விந்தன் கதைகள்-2
சிறுகதைகள்
Back
விந்தன் கதைகள்-2
விந்தன்
விந்தன் கதைகள்
2
Rs. 100
VINDHAN KATHAIGAL - II
First Edition 2000
Published by,
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T.Nagar, Chennai - 600 017.
Type Setted by
Sri Sathya Sai Graphics,
Chennai - 17
Printed at
Sakthi Printers
Chennai - 21
Cover Design by
Trotsky Marudu
விந்தன் எழுத்துகள் பற்றி...
தமிழ் எழுத்தாளர்களில் விந்தன் வித்தியாசமானவர்; பாதிப்புகளைக் கண்டு அஞ்சாத படைப்பாளி; எதிலும் எவரிடத்திலும் சமரசம் செய்து கொள்ளாத சுயமரியாதைக்காரர்; சுதந்திரமான சிந்தனையாளர்.
1942 முதல் 1975 வரையில் வணிக நோக்குடைய பல பத்திரிகைகளில் இலக்கிய நோக்குடன் ஏராளமான கதைகளை எழுதியுள்ளார் விந்தன்.
அக்கதைகளில் சிகரமாகவும் சிறப்புடையதுமான கதைகளைத் தேர்வு செய்து தரப்பட்டுள்ளது.
1946 இல் தமிழ் வளர்ச்சிக்கழகம் முதன் முதலாக வழங்க முன் வந்த பரிசை, விந்தனின் 'முல்லைக் கொடியாள்' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கி பாராட்டியுள்ளது. நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன், பெற்ற முதல் பரிசும் கடைசிப் பரிசும் அதுதான்.
தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் விந்தன் கதைகள் பரவிய காலத்தில், இந்திய மொழிகளில் சிலவற்றிலும் ருஷ்யா, செக்கோஸ்லேவியா ஆகிய மொழிகளிலும் விந்தன் கதைகள் பிரசுரம் ஆகின.
விந்தன் கதைகளில் உள்ள தனிச் சிறப்பு, அவர் ஏழை எளியவர்களைப் பற்றியும், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைப் பற்றியும் எழுதியதோடு நடுத்தர மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும், அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடியால் உண்டாகும் சிக்கல்களை, குடும்பச் சிதைவுகளை, காதல் தோல்விகளை, தாம்பத்திய முறிவுகளை அனைத்துக்கும் மேலாக நசிந்து வரும் மனித நேயத்தை யதார்த்தமாகவும் எள்ளல்தன்மையுடனும் எளிய தமிழிலும் எழுதியிருப்பது தான்.
விந்தன் கதைகள் முழுவதும் ஒரே நூலாக வரவேண்டும் என்பது வாசகர்களின் - ஆய்வாளர்களின் நீண்ட நாளைய கனவு. அந்த இலக்கியக் கனவை நல்ல நூல்கள் வெளியீட்டாளரான கலைஞன் பதிப்பகத்தின் எழுச்சி மிக்க இளைஞர் எம். நந்தா அவர்கள் நனவாக்கி விட்டார்கள். அவர்களின் இலக்கிய உள்ளத்துக்கு என் சார்பிலும், விந்தன் குடும்பத்தாரின் சார்பிலும் மனப்பூர்வமான நன்றியையும் வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்ளும் இந்நேரத்தில், ஏற்கெனவே விந்தனின் புகழ் பரப்பும் வகையில் 'மனிதன்' இதழ் தொகுப்பை வெளியிட்டுள்ள கலைஞன் பதிப்பகத்தார் மேலும் மேலும் விந்தன் படைப்புகளை வெளியிடுவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
தோழமையுடன்
மு.பரமசிவம்
(தொகுப்பாசிரியர்)
பொருளடக்கம்
"தாயிற் சிறந்ததொரு..."
அன்பு
"ஆபீஸாப்பியாசம்"
காந்தியவாதி
எதிர்க்கட்சி
வேதாந்தம்
மிஸ் நளாயினி-1950
திருடனுக்கு விடுதலை
மறுமணம்
நேற்று வந்தவள்
அன்பும் அருளும்
மாடும் மனிதனும்
இரக்கம்
தலையெழுத்து
சிறைப் பறவை
திருப்தி
பதவி
கவிஞர் ஒன்பாற் சுவையார்
செய்ததும் செய்வதும்
இரு பேரப்பிள்ளைகள்
பணமே அன்புக்கும் அதுவே ஆதாரம்
கொண்டுவா, நாயை
இரு திருடர்கள்
ஊமைப் பட்டாசு
சாந்தி எங்கே?
ஏசுநாதரின் வாக்கு
நாளை நம்முடையதே
திருந்திய திருமணம்
கலையும் வாழ்க்கையும்
படித்தவர்கள்
பிழைக்கத் தெரியாதவன்
பதினோராம் அவதாரம்
சண்டையும் சமாதானமும்
அன்பும் அதிகாரமும்
ஐந்தாண்டுத்திட்டம்
குப்பையிலே குருக்கத்தி
இரண்டு ரூபாய்
அவன் ஏன் திருடவில்லை?
கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து....
வணக்கத்துக்குரியவள்
மூன்று பொம்மைகள்
சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்
கூலி வேண்டுமா, கூலி?
ஈசன் விட்ட வழி
மறுபடியும்......
இளைய பாரதத்தினன்
விந்தன் கதைகள் - 2
"தாயிற் சிறந்ததொரு..."
"பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா! கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்ணுக் கழகாகப் பார்க்க வேண்டுமென்பதுதான்!" என்று அலமேலு அம்மாள் தன் ஒரே மகனைப் பற்றித் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.
ஜானகிராமனோ தனக்குத் தெரிந்த அரை குறையான உலகானுபவத்தைக் கொண்டு, தன் தாயார் உயிரோடு இருக்கும்வரை, தான் கல்யாணம் செய்து கொள்வது தனக்குக் கெடுதல், தன்னைத் தேடி வருபவளுக்கும் கெடுதல் என்ற விபரீதமான முடிவுக்கு வந்திருந்தான்.
இந்த முடிவை அவன் தாயாரிடமும் ஒரு நாள் நாசூக்காகத் தெரிவித்தான்: "என்னுடைய நன்மை எனக்குப் பெரிதல்ல. அம்மா! உன்னுடைய நன்மைதான் எனக்குப் பெரிது. உன்மீது கொண்டிருக்கும் அன்பில் இன்னொருத்தி பங்கு கொள்ள வருவதை நான் விரும்பவில்லை!" என்றான்.
"நன்றாயிருக்குடா, நீ சொல்வது! நான் இன்று போவேனோ, நாளை போவேனோ? நான் ஒரு சதமா உனக்கு? - அதெல்லாம் முடியாது; உனக்குக் கல்யாணத்தைப் பண்ணிவைத்து விட்டுத்தான் நான் கண்ணை மூடுவேனாக்கும்!" என்று பிடிவாதம் பிடித்தாள் தாயார்.
ஜானகிராமனின் பாடு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. அவன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கல்யாணத்துக்கு ஒருவாறு சம்மதித்தான். அதன் பயனாக வைஜயந்தி அவனுக்கு மனைவியாக வந்து வாய்த்தாள்.
ஏறக்குறைய மூன்றுமாத காலம் அவர்களுடைய மண வாழ்க்கையில் குறையொன்றும் தெரியவில்லை; அப்படியே தெரிந்தாலும் அது குறையாகத் தோன்றவில்லை. அதற்குள் அலமேலு அம்மாள், தான் ஏற்கனவே சபதம் எடுத்துக் கொண்டிருந்தபடி கண்ணை மூடிவிட்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதுதான் நடக்கவில்லை!
அவளுடைய வயது வளர்ந்து கொண்டே யிருந்தது; அதற்கேற்றாற்போல் வம்பும் வளர்ந்து கொண்டே வந்தது.
★★★
"பேபி, பேபி!"
இது 'வைஜயந்தி' என்பதற்குப் பதிலாக ஜானகிராமன் தன் மனைவிக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர். இந்தப் பெயரைச் சொல்லி அவன் தன் மனைவியை அன்புடன் அழைத்தால் போதும் - வந்தது மோசம்; "அது என்னடா, பேபி, பேபி!" நாய்குட்டியைக் கூப்பிடுகிற மாதிரி கூப்பிடுகிறாயே! என்பாள் அலமேலம்மாள்.
வைஜயந்தி பதிலுக்கு எதையாவது சொல்லி, வம்பை வளர்க்காமலிருக்க வேண்டுமே என்று கவலையுடன் ஜானகிராமன் தன் மனைவியின் முகத்தைப் பார்ப்பான். அவளோ தன் உதட்டின் மேல் ஆள் காட்டி விரலை வைத்து "உஸ்...தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை" என்று சொல்லி விட்டுச் சிரிப்பாள்.
சாயந்திரவேளையில் வைஜயந்தி தன்னை அலங்கரித்துக் கொண்டால் அலமேலு அம்மாவுக்கு ஏனோ பிடிக்கவே பிடிக்காது. "அகமுடையானின் மனதைக் கெடுப்பதற்கு இதெல்லாம் என்ன வேஷம்?" என்று கேட்டு, அவள் முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொள்வாள்.
"இது என்ன அபத்தம்! கண்டால் காத தூரத்தில் நிற்கும்படி அவள் இருக்கவேண்டுமா, என்ன?" என்று தனக்குள் வருந்தியவனாய், ஜானகிராமன் தன் மனைவியைப் பார்ப்பான்.
அவள், "தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!" என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாள்.
இரவிலும் இந்த வம்பு நிற்பதில்லை. படுக்கையறையில் இருக்கும் கணவனுக்கு மனைவி பால் கொண்டு போனால், "வெய்யிற்காலத்தில் கூட இருவருக்கும் உள்ளே என்ன படுக்கை?” வெளியே சற்றுக் காற்றாடப் படுத்துக் கொள்ளக்கூடாதோ?" என்று அவள் எதையோ நினைத்துக் கொண்டு இரைவாள். இந்த ரஸாபாசமான விஷயம் ஜானகிராமனின் காதில் நாராசம் போல் விழும். அவன், "அட கடவுளே! இது என்ன வெட்கக்கேடு!" என்று தலையில் அடித்துக் கொண்டே தன் மனைவியைப் பார்ப்பான்.
"தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை" என்பாள் அவள் சிரித்துக் கொண்டே.
மற்ற நாட்களிலாவது அலமேலு அம்மாள் சும்மா இருப்பாள் என்கிறீர்களா? - அதுவும் கிடையாது. அவர்களுடைய அறைக்கு அருகே நின்றுகொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பாள். அவர்களோ அவள் எதிர்பார்த்தபடி ஒன்றும் பேச மாட்டார்கள். அலமேலு அம்மாள் நின்று நின்று கேட்டுக் கேட்டு அலுத்துப் போவாள். கடைசியில் "விடிய விடிய என்னடா பேச்சு? அவளுக்குத்தான் வேறு வேலை கிடையாது. பொழுது விடிந்ததும் நீ வேலைக்குப் போக வேண்டாமா? ஓயாமல் ஒழியாமல் இப்படிப் பேசிக் கொண்டேயிருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்று அக்கரையுடன் இரைந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்று படுத்துக் கொள்வாள்.
ஜானகிராமனுக்கோ ஒன்றும் புரியாது. அவன் மனோதத்துவத்தில் இறங்கித் தன்னுடைய தாயாரைப் பற்றி ஆராய்ச்சி செய்வான். ஆராய்ச்சியின் முடிவில் தன் அருமை அன்னை இளம் பிராயத்திலேயே கணவனை இழந்து விட்டது தான் மேலே குறிப்பிட்ட வம்புகளுக்கெல்லாம் காரணம் என்று தோன்றும், இருந்தாலும் வைஜயந்தி சொல்வது போல் "தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை" அல்லவா?
★★★
ஜானகிராமனுக்கும் வைஜயந்திக்கும் தாங்கள் கல்யாணமாவதற்கு முன்னால் தனித்தனியே இருந்து வாழ்ந்த உலகம் பழைய உலகமாகவும், கல்யாணம் செய்து கொண்டு இருவரும் சேர்ந்து வாழும் உலகம் புதிய உலகமாகவும் தோன்றிற்று. தாங்கள் கண்ட புதிய உலகத்தைப் பற்றி அவர்கள் என்னவெல்லாமோ பேசவேண்டுமென்று துடியாய்த் துடித்தார்கள். அதற்கு ஔவைப் பிராட்டியாராலும் ஆச்சாரிய புருஷர்களாலும் புகழப்பட்ட 'அன்னை' எவ்வளவுக் கெவ்வளவு இடையூறாயிருந்தாளோ, அவ்வளவுக் கவ்வளவு அவர்களுடைய ஆவல் அதிகரித்தது.
ஒரு நாள் மாலை ஜானகிராமன் பொழுதோடு வீட்டுக்கு வந்தான். அவனுக்குக் காப்பி கொடுத்த பிறகு, "எங்கேயாவது சென்று சிறிது நேரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தால் தேவலையே!" என்றாள் வைஜயந்தி.
இதை அவள் சாதாரணமாய்த்தான் சொன்னாள். இருந்தாலும் ஜானகிராமனின் உள்ளத்தை அது என்னவோ செய்தது. அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான். பிறகு "கடற்கரைக்காவது சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வருவோமா?" என்றான்.
"எனக்கு ஆக்ஷேபணையில்லை; ஆனால் உங்கள் தாயார்...."
"அவளிடம் ஏதாவது...?"
"பொய்யா சொல்லுவீர்கள்?"
"ஆமாம்; அவள்தானே நம்மைப் பொய் சொல்லச் சொல்கிறாள்?"
"சரி, என்ன பொய் சொல்வீர்கள்?"
"இப்பொழுது எங்கே பார்த்தாலும் நவராத்திரி விழா நடக்கிறதே, யாரோ கொலுவுக்கு அழைத்திருப்பதாகச் சொன்னால் போகிறது!"
இதைச் சொல்லி அவன் வாயைக்கூட மூடவில்லை; "காரியம் ஒன்றும் நடக்காவிட்டாலும் இந்த வீட்டில் பேச்சுக்குக் குறைவில்லை?" என்று இரைந்து கொண்டே அலமேலு உள்ளே வந்தாள்.
ஜானகிராமன் 'திருதிரு' வென்று விழித்துக் கொண்டே, "ஒன்றுமில்லை, அம்மா!" நண்பன் ஒருவன் எங்களை நவராத்திரி விழாவுக்கு அழைத்திருக்கிறான்..." என்று ஆரம்பித்தான்.
"அதற்கு ஒரு வயசுப் பெண்ணை அழைத்துக் கொண்டு நீ தனியாகப் போக வேண்டுமா?"
"ஆமாம், அம்மா! ஒரு மணி நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்துவிடுகிறோம்."
"சரி, சரி; ஜாக்கிரதையாகப் போய்விட்டு வா; சீக்கிரமாகத் திரும்பி விடு!" என்றாள் தாயார்.
ஜானகிராமன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
★★★
சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் கடற்கரைக்குக் கிளம்பினர், கவிந்திருந்த இருளிலும் அவர்களுடைய மனம் ஏனோ தனிமையை நாடிற்று. உயிர்பெற்ற நிழல் படங்களைப்போல் உருமாறிவிட்ட அவர்கள், கடற்கரையோரமாக வெகு தூரம் நடந்தனர். கடைசியில் ஒரு கட்டு மரத்துக்கு கீழே உட்கார்ந்தனர்.
"எனக்கு நல்ல அம்மா வந்து வாய்த்தாள்" என்றான் ஜானகிராமன் அலுப்புடன்.
அப்படிச் சொல்லாதீர்கள். "தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை!" என்றாள் வைஜயந்தி வழக்கம் போல் சிரித்துக் கொண்டே.
இருவரும் 'கலகல' வென்று நகைத்தனர்.
அதற்குள் ஒருவன் எங்கிருந்தோ வந்து அவர்களுக்கு எதிரே யிருந்த கட்டு மரத்தின் மேல் உட்கார்ந்தான். உட்கார்ந்தவன் சும்மா இருக்கவும் இல்லை;
"காத லாகினேன் - கண்ணே!
காத லாகினேன்!"
என்று கரக் கம்பம் சிரக் கம்பம் எல்லாம் செய்து, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாகப் பாட ஆரம்பித்து விட்டான்.
"ஐயோ, பாவம்! இவன் என்னத்துக்கு இப்படி உருகித் தொலைகிறான்!" என்று வைஜயந்தி அனுதாபத்துடன் சொன்னாள்.
"எல்லாம் நம்முடைய கஷ்ட காலந்தான்!" என்று வெறுப்புடன் சொல்லிக் கொண்டே, அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தான் ஜானகிராமன்.
வைஜயந்தி அவனைத் தொடர்ந்து சென்றாள். அடுத்தாற் போலிருந்த ஒரு மணல் மேட்டுக்குக் கீழே இருவரும் உட்கார்ந்தனர்.
"காதல் மனிதர்களைப் பைத்தியக்காரர்க ளாக்கிவிடுகிறது என்கிறார்களே, அது என் அம்மாவைக்கூட விடவில்லை பார்த்தாயா?" என்றான் ஜானகிராமன்.
"உஸ்.... தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை!" என்று சொல்லி அவன் வாயைப் பொத்தினாள் வைஜயந்தி.
அதே சமயத்தில் 'டூப்ளிகேட் இங்கிலீஷ்'காரர்களைப் போல விளங்கிய கலாசாலை மாணவர்கள் இருவர் - இல்லை இல்லை; கலாசாலை 'மைனர்'கள் இருவர் - ஒருவர் தோளின் மேல் ஒருவர் லாகவமாகக் கையைப் போட்டுக் கொண்டு அவர்களை நோக்கி வந்தனர்.
அவர்களில் ஒருவன் வைஜயந்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே 'எப்படி?' என்றான்.
இன்னொருவன், "இருட்டிலே எந்த உருப்படியாயிருந்தாலும் பிரமாதமாய்த்தான் இருக்கும்!" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த சிகரெட்டை ஓர் இழுப்பு இழுத்துப் புகையைக் குபுகுபுவென்று விட்டான்.
இந்த விமர்சனத்துக்குப் பிறகு இருவரும் தங்களுக்குத் தெரிந்த 'இங்கிலீஷ் டியூன்' ஒன்றைச் சீட்டியடித்துக் கொண்டே பாட ஆரம்பித்தனர்.
பாட்டு முடிந்ததும் ஜானகிராமனுக்கும் வைஜயந்திக்கும் இடையே இருந்த இடைவெளியைச் சுட்டிக் காட்டி, "இப்படிப் போவோமா?" என்றான் ஒருவன்.
"ஓ, போவோமே!" என்றான் இன்னொருவன்.
ஜானகிராமன் அவர்களை வெறுப்புடன் நோக்கினான். அவசியமானால் பாதரட்சையிலிருந்து பட்டுக்குஞ்சம் கட்டிய விளக்குமாறு வரை ருசி பார்ப்பதற்குத் தயாராயிருந்த அந்த ‘மைனர்'கள் அதை லட்சியம் செய்யவில்லை; இருவருக்கும் நடுவே புகுந்து சென்றனர். சிறிது தூரம் சென்றபிறகு மீண்டும் திரும்பி இருவருக்கும் நடுவே வந்தனர்.
இந்தத் திருவிளையாடலின் காரணமாகத் தன் கணவன் பொறுமையை இழக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக, "இது என்ன சங்கடம்? எழுந்து போவோம் வாருங்கள்!" என்றாள் வைஜயந்தி. தம்பதிகள் இருவரும் மீண்டும் தனிமையை நாடி நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் 'களுக்'கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. சிரித்தவர்கள் வேறு யாரும் இல்லை; 'டூப்ளிகேட் இங்கிலீஷ்'காரர்கள்தான்!
"ஒருவேளை இவர்களை இங்கே அனுப்பி வைத்த கைங்கரியம் அம்மாவைச் சேர்ந்ததாயிருக்குமா!" என்றான் ஜானகிராமன்.
"தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!" என்றாள் வைஜயந்தி.
"சரி, சரி; அந்தக் கோயிலுக்கே போய்த் தொலைவோம், வா!" என்றான் எரிச்சலுடன்.
இருவரும் நேரே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தனர். கலாசாலை 'மைனர்'களும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். இரண்டு மூன்று முறை அவர்களைத் திரும்பிப் பார்த்த ஜானகிராமன் அப்புறம் திரும்பிப் பார்க்கவேயில்லை.
★★★
ஜானகிராமன் பஸ் ஸ்டாண்டை அடைவதற்கும் பஸ் வந்து நிற்பதற்கும் சரியாயிருந்தது. தம்பதிகள் இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள். தங்களைத் தொடர்ந்து வந்த 'மைனர்'களை மட்டந்தட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் "கர்ம சிரத்தையுடன் இவ்வளவு தூரம் வந்து எங்களைப் பஸ்ஸில் ஏற்றி விடுகிறீர்களே, ரொம்ப சந்தோஷம்!" என்று சொல்லிவிட்டு ஜானகிராமன் திரும்பினான்.
"நீங்களா, அத்திம்பேரா! இருட்டில் உங்களை நான் கவனிக்கவே யில்லை; யாரோ என்று பார்த்தேன் மன்னிக்கணும்" என்று அசடு வழியச் சொன்னான் அந்த 'மைனர்'களில் ஒருவன்.
அவ்வளவுதான்; அடுத்தவன் கையிலிருந்த சிகரெட் துண்டை வீசி எறிந்து விட்டுக் கம்பி நீட்டிவிட்டான்.
"வைஜயந்தி! இப்படித் திரும்பி உன் தம்பியின் அழகைக் கொஞ்சம் பாரேன்?" என்றான் ஜானகிராமன்.
அவள் எதிர்பாராத விதமாகத் தம்பியைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
ஜானகிராமன் அவன் கையைப் பிடித்து இழுத்துப் பலவந்தமாக உட்கார வைத்தான்.
அசடுவழியும் தம்பியின் முகம் அக்காவின் அநுதாபத்தைப் பெற்றது. அவள் பேச்சை மாற்ற எண்ணி, "நீ எங்கே வந்தாய்? எப்போது வந்தாய்?" என்று கேட்டாள்.
"அப்பாவின் நண்பர் ஒருவரின் வீடு இங்கே இருக்கிறது, அக்கா! அவருடைய மகனுக்கு இன்று காலை கல்யாணம். அப்பா அதற்கு என்னை அனுப்பி வைத்திருந்தார். அப்படியே உன்னையும் பார்த்து விட்டு வரச் சொன்னார். என்னுடன் இருந்தானே, அவன் என் நண்பன். அவனைக் கல்யாண வீட்டில் பார்த்தேன். அவனும் நானும் சாயந்திரம் உங்கள் வீட்டுக்கு வந்தோம். நீங்கள் நவராத்திரி விழாவுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். சிறிது நேரம் கடற்கரையில் இருந்து விட்டு வரலாம் என்று இங்கே வந்தேன். வந்த இடத்தில்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. என்னை மன்னித்துவிடு, அக்கா!" என்றான் அவன்.
ஜானகிராமன் வைஜயந்தியின் பக்கம் திரும்பி, "தாயிற் சிறந்ததொரு கோயில் இருக்கிறதோ இல்லையோ, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றான்.
அதற்குள் அவர்கள் இறங்கவேண்டிய இடத்தில் பஸ் வந்து நின்றது. மூவரும் இறங்கி வீட்டையடைந்தனர்.
"அழகாய்த்தாண்டா இருக்கு, நீ அவளை அழைத்துக் கொண்டு இந்நேரம் தன்னந் தனியாகத் திரிந்துவிட்டு வருவது! அவளுக்கு வெட்கமில்லா விட்டாலும் உனக்காவது இருக்கவேண்டாமோ?" என்றாள் அன்னை.
"அம்மா உன்னை அன்னையாகப் பெற்ற எனக்கு வெட்கம் ஒரு கேடா, அம்மா?" என்றான் ஜானகிராமன்.
"உஸ்..... தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!" என்றாள் வைஜயந்தி.
அன்பு
விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? - எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே மலர்ந்த காதல், பிஞ்சு விடவில்லை!
வேலைக்குப் போகும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவன் "லக்ஷ்மி!" என வேண்டியது; அவள் 'ஏன்?!' என வேண்டியது - மாதாந்திர பட்ஜட், மைத்துனன் வருகை, அடுத்த வீட்டுக்காரியின் புதுப் புடவை, அவள் அகமுடையானின் வருமானம் ஆகியவற்றைப் பற்றி ஏதாவது பேச வேண்டியது; அவ்வளவுதான் - 'அப்பப்பப்பா!' 'அம்மம்மம்மா!' என்று தெத்தித் தெத்திப் பேசுவதற்கும், 'என் கண்ணா வாடா!' என்று கொஞ்சுவதற்கும் இடையிடையே, 'ங்கா, ங்கா' என்ற இன்பநாதம் எழுப்புவதற்கும் 'ச்,ச்,ச்!' என்ற இன்ப ஒலி கிளம்புவதற்கும் என்ன வேண்டுமோ, அந்தப் பிஞ்சு அந்த மூன்றாவது ஜீவன் - அவர்களுக்கு இல்லவே இல்லை!
அருணோதயத்தில் அடுத்த வீட்டுக் குழந்தை ‘வீல், வீல்' என்று கத்தும். அதன் அப்பா அந்த நேரத்தில் தான் ஏதோவிழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருப்பார். அடுப்பண்டை ஏதோகாரியமாக இருக்கும் அம்மா, "எழுதிக் கிழித்தது போதும்; அந்தக் குழந்தையைக் கொஞ்சம் தூக்குங்கள்!" என்பாள். "குழந்தையை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டால் போதுமா? - வா, உன்னையும் தூக்கி வைத்துக் கொள்கிறேன்" என்று எரிந்து விழுவார் அப்பா. இருவரிடையேயும் வார்த்தை வளர்ந்து கொண்டே போகும். கணவன் அழகைப் பற்றி மனைவியும், மனைவியின் அழகைப் பற்றிக் கணவனும் காரசாரமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் அம்மாவும் குழந்தையோடு சேர்ந்து அழுது தீர்க்கும் கட்டம் வரும் வரை, நாராயணனும் லக்ஷ்மியும் அந்தத் குழந்தை அழுவதை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்!
"இந்தக் கிராமபோன் கம்பெனிக்காரர்கள் எதையெல்லாமோ ‘ரிகார்ட்' செய்கிறார்களே, ஒரு குழந்தையை நல்லாக் கத்தவிட்டு 'ரிகார்ட்' செய்யக் கூடாதோ?" என்பாள் லக்ஷ்மி.
"அவர்களென்ன, இந்த ரேடியோக்காரர்களையுந்தான் பாரேன்? தினசரி எத்தனையோ பேரை மாறி மாறி அழ வைக்கிறார்கள் - ஒரு குழந்தை ஆனந்தமாக அழுவதற்கு அரைமணிநேரம் 'சான்ஸ்' கொடுக்கக் கூடாதோ?" என்பான் நாராயணன்.
என்றைக்காவது ஒருநாள் என் அருமைப் பெண்ணைப் பற்றி நான் பேச்சோடு பேச்சாக, "சுதா, சுவரைத் துணையாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள். என் அறையில் வைத்தது வைத்தபடி ஒன்றுமே இருப்பதில்லை!" என்பேன்.
உடனே, தன் மேஜை மீது ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து நாராயணன் பெருமூச்சு விடுவான். லக்ஷ்மி சமையலறையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டுச் சோகமே உருவாய்ச் சுவரோடு சுவராகச் சாய்ந்து விடுவாள்.
அவர்கள் போகாத கோயில்களில்லை; ஆடாத தீர்த்தங்களில்லை; தரிசிக்காத தெய்வங்களில்லை; வலம் வராத மரங்களில்லை; அனுஷ்டிக்காத விரதமில்லை/ என்ன இருந்தும் என்ன பயன்? - 000!
★★★
அப்பாடி! ஒரு வழியாக அந்த இளந்தம்பதிகளுடைய எண்ணம் ஈடேறுவதற்கு எட்டாவது வருஷமும் பிறக்க வேண்டுமென்று இருந்தது போலும்? "வெந்நீர் போட்டு விட்டேன்!", "காப்பி தயார்!", "இலை போட்டாச்சு!" என்றெல்லாம் இத்தனை நாளும் லக்ஷ்மியே முன்வந்து நாராயணனை அழைத்தது போக, இப்பொழுது நாராயணனே முன்வந்து "வெந்நீர் போட்டாச்சா?" "காப்பி தயாராகிவிட்டதா?" "இலை போட்டாச்சா?" என்றெல்லாம் விசாரிக்கும்படியாகிவிட்டது.
முன்னெல்லாம் "லக்ஷ்மி!" என்று ஒருமுறை கூப்பிட்டாலும் போதும், "ஏன்?" என்று எங்கே யிருந்தாலும் அவள் சிட்டாய்ப் பறந்து ஓடி வருவாள். இன்று அப்படியில்லை. "லக்ஷ்மி, லக்ஷ்மி!" என்று லக்ஷோபலக்ஷம் தடவை அடித்துக் கொண்டாலும் "உம்,உம்" என்ற முனகலைத் தவிர அவனால் அவளை நேரில் பார்க்க முடியவில்லை.
"இதென்ன வம்பு!" என்று அலுத்துக் கொண்டே நாராயணன் எழுந்து உள்ளே போவான்.
அவள் எண் சாண் உடம்பையும் ஒரு சாண் உடம்பாக ஒடுக்கிக் கொண்டு எங்கேயாவது ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருப்பாள்.
"என்ன, லக்ஷ்மி?" என்று விசாரிப்பான் நாராயணன்.
"ஒன்றுமில்லை!" என்று எதையோ மறைக்கப் பார்ப்பாள் அவள்.
"என்னதான் சொல்லேன்?" என்று அவளைத் தூக்கி உட்கார வைப்பான் அவன்.
"கொஞ்சம் மயக்கமாயிருக்கிறது; அவ்வளவு தான்! சிறிது நேரம் படுத்து எழுந்தால் சரியாய்ப் போய்விடும்" என்று சொல்லி விட்டு 'சட்'டென்று படுத்துக் கொள்வாள் அவள்.
"சமையல் செய்வதில் சகதர்மிணிக்குநான்
சளைப்பில்லை காணென்று கும்மியடி!"
என்று பாடிக்கொண்டே சமையலறைக்குள் நுழைவான் நாராயணன். அவனே வெந்நீர் போட்டுக் குளித்து விடுவான்: அவனே சமைத்தும் சாப்பிட்டு விடுவான்; கடைசியில் லக்ஷ்மியையும் அழைப்பான்; சாப்பிடுவதற்கு!
"பழிக்குப் பழிவாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம்; நம் சமையலின் தராதரத்தைப் பற்றி அவர் என்னவெல்லாம் சொல்வாரோ, அதையெல்லாம் அப்படியே இப்போது திருப்பிச் சொல்லிவிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே எழுந்திருப்பாள் லக்ஷ்மி. ஆனால் ஒரு வாய் சாதத்தை எடுத்து வைத்ததும் அவளுக்குக் குமட்டும்; எழுந்து வாசலுக்கு ஓடி விடுவாள்.
"என்ன, லக்ஷ்மி? நான் செய்த சமையலுக்கு நீ கொடுக்கும் 'ஸர்டிபிகேட்' இதுதானா!" என்று கேட்டு விட்டுச் சிரிப்பான் நாராயணன். லக்ஷ்மியும் அவனுடைய சிரிப்பில் கலந்து கொள்வாள்.
இவை மட்டுமா? - நாராயணன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து வந்த லக்ஷ்மியிடம் இப்பொழுது எத்தனை மாறுதல்!
ஒரு நாள் வேலைக்குப் போக கிளம்பிய நாராயணன் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு வாசலில் நின்று "லக்ஷ்மி! என் மேஜையின் மேல் பேனாவை மறந்து வைத்து விட்டேன்; அதைக் கொஞ்சம் கொண்டு வாயேன்!" என்றான்.
அதற்கு லக்ஷ்மி அளித்த பதில் அவனைத் தூக்கிவாரிப் போடுவாதாயிருந்தது; "எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது; நீங்களே வந்து எடுத்துக் கொண்டு போங்கள்!" என்றாள் அவள்.
இம்மாதிரி விஷயங்களுக்காக நாராயணன் இப்பொழுதெல்லாம் அவளைக் கோபித்துக் கொள்வதில்லை; ஏனெனில், அவனுக்கு விஷயம் விளங்கி விட்டது. இல்லையென்றால் இத்தனை நாளும் அவள் விரும்பிக் கேட்டதையே வாங்கிக் கொடுக்காத நாராயணன், இப்பொழுது அவள் கேட்காததையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பானா?
அன்றொரு நாள் வாங்கி வந்தீர்களே ரோஸ் ஜாங்கிரி, அது ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது!" என்று லக்ஷ்மி இப்போது சொன்னால் போதும்; அன்று மாலையே அதேமாதிரி ஜாங்கிரியில் ஒரு டஜன் வந்து சேர்ந்துவிடும்.
"இன்று காலை என் சிநேகிதி ஸரஸா இங்கே வந்திருந்தாள். ரேடியோ வளையலாம், ஒன்றுக்கு இரண்டு சவரன் ஆகிறதாம் கைக்கு ஒன்று செய்து போட்டுக் கொண்டிருக்கிறாள். பாதகமில்லை. பார்ப்பதற்கு நன்றாய்த் தான் இருக்கிறது!" என்று சொன்ன லக்ஷ்மி வாயெடுக்க வேண்டியது தான்; "அதற்கென்ன இன்னும் ஒரே வாரத்தில் நாமும் அதேமாதிரி இரண்டு செய்துவிட்டால் போச்சு!" என்பான் நாராயணன்.
"எதிர் வீட்டுக்காரி கட்டிக் கொண்டிருக்கிறாள் ஏரோப்ளேன் பார்டர் போட்ட புடவை. எப்படியிருக்கிறது தெரியுமா? விலை எண்பது ரூபாய்தானாம்?" என்பாள் லக்ஷ்மி.
அவ்வளவுதான்; அந்த மாதக் கடைசியில் சம்பளம் வாங்கியதும், நாராயணனின் முதல் வேலை மேற்சொன்ன புடவையை வாங்கிக் கொண்டு வருவதாய்த்தானிருக்கும்!
★★★
நாராயணன் - இப்படியெல்லாம் லக்ஷ்மியைக் கண்ணுங் கருத்துமாக கவனித்து வந்தும், அவளுடைய வேதனை மட்டும் குறையவில்லை. ஒன்று போனால் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல டாக்டர் 'பில்'லும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.
ஒரு நாள் நாராயணன் ஏதோ எண்ணித்துணிந்தவனாய் 'லக்ஷ்மி, லக்ஷ்மி! இது எத்தனையாவது மாதம்?' என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டான்.
"ஆறாவது!" என்று சொல்லிவிட்டு, அவள் உள்ளே ஓடிவிட்டாள்!
நாராயணன் அவளைப் பின் தொடர்ந்து சென்று "அப்படியானால் அடுத்த மாதம் உன்னை அழைத்துக் கொண்டு போகும்படி அத்தைக்குக் கடிதம் எழுதுகிறேன்!" என்றான்.
தலை குனிந்த வண்ணம் முந்தானையின் ஒரு மூலையை முறுக்கி விட்டுக் கொண்டே, "அதற்குள் என்னை அங்கே அனுப்பி வைத்துவிட்டு, நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்களாம்?" என்று கேட்டாள் லக்ஷ்மி.
"நான் எக்கேடாவது கெட்டுப் போகிறேன். என் சுகத்திற்காக உன் கஷ்டத்தை நீ வேண்டுமானால் சகித்துக் கொண்டிருக்கலாம்; என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது!"
"ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது. என் சுகத்திற்காக உங்கள் கஷ்டத்தை மட்டும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?"
"இந்தப் பிடிவாதமெல்லாம் வேண்டாம்; நீ இல்லாமலே என்னால் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள முடியும்! - நான் சொல்கிறபடி, நீ போய் உடம்பைப் பார்த்துக் கொண்டு, வா?"
"ஆமாம், உங்கள் சமையலும் நீங்களும்!"
"சரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்!"
"ஐயோ! உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்...?"
அதற்கு மேல் நாராயணனால் பொறுக்க முடியவில்லை. "அதெல்லாம் என் இஷ்டத்தைப் பொறுத்தது. அடுத்த மாதம் நீ உன் அம்மாவுடன் போய்த்தான் ஆக வேண்டும்!" என்று உச்சஸ்தாயில் இரைந்தான்.
காதைப் பொத்திக் கொண்ட லக்ஷ்மி, "வாயையும் பொத்திக் கொண்டாள். இல்லாத சந்தேகமெல்லாம் வந்துவிட்டது அவளுக்கு! - அத்துடன் எப்பொழுதோ நிகழ்ந்த சில சம்பவங்கள், கேட்ட பேச்சுக்கள், உலாவிய வதந்திகள் எல்லாம் அவளுடைய ஞாபகத்துக்கு வந்து விட்டன - அவ்வளவுதான் அவளுடைய அன்புள்ளம் சலசலத்தது. ஆத்திரம் அவளை ஆட்கொண்டு விட்டது!
பேதைப் பெண் பின் வருமாறு எண்ணமிட்டாள்;
"இவர் ஏன் நம்மை இப்படி ஒரேயடியாய்த் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்? ஒருவேளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவளையாவது....
வி.க.-22 எண்ணம் முடியவில்லை; அதற்குள் கண்ணிர் கரை புரண்டு விட்டது.
"நாராயணன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவன் பாட்டுக்கு அத்தைக்கு கடிதம் எழுதிப் போட்டு விட்டான். அவளும் வந்தாள்; லக்ஷ்மியை விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு போனாள்.
★★★
எட்டு வருஷ காலம் இணைபிரியாமலிருந்த நாராயணனுக்குத் தனிமையைத் தாங்குவது அசாத்தியமாயிருந்தது. சில சமயம் தன்னை மறந்து "லக்ஷ்மி!"என்று அவன் கத்திவிடுவான். பிறகு, "ஒஹோ! லக்ஷ்மி இங்கே இல்லையா!"என்று தன்னைத் தானே அவன் தேற்றிக் கொண்டு விடுவான்.
அன்று பிரசவத்துக்கு முன் அவளை ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று அவன் உள்ளம் துடியாய்த் துடித்தது. உடனே ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டான்.
ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், "அவள் எப்படியிருக்கிறாளோ?" என்று ஏங்கிற்று அவன் மனம். அந்த நிலையில் அவனுடன் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே, "அவள் எப்படியிருக்கிறாளோ!" என்று லக்ஷ்மியை நினைத்து ஏங்கவேண்டுமென்பது அவனுடைய எண்ணம் போலும்! - இல்லையென்றால், அவர்கள் பாட்டுக்குத் தங்களுக்குள் பேசிச் சிரிப்பது கூட அவனுக்கு ஏன் பிடிக்காமல் இருக்க வேண்டும்? - அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஏழைகளைக் கவனிக்காமல் செல்லும் பணக்காரனைப்போல, சின்னஞ்சிறு ஸ்டேஷன்களைக் கவனிக்காமல் 'மெயில்'சென்று கொண்டிருந்தது. அதைவிட வேகமாக நாராயணனின் மனோரதம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் ரயிலை விட்டு இறங்கியதும் ஓடோடியும் சென்று பஸ்ஸைப் பிடித்தான். வீட்டை நெருங்கியதும் உள்ளே லக்ஷ்மியும் அவளுடைய அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. "அம்மாடி! அந்த மட்டும் லக்ஷ்மி செளக்கியமாய்த்தான் இருக்கிறாள்" என்று ஆறுதல் அடைந்த வண்ணம், நாராயணன் சற்று நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.
"அவன் அங்கே எப்படியிருக்கிறானோ? - வீட்டில் தான் வேறுயாரும் கிடையாதே, உன்னை ஏன் அவன் ஏழாவது மாதமே இங்கு அனுப்பி வைக்க வேண்டும்? ஒன்பதாவது மாதம் அனுப்பி வைத்திருக்கக் கூடாதோ?" என்றாள் லக்ஷ்மியின் தாயார்.
"நானும் அதைத்தான் சொன்னேன்; அவர் கேட்டால்தானே? - ஒருவேளை நான் இல்லாத சமயத்தில் வேறு எவளையாவது....?"
"சீ சீ!அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது; டாக்டர் செலவுக்குப் பயந்து அவன் ஒருவேளை உன்னை இங்கே அனுப்பியிருக்கலாம்!”
"ஆமாம், வண்டு மதுவைத்தானே விரும்புகிறது, மலரையா விரும்புகிறது?"என்று அவர்களுடைய பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் லக்ஷ்மியின் தகப்பனார்.
இதைக் கேட்ட நாராயணன் தலையில் இடி விழவில்லை; இமயமலையே பெயர்ந்து வந்து விழுந்தது!
"அடக் கடவுளே! அன்பின் லட்சணம் இதுதானா? - இதற்கா நான் இவ்வளவு பாடுபட்டேன்? - எல்லாம் எனக்காக என்றால், அன்று கஞ்சியைக் காலில் கொட்டிக் கொண்டு, கதிகலங்கிப் போனதுகூட அவளுக்காக இல்லையா? மஞ்சள் தூளை மிளகாய்த் தூள் என்று எண்ணி அன்றிரவு கத்திரிக்காய்க் கறியில் கொட்டிவிட்டு, கடைசியில் மருந்தை விழுங்குவதுபோல் விழுங்கித் தொலைத்தேனே, அதுகூட அவளுக்காக இல்லையா? - அதெல்லாம் போகட்டும்; எப்படியாவது அவள் சந்தோஷமாயிருந்தால் போதும்!" என்று எண்ணி, அளவுக்கு மீறி அங்கங்கே கடனை வாங்கிவிட்டு இப்போது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேனே, அது கூடவா அவளுக்காக இல்லை...?'
எண்ணம் முடிவடையவில்லை; அதற்குள் அவன் வந்த வழியே திரும்பிவிட்டான்
சிறிது நேரத்திற்குப் பிறகு 'எங்கே இருக்கிறோம்?' என்று அவன் தன்னைக் கவனித்தபோது தான் சென்னையை நோக்கிப் போகும் ரயிலில் தான் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது!
"ஆபீஸாப்பியாசம்"
மாதா கோயிலின் மணியோசையிலிருந்து மணி ஒன்பது என்று தெரிந்தால் போதும்; வாத்தியார் வைத்தியலிங்கம் தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, “சரி, நான் போகிறேன்!” என்பார்தம் சகதர்மிணியிடம்.
"அபசகுனம் மாதிரி 'போகிறேன், போகிறேன்' என்று சொல்கிறீர்களே? 'போய் வருகிறேன்' என்று சொல்லுங்கள்!"என்று திருத்துவாள் அவள்.
"ஆமாம், நான் போய்விட்டால் உலகமே அஸ்தமித்து விடுமாக்கும்?" என்பார் வாத்தியார் வெறுப்புடன்.
"அதற்கு என்னை ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்?" என்று தன் மேலாக்கை எடுத்துக் கண்களைத் துடைத்து விட்டுக் கொள்வாள் அவள்.
"அடி, அசடே! நான் மட்டுமா உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்? நீயுந்தானே என்னைக் கல்யாணம் செய்துகொண்டாய்?" என்று சொல்லி, வராத சிரிப்பை வரவழைத்துக் கொள்வார் வாத்தியார். உடனே அவருடைய சகதர்மிணியின் கோபமும் ஒருவாறு தணிந்து விடும், அவ்வளவுதான்; பள்ளிக்கூடத்தை நோக்கி வாத்தியார் நடையைக் கட்டிவிடுவார்.
வழியெல்லாம் அவருக்குத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் - அவரிடம் படித்தவர்கள் - இப்படி எத்தனையோ பேர் அவரைச் சந்திப்பார்கள். "என்ன, வாத்தியார் வாள்! - நமஸ்காரம் - செளக்கியந்தானே?" என்று கை கூப்பிய வண்ணம் வழக்கமாகக் கேட்கும் அந்த அசட்டுக் கேள்வியைக் கேட்காமல் விடமாட்டார்க்ள்.
"நேற்றுத்தான் வாத்தியார் செளக்கியமாயிருந்தாரே, இன்று அவருடைய செளக்கியத்திற்கு என்ன ஆபத்து வந்துவிட்டிருக்கப் போகிறது!" என்று எண்ணி, அவர்கள் ஒரு நாளாவது சும்மா இருக்க வேண்டுமே? - ஊஹும்!
அப்பாவி வாத்தியார் என்ன செய்வார், பாவம்! - அவரும் அவர்களுக்குச் சளைக்காமல், "செள...க்..கி....ய...ந்... தா....ன்!" என்று முகஸ்துதிக்காக ஒரு பச்சை பொய்யைக் கொஞ்சம் தயக்கத்துடன் சொல்லிவிட்டு மேலே நடப்பார்.
இடையே கோயில்கள் வேறு வந்து குறுக்கிடும். வாத்தியார் வைத்தியலிங்கம் பிள்ளையைவிட எத்தனையோ விதத்தில் உயர்ந்தவர்கள் பலர் காரிலும் மற்ற வாகனங்களிலும் அதே ரஸ்தாவில்தான் சென்று கொண்டிருப்பார்கள், அவர்களெல்லாம் தங்களைக் குறுக்கிடும் கோயில்களைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. இந்த விஷயத்தில் வாத்தியார் வைத்தியலிங்கம் மட்டும் அவர்களுக்கு நேர் விரோதம். எந்தக் கோயிலைக் கண்டாலும் சரி, உடனே தமது பாதரட்சைகளைக் கழற்றிக் கீழேவிட்டு விட்டு, பவ்யமாக ஒரு 'கும்பிடு' போட்டுவிட்டுத்தான் அப்பால் செல்வார். விஷ்ணு கோயில், சிவன் கோயிலாயிருந்தால் இந்த ஒரே ஒரு கும்பிடோடு சரி - விநாயகராயிருந்துவிட்டாலோ தொல்லை தான் - பிரதட்சணம் வருவதோடு தோப்புக்கரணம் வேறு போட வேண்டும்; காதைப் பிடித்துக் கொள்வதோடு கன்னத்தில் வேறு போட்டுக் கொள்ள வேண்டும். இதெல்லாம்தான் போகட்டும் என்றால், தலையிலாவது குட்டிக் கொள்ளாமல் இருப்பார் என்கிறீர்களா - அதுதான் கிடையாது! - எண்ணி மூன்று குட்டுகள் குட்டிக் கொள்ளாமல் அடுத்தடி வைக்கமாட்டார்!
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேற்கண்டவாறு கோயிலுக்குக் கோயில் நின்று தொழுது சென்ற வாத்தியார் பூலோகத்தில் நரகத்தைக் கண்டார்; தொழாமலே சென்றவர்களோ, சொர்க்கத்தைக் கண்டார்கள்!
★★★
எது இருந்தாலும் எது இல்லாமற் போனாலும் வாத்தியார் வைத்தியலிங்கம் எத்தனையோ விதத்தில் கொடுத்து வைத்தவர். தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகும் வரை தாங்கள் இருந்தால் போதும் என்று பகவானை அல்லும் பகலும் அனவரதமும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்த அவருடைய பெற்றோர், அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்துங்கூட உயிருடன் இருந்தார்கள்; கல்யாணம் பண்ணிக்கொண்டு புக்ககம் போனதங்கை, அண்ணாவை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க மனமில்லாமலோ என்னவோ, அடுத்த வருஷமே விதவைக் கோலத்துடன்பிறந்தகம் வந்து சேர்ந்துவிட்டாள்; அவருடைய மனைவி மங்களமும் ஸ்ரீதனமாக ஒன்றும் கொண்டு வராமற் போகவில்லை - தன்னுடன் பெற்றோரையிழந்த இரண்டு தங்கைமாரைக் கட்டி கட்டியாகக் கொண்டு வந்திருந்தாள்!
இத்தனை விஷயங்களில் கொடுத்து வைத்திருந்த வாத்தியார், ஒரே விஷயத்தில் மட்டும் ஏனோ கொடுத்து வைக்கவில்லை. அதாவது அவருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் உயிரோடு இருக்கவில்லை. என்ன இருந்தாலும் கடவுள் கருணையுள்ளவரல்லவா? அவற்றில் ஆறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார். நான்காவதாகப் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் தான் அவருக்கு இருந்தது. அதற்கு இப்போது ஆறாவது வயது நடந்து கொண்டிருக்கிறது. ஆக எட்டு ஜீவன்களும் வாத்தியார் வைத்தியலிங்கத்தின் வரும்படியை எதிர்பார்த்துத் தங்கள் காலத்தைக் கழித்து வந்தன.
இந்த லட்சணத்தில்தான் தன்னுடைய ஏக புத்திரஜயசந்திரனுக்கு நல்ல முறையில் அக்ஷராப்பியாசம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினாள் மங்களம். அதற்கேற்றாற்போல், அடுத்த தெருவில் வசிக்கும் அழகிரிசாமி என்பவன் - சின்னஞ் சிறு வயதில் வைத்தியலிங்கம் வாத்தியாரிடம் கல்வி கற்றவன் - அன்று கையில் அக்ஷராப்பியாசப் பத்திரிக்கையுடன் அவர்கள் வீட்டைத் தேடி வந்தான்.
"வாடா, வா! என்ன விசேஷம்?"என்று வாத்சல்யத்துடன் அவனை வரவேற்றார் வைத்தியலிங்கம்.
"குழந்தை குமரேசனுக்கு அடுத்த வாரம் அக்ஷராப்பியாசம், அழைப்பிதழ் வைத்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்"என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிக்கையை எடுத்து அவரிடம் நீட்டினான் அழகிரிசாமி.
"ரொம்ப சந்தோஷம்!" என்று அதை வாங்கிக் கொண்டார் வாத்தியார்.
“என்னமோ, எல்லாம் உங்க புண்ணியந்தான்! அன்று நீங்கள் என்னைத் தெருத் தெருவாகத் தேடியலைந்து இழுத்துக் கொண்டு போய் அத்தனை அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்திராவிட்டால் இன்று நான் எப்படி இருந்திருப்பேனோ?”
"என் புண்ணியமென்ன, புண்ணியம்? எல்லாம் கடவுளின் கிருபை என்று சொல்லு!"
"அப்படிச் சொல்லிவிட முடியுமா? எனக்குத் தெரிந்த கடவுள் நீங்கள்தான்! - எது எப்படியானாலும் குழந்தையின் அக்ஷராப்பியாசத்திற்கு நீங்கள் அவசியம் வரவேணும். அவனையும் உங்கள் பள்ளிக்கூடத்தில்தான் சேர்க்கப் போகிறேன். என்னைக் கவனித்துக் கொண்டது போல் அவனையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேணும்..."
"அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்"
"நமஸ்காரம்!"
அவன் போய்விட்டான்; மங்களம் ஆரம்பித்தாள்.
"ஆமாம், நம் ஜயச்சந்திரனுக்கு ஐந்து வருஷங்கள் பூர்த்தியாகி ஆறாவது வருஷங்கூடப் பிறந்து விட்டதே இன்னும் எப்பொழுதுதான் அவனுக்கு நீங்கள் அக்ஷராப்பியாசம் செய்துவைக்கப் போகிறீர்கள்?"
"சரிதான்போடி, அது ஒன்றுதான் குறைச்சல் நமக்கு!”
“என்ன, அப்படிச்சொல்கிறீர்களே!இருப்பது ஒரு குழந்தை..."
"நான்மட்டும் இரண்டு என்றா சொல்கிறேன்?"
"உங்கள் பரிகாசமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்;"
"என்னடி, உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? வயிற்றுச் சோற்றுக்கே வரும்படி போதாமல் மாதம் பிறந்தால் பத்தும் இருபதுமாகக் கடன் வாங்கிக் காலஷேபம் செய்ய வேண்டி யிருக்கிறது; அக்ஷராப்பியாசம் என்கிறாயே!”
"ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது! ஊர்ப் பிள்ளைகளெல்லாம் உங்களைக் கொண்டு படிக்க வேண்டும்; உங்கள் பிள்ளை மட்டும் தற்குறியாகத் திரிய வேண்டுமாக்கும்?"
"அதற்கென்ன, அப்படியா விட்டுவிடுவேன்? பெற்றெடுத்த தோஷத்துக்காக அவனுக்கு அக்ஷராப்பியாசம் செய்து வைக்காவிட்டாலும் ஆபீஸாப்பியாசமாவது செய்து வைக்க மாட்டேனா?"
"அதென்ன, ஆபீஸாப்பியாசம்....?"
"சரியாய்ப் போச்சு; தயவு செய்து நீ கொஞ்ச நேரம் பேசாமலிரேன்! அதைப்பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம்.இப்போது வீட்டுச் செலவுக்கு இந்த மாதம் யாரிடம் இருபது ரூபாய் மேற்கொண்டு கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களிலோ ஒருவர் கூடப் பாக்கி இல்லை; எல்லோரிடமும் வாங்கியாகிவிட்டது. புதிதாக யாரையாவது பிடிக்க வேண்டும். யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சமயத்தில் வந்து நீ என்கழுத்தை அறுக்கிறாயே!” என்று எரிந்து விழுந்தார் வாத்தியார்.
"உங்களுக்கு ஏன் பெண்டாட்டியும் பிள்ளையும் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றாள் அவள்.
"உனக்கு ஏன் புருஷனும் பிள்ளையும் என்று எனக்கும் தெரியவில்லை!" என்றார் அவர்.
★★★
இந்தச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருக்கும். என்றுமில்லாத திருநாளாய் அன்று வாத்தியார் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே ஆனந்த பரவசத்துடன் வந்தார். இந்தக்கோலத்தில் அவரைக் கண்டதும் மங்களம் "என்ன விசேஷம் ?"என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டேசமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.
"ஏதாவது விசேஷம் இல்லாமல் நான் இப்படியிருப்பேனா? நீயுந்தான் இத்தனை வருஷங்களாக என்னுடன் குடித்தனம் செய்துகொண்டு வருகிறாயே, என்னைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாயா? வாழ்க்கையில் என்றைக் காவது ஒரு நாள் நான் சந்தோஷமாயிருக்கிறனென்றால், அன்று எங்கேயாவது பத்தோ, இருபதோ கடன் வாங்கியிருப்பேன்....!"
"பேசுகிறீர்களே, நீங்களும் ஒரு ஆண்பிள்ளை மாதிரி! பையனின் அக்ஷராப்பியாசத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டீர்களாக்கும் என்று நான் கேட்க வந்தால்..."
"கவலைப்படாதே; அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டேன்...."
"என்ன பணத்திற்கா?”
"ஆமாம்; அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்!"
"எவ்வளவு?"
"மாதம் பதினைந்து ரூபாய்!”
"என்ன பிதற்றுகிறீர்? மாதம் பதினைந்து ரூபாய் வாங்கி அக்ஷராப்பியாசம் எப்படிச் செய்வதாம்?" "அக்ஷராப்பியாசம் என்னடி, அக்ஷராப்பியாசம்! இதோ பார், அடேய் சுந்தர்! அடேய் சுந்தர்...!
"பையன் வந்தான்; "என்ன அப்பா?"என்று கேட்டான்.
"கோடி வீட்டுக் கோடீஸ்வர ஐயரை உனக்குத் தெரியுமா?"
"தெரியுமே!"
"நாளையிலிருந்து நீ அவருடன் போ! அவர், தம் ஆபீஸில் உனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுப்பார்.என்ன வேலை தெரியுமா? மானேஜர் மேஜையின் மேலிருக்கும் மணி 'டங்’ என்று ஒலித்ததும், அவருக்கு முன்னால் நீ போய் பயபக்தியுடன் நின்று, "ஏன் ஸார்?" என்று கேட்க வேண்டும்; அவர் வருவதற்கு முன்னால் அவருடைய மேஜை, நாற்காலி முதலியவற்றை துடைத்து வைக்க வேண்டும், என்ன தெரிந்ததா?”
"தெரிந்தது அப்பா!"
பையன் போய்விட்டான். அவன் சென்றதும் மங்களம் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு 'இதுதான் அக்ஷராப்பியாசமா? இல்லை, கேட்கிறேன்!” என்று இன்னொரு கையை வாத்தியாருக்கு முன்னால் நீட்டிக் கேட்டாள்.
"யார் சொன்னது? - இது ஆபீஸாப்பியாசண்டி, ஆபீஸாப்பியாசம்"!என்றார் சிரித்துக் கொண்டே.
காந்தியவாதி
"நாளைக்குத் தீபாவளி என்று தலையைச் சொரிந்தான் குப்புலிங்கம்.
"ஆமாம், அதற்கென்ன இப்போது?"என்று அன்பையும் அஹிம்ஸையையும் சற்றே மறந்து கேட்டார், காந்திஜியின் படத்திற்கு அருகே விளக்கேற்றி வைத்து விட்டுப் பண்பே உருவாய் நின்றுகொண்டிருந்த தோல் மண்டிதுளசிங்கராயர்.
"ஒன்றுமில்லை....."
“என்ன ஒன்றுமில்லை? இதோ பாரும் போதுமென்ற மனந்தான் பொன் செய்யும் மருந்து!"
"உண்மைதான்; ஆனால் ஒன்று....."
“என்ன ஆனால் ஒன்று?"
"வயிறு போதுமென்று சொல்லாதவரை மனம் போதுமென்று சொல்லாது போலிருக்கிறதே!"
"அதற்காகக் கடன்வாங்கித் தீபாவளி கொண்டாட வேண்டுமா, என்ன?”
"இல்லை......"
"இல்லையாவது, கில்லையாவது! வாழ்க்கையில் எளிமை வேண்டும் ஐயா, எளிமை வேண்டும். அதுமட்டும் போதாது மனிதனுக்கு; சொல்லில் சத்தியம் வேண்டும்; செய்கையில் தூய்மை வேண்டும்; நடத்தையில் ஒழுக்கம் வேண்டும்-எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும். இதைத்தான்காந்தி மகாத்மா அன்று சொன்னார்; இன்று நான் சொல்கிறேன் - உதாரணத்துக்கு வேண்டுமானால் என்னைப் பாரும்; மேலே ஒரு துண்டு, கீழே ஒரு துண்டு - இவற்றைத் தவிர வேறு ஏதாவது நான் அணிந்திருக்கிறேனா?"
"இல்லை......"
"ஒரே ஒரு கெடில்லாக் காரைத் தவிர வேறு கார் ஏதாவது வைத்துக் கொண்டிருக்கிறேனா?" "இல்லை......"
"உள்ளுரிலும் ஊட்டியிலும் இருக்கும் இரண்டு பங்களாக்களைத் தவிர வேறு பங்களாக்கள் ஏதாவது உண்டா?"
'ஊஹூம்......"
"வேளைக்கு ஒரு பவுண்டு ஓட்ஸ் சாதம், தாகத்துக்கு நாலே டம்ளர் ஆரஞ்சுஜூஸ், சிற்றுண்டிக்கு கொஞ்சம் நிலக்கடலை, குடிக்க இரண்டே டம்ளர் வெள்ளாட்டுப் பால் இவற்றைத் தவிர வேறு ஆகாரம் ஏதாவது நான் அருந்துவதுண்டா?”
"ஏது?"
"காந்தியடிகளின் 'பிரம்மசரியத்தை நீருந்தான் படித்தீர்; நானும்தான் படித்தேன்-ஆனால் முதல் தாரம் இறந்ததும் நீர் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டீர்; நான் அப்படிச் செய்து கொண்டேனா?”
"கிடையாது!"
"உமக்காவது நாலு குழந்தைகள் இருக்கின்றன; எனக்கு ஒரு குழந்தையாவது உண்டா?”
"கிடையவே கிடையாது!"
"அப்படியிருக்கும்போது நீயும் என்னைப் போலவே ஏன் ஐயா, எளிமையாயிருக்கக்கூடாது?"
"இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் இருக்கிறது; எல்லாவற்றுக்கும் கொடுத்துவைக்க வேண்டுமே!"
"அதென்னய்யா, அது! எளிமையாயிருக்கக் கூடக் கொடுத்துவைக்க வேண்டும், என்ன?”
"அவசியம் கொடுத்துவைக்க வேண்டும். கூத்தாடி வேண்டுமானால் பிழைப்புக்காக ராஜா வேஷம் போடலாம்; ராஜாவே ராஜாவேஷம் போட்டால் நன்றாயிருக்குமா?"நான்தான் பிறக்கும் போதே ஏழையாய்ப் பிறந்து எளிமையிலேயே வளர்ந்துவிட்டேனே!"
"நல்ல ஆளைய்யா, நீர்! எளிமையாயிருக்கக் கூடப் பணக்காரனாய்ப் பிறக்க வேண்டும் என்கிறீரே?...... ம்...... அதையுந்தான் பார்த்து விடுகிறேனே, நாளைக்கு! போய் வாரும்; நீர் ஆடம்பரமாக தீபாவளி கொண்டாட என்னால் 'அட்வான்ஸ்' கொடுக்க முடியாது!”
"அதற்கு வரவில்லை......"
"பின் எதற்கு வந்தீர்?"
"தீபாவளிக்குத் தீபாவளி ஊர்க்குழந்தைகளுக்கெல்லாம் பட்டாசு வாங்கிக் கொடுப்பீர்களே என்று வந்தேன்!”
"ஒ, அதுவா இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா? இந்தாரும், இதை எடுத்துக் கொண்டுபோய் வழக்கம் போல் வாங்கவேண்டிய பட்டாசை வாங்கிக் கொண்டு வாரும்!” என்று நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டினார் துளசிங்கராயர்,
குப்புலிங்கம் அதை வாங்கிக் கொண்டு, “நாளைக்கு ஒருவசவு மிச்சம்!” என்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். அவனுடைய தலை மறைந்ததும் ராயர் கண்களை இறுக மூடிக்கொண்டு, காந்தி மகான் படத்தை நோக்கிக் கை கூப்பிய வண்ணம்,
"வாழ்க நீ எம்மான், இந்த
வையத்து நாட்டிலெல்லாம்......"
என்று வாய்விட்டுப் பாடி, மனம் விட்டுத் துதிக்க ஆரம்பித்துவிட்டார். தெருமுழுவதும் எதிரொலி செய்த அவருடைய குரலைக்கேட்டுக் காந்திஜீயைப் பற்றி நினைக்க நேரமில்லாதவர்கள் கூட நினைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
கான்அப்துல் கபார்கானை 'எல்லைப் புறகாந்தி' என்றால் தோல் மண்டி துளசிங்கராயரை 'எங்கள் ஊர்க்காந்தி’ என்று சொல்ல வேண்டும் அவ்வளவு தூரம் எங்களுடைய அன்புக்குப் பாத்திரமாகியிருந்தார் அவர். அதேமாதிரி நாங்களும் அவருடைய அன்புக்குப் பாத்திரங்களாகியிருந்தோமா என்றால், அதுவேறு விஷயம். அந்த விஷயத்தை விளக்க அவருடைய 'பொன் மொழி' ஒன்றை இங்கே சொன்னால் போதுமென்று நினைக்கின்றேன்:
"ஏழைக்கு என்ன ஐயா, கேடு? அவன் ஓசியிலேயே எவ்வளவு அன்பு வேண்டுமானாலும் காட்டி விடலாம். நான் அன்பு காட்ட வேண்டுமென்றால் காசிலல்லவா கை வைக்க வேண்டியிருக்கிறது"
இந்தப் "பொன் மொழி" எங்களில் சிலருக்குப் 'புன் மொழியாகப் பட்டாலும். அதற்காக எங்களால் அவரைக் கைவிட முடியவில்லை. காரணம், நாங்கள் குடியிருந்த வீடுளெல்லாம் சட்டப்படி-அதாவது, கடவுளுக்கு விரோதமான மனிதனின் சட்டப்படி-அவருடைய அண்ணாவுக்குச் சொந்தமானவையாயும், வேலை செய்து வந்த மில்களெல்லாம் அவருடைய தம்பிக்குச் சொந்தமானவையாயும் இருந்து வந்ததுதான்!
இப்பொழுதாவது தெரிகிறதா? - எங்களுடைய அன்புக்கு அவர் பாத்திரமாகியிருந்தார், அவருடைய அன்புக்கு நாங்கள் ஏன் பாத்திரமாகவில்லை என்று?"
எது எப்படியிருந்தாலும் காந்திமகான் விட்டுச் சென்ற அந்த 'மோகனப் புன்னகை' மட்டும் ‘எங்கள் ஊர்க்காந்தி' யிடந்தான் இருந்தது. அதைக்கொண்டு அறியாமை நிறைந்த இந்த உலகத்தில் அவர் சாதித்துக் கொண்ட காரியங்கள் எத்தனை எத்தனையோ?”
அவற்றில் ஒரே காரியம்தான் எங்களில் யாருக்குமே புரியாமல் இருந்தது. அதாவது கல்லாப்பெட்டிக்கு அருகே உட்கார்ந்திருக்கும் அவர், தம் பார்வையை அடிக்கடி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பிக் கொண்டே இருப்பார்; திடீரென்று சிரிப்பார்; சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு வாயின்மேல் விரலைவைத்து, 'ஸ், ஸ்' என்று யாரையோ விரட்டுவது போல் விரட்டுவார். இத்தனைக்கும் நாம் பார்க்கும்போது அவருக்கு எதிரேயாரும் இருக்க மாட்டார்கள்!
தாம் விற்கும் தோல்கள்கூட ஆடு மாடுகளைக் கொன்று குவித்து எடுத்த தோல்களல்ல, இயற்கை மரணம் எய்திய பின் எடுத்த தோல்கள் அவை என்று சொல்லும் அந்த உத்தமர், அந்த புண்ணிய புருஷர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று தெரியாமல் நாங்கள் நீண்ட நாட்களாக விழித்துக் கொண்டிருந்தோம்; கடைசியாக ஒரு நாள் குமாஸ்தா குப்புலிங்கத்தை இதற்கென்றே பேட்டி கண்டு விசாரித்தோம்.
"நீங்கள் ஒன்று-அவர் ஈ ஓட்டியிருப்பார்; அதைப் பிரமாதப் படுத்துகிறீர்களே!" என்று அந்த மனுஷன் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டான்.
அப்படிப் பட்டவன், அன்றிரவு நான் வேலையிலிருந்து திரும்பும் போது என்னைத் தானாகவே கூப்பிட்டான். "என்ன குப்புலிங்கம், இந்த வருஷமும் ஊர்க்குழந்தைகளுக்குத் தீபாவளி பட்டாசு உண்டோ, இல்லையோ" என்று கேட்டுக்கொண்டே நான் அவனை நெருங்கினேன்.
"உண்டு, நிச்சயம் உண்டு; ஆனால் ஊர்க் குழந்தைகள் என்று சொன்னிர்களே-அதைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும்!” என்று எனக்கு முன்னால் திடீரென்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான் அவன்.
"ஏன், என்ன விஷயம்?"என்று பரபரப்புடன் விசாரித்தேன். அந்தச் சமயத்தில், "ஆமாம் போங்கள் இன்னும் எத்தனை வருஷங்கள்தான் நம் வீட்டுக் குழந்தைகள் 'ஊர்க்குழந்தை' களாயிருப்பதாம்?" என்று கொஞ்சும் பெண் குரலொன்று என் காதில் விழுந்தது.
அதைத் தொடர்ந்து, "பெரிய மனுஷன், பண்பாடு மிக்கவன் என்று பெயர் எடுக்க வேண்டுமென்றால் சும்மாவா?"என்ற ஆண் குரலொன்றும் கேட்டது.
நான் திடுக்கிட்டேன்-கலகலவென்ற சிரிப்பொலி எழுந்தது.
ஒன்றும் புரியாமல் குப்புலிங்கத்தைப் பார்த்தேன். திறந்த ஜன்னல் ஒன்றைச் சுட்டிக் காட்டிவிட்டு, அவன் எடுத்தான் ஓட்டம்.
நான் எட்டிப் பார்த்தேன்-என்ன ஆச்சரியம்!உள்ளே ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே 'எங்கள் ஊர்க்காந்தி எழுந்தருளியிருந்தார்; மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள். அவற்றைக்கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய் வாய்மையையும் தூய்மையையும், பண்பையும் பாரம்பரியத்தையும் அங்கே வளர்த்துக் கொண்டிருந்தார்!
எதிர்க்கட்சி
மாலை மணி ஐந்து இருக்கும். வெள்ளிநாயகம், தங்க நாயகத்தின் குடிசை வாசலில் வந்து நின்று, "என்னா அண்ணே, கூட்டத்திற்கு வாறியா?"என்று கேட்டான்.
"வாரேன், தம்பி!"என்று சொல்லிக் கொண்டே, வெளியே வந்தான் தங்கநாயகம்.
இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தனர். வழியில் "ஏன் அண்ணே! நம்ம சங்கத்தை யாரோ தொறந்து வைக்கப் போறாங்கன்னு சொன்னியே, அது யார் அண்ணே?"என்று கேட்டான் வெள்ளிநாயகம்.
"அவர்தான் நம்ம தலைவர் சண்டமாருதம்!"என்றான் தங்கநாயகம்.
"அவருக்கு நம்மைப் பத்தி என்னா தெரியும்? பாவம். நடந்து கூட அவருக்கு பழக்கமிருக்காது போல இருக்குதே!"
"நல்லாச் சொன்னே! அவர் எம்மாம் பணம் வச்சி இருக்காரு!"
"ஓஹோ! அதுக்காவத்தான் அவரைக் கூப்பிட்டிருக்காங்களா?-சரிசரி; எனக்கு ஒரு சந்தேகம், அண்ணே!”
"என்ன சந்தேகம்?"
"அந்தச் சங்கத்தை 'நம்மசங்கம்'ன்னு நான் எப்படிச் சொல்லிக்கிடறது. அண்ணே?"
"ஏன் சொல்லிக்கிடக்கூடாது?"
"என்ன இருந்தாலும் நீ வேறே, நான் வேறே இல்லையா?”
“என்ன வேறே? நீயும் கூலி, நானும் கூலிதானே?"
"அது சரி, ரெண்டு பேரும் கூலியாயிருந்தாலும் நமக்குள்ள வித்தியாசம் இருக்குதில்லே?"
"அது என்ன வித்தியாசம், தம்பி?"
"நீ ரெயில்வே கூலி;உனக்குன்னு ஒரு சட்டை, கிட்டைஎல்லாம் கொடுத்திருக்காங்க. எனக்கு அப்படியில்லை, பாரு! நான் கண்ட சட்டையை போட்டுகிட்டு நினைச்ச இடத்திலே நின்னுகிட்டு இருக்கிறவன் தானே?" "என் சட்டையைச் சொல்லு, 'கூலி'ன்னு, நெத்தியிலே எழுதி ஒட்டி வச்சிருக்காப் போல! பார்க்கப் போனா எல்லாம் பொதி சுமக்கிற ரெண்டு கால் கழுதைங்கதானே? அதிலே வித்தியாசம் ஒரு கேடா?"
"ஒரேயடியா அப்பிடிச் சொல்லிப்பிட முடியுமா?"
"அட, நீ ஒண்ணு! அதுக்காவத்தானெ நம்ம சங்கத்துக்குக் 'கூலிங்க சங்கம்'னு பொதுவாக பேரு வச்சி இருக்காங்க!"
"என்னமோ போ, அண்ணே! எனக்கு ஒண்ணும் புரியலே!" அதற்குள் கடற்கரை நெருங்கி விடவே, அவர்களுடைய பேச்சு நின்றது. மேடைக்கு அருகே இருவரும் நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டனர்.
"ஸ்ரீமான் சண்ட மாருதத்துக்கு, ஜே!" என்ற கோஷம் காதைப் பிளந்ததும், கூலிகள் சங்கத்தின் திறப்பு விழா ஆரம்பமாயிற்று. இளைஞர் ஒருவர் மேடையின் மேல் ஏறிக் கம்பீரமாக நின்று,
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே!
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?"
என்னும் பாரதியாரின் பாடலை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்; கூட்டத்தில் அமைதி நிலவியது.
பாட்டு முடிந்ததும் தங்கநாயகம் ஒரு நீண்ட கரகோஷம் செய்துவிட்டு, "கேட்டியா தம்பி, நம்ம வாழ்வு தாழ்வு எல்லாம் எங்கே இருக்குதுன்னு இப்பவாவது தெரிஞ்சு கிட்டியா?" என்று கேட்டான், வெள்ளி நாயகத்தை.
"எங்கே இருக்குதாம்?" என்று வெறுப்புடன் அவனைத் திருப்பிக் கேட்டான் வெள்ளி நாயகம்.
"இது கூட உனக்குத் தெரியலையா? - அட பாவி, எல்லோரும் ஒற்றுமையாய் இருக்கிறதுலேதான் இருக்கு தாம்!" என்றான் தங்க நாயகம் பெருமையுடன்.
"ஆமாமாம்; ஆனா...."
"ஆனா என்னா? உனக்கு எப்போப் பார்த்தாலும் சந்தேகந்தான்!" என்று தங்க நாயகம் எரிந்து விழுந்தான்.
அதே சமயத்தில், 'ஸ்' என்ற சத்தம் சபையின் மூலை முடுக்கிலெல்லாம் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீமான் சண்ட மாருதம் எழுந்து ஒலி பெருக்கியின் முன்னால் நின்றார்.
"தயவு செய்து அமைதியாயிருங்கள்!" என்று 'தற்காப்பு'க்காகச் சபையோரைக் கேட்டுக் கொண்டு தம் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அவருடைய பேச்சிலும் அன்று ஒற்றுமைதான் முக்கிய ஸ்தானம் வகித்தது.
ஏனெனில் கூலிகளுக்கு தங்கள் சங்கத்தால் நன்மை விளைந்தாலும் சரி, நன்மை விளையாவிட்டாலும் சரி - அந்தப் பழியை ஒற்றுமையின் மேல் போட்டுவிட்டு தலைவர் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?-எனவே "ஒற்றுமை இன்றேல் ஒன்றுமே இல்லை; "ஒற்றுமை வழி ஒன்றே வழி!" என்று அழுத்தந்திருத்தமாக முழங்கிவிட்டு, திறப்பதற்கு ஒன்றும் இல்லாத கூலிகள் சங்கத்தை அவர் 'சும்மானாச்சும்' திறந்து வைத்தார். அவருக்கு அடுத்தாற்போல் பேசிய இன்னும் சிலரும் ஒற்றுமையைப் பற்றியே ஓயாமல் பேசிப் பேசி ஓய்ந்தார்கள்; ஒரு குரோஸ் சோடா புட்டிகள் காலியான பிறகு கூட்டம் இனிது முடிவதற்குப் பதிலாக ஒரே கரிப்புடன் முடிந்த காரணம் வேறொன்றுமில்லை; சோடாதான்!
அதற்குமேல் தங்கநாயகத்துக்கும் வெள்ளிநாயகத்துக்கும் அங்கே என்ன வேலை!-எழுந்து தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடந்தனர். பிரசங்கிகள் கூலிகளை ஒருகணம் மறந்து, தாங்கள் அன்றைய தினம் பேசிய பேச்சுகளுக்காக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர். பிறகு, "கேவலம், ஒரு சட்ட சபை அங்கத்தினர் பதவிக்குக் கூட இந்தக் காலத்தில் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது!"என்ற தங்களுடைய ஆற்றாமையை ஆளுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு கலைந்தனர்.
மறுநாள் மாலை வெள்ளிநாயகம் வழக்கம்போல் சென்னை 'பாரிஸ் கார்னரில் அப்படியும் இப்படியுமாக நடை போட்டுக் கொண்டிருந்தான். அதுவரை சம்பாதித்திருந்த எட்டனாக்காசு அவன் மடியில் பத்திரமாக இருந்தது. அதை எடுத்து அவன் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டான். எத்தனை தரம் எண்ணிப் பார்த்துத்தான் என்ன? அந்த பாழும் எட்டனா எட்டனாவாகவே இருந்தது! அதை வைத்துக் கொண்டு அவனும் அவனுடைய மனைவி மக்களும் அன்றையப் பொழுதை எப்படிக் கழிப்பது? இன்னும் ஒரு எட்டனாவாவது கிடைத்தால் பரவாயில்லை!-அதற்காக யாராவது கையில் ஒரு சிறுபையுடன் சென்றாலும், "ஏன் சாமி!கூலி வேணுமா, சாமி!" என்று அவன் கேட்டுக் கொண்டே இருந்தான். கிறுக்குப் பேர்வழி ஒருவர் "என்னிடம் கூலிக்கு ஒன்றுமில்லை; என்னை வேண்டுமானால் தூக்கிக் கொண்டு போய் என் வீட்டில் விடுகிறாயா?" என்று கேட்டபோது கூட அவன் சளைக்க வில்லை; "ஆகட்டும், சாமி! தோள் மேலே வேணுமானால் உங்களை துக்கிட்டுவாறேன்; எப்படியாச்சும் காசு கெடச்சா சரி!" என்று சொல்லிக் கொண்டே அவரை நெருங்கினான். "போடா, போ!"என்று சொல்லிவிட்டு அவர் விரைந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மனிதர் பெட்டி, படுக்கையுடன் ரிக்ஷாவில் வந்து பஸ் நிலையத்தில் இறங்கினார். ரிக்ஷாவாலா அவரிடம் கூலி பெற்றுக் கொண்டு அப்பால் சென்றதும் வெள்ளி நாயகம் ஓடோடியும் வந்து, "ஏன் சாமி! எங்கே போவணும்?"என்று கேட்டான்.
"பெங்களுருக்கு!-ஏன், நீயும் வருகிறாயா?" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.
"நீங்க அம்மாந்துரம் நடந்து போறதாயிருந்தா, நானும் அம்மாந்துரம் நடந்து வாறேன், சாமி!"என்றான் வெள்ளி நாயகமும் சிரித்துக் கொண்டே.
அதற்குள் ஒண்ணாம் நம்பர் பஸ் வந்து நின்றது. பெரிய மனிதர் வெள்ளி நாயகத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, பெட்டியையும், படுக்கைகையையும் தூக்கிக் கொண்டு போய் பஸ்ஸில் வைத்தார்.
கண்டக்டர், "பெட்டி, படுக்கைகளையெல்லாம் பஸ்ஸில் ஏற்றக் கூடாதுங்க!"என்று அவரைத் தடுத்தான்.
"ஏன்?" என்று கேட்டார் பெரிய மனிதர்.
"எனக்குத் தெரியாதுங்க; உங்க சர்க்காரைக் கேளுங்க!" என்று சொல்லிவிட்டு, அவன் டிரைவரை நோக்கி, "போப்பா, ரைட்!" என்று அலட்சியமாக 'விஸில்' அடித்தான்; பஸ் கிளம்பிவிட்டது.
வெள்ளிநாயகம் பெரிய மனிதரைப் பார்த்தான். பெரிய மனிதர் வெள்ளி நாயகத்தைப் பார்த்தார்.
"இப்போவெல்லாம் பட்டணத்துல எந்தப் பஸ்ஸிலும் பெட்டி, படுக்கைகளை ஏத்தறதில்லைங்க!” என்றான் வெள்ளி நாயகம்.
"நாசமாய்ப் போச்சு நான் இப்போது ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமே, என்ன செய்வது?"என்று முணுமுணுத்தார் பெரிய மனிதர்.
"இதோ, பக்கத்திலே பீச்சுடேசன் இருக்குதுங்க;அங்கேயிருந்து பார்க்குடேசனுக்கு எலெக்டிரிக் வண்டி போகுதுங்க; அதிலே பெட்டி, படுக்கையெல்லாம் ஏத்துவாங்க. ரொம்பக் காசுகூட இல்லை; ஓரணாத்தான்!- பார்க்கிலேயிருந்து ஸென்ட்ரஸ் டேசன் ரொம்ப கிட்ட!" என்று அவருக்கு தூபம் போட்டான் வெள்ளி நாயகம்.
சிக்கனத்தை உத்தேசித்துப் பெரிய மனிதர் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார். வெள்ளிநாயகம் அவருடைய பெட்டி, படுக்கைகளைத்துக்கிக் கொண்டு பீச்ஸ்டேஷனைநோக்கி நடந்தான். பெரிய மனிதர் அவனைத் தொடர்ந்தார்.
வழியில் வெள்ளி நாயகத்துக்கு ஒரு சபலம் தட்டிற்று. பீச் ஸ்டேஷன்வரை சென்றால் ஐயா ஒரனா கொடுப்பாரோ, இரண்டனா கொடுப்பாரோ ஸென்ட்ரல் ஸ்டேஷன்வரை தானே சென்று அவரை வண்டியில் ஏற்றி விட்டால் எட்டணாவாவது கொடுக்க மாட்டாரா?-இவ்வாறு எண்ணியதும் அவன் அந்தப் பெரிய மனிதரை நோக்கி, "நானே ஸென்ட்ரல் வரை வந்து உங்களை வண்டி ஏத்தி விடட்டுங்களா?" என்றான். ஒரே கூலியாயிருந்தால் தமக்கும் செளகரியந்தானே என்று எண்ணி அவரும் "சரி!" என்றார்.
அவ்வளவுதான் வெள்ளி நாயகத்துக்குத் தெம்பு பிறந்துவிட்டது; அவன்குதிநடை போட்டுக் கொண்டு சென்றான். அன்றையக் கவலை தீர்ந்த பிறகு இந்த உலகத்தில் தன்னைப் பொறுத்தவரை அவனுக்கு வேறு எந்தக் கவலையும் இல்லையல்லவா?
ஜிகு ஜிக்கு.....ஜிகு ஜிக்கு....... ஜிகு ஜிக்கு..... ஜிகு ஜிக்கு....ஜிகு ஜிக்கு....
தலை தெறிக்கும் வேகத்தில் சென்னை மாநகரின் அமைதியை குலைத்துக் கொண்டு வந்த 'எலெக்ட்ரிக் ட்ரெயின்' பார்க் ஸ்டேஷனை அடைந்தது. அதற்குள் வரிசை வரிசையாய் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. இருந்தாலும், பெரிய மனிதர் கூலிக்காரனின் மூலம் தம்முடைய அந்தஸ்தை உலகத்துக்கு ஓரளவு 'வெளிச்சம்' போட்டுக் காட்டிக் கொண்டு வந்தது, தனி வெளிச்சமாய்த் தான் இருந்தது!
ஆயிற்று; இதோ ஸென்ட்ரஸ் ஸ்டேஷனின் மணிக்கூண்டு கம்பீரமாகத் தனக்கு எதிரே நிற்கிறது; இன்னும் இரண்டே நிமிஷத்தில் பிளாட்பாரத்தை அடைந்து விடலாம்.......
.....எட்டணாக் காசு இந்தக் கைமேல் 'டக்'கென்று விழும், தன்னிடம் ஏற்கெனவே எட்டணா இருக்கிறது. முழுசாக ஒரு ரூபாய்! இன்று வீட்டுக்கு இத்துடன் கம்பி நீட்டி விடலாம். அதோ, தங்கநாயகம் அண்ணன்கூடத் தனக்கு எதிரே சொல்லி வைத்தாற்போல வருகிறதே! ..........அது போட்டிருக்கிற ஊதாச் சட்டையும், சிவப்புப் பட்டையும், அதிலே 'போர்ட்டர்' என்று எழுதியிருக்கின்ற அழகும்-அடாடாடாடா!-ம், அண்ணனுக்கு என்ன குறைவு? தன்னைப் போலவா?-அடடே அண்ணன் ஏதோ பாட்டுக்கூடப் பாடுதே! என்ன பாட்டாயிருக்கும்?
.......ஆமாம்; அதுதான்! அதுவேதான்!- 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!-' நேற்று கேட்ட பாட்டை அண்ணன் அப்படியே பிடிச்சிகிச்சே!
ஐயோ, இது என்ன சங்கடம்?
..........அண்ணன் தன்னை ஏன் அப்படி முறைச்சி பார்க்குது? அதன் மீசை ஏன் அப்படித் துடிக்குது? கண்களில் கணத்துக்கு கணம் ஏன் அப்படிச் சிவப்பேறுகிறது? - ஒன்றும் புரியவில்லை தம்பிக்கு.
“என்னா அண்ணே!" என்று அது குழைந்தது.
'அண்ணே, அண்ணேன்னு சொல்லி ஆளை ஏய்க்கவா பார்க்கிற? 'இங்கே கூலி எடுத்துக்கிட்டு வர உனக்கு என்னடா அம்மாந் தைரியம் ? நான் இங்கே வேலை மெனக் கிட்டா இருக்கேன்?" என்று ஆவேசத்துடன் கூறி, அவன் தலைமேலிருந்த படுக்கையை பலவந்தமாகத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக்கொண்டு கையில இருந்த பெட்டியையும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, நீங்க வாங்க. சாமி!"என்று அழைத்தது இது.
"அண்ணே, அண்ணே! நம்ம வாழ்வு. தாழ்வு எல்லாம்....."
"ஆமாம் போடா! நீயும் நானும் ஒரு கட்சியாயிருந்தாலும் நம்ம வயிறு நமக்கு 'எதிர்க்கட்சி' யாயிருக்கின்றதே!" என்று அதை பொருட்படுத்தாமல் இது நடையைக் கட்டிவிட்டது.
