பிற்காலச் சோழர் சரித்திரம் -1
வரலாறு
Back
பிற்காலச் சோழர் சரித்திரம் -1
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
1. பிற்காலச் சோழர் சரித்திரம் -1
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. அறிமுகவுரை
2. சோழரின் தொன்மை
3. கடைச் சங்கத்திறுதிக் காலத்திற்கும் பிற்காலச் சோழர் ஆட்சியின் தொடக்கத் இடைப்பட்ட சோழர் நிலை
4. சோழன் விசயாலயன்கி. பி 846 - 881
5. முதல் ஆதித்த சோழன் கி. பி. 871-907
6. முதற் பராந்தக சோழன் கி. பி. 907 - 953
7. கண்டராதித்த சோழன் கி. பி. 950 - 957
8. அரிஞ்சய சோழன் கி. பி. 956 - 957
9. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (கி. பி. 957 - 970)
10. உத்தம சோழன் கி. பி. 970 - 985
11. முதல் இராசராசசோழன் கி. பி. 985 - 1014
12. முதல் இராசேந்திர சோழன் (கி. பி. 1012 - 1044)
13. முதல் இராசாதிராச சோழன் கி. பி. 1018 - 1054
14. இரண்டாம் இராசேந்திர சோழன் கி. பி. 1051-1063
15. வீரராசேந்திரசோழன் கி.பி.1063-1070
16. அதிராசேந்திரசோழன் கி. பி. 1070
1. சேர்க்கை - 1
2. சேர்க்கை II
3. சேர்க்கை III
4. கணியம் அறக்கட்டளை
பிற்காலச் சோழர் சரித்திரம் -1
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : பிற்காலச் சோழர் சரித்திரம் -1
தொகுப்பு : தமிழக வரலாற்று வரிசை - 2
ஆசிரியர் : தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
பதிப்பாளர் : இ. வளர்மதி
முதற்பதிப்பு : 2008
தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 12 புள்ளி
பக்கம் : 16 + 280 = 296
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 275 /-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்”பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017
அறிமுகவுரை
இந்திய வரலாற்றிலேயே நெடுங்காலம் (ஏறத்தாழ 1500 ஆண்டு களுக்கு மேலாக) தொடர்ந்து ஆட்சி செய்து வந்த ஓரிரு அரச பரம்பரை யினருள் சோழரும் ஒருவர். சில நூற்றாண்டுகள் ( கி.பி.300 - கி.பி. 850) சோழர் சிற்றரசர்களாகவோ, மிகச்சிறு நிலப் பகுதிகளை ஆண்டவர் களாகவோ ஒடுங்கியிருந்தனர். அவற்றையும் சேர்த்துத்தான் இந்தக் கணக்கு. இன்றையத் தமிழகம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வந்த கி.பி.1800க்கு முன்னர், எப்பொழுதாவது இந்தநிலை இருந்தது என்றால் அது பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் அடங்கிய கி.பி. 900-1200 ஆகிய முந்நூறு ஆண்டுகளில்தான் (அந்த முந்நூறு ஆண்டுகளில் சேர நாட்டுப் பகுதியும் கூடச் சோழரின் கீழ்த்தான் இருந்தது). பிற்காலச் சோழர் ( விசயாலயன் பரம்பரை ) ஆண்ட கி.பி. 846-1279 கால அளவின் உச்சகட்டத்தில் சோழப் பேரரசர் ஆட்சி வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணா ஆறுகள் வரை நடந்தது; 11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பெரும் பகுதியும் அவ்வாட்சியின் கீழ் இருந்தது. மொழிபெயர் தேயத்தின் வடக்கே சங்ககாலத் தமிழ் வேந்தர் ஒரோவழி படையெடுத்து வென்றதாகக் கூறப்படுகிறதேயொழிய, நிலையான ஆட்சி நடத்தியதாகவோ தொடர்ந்து பிற அரசுகளிடம் கப்பம் பெற்று வந்ததாகவோ கூறப்படவில்லை. தமிழ் நாட்டிற்குள்ளும், பிற்காலச் சோழர் ஆட்சிக்கு முன்னர், பாண்டியர் - சோழரிடையே போர்கள் நடந்தன; ஆயினும் வென்ற நாட்டைத்தாமே (பரம்பரை அரசரை நீக்கிவிட்டு) தமது அரசப்பிரதிநிதி மூலம் ஆண்டதாகத் தெரியவில்லை. பிற்காலச்சோழர் அகலக்கால் வைத்து தமிழகத்துக் குள்ளும் வெளியிலும் நிகழ்த்திய போர் நடவடிக்கைகளும் ஓரளவுக்கு தமிழகமும் தென்னிந்தியாவும் 1300க்குப் பிறகு வீழ்ச்சியடையக் காரணமாக இருந்தனவோ என்பதும் ஆய்வதற்குரியது.
2. பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிய கல்வெட்டுச் சான்றுகள் மிகப் பலவாகும். 1887 முதல் இன்று வரைத் தென்னாட்டில் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஏறத்தாழ 50000க்கும் மேற்பட்டவை (சுமார் 2000 செப்பேடுகள்; 3000 நாணயங்கள், முத்திரைகள் உட்பட) இந்தக் கல்வெட்டுக்களில் 26000 கல்வெட்டுக்கள் இன்றையத் தமிழகப் பகுதியில் கண்டவை; ஏறத்தாழ அனைத்தும் தமிழ்க் கல்வெட்டுக்கள். இந்த 26000இல் 35 விழுக்காடு ஆகிய 9000 கல்வெட்டுக்கள் பிற்காலச் சோழரைச் (கி.பி.850- 1250 கால அளவு) சார்ந்தவை என்பார் சுப்பராயலு. (தமிழ்க் கல்வெட்டுகளில் பாண்டியருடையவை 18%. விசய நகர மன்னருடையவை 16%) ஏராளமான இக் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு சமுதாய, வணிக, பண்பாட்டு வரலாறுகளுக்கு உதவுவனவாயினும் அரசியல் வரலாற்றை அறிய உதவுவன சிலவே. இக்கல்வெட்டுச் சான்றுகளையும், இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், அகழ்வாய்விற் கண்ட எச்சங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி முதன்முதலில் ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் விரிவாக சிறப்பாகப் பிற்காலச்சோழர் வரலாற்றை ஆங்கிலத்தில் 850 பக்கங்களில் 1935-37ல் வெளியிட்டவர் வரலாற்றறிஞர் க.அ. நீலகண்ட சாத்திரியார்; திருத்திய இரண்டாம் பதிப்பு 1955இல் வெளிவந்தது.
3. வரலாற்றுத் துறையில் தடம்பதித்த தமிழறிஞர்களுள் தலைசிறந்த சிலருள் ஒருவர் சதாசிவப் பண்டாரத்தார். (1892 - 1961) தமிழில் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற பெயரில் அவர் எழுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் வெளியிட்ட காலம் வருமாறு:
முதற் 2-ஆம், 3ஆம்பதிப்புகள்
பதிப்பு பண்டாரத்தாரே திருத்தியது
பகுதி I கி.பி.846 - 1070; 1949 2ஆம் 1954; 3ஆம் 1958
பகுதி II 1070 - 1279; 1951 2ஆம் 1957
பகுதி III சோழர் அரசியல் 1961
பண்டாரத்தார் பகுதி I முன்னுரையில் 1949இல் குறித்துள்ளது போல் அவர் தமது நூலை கல்வெட்டுப் புத்தகங்கள், அறிக்கைகள்; சாத்திரியார் ஆங்கில நூல், சில தமிழ் நூல்கள், சில ஊர்களுக்கு பண்டாரத்தாரே நேரில் சென்று படித்து அறிந்து வந்த புதிய செய்திகள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வரலாற்றை எழுதியுள்ளார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தமது 1949 முன்னுரையில் குறிப்பிடுவது போல (அதுவரைத் தமிழில் வெளிவந்த வரலாற்று நூல்கள் போல் பாடபுத்தகமாக இல்லாமல்) சிந்தித்து ஆய்வு செய்து தமிழில் மூலநூலாக எழுதிய முதல் வரலாற்று நூல் இதுவாகும்: the first original work of this kind in Tamil, distinguished from mere text books”
4. i. வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தன் ஒருவன் தனது மனத்தில் உருவாக்கிக் கொள்ளும் எண்ணமே அது. எழுது பவனுடைய அறிவுநிலை, மனநிலை, அவனுடைய சமுதாயப் பார்வை, அவனுக்குக் கிட்டும் ஆதாரங்கள் ஆகியவற்றுக்கேற்பவே ஒரு காலத்தைப் பற்றி அல்லது ஒரு பொருளைப் பற்றி ஒருவன் வரலாறு எழுதுகிறான். எனவே ஒவ்வொரு காலத்தையும் பொருளையும் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியனவே.
வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங்களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம்தான் அவன் எப்படி வரலாற்றை எழுதுகிறான் என்பதை நிர்ணயிக் கிறது; விருப்பு வெறுப்பற்ற வரலாற்றாசிரியன் முயற்கொம்புதான். எனவே எந்த வரலாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணி விடக்கூடாது.
- காரி பெக்மான்.
வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக் கூறத் தேவையான அறிவை விட பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிக நுட்பமானது
- அனதோல் பிரான்சு.
வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்துபவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ, உள்ள குறிக்கோள்களுடன் தான் வரலாறு எழுதப்படுகிறது. அக்குறிக்கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப்படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்குகளைக் காட்டி ஊக்குவித்தல்; குழுக்கள், வர்க்கங்களுக்கு உணர்ச்சியூட்டுதல்; அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல்; அதிகாரமில்லாதவர்களிடையேயும், ஒடுக்கப்பட்ட வரிடையேயும் இப்பொழுதுள்ள நிலைமையே சரி என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம்.
- ஜே.எச்.பிளம்ப்
வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று.
- வில் & ஏரியல் டுரான்ட்
வரலாறு எழுதும் நாம் நம்காலத்தவர் சார்பில் மாந்த இனத்தின் முந்தைய நடவடிக்கைகளைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். வரலாற்றாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு பொழுது போக்குபவர் முந்தை வரலாற்று நடவடிக்கைகளைக் குறித்து இது அறிவுடையது, அது மூடத்தனமானது; இது மதுகையுடையது, அது கோழைத்தனம்; இச்செயல் நன்று, அச்செயல் தீது; என்றவாறு மதிப்பிட்டுக் கூறும் பொறுப்பைத் தட்டிக் கழித்தல் ஒல்லாது. காயடித்த வரலாற்றாசிரியன் நமக்குத் தேவை யில்லை.
- ஆர்.ஜி.காலிங்வுட்
ii. மேற்கண்டவற்றின் ஆங்கில மூலங்கள் வரலாற்று மாணவர் வசதிக்காகக் கீழே தரப்படுகின்றன.
History is a reconstruction of elements of the past in the mind of a human being of a later generation… In principle there will be multiple histories of any given period, each congruent to the mental world, social purposes, and sources available to the person who creates it.
Since the recreation of the past takes place in the mind of the individual historian which has been shaped by his personal experience and world view the unbiased hstorian is an unattainable idea.
By the very nature of the historical discourse there can be no final truth - GARY BECHMAN “The Limits of Credulity” JOURNAL OF THE AMERCIAN ORIENTAL SOCIETY 125.3
It needs rarer genius to restore the past than to foretell the future - ANATOLE FRANCE
(History) is always a created ideology with a purpose, designed to control individuals or motivate societies, or inspire classes .. to strengthan the purpose of those who possessed power… and reconcile those who lacked it.
-* J.H. PLUMB ( 1969 ) _THE DEATH OF THE PAST_ (QUOTED BY BECKMAN).
“Most History is guessing and the rest is prejudice
- WILL AND ARIEL DURANT
“We are the present of man, passing judgement on his own corporate past. What we cannot do, is to continue playing with historical research and yet shirk the responsibility of judging the actions we narrate: saying this wise, that foolish; this courageous, that cowardly; this well done, that ill”
**-R.G.Colingwood ( 1999 Posthumous: Ed by W.H. Dray and another) *The Principles of history and other writings in philosopy of History. Oxford; OUP**
Those who disregard the past are bound to repeat it.
- GEORGE SANTAYANA.
5. முன்பத்தியிற் கண்டவற்றைக் கருதும் பொழுது சாத்திரியாரும் பண்டாரத்தாரும் பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் இத்துறையில் ஆய்வு செய்த பல அறிஞர்கள் உழைப்பால் சிலபல விஷயங்களில் புதிய கருத்தோட்டங்கள் உருவாகியுள்ளன என்பதை வரலாற்று மாணவரும் இந்நூலைப் பயிலும் ஏனையோரும் உணர்தல் வேண்டும். அப்புதிய கருத்தோட்டங்களைத் தரும் நூல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது (வசதி கருதி 1960க்கு முன்னர் வெளிவந்தாலும், என்றும் இத்துறையில் அறிய வேண்டிய நூல்களாக உள்ள, நூல்களும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன) அண்மைக்கால ஆய்வாளர்களின் சிலபுதிய பார்வைகளும் அவற்றை மேற்கொண்டவர்களும் வருமாறு:
(I) பர்டன் டெய்ன்: நீலகண்ட சாத்திரியார் சொன்னபடி பிற்காலச் சோழர் ஆட்சிமுறை, பைசாந்தியப் பேரரசு Byzantine Emire போல சர்வ வல்லமை பெற்ற ஆட்சியன்று. பல்கூறுகளாக அதிகாரம் பிளவுண்டு நிலவிய அரசு segmentary state தான் அது. தென்னிந்தியாவில் இடைக்கால அரசுகள் - பிற்காலச் சோழர் உட்பட - தம் கீழ் உள்ள பகுதிகளைக் கண்காணித்து தம் கட்டுக்குள் வைத்திருந்தவையே; அப்பகுதிகளை நேரடியாக நிருவகித்தவை அல்ல. அவை கப்பம் பெற்று வந்தவை; வரி வசூலைக் கொண்டு நடந்தவை அல்ல; பேரரசில் அடங்கிய பல்வேறு வகைச் சமூகங்களும் பெருமளவுக்கு ஊரார், நாட்டார், பிரமதேயத்தார், கோயில் நிருவாகத்தார், வணிகர் அமைப்புகள் போன்ற தனித்தனி அமைப்புகளாகவே செயல்பட்டன.
“The South Indian medieval states were custodial rather than managerial, tribute - receiving, rather than tax**ased; and the society itself was organised into relatively isolated, locally oriented networks of relations among corporate groups and associations.
ii. நொபுரு கராசிமா, ஒய்.சுப்பராயலு, பி.சண்முகம்
இவர்கள் ஆய்வின் முடிவு டெய்ன் கருத்து ஆதாரமற்றது என்பதாகும். பிற்காலச் சோழச் சோழர் ஆட்சியில் (குறிப்பாக சோழர் பூர்வீக ஆட்சிப்பகுதியிலும் அதையொட்டிய பகுதிகளிலும்) பல துறைகளிலும் நேரடியாக முழு அதிகாரம் செலுத்திய ஆட்சிமுறை (Centralized Administration) இருந்திருக்கத்தான் வேண்டும். பிற்காலச் சோழர் ஆட்சி முழு அதிகார அரசின் தொடக்கநிலை Early State என்பார். (பிற்காலச் சோழர் ஆட்சிமுறையைப் பற்றிய பல்வேறு கருத்தோட்டங்களைச் சுருக்கமாக, தெளிவாக பி.சண்முகம், தமிழ்நாட்டு அரசு வரலாற்றுக் குழு 1998இல் வெளியிட்ட நூலின் முதல் தொகுதி பக்கங்கள் 405-475இல் தந்துள்ளார்)
iii. கைலாசபதி, கேசவன், எம்.ஜி.எ. நாராயணன் இவர்கள் பிற்காலச் சோழ அரசு நிலமானிய அரசு (Feudal State) என்பர்.
(iv)ஆர் ஹால் (2001)
அக்காலத் தென்னிந்திய அரசுகளை நிலமானிய அரசு என்று முத்திரை குத்துவது; அல்லது வேறுநாட்டு வரலாறுகள் சார்ந்து உருவாகிய கோட்பாடுகளின் பெயரை தென்னிந்திய அரசுகளின் நெற்றியில் ஒட்டுவது; இரண்டுமே எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. டெய்ன் கருத்துக்கும், கரோசிமா கருத்துக்கும் இடைப்பட்ட நிலையே என்னுடையது ஆகும். I am less than comfortable in applying the “feudal” label or other externally - derived vocabulary to early South India and find myself somewhere between Karoshima’s “UNITARY STATE”and Steins‘SEGMENTARY STATE’ in my sense of early South Indian History
6. ஆக பிற்காலச் சோழர் வரலாற்றை அன்று சாத்திரியாரும் பண்டாரத்தாரும் செய்தது போல வரலாற்றறிஞர் ஒருவரே அண்மைக்கால ஆய்வுகளையும் தமிழக அரசு வரலாற்றுக் குழு 1998 நூலில் உள்ள16 அறிஞர் வெவ்வேறு கூறுகள் பற்றி தனித்தனியாக எழுதிய கட்டுரைகளையும் கருத்திற்கொண்டு ஏறத்தாழ ஐநூறு பக்கங் களில் ஒரு மடலமாக எழுதுவது தமிழுலகுக்குப் பயன்தருவ தாகும்..
##பதிப்புரை
‘வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.’ ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்’. ‘வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்’. ‘தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது.’ வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப்பாகக் காட்டுவது.
‘வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப்பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன் (Gary Bachman: JAOS - 2005) . இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவு நிலை, மனநிலை, சமுதாயப் பார்வை,பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது.
ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள், கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ்மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர்.
இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையிலிருந்து எழுதப்படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண்மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது.
தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன்முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பி.டி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணிசேர்த்துள்ளார்.
பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர்சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு எனும் நூல்களைத் தேடி எடுத்து தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும் பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய கருவிநூல்களாகவும், என்றும் பயன்தரும் (classic) நூல்களாகவும் கருதப்படவேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி/பல்கலைக்கழக ஆய்வுத் துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன்கொள்வாராக.
தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், ஒளவை துரைசாமிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர,பன்னீர்செல்வம், மயிலை சீனி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசிநாதன் போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந்தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவுகூர்கிறோம்.
தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அரிய செய்திகளை தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதியுள்ள இந் நூல்கள் ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன்படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக் கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்ட மிட்டுத் தம் எதிர்கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப் பார்வையுடன் இவ் வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்ளுங்கள்.
தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே.
ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே.
பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட் டானே.
இதுதான்நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.
எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள்.
மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெரும க்களுள் தலைசிறந்தோர் தந்தை பெரியாரும், மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றி யுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம்.
தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும் தாழ்வையும் ஆழ நினையுங்கள். இனத்தின் மீளாத்துயரை மீட்டெடுக்க முனையுங்கள்.
- பதிப்பாளர்.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் ஒளவை. நடராசன், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி, பி. இராமநாதன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர்
_அச்சுக்கோப்பு_ முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா,
_மெய்ப்பு_ சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி, அ. கோகிலா
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,
எதிர்மம் _(Negative)_ பிராசசு இந்தியா (Process India)
அச்சு மற்றும் நூல்கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
சோழரின் தொன்மை
வடவேங்கடம் தென்குமரிக்கு இடையிலுள்ள நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம்1 என்று வழங்கப்பெற்றது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்றே யாவரும் கூறிவருகின்றனர். இதனைக் குடபுலம், குணபுலம், தென்புலம் என்ற மூன்று பகுதிகளாகப்2 பிரித்துப் பண்டைக் கால முதல் ஆட்சி புரிந்து வந்தோர், சேர, சோழ, பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். இவர்கள் ஆட்சி புரிந்த பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் எனப்படும். இவர்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னரே இத்தமிழ் நாட்டில் அரசாண்டு வந்தனர் என்பது, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு3 எனவும், போந்தை வேம்பே ஆரென வரூஉம் - மாபெருந் தானையர்4 எனவும் போதரும் தொல்காப்பியச் சூத்திரங்களால் நன்கு பெறப்படு
கின்றது. இம் மூவேந்தருள் இடையிலுள்ள சோழரின் வரலாறே ஈண்டு ஆராயப்பெறுவது.
இனி சோழர் என்பார் நம் தமிழகத்தின் கீழ்ப்பகுதியாகிய சோழ மண்டலத்தைத் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்து வந்த அரச மரபினர் ஆவர். இவர்கள் எக்காலத்து இதனை ஆட்சி புரியும் உரிமை எய்தினரென்றாதல், எவ்வேந்தரால் இதன் ஆட்சி முதலில் கைக்கொள்ளப்பட்டதென்றாதல் அறிந்து கொள்ளக்கூட வில்லை. எனவே, எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத் தொன்மையுற்ற குடியினர் இன்னோர் என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, இவர்கள் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருந் தொல்குடியினர் என்று ஓர் அறிஞர் கூறியிருப்பது1 பொருத்தமுடையதேயாம்.
இராமாயண பாரத காலங்களிலும் இவற்றிற்கு முந்திய நாட்களிலும் இவர்கள் மிகச் சிறப்புடன் விளங்கியுள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அன்றியும், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், மகத நாட்டில் செங்கோல் செலுத்திய அசோகச் சக்ரவர்த்தியின் ஆணையை யுணர்த்தும் கல்வெட்டுக்களில் சோழரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டில் மேனாட்டினின்றும் தமிழ் நாடு போந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பவனது வரலாற்றுக் குறிப்பிலும் மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால் அப்பழைய காலத்தில் எழுதப்பட்ட பெரிப்ள என்ற நூலிலும் இவர்களைப் பற்றிய உயரிய செய்திகள் காணப் படுகின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அவர்களுடன் வாணிகத் தொடர்
புடையவர்களாய்ப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர் என்பது தெள்ளிது.
இத்துணைத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த சோழர் குடியினர் வளம் நிறைந்த சோழ மண்டலத்தைத் தமக்குரியதாகக் கொண்டு பண்டைக்கால முதல் ஆட்சி புரிந்து வந்தமை பற்றி வளவர் என்றும் வழங்கப் பெற்றனர். இவர்களது நாடு, வானம் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியால் வளம்பெற்றுச் சிறப்பெய்தியிருந்தமையின், காவிரி நாடு எனவும் பொன்னி நாடு எனவும் அறிஞர்களால் பாராட்டப் பட்டது. நிலவளமும் நீர் வளமும் ஒருங்கே அமைந்துள்ளமையால் இதன் நெல் விளைவு எந்த நாட்டினரும் புகழ்ந்து கூறும் இயல்புடையதாகும்.
நெல்லுடையான் நீர்நாடர் கோ 2 என்ற பழம் பாடற்பகுதியும், மேதக்க - சோழ வளநாடு சோறுடைத்து 3 என்ற ஔவைப் பிராட்டியாரது திருவாக்கும் ஈண்டு நோக்கற்பாலவாகும். நெல்லுடைமையால் குடியுயர்தலும் குடியுயர்தலால் கோன் உயர்தலும் இயல்பே யாம். ஆகவே, வளவனாயினும் அளவறிந்தழித்துண் என்னும் முதுமொழியில் செல்வத்தின் மேல் எல்லைக்கோர் எடுத்துக் காட்டாகச் சோழர் குடியினர் கூறப்பெற்றிருப்பது உணரற் பாலதாகும். சுருங்கச் சொல்லுமிடத்து, செல்வ வளம் பற்றி மூவேந்தருள்ளும் முதல் வேந்தராய்த் திகழ்ந்தவர் இவர்களே எனலாம்.
சோழர் குடியினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும்.1 செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் அங்ஙனமே அறிவிக் கின்றன. இவர்களது கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலையே இவர்கட்குரிய அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகின்றது.2 இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்தும் பேறு பெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறைநகர் என்பன. இவற்றுள், உறையூரும் காவிரிப் பூம்பட்டினமும் சங்ககாலச் சோழ மன்னர் கட்குத் தலைநகரங்களாக விளங்கிய சிறப்புடையவை; தஞ்சாவூரும் கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழ அரசர்கட்குத் தலைநகரங்களாக விளங்கிய பெருமை வாய்ந்தவை; பழையாறை நகர், சோழர் பல்லவர்க்குக் கீழ்ச் சிற்றரசராயிருந்த காலப் பகுதியில் வாழ்ந்து வந்த இடமாகும். பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தும் இம்மாநகர் சோழரது இரண்டாவது தலைநகராய்ச் சிறப்புடன் நிலவியமை அறியற்
பாலதாம்.
கடைச் சங்கத்திறுதிக் காலத்திற்கும் பிற்காலச் சோழர் ஆட்சியின் தொடக்கத் இடைப்பட்ட சோழர் நிலை
மதுரை மாநகரில் நிலவிய கடைச்சங்கம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிவெய்தியது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து நிறுவியுள்ள உண்மையாகும்.1 எனவே, புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு முதலான கடைச்சங்க நூல்களில் சொல்லப்பட்டுள்ள சோழ மன்னர்கள் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் சோழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்த முடியுடைவேந்தர் ஆவர். அவர்கள் காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான், போரவைக்கோப் பெரு நற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, நெடுங்கிள்ளி, இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி, செங்கணான், நல்லடி2 என்போர். அன்னோர் வரலாறுகளும் மிகச் சுருக்கமாகவே சங்க நூல்களில் காணப்படுகின்றன. கடைச்சங்கத்திறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் தஞ்சை மாநகரைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய சோழன் விசயாலயன் காலம் வரையில் சோழரின் செய்திகள் நன்கு புலப்படவில்லை. இவ்விடைக்காலப் பகுதியில் சோழ அரசர்கள் தாழ்ந்த நிலையை எய்திச் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியைத் தமக்குரியதாகக் கொண்டு குறுநில மன்னராய்ப் பிறவேந்தர்க்கு அடங்கி வாழ்ந்து வந்தனராதல்வேண்டும். அக்காலத்தில் வெளிவந்துள்ள செப்பேடுகளும், கல்வெட்டுக்களும், தமிழ் நூல்களும் இவர்கள் சோழ நாட்டில் இருந்தனரென்ற அளவில் உணர்த்துகின்றனவேயன்றி இவர்களது பிற செய்திகளைக் கூறவில்லை. இதற்குக் காரணம், இவர்கள் தம் பெருமை யிழந்து தாழ்ந்த நிலையிலிருந்தமையேயாம்.
இனி, அக்காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றை ஆராய்ந்து இவர்கள் நிலையை இயன்றவரையில் உணர்ந்துகொள்வதும் இன்றியமையாத தாகும். கி. பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளில் நம் தமிழகம் களப்பிரர் என்ற ஒருவகையாரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது பல ஆதாரங் களால் அறியக்கிடக்கின்றது1. பாண்டி நாடு களப்பிரரால் கைப்பற்றப் பட்டிருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளாலும் புலனாகின்றது2. அந்நாட்களில் தான் சோழரும் தம் நாட்டைக் களப்பிரரிடம் இழந்திருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. முதலில், பாண்டியர் தாம் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றித் தமிழகத்தின் தென்பகுதியில் தம் பேரரசை நிறுவி அதனை உயர்நிலைக்குக் கொணர்ந்து ஆட்சிபுரிந்து வருவாராயினர். சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிய பல்லவர், தமிழகத்தின் கீழ்ப்பகுதிக்குப் பேரரசராய் விளங்குவாராயினர்3. இந்நிலையில் சோழர் தம் நாட்டைக் கைப்பற்றித் தமக்குரியதாகக் கொண்டு ஆட்சி நடத்து வதற்குத் தக்க காலமும் துணைவலியும் அமையாமையால் காலங்கருதி அடங்கி வாழ்ந்துவந்தனர். எனவே, அந்நாட்களில் இவர்கள் பல்லவர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராயிருந்தனர் என்பது தேற்றம்.
சோழர் அந்நிலையிலிருந்த நாட்களில் பண்டைத் தலைநகரங்களாகிய உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பவற்றில் தங்கி வாழ்ந்து வந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை. ஆகவே, இவர்கள் வேறு ஒரு நகரத்தில்தான் இருந்திருத்தல் வேண்டும். வரலாற்று ஆராய்ச்சி யாளருள் சிலர், கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் அந்நாட் களில் இவர்கள் தங்கியிருந்தனர் என்று கூறுகின்றனர்; மற்றுஞ் சிலர் இவர்கள் உறையூர்ப் பக்கத்தில் இருந்திருத்தல்வேண்டும் என்கின்றனர்1. இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கோனாடு என்பது புதுக்கோட்டை இராச்சியத்தில் முற்காலத்திலிருந்த ஒரு நிலப்பரப்பாகும். அது, சோழ மண்டலத்திற்கும் பாண்டி மண்டலத்திற்கும் இடையில் அமைந்திருந்த ஒரு சிறு நாடு எனலாம். அந்நாட்டிலிருந்த கொடும் பாளூரில் இருக்குவேள் என்ற குடியினர் இருந்தனர் என்பதும் அவர்கள் சிலகாலம் பாண்டியர்க்கும் சிலகாலம் பல்லவர்க்கும் அடங்கித் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராயிருந்து வந்தனர் என்பதும் சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன2. அவர்கள் கடைச்சங்க நாளில் வாழ்ந்த இருங்கோவேளின் வழியினர்; சோழ மரபினர் அல்லர். எனவே, கொடும்பாளூரில் இருவேறு குறுநில மன்னர் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடையதன்று. ஆகவே, சோழர் குறுநில மன்னராயிருந்த காலத்தில் கொடும்பாளூரில் இருந்திலர் என்பது திண்ணம்.
இனி, சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகள், சோழ நாட்டில் பழையாறை வடதளியில் இறைவனை வணங்குவதற்குச் சென்றபோது அக்கோயிலில் சிவலிங்கப் பெருமானை அமண் சமயத்தினர் மறைத்து வைக்கவே, அடிகள் உள்ளம் வருந்தினாராக, அதனை யுணர்ந்த அவ்வூரிலிருந்த வேந்தன், அடிகளது இன்னலைப்போக்கி வடதளிப் பெருமானை வழிபடச் செய்து, சிறந்த விமானம் ஒன்றும் எடுப்பித்து, நாள் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்தனன் என்று திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் கூறுகின்றது3. இதில் குறிப்பிடப் பெற்ற அரசன், அடிகள் காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டின் பழையாறை4 என்னுந் தொன்னகரில் தங்கி வாழ்ந்து கொண்டிருந்த சோழர் மரபினனாகிய ஒரு குறுநில மன்னன் என்பதில் ஐயமில்லை. அந்நகரம் மிகப் பழமை வாய்ந்த தொன்று. அந்நகரில் பண்டைச் சோழரது அரண்மனையிருந்த இடம் இக்காலத்தில் சோழ மாளிகை என்ற பெயருடன் ஒரு தனி ஊராக உளது. அதனைச் சுற்றி நாற்புறத்திலும் ஆரியப்படைவீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு என்ற நான்கு பெரும்படைவீடுகள் அக்காலத்தில் சோழ மன்னர்களால் அமைக்கப்பட்டிருந்தன. அவை நான்கும் இந்நாளில் தனித்தனி ஊர்களாக உள்ளன. பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த விசயாலய சோழன் வழியினரும் அப்பழையாறை நகரைத் தமக்குரிய இரண்டாவது தலைநகராகக் கொண்டது அதன் தொன்மைத் தொடர்பு நோக்கியேயாம். இரண்டாம் பராந்தகன், கங்கைகொண்ட சோழன் முதலானோர் அம் மாநகரில் பல நாட்கள் தங்கியிருந்தமையும் அறியத்தக்கது. கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் சோழ அரச குடும்பத்தினருள் சிலர் அங்கு வாழ்ந்துவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது1. எனவே, அது சோழரது பழைய நகரங்களுள் ஒன்றாயிருத்தல் வேண்டும் என்பது வெளியாதல் காண்க. அந்நகரில்தான், பல்லவர் காலத்தில் குறுநில மன்னராயிருந்த சோழர் இருந்தனர் என்பது கண்டு உணரற்பாலதாகும்.
சமயகுரவராகிய சுந்தரமூர்த்திகள் கூறியுள்ள கருவூர்த்துஞ்சிய புகழ்ச்சோழர் என்பார் கி. பி. ஆறாம் நூற்றாண்டிலாதல் அதற்கு முன்னராதல் இருந்திருத்தல் வேண்டும். அவரைப்பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை.
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் பாண்டி மண்டலத்தில் மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்தவனும் அறுபான்மும்மை நாயன்மார் களுள் ஒருவனும் சுந்தரமூர்த்திகளால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்2 என்று திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்றவனும் ஆகிய பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் மனைவி மங்கையர்க்கரசி, ஒரு சோழமன்னன் மகள் ஆவள். இதனை, மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கை மடமானி - பங்கயச் செல்வி பாண்டிமாதேவி1 என்னும் திருஞான சம்பந்தர் அருட்பாடலால் நன்கறியலாம். மங்கையர்க் கரசியின் தந்தை மணிமுடிச் சோழன் என்னும் பெயரினன் என்பது அவ்வடிகள் திருவாக்கினால்2 உணரப்படுகின்றது. ஆகவே, கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மணிமுடிச்சோழன் என்ற மன்னன் ஒருவன் சோழநாட்டில் இருந்தனன் என்பது பெறப்படுதல் காண்க.
கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் சுந்தரமூர்த்திகள் சேரமான் பெருமாளுடன் மதுரைமாநகருக்குச் சென்றபோது, அவர்களைப் பாண்டிவேந்தன் ஒருவனும் அந்நகரில் முன்னரே போய்த் தங்கியிருந்த அவன் மருமகன் சோழமன்னன் ஒருவனும் எதிர் கொண்டழைக்க, எல்லோரும் சோமசுந்தரக் கடவுள் திருக்கோயிலுக்குச் சென்றார்கள் என்று பெரியபுராணம்3 கூறுகின்றது. அன்றியும், சுந்தர மூர்த்திகள் மதுரையம்பதிக்கு அண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்திற்குச் சென்று, அங்குத் தாம் பாடிய பதிகத்தின் இறுதிப் பாடலில் அதனைச் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர் முன்னே பாடியதாகக் கூறியுள்ளனர். அடிகள் குறிப்பிட்டுள்ள சேரர், சேரமான் பெருமாள் நாயனார் என்பதும், சோழன், பாண்டியன் மகளை மணந்து மதுரையில் அப்போது தங்கியிருந்த ஒரு சோழ அரச குமாரன் என்பதும், பாண்டியன், கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் என்பதும் ஆராய்ச்சியால் புலப்படுகின்றன.
திருவேங்கடத்தைச் சார்ந்த திருச்சானூர்த் திருஇளங் கோயிற் பெருமானுக்குப் பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் ஆட்சியில் சோழ நாட்டுச் சோழனார் உலக பெருமானார் திருவிளக்கு வைத்து அதற்கு முதற்பொருளாக முப்பது கழஞ்சு பொன் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டால் அறியப்படுகின்றது1. இவன் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழநாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு சோழர் குலக் குறுநில மன்னன் ஆவான்.
கி. பி. 831 - ஆம் ஆண்டில் குமாராங்குசன் என்ற பெயருடைய சோழ மன்னன் ஒருவன் இருந்தனன் என்பது பல்லவ வேந்தனாகிய தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் ஆட்சியில் வெளியிடப்பெற்ற வேலூர்ப்பாளையச் செப்பேடுகளால் வெளியாகின்றது.2 அச்செப்பேடுகளில் முதலில் நந்தி வர்மன் ஆட்சியாண்டு வரையப்பெற்று பிறகு மற்றைச் செய்திகள் குறிக்கப்பட்டிருத்தலால் அச்சோழன் நந்திவர்மப் பல்லவனுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது நன்கு துணியப்படும். அவன் சோழர் குலத்தில் தோன்றிய வீரர்தலைமணி என்றும், கொடையில் கர்ணனைப் போன்றவன் என்றும், நேர்மையான ஒழுக்கமுடையவன் என்றும் அச்செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டில் குறுநில மன்னனாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சோழர் குலத்தோன்றல் என்பதில் ஐயமில்லை.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில், கும்பகோணம் என்று இந்நாளில் வழங்கும் குடமூக்கில் நடைபெற்ற போரில் பாண்டியன் சீமாறன் சீவல்லபன் பரச்சக்கர கோலாகலன் என்பான், சோழர், பல்லவர், கங்கர் முதலானோரைப் போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்தனன் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள்3 உணர்த்துகின்றன. கி. பி. 844 முதல் கி. பி. 866 வரையில் ஆட்சி புரிந்த தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன், சோழன் ஒருவனைப் போரில் வென்றான் என்று அவன் மீது பாடப்பெற்ற நந்திக்கலம்பகம் என்ற நூல் கூறுகின்றது.1 எனவே, கடைச்சங்க காலத் திற்குப் பிறகு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் குறுநில மன்னராயிருந்த சோழர், சில காலங்களில் பாண்டியர்க்கும் சில காலங்களில் பல்லவர்க்கும் திறை செலுத்திக்கொண்டு அவர்கட்கு அடங்கி வாழ்ந்து வந்தனர் என்பது உய்த்துணரப்படுகிறது.
இதுகாறும் விளக்கியவாற்றால் சோழர், தம் வலி குன்றியிருந்த காலத்தில் வேறு நாடுகட்குப் போகவில்லை என்பதும் சோழ நாட்டிலேயுள்ள பழையாறை நகரில் சிற்றரசராயிருந்து வந்தனர் என்பதும் நன்கு புலனாதல் காண்க.
இஃது இங்ஙனமாக, சோழர் குறுநில மன்னராயிருந்த காலத்தில் கடப்பை, கர்நூல் ஜில்லாக்களுக்குச்சென்று அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பது சில வரலாற்று ஆராய்ச்சி யாளரது கொள்கை யாகும்2. அவர்கள் அவ்வாறு கருதுவதற்கு இரு காரணங்கள் சொல்லப் படுகின்றன.
ஒன்று, சீன வழிப்போக்கனாகிய ஹியூன்சாங் என்பவன் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத்துக்கு வந்து சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது சோழ நாடு காஞ்சிபுரத்திற்கு வடமேற்கே இருப்பதாகத் தன் யாத்திரைக் குறிப்பில் வரைந் திருப்பது. மற்றொன்று, கர்நூல், கடப்பை ஜில்லாக்களில் கிடைத்துள்ள தெலுங்கச் சோழர் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் அவர்கள் காவிரியாற்றிற்கு இரு மருங்கும் கரைகண்ட சோழன் கரிகாலன் வழியினர் என்று குறிக்கப் பெற்றிருப்பது.3 சோழ மன்னர்கள் ஏழு எட்டாம் நூற்றாண்டு
களில் தமக்குரிய சோழநாட்டிலேயே இருந்தனர் என்பதற்குத் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திகள் ஆகிய சமய குரவரது அருட்பாடல்களும் நந்திக்கலம்பகமும் வேலூர்ப் பாளையச் செப்பேடு களும் சின்னமனூர்ச் செப்பேடுகளும் பெரிய புராணமும் தக்க சான்று களாக உள்ளன என்பது முன்னரே விளக்கப்பட்டது, ஆகவே, சோழர் குறுநில மன்னராயிருந்த காலத்தில் வேறு நாடு புகுந்து வதிந்தனர் என்ற கொள்கை வலியுடைத்தாகாமை உணர்க.
சோழன் விசயாலயன்கி. பி 846 - 881
சோழர் பேரரசை நிறுவ முதலில் அடிகோலியவன் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்த விசயாலயன் என்னும் சோழ மன்னனே யாவன். இவன் தஞ்சை மாநகரைக் கைப்பற்றி அதனைத் தன் தலைநகராக வைத்துக் கொண்டனன் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள்1 உணர்த்துகின்றன. நகரத்திற்கு இன்றியமையாத எல்லா நலங்களுடன் தஞ்சாபுரி என்னும் மாநகரை விசயாலய சோழன் புதிதாக அமைத்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு2 கூறுகின்றது. விசயாலயன் காலத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தஞ்சை மாநகர் சிறப்புடன் இருத்தது என்பது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பெற்ற செந்தலைக் கல்வெட்டுக்களால்3 புலனாகின்றது. ஆகவே தஞ்சாவூரை விசயாலயன் புதிதாக அமைத்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உரைப்பது பொருத்தமில் கூற்றேயாம். எனவே, இவ்வேந்தன் அதனைப் பிறரிடமிருந்து கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது வலியுறுதல் காண்க.
இனி, விசயாலயன் என்பான் யாவன்? இவனுக்கும் பண்டைச் சோழ மன்னர்க்குமுள்ள தொடர்பு யாது? இவன் தஞ்சாவூரை யாரிடமிருந்து எப்போது கைப்பற்றிக் கொண்டனன் என்பவற்றை ஈண்டு ஆராய்வாம்.
தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் காலத்திலிருந்ததாக வேலூர்ப் பாளையச் செப்பேடுகளால் அறியக்கிடக்கும் குமாராங்குசன்1 என்ற சோழ மன்னனுக்கு இவன் புதல்வனாயிருத்தல் வேண்டும் என்று எண்ணப்படு கின்றது. எனினும், இதனை ஒரு தலையாகத் துணிதற்கேற்ற ஆதாரங்கள் இப்போது கிடைத்தில. இவ் விசயாலயன் வழியினரான பிற்காலச் சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் வரையப் பெற்ற அன்பிற் செப்பேடுகளும்2 ஆனை மங்கலச் செப்பேடுகளும்3 திருவாலங்காட்டுச் செப்பேடுகளும்4 கன்னியாகுமரிக் கல்வெட்டும்5 கடைச்சங்க காலத்திற் புகழுடன் விளங்கிய பெருநற்கிள்ளி, கரிகாலன், செங்கணான், நல்லடி என்னும் சோழ அரசர்களின் வழியில் தோன்றியவன் விசயாலயன் என்று உறுதி யாகக் கூறுகின்றன. இச்செய்தி புனைந்துரை என்று எண்ணுவதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும், அக்காலத்திலிருந்த சோழ மன்னர்கள், தாம் கடைச் சங்ககாலத்துச் சோழரின் வழித்தோன்றல்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தனர் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ள அவர்கள் செப்பேடுகளாலும் கல்வெட்டினாலும் நன்கறியக் கிடக்கின்றது.
சங்ககாலச் சோழரின் வழியினரே கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசு நிறுவிப் புகழோடு ஆட்சிபுரியத் தொடங்கிய வர்கள் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலாக்களினாலும்6 இனிது பெறப்படுகிறது. இச்செய்தி, கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரது கலிங்கத்துப் பரணியாலும்7 உறுதியெய்துகின்றது. ஆகவே, கடைச்சங்க காலத்துச் சோழரின் வழியில் தோன்றியவனே விசயாலயன் என்பது தெள்ளிதின் விளங்குதல் காண்க.
கி. பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த முத்தரையன், தஞ்சைக் கோன் 1 எனவும் தஞ்சை நற்புகழாளன் 2 எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப் பட்டிருத்தலால், தஞ்சை மாநகர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர் தலைநகராதற்கு முன்னர் முத்தரையர்க்குரிய சிறந்த நகரமாக இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது.
இனி, முத்தரையர் என்பார், தஞ்சைமா நகர்க்கு வடமேற்கே இந்நாளில் செந்தலை என்று வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்திலிருந்து3 அதனைச்சூழ்ந்த நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னர் ஆவர். தஞ்சைக் கண்மையிலுள்ள வல்லமும் அவர்கட்குத் தலைநகராக இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.4 அவர்கள், பெரும்பிடுகு, மாற்பிடுகு, விடேல் பிடுகு, பகாப்பிடுகு முதலான பல்லவ அரசர்க்குரிய பட்டங்களை யுடையவர்களாகக் காணப்படுவதால், அம்மரபினர் பல்லவர்க்குத் திறை செலுத்திக் கொண்டு அவர்கட்குக் கீழ்ச் சிற்றரசரா யிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். பழந்தமிழ்க் குடியினரான முத்தரையரது வரையா வண்மை, பெருமுத்தரையர் பெரிது வந்தீயும் கருணைச் சோறு 5 என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரில் பெரிதும் புகழப் பட்டுள்ளது. அம்முத்தரையரே, கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தஞ்சைக்கும், திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நாட்டைப் பல்லவர் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னரா யிருந்து ஆண்டு வந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.6 அன்றியும், அவர்கள் பாண்டியரைப் போரிற் புறங்கண்ட செய்தியும் அச்செந்தலைக் கல்வெட்டுக்களால் புலனாகின்றது. ஆகவே, அவர்கள், பல்லவர்களோடு சேர்ந்து பாண்டியருடன் போர் நிகழ்த்தினர் என்பது தெள்ளிது7. அக்காலத்தில் பழையாறை நகரிலிருந்து அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பை ஆண்டு வந்தவர் சோழர் குடியினர் என்பதும், அன்னோர் தமக்குரிய சோழ மண்டலத்தைத் திரும்பப் பெற்றுத் தம் ஆட்சிக்குள்ளாக்குவதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்தனர் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. எனவே, கி. பி. 846 ஆம் ஆண்டில் பழையாறை நகரிலிருந்த விசயாலய சோழன் என்பான் முத்தரையர் மரபினனாய ஒரு குறுநில மன்னனைத் தாக்கி அவன் ஆளுகைக்குட்பட்டிருந்த தஞ்சை மாநகரைக் கைப்பற்றிக் கொண்டனன் என்பது தேற்றம்1. முத்தரைய மன்னன்பால் திறை பெற்று வந்த பேரரசனும், அவனை அந்நாளில் விசயாலயன் படையெழுச்சியினின்றும் காப்பாற்றாமல் கைவிட்டனன் போலும். பல்லாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக் கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர் நிலைக்குக் கொணர அடிகோலியவன் விசயாலய சோழனே என்பது வரலாற்று ஆராய்ச்சி யாளர் எல்லோரும் கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொள்ளும் செய்தி யாகும். எனவே, சோழர் பேரரசு நிறுவுவதற்கு விசயாலயனால் விதை யிடப் பெற்ற காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம் என்பது தெள்ளிதின் விளங்குதல் காண்க.
அக்காலத்தில் சோழ மண்டலத்தில் முடி சூடி ஆட்சி புரிந்து வந்த சோழ மன்னர்கள் எல்லோரும் இராசகேசரி, பரகேசரி என்ற இரு பட்டங் களையும் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து கொண்டிருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அவற்றுள், பரகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன் நம் விசயாலய சோழன் என்று தெரிகிறது. ஆகவே, இவன் தந்தை இராசகேசரி என்ற பட்டமுடைய வனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
இவன் சற்றேறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும்.2 இவனது இத்தகைய நீண்ட ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த செய்திகளை நன்கு அறிதற்குரிய கருவிகள் இக்காலத்தில் கிடைத்தில. இவன் தஞ்சை மாநகரில் துர்க்கைக்கு ஒரு கோயில் எடுப்பித்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன.1 நிசும்பசூதனி என்பது அவ்வம்மையின் பெயராம். இந்நாளில் அக்கோயில் தஞ்சையில் யாண்டுளது என்பது தெரியவில்லை. எனினும் தஞ்சை மாநகரின் மேலைக்கோட்டை வாயிலில் இப்பொழுதுள்ள கோடியம்மன் கோயிலே அதுவாக இருத்தல் வேண்டுமென்று அறிஞர்கள் கருது கின்றனர்.
இவ்வேந்தன், தன் பகைஞர்களாகிய பேரரசர்களோடும் சிற்றரசர் களோடும் நிகழ்த்திய போர்கள் பலவாகும். இவன் சோழ இராச்சியத்திற்கு அடிகோலிய முதல் மன்னனாதலின் தன் வாழ்நாள் முழுமையும் பகைஞர்களோடு போர் புரிந்து காலங் கழிக்க வேண்டிய நிலையில் இருந்தனன். கடைச் சங்கத்திறுதிக் காலத்திலிருந்த சோழன் செங்கணானுக்கும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்த முதல் ஆதித்த சோழனுக்கும் இடையில், மார்பில் தொண்ணூற்றாறு புண் கொண்ட வென்றிப் புரவலன் என்ற சோழ மன்னன் ஒருவன் மூவருலாக்களில் ஒட்டக்கூத்தரால் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளனன்.
சோழர் தம் நிலையில் தாழ்ந்து குறுநிலமன்னராயிருந்த அக்காலப் பகுதியில் அத்துணைப் புண்களைத் தன் மார்பில் கொள்ளுமாறு பல போர்களைப் புரிந்து வெற்றியெய்தியவன், முதல் ஆதித்த சோழன் தந்தையும் பிற்காலச் சோழர்குல முதல்வனும் சோழர் பேரரசிற்கு அடிகோலியவனும் ஆகிய இவ்விசயாலய சோழனே என்பது நன்கு துணியப்படும். விசயாலயன் என்பதே இவன் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றமை பற்றி அக்காலத்தில் இவனுக்கு வழங்கிவந்த சிறப்புப் பெயராகவும் இருக்கலாம் ஆகவே, தன் மார்பில் தொண்ணூற்றாறு புண்
கொண்ட வெற்றி வேந்தன் நம் விசயாலயனேயாவன். தான் நிகழ்த்திய போர்களில் எல்லாம் வாகை சூடுமாறு அருள்புரிந்தமையால் துர்க்கைக்குத் தன் தலைநகராகிய தஞ்சாவூரில் இவன் கோயில் எடுப்பித்து வழிபட்டனனாதல் வேண்டும். வீரர்கள் கொற்றவையைப் பரவுதல் இயல்பன்றோ?
கி. பி. 854 - ஆம் ஆண்டில் பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் குடமூக்கில் ஒரு போர் நடைபெற்றதென்பது சின்னமனூர்ச் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது1. இந்நாளிலுள்ள கும்பகோணம் என்ற நகரமே குடமூக்கு என்பது முன்னர் உணர்த்தப்பட்டது. மாறவர்மன் பரசக்கரக் கோலாகலன் என்னும் பாண்டி மன்னன் ஒருவன் அந்நகரில், பல்லவர், சோழர், கங்கர். மகதர் முதலானோரை வென்று புறங்காட்டியோடச் செய்தான் என்று அச்செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன2. இச்செய்தி நிருபதுங்க வர்மன் என்னும் பல்லவ அரசனது வாகூர்ச் செப்பேட்டிலும் சொல்லப் பட்டிருக் கின்றது3. இக்குடமூக்குப் போரில் பல்லவரோடு சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்த சோழ மன்னன் இவ்விசயாலயனாகவேயிருத்தல் வேண்டும். ஆகவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழ மண்டலத்தின் தென்பகுதி பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதும் அதனைத் திரும்பக் கைப்பற்றுவதற்குப் பல்லவர், கங்கர் முதலானோர் துணைகொண்டு விசயாலய சோழன் முயன்றிருத்தல் வேண்டும் என்பதும் வெளியாதல் காண்க. ஆனால் அம்முயற்சியில் இவன் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது. பின்னர், கி. பி. 862 - ஆம் ஆண்டில் அரிசிலாற்றங்கரையில் நடைபெற்ற போரில் பல்லவ மன்னனாகிய நிருபதுங்க வர்மனும் இலங்கை வேந்தனாகிய இரண்டாம் சேனனும் ஒருங்கு சேர்ந்து மாறவர்மன் பரசக்கர கோலாகலனைத் தோற்றோடச் செய்தனர்1. இப்போர் நிகழ்ச்சியிலும் விசயாலய சோழன் கலந்து கொண்டனனாதல் வேண்டும். இவன், பல்லவன் நிருபதுங்கவர்மன் பக்கத்திற் சேர்ந்து போர் புரிந்திருத்தல்வேண்டும் என்பது திண்ணம். அரிசிற்கரைப் போரில் வெற்றி பெற்ற நிருபதுங்க வர்மனது கல்வெட்டுக்கள் கண்டியூர், கோவிலடி, லால்குடி முதலான ஊர்களில்2 இது முதற்காணப்படுதலால், சோழ மண்டலத்தில் பாண்டியர் ஆட்சிக்குட் பட்டிருந்த நிலப்பகுதியை அப்பல்லவ மன்னன் கைப்பற்றிக்கொண்டான் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, அந்நாளில் சோழ மண்டலத்தில் ஒரு பகுதி விசயாலய சோழன் ஆட்சிக்கும் மற்றொரு பகுதி பல்லவன் நிருபதுங்கவர்மன் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தனவாதல் வேண்டும்.
இஃது இங்ஙனமாக, பாண்டி நாட்டில் மாறவர்மன் பரசக்கர கோலாகலன் கி. பி. 862 - ஆம் ஆண்டில் இறக்கவே; அவன் மகன் இரண்டாம் வரகுண வர்மன் அரசுகட்டில் ஏறினான்3. அவனுக்குத் தன் தந்தை இழந்த சோணாட்டுப் பகுதியைத் தான் திரும்பக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அவன் தன் கருத்தை நிறைவேற்றுவதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்தமையோடு தன் படை வலியைப் பெருக்கிக் கொண்டும் வந்தான். அக்காலத்தில் சோழ மண்டலத்துள் ஒரு பகுதியை ஆட்சி புரிந்து கொண்டிருந்த விசயாலய சோழன் முதுமை எய்தி வலிகுன்றியிருந்தான். அம்மண்டலத்தின் மற்றொரு பகுதியையும் தொண்டை நாட்டையும் ஒருங்கே அரசாண்டு கொண்டிருந்த பல்லவ வேந்தனாகிய நிருபதுங்க வர்மனும் இறக்கவே, அவன் புதல்வன் அபராஜித வர்மன் முடிசூடி ஆட்சியைக் கைக்கொண்டான். இரண்டாம் வரகுண பாண்டியன், தன் கருத்தை நிறைவேற்றுவதற்கு அதுவே தக்க காலம் என்று கருதி, கி. பி. 880 - ஆம் ஆண்டில் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சோணாட்டிற் புகுந்தான். அந்நாட்டில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள மண்ணி நாட்டு நகரங்களுள் ஒன்றாகிய இடவை1 வரகு பாண்டியனால் தாக்கப்பட்டது. அங்கு நிகழ்ந்த போர் நிகழ்ச்சிகளை விளக்கமாக அறிதற்கியலவில்லை. விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் அந்நாட்களில் இளவரசனாக இருந்தமையின் அவன் வரகுண பாண்டியனை எதிர்த்து இடவையில் போர் புரிந்திருத்தல் கூடும். அவன் பிற வேந்தர் உதவியின்றித் தனியே பாண்டிப் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெறுவதும் எளிதன்று. எனவே, வரகுண பாண்டியன் படையெழுச்சியினால் சோணாடு பல இன்னல்களுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். சோழ மண்டலத்தின் மற்றொரு பகுதி அபராஜித வர்மன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டுளது. அந்நிலையில், முதல் ஆதித்த சோழனுக்கு உதவி புரிந்து வரகுண பாண்டியன் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியையும் கவர்ந்துகொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அப்பல்லவ வேந்தனது இன்றியமையாக் கடமையாயிற்று. ஆகவே, அபராஜித வர்மனும் பாண்டி மன்னனை எதிர்ப்பதற்குப் பெரும் படையுடன் புறப்பட்டான். கங்க1 நாட்டரசனாகிய முதலாம் பிருதிவிபதியும் தன் நண்பனாகிய அபராஜித வர்மனுக்கு உதவி புரியும் பொருட்டுப் படை திரட்டிக் கொண்டு சோழ நாட்டிற்கு விரைந்து வந்தான். எனவே, சோழன், பல்லவன், கங்கன் ஆகிய மூவேந்தரும் ஒருங்குசேர்ந்து பாண்டி வேந்தனை எதிர்த்தனர். கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையிலுள்ள திரும்புறம்பயத்தில்2 பெரும் போர் நடைபெற்றது. போர்க்களத்தில் இரு மருங்கிலும் பல்லாயிரம் வீரர்கள் உயிர் துறந்தனர். பல்லவ மன்னனுக்கு உதவி புரிய வந்த கங்க அரசனாகிய முதலாம் பிருதிவிபதியும் பெரு வீரத்துடன் போர் புரிந்து அபராஜித வர்மன் வாகை சூடி மகிழும்படி செய்தான். அத்தகைய பெருவீரன் போர்க்களத்தில் இறுதியில் கொல்லப்பட்டான்3. எனினும், வரகுண பாண்டியன் தோல்வியுற்றுச் சோழ நாட்டை விட்டு ஓடும் நிலையை எய்தினான். அபராஜித வர்மனும் ஆதித்தனும் வெற்றி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுற்ற அபராஜித வர்மன், தன்னாட்சிக்குட்பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியையும் ஆதித்தனுக்கு வழங்கி யிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடம் உளது. இத்திருப்புறம் பயப் பெரும் போரில் அபராஜிதவர்மன் வெற்றி பெற்றனனாயினும் அவனது படைப்பெருக்கம் இப்போர் நிகழ்ச்சியினால் ஒருவாறு குன்றிவிட்டது எனலாம். அந்நிலையில் அவன் தொண்டை மண்டலத்தையும் சோணாட்டுப் பகுதியையும் ஒருங்கே ஆளுதல் எங்ஙனம் கூடும்? ஆதலால், அவன் தன் ஆளுக்கைக்குட்பட்டிருந்த சோணாட்டுப் பகுதியை ஆதித்த சோழனுக்கு அளித்து விட்டுத் தொண்டை மண்டலத்தையும் திருமுனைப் பாடி நாட்டையும் தன்பால் வைத்துக்கொண்டனன். சோழ மண்டலத்தில் அபராஜிதவர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமைக்குக் காரணம் அதுவேயாம். ஆகவே, திருப்புறம்பயப் பெரும் போரின் பயனாக, பாண்டியர் முதற்பேரரசின் வலிமையும் பல்லவர் வலிமையும் குறைந்துபோயின; சோழர் முடிமன்னராகிச் சோழ மண்டலம் முழுமையும் தம் ஆணை செல்லுமாறு ஆட்சி புரியும் பேறு பெற்றனர். எனவே, பல்லவர் ஆட்சியும் பாண்டியர் ஆட்சியும் சோணாட்டில் சிறிதுமின்றி ஒழிதற்கும் சோழரது ஆட்சி மீண்டும் நிலை பெறுதற்கும் ஏதுவாயிருந்த இத்திருப்புறம்பயப் பெரும் போர் தமிழக வரலாற்றில் முதன்மையான இடம் பெறுதற்குரிய ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இப்பெரும் போருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இளமையில் வென்ற தலையாலங்கானப் போரையும் ஆங்கிலேயர் வென்ற பிளாசிப் போரையும் ஒப்பாகக் கூறலாம். இப்போரில் இறந்த கங்க மன்னனாகிய முதற் பிருதிவிபதியின் நடுகற்கோயில் ஒன்றும் உதிரப்பட்டி என்ற பெயருடைய நிலப்பகுதியும் இக்காலத்தும் திருப்புறம்பயத்தில் உள்ளன. அன்றியும், கச்சியாண்டவன் கோயில் என்ற நடுகற் கோயிலும் போர் நிகழ்ந்த இடம் என்று கருதப்படும் பறந்தலை யொன்றும் அவ்வூரில் இன்றும் காணப்படுகின்றன. கச்சியாண்டவன் கோயில் என்பது அங்குப் போரில் இறந்த ஒரு பல்லவ மன்னனது நடுகல் நிற்கும் இடமாகவும் இருக்கலாம். ஆனால் அங்கு இறந்த பல்லவ அரசன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், இவை எல்லாம் இக்காலத்தினர்க்கு அங்கு நிகழ்ந்த பெரும் போரை அறிவிக்கும் அடையாளங்களாக நிற்றல் அறியத் தக்கதாம். இதுகாறும் கூறியவாற்றால் திருப்புறம்பயத்தில் நடைபெற்ற பெரும் போரின் பயனாகச் சோழர் பேரரசு கி. பி. 880 - ஆம் ஆண்டில் தோன்றிற்று என்பது நன்கு தெளியப்படும்.
இனி, விசயாலய சோழன் இப்போர் நிகழ்ந்தபோது உயிர் வாழ்ந் திருந்தனன் என்பது ஒருதலை. ஆனால், இதில் இவன் கலந்து கொள்ள வில்லை. அதற்குக் காரணம் இவனது முதுமை நிலையே எனலாம். இவன் புதல்வன் முதல் ஆதித்தன் இப்போரில் கலந்து கொண்டு பாண்டியனுடன் பொருத செய்தி முன்னர் விளக்கப் பட்டது. இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் கிடைக்காமையின் இவனைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.
புதுக்கோட்டை இராச்சியத்தில் நார்த்தாமலை என்ற ஊருக்குத் தென்மேற்கேயுள்ள ஒரு குன்றின்மேல் விசயாலய சோழேச்சுரம் என்ற கற்றளி ஒன்றுளது1. அது விசயாலய சோழன் எடுப்பித்த கோயிலாக இருத்தல் வேண்டும். சோழ நாட்டில் விசயாலய சோழச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊர் ஒன்று இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டிருந்தது என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலனாகின்றது. அன்றியும், சோழிய வளாகம் என்ற ஊர் விசயாலய நல்லூர் என்ற பெயருடன் முற்காலத்தில் நிலவியது என்று அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது3. இவையெல்லாம் சோழ நாட்டிலும் பிற நாட்டிலும் இவ்வேந்தனது ஆட்சி பரவியிருந்த இடங்களை நன் குணர்த்துவனவாகும்.
தன் வாணாள் முழுமையும் போர் புரிந்து சோழர் பேரரசிற்கு அடிகோலிய விசயாலய சோழன் கி. பி. 881 - ஆம் ஆண்டில் விண்ணுலகடைந்தான். இவன் பட்டத்தரசியைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவனுக்கு ஆதித்த சோழன் என்ற புதல்வன் ஒருவன் உண்டு என்பது முன்னர்க் கூறப்பட்டது. இவன் தான் இறப்பதற்குப் பத்து ஆண்டுகட்கு முன்னரே கி. பி. 871 - ல் தன் புதல்வனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் ஈடும்படும்படி செய்திருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது4.
முதல் ஆதித்த சோழன் கி. பி. 871-907
இவன், தன் தந்தை விசயாலய சோழன் கி. பி. 881 - இல் இறந்தவுடன் சோழநாட்டில் முடிசூடி அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டனன். இவன் தந்தை பரகேசரியாதலின், இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டு அரசாண்டான். இவனுக்குக் கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது கன்னியாகுமரிக் கல்வெட்டால் புலனாகின்றது.
இவன், பல்லவ மன்னனாகிய அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிக்கொண்டான் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன2. அதற்கேற்ப இவனது ஆட்சியின் இருபத்துமூன்றாம் ஆண்டு முதல்தான் இவன் கல்வெட்டுக்கள் தொண்டைமண்டலத்தில் காணப்படுகின்றன3. அவற்றுள், திருக்கழுக் குன்றத்துக் கல்வெட்டு, ஈண்டுக் குறிப்பிடத் தக்கதொன்று4. அது, பல்லவ அரசர்களான கந்தசிஷ்யனும் வாதாபிகொண்ட நரசிங்கவர்மனும் திருக்கழுக்குன்றத்துச் சிவபெருமானுக்கு அளித்திருந்த இறையிலி நிலத்தை ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு தன் ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் உறுதிப்படுத்திய செய்தியை உணர்த்துகின்றது. இவ்வாறு இவ்வேந்தன் செய்தமைக்குக் காரணம் தொண்டைமண்டல ஆட்சியில் ஏற்பட்ட மாறுதலேயாம். செங்கற்பட்டு ஜில்லா திருமால்புரத்தில் காணப்படும் கல்வெட்டொன்று, ஆதித்த சோழன் திருமாற் பேற்றிறைவனுக்குத் தன் ஆட்சியின் இருபத்தொன்றாம் ஆண்டில் தேவதானமாக நிலம் அளித்தனன் என்றும் அஃது இவன் மகன் முதற்பராந்தக சோழனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் இறையிலியாக அரசாங்க வரிப்புத்தகக் கணக்கில் எழுதப்பட்டதென்றும் கூறுகின்றது. ஆகவே, ஆதித்தன், தன் ஆட்சியின் இருபத்தொன்றாம் ஆண்டிற்கு முன்னரே அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும். அபராஜிதவர்மன் கல்வெட்டுக்களும் அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டிற்குப் பிறகு தொண்டை மண்டலத்தில் யாண்டும் காணப்படவில்ல. இதனைக் கூர்ந்து ஆராயுமிடத்து, கி. பி. 891 - ஆம் ஆண்டிலாதல் அதற்கடுத்த ஆண்டிலாதல் ஆதித்தன் அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. யானை மேலிருந்துகொண்டு போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்றான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு உணர்த்துகின்றது3. தொண்டை மண்டலத்தை ஆதித்தன் கைப்பற்றிய பின்னர், அபராஜிதவர்மனைப் பற்றிய செய்திகளே கிடைக்கவில்லை. ஆதலின், அக்கல்வெட்டுச் செய்தி ஒருகால் உண்மையாயிருப்பினும் இருக்கலாம்.
இந்நாளில் தில்லைத்தானம் என்று வழங்கும் திருநெய்த் தானத் திலுள்ள இவன் கல்வெட்டொன்று, இவனைத் தொண்டை நாடு பரவின சோழன் இராசகேசரிவர்மன் என்று குறிப்பிடுவதும்4 இவன் தொண்டை மண்டலத்தை வென்று தன்னடிப்படுத்தியதையே உணர்த்துவதாகும்.
அன்றியும், பல்யானைக் கோக்கண்டனான ஆதித்த சோழனும் சேரமான் தாணுரவியும் அந்நாளில் உற்ற நண்பர்களாக இருந்தனர் என்பதும் இருவரும் சேர்ந்து விக்கியண்ணன் என்ற தலைவன் ஒருவனுக்கு அவன் புரிந்த அருந்தொண்டைப் பாராட்டிச் செம்பியன் தமிழவேள் என்ற பட்டமும் தவிசும் சாமரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் இறையிலி நிலமும் எக்காளமும் களிற்று நிரையும் வழங்கினார்கள் என்பதும் அத்திருநெய்த்தானக் கல்வெட்டால் வெளியாகின்றன. சோழ மன்னனும் சேர மன்னனும் ஒருங்கு சேர்ந்து பட்டம் வழங்கிப் பாராட்டுமாறு விக்கியண்ணன் புரிந்த அரிய தொண்டு யாது என்பதை அக்கல்வெட்டு அறிவிக்கவில்லை. எனினும், அவனுக்கு வழங்கப்பெற்ற பட்டம் செம்பியன் தமிழவேள் என்று சொல்லப் படுவதால் அவன் ஆதித்தனுக்கு உதவி புரிந்தமை பற்றி அப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமாயின், ஆதித்தன் போர்புரிந்து தொண்டை மண்டலத்தையாதல் கொங்குமண்டலத்தையாதல் கைப்பற்றிய காலத்தில் விக்கியண்ணன் என்ற தலைவன் படையுடன் வந்து இவனுக்குச் சிறந்த உதவிபுரிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
இனி, ஆதித்தன் கொங்கு மண்டலத்தின் மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான் என்று கொங்கு தேச இராசாக்கள் என்ற வரலாற்று நூல் கூறுகின்றது1. அந்நூல் கூறுவது சோழ வம்சத்திலே விசயாடராயன் மகன் ஆதித்தவர்மராயன் சோழதேசம் தஞ்சாவூரிலே பட்டங் கட்டிக்கொண்டு கொங்க தேசத்துக்கு வந்து ராசா வேடர்களைச் செயம் பண்ணித் தலைக்காடு என்ற பட்டணங் கட்டிக் கொண்டு இந்த இராச்சியங்களிலேயே அநேக அக்கிரகாரம் சர்வமானிய மாய்த் தருமம் பண்ணி அந்த அரசை ஆண்டனன் - என்பதாம். ஆதித்தனது கல்வெட்டுக்கள் கொங்கு நாட்டில் காணப்படாவிட்டாலும் இவன் மகன் முதற் பராந்தகச் சோழனுடைய கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் தொடக்கத்திலேயே அந்நாட்டில் உள்ளன2. ஆனால், பராந்தக சோழன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டமைக்குச் சான்றுகள் இதுகாறும் கிடைக்கவில்லை. எனவே, அந்நாட்டிலுள்ள அவன் கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் தொடக்கத் திற்கு முன்னரே அந்நாடு சோழர்களால் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத்துகின்றன. ஆகவே, ஆதித்தன் கொங்குநாட்டை வென்று கைப்பபற்றிக் கொண்டான் என்று கொங்கு தேச ராசாக்கள் சரிதம் கூறுவது உண்மையாதல் காண்க. அன்றியும், சைவசமய குரவர் மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி என்பவர், தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பலமுகடு - கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்1 என்று கூறியிருப்பது, ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தை வென்று அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றபலமுகட்டை அப் பொன்னால் வேய்ந்த செய்தியை உறுதிப்படுத்துகின்றது. எனவே, கொங்குதேச இராசாக்கள் சரிதம் கூறும் ஒரு வரலாற்று நிகழ்ச்சி நம்பியாண்டார் நம்பியின் வாக்கினால் வலியுறுதல் அறியத்தக்கது.
இனி, முதற்பிருதிவிபதியின் பெயரனும் மாற மரையன் புதல்வனு மாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான் ஆதித்தன் ஆட்சியின் இருபத்து நான்காம் ஆண்டில் தொண்டை நாட்டிலுள்ள தக்கோலமென்னும் திருவூறற் கோயிலுக்கு ஒரு வெள்ளிக்கெண்டி அளித்தான் என்று அவ்வூரில் காணப்படும் கல்வெட்டொன்று கூறுகின்றது2. ஆகவே, ஆதித்த சோழனும் கங்க நாட்டு வேந்தனும் அந்நாட்களில் நண்பர்களாக இருந்தனர் என்பது இனிது புலப்படுகின்றது.
எனவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சேரன் சோழன் கங்கன் ஆகிய மூவேந்தரும் உற்ற நண்பர்களாயிருந்தனர் என்பது இதுகாறும் கூறியவற்றால் நன்கு விளங்குதல் காண்க.
இனி, இவ்வாதித்த சோழன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக எடுப்பித்தான் என்று அன்பிற் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன1. இவன் தன் ஆட்சிக் காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், சமயத்தொண்டு புரிவதற்குத் தொடங்கியிருத்தல் வேண்டும். சோழர்க்கு முன்னர் அரசாண்ட பல்லவ அரசர் காலங்களில் சில கோயில்களே கற்றளிகளாக அமைக்கப் பெற்றிருந்தன; பல, செங்கற் கோயில்களாகவே இருந்தன. அவற்றைக் கற்றளிகளாக அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இத்தகைய பெருவேந்தன் உள்ளத்தில் உதிப்பது இயல்பேயாம். இவன் எடுப்பித்த கற்றளிகளுள் திருப்புறம்பயத்திலுள்ள கோயிலையே முதன்மை வாய்ந்ததாகக் கொள்வது மிகப் பொருந்தும். கி. பி. 880 - ஆம் ஆண்டில் திருப்புறம்பயத்தில் நடைபெற்ற பெரும் போரின் பயனாக ஆதித்தனுக்குச் சோழ மண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பேறு கிடைத்தது என்பது முன்னர் விளக்கப் பெற்றது. அதனால் பெருமகிழ்ச்சியுற்ற இவ்வேந்தன் திருப்புறம்பயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்பால் எல்லையற்ற அன்புடையவனாய் அப்பெருமானது திருக்கோயிலை அரிய சிற்பத் திறங்கள் அமைந்த பெருங் கற்றளியாக எடுப்பித்து அதற்கு ஆதித்தேச்சுரம் என்ற பெயரும் வழங்கினான். முற்காலத்தில் அக்கோயில் ஆதித்தேச்சுரம் என்றே வழங்கப்பெற்று வந்தது என்பது அதிற் காணப்படும் கல்வெட்டுக் களால் புலனாகின்றது2. அன்றியும் அக்கோயிலிற் காணப்படும் ஆதித்த சோழன் கல்வெட்டும் அவனால் அக்கோயில் முதலில் கற்றளியாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதை உறுதிப்படுத்துதல் அறியத் தக்கது. இவன், சைவசமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாக ஒழுகிவந்தமையின் வேறு சிவன் கோயில்களும் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் கொங்குநாட்டிலிருந்து பொன் கொண்டு வந்து தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன்வேய்ந்த செய்தி முன்கூறப்பட்டது. சைவத்திருமுறைகளுள் முதல் ஏழும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி என்ற பெரியார், இவனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர் என்பது அவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியினால்1 நன்கு விளங்கும்.
இனி, தஞ்சாவூர் ஜில்லாவில் ஐயன்பேட்டைக் கண்மையிலுள்ள இராசகிரி என்ற ஊர், இவ்வேந்தன் பெயரால் இராசகேசரிச் சதுர்வேதி மங்கலம் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்று வந்தது என்பது கோயில் தேவராயன்பேட்டையிற் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது.
ஆதித்த சோழனுக்கு இருமனைவியர் இருந்தனர். அன்னோர் இளங்கோப்பிச்சி, திரிபுவனமாதேவியாகிய வயிரியக்கன் என்போர். அவர்களுள் இளங்கோப்பிச்சி என்பாள், கி. பி. 897 - ல் திருமழபாடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு ஒரு நுந்தாவிளக்கு வைத்துத் திருவிளக்குப் புறமாகப் பத்துக் கழஞ்சு பொன்னும் அளித்துள்ளனள். இச்செய்தியையுணர்த்தும் அச்கல்வெட்டினால் இவள் வல்லவரையன் மகள் என்பதும் ஆதித்தனுடைய முதல்மனைவி என்பதும் நன்கு வெளியாகின்றன3. ஆகவே, இவள் வேந்தனுக்குப் பட்டத்தரசியாயிருந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. மற்றொரு மனைவியாகிய திரிபுவன மாதேவி என்பாள், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை என்ற ஊர் களிலுள்ள சிவன்கோயில்களில் நுந்தா விளக்குகள் வைத்து அவற்றிற்கு நிவந்தமாகப் பொன்னும் கொடுத்துள்ளனள். இவள் பல்லவர் குடியில் தோன்றியவள் என்பது திருப்பழனத்திலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது.