பெரிய மனிதர் தம்மைப் பாதிக்காத விஷயங்களில் எப்பொழுதுமே சட்டத்தையும், ஒழுங்கையுமே கடைப்பிடிப்பவர். ஆகவே அதை அத்துடன் விட்டு விட்டு, அவர் இதைத் தொடர்ந்து சென்றார்.
“எனக்கு கூலி ஒன்னும் இல்லிங்களா, சாமி!" என்றது அது.
நல்ல வேளையாக அப்போது ஒர் இளம் பெண் அந்த வழியாக வரவே, அவள் பார்க்கும்படியாக நாலணாவை எடுத்து வீசி எறிந்துவிட்டு, அவர் மேலே நடந்தார்!
வேதாந்தம்
....கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். "என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர சர்க்காராம், சுதந்திர சர்க்கார்; தேசம் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதுமா? தூங்குவதற்குச் சுதந்திரம் வேண்டாமா? இத்தனை மணிக்குத்தான் கடையைத் திறக்க வேண்டும், இத்தனை மணிக்குத்தான் கடையை மூட வேண்டும், இன்ன கிழமைதான் கடைக்கு வார விடுமுறை விடவேண்டும்-இதெல்லாம் என்ன திட்டம், என்ன சட்டம்? இதுவா வியாபாரத்திற்கு அழகு? இதுதான் போகட்டும் என்றால் மனிதனை மனிதன் நம்ப வேண்டாமா? எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டுமாம், கணக்கு!"சரி;அப்படியே வைத்துக் கொள்கிறோம் என்றால், அத்துடன் விடுகிறார்களா? தங்களுடைய சிப்பந்திகளை அனுப்பி பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள்! அந்தப் பயல்களை சரிப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது!" என்று தமக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவர்தம் மீது கிடந்த போர்வையை எடுத்து வீசி எறிந்தார்.
அந்தச் சமயத்தில், "உன்னிடம் குற்றம் இல்லாதவரை நீ யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை" என்று அவருடைய பத்து வயதுப் பையன் ஏதோ ஒரு பாடத்தை அழுத்தந்திருத்தமாகப் படித்து உருப்போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கருப்பையாவுக்கு ஏனோ ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "படித்துக் கிழித்தது போதும், எழுந்து போய் வேலையைப் பாருடா!"என்று அவனை அதட்டி விட்டுக் குளிக்கும் அறையை நோக்கி நடந்தார்.
வாசலில் நின்றபடி, "ஸார், ஸார்!" என்று அவரை யாரோ கூப்பிட்டார்கள்.
கருப்பையா விரைந்து சென்று, கதவைச் சற்றே திறந்து மெல்ல எட்டிப்பார்த்தார்.
'குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எந்த வேலைக்கும் லாயக்கில்லை' என்று தம்பட்டம் அடிக்கும் தோற்றத்துடன் கோபாலசாமி அங்கே நின்று கொண்டிருந்தான்.
"ஏன் ஐயா, இப்படிக் கூனிக் குறுகி நிற்கிறீர்? என்னிடம் நீர் பிச்சை கேட்கவா வந்திருக்கிறீர்? வேலை செய்து பிழைக்கத்தானே வந்திருக்கிறீர்? நீர் உம்ம வீட்டு வேலையைச் செய்தால், நான் எங்க வீட்டுக் காசை கொடுக்கப் போகிறேன்; இவ்வளவுதானே விஷயம்?" என்று கருப்பையா அவன் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஒரு வெத்து வெடியைத்துக்கி எறிந்து அவனைத் திணற அடித்தார்.
கோபாலசாமி அசந்து போனான்.
கறார் கருப்பையா வெற்றியுடன் பின்வாங்கி வீட்டுக்குள் வந்தார். குமாஸ்தா என்றால் முதலாளியிடம் அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டியதுதான்; அதற்குப் பார்த்தால் நாம் இல்லாத வேளையில் அந்தச் சர்க்கார் ஆட்கள் வந்தால் இவன் கொஞ்சம் நிற்க வேண்டாமோ?"என்று தமக்குள் சொல்லிக்கொண்டே பீரோவைத் திறந்தார். சாவிக் கொத்தையும் ஒரு நூறு ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.
"இந்தாரும் சாவி, இதோ நூறு ரூபாய் பணம்......." என்று ஆரம்பித்தார் கருப்பையா.
அசட்டுக் கோபாலசாமி குறுக்கிட்டு பணம் என்னத்துக்கு சார்?" என்று அசடு வழியக் கேட்டான்.
"நாசமாப் போச்சு! நாலு நாட்களாக அந்தச் சத்திய கீர்த்தி 'சாமிக்கண்ணு' உமக்கு என்னதான் சொல்லிக் கொடுத்தான்?" என்று எரிந்து விழுந்தார் கருப்பையா.
கறார்கருப்பையாவின் அரிசிரேஷன்கடையில் குமாஸ்தாவாக இருந்தவன் சாமிக்கண்ணு. ஆரம்பத்தில் அவன் வெறும் சாமிக்கண்ணாகத்தான் அவருடைய கடைக்கு வேலை பார்க்க வந்தான். வேலையிலிருந்து விலகும் போது 'சத்திய கீர்த்தி' என்னும் பட்டத்தோடு விலகினான். அந்தப் பட்டத்தை அவனுக்கு மனமுவந்து அளித்தவர் கறார் கருப்பையாதான்.
காரணம், 'புத்தக ஞானத்தைக் கொண்டு 'சத்திய கீர்த்தியாக வாழ விரும்பியவன் சாமிக்கண்ணு. 'அனுபவ ஞானம்' அதற்கு நேர் விரோதமாக யிருந்ததைக் கண்டதும் அவனுடைய மூளை குழம்பிற்று. அந்த மட்டும் தனக்குப் பைத்தியம் பிடிப்பதற்குள் அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். அதற்குத் துணையாயிருந்தது அவனுடைய பசி;பசியென்றால் பெண்ணைப் பற்றிய பசி அல்ல; சோற்றைப் பற்றிய பசி!
இந்தப் பசியின்காரணமாக அவன்கருப்பையாவின்காரியங்கள் தனக்குப்பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி-அவருடன் ஓரளவு ஒத்துழைத்து வந்தான். இருந்தாலும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதே அது அடிக்கடி அவனை உறுத்தி வந்தது. தக்க சந்தர்ப்பம் வாய்த்ததும், அதாவது வயிற்றுக் கவலையைத் தீர்த்துக் கொள்ள வேறுவழி பிறந்ததும்-அவன் கருப்பையாவின் கடையிலிருந்து விலகிக் கொண்டு விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தான்.
தன்னுடைய முடிவை அவன் கருப்பையாவிடம் தெரிவித்தபோது, அவர் காரணம் என்னவென்று கேட்டார். அப்போதும் அவன் உண்மையை மறைக்க விரும்பவில்லை! தங்களுடைய காரியங்களில் ஒத்துழைக்க என் மனசாட்சி இடம் தரவில்லை!" என்றே சொல்லி விட்டான்.
இதைக் கேட்டதும் கருப்பையாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. "அடடே, உமக்கு மனசாட்சி வேறே இருக்கிறதா? இந்த விஷயம் முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தால், உம்மை வேலையிலேயே வைத்துக் கொண்டிருக்க மாட்டேன்!” என்றார்.
"எனக்கும் தங்களுக்கு மனசாட்சி இல்லை என்ற விஷயம் முதலிலேயே தெரிந்திருந்தால் உம்ம வேலையிலேயே சேர்ந்து கொண்டிருக்க மாட்டேன்! என்றான் சாமிக்கண்ணு.
அன்றைய தினத்திலிருந்து சாமிக்கண்ணுவைக் குறிப்பிட நேரும் போதெல்லாம் 'சத்தியகீர்த்தி சாமிக்கண்ணு' என்றே கருப்பையா குறிப்பிடுவது வழக்கம். அவன் விலகுவதற்கு நாலு நாட்கள் இருக்கும்போதுதான் கோபால சாமி அவனுக்குப் பதிலாக வந்து சேர்ந்தான். அந்த நாலு நாட்களில் அவன் எவ்வளவோ விஷயங்களை தெரிந்து வைத்திருந்தான், எனினும் கடையை திறக்கச் செல்லும் போது நூறு ரூபாய்ப் பணத்தை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விஷயம் மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே விழித்தது விழித்தபடி நின்றான்; நின்றது நின்றபடி யோசித்தான்.
"கருப்பையா பொறுமையிழந்து, கடிகாரம் உமக்காக ஓடாமல் இருக்குமா என்ன?" என்றார்.
கோபாலசாமிக்கு அப்போதுதான் கொஞ்சம் விஷயம் புரிந்தது. "யாராவது இந்த உபரிதானியங்களை வாங்காமல் விட்டுவிட்டால்....." என்று ஆரம்பித்தான்.
"யாராவது என்ன? நூற்றுக்கு எழுபத்தைந்துபேர் 'வேண்டாம்' என்றுதான் சொல்வார்கள். தண்ணீரில் வேகும் சோற்றுக்கே அவர்கள் தவியாய்த் தவிக்கும் போது. எண்ணெயில் வேகும் பூரிக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கெல்லாம் நீர் உபரிதானியம் கொடுத்தது போல் கணக்கு எழுதவேண்டும்; அவ்வாறு எழுதும்போது அந்தத் தானியத்துக்குரிய காசைக் கல்லாவில் போடவேண்டாமா?-அதற்காகத்தான் அந்த நூறு ரூபாய்க் காசு!"
"இப்போது தெரிகிறது......"
“என்னத்தைத் தெரிகிறது?-சரியாகத் தெரிந்து கொள்ளும், ஐயா! சிலர் ஞாயிற்றுக்கிழமை வாங்க வேண்டிய அரிசியை அடுத்த சனிக்கிழமை வரை வாங்காமல் இருந்து விடுவார்கள். அந்தக் 'கூப்பன்'களுக்குரியவர்களெல்லாம் அரிசி வாங்கிக்கொண்டு விட்டதுபோல், நீர் சனிக்கிழமையன்றே 'பில்' எழுதிக் கிழிந்து எறிந்துவிடவேண்டும். மறுநாள்.அவர்கள் வந்து என்னதான் பல்லைக் காட்டினாலும்.'நேற்றோடு காலாவதியாகிவிட்டது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவேண்டும்.'
"தெரிகிறது; ஆனால் ஒரு சந்தேகம்......
"என்ன சந்தேகம்?"
"உபரிதானியத்துக்கும் சேர்த்து 'பில்' போட்டு விட்டு அரிசிக்கு மட்டும் காசுவாங்கினால் சந்தேகப்பட மாட்டார்களா?”
"ஆளைப்பார்த்து பில் போடுமே, ஐயா! பார்க்கும் போதே இது படிக்கத் தெரிந்த மூஞ்சி, இது படிக்கத் தெரியாத மூஞ்சி என்று தெரியாதா?”
"சரி!"
"சரி என்று சொல்லிவிட்டுப் போய் மக்காச்சோளம். புழுத்துப் போனரவை, இவற்றையெல்லாம் சேமித்து வைக்காதீர்; நம்முடைய ஹோட்டல்காரர்களுக்கு உதவாதவற்றையெல்லாம் கூப்பன்' காரருடைய தலையிலே கட்டப்பாரும்; அவற்றை வாங்கினால் தான் அரிசி போடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லும்!"
"அவசியம் சொல்கிறேன்....."
“என்னிடம் சொல்வது போல் இழுத்துப் பறித்துக் கொண்டு சொல்லாதீர்; நன்றாய் அடித்துச்சொல்லும். 'நம்முடைய முறைப்படி’ சேகரிக்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றை நம்முடைய விலைப்படி நம் வாடிக்கைக் காரர்களுக்கு அவ்வப்போது தள்ளிவிடும். அவர்கள் கொடுக்கும் காசை கல்லாவில் போட்டுவிடாதீர்; அடுத்தாற்போல் இருக்கும் நம் மளிகைக் கடை குமாஸ்தாவிடம் கொடுத்துவையும்-என்ன, தெரிகிறதா?”
"தெரிகிறது, தெரிகிறது!"
"திடீர் திடீரென்று சர்க்கார்பயல்கள் வந்து, 'தாம்'. 'தும்’ என்பான்கள்; கணக்குப் புத்தகத்தை எடு; கல்லாவை விட்டு எழுந்திரு. அரிசியை அளந்து காட்டு, என்றெல்லாம் குதிப்பான்கள்-நீர் மிரண்டுவிடாதீர்! ஒரு புன் சிரிப்பை அலட்சியமாக வீசி அவர்களை உட்காரவையும்; உடனே பையனை ஹோட்டலுக்கு அனுப்பும். அந்தப் பயல்கள் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான்கள். நீர் பாட்டுக்கு உம் வேலையை தொடர்ந்து பாரும்!"
இந்தச் சமயத்தில் கோபாலசாமியின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. அந்தப் புன்னகையைக் கண்ட கருப்பையா, "ஹா இப்போது சிரித்தீரே-இந்தச் சிரிப்பே போதும், அந்தப் பயல்களை உட்கார வைக்க" என்று துள்ளிக் குதித்துக் கொண்டே சொன்னார்.
கோபாலசாமி நூறுரூபாய் பணத்தை எடுத்துச்சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். 'பத்திரம், பத்திரம்' என்று சொல்லிக்கொண்டே கருப்பையா சாவிக் கொத்தை அவனிடம் கொடுத்தார்.
கோபாலசாமி புறப்பட்டான்.
கறார் கருப்பையா தம்முடைய காலைக்கடன்களை யெல்லாம் முடித்துக் கொண்டு கடைக்குப் புறப்பட்ட போது யாரோ ஒரு ஆள் ஓடோடியும் வந்து, "நல்லமுத்து போயிட்டாருங்க!" என்றான்.
இந்த துக்கச் செய்தி கருப்பையாவை தூக்கிவாரிப் போட்டது. நல்லமுத்து அவரது அத்தியந்த நண்பர்களில் ஒருவர்; பக்கத்துக் கடைக்காரர்; அத்துடன் எதிர் வீட்டுக்காரர்; அவரும் அரிசி ரேஷன் கடைதான் வைத்திருந்தார்; சர்க்காரைத் திட்டும் விஷயத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவரும் கருப்பையாவுடன் ஒத்துழைத்து வந்தார். அத்தகையவருடைய பிரிவை கருப்பையாவால் எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?- அனுதாபம் ஒரு புறம்: ஆத்திரம் ஒரு புறம்-ஆத்திரம் நல்லமுத்துவின் மீது அல்ல, சர்க்காரின் மீதுதான்! "இதோ முதலாளியே போய்விட்டான்; 'மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன' என்று கடையை மூட முடிகிறதா?- எங்கே மூடமுடிகிறது? மூடினால் சட்ட விரோதம் என்பார்கள்!" என்று இரைந்து கொண்டே திண்ணையின் மேல் உட்கார்ந்தார்.
அதற்குள் நல்லமுத்துவின் குமாரர்கள் வந்து, "எங்களுக்கு ஒன்றும் தெரியாது; நீங்கள்தான் கிட்ட இருந்து அப்பாவை அடக்கம் செய்யவேணும்" என்று கருப்பையாவை வேண்டிக் கொண்டனர்.
"ஆகட்டும் என்று சொல்லிவிட்டு கருப்பையா அவர்களுக்காக மேல்துண்டை எடுத்து தம் கண்களைதுடைத்து விட்டுக் கொண்டார்.
மாலை மணி ஐந்து அல்லது ஐந்தரை இருக்கும். நல்ல முத்துவுக்கு தங்களுடைய 'கடைசி மரியாதை'யைச் செலுத்திவிட்டுப் போக வந்தவர்கள் கருப்பையாவின் வீட்டுத் திண்ணையில் கூடினார்கள். அவர்களில் தமக்குத் தெரிந்த ஒருவரை நோக்கி, "பார்த்தீர்களா, நம்ம செவிட்டுப் பிள்ளையாருக்கு வாரம் நூற்றெட்டுத் தேங்காய் சூறை விடுவாரே, அந்த நல்ல முத்துவின் கதியை' என்றார் கருப்பையா.
"ஆமாம் ஆமாம், அக்கிரமமா நடப்பவனுக்குத்தானே இது காலம்!" என்றார் அவர்.
"அது சரி. சர்க்கார் சிப்பந்தியை லஞ்சம் கொடுத்து, ஏமாற்றுவதைப் போலக் கடவுளையும் ஏமாற்ற முடியுமா?" என்றார் அவருக்கு அருகிலிருந்த ஒரு பகுத்தறிவுவாதி.
“நல்லமுத்துவைப் பற்றி உமக்கு ஏதாவது தெரிந்தால் பேசும்; தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரும்!” என்று அந்த மனிதரை நோக்கி சீறினார் ஆஸ்தீக சிகாமணி ஒருவர்.
"கடவுளை வழிபடுவதெல்லாம் மோட்சத்துக்குத் தானே? அந்த மோட்சத்தை அவர் அடைந்துவிட்டார்- அவ்வளவுதான் விஷயம்; அதற்காக நீங்கள் ஏன் இப்படி ஒருவர் மீது ஒருவர் எரிந்து விழுகிறீர்கள்" என்றார் சுத்த சமரச சன்மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட ஒரு சைவர்.
"வியாபார தந்திரத்தைப் பார்க்கவேண்டுமானால் நல்லமுத்துவிடம் தான் பார்க்கவேண்டும். சிரிக்க வேண்டியவர்களிடம் சிரித்து, அழ வேண்டியவர்களிடம் அழுது காரியத்தை சாதித்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான்!” என்று அவருடைய பெருமையைப் பற்றி கொஞ்சம் இடையிலே எடுத்துவிட்டார் கருப்பையா.
"ஆனால் கோபம் வந்தாலோ அவரை யாரும் கட்டுப் படுத்த முடியாது!" என்று நல்லமுத்துவுக்கு கொஞ்சம் கூடத் தெரியாதவர் ஒருவர் சந்தர்ப்பத்தை உத்தேசித்து சொல்லி வைத்தார்.
"நல்லவர்களுக்கே எப்போதும் கோபம் கொஞ்சம் அதிகமாகத்தான் வரும்" என்று கருப்பையா தம்முடைய ஞானத்தை அந்த இடத்தில் சற்று காட்டிக் கொண்டார்.
"ஆமாம், ஆமாம்” என்று அவர் சொன்னதை சில காரியவாதிகள் ஆமோதித்தனர்.
"ஒரு நாள் பாருங்கள், அவருடைய கடைக்கு ரேஷன் அரிசி வாங்க ஒருத்தி வந்தாள். அவள் மிகவும் ஏழை, அரிசிக்கு வேண்டிய காசுக்கே அவளுக்குப் பஞ்சம். அப்படியிருக்கும் போது அவள் கோதுமைக்கு எங்கே போவாள்? வேண்டாம் என்று சொன்னாள்.
"அப்படி யார் சொல்வார்கள்?" என்றுதானே ரேஷன் கடைக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்த விஷயம் தெரியாமல் ஒருவன், 'நீ வேண்டாம் என்று சொல்லும் கோதுமையை எனக்கு வாங்கிக் கொடுத்து விடேன்' என்றான். அவ்வளவுதான்; நல்லமுத்துவுக்கு வந்து விட்டது கோபம்; அவனைப் பிய்த்துப் பிரிகட்டி விட்டார்-பாவம். அவன் அசடுவழிய அரிசியை வாங்கிக் கொண்டு போனான்-இப்படியெல்லாம் ஏழை எளியவர்களை மிரட்டி. அவர்களுடைய வாயில் வயிற்றில் அடித்து, பாழும் பணத்தை சேர்த்தாரே என்னத்தை வாரிக்கட்டிக் கொண்டு போனார்?" என்று கடைசியாகக் கருப்பையா வேதாந்தத்தில் இறங்கினார்.
"என்னத்தைக் கட்டிக்கொண்டு போவது? கொளுத்தும்போது அண்ணாக்கயிறக்கூட அறுத்துக் கொண்டல்லவா கொளுத்து கிறார்கள்!" என்றார் ஒரு பெரியவர். இதைக் கேட்டுக் கொண்டே அப்போது கோபாலசாமி கையில் கொத்துச்சாவியுடன் அங்கே வந்து சேர்ந்தான். நேரமாகி விட்டதால் கடையைப் பூட்டிக்கொண்டு சாவியை முதலாளியிடம் கொடுத்துவிட்டுப் போவதற்காக அவன் வந்தான்.
கருப்பையா அவனைக் கவனியாதவர்போல், "இன்னொரு வேடிக்கை உங்களுக்குத் தெரியுமோ? வியாபாரத்தில் இந்த மாதிரி 'பேத்து மாத்து' செய்வதை அவர் 'திறமை' என்று சாதிப்பார். இந்த ஒரு விஷயத்தில்தான் அவருக்கும் எனக்கும் கொஞ்சம் அபிப்பிராய பேதம், என்ன இருந்தாலும் மனிதன் தனக்காக மட்டும் வாழக் கூடாது, பாருங்கள்!" என்று தம் பேச்சை மேலும் தொடர்ந்தார்.
"ஆமாம், ஆமாம்; பிறருக்காக வாழ்வதில் உள்ள பெருமை வேறு எதிலுமே கிடையாதே!" என்றார் தனக்கென்று வாழாத ஒரு தகைமையாளர்.
“சர்க்கார் என்னதான் சட்டதிட்டங்கள் செய்தாலும் அவற்றில் கொஞ்சநஞ்சம் ஓட்டையும் இருக்கத்தானே செய்யும்? அந்த ஓட்டை உடைசல்களை நம்முடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா!" என்றார் கருப்பையா.
"சீசீ, அது என்ன வாழ்வு" என்று முகத்தை சுளித்தார் இன்ஸால்வென்ஸி பேர்வழி ஒருவர்.
"பாரதக் கதையில் யக்ஷன் தரும புத்திரனைப் பார்த்து. 'உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?' என்று கேட்கிறான். 'நாள்தோறும் பலர் மடிந்து கொண்டிருப்பதை பார்த்தும் எஞ்சியுள்ள மனிதர்கள் தாங்கள் நிலை பெற்று இருப்போம் என்று நம்புகிறார்களே, அதுதான் பெரிய ஆச்சரியம்!" என்று தரும புத்திரர் சொல்கிறார்.இதில் எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது பார்த்தீங்களா?" என்று சொல்லிக் கருப்பையா நெருப்பிலிட்ட நெய்யாய் உருகினார்.
இதைக்கேட்ட கோபாலசாமியோ ஒன்றும் புரியாமல் தேம்பினான். காலையில் அவர் சொல்லியனுப்பியவற்றை யெல்லாம் ஒரு முறைக்கு இருமுறையாக நினைவுகூர்ந்து பார்த்தான்- 'அவ்வளவும் அவர் சொன்னவையா அல்லது நம் கற்பனையா?" என்ற சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. 'எது எப்படியிருந்தாலும் உபரி தானியத்துக்காக நூறு ரூபாய் கொடுத்தது உண்மைதானே?' என்று எண்ணி அவன் ஒரு கணம் ஆறுதல் அடைந்தான். மறுகணம், "ஒருவேளை அதுவும் பொய்யோ! நம்மிடம் நூறு ரூபாய் கொடுத்ததாக நாம்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ!" என்று எண்ணி அவன் குழம்பினான். கறார் கருப்பையாவோ தமக்குத் தெரிந்த வேதாந்த உண்மைகளையெல்லாம் அள்ளி அள்ளி விட்டுக் கொண்டே இருந்தார். அவற்றைக்கேட்க கேட்க கோபாலசாமியின் சந்தேகம் வலுத்தது. தலை கனத்தது. அத்துடன் 'விண், விண்' என்ற வலி வேறு தோன்றி அவனை வதைத்தது-தாங்க முடியவில்லை, அவனால்; துணிந்து நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு "கொஞ்சம்...... இப்படி...... வருகிறீர்களா?" என்று அவன் அழாக்குறையாக அழைத்தான்.
அப்பொழுதுதான் அவனைப் பார்த்ததுபோல் 'சட்'டென எழுந்து, "ஒரு நிமிஷம் இதோ வந்து விட்டேன்!” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே சென்றார்.
"காலையில்.....உபரி தானியத்துக்காக..... காலையில்..... உபரிதானியத்துக்காக....." என்று மேலே சொல்ல முடியாமல் திணறினான் கோபாலசாமி.
"ஆமாம்; என்ன உபரிதானியத்துக்கு? சொல்லித் தொலையுமே!"
"ஒரு சந்தேகம்.... இன்று காலை...... நீங்கள்..... நீங்கள் என்னிடம் நூறு ரூபாய் கொடுத்தீர்களல்லவா?”
"ஆமாம்; அதை எங்கேயாவது தொலைத்து, விட்டீரா என்ன?"
அவ்வளவுதான்; "அப்பாடா!" என்று கோபால் சாமி பெருமூச்சுவிட்டான்; அவனுடைய சந்தேகம் தீர்ந்தது. முகமும் மலர்ந்தது.
"இல்லை; இவர்களுடன் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும்....."
"உமக்குச் சந்தேகம் வந்துவிட்டதாக்கும்? நல்ல ஆள் ஐயா, நீர்? அந்த வேதாந்தம் வாய் வேதாந்தம்; இந்த வேதாந்தம் வயிற்று வேதாந்தம்!" என்றார் கருப்பையா.
கோபாலசாமிக்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.
மிஸ் நளாயினி-1950
......யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, "ராஜா!" என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது.
"ராஜா!"
"ஏன் அப்பா!"
"எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?"
"இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் பார்த்தாயா என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பதுதானா வேலை?”
"அதற்கில்லை ராஜா......!"
"எதற்கில்லை?"
"அந்தப் பெண் பொழுது விடிந்து எத்தனை தரம் நம் வீட்டுக்கு வந்து வந்து போகிறாள், பார்த்தாயா?"
"வந்தால் என்ன, அப்பா? அவள் ஏதோ காரியமாகத் தானே வந்து விட்டுப் போகிறாள்?"
"என்ன காரியம்?"
"உங்களுக்குத் தெரியாதா? அவள்தான் சொன்னாளே, அப்பா ஹிந்து பத்திரிகை வாங்கி வரச் சொன்னார்!" என்று.
"உனக்கு உண்மை தெரியாது ராஜா, தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய்!"
“என்ன உண்மை? அதைத்தான் சொல்லுங்களேன்?"
"சொல்கிறேன் ராஜா, சொல்கிறேன்! இன்று காலை நீ இங்கே இருக்கும் வரைதான் அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள். நீ வெளியே போனாயோ இல்லையோ, அவளைக் காணவேயில்லை. கடைசியில் 'என்னடா,'பெரிய மனிதராச்சே' என்று நானே பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனேன். அவளுடைய அப்பா வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தார். அவரிடம் பத்திரிகையை நீட்டி, 'நீங்கள் கேட்டீர்களாமே' என்றேன். 'இல்லையே' என்றார். எனக்குத்துக்கி வாரிப் போட்டது. 'ஓஹோ' என்று சொல்லி மழுப்பி விட்டு வந்தேன்-எப்படியிருக்கிறது, கதை?- நானும் பார்க்கின்றேன், எப்போது பார்த்தாலும் அந்தப் பெண்ணுக்கு உன் மேலேயே கண்! இப்படித்தான் தினசரி ஏதாவது ஒரு ஜோலி வைத்துக்கொண்டு, அவள் நீ இருக்கிற சமயமாகப் பார்த்துவிட்டு, இங்கே அடிக்கடி வந்து விட்டுப் போகிறாள்!"
"இருக்காது, அப்பா!"
"இல்லை ராஜா என்னுடைய கல்யாணத்திற்கு முன் உன்னுடை அம்மா கூட....."
இந்த சமயத்தில் அதுவரை அங்கே உட்கார்ந்திருந்த அவருடைய சம்சாரம், "ஆமாம், போங்கள்" என்று சொல்லிக்கொண்டே 'வாக்-அவுட்' செய்து விட்டாள். அவரும் அதற்கு மேல் தம்முடைய 'காதல் நாடகத்தைப் பற்றி விவரிக்காமல், 'இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் தெரியுமா? நான் கண்ணை மூடுவதற்குள் உனக்கு எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்ற ஒரே ஆசையினால்தான்! நீயோ 'காதல் கல்யாணந்தான் பண்ணிக்கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாயிருக்கிறாய். 'அப்படித்தான் செய்வோமே!' என்று 'யாரையாவது காதலிக்கிறாயா?" என்றால், 'இல்லை' என்கிறாய். இப்படியேயிருந்தால் என்னுடைய ஆசை எப்போது நிறைவேறுவது, ராஜா!"
"அப்பா, நீங்கள் இப்படியெல்லாம் சொன்னால் கடைசியில் எனக்குப் பைத்தியந்தான் பிடித்துவிடும். நாலு நாவல்களைப் படித்துவிட்டு, நின்றால் காதல், நினைத்தால் காதல், கண்டால் காதல், காணாவிட்டால் காதல் என்று பிதற்றுபவன் நானல்ல. நான் சொல்லும் காதலுக்கும், நீங்கள் சொல்லும் காதலுக்கும் ரொம்ப ரொம்பதுரம். என் காதலி....."
"சொல்லு ராஜா, ஏன் வெட்கம்? நானேதான் வெட்கத்தைவிட்டு உன்னிடம் பேசத் தகாததையெல்லாம் பேசிக் கொண்டிருக் கிறேனே!"
“என் காதலி, தாசி வீட்டுக்குப் போக ஆசைகொண்ட நாயகனை தலைமேல் சுமந்து சென்ற நளாயினியைப் போன்றவளாயிருக்க வேண்டும்."
"அடேயப்பா அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்குமா ராஜா? எவளிடமாவது இப்போது அப்படிச் சொன்னால்கூட அவள் சிரிப்பாளே!-'சரி!அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு வந்தால் அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்; அதே மாதிரி ஆசை எனக்கு வந்தால் நீங்களும் நிறைவேற்றி வைப்பீர்களா?" என்று கேட்டாலும் கேட்பாளே!
"அதென்னமோ அப்பா நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லுங்கள்; எனக்கு ராதாவைப் பிடிக்கவில்லை!"
முன்னாள் அமைச்சர் ரங்கநாதம் அவர்களின் ஏகபுத்திரன் ராஜகோபாலன் பிறந்ததிலிருந்தே பிடிவாதத்தை துணையாகக் கொண்டு வளந்தவன். பணமும் பாசமும் அதற்கு பக்கபலமாயிருந்து வந்தன. வழிவழியாக தாமும் தம்முடைய வம்ச பரம்பரையும் வாழ்ந்து வருவதுபோல் ராஜகோபாலனும் வாழவேண்டு மென்பதில் அடங்காத ஆசை கொண்டிருந்தார் அவர். வம்ச வழியை யொட்டி வராமல் அவன் எங்கே வழிதவறிவிடப் போகிறானோ என்று பயந்து, அல்லும் பகலும் அவர் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இதுவரை அவர் எண்ணியபடியே அவன் பிறந்து வளர்ந்தாகிவிட்டது. இப்பொழுது 'கல்யாணம் செய்துகொள்' என்றால், பையன் என்னவெல்லாமோ பிதற்றுகிறானே?
இந்த விஷயத்தில் கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தம்முடைய பிள்ளைக்குச் சென்னை சர்க்கார் காரியாலயத்திலேயே ஒரு பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் காரணமாகத் தன்னுடைய அத்தையின் வீட்டில் அவன் தங்க நேர்ந்தது. இதனால் அவனுடைய மகள் உஷாவுக்கும் தம்முடைய மகன் ராஜாவுக்கும் காதல் உதயமாகும், கல்யாணத்தால் அது அஸ்தமனமாகும் என்று ரங்கநாதம் எதிர்பார்த்தார். அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை; நடக்குமென்று தோன்றவும் இல்லை.
இத்தனைக்கும் தினசரி எத்தனையோ விதமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு உஷா அவனுக்கு காணாத காட்சியெல்லாம் தந்தாள்; பேசாத பேச்செல்லாம் பேசினாள்: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினாள்; பாடாத பாட்டெல்லாம் பாடினாள். ஆனாலும் என்ன, அவளுடைய உடலழகைப் பொருட்படுத்தாமல் உள்ளத்தின் அழகைக் கண்டு பிடிப்பதிலே அவனுடைய கவனம் சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் மாலை ராஜகோபாலன் வழக்கம்போல் வீட்டுக்குத் திரும்பினான். வீடு வெறிச்சென்றிருந்தது. சுற்று முற்றும் பார்த்தான். உஷா மட்டும் கூடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
"எங்கே, யாரையும் காணவில்லை!" என்று கேட்டான் ராஜகோபாலன்.
"என்ன என்னைக்கூடவா காணவில்லை!" என்று தன்னைத் தானே தொட்டுப் பார்த்துக் கொண்டு சிரித்தாள் உஷா.
அவளுடைய சிரிப்பு ராஜகோபாலனுக்கு நெருப்பாயிருந்தது. "உன்னைக் காணாமலென்ன? உன் அப்பாவையும் அம்மாவையும் காணோமே என்று கேட்டேன்" என்றான் அவன்.
"ஒ, அவர்களைக் கேட்கிறீர்களா?-அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள்!"
"எந்த ஊருக்கு?"
"திருநெல்வேலிக்கு?"
அவ்வளவுதான். அதற்குமேல் ராஜகோபாலன்தன்னை ஒன்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி அவள் வைத்துக் கொள்ளவில்லை. தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போனாள்.
"அவர்கள் ஏன் திருநெல்வேலிக்குப் போயிருக்கிறார்கள் தெரியுமா?'- என் அப்பாவின் சிநேகிதர் வீட்டுக் கல்யாணத்திற்கு!”
"எப்போது வருவார்கள். தெரியுமா? - இரண்டு நாட்கள் கழித்து வருவார்கள்?"
"அவர்கள் என்ன சொல்லிவிட்டுப் போனார்கள் தெரியுமா?-வேலைக்காரியிடம் என்னைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டுப் போனார்கள்; என்னிடம் உங்களைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போனார்கள்?"
அதுவரை நின்றது நின்றபடி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜகோபாலன் பொறுமையை இழந்தவனாய், "போதும், போதும்!" என்று சொல்லிவிட்டு, கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டுத் தன் அறைக்குள் சென்று உட்கார்ந்தான்.
காபியைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள் உஷா. அதை வாங்கிக் குடித்துவிட்டு அவன் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். காலி டம்ளரை எடுத்துக்கொண்டு போன உஷா சிறிது நேரத்திற்கெல்லாம் துள்ளிக் குதித்துக்கொண்டே திரும்பி வந்து, ராஜகோபாலன் முன்னால் ஒரு தினுசாக உட்கார்ந்தாள்.
அந்த நிலையில் அவளைக் கண்ட அவன் கையிலிருந்த புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு எழுந்து சென்றான்.
வி.க. -24 "தேவலையே; என்னைக் கண்டதும் எழுந்துகூட நிற்கிறீர்களே? என்னிடம் நீங்கள் இவ்வளவு மரியாதையாக நடந்து கொள்வீர்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்க வில்லை" என்றாள் உஷா.
அவள் சொன்னதை அவன் அனுபவிக்கவில்லை; எழுந்த இடத்திலேயே இருந்த மேஜையின்மேல் சிறிது நேரம் உட்கார்ந்து ஏதோ யோசித்தான். பிறகு கோட்டை எடுத்து மீண்டும் மாட்டிக் கொண்டு வெளியே போய்விட்டான்.
வழியில் ஏனோ உஷாவின் காதலை நினைத்து கரைந்தது ராஜகோபாலனின் உள்ளம்.
அவன் வெளியே போன பிறகு உஷாவின் உள்ளமும் வேதனையடைந்தது. "அவனுக்குத் தன்னைப் பிடிக்காத போது அவனிடம்தான் ஏன் விளையாட வேண்டும்?" என்று கூட அவள் நினைக்க ஆரம்பித்து விட்டாள்
இரவு மணி எட்டு இருக்கும். வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உஷா கண்ணிர் சிந்திக் கொண்டிருப்பதை ராஜகோபாலன் கண்டான். அவன் மனம் பேதலித்து விட்டது. "ஏன் அழுகிறாய், உஷா?" என்று உடனே கேட்டுவிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. ஆயினும் அவ்வளவு சீக்கிரத்தில் அவளிடம் தன்னை இழந்து விட விரும்பவில்லை; மெளனமாக உட்கார்ந்தான். உஷாவும் மெளனமாக எழுந்து வந்து, அவனுக்கு சாதம் பரிமாறினாள். அந்தச் சாதத்தோடு, சாதமாக, "ஏன் அழுகிறாய், உஷா?" என்று அவளைக் கேட்க வேண்டுமென்றிருந்த கேள்வியையும் சேர்த்து அவன் விழுங்கப் பார்த்தான். முடியவில்லை. கேட்டு விட்டான்.
"ஏன் அழுகிறாய், உஷா?”
அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவள். "ஒன்றுமில்லை!" என்று சொல்லிக் கொண்டே அப்பால் போய்விட்டாள்.
இந்த நிலையில் ரங்கநாதம் எதிர்பார்த்தபடி இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தான் விரும்பினர். ஆயினும் அவர் களுடைய காதலுக்கு இடையே ஏதோ ஒன்று இடையூறாக இருந்து வந்தது; அதுதான் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.
கடைசியாக அவர் என்ன நினைத்தாரோ என்னமோ, தமது மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானல் பங்களாவிற்கு சென்றார். அங்கிருந்து வந்த கல்யாணப் பத்திரிகை யொன்று உஷாவைத் தூக்கி வாரிப் போட்டது. 'சிரஞ்சீவி ராஜகோபாலனுக்கும், செளபாக்கியவதி ராதைக்கும்’ என்ற வரியைப் படித்ததும் அவள் நிலை குலைந்தாள்.
"என்ன, அம்மா! ஏன் அப்படி நிற்கிறாய்? என்றார் அவளுடைய தந்தை.
அவள் பதில் சொல்லவில்லை; கல்யாணப் பத்திரிகையை அவரிடம் கொடுத்துவிட்டு நின்றது நின்றபடி நின்றாள்.
அதைப்படித்ததும், "அவன் கிடக்கிறான்!" என்றார் அவர் அலட்சியமாக.
அதேமாதிரி அவளால் சொல்ல முடியவில்லை; விம்மினாள். அதற்குள் கல்யாணப் பத்திரிகையுடன் வந்திருந்த கடிதம் ஒன்று அவருடைய கண்ணில் பட்டது. அதையும் எடுத்துப் பிரித்துப் படித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எல்லோரும் வந்துவிட வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.
"ஆமாம், இவன் கல்யாணத்திற்கு ஒருவாரம், என்ன? ஒரு மாதத்திற்கு முன்னாலேயே போயிருக்க வேண்டியது தான்" என்றார் அவர் வெறுப்புடன்.
அவர் எதிர்பார்த்தபடி, உஷா அந்தக் கல்யாணத்தை வெறுக்கவில்லை. "அதனாலென்ன அப்பா, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி நாம் அனைவரும் அந்தக் கல்யாணத்திற்கு போகத்தான் வேண்டும்!" என்றாள் அவள் கண்களை துடைத்து விட்டுக் கொண்டே.
"இதென்ன, அம்மா உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?"
"எனக்கு ஏன்பைத்தியம் பிடிக்கவேண்டும்? அவருக்குப்பிடித்த பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொள்கிறார்; அவ்வளவுதானே விஷயம்!"
"நம்பிக்கை துரோகம் செய்த அந்த நயவஞ்சகனுக்கா இப்படிப் பரிந்து பேசுகிறாய்?-உங்களுடைய இஷ்டம் அதுவானால் அதை நான் ஆக்ஷேபிக்கவில்லை!" என்றார் அவர்.
அவ்வளவுதான்: ஒருவாரத்துக்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே எல்லோரும் கோடைக்கானலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
"நீங்கள் எங்கே வராமல் இருந்துவிடப் போகிறீர்களோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை வந்துவிட்டீர்கள்!" என்று கூறி, அவர்களை வரவேற்று உபசரித்தார் ரங்கநாதம்.
கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன. ராஜகோபாலன் 'ராஜா' மாதிரியே இருந்தான். அங்குமிங்குமாக அவன் நடமாடுவதைப் பார்க்கும் போதெல்லாம் உஷாவை ஏதோ ஒன்று என்னவோ செய்வது போல் இருந்தது!
மறுநாள் காலை கல்யாணம். அதற்கு முதல் நாள் மாலை உஷாவிடம் வந்து, "நளாயினியின் புனர்ஜன்மம் நீதான்!” என்றான் ராஜகோபாலன்.
அவள் பதில் சொல்லவில்லை.
"வேறொரு பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிந்தும், நீ என்னுடைய கல்யாணத்திற்கு வந்திருக்கிறாயே, அதுவே போதும், உன்னை நான்கல்யாணம் செய்து கொள்ள" என்றான் அவன்.
அவள் தலை கவிழ்ந்தது; அதைத் தொடர்ந்து ஒரு சொட்டுக் கண்ணிர் கீழே விழுந்து தெறித்தது.
"அழாதே, அசடே! நாளைக்கு நான் மாலையிடப் போகும் மாதரசி நீதான்" என்றான் அவன்.
அவ்வளவுதான்; அவள் எழுந்து அவசர அவசரமாகக் கண்களை துடைத்துவிட்டுக் கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தாள். அப்போது படபடவென்று அடித்துக் கொண்ட அவளது இமைகள் "இது நிஜந்தானா, இது நிஜந்தானா? என்று கணத்துக்கு கணம் அவனைக் கேட்பது போல் இருந்தது!
"ஆமாம், உஷா, அவ்வளவும் சோதனை ராதை கல்யாணப் பத்திரிகையோடு சரி, நீதான் இத்தனை நாளும் நான் தேடிக் கொண்டு இருந்த மிஸ் நளாயினி 1950!" என்றான் அவன்.
அவள் முகம் மலர்ந்தது!
திருடனுக்கு விடுதலை!
"அப்பா!" என்றான் பையன். "ஏண்டா, ராஜீ?" என்றார் அப்பா.
“பொங்கல் அப்பா....."
“பொங்கல்தானே?....... நாளைக்கு நம்ம வீட்டிலே பண்ணச் சொன்னால் போச்சு; உனக்கு சர்க்கரைப் பொங்கல் வேணுமா; சாதாப் பொங்கல் வேணுமா?"
"ஊ ஹும்..... அது இல்லேப்பா, பொங்கலுக்கு.... பொங்கலுக்கு....”
"ஒஹோ, பொங்கலுக்கா?....என்ன வேணும் உனக்கு?"
"புஷ்-கோட், அப்பா!"
"இவ்வளவுதானே? தைத்து விட்டால் போச்சு. எங்கே தங்கச்சி......?”
"இதோ, வந்துட்டேன்!”
'உனக்கு ஒன்னும் வேணாமாம்மா?"
"எனக்கா?...... எனக்கு....... எனக்குப் பட்டுப்பாவாடை, பட்டு ஜாக்கெட்டு, அப்பாலே....... அப்பாலே....... எனக்கு எல்லாம் வேணும்ப்பா!"
"சரி, உனக்கு வேணுங்கிறதெல்லாம் அந்த எல்லாங்கிறதுல அடங்கிப் போச்சு இல்லையா?” என்றார் அப்பா சிரித்துக் கொண்டே.
இந்தச் சமயத்தில் கடைக்குட்டி கல்யாணி எங்கிருந்தோ ஓடோடியும் வந்து, அப்பாவின் கால்களை தன் பிஞ்சுக் கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, "அப்பா, அப்பா, அப்ப்பா!" என்று வாய் ஓயாமல் அடித்துக் கொண்டாள்.
"என்னடா, கண்ணு?" என்றார்.அவர், அவளை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டே.
"எல்லோர் வீட்டுக்கும் பொங்கல் வரப்போகிறதாமே, அது நம்மவீட்டுக்கு வருமாப்பா? என்று ஒரு போடு போட்டாள் அவள்.
அவ்வளவுதான்; எல்லோரும் 'கொல்' என்று சிரித்தார்கள்.
அந்தச்சிரிப்பொலியைத் தொடர்ந்து, "இதென்ன நியூஸென்ஸ்! என்ற வகைச் சொல் படுக்கையறையிலிருந்து வந்தது.
எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்; மத்தியானம் சாப்பிட்டுவிட்டுப் படுத்த எஜமானியம்மாள் அப்போதுதான்துக்கம் கலைந்து எழுந்து, கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தாள்.
ஹாலில் மாட்டியிருந்த கடிகாரம் மணி ஆறு அடித்து ஓய்ந்தது.
"ஜம்பு, டேய் ஜம்பு....!"
இந்தக் குரலைக் கேட்டதும் சமையலறையிலிருந்த ஜம்பு கரண்டியும் கையுமாக ஓடோடியும் வந்து அவளுக்கு எதிரே நின்றான்.
"ஏண்டா இடியட், நான் எழுந்து எவ்வளவு நேரமாச்சு? காப்பி கொண்டு வந்து கொடுப்பதற்கு என்ன கேடு?"
"ஒண்ணுமில்லேம்மா; இதோ வந்துட்டேன்!” என்றுதடுமாறிக் கொண்டே சென்று, அடுத்த நிமிஷமே கையில் காப்பியுடன் உள்ளே நுழைந்தான் ஜம்பு.
எரிச்சலுடன் அதை வாங்கி அவன் முகத்தில் கொட்டி விட்டு எஜமானியம்மாள் ஹாலுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் மூன்றும் பீதிநிறைந்த கண்களுடன் அப்பாவிடமிருந்து ஒதுங்கின.
"ஏன் சுஜாதா, என்மேல் இன்னுமா கோபம் உனக்கு" என்று குழைந்து கொண்டே எஜமானியம்மாளை நெருங்கினார் எஜமான்.
அவள் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் அவரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.
இவ்வளவு தூரம் அவளுடைய கோபத்துக்கு அவர் ஆளாகியிருந்ததற்கு காரணம் இதுதான்:
எஜமானியம்மாளுக்கு ஒரு 'பிரண்ட்' உண்டு. ஜாலிலைப்பில் ஈடுபட்டிருந்த அந்த ப்ரெண்டுக்குச் சட்டைப் பை எப்போதுமே காலி?-எனவே. அடிக்கடி அதை இட்டு நிரப்ப வேண்டிய பொறுப்பு எஜமானியம்மாளைச் சார்ந்தது. அதற்காக 'அன்பளிப்பு’ என்னும் பேரால் அவளிடமிருந்து அவன் ஏதாவது, அவ்வப்போது பெற்றுக் கொள்வது வழக்கம். சாதாரணமாக அல்ல; கொஞ்சம் பிகுவுடன்தான். அந்த வழக்கத்தின் காரணமாக அன்று எஜமான் கையிலிருந்த வைர மோதிரத்திற்கு பிடித்தது தலைவலி. அதை எப்படியாவது பிடுங்கித் தன் 'ப்ரெண்'டுக்குக் கொடுத்து விடவேண்டுமென்று எஜமானியம்மாள் தீர்மனித்தாள்-அவ்வளவுதான்; அன்று மாலை 'காதல்’ திடீரென்று கரை புரண்டது; என்று மில்லாத திருநாளாகத் தன் கணவனை அழைத்துக் கொண்டு அவள் கடற்கரையை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, அவரை ஆசையுடன் அணைத்து முத்தமிடப் போனாள். நாலுபேருக்கு முன்னால் அவ்வாறு நடந்து கொள்ளத் துணிந்தது அவளுக்கு வெட்கமாக இல்லாவிட்டாலும், அவருக்கு வெட்கமாக இருந்தது. "இதெல்லாம் இங்கே எதற்கு? வீட்டில் வைத்துக் கொள்வோமே!" என்றார்-உடனே வந்துவிட்டது கோபம் அவளுக்கு. அந்தக் கோபம் தான் இன்னும் தீரவில்லை-எப்படித் தீரும்-அதனால் வைர மோதிரமல்லவா கிடைக்காமற் போய்விட்டது!
அந்தத் தீராத கோபத்தைத் தீர்த்து வைப்பதற்காக, "பொங்கல் வரப்போகிறதே, உனக்கு ஒன்றும் வேண்டாமா?" என்று கேட்டார் அந்த அப்பாவி.
"நான் என்ன பச்சைக் குழந்தையா?-மிஸ்டர் ஹரன், என்னை இன்னொரு முறை இப்படியெல்லாம் கேட்காதீர்கள்!” என்று அவள் உறுமினாள்.
"இல்லை; இல்லவே இல்லை!" என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாக அவர் கலங்கினார்.
"ஆமாம், எனக்கு வேண்டியதை நானே வாங்கிக் கொண்டு விட்டேன்!” என்றாள் அவள்.
“எப்போது என்று தெரிந்து கொள்ளலாமோ?" என்றார் அவர்.
"ஓ, பேஷாய்! இன்று 'கிவ் அண்ட்டேக்'குக்குப் 'போன்' பண்ணி ஒரு நூறு புடவைகள் கொண்டுவரச் சொன்னேன். அவற்றில் பத்துப் புடவைகள் எனக்கு பிடித்திருந்தன. எடுத்துக் கொண்டேன். நீங்கள் "இம்மீடியட்டா அவனுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு ஒரு 'செக்' அனுப்பிவையுங்கள்!" என்று சொல்லிவிட்டு அவள் சிங்கார அறைக்குச் சென்றாள். அவர் மூர்சையானார்!
"கல்யாணம் செய்து கொள்வது முட்டாள்தானம்" என்பது விவேகானந்தர் வாக்கு. அந்த முட்டாள் தனத்தை மும்முறை செய்தவர் மிஸ்டர் ஹரன். மூன்று குழந்தைகளில், இரண்டு முதல் மனைவியுடையவை. ஒன்று இரண்டாவது மனைவியுடையது; மூன்றாவது மனைவியான சுஜாதாவுக்கு இன்னும் புத்திரபாக்கியம் கிட்டவில்லை; அதற்காக அவள் அவரை நம்பியிருக்கவும் இல்லை.
வாழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது. மிஸ்டர் ஹரனுக்கு அது ஒரு கலையாகத் தோன்றியது. காரணம், கஷ்டத்தை பற்றியும் கவலையைப் பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தது தான்!
ஹரனின் பத்தாம் பாட்டனார் சத்தியம் என்றால் இன்னதென்றே தெரியாத ஓர் அப்பாவி, தம்மை லேவா தேவி செய்து வந்த நாலைந்து பண மூட்டைகளுக்கு ஶ்ரீமந்நாராயணனின் நாமத்தைப் பக்தி சிரத்தையுடன் போட்டு, வசதி மிக்க ஏழெட்டு விதவைகளின் கற்பைச் சூறையாடி, தமது பிற்காலச் சந்ததிகளுக்கு ஏராளமான வீடுவாசல்களையும், நிலபுலன்களையும் அவர் சேர்த்துவிட்டுப் போய் விட்டார். அதிலிருந்து வருஷம் ஒன்றுக்கு லட்சக் கணக்கில் வருமானம்வரவே, அவர்களுடைய குடும்பம் 'கலைக்குடும்ப'மாக மாறிவிட்டது. அத்தகைய குடும்பத்தின் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர் மிஸ்டர் ஹரன்; அவருடைய 1951-ம் வருடத்திய மாடல் மனைவி சுஜாதா. அந்த மாடலுக்கு ஏற்ப, அவள் மண்ணாசை, பொன்னாசையோடு ஆணாசையும் கொண்டிருந்தாள். ஆண்கள் பெண்ணாசை கொள்ளும் போது, பெண்களும் ஆணாசை கொள்ள வேண்டியதுதானே?
இந்த நிலையில் மூர்ச்சையான ஹரனைச் சுஜாதா கவனிக்க வில்லை; அவனுக்குப் பதிலாக ஜம்பு கொஞ்சம் தண்ணீரை கொண்டு வந்து அவருடைய முகத்தில் தெளித்து, விட்டு விசிறினான். டிரைவர் கன்னையா அது தான் சமயம் என்று, அவருக்கு எதிரே வந்து நின்று "எஜமான் எஜமான்!” என்று 'காக்கா' பிடித்துக் கொண்டிருந்தான்.
கோபம் வந்துவிட்டது எஜமானுக்கு-“ஏண்டா தடியன்களா! உங்களை யார் இங்கே வரச் சொன்னது?" என்று எரிந்து விழுந்தார்.
அவ்வளவுதான் ஜம்பு நழுவிவிட்டது; அசட்டுக் கன்னையா மட்டும் "எங்களைத் தவிர இங்கே வேறே யாரும் இல்லீங்களே!" என்று குழைந்த வண்ணம் அங்கே நின்றான்.
"ஏன், அம்மா எங்கே?" என்று திடுக்கிட்டுக் கேட்டார் அவர்.
"அவங்க 'ப்ரெண்ட்' டாக்ஸியிலே வந்து அவங்களை எப்பவோ அழைச்சிகிட்டுப் போயிட்டாருங்க!" என்றான் அவன்.
"சரி, சரி நீங்களும் எங்கேயாவது போய்த் தொலையுங்கள்!" என்று மனைவியிடம் காட்ட முடியாத கோபத்தை அவர்கள் மேல் காட்டிவிட்டு, அவர் விறைப்புடன் எழுந்தார்.
“எஜமான்.....!" என்று தலையைச் சொறிந்தான் கன்னையா.
"என்னடா?"
"பொங்கலுக்கு....."
"பணம் வேண்டும் என்கிறாயா? ஒரு காலணாக்கூட 'அட்வான்ஸ்' கொடுக்க முடியாது; அப்புறம்.....?”
"அட்வான்ஸ் கேட்கலைங்க; போன மாசத்துச் சம்பளம்...."
"போன மாசத்துச் சம்பளமா.....இன்னுங் கொடுக்கவில்லை?”
"இல்லைங்க!”
"அம்மாவிடம் கொடுத்திருந்தேனே?”
"நெசமாவா! கொடுக்கலைங்களே!”
"அப்படியானால் இரு; அம்மா வந்ததும் போகலாம்."
"அவங்க வர மணி பத்துக்கு மேலே ஆகுங்களே!"
"அதற்குக்கூட என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்? பணம் வேண்டுமானால் இருந்துதான் தீர வேண்டும்."
"சரிங்க!”
கன்னையா வெளியே போய்விட்டான். ஜம்பு குழந்தைகளுக் கெல்லாம் சோற்றைப் போட்டுவிட்டு, படுக்க வைத்து விட்டு தானும் படுத்துக் கொண்டான்.
ஹரனை அவன் சாப்பிடக் கூப்பிடவில்லை. ஏனெனில் அம்மா வராமல் அவர் சாப்பிடமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும்!
மணி பத்து இருக்கும்; வாசலில் 'டாக்ஸி' வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, "குட்நைட்" என்று இரு குரல்கள் ஒலித்தன. 'டாக்ஸி' கிளம்பியது. அம்மா உள்ளே வந்தாள்.
"ஏன் சுஜாதா, வெளியே உங்களை யாரும் பார்க்க வில்லையே?" என்று அவள் காதோடு காதாகக் கேட்டார் ஹரன்.
அவள் பேசாமல் இருந்தாள்.
"சரி, சாப்பிடப் போவோமா?" என்றார் அவர்.
இம்முறை அவள் பேசாமல் இருக்கவில்லை; "அது எனக்குத் தெரியும்; நீங்கள் ஒன்றும் என்னை அழைக்க வேண்டாம்!" என்றாள்.
இந்தச்சமயத்தில் உள்ளே தலைநீட்டியபடி, "எஜமான்!” என்று குரல் கொடுத்தான் கன்னையா.
அவன் குரலைக் கேட்டதும், "இன்னொன்று சொல்ல மறந்து விட்டேனே.....!" என்று ஆரம்பித்தார் அவர்.
“என்ன சொல்லித் தொலையுங்கள்!” என்று கேட்டாள் மிஸஸ் ஹரன்.
"கன்னையாவுக்கு...."
“என்ன, காலராவா?"
"இல்லை, சம்பளம்....."
"ஒ, அந்த 'டாங்கி' நான் சம்பளம் கொடுக்க வில்லை என்று சொல்லி விட்டானா? அவனை முதலில் வீட்டுக்கு அனுப்புங்கள்."
"இல்லை, நான்தானே கேட்டேன்....."
"அப்படியானால் என்மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று அர்த்தமாகிறது....!"
"ஐயய்யோ, இது என்ன அநியாயம்! உன்மீதாவது எனக்கு நம்பிக்கையில்லையாவது ? நல்லாச் சொன்னே!..... ஹிஹிஹி.....நல்லாச் சொன்னே!"
"இளித்தது போதும், நிறுத்துங்கள்!"
"இல்லை....."
“என்ன இல்லை...?”
"இளிக்கவில்லை!"
அதற்குமேல் சுஜாதா அங்கே நிற்கவில்லை; 'விர்ரென்று கன்னையாவை நோக்கி வந்து, "டேய் நாளையிலிருந்து நீ இங்கே தலைகாட்டக் கூடாது. ஆமாம் சொல்லி விட்டேன்" என்றாள்.
"நான் ஒரு குற்றமும் செய்யலைங்களே!” என்றான் கன்னையா.
"நீ ஒரு குற்றமும் செய்யவில்லையல்லவா? அதுதான் குற்றம்; போய் வா;”
"ஏழை மேலே தயவு வையுங்க, அம்மா!"
"அது என் வேலையல்ல; கடவுளின் வேலை!"
"அவருதான் உங்களைவிட மோசமாயிருக்காருங்களே” அவ்வளவுதான்; சுஜாதா சட்டென்று திரும்பி, மிஸ்டர் ஹரன்! இவன் சொல்வதைக் கேட்டீர்களா. நான் ரொம்ப மோசமாம்!" என்று இரைந்தாள்.
கன்னையாவுக்கு தான் செய்து விட்ட தவறு இப்போது தான் புரிந்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக, "உங்களைச் சொல்லலை, அம்மா....!" என்று அவன் ஏதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்தான்.
"போடா, ராஸ்கல்! இனிமேல் நீ இங்கே ஒரு நிமிஷங் கூட இருக்கக்கூடாது...கெட்அவுட்....ம், கெட் அவுட்......!"
கன்னையாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் திருதிரு வென்று விழித்தபடி, "எஜமான்" என்று மீண்டும் குரல் கொடுத்தான்.
அவர் உள்ளே இருந்தபடி, "அம்மா சொன்னால் சொன்னதுதான், போடா வெளியே!” என்று உறுமினார்.
கன்னையாவின் கண்களில் நீர் சுரந்துவிட்டது. இருவரும் கைவிட்ட பிறகு அவன் என்ன செய்வான்? "நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்!” என்று எண்ணி, "சம்பளம்?" என்றான் அழாக் குறையாக.
"மிஸ்டர் ஹரன், இவனுக்குச் சம்பளத்தைக் கொடுத் தனுப்புங்கள்" என்றாள் சுஜாதா.
"அதைத்தான் உன்னிடம் கொடுத்திருந்தேனே" என்றார் ஹரன்.
"ஓ, அதுவா? அந்தப் பணத்துக்கு ஒரு பார்க்கர் பேனா வாங்கி என் 'ப்ரெண்'டுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்துவிட்டேன்; இப்போது என்னிடம் பணமில்லை. இதற்குத்தான் பாங்கில் போடும் பணத்தை என் பேரால் போடுங்கள், என் பேரால் போடுங்கள் என்று நான் படித்துப் படித்துச் சொல்கிறேன், கேட்டால்தானே?" என்றாள் அவள்.
"அது ஒன்றுதானே சுஜாதா, உன்னையும் என்னையும் இன்று வரை பிணைத்து வைத்திருக்கிறது!" என்று பரிதாபத்துடன் சொல்லிக்கொண்டே, தம் சட்டைப் பையிலிருந்த நாற்பது ரூபாயை எடுத்து கன்னையாவிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு அவன்தன் வீட்டை நோக்கி நடந்தான்-நடந்தானா!-இல்லை; நகர்ந்தான்.
அன்றிரவு 'கன்னையா தொலைந்தால் தொலைகிறான்- காதலுக்குத் தடையாயிருந்த ஊடல் தொலைந்ததே, அதைச் சொல்லு!' என்ற சந்தோஷத்தில் கட்டிலை நெருங்கிச் சுஜாதாவின் கன்னத்தை லேசாகத் தடவினார் ஹரன்.
அவ்வளவுதான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல அவள் 'புஸ்' என்று கிளம்பி, அவருடைய கையைத் தட்டி விட்டு, "என்ன தைரியம் உங்களுக்கு! 'அலோ' பண்ணுவதற்கு முன்னால் என் கன்னத்தில் நீங்கள் எப்படித் தொடலாம்? மனைவியென்றால் உங்கள் வீட்டுப் பொம்மையென்று நினைத்துக் கொண்டீர்களா, இஷ்டப்பட்ட போதெல்லாம் விளையாட? ஜாக்கிரதை" என்று உறுமினாள்.
தேள் கொட்டிய திருடனைப் போல், "இதென்னடா வம்பு! மழைவிட்டும் துவானம் விடவில்லையே?" என்று எண்ணியவராய் கையைப் பிசையும்போது அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணாமல் அவர் திடுக்கிட்டார். அடுத்த நிமிஷம் காலையில் ஸ்நானம் செய்யும்போது அதைக் கழற்றி அலமாரியில் வைத்த ஞாபகம் அவருக்கு வந்தது. ஒடிப்போய்ப் பார்த்தார். காணவில்லை. காணவேயில்லை!
திரும்பி வந்து, "ஏன் சுஜாதா, என் வைரமோதிரத்தைப் பார்த்தாயா?" என்றார்.
"அதைவிட வேறு என்ன வேலை, எனக்கு? மிஸ்டர் ஹரன். என்னை இன்னொருமுறை அப்படிக் கேட்காதீர்கள், ஆமாம்." என்று ஒரு முத்தாய்ப்பு வைத்துவிட்டாள் அவள்.
"சரி, எதற்கும் போலீஸுக்காவது போன் பண்ணி வைப்போம்" என்று அவர் 'ரெஸ்டை' நெருங்கினார்.
"இந்நேரத்தில் போன் எதற்கு!" என்று அதட்டிக் கேட்டாள் வள்ளி.
"வைர மோதிரம் காணாமற் போனதைப் பற்றி......"
"அவமானம்; இந்த அற்ப விஷயத்திற்காக இந்நேரத்தில் நீங்கள் போன் பண்ணப் பார்ப்பது அவமானத்திலும் அவமானம்!”
"அதனாலென்ன, போகிற மானம் இப்படியும் கொஞ்சம் போகத்தான் போகட்டுமே!" என்று அவர் பண்ணவேண்டிய போனைப் பண்ணிவிட்டு வெளியே சென்றார்.
அடுத்தாற்போல் தன் 'ப்ரெண்'டைச் சுஜாதா போனில் அழைப்பது ஹரனின் காதில் விழுந்தது. “கர்மம், கர்மம்!" என்று தலையில் அடித்துக்கொண்டே, ரேடியோவை திருப்பி வைத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்தார்.
"அப்பா!"
"..........."
"அப்பா!"
"............"
"அப்பா!"
“ஏண்டா, 'தொப்பா, தொப்பா'ன்னு அடிச்சுக்கிறே?"
"பொங்கல், அப்பா!"
"பொங்கலா! அது நம்ம வீட்டுக்கு வராது: அப்புறம்?"
"நிஜமாகவா? அப்பா?”
"ஆமாண்டா, ஆமாம்!”
இவ்வாறு சொல்லித் தன் பையனை விரட்டிவிட்டு கன்னையா சட்டையைக் கழற்றி கொடிமேல் வீசி எறிந்தான்.
"வந்ததும் வராததுமா குழந்தை மேலே ஏன் அப்படி எறிஞ்சி விழறீங்க?" என்றாள் அவர் மனைவி.
"எறிஞ்சி விழாம எடுத்து வைச்சிக்கிட்டு கொஞ்சவா சொல்றே?" "குழந்தைன்னா கொஞ்சத்தான் வேணும், நீங்க எறிஞ்சு விழறதுக்கா இம்மூட்டு நேரம் அப்பா வரட்டும், அப்பா வரட்டும்’னு அவன் முழுச்சிக்கிட்டு இருந்தான்!”
"ஆமாம், போ! வயிறு சோத்துக்குக் கெஞ்சறப்போ நான் எங்கே குழந்தைக்கிட்டே கொஞ்சறது”
"அப்படின்னா, நீங்க இன்னும் ஒண்ணுமே சாப்பிடலையா?”
"இல்லை, ஏன் நீ ஒன்னுமே பண்ணலையா?”
"கையிலே காசில்லாம என்னத்தைப் பண்றது? பொழுது விடிஞ்சா, பொழுது போனா அந்தப் பலசரக்குக் கடைக்காரன் வந்து கழுத்தை அறுக்கிறான்....."
"சரி, அவனுக்கு என்ன தரணும்?”
"இருவது ரூவா?"
"இந்தா, இருவது ரூவா....."
"ட்டுக்காரர் வேறே வந்து....."
"அவருக்கு பத்து ரூவாதானே கொடுக்கணும்? இந்தா.....!"
"அதில்லாம அரிசிக்காரிக்கு நாலு ரூவா தரணும்; நான் வேறே இங்கேயும், அங்கேயுமா அஞ்சாறு ரூவா வரையிலே சில்லறைக் கடன் வாங்கியிருக்கேன்....."
"அப்போ சரியாப் போச்சு!-என் கையிலும் இன்னும் பத்து ரூவாதான் இருக்கிறது. இந்தா இதையும் நீயே வைச்சுக்கோ!"
"நல்ல நாளும் அதுவுமாக் குழந்தைக்கு ஒரு சட்டையாச்சும் தச்சுப் போடமாட்டீங்களா?"
"குழந்தைக்குச்சட்டை மட்டுமா? உனக்கு ஒரு புடவை, எனக்கு ஒரு வேட்டி - எல்லாம் வாங்க வேண்டியதுதான்"
"எப்போ வாங்கறது? பொங்கலுக்கு இன்னும் ரெண்டு நாள்தானே இருக்குது!"
"அதுக்குள்ளே எங்கேயாச்சும் கன்னம் வைக்கணும்...."
"எதுக்கு?"
"திருடத்தான்!" "ரொம்ப நல்லாத்தான் இருக்குது, போங்க!" என்றாள் அவள்.
"இனிமே எங்கே போறது?-பழைய பாயை விரிச்சுப் போட்டுப் படுக்க வேண்டியதுதான்!” என்று சொல்லிக் கொண்டே, அவன் மூலையில் இருந்த பாயை எடுத்து விரித்துப் படுத்தான்.
வேலை போன விஷயத்தை மட்டும் அவன் மனைவியிடம் சொல்லவில்லை. "அவளுக்கு இருக்கிற கஷ்டமே போதும்" என்று நினைத்தானோ, என்னமோ!
பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பதுபோல் அன்றிரவு கன்னையா தன்னுடைய பழங்காலத்தைப் பற்றி, யோசித்தான்.
அவனுக்கு கல்யாணமாகிப்பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். நல்ல வேளையாகப் பிறந்த குழந்தைகள் அத்தனையும் உயிருடன் இருக்கவில்லை; எல்லாம் போக ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அதற்கும் அவன் வருடத்திற்கு ஒரு முறைதான்-அதாவது பொங்கலுக்குப் பொங்கல்தான்-புதுச் சட்டை தைப்பது வழக்கம். அந்தச் சட்டைக்கும் இந்த வருடம் வழியில்லை!
இதுவரை அவன் எத்தனையோ இடங்களில் வேலை பார்த்தாகிவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒர் அக்கப்போர்-அதன் பயனாக அவனுடைய சீட்டைக் கிழித்தல்-அப்புறம் வேலை இல்லாமல் திண்டாடுதல்!
வேலை இருக்கும்போதாவது திண்டாட்டம் இல்லாமலிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இருந்தாலும் திண்டாட்டம்; இல்லாவிட்டாலும் திண்டாட்டம்.
இப்படியே அவனுடைய வாழ்க்கையில் பெரும் பகுதி கழிந்துவிட்டது. இதுவரை அமைதி என்பதையே அவன் தன் வாழ்நாட்களில் கண்டதில்லை. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு போராட்டம், போராட்டம், போராட்டம்!
இந்தப் போராட்டத்திற்குத் துணையாயிருந்ததைத் தவிர தன் மனைவி தன்னிடம் என்ன சுகத்தைக் கண்டாள்? நகை நட்டுக்கள் இல்லாவிட்டாலும், மாற்றிக் கட்ட அவளுக்கு இரண்டு புடவைகளாவது உண்டா? பொங்கலுக்குப் பொங்கல் ஒரு புதுப் புடவை எடுத்துக் கொடுக்கக்கூடத் தன்னால் முடியவில்லையே? இந்த லட்சணத்தில், தான் அவளுக்குச் சர்வ வல்லமையுள்ள புருஷன்!-சொல்லிக் கொள்ளவே வெட்கமாயில்லையா, இது?
கேவலம், ஒரு சாத்துக்குடிப் பழம் தின்ன வேண்டுமென்றால் அதற்காக அவளுக்கு ஜூரம் வரவேண்டியிருக்கிறது; வைத்தியர் சிபாரிசு செய்யவேண்டியிருக்கிறது!? மிக மிகப் பரிதாபமாக அல்லவா இருக்கிறது இது?
இன்னும் எத்தனை வருடங்கள்தான் அவள் தன்னைக் கல்லாகவும் புல்லாகவும் கருதி 'பக்தி' செலுத்துவது? என்றைக்காவது ஒரு நாள் அவள் தன்னைக் கணவன் என்ற உருவில் பார்த்துக் 'காதல்' கொள்ள வேண்டாமா? அந்தக் கணவனுக்குரிய கடமைகளைத் தான் செய்ய வேண்டாமா?
குழந்தை-அதனிடம் ஒரு தனி இன்பம் இருக்கிறது என்கிறார்கள். எங்கே அந்தப் பாழும் இன்பத்தைத் தன் வீட்டில் காணோமே!- பிறந்தாலும் கஷ்டமாக யிருக்கிறது; இறந்தாலும் கஷ்டமாயிருக்கிறதே!
இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?-உண்டு; நிச்சயம் உண்டு.
எப்பொழுது? மரணத்திலா?
சீசீ, அதுவரை இனி பொறுத்திருக்கக்கூடாது.அதற்கு முன்னால் ஒருநாள்-ஆம், ஒரே ஒரு நாளாவது மனைவி மக்களுடன் சுகமாயிருக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்தே யாகவேண்டும்-அதற்குள்ள ஒரே வழி திருடுவதுதான்!
அதையும் இப்போதே, இன்றே செய்துவிட வேண்டும். அப்போதுதான் வரப்போகும் பொங்கலைக் குதுகலமாகக் கொண்டாட முடியும்...!
எங்கே, யாருடைய வீட்டில் திருடுவது?
மிஸ்டர் ஹரன்.....மிஸ்டர் ஹரன்.....
ஆம், அவருடைய வீட்டில்தான் திருட வேண்டும். தலை முறை தலைமுறையாக வல்லவா அவர்கள் நகத்தில் மண்படாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
அவர்கள் வேலைக்குப் போவதும் கிடையாது; அவர்களை யாரும் வீட்டுக்கு அனுப்புவதும் கிடையாது- அதிசயமாயில்லையா, இது? நாமும் பொங்கலுக்குத் தானே செலவழிக்கப் போகிறோம்?
அப்புறம் கேட்கவேண்டுமா?-அந்த வருடம் கன்னையாவின் வீட்டில் பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தான் நினைத்தபடி, தன் வாழ்நாட்களிலேயே ஒரு நாள்-ஒரே ஒரு நாள்-அவன் சந்தோஷமாக இருந்து விட்டான்.
ஆனால் அந்த சந்தோஷத்தைப் பரிபூரணமாக அனுபவிக்க அவனை விடவில்லை அவன் மனைவி. இடையிடையே "இவ்வளவு பணம் உங்களுக்கு ஏது?" என்று அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள். "எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்!" "எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்!" என்று அவன் அதையும் சந்தோஷமாகவே சொல்லிக் கொண்டிருந்தான்.
அதற்குள் போலீஸார் வந்து அவனைக் கைது செய்தார்கள்; முகமலர்ச்சியுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
கோர்ட்டில் வழக்கு நடந்தது; ஆனால் தீர்ப்பு-அது தான் கன்னையாவுக்கு அதிசயமாயிருந்தது!
நீதிபதி சொன்னார்:
"கன்னையா திருடியது உண்மைதான். ஆனால் அவன் குற்றவாளி அல்ல!”
சர்க்கார் வக்கீல் கேட்டார்:
"உங்கள் தீர்ப்பு எனக்குப் புரியவில்லை; நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மிஸ்டர் ஹரன் குற்றவாளியா?"
"இல்லை......"
"பின் யார் குற்றவாளி?”
"மிஸ்டர் ஹரன் போன்றவர்களை இஷ்டம்போல் பணம் சேர்த்துக்கொள்ள அனுமதித்து, கன்னையாவைப் போன்றவர்களை என்றும் கஷ்டத்தில் ஆழ்த்துகிறதே சர்க்கார், அந்தச் சர்க்கார்தான் குற்றவாளி!"
நீதிபதி இவ்வாறு சொல்லக் கேட்டதும், "எஜமான். நான் இந்த உலகத்திலேயே இல்லைங்களா?' என்று கேட்டான் கன்னையா.
நீதிபதி சிரித்தார்.
கன்னையா அவருடைய கால்கள் பூமியில் பதிந்திருக்கின்றனவா என்று பார்த்தான்.
பிறகு தன்னையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் ஒருமுறை கண்ணை கசக்கி விட்டுக்கொண்டு கவனித்தான். சந்தேகம் தீரவில்லை அவனுக்கு!
வி.க. -25
"தம்பி நீ நிரபராதி; உனக்கு விடுதலை!" என்றார் நீதிபதி.
"விடுதலை; திருடனுக்கு விடுதலை!" என்று வியப்பின் மிகுதியால் கன்னையா கத்தினான்.
அவன் மனைவி அவனைத் தட்டி எழுப்பி "என்ன விஷயம்?" என்று விசாரித்தாள்.
கன்னையா திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். கரிய உருவம் ஒன்று சுவர் ஏறிக் குதித்து வெளியே செல்வதுபோல் இருந்தது.
"யார் அது?" என்று அதட்டினான் அவன்.
பதில் இல்லை. அதற்குள் அந்த உருவம் அவன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது!
"எல்லாம் வெறும் பிரமை!" என்று சொல்லிக் கொண்டே அவன் படுத்தான்; அவன் மனைவியும் அந்த நேரத்தில் அவனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாமல் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் போலீஸார் வந்து அவன் வீட்டுத் கதவை தட்டினார்கள்!
கன்னையா அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்: போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
வீடு சோதனை யிடப்பட்டது. அன்றைக்கு முதல் நாள் இரவு அவன் கொடிமேல் அலுப்புடன் சுழற்றி எறிந்த சட்டைப்பை யிலிருந்து எஜமான் வீட்டில் காணாமற் போன வைரம் கண்டெடுக்கப் பட்டது.
அப்புறம் கேட்க வேண்டுமா? கட்டிய மனைவியும், பெற்று வளர்த்த பிள்ளையும் கதறக் கதறக் கன்னையா கைது செய்யப்பட்டான்.
பாவம் தங்கள் கெளரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகச் சுஜாதாவின் யோசனையின் பேரில் அவளுடைய 'ப்ரெண்ட்' செய்த வேலை இதெல்லாம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்?போலீஸாருக்கே தெரியாதே!
மறுமணம்
அவள் போய் விட்டாள்-எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்து மித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க்கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட் கொண்டாளோ, அவள்; எனக்கு நோய் நொடி வந்த போதெல்லாம் தனக்கே வந்து விட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்குச் சேவைசெய்து வந்தாளோ, அவள்; 'அன்பு காட்டுவதில் தாயும், தாரமும் ஒன்றுதான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ, அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுகதுக்கம் இரண்டிலும், இத்தனைநாளும் எவள் பங்கெடுத்துக் கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திரஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாமோ திட்டம் போட்டுக் கொண்டிருந்தாளோ, அவள்!
அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.
நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்-அவள்?-போயே போய்விட்டாள்!
அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன. நான் ஏன் இருக்கிறேன்?-அவள் போனால் போகிறாள்! என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்?-என்தலையில் இன்னொருத்தியைக் கட்டிவைக்கவா? ரகுவும், ராதையும் ஏன் இருக்கிறார்கள்? - 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா?-எப்படி முடியும்?
தாம்பத்திய வாழ்க்கையில் மனிதவர்க்கத்தைவிட மணிப் புறாக்கள் எவ்வளவோ மேலானவையாகத் தோன்றுகின்றன. அவை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கை விடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரைவிட்டுவிடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர்போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் - நாமும் அவற்றைப் பின் பற்றுவது சாத்தியமா?-அது எப்படிச் சாத்தியமாகும்! ரகுவையும் ராதையையும் விட்டு விட்டு நாம் எப்படி ஊணுறக்க மின்றி உயிரை விடமுடியும்?
அப்புறம் அம்மா? நமக்குப்பின் அவள் கதி? அந்தப் புறாக்களுக்குத்தான் பாசமென்றும் பந்தமென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பறக்கும் சக்தி வந்ததும் அவை தங்கள் குஞ்சுகளை விரட்டி விடுகின்றன. நம்முடைய குழந்தைகளை நாம் அப்படி விரட்டிவிட முடியுமா?-ஐயோ, எப்படி முடியும்?
முடியா விட்டால் என்ன? இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொள்ளமலே நாம் வாழ முடியாதா?
ஏன் முடியாது?
அம்மாவுக்கோ வயதாகிவிட்டது; அவளால் எந்த காரியத்தையும் இனி கவனிக்க முடியாதுதான்-அதனால் என்ன, சமையலுக்குத்தான் சங்கரனை வைத்தாகி விட்டதே! பார்ப்போம்:
நாளடைவில் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு ஏக்கம்: ஏன் இப்படி?
இத்தனை நாளும் பார்ப்பதற்கு லட்சணமாயிருந்த சங்கரனை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் சமையலையும் சாதம் பரிமாறுவதையும் சகிக்கவே முடிவதில்லை.
"காப்பி கொண்டு வரட்டுமா?" "சாதம் போடட்டுமா?" என்று அவன் கேட்கும் போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. வியர்க்க விறு விறுக்க அவன் எதிரில்வந்து நின்றால் என் உடம்பே பற்றி எரிவது போல் இருக்கிறது.
சாட்டை போல் தலைமயிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, தலை நிறையப் பூவை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வளைகள் கலகலவென்று சப்திக்க, அப்படியும் இப்படியுமாக அன்னநடை போட்டுக் கொண்டிருந்த அந்த அழகு தெய்வம் எங்கே, இந்த அவலட்சணம் எங்கே?
"காப்பியா? இதோ, கொண்டுவந்து விட்டேன்"
"சாதமா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவள் குயிலைப்போலக் கொஞ்சுவது எங்கே? இவன் கழுதை போலக் கத்துவது எங்கே?
அவன் செய்யவேண்டியது வேலை; வாங்கவேண்டியது கூலி-இவற்றைத் தவிர அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இப்படிப் பட்ட வாழ்க்கையில் அன்புக்கு இடமுண்டா? அன்புக்கு இடமில்லை என்றால் இந்த வாழ்க்கை என்னத்திற்கு? இந்த உலகம்தான் என்னத்திற்கு?
இப்படியெல்லாம் என்மனம் இப்பொழுது எண்ணமிடுகிறது; எண்ணமிட்டு ஏங்குகிறது.
வீட்டில் உள்ளவையெல்லாம் போட்டது போட்ட இடத்தில் கிடக்கின்றன; ஏற்ற இடத்தில் அவை எடுத்து வைக்கப் படவில்லை; வீடே வெறிச் சென்று கிடக்கிறது. இத்தனைக்கும் அவளைத் தவிர வீட்டில் எல்லாம் இருக்கின்றன; இருந்தும் என்ன? ஒன்றுமே இல்லாதது போலல்லவா இருக்கிறது!
நல்ல வேளையாக குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மட்டும் தன் சிநேகிதி சீதாவை அவள் வைத்து விட்டுப் போயிருந்தாள்.
எதிர் வீட்டில் குடியிருப்பவள் அவள்; வாழ்க்கை இன்னதென்று தெரியுமுன்பே விதவையாகி விட்டாள். அவளுக்குத் தகப்பனார் இல்லை. தாயார் இருந்தாள். இவர்கள் இருவருக்கும் ஜீவனோபாயம் அளித்துவந்தது ஒரே ஒரு இயந்திரம் - தையல் மெஷின்-உணர்ச்சியற்றது!-ஆம், உணர்ச்சியுள்ள உறவினர்கள் பலர் அவர்களுடைய திக்கற்ற நிலையைப் பார்த்ததும் பார்க்காதது போல் இருந்து விட்டார்கள்! அந்தச் சீதாதான் இப்போது ரகுவுக்கும் ராதைக்கும் தாயார்!
குழந்தைகள் இருவரும் தலைவாரிக் கொள்ளவேண்டுமா அவளிடந்தான் செல்வார்கள். பொட்டிட்டுக் கொள்ள வேண்டுமா?-அவளிடந்தான் செல்வார்கள். சட்டை போட்டுக் கொள்ள வேண்டுமா?-அவளிடந்தான் செல்வார்கள்.
எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் அவள் இத்தனை காரியங்களையும் செய்து வந்தாள்.
ஒருநாள்மாலை வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக் குரல் கேட்டது. செவிமடுத்தேன்.
"நிமோனியாவாம்; 'மிக்சர்' கொடுத்தார்!" என்றாள் அவள்.
அவ்வளவுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உடனே கேட்டுவிட என்மனம் துடித்தது.
அதற்குள் "காலையில் பள்ளிக் கூடத்திற்கு போகும் போது நன்றாகத்தானே போனான்? அதற்குள் இப்படி வந்து விட்டதே?" என்று அங்கலாய்த்தாள் என் தாயார், "எல்லாம் சரியாய்ப் போய்விடும், மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.
நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.
"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம்." என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.
"பகல் பன்னிரண்டு மணிக்குப் பள்ளிக் கூடத்திலிருந்து வரும் போதே குழந்தைக்கு நல்ல ஜூரம். சீதா தான் டாக்டர் வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா, தெரிகிறது!" என்றாள் தாயார்.
அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆறவைத்துக் குழந்தைக்குக் குளிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.
"உனக்கு அம்மா இல்லேடி, கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணிரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் தாயார்.
"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனாளே, அம்மா!" என்றாள் குழந்தை.
"அந்த 'அம்மா' வாடி? இதோ அழைச்சிகிட்டு வறேன்!” என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டுச் சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.
அவள் வந்து குளிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!
சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.
அடுத்தபடி மருந்து கொடுக்கும் வேளை வந்தது. நான் கொடுக்க முயன்றேன். குழந்தை குடிக்கவில்லை. அதற்கும் சீதாதான் வரவேண்டியிருந்தது.
"ஐயோ, அவளுக்கு வேலை தலைக்கு மேலிருக்குமே” என்று அம்மா வருந்தினாள்.
"அதற்கென்ன மாமி, பரவாயில்லை" என்றாள் அவள். ராதையின் ஜூரம் நீங்குவதற்கு மூன்று வாரங்களாயின. அந்த மூன்று வாரங்களும் சீதா, ராதையுடனேயே இருந்தாள்.
"இந்தச் சமயத்தில்தான் என் மனத்தில் ஒரு சபலம் தட்டிற்று. ஏற்கெனவே சமூகச் சீர்திருத்தத்தில் பற்றுக் கொண்டிருந்த என் மனம் சீதாவை நாடியது-அவள் சம்மதிப்பாளா. அவள் சம்மதித்தாலும் அவளுடைய தாயார் சம்மதிப்பாளா?
யார் சம்மதிக்காவிட்டால் என்ன? என்னைப் பார்த்து அவளும், அவளைப் பார்த்து நானும் சம்மதித்தால் போதாதா?-இந்த அநித்தியமான உலகத்தில் பிறருடைய விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது?
ஒரு நாள் துணிந்து இந்த விஷயத்தை என் தாயாரிடம் வெளியிட்டேன்.
அவள் "சிவ சிவா!" என்று காதைப் பொத்திக் கொண்டு, 'ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது; இந்த மாதிரி இன்னொரு தரம் சொல்லாதே!' என்று சொல்லி விட்டாள்.
அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும், தாயாருக்குமிடையே பின்வரும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.
‘என்ன இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாதவீடு ஒரு வீடு ஆகுமா?"-இது என் அம்மா.
"ஏனாம்? இவரைவிட வயதானவர்கள், ஏழெட்டுப் பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?”
"இவன் என்னமோ சமூகத்தை சீர்திருத்திவிடப் போகிறானாம்; விதவைகளின் துயரத்தை தீர்த்துவிடப் போகிறானாம். அதற்காக இரண்டாந்தாரமாக கல்யாணம் செய்து கொள்வதென்றால் இவன் எவளாவது ஒரு விதவையைத்தான் கல்யாணம் செய்து கொள்வானாம். இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே எனக்கு வெட்கமாக யிருக்கிறது!"