இவ்வேந்தர் பெருமானுக்குப் பராந்தகன், கன்னரதேவன்1 என்ற இரு புதல்வர் உண்டு. அவர்களுள் பராந்தகனே இவனுக்குப் பிறகு பட்டம் பெற்றவன். ஆதித்தனுடைய இரு மனைவியருள் அப்பராந்தகன் யாருடைய புதல்வன் என்பது புலப்படவில்லை, கிருஷ்ண தேவன் என்பது கன்னடமொழியில் கன்னரதேவன் என்று வழங்கும். எனவே, கி. பி. 880 முதல் கி. பி. 915 வரையில் குந்தள நாட்டில் அரசாண்ட இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவன் மகளும் ஆதித்தனுடைய பட்டத்தரசியுமாகிய இளங்கோப்பிச்சியின் மகனே அக்கன்னர தேவன் என்பது நன்கு துணியப்படும்1. ஆகவே, அவனுக்குத் தாய்ப்பாட்டன் பெயர் இடப்பட்டிருத்தல் அறியத்தக்கது. ஆதித்தனுக்குப் பிறகு பட்டத்தரசியின் புதல்வனாகிய கன்னரதேவன் பட்டம் பெறாமைக்குக் காரணம் தெரியவில்லை. ஒருகால், அவன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இறந்திருத்தல் வேண்டும்; அவ்வாறு இறந்திலனாயின் பராந்தகனுக்குத் தம்பியா யிருந்திருத்தல் வேண்டும். அதுபற்றியே, ஆதித்தன் வயதில் மூத்தவனும் பேராற்றல் படைத்தவனுமாகிய பராந்தகனுக்குச் சோணாட்டு ஆட்சியை அளித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். கன்னர தேவனுக்குப் பூதிமாதேவ அடிகள் என்ற மனைவி யொருத்தி இருந்தனள் என்பது அந்துவநல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. அவள் கொடும்பாளூரிலிருந்த குறுநில மன்னன் ஒருவனுடைய மகள் ஆவள்.
சித்தூர் ஜில்லாவில் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் கி. பி. 907 - ஆம் ஆண்டில் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது4. அவ்வூர் இக்காலத்தில் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது. அங்கு, இவன் புதல்வனாகிய முதற்பராந்தக சோழன் தன் தந்தையை நினைவு கூர்தற் பொருட்டுப் பள்ளிப்படையாக1 ஒரு கோயில் எடுப்பித்தான். அக்கோயிலுக்கு ஆதித்தேசுவரம், கோதண்ட ராமேசுவரம் என்னும் பெயர்கள் அந்நாளில் வழங்கி வந்தன என்பது அதிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகிறது2. ஆதித்தனுக்குக் கோதண்டராமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துவது ஈண்டு அறியத்தக்கது3. தன் தந்தையின் பள்ளிப்படையாகிய கோதண்டராமேசுவரத்தில் புரட்டாசித் திங்களில் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கும் மாவிரதி களுள்ளிட்ட அறுசமயத் தவசிகள் இருநூற்றுவர், அந்தணர் முந்நூற்றுவர், அன்பரான பல சமய ஐந்நூற்றுவர் ஆகிய ஆயிர வர்க்கும் அவ்விழா நாட்களில் நாள்தோறும் உணவளிப்பதற்கும் முதற்பொருளாக நூற்றைந்து கழஞ்சு பொன் பராந்தக சோழனால் கொடுக்கப்பட்டுள்ளது.
முதற் பராந்தக சோழன் கி. பி. 907 - 953
ஆதித்த சோழன் கி. பி. 907 - ல் இறந்தவுடன் அவன் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் தஞ்சை மாநகரில் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றான். சோழ மன்னர்கள் மாறி மாறிப் புனைந்துகொண்ட இரு பட்டங்களுள் இவ்வேந்தன் பரகேசரி என்ற பட்டமுடையவன் ஆவன்.
கி. பி. 907 - ல் இவன் சோழ இராச்சியத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட காலத்தில் வடக்கேயுள்ள திருக்காளத்தி வரையில் தொண்டை மண்டலம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அன்றியும், கொங்கு மண்டலமும் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது என்பது அங்குக் காணப்படும் இவன் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. எனவே, தன் தந்தையால் இத்தகைய உயர்நிலைக்குக் கொண்டுவரப்பட்டுத் தனக்கு உரிமையிற் கிடைத்த சோழ இராச்சியத்தை எடுப்பும் இணையுமற்ற சீரிய நிலைக்குக் கொணர வேண்டும் என்பது இவனது பெருவிருப்பம். அதனை நிறைவேற்றுவதற்கேற்றவாறு இவன் பெரிய வீரனாகவும் இருந்தான். அன்றியும், இவனது ஆட்சி நாற்பத்தாறு ஆண்டுகள் நடைபெற்றமை அதற்குற்ற துணையாகவும் அமைந்தது.2 இவனது நீடிய ஆட்சியில் எத்துணையோ பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும். எனினும், இவன் காலத்துக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறியக்கிடப்பன மிகச் சிலவேயாம். இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்3 இவனை மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று கூறுகின்றமையின் கி. பி. 910 -ஆம் ஆண்டில் இவன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று மதுரையைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அந்நாளில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் என்போன். பராந்தகன் நிகழ்த்திய போரில் அவன் தோல்வியுற்று இலங்கை வேந்தனாகிய ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை யுதவுமாறு வேண்டிக்கொண்டான். இலங்கை வேந்தனும் இராசசிம்மன் வேண்டுகோட்கிணங்கி, சக்க சேனாதிபதியின் தலைமையில் பெரும் படையொன்றைப் பாண்டி நாட்டிற்கனுப்பினான்2. அப்படைப் பெருக்கைக் கண்ட பாண்டி வேந்தன் களிகூர்ந்து, அதன் துணைகொண்டு நாவலந்தீவு முழுமையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முடியும் என்று கூறினான்3. பின்னர், பாண்டிப் படையையும் ஈழப் படையையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு இராசசிம்ம பாண்டியன் பராந்தகனோடு போர்புரியப் புறப்பட்டான். வெள்ளூர்4 என்ற இடத்தில் இரு வேந்தர்க்கும் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில், பராந்தகன் அளவற்ற வீரர்களையும் யானை களையும் குதிரைகளையும் கொன்று குவித்து மீண்டும் மதுரைமாநகரைக் கைப்பற்றினான். பாண்டிப் படையும் இலங்கையிலிருந்து வந்த துணைப் படையும் புறங்காட்டி ஓடின5. இராசசிம்ம பாண்டியன் இம்முறையும் தோல்வியெய்தினான். இச்செய்திகளுள் சிலவற்றை இரண்டாம் பிருதிவிபதியின் உதயேந்திரச் செப்பேடுகளிலும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் காணலாம். இலங்கைப் படைத் தலைவனாகிய சக்கசேனாபதி என்பான் மறுமுறையும் பராந்தக சோழனோடு போர்புரிய முயன்றபோது அவன் ஒருவகை நோயினால் இறந்துபோனான் என்றும் அதனையறிந்த இலங்கை வேந்தன் ஈழப்படையைத் தன் நாட்டிற்கு அழைத்துக் கொண்டான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. ஆனால் இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் இச்செய்தி காணப்படவில்லை.
இப்போரில் பராந்தக சோழனோடு சேர்ந்துகொண்டு பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தோர் கொடும்பாளூர்க் குறுநில மன்னனும் கீழைப் பழுவூரிலிருந்த சிற்றரசனாகிய பழுவேட்டரையன் கண்டன் அமுதனும் ஆவர்2. சோழ மண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும்3 பரதூருடையான் நக்கன் சாத்தனும் பராந்தக சோழனுக்குப் படைத்தலைவராக இருந்தனர்.
இனி, இராச சிம்ம பாண்டியனது சின்னமனூர்ச் செப்பேடுகள் அவன் கொடும்பாளூர்த் தலைவனையும் தஞ்சை மன்னனையும் போரிற் புறங்கண்டான் என்று கூறுகின்றன4. எனவே, இராச சிம்மனுக்கும் பராந்தகனுக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்திருத்தல் கூடும். அவற்றுள் சிலவற்றில் அவன் வெற்றி எய்தியிருந்தலும் இயல்பே. இறுதியில் வெள்ளூரில் நடைபெற்ற பெரும்போரில் இராசசிம்மன் தோல்வியுறவே பராந்தகன் வெற்றிபெற்றுப் பாண்டிமண்டலத்தைக் கைப்பற்றினான். இவன் இராசசிம்மனோடு வெள்ளூரில் நிகழ்த்திய இப்போர் கி. பி. 919 - ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது கீழைப் பழுவூரிலும் திருப்பாற்கடல் என்ற ஊரிலும் காணப்படும் இரு கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது5. இப்போர் நிகழ்ச்சியே பராந்தகன் பாண்டிநாடு முழுமையும் கைப்பற்றுவதற்குப் பெரிதும் ஏதுவாக இருந்தது எனலாம். பாண்டி நாட்டில் பராந்தகனது கல்வெட்டுக்கள் இவனது ஆட்சியின் இருபத்து நான்காம் ஆண்டு முதல்தான் காணப்படுகின்றன6. ஆகவே, இவன் உள்நாட்டுக் குழப்பங்களையும் கலகங்களையும் அடக்கி அந்நாடு முழுமையும் தன் ஆட்சியின்கீழ் அமைத்தற்கு அத்துணையாண்டுகள் ஆயின என்பது அறியத்தக்கது.
இராச்சியத்தை இழந்த இராச சிம்ம பாண்டியன் சிங்களத்திற்குச் சென்று அந்நாட்டரசனாகிய நான்காம் தப்புலன் பால் (கி. பி. 923 - 934) உதவி பெறுமாறு அங்குத் தங்கியிருந்தான். சோழனோடு போர்புரிந்து பாண்டி நாட்டைப் பெற்று அவனுக்கு அளிப்பதாக உறுதி கூறிய சிங்கள மன்னனும் அவ்வாறு உதவாமை கண்டு, அங்குத் தனக்குச் செய்யப்படும் பேருபசாரங்களைப் பெற்றுக்கொண்டு வாளாத் தங்கி யிருப்பதால் ஒரு பயனுமில்லை என்பதை யுணர்ந்த இராச சிம்மன், தன் முன்னோர் களிடமிருந்து தனக்குக் கிடைத்த சுந்தர முடியையும் பிற அரசச் சின்னங் களையும் அவ்வேந்தன்பால் அடைக்கலப் பொருளாக வைத்துவிட்டு, தன்தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேரநாட்டிற்குச் சென்று அங்கு வசித்து வந்தான்.
பராந்தக சோழன், பாண்டிநாடு முழுமையும் தன் ஆட்சிக் குட் படுத்திய பின்னர், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையில் முடிசூட்டு விழா நடத்துவதற்கு முயன்றபோது பாண்டியர்க் குரிய முடியும் பிற அரசச் சின்னங்களும் அங்குக் காணப்பட வில்லை. அவையனைத்தும் நாட்டை விட்டுச்சென்ற இராசிம்ம பாண்டியனால் இலங்கைக்குக் கொண்டு போகப்பட்டு அந்நாட்டு வேந்தனிடம் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்த பராந்தகன், அவற்றை வாங்கிவருமாறு சில தூதர்களைச் சிங்கள நாட்டிற்கு அனுப்பினான்2. அக்காலத்தில் அந்நாட்டில் அரசாண்டு கொண்டிருந்த நான்காம் உதயன் என்பான் அவற்றைக் கொடுக்க மறுக்கவே, பராந்தகன் அவன் நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் ஆற்றலால் கைப்பற்றிக் கொண்டுவர வேண்டும் என்று கருதினான். அதுபற்றியே ஈழநாட்டிற்குப் பெரும்படையொன்று அனுப்பப் பெற்றது. அந்நாட்டில் நடைபெற்ற போரில் ஈழநாட்டுப் படைத்தலைவன் இறந்தான். பராந்தகன் படை வெற்றி யெய்தவே, சிங்கள வேந்தனாகிய உதயன், வேறு வழியொன்றும் அறியாதவனாய்ப் பாண்டியன் கொடுத்துச் சென்ற முடியையும் பிறவற்றையும் எடுத்துக் கொண்டு இலங்கையின் தென்கீழ்ப் பகுதியாகிய ரோகண நாட்டிற்குப் போய்விட்டான்1. சோணாட்டுப் படை அவற்றைக் கைப்பற்ற முயன்றும் அங்குச்செல்ல முடியாமல் தன் நாட்டிற்குத் திரும்பிற்று. இவ்வரலாற்றை மகாவம்சத்தில் காணலாம். பராந்தகன் ஈழநாட்டுப் போரில் வெற்றி எய்தியும் தன் விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை2. இவனது ஆட்சியின் 37 - ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் இவனை மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் 3 என்று குறிப் பிடுவதால் இவனது ஈழநாட்டுப் படையெழுச்சி கி. பி. 944 - ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.
இவன், பாண்டி நாட்டையும் ஈழநாட்டையும் வென்ற செய்தி, கலிங்கத்துப்பரணிலும் குலோத்துங்க சோழனுலாவிலும் இராசராச சோழனுலாவிலும் சொல்லப்பட்டிருப்பது உணரற் பாலதாம்.
இனி, பராந்தகனது ஆட்சியின் 15 - ஆம் ஆண்டில் வரையப்பெற்ற உதயேந்திரச் செப்பேடுகள் இவன் இரண்டு வாணர் குல அரசர்களை வென்று அன்னோரது வாணகப்பாடி நாட்டைக் கங்க மன்னனாகிய இரண்டாம் பிருதிவிபதிக்கு வழங்கியதோடு அவனுக்குச் செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டமும் அளித்தனன் என்று கூறுகின்றன1. அன்றியும், சோழசிங்க புரத்திலுள்ள பராந்தகனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டொன்று வல்லாள என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இரண்டாம் பிருதிவிபதி என்பான் பகைஞர்களை வென்று இவ்வேந்தனுக்கு உதவிபுரிந்தானென்று உணர்த்துவதோடு இவனால் வழங்கப்பட்ட வாணாதிராசன் என்ற பட்டத்தைப் பெற்றான் என்றும் கூறுகின்றது2. அக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற வல்லாள என்ற ஊர், வாணர்களின் தலைநகரமாகிய வல்லமாக 3 இருத்தல் வேண்டும். அன்றியும், அதில் குறிப்பிடப்பட்ட பகைஞரும் வாணர் களாகவே இருத்தல் வேண்டும். எனவே, வல்லத்தில் நடைபெற்ற போரில், பராந்தக சோழனும் இரண்டாம் பிருதிவிபதியும் ஒருங்கு சேர்ந்து வாணர்குல மன்னரை வென்றனர் என்பது நன்கறியப்படுகின்றது.
இனி, வாணர் என்பார், பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் ஜில்லா வரையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகிய வாணகப்பாடி நாட்டைப் பண்டைக்காலத்தில் ஆட்சிபுரிந்த ஓர் அரச மரபினர் ஆவர். அன்னோர், வல்லம், வாணபுரம் என்ற நகரங்களைத் தம் தலைநகரங்களாகக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் அப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். அவர்கள் மாபலியின் வழியில் வந்தவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வதைப் பல கல்வெட்டுக்களில் காணலாம்4. அவர்களது நாடு பெரும்பாணப் பாடி என்றும் வடுகவழிமேற்கு என்றும் முற்காலத்தில் வழங்கப்பட்டது. தொண்டைமண்டலம் பல்லவர் ஆட்சிக்குப்பட்டிருந்த காலத்தில் வாணர்குல வேந்தர், அவர்கட்குத் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராக இருந்து வந்தனர். முதல் ஆதித்தசோழன் அபராஜித வர்மனை வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய நாட்களில் வாணர் சுயேச்சை யெய்தி, பிறகு தனியரசு புரிந்துவந்தனர்1. ஆகவே, பராந்தக சோழன் அவர்களை வென்றடக்குவது இன்றியமையாததாயிற்று. அம்முயற்சியில்தான் கங்கமன்னனாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான், பராந்தகனுக்கு உதவிபுரியவந்து வல்லத்தில் நிகழ்ந்த போரில் வாணர்களை வென்று அதற்குப் பரிசிலாக வாணகப்பாடி நாட்டையும் செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டத்தையும் இவ்வேந்தன்பால் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.
பராந்தகன்பால் தோல்வியுற்றுத் தம் நாட்டை இழந்த வாணர்குல வேந்தர் இரண்டாம் விசயாதித்தனும் அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தனும் ஆவர்2. பராந்தகன் கி. பி. 910 ஆம் ஆண்டில் இராசசிம்ம பாண்டியனோடு நடத்திய முதற்போருக்குப் பின்னர் வாணரை வென்றிருத்தல் வேண்டும். இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில், தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள புள்ளமங்கைக் கோயிலில் சிறு காலைச்சந்தி நடத்துவதற்கு நிவந்தமாக மாவலிவாணராயன் நிலம் வாங்கிக் கொடுத்தானென்று அவ்வூர்க் கல்வெட்டொன்று3 கூறுகின்றது. இரண்டாம் பிருதிவிபதி அவ்வாண்டிலேயே செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டத்துடன் விளங்கினான் என்பது அக்கல்வெட்டால் புலனாகின்றது. எனவே, அக்கங்க மன்னன் அப்பட்டம் பெறுவதற்கு ஏதுவா யிருந்த வல்லத்துப் போர், கி. பி. 913. ஆம் ஆண்டிற்கு முன்னர் நடை பெற்றதாதல் வேண்டும். ஆகவே, பராந்தகன் வாணரை வென்று அன்னோர் நாட்டைக் கி. பி. 911, 912 - ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். வாணர்குல வேந்தனாகிய இரண்டாம் விசயாதித்தன் போரில் இறந்தமையால்1 அவன்மகன் இரண்டாம் விக்கிரமாதித்தன் என்பவன், இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து, அவன் ஆதரவிலிருந்து கொண்டு தக்க காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
இனி, பராந்தகன் வைதும்ப மன்னனையும் போரில் வென்றான் என்று உதயேந்திரச் செப்பேடுகள்2 உணர்த்து கின்றன. வைதும்பர் என்பார் கி. பி. 9 - ஆம் நூற்றாண்டில் ரேநாண்டு நாட்டை அரசாண்ட தெலுங்கர் என்றும் அன்னோர் கங்கர்க்குப் பகைஞராகவும் வாணர்க்கு நண்பராகவும் இருந்தவர் என்றும் வரலாற்றாராய்ச்சியில் வல்ல பேராசிரியர் ஒருவர் கூறுகின்றனர்3. பராந்தகன் வாணரோடு நிகழ்த்திய போரில் அவர்கட்குத் துணைவனாயிருந்த வைதும்ப வேந்தன் ஒருவனையும் வென்றிருத்தல் கூடும். ஆனால் பராந்தகன் போரில் வென்ற வைதும்பன் யாவன் என்பதும் அவன் எந்த நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் என்பதும் இப்போது புலப்படவில்லை4. தோல்வியுற்ற வைதும்ப வேந்தனும் வாணரைப்போலவே இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவன்பால் தங்கியிருந்தான்.
வைதும்ப மகாராசன் என்னும் பட்டமுடைய இரண்டு சிற்றரசர், கி. பி. 961, 964, 965 - ஆம் ஆண்டுகளில் இருந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர், கிராமம் என்ற ஊர்களில் காணப்படும் மூன்றாம் கிருஷ்ணதேவன் காலத்துக் கல்வெட்டுகளால்5 நன்கறியக் கிடக்கின்றது. எனவே, பராந்தகன்பால் தோல்வி யெய்திய வைதும்பராயன் அவ்விருவருள் ஒருவனாதல் வேண்டும். அன்றேல் அன்னோர்க்குத் தந்தையாதல் வேண்டும்.
இனி, பராந்தகனது ஆட்சியின் 34 - ஆம் ஆண்டாகிய கி. பி. 941 - ல் இவன் படைத் தலைவன் சிறுகுளத்தூர் மாறன் பரமேசுவரனான செம்பியன் சோழியவரையன் என்பவன் சீட்புலியைவென்று நெல்லூரையும் அழித்துத் திரும்புங்கால் தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூரில் தங்கி, அவ்வூர்க் கோயிலில் நாள்தோறும் நுந்தாவிளக்கு எரிப்பதற்குச் சாவா மூவாப் பேராடுகள் தொண்ணூறு வைத்து வந்தான் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று1 கூறுகின்றது. சீட்புலி என்பது நெல்லூர் ஜில்லாவில் வட பகுதியிலிருந்த ஒரு நாடு2. அந்நாளில் அது கீழைச் சளுக்கிய இராச்சியத்தின் தென் பகுதியிலிருந்தது என்று தெரிகிறது3. எனவே, கீழைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் வீமனை வென்றடக்கும்பொருட்டு அப்படை யெழுச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப்படை யெழுச்சியினால், சீட்புலி நாடும் நெல்லூரும் பராந்தகன் ஆட்சிக்குட்பட்டுப் போயின என்று கூற முடியவில்லை. அஃது எங்ஙனமாயினும், தென்குமரி முதல் நெல்லூர் ஜில்லாவின் வட எல்லை வரையிலும் பராந்தகனது ஆற்றலும் வீரமும் பரவியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.
இவன், தன் இராச்சியத்தை இங்ஙனம் உயர்நிலைக்குக் கொண்டு வந்து தன் வீரமும் ஆணையும் யாண்டும் பரவ ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காலத்தில் வடபுறத்தில் பெருவேந்தராயிருந்து அரசாண்டவர் இராஷ்டிரகூட மரபினர் ஆவர். இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ண தேவன், தன் மகள் இளங் கோப்பிச்சியை முதல் ஆதித்த சோழனுக்கு மணம் செய்து கொடுத்த செய்தி முன் கூறப்பட்டது. எனவே, ஆதித்தன் காலத்தில் சோழரும் இராஷ்டிரகூடரும் நெருங்கின உறவினாற் பிணிக்கப்பட்டிருந்தனர் என்பது தேற்றம். கி. பி. 915 - ஆம் ஆண்டின் இறுதியில் இராஷ்டிரகூட வேந்தன் இரண்டாம் கிருஷ்ணன் இறக்கவே, அவன் பேரன் மூன்றாம் இந்திரன் என்பான் அரசுகட்டில் ஏறினான்4. அவ்விந்திரனுக்கு நான்காம் கோவிந்தன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். அவன் வனப்பில் காமவேள் போன்றவன்1 இந்திரனும் கி. பி. 918 - ல் அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான்2. அவ் விராஷ்டிரகூட அரச குமாரனுக்கு நம் பராந்தக சோழன் தன் மகள் வீரமாதேவியை மணஞ்செய்து கொடுத்து அவ்வரச குடும்பத்தை நெருங்கிய உறவினாற் பிணித்துக் கொண்டான்3. தன் தந்தை இறந்த பின்னர், நான்காம் கோவிந்தன் குந்தள நாட்டில் முடி சூடி, கி. பி. 934 வரையில் ஆட்சி புரிந்தான். அந்நாட்களில் அவன் செயல்கள் பொது மக்கட்கு மிக்க வெறுப்பை யுண்டுபண்ணின. அன்றியும் குறுநில மன்னர்களும் அரசாங்க அலுவலாளர்களும் அவன் செய்கைகளைப் பெரிதும் வெறுத்து அவன்பால் அன்பில்லாதவராயினர்4 ஆகவே குந்தள இராச்சியத்தில் அவனுக்கு ஆதரவு வரவரக் குறைந்துகொண்டே வந்தது எனலாம். அந்நாட்களில் கீழைச் சளுக்கிய மன்னர்களாகிய யுத்த மல்லனுக்கும் இரண்டாம் வீமனுக்கும் மனவேறுபாடு உண்டாகிப் பகை மூண்டது. கி. பி. 934 - ல் இராஷ்டிரகூட வேந்தனாகிய நான்காம் கோவிந்தன் யுத்தமல்லனுக்கு உதவிபுரியவேண்டி இரண்டாம் வீமனை எதிர்த்துப் போர் புரிந்து தோல்வி எய்தினான்5. அப்போது கோவிந்தனுடைய சிறிய தந்தையின் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் என்பவன், நாட்டில் அவனுக்கு ஆதரவு சிறிதும் இல்லை என்பதை நன்குணர்ந்து, உள்நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டுபண்ணி, இராஷ்டிரகூடச் சிங்காதனத்தைக் கவர்ந்து தன் தந்தைக்கு முடி சூட்டினான்6. எனவே, மூன்றாம் கிருஷ்ணதேவன் தந்தையும், மூன்றாம் இந்திரன் தம்பியுமாகிய மூன்றாம் அமோகவர்ஷன் என்பான் கி. பி.. 935 - ல் மானியகேட மாநகரில் இராஷ்டிரகூட வேந்தனாய் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். தன் இராச்சியத்தை இழந்த கோவிந்தனும் தன் மனைவி வீரமாதேவியோடு தஞ்சைமாநகர்க்கு வந்து தன் மாதுலன் பராந்தக சோழன்பால் தங்கியிருத்தான். அவன் கி. பி. 939 வரையில் சோழ நாட்டில் இருந் திருத்தல் வேண்டும் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது1. மூன்றாம் அமோகவர்ஷன் கி. பி. 939 - ஆம் ஆண்டின் இறுதியில் இறந்தபோது2, இராச்சியத்தை இழந்து தஞ்சைமாநகரில் தங்கியிருந்த கோவிந்தன் தனக்குரிய இரட்ட மண்டலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அதுவே தக்க காலமென்று கருதித் தன் மாதுலன் துணைகொண்டு முயற்சி செய்தான். எனவே, பராந்தக சோழனது படையும் இரட்ட மண்டலத்திற்குப் போருக்குப் புறப்பட்டது. அமோகவர்ஷன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ணதேவனுடைய தமக்கையின் கணவனும் கங்க நாட்டு வேந்தனுமாகிய பூதுகன் என்பான், அச்செய்தியை யறிந்து பெரும் படையுடன் கிருஷ்ண தேவனுக்கு உதவிபுரிய வந்தான்3. இரு பகுதியினர்க்கும் இராஷ்டிரகூட நாட்டில் கி. பி. 940 -ன் ஆரம்பத்தில் பெரும்போர் நடைபெற்றது. அப்போரில் கோவிந்தனுக்கு உதவிபுரியச் சென்ற சோணாட்டுப் படை தோல்வியுறவே, மூன்றாம் கிருஷ்ணதேவன் வெற்றிபெற்று இராஷ்டிரகூடச் சிங்காதனத்தைக் கைப்பற்றினான்4. அவனது ஆட்சியும் கி. பி. 968 வரையில் இரட்ட மண்டத்தில் நடைபெற்றது என்பது அந்நாட்டில் காணப்படும் அவன் கல்வெட்டுக்களாலும், செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது5. பராந்தக சோழன் மருகனாகிய நான்காம் கோவிந்தனைப் பற்றிய செய்திகள் அப்போருக்குப் பிறகு கிடைக்கவில்லை. பராந்தக சோழன் தன் மருகன் பொருட்டுச் செய்த முயற்சியின் பயனாக இவனுக்கு மூன்றாம் கிருஷ்ணதேவன் பெரும் பகைவனானான்; அவனது ஆட்சியும் இரட்ட மண்டலத்தில் நிலைபெறுவ தாயிற்று. அன்றியும், கங்க நாட்டரசனாகிய இரண்டாம் பூதுகனும் மூன்றாங் கிருஷ்ண தேவன்பால் நெருங்கிய உறவும் நட்பும் பூண்டு அவனுக்கு உற்றுழி யுதவும் நிலையில் இருந்தான். பராந்தகன்பால் தம் நாடுகளை இழந்து வருந்திய வாணரும் வைதும்பரும் மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து அவனால் ஆதரிக்கப்பெற்று இரட்ட மண்டலத்தில் தங்கியிருந்தனர். அந்நிலையில் பராந்தகன்பால் பெருமதிப்பு வைத்துப் பேரன்புடன் ஒழுகிவந்தவனும் கங்கநாட்டின் தென் பகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவனுமாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான் கி. பி. 940 -ல் இறந்தான். அவன் புதல்வன் விக்கியண்ணன் என்பவனும் தன் தந்தை இறப்பதற்குமுன் இறந்துவிட்டான்1 எனவே, சோழ இராச்சியத்திற்கு வடமேற்கே யிருந்த கங்க நாடு முழுவதும், கங்கருள் மற்றொரு கிளையைச் சேர்ந்தவனும் மூன்றாம் கிருஷ்ண தேவன் தமக்கையின் கணவனும் பராந்தக சோழனுக்குப் பகைவனும் ஆகிய இரண்டாம் பூதுகன் ஆட்சிக்குள்ளாயிற்று. ஆகவே, சோழ இராச்சியத்திற்கு வடக்கேயிருந்த நாடுகளில், பராந்தகனுக்குப் பகைவர்கள் மிகுந்து ஒருங்கு சேர்ந்திருந்தனர் என்பது தெள்ளிது.
இனி, பராந்தகனும் தன் மருகன் கோவிந்தன் இரட்ட மண்டலத்தை இழந்து தஞ்சைக்கு வந்த பிறகு, வடபுலத்தில் தனக்குப் பகைவர் தோன்றியிருந்தமையை உணராமலில்லை. எனவே, இவன் தன் முதற் புதல்வனும் பெருவீரனுமாகிய இராசாதித்தன் என்பான் பெரும் படை யோடு திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரிலிருந்து கொண்டு சோழ இராச்சியத்தின் வடபகுதியைக் கண்காணித்து வருமாறு கி. பி. 936 - ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தான்2. திருநாவலூர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர் தாலூக்காவில் இந்நாளில் திருநாமநல்லூர் என்று வழங்கும் பேரூராகும். அவ்வூர், இராசாதித்தபுரம் என்றும் அங்குள்ள கோயில் இராசாதித்தேசுவரம் என்றும் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பதும் இராசாதித்தனுடைய படை வீரர்களும் பணி மக்களும் அக் கோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர் என்பதும் அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றன1. ஆகவே, அரசகுமாரனாகிய இராசாதித்தன் தன் தந்தை விரும்பியவாறு அவ்வூரில் சில ஆண்டுகள் தங்கிச் சோழ இராச்சியத்தின் வடபகுதியைக் காத்து வந்தனனாதல் வேண்டும்2. அந்நாட்களில் தான் அவனுடைய படை வீரர்களும் பணிமக்களும் அக் கோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித் திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவ்வூர்க்கண்மையில் பெண்ணை யாற்றங்கரையிலுள்ளதும் இந்நாளில் கிராமம் என்று வழங்கிவருவதும் ஆகிய முடியூரில் இராசாதித்தன் படைத் தலைவனும் சேரநாட்டு நந்திக்கரைப் புத்தூரினனும் ஆகிய வெள்ளங் குமரன் என்பவன் கி. பி. 936 - ஆம் ஆண்டில் தன் படையுடன் தங்கியிருந்தனனென்று அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டு3 உணர்த்துகின்றது. அப்படைத் தலைவனே, கி. பி. 943 - ஆம் ஆண்டில் அவ்வூரில் ஆற்றுத்தளி என்ற சிவன் கோயில் ஒன்று எடுப்பித்தான் என்று மற்றொரு கல்வெட்டு அறிவிக் கின்றது4. அன்றியும், பராந்தகன் புதல்வருள் ஒருவனும் இராசாதித்தன் தம்பியுமாகிய அரிகுலகேசரி என்னும் அரசகுமாரன் அந்நாட்டில் படை யோடு தங்கியிருந்தனன் என்பது திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டுக் களால் புலனாகின்றது5. இவற்றையெல்லாம் ஆராய்ந்துண்மை காணு மிடத்து, வடபுலத்திலிருந்து பகைவர் படையெடுத்து வருதல் கூடும் என்பதைப் பராந்தகன் நன்குணர்ந்து, அதனைத் தடுத்துத் தன் இராச்சியத்தைப் பாதுகாக்கவேண்டியே இத்தகைய ஏற்பாடுகள் செய்திருந்தான் என்பது தெளிவாக விளங்குதல் காண்க. எனினும், காலப்போக்கில் நிகழ்வனவற்றை இவ்வுலகில் யாவர் தாம் தடுக்க முடியும் ? ஆகவே, காலச் சக்கரத்தின் சுழற்சியினால் நிகழ்வன நிகழ்ந்தே தீரும் என்பது ஒரு தலை. எத்தகைய பேரறிவும், பேராற்றலும் சூழ்ச்சித் திறனும் ஊழால் நிகழ்வனவற்றை ஒரு காலும் வெல்லமாட்டா என்பது தெளிவு.
இனி, இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன், தன் தந்தை இறந்த பிறகு முடி சூட்டுவிழா நடத்துவதற்குக் கி. பி. 940 -ல் ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, பராந்தகச் சோழன் இரட்ட மண்டலத்தைக் கைப்பற்றித் தன் மருகன் நான்காம் கோவிந்தனுக்கு அளிக்கும் பொருட்டுப் படையெடுத்துச் சென்றமையை அவ்வேந்தன் சிறிதும் மறந்தானில்லை. எனவே, தக்க படை வலிமையுடன் சென்று சோழ இராச்சியத்தைத் தாக்கிப் பராந்தகனுக்குத் தன் ஆற்றலைப் புலப்படுத்துவதோடு இடையூறு புரிதலும் வேண்டும் என்பது அவன் உள்ளத்தில் ஊன்றிக் கிடந்ததோர் எண்ணமாகும். அவ்வெண்ணத்தை நிறைவேற்றிக் கோடற் பொருட்டுச் சுமார் எட்டு ஒன்பது ஆண்டுகள் வரையில் அவன் தன் படைகளைப் பெருக்கிக் கொண்டே வந்தான். இறுதியில் கி. பி. 949 - ஆம் ஆண்டில், அவன் சோழ இராச்சியத்தின்மீது படையெடுத்தான்1. அந்நாளில், கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகனும் பெரும்படையோடு அவனுக்கு உதவி புரிய வந்தான்2. எனவே, இராஷ்டிரகூடப் படையும் கங்கப்படையும் ஒருங்கு சேர்ந்து சோழ இராச்சியத்தின் வட பகுதியிலிருந்த தொண்டை நாட்டைத் தாக்கின. அந்நாளில், திருநாவலூரில் படையுடன் தங்கியிருந்த இளங்கோவாகிய இராசாதித்த சோழன், வடவேந்தர் படையெடுப்பைத் தடுத்துப் போர் புரியத் தொடங்கினான். வட ஆர்க்காடு ஜில்லாவில் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கே ஆறு மைல் தூரத்திலுள்ள தக்கோலம் என்ற ஊரில் இரு பெரும் படைகளும் கடும்போர் புரிந்தன3. இருபக்கத்திலும் பல்லாயிரம் வீரர்கள் உயிர் துறந்தனர். போர் மிகக் கடுமையாக நடைபெற்றதாயினும், சோழ நாட்டுப் படைவீரர்கள் சிறிதும் அஞ்சாமற் போர் புரிந்து தம் வீரத்தையும் ஆற்றலையுங் காட்டினர். வெற்றித் திரு எவர்க்குரித்தாகுமோ என்ற ஐயப்பாடும் ஏற்பட்டது. அந்நிலையில். கங்கமன்னனாகிய இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று, யானைமேலிருந்து போர் புரிந்துகொண்டிருந்த அரசகுமார னாகிய இராசாதித்தன் மார்பில் தைக்கவே, அவனும் விண்ணுல கடைந்தான்1. அந் நிகழ்ச்சியினால் சோணாட்டுப் படைவீரர்கள் மன முடைந்து போகவே, இராஷ்டிரக்கூடப் படைகள் ஊக்கத்தோடு போர் புரிந்து வெற்றி எய்தின; மூன்றாங்கிருஷ்ணதேவனும் வாகை சூடினான். இப்போர் நிகழ்ச்சி, ஆனைமங்கலச் செப்பேடு களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது2. பங்களூர்ப் பொருட் காட்சிச் சாலையிலுள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று3, பூதுகன், இராசாதித்தன் யானைமேல் வீற்றிருந்த அம்பாரியையே தன்போர்க் களமாகக்கொண்டு போர்புரிந்து அவனைக் குத்திக்கொன்றான் என்றும் மூன்றாங் கிருஷ்ண தேவன் அவனது வீரச் செயலைப் பாராட்டி அவனுக்கு வனவாசிப் பன்னீராயிரமும் பிறவும் வழங்கினான் என்றும் கூறுகின்றது. கும்பகோணம், திருவிடை மருதூர், திருவெள்ளறை முதலான ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்கள்4. இரா சாதித்தனை ஆனைமேற்றுஞ்சினார் என்று குறிப்பிடுவதால் அவன் யானைமேல் வீற்றிருந்தபோது உயிர் துறந்த செய்தி நன்கு வலியுறுதல் காண்க.
தக்கோலப் போரில் பெருவெற்றி யெய்திய மூன்றாங் கிருஷ்ண தேவன், தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையுங் கைப் பற்றித் தன் ஆளுகையின்கீழ்க் கொண்டு வருவதற்குச் சில ஆண்டுகள் சென்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. இப்போர் நிகழ்ச்சிக்குப் பின்னர், முதற்பராந்தக சோழனது கல்வெட்டுக்கள் அந்நாடுகளில் யாண்டுங் காணப் படவில்லை. ஆகவே, இப்போரின் பயனாக அந் நாடுகளை இவன் இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இராஷ்டிரகூட வேந்தனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன் கல்வெட்டுக்கள்1 அவனது ஆட்சியின் 15 - ஆம் ஆண்டாகிய கி. பி. 955 முதல் தான் அந்நாடுகளில் காணப் படுகின்றன. ஆகவே, கி. பி. 949 முதல் 955 வரையில் அவன் அந்நாடுகளைத் தன் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுச் சிறிது சிறிதாக அதில் வெற்றியும் பெற்றனன் எனலாம்.
திருமுனைப்பாடி நாட்டில் கி. பி. 953, 954 - ஆம் ஆண்டுகளில் குறுநில மன்னனாகவிருந்து அரசாண்டு கொண்டிருந்த முனையதரையன் குலமாணிக்கன் இராமதேவன் என்பான், தன் பேரரசன் பெயரைக் குறிப்பிடாமல் திருநாம நல்லூர்க் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் பொறித் துள்ளான்2. அத்தலைவன், அவ்வாண்டுகளில் பழைய சோழர்க்குத் திறை கொடாமலும் புதிய இராஷ்டிர கூடர்க்குத் தலை வணங்காமலும் சுயேச்சையாகத் தன் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தனன் என்பது அக்கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. தக்கோலப் போரில் வெற்றி பெற்ற மூன்றாங் கிருஷ்ணதேவன், உடனே அந்நாடு முழுவதையும் தன் ஆட்சிக்குக் கொண்டுவர இயலவில்லை என்பது இதனால் நன்கு புலப்படுகின்றது. ஆகவே, கி. பி. 949 -க்கும் கி. பி. 955 -க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெள்ளாற்றிற்கு வடக்கேயுள்ள திருமுனைப்பாடி நாட்டிலும் அதற்கு வடபால் அமைந்துள்ள தொண்டை நாட்டிலும் பேரரசின்மை அறியற்பாலதாம். கி. பி. 955 முதல் கி. பி. 968 வரையில் அவ்விருநாடுகளும் மூன்றாங் கிருஷ்ணதேவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது அந் நாடுகளில் காணப்படும் அவ்வேந்தன் கல்வெட்டுக்களால்3 அறியக்கிடக்கின்றது.
இனி, சோழநாட்டில் அவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்பட வில்லை. ஆனால், அக்காலப்பகுதியில், முதற் பராந்தகன், முதற்கண்ட ராதித்தன், இரண்டாம் பராந்தகன் என்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக் களே அந்நாடெங்கும் வரையப் பெற்றிருக்கின்றன1. இவற்றால், சோழநாடு மாத்திரம் இராஷ்டிரகூட மன்னனது ஆட்சிக்குட்படாமல், சோழ மன்னர்களின் ஆளுகையிலேயே அக்காலப் பகுதியில் அமைந் திருந்தது என்பது தெளிவாக விளங்குதல் காண்க.
இஃது இங்ஙனமாக, சில கல்வெட்டுக்கள், மூன்றாங் கிருஷ்ண தேவனைக் கச்சியுந் தஞ்சையுங்கொண்ட கன்னர தேவன் என்று குறிப்பிடு கின்றன2. அன்றியும், மூன்றாங் கிருஷ்ணதேவனது கார்காட் செப்பேடுகள், அவன் சோழரை வென்று, அன்னோரது நாட்டைத் தன்னுடன் வந்த தலைவர்கட்கு அளித்ததோடு இலங்கை வேந்தன் முதலான அரசர்கள் பால் கப்பம் பெற்று இராமேச்சுரத்தில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்றும் கூறுகின்றன3. புதுச்சேரிக் கண்மையிலுள்ள வாகூருக்கும் தென்னார்க்காடு ஜில்லாவில் பண்ணுருட்டிக்கருகிலுள்ள திருவதிகை வீரட்டானத்திற்கும் தெற்கே மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் எவ்விடத்தும் காணப்படாமையால், அவன் தஞ்சையைக் கைப்பற்றி யமையும் பிறவும் வெறும் புனைந்துரைகளேயன்றி உண்மைச் செய்திகள் ஆகமாட்டா. அவன், தன்னுடன் வந்த சில தலைவர்கட்குச் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டிலும் திருமுனைப்பாடி நாட்டிலும் சில பகுதிகளைக் கொடுத்திருத்தல் கூடும். எனவே, அவன் தக்கோலத்தில் சோழரை வென்று அவ்விரு நாடுகளையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கிய வரலாற்றையே அச்செப்பேடுகள் மிகைப்படுத்திக் கூறுகின்றன என்பது தெள்ளிது. ஆயினும், இப்போர் நிகழ்ச்சியால் சோழ இராச்சியம் சுருங்கிய நிலையை எய்திற்று எனலாம். சோழர் பேரரசும் தன் உயர் நிலையினின்றும் சிறிது வீழ்ச்சியடைந்தது என்பதில் ஐயமில்லை.
இனி, பராந்தக சோழனது ஆட்சியின் 46 - ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், சோழநாட்டில் கண்டியூர், திருச்சோற்றுத் துறை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன1. அவ்வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள், யாண்டும் கிடைக்கவில்லை. ஆகவே, இவன் எஞ்சி யிருந்த சோழ இராச்சியத்தைச் சில ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரிந்து கி. பி. 953 -ல் இறந்தனனாதல் வேண்டும். இவன் தன் முதல் மகனும் பெருவீரனுமாகிய இராசாதித்தனைத் தன் ஆட்சியின் இறுதியில் போரில் இழக்க நேர்ந்தமை, இவனுக்கு ஆற்றொணாத் துன்பத்தையும் பெருங் கவலையையும் அளித்திருக்கும் என்பது திண்ணம். எனினும். தன் இராச்சியத்தில் ஆட்சி அமைதியாக நடைபெற வேண்டும் என்ற கருத்தினனாய், இவன் தன் இரண்டாம் புதல்வனாகிய கண்டராதித்த சோழனுக்கு, கி. பி. 950 -ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டங்கட்டி அரசாங்க அலுவல்களைக் கவனித்துவருமாறு செய்தான்2. ஆகவே, இவன் நாட்டின் நலங்கருதித் தான் செய்தற்குரியதைத் தவறாமல் நிறைவேற்றியமை பெரிதும் பாராட்டற்பாலதாம்.
பராந்தகன், சிறந்த சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்ற வனாதலின், தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து அதனை உண்மையிற் பொன்னம்பலமாக்கினான். இச் செய்தியை ஆனை மங்கலச் செப்பேடுகளிலும் திருவாலங்காட்டுச் செப்பேடு களிலும் காணலாம்3. அன்றியும் இதனை,
வெங்கோல் வேந்தன் தென்னனாடும் ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலம்
என்று முதற் கண்டராதித்த சோழனும்
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும்
என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் போற்றிப் புகழ்ந் திருத்தல் அறியற்பால தொன்றாம்.
இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் திருவிடைமருதூர்2, திருவாவடு துறை, திருச்செந்துறை, உறுமூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோயில்கள் கற்றளிகளாக ஆக்கப்பட்டன. அவற்றுள் திருவாவடுதுறைக் கோயில்3 இவன் பொருளுதவி கொண்டு திருக்கற்றளிப் பிச்சன் என்ற படைத் தலைவனால் எடுப்பிக்கப் பெற்றது. திருச்செந்துறைக்கோயில்4. இவன் புதல்வன் அரிகுலகேசரியின் மனைவியாகிய பூதி ஆதித்த பிடாரியால் கட்டப்பட்டது. உறுமூர்க்கோயில்5 இம்மன்னன் ஆணையின் படி இருங்கோளன் குணவன் அபராசிதன் என்ற தலைவன் ஒருவனால் அமைக்கப்பெற்றது.
சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ளதும் இந்நாளில் காட்டு மன்னார் கோயில் என்று வழங்குவதும் ஆகிய வீரநாரா யணச்சதுர்வேதி மங்கலமும்6 அதற்கு வடக்கேயுள்ள வீர நாராயணன் ஏரியும் இவன் அமைத்தனவேயாம். அன்றியும், சோழசிங்கபுரத்திற்கு அண்மையில் சோழவாரிதி7 என்னும் ஏரி ஒன்று இவன் ஆட்சிக்காலத்தில் தோண்டப் பெற்றது.
இம்மன்னன், தன் வாழ்நாளில் ஏமகர்ப்பம், துலாபாரம் முதலான பல தானங்களைச் செய்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் கூறுகின்றன8. இவன் காலத்தில் குடவோலை பறித்துக் கிராம சபை உறுப்பினர்களைத் தெரிந்தெடுக்கும் முறையும் கிராம சபை அமைக்கும் முறையும் கிராம ஆட்சி முறையும் எவ்வாறிருந்தன என்பது செங்கற்பட்டு ஜில்லா உத்தரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களால்1 புலப்படு கின்றது. அவை, இவ்வேந்தனது ஆட்சித் திறத்தையும் அரசியல் முறைகளையும் நன்கு விளக்குவனவாகும்.
இவ்வேந்தனுக்கு வேறு சில பெயர்களும் அந்நாளில் வழங்கி யுள்ளன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அவை, வீரநாராயணன், வீரசோழன், பண்டிதவற்சலன், குஞ்சரமல்லன், சங்கிராமராகவன், இருமடி சோழன் என்பன. அவற்றுள், வீரசோழன் என்ற பெயர். இவன் இராஷ்டிரகூட மன்னனாகிய கிருஷ்ணதேவனைப் போரில் வென்றமை பற்றி வழங்கியது என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்து கின்றது2. அஃது இவனது சோழசிங்கபுரக் கல்வெட்டில் கி. பி. 916 - ஆம் ஆண்டிலேயே காணப்படுவதால் அச்செய்தியை நம்பமுடியவில்லை. ஒருகால் இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவனுக்கும் இவனுக்கும் போர் நிகழ்ந்து அதில் இவன் வெற்றி பெற்றிருக்கலாம். அவன், இவன் தந்தையாகிய ஆதித்தனுக்குப் பெண் கொடுத்த மாமன் என்பது முன் கூறப்பட்டது. எனவே, இருவர்க்கும் பகைமை எங்ஙனம் உண்டாயிற்று என்பது இப்போது புலப்படவில்லை.
இவன் புலவர்களை அன்புடன் ஆதரித்து வந்தமையால் பண்டித வற்சலன்3 என்று புகழப்பெற்றனன்போலும்; மற்போரில் வல்லவனாகவும் களிறுபோல் வலிமிக்கவனாகவும் விளங்கியமை பற்றிக் குஞ்சரமல்லன்4 என்ற பெயர் எய்தியிருத்தல் வேண்டும்; இராமனைப்போல் ஈழநாட்டில் போர் நிகழ்த்தி வென்ற மையால் சங்கிராமராகவன் என்ற பெயர் பெற்றான்5. பாண்டி மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்று அதனை வென்று சோணாட்டோடு சேர்த்து அரசாண்ட காரணம்பற்றி இருமடி சோழன் என்று வழங்கப்பெற்றனன்.
பராந்தகனுக்குத் தேவிமார் பலர் இருந்தனர். அவர்களுள் இராசாதித்தன் தாயாகிய கோக்கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவள் சேரமன்னன் மகள் என்பது உதயேந்திரச் செப்பேடு களால் உணரப்படுகின்றது1. பராந்தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியாயிருந்தனள் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகின்றது2. அவள், மழ நாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரச குமாரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பராந்தகனுடைய மற்ற மனைவியர், அருமொழி நங்கை3, வில்லவன்மாதேவி4, திரிபுவனமாதேவி5, வளவன் மாதேவி6, சோழசிகாமணி7, சோழமாதேவி8, தென்னவன்மாதேவி9 என்போர்.
பராந்தகனுக்கு நான்கு புதல்வரும் இரு மகளிரும் இருந்தனர். அவர்களுள், இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன்10, உத்தமசீலி11 என்ற நால்வரும் புதல்வர் ஆவர். வீரமாதேவி, அனுபமா என்ற இருவரும் புதல்வியர் ஆவர். முதற்புதல்வனாகிய இராசாதித்தன் என்பான் தந்தையின் ஆட்சிக் காலத்தில் இராஷ்டிரகூடரோடு நிகழ்த்திய போரில் தக்கோலத்தில் உயிர் துறந்தான் என்பது முன் கூறப்பட்டது. புதல்வியருள் வீரமாதேவி என்பவள் இராஷ்டிரகூட மன்னனாகிய நான்காம் கோவிந்த வல்லவரையனை மணந்தவள். அவள், கி. பி. 935 -ல் தக்கோலத்துத் திருவூறல் பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்து அதற்கு நிவந்தமாக அறுபது கழஞ்சு பொன் அளித்துள்ளனள். மற்றொரு மகள் கொடும்பாளூர்ச் சிற்றரசன் ஒருவனை மணந்து வாழ்ந்தனள். இதனால் கொடும்பாளூர் தலைர்கள் சோழர்க்கு உற்ற நண்பராகவும் உறவினராகவும் அந்நாளில் இருந்தனர் என்பது உணரற் பாலதாகும்.
கண்டராதித்த சோழன் கி. பி. 950 - 957
முதற் பராந்தக சோழன் இறந்த பின்னர், அவன் இரண்டாம் புதல்வனும் முன்னரே இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றிருந்தவனுமாகிய கண்டராதித்த சோழன் கி. பி. 953-ல் முடி சூட்டப்பெற்றுச் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாயினான்.1 இவன் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டான். இவன் தந்தை ஆட்சியின் இறுதியில், இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் கவர்ந்து கொண்டமையால் சோழ நாடு மாத்திரம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவன் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் யாண்டுங் காணப்படாமையால், சோழர்க்குத் திறை செலுத்திக்கொண்டு சிற்றரசனாய் வாழ்ந்து வந்த வீரபாண்டியன் என்பவன் இவன் காலத்தில் சுயேச்சை எய்திப் பாண்டி நாட்டில் தனியரசு புரியத் தொடங்கியிருந்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். அன்றியும், பாண்டி நாட்டில் காணப்படும் வீரபாண்டியன் கல்வெட்டுக்களாலும் இச்செய்தி உறுதி எய்துகின்றது2. எனவே, இவன் தந்தை ஆளுகையின் கீழிருந்த பாண்டி நாட்டையும் வீரபாண்டியன் கைப்பற்றிக்கொண்டமையால் எஞ்சியிருந்த சோழ நாட்டை மாத்திரம் இவன் ஆண்டு வந்தனன் என்பது தெள்ளிது. எனினும், பாண்டி நாட்டை மீண்டுங் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் இவ்வேந்தனுக்கு இருந்தது என்று தெரிகிறது. ஆனால், அவ்வெண்ணம் இவன் ஆட்சிக் காலத்தில் நிறைவேறவில்லை.
இவ்வரசன், காவிரியாற்றிற்கு வடக்கே கண்டராதித்தச் சதிர்வேதி மங்கலம் என்ற ஊர் ஒன்றை அமைத்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன. அது, திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளையம் தாலூகாவில் கொள்ளிடப் பேராற்றிற்கு வடகரையில் திருமழபாடிக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் இந்நாளில் ஒரு சிற்றூராக உளது. இப்போது அதனைக் கண்டி ராச்சியம் என்று வழங்குகின்றனர்.
இனி, கண்டராதித்தப் பேரேரி என்ற நீர்நிலை ஒன்றிருந்தது என்பது தென்னார்க்காடு ஜில்லா உலகபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப் படுகிறது. அவ்வேரி இம்மன்னன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்றதாதல் வேண்டும்.
இவ்வேந்தன் மிகுந்த சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவன். தில்லையம்பதியில் நடம்புரியும் திருச்சிற்றம்பல முடையார் திருவடிகளில் பெரிதும் ஈடுபாடுஉடையவன். அப்பெருமான் மீது இவன் பாடிய திருப்பதிகம் ஒன்று, சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாம் திருமுறையில் இருத்தல் அறியத்தக்கது2. அப்பதிகத்தின் இறுதியிலுள்ள திருக்கடைக்காப்புப் பாடலில்3 இவ்வரசன் தன்னைக் கோழி வேந்தன் எனவும் தஞ்சையர் கோன் எனவும் கூறியிருப்பது உணரற்பாலதாம்.
இவன், சைவ சமயத்தில் பெரிதும் பற்றுடையவனா யிருந்தாலும், வைணவம், சமணம் முதலான புறச்சமயங்களிடத்தில் சிறிதும் வெறுப்புக் காட்டியவனல்லன். இவன், தான் அமைத்த கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற நகரில் கண்டராதித்த விண்ணகரம் என்னுந் திருமால் கோட்டம் ஒன்று எடுப்பித்திருப்பதும்4 தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள பள்ளிச்சந்தல் என்ற ஊரில் இவன் பெயரால் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் அமண்பள்ளியொன்று காணப் படுவதும்2 இவன் புறச் சமயத்தினரையும் நன்கு மதித்து அவர்கள்பால் அன்புடன் ஒழுகியவன் என்பதை இனிது விளக்குவனவாகும். எனவே, இவ்வேந்தன்,
‘விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்’
என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாக்கின் உண்மையைத் தெள்ளிதின் உணர்ந்து, அதனைத் தன் வாழ்க்கையில் உறுதி யாகக் கடைப்பிடித்தவன் என்பது சிறிதும் புனைந்துரை யாகாதென்க.
இனி, இவ்வரசன் இரு மனைவியரை மணந்தவன் என்பது கல்வெட்டுக்களால் புலனாகின்றது. அவ்வரசியர், வீரநாரணி, செம்பியன் மாதேவி என்போர். அவர்களுள் வீரநாரணியே முதல் மனைவியாவள்3. கண்டராதித்தன் முடிசூட்டப் பெறுவதற்கு முன்னர் அவ்வம்மை இறந்தனள் என்று தெரிகிறது. மற்றொரு மனைவியாகிய செம்பியன் மாதேவி, மழநாட்டுச் சிற்றரசன் ஒருவன் மகள் என்பது மழவரையர் மகளார் ஸ்ரீகண்டராதித்தப் பெருமாள் தேவியார் செம்பியன் மாதேவியார், என்ற கல்வெட்டுப் பகுதியால் நன்கறியக் கிடக்கின்றது4. அவ்வரசியும் தன் கணவனைப்போல் மிகுந்த சிவபக்தியுடையவள். அவ்வம்மை, தன் கணவன் இறந்த பின்னர், கி. பி. 1001-ஆம் ஆண்டு வரையில் உயிருடனிருந்தனள் என்பது விருத்தாசலம், திருவக்கரை ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகிறது5. எனவே அவள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனள் என்பது தேற்றம். தன் நீண்ட வாழ்நாளில் அம்மாதேவி புரிந்துள்ள அறங்கள் மிகப் பலவாம். அவையெல்லாம் உத்தம சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும்.
கண்டராதித்தனுக்கு மும்முடிச்சோழன் என்ற மற்றொரு பெயரும் வழங்கியுள்ளது1. சிதம்பரந் தாலுகாவிலுள்ள உடையார் குடியில் காணப்படுங் கல்வெட்டொன்று இவனை மேற்கெழுந் தருளிய தேவர்2, என்று குறிப்பிடுவதும் அறியற்பாலதாகும். அச் சொற்றொடரின் உண்மைப் பொருள் யாது என்பது தெரியவில்லை. இவன் மேற்றிசையில் பகைவரோடு போர் நிகழ்த்தி அதில் இறந்த செய்தி அவ்வாறு மங்கல வழக்காகக் கூறப்பட்டிருத்தல் வேண்டும் என்பது சில அறிஞர்கள் கொள்கை3. பண்டைச் சோழ மன்னருள் சிலர், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்4, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்5 என்று சங்க நூல்களிலும் தொண்டை மானாற்றூர்த் துஞ்சின உடையார்6 ஆற்றூர்த் துஞ்சினதேவர்7 ஆனைமேற்றுஞ்சின உடையார்8 பொன் மாளிகைத் துஞ்சின தேவர்9 என்று கல்வெட்டுக்களிலும் சொல்லப் பட்டுள்ளனர். ஈண்டு எடுத்துக் காட்டப்பெற்ற அத்தொடர்கள் எல்லாம் அவ்வேந்தர்கள் எவ்வெவ்விடங்களில் இறந்தனர் என்ற செய்தியை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ஆனால், மேற்கெழுந்தருளிய என்ற அடை மொழி அவற்றைப்போல் இறந்த செய்தியை உணர்த்தவில்லை. இவ்வேந்தன் இறந்த செய்தி கூறப்பட்டிருந்தால் அதற்குரிய அடைமொழி அக்கால ஒழுகலாற்றின்படி அமைந்திருக்கும் என்பது திண்ணம். எனவே, மேற்கெழுந்தருளிய என்ற தொடர்க்கு வேறு பொருள் இருத்தல் வேண்டும். அது, சோழநாட்டிற்கு மேற்கேயுள்ள நாடுகளுக்கு இவ்வரசன் தல யாத்திரை சென்று திரும்பி வராமையை ஒருகால் குறிப்பினுங் குறிக்கலாம். சிவஞானியாக நிலவிய இம்முடி மன்னன், தன் அரசைத் துறந்து அங்ஙனம் போயிருத்தல் இயல்பேயாம். பங்களூர் ஜில்லாவிற் காணப்படும் கல்வெட்டொன்று1 இவனைச் சிவஞான கண்டராதித்தர் என்று குறிப்பிடுவதால் இவனுக்கும் மைசூர் இராச்சியத்தின் தென் பகுதியிலிருந்த கங்க நாட்டிற்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு பெறப்படுகின்றது. அக்கல்வெட்டுச் சிதைந் திருத்தலால் இவனைப் பற்றி அஃது உணர்த்துஞ் செய்திகளை அறிய இயலவில்லை. எனினும் இவன் படைத்தலைவன் ஒருவன், அந்நாட்டு மழவூர்க் கோயிலில், கண்டராதித்தவிடங்கரையும் உமாபரமேசுவரி யாரையும் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளனன் என்பது அக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. சோழ நாட்டிற்கு வட மேற்கில் அத்துணைச் சேய்மையிலுள்ள கங்க நாட்டில் கண்டராதித்த விடங்கர் எழுந்தருளுவிக்கப் பெற்றமைக்குத் தக்க காரணம் இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.
இனி, மைசூர் இராச்சியத்தில் நந்தி என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோயிலில் ஓர் அரசர் படிமம் உளது. அது சோழ மன்னரது படிமம் என்று அங்கு வழங்கப்படுகின்றது.2 அது யோகத்தில் வீற்றிருக்கும் நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது. கோனேரி ராசபுரத்திலுள்ள கண்டராதித்தன் படிமத்திற்கும் அதற்கும் வேறுபாடு மிகுதியாகக் காணப்படவில்லை. எனவே, அது நம் கண்டராதித்த சோழனை நினைவு கூர்தற்கு வைக்கப் பெற்ற உருவச் சிலையாதல் வேண்டும். ஆகவே, இச்செய்தி மேலே குறிப்பிட்ட வரலாற்றிற்குச் சான்றாக நிற்றல் காண்க.
சிவபக்தியும் தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற இவ்வேந்தன் தான் வணங்கிய திருப்பதிகளில் எழுந்தருளி யுள்ள இறைவன்மீது பல பதிகங்கள் பாடியிருத்தல் கூடும். அவற்றுள், கோயிற் பதிகம் ஒன்றே இந்நாளில் நமக்குக் கிடைத்துளது.
கண்டராதித்தனுக்குப் பல ஆண்டுகள் வரையில் மகப்பேறின்றி இறுதியில் செம்பியன்மாதேவிபால் ஒருதவப் புதல்வன் பிறந்தனன். அவனுக்கு மதுராந்தகன் எனவும் உத்தம சோழன் எனவும் இரு பெயரிட்டு வழங்கலாயினர்.1தன் மகன் சிறு குழந்தையா யிருந்தமையால் தன் தம்பி அரிஞ்சயனை இளரவசுப் பட்டங்கட்டி அரசியல் துறையில் பழக்குவது இவனது இன்றியமையாத கடமையாயிற்று, ஆகவே, இவன் கி. பி. 953 - ஆம் ஆண்டில் அரிஞ்சயனை இளவரசனாக்கிப் பட்டமுங் கட்டினான். மதுராந்தகன் இளைஞனாயிருந்தபோது கண்டராதித்த சோழன் கி. பி. 957- இல் சிவபெருமான் திருவடி நீழல் எய்தினான்2. செம்பியன் மாதேவி, தன் இளம்புதல்வன்பால் வைத்த அன்பின் பெருக்கினால் அவனை ஓம்பி வளர்த்தலையே தன் கடமையாகக் கொண்டு சிவஞானியாக நிலவிய கணவனைப் பிரிந்தும் உயிருடன் இருந்தனள். அவ்வரசி, சிவபெருமானுக்குப் பல்வகைத் தொண்டுகள் புரிவதிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்துவந்தனள் என்பது பல ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது. இக்காலத்தில் கோனேரி ராசபுரம் என்று வழங்கும் திருநல்லம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அவ்வம்மை தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என்னுங் கற்றளி அமைத்து, அதில் தன் கணவன் அவ்விறைவனை வழிபடுவது போல் ஒரு படிமம் வைத்திருப்பதும் அறியற்பால
தாகும்3.
அரிஞ்சய சோழன் கி. பி. 956 - 957
கண்டராதித்தனுக்குப் பின்னர் அவன் தம்பியும் இளவரசுப் பட்டங் கட்டப் பெற்றிருந்தவனுமாகிய அரிஞ்சயன் முடிசூட்டப் பெற்றான். இவனை அரிந்தமன் என்றும் அரிகுலகேசரி என்றும் அந்நாளில் வழங்கி யுள்ளனர் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது1. இவன் முதற் பராந்தக சோழனுடைய மூன்றாம் புதல்வன்; அவ்வேந்தருக்குக் கேரள அரசனான பழுவேட்டரையன் மகள்பாற் பிறந்தவன்2; பேராற்றல் படைத்த பெருவீரன் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளில் புகழ்ந் துரைக்கப் பெற்றவன்3; பரகேசரி என்ற பட்டமுடையவன். இவன், தன் தமையன் இராசாதித்தன் சோழ இராச்சியத்தின் வடபகுதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு உதவிபுரிதற் பொருட்டு மலைய மானாட்டின் தலைநகராகிய திருக்கோவலூரில் பெரும் படையுடன் தங்கியிருந்தான்4. எனவே, சோழர்க்கும் இராஷ்டிர கூடர்க்கும் பராந்தகன் ஆட்சியில் நிகழ்ந்த பெரும் போரில் இவனும் கலந்து கொண்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
இவன் சோழநாட்டில் சக்கரவர்த்தியாக முடிசூடிய பிறகு, தன் தந்தை யாட்சியின் இறுதியில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ண தேவன் கவர்ந்துகொண்ட தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணங்கொண்டு அதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினான். அவ்விரு நாடு களையும் வென்று, தன் ஆட்சிக்குட் படுத்தி யிருந்த மூன்றாங் கிருஷ்ண தேவன், தன்பால் அடைக்கலம் புகுந்திருந்த வைதும்பராய மன்னனுக்கு அவற்றை யளித்துத் தன் பிரதிநிதியாகவிருந்து ஆண்டு வருமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வேந்தனுக்குப் பிரதிநிதியாக அமர்ந்து மலாடு, வாணகோப்பாடி நாடு, சிங்கபுர நாடு என்பவற்றை முதலில் அரசாண்டவன் விக்கிரமாதித்த வைதும்ப மகாராசன் என்பது தென்னார்க்காடு ஜில்லாக் கீழுரிலுள்ள ஒரு கல்வெட்டினால் தெளிவாக அறியப்படுகிறது1. அவனுக்குப் பின்னர் வைதும்ப மகாராசன் திருவையனும் பிறகு அவன் மகன் ஸ்ரீகண்டனும் இராஷ்டிரகூட மன்னன் பிரதிநிதிகளாகவிருந்து அப்பகுதிகளில் ஆட்சி புரிந்தனர்2. அரிஞ்சயன் தான் வைதும்ப வேந்தரோடு போர் புரிந்து அந்நாடுகளைக் கைப்பற்றவேண்டி யிருந்தமையின், முதலில் தன் புதல்வி அரிஞ்சிகைப் பிராட்டியை ஒரு வாணர்குல மன்னனுக்கு மணஞ் செய்து கொடுத்து அக்குலத்தினர் உறவும் நட்பும் பெற்று அன்னோர்க்கு இராஷ்டிரகூடர்த் தொடர்பு அற்றுப் போகும்படி செய்துவிட்டான்3. பின்னர், இவ்வேந்தன் சோழ இராச்சியத்தின் வடபகுதி யாகத் தன் தந்தையின் காலத்திலிருந்த திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றுவதற்குப் பெரும் படையுடன் புறப்பட்டான். அப்போது நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை அறிவிக்கும் கல்வெட்டுக்கள் இதுகாறும் கிடைத்தில. ஆனால், வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள ஆற்றூரில் இவன் இறந்தனன் என்று தெரிகிறது. இவனை ஆற்றூர்த் துஞ்சின தேவர்4 என்று சில கல்வெட்டுக்கள் கூறுவதால் இச் செய்தியை நன்கறியலாம். இவன் போரில் உயிர்துறந்தனனா அன்றி இயற்கையாகவே இறந்தனனா என்பது இப்போது புலப்படவில்லை. இத்தகைய ஐயப்பாடுகள் எல்லாம் எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் நீங்கும் என்பது ஒருதலை.
இனி, அரிஞ்சயனது கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் யாண்டும் காணப்படாமையால் இவன் முடி சூடிய சில திங்கள்களில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆராய்ச்சியாளருள் சிலர் இவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் கூடும் என்று கருதுகின்றனர்.1 இளவரசுப் பட்டம் பெற்ற நாள் முதல் ஆட்சி யாண்டு கணக்கிடப்படுவது அக்காலத்து வழக்கமாதலின் அங்ஙனம் கருதுவதற்கு இடமில்லை என்க.
இவனுக்கு வீமன் குந்தவை, ஆதித்தன் கோதைப்பிராட்டி, கல்யாணி, பூதி ஆதித்தப் பிடாரி என்ற நான்கு மனைவியர் இருந்தனர்2. அவர்களுள், வீமன் குந்தவை என்பவள் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் வீமன் புதல்வியாவள். இவள் திருப்பழனப் பக்கத்திலிருந்த அரையன் ஆதித்த வீமன் மகளாயும் இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது3. குந்தவை என்ற பெயருடன் சோழ நாட்டில் முதலில் காணப்படும் அரசி இவ்வம்மையாகவே இருத்தலாலும், இப்பெயர் ஆந்திர நாட்டில் வழங்கும் பெயராயிருத்தலாலும், சோழர்கள் தம் பகைவர்களைப் புறங்காண வேண்டிப் புறநாட்டு வேந்தருள் சிலரை அந்நாட்களில் தமக்கு உறவினராக்கிக் கொண்டு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருத் தலாலும் அரிஞ்சயன் மனைவியாகிய இம்மாதேவி கீழைச் சளுக்கிய மன்னன் மகளாகவே இருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். மற்றொரு மனைவியாகிய ஆதித்தன் கோதைப்பிராட்டி என்பவள் ஒரு சேரமன்னன் மகளாதல் வேண்டும். பிறிதொரு மனைவியாகிய கல்யாணி என்பாள் வைதும்பராயன் மகள் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது4. வேறொரு மனைவியாகிய பூதி ஆதித்த பிடாரி என்பவள், கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பூதி விக்கிரம கேசரியாகிய தென்னவன் இளங்கோவேள் மகள் ஆவள்5. இவ்வரசி, திருச்சிராப் பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் தூரத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமும் அளித் துள்ளனள்1. இவ்வேந்தனுக்குப் பராந்தகன் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். அவன் வைதும்பராயன் மகள் கல்யாணி என்ற அரசியின்பாற் பிறந்தவன் என்பது அன்பிற் செப்பேடுகளால் உணரப்படுகிறது2.
இவ்வரிஞ்சயன் பேரனாகிய முதல் இராசராச சோழன், வட ஆர்க்காடு ஜில்லாவில் திருவல்லத்திற்கு வடக்கே ஆறு மைலிலுள்ள மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்னுங் கோயில் ஒன்று எடுப்பித்து அதற்கு நிவந்தங்களும் வழங்கியுள்ளனன்3. அக்கோயில் தன் பாட்டனை நினைவு கூர்தற்பொருட்டு முதல் இராசராச சோழன் அமைத்ததாகும். இச்செய்தியை ஆற்றூர்த் துஞ்சின தேவர்க்குப் பள்ளிப் படையாக உடையார் ஸ்ரீ இராசராச தேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித் தருளின திரு அரிஞ்சிகை ஈசுவரத்து மகாதேவர்4 என்னுங் கல்வெட்டுப் பகுதியினால் நன்குணரலாம். அஃது இந்நாளில் சோழேச்சுரம் என்று வழங்குகின்றது; ஆனால் அழிவுற்ற நிலையிலிருப்பது வருந்தத்தக்கது.
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (கி. பி. 957 - 970)
அரிஞ்சயன் இறந்த பின்னர், அவன் மகன் இரண்டாம் பராந்தக சோழன் கி. பி. 957-இல் சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாக முடி சூட்டப்பெற்றான். இவன், அவ்வேந்தற்கு வைதும்பராயன் மகள்பாற் பிறந்த அரசகுமாரன் ஆவன். பெற்றோர்கள் இவனுக்கிட்ட பெயர் பராந்தகன் என்பதேயாம். இவன் பேரழகுடையவனாயிருந்தமை பற்றிச் சுந்தர சோழன் என்னும் பெயரைப் பின்னர் எய்தினன் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது1.
இவனை, மதுரை, கொண்ட கோ இராசகேசரிவர்மன்2 எனவும், பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீசுந்தர சோழதேவர்3 எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. புதுக் கோட்டை இராச்சியத்தில் கொடும்பாளூரில் காணப்படுங் கல்வெட்டொன்றில் இவன் மதுராந்தகன் சுந்தர சோழன்4 என்றுங் குறிக்கப்பெற்றுள்ளனன். இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், சுந்தர சோழன், தன் பாட்டனாகிய முதற்பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டிருந்து பிறகு நீங்கிப்போன பாண்டி நாட்டை மீண்டுங் கைப்பற்றும் பொருட்டுப் பாண்டியனோடு போர்புரிந்து வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகிறது.
சுந்தர சோழன் காலத்தில் பாண்டி நாட்டில் மதுரைமா நகரில் வீற்றிருந்து அரசாண்டவன் இராசசிம்ம பாண்டியன் மகனாகிய வீரபாண்டியன் ஆவன். அவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டு முதல் பாண்டி நாட்டில் காணப்படுங் கல்வெட்டுக்களில் அவன் சோழன் தலைகொண்ட கோ வீர பாண்டியன் என்று பெருமையாகக் கூறப்பட்டுள்ளான்1. ஆகவே, கி. பி. 953-இல் சோழர்க்கும் வீர பாண்டியற்கும் நடைபெற்ற போர் ஒன்றில் பாண்டி வேந்தன் சோழன் ஒருவனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் சோழன் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாகச் சோழன் என்று கூறுகின்றமையால் அவனால் போரில் கொல்லப்பட்டவன் சோழச் சக்ரவர்த்தி யல்லன் என்பதும் சோழர் குடியில் தோன்றிய ஓர் அரசகுமாரனாகவே யிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். அவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. சோழ அரசகுமாரன் ஒருவனை வீரபாண்டியன் முன்னர் நிகழ்ந்த போரில் கொன்றமையாலும், அவனிடமிருந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் சுந்தர சோழன் உள்ளத்தில் பன்னாட்களாக நிலைபெற்றிருந்தமையாலும், இவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். அந்நாட்டிலுள்ள சேவூரில் சுந்தர சோழற்கும் வீரபாண்டியற்கும் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில் சுந்தர சோழனே வெற்றி எய்தினான். தோல்வியுற்றுப் புறங்காட்டியோடிய பாண்டி மன்னன் சுரம் புகுந்து ஒளிந்து கொண்டான்2. அதுபற்றியே, சுந்தர சோழன் பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் என்று வழங்கப் பெற்றனன். இவன் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்3 இவனை மதுரை கொண்டகோ இராசகேசரிவர்மன் என்று கூறுவதால் சேவூர்ப் போர் கி. பி. 962-ஆம் ஆண்டில் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. அப்போர் நிகழ்ச்சி ஆனை மங்கலச் செப்பேடுகளில்4 சொல்லப்பட்டுள்ளது. அப்போரில் வீர பாண்டியனுக்கு உதவிபுரிதற் பொருட்டுச் சிங்கள நாட்டு மன்னன் நான்காம் மகிந்தன் என்பவன் பெரும் படையனுப்பி யிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கள மன்னன் செய்கையை யுணர்ந்த சுந்தர சோழன், தன் படைத் தலைவனும் கொடும்பாளூர்க் குறுநில மன்னனுமாகிய பராந்தகன் சிறிய வேளான் என்பவனைப் பெரும் படையுடன் சிங்கள நாட்டிற்கு கி. பி. 965-இல் அனுப்பினான். அவ்வாண்டில் அந்நாட்டில் நிகழ்ந்த போரில் அத்தலைவன் உயிர் துறந்தான். அச்செய்தி ஈழத்துப்பட்ட கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான் என்ற ஒரு கல்வெட்டுப் பகுதியினால்1 அறியக் கிடக்கின்றது. ஆகவே, சுந்தர சோழன் ஈழ நாட்டு வேந்தனோடு நிகழ்த்திய போரில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது. நான்காம் மகிந்தன் தன் படைத்தலைவன் சேனா என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பிச் சோணாட்டுப் படையை எதிர்த்துப் போர் புரியுமாறு செய்தனன் என்றும் அப்போரில் சிங்களப்படை வெற்றி யெய்தவே, சோழ மன்னன் ஈழ மன்னனோடு உடன்படிக்கை செய்து கொண்டு நட்புரிமை பெற்றனன் என்றும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சம் கூறுகின்றது2. ஈழ நாட்டிலுள்ள வெசகிரி என்ற இடத்தில் காணப்படும் மகிந்தனது கல்வெட்டொன்று3, சேனா என்ற சிங்களப்படைத் தலைவன் தமிழ்ப்படையைப் போரில் வென்ற செய்தியை உறுதிப்படுத்துகின்றது.