"எந்த விதவை இவரைக் கல்யாணம் செய்து கொள்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்தப் புருஷர்கள்தான் 'விதவா விவாகம், விதவா விவாகம்’ என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்கள். எந்தப் பெண்ணாவது அப்படிச் சொல்கிறாளா?-பைத்தியந்தான்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் என் மனக்கோட்டை இடிந்து விழுந்தது. எண்ணங்கள் மூலைக்கு ஒன்றாகச் சிதறின.
ஆனாலும் ஆசை அத்துடன் என்னை விட்டுவிடவில்லை. எதற்கும் ஒரு கடிதம் எழுதிக் கேட்டு விடுவதென்று தீர்மானித்தேன். அந்தக் கடிதத்தின் முதலில் விதவா விவாகத்தின் அவசியத்தை வற்புறுத்தி, நடுவே என் ஆவலை, வெளியிட்டு கடைசியில் கடிதம் பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் தயவு செய்து பரம ரகசியமாகப் பதில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்படி கடிதத்திற்கு வந்த பதில் இதுதான்:
வணக்கம்.
மறுமணம் செய்து கொண்டால் விதவையின் துயரம் தீர்ந்துவிடும் என்று சிலர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? - என்னால் அதை நம்ப முடியவில்லை. அதற்காக வழிவழியாக வாழ்ந்து வரும் காதலைக் கொன்றுவிடவும் நான் விரும்பவில்லை.
எனவே என்னைப் பொறுத்தவரை, நான் பூசிக் கொண்ட மஞ்சளும், வைத்துக்கொண்ட குங்குமத்திலகமும், சூடிய மலரும், அணிந்த வளையலும் 'அவ'ருக்காகத்தான்.
வேறொருவருக்காக அவற்றை மீண்டும் அணிந்து கொள்வ தென்பது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்.
மன்னிக்கவும்,
-சீதா
மேற்படி கடிதத்தை படித்து முடித்ததும் "பெண்கள் சபலச் சித்தம் உள்ளவர்கள்" என்று சொன்ன மேதா'விகளின் 'மேதை'யை எண்ணி நான் சிரித்தேன். வைர நெஞ்சுடன் அவள் வாழும் முறைமையைப் பற்றி எண்ணியெண்ணி வியந்தேன். அப்போது காற்றிலே மிதந்து வந்த கீதமொன்று,
'கற்பு நிலையென்று சொல்ல வந்தார்-இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்!'
என்று இசைத்து, மறுமணம் அல்ல திருமணம், ஒரு மனமே திருமணம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்றது.
நேற்று வந்தவள்
அன்று என் சகோதரி லலிதாவிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் எங்களுடைய தாம்பத்ய வாழ்க்கையில் அத்தகைய புயலைக் கிளப்பிவிடும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. லலிதாவும் அந்தக் கடிதத்தில் அப்படி யொன்றும் எழுதியிருக்கவில்லை. என்னையும், மன்னியையும் பார்க்க அவளுக்கு ஒரே ஆவலாயிருப்பதாயும் அதனால் என் வீட்டுக்கு வந்து பத்துநாட்கள் தங்கியிருக்கப் போவதாகவுந்தான் எழுதியிருந்தாள்-அடேயப்பா எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளுக்கு இந்த ஆவல் தோன்றியிருக்கிறது!
வரவே வருகிறாள்-இன்றோ அல்லது நேற்றோ வந்திருக்கக் கூடாதா? நாளைக்கு வருகிறாளாம். நான்தான் இன்றே ஒரு கேஸ் விஷயமாக வெளியூருக்குப் போக வேண்டியிருக்கிறதே?-திரும்பி வந்துதான் அவளைப் பார்க்கவேண்டும்-சரி, சரசுவிடம் சொல்லி விட்டாவது போவோமா?
"யார் அங்கே?"
"கொஞ்சம் இருங்கள்; பார்த்துச் சொல்கிறேன்?
நீ ஒன்றும் பார்த்துச் சொல்ல வேண்டாம்; கூப்பிடுவது உன்னைத்தான்!”
“என்ன வந்துவிட்டது, எனக்கு?"
"ஏன், ஒன்றுமில்லாததற்கெல்லாம் இப்படி அலுத்துக் கொள்கிறாய்?"
"இல்லையென்றால் இங்கே ஆனந்தம் பொங்கி வழிகிற தாக்கும்!"
"சரி, சரி எனக்கு முன்னாலேயே நீ இந்தக் கடிதத்தை படித்து விட்டாயாக்கும்?"
"இந்த வீட்டில் எனக்கு வேறு வேலை ஏதாவது உண்டா, என்ன?-உங்களுக்கு வரும் கடிதங்களையெல்லாம் படித்துக் கொண்டிருப்பதுதான் வேலை!"
"வீணாகப் பேச்சை வளர்த்து என் வெறுப்புக்கு ஏன் மேலும் மேலும் ஆளாகிறாய்? இதனால் நீயும் வாழ்க்கையில் சுகத்தைக் காணப் போவதில்லை. நானும் காணப் போவதில்லை. பேசாமல் சொல்வதைக் கேள்-நாளைகாலை வண்டியில் லலிதாவருகிறாளாம்; அதிலும் தன்னந்தனியாக வருகிறாளாம்-என்ன மனக் கஷ்டத்துடன் வருகிறாளோ, என்னமோ!-இப்போது நாம்தான் அவளுக்குத் தாயும் தந்தையும் போல. நீ நினைப்பது போல் அவள் இங்கே எஜமானியாக வரவில்லை. விருந்தாளியாகத்தான் வருகிறாள். அவள் வந்து இங்கே ஒரு பத்து நாட்கள் இருந்து விட்டுப் போவதால் உனக்கோ, எனக்கோ, பிரமாதமான நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் அதற்காக மனிதத்தன்மையை நாம் இழந்து விடுவதா, என்ன? பணம் இன்று வரும், நாளைபோகும். பெற்று எடுத்த பாசமும் உடன் பிறந்து வளர்ந்த பாசமும் போனால் வராது. அவளுடைய துரதிருஷ்டமோ-இன்று இரவே நான் அவசியம் வெளியூருக்குப் போகவேண்டியிருக்கிறது. நாளைக் காலையில் நீயே மணியுடன் ஸ்டேஷனுக்குப் போய், அவளை முகம் கோணாமல் அழைத்து வா; வஞ்சனை இல்லாமல் அவளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்!”
"செய்வதை நீங்களே செய்து கொள்ளுங்கள்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை!"
"இதோ பார், சரசு! நீ இப்படிக் கரிக்கும்படியாக அவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள், என்னுடன் பிறந்ததைத் தவிர!-உன்னைப் பற்றி அவள் இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தாயா? - கல்யாணத்திற்குப் பிறகு மன்னியை ஒரே முறைதான் பார்த்தேன். இன்னொரு முறை பார்க்கவேண்டுமென்று உன் உள்ளம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது. மணியைப் பெற்றெடுத்த பிறகு அவளது உடல் நிலை எப்படியிருக்கிறது, அண்ணா.....?”
"இவ்வளவுதானே?-இன்னும் கொஞ்சம் நாட்களுக்கெல்லாம் போயே விடுவாள்; நீ வந்து இங்கயே, ‘ஹாய்'யாக இருக்கலாம் என்று எழுதுங்கள்!"
"சீசீ ஒரேயடியாய் நீ இப்படிக் கெட்டுவிட்டாயே?
"நான் ஒன்றும் கெட்டுப் போகவில்லை!"
"உன்னிடம் மட்டும் அல்ல; உன்னைப்போன்ற பெண்களிடமே என்னைப் போன்றவர்கள் நியாயத்தை எதிர் பார்ப்பது மடமைதான்.....!"
"அப்படிச் சொல்லுங்கள்: அதில் உங்கள் தங்கையும் சேர்ந்தவள்தானே?"
“இப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து கொண்டிருந்தால் அதற்கு முடிவே இராது"
"அதைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்! நாளைக்கே நான் பிறந்தகம் போய் விடுகிறேன்!"
"நீ சொல்வது கொஞ்சம் கூட நன்றாகயில்லை சரசு! அவள் வரும்போது நானும் ஊருக்குப் போவது, நீயும் ஊருக்குப் போவதென்றால் அதைத் தெய்வம் கூட மன்னிக்காது!-எதற்கும் ஓர் எல்லை உண்டு; என் பொறுமையை அளவுக்கு மீறிச் சோதிக்காதே!"
"என் பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு; என்னையும் நீங்கள் அளவுக்கு மீறிச் சோதிக்கவேண்டாம்" என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு அவள் அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க நடந்தாள்.
அதற்குமேல் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. 'இடையில் ஒரு நாள் தானே, நடப்பது நடக்கட்டும்!’ என்று துணிந்து, நான் பிரயாணத்தை மேற்கொண்டேன்.
மறுநாள் திரும்பி வந்த போது, நல்ல வேளையாக என் மனைவி பிறந்தகத்துக்குப் போய் விடவில்லை. எதையோ பறிகொடுத்தவள் போல் முகத்தை தொங்க விட்டுக் கொண்டு அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தாள். லலிதா கூடத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன, லலிதா! பிரயாணமெல்லாம் செளகரியமாயிருந்ததா?” என்று அவளை நான் விசாரித்தேன்.
"இருந்தது, அண்ணா!" என்றாள் அவள்.
"ஸ்டேஷனுக்கு மன்னியும், மணியும் வந்திருந்தார்களோ, இல்லையோ?”
"இல்லை; நானே 'டாக்ஸி' வைத்துக் கொண்டு வந்து விட்டேன்!”
அவ்வளவுதான்; எங்கிருந்தோ இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சரசு ஒடோடியும் வந்து, "வந்ததும் வராததுமாக இருக்கும் போதே கலகத்துக்கு வழி வைத்து விட்டாயோ? இல்லையோ?-போ: இதற்குத்தான் அத்தனைதுரத்திலிருந்து இங்கே அவ்வளவு அவசரமாக வந்தாயாக்கும்?" என்றாள்.
யாரை, யார் என்ன சொன்னார்கள்? எனக்கு ஒன்றும் புரிய வில்லை. ஆனால் சரசுவுக்கு மட்டும் ஏதோ புரிந்திருக்கிறதே?-ஆச்சரியந்தான்! இப்படி எத்தனை எத்தனை ஆச்சரியமான நிகழ்ச்சிகள், அக்கிரமமான வம்புகள் நமது தாம்பத்திய வாழ்க்கையில்?
லலிதாவின் கண்கள் கலங்கின; என் மனம் தாங்கவில்லை. மாடிக்கு அழைத்துக்கொண்டு போய், “என்ன செய்யலாம், அம்மா? எல்லாம் கல்யாணம் செய்து கொண்டபலன்!" என்றேன்.
"அதனாலென்ன? மன்னிக்கு என்னைப் பிடிக்காத போது நான் ஏன் இங்கே இருக்கவேண்டும்? எதற்காக உங்கள் அமைதியைக் குலைக்கவேண்டும் ?- நாளைக்கே ஊருக்குத் திரும்பிப் போய் விடுகிறேன், அண்ணா!"
"ம், உன்னை, 'இரு' என்று சொல்லவும் எனக்குத் தைரியமில்லை; 'போ' என்று சொல்லவும் எனக்குத் தைரியமில்லை-என்ன செய்வேன்? உன் விருப்பம் அப்படியானால் இன்றைக்கே நான் உனக்கென்று ஒரு புடவையாவது வாங்கி வந்து வைத்து விடுகிறேன். அதைப் பெற்றுக் கொண்டு நீ சந்தோஷமாகப் போய்வா, சமயம் வாய்க்கும் போது நானே அங்கு வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்-எல்லாம் தெரிந்தவள் நீ; என்னுடைய நிலைமையைக் கண்டு கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக இரக்கமே கொள்வாயென்று நம்புகிறேன்."
"உங்கள் மேல் எனக்கு கோபம் ஒன்றுமில்லை, அண்ணா" என்று மேலே ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் அவள்.
அதற்குள் அங்கு வந்த சரசு, "என் மேல் மட்டும் வேண்டிய கோபம் இருக்கிறதோ, இல்லையோ?” என்றாள் ஆவேசத்துடன்.
"உங்கள் மேல் எனக்குக் கோபம் ஒன்றுமில்லை மன்னி!" என்றாள் லலிதா.
என்னால் தாங்க முடியவில்லை. சரசுவின் கையை பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு போய் கீழே விட்டேன். அதற்கு மேல் ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்காமல் உடனே சென்று லலிதாவுக்கென்று ஒரு புடவை வாங்கிக் கொண்டு வந்தேன். அதைக் கண்டதும் எரிகிற தீயில் எண்ணெயை விட்டது போலிருந்தது, சரசுவுக்கு!- ஆனால் அந்தக் கோபத்தை நல்ல வேளையாக என் மீதோ, லலிதாவின் மீதோகாட்டவில்லை; தட்டுமுட்டு சாமான்கள் மேஜை, நாற்காலிகள், துணிமணிகள் ஆகியவற்றின்மீது காட்டிக் கொண்டிருந்தாள்!
எப்படியோ இராப்பொழுது பிழைத்துக்கிடந்தால் போதும் என்றுதான் தவித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பொழுது விடிந்ததும் லலிதாவை ஊருக்கு அனுப்பி வைக்கும் காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டேன். எல்லா ஏற்பாடுகளும் ஒருவாறு முடிந்தன. 'டாக்ஸி' வர வேண்டியதுதான் பாக்கி; அடுத்த நிமிஷம் அதுவும் வந்து சேர்ந்தது.
"லலிதா, லலிதா!"
"ஏன், அண்ணா?"
"வண்டி வந்துவிட்டது. வந்து ஏறிக்கொள்!" என்று சொல்லிவிட்டு உள்ளே போனேன். பீரோவைத் திறந்து, லலிதாவுக்கென்று வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்தேன். சரசு ஒடோடியும் வந்து, அதை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, "அவளுக்கென்று ஒருவன் வந்த பிறகுகூட நீங்கள் ஏன் புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம்?" என்றாள் ஆத்திரத்துடன்.
அவ்வளவுதான், "நேற்று வந்தவள் நீ; என்னுடன் பிறந்து வளர்ந்தவள் அவள். உனக்கிருக்கும் உரிமை அவளுக்கு இல்லையா?” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டேன் நான்.
அதே சமயத்தில், “வரவில்லையா, அண்ணா?" என்று கேட்டுக் கொண்டே லலிதா அங்கே வந்துவிட்டாள்.
என்னுடைய நிலைமை தர்ம சங்கடமாகப் போய் விட்டது. "இதோ வந்து விட்டேன்!” என்று கூறிக் கொண்டே அவசர அவசரமாக அவள் கையிலிருந்த புடவையைப் பிடுங்கிக் கொண்டு வந்து டாக்ஸியில் ஏறிக் கொண்டேன்.
என் மனம் இன்னதென்று விவரிக்க முடியாத வேதனையில் சூழ்ந்தது; லலிதாவும் அதே நிலையில்தான் இருந்தாள் என்பது அவளுடைய முகபாவத்திலிருந்தே எனக்குத் தெரிந்தது.
"கூகுக்" என்று ரயில் கூவியதும், "போய் வருகிறாயாலலிதா?” என்று நான் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பினேன்.
"இந்தப் புடவையையும் எடுத்துக்கொண்டுபோங்கள்!" என்றாள் அவள்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "ஏன் அம்மா, ஏன்?" என்று பதட்டத்துடன் கேட்டேன்.
"மன்னியை 'நேற்று வந்தவள்’ என்று நீங்கள் சொன்னால், என்னையும் 'நேற்று வந்தவள்’ என்று அவர் சொல்லமாட்டாரா, அண்ணா?" என்றாள் அவள்.
"நானாகவா சொன்னேன்? அவள் சொல்ல வைத்து விட்டாள்! அதனாலென்ன, இதை நீ எடுத்துக் கொண்டு போ!" என்றேன் நான்.
"வேண்டாம் அண்ணா! மன்னி சொல்வது போல் எனக்கென்று ஒருவர் வந்த பிறகுகூட நான் ஏன் உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் எடுத்துக் கொண்டு போங்கள்!" என்று அவள் புடவையை எடுத்து என் கையில் திணித்து விட்டாள்.
"லலிதா, லலிதா" என்றேன் நான்; வண்டி போயே போய் விட்டது.
வீட்டுக்கு வந்ததும் வராததுமாகச் சரசுவைக் கூப்பிட்டு, "இந்தா, இந்தப் புடவையை நீயே வைத்துக்கொள். உன்னுடைய லட்சணத்துக்கு உன்னை நான் 'நேற்று வந்தவள்’ என்று சொன்னால், அவளையும் 'நேற்று வந்தவள்’ என்று அவள் அகத்துக்காரர் சொல்வாராம்!” என்று சொல்லிக் கொண்டே, புடவையை வீசி எறிந்துவிட்டு, மாடிக்குச் சென்றேன். மத்தியானம் மணி வந்து சாப்பிடக் கூப்பிட்டான். "வேண்டாம்; எனக்கு என்னவோபோல் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் குப்புறப் படுத்துக் கொண்டேன்.
அடுத்தாற்போல் சரசு வந்து, "எனக்கும் என்னவோ போலிருக்கிறது; மணியை அழைத்துக் கொண்டு நான் ஊருக்குப் போய் நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன்!” என்றாள்.
"எங்கேயாவ்து போ, எப்படியாவது போ!" என்றேன் நான்.
அவள் போய்விட்டாள். "உனக்கு மனம் என்றுகூட ஒன்று இருக்கிறதா?” என்று எண்ணியது என் மனம். ஆனால் "எனக்கும் மனம் என்று ஒன்று இருக்கத்தான் இருக்கிறது!" என்பதை நாலைந்து நாட்களுக்குப் பிறகு அவள் நிரூபித்து விட்டாள்!
ஆம், ஊரிலிருந்து திரும்பி வரும்போது, அவனும் மணியும் மட்டும் வரவில்லை; அவர்களுடன் லலிதாவும் தன் கணவனுடன் சேர்ந்து வந்தாள். வந்த லலிதா சும்மா வரவில்லை; முன்னால் நிராகரித்துவிட்டு சென்ற புதுப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்தாள்.
எனக்கு அப்போதுதான் தெரிந்தது-சரசு தன் பிறந்த வீட்டுக்குப் போகவில்லை. லலிதாவின் வீட்டுக்குத்தான் போயிருந்தாள் என்று.
"வாருங்கள்; உட்காருங்கள்!"என்று நான் மைத்துனரை வரவேற்றேன். எங்கள் இருவரையும் நோக்கி, "உங்களுக்கு நாங்கள் 'நேற்று வந்தவர்களானால் எங்களுக்கு நீங்கள்'நேற்றுவந்தவர்கள்'தானே?"என்றாள், சரசு சிரித்துக்கொண்டே.
"ம், சொல்லுங்கள்!" என்றாள் லலிதாவும், அவளுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே. -
எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போனோம்.
அன்பும் அருளும்
எங்கள் கடைவாயிலில் தினசரி 'மல்லு'க்காக வந்து மல்லுக்கு நிற்பவர்களில் அந்த ஏழை சிறுமியும் ஒருத்தி, வயது ஏழெட்டுத்தான் இருக்கும். பெயர் என்னவோ, தெரியவில்லை.
நானும் அவளை நாலைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன்; ஒரு நாளாவது அவளால் எங்கள் கடையிலிருந்து மல் வாங்கமுடிவதில்லை.காரணம்'க்யூ' வரிசையில் அவள் கடைசியில் நிற்க நேர்ந்து விடுவதுதான்!
அவள் என்னமோ ஒவ்வொரு நாளும் முன்னால் நிற்கப் பிரயத்தனம் செய்துதான் வந்தாள்; முடிந்தால்தானே? - ஆடை அலங்காரங்களில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாயிருக்கும் அச்சிறுமியை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளி விடுவது வழக்கம். அவளும் அவர்களுடைய ஏச்சுப் பேச்சுக்களுக்குப் பயந்து ஒதுங்கிவிடுவது வழக்கம்.
ஒரு கஜம் மல்லின் விலை ஒன்பதணா நாலுபை. தினசரி இத்தனை பீஸ்'கள்தான் விற்கலாம். ஆள் ஒன்றுக்கு இத்தனை கெஜந்தான் கொடுக்கலாம் என்று சர்க்கார் திட்டம் செய்திருந்தார்கள். அவர்களுடைய திட்டப்படி எங்கள் கடைக்கு வந்து தினசரி மல் வாங்கும் ஒவ்வொரு வரின் விலாசத்தையும் நாங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பரிசோதனை அதிகாரிகள் வந்து பார்வையிடும் போது அவர்களுக்குக் காட்ட வேண்டும். இதனால் என் அப்பாவின் உத்தரவுப்படி எத்தனையோ பொய் விலாசங்களை நான் எழுத வேண்டியிருந்தது. ஏன் தெரியுமா? அவ்வாறு எழுதும் விலாசதாரர்களுக்கெல்லாம் மல்விற்றது போல் நாங்கள் அதிகாரிகளிடம் காட்டிக் கொள்வோம். அவர்களுக்கு விற்காத மல்லை அமித லாபத்துக்கு விற்போம் - எப்படியாவது மல் கிடைத்தால் சரி என்று நினைக்கும் வசதியுள்ள சிலர், கெஜம் ரூபாய் ஒன்று, ஒன்றரை என்றாலும் வாங்கிக் கொள்வார்கள்.
எனினும் எல்லாவற்றையுமே கறுப்பு மார்க்கெட்டில் விற்று, சர்க்கார் அதிகாரிகளின் கண்ணில் ஒரேடியாக மண்ணைவாரிப் போட எங்களுக்குக் கொஞ்சம் பயம். அதனால் தினசரி கட்டுப்பாட்டின் விலைப்படி ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லி விடுவோம். அந்த 'இல்லை'என்ற பதிலைக் கேட்டுத் தினசரி ஏமாந்து சென்றவர்களில் மேற்படி ஏழைச் சிறுமியும் ஒருத்தி.
ஒரு நாள் என்னையுமறியாமல் அந்தச் சிறுமியிடம் எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. வழக்கம்போல் அன்றும் 'இல்லை' என்று சொல்லும் கட்டம் வந்தபோது, அவளை மட்டும் நான் இருக்கும்படி சமிக்ஞை செய்தேன். குறிப்பறிந்து அவளும் என்னுடைய அழைப்பை எதிர்பார்த்து நின்றாள்.
மல் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் எல்லாரும் கடையை விட்டுச் சென்ற பிறகு அந்தச் சிறுமியை அழைத்து, "உன் பெயர் என்ன, அம்மா?"என்று விசாரித்தேன்.
"நீலி!” என்றாள் அவள்.
"எடுத்ததற்கெல்லாம் அழுவாயோ?”
"இல்லை; என் பெயர் நீலா. அம்மா 'நீலி, நீலி'என்று தான் என்னைக் கூப்பிடுவாள்!"
"எங்கே இருக்கிறாய்?"
"ஓடைத் தெரு, ஒன்பதாம் நெம்பர் வீட்டில்!”
"உனக்கு எத்தனை கெஜம் மல் வேண்டும்?"
"ஆறு கெஜம்."
"ஐயோ, அத்தனை கெஜமா!"
"ஆமாம்; அக்காவுக்குப் புடவைக்காக!"
"ஏன், வேறு ஏதாவது புடவையாகவே வாங்கிக் கொள்ளக் கூடாதா?"
எப்படி வாங்க முடியும்? ஆறு கெஜம் மல்லுக்காக அக்கா மூன்றரை ரூபாய்தான் கொடுத்தனுப்பியிருக்கா. அவள் அப்பம் பண்ணிவிற்றுச் சொந்தமாகச் சேர்த்த ரூபாய்; இனி அதற்கு 'டை' அடிக்க வேறு அவள் பணம் சேர்க்கவேண்டும். இந்த லட்சணத்தில் வேறே புடவை வாங்குவதாயிருந்தால் குறைந்த பட்சம் பத்து ரூபாய்களாவது வேண்டாம்?"
அதற்குப் பிறகு நான் அவளை ஒன்றும் கேட்கவில்லை. எங்கள் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனைக் கூப்பிட்டு, ஆறு கெஜம் மல் கொடுக்கும்படி சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு அவள் போய்விட்டாள்.
வி.க-26 "வியாபாரத்தில் சபலச் சித்தம் கூடாது; திடச் சித்தம் வேண்டும்” என்பது என் அப்பாவின் சித்தாந்தம்.
இப்போது நான் அதை மீறியல்லவாகாரியம் செய்துவிட்டேன்?
இப்படி எண்ணிய வண்ணம் உட்கார்ந்திருந்தபோது கடை வாயிலில் வந்து நின்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
ஐயோ, அப்பா வந்துவிட்டாரா? -இல்லை, ராணிதான் காரிலிருந்து இறங்கி, 'அன்ன நடை'க்குப் பதிலாக 'யானை நடை' போட்டுக் கொண்டு வந்தாள்.
அவள் என் அத்தையின் ஏக புத்திரி; கலாசாலையில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய அம்மாவுக்கு என்மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாளது வரை ராணியை என் தலையில்தான் எப்படியாவது கட்டிவைக்க வேண்டும் என்று ஒரே பிடிவாதமாயிருந்து வருகிறாள். எனக்கோ அவளைப் பார்க்கும் போதெல்லாம் அச்சம் ஏன் தெரியுமா? - அக்கம் பக்கத்தில் யார் இருந்தாலும் சரி, அவள் முதலில் என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுத்தான் அப்புறம் ஏதாவது பேச ஆரம்பிப்பாள். இதில் ஒன்றும் குற்றம் இல்லைதான். ஆயினும் உண்மையான அன்புக்கு உள்ளேதான் இடமிருக்குமே தவிர, வெளியே இடமிராதல்லவா?
இந்த நிலையில் இருந்த என்னை இன்று அவள் நெருங்கியதும், நான்சுற்றுமுற்றும் பார்த்துத் திருடனைப்போல் விழித்தேன். அதிலும் மற்ற நேரங்களில் கடையின் குமாஸ்தாக்கள், பையன்கள் ஆகியவர்களில் பாதிப்பேர் ஏதேதோ காரியமாக வெளியே போய்விட்டிருப்பார்கள்; கடையிலும் அவ்வளவு வியாபாரம் நடந்து கொண்டிருக்காது. இப்போது என்னடாவென்றால் அத்தனை பேரும் கடைக்குள் அடைந்து கிடந்தார்கள்!அவர்களெல்லாம் போதாதென்று கடையில் வியாபாரம் வேறு பிரமாதமாக நடந்துகொண்டிருந்தது!
என்ன செய்வேன்?- என் உடம்போ சில்லிட்டுவிட்டது; உணர்ச்சியோகுன்றிவிட்டது. வலுவில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, "வாராணி, வா!" என்றேன்.
அதைப் பொருட்படுத்தாமல், "ஹெல்லோ, ஹெள ஆர் யூ?" என்று எதிர்த்தாற்போல் இருக்கும் என்னைப் பார்த்த பிறகும், என்னைப்பற்றி அவசியமில்லாமல் கேட்டுக்கொண்டே, உணர்ச்சியற்ற என் கையைப் பிடித்து அவள் உணர்ச்சியுடன் குலுக்கினாள்.
"அபாயம் நீங்கியது!"
அடுத்தாற்போல் எனக்கு எதிரே போட்டிருந்த மேஜையின் மேல் அவள் வானரம் போல் தாவி உட்கார்ந்தாள்.
அவ்வளவுதான்; கடைக்குள் அடைந்து கிடந்தவர்களெல்லாம் அவளை ஏதோ ஓர் அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினார்கள்-அவளும் அவ்வாறு பார்க்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்; பார்த்துச் சிரிக்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்!
அவர்களுடைய சிரிப்புக்கிடையே என்னை நோக்கி, "என்ன உங்கள் உடம்புக்கு?"என்று கேட்டாள் அவள்.
"ஒன்றுமில்லை" என்றேன்.
"பின் ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்?"
"சும்மாத்தான்!”
"பொய்! உங்களுக்குத் தலையைக் கிலையை வலிக்கிறதா, என்ன?”
"ஆமாம்; கொஞ்ச நேரமாகத் தலையை வலிக்கத்தான் செய்கிறது!"
"அதாவது, நான் வந்ததிலிருந்து என்று சொல்லுங்கள்!"
"சே, சே! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கே இப்படி.....?"
"சரிதான்; என்னை இங்கிருந்து சீக்கிரமாக வெளியேற்றச் சதியோ?"
"சரியாய்ப் போச்சு; வந்தவர்களை 'ஏன், என்ன?’ என்று விசாரிக்க வேண்டாமா?"
"ஆமாம், ஆமாம்-அது கிடக்கட்டும், எனக்குக் கொஞ்சம் மல் வேண்டியிருக்கிறது-நானும் 'க்யூ' வரிசையில்தான் நிற்க வேண்டுமா?"
"காலையில் வந்திருந்தால் நின்றிருக்கலாம்; இப்போது தான் கூட்டமில்லையே!-சரி, எத்தனை கெஜம் வேண்டும்?"
"கெஜமாவது! நாலு பீஸ் வேண்டும் ஸார், நாலு பீஸ்!"
"ஹா!" "என்ன! அவ்வளவு மல் கிடைக்காதோ?”
"உனக்குக் கிடைக்காமலென்ன?-ஆனால் தற்சமயம் இங்கே அவ்வளவு மல் இல்லை; இரவு வேண்டுமானால் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!”
'சரி' என்று அவள் போய் விட்டாள்; நானும் "பிழைத்தேன்"என்று பெருமூச்சு விட்டேன்.
அன்றிரவு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக என் அறையை நோக்கித் திடுதிடுவென்று நடந்து வந்தார் அப்பா; திடுக்கிட நான் எழுந்து நின்றேன்.
"அடேய்! அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ?"
"......"
"உன்னை யாரடா நான் சொன்னதற்கு மேல் விற்கச் சொன்னார்கள்?"
"......"
"இளம் பெண்ணைக் கண்டதும் இரக்கம் வந்து விட்டதோ?”
"ஐயோ! அவள் குழந்தை, அப்பா!"
"அவள் குந்தைதான்; அவளுடைய அக்கா?"
"இதென்ன வீண் பழி! யாரோ சொன்னதைக் கேட்டு....."
"சொன்னதைக் கேட்டு என்னடா? இப்படி என் தலையை மொட்டையடிக்க எத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தாய்?"
"அப்படி என்ன அப்பா, பிரமாதமாக மொட்டையடித்துவிட்டேன்? ஆறு கெஜம் மல்தானே?"
அவ்வளவுதான்; ஓஹோ! எதிர்த்துப் பேசக் கூடத் தைரியம் வந்துவிட்டதா?-ம், நடடா வெளியே!" என்று என்னை ஓங்கி அறைந்தார் அவர். அதற்குள் அம்மா அலறிக் கொண்டே, ஓடிவந்து, "நன்றாயிருக்கிறது. ஏன் இப்படி அமர்க்களம் பண்ணுகிறீர்கள்? நீங்கள் சொன்னதற்குமேல் ஆறு கெஜம் மல்லை விற்றுவிட்டால் குடியா முழுகிப் போய்விடும்!" என்றாள்.
"மூடு, வாயை! இப்போது 'பீஸ்' ஒன்றுக்கு இருபது ரூபாய் விலை பேசி, இன்றிரவு இருபது 'பீஸ்' கொடுப்பதாக ராம்ஜியிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு வந்து விட்டேனே, அதற்கு நான் என்ன செய்வது?" "நாளைக்கு கொடுக்கிறேன் என்று சொல்வது! அதற்காக குழந்தையை அடித்தால் வந்துவிடுமா?"
நீயும் உன் குழந்தையும் நாசமாய்ப் போங்கள்; சொற்படி நடக்காத பிள்ளை எனக்கு வேண்டாம்!
கதைகளில் நிகழும் சில சம்பவங்களை நம்மால் நம்ப முடிவதேயில்லை. ஆனால் அதே மாதிரி சம்பவங்கள் சில நமது வாழ்க்கையில் நிகழும்போது, அவற்றை நம்மால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?
அன்றோ நல்ல வெண்ணிலவு; கலங்கிய, மனத்துடன் நான் கால்கள் போன வழி நடந்துகொண்டிருந்தேன்.
அப்படியென்ன, நாம் செய்யத் தகாத காரியம் செய்து விட்டோம்? ஓர் ஏழைச் சிறுமியிடம் இரக்கம் காட்டியதா குற்றம்? அதுவும் காசை வாங்கிக் கொண்டுதானே இரக்கம் காட்டினோம். இதற்கா இத்தனை அமர்க்களம்?-இந்தக் கோடை விடுமுறை என்று ஒன்று ஏன்தான் வந்து தொலைந்ததோ? அது வந்திராவிட்டால் நாம் ஏன் அந்த நாசமாய்ப் போன கடையில் உட்கார்ந்திருக்கப் போகிறோம்? அந்தச் சிறுமியிடந்தான் ஏன் இரக்கம் காட்டியிருக்கப் போகிறோம்? அப்பாதான் இப்படி ஏன் கோபித்துக் கொண்டிருக்கப் போகிறார்?
இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சென்ற என் கண்களுக்கு 'ஓடைத் தெரு’ என்று பொறிக்கப் பட்டிருந்த தெருப் பலகை ஒன்று காட்சியளித்தது. பேதலித்ததிலிருந்து நான் ஒரு காரணமும் இல்லாமல் அந்தத் தெரு வழியே சென்றேன். மனச்சோர்வினால் அங்கே பூட்டிக்கிடந்த ஒரு வீட்டுத் திண்ணையை என் கால்கள் தஞ்சமடைகின்றன. 'யோக்கிய தாம்ச'த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அந்தத் திண்ணையின்மேல் உட்கார்ந்தேன். கதவில் எழுதப்பட்டிருந்த '9' என்ற இலக்கம் என்னைக் கவர்ந்தது. அதைக் கண்டதும், "இந்த வீட்டுச் சிறுமியால்தானே நமக்கு இந்தக் கஷ்டம்?"என்று எண்ணி என்மனம் இடிந்தது.
"என்னடா, பூட்டை உடைப்பதற்கு யோசனையோ?" திடுக்கிட்டு நான் திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவர் வந்து எனக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார். தலைவிரி கோலமாயிருந்த என்னை அவர் திருடனென்றும் தீர்மானித்து விட்டார் போலும்! அந்த முதியவருக்குப் பின்னால் ஒரு முதியவள், அவளுக்குப் பின்னால் ஒரு யுவதி, கடைசியில் அந்த நீலி அவள் என்னைப் பார்த்துவிட்டாள்.
அவ்வளவுதான்; "அப்பா, அப்பா! அவர் என்னை தனியே அழைத்து ஆறு கெஜம் மல் கொடுத்தனுப்பிய ஜவுளிக் கடைக்காரராச்சே, அப்பா! அவரைப் போய் 'பூட்டை உடைக்க யோசனையோ!" என்று கேட்கிறீர்களே?"என்று அங்கலாய்த்தாள் அவள்.
முதியவர் அசடு வழிய, "மன்னிக்கவேணும்; கோபித்துக் கொள்ளக்கூடாது!" என்று கெஞ்சிக் கொண்டே என்னை நெருங்கினார்.
"அதற்கென்ன, இந்நேரத்தில் இப்படி வந்து உட்கார்ந்திருந்தால் அப்படித்தான் தோன்றும்!" என்று நான் அவருடைய மனச் சாந்திக்காகச் சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தேன்.
"என்ன ரத்னா, இன்னும் ஏன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?-உள்ளே வந்து விளக்கை ஏற்று!" என்றார் முதியவர், இரண்டடிகள் எடுத்து வைத்த நான் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தேன்; ரத்னா முகம் சிவக்கத் தன் அப்பாவுடன் திறந்த வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்!
அதே சமயத்தில் என் உள்ளத்திலும் அவள் நுழைந்து விட்டாள் என்பதை அப்போது நான் ஏனோ உணரவில்லை.
இரவு மணி பத்துக்கு மேலே இருக்கும். வீட்டை அடைந்தேன். எனக்காகக் காத்துக் கொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும், "வாடா அப்பா!வந்துவிட்டாயா? அந்த மட்டும் என் வயிற்றில் பாலை வார்த்தாயே!” என்று கனிவு ததும்ப வரவேற்றாள்.
எடுத்தததற்கெல்லாம் நான் தற்கொலை செய்து கொள்வேனோ என்று அவளுக்குப் பயம்.
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்பா எங்கேயாவது கையைத் தீட்டிக்கொண்டு என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்றுதான்!-அவருக்குப் பதில் அவருடைய சயன அறையிலிருந்து அவர் குறட்டை விடும் சத்தந்தான் வந்துகொண்டிருந்தது. அதற்குள் அம்மா எனக்குச் சாதம் பரிமாறினாள். சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போனேன். அதே சமயத்தில் யாரோகதவைத்தடதட வென்று தட்டும் சத்தம் கேட்டது. விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன்.
என்ன பயங்கரமான சேதி!
எங்கள் கடையில் தீப்பிடித்துக்கொண்டு விட்டதாம்! அவ்வளவுதான்; அடுத்த கணம் நானும் அக்கினி பகவானால் ஆட்கொள்ளப்பட்டுத் 'திருதிரு'வென்று எரிவதுபோல், எனக்குத் தோன்றியது.
அப்பாவிடம் சேதி சொல்வதற்காக விரைந்தேன். கண்ணில் பட்ட ஒவ்வொரு பொருளும் தீப்பற்றி எரிவது போல எனக்குத் தோன்றின! -
பரபரப்புடன் அவருடைய அறைக்குள் நுழைந்தேன். அவரும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார்!
"அப்பா! அப்பா!! அப்பா!!!"
“என்னடா அது?"
"கடையில் தீப்பிடித்துக்கொண்டு விட்டதாம்!”
"ஐயோ, கையிருப்பு ரொக்கம் கூடக் கடையில்தானே வைத்திருந்தேன்!” என்று சொல்லிக்கொண்டே, அவர் எழுந்து வெளியே ஓடினார்.
வாயிற்படியில் பாவி எமன் காத்துக் கொண்டிருந்தான் போலும்-தடுக்கி விழுந்த அப்பாதடுக்கி விழுந்தவர்தான்; மறுபடியும் எழுந்திருக்கவேயில்லை!
அடுத்தாற்போல் அவரைத் தொடர்ந்து சென்று நானும் உணர்விழந்து கீழே விழுந்தேன். அந்த நிலையில் எவ்வளவு நேரம் இருந்தேனோ. தெரியாது. மீண்டும் உணர்வு பெற்றபோது என் அன்னை, அழுது, அழுது ஓயும் தருவாயில் இருந்தாள்.
அவளுடைய வெளுத்த முகத்தையும், கண்ணிர் பெருகிய கண்களையும், என்னால் சகிக்க முடியவில்லை. மெல்ல எழுந்து கடையின் பக்கம் சென்றேன்.
கருத்த சாம்பல் என் கண்களுக்குக் காட்சியளித்தது. யாரோ கொடுத்த தகவலின்பேரில் தீயணைக்கும் படையினர் வழக்கம்போல் தீயணைந்த பிறகு வந்து திரும்பிச் சென்றனராம்!
எந்த விஷயத்திலும் பிறரை நம்பாத என் அப்பா எங்கள் கடையை ஒரு காலணாவுக்குக் கூட 'இன்ஷ்யூர்'செய்து வைக்கவில்லை. அவருக்குப் பிறகு எனக்கும் என் அன்னைக்கும் ஜீவாதாரமாக இருந்தது நாங்கள் குடியிருந்த வீடும், அந்த வீட்டின் பெறுமானமுள்ள கடனுந்தான்!
ஒரு பக்கம் கவலையே உருவான தாய்; இன்னொரு பக்கம் கரைகாணாத சம்சார சாகரம்; மற்றொரு பக்கம் கடன்காரர்கள்-இவற்றுக்கு முன்னால் என் கலாசாலை வாழ்க்கையின் கதி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்?
கதை கவிதையிலும், நடனம் நாடகத்திலும், சினிமா சங்கீதத்திலும் சென்றுகொண்டிருந்த என் மனம், அரிசி பருப்பிலும், உப்பு புளியிலும், காய் கறியிலும் செல்ல ஆரம்பித்தது.
பணக் கவலை என்னைப் படுத்திய பாடோ கொஞ்சநஞ்சமல்ல. நான் பார்த்து வந்த வேலைக்காகப் பாங்கிக்காரர்கள் கொடுத்த மாதச் சம்பளம் அறுபது ரூபாய் போதவில்லை. வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதென்று தீர்மானித்தேன். அன்றே 'வீடு வாடகைக்கு விடப்படும்' என்று ஒர் அட்டையில் எழுதி வாயிற்படியில் தொங்கவிட்டேன்.
காலை எழுந்தவுடன் வேலை; மாலை முடிந்தவுடன் துக்கம்; மற்ற நேரங்களில் அன்னவிசாரம்; நடுநடுவே என் மனோவானத்தில் ரத்னாவின் வதன மின்னல்-ஆம், ராணி மின்னாத அந்த வானத்திலே ரத்னா அடிக்கடி மின்னிக் கொண்டிருந்தாள்!
இந்த நிலையிலே சதிசெய்யும் விதிக்கு என்மேல் என்ன கருணையோ தெரியவில்லை. எங்கேயோ இருந்த ரத்னாவை அது எங்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்த்தது-ஆம், எங்கள் வீட்டில் ஒரு பகுதியை அவர்கள்தான் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள்.
இடையே கழிந்த ஒரிரு வருடங்களில் எங்களுக்குள் ஏற்பட்டிருந்த மாறுதல் ஒன்றே ஒன்றுதான்-அதாவது அவளைச் சந்தித்த பிறகு, நான்தந்தையை இழந்துவிட்டிருந்தேன். அவள்தாயை இழந்து விட்டிருந்தாள்.
ஒரு நாள் ஏதோ பேச்சுவாக்கில் ரத்னாவின் தகப்பனாரை நோக்கி, "நீங்கள் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொள்ள வில்லையா?"என்று கேட்டாள் என் தாயார்.
அவர் சிரித்துக்கொண்டே "இப்போது ரத்னாவுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்!" என்றார். அவளுக்குக் கல்யாணமான பிறகு, நீலிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்துக் கல்யாணம் செய்துவிட்டு, "நான் கடைசி கல்யாணத்திற்குத் தயாராகிவிடலாம் என்று இருக்கிறேன்!” என்றார்.
"என்னமோ போங்கள், எவன் யாருக்கு எங்கே பிறந்திருக்கிறானோ!" என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே வந்தாள். அதுதான் சமயமென்று, "இதோ, ரத்னாவுக்காக நான் பிறந்திருக்கிறேனே!"என்றேன்.
"அப்படியா சமாச்சாரம்? - கொஞ்சம் பொறு, நாளைக்கே அவர்களை வேறு வீடு பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன்"என்று உறுமினாள் அம்மா.
அவ்வளவுதான்; "அம்மா அந்தப் பெண்ணை நான்கல்யாணம் செய்து கொள்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அத்துடன் அதை விட்டுவிடுங்கள்; நானும் விட்டு விடுகிறேன். அதற்காக இந்த வீட்டைவிட்டு அவர்களைக் காலி செய்யவோ, அவர்களிடம் கடுமையாகவோ நடந்து கொள்ள வேண்டாம்!" என்று நான் கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சினேன்.
அதற்குப் பிறகு அம்மா ஒருவாறு சமாதான மடைந்து, "ஏற்கெனவே கெட்டது போதாதென்று மேலும் கெட்டுப் போகப் பார்க்கிறாய்? நம்மை விட மேலான இடம் நமக்காக எத்தனையோ நாட்கள் காத்துக் கொண்டிருக்கும்போது ஏன் இப்படியெல்லாம் உளறுகிறாய்?" என்றாள்.
அத்துடன் அவள் நின்றுவிடவில்லை. மறுநாளே அந்த மேலான இடத்துக்குக் கிளம்பி விட்டாள்!
அன்று மாலை நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய போது அம்மா ஏனோ அசோகவனத்துச் சீதைபோல் காட்சி அளித்தாள். “என்ன, அம்மா! என்ன நடந்தது?"என்று பரபரப்புடன் கேட்டேன்.
விக்கலுக்கும், விம்மலுக்கும் இடையே, "ஆயிரம் தடவை நம் வீடு தேடி வந்து, “எங்கள் ராணி உங்கள் பிள்ளைக்குத்தான், எங்கள் ராணி உங்கள் பிள்ளைக்குத்தான் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்களே, இப்போது என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 'உன்னுடைய கல்யாணப் பேச்சை எடுத்ததும், 'உன் பிள்ளைக்கா எங்கள் ராணி வேண்டும்?' என்று எகத்தாளமாகச் சொல்லி, எல்லோருமாகச் சேர்ந்து குலுங்கச்சிரிக்கிறார்கள்?-உனக்குச்சம்பளம் அறுபது ரூபாயாம். அவர்கள் மோட்டார் டிரைவருக்கே மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாம்.அதை நினைக்க நினைக்க என் வயிறு பற்றி எரிகிறது! என்னகாலம் இது? நமக்கு வந்த கதி அவர்களுக்கும் வராதா?" என்றெல்லாம் அவள் கலங்க ஆரம்பித்துவிட்டாள்.
"வேண்டாம் அம்மா! அவர்களுக்கும் அந்தக் கதி வரவேண்டாம். நல்லதைத்தான் சொல்கிறார்கள்; நன்றாயிருக்கட்டும்"என்றேன் நான்.
அவள் சமாதானம் அடையவில்லை. அந்த வியாகூலத்தால் இரண்டு நாட்களுக்கெல்லாம் படுக்கையாய்ப் படுத்து விட்டாள். வாழ்க்கையில் அவள் வைத்திருந்த கடைசி நம்பிக்கை எப்படியாவது ராணியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதுதான்.அது முறிந்து விடவே, அவள் இதயம் தாங்க முடியாத அதிர்ச்சியை அடைந்துவிட்டது.
இத்தனைக்கும் 'ஏழை' என்ற ஒரே ஒரு குறையைத் தவிர ரத்னா வேறொரு குறையும் இல்லாதவள். அந்தக் குறைக்குக் கூடக் காரணம் அவள் அல்ல; எல்லாம்வல்ல இறைவன், ஏழை பங்காளன்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டுதானே நேற்று அம்மா அவளைத் தட்டிக் கழித்தாள்? அதேபோல்தான் என்னையும் 'ஏழை' என்பதற்காக அவர்கள் தட்டிக் கழிக்கிறார்கள்!
இது தெரியாமல் அனாவசியமாக அதிர்ச்சியடைந்து அம்மா இப்போது உடம்பைக் கெடுத்துக் கொண்டாளே, அதற்காக அவதிப்படுவது யார்? அம்மாவின் அருகில் இருந்து நாம் சிருஷ்ஷை செய்து கொண்டிருந்தால் சம்பளம் கொடுப்பவன் சும்மா இருப்பானா?
எனக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இதற் கிடையில் அம்மாவோ நாளுக்கு நாள் அப்படியிப்படி நகரக்கூட முடியாதவளாகி விட்டாள். அவளை விட்டுவிட்டு நான் எப்படி வேலைக்குச் செல்வது? ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
உள்ளே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது-என்ன! அதற்குள் அம்மா எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டாளா? இல்லை; என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டதும் ரத்னாதான் வால் நட்சத்திரத்தைப் போல் விரைந்து சென்று மறைந்தாள்-ஆம், நீண்ட ஜாடையாக அவள் ஆடி அசைந்து ஓடியது எனக்கு அப்படித்தான் தோன்றியது!
அதனால் ஏற்பட்ட உள்ளக் கிளுகிளுப்பைப் பெரு மூச்சின் வாயிலாக மெள்ள வெளியேற்றி விட்டு நான் அம்மாவின் அருகில் உட்கார்ந்தேன். நீலி சுடச்சுடக் காப்பியைக் கொண்டுவந்து எனக்கு எதிரே வைத்தாள். சந்தேகக் கண்களுடன் நான் அதை வெறித்துப் பார்த்தேன்; "சாயங்காலம் வந்ததும் காப்பி சாப்பிடுவது வழக்கமாச்சே என்று நான்தான் ரத்னாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் காப்பி போடச்சொன்னேன்!” என்று அம்மா என்.சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்.
"சரி, உடம்பு எப்படியிருக்கிறது?"என்றேன் நான், என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்காக!
'உடம்புக்கு ஒன்றுமில்லை; நீ சாப்பிடு!" என்றாள்.அவள்.
அத்தனை நாளும் இல்லாத உவகையுடன் அந்தக் காபியை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, "நாளையிலிருந்து ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு விட்டேன், அம்மா!" என்றேன் நான்.
"என்னத்துக்காக?”
"எத்தனை நாளைக்குத்தான் பேசாமலிருப்பது? உன்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு டோக வேண்டாமா?”
"அதற்கா ஒரு வாரம்?"
"நாளுக்கு நாள் உடம்பு எப்படி எப்படியிருக்குமோ? உன்னைக் கவனித்துக் கொள்ள என்னைவிட்டால் வேறு யார் அம்மா இருக்கிறார்கள்?"
"ஏன் இல்லை? பகவான் என்னை அப்படியொன்றும் அனாதையாகவிட்டு விடவில்லை; அவர்தான் ரத்னாவை நமக்குத் துணையாக அனுப்பியிருக்காரே?-இன்றைக்கெல்லாம் வெந்நீருக்கும், வேறு காரியங்களுக்குமாக ஆயிரந்தடவை அவளைக் கூப்பிட்டிருப்பேன். கொஞ்சமாவது அலுத்துக் கொண்டாள் என்கிறாய்?-ஊஹும்! என்ன அடக்கம், என்ன ஒடுக்கம்! சொந்த நாட்டுப் பெண் கூடக் கெட்டாள், போடா?”
இதைக் கேட்டதும் எனக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அவளைப் பற்றியே அம்மா இன்னும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க மாட்டாளா? என்று நான் இருந்த இடத்தை விட்டு நகராமல் உட்கார்ந்திருந்தேன்.
“என்னமோ, அவளுக்கு எல்லாபாக்கியமும் கொடுத்த கடவுள் ஐசுவரிய பாக்கியத்தைத்தான் கொடுக்கவில்லை. ஏதாவது நல்ல இடமாகக கிடைக்க வேண்டுமே; போகிற இடத்திலாவது அவள் நன்றாயிருக்க வேண்டும்!" எப்படியிருக்கிறது, கதை?-எதற்காக அம்மா என்னை இப்படியெல்லாம் சோதிக்கிறாய்? - உடனே அந்த இடத்தைவிட்டு அப்பால் சென்றுவிட வேண்டும் என்று தோன்றிற்று எனக்கு. "உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்; நான் போய் ராத்திரி சாப்பாட்டுக்கு ஏதாவது தயார் செய்கிறேன்!" என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுந்தேன்.
"உனக்கு என்ன தெரியும்? நீ பேசாமல் இரு; ரத்னாவையே கொஞ்சம் சமைத்துக் கொடுக்கச் சொல்கிறேன்!” என்றாள் அம்மா.
அதை நான் பொருட்படுத்தவில்லை; ரத்னாவேண்டாம்; அவள் சமையல் மட்டும் வேண்டுமாக்கும்! என்று கறுவிக் கொண்டே சமையலறைக்குள் சென்று அடுப்பை மூட்டயத்தனித்தேன். அந்த வாரம் வாங்கிய ஒரு புட்டி மண்ணென்னை வீணானதுதான் மிச்சம்; அடுப்பு எரிந்த பாடாகக் காணோம்!
எரிச்சல் தாங்கவில்லை எனக்கு. கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து வெளியே வந்தேன்; யாரோ'களுக்'கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். சிரித்தவள் அவள்தான்!
அதற்கு மேல் அவள் அங்கு நிற்கவில்லை. சட்டென்று சமையலறைக்குள் நுழைந்தாள்1-அடுத்த நிமிஷம் அந்தப் பாழாய்ப் போன அடுப்பு கொழுந்து விட்டெரிந்தது!
அதனாலென்ன, அடுப்பு எரிந்துவிட்டால் மட்டும் போதுமா? முன்பின் எங்கள் வீட்டுக்கு வந்து பழக்கமில்லாத அவள், அரிசி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டாமா? அதற்காவது அவள் என்னுடன் பேசித்தானே தீரவேண்டும்? அந்த சந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் வெளியே நின்று கொண்டிருந்த என்னை அவள் அப்போதும் ஏறெடுத்துப் பார்க்காமல், "இங்கே அரிசி எங்கே இருக்கும்?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்!
நான் மட்டும் அவளுக்கு இளைத்தவனா, என்ன? "இங்கேதான் இருக்கும்!" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்!
அடுத்தாற் போல், “இங்கே கரண்டியைப் பார்த்தாயா, நீலி?" என்றாள் அவள், அங்கே இல்லாத நீலியை நோக்கி!
"இதோ, இங்கேதான் இருக்கிறது நீலி!"என்றேன் நானும், அங்கே இல்லாத நீலியை நோக்கி! பாவம்! அவள் என்ன படித்த பெண்ணா, பணக்காரர் வீட்டுப் பொண்ணா?-நேருக்கு நேராக, 'ஹல்லோ, ஹெள ஆர்யூ?'என்று என்னைக் கேட்க?
மறுநாள் காலை அம்மாவை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்று சொல்லி அவர் ஆறு வேளை மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்தோம். அங்கே நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத அதிசயம் ஒன்று எங்களுக்காகவே காத்துக் கொண்டிருந்தது. யாரோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லக் கேட்டு அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக அத்தையும் ராணியும் வந்தார்கள். பீரோக்களில் வருடக்கணக்காக உறங்கும் பட்டும் ஜரிகையும் மின்ன, பொன்னும் மணியும் குலுங்க நாலு பேருக்கு முன்னால் 'க்ரீச்'சென்று காரில் வந்து இறங்க வேண்டுமென்றால் சந்தர்ப்பம் எதுவாயிருந்தாலும் சரி-அதைப் பணக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டித்தானே இருக்கிறது?
ஆனால் ஒரு வித்தியாசம்-ராணி என்னைக் கண்டதும் அன்று போல் இன்று கைகுலுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஓர் அலட்சியப் புன்னகை புரிந்து விட்டு "ஆகாரம் என்ன, க்ளுக்கோஸ்?" என்று கேட்டாள்.
"அப்படியென்றால் என்ன?"என்று அம்மா திரும்பிக் கேட்டாள். அவ்வளவுதான் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது அவளுக்கு. "இப்படியும் ஒரு கர்நாடகம் இருக்குமா?"என்று எண்ணியோ என்னமோ, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்!
"பேசாமல் இருடி!" என்று அத்தை பெருமையுடன் மகளை அடக்கி விட்டு, "உடம்புக்கு இப்போது எப்படியிருக்கிறது? என்று கேட்டாள்.
"நீங்கள் வந்த பிறகு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது!"என்று வெறுப்புடன் சொல்லி விட்டு "ரத்னா கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாம்மா"என்றாள் அவள், படுக்கையில் குப்புறப்படுத்துக் கொண்டே,
அதற்குள் "படுக்கவே படுக்கிறாய்! இன்னும் ஒரு வேளை மருந்து சாப்பிட்டுப் படுத்துக்கோ அம்மா!"என்றேன் நான்.
வண்டியில் சென்று வந்த அலுப்பிலே அவள் கொஞ்சம் சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தாள்; நான் மருந்தை எடுத்து வாயில் ஊற்றினேன். குமட்டிக் கொண்டு வந்து விட்டது; வாயிலெடுத்து விட்டாள்;
உடனே ராணி முகத்தைச் சுளித்துக் கொண்டு, "சீச்சீ, இதென்ன நியூசென்ஸ்!" என்று எரிந்து விழுந்தாள். அதற்குள் வெந்நீர் கொண்டு வந்த ரத்னா கருணையின் வடிவாய் அம்மாவின் வாயைத் துடைத்துவிட்டு, அவளை மெல்லக்கீழே இறக்கி விட்டு, படுக்கையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்!
அப்போதுதான் அம்மாவின் வறண்ட வதனத்தில் என்றுமில்லாத ஜீவகளை தோன்றிற்று; அளவற்ற வாஞ்சையுடன் தட்டுத் தடுமாறி எழுந்து ரத்னாவை தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் வடித்தாள்.
வெட்கத்தைத் தவிர வேறொரு ஆபரணமும் இல்லாத அவள் அதையே பெருமையுடன் பூண்டு, "வேண்டாம்மாமி, வேண்டாம். உடம்பை வீணாக அலட்டிக்கொள்ளாதீர்கள்"என்று எச்சரித்தபடி படுக்கையை சுருட்டி எடுத்துக் கொண்டு குழாயடிக்கு சென்றாள். அவள் தலை மறைந்ததும் "இவள் யார் என்று தெரியவில்லையே" என்றாள் அத்தை.
"இவளா! - இவள்தான் இந்த 'நியூசென்ஸ்'காரிக்கு மருமகளாக வரப் போகிறவள்!" என்றாள் அம்மா ஆத்திரத்துடன். இதைக் கேட்டதும் ராணி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றாள். அவளைப் பின் பற்றி "மன்னிக்கு உடம்பும் சரியில்லை; மனமும் சரியில்லை", என்று மழுப்பிக் கொண்டே நாலுபேருக்கு முன்னால் போட்ட வெளிச்சமெல்லாம் போதும் என்று எண்ணியோ என்னமோ, அத்தையும் நழுவினாள்!
அதே சமயத்தில் ஏதோ காரியமாக ரத்னாவைக் கூப்பிட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்த அவளுடைய தகப்பனாரிடம், “இங்கே பாருங்கள்- இனிமேல் நீங்களும் நாங்களும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்களல்ல; எல்லோரும் ஒரே குடும்பந்தான்! இதோ நிற்கிறானே என் பிள்ளை, இவன் தான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை; ரத்னாதான் எங்கள் வீட்டு மருமகள்!"என்றாள்.அம்மா.
"எல்லாம் அவன் செயல்!"என்றார் அவர்.
மாடும் மனிதனும்
மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமாரி என்று கேள்விப்பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர்.
"என்னடாபயல்களா, என்ன சேதி?”
"பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்......"
"வேலைதானே ? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!"
"முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்......!"
"ஆமாம், அதற்கென்ன இப்போது?"
"அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்.....!"
"ஓஹோ! அப்படியானால் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்; கணக்குப் பிள்ளை அவனைத்தான் பார்க்கப் போயிருக்கிறார்; வரட்டும்!"
அப்படியே அவர்கள் ஒதுங்கி நின்றனர். அதே சமயத்தில் ஒதுங்காமலும், பதுங்காமலும், நிமிர்ந்த நடையுடனும் நேர் கொண்ட பார்வையுடனும் எசமான் வீட்டு நாய் அவர்களுக்கிடையே நுழைந்தது. அதைத் தொடர்ந்து கணக்கப் பிள்ளையும் வந்தார்.
"என்னய்யா, ஆளைப் பார்த்தீரா? என்ன சொன்னான்? இன்றாவது வேலைக்கு வரப் போகிறானா, இல்லையா?” என்றார் மாணிக்கம் பிள்ளை.
"அவன் எங்கே இனிமேல் வேலைக்கு வரப் போகிறான்?" என்றார் கணக்கப் பிள்ளை.
"ஏன் வாயைப் பிளந்து விட்டானா?”
"ஆமாம்."
"சரி, விடு கழுதையை! ஏய்! யாரடா அங்கே?" என்று திரும்பினார் மாணிக்கம் பிள்ளை.
அவ்வளவுதான்; "எசமான்"என்று விழுந்தடித்துக் கொண்டு வந்து அவருக்கு எதிரே நின்றான் ஒருவன்.
அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "வந்திருப்பவர்களில் நீதான் தேவலை என்று தோன்றுகிறது; ஒழுங்காக வேலை செய்வாயா?"
ரோஸம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு; "என்னா அப்படிக் கேட்டுப்புட்டிங்க, உங்க காலு செருப்பாயிருப்பேனுங்க நானு" என்று சூள் கொட்டினான்.
“என்னமோ, தலைக்குக் கிரீடமாக வந்து சேராமல் இருந்தால் சரிதான்!-ஓய், இவனைப் பண்ணைக்கு அனுப்பிவையும்; பாக்கிப் பேரை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தும்!" என்று உத்தரவு போட்டுவிட்டு மாணிக்கம் பிள்ளை உள்ளே வந்தார். மாட்டு வைத்தியர் கையைப் பிசைந்து கொண்டு அவருக்கு எதிரே நின்றார்.
“என்னய்யா, எப்படியிருக்கு?"
“என்னாலே ஆன மட்டும் பார்த்தேனுங்க; தவறிப் போச்சுங்க!"
"இரண்டுமா?"
"ஆமாங்க!"
இதைக் கேட்டதுதான் தாமதம்; 'ஆ' என்று அலறிய வண்ணம் அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் பிள்ளை.
மாட்டு வைத்தியர் அதுதான் சமயமென்று மெள்ள நழுவினார்.
"அப்போது சேரிக்கு ஆள் விடட்டுமா?"என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் மாணிக்கம் பிள்ளையின் மனைவி.
"பேசாமல் போடி, சேரிக்கு ஆள் விடுகிறாளாம் ஆள்!" என்றார் பிள்ளை எரிச்சலுடன்.
"ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது முப்பது வருஷமாவேலை செஞ்ச முனியனே போயிட்டானாம்; மாடு போனா என்னவாம்?" என்றாள் அவள்.
"மனுஷன் முதலில்லாமல் வருவான்; மாடு முதலில்லாமல் வருமா?" என்றார் அவர்.
இரக்கம்
முக்கால் கெஜம் ஜாக்கெட்துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச்சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
“நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவலையே!" என்று சுற்றுமுற்றும் பார்த்தாள் சரளா.
“சரியாய்ப் போச்சி, அந்தப் பக்கம் இருக்கும் போதே அதைச் சொல்லியிருக்கக் கூடாதா? இந்தப் பக்கம் வந்த பிறகுதான் சொல்ல வேண்டுமா?" என்றான் முரளி அலுப்புடன்.
"இதுதான் நுண்ணிடைப் பெண் ஒருத்திக்காக நீங்கள் நூற்றிரண்டு மலைகளைச்சாடும் லட்சணமாக்கும்?"என்றாள் சரளா.
தனக்காகத்தன் இனத்தையே பழிக்கும் அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது. அவனுக்காக நூற்றிரண்டு மலைகளைச் சாடாவிட்டாலும் நூற்றிரண்டடி நீளமுள்ள சாலையையாவது சாடுவோம் என்று அவன் திரும்பினான். அப்போது அழுதுவடியும் ஆண்சிங்கத்தின் குரலொன்று கேட்கவே இருவரும் திரும்பிப் பார்த்தனர்; எதிர்த்தாற் போலிருந்த நீதி மன்றத்திற்கு எதிரே யாரோ ஒருவன் தலைவிரி கோலமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.
"பாவம் என்ன கஷ்டமோ"என்றாள் சரளா.
"எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், பிறர் கஷ்டத்துக்கு நாம் காரணமல்ல என்பது எங்கள் பேராசிரியர் வாக்கு" என்றான் முரளி.
"அவர் கிடக்கிறார்! அதற்காகக் கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக நாம் வாழ்வதா, என்ன? வாருங்கள், போய் என்னவென்று விசாரிப்போம்" என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்.
"என்னய்யா, என்ன நடந்தது?"அவ்வளவுதான்; அவனுடைய கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை நான் எப்படி அம்மா, சொல்வேன்? எப்படி ஊருக்குத் திரும்பிப் போவேன்?" என்று அவன் கதறினான்.
வி.க. -27 "ஏன், உனக்கு இந்த ஊர் இல்லையா?” என்று கேட்டாள்.அவள்.
"இல்லை, எனக்கு இளிச்சவாயன் பட்டி?”
“இங்கே எதற்கு வந்தாய்?"
"அந்த வெட்கக் கேட்டை ஏன் கேட்கறீங்க, எனக்கு ஸினிமா ஸ்டார்ஜில்ஜில் சுந்தரியைக் கண்ணாலம் பண்ணிக்கணும்னு ஆசை;"
"ம்......
"அதுக்காக நான் பணம் சேர்க்கிறதுக்குள்ள அவளுக்கு வயசாயிப் போச்சு!"
"ம்........ "
"அடுத்தாற்போல் புல்புல் தாராவைக் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்"
"ம்.........."
"அவளுக்கும் வயாசியிப்போச்சி!"
"அடபாவமே, அவர்களுக்கு வயசாக ஆக உனக்கு மட்டும் வயசு குறைந்து கொண்டே வந்ததாக்கும்?" என்றான் முரளி குறுக்கிட்டு.
"ரொம்ப அழகாத்தான் இருக்கு! இப்படிப்பட்டவர்களுடைய அறியாமைக்காக நாம் அழுவதா, சிரிப்பதா? வாயை மூடிக் கொண்டு பேசாமலிருங்கள்!" என்றாள் சரளா.
"இதோ மூடிக் கொண்டுவிட்டேன்"என்று அவன் உடனேதன் வாயை மூடிக் கொண்டு விட்டான்.
"ம், அப்புறம்......?”
"கடைசியா குமாரி குலோப்ஜானையாச்சும் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு நெனைச்சி, அவளுக்கு ஒரு கடிதாசி எழுதிப் போட்டேன்!"
"ம்......."
"அதுக்கு வேண்டிய பணத்தை எடுத்துகிட்டு அடுத்த நாளே வரும்படி அவ குமாஸ்தா பதில் எழுதியிருந்தான்!”
"ம்........." "சந்தோஷத்துக்குக் கேக்கணுமா? கண்ணு போட்ட மாடு, குட்டி போட்ட ஆடு எல்லாத்தையும் வித்து ஐநூறு ரூபா எடுத்து கிட்டுப் பறந்து வந்தேன்!"
"ம்.........”
"சொன்னது சொன்னபடி குமாஸ்தா ஸ்டேஷனுக்கும் வந்திருந்தான்.....!"
"ம்......."
"கேட்டது கேட்டபடி நான் ஐநூறு ரூவாயை எடுத்து அவன் கையிலே கொடுத்தேன்"
"ஐயோ , பாவம்!"
"ரெண்டு பேருமாகச் சேர்ந்து இங்கே வந்தோம்......!"
"எங்கே வந்தீர்கள்?"
"இங்கேயேதான்!"
"ம்........."
அவன் என்னை வெளியே நிறுத்திப்பிட்டு, "கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்துகிட்டு இரு; அம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்து விட்டு ஒரு நிமிஷத்துல வயந்துட்றேன்"னு உள்ளே போனான். ஒரு நிமிசம்ரெண்டு நிமிசமாச்சு; ஒரு மணியாச்சு; இரண்டு மணியாச்சு; ஒருநாள் ரெண்டு நாளாச்சு, போனவன் போனவன்தான்; திரும்பி வரவேயில்லை!"
"அவன் எப்படி வருவான்?"
"அதுக்கப்புறம் என்னடான்னா, இங்கே வரவங்க போறவங்க எல்லாம் இது குலோப்ஜான் வீடில்லே, ஐ கோர்ட்டுன்னு சொல்லிச் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க!"
"அவர்கள் கிடக்கிறார்கள்! நீ வா, எதற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் எழுதிவைப்போம்!" என்று அவனை அழைத்துக்கொண்டு சென்றாள் சரளா, முரளியும் அவளைத் தொடர்ந்தான்.
போலீஸார் அவன் விலாசத்தை குறித்து வைத்துக் கொண்டு, "தகவல் கிடைத்ததும் தெரிவிக்கிறோம்" என்றார்கள்.
"அப்படின்னா நான் ஊருக்குப் போகலாமுங்களா?"
"பேஷாய்ப் போகலாம்!"
அவ்வளவுதான்; "அதுக்குக் கூட எங்கிட்ட பணம் இல்லீங்களே!" என்று அவன் மறுபடியும் அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டான். சரளா அவனிடம் பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.
"நல்ல வேளை குலோப்ஜானையே கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் விட்டாயே, அந்த மட்டும் சந்தோஷம்!" என்றான் முரளி.
அலைந்த அலைச்சல் தீர, ஆளுக்கோர் ஐஸ்கிரீமுக்குப் பதிலாக ஆளுக்கு இரண்டு ஐஸ்கிரீமை அவர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தபோது, "என்னடா, என்ன கெடைச்சது?" என்றான் அவர்களுக்குச் சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவன், இன்னொருவனை நோக்கி.
"பத்து ரூபாய் தாண்டா! அதுவும் அவன் கொடுக்கலே, அவனோட ஒரு குட்டி வந்தாபாரு, அவ கொடுத்தா!" என்றான் இவன்.
"போயும் போயும் இன்னிக்குப் பொம்பிளைதானா கெடைச்சா, ஏமாத்த? ஐயோ, பாவம்!" என்றான் அவன்.
சரளா இதைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள்? அதே குலோப்ஜான் காதலன்!
அவளை அவன் கண்டதும் தன் சகாவுடன் வெளியே விரைந்தான்.
"போலீஸ், போலீஸ்!" என்று கத்தினாள் சரளா, ஆத்திரத்துடன்.
"ஸ், போலீசை ஏன் அனாவசியமாக கூப்பிடுகிறாய்? அவர்களிடம் நீ இரக்கம் காட்டலாம். உன்னிடம் அவர்கள் இரக்கம் காட்டக் கூடாதா?" என்றான் முரளி.
தலையெழுத்து
ரயில் சிநேகிதன் பஸ் சிநேகிதன், நாடகமேடை சிநேகிதன், சினிமாக் கொட்டகை சிநேகிதன் இவ்வாறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திடீர் என்று எத்தனையோ சிநேகிதர்கள் தோன்றித் தோன்றி மறைகிறார்களல்லவா? அதேமாதிரிதான் செங்கண்ணனும், கருங்கண்ணனும் என்னுடைய கடற்கரைச் சிநேகிதர்களாகத் தோன்றினார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் அவர்கள் மறைந்து விடவில்லை; கடற்கரைக்குப் போகும் போதெல்லாம் என் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டே இருந்தார்கள்.
அதிலும் என்மேல் அளவில்லாத நம்பிக்கை அவர்களுக்கு, அதற்குக் காரணம் என்னவென்றே புரியவில்லை எனக்கு. ஒருவேளை நான் வழக்கமாக அணிந்து வரும் கதராடைதான் காரணமாயிருக்குமோ?
இருக்கலாம். அவர்களுக்குத்தான்கதர் அணிந்தவன்களெல்லாம் காந்தி மகான்களாச்சே! அன்று மாலை நான் வழக்கம்போல் கடற்கரைக்குப் போய் சேர்ந்தபோது, செங்கண்ணனும், கருங்கண்ணனும் கட்டுமரத்துடன் கரையேறிக் கொண்டிருந்தார்கள். "என்ன செங்கண்ணா, இன்று எப்படி வேட்டை?" என்றேன் நான்.
"ஒன்னும் சொகம் இல்லைங்க, பாழாப்போன காத்து தான் இப்படி அடிச்சுத் தொலைக்குதே! கொஞ்சம் ஏமாந்தா ஆளையே தூக்கிகிட்டு இல்லே போயிடும்போல இருக்குது!" என்றான் செங்கண்ணன்.
"அதாச்சும் நடக்குதா, ஒரு நாளைப்போலப் பொறந்து பொறந்து சாகாம, ஒரேடியா செத்தாச்சும் தொலையலாம்!" என்றான் கருங்கண்ணன்.
நான் சிரித்தேன்.
"என்னா சாமி, சிரிக்கிறீங்க?"
"இன்னும் பத்து வருஷம் வாழ்ந்தால் தேவலை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் இன்றே செத்தால் தேவலை என்று நினைக்கிறீர்கள்?"
"யார் யாருக்கு எதிலே சொகம் கெடைக்குமோ அதிலேதான் ஆசை இருக்கும் சாமி?"
"அப்படியானால் உங்களுக்கு வாழ்வதில் ஆசை இல்லையா?"
"ஏது சாமி, வாழ்ந்தாத்தானே எங்களுக்கு அதிலே ஆசை இருக்கப்போவுது?"
"உங்களை யார் வாழவேண்டாம் என்கிறார்கள்? உழைத்தால் நீங்களும் உயரலாமே!"
அவன் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டேன் நான்.
"ஒழைச்சா ஒயராலாம்னு சொன்னீங்களே, அதுக்காகத் தான் சிரிச்சோம், சாமி!"
"ஏன், அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?"
"அது எப்படி இருக்கும் சாமி?சாமி, அவனவன் தலையெழுத்து எப்படியோ அப்படித்தானே எல்லாம் நடக்கும்?"
"சரி, உங்களுடைய தலையெழுத்து எப்படியிருக்கிறது?"
"நாங்க ஒழைச்சா நைனா முகம்மது ஒயரணும்னு இருக்குது சாமி!"
"அவன்யார், அவன்? இரண்டு வாரத்துக்கு முன்னால் இருளப்பன் தெருவிலே, ஏதோ ஒருவீட்டை எட்டாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தானே, அவனா?"
"ஆமாம் சாமி, நேத்துக்கூட இங்கே குதிரைவண்டியிலே வந்து இறங்கல, அவன்தான் சாமி!"
"அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"
"அதை ஏன் கேட்கறீங்க, சாமி! இப்போ விக்கிற விலைக்கு இந்தவலையிலே இருக்கிற மீன் அஞ்சுரூவாய்க்கு பஞ்சமில்லாம போவும். ஆனா என்ன பிரயோசனம்? மூணு ரூவாதானே கொடுக்கப் போறான் அந்தப் புண்ணியாத்மா"
"ஒரு கூடைமீன் ஐந்து ரூபாய்க்கு வாங்குபவனைவிட்டு விட்டு, நீங்கள் ஏன் மூன்று ரூபாய்க்கு வாங்கும் அவனுக்கு விற்கவேண்டும்? யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்கக் கூடாதா?"
"அது எப்படி முடியும், சாமி? போனமாசம் பொத்த லாப்போன குடிசையை பிரிச்சிக் கட்டிக்கிறதுக்காக ஆளுக்கு ஐம்பது ரூவா அவங்கிட்ட கடனா வாங்கிகிட்டோம். அதிலேயிருந்து நாங்க பிடிக்கிற மீனெல்லாம் கூடை மூணு ரூபா வீதம் அவனுக்கே கொடுக்கிறதுன்னும், கடனுக்காவத்தினம் ஒருரூவா கழிச்சிக்கிறதாப் பேச்சுங்க!"
"குடிசை போடும் போதே அதைப்பின்னால் பிரித்துக் கட்டவேண்டியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா? அதற்காக ஏன் முதலிலிருந்தே கொஞ்சங்கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது? அப்படிச் செய்திருந்தால் நைனா முகம்மதுவிடம் நூறு ரூபாய் கடனும் வாங்கியிருக்க வேண்டாம். தினசரி இரண்டு ரூபாய் நஷ்டத்துக்கு மீனையும் வீற்றிருக்க வேண்டாமல்லவா?"
"நெசத்தான் சாமி, பொறக்காம இருந்தா சாகாம இருக்கலாம், சாமி!"
"அதைத்தான் நானும் சொல்கிறேன். கடன் வாங்காமல் இருந்தால் கொடுக்காமல் இருக்கலாமல்லவா?"
"முடிஞ்சாத்தானே, சாமி? இன்னிக்குத்தான் பாருங்களேன், அவன் வந்து இந்தமீனை எடுத்துகிட்டுக் கடனுக்கு ஒருரூவா போக, பாக்கி ரெண்டு ரூவா தரப்போறான். ஆளுக்கு ஒண்ணா அதைத்தான் வீட்டுக்குக் கொண்டு போவோம்னா முடியாதுங்களே? காலையிலேயிருந்து கஷ்டப் பட்ட ஒடம்புக்குள்ளே கள்ளுத்தண்ணி போனாத்தான் சரிப்பட்டு வரேங்குது!"
"கஷ்டப்பட்டால் கள் குடிக்க வேண்டுமா, என்ன? உங்களைப்போல் கஷ்டப்படும் குதிரையும், மாடும் கள் குடிக்காதபோது நீங்கள் மட்டும் ஏன் குடிக்க வேண்டும்?"
"அதுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அது தானே சாமி? அதைக் கூடவா, சாமி ஒழிச்சிப்பிடணும்?
"அப்போது தான் உங்கள் கஷ்டம் ஒழியும்"
"கள் ஒழிச்சா கஷ்டம் ஒழிஞ்சுடுமா, சாமி? கஷ்டம் ஒழிஞ்சாத்தான்கள் ஒழியும்!"
"அப்படியானால் உங்களுடைய பெண்டாட்டி பிள்ளைக ளெல்லாம் ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?"
"அதுங்களே எங்கேயாச்சும் கூலிவேலை கீலிவேலை செஞ்சி வயித்தைக் கழுவிக்கும், சாமி"
"சரிதான், வருஷத்துக்கு ஒருதடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒருதடவையோபிள்ளை பெற்று வைப்பதோடு உங்கள் குடும்ப சேவை தீர்ந்து விடுகிறதாக்கும்!"
"ம், அதை நெனைச்சிப்பார்த்தா எங்களுக்கே வெட்கமாகத்தான் இருக்குது. என்ன செய்யறது!, சாமி?"
"என்ன செய்யவாவது! முதலில் நீங்கள் இந்தச் 'சாமி சாமி,' என்கிறதை விட்டுத் தொலைக்கணும்; என்னைப் போல நீங்களும் 'சாமிகள்தான்' என்று நினைத்துக் கொள்ளணும்!"
"சரி, நெனைச்சுக்கிட்டோம்!"
"அப்புறம் அந்த நைனாமுகம்மதுவைப் பற்றியும் நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்கவேண்டும். உங்களைப் போன்றவர்களிடம் மூன்று ரூபாய்க்கு வாங்கிய மீனை ஒன்பது ரூபாய்க்கோ, பன்னிரண்டு ரூபாய்க்கோ விற்று அவன் ஆயிரமாயிரமாகப் பணம் சேர்த்து விட்டான். இருக்க வசதியானவீடு, வேளாவேளைக்குச் சுகமான சாப்பாடு, வெளியே போய் வருவதற்கு குதிரைவண்டி எல்லாம் அவனுக்குக் கிடைத்து விட்டன. இத்தனைக்கும் உங்களைப் போல் அவன் ஒருநாளாவது கஷ்டப்பட்டதுண்டா? கிடையாது; கிடையவே கிடையாது. உழைத்துக் கொடுத்தவர்கள் நீங்கள்; உண்டு கொழுத்தவன் அவன். முதலில் உங்கள் மீனை விலைக்கு வாங்கிய அவன் பின்னால் உங்களையே விலைக்கு வாங்கி விட்டான்! ஆரம்பத்திலேயே நீங்கள் அவனிடம் கடனும் வாங்காமல் அதற்காக மீனையும் விற்காமல் இருந்திருந்தால் இன்று அவனைப்போல் நீங்களும் சௌகரியமாக வாழ்ந்திருக்கலாமல்லவா?
"அதெல்லாம் தம்மாலே ஆகிற காரியமா, சாமி?"
"என் ஆகாது சாமி, எல்லாம் முயன்றால் ஆகும், சாமி!"
"ம், அன்னிக்கி எழுதினதை அவன் அழிச்சா எழுதப் போறான்? நாங்க கஷ்டப்படணுங்கறது எங்க தலையெழுத்து; நைனாமுகம்மது சொகப் படணுங்கிறது அவன் தலையெழுத்து!" என்றான் அவன்.
எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்து விட்டது. 'கையெழுத்துக் கூடப் போடத் தெரியாத பயல்களெல்லாம் தலையெழுத்தைக் கட்டிக்கொண்டு அழும்வரை தமிழ் நாடாவது, உருப்படுவதாவது! என்று கறுவிக் கொண்டே, எழுந்து அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நடையைக் கட்டினேன்.
சிறைப் பறவை
"திருடுவதென்பது அவ்வளவு எளிதல்ல; அதிலும் எத்தனையோ தொல்லைகள் இருக்கத்தான் இருக்கின்றன!"
மூன்று முறைகள் சிறைவாசம் செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்தான் முத்து.
அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திருடவேண்டும்; அகப்பட்டுக்கொண்டால் அடி, உதைக்குத் தயாராக வேண்டும் அதற்கு மேல் விசாரனை, தண்டனை எல்லாம்!
விசாரணை என்றால் என்ன விசாரணை?' 'ஏன் திருடினான்; எதற்காகத் திருடினான்?' என்றா விசாரிக்கிறார்கள்? அப்படி விசாரித்தால்தான் பெரும்பான்மையான வழக்குகளில் அரசாங்கமே குற்றவாளியாகி, குற்றவான் நிரபராதியாகி விடுவானே? அதனால்தான் ஒருவன் திருடினான் என்றால், 'அவன் திருடியது உண்மைதானா?' என்று மட்டுமே விசாரிக்கிறார்களோ, என்னமோ?
'தண்டனை, தண்டனை' என்கிறார்களே, அந்தத் தண்டனை மட்டும் என்ன வாழுகிறதாம்? - திருந்துவதற்கா தண்டனை, திரு.னுக்கு? இல்லை, அதில் அவன் பயிற்சி பெறுவதற்கு! இல்லையென்றால் முதலில் மூன்று மாதம், பிறகு ஆறு மாதம், அதற்குப் பிறகு ஒரு வருஷம், இரண்டு வருஷம் என்று ஆயுள் முழுவதையும் சிறைவாசத்திலேயே சுழித்துவிடுகிறார்களே சில திருடர்கள், அதற்கு என்ன அர்த்தமாம்? - சிறை வாசத்தில் அவர்கள் பெற்ற பயிற்சி என்றுதானே அர்த்தம்?
எது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் - இனி, தான் திருடக்கூடாது - ஆம்; அவளுக்காகவாவது இனி, தான் திருடவே கூடாது!
அதைவிட அரை வீசை சிகைக்காய் வாங்கி அரைக்கலாம்; அரைத்த சிகைக்காய்ப் பொடியில் ஆறு படி அரிசித் தவிட்டையோ, அரக்குப் பொடியையோ வாங்கிக் கலக்கலாம்; ஆயிரமாயிரம் காலணா, அரையணா பொட்டணங்களாக அவற்றைக் கட்டலாம்; 'முத்து விலாஸ் சிகைக்காய்ப் பொடி தான் உலகத்திலேயே முதன்மையானது!' என்று கூசாமல் விளம்பரமும் செய்யலாம்; அதன் வாயிலாக லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு அதிபதியாகி, அந்த ரூபாய்களைக் கொண்டே அரசியல், கலை, இலக்கியப் பிரமுகராகி, 'பாரதரத்னா' பட்டத்தைக்கூடப் பெற்றுவிடலாம். அரசியலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்த அரசியல்வாதியாவது என்னைக் கேட்பானா? கலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்தக் கலைஞனாவது என்னைக் கேட்பானா? இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று எந்தப் புலவனாவது என்னைக் கேட்பானா?. ஊஹும், என்னைப் பார்க்கும்போதெல்லாம் தலையைச் சொறிந்து கொண்டும், கையைப் பிசைந்து கொண்டுமல்லவா நிற்பார்கள்?-தூ! மனிதர்களா இவர்கள்? 'ஆறாவது ' அறிவு' என்று ஏதோ ஒன்று இருக்கிறதாமே - அது இருக்கிறதா, இவர்களுக்கு ஊஹும், எனக்கு நம்பிக்கை இல்லை; இல்லவே இல்லை.
இப்படிப் பிழைப்பதும் ஒருவகையான திருட்டைச் சேர்ந்ததுதான் என்றாலும், இதற்கு விசாரணை கிடையாது, தண்டனையும் கிடையாது. அப்படியே இருந்தாலும் இருக்கவே இருக்கிறது 'சம்திங்' - அந்த 'அருமருந்தைக் கொடுத்து ஒரே அமுக்காக அமுக்கி விடலாம் - என்ன இருந்தாலும் வியாபாரத்தில் நாணயம் வேண்டும் என்று சிலர் சொல்லலாம். உண்மைதான்; நாணயம் 'நாணய'த்தில் வேண்டும்தான்! சரக்கில் அது எதற்கு? - 'வேண்டாம்' என்பதற்காகத் தானே ராஜாங்கத்தில் 'ராஜதந்திரம்' என்று ஒன்று இருப்பதுபோல வியாபாரத்தில் 'வியாபார தந்திரம்' என்று ஒன்று இருக்கிறது?'
ஆனால் இதுபோன்ற 'திருட்டுத் தொழில்'களுக்கு முதல் வேண்டும்; அந்த முதலுக்கு எங்கே போவது?
இதுவரை 'முதல் இல்லாத திருட்டுத் தொழிலைச் செய்து வந்த தனக்குத் தெரிந்த ஒரே வழி திருடுவதுதான்! அதையா மறுபடியும் ஆரம்பிப்பது? - சேச்சே, திருடுவதற்குச் சட்ட ரீதியான வழிகள் எத்தனையோ இருக்க, சட்ட விரோதமாகத் திருடுவானேன்?-கூடாது; கூடவே கூடாது.
முதலில் ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ளவேண்டும்; அந்த வேலையைக் கொண்டு ஏதாவது ஒரு வியாபாரத்துக்கு வேண்டிய முதலைத் தேடிக் கொள்ள வேண்டும் - அதற்குப் பிறகு? - நானும் அவளும் ஜோடி; வானில் பறக்கும் வானம்பாடி?