சுந்தர சோழன்பால் தோல்வியுற்று ஓடியொளிந்த வீர பாண்டியன், மீண்டும் மதுரையம்பதியிலிருந்துகொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான். பாண்டி நாட்டில் காணப்படும் வீர பாண்டியன் ஆட்சியின் 18, 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்4 அவன் கி. பி. 965, 966 -ஆம் ஆண்டுகளில் பாண்டி நாட்டிலிருந்து அரசாண்டனன் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்து கின்றன. எனவே, சுந்தர சோழன் மறுபடியும் பாண்டி நாட்டின் மேல் படையெடுப்பது இன்றியமையாததாயிற்று. அப்படை யெழுச்சியும் கி.பி. 966-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. பாண்டிநாட்டுக்குப் பெரும் படையுடன் சென்று போர் நிகழ்த்திய தலைவர்கள் சுந்தர சோழன் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன், கொடும்பாளூர் வேள் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திரவர்மன் என்போர், அந்நாட்களில் ஆதித்த கரிகாலன், இளைஞனாயிருந்த போதிலும் பெரு வீரத்தோடு போர்புரிந்து வீரபாண்டியனைக் கொன்று வெற்றி மாலை சூடினான். அது பற்றியே அவ்வரசிளங் குமரன் வீர பாண்டியனைத் தலைகொண்ட கோப் பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்களில்1 கூறப்பட்டுள்ளனன். அப்போரில் கலந்து கொண்டிருந்த தலைவர்களாகிய பூதி விக்கிரம கேசரியும் பார்த்திவேந்திரவர்மனும் தாம் வீரபாண்டியனைத் தலை கொண்டவர்கள் என்று தம் கல்வெட்டுக்களில் குறிப்பிட் டுள்ளனர்2. அவர்கள் பாண்டிநாட்டுப் போரில் படைத் தலைமை வகித்து அதனை நடத்திய தலைவர்களாதலின் அங்ஙனம் கூறிக் கொள்வதில் வியப் பொன்றுமில்லை. சுந்தர சோழன் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டில் யாண்டும் காணப் படாமையால் அந்நாடு உடனே சோழர் ஆட்சிக்குட் படுத்தப் படவில்லை என்பது தேற்றம். ஆகவே, சுந்தர சோழன் அவ்வப்போது போரில் வெற்றி பெற்றதோடு அமைந்திருந்தன னேயன்றிப் பாண்டி நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரியவில்லை என்பது நன்கு புலனாகின்றது.
இனி சுந்தர சோழனும் தன் தந்தையைப்போல் வடக்கே யுள்ள திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றித் தன் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டு அந்நாடு களிலிருந்த இராஷ்டிரகூடர்களின் பிரதிநிதிகளோடு இவன் போர் புரிந்து வெற்றியும் எய்தினான். இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல் இவன் கல்வெட்டுக்கள் தென்னார்க் காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு ஜில்லாக்களில் காணப் படுகின்றன3. அன்றியும், இவன் பிரதிநிதியாகத் தொண்டை நாட்டிலிருந்த பார்த்திவேந்திரவர்மன் கல்வெட்டுக்களும் அப் பக்கங்களில் உள்ளன1. இந்நிலையில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்களும் கி. பி. 967 வரையில் அந்த ஜில்லாக்களில் சில ஊர்களில் காணப்படுகின்றன. ஆகவே சுந்தரசோழன் அவ்விரு நாடு களையும் கைப்பற்றுவதற்குச் செய்த முயற்சி சிறிது சிறிதாகச் சில ஆண்டுகளில் நிறைவேறியது போலும். அந்த நிகழ்ச்சிகளைக் கால வரையறையுடன் தெளிவாக அறிய இயலவில்லை. எனினும், கி. பி. 963 - ஆம் ஆண்டிலேயே தொண்டைநாட்டுப் பகுதிகள் இவன் ஆட்சிக்குட்பட்டு விட்டன என்று ஐயமின்றிக் கூறலாம்2.
இவனுக்குப் பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி என்னும் இரு மனைவியர் இருந்தனர். அவர்களுள் பராந்தகன் தேவியம்மன் ஒரு சேரமன்னன் புதல்வியாவாள்3. மற்றொரு மனைவியாகிய வானவன் மாதேவி என்பாள் திருக்கோவலூரி லிருந்த மலையமானாட்டுச் சிற்றரசன் மகள்4. இவனுக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழிதேவன் என்ற இரு புதல்வரும் குந்தவை என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவர்களுள் ஆதித்த கரிகாலன் இளைஞனாயிருந்தபோதே வீரபாண்டியனைப் போரில் கொன்றான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன.
சுந்தரசோழன் தன் மூத்த புதல்வனது வீரச் செயலையும் ஆற்றலையும் உணர்ந்து கி. பி. 966 - ல் அவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினான். மற்றொரு மகனாகிய அருண்மொழிதேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ்பரப்பி இனிது வாழ்ந்த முதல் இராசராசசோழன் ஆவன். குந்தவைப் பிராட்டி வல்லவரையன் வந்திய தேவனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனள்6. அவ்வரசகுமாரன் வேங்கி நாட்டில் வாழ்ந்த கீழைச் சளுக்கியர் மரபினனாதல் வேண்டும். அவன் குந்தவையை மணந்த பிறகு சோழ நாட்டிலேயே தங்கிவிட்டனன் என்று தெரிகிறது.
மழநாட்டு அன்பில் என்னும் ஊரினனாய அநிருத்த பிரமாதி ராஜன் என்பான் சுந்தர சோழனுக்கு அமைச்சனாக இருந்தனன். அவனுக்குத் திருவழுந்தூர் நாட்டிலுள்ள கருணாகர மங்கலம் என்னும் ஊரினை இறையிலியாக இவ்வேந்தன் வழங்கினான். இது குறித்து அளிக்கப்பெற்ற செப்பேடுகள் அன்பிற் செப்பேடுகள் எனப்படும். இதுகாறுங் கிடைத்துள்ள சோழ மன்னரது செப்பேடுகளுள் இவ்வன்பிற் செப்பேடுகளே மிகப் பழமை வாய்ந்தவை.
இனி, சுந்தரசோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று இவன் மன முடைந்து இரண்டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது. அஃது இவன் முதல் மகனும் பெருவீரனுமாகிய ஆதித்த கரிகாலன் கி. பி. 969 - ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டமையேயாம். சிதம்பரந் தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல்வெட்டொன்று2 அவ்வரச குமாரனைக் கொன்றவர் யாவர் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. அக் கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதி ராஜன். மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால் வரும் உடன்பிறந்தோர் என்பது அக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. அவர்களுள் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடி சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரச னான ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வனாகிய உத்தமசோழன் என்பவன், தான் அரசு கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருத்தல் கூடும் என்பது சிலர் கருத்து1. அதனையாராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையா ததேயாம்.
உத்தம சோழனுக்கு அக் கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்த கரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப்பெற்றவனும் பெரியவீரனுமாகிய முதல் இராசராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சிபுரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தம சோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராசசோழன் தன் சிறியதந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் தான் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக் கின்றது. உத்தமசோழன் சூழ்ச்சியினால் தன் தமையன் கொல்லப் பட்டிருந்தால் இராசராசசோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்கமாட்டான் என்பது ஒருதலை. உத்தம சோழன், இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம்பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்கமாட்டா. அதனால் உள் நாட்டில் அமைதியின்மையும் கலகமுமே ஏற்பட்டிருக்கும். ஆனால், சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தம சோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது3. ஆகவே எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும் அவர்கள் உடன்பிறந்தார் இருவரும் ஒருங்குசேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தமசோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.
அன்றியும், இராசராசசோழன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள்2 செம்பியன் மாதேவியாரைக் குறிக்கு மிடங்களில் ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன்மாதேவிப் பிராட்டியார் எனவும், ஸ்ரீ உத்தம சோழதேவர் தங்களாச்சியார் ஸ்ரீ பராந்தகன் மாதேவடிகளா ரான ஸ்ரீ செம்பியன்மாதேவியார் எனவும் உத்தம சோழனைப் புகழ்ந்து கூறுவதால் ஆதித்த கரிகாலன் உத்தமன்சோழன் சூழ்ச்சியினால் கொல்லப்படவில்லை என்பது நன்கு தெளியப்படும்.
இனி, உத்தமசோழன் ஆட்சியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர் கட்குத் தண்டனை விதிக்கப்படாமல் இராசராச சோழன் ஆட்சியில் இரண்டாம் ஆண்டிலே விதிக்கப்பட்டிருத்தலால் அக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்கும் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் சிலர் கொள்கை. கொலை புரிந்தோருள் ஒருவனுக்கும் அவனைச் சார்ந்தோர்க்கும் கிடைத்த தண்டனை இராசராச சோழன் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டமை உடையார் குடிக் கல்வெட்டால் அறியப்படுகிறது. அக் கல்வெட்டின் துணை கொண்டு உத்தம சோழன்மீது குற்றங்காண்டல் எங்ஙனம் பொருந்தும்? மறைவில் நிகழ்ந்த அக்கொலையில் தொடர்பு டையவர் யாவர் என்பதை ஆராய்ந்து பார்த்து அனைவர்க்கும் தண்டனை விதிப்பதற்குள் சில ஆண்டுகள் கழிந்திருத்தல் கூடும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சியும் முடிவெய்தியிருக்கலாம். அதனால் இராசராசசோழன் ஆட்சியில் எஞ்சியோர்க்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தமை இயல்பேயாம். ஆதலால், அக்கொலைபற்றி உத்தமசோழன் ஒருவருக்கும் தண்டனை விதிக்கவில்லை என்று எத்தகைய ஆதாரமுமின்றி எவ்வாறு கூறமுடியும்?
சுந்தரசோழன் கி. பி. 969 - ல் தன் முதல் மகனாகிய ஆதித்த கரிகாலனை இழந்தமையால் ஆற்றொணாத் துன்பத்தில் ஆழ்ந்து அவ்வாண்டிலேயே காஞ்சிமா நகரிலிருந்த பொன் மாளிகையில்1 உயிர் துறந்தான். அதுபற்றியே, இவ்வேந்தன் பொன் மாளிகைத் துஞ்சினதேவர் என்று சில கல்வெட்டுக்களில்2 குறிப்பிடப் பட்டுள்ளனன். இவன் மனைவியருள் வானவன் மாதேவி என்பாள், தன் கணவன்பால் அளவற்ற அன்புடையவளாதலின் பிரிவாற்றாமல் தானும் உடன்கட்டையேறி ஒருங்கே மாய்ந்தனள். அம்மாதேவியின் செயற்கருஞ்செயல் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது3. அன்றியும், திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டொன்று4 வானவன் மாதேவி நிகழ்த்திய அவ்வருஞ்செயலை எடுத்துக் கூறி,
செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன்
இந்திரசமானன் இராஜசர்வஞ்ஞனெனும்
புலியைப் பயந்த பொன்மான் கலியைக்
கரந்து கரவாக் காரிகை சுரந்த
முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும்
தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந்
தூண்டா விளக்கு . . . .
. . . . . மணிமுடி வளவன்
சுந்தரசோழன் மந்தரதாரன்
திருப்புய முயங்குந்தேவி
என்று பாராட்டுவது உணரற்பாலதாகும். அம்மாதேவி, தன் இளங்குழந்தையைப் பிரிந்து கணவனோடு உடன்கட்டை ஏறிய செய்தியைக் கூறும் சுரந்த, முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் - தலைமகற் பிரியாத் தையல் என்ற பகுதி படிப்போர் உள்ளத்தை உருக்குந் தன்மையது.
முதல் இராசராசசோழன் தஞ்சைமாநகரில் எடுப்பித்த இராசராசேச் சுரம் என்னும் பெரிய கோயிலில் குந்தவைப் பிராட்டி, தன் தந்தை சுந்தரசோழன் படிமத்தையும் தாய் வான வன் மாதேவியின் படிமத்தையும் எழுந்தருளுவித்து அவற்றிற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாகப் பெரும் பொருள் வழங்கியுள்ளமை ஈண்டு அறியற்பாலதாம்1. அன்றியும், அவ்வம்மை, தஞ்சையம்பதியில் தன் தந்தையின் பெயரால் சுந்தரசோழ விண்ணகர் ஆதுரசாலை என்ற மருத்துவ நிலையம் ஒன்று நிறுவி அதனை நடத்திவருவதற்கு மருத்துவக்காணியாக நிலமும் அளித்துள்ளனள்2.
தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள உலகபுரம் என்ற ஊரில் சுந்தரசோழப்பெரும்பள்ளி என்னும் புத்த கோயில் ஒன்றும்3 எண்ணாயிரம் என்னும் ஊரில் சுந்தர சோழ விண்ணகர் என்ற திருமால்கோயில் ஒன்றும்4 வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள பிரமதேசம் என்ற ஊரில் சுந்தரசோழப் பேரேரி என்னும் ஏரி ஒன்றும்5 புதுக்கோட்டை நாட்டில் திருமெய்யந் தாலுகாவில் சுந்தரசோழபுரம் என்னும் நகரம் ஒன்றும்6 இருந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அவை யெல்லாம் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பெற்றனவாதல் வேண்டும். அவற்றுள், சுந்தர சோழபுரம் என்பது இக்காலத்தில் சுந்தரம் என்று வழங்குகின்றது. அவற்றை யெல்லாம் நுண்ணிதின் நோக்குமிடத்து, இவன், தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மக்கட்குப் பல்வகை நலங்களும் புரிந்து புகழுடன் செங்கோல் செலுத்திவந்தான் என்பது இனிது புலனாகும்.
சுந்தரசோழன் ஆளுகையில் துன்பத்தால் ஆ என்று ஓலமிட்டு அரற்றியவர் எவரும் இலர் என்றும் அதற்கு மாறாகச் சிவபெருமானை வணங்குங்கால் மக்கள் கூறிய அர என்ற ஒலிதான் கேட்கப்பெற்றது என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
இம்மன்னர் மன்னன் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்துள்ளான். இவன் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், அவர்கள் இவன்மேல் பாடிய பாடல்களுள் இரண்டு வீரசோழிய உரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன2. அவற்றால் இவன் சிவபெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவன் என்பதும் பௌத்தம் முதலான புறச் சமயங்களை வெறுக்காமல் ஆதரித்து வந்தவன் என்பதும் இனிது வெளியாகின்றன. பௌத்த சமயத்தினரான தமிழ்ப் புலவர் ஒருவர் இவ்வரசன் வண்மையும் வனப்பும் திண்மையும் சிறந்து உலகில் வாழுமாறு புத்தர் பெருமானை வேண்டிப் பரவியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாம். எனவே, இவன் சமயப் பொறையுடையவனாய்ப் பல்வகைச் சமயங்கட்கும் பாதுகாவல் பூண்ட பெருங்குண வேந்தனாக வாழ்ந்து வந்தனன் என்பது தெள்ளிது.
இனி, வீரசோழிய உரையிற் காணப்படும் அப்பழைய பாடல்கள், இவனை மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர் என்றும் பழையாறை நகர்ச் சுந்தரச் சோழர் என்றும் கூறுகின்றமையின் இவன் பழையாறை நகரிலிருந்து ஆட்சி புரிந்திருத்தல் வேண்டுமென்பது நன்கறியக்கிடக் கின்றது. அந்நகர், கும்பகோணத்திற்குத் தென் மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறை என்னும் பெயருடன் இந்நாளில் ஒரு சிற்றூராக உள்ளது. அச்சிற்றூரையும் அதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், சோழமாளிகை, அரிச்சந்திரபுரம் ஆரியப்படையூர், பம்பைப் படையூர், புதுப்படையூர், மணப்படையூர், கோணப்பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன் கோயில் என்று வழங்கும் நந்திபுரவிண்ணகரம் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் பெரிய நகரமாக அஃது அமைந் திருந்தது என்பதைத் தேவாரப்பதிகங்களாலும் அவ்விடங்களில் காணப்படும் கல்வெட்டுக் களாலும் அறியலாம். அன்றியும் சேக்கிழாரடிகள், தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை1 என்று அதனைப் பெருநகராகவே கூறியிருப்பதும் அறியத்தக்கது. அம்மாநகர் வெவ்வேறு அரசர் காலங்களில் வெவ்வேறு பெயர்களை எய்தி மிகச் சிறப்புற்றிருந்தது என்பது வெறும் புனைந்துரையன்று. அது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறை நகர் எனவும், எட்டாம் நூற்றாண்டில் நந்திபுரம் எனவும், ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் பழையாறை நந்திபுரம் எனவும், பதினொன்றாம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராசராசபுரம் எனவும் வழங்கப்பெற்றது என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் நன்குணர்த்து கின்றன. அந்நகரில் அக்காலத்தில் சோழ மன்னர்களின் அரண்மனை அமைந்திருந்த இடம், இக்காலத்தில் சோழமாளிகை என்னும் ஒரு தனியூராக உள்ளது. அவ்வரண்மனையைச் சுற்றிலும் முன்னிருந்த நான்கு படைவீடுகள் இப்போது நான்கு ஊர்களாக இருக்கின்றன. எனவே சோழர் காலங்களில் அது பெரிய நகரமாயிருந்ததோடு அவ்வேந்தருட் சிலர்க்கு இரண்டாவது தலைநகராக இருந்து புகழெய்தியது என்பதும் அறியற்பாலதாம்.
உத்தம சோழன் கி. பி. 970 - 985
இவன் முதல் கண்டராதித்த சோழனுடைய புதல்வன். அவ்வேந்தன் இறந்தபோது இவன் சிறுகுழந்தையாயிருந்த மையால் முடிசூட்டப் பெறவில்லை. அந்நாளில் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயன் என்பவன் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்று அரசாண்டான் என்பதும் பிறகு அவன் மகன் சுந்தர சோழன் ஆட்சி புரிந்தனன் என்பதும் முன்னர்க் கூறப் பட்டுள்ளன. சுந்தரசோழனுக்குப் பின்னர் அவன் மகன் முதல் இராசராச சோழன் பட்டம் பெற்று அரசாளவேண்டும் என்று சோழநாட்டிலிருந்த பொதுமக்கள் பெரிதும் விரும்பினர் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு களால் நன்கறியக் கிடக்கின்றது1. அன்னோர் அங்ஙனம் விரும்பியும், இராசராச சோழன், தன் பெரிய பாட்டன் புதல்வனும் தனக்குச் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழனது உரிமையையும் விருப்பத்தையும் மதித்து இவனுக்குச் சோழநாட்டின் ஆட்சியை அளித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலது. எனவே இராசராச சோழனது நியாய உணர்ச்சியும் அறநெறி பிழையாக் கொள்கையுமே உத்தம சோழன் முடிசூட்டப் பெறுவதற்கு ஏதுக்களாக இருந்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவன் முடிசூட்டு விழா கி. பி. 969 இன் இறுதியிலாதல் கி. பி. 970 இன் தொடக்கத்திலாதல் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது திருவிடை மருதூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது2. இவனைக் கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்3 என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றமையால் இவ்வேந்தன் பரகேசரி என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன் என்பது தேற்றம். இவனுக்கு முன் ஆட்சிபுரிந்த சுந்தர சோழன் இராச கேசரி என்ற பட்டம் பெற்றவனாதலின் இவன் பரகேசரி என்று தன்னைக் கூறிக்கொள்வது அக்காலத் தொழுகலாற்றிற்கு ஏற்புடையதேயாம்.
இனி, உத்தம சோழன் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக்கள் செங்கற் பட்டு ஜில்லாவில் திருமுல்லைவாயில்1, காஞ்சிபுரம்2, திருவொற்றியூர்3, திருவடந்தை4, மீஞ்சூர்5 என்னும் ஊர்களிலும், வட ஆர்க்காடு ஜில்லாவில் பழங்கோயில்6, திருமால்புரம் என்னும் ஊர்களிலும், தென்னார்க்காடு ஜில்லாவில் திருவதிகை வீரட்டானத்திலும் காணப்படுகின்றமையால் தொண்டை நாடும் திருமுனைப்பாடிநாடும் இவ்வேந்தன் ஆட்சிக்குட் பட்டிருந்தன என்பது தெள்ளிதின் விளங்கும். இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்த அந்நாடுகள் சுந்தரசோழன் காலத்திலேயே சோழர் ஆட்சிக்குள்ளாயின. எனவே, உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில் அந்நாடுகள் எத்தகைய இன்னல்களு மின்றி மிக்க அமைதியாக நன்னிலையில் சிறந்திருந்தன என்பது அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.
சோழ நாட்டிலும் இவ்வரசன் காலத்துக் கல்வெட்டுக்கள் மிகுதி யாகக் காணப்படுகின்றன. அவை, இவன் தாய் செம்பியன் மாதேவியும் இவன் தேவிமார்களும் அரசியல் அதிகாரிகளும் புரிந்த அறச்செயல் களையெல்லாம் கூறுவனவாயுள்ளன. அவற்றால் அக்காலத்து ஆட்சி முறை, மக்கள் நிலை, வழக்கவொழுக்கங்கள், பொருளாதார நிலை முதலானவற்றை நன்கறியலாம்.
இனி, இம்மன்னனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டில் வரையப் பெற்ற செப்பேடுகள்9. சென்னையிலுள்ள பொருட் காட்சிச் சாலையில் இருக்கின்றன. அவற்றுள் வடமொழிப் பகுதி காணாமற் போய் விட்டமையின் தமிழ்ப் பகுதி மாத்திரம் இப்போது உள்ளது. அதன் துணை கொண்டு இவ்வேந்தன் முன்னோர் வரலாற்றை அறிய இயலாது. எனினும், அவன் காலத்துச் செய்திகளுள் சிலவற்றையும் சோழர்களின் ஆட்சி முறையையும் அதனால் அறிந்து கொள்ளலாம். அன்றியும், பத்தாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் வரிவடிவில் எவ்வாறு இருந்தன என்பதை உணர்ந்து கொள்வதற்கு அச்செப்பேடுகள் பயன்படுவனவாகும்.
உத்தம சோழனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது செம்பியன் மாதேவி என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அவர்களுள் ஐவர் பெயர்கள், அவ்வூரில் ஒரே கல்வெட்டில் குறிக்கப் பட்டிருக்கின்றன. அன்னோர் பட்டன் தானதுங்கி, மழபாடித் தென்னவன்மாதேவி, இருங்கோளர் மகள் வானவன் மாதேவி, விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள், பழு வேட்டரையர் மகள் என்போர்1. பட்டத்தரசியாக விளங்கியவள் மூத்த நம்பிராட்டியாகிய திரிபுவன மாதேவியாவள்2. அன்றியும் பஞ்சவன்மாதேவி, சொன்னமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் என்னும் வேறுமனைவியரும் இருந்தனர்3. அவர்கள் எல்லோரும், தம் மாமியாகிய செம்பியன்மாதேவி பெயரால் தஞ்சை ஜில்லா நாகப்பட்டினந் தாலுகாவில் உள்ள செம்பியன் மாதேவி என்னும் ஊரில்4 எடுப்பித்த திருக்கயிலாயம் என்னும் சிவாலயத்திற்கு நாள்வழிபாட்டிற்கும் திங்கள் விழாக்களுக்கும் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர். இச்செயலால் அவர்கள் எல்லோரும் தம் கணவனைப் பயந்த மாமியிடத்து எத்துணை அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பது இனிது விளங்கும்.
இனி, முதல் இராசராசசோழன் ஆட்சியில் கோயிற்காரி யங்களும் பிற அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணித்துவந்த மதுராந்தகன் கண்டராதித்த சோழன் என்பவன் இவ்வரசனுடைய புதல்வன் ஆவன்1. இவ்வரசிளங்குமரன், ஐவரடங்கிய ஒரு குழுவுடன் அற நிலையங்களின் கணக்குகளை ஆராய்ந்து வந்தமை கல்வெட்டுக்களால் புலனாகின்றது.
மலாடு எனவும் சேதிநாடு எனவும் வழங்கிய மலைய மானாட்டில் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட சித்தவடத்தடிகள் என்பான் உத்தம சோழனுக்குத் திறை செலுத்திக் கொண்டு அப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்3. மூன்றாங் கிருஷ்ணதேவனது ஆட்சியின் 17 -ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றால் அவன் நரசிங்கவர்மன் என்னும் அபிடேகப் பெயருடையவன் என்பதும் வெளியாகின்றது.
திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள கோவந்தபுத்தூரில் காணப்படும் சில கல்வெட்டுக்களால்5 இவ்வரசன் காலத்திலிருந்த அரசியல் அதிகாரி ஒருவனது வரலாறு அறியப்படு கின்றது. அவன் குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர்நக்கனான விக்கிரமசோழ மாராயன் எனபான். அவன் உத்தம சோழனுடைய பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன். அவன் குவளாலமுடையான் என்று தன்னைக் கூறிக் கொண்டிருத்தலால் அவன் முன்னோர்கள் கங்க மண்டலத்திலுள்ள குவளாலபுரத்திலிருந்து வந்து பழுவூரில் தங்கிய வராதல் வேண்டும். அவன், அரசனால் வழங்கப்பட்ட விக்கிரம சோழ மாராயன் என்ற பட்டம் பெற்ற வனாக இருத்தல் அறியத்தக்கது. அத்தலைவன் கோவந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கை என்ற சிவன் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நிவந்தமாக நெடுவாயில் என்னும் ஊரையும் நூறுகழஞ்சு பொன்னையும் அளித்திருப்பது அவனது சிவ பக்தியின் மாண்பை இனிது புலப்படுத்தும்.
அவ்விக்கிரமசோழ மாராயன் முதல் இராசராச சோழன் ஆட்சிக்காலத்திலும் இராசராசப் பல்லவரையன் என்னும் பட்டம் பெற்று1 உயர்நிலையில் இருந்துள்ளான் என்று தெரிகிறது.
இனி, உத்தம சோழன், தன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய அம்பலவன் பழுவூர் நக்கனுக்கு விக்கிரம சோழ மாராயன் என்னும் பட்டம் அளித்திருத்தலால் இவ்வேந்தனுக்கு விக்கிரமசோழன் என்ற மற்றொரு பெயரும் இருந்திருத்தல் வேண்டும். அன்றியும், இவனை மதுராந்தகன் என்றும் அக் காலத்தில் வழங்கியுள்ளனர் என்பது ஸ்ரீமதுராந்தக தேவரான உத்தம சோழரைத் திருவயிறுவாய்த்த உடையபிராட்டியார்2 என்னும் கல்வெட்டுப் பகுதியினால் நன்கறியக்கிடக்கின்றது.
நடுவில் புலியுருவம் பொறிக்கப்பெற்றதாயும் ஓரத்தில் உத்தமசோழன் என்று வடமொழியில் வரையப்பெற்ற தாயு மிருந்த ஒரு பொற்காசு3 உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்று வழங்கி வந்தது என்று சர்வால்ட்டர் எலியட் என்னும் அறிஞர், தென்னிந்திய நாணயங்கள் என்னும் தம் நூலில் கூறியுள்ளனர். இப்போது கிடைத்துள்ள சோழ மன்னர் நாணயங்களுள் அதுவே மிகப் பழமை வாய்ந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து4.
நாட்டில் யாண்டும் அமைதி நிலவ, மக்கள் எல்லோரும் எத்தகைய துன்பங்களுமின்றி இனிது வாழ்ந்து வருமாறு செங்கோல் செலுத்திக் கொண்டிருந்த உத்தம சோழனும் கி. பி. 985 ஆம் ஆண்டில் இறந்தான். இவனுக்குப்பிறகு சுந்தரசோழன் புதல்வனாகிய முதல் இராசராச சோழன் முடிசூட்டப் பெற்றனன்.
இனி, உத்தம சோழனுடைய அரும்பெறலன்னையாகிய செம்பியன் மாதேவியின் வரலாற்றையும் சமயத் தொண்டையும் ஈண்டுச் சுருக்கமாக எழுதுவதும் ஒரு வகையில் ஏற்புடைய தேயாம்.
இவ்வரசி மழவர் குலத்தில் தோன்றி முதற் கண்டராதித்த சோழன் மாதேவியாகிப் பெருவாழ் வெய்தியவள்; எல்லையற்ற சிவபத்திச் செல்வம் படைத்தவளாய்ச் சிறப்புற்றிருந்தமைபற்றி மாதேவடிகள் எனவும் வழங்கப் பெற்றவள். இவ்வம்மை தன் கணவனை இளமைப் பருவத்தில் இழந்தும், குழந்தையாயிருந்த தன் ஒரே புதல்வனாகிய உத்தம சோழன் பொருட்டே உயிர் வாழ்ந்தவள். இவள், தன் கணவன் இறந்த பின்னர், அரிஞ்சயன், சுந்தரசோழன், உத்தம சோழன் ஆகிய மூவேந்தர் ஆட்சிக் காலங்களிலும் முதல் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1001 வரையிலும் உயிருடன் இருந்தவள்1. இவ்வரசி, செங்கற் கோயில்களைக் கற்றளிகளாக எடுப்பித்தும் பல கோயில்களுக்கு நிவந்தங்கள் விட்டும் அணிகலன்கள் அளித்தும் பொன்னாலும் வெள்ளியாலும் பல்வகைக் கலங்கள் செய்து கொடுத்தும் புரிந்துள்ள அறங்கள் மிகப் பலவாம். அவற்றுள், முதலில் வைத்துப் பாராட்டற்குரியது தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் என்று இக்காலத்தில் வழங்கப்பெறும் திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்தைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்த மாக இறையிலி நிலங்கள் அளித்திருப்பதேயாம்2. அத்திருக் கோயிலுக்கு ஸ்ரீகண்ட ராதித்தன் என்று தன் ஒப்புயர்வற்ற கணவன் பெயரையே இவ்வம்மை வழங்கியிருப்பது3 அவன்பால் வைத்திருந்த பேரன்பினை இனிது புலப்படுத்தாநிற்கும். அக் கோயிலில் கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடுவதாகப் படிமம் ஒன்று வைக்கப் பெற்றிருத்தலை இன்றுங் காணலாம். அக்கோயிலைச் செம்பியன் மாதேவியின் ஆணையின்படி சிறந்த கற்றளியாக எடுப்பித்தவன் ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தன் அரசரண சேகரனான இராசகேசரி மூவேந்த வேளான் ஆவன்1. அத்திருப்பணி. உத்தம சோழன் ஆட்சியில் நடைபெற்றதாகும்.
இனி செம்பியன் மாதேவி கற்றளிகளாக அமைத்த பிறகோயில்கள் விருத்தாசலம்2, திருகோடிகா3, தென் குரங்காடுதுறை4, செம்பியன் மாதேவி5, திருவாரூர் அரநெறி6, திருத்துருத்தி7, ஆநாங்கூர்8, திருமணஞ் சேரி9, திருவக்கரை10 என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்களாம். அவற்றுள், முதல் இராசராசசோழன் ஆட்சியின் 16 ஆம் ஆண்டாகிய கி. பி. 1001- ல் இவ்வம்மை திருவக்கரைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்தமையே தன் வாழ்நாளின் இறுதியில் புரிந்த திருப்பணி எனலாம். மற்றும் பல கோயில்களுக்கு இம்மாதேவி புரிந்த தொண்டுகள் கல்வெட்டுக்களில் மிகுதியாகக் காணப்படு கின்றன. விரிவஞ்சி, அவையெல்லாம் ஈண்டு எழுதப்படவில்லை.
முதல் இராசராசசோழன் மகனாகிய கங்கைகொண்ட சோழன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாய முடையார் கோயிலில் கி. பி. 1019 இல் இவ்வம்மையின் படிமம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்11. எனவே, இவ்வம்மை இறைவன் திருவடியையடைந்த அண்மையிலேயே தெய்வமாகக் கருதிக் கோயிலில் படிமம் வைத்து முடிமன்னனால் வணங்கப் பெற்றுள்ளமை அறியத்தக்கது.
முதல் இராசராசசோழன் கி. பி. 985 - 1014
சோழ இராச்சியத்தின் வளர்ச்சிக்கு முதற்காரணமாக இருந்தது சோழர் குடியில் தோன்றிய அரசர்களின் ஆற்றலேயாம். அத்தகைய ஆற்றலமைந்த சோழ மன்னர்களுள் முதல் இராசராச சோழன் தலைமை வாய்ந்தவன் என்று கூறலாம். இவ்வேந்தன் இரண்டாம் பராந்தக சோழனுக்கு அவன் பட்டத்தரசியாகிய வானவன் மாதேவிபாற் பிறந்த அரும்பெறற் புதல்வன் ஆவன்1. இவன் எடுப்பித்த தஞ்சை இராசராசேச் சுரத்திலும், இவன் பட்டத்தரசி திருவையாற்றில் கட்டுவித்த உலோக மாதேவீச்சுரத்திலும் திங்கள்தோறும் சதயநாளில் சிறப்பாக விழா நடை
பெறுவதற்கு நிவந்தங்கள் விடப்பட்டிருத்தலால் இவன் சதய நன்னாளில் பிறந்தவ னென்பது நன்கறியக் கிடக்கின்றது2. இவனைச் சதய நாள் விழா உதியர் மண்டலந்தன்னில் வைத்தவன் என்று கலிங்கத்துப் பரணி3 புகழ்ந்து கூறுவதாலும் இச் செய்தி வலியுறுகின்றது.
இவ்வேந்தன் மலையாள தேசத்தில் வள்ளுவ நாட்டி லுள்ள முட்டம் என்னும் ஊருக்கு மும்முடி சோழநல்லூர் என்று பெயரிட்டு அதனை அந்நாட்டில் திருநந்திக்கரையிலுள்ள கோயிலுக்கு இறையிலியாக அளித்துத் தான் பிறந்த ஐப்பசித் திங்கள் சதய நாளில் விழா நடத்துமாறு ஏற்பாடு செய்து உள்ளமையால்1 இவன் ஐப்பசித் திங்களில் சதய நாளில் பிறந்தவனென்பது பெறப்படுகிறது. இவன் ஆட்சிக்காலத்தில், திருவெண்காட்டிறைவர்க்கு ஆண்டு தோறும் ஐப்பசித் திங்களில் ஏழு நாட்கள் சதய விழா நடைபெற்றதென்று அவ்வூர்க் கல்வெட்டொன்று2 கூறுவதும், இதனை உறுதிப்படுத்து கின்றது. ஆகவே, ஐப்பசித் திங்களில் சதய நாளிலே இவன் பிறந்தவனென்பது தேற்றம். எனவே, ஆவணித் திங்கள் சதயநாளில் இவன் பிறந்தவன் என்பார் கூற்றிற்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க.
இவ்வரசன் பிறந்தபோது ஆதிசேடன் மனைவியராகிய நாகர்குல மகளிர், தம் கணவர்க்கு இனி நிலப் பொறை குறைந்துவிடும் என்னும் உவகை மிகுதியால் நடித்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன3. அன்றியும், அச்செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு சக்கரக் குறிகள் அமைந்திருந்தன என்று புகழ்கின்றன அவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், இவன் பேரரசனாதற்குரிய உத்தம இலக்கணங்கள் அமைந்த உடலமைப்புடையவனாய் இளமையில் திகழ்ந்திருத்தல் வேண்டுமென்பது இனிது புலனாகின்றது.
இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டுவழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது5. இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுமுதல் இவனுக்கு இராசராசன் என்னும் பெயரே வழங்கி வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது6. இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்தில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று இவனைக் காந்தளூர்ச்சாலைக் கல மறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன் என்று கூறுகின்றது1. ஆகவே, அவ்வாண்டிற்கு முன்னரே காந்தளூர்ப் போர் நிகழ்ந்ததாதல் வேண்டும். எனவே, இவன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 988 ல் சேரனையும் அவனுக்கு உதவிபுரியவந்த பாண்டியனையும் காந்தளூர்ப் போரிற் புறங்கண்டு வாகை சூடினான் என்பது தெள்ளிது. அவ் வெற்றியின் பயனாக இவன் அவ்வேந்தர்களின் இரு முடிகளையும் கைப்பற்றிக் கொண்டு மும்முடி சோழன் என்னும் சிறப்புப் பெயரும் எய்தினான். அந்நாள் முதல் அரசர்க்கரசன் என்று பொருள்படும் இராசராசன் என்னும் சிறப்புப் பெயரும். இவ்வேந்தனுக்கு உரியதாயிற்று. பிறகு, இப்பெயர் இவனுக்குரிய இயற்பெயராகவே வழங்கி வந்தது எனலாம். ஆகவே கி. பி. 988 முதல் இவன் வாணாள் முழுமையும் இராசராசன் என்றே வழங்கப் பெற்றனன் என்பது உணரற்பாலதாகும்.
இனி, இம்மன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பல்வகைப் பணிகள் புரிந்தமை பற்றித் தில்லை வாழ் அந்தணர்கள் கி. பி. 1004 ஆம் ஆண்டில் இவனுக்கு இராசராசன் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர் என்றும் அது முதல்தான் இராசராசன் எனவும் இவன் வழங்கப்பெற்றனன் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளருள் சிலர் கூறியுள்ளனர்2. அஃது எவ்வாற்றானும் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. தில்லையம்பலத்திற்கு இராசராசன் திருப்பணி புரிந்தமைக்குரிய சான்றுகள் கல்வெட்டுக்களில் யாண்டுங் காணப்படவில்லை அன்றியும் இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 988 ஆம் ஆண்டிலேயே இவனுக்கு இராசராசன் என்னும் பெயர் வழங்கியது என்பது திருச்செங்காட்டங்குடி திருமால்புரம் என்னும் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது3. இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் திருவெண் காட்டிலும்4, ஐந்தாம் ஆண்டில் திருவேதிகுடி, திருவிசலூர் என்னும் ஊர்களிலும்1 ஆறாம் ஆண்டில் திருச்சோற்றுத் துறையிலும்2 வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்கள் இவனை இராசராசன் என்றே கூறுகின்றன. அவற்றையெல்லாம் ஆராயுமிடத்து, இவ்வேந்தன் தான் அடைந்த வெற்றி காரணமாக கி. பி. 988 ஆம் ஆண்டிலேயே இராசராசன் என்னும் பெயரை எய்தினன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, அவ்வாராய்ச்சியாளர் கருத்து ஒரு சிறிதும் பொருந்தாமை காண்க.
தன் சிறிய தாதையாகிய உத்தமசோழன் ஆட்சியில் இளவரசுப் பட்டம் கட்டப் பெற்றிருந்த இவ்விளங்கோ, அவன் இறந்த பின்னர், கி. பி. 985 ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்று3 அரியணை யேறினான். பிற்காலச் சோழ மன்னர்கள் ஒருவர் பின்னொருவராக மாறி மாறிப் புனைந்து கொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் இவ்வரசன் இராசகேசரி என்ற பட்டம் பூண்டு ஆட்சிபுரியத் தொடங்கினான். பிற்காலச் சோழர் குல முதல்வனாகிய விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட சோழ இராச்சியம் இராசராச சோழன் ஆட்சியில்தான் உயர் நிலையை எய்திற்று. இவன் இயற்கையில் ஒப்பற்ற ஆற்றலும் வீரமும் நுண்ணறிவும் படைத்தவனா யிருந்தமையோடு சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரியுமாறு நீடிய ஆயுளைப் பெற்றிருந் தமையும் சோழ இராச்சியம் இவன் ஆட்சியில் யாண்டும் பரவிப் பெருகுவதற்குக் காரணமாயிருந்தது எனலாம். இவன் புதல்வன் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் மிகப் பெருகிக் கடல்கடந்தும் பரவியிருந்ததாயினும் அதற்கு அடிகோலி வைத்தவன் நம் இராசராச சோழனேயாவன். அறிவும் அன்பும் நிறைந்த அரசியல் அதிகாரி களையும் வீரஞ்செறிந்த படைத் தலைவர்களையும் இவன் தேர்ந் தெடுத்துக் கொண்டு ஆட்சி நடத்தியமையே இவன் எக் கருமங்களையும் எளிதிற் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருந்தது என்பது ஒருதலை.
இவனை இளமையில் வளர்த்தவர்கள் முதல் கண்ட ராதித்தசோழன் மனைவியாகிய செம்பியன் மாதேவியும் இவன் தமக்கையாகிய குந்தவைப் பிராட்டியுமாவர். அவர்கள் சிவபக்தி, சமயப்பொறை முதலான உயர் குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள். அத்தகையாரது அன்பு கலந்த அறிவுரைகளை நாள்தோறும் கேட்டு ஒழுகி வந்தமையே இவன் சைவசமய வளர்ச்சியிலும் சிற்பம், ஓவியம், இசை முதலான கலை வளர்ச்சியிலும் பெரிதும் ஈடுபட்டுச் சமயப்பொறை யுடையவனாய் வாழ்ந்துவந்தமைக்குக் காரணமாகும்.
முற்காலத்தில் பாண்டியரும் பல்லவரும் பிறர்க்கு இறையிலியாக நிலங்கள் வழங்குங்கால் அவ்வறச் செயல்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து உரியவர்க்கு அளிப்பது வழிவழி வந்த வழக்கமாகும். அவர்கள் அங்ஙனம் செய்யும்போது அச் செப்பேடுகளில் தம்முன்னோர் வரலாற்றை முதலில் எழுதுவித்து, பின்பு தாம் புரிந்த அறச்செயல்களைக் குறிப்பிட்டு வந்தனர் என்பதை அன்னோர் ஆட்சிக் காலங்களில் வெளியிடப்பெற்ற செப்பேடுகளால் நன்கறியலாம். இராசராச சோழனுடைய தந்தையாகிய இரண்டாம் பராந்தக சோழனும் அம்முறையைப் பின் பற்றிய செய்தி அவனது அன்பிற் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது.
தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ்மொழியில் அகவற் பாவில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட பெருவேந்தன் நம் இராசராச சோழனேயாவன். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற்கொள்வாராயினர். எனவே, அரசர்கள் தம் மெய்க்கீர்த்திகளைக் கல்வெட்டுக்களில் எழுதும் வழக்கம் முதலில் இராசராச சோழன் காலத்தில்தான் உண்டாயிற்று என்பதும் அதற்கு முன்னர் அஃது இல்லை என்பதும் அறியற் பாலனவாகும்.
மெய்க்கீர்த்திகள்1 கூறுவனவெல்லாம் வெறுங் கற்பனைச் செய்தி களல்ல. அவை, அவ்வேந்தர்களின் ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த உண்மைச் செய்திகளையே உணர்த்துகின்றன. சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க்கீர்த்திகளையுடையவராகவும் இருப்பதுண்டு. ஒவ்வொரு வேந்தனுடைய மெய்க்கீர்த்தியும் வெவ்வேறு மங்கல மொழி யால் தொடங்கப் பெற்றிருத்தலால் அம்மெய்க் கீர்த்தியின் தொடக்கத் திலுள்ள தொடர்மொழிகளாகிய அவற்றைக் கண்ட அளவிலேயே அக்கல்வெட்டு எவ்வேந்தனுடைய ஆட்சிக் காலத்தில் வரையப் பட்டது என்பதை ஐயமின்றிக் கூறிவிடலாம். முதல் இராசராச சோழனது மெய்க் கீர்த்தி திருமகள் போலப் பெரு நிலச் செல்வியும் என்று தொடங்குகிறது. அம்மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ள இவ்வேந்தனது வீரச் செயல் களெல்லாம் ஆண்டுதோறும் அவை நிகழ்ந்த முறையில் நிரல்பட வைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே, ஆட்சியாண்டுகள் ஏற ஏற மெய்க்கீர்த்தியும் வளர்ந்துகொண்டே போகும் என்பது ஒருதலை. ஏனைய மன்னர் மெய்க்கீர்த்தியும் அத்தகையவே.
இனி, இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் துணை கொண்டு இவனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளையும் இவனது வெற்றிச் சிறப்பையும் ஆராய்ந்து காண்பது அமைவுடையதேயாம். திருமகள் போல என்று தொடங்கும் இவன் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 993 முதல்தான் கல்வெட்டுகளில் காணப்படுகிறது2. இவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டின் தொடக்கத்திலேயே காந்தளூர்ச் சாலைக்கல மறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன் என்று தன்னைக் கூறிக் கொள்வதோடு3 தன் மெய்க்கீர்த்தியிலும் அச்செயலையே முதலில் குறிப்பிட்டுள்ளனன். ஆகவே, இவன் கி. பி. 988-ஆம் ஆண்டில் காந்தளூர்ச் சாலையில் போர் நிகழ்த்தி வெற்றி பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இவன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முதற் போர் அதுவேயாகும்.
காந்தளூர்ச் சாலை என்பது திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி யாக இந்நாளில் உளது. அதனை வலியசாலை என்றும் வழங்குவர்1. அது கடற்கரைப்பட்டினம் என்பது சேரலன் வேலைகெழு காந்தளூர்ச் சாலை என்ற கல்வெட்டுத் தொடரால் பெறப்படுகிறது2. அங்குச் சேர மன்னனோடு இராசராச சோழன் போர் நிகழ்த்தியமைக்குக் காரணம் தெளிவாகப் புலப்பட வில்லையாயினும் ஓரளவிற் குறிப்பாகத் தெரிகிறது. இவன் காலத்தில் சேர நாட்டில் ஆட்சி புரிந்தவன் பாற்கர ரவிவர்மன் என்பான். அவன் கி. பி. 978 முதல் 1036 வரையில் அந்நாட்டில் அரசாண்டான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது3. எனவே, இராசராச சோழன் ஆட்சிக் கால முழுமையும் அவன் இருந்தனன் என்பதில் ஐயமில்லை. இராசராச சோழனுக்கும் பாற்கர ரவிவர்மனுக்கும் பகைமை உண்டாக்கிப் போர் நடைபெற்றமைக்குக் காரணம், இவன் சேர நாட்டிற்கனுப்பிய தூனொருவனை அவன் அவமதித்து இழிவாக நடத்தி உதகையில் சிறை யிட்டிருந்தமையேயாம். இச்செய்தி, கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக் கூத்தரால் பாடப்பெற்ற உலாக்களில் மிகச் சுருக்கமாகச் சொல்லப் பட்டுள்ளது4. தூதர்களை அவமதிப்பதும், சிறையிடுவதும் அரச ராயினார்க்கு அடாத செயல்களே. அன்றியும், அச்செயல்கள் அரச நீதிக்கு மாறு பட்டனவும் ஆகும். அறநெயியிற் பிறழாத சேரர்குடியிற் பிறந்த பாற்கர ரவிவர்மன் என்பான், இராசராச சோழன் தூதனை அவ்வாறு நடத்தியமைக்குக் காரணம் யாது என்பது இந்நாளில் புலப்படவில்லை. அக்கொடுஞ் செயல்களை யுணர்ந்த இராசராசசோழன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சேர நாட்டிற்குச் செல்வானாயினான். அங்ஙனம் செல்லுங்கால் பாண்டி நாட்டைக் கடந்து செல்வது இன்றியமையாத தாயிற்று. பாண்டியன் அமர புயங்கன் என்பான் சேரனுக்குச் சிறந்த நண்பனாவன். எனவே, அவன் படையுடன் வந்து இராசராசனை எதிர்த்தான். அதுபோது நிகழ்ந்த போரில் இவன் பாண்டியனைப் புறங்கண்டு தன் படையுடன் சேரநாட்டை அடைந்தான். கடற்கரைப் பட்டினமாகிய காந்தளூர்ச் சாலையில் சேர மன்னனுக்கும் சோழ மன்னனுக்கும் பெரும்போர் நடைபெற்றது. அப்போரில் சேர மன்னனுடைய கப்பற் படைகள் அழிந்து போயின. பின்னர், இராசராச சோழன் தன் தூதன் சிறையிடப்பெற்றிருந்த உதகைக்குப் படையுடன் சென்றான். உதகை என்பது கன்னியாகுமரி ஜில்லாவிலுள்ள கல்குளந் தாலூகாவில் நாகர்கோயிலுக்கு வடமேற்கேயுள்ள ஒரு நகரமாகும்1. அஃது அக் காலத்தில் மாபெரும் மதில்கள் சூழ்ந்ததாய் மாளிகைகளும் சூளிகை களும் தன்பாற்கொண்டு உயரிய கோபுரங்கள் அமைந்த வாயில்களை யுடையதாய்ச் சேரர்க்குரிய சிறந்த நகரங்களுள் ஒன்றாக நிலவியது. அந்நகர்க்குத் தன் படையுடன் சென்ற இராசராச சோழன் அங்கு எதிர்த்த சேரன் படையைப் போரிற் புறங்கண்டு அதிலிருந்த கோட்டை மதில்கள், கோபுரங்கள், மாளிகைகள் முதலானவற்றைத் தன் படைகளால் தகர்ப்பித்து எஞ்சியவற்றை எரிகொளுவிச் சூறையாடினான்2. அங்குச் சிறையில் வைக்கப்பட்டிருந்த தன் தூதனையும் விடுவித்தான். இவன் தன் தூதனை அந்நகரில் சேரன் சிறையில் வைத்திருந்தமை பற்றியே இத்தகைய அழிவு வேலைகளைப் பெருங் கோபத்தினால் அங்குச் செய்துவிட்டான் என்பது வெளிப்படை. பிறகு தென்கடற் கோடியிலுள்ள விழிஞத்திலும் பெரும்போர் நடைபெற்றது. அப்போரிலும் சேரநாட்டு வீரர்கள் தோல்வியுற்றுப் புறங்காட்டியோடவே, இராசராசன் வெற்றி யெய்தி அந்நாட்டைக் கைப்பற்றினான். சேர நாட்டுப் போர் நிகழ்ச்சிகளும் ஒருவாறு முடிவுற்றன. இவன் வெற்றித் திருவை மணந்து அந்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் இவன் பிறந்தநாள் விழாவும் வரநேர்ந்தது. ஆகவே, தான் பிறந்த சதய நாள் விழாவை அந்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்தினான். அன்றியும், ஆண்டுதோறும் அவ்விழா சேர நாட்டில் நடைபெறுமாறும் இவன் தக்க ஏற்பாடு செய்தான்1. பிறகு, இவ்வேந்தன் அந்நாட்டிலிருந்து சோணாட்டிற்குத் திரும்புங் கால் பொற்குவியலும் களிற்று நிரைகளும் மிகுதியாகக் கொணர்ந்தனன்.
அப்போர் நிமித்தம் சேர நாட்டிற்குச் சென்றிருந்த படைத்தலைவர்களுள் ஒருவனான கம்பன் மணியன் ஆகிய விக்கிரமசிங்க மூவேந்த வேளான் என்பவன், அங்கிருந்து இராசராச சோழன் கொண்டுவந்த கடவுட் படிமங்கள் பலவற்றுள் மரகத தேவர் படிமத்தை அரசனிடம் பெற்று, அதனைத் திருப் பழனத்திலுள்ள சிவன் கோயிலில் எழுந்தருளிவித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது3. அக்கல்வெட்டில் சொல்லப்பட்ட கடவுட்படிமம் நவமணிகளுள் ஒன்றாகிய மரகதத்தால் செய்யப்பெற்றதாதல் வேண்டும். அதில் பொதுவாக மரகத
தேவர் என்று குறிப்பிடப்பட்டிருத்தலாலும் இக்காலத்தில் அப்படிமம் அக்கோயிலில் காணப்படாமையாலும் அஃது எந்தக் கடவுளுடைய படிமம் என்பது புலப்படவில்லை.
இனி, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இராசராச சோழனது போர்ச் செய்திகளைப் பற்றிக் கூறுஞ் செய்திகள் ஆராயற்பாலன. இவன் தென் திசையிலிருந்து தன் திக்கு விசயத்தைத் தொடங்கினான் என்றும் அப்போது பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த பாண்டியன் அமர புயங்கன் என்பவன் முதலில் தாக்கப்பட்டான் என்றும் அவன் போரில் தோல்வியுறவே அந்நாடு இவ்வேந்தனால் கைப்பற்றப்பட்ட தென்றும் அச்செப்பேடுகள் கூறுகின்றன1. இராசராசன் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றபோது இவனை இடையில் தடுத்துப் போர் செய்தவன் அவ்வமர புயங்கனே யாவன். அக்காரணம் பற்றியே இவன் தன் திக்கு விசயத்தின்போது முதலில் அப்பாண்டியனைத் தாக்கிப் போரில் வென்று அவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான் என்பது ஈண்டுணரற் பாலது. இவன் கல்வெட்டுக்கள் எல்லாம் செழியரைத் தேசுகொள் கோவிராச கேசரிவர்மன் என்று கூறுவதால் இவன் பாண்டியர்களை வென்று முற்றும் அடக்கினமை பெறப்படுகிறது. செழியர் என்று பன்மையில் குறிப்பிடுவதால் ஒருவர்க்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்களை இவன் வென்றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப் படுகிறது. அன்றியும், தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள இவன் கல்வெட்டுக்கள், மலைநாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்து என்று கூறுவதால்2 இவன் காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் என்பதும் அவர்கள் எல்லோரையும் இவன் வென்று அடக்கி விட்டனன் என்பதும் நன்கு வெளியாதல் காண்க. திருவாலங் காட்டுச் செப்பேடுகளில் கூறப்பெற்ற பாண்டியன் அமரபுயங்கன் என்பவன் அந்நாட்களிலிருந்த பாண்டியர்க்குத் தலைவன் போலும். இராசராச சோழனுக்குப் பாண்டிய குலாசனி என்னும் சிறப்புப் பெயர் இருப்பதாலும் பாண்டி மண்டலம் இராசராச மண்டலம் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றமையாலும் இவ் வேந்தன் கல்வெட்டுக்கள் இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு முதல் பாண்டி நாட்டில் காணப்படுதலாலும், போர் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்நாடு இவனது ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது என்பது ஒரு தலை.
இராசராச சோழன் தன் திக்குவிசயத்தில் முதலில் நிகழ்த்தியது பாண்டி நாட்டுப் போர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்தாநிற்க, இவன் கல்வெட்டுக்கள் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்த இவனது சேர நாட்டுப் போரையே முதலில் கூறுகின்றன. இராசராசன் நடத்திய சேர நாட்டுப் போர், பாண்டி நாட்டுப் போர் ஆகிய இரண்டினுள் எது முதலில் நடைபெற்றது என்பது பற்றிச் செப்பேடும் கல்வெட்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தை உணர்த்துவனபோல் காணப்படினும் அவை உண்மையில் முரண்படக் கூறவில்லை. இராசராசன் தன் திக்கு விசயத்தைத் தொடங்குவதற்கு முன், தன் தூதனைச் சேரன் அவமதித்துச் சிறையிலிட்டமை பற்றிச் சேர நாட்டிற்குப் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. ஆகவே சேர நாட்டில் காந்களுர்ச் சாலையில் கி.பி. 988-ல் நிகழ்ந்ததே இராசராச சோழனது முதற் போர் என்று கல்வெட்டுக்கள் உணர்த்தும் செய்தி உண்மையானதேயாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளை நுண்ணிதின் ஆராயுங்கால் அவை கூறுஞ் செய்தியிலும் தவறில்லை என்பது நன்கு புலனாகும். இராசராச சோழன் திக்குவிசயஞ் செய்யத் தொடங்கியபோது முதலில் தாக்கி வென்றது தென்றிசையிலுள்ள பாண்டி நாடே என்பதுதான் திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக் கிடப்பது. எனவே, இராசராசனது திக்குவிசயச் சிறப்பைக் கூறத் தொடங்கிய திருவாலங் காட்டுச் செப்பேடுகள் அதற்கு முன்னர் இவன் ஆட்சியில் நிகழ்ந்த போர்ச் செயலைக் குறிப்பிடா மையால் முதலில் நடைபெற்ற காந்தளூர்ச்சாலைப் போர் அவற்றில் காணப்படவில்லை என்க.
இனி, இராசராச சோழன் தன் திக்குவிசயத்தில் பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பிறகு கொல்லத்திற்குச் சென்று அங்குப் போர் புரிந்து அதனைக் கைக்கொள்வானாயினன். கொல்லம் என்பது இந்நாளில் கேரள இராச்சியத்திற்குள் அமைந்துள்ள சிறு நாடாகும். அது, முன்னர் இவ்வேந்தன் கைப்பற்றிய சேர நாட்டில் சேரன் ஆட்சியில் எஞ்சியிருந்த பகுதியாகும். அதனையும் அதனைச் சார்ந்த கொடுங்கோளூரையும் இவன் வென்று தன்னடிப்படுத்திய காரணம் பற்றி இவனுக்குக் கீர்த்தி பராக்கிரமன் என்னும் சிறப்புப் பெயர் வழங்கியமை அறியற்பாலதாம்1. அஃது இவன் இரண்டாம் முறை சேரனுடன் நடத்திய போராகும்.
பிறகு இராசராச சோழனது படை குடமலை நாட்டைத் தாக்கிற்று. அந்நாடு இக்காலத்தில் குடகு என்று வழங்கும் நாடேயாம்2. கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் அப்போது அதனை அரசாண்டு கொண்டிருந்தான். பணசோகே என்ற இடத்தில் ஒரு பெரும்போர் நடைபெற்றது. அதில் அவன் தோல்வியுற்று ஓடிப் போனான். அப்போரில் வீரங்காட்டிப் போர்புரிந்த மனிஜா என்பவன் செய்கையைப் பாராட்டி, இராசராச சோழன் ஆணையின் படி அவனுக்கு க்ஷத்திரய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் வழங்கப் பெற்றதோடு மாளவ்வி என்னும் ஊரும் அளிக்கப்பட்டது. மனிஜாவின் மரபினர் சுமார் நூறாண்டுகள் வரையில் சோழர்கட்கு அடங்கிய குறுநில மன்னராய்க் கொங்காள்வார் என்னும் பட்டத்துடன் குட நாட்டில் அரசாண்டு வந்தனர். என்வே, அப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு குடகு மலை நாடு அம் மனிஜா என்பவனுக்கே அளிக்கப்பட்டது போலும்.
அதன் பின்னர், குடகு நாட்டிற்குப் பக்கத்திலுள்ள கங்கபாடியும் நுளம்ப பாடியும் இராசராசன் படைகளால் தாக்கப்பெற்றன. கங்கபாடி என்பது மைசூர் இராச்சியத்தின் தென்பகுதியும் சேலம் ஜில்லாவின் வடபகுதியும் தன்னகத்துக் கொண்ட கங்க நாடாகும். அதன் தலைநகர் தழைக்காடு என்பது. அந்நாட்டைக் குவளாலபுர பரமேசுவரர்களான மேலைக் கங்கர்கள் ஆண்டு வந்தனர். நுளம்பபாடி என்பது மைசூர் இராச்சியத்தின் கீழ்ப்பகுதியையும் பல்லாரி ஜில்லாவையும் தன்பாற் கொண்ட நாடாகும்3. பல்லவருள் ஒரு கிளையினரான நுளம்பர்கள் அதனை ஆண்டு வந்தனர். அப்படையெடுப்பின் இறுதியில், மைசூர் ஜில்லாவைத் தன்னகத்துக் கொண்ட தடிகைபாடியும் இராசராச சோழனுக்கு உரியதாயிற்று. இராஷ்டிரகூடர்கள் வலிகுன்றிக் கிடந்தமை யாலும் கங்கரையும் நுளம்பரையும் ஆதரித்து உதவி புரிவார் எவரும் இல்லாமையாலும் நம் இராசராசன் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி என்னும் நாடுகளை எளிதில் கைப்பற்றிக் கொண்டான். மைசூர் இராச்சியத்தில் கி. பி. 991-ஆம் ஆண்டில் வரையப் பெற்ற சோழ நாராயணன் கல்வெட்டொன்று உளது. அதில் குறிப்பிடப்
பட்ட சோழ நாராயணன் என்பான் இராசராச சோழனேயாவான் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து1. அஃதுண்மை யாயின் அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசராசன் ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி. பி. 991-க்கு முன்னர் நடைபெற்றனவாதல் வேண்டும்.
சோழர் படைகட்குத் தலைமை வகித்து அப்போர்களை நடத்தியவன் இராசராச சோழன் புதல்வனாகிய முதல் இராசேந்திர சோழனே யாவான். மும்முடி சோழன் பெற்ற களிறு மலையம், கொண்கானம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றி யமையோடு சேரனையும் நாட்டை விட்டோடும்படி செய்தது என்று மைசூர் இராச்சியத்திலுள்ள இராசராச சோழனது எட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று2 கூறுவதும் அச்செய்தியை வலியுறுத்துதல் காண்க. அவ் வரசகுமாரன் இளமையில் கங்க மண்டலத்திற்கும் வேங்கி மண்டலத்திற்கும் மாதண்ட நாயகனாக இருந்தான்; அன்றியும் தன் தந்தையால் அளிக்கப்பெற்ற பஞ்சவன் மாராயன் என்ற பட்டமும் பெற்றிருந்தான்.
இராசராச சோழனால் வென்று கைக்கொள்ளப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பது இவனது திருமகள் போல என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியினால் அறியப்படுகிறது. ஈழ மண்டலத்தில் அப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் கி. பி. 981-ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனேயாம்4. அவன் இராசராச சோழனுக்குப் பகைஞரா யிருந்த பாண்டியர்க்கும் சேரனுக்கும் உற்றுழியுதவிவந்தனன். அதுபற்றியே இராசராசன் ஈழ மண்டலத்தின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது எனலாம். அப்படையெழுச்சியிலும் தலைமை வகித்துச் சென்றவன் இவன் புதல்வனாகிய இராசேந்திர சோழனேயாவன். கி. பி. 991-ல் ஈழ மண்டலத்தில் படைவீரர்களால் குழப்பம் உண்டாகவே, அரசனாகிய ஐந்தாம் மகிந்தன் என்பான் அதனை அடக்கும் ஆற்றலின்றி1 அம்மண்டலத்துள் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு ஓடிவிட்டான். எனவே சோழ நாட்டுப் படை அம்மண்டலத்தின் வட பகுதியை எளிதில் கைப்பற்றிக் கொண்டது. அன்றியும், அந்நிலப் பரப்பு மும்முடி சோழ மண்டலம் என்று பெயரிடப்பெற்று2 இராசராச சோழன் ஆட்சிக்கு உள்ளாக்கப்பட்டது. முரட்டொழில் சிங்களர் ஈழ மண்டலம் என்றும் எண்டிசை புகழ் தர ஈழ மண்டலமும் என்றும், இவன் மெய்க்கீர்த்திகள் கூறுவனவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், ஈழ நாட்டுப் போரில் வலிமிக்க சிங்கள வீரர்கள் பேராற்றல் காட்டிப் போர் புரிந்தனர் என்பதும் அத் தகையாரைச் சோணாட்டுப் படை வென்று அவர்களது நாட்டைக் கைப்பற்றியமை இராசராசனுக்கு யாண்டும் பெரும் புகழை யுண்டுபண்ணியது என்பதும் நன்கு வெளியாகின்றன.
பண்டைக்கால முதல் ஈழ மண்டலத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் போரில் சோழரால் அழிக்கப்பட்ட மையால் அம்மண்டலத்தின் நடுவணுள்ள பொலன்னருவா என்னும் நகரம் சனநாத மங்கலம்3 என்று பெயரிடப்பெற்றுச் சோழர்க்குத் தலைநகராக வைத்துக் கொள்ளப்பட்டது. இதற்குமுன் ஈழ மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்ற தமிழ் வேந்தர்கள் அதன் வட பகுதியை மாத்திரம் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இராசராசன் அம்மண்டலம் முழுவதையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்த வேண்டும் என்று எண்ணிய படியால் பழைய தலைநகரை விடுத்து நாட்டின் நடுவணுள்ள பொலன்னருவா என்னும் ஊரைத் தன் தலைநகராக அமைத்துக் கொண்டான் என்பது ஈண்டு அறியத்தக்கது. பிற்காலத்திலிருந்த சிங்கள வேந்தனாகிய முதல் விசயவாகு என்பவன் அநுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றனனாயினும் அவன் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட நகரம் பொலன்னருவா என்பதேயாம்.
இனி ஈழ மண்டலம் இராசராச சோழன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதற்கு அந்நாட்டிலேயே பல சான்றுகள் உள்ளன. கொளும்பு மாநகரில் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப் பெற்றுள்ள கருங்கற் பாறை யொன்றில் சோழ மண்டலத்து க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு வெளாநாட்டுச் சிறுகூற்ற நல்லூர்க்கிழவன் தாழிகுமரன் ஈழமான மும்முடி சோழ மண்டலத்து மாதோட்டமான இராசராசபுரத்து எடுப்பித்த ராசராச ஈவரத்து மகாதேவர்க்குச் சந்திராதித்தவல் நிற்க1 என்று தொடங்கும் ஒரு கல்வெட்டுக் காணப்படுகின்றது. அக்கல் வெட்டால் சோணாட்டுத் தலைவன் ஒருவன் ஈழமண்டலத்தில் மாதோட்ட நகரத்தில் தன் நாட்டு வேந்தன் பெயரால் இராச ராசேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எடுப்பித்து, அதற்கு அர்த்தயாம வழிபாட்டிற்கும் வைகாசித் திருவிழாவிற்கும் நிவந்தமாக இறையிலி நிலம் அளித்த செய்தி புலனாகின்றது. அன்றியும் ஈழமண்டலம் இராசராசன் சிறப்புப் பெயரால் மும்முடி சோழமண்டலம் என்று அந்நாளில் வழங்கப்பெற்று வந்தது என்பதும் மாதோட்ட நகரம் இராசராசபுரம் என்னும் மற்றொரு பெயரும் பெற்றிருந்தது என்பதும் அக்கல்வெட்டால் வெளியாதல் காண்க. சோழர்க்குத் தலைநகராயிருந்த பொலன்னருவா என்னும் ஊரில் சிவாலயம் ஒன்று கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிற்பவமைதியை நோக்குங்கால் கி. பி. பத்து பதினொன்றாம் நூற்றாண்டு களில் கட்டப்பெற்ற சோழர் காலத்துக் கோயில்களைப் போல் அஃதும் அமைந் துள்ளது என்பது தெளிவாம். ஆகவே, இராசராச சோழனே அக்கற்றளியை எடுப்பித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருது கின்றனர். அக்கோயிலுக்கு வானவன் மாதேவீச்சுரம் என்னும் பெயர்1 இருத்தலால் தன் தாயாகிய வானவன் மாதேவியை நினைவு கூர்தற் காரணமாகத் தலைநகராகிய பொலன்னருவாவில் இராசராச சோழன் அதனை எடுப்பித் திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. ஈழ மண்டலத்தில் காணப்படும் இராசராசன் கல்வெட்டுக்களும் அஃது இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை வலியுறுத்து கின்றன2. இவ் வேந்தன் தஞ்சை மாநகரில் தான் எடுப்பித்த பெருங்கோயிலாகிய இராசராசேச்சுரத்திற்கு ஈழ மண்டலத்திலும் சில ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளனன் என்பது அக்கோயிலிற் காணப்படும் கல்வெட்டுக் களால் புலப்படு கின்றது3. எனவே, ஈழ மண்டலம் இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தாலன்றி அவ்வூர்களை அக்கோயிலுக்கு நிவந்தமாக விட்டிருக்க இயலாதன்றோ?
இனி, தஞ்சை பெரிய கோயிலிலுள்ள கல்வெட்டொன்றில், சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி வந்த ஸ்ரீபாத புஷ்பமாக அட்டித் திருவடி தொழுந்தன என்ற தொடர்கள்4 காணப்படு கின்றன. இராசராச சோழனது ஆனைமங்கலச் செப்பேடுகளும் இவன் சத்தியாசிரயனை வென்ற செய்தியைக் குறிப்பிடுகின்றன5. அன்றியும், சத்தியாசிரயன் இராசராசனது கடல்போன்ற பெரும் படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தைவிட்டு ஓடி விட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன6. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கு மிடத்து, மேலைச் சளுக்கிய மன்னனாகிய சத்தியாசிரயனுக்கும் இராசராச சோழனுக்கும் பெரும் போர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், அதில் இராசராசனே வெற்றி பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் நன்கு வெளியா கின்றன. மேலைச் சளுக்கியர்க்கும் சோழர்க்கும் பகைமை ஏற்பட்டமைக்குக் காரணம் புலப்படவில்லை. ஒரு காலத்தில் மேலைச் சளுக்கியர் ஆட்சிக்குட்பட்டிருந்த நுளம்ப பாடியை இராசராசன் வென்று தன் ஆட்சிக்குள்ளாக்கினமையே அன்னோர் பகைமைக்கு ஒரு காரண மாகவும் இருக்கலாம். அன்றியும், வேறு காரணங்களும் இருத்தல் கூடும். அவை, இப்போது புலப்படவில்லை.
மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் தைலபன் இறந்த பின்னர், அவன் மகன் சத்தியாசிரயன் என்பவன் இரட்டபாடி ஏழரை இலக்கத்திற்கு அரசனானான். தார்வார் ஜில்லா ஹொட்டூரில் கி. பி. 1007-ஆம் ஆண்டில் வரையப்பெற்றுள்ள அவன் கல்வெட்டொன்று, சோழர் குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்த விநோதன் மகனும் ஆகிய நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்களடங்கிய பெரும்படையுடன் பீசப்பூர் ஜில்லாவிலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும் இளங்குழவிகள், மறையோர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராகக் கொண்டும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான் என்று கூறுகின்றது1. அன்றியும், அத்தகைய வீரனை நாட்டைவிட்டு ஓடும்படி செய்தவன் சத்தியாசிரயன் என்று அக் கல்வெட்டுப் புகழ்ந்து கூறுகின்றது. இதனால் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் அவன்மகன் இராசேந்திரன் மேலைச் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வென்று வந்த செய்தி உறுதி யாதல் காண்க. ஆனால் பகைப்புலத்தரசன் கல்வெட்டில் காணப்படும் அத்துணை அழிவு வேலைகளைச் சோழ இராசகுமாரனாகிய இராசேந்திரன் செய்திருக்கமாட்டான் எனலாம். அப்போரில் சோழர்கள் வெற்றி பெற்றுப் பெரும் பொருளுடன் திரும்பினரே யன்றி அந்நாட்டைக் கைப்பற்றிக்கொள்ளவில்லை என்பது திண்ணம். சோழ மன்னரின் கல்வெட்டுக்கள் அந்நாட்டில் காணப்படாமையே இச்செய்தியை நன்கு வலியுறுத்துகின்றது. மேலைச் சளுக்கிய நாட்டுப் போர்க்களத்தில் இராசேந்திரன் ஆணையின் படியே, சத்தியாசிரயன் ஏறியிருந்த யானையைக் குத்தி வீழ்த்த முயன்ற ஊற்றத்தூர்ச் சுருதிமான் நக்கன் சந்திரனான இராசமல்ல முத்தரையன் என்னும் வீரன் இறந்தனன் என்று திருச்சிராப்பள்ளி ஜில்லா ஊற்றத்தூரிலிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. அப் போரில் இராசராசன் வெற்றி எய்தியமை பற்றித் தஞ்சைப் பெரிய கோயிலில் தட்சிணமேருவிடங்கர்க்குப் பொற்பூக்கள் வழங்கியுள்ளான்2. அப்போரின் இறுதியில் துங்கபத்திரை யாற்றிற்கு தெற்கேயுள்ள நாடுகள் இராசராச சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம்.
இராசராசன் மெய்க்கீர்த்தியில் இவன் வேங்கை நாடு கொண்டமையும் குறிக்கப்பட்டுள்ளது. வேங்கை நாடு என்பது கிருஷ்ணை, கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் முற்காலத்தில் அமைந்திருந்த ஒரு நாடாகும். அந்நாட்டை மேலைச் சளுக்கியரின் தாயத்தினரான கீழைச் சளுக்கியர் அரசாண்டு வந்தனர். கி. பி. பத்தாம் நூற்றாண்டின் நடுவில் கீழைச் சளுக்கிய அரச குமாரர்களுக்குள் சிறிது மனவேறுபாடு உண்டாயிற்று. அந் நாளில் மூத்தோன் வழியினனாகிய இரண்டாம் வீமன் மகன் இரண்டாம் அம்மராசன் (கி. பி. 945 - 970) அங்கு அரசாண்டு கொண்டிருந்தான். இளையோன் வழியினனாகிய இரண்டாம் யுத்த மல்லன் மகன் பாதபன் என்பவன் அவ்வாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற கருத்தினனாய் இராஷ்டி கூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவனது உதவி பெற்று, இரண்டாம் அம்மராசனைப் போரில் வென்று நாட்டைக் கவர்ந்துகொண்டு ஆட்சி புரிவானாயினன்3. அப்போது அம்மராசன் கலிங்க நாட்டிற்கு ஓடிவிட்டானென்று பாதபனுடைய ஆரும்பாகச் செப்பேடுகள் கூறுகின்றன4. மூத்தோன் வழியினர்க்கும் இளையோன் வழியினர்க்கும் நாட்டின் ஆட்சியுரிமை பற்றி அடிக்கடி போர்கள் நிகழ்ந்தமையால் கி. பி. 945-ஆம் ஆண்டு முதல் வேங்கி நாட்டில் குழப்பமும் கலகமும் மிகுந்துகொண்டே வந்தன. பாதபனுடைய ஆட்சிக்குப் பிறகு அவன் தம்பி இரண்டாம் தாழன் முடி சூடி அரசாண்டான். குறுநில மன்னர்களும் அரசியல் அதிகாரிகளும் அவன்பால் பற்றின்றி முரண்பட்டிருத் தலையுணர்ந்த அம்மராசன் தென்கலிங்க வேந்தனது துணைகொண்டு படை யெடுத்துத் தாழனைப் போரிற் கொன்று நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிவானாயினன். இளையோன் வழியினர் ஒருவரு மின்றி தாழனொடு முடிவெய்தினர். கி. பி. 970-ல் அம்மராசனை அவன் மாற்றாந் தாயின் மகனாகிய தானார்ணவன் என்பான் வடகலிங்க மன்னன் உதவி கொண்டு போரிற் கொன்று தன் தமையன் ஆண்டு வந்த நாட்டைக் கைப்பற்றி கி. பி. 973 வரையில் ஆட்சி புரிந்தான்.
தன் மைத்துனனாகிய அம்மராசனைக் கொன்று நாட்டைக் கவர்ந்துகொண்ட தானார்ணவன் செயலைக் கண்டு சீற்றங் கொண்ட தெலுங்கச் சோழனாகிய ஜடா சோடவீமன் என்பான் கி. பி. 973-ல் வேங்கி நாட்டின் மேற்படையெடுத்துத் தானார்ணவனைக் கொன்று அந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சிபுரியத் தொடங்கினான். அப்பொழுது தானார்ணவன் மக்களாகிய சக்திவர்மனும் விமலாதித்தனும் வடகலிங்க நாட்டிற்கு ஓடி அங்குத் தங்கியிருந்தனர்.
அந்நாட்டு வேந்தனாகிய காமார்ணவனும் அவன் தம்பி விநயாதித் தனும் அவர்களை ஆதரித்தமை பற்றி அவர்களுடைய பகை ஞனாகிய அத் தெலுங்க வீமனால் முறையே கி. பி. 978, 981-ஆம் ஆண்டுகளிற் போரிற் கொல்லப்பட்டு நாட்டை யிழக்கும்படி நேர்ந்தது. கலிங்க நாடும் அவன் ஆட்சிக்குள்ளாயிற்று. அந்நாட்களில் கீழைச் சளுக்கிய அரசகுமாரர் இருவரும் சோழ மண்டலத்தையடைந்து இராசராச சோழன்பால் அடைக்கலம் புகுந்து, தெலுங்க வீமன் கவர்ந்துகொண்ட தமது நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தனர்.
மூத்தோன் வழியினரின் செப்பேடுகள் எல்லாம் அவ் விருபத்தேழு ஆண்டுகளும் வேங்கி நாட்டில் குழப்பமும் கலகமும் மிகுந்திருந்த காலம் என்று கூறுகின்றனர்1. அக்காலத்தில் அவர்கள் தம் நாட்டையிழந்து ஓரிடத்தில் கரந்துறையும் வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தமையால் அவர்களுடைய செப்பேடுகள் அவ்வாறு கூறுவதில் வியப்பொன்று மில்லை.
இராசராச சோழன் அவர்கட்கு வேங்கி நாட்டை வென்று அளிப்பதற்கு முன்னர், சீட்புலிநாடு, பாகிநாடு என்பவற்றின் மேல் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றுவது இன்றியமை யாததாயிற்று. அந்நாடுகள், நெல்லூர் ஜில்லாவின் வட பகுதியிலிருந்தவை யாகும்2. முதற் பராந்தக சோழன் அவற்றைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்தி யிருந்தான். அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நிகழ்ந்த இராஷ்டிரகூடர் படையெடுப்பினால் சோழ மன்னர்கள் அவற்றை இழக்கும்படி நேர்ந்தது. இராசராச சோழன் அவற்றைக் கைப்பற்றும் பொருட்டு கி. பி. 991 ஆம் ஆண்டில் தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருகாடியுடையான்3 பரமன் மழபாடியானான மும்முடிச் சோழன் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பினான். அப்படையெடுப்பின் பயனாக, சீட்புலி நாடும் பாகிநாடும் இராசராச சோழன் ஆட்சிக்குள்ளாயின. அப்போர் நிகழ்ச்சி திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும்4 சக்திவர்மனது பற்றுச் செப்பேடுகளாலும் அறியப்படுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள இராசராசன் ஆட்சியின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் அச்செய்தியையுணர்த்துகின்றது5. அன்றியும், நெல்லூர் ஜில்லாவிலுள்ள ரெட்டிபாளையத்தில் காணப்படும் இராசராசன் ஆட்சியின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று6 அந்நிலப்பரப்பு இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பதை நன்கு புலப்படுத்துகின்றது.
இராசராச சோழன் வேங்கி நாட்டிற்குத் தெற்கேயுள்ள சீட்புலி பாகி நாடுகளை வென்று கைப்பற்றிய பிறகு கீழைச் சளுக்கிய மன்னனாகிய சக்திவர்மனுக்கு அவன் நாட்டைப் பெறுமாறு உதவி புரிவது எளிதாயிற்று. ஆகவே கி. பி. 999 ஆம் ஆண்டில் இராசராசன் வேங்கி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று ஜடா சோட வீமனைப் போரில் வென்று சக்திவர்மனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக முடி சூட்டினான்1. எனினும், தோல்வியுற்ற அவ்வீமன் கி. பி, 1001 -ல் கலிங்கப் படையின் துணை கொண்டு சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையிலும் துரத்தி வந்தான். அந்நிலையில் இராசராசன் அவனைப் போரிற் கொன்று வேங்கி நாட்டைச் சக்தி வர்மனுக்குத் திரும்ப அளித்தனன். அதன் பிறகுதான் அந்நாடு கீழைச் சளுக்கியரது ஆட்சியில் நிலைபெறுவதாயிற்று. அன்றியும் சக்திவர்மனுக்குப் பிறகு அவன் தம்பி விமலாதித்தன் வேங்கி நாட்டிற்குப் பிறகு அரசனாக முடி சூட்டப்பெற வேண்டுமென்ற ஏற்பாடு இராசராசனால் செய்யப்பட்டது. உடனே அவ்விமலாதித்தன் இளவரசுப் பட்டமுங்கட்டப் பெற்றனன். இராசராச சோழன் அத்துணை ஆதரவையும் அன்பையும், அவ் விமலாதித்தன்பாற் காட்டியமைக்குக் காரணம் தன் புதல்வியாகிய குந்தவைப்பிராட்டியை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்திருந்தமையேயாம்.
சக்திவர்மன் வேங்கி மண்டலத்தில் பன்னிருயாண்டுகள் ஆட்சிபுரிந்து கி. பி. 1011 ஆம் ஆண்டில் இறந்தான். பிறகு விமலாதித்தன் அந்நாட்டில்தான் முடிசூட்டப் பெற்று அரசாளுவா னாயினன்.
இராசராச சோழன் வேங்கி நாட்டை வென்று சக்தி வர்மனுக்கு அளித்தனனாயினும் அதனைத் தன் ஆட்சிக் குட்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஈண்டு அறியற்பாலது. எனவே, இவன் தன் பாதுகாப்பிற்கும் ஆதரவிற்கும் உட்பட்ட தனி இராச்சியமாகவே வேங்கி நாட்டை மதித்து நடத்தி வந்தனன் என்பது தெள்ளிது. இவ்விரண்டு அரச குடும்பத் தினர்க்கும் மணவினையால் ஏற்பட்ட தொடர்பே இவர்களைப் பிணித்து இத்தகைய நிலையில் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்படி செய்தது என்பது திண்ணம்.
இனி, இராசராச சோழன் வென்று கைப்பற்றிய நாடுகளுள் கலிங்கமும் ஒன்று என்பது இவன் மெய்க்கீர்த்தியால் நன்கறியக் கிடக் கின்றது. கலிங்க நாடு என்பது கோதாவரி யாற்றிற்கும் மகாநதிக்கு மிடையில் கீழ்கடலைச் சார்ந்திருந்த ஒரு நிலப் பரப்பாகும். அஃது இந்நாளில் வட சர்க்கார் என்று வழங்கும் நிலப் பகுதியில் அடங்கியுள்ளது. அந்நாட்டில் மகேந்திரகிரியில் தமிழ் மொழியிலும் வட மொழியிலும் வரையப்பெற்று ஆண்டு குறிக்கப்படாத இரண்டு கல்வெட்டுக்கள் உள. அவை இராசேந்திர சோழன், விமலாதித்தன் என்னும் குலூத வேந்தன் ஒருவனைப் போரில் வென்று அம்மலையில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்று கூறுகின்றன1. ஆனால், அப்போர் நிகழ்ச்சி இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியில் காணப்படவில்லை. ஆகவே, அஃது அவன் பட்டம் பெறுவதற்குமுன், தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவன் இளவரசனாயிருந்தபோது நிகழ்ந்ததாதல் வேண்டும். அக்காரணம் பற்றியே அவனது கலிங்க வெற்றி இராசராச சோழனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெள்ளிது.
மகேந்திரகிரிக் கல்வெட்டில் சொல்லப்படும் விமலா தித்தன் யாவன் என்பதும், இராசேந்திரன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவன் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றமைக்குக் காரணம் யாது என்பதும் இப்போது புலப்பட வில்லை. ஒருகால் அக்கலிங்க வேந்தன் கீழைச் சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கு அடிக்கடி இடையூறு இழைத்துக்கொண்டு இருந்திருத்தல் கூடும்; அது பற்றி அவனை வென்றடக்கக் கருதி2 இராசேந்திரன் கவிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்று அங்ஙனஞ் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இராசராச சோழனது போர்ச் செயல்களுள் இறுதியில் நிகழ்ந்தது இவன் முந்நீர்ப்பழந் தீவு பன்னீராயிரமும் கைப்பற்றும் பொருட்டு படையெடுத்தமையேயாம். பழந்தீவு பன்னீராயிரம் என்பது சேர நாட்டிற்குத் தென்மேற்கே அரபிக் கடலிலுள்ள மால் தீவுகளைக் குறிக்கும் பழைய பெயராகும். கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் என்னும் அகத்தியச் சூத்திரத்தினாலும்2, குமரி யாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் என்னும் தெய்வச்சிலையாரது தொல்காப்பியச் சொல்லதிகார உரைப் பகுதியினாலும்3, பண்டைக் காலத்தில் குமரியாற்றிற்குத் தெற்கே கடலில் பழந்தீவுகள் இருந்தமை இனிது புலனாகும். எனவே அவை சேர நாட்டிற்குத் தென்மேற்கே அண்மையில் இருந்தமையின் அத் தீவுகளிலிருந்த மக்களால் சேர நாட்டினர்க்கு அடிக்கடி இன்னல்கள் நேர்ந்திருக்கலாம். சேர நாடு இராசராச சோழன் ஆட்சிக்குட்பட்டிருந் தமையால் அந்நாட்டு மக்களின் துன்பங்களை ஒழிப்பதும் இவ் வேந்தனது கடமைகளுள் ஒன்றேயாம். அது பற்றியே இவன் பழந்தீவுகளின் மேல் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றி யிருத்தல் வேண்டும். அப் படையெழுச்சியைப் பற்றிய செய்திகள் சிறிதும் புலப்படவில்லை. எனினும், இவன் வென்று கைப்பற்றிய பழந்தீவுகள் கடல் நடுவில் இருந்தமையால் அவற்றின் மீது படையெடுத்துச் செல்வதற்கு கப்பற் படைகள் இன்றியமையாதன ஆகும். எனவே, பெருவேந்தனாகிய நம் இராசராசன், அலைகடல் நடுவுள் பல கலங்கள் செலுத்தியே முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் வென்று கைப்பற்றினனாதல் வேண்டும். இவன் ஆட்சியில் முன் நிகழ்ந்த ஈழ மண்டலப் படை யெடுப்பையும் இவன் கப்பற் படைகளின் துணைகொண்டே நிகழ்த்தியிருத்தல் வேண்டும். ஆகவே, இராசராச சோழனிடத்தில் சிறந்த கப்பல் படை அந்நாளில் இருந்தது என்பது தேற்றம்.
இனி, இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் மிக உயர்நிலையில் இருந்தது எனலாம். பாண்டி மண்டலமும் சேர மண்டலமும் அடங்கிய இராசராசத் தென் னாடும்1 தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும், கங்க மண்டலமும், கொங்கு மண்டலமும் நுளம்பபாடி நாடும், கலிங்க நாடும், ஈழமாகிய மும்முடிச்சோழ மண்டலமும், இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்று உறுதி யாகக் கூறலாம். இம்மண்டலங்களுள் சிலவற்றிற்குப் பெயர் களாக இவனது சிறப்புப் பெயர்கள் வழங்கப்பெற்றமை அறியத்தக்கது.
இராசராச சோழன் பேராற்றலும் பெருவீரமும் படைத்த தன் புதல்வனாகிய இராசேந்திரனுக்குக் கி. பி. 1012-ஆம் ஆண்டில்2 இளவரசுப் பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களில் கலந்து கொண்டு பல துறைகளிலும் பயிற்சி பெற்று வருமாறு செய்தனன். அவ்வாண்டிற்கு முன்னர் நிகழ்ந்த கங்கப் போர், கலிங்கப் போர், குந்தளப் போர் முதலானவற்றிற்குச் சென்று அவற்றை வெற்றியுடன் நடத்திப் புகழெய்தியவன் இராசேந்திர சோழனேயாவன். ஆதலால், அவன் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்ற நாளில் முப்பது வயதிற்குக் குறையாதவனாக இருந்திருத்தல் வேண்டும். தஞ்சைப் பெரிய கோயிலிலும் மற்றும் பல ஊர்களிலும் இராசராசன் ஆட்சியின் 29-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றமையாலும் அவ் வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் கிடைக்காமை யாலும் இவன் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தனன் என்பது நன்கு தெளியப்படும். எனவே, கி. பி. 1014-ஆம் ஆண்டில் இவன் இறைவன் திருவடியை அடைந்தான் என்பது தேற்றம். இவனது ஆட்சியின் 29-ஆம் ஆண்டாகிய கி. பி. 1014-ல் கும்பகோணத்திற்கு வடகிழக்கே மூன்றரை மைலில் காவிரியாற்றின் வட கரையிலுள்ள திருவியலூர்க் கோயிலில் இவன் துலாபாரம் புகுந்ததையும்1 இவனுடைய முதற் பெருந்தேவியாகிய உலோக மாதேவி இரணிய கருப்பம் புகுந்ததையும்2 நுணுகி நோக்குங்கால் அவை இரண்டும் இவனது வாழ்நாளின் இறுதியில் நடைபெற்ற அறச்செயல்கள் என்பது ஒருதலையாக உணரப்படுகின்றது. அவ்வாண்டு முதல் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களும் நம் தமிழகத்தில் யாண்டும் காணப்படு கின்றன. ஆகவே அவ்வாண்டில் இராசராசன் இறக்கவே, இராசேந்திரன் முடி சூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினன் என்பது தெள்ளிது.
இராசராச சோழன் பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவனாதலின் அதுபற்றிப் பல சிறப்புப் பெயர்கள் இவனுக்கு அந்நாளில் வழங்கின என்பது கல்வெட்டுக்களால் உய்த்துணரக் கிடக்கின்றது. அவற்றுள், இராசராசன் என்ற பெயர் முன் விளக்கப் பட்டது. மற்றச் சிறப்புப் பெயர்கள் க்ஷத்திரிய சிகாமணி, இராசேந் திரசிங்கன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் நித்தவினோதன், இராசசிரயன், சிவபாதசேகரன்3 சநநாதன், சிங்களாந்தகன், சயங்கொண்ட சோழன், மும்முடிச் சோழன்4 இரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன், சோழேந்திர சிங்கன், சோழமார்த்தாண்டன், இராசமார்த்தாண்டன், தெலுங்ககுல காலன், கீர்த்திப் பராக்கிரமன் என்பன. அவற்றுள் க்ஷத்திரிய சிகாமணி முதலாகவுள்ள ஏழு சிறப்புப் பெயர்கள், இராசராசன் காலம் முதல் சோழ மண்டலத்தில் வள நாடுகளின் பெயர்களாகவும்1 வழங்கி வந்தமை அறியத்தக்கது. அன்றியும் சயங்கொண்ட சோழன், மும்முடிச் சோழன், நிகரிலி சோழன் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் சயங்கொண்ட சோழ மண்டலம் மும்முடிச் சோழ மண்டலம், நிகரிலி சோழ மண்டலம் என முறையே தொண்டை மண்டலம், ஈழ மண்டலம், நுளம்பபாடி என்பவற்றின் பெயர்களாகவும் வழங்கப் பெற்றுள்ளன. பல ஊர்களும், பேரூர்களிலுள்ள சேரிகளும் இராசராச சோழனுடைய சிறப்புப் பெயர் களையுடையனவாய் அந் நாட்களில் நிலவின என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. அவற்றுள் சில, அப்பெயர்களுடன் இக்காலத்தும் இருக்கின்றன.
அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர் போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழித் தேவன் என்பது வழக்கற்றுப் போயிற்று. இவன் தன் பெயராகிய இராசராசன் என்பது என்றும் நின்று நிலவ வேண்டும் என்ற எண்ணமுடையவனாய்த் தலைநகராகிய தஞ்சாவூரில் மாபெருங் கோயில் ஒன்றை எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளான்.
அம்மாடக் கோயில்2 பிற்காலச் சோழர் காலத்துச் சிற்பத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இராசராசனது பெருமைக்கும் புகழுக்கும் சிவபத்திக்கும் ஒரு கலங்கரை விளக்காகவும் கண்டோர் யாவரும் வியக்குமாறு வானளாவ நின்று நிலவுவது யாவரும் அறிந்ததொன்றாம். பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி இராஜராஜேச்வரம் என்னும் கல்வெட்டுப் பகுதியினால்1 இராசராசன் கோயில் எடுப்பித்த இடமும் அக்கோயிலின் பெயரும் அஃது அமைந்துள்ள நாடும் வள நாடும் நன்கு புலனாகும்.
இனி, இவன் எடுப்பித்த இராசராசேச்சுரம் என்னும் அக் கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது2. அதன்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது3 அதன் உச்சியில் போடப் பெற்றிருப்பது ஒரே கருங்கல். அஃது ஏறக்குறைய எண்பது டன் எடையுள்ளது என்றும்4 விமானத்தின் மேல் அமைக்கப்பெற்றுள்ள செப்புக்குடம் 3083 பலம் நிறையுடையது என்றும்5 அக்குடத்தின் மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926½ கழஞ்சு கொண்டது என்றும்6 அவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.
அக்கோயிலின் திருப்பணி இவ்வேந்தனது ஆட்சியின் 19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 23-ஆம் ஆண்டில் பெரும் பாலும் நிறை வேறிவிட்டது என்று தெரிகிறது. இவன் ஆட்சியின் 25-ஆம் ஆண்டு 2-ஆம் நாளில் தூபித்தறியில் வைப்பதற்குப் பொற்றகடு வேய்ந்த செப்புக்குடம் கொடுக்கப்பட்டிருத்தலால்7 அக்காலத்தில் தான் திருப்பணி முடிவுற்றுக் குடமுழுக்காகிய கடவுண் மங்கலமும் நடைபெற்றிருத்தல் வேண்டும். எனவே, அந்நிகழ்ச்சி கி. பி. 1010-ஆம் ஆண்டில் நடைபெற்றதாதல் வேண்டும். பிறகு, இவன் தன் ஆட்சியின் 26-ஆம் ஆண்டு 20-ஆம் நாளில் அக்கோயில் விமானத்தில் கல்வெட்டுக்கள் வரைதற்குக் கட்டளை யிட்டிருப்பதும்8 அவ்வாண்டிற்கு முன் அத்திருப்பணி முடிவெய்தி யிருத்தல் வேண்டும் என்பதை உறுதிப் படுத்துகின்றது. அக்கோயிலிலுள்ள முதற் கோபுர வாயிலாகிய திருத்தோரண வாயில் கேரளாந்தகன் வாயில்1 எனவும் இரண்டாம் வாயிலாகிய திருமாளிகை வாயில் இராசராசன் வாயில்2 எனவும் அந்நாளில் வழங்கியுள்ளன; அக்கோயில் விமானம் தட்சிணமேரு என்று வழங்கியது3. கோயிலின் வெளித் திருச்சுற்றிலுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப்பட்டது. அது பன்னிரண்டடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும் எட்டேகாலடி அகலமும் உடையது4. கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தனவேயன்றி வேறு தெய்வங்கட்கு இட மின்மை அறியற்பாலதாம்.
இனி, இராசராசேச்சுரமுடைய பெருமான் மீது இராசராசன் காலத்த வரான கருவூர்த்தேவர் என்னும் பெரியார் ஒரு பதிகம் பாடிப் பரவியுள்ளார். அது, சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் சேர்த்துத் தொகுக்கப் பட்டுள்ளது. இராசராச சோழனும் இவன் உரிமைச் சுற்றத்தினரும் வழித்தோன்றல்களும் அக்கோயிலுக்கு மிக்க வருவா யுள்ள ஊர்களும் பெரும் பொருள்களும் அளித்துப் போற்றி வந்தனர் என்பது அங்குக் காணப்படும் பல கல்வெட்டுகளால் புலனாகின்றது.5 அன்றியும் இவன் காலத்தில் விளங்கிய அரசியல் அதிகாரிகளும் படைஞரும் அக் கோயிலுக்குப் பொற்பூக்களும் அணிகலன்களும் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
இனி, இராசராச சோழன் தஞ்சை மாநகரில் புதிய கோயில் ஒன்று அமைத்தனனா அன்றிப் பழைய கோயிலைப் பெரிய கற்றளியாக எடுப்பித்தனனா என்பது ஈண்டு ஆராய்தற்குரியதொன்றாகும். அப்பர் அடிகளது திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் காணப்படும் தஞ்சைத் தளிக்குளத்தார்1என்னுந் தொடரால் சைவ சமய குரவர்கள் காலங்களில் தஞ்சை மாநகரில் தளிக்குளம் என்னுங் கோயில் ஒன்று இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது. ஆகவே, அப்பெரியோர்கள் அத்திருப்பதி மீது பதிகங்கள் பாடியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. தேவாரப் பதிகங்களுள் பல அழிந்து போயின, என்பது பலரும் அறிந்ததேயாம். எனவே, தஞ்சைத் தளிக்குளத்திற்குரிய பதிகங்களும் அழிந்து போயிருத்தல் வேண்டும். எனினும் அப்பர் அடிகள் தம் திருவீழிமிழலைப் பதிகத்தில் அத்திருப்பதியைக் குறிப்பிட்டிருத்தலால் அது வைப்புத் தலமாக இக்காலத்தில் கருதப்பட்டு வருதல் அறியற்பாலது. அத்தகைய தஞ்சைத் தளிக்குளத்தைத்தான் இராசராச சோழன் பெரிய கற்றளியாக எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுவரம் என்னும் பெயரும் வழங்கிச் சிறப்பித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலதாகும். எனவே, அத்திருக் கோயிலின் தொன்மையும் பெருமையும் அறிந்துதான் இராசராசன் அதற்கு மிகச் சிறந்த முறையில் திருப்பணி புரிந்து யாவரும் வியக்கும் நிலையில் அதனை அமைத்துள்ளனன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, தஞ்சை மாநகரில் வெற்றிடமாகக் கிடந்த நிலப்பரப்பில் அஃது இராசராசனால் புதியதாக அமைக்கப்பெற்ற தொன்றன்று என்பது தெள்ளிது.
இராசராச சோழன் சிவபாதசேகரன் என்னுஞ் சிறப்புப் பெயர் உடையவன் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தியுடையவன் என்பது இவன் தஞ்சையில் எடுப்பித்த பெருங்கோயிலாலும் அதற்கு வழங்கியுள்ள நிவந்தங்களாலும் நன்கு விளங்கும். இவன் அத்துணைச் சிவபத்தியுடையவனாய்த் திகழ்ந் தமைக்குக் காரணம், சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு பல தொண்டுகள் ஆற்றிய செம்பியன் மாதேவியும் குந்தவைப் பிராட்டியும் இவனை இளமையில் வளர்த்து நல்வழிப்படுத்தியமையேயாம். தாம் மேற்கொண்ட சமயமொழிய மற்றைச் சமயங்களைக் கடைப்பிடித்தொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானுந் துன்புறுத்தும் அரசர் சிலர் போல, இவன் புறச் சமயத்தாரிடம் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இவன் எல்லாச் சமயங்களையும் சோபான முறையில் வைத்துக் காணுங் கருத்துடையவனாய் அவற்றிற்குச் சிறிதும் இடையூறு நேராமல் காப்பாற்றி வந்தனன் என்பது இவன் காலத்து நிகழ்ச்சிகளால் புலப்படுகின்றது. நாகப்பட்டினத்தின் கண் கடாரத் தரசனாகிய சூளாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவன் மகன் மாற விஜயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற புத்த விகாரத் திற்கு1 இராஜராஜப் பெரும்பள்ளி என்று தன் பெயரிடு வதற்கு இவன் உடன்பட்டமையும் அதற்கு நிவந்தமாக ஆனை மங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாக2 அளித்தமையும் புறச் சமயங்களை இவன் ஆதரித்து வந்த செய்தியை நன்கு விளக்குவனவாகும். இவன் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத்துச் சுவர்களில் புத்தப் படிமங்கள் இருத்தலை இன்னுங் காணலாம். திருமாலுக்குப் பங்களூர் ஜில்லாவிலுள்ள மணலூரில் சயங்கொண்ட சோழ விண்ணகரம் என்னுங் கோயிலும்3 தலைக்காட்டிற்கு அண்மையில் ஓர் ஊரில் இரவிகுல மாணிக்க விண்ணகரம் என்னுங் கோயிலும்4 இவ் வேந்தனால் எடுப்பிக்கப்பெற்று அவற்றிற்கு இவனாலும் இவன் தமக்கை குந்தவைப் பிராட்டியாலும் நிவந்தங்கள் விடப் பட்டிருக்கின்றன. சயங்கொண்டசோழன், இரவிகுல மாணிக்கம் என்பன இராசராசனுக்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்கள் என்பது முன் கூறப்பட்ட செய்தியேயாம். அவற்றை யெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்திலிருந்த எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடை யவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இனிது பெறப்படுகின்றது. எனவே, பேரரசராயிருப்பார்க்கு இன்றியமையாத சிறந்த பண்புகளுள் ஒன்றாகிய சமயப்பொறை நம் இராசராச சோழன்பால் நன்கு நிலைபெற்றிருந்தது என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க.
இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுள் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்தமை ஒன்றாகும். ஓர் அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எல்லா வற்றையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்திக் குடிகளிட மிருந்து வாங்குவது இயலாததாகும். ஆதலால் இவன் தன் ஆட்சியின் 16-ஆம் ஆண்டாகிய கி. பி. 1001-ல் சோழ இராச்சியம் முழுவதையும் அளக்குமாறு ஆணையிட்டனன்1. அவ்வேலையும், குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் தலைமையில் தொடங்கப் பெற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவேறியது. அவ்வதிகாரி இராச்சியம் முழுமையும் அளந்த காரணம் பற்றி உலகளந்தான் என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றனன். அன்றியும், இராசராச மாராயன் என்னும் பட்டமும் அவனுக்கு இராசராச சோழனால் வழங்கப்பெற்றிருப்பது அறியத்தக்கது. நிலம் அளந்த கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதனை உலகளந்த கோல் என்றும் அந்நாளில் வழங்கினர்.
இம்மன்னன் புரிந்த மற்றோர் அரிய செயல், சோழ இராச்சியத் திலுள்ள ஒவ்வொரு மண்டலத்தையும் பல வள நாடுகளாகப் பிரித்து யாண்டும் தன் ஆட்சி இனிது நடைபெறுமாறு செய்தமையேயாம். அஃது இராச்சியம் முழுமையும் அளந்த பின்னர், இவன் தன் ஆட்சியின் பதினேழாம் ஆண்டாகிய கி. பி. 1002-ல் புரிந்த சீர்திருத்தச் செயலாகும்2. அதற்குமுன் ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப் பட்ருந்தது; சில நாடுகளைத் தன்னகத்துக் கொண்ட வளநாடு என்னும் உட்பிரிவு அக்காலத்தில் இல்லை. நாட்டை இக்காலத்துத் தாலூகாவிற்குச் சமமாகவும், வளநாட்டை ஜில்லாவிற்கு ஒப்பாகவும் மண்டலத்தை மாகாணமாகவும் கொள்ளலாம். எனவே, நம் சென்னை நாடு ஜில்லாக்களின்றித் தாலூகாக்களை மாத்திரம் உடையதாயிருக்குமாயின் எவ்வாறிருக்குமோ, அவ்வாறே சோழ மண்டலமும் இராசராசன் ஆட்சிக்குமுன் பல நாடுகளைத் தன்னகத்துக்கொண்டு விளங்கியது. இவ்வேந்தனே தன் ஆட்சி நன்கு நடைபெற வேண்டி, சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்பாற்கொண்ட வளநாடு என்னும் ஓர் உட்பிரிவை ஒவ்வொரு மண்டலத்திலும் அமைத்தனன். அச்செயல் இவன் அரசியல் நுட்பங்களை இயல்பாகவே உணர்ந்தவன் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்துவதாகும். இவனது ஆணையின்படி சோழ மண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில் மாத்திரம் முன்னேயிருந்த இருபத்து நான்கு கோட்டங்களும் இருபத்து நான்கு வளநாடுகளாக மாற்றப்பெற்றன. இராசராச சோழன் ஆட்சியின் 17-ஆம் ஆண்டு முதல்தான் ஊர்களையும் நகரங்களையும் குறிக்குமிடத்து அவை அமைந்த நாட்டைக் கூறுவதோடு நில்லாமல் அந்நாடு அமைந்துள்ள வள நாட்டையும்1 ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது என்பது ஈண்டு அறியத்தக்கது.
இராசராசனுடைய அமைச்சர்களும் நாட்டதிகாரிகளும் அறநிலையங்களைப் பாதுகாத்துக் கண்காணிப்போரும் அறங் கூறவையத் தாரும் பிற அரசியல் அதிகாரிகளும் ஊர்ச்சபை யாரும் தத்தம் கடமை களை ஒழுங்காக நிறைவேற்றி வந்தமையால் இவன் ஆட்சியில் குடிகள் எல்லோரும் இனிது வாழ்ந்து கொண்டிருந்தனர். பயிற்சி பெற்ற சிறந்த தரைப்படைகளும் கடற்படைகளும் இவ்வேந்தன்பால் மிகுதியாக இருந்தமையோடு அவற்றை நடத்தற்குத் தகுதியும் ஆற்றலும் வாய்ந்த பல படைத்தலைவர்களும் இருந்தனர். ஆதலால், சோழ இராச்சியத்தில் பிற வேந்தர் படையெழுச்சி இவன் ஆட்சிக் காலத்தில் நிகழவே இல்லை. ஆகவே, இவன் இராச்சியத்திலிருந்த மக்கள் எல்லோரும் பகையரசர் களால் ஏற்படும் படை யெழுச்சி முதலான எத்தகைய இன்னல்களுமின்றி இன்புற்று வாழ்ந்துவந்தனர் என்பது தேற்றம்.
இனி, தஞ்சைமாநகரில் இராசராசன் எடுப்பித்த திருக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்தவர்களுள் இவன் மனைவிமார்களும் காணப்படு கின்றனர். அச்செய்திகளையுணர்த்துங் கல்வெட்டுக்களை ஆராயுங்கால் இவனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது புலனாகின்றது. அவர்களுள் பட்டத்தரசியாக விளங்கியவள் உலோகமாதேவியாவாள். அவளுக்குத் தந்தி சக்தி விடங்கி என்னும் வேறொரு பெயரும் உண்டு. அவ் வம்மையே இம்மன்னன் வாழ்நாள் முழுமையும் பட்டத்தரசியாக இருந்தனள் என்பது இவன் தன் ஆட்சியின் 29-ஆம் ஆண்டில் திருவியலூர்க் கோயிலில் துலாபாரம் புகுந்தபோது அவ் வரசியும் இரணியகருப்பம் புகுந்துள்ளமையால் தெள்ளிதின் உணரப்படும். அம்முதற் பெருந் தேவி தஞ்சைமாநகர்க்கு வடக்கேயுள்ள திருவை யாற்றில் ஐயாறப்பரது கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உலோகமாதே வீச்சுரம் என்னும் கோயில் ஒன்று எடுப்பித்து அதன் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்துள்ளனள்1. அஃது இந்நாளில் உத்தர கைலாயம் என்று வழங்குகின்றது. அச்செயலால் உலோகமாதேவியும் தன் கணவனைப்போல் சிவபக்தி யுடையவளாகத் திகழ்ந்தனள் என்பது புலப்படுதல் காண்க.
இராசராச சோழனுடைய மற்ற மனைவிமார்கள், சோழ மாதேவி2, திரைலோக்கியமாதேவி3, பஞ்சவன்மாதேவி4, அபிமானவல்லி5, இலாட மாதேவி6, பிருதிவிமாதேவி7, மீனவன்மாதேவி8, வீரநாராயணி1, வில்லவன் மாதேவி2, வானவன் மாதேவி3 என்போர். அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவ்வரசியே இராசேந்திர சோழனைத் தன் மகனாகப் பெற்ற பெருமையுடயவள் என்பது உணரற்பாலது4. பஞ்சவன்மாதேவி என்பாள் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவில் மழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த சேரர் குலக் குறுநில மன்னனாகிய பழு வேட்டரையன் மகள் ஆவள். இராசராசனுக்குப் பெரு வீரனாகிய இராசேந்திரன் ஒரே புதல்வன் ஆவன். வேறு புதல்வர் இலர். ஆனால், பெண் மக்கள் இருவர் இருந்தனர்5. அவர்களுள், மூத்த பெண் மாதேவடிகள் என்னும் பெயரினள். இளைய பெண் இரண்டாம் குந்தவையாவள். அவள், கீழைச்சாளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கு மணஞ் செய்து கொடுக்கப்பெற்றனள். அவ்விருவர்களுக்குப் பிறந்த புதல்வனே முதற் குலோத்துங்கன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் என்பது அறியற்பாலதாகும்.
இராசராசன் தமக்கைக்கும் இளைய புதல்விக்கும் குந்தவை என்னும் பெயர் இருத்தலால் வேறுபாடு உணர்தற்பொருட்டு இவன் தமக்கையைப் பெரிய குந்தவை என்று வழங்கியுள்ளனர். அவ்வம்மை வல்லவரையர் வந்திய தேவரை மணந்து வாழ்ந்தவள் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் தான் எடுப்பித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தானும் தன் தமக்கையும் கொடுத்தவற்றை நடு விமானத்தில் கல்லில் வரையும்படி முதலில் குறிப்பிட்டிருப்ப தொன்றே1 இவன் தன் தமக்கையிடத்தில் வைத்திருந்த பேரன்பையும் பெருமதிப்பையும் நன்குணர்த்துவதாகும்.
இவன்தன் பாட்டனாகிய அரிஞ்சயனையும் பெரிய பாட்டியாகிய செம்பியன் மாதேவியையும் நினைவு கூர்தற்கு அறிகுறியாக முறையே வட ஆற்காடு ஜில்லாவில் மேற்பாடி என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்ற கோயிலும்2 திருமுக் கூடலில் செம்பியன் மாதேவிப் பெருமண்டபம் என்ற மண்டபமும்3 கட்டுவித்திருப்பது இவன் தன் முன்னோர் களிடத்தில் எத்துணை அன்பும் மரியாதையும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்தாநிற்கும். இராசராசன் திருமுக்கூடலில் எடுப்பித்த அப் பெரு மண்டபம் ஊர்ச்சபையார் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்பட்டது என்பது அறியத்தக்கது.
இனி, இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் ஆண்டு தோறும் இவனுக்குத் திறை செலுத்திக்கொண்டு வாழ்ந்து வந்த குறுநில மன்னர் சிலர் இருந்தனர். அன்னோருள் முதல்வனாகக் கருதத் தக்கவன் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகா விலுள்ள பழுவூரில் பழுவேட்டரையர் என்னும் பட்டத்துடன் வாழ்ந்த குறுநில மன்னன் ஆவன். பழுவேட்டரையர் என்ற பட்டமுடையோர் சேரர் மரபினருள் ஒரு கிளையினரேயாவர். அவர்கள் சோழர்கட்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதற் பராந்தக சோழன் பழுவேட்டரையன் மகளை மணந்து கொண்டான் என்பதும் அவ்விருவர்க்கும் பிறந்த புதல்வனே இராசராச சோழன் பாட்டனாகிய அரிஞ்சயன் என்பதும் அன்பிற் செப்பேடுகளால்1 அறியப்படுகின்றன. இராசராசன் மனைவியருள் பஞ்சவன் மாதேவி என்பாள் பழுவேட்டரையன் மகள் ஆவள்2. இச்சோழ மன்னன் காலத்திலிருந்த பழுவூர்க் குறுநிலமன்னன் அடிகள் பழுவேட்ட ரையன் கண்டன் மறவன் என்பவன். இவன் குறுநில மன்னர்க்குரிய எல்லாச் சிறப்புக்களும் உடையவனாய் இனிது வாழ்ந்தவன் என்பது பழுவூரில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது3.
கொங்கு நாட்டிலிருந்த கொல்லிமழவன் ஒற்றியூரன் பிருதி கண்டவர்மன் என்பான் இராசராசனுக்குக் கப்பஞ் செலுத்தி வந்த ஒரு குறுநில மன்னன் என்பது திருச்செங் கோட்டுச் செப்பேடுகளால் புலனா கின்றது4. இராசராசன் தந்தையாகிய சுந்தர சோழன் ஈழ நாட்டு வேந்தனோடு நிகழ்த்திய போரில் இக்கொல்லி மழவன் தந்தை சோழர் பக்கத்திலிருந்து போர்புரிந்து அந்நாட்டில் உயிர்துறந்தான்5. எனவே, கொங்கு மண்டலத்திலிருந்த இக்குறுநில மன்னர் குடியினர் தம் பேரரசராகிய சோழர்கட்குப் போர் நிகழ்ச்சிகளில் உதவிப்படை யனுப்பி உண்மையன்புடன் ஒழுகி வந்தனர் என்பது பெறப்படுதல் காண்க.
வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லத்தில் திருவையேச்சுரம் என்னும் கோயில் ஒன்று எடுப்பித்து அதற்கு அர்ச்சனாபோக மாக நிலமளித்துள்ள திருவையன் சங்கரதேவன் என்பவன் நம் இராசரா சனுக்குத் திறை செலுத்திக் கொண்டு அப்பக்கத்தில் ஆண்டுகொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்6.
கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரிலிருந்த வேளான் சுந்தரசோழன் என்பான் இராசராசனுக்கு உட்பட் டிருந்த ஒரு சிற்றரசன் ஆவன். இவன் தந்தை பராந்தகன் சிறியவேளான் ஆகிய திருக்கற்றளிப் பிச்சன் நம் இராசராசன் தந்தையாகிய சுந்தர சோழன் ஆட்சியில் படைத்தலைமை பூண்டு ஈழ நாட்டிற்குச் சென்று போர்புரிந்து அங்கு உயிர் துறந்தானென்று திருவெண்காட்டிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது1.
திருவல்லத்திலிலுள்ள ஒரு கல்வெட்டில் நன்னமரையன் என்னுங் குறுநில மன்னன் ஒருவன் குறிக்கப்பட்டுள்ளனன்2. வைதும்பர் மரபினனாகிய இவன் கடப்பை ஜில்லாவிலுள்ள இங்கல்லூர் நாட்டை ஆட்சிபுரிந்தவன். நெல்லூர் ஜில்லாவி லுள்ள ரெட்டிப்பாளையக் கல்வெட்டினால் விஷ்ணு தேவனாகிய மும்முடி வைதும்ப மகாராசன் என்னுஞ் சிற்றரசன் ஒருவன் அப்பக்கத்தில் இருந்தனன் என்று தெரிகிறது3. இவ்விருவரும் இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னர்கள் என்பது அன்னோரது கல்வெடுக்களினால் புலனாகின்றது.
வட ஆற்காடு ஜில்லாவிலுள்ள பஞ்சபாண்டவர் மலையில் காணப்படும் கல்வெட்டொன்று, வீர சோழன் இலாடப் பேரரையன் என்பவன் அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பை இராசராசன் காலத்தில் குறுநில மன்னனாயிருந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்று உணர்த்து கின்றது4. இவன் தந்தை இலாட ராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பதும் இவன் முன்னோர் தொண்டை மண்டலத்தில் படுவூர்க் கோட்டத்தி லுள்ள பெருந்திமிரி நாட்டை யாண்டவர் என்பதும் அக்கல் வெட்டால் வெளிப்படு கின்றன. இராசராசன் மனைவியருள் இலாடமாதேவி என்பாள் இவ்விலாடப் பேரரையன் மகள் ஆதல் வேண்டும்; அன்றேல் இவன் தந்தை இலாடராசன் மகளாதல் வேண்டும். இப்போது அதனை ஒரு தலையாகக் கூற இயலவில்லை.
வாணகப்பாடி நாட்டில் அரசாண்ட மறவன் நரசிம்ம வர்மனாகிய இராசராச வாணகோவரையன் என்பவன் இராச ராசனுக்கு உட்பட்ட ஒரு குறுநில மன்னன் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள ஜம்பை என்னும் ஊரில் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது1. இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வாணகப்பாடி நாடு தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியாகும்.
இனி, இராசராசன் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் படைத்தலை வராகவும் நாட்டதிகாரிகளாகவும் திருமந்திர ஓலை நாயகமாகவும் அறநிலையக் கண்காணிப்பாளராகவும் அமர்ந்து அரசாங்கத்தை நன்கு நடத்திவந்த அரசியல் அதிகாரிகள் பலர் ஆவர். அவர்களுள் கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலரைப்பற்றிய செய்திகளை மாத்திரம் ஈண்டுச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் ஏற்புடையதேயாம்.
1. சேனாபதி கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரமமாராயன்:
இவன் வெண்ணாட்டு அமண் குடியினன்; அந்தணர் குலத்தினன்; இராசராசனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; இவ்வேந்தன் ஆணையின்படி தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையை எடுப்பித்தவன். இச்செய்தியை யுணர்த்தும் மூன்று கல்வெட்டுக்கள் அக்கோயில் பிராகாரத்தில் மூன்று இடங்களில் வரையப்பட்டிருக் கின்றன . அம்மூன்றும் ஒரே கல்வெட்டின் படிகளேயாம். இப்படைத் தலைவன் இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியில் திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்தனன் என்பது ஆனை மங்கலச் செப்பேடுகளால் அறியப்படுகிறது3. இவன் அரசனால் வழங்கப் பெற்ற மும்முடி சோழ பிரமமாராயன் என்னும் பட்டம் பெற்றவன் ஆவன்.
2. பரமன் மழபாடியானான மும்முடி சோழன்:
இவன் தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருகாடி என்னும் ஊரினன்; இராசராசனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; இம்மன்னன் விரும்பியவாறு நெல்லூர் ஜில்லாவிலுள்ள சீட்புலி நாடு, பாகி நாடு என்பவற்றின் மேல் படையெடுத்துச் சென்று அவற்றைக் கைப் பற்றியவன்1. இவன், தான் அங்கிருந்து கொணர்ந்த திறைப் பொருள்களுள் தொளாயிரம் ஆடுகளைக் கச்சிப்பேட்டு ஐஞ்சந்தி துர்க்கையார்க்கு இராசராசன் திருநாமத்தால் பத்து நுந்தா விளக்குகளுக்கெனச் சாவாமூவாப் பேராடுகளாக அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது2.
3. சேனாபதி குரவன் உலகளந்தானான இராசராச மாராயன்:
இவன் இராசராச சோழன் படைத்தலைவருள் ஒருவன்; அரசன் ஆணையின்படி கி. பி. 1001-ஆம் ஆண்டில் சோழ இராச்சியம் முழு வதையும் அளந்து எவ்வளவு நன்செய் புன்செய்களும் காடுகளும் உள்ளன என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி அவற்றுள் விளைநிலங்களுக்கு மாத்திரம் வரி விதிக்குமாறு ஏற்பாடு செய்தவன்3. இவன் இராச்சியம் முழுமையும் அளந்தமைபற்றி இவனுக்கு உலகளந்தான் இராசராச மாராயன் என்ற பட்டம் இராசராசனால் வழங்கப் பட்டிருத்தல் அறியத் தக்கது.
4. மதுராந்தகன் கண்டராதித்தன்:
இவன் இராசராசன் சிறிய தந்தையாகிய உத்தம சோழன் புதல்வன்; இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் கோயில்களைக் கண்காணித்து அவற்றில் தவறிழைத்தவர்களைத் தண்டித்து அவை நல்ல நிலையில் இருக்குமாறு பாதுகாத்து வந்த பெருமையுடையவன்4. சில கோயில்களின் வருவாய்களை ஆராய்ந்தபோது அக் கோயில்களில் நாள் வழிபாடுகள் முறைப்படி நடைபெறுவதற்கு அவற்றிற்கு அளிக்கப் பெற்றிருந்த நிவந்தங்கள் போதாமை கண்டு இன்றியமையாமைக் கேற்ப இவன் புதிய நிவந்தங்களும் அரசாங்கத்தில் வழங்கும்படி ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத் தக்கதொன்றாம். திருவிசைப்பாவில் மின்னாருருவம் என்று தொடங்கும் கோயிற் பதிகம் பாடியுள்ள கண்டராதித்தன் இவனே என்று சிலர் கூறுவது பொருத்தமில் கூற்றாம்1. அப்பதிகம் பாடியவர், முதற் பராந்தக சோழனுடைய இரண்டாம் புதல்வராகிய கண்டராதித்தரே என்பது முன் விளக்கப்பட்டுள்ளது. எனவே, திருவிசைப்பாவிலுள்ள கோயிற் பதிகம் பாடிய முதற் கண்டராதித்தருடைய பேரனே கோயில்களின் காண்காணிப்பாகிய ஸ்ரீ காரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இவ்வரச குமாரன் என்பது ஈண்டு உணரத்தக்கது. இவனை இரண்டாங் கண்டராதித்தன் என்றும் கூறலாம்.
5. ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடி சோழ போசன்:
இவன் பாம்புணிக் கூற்றத்து அரசூரின் கண் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தலைவன்; இராசராச சோழன் பெருந்தரத்து அதிகாரி களுள் ஒருவன்; தஞ்சைப் பெரிய கோயிலில் சண்டேசுவர தேவரை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தங்கள் அளித்தவன்2; வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லம், மேற்பாடி என்னும் ஊர் களிலுள்ள கோயில்களுக்கும் நிவந்தங்கள் வழங்கியுள்ளனன் என்பது அக்கோயில்களில் காணப்படுங் கல்வெட்டுக்களால் புலப்படுகிறது3. இவன் இராசராச சோழனுக்குத் திருமந்திர ஓலை நாயகமாகவும் சில ஆண்டுகள் வரையில் இருந்துள்ளனன். ஆனைமங்கலச் செப்பேடுகளில் கையெழுத்திட்டுள்ள அரசியல் அதிகாரிகளுள் இவனும் ஒருவனாதலின், இவன் இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகிய இருவர் ஆட்சியிலும் உயர்நிலையில் இருந்தவன் ஆதல் வேண்டும்4. இவன் பல்லவர் குடித்தோன்றல், மும்முடி சோழ போசன் என்னும் அரசாங்கப் பட்டம் பெற்ற பெருமையுடையவன்.
6. பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான்:
இவன் சோழ மண்டலத்தில் இராசேந்திர சிங்க வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய பொய்கை நாட்டின் தலைவன்; இராசராச சோழன் தஞ்சை மாநகரில் எடுப்பித்த பெரிய கோயிலில் இவ்வேந்தன் ஆணையின்படி ஸ்ரீகாரியஞ் செய்து வந்தவன்; சிவபெரு மானிடத்தில் சிறந்த பக்தியுடையவன். இவன், இராச ராசேச்சுரத்தில் திருஞானசம்பந்த அடிகள் திருநாவுக்கரைய தேவர், நம்பியாரூரர், நங்கை பரவையார், மெய்ப்பொருள் நாயனார், சிறுத்தொண்ட நாயனார் என்போர்க்குச் செப்புப் படிமங்கள் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்களும் அளித் துள்ளனன்1. இச்செயல், இவன் சமய குரவர்களிடத்தும் சிவனடியார் களிடத்தும் வைத்திருந்த பேரன்பினை நன்கு புலப்படுத்துவதாகும். அன்றியும், சிவனடியார்களுள் மெய்ப் பொருள் நாயனார்க்கும் சிறுத்தொண்ட நாயனார்க்கும் இவன் பெரிய கோயிலில் படிமங்கள் எழுந்தருளுவித்தமைக்குக் காரணம் அவ்விருவருஞ் செய்த செயற்கருஞ் செயல்கள் இவன் உள்ளத்தைப் பிணித்தமையேயாம். மெய்ப்பொருள் நாயனாரது படிமத்தை வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டில் அவ்வடியாரது பெயரைக் கூறாமல் தத்தா நமரே காண் என்ற மலாடுடையார் என்று இவன் குறிப்பிட்டிருப்பது அவர்பால் இவனது உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த அன்பின் முதிர்ச்சியை இனிது உணர்த்துவ தாகும்2. இவன் தன் அரசனிடத்தும் பேரன்புடையவன் என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராச சோழன் உலோகமாதேவி ஆகிய இருவர் படி மங்களும் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்களும் கொடுத் திருப்பதனால் நன்கு விளங்கும்3. இவன் கி. பி. 995-ஆம் ஆண்டில் திருச்சோற்றுத்துறைக் கோயிலில் நாள்தோறும் தேவாரப் பதிகம் பாடுவோர்க்கு நிவந்தமாகப் பொன் அளித்துள்ளனன்1. ஆகவே, இவன் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டு ஒழுகியவன் என்பது ஒருதலை. இராசராசசோழன் இவனது சிறந்த பண்புகளை யுணர்ந்துதான் இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியஞ் செய்யும் வேலையில் இவனை அமர்த்தினன் போலும்.
7. பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன்:
இவன் இராசராசன் காலத்திலிருந்த அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; பாண்டி நாட்டுத் திருக்கானப்பேர்க் கூற்றத்துப் பாளூரின் தலைவன்; இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியக் கண்காணி நாயகமாக இருந்தவன்2.
8. இராசகேசரிநல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம்:
இவன் இராசராச சோழன்பால் திருமந்திர ஓலை எழுதும் ஓர் அதிகாரியாயிருந்தவன். ஸ்ரீ இராஜராஜ தேவர்க்குத் திருமந்திர ஓலை யெழுதும் அருமொழி தேவ வளநாட்டு இங்கண் நாட்டு இராஜகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம் என்ற கல்வெட்டுப் பகுதியினால்3 இவன் நாடும் ஊரும் பேரும் மேற்கொண்டிருந்த அலுவலும் அறியற்பாலவாம்.
9. வேளான் உத்தம சோழனாகிய மதுராந்தக மூவேந்தவளான்:
இவன் அருமொழிதேவ வளநாட்டு நென்மலி நாட்டுப் பருத்திக் குடியிலிருந்த ஒரு தலைவன்; இராசராச சோழனிடத்தில் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தவன். இவன் பெயர் ஆனை மங்கலச் செப்பேடு களில் காணப்படுகிறது4. இவன் மதுராந்தக மூவேந்த வேளான் என்ற அரசாங்கப் பட்டம் பெற்றவன்.
10. விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரன்:
இவன் நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து விளத்தூரினன்; இராசராச சோழனிடத்தில் திருமந்திர ஓலை எழுதும் அலுவலில் அமர்ந்திருந்தவன். நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்திற்கு இவ்வேந்தன் ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாக அளித்த உத்தரவை எழுதியவன் இவனே யாவன்.
பல மண்டலங்களைத் தன்பாற்கொண்டு நிலவிய சோழ இராச்சியத் திற்குச் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்ட இராசராச சோழன் காலத்தில் அரசியலில் பல துறைகளிலும் அதிகாரிகளாக அமர்ந்து அரசாங்க அலுவல்களைப் பார்த்து வந்தோர் பலர் ஆவர். அவர்களுள் மிகச் சிலரைப்பற்றிய செய்திகளே கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஈண்டு எழுதப்பட்டன.
இனி, இராசராச சோழன் வரலாற்றைக் கூறும் நூல் ஒன்று அந்நாளில் இருந்தது என்பது திருப்பூந்துருத்தியிலுள்ள ஒரு கல்வெட்டால்1 அறியப்படுகிறது. அந்நூலின் பெயர் ஸ்ரீ இராசராச விஜயம் என்பது. அதன் ஆசிரியர் சவர்ணன் நாரணன் பட்டாதித்தன் என்பார். அது வடமொழியில் எழுதப்பெற்ற நூல் என்பது உய்த்துணரக்கிடக்கின்றது. அன்றியும் இராசராசேசுவர நாடகம் என்ற நாடக நூல் ஒன்றும் இருந்தது என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டால் புலனாகிறது2. அது விழாக்காலங்களில் தஞ்சைப் பெரிய கோயிலில் நடிக்கப்பட்டி ருத்தலால் அந்நாடகம் தமிழ் மொழியில் எழுதப்பெற்றதாதல் வேண்டும். அந்நாடகம் இராசராச சோழன் தஞ்சையில் இராசராசேசுரம் என்னுங் கோயில் எடுப்பித்த வரலாற்றைத் தன்பாற் கொண்டது போலும். அதனைத் தஞ்சை மாநகரில் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் நடித்தற்கு இரண்டாம் இராசேந்திர சோழன் நூற்றிருபது கல நெல் நிவந்தமாக அளித்திருப்பது அறியத்தக்கது. அவ்விரண்டு நூல்களும் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவை கிடைப்பின் இராசராச சோழன் வரலாற்றில் பல அரிய செய்திகளை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
முதல் இராசேந்திர சோழன் (கி. பி. 1012 - 1044)
பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசரி வர்மன் என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் இவ்வரசர் பெருமான், முதல் இராசராச சோழனுக்கு அவன் கோப்பெருந் தேவியருள் வானவன்மாதேவி என்று வழங்கும் திரிபுவனமா தேவிபால் பிறந்த புதல்வன் ஆவன்.1 இவன் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தவன் என்பது திருவொற்றியூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.2 விருத்தாசலத்திலுள்ள கல்வெட்டொன்று இவ்வேந்தன் நலங் கருதித் திருமுது குன்றமுடையார் கோயிலில் திங்கள்தோறும் திருவாதிரை நாளில் விழா நடத்துவதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தியைக் கூறுகின்றது.3 இதனாலும் இவன் திருவாதிரை நாளிற் பிறந்தவன் என்பது உறுதியாதல் காண்க.
இவன் தந்தை இவனுக்கு மதுராந்தகன் என்று பெயரிட்டி ருந்தனன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது.4 இவனுக்கு இப்பெயர் இடப்பெற்றிருந்த செய்தி கன்னியாகுமரிக் கல்வெட்டினாலும் வலியுறுகின்றது.5 இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய மதுராந்தக உத்தம சோழன்பால் பேரன்பு பூண்டொழுகிய வனாதலின், தன் மகனுக்கும் அவன் பெயரையே வைத்தனன் என்பது ஈண்டு உணரற்பாலது.
இனி, இவனை, இறைவன் நெற்றிக்கண் காணாத மற்றொரு காமவேள் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுவதால்,1 இவன் பேரழகு வாய்ந்தவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவன், தன் பாட்டனாகிய சுந்தர சோழனைப்போல் எழிலுடன் திகழ்ந்தனன் எனலாம்.
கி. பி. 1012-ஆம் ஆண்டில்2இராசராச சோழன் இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிய நாளில் இராசேந்திரன் என்ற அபிடேகப் பெயர் வழங்கியமையால் இவன் தன் ஆட்சிக்காலம் முழுமையும் அப்பெயருடன் விளங்கினன் என்பது அறியற்பால தொன்றாம். கி. பி. 1014-ஆம் ஆண்டில் இராசராசன் இறந்தவுடன் இவன் முடிசூட்டப் பெற்று, சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாயினான். இவன் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாளில் சோழ இராச்சியம் இக்காலச் சென்னை ஆந்திர இராச்சியங்களையும், மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் தன்னகத்துக் கொண்டு ஒரு சிறந்த ராச்சியமாக இருந்தது எனலாம். அக்காலத்தில் சோழ இராச்சியத்திற்கும் வடக்கேயுள்ள மேலைச்சளுக்கிய நாடாகிய குந்தள இராச்சியத்திற்கும் இடையில் எல்லையாக அமைந்திருந்தது துங்கபத்திரை யாறேயாம்.
சோழ மன்னர்கள் தம் ஆட்சியைக் கைக்கொள்ளும் போது ஒருவர் பின்னொருவராக மாறிமாறிப் புனைந்து கொண்டுவந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள் இவன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன்.
இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1018-ல்3 தன் முதற் புதல்வன் இராசாதிராசனுக்கு இளவரசுப் பட்டஞ் சூட்டி அரசாங்க அலுவல்களைப் பார்த்துவருமாறு செய்தான். அச்செயலால் அரசற்குரிய அரசியற் பொறை ஓரளவு குறைந்து போவதும் பின்னர் அரசனாகி ஆட்சிபுரிய வேண்டியவன் அரசியற் கருமங்களிற் சிறந்த பயிற்சி பெறுவதற்குத் தக்க வாய்ப்பு ஏற்படுவதும் ஆகிய இரு வகை நன்மைகள் உண்டாதல் உணரற்பாலதாகும். அன்றியும் அரசனாக இருந்து ஆட்சி புரிந்து கொண்டிருப்பவன், தனக்குப்பின் அரசாளும் உரிமை யுடையவனைத் தன் ஆட்சிக் காலத்திலேயே இளவரசனாக முடிசூட்டி விட்டால் பிற்காலத்தில் ஆட்சியுரிமைபற்றி அரச குமாரர்களுக்குள் எத்தகைய போர் நிகழ்ச்சியும் ஏற்படாது. மேலும், உள்நாட்டில் அதுபற்றிக் கலகமும் குழப்பமும் உண்டாக மாட்டா. ஆதலால் இராசேந்திரனுடைய அருஞ்செயல் மிகப் பாரட்டத்தக்க தொன்றாகும்.
இனி, இவனது மெய்க்கீர்த்தி, திருமன்னி வளர இரு நில மடந்தையும் - போர்ச்சயப் பாவையும் சீர்த்தனிச் செல்வியும் - தன் பெருந் தேவியராகி இன்புற என்று தொடங்குகின்றது. அம்மெய்க்கீர்த்தி, இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான்1 முதலில் காணப்படுகிறது; எனினும், அது மிகுதியாகக் காணப்படுவது ஐந்தாம் ஆட்சியாண்டு முதல்தான் என்பது அறியத்தக்கது. அவ்வப்போது நிகழும் அரசனுடைய வீரச்செயல்களையும் புகழுக்குரிய பிற செயல்களையும் மெய்க்கீர்த்தியில் ஆண்டுதோறும் சேர்த்துக் கொண்டே போவது அக்கால வழக்கமாதலின், அரசனது ஆட்சிக்காலம் மிகுந்து செல்லச் செல்ல, மெய்க்கீர்த்தியும் அதன் அளவிற் பெருகிக்கொண்டே போகும். அதனால் ஓர் அரசன் ஆட்சியில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வெவ்வாண்டில் நடைபெற்றது என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ளலாம்.2 நம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இவன் ஆட்சியில் ஆண்டுதோறும் நிகழ்ந்த வீரச் செயல்களையும் பிறவற்றையும் முறையாகப் புலப்படுத்தும் வகையில் பெருகிக் கொண்டேபோய், இவனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் ஒரு நிலையில் அமைந்துள்ளது. பிறகு, இவன் ஆட்சிக் காலம் முழுவதும் அந்நிலையிலேயே இருந்தது எனலாம்.
இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டில் வட திருவாலங் காட்டுக் கோயிலுக்கு விடப்பெற்ற நிவந்தத்தை உணர்த்தும் இவனது திருவாலங் காட்டுச் செப்பேடுகள்1 இவன் முன்னோர் வரலாற்றை நன்கு விளக்கு கின்றன; எனினும் இவன் ஆட்சிக்காலத்து நிகழ்ச்சிகளை இவன் மெய்க் கீர்த்தியைப்போல் அத்துணை முறைப்பட அச்செப்பேடுகள் கூறவில்லை. இவனது புறநாட்டுப் படை யெழுச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னரே திருவாலங்காட்டுச் செப்பேடுகள் வரையப்பட்டிருக்கின்றன. ஆதலால் அவற்றிற் கூறப்படும் இவன் வீரச்செயல்கள் அவை நிகழ்ந்த கால வரிசைப்படி அமையாமல் வேறுபட்டும் இருக்கின்றன. எனினும், அச்செப்பேடுகள் இவன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளை உறுதிப்படுத்துவதாலும் பண்டைச் சோழ மன்னர்களின் வரலாற்றைக் கூறுவதாலும் சரித ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவேயாம்.
இனி, இவ்வேந்தனது மெய்க்கீர்த்தியின் துணைகொண்டு இவன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்பது அமைவு டைத்தேயாம். இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் இடைதுறை நாடு, வனவாசி கொள்ளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம்2 என்பவற்றை இவன் வென்று தன்னடிப் படுத்திய செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள், இடைதுறை நாடு என்பது கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த ஒரு நாடாகும்.3 இக் காலத்தில் பம்பாய் மாகாணத்திலுள்ள ரெய்ச்சூர் ஜில்லாவே பழைய இடைதுறை நாடு என்று கொள்வது மிகப் பொருந்தும். அதனை, எடத்தோர் இரண்டாயிரம் எனவும் அந்நாட்டுக் கல்வெட்டுக்கள் கூறாநிற்கும்.
இனி, வனவாசி என்பது மைசூர் இராச்சியத்தின் வடமேற்குப் பகுதியைத் தன்னகத்துக்கொண்டு முற்காலத்தில் நிலவிய ஒரு நாடாகும். அது கங்கபாடிக்கு வடக்கிலும் துளம்பபாடிக்கு மேற்கிலும் இருந்தது எனலாம். அதனை வனவாசிப் பன்னீராயிரம் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
கொள்ளிப்பாக்கை என்பது ஹைதராபாத்திற்கு வட கிழக்கில் நாற்பத்தைந்து மைல் தூரத்திலுள்ள குல்பாக் என்ற ஊராகும்2. கொள்ளிப் பாக்கை ஏழாயிரம் என்று பிற்காலக் கல்வெட்டுக்கள் கூறுவதால் அஃது ஒரு நாட்டின் தலைநகராக இருந்திருத்தல் வேண்டும். அன்றியும் மேலைசளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் மகன் மூன்றாம் சோமேசுரன் என்பான் தன் தந்தையின் கீழ் அரசப் பிரதிநிதியாக அந்நகரிலிருந்து அதனைச் சூழ்ந்த நாட்டைப் பிற்காலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. ஆகவே, அது மேலைச் சளுக்கியரது இராச்சியத்தின் தென்பகுதியிலிருந்த ஒரு சிறந்த நகரமாதல் வேண்டும். சுள்ளிச் சூழ் மதில் கொள்ளிப் பாக்கை என்று கல்வெட்டுக்கள் கூறுவதால் அது சிறந்த மதில் அரண்களையுடைய பெரிய நகரமாக அந்நாட்களில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
மண்ணைக்கடக்கம் என்பது இராஷ்டிரகூடர்களுக்குத் தலைநகரமா யிருந்த மானியகேடமேயாம். இக்காலத்தில் அது மால்செட் என்று வழங்குகின்றது. அந்நகர், இராஷ்டிர கூடர்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் வரையில் மேலைச் சளுக்கியர்க்கும் தலைநகரமாயிருந்தது. வடக்கே யிருந்த மாளவ தேயத்துப் பரமாரக் குலத்து மன்னர்களும் தெற்கேயிருந்த சோழ அரசர்களும் அந்நகரத்தின் மீது அடிக்கடி படையெடுத்துச் சென்று அழித்து வந்தமையோடு அதனைப் பல்வகை இன்னல்களுக்கும் உட்படுத்தி வந்தனர். அதுபற்றியே மேலைச் சளுக்கியர்கள் அந்நகரத்திற்கு வடகிழக்கில் நாற்பத்தெட்டு மைல் தூரத்திலுள்ள கலியாண புரத்தைத் தக்க அரணுடைய நகரமாகக் கருதித் தம் தலைநகரை அங்கு மாற்றிக் கொண்டனர்.
மேலைச் சளுக்கியரது ஆட்சிக்குட்பட்ட இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம் என்பவற்றின் மீது இராசேந்திரன் படையெடுத்துச் சென்று வெற்றி யெய்திய செய்திகள் இவனது ஆட்சியின் தொடக்கத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களிலேயே காணப்படுவதால் அந்நிகழ்ச்சிகள் இவன் பட்டம் பெறுவதற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. மேலைச் சளுக்கிய மன்னனாகிய சத்தியாசிரயன் கி. பி. 1008 - ஆம் ஆண்டில் இறந்து விட்ட படியால் அவனோடு நிகழ்த்தப்பெற்றனவாக அறியப்படும் அப்போர்கள் எல்லாம் அவ்வாண்டிற்குமுன் நடைபெற்றவை என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, அவை இராசராசசோழன் ஆட்சிக்காலத்தில் அவன் புதல்வனாகிய நம் இராசேந்திரன் வடபுலத்தில் பெற்ற வெற்றிகளேயாதல் வேண்டும். கி. பி. 1007 - ல் நிகழ்ந்ததாக ஹொட்டூர்க் கல்வெட்டு1 உணர்த்தும் இவனது வடநாட்டுப் படையெழுச்சியும் ஒருகால் அவற்றையே குறிப்பினும் குறிக்கலாம்.
இனி இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் அடுத்துக் கூறப்படுவது இவன் ஈழநாட்டை வென்ற செய்தியேயாம். அப்போர் நிகழ்ச்சி இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதலில் காணப்படுகிறது.2 அந்நிகழ்ச்சி, அவ்வாண்டுக் கல்வெட்டுக்களுள் சிலவற்றில்3 குறிக்கப்படாமலிருத்தலை நோக்குமிடத்து இவ்வேந்தன் ஈழநாட்டில் நிகழ்த்திய போர் இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டின் நடுவில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சமும் அப்போர் கி. பி. 1017-ல் நிகழ்ந்தது என்று கூறி அச்செய்தியை வலியுறுத்துகின்றது. இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஈழ நாட்டுப் போரில் தோல்வியுற்று ஓடியொளிந்த ஐந்தாம் மகிந்தன் என்னும் சிங்கள வேந்தன், சில ஆண்டுகட்குப் பிறகு சோழர் ஆட்சிக்குட் படாமல் அத்தீவின் தென் கிழக்கில் சேய்மையிலிருந்த ரோகண நாட்டிலிருந்து பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு சோழர்கள் மீது போர் தொடுத்துத் தான் இழந்த நாட்டைக் கைப்பற்ற முயன்றனன். அதுபற்றியே இராசேந்திர சோழன் கி. பி. 1017-ல் ஈழ நாட்டின்மேல் மீண்டும் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. அப்படை யெழுச்சியில் ஈழத்தில் நிகழ்ந்த போரில் இவன் வெற்றி பெற்றமையோடு சிங்கள மன்னர்கட்கு வழி வழியுரிமை யுடையதாயிருந்த சிறந்த முடியினையும் அன்னோர் தேவியரது அழகிய முடியினையும் கைப்பற்றிக்கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பினான். அன்றியும், மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இலங்கை வேந்தனிடத்து அடைக்கலமாக வைத்துச் சென்ற பாண்டியர் முடியையும் அன்னோர்க்குரிய இந்திரன் ஆரத்தையும்1 இவன் கைப்பற்றிக்கொண்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்க தொன்றாம். முதற் பராந்தக சோழன் தன் ஆட்சிக்காலத்தில் ஈழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றமைக்குக் காரணம் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் அங்கு வைத்துச் சென்ற சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் கைப்பற்றுவதற்கேயாம். ஆனால், அவன் விரும்பியவாறு அக்காலத்தில் அவற்றைக் கைப்பற்றிக் கொண்டுவர முடியவில்லை. எனினும், அவன் பேரனுக்குப் பேரனாகிய நம் இராசேந்திர சோழன் ஆட்சிக்
காலத்தில் நிறைவேறியது அறியற்பாலதாம்.
இனி, ஐந்தாம் மகிந்தனது ஆட்சியின் 36-ம் ஆண்டில் இராசேந்திர சோழனுடைய படைஞர்கள் ஈழ நாட்டில் பல இடங்களில் கொள்ளை யிட்டு, மணியும், பொன்னும், அணிகலன்களும், பல பொற்படிமங்களும் கவர்ந்து கொண்டனர் என்றும் போரில் புறங்காட்டி ஓடியொளிந்த அச்சிங்கள வேந்தை உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அழைப்பது போல் வருவித்துச் சிறைபிடித்து அப்பொருள்களோடு சோழ நாட்டிற்கு அனுப்பிவிட்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. அன்றியும், சிங்கள வேந்தனாகிய ஐந்தாம் மகிந்தன் என்பான், சோழநாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் வாழ்ந்திருந்து கி. பி. 1029-ஆம் ஆண்டில் இறந்தனன் என்பது மகாவம்சத்தால் அறியக்கிடக்கின்றது. அச்செய்திகள் எல்லாம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. எனினும் தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரத்திலுள்ள கல்வெட்டொன்று1 மகிந்தன் சோழ நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இராசேந்திர சோழனுக்கு முற்றிலும் பணிந்துவிட்டான் என்று கூறுகின்றது. ஆகவே, அப்படை யெழுச்சியின் பயனாக ஈழ நாடு முழுவதும் இவன் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது என்று கூறலாம். ஈழ நாட்டில் காணப்படும் இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் சிலவற்றாலும் அச்செய்தி உறுதியாகின்றது.2 அக்கல்வெட்டுக்கள் சிதைந்த நிலையில் இருத்தலால் அவற்றிலுள்ள வரலாற்றுச் செய்திகள் எல்லாவற்றையும் அறிய இயலவில்லை.
இனி, ஐந்தாம் மகிந்தன் மகனாகிய காசிபன் என்பவனை ஈழ நாட்டு மக்கள் மறைவாக வளர்த்து வந்தனர் என்பதும் அவன் தந்தை சோழ நாட்டில் இறந்தவுடன் அவர்கள் அவனைத் தம் அரசனாக ஏற்றுக்கொண்டு சோழ நாட்டுப் படைகளுடன் ஆறு திங்கள் வரையில் போர் புரிந்து தென்கிழக்கிலுள்ள ரோகண நாட்டைக் கைப்பற்றி விக்கிரமபாகு என்ற பெயருடன் கி. பி. 1029-ஆம் ஆண்டில் அவனுக்கு முடிசூட்டினார்கள் என்பதும் அவன் கி. பி. 1041-வரையில் அந்நாட்டிலிருந்து அரசாண்டனன் என்பதும் மகாவம்சத்தால் அறியப்படுகின்றன.
இராசேந்திர சோழனது ஆட்சியின் ஆறு1 ஏழாம்2 ஆண்டுகளில் வரையப்பெற்ற கல்வெட்டுகள் இவன் சேர நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அந்நாட்டரசர்க்கு வழிவழி யுரிமையுடையனவாயிருந்த முடியையும் மாலையையும் கி. பி. 1018-ல் கைப்பற்றிக்கொண்டு பழந்தீவையும் பிடித்துக் கொண்டான் என்றும் யாவரும் கிட்டுதற்கரிய அரண்களை யுடைய சாந்திமத்தீவில்3 பரசிராமனால் வைக்கப்பட்டிருந்த செம்பொன் முடியைக் கி. பி. 1019-ஆம் ஆண்டில் கவர்ந்து கொண்டான் என்றும் உணர்த்துகின்றன.
இனி, இராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் காணப்படாத சில செய்திகள் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ளன. அவை: இவன் திக்குவிசயம் செய்யக் கருதி தான் இல்லாதபோது சோழ நாட்டில் ஆட்சி அமைதியாக நன்கு நடைபெறுமாறு தக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தென்றிசையிலுள்ள பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் எதிர்த்துப் போர் புரியும் ஆற்றலில்லாதவனாய்ப் புறங்காட்டி யோடி மலைய மலையில் ஒளிந்துகொண்டான். பிறகு, நம் இராசேந்திரன் பாண்டியன் புகழுக்குரிய முத்துக்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டு, தன் மகன் சோழ பாண்டியன் அந்நாட்டை யாண்டு வருமாறு செய்து மேற்கே சென்றான். பரசிராமனால் பண்டை வேந்தர்கள் அடைந்த அல்லல்களைக் கேள்வியுற்ற இவ்வேந்தன், அவனை இந்நிலவுலகில் காணமுடியாமையால் அவன் அமைத்த நாட்டைக் கைப்பற்ற விரும்பினான். அதனை நிறைவேற்றும் பொருட்டு, இவன் மலைய மலையைக் கடந்து சென்று, சேர மன்னரோடு பெரும் போர் புரிந்து வெற்றி எய்தித் தன் நாட்டிற்குத் திரும்பினான் - என்பனவேயாம்.