இப்படி நினைத்ததும் தனக்குத்தானே சிரித்து கொண்டான் அவன்.
"இன்னா வாத்தியாரே, சிரிக்கிறே?" திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் முத்து. கேட்டது வேறு யாருமல்ல; அவனுடைய சீடன் அபேஸ் அய்யாக்கண்ணு.
"டேய், அய்யாக்கண்ணு மரியாதையா சொல்றேன்-இனிமே நீ என்னை வாத்தியாரே கீத்தியாரேன்னு கூப்பிடக்கூடாது-ஆமாம், சொல்லிட்டேன்!"
"ஏன் வாத்தியாரே, அப்படி?"
"இனிமே நான் திருடப் போவதில்லே!"
இதைக் கேட்டதும் 'இடியிடி'யென்று சிரித்தான் அவன்.
"ஏண்டா, இளிக்கிறே?"
"இல்லே வாத்தியாரே, என் அம்மாகூட இப்படித்தான் சொன்னாளாம்!"
"எப்படி?"
"என்னைப் பெறப்போ, 'இனிமே நான் பிள்ளையே பெறப்போவதில்லேன்னு சொன்னாளாம். அப்புறம் என்னடான்னா, எனக்குப் பின்னாலே ஏழு பேரு; எட்டாவது பிள்ளை 'அண்டர் ப்ரொடக்ஷன்'லே!"
"அடடே இங்கிலீஷ்லே பேசக்கூடக் கத்து கிட்டியா, நீ?"
"எல்லாம் நீ குடுத்த பிச்சைதானே வாத்தியாரே?"
இந்தச் சமயத்தில் அங்கே வந்த காவலன் கந்தசாமி, "அட, முத்துவா! எப்போடா வந்தே, ஜெயில்லேருந்து?" என்று கேட்டான் வியப்புடன்.
"இன்னிக்குத்தான்!" என்றான் முத்து.
"நல்ல நாளும் அதுவுமாத்தான் வந்திருக்கே!"
"இன்னா இன்னிக்கு அப்படிப்பட்ட நல்ல நாளு?"
"மயிலாப்பூரிலே அறுபத்துமூவர் திருநாளாச்சேடா, இன்னிக்கு! உனக்குத் தெரியாதா? போபோ, சீக்கிரம் போ! ஏதாச்சும் கெடச்சா என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ"
"உங்களைக் கவனிக்க வேண்டியதுதான்! வாங்கறதையும் வாங்கிக்குவீங்க, ஆளையும் காட்டிக் கொடுத்திடுவீங்க இல்லே? உங்களை அவசியம் கவனிக்க வேண்டியதுதான்!"
"வாங்கறது வயித்துக்கு; காட்டிக் கொடுக்கறது பொழைப்புக்கு"
"நல்ல பொழைப்பு பொழைச்சீங்க, போங்கய்யா!" என்று சொல்லிக்கொண்டே, அதுவரை உட்கார்ந்திருந்த அந்தச் சுமைதாங்கியை விட்டு எழுந்து நடந்தான் முத்து.
"எங்கே வாத்தியாரே, கௌம்பிட்டே?" என்று கேட்டுக் கொண்டே, அவனைத் தொடர்ந்தான் அபேஸ் அய்யாக்கண்ணு.
"சொல்லச் சொல்லப் பேச்சுக்குப் பேச்சு என்னை 'வாத்தியாரே, வாத்தியாரே!'ன்னா கூப்பிட்டுகிட்டிருக்கே? உதைக்கிறேன் பாரு, உன்னை! என்று திரும்பினான் முத்து.
"இந்தக் கழுதை புத்தி உனக்கு எப்போ வந்துச்சி, வாத்தியாரே?" என்றான் அவன் மீண்டும்.
"இப்போத்தான்!" என்று முத்து உதைக்க, அந்த உதையிலிருந்து அவன் லாகவமாகத் தப்பி ஓட, இருவரும் பிரிந்தார்கள்.
★★★
இது என்ன வேடிக்கை! - வழியில் தன்னைக் கண்டவர்க ளெல்லாம் ஒதுங்கி நடக்கிறார்களே? பெண்களில் சிலர் தன்னைப் பீதியுடன் பார்க்கிறார்களே? குழந்தைகள் கை கொட்டிச் சிரிக்கின்றனவே? அவற்றில் சில தன்னைக் கல்லால்கூட அடிக்கின்றனவே?
ஒரு வேளை .......
அருகிலிருந்த முடி திருத்தகத்துக்குள் அவசர அவசரமாக நுழைந்து, தன் அழகைக் கண்ணாடியில் பார்த்தான் முத்து - சந்தேகமென்ன, அசல் பைத்தியம்தான்!
இந்தக் கோலத்தில் எங்கேயாவது போனால் தனக்கு வேலையா கொடுப்பார்கள்? பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் 'போன்'தான் செய்வார்கள்!
முதலில் இந்தத் தாடி - மீசையை வழித்துக் கொள்ள வேண்டும்; அதற்குப் பிறகு இந்தக் கிழிந்த வேட்டி-சட்டைக்குப் பதிலாக வேறொரு வேட்டி-சட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் - அதற்குப் பிறகுதான் வேலை, கல்யாணம் எல்லாம்!
இவற்றுக்கெல்லாம் காசு? - எதைத் தேட வேண்டுமானாலும் முதலில் அதையல்லவா தேட வேண்டியிருக்கிறது?
'கல்யாணமானால் பைத்தியம் தெளியும்; பைத்தியம் தெளிந்தால் கல்யாணமாகும்' என்ற கதையாகவல்லவா இருக்கிறது என் கதை?
முடி திருத்தகத்தை விட்டுக் கீழே இறங்கினான் முத்து. அவனுக்கு எதிர்த்தாற்போல் ‘ஒத்துழையாமை இயக்க'த்தில் ஈடுபட்டிருந்த கார் ஒன்று அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது - காரணம் தன்னைத் தள்ள முயன்ற முதலாளியை அது கீழே தள்ளிவிட்டு, 'என்னையாதள்ளுகிறாய்?' என்பது போல் ஓர் உறுமல் உறுமி நின்றதுதான்!
வெட்கத்துக்கு அஞ்சி விழுந்த வேகத்தில் எழுந்து நின்ற முதலாளியை நெருங்கி, "நான் தள்ளட்டுமா, ஸார்?" என்றான் முத்து.
"தள்ளப்பா, தள்ளு!" என்றார் முதலாளி, சட்டையில் ஒட்டிக்கொண்ட மண்ணைத் தட்டி விட்டுக்கொண்டே.
"நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய் விட மாட்டீர்களே" என்றான் முத்து, தலையைச் சொறிந்து கொண்டே.
"ஏன், அது மட்டும் போதாதா உனக்கு?" என்றார் முதலாளி குறுநகையுடன்.
"போதாது ஸார்! அந்த ‘நன்றி'க்குப் பெட்டிக் கடைக்காரன்கூட 'ஒரு பீடி' கொடுக்க மாட்டேன் என்கிறான், ஸார்!" என்றான் முத்துவும் அதே குறு நகையுடன்.
"சரி, தள்ளு! நன்றியோடு நாலணாவும் சேர்த்துத் தருகிறேன்"
"ரொம்ப சந்தோஷம், ஸார்! நீங்கள் ஏறுங்கள், வண்டியில்!" என்று வரிந்து கட்டிக்கொண்டு அவருடைய காரைத் தள்ளினான் முத்து.
கார் கிளம்பிற்று -ஆனால் முதலாளி?-நிற்க வில்லை; போயே போய்விட்டார்!
அட கடவுளே! இல்லாதவன்தான் ஊரை ஏமாற்றுகிறான் என்றால் இருப்பவனுமா ஊரை ஏமாற்றவேண்டும்? - இருக்கட்டும், இருக்கட்டும்; அந்த ஒரு வகையிலாவது அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கட்டும் - இப்படி நினைத்துக்கொண்டே மேலே நடந்தான் முத்து.
அதுவரை 'பசி, பசி' என்று முனகிக்கொண்டிருந்த அவன் வயிறு, இப்போது 'பசி! ஐயோ, பசி' என்று அலறவே ஆரம்பித்துவிட்டது.
அகில உலகையும் ஆண்டவன் ஆட்டி வைக்கிறானாம்-பொய்; சுத்தப் பொய்! பசி அல்லவா அகில உலகையும் ஆட்டி வைக்கிறது? - இதற்கு எதை நான் இப்போது 'புசி!' என்று கொடுப்பது?
வேலை கிடைப்பதற்கு முன்னால் அவளையும் பார்ப்பதற்கில்லை; பார்த்தால் சீறுவாள்! - திருடுவது அவ்வளவு பெரிய குற்றமாகப் படுகிறது அவளுக்கு! - பாவம், உலகத்திலுள்ள ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு விதத்தில் திருடத்தான் திருடுகிறான் என்பது அவளுக்குத் தெரியுமா, என்ன?
போகட்டும்; என்னைப் போன்றவர்களைத் தவிக்க விடுவதற்கென்றே எல்லாவற்றையும் தனி உடைமையாக்கிக் கொண்டு விட்ட மனிதன், தண்ணீரையாவது இன்றுவரை பொதுவுடைமையாக விட்டு வைத்திருக்கிறானே - அதுகூடவா உதவாமல் போய்விடும் தன் பசிக்கு? சுற்றுமுற்றும் பார்த்தான் முத்து; சற்றுத் தூரத்திலிருந்த தெருக்குழாய் ஒன்று 'வா அப்பனே, வா!' என்று அவனை அன்புடன் அழைப்பது போலிருந்தது - சென்றான்; திறந்தான்; குடித்தான்; நடந்தான்!
"ஏண்டாப்பா, இந்த அரிசி மூட்டையைக் கொஞ்சம் தூக்கிண்டு வர்றியா?"
பலசரக்குக் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பாட்டியின் வேண்டுகோள் இது; அந்த வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு விட்டான் முத்து.
இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள்; வீடு வந்து சேர்ந்ததும், "மகாராஜனாயிருப்பே! போய் வா; கோடி புண்ணியம் உனக்கு!" என்று அவனை வாயாற, மனமாற ஆசீர்வதித்து அனுப்பப் பார்த்தாள் பாட்டி.
"ஐயோ எனக்கு ஆசீர்வாதம் வேண்டாம் பாட்டி, கூலி ஏதாச்சும் கொடு!" என்று அலறினான் முத்து.
"கையை நீட்டிக் காசு வாங்கினா, நீ செய்த புண்ணியத்துக்குப் பலன் இல்லாமற் போய்விடுமேடா! போற வழிக்குப் புண்ணியம் வேண்டாமோ, உனக்கு?"
"வேண்டாம் பாட்டி, இருக்கிற வழிக்கு ஏதாச்சும் கெடைச்சாப் போதும்"
மூக்கால் அழுது கொண்டே பாட்டி கொடுத்த இரண்டணாவை வாங்கிக்கொண்டு, அடுத்தாற் போலிருந்த தேநீர் விடுதிக்குள் நுழைந்தான் முத்து. ஓரணாவுக்குப் பன்; ஓரணாவுக்கு டீ - தீர்ந்தது அவனுடைய பசிப் பிரச்னை, அப்போதைக்கு!
தேவலையே, இந்தக் கூலிப் பிழைப்பு!-இந்தப் பிழைப்பைக் கொண்டே தாடி மீசைப் பிரச்னையையும் வேட்டி-சட்டைப் பிரச்னையையும்கூடத் தீர்த்துக்கொண்டு விடலாம் போலிருக்கிறதே?
அவ்வளவுதான்; 'கூலி வேணுமா ஸார், கூலி? கூலி வேணுமா ஸார், கூலி?' என்று எங்கெல்லாம் கூலி கிடைக்குமோ, அங்கெல்லாம் கூவிக் கூவிக் அலைய ஆரம்பித்துவிட்டான் அவன்!
★★★
பத்துப் பதினைந்து நாட்கள் படாத பாடு பட்ட பிறகு அவனால் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி முழுசாக ரூபா ஐந்துதான் சேர்க்க முடிந்தது. உடனே ஒரு 'மரத்தடி ஸலூ'னைத் தேடிப் பிடித்து நாலணாவுக்கு முடி வெட்டிக்கொண்டான்; பாக்கியிருந்த ரூபா நாலே முக்காலுக்குத் தகுந்தாற் போல் வேட்டி-சட்டையும் வாங்கிக் கொண்டான்-இனி வேலை தேட வேண்டியதுதான் பாக்கி!
அதற்காக யார் யாரையோ 'காக்கா' பிடித்துப் பார்த்தான். அவர்கள் 'கவனிக்கிறேன், கவனிக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு வந்ததைப் பார்த்தால், அவன் கண்ணை மூடும் வரை அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் போல் தோன்றிற்று. எனவே அவர்களை விட்டுவிட்டு அவன் 'வேலை தேடித் தரும் ஸ்தாபனத்தின் உதவியை நாடினான். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரச்சொல்லி அவர்கள் அவனுடைய காலை ஒடித்தார்களே தவிர, வேலை தேடித் தரவில்லை!
அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தெருவில் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோதுதான் ஓர் 'ஐஸ் - கிரீம் வாலா'வின் சிநேகம் அவனுக்குக் கிடைத்தது.
தங்களுக்கிருந்த குறைகளை அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்ட பிறகு, அந்த ஐஸ்-கிரீம் வாலா கேட்டான்:
"உன்னால் பத்து ரூபா முன் பணமாகக் கட்ட முடியுமா?"
"கட்டினால் என்ன கிடைக்கும், வேலை கிடைத்துவிடுமா?" என்று ஆவலுடன் கேட்டான் முத்து.
"கிடைக்கலாம்" என்றான் அவன்.
"அப்போதும் சந்தேகம்தானா, என்ன வேலை அது?"
"என்னைப்போல் ஐஸ்-கிரீம் வண்டி தள்ளும் வேலைதான்"
"சம்பளம்?"
"சம்பளம் என்று ஒன்றுமில்லை; கமிஷன்!"
"கமிஷனா, அதில் என்ன கிடைக்கிறது, உனக்கு?"
"தினம் இரண்டு ரூபாய்க்குப் பஞ்சமில்லை!"
முத்து யோசித்தான்; "என்னயோசிக்கிறாய்?" என்று கேட்டான் அவன்.
"ஒன்றுமில்லை; இந்த வேலை செய்தால் அவள் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாளா என்று தான் யோசிக்கிறேன்!" என்றான் முத்து.
"அவள் வேறு இருக்கிறாளா, உனக்கு?"
"இருக்கிறாள், இருக்கிறாள்"
"அதனால் என்ன? 'எங்கே வேலை?' என்று கேட்டால், 'ஹிமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனியிலே' என்று சொல்; 'என்ன வேலை?' என்று கேட்டால், 'சேல்ஸ்மேன் வேலை' என்று சொல்!"
"சேல்ஸ்மேன்! - எதையும் இங்கிலீஷிலே சொன்னால் கொஞ்சம் மதிப்பாய்த் தான் இருக்கும் போலிருக்கிறது!"
"அதுதான் அங்கே பாய்ண்ட்!" என்று அதிலிருந்து 'பாய்ண்ட்'டை எடுத்துக் காட்டிவிட்டு, "ஆனால் ஒன்று!" என்று இழுத்தான் அவன்.
"என்ன?" என்று கேட்டான் முத்து.
"அந்த வேலைக்கும் ஏகப்போட்டி, அங்கே! இந்த மாதக் கடைசியில் நான் அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகிறேன் என்கிற விஷயம் எப்படியோ வெளியே தெரிந்துவிட்டிருக்கிறது. தினம் இரண்டு பேராவது வந்து, 'இந்த வண்டியை எனக்குக் கொடுத்துவிடுங்கள், இந்த வண்டியை எனக்குக் கொடுத்துவிடுங்கள்!' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் நீ வெல்ல வேண்டுமானால் முப்பதாம் தேதி மாலை ஆறு மணிக்குள் ரூபா பத்து கொண்டு வந்து முன் பணமாகக் கட்டிவிடவேண்டும் - என்ன, முடியுமா?"
"அட, கடவுளே! முப்பதாம் தேதிக்கு இன்னும் பத்து நாட்கள் தானே இருக்கின்றன?"
"ஏன் முடியாதா? - முடியாதென்றால் சொல்லி விடு; வேறு யாருக்காவது கொடுத்துவிடச் சொல்கிறேன்"
"முடியுமென்றால்?"
"அண்ணன்-தம்பி என்று சொல்லி, எனக்குப் பதிலாக உன்னை நான் அங்கே வைத்துவிடுவேன்!"
"சரி, உன் விலாசத்தைக் கொடு; முப்பதாம் தேதிக்குள் உன்னை நான் முன் பணத்துடன் வந்து பார்க்கிறேன்"
"என் விலாசம் எதற்கு? நீ என் கம்பெனி விலாசத்துக்கே வந்துவிடலாமே?" என்றான் அவன்.
"சரி!" என்று கிளம்பினான் முத்து.
★★★
நாளை தேதி முப்பது! - உணவு விஷயத்தில் ‘ஒட்டகத்தின் முறை'யைக் கையாண்டு இன்றுவரை எப்படியோ எட்டரை ரூபா சேர்த்து விட்டான் முத்து. இன்னும் ஒன்றரை ரூபா வேண்டுமே? நாளை ஒரே நாளில் கிடைத்து விடுமா, அது?. கிடைக்காவிட்டால்.......
அந்த வேலை மட்டுமா கிடைக்காமல் போய் விடும், தனக்கு? அவளுமல்லவா கிடைக்காமல் போய் விடுவாள்? - அதற்குப் பிறகு நாலு பேரைப் போலத் தானும் நாணயமாக வாழ்வதுதான் எப்படி?
'எதற்கும் முயன்று பார்ப்போம்?' என்று எண்ணித் துணிந்தவனாய், அன்று ஊரடங்கும் வரை தெருத் தெருவாய்ச் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, வழக்கம்போல் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குத் திரும்பினான் படுக்க!
வி.க.-28 ஆம், செத்த பிறகு போக வேண்டிய இடத்திற்கு அவனைப் போன்றவர்கள் உயிரோடிருக்கும் போதே போய்விடுவார்கள்!-'ஏன்?' என்று கேட்கிறீர்களா?- வேறு எங்கேயாவது படுத்தால்தான், 'நீ யார், எந்த ஊர், எங்கே வந்தாய், என்ன செய்கிறாய்?' என்றெல்லாம் குடைந்து குடைந்து கேட்டு, அவனைச் சந்தேகத்தின் பேரால் உள்ளே தள்ளி விடுவார்களே!
இந்த ஆபத்திலிருந்து தன்னைக்காத்து வந்த அந்தச்சுடுகாட்டை அன்று அவன் அடைந்தபோது மணி பத்துக்கு மேல் இருக்கும் அவனை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டிருந்த 'ஓசிப் பீடித்தோழர்' ஒருவர், "என்ன அண்ணாச்சி, இன்னிக்கு இம்மா நேரம்" என்றார் கொட்டாவி விட்டுக் கொண்டே.
அவர் கேட்பதற்கு முன்னால் அவரிடம் ஒரு பீடியை எடுத்து நீட்டிவிட்டு, "ஒண்ணரை ரூபா காசுக்காக ஊரடங்கும் வரை சுற்றினேன்; ஒண்ணும் கெடைக்கல்லே!" என்றான் முத்து.
"எழும்பூர் ஸ்டேஷன் பக்கம் போய்ப் பார்க்கிறதுதானே?"
"அங்கேதான் ஏகப்பட்ட 'போர்ட்டர்'கள் இருப்பானுங்களே?"
"அவனுங்க கைவரிசையெல்லாம் ஸ்டேஷனுக்குள்ளேதான்; நீ வெளியே போய் நின்று பாரு!"
"வெளியேதான் டாக்ஸி, ஆட்டோ, ஜட்கா, ரிக்ஷான்னு எத்தனையோ இருக்கே, அத்தனையையும் விட்டுட்டா என்னைத் தேடி வரப் போறாங்க?"
"உனக்குத் தெரியாது அண்ணாச்சி! அத்தனை வண்டி அங்கே இருந்தும் காலை நேரத்திலே அவசரத்துக்கு ஒரு வண்டிகூடக் கெடைக்காம அவதிப் படறவங்க அங்கே ரொம்பப் பேரு!"
"சரி, அதையும் பார்த்து விட்டால் போச்சு!" என்றான் முத்துவும் கொட்டாவி விட்டுக் கொண்டே.
அதற்குமேல் இருவரும் பேசவில்லை; பேசினால் தன்னிடமுள்ள எட்டரை ரூபா விஷயம் எங்கே தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் அவனுக்கு! - மாஜி திருடனாயிருந்தாலும் திருட்டுப் பயம் அவனை மட்டும் விட்டுவிடுமா, என்ன?
★★★
மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே எழுந்து, எழும்பூர் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் முத்து. 'ஓசிப் பீடித் தோழரின் யோசனை வீண் போகவில்லை; அன்று மத்தியானத்துக்குள் ஒரு ரூபா கிடைத்து விட்டது அவனுக்கு!
இன்னும் எட்டே அணாக்கள்.......
வெளியூர் பஸ் நிலையத்துக்குப் போனால் எளிதில் கிடைத்துவிடுமே அது? - அவ்வளவுதான்; எடுத்தான் ஓட்டம், பஸ் நிலையத்திற்கு!
அங்கே பெட்டியும் படுக்கையுமாக ஓர் உல்லாசப் பேர்வழி நின்று, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி, “கூலி வேணுமா ஸார், கூலி?” என்றான் முத்து, வழக்கம்போல்.
"எடுத்துக் கொள்!" என்று கீழே வைக்கப்பட்டிருந்த பெட்டி படுக்கையைச் சுட்டிக் காட்டி விட்டு அவர் நடந்தார்.
"ரொம்ப தூரம் போகணுமா, ஸார்?"
இதை அவன் கேட்டிருக்க மாட்டான்; ஆறு மணிக்குள் 'இமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனிக்'குப் போகவேண்டும் என்ற கவலை அவ்வாறு கேட்க வைத்துவிட்டது, அவனை!-அதை அறிவாரா அந்த உல்லாசப் பேர்வழி? - "ரொம்ப தூரம் போக வேண்டுமென்றால் உன்னை ஏண்டா கூப்பிட்டிருக்கப் போகிறேன்? நீ ஏதாவது ஒரு 'டாக்ஸி ஸ்டாண்'டருகே என்னை விட்டுவிடு, போதும்!" என்றார் சுடச்சுட.
"அங்கே 'டாக்சி ஸ்டாண்டு' என்கிற போர்டு மட்டும்தான் இருக்கும் ஸார், டாக்சி இருக்காது!" என்றான் அவன் சிரித்துக் கொண்டே.
"ரோடில் எவனாவது காலியாக வரமாட்டானா? - வா, பார்ப்போம்!" என்றார் அவர்.
இருவரும் வெளியூர் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள் - முத்து சொன்னபடி, 'டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸி இல்லை!
"யு ஆர் கரெக்ட்!" என்று ரோடைப் பார்த்தார் அவர்; எத்தனையோ டாக்ஸிகள் வருவதும் போவதுமாய்த்தான் இருந்தன; ஆனால் ஒன்றாவது அவருடைய கை தட்டலைக் கேட்டு நிற்க வேண்டுமே?-ஊஹும்!
"சரி, 'ஓட்டல் தி ஹெவ'னுக்கு நீயே வந்து விடுகிறாயா?" என்றார் அவர்.
"வருகிறேன், ஸார்!" என்றான் அவன்.
இருவரும் மேலே நடந்தார்கள். ஹோட்டலை அடைந்ததும் பெட்டி - படுக்கையை இறக்கிக் கீழே வைத்துவிட்டுக் கையை நீட்டினான் முத்து. அவன் நீட்டிய கையில் நாலணாவை எடுத்துப் போட்டு விட்டுத் திரும்பினார் உல்லாசப் பேர்வழி.
"ஸார், ஸார்! இன்னும் ஒரே ஒரு நாலணா-தர்மத்துக்குக் கொடுப்பது போல் கொடுங்கள் - ஒரு முக்கியமான காரியத்துக்கு வேணும்!" என்று பல்லைக் காட்டினான் அவன்.
"நாலணா என்ன, நாலு ரூபாயே வேண்டியிருக்கும் உனக்கு! அதற்கெல்லாம் நானா ஆளு? போ, போ!"
"கோபித்துக் கொள்ளாதீர்கள்; கொஞ்சம் தயவு செய்யுங்கள்!"
"தயவாவது, தாட்சண்யமாவது?- இந்தக் கூலிக்காரர்களே இப்படித்தான்; லேசில் ஆளை விட மாட்டார்கள்- இப்போது நீ மரியாதையாகப் போகிறாயா, இல்லையா?" என்று கத்தினார் அவர்.
"வேறு நாளாயிருந்தால் உங்களை இவ்வளவு கோபத்துக்கு உள்ளாக்கி யிருக்கமாட்டேன், ஸார் இன்று ஓர் அவசரம்; அவசியம்; அதனால்தான் கேட்கிறேன் - ஒரே ஒரு நாலணா!" என்று கெஞ்சியபடி அழவே ஆரம்பித்துவிட்டான் அவன்.
"நாலணா கிடைக்காது உனக்கு, நாலு அறைதான் கிடைக்கும்!" என்று கையை ஓங்கினார் அவர்.
அதற்குள் பொறுமை இழந்த ஹோட்டல் முதலாளி, "அவனுடன் ஏன் ஸார், அனாவசியமாகத் தகராறு? பேசாமல் போலீசுக்குப் போன் செய்வதை விட்டு விட்டு?" என்று 'பெரிய மனிதத் தோரணை'யோடு சொல்லிக்கொண்டே, 'ரிஸிவ'ரைக் கையில் எடுத்தார்.
பாவம், அதற்கு மேல் என்ன செய்வான் முத்து? - அழுத கண்ணீரைத்துடைத்துக்கொண்டே திரும்பினான்; 'ஒரே ஒரு நாலணா, ஒரே! ஒரு நாலணா! என்று பித்துப் பிடித்தவன் போல் பிதற்றிக் கொண்டே அங்குமிங்குமாக அலைந்தான் ஆனால் என்ன பிரயோசனம்? மணி ஐந்தரையாகியும் அந்த ஒரே ஒரு நாலணா அவனுக்குக் கிடைக்கவில்லை!
ஆயிற்று - மணி ஐந்து முப்பத்தைந்து, ஐந்து நாற்பது, ஐந்து நாற்பத்தைந்தும் ஆயிற்று.......
பதினைந்து நிமிஷமாவது வேண்டாமா, ஹிமாலயா ஐஸ்-கிரீம் கம்பெனிக்குச் செல்ல?
வேண்டும்தான்!-ஆனால் அதற்குள் அந்த நாலணா, ஒரே ஒரு நாலணா தனக்குக் கிடைத்து விடுமா?
நம்பிக்கை கைவிட்டாலும், நப்பாசை அவனைக் கைவிடவில்லை - ஓடினான்; தேடினான் - அந்த ஒன்பதே முக்கால் ரூபாய்க்கு மேல் ஒரு காசும் சேரவில்லை!
டிங், டாங்! டிங், டாங்! டிங், டாங்! - தன்னை மறந்து திரிந்து கொண்டிருந்த முத்துவை மாதாக் கோயிலின் மணியோசை தடுத்து நிறுத்தியது-இனி பிரயோசனமில்லை; இனி அந்த நாலணா, ஒரே ஒரு நாலணா கிடைத்தும் பிரயோசனமில்லை!
அவன் போய்விட்டிருப்பான்; அவனுடைய வேலையும் அவன் கையை விட்டுப் போய்விட்டிருக்கும்......
வெறுப்பு ஒரு பக்கம்; வேதனை இன்னொரு பக்கம்-இந்த இரண்டும் சேர்ந்தாற்போல் தன் இயத்தில் கொதித்து எழுந்த வேகத்தில் அவன் அந்த உல்லாசப் பேர்வழியை மட்டுமா, உலகத்தையே சபித்தான் - பாவம், உலகம் என்ன செய்யும்?- 'திருடுவதற்கு எத்தனை சந்தர்ப்பங்கள் வேண்டுமானாலும் அளிப்பேன்; திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பங்கூட அளிக்க மாட்டேன்' என்று மனிதன் ஒற்றைக் காலில் நிற்கும்போது!
★★★
எளிதில் சமாளித்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்துடன் கால்கள் போன வழி நடந்து வந்த முத்துவை, சினிமா தியேட்டர் ஒன்று கவர்ந்து இழுத்தது - அடேயப்பா! என்ன கூட்டம், என்ன கூட்டம்! - வெறும் நிழலைப் பார்த்து மயங்க இத்தனை கூட்டமா?
ம், எதுவாயிருந்தால் என்ன? - பொழுது சீக்கிரம் போக மாட்டேன் என்கிறது இவர்களுக்கு! ஆனால் தன்னைப் போன்றவர்களுக்கோ? - அதே பொழுது சீக்கிரம் போய்விடுகிறது!
விஷயம் ஒன்றுதான்; ஆனால் வித்தியாசம்?
இந்த 'ஆறு மணி' மட்டும் தனக்காக இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால்? - அந்த நாலணா, அந்த ஒரே ஒரு நாலணாதனக்குக் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாமல்லவா?
சரி, அதைப் பற்றி இப்போது எண்ணி பிரயோசனம்?-இழந்த சந்தர்ப்பம் இழந்ததுதான்!
இப்படி நினைத்தவனாய் அவன் மேலே ஓர் அடி எடுத்து வைத்தபோது, திருடன், திருடன்! பிடியுங்கள், பிடியுங்கள்! என்று யாரோ அலறும் சத்தம் - அதே உல்லாசப் பேர்வழி, தன்னை ஹோட்டல் ஹெவனுக்கு அழைத்துக்கொண்டு வந்த அதே உல்லாசப் பேர்வழி, தனக்கு சற்று தூரத்தில் ஓடும் ஒருவனைச் சுட்டிக் காட்டி மேற்கண்டவாறு அலறிக் கொண்டிருந்தான்!
அதற்குள் அவனைச் சூழ்ந்து கொண்ட ஒரு கூட்டம், "திருடனா! ஏதாவது அடிச்சிகிட்டுப் போயிட்டானா, என்ன?" என்று 'துக்கம் விசாரிக்க' ஆரம்பித்தது.
"ஆமாம், ஸார்! என் பர்ஸை அடிச்சிகிட்டுப் போயிட்டான், ஸார்!" என்றான் அவன் அழமாட்டாக் குறையாக.
"எவ்வளவு இருந்தது, அதில்?" என்று குத்திக் கிளறினார். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.
"நானூறு ரூபாய்க்குமேல் இருக்கும், ஸார்!" -இது அவனுடைய பிரலாபம்!
"ச்சோச்சோ! அத்தனை ரூபாயை எடுத்துக் கொண்டு இந்த மாதிரி இடத்துக்கு வரலாமா, ஸார்?" - அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இன்னொரு வருடைய அனுதாபம் இது!
இந்தப் பிரலாபமும் அனுதாபமும்தான் அங்கே எதிரொலித்தனவே தவிர, திருடனைப் பிடிக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை -அந்தச்சமயம் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரே ஒரு போலீஸ்காரரைத் தவிர!
அவர்தான் என்ன செய்வார், பாவம்!-ஓடும் திருடனின் கையிலே மின்னிக்கொண்டிருந்த கத்தி அவரையும் அவ்வளவு எளிதில் அவனை நெருங்க விடாதபோது?
இவையனைத்தையும் ஒரு கணம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற முத்து, 'பைத்தியக்காரர்கள்! ஓடுபவனின் கையில் 'பர்ஸ்' இருக்காது என்கிற 'தொழில் நுட்பம்' இவர்களுக்கு எப்படித் தெரியும்?' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். பிறகு, அந்த உல்லாசப் பேர்வழியைச் சுற்றி நின்ற கூட்டத்தை நோக்கி ஒரு நோட்டம் விட்டான் - அவ்வளவுதான்; எடுத்த ஆசாமி புலப்பட்டு விட்டான் அவனுடைய எறும்புக் கண்களுக்கு! - உடனே பாய்ந்து சென்று அவனிடமிருந்த பர்ஸைப் பிடுங்கி அந்த உல்லாசப் பேர் வழியிடம் கொடுத்துவிட்டு, "ஏமாந்து நானூறு ரூபா கொடுத்தாலும் கொடுப்பீர்கள்; ஏமாறாமல் ஒரு நாலணா, ஒரே ஒரு நாலணாகூடக் கொடுக்க மாட்டீர்கள், இல்லையா?" என்றான் அவன்.
இதைக் கேட்டதும் அவன் எதிர்பார்த்தபடி அந்த உல்லாசப் பேர்வழி அவமானத்தால் குன்றிஅப்படியே நின்றுவிடவில்லை-அந்த மான அவமானமெல்லாம்தான் அவனைப் போன்றவர்களுக்குக் கிடையாதே? அவற்றைத்தான் தங்கமாகவும், வைரமாகவும், நோட்டுக் கற்றைகளாகவும் அவர்கள் மாற்றிக்கொண்டு விடுகிறார்களே? - எனவே, முத்து கொடுத்த ‘மணிபர்'ஸை முத்துவின் கையிலேயே வைத்து மூடிப் பிடித்துக்கொண்டு, "எல்லாம் உன்னுடைய திருவிளையாடல்தானா? இந்த நாடகமெல்லாம் என்னிடம் பலிக்காது!" என்று உறுமிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தான் அவன்.
"அகப்பட்டுக் கொண்டானா, ஆசாமி?" என்று நீட்டி முழக்கிக் கேட்டுக்கொண்டே அவனுக்கு அருகில் வந்தார் ஒருவர்.
"அதுவும் சும்மாவா, கையும் களவுமாக!" என்றார் அவரைத் தொடர்ந்து வந்த இன்னொருவர்.
அதற்குள் அங்கே வந்த ஸி.ஐ.டி. ஒருவன், 'வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை ; அதற்குள் ஆரம்பித்துவிட்டான், தன் கை வரிசையைக் காட்ட!' என்று 'முத்தாய்ப்பு' வைத்தபடி முத்து வின் கழுத்தில் கையை வைத்துத் தள்ளிக்கொண்டே எதிர்த்தாற்போலிருந்த போலீஸ் வா'னை நோக்கி நடந்தான்.
"இல்லை ஸார், நான் திருடவே யில்லை, ஸார்!" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் முத்து - கேட்கவில்லை; போலீஸார் கேட்கவேயில்லை!
★★★
ஏண்டா, திருட்டுப் பயலே! உள்ளே எப்படியிருந்தாலும் வெளியே ‘அந்தஸ்து வாய்ந்த பிரமுக'ராக விளங்கும் அந்த உல்லாசப் பேர்வழியின் வார்த்தைக்கு முன்னால் உன்னுடைய வார்த்தை எடுபடுமாடா?-போ! திருந்தியது போதும்; நீ திருடனாகவே சிறைக்குப் போ!
திருப்தி
நண்பர் நட்-'நட்'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் 'நடேசன்' என்ற பெயரைத் தான் 'நட்' என்று 'ரத்தினச் சுருக்க'மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர்.
காரணம், தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் கவிதை எழுதுவதை அகௌரவமாக எண்ணி, அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டது தான்!
இதனால் ஆங்கில நண்பர்கள் மட்டுமல்ல; ஆங்கில நாணயங்களான பவுன், ஷில்லிங் பென்ஸும் அவருக்குத் தாராளமாகக் கிடைத்து வந்தது.
எனினும், அந்த நோபல் பரிசை-உலகம் முழுவதும் ஒரே நாளில் தன்னை அறிமுகப்படுத்தி வைத்து விடும் சக்தி வாய்ந்த அந்த நோபல் பரிசை-ஒரு முறையேனும் தட்டிக்கொண்டு விடவேண்டும் என்ற கட்டுங்கடங்காத ஆசை அவருக்கு. இதனால் அந்தப் பரிசுக்குரிய காலம் வரும்போதெல்லாம் அதை ஆவலுடன் எதிர்பார்ப்பதும், எதிர்பார்த்து ஏமாற்ற மடைவதும் அவருக்கு வழக்கமா யிருந்துவந்தது.
★★★
ஒரு நாள், 'வீடு வேண்டும்; பெரிய வீடாக வேண்டும்!' என்று தம் கைகள் இரண்டையும் அகல விரித்துக்காட்டிக்கொண்டே வந்தார், நண்பர் நட்.
"நீங்கள் நான்கு பேர்தானே இருக்கிறீர்கள்? இப்போதிருக்கும் வீடு போதவில்லையா, உங்களுக்கு?" என்றேன் நான்.
"எங்களுக்காகக் கேட்கவில்லை, நான். லண்டன் நண்பர் பட் என்பார் வரப்போகும் வசந்த காலத்தின்போது இந்தியாவுக்கு வருகை தரப் போவதாக எழுதியிருக்கிறார். கிடைத்தற்கரிய அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நான் அவருக்கு ஒரு நாள் விருந்து வைக்கலாமென்று நினைக்கிறேன். இப்போதிருக்கும் வீடு அதற்குத் தகுதியாயிருக்கும் என்று தோன்றவில்லை. எனவே தான்......."
"பாக்ஸ் ரோடில் ஏதோ ஒரு பங்களா காலியாயிருப்பதாகச் சொன்னார்கள், சாயந்திரம் வேண்டுமானால் வாருங்களேன்; போய்ப் பார்த்து விட்டு வரலாம்" என்றேன் நான்.
"நன்றி!" என்று 'நாகரிகமாகச் சொல்லிவிட்டு - அதாவது உதடு உள்ளத்தைத் தொடாமலும், உள்ளம் உதட்டைத் தொடாமலும் சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்!
அவரைப் போன்றவர்களுக்கு அதுதானே நாகரிகம்?
★★★
சொன்னது சொன்னபடி, அன்று மாலை குழந்தை விண்ட்டெருடன் நண்பர் நட் வந்தார். மூவரும் பாக்ஸ் ரோடுக்குச் சென்றோம். வழியில், "சாவியை வாங்கிக்கொண்டு விட்டீர்களா?" என்றார் நண்பர்.
"ஓ, வாங்கிக்கொண்டு விட்டேனே?" என்றேன் நான்.
பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருந்தது பங்களா; ஆனால் கிழக்குப் பார்த்த வாசல்.......
"தெற்குப் பார்த்த வாசலாயிருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்" என்று தம் முதல் குறையை முதல் முதலாக வெளியிட்டார் நண்பர்.
"கிழக்குப் பார்த்த வாசலும் நல்லதுதான்!" என்றேன் நான்.
"வாசலில் வேப்பமரமல்லவா இருக்கிறது? பூவரசு வைத்திருந்தால் விசேஷமாக இருந்திருக்கும்" என்று நண்பர் தம் இரண்டாவது குறையை வெளியிட்டார்.
"அதனாலென்ன, நீங்கள் வந்த பிறகு வேண்டுமானால் பூவரசும் கொண்டுவந்து வைத்துக்கொள்ளுங்களேன்!"
"வீட்டின் அகலம் எத்தனை அடி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?"
"ஏனாம்?"
"இருபத்தைந்து அடி இருந்தால் மனைவி மாண்டு போவாளாம், ஸார்!"
"கவலைப்படாதீர்கள்; முப்பது அடிக்குக் குறையாது!"
"நீளம்?"
"நாற்பத்து நான்கு அடி இருக்கலாம்........"
"ஐயையோ! கண்ணே போய்விடுமாமே?"
"ஆபத்துத்தான் கொஞ்சம் பொறுங்கள்; கையாலேயே அளந்து பார்த்து விடுகிறேன்!" என்று அளந்து பார்த்துவிட்டு, "சரியாக நாற்பத்திரண்டு!" என்றேன் நான்.
"சந்தோஷம்; அஷ்ட லக்ஷ்மிகளும் குடியிருப்பார்கள் என்பது சாஸ்திரம்!"
"எல்லா வகையிலும் ஆங்கில நடை, உடை பாவனைகளைப் பின்பற்றும் நீங்கள், நமது சாஸ்திரத்தில் இவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!"
"நெற்றியில் 'நாம'த்தைப் போட்டுக்கொண்டு தலையில் 'ஹாட்'டையும் வைத்துக் கொள்கிறார்களே சிலர், அவர்களுடன் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்!" என்றார் அவர், சிரித்துக்கொண்டே,
நானும் பதிலுக்குச் சிரித்துக்கொண்டே கதவைத் திறந்தேன்.
"மாடிப்படி ஹாலிலேயே இருக்கிறதா, நல்லது தான்!"
"நல்ல வேளை, பின்பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லாமல் இருந்தீர்களே?"
"தெற்குப் பார்த்தாற்போல் இரண்டு ஜன்னல்கள் வைக்கவே வைத்தார்கள்; அவற்றை இன்னும் கொஞ்சம் பெரிதாக வைத்திருக்கக் கூடாதோ?"
"வைத்திருக்கலாம்; அப்புறம்?"
"மெட்ராஸ் டெர்ரஸுக்குப் பதில் பாம்பே டெர்ரஸ் போட்டிருந்தால் இந்த மரங்கள் கண்ணை உறுத்தாது!"
"ம், அப்புறம்?"
"இன்னும் எத்தனையோ குறைகள்; இருந்தாலும்......"
இந்தச்சமயத்தில் அவருடைய குழந்தை விண்ட்டெர் ஓடி வந்து, "அப்பாப்பா! எனக்கு வீடு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது, அப்பா! அதோ இருக்கிறது பாருங்கள் மாடிப்படி, அந்த மாடிப் படிக்குக் கீழே இருக்கும் சந்தில் நான் ஒளிந்து கொண்டு விட்டால், அண்ணா மான்ஸுனால் என்னைப் பிடிக்கவே முடியாது, அப்பா!" என்றாள் உற்சாகத்துடன்.
"பார்த்தீங்களா, இந்த வீட்டைப்பற்றி உங்களுக்கு எத்தனையோ குறைகள்! உங்கள் குழந்தைக்கோ ஒரு குறையும் தோன்றவில்லை; தனக்குக்கிடைத்த ஒரு மாடிப் படிச்சந்தை வைத்துக் கொண்டு, 'வீடே எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்துப்போய்விட்டது!' என்கிறாள் திருப்தியுடன்" என்றேன் நான்.
அவ்வளவுதான்; "எக்ஸெலெண்ட் ஐடியா, ப்ரில்லியண்ட் ஐடியா!" என்று ஒரேகத்தாகக் கத்திக்கொண்டே துள்ளுத்துள்ளென்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார் கவிஞர் நட்.
"என்ன! என்ன வந்துவிட்டது, உங்களுக்கு?" என்றேன் நான், ஒன்றும் புரியாமல்.
"சந்தேகமேயில்லை, இந்த ஆண்டு நோபல் பரிசு எனக்குத்தான்!" என்றார் கவிஞர், மீண்டும் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தபடி.
"வாங்கும் போது வாங்கிக் கொள்ளுங்களேன்; அதற்காக இப்போதே 'குதி, குதி' என்று குதிப்பானேன்?" என்றேன் நான்.
"உங்களுக்குத் தெரியாது, ஸார்! இப்படி ஓர் 'ஐடியா' இதுவரை 'ஸ்ட்ரைக்' ஆகாமல்தான் எப்போதோ வாங்கியிருக்க வேண்டிய நோபல் பரிசை நான் இன்னும் வாங்காமலிருக்கிறேன். கடைசியில் என் கண்மணியாலல்லவா அந்த 'ஐடியா' எனக்கு ‘ஸ்ட்ரைக்'காகியிருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே குழந்தையைத் தூக்கி முத்து, முத்து' என்று முத்த ஆரம்பித்துவிட்டார் அவர்.
"அப்படி என்ன ஐடியா ஸார், திடீரென்று உங்களுக்கு 'ஸ்ட்ரைக் 'காகிவிட்டது?" என்று கேட்டேன் நான்.
"மனிதன் பேராசை பிடித்தவன்; அவனுக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்பதே ஏற்படுவதில்லை. மேலும் மேலும், 'இது கிடைக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே!' என்று கிட்டாத பொருள்களுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கிறான்; ஆனால் குழந்தைகள்-கல், மண், கதவிடுக்கு, மாடிப்படி சந்து - எது கிடைத்தாலும் திருப்தியடைந்துவிடுகின்றன. இந்த அற்புதமான கருத்தை ஆதார சுருதியாக வைத்து, அபூர்வமான காவியம் ஒன்று எழுதினால் நோபல் பரிசு எனக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கு ஸார், கிடைத்துவிடும்?" என்றார் அவர் மிடுக்குடன்.
"நல்ல வேளை! என்னிடம் சொன்னது போல் வேறு எந்தக் கவிஞனிடமாவது இந்தக் கருத்தைச் சொல்லிவிடாதீர்கள்; அவன் உங்களை முந்திக் கொண்டு விடப்போகிறான்!" என்று நான் அவரை எச்சரித்து வைத்தேன்.
"ஆமாம், ஆமாம்; நான் இந்தக் காவியத்தை எழுதி முடிப்பதற்கு முன்னால் நீங்களும் வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்" என்று என்னையும் பதிலுக்கு எச்சரித்துவிட்டுச் சென்றார் அவர்.
★★★
நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கடற்கரைக்குப் போய்விட்டுக் கவிஞர் 'நட்'டின் வீட்டு வழியாக வந்து கொண்டிருந்தேன்.
வானத்தை நோக்கியபடி கவிஞர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
"என்ன மிஸ்டர், நட்! காவியத்தை எழுதி முடித்து விட்டீர்களா?" என்றேன் நான், பழகிய தோஷத்துக்காகப் பார்த்தவுடன் ஏதாவது பேசி வைக்கவேண்டுமே என்று!
"நீங்களா? வாங்க ஸார், வாங்க! இன்னும் நாலே நாலு அடிகள்தான் பாக்கியிருக்கின்றன. அதைப்பற்றித்தான் இப்போதும் யோசிக்கிறேன், யோசிக்கிறேன், யோசித்துக்கொண்டே இருக்கிறேன்!" என்றார் அவர்.
மன்னியுங்கள்; நல்ல சமயத்தில் வந்து உங்கள் கற்பனைக்குத் தடையாக இருந்து விட்டேன்!" என்று நான் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மேலே நடந்தேன்.
அப்போது 'ஓ' என்று அலறிக்கொண்டிருந்த குழந்தை விண்ட்டெருடன் அவருடைய மனைவி அங்கே வந்து, "இவளை என்னவென்று கேட்டீர்களா?" என்றாள் சிரித்துக் கொண்டே.
"என்னவாம் என் கண்ணுக்கு?" என்றார் கவிஞர், நோபல் பரிசுக்கு வித்திட்டுத் தந்த தன் அருமைக் குழந்தையை அன்புடன் வாங்கி அணைத்தபடி.
"வானத்தில் இருக்கும் நிலவைப் பிடித்து இவளுக்குத் தரவேண்டுமாம்; அப்போதுதான் இவள் சாப்பிடுவாளாம்!"
அவ்வளவுதான்; தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியுற்ற கவிஞர் நட், குழந்தையைச் 'சட்டென்று' இறக்கிக் கீழே விட்டுவிட்டு அவசர அவசரமாக உள்ள சென்றார். பூர்த்தி பெறாத மனோரதம் போல் பூர்த்தி பெறாமலிருந்த அந்தக் கருத் தோவியத்தை எடுத்துக்கொண்டு வந்து சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிட்டு, "போச்சு, என் முயற்சி அத்தனையும் வீணாய்ப் போச்சு! - என்ன பேராசை இந்தக் குழந்தைகளுக்கு? இவையும் மனிதர்களைப் போலவே கிட்டாத பொருள்களுக்கெல்லாம் கொட்டாவி விடுகின்றனவே? - இனி நோபல் பரிசாவது, எனக்குக் கிடைக்கப் போவதாவது?" என்றார் பெருமூச்சுடன்,
"மனிதக் குழந்தைதானே? பிறக்கும்போதே பேராசையும் சேர்ந்து பிறந்துவிட்டாற் போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் நான்!
பதவி
டண்டண், டண் டண், டண் டண், டாண் டாண்!
"வயிறு பன்னிரண்டு மணிக்கே சாப்பாட்டு மணி அடித்து விட்டது; இவன் என்னடா வென்றால் ஒரு மணிக்கு அடிக்கிறான்!" என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த 'ஸ்டிக்'கைக் 'கே'ஸின் மேல் வைத்து விட்டுக் கையைக் கழுவுவதற்காகக் குழாயடியை நோக்கிச் சென்றான் கதிர்வேலு.
"எத்தனை மணிக்கு அடித்தால் என்ன, நம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதானே?- செய்தால் கூலி; செய்யாவிட்டால் வயிறு காலி!" என்று சொல்லிக்கொண்டே அவனைத் தொடர்ந்தான் கோவிந்தசாமி.
"ஆமாமாம், நாமெல்லாம் 'எக்ஸ்ட்ரா கம்போஸிட்டர்'கள் தானே? அதைக்கூட மறந்துவிட்டேன், பசியில்!" என்று கதிர்வேலு தனக்குத் தானே அசடு வழியச் சிரித்துக் கொண்டான்.
அப்போது, "பசி ஒரு வரப்பிரசாதம்!" என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் ஆரோக்கியசாமி.
"யாருக்கு?" என்று அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அருணாசலம் கேட்டான்.
"போயும் போயும் அதை உன்னிடம்தானா சொல்ல வேண்டும்?" என்றான் ஆரோக்கியசாமி, அப்போது தான் காரை விட்டுக் கீழே இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்த முதலாளியைக் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டே.
அதற்குள், "ஏண்டா மெஷின்களெல்லாம் நின்றுவிட்டன?" என்று யாரையும் குறிப்பிட்டுக் கேட்காமல், எல்லோருக்கும் பொதுவாக நின்று இரைந்தார் அவர்.
"ஆபீஸ் கடிகாரம் அரை மணி நேரம் 'ஸ்லோ ' என்பதற்காக அவர்களெல்லாம் பன்னிரண்டரை மணிக்கே சாப்பாட்டுக்குப் போய்விட்டார்கள், ஸார்!" என்றான் அருணாசலம், வழக்கம்போல் எல்லோரையம் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று.
பீதாம்பரத்துக்கு இது பிடிக்கவில்லை; "இதோ வந்து விட்டாரேடா ‘போர்மேன் பொன்னையா' புனர்ஜன்மம் எடுத்து!" என்று ஏகாம்பரத்தின் காதோடு காதாகக் கிசுகிசுத்தான்.
அருணாசலத்தின் 'எலிக்கா'தில் அது விழுந்து விட்டது. அவன் விடுவானா, அந்தச் சந்தர்ப்பத்தை? "தட்டிக் கேட்க ஆளில்லாமற் போனதால்தான் எல்லோரும் சண்டப்பிரசண்டர்களாகிவிட்டீர்கள்!" என்று 'போர்மேன்' இல்லாத குறையை நாசூக்காகத் தெரிவித்துக்கொண்டான், முதலாளியிடம்.
அவரோ அதைக்கூடப் பொருட்படுத்தாமல், "சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு! எப்போது பார்த்தாலும், சாப்பாட்டு நினைவுதான் இந்தப் பயல்களுக்கு!" என்று தம்மைப் பொறுத்தவரை அந்த நினைவே இல்லாதவர்போலச் சாப்பிடப் போய் விட்டார்!
எப்படியிருக்கும், அருணாசலத்துக்கு? அவருக்காகத் தான் எடுத்துக் கொண்ட சிரமத்துக்கு, அவரிடமிருந்து கேவலம் ஒரு 'சபாஷ்' கூடவா கிடைக்கக்கூடாது தனக்கு?- இதை நினைத்ததும், அழுகையே பொத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது அவனுக்கு; முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு திரும்பினான்.
"கவலைப்படாதே! போர்மேன் பொன்னையா செத்ததே உனக்காகத் தானே? அவருடைய பதவிக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள், இங்கே? கவலைப்படாதே தம்பி, கவலைப்படாதே!" என்று அவனுடைய தோள்களில் ஒன்றைப் பற்றி அவனைத் தேற்றினான் கோவிந்தசாமி.
"அவன் என்ன செய்வான், பாவம்!" என்று சொல்லிக்கொண்டே அருணாசலத்தின் இன்னொரு தோளைப் பற்றி, "பதவி, மோகம் ஒருவனைப் பிடித்து விட்டால் அது அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது!" என்று கதிர்வேலும் கோவிந்தசாமியுடன் சேர்ந்து கொண்டு அவனைத் தேற்றாமல் தேற்றினான்!
"என்னை யாரும் தேற்ற வேண்டாம்; எட்டிப் போங்கள்!" என்று அவர்களுடைய கையைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு; 'விடுவிடு' வென்று வெளியே போய்விட்டான் அருணாசலம்.
அவன் தலை மறைந்ததும், 'நரிப் பயல்!' என்று கருவிக்கொண்டே கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றை எடுத்துத் தன் கேஸுக்கு அடியிலேயே உட்கார்ந்து அவிழ்த்தான் கோவிந்தசாமி.
அப்போதுதான் வழக்கமாத் தனக்குப் பக்கத்தில் உட்காரும் கதிர்வேலு அங்கே உட்காரவில்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.
தனக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்தவன் என்ன ஆனான்? "கதிர்வேல், கதிர்வேல்!" என்று குரல் கொடுத்துப் பார்த்தான் கோவிந்தசாமி, பதில் இல்லை.
எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு மூலையில் ஓர் ஆள் உயரத்துக்குமேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 'ரீம்'களின்மேல் அவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
"அட பாவி இன்று நீ சோறு கொண்டு வரவில்லையா, என்ன?-ம், கொண்டு வந்திருந்தால் படுப்பதற்கு அந்த மூலையை ஏன் தேடியிருக்கப் போகிறாய்?"-அவிழ்த்த கட்டுச் சோற்றை அப்படியே கட்டி வைத்துவிட்டுச்சென்று அவனை எழுப்பினான் கோவிந்தசாமி.
"ஏண்டா, இன்னுமா நீ சாப்பிடவில்லை?" என்று தான் ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதுபோல் அவனைக் கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான் கதிர்வேலு.
"உன்னை விட்டுவிட்டுச் சாப்பிடும் அளவுக்கு நான் இன்னும் 'பெரிய மனிதனாகி விடவில்லையே? இறங்கி வா, இருப்பதை இருவரும் பகிர்ந்து கொள்வோம்."
"வேண்டாம், அது உனக்கும் போதாது; எனக்கும் போதாது!"
"மனம் 'போதும்' என்று சொல்லும்போது வயிறு 'போதாது' என்று சொல்லாது; நீ வாடா!" என்று அவனை இழுத்துக்கொண்டு வந்தான் கோவிந்தசாமி.
இருவரும் உட்கார்ந்தனர்; "இருப்பதைப் பகிர்ந்து கொள்வதற்குக்கூட இன்னோர் இலை வேண்டுமே?" என்றான் கதிர்வேலு.
"ஏன், இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டால் என்னவாம்?"
"அது அவ்வளவு நன்றாயிருக்குமா?" என்றான் அவன், கொஞ்சம் அருவருப்புடன்.
"ஓட்டலில் எத்தனையோ பேர் சாப்பிட்ட எச்சில் தட்டில் நாமும் சாப்பிடுகிறோமே, இங்கே ஒருவருடைய எச்சில் இலையில் இன்னொருவர் சாப்பிடக் கூடாதா?" என்றான் இவன், கொஞ்சம் விறுவிறுப்புடன்.
"அது நாகரிகம்; இது அநாகரிகமில்லையா?" என்றான் கதிர்வேலு சிரித்துக்கொண்டே.
"அந்த நாகரிகத்திற்கு இந்த அநாகரிகம் ஒன்றும் கெட்டுப் போய்விடாது; நீ சாப்பிடு!" என்றான் கோவிந்தசாமி.
இருவரும் இடம் மாறி எதிரும் புதிருமாக உட்கார்ந்தார்கள்; ஆளுக்கு நாலு கவளம் எடுத்து விழுங்கிவிட்டு வெளியே வந்தார்கள்.
"உனக்குத் தெரியுமா? அடுத்த முதல் தேதியிலிருந்து நம் அனைவரையும் மாதச் சம்பளத்துக்கு அமர்த்திக்கொண்டு விடப் போகிறார்களாம்" என்றான் கோவிந்தசாமி.
"ஏனாம்?" என்று கதிர்வேலு கேட்டான்.
"மெஷின் ஸெக்ஷனுக்கு வேலை குறைவாகவும், கம்போஸிங் ஸெக்ஷனுக்கு வேலை அதிகமாகவும் இருப்பதால்!"
"அதனால் என்ன?"
"இத்தனை வாரங்களாகப் பத்துப் பன்னிரண்டு என்று கூலி வாங்கிக்கொண்டிருந்த நாம், இந்த வாரம் இருபது ரூபாய் வாங்கிவிடவில்லையா, அது முதலாளிக்குப் பிடிக்கவில்லை"
"அப்படியானால் கம்போஸிட்டர்கள் 'பெர்மெனெண்ட்' ஆகும்போது, 'மெஷின் மென்'களெல்லாம் 'டெம்பரரி' யாகிவிடுவார்களா, என்ன?"
"ஆனாலும் ஆவார்கள், யார் கண்டது?"
"அநேகமாக அருணாசலம்தான் நமக்கெல்லாம் போர்மேனாக நியமிக்கப்படுவான், இல்லையா?" என்று கதிர்வேலு கேட்டான்.
"அவன் என்னமோ அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்; முதலாளி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?" என்றான் கோவிந்தசாமி.
"நினைப்பதென்ன?-அவரும் அநேகமாக யாராவது ஓர் ஆமாம் சாமி'யைத்தான் தேடிப் பிடிப்பார்; அதற்கு நம் அருணாசலம்தான் லாயக்கு!"
"அவருக்குத் தெரியாது, வேறு எவனைப் பிடித்துப் போட்டாலும் அவனும் உடனே 'ஆமாம் சாமி' யாகிவிடுவான் என்று!"
"இதனால் என்ன ஆகிறது, தெரியுமா?- திறமைக்கு இடம் இல்லாமற் போய்விடுகிறது!"
வி.க. -29 "திறமைக்கு இடம் கொடுத்தால் 'ஆமாம் சாமி'க்கு இடம் இல்லாமற் போய்விடுகிறதே? இவ்வளவு பெரிய உலகத்தில் தன்னைப் புத்திசாலி' என்று ஒப்புக்கொள்ள 'ஒரே ஒருவ'னாவது வேண்டாமா, முதலாளிக்கு?"
"ம், எவன் வந்தாலும் அவன் தலை கனக்கப் போவது மட்டும் நிச்சயம்!"
"தலை கனத்தால் கனத்துவிட்டுப் போகட்டும்; தன்னுடைய பதவியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களுடைய வாயில் அவன் மண்ணைப் போடாமலிருந்தால் சரி!"
"அப்படித்தான் நினைத்தான் போர்மேன் பொன்னையா-ஆனால் என்ன ஆயிற்று? ஒரே நாள் காய்ச்சலில் ஆளே அவுட்"
"அவன் மட்டுமா?-பொழுது விடிந்தால் அவனைப்போல் எத்தனையோ பேர் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் புத்தி வருகிறதா, எவனுக்காவது? 'ஊஹும்!"
"தான் வாழ்ந்தால் போதும் என்று எவன் நினைக்கிறானோ, அவன் தலையில் இடியாவது விழுகிறதா?-அதுவும் இல்லை!"
"எங்கே விழுகிறது? - அதுவும் நல்லவர்களைத்தான் விரும்புகிறது; கெட்டவர்களை விரும்பமாட்டேன் என்கிறது!"
"அதைச் சொல்லு, முதலில்!" என்று சொல்லிக்கொண்டே கதிர்வேலு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான்.
"ம், எல்லாம் முதல் தேதி பிறந்தால் தெரிந்து விடாதா? - நீ எனக்கும் ஒரு பீடி இருந்தால் கொடு!" என்றான் கோவிந்தசாமி.
"இதிலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான், இருவரும்!" என்று தான் பிடித்துக்கொண்டிருந்த பீடியில் பாதியைப் பிட்டு அவனிடம் கொடுத்தான் கதிர்வேலு.
இன்றைய நேற்றைய நட்பா, அவர்களுடையது? கடந்த இருபது வருட காலத்திய நட்பாயிற்றே?- எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயிருந்தார்கள் அவர்கள், மனைவிமார்களைத் தவிர!
★★★
முதல் தேதி பிறந்தது. ஆனால் கதிர்வேலு எதிர்பார்த்தபடி, அருணாசலம் 'போர்மே'னாக நியமிக்கப்படவில்லை; கதிர்வேலே போர்மேனாக நியமிக்கப்பட்டான்.
காரணம், மற்றவர்களுக்குப் பிடிக்காத அருணாசலத்தைவிடப் பிடிக்கும் கதிர்வேலே மேல் என்று முதலாளி நினைத்ததுதான்!
புறாவைப் பிடிக்க வேண்டுமென்றால் புறாவைக்காட்டித்தானே பிடிக்க வேண்டும்? காக்கையைக் காட்டிப் புறாவைப் பிடிக்க முடியுமா?
இது தெரியாத அருணாசலம் முதலில் கொஞ்சம் புழுங்கினான். பிறகு, 'பகையாளியின் குடியை உறவாடிக் கெடு!' என்று எண்ணித் துணிந்தவனாய் வழக்கம்போல் எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று, "என்ன இருந்தாலும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்; உங்களுக்கு என் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்!" என்றான் வாயெல்லாம் பல்லாக.
"அப்படி என்று ஒன்று இருக்கிறதா என்ன, உனக்கு" என்று வியப்புடன் கேட்டான் ஆரோக்கியசாமி.
"எப்படியென்று?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் அருணாசலம்.
"ஒன்றுமில்லை!" என்று சொல்லிக்கொண்டே அவனை விட்டு அப்பால் சென்ற ஆரோக்கியசாமி "இவனுக்காவது, இதயம் என்று ஒன்று இருப்பதாவது!" என்று தனக்குத்தானே முனகிக் கொண்டான்.
எதிர்பாராத விதமாகக் கதிர்வேலுக்குக் கிடைத்த பதவி கோவிந்தசாமியை ஒரே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது. ஒரு கணம் ஒன்றும் பேச முடியாமல் தழுதழுத்து நின்ற அவன், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு, "வாழ்த்தாதே, முதலில் உன் வாயால் அவனை வாழ்த்தாதே!" என்று கத்தினான்.
"ஏன், அவரை நான் வாழ்த்துவது உனக்குப் பிடிக்கவில்லையா?" என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதினான் அருணாசலம்.
அதைப் புரிந்து கொள்ளாத அப்பாவி கோவிந்த சாமியோ, "ஆம், அவனை நீ வாழ்த்துவது எனக்குப் பிடிக்கத்தான் இல்லை. அதிலும், அவனுக்குக் கிடைத்த பதவி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று நீ சொல்வது அவனுடைய திறமையைக் குறைத்துப் பேசுவது போலிருக்கிறது. போ, எட்டிப் போ!" என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டுத் தன் நண்பனை அப்படியே அணைத்துக்கொண்டு விட்டான்!
இந்தச் சமயத்தில், "முதலாளி உங்களைக் கூப்பிடுகிறார்!" என்று ஏவலாள் வந்து சொல்லவே, "விடு, என்னை!" என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக்கொண்டே அவனுடைய பிடியிலிருந்து அவசர அவசரமாக விலகி, அவருடைய அறையை நோக்கி நடந்தான் கதிர்வேலு.
அவனுடைய 'அவசரம்' கோவிந்தசாமியை என்னவோ செய்வது போலிருந்தது. இதற்குள் இவனிடம் ஏன் இந்த மாறுதல்? ஒருவேளை இவனையும் அந்தப் பாழும் பதவி 'ஆமாம் சாமி'யாக்கி விடுமோ? தான் வாழப் பிறர் வாயில் மண்ணைப் போட வைத்து விடுமோ?' என்று தனக்குத்தானே கேள்விமேல் கேள்வியாக எழுப்பிக்கொண்டு நின்றான்.
அவனுடைய நிலையை ஒருவாறு புரிந்து கொண்டவன்போல், "பதவி வேலை செய்ய ஆரம்பித்து விட்டதப்பா, பதவி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது!" என்றான் ஆரோக்கியசாமி பெருமூச்சுடன்.
★★★
ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முதலாளியின் அறையை விட்டுக் கதிர்வேலு வெளியே வந்தபோது, "விழுந்தது; முதலாளி சொன்னதெல்லாம் என் காதிலும் விழத்தான் விழுந்தது. அதிலே ஒரு 'பியூட்டி' என்னவென்றால் எல்லாவற்றுக்கும் என்னைப்போல் நீங்களும் 'ஆமாம்' போட்டுக்கொண்டிருந்தீர்கள் பாருங்கள், அதுதான் அங்கே பாயிண்ட் " என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான்; கையோடு கையைச் சேர்த்துப் பிசைந்தபடி அருணாசலம் அவனுக்குப் பின்னால் கூனிக் குறுகி வந்து கொண்டிருந்தான்.
"நீதானா!" என்றான் கதிர்வேலு - அவன் குரலில் இப்போது அவனையும் அறியாமல் ஓர் 'அலட்சிய பாவம்' இடம் பெற்றிருந்தது.
"ஆமாம் ஸார், நானேதான் ஸார்!" என்றான் அருணாசலம், அத்தனை நாட்களும் இல்லாத 'ஸா'ரைப் போட்டு!
அந்த 'ஸார்' தன் தலையைச் சற்றே கனக்க வைப்பதைக் கதிர்வேலு உணர்ந்தான்; ஆனால் தன் மார்பு அதனால் விம்மிப் புடைத்ததை அவன் அறியவில்லை.
"அவர் சொன்னவையெல்லாம் உங்களுக்குப் பிடித்தது போல் எனக்கும் பிடிக்கத்தான் பிடித்தன; ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் பிடிக்கவில்லை!" என்று மேலும் கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதினான் அருணாசலம்.
அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; "என்ன அது?" என்று உடனே கேட்டுவிட்டான் கதிர்வேலு.
அது போதாதா, அவனுக்கு? "ஆளுக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் என்று பேசி, ஆறு பேரை வைத்துக்கொண்டு இப்போதுள்ள வேலையைச் செய்து முடித்தால் உங்களுக்கு மாதம் ரூபாய் இரு நூறு சம்பளம் கொடுக்கிறேன் என்று சொன்னாரே, அதைத்தான் சொல்கிறேன்!" என்று தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டான்!
"ஏன், எனக்கு மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று அவர் சொன்னது உனக்கும் பிடிக்கவில்லையா?" என்று கேட்டான் கதிர்வேலு பகவான் பக்தனைச் சோதிப்பது போல.
அந்தப் பக்தனா அதற்கெல்லாம் அயர்ந்து விடுபவன்? "நன்றாய்ச் சொன்னீர்கள்! உங்களுடைய அந்தஸ்துக்கு மாதம் ரூபாய் முந்நூறாவது சம்பளம் தருகிறேன் என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும்? தவறிவிட்டார்; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தவறித்தான் விட்டார்!" என்று சொல்லி, பகவானின் அருளுக்கு உடனே தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்டு விட்டான்!
உச்சி குளிர்ந்த பகவான், "ஓ, அதற்குச் சொன்னாயா?" என்று தன் தலையைச் சற்றே ஆட்டினார்.
"ஆமாம், அதற்குத்தான் சொன்னேன்! இப்போதுகூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை; ஆறு பேரை வைத்துக்கொண்டு அவர் முடிக்கச் சொன்ன வேலையை ஐந்தே பேரை வைத்துக் கொண்டு முடித்து விடுகிறேன் என்று சொல்லிப் பாருங்கள் - இன்னும் ஓர் ஐம்பது ரூபாயாவது உங்களுக்குக் கூடக் கிடைக்கும்"
இதைக் கேட்டதும், 'சொல்லிப் பார்க்கலாம் போலிருக்கிறதே?' என்று உள்ளுற நினைத்தான் கதிர்வேலு; ஆனால் அதை அவன் வெளியே சொல்லவில்லை.
"அப்புறம் போக்குவரவு சௌகரியத்துக்காக உங்களுக்கு ஒரு 'ஸைக்கிள்' வாங்கித் தருகிறேன் என்று சொன்னார் பாருங்கள், அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுடைய அந்தஸ்துக்குக் கேவலம் ஒரு 'ஸ்கூட்டர்' கூடவா வாங்கிக் கொடுக்கக் கூடாது?"
'கொடுக்கலாம் போலிருக்கிறதே?' என்று நினைத்தான் கதிர்வேலு; ஆனால் அதையும் அவன் வெளியே சொல்லவில்லை.
"சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - இனி உங்களுடைய அந்தஸ்தை நீங்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நேற்று வரை நீங்கள் எந்தச் சக்தியும் இல்லாத எக்ஸ்ட்ரா கம்போஸிட்டராக இருந்திருக்கலாம்-இன்றோ நீங்கள் போர்மேன்; எல்லாச்சக்தியும் வாய்ந்த போர்மேன். அவர்தான் சொல்லிவிட்டாரே, நீங்கள் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம்; விரும்பாவிட்டால் யாரை வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று!- அப்புறம் என்ன, முதலில் உங்களைவிடத் திறமைசாலிகள் வேறு யாராவது இங்கே இருந்தால் அவர்களை ஈவிரக்கமின்றி வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பதவி நிலைக்கும். அடுத்தாற்போல் உங்களை இனி யாராவது, 'வாடா, போடா' என்று மரியாதைக் குறைவாகப் பேசினால் அவர்களையும் தயவு தாட்சண்யமின்றி வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்; அப்போதுதான் உங்களுடைய அந்தஸ்து பரிமளிக்கும்"
'அனுப்பவேண்டியதுதான்; தன்னுடைய பதவிக்கு யார் பங்கம் விளைவித்தாலும் சரி, அவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்!' என்று சொல்ல நினைத்தான் அவன்; ஆனால் சொல்லவில்லை.
இத்தனைக்கும் மௌனம் சாதித்த பிறகு இனி பொறுப்பானேன் என்று, "ஆமாம், அவர் சொன்ன அந்த ஆறு பேர்-அந்த ஆறில் 'நமக்'காக ஒன்றைத் தள்ளிவிட்டால் ஐந்து பேர், 'யார், யார்' என்று தீர்மானித்து விட்டீர்களா, நீங்கள்?" என்று மெல்ல விஷயத்துக்கு வந்தான் அருணாசலம், அந்த 'நமக்'கில் தன்னையும் அவனையும் மட்டுமே சேர்த்துக் கொண்டு!
"அதெல்லாம் தீர்மானித்தாகி விட்டது; என்னுடைய மேஜைக்குச் சென்றதும் எழுதி அனுப்ப வேண்டியதுதான் பாக்கி"' என்றான் கதிர்வேலு.
★★★
சிறிது நேரத்துக்குப் பிறகு 'கம்போஸிங் செக்ஷ'னுக்குள் நுழைந்த கதிர்வேலுவை, 'வாடா, வா!' என்று வழக்கம்போல் 'டா' போட்டு வர வேற்று, "இவ்வளவு நேரமாகவா முதலாளியும் நீயும் பேசிக்கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான் கோவிந்தசாமி.
அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, காதோரத்தில் செருகி வைத்திருந்த பென்சிலை எடுத்தான் கதிர்வேலு.
அதற்குள் ஒரு காகிதத்தை எடுத்துப் படு பவ்வியமாக அவனிடம் நீட்டினான் அருணாசலம். அதை வாங்கி, '1, அருணசலம்' என்று எழுதினான் அவன்!
"பிள்ளையார் சுழிக்குப் பதிலாக அவனுடைய பெயரை எழுதவே எழுதினாய்; குறைந்த பட்சம் மூன்று குட்டும், மூன்று தட்டும், மூன்று தோப்புக் கரணமுமாவது போட்டுவிட்டு எழுதக் கூடாதா?" என்றான் ஆரோக்கியசாமி.
"மறந்து விட்டிருப்பான்!" என்றான் பீதாம்பரம்.
"அப்பொழுதே ஞாபகப்படுத்தி யிருக்க வேண்டும்" என்றான் ஏகாம்பரம்.
அவர்கள் அனைவரையும் சேர்ந்தாற்போல் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, '2. குமாரசாமி, 3. முத்தையா, 4. நாராயணன், 5. பஞ்சாட்சரம்' என்று எழுதி, "இந்தாப்பா அருணாசலம், இதை எடுத்துக்கொண்டு போய் முதலாளியிடம் கொடுத்துவிடு; ‘ஆறாவது பெயரைக்காணோமே?' என்று கேட்டால், 'ஐந்து பேரே போதுமாம்!' என்று சொல்லிவிடு!" என்றான் கதிர்வேலு.
"சரி, ஸார்!" என்று அதை வாங்கிக்கொண்டு சிட்டாய்ப் பறந்த அருணாசலம், 'தொலைந்தான்; இனி கதிர்வேலு தொலைந்தான்! ‘எல்லோருக்கும் வேண்டியவர்' என்பதற்காகத்தானே அவருக்குப் போர்மேன் பதவி? இப்போதோ, அவர் யாருக்கும் வேண்டாதவராகி விட்டார். இனி, நான் 'எல்லோருக்கும் வேண்டியவனாவதற்கு வழி வகைகளைத் தேட வேண்டும் வெற்றி, எனக்கே வெற்றி!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அதற்குள் விஷயத்தை ஒருவாறு புரிந்து கொண்ட ஆரோக்கிய சாமி, "நாங்கள்?" என்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டு, கதிர்வேலுவின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்.
"நீங்கள் வீட்டுக்குப் போகலாம்!" என்றான் அவன் துணிந்து.
"நான் கூடவா?" என்றான் கோவிந்தசாமி. 'கூடவா' என்பதற்கு மட்டும் கொஞ்சம் கூடுதலான அழுத்தம் கொடுத்து!
"ஆம், முதலாளியின் உத்தரவு அது!" என்றான் கதிர்வேலு, தன்னை அவனிடம் காட்டிக் கொடுத்துக் கொள்ள விரும்பாமல்,
"இருக்கும், இருக்கும்!" என்றான் ஏகாம்பரம்.
"இல்லாமலா சொல்வார், போர்மேன்?" என்றான் பீதாம்பரம்.
"போர்மேன் இல்லை அப்பா, 'பொய்மேன்' என்று சொல்லு!" என்று அவன் சொன்னதைத் திருத்தினான் ஆரோக்கியசாமி.
"வருந்துகிறேன் நண்பா, உன்னைப் பொய் சொல்ல வைத்ததற்காக நான் வருந்துகிறேன்!" என்றான் கோவிந்தசாமி.
"எனக்காக நீ ஒன்றும் வருந்த வேண்டாம்!" என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சொன்னான் கதிர்வேலு.
கோவிந்தசாமிசிரித்தான்; சிரித்துவிட்டு, "ஆஹா! பதவி மோகம் ஒருவனைப் பிடித்துவிட்டால், அது அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது!" என்று அன்றொரு நாள் அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிச் சொல்லிவிட்டு நடந்தான்.
அதற்குள் முதலாளியைப் பார்த்துவிட்டு வந்த அருணாசலம், "பார்த்தாயா, அவன் உன்னையே வீட்டுக்கு அனுப்பிவிட்டான்!" என்று தன் அடுத்த முயற்சியை அன்றே ஆரம்பித்து வைத்தான்.
அதற்கும் சிரித்தான் கோவிந்தசாமி; சிரித்து விட்டு, "அவன் என்னை வீட்டுக்கு அனுப்பவில்லை; தன்னைத் தானே அனுப்பிக் கொண்டிருக்கிறான்!" என்றான், தீர்க்கதரிசனத்துடன்!
கவிஞர் ஒன்பாற் சுவையார்
கவிஞர் ஒன்பாற் சுவையாரை உங்களுக்குத் தெரியுமோ? அபசாரம், அபசாரம்/- "ஞாயிற்றை ஞாலத்துக்கு அறிமுகப் படுத்துவார் உண்டோ, உண்டோ?" என் அன்னார், என்னை ஆயிரமாயிரம் முறை இடித்துரைத்திருந்தும், அத்தகு பெரியாரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தத் துணிந்தேனே, என்னே என் அறியாமை! என்னே என் அறியாமை!
இந்த அறியாமை காரணமாக அன்னாரிடம் ஓர் ஐயப்பாட்டைக் கடாவி, நான் பட்ட பாடு -அப்பப்பா! கொடிது, கொடிது! கவிஞர் பெருமானின் சீற்றம் கொடிது, கொடிது!
இத்தனைக்கும் தான் அப்படியொன்றும் கேட்டு விடவில்லை. "ஆனானப்பட்ட கம்பனேதன்னைத்தானே 'கவிஞன்' என்று அழைத்துக் கொள்ளாத போது, நீங்கள் ஏன் உங்களை நீங்களே 'கவிஞர்' என்று அழைத்துக் கொள்கிறீர்கள்?" என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான்; "பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா என்று கேட்கிறேன்!" என்று அவன் என்மேல் சீறிப் பாய ஆரம்பித்துவிட்டார். "அதில் என்ன தெரிய வேண்டும். உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள், சொல்கிறேன்!" என்றேன் நான், அடக்க ஒடுக்கமாக.
"நன்று; நவிலும்? 'அ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?"
"அணிலின் படம் போட்டிருக்கிறது."
"அதற்குக் கீழே?"
"அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது!"
"நன்று; 'ஆ' என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?"
"ஆட்டின் படம் போட்டிருக்கிறது!"
"அதற்குக் கீழே?"
"'ஆடு' என்று எழுத்தால் போட்டிருக்கிறது"
"அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ ?"
"இல்லை."
"அங்ஙனமிருந்தும் சித்திர விளக்கத்தோடு நிற்காமல் எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எற்றுக்கு?"
"எடுத்துக் காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர் கண்ணில் பதிவதோடு, கருத்திலும் பதிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது!"
"அம்முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம் சிற்றறிவாளரே, யாமும் கையாண்டு வருகிறோம். நீர்தான் பார்த்திருப்பீரே, சிங்கத்தின் பிடரிபோன்று எமது சிகையை வெட்டிச் சீவி விட்டுப் பார்த்தோம்; கவிஞன் என்று கழலுவார் கண்டிலோம். கவின்மிகு அங்கி கால் வரை நீண்டு தொங்குமாறு அணிந்து பார்த்தோம்; பாவலர் என்று பகருவார் பார்த்திலோம். தாடியும் மீசையும் தழைத்து வளர, தடி கொண்டு ஊன்றித் தளர்நடை நடந்தும் பார்த்தோம்; 'ஏ, பிச்சைக்காரா! ஒன்றும் இல்லை, போ!' என்று விரட்டு வாரைத்தவிர, 'பிறவிக் கவிஞரே!' என்று முகம் மலர, அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்!"
"அதாவது, கவிதை புனைவதைத் தவிர!" என்றேன் நான், இடை மறித்து.
"அன்று, அன்று; இன்று காலைப் போது கூட, 'காலை எழுந்தவுடன் காநீர்!' என்று யாம் கவிதை புனைந்து கொண்டேதான் எழுந்தோம்!"
"காநீரா! அது என்ன, காநீர்?"
"கவிதை புனைவதோடு நிற்காமல் தமிழையும் வளர்க்கிறோம் ஐயா, தமிழையும் வளர்க்கிறோம். தேயிலைச் சாறு கலந்த பானம் தேநீர்; காபிச் சாறு கலந்த பானம் காநீர்!"
"என்னே உங்கள் பேரறிவாற்றல், என்னே உங்கள் பேரறிவாற்றல்!"
"இம்மட்டோ, இம்மட்டோ ? அற்றை நாளில் 'மக்கள்' இருந்தனர், கம்பனை இனம் கண்டு கொண்டு 'கவிச் சக்கரவர்த்தி' எனக் கழல, பகர, விளிக்க! இற்றை நாளில் மக்களா உள்ளனர்? 'மாக்க'ளன்றோ உள்ளனர்? அது குறித்தன்றோ அஞ்சல்காரர் 'அஞ்சல் உடை' அணிவது போன்று, காவலர் 'காவல் உடை' அணிவது போன்று, யாமும் கவிஞன் என்பதற்காகக் 'கவிஞர் உடை'யை எமது கற்பனையால் கண்டு அணியவேண்டி உள்ளது? 'ஒன்பாற் சுவையார்' என வெறுமனே சொல்லிக் கொள்ளாமல், 'கவிஞர் ஒன்பாற் சுவையார்' என எமக்கு யாமே 'கவிஞர்' என்னும் கௌரவப் பட்டத்தையும் அணிந்து கொள்ள வேண்டி உள்ளது?"
"ஐயகோ, ஐயகோ! இஃது அனுதாபத்துக் குரியதே, இஃது மிக மிக அனுதாபத்துக்குரியதே!"
"இதுபோதாவது புரிந்ததா, பாலர் பாடத்தில் அணிலின் படத்துக்குக் கீழே 'அணில்' என எழுத்தால் விளக்குவது போன்று, ஆட்டின் படத்துக்குக் கீழே 'ஆடு' என எழுத்தால் விளக்குவது போன்று, யாமும் கவிஞருக்குரிய ஆடையணிகள் தரிப்பதோடு, 'கவிஞர்' என்ற பட்டத்தையும் எமக்கு யாமே எமது பெயருக்கு முன்னால் ஏன் சூட்டிக் கொண்டிருக்கிறோம் என்று?"
"புரிந்தது சுவாமி, புரிந்தது!"
அவ்வளவுதான்; அதற்குமேல் நான் அங்கே நிற்கவில்லை -ஆளை விட்டால் போதாதா? - எடுத்தேன் ஓட்டம்!
★★★
இத்தகு கவிஞர்பிரானின் இயற்பெயர் ஒப்பிலாமணி என்பதாகும்; அன்னாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையாராவர்.
கவிஞர் ஒன்பாற்சுவையாருக்குக் கவிதை பிறந்ததோ இல்லையோ, 'கவிதா தேவி' என்ற பெண் மகவு பிறந்தது மட்டும் உண்மை; உண்மையிலும் உண்மை!
அந்தப் பிள்ளைக்கனி அமுதுக்கு ஆறு ஆண்டுகள் நிறைந்து, ஏழாவது ஆண்டு பிறந்து தவழ்ந்து கொண்டிருந்தது.
கவிஞர் பெருமான் ‘நமக்குத் தொழில் கவிதை' என்று தமக்குத் தாமே வரித்துக்கொண்டு விட்டதால், காசுக்கும் அவருக்கும் காணாத தூரமாயிருந்து வந்தது. எனவே, இட்டிலி-மசால் வடைக் கடையை நம்பி, அன்னாரின் இல்லாள் இல்லறத்தை இனிதே நடாத்தி வரலாயினள்.
இதுவே 'எல்லாரும் இந்நாட்டு மன்னராகி விட்ட இந்தக் காலத்தில், 'எல்லாரும் இந்நாட்டுக் கவிஞர்' என்று நினைக்காமல் நினைத்துக்கொண்டு விட்ட நம் கவிஞர் பிரானின் குடும்ப வரலாற்றுச் சுருக்கமாகும்.
★★★
ஒரு நாள், "ஆற்றங்கரைக்குச் சென்று, அங்குள்ள இயற்கை அழகில் ஈடுபட்டு நின்றால் நல்ல கவிதை - நாட்டு மக்களைப் போற்றிப் புகழ வைத்துப் பொன்னாடை போர்த்தி, எடைக்கு எடை பொற்காசும் அளிக்க வைக்கும் கவிதை தானாகவே பிறக்கும்!" என்று சகக் கவிஞர் ஒருவர் பரிந்துரை நல்க, அங்ஙனமே கலிஞர் ஒன்பாற்சுவையார் ஆற்றங்கரைக்குச் செல்ல, அங்கே 'கா, கா' என்று பல காகங்கள் ஏக்காலத்தில் கரைந்தவாறு தரையோடு தரையாகப் பறந்து கொண்டிருக்க, கவிஞர்பிரான் அவை சுற்றிச் சுற்றி வந்த இடத்தை நெருங்கி உற்று உற்று நோக்க, குயிற் குஞ்சு ஒன்று கீழே விழுந்து கிடக்க, "இயற்கைக் கவிஞனன்றோ இக் கதிக்கு உள்ளாகியுள்ளான்!" என்று கவிஞர் பெருமான் கனிவே உருவாய் அதை எடுக்க, அக்கணமே ஆயிராயிரம் காகங்கள் எங்கிருந்தோ படையெடுத்து வந்து அன்னார் தலையைப் 'பதம்' பார்க்க, ‘தலை தப்பினால் போதும்!' என்று 'இயற்கைக் கவிஞ'னை அங்கேயே விட்டுவிட்டு, 'இட்டிலியின் இன்முகம் காண' வீட்டுக்கு விரைந்து வரலானார் செயற்கைக் கவிஞர்!'
அதுபோது, "காலையிலேருந்து ஒரு பைசாவுக்குக்கூடப் 'போனி'யாகாமல் சுட்டுப் போட்ட இட்டிலி - மசால் வடை அத்தனையையும் அப்படியே வெச்சிகிட்டு நான் அவதிப்பட்டுகிட்டிருக்கேன், உனக்கு இட்டிலியா வேண்டும், இட்டிலி?" என்று இரைந்தபடி, இன்பவல்லி அம்மையார் கவிதா தேவியின் முதுகில் கடைசி 'முத்தாய்ப்'பை வைத்துக் கொண்டிருக்க, 'கவிதாதேவிக்கே இந்தக் கதியென்றால் தமக்கு என்னகதியோ' என்ற கலக்கத்துடன் கவிஞர் பெருந்தகை உள்ளே நுழைய, அதுகாலை யாரோ ஒரு பெருமாட்டி வந்து ஆறு காசுக்கு இட்டிலியும் மூன்று காசுக்கு மசால் வடையும் வாங்கிக் கொண்டு ஏக, 'வாழ்க நீ அம்மா, வாழ்க நீ அம்மா!' என்று அந்த 'அபயாம்பா'ளைத் தமக்குள் வாழ்த்திக் கொண்டே ஒன்பாற்சுவையார் அமர, இரண்டு இட்டிலி கொண்ட தட்டு ஒன்று அன்னாரை நோக்கி 'விர்'ரென்று சுழன்று வர, கவிஞர்பிரான் அதைத் தடுத்து நிறுத்தி உற்று நோக்குவாராயினர்.
என்னே கொடுமை, என்னே கொடுமை! ‘வடைத் துணை' இல்லையென்றாலும் 'சட்டினித் துணை' யாவது வேண்டாவோ, இட்டிலிக்கு?
ஒன்பாற்சுவையார் சிந்தனை வயப்பட்டார்.
இரண்டு இட்டிலிகளுக்கு அருள் பாலித்த அம்மையார், கொஞ்சம் சட்டினிக்கும் அருள் பாலித்திருக்கக் கூடாதோ?
இப்படி எண்ணியதுதான் தாமதம், உடனே பிறந்தது உள்ளத்தை நெருப்பில்லாமலே உருக வைக்கும் ஒரு சோகக் கவிதை:
"வேதனை, வேதனை, வேதனை வேதனை போயிற் சோதனை, சோதனை, சோதனை"
ஆனால்? - வேதனையையும் சோதனையையும் வெளியிட்டு என்ன பயன்? - பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் அம்மையாரின் கவனத்துக்குச் சட்டினியன்றோ வரவேண்டும்?
மீண்டும் சிந்தனை வயப்பட்டார் ஒன்பாற்சுவையார்- உதித்தது, உதித்தே விட்டது. பாடினார்; தொடையையும் -கையையுமே பக்க வாத்தியங்களாகக் கொண்டு பாடினார்;
"இட்லி, இட்லி, இட்லி! இட்லிக்கு வேண்டும் சட்னி, சட்னி, சட்னி!"
அவ்வளவுதான்; அந்தத் தெரு வழியே 'விர்' ரென்று போய்க்கொண்டிருந்த ஒரு கார்தம் வீட்டு வாசலில் 'டக்'கென்று நின்ற சத்தமும், கதவைத் திறந்து மூடும் சத்தமும், அவற்றைத் தொடர்ந்து, "வொண்டர்புல், மாஸ்டர் பீஸ்! இப்படிப் பாடினால் எந்த ஸாங்தான் ஹிட் ஸாங்காகாது? ஆஹா, ஆஹாஹா!" என்ற பாராட்டுரையும் கவிஞர் பெருமானின் காதில் விழுந்தன. 'சட்டினி இந்த உருவத்திலும் வருமோ?' என்ற ஐயப்பாட்டுடன் அன்னார் தலை நிமிர, "என்னைத் தெரியாவிட்டாலும் என் பெயரையாவது நீங்கள் கேள்விப்பட் டிருப்பீர்கள். நான்தான் வானா மூனா; ஜாலி பிக்சர்ஸ் ஓனர்!" என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தார் வலம்புரி முத்தையா.
ஒன்றும் புரியவில்லை, ஒன்பாற்சுவையாருக்கு: 'உட்கா ருங்கள்!' என்று சொல்லக்கூட முடியாமல் விழித்த கண் விழித்தபடி நின்றார்.
அதற்குள் 'செக்' புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, "தங்கள் பெயர்?" என்றார் படாதிபதி.
"ஒன்பாற்சுவையார்" என்றார் கவிஞர், தட்டுத் தடுமாறி.
"ஓஹோ, நவரஸமும் பாட வரும்போலிருக்கிறது, தங்களுக்கு!" என்று சொல்லிக்கொண்டே 'செக்'கில் ஏதோ எழுதி, "இந்தாருங்கள், ரூபா ஐந்நூற்றொன்றுக்குச் செக் இது; இதை முன் பணமாக வைத்துக்கொள்ளுங்கள். நாளைக் காலை பத்து மணிக்கு வண்டி அனுப்பி வைக்கிறேன்; கம்பெனிக்கு வாருங்கள்!" என்றார் வானா மூனா.
கை நடுங்க அந்தச் செக்கைக் கவிஞர்பிரான் வாங்கிக் கொண்டதுதான் தாமதம்; 'விர்'ரென்று அந்த வீட்டை விட்டு வெளியே வந்தார் வலம்புரி முத்தையா, ஆனால்.......
இம்முறை கதவைத் திறந்து மூடும் சத்தமும், கார் கிளம்பும் சத்தமும் கவிஞர் பெருமானின் காதில் விழவில்லை. காரணம், தமது வாழ்நாளிலேயே முதன் முறையாக ரூபாய் ஐந்நூற்றொன்றுக்குச் செக்கைக் கண்ட அதிர்ச்சியில் அன்னார் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டதுதான்!
★★★
"இதுபோது போது யாம் எங்குள்ளோம்?" மூர்ச்சை தெளிந்த பின் கவிஞர்பிரான் கேட்ட முதல் கேள்வி இது.
"என் மடியில்!"
முகம் சிவக்க இன்பவல்லி அம்மையார் இறுத்த முதல் பதில்
அவ்வளவுதான்; திடுக்கிட்டெழுந்தார் ஒன்பாற் சுவையார். வியப்பு! பெரு வியப்பு!-இரண்டு இட்டிலியோடு இன்னும் இரண்டு இட்டிலி; இரண்டு மசால் வடை; சட்டினி; சாம்பார்; மிளகாய்ப் பொடி; நெய்!!!
அடி சக்கை! இவ்வளவும் தமக்கா, இந்தச் செக்குக்கா?
'எதற்காயிருந்தால் என்ன?' என்று சட்டையின் கையைத் தள்ளிவிட்டுக் கொண்டு, கிடைத்தற் கரிய அந்தப் பேற்றை 'ஒரு கை' பார்த்தார் கவிஞர்.
"இன்னும் இரண்டு வைக்கட்டுமா?"
"வை வை! போதுமென்ற மனம் மனிதனுக்கு எப்போதாவது இருக்குமென்றால், அது எதையாவது தின்னும்போதுதான் இருக்கும் என்பார்கள்; அதுவுமன்றோ இந்நாள் வரை இல்லாமலிருந்தது எமக்கு? வை, வை! இன்னும் நான்கே வேண்டுமானாலும் வை!"
அடுத்தாற்போல் என்றும் இல்லாத திருநாளாக அன்னாருக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்துக் கொண்டே, "எனக்கு இரண்டு பவுன்களில் இரண்டு வளையல்கள்!" என்று ஆரம்பித்தாள் சதி, செக்கை ஒரு, கண்ணாலும், செக்குக்கு உரியவரை இன்னொரு கண்ணாலும் பார்த்துக்கொண்டே.
"ம்........" என்றார் பதி.
"குழந்தைக்கு ஒரு பவுனில் ஒரு சங்கிலி"
"ம்........"
"எங்கேயாவது போகும்போதாவது கட்டிக் கொள்ள எனக்கு ஒரு பட்டுப் புடவை!"
"ம்......."
"அப்புறம், அப்புறம்........"
"யாம் சொல்கிறோம்-எம்முடைய கழுத்துக்கு ஒரு ‘மைனர் செயின்'; கைக்கு இரண்டு கல் இழைத்த மோதிரம்; வெள்ளி வெற்றிலைப் பெட்டி ஒன்று; அதை எடுத்துக்கொண்டு எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்க ஓர் உருப்படாத சீடன்; ஸில்க் ஜிப்பா; ஸெண்ட்-இத்யாதி, இத்யாதி!"
"இந்த முன் பணத்துக்குப் பிறகு பின் பணம் வரும்போது........" என்று மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் பத்தினி.
"அந்தப் பின் பணத்தை என்ன செய்வது என்பதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்வோம்!" என்று செக்கை எடுத்து மடித்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார் அவர்.
"எங்கே, பாங்குக்கா?" என்று அவசர அவசரமாகக் கேட்டாள் அவள்.
"இந்த நேரத்தில் பாங்க் எங்கே இருக்கப் போகிறது? வேறு யாரிடமாவது கொடுத்துத்தான் இதைப் பணமாக்கிக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக நடையைக் கட்டினார் அவர்.
'செக்' கை எடுத்துக்கொண்டு கவிஞர் ஒன்பாற் சுவையார் வேறெங்கும் போய்விடவில்லை; அடியேனைத்தான் தேடிக்கொண்டு வந்தார். நான் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு செக்கை வாங்கிப் பார்த்தேன்; 'கிராஸ்' செய்த செக்காயிருந்தது. "இது பணமாக இரண்டு நாட்களாவது ஆகுமே?" என்றேன்.
"நாளைக் காலை பத்து மணிக்கன்றோ அன்னார் எனக்கு வண்டி அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்? அதற்குள் யாம் வாங்கவேண்டியவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு தீர வேண்டிய நிலையிலன்றோ உள்ளோம்?" என்றார் கவிஞர்.
"அதனாலென்ன, உங்களுக்கு வேண்டியவற்றை யெல்லாம் யாரிடமாவது இரவல் வாங்கிக்கொண்டு விட்டால் போகிறது!"
"நகை நட்டுக்கள் இரவலாகக் கிடைக்கலாம்; ஸில்க் ஜிப்பா ......"
"அதுகூடச் சலவை நிலையங்களில் வாடகைக்குக் கிடைப்பதாகக் கேள்வி!"
"அதற்குரிய தொகையையாவது உம்மால் கொடுத்து உதவ முடியுமா?"
"தருகிறேன்!"
"அங்ஙனமே 'ஸெண்ட் பாட்டில்' ஒன்றும்....."
"வாங்கித் தருகிறேன்!"
"அடுத்து, உருப்படாத சீடன்......"
"ஏன் உருப்படும் சீடனாயிருந்தால் என்னவாம்?"
"அவன் என்னையே - கவிழ்த்து விட்டாலும் கவிழ்த்துவிடலாமன்றோ?"
"அஞ்சற்க! உருப்படாத சீடன் ஒருவன் கிடைக்கும் வரையாமே உ.மக்கு இரவல் சீடனாக இருந்து வருவோம்!"
"மகிழ்ச்சி! நாளைக் காலை ஒன்பது மணிக்கெல்லாம் எமது இல்லத்துக்கு வந்துவிடும்; இந்தச் செக்கையும் உமது கணக்கிலேயே கட்டிவிடும்!"
"சரி!" என்று நான் அவரிடம் பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டி, "ஸெண்ட்டையும் நீங்களே வாங்கிக்கொண்டு விடுங்கள், உங்களுக்குப் பிடித்த மணத்தில்!" என்றேன்.
"நன்று, நன்று!" என்று கவிஞர் பெருமான் உற்சாகத்துடன் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார்.
★★★
மறுநாள் காலை கவிஞரும் நானும் 'சர்வாலங் காரதாரி'களாக வாசலில் நின்றுகொண்டிருந்தோம், வானா மூனாவின் வண்டியை எதிர்நோக்கி-வண்டி வந்தது; சென்றோம்.
'மியூஸிக் ஹால்' என்ற அறிவிப்புப் பலகையுடன் காட்சியளித்த ஓர் ஹாலில் பக்க வாத்தியக்காரர்கள் பலர் பலவிதமான வாத்தியங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் எங்களைக் கொண்டு போய் விட்டார்கள். அங்கே இருந்த வானா மூனா ஆர்மோனியத்தைக் கட்டி அழுது கொண்டிருந்த ஒருவரை ஒன்பாற்சுவையாருக்குச் சுட்டிக் காட்டி, "இவர்தான் மியூஸிக் டைரக்டர்!" என்றார்.
"ஓகோ!" என்றார் கவிஞர்.
அடுத்தாற்போல் ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்றை நீட்டினார்கள். "இதுதான் பாட்டுக்குரிய சம்பவமோ?" என்று அலட்சியத்துன் அதை வாங்கிப் பார்த்தார் கவிஞர்.
ஐயகோ! அதில் பாட்டுக்குரிய சம்பவமா இருந்தது? -இல்லை , பாட்டே இருந்தது - 'என்ன பாட்டு?' என்கிறீர்களா? இதோ:
எடுப்பு
டப்பா, டப்பா, தகர டப்பா!
டப்பா, டப்பா, தகர டப்பா!
தொடுப்பு
பொழுது போன வேளையிலே
கழுதை வாலில் கட்டிவிட்டால்
இழுத்துக்கொண்டு ஓடையிலே
எழும் இன்ப நாதமடா! (டப்)
வி.க.-30 முடிப்பு
டண்டணால், டண்டணால்,
டண்டணால், டண்டணால்!
தானாப் போடும் தாளம், டப்பா!
மானாமதுரை போகும் குப்பா! (டப்)
'மியூஸிக் டைரக்டர்' இந்தப் பாட்டை ஒரு முறை பாடிக் காட்டியதும் வானா மூனா 'ஓஹோஹோ!' என்று அந்த ஹாலே அதிரும்படிச் சிரித்துவிட்டு, எப்படி, பாட்டு? என்றார் கவிஞர் பெருமானிடம்.
"வழு, ஒரே வழு! என்றார் கவிஞர்.
"எது? பேப்பர் ஒரே வழுவழுப்பா யிருப்பதைச் சொல்கிறீர்களா?"
"இல்லை, பாடலில் பிழை மலிந்து கிடப்பதைச் சொல்கிறேன்!"
"நாசமாய்ப் போச்சு, போ! பின் பாட்டுக்காரன் கூடப் பாடலில் பிழை காண ஆரம்பித்தால் நான் வாழ்ந்த மாதிரிதான்!" என்றார் வானா மூனா எரிச்சலுடன்.
"என்ன சொன்னீர்!" என்று ஆத்திரத்துடன் எழுந்தார் கவிஞர்.
"அவனவன் வேலையை அவனவன் செய்தால் போதும் என்றேன்!"
"எது, எவன் வேலை?"
"பின்னணி பாடுவது உமது வேலை! அதற்குத் தான் உம்மை இங்கே அழைத்திருக்கிறேன்; அதை ஒழுங்காகச் செய்யும்!"
"என்ன! பின்னணிப் பாடகனோ, யாம்?"
அவ்வளவுதான்; மறுபடியும் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்ட கவிஞர்பிரானை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பிப்பதற்குள் என் பாடு 'போதும், போதும்' என்று ஆகிவிட்டது!
★★★
என்னே கொடுமை, என்னே கொடுமை! கம்பனை இனம் கண்டு கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், கவிஞர் ஒன்பாற்சுவையாரையும் இனம் கண்டு கொல்லும் நாள்- வழு, வழு!-இனம் கண்டு கொள்ளும் நாள் எந்நாளோ, எந்நாளோ?
செய்ததும் செய்வதும்
தனக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே அவன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் - அவன் என்றால் அது அருணாசலத்தைக் குறிக்கும்; அவர் என்றால் அது பாங்கர் வேங்கடாசலபதியைக் குறிக்கும்.
பாங்கர் வேங்கடாசலபதியின் பங்களாவுக்குப் பக்கத்தில்தான் அருணாசலத்தின் பன்றிக் குடிசை இருந்தது - ஆம், பன்றிக் குடிசைதான் - யாரோ பன்றி வளர்ப்பதற்காகப் போட்டு வைத்திருந்த குடிசையை அவர்கள் ஐம்பது ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள் - ஐம்பது ரூபாய் என்றால் அவர்களுக்கு லேசா? - அதற்காக நம் மத்திய சர்க்காரைப் பின் பற்றி அவர்கள் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் அல்லவா வகுக்க வேண்டியிருந்தது!
இத்தனைக்கும் அந்த வீட்டில் வருவாய்க்கு வழி தேடுவோர் ஒருவர் அல்லர்; மூவர்! - மூவர் என்றால் அருணாசலத்தின் தாயையும் தந்தையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் - தந்தை தணிகாசலத்துக்குத் தோட்ட வேலை; தாய் வள்ளியம்மைக்கு வீடு கூட்டும் வேலை; மகன் அருணாசலத்துக்கோ கொல்லன் பட்டறையில் துருத்தி ஊதும் வேலை!- 'அதற்குள் அவனும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டானா? என்ன வயதிருக்கும்?' என்று கேட்கிறீர்களா?-யார் கண்டார்கள்? - அவனுக்கென்ன, பிறந்த நாள் விழாவா கொண்டாடப்போகிறார்கள்-ஜன்ம நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் கணித்து வைக்க?- அதிலும், அஷ்ட திக்குப் பாலகர்களில் ஒருவனாய் அவன் அந்த வீட்டில் அவதரித்திருக்கும்போது, அவனுடைய பிறந்த நாள் அவன் பெற்றோருக்கு ஒரு நல்ல நாள்தானே?
அஷ்ட திக்குப் பாலகர்கள் என்றால், அவனுடன் பிறந்த மற்ற எழுவரின் கதி?-யாருக்குத் தெரியும், 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற நம்பிக்கையில் அவர்களைப் பெற்றவர்களே அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது?
கடைசி கடைசியாகத்தான் அருணாசலம் பிறந்தானாம். அவனுக்கு வயது என்ன என்று கேட்டால், அவன் அம்மா சொல் வாள்-'இந்த மாமாங்கம் வந்தால் பன்னிரண்டு' என்று!- அதாவது, சென்ற மாமாங்கத்தின்போது அவன் பிறந்தானாம் - போதாதா, ஜாதகம்?
ஒரு நாள் அவனை நான் கேட்டேன்- "உன்னைப் போன்றவர்களை எப்படியாவது படிக்க வைத்துவிடவேண்டும் என்பதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு மேல் பள்ளிக்கூடம், சம்பளச் சலுகை, ஒரு வேளை ஓசிச் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்து வருகிறார்களே நீ படிக்கக்கூடாதா?" என்று.
"நான் படிக்கத் தயார்தான் ஸார், ஏன்னா, என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சேர்த்துச் சாப்பாடு போட்டால்!" என்றான் அவன்.
"அவர்களுக்கு நீயாசாப்பாடு போடுகிறாய்?"
"நான் ஒரு வேளை அவர்களுக்குப் போட்டால், அவர்கள் ஒரு வேளை எனக்குப் போடுகிறார்கள்!"
அதற்கு மேல் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை - என்ன கேட்பது, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள்ள ஒரே பிரச்னை சோற்றுப் பிரச்னையாயிருக்கும்போது?
★★★
வெளிக்குப் போகும் வேலையைக்கூடப் படுக்கையறைக்குப் பக்கத்திலேயே 'நாகரிக'மாகச் செய்து கொண்டிருந்த பாங்கர் வேங்கடாசலபதி, அருணாசலத்துக்கு ஒரு பெரும் புதிராயிருந்து வந்தார். அவருடைய அறைக்கு நேர் எதிரே அவன் வேலை செய்யும் பட்டறையும் இருந்ததால், துருத்தியை மிதித்தபடி அவன் அவரையே பார்க்கப் பார்க்க அவருடைய பிறவியே 'அதிசயப் பிறவி'யாகத் தோன்றும் அவனுக்கு. குளிர்சாதன அறை குளுகுளுக்க, பட்டு மெத்தை பளபளக்க, மின் விசிறி சிலுசிலுக்க, அத்தர் மணம் கமகமக்க அவர் தூங்கும் அழகையும், பொழுது விடிவதற்கு முன்னால் அழகி ஒருத்தி அரிதுயில் களைந்து, எழில் மிகு வீணயை எடுத்து மீட்டி பூபாளம் வாசிப்பதையும், அவளுக்கு அடுத்தாற் போல் கையில் டூத் பேஸ்ட் - பிரஷ்ஷுடன் ஒருவன், துண்டுடன் ஒருவன், காபியுடன் ஒருவன் பறந்து வந்த வந்த அறையைச் சூழ்ந்து கொண்டு நிற்பதையும், அவர் எழுந்து வாயைத் திறப்பதற்கு முன்னால் அத்தனை பேரும் ஓடோடியும் வந்து, 'என்ன, என்ன?' என்று கண்ணால் கேட்பதையும், "ஒன்றுமில்லை, கொட்டாவி விடத்தான் வாயைத் திறந்தேன்!" என்று அவர் திருவாய் மலர்ந்தபின் அவர்கள் ஒதுங்கி நிற்பதையும் பார்க்கும்போது - கிழிந்த ஓலைப் பாய் கிலுகிலுக்க, தலைக்கு அணையாக வைத்துக்கொண்டிருந்த கை வெலவெலக்க, ஆயிரமாயிரம் மூட்டைப் பூச்சிகள் தனக்காக இரவு பூராவும் கண்விழித்திருந்து, தன்னுடன் 'கிச்சு, சிச்சு' மூட்டி விளையாட, சுவர்க்கோழி 'சொய்ங் சொய்ங்' என்று சுருதி கூட்ட, கொசுக்கள் 'நொய்ங், நொய்ங்' என்று நீலாம்பரி வாசிக்க, தான் தூங்கும் அழகும், பொழுது விடிவதற்கு முன்னால் காகமோ, கர்த்தபமோ வந்து தன் வீட்டருகே கத்துவதும், ‘நல்ல சகுனம்' என்று நினைத்துக் கொண்டே தான் எழுந்திருப்பதும், வெளிக்குச் செல்ல ஆற்றங்கரையைத் தேடி 'அநாகரிக'மாக ஓடுவதும், பல்லைத் தேய்க்க வேப்பங் குச்சியை நாடுவதும், பழைய சோற்றுப் பானையைத் திறந்தால், ராத்திரிதான் எங்கிருந்தோ ஒரு விருந்தாளி வந்து தொலைந்தானே, உனக்கு ஏது பழையது. என்று கேட்பது போல அது தன்னைப் பார்த்து வாயைப் பிளப்பதும் ஞாபகத்துக்கு வரும்? அது மட்டுமா? தன்னுடைய உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் சுக்குக் கஷாயத்தோடு சரி; அந்த அபூர்வ மனிதரின் உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டாலோ உள்ளுர் டாக்டர்கள், உள்ளூர் ஆஸ்பத்திரிகளைக்கூட அவர் சீந்துவதில்லை; அமெரிக்காவுக்கும் ஸ்விட்ஜர்லாந்துக்கும் பறக்கிறார்! - இப்படியெல்லாம் இருக்க, வாழ, அவரால் எப்படி முடிகிறது? அதற்காக அவர் என்ன செய்கிறார்? என்னதான் செய்கிறார்.
இந்தக் கேள்வி அவனுடைய உள்ளத்திலிருந்து இன்று நேற்று எழவில்லை; அவனுக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே எழுந்துவிட்டது.
இத்தனைக்கும் அவர் கால் வலிக்கத் துருத்தி ஊதுகிறாரா? கை வலிக்க எதிர் முட்டி அடிக்கிறாரா? உலைக்களத்தில் வேகும் இரும்போடு இரும்பாக வேகிறாரா? உடம்பெல்லாம் கரியைப் பூசிக்கொண்டு, குளிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் வியர்வையாலேயே அதைத் துடைத்துக் கொள்கிறரா?- இல்லையே?
அவருடைய தகப்பனார் தோட்ட வேலைக்குப் போகிறரா? தாயார் வீடு கூட்டப் போகிறாளா?-இல்லையே?
இவையொன்றும் இல்லையென்றால் அவர் இப்படி யெல்லாம் இருக்க, வாழ என்ன செய்தார்? என்னதான் செய்தார்?
★★★
இந்தப் புதிரை- ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவில்லையென்றால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு. ஒரு நாள் அவருடைய வீட்டு வேலைக்காரர்களில் ஒருவனை நெருங்கினான்; விஷயத்தை வினயத்தோடு தெரிவித்தான்.
அவனோ கடகடவென்று சிரித்து விட்டு, "அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?" என்று கேட்டான்.
'ஆமாம்' என்பதற்கு அடையளமாகத் தலையை ஆட்டினான் அருணாசலம்.
"சரி, தெரிந்துகொள் - பாங்கர் பஞ்சாபகேசனுக்கு அவர் பிள்ளையாய்ப் பிறந்தார்!"
"இவ்வளவுதானா அவர் செய்தது? என்றான் அவன் வியப்புடன்.
"ஆம் தம்பி, ஆம்; அந்த அதிசய மனிதர் செய்ததெல்லாம் அவ்வளவேதான்!"
"செய்தது சரி; செய்வது?" என்றான் அவன் மேலும் வியப்புடன்.
"இன்னொரு பாங்கரைப் பெற்றெடுக்கும் வேலை!"
"அதைத் தவிர வேறொரு வேலையும் செய்வதில்லையா, அவர்?"
"இல்லை; இல்லவே இல்லை!"
"அதிசயம்; அதிசயத்திலும் அதிசயம்!" என்று கை கொட்டிச் சிரித்தான் அருணாசலம்.
"சிரிதம்பி, சிரி கண்ணீருடன் சிரிப்பும் கலந்தால்தான் கவலை இன்னும் கொஞ்ச நாட்களாவது நம்மை இந்த உலகத்தில் வாழ விட்டு வைக்கும்!" என்றான் அவன், பெருமூச்சுடன்.
இரு பேரப்பிள்ளைகள்
"பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா? -சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா?" என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த கண்களுக்குத் தன் கையால் ஒளியைத் தேக்கிக் கொடுத்துக் கொண்டே திண்ணைக்கு வந்தார் பெரியண்ணா.
அப்போது, "என்ன பெரியவரே, சௌக்கியமா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார் எதிர் வீட்டுச் சின்னண்ணா.
சின்னண்ணாவும் அப்படி யொன்றும் சிறியவரல்ல; அவரும் பெரியவரே. ஆனாலும் அந்தப் 'பிள்ளைக் குறும்பு' இன்னும் அவரை விட்டபாடில்லை!
"என்னமோ, இருக்கிறேன்!" என்றார் பெரியண்ணா, தான் இருப்பதையே ஒரு பெரிய குற்றமாகக் கருதுபவர்போல்.
★★★
"அவர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம்! வாலிபத்தில் அவர்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு மனைவிமார்கள்; அந்த மனைவிமார்களை மஞ்சள் - குங்குமத்தோடு அனுப்பி வைத்துவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்த இரண்டாவது பொழுது போக்கோ தொணதொணப்பு!-அந்தத் தொணதொணப்புக்கு இந்த 'ராக்கெட் யுக'த்தில் யார் அவ்வளவு எளிதில் இரையாகிறேன் என்கிறார்கள்? அப்படியே ஒரிருவர் இரையாகக் கிடைத்தாலும் 'படம் கொண்ட பாம்பின் வாயில் பற்றிய தேரைபோ'லல்லவா அவர்கள் விழிக்க 'ஆரம்பித்து விடுகிறார்கள்!
அதற்காக அவர்கள் இருவரும் அயர்ந்து போய் விடுவதும் இல்லை; தங்களுடைய தொணதொணப்புக்கு வேறு யாரும் இரையாகவில்லையென்றால், அவர்களே ஒருவருக்கொருவர் இரையாகிக் கொண்டு விடுவார்கள்!
ஆம், அவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் அவர் இவரைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்; இவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் இவர் அவரைத் தேடிக்கொண்டு போய்விடுவார் அன்றைய சந்திப்புக்கும் அதுவே காரணம்!
★★★
காரணம் அதுவாயிருந்தாலும் காரியம் என்று ஒன்றும் இருக்கத்தான் இருந்தது. அந்தக் காரியம் வேறொன்றுமில்லை; ஒரு சிட்டிகை ஓசிப் பொடி! முதலில் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு, "எப்பொழுது கேட்டாலும் 'என்னமோ இருக்கிறேன்!' என்பதுதானா? அப்படி என்ன குறைச்சல் ஐயா, உமக்கு?" என்று கேட்டார் சின்னண்ணா.
"என்னத்தைச் சொல்வது, போங்கள்! என்னுடைய பையனைப்பற்றியோ கேட்கவே வேண்டாம். அவனிடம் யாராவது வந்து, 'என் அப்பா எனக்கு இதை வைத்துவிட்டுப் போனார், அதை வைத்து விட்டுப் போனார்' என்று அளந்தால் போதும்; 'என் அப்பாவும் என்னை அப்படி யொன்றும் வெறுங்கையுடன் விட்டு விட்டுப் போவதாக இல்லை; திவசம் வைத்து விட்டுப் போகப் போகிறார், திவசம்' என்று என் காதில் விழும்படிச் சொல்கிறான்!" என்றார் பெரியண்ணா , அழாக் குறையாக.
"சரி, விடும். நீரும் நானும் அதைத் தவிர வேறு என்னத்தை வைத்து விட்டுப் போகப் போகிறோம்?" என்றார் சின்னண்ணா அலட்சியமாக.
"அவன்தான் அப்படியென்றால் அவனுக்கென்று வந்து வாய்த்த மனைவிக்கோ நான் ஒரு வத்தல்!"
"வத்தலா!"
"ஆமாம்; வாசலில் வத்தலைக் காய வைத்து விட்டு, அந்த வத்தலோடு வத்தலாக என்னையும் வெய்யிலில் காய வைத்து விடுகிறாள் அவள்! எனக்கென்ன கண்ணா தெரிகிறது, காக்காயை விரட்ட?"
"அந்த விஷயத்தில் மட்டும் நீர் கொஞ்சம் ஜாக்கிரதையாயிரும்; உம்மையும் வத்தலென்று நினைத்துக் காக்காய் கொத்திக்கொண்டு போய்விடப் போகிறது!"
"இந்த வீட்டில் எது நடக்கும், எது நடக்காது என்றே சொல்வதற்கில்லை, காலையில் பாருங்கள், 'இங்கே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட, அங்கே வந்து உங்களுடன் பேசிக் கொண்டாவது இருக்கலாமே?' என்று நினைத்தேன். இப்பொழுதெல்லாம் நினைத்தால் நினைத்தபடி வந்து விட முடிகிறதா? கண்தான் தெரியவில்லை யென்றால், காலுமல்லவா இடறித் தொலைக்கிறது? அதற்காகப் பேரப் பிள்ளையைக் கூப்பிட்டோர், துணைக்கு. அவன் என்னடா என்றால், 'நீ போதாத்தா, எனக்கு வேலை இருக்கு!' என்று என் தலையில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான், பம்பரம் ஆட! அந்தப் பயலுக்கு ஒரு முறை ‘டிப்தீரியா' வந்திருந்தபோது, அவனுக்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம் இருக்கிறதே, அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!"
"உம்முடைய பேரப் பிள்ளையைப் பார்க்கும் போது என்னுடைய பேரப் பிள்ளைகள் எவ்வளவோ தேவலை போலிருக்கிறதே?"
"உங்களுக்கு ஏதய்யா, பேரப் பிள்ளைகள்?"
"ஏன் இல்லை, ஒருவருக்கு இருவர் இருக்கிறார்களே, சுவாமி"
"இதே ஊரிலா?"
"ஆமாம்"
ஆச்சரியமாக இருக்கிறதே?"
"அதைவிட ஆச்சரியம் என்ன வென்றால், அவர்கள் நான் கூப்பிடும்போது பம்பரம் ஆடப் போவதுமில்லை; பட்டம் விடப் போவதுமில்லை!"
"கொடுத்து வைத்தவர்தான்!"
"அவர்களுக்கு இதுவரை 'டிப்தீரியா'வும் வந்தது கிடையாது; 'டான்'ஸிலும் வந்தது கிடையாது!"
"வரவேண்டாம்; அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு எதுவுமே வர வேண்டாம்."
"அவர்கள் என்னை அவமதிப்பதுமில்லை; அலட்சியப் படுத்துவதுமில்லை!"
"தீர்க்காயுசாக இருக்கட்டும்!"
"நான் எங்கே கூப்பிட்டாலும் சரி, எப்பொழுது கூப்பிட்டாலும் சரி-அவர்கள் என்னுடன் வரத்தயார்!"
"கிலோ கணக்கில் சாக்லெட் வாங்கி, கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ?"
"அதெல்லாம் ஒன்றும் கிடையாது; பகவத் கீதை படிக்காமலே, பலனை எதிர்பாராமல் கருமம் செய்கிறவர்கள் அவர்கள்!"
"அப்படியானால் ஒருநாள் இருபத்துநாலு மணி நேரமும் அல்லவா அவர்கள் உங்களுடன் இருந்தாக வேண்டியிருக்கும்?"
"ஆமாம்; ஒரு கணங்கூட அவர்கள் என்னை விட்டுப் பிரிவது கிடையாது!"
"அப்படி யிருந்துமா அவர்களை நான் இதுவரை பார்க்கவில்லை ?"
"உமக்குக் கண் தெரிந்தால்தானே பார்ப்பதற்கு?"
"அதனாலென்ன, அவ்வளவு அருமையான குழந்தைகளை நான் தடவிப் பார்த்தாவது உச்சி முகரக் கூடாதா? எங்கே, அவர்களைக் கொஞ்சம் அருகே வரச் சொல்லுங்கள்?"
"இதோ, அவர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்; தடவிப் பாருங்கள்!" என்றார் சின்னண்ணா, தம்முடைய பேரப் பிள்ளைகளை அவருக்கு அருகே தள்ளி.
ஆவலுடன் அவர்களைத் தடவிப் பார்த்த பெரியண்ணா , கண்களில் நிர்துளிர்க்கச் சொன்னார்:
"ஆஹா! மூக்குக் கண்ணாடியையும் கைத் தடியையுமே பேரப் பிள்ளைகளாகக் கொண்டு விட்ட நீங்கள்தான் எவ்வளவு பெரிய பாக்கியசாலி!"
பணமே! அன்புக்கும் அதுவே ஆதாரம்
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!"
என்று நம் அமரகவி பாரதியார் பாடியிருக்கிறார் அல்லவா? - அந்த அமர வாக்கை யார் காப்பாற்றினாலும் காப்பாற்றாவிட்டாலும், நாமாவது காப்பாற்றுவோமே என்ற திடசங்கல்பம் போலிருக்கிறது அவர்களுக்கு. இல்லாவிட்டால் ஆற்றங்கரை யோரத்தை ஒட்டினாற்போல் இருக்கும் அந்தப் பள்ளத்தாக்கில் - அடிக்கடி பெருகி வரும் வெள்ளம், நகரத்தை அழகுபடுத்த வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் அவர்களுடைய குடிசைகளைப் பிய்த்து எறிந்து, அவர்களைப் பாடாய்ப் படுத்த வரும் நகராண்மைக் கழகத்தார், அடுத்தாற்போல் இருக்கும் சுடுகாட்டில் எரியும் பிணங்களிலிருந்து வரும் துர்நாற்றம், அந்தச் சுடுகாட்டுக்கு எதிர்த்தாற்போல் அமைந்திருக்கும் நாய்களின் கொலைக்களத்திலிருந்து கிளம்பும் அலறல், ஓலம்-இவை எதற்கும் அஞ்சாமல் தங்கள் அருமை மனைவிமார், ஆசைக் குழந்தைகள் ஆகியவர்களோடு அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வருவார்களா?
என்ன சொன்னேன், 'வாழ்ந்து வருகிறார்கள்' என்றா சொன்னேன்?-இல்லை, அவர்கள் வாழ்ந்து வரவில்லை - தினசரி இறப்பதும் பிறப்பதுமாயிருந்து வருகிறார்கள்- அதிர்ஷ்டசாலிகள் ஐயா, அதிர்ஷ்டசாலிகள்! நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை சாவு வந்தால், அவர்களுக்குத் தினம் தினமல்லவா வந்துகொண்டிருக்கிறது!
நகரத்தின் அழகையும், நாகரிகத்தையும் அந்த 'நித்திய கண்ட'ங்கள் காப்பாற்றாவிட்டால் என்ன, அவற்றைக் காப்பாற்றுவதற்கென்றே வழிவழியாக வந்து கொண்டிருக்கும் சிலருடைய பங்களாக்கள் ஆற்றங்கரையின்மேல் அழகான பூங்காக்களுக்கு நடுவே இருந்தன. அந்தப் பங்களாக்கிளிலுள்ள குழந்தைகள் தங்களுடைய விளையாட்டுச் சாமான்களுடன் ஆற்றங்கரைக்கு விளையாட வரும்போதெல்லாம் பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளை அதிசயத்துடன் பார்க்கும்; அதே மாதிரி பள்ளத்தாக்கிலுள்ள குழந்தைகளும் பங்களாக்கிலுள்ள குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் வியப்பே உருவாய்த் தங்களை மறந்து நிற்கும்.
இரண்டும் இரு வேறு உலகங்கள், இரு வேறு துருவங்கள் அல்லவா?-ஒன்றை யொன்று சந்திப்பதே அபூர்வ நிகழ்ச்சிதானே?
★★★
ஒரு நாள் மாலை ஆயா ஒருத்தி ஓர் ஆண் குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்தாள். அதைப் பார்த்ததும் பள்ளத்தாக்கில் பிறந்த மேனியாய் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தைக்கு-ஆம், தன் மானத்தைத் தானே காத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றும் வயதை அடையும் வரை அதன் பெற்றோர் அதனுடைய வயிற்றைத் தவிர வேறொன்றையும் கவனிப்பதில்லை; கவனிக்க முடிவதும் இல்லை - என்ன தோன்றிற்றோ என்னமோ, "ச்சு, ஐயோ பாவம்" என்றது அனுதாபத்துடன்.
இதைக் கேட்டதும் வண்டியில் அமர்ந்திருந்த குழந்தை மட்டுமல்ல; அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த ஆயாவும் அதை அதிசயத்துடன் பார்த்தாள்.
"ஏன், பாட்டி! இவன் நொண்டியா, இவனால் நடக்க முடியாதா?"
பள்ளத்தாக்குக் குழந்தையின் அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுப் பங்களாக் குழந்தை சிரித்தது.
"ஏன் சிரிக்கிறாய்?"
"நானா நொண்டி இதோ பார்!" என்று வண்டியை விட்டுக் கீழே குதித்து டக், டக் என்று நடந்து காட்டியது அது.
"உன்னால் நடக்க முடியும்போது உனக்கு ஏன் வண்டி?" என்று கேட்டது இது.
"நடந்தால் கால் வலிக்கும் என்று என் அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்தார்!" என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டே, வண்டியிலிருந்த ஒரு சிறு சிதார் வாத்தியத்தை எடுத்து 'டொய்ங், டொய்ங்' என்று வாசித்துக் காட்டியது அது.
"இது?" என்று கேட்டது இது.
"இதுவும் என் அப்பா வாங்கிக் கொடுத்ததுதான்!"
"அதுவும் அப்பா வாங்கிக் கொடுத்தார்; இதுவும் அப்பா வாங்கிக் கொடுத்தார்-ஆச்சரியம் தாங்கவில்லை, வெந்த சோற்றைத் தவிர வேறொன்றையும் காணாத குச்சு வீட்டுக் குழந்தைக்கு; அவன் அணிந்திருந்த 'சூட், பூட்' ஆகியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, 'இது, இது?' என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த மச்சு வீட்டுக் குழந்தையோ எல்லாவற்றுக்கும் 'என் அப்பா வாங்கிக் கொடுத்தார், என் அப்பா வாங்கிக் கொடுத்தார்' என்ற பதிலையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தது.
கடைசியில், "உன்னுடைய அப்பா உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?" என்று கேட்டது அது.
"எனக்கா வந்து ....... வந்து ........"
மேலே ஒன்றும் சொல்ல முடியவில்லை இதால்; விழித்தது.
அவன் மறுபடியும் சிரித்தான்.
வெட்கமாகப் போய்விட்டது இவளுக்கு. ஓடினாள்- 'ஒரு சிட்டிகை ஓசிப் பொடி கொடுக்க எந்தப் புண்ணியவானாவது இந்தப் பக்கம் வர மாட்டானா?' என்று வழி மேல் விழி வைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம்.
"தாத்தா, தாத்தா! என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தாத்தா?"
தாத்தாவின் காதில் இது விழவில்லை, அவருடைய கவனமெல்லாம் ஓசிப் பொடியின்மேலேயே இருந்ததால்!
அவரைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, "தாத்தா, தாத்தா! என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தாத்தா?" என்று மறுபடியும் கேட்டாள் அவள்.
"உன் தலை!" என்றார் தாத்தா மிக்க வெறுப்புடன்.
குழந்தைக்கு ஆனந்தம் தாங்கவில்லை; 'குதி, குதி' என்று குதித்துக் கொண்டே ஓடியது அவனிடம்.
"என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தெரியுமா? என் தலை!"
அவன் மீண்டும் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறாய்?"
"உன் தலையை உனக்கு யாராலும் வாங்கிக் கொடுக்க முடியாது!"
இப்படிச் சொல்லிவிட்டானே பாவி, என்ன செய்வாள் பாவம்! - மீண்டும் ஓடினாள். 'அரைப்படி அரிசி யாராவது முறைக்கடனாகக் கொடுக்க மாட்டார்களா, அன்றைய இரவைக் கழித்துவிட மாட்டோமா?' என்ற கவலையோடு கையில் முறத்துடன் வீடு வீடாக நுழைந்து வந்து கொண்டிருந்த அம்மாவிடம்.
"அம்மா, அம்மா! அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், அம்மா?"
"அது என்ன வாங்கிக் கொடுத்தாரோ, எனக்குத் தெரியாது!"
உண்மையிலேயே தெரியாதுதானே?- எனவே அவள் நிற்கவில்லை; போய்க்கொண்டே இருந்தாள்.
"சொல்லு, அம்மா?"-அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது குழந்தை.
"விளக்கு வைக்கிற நேரமாச்சு! அப்பா பசியோடு வருவார்; விடு சனியனே, விடு!"
"ஊஹும், விடமாட்டேன்; சொன்னால்தான் விடுவேன்!"
"விடப் போகிறாயா, இல்லையா?" - கோபா வேசத்துடன் இரைந்தாள் தாய்.
"போம்மா, சொல்லும்மான்னா!" கொஞ்சலுடன் கெஞ்சியது சேய்.
"சொன்னா கேட்கமாட்டே? போன்னா போ!" என்று குழந்தையைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி, அதன் முதுகில் 'பளார், பளார்' என்று அறைந்தாள் அவள்.
குச்சு வீட்டுக் குழந்தை ‘கோ' வென்று அழுதது.
"இது உன் அம்மா உனக்கு வாங்கிக் கொடுத்ததா, வாங்காமல் கொடுத்ததா?" என்று அதைக் குறும்புடன் கேட்டுவிட்டு, 'கலகல' வென்று நகைத்தது மச்சு வீட்டுக் குழந்தை.
இந்தச் சமயத்தில் கல் உடைத்த கையை ஆற்று நீரில் கழுவிக் கொண்டு, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறித் தோளின் மேல் போட்டுக்கொண்டு அந்த வழியாக வந்த குச்சு வீட்டுக் குழந்தையின் அப்பன், "என்ன, அம்மா! ஏன் அழறே?" என்று கேட்டான். அழுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தும் ஒரு காரணமும் இல்லாதது போல!
"போப்பா! நீ எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தேன்னு கேட்டால், அம்மா சொல்லமாட்டேங்குதே!"
"நானா, உனக்கா ! வந்து .... வந்து ......."
அவனாலும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை; விழித்தான்!
"ஏம்ப்பா , அது உனக்கும் தெரியாதா?" என்றது குழந்தை, ஏமாற்றத்துடன்.
"ஏம்மா தெரியாது? இதோ, என் அன்பு முத்தம்!- இதுதான் உனக்கு நான் வாங்கிக் கொடுத்தது, கொடுப்பது, கொடுக்கப் போவது எல்லாம்!" என்று கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே குழந்தையை வாரி எடுத்து முத்தப் போனான் அவன்.
"போப்பா! முத்தமாம் முத்தம்; யாருக்கு வேணும், உன் முத்தம்!" என்று அவனுடைய கையை உதறித் தள்ளிவிட்டு, விரைத்துக்கொண்டு நின்றது குழந்தை.
"அட, கடவுளே! அன்புக்கும் ஆதாரம் அது தானா?" என்றான் அவன், வானத்தை நோக்கி.
"ஆம், ஆம்!" என்பதுபோல் தன் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தது மச்சு வீட்டுக் குழந்தை!
கொண்டு வா, நாயை!
அன்று என்னவோ தெரியவில்லை; கம்பெனிக்கு வந்ததும் வராததுமாயிருக்கும்போதே, "கொண்டு வா, நாயை!" என்று என்னை நோக்கி இரைந்து விட்டு, மடமடவென்று மாடிக்குப் போனார் முதலாளி.
முதலாளி என்றால், முதல் உள்ள முதலாளி இல்லை ; முதல் இல்லாத முதலானி!
'முதல் இல்லாத முதலாளியும் இந்த உலகத்தில் உண்டா?' என்று நீங்கள் மூக்கின்மேல் விரலை வைக்காதீர்கள் உண்டு; வேறு எந்த உலகத்தில் இல்லா விட்டாலும் எங்கள் சினிமா உலகத்தில் நிச்சயம் உண்டு!
ஆனால், இந்த 'முதலாளி' என்ற 'பட்டம்' இருக்கிறதே, அது மற்ற முதலாளிகளுக்குப் பொருந்துவதை விட, எங்கள் முதலாளிகளுக்குத் தான் ரொம்ப ரொம்பப் பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா?- சொல்கிறேன் - முதலாளி என்ற பெயர் முதல் போடுபவரைக் குறிக்கவில்லை; முதலை ஆளுபவரைத்தான் குறிக்கிறது. எனவே, முதல் போடுபவர் ஒருவராயும், அந்த முதலை ஆளுபவர் இன்னொருவராயும் உள்ள எங்கள் 'சினிமா உலக'த்தில் முதலாளி என்ற பெயர் எங்களுடைய முதலாளிகளுக்குத்தானே கன கச்சிதமாகப் பொருந்துகிறது?
அத்தகு பெருமை வாய்ந்த முதலாளி தானே அன்றொரு நாள் இங்கிருந்த நாயை கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு வரச் சொன்னார்? இன்று அந்த நாய் இங்கே எதற்காம்?- என்னைக் கேட்டால் அது இங்கேயே இருந்திருக்கலாம் என்பேன்; அங்கே கொண்டு போய் விடுவதற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டது அது? ஒன்றுமில்லை; அன்றிரவு பத்து மணிக்கு மேல் யாரோ ஓர் அம்மாள் அவரைத் தேடிக்கொண்டு வந்தார்களாம். 'அம்மாள்' என்றதும் 'வயது நாற்பதுக்கு மேலிருக்கும் போலிருக்கிறது!' என்று நீங்கள் 'குத்து மதிப்புப் போட்டு விடாதீர்கள்; தமக்கு வயது அறுபதானாலும் தம்மைத் தேடிவரும் பெண்களுக்குப் பதினாறு வயதுக்குமேல் போகக்கூடாது என்பது என் முதலாளியின் குறிக்கோள் - மனிதன் என்று ஒருவன் பிறந்து விட்டால் 'குறிக்கோள்' என்று ஏதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அந்தக் குறிக்கோள் அதுவாயிருந்தது, அவருக்கு! - அத்தகைய 'லட்சிய வாதியின் ஆணைப்படி, அன்றிரவும் மணி பத்து என்று தெரிந்ததும் ஆபீஸ் பையன் வழக்கம்போல் அந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டு, அணைக்க வேண்டிய விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, அவ்வப்போது தம்மை எதிர்க்கும் மனச்சாட்சியைக் கொல்வதற்காக ஐயா அருந்தும் போதை அவருடைய மண்டைக்கு ஏறிவிட்டதா என்று அப்படியே ஒரு பார்வையும் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போய் விட்டிருக்கிறான். படுக்க அவன் போன பிறகு அந்தப் 'பத்தினிப் பெண்' வந்திருக்கிறாள்; நாய் குரைத்திருக்கிறது - குரைக்காமல் என்ன செய்யும்?-அன்னியர் யாராவது அகாலத்தில் வந்தால் குரைப்பது அதன் கடமை; அந்தக் கடமையைத் தயவு தாட்சண்யமின்றி அது நிறைவேற்றியிருக்கிறது. மனிதனா, ஆளுக்குத் தகுந்தாற்போல் வேஷம் போட? அதுதான் நாயாச்சே, வேஷம் போட முடியவில்லை அதனால் எனவே, குரைத்திருக்கிறது. பழம்பெரும் இலக்கியங்களிலும், புராண இதிகாசங்களிலும் ஒரு பெண்ணுக்கு என்னென்னவோ இருக்க வேண்டுமென்று சொல்கிறார்களே, அதெல்லாம் ஒன்றுமில்லாத அந்தப் பெண்மணி-அவற்றுக்கெல்லாம் அஞ்சாத அந்தக் கண்மணி-கேவலம், அந்த நாயின் குரைப்புக்கு அஞ்சி வந்த வழியே திரும்பி விட்டிருக்கிறாள். போதை தெளிந்தபின் ஐயா எழுந்து, அந்த 'எதிர்கால நட்சத்திரத்தைத் தேடியிருக்கிறார். அது அங்கே இல்லை - என்ன ஏமாற்றம், எப்படிப்பட்ட ஏமாற்றம்- டிரைவர்! டிரைவர்! என்று மேலே இருந்தபடியே கத்தியிருக்கிறார். அவனோ ‘சகவாச தோஷ'த்தின் காரணமாகத் தன் சக்திக்கு ஏற்றாற்போல் கள்ளச் சாராய'த்தை ஒரு கை பார்த்துவிட்டு, தேடிக்கொண்டு போய்விட்டிருக்கிறான், வெளியே!-என்ன செய்வார், முதலாளி? அளவு கடந்த ஆத்திரத்துடன் கீழே வந்து காரைத் தாமே எடுத்திருக்கிறார்; பெட்ரோல் இல்லை - 'முட்டாள்! வரட்டும் அவன், முதல் வேலையாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு மறு வேலை பார்க்கிறேன்!' என்று கருவிக்கொண்டே போய்ப் படுத்திருக்கிறார்!தூக்கம் வருமா?-வரவில்லை!
அவ்வளவுதான்; அடுத்த நாள் வந்தது ஆபத்து! - டிரைவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்; நாயும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டது!
ஆம், யாருக்கு என்ன வேண்டுமானாலும் இடையூறா யிருக்கலாம்; மழை தேடி வரும் பெண்களுக்கு மட்டும் ஒரு சிறு துரும்புகூட இடையூறாயிருக்கக் கூடாது என்பது அவருடைய
வி.க. -31 சித்தாந்தம் - 'அப்படி என்னதான் இருக்கும் அந்தப் பெண்களிடம்?' என்று என்னைக் கேட்கிறீர்களா? -அது எனக்குத் தெரியாது ஐயா, நிச்சயமாகத் தெரியாது!
டிரைவருக்குப் பதிலாக வேறொரு டிரைவரை நியமித்த முதலாளி, நாய்க்குப் பதிலாக வேறொரு நாயை நியமிக்கவில்லை - எப்படி நியமிக்க முடியும்? - மனிதனென்றால் அவனுக்கென்று தனிக் குணம் எதுவும் இல்லை; எப்படி வேண்டுமானாலும் குணம் மாறவும், கூடு விட்டுக் கூடு பாயவும் அவனால் முடியும், நாயால் முடியுமா? -அது தனக்கென்று ஒரு தனிக் குணம் வைத்துக் கொண்டிருக்கிறதே?
ஆகவே நாய்க்குப் பதிலாக அந்தரங்கக் காரிய தரிசி' என்று ஒருவரை அன்றே நியமித்துவிட்டார், அவர்!
'அந்தரங்கக் காரியதரிசி' என்றால் அப்படி இப்படி அந்தரங்கக் காரியதரிசி இல்லை -முதலாளிக்கு 'ஏர்-கண்டிஷன் ரூம்' என்றால் அவருக்கும் ஏர்-கண்டிஷன் ரூம்; முதலாளிக்கு 'ஹெராட்' கார் என்றால் அவருக்கும் ஹெராட் கார்; அவருக்கும் தனி டெலிபோன் - இப்படியாகத்தானே அந்தரங்கக் காரியதரிசியின் அந்தஸ்தை உயர்த்தி, அதன் மூலம் தம்முடைய அந்தஸ்தையும் திடீரென்று உயர்த்திக்கொண்டு விட்டார், முதலாளி.
அவர்தான் என்ன செய்வார், பாவம்!- வேறு எந்த விதத்திலும் தம்முடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடியாமல் இருக்கும்போது?
அன்றிலிருந்து யார் வந்தாலும் சரி - முதலில் அந்தரங்கக் காரியதரிசியைத்தான் பார்க்க வேண்டும், அவர் வடிகட்டி விட்ட பிறகே வந்தவர்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று.
இதனால் தமக்கு வேண்டியவர்கள் மட்டுமே தம்மைச் சந்திக்கவும், வேண்டாதவர்கள் சந்திக்க முடியாமல் திரும்பி, 'அடேயப்பா! அவரைப் பார்ப்பதென்றால் அவ்வளவு லேசா? கடவுளைப் பார்த்தாலும் பார்த்துவிடலாம்; அவரைப் பார்க்கவே முடியாது போலிருக்கிறதே?' என்று தமக்காகக் கடவுளைக்கூட ஒரு படி கீழே இறக்கி விட்டுவிடவும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு!
கிடைக்கட்டும்; வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, "கொண்டு வா, நாயை!" என்று திடீரென்று சொன்னால், எங்கிருந்து கொண்டு வருவேன்?
வீட்டுக்குப் போய்க் கொண்டு எப்படிக் கொண்டு வருவது? என்றும் அவருடைய வீடு என்ன, பக்கத்திலா இருக்கிறது?
அந்தரங்கக் காரியதரிசி விரும்பினால் வெளிக்குப் போய்விட்டு வரக்கூடக் கார் கிடைக்கும்; எனக்குக் கிடைக்குமா? - நாயைக் கொண்டு வரத்தான்!
அதிலும் பாருங்கள், என்னுடைய வேலையோ கணக்கெழுதும் வேலை-கணக்கு எழுதும் வேலை என்றால் சாதாரணக் கணக்கு எழுதும் வேலையா? - அதுவும் இல்லை ; வராத வரவுக்கும், செய்யாத செலவுக்குமல்லவா நான் கணக்கு எழுத வேண்டியிருக்கிறது?
எனவே, கணக்குக்கும் எனக்கும் வேண்டுமானால் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்; நாய்க்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
‘முன்னாள் காரியதரிசி'யான அந்த நாயை, 'இந்நாள் காரியதரிசி'யான அவர் வேண்டுமானாலும் கொண்டுவரட்டுமே!
இப்படி நினைத்த நான், அந்தரங்கக் காரியதரிசியின் அறையை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தேன்; அவரைக் காணவில்லை!
முதலாளி வருவதற்கு முன்னால் வந்து விடுபவராயிற்றே அவர்? இன்று ஏன் அவர் வந்தபிறகும் வரவில்லை ? ஒன்றும் புரியவில்லை எனக்கு; முகத்தில் கேள்விக் குறியுடன் திரும்பினேன்.
ஆபீஸ் பையன், "உங்களுக்குத் தெரியாதா?" என் வாயெல்லாம் பல்லாக,
"தெரியாதே!" என்று ஒரு கைக்கு இரண்டு கைகளாக விரித்தேன், நான்.
"இவ்வளவுதானா நீங்கள். நேற்றிரவு, 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற பெருநோக்கோடு, முன்பின் தெரியாத யாரோ ஒரு 'புது முகத்தை' முதலாளியிடம் அனுப்பியிருக்கிறார் ஒருவர். அந்தரங்கக் காரியதரிசியிடம் வந்து, 'முதலாளியைப் பார்க்க வேண்டும்' என்று சொல்லியிருக்கிறாள். அவளைப் பார்த்த அந்தரங்கக் காரியதரிசிக்கு அந்த நேரத்தில் எப்படி இருந்ததோ என்னவோ, 'நான் தான் முதலாளி!' என்று சொல்லி, அவளை அகலிகையாகவும் தன்னை இந்திரனாகவும் பாவித்துக் கொண்டு, அந்த 'இந்திரன் செய்த வேலையையும் செய்து விட்டிருக்கிறார்;
முதலாளிக்கு இது எப்படியோ தெரிந்துவிட்டது என்ற செய்தி மறுநாள் காலை அந்தரங்கக் காரியதரிசியின் காதுக்கு எட்டி யிருக்கிறது. அவ்வளவுதான்; ஆபீசுக்குப் போனால் ஆபத்து என்று வீட்டிலிருந்தபடியே தம்முடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டிருக்கிறார்!"
"அப்படியா சங்கதி? -இப்பொழுதுதான் தெரிகிறது, 'கொண்டு வா, நாயை!' என்று அவர் ஏன் வந்ததும் வராததுமாயிருக்கும் போதே அப்படி இரைந்தார் என்று?-சரி; கொண்டு வருகிறேன் ஐயா, அந்த நாயை நானே கொண்டு வருகிறேன்!" என்று நான் நடந்தேன், 'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டபின் உதைக்கு அஞ்சிப் பயனில்லை!' என்று .
"அந்தரங்கக் காரியதரிசியைவிட அல்சேஷியன் நாயே மேல் என்று இப்பொழுதாவது தெரிந்ததே முதலாளிக்கு, அதைச் சொல்லுங்கள்!" என்றான் ஆபீஸ் பையன்.
இரு திருடர்கள்
அன்று ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்து மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விட வேண்டும் என்று நேற்றே சொல்லி வைத்த பீட்டரை இன்னும் காணோமே? என்ற ஏமாற்றம் இன்னொரு பக்கம் - இவையிரண்டுக்கும் இடையே தவித்தபடி, அவன் வரும் வழி மேல் விழி வைத்துக்கொண்டிருந்தான் டேவிட்.
அவனைக் காணவில்லை; காணவேயில்லை.
தன் வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த மாதா கோவிலின் மணிக் கூண்டைப் பார்த்தான் டேவிட், மணி இரண்டு!
காவற்காரன் சாப்பாட்டுக்குப் போயிருக்கும் சமயத்திலல்லவா அவன் கை வரிசையைக் காட்ட வேண்டுமென்று சொன்னான்? அவன்கூட இந்நேரம் திரும்பி வந்திருப்பான் போலிருக்கிறதே?
எங்கே போயிருப்பான்? - வேறு எங்கே போயிருக்கப் போகிறான்? - கடற்கரைக்குத்தான் போயிருக்க வேண்டும், காற்றாடி விட! இனி தாமதிப்பதில் பிரயோசனமில்லை -ஆம், இனி தாமதிப்பதில் பிரயோசனமே இல்லை! - இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவன் கடற்கரையை நோக்கி எடுத்தான் ஓட்டம்; அங்கே.....
டேவிட் நினைத்தது நினைத்தபடியே காற்றாடிதான் விட்டுக் கொண்டிருந்தான் பீட்டர்!
அதிலும் சும்மாவா? -இல்லை ; ‘டீல்' விட்டுக் கொண்டிருந்தான்!
'மாஞ்சா போடுவதில் மகா சூரனான மஸ்தான் காற்றாடியுட னல்லவா இவனுடைய காற்றாடி மோதிக்கொண்டிருக்கிறது? அவனுடைய காற்றாடியையாவது, இவனுடைய காற்றாடி அறுப்பதாவது?
நடக்காத காரியம்; அப்படியே நடப்பதாயிருந்தாலும் அதுவரை தான் இங்கே காத்திருப்பது முடியாத காரியம்!
ஓ! 'வஜ்ஜிர மாஞ்சா போட்டிருக்கிறாரா, இவர்? அதனால்தான் எதிரி எந்த மாஞ்சா போட்டிருந்தாலும் ஓரிரு முறை அறுத்தெறிந்துவிடலாம் என்ற தைரியத்தில் இவர்பாட்டுக்கு நூலை 'மடமட' வென்று விட்டுக்கொண்டே இருக்கிறார்!
விடப்பா விடு; இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமலே நூலை விடு! - மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விடவேண்டும் என்று சொல்லி என்னை அங்கே காக்க வைத்துவிட்டு, இங்கே நீ டீலா விட்டுக் கொண்டிருக்கிறாய், டீல்?. உனக்குப் பின்னால் உருண்டோடி வரும் நூலுருண்டையை நான் அறுத்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னை நீ என்ன செய்வாயாம்?
அதுதான் சரி; அதுதான் தன்னைக் காக்க வைத்ததற்குச் சரியான தண்டனை!
டேவிட் இப்படி நினைத்தானோ இல்லையோ, எடுத்தான் பிளேடை; அறுத்தான் உருண்டையை; பிடித்தான் ஓட்டம்!
அதே சமயத்தில் கையை விட்டுக் காற்றாடி போன ஆத்திரத்தோடு திரும்பினான் பீட்டர்; நூலுருண்டையுடன் டேவிட் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது - என்னதுணிச்சல் இந்தப் பயலுக்கு, என்னை இப்படி அவமானப் படுத்த? -அவ்வளவுதான்; ஊர்க்குருவியைப் பருந்து துரத்துவதுபோல் துரத்தினான் அவன்.
கடற்கரையில் பிடித்த ஓட்டத்தை மாந்தோப்பின் வாசலை அடைந்த பிறகு தான் நிறுத்தினான் டேவிட்.
"இப்படிக் கூடச் செய்யலாமா, நீ?" என்று பீட்டர் கையை ஓங்கினான்.
"இல்லாவிட்டால் ஒரு மணிக்கே இங்கு வந்திருக்கவேண்டிய நாம் மூன்று மணிக்காவது வந்திருப்போமா?" என்று சமாளித்தான் டேவிட்.
அவ்வளவுதான்; "நல்ல வேலை செய்தாய், நான் மறந்தே போய்விட்டேன்!" என்று தன் கோபத்தை மறந்து, பீட்டர் அவனைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டான்!
அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? இருவரும் ஒரே தாவில் மதிற்சுவரின்மேல் ஏறி உட்கார்ந்தனர்.
"முதலில் காவற்காரன் எங்கே இருக்கிறான் என்று பார்?" என்றான் பீட்டர், தன்னுடைய கண்ணோட்டத்தையும் தோப்புக்குள் செலுத்தியபடி.
"அதோ, அந்த மரத்தடியைப் பார்; அவன் தூங்குகிறான் போலிருக்கிறது!" என்றான் டேவிட்.
"ஓஹோ, சாப்பிட்ட களைப்பிலே இளைப்பாறுகிறார் போலிருக்கிறது! இளைப்பாறாட்டும், இளைப்பாறட்டும்; நன்றாக இளைப்பாறட்டும்!" என்று சொல்லிக்கொண்டே, கைக்கு எட்டிய தூரத்திலிருந்த இரண்டு மாங்காய்களைப் பறித்துக் கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு தோப்புக்குள் குதித்தான் பீட்டர்; அவனைத் தொடர்ந்து டேவிட்டும் குதித்தான்.
'என்ன சத்தம்?' என்று படுத்தபடி கேட்டுக் கொண்டே, தலையைத் தூக்கிப் பார்த்தான் காவற்காரன்.
'வந்தது ஆபத்து!' என்று நினைத்த டேவிட் ஒரே தாவாகத் தாவி மதில்மேல் ஏறப்போனான்; 'உஸ்!' என்று அவனை இழுத்து ஒருமரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, கால் சட்டைப் பைக்குள் இருந்த மாங்காய்கள் இரண்டையும் எடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் காவற்காரனுக்கு முன்னால் போய் விழுமாறு உயரத் தூக்கி எறிந்தான் பீட்டர். "ஓ, மாங்காயா? விழட்டும். விழட்டும்!" என்று மீண்டும் தலையைக் கீழே போட்டுக் கண்ணையும் மூடிக்கொண்டுவிட்டான் அவன்!
"தாலேலோ, தாலேலோ!" என்று மெல்ல அவனுக்குத் தாலாட்டிக்கொண்டே டேவிட்டின் கையைப் பற்றிய வண்ணம் அடிமேல் அடி எடுத்து வைத்தான் பீட்டர். "ஒரு மணிக்கெல்லாம் வந்திருந்தால் இந்தத் தொல்லையெல்லாம் இருந்திருக்காது!" என்று டேவிட் முணுமுணுத்தான்.
பீட்டர் அதைப் பொருட்படுத்தாமல் காவற்காரனைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் வாய்க்குள் விரலை மடக்கி வைத்து ஒரு நீண்ட கீழ்க்கை அடித்தான். "என்னடா இது! உடம்பு கிடம்பு ஊறுகிறதா என்ன, உனக்கு?" என்று பதறினான் டேவிட்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை; அபாயம் நீங்கி விட்டதற்கு அறிகுறி! நீ ஏறு அந்த மரத்தின் மேல்; நான் இந்த மரத்தின்மேல் ஏறுகிறேன்!" என்றான் பீட்டர்.
ஆளுக்கு ஒரு பரத்தின்மேல் ஏறிய இருவரும் அப்படியே பல மரங்களுக்குத் தாவி, வேண்டிய மட்டும் மாங்காய்களைப் பறித்துச் சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.
"நாம் திருடினால் தோட்டக்காரர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று இப்பொழுதுதான் தெரிகிறது!" என்றான் பீட்டர்.
"ஏனாம்?" என்று கேட்டான் டேவிட்.
"திருடுவது நமக்கு லாபமாயும் அவர்களுக்கு நஷ்டமாயும் இருப்பதால்!”
"மகா புத்திசாலிடா, நீ! வாவா, சீக்கிரம் வா!"
“கொஞ்சம் பொறு, 'மாங்காய் தின்றால் பல் கூசும்' என்று நாம் படித்திருக்கிறோம், இல்லையா? அது மெய்யா, பொய்யா என்று பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே பீட்டர் ஒரு மாங்காயை எடுத்துக் கடித்துப் பார்த்து விட்டு, "பொய், சுத்தப் பொய்! யாரோ ஒரு மாந்தோப்புக்குச் சொந்தக்காரன் நம்மை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்லி யிருக்கிறான்!” என்றான் 'குதி, குதி' என்று குதித்துக்கொண்டே.
"இந்தப் பரீட்சைகளையெல்லாம் வெளியே போய் வைத்துக்கொள்ளக் கூடாதாக்கும்?" என்று டேவிட் வழக்கம்போல் முணுமுணுத்தான்.
"அட பயந்தாங்கொள்ளி பெரிய மனிதர்களின் சுய சரிதைகள் எதையாவது படித்திருக்கிறாயா, நீ? அவற்றில் திருடுவதுகூட அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது!” என்றான் பீட்டர்.
"இருக்கலாம்; திருடுவதுகூடப் பெரிய மனிதர்களுக்குப் பெருமையளிப்பதாயிருக்கலாம். நாமெல்லாம் சிறிய மனிதர்கள்தானே? நீ வா, சீக்கிரம்!" என்று டேவிட் அவனை அவசரப்படுத்தினான்.
இந்தச்சமயத்தில், 'ஆங், ஆங்!' என்ற ஹாரன் ஒலி எங்கிருந்தோ கேட்கவே, இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். மூடியிருந்த அந்தத் தோப்பின் கேட்டருகே ஒரு கார் வந்து நின்று காவற்காரனை அழைத்துக் கொண்டிருந்தது. ‘கேட்'டைத் திறப்பதற்காக!
அதைப் பார்த்தானோ இல்லையோ, "நான் செத்தேன்!” என்று அலறினான் டேவிட்.
சட்டென்று அவனைத் தொட்டுப்பார்த்துவிட்டு, "இல்லை; நீ இன்னும் சாகவில்லை!" என்று பீட்டர் அவனைத் தேற்றினான்
அதற்குள் தூக்கம் கலைந்து எழுந்துவிட்ட காவற்காரன் அவசர அவசரமாகக் 'கேட்'டைத் திறந்துவிட்டு, "திருட்டுப் பயல்களா, அகப்பட்டுக் கொண்டீர்களா?" என்று கத்திக்கொண்டே அவர்களை நோக்கித் திரும்பினான்.
"பார்த்து ஒடிவா, தாத்தா! ஏதாவது தடுக்கிக்கிடுக்கி விழுந்துடப் போறே!" என்று அவனை எச்சரித்துக்கொண்டே பீட்டரும் திரும்பினான்-ஆனால் என்ன ஆச்சரியம், டேவிட்டைக் காணோம்!
அட பாவி! நீ எங்கே போய்விட்டாய்?-சுற்று முற்றும் பார்த்தான் பீட்டர்-காணோம்; காணவே காணோம்!
'இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து!’ என்பதை உணர்ந்த பீட்டர் ஓடினான். ஆனால்........
அவன் எச்சரித்ததுபோல் காவற்காரன் தடுக்கி விழவில்லை.அவனே தடுக்கி விழுந்துவிட்டான்!
அதுதான் சமயமென்று காவற்காரன் அவனைத் தூக்கி நிறுத்தி மரத்தோடு மரமாகச் சேர்த்துக் கட்டப் போனபோது, “டேடேடேய்! இருடா, இருடா!" என்று கத்திக்கொண்டே காரை விட்டு இறங்கி, அவசர அவசரமாக ஓடி வந்தார் மாந்தோப்பின் முதலாளி மாணிக்கவாசகம்.
"ஏன், பேசாமல் இவனைப் போலீஸில் ஒப்படைத்துவிடலாம் என்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே திரும்பினான் காவற்காரன்.
"போடா, முட்டாள்! தம்பியைத் தெரியவில்லையா, உனக்கு? நமது கலெக்டர் ஐயாவின் மகன்டா, நமது கலெக்டர் ஐயாவின் மகன்!”
"சரிதான், நான் அப்பொழுதே நினைத்தேன்....... "
“என்ன நினைத்தாய்?"
"தம்பி திருடியிருக்காது-தம்பியோடு ஒரு பிச்சைக்காரப் பயல் வந்திருந்தானே, அவன்தான் திருடியிருப்பான் என்று!"
"யார் அந்தப் பிச்சைக்காரப் பயல்?”
“பியூன் பெர்னாண்டோ இல்லை, அவன் மகன்"
"யார் அந்தப் பியூன் பெர்னாண்டோ?-கலெக்டர் ஆபீசுக்குப் போகும்போதெல்லாம் கழுத்தைச் சொறிந்து கொண்டு வந்து நிற்பானே, அவனா?"
"ஆமாம், அவனேதான்!" என்றான் காவற்காரன்.
"அந்த மாதிரிப் பயல்களோடெல்லாம் நீ சேரக் கூடாது, தம்பி! நிசமாச் சொல்லு, அவன்தானே இந்த மாங்காயைத் திருடி உன்னிடம் கொடுத்தான்?" என்று அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டார் மாணிக்கவாசகம்.
"இல்லை; நானேதான் திருடினேன்!" என்றான் பீட்டர், பொய் சொல்லத் தெரியாமல்!
"எனக்குத் தெரியும் தம்பி, எனக்குத் தெரியும்; 'நண்பனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது' என்பதற்காக நீ பொய் சொல்கிறாய்!-அப்படித்தானே?" என்றார் அவர், மேலும் சிரித்துக்கொண்டே.
"இல்லை; நான் பொய் சொல்லவில்லை!" என்றான் அவன் மீண்டும்.
"தம்பியின் வாய் 'பொய் சொல்லவில்லை' என்றும் சொன்னாலும் முகம் 'பொய்தான் சொல்கிறேன்' என்று சொல்லாமல் சொல்கிறதே!" என்றான் காவற்காரன், எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவன்போல.
"இந்தமாதிரிப் பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கெடுக்கும் அந்தத் திருட்டுப் பயல் மட்டும் கிடைத்திருந்தால் அவனை நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா? இங்கே கட்டி வைத்து அடிப்பதோடு, போலீஸாரிடமும் ஒப்படைத்திருப்பேன்!"
"கிடைக்காமலா போய்விடப் போகிறான்? இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கிடைக்காமலா போய்விடப் போகிறான்?"
"அந்தத் தறுதலையை விட்டுவிட்டு நீ இந்தத் தம்பியை அவமானப் படுத்தலாமா?-கேள்; தம்பியிடம் மன்னிப்புக் கேள்!" என்றார் மாணிக்கவாசகம்.
"ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன்; என்னை மன்னித்துவிடு, தம்பி!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான் காவற்காரன்.
பீட்டர் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி வைத்துக்கொண்டு, "காதில் விழவில்லை!" என்றான் குறுநகையுடன்.
"ஏது, தம்பி பொல்லாத தம்பியாயிருக்கும் போலிருக்கிறதே?" என்று காவற்காரன் மீண்டும் ஒரு முறை அவன் 'காதில் விழும்படி’ தன் கன்னத்தில் 'பட், பட்' என்று போட்டுக்கொண்டான்! "சரி, மன்னித்தேன்!" என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி, கையை நீட்டி அவனை ஆசீர்வதித்தான் பீட்டர்!
"பாவம், பிழைத்துப் போகட்டும்; அவனைப் பற்றி அப்பாவிடம் ஒன்றும் சொல்லிவிடாதே!-உனக்கு மாங்காய் என்றால் ரொம்பப் பிடிக்குமா? இப்படி வந்து உட்கார்; இப்பொழுதே இரண்டு கூடைநிறைய மாங்காய் பறித்துத்தரச்சொல்கிறேன்!” என்று அவனை உட்கார வைத்துவிட்டு, காவற்காரனை ஏவினார் மாணிக்கவாசகம்.
அடுத்த அரை மணி நேரத்துக்கெல்லாம் நிறைந்துவிட்ட இரண்டு கூடை மாங்காய்களை எடுத்துக்கொண்டு போய்க் காரில் வைத்துவிட்டு வந்தான் காவற்காரன்.
"ஏ, டிரைவர்! தம்பியையும் காரில் ஏற்றிக் கொண்டு போய்க் கலெக்டர் ஐயாவின் வீட்டிலே விட்டுவிட்டு வா; என்னுடைய வணக்கத்தையும் நான் அவருக்குத் தெரிவித்துக் கொண்டதாகச் சொல்லு!" என்றார் மாணிக்கவாசகம்.
அவ்வளவுதான்; கார் பீட்டருடன் பறந்தது!
வழியிலிருந்து ஒரு தேநீர்க் கடைக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு, "தம்பி, ஒரு நிமிஷம் காரிலேயே உட்கார்ந்திருக்கிறாயா? நான் போய் ஒரு 'டீ'அடித்து விட்டு வந்துவிடுகிறேன்!” என்றான் டிரைவர்.
அவன் எப்போதுமே டீ குடிப்பதில்லை; அடிப்பதுதான் வழக்கம்!
"சரி, போய் வா!" என்றான் பீட்டர்.
இந்தச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த டேவிட், "ஏண்டா, பீட்டர் இதெல்லாம் என்ன?" என்று கேட்டான் வியப்புடன்.
"வெகுமதி; திருடனுக்கு வெகுமதி!" என்று தன் தோள்கள் இரண்டையும் ஒரு குலுக்குக் குலுக்கிக் காட்டினான் பீட்டர்.
"அடாடா தானும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் இந்த வெகுமதி தனக்கும் கிடைத்திருக்குமே?" என்று நினைத்தான் டேவிட்!
அந்தஸ்தைப் பற்றி அறியாத அந்த அசட்டுப் பயலுக்கு என்ன கிடைத்திருக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதானே?
ஊமைப் பட்டாசு
தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே 'கங்கா ஸ்நான'த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெரு முழுவதும் விரவிக் கிடந்தன. யாரோஒரு சிறுவன்-வயது பத்துப் பன்னிரண்டுக்கு மேல் ஆகியுங்கூட அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் அணியாத, அணிய முடியாத சிறுவன் கோழி குப்பையைக் கிளறுவதுபோல அந்தக் குப்பைகளைக் காலால் கிளறுவதும், வெடிக்காத பட்டாசு ஏதாவது கிடைத்தால் அதைக் குதூகலத்துடன் கையில் வைத்துக் கொள்வதுமாக அந்தத் தெரு வழியே வந்துகொண்டிருந்தான். ஆண்டவனைப் போல அவனும் ஒருவேளை அனாதையாயிருக்கலாம். அதற்காகத் தீபாவளியை முன்னிட்டு ஆண்டவனுக்கு என்னவெல்லாமோ செய்து வைத்துப் படைக்கிறார்களே, அதே மாதிரி அவனுக்கும் யாராவது ஏதாவது செய்து வைத்துப் படைக்கப் போகிறார்களா, என்ன? அப்படியே படைத்தாலும் இந்தச் 'சாப்பிடும் சாமி', 'அந்தச் சாப்பிடாத சாமி'யைப்போலப் படைத்ததையெல்லாம் படைத்தவர்களுக்காகவே விட்டு வைக்கப் போகிறதா, என்ன?
சரி, படைக்காவிட்டால் போகட்டும்; வீதியில் வீசி எறியும் எச்சில் இலைகளிலாவது ஏதாவது மிச்சம் மீதி-ஊஹாம், சுதந்திரம் வந்தாலும் வந்தது; அந்தப் பேச்சே கிடையாது!-எல்லாம் தான் தாறுமாறாக விலை ஏறிவிட்டதே, யார் மிச்சம் மீதி வைக்கிறார்கள்? ஏதோ ஞாபகமாக எச்சில் இலைகளையாவது வெளியே கொண்டு வந்து போடுகிறார்களே, அது போதாதா?
போதும்; 'மேல் தீனி' வேண்டித் திரியும் மாட்டுக்கு வேண்டுமானால் அது போதும். ஆனால் மனிதனுக்கு?-காசில்லாமல் இவ்வளவு பெரிய உலகத்தில் கிடைக்கக் கூடியவை இரண்டு. ஒன்று தண்ணிர்; இன்னொன்று காற்று-இவற்றை மட்டுமே கொண்டு மனிதன் உயிர் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
ஆரம்பப்பள்ளி ஆசிரியன் என்ற முறையில் மற்றவர்களுக்குக் கிட்டாத ஒர் அனுபவம் அடியேனுக்குக் கிட்டிற்று. அதாவது, இந்த 'மதிய உணவுத் திட்டம்' என்று ஒரு திட்டம் வந்திருக்கிறதே, அந்தத் திட்டத்துக்குப் பிறகு முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது என்னமோ உண்மைதான்.ஆனால் படிப்பதற்கு அல்ல; சாப்பிடுவதற்கு!-ஆம், சாப்பிட்டு முடிந்ததும், அவர்களில் பலர் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். 'ஏண்டா?' என்று கேட்டால், ‘எங்கம்மாவரச் சொன்னாங்க ஸார், எலும்பு பொறுக்க!' என்பார்கள்; 'எலும்பா, அதை எதற்குப் பொறுக்குகிறீர்கள்?' என்று கேட்டால், அதை எதற்கோ விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள், ஸார்! இரவுச் சாப்பாட்டுக்கு அதுதான் எங்களுக்கெல்லாம் வழிகாட்டுகிறது, ஸார்!’ என்பார்கள். அதற்கு மேல் நான் என்னத்தைச் சொல்ல, 'மங்களம் உண்டாகட்டும்!’ என்று அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதைத் தவிர?
அவர்களைப் போலவே இவனும் ஒரு வேளை பகல் உணவுக்காகப் பள்ளிக்குச் சென்று, இரவு உணவுக்காக எதையாவது பொறுக்கி விற்பவனாயிருப்பானோ?-இருக்கலாம், யார் கண்டது?
தீபாவளியை முன்னிட்டு இன்று அந்தத் தொழிலை இவன் மேற்கொள்ளவில்லை போலும்!
என்ன சொன்னேன், 'தொழில்' என்றா சொன்னேன்?-'ஆம், அதுவும் ஒரு கலை!' என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்குத்தான் அவன் இன்னும் வளர வில்லையே?
★★★
இப்படி ஒரு 'பாரத புஷ்பம்' இந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்க, அப்படி ஒரு பாரத புஷ்பம் அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்தது. அதற்கும் வயது பதினைந்துக்குக் கிட்டத்தட்ட இருக்கும். ஆனால் அது கோவணம் மட்டும் கட்டிக்கொண்டிருக்க வில்லை; அதற்கும் மேலே நாலு முழத்துக்குக் குறையாத சல்லாத் துணி வேறு கட்டிக்கொண்டிருந்தது-சமர்த்துப் பயல், சிதையில் வைத்த பிணம் எரிவதற்கு முன்னாலேயே அதன் இடையில் சுற்றியிருந்த சல்லாத் துணியை எப்படியோ இழுத்துக்கொண்டு வந்துவிட்டான் போலிருக்கிறது!- இல்லாவிட்டால் அந்தப் புத்தம் புதிய சல்லாத்துணி அவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கப் போகிறது?
சபாஷ்! அவனுடைய திறமைக்கு ஒரு சபாஷ் என்றால், தீபாவளியை முன்னிட்டு அவன் அணிந்து கொண்டிருக்கும் புத்தாடைக்கு இரண்டு சபாஷ்களல்லவா போடவேண்டும் போலிருக்கிறது?-சபாஷ், சபாஷ்!
என்ன, சபாஷ் போட முடியவில்லையா உங்களால்?-எப்படி முடியும், அவனைப் போன்ற எத்தனையோ நடமாடும் பிணங்களை மறந்து, நீங்கள் மட்டும் அண்டர்வேர், அதற்குமேல் வேட்டி அல்லது பேண்ட், அதற்கும் மேலே பனியன், சட்டை, கோட்டு அல்லது அங்கவஸ்திரம் எல்லாம் அணிந்து, 'நடமாடும் ஜவுளிக்கடை' களாகவே காட்சியளிக்கும் போது?
ஆனால் ஒன்று-மனிதனை மனிதன் சுலபமாக ஏமாற்றி விடலாம்; மனத்தை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடிகிறதா?
கிடக்கிறது, விடுங்கள்!-அப்படியொன்று இருப்பதையே அதுதானே இப்பொழுதெல்லாம் நமக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டி யிருக்கிறது?-இல்லாவிட்டால் 'நாட்டுப் பிரஜை'களாகவா இருப்போம் நாம் ? என்றோ 'காட்டுப் பிரஜை%களாகி விட்டிருப்போமே?
"ம், அவரவர்கள் செய்த புண்ணியம் அது!" என்று ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறீர்களா?-விடுங்கள்!-அதுதான் வழி; மனத்தை ஏமாற்ற அதுதான் வழி!
அந்த வழியையே அடியேனும் பின்பற்றி மனத்தை ஏமாற்றிவிட்டு, அவனைக் கவனித்தேன்; அவனுக்கு வேண்டியதும் அப்போது பட்டாசாய்த் தான் இருந்தது. எனவே, குப்பைக்குக் குப்பை நின்று அதைத் தேடிக்கொண்டே வந்த அவன் இவனைக் கண்டதும், “ஏண்டா, பொறுக்கி இந்தத் தெருவுக்குள்ளே நீ யாரைக் கேட்டு நொழைஞ்சே? யாரைக் கேட்டு நொழைஞ்சேடா?" என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக அதட்டிக் கேட்டான், தனக்கு ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில்-தானும் ஒரு 'பொறுக்கி’ என்பதை அடியோடு மறந்து!
பதில் இல்லை.
"சொல்லுடர், சோமாறி,"
அதற்கும் பதில் இல்லை.
"ஒரு வருசம், ரெண்டு வருசம் இல்லேடா, ஏழு வருசமா 'இந்தத் தெருவேதான், தானே இந்தத் தெரு'ன்னு இருந்துகிட்டு இருக்கிறவரு இவரு! இவரைக் கேட்காம நீ எப்படிடா இங்கே வரலாம்? போ, மரியாதையா திரும்பிப் போ!" என்றான் அவன்.
இவன் திரும்பினான்.
"என்னாம்மா, நைஸா நழுவுறே? கையிலே இருக்கிற பட்டாசையெல்லாம் கீழே போட்டுட்டுப் போம்மா! இல்லேன்னா, மூக்கு வெத்திலைப் பாக்கு போட்டுக்கும்!” என்று தன் மூஷ்டியை மூக்குக்கு நேராக உயர்த்திக் காட்டினான் அவன்.
இவன் மூக்கு வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதை விரும்பாமலோ என்னவோ, கையிலிருந்த பட்டாசுகளையெல்லாம் அவனுக்கு முன்னால் போட்டுவிட்டு அப்படியே நின்றான்.
வெற்றிப் புன்னகை முகத்தில் அரும்பச் சுற்று முற்றும் பார்த்தான் அவன், தீக்கு ஏதாவது வழி பிறக்குமா என்று. அப்போது அந்த வழியாக வந்த மைனர் ஒருவர் தன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கடைசியாக ஒர் இழுப்பு இழுத்து விட்டுத் தெருவோரமாக விட்டெறிந்துவிட்டுப் போனார். ஆவலுடன் ஒடிச் சென்று அதை எடுத்துக்கொண்டு வந்து பட்டாசின் திரியிலே வைத்துவிட்டுக் காதைப் பொத்திக் கொண்டான் அவன்-'டமார்!’ என்று அது வெடிக்கப் போகும் சத்தத்தை எதிர்பார்த்து.