இவன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சேர நாடும் பாண்டிய நாடும் சோழரது ஆட்சிக்குள்ளாகி விட்டன என்பது அந்நாடுகளில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படு கின்றது.1 ஆகவே, இராசேந்திர சோழன் அந்நாடுகளை வென்று தன்னடிப்படுத்தினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது அத்துணைப் பொருத்த முடையதாகக் காணப்பட வில்லை. எனினும், புதுச்சேரியைச் சார்ந்த திருவாண்டார் கோயிலில் வரையப் பெற்றுள்ள இவனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, பாரது நிகழப் பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன் மகன் சோழ பாண்டியன் என்றபிஷேகஞ் செய்து தண்டாற்சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி2 என்று கூறுகின்றது. அதனை ஆராய்ந்து பார்க்குங்கால் இவ்வேந்தன் மதுரைமா நகரில் ஓர் அரண்மனை எடுப்பித்து அங்குத் தன் மகனைச் சோழ பாண்டியன் என்னும் பட்டத்துடன் முடிசூட்டிப் பாண்டி நாட்டை ஆட்சி புரிந்து வருமாறு ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. அங்ஙனம் மதுரையம்பதியிலிருந்து தன் தந்தையின் ஆணையின்படி ஆட்சிபுரியத் தொடங்கியவன் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் என்பது பாண்டி நாட்டில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இச்செய்திகளையே திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பாக உணர்த்துகின்றன என்று கொள்வது ஒருவாறு பொருந்தும்.
இனி, பாண்டி நாட்டை ஆண்டு கொண்டிருந்த அச் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனுக்குச் சேர நாட்டின் ஆட்சி உரிமையையும் இராசேந்திரன் பிறகு அளித்துள்ளான் என்று தெரிகின்றது. அவ்வுண்மை, சேர நாட்டில் காணப்படும் அவன் கல்வெட்டுக்களால் புலனாகின்றது. நாஞ்சில் நாட்டுச் சுசீந்திரம் சுந்தர சோழச் சதுர்வேதிமங்கலம் என இவன் பெயரால் வழங்கி யுள்ளமையும் அறியத்தக்கது. சோழர் குலத் தோன்றலாகிய அவன் பாண்டி நாட்டை ஆண்டமையால் அவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டமும் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி சடையவர்மன் என்ற பட்டமும் இராசேந்திரனால் வழங்கப் பெற்றன என்பது ஈண்டு அறியற்பாலது.
திருநெல்வேலி ஜில்லாவில் மன்னார் கோயிலில் வரையப் பட்டுள்ள ஒரு கல்வெட்டால் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் கி. பி. 1018-ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் அரசப் பிரதிநிதியாக முடிசூட்டப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது.3 அவனது ஆட்சியும் கி. பி. 1042 வரையில் அங்கு நடைபெற்றது என்று தெரிகிறது. சேர மன்னனாகிய இராச சிங்கன் என்பவன் பாண்டி நாட்டிலுள்ள மன்னார் கோயிலில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து அதற்கு இராசேந்திர சோழ விண்ணகரம் என்று பெயரிட்டிருத்தலால் அச்சேரன் இராசேந்திர சோழனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.
இனி, நாகர்கோயிலுக்கண்மையிலுள்ள கோட்டாற்றில் இராசேந்திர சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு விஷ்ணுவர்த்தன மகாராசனான சளுக்கிய விசயாதித்தன் விக்கியண்ணன் என்பான், சுந்தர சோழ பாண்டியன் ஆட்சியில் கி. பி. 1029-ல் ஒரு நுந்தா விளக்கிற்கு நிவந்தம் அளித்தனன் என்று அக்கோயிலிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.4 அவன், விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயருடையவனாயிருத்தலால் கீழைச் சளுக்கியர் வழித்தோன்றலாயிருத்தல் கூடும். கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் சோழர்க்கும் கீழைச் சளுக்கியர்க்கும் மணவினை முதலியவற்றால் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததேயாம். எனவே, கோட்டாற்றில் அமைக்கப்பெற்றிருந்த சோழருடைய நிலைப்படைக்கு அச்சளுக்கிய அரச குமாரன் தலைவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.
இம்முறை இராசேந்திர சோழன் நிகழ்த்திய படையெழுச்சிகளில் புதிய நாடுகளுள் ஒன்றாதல் கைப்பற்றப் படவில்லை. ஆயினும், முன் கைப்பற்றிய நாடுகளில் தன் மகனை அரசப் பிரதிநிதியாக அமைத்து அவற்றைத் தன் ஆளுகையின் கீழ் இவன் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
இனி, இராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டு, இவன் முயங்கி என்னும் ஊரில் மேலைச் சளுக்கிய மன்னனாகிய சயசிங் கனைப் போரில் வென்று இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தைக் கைப் பற்றினான் என்று கூறுகின்றது1. அச்செய்தி, அவ்வாண்டுக் கல்வெட்டுக் களுள் சிலவற்றில் காணப்படவில்லை. ஆகவே அவ்வாண்டின் பிற்பகுதியில் கி. பி. 1020-ல் அப்போர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இவன், காஞ்சிமா நகரிலிருந்து பெரும் படையுடன் புறப்பட்டு, இரட்டபாடி நாட்டிற்குச் சென்று அந்நாட்டரச னாகிய சயசிங்கனை வென்று காட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளுமாறு செய்து, அங்குக் கிடைத்த மணித்திரளும் பொற்குவியலும் கைப்பற்றிக் கொண்டு தன் நாட்டிற்குத் திரும்பினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன.
மேலைச் சளுக்கியருடன் இராசேந்திரன் அப்போர் நிகழ்த்தியமைக்குக் காரணம், ஐந்தாம் விக்கிரமாதித்தன் இளவலான சயசிங்கன் என்பவன் கி. பி. 1016-ல் முடிசூடிச் சோழரிடம் தன் தந்தையும் தமையனும் இழந்த நாடுகளைத் திரும்பக் கைப்பற்றுவதற்கு முயன்று, அச்செயலில் சிறிது வெற்றி பெற்றமையேயாம். அதற்கேற்ப, கி. பி. 1019-ல் பௌகாம்வே (Belagamve) என்ற ஊரில் வரையப்பெற்றுள்ள கல்வெட் டொன்று சயசிங்கன் சோழரை வென்ற செய்தியைக் கூறுகின்றது1. அன்றியும், பல்லாரி ஜில்லாவிலும் மைசூர் இராச்சியத்தின் வடமேற்குப் பகுதியிலும் சயசிங்கன் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன2. ஆகவே, சோழர் ஆட்சிக்கு உட்பட்டனவாய் எல்லைப்புறத்திலிருந்த சில பகுதிகளை அவன் மீண்டும் கைப்பற்றிக்கொண்டனன் என்பது தெள்ளிது. அது பற்றியே, இராசேந்திர சோழன் சயசிங்கனோடு முயங்கியில் போர் புரிய நேர்ந்தது என்பதும் அப்போரில் இவன் வாகைசூடிப் பெரும் பொருளுடன் சோழ நாட்டிற்குத் திரும்பினன் என்பதும் தேற்றம்.
ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற முயங்கி என்பது சில கல்வெட்டுக்களில் முசங்கி என்றும் எழுதப்பெற்றுள்ளது3. அது பல்லாரி ஜில்லாவில் ஹர்ப்பனஹல்லி தாலூகாவிலுள்ள உச்சங்கிதுருக்கமே யாதல் வேண்டும் என்பது கல்வெட்டிலாகா அறிஞர்களின் கருத்து4. பிறிதொருசாரார், நைசாம் இராச்சியத் திலுள்ள மாகி என்ற ஊரே பழைய முயங்கியாய் இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்5. அஃது எவ்வாறாயினும், அவ்வூர் மேலைச் சளுக்கிய இராச்சியத்தில் இருந்த ஒரு நகரம் என்பது திண்ணம்.
இடைதுறை நாட்டிலிருந்த மாடதூஜுரு என்ற ஊரை மேலைச் சளுக்கிய மன்னனாகிய சயசிங்கன் என்பான் கி. பி. 1024-ல் அந்தணன் ஒருவனுக்கு இறையிலியாக அளித்தனன் என்று மிராஜ் செப்பேடுகள் கூறுகின்றன6. ஆதலால் அவ்வாண்டில் அந்நாடு சயசிங்கன் ஆட்சிக்கு உட்பட்டதாயிருந்திருத்தல் வேண்டும். ஆகவே, இரட்டபாடி இராச்சியத்தில் துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கேயுள்ள பகுதிகளை மீண்டும் சயசிங்கன் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்திக்கொண்டனன் எனலாம். ஆனால் அவ்விராச்சியத்தில் அப்பேராற்றிற்குத் தெற்கேயுள்ள பகுதிகள் இராசேந்திர சோழன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன என்பது ஒருதலை.
இனி, இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டுக் கல் வெட்டில் இவனது வடநாட்டுப் படையெழுச்சி கூறப்பட்டுளது. அதில் இவ்வேந்தன் படைகள் வடநாட்டில் புரிந்த வீரச்செயல்கள் நன்கு விளக்கப்பட்டிருக் கின்றன. அந் நிகழ்ச்சிகள் கி. பி. 1023-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடை பெற்றிருத்தல் வேண்டும். அவற்றை ஆராயுமிடத்து, அவைகள் எல்லாம் முடிவுபெறுதற்குக் குறைந்த அளவில் இரண்டு ஆண்டுகளாயினும் சென்றிருத்தல் வேண்டும் என்று கூறுவது மிகப் பொருந்தும்.
இராசேந்திரனது வடநாட்டுப் படையெழுச்சிக்குக் காரணம், இவன் கங்கை நீரைக் கொணர்ந்து தன் நாட்டைத் தூய்மையாக்குவதற்குக் கருதினமையேயாம் என்பது திருவாலங் காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. எனவே, இவன் தன் ஆட்சியில் புதிய தலைநகர் ஒன்று அமைப்பதற்குத் தொடங்கி, அது நிறைவேறியவுடன் அந்நகரம் தூய்மையுடையதாகக் கருதி மக்கள் குடியேறும் பொருட்டு அதனைக் கங்கை நீரால் புனிதமாக்குவதற்கு இவன் எண்ணியிருத்தல் வேண்டும். அது பற்றியே, இவனது வட நாட்டுப் படை யெழுச்சியும் நிகழ்ந்
திருத்தல் வேண்டும். வடதிசையிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வருங்கால் அத்திசையிலுள்ள வேந்தர்களையும் போரில் வென்று அதனைக் கொணர எண்ணுதல் வீரம் நிறைந்த பழங்குடியில் தோன்றிய பேரரசன் ஒருவனுக்கு இயல்பேயாம். அன்றியும், கங்கை நீரைச் சோழ நாட்டிற்குக் கொண்டுவருவது அதன் கரைவரையிலுள்ள அரசர்களைப் போரில் வென்று வாகை சூடினால்தான் எளிதில் நிறைவேறும் என்று இராசேந்திரன் கருதியிருக்கலாம் எனவே, இவ்வேந்தன், தன் படைகளைச் சிறந்த படைத்தலைவன் ஒருவன் தலைமையில் வடநாட்டிற்கு அனுப்புவது இன்றியமை யாததாயிற்று. ஆகவே, இவன் தன் படைத்தலைவனைப் பெரும் படையுடன் வடக்கே அனுப்பி, கங்கைக்கரை வரையிலுள்ள அரசர்களை வென்று அன்னோர் தலைகளில் கங்கைநீர் நிரம்பிய குடங்களைக் கொண்டு வருமாறு ஆணையிட்டனன். சோழ நாட்டுப் படையும் வட நாட்டிற்குப் புறப்பட்டது.
கோதாவரி, கிருஷ்ணை ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கி நாடு, சோழர்க்கு நெருங்கிய உறவினரான கீழைச் சளுக்கிய மன்னர்களால் அந்நாட்களில் ஆளப்பட்டு வந்தமையாலும் அதற்குத் தெற்கேயிருந்த நாடுகள் எல்லாம் இராசேந்திரன் ஆட்சிக்குட் பட்டிருந்தமையாலும் அப்படையெழுச்சி வேங்கி நாட்டிற்கு வடக்கே தொடங்கிற்று எனலாம். அதில் முதலில் கைப்பற்றப்பட்டது சக்கரக் கோட்டமேயாகும்.
சக்கரக்கோட்டம் என்பது விசாகப்பட்டினம் ஜில்லாவிற்கு வடமேற்கே மத்தியப் பிரதேசத்தில் வத்ச இராச்சியத்தில் இருந்த ஒரு நகரமாகும். அஃது அவ் விராச்சியத்தின் தலைநகராகிய இராசபுரத்திற்கு எட்டு மைல் தூரத்தில் இந்திராவதி யாற்றின் தென்கரையில் உள்ளது; இக்காலத்தில் சித்திரக்கோட்டம் என்று வழங்குகின்றது.1 நாகர் மரபினர் எனவும் போகவதி புரத்தலைவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்ட ஓர் அரசர் வழியினர், கி. பி. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் அச் சக்கரக் கோட்டத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்தனர். அன்னோர் நாகர் மரபினராதல் பற்றி அவர்கள் அரசாண்ட நாடும் மாசுண தேசம் என்று வழங்கப்
பெற்று வந்தது. அதற்குச் சக்கரக்கோட்ட மண்டலம் என்னும் வேறொரு பெயரும் உண்டு. இராசேந்திரனுடைய படைத்தலைவனால் கைப்பற்றப் பட்ட மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப் பள்ளி ஆகிய இடங்கள் அந்த வத்ச இராச்சியத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனவே, அவை வேங்கி நாட்டிற்கு வடக்கே இருந்தன என்பது ஒருதலை.
பிறகு, அப்படைத்தலைவன் ஆதிநகரில் இந்திரரதன் என்பவனை வென்று ஒட்டர தேயத்தையும் கோசல நாட்டையும்1 பிடித்துக் கொண்டனன். அக் கோசலம், மகாகோசலம் என்று வழங்கும் தென்கோசல நாடாகும். தாரா நகரத்திலிருந்த போச ராஜனுக்கு2 இந்திரரதன் என்னும் பகைவேந்தன் ஒருவன் இருந்தனன் என்பது உதயபுரக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. அவ்விந்திரரதனே ஆதிநகரில் நிகழ்ந்த போரில் தோல்வியுற்று ஒட்டர தேயத்தையும் தென்கோசல நாட்டையும் இழந்தவனாதல் வேண்டும் என்று டாக்டர் கெல்ஹார்ன் கருதுவது3 மிகப் பொருத்தமுடையதேயாம்.
அதன் பின்னர், தன்மபாலனுடைய தண்டபுத்தியும் இரண சூரனது தக்கணலாடமும் கோவிந்தசந்தனுக்குரிய வங்காள தேசமும் மகிபாலனது உத்திரலாடமும் இராசேந்திரன் படைத்தலைவனால் கைப்பற்றப்பட்டன. அவ்வேந்தர்களை வென்று அவர்களுடைய நாடுகளைப் பிடித்த பிறகு அப்படைத்தலைவன் கங்கைக்கரையை அடைந்தான் என்று மெய்க்கீர்த்தி கூறுகின்றது.
அந்நாடுகளுள், தண்டபுத்தி என்பது வங்காள நாட்டில் மிதுனபுரி ஜில்லாவின் தென்பகுதியும் தென் மேற்குப் பகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும்4. எனவே, அது சொர்ணரேகை யாற்றின் இரு கரையிலும் பரவியிருந்த நாடெனலாம். ஆகவே, அஃது ஒட்டரதேயத்திற்கும் வங்காளத்திற்கும் இடையில் அமைந்திருந்த ஒரு நாடு என்பது திண்ணம்5. வங்காளத்திலுள்ள பர்த்துவான் என்னும் நிலப்பரப்பு முற்காலத்தில் வர்த்தமான புத்தி என்ற பெயருடைதாயிருந்தது என்றும் அதிலிருந்த ஓர் உள்நாட்டிற்குத் தண்டபுத்தி மண்டலம் என்ற பெயர் வழங்கியது என்றும் தெரிகின்றன1.
தக்கணலாடம், என்பது வங்காளத்திலுள்ள ஹூக்ளி (Hooghly), ஹௌரா (Howrah) ஜில்லாக்களைக் கொண்ட நாடு; உத்தரலாடம் என்பது மூர்ஷிதாபாத் (Murshidabad), பீர்பூம் (Birbhum) ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்ட நாடாகும்.2 தண்டபுத்தி மண்டலத்திற்குக் கிழக்கே தக்கணலாடமும் அம்மண்டலத்திற்கு வடக்கிலும் வடகிழக்கிலும் உத்தர லாடமும் இருந்தன என்பது உணரற்பாலது.
வங்காள தேசம் என்பது கீழ் வங்காளமாகும். தண்டபுத்தியை யாண்ட தன்மபாலனும் தக்கணலாடத்தை யாண்ட இரணசூரனும் வங்காள வேந்தனாகிய கோவிந்த சந்தனும் உத்ரலாடத்திலிருந்து அந்நாளில் அரசாண்ட பேரரசனாகிய மகிபாலனுக்குட்பட்ட குறுநில மன்னர்களா யிருத்தல் வேண்டும் என்பது இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியினால் உய்த்துணரக் கிடக்கின்றது. அவர்களுள், மகிபாலனைத் தவிர மற்றையோர் செய்திகள் தெரியவில்லை. தன்மபாலன் என்பவன், ஒருகால் மகிபாலனுக்கு உறவினனாக இருப்பினும் இருக்கலாம்.
சோணாட்டுப் படைத் தலைவன்பால் தோல்வியுற்ற வட வேந்தர் களை நிரல்படக் கூறுவதில், இராசேந்திரன் மெய்க் கீர்த்திக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளுக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மெய்க்கீர்த்தி, அப்போர் நிகழ்ச்சிகள் முடிவெய்தியவுடன் எழுதப்பெற்றது. திருவாலங் காட்டுச் செப்பேடுகள், சில ஆண்டுகளுக்குப் பின்னர் வரையப் பெற்றவை. ஆதலால், மெய்க்கீர்த்தியில் உள்ளவையே நேர்மையானவை என்று கொள்வது மிகப் பொருந்தும். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கூறப்பெற்ற வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டால் உத்தரலாட வேந்தனாகிய மகிபாலனை அப்படைத்தலைவன் வென்றது, கங்கைகொண்டு திரும்புங்கால் நிகழ்ந்த நிகழ்ச்சி என்று கொள்ளல் வேண்டும்.
இனி, மகிபாலன் என்பான் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வங்காள மாகாணத்தை ஆட்சி புரிந்த பால மரபினர் வழியில் தோன்றிய வேந்தன் ஆவன். அவனது ஆட்சி வடக்கே காசி வரையில் பரவியிருந்தது என்று தெரிகிறது. அந்நாளில் வங்காள நாடு பல உள்நாடுகளைத் தன்னகத்துக் கொண்டு நிலவிற்று. அந்நாடுகளிலிருந்த அரசர்கள் எல்லாம் மகிபாலனுக்குக் கீழ்ப்படிந்து கப்பஞ் செலுத்தி வந்தனர். எனவே, அக்ககாலத்தில் அம்மகிபாலன் பேரரசனாகத் திகழ்ந்தனன் என்பது தேற்றம். சோழ நாட்டுப் படைத்தலைவன், முதலில் அப்பக்கத்திலிருந்த குறுநில மன்னர்கள் எல்லோரையும் வென்று, இறுதியில் பேரரசனாகிய மகிபாலனையும் போரில் புறங்காட்டி யோடும்படி செய்து, தோல்வியுற்ற மன்னர்களின் தலைகளில் கங்கைநீர் நிரம்பிய குடங்களையும் வைத்துக் கொண்டு1 தன் நாட்டிற்குத் திரும்பினான்.
அப்படையெழுச்சி நிகழ்ந்தபோது, இராசேந்திர சோழ னுடைய படைத்தலைவன், கங்கைப் பேராற்றில் யானைகளை வரிசையாக நிறுத்திப் பாலங்கள் அமைத்து அவற்றின் மீது தன் படைகளைச் செலுத்தி அவ்வாற்றை எளிதாகக் கடந்து சென்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதோர் அரிய செய்தியாகும்.
வட நாட்டில் வெற்றித் திருவை மணந்து பெரும் பொருளும் கங்கை நீரும் கைக்கொண்டு திரும்பிவந்த தன் படைத்தலைவனை, நம் இராசேந்திரன் கோதாவரியாற்றங் கரையிற்3 கண்டு பெரு மகிழ்ச்சியுற்று, அவன் கொணர்ந்தவற்றை ஏற்றுக்கொண்டு அவனோடு தன் நாட்டிற்குத் திரும்பினான். அவ்வாறு இவன் திரும்பி வரும்போது இடையிலுள்ள திருப்பதிகளில் இறைவனை வணங்கி நிவந்தங்கள் அளித்த செய்தி கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென்கிழக்கே பத்து மைல் தூரத்தில் உள்ளதும் இக்காலத்தில் திருலோக்கி என்று வழங்குவதும் ஆகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள கல்வெட்டொன்று1, இராசேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது என்று கூறுவதனால் அவ்வுண்மையை உணரலாம். அன்றியும் கும்பகோணத்தில் நாகேச்சுரரது கோயிலில் இறைவன் திருமுன்னர் வைக்கப்பெற்றுள்ள கங்கை விநாயகர் படிமமும் அப்படையெழுச்சியில் வடநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு இராசேந்திரனால் அங்கு பிரதிட்டை செய்ப்பெற்றதேயாம். அப் படிமம் அமைக்கப்பெற்ற கல்லும் அதன் சிற்ப அமைதியும் அது வடநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை நன்கு வலியுறுத்துகின்றன. அன்றியும் கங்கை விநாயகர் என்னும் அதன் பெயர்க் காரணமும் அது வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயருடைய இராசேந்திர சோழனால் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நன்கு விளக்குதல் காண்க. வெற்றி பெற்ற வேந்தர்கள் தோல்வி எய்திய நாடுகளிலிருந்து தம் வெற்றிக்கு அடையாளமாகக் கடவுட் படிமங்கள் கொண்டு வருவது பழைய வழக்கம்.
இனி, தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றில் உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப்பரிக்கிரகம் பண்ணியருளின கங்கைகொண்ட சோழனென்னுந் திரு நாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனின் உண்ணும் . . . . வைஷ்ணவர்2 என்னும் செய்தி வரையப் பெற்றுள்ளது. இவ்வேந்தன் கங்கையைக் கொண்டு வந்தமையும் அதுபற்றிப் புரிந்த வீரச் செயலும் அறச் செயலும் அதில் எழுதப் பட்டிருத்தல் அறியத்தக்கது. வடவேந்தரை வென்று கங்கை நீரைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்த அருஞ்செயல் பற்றி, நம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் எய்தினன் என்பதும் அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.
இராசேந்திரனது வடநாட்டுப் படையெடுப்பிற் கலந்து கொண்ட படைத்தலைவர்கள் பலராதல் வேண்டும். அவர்கள் இன்னார் இன்னார் என்பதை இப்பொழுதுள்ள கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையுங் கொண்டு அறிய முடியவில்லை. எனினும் இவ்வேந்தனுடைய படைத் தலைவர்களுள் மிகச் சிறப்புற்று விளங்கிய விக்கிரம சோழச் சோழிய வரையனான இராசராசன் என்பான் தலைமைச் சேனாபதியாகச் சென்றிருக்க வேண்டும் என்பது ஒருவாறு புலப்படுகின்றது. அன்றியும் இராசேந்திரனுடைய மூத்த மகனும் இளவரசுப் பட்டம் பெற்றவனுமாகிய முதல் இராசாதிராச சோழன் இப்போரில் படையுடன் சென்று வெற்றிதேடித் தந்திருத்தல் வேண்டும் என்பது,
வங்கத்தை
முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி
செற்ற தணியாண்மைச் சேவகனும்
என்ற தொடரில் இவ்வேந்தனது போர்ச்செயலை ஒட்டக்கூத்தர் விரித்துரைத்திருத்தலால் நன்கு விளங்கும்.
அப்படையெடுப்பின் பயனாகத் தமிழர் நாகரிகம் வங்காள நாட்டில் புகுந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். படையுடன் சென்ற தமிழ் நாட்டுத் தலைவர்களுள் ஒருவன் மேல் வங்காளத்தில் தங்கி விட்டனன் என்றும் அவன் வழியில் வந்த சாமந்த சேனன் என்பவனே பிற்காலத்தில் வங்காளத்தில் ஆட்சி புரிந்த சேன மரபினரின் முதல்வன் என்றும் திரு. R. D. பானர்ஜி என்னும் அறிஞர் கூறுகின்றனர்.2 மிதிலையை யாண்ட கருநாடரும் அவ்வாறு சென்றவர்களாக இருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.3 திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாரா வளியின் உரையில் இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலிருந்து பல சைவர்களை அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும் சோழ நாட்டிலும் குடியேற்றினான் என்று சொல்லப்பட்டுள்ளது1. அவ்வுரையில் குறிப்பிடப்பெற்ற சைவர்கள் சைவாசாரியர்கள் போலும்.
இனி, இவனது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்க்கீர்த்தி, இவன் கப்பற்படைகளைக் கடல் நடுவிற் செலுத்திக் கடாரங்கொண்ட செய்தியை விரிவாகக் கூறுகின்றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அச்செய்தி மிகச் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடாரப் படையெடுப்பைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு இவன் மெய்க்கீர்த்தியே சிறந்த கருவியாகும். அப்படையெழுச்சி கி. பி. 1025-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்ததாதல் வேண்டும். கடல் கடந்துசென்று பகைவர்களோடு போர்புரிவது அக்காலத்தில் எளிதன்று ஆதலால், இன்றியமையாமை பற்றியே இராசேந்திரன் அப்படை யெடுப்பில் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.
இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் இராசேந்திர சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சோழ இராச்சியமும் கடார இராச்சியமும் தம்முள் நட்புக் கொண்டிருந்தன என்பது ஆனை மங்கலச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.2 அத்தகைய நிலையிலிருந்த அவ்விரு இராச்சியங்களும் சில ஆண்டுகளில் பகைமைகொண்டு ஒன்றன்மேல் மற்றொன்று போர் தொடங்கும் நிலையை எய்தியமைக்குக் காரணம் நன்கு புலப்பட வில்லை. ஒருகால் வாணிகம் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த தமிழ் மக்கள் உரிமைகளைக் காப்பாற்றும் பொருட்டு இராசேந்திர சோழன் அப்படையெடுப்பைத் தொடங்கி யிருத்தல் கூடும். அஃது எவ்வாறாயினும், தமிழ் மக்களின் வாணிக வளர்ச்சியின் பொருட்டு அப்படையெழுச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது பொருந்தும் எனலாம். ஸ்ரீவிசய நாட்டைச் சோழ இராச்சியத்திற்கு உட்பட்டதாகச் செய்து அந்நாட்டு வேந்தனைத் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் இராசேந்திரனுக்கு இருந்ததா என்பது தெரியவில்லை.
இவ்வேந்தன், தன்னுடைய சிறந்த கப்பற்படையின் துணை கொண்டு, கடல் நடுவிலுள்ள கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கவர்மனைப் போரிற் புறங் கண்டு அவனது பட்டத்து யானையையும் பெரும் பொருளையும் வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்துகொண்டு ஸ்ரீவிசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம் இலாமுரி தேசம், நக்கவாரம், கடாரம் ஆகிய இடங்களையும் கைப்பற்றினன் என்பது இவன் மெய்க்கீர்த்தியினால் அறியப்படுகிறது. அவற்றுள், கடாரம் என்பது பரக்கு மோதக் கடாரம்2 எனவும், குளிறு தெண்டிரைக் குரை கடாரம் எனவும் கலிங்கத்துப்பரணியில் கூறப்பட்டிருத்தலால் அது கடற்கரையில் அமைந்திருந்த ஒரு நகரம் என்பது வெளியாகின்றது. செப்பேடுகளில் வரையப்பெற்றுள்ள வடமொழிப் பகுதியில் அது கடாகம்4 என்று குறிக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப் பாலையில் சொல்லப் படும் காழகம்5 எனப்படுவது கடாரமேயாம் என்பது அதற் குரைகண்ட நச்சினார்க்கினியர் கருத்து. அவ்வாசிரியர் தக்க ஆதாரமின்றி அங்ஙனம் கூறார் என்பது ஒருதலை. ஆகவே, கடைச்சங்க காலத்தில் காழகம் என்று வழங்கிய கடாரத்துடன் தமிழ் நாட்டார் வாணிகத் தொடர்புடையவராய் வாழ்ந்து வந்தனர் என்பது பட்டினப்பாலை உரையால் நன்கு புலப்படு
கின்றது. அதனோடு சீன தேயத்தினரும் அந்நாளில் வாணிகஞ் செய்து வந்தனர் என்பது அந்நாட்டு வரலாற்றுக் குறிப்புகளால் அறியப் படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கடாரம் மலேயாவின் மேல் கரையில் தென்பக்கத்தில் கெடா6 என்னும் பெயருடைய நகரமாக இக்காலத்திலிருத்தல் அறியத்தக்கது.
ஸ்ரீவிசயம் என்பது சுமத்ரா என்று இக்காலத்தில் வழங்கும் சொர்ண தீவத்திலுள்ள பாலம்பாங் என்னும் இராச்சியமாகும்1. அது கி. பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையில் சிறந்து விளங்கிய தோடு தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டும் நிலவியது. அதனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சீன தேயத்து நூல்களில் மிகுதியாகக் காணலாம்.
பண்ணை என்பது சுமத்ரா தீவின் கீழ்கரையில் உள்ள ஊராகும்.2 அஃது இந்நாளில் பனி, பனை (Pani or Panei) என்று வழங்கப்படுகிறது.
மலையூர் என்பது சுமத்ராவின் கீழ்கரையில் இருந்தது என்று ஒருசாராரும் மேல்கரையில் இருந்தது என்று மற்றொரு சாராரும் மலேயாவின் தென்பகுதியில் இருந்தது என்று பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். எனவே, அஃது எங்கிருந்தது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் அந் நாட்டில்தான் மலையூ என்னும் ஆறு ஓடியது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அது பாலம்பாங் இராச்சியத்திற் கண்மையில் இருந்திருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்.3 ஹாலண்டு தேயத்தினரான ஓர் ஆராய்ச்சியாளர் அது ஜம்பி (Jambi) என்னும் நாடாகும் என்று உறுதி செய்துள்ளனர்.
மாயிருடிங்கம் என்பது மலேயாவின் நடுவில் இருந்ததாம். சீன தேயத்தினர் அதனை ஜிலோடிங் (Ji - lo - ting) என்று வழங்கி யுள்ளனர்.
இலங்கா சோகம் என்பது மலேயாவிலுள்ள கெடாவிற்குத் தெற்கே இருந்தது என்று தெரிகிறது. அது சீன தேயத்தினரால் லிங் - யா - சென் - கியா (Ling - ya - ssenkia) என்று வழங்கப்பட்டுள்ளது.
பப்பாளம் என்பது பப்பாளமா என்று மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பப்பளம் என்ற நாடு ஒன்று முற்காலத்தில் இருந்தது என்பது குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில் மாளுவம் சோனகம் பப்பளம்1 என்று ஒட்டக்கூத்தர் கூறிய வாற்றான் நன்கறியக்கிடக்கின்றது. எனவே, பப்பாளம் என்பதுதான் அவ்வாசிரியரால் பப்பளம் என்று கூறப்பட்டிருத்தல் வேண்டும். சிங்கள வேந்தனாகிய முதற் பராக்கிரம பாகுவின் ஆணையின்படி அருமண தேயத்தின்மீது கி. பி. 1165-ல் படையெடுத்துச் சென்ற ஆதிச்சன் என்னும் படைத்தலைவன், பப்பாளத்தில்தான் முதலில் இறங்கினான் என்று மகாவம்சம் கூறுகின்றது. எனவே, அது கிரா என்னும் பூசந்திக்கு (Isthmus of Kra) அணித்தாக இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபாகும்.2 இலிம்பங்கம், வளைப்பந்தூர் என்னும் இரண்டும் எவ்விடங்களில் இருந்தன என்பது இப்போது புலப்படவில்லை.
தக்கோலம் என்பது கிரேக்க ஆசிரியரான தாலமியால் தகோலா என்று குறிக்கப்பட்டுள்ளது. அகில் வகைகளில் அருமணவன், தக்கோலி, கிடாரவன் என்பன, சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரால் கூறப்பட்டுள்ளன3. அவற்றுள், தக்கோலி என்பது தக்கோலத்திலிருந்து நம் தமிழ் நாட்டிற்கு அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பெற்ற அகில் என்று கருதப்படுகிறது. எனவே, அவ்வூர் நம் தமிழகத்தோடு வாணிகத் தொடர்புடையதாய்ப் பண்டைக் காலத்தில் விளங்கியது என்பது திண்ணம். கிரா பூசந்திக்குத் தெற்கே மலேயாவின் மேல் கரையிலுள்ள தகோபா ஜில்லாவின் தலைநகராகிய தகோபா நகரமே (Takuapa) பழைய தக்கோலம் என்பது அறிஞர்கள் கருத்து4.
தமாலிங்கம் என்பது சீன தேயத்து நூல்களில் தன்மாலிங் (Tan - ma - ling) என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அது மலேயாவின் கீழ்கரையில் குவாண்டன் (Kwantan) என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்திலுள்ள தெமிலிங் (Temiling) என்னும் நகரமாகும்1. அதனைத் தெம்பெலிங் என்று வழங்குவதும் உண்டு. தமாலிங்கத்திலிருந்து இலங்கா சோகத்திற்குச் செல்வதற்குத் தரைவழி யொன்று இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அன்றியும், கடல் வழியாகச் சென்றால் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஆறு நாட்களில் செல்லலாம் என்பது அன்னோர் கருத்து.
இலாமுரி தேசம் என்பது சுமத்ராவின் வடபகுதியிலிருந்த நாடாகும். அதனை இத்தாலிய யாத்திரிகரான மார்க்கோ போலோ என்பார் லம்பிரி (Lambri) எனவும் அராபியர்கள் லாமுரி (Lamuri) எனவும் கூறியுள்ளனர். சீன தேயத்தினர், அதனை லான்வூலி (Lan - wou - li) என்று வழங்கியுள்ளனர்.
நக்கவாரம் என்பது நிக்கோபார் (Nicbar Islands) தீவுகள் என்று இக்காலத்தில் வழங்குகின்றது. அதில் அடங்கிய அத்தீவுகள் வங்காளக் கடலில் உள்ளன. தென்னைகளுள் ஒருவகைக்கு நக்கவாரம்பிள்ளை என்னும் பெயர் இன்றும் வழங்குகிறது.
ஆகவே, கடாரப் படையெடுப்பில் நம் இராசேந்திரன் கைப்பற்றியன வாக மெய்க்கீர்த்தியில் சொல்லப்படும் நாடுகளும் ஊர்களும் சுமத்ராவிலும் மலேயாவிலும் அவற்றைச் சூழ்ந்தும் இருந்தனவாதல் வேண்டும். அவைகள் எல்லாம் சுமத்ராவில் அக்காலத்தில் நிலைபெற்றிருந்த ஸ்ரீவிசயராச்சியத்திற்கு உட்பட்டிருந்தன என்பது திண்ணம். கடாரப் படை யெழுச்சியைப் பற்றிக் கூறும் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியைக் கூர்ந்து நோக்குமிடத்து, அங்கே இவன் எய்திய வெற்றிகள் அனைத்தும் ஒரே படை யெடுப்பில் பெற்றவை என்பதும் அதில் குறிப்பிடப்பெற்ற நாடுகளும் ஊர்களும் ஓர் அரசன் ஆளுகைக்கே உட்பட்டிருந்தன என்பதும் நன்கு புலனாகின்றன. ஸ்ரீவிசய ராச்சியத்திற்கு உட்பட்டிருந்தவையாகச் சீன தேயத்து நூல்களில் கூறப்பட்டுள்ள இடங்களும் இராசேந்திரன் கடாரப் படையெடுப்பில் கைப்பற்றியனவாக மெய்க்கீர்த்தியில் குறிக்கப்பெற்றுள்ள இடங்களும் பெரும்பாலும் ஒத்திருத்தல் ஈண்டு உணரற்பாலது.
நம் இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ போர்கள் நிகழ்த்தி வெற்றிபெற்றுள்ளானெனினும் இவன் கங்கையும் கடாரமும் கொண்டமைதாம் அக்காலத்தில் மக்கள் மனத்தையும் புலவர் உள்ளத்தையும் ஒருங்கே பிணித்துள்ளன. அவ்வெற்றிச் சிறப்பினை,
களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில்
காய்சினத் தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங்
கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்
என்று ஆசிரியர் சயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. அன்றியும், கவிச்சக்கர வர்த்தியாகிய ஒட்டக்கூத்தர், தாம் பாடிய இரண்டு உலாக்களில்,
தண்டேவிக்
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
கங்கா புரிபுரந்த கற்பகம்
என்றும்,
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்
என்றும் அவ்விரு வீரச்செயல்கள் பற்றியே நம் இராசேந்திரனைப் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம். அவ்வருஞ் செயல்கள் பற்றி இராசேந்திரனுக்குக் கங்கை கொண்ட சோழன், கடாரங் கொண்டான் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் அந்நாளில் வழங்கிய செய்தியும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.
இனி, இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியை நோக்கு மிடத்து, இவனது கடார வெற்றியோடு இவன் போர்ச் செயல்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்தின என்று கூறலாம். ஆனால், இவன் மகன் முதல் இராசாதிராசன் மெய்க்கீர்த்தியை1 ஆராயுங்கால், இராசேந்திரன் கடாரம் வென்ற பிறகு இவனது ஆட்சியின் பிற்பகுதியில் மலை நாடு, ஈழ நாடு, மேலைச்சளுக்கிய நாடு என்பவற்றோடு மீண்டும் போர் நிகழ்த்த வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது என்பதும் அக்காலத்தில் இளவரசனாயிருந்த இராசாதிராசன் அப்போர்களை நடத்தி வெற்றி எய்தினான் என்பதும் நன்கு புலப்படுகின்றன. அப்போர் நிகழ்ச்சிகளில் நம் இராசேந்திரன் நேரில் கலந்து கொள்ளாமல் தன் புதல்வர்களைப் பெரும்படைகளுடன் அந்நாடுகளுக்கு அனுப்பிவிட்டுத் தலைநகரில்தான் தங்கியிருந்தனனாதல் வேண்டும். ஆகவே, இராசேந்திர சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை இவன் மகன் இராசாதிராசன் மெய்க்கீர்த்தியின் துணைகொண்டு ஆராய்வது பொருத்த முடையதாகும்.
பாண்டி நாடும் சேர நாடும் இராசேந்திரன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன என்பதும் அவற்றை இவன் புதல்வர்களுள் ஒருவன் சோழ பாண்டியன் என்னுஞ் சிறப்புப் பெயருடன் மதுரை மாநகரில் இருந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. அந்நிலையில் தம் நாடுகளைக் கைப்பற்றித் தாமே ஆட்சி புரியவேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய்த் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாண்டியர் மூவரும் உள்நாட்டில் கலகஞ் செய்யத் தொடங்கினர். அதனை யுணர்ந்த இளவரசனாகிய இராசாதிராசன் பெரும்படையுடன் பாண்டி நாட்டிற்குச் சென்று போர்புரிந்து பாண்டி வேந்தர்களான மானாபரணனையும் வீரகேரளனையுங் கொன்றமையோடு சுந்தர பாண்டியன் போர்க்களத்தில் எல்லாவற்றையும் இழந்து தலை
விரித்தோடி முல்லையூர் புகுந்து ஒளிக்குமாறும் செய்தனன்2. அந்நிகழ்ச்சிகள் எவ்வாண்டில் நடைபெற்றன என்பது தெரியவில்லை. அச் செய்திகளை யுணர்த்தும் பாண்டியர் கல்வெட்டுகளாதல் சோழ பாண்டியர் கல்வெட்டுக்களாதல் பாண்டி நாட்டில் காணப் படாமை யானும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி யொன்றே அவற்றைக் கூறுவ தாலும் அப்போர் நிகழ்ச்சிகளைத் தெளிவாக அறிய இயலவில்லை. எனினும், சோழர்களைப் பாண்டி நாட்டைவிட்டுத் துரத்துவதற்குப் பாண்டியர் மூவரும் செய்த முயற்சி இவ்வாறு முடிவெய்தியது எனலாம்.
பின்னர், சேரர்கள் சுயேச்சை பெற்றுத் தனியரசு புரியும் விருப்பத்துடன் தம் நாட்டிலும் கலகம் புரிவாராயினர். அதனை யறிந்த இளவரசனாகிய இராசாதிராசன் சேர நாட்டிற்கும் படை யெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. அக்காலத்தில் சேரநாடு சில பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் பகுதியும் ஒவ்வொரு அரசனால் ஆளப்பட்டு வந்தது. சேர நாட்டின்மேல் படையெடுத்துச் சென்ற இராசாதிராசன் முதலில் வேணாட்டரசனோடு போர் புரிந்து அவனைக் கொன்றனன்; பிறகு, அவனுக்குஉதவிய கூபக நாட்டு வேந்தனைப் போரில் வென்று அவன் தன் வீரங் குலைந்து புறங் காட்டியோடுமாறு செய்தனன்1. பின்னர் எலிமலைக்கு அண்மையிலுள்ள இராமகுட நாட்டு மன்னன் ஒருவனோடு போர்புரிந்து வாகை சூடினான். இராமகுட நாட்டு மன்னர்கள் மூஷிக மரபைச் சேர்ந்தவர்கள்; அரச குலத்தினர் எல்லோரையும் கொன்று அழித்த பரசிராமனால் முடிசூட்டப் பெற்ற பெருமை வாய்ந்தவர்கள்.2 கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இராமகுட மூவர் திருவடியாகிய கண்டன் காரிவர்மன் ஆட்சியின் 59-ஆம் ஆண்டில் வரையப்பட்ட கல்வெட்டொன்று எலிமலைப் பக்கத்தில் காணப்படுகிறது.3 அதில் இராசேந்திர சோழ சமய சேனாபதி என்பவனைப் பற்றிய செய்தி கூறப்பட்டிருத்தலால் இராசாதி ராசன் வென்ற இராமகுட நாட்டு மன்னன் கண்டன் காரிவர்மனே எனல் பொருந்தும். அப்போருக்குப் பிறகு காந்தளூர்ச் சாலையும் இராசாதி ராசனால் கைப்பற்றப்பட்டது.
ஆகவே, சோழ பாண்டியன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழ அரசகுமாரன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்த குறுநில மன்னர்கள் தாம் சுயேச்சை பெறும் பொருட்டுச் சில காலங்களில் கலகங்கள் செய்தனர் என்பதும் அவற்றை அடக்கி அந்நாடுகளில் தன் தம்பியின் ஆட்சி நன்கு நடைபெறுமாறு செய்வதற்கே, இராசாதிராசன் தன் தந்தையின் ஆட்சியின் பிற்பகுதியில் அவற்றின் மீது படையெடுத்துச் சென்றனன் என்பதும் தெற்றெனப் புலப்படுதல் காண்க.
இனி, ஈழ நாடு முழுவதும் சற்றேறக்குறையப் பத்து ஆண்டுகள் வரையில் இராசேந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது எனலாம். பிறகு, அதன் தென்கிழக்குப் பகுதியாகிய ரோகண நாட்டை ஐந்தாம் மகிந்தனுடைய புதல்வன் காசிபன் என்பான் கி. பி. 1029-ல் கைப்பற்றிக் கொண்டு விக்கிரமபாகு என்ற பெயருடன் முடிசூடிக் கி. பி. 1041 வரையில் அப்பகுதியை மாத்திரம் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அவன் சோழர்களோடு போர் புரிந்து ஈழ மண்டலம் முழுவதையுங் கைப்பற்றித் தன் ஆட்சியின்கீழ் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் கி. பி. 1041-ல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான் என்று மகாவம்சம் கூறுகின்றது. ஆனால், அவன் சோழர்களோடு நிகழ்த்திய போரில் உயிர் துறந்தானென்றும் அவனுடைய முடி முதலான அரசச் சின்னங்கள் இராசாதிராச சோழனால் கைப்பற்றப்பட்டன என்றும் சோழ மன்னர் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன1. அஃது எங்ஙன மாயினும் கி. பி. 1041-ல் விக்கிரமபாகு இறந்து போனான் என்பது மகாவம்சத்தாலும் கல்வெட்டினாலும் உறுதியெய்துகின்றது. ஆகவே, அந்நாட்களில் அவனுடைய முடி முதலானவை சோழர்களுக்குக் கிடைத்திருத்தல் கூடும். விக்கிரமபாகு இறந்த பிறகு கித்தி என்பான் எட்டு நாட்கள் ரோகணத்தில் அரசாண்டான். அவனுக்குப்பிறகு மகாலான கித்தி என்பான் முடிசூடி அந்நாட்டில் மூன்று ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரிந்தான். அவன் சோழர்களோடு புரிந்த போரில் தோல்வியெய்தி அவ்வவமானத்தைப் பொறாது தன் கையால் கழுத்தை அறுத்துக் கொண்டு (கி. பி. 1044-ல்) இறந்தான்1. சோழ நாட்டுப் படைகள் அவன் முடி முதலான வற்றையும் பிற அணிகலன்களையும் பொருள்களையும் கைப்பற்றித் தம் அரசற்கு அனுப்பி விட்டன. மகாவம்சத்தில் குறிப்பிட்ட மகாலான கித்தியின் செய்தி, சோழ மன்னரது கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. இராசேந்திர சோழன் ஆட்சியின் இறுதியில் இராசாதிராசன் இளவரசனாயிருந்த காலத்தில் நடைபெற்ற இரண்டாம் ஈழ நாட்டுப் போர் இவ்வாறு முடிவெய்திற்று. மகாலான கித்தியின் மகன் விக்கமபண்டு என்பவன் இலங்கையில் இருப்பதற்கு அஞ்சித் துளுவ நாட்டில் இருந்து கொண்டிருந்தான். அவன், தன் தந்தை இறந்ததை அறிந்து ரோகணத்திற்குத் திரும்பிச் சென்று அந்நாட்டின் ஆட்சியை (கி. பி. 1044-ல்) ஏற்றுக்கொண்டான் என்று மகாவம்சம் கூறுகின்றது. பின்னர் அங்கு நிகழ்ந்த போர்ச்செய்திகள் இராதிராச சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும்.
இனி, இராசேந்திர சோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சோழர்கட்கும் மேலைச் சளுக்கியர்கட்கும் மீண்டும் போர் தொடங்கிற்று. கி. பி. 1042-ல் மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் ஜயசிங்கன் இறக்கவே, அவன் மகன் முதல் சோமேசுவரன் முடிசூட்டப்பட்டான். சோழர்களின் கல்வெட்டுக்கள் எல்லாம் அவனை ஆகவமல்லன் என்றே குறிப் பிடுகின்றன. ஜயசிங்கன் ஆட்சிக் காலத்திலேயே இடைதுறை நாடு மேலைச்சளுக்கியர்களால் கைப்பற்றப்பட்டுப் போயிற்று என்பது முன் கூறப்பட்டது. அதன் பின்னர், துங்கபத்திரை யாற்றிற்குத் தெற்கே பல்லாரி ஜில்லாவில் சோழர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்பில் சில பகுதிகளை அவர்கள் கவர்ந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியினால் மேலைச் சளுக்கியர்கட்கும் சோழர்கட்கும் பகைமை முதிர்ந்து கொண்டே வந்தது. அதனால் ஆகவமல்ல சோமேசுவரன் பட்டம் பெற்றவுடன் சோழர்கள் அவனுடன் போர்புரிந்து தம் ஆற்றலைக் காட்ட வேண்டியது இன்றியமை யாததாயிற்று. ஆகவே, இளவரசனாகிய இராசாதிராசன் பெரும் படையுடன் மேலைச்சளுக்கிய நாட்டிற்குச் சென்று தன்னாடை1 என்ற ஊரில் சளுக்கியப் படையைப் போரிற் புறங்கண்டு, அப்படையின் தலைவர் களாகிய கண்டப்பையன், கங்காதரன் என்பவர் களையுங் கொன்றான். அப்போர் நிகழ்ச்சிகளிற் கலந்து கொண்ட சோமேசுவரன் புதல்வர்களாகிய விக்கிர மாதித்தனும்2 விசயாதித்தனும் தம் படைத்தலைவன் சங்கமையனோடு போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டனர்.3 பிறகு, இராசாதிராசன் அங்குத் தனக்குக் கிடைத்த யானை குதிரைகளையும் பெரும் பொருளையும் கைப்பற்றிக்கொண்டு, கொள்ளிப்பாக்கையும் எரியூட்டித்4 திரும்பினான். மேலைச் சளுக்கியரோடு இராசாதிராசன் செய்த போர் அவனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி. பி. 1044 - ல் அவன் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆகவமல்ல சோமேசுரன் கி. பி. 1042-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்றவன். ஆகவே, அவனது ஆட்சியும் மேலைச் சளுக்கிய நாட்டில் அவ் வாண்டில் தொடங்கியிருத்தல் வேண்டும். எனவே, இராசாதிராசன் அந்நாட்டில் நிகழ்த்திய போரும் கி. பி. 1042, 1043-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதாதல் வேண்டும். அவன் இளவரசனாயிருந்த காலத்தில் நடத்திய அம்மேலைச் சளுக்கியப் போர் வெற்றியுடன் முடிவெய்தியமை அறியத்தக்கது.
இனி, நம் இராசேந்திரன் இளமையில் தன் தந்தையால் இடப்பெற்ற மதுராந்தகன் என்னும் பெயரும் தன் முடிசூட்டு விழாவில் பெற்ற இராசேந்திரன் என்னும் அபிடேகப் பெயரும் உடையவனாயிருந் தமையோடு வேறு சில சிறப்புப் பெயர்களையும் எய்தியிருந்தனன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும்1 கல்வெட்டுக்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அவை உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன், கடாரங் கொண்டான், கங்கைகொண்ட சோழன் என்பனவாம். அவற்றுள், உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன் என்னும் பெயர்கள் இவனுக்கு வழங்கியமை திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகிறது.2 சோழர்களது முடிசூட்டுவிழா நடைபெற்ற தொன்னகரங்களுள் ஒன்றாயிருப்பதும் அரச குடும்பத்தினர் பலர் அக்காலத்தில் தங்கி வாழ்ந்து வந்ததும் ஆகிய பழையாறை மாநகர் இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்று வழங்கப் பெற்றிருத்தலையும்3 அந்நகரின் தென்பால் ஓடும் ஆறு இவனால் வெட்டப் பெற்று முடிகொண்ட சோழப் பேராறு4 என்னும் பெயர் எய்தியிருத்தலையும் நோக்குங் கால் இவனுக்கு முடிகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் இருந்தமை நன்கு புலனாகும். இவன் தமிழ்மொழியிலும் வட மொழியிலும் சிறந்த புலமையுடையவனாயிருந்தமை பற்றி இவனைப் பண்டித சோழன் என்று அக்காலத்திலிருந்த அறிஞர்கள் பாராட்டிக் கூறியுள்ளனர்5. நம் தமிழகத் திற்குத் தென்கிழக்கேயிருந்த ஸ்ரீவிஜய ராச்சியத்தையும் அங்கிருந்த சிறந்த கடற்றுறைப் பட்டினமாகிய கடாரத்தையும் இவனது கப்பற்படை சென்று வென்றமைப் பற்றிக் கடாரங் கொண்டான் என்னும் சிறப்புபெயர் பெற்றனன். இவன் கங்கை கொண்ட சோழன் என்னும் பெயரெய்தி யமைக்குக் காரணம் முன் கூறப்பட்டுள்ளது. கிடைத்தற்கரிய அச்சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவுமாறு, இவன்தான் புதியதாக அமைத்த தலைநகர்க்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் வழங்கினன். இச் செயலால் அச்சிறப்புப் பெயரை எத்துணைப் பெருமை வாய்ந்ததாக இவன் கருதியிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் விளங்கும்.
இவன் அமைத்த அப்பெருநகர் கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும்1 விக்கிரம சோழன் உலாவிலும்2 கங்கைமாநகர் என்று வீரராசேந்திர சோழன் மெய்க் கீர்த்தியிலும்3 கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும்4 சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.
இத்தகைய பெருமை வாய்ந்த அந்நகர் இந்நாளில் தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து கும்பகோணத்திற்கு வட கிழக்கில் பத்து மைல் தூரத்திலுள்ள திருப்பனந்தாளுக்கு வடக்கே கொள்ளிடத்திற்குக் கட்டப் பெற்றுள்ள அணையி லிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெரு வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. அஃது இக்காலத்தில் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளையந் தாலுகாவில் இருக்கின்றது. அவ்வூரை ஒரு முறை சென்று பார்ப்பவர்களும் அஃது ஒரு காலத்தில் அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரமாக இருந்தது என்பதை நன்கறியலாம். அந்நகரின் பல பகுதிகள் இப்போது சிற்றூர்களாக அதனைச் சூழ்ந்திருந்த்தலை யாவரும் காணலாம்1. அவற்றின் பெயர்களே அவை முற்காலத்தில் ஒரு மாநகரத்தின் பகுதிகளாயிருந்தவை என்பதை நன்கு புலப்படுத்தும். அவ்வூர்க் கண்மையில் தென்மேற்கே உட்கோட்டை என்னும் ஊர் ஒன்றுளது. அங்கேதான் சோழ மன்னர்களுடைய சோழ கேரளன் - முடிகொண்ட சோழன் முதலான அரண்மனைகள் இருந்தன என்பது ஒருதலை2. கங்கைகொண்ட சோழபுரத்தில் இப்போது காணப்படும் கல்வெட்டுகளுள் மிகப் பழமை வாய்ந்தது நம் இராசேந்திரன் புதல்வன் வீரராசேந்திரன் கல்வெட்டேயாம். எனினும், இராசேந்திரன் கல்வெட்டுக்களிலும் அந்நகர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அம்மாநகரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் நம் இராசேந்திரன் பெருமையையுணர்தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலை பெற்றிருப்பது கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னுந் திருக்கோயிலே யாகும். அது கங்கைகொண்ட சோழன் எடுப்பித்து வழிபட்டமை பற்றிக் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் பெயர் எய்துவதாயிற்று. தஞ்சை இராசராசேச்சுரத்தின் மீது பதிகம் பாடியுள்ள கருவூர்த் தேவர் என்னும் பெரியார் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீதும் ஒரு பதிகம்4 பாடியுள்ளார். அப்பதிகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா என்னும் பகுதியில் உளது. கங்கைகொண்ட சோழேச்சுரம் அமைப்பில் தஞ்சை இராசராசேச்சுரத்தை ஒத்தது எனலாம். ஆனால், உருவத்தில் தஞ்சைக் கோயிலினும் சற்றுச் சிறியது; சிற்பத் திறத்தில் உயர்ந்தது. கர்ப்பக்கிரகம், அதனைச் சூழ்ந்த பிரகாரம், இடிந்த கிழக்குக் கோபுரம் என்பவற்றைத் தவிர எஞ்சிய பகுதிகள் எல்லாம் இடிந்தழிந்து போயின1. விமானம் தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தைப் போல் மிக அழகாக அமைந்துள்ளது. அது நூறடிச் சதுரமாக இருப்பதோடு நூற்றெழுபதடி உயரமும் ஒன்பது நிலைகளும் உடையது2. நேரே செல்லச் செல்லச் சிறுத்துச் செல்லும் இயல்பினதாய் உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தை உடையது. அவ்விமானத்தின் கீழ் மிகப்பெரிய சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளி யுள்ள இறைவனது திருப்பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் என்பது. அப்பெருமானது நாள்வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் இராசேந்திர சோழனும் இவன் வழித்தோன்றல்களும் நிவந்தமாக வழங்கியுள்ள ஊர்கள் பல. அவற்றுள் ஒன்றேனும் அக்கோயிலுக்குரியதாக இக் காலத்தில் இல்லை.
நம் இராசேந்திரன், தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அண்மையில் பெரியதோர் ஏரியை வெட்டுவித்து மக்கட்குத் தண்ணீர்க்குறை இல்லாதவாறு செய்தான். அப்பேரேரி, சோழகங்கம் என்னும் பெயருடையது என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகிறது3. அச் செப்பேடுகள் அதனை நீர்மயமான வெற்றித்தூண் என்றும் புகழ்ந்து கூறுகின்றன. இக் காலத்தில் அது பொன்னேரி என்று வழங்கப்படுகிறது. தெற்கு வடக்கில் பதினாறு மைல் நீளமுள்ள அவ்வேரி முற்காலத்தில் மிக உயர மான கரைகளையுடையதாய்த் திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு ஜில்லாக்களுள் சில பகுதிகளைத் தன் நீர் வளத்தால் செழிப்பித்து நன்னிலையில் இருக்கும்படி செய்த பெருமையுடையதாகும். தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுகாவில் இப்போது மிகப் பெரிய ஏரியாகவுள்ள வீர நாராயணன் ஏரியும் சோழகங்கம் என்னும் இவ்வேரிக்கு வடிகாலாகவே இருந்ததாம். மாளவ தேசத்து மன்னனாகிய போசனால் வடநாட்டில் இரு குன்றுகளுக்கிடையில் அமைக்கப்பெற்ற போசபுரத்து ஏரியினும் சோழ நாட்டில் மலைகளேயில்லாத நிலப்பரப்பில் மிக்க வலிமை வாய்ந்த பெருங் கரைகளுடன் நம் இராசேந்திர சோழனால் அமைக்கப் பெற்ற சோழகங்கம் என்னும் ஏரி சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது என்பது உணரற்பாலது1. இத்தகைய பேரேரியும் அதற்கணித்தாக அமைந்திருந்த கங்கைகொண்ட சோழபுரம் என்னுந் தலைநகரும் அழிந்து தம் சிறப்பனைத்தையும் இழந்து பாழ்பட்டுக் கிடத்தற்குக் காரணம் பிற வேந்தர்களின் படையெழுச்சியும் அடாச் செயல் களுமேயாகும்.
இனி, இராசேந்திர சோழன் தன் தந்தையைப்போல் சிவநெறியையே தனக்குரிய சமயமாகக் கொண்டவன். இவன் தன் வாழ்நாளில் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பது இவன் தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கற்றளியாக எடுப்பித்த ஈடும் எடுப்புமற்ற சிவாலயம் ஒன்றினால் நன்கறியப்படும். இவன், அவ்வாறு சிவபத்திச் செல்வ முடையவனாய் விளங்கியமைக்குக் காரணம், முதற் கண்டராதித்த சோழன் மனைவியார் செம்பியன் மாதேவியாரும் இராசராச சோழன் தமக்கையார் குந்தவைப் பிராட்டியாரும் இவனை இளமையில் வளர்த்து வந்தமையேயாம். ஒருவன் தன் இளமைப் பருவத்தில் எய்திய சிறந்த பயிற்சியும் பண்பும் அவன் வாழ்நாள் முழுமையும் நிலைபெற்றுப் பயன்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையேயாம்.
இவ்வேந்தன் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 1019-ல் செம்பியன்மா தேவியாரின் படிமம் ஒன்று செய்வித்து அதனை நாகப்பட்டினந் தாலுகாவில் செம்பியன் மாதேவி என்னும் ஊரிலுள்ள கோயிலில் எழுந்தருளுவித்து அதன் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ள செயல் ஒன்றே, இவன் சிவபக்தி மிக்க அவ்வம்மை யாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்துவதாகும்2.
இவனுக்குச் சைவாசாரியராக விளங்கியவர் சர்வசிவ பண்டிதர் ஆவார். இச்செய்தி, ஆசாரிய போகமாக இவருக்கு இரண்டாயிரங் கல நெல் ஆண்டு தோறும் அளிக்குமாறு இவன் செய்துள்ள ஏற்பாட்டினால் நன்கு வெளியாகின்றது. அன்றியும், சிவநெறியின் அறுவகைப் பிரிவுகளுள் ஒன்றாகிய காளாமுகத்தைச் சார்ந்த லகுளீச பண்டிதரும் இவனால் ஆதரிக்கப்பட்டனர் என்று தெரிகிறது.
இவன் சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் வாழ்ந்து வந்தவனெனினும் பிற சமயங்களிடத்தில் சிறிதும் வெறுப்புடைய வனல்லன். அன்றியும், புறச் சமயங்களையும் மதித்து அவற்றை அன்புடன் ஆதரித்தும் வந்தனன் எனலாம். நாகப்பட்டினத்தில் கடாரத்தரசனால் எடுப்பிக்கப் பெற்ற புத்த கோயிலுக்குப் பள்ளிச்சந்தமாக இவன் தந்தை அளித்த ஆனை மங்கலம் என்னும் ஊர் இவன் ஆட்சிக் காலத்தில்தான் சாசன மூலமாக அதற்கு வழங்கப் பட்டது2. இதனால், இவன் எல்லாச் சமயங்களையும் ஆதரித்து வந்தனன் என்பது இனிது விளங்குதல் காண்க.
இனி, நம் இராசேந்திர சோழனுக்கு மனைவிமார் ஐவர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அன்னோர், முக்கோக் கிழானடிகள்3, அரிந்தவன்மாதேவி4, வானவன் மாதேவி5, வீரமாதேவி6, பஞ்சவன்மாதேவி7 என்போர். அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவர்களுள் பட்டத்தரசியாக விளங்கியவள் யார் என்பது புலப்படவில்லை.
இவ்வேந்தற்கு மக்கள் பலர் உண்டு. அவர்களுள், இவனுக்குப் பிறகு சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவன் முதல் இராசாதி ராச சோழன் ஆவன். அவனுக்குப் பிறகு அவன் தம்பிமார்களாகிய இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் என்போர் முறையே அரசாண்டனர். அம்மூவரும் வேள்வியில் தோன்றும் முத்தீயைப் போல் இராசேந்திர சோழன் புதல்வர்களாகச் சிறந்து விளங்கினர் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது1. தன் தந்தையின் ஆணையின்படி சேர பாண்டிய நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாய் மதுரைமா நகரில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் இராசேந்திர சோழனுடைய மற்றொரு புதல்வன் ஆவன்.2 இராசேந்திரனுக்கு வேறு புதல்வரும் இருந்தனர் என்று சில கல்வெட்டுக் களால் தெரிகிறது. அவ்வரச குமாரர்கள் சில மண்டலங்களுக்குத் தலைவராய் அமர்த்தப் பெற்று அவ்விடங்களில் அரசாண்டுவந்தனர். அரச குமாரரை வென்ற நாடுகளுக்குத் தலைவராக அமர்த்தும் புதிய முறையை முதலில் பின்பற்றத் தொடங்கியவன் நம் இராசேந்திர சோழனேயாவன்.
இவனுக்கு இரு பெண்கள் இருந்தனர். அவர்கள் அருண்மொழி நங்கை, அம்மங்கைதேவி என்போர். அருண்மொழி நங்கைக்குப் பிரானார் என்னும் வேறொரு பெயரும் உண்டு. கொள்ளிடத்திற்கு வடகரையில் கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள திருமழபாடிக் கோயிலுக்கு இவ்வம்மை சில நிவந்தங்கள் அளித்துள்ளனள்3. மற்றொரு மகளாகிய அம்மங்கைதேவி, கீழைச் சளுக்கிய மன்னனாகிய விமலாதித் தனுக்கும் முதல் இராசராச சோழன் புதல்வியாகிய குந்தவைக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்னும் அரசகுமாரனுக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டனள்.4 அவ்விருவர்க்கும் பிறந்த புதல்வனே பிற்காலத்தில் சோழ ராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்று அரசாண்ட பெரு வீரனாகிய முதற் குலோத்துங்க சோழன் என்பது ஈண்டுணரற்பாலதாம்.
இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் குறுநில மன்னர்களாகவும் அரசியலில் பல துறைகளிலும் அதிகாரி களாகவும் இருந்து தம் அரசனது ஆணையின்படி யொழுகி நாட்டிற்குப் பல்லாற்றானுந் தொண்டு புரிந்தோர் பலர் இருந் திருத்தல் வேண்டும். அன்னோருள் சிலர், கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆயினும், அவர்களைப் பற்றிய செய்திகள் நன்கு புலப்படவில்லை. எனினும், கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறியப்பெற்ற சிலர் வரலாறுகள் மாத்திரம் ஈண்டு எழுதப்படுகின்றன.
1. விக்கிரம சோழ சோழியவரையனாகிய அரையன் இராசராசன்: இவன் சோழ மண்டலத்தில் திரைமூர் நாட்டிலுள்ள சாத்தமங்கலத்திற் பிறந்தவன்; இராசேந்திர சோழன் படைத் தலைவருள் ஒருவன்; அரசன் ஆணையின் படி மேலைச்சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றிமாலை சூடியவன்1; இவன் படையுடன் சென்றபோது அச்செய்தியைக் கேட்ட வேங்கி நாட்டு மன்னன் விசயாதித்தன் என்பான் ஓடியொளிந்தானென்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது2. இவன் மேலைச் சளுக்கியரோடும் கீழைச் சளுக்கிய மன்னனாகிய விசயாதித் தனோடும் வங்காள மன்னன் கோவிந்த சந்தன் மகிபாலன் முதலியவர் களோடும் புரிந்த போர்களில் பெரும் புகழ்பெற்று, நால்மடி வீமன், சோழன் சக்கரன், சாமந்தா பரணன், வீரபூஷணம், எதிர்த்தவர்காலன், வயிரி நாராயணன், வீரவீமன் என்னும் பட்டங்களை யுடையவனாய் விளங்கினான். இராசேந்திர சோழன் இவன்பால் எத்துணை மதிப்பு வைத்திருந்தான் என்பது இவன் எய்தியுள்ள பட்டங்களால் நன்கு புலனாகும். இவனைப் பற்றிய செய்தி இராசேந்திரனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்படுவதால் இவன் இவ்வேந்தனது ஆளுகையின் முற்பகுதியில் படைத்தலைவனாக நிலவியவனாதல் வேண்டும்.
2. கிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரம மாராயன்: இவன் இராசராச சோழன் ஆணையின்படி தஞ்சைப் பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுப்பித்தவன் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் இராசேந்திரன் ஆட்சியிலும் படைத் தலைவனாக இருந்துள்ளனன்1. கி. பி. 1044-ல் ஒரு கல்வெட்டில் இவன் குறிப்பிடப்பட்டிருத்தலால் இவன் இரா சேந்திர சோழன் ஆட்சிக் காலம் முழுமையும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் இவ்வேந்தனது ஆட்சியில் இராசேந்திர சோழ பிரமமாராயன் என்ற பட்டம் பெற்றுப் புகழுடன் விளங்கினான்.
3. மாராயன் அருண்மொழியான உத்தமசோழ பிரம மாராயன்: இவன், மேலே குறிப்பிடப்பெற்ற படைத்தலைவன் கிருஷ்ணன் இராமன் என்பவனுடைய புதல்வன். இவன், தன் தந்தையைப்போல் இராசேந்திரன் ஆட்சியில் சிறப்புடன் நிலவிய அரசியல் தலைவன்; இராசேந்திர சோழன் ஆணையின்படி கங்கபாடி நாட்டிலுள்ள குவளாலபுரத்தில் கி. பி. 1033-ஆம் ஆண்டில் ஒரு படாரி கோயில் எடுப்பித்தவன்3; அருண்மொழி என்பது இவனது இயற்பெயர்; உத்தம சோழ மாராயன் என்பது இவனது அரசாங்க ஊழியத்தைப் பாராட்டி அரசன் அக்காலத்தில் வழங்கிய பட்டமாகும். பிரமமாராயன் என்பதனால் இவன் அந்தணர் குலத்தினன் என்று தெரிகிறது.
4. ஈராயிரவன் பல்லவயனான உத்தம சோழப் பல்ல வரையன்: இவன் சோழ நாட்டில் பாம்புணிக் கூற்றத்திலுள்ள அரசூரில் பிறந்தவன்; இராசேந்திர சோழனுடைய பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன்; இராசராச சோழன் ஆட்சிக் காலத்திலும் அத்தகைய உயர்நிலையில் இருந்தவன். ஆனைமங்கலச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்களுள் இவனும் ஒருவன் ஆவன்.
5. பாண்டியன் சீவல்லபன்: இவன் மனைவி சோழ நாட்டி லுள்ள திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் அளித்துள்ளமையாலும் பாண்டி நாடு இராசராச சோழன் கால முதல் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையாலும் இப்பாண்டி வேந்தன் இராசேந்திர சோழனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த ஒரு சிற்றரசன் ஆதல் வேண்டும்.
6. வல்லவரையன் வந்தியதேவன்: இவன் இராசராச சோழன் தமக்கையான குந்தவைப் பிராட்டியின் கணவன் ஆவன்; வடஆர்க்காடு சில்லாவில் பிரமதேசம் என்ற ஊரைச் சூழ்ந்த பகுதிகளை அரசாண்டவன்2. சேலம் சில்லாவின் ஒரு பகுதி வல்லவரையர் நாடு என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றது3. எனவே, தன் அத்தையின் கணவன்பால் இராசேந்திரன் மிக்க அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பது இனிது புலனாதல் காண்க. இவ்வல்லவரையன் சோழர்க்குச் சிறந்த படைத் தலைவனாகவும் இருந்தமை அறியத்தக்கது.
7. உத்தமசோழமிலாடுடையான்: இவன் தென்னார்காடுசில்லாவில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலைய மானாட்டை ஆட்சி புரிந்த ஒரு குறுநில மன்னன் ஆவன். இவனது இயற்பெயர் பராந்தகன் யாதவ வீமன் என்பது4. இவன் கங்கை கொண்ட சோழனுடைய மருமகனாகிய இராசராச நரேந்திரனுக்கு உதவி புரியும் பொருட்டு வேங்கி நாட்டிற்குச் சென்று கலிதிண்டி என்ற ஊரில் மேலைச் சளுக்கியரோடு நிகழ்த்திய போரில் உயிர் துறந்தான். இவனோடு உடன் சென்ற இராசராச பிரமமாராயன், உத்தமசோழ சோழகோன் என்ற படைத் தலைவர்களும் அப் போரில் இறந்தனர். இவர்கள் மூவருக்கும் அவ்வூரில் மூன்று சமாதிக் கோயில்கள் இராசராச நரேந்திரனால் அமைக்கப்பெற்று நிவந்தங்கள் அளிக்கப் பட்டமை5 அறியத்தக்கதாகும். இந்நிகழ்ச்சி கி. பி. 1035-ல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.
8. கங்கைகொண்டசோழ மிலாடுடையான்: இவன் மேலே குறிப்பிடப்பெற்ற குறுநில மன்னனுக்குப் பின்னர் மலைய மானாட்டை அரசாண்டவன். இவன் கி. பி. 1024-ல் திருக்காளத்திக் கோயிலில் கார்த்திகை விளக்கீட்டிற்கு நிவந்தமாகப் பொன் வழங்கிய செய்தி, அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது. இவனும் இராசேந்திர சோழனுக்கு உட்பட்டிருந்த குறுநில மன்னர்களுள் ஒருவன் ஆவன்.
9. க்ஷத்திரியசிகாமணி கொங்காள்வான்: இவன் குட நாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; மனிஜா என்னும் இயற்பெயர் உடையவன். இவனது போர் வீரத்தைப் பாராட்டி இவனுக்கு க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டம் இராசராச சோழனால் அளிக்கப் பெற்ற செய்தி முன் கூறப்பட்டது. இவன் இராசேந்திர சோழன் காலத்தும் கொங்கு நாட்டில் குறுநில மன்னனாயிருந்து அரசாண்டு வந்தான்.
மைசூர் சில்லாவிலுள்ள சங்க நாட்டை ஆண்டு வந்த சங்காள்வார் மரபினரும், இராசேந்திர சோழனுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டிருந்தனர்.
சில காலத்திற்குப் பின்னர், கொங்காள்வார் தம்மைச் சோழர் வழியினர் என்று கூறிக்கொண்டமையோடு. தம்மைக் கரிகால சோழன் மரபினர் என்று சிறப்பித்துச் சொல்லிக் கொண்ட தெலுங்கச் சோழரைப்போல் பெருமையும் எய்துவாராயினர்.
இனி சோழர்களின் ஆற்றல், வீரம் ஆகியவற்றை அயல் நாட்டார் எல்லோரும் அறிந்து அடங்கியொழுகுமாறு செய்தவர்கள், பெரு வீரர்களாகிய இராசேந்திரன் புதல்வர்களும் பேராற்றல் படைத்த அரசியல் அதிகாரிகளுமே யாவர். அவர்கள் அலைகடல் நடுவுள் பல கலஞ் செலுத்திக் கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றினரெனின் அன்னோரது கடற்படை எத்துணை வலிமையுடையதாயிருத்தல் வேண்டும்? இராசேந்திரனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் சோழ இராச்சியம் யாண்டும் பரவிச் சிறப்புற்றிருந்தது. பழைய சென்னை மாகாணம், மைசூர் இராச்சியம் ஒரிசா மாகாணத்தின் தென்பகுதி, நைசாம் இராச்சியத்தின் பெரும்பகுதி, இலங்கை, மலேயா, சுமத்ரா ஆகிய நாடுகள் நம் இராசேந்திர சோழன் ஆட்சிக்கு உட் பட்டிருந்தன. அந்நாடுகளில் இவ்வேந்தனது ஆட்சி இனிது நடைபெறுமாறு உதவியவர்கள் இவனுடைய புதல்வர்களும் அரசியல் அதிகாரிகளுமே என்பது சிறிதும் புனைந்துரையன்று. சில சமயங்களில் சேய்மையிலிருந்த நாடுகளில் தோன்றிய சிறு கலகங்களும் அவ்வரசியல் தலைவர்களால் அவ்வப்போது அடக்கப் பெற்றமையின் இவ்வேந்தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வந்தனரெனலாம். ஆகவே இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் என்றுங் காணமுடியாத மிக உயர்ந்த நிலையில் திகழ்ந்தது என்பது ஒருதலை.