ஆனால் என்ன ஏமாற்றம்!-ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி வைத்ததுதான் மிச்சம்; ஒன்று கூட வெடிக்கவில்லை!
"அடகடவுளே, எல்லாமே ஊமைப் பட்டாசாயில்லே போச்சு!" என்று சொல்லிக்கொண்டே ஏமாற்றத்துடன் திரும்பினான் அவன்.
அவனுடைய ஏமாற்றம் அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது இவனுக்கு: கைகொட்டிச் சிரித்தான்.
என்ன அவமானம், என்ன அவமானம்! ஆத்திரம் தாங்கவில்லை சமர்த்துக்கு அடித்து நொறுக்கி விட்டது சப்பாணியை!
அவ்வளவுதான்; "பேபேபே, பேபேபே" என்று அலற ஆரம்பித்து விட்டது சப்பாணி.
அப்போதுதான் எனக்கும் தெரிந்தது, இது ஊமையென்று!
"அட பாவி, நீயும் ஊமையா?" என்று கேட்டான் அவன்.
அதற்கும் பதில் இல்லை இவனிடமிருந்து, "பேபேபே, பேபேபே" என்று அழுவதைத் தவிர! "அட பாவமே, உன்னையா நான் அடிச்சுட்டேன்?"
இதைச் சொல்லி வாய்கூட மூடவில்லை; அதற்குள் கண்களிலே நீர்முட்டிக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு-அப்படியே இவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவனும் அழ ஆரம்பித்துவிட்டான்!
நான் அழவில்லை-எனக்குத்தான் தெரியுமே, என் மனத்தை ஏமாற்ற!-'அது அவர்கள் வந்த வழி!' என்று ஒரே போடாகப் போட்டு அதை அடக்கிவிட்டு உள்ளே சென்றேன், அந்த வருடத்துத் தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட!
சாந்தி எங்கே?
பொங்கலுக்கு முதல் நாள்; அந்தத் தெருவிலிருந்து சென்ற வருடம் கல்யாணம் செய்துகொண்டு சென்ற பெண்களெல்லாம் தங்கள் கணவன்மாருடன் தாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள், பொங்கலைத் தங்கள் பிறந்த வீட்டில் கொண்டாட!
அவர்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமுதாவுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, தன் கண்களில் துளிர்த்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.
"நல்ல நாளும் அதுவுமாக ஆரம்பித்துவிட்டாயா, மூக்கைச் சிந்த? எல்லாம் உன்னால் வந்தவினைதானே?" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார் ஆலாலசுந்தரம்.
ஆம், அமுதாவால் வந்த வினைதான் அது-அவள்தான் என்ன செய்வாள், பாவம்! அவளுக்கென்று இருந்த ஒரே ஒரு பெண், தனக்கென்று ஒருவனைத் தானே தேடிக்கொள்ள முயன்றபோது, அவளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை; தடுக்கக்கூடியதாக அது இருக்கவும் இல்லை. அவளுடைய கடந்த காலக் கதைதான்!
கதையென்றால் ஒரே இதழில் முடிந்து விடும் சிறுகதையாகவும் இருக்கவில்லை, அது; தொடர்கதையாக இருந்தது.
அவளுக்கும் கல்யாணமாகி இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆயினும், அந்தக்கதை இன்னும் முடியவில்லை; தொடர்ந்து கொண்டே இருந்தது!
இளம் பிராயத்தில் அவளுடைய இதயத்தில் எப்படியோ இடம் பெற்றுவிட்ட அந்த இனியவன், இப்பொழுதும்கூட எப்பொழுதாவது ஒரு நாள் அவளைத் தேடிக்கொண்டு வருவான். "எங்கே வந்தாய்?" என்று கேட்டால், "ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்று ஏதோ ஒரு விதமாகச் சிரித்துக்கொண்டே போய் விடுவான்.
அவனுடைய சிரிப்பு நெருப்பாயிருக்கும், அவளுக்கு: தண்ணீரால் அணைக்க முடியாத அந்த நெருப்பைக் கண்ணிரால் அணைப்பாள்.
வி.க. -32 அணைத்த பின்சிலசமயம் ஆத்திரம் பற்றிக் கொண்டு வருவதும் உண்டு, அவளுக்கு. 'அவன் ஏன் இன்னும் இங்கே வந்து தொலைகிறான்? எதற்காக என்னை இப்படி வதைக்கிறான்?' என்றெல்லாம் நினைப்பாள்; 'இன்னொரு முறை வந்தால், இங்கே வராதே என்று சொல்லிவிட வேண்டும்; வந்தால் அவரிடம் சொல்லிவிடுவேன் என்று அவனைப் பயமுறுத்த வேண்டும்' என்றெல்லாம் தீர்மானிப்பாள். ஆனால் அவன் வந்து நின்றதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, “எங்கே வந்தாய்?" என்ற அதே அசட்டுக் கேள்வியைத்தான் அவளும் கேட்பாள்; “ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்ற அதே அசட்டுப் பதிலைத்தான் அவனும் சொல்வான்.
எல்லாம் வாசலோடு சரி; உள்ளே அவன் ஓர் அடிகூட எடுத்து வைப்பது கிடையாது.
ஒரு நாள் தற்செயலாக அவனைப் பார்த்து விட்ட ஆலாலசுந்தரம், "யார், அது?" என்று கேட்டார், அமுதாவை நோக்கி.
"எங்கள் ஊர்ப் பையன்!” என்றாள் அவள், அவரை ஏமாற்றுவதோடு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு விடலாம் என்ற நினைப்பிலே.
"ஊர்ப் பையனாயிருந்தால் வாசலோடு அவனை நிற்க வைப்பானேன்? உள்ளே வந்து உட்காரச் சொல்கிறதுதானே? என்றார் அவர், ஏமாந்தும் ஏமாறாமல்.
"வா உள்ளே வா!" என்றாள்.அவள், அவருக்காக,
அவன் வரவில்லை; "ஊஹூம்" என்று தலையை ஆட்டிவிட்டு, அவன்பாட்டுக்குப் போய்விட்டான்.
"ஏன் அவன் உள்ளே வரவில்லை?" என்று கேட்டார்.அவர்.
"அவன் ஒரு மாதிரி!” என்று சொல்லி, அவரிடமிருந்து தப்பப் பார்த்தாள் அவள்.
அவர் விடவில்லை; “ஒரு மாதிரி என்றால் பைத்தியமா?" என்று தொடர்ந்தார்.
"அப்படித்தான் தோன்றுகிறது!" என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு, அவள் மெல்ல நழுவப் பார்த்தாள்.
"ஐயோ பாவம், கல்யாணமாகிவிட்டதா அவனுக்கு?' என்றார் அவர், அப்பொழுதும் விடாமல்.
"இல்லை!" என்றாள் அவள், அவரை நோக்கித் திரும்பாமல் அப்படியே நின்று.
“ஒருவேளை கல்யாணமானால் பைத்தியம் தெளிந்துவிடுமோ, என்னமோ?" என்றார்.அவர்.
"பைத்தியம் தெளிந்தால்தானே கல்யாணமாகும்?" என்றாள் அவள், அத்துடனாவது அவர்தன்னை விட்டால் போதுமென்று.
அவர் சிரித்தார்; அவளும் சிரிக்க முயன்றாள், அவருக்காக. ஆனால் வந்தது?-அழுகை, அதை மறைப்பதற்காக அடுக்களையைத் தஞ்சமடைந்து விட்டாள், அவள்!
★★★
இந்த நிலையிலேதான் ஒரு நாள் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தபோது, அந்தக் கடிதத்தைக் கண்டெடுத்தாள் அவள்.
யாரோ சந்திரனாம்- அவன் எழுதியிருந்தான், அவள் மகள் தாராவுக்கு.
அன்புள்ள தாரா,
சென்ற வருடம் இதே நாளில் நான் உன்னிடம் 'நாளை உனக்குப் பிறந்த நாள்' என்று தெரிவித்தபோது, 'நீங்கள் சொன்னபிறகுதான் என் பிறந்த நாள் என்னுடைய நினைவுக்கு வருகிறது!’ என்று நீ சொன்னது, உன்னுடைய நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். அதே மாதிரி இந்த வருடமும் நினைவுபடுத்திக் கொள்-நாளை உனக்குப் பிறந்த நாள்!
வழக்கம்போல் நாளைமாலை வடபழனி ஆண்டவர் சந்நிதியில் உனக்காக அர்ச்சனை நடக்கும். முடியுமானால் நீயும் வரலாம், எனக்காக உன் அம்மாவிடம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு!
என்றும் உன்னுடைய,
சந்திரன்
இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது அவள் எவ்வளவோ கோபத்துடன்தான் படித்தாள்; ஆனால் படித்து முடித்ததும் அவளுக்கு வந்ததோ, சிரிப்பு! நல்ல பிள்ளைதான், போ!-ஏதாவது ஓர் ஓட்டல் அறைக்கு, இல்லாவிட்டால் ஒரு 'மாட்டினி ஷோவுக்கு, அதுவும் இல்லாவிட்டால் கடற்கரைக்கு அல்லவா அழைப்பான் இந்தக் காலத்துக் காதலன், காதலியை? இவன் என்னடா என்றால் கோயிலுக்கு அழைக்கிறானே, கோயிலுக்கு!
அதுவும் எதற்காம்?-அங்கே ஏதாவது ஒரு பாழடைந்த மண்டபத்தைத் தேடவா என்றால், அதுவும் இல்லையாம்; அர்ச்சனைக்காம்!
அட, பாவி! நிஜமாகவே நீ அவளைக் காதலிக்கிறயா, என்ன?
இல்லாவிட்டால் 'முடியுமானால்' என்றொரு வார்த்தையை வேறு நீ உன்னுடைய கடிதத்தில் சேர்த்திருப்பாயா? 'வராவிட்டால் உயிரை விட்டு விடுவேன்' என்று கடிதத்துக்குக் கடிதம் பயமுறுத்தி, கடைசியில் அவள் உயிரை விடும் அளவுக்கு அல்லவா நீ அவளைக் கொண்டுபோய் விட்டிருப்பாய்?
அதிலும், இன்று நேற்று நீ அவளைக் காதலித்தவனாகவும் தெரியவில்லை; சென்ற வருடத்திலிருந்தே காதலித்து வந்திருக்கிறாய்!- அப்படி யிருந்தும், இன்றுவரை 'கன்னி'யாக விட்டு வைத்திருப்பதற்காகவே அவளை நான் உனக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிடலாம் போலிருக்கிறதே?
ஆனால், அவளுடைய அப்பாவுக்கு?- ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாக ஏறி இறங்க வேண்டும்; 'இருபதினாயிரம் ரூபாயாவது எண்ணி வைத்துவிட வேண்டும்' என்று பிள்ளையைப் பெற்றவர் சொன்னால், 'எண்ணாமல் வைத்தால் எடுத்துக் கொள்ள மாட்டீர்களோ?' என்று பெண்ணைப் பெற்றவர் கேட்கவேண்டும். 'பையன் அமெரிக்காவுக்குப் போய் ஏதோ படிக்க வேண்டுமென்று சொல்கிறான்; அதற்காகும் செலவை உம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமோ?' என்று அவர் கேட்டால், 'அப்போதே சொல்லியிருக்கக் கூடாதா? அட்சராப்பியாசத்திலிருந்து ஆன செலவுகளைக்கூட அடியேனே ஏற்றுக்கொண்டிருப்பேன்!' என்று இவர் சொல்லவேண்டும். 'நகை மட்டும் ஐம்பது பவுன்களுக்குக் குறையக் கூடாது' என்று பிள்ளையைப் பெற்றவர் சொன்னால், 'மேலே போகலாமோ, இல்லையோ?' என்று பெண்ணைப் பெற்றவர் கேட்க வேண்டும். 'வெள்ளிப் பாத்திரங்களுக்கென்று ஐயாயிரம் ரூபாய் எடுத்து வைக்க முடியுமோ, உம்மால்?’ என்று அவர் கேட்டால், 'எடுத்து வைக்கிறேன், யாராவது ஏமாந்தால்!' என்று இவர் சொல்ல வேண்டும். எல்லாம் ஒத்து வரும்போது பெண்ணின் வயது ஒத்து வராமற்போய், இரண்டாந்தாரமாகவோ மூன்றாந்தாரமாகவோ எவன் தலையிலாவது கட்டி வைக்க வேண்டும்-இதற் கிடையில், 'எனக்கு ஒன்றும் வேண்டாம்; உங்கள் பெண்ணைக் கொடுங்கள், போதும் என்று நீ வந்து நின்றால் அவர் உனக்குக் கொடுக்கவா போகிறார்? -ஊஹாம், அப்பாக்களின் சரித்திரத்திலேயே அது கிடையாதே
'தான் தேடாத பொன்னுக்கு மாற்றும் இல்லை, உரையும் இல்லை' என்பதுபோல, அவர் தேடாத மாப்பிள்ளைக்கு எது இருந்து என்ன பிரயோசனம்?
அதற்காக?-தனக்குக் காதற் பரிசாகக் கிடைத்த கண்ணீர், தன் மகளுக்கும் கிடைக்க வேண்டுமா, என்ன?-இது நடக்காது; அடுக்காது!
இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவனைத் தானும் ஒரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது, அவளுக்கு. 'பொழுது எப்போது விடியும், பொழுது எப்போது விடியும்?' என்று காத்துக் கொண்டிருந்தாள்: விடிந்தது. 'மாலை எப்போது மலரும், மாலை எப்போது மலரும்?' என்று பார்த்துக் கொண்டிருந்தாள்; மலர்ந்தது.
அதற்குள் தன் அலங்காரங்களையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டு விட்ட தாரா, "அம்மா, அம்மா இன்று பாலர் அரங்கில் எங்களுக்காக ஏதோ ஒரு படம் போட்டுக் காட்டுகிறார்களாம், அம்மா! போய்விட்டு வரட்டுமா, அம்மா?" என்றாள், அடிக்கோர் அம்மாவைப் போட்டு.
"போய் வா!" என்று ஏதும் அறியாதவள்போல் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு, அவள் சென்ற அரை மணி நேரத்துக்கெல்லாம் அவளுக்குத் தெரியாமல் அவளைத் தொடர்ந்தாள் அமுதா. அங்கே.....
ரதியும் மன்மதனுமாகவல்லவா காட்சி தருகிறார்கள், அவர்கள்! எடுத்த எடுப்பிலேயே அவனைப் பிடித்துப் போய் விட்டது அவளுக்கு. எனவே, மானசீகமாக அவர்களை ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினாள்.
★★★
இதெல்லாம் தெரியாத ஆலாலசுந்தரம், ஒரு நாள் தாராவுக்கென்று யாரோ ஒருவனைத் தானே தேடிக்கொண்டு வந்து நின்றபோது, அதையும் சொல்ல முடியாமல் இதையும் ஒப்புக்கொள்ள முடியாமல், “எனக்குக் கல்யாணமே வேண்டாம், அப்பா!" என்றாள் தாரா.
"ஏன்?" என்று கேட்டார்.அவர், ஒன்றும் புரியாமல்.
“என்னமோ பிடிக்கவில்லை!"
"பிடிக்கவில்லையாவது! எது எது எந்த எந்தக் காலத்தில் நடக்கவேண்டுமோ, அது அது அந்த அந்தக் காலத்தில் நடந்துதானே ஆகவேண்டும்?"
"நடக்காவிட்டால் எது நடந்துவிடும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அது ஒரு நாளும் நடக்காது, அப்பா என்னை நீங்கள் நம்பலாம்!" என்றாள் அவள்.
இதைக் கேட்டதும், 'நல்ல பெண்தான் போ; நீயும் என்னைப்போல் கடைசிவரை கண்ணீர் விட்டே காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைக்கிறாயா, என்ன?-அதுதான் என் உடம்பில் உயிருள்ளவரை நடக்காது!’ என்று தனக்குத்தானே சூள் கொட்டிக் கொண்டாள்.அமுதா.
ஆனால் அடுக்களையை விட்டு அவள் வெளியே வரவில்லை.
அப்பா தொடர்ந்தார்.
"பைத்தியமா, உனக்கு? பையன் 'என்ஜினிரிங் காலே'ஜிலே படித்துக்கொண்டிருக்கிறான்; அவன் அப்பா:பிரசித்தி பெற்ற 'பில்டிங் காண்ட்ராக்ட்' ராயிருந்து வருகிறார்; சென்னையிலே மட்டும் அவர்களுக்குச் சொந்தமாக ஐம்பது வீடுகளுக்குமேல் இருக்கின்றனவாம்; அதைத் தவிர அவர்கள் இப்போது இருந்து வரும் பங்களா வேறு ரூபா இரண்டு லட்சத்துக்கு மேல் போகுமாம். நன்னிலத்திலே நாலு வேலி நன்செய் வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள். புத்தனேரியிலே பத்து வேலி புன்செய் வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள்......." இந்த வர்ணனை 'நிற்கும், நிற்கும்' என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் அமுதா; நிற்கவில்லை. அத்துடன் தான் அதுவரைகடைப்பிடித்து வந்த பொறுமை வேறு தன்னைக் கைவிட்டு விடவே, "என்ன இருந்து என்ன பிரயோசனம்? மனம் இருக்க வேண்டாமா?" என்று இடைமறித்துக் கேட்டுக் கொண்டே அடுக்களையை விட்டு அவள் வெளியே வந்தாள்.
"மனம் இல்லாமல் எங்கே போயிற்றாம்?" என்று கேட்டுக்கொண்டே அவளை நோக்கித் திரும்பினார் ஆலாலசுந்தரம்.
"சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?"
கேள்விக்குப்பதில் கிடைக்கவில்லை.அவரிடமிருந்து; அதற்குப் பதிலாக இன்னொரு கேள்விதான் பிறந்தது.
“என்ன புதிர் போடுகிறாய்?"
"நானும் புதிர் போடவில்லை; அவளும் புத்தி கெட்டுப் போய்விடவில்லை-பையன் நன்றாய்த்தான் இருக்கிறான்; இவளுக்கு ஏற்றவன்தான் அவன்!"
"எவன்?"
"எவனிடம் அவள் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாளோ, அவன்!"
இந்தச்சமயத்தில் தன்னையும் மீறி, "அம்மா!" என்று கத்தினாள் தாரா.
“என்னடி?" என்றாள்.அமுதா.
"நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, அம்மா?"
"ஆமாம், பார்த்தேன்!" என்றாள் அவள்!"
அவ்வளவுதான்; அவளை அப்படியே சேர்த்துக்கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டாள் தாரா.
"இது நடக்காது. என் உடம்பில் உயிருள்ள வரை இது நடக்கவே நடக்காது" என்றார் ஆலாலசுந்தரம், அழுத்தம் திருத்தமாக.
ஆனால் தன்னைப்போலவே தன் மனைவியும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அப்போது அறியவில்லை-எப்படி அறிய முடியும்?
★★★
கடைசியில் வெற்றி 'சிவ'னுக்குக் கிட்டவில்லை, 'சக்தி'க்குத்தான் கிட்டிற்று-ஆம், ஒரு நாள் இரவு தாயின் ஆசியுடன் தந்தைக்குத் தெரியாமல் தன் வீட்டை விட்டு வெளியேறிய தாரா, மறுநாள் காலை தன்னுடைய திருமணத்தைத் திருநீர்மலையில் வைத்து முடித்துக்கொண்டு வந்துவிட்டாள், தன் தந்தையின் தண்டனை எதுவாயிருந்தாலும் அதைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு விடுவது என்ற தைரியத்துடன்! இருவரும் எதிர்பாராதவிதமாக வந்து தன்னுடைய கால்களைப் பற்றிக்கொண்டு, "எங்களை மன்னியுங்கள்; மன்னித்து ஆசீர்வதியுங்கள்" என்று கேட்டுக்கொண்டேபோது, ஆலாலசுந்தரம் அவர்களை மன்னிக்கவுமில்லை; மன்னித்து ஆசீர்வதிக்கவுமில்லை. அந்தக் கணமே அவர்கள் இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளித் தன் வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு விட்டதோடு, இதயக் கதவையும் சாத்திக்கொண்டு விட்டார்!
அதற்குப்பின்அந்த வீட்டில் அடித்த புயல், இடித்த இடி, பெய்த மழை எல்லாவற்றுக்கும் தன்னை மட்டுமே ஈடு கொடுத்துக்கொண்ட அமுதா, சற்றே நிலை சாய்ந்து நின்றாலும் தலை சாய்ந்து விடவில்லை!
★★★
இது நடந்தது சென்ற வருடத்தில்-இன்று, பொங்கலுக்கு முதல் நாளான இன்று-இன்று கூடவா திறக்கக் கூடாது, இந்த வீட்டுக் கதவு அந்தக் குழந்தைகளுக்காக?
அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்கள் அவர்கள், ஒருவருக்கொருவர் அன்பு கொண்ட குற்றத்தைத் தவிர?
'எதற்கும் ஒரு வார்த்தை சொல்லித்தான் பார்ப்போமே?' என்று தோன்றிற்று அவளுக்கு; சொன்னாள்-அவ்வளவுதான்; "போய் உன் வேலையைப் பார்!" என்று போட்டாரே ஒரு சத்தம் பார்க்கலாம்-அதிர்வெடிச் சத்தங்கூட அல்லவா அந்தச் சத்தத்துக்கு முன்னால் நிற்காதுபோலிருக்கிறது!
கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் விட்டது, அவளுக்கு. இனிப் பயனில்லை; இவரை நம்பி இனிப் பயனில்லை-தன்னுடைய கடமைக்காவது, தன்னுடைய பங்குக்காவது, தான் ஏதாவது செய்துதான் தீரவேண்டும்.அதை இங்கே வரவழைத்துத்தான் செய்ய வேண்டுமா, என்ன? அங்கேயே போய்ச் செய்துவிட்டு வந்தால் என்னவாம்? இப்படி நினைத்ததும் மெல்ல அடிமேல் அடிஎடுத்து வைத்து அடுக்களைக்குச் சென்றாள்; அஞ்சறைப் பெட்டியைத் திறந்து அதுவரைதான் அவருக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த ஐந்நூறு ரூபாயை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.
இனி அவர் வெளியே போக வேண்டியதுதான் பாக்கி; வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு போய் அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர் வீடு திரும்புவதற்குள் நாம் திரும்பிவிடலாம்.......
இந்த எண்ணத்துடன் அடிக்கொரு தரம் அவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்; மனஷன் அப்படி இப்படி நகருவதாகக் காணோம்.
நல்ல வேளையாக அவருடைய நண்பர் நம்மாழ்வார் வந்து, "உங்களால் ஒரு காரியம் ஆகவேண்டும்; வாருங்கள் போவோம்!" என்று அவரை அங்கிருந்து நகர்த்திக்கொண்டு போனார்.
'அப்பாடா!' என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, அவர் சென்ற அரை மணி நேரத்துக் கெல்லாம் அவளும் கிளம்பினாள். வாங்க வேண்டியவற்றையெல்லாம் அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு போய் அவள் அவர்களுடைய வீட்டுக் கதவைத் தட்டியபோது, வந்து திறந்தது யார் என்கிறீர்கள்?-சாட்சாத் ஆலாலசுந்தரமேதான்!
"வா, வா, பொங்கலுக்கு நான் மட்டும் வந்து மாப்பிள்ளையை அழைத்தால் போதாதென்று நீயும் வந்துவிட்டாயா?-வா வா!" என்றார் அவர்.
அமுதா வாயைத் திறக்கவில்லை; அப்படியே அசந்து போய் நின்றாள்.
★★★
மறுநாள் காலை மற்றவர்களைப்போல அமுதாவும் புது மணத்தம்பதிகளுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடிக்கொண் டிருந்தபோது அவன்-'அவள் ஊர்ப்பையன்' வழக்கம்போல் வந்தான்.
“எங்கே வந்தாய்?" என்று கேட்டாள் அவள்.
“ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்றான் அவன்.
"ஏன், என்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா, உன்னால்?"
"முடியும்; இன்னொரு கண்ணையும் இழந்து விட்டால்!"
"ஏற்கெனவே ஒரு கண்ணை இழந்து விட்டாயா, என்ன?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் அவள்.
"ஆம், இழந்துதான்விட்டேன்!" என்று வழக்கம்போல் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன்.
உண்மையில் அவன் இழந்தது கண்ணையல்ல, தன்னைத்தான் என்பதை உணர்ந்த அமுதா, தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
"யாருக்கு யாரால் சாந்தி கிட்டி என்ன பிரயோசனம் ? அவனுக்கும் எனக்கும் சாந்தி சாவில் தான் கிட்டும்போலிருக்கிறது!"
ஏசு நாதரின் வாக்கு
வழக்கம்போல் காலை எட்டு மணிக்கெல்லாம் தம்முடைய 'நர்ஸிங்' ஹோமிலிருந்த நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக ஞானப்பிரகாசம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, "இன்னும் எத்தனை நாட்கள்தான் உங்கள் நர்ஸிங் ஹோமையும் வீட்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள், அவருடைய மனைவி அற்புதம்.
"பொழுது விடிந்தால் இந்தப் பல்லவிதானா?” என்றார் டாக்டர், தம்முடைய வழுக்கைத் தலையைத் தாமே தடவிப் பார்த்து ரசித்தபடி!
"உங்களுக்கென்ன தெரியும்?-நேற்றுக்கூட என்னை ஒரு நோயாளி கேட்டார், 'நீங்கள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வியாதி?’ என்று!" என்றாள் அவள், அங்கிருந்த நோயாளிகளோடு தானும் ஒரு நோயாளியாக இருக்க விரும்பாமல்.
"இவ்வளவுதானே, நாளைக்கே வீட்டை மாற்றி விட்டால் போச்சு!" என்றார் அவர். "இப்படித் தான் உங்கள் அப்பா கண்ணை மூடும் வரை உங்களுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்!” என்றாள் அவள்.
அவர் விடவில்லை; "இப்படித்தான் என் அம்மா கண்ணை மூடும் வரை என்னுடைய அப்பாவை நச்சரித்துக் கொண்டிருந்தாளாம்!" என்று பதிலுக்குப் பதில் பழி வாங்கிவிட்டுப் படியை விட்டுக் கீழே இறங்கினார்.
"இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!" என்று அலுத்த படி அவள் உள்ளே செல்ல, அவருடைய மகன் அருளானந்தன் வெளியே வந்து, "அப்பாப்பா! உங்கள் 'போர்'டைப் பார்த்தீர்களா, அப்பா? 'டாக்டர் ஞானப் பிரகாசம் 'எம்.பி., பி. எஸ்.' ஸு-க்குக் கீழே 'ஏஜண்ட், எமதர்மராஜன்' என்று யாரோ எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள், அப்பா!" என்றான் கண்களில் குறுநகைதேங்க.
"போடா போக்கிரி, எல்லாம் உன் வேலையாய்த்தான் இருக்கும்!" என்று அவனைச்செல்லமாகக் கடிந்து கொண்டே டாக்டர் ஞானப்பிரகாசம் நர்ஸிங் ஹோமை நோக்கி நடையைக் கட்டினார்.
★★★
டாக்டர் பாக்கியநாதனின் ஒரே மகன் டாக்டர் ஞானப்பிரகாசம். 'கொடுப்பவனாயிரு; வாங்குபவனாயிருக்காதே! என்ற ஏசுநாதரின் வாக்கைச் சிரமேற்கொண்டு மிஸ்டர் பாக்கியநாதன் தான் வாழ்ந்து மறைந்ததால் அவருக்குப் பின் அவருடைய வீட்டில் எஞ்சியிருந்ததெல்லாம் புகழ் ஒன்றுதான். அந்தப் புகழுக்கும் ஒர் இழுக்கு இருந்தது.அதாவது, 'டாக்டர் பாக்கியநாதனின் மரணம் இயற்கை மரணம் அல்ல; செயற்கை மரணம்' என்பதே அந்த இழுக்கு! அவர் என்ன செய்வார், பாவம்!-உலகத்தினிடம் அவர் இரக்கம் காட்டிய அளவுக்கு உலகம் அவரிடம் இரக்கம் காட்டவில்லை. பரோபகாரியாக வாழ்ந்ததின் பலன், கடன்காரர் உருவிலே வந்து அவருடைய கழுத்தை நெரித்தது-ஜப்தி, வாரண்ட் என்று பல ஜபர்தஸ்துகள்; செத்தால் தலை முழுகுவதைத் தவிர வேறொன்றும் செய்ய விரும்பாத உறவினர்கள்; 'நன்றாயிருக்கிறான்' என்று தெரியும் வரை நாய்போல் வளைய வந்து, 'கெட்டுவிட்டான்' என்று தெரிந்ததும் ஒநாய்போல் ஒடி ஒளியும் நண்பர்கள்!-பார்த்தார்; கடைசி நிமிஷத்தில் தம்முடைய மானத்தைக் காத்துக்கொள்ள வழி என்னவென்று பார்த்தார்-ஒரேவழி, பிறருடைய ஏச்சும் பேச்சும் செவி வழி புகுந்து இதயத்தை ஊடுருவாத அந்த ஒரே வழி-தற்கொலை! ஆம், தற்கொலை தான்!-அக்கம் பக்கம் தெரியாமல் அதைச் செய்து கொண்டு, அமைதி கண்டுவிட்டார்.அவர்
இந்தச் சம்பவம் தம்முடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத சம்பவமாயிருந்தாலும், முதலில் தம்மையும் தம் தந்தையின் புகழுக்கு உரியவராக்கிக் கொண்டு விடவேண்டும் என்றுதான் டாக்டர் ஞானப்பிரகாசமும் நினைத்தார். ஆனால் அந்தப் புகழைக் கொண்டு ஒரு கப் காபிகூடச் சாப்பிட முடியாமற் போனதோடு, அவர் கண்ட உலகமும், 'எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்னதருவாய்?' என்பதுபோல் 'ஒன்வே டிராபிக்'காக இருக்கவே, வாழ்க்கையை வரவு-செலவுக் கணக்காக அமைத்துக்கொண்டு, 'இட்டார்க்கு இடு; செத்தார்க்கு அழு!' என்று தம் தந்தைக்கு நேர் விரோதமாக 'அழ ஆரம்பித்துவிட்டார்' அவர்!
இதனால், 'ஏழைகளிடம் இரக்கம் காட்டுவது கூட ஏமாளித்தனம்' என்ற அளவுக்கு அவருடைய ஞானம் பிரகாசமடைந்துவிட்டது!-அடையாதா, ஆதாயம் ஏதாவது கிடைக்குமென்றால், ஆனானப் பட்ட பணக்காரர்களே ஏழைகளாக நடிக்கத் தயாராயிருக்கும்போது?
★★★
அன்று நோயாளிகள் அனவரையும் பார்த்துவிட்டு டாக்டர் ஞானப்பிரகாசம் தம்முடைய அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, "ஐயா, காப்பாற்றுங்கள்! தயவு செய்து காப்பாற்றுங்கள்! யாரோ ஒரு பாவி என் மகன்மேல் காரை ஏற்றிவிட்டுக் காற்றாய்ப் பறந்துவிட்டான்-காப்பாற்றுங்கள் ஐயா, தயவு செய்து என் மகனைக் காப்பாற்றுங்கள் ஐயா!" என்ற அவலக் குரல் கேட்டு நின்றார். தலைவிரி கோலமாக இருந்த யாரோ ஒரு தாய், பலத்த காயங்களுக்குள்ளான பத்து வயதுப் பாலகன் ஒருவனைக் கைகளில் ஏந்தியபடி, கண்ணிரும் கம்பலையுமாக அவரை நோக்கித் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள்.
"இது ஆஸ்பத்திரி இல்லை அம்மா, நர்ஸிங் ஹோம்! இங்கே யாருக்கும் இனாமாக வைத்தியம் செய்யமாட்டார்கள்; போ, ஆஸ்பத்திரிக்குப் போ!"என்றார் டாக்டர், அவளைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு.
"ஆஸ்பத்திரிக்குப் போகும் வரை என் மகன் உயிர் தரித்திருக்க மாட்டான் போலிருக்கிறது; காப்பாற்றுங்கள் ஐயா, தயவு செய்து காப்பாற்றுங்கள்!"என்று 'கெஞ்சு, கெஞ்சு' என்று கெஞ்சினாள் தாய்.
"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? போபோ, ஆஸ்பத்திரிக்குப் போ!"
டாக்டர் தம் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு மேலே நடந்தார்.
"நில்லுங்கள்; இந்த ரத்தப் பெருக்கையாவது முதலில் நிறுத்துங்கள்!” என்றாள்.தாய், தன்கண்களைக் குளமாக்கிக்கொண்டு.
டாக்டர் திரும்பினார்.
"பணம் வைத்திருக்கிறாயா, பணம்?"
"பணமா? காய்கறி விற்பவள் நான்;என்னிடம் ஏது ஐயா பணம்? உங்களுக்குப் புண்ணியமுண்டு, பெருகி வரும் இந்த ரத்தத்தை மட்டும் எப்படியாவது நிறுத்திவிடுங்கள்; அதற்குப் பிறகு வேண்டுமானால் இவனை நான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விடுகிறேன்!"
"பைத்தியக்காரி!வாழ்க்கையில் வரவு வைப்பது பாவம்; செலவு வைப்பது புண்ணியம். இதுகூடத் தெரியாதா, உனக்கு? போபோ, ஆஸ்பத்திரிக்குப் போ!" "போகிறேன்; ரத்தத்தை நிறுத்துங்கள்! அதற்காக இதோஎன்னிடமுள்ள காசு!" என்று தன் மடியிலிருந்த இருபது பைசாக்களை எடுத்து அவரிடம் நீட்டினாள் தாய்.
டாக்டர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்:
"இந்தக் காசை நீயே வைத்துக்கொள்; வெற்றிலை பாக்குப் புகையிலைக்கு உதவும்!"
தன்னைத்தான் பரிகசிக்கிறார் என்றால், தன்னுடைய ஏழ்மையையும் இல்லாமையையுமல்லவா பரிகசிக்கிறார், இந்த டாக்டர்?-அந்த இருபது காசு, இருபது காசாகத்தான் தெரிகிறதே தவிர, அதிலுள்ளதாய்மை உணர்ச்சி தெரியவில்லையே, இவருக்கு?
இப்படி நினைத்தாளோ இல்லையோ, அதுவரை பசுவாயிருந்த அவள் இப்போது புலியானாள்; புலியாகிச் சொன்னாள்:
"அட, பாவி பிள்ளை-குட்டி பெறாதவனா, நீ? ஈவு, இரக்கம் என்பதே கிடையாதா, உனக்கு?"
"கிடையாது; என்னிடம் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது!-உலகம் என்னிடம் ஈவு, இரக்கம் காட்டாதபோது, அதனிடம் நான் மட்டும் ஏன் காட்ட வேண்டுமாம்?-கிடையாது; என்னிடம் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது!”
அழுத்தந் திருத்தமாக இதைச் சொல்லிவிட்டுத் தம் அறைக் கதவைப் 'பட்'டென்று அடைத்துக் கொண்டுவிட்டார் டாக்டர்:
அப்போதுதான் அந்த அழுகைச் சத்தம்- தமது மகன் அருளானந்தத்தின் அழுகைச் சத்தம் அவருடைய காதில் விழுந்தது-சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்தார்.
'காவ், காவ்' என்று கத்தும் கால் ஒடிந்த நாய்க்குட்டியுடன் அவன் அழுதபடி அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“ஏண்டா, அழுகிறாய்?"
"யாரோ ஒரு மடையன் இந்த நாய்க்குட்டியின் மேல் லைக்கிளை ஏற்றிவிட்டுப் போய்விட்டான், அப்பா!"
"அதற்கு நீ ஏன் அழவேண்டுமாம்?"
"போப்பா!'உருவம் எப்படியிருந்தாலும் உயிர் எல்லா வற்றுக்கும் ஒன்றே!'என்று நம் பாதிரியார் சொல்லவில்லையா? அதனால் இதன் உயிர் துடிக்கும் போது என்னுடைய உயிரும் துடிக்கிறது!"
"துடித்தால் துடிக்கட்டும்; நீ அதைத் தூக்கித்தூர எறிந்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போ!"
நாளை நம்முடையதே
வழக்கம்போல் வேலை தேடித்தரும் நிலையத்திற்குச் சென்று, வழக்கம் போல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த வைகுந்தன், வழக்கம்போல்துண்டை விரித்துப் போட்டுச்சத்திரத்தில் படுத்தான்.
அப்போது கையில் காலிக் கப்பரையுடன் வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த கைலாசம், "நண்பா, சாப்பிட்டு நான்கு நாட்களாகி விட்டன; இன்றும் ஒரு பருக்கை கூடக் கிடைக்க வில்லை!" என்றான் பெரு மூச்சுடன்.
"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”
"கட்டத்துணியில்லை; வாங்கக் காசில்லை..."
"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”
“படுக்கப்பாயில்லை; இருக்க நமக்கென்று ஓர் இடமில்லை..."
"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”
இந்த நம்பிக்கையையே அவர்கள் வழக்கம் போல் உணவாகவும், உடையாகவும், வீடாகவும், வாசலாகவும் கொண்டு வழக்கம் போல் தூங்கி விட்டார்கள்.
வழக்கம் போல் மறுநாள் பொழுது விடிந்தது. ஆனால் சத்திரத்துக்கு எதிர்த்தாற்போலிருந்த காண்ட்ராக்டர் கந்தையாவின் வீடு மட்டும் அன்று வழக்கம் போல் காணப்படவில்லை; வழக்கத்துக்கு விரோதமாக அந்த வீட்டு மாடியில் தாயின் மணிக்கொடி தகதகாய்த்துப் பறந்தது.
“என்ன இன்றைக்கு?" என்றான் கைலாசம் ஒன்றும் புரியாமல்.
"சுதந்திர தினம் நண்பா, சுதந்திர தினம்!"
"ஓஹோ! இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. நேற்றே நான் இதைக் கேள்விப்பட்டேன்!"
"கேள்விப்பட்டாயா? ஏன், இது உனக்கே தெரியாதா?"
“எங்கே தெரிகிறது! எனக்குத்தான் பட்டினி சுதந்திரத்தைத் தவிர வேறெந்தச் சுதந்திரமும் தெரியவில்லையே?" "அதோ பார், அதற்கும் ஆபத்து!”
கைலாசம் பார்த்தான்; காண்ட்ராக்டர் கந்தையா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்துக் கொண்டிந்தார்.
“எதற்கு ஆபத்து?”
"பட்டினிச் சுதந்திரத்துக்குத் தான்; அங்கே பறி போய்க் கொண்டிருக்கிறதல்லவா, அது?”
"ஏதோ இன்றாவது போகிறதே, அதைச் சொல்லு வா, நாமும் போய் அந்தச் சுதந்திரத்தைப் பறிகொடுப்போம்!"
★★★
இருவரும் சென்று 'க்யூ'வில் நின்றார்கள்.
"இந்த வருஷம் இவருடைய வீட்டில் பறப்பது பட்டுக் கொடி போலிருக்கிறதே?" என்றான் கைலாசம்.
"ஆமாம், ஆமாம். உனக்குத் தெரியுமா. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இவர் மணல் சப்ளை செய்த போது இவருடைய வீட்டில் பறந்தது பருத்திக் கொடி!" என்றான் வைகுந்தன்.
"ஓஹோ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது செங்கலும் சுண்ணாம்பும் சப்ளை செய்தபோது இவர் அடைந்த அபிவிருத்தியை இது காட்டுகிறது போலிருக்கிறது!”
"ஆமாம், ஆமாம், இது மட்டுமல்ல; இரண்டடுக்கு மாடி நாலடுக்காக மாறி வருவது கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தான்!"
இவருடைய மனைவி 'நடமாடும் பாங்க்'காக மாறி வருவது கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்திதானோ?”
"ஆமாம், ஆமாம், சைக்கிள், மோட்டார் சைக்கிளாக மாறி, மோட்டார்சைக்கிள் காராகவே மாறி விட்டதற்குக் கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தான் காரணம்!"
"ம்! இந்த அபிவிருத்தி என்னுடைய கப்பன்ரயிலும் உன்னுடைய வேலை தேடித் தரும் ஸ்தாபனத்திலும் என்று தான் காணப் போகிறதோ, எனக்குத் தெரியவில்லை!" என்றான் கைலாசம், நீண்ட பெருமூச்சுடன், "கவலைப்படாதே, நண்பா, நாளை நம்முடையது!"என்றான் வைகுந்தன்.
★★★
இந்தச் சமயத்தில் யாரையோ யாரோ 'பளார்' என்று அறையும் சத்தம் அவர்களின் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்; அடித்தவர் கந்தையா; அழுதவள் ஒரு சிறுமி.
"ஒரு தரம் வாங்கிக் கொண்டு போன கஞ்சியை எங்கேயோ வைத்துவிட்டு, இன்னொரு தரமாக வந்து இங்கே நிற்கிறாய்? போ, அப்படி!"என்று அவளைப் பிடித்து அப்பால் தள்ளினார் அவர்.
கீழே விழுந்த அவள் தட்டுத்தடுமாறி எழுந்து "அது எனக்கு ஐயா! இது என் அம்மாவுக்கு" என்றாள் தேம்பிக் கொண்டே.
"ஏன் அவளுக்கென்ன கேடு?"
"காய்ச்சல் ஐயா! எழுந்து வரமுடியவில்லை, ஐயா!"
"சீ, நாயே! நான் ஏதோ ஒர் இதுக்குக் கஞ்சி வார்த்தால் அம்மாவுக்கு வேண்டுமாம், ஆட்டுக்குட்டிக்கு வேண்டுமாம்! போ, போ!போகிறாயா, இல்லையா?”
"அம்மாவை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி ஐயா கஞ்சி குடிப்பேன்?"
"குடிக்காவிட்டால் நீயும் சாவு; உன் அம்மாவும் சாகட்டும்! எனக்கென்ன வந்தது!”
அவ்வளவுதான்; "சரி, ஐயா! நாங்கள் சாகிறோம்; நீங்கள் வாழுங்கள்!" என்று அதுவரை மறைத்து வைத்திருந்த கஞ்சியை எடுத்து அவருக்கு முன்னாலிருந்த ஏனத்தில் கொட்டிவிட்டு அவள் திரும்பினாள்.
"அவ்வளவு திமிரா உனக்கு?"என்று அவளை இழுத்து நிறுத்தி இன்னொரு முறை அறைந்தார் அவர்.
"ஐயோ, அம்மா!" எனறு அலறித்துடித்தபடி அவள் ஓடினாள்.
தனக்குத் தெரிந்த அந்தச் சிறுமியை அநுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தனை நோக்கி, "ஆமாம், ஏதோ ஓர் இதுக்குக் கஞ்சி வார்ப்பதாகச் சொல்கிறாரே, அந்த இது என்ன இது?" என்று விளக்கம் கோரினான் கைலாசம்.
வி.க. -33 "அது தானே எனக்கும் தெரியவில்லை!"என்று கையை விரித்தான் வைகுந்தன்.
அதற்குள் தங்களுடைய முறை வந்துவிடவே, அவர்கள் இருவரும் கப்பரையை ஏந்திக் கஞ்சியை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.
“என்ன இருந்தாலும் ஏழைக்குக் கோபம் வரவே கூடாது; நீ என்ன சொல்கிறாய்?" என்றான் கைலாசம்.
"ஆமாம், ஆமாம். வரக்கூடாது. வரவே கூடாது. அப்படி வந்தால் அது கூடப் பணக்காரனுக்குத் தான் வர வேண்டும்!"என்று ஒத்து ஊதினான் வைகுந்தன்.
"இதற்குத் தான் ஏழைக்குக் கோபம் வந்தால் அது அவன் வாழ்வைக் கெடுக்கும்! என்று ஏற்கனவே நம் பெரியோர் நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இப்போது அந்தப் பெண்ணின் விஷயத்தில் அது சரியாகி விட்டதல்லவா?”
"அது எப்படிச் சரியாகும்? ஒரு வேளை அவர்களும் கந்தையாவின் கட்சியோ, என்னமோ?"
"இருக்கலாம் நண்பா, இருக்கலாம். நீ வா, நாமாவது அந்தப் பெண்ணின்கட்சியில் சேரலாம்" என்று கைலாசம் சிறுமியைத் தேடிக் கொண்டு போய்த்தன்னிடமிருந்த கஞ்சியை அவளிடம் கொடுத்தான். வைகுந்தன் அவள் தாயாருக்குக் கொடுத்தான்.
★★★
அங்கிருந்து திரும்பியதும் "இன்று ஐந்தாவது நாள்!" என்றான் கைலாசம்.
“எதற்கு?"என்று கேட்டான் வைகுந்தன்.
"பட்டினிச் சுதந்திரத்துக்குத்தான்!"
"கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!"
இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன கைலாசத்துக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, "அது சரி நண்பா, நாளை நம்முடையதானால் இன்று யாருடையது?"என்று கேட்டான்.
தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது வைகுந்தனுக்கு? மறுகணம் "இன்று கந்தையாவுடையதாகல்லவா இருக்கிறது!" என்றான் வியப்புடன்.
அவ்வளவுதான்; அவன் சொன்ன இது என்ன இது என்று புரிந்து விட்டது அவர்களுக்கு!
கைலாசம் கேட்டான்?
"இன்று அவர்களுடையதாயிருக்கும்போது நமக்கு மட்டும் ஏன் நாளை நம்முடையதாயிருக்க வேண்டும்?"
"கூடாது நண்பா, கூடாது நாளை அவர்களுடையதாயிருக்கட்டும்; இன்றை நாம் நம்முடையதாக்கிக் கொள்வோம்!”
இந்த உறுதி மொழியைக் கேட்டதுதான் தாமதம்; இருளடைந்து கிடந்த அந்தச் சிறுமியின் கண்களில்கூட ஒளி வீசியது.
திருந்திய திருமணம்
கையிலிருந்த மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் காதில் மாட்டிக் கொண்டு, சாளரத்துக்குக் கீழே விழுந்து கிடந்த செய்தித்தாளை எடுத்துப் பிரித்தார் சிதம்பரம்.
"இந்தக் கதையைக் கேட்டீர்களா?" என்று அங்கலாய்த்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள்.அவருடைய மனைவி சிவகாமி.
"ஊர்க் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க உனக்கு நான்தானா கிடைத்தேன்? போய் வேலையைப் பார்!"
"இது ஒன்றும் ஊர்க்கதை இல்லை; உங்கள் வீட்டுக் கதைதான்!”
"அது என்ன கதை?”
"எல்லாம் உங்கள் சிகாமணியின் கதைதான்!"
"அவன் எங்கே இப்பொழுது சிகாமணியாயிருக்கிறான்? அவன்தான் 'முடிமணி'யாய்ப் போய்விட்டானே!"
"முடிமணியா! அது என்ன மணி?"
"அதை வெளியே சொல்லும் அளவுக்கு என்னை இன்னும் வெட்கம் விட்டு விட்டுப் போய்விடல்லை; அவனுடைய தமிழ்ப்பற்று அத்துடனாவது நிற்கிறதே, அதைச் சொல்லு!”
"அதுதான் இல்லை! அந்த முந்திரித் தோட்டம் முத்தையாவின் மகள் முல்லைக்கு "உனக்கேற்ற குட்டிக் சுவர் நான்; எனக்கேற்ற கழுதை நீ!" என்று இவன் காதற் கடிதம் எழுதுகிறானாம், காதற் கடிதம்!”
"சரிதான்; காதற் கடிதத்திலும் 'கருத்துக் குவியலை'க் கொட்டிக் கலக்க ஆரம்பித்துவிட்டான் போலிருக்கிறதே!"
"கருத்துக் குவியலோ, கண்ராவிக் குவியலோ, நமக்கு இருப்பவன் இவன் ஒருவன்தானே? காலா காலத்தில் இவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டு மறு வேலை பாருங்கள்!"என்றாள் சிவகாமி,
"உத்தரவு" என்றார் சிதம்பரம்.
★★★
சிவதானபுரத்தைச்சேர்ந்த சிதம்பரம் எதையுமே வேடிக்கையாக எடுத்துக் கொள்பவர். இன்பத்தில் துன்பத்தையும், துன்பத்தில் இன்பத்தையும் காண்பது அவருடைய இயல்பு. இந்த இயல்பு சிவகாமிக்கும் பிடித்தே இருந்தது - கல்யாணத்துக்கு முன்னால் காதலை வளர்த்துக் கல்யாணத்துக்குப் பின்னால் காதலைக் கொல்லாமல் இருந்ததால்!
ஆனால் சிகாமணிக்கோ இதெல்லாம் பிடிப்பதில்லை. அவன் எடுத்ததற்கெல்லாம் சிந்தித்தான், சிந்தித்தான், சிந்தித்துக் கொண்டே இருந்தான். இந்தச் சிந்தனையின் காரணமாகக் கலாசாலையில் காலடி எடுத்து வைத்ததும் அவன் முதன் முதலாக கண்டுபிடித்த உண்மை; அப்பா ஒரு முட்டாள்; அம்மா ஓர் அசடு!"என்பதாகும்.
அந்த முட்டாளும், அசடும் சேர்ந்து தனக்குக் கல்யாணம் செய்வதை அவன் விரும்புவானா? விரும்பினால் பகுத்தறிவு மிக்க அவன் பள்ளி நண்பர்கள் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்களை வெள்ளிப் பாத்திரங்களென்றும், அந்த வெள்ளிப் பாத்திரங்களின் மேல் படியும் அறியாமை என்னும் அழுக்கை எளிதில் துடைத்து விடலாமென்றும், அவர்களுடைய பெற்றோர் பித்தளைப் பாத்திரங்களென்றும், அந்தப் பித்தளைப் பாத்திரங்களின் மேல் ஏறியிருக்கும் அறியாமை என்னும் களிம்பை அகற்றுவது அவ்வளவு எளிதல்லவென்றும், அந்தப் பணியை மேற்கொள்ளும் இளைஞர் சமுதாயம் அதைப் படிப்படியாகத்தான் அகற்ற முடியுமென்றும் அடிக்கடி விளக்கிவரும் அரும் பெரும் தலைவர் ஆசிரியர் அறிவழகனார்தான் அவனைப்பற்றி என்ன நினைப்பார்?
சிந்தித்தான், சிந்தித்தான், சிந்தித்துக் கொண்டே இருந்தான்' சிகாமணி - இல்லை முடிமணி!
"இன்னும் என்ன யோசனை? நான்தான் அந்த முல்லையையே உனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறேன் என்கிறேனே?" என்றார் சிதம்பரம்.
"கல்யாணம், கல்யாணம் என்று சொல்லாதீர்கள் அப்பா!காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறது!"
“சரி, தேனாகப் பாயும் திருமணம்தான் செய்து கொள்ளேன்!"
"திருமணம் என்றால் 'திருந்திய திருமணம்' தான் செய்து கொள்வேன்; சம்மதமா?”
"அது என்ன திருமணம்?" "பழைய சடங்குகளையும் பழைய சம்பிரதாயங்களையும் உடைத்தெறியும் திருமணம்!”
"அப்படியென்றால் புதிய சடங்குகளையும் புதிய சம்பிரதாயங்களையும் உருவாக்கும் திருமணமா?"
'சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"
சிகாமணி உட்கார்ந்தான்.
"சிந்திக்க ஆரம்பித்து விட்டாயா, என்ன?"என்றார் சிதம்பரம் திடுக்கிட்டு.
"ஆம்; சிந்திக்கிறேன், சிந்திக்கிறேன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்!” என்றான் சிகாமணி.
"நானும் போகிறேன், போகிறேன் போய்க் கொண்டே இருக்கிறேன்!” என்று சொல்லிக் கொண்டே குடையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் சிதம்பரம்.
"எங்கே போகிறீர்கள்?"என்றான் சிகாமணி விசுக்கென்று எழுந்து.
"புரோகிதர் வீட்டுக்கு!"
"புரோகிதர் வீட்டுக்கா திருந்திய திருமணத்தில் அவருக்கு ஏது இடம்? ஆசிரியர் அறிவழகனார் வீட்டுக்கு வேண்டுமானால் போய் விட்டு வாருங்கள்!"
"ஏன் அவரே இப்பொழுது புரோகிதராகிவிட்டாரா?"
"இது சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"
சிகாமணி உட்கார்ந்தான்.
"சிந்திக்க ஆரம்பித்து விட்டாயா, என்ன?"என்றார் சிதம்பரம் மறுபடியும் திடுக்கிட்டு!
"ஆம், சிந்திக்கிறேன், சிந்திக்கிறேன், சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்!” என்றான் சிகாமணி.
"ஆஆஆ.." என்றார் சிதம்பரம் தமது, கைவிரல்களைச் சொடுக்கிக் கொண்டே.
"என்ன அப்பா அது?" என்றான் அவன், சிந்தனையைச் சற்றே கலைத்து! "ஒன்றுமில்லை; கொட்டாவி விடுகிறேன், விடுகிறேன், விட்டுக் கொண்டே இருக்கிறேன்!”
"ஏன் கொட்டாவி விடவேண்டும்? ஆசிரியர் அறிவழகரை வேண்டுமானால் நானே பார்த்துக் கொள்கிறேன்; அதற்குமேல் ஆகவேண்டிய காரியங்களை நீங்கள் கவனிக்கலாமே?”
"சரி, கவனிக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கிளம்பினார் சிதம்பரம்.
"எங்கே போகிறீர்கள்?" என்றான் சிகாமணி, மறுபடியும் விசுக்கென்று எழுந்து.
"தாலி வாங்க!”
"வேண்டேன் தாலி; பெண்களுக்கு அது வேலி!"
"வேறு என்னதான் செய்ய வேண்டும்? அதையாவது சொல்லேன்!"
"சொல்கிறேன் அப்பா, சொல்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு மிகவும் முக்கியமாக வேண்டியது மைக்!"
"மைக் என்று சொல்லாதே 'ஒலிபரப்பும் கருவி' என்று சொல்லு!"
"வரவேற்கிறேன், அப்பா வரவேற்கிறேன்; தமிழில் உங்களுக்குள்ள ஆர்வத்தை நான் தலைவணங்கி வரவேற்கிறேன். ஒலி பரப்பும் கருவிக்கு அடுத்தாற்போல் என்னுடைய திருமணத்திற்கு வேண்டிய திரைப்பட இசைத் தட்டுக்கள்!"
"ஐயோ, அது வேண்டாண்டா!"
"ஏன் அப்பா?"
"அந்த இசைத்தட்டால் தான் நிலவொளி வீட்டுத் திருமணம் நின்று விட்டதாம்!”
"இசைத் தட்டுக்கும் நிலவொளி வீட்டுத் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்"
"தலைவிக்கு மாலையிடத் தலைவன் எழுந்தபோது "நெனைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு அதனாலேயே முழிக்குதே அம்மா பொண்ணு!"என்ற இசைத்தட்டை ஒலிபரப்பாளர் வைத்து விட்டாராம்; அதைக் கேட்டதும் தலைவி திடுக்கிட்டு விழிக்க, ஐயமுற்ற தலைவன் பைய நழுவி விட்டானாம்!" "அறிந்தேன் உண்மையை; அதற்காகக் கலங்கமாட்டான் இந்தக் காளை! எந்தையே, என் அருமைத் தந்தையே! எங்கள் சிந்தனை செயல்படும் போது இம்மாதிரியான சிக்கல், தவறுகள் நேருவது ஏராளம்! ஏராளம்! அந்தத் தவறுகளைத் தாங்குவதற்கு நாங்கள் கொண்டுள்ள கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தாராளம், தாராளம்!"
இந்தச் சமயத்தில் சிதம்பரம் கைதட்ட "என்னப்பா இது? ஏன் கை தட்டுகிறீர்கள்? இப்பொழுது நான் மக்கள் மன்றத்திலா உரையாடிக் கொண்டிருக்கிறேன்?" என்றான் சிகாமணி.
"இல்லையா, இப்பொழுது நீ மக்கள் மன்றத்தில் உரையாடவில்லையா?" என்றார் சிதம்பரம், ஏதும் அறியாதவர் போல.
"இல்லை, அப்பா! என்னுடைய உணர்ச்சியில் ஒரு சொட்டு இங்கே உதிர்ந்து விட்டது; என்னுடைய சிந்தனையில் ஒரு துளி இங்கே சிதறிவிட்டது; அவ்வளவுதான்!”
"சரி, அப்புறம்?"
"அடுத்தாற்போல் என்னுடைய திருமணப் பந்தலில் நீங்கள் அவசியம் கட்ட வேண்டும், கறுப்புத்துணி!”
"அத்துடன் சங்கும் ஊதி, திருவாசகமும் பாட வேண்டுமா?"
“ஒரு வாசகமும் வேண்டாம்; இடையிடையே கொட்டு மேளம் முழங்கட்டும் அது எங்களுக்கு உடன்பாடே!"
"இவ்வளவுதானா, இன்னும் ஏதாவது உடன்பாடு உண்டா?”
"உண்டு" இரண்டு ரோஜாப்பூ மாலைகள்!
"ரோஜாப்பூ என்று சொல்லாதே; இரோசாப்பூ மாலை என்று சொல்லு!"
"வரவேற்கிறேன் அப்பா, வரவேற்கிறேன்; தமிழில் உங்களுக்குள்ள தனியாத ஆர்வத்தை நான் தலைவணங்கி வரவேற்கிறேன். ஆனால் இரண்டு இரோசாப்பூ மாலைகள் மட்டும் போதாது. என் திருமண விழாவுக்கு! இன்னும் சில பல மாலைகள் வேண்டும்; வாழ்வு வளம்பெற வாழ்த்துரை வழங்குவோருக்கு!”
"ஐயோ, இது மூடநம்பிக்கையாச்சே? பிறருடைய வாழ்த்துரையில் உன்னுடைய வாழ்வு வளம்பெறும் என்று நீ நம்பலாமா? அன்னையும் பிதாவும் ஆன்றோரும் சான்றோரும் செய்யும் 'ஆசீர்வாத'த்தை நம்பாத நீ; அவர்களுடைய 'வாழ்த்துரை'யை மட்டும் நம்பலாமா? பகுத்தறிவுக்குப் பாதகமாச்சே! ஏன் இந்த வார்த்தைப் புரட்சி? இதனால் ஏற்படுமா வாழ்க்கைப் புரட்சி?”
"சிக்கலான கேள்வி, சிந்திக்க வேண்டிய கேள்வி; சிந்தித்தாலும் என் சிற்றறிவுக்கு விடை கிடைக்காத கேள்வி; வருகிறேன் அப்பா வருகிறேன்!”
"சிகாமணி கிளம்பினான்.
"எங்கே போகிறாய் குழந்தை, எங்கே போகிறாய்?"
“பேரறிவு படைத்த பெருமகனாரின் உறைவிடத்துக்கு!"
"நன்றி, சென்று வருக!"
சிதம்பரம் திரும்பினார்.
அவர் திரும்பினாரோ இல்லையோ, “ரொம்ப அழகாய்த் தான் இருக்கிறது! அவன் ஏதோ தத்துப்பித்து என்று உளறுகிறான் என்பதற்காக நீங்களுமா அவனுடன் சேர்ந்து கொண்டு உளறுவது? கூப்பிடுங்கள், அவனை!" என்றாள் சிவகாமி.
"குழந்தாய், அன்னை உன்னை அழைக்கிறாள்!" என்றார் சிதம்பரம்.
சிகாமணி வந்தான் "தாயே தலை வணங்குகிறேன்!” என்றான்.
“என்னடா இது, நாடகத்திலே வேஷம் போடும் கூத்தாடிப் பயல்கள் மாதிரி? பிள்ளையா, லட்சணமாப் பேசேன்'
"வருந்துகின்றேன், அன்னையே வருந்துகின்றேன்; செந்தமிழின் சுவை அறியாச் சீற்றம் குறித்து வருந்துகின்றேன்!”
"வருந்தற்க மகனே வருந்தற்க!" என்று அவனைத் தேற்றினார் சிதம்பரம்.
"இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. முதலில் நீங்கள் போய் முகூர்த்தத்துக்கு நாள் பார்த்து வாருங்கள்"என்றாள் சிவகாமி.
"நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும்?"
"கோளோ, தேளோ, எனக்கு வேண்டியது நாள்!" என்றாள் சிவகாமி, அழுந்தந் திருத்தமா.
"அப்பா வெள்ளிப் பாத்திரமே, இந்தப் பித்தளைப் பாத்திரத்தைத் திருப்தி செய்வது எப்படி?”
"அதற்கும் எங்களிடம் திட்டம் இருக்கிறது; அந்தத் திட்டத்தின் மூலம் விதி நாளைக் குறித்தாலும் கோளைக் குறிக்கக் கூடாது என்பது தான்!” "அப்படியே குறித்தாலும் அதைத் திருமண அழைப்பிதழில் குறிக்கக் கூடாது; அதுதானே உங்கள் குறிக்கோள்?"
"ஆம், ஆம்!”
"அருமையான திட்டம்; அந்தத் திட்டத்தில் அடியேனும் ஒரு திருத்தம் கொண்டு வரலாமோ?”
“என்ன திருத்தம் எந்தையே?”
"நாள் பார்க்கும் போது ஒரே நாளில் இரண்டு முகூர்த்தங்கள் உள்ள நாளாகப் பார்த்துவிட வேண்டியது. அப்படிப் பார்க்கும்போது 11/2-3 கும்ப லக்கினம் என்று இருந்தால் இன்னொன்று 9-101/2 சிம்ம லக்கினம் என்று இருக்கும். அறியாமை மிக்க அன்னையின் திருப்திக்காக 11/2-3 முகூர்த்தத்தில் யாருக்கும் தெரியாமல் தாலியைக் கட்டிவிட வேண்டியது. அறிவு மிக்க ஆசிரியர் பெருமகனாரின் திருப்திக்காக 9-101/2 முகூர்த்தத்தில் முகூர்த்தம் என்று சொல்லாமல் மாலை மாற்றிக் கொண்டு விடவேண்டியது. இதுவே திருத்தம். என் இன்னுயிர் இளவலே!"
“தேவையில்லாத திருத்தம்; எங்கள் திறமைக்கு மாசு கற்பிக்கும் திருத்தம்; எந்தையே, இது எங்கள் திட்டத்தின் இரண்டாவது விதி; ஏற்கனவே எங்களால் திருத்தங் கொண்டு வரப்பட்டு, எங்கள் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி!"
"என்னே என் அறியாமை! இதற்குத்தான்பகுத்தறிவு வேண்டும் போலும்!”
"உங்களைப் போன்றவர்கள் அதைப் படிப்படியாக அடைய வேண்டுமென்பதற்காகவே இந்த அந்தரங்க விதி!"
"விதியோ, சதியோ! நீங்கள் போய் வேலையைப் பாருங்கள்!" என்றாள் சிவகாமி.
அதற்குமேல் சிதம்பரம் அங்கு நிற்கவில்லை.
"வாழ்க, திருத்தம்! வாழ்க;சீர்திருத்தம்!"என்று முழங்கிக் கொண்டே புரோகிதரின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.
அன்று மாலை சிந்தனைப் புயலில் சிக்குண்டு வந்த சிகாமணியை நோக்கி, "என்ன தம்பி என்ன?"என்று வினவினார் அண்ணா அறிவழகனார்.
"திருந்திய திருமணத்தில் ஓர் திடீர் ஐயம்?” "திடீர் ஐயமா, அது என்ன ஐயம்? தெரிவித்தால் விளக்குகிறேன்!”
இந்தச்சமயத்தில் கையில் விளக்கு மாற்றுடன் உள்ளே நுழைந்த வேலைக்காரி, "நான் இருக்கிறப்போநீங்கள் ஏன்சாமி விளக்கணும்? கொஞ்சம் எழுந்திருங்க; நானே விளக்கிட்டுப் போயிடறேன்!" என்றாள்.
"அறிவற்ற மக்கள், ஆட்டு மந்தை யொத்த மக்கள்! என்று தம்மை மறந்து, தம்முடைய ஆதரவாளர்களை 'விமர்சனம்’ செய்தவாறே ஆசிரியர் அறிவழகனார் மாடிக்குச் சென்றார்; சிகாமணி அவரைப் பின் தொடர்ந்தான்.
“என்ன ஐயம், எடுத்தியம்புவாய்!”
"எந்தப் பழைய சடங்குகளையும், எந்தப் பழைய சம்பிரதாயங்களையும் திருந்தாத திருமணத்திலிருந்து நாம் ஒழிக்கப் பார்க்கிறோமோ, அதே சடங்குகளையும் அதே சம்பிரதாயங்களையும் திருந்திய திருமணத்தில் புதிய உருவில் நாம் புகுத்தப் பார்க்கிறோம் என்பது என் தந்தையாரின் கூற்றாயிருக்கிறது. அந்தக் கூற்றை நான் மறுப்பது எங்ங்னம்?"
"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"
"அது மட்டுமல்ல; திருந்திய திருமணத்தில் நீங்கள் இன்று வழங்கும் வாழ்த்துரை, திருந்தாத திருமணத்தில் அன்னையும் பிதாவும் ஆன்றோரும் சான்றோரும் அன்று வழங்கிய ஆசீர்வாதந்தானே? 'ஆசீர்வாத'த்தில் இல்லாத நம்பிக்கை ‘வாழ்த்துரை'யில் மட்டும் இருக்கலாமா? ஏன் இந்த வார்த்தைப் புரட்சி? இதனால் ஏற்படுமா வாழ்க்கைப் புரட்சி?’ என்றும் அவர் கடாவுகிறார். அதை நான் எதிர்ப்பது எங்ங்னம்?"
"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!'
"சிந்தித்தேன்! சிற்றறிவுக்கு எட்டவில்லை; பேரறிவைத் தேடி ஓடி வந்தேன். தங்களுக்கும் இது சிக்கலான கேள்விதானா? தங்களுக்கும் அது சிந்திக்க வேண்டிய கேள்விதானா?”
"ஆம் தம்பி, ஆம்!”
"முடிவு?"
"இந்த முடிவற்ற உலகத்தில் முடிவு காண நான் யார், நீ யார்? நடப்பது நடக்கும்; கிடைப்பது கிடைக்கும். உண்மையை உள்ளது உள்ளபடி உனக்கு மட்டும் சொல்கிறேன்; கேள்; கொள்கை எதுவா யிருந்தாலும், கோட்பாடு எதுவாயிருந்தாலும் அதை உருவாக்குவது காலம்; உடைத்தெரிவதும் காலந்தான்! அந்தக்காலத்தையொட்டிநாம் கடைத்தேற வழிகோலுவோம்; முடிவைப் பற்றிய கவலையில்லாமல் 'மூட நம்பிக்கைகள் ஒழிக!' என்று ஒரே மூச்சில் முழங்குவோம், முழங்குவோம்; முழங்கிக் கொண்டே இருப்போம்!"
"அங்ஙனம் முழங்குவது சுயமரியாதைக்கு விரோதமில்லையா, தன்மானத்துக்குப் பங்கமில்லையா?”
அவன் குமுறினான்; கொந்தளித்தான்.
"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி!"
அவர் பாடினார்; சொன்னதையே சொல்லிப் பொற்சிலம்பமாடினார்.
"போதும், இந்தப் பல்லவி! வருகிறேன்; வணக்கம்!”
'க்க'த்துக்கு ஓர் 'அழுத்தம்' கொடுத்து விட்டு வெளியே வந்தான் சிகாமணி - இல்லை, முடிமணி!
இனி என்ன?
இந்தக் கேள்வி எழுந்தது அவன் உள்ளத்தில், நின்றான்.
வீட்டைக் கூட்டிய வேலைக்காரி குப்பையைக் கொண்டு வந்து வெளியே கொட்டினாள்.
அதிலிருந்த ஒரு கரித் துண்டு அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. எடுத்தான்; எழுதினான் - அந்தக் கணமே அவன் கண்ட முடிவைத்தான்!
மறுநாள்...
சிகாமணி கண்ட முடிவைச் சிதம்பரம் கண்டார்; சிவகாமியும் கண்டாள் - ஏன், ஊர் கண்டது; ஊராரும் கண்டார்கள்.
அது என்ன முடிவு என்கிறீர்களா? - அது தான் திருந்திய திருமணத்தின் திடீர் முடிவு; ஒருவருக்கும் தெரியாமல் முல்லையை இழுத்துக் கொண்டு ஓடிவிட்ட முடிவு
இந்த முடிவு தெரிந்ததும் "உங்கள் முடிமணிதான் எங்கள் முல்லையை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான்!" என்றாள் பெண்ணைப் பெற்றவள்.
"உங்கள் முல்லைதான் எங்கள் முடிமணியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள்!"என்றாள் பிள்ளையைப் பெற்றவள்.
இவர்கள் இருவருக்குமிடையே சிக்கிக் கொண்ட சிதம்பரம் என்ன செய்வார், பாவம்! ஆசிரியர் அறிவழகனாரை சந்தித்து, "மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு முன்னால் முடிமணியை ஒழித்து விட்டீர்களே, அவன் எங்கே போயிருக்கிறான் என்றாவது தெரியுமா?" என்று உசாவினார்.
"அவன் எங்கே போயிருந்தால் என்ன? அறிவில் என்னையும் மிஞ்சி விட்டான் அவன்! அது மட்டுமல்ல; பழைய சடங்குகளையும், பழைய சம்பிரதாயங்களையும் உடைத்தெரிந்ததோடு, புதிய சடங்குகளையும் புதிய சம்பிரதாயங்களையும் கூட உடைத்தெரிந்து விட்டான் அவன்! அதோ பாருங்கள் அவன் எழுப்பியிருக்கும் புதிய கோஷத்தை, புதிய குரலை!" என்று முழங்கிக் கொண்டே எதிர் வீட்டுச் சுவரைச் சுட்டிக் காட்டினார் அவர்.
சிதம்பரம் படித்தார், படித்தார்.
"திருந்திய திருமணம் வீழ்க; திருட்டுத் திருமணம் வாழ்க"
அறிவழகனார் அறையலுற்றார்.
"இதையே 'காதல் வாழ்க' களவழி வாழ்க! என்று 'வள்ளுவன் பாணி'யில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும், இல்லையா?”
சிதம்பரம் சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அறிவழகனார்.
"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி என்றார் சிதம்பரம்.
கலையும் வாழ்க்கையும்
ஒளிப்பதிவாளர் ஒன்பதாவது கொட்டாவியை விட்டு விட்டு, ஐந்தாவது காப்பியின் துணையுடன் பத்தாவது கொட்டாவியை விரட்டப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போது, 'மேக்-அப்' அறையை விட்டு வெளியேறிய குமாரி கும்கும், பாட்டி பவனாம்பாளுடன் 'செட்'டுக்குள்ளே பிரவேசித்தாள்.
அஜந்தாக் கொண்டை - அசல் அல்ல, போலி; அந்தக் கொண்டையைச் சுற்றிலும் முல்லை அரும்புகள் - அசல் அல்ல, போலி; காதன வோடிய கண்கள் - அசல் அல்ல, போலி; கனிவாய் இதழ்கள் - அசல் அல்ல, போலி...
ஒரு வேளை அவளுடைய வாழ்க்கையே போலியாயிருக்குமோ?
அதைப் பற்றி அவளும் சிந்தத்தில்லை; அவளுடைய அபிமானிகளும் சிந்தித்ததில்லை!
இயற்கை இரவில் ஒளி வீசும் நட்சத்திரத்துக்குப் போட்டியாகச் செயற்கை இரவில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரத்தைக் கண்டதும் படத் தயாரிப்பாளர் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, 'பரவாயில்லை; பத்து மணி கால்-ஷீட்டுக்குப் பன்னிரண்டு மணிக்கே வந்து விட்டாளே!' என்று திருப்தியுடன், “எங்கே டைரக்டர் சாரைக் காணோம்?" எனறு கேட்டுக் கொண்டே திரும்பினார்.
"இதோ, நான் தயார்!" என்று சொல்லிக் கொண்டே அவர் இருபத்தேழாவது சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, "குட் மார்னிங்" என்றார் நட்சத்திரத்தின் பக்கம் திரும்பி.
பதிலுக்குக் "குட்மார்னிங்" என்று சொல்லி விட்டு "எங்கே டைலாக்?" என்று நட்சத்திரம் திருவாய் மலர்ந்தருள "இதோ!"என்று "டைலாக் பை"லை எடுத்து நீட்டினார் உதவி டைரக்டர். அதை ஒரு நட்சத்திரப் பார்வை பார்த்துவிட்டு "சரி, இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள் கும்கும்.
"உங்களுடைய ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு செயலிலும் அன்புததும்ப வேண்டும். அதற்கு முதற்படியாக, யாரைக் கண்டதும் உங்களுடைய உள்ளத்தில் அன்பு சுரக்குமோ, பிரவாகம் எடுத்து ஓடுமோ, அவர்களை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்!” என்றார் டைரக்டர்.
"இவ்வளவுதானே, என்னுடைய 'பேபி'யை நினைத்துக் கொள்கிறேன்?"என்றாள் கும்கும் அலட்சியமாக.
"பேபியா, உங்களுக்கா!" என்றார் டைரக்டர் ஆச்சரியத்துடன்.
"அதற்குள் மறந்து விட்டீர்களா, என்ன? சென்ற வாரம் 'அவுட்டோர் ஷூலிட்டிங்' குக்காகப் பெங்களுருக்குப் போயிருந்தபோது நான் வாங்கிக் கொண்டு வந்தேனே, ஒரு நாய்க்குட்டி...."
"ஓ, அதைச் சொல்கிறீர்களா? சரி, எதை நினைத்துக் கொண்டால் என்ன? எனக்கு வேண்டியது 'எபெக்ட்' - அவ்வளவுதான்! அதோ பாருங்கள், அந்தக் கடையை நோக்கி நீங்கள் இந்தக் காரில் செல்கிறீர்கள். கடையை நெருங்கியதும் காரை நிறுத்தச் சொல்கிறீர்கள்; கார் நிற்கிறது. டிரைவர் இறங்கிக்கதவைத் திறக்கிறார்; நீங்கள் இறங்கி உள்ளே செல்கிறீர்கள். இது தான் முதல் ஷாட்!"
கும்கும் சிரித்தாள். "ஏன் சிரிக்கிறீர்கள்?"என்று கேட்டார் டைரக்டர்.
"ஒன்றுமில்லை. இப்பொழுது நான் எதை நாய்க்குட்டியாக நினைத்துக் கொள்ள வேண்டும்? எதன் மேல் அன்பைச் சொரிய வேண்டும்? கடை மீதா, கார் மீதா?"என்று கேட்டாள் அவள்.மேலும் சிரித்துக் கொண்டே.
"மன்னியுங்கள், அதற்குள் என்னுடைய கவனம் எங்கேயோ போய்விட்டது!" என்றார் அவர் அசடு வழிய.
வேறு எங்கே போயிருக்கும்? குதிரைப் பந்தயத்தின் மேல் போயிருக்கும்!
"கரெக்ட், கரெக்ட்! ஏன், நீங்கள் போவதில்லையா?”
இந்தச் சமயத்தில் படத் தயாரிப்பாளர் குறுக்கிட்டு, "அங்கே போகும் போது போவோமே ஸார்!" என்று பரிதாபத்துடன் சொல்லவே, "அடென்ஷன் ப்ளிஸ்!" என்று டைரக்டர் இரைந்து விட்டு, "இதோ இருக்கிறான் - இந்தப் பையனைத்தான் நீங்கள் நாய்க்குட்டியாக நினைத்துக் கொள்ள வேண்டும்; இவன் மேல் தான் அன்பைச் சொரிய வேண்டும். இவன் தாய் தந்தையற்ற அனாதை; இவனுக்கு ஏகப் பசி;இவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்து உங்கள் காரை நெருங்குகிறான்; பின் 'ஸீட்டின்' மேல் தட்டிலிருக்கும் ரொட்டியை எடுத்துப் பிட்டுப் பிட்டுத் தின்கிறான். அப்போது இதோ இருக்கிறாரே - இந்தப் போலீஸ்காரர் வந்து 'திருட்டுப் பயலே அகப்பட்டுக் கொண்டாயா?' என்று இவனைப் பிடித்துக் கொள்கிறார். அந்தச் சமயத்தில் நீங்கள் வருகிறீர்கள்; பையனையும் போலீஸ்காரரையும் மாறி மாறிப் பார்க்கிறீர்கள். நடந்தது இதுதான் என்று உங்களுக்குத் தெரிகிறது. 'ஐயோ பாவம்!' என்று இவனிடம் அனுதாபம் கொள்கிறீர்கள். உடனே உங்களுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, "அவனை விடுங்கள்; அவனுக்குத் தின்ன ரொட்டி கொடுத்தது நான்தான்!” என்று சொல்கிறீர்கள்; போலீஸ்காரர் பையனை விட்டு விட்டுச் செல்கிறார்; நீங்கள் இவனை நெருங்குகிறீர்கள்; 'ரொட்டி போதுமா, இன்னும் வேண்டுமா?' என்று கனிவுடன் கேட்கிறீர்கள். இவனுக்கு ஒரே வியப்பு;'இப்படியும் ஒரு தெய்வம் உண்டா, இந்த உலகத்தில்?’ என்று உங்களைப் பார்க்கிறான். இவனுடைய கண்களில் நீர் மல்குகிறது; அதை நீங்கள் அன்புடன் துடைக்கிறீர்கள். இதுதான் இன்று எடுக்கப்போகும் காட்சி!"என்றார் கும்கும்மை நோக்கி.
"சரி, இவனுடைய கண்ணிரைத்துடைக்கிறேன். அதற்குப் பிறகு இவனை நான் காதலிக்கிறேனா?"என்றாள் அவள். தன்னுடைய 'மேதாவிலாச'த்தைச் சற்றே வெளிப்படுத்தி!
"அது எனக்குத் தெரியாது; கதாசிரியரைத்தான் கேட்க வேண்டும்!' என்றார்.அவர் தற்காப்புக்காக.
"அவருடைய இஷ்டத்துக்காக இங்கே என்ன ஸார், நடக்கிறது? எல்லாம் நம்முடைய இஷடந்தானே?"
“என்ன இருந்தாலும் வயது என்று ஒன்று இருக்கிறது பாருங்கள். இவனோ சிறுவன்; நீங்களோ வயது வந்தவர்கள்...."
"அதனாலென்ன, அதுவும் ஒரு புதுமையாகயிருக்கட்டுமே!"
‘புதுமை' என்ற வார்த்தை காதில் விழுந்தது தான் தாமதம். ‘புதுமை எதுவாயிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் இருக்கிறேன்; நீங்கள் ஏறுங்கள், காரில்!” என்றார் படத் தயாரிப்பாளர்.
அவ்வளவுதான்; வெற்றிப் புன்னகையுடன் நடிகை கும்கும் காரில் ஏறி உட்கார்ந்தாள்.
டைரக்டர் திரும்பித் தலையில் அடித்துக் கொண்டு "கம் ஆன், ரிஹர்ஸல்!" என்று தம்முடைய தோல்வியைச் சமாளித்தார்.
அதைப் பொருட்படுத்தாமல் "எங்கே மேக்-அப்மேன்?" என்று குரல் கொடுத்தாள் கும்கும். 'டச் அப்' செய்து கொள்வதற்காக.
அதுவரை பொறுமையுடனிருந்த ஒளிப்பதிவாளர், 'லைட்ஸ் ஆர்பர்னிங்!' என்றார் நட்சத்திரத்தின் காதில் விழும்படி.
"எஸ் ஐ ஆம் ரெடி!" என்றாள் அவள்.
இந்தச் சமயத்தில் எங்கிருந்தோ ஓடி வந்த ப்ரொடக்க்ஷன் மானேஜர், "எனி திங்யு வாண்ட்?"
"ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், ஐஸ் க்ரீம், சோடா, காப்பி ஒவல்..." என்று அடுக்கிக் கொண்டே போனார். அவளை நெருங்கி
படத் தயாரிப்பாளர் அவருடைய கழுத்தைப் பிடித்து நெரிக்கத் தயாராவதற்கும் "இப்போது ஒன்றும் வேண்டாம் எனக்கு!" என்று சொல்லிவிடவே, "ஸைலென்ஸ் ப்ளீஸ்!" என்று ஏற்கனவே அங்கு நிலவிக் கொண்டிருந்த அமைதியைக் குலைத்தார் அவர்!
"சரி, ஆரம்பிப்போமா?" என்று எல்லோரையும் பார்த்தாற்போல் கேட்டுவிட்டு, "ஸ்டார்ட் ப்ளீஸ்!" என்றார் டைரக்டர்.
கடையை நோக்கிக் கார் சென்று நின்றது; ஒத்திகையும் ஒருவாறு நடந்து முடிந்தது.
"ஓகே டேக்!" என்றார் டைரக்டர்.
இப்படியாக அந்தக் காட்சி முழுவதும் அன்று படமாக்கப்பட்டு முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நட்சத்திரத்தைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.
"ஆஹா! அற்புதம்!" என்றார் ஒருவர். 'அபாரம் என்றார் இன்னொருவர்.
"அன்று நடிப்பின் சிகரத்தையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள்!" என்றார் ஒரு பேர்வழி. "நடிப்பின் சிகரத்தை மட்டுமா, என் இதயத்தைக் கூடத் தொட்டு விட்டார்கள். அந்தப் பையனின் கண்ணீரை அவர்கள் துடைத்தபோது, என்னுடைய கண்களிலும் நீர் நிறைந்துவிட்டது" என்றார் இன்னொரு பேர்வழி.
வி.க. -34 இந்தச் சமயத்தில் அங்கு வந்து உட்கார்ந்து 'கா' 'கா' என்று கரைந்த காக்கைகளை ‘ஸ் ஸ்' என்று விரட்டி 'அபிமானி'களின் மேல் தமக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை ஒருவாறு தீர்த்துக் கொண்டார் ஒலிப்பதிவாளர்!
எல்லோருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு 'நட்சத்திரப் புன்னகை' புரிந்து விட்டு ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பினார் குமாரி கும்கும்.
★★★
வழியில் "ஏண்டி குப்பாயீ; பேபிக்குப் பிஸ்கெட் வாங்க வேண்டுமென்று சொன்னாயே?" என்றாள் பாட்டி.
"ஏன் பாட்டி, என்னைக் 'குப்பாயி குப்பாயி' என்று கூப்பிடாதே என்று உனக்கு நான் எத்தனை தடவை சொல்லுகிறது? என்று எரிந்து விழுந்தாள் குமாரி கும்கும்.
"இனிமேல் சொல்ல வில்லையடி, அம்மா! இப்போது நீ 'டவு'னுக்குப் போகப் போகிறாயா? இல்லையா?"
"போகத்தான் வேண்டும்; இருந்த பிஸ்கட்டெல்லாம் தான் நேற்றே தீர்ந்து போய் விட்டதே!"
"சரி, வண்டியைத் திருப்பச் சொல்லு; வாங்கிக் கொண்டு போவோம்" என்றாள் பாட்டி.
"அதென்ன பாட்டி, நீங்கள் சொன்னால் திருப்ப மாட்டேனா?" என்றான் டிரைவர் முத்து சிரித்துக் கொண்டே.
"வாயை மூடுடா, உனக்குமா நான் பாட்டியாய்ப் போய் விட்டேன்?" என்றாள் அந்த நித்தியகன்னி.
"இல்லை மேடம் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே சென்று, நிறுத்த வேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்தினான் முத்து.
அவ்வளவுதான்; அங்கிருந்த அனாதைச் சிறுவர், சிறுமியரெல்லாம் - பாரத புண்ணிய பூமியில் பூத்த பைந்தமிழ் மலர்களெல்லாம் அந்தக் காரைச் சூழ்ந்து கொண்டு வாயையும் வயிற்றையும் காட்ட ஆரம்பித்து விட்டன.
"அவமானம், நகரத்துக்கே அவமானம்!" என்றாள் கும்கும்.
"நகரத்துக்கு மட்டும் என்னடி, நாட்டுக்கே அவமானம் என்று சொல்லு" என்றாள் கௌரவம் மிக்க பவுனாம்பாள்.
"இறங்கினால் இந்த அவமானங்கள் என்னையே சாப்பிட்டு விடும் போலிருக்கிறதே!" என்றாள் குமாரி கும்கும்.
"ஆமாம், நீ இறங்காதே! முதலில் முத்துவைக் கீழே இறங்கி அவற்றை விரட்டச் சொல்லு!”
முத்து சிரித்தான்; சிரித்துக் கொண்டே தன்னிடமிருந்த பத்துக் காசைஎடுத்து அந்த அவமானங்களில் ஒன்றை அழைத்துக் கொடுத்து விட்டு "என்னிடமிருந்தது இவ்வளவுதான்; இதை எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்!" என்றான். அதை வாங்கிக் கொண்டு அவை சிட்டாய்ப் பறந்ததும் "இறங்குவோமா?" என்றாள் பாட்டி.
"எதற்கு இவனிடம் கொடுத்தால் இவனே வாங்கிக் கொண்டு வந்து விடுகிறான்!" என்று சொல்லிக் கொண்டே இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து முத்துவுக்கு முன்னால் விட்டெறிந்து, "ஒரு டின் பிஸ்கெட் வாங்கிக் கொண்டு வந்து வண்டியில் வை!" என்றாள் பேத்தி.
அப்படியே வாங்கிக் கொண்டு வந்து வைத்து விட்டு "போவோமா?" என்றான் முத்து.
"போக வேண்டியதுதான்!" என்றாள் நடிகை கும்கும்.
இந்தச் சமயத்தில் "ஏண்டி, 'நாலு பாவாடைக்கு ஸாட்டினும் நாலு தாவணிக்கு நைலானும் வாங்கிக் கொடு, வாங்கிக் கொடு!' என்று நானும் எத்தனை நாட்களாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன்? இன்றாவது வாங்கிக் கொடேண்டி!" என்றாள் பவுனாம்பாள்.
"அதற்கென்ன, வாங்கிக் கொண்டால் போச்சு!" என்றாள் கும்கும்.
இருவரும் இறங்கி முக்காட்டை இழுத்துப் போத்திக் கொண்டு எதிர்த்தாற் போலிருந்த ஜவுளிக் கடைக்குள் நுழைந்தார்கள்.
அதுதான் சமயமென்று முத்து வண்டிக்குப் பின்னால் சென்றான்; ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நின்றான்.
குப், குப், குப்
"ஆகா! என்ன சுகம், என்ன சுகம்!
'ஏர் கண்டிஷன் ரூ'மின் குளுமை இமாசல வாசத்தின் பெருமை எல்லாம் இந்தப் பீடியிலல்லவா இருக்கிறது, எனக்கு!'
இந்த ரசனையில் சுவாரசியமாக ஈடுபட்டிருந்த அவனை, "ஏய், என்ன அது?" என்று கும்கும்மின் குரல் திடிக்கிட வைத்தது.
அவசரம் அவசரமாகக் கையிலிருந்த பீடித்துண்டைக் கீழே போட்டுக்காலால் மிதித்து விட்டு, "என்ன அம்மா, என்ன?" என்றான் அவன் பரபரப்புடன்.
"அங்கே பாருடா, இடியட்" என்றாள் கும் கும், ஆத்திரத்துடன்.
முத்து பார்த்தான்; ஒட்டிய வயிறும் குழி விழுந்த கண்களுமாகக் காட்சியளித்த ஒரு சிறுமி, 'பேபி'க்காக வாங்கி வைத்திருந்த 'பிஸ்கெட்டுகளில் ஒன்றை எடுத்து அவசரம் அவசரமாகத் தின்று கொண்டிருந்தான்!
"ஐயோ, பாவம்!" என்றான் முத்து.
"பாவமாவது? கூப்பிடு, போலீஸை!" என்று இரைந்தாள் கும்கும்.
அதற்குள் அந்த வழியாக வந்த ஒரு போலீஸ்காரர் "திருட்டுச் சிறுக்கி, இங்கேயும் உன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டாயா? நட ஸ்டேசனுக்கு" என்று அந்தப் 'பாரத புஷ்பத்தைத் தள்ளிக் கொண்டு போனார்.
முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏம்மா, காலையிலே அந்தப் பையன் ரொட்டியைத் திருடித் தின்றபோது, ஐயோ பாவம்! என்று நீங்கள் தானே?" என்று கேட்டான், திருதிருவென்று விழித்துக் கொண்டே.
"அது கலை; இது வாழ்க்கையடா, முட்டாள்!" என்றாள்.
அவள். அப்படியானால் அன்பு...
நடிக்கத்தானா?
படித்தவர்கள்
நடுப் பகல் நேரம்; காசாம்பு கொண்டு வந்த கஞ்சிக் கலயத்தைக் காலியாக்கிவிட்டுக் களத்து மேட்டுக்கு வந்தான் கண்ணாயிரம்.
அங்கே அவன் கண்ட காட்சி......
எந்த வேலையைத்தன் மகன் செய்யக் கூடாது என்பதற்காக ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுப் படிக்க வைத்தானோ, அந்த வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்!
அதாவது, தந்தை விட்டுவிட்டு வந்த ஏரைப் பூட்டி, மாட்டை விரட்டி உழுது கொண்டிருந்தான் மகன்.
"ஏண்டா, முருகையா! இந்த வேலை செய்யவா உன்னை நான் படாத பாடு பட்டுப் படிக்க வைத்தேன்"
"செய்தால் என்னப்பா, உழவன் கைதானே உலகத்தின் கை?"
"அதற்காக என்னுடைய கைதான் பேனாவைத் தொட்டுக் கொடுப்பதோடு நின்று விட்டதே அது போதாதோ? போடா போ, போய் 'ரிஸல்ட்' வந்து விட்டதா என்று பார்த்துவிட்டு வா?"
"பார்த்துவிட்டேன் அப்பா, நான் பாஸ்!"
அவ்வளவுதான்; அவனைத் தூக்கித் தோளின் மேல் வைத்துக் கூத்தாடிக் கொண்டே., "காசாம்பு! ஏ, காசாம்பு!" என்று குதூலகத்துடன் குரல் கொடுத்தான் கண்ணாயிரம்.
"என்ன காசாம்பூவுக்கு?" என்று கேட்டுக் கொண்டே திரும்பினாள் அவள்.
"பையன் பாஸ் பண்ணிவிட்டானாம்!"
"அப்புறம் என்ன? வேலைக்கு மனு எழுதிப் போட்டு விட்டு, ‘எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா, எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா, எனக்கு ஏதாவது வந்திருக்கிறதா?' என்று இளித்துக் கொண்டே தபாற்காரனை வட்டமிடச் சொல்லுங்கள்!"
"போடி, போ! இவனை நான் எஸ். எஸ். எல். ஸி யோடு விட்டுவிடுவேனா, என்ன?"
"விடாமல் கட்டிக் கொண்டு அழப் போறீங்களா?"
"உனக்கு என்ன தெரியும்; எடுத்ததற்கெல்லாம் கட்டிக் கொண்டு அழத்தான் தெரியும்! போ, போ, போய் உன் தம்பியை இங்கே அனுப்பி விட்டு, நீ கொஞ்சம் கட்டுச் சோறு கட்டி வை!"
"எங்கே போவதற்காம்!"
"பட்டணத்துக்கு!"
"அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? அதைத் தான் எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்?"
"அழியாத செல்வம், அள்ள அள்ளக் குறையாத செல்வம்!"
"அந்த ஆள் ஏய்த்துப் பிழைக்கும் செல்வத்துக்காத் தான் ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுத் தொலைத்தீர்களே, அது போதாதா?"
"ஏழு ஏக்கர் என்னடி? இன்னும் இரண்டு ஏக்கர் பாக்கியிருக்கிறது பார், அதையும் அந்தப் பட்டணத்துச்சாமிக்கு விற்றுத்தான் இவனை நான் மேலே படிக்க வைக்கப் போகிறேன்!"
"கஞ்சிக்கு!"
"கவலைப்படாதே, இந்தக் கை இருக்கும்வரை காற்றாய்ப் பறக்க மாட்டோம்" என்று தன் கையை உயர்த்திக் காட்டினான் கண்ணாயிரம்.
அதற்கு மேல் அவள் ஒன்றும் சொல்லவில்லை; சொன்னால்தான் அவன் கேட்கப் போகிறானா, என்ன?
மறுநாள் காலை.....
ரயிலை விட்டு இறங்கிய 'பட்டிக்காட்டுச் சாமிகள் இரண்டும் பட்ணத்துச்சாமி'யைத் தேடி அலைந்தன.
"அவருடைய பெயர் என்ன, அப்பா?" என்று கேட்டான், அலைத்தலைந்து அலுத்துப் போன முருகையன்.
"வக்கீல் வள்ளிநாயகம்"
"விலாசம்?"
"எழுபத்தைந்து, எல்லோரா நகர் என்று சொன்னார்!"
"இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா?" என்று எண்ணியவனாய் "எங்கே எல்லோரா நகர், எங்கே எல்லோரா நகர்?" என்று எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டே. எல்லோரா நகருக்குள் நுழைந்தான் முருகையன்.
அவனைத் தொடர்ந்து சென்ற கண்ணாயிரம் அங்கே வானளாவி நின்ற வண்ண மாளிகைகளைப் பார்த்ததும், "பார்த்தாயா, படித்தவர்கள் வசிக்கும் இடத்தை!" என்றான் பரவசத்துடன்.
"பார்த்தேன், பார்த்தேன்; பத்துக் குடிசைகள் போட்டுப் பத்துக் குடும்பங்கள் நடத்த வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பங்களா அல்லவா காட்டியிருக்கிறார்" என்றான் முருகையன் ஒரே வியப்புடன்.
"பத்து என்ன பதினாயிரம் குடிசைகள் கூடப் போட்டுக் கொடுக்கலாம், படிக்காத பதர்களுக்கு! நீ பார், எழுபத்தைந்தாம் நம்பர் வீடு எங்கே இருக்கிறதென்று?" என்றான் கண்ணாயிரம், வெறுப்புடன்.
"இங்கே ஒரு நம்பரையும் வெளியே இருந்தபடி பார்க்க முடியவில்லையே?"
"நம்பரைப் பார்க்க முடியாவிட்டால் என்ன, 'வள்ளி நாயகம் பி.ஏ.,பி.எல்,' என்று போர்டு' போட்டிருக்கும், பார்!"
அப்படியே அங்கிருந்த போர்டுகளையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தான் முருகையன், "நாய்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை!" என்று நாலைந்து போர்டுகளில் எழுதியிருந்ததைப் பார்த்தும் அவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, "என் அப்பா, இங்கே மனிதர்கள்தானே வசிக்கிறார்கள்?" என்றான் சந்தேகத்துடன்.
"மனிதர்கள் வசிக்காமல் நாய்களா வசிக்கும்?"
"அப்படித்தான் இங்கே எழுதியிருக்கிறார்கள்!"
"இருக்காது; எச்சில் இலை நக்கும் நாய்களுக்கு இவ்வளவு பெரிய பங்களாக்கள் இருக்கவே இருக்காது!"
"பட்டணத்திலே அப்படி நினைப்பதற்கில்லை அப்பா இங்கே படித்தவர்கள் கூட எச்சில் தட்டை நக்குகிறார்களாம்; அதற்கென்று அவர்கள் அங்கங்கே வைத்திருக்கும் கடைகளுக்கு ஓட்டல் என்று பெயராம்!"
"வாயை மூடு, படித்தவர்கள் எதையும் தெரியாமல் செய்து மாட்டார்கள்!"
"அது என்னமோ உண்மைதான், அப்பா அவர்கள் எதையும் தெரிந்துதான் செய்கிறார்களாம்"
"அப்புறம் என்ன? விடு, கதையை; தேடு, வக்கில் வள்ளநாயகம் வீட்டை!" என்றான் கண்ணாயிரம்.
இந்தச் சமயத்தில் 'ஹாட்'டும் 'ஸுட்'டும் அணிந்த ஒருவர் எதிர்த்தாற்போல் வர, அவரை நோக்கி முருகையன் கேட்டான்.
"இங்கே வக்கீல் வள்ளிநாயகத்தின் வீடு எங்கே இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா!”
"என்னை மன்னியுங்கள், எதிர்த்த வீட்டுக்காரர் என் மனைவியை அழைத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிப் போலீசில் புகார் செய்ய நான் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்
அவர் நிற்கவில்லை; போய்விட்டார்.
"அட, பாவமே! எதிர்த்த வீட்டுக்காரரிடம் இருக்கும் மனைவியை மீட்பதற்குக்கூடப் போலீஸாரின் உதவியை நாடும் அளவுக்கா இவர் கோழையாக இருக்க வேண்டும்?" என்றான் முருகையன், அனுதாபத்துடன்.
"வாயை மூடு, படித்தவர்கள் எதையும் தெரியாமல் செய்ய மாட்டார்கள்!" என்றான் கண்ணாயிரம் ஆத்திரத்துடன்.
"அது என்னமோ உண்மைதான், அப்பா! அவர்கள் எதையும் தெரிந்து தான் செய்கிறார்களாம்!"
"அப்புறம் என்ன? விடு கதையை; தேடு வக்கீல் வள்ளிநாயகம் வீட்டை!"
அப்போது அந்தத் தெருவின் திருப்பத்திலிருந்து ஒரு வீட்டு முகப்புச் சுவரில் 'வள்ளிநாயகம் பி. ஏ., பி.எல் என்று 'போர்டு' தென்படவே, "இனி தேடவேண்டிய அவசியமில்லை அப்பா! இதோ இருக்கிறது, அவருடைய வீடு!" என்றான் முருகையன்.
உடனே மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு "சாமி சாமி" என்று அந்த வீட்டுக்கு முன்னால் நின்று குரல் கொடுத்தான் கண்ணாயிரம்.
அவ்வளவுதான்; உர்ர்ர்! வள், வள்! வள், வள்! என்று குரைத்துக் கொண்டே அந்த வீட்டு நாய் அவனை நோக்கி ஓடி வந்தது.
'ஒரு வேளை முருகையன் சொன்னது உண்மையாய் யிருக்குமோ?'
இந்த எண்ணத்துடன் தன் மகனைத் திரும்பிப் பார்த்தான் கண்ணாயிரம்.
"இப்பொழுதாவது சந்தேகம் தீர்ந்ததா, உங்களுக்கு? இங்கெல்லாம் நாய்கள்தான் வசிக்கின்றன!" என்றான் முருகையன்.
அதற்குள் அந்த நாயைத் தொடர்ந்து வந்த வேலைக்காரன், "யார் ஐயா, நீங்கள்? உங்களுக்கு இங்கே என்ன வேலை?" என்று எரிந்து விழுந்தான்.
அதைப் பொருட்படுத்தாமல் அவனையும், அவனை முந்திக் கொண்டு நின்ற நாயையும் மாறி மாறிப் பார்த்தான் முருகையன் பிறகு, "'குணத்தில் வித்தியாசம் இல்லா விட்டாலும் உருவத்தில் என்னமோ வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
கேட்ட கேள்விக்கு உடனே பதில் கிடைக்காமற் போகவே, "ஏன் விழிக்கிறீர்கள்? இரவு எங்கே, எப்படி கன்னம் வைக்கலாம் என்று யோசிக்கிறீர்களா, என்ன?" என்றான் வேலைக்காரன் பொறுமை இழந்து.
"அட., கடவுளே! இது கன்னமிடும் கை இல்லை ஐயா, அன்னமிடும் கை!" என்றான் கண்ணாயிரம் தன் கையைக் காட்டி.
"பட்டணத்திலே திருடனுக்கும் திருடாதவனுக்கும் கூட வித்தியாசம் தெரியாது போலிருக்கிறது!" என்றான் முருகையன்.
"திருட வரவில்லை யென்றால் வேறு எதற்குத்தான் வந்திருக்கிறீர்கள்? அதையாவது சீக்கரம் சொல்லித் தொலையுங்கள்; எனக்கு நேரமாகிறது!"
"கோபித்துக் கொள்ளாதீர்கள், ஐயா பட்டணத்திலே இவனைப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆசை; அதற்காகப் பச்சைமலையிலே இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தைப் 'பட்டணத்துச் சாமி'க்கு விற்றுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போலாமென்று வந்திருக்கிறேன்!"
"அதற்கு இவ்வளவு தூரம் வருவானேன் அங்கே யாரும் இல்லையா, அதை வாங்க!"
"எத்தனையோ பேர் இருக்கிறார்கள்; இருந்தாலும், அதை விற்கும்போது 'பட்டணத்துச் சாமி'க்கே விற்கிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டேன்; அதை மீறலாமா?"
"சரிதான், அரிச்சந்திரனுக்கு நேர் வாரிசு போலிருக்கிறது! அவர் இல்லை, போய் வாருங்கள்!"
"எங்கே போயிருக்கிறார்?"
"ஊட்டிக்கு!"
"எப்போது வருவார்?"
"நாளைக்கே வந்தாலும் வரலாம்; நாலு நாட்கள் கழித்து வந்தாலும் வரலாம்!"
கண்ணாயிரம் முருகையனின் முகத்தைப் பார்த்தான், முருகையன் கண்ணாயிரம் முகத்தைப் பார்த்தான். அவர்கள் இருவரையும் பார்த்த வேலைக்காரனோ "சரி, பார்த்துக் கொண்டிருங்கள்! நான் வருகிறேன்" என்று நாயை அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.
அவன் என்ன செய்வான், பாவம்! எல்லாம் சகவாச தோஷம்; இல்லாவிட்டால் வீட்டுக்கு நாய் காவவென்றால் நாய்க்குக் காவலாக அவன் அங்கே இருந்து கொண்டிருப்பானா?
★★★
"நாளை, வந்து போயிற்று; நாலு நாட்'களும் வந்து போயின. வள்ளிநாயகம் வரவில்லை; வரவேயில்லை.
அந்தப் 'பட்டணத்துச் சாமி'யை எதிர் பார்த்தபடி, 'பட்டிக்காட்டுச்சாமி'கள் இரண்டும் எல்லோரா நகரைச்சுற்றிச்சுற்றி வந்தன; கண்ட இடத்தில் உண்டு, கண்ட இடத்தில் உறங்கின. கட்டுச் சோறு தீர்ந்தது. கையிலிருந்த காசும் கரைந்தது.
"இன்னும் எத்தனை நாட்கள் அப்பா, இப்படி நாம் இங்கே சுற்றிக் கொண்டிருக்க முடியும்?" என்றான் முருகையன்.
"அதற்காக வந்த காரியத்தை முடிக்காமலா போய்விடுவது? நீ பேசாமல் இரு, பட்டணம் நம்மைப் பட்டினி போட்டு விடாது!" என்றான் கண்ணாயிரம்.
இந்தச் சமயத்தில் யாரோ 'கலகல வென நகைக்கும் சத்தம் காதில் விழவே, இருவருமே திரும்பிப் பார்த்தனர். எதிர் வீட்டுத் தெருப்படிகளின் மேல் உட்கார்ந்திருந்த ஓர் ஏகாங்கி, "நகைத்தவன் நான்தான்; நாலு நாட்களாக நான் பட்டினி" என்றான் விரக்தியுடன்.
"உங்களை விட்டுவிட்டா இந்த வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்கள்? அப்படிச் சாப்பிடுபவர்கள் திருடர்கள் என்று காந்தி ஐயா கூடச் சொல்லியிருக்காரே?" என்றான் கண்ணாயிரம் வியப்புடன்.
"இந்த வீட்டில் மட்டுமென்ன, எல்லா வீடுகளிலும் என்னை விட்டு விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்!"
"எங்கள் கிராமத்தில் அப்படி யாரையும் விடுவதில்லையே?"
"அங்கே சிறிய சிறிய குடிசைகள்; அவற்றுக்குள் பெரிய பெரிய உள்ளங்கள். இங்கே பெரிய பெரிய மாளிகைகள் அவற்றுக்குள் சிறிய சிறிய உள்ளங்கள்!"
இதைச் சொல்லி அவன் வாய் மூடுவதற்குள் "ஏய் யார் அது?" என்று குரல் உள்ளேயிருந்து இடி முழக்கம் போல் ஒலித்தது.
"என்ன அது?" என்றான் கண்ணாயிரம், அந்த குரலொலியின் அதிர்ச்சியால் ஒரு குலுங்கி குலுங்கி நின்று.
"ஒன்றுமில்லை; வீட்டுக்கு உரியவர்கள் என்னை உபசரிக்கிறார்கள்" என்றான் ஏகாங்கி.
அடுத்த கணம் அவன் தலையில் ஒரு செம்பு தண்ணீர் வந்து விழுந்து சிதறி வழிந்தது!
எதிர்பாராத இந்தத் தாக்குதலைக் கண்டதும் முருகையன் கொஞ்சம் பின்வாங்கி, "இதுவும் உபசாரத்தைச் சேர்ந்ததுதானா?" என்றான் கொஞ்சம் சந்தேகத்துடன்.
"ஆமாம்; பட்டிக்காட்டில் காலுக்குத் தண்ணீர் கொடுத்து உபசரித்தால், பட்டணத்தில் தலைக்குத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கிறார்கள்" என்றான் அவன், தலையில் விழுந்த தண்ணீரைத் தன் கையால் முடிந்தவரை தட்டிவிட்டுக் கொண்டே.
அவனிடம் தன் மேல் துண்டை எடுத்துக் கொடுத்து விட்டு "ஒன்றும் புரியவில்ல ; எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றான் கண்ணாயிரம்.
"புரியும், இன்னும் இரண்டு நாட்கள் பட்டணத்தில் இருந்தால்!" என்று சொல்லிக் கொண்டே துடைத்த துண்டை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, "நன்றி நான் வருகிறேன்!" என்று நடையைக் கட்டிவிட்டான் ஏகாங்கி.
அன்றிரவு......
வண்டிமேடொன்றைத் தஞ்சமடைந்த தந்தையும் மகனும் வராத தூக்கத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது "ஐயா, ஐயா!" என்று அவர்களை யாரோ தட்டி எழுப்புவது போலிருந்தது. 'இங்கேயும் யாராவது விரட்ட வந்துவிட்டார்களோ, என்னமோ?' என்ற பீதியுடன் இருவரும் எழுந்து உட்கார்ந்தனர். அவர்களுக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த ஒரு கோவணாண்டி, "கோடை மாடு போல் கிடக்கிறீர்களே, ஏதாவது சாப்பிட்டீர்களா?" என்று அவர்களை விசாரித்தான்.
'இல்லை' என்பதற்கு அடையாளமாக இருவரும் தலையை ஆட்டினர்.
"நான் நினைத்தது சரிதான்; இந்தாருங்கள்; எழுந்து கையை அலம்பிக் கொண்டு வாருங்கள்!" என்று குடுவை தண்ணீரை எடுத்து அவர்களிடம் நீட்டினான் அவன்.
"பட்டணத்தில் இப்படியும் ஒரு பட்டிக்காடா?"
கண்ணாயிரத்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுக்குச் சற்று தூரத்தில் வைக்கோல் வண்டியொன்று அவிழ்த்து விடப்பட்டிருந்தது; அதற்கு அருகே இரண்டு மாடுகள் படுத்தபடி அசை போட்டுக் கொண்டிருந்தன; அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் இரண்டு கல்லடுப்புகள்; அவற்றில் ஒன்றின் மேல் சோற்றுப் பானை; இன்னொன்றின் மேல் குழம்புச் சட்டி!
'ஆஹா! பச்சைமலை கிராமமே பசி தீர்க்க வந்து விட்டது போலல்லவா இருக்கிறது!'
இந்த எண்ணத்தில் தன்னை மறந்து நின்ற அவனைப் பிடித்து உலுக்கி, "என்ன யோசிக்கிறீர்கள்? நாம் வரும் போது இங்கே ஒன்றும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா?" என்றான் கோவணாண்டி.
"ஆமாம் நீங்கள் எப்போது வந்தீர்கள்?"
"நான் காலையிலேயே வந்துவிட்டேன்; இந்த வைக்கோலை விற்றுத் தீர்க்கும்வரை இங்கே தான் தங்கியிருப்பேன்" என்றான் அவன், தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக!
"வந்த இடத்தில் எங்களை விருந்துக்கு அழைக்கிறீர்களே, நாளைக் காலையில் உங்களுக்குப் பழையது இல்லாமற் போய்விடுமே?" என்றான் கண்ணாயிரம் கொஞ்சம் தயக்கத்துடன்.
"நாளையைப் பற்றிக் கவலைப்பட நாம் யார்? கடவுள் இருக்கிறார், கொடுக்க; நாம் இருக்கிறோம், சாப்பிட! ம், பிடியுங்கள்; எப்பொழுது சாப்பிட்டதோ என்னமோ?" என்றான் அவன் மீண்டும் குடுவையை நீட்டி.
அதை வாங்கி இருவரும் கையை அலம்பிக் கொண்டதும் "உட்காருங்கள்! என் தம்பி இதோ இலை வாங்கிக் கொண்டு வந்து விடுவான்!" என்று அவர்களை உட்கார வைத்து விட்டுச் சோற்றையும் குழம்பையும் கொண்டு வந்து அவர்களுக்கு எதிரே வைத்தான் கோவணாண்டி. அதற்குள் இலை வந்து சேர்ந்தது; நாட்டு வளப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே நாகரிகம் தெரியாத அந்த நாலு ஜீவன்களும் சாப்பிட்டு முடித்தன.
படுக்கத் துண்டை விரிக்கும் போது "ஏன், அப்பா? அந்த வண்டிக்காரர் எவ்வளவு தூரம் படித்திருப்பார்?" என்றான் முருகையன்.
"நான் எவ்வளவு தூரம் படித்திருக்கிறோனோ, அவ்வளவு தூரம்தான் அவரும் படித்திருப்பார்!" என்றான் கண்ணாயிரம்.
அடுத்த நாள்...
வழக்கம் போல் வள்ளி நாயகத்தின் வீட்டுக்கு வந்து வக்கீல் ஐயா வந்து விட்டாரா? என்று விசாரித்தான் கண்ணாயிரம்.
"வந்து விட்டார்/உட்காருங்கள்; இதோவந்துவிடுவார்!" என்று அவருடைய அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சைச் சுட்டிக்காட்டினான் வேலைக்காரன்.
கண்ணாயிரம் உட்காரவில்லை; நின்றது நின்றபடி நின்றான். உள்ளே யாரோ ஒரு கட்சிக்காரனுடன் வள்ளிநாயகம் பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.
"இந்தக் குரல் எங்கேயோ கேட்ட குரலாயிருக்கிறதே?"
'ஆம் வள்ளிநாயகத்தின் குரல் மட்டும் அவனுக்குக் கேட்ட குரலாயில்லை; அவருடன் பேசிக் கொண்டிருந்த கட்சிக்காரனின் குரலும் அவனுக்குக் கேட்ட குரலாயிருந்தது.
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகச் சற்றே உற்றுக் கேட்டான் அவன்.
"நீ வாங்கியது ரூபாய் ஆயிரந்தான்; இல்லையா?"
"வாங்கியது ரூபாய் ஆயிரந்தான்; எழுதிக் கொடுத்தது ரூபாய் இரண்டாயிரத்துக்கு!"
"அதை வைத்துக் கொண்டு தான் ரூபாய் இரண்டாயிரமும் அதற்குரிய வட்டியும் தனக்குச் சேர வேண்டுமென்று அவன் உன்மேல் வழக்குத் தொடர்ந்திருக்கிறான்; இதிலிருந்து நீ தப்ப வேண்டுமானால் இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!"
"சொல்லுங்கள்!"
"அந்த ஆயிரம் ரூபாயைக் கூட அவனிடமிருந்து நான் வாங்கவில்லை என்று நீ சொல்லிவிட வேண்டும்!"
"ஐயையோ! அப்படிக்கூடப் பொய் சொல்லலாமா?"
"என்ன ஐயையோ! அவன் பொய் சொல்லும்போது நீ பொய் சொல்லக்கூடாதா?"
"அது எப்படிச் சொல்ல முடியும்? நான்தான் அவனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேனே?"
"நீ எங்கே எழுதிக் கொடுத்தாய்? உனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே?"
"எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் பேனாவைத் தொட்டுக் கொடுத்திருக்கிறேனே?"
"தொட்டுக் கொடுத்த கையைத்தான் எப்போதோ துடைத்துக் கொண்டிருப்பாயே! சும்மா சொல், வழக்கில் வெற்றியடைந்த பின் எனக்கு நீ ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் போதும்!"
"கேவலம், ரூபாய் ஐந்நூற்றுக்காக நான் பொய் சொல்வதோடு உங்களையும் பொய் வழக்காட வைக்க வேண்டுமா?"
"இந்த உலகத்தில் எது பொய் இல்லை?" எல்லாம் பொய் என்றுதான் நம்முடைய வேதம் கூடச் சொல்லுகிறது.
"வேதம் சொன்னால் சொல்லட்டும்; நான் சொல்ல மாட்டேன்!"
"சொல்லாவிட்டால் நீதான் கெட்டுப் போவாய்!"
"என்னைக் கெடுத்து விட்டு அவன் மட்டும் நன்றாயிருந்து விடுவானா? நன்றாயிருந்தால் இருக்கட்டும்; நான் வருகிறேன்"
இப்படிச் சொல்லிவிட்டு அந்தக் கட்சிக்காரன் வெளியே வந்ததும், "உங்களுடைய குரலிலிருந்தே உங்களை நான் தெரிந்து கொண்டு விட்டேன்!" என்றான் கண்ணாயிரம். கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகத்தையும் அவனைப் பார்த்த பின் தீர்த்துக் கொண்டு.
கோபண்ணா சிரித்தான். சிரித்து விட்டு "நீங்களும் இவரைப் பார்க்கத்தான் வந்தீர்களா?" என்றான் சுவரில் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த காந்தி மகானின் படத்தைப் பார்த்தபடி!
"ஆமாம்; இவரைப் பார்க்கத்தான் வந்தேன்; ஆனால் இனி பார்ப்பதாக இல்லை!" என்றான் கண்ணாயிரம், ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டவனைப் போல.
முருகையனுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் அப்பா?" என்றான் இடையே குறுக்கிட்டு.
"படித்தது போதும் வா, இவருடைய வண்டியிலேயே நாமும் ஊருக்குப் போய் விடுவோம்" என்றான் அவன், படியை விட்டுக் கீழே இறங்கிக் கொண்டே.
அதற்குமேல் முருகையன் அவனை ஒன்றும் கேட்கவில்லை, கேட்பதற்கு என்ன இருக்கிறது, 'படித்தவர்களின் லட்சண'த்தை அவனும் பார்த்த பிறகு?
பிழைக்கத் தெரியாதவன்
நள்ளிரவு; தங்களையும் கொன்று தின்னத் துணிந்து விட்ட சீனர்களுக்கு அஞ்சியோ என்னமோ, நாய்கள் கூடக் குரைப்பதை நிறுத்தி விட்டிருந்தன.
அந்த நிசப்தமான வேளையிலே, திடீரென்று ஓர் அலறல்;
"ஐயோ, போச்சே! ஒரு மாதச் சம்பளம் பூராவும் போச்சே!"
கேட்போரின் நெஞ்சைப் பிளக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவனின் இந்த அலறல் மாடி அறையில் உட்கார்ந்து, அடுத்தாற்போல் மந்திரி பதவியை அடைவதற்கான வழி வகைகளைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தியாகி தீனதயாளரின் காதில் விழுந்தது - ஆம், அவர் இப்பொழுது எம்.எல்.ஏ அதாவது, மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதி!
"கத்தாதே! இதோ பார், கத்தி - குத்தி விடுவேன்"
வழிப்பறிக்காரனின் மிரட்டல் இது!
இந்த மிரட்டலைத் தொடர்ந்து என்ன கனவு கண்டாளோ என்னமோ, "ஐயோ! என்னைக் குத்துகிறானே!" என்று அலறி எழுந்தாள் அவருக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருடைய மனைவி திலகம்.
"உன்னை யாரும் குத்தவில்லை; தெருவில் யாரையோ யாரோ குத்துகிறார்கள் - நீ தூங்கு!" என்று சொல்லிக் கொண்டே சென்று, மின்சார விசிறியின் 'ஸ்விட்'சைப் போட்டார் தீனதயாளர்.
"ரொம்ப அழகாய்த்தானிருக்கிறது! யாரையோ யாரோ குத்துகிறார்களாம். நாளைக்கு அவர்கள் நம்மையும் குத்த வந்து விட்டால்?"
"பைத்தியக்காரி! நாம் என்ன, நடந்தா வரப்போகிறோம்? நமக்குக் கார் இருக்கிறது; டிரைவர் இருக்கிறான்; போலீஸ் இருக்கிறது; போலீஸைக் கூப்பிடப் போன் இருக்கிறது....."
"அதையாவது செய்யுங்களேன், உங்களுக்குப் பக்கத்தில் தானே 'போன்' இருக்கிறது?"
"அதுதான் கூடாது! இந்தத் தெருவில் 'போன்' உள்ள வீடு நம் வீடு ஒன்று தான், இது அந்த வழிப்பறிக்காரர்களுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். நாளைக்கு அவர்களால் நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்?"
"அதற்காக நம் கண்ணுக்கு முன்னால் ஒருவன் கொல்லப் படுவதை நாம் பார்த்துக் கொண்டா இருப்பது?"
"கவலைப்படாதே! இப்பொழுது தெல்லாம் குறைந்த பட்சம் ரூபாய் இரண்டாயிரத்துக்கு ஒவ்வொரு தொழிலாளியின் உயிரும் 'இன்ஷ்யூர்' செய்யப்படுகிறது!"
"எல்லாம் அந்த படுபாவியால் வந்தவினை! உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே!" என்று அவன் ஓயாமல் எழுதுவதை விழுந்து விழுந்து படித்து விட்டு..."
"அது எந்தப் படுபாவி?"
"அவன்தான்! வள்ளுவனுக்குப் பின்னால் வந்த கிள்ளுவன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான்!"
"பிழைப்பின் ரகசியத்தையே கண்டுபிடித்துவிட்ட பேராசிரிய ரல்லவா அவன்? அவருடைய வாக்கு வரப்பிரசாதம்; வாழ்வு வழிகாட்டி..."
"யாருக்கு? உணர்ச்சியைப் பொருட்படுத்தாத கொலைகாரர் களுக்கு; கொள்ளைக்காரர்களுக்கு; ஏமாற்றுக்காரர்களுக்கு!"
"அவர்களுக்காவது சட்டத்தைப் பற்றிய அச்சம் ஓரளவாவது இருக்கலாம்; நம்மைப் போன்றவர்களுக்கு அது கூட அவசியமில்லையே; அவருடைய அறிவுரைகளைக் கேட்டால்?"
"மகிழ்ச்சி; அவருடைய அறிவுரைகளைக் கேட்பதற்காக நீங்கள் அறிவில்லாமல் இருப்பது பற்றி?"
இந்தச் சமயத்தில் "ஏண்டா, சோம்பேறிப் பயல்களா? எவனாவது மாதம் பூராவும் உழைத்துச் சம்பளம் வாங்கிக் கொண்டு வர வேண்டியது. அதை நீங்கள் எந்த விதமான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல் அடித்துப் பிடுங்கிக் கொள்ள வேண்டியது. இது ஒரு பிழைப்பா? உங்களுக்கு வெட்கமில்லை? மானமில்லை? மரியாதையாய் அவன் சம்பளத்தை அவனிடம் கொடுத்து விட்டு போங்கடா!" என்று யாரோ ஒரு மூன்றாவது மனிதன் குறுக்கிட்டு விரட்ட, "நீ யார் அதைக் கேட்க?" என்று வழிப்பறிக்காரர்களில் ஒருவன் அவன் மேல் பாய, இருவரும் கட்டிப் புரளும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.
அவ்வளவுதான்; அவசர அவசரமாக எழுந்து ஜன்னல் கதவுகள் அனைத்தையும் 'படார், படார்' என்று சாத்தி விட்டு, "அமைதியைக் குலைக்கிறார்கள் எதையும் ஆற அமர யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டிய வேளையிலே அமைதியைக் குலைக்கிறார்கள்!" என்றார் அவர், நடுங்கிக் கொண்டே.
"அட, சிங்கத் தமிழா! நீயா சீறிப் பாயும் வேங்கையின் கொடியை இமயமலையின் சிகரத்திலே பறக்க விட்டாய்?" என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.
"சிரிக்காதே! இப்போது எனக்கு வேண்டியது உன்னுடைய சிரிப்பு அல்ல! அமைதி!" என்று கத்தினார் அவர்.
"அடுத்தவன் வீட்டில் அமைதி நிலவாத போது உங்களுடைய வீட்டில் மட்டும் எப்படி அமைதி நிலவுமாம்?"
"தனிப்பட்டவன் கவனிக்கவேண்டிய பிரச்சனை அல்ல;
"அது அரசாங்கம் கவனிக்க வேண்டிய பிரச்சனை!"
"அடியார்கள் தங்களுடைய தற்காப்புக்கு ஆண்டவனை இழுப்பதுபோல் நீங்கள் ஏன் உங்களுடைய தற்காப்புக்கு அரசாங்கத்தை இழுக்கிறீர்கள்? தனிப்பட்டவன் வேறு, அரசாங்கம் வேறா? அரசாங்கத்தின் ஒர் அங்கம் தானே தனிப்பட்டவன்? தனிப்பட்டவன் தனிப்பட்டவனாகவே இருந்து விட்டால் சமூகம் ஏது, சமுதாயம் ஏது? அரசியல் ஏது, அரசாங்கம் தான் ஏது?”
பேசாதே, தனிப்பட்டவன் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்து கொண்டு இருக்கிறேன்!”
எதைச் சொல்கிறீர்கள்? மின்சார விசிறியைக் சுழல விட்டதையா, ஜன்னல் கதவுகள் அத்தனையையும் அடைத்து விட்டதையா?”
இந்தச் சமயத்தில் கீழே போராடிக் கொண்டிருந்த மூன்றாவது மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கச் சொன்னான்:
"இந்தாதம்பி, உன் சம்பளம்; எடுத்துக் கொண்டு போ சீக்கிரம்! ம், சீக்கிரம்!"
அதைப் பெற்றுக் கொண்டு அவன் நாத் தழுதழுக்கச் சொன்னான்:
வி.க. -35வி.க. "இன்றுதான் கடவுளைக் கண்ணாரக் காண்கின்றேன்; உங்களுக்கு என் நன்றி!”
இதைக் கேட்டதும் "நல்லவேளை எல்லோரும் உங்களைப் போல் இருந்து விட்டால் அந்த ஏழையின் கதி என்ன ஆவது?" என்றாள் திலகம்.
"நான் மட்டும் சும்மாவா இருந்து விடப்போகிறேன்!” என்றார் தியாகி தீனதயாளர்.
"வேறு என்ன செய்யப் போகிறீர்கள், சட்ட சபையில் கேள்வி கேட்பதைத் தவிர!” என்றாள் அவள்.
"அதை இப்போது சொல்வானேன்? நாளைக்குப் பார் பத்திரிக்கையை!” என்றார் அவர்.
★★★
மறுநாள் காலை...
"ஆசிரியர்க்குக் கடிதங்கள்" என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவதற்காக 'நகரவாசி' என்ற புனைப்பெயரில் நாளுக்கு நாள் நகரில் பெருகி வரும் வழிப்பறிக் கொள்ளையைப் பற்றியும், அவற்றைத் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருக்கும் போலீஸாரின் பொறுப்பற்ற தன்மைகளைப் பற்றியும் காரசாரமாக ஒரு கடிதம் எழுதி எடுத்துக் கொண்டு, அதைத் தபாலில் சேர்ப்பதற்காக டிரைவரைத் தேடிக் கொண்டு கீழே இறங்கி வந்தார் தீனதயாளர்.
'ஷெட்'டில் கார் இருந்தது; டிரைவர் இல்லை.
"கோபாலா, கோபாலா!"
எத்தனை குரல் கொடுத்துத் தான் என்ன பயன்? காணோம்; கோபாலனைக் காணவே காணோம்.
"பொழுது விடிந்ததோ இல்லையோ, டீ குடிக்கப் போய் விட்டான் போலிருக்கிறது, துரை!" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார்.
வாசலில் அவர் கண்ட காட்சி...
"அட பாவி, அந்த மூன்றவாது மனிதன் நீதானா?” 'கிறிச்'சிட்டுக் கத்தினார் தீனதயாளர் - ரத்த வெள்ளத்திலே மார்பில் பாய்ந்த கத்தியுடன் கீழே விழுந்து கிடக்கும் கோபாலனின் உயிரற்ற உடலைப் பார்த்து.
"ஆம், நானேதான்!” என்பது போலிருந்தது, அந்த நிலையிலும் மலர்ந்திருந்த அவன் முகம்.
"பிழைக்கத் தெரியாதவன்; பிழைப்பின் ரகசியத்தை அறியாதவன்" என்றார் அவர் பெருமூச்சுடன்.
"ஏன், என்ன நடந்தது?" என்று கேட்டுக் கொண்டே வந்தார், 'இரும்பு பெர்மிட்'டுக்காக அவருடன் 'இரண்டறக் கலந்து' பேச வந்த இரும்பு வியாபாரி ஒருவர்.
நடந்ததைச் சொன்னார் தியாகி தீனதயாளர்.
"கிடக்கிறான் விடுங்கள்! இப்படி ஏதாவது செய்து விட்டால் இவனுக்காக யாராவது வெண்கலச் சிலை செய்து வைத்து விடுவார்களா என்ன? அப்படி ஏதாவது செய்து வைப்பதாயிருந்தால் தங்களைப் போன்ற தியாகி சிகரங்களுக்கல்லவா செய்து வைக்க வேண்டும்?" என்றார் அவர் வந்த அவசரத்தில் அவிழ்ந்து தொங்கிய தம் சிண்டைத் தட்டி முடிந்து கொண்டே!
பதினோராம் அவதாரம்
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்... ஊம்" என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம்' கொட்டிக் கொண்டிருந்தான்.
அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு 'உக்கும்...உக்கும்...உக்கும்' என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி மாரியாயி.
முத்தையாவின் முணுமுணுப்பு வரவர அதிகமாகிக் கொண்டு வரவே, அவள் உரலிலேயே உலக்கையை நாட்டி விட்டு உள்ளே ஒடினாள்.
அப்படியும் இப்படியுமாக அவன் புரண்டு புரண்டு படித்தான். பாயின் மேல் விரிக்கப்பட்டிருந்த பழைய புடவைத்துண்டு - அதாவது பஞ்சைமகள் படுக்கும் பஞ்சு மெத்தை - நழுவித் தரையில் விழுந்து கிடந்தது. கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மனத்தில் எழுந்த கடைசி எண்ணங்களின் பயனாக, அவன் கடைக்கண்களில் நீர்த் துளிகள் அரும்பியிருந்தன.
"என்ன குத்துதா?”
"ஆமாம், நெஞ்சை எண்ணம் குத்துது; உடம்பைப் பாய் குத்துது: வயிற்றைப் பசி குத்துது!”
"இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ, கஞ்சி காய்ச்சி எடுத்துக்கிட்டு வந்துட்றேன்!” என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் நடைக்கு வந்தாள் மாரியாயி.
"என்னமோ, அதுவரை என் உயிரும் பொறுத்துகிட்டு இருந்தால் சரி!" என்று குப்புறப் படுத்தான் முத்தையா.
"சிறது நேரத்திற்கெல்லாம் முத்தையனுக்கு எதிரே கஞ்சிக் கலயம் காட்சியளித்தது. அதைக் கண்டதும் முகத்திலே கோடி சூரியப் பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார முயன்றான் முத்தையா. ஆனால் அவனது உடல் நலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
கலயத்தைக் கீழே வைத்துவிட்டு அவனைத் தூக்கி உட்கார வைத்தாள் மாரியாயி. 'முருகா! முருகா' என்று முனகிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் முத்தையா.
“நாமெல்லாம் கூப்பிட்டா முருகரு வருவாரா? வள்ளி கூப்பிட்டா வருவாரு!" என்று சொல்லிக் கொண்டே, ஒரு தகரக் குவளை நிறையக் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள் மாரியாயி.
அந்தக் கஞ்சி உள்ளே போனபிறகு, "ஏன், மாரி காத்தாலே வைத்தியரைக் கூட்டிக்கிட்டு வரலே?" என்று கேட்டான் முத்தையா.
"அவரு வந்தாத்தானே? 'வர முடியாது போ!' என்று சொல்லிப்பிட்டாரு!"
"அப்புறம்...?"
"கையிலே யிருந்த நாலணாக் காசை எடுத்து உண்டியிலே போட்டேன்; 'உன் புருசன் உடம்புக்கு என்ன'ன்னு கேட்டாரு; 'சுரம்’னு சொன்னேன். நாலு பொட்டணம் மருந்தை மடித்துக் கொடுத்து, 'இதைத் தினம் ரெண்டு வேளை தேனிலே கொடு; ஆகாரம் பார்லி கஞ்சி மட்டுந்தான் கொடுக்கணும்’னு சொன்னாரு. நீ தான் பாயிலே படுத்துப் பத்து நாளாச்சே, கையிலே ஒரு சல்லிக் காசு ஏது? தேன் வாங்கிறதற்கும் காசில்லே, பார்லி வாங்கிறதற்கும் காசில்லே! அதாலேதான் உனக்கு இன்னிக்கு மருந்து கொடுக்கல்லே!" என்றாள் மாரியாயி.
"அப்படின்னா, நீ என்ன பண்ணப் போறே, மாரியாயி?”
"என்னத்தைப் பண்றது. இந்தக் கஞ்சிக்கலயத்தையும் தகரக் குவளையையும் நான் உன் தலை மாட்டிலேயே வைத்து விட்டுப் போறேன். பசிக்கிற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஊத்திக் குடிச்சுக்கோ. நான் காட்டுக்குப் போய் ஒரு சுமை கட்டையாச்சும் வெட்டி பட்டணத்துப் பக்கமாய் போய் வித்துப்பிட்டு வரேன். வரும்போது தேனும் பார்லியும் வாங்கிக்கிட்டு வரேன். அப்படிச் செஞ்சாத்தான் அடுத்த வீட்டுக்காரிட்டே வாங்சின அரைப் படி நெல்லையும் நாளைக்குத் திருப்பிக் கொடுக்க முடியும்; அவள் வாயிலிருந்தும் தப்பித்துக் கொள்ளமுடியும். சும்மா வீட்டிலே உட்கார்ந்துகிட்டு, உன்னை நானும், என்னை நீயும் பார்த்துக்கிட்டு இருந்தா உன் உடம்பு தேறுகிற வழிதான் எப்படி?”
"மாரியாயி; நீ சாதாரண மாரியாயி இல்லை; இந்த மகமாயி மாரியாயிதான்! இல்லாட்டிப் போனா இந்த ஒண்ணுமில்லாத பயலுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவியா. சீமையிலே இந்த வெள்ளைகாரப் பயலுங்க இருக்கிறாங்களாமே, அவனுங்க பெண்டாட்டிமாருங்க 'ஊம்' என்கிறதற்கு 'ஆம்' என்கிறதற்கெல்லாம் கட்டிக்கிட்ட புருஷனை விட்டுட்டு, வேறே எவனாச்சையும் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிடுவாளுங்களாம்! ராசங்கங்கூட அது தான் ஞாயம்னு சட்டம் செஞ்சு வச்சிருக்குதாம்! - போனமாசம் நம்ம ஊருக்கு வந்திருந்துச்சே ஒரு பட்டணத்துப் பிள்ளை, அது சொல்லிச்சு. அந்த வெள்ளைக்காரிங்க என்ன தான் படிச்சுக் கிழிச்சவங்களாயிருந்தாலும் உனக்கு ஈடாவ முடியுமா? - என்னவோ, போ! கடவுள் விட்டவழி போய்ப் பார்த்துக் கிட்டுப் பொழுதோடே வந்துடு!" என்று மிக்க வேதனையுடன் சொல்லிக் கொண்டே மீண்டும் படுத்து விட்டான் முத்தையா.
மாரியாயியும் கையில் வெட்டுக் கத்தியைப் பிடித்துக் கொண்டு காட்டை நோக்கிக் கிளம்பி விட்டாள்.
கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்க நடந்து, காட்டை அடைந்தாள் மாரியாயி. கட்டையும் வெட்டினாள் கட்டும் கட்டினாள். அப்பாடி ஒரு ரூபாயாவது போகும்!” என்று நினைத்த போது, அவள் உள்ளம் இழுத்துச்சிம்மாடு சுத்தித்தலையில் வைத்துக் கொண்டே, காட்டிலாகா அதிகாரிகள் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தாள்; யாரையும் காணவில்லை. பிறகு, சுமையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் நடந்தாள்.
கிராமத்தின் எல்லையைக் கடந்து பட்டணத்தின் எல்லையை அடைந்ததும் "விறகு அம்மா, விறகு!" என்று கூவிக் கொண்டே அவள் தெருத் தெருவாக அலைந்தாள்.
அங்கே ஒரு தெருவில் இருவர் குடிவெறியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வாய்ச்சண்டை முற்றி கைச்சண்டையில் இறங்கும் சமயம்; அந்த வழியே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கும், குடியர்கள் இருவரும் ஒருவரையொருவர் தங்களால் ஆன மட்டும் குத்திக் கொள்வதற்கும் சரியா யிருந்தது.
"முதல் தேதி நெருங்கிப் போச்சு; என்னடா நீ இன்னும் ஒரு கேசும் பிடிச்சுகிட்டு வரலேன்னு இன்ச்சிபெட்டரு ஐயா கேக்கறாரு! இவனுங்களையாச்சும் இன்னிக்குப் பிடிச்சுக்கிட்டுப் போவோமா?" என்றான் 101.
"அடே! அவனுங்கக் கிட்ட யாருடா போவான்? அவனுங்களுக்கு இருக்கிற கோவத்திலே நம்மையும் ஒரு போடு போட்டு வச்சா என்ன பண்றது?" என்றான் 202.
"அதாஅண்ணே, நானும் பார்க்கிறேன்! அவனுங்கக்கிட்ட உதை பட்டா நம்ம உடம்பு தானே நோவப் போவுது? இன்ச்சிபெட்டரு ஐயாவுடைய உடம்பா நோவப் போவுது?"
"இங்கே நம்ம நிக்கிறதுகூடத் தப்பு எவனாச்சும் ஒரு பித்துக்குளிப் பய வந்து, போலீஸ் போலீஸ் என்று கத்துவான். அப்படிக் கத்தர வரைக்கும் நாம ஏன் இங்கே நின்னுக்கிட்டு இருக்கணும்? நீ வந்தாவா, வராவிட்டாப் போ! நான் போரேப்பா!" என்று சொல்லிக் கொண்டே 202 அந்த இடத்தை விட்டு நழுவி விட்டான்.
101 எதற்கும் துணியாமல், சிறிது நேரம் அங்கேயே நின்று தவித்துக் கொண்டிருந்தான். அதற்குள் அந்தக் குடியர்களில் ஒருவன் கைச் சண்டையை விட்டுக் கத்தியை எடுத்துக் கொண்டான். அவ்வளவுதான்; கல்லைக் கண்ட நாயைப் போல் 101 இருந்த இடம் தெரியவில்லை!
அடுத்த நிமிஷம் அவன் அந்தத் தெருக்கோடியில் திரும்பிக் கொண்டிருந்தான்.
மாரியாயி அந்த சூரப்புலியின் கண்ணில்பட்டாள்!
"ஏய்":என்று அவளை அதிகாரத்துடன் அதட்டி அழைத்தான் 101.
"நேரமாச்சுங்கோ, சும்மா பேரம் பண்ணி பொழுதை ஒட்டாதீங்கோ ஒரே விலை ஒரு ரூபாய் தானுங்க!" என்றாள் அப்பாவி மாரியாயி.
101 'இடி இடி' என்று சிரித்தான்.
"ஏம்மா, என்னைக் கட்டை வாங்க வந்தவன்னா நினைச்சுக்கிட்டே?... ஹஹ்ஹிஹ்ஹி... " என்று தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டே அவன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.
மாரியாயிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் தன்முகத்தில் அசடு வழிய, 'நீங்க கட்டை வாங்க வரலையா? அப்படின்னா நான் போய்விட்டு வரேனுங்க!" என்று சொல்லி விட்டுத் திரும்பினாள்.
மீசைக்காரனுக்குக் கோபம் வந்து விட்டது. "ஏய்! கட்டையை இறக்கு, கீழே!" என்று கட்டளை யிட்டான்.
"ஏன் சாமி?"
"ஐயே! ஏ...ன்..சா...மி? - கேள்வியைப் பாருடா, கேள்வியை!” என்று கிண்டல் செய்து கொண்டே, "இறக்கும்மே, கீழே! இப்போ பட்டணத்திலேயே கட்டையை 'ரேஷன்' செய்திருக்காங்கன்னு உனக்குத் தெரியாதா?" என்று அதட்டினான் 101.
"என்ன சாமி! என்ன செய்திருக்காங்க? ஏசனா? அப்படின்னா என்ன சாமி?
"உன் தலையைச் செய்திருக்காங்க இறக்கு கீழே!" என்றான் 101 வெறுப்புடன்.
இப்பொழுதும் மாரியாயிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பயந்து கொண்டு, தலையிலிருந்த சுமையை இறக்கிக் கீழே வைத்து விட்டாள்.
"சரி, இங்கேயே கொஞ்சநேரம் நின்னுக்கிட்டு இரு. என் 'டூட்டி’ முடிஞ்சதும் உன்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்!”
"நான் வீட்டுக்குப் போவனும், சாமி! அவரு காயலாப் படுத்துக்கிட்டு இருக்காரே!”
"எவரு காயலாப் படுத்துக்கிட்டு இருக்கா? ...சீ... சும்மாயிரு!" என்று அவுள் தலையில் தட்டினான் 101.
மாரியாயி அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. 'கலகல' கண்ணிரைத் தரையில் கொட்டிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் நூற்றியொன்றுக்கு 'டூட்டி' முடிந்துவிட்டது. அவன் மாரியாயியைக் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்.
மறுநாள் நீதி மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டாள் மாரியாயி. தீர்ப்பு என்ன? அவள் செய்த மகத்தான குற்றத்திற்கு இரண்டு வாசச் சிறைவாசம்!
"வேணும்னா கட்டையை மட்டும் எடுத்துக்கிட்டு என்னை விட்டு விடுங்களேன், சாமி! காயலாப் படுத்துக்கிட்டுக் கிடக்கும் என் புருஷனுக்கு என்னை விட்டா வேறே கதியில்லையே!" என்று கதறிப் பார்த்தாள் மாரியாயி.
சட்டம் அப்படிச் சொல்லவில்லையோ என்னவோ, "ஸைலன்ஸ்!" என்று இரைந்து, அங்கே நிலவியிருந்த நிசப்தத்தைக் கலைத்தான் 'கோர்ட்' சேவகன்!
★★★
காட்டில் ஒரு யானை நோய்வாய்ப்பட்டு இரை தேடித் தின்பதற்குச்சக்தியற்றுப் போனால், மற்ற யானைகள் அதற்கு இரங்கி இரை தேடிக் கொண்டு வந்து கொடுத்து அதைக் காப்பாற்றுமாம். அம்மாதிரியான கெட்ட வழக்கம் ஒன்றும் மனித வர்க்கத்தினிடம் கிடையாதல்லவா? ஆகவே தன் குடிசையில் நாதியற்றுக் கிடந்த முத்தையனை அந்த ஊரார் யாரும் கவனிக்கவில்லை. தன் மனைவி மாரியாயி ஒரு சுமை விறகைக் கொண்டு போய் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவித்ததற்காக, இரண்டு வாரச் சிறை வாசம் கிடைக்கப் பெற்றாள் என்பதும் அன்று மாலை வரை அவனுக்குத் தெரியவில்லை!
இந்நிலையில் அவன் அடிக்கடி 'மாரி மாரி' என்று அரற்றுவதும், கஞ்சிக் கலயத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகக் காலி செய்வதுமாகப் பொழுதைக் கழித்து வந்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தக் குடிசை முழுவதும் இருள் கவிழ்ந்தது. விளக்கையாவது பொருத்தி வைக்கலாம் என்ற நோக்கத்துடன் அவன் அடுப்பங்கரையை நோக்கி நகர்ந்தான்.
இந்தச் சமயத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தி பரபரப்புடன் உள்ளே ஓடி வந்து, "முத்தையன் அண்ணே உன் பெண்சாதியைப் பட்டணத்திலே ஒரு போலீஸ்கார ஐயன் பிடிச்சிக் கிட்டான்!" என்று இரைந்தாள்.
அவள், மாரியாயியுடன் பட்டணத்திற்குக் காய்கறி விற்கச் சென்றவள்.
அவள் சொன்னதைக் கேட்டதும், "ஆ!" என்று அலறிய முத்தையா, அடுத்த நிமிஷம் மூர்ச்சையானான்!
சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ட சராசரங்களும் 'கிடுகிடு’ வென்று நடுங்குவது போன்ற ஒரு பேரோசை அவன் காதில் விழுந்தது.
தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு எழுந்தான். 'திருதிரு' வென்று விழித்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தான்.
'படீர்' என்று ஒரு வெடி, பளிச்சென்று ஒரு மின்னல் பகவான் பிரத்தியட்சமானார்!
"நீங்க யாரு, சாமி ?" என்று வினயத்துடன் கேட்டான் முத்தையா. ஏனெனில், அதற்குமுன் அவன் பகவானைப் பார்த்ததில்லையல்லவா?
"தீனதயாளன் நான்; கருணாமூர்த்தி நான்; ஏழை பங்காளன் நான்..." என்று பகவான் ஆரம்பித்தார்.
"அப்படின்னா இந்த ஏழையைக் காப்பத்தத் தான் இப்போ..."
"ஆமாம்; இதற்கு முன் நான் பல உயிர்களைக் காப்பதற்காகப் பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறேன்; இப்போது அந்த ஈவிரக்கமற்ற அதிகார வர்க்கத்தினிடமிருந்து உன் மனைவியை மீட்டு வருவதற்காகச் 'சிறை வார்டராய்ப் பதினோராம் அவதாரம் எடுத்தேன், இதோ உன் மனைவி; இனி உங்களுக்குத் தீங்கு செய்பவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுடைய தலைகள் என் சக்ராயுதத்துக்கு இரையாகும்..."
"என்ன சாமி, என்ன சொன்னிங்க அந்த எமப் பயலுங்கக்கிட்ட இருந்து என் மாரியை மீட்டுக்கிட்டா வந்துட்டீங்க! ஆ! என் மாரி, மாரி!" என்று கூவிக் கொண்டே தன் மனைவியைக் கட்டி அணைத்தான் முத்தையா.
அவனுடைய அணைப்பில் யாரும் பிடிபடவில்லை! வெறித்துப் பார்த்தான் முத்தையா. எல்லாம் வெறும் கனவு!
சண்டையும் சமாதானமும்
ஆம், அந்த 'முடிவில்லாத சண்டை' நடந்து கொண்டே தான் இருந்தது!
அவை இரண்டில் ஒன்று அழியும்வரை அந்தச் சண்டை தொடர்ந்து நடந்தாலும் - நடக்கட்டும்; நடக்கட்டும்; அவற்றின் அழிவைப் பார்த்தபிறகாவது மற்ற ஜீவராசிகளுக்குப் பலாத்காரத்தில் உள்ள நம்பிக்கை தொலையட்டும்!
நல்ல வேளை! நானும் ரங்கனைப் பின்பற்றியிருந்தால்?
சரி, கதையை முழுவதும்தான் கேளுங்களேன்!
★★★
நாங்கள் வசித்து வந்த மாந்தோப்பில் எங்களைப் போல் எத்தனையோ கிளிகள் வசித்து வந்தன. நானும் ரங்காவும் அடுத்தடுத்து இருந்த மரப் பொந்துகளில் வசித்து வந்தோம். எங்கள் தோப்புக்கு இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் ஒரு வெற்றிலைத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலிக்காக அகத்திச் செடிகள் வைக்கப்பட்டிருக்கும். பொழுது விடிந்ததும் எங்களையெல்லாம் அங்கு தான் பார்க்கலாம்; ஆடலும் பாடலுமாக ஒரே ஆனந்தத்தில் மூழ்கியிருப்போம்.
அந்தத் தோட்டத்தின் பக்கமாக எத்தனையோபேர்போவார்கள், வருவார்கள், அவர்களில் எத்தனை பேர் எங்கள் ஆடலிலும் பாடலிலும் தங்கள் மனதைப் பறிகொடுத்து நிற்பார்கள் என்கிறீர்கள்? - ஒரிருவர்தான்!
அந்த ஒரிருவரைப் போல் எல்லோருமே அழகை அனுபவிப்பவர்களாயிருந்தால் இந்த உலகம் இப்படியா இருக்கும்? நன்றாய்ச் சொன்னேன்! - அழகை அனுபவிக்காமலிருக் கிறார்களே, அவர்களால் மட்டுமா இந்த உலகத்தில் அமைதிக்குப் பங்கம் விளைகிறது? அழகை அனுபவிக்கிறார்களே, அவர்கள் கூடத்தான் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறார்கள்!
அது கிடக்கட்டும்; ஒரு நாள் வழக்கம் போல் வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்ற நாங்கள் இருவரும் உடனே வீடு திரும்பவில்லை. அதற்குக் காரணம் ரங்கா தான். அன்று என்னமோ அது இருந்தாற் போலிருந்து, "என்ன, சுகப்பிரம்மரே! இந்த வெற்றிலைத் தோட்டமும் அந்த மாந்தோப்பும் சேர்ந்ததுதானா உலகம்?' என்று கேலியாகக் கேட்டுவிட்டுச் சிரித்தது.
"ஏன், வேறு எங்கே போகவேண்டுமென்கிறாய்? உண்பது இங்கே, உறங்குவது அங்கே! - இவை போதாதா நமக்கு?" என்றேன்.
"ஏது, வரவர நீயும் மனிதர்களைப் போலாகி விட்டாயே!”
"உனக்கு என்ன தெரியும்? அவர்களில் எத்தனையோ பேருக்கு உண்பதற்கு உணவில்லை; உறங்குவதற்கு இடமில்லை, அப்படிப்பட்டவர்களை வேறு என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாய்?"
"சரிசரி, அதெல்லாம் நாகரிக உலகத்துச் சமாசாரம் - நமக்கு வேண்டாம், நீ வா இப்படி எங்கேயாவது போய்ச் சுற்றிவிட்டு வரலாம்" என்று சொல்லிச் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு ரங்கா தன் குஷியை வெளியிட்டது.
அதன் குஷியைப் பார்த்ததும் எனக்கும் என்னையறியாமல் குஷி பிறந்து விட்டது. அவ்வளவுதான்; இருவரும் ஸ்டேஷனுக்குச் செல்லவில்லை; 'க்யூ'வில் நிற்கவில்லை; டிக்கெட் வாங்கவில்லை; ரயிலிலோ விமானத்திலோ சவாரி செய்யவில்லை; சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு வான வீதியை நோக்கி 'ஜம்'மென்று கிளம்பினோம். பறந்தோம், பறந்தோம், பறந்தோம், அப்படிப் பறந்தோம், போனோம், போனோம், போனோம், அப்படிப் போனோம் - நாட்டையும் நகரத்தையும் கடந்து, காட்டையும் கடலையும் கடந்து, மலையையும் மடுவையும் கடந்து, நதியையும் புனலையும் கடந்து போய்க்கொண்டே இருந்தோம் ஆமாம், நிற்கவே யில்லை!
கடைசியில் எங்கோ எங்களுக்கு அலுத்துப் போயிற்றோ? அங்கே உட்கார்ந்தோம். எங்களைத் தொடர்ந்து வர முடியாமல் சூரியன் வெட்கிப் போய் மலைத் தொடரில் ஒளிந்து கொள்ள ஓட்டமாய் ஓடினான். அவனைப் பார்த்துச்சிரித்து வாய் மூடவில்லை; ஆனானப்பட்ட சூரியனையே வெற்றி கொண்ட எங்களை மிரட்டுவதற்காகப் பேதை இருள் கவ்வி வந்தது. அதன் மூஞ்சையும் முகரக் கட்டையையும் பார்த்துக் கொண்டிருக்க இங்கே யாருக்குப் பிடிக்கிறது? - "என்ன வீட்டுக்குத் திரும்பி விடுவோமா?" என்றேன், ரங்காவை நோக்கி.
"இனிமேல் எப்படித் திரும்புவது?" - என்று கேட்டது ரங்கா,
"திரும்பாமல் என்ன செய்வதாம்?" "இங்கேயே எங்கேயாவது தங்கி இரவைக் கழித்து விட்டுப் பொழுது விடிந்ததும் தான் போக வேண்டும்"
"ரொம்ப அழகுதான்!" - இப்படிச் சொன்னேனோ இல்லையோ, பாழும் மழை 'சடசட'வென்று கொட்ட ஆரம்பித்து விட்டது, அதைப் பார்த்த இருளோ 'பளிச் பளிச்' என்று மின்னி எங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது.
எப்படி இருக்கும் எங்களுக்கு? - இருந்த குஷியெல்லாம் மறைந்து இருவரும் செய்வது இன்னதென்றறியாமல் விழித்தோம்.
"இப்படியே விழித்துக் கொண்டிருந்தால் மழையில் நனைந்து சாக வேண்டியது தான் - வா, போவோம்!" என்று சொல்லி, ரங்கா அருகிலிருந்த ஒரு சோலையை நோக்கிப் பறந்தது. நானும் அதைப் பின்தொடர்ந்து சென்றேன்.
அந்தச் சோலையிலிருந்த மரங்கள் ஒவ்வொன்றையும் அணுகி, ஏதாவது பொந்து இருக்கிறதா என்று கூர்ந்து பார்த்துக் கொண்டே போனோம். அப்பாடா! எத்தனையோ மரங்களைப் பார்த்த பிறகு அடுத்தடுத்து இருந்த இரு பொந்துகள் இருந்தன. எங்களுடைய சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்?" உடனே ஆளுக்கொரு பொந்தில் புகுந்து கொண்டோம்.
"இனி மழையும் இருளும் நம்மை என்ன செய்யும்?" என்று நாங்கள் கவலை யற்றிருந்தபோது, எங்கிருந்தோ இரண்டு கிளிகள் நாங்கள் இருந்த பொந்துகளைத் தேடி வந்து சேர்ந்தன. விசாரித்துப் பார்த்ததில், பொந்துகள் இரண்டும் அந்தக் கிளிகளினுடையவை என்று தெரிந்தது!
அப்புறம் பேச்சுக்கு என்ன இருக்கிறது? நான் பேசாமல் வெளியே வந்து அந்தப் பொந்துக்கு எதிர்த்தாற் போலிருந்த ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நிமிஷம் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே நான் இருந்த பொந்துக்குள் ஒரு கிளி சென்று விட்டது.
இன்னொரு கிளிக்குத்தான் ரங்கா இடம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுப்பது 'பயங்கொள்ளித்தனம்' என்று நினைத்து, அது 'பலப் பரீட்சை' செய்ய ஆரம்பித்தது.
“மரியாதையாக வெளியே வந்து விடுகிறாயா, இல்லையா?” என்று கேட்டது வெளியே இருந்த கிளி.
"முடியாது, உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன்!” என்றது ரங்கா.
அவ்வளவுதான்; வெளியே யிருந்த கிளி பொறுமை இழந்து உள்ளே நுழைந்தது. அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? இரண்டும் ஒன்றை யொன்று அலகால் குத்திக் கொள்வதும் சிறகால் அடித்துக் கொள்வதுமாக இருந்தன. பலவந்தமாக வெளியே தள்ளப்பட்ட ரங்கா, அந்தக் கிளியின் எதிர்ப்பை மீறி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தது. எனக்கோ அதனுடைய அதர்மக் காட்சியில் சேர மனமில்லை, ஆகவே, துணைக்கு வரவில்லை என்பதற்காக அது என்னைத் திட்டியதையும் நான் பொருட்படுத்தாமல் நான் இருந்த இடத்திலேயே இருந்தேன்!
போராட்டம் நீடித்தது!
அந்த நீடித்த போராட்டத்தை நானும் நீடித்த மழையில் நனைந்த வண்ணம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் சிறகுகளெல்லாம் நனைந்து உடம்பு 'வெடவெட' வென்று நடுங்க ஆரம்பித்து விட்டது. அந்த நடுக்கத்தில் கிளையை விட்டுத் தவறிக் கீழே விழுந்து விடுவோமோ என்று கூட நான் பயந்து போனேன். ஆயினும் என்ன செய்வது? - ரங்காவைப் போல் நானும் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதா?
"வேண்டாம்; நடப்பது நடக்கட்டும்" என்று நான் பேசாமலிருந்தேன். எனக்கு எதிர்த்தாற் போல் பொந்துக்குள் இருந்த கிளியோ, அடிக்கடி வெளியே தலையை நீட்டி என்னை பரிதாபத்துடன் பார்ப்பதும், பதவிசு போல் உள்ளே சென்று விடுவதுமாக இருந்தது.
இப்படியே இருப்பதற்கு அதனுடைய அந்தராத்மா இடம் கொடுக்கவில்லையோ என்னமோ, சிறிது நேரத்திற்கெல்லாம் அது தலையை பலமாக ஆட்டி என்னை 'வா, வா!" என்று அழைத்தது. நான் அதன் அருகே சென்றேன். "இப்படி மழையில் நனைந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? உள்ளே வந்துவிடு!" என்று அது கரிசனத்துடன் சொல்லிற்று.
என்னால் நம்ப முடியவில்லை. "நிஜமாகவா சொல்கிறாய்?" என்று கேட்டேன்.
"ஆமாம், நிஜமாகத்தான்" என்றது அது அன்புடன்.
"வந்தனம்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பொந்துக்குள் நுழைந்தேன். பிறகு உள்ளே யிருந்தபடி நனைந்த சிறகுகளையெல்லாம் அலகால் கோதிவிட ஆரம்பித்தேன்.
இந்தச் 'சகிக்க முடியாத காட்சி'யைக் கண்ட ரங்கா, ஆத்திரத்துடன் ஓடோடியும் வந்து என்னையும் ஒரு கைபார்த்துவிட்டுச் சென்றது. "எங்கே சென்றதோ?" என்று எட்டிப் பார்த்தேன். சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது!
சிறிது நேரத்துக்கெல்லாம் மழை நின்றது; ஆனால் சண்டை நிற்கவில்லை!
★★★
பொழுது விடிந்ததும் இரவு தங்குவதற்கு இடம் கொடுத்த கிளியிடம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு வெளியே வந்தேன்.
என்ன விந்தை இது! - அப்போதும் சண்டை ஓயவில்லை.
"விட்டேனா, பார்!" "விட்டேனா, பார்!" என்று இரண்டும் விடாமல் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன.
"ரங்கா போதும், சண்டையை நிறுத்து! பகையைப் பகையால் வெல்வது முடியாத காரியம்; அப்படியே வென்றாலும் அந்த வெற்றி நீடித்திருக்காது. இந்த வீணான முயற்சியில் ஏன் உன்னுடைய அருமையான காலத்தைக் கழிக்கிறாய்?" வீட்டுக்குப் போவோம், வா!" என்றேன்.
"போடா, உன்னைப்போல் என்னையும் கோழை என்று நினைத்துக் கொண்டாயா?" என்று ரங்கா சீறி விழுந்தது.
"சரி, நீ வீரனாகவே இரு, அப்பா!" என்று சொல்லிவிட்டு நான் வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.
அந்த 'முடிவில்லாத சண்டை' தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது.
ஆனால் அந்த 'வீர'னின் வாழ்க்கையிலோ இன்று வரை அமைதி நிலவவில்லை; 'கோழை'யின் வாழ்க்கையிலோ பரிபூரண அமைதி நிலவியது.
அன்பும் அதிகாரமும்
பாதுஷா லில்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று ஆப்கானிஸ்தானமே ஒரே கோலகலமாகக் காட்சியளித்தது. தங்களுடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் பாதுஷாவிடம் தெரிவித்துக் கொள்வதற்காக மந்திரிப் பிரதானிகள், சேனாதிபதிகள், ஜாகீர்தார்கள், கலைஞர்கள், கவிஞர்கள் எல்லோரும் அன்று ராஜ சபையில் பிரசன்னமாயிருந்தனர். ராணி ஜிஜியாவுடன் லில்லாவும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டான். கவி இஸாவை மட்டும் அதுவரை காணவில்லை.
பாதுஷாவின் புருவங்கள் சற்றே நெரிந்தன. அதே சமயத்தில் கவி இஸா ராஜ சபைக்குள் பிரவேசித்தான். என்றுமில்லாதபடி அன்று ஒரு மானும் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. சின்னஞ்சிறுகுட்டி முதல் கட்டி வளர்க்காத அந்தமானை - பலாத்காரத்தின் துணை அணுவளவுமின்றி அன்பின் துணை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு அன்று வரை வளர்த்து வந்த 'அல்லா' என்ற அந்த அருமை மானை - அன்று தான் முதன் முதலாக அரண்மனைக்குத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் இஸா.
அந்த மானைக் கண்ட மாத்திரத்தில் தன் மனதை அதனிடம் பறி கொடுத்து விட்டாள் ராணி ஜிஜியா. அவ்வளவுதான்! அவளுடைய அதரங்கள் ஒரு கணம் அரசனின் காதருகே சென்று ஏதோ முணுமுணுத்தன; அடுத்த கணம் பாதுஷாவின் முகத்தில் ஒர் அலட்சியப் புன்னகை மின்னி மறைந்தது.
இந்தக் காட்சியை கண்டதும் இஸாவுக்கு விஷயம் ஒருவாறு புரிந்துவிட்டது - அரசனாயிருக்கட்டும், அல்லது அவள் வேறு யாராகவாவது இருக்கட்டும் - அதிகாரத்திமிரையும், செல்வச் செருக்கையும் துணையாகக் கொண்டு, உலகத்தில் சகல விதமான காரியத்தையும் சாதித்துக் கொள்ளப் பார்க்கும் அக்கிரமம் இஸாவுக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. ஆகவே, ராணி ஜிஜியாவின் ஆக்கிரமிக்கும் ஆசையும், பாதுஷாவின் அலட்சியப் புன்னகையும் அவனுக்கு அடக்க முடியாத ஆத்திரத்தையளித்தன.
அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த கணம் "இஸா...!" என்று அவனை அலட்சியமாக அழைத்தான் பாதுஷா. அப்பொழுது, அவனுடைய வலது கண்ணும் வலதுபக்கத்து மீசையும் சற்றே உயர்ந்து தாழ்ந்தன.
தன் உள்ளத்தில் பொங்கி வந்த உணர்ச்சிகளை யெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, "ஷாஹுன்ஷா!" என்றுதன் ஆசனத்தை விட்டு எழுந்து வந்து சம்பிரதாயப்படி அரசனின் முன்னால் நின்றான் கவி.
"உன்னுடைய மானிடம்..." என்றான் பாதுஷா. தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்கு முன்னரே, “என்னுடைய மான் இல்லை, மகராஜ்! அல்லாவினுடையது!" என்று அடித்துச் சொன்னான் கவி.
"தெரியும்; ஜிஜியா அந்த மானிடம் தன் மனதைப் பறிகொடுத்து விட்டாள்..."
"இருக்கலாம்; ஆனால் அந்த மானும் தன் மனதை ராணியிடம் பறி கொடுக்க வேண்டுமே!" என்றான் கவி.
பாதுஷாவின் கண்கள் 'ஜிவ்' வென்று சிவந்தன. அவன் கலகலவென்று பயங்கரமாகச் சிரித்தான். ராஜசபையில் பிரச்சன்னமாயிருந்தவர்களின் விழிகளெல்லாம் மிரண்டு விழித்தன.
"என்ன சொல்கிறாய்? ஜிஜியா அந்த மானை அடையவேண்டுமென்றால் அவளிடம் அது தன் மனதைப் பறி கொடுக்க வேண்டுமோ? - பேஷ், நன்றாயிருக்கிறது! - கழுத்தில் விலங்கைப் போட்டால் தானே மனதைப் பறி கொடுத்து விட்டுப் போகிறது!”
அவ்வளவுதான்; அரசனின் முன்னால் கவி தன் இரு கரங்களையும் அலட்சியமாக நீட்டி "இந்த கைகளில் விலங்கிடுவதற்கு முன்னால் அந்தமானின் கழுத்தில் விலங்கிடுவது யாராலும் முடியாத காரியம் பாதுஷா!" என்றான்.
வில்லாவின் கண்களில் தீப்பொறி பறந்தது. "என்ன என்னால் கூடவாமுடியாது!":என்றான்ஆச்சரியத்துடனும் அவமானத்துடனும்.
"என்னைப் பொறுத்தவரையில் எல்லோரையும் சமமாகத் தான் பாவிக்கிறேன், பாதுஷா!" என்றான் இஸா.
"கடைசி தடவையாகக் கேட்கிறேன்; என்னுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டாம்..."
"அல்லாவின் கோபத்தைத் தவிர வேறு யாருடைய கோபத்துக்கும் நான் அஞ்சுவதில்லை!"
வி.க. -36 கவியின் அஞ்சாநெஞ்சம் அரசனின் அதிகாரத் திமிரைக்கூட ஒர் அசக்கு அசக்கிவிட்டது. "வேறு வழி?" என்று கேட்டுக் கொண்டே அவன் இஸாவை ஏற இறங்கப் பார்த்தான்.
"வேண்டுமானால் அதை 'அரே அல்லா, வா!' என்று ராணியைக் கூப்பிடச் சொல்லுங்கள்; வந்தால் நான் அதைத் தடுக்க மாட்டேன்!” என்றான் இஸா.
பாதுஷா, ராணியின் முகத்தைப் பார்த்தான்; அவளும் குறிப்பறிந்து 'அரே அல்லா வா!' என்று அந்த மானை அன்புடன் அழைத்தாள்.
அதுவரை தன் இரு நீண்ட காதுகளையும் உயர்த்தி வளைத்து அவள் சொல்வதைத் தன் அகன்ற விழிகளால் கவனித்துக் கொண்டிருந்த 'அல்லா' உடனே கவி இஸாவுக்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டது. முகத்தில் புன்னகை தவழ, அந்த மானை அன்புடன் துக்கி மார்புடன் அணைத்துக் கொண்டான் கவி.
அன்பால் பிணைக்கப்பட்டிருந்த அந்த இரு ஜீவன்களுக்கு முன்னால் அரசனின் ஆணவமும் கொஞ்சம் ஒடுங்கிற்று. "ஆயிரம் மோகராக்கள் தருகிறேன்! மானைக் கொடுத்துவிடு!" என்றான்.
"அந்த மோகராக்களும் உமக்குச் சொந்தமில்லை; இந்த மானும் எனக்குச் சொந்தமில்லை; உலகத்தில் இருக்கும் எல்லாப் பொருளுமே உண்மையில் அல்லாவினுடையவையல்லவா? அவற்றில் எதையாவது விற்கவோ வாங்கவோ நமக்கு என்ன உரிமையிருக்கிறது?" என்று கேட்டான் கவிஇஸா.
பாதுஷா பொறுமையிழந்தான். "என்ன உளறுகிறாய்? நான் யார் என்று தெரியவில்லையா?" என்று அனலைக் கக்கினான்.
"தெரியாமலென்ன...!"
"தெரிந்தால் உடனே மானைக் கொடுத்து விடு; மன்னித்து விடுகிறேன்!"
"என்னை மன்னிக்கக் கூடியவர் ஒரே ஒருவர் தான் உண்டு; அவர்தான் அல்லா!" என்றான் கவி. அரண்மனையின் முகட்டை நோக்கி.
"ஹா!" என்றான் பாதுஷா. அவன் கை உடைவாளை உருவ விரைந்தது. அதற்குள் என்ன நினைத்தானோ என்னமோ, "இவனைக் கொண்டு போய்ச் சிறையில் தள்ளுங்கள்!" என்றான்.
அடுத்த கணமே அவருடைய ஆக்கினை நிறைவேற்றி வைக்கப்பட்டது.
★★★
இருள் கவிந்த சிறையிலே, காலைக் கதிரவனையும் மாலை மதியையும், பனி மூடிய மலைத் தொடர்களையும், மலர் நிறைந்த சோலைகளையும், வானளாவிய மரங்களையும் வானம்பாடிக் குருவிகளையும் கவி இஸா காண முடியுமா? - அவற்றையெல்லாம் காணாமல் அவன் கவி இதயம் வெடித்து விடும் போலிருந்தது. ஆனாலும் சிறையின் ஜன்னல் வழியே பார்க்க முடிந்த அவனுடைய அருமை மான், அன்பைக் கவர்ந்த மான், அரண்மனை உத்தியான வனத்தில் கழுத்தில் விலங்கிடப்பட்டுக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த மான் அயர்ச்சி அடைந்திருந்த அவன் உள்ளத்துக்கு ஒரளவு உணர்ச்சியூட்டிற்று.
"அரே, அல்லா!' என்று சிறையிலிருந்தபடியே அந்த மானை அன்புடன் கூவி யழைப்பான் இஸா. அது இழுத்துப் பறித்துக் கொண்டு எப்படியாவது அவனை அடைந்துவிடத் துடியாய்த் துடிக்கும். ஆனால் அதன் பலன்? - இரும்புச் சங்கிலி இறுகி இறுகி அதன்கழுத்தில் செக்கச்செவேரென்று இரத்தம் கசியச் செய்துவிடும். அந்தக் காட்சியைக் கண்டதும் கவியின் உள்ளம் பதை பதைக்கும், நெஞ்சு நெக்குருகிக் கண்ணிர் கசிந்துவிடும். ஒரு கையால் தன் கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கையால் "வேண்டாம் அல்லா, வேண்டாம்!” என்று இரைந்தபடி சமிக்ஞை காட்டி அதை வேண்டிக் கொள்வான் இஸா.
'அல்லா' வோ அவனை 'வா, வா!' என்று அழைப்பது போல் மருண்டு நோக்கித் தன் முன் கால்கள் இரண்டையும் தூக்கி தூக்கி நிற்கும்.
"பொறு அல்லா பொறு! காலம் மாறும்!" என்பான் கவி.
'அல்லா'வைப் பிரிந்ததிலிருந்து அவனுக்கு உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை. அவனைப் பிரிந்ததிலிருந்து 'அல்லா'வும் அதே நிலைமையில் தானிருந்தது.
★★★
ராணி ஜிஜியாவோ 'அல்லா'வின் அன்பைப் பெறுவதற்கு என்ன வெல்லாமோ செய்து பார்த்தாள். அடிக்கடி அதன் முதுகை அன்புடன் தடவிக் கொடுக்க யத்தனிப்பாள். அதற்கு இடங் கொடுக்காமல் 'அல்லா' இப்படியும் அப்படியுமாகத் துள்ளித்துள்ளி ஒடி அவளை அலக்கழிக்கும்.
வேளைக்கு வேளை விதம் விதமான இரைகளை எடுத்துக் கொண்டு ஜிஜியாவின் தோழிகள் 'அல்லா'விடம் வருவார்கள். அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 'அல்லா', தோழிகள் மனமுடைந்து போய் விஷயத்தை ராணியிடம் தெரிவிப்பார்கள். அவளே நேரில் வருவாள். என்னவெல்லாமோ கொஞ்சி குலாவி ஒரு பிடி புல்லையாவது அதன் வாயில் திணித்துவிடப் பார்ப்பாள். 'அல்லா'வோ தன்னால் முடிந்தவரை வாயை இறுக மூடிக்கொண்டு தலையைத் திருப்பிக் கொள்ளும். இதனால் ராணி ஜிஜியா அடைந்த வேதனை கொஞ்சநஞ்மன்று. ஆனால் அந்தப் பாழும் ஆசை மட்டும் அவளை விடவேயில்லை.
இந்தக் காட்சிகளையெல்லாம் காராக் கிரகத்தின் ஜன்னல் மூலம் ஒருவாறு காணும் பாக்கியம் பெற்றிருந்த இஸா, ஒரு பக்கம் இன்பமும் இன்னொரு பக்கம்துன்பமும் அடைவான்.
இதயத்தோடு இதயம் ஒன்றிப்போயிருந்த இரு ஜீவன்களும் எத்தனையோ நாட்களை இப்படியே உணவின்றி உறக்கமின்றிக் கழித்துவிட்டன. ஆனால், பாதுஷா...?
அந்த இரு ஜீவன்களுக்குமிடையே இருக்கும் அன்பைத் தன் அதிகாரத் திமிரால், ஆயிரம் மோகராக்களால் பெற முடியாவிட்டாலும், சிறைப்படுத்திச் சித்திரவதை செய்வதன் மூலம் பெற்றுவிட முடியுமென்று நினைத்தான்!
இவர்களுக்கு மத்தியில் என்றைக்காவது ஒரு நாள் 'அல்லா'வின் உள்ளத்தில் தனக்கும் இடம் கிடைக்குமென்று எண்ணிப் பொறுமையுடன் நாளைக் கழித்து வந்தான் ஜிஜியா.
★★★
அன்று காலை வழக்கம் போல் நமாஸ் செய்து விட்டு ஜன்னலருகே வந்து நின்று 'அல்லா'வை நோக்கினான் இஸா. எந்த நேரமும் நிமிர்ந்து நின்று இஸாவின் வரைவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அல்லா அன்று ஏனோ தரையில் சோர்ந்து விழுந்து கிடந்தது!
கவி இலா, அரே அல்லா அரே அல்லா என்று கதறினான்.
அவனுடைய கதறல் அந்த மானின் காதில் விழுவதற்கு அதனுடைய உடம்பில் உயிர் இருந்தால் தானே!
'அல்லா' தன் உயிரை அன்புக்கு அர்ப்பணம் செய்து விட்டதை அறியாத இஸா மேலும் மேலும் "அரே அல்லா, அரே அல்லா!" என்று கதறிக் கொண்டே யிருந்தான்.
அதே சமயத்தில் தன் தோழிகளின் மூலம் செய்தி கேட்ட ராணி ஜிஜியா அங்கே ஒடோடியும் வந்தாள். 'அல்லா'வை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்துவிட்டு அவள் அழுது கொண்டே சிறையின் ஜன்னலை நோக்கினாள்.
இஸாவுக்கு விஷயம் புரிந்து விட்டது.
அவன் வானத்தை நோக்கித் தன் இரு கைகளையும் ஏந்தி "அரே அல்லாஹுத ஆலா! 'அல்லா'வை உன் திருவடிக்கு அழைத்துக் கொண்டு விட்டாயா?" என்று கேட்டு விட்டுக் கண்ணிர் மல்கிய கண்களுடன் சிறையின் வாயிலை நோக்கித் திரும்பினான்.