தன் தந்தையிடமிருந்து உரிமையிற் கிடைத்த சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகி, அதனை ஒப்பற்ற உயர் நிலைக்குக் கொணர்ந்து, பெருவாழ்வு பெற்றுப் புகழுடன் விளங்கிய இராசேந்திர சோழன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்து கி. பி. 1044-ல் இறைவன் திருவடியை அடைந்தான்.1 இவன் மனைவியருள் வீரமாதேவி என்பாள் இவனது பெரும் பிரிவிற்கு ஆற்றாமல் உடனுயிர் துறந்தாள்.2 வடஆற்காடு சில்லாவில் பிரமதேசம் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டொன்று, இராசேந்திர சோழன் வீரமாதேவி ஆகிய இருவர் உயிர்கட்கும் நீர்வேட்கை தணிதற்பொருட்டு அவள் உடன் பிறந்தானாகிய சேனாபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்தவேளான் என்பவன் ஒரு தண்ணீர்ப் பந்தல் நிறுவினான் என்று கூறுகின்றது3. அன்றியும் அக்கல்வெட்டு, இராசேந்திர சோழன் அடக்கஞ் செய்யப்பெற்ற இடத்திலேயே அத்தேவியும் உயிர் நீத்தாள் என்று உணர்த்துவதால் இவ்வேந்தன் பிரமதேசம் என்னும் ஊரில் இறந்திருத்தல் வேண்டும் என்பதும், இவன் மாதேவியும் அங்கு உடன்கட்டை ஏறியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கறியப்படுகின்றன. எனவே, இவ்வரசர்பெருமான், தன் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்தற்குச் சென்றிருந்தபோது தொண்டை மண்டலத்திலுள்ள பிரமதேசம் என்னும் ஊரில் இறந்தனன் என்றுணர்க.
இவ்வேந்தனது எட்டாம் ஆட்சி யாண்டில் வெளியிடப்பெற்ற திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலச் செப்பேட்டினைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தார் அரிதில் முயன்று பெற்றுத் தமிழ்ப்பொழில் என்ற திங்களிதழில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள் என வழங்கும் இது, முதல் இராசேந்திர சோழன் கி. பி. 1020-ல் சோழ மண்டலத்தில் ஐம்பத்தோரூர்களைத் திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல அந்தணர் பலர்க்குப் பிரமதேயமாக வழங்கிய நிகழ்ச்சியை அறிவிப்பதாகும். ஐம்பத்தைந்து இதழ்களையுடைய இச் செப்பேட்டில் அவ்வூர்களின் பெயர்களும் நான்கெல்லை களும் விளைநிலங்களின் கணக்கும் அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லும் காசும் அவற்றைப் பெறுதற்குரிய அந்தணர்களின் ஊர்களும் பெயர்களும் பங்குகளும் விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களிலிருந்து ஆண்டுதோறும் அன்னோர் பெறும் நெல் 51050 கலமும் காசு 32½ -ம் ஆகும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதுகாறும் கிடைத்துள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பெரியதாகும்.
பேரும் புகழும் படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காரு மின்றி விளங்கிய முதல் இராசேந்திர சோழன் இவ்வறத்தைத் தன் தாயாகிய திரிபுவனமாதேவியின் பெயரால் செய்துள்ளமை இப்பெருவேந்தன் தன் தாயிடத்திற் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப்படுத்துவதாகும்.
இக்காலத்தில் கம்போடியா என வழங்கப்பெறும் காம்போச நாட்டின் மன்னன் நம் இராசேந்திரனுக்குத் தன் நாட்டிலிருந்து அழகிய தேர் ஒன்றை அன்பின் கையுறையாக அனுப்பி இவனது பேராதரவு பெற்றுத் தனது நாட்டைப் பாதுகாத்துக் கொண்டமையும், இவ்வேந்தன் மேலைச் சளுக்கியர் தலைநகராகிய மான்ய கேடத்தைக் கைப்பற்றித் தன் தந்தையாகிய இராசராச சோழனது கருத்தை நிறைவேற் றினமையும் இச்செப்பேட்டினால் அறியப்படும் புதிய செய்திகளாகும்.
முதல் இராசாதிராச சோழன் கி. பி. 1018 - 1054
இம்மன்னர் பெருமான் முதல் இராசேந்திர சோழனுடைய மூத்த புதல்வன். அவ்வரசன் தேவிமார் ஐவருள் இவன் யார் வயிற்று மகன் என்பது புலப்படவில்லை. செங்கற்பட்டு சில்லா விலுள்ள திருவடந்தைத் திருமால் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்று இவன் பூர நாளில் பிறந்தவன் என்று உணர்த்துகின்றது.1 வேள்வியிற் சிறந்து விளங்கும் முத்தீயைப் போன்ற மூன்று புதல்வர் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டால் பாராட்டப் பெற்ற மூவருள் இவனே முதல்வன் ஆவான்.2 மைசூர் இராச்சியத்தில் மிண்டிகல் என்னும் ஊரிலுள்ள ஒரு கல்வெட்டு, இராசாதிராசன் ஆட்சியின் முப்பதாம் ஆண்டாகிய சகம் 970-ல் அங்குள்ள கோயிலுக்கு நிலம் அளிக்கப் பெற்றதையும் அங்கே ஒரு குளம் அமைக்கப்பெற்றதையும் கூறுகின்றது.3 அதனால், இவ்வேந்தன் சகம் 940-க்குச் சமமான கி. பி. 1018ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டவன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இராசேந்திர சோழன் தன் முதற் புதல்வனும் பேராற்றல் படைத்த பெருவீரனுமாகிய முதல் இராசாதிராசனுக்குக் கி. பி. 1018-ல் இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் ஒரு பகுதியை இவன்பால் ஒப்பித்திருந்தனன் என்பது தெள்ளிது.
தன் முன்னோர்கள் கைக்கொண்டொழுகிய முறைப்படியே இவனும் இளவரசுப் பட்டம் பெற்ற நாளில் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டான். இவனுக்கு முன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த இவன் தந்தை இராசேந்திரன், பரகேசரி என்னும் பட்டமுடையவன் என்பது நாம் அறிந்ததே. ஆகவே, இவன் இராசகேசரியாதல் எவ்வாற்றாலும் பொருத்த முடைத்து.
கல்வெட்டுக்களில் இவனுக்கு மூன்று வகை மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. ஒன்று திங்களேர் பெறவளர்1 என்று தொடங்குகிறது; மற்றொன்று, திங்களேர் தரு2 என்று ஆரம்பிக்கிறது; பிறிதொன்று, திருக்கொடியொடு தியாகக்கொடி3 என்ற தொடர்களை முதலில் கொண்டது. அவற்றுள், திங்களேர்பெற என்று தொடங்குவது இவனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டு வரையில் நிகழ்ந்தவற்றைக் கூறி அந்நிலையில் நின்றுவிடுகிறது. திங்களேர் தரு என்று தொடங்குவது இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல செய்திகளை விரித்துக் கூறும் நீண்ட மெய்க்கீர்த்தி யாகும். அஃது இவனது ஆட்சியின் முப்பதாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. சில கல்வெட்டுக்களில் மாத்திரம் காணப்பெறும் அம்மெய்க்கீர்த்தி, வேறு எங்கும் குறிக்கப்படாத சில அரிய செய்திகளைத் தன்னகத்துக் கொண்டுளது. திருக்கொடியோடு தியாகக்கொடி என்று தொடங்குவது மேலே குறிப்பிட்டுள்ள மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளுள் சிலவற்றையே கூறுகின்றது. அம்மெய்க்கீர்த்தி களின் துணைகொண்டு இவ்வேந்தன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்பது ஏற்புடையதேயாம்.
இராசேந்திர சோழன் கி. பி. 1044-ஆம் ஆண்டில் இறந்த பிறகு, முறைப்படி இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகிச் செங்கோல் செலுத்தத் தொடங்கினான். இவன் பிறவியிலேயே ஆண்மையும் வீரமும் படைத்தவன்; தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் இருபத்தாறு ஆண்டுகள் வரையில் இளவரசனாயிருந்து அரசியல் துறையில் சிறந்த பயிற்சி பெற்றவன்; பாண்டியர், சேரர், சிங்களர், மேலை சளுக்கியர் என்பவர்களோடு பெரும் போர் புரிந்து வெற்றி மாலை சூடிப் புகழெய்தியவன். போர்க்குணம் வாய்ந்த இத்தகைய பேரரசன் பிற வேந்தர் எல்லாம் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும் என்று எண்ணுவது இயல்பேயாம்.
இனி, இவனது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்படும் மெய்க்கீர்த்தி.
திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்
நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து
செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து
மன்னுபல் லூழியுள் தென்னவர் மூவருள்
மானா பரணன் பொன்முடி யானாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
வீரகே ரளனை ஆனைக்கிடு வித்து
அசைவில் சுந்தர பாண்டியனைத் திசைகெடத்
தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில்
வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி
மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து
வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத்
தாகவ மல்லனு மஞ்சற் கேவுதன்
றாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுள்
கண்டப் பய்யனுங் கங்கா தரனும்
வண்டமர் களிற்றோடு மடியத் திண்டிறல்
விருதர் விக்கியும் விஜயா தித்தனுங்
கடுமுரட் சாங்க மய்யனும் முதலினர்
சமர பீருவொத் துடைத்தர நிமிர்சுடர்ப்
பொன்னோ டைக்கரி புரவியொடும் பிடித்துத்
தன்னா டையில் ஜயங்கொண் டொன்னார்
கொள்ளிப் பாக்கை யொள்ளெரி மடுத்து
வில்லவர் மீனவர் வெஞ்சினச் சளுக்கியர்
வல்லவர் முதலினர் வணங்கவீற் றிருந்த
ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க்
கோவி ராஜகேசரி வர்மரான உடையார்
ஸ்ரீ இராஜாதி ராஜ தேவர்.
என்பதேயாம். இவ்வேந்தன், மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியர் மூவரையும் போரில் வென்றமையும் வேணாட்ட ரசனையும் இராமகுட மூவரையும் தோற்றோடச் செய்து காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தமையும் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனை வென்று அவன் புதல்வராகிய விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும் புறங்காட்டி ஓடுமாறு செய்தமையும் அன்னோர் நகரமாகிய கொள்ளிப் பாக்கையை எரித்தமையும் அம்மெய்க்கீர்த்தியில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவ்வீரச் செயல்கள் எல்லாம் கி. பி. 1044-ஆம் ஆண்டிற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அக்கல்வெட்டினால் நன்கு புலனாகின்றது. எனவே, அவை யனைத்தும் இவன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் இளவரசனாயிருந்த போது புரிந்த போர்கள் என்பது ஒருதலை. அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் விளக்கப்பட்டிருத்தலால் அவற்றை அப்பகுதியிற் காண்க.
இனி, இவனது ஆட்சியின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு இவன் ஈழ நாட்டு மன்னர்களோடு போர் புரிந்த செய்திகளையும் இரண்டாம் முறை மேலைச் சளுக்கிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற வரலாற்றையும் கூறுகின்றது. இவனது மெய்க்கீர்த்தியில் காணப் படும் அப்பகுதி.
ஒருதனித் தண்டால் பெருகட லிலங்கையர்
கோமகன் விக்கிரம பாகுவின் மகுடமும்
முன்றனக் குடைந்து தென்றமிழ் மண்புலம்
முழுவது மிழந்து எழுகட லீழம்
புக்கவிலங் கேச னாகிய விக்கிரம
பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு
தன்ன தாகிய கன்னக் குச்சியிலும்
ஆர்கலி ஈழஞ் சீரிதென் றெண்ணி
உளங்கொள் நாடுதன் னுறவொடும் புகுந்து
விளங்குமுடி கவித்த வீரசலா மேகன்
போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிழிந்து
கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன்
தவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய
ஆங்கவ மானம் நீங்குதற் காக
மீட்டும் வந்த வாட்டொழி லுழந்து
வெங்களத் துலந்தவச் சிங்களத் தரைசன்
பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந்
துரைகொ ளீழத் தரைச னாகியசீர்
வல்லவன் மதன ராசன் எல்லொளித்
தடமணி முடியுங் கொண்டு வடபுலத்
திருகா லாவதும் பொருபடை நடத்திக்
கண்டர் தினகரன் நாரணன் கணவதி
வண்டலர் தெரியல் மதுசூ தனென்
றெனைப்பல வரையரை முனைவயிற் றுரத்தி
வம்பலர் தருபொழில் கம்பிலி நகருட்
சளுக்கியர் மாளிகை தகர்ப்பித்து
என்பதாம்.
இதில் குறிப்பிடப்பெற்ற இலங்கை வேந்தனாகிய விக்கிரம பாகுவை இராசாதிராசன் போரில் வென்ற செய்தி, இவன் ஆட்சியின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டிலும் காணப்படுகின்றது. அன்றியும், ஐந்தாம் மகிந்தன் மகனாகிய அவ்விக்கிரமபாகு கி. பி. 1029 முதல் 1041 வரையில் இலங்கையின் தென்கீழ்ப்பகுதியாகிய ரோகணத்திலிருந்து ஆட்சி புரிந்துள் ளான். எனவே அவனோடு நம் இராசாதிராசன் போர்புரிந்து வெற்றி எய்தியமை கி. பி. 1041-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாதல் வேண்டும். ஆகவே, அப்போர் முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் இராசாதிராசன் நிகழ்த்தியதாதலின் அதனை விளக்கமாக அங்குக் காணலாம்.
பிறகு, விக்கிரம பாண்டியன் என்னும் இலங்கையரசன் ஒருவனை இராசாதிராசன் கி. பி. 1046-ல் போரில் வென்றான் என்றும் அப்பாண்டியன் தனக்குரிய பாண்டிய நாட்டை இவன்பால் இழந்தமையால் ஈழ நாட்டை யடைந்து அதன் ஆட்சியை ஏற்றுக் கொண்டவன் என்றும் மேற்குறித்த மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது. இலங்கையிலிருப்பதற்கஞ்சித் துளுவ நாட்டிலிருந்து கொண்டிருந்தவனும் சோழர்பால் தோல்வியுற்று அவ்வவமானம் பொறாது உயிர்துறந்த மகாலானகித்தியின் புதல்வனும் ஆகிய விக்கமபண்டு என்பவன் ஒருவன் கி. பி. 1044 முதல் 1047 வரையில் ரோகண நாட்டில் அரசாண்டானென்று மகாவம்சம் கூறுகின்றது. இராசாதி ராச சோழனது மெய்க்கீர்த்தியுணர்த்தும் விக்கிரம பாண்டியனும் மகா வம்சம் கூறும் விக்கமபண்டும் ஒருவனே யாதல் வேண்டும். மெய்க் கீர்த்திச் செய்தியைக் கூர்ந்து நோக்குமிடத்து, அவன் பாண்டி மன்னன் ஒருவனுக்கு இலங்கை யரசன் மகள் வயிற்றிற் பிறந்த ஒரு பாண்டிய அரச குமாரனாக இருத்தல் வேண்டும் என்பதும் தனக்குரிய பாண்டி நாட்டை இராசாதிராச சோழன்பால் இழக்க நேர்ந்தமையால் ஈழ நாட்டிற்குச் சென்று தன் தாய்ப்பாட்டனுக்குரிய ரோகண நாட்டை ஆண்டு வந்தவனாதல் வேண்டும் என்பதும் உய்த்துணரப்படுகின்றன. மகாவம்சம் கூறுவதை நோக்குங்கால், அவன் ரோகணத்தை யாண்ட மகாலானகித்திக்குப் பாண்டி மன்னன் மகள் வயிற்றிற் பிறந்த ஓர் அரச குமாரனாக இருத்தல் கூடும் என்று கருதற்கும் இடமுளது. அஃது எவ்வாறாயினும் ஆகுக. கி. பி. 10, 11-ம் நூற்றாண்டுகளில் பாண்டியரும் சேரரும் இலங்கையரசர்களும் தமக்குள் மணவினையால் தொடர்புகொண்டு நெருங்கிய உறவினராகித் தமக்குப் பெரும் பகைஞராயிருந்த சோழரை வென்று தம்தம் நாட்டைக் கைப்பற்றிச் சுயேச்சையாய் ஆட்சிபுரிய முயன்று வந்தனர் என்பது ஒருதலை. ஆகவே, அவ் விக்கிரம பாண்டியன் வரலாறு ஏற்றுக்கொள்ளத் தக்கதேயாம். இனி, அவ்விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிலும் இராசாதி ராசன்பால் தோல்வியுற்று மணிமகுடம் முதலானவற்றை இழந்தனன் என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. அவனை அயோத்தி யரசகுமாரனாகிய ஜகதீபாலன் என்பவன் கி. பி. 1047-ல் போரிற்கொன்று அவனது ரோகண நாட்டைக் கைப்பற்றி, கி. பி. 1051 வரையில் அங்கு அரசாண்டனன் என்றும் அவனையும் சோழர்கள் போரிற் கொன்று, அவன் மனைவியையும் மகளையும் பிற செல்வங்களையும் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்து விட்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. ஆனால் இராசாதிராச சோழன் கல்வெட்டுக்களில் ஜகதீபாலன் வரலாறு காணப்படவில்லை; மற்றொரு வரலாறு சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுப்ஜத்தை யாண்ட வீரசலாமேகன் என்பவன் தன் நாட்டைவிட்டு ஈழம் புகுந்து, அதனை ஆண்டுவந்தபோது இராசாதிராசன்பால் தோல்வியுற்று, தன் தாய், தமக்கை, மனைவி முதலானவர்களை விட்டுவிட்டுப் புறங்காட்டி யோடினன் என்பதே. அவ்வீரசலாமேகன், பகைஞராகிய சோழரால் தன் குடும்பத்தார் பல அவமானங்கட்கு உட்படுத்தப்பட்டமை யுணர்ந்து, அதனைப்பொறாமல் மீண்டும் போர் புரிந்து உயிர்துறக்கவே, அவன் பொன்முடி கைப்பற்றப்பட்டது என்றும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. ஒருகால், மகாவம்சம் கூறும் ஜகதீபாலனும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி யுணர்த்தும் வீரசலாமேகனும் ஒருவனாகவே இருத்தல் கூடும். ஆனால், முன்னவன் அயோத்தி யரசகுமாரன் என்று மகாவம்சத்திலும் பின்னவன் கன்னியாகுப்ஜ வேந்தனென்று மெய்க் கீர்த்தியிலும் சொல்லப் பட்டிருப்பது அக்கொள்கைக்கு ஒரு தடையாக உளது. அன்றியும் இருவர் காலங்களும் முரண்படுகின்றன. ஆகவே, பிற ஆதாரங்கள் கிடைக்கும் வரையில் அதனை ஒரு தலையாகத் துணிதற்கிடமில்லை.
இனி, கன்னரன் வழிவந்த ஈழத்தரசனாகிய சீவல்லபன் மதனராசன் என்பவன், இராசாதிராசனால் கி. பி. 1046-ல் தோற்கடிக்கப்பட்டான் என்பது இவன் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. மகாவம்சத்தில் அவன் பெயரே காணப்படவில்லை. ஆனால், விக்கம பண்டுவின் புதல்வன் பராக்கிரமபண்டு என்னும் ஈழமன்னன் ஒருவன் சோழரோடு புரிந்த போரில் கி. பி. 1053-ல் இறந்தான் என்று மகாவம்சம் கூறுகின்றது. சீவல்லப மதனராசனும் பராக்கிரமபண்டு என்பவனும் ஒருவனாகவே இருக்கலாம் என்று கொள்வதற்கு அவ்விருவரும் சோழரோடு போர்புரிந்து இறந்த ஆண்டுகள் முரண்படுகின்றன. ஆகவே, அதுபற்றி இப்போது ஒன்றும் கூற இயலவில்லை. சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களையும் மகாவம் சத்தையும் ஒப்பு நோக்கியாராயுங்கால், அக்காலப் பகுதியில் ஈழ மண்டலத்தில் பெரும்பகுதி, சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதும் அதன் தென் கிழக்குப் பகுதியிலிருந்த ஒரு சிறு நாடாகிய ரோகணம் மாத்திரம் ஈழ மன்னர் ஆளுகையில் இருந்து வந்தது என்பதும் அவர்கள் தம் நாடு முழுமையும் மீண்டுங் கைப்பற்றியாளுவதற்கு இடைவிடாது முயன்று சோழரோடு போர்புரிந்து வந்தனர் என்பதும் அங்ஙனம் நிகழ்ந்த போர்களில் அந்நாட்டு வேந்தர் சிலர் உயிர் துறக்க நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. சோழர் ஆட்சி ஈழ நாட்டில் நடைபெற்று வந்தமைக்கு அவர்கள் கல்வெட்டுக்களும் பொற்காசுகளும் அந்நாட்டில் காணப் படுகின்றமை சிறந்த சான்றாகும்.
இனி, இராசாதிராசன் மெய்க்கீர்த்தியில் சொல்லப்பட்டவாறு மேலைச் சளுக்கியரோடு இவன் இரண்டாம் முறை நடத்திய போர் ஆராயற்பாலதாகும். அது கி. பி. 1046-ல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது இவனது ஆட்சியின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டால் புலனாகின்றது.1 மேலைச் சளுக்கியர்களை முற்றிலும் வென்று அவர்களைத் தமக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னராகச் செய்தல் வேண்டும் என்பது சோழ மன்னர்களின் கருத்தாதலின் அவர்களுடைய குந்தள நாட்டின் மேல் அடிக்கடி படையெடுத்துச் சென்று பெரும் போர்கள் புரிந்து நாடு நகரங்களை அழித்து வருவாராயினர். அத்தகைய போர் நிகழ்ச்சி களுள் கி. பி. 1046-ல் நிகழ்ந்ததும் ஒன்றாகும். அப்போரில், கண்டர்தினகரன், நாரணன், கணபதி, மதுசூதனன் ஆகிய சளுக்கியத் தலைவர்கள் தம் வலியிழந்து புறங்காட்டி ஓடிவிட்டனர். பிறகு, பல்லாரி ஜில்லா ஹாபேட்டைத் தாலுகாவிலுள்ள கம்பிலி நகரத்திலிருந்த சளுக்கியரது மாளிகை தகர்த்தெறியப்பட்டு அங்கு இராசாதிராசனால் வெற்றித்தூணும் நிறுவப்பட்டது.2 இவ் வேந்தன் புரிந்த அப்போர்,கம்பிலிச் சயத்தம்பம் நட்டதும் என்று கலிங்கத்துப் பரணியில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.3 மகாமண்டலேசுவரன் கண்டராதித்தராசன் என்பவன் ஒருவன் ஆகவமல்லனுக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னனாகச் சிந்தவாடி நாட்டை ஆண்டு வந்தனன் என்பது பல்லாரி ஜில்லாவிற் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.1 அக் கண்டராதித்த ராசனே இராசாதிராச சோழனிடத்தில் தோல்வியுற்றோடிய கண்டர் தினகரனாக இருத்தல்கூடும் என்று வரலாற்று ஆராய்ச்சியில் வல்ல பேராசிரியர் ஒருவர் கருதுவது2 மிகப்பொருத்த முடையதேயாம்.
இனி, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு மூன்றாம் முறை நடத்திய போர் இவனது ஆட்சியின் முப்பதாம் ஆண்டுக் கல்வெட்டுக் களிலும் அதற்குப் பிற்பட்ட காலத்துக் கல்வெட்டுக்களிலும் காணப்படு கின்றது. ஆனால், அது பிச்சாண்டார் கோயிலிலுள்ள இவனது ஆட்சியின் 30-ம் ஆண்டுக் கல்வெட்டில் இல்லை. அம்மூன்றாம் சளுக்கியப் போர் ஒரே ஆண்டுக் கல்வெட்டில் சிலவற்றில் காணப்பட்டும் சிலவற்றில் காணப்
படாமலும் இருத்தலால் அஃது அவ்வாண்டின் பிற்பகுதியில் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அதில் நிகழ்ந்த நிகழ்ச்சி களைக் கூறும் கல்வெட்டுக்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய செய்தியைக் கூறுகின்றன. அவற்றை நோக்குமிடத்து, அப்போர் சில ஆண்டுகளாதல் தொடர்ந்து மிகக் கடுமையாக நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது. அது கி. பி. 1048-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, குந்தள இராச்சியத்தின்மீது அவ்வாண்டில் படையெடுத்துச் சென்ற இராசாதிராசன் கிருஷ்ணை யாற்றங்கரையிலுள்ள பூண்டூரில் மேலைச் சளுக்கியரோடு பெரும்போர் புரிந்து தெலுங்க விச்சையன், அத்திராசன், அக்கப்பையன், கொண்டையராஜன், முஞ்சன், தண்ட நாயகன் தனஞ்சயன், வீரமாணிக்கன் என்னுஞ் சளுக்கியத் தலைவர்களை வென்று விச்சையன் தாய் தந்தையரையும் எண்ணரும் மகளிரையும் சிறைபிடித்து, அந்நகரின் மதில்களையும் இடித்துப் பாழ்படுத்தினன்; அன்றியும், மண்ணதிப் பதியிலிருந்த மேலைச்சளுக்கியர் மாளிகையிலும் எரியூட்டி, அந்நகரில் வேங்கை வடிவம் பொறிக்கப்பெற்ற வெற்றித்தூண் ஒன்றும் நாட்டினான்;3 பிறகு, மேலைச்சளுக்கியர்க்குரிய கடல்போன்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்னும் முத்துறைகளிலும் தன்பட்டத்து யானையை நீராட்டிச் சளுக்கியரின் வராக முத்திரை பொறிக்கப்பெற்ற வராகக் குன்றில் தன் புலி முத்திரையைப் பொறித்து அங்கு வெற்றித் தூணும் நிறுவினான். அந்நாட்களில் சோழரின் படைவீரர்கள் தங்கியிருந்த பாசறையில் அன்னோரது நிலையை யுணருமாறு ஆகவமல்லன் அனுப்பிய ஒற்றர் சிலர் அவ்வீரர்கள்பால் அகப்பட்டுக் கொண்டனர். நம் இராசாதிராசன் அவர்களைக் கொல்லாமல் அன்னோர் மார்பில் ஆகவமல்லன் யாங்கணும் அஞ்சிப் புறங்காட்டி யோடினன் என்று தெளிவாக எழுதுவித்து, பிறகு அவர்களைத் துரத்தி விடும்படி செய்தான்.
அவ்வவமானத்தைப் பொறுக்காத ஆகவமல்லன் பெரும் படையுடன் வந்து இராசாதிராசனோடு மீண்டும் போர் தொடங்கினான். அப்போரில் சளுக்கியப் படைத்தலைவர் களாகிய நுளம்பன், காளிதாசன், சாமுண்டன், கொம்மையன், வில்லவராசன் என்போர் தோல்வியுற்றுப் புறங்காட்டி யோடினர்; கூர்ச்சர மன்னன் ஒருவன் கொல்லப்பட்டான்.2 இராசாதிராசன் பெருவெற்றி எய்தினான். அவ்வேந்தன் தன் பட்டத்து யானையை நீராட்டியதாகக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெற்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்பன முறையே துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் பேராறுகளாக இருத்தல்வேண்டும் என்று கருதப்படுகின்றன.
இனி, திருக்கழுக்குன்றத்திலுள்ள இராசாதிராசன் கல்வெட்டொன்றில் அப்போரில் நிகழ்ந்த வேறொரு நிகழ்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.3அது, பகை வேந்தனாகிய ஆகவமல்லன் தன் பெற்கடை4 ஒருவனோடு வேறு இருவரையும் இராசாதிராசன்பால் ஒரு செய்தி தெரிவிக்குமாறு அனுப்பிய போது அவ்விருவருள் ஒருவனுக்கு ஐங்குடுமி வைப்பித்து ஆகவமல்லன் என்று பெயரிட்டும் மற்றவனுக்குப் பெண்ணுடை தரிப்பித்து ஆகவமல்லி என்று பெயரிட்டும் இவன் திருப்பியனுப்பினன் என்பதேயாம். அந்நிகழ்ச்சி, மேலைச் சளுக்கியரோடு இராசாதிராசன் மூன்றாம் முறை நடத்திய போரில் நிகழ்ந்த செயல்களுள் ஒன்றாதல் வேண்டும். அவர்களோடு இவ்வேந்தன் இம்முறை நிகழ்த்திய போரில் வெற்றி எய்திய பின்னர், அன்னோரது தலைநகராகிய கல்யாண
புரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த அரண்மனையையும் இடித்து, தன் வெற்றிக்கு அடையாளமாக அந்நகரிலேயே வீராபிடேகஞ் செய்து கொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டமும் புனைந்தனன். இச் செய்திகள் இராசாதிராசன் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. அன்றியும், இவனது பிற்காலக் கல்வெட்டு ஒன்றினாலும் இவை உறுதி எய்துகின்றன. கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள தாராசுரம் இராசராசேச்சுர முடையார் கோயிலில் வைக்கப்பெற்றுள்ள துவாரபாலர் படிமம் ஒன்றின் பீடத்தில் வதிஸ்ரீ உடையார் ஸ்ரீ விசயரசேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலர் என்று வரையப் பெற்றுள்ள செய்தி இப்போர் நிகழ்ச்சிக்குச் சிறந்த சான்றாக இருத்தல் அறியத்தக்கது. எனவே இராசாதிராசன், மேலைச் சளுக்கியரது தலைநகராகிய கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்து கொணர்ந்த பொருள்களுள் அத் துவாரபாலரது படிமமும் ஒன்று என்பது தேற்றம். அதன் சிற்பவமைதி, சோழர் காலத்துத் தமிழ் நாட்டுப் படிமங்களோடு ஒத்தில்லாமல் வேறுபட்டிருத்தலால் அது மேலைச்சளுக்கிய நாட்டுப் படிமமேயாதல் வேண்டும். ஆகவே, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு கல்யாணபுரத்தில் போர்புரிந்து வெற்றிபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க.
இராசாதிராசன் குந்தள நாட்டின்மேல் மும்முறை படை
யெடுத்துச் சென்று நிகழ்த்திய வீரச் செயல்கள் எல்லாம்,
கம்பிலிச்சயத் தம்ப நட்டதும்
கடியரண்கொள் கல்யாணர் கட்டறக்
கிம்புரிப்பணைர கிரியுகைத்தவன்
கிரிகளெட்டினும் புலி பொரித்ததும்
என்று கலிங்கத்துப் பரணியிலும்
……………………….மும்முடி போய்க் கல்யாணி
செற்ற தனியாண்மைச் சேவகனும்
என்று விக்கிரமசோழன் உலாவிலும் முறையே சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகிய இரு கவிஞர்பெருமான்களாலும் பாராட்டப் பெற்றிருத்தல் அறியற்பாலது.
சோழர்க்கும் மேலைச்சளுக்கியர்க்கும் நிகழ்ந்த போர்கள் எல்லாம் அடிக்கடி குந்தள இராச்சியத்திலேயே நடைபெற்றமையின் அந்நாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்க்கையின்றி அல்லலுறு வாராயினர். அன்றியும் அவ்விராச்சியத்தில் பல நகரங்கள் சோழரது படையெடுப்பினால் தம் செல்வமும் சீரும் இழந்து அழியும் நிலையை எய்தின. தம் குடிமக்களுக்கும் நகரங்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களைக் குந்தள நாட்டு வேந்தரும் குறுநில மன்னருங் கண்டு, பெருங் கவலை கொண்டு, மன முடைந்தன ரெனினும் அன்னோர் தம் இராச்சியத்தில் பெரும்பகுதியை இழந்து விடாமல் தம் ஆட்சிக்குள் வைத்துக்கொண்டிருந்தன ரென்பது அந்நாட்டில் காணப்படும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.
கி. பி. 1054-ம் ஆண்டில் இராசாதிராசன் தன் தம்பி இரண்டாம் இராசேந்திரனோடு மறுபடியும் மேலைச் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். கிருஷ்ணை யாற்றங்கரையிலுள்ள கொப்பத்தில்2 இரு படைகளும் கைகலந்து கடும்போர் புரிந்தன. சளுக்கியர் பக்கத்தில் ஆகவமல்லனும் சோழர் பக்கத்தில் இராசாதிராசனும் படைத்
தலைமை வகித்துப் போரை நடத்தினர். இராசாதிராசன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரன் போர்க் களத்திற்கு வராமல் பெரும்படையுடன் பாடி வீட்டில் தங்யிருந்தான். போர் எவ்வாறு முடியுமோ என்று இருபக்கத்தினரும் ஐயுறும் வகையில் அத்துணைக் கடுமையாக நடைபெற்றது. சளுக்கியப் படைகள் ஒரேமுகமாகத் திரண்டு இராசாதி
ராசன் வீற்றிருந்த யானையைத் தாக்கின. அதனால், அவ்யானையும் இறக்கவே, அதன் மீதிருந்த இராசாதிராசனும் பகைவர் அம்பிற்கு இலக்காகி விண்ணுலகெய்தினான்.1 குந்தளப் படைகள் சோணாட்டுப் படைகளை நாற்புறத்திலும் தாக்கவே அப் படைகள் அதனைப் பொறுக்க முடியாமல் குழப்பமடைந்து புறங்காட்டத் தொடங்கின.
அந்நிலையில் இர்ண்டாம் இராசேந்திர சோழன் தன் பட்டது யானைமீதேறிப் போர்க்களஞ்சென்று, ’ அஞ்சேல் அஞ்சேல்! என்று அபயங்கூறிச் சோணாட்டுப் படைகட்கு வீரவுணர்ச்சியுண்டுபண்ணி, அப்படைகளுள் அமைதி நிலவுமாறு செய்து, மீண்டும் சளுக்கியருடன் போர் செய்ய தொடங்கினான்.2 இராசேந்திரன் ஏறியிருந்த யானையைச் சளுக்கியப் படைகள் முன்போல ஒருமுகமாகத் தாக்கவே அவ்யானையின் நெற்றியில் அம்புகள் தைத்தன. ஆகவமல்லனுடைய கூரிய அம்புகள் இராசேந்திரனுடைய குன்றுபோன்ற புயத்திலும் தொடை
யிலும் தைத்துப் புண்படுத்தின.3 அதுபோது யானைகளின் மேலிருந்து போர்புரிந்து கொண்டிருந்த சோணாட்டு வீரர் பலர் உயிர் துறந்தனர். எனினும் சளுக்கியப் படைத்தலைவர்களாகிய சயசிங்கன், புலகேசி, தசபன்மன், அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னிநுளம்பன் என்போர் இராசேந்திரனால் கொல்லப்பட்டனர். மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனும் தோல்வியுற்றோடினான். வன்னியரேவன், துத்தன், குண்டமையன் என்ற எஞ்சியிருந்த சளுக்கியப் படைத்தலைவர்களும் மற்றும் பல சளுக்கிய அரச குமாரர்களும் போர்க்களத்தில் நிற்க முடியாமல் அஞ்சிப் புறங்காட்டி யோடிவிட்டனர். இறுதியில் நம் இராசேந்திரனே வெற்றித் திருவை மணந்து வாகைசூடினான். சளுக்கியருடைய சத்துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்ற பட்டத்து யானைகளையும் வராகக்கொடியையும் சக்தியவ்வை, சாங்கப்பை முதலான கோப்பெருந்தேவியரையும் இராசேந்திரன் கைப்பற்றிக்கொண்டான்.1 அன்றியும் சளுக்கியர் போர்க்களத்தில் விட்டோடிய எண்ணிறந்த யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் பிற பொருள்களும் இராசேந்திரனுக்கு உரியனவாயின. பின்னர், சளுக்கியர் நகரமாகிய கொல்லாபுரத்தில் ஒரு வெற்றித்தூணும் நிறுவப்பட்டது. இரண்டாம் இராசேந்திரன், அப்போர்க் களத்திலே பார்த்திபரானோர் முன் செய்தறியாத தொன்றைத் தான்செய்யக் கருதிப் பகைஞர் அம்புகள் தைத்த புண்களிலிருந்து ஒழுகும் செந்நீரைப் புதுப்புனலால் நீக்கியதுபோல விசயாபிடேகஞ் செய்துகொண்டு சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டான்.2 பிறகு, போரிற் கிடைத்த பல்வகைப் பொருள்களுடன் வெற்றி வேந்தனாய்த் தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்து சேர்ந்தான். கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசாதிராசன் தம்பியாகிய இரண்டாம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இனி, அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஆகவமல்லன் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. அவன் தன் பகைஞராகிய சோழரால் தானும் தன் நாடும் அடைந்த பரிபவங்களைத் தன் நாட்டுக் கல்வெட்டுக்களில் எங்ஙனம் பொறித்து வைத்திருத்தல் கூடும்? அவ்வாறு செய்வது அவன் பெருமைக்கும் புகழுக்கும் இழுக்கைத் தருமன்றோ? அதுபற்றியே அவன் கல்வெட்டுக்களில் கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் காணப்படவில்லை எனலாம். ஆயினும், ஆகவமல்லன் இறந்த பிறகு கி. பி. 1071-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற மேலைச் சளுக்கியர் கல்வெட்டுக்கள் இரண்டில் அப்போர் நிகழ்ச்சிகளுள் சில, குறிப்பாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் தமிழ் வேந்தனாகிய பாண்டிய சோழன் என்பான், தன் முன்னோர் கைக்கொண்ட உயர்ந்த முறைகட்கு முரணாக பெள்வோலா3 நாட்டிற் பெரும் படையுடன் புகுந்து சைன கோயில்கள் உள்ளிட்ட பலவற்றையும் எரியூட்டி அழித்தான் என்றும் அத்தீச்செயல் காரணமாக ஆகவமல்லனால் போரிற் கொல்லப்பட்டானென்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அக்கல்வெட்டுக்கள் கொப்பத்துப் போர் நிகழ்ச்சிக்குச் சில ஆண்டுகட்குப் பின்னர் வரையப்பெற்றவையாகும்.
ஆயினும், அவற்றில் போரில் உயிர் துறந்ததாகக் கூறப்பட்ட பாண்டிய சோழன் இராசாதிராசனாக இருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரப்படுகின்றன. எனவே, சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் குந்தள நாட்டுப் போர்ச் செய்திகளுள் சில, மேலைச்சளுக்கியர் கல்வெட்டுக் களாலும் உறுதி எய்துதல் காண்க.
இராசாதிராசன் போர்க்களத்தில் யானைமீதிருந்து உயிர் துறந்தமைபற்றிக் கல்யாணபுரமுங் கொல்லாபுரமும் எறிந்து யானை மேற்றுஞ்சின உடையார் விஜயராசேந்திர தேவர் என்று சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தல் அறியற்பாலதாகும். அன்றியும், இவன் போர்க்களத்தில் உயிர் நீத்த செய்தி இவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டிலும் காணப்படுகின்றது.2 இவன் இளமைப்பருவம் முதல் பெரு வீரனாகவே விளங்கினான். இளவரசனாயிருந்த காலத்தில் புறநாடுகள் பலவற்றின் மேல் படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் தந்தையின் ஆட்சிக்குள்ளாக்கிய செயல் ஒன்றே, இவன் ஆற்றலை இனிது புலப்படுத்தா நிற்கும். இவனது வாழ்க்கையே வீரம் நிரம்பிய ஒரு தனிவாழ்க்கை எனலாம். இவன், போர்க்களத்திலேயே தன் வாணாளின் இறுதியையும் எய்திப் புகழ் கொண்டமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.
இனி, இவன் மேலைச்சளுக்கியரது போர்க்களத்தில் வாகை சூடி அவர்களுடைய தலைநகராகிய கல்யாணபுரத்தில் வீராபிடேகஞ் செய்து கொண்டு விசயராசேந்திரன் என்னும் பட்டம் புனைந்து கொண்டமை முன்னர் விளக்கப்பட்டது. வேறு சில சிறப்புப் பெயர்களும் அந்நாளில் இவனுக்கு வழங்கியுள்ளன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவை: சயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாண
புரங்கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன் என்பனவாம். இவன் பல அரசர்களை வென்று அசுவமேதம் செய்து அவர்கள் வணங்க வீற்றிருந்த காரணம்பற்றிச் சயங்கொண்டசோழன் என்னும் சிறப்புப் பெயர் எய்தினான். மேலைச்சளுக்கியர் தலைநகரை எறிந்து அதனைக்கைப்பற்றி அங்கு வீராபிடேகஞ் செய்து கொண்டமையால் கல்யாணபுரங் கொண்ட சோழன்2 என்று வழங்கப்பெற்றனன். ஆகவமல்ல குலாந்தகன் என்பது ஆகவமல்லன் குலத்திற்கு யமனைப்போன்றவன் என்று பொருள்படும். இவன் அவ்வேந்தனுக்கும் அவன் மக்களுக்கும் அடிக்கடி இன்னல் விளைத்து வந்தமைபற்றி இவனுக்கு அப்பட்டம் வழங்கியதாதல் வேண்டும். வீரராசேந்திரன் என்பது இவன் தன் வாழ்நாளில் பெருவீரனாகத் திகழ்ந்தமையால் எய்திய சிறப்புப்பெயர் எனலாம்.
இவன், தன் உடன்பிறந்தார்க்கும் புதல்வர்க்கும் தான் வென்ற நாடுகளில் ஆட்சியுரிமை வழங்கி அவர்கள் அந்நாடுகளில் அரசாண்டு வருமாறு ஏற்பாடு செய்தான் என்றும் தன் வாழ்நாளில் பரிமேத வேள்வி புரிந்து சிறப்பெய்தினான் என்றும் இவன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவனுக்குக் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது.5 இவன் பட்டத்தரசி, திரைலோக்கிய முடையாள் ஆவள்.6 உலகுடைய பிராட்டி என்னும் ஒரு மனைவி இவ்வேந்தனுக்கு இருந்தனள் என்பது கன்னியாகுமரிக் கல்வெட்டினால் அறியப்படுகின்றது. அவ்விருவரும் வெவ்வேறு மனைவியரோ அன்றி ஒருவரோ என்பது தெரியவில்லை.
இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசாங்க அலுவல்களில் அமர்ந்து நாட்டை நன்கு பாதுகாத்துவந்த அரசியல் தலைவர்கள் பலர் ஆவர். அன்றியும், இவனுக்குக் கப்பஞ் செலுத்திவந்த குறுநில மன்னரும் இருந்தனர். இவன் குந்தள நாடு முதலானவற்றிற்குப் படையெடுத்துச்சென்று அவ்விடங்களில் போர்புரிந்து வெற்றியுடன் தன் நாட்டிற்குத் திரும்புவதற்குச் சில திங்களாதல் சென்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அக்காலங்களில் சோழநாட்டில் அமைதி நிலவுமாறு ஆட்சியை இனிது நடத்திவந்தவர்கள் இவன் தம்பிமார்களும் அரசியல் அதிகாரிகளுமேயாவர். சில தலைவர்கள் தம் சக்கர வர்த்தியோடு பகைப்புலத்திற்குச் சென்று வீரத்தோடு போர்புரிந்து புகழ் எய்தியுள்ளனர். எனவே இவன் காலத்து அரசியல் தலைவருள் சிலரை ஈண்டுக் குறிப்பதும் பொருத்தமேயாம்.
1. தண்டநாயகன் அப்பிமையனாகிய இராசேந்திரசோழ பிரமமாராயன்: இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒருவன்; கடப்பை ஜில்லாவிலுள்ள வல்லூரைத் தன் தலைநகராகக் கொண்டு மகாராசவாடி ஏழாயிரத்திற்கு அரசப்பிரதியாகவிருந்து ஆட்சிபுரிந்தவன்.2 இவன் இராசேந்திரசோழ பிரமமாராயன் என்னும் பட்டம் பெற்றிருத்தலால் அந்தணர் குலத்தினன் என்பதும் முதல் இராசேந்திரசோழன் காலத்தில் அப்பட்டம் எய்தியவன் என்பதும் நன்கு புலனாகின்றன. ஆகவே, இவனது நீண்ட அனுபவம் பற்றி, இராசாதிராசன் இவனை அப்பகுதியில் அரசப்பிரதிநிதியாக அமர்த்தினன் எனலாம்.
2. சேனாபதி இராசேந்திரசோழ மாவலிவாணராயன்: இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒருவன்; முதல் இராசேந்திர சோழனால் பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவன்; புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள திரிபுவனியில் ஆண்டு ஒன்றிற்கு 12000 கலம் நெல் வருவாயுள்ள 72 வேலி நிலத்தைச் சில திருவிழாக்களும் ஒரு கல்லூரியும் நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கிய பெருங்கொடைவள்ளல்1 இவன் கோயிலில் திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வதற்கு ஏற்பாடு செய்திருத்தலால் வைணவ சமயத்தில் பெரும்பற்றும் ஆழ்வார்
களிடத்தில் ஈடுபாடும் உடையவன் என்று தெரிகிறது.
3. சேனாபதி சயங்கொண்ட சோழ வாணகோ வரையன்: இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒருவன்; மைசூர் இராச்சியத்திலுள்ள தடிகைபாடி நாட்டில் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்தவன்.
4. அதிகாரிகள் பாராசியன் வாசுதேவ நாராயண னாகிய உலகளந்த சோழ பிரமமாராயர்: இவர் இராசாதிராசனுடைய குருதேவர் ஆவர்.3 இவருக்கு வழங்கப் பெற்றுள்ள பட்டத்தை நோக்குங்கால், இராசாதிராசன் ஆட்சிக்காலத்தும் சோழ இராச்சியத்தின் ஒரு பகுதி அளந்து கணக்கெடுக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது.
5. தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தக மாராயனாகிய இராசாதிராச நீலகங்கரையன்: இவன் இராசாதிராசன் ஆட்சிக்காலத்திலிருந்த படைத்தலைவருள் ஒருவன் அரசனால் அளிக்கப் பெற்ற இராசாதிராச நீலகங்கரையன் என்னும் பட்டம் பெற்றவன்; இவனைப்பற்றிய கல்வெட்டொன்று திருவொற்றியூர்க் கோயிலில் உளது.4 எனவே, இவன் தொண்டை மண்டலத்தின் வடபகுதியிலிருந்த ஒரு தலைவன் ஆதல் வேண்டும்.
6. தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன்:- இவன் உத்தமசோழ நல்லூரினன்; இராசாதிராசனுடைய படைத்தலைவருள் ஒருவன்; அரசாங்க அலுவலாளருள் பெருந்தரம் என்ற உயர் நிலையில் அமர்ந்திருந்தவன்; அரசனால் வழங்கப் பெற்ற இராசாதிராசப் பல்லவராயன் என்னும் பட்டம் பெற்றவன்; இவன் அந்தணர்களையும் சிவயோகிகளையும் நாள்தோறும் உண்பித்தற்குத் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கேயுள்ள திருப் பைஞ்ஞீலிக் கோயிலைச் சார்ந்த செந்தாமரைக் கண்ணன் மடத்திற்கு நிலம் அளித்துள்ளனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டால்1 அறியப்படுகின்றது. எனவே, இவன் சோழ மண்டலத்தின் மேற்பகுதியில் கொங்குநாட்டெல்லைப்புறத்தில் தங்கியிருந்த ஒரு தண்டநாயகன் என்பது இனிது விளங்குதல் காண்க.
இரண்டாம் இராசேந்திர சோழன் கி. பி. 1051-1063
இம்மன்னன், கங்கைகொண்ட சோழன் என்று வழங்கும் முதல் இராசேந்திர சோழனுடைய இரண்டாம் புதல்வன். இவன், தன் தமையன் இராசாதிராசன் கொப்பத்துப்போரில் கி. பி. 1054-ல் இறந்தவுடன் அப்போர்க்களத்திலே சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாக முடிசூடிக்கொண்டான் என்பது இவன் கல்வெட்டால் அறியப்படுகின்றது. ஆனால், இவன் கி. பி. 1051-ஆம் ஆண்டில் முடி சூட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது மைசூர் இராச்சியத்திலுள்ள ஒரு கல்வெட்டால் வெளியாகின்றது.2 ஆகவே, இராசாதிராசன் கி. பி. 1051-ல் இவனுக்கு இளவரசுப்பட்டங்கட்டித் தனக்குத் துணையாய் அமர்ந்து அரசியற் கருமங்களைப் பார்க்குமாறு ஏற்பாடு செய்திருந்தனன் என்பது தெள்ளிது. அதற்கேற்ப, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு பல ஆண்டுகள் நடத்திவந்த பெரும் போர்களில் நம் இராசேந்திரன் அவனுக்குப் பல்வகையானும் உதவி புரிந்து வந்தமை கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. தென்னார்க்காடு ஜில்லா மரக்காணத்தில் கி. பி. 1053 -ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று, அவ்வூர் தம்பித்துணைச் சோழவள நாட்டின்கண் உள்ளது என்று உணர்த்துகின்றது.3 தொண்டைமண்டலத்தில் ஒரு வள நாட்டுக்குத் தம்பித் துணைச் சோழவள நாடு என்று இராசாதிராசன் தன் ஆட்சிக்காலத்தில் பெயர் வைத்திருத்தலை நோக்கு மிடத்து, அவன் தன் தம்பி இராசேந்திரன் தனக்குச் செய்துவந்த உதவிகளை எத்துணை மதிப்புடன் பாராட்டியுள்ளனன் என்பது நன்கு புலனாகும்.
இவன் தமையனாகிய இராசாதிராசன் இராசகேசரி என்னும் பட்டத்துடன் அரசாண்டவனாதலின் அவனுக்குப் பிறகு முடிசூடிய இவ்வேந்தன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு ஆட்சி புரிவானாயினன்.
இவ்வரசன் கல்வெட்டுக்களில் இவனுக்குரியனவாக மூன்று மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரட்டபாடி ஏழரை இலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்து ஜயதம்பம் நாட்டிப் பேராற்றங்கரைக் கொப்பத்து ஆகவமல்லனை அஞ்சுவித்து அவன் ஆனையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டு விஜயாபிஷேகம் பண்ணி வீர சிங்காசனத்து வீற்றிருந்தருளின கோப்பர கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்1என்பது இவன் வீரச் செயல்கள் எல்லாவற்றையும் சுருக்கிக் கூறும் ஒரு சிறிய மெய்க்கீர்த்தியாகும். இஃது இவனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இரண்டாம் மெய்க்கீர்த்தி திருமகள் மருவிய செங்கோல் வேந்தன் என்று தொடங்குகிறது. அது முதல் மெய்க்
கீர்த்தியின் பிறிதொரு வடிவமேயாம். சிற்சில கல்வெட்டுக்களில் அம்மெய்க்கீர்த்தியிலுள்ள தொடர்கள் முன் பின்னாக மாறியும் சில மொழிகள் வேறுபட்டும் காணப் படுகின்றன. இவனது மூன்றாம் மெய்க்கீர்த்தி, திருமாது புவியெனும் பெருமாதர் என்று தொடங்கி நீண்டு செல்லுகின்றது. அது பெரிய மெய்க்கீர்த்தியாதலின் பல செய்திகளைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. ஆகவே, இவ்வேந்தன் வரலாற்றை ஆராய்வதற்கு அது பெரிதும் பயன்படுவதாகும். அஃது இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.2 அதில் இராசேந்திரன் நிகழ்த்திய முதல் மேலைச் சளுக்கியப் போர், ஈழநாட்டுப்போர் இரண்டாம் மேலைச்சளுக்கியப் போர் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவன், கி. பி. 1054-ல் ஆகவமல்லனுடன் கொப்பத்தில் நடத்திய பெரும்போரே முதல் மேலைச் சளுக்கியப் போராகும். இவன், தன் தமையன் இராசாதிராசன் அப்போரில் உயிர் துறந்தவுடன் போர்க் களத்திற்குச் சென்று தன் படையில் அமைதி நிலவுமாறு செய்தமையும் பின்னர் அஞ்சாநெஞ்சத்தோடு பெருவீரங் காட்டிப் போர் புரிந்து வெற்றி பெற்று, அக்குந்தள நாட்டுப் போர்க்
களத்திலே முடிசூடிக் கொண்டமையும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள திருமழபாடியிற் காணப்படும் இவன் கல்வெட்டொன்றில் வரையப் பெற்றுள்ளன. கொப்பத்தில் நடைபெற்ற அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசாதிராசன் ஆட்சியில் எழுதப்பட்டிருத்தலின் ஈண்டு அவை விளக்கப் படவில்லை.
நம் இராசேந்திரன் கொப்பத்துப் போர்க்களத்தில் முடிசூடிக் கொண்டனன் என்று அக்கல்வெட்டு உணர்த்தும் செய்தி,
ஒருகளிற்றின் மேல் வருகளிற்றையொத்
துலகுயக்கொளப் பொருதுகொப்பையிற்
பொருகளத்திலே முடிகவித்தவன்
என்று கலிங்கத்துப் பரணியிலும் ஆசிரியர் செயங்கொண்டாரால் கூறப்பட்டிருத்தல் காண்க.
அன்றியும், இவ்வேந்தன் அக் கொப்பத்துப் போரில் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றிக் கொண்டமை,
பற்றலரை
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும்
என்றும்,
கொலையானைப்
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன்
என்றும், கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தரால் தம் உலாக்களில் குறிப்பிடப்பட்டிருத்தல் உணரற்பாலது.
இனி, இவன் ஆட்சிக்காலத்தில் அடுத்து நிகழ்ந்தது ஈழநாட்டுப் போராகும். அது கி. பி. 1054-ன் இறுதியிலாதல் 1055-ம் ஆண்டின் தொடக்கத்திலாதல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.1 ஈழநாட்டின் பெரும்பகுதி சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது முன்னர் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் தென்கீழ்ப் பகுதியாகிய ரோகண நாட்டில் பழைய சிங்கள மன்னரின் வழியினர் தங்கியிருந்து கொண்டு, ஈழம் முழுவதையும் தம் ஆட்சிக்கு உட்படுத்துவதற்குக் காலம் கருதிக் கொண்டிருந்தனர். எனவே, சில சமயங்களில் அன்னோர் அந்நாட்டில் அமைதியின்மையையும் கலகத்தையும் உண்டுபண்ணியிருத்தல் கூடும். அத்தகைய சமயம் ஒன்றில்தான் நம் இராசேந்திரன் பெரும்படையொன்றைத் தக்க தலைவன் ஒருவன்கீழ் ஈழ நாட்டிற்கு அனுப்பிப் போர் நிகழ்த்தியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அங்கு நடைபெற்ற போரில் வீரசலாமேகன் என்பவன் கொல்லப்பட்டான்; இலங்கையர்க் கிறைவனாகிய மானாபரணன் புதல்வர் இருவர் போர்க்களத்தில் சிறை பிடிக்கப்பட்டனர். போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரசலாமேகன் கலிங்க மன்னன் என்று இவ்விராசேந்திரன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.2 இராசாதிராசன் ஆட்சியில் நடைபெற்ற ஈழநாட்டுப்போரில் கொல்லப்பட்ட வீரசலா மேகன் என்பான் கன்னியா குப்ஜத்தரசன் என்று அவன் மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது3. எனவே, ஒரே பெயர்கொண்ட அவ்விருவரும் வெவ்வேறு நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்று அதனை ஆட்சிபுரிந்து, இரு வேறு சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் போரில் கொல்லப்பட்டவர் என்பது அறியத்தக்கது. சிறை பிடிக்கப் பெற்ற மானாபரணன் புதல்வரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. நம் இராசேந்திரன் கல்வெட்டு ஈழநாட்டில் காணப்படுவதால் அந்நாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது திண்ணம்.
இராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த இரண்டாம் மேலைச் சளுக்கியப் போர் கி. பி. 1059-ம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது திருமழபாடியிலுள்ள இவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியப்படுகின்றது.1 மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன்தான் கொப்பத்துப் போரில் அடைந்த அவமானத்தை நினைத்து வருந்தி அதனை ஒருவாறு போக்கிக் கொள்ளும் நிமித்தம் பெரும் படையுடன் புறப்பட்டுப் பேராறாகிய கிருஷ்ணையின் கரையில் மீண்டுஞ் சோழரைச் சந்தித்து கடும் போர் புரிந்தான். முடக்காற்றுப் போர் என்று இராசேந்திரன் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருப்பது இப்போரேயாம்.2 இதிலும் மேலைச்சளுக்கியர் பல்வகைத் துன்பங்களுக்கு உள்ளாயினர். சளுக்கிய தண்ட நாயகனாகிய வாலாதேவனும் மற்றும் பல தலைவர்களும் கொல்லப்பட்டனர்; ஆகவமல்லனும் அவன் மகன் விக்கிரமாதித்தனும் இருகையன் முதலானோரும் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் புறங்காட்டி ஓடிவிட்டனர். எனவே, தம் மானத்தைக் காக்கும் பொருட்டுச் சோழரோடு போர்புரிய வந்த மேலைச்சளுக்கியர் முடக்காற்றுப் போரிலும் முழுத் தோல்வி எய்தித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடியமை குறிப்பிடத்தக்கது.
இனி, முடக்காற்றுப் போரில் கலந்து கொண்டு போர் புரிந்த சோழ மன்னர்கள் யாவர் என்பதும் ஈண்டு ஆராயற்பாலதாம். அப்போர் நிகழ்ந்தபோது சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக இருந்தவன் நம் இராசேந்திரசோழனே என்பது இவன் கல்வெட்டுக்களில் அந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டிருத்தலால் நன்கறியக் கிடக்கின்றது. திருப்பாதிரிப்புலியூரிலுள்ள கல்வெட்டொன்று, அடற்களிற்றால் ஆகவமல்லனை - முடக்காற்றில் முதுகிடுவித்து - மற்றவன் சயசிங்கனொடும் - வருதண்டினைப் பொருதண்டினால் - வெற்றி கொண்டு வெண்குடை நீழல் - வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளின கோவிராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசமகேந்திர தேவர் என்று கூறுகின்றது.3 எனவே, முடக்காற்றுப் போர் நிகழ்த்திய சோழ மன்னருள் இராசமகேந்திரனும் ஒருவன் ஆவான். செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்தைச் சார்ந்த பெரும்பேரூரிலுள்ள கல்வெட்டொன்று, முரட் சளுக்கியை முடக்காற்றில்-முதுகுகண்டு முனிவாறி-இரட்டராச குலகாலன்-இகல் வீரராசேந்திரன்-புயங்கொண்டு பொது நீக்கி-ஆள்கின்ற சயங்கொண்ட சோழமண்டலம்1 என்று கூறுவதால் முடக் காற்றில் போர் புரிந்தவர்களுள் நம் இராசேந்திரன் தம்பியாகிய வீரராசேந்திரனும் ஒருவன் என்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இரண்டாம் இராசேந்திரன், இராசமகேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய மூவரும் முடக்காற்றில் நிகழ்ந்த போரை நேரில் நடத்தி வாகை சூடிய சோழமன்னர்கள் ஆவர்.
அவர்களுள், இராசமகேந்திரன் என்பான், நம் இராசேந்திரனால் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றிருந்த இவன் முதற் புதல்வன் என்று சொல்லப்படுகிறது.2 அவ் விராசமகேந்திரன் ஆகவமல்லனை முடக்காற்றில் முதுகாட்டி ஓடும்படி செய்த பெருவீரன் என்று அவன் கல்வெட்டுக்கள் உணர்த்தினும் அவனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. ஆயினும்,
பனுவலுக்கு முதலாய வேதநான்கிற்
பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழைய தங்கள்
மனுவினுக்கு மும்மடி நான்மடியாஞ் சோழன்
மதிக்குடைக்கீழ் அறந்தளிர்ப்ப வளர்த்த வாறும்
என்று கலிங்கத்துப் பரணியில்3 குறிப்பிடப் பெற்றுள்ள மும்முடி சோழனே இராசமகேந்திரன் என்று கருதுவதற்கு இடமுளது. அன்றியும்,
அப்பழநூல்
பாடரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடரவப் பாயல் அமைத்தோனும்
என்னும் விக்கிரமசோழன் உலாவடிகளால்1 அவன் அரங்கநாதரிடம் அன்பு பூண்டு அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணையொன்று அமைத்தனன் என்பது அறியப்படுகின்றது. அக் கோயிலில் இராசமகேந்திரன் திருவீதி என்னும் பிராகாரம் ஒன்றும் அவன் எடுப்பித்தான் என்று கோயிலொழுகு என்ற நூல் கூறுகின்றது.2 கலிங்கத்துப் பரணியில் இரண்டாம் இராசேந்திரனுக்கும் வீரராசேந்திரனுக்கும் நடுவில் வைத்து மும்முடி சோழன் பாராட்டப் பெற்றுள்ளான். அவ்வாறே விக்கிரமசோழன் உலாவில் இரண்டாம் இராசேந்திரனுக்கும் வீரராசேந்திரனுக்கும் இடையில் திருவரங்கத் திருப்பணி புரிந்த இராசமகேந்திரன் புகழப்பட்டிருக்கின்றான். எனவே, சயங்கொண்டார் கூறிய மும்முடி சோழனே திருவரங்கத் திருப்பணி புரிந்த இராசமகேந்திரன் என்று அவ்வாசிரியர் காலத்திற்கு அண்மையிலிருந்த ஒட்டக்கூத்தரும் கருதியுள்ளனர் என்பது நன்கு விளங்குதல் காண்க.
இனி, மும்முடி சோழன் என்பான் இரண்டாம் இராசேந்திரனுக்குத் தம்பியும் வீரராசேந்திரனுக்குத் தமையனும் ஆவன் என்பது திருமழபாடி, திருவல்லம் என்னும் ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இரண்டாம் இராசேந்திரன் அவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் வழங்கினான் என்று அக்கல்வெட்டுக்களே உணர்த்துகின்றன. ஆகவே, மதுரைமாநகரில் அரசப்பிரதிநிதியாயிருந்து பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் அரசாண்டு வந்த மும்முடி சோழனே சோழநாட்டில் இளவரசுப்பட்டம் பெற்ற நாளில் இராசமகேந்திரன் என்னும் பெயர் எய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆதலால், இராசமகேந்திரன் என்பான் இரண்டாம் இராசேந்திரனுடைய புதல்வன் என்று கூறுவது பொருந்தாமை காண்க. அன்றியும், நம் இராசேந்திரன் தன் மக்கள் அறுவர்க்கும் உத்தமசோழன், விசயாலய சோழன், சோழ கேரளன், சோழஜனகராசன், சுந்தரசோழன், சோழகன்னக்குச்சிராசன் என்னும் பட்டங்கள் வழங்கினான் என்றும் அப்புதல்வர்களுக்குரிய இயற்பெயர்கள் இவை யென்றும் திருமழபாடியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்து
கின்றது. அப்பெயர்களுள், இராசமகேந்திரன் என்னும் பெயர் காணப்படாமையே, அப்பெயருடைய அரசகுமாரன் இராசேந்திரனுடைய புதல்வன் அல்லன் என்பதை ஒருதலையாக வலியுறுத்தல் அறியத்தக்கது. இரண்டாம் இராசேந்திரன் தன் முதற்புதல்வனுக்கு உத்தம சோழன் என்னும் பட்டம் வழங்கினான் என்று கல்வெட்டுக்கள் கூறு
கின்றனவேயன்றி2 இராசமகேந்திரன் என்னும் பட்டம் வழங்கினான் என்று யாண்டும் கூறவில்லை. எனவே, இராசமகேந்திரன் என்பான் இரண்டாம் இராசேந்திரன் மகன் அல்லன் என்பதும் தம்பியேயாவன் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.
இனி, மனுவினுக்கு மும்முடி நான்மடியாஞ் சோழன் என்ற கலிங்கத்துப்பரணிப் பாடலும் தருமநெறி நிற்ப மனுநெறி நடத்திய கோவிராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசமகேந்திரதேவர் என்ற கல்வெட்டுப் பகுதியும் அவன் செங்கோற் சிறப்பையும் நீதி மாண்பினையும் தெற்றென விளக்கி நிற்றல் அறியற்பாலதாம். அவன் இளவரசனாய் இருந்தபோதே இறந்தனன் என்று தெரிகிறது.
நம் இராசேந்திரனுக்கும் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரா யிருந்தது என்பது திருமழபாடி முதலான ஊர்களிலுள்ள கல்வெட்டுக் களால் அறியப்படுகிறது.3 இவனுக்கு மனைவியர் சிலர் இருந்துள்ளனர். அவர்களுள் கிழானடிகள்,4 திரைலோக்கிய முடையாள்5 என்ற இருவரைத் தவிர மற்றையோர் பெயர்கள் தெரியவில்லை. இவனுக்குப் புதல்வர்கள் அறுவர் இருந்தனர். அவர்கள், இராசேந்திர சோழன், முகைய விழலங்கல் முடிகொண்ட சோழன், சோழ கேரளன், கடாரங்கொண்ட சோழன், படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழன், இரட்டபாடி கொண்ட சோழன் என்போர்1 அவ்வறுவர்க்கும் இவன் உத்தம சோழன் முதலான பட்டங்கள் வழங்கியுள்ளனன். இவனுக்கு மதுராந்தக சோழன், நிருபேந்திரசோழன் என்னும் இரு பேரன்மார்களும் இருந்தனர்.3 இவனுடைய மகள் மதுராந்தகி என்பாள். அவள் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இராசராச நரேந்திரன் மகனும் கங்கைகொண்ட சோழன் மகள் வயிற்றுப் பேரனுமாகிய இராசேந்திரனுக்கு மணஞ்செய்து கொடுக்கப்பெற்றாள். அவ்வீரராசேந்திரனே பிறகு சோழ இராச்சியத்தில் அரசாண்ட முதற் குலோத்துங்க சோழன் என்பது உணரற்பாலது.
இனி, இவ்விரண்டாம் இராசேந்திரன், நாடகம் முதலான கலைகளிற் பெரும் பற்றுடையவன் என்பதும், தன் முன்னோர்களிடத்தில் அன்பும் மரியாதையும் உடையவன் என்பதும் தஞ்சை இராசராசேச்சுர நாடகம் நடித்தற்கு ஆண்டு ஒன்றிற்கு 120 கலநெல் நிவந்தமாக இவன் அளித்துள்ளமையால் நன்கறியக்கிடக்கின்றன.
இவன் ஆட்சியின் 12-ம் ஆண்டுக்கல்வெட்டொன்று6 மைசூர் இராச்சியத்தில் உளது. அவ்வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமையின் இவன் கி. பி. 1063-ல் இறந்தனன் என்பது திண்ணம்.
இனி, இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து இவன் ஆட்சியில் அரசியல் அதிகாரிகளாகவும் குறுநிலமன்னராகவும் இருந்தவர் பெயர்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. ஆனால் அவர்களைப் பற்றிய வரலாற்றை அறிய இயலவில்லை. எனினும் அவர்களுள் சிலரை ஈண்டுக் குறிப்பிடுதல் ஏற்புடையதேயாம்.
1. மிலாடுடையன் நரசிங்கவர்மன்: இவன், திருக்கோவலூரி லிருந்து கொண்டு மலையமானாட்டை ஆட்சி புரிந்த ஒரு குறுநில மன்னன். இவன் நம் இராசேந்திரனுக்கு கப்பஞ் செலுத்தி வந்தவன். இவன் ஆட்சிக்காலத்தில்தான் திருகோவலூரிலுள்ள திருமால் கோயில் கருங்கற் கோயிலாக எடுப்பிக்கப் பெற்றது. இவனை நரசிங்கவர்மர் என்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்கவர்மர் என்று திருக்கோவலூர்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுவது அறியற்பாலது.
2. சேனாபதிகள் ஜயமுரி நாடாழ்வான்: இவன் இராசேந்திர சோழனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன். இவனைப்பற்றிய கல்வெட்டொன்று ஈழநாட்டில் இருத்தலால்2 இவன் அந்நாட்டில் போர் நிகழ்த்திய சோழர் படைத்தலைவனாதல் வேண்டும் என்பதும் சில ஆண்டுகள் அங்கு அரசப்பிரதிநிதியாக இருந்திருத்தல் கூடும் என்பதும் நன்கறியப்படும். அரையன் இராசராசனான வீரராசேந்திர ஜயமுரி நாடாழ்வான் என்று கருவூர்க் கல்வெட்டில்3 குறிக்கப்பெற்ற தலைவன் இவனேயாவன்.
3. சேனாபதி அரையன் கடக்கங்கொண்ட சோழன் இராசராச அணிமுரி நாடாழ்வான்: இவன் இராசேந்திர சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன். இவனுடைய ஊர் திருவையாறு என்று தெரிகிறது. இவன் திருமழபாடிக் கோயிலில் பொன்னார் மேனியர் திருவுருவம் ஒன்று செம்பினால் எழுந்தருளுவித்து4 அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக நிலம் அளித்துள்ளான். அன்றியும், அதற்குப் பல அணிகலன்களும் கொடுத்துள்ளனன். ஆகவே, இவன் சைவசமய குரவரிடத்தும் பேரன்புடையவன் என்பது தெள்ளிது.
4. பஞ்சநதிவாணனாகிய மதுராந்தகத் தமிழ்ப் பேரரையன்: இவன் இராசேந்திர சோழனுடைய தண்ட நாயகர்கட்குத் தலைவன்; மதுராந்தகத் தமிழ்ப் பேரரையன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் மைசூர் இராச்சியத்தில் கங்கநாட்டுக் கல்வெட்டொன்றில்2 குறிப்பிடப் பெற்றி ருத்தலால் அந்நாட்டை யாண்டுவந்த சோணாட்டுத் தலைவன் ஆதல் வேண்டும்.
5. வேளாளக்கூத்தன் ஆகிய செம்பியன் மூவேந்த வேளான்: இவன் இராசேந்திரனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; அரசனால் வழங்கப்பெற்ற செம்பியன் மூவேந்த வேளான் என்னும் பட்டம் உடையவன். அரசனது உத்தரவின்படி திருவாரூர்க் கோயிலில் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் முதலானவற்றைப் பொன் வேய்ந்து புகழ் எய்தியவன்.
6. சேனாபதி சயங்கொண்டசோழ பிரமாதிராசன்: இவன் இராசேந்திரனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; அந்தணர் குலத்தினன். செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலத்தி லுள்ள ஒரு கல்வெட்டு3 இவன் தாயார் காமக்கவ்வை என்பாள் அவ்வூர்க் கோயிலுக்கு இறையிலி நிலம் அளித்த செய்தியை உணர்த்துகின்றது.
7. உதயதிவாகரன் கூத்தாடியாரான வீரராசேந்திர மழவராயன்: இவன் சயங்கொண்ட சோழநல்லூர் என்னும் எருக்கட்டாஞ் சேரியில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு தலைவன். இவன் இராசேந்திர சோழனுடைய உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவன் என்பது இவன் அரசாங்க உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளமையால் புலனாகின்றது.
வீரராசேந்திரசோழன் கி.பி.1063-1070
இவ்வரசரேறும் கங்கைகொண்ட சோழனுடைய புதல்வர்களுள் ஒருவன். இவன் அவ்வேந்தர் பெருமானுடைய மனைவிமார்களுள் யாருடைய மகன் என்பது புலப்படவில்லை. செங்கற்பட்டு ஜில்லா திருமுக்கூடலிலுள்ள கல்வெட்டொன்றில் காணப்படும் ஸ்ரீவீர ராஜேந்திர தேவர் ஆட்டைத் திருநாள் ஆவணித் திங்கள் திருவாயிலியத்தில் என்ற சொற்றொடர்களால் இம்மன்னன் ஆவணித்திங்கள் ஆயிலிய நாளிற் பிறந்தவன் என்பது நன்கறியக்கிடக்கின்றது. திருவெண்காட்டில் திங்கள் தோறும் ஆயிலிய நாளில் இறைவன் திருமஞ்சனமாடித் திருவிழா எழுந்தருளுவதற்கு இவன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் நிவந்தம் விடப்பெற் றிருப்பதும்2 அதற்குச் சான்றாதல் காண்க. அன்றியும், திருவொற்றியூர்க் கோயிலில் ஆயிலிய நாளில் சிறப்புவிழா ஒன்று நடத்துவதற்கு இவன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய சயசிங்க குலகால விழுப்பரையன் என்பவன் ஏற்பாடு செய்திருப்பதும்3 அச்செய்தியை வலியுறுத்தி நிற்றல் அறியத்தக்கது.
செங்கற்பட்டு ஜில்லா யோகி மல்லவரத்திலுள்ள கல்வெட்டொன்று இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய சகம் 991-ல் வரையப் பெற்றுள்ளது4 அன்றியும், சித்தூர் ஜில்லா சாரால என்னும் ஊரில் கிடைத்த செப்பேடுகளிலும் இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய சகம் 991-ல் இவன் பெருங்கொடை வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது. எனவே, இவன் சகம் 984-க்குச் சமமான கி. பி. 1062-ஆம் ஆண்டில் பட்டங்கட்டப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவன் தமையனாகிய இரண்டாம் இராசேந்திரசோழன் தான் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்னரே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிச் சிறப்பித் தனனாதல் வேண்டும். கி. பி. 1063-ல் அவன் இறந்தவுடன் இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பெற்றுச் செங்கோல் செலுத்துவா னாயினன்.
இவனுக்குமுன் ஆட்சிபுரிந்த இரண்டாம் இராசேந்திர சோழன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு இருந்தமையால், சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இவன் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டான்.
இவ்வேந்தனுக்கு உரியனவாக இரண்டு மெய்க்கீர்த்திகள் இவன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அவற்றுள் திருவளர்திரள்புயத்து என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி மிகப்பெரியது; இவனது ஆட்சியாண்டுகள் ஏற ஏற அது வளர்ந்துகொண்டே செல்லுகின்றது. வரலாற்றுண்மைகளை உணர்ந்து கொள்வதற்கு அது பெரிதும் பயன்படுவதாகும். மற்றொரு மெய்க்கீர்த்தி வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும் என்று தொடங்குகின்றது. அது மிகச் சிறியதாயினும் இவனது வீரச்செயல்கள் எல்லாவற்றையும் தொகுத்து மிக அழகாகக் கூறுகின்றது. ஆட்சி யாண்டுகள் ஏறவே, அதுவும் சில வேறுபாடுகளை அடைந்துள்ளது. எனினும், இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் அஃது ஒரு நிலையை எய்தி அவ்வளவில் நின்று விடுகிறது.
_அது_
வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்
செங்கோலோச்சிக் கருங்கலி கடிந்து
தென்னனைத் தலைகொண்டு சேரனைத் திறை கொண்டு
சிங்களதேசம் அடிப்படித்து வெங்களத்
தாகவமல்லனை ஐம்மடி வென்கண்டு
வேங்கைநாடு மீட்டுக்கொண்டு
தன்னுடன் பிறந்த முன்னவர் விரதமுடித்து
வந்து பணிந்த விஜயாதித்தர்க்கு மண்டலமருளிக்
கழலடைந்த மன்னர்க்குக் கடாரமெறிந்து கொடுத்தருளிச்
சோமேசுவரனைக் கன்னடதேசங் கைவிடத் துரத்தித்
தன்னடியடைந்த சளுக்கி விக்கிரமாதித்தனை
எண்டிசை நிகழக் கண்டிகை கட்டி
இரட்டபாடி ஏழரை இலக்கமும் எறிந்துகொடுத்தருளி
விஜய சிம்மாசனத்து உலகமுழுதுடையாளோடும்
வீற்றிருந்தருளின சக்கரவரர்த்திகள்
ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்
என்பதாம்.
இச்சிறு மெய்க்கீர்த்தி, பயன்படாப் புனைந்துரைகளின்றி இவன் வரலாற்றுண்மைகளை விளக்கிச் செல்லும் நிலையில் அமைந்துள்ளமை காண்க.
இவ்வேந்தன் தன்னுடன் பிறந்த முன்னவர்போல் பேராற்றல் படைத்த பெருவீரனாயிருந்தமையால் இவனது ஆட்சிக்காலம் முழுவதும் போரிலேயே கழிந்தது. இவன் தன் தமையன்மார் கொண்ட விரதத்தைத் தன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிவிட்டதாகத் தன் கல்வெட்டுகளில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அன்றியும் இவன் ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்டு2 என்று தன் கல்வெட்டுகளில் வரைந்திருப்பதால், மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனை இவன் போரில் ஐந்து முறை வென்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இவன் முடிசூடிய பிறகு கி. பி. 1063-ஆம் ஆண்டில் மறுபடியும் மேலைச் சளுக்கியப்போர் தொடங்கி யிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.
குந்தள வேந்தனாகிய ஆகவமல்லன் தன் இரண்டாம் புதல்வனாகிய விக்கிரமாதித்தன் சோழ இராச்சியத்தின் எல்லையில் வனவாசி, நுளம்ப பாடி என்பனவற்றின் வடபகுதியில் இருந்துகொண்டு, தன்னுடைய இராச்சியத்தின் தென்பகுதியைக் கண்காணித்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான்.1 நம் வீரராசேந்திரன் முடிசூட்டு விழாவில் ஈடுபட்டுத் தலைநகரில் தங்கியிருந்த காலத்தில் விக்கிரமாதித்தன் தனக்கு அண்மையில் இருந்த கங்கபாடி நாட்டைக் கைப்பற்ற முயன்றனன். அதனையறிந்த வீரராசேந்திரன் பெரும் படையுடன் புறப்பட்டுச் சென்று, சளுக்கிய விக்கிரமாதித்தனையும் அவன் மாசாமந்தர்களையும் போரில் வென்று, கங்கபாடிக் களத்தினின்றும் துங்கப்பத்திரை யாற்றிற்கப்பால் துரத்தினான்.9 அதுவே, இவன் முடிசூடியபின் மேலைச் சளுக்கியரோடு நிகழ்த்திய முதற்போராகும்.
இனி, வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த கீழைச்சளுக்கியர் முதல் இராசராசசோழன் காலமுதல் சோழர்க்கு நெருங்கிய உறவின ராகவும் அவர்களிடம் பெரும் பற்றுடையவராகவும் இருந்துவந்தனர். அதனால் வடபுலத்தில் அன்னோர்க்குப் பகைமை இல்லாமையோடு ஆதரவும் நட்பும் என்றும் நிலைபெற்றிருந்தன. அத்தகைய நிலையில் கீழைச் சளுக்கியரை எக்காலத்தும் வைத்துக்கொள்வதற்குச் சோழ மன்னர்கள் முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர். அந்நிலையில் மேலைச்சளுக்கியர் தம் தாயத்தினராகிய கீழைச் சளுக்கியர் வழிவழித் தமக்குப் பகைஞராயுள்ள சோழரோடு சேர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரிதும் வருந்தி, அவ்விருவரையும் பிரித்துவிட்டுக் கீழைச்சளுக்கி யரைத் தமக்கு உற்ற துணைவராக அமைத்துக் கொள்வதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப கி. பி. 1062-ஆம் ஆண்டில் கீழைச் சளுக்கிய மன்னனும் கங்கைகொண்ட சோழன் மருமகனும் ஆகிய இராசராச நரேந்திரன் என்பான் வேங்கிநாட்டில் இறந்தான். மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன் தன் ஆட்சியின் கீழ் வேங்கி நாட்டைக் கொணர்தற்கும் கீழைச் சளுக்கியரைப் பணிய வைத்துத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுவதற்கும் அதுவே தக்க காலமென்று கருதி, வனவாசியில் தன் பிரதிநிதியாக இருந்து கொண்டிருந்த மாதண்ட நாயகனாகிய சாமுண்டராயன் என்பவனைப் பெரும்படையுடன் வேங்கி நாட்டிற்கனுப்பினான். அதை யுணர்ந்த நம் வீரராசேந்திரன் தன் பாட்டன் இராசராசசோழன் காலமுதல் நெருங்கிய உறவினாற் பிணிக்கப்பட்டிருந்த வேங்கிநாட்டைக் கைவிடாமற் காக்கும் பொருட்டுத் தானும் பெரும்படையுடன் அங்குச்சென்று சாமுண்டராயனுடன் போர்புரிந்து அவனையுங்கொன்றான் ஆகவே மேலைச்சளுக்கியர் தம் தாயத் தினராகிய கீழைச்சளுக்கியரைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி சிறிதும் பயன்படாமற் போயிற்று. சளுக்கிய தண்டநாயகன் சாமுண்டராயனை வீரராசேந்திரன் வேங்கி நாட்டில் கொன்ற அப்போர் இவன் மேலைச்சளுக்கியரோடு இரண்டாம் முறை நடத்தியதாகும்.
இனி, வீரராசேந்திரனுக்கும் மேலைச்சளுக்கியருக்கும் மூன்றாம் முறை நிகழ்ந்த போர், கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளும் கூடும் இடமாகிய கூடல் சங்கமத்தில் கி. பி. 1064-ஆம் ஆண்டில் நடைபெற்றது. வடகடலென்ன வகுத்த அத் தானையைக் கடகளிறொன்றால் கலக்கி என்று வீரராசேந்திரன் கல்வெட்டு ஒன்று கூறுவதால், கடல்போன்ற பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சாளுக்கியர் இவனோடு போர்புரிய வந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, இரு தரத்தினரும் பெரும் படையுடன் கடும்போர் புரிந்தனர் என்பது ஒருதலை. கூடல் சங்கமத்து2 நிகழ்ந்த அப் போரில் மேலைச்சளுக்கிய தண்டநாயகர்களாகிய கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரையன், இரேச்சயன் என்போர் கொல்லப்பட்டனர். படைத் தலைவனாகிய மதுவணனும் அரச குமாரர்களாகிய விக்கிரமாதித்தன், சயசிங்கன் என்பவர்களும் மேலைச்சளுக்கிய வேந்தனாகிய ஆகவ மல்லனும் எதிர்த்துப் போர் புரிய முடியாமல் புறங்காட்டி ஓடிவிட்டனர். வீரராசேந்திரன் பெரு வெற்றி எய்தி ஆகவமல்லனுடைய பாசறையை முற்றுகையிட்டு, அவன் மனைவியரையும் பட்டத்து யானையாகிய புட்பகப்பிடியையும் வராகக் கொடியையும் யானை குதிரைகளையும் மற்றும் பல பொருள்களையும் கைப்பற்றிக் கொண்டு, வெற்றி வேந்தனாய்த் தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தை யடைந்து, அங்கு வெற்றி முடி சூடி விசயாபிடேகம் செய்து கொண்டான்.
இவ்வேந்தன் ஆகவமல்லனோடு போர்புரிந்து அடைந்த வெற்றி களுள் கூடல் சங்கமத்தில் பெற்ற வெற்றியே மிகச் சிறந்ததாகும். சயங் கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர் பெருமக்கள் இவனைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் இவனது கூடல் சங்கமத்து வெற்றியையே குறிப்பிட்டுப் புகழ்ந்திருத்தலால் அவ்வுண்மையை நன்குணரலாம். அதனை,
குந்தளரைக் கூடல் சங்கமத்து வென்ற கோனபயன்
என்னும் கலிங்கத்துப்பரணிப் பாடலாலும்
-கூடலார்
‘சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும்’
என்னும் விக்கிரமசோழன் உலாவினாலும்,
பாடவரிய பரணி பகட்டணிவீழ்
கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்
என்னும் இராசராசசோழன் உலாவினாலும் அறிந்து கொள்ளலாம்.
இனி, நம் வீரராசேந்திரன் ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் இவன் பொத்தப்பி வேந்தனையும்1 கேரளனையும் ஜனநாதன் தம்பியையும் பாண்டியன் சீவல்லவன் மகன் வீரகேசரியையும் போரில் கொன்றான் என்று கூறுகின்றன. எனவே, அந்நிகழ்ச்சிகள் கி. பி. 1065-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அவ்வரசர்களைப் பற்றி இப்போது ஒன்றும் புலப்படவில்லை. வீரராசேந்திரன் கல்வெட்டுக்கள் கன்னியாகுமரியிலும்2 பாண்டிய நாட்டிலுள்ள ஆற்றூர், திருப்பத்தூர் முதலான ஊர்களிலும் காணப்படுகின்றன.3 அன்றியும், இவன் தன் புதல்வன் கங்கைகொண்ட சோழன் என்பவனைச் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் கி. பி. 1064-ல் பாண்டி நாட்டில் அரசப்பிரதிநிதியாக அமர்த்தினான் என்று திருவெண்காட்டுக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது. இந்நிலையில் இவன் பாண்டியனோடு போர் தொடுத்தமைக்குக் காரணம் தெரியவில்லை. அரசப் பிரதிநிதியாயிருந்த தன் புதல்வனுக்கு அடங்காமல் உள் நாட்டில் குழப்பமும் கலகமும் உண்டுபண்ணிக் கொண்டிருந்தமை பற்றி இவன் பாண்டி நாட்டிற்குச் சென்று அவ்வீரகேசரியைப் போரில் கொன்றிருத்தல் கூடும்.5 கி. பி. 1066-ஆம் ஆண்டில் இவன் சேர நாட்டிலுள்ள உதகைமீது படையெடுத்துச் சென்றபோது சேர மன்னர்கள் எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் பெரிதும் அஞ்சி ஓடி யொளிந்தனர் என்றும், பின்னர் அவர்கள் கப்பமாக அளித்த யானைகளையும் பிறபொருள்களையும் பெற்றுக் கொண்டு திரும்பினான் என்றும் செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலத்திலுள்ள ஒரு கல்வெட்டும், திருமுக்கூடலிலுள்ள ஒரு கல்வெட்டும்6 உணர்த்துகின்றன. அவ்வாறு அச்சமுற்று வீரராசேந்திரனுக்குத் திறை செலுத்திய சேர மன்னர்கள் யாவர் என்பது இப்போது தெரியவில்லை. அன்னோர் சோழர்க்கு அடங்கிய குறுநில மன்னராயிருந்து பின்னர் முரண்பட்டவ ராதல் வேண்டும். அது பற்றியே வீரராசேந்திரன் அவர்கள் நாட்டின்மேல் படையெடுத்துச் செல்லவேண்டியது இன்றி யமையாததாயிற்று எனலாம்.
இனி, இவ்வேந்தன் ஆகவமல்லனோடு நான்காம் முறை நடத்திய போர் ஆராயற்பாலதாகும். அஃது எவ்விடத்தில் நடைபெற்றது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் கல்வெட்டுக்களின் துணை கொண்டு பார்க்குங்கால், அஃது ஓர் ஆற்றின் பக்கத்தில் கி.பி.1066-ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது உய்த் துணரப்படுகிறது. சோழர்க்கும் மேலைச் சளுக்கியர்க்கும் நிகழ்ந்த போர்கள் எல்லாம் பெரும்பாலும் துங்கபத்திரை, கிருஷ்ணை என்னும் பேராறுகளின் பக்கங்களில்தான் நடந்துள்ளன. ஆகவே, நான்காம் மேலைச் சளுக்கியப் போரும் அவ்விரண்டினுள் ஒன்றின் பக்கத்தில்தான் நடை பெற்றதாதல் வேண்டும். அதில் மேலைச்சளுக்கியர் பேரிழப்பிற்கும் பெருந்துன்பத்திற்கும் உள்ளாயினர். சளுக்கிய தண்டநாயகர்களாகிய மல்லியண்ணன், மஞ்சிப்பையன், பிரமதேவன் அசோகையன், சக்தி யண்ணன், வீமய்யன், வங்காரன் என்போர் வீரராசேந்திரனால் கொல்லப்பட்டமையோடு கங்கன், நுளம்பன், காடவர்கோன், வைதும்பராயன் என்னும் அரசர்களும் அப்போரில் உயிர்நீத்தனர். அதனை யுணர்ந்த ஆகவ மல்லன் பெரிதும் வருந்திப் பழியொடு வாழ்வதினும் சாவது சால நன்று என்றெண்ணி, உள்ளமுடைந்து துன்புறுவானாயினன். பிறகு அவன் ஒருவாறு தேறுதலெய்தி, மறுபடியும் வீரராசேந்திரனோடு போர் புரிந்து தனக்கு நேர்ந்த பெரும் பழியைப் போக்கக் கருதித் தானும் தன் புதல்வரும் முன்னர்த் தோல்வியுற்ற கூடல் சங்கமத்தையே போர்க்களமாகக் கொண்டு தன்னோடு போர் புரிய வரவேண்டும் என்றும், அங்ஙனம் வாராதஞ்சியவர் மன்னவர் அல்லர் என்றும், போர்ப்பெரும் பழிப் புரட்டர் ஆவர் என்றும், ஒரு திருமுகம் எழுதி கி. பி. 1067-ல் கங்காகேத்தன் என்பவனிடம் கொடுத்து அவனை வீரராசேந்திரன்பால் அனுப்பினான். அதனைப் பெற்றுச் செய்தியுணர்ந்த இவ்வேந்தன், சிந்தையும் முகமுந் திருப்புய மிரண்டும் - ஏந்தெழில் உவகையோடு இருமடங்கு பொலிய ஐந்தாம் முறை ஆகவமல்லனோடு போர் புரிவதற்கு அவன் விரும்பிய வாறு பெரும் படையுடன் கூடல் சங்கமத்திற்குச் சென்று, அதற்கணித் தாகவுள்ள கரந்தை என்னும் இடத்தில் அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அத்திரு முகத்தில் குறிக்கப் பெற்ற நாளுக்குப் பிறகு ஒரு திங்கள் வரையில் இம் மன்னன் அங்குக் காத்துக் கொண்டிருந்தும், அவன் முன்னர்த் தெரிவித்தவாறு வரவில்லை. அதுபற்றி இவன் பெருஞ்சினங் கொண்டு, இரட்டபாடி நாட்டில் அப்பகுதியிலிருந்த தேவநாதன், சித்தி, கேசி என்னுஞ் சளுக்கியத் தலைவர் மூவரும் தோற்றுத் தனித்தனியாக முதுகுகாட்டி யோடும்படி போர்புரிந்து, பல இடங்களில் எரியூட்டித் துங்கபத்திரைக்கரையில் நானிலம் புகழ ஒரு வெற்றித் தூணும் நிறுவினான். அன்றியும், இவ்வேந்தன் ஆகவ மல்லனைப் போல் ஓர் உருவம் அமைத்துக் கழுத்திற் கண்டிகை பூட்டி, அவனும் அவன் மக்களும் தனக்கஞ்சி உலகறிய ஐந்துமுறை முதுகுகாட்டி ஓடிய செய்தியை ஒரு பலகையில் எழுதுவித்து, அதனை அதன் மார்பில் தொங்கவிட்டு மற்றுஞ் சில அவமானங்களும் செய்வித்தனன். பிறகு, அவன் கைப்பற்றியிருந்த வேங்கி நாட்டை மீட்காமல் திரும்புவதில்லை; வல்லவனாகில் வந்துகாக்க என்று சொல்லியனுப்பிவிட்டு, இவன் வேங்கி நாட்டை நோக்கிச் சென்றான்.
இனி, ஆகவமல்லன் தானே தெரிவித்தவாறு குறித்த நாளில் கூடல் சங்கமத்தில் வீரராசேந்திரனோடு போர் புரிய வாராமைக்குக் காரணம் தெளிவாகப் புலப்படவில்லை. வீரராசேந்திரன் கல்வெட்டுக்கள், அவன் அச்சமுற்று மேல்கடற்பக்கம் ஓடி ஒளிந்தான் என்று உணர்த்துகின்றன. ஆனால், அவன் திடீரென்று சுரநோயுற்று பல மருத்துவங்கள் செய்தும் பயன்படாமையின், துன்பம் பொறுக்கமுடியாமல் துங்கபத்திரை யாற்றிற்குப்போய் குருவர்த்தி என்னுமிடத்தில் கி. பி. 1068-ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்கள் 30-ஆம் நாளில் நீரில் மூழ்கி உயிர் துறந்தான் என்று மைசூர் நாட்டிலுள்ள ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. அன்றியும் விக்கிரமாங்கதேவ சரிதமும் அவ்வாறே கூறுகின்றது.2 அஃது உண்மைச் செய்தியாகவும் இருக்கலாம். ஆனால், அந்நிகழ்ச்சி வீரராசேந்திரனுக்குத் தெரியாதன்றோ? அதனால்தான் இவன் பெருங் கோபங்கொண்டு, அவன் பொய்யன் என்றும் புரட்டன் என்றும் கருதி அவனைப்போல் உருவொன்றமைத்து, அதனைப் பல்வகை அவமானங்களுக்கு உட்படுத்தினன் என்க.
அங்ஙனம் ஆகவமல்லன் உயிர்துறந்தபோது அவன் இரண்டாம் புதல்வன் விக்கிரமாதித்தன் என்பான் திக்குவிசயஞ் செய்யப்புறப்பட்டு, வேங்கிநாட்டையும் சக்கரக் கோட்டத் தையும் தன்னடிப்படுத்தி, கிருஷ்ணையாற்றங்கரைக்கு வந்து தங்கியிருந்தான் என்றும் அந்நாட்களில் தன் தந்தை இறந்தமை கேட்டுப் பெரிதும் வருந்தி தான் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை அங்குச் செய்து முடித்தான் என்றும் பில்ஹணர் கூறியுள்ளனர்.3 எனவே, ஆகவமல்லன் இறப்பதற்கு முன்னர், கி. பி. 1067-ஆம் ஆண்டில் வேங்கிநாடு விக்கிரமாதித்தனால் கைப்பற்றப் பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆயினும், அது, நெடுங்காலம் மேலைச் சளுக்கியர் ஆட்சிக்கு உட்பட் டிருக்கவில்லை என்பது அதேயாண்டில் நம் வீரராசேந்திரன், தான்4 கைக்கொண்ட வேங்கை நன்னாடு-மீட்டுக் கொண்டலால் மீள்கிலம் கேட்டு நீ-வல்லனாகில் வந்து காக்கென்று சொல்லி விட்டுக் கூடல் சங்கமத்திலிருந்து படையுடன் புறப்பட்டு வேங்கிநாடு நோக்கிச் சென்றான் என்று இவனது கல்வெட்டு ஒன்று கூறுவதால் நன்கறியக் கிடக்கின்றது.5 அங்ஙனம் வேங்கிநாடு நோக்கிச் சென்ற வீரராசேந்திரனை மேலைச்சளுக்கிய தண்ட நாயகர்களாகிய சனநாதன், இராசமய்யன், திப்பரசன் என்போர் படையுடன் வந்து கிருஷ்ணையின் கரையில் தடுத்தனர். இரு தரத்தினர்க்கும் விசயவாடை நகர்க்கண்மையில் பெரும்போர் நடைபெற்றது. அதில் சளுக்கிய தண்டநாயகர்கள் தோல்வியுற்றுத் தம் உயிர் பிழைத்தோடிக் கானகத்தின்கண் ஒளிந்தனர். பிறகு இவன் கோதாவரியாற்றைத் தாண்டி, கலிங்கம் ஏழுங் கடந்து சர்க்கரக்கோட்டத்திற்கு அப்பாலும் படையுடன் சென்று வேங்கிநாட்டைத் திரும்பக் கைப்பற்றினான்; இறுதியில் தன்பால் அடைக்கலம் புகுந்த கீழைச்சளுக்கிய மன்னனாகிய ஏழாம் விசயாதித் தனிடம் அந்நாட்டை அளித்துவிட்டு, வெற்றி வேந்தனாய்த் தன் தலை நகர்க்குத் திரும்பினான்.
இவன் இரண்டாம் முறையிலும் வேங்கையில் நிகழ்த்திய போரில் வெற்றி எய்தியமையால் மேலைச்சளுக்கியர் எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. எனவே, இவன் வேங்கிநாடு பற்றித் தன் தமையன்மாரினும் மிகுந்த கவலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இனி, வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் குறிக்கப் பெற்றுள்ள போர் நிகழ்ச்சிகளுள், இவன் ஈழநாட்டு மன்னன் விசயபாகுவுடன் புரிந்தபோரும் ஒன்றாகும்; அஃது இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக் களுள் ஒன்றில் மாத்திரம் காணப்படுகிறது. எனவே, அது கி. பி. 1067-ஆம் ஆண்டில் நடைபெற்றதாதல் வேண்டும். ஈழமண்டலத்தின் தென்கீழ்ப் பகுதியாகிய ரோகண நாட்டைத்தவிர மற்றப்பகுதிகள் எல்லாம் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது முன்னர்க் கூறப்பட்டுளது. அந்த ரோகண நாட்டிலிருந்த விசயபாகு என்னும் வேந்தன் சோழர் ஆட்சியை ஒழித்து ஈழமண்டலம் முழுவதையும் தன் ஆளுகையின் கீழ் அமைப்பதற்குப் பெரிதும் முயன்றான். அதனையறிந்த வீரராசேந்திரன் பெரும்படை யொன்றைக் கப்பல் வழியாக ஈழநாட்டிற்கு அனுப்பினான். அப்படை அங்குச் சென்று விசயபாகுவோடு போர்புரிந்து அவனை ஓடியொளியுமாறு செய்ததோடு அவன் மனைவியைச் சிறைப்படுத்திக் கொண்டும் அளப்பரும் பொருளுடன் திரும்பிற்று. அப்போரின் பயனாக ஈழமண்டலம் முழுவதும் வீரராசேந்திரன் ஆட்சிக்கு உள்ளாயிற்று என்று இவன் கல்வெட்டு உணர்த்துகின்றது. விசயபாகுவின் முயற்சியும் எண்ணமும் நிறைவேறாமற் போன செய்தி மகாவம்சத்தாலும் நன்கறியப் படுகின்றது. ஆனால் வீரராசேந்திரன் கல்வெட்டிற்கும் மகாவம்சத்திற்கும் ஒரு சிறு வேறுபாடு காணப்படுகின்றது. வீரராசேந்திரன் விசயபாகுவை அடக்குவதற்குக் கடல் அடையாது பல கலங்களில் ஒரு பெரும் படையைச் சோழ நாட்டிலிருந்து ஈழநாட்டிற்கு அனுப்பினான் என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. மகாவம்சமோ வீரராசேந்திரன் விசய பாகுவின் முயற்சியை யறிந்தவுடன் ஈழத்தில் புலத்தி நகரத்திலிருந்த தன் படைத்தலைவன் ஒருவனை ரோகண நாட்டிற்குப் பெரும்படையுடன் அனுப்பி, அவனைப் போரில் வென்று அடக்குமாறு செய்தான் என்று கூறுகின்றது. இதுவே இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடாகும். விசயபாகு, சோழர் படைக்கு முன் நிற்கும் ஆற்றலின்றி ஓடி ஒளிந்தவனாயினும், சில ஆண்டுகட்குப் பிறகு ரோகணத்திலிருந்து கொண்டு ஈழமண்டலத்தின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினான் என்று தெரிகின்றது. ஆகவே, அவன் வீரராசேந்திரன் படைத் தலைவன்பால் தோல்வியுற்றோடியபின் மீண்டும் வந்து அப்பகுதியில் தான் இருந்தனனாதல் வேண்டும்.
இனி, வீரராசேந்திரனது ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டு, இவன் தன் கழலடைந்த மன்னர்க்குக் கடாரம் எறிந்து கொடுத்தருளி னான் என்று கூறுகின்றது. இவன் தந்தையாகிய கங்கைகொண்ட சோழன் கி. பி. 1025-ல் ஸ்ரீ விஜயராச்சியத்தின் மேல் படையெடுத்துச் சென்று கடாரத்த ரசனாகிய சங்கிராம விசயோத்துங்கவர்மனைப் போரில் வென்று வந்த செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. கி. பி. 1068-ஆம் ஆண்டில் தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசன் பொருட்டு, வீரராசேந்திரன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அதனைக் கைப்பற்றி அவ்வரசனுக் களித்தான். தன் நாட்டை இழந்து சோணாட்டிற்கு வந்து அடைக்கலம் புகுந்த கடாரமன்னன் யாவன் என்பதும் அவன் அதனைத் தன் பகைவனாகிய பிறநாட்டரசனிடம் இழக்க நேர்ந்ததா அன்றித் தன் தாயத்தினர்பால் இழக்க நேர்ந்ததா என்பதும் புலப்படவில்லை. எனினும் வீரராசேந்திரன் பேருதவியினால் அவன் தனக்குரிய நாட்டை மீண்டும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வீரமே துணையாகவும் என்று தொடங்கும் இவனது சிறிய மெய்க்கீர்த்தியில்தான் கடாரப் படையெழுச்சி சொல்லப்பட்டுள்ளது.
இனி, இவனது மெய்க்கீர்த்தியில்,
‘சோமேசுவரனைக் கன்னடதேசங் கைவிடத்துரத்தித்
தன்னடியடைந்த சளுக்கி விக்கிரமாதித்தனை
எண்டிசை நிகழக் கண்டிகை கட்டி
இரண்டபாடி ஏழரை இலக்கமும்
எறிந்து கொடுத்தருளி னான்’
என்று கூறப்பட்டிருப்பது ஆராயற்பாலதாகும்.
மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன் கி. பி. 1068-ல் இறந்தபின்னர் இளவரசனாயிருந்த அவன் முதற்புதல்வன் இரண்டாம் சோமேசுவரன் முடிசூட்டப் பெற்றான்.2 அச்சமயத்தில் வீரராசேந்திரன் படையெடுத்துச் சென்று அனந்தப்பூர் ஜில்லாவிலுள்ள குத்தி என்னும் நகரை முற்றுகையிட்டுச் சோமேசுவரன் முன் நிற்க முடியாமல் விரைவில் திரும்பிவிட்டான் என்று அச் சளுக்கிய மன்னன் கல்வெட்டொன்று கூறுகின்றது.3 ஆனால் வீரராசேந்திரன் சோமேசுவரன் கட்டிய கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம், அவன் நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, பல்லாரி ஜில்லாவிலுள்ள கம்பிலி நகரை எரித்து, குத்தியை முற்றுகை யிட்டு, இடைதுறை நாட்டிலுள்ள கரடிக்கல்லில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்று அவன் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. அன்றியும், இவன் அச் சோமேசுவரனைக் கன்னட தேசத்தைக் கைவிட்டோடும்படி செய்து, இரட்டபாடி ஏழரை இலக்கத்தை
வென்று, தன்னையடைந்து வணங்கி உதவிவேண்டிய சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு அதனை வழங்கி முடி சூட்டினான் என்று அக்கல்வெட்டுகள் கூறுகின்றன.1 விக்கிரமாங்கதேவ சரிதத்தில் அச்செய்திகள் விக்கிரமாதித்தனைப் புகழ்ந்துகூறும் முறையில் வேறு பட்டுக் காணப்படுகின்றன. இரண்டாம் சோமேசுவரன் முடி சூடியபிறகு தீயநெறியிற் சென்று பல்வகையாலும் குந்தளநாட்டு மக்களை வருத்தவே, அதுபற்றிக் குடிகட்கு அவன்பால் வெறுப்பு ஏற்பட்டது என்றும், அதனை யுணர்ந்த இளவலாகிய விக்கிரமாதித்தன் அவனை நன்னெறிக்குத் திரும்புவதற்குப் பெரிதும் முயன்று, பயன் படாமையால் மனம் வேறுபட்டுத் தன் தம்பி சயசிம்மனோடு கல்யாணபுரத்தைவிட்டுப் போய்விட்டான் என்றும், அங்ஙனம் போகுங்கால் சோமேசுவரன் படையையும் புறங்காட்டி ஓடச்செய்து, வனவாசியில் துங்கபத்திரைக் கரையில் சிலகாலம் வரையில் தங்கியிருந்தான் என்றும், பிறகு அவன் சோணாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முயன்றபோது கோவா நகரத்திலிருந்த கடம்பர்குல மன்னன் சயகேசியும் ஆளுபவேந்தனும் அவனைப் பணிந்து உதவி புரிந்தனர் என்றும், அவற்றையறிந்த வீரராசேந்திரன் அச்சமுற்றுத் தன் மகளை அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதாக ஒரு தூதன் மூலம் தெரிவிக்கவே, அவனும் உடன்பட்டுத் துங்கபத்திரைக் கரையில் சோழமன்னன் மகளை மணந்து
கொண்டான் என்றும், அதுமுதல் விக்கிரமாதித்தனும் வீரராசேந்திரனும் உறவினாற் பிணிக்கப்பெற்றனர் என்றும் அச்சரிதம் கூறுகின்றது. அன்றியும், கடம்ப அரசனாகிய முதல் சயகேசி என்பான், தான் மேலைச் சளுக்கியர்க்கும் சோழர்க்கும் காஞ்சிமாநகரில் நட்புரிமையுண்டுபண்ணி, விக்கிரமாதித்தன் எத்தகைய இடையூறுமின்றிக் குந்தள நாட்டிலிருந்து ஆட்சிபுரிந்து வருமாறு ஏற்பாடு செய்ததாகத் தன் கல்வெட்டுக்களில் குறித்துள்ளனன்.2 அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து ஆகவமல்லன் இறந்தபின்னர், அவன் புதல்வர்களாகிய இரண்டாம் சோமேசுவரனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.1 அந்நாட்களில் ஆகவமல்லனுடைய மூன்றாம் புதல்வனாகிய சயசிம்மனும் கடம்ப வேந்தனாகிய சயகேசியும் விக்கிரமாதித்தனுக்கு ஆதரவளித்து உதவி புரிவாராயினர். அவர்களுள், சயகேசி என்பான் காஞ்சிமாநகர் சென்று, நம் வீரராசேந்திரனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் நட்புரிமை ஏற்படுமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது அவன் கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது. அங்ஙனம் ஏற்பட்ட நட்பின் பயனாக வீரராசேந்திரன் இரட்டபாடி ஏழரை இலக்கத்தின்மேல் படையெடுத்துச் சென்று, இரண்டாம் சோமேசுவரனைப் போரில் வென்று துரத்திய பின்னர் அந்நாட்டை விக்கிர மாதித்தனுக்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.2 ஆகவே, அந்நிகழ்ச்சியைத்தான் இவன் மெய்க்கீர்த்தி மிகச் சுருக்கமாக உணர்த்துகின்றது என்பது அறியற்பாலதாகும்.
நம் வீரராசேந்திரன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் அவ்வாறு போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனனாயினும், தன் இராச்சியத்திலுள்ள குடிகட்கு எத்தகைய இன்னல்களுமின்றி அன்னோரைப் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டத்தக்கது. இவனும் தன் முன்னோர்களைப் போல் சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகிவந்தனன்.3 இவன் தில்லையம்பதியில் பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராசப் பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற சிறந்த முடிமணியொன்று அளித்தனன் என்று இவனது கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துகின்றது.4 அன்றியும் இவன் சோழ நாடு, பாண்டி நாடு, தொண்டைநாடு, கங்கநாடு, குலூதநாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்கட்குப் பிரமதேயங்கள் வழங்கி அவர்கள் அந்நாடுகளில் என்றும் நிலைபெற்று வாழுமாறு செய்தான் என்று அக்கல்வெட்டே கூறுகின்றது.1 இவன் ஆகவ மல்லனையும் அவன் புதல்வர்களையும் கூடல் சங்கமத்துப் போரில் வென்று கைப்பற்றிய நாடாகிய இரட்டபாடி கொண்ட சோழ மண்டலத்திலுள்ள சேராம் என்னும் ஊரைக் கி. பி. 1069-ஆம் ஆண்டில் உத்தராயண சங்கராந்தி நாளில் மூன்று பிராமணர்கட்குப் பிரமதேயமாக அளித்தனன் என்பது அவ்வூரிலிருந்து கிடைத்த செப்பேடுகளால் அறியப்படுகிறது. அவ்வூர் இக்காலத்தில் சித்தூர் ஜில்லா புங்கனூர்த் தாலுகாவில் சாரால என்னும் பெயருடன் உள்ளது.
இனி, இவன் தந்தையின் காலத்தில் சோழ இராச்சி யத்திற்குத் தலைநகராயிருந்த கங்கைகொண்ட சோழபுரமே இவன் ஆட்சிக் காலத்தும் தலைநகராயிருந்தது என்பது, இவன் மேலைச்சளுக்கியரைப் போரில் வென்று ஜயத்திருவொடும் கங்காபுரி புகுந்தருளி னான் என்று கல்வெட்டுகள் கூறுவதால் நன்கறியப்படுகின்றது அப்பெருநகரில் சோழ கேரளன் மாளிகை என்னும் அரண்மனையில் இராசேந்திரசோழ மாவலி வாணராயன் என்ற அரியணையில் இவன் வீற்றிருந்து அறங்கள் புரிந்துள்ளமை கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.
இவ்வேந்தனுக்கு அந்நாளில் பல பட்டங்கள் வழங்கி வந்தன என்பது இவன் கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் அறியக்கிடக்கின்றது. அவை, சகல புவனாசிரயன், ஸ்ரீமேதினி வல்லவன், மகாராசாதிராசன், பரமேசுவரன், பரமபட்டாரகன், இரவிகுலதிலகன், சோழகுலசேகரன், பாண்டிய குலாந்தகன், ஆகவமல்லகுலகாலன் ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராசசேகரன், இராசாசிரயன், இராச ராசேந்திரன், வீரசோழன், கரிகாலசோழன், வீரன், இரட்ட ராசகுல காலன் என்பனவாம்.1 அவற்றுள் முதல் ஐந்து பட்டங்கள் மேலைச் சளுக்கிய மன்னர்கள் புனைந்து கொண்ட பட்டங்களாக இருத்தல் அறியத்தக்கது. அவர்களையும் பன்முறை வென்ற காரணம் பற்றி அவர்கள் பட்டங்களையும் இவ்வேந்தன் புனைந்து கொண்டனன் போலும்; மற்றுஞ் சில பட்டங்கள், மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆகவமல்லனையும் பாண்டியனையும் போரில் வென்று வாகை சூடியமைபற்றி இவன் புனைந்து கொண்டனவாகும்; வேறு சிலபட்டங்கள், இவன் தான் தோன்றிய குலத்தைச் சிறப்பித்தமை பற்றி எய்தியனவாகும். கரிகாலசோழன் என்பது இவன் தமையன் இரண்டாம் இராசேந்திரன் இவனுக்கு வழங்கிய பட்டம் என்று அவன் கல்வெட்டுக்களால் தெரிகிறது. வீரராசேந்திர சோழர் என்னும் இயற்பெயர் வீரசோழன் என்றும் வழங்கப்பெறுவது இயல்பேயாம்.
இனி, வீரராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் பாண்டி மண்டலத்தில் மிழலைக் கூற்றத்திலுள்ள பொன்பற்றி என்னும் நகரில் சிற்றரசனா யிருந்த புத்தமித்திரன் என்பான் இவன் விரும்பியவாறு ஐந்திலக்கணங் களும் அடங்கிய நூல் ஒன்றெழுதி அதற்கு வீரசோழியம் என்று பெயரிட்டுள்ளான். அந்நூலில் எல்லாவுலகும்-மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்றன்-நாவியல் செந்தமிழ்ச் சொல்3 எனவும், தேமேவியதொங்கற் றேர்வீரசோழன் றிருப்பெயரால்-பூமேலுரைப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே4 எனவும், இம்மன்னன் பாராட்டப்பெற்றிருப்பது அறியற்பாலது. எனவே, இவன் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனன் என்பது தேற்றம்.
இவ்வரசர் பெருமான் பட்டத்தரசி உலக முழுதுடையாள் என்னுஞ் சிறப்புப்பெயருடன் இவன் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளனள். முதற் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கி. பி. 1085-ல் வீரராசேந்திரன் மனைவி அருமொழி நங்கை என்பாள் தஞ்சை இராசராசேச்சுரக் கல்வெட்டொன்றில் சொல்லப்பட்டுள்ளனள். எனவே, அவ்வரசி தன் கணவன் இறந்த பிறகு பதினைந்து ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்தனள் எனலாம். உலக முழுதுடையாளும் அருமொழி நங்கையும் வெவ்வேறு மனைவியரோ அன்றி ஒருவரோ என்பது தெரியவில்லை.
இவனுக்கு மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன் என்னும் இரண்டு புதல்வர் இருந்தனர் என்பது இவன் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அவர்களுள் மதுராந்தகனுக்குச் சோழேந்திரன் என்ற பட்டம் வழங்கி, அவன் தொண்டை மண்டலத்தில் அரசப் பிரதிநிதியாயிருந்து ஆட்சிபுரிந்து வருமாறு இவன் முடிசூட்டினான்; மற்றொரு புதல்வனாகிய கங்கை கொண்ட சோழனுக்குச் சோழ பாண்டியன் என்னும் பட்டம் வழங்கி அவன் பாண்டி மண்டலத்தில் அரசப் பிரதிநிதியாயிருந்து அரசாண்டு வருமாறு முடிசூட்டினான்.2 எனவே, இவன் தன் புதல்வர்கள் அரசியல் முறையில் நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ச்சி யடையவேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்துடன் தன் ஆட்சிக்குட்பட்ட பிறமண்டலங்களில் அவர்களை அரசப் பிரதிநிதிகளாக அமர்த்தினனாதல் வேண்டும். இவனுக்கு ஒரு புதல்வி இருந்தனள் என்றும் அம்மகளை மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு இவன் மணஞ் செய்து கொடுத்தனன் என்றும் விக்கிரமாங்கதேவ சரிதம் கூறுகின்றது. அப்புதல்வியின் பெயர் தெரியவில்லை. இவனுக்குப் பிறகு முடிசூட்டப் பெற்றவனும் சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு மைத்துனன் என்று விக்கிரமாங்கதேவ சரிதத்தில் கூறப்பெற்றவனும் ஆகிய அதிராசேந்திர சோழன் மேலே குறிப்பிட்ட இரு புதல்வர்களுள் யாவன் என்பது புலப்படவில்லை. நம் வீரராசேந்திரன் தன் தமையன் ஆளவந்தான் என்பவனுக்கும் சுந்தரசோழன் என்பவனுக்கும் பட்டங்கள் வழங்கிச் சில நாடுகளுக்கு அவர்களை அரசப் பிரதிநிதிகளாக அமர்த்தினன் என்று இவன் கல்வெட்டு உணர்த்துகின்றது. ஆனால் அவர்களைப் பற்றியும் அவர்கட்கு அளிக்கப் பெற்ற நாடுகளைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.
இனி, இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசியல் அதிகாரி களாக இருந்தோர் பலர் ஆவர். இவனது திருமுக்கூடல் கல்வெட்டில் அரசியலில் சம்பந்தப்பட்ட எண்பதின்மர் பெயர்கள் காணப்படுகின்றன. வேறு கல்வெட்டுக்களிலும் பல அரசியல் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்களுள் சிலரைப்பற்றிய செய்திகளை அடியிற் காண்க.
1. சேனாபதி கங்கைகொண்ட சோழ தன்மபாலன்: இவன் திருமுக்கூடல் திருமால் கோயிலில் சனநாதன் மண்டபமும் திருச்சுற்று மாளிகையும் கட்டுவித்த வைசியன் மாதவன் தாமயன் என்பவனுடைய புதல்வன்; வீரராசேந்திரன் படைத்தலைவர்களுள் ஒருவன்; வைசிய குலத்தினன்; வயலைக்காவூரைத் தன் காணியாக உடையவன்.
2. சேனாபதி வீரராசேந்திர தன்மபாலன்: இவன் மேலே குறிப்பிடப்பெற்ற தலைவனுக்குத் தம்பியாவன். இவனும் வீரராசேந்திரன் காலத்துப் படைத்தலைவர்களுள் ஒருவன்.
3. இராசேந்திர மூவேந்த வேளான்: இவன் வீரராசேந்திரன் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; திருவரங்கன் என்னும் இயற் பெயருடையவன்; திருவொற்றியூரில் படம்பக்க நாதர் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அங்கு வீரராசேந்திரன் பெயரால் திருநந்தவனம் ஒன்றும் அமைத்தவன்.
4. சயசிங்ககுலகால விழுப்பரையன்: இவன் வீரராசேந்திரன் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; திருவொற்றியூர்க் கோயிலில் வீரராசேந்திரன் பிறந்த ஆயிலிய நாளில் திங்கள் தோறும் விழா நடைபெறுமாறு ஏற்பாடு செய்தவன்; எனவே இத்தலைவன் தன் அரசன்பால் கொண்டிருந்த பேரன்பு பெரிதும் பாராட்டத்தக்கது.
5. சேனாபதி வீரராசேந்திர காரானை விழுப்பரையன்: இவன் வீரராசேந்திரன் படைத்தலைவர்களுள் ஒருவன்; திருவாமாத்தூர்க் கோயிலுக்குப் பொன்னும் பசுக்களும் அளித்தவன்.
6. வீரராசேந்திர பிரமாதிராசன்: இவன் வீரராசேந்திரன் உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவன்.
7. தாழித்திருப்பனங் காடுடையானான வானவன் பல்லவரையன்: இவன் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டு நேரிவாயில் என்னும் ஊரினன்; வீரராசேந்திரன்பால் திருமந்திர ஓலை என்னும் உத்தி யோகத்தில் அமர்ந்திருந்தவன்.
8. திருவெண்காட்டு நங்கை மகன் சிவலோகநாதன்: இவன் வீரராசேந்திரன் பிறந்த ஆயிலியநாளில் திங்கள்தோறும் திருவெண் காட்டுப் பெருமானுக்குப் பாலுந் தேனுங்கொண்டு நீராட்டி வழிபடுதற்கும் விழா நடத்துதற்கும் சிவயோகிகள் முதலானோர்க்கு உணவளித்தற்கும் வேண்டும் நிவந்தங்கள் அளித்துள்ளான். திருவெண்காட்டுத் திருக்கோயிலில் பாடலாக அமைந்த கல்வெட்டொன்று இவனது தமிழ்ப் புலமையினையும் சிவபத்தியினையும் நன்கு புலப்படுத்துகின்றது. இவன் திருவொற்றியூரில் கூத்தப்பெருமான் எழுந்தருளியுள்ள கருங்கற் பீடத்தை அமைத்து அதற்கு வீரராசேந்திரன் என்று பெயரிட்டுள்ளமை இவன் வேந்தன்பால் வைத்திருந்த பேரன்பினை விளக்குவதாம்1 இச்செயல் களை நோக்குமிடத்து இவன் வீரராசேந்திர சோழனுடைய அதிகாரிகளுள் ஒருவனாதல் வேண்டுமென்பது பெறப்படும்.
இனி, இவ்வேந்தனுக்குப் பிறகு முடிசூட்டப்பெற்ற இவன் புதல்வன் அதிராசேந்திரனுடைய கல்வெட்டுக்களில் இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு2 குறிப்பிடப் பெற்றிருத்தலால் இவன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி.1067-ல் தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திர சோழன் என்னும் அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தனன். இவன் கி. பி. 1070-ன் தொடக்கத்தில் இறந்தவுடன் அவ்வதிராசேந்திர சோழனே முடிசூட்டப் பெற்றான். வீரராசேந்திரன் இறந்தவுடன் சோணாட்டில் முடிசூடும் உரிமை பற்றிக் கருத்து வேறுபாடு தோன்றிக் கலகம் உண்டாயினமையின் சளுக்கிய விக்கிர மாதித்தன் விரைந்து வந்து அக் கலகத்தை யடக்கித் தன் மைத்துனனாகிய அதிராசேந்திரனுக்கு முடிசூட்டிச் சென்றான் என்று விக்கிரமாங்க தேவசரிதம் கூறுகின்றது. அதனை அடுத்த அதிகாரத்தில் ஆராய்ந்து உண்மை காண்போம்.
அதிராசேந்திரசோழன் கி. பி. 1070
இவ்வேந்தன் வீரராசேந்திர சோழன் புதல்வன். அவன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த பின்னர், இவன் முடி சூட்டப்பெற்றுச் சோழமண்டலத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டான் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் தந்தை இராசகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந்தமையால் அவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற இம்மன்னன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டனன். முதல் குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழா சோழ மண்டலத்தில் கி. பி. 1070-ஆம் ஆண்டு சூன் திங்கள் 9-ம் நாள் நடைபெற்றது என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையாகும்.1 எனவே அதிராசேந்திரன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சில திங்களே ஆட்சி புரிந்தனனாதல் வேண்டும். இராசகேசரி வர்மனாகிய வீரராசேந்திர சோழனுக்கும் இராசகேசரி வர்மனாகிய முதற் குலோத்துங்க சோழனுக்கும் இடையில் பரகேசரி வர்மன் என்னும் பட்டமுடைய ஓர் அரசன் சோழநாட்டில் அரசாண்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அவ்விரு பெருவேந்தர்க்கும் நடுவில் பரகேசரி வர்மனாகிய நம் அதிராசேந்திரன் ஆட்சி புரிந்துள்ளனன் என்பது தெள்ளிது. விக்கிரமசோழன் உலாவில் அவ்விருவருக்கும் இடையில் அங்க வன்பின்-காவல் புரிந்தவனி காத்தோனும்2 என்று ஒரு சோழ மன்னன் குறிப்பிடப்பட்டிருப்பதும் அச்செய்தியை வலியுறுத்துதல் காண்க.
முடி சூடிய சில திங்கள்களில் இவ்வதிராசேந்திர சோழன் ஊழ்வினை வயத்தால் இறக்க நேர்ந்தது என்பது அவ்வாண்டி லேயே சூன் திங்களில் முதற் குலோத்துங்க சோழன் முடிசூட்டப் பெற்றிருத்தலால் நன்கு புலனாகின்றது. எத்துணை ஆற்றலும் வீரமும் படைத்த பெரு வேந்தனாயிருப்பினும் அவன், தன் வினை யொழிந்தால் முடிவெய்துவது ஒருதலை. இந் நிலையில், அதிராசேந்திர சோழன் ஆட்சியை ஏற்றுக்கொண்ட சில திங்கள்களில் இறந்தமைக்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றையும் ஈண்டாராய்ந்து உண்மை காணுதல் ஏற்புடையதேயாம்.
மேலைச்சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் வரலாறு எழுதிய வடமொழிப் புலவர் பில்ஹணர் என்பார், சோணாட்டில் நிகழ்ந்த உண்ணாட்டுக் கலகத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் என்று அந்நூலில் கூறியுள்ளனர். அன்றியும் அதிராசேந்திரனுக்கு முடிசூட்டு விழா நிகழ்த்த முயன்றபோது சோழ நாட்டில் பகைஞர்கள் புரிந்த இடையூறுகள் எல்லாவற்றையும் சளுக்கிய விக்கிரமாதித்தனே தன் ஆற்றலால் நீக்கி, இவனுக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிவிட்டுத் தன் நாட்டிற்குச் சென்றனன் என்றும் அவ்வாசிரியர் அந்நூலில் குறிப்பிட்டுள்ளனர். சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு வீரராசேந்திரன் புதல்வனாகிய அதிராசேந்திரன் மைத்துனனாதல் பற்றி இவனுடைய முடிசூட்டு விழாவிற்கு அவன் வந்திருத்தல் இயல்பேயாம். வீரராசேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர் கி. பி. 1067-ல் தன் புதல்வனாகிய அதிராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் பயிற்சி பெற்று வருமாறு செய்திருந்தனன் என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.
ஒவ்வொரு சோழ மன்னனும் தனக்குப் பிறகு பட்டம் பெற வேண்டியவன் யாவன் என்பதைத் தன் நாட்டு மக்களும் அரசியல் அதிகாரி களாகவுள்ள பல தலைவர்களும் நன்குணர வேண்டி, அவனுக்குத் தன் ஆட்சிக்காலத்திலேயே இளவரசுப் பட்டம் கட்டிவிடுவது அக்காலத்தில் நடைபெற்றுவந்த ஒரு வழக்கமாகும். அவ்வாறே வீரராசேந்திரனும் செய்துள்ள மையால் இளவரசுப் பட்டம் பெற்றிருந்த அதிராசேந்திரனுக்கு முடிசூட்டுவதில் சோழ நாட்டு மக்களும் அரசியல் அதிகாரிகளும் ஒருமனப்பட்டு உவப்புடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவனது முடிசூட்டுவிழா உள்நாட்டில் கலகமின்றிச் சிறப்பாக நடைபெற்றிருத்தல் வேண்டும். எனவே, சளுக்கிய விக்கிரமாதித்தன் பகைவர்களை வென்று இவன் முடி சூடுவதற்கு உதவி புரிந்தான் என்று பில்ஹணர் கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. அவர் தம் நூலின் தலைவனும் தம்மைப் பேரன்புடன் ஆதரித்துக் கொண்டிருந் தவனும் ஆகிய விக்கிரமாதித்தனைச் சிறப்பிக்க வேண்டியே அச்செய்தியைப் புனைந்துரையாகக் கூறியிருத்தல் வேண்டும். அதுபோலவே, அதிராசேந்திரன் சோழநாட்டில் நிகழ்ந்த கலகத்தில் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டான் என்றும், மிகச் சேய்மையிலிருந்த விக்கிரமாதித்தன் தக்க சமயத்திற் சென்று தன் மைத்துனனுக்கு உதவி புரிய முடியவில்லை என்றும் அவர் தம் நூலில் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளற்பாலதன்று. அதிராசேந்திரன் ஆட்சியில் சோழ மண்டலம் மிக அமைதியாக இருந்தது என்பது இவன் காலத்துக் கல்வெட்டுக்களால் புலனாகின்றது. திருமடந்தையும் சயமடந்தையும் திருப்புயங்களில் இனி திருப்ப1 எனவும், திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டிலம்2 எனவும் தொடங்கும் இவன் மெய்க்கீர்த்திகள் இரண்டும் இவ்வாறே இவ்வேந்தனை வீரமுந் தியாகமும் ஆரமெனப் புனைந்து மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர் என்று கூறுகின்றமையால் இவன் மக்களால் பெரிதும் போற்றப்பட்டுப் பெரும் புகழுடன் வாழ்ந்து வந்தனனாதல் வேண்டும். இவன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, தஞ்சாவூர் ஆகிய ஜில்லாக்களிலும் ஈழ மண்டலத்திலும் காணப்படுகின்றன. இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுள் ஒருவனும் படைத்தலைவன் ஒருவனும் காஞ்சிபுரத்தில் திருமயானமுடையார் கோயிலிலுள்ள கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து, திருவல்லம், திருக்காரைக்காடு முதலான ஊர்களிலுள்ள கோயில்களின் கணக்குகளை ஆராய்ந்து அக்கோயில்களுக்குச் சில புதிய நிவந்தங்கள் அளித்தமை அவ்வூர்களிலுள்ள கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது.1 இவ்வேந்தன், கி. பி. 1070-ஆம் ஆண்டில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் அரண்மனையில் இருந்து கொண்டு, தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய திருப்பாசூர்க் கோயிலுக்குரிய தேவதானமாகிய சேலை என்னும் ஊரை இறையிலியாக்கிய செய்தி அக்கோயிலில் வரையப் பெற்றுள்ளது. அதில் இம்மன்னனுடைய உடன் கூட்டத்ததி காரிகளும் மற்ற அரசியல் தலைவர்களும் கையெழுத் திட்டுள்ளனர்.2 இவற்றையும் இவைபோன்ற இவனுடைய பிற கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து, இவன் ஆட்சியில் அரசாங்க அலுவல்கள் எல்லாம் மிக்க அமைதியாகவே நடைபெற்று வந்தன என்பதும் படைத் தலைவர்களும் மற்ற அரசியல் அதிகாரிகளும் இவன்பால் பேரன்புடன் ஒழுகி வந்தனர் என்பதும் வெளியாகின்றன. எனவே, பில்ஹணர் கூறியுள்ளவாறு உள்நாட்டில் குழப்பமும் அமைதியின்மையும் ஏற்பட்டமைக்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க. ஆகவே, சோழ நாட்டில் நிகழ்ந்த குழப்பத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் என்று அவர் கூறியிருப்பது உண்மையன்று என்பது உணரற்பாலதாகும்.
சோழ மண்டலத்திற்கு வடக்கே பன்னூறு மைல் களுக்கப்பாலுள்ள கல்யாணபுரத்திலிருந்த பில்ஹணர், சோணாட்டு நிகழ்ச்சிகளை உண்மையாக உணர்ந்து கோடற்குத் தக்க வாய்ப்பும் அக்காலத்தில் இல்லை. யாண்டும் நிகழும் அரிய நிகழ்ச்சிகளையும் அரசாங்கச் செய்திகளையும் அறிதற்குத்தக்க கருவிகள் கிடைக்கின்ற இந்நாட்களில் கூட உண்மைக்கு மாறான பல செய்திகள் வெளிவந்து பரவுகின்றன. இத்தகைய கருவிகளுள் ஒன்றுமில்லாத பதினொன்றாம் நூற்றாண்டில் தமிழ் வழங்காத வடநாட்டிலிருந்த வடமொழிப் புலவர் ஒருவர் சோழ நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றை எங்ஙனம் உண்மையாக உணர்ந்து கூறமுடியும்?
இனி, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்று அதிராசேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றான் என்றும் இவன் உடல் நலம் பெறும் பொருட்டு அவ்வூர்க் கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள்தோறும் தேவாரப் பதிகங்கள் இருமுறை ஓதப்பெற்று வந்தன என்றும் கூறுகின்றது. இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு இருநூறாம் நாளுக்குப்2 பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. எனவே, நோய் வாய்ப்பட்டிருந்த இவ்வேந்தன் நலமுறாமல் அந்நாட்களில் உயிர்துறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்பது பொருந்தாமை காண்க.
இனி, ஒரு சோழமன்னன் தில்லைமாநகரில் சித்திர கூடத்திலிருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்துக் கடலில் எறிந்தமையோடு வைணவர் களையுந் துன்புறுத்தினான் என்றும் அதுபற்றி வைணவ ஆசாரியராகிய இராமாநுசர் தமிழ் நாட்டைத்துறந்து மைசூர் நாட்டிற்குப் போய்த் தங்கநேர்ந்தது என்றும் அந்நாட்களில் அவர் செய்த மாரண மந்திரத்தினால் அவ்வரசன் இறந்தனன் என்றும் வைணவர் அவனையே கிருமிகண்ட சோழன் என்பர் என்றும் திவ்யசூரி சரிதம், யதிராசவைபவம், இராமாநுசாசார்ய திவ்ய சரிதை ஆகிய வைணவ நூல்கள்3 கூறுகின்றன. அன்றியும், அவன் வைணவர்கட்கு இன்னல் இழைத்தமைப்பற்றிச் சோழர் மரபையே ஒழித்து அழித்து விடுவதாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் உரைத்தருளினார் என்றும் அத் திவ்யசூரி சரிதம் உணர்த்துகின்றது. நம் அதிராசேந்திரன் முடிசூடிய சில திங்கள்களில் இறந்தமையாலும் பண்டைச் சோழர் மரபு இவனோடு இறுதி எய்தியமையாலும் இவனே தில்லைச் சித்திரக்கூடத்தைச் சிதைத்துத் திருமாலைக் கடலில் கிடத்திய கிருமிகண்ட சோழனாயிருத்தல் வேண்டும் என்றும் அக்கொடுஞ்செயல் பற்றிச் சோழ நாட்டில் நிகழ்ந்த கலகத்தில் இவன் கொல்லப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்றனர். அவர்கள் கருத்தையும் ஆராய்ந்து உண்மை காண்பது இன்றியமையாத தாகும்.
நம் அதிராசேந்திரன் தன் முன்னோர்களைப்போல வைணவ சமயத்தில் சிறிதும் வெறுப்பின்றி அதன்பால் ஆதரவுகாட்டிச் சமயப் பொறையுடன் ஒழுகியவன் என்பதற்கும் சித்திரக்கூடத் திருமாலைக் கடலில் கிடத்தியவன் விக்கிரம சோழன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழனே என்பதற்கும் பல சான்றுகள் கல்வெட்டுக்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளன.3 அவையெல்லாம் இரண்டாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும்.
தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருவக்கரை சந்திர மௌளீசுவரர் சிவாலயத்திற்குள் இருந்த வரதராசப் பெருமாள் கோயில் அதிராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கருங்கற் கோயிலாகக் கட்டப்பெற்றது என்பது அவ்வூரில் காணப்படும் கல்வெட்டொன்றால்4 இனிது புலப்படுகின்றது. இச்செய்தி யொன்றை இவன் வைணவ சமயத்தை வெறுக்காமையோடு அதற்கு ஆதரவும் அளித்துச் சமயப்பொறையுடன் ஒழுகி வந்தான் என்பதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகு மன்றோ? எனவே, எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடைய வனாய் வாழ்ந்து வந்த இப்பெருங்குண வேந்தன் வைணவர் கட்கும் திருமால் கோயிலுக்கும் தீங்கிழைத்தான் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. அன்றியும் வைணவ நூல்களில் குறிப்பிடப் பெற்றுள்ள இராமாநுசர், அதிராசேந்திர சோழனுக்குக் காலத்தால் மிகப் பிற்பட்டவர் ஆவர். ஆதலால், இவ்வேந்தன் காலத்தில் அந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று கொள்வதும் ஏற்புடைத்தன்று. எனவே, வைணவர்களால் உள்நாட்டில் ஏற்பட்ட கலகத்தில் இவ்வரசன் கொல்லப் பட்டான் என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை என்பது உணரற்பாலதாகும்.
இனி, முதற் குலோத்துங்க சோழன், தான் சோழ நாட்டைக் கவர்ந்துகொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் நிகழுமாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். தம் வரலாற்று நூலின் தலைவனாகிய சளுக்கிய விக்கிர மாதித்தனைப் புனைந்துரை வகையில் பல படப் பாராட்டியும் அதற்கு முரணாக முதற் குலோத்துங்க சோழனுடைய ஆற்றல் வீரம் முதலானவற்றைக் குறைத்தும் குணஞ் செயல்களை இழிவுபடுத்தியும் கூறுவதையே தன் கொள்கையாகக் கொண்ட பில்ஹணர் என்னும் வடமொழிப் புலவர், அவன் அதிராசேந்திரனைக் கொன்று சோழ இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தால் அவன் செய்கையைத் தம் நூலிற் கூறாமற் போகார் என்பது ஒருதலை. இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று கூறும் அப்புலவர், அச்செய்கையைக் குறிப்பிடாமையொன்றே குலோத்துங் கனுக்கும் அதிராசேந்திரனுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதையும் அவனால் இவ்வேந்தன் கொல்லப்பட வில்லை என்பதையும் நன்கு புலப்படுத்தாநிற்கும். ஆகவே குலோத்துங்க சோழன் அதிராசேந்திரனைக் கொன்று சோழ நாட்டைக் கவர்ந்துகொண்டான் என்று கூறுவது எவ்வாற் றானும் பொருந்துவதன்று. இவன் நோய்வாய்ப்பட்டு இறந்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது.
இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படவில்லை. அதற்குக் காரணம், இவன் சில திங்கள்கள் மாத்திரம் ஆட்சி புரிந்துள்ளமை யேயாகும். வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில்தான் இவன் பட்டத்தரசியைப் பற்றிய குறிப்பு உளது. அஃது அவ்வரசியின் சிறப்புப் பெயர் உலக முழுதுடையாள் என்று உணர்த்துகின்றது. அவ்வரசியைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.
இனி, இவ்வரசன் ஆட்சிக்காலத்தில் நிலவிய அரசியல் தலைவர் களுள் சிலர் இவன் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றிருக்கின்றனர். அன்னோரைப் பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க.
1. ஆதித்த தேவனான இராசராசேந்திர மூவேந்த வேளான்:2 இவன் அதிராசேந்திரன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; காஞ்சிபுரத்தில் திருமயானமுடையார் கோயிலிலுள்ள கங்கை கொண்டான் மண்டபத்தி லிருந்து திருவல்லம், திருக்காரைக்காடு ஆகிய ஊர்களிலிலுள்ள கோயில் களின் கணக்குகளை இவன் ஆராய்ந்தனன் என்று காஞ்சிக் கல்வெட் டொன்று கூறுகின்றது. எனவே, இவன் அரசன் ஆணையின்படி அறநிலையகளை ஆராய்ந்து கண்காணித்து வந்தமையோடு சில கோயில்களில் புதிய நிவந்தங்கள் அமைத்துள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
2. சேனாபதி இராசராசன் பரநிருப இராக்கதனான வீரசோழ இளங்கோ வேளான்3: இவன் சோழ நாட்டில் திருவிடை மருதூருக்குத் தெற்கேயுள்ள நடார் என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன்; அதிராசேந்திர சோழனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன்; அரசனால் அளிக்கப்பெற்ற பரநிருப இராக்கதன், வீரசோழ இளங்கோ வேள் என்னும் பட்டங்களையுடையவன். காஞ்சி மாநகரிலிருந்து கோயில் கணக்கு
களை ஆராய்ந்த அதிகாரிகளுள் இவனும் ஒருவன்.
3. இராசராசன் சயங்கொண்ட சோழனான சேனாபதி இருக்குவேள்: இவன் அதிராசேந்திரன் காலத்திலிருந்த ஒரு படைத் தலைவன்; தென்னார்க்காடு ஜில்லாவைச் சேர்ந்த புறவார் பனங்காட்டூர் என்னுந் திருப்பதியில் சிவதர்ம மடம் என்ற மடம் ஒன்றமைத்து இதில் அவ்வூர்க்கு வரும் சிவனடியார்கட்கு உணவளிக்குமாறு இறையிலியாக நிலம் வழங்கியவன்.1 இவன் இருக்குவேள் என்னும் பட்டமுடையவ னாயிருத்தலால், ஒருகால் கொடும்பாளூர்க் குறுநிலமன்னனாக இருத்தல் கூடும். அதிராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் இவன் முதுமை எய்தியிருத்தல் வேண்டும். சைவ சமயத்தும் சிவனடியா ரிடத்தும் இவன் கொண்டிருந்த அன்பு மிகவும் பாராட்டத் தக்கது.
இனி அதிராசேந்திரனுக்குப் புதல்வன் இல்லாமையாலும் சோழ நாட்டில் முடிசூட்டப்பெறுவதற்குரிய வேறு சோழ அரசகுமாரன் ஒருவனும் அத்தொல் பெருங்குடியில் இன்மை யாலும் புகழும் பெருமையும் வாய்ந்த விசயாலய சோழன் காலம் முதல் சோழ நாட்டில் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த பண்டைச் சோழ மன்னர் மரபு கி. பி. 1070-ஆம் ஆண்டில் இவ்வதிராசேந்திர சோழனோடு முடிவெய்தியது எனலாம். இவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற முதற் குலோத்துங்க சோழன், தந்தை வழியில் கீழைச்சளுக்கியர் மரபையும் தாய் வழியில் சோழர் மரபையும் சேர்ந்தவன் ஆவன். குலோத்துங்கனுக்குச் சோழ ராச்சியம் எவ்வாறு கிடைத்த தென்பதை அடுத்த அதிகாரத்தில் காண்க.
சேர்க்கை - 1
சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்
மெய்க்கீர்த்தி என்பது பேரரசனது மெய்ப்புகழையும் வரலாற்றையும் எடுத்துரைத்து, அவன் தன் மாதேவியருடன் நீடு வாழ்க என வாழ்த்தி, அம்மன்னன் இயற்பெயரோடு சிறப்புப் பெயர்களையும் ஆட்சியாண்டினையும் கூறும் செய்யுளாகும். இதனைச் சீர்மெய்க்கீர்த்தி என்றும் வழங்குவர். இதன் இலக்கணத்தை,
‘சீர்நான் காகி யிரண்டடித் தொடையாய்
வேந்தன் மெய்ப்புக ழெல்லாஞ் சொல்லியும்
அந்தத் தவன்வர லாறு சொல்லியும்
அவளுடன் வாழ்கெனச் சொல்லியு மற்றவன்
இயற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத்
திறப்பட வுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி’
என்னும் பன்னிருபாட்டியல் சூத்திரத்தால் நன்குணரலாம். அன்றியும், வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியலின் ஆசிரியராகிய குணவீர பண்டிதர் என்பார், தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீரடியால் எழிலரசர் செய்தி இசைப்பர் என்று கூறியிருத்தல் அறியத்தக்கது. இது பெரும் பான்மை அகவ லோசையும் சிறுபான்மை கலியோசையும் கொண்டு அமைந்துள்ளது. இத்தகைய மெய்க்கீர்த்தியைக் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் உண்டு பண்ணியவன் பெருவேந்தனாகிய முதல் இராசராச சோழனே யாவான். அவனுக்குப் பிறகு அவன் வழிவந்த சோழ மன்னர்களும் பாண்டி வேந்தர்களும் அச்சிறந்த செயலைத் தாமும் மேற்கொண்டு ஒழுகுவாராயினர். பேரரசர் களாக விளங்கிய தமிழ் வேந்தர்களின் கல்வெட்டுக்களில்தான் மெய்க் கீர்த்தி காணப்படுகிறதேயன்றிக் குறுநில மன்னர் முதலான ஏனையோர் கல்வெட்டுக்களில் காணப்படாமை குறிப்பிடத்தக்கது.
முதல் இராசராச சோழனுக்கு முன் அரசாண்ட சோழ மன்னர்கள் தம் இயற் பெயர்களோடு தம் வீரச் செயல்களையுணர்த்தும் அடைமொழிகள் அமைந்த பட்டங் களையும் சேர்த்துக் கல்வெட்டுக்கள் வெளியிட்டுள்ளனர். அவ்வுண்மையை, விசயாலய சோழன் தஞ்சைகொண்ட கோப்பரகேசரி வர்மன் எனவும், முதல் ஆதித்த சோழன் தொண்டை நாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டனான ராசகேசரிவர்மன் எனவும், முதற் பராந்தக சோழன் மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன் எனவும், இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் மதுரை கொண்ட கோ இராசகேசரிவர்மன் எனவும், பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் எனவும், தத்தம் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருத்தலால் நன்கறிந்து கொள்ளலாம். முதல் இராசராச சோழனும் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்களிலே மெய்க்கீர்த்தியின்றிக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன் என்றுதான் தன்னைக் குறித்துள்ளனன். எனவே அவனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 993-தான் அவன் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தியை முதலில் வரையத் தொடங்கிய காலமாகும். அவ்வாண்டிற்கு முன்னர் அவன் நிகழ்த்திய போர்ச் செயல்கள் எல்லாவற்றையும் நிரலே அமைத்து அம்மெய்க்கீர்த்தி எழுதப்பெற்றிருத்தல் அறியத்தக்கது. ஆண்டுதோறும் நிகழும் அரசனுடைய வீரச் செயல்களும் புகழுக்குரிய பிற செயல்களும் மெய்க்கீர்த்தியில் அவ்வப்போது தவறாமல் சேர்க்கப்பெற்று வந்தமை உணரற் பாலதொன்றாம். ஆகவே அரசனது ஆட்சி யாண்டுகள் மிகுந்து செல்லச் செல்ல, மெய்க்கீர்த்தியும் பெருகிக் கொண்டே போகும் என்பது ஒருதலை. அதனால், ஒரு வேந்தன் ஆட்சியில் எவ்வெவ்வாண்டில் எவ்வெவை நிகழ்ந்தன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அன்றியும், ஒவ்வொரு மன்னனுடைய மெய்க்கீர்த்தியும் வெவ்வேறு மங்கல மொழித் தொடரால் தொடங்கப் பெற்றிருத்தலால் அதில் முதலில் காணப்படும் தொடர்மொழியினைக் கொண்டே அக்கல்வெட்டு இன்ன வேந்தன் காலத்தது என்பதை எளிதாய் அறிந்து கொள்ளலாம். ஆகவே, வரலாற்றாராய்ச்சிக்குப் பல்வகையாலும் பயன்படுவதும் பண்டைத் தமிழ் வேந்தர்களின் பேரும் புகழும் என்றும் நிலைபெறும்படி செய்வதும் ஆகிய மெய் கீர்த்தியைத் தன் கல்வெட்டுக்களில் முதலில் அமைத்து நம் நாட்டிற்கு நலம் புரிந்துள்ள முதல் இராசராச சோழனது பேரறிவுடைமை அளவிட்டுரைக்குந் தரத்ததன்று. அவன் முன்னோர்கள், தம் பெயர்களுக்கு முன்னர்க் கல்வெட்டுக்களில் பொறித்துவந்த வீரச் செயல்களைக் கூறும் அடைமொழிகளும் அவன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் வென்றடிப் படுத்திய சேர நாட்டிற் கிடைத்த பதிற்றுப்பத்து என்னும் நூலில் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் காணப்படும் பண்டைச் சேர மன்னர்களின் மெய்க் கீர்த்திகளாகிய பதிகங்களும் இத்தகைய மெய்க்கீர்த்தி யொன்று அமைக்கும் எண்ணத்தை அவன் உள்ளத்தில் தோற்றுவித்தனவாதல் வேண்டும். அவ்வெண்ணமும் கி. பி. 993-ம் ஆண்டில் நிறைவேறியது. அவ்வாண்டிலேயே அவ்வரசர் பெருமான் கல்வெட்டுக்களில் திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் - தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொள என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியும் தோன்றுவதாயிற்று. இராசராசன் தன் வழித்தோன்றல்கள் தான் செய்த வீரச்செயல்களை யுணருமுகத்தால் சோழர் பேரரசை என்றும் நின்றுநிலவச் செய்தற்குரிய ஆற்றலும் ஊக்கமும் உடையராதல் வேண்டும் என்ற விருப்பத்தினாலேயே தன் மெய்க்கீர்த்தியைக் கல்வெட்டு களிற் பொறித்தனனாதல் வேண்டும். அவன் கருதியவாறே அவனுக்குப் பின்வந்த சோழ மன்னர்களும், பேராற்றலும் பெருவீரமுமுடையவர்களாய் வெளி நாடுகளையும் வென் றடக்கிச் சோழர் பேரரசைப் பேணிவந்தமை அவர்களுடைய கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது.
நம் இராசராசனுக்குத் திருமகள் போல என்று தொடங்கும் இந்த ஒரே மெய்க்கீர்த்திதான் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சில சோழ மன்னர்கட்கு ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க்கீர்த்திகளும் கல்வெட்டுகளில் வரையப்பெற்றுள்ளன. தமிழ் வளம் நிறைந்த இம்மெய்க்கீர்த்திகள் எல்லாம் அவ்வேந்தர்களின் அவைக்களப் புலவர்களாக விளங்கிய பெருமக்களால் பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.
முதல் இராசராச சோழன்
திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி
வேங்கை நாடுங் கங்க பாடியுந்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
முரட்டொழிற் சிங்கள ரீழமண்டலமும்
இரட்டபாடி யேழரை யிலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரமுந்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
னெழில் வள ரூழியு ளெல்லா யாண்டுந்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள் கோராச கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராச ராச தேவர்க்கு யாண்டு.
திருக் கோவலூர்க் கல்வெட்டுப் பகுதி
. . . . . . . . . . . ஜயஜய வெ(ன்று) மொழி
பன்னிய வாய்மையிற் பணியப் பொன்னியல்
விசும்பரிற் கதமும் பசும்பரி வெள்ளுளை
நெடுஞ்சுவற் றெடுத்த குறுந்துனைப்படுங்க
நள்ளுறப் பொன்ஞாண் வள்ளுற வச்சத்
தனிக்கா லரசு மனக்காற் கங்குற்
குழம்புபடு பேரிருட் (பி)ழம்புபட வுருட்டிய
செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன்
வழிமுதல் வந்த மஹிபதி வழிமுத
லதிபதி நரபதி அவபதி . . . . . .
கஜபதி கடலிடங் காவலன் மதிமுதல்
வழுதியர் வரைபுக மற்றவர் தேவிய
ரழுதுய ரழுங்கலி லழுங்கப் பொழுதியல்
வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக்
கலிங்கன் கன. . . கப் பா. . . லங்கன் அ(ம்)(ம) …
புதுமலர் வாகை புனைந்து நொதுமலர்
கங்கபாடி கவ்விக் கொங்கம்
வெளி(ப்)படுத் தருளி யளிபடுத்தருளி
சாரல் மலை யட்டுஞ் சேரன் மலைஞாட்டுத்
தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத்
துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற்
கோபுரங் கோவை குலைய மாபெரும்
புரிசை வட்டம் பொடிபடப் புரிசைச்
சுதை கவின் படைத்த சூளிகை மாளிகை
யுதைகைமுன் னொள்ளெரி கொளுவி உதைகை
வேந்தைக் கடல்புக வெகுண்டு போந்து
சூழமண்டலந் தொழ வீழமண்டலமுங்
கொண்டு தண்டருளிப் பண்டு தங்க டிருக்
குலத்தோர் தடவரை எழுதிய
பொங்குபுலிப் போத்துப் புதுக்கத் துங்கத்
திக்கினிற் சேனை செலுத்தி மிக்க
வொற்றை வெண்குடைக்கீ ழிரட்டை வெ(ண்) கவரி
தெற்றிய வனலந் திவள வெற்றியுள்
வீற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந்
தண்டமிழ்நாடன் சண்டபராக்கிரமன்
திண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான்
செந்திரு மடந்தைமன் ஸ்ரீராஜ ராஜன்
இந்திர ஸமானன் ராஜஸர் வஞ்ஞனெனும்
புலியைப் பயந்த பொன்(ம)ன் கலியைக்
கரந்து கரவாக் காரிகை சுரந்த
முலை(ம)கப் பிரிந்து முழங்கெரி நடுவணுந்
தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந்
தூண்டா விளக்கு . . . . . . சி சொல்லியல்
அரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான்
புரைசைவண் களிற்றுப் பூழியின் விரைசெயு
(மாதவித்) தொங்கல் மணிமுடி வளவன்
சுந்தர சோழன் மந்தர தாரன்
திருப்புய முயங்குந் தேவி விருப்புடன்
வந்துதித்தருளிய மலையர் திருக்குலத்தொ
ரன்மையாக தமரகத்தொன்மையிற்
குலதெய்வ . . . . . கொண்டது நலமிகுங்
கவசந் தொடுத்த கவின் கொளக் கதிர்நுதித்
துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப்
புளகப் புதவக் களகக் கோபுர
வாயின் (ம)ட மாளிகை வீதித்
தேசாந் தன்மைத் தென்றிருக் கோவலூ
ரீசரந் தன்றக்க வன்றது மீசரங்
குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக்
காளா கருவுங் கமழ் சந்தனமுந்
தாளார் திரளச்சரளமு நீளார்
குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற்
பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர்
புதுமதிகிடறிப் போர்க்கலிங் கிடந்து
மொது மொது முதுதிரை விலகிக் கதுமென
வன்கரை பொருது வருபுனற் பெண்ணை
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் டடக்கைப் பாரி தனடைக்கலப்
பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல
மினல் புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்
கனல் புகுங் கபிலக்கல்லது புனல்வளர்
பேரெட்டான வீரட்டானம்
அனைத்தினு மனாதி யாயது நினைப்பினு
முணர்தற் கரியது யோகிக ளுள்ளது
புணர்தற் கினியது பொய்கைக் கரையது
சந்தன வனத்தது சண்பகக் கானது
நந்தன வனத்தி னடுவது பந்தற்
சுரும்படை வெண்பூங் கரும்பிடை துணித்தரத்
தாட்டொலி யாலையயலது பாட்டொலிக்
கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள்
பசுந்தாட்டிரியுஞ் செந்நெற் பழனத்
தசும்பார் கணி….. யவற்றை யருக்க னருச்சனை முற்றிய
நான்மறை தெரிந்து நூன்முறை யுணர்ந்தாங்
கருச்சனா விதியொடு தெரிச்ச வாகமத் தொழில்
மூவெண் பெயருடை முப்புரி நூலோர்
பிரியாத் தன்மைப் பெருந்திரு வுடையது
பாடகச் சீறடிப் பணைமுலைப் பாவையர்
நாடகத் துழநி நவின்றது சேடகச்
சண்டையுங் கண்டையுந் தாளமு(ங்காள)முங்
கொண்டதிர் படகமுங் குளிறு மத்தளங்களுங்
கரடிகைத் தொகுதியுங் கைமணிப் பகுதியு
முருடியல் திமிலை முழக்கம் மருடரு
வால்வளைத் துணையு மேல்வளைத் தணையுங்
கருப்பொலி மேகமுங் கடலுமெனக் கஞலி
திருப்பொலி திருப்பலி சினத்து விருப்பொலிப்
பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ்
நாவலர் நாற்கவி நவின்றது ஏவலி
லருஷையொ டரஹரவெனக் குனித் தடிமைசெய்
பருஷையர் வெஹுவிதம் பயின்றது அருஷைமுக்
கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது
மண்ணவர் தொழுவது வானவர் மகிழ்வது
மற்று மின்ன வளங்கொள்மதிற் பதாகைத்
தெற்றுங் கொழுநிழற் சிவபுரத்தாற்குப்
பன்னாணிலைபெற முன்னா ளுரவோன்
செய்த தானம்.
முதல் இராசேந்திர சோழன்
(கங்கைகொண்ட சோழன்)
திருமன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவிய ரோங்கெழின் முடியும்
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த
சுந்தர முடியு மிந்திர னாரமும்
தெண்டிரை யீழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசுராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும்
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமு
முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரகவையிற்
சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
சிட்டருஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணறத் தாக்கித்
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடை லுத்தர லாடமும்
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடராத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்
துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்
வண்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடுந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும்
தொடுகடற் காவற் கரடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு.
இராசாதி ராச சோழன்
திங்களேர் தருதன் றொங்கல்வெண் குடைக்கீழ்
நிலமக ணிலவ மலர்மகட் புணர்ந்து
செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து
தன்சிறிய தாதை யுந்திருத் தமையனுங்
குறிகொடன் னிளங்கோக் கிளையு நெறியுணர்
தன்றிருப் புதல்வர் தம்மையுந் துன்றெழில்
வானவன் வில்லவன் மீனவன் கங்க
னிலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன்
கன்னகுச்சி யர்கா வலனெனப் பொன்னணி
சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படர்புக
ழாங்கவர்க் கவர்நா டருளிப் பாங்குற
மன்னுபல் லூழியுட் டென்னவர் மூவருள்
மானா பரணன் பொன்முடி யானாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
வாரள வியகழல் வீரகே ரளனை
முனைவயிற் பிடித்துத் தனது வாரணக்
கதக்க ளிற்றினா லுதைப்பித் தருளி
அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தர பாண்டியன்
கொற்றவெண் குடையுங் கற்றைவெண் கவரியும்
சிங்கா தனமும் வெங்களத் திழந்துதன்
முடிவிழத் தலைவிரித் தடிதளர்ந் தோடத்
தொல்லை முல்லையூர்த் துரத்தி யொல்கலில்
வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி
மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து
மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன்
நாடுவிட்டோடிக் காடுபுக் கொளிப்ப
வஞ்சியும் புதுமலர் மலைந்தாங் கெஞ்சலில்
வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத்
தாகவ மல்லனு மஞ்சற் கேவுதன்
தாங்கரும் படையா லாங்கவன் சேனையுட்
கண்டப் பயனும் கங்கா தரனும்
வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல்
விருதர் விக்கியும் விசயா தித்தனுங்
கருமுரட் சாங்க மய்யனு முதலியர்
சமர பீருவொத் துடைய விரிசுடர்ப்
பொன்னோ டைக்கரி புரவியொடும் பிடித்துத்
தன்னா டையிற் சயங்கொண் டொன்னார்
கொள்ளிப் பாக்கை யுள்ளெரி மடுப்பித்
தொருதனித் தண்டாற் பொருகட லிலங்கையர்
கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும்
முன்றனக் குடைந்த தென்றமிழ் மண்டல
முழுவ தும்மிழந் தெழுகட லீழம்
புக்கவிலங் கேசனாகிய விக்கிரம
பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு
தன்ன வாக்கித்தன் கன்னகுச் சியினும்
ஆர்கலி யீழஞ் சீரிதென் றெண்ணி
உளங்கொளந் நாடுதன் னுறவொடும் புகுந்து
விளங்குமுடி கவித்த லீரசலா மேகன்
போர்க்களத் தஞ்சித் தன் கார்க்களி றிழிந்து
கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன்
றவ்வையைப் பிடித்துத் தாயைமூக் கரிய
ஆங்கவ மானம் நீங்குதற் காக
மீட்டும் வந்து வாட்டொழில் புரிந்து
வெங்களத் துலந்தவச் சிங்களத் தரசன்
பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந்
துரைகொளீழத் தரசனா கியசீ
வல்லவ மதன ராசன் மெல்லொளித்
தடமணி முடியுங் கொண்டு வடபுலத்
திருகா லாவதும் பொருபடை நடாத்திக்
கண்டர் தினகரன் நாரணன் கணவதி
வணடலர் தெரியன் மதுசூ தனனென்
றெனைப்பல வரைசரை முனைவயிற் றுரத்தி
வம்பலர் தருபொழிற் கம்பிலி நகருட்
சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில்
வில்லவர் மீனவர் வேள்குலச் சளுக்கியர்
வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர்
சிந்துர ரையணர் சிங்களர் பங்களர்
அந்திரர் முதலிய வரைசரிடு திறைகளும்
ஆறிலொன் றவனியுட் கூறுகொள் பொருள்களும்
உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து
விசுவலோ கத்தும் விளங்கமனு நெறிநின்
றசுவமே தஞ்செய் தரைசுவீற் றிருந்த
சயங்கொண்ட சோழனுயர்ந்த பெரும்புகழ்க்
கோவிராச கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராசாதிராச தேவர்க்கு யாண்டு.
இரண்டாம் இராசேந்திர சோழன்
திருமாது புவியெனும் பெருமாத ரிவர்தன்
மாதே வியர்க ளாக மீதொளிர்
வெண்குடை யுயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்
சிறிய தாதையாகிய வெறுழ்வலிக்
கங்கை கொண்ட சோழனைப் பொங்கிகல்
இருமுடிச் சோழ னென்றும் பெருமுரட்
டன்றிருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழனைத் தெம்முனை யடுதிறற்
சோழ பாண்டிய னென்றுங் கோழிமன்
றொடுகழல் வீரசோழனைப் படிபுகழ்
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வாள்வலித் தடக்கை மதுராந் தகனைச்
சோழ கங்க னென்றுந் தோள்வலி
மேவிகல் பராந்தக தேவனைச் சோழ
வயோத்திய ராச னென்றும்
இருதயத் தன்பொடு கருது காதலருள்
இத்த லம்புக ழிராசேந்திர சோழனை
உத்தம சோழ னென்றுந் தொத்தணி
முகையவி ழலங்கன் முடிகொண்ட சோழனை
இகல்விச யாலய னென்றும் புகர்முகத்
தேழுயர் களிற்றுச் சோழகே ரளனை
வார்சிலைச் சோழ கேரள னென்றுங்
திண்டிறற் கடாரங் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழனை
கனக ராச னென்றுங் கனைகடற்
படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழ னென்றுஞ் செந்தமிழ்ப்
பிடிகளிற் றிரட்ட பாடி கொண்ட
சோழனைத் தொல்புலி யாளுடைச் சோழ
கன்னகுச் சியராச னென்றும் பின்னுந்தன்
காதலர் காதலர் தம்முள் மேதகு
கதிராங் கனைகழல் மதுராந் தகனை
வெல்படைச் சோழ வல்லப னென்றும்
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழ னென்றும பருமணிச்
சுடரணி மகுடஞ் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினு ளிகல்வேட் டெழுந்துசென்
றொண்டிற லிரட்ட மண்டல மெய்தி
நதிகளும் நாடும் பரிகளு மநேகம்
அழித்தனன் வளவனெனு மொழிப்பொருள் கேட்டு
வேகவெஞ் சளுக்கிய ஆகவமல்லன்
பரிபவ மெனக்கிதென் றெரிவிழித் தெழுந்து
செப்பருந் தீர்த்தக் கொப்பத் தகவையிற்
சென்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினுந்
தன்றிருத் துடையினுங் குன்றுறழ் புயத்தினுந்
தைக்க வுந்தன் னுடன்களி றேறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா
லொருதனி யநேகம் பொருபடை வழங்கியம்
மொய்ம்பமர் சளுக்கி தம்பிசய சிங்கனும்
போர்ப்புல கேசியுந் தார்த்தச பன்மனு
மானமன் னவரின் மண் டலியசோ கையனும்
ஆனவன் புகழா ரையனுந் தேனிவர்
மட்டவி ழலங்கல் மொட் டையனுந் திண்டிறல்
நன்னி நுளம்பனு மெனுமிவர் முதலினர்
எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி
வன்னிய ரேவனும் வயப்படைத் துத்தனுங்
கொன்னவில் படைக்குண்ட மய்யனு மென்றின
வெஞ்சின வரைசரோ டஞ்சிச் சளுக்கி
குலங்குலை குலைந்து தலைமயிர் விரித்து
வெந்நுற் றொளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பரிந் தோடி மேல்கடற் பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு
சத்துருபயங் கரன்கர பத்திரன் மூல
பத்திர சாதி பகட்டரை சநேகமும்
எட்டுநிரை பரிகளு மொட்டக நிரைகளும்
வராகவெல் கொடிமுத லிராசபரிச் சின்னமும்
ஒப்பில்சத்தி யவ்வை சாங்கப்பையென் றிவர்மூதல்
தேவியர் குழாமும் பாவைய ரீட்டமு
மினையன பிறவு முனைவயிற் கொண்டு
விசையா பிடேகம் செய்துதென் றிசைவயிற்
போர்ப்படை நடாத்திக் கார்க்கட லிலங்கையில்
விறற்படைக் கலிங்கர்மன் விரசலா மேகனைக்
கடகளிற் றொடுபடக் கதிர்முடி கடிவித்
திலங்கையர்க் கிறைவன் மானா பரணன்
காதல ரிருவரைக் களத்திடைப் பிடித்து
மாப்பெரும் புகழ் மிகவளர்த்த கோப்பரகேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர தேவர்க்கு யாண்டு.
இராச மகேந்திர சோழன்
திருமகள் விளங்க விருநில மடந்தையை
ஒருகுடை நிழற்கீ ழினிதுறப் புணர்ந்து
தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய
உடையார் ஸ்ரீராசமகேந்திர தேவர்க்கு யாண்டு.
வீரராசேந்திர சோழன்
I
திருவளர் திரள்புயத் திருநில வலயந்
தன்மணிப் பூணெனத் தயங்கப் பன்மணிக்
கொற்றவெண் குடைநிழற் குவலயத் துயிர்களைப்
பெற்ற தாயினும் பேணி மற்றுள
அறைகழ லரையர்தன் னடிநிழ லொதுங்க
உறைபிலத் துடைகலி யொதுங்க முறைசெய்து
விரைமலர்த் தெரியல் விக்கலன் றன்னோடு
வரிசிலைத் தடக்கை மாசா மந்தரைக்
கங்கபாடிக் களத்திடை நின்றுந்
துங்கபத் திரைபுகத் துரத்தி யங்கவர்
வேங்கைநன் னாட்டிடை மீட்டுமவர் விட்ட
தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி
மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச்
செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவ
னொருமக ளாகிய விருகையன் றேவி
நாகலை யென்னுந் தோகையஞ் சாயலை
முகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர்
முன்றாம் விசையினு மேன்றெதிர் பொருது
பரிபவந் தீர்வனெனக் கருதிப் பொருபுனற்
கூடல் சங்கமத் தாகவ மல்லன்
மக்க ளாகிய விக்கலன் சிங்கண
னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை
வென்றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை
மன்னருந் தானும் பின்னடுத் திருந்து
வடகட லென்ன வகுத்தவத் தானையைக்
கடகளி றொன்றாற் கலக்கி யடல்பரிக்
கோசலைச் சிங்கனைக் கொடிபட முன்னர்த்
தூசிவெங் களிற்றொடுந் துணித்துக் கேசவ
தண்ட நாயகன் தார்க்கேத் தரையன்
திண்டிறல் மாரயன் சினப்போத் தரைய
னிரேச்சய னிகல்செய்பொற் கோதைமூ வத்தியென்
றார்த்தடு துப்பி லநேகசா மந்தரைச்
சின்னபின்னஞ் செய்து பின்னை
முதலி யான மதுவண னோட
விரித்த தலையோடு விக்கல னோடச்
செருத்தொழி லழிந்து சிங்கணனோட
அண்ணல் முதலிய அனைவரு மமர்பொரப்
பண்ணிய பகடிழிந் தோட நண்ணிய
ஆகவ மல்லனு மவர்க்கு முன் னோட
வேகவெங் களிற்றினை விலக்கி வாகைகொண்
டங்கவர் தாரமு மவர்குல தனமுஞ்
சங்குந் தொங்கலுந் தாரையும் பேரியும்
வெண்சா மரையு மேக டம்பமும்
சூகரக் கொடியும் மகரதோரணமும்
ஒட்டக நிரையு முலோக சனமும்
புட்பகப் பிடியும் பொருகளிற் றீட்டமும்
பாய்பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி
வீரசிங் காதனம் பார்தொழ வேறி
எழிறர வுலக முழுதுடை யாளொடும்
விசையமணி மகுட மேய்ந்து எழில் கொள்
தத்துமாப் புரவிப் பொத்தப்பி வேந்தனை
வாரணை வன்கழற் கேரளன் றன்னைத்
தார்சன நாதன் றம்பியைப் போர்க்களத்
தலங்கல்சூழ் பசுந்தலை யரிந்து பொலங்கழல்
தென்னவன் ஸ்ரீவல்லவன் மகன் சிறுவன்
மின்னவில் மணிமுடி வீரகே சரியை
மதவரை யொன்றா லுதைப்பித் துதகையிற்
கேரளர் தங்குல செங்கீரை யோடும்
வேரறப் பறிந்தோடி மேல்கடல் லீழ
வாரண மருகுளி செலுத்தி வாரியி
லெண்ணருங் களிற்றின மிரட்டரைக் கவர்ந்த
கண்ணியற் களிற்றொடுங் கட்டிப் பண்ணுப்
பிடியொடு மாங்கவர் விடுதிறை தந்த
வேழ நிரைகொண்டு சூழி புனல்
கொண்டாற் றுறவிற் குறித்த வெம்போரில்
தண்ட நாயகர் தம்மில் திண்டிறல்
மல்லியண் ணனையு மஞ்சிப் பய்யனையும்
பில்குமதக் களிற்றுப் பிரமதே வனையும்
தண்டா ரசோகையன் தன்னையுங் திண்டிறற்
சத்தியண் ணனையுஞ் சந்திவிக் கிரகப்
பத்தி யண்ணன் றன்னையு மத்தகு
தேமரு தெரியல் வீமயன் றன்னையு
மாமதி வங்கா ரனையும் நாமவேற்
கங்கனை நுளம்பனைக் காடவர் கோனை
வம்புமத யானை வைதும்ப ராயனை
யிருந்தலை யரிந்து பெரும்புனற் றனாது
கங்கை மாநகர் புகுந்தபின் திங்களின்
வழிவரு சளுக்கியிப் பழியொடு வாழ்வதிற்
சாவது சால நன்றென் றேவமுற்
றுன்னிய சிந்தைய னாகி முன்னம்
புதல்வருந் தானு முதுகிட் டுடைந்த
கூடலே களமெனக் குறித்துக் கூடலில்
வாரா தஞ்சினர் மன்ன ரல்லர்
போர்ப்பெ ரும்பழிப் புரட்ட ராகவென்
றியாவரு மறிய வெழுதிய சபத
மேவரு மோலை விடை யொடுங் கொடுத்தவ்
விரட்ட பாடிப் புரட்டரில் மேதகு
கங்கா கேத்தனை யேவ ஆங்கவன்
வந்தடி வணங்கி வாசக முரைத்தலும்
சிந்தையு முகமுந் திருப்புய மிரண்டும்
ஏந்தெழி லுவகையோ டிருமடங்கு பொலியப்
போந்தப் போர்க்களம் புகுந்து கரந்தையில்
வல்லவர் கோனை வரவு காணாதவன்
சொல்லிய நாளின் மேலுமோர் திங்கள்
பார்த்தினி திருந்த பின்னைப் பேர்த்தவன்
கால்கெட வோடி மேல்கட லொளித்தலுந்
தேவ நாதனுஞ் சித்தியுங் கேசியும்
மூவருந் தனித்தனி முதுகிடப் பாவரும்
இரட்ட பாடி ஏழரை யிலக்கமும்
முரட்டொழி லடக்கி முழங்கெரி மூட்டி
வெங்கதப் புலியேறு வியந்து விளையாடத்
துங்கபத் திரைகரைச் செயபத் திரத்தூண்
நானிலம் பரச நாட்டி மேனாள்
வந்தவப் புரட்டனை வல்லவ னாக்கிக்
கந்தரக் கண்டிகை சூட்டியக் குந்தளத்
தரசனும் மக்களும் ஐம்மடி யஞ்சித்தன்
புரசை யானைப் புழைக்கையிற் பிழைத்திவ்
வுலகெலா மறிய ஓடிய பரிசொரு
பலகையிற் பழுதற எழுதிய பின்னை
சார்த்தின வுரையுஞ் சளுக்கி பதமேற்ற
பூத்தள மார்வொடு பூட்டிப் பேர்த்துந்
தாம்கைக் கொண்ட வேங்கைநன் னாடு
மீட்டுக் கொண்டலான் மீள்கிலங் கேட்டுநீ
வல்ல னாகில் வந்துகாக் கென்று
சொல்லெனச் சொல்லிப் போக்கி எல்லையங்
கடுத்தவத் தரனை எழில்விசய வாடையோ
டடுத்த பேராற்றில் வந்து தடுத்த
சனநா தனையுந் தண்டநா யகனாம்
இனமார் கடக்களிற் றிராசமய் யனையும்
திப்பர சனையு முதலாக வுடைய
அப்பெருஞ் சேனையை யடவியிற் பாய்ச்சிக்
கோதா விரியில்தன் கோதக நீருணக்
கலிங்க மேழுங் கடந்த புலிவலம்
பொறித்த விமய மகேந்திரத் தளவும்
மேவருந் தானைத் தாவடி செலுத்தி
வேங்கை நன்னாடு மீட்டுக் கொண்டுதன்
பூங்கழற், கடைக்கலம் புகுந்த படைக்கலத் தடக்கை
விசையா தித்தற் கருளி இசைகொடு
மீண்டுவிட் டருளி யிகலிடைப் பூண்ட செயத்
திருவொடுங் கங்கா புரிபுகுந் தருளி
அங்கே, ராசாதி ராசன் ராசா ராசனெனத்
தராபதி யாகத் தமனியத் தியற்றி
படியின் மன்ன ரடிதொழு தேத்த
இனமணிப் பீடத் திருந்து முனையிடை
வேங்கை நன்னாட் டினிற் கொண்ட
இருநிதிப் பிறக்கம் வரிசையிற் காட்டி
ஆழியு நிகளமும் கழற்றி ஆங்கவர்
வாழிய விரதமு மாற்றி ஈழத்
தலைகட லடையாது பலகலஞ் செலுத்தி
மாப்பெருந் தானை ஏற்ற காப்புடைக்
கடல்வளை யரணத்து வெல்சமந் தொடங்கியச்
சிங்களச் சேனை மங்கப் பைங்கழல்
குருகுலத் தரையனு முருமெனப் பொருசினத்தால்
சாமந்தனும் பட்டுவிழக் கெட்டுடைந் தாற்றாதோர்
ஓசைத் தரையி னோடத் தராபதி
விசைய பாகுவுந் திசைகெட ஓட
மற்றவன் தேவியைப் பற்றி வென்று
. . . . . முதலாகிய அளப்பருங் குலதனங்
மணியின முடியொடு வாரித் திணிமதில்
இலங்கையுந் தனதே யாக்கித் தெங்காகந்
தாண்டிக் கொண்டையில் மீண்டுமச் சளுக்கி
பண்டையில் இரட்டிப் பகட்டொடும் விடு. . . . .
. . . . . . . . . . தடுத்து கண்டாரில்
மதிநாகயைன் மாரயன் மநுமக் கண்டயன்
கட்டங்கிள . . . . . க்கூற்றுகவதி கைக்காமயன்
. . . . . . . . . . கொண்டயன் ஆச்சீதரன்
பற்கொல்லு . . . . . முயட்டிக்கோ. . . . . யன் முதலினர்
மதமழைப் பொருமிடி முதுகிட்டு வாசியோடக்
கோ. . . . . ஓட்டுமடையன் முதலினர்பாத சாமந்தரோடு
ஐங்களி றிழந்தோட ஆடற்புரவிளங் கரியு
அரிவையர் குழாத்தொடு மகப்படப் பிடித்துப்
பண்டு போலப் பரணியுங் கொண்டு
தண்டா லமைய துன்னமா ராயன்
தானுமப் பாகான கேசவன் . . . . . . . .
யோதையும் பதாகின் இடந்தங்கு சிங்கணன்
சோழிய வரையனென் றேழ்பரி யானை
மிக்குறு மந்தர பூச . . . . .
புறக்கிகல் புலிசூட்டுக் கல்லில் செயத்தம்பம்
நாட்டித்தெ. . . . . தன்முதல் . . . . .
சாமந்தரைச் சக்கரக்கோட்டத்து த. . . . .
. . . . .சனைக் கலிங்க
மிடையப் படைக்கட லேவி வடதிசை
சக்கரக் கோட்டத்து மிக்குடன் றெழுந்த
சளுக்கியன் றானையைக் கனலெரி நூறிச்
சோனய்ய நகர்ச்சிலைச் சோமயன் எறியமன்
வாமவேல் ஆதித்த பன்மன் றாமிவர்
குறைத்தலைக் குழாத்தொடுங் குனிப்ப தறைப்ப . . . . .
ஆதச்சப . . . . . மலியும் சாகயன்னும்
வச்சிரப் பைம்பூண்ம . . . . . நுமனும்
வைதும்பனுந் தேவ நாதனுந் தேவிகொ
. . . . . ண்ண கடமெட்டும்
பகுதியு மொட்டகத் தொகுதியும் பரிகலப்
பரிசந்திப் பகுதியும் வரிசையில் கொள்ளையில்
கூ . . . . . பத்துள்ளழிந் தோடு . . . . .
நாதன் தேவி காவியில் வாளி
மண்ணடுங்க . . . . . ண் காளியப்பையுந் தம்பியும்
விச்சத . . . . . முதல் தும்பயவதி குழுவுந்
தோகைய ரீட்டமு மாக்களத் தகப்படப்
பிடித்து தி. . . . . குற்ற. . . . . லமையன் மக்களை
ஒதுக்கி எல்லை கடந்து நிலையிட்டுக்
களகாப்பிலி யிருதற் கிடந்த வடதிசை
இமயத் தொடுங் கிடந்த சேது வரம்பாகச்
செங்கோல் செலுத்தி . . . . .
வேத நீதியை விளக்கி மீதுயர்
வீரத் தனிக்கொடி தியாகக் கொடியொடும்
ஏற்பவர் வரு கென்று நிற்பக் கோத்தொழில்
உரிமையி னெய்தி அரைசு வீற்றிருந்து
மேவரு மனுநெறி விளக்கிய கோவிராசகேசரி வர்மரான
உடையார் ஸ்ரீவீர ராசேந்திர தேவர்க்கு யாண்டு.
II
வீரமே துணையாகவும் தியாகமே யணியாகவும் செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து கூடல் சங்கமத்து ஆகவமல்லனை அஞ்சுவித்து விக்கலனையும் சிங்கணனையும் உடை புறங்கண்டு மற்றவன் மாதேவியரோடும் வது வாகனங் கைக்கொண்டு இரண்டாம் விசையிலும் குறித்த களத்தாகவமல்லனை அஞ்சுவித்து வேங்கை நாடு மீட்டுக் கொண்டு தன்னுடன் பிறந்த முன்னவர் விரத முடித்து மூன்றாம் விசையிலும் சோமேசுவரன் கட்டிய கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம் கம்பிலி சுட்டுக் கரடிக் கல்லில் செயத் தம்பம் நாட்டித் தேவநாதன் முதல் சாமந்தரைச் சக்கரக் கோட்டத்துத் துரத்தியவர்கள் உரிய தாரம் பிடித்துக்கொண்டு கன்னக் குச்சி மீட்டு எல்லைகெடாது நிலையிட்டு விசய சிம்மாசனத்து உலக முழுதுடை யாளோடும் வீற்றிருந்தருளிய கோராசகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ வீரராசேந்திரன் சோழ தேவர்க்கு யாண்டு.
அதிராசேந்திர சோழன்
திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டில
மன்னுயிர் தோறு மின்னருள் சுரந்து
நிறைநிழல் பரப்பி நிற்ப முறையிற்
செங்கோல் திசைதொறுஞ் செல்லத் தங்கள்
குலமுதற் பரிதியின் வலிசேர் புவனிக்கும்
ஒற்றை யாழி யுலாவ நற்றவத்
திருமலர்ச் செல்வியு மிருநிலப் பாவையும்
கீர்த்தியங் கிள்ளையும் போர்த்தனிப் பூவையும்
வதுவையிற் புணர்ந்து பொதுமை துறந்து
உரிமைத் தேவிய ராக மரபினிற்
சுடர்மணி மகுடஞ் சூடி நெடுநில
மன்னவர் முறைமுறை தன்னடி வணங்க
வீரமுந் தியாகமு மாரமெனப் புனைந்து
வீரசிம் மாசனத்து உலகமுழுதுடையாளொடும் - வீற்றிருந்தருளிய
மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர்க்கு யாண்டு.
சேர்க்கை II
சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்கள்
முதல் ஆதித்த சோழன்
புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே.
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப் பறைபோக்
கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே.
செம்பொன் அணிந்து சிற்றம்பலத் தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணான்எனும் நித்தனையே.
கண்டராதித்த சோழர்
மின்னாருருவ மேல்விளங்க வெண்கொடிமா ளிகைசூழப்
பொன்னார்குன்ற மொன்றுவந்து நின்றது போலுமென்னாத்
தென்னாவென்று வண்டுபாடுந் தென்றில்லை யம்பலத்துள்
என்னாரமுறை யெங்கள்கோவை யென்றுகொ லெய்துவதே.
ஓவாதமுத்தீ யஞ்சுகேள்வி யாறங்க நான்மறையோ
ராவேபடுப்பா ரந்தணாள ராகுதி வேட்டுயர்வார்
மூவாயிரவர் தங்களொடு முன்னரங் கேறிநின்ற
கோவேயுன்றன் கூத்துக்காணக் கூடுவ தென்றுகொலோ.
முத்தீயாளர் நான்மறையர் மூவா யிரவர் நின்னோடு
ஒத்தேவாழுந் தன்மையாள ரோதிய நான்மறையைத்
தெத்தேயென்று வண்டுபாடுந் தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்ற னாடல்காண வணைவது மென்றுகொலோ.
மானைப்புரையு மடமென்னோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ்சாடுஞ் சென்னிமேலோ ரம்புலி சூடுமரன்
தேனைப்பாலைத் தில்லைமல்கு செம்பொனி னம்பலத்துக்
கோனைஞானக் கொழுந்துதன்னைக் கூடுவ தென்றுகொலோ.
களிவானுலகிற் கங்கைநங்கை காதலனே யருளென்
றொளிமால் முன்னே வரங்கிடக்க வுன்னடியார்க் கருளுந்
தெளிவாரமுதே தில்லைமல்கு செம்பொனி னம்பலத்துள்
ஒளிவான்சுடரே யுன்னைநாயே னுறுவது மென்றுகொலோ.
பாரோர்முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார்முலையாண் மங்கைபங்கன் மாமறையோர் வணங்கச்
சீரான்மல்கு தில்லைச்செம்பொ னம்பலத் தாடுகின்ற
காரார்மிடற்றெங் கண்டனாரைக் காண்பது மென்றுகொலோ.
இலையார்கதிர்வே லிலங்கைவேந்த னிருபது தோளுமிற
மலைதானெடுத்த மற்றவற்கு வாளொடு நாள்கொடுத்தான்
சிலையாற்புரமூன் றெய்தவில்லி செம்பொனி னம்பலத்துக்
கலையார் மறிபொற் கையினானைக் காண்பதுமென்றுகொலோ.
வெங்கோல் வேந்தன் றென்னனாடு மீழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல்வளையார் பாடியாடு மணிதில்லை யம்பலத்துள்
எங்கோனீச னெம்மிறையை யென்றுகொ லெய்துவதே.
நெடியானோடு நான்முகனும் வானவரு நெருங்கி
முடியான் முடிகண் மோதியுக்க முழுமணி யின்றிரளை
அடியாரலகி னாற்றிரட்டு மணிதில்லை யம்பலத்துள்
கடியார் கொன்றை மாலையானைக் காண்பது மென்றுகொலோ.
சீரான்மல்கு தில்லைச்செம்பொ னம்பலத் தாடி தன்னைக்
காரார்சோலைக் கோழிவேந்தன் றஞ்சையர் கோன்கலந்த
ஆராவின்சொற் கண்டராதித்த னருந்தமிழ் மாலைவல்லார்
பேராவுலகிற் பெருமையோடும் பேரின்ப மெய்துவரே.
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன்
(அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)
தரவு
மண்வாழும் பல்லுயிரும் வான்வாழு மிமையவரும்
கண்வாழு மாநகர் கிளையனைத்துங் களிகூர
அந்தரதுந் துபியியங்க வமரர்க ணடமாட
இந்திரர்பூ மழைபொழிய விமையவர்சா மரையிரட்ட
முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரியணைமேல்
மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த வொரு பெரியோய்!
தாழிசை
எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின்
அவ்வுடம்பி னுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்;
அறங்கூறு முலகனைத்துங் குளிர்வளர்க்கு மழைமுழக்கின்
திறங்கூற வரைகதிருஞ் செழுங்கமல நனிநாண
ஒருமைக்க ணீரொன்பா னுரைவிரிம்ப வுணர்பொருளால்
அருமைக்கண் மலைவின்றி யடைந்ததுநின் றிருவார்த்தை;
இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென
அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும்
மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும்
பொதுவன்றி நினக்குரித்தோ புண்ணியநின் றிருமேனி;
அம்போதரங்கம் பேரெண்
ஆருயிர்க ளனைத்தினையுங் காப்பதற்கே யருள்பூண்டாய்
ஓருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும்;
தாமநறுங் குழன்மழைக்கட் டளிரியலார் தம்முன்னர்க்
காமனையே முனந்தொலைத்தாற் கண்ணோட்டம் யாதாங்கொல்;
1. இது வீரசோழியம் யாப்புப் படலத்திலுள்ள 11-ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியராகிய பெருந்தேவனார் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ள பாடலாகும்.
சிற்றெண்
போரரக்க ரோரைவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே;
ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே;
வார்சிறைப்புள் ளரையற்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே,
பார்மிசை யீரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே
மூச்சீர் இடையெண்
அருளாழி நயந்தோய் நீஇ;
அறவாழி பயந்தோய் நீஇ;
மருளாழி துரந்தோய் நீஇ;
மறையாழி புரந்தோய் நீஇ;
மாதவரின் மாதவ னீஇ;
வானவருள் வானவ னீஇ;
போதனரிற் போதன னீஇ;
புண்ணியருட் புண்ணிய னீஇ;
இருசீர் இடையெண்
ஆதி நீஇ;
அமல னீஇ;
அயனு நீஇ;
அரியு நீஇ;
சோதி நீஇ;
நாத னீஇ;
துறைவ நீஇ;
இறைவ நீஇ;
அருளு நீஇ;
பொருளு நீஇ;
அறிவ னீஇ;
அனக னீஇ;
தெருளு நீஇ;
திருவு நீஇ;
செறிவு நீஇ;
செம்ம னீஇ;
தனிச்சொல்
எனவாங்கு
சுரிதகம்
பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்
பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும்
போதியந் திருநிழற் புனிதநிற் பரவுதும்
மேதகு 1நந்தி புரிமன்னர் சுந்தரச்
சோழர் வண்மையு வனப்பும்
திண்மையு முலகிற் சிறந்துவாழ் கெனவே.
கட்டளைக் கலித்துறை
இந்திர னேறக் கரியளித் தார்பரி யேழளித்தார்
செந்திரு மேனித் தினகரற் குச்சிவ னார்மணத்துப்
பைந்துகி லேறப் பல்லக்களித்தார் பழையாறை நகர்ச்
சுந்தரச் சோழரை யாவரொப் பார்களித் தொன்னிலத்தே.
முதல் இராசராச சோழன்
அருமொழிதன் கோயி லடலரசர் மிண்டித்
திருமகு டக்கொடிக டேய்த்த - பருமணிகள்
ஓதத் தமுதனைய வொண்ணுதலார் மென்மலராம்
பாதத்தி னூன்றும் பரல்.
எனவே தனமென் றிராசேந்திர சிங்கனோ டின்றணைந்த
கனவே யுடையன் கனிப்புக்கண் டாற்கட லேழுமமைந்
தனவே யெனவவன் றானுதித் தன்றே தொடங்கியென்று
நனவே புணர்திரு வின்களிக் கேதுகொ னல்லனவே.
இரண்டாம் இராசேந்திர சோழன்
தற்றுற் றன்றுவெம் போர் செய்த
விற்கைப் பன்மன்முன் போடவோர்
தத்திற் றுன்றுவன் பாய்பரி
யுய்த்துத் தன்மெய்கொண் டோடிய
வெற்றிச் செம்பியன் பார்புகழ்
கொற்கைக் கண்டன்வன் பாரதம்
வெற்புக் கொண்டுதிண் போர்புரி
கொப்பத் தன்றெதிர்ந் தோர்பெறு
கொற்றத் தொங்கல் சிங் காதன
மொற்றைச் சங்குவெண் சாமரை
குத்துப் பந்தர்முன் பாவிய
முத்துப் பந்திமுன் றான்மகிழ்
ஒற்றைப் பெண்டிர் பண் டாரமொ
டற்றைத் தன்பெருஞ் சேனையும்
இட்டிட் டன்றுடைந் தான்வசை
பட்டுக் கண்டவங் காரனே.
வீரரசாசேந்திர சோழன்
மின்னார் வடிவேற்கை வீர ராசேந்தின்றன்
பொன்னார் பதயுகளம் போற்றாது - கன்னாடர்
புன்கூ டலசங்க மத்தினொடும் போருடைந்தார்
மன்கூ டலசங்க மத்து.
விண்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுகர்
எண்கூ டலறு மிருங்கானிற் - கண்கூடப்
பண்ணினான் றன்னுடைய பாதம் பணியாமைக்
கெண்ணினார் சேரு மிடம்.
வீரத்தால் விண்ணாதல் மெய்தவத்தால் வீடாதல்
ஆரத்தா லாள்வதெவர் தாடேற்ற - சீரொத்த
மின்னார் படைத்தடக்கை வீர ராசேந்திரனுக்
கொன்னாராய் வாழ்வு துறின்.
மரத்தினை யோரெழுத்துச் சொல்லுமற் றொன்று
நிரப்பிட நீரிற்பூ வொன்றாம் - நிரப்பிய
வேறோ ரெழுத்துய்க்க வீர ராசேந்திரனாட்
டாறா மெனவுரைக்க லாம்.
ஈண்டு நூல் கண்டான் எழின் மிழிலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே - மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்றன்
சொல்லின் படியே தொகுத்து.
நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனு
பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித்
தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற்
பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே.
ஆவி யனைத்துங் கசத நபமவ் வரியும் வல்வில்
ஏவிய வெட்டும் யவ்வாறிஞந் நான்கு மெல்லாவுலகு
மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன்
நாவியல் செந்தமிழ்ச் சொல்லின் மொழிமுத னன்னுதலே.
சேர்க்கை III
கி. பி. 846 முதல் கி. பி 1070 வரையில் அரசாண்ட சோழ மன்னர்களின் மரபு விளக்கம்
குறிப்பு
முடிசூடி ஆட்சிபுரிந்தவர்களின் பெயர்களுக்கு முன்னர் அம்முறைப்படி எண்கள் குறிக்கப் பட்டுள்ளன. இராசாதித்த சோழன், ஆதித்த கரிகாலன், இராச மகேந்திர சோழன் ஆகிய மூவரும் இளவரசுப் பட்டங்கட்டப்பெற்ற பிறகு இறந்த அரச குமாரர்கள் ஆவர்.
பொருட்குறிப்பு அகராதி
( எண் - பக்க எண்)
அ
அக்கப்பையன் 180
அகத்தியச் சூத்திரம் 106
அகநானூறு 6
அசோகச் சக்கரவர்த்தி 4
அசோகையன் (கொப்பத்துப் போரில் இறந்தவன்) 184
அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவன் 119
அத்திராசன் 180
அதிராசேந்திரன் 220, 222, 223
அநிருத்த பிரமாதிராசன் 70
அநுராதபுரம் 97
அப்பிமையனாகிய இராசேந்திரசோழ பிரம்மாராயன் 188
அபராஜிதவர்மன் 22,22
அபிமானிவல்லி 116
அம்மங்கைதேவி 164
அம்மராசன் II 101
அமரபுயங்கன் 91,93
அமுதன் தீர்த்தகரன் 125
அமோகவர்ஷன் 43
அரவணையான் மாலரி கேசவன் 125
அரிகுலகேசரி, அரிஞ்சயன், அரிந்தமன் 45,53.61,62,118
அரிகேசரிமாற வர்மன் 9
அரிஞ்சயன் 53
அரிஞ்சயேச்சுரம் (சோழேச்சுரம்) 64
அரிஞ்சிகைப்பிராட்டி 62
அரிந்தவன் மாதேவி 163
அருண்மொழிதேவன் 109
அருண்மொழிநங்கை (பிரானார்) 164
அருண்மொழிவர்மன் I (இராசராசன்) 85
அரும்பாகச் செப்பேடுகள் 101
அருமணதேயம் 150
அருமணவன் 150
அருமொழிநங்கை (வீர ராசேந்திரன் மனைவி) 219
அரையன் ஆதித்தவீமன் 63
அரையன் கடக்கங் கொண்ட சோழன் இராராச அணிமுரி நாடாழ்வான் 200
அன்பில் 70
அன்பிற் செப்பேடுகள் 15,29, 53,70,65,63
ஆ
ஆகவவல்ல குலகாலன் 217
ஆகவமல்ல குலாந்தகன் 187
ஆகவமல்லனை ஐம்மடிவென்கண்ட இராசசேகரன் 217
ஆதகூர்க் கல்வெட்டு 47
ஆதித்தசோழன் 18,19,21,22,23,25,28,29,30
ஆதித்த கரிகாலன் ( வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பர கேசரிவர்மன்) 68,69, 71,72
ஆதித்த தேவனான இராசேந்திர மூவேந்தவேளாண் 230
ஆதித்தன் கோதை பிராட்டி 63
ஆதித்தேச்சுரம் 29
ஆதிநகர் 142
ஆரியப்படைவீடு 9, 76
ஆரூரன் அம்பலத்தடிகள் 79
ஆரையன் 184
ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தன் அரசரண சேகரனான இராசகேசரி மூவேந்த வேளான் 82
ஆளவந்தான் 220
ஆளுபவேந்தன் 215
ஆற்றுத்தளி 45
ஆற்றூர் 62
ஆற்றூர்த் துஞ்சினதேவர் 58,67
ஆனைமங்கலச் செப்பேடுகள் 15,47,50,55,61,66,99,123,125
ஆனைமேற்றுஞ்சின உடையார் 58
ஆனைமேற்றுஞ்சினார் 47
இ
இங்கல்லூர் நாடு 120
இடைதுறைநாடு 139
இந்திர ரதன் 141
இந்திரன் III 42
இந்திராவதியாறு 14
இரட்டமண்டலம், இரட்டபாடி நாடு, இரட்டபாடி ஏழரை இலக்கம் 43,44,100
இரட்டராசகுலகாலன் 218
இரவிகுலதிலகன் 217
இரவிகுலமாணிக்கம் 108
இரவிகுலமாணிக்க விண்ணகரம் 113
இராசகேசரி 17
இராசகேசரிச் சதுர்வேதி மங்கலம் (இராசகிரி) 30
இராசசிங்கன் (சேரன்) 137
இராசசிம்மன் III 35, 36, 133
இராசபுரம் 141
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 6
இராசமகேந்திரன் 196,197,198
இராசமகேந்திரன் திருவீதி 197
இராசமார்த்தாண்டன் 108
இராசராச சோழன் I 84, 126
இராசராச சோழனுலா 207
இராசராசத் தென்னாடு 107
இராசராச நரேந்திரன் 205
இராசராசப் பல்லவரையன் 81
இராசராசப் பெரும்பள்ளி 113
இராசராசபுரம் (பழையாறை) 75
இராசராசமண்டலம் 94
இராசராசன் வாயில் 111
இராசராசேச்சுர நாடகம் 74,84,111
இராசராசேச்சுரம் (ஈழநாடு) 98
இராசராசேச்சுர முடையார் கோயில் (தாராசுரம்) 182
இராசஇராசேந்திரன் 217
இராசாசிரயன் (வீர ராசேந்திரன்) 217
இராசாதித்தபுரம் (திருநாவலூர்) 44
இராசாதித்தன் 45,46,50
இராசாதித்தேசுவரம் 44
இராசாதிராசன் ஐ 172,190
இராசேந்திர சிங்கன் 100
இராசேந்திர சோழ சமயன சேனாபதி 155
இராசேந்திர சோழ மாவலி வாணராயன் 188
இராசேந்திர சோழ மாவலி வாணராயன் (அரியணை) 217
இராசேந்திர சோழ விண்ணகரம் 137
இராசேந்திரன் I, கங்கை கொண்ட சோழன் 127, 171
இராசேந்திர சோழன் ஐஐ 191, 201
இராசேந்திர மூவேந்த வேளான் 220
இராமகுட நாடு 154
இராமகுட மூவர் திருவடியாகிய கண்டன் காரிவர்மன் 154
இராமாநுசர் 227, 229
இராமாநுசாசார்ய திவ்ய சரிதை 227
இருக்குவேள் குடியினர் 8
இருங்கோவேள் 8
இருங்கோளர் மகன் வானவன் மாதேவி 79
இருங்கோளன் குணவன் அபராசிதன் 51
இருமடி சோழன் 52
இலங்காசோகம் 149, 151
இலங்காதேசம் 149, 151
இலாடமாதேவி 116, 120
இலாடராசன் புகழ்விப்பவர் கண்டன் 120
இலாமுரிதேசம் 148, 151
இலிம்பங்கம் 148, 150
இளங்கோப்பிச்சி 30
ஈ
ஈராயிரவன் பல்லவயனான உத்தமசோழப் பல்லவரையன் 166
ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடி சோழபோசன் 123
ஈழம், ஈழமண்டலம் 96, 97
உ
உட்கோட்டை 160
உத்தமசீலி 53
உத்தம சோழமிலாடுடையான் 167
உத்தமசோழன் செப்பேடுகள் ( Museum Plates ) 78
உத்தம சோழன் (இராசேந்திரன் I ) 158
உத்தமசோழன் மதுராந்தகன் 77,83
உத்தர கைலாயம் 116
உத்திரலாடம் 142,143
உதகை 91
உதயதிவாகரன் கூத்தாடியாரான வீர ராசேந்திர மழவராயன் 201
உதயன் IV 36
உதயேந்திரச் செப்பேடுகள் 53
உய்யக்கொண்டான் 108
உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி 6
உலக முழுதுடையாள் ( வீரராசேந்திரன் பட்டத்தரசி) 229
உலகளந்தகோல் 114
உலகுடைய பிராட்டி 187
உலோகமாதேவி 116
உலகமாதேவீச்சுரம் 116
உறையூர் 5,7
ஊ
ஊற்றத்தூர்ச் சுருதிமான் நக்கன் சந்திரனான இராசமல்ல முத்தரையன் 101
எ
எடத்தோர் இரண்டாயிரம் 131
ஓ
ஒட்டக்கூத்தர் 15, 18, 51.152, 183,193,197
ஒட்டாதேயம் 142
ஒன்பதாம் திருமுறை 56, 111, 160
க
கங்கபாடி, கங்கநாடு, கங்கமண்டலம் 95, 96, 107, 158, 205
கங்காதரன் 157
கங்காபுரம் 159
கங்காபுரி 159
கங்கைகொண்ட சோழபுரம் 5,144
கங்கைகொண்ட சோழ தன்ம பாலன் 220
கங்கைகொண்ட சோழ மிலாடுடையான் 168
கங்கை கொண்ட சோழன் (வீரராசேந்திரன் மகன், சோழபாண்டியன்) 208, 219
கங்கை கொண்ட சோழேச்சுரம் 160
கங்கைகொண்டான் மண்டபம் 226, 230
கங்கைமாநகர் 159
கங்கை விநாயகர் 145
கச்சியுந் தஞ்சையுங் கொண்ட கன்னர தேவன் 49
கடாகம் 148
கடாரங்கொண்டான் 152
கடாரம் 127,148, 151
கண்டப்பையன் 157
கண்டர் தினகரன் 179
கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் (கண்டிராச்சியம்) 56, 164
கண்டராதித்தப்பெரும் பள்ளி 57
கண்டராதித்தப் பேரேரி 56
கண்டராதித்தம் 60,82
கண்டராதித்த விண்ணகரம் 56
கண்டராதித்தன் I 55,59
கணபதி 179
கம்பன் மணியன் ஆகிய விக்கிரமசிங்க மூவேந்த வேளான் 92
கம்பிலி நகரம் 179
கரந்தை 206
கரபத்ரன் 184
கரிகால சோழன் (வீரராசேந்திரன்) 218
கரிகாலன் 6,13
கருவூர்த்தேவர் 111
கல்யாணபுரங்கொண்ட சோழன் ( வீரராசேந்திரன் தமையன்) கல்யாணபுரம் 226
கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலர் 182
கல்யாணி 63,64
கலிங்கத்துப்பரணி 15,37,152,159,207
கலிங்கநாடு 105,107
களப்பிரர் 7
கன்னரதேவன் (சோழன்) 36
கன்னியாகுமரிக் கல்வெட்டு 216
கா
காந்தளூர்ச்சாலை (வலிய சாலை) 90, 155
காந்தளூர்ப் போர் 86
காந்தமன் 6
கார்காட் செப்பேடுகள் 49
காவிரிப்பூம்பட்டினம் 5
காழகம் 148
காளிதாசன் 181
கி
கிடாரவன் 150
கித்தி 156
கிருஷ்ணதேவன் II (இராட்டிர கூடன்) 31, 41, 52
கிருஷ்ணதேவன் III (இராட்டிர கூடன் ) 42,43,44,49,52,69,101
கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரமமாராயன் 121
கீ
கீர்த்திபராக்கிரமன் (இராசராசன் ஐ ) 95
கீர்த்திப் பராக்கிரமன் 109
கு
குஞ்சரமல்லன் 52
குடமூக்குப்போர் 11,19
குண்டமையன் 184
குந்தவை II 104,117
குந்தவைப் பிராட்டி I 69,74,88,118
குந்தள நாடு (இரட்ட மண்டலம்) 42
குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் 114,122
குருவர்த்தி 210
குலோத்துங்க சோழன் உலா 37
குலோத்துங்கன் I 117,218
குவளாலபுர பரமேசுவரர்கள் 95
குவளாலபுரம் (கோலார்) 80,166
குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான விக்கிரமசோழமாராயன் 80
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 6, 58
கூ
கூடல் சங்கமப்போர் 206, 207
கூபக நாடு 154
கெ
கெல்ஹார்ன், டாக்டர் 142
கே
கேசவன் 206
கேத்தரயன் 206
கேரளாந்தகன் 108
கேரளாந்தகன் வாயில் 111
கொ
கொங்காள்வான் 168
கொங்குதேச ராசாக்கள் 27
கொங்கு மண்டலம் 27, 28
கொடுங்கோளூர் 7, 68
கொண்டையராஜன் 180
கொப்பத்துப்போர் 183, 193
கொம்மையன் 181
கொல்லம் 94
கொல்லாபுரம் 185, 192
கொல்லிமழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் 119
கொள்ளிப்பாக்கை ஏழாயிரம் 131,132
கோ
கோக்கிழானடி 53
கோச்சடையன் ரணதீரன் 10
கோசலநாடு (மகா கோசலம்) 142
கோட்டாறு 137
கோதண்டராமன் 32
கோதண்டராமேச்சுரம் 32
கோயிலொழுகு 197
கோவந்த புத்தூர்க் கல்வெட்டுக்கள் 80
கோவிந்தன் ஐஏ 42, 43
கோனாடு 119
கோனேரிராசபுரம் (திருநல்லம்) 59,60,82
ச
சக்கசேனாபதி 34
சக்கரக்கோட்ட மண்டலம் 141, 211
சக்திவர்மன் 102, 103
சகலபுவனாசிரயன் 217
சங்கநாடு 157
சங்காள்வார் மரபினர் 168
சங்கிராம ராகவன் 52
சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் 136, 137
சத்தியண்ணன் 209
சத்தியவ்வை 185
சத்தியாசிரயன் 100,132
சத்துருபயங்கரன் 184
சநநாதன் 108
சயகேசி (கடம்பர்குல மன்னன்) 216
சயங்கொண்ட சோழ பிரமாதிராஜன் 201
சயங்கொண்ட சோழ மண்டலம் 107,109
சயங்கொண்ட சோழ வாண கோவரையன் 189
சயங்கொண்ட சோழ விண்ணகரம் 113
சயங்கொண்ட சோழன் 108,109
சயங்கொண்ட சோழன் (இராசாதிராசன்) 187
சயங்கொண்ட சோழ நல்லூர் 201
சயங்கொண்டார் 15,183,193
சயசிங்ககுலகால விழுப்பரையன் 202
சயசிங்கன் ஐஐ 139, 140
சயசிங்கன் (சேனாபதி) 184
சயசிங்கன் (அரசகுமாரன்) 207
சர்வசிவபண்டிதர் 163
சர்வணன் நாரணன் பட்டாதித்தன் 126
சனநாதன் (சளுக்கிய தண்ட நாயகன்) 211
சனநாதன் மண்டபம் 220
சா
சாங்கப்பை 185
சாந்திமத்தீவு 135
சாமந்தசேனன் 146
சாமந்தாபரணன் 165
சாமுண்டராயன் 205
சாமுண்டன் 181
சாரால 217
சாரால செப்பேடுகள் 202
சி
சிங்கபுர நாடு 62
சிங்களாந்தகன் 108
சித்தாந்தசாராவளி 146
சித்தி 210
சிந்தவாடி நாடு 179
சிலப்பதிகாரம்- அடியார்க்கு நல்லார் உரை 150
சிவஞான கண்டராதித்தர் 59
சிவபாதசேகரன் 108, 112
சிறுதுறை 181
சின்னமனூர்ச் செப்பேடுகள் 11,13, 19
சீ
சீட்புலிநாடு 104
சீமாறன் சீவல்லபன் பரச சக்கர கோலாகலன் 11,20
சீவல்லபன் மதனராஜன் 178
சு
சந்தரசோழப் பெரும்பள்ளி 74
சுந்தரசோழப் பேரேரி 74
சுந்தரசோழபுரம் (சுந்தரம்) 74
சுந்தரசோழ விண்ணகர ஆதுரசாலை 74
சுந்தர பாண்டியன் 153
சுந்தரமூர்த்திகள் 9,10,13
சூ
சூளாமணி வர்மன் 113
செ
செங்கணான் 6, 15
செந்தலை (சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலம்) 16
செந்தாமரைக் கண்ணன் மடம் 190
செம்பியன் தமிழவேள் 27
செம்பியன் மாதேவி 57
செம்பியன் மாதேவி (ஊர்) 60, 82, 83
செம்பியன் மாதேவி பெருமண்டபம் 118
செம்பியன் மாவலிவாணராயன் 38
சே
சேதிநாடு, மலாடு 80
சேரமான் பெருமாள் 10
சேவூர்ப் போர் 66
சேனமரபினர் 146
சேனா 67
சொ
சொர்ண தீவம் 149
சொர்ண ரேகையாறு 142
சொர்ணமாதேவி 79
சோ
சோமேசுவரன் I ஆகவமல்லன் 156, 157
சோமேசுவரன் II 216
சோழகங்கம் 161
சோழகுலசேகரன் 217
சோழகேரளன்(அரண்மனை) 217
சோழசிகாமணி 53
சோழ நாராயணன் 96
சோழ மாதேவி 53
சோழமாதேவி 116
சோழ மார்த்தாண்டன் 108
சோழ மாளிகை 9, 75
சோழன் உலகபெருமானார் 11
சோழன் குமாராங்குசன் 15
சோழன் சக்கரன் 165
சோழேந்திர சிங்கன் 108
சோழேந்திர சிம்மன் 158
சோழேந்திரன் 219
த
தக்கணலாடம் 142
தக்கோலம் 28,46,48
தக்கோலம் ஸ்ரீ விசய
ராச்சியம் 148,150,151
தக்கோலி 150
தசபன்மன் 184
தஞ்சாவூர், தஞ்சை 5,116,118
தஞ்சாவூர்க் கூற்றத்துக் காருகுடி யுடையான் பரமன் மழபாடியானான மும்முடிச் சோழன் 103,122
தஞ்சையர்கோன் 56
தட்சிணமேரு 111
தடிகைப்பாடி 96, 189
தண்டநாயகன் தனஞ்சயன் 180
தண்டபுத்தி 142
தண்டியலங்கார மேற்கோள் பாடல் 159
தந்தி சக்தி விடங்கி 116
நந்திவர்மன் 11
தப்புலன் IV 36
தம்பித்துணைச் சோழவள நாடு 191
தமாலிங்கம் 148,150
தலையாலங்கானப்போர் 23
தழைக்காடு 95
தளிக்குளம் 112
தன்மபாலன் 143
தா
தாரா நகரம் 142
தாலமி 41,150
தாழன் 102
தாழித் திருப்பனங்காடுடையானான வானவன் பல்லவரையன் 221
தானார்ணவன் 102
தி
திரிபுவன மாதேவி (முதற் பராந்தகன் மனைவி) 53
திரிபுவன மாதேவி (உத்தமசோழன் மனைவி) 79
திரிலோசன சிவாசாரியார் 146
திருக்காரைக்காடு 230
திருச்செங்கோட்டு செப்பேடுகள் 119
திருஞானசம்பந்தர் 10,13. 124
திருத்தொண்டத் தொகை 9
திருத்தொண்டர் திருவந்தாதி 28,30
திருநாவுக்கரசு அடிகள், அப்பர் 7,13
திருப்புறம்பயப்போர் 23,29
திரும்புறம்பயம் 29
திருமுக்கூடல் 118
திருமுனைப்பாடி நாடு 23,44,47,48
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் 14,15,18,25
திருவிசைப்பா 123,160
திருவெண்காட்டு நங்கை மகன் சிவலோக நாதன் 221
திருவையன் சங்கரதேவன் 119
திரைலோக்கிய சாரம் 216
திரைலோக்கிய மாதேவி 116
திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதிமங்கலம் 144
திரைலோக்கியமுடையாள் திவ்யசூரி சரிதம் 187
தீ
தீரன் சென்னிப்பேரரையன் 35
து
துத்தன் 184
தூ
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் 6
தெ
தெய்வ வீமகசி 181
தெலுங்கு குலகாலன் 109
தெலுங்க விச்சையன் 180
தெள்ளாறெறிந்த நந்திவர்மன் 11,15
தென்னவன் மாதேவி 53
தென்னிந்திய நாணயங்கள் 81
தே
தேவநாதன் 210
தை
தைலபன் II 100
தொ
தொண்டைமண்டலம் 22,25,26,33
தொண்டைமான் பேராற்றூர் 31
தொண்டைமானாடு 31
தொண்டைமானாற்றூர்த் துஞ்சின உடையார் 58
தொல்காப்பியம் 3,5
தொல், சொல், தெய்வச் சிலையார் உரை 106
ந
நக்கவாரம் 148,151
நக்கவாரம் பிள்ளை 151
நச்சினார்க்கினியர் 148
நடார் 230
நந்திக்கலம்பகம் 12
நந்திபுர விண்ணகரம் 76
நந்திபுரி (பழையாறை) 76
நம்பியாண்டர் நம்பி 28,29
நரசிங்க வர்மன் I 25
நல்லடி 6
நலங்கிள்ளி 6
நன்னமரையன் 120
நன்னிநுளம்பன் 184
நா
நாமணைக்கோணம் 141
நார்த்தாமாலை 24
நால்மடி வீமன் 165
நாலடியார் 16
நி
நிகரிலி சோழமண்டலம் 108
நிகரிலி சோழன் 108
நித்த வினோதன் 108
நிருபதுங்க வர்மன் 21,22
நின்றசீர் நெடுமாறன் (நெல்வேலி வென்ற) 9
நு
நுளம்பபாடி 95,100,107,204
நுளம்பர்கள் 95
நுளம்பன் 181
நெ
நெடுங்கிள்ளி 6
ப
பகாப்பிடுகு 16
பஞ்சநதிவாணனாகிய மதுராந்தகத் தமிழ்ப் பேரரையன் 201
பஞ்சப்பள்ளி 141
பஞ்சவன் மாதேவி (உத்தம சோழன் மனைவி) 79
பஞ்சவன் மாதேவி (இராசராசன் I மனைவி) 163
பஞ்சவன் மாராயன் 96
பட்டன் தானதுங்கி 79
பட்டினப்பாலை 148
பண்ணை 148,149
பண்டித சோழன் (இராசேந்திரன் I) 158
பண்டிதவற்சலன் 52
பணசோகே 95
பத்துப்பாட்டு 6
பப்பாளம் 148,150
பபுற்றுச் செப்பேடுகள் 103
பம்பைப் படைவீடு 9,76
பரகேசரி 17,33,61,78,128
பரதூருடையான் நக்கன் சாத்தன் 35
பரநிருப இராக்கதனான வீரசோழ இளங்கோ வேளான் 230
பரமபட்டாரகன் 217
பரமாரக்குலத்து மன்னர் 131
பரமேசுவரன் 217
பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராஜன் 70
பராக்கிரமபண்டு 178
பராந்தகன் I 33,54
பராந்தகன் II (சுந்தர சோழன்) 65,76
பராந்தகன் சிறிய வேளான் ஆகிய திருக்கற்றளிப் பிச்சன் 51, 120
பராந்தகன் தேவியம்மன் 69
பழுவேட்டரையர் மகள் 79
பழுவேட்டரையன் 53,117
பழுவேட்டரையன் கண்டன் 119
பழையாறை நகர் 5,9,12,75,158
பழையாறை வடதளி 8
பள்ளிப்படை 32,64
பா
பாகிநாடு 103
பாதபன் 101
பாண்டியகுலாசனி 93,108
பாண்டிய குலாந்தகன் (வீரராசேந்திரன்) 217
பாண்டிய சோழன் 185
பாண்டியன் நெடுஞ்செழியன் 23
பாண்டியனச் சுறம் இறக்கின பெருமாள் 65
பார்த்திவேந்திரவர்மன் 68
பாராசிரயன் வாசுதேவ நாராயணனாகிய உலகளந்த சோழ பிரமராயர் 189
பாலமரபினர் (ஞயடயள டிக க்ஷநபேயட) 144
பாற்கர ரவிவர்மன் 90
பானர்ஜி சு.னு. 146
பி
பிரமதேவன் 209
பிருதுவிபதி ஐ 22,28
பிருதுவிபதி ஐஐ 28,34,37,38
பிருதுவிமாதேவி 116
பில்ஹணர் 211, 224, 255
பு
புகழ்ச்சோழர் ( கருவூர்த் துஞ்சிய) 9
புதுப்படை வீடு 76
புலகேசி 185
புறநானூறு 6
புறவார் பனங்காட்டூர் 231
பூ
பூண்டூர்ப்போர் 180
பூதி ஆதித்தபிடாரி 51, 63
பூதிமாதேவ அடிகள் 31
பூதி விக்கிரமகேசரி (தென்னவன் இளங்கோவேள்) 68
பூதுகன் II 43,44,46,47
பூர்வதேசம் 127
பெ
பெரிப்ளூ 4
பெரியபுராணம் 8,10,13
பெருந்துறை 181
பெரும்பாணப்பாடி 38
பெரும்பிடுகு 16
பெள்வோலோ 18
பொ
பொலன்னருவா (சனநாத மங்கலம்) 97
பொன்பற்றி 218
பொன்மாளிகைத் துஞ்சின தேவர் 73
போ
போகவதிபுரத் தலைவர் (நாகர் மரபினர்) 141
போசபுரத்து ஏரி 162
போசராசன் 142
போத்தரையன் 206
போரவைக்கோப்பெருநற்கிள்ளி 6
ம
மகாண்டலேசுவரன் கண்டராதித்தராசன் 179
மகாராசவாடி ஏழாயிரம் 188
மகாராசாதிராசன் 217
மகாலானகித்தி 156
மகாவம்சம் 67,133,134,155,156,177
மகிந்தன் ஏ 97,134
மகிபாலன் 142,143
மகேந்திரகிரிக் கல்வெட்டு 105
மங்கையர்க்கரசி 9
மஞ்சிப்பையன் 209
மணப்படைவீடு 9,76
மதுராந்தகன் (இராசேந்திரன் I) 127
மதுராந்தகன்(வீரராஜேந்திரன் மகன்) 219
மதுராந்தகன் கண்டராதித்த சோழன் 122
மதுராந்தகன் சுந்தர சோழன் 65
மதுராந்தகி 199
மதுரை 40
மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன் 33
மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பர கேசரி வர்மன் 34,37
மதுவணன் 207
மல்லியண்ணன் 209
மலையமானாடு, மலாடு 61,70,76
மலையமானூரானான ரேவதாசக்கிரமவித்தன் 70
மலையூர் 148,149
மழநாடு 53
மழபாடித் தென்னவன் மாதேவி 79
மறவன் நரசிம்மவர்மனாகிய
இராசராச வாணகோவரையன் 120
மணிஜா 95,168
மா
மாகண தேசம் 141
மாடக்கோயில் 109
மாதேவடிகள் 117
மாதோட்டம் (இராசராசபுரம்) 98
மாயிருடிங்கம் 148,149
மாரயன் 206
மாரயன் அருண்மொழியான உத்தம சோழ பிரம்மராயன் 166
மாற்பிடுகு 16
மாறமரைபன் 28
மாறவிஜயோத்துங்க வர்மன் 113
மாறன் பரமேசுவரனான செம்பியன் சோழிய வரையன் 41
மானிய கேடம் 131
மானியகேடமாநகர் 42
மானாபரணன் 153
மானாபரணன் புதல்வர் 194
மி
மிண்டிகல் கல்வெட்டு 172
மிராஜ் சேப்படுகள் 139
மிலாடு இரண்டாயிரம் பூமி 200
மிலாடுடையான் நரசிங்கவர்மன் 200
மீ
மீனவன் மாதேவி 116
மு
முக்கோக்கிழானடிகள் 163
முஞ்சன் 180
முடக்காற்றுப்போர் 195,196
முடிகொண்ட சோழப் பேராறு 158
முடிகொண்ட சோழபுரம் (பழையாறை) 76
முடிகொண்ட சோழன் (அரண்மனை) 160
முடியூர் (கிராமம்) 45
முத்தரையர் 16,17
முதற்குலோத்துங்க சோழன் 223,224,229,231
முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் (மால்தீவுகள்) 106,107
மும்முடி சோழனல்லூர் (முட்டம்) 84
மும்முடிசோழன் (கண்டராதித்தன் I) 55
மும்முடிச்சோழன் (இராச மகேந்திரன்) 197
முயங்கிப்போர் 138,139
முனையதரையன் குல மாணிக்கன் இராமதேவன் 57
மூ
மூலபத்திரன் 184
மூவருலா 15,18,20
மூஷிக மரபு 154
மெ
மெய்க்கீர்த்தி 88,89
மொ
மொட்டையன் 184
வ
வல்லாள 38
வல்லூர் 188
வளநாடுகள் 125
வளவன் மாதேவி 53
வளைப்பந்தூர் 150
வன்னியரேவன் 184
வனவாசிப் பன்னீராயிரம் வனவாசி 47,131,132,204
வா
வாகூர் 49
வாகூர்ச் செப்பேடுகள் 19
வாணகோப்பாடி நாடு 62,120
வாணபுரம் 39
வாணர்கள் 39,44
வால்டர் எலியட், சர் 81
வாலாதேவன் 195
வானவன் மாதேவி (பராந்தகன் II மனைவி ) 36,69
வானவன் மாதேவி (இராசேந்திரன் I மனைவி) 163
வானவன் மாதேவீச்சுரம் 98
வி
விக்கம பண்டு 156
விக்கியண்ணன் 27,44
விக்கிரம சோழன் (இராசேந்திரன் I) 158
விக்கிரம சோழன் 228
விக்கிரம சோழன் உலா 197,207,223
விக்கிரம சோழ சோழிய வரையனான அரையன் இராசராசன் 165
விக்கிரமபாகு 134, 158,176
விக்கிரம பாண்டியன் (இலங்கையரசன்) 176, 177
விக்கிரமாங்கதேவ சரிதம் 220,222
விக்கிரமாதித்த வைதும்ப மகாராசன் 62
விக்கிரமாதித்தன் II (வாணன்) 39,40
விக்கிரமாதித்தன் V 1 38
விக்கிரமாதித்தன் VI 1 57,219,222,224
விசயபாகு 212,213
விசயராசேந்திரன் (இராசாதிராசன் I) 186
விசயவாடை 212
விசயாதித்தன் II 39
விசயாதித்தன்(சோமேசுவரன் மகன்) 157
விசயாதித்தன் VII 212
விசயாலய கோழேச்சுரம் 24
விசயாலயன் 23,24
விடேல்பிடுகு 16
வித்தியாதர தோரணம் 148
விமலாதித்தன் 104, 117
விமலாதித்தன் (குலூதவேந்தன்) 105
வில்லவன் மாதேவி (முதற்பராந்தகன் மனைவி) 53
வில்லவன் மாதேவி (முதல் இராசஇராசன் மனைவி) 117
வில்லவராசன் 181
விழிஞம் 92
விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள் 70
விஷ்ணுதேவனாகிய மும்முடிவைதும்ப மகாராசன் 120
விஷ்ணுவர்த்தன் மகாராசனான சளுக்கிய விசயாதித்தன் விக்கியண்ணன் 137
வீ
வீமன் II 41,42,63
வீமன் (தெலுங்குச் சோழன்) 102
வீமன் குந்தவை 63
வீமையன் 209
வீரகேசரி (பாண்டியன் சீவல்லபன் மகன்) 208
வீரகேரளன் 153
வீரசலாமேகன்(கன்னியாகுப்ஜ மன்னன்) 178
வீரசலாமேகன் (கலிங்க மன்னன்) 194
வீரசோழன் 52
வீரசோழன் 218
வீரசோழன் இலாடப் பேரரையன் 120
வீரசோழிய உரை 75
வீரசோழியம் 218
வீரநாரணி 57
வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம் (காட்டுமன்னார் கோவில்) 51
வீரநாராயணன் 51
வீரநாராயணன் ஏரி (வீராணத்தேரி) 51,161
வீரநாராயணி 117
வீரபாண்டியன், சோழன் தலை கொண்ட கோவீரபாண்டியன் 55,66,67
வீரபூஷணம் 165
வீரமாணிக்கன் 180
வீரமாதேவி (முதற்பராந்தகன் மகள்) 42,43,54
வீராமாதேவி(முதல் இராசேந்திர சோழன் மனைவி) 163,169
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கைக் குறிப்புக்கள்
தோற்றம் : 15.8.1892
பெற்றோர் : திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தார் - திருமதி. மீனாட்சி அம்மையார்
ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம்
கல்வி கற்ற இடங்கள் : திருப்புறம்பயம் திண்ணைப் பள்ளி, புளியஞ்சேரி உயர்தரத் தொடக்கப்பள்ளி, குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் முதல் மெட்ரிகுலேசன் முடிய (1910)
ஆசிரியர்கள் : பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி அ.பாலசுப்பிரமணியப்பிள்ளை முதலானோர்
திருமணம் : 1914-இல் தையல்முத்து அம்மையாரை மணந்தார். இவர் 1921இல் காலமாகவே 1922இல் சின்னம்மாள் என்பவரை மணந்தார்.
பணி விவரங்கள் : பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுக் காலம் எழுத்தர் பணி, குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாதக் காலம் தலைமைத் தமிழாசிரியர், பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் (1917-1942), அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் (1942-53, 1955- 1.1.1960)
மறைவு : 02.1.1960
பெற்ற சிறப்புக்கள் : 29.3.1956 இல் மதுரைத் திருவள்ளுவர் கழகம் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டம் வழங்கியது. 7.4.1956 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கியது.
வழித்தோன்றல் : பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் (ஒரே மகனார்)
பண்டாரத்தார் அவர்கள் எழுதிய நூல்கள்
1. சைவ சிகாமணிகள் இருவர் ( அ.பாலசுப்பிரமணியப் பிள்ளையுடன் இணைந்து எழுதியது)
2. தொல்காப்பியப் பாயிரவுரை 1923
3. முதற்குலோத்துங்க சோழன் (1930)
4. பாண்டியர் வரலாறு (1940)
5. திருப்புறம்பயத் தல வரலாறு (1946)
6. பிற்காலச் சோழர் சரித்திரம் - மூன்று பாகங்கள் (1949, 1951, 1961)
7. தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) - 1955
8. தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) - 1955
9. செம்பியன் மாதேவித் தல வரலாறு - 1958
10. காவிரிப்பூம்பட்டினம் - 1959
11. இலக்கிய ஆராய்ச்சியும், கல்வெட்டுக்களும் - 1961
12. கல்வெட்டுக்களால் அறியப் பெறும் உண்மைகள் 1961
கருத்துகள்
கருத்துரையிடுக