என்ன விந்தை இது! 'கடக்'கென்று பூட்டுத் திறக்கும் சத்தமும் 'லொடக்'கென்று நாதங்கி கழன்று விழும் சத்தமும் அவன் காதில் விழுந்தன.
அடுத்த கணம் 'படார், படார்' என்று சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பாதுஷா இஸாவின் முன்னால் மண்டியிட்டு அவன் இரு கைகளையும் பற்றி, "என்னை மன்னித்துவிடு, இஸா!" என்று வேண்டிக் கொண்டான்.
"மாட்டார், அல்லாஹுத ஆலா உம்மை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்!" என்று சொல்லி அவன் பிடியிலிருந்து விலகிக் கொண்ட இஸா, "அரே, அல்லா இதோ நானும் உன்னுடன் வந்து விட்டேன்! அரே, அல்லா இதோ, நானும் உன்னுடன் வந்து விட்டேன்!" என்று ஆவேசத்துடன் இரைந்து கொண்டே, சிறை வாயிலை விட்டுச்சிட்டுக் குருவி போல் பறந்து சென்றான்!
அரண்மனை நெடுகிலும் நின்று காவல் புரிந்த ஆயுத பாணிகளான வீரர்கள் யாரும் அவனை ஏனோ தடுக்கவில்லை!
ஐந்தாண்டுத் திட்டம்
மூடியிருந்த 'ரயில்வே கேட்'டுக்கு முன்னும் பின்னும் மத்திய சர்க்காரை மீறி ஒன்றும் செய்ய முடியாத மாகாண சர்க்கார்களைப் போலச் சகல வண்டிகளும் நின்று கொண்டிருந்தன; சகல மக்களும் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது 'பாம், பாம்' என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த லாரி நம்பர் 3636, "இங்கே ஒரு மேம்பாலம் எப்பொழுது தான் கட்டித் தொலைக்கப் போகிறார்களோ!" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே நின்றது.
"கவலைப்படாதீர்; அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்துக்குள் அவசியம் கட்டிவிடுவார்கள்!" என்றது அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த கார் நம்பர் 4545.
இதைக் கேட்டதும் "நீங்கள் நாசமாய்ப் போக!" என்று சாபம் கொடுத்தது, அவற்றுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு கைவண்டி.
"யாரது, வண்டியப்பரா? பாவம், அவர் என்ன செய்வார்? மேம்பாலத்தின் மேல் ஏறும் போதும் கஷ்டம், இறங்கும் போதும் கஷ்டம், அவருக்கு!" என்றது முப்பத்தாறு முப்பத்தாறு.
"ஒருவர் கஷ்டப்படுவாரே என்பதற்காக உலகத்தில் உள்ளவர்களெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன?"
"முடியாது, முடியாது அதற்கு நாம் தயாராயிருந்தாலும் நம்முடைய எஜமானர்கள் தயாராயிருக்கமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் மனிதர்கள்; நாமோ இயந்திரங்கள்"
"மேலும்..."
"சொல்லுங்கள், சொல்லுங்கள்?"
"வண்டியப்பர் எப்போதும் வண்டியப்பராகவே இருந்து விடப் போகிறாரா, என்ன? நமது சர்க்கார் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் நாளைக்கே அவரும் உம்மைப் போல் லாரியப்பரானாலும் ஆகிவிடுவார், இல்லையா?" என்றது நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.
கைவண்டி பெருமூச்சுடன் சொல்லிற்று.
'ம், அந்த நம்பிக்கையுடன்தான் வாழ்க்கையை ஆரம்பித்தார் என் முதலாளி; ஆனால்...'
"என்ன ஆனால்?"
"இப்போது அவர் வாழவில்லை; செத்துக் கொண்டிருக்கிறார்!"
"சர்க்காருக்குத் தெரியாமலா?"
"ஆமாம்!:
"சட்ட விரோதமாச்சே?"
இப்படி ஒரு 'சட்டப் பிரச்சனை'யைக் கிளப்பியது, கார் நம்பர் 4545.
"சட்ட விரோதம் மட்டுமல்ல; இலக்கிய விரோதமுங்கூட. ஏனெனில், மனிதன் சாகும் போது கூட நம்பிக்கையுடன்தான் சாக வேண்டுமென்று தற்கால இலக்கியகர்த்தாக்கள் சொல்லிக் கொண்டிருக்கும்!"
இப்படி ஒரு இலக்கியப் பிரச்சனை'யைக் கிளப்பியது லாரி 3636.
"அந்தப் பிரச்சனைகளைப்பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும்? எங்களுக்குத் தெரிந்தது ஒரே ஒரு பிரச்சனைதான்" என்றது கைவண்டி.
"அது என்ன பிரச்சனை!" என்று ஆவலுடன் கேட்டது. கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.
"வயிற்றுப் பிரச்சனை!"
"உமக்குத் தெரியாதா, அந்தப் பிரச்சனையைத் தீர்க்கத்தான் நமது சர்க்கார் ஐந்தாண்டுத் திட்டத்துக்கு மேல் ஐந்தாண்டுத் திட்டமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்"
"நானும் கேள்விப்பட்டேன்; எங்களுக்கும் அந்தத் திட்டங்களில் இரண்டு அம்சங்கள் இருக்கத்தான் இருக்கின்றன"
"அவை என்ன அம்சங்கள்?"
"ஒன்று, கர்ப்பத்தடை; இன்னொன்று; சுடுகாட்டு அபிவிருத்தி"
"பொய்; பொய் இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் தப்புப் பிரசாரம்!" என்று கத்திற்று கார் நெம்பர் 4545.
"கிடக்கிறார்கள், விட்டுத் தள்ளுங்கள்! அபிவிருத்தியும் பிடிக்கவில்லை. தடையும் பிடிக்கவில்லை என்றால் அப்புறம் என்னதான் செய்வது?" என்றது லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.
"அப்பள வியாபாரம்!" என்றது கைவண்டி.
"நிறுத்தும்! எதற்காக அப்பளவியாபாரம் தெரியுமா?" என்று அடித்துக் கேட்டது கார் நம்பர் 4545.
"தெரியும், ஏற்கெனவே அந்தத் தொழிலை நம்பிப் பிழைத்து வந்த அபலைகளின் வாயில் மண்ணைப் போடுவதற்காக!" என்றது கைவண்டி.
"பொய், பொய்; இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் தப்புப் பிரசாரம்!"
இந்தச் சமயத்தில் 3636 குறுக்கிட்டுச் சொன்னதாவது
"சரியான பிரசாரம் என்னவென்றால்......"
அது முடிக்கவில்லை ; 4545 தொடர்ந்தது.
"எல்லாவற்றுக்கும் சர்க்காரை நம்பாதீர்கள்; உங்களையும் கொஞ்சம் நம்புங்கள் என்பதே!"
கைவண்டி கேட்டது.
"எங்களை நாங்களே நம்பாவிட்டால் வேறு யார்தான் நம்புவார்கள்?"
"எங்கே நம்புகிறீர்கள்? அப்படி நம்புவதாயிருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்காக நமது சர்க்கார் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுப்பது போல, வீட்டின் முன்னேற்றத்துக்காக உமது முதலாளியும் ஏன் ஓர் ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கக் கூடாது?"
"ஓர் ஐந்தாண்டுத் திட்டம் என்ன, ஒன்பது ஐந்தாண்டுத் திட்டங்கள் இதுவரை வகுத்திருக்கிறார்!"
"அப்படியானால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாலிருந்தே அவர் ஐந்தாண்டுத் திட்டம் வகுக்க ஆரம்பித்துவிட்டாரா, என்ன?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது, கார் நம்பர் 4545.
"ஆமாம்!" என்றது கைவண்டி அழுத்தந்திருத்தமாக.
"சபாஷ், அப்படித்தான் இருக்கவேண்டும். ஆமாம், அத்தனை திட்டங்கள் வகுத்துமா உம்மை லாரியப்பராக்க அவரால் முடியவில்லை!"
"எப்படி முடியும்? முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது முந்நூற்றுச் சொச்சம் ரூபாய் சேர்ந்தது; மூத்த மகள் கல்யாணத்துக்கு நின்றாள்!"
"அப்புறம்?"
"அரோகரா, ஐந்தாண்டுத் திட்டம் அரோகரா!"
இதைக் கேட்டதும் முப்பத்தாறு முப்பத்தாறு என்ன தோன்றிற்றோ என்னமோ, "திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்!" என்று தனக்குத் தானே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டது, மனச் சாந்திக்காக.
"ஓய், உம்மை யார் 'திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்' என்று சொல்லச் சொன்னது?" என்று எரிந்து விழுந்தது, 4545.
"என் அப்பன் திருநாமத்தைச் சொல்ல எனக்கு யார் சொல்ல வேண்டும்?" என்று திருப்பிக் கேட்டது. 3636.
"சரி, சொல்லும்! அவர் கிடக்கிறார்; நீர் மேலே சொல்லும் ஐயா?"
"இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய் சேர்ந்தது; கல்யாணத்துக்கு நின்றவள் பிள்ளைப் பேறுக்காகப் பிறந்த வீட்டுக்கு வந்தாள்!"
"அப்புறம்?"
"அரோகரா, ஐந்தாண்டுத்திட்டம் அரோகரா!'"
"திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்!"
"மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நூறு ரூபாய் சேர்ந்தது; எங்கிருந்தோ வந்த வெள்ளம் எஜமானின் குடிசையை அடித்துக் கொண்டு சென்றது!"
"ம், அப்புறம்!"
"அரோகரா, ஐந்தாண்டுத் திட்டம் அரோகரா!"
"திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்/"
அதற்குள் 'ரயில்வே கேட்' திறக்கவே, "ஆமாம், உங்கள் ஐந்தாண்டுத் திட்டங்களின் தொகை ஏன் வரவரக் குறைந்து கொண்டே வருகிறது?" என்று நகர்ந்து கொண்டே கேட்டது, கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.
"உணவு உற்பத்தி பெருகுகிறதோ இல்லையோ உணவுப் பொருட்களின் விலை பெருகிக் கொண்டே வருகிறதல்லவா? அதனால்தான்" என்றது கைவண்டி.
"பொய், பொய் இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் தப்புப் பிரசாரம்!" என்று சொல்லிக் கொண்டே காற்றாய்ப் பறந்தது கார் நம்பர் 4545.
★★★
மறு நாள்......
துறைமுகத்திலே வாடிய முகத்துடன் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தது கைவண்டி.
"என்ன வண்டியப்பரே, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்?" என்று கேட்டது லாரி நம்பர் 3636.
"அதை ஏன் கேட்கிறீர்? நேற்று முழுவதும் என் எஜமான் பட்டினி!"
"பட்டினியா, பாரத நாட்டிலா? கிடையவே கிடையாதே!"
"அப்படித்தான் சொல்கிறார்கள், ஆனால் நேற்று முழுவதும் அவர் பட்டினி இருந்தது என்னமோ உண்மை!"
"ஏன், காதல் கொண்ட மனைவியிடம் ஊடல் கொண்டு விட்டாரோ?"
"காதலாவது, ஊடலாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை; நேற்றைக்கு முதல் நாள் என்னுடைய சக்கரங்களில் ஒன்றை உடைத்துக் கொண்டு நான் நின்றேன். அதைப் பழுது பார்த்ததில் அன்று கிடைத்த கூலி தீர்ந்து விட்டது!"
"அதனாலென்ன, பகல் பட்டினி' இருந்தாலும் 'இராப் பட்டினி' இல்லாமல் இருந்திருக்கலாமே?"
"அதற்கும் குறுக்கே வந்து சேர்ந்தான் அவருடைய மைத்துனன்!"
"ஊரிலிருந்தா?"
"ஆமாம், சாப்பிடப் போகும் போது வந்து, 'என்ன மாமா? சௌக்கியமா?" என்று விசாரித்தால் அவர் என்ன செய்வார், பாவம்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு கணம் தவித்தார்; மறுகணம் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஏதோ இருக்கிறேன்! வா, உட்கார் சாப்பிடு! என்றார். 'நீங்களும் உட்காருங்கள்; சாப்பிடலாம்!" என்றான் அவன். "நான் இப்பொழுதுதான் சாப்பிட்டேன்; நீ சாப்பிடு!" என்று சொல்லிக் கொண்டே அவர் வெளியே வந்து விட்டார்!"
"ம், வயிறு காப்பாற்றப்படவில்லை யென்றாலும் கௌரவம் காப்பாற்றப்பட்டதாக்கும்?"
"அதன் பலன் என்னடாவென்றால், இன்று என்னை இழுக்கும்போது அவருடைய கால்கள் பின்னுகின்றன!"
"பின்னட்டும்; பின்னட்டும்!"
"இந்த நிலையில் தான் இன்று அவர் எழும்பூர் பாலத்தைக் கடக்க வேண்டுமாம்!"
"கடக்கட்டும்; கடக்கட்டும்!"
இந்தச் சமயத்தில் இறக்குமதியாளரான தன் எஜமானரை ஏற்றிக் கொண்டு அங்கே வந்த கார் நம்பர் 4545 "இன்னுமா நீ சரக்கை ஏற்றிக் கொண்டு கிளம்பவில்லை? மோசம், மோசம்! ரொம்ப ரொம்ப மோசம்! இப்படி வேலை செய்தால் உம்முடைய முதலாளி எப்படி உருப்படுவார்?" என்று கேட்டுக் கொண்டே ஓர் உறுமல் உறுமிவிட்டு நின்றது.
"அவர் உருப்பட்டால் உருப்படுகிறார்; உருப்படாவிட்டால் போகிறார், நீர் போய் உம்முடைய வேலையைப் பாரும்" என்றது கைவண்டி வெறுப்புடன்.
"ஆத்திரப்படாதே! மனிதன் எதனால் உயர்கிறான் தெரியுமா? உழைப்பினால் தான் உயர்கிறான்!"
"போதும்! எனக்குப் புளித்துப்போய் விட்டது, உம்முடைய உபதேசத்தைக் கேட்க கேட்க!"
"உம்மைப் போன்றவர்களுக்கு இந்த உலகத்தில் மிக மிக மலிவாகக் கிடைப்பது அது ஒன்று தானே, ஐயா? அதையும் வேண்டாம் என்கிறீரே, நீர்?" என்று சொல்லிக் கொண்டே, கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து நோக்கித் திரும்பியது, லாரி நம்பர் 3636.
"அதற்கு தான் என்ன செய்வேன்? எதனால் வயிறு நிறையுமோ, அதைத் தான் என் காது கேட்க விரும்புகிறது!" என்றது கைவண்டி.
"உலகத்தில் அதைத் தவிர வேறொரு இன்பமும் இல்லையா?" என்று கேட்டது 4545.
"இருக்கிறது, உங்களுக்காக!" என்றது கைவண்டி, ஆத்திரத்துடன்.
"நீலவான், நெடுங்கடல், தென்றல், தேனருவி, வட்டநிலா, விண்மீன் ஆகியவை கூடவா எங்களுக்காக இருக்கின்றன?"
"இருக்கும், அவை உங்களுடைய சிருஷ்டிகளாக இருந் திருந்தால்!" என்று ஒரு போடு போட்டது கைவண்டி.
"இருக்காது! அவையும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, உம்மைப் போன்றவர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கும்!" என்று அது போட்ட போட்டையே திருப்பிப் போட்டது, லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.
"விற்பார்கள், விற்பார்கள்; ஏன் விற்கமாட்டார்கள் ஒரு காலத்தில் மனிதர்களையே சந்தைக்குக் கொண்டு வந்து விலை கூறி விற்றுக் கொண்டிருந்தவர்கள் தானே இவர்கள் ஆனால்..."
கைவண்டி முடிக்கவில்லை; கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து தொடர்ந்தது:
"என்ன ஆனால்?"
"இனியும் நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கப் போவதில்லை; நீலவானையும் நெடுங்கடலையும் காட்டி நீங்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க!"
"பொறும் வண்டியப்பரே, பொறும். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்குள்..."
"நாங்களே முடிந்தாலும் முடிந்து விடுவோம்; நீர் போய் வாரும்!" என்றது கைவண்டி அலுப்புடன்.
"இழக்காதீர்! நம்பிக்கையூட்டும் இலக்கியங்களைப் படிக்காதவரே, படிக்க முடியாதவரே, நம்பிக்கையை இழக்காதீர்"
என்று போகிற போக்கில் அதை எச்சரித்துக் கொண்டே போயிற்று லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.
அன்று மாலை...
இரண்டாவது முறையாக எழும்பூர் மேம்பாலத்தின் மேல் ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்த கைவண்டியை நோக்கி, "ஏறு, முன்னேறு!" என்று கத்திக் கொண்டே சென்ற கார் நம்பர் 4545, திரும்பி வரும் போது அப்படியே திகைத்து நின்றுவிட்டது. காரணம், பாலத்தின் இறக்கத்தில் தன்னை மீறி உருண்டு சென்ற வண்டியைத் தடுத்து நிறுத்த முடியாமல் அதன் முதலாளி கீழே விழுந்து, அவர்மேல் வண்டியில் ஏற்றப் பட்டிருந்த சரக்குகளெல்லாம் சரிந்து, அவர் உருத்தெரியாமல் நசுங்கிப் போயிருந்தது தான்.
மேற்படி காட்சியைப் 'பெரிய மனிதர்கள் தோரணையில் அருவருப்புடன் பார்த்துக் கொண்டே நின்ற கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்தை நோக்கி "என்ன பார்க்கிறீர்? என் எஜமான் சட்டத்துக்கு விரோதமாக சாகவில்லை ஐயா, சட்டத்துக்கு விரோதமாகச் சாகவில்லை!" என்றது கைவண்டி, விரக்தியுடன் சிரித்துக் கொண்டே.
அதைக் கேட்டுக் கொண்டே அந்த வழியாக வந்த லாரி நம்பர் 3636 "சட்டத்துக்கு விரோதமாக மட்டுமல்ல; இலக்கியத்துக்கும் விரோதமாகச் சாகவில்லை!" என்றது, அழுத்தந்திருத்தமாக.
"உண்மை; முற்றிலும் உண்மை. ஏனெனில், சாகும் போதுகூட அவர் நம்பிக்கையுடன் தான் செத்திருக்கிறார்" என்றது கைவண்டி.
"அவசரப்பட்டு விட்டார்; மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்குள் அவசரப்பட்டு விட்டார்" என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றது கார் நம்பர் 4545.
குப்பையிலே குருக்கத்தி
தீபாவளிக்கு முதல் நாள் வந்திருந்த 'தீபாவளி மலர்'களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தீபா, அவற்றில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தைக் கண்டதும் 'களுக்' கென்று சிரித்து விட்டாள். காரணம் அந்த விளம்பரத்தில் அவளும் அவளுடன் நடித்த அமர்நாத்தும் ஒருவரை யொருவர் அணைத்தபடி நின்று கொண்டிருந்த காட்சி, அவள் நினைக்க நினைக்க இனிக்கும் காட்சியாயிருந்தது தான்! ஆனால்...
ஆயிரமாயிரம் ரஸிகர்கள் தன்னைக் காதலிக்கும் போது, அவனை மட்டும் தான் காதலிக்க முடியுமா? காதலித்தால் கல்யாணமுமல்லவா செய்து கொள்ள வேண்டியிருக்கிறது? கல்யாணம் செய்து கொண்டால் பைத்தியமுமல்லவா தெளிந்து விடுகிறது? பைத்தியம் தெளிந்தால் நட்சத்திரப் பதவியுமல்லவா போய் விடுகிறது?
என்ன இருந்தாலும் அன்று அவன் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது; டைரக்டருக்குத் தெரிந்திருந்தால்....
தெரிந்திருந்தால் என்ன, அவரையும் காதலித்துத் தொலைக்க வேண்டியிருந்திருக்கும்!
"எத்தனையோஜன்மம் எடுத்தெடுத்தே இளைத்தேன்!" என்பது போல, சினிமா உலகில்தான் காதலும் எத்தனையோ ஜன்மம் எடுத்தெடுத்து இளைக்க வேண்டியிருக்கிறதே!
இத்தனைக்கும் முன்னெரிச்சரிக்கையோடு 'அண்ணா!' என்றுகூட அழைத்துப் பார்க்கிறோம்; அவர்கள் எங்கே ‘தங்காய்!' என்று அழைக்கத் தயாராயிருக்கிறார்கள்?
மோசம், ரொம்ப மோசம்!
சிரிக்க வைத்தது; இவ்வளவு தூரம் அவளைச் சிந்திக்கவும் வைத்துவிட்ட அந்தச் சம்பவம் இது தான்;
கதாநாயகன், கதாநாயகியைக் கட்டிப் பிடித்து, கண்ணே ! கறுப்புச் சந்தை மணமே! இனி யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது, இனி யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது! என்று தன்னால் முடிந்தவரை கத்த வேண்டும் - உணர்ச்சியை வெளிப்படுத்தத்தான்.
இந்தக் காட்சி பதிவாக ஒளியும் ஒலியும் தயாரானதும், "கமான், ரிஹர்ஸல்!" என்றார் டைக்ரடர்.
இதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த அமர்நாத், அதுதான் சமயமென்று அவளைக் கட்டிப் பிடித்து 'நறுக்' கென்று கிள்ளி விட்டான். அத்துடன் அவன் நிற்கவில்லை ; அதன் பலாபலனை வேறு அவள் முகத்திலே நேருக்கு நேராகப் பார்க்க ஆரம்பித்து விட்டான்!
அவளோ வலி தாங்காமல், 'சூசூ ' என்று 'சூ'கொட்டிக் கொண்டே.. அவன் பிடியிலிருந்து மெள்ள நழுவினாள்.
"என்ன, என்ன?" என்றார் டைரக்டர் பதட்டத்துடன்.
"ஒன்றுமில்லை; எறும்பு, கட்டெறும்பு!" என்று தடுமாறினான் அமர்நாத்.
"என்ன கட்டெறும்புக்கு?"
"ஒன்றுமில்லை - கடித்துவிட்டது!"
"ஓ, தீபாவைக் கட்டெறும்பு கடித்து விட்டது என்கிறீர்களா? கடிக்கும், கடிக்கும் நம் கதாநாயகியைக் கண்டால் யாருக்குத்தான் கடிக்கத்தோன்றாது?" - என்றார் டைரக்டர் அவளையும் அவள் அழகையும் பாராட்டும் நோக்கத்துடன்.
இந்தப் பாராட்டு இத்துடன் நிற்க வேண்டுமே என்ற கவலையில் "நான் ரெடி ஸார்!" என்றாள் தீபா.
"எஸ், ஒன்ஸ் அகெய்ன்!" என்றார் டைரக்டர்.
"காரியம் கைகூடும் போலிருக்கிறதே!" என்ற நம்பிக்கையுடன் இம்முறை இன்னும் கொஞ்சம் தைரியத்துடன் அவளை நெருங்கினான் அமர்நாத். ஒத்திகையும் வெற்றிகரமாக முடிந்தது; படப்பிடிப்பும் திருப்திகரமாக இருந்தது.
அன்றிலிருந்து ஏனோ தெரியவில்லை - அவன் கை இட்ட இடந்தனிலே அவளுக்குத் தண்ணென்றிருந்தது; அதில் ஒரு சாந்தியும் பிறந்தது!
அதற்காக - அவனுக்குத் தன்னை அப்படியே அர்ப்பணித்து விட முடியுமா என்ன? அப்படி அர்ப்பணித்து விட்டால் லட்சக் கணக்கான ரூபாய் வருமானம் 'குளுகுளு' பங்களா, 'ஜிலுஜிலு' கார் - எல்லாவற்றிற்கும் அவனல்லவா அதிகாரியாகி விடுவான்? - அவனுடைய அதிகாரத்துக்குத் தானாவது, கீழ்ப்படியவாவது!
அன்றொரு நாள் அவனைச் சோதித்துப் பார்த்ததிலிருந்தே இது தெரிந்து விடவில்லை? 'இந்தக் கூஜாவைக் கொண்டு போய்க் காரில் வைக்கிறீர்களா?' என்றதற்கு "ஆஹா, அதற்கென்ன?" என்று எதிர்த்தாற் போலிருந்த 'லைட் பா'யை அல்லவா அவன் கூப்பிட்டான்? - அவனாவது, தன் முகம் கோணாமல் நடப்பதாவது!
வேண்டாம்; காதலும் வேண்டாம்; கல்யாணமும் வேண்டாம். கன்னி; நித்திய கன்னி - ஆம், ஒப்பனைக்காரன் என்று ஒருவன் இந்த உலகத்தில் இருக்கும் வரை!
இந்தத் தீர்மானத்துடன் தீபாவளி மலர்களை மூடி வைத்துவிட்டு அவள் எழுந்த போது "அன்புள்ள தீபாவுக்கு, அன்புடன் அமர்நாத்" என்று எழுதப்பட்ட பெரிய காகிதப் பையொன்றை யாரோ ஒரு சிறுவன் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.
"இதுவும் புடவையாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது! சரிதான், சரிதான்; இந்தத் தீபாவளிக்கு வரும் புடவைகளைப் பார்த்தால் 'தீபாவளி எம்போரியம்' என்று ஓர் எம்போரியம் வைத்து விடலாம் போலிருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே அதிலிருந்த பட்டுப் புடவையை எடுத்துப் பார்த்து விட்டு செலக்ஷன் நன்றாய்த் தான் இருக்கிறது; இருந்தாலும் நாயுடு கொண்டு வந்து கொடுத்த புடவைக்கு இது ஈடாகுமா?' என்று எண்ணிக் கொண்டே அதைச் சோபாவின் மேல் வீசி எறிந்தாள்.
அதன் மேலிருந்த 'வாசகம்' அப்போது தான் அவள் கண்களைக் கவர்ந்தது!
'அன்புள்ள தீபாவுக்கு, அன்புடன் அமர்நாத்!'
இதைப் படித்ததும் அவள் சிரித்தாள்.
அன்பு -அதைக்கூட ஏதாவது ஒரு காரியத்துக்காகத் தான் செலுத்த முடியும் போலிருக்கிறதே!... ம், இவனைப் போல் எத்தனையோ பைத்தியங்களைப் பார்த்தவள் நான், என்னையா இவனால் பைத்தியமாக்க முடியும்?
அவள் மறுபடியும் சிரித்தாள்.
"வைரக் கற்களை வாரி இறைப்பது போலிருக்கிறதே! எங்கே, இன்னொரு முறை சிரி - பார்க்கலாம்?" என்று இளித்துக் கொண்டே வந்தார் வான மூனா.
"வாருங்கள், வாருங்கள்; இன்றுதான் உங்கள் படத்தைப் பற்றிய விமரிசனத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்!" என்று சொல்லிக் கொண்டே அவரை வரவேற்றாள் தீபா.
"அதென்ன, உங்கள் படம்? ‘நம்படம்' என்று தான் சொல்லேன் - என் மனசு கொஞ்சமாவது குளிராதா?" என்று குழைந்து கொண்டே சோபாவில் உட்கார்ந்த வானா, மூனா தேள் கொட்டிய திருடன் போல் திடுக்கிட்டு எழுந்தான்.
"என்ன, என்ன? என்றாள் தீபா பதட்டத்துடன்.
"இந்த அமர்நாத் யார், உனக்குப் புடவை எடுத்துக் கொடுக்க? இவன் எடுத்துக் கொடுத்த புடவையை நீ எப்படி வாங்கலாம்? தூக்கி எறி!" என்று அவள் தூக்கி எறிவதற்கு முன்னால் தானே அதைத் தூக்கி எறிந்துவிட்டு உட்கார்ந்தார் வான மூனா,
சிரிப்பைக் கூட.... கொஞ்சம் சிக்கனமாகவே அவருக்காகச் செலவழித்து விட்டு 'அவரும் ' நம்முடைய படத்தில் நடித்தவர்தானே? என்றாள் தீபா.
அட்சர லட்சம் பெறும் அந்த ‘நம்முடைய' என்ற வார்த்தையைக் கேட்டதும் உச்சி குளிர்ந்த வான மூனா, "என்னமோ தெரியவில்லை, என்னுடைய படத்தில் நீ இது வரை நடிக்காவிட்டாலும் உன்னை என்னால் மறக்கவே முடியவில்லை!" என்று சொல்லிக் கொண்டே, "வாடா சுப்பையா, வாடா" என்று தன்னை நோக்கித் தட்டும் கையுமாக வந்து கொண்டிருந்த டிரைவரை உற்சாகத்துடன் வரவேற்று அவன் கையிலிருந்த தட்டைத் தானே வாங்கி 'டீபா'யின் மேல் வைத்துவிட்டு "இதோபார், தீபா! இந்தத் தங்கக்கிண்ணத்திலிருக்கும் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டுதான் நாளைக்கு நீ தீபாவளி ஸ்நானம் செய்ய வேண்டும்; ஆமாம்!" என்றார் பெருமிதத்துடன்.
"ஏற்கனவே ஒன்பது பேர் இப்படி என்னை வேண்டிக் கொண்டிருக்கிறார்களே, நான் என்னத்தைச் செய்ய?" என்றாள் தீபா.
"என்ன, என்ன! தங்கக் கிண்ணத்தில் எண்ணையை வைத்தா?" என்றார் வான மூனா ஏமாற்றத்துடன்.
வி.க.-37 "ஆமாம், அதோ பாருங்கள்!" என்றாள் அவள், அலமாரியைச் சுட்டிக் காட்டி.
"அட, பாவிகளா! தீபாவளிப் பரிசுக்குப் புதுசா ஏதாவது 'ஐடியா' சொல்லுங்கள் என்றால், இதைச் சொல்லி என்னிடம் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டார்களே!" என்று அலறினார் அவர்.
"இந்த 'ஐடியா'வைக்கூடக் காசு கொடுத்துத்தான் வாங்கினீர்களா?" என்றாள் தீபா.
"ஆமாம், தீபா ஆமாம்; அதற்காகவாவது நாளைக்கு நீ இந்தக் கிண்ணத்திலிருக்கும் எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்தால் எனக்கு எவ்வளவோ திருப்தியாயிருக்கும்!" என்றார் வானா மூனா, பரிதாபமாக.
"பொழுது விடியட்டும்; பார்க்கலாம்!" என்றாள் அவள், அந்தச் சமயம் அவரிடமிருந்து தப்புவதற்காக.
"பார்க்கலாம் என்று சொன்னாயே, அதுவே போதும்; பரம திருப்தி!" என்று அவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தார் அவர்.
மறுநாள் காலை 'அடியார்களின்' வேண்டுகோளுக்கு இணங்கி, அத்தனை கிண்ணங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெயைத் தொட்டுத் தலையில் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்துவிட்டு மாடிக்கு வந்தாள் தீபா. அவள் வீட்டுக்கு எதிர்த்தாற் போலிருந்த பூந்தோட்டத்தில் வழக்கம் போல் வந்து பூப்பறித்துக் கொண்டிருந்தாள் பொன்னாயி. அவளைக் கண்டதும் 'இன்றுகூட இவள் வேலைக்கு வந்திருக்கிறாளே! இவளுக்குத் தீபாவளி இல்லையா, என்ன?' என்று தோன்றிற்று அவளுக்கு.
இந்தச் சமயத்தில் தோளில் பூக்குடலையுடனும் கையில் புதுப் புடவையுடனும் யாரோ ஒருவன் அங்கு வந்து, "இந்தாம்மா, ஐயா கொடுக்கச் சொன்னாரு!" என்று சொல்லிக் கொண்டே புடவையை அவளிடம் நீட்டினான்.
"புடவை இருக்கட்டும்; முதலில் நீ பூக்குடலையைப் பிடி" என்றாள் பொன்னாயி.
அவன் பிடித்தான்; பறித்த பூக்களை அதில் கொட்டி விட்டு, "நேற்றையக் கூலி எங்கே?" என்றாள் அவள் கம்பீரத்துடன்.
"அதையும் கொடுத்திருக்கிறார்!" என்று நாலணாவை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு "புடவை?" என்றான் அவன்.
"அவளுக்கென்று ஒருவன் வரும்போது அவன் அவளுக்குப் புடவை எடுத்துக் கொடுப்பானாம்; அதுவரை நீங்கள் அவளுக்கு வேலை மட்டும் கொடுத்தால் போதுமாம்; புடவை எடுத்துக் கொடுக்க வேண்டாமாம் என்று நான் சொன்னதாகப் போய்ச் சொல்!" என்றாள் அவள்.
"உன் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு அவன் சென்றதும், "இஷ்டத்தில் தானே இருக்கிறது கஷ்டம்!" என்று சொல்லிக் கொண்டே, அடுத்தாற் போலிருந்த பலசரக்குக் கடைக்குச் சென்ற பொன்னாயி, உள்ளங் கையிலே ஓரணாவுக்கு எண்ணெய் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டாள். அரையணாவுக்குச் சிகைக்காய்ப் பொடியும் அரையணாவுக்கு வெற்றிலைப்பாக்கும் வாங்கிக்கொண்டு கிணற்றடிக்கு வந்தாள். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே 'தீபாவளி ஸ்தான'த்தை முடித்துவிட்டுத் தோய்ந்த புடவையில் பாதியைத் தோட்டத்து வேலியின்மேல் காயப் போட்டு விட்டுப் பாதியை இடுப்பிலே சுற்றிக்கொண்டு நின்றாள். 'பாவம், அவளிடம் இருப்பதே ஒரே ஒரு புடவைதான் போலிருக்கிறது!' என்று நினைத்த தீபாவுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, கூர்க்காவை விட்டு அவளைக் கூப்பிடச் சொன்னாள்.
அவன் வந்து "அம்மா உன்னைக் கூப்பிடறாங்க!" என்றதும், "பறித்த பூக்களைத்தான் கடைக்குக் கொடுத்தனுப்பி விட்டேனே, என்னிடம் பூ ஏது?" என்றாள் அவள்.
"இல்லேன்னா வந்து சொல்லேன்!" என்றான் அவன்.
"அதை நீயே சொல்லக் கூடாதா?" என்று அலுத்துக் கொண்டே வேலியின் மேல் போட்டிருந்த புடவையை எடுத்துத் தோளின் மேல் போட்டுக் கொண்டு அவள் அவனைத் தொடர்ந்தாள்.
அதற்குள் பட்டுப் புடவையும் கையுமாக வந்து வாசலில் நின்று கொண்டிருந்த தீபா "தீபாவளியும் அதுவுமாகப் புதுப்புடவை கட்டாமல் இருக்கலாமா? இந்தா, இதைக் கட்டிக்கொள்!" என்றாள்.
"என்னை மன்னியுங்கள், அம்மா! எந்த வேலையும் செய்யாமல் நான் யாரிடமும் எதையும் வாங்கிக் கொள்வதில்லை" என்றாள் பொன்னாயி.
இரண்டு ரூபாய்
"அண்ணே ! ஒரு பீடி இருந்தா கொடுக்கிறியா அண்ணே?" என்றான் சின்னசாமி, தான் அணிந்திருந்த சிவப்பு குல்லாயைக் கழற்றித் தலையைச் 'சொறி, சொறி' என்று சொரிந்து கொண்டே.
"என்னடா! சும்மா ஆளை ஒரு நோட்டம் விட்டுப் பார்க்கிறியா? இப்போத்தான் சம்பளத்தைக்கூட ஒசத்திக் கொடுத்திருக்காங்க, அதுக்குள்ளே நீ ஓசி பீடிக்கு வந்து நிக்கிறியே?" என்றான் பெரியசாமி, அதுவரை தான் காவல் காத்துவந்த இடத்தை விட்டுக் கொஞ்சம் அப்பால் நகர்ந்து கொண்டே.
"அங்கே சம்பளத்தை ஒசத்தினா, இங்கே அரிசி விலை, பருப்பு விலையை ஒசத்திடறாங்க! அதுக்கும் இதுக்கும்தான் சரியாய்ப் போகுதே!" என்றான் அவன்.
"அப்போ ஒண்ணு செய்!" என்றான் இவன்.
"என்ன அண்ணே , செய்யணுங்கிறே?"
"அதோ இருக்கா பார், ஒரு பழக்காரி! அவகிட்டே போய், "ஏம்மே, பிளாட்பாரத்திலே கடை வெச்சே?"ன்னு சும்மா ஒரு மெரட்டு மெரட்டிப் பாரு!"
"மெரட்னா?"
"அவ, 'இது ஒரு தண்ட எழவு'ன்னு எட்டணா எடுத்துக் கொடுக்க வருவா. உனக்கு இருக்கிற காஜிலே, 'அப்படிக் கொடுடி, என் ராஜாத்தி!'ன்னு அதை வாங்கிக் கிட்டு நீ நேரே இங்கே வந்து நின்னுடாதே! 'அதுக்கு வேறே ஆளைப் பாரும்மே, வா டேசனுக்கு'ன்னு சும்மா ஒரு சின்ன கலாட்டா பண்ணு; ஒரு ரூபா எடுத்து நீட்டுவா. அதுக்கும் மசியாதே! 'என்னா இன்னா லஞ்சம் வாங்கற பஞ்சப் பயன்னு நெனைச்சிட்டியா, எழுந்து வாம்மேன்னா!'ன்னு ஒரு இசுப்பு இசுத்துக்கிட்டே, கையிலே இருக்கிற குண்டாந்தடியைச் சும்மா ஒரு சொழட்டுச் சொழட்டு! அவ கில்லாடி, அதுக்கெல்லாம் பயப்பட மாட்டான்னாலும், உன் மூஞ்சி அதுக்குள்ளே அழுது வடியுமே, அதை நீ அவளுக்குத் தெரியாம மறைக்க வேண்டாமா, அதுக்காகத்தான் இது! அதுக்கு மேலே அவ ‘ம்மா நிறுத்தப்பேன்!'னு சொல்லிக்கிட்டே ஒண்ணரை ரூபா எடுத்துக் கொடுக்க வருவா; இந்த இடத்திலேதான் நீ அவளுக்கு ஒரு சின்ன லாப நஷ்டக் கணக்குப் போட்டுக் காட்டணும். அது எப்படி, தெரியுமா? தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிகிட்டே, 'நடக்காது, நட டேசனுக்கு! அங்கே போய்க் கேசு எழுதி, நாளைக்குக் காத்தாலே உனக்கு நான் கோர்ட்டுலே அஞ்சு ரூபா அவராதம் போட்டு வைக்கலே, என் பேரு சின்னசாமியில்லே'ன்னு மீசைமேலே சும்மா ஒரு கையைப் போடு! இன்னா, உனக்கு மீசையே இன்னும் சரியா முளைக்கலையா? பரவாயில்லை! அது முளைக்கிற இடத்தைச் சும்மா ஒரு தடவுத் தடவு, போதும்! எல்லாம் உன் அசட்டுத்தனத்தை மறைக்கத்தானே? இப்போ நீ போடாம போட்டுக் காட்டிய கணக்கு அவளுக்கு புரிஞ்சிப்போவும். 'மூணு ரூவாய்க்கு மூணு ரூவாயும் மிச்சம், பேரமும் கெட்டுப் போவாது'ன்னு முழுசா ரெண்டு ரூபா எடுத்துக் கொடுக்க வருவா! அதையும் பேசாம வாங்கிக்கிட்டு வராம 'இன்னிக்கு உன்னைப் போனாப் போவுதுன்னு உடறேன்; நாளைக்கு இங்கேகடை வெச்சே, லாரியைக் கொண்டாந்து, உன்னையும் உன் பழத்தையும் வாரிப் போட்டுக்கிட்டுப் போயிடுவேன்! 'ன்னு சும்மா ஒரு 'உடான்சு' உட்டுட்டு இங்கே வா! அதோ, அந்தச் சந்து முனையிலே இருக்கிற காக்கா ஓட்டலுக்குப் போயி, ஆளுக்கு ரெண்டு சம்சாவை எடுத்துக் கடிச்சி, அதுக்குமேலே டீயும் அடிச்சு, அப்படியே உனக்கொரு பீடிக்கட்டும் எனக்கொரு பீடிக்கட்டும் வாங்கிக்கிட்டு வந்துடுவோம், என்ன செய்யறியா?"
"ஐயையோ, நான் மாட்டேண்ணா ! லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க பார்த்தா ..."
"அந்தக் கவலை உனக்கு இன்னாத்துக்கு? அவங்களைப் பார்த்துக்கத்தான் நான் இருக்கேனே, நீ போடா சும்மா!"
"அப்புறம் என்னை வம்புலே மாட்டி வெச்சிடாதே, அண்ணே! நான் பிள்ளை குட்டிக்காரன்...."
"எனக்கு மட்டும் பிள்ளை குட்டி இல்லையா? போடா! அவங்க வந்தா ஏதாச்சும் ஒருசாக்கைவெச்சி நான் விசில் அடிக்கிறேன், அதைக் கேட்டதும் நீ சும்மா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கம்னு வந்துடு!"
"சும்மா சும்மான்னு என்னைச் சும்மா போகச் சொல்றியே, அதுக்கு நீயேதான் போனா என்னண்ணே?"
"நான் நேத்துத்தாண்டா, அவளை மெரட்டி ரெண்டு ரூவா வாங்கினேன்; அதுக்குத்தான் இன்னிக்கு உன்னைப் போகச் சொல்றேன்!"
"என்னமோண்ணே, என் பொழைப்பிலே மண்ணைப் போட்டுடாதீங்க! உஷாராப் பார்த்துக்குங்க, பொறாவைத் தேடிப் பருந்து கத்தறாப்போல அந்தப் பசங்க சும்மா சுத்து, சுத்து'ன்னு சுத்திக்கிட்டே இருக்கானுங்க!"
"அதெல்லாம் எனக்குத் தெரியும், நீ போடா!" என்று பெரியசாமி, சும்மா’ அவனை ஒரு தள்ளுத் தள்ளி விட, அப்போதும் சின்னசாமி அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் நடக்க, அவனுக்குப் பின்னால் நின்று அவன் கால்கள் பின்னுவதைக் கண்ட பெரியசாமி கலகலவென்று நகைக்க, "என்ன அண்ணே, சிரிக்கிறீங்க?" என்றான் அவன், மேலும் தயக்கத்துடன் நின்று.
"ஒண்ணும் இல்லேடா என்னதான் புதுசா இருந்தாலும் இப்படியா? நீ கொஞ்சம் மிடுக்கா போ, அப்போத் தான் காரியம் நடக்கும்!" என்றான் பெரியசாமி. அவனுக்குத் தெரியாமல் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டே.
அதைக் கவனிக்காத சின்னசாமி, "சரி!" என்று மூக்கால் அழுது கொண்டே அவளை நெருங்க, "எல்லாம் நான் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன்! அதுக்காக நீங்க ஒண்ணும் இங்கே மணிக்கணக்கா நின்று, எங்கிட்டே கொசிறிகிட்டு இருக்கவேணாம்; இந்தாங்க, ஒரேயடியா ரெண்டு ரூவாயாவே கொடுத்துடறேன், எடுத்துக்கிட்டுப் போங்க! அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க வந்ததும், நானே உங்களைப் பிடிச்சு அவங்ககிட்டே கொடுக்கலேன்னா, என் பேரு எச்சிமியில்லே!' என்று இவன் அவளை மிரட்டுவதற்குப்பதிலாக அவளே இவனை மிரட்ட, இவன் விழிக்க, நிலைமை மோசமாவதற்கு முன்னால் பெரியசாமி விரைந்து வந்து அந்த ரூபாய் இரண்டையும் வாங்கிக்கொண்டு 'லஞ்சம் வாங்கறது மட்டும் தப்பு இல்லே எச்சிமி, கொடுக்கறதும் தப்புன்னு தெரியுமா உனக்கு?" என்றான் அவள் விட்ட சவாலுக்கு எதிர்ச்சவாலாக.
"எல்லாம் தெரியும், போய்யா!" என்றாள் அவள், அப்போதும் அலட்சியமாக.
அதற்குமேல் அவளை மிரட்டுவது தனக்கே ஆபத்து என்பதை உணர்ந்த பெரியசாமி மேலே நடக்க, அவனைத் தொடர்ந்து நடந்தான் சின்னசாமி.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, இருவரும் அந்தக் காக்கா ஓட்டல் இருந்த சந்து மூலைக்குத் திரும்பியது தான் தாமதம், தங்களை யாரோ கைதட்டி அழைப்பது போலிருக்கவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
என்ன ஆச்சரியம்! அவர்கள் பயந்ததற்கு ஏற்றாற் போல் அவர்களை நோக்கி லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் அவசரம் அவசரமாக வந்து கொண்டிருந்தார்!
தம்மைக் கண்டதும் பேய் அறைந்தது போல் நின்ற அவர்களை நெருங்கி, "அந்தப்பழக்காரியிடமிருந்து என்ன வாங்கினீர்கள், காட்டுங்கள் கையை!" என்றார் அவர், அதிகாரத்துடன்.
அவ்வளவுதான்; 'நானில்லை, ஸார்!' என்றான் சின்னசாமி, அழாக்குறையாக.
அவனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே அவர் சொன்னது சொன்னபடி கையைக் காட்டினான் பெரியசாமி.
அவனை மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டே அவன் கையிலிருந்த ரூபாய் இரண்டில் ஒன்றை எடுத்துத் தம் சட்டைப் பையில் போட்டுக் கொண்டே "பயப்படாதே, போ!" என்றார் அதிகாரி!
"நன்றி!" என்று சொல்லிக்கொண்டே பெரியசாமி நழுவ, "லஞ்சம் ஒழிந்ததோ இல்லையோ என்னைப் பிடிச்ச பயம் என்னை விட்டுப் போச்சுடா, அப்பா!" என்று பெருமூச்சு விட்டான் சின்னசாமி.
அவன் ஏன் திருடவில்லை?
'லொக்கு, லொக்கு, லொக்கு'.... நெஞ்சைப் பிளக்கும் இந்த இருமல் சத்தம் காதில் விழும்போதெல்லாம் அந்தச் சத்தத்துக்குரிய ஜீவனைக் கடை வாயிலில் உட்கார்ந்தபடியே அனுதாபத்தோடு பார்ப்பான் ஆறுமுகம். ஆம், அவனுடைய கடைக்கு எதிர்த்தாற் போலிருந்த நடைபாதையில் தான் அந்தக் கிழவன் வசித்து வந்தான். கடை என்றால் சாதாரணக் கடையல்ல, மிகப் பெரிய ஜவுளிக் கடை. அந்த மிகப் பெரிய கடையிலே ஏவலாளர்களாக வேலை பார்த்து வந்தவர்களில் மிகச் சிறியவனான ஆறுமுகமும் ஒருவன்.
காலையில் கடை திறப்பதற்கு முன்னால் அந்தக் கிழவனின் கையிலே ஒரு மூங்கில் பச்சைப்பசேலென்று காட்சி அளிக்கும். சிறிது நேரத்துக்கெல்லாம் அது அவன் கை பட்டுக் கூடைகளாகவும், முறங்களாகவும் மாறிவிடும். அதற்குப்பின் 'லொக்கு லொக்கு' என்ற இருமல் ஓசையோடு 'கூடை வாங்கலையோ, முறம் வாங்கலையோ!' என்ற ஓசையும் கலந்து கேட்கும்.
தெருவெல்லாம் அந்த ஓசைபரவி எதிரொலிப்பதை ஆறுமுகம் கேட்டுக் கொண்டே யிருப்பான். அதற்குள் மத்தியான வேளை வந்துவிடும்; அவன் சாப்பிடப் போய் விடுவான்.
சாயந்திரம் பார்த்தால் அந்தக் கிழவன் வேலை செய்த இடத்திலே கூடையும் இருக்காது; முறமும் இருக்காது. அவற்றுக்குப் பதிலாக புகையும் கல்லடுப்பின் மேல் கரி படிந்த கலம் ஒன்று கம்பீரமாக வீற்றிருக்கும்; அந்தக் கலத்தின் வாயிலிருந்து பொங்கிவரும் சோறு, அவனுடைய முகத்தையும் மகிழ்ச்சியால் பொங்கவைக்கும். அதை வடிக்காமலே எடுத்து வைத்துக்கொண்டு அவன் சாப்பிடுவதற்கும், ஆறுமுகம் வேலை பார்க்கும் கடையை மூடுவதற்கும் அநேகமாகச் சரியாயிருக்கும்.
இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? - எத்தனையோ நாட்களாக அவன் அந்தக் கிழவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் இல்லாத அந்தக் கிழவன் குளிரால் நடுங்கும் போது, தன்னுடைய சட்டையையாவது கழற்றி அவனிடம் கொடுத்து விடலாமா என்று தோன்றும் ஆறுமுகத்துக்கு. ஆனால் மிகச்சிறியவனான நான் எங்கே, மிகப் பெரியவனான அந்தக் கிழவர் எங்கே? - தன்னுடைய உள்ளம் அதற்கு இடம் கொடுத்தாலும், அவருடைய உடல் இடம் கொடுக்காது போலிருக்கிறதே!
தனக்கு மட்டும் ஒரு போர்வை இருந்தால் அதை அவரிடம் கொடுத்து விடலாம். ஆனால் அம்மாவின் புடவைதானே, அவளுக்கும் புடவையாயிருந்து தனக்கும் போர்வையாக இருந்து தொலைகிறது?
இப்படி ஒரு நாள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது கடையின் சிப்பந்திகளில் ஒருவனான கணபதி அவனுடைய முதுகிலே ஒரு தட்டுத் தட்டி, "ஏண்டா, தம்பி! இன்னுமா நீ சாப்பாட்டுக்குப் போகலே?" என்றான் கனிவுடன்.
அப்போதுதான் சாப்பாட்டு நேரம் விட்டதென்பதையும், கடையில் தன்னையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் உணர்ந்த ஆறுமுகம் "இல்லை ஸார்!" என்றான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே.
"ஏண்டா?"
"அம்மா வேலை செய்யும் அய்யர் வீட்டிலே ராத்திரி ஒன்றும் மிச்சமாக வில்லையாம்!"
"அங்கே ராத்திரி சாப்பாடு மிச்சமானால் தான் உனக்கு இங்கே மத்தியானம் சாப்பாடா?"
"ஆமாம், ஸார். எனக்கு இங்கே மாசம் முப்பது ரூபாய் சம்பளம்: என் அம்மாவுக்கு மாதம் பத்து ரூபாய் சம்பளம்; இந்த நாற்பது ரூபாயில் ராத்திரி ஒரு வேளை மட்டும்தான் எங்கள் வீட்டில் அடுப்பு புகைகிறேன் என்கிறது, ஸார்!"
"ஐயோ, பாவம்! அதற்காக மத்தியானம் சும்மாவா இருப்பது? இந்தா ஒரு ரூவா போய்ச் சாப்பிடு!" என்று ஒரு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தான் கணபதி.
"என்ன ஆச்சரியம்! இப்படியும் ஒரு மனிதரா இந்தக் காலத்தில்? - நன்றி உணர்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஆறுமுகம் அடுத்தாற்போலிருந்த ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தான். ஒரு ரூபாய்க்குக் கிடைத்த அளவுச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு அவசரம் அவசரமாக கடைக்குத் திரும்பினான். அதற்குள் முதலாளி வந்து விடுவாரோ, என்னவோ என்ற அச்சத்தில்.
ஆனால் அவன் எதிர்பார்த்தபடி முதலாளி வரவில்லை; அவருக்குப் பதிலாக கணபதியின் மகன் கல்யாணம் அங்கே வந்திருந்தான். அவனிடம் ஒரு போர்வையை எடுத்து அவசரம் அவசரமாக மடித்துக் கொடுத்துவிட்டு, "போ! போ சீக்கிரம் போ" என்றான் கணபதி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே.
அதைப் பார்த்துக்கொண்டே வந்த ஆறுமுகத்துக்கு ஒன்றும் புரியவில்லை; விழித்த கண் விழித்தபடி "ஏன் ஸார், நீங்களா திருடுகிறீர்கள்?" என்றான் வியப்புடன்.
"வேறு வழியில்லை, அப்பனே! உனக்கும் எனக்கும் போர்வை வேண்டும் என்றால் திருடுவதைத் தவிர வேறு வழியே இல்லை!" என்று அவனையும் தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொண்டு கையை விரித்தான் கணபதி!
"நிஜமாகவா?"
"சந்தேகமில்லாமல்!"
"அப்படியானால் நம்முடைய கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவருக்குக் கூடத் திருடினால் தான் போர்வை கிடைக்குமா?"
"ஆமாம் அப்பனே, ஆமாம்!"
"அப்படியானால் அவர் ஏன் திருடவில்லை?"
"திருட முடியவில்லை; அதனால் திருடவில்லை!"
"ஐயோ, பாவம்! திருட முடிந்தவர்கள் அவருக்கும் ஒரு போர்வை திருடிக் கொடுத்தால்?"
"கொடுக்கலாம், நீ ஒத்துழைத்தால்!"
"எப்படி?"
"சொல்கிறேன் - ராத்திரி நான் கடையை மூடும் போது நீ நம் கடைக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலுக்கு அருகே வந்து நில்; நான் ஒரு போர்வையை எடுத்துக் கொடுக்கிறேன் - வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்துவிடு!"
"இவ்வளவுதானே, அவசியம் வந்து நிற்கிறேன்!" என்றான் ஆறுமுகம்.
"அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டான் கணபதி - இனி அவனுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அந்த ஒரு ரூபாய் கூடக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நிம்மதியில்!
சொன்னது சொன்னபடி அன்றிரவு கணபதி கடையை மூடும் போது, கடைக்குப் பின்னாலிருக்கும் ஜன்னலருகே வந்து நின்றான்; ஆறுமுகம் அவனிடம் ஒரு போர்வையை எடுத்துக் கொடுத்தான் கணபதி.
"இன்னும் ஒன்று!" என்றான் ஆறுமுகம்.
"எதற்கு? ஒன்று கொடுத்தால் போதும்; போ போ" என்றான் கணபதி.
"அவருக்கு இல்லை ஸார், எனக்கு!"
"ஓ, உனக்கா இந்தா!" என்று அவன் இன்னொரு போர்வையை எடுப்பதற்காகத் திரும்பியபோது, 'லொக்கு லொக்கு' என்ற இருமல் சத்தம் அவன் காதில் விழுந்தது. திடுக்கிட்ட கணபதி, திறந்த பீரோவைத் திறந்தது திறந்தபடி வைத்துக்கொண்டு அப்படியே நின்றான்.
"அதோ அவரே வந்து விட்டார்!" என்றான் ஆறுமுகம், கணபதியின் நிலையை உணராமல்.
"அதுதான் தெரிகிறதே! அவன் ஏண்டா இந்த நேரத்திலே இங்கே வந்து தொலைந்தான்?" என்றான் கணபதி எரிச்சலுடன்.
"வந்தால் என்ன ஸார், அவரும் நம்மைச் சேர்ந்தவர் தானே?" என்றான் ஆறுமுகம்.
"யார் கண்டது? அவன் எப்படியோ என்னவோ? உனக்கு அவன்மேல் நம்பிக்கை யிருந்தால் உன்னிடமிருக்கும் போர்வையை அவனிடம் கொடுத்துவிடு; நாளை நான் உனக்கு வேறொரு போர்வை தருகிறேன்!" என்றான் கணபதி.
"சரி!" என்றான் ஆறுமுகம்.
"தாத்தா, தாத்தா!
அந்த நேரத்தில் ஆறுமுகத்தின் எதிர்பாராத அழைப்பைக் கேட்டதும் "யாரப்பா அது?" என்றான் கிழவன், தெரிந்தும் தெரியாதவன் போல.
"நான்தான் ஆறுமுகம் தாத்தா! அன்றொரு நாள் உங்களுடன் சேர்ந்து கூடைகூட முடைந்தேனே...?"
"ஓ, நீயா! என்னப்பா, சமாசாரம்?"
"குளிருக்கு ஒரு போர்வைகூட இல்லாமல் நீங்கள் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், இல்லையா? இந்தாருங்கள், உங்களுக்கு ஒரு போர்வை!"
கிழவன் சிரித்தான்; "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டான் ஆறுமுகம்.
"ஒன்றுமில்லை; எனக்குப் போர்வை இல்லை என்று நீ சொன்னாயே, அதற்காகச் சிரித்தேன்!" என்றான் கிழவன்.
"அப்படியானால் உங்களிடம் போர்வை இருக்கிறதா, என்ன?"
"இருக்கிறது தம்பி, இருக்கிறது. ஆனால் அதை உன்னாலும் பார்க்க முடியாது; அந்தக் கணபதியாலும் பார்க்க முடியாது!"
"அது என்ன போர்வை தாத்தா, அப்படிப்பட்ட போர்வை?" என்று கேட்டான் ஆறுமுகம் ஒன்றும் புரியாமல்.
"அது தான் மானம் தம்பி, மானம் அந்தப் போர்வை உள்ளவன் இந்தப் போர்வையை விரும்பமாட்டான்!" என்றான் கிழவன்.
கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து.....
25 ஜனவரி 1965
பின் இரவு; மணி மூன்று அல்லது மூன்றரைதான் இருக்கும். 'மூன்றாவது ஷிப்ட்' வேலை முடிந்து, நான் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சில்லென்று வீசிய காற்று, பாடாமலே என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தது. 'நடக்கட்டும் நடக்கட்டும், நானும் என் சைக்கிளும் தூக்கத்தில் எங்கேயாவது போய், எதிலாவது முட்டி மோதிக் கொண்டு நொறுங்கும் வரை உன்னுடைய திருவிளையாடல் நடக்கட்டும், நடக்கட்டும்!' என்று நான் விழித்த கண் விழித்தபடி போய்க் கொண்டிருந்தேன்.
மறுநாள் பொழுது விடிந்தால் - விடிந்தால் என்ன, அது தான் விடிந்து விட்டதே! - குடியரசு தினம். முன்னெல்லாம் அதன் கோலாகலம் முதல் நாள் இரவே அங்கங்கே கொஞ்சம் தலை காட்டும்; அதாவது மூவர்ணக் கொடிகள் நிறைந்த தோரணத்தையாவது மக்களில் பலர் தாமாகவே முன் வந்து வீதிக்கு வீதி கட்டிக் கொண்டிருப்பார்கள். இப்போதோ அதுகூட இல்லை; ஆளுங் கட்சிக்காரர்கள் கூட அதற்குரிய காசை வாங்கி, ஆனந்தமாக சினிமாப் பார்த்து விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே! தூங்கட்டும் தூங்கட்டும்; தேர்தலின்போது மட்டும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது? நினைக்கட்டும்; நினைக்கட்டும்.
எதிர்க்கட்சிக்காரர்களுக்கோ இந்த வருடத்துக் குடியரசு தினம் 'துக்க தின'மாகப் போய்விட்டது. ஆட்சிமொழி இந்தி நாளை அமுலுக்கு வரப்போவதாக அறிவித்திருப்பதால்! எனக்கென்னவோ இது பிடிக்கவில்லை; என்னைப் போன்றவர்களுக்கு எல்லாத் தினமுமே துக்க தினமாக யிருக்கும் போது, நாளை மட்டும் என்ன துக்க தினம் வாழுகிறதாம்?
இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே நான் வீட்டை அடைந்தபோது, எனக்காகக் காத்துக் கொண்டிருந்த என் மனைவி கதவைத் திறந்து விட்டு விட்டு எனக்குத் தெரியாமல் எதையோ எடுத்துச் சட்டென்று மறைக்கப் பார்த்தாள்; என்றுமில்லாத அந்த அதிசயத்தைக் கண்டு நான் துணுக்குற்று "என்ன அது?" என்றேன் ஒன்றும் புரியாமல்.
"அதற்குள் பார்த்துவிட்டீர்களா, அதை? ஒன்றுமில்லை, நீங்கள் போய்ப் பேசாமல் தூங்குங்கள்" என்றாள் அவள்.
சர்வ வல்லமையுள்ள சாட்சாத் கணவனாயிற்றே நான்! எனக்குத் தெரியாமல் அவள் எதையாவது மறைத்தால் அதை நான் பொருட்படுத்தாமல் இருப்பேனா? அப்படியிருந்தால் அவளைப் பொறுத்தவரை எனக்குள்ள ‘அதிகாரம்' என்ன ஆவது? ஆகவே நான் ஆத்திரத்துடன், '"அது எனக்குத் தெரியும்; என்ன அது? அதைச் சொல், முதலில்!" என்றேன் விறைப்புடன்.
"சரியாய்ப் போச்சு போங்கள்! தூக்கம் கெட்டுப் போகுமே என்று பார்த்தால் அதற்குள் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதா உங்களுக்கு? எனக்கென்ன வந்தது, எப்படியாவது போங்களேன்?" என்று சொல்லிக் கொண்டே அவள் எனக்கு முன்னால் ஒரு கடிதத்தை எடுத்து விட்டெறிந்துவிட்டு, "யாரோ தமிழ்மாறனாம்; அவர் உங்களிடம் இந்தக் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னாராம்; இது தான் விஷயம்; இதை நீங்கள் பொழுது விடிந்து பார்த்தால் என்னவாம்?" என்றாள், அதற்குள் எழுந்து அழ ஆரம்பித்துவிட்ட குழந்தையைத் தூக்கிச் சமாதானம் செய்து கொண்டே.
அவள் சொன்னபடி, அதைப் பார்க்கப் பொழுது விடியும் வரை காத்திருக்கவில்லை நான்; அப்போதே பிரித்துப் பார்த்தேன்:
நண்பர்க்கு,
இன்று காலை உங்களிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. நீங்கள் என்னதான் சொன்னாலும் தமிழுக்காக ஒரு சில தமிழராவது தங்களைத் தியாகம் செய்யாதவரை, இந்தி ஏகாதிபத்தியவாதிகள் இறங்கி வரமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த நினைப்பைச் செயலாக்க என்னையே 'முதல் பலி'யாக அவர்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் நான் தீர்மானித்து விட்டேன். இனி யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் பொழுது விடிவதற்கு முன்னால் அது எப்படியும் நடந்துவிட்டிருக்கும்...
வருந்தற்க; எனக்குப் பின்னால் தமிழ் வாழ்வது போலவே என் தாயாரும் வாழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த விருப்பத்தை நம் 'பாக்டரியிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டியிருக்கும். ‘கிராஜுடி, பிராவிடெண்ட் பண்ட்' ஆகியவற்றின் தொகையைக் கொண்டு நீங்கள் தான் நிறைவேற்றி வைக்க வேண்டும். அதற்காகவே இந்தக் கடிதம்....
கடைசி வணக்கத்துடன்
தமிழ் மாறன்.
அட, பாவி! சாகும்போது கூட ‘சொந்த நிதி'யைத் தவிர வேறு 'எந்த நிதி'யையும் எதிர்பார்க்காத சண்டாளா! கடைசியில் இந்த முடிவுக்கா வந்துவிட்டாய் நீ? தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரோ சிலர் தமிழைக் காப்பாற்றப் போவதாகச் சொல்ல, அதற்காக நீ உன் உயிரையா கொடுக்கப் போகிறாய்? - ஐயோ! என்றும் குன்றாத தமிழுக்கு, இன்றுவரை எதனாலும் பாதிக்கப்படாத தமிழுக்கு, இப்படி ஓர் இழுக்கா? அந்த இழுக்கும் ஒரு பாவமும் அறியாத உன்னாலா அதற்கு ஏற்படுவது? இது கூடாது; இதை நடக்கவிடக் கூடாது!
இப்படி நினைத்ததும், "கதவைத் தாளிட்டுக்கொள்; இதோ, நான் வந்து விடுகிறேன்!" என்று தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிய நான், எதற்கும் 'தக்கதுணை'யொன்று இருந்தால் நல்லது என்று எண்ணி, எங்கள் தெருவில் 'தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு' ஆக ‘நால்வகைக்கன்னி'களுடன் - 'எங்கே உங்கள் திராவிட நாடு?' என்று யாராவது ஓர் அதிகப்பிரசங்கி கேட்டால், 'இதோ இருக்கிறது எங்கள் திராவிட நாடு!' என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சொல்வதற்காகத்தானோ என்னவோ, 'எழுந்தருளி யிருந்த 'தமிழ்ப்புயல் தயாநிதி'யைக் கொஞ்சம் தயக்கத்துடனேயே தட்டி எழுப்பினேன்.
அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்த அவர் "என்ன சங்கதி, எதற்கு என் இனிய தூக்கத்தைக் கெடுத்தீர்?" என்றார் சற்றே 'பைரவ'ரைப் பின்பற்றி.
"மன்னிக்க வேண்டும்; நேற்று வரை தமிழ்ப் புயலாயிருந்த தாங்கள் இன்றைய 'துக்க தின'த்தை இப்படித் 'தூக்க தின'மாகக் கொண்டாடலாமோ? எழுந்திருங்கள், தங்கள் தலையாய தொண்டன் தமிழ்மாறன் தமிழுக்காகத் தன் இன்னுயிரையே ஈயப்போகிறானாம். அந்தத் 'தற்குறி'யைத் தடுத்தாட்கொள்வது தங்கள் கடமையன்றோ? வாருங்கள், என்னுடன்" என்றேன் நான் பணிவுடன்.
அவ்வளவுதான்; அவர் சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஆகா! இதுவன்றோ நான் எதிர்பார்த்த இனிப்புச் செய்தி! ஆகா! இதுவன்றோ நான் எதிர்பார்த்த இனிப்பச் செய்தி!" என்று ஒரு கணம் ஆனந்தக் கூத்து ஆடிவிட்டு, மறுகணம் "ஒரு வினாடி பொறும்!" என்று சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக எங்கோ ஓடினார்!
எனக்கு ஒன்றும் புரியவில்லை; "தலைவர் எவ்விடம் செல்கிறாரோ?" என்றேன், அவரைச் சற்றே தடுத்து நிறுத்தி.
"புகைப்படக்காரரைக் கையோடு அழைத்துக் கொண்டு வரவேண்டாமோ? அந்த அபூர்வமான காட்சியை அந்த அருமையான காட்சியை அப்படியே படம் எடுத்துவிட வேண்டாமோ?" என்றார் அவர்.
"எந்த அருமையான காட்சியை?" என்றேன் நான்.
'தமிழுக்காக, தமிழ் அன்னைக்காக அந்தத் தமிழ் இளவல் தன் இன்னுயிர் நீக்கும் காட்சியைத்தான்' என்றார் அவர் பரவசத்துடன்.
அதற்குமேல் அங்கே நிற்க ‘என் வயிற்றெரிச்சல்' எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஏனெனில் தமிழ்மாறனைப் போன்றவர்கள் 'வெறி'க்கு வேலை கொடுத்தால், தமிழ்ப்புயல் தயாநிதியைப் போன்றவர்கள் எப்போதுமே 'அறிவு'க்கு வேலை கொடுப்பவர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே 'உங்கள் தலையிலே இடி விழ!' என்று நான் அவருக்குத் தெரியாமல் அவரை ஆசீர்வதித்துக் கொண்டே, 'அந்த அப்பாவிப் பைய'னின் வீட்டை நோக்கி - அந்த 'அனுதாபத்துக்குரிய 'வனின் வீட்டை நோக்கிக் காற்றாய்ப் பறந்தேன்!
26 ஜனவரி 1965
"தமிழ் வாழ்க, தமிழ்த் தாய் வாழ்க! தமிழ் வாழ்க, தமிழ்த் தாய் வாழ்க!"....
இப்படி ஒரு குரல் - ஆம், ஒரே ஒரு குரல்தான் - அவன் வீட்டை நான் நெருங்க நெருங்க அதுவும் என்னை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது.
ஒருவேளை அவன் குரலாயிருக்குமோ? - இதை நினைக்கும்போதே நெஞ்சில் திக்கென்றது எனக்கு!
இன்னும் வேகமாக சைக்கிளை மிதித்தேன்; அதே வேகத்தில் அந்தக் குரலும் என்னை நோக்கி விரைந்து வந்தது.
"தமிழ் வாழ்க; தமிழ்த் தாய் வாழ்க!" "தமிழ் வாழ்க! தமிழ்த் தாய் வாழ்க!"
சந்தேகமில்லை; அதே குரல்தான்!
ஆனால், அது தீனக் குரலாயுமில்லை; ஈனக் குரலாயுமில்லை . தமிழின் கம்பீரத்தைப் போலவே அதுவும் கம்பீரமாயிருந்தது!
எங்கிருந்து வருகிறது, அது?
இந்தக் கேள்வியை நான் எழுப்புவதற்குள் "அதோ பாரும்!" என்றொருகுரல் எனக்குப் பின்னாலிருந்து வந்தது. திரும்பிப் பார்த்தேன்; பக்கத்தில் புகைப்படக்காரருடன் தமிழ்ப்புயல் தயாநிதி எனக்குப் பின்னால் 'டாக்'ஸியில் வந்து கொண்டிருந்தார். அவரை நான் பொருட்படுத்தாவிட்டாலும் அவர் காட்டிய திசையைப் பொருட்படுத்திப் பார்த்தேன்; தீ, செந்தீ!
இந்தியால் மூட்டப்பட்ட செந்தீயா, அது?
"ஆம்; ஐயமில்லை அப்பனே, ஐயமில்லை, அந்த தீக்குள்ளிருந்து தான் அந்த இளவலின் குரல் வருகிறது; எடும், அந்த அற்புதக் காட்சியை அப்படியே! என்றார் அவர், எனக்குப் பதில் சொல்வது போல் தமக்குப் பக்கத்திலிருந்த புகைப்படக்காரரிடம்.
"என்ன!" - திறந்த வாய் மூடுவதற்குள் சைக்கிளை விட்டுக் கீழே குதித்து விட்டேன் நான்; என்னைத் தொடர்ந்து தமிழ்ப்புயல் தயாநிதியும் தமது புகைப்படக்காரருடன் 'டாக்ஸி'யை விட்டுக் கீழே குதித்துவிட்டார்!
ஆனால்....ஆனால்...
என்ன விரைந்து என்ன பயன்? அவனுக்கு அருகே காலியாகக் கிடந்த 'பெட்ரோல் டின்னையும் இறைந்து கிடந்த தீக்குச்சிகளையும்தான் என்னால் பார்க்க முடிந்தது; அவனைப் பார்க்க முடியவில்லை!
ஆம்; அதற்குள் அவன் குரல் அந்தத் தீயிலே மங்கி மறைந்துவிட்டது; அவன் இன்னுயிரும் பொன்னுடலும் கூட உருகிக் கரைந்து, கருகி உதிர்ந்து, உருத் தெரியாமல் மறைந்துவிட்டன!
"ஐயோ, தமிழ்மாறா! உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு வெறியூட்டும் வீணர்கள் தமிழால் வாழும்போது, அதே தமிழால் நீங்கள் ஏன் சாக வேண்டும்?"
வாய் விட்டுக் கதறினேன் நான்! என்னுடைய கதறலைக் கேட்டோ என்னவோ அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அலறி எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர்.
அதே சமயத்தில் எங்களுக்கு எதிரே போலீஸ் லாரி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து பத்துப் பதினைந்து போலீஸ்காரர்கள் குண்டாந்தடிகள் சகிதம் இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க, அவர்களைத் தொடர்ந்து வந்த இன்ஸ்பெக்டர், "இந்தத் தற்கொலைக்கு இவனை யார் தூண்டிவிட்டது? சொல்லுங்கள், யார் தூண்டிவிட்டது இவனை!" என்று கர்ஜித்தார், கடமையில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தி.
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தோம்.
"சொல்லப் போகிறீர்களா, இல்லையா?" என்றார் அவர் மறுபடியும்.
அதற்கு மேல் அவருடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாமல், "எங்களுக்குத் தெரியாது, ஸார்" என்றார் ஒருவர்.
"தெரியாதா, ஏறு வண்டியில்!" என்று அவருடைய சிண்டைப் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, "உனக்கு?" என்றார் அவர் அடுத்தவரை நோக்கி.
"தெரியாது!" என்று சொல்வதே குற்றமாயிருக்கும் போது அவர் என்ன செய்வார், பாவம்! எப்படியாவது அவரிடமிருந்து தப்ப வேண்டுமே என்பதற்காக 'யார் தூண்டிவிட்டது இவனை? என்றார் அவரும் இன்ஸ்பெக்டரைப் பின்பற்றி.
"என்னையே திருப்பிக் கேட்கிறாயா, ஏறு வண்டியில்!" என்று அவருடைய சிண்டையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, "உனக்கு?" என்றார் இன்ஸ்பெக்டர் அவருக்கு அடுத்தவரை நோக்கி.
'இதென்ன வம்பு!' என்று எண்ணியோ என்னமோ, "இந்த எதிர்க் கட்சிக்காரர்கள்தான் ஸார், இவனைத் தூண்டிவிட்டிருக்க வேண்டும்" என்றார் அவர் கையைப் பிசைந்தபடி.
"அவர்கள்தான் நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை என்று சொல்லிவிட்டார்களே?" என்றார் இன்ஸ்பெக்டர்.
"அவர்கள் இல்லையென்றால் வேறு யாராயிருக்கும்? ஒருவேளை சமூக விரோத சக்திகள் ஏதாவது..."
அவர் முடிக்கவில்லை ; அதற்குள் "அந்த சக்தி நீதான்; வண்டியில் ஏறு!" என்று அவருடைய பிடரியையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு "உனக்கு?" என்றார் அவர் அடுத்தாற்போல் இருந்தவரை நோக்கி.
"என்ன சொன்னாலும் இந்தக் கடமை வீரரிடமிருந்து தப்ப முடியாது போலிருக்கிறதே?" என்று நினைத்தோ என்னமோ, "ஆளும் கட்சியின் சோஷலிஸம் பிடிக்காத ஆலை முதலாளிகள்தான் ஸார், இவனைத்தூண்டி விட்டிருக்க வேண்டும்!" என்றார் அவர், தம் இஷ்ட தெய்வத்தை இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல் பிரார்த்தித்துக் கொண்டே.
வி.க.-38 அப்போதும் அவருடைய கஷ்டம் தீரவில்லை; "அவர்களும்தான் நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை என்று சொல்லிவிட்டார்களே?" என்றார் இன்ஸ்பெக்டர், அவரைவிடாமல்.
"அவர்களும் இல்லையென்றால் வேறு யாராயிருக்கும்? வந்து.... வந்து" என்று அவர் இழுக்க, "சரி, வந்தே சொல்!" என்று அவருடைய பிடரியையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, "எல்லோரும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?" என்றார் இன்ஸ்பெக்டர். ஒரே கல்லில் எல்லா மாங்காய்களையும் அடித்து வீழ்த்த!
அப்போது, "இல்லை, நான் சொல்கிறேன் உண்மையை!" என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் திரும்பினோம்.
"யார் அது? இங்கே வந்து சொல், அந்த உண்மையை!" என்று அந்தக் குரலுக்குப் பதில் குரல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.
அவ்வளவுதான்; "இதோ இந்தத் தாய்தான் தூண்டி விட்டாள் அவனை!" என்று சொல்லிக் கொண்டே ஆற்றொணாத் துயரத்தால் அலமலந்து போயிருந்த தமிழ்மாறனின் தாயாரைக் கொண்டுவந்து, அதுதான் சமயமென்று அவருக்கு முன்னால் நிறுத்தினார் தமிழ்ப் புயல் தயாநிதி!
"இவளா!" என்றார் இன்ஸ்பெக்டர் வியப்புடன்.
"ஆம், இந்தத் தமிழ்த்தாய்தான் தூண்டிவிட்டாள் அந்தத் தமிழ்மகனை!" என்றார் அவர் மிடுக்குடன்.
இன்ஸ்பெக்டர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்.
"இப்போது தெரிந்துவிட்டது. இவனை யார் தூண்டி விட்டார்கள் என்று?"
"யார்?" என்றார் தயாநிதி.
"நீர்தான்; சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நீர்தான்! ஏறும் வண்டியில், உம்மை ஏமாற்ற நான் விரும்பவில்லை" என்றார் இன்ஸ்பெக்டர், அவரையும் வண்டியில் ஏற்றி.
அவர் சொன்னது உண்மைதான் என்றாலும் அந்த உண்மையைத் தமிழ் மக்கள் உணர்கிறார்களா, என்ன? "தமிழ்ப்புயல் தயாநிதி, வாழ்க தமிழ்ப்புயல் தயாநிதி வாழ்க!" என்று ஒருசாராரும், "எங்கள் தயாநிதியை விடுதலை செய்! எங்கள் தயாநிதியை விடுதலை செய்!" என்று இன்னொரு சாராரும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டே கலைந்து சென்றனர்!
ஆம், அவர்களுடைய நினைவில் இப்போது அந்தத் தமிழ் மாறனும் இல்லை; அவனைப் பெற்றெடுத்த தாயும் இல்லை; தமிழ்ப் புயல் தயாநிதிதான் இருந்தார்!
அதற்குமேல் அங்கென்ன வேலை எனக்கு? "வாழ்க, தமிழ் மக்கள்!" என்று நான் அவர்களை வாழ்த்திக்கொண்டே திரும்பினேன் - எனக்கே உரிய வயிற்றெறிச்சலுடன்தான் வேறு என்ன செய்ய?
27 ஜனவரி 1966
இதெல்லாம் அன்று; இன்றோ ?.....
இன்னுயிரை மட்டுமல்ல; பொன்னுடலைக் கூடத் தீக்கு இரையாக்காமலே 'தியாக முத்திரை' குத்திக் கொண்டு சிறையை விட்டு வெளியே வந்திருக்கும் தமிழ்ப்புயல் தயாநிதி, தீக்குளித்த தமிழ் மாறனின் படத்தை வண்ணப் படமாகத் - தீட்டிக் கொண்டிருக்கிறார்! நாளை அது சந்திக்குச் சந்தி நிற்கலாம்; அதற்குக் கீழே "இந்த இளவலைத் தீயிட்டுக் கொன்ற இந்தி வெறியர்களுக்கா உங்கள் ஓட்டு? வையுங்கள் வேட்டு" என்பது போன்ற வாசகங்களும் காணப்படலாம். அதன் பயனாகத் தமிழ்ப் புயல் தயாநிதி சட்டசபை உறுப்பினராகலாம்; சபாநாயகராகலாம்; அமைச்சராகக் கூட ஆகலாம்...
அதற்குப்பின் சர்க்கார் செலவில் தமக்குக் கிடைக்கப் போகும் இலவசக் கார், இலவச பங்களா, இலவச எடுபிடி ஆட்கள், இலவசப் பிரயாணம், இன்னும் 'இலை மறைகா'யான இதர இதர, இன்னபிற இன்னபிற சுக சௌகரியங்கள் ஆகியவை குறித்து அவர் இன்றே, இப்போதே 'இனிய பல கனவு'களும் காணலாம்...
ஆனால், என் அருமை நண்பன் தமிழ் மாறனைப் போன்றவர்கள்?
'வெறி'யால் வீழ வேண்டியதுதானா? அந்த வெறிக்கு அவர்களை ஆளாக்கும் ‘நர மாமிச பட்சிணிகள்' தங்கள் 'நயம் மிக்க அறி'வால் வாழ வேண்டியது தானா?
இது என்ன வெறி, இது என்ன நெறி?
வணக்கத்துக்குரியவள்
சொல்வதற்கு மட்டுமல்ல; நினைப்பதற்கே நெஞ்சம் ‘ரஸக் குறை'வாக இருந்தாலும், அந்தக் கடிதம் அவளை அன்று அப்படித்தான் நினைக்க வைத்தது.
'வாழ்க்கை, வாழ்க்கை' என்கிறார்களே, அந்த வாழ்க்கை என்பது தான் என்ன? அதில் உடலுறவைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாதா? அந்த உறவு இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமா? - வெட்கக் கேடு!
என்னதான் முற்போக்கு வாதியாக இருந்தாலும் அவர் இப்படியா எழுதுவார், தம் மனைவிக்கு?
மனைவிக்குத்தான் இப்படி எழுதினாரென்றால், மாற்றானுக்குமா அப்படி எழுத வேண்டும்? அவர் படித்த சில நாவல்கள், அவர் பார்த்த சில நாடகங்கள், சினிமாக்கள், அவர் கேட்ட சில பேச்சுக்கள் அவரை இவ்வாறு எழுதத் தூண்டியிருக்குமோ?
கடவுளே, அந்த அழகான கடிதத்தை எடுத்துக் கொண்டு அவன் இங்கே வந்து நின்றால், அவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?
அவருக்கு அவன் எப்படியோ, என்னைப் பொறுத்தவரை அவன் ஏற்கனவே ஒருமாதிரி....
ஒருமுறை அவனை நான், "அண்ணா!" என்று அழைத்ததையே அவன் விரும்பவில்லை. "உன் கணவன் என் மனைவியை அண்ணி' என்று அழைக்கும்போது உனக்கு நான் எப்படி அண்ணாவாவேன்?" என்று கேட்டு 'இளி, இளி' என்று இளித்தான். அதற்கேற்றாற்போல் அவரும், "ஆமாம் அமுதா! அவர் எனக்கு அண்ணாவாயிருக்கும் போது உனக்கும் எப்படி அண்ணாவாக இருக்க முடியும்?" என்று அவனுக்கு எதிர்த்தாற் போலவே என்னைக் கேட்டு வைத்தார். அன்றிலிருந்து அவன் என்னிடம் 'மைத்துனி முறை' கொண்டாடுவது போதாதென்று, இவர் தாம் போகும்போது அவனையே எனக்குத் துணையாக வேறு வைத்துவிட்டுப் போய்விட்டார்! அவருடைய நம்பிக்கையைக் குலைக்கும் அளவுக்கு இன்றுவரை அவன் என்னிடம் அப்படியொன்றும் தவறாக நடந்துகொள்ளவில்லை யென்றாலும், அவனுடைய பார்வை - அவ்வளவு கூராகவா இருக்கும், அது?
அதைப்பற்றியும்தான் ஒரு நாள் அவரைக் கேட்டு வைத்தேன்! - அதற்கு அவர் "உனக்குத் தெரியாது அமுதா! அவர் ஒரு கவிஞர்; கவிஞர்கள் எதையும் எப்போதுமே அப்படித்தான் ஊருடுவிப் பார்ப்பார்கள்!" என்று சொல்லிவிடவில்லையா?
அது எப்படியாவது போகட்டும்; அவர் என்னை விட்டுப் பிரிந்த ஒரு வாரத்துக்கெல்லாம் அவன் ஒரு நாள் எனக்குப் பின்னால் வந்து என் தலையிலிருந்த ஒரு ஒற்றை ரோஜாவை எடுத்து முகர்ந்து பார்த்தானே, அதுவும் கவிஞர்களின் கைவரிசைகளில் ஒன்றாகத்தான் இருக்குமோ? - என்ன இழவோ, எனக்கு அப்படித் தோன்றவில்லை. வந்தது வரட்டுமென்று "என்ன இது?" என்று ஒரு சீறினேன்.
"ஒன்றுமில்லை; மலரைத்தான் தீண்டினேன்; உன்னைத் தீண்டவில்லையே!" என்றான் அவன் ஒரு விஷமச் சிரிப்புடன்.
"அதைச் செடியில் இருக்கும்போது தீண்டுங்கள்; என் தலையில் இருக்கும் போது தீண்ட வேண்டாம்" என்று நான் 'வெடுக்'கென்று சொன்னேனோ இல்லையோ, அன்றிலிருந்து அவன் இங்கே வருவதைக்கூட ஓரளவு குறைத்துக் கொண்டு விட்டான். அதற்கு முன்னால் “திறந்த வீட்டில் நாய் நுழைவது போல்' என்பார்களே, அந்த மாதிரியல்லவா அவன் இந்த வீட்டுக்குள் அடிக்கொருதரம் நுழைந்து கொண்டிருந்தான்!
என்னைக் கேட்டால் அவன் இங்கே வராமலேகூட இருந்து விடலாம் என்பேன்; அவருடைய அம்மா எனக்கு இங்கே துணையாயிருக்கும்போது அவன் வேறு எதற்காம்?
ஆனாலும் அந்த ‘மலர் பறி படல'த்தைப் பற்றி அவருக்கு நான் அப்போதே எழுதாமற் போய்விட்டது எவ்வளவு பெரிய தவறாகப் போய்விட்டது!
இப்போது அப்படியே நான் அந்த நிகழ்ச்சி பற்றி எழுதினால் என்ன? அதற்கும் அவர் 'உனக்குத் தெரியாது, அமுதா! அவர் ஒரு கவிஞர்; அப்படித்தான் செய்வார்!' என்று எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார்!
அது கிடக்கட்டும்; இன்று அவன் 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என்று நினைத்து, அந்தக் கடிதத்துடன் வந்து நின்றால், என்ன சொல்லி அவனை நான் இங்கிருந்து அனுப்பி வைப்பது?
சீசீ, மரணத்தறுவாயில் சிலர் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவார்கள் என்கிறார்களே, அந்த உளறலில் ஒரு பகுதியாக இருக்குமோ , இது?....
இப்படி நினைத்ததும் அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்தாள் இவள்.
தமக்குப் பிறகு தம்முடைய வீட்டையும் அந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருக்கும் வகையில் மாதந்தோறும் கிடைக்கும் ரூபாய் நூறையும் தம் மனைவி அனுபவிக்க வேண்டும்
ரொம்பச் சரி......
தமக்குக் குழந்தைகள் யாரும் இல்லாததால், தம் மனைவிக்குப் பிறகு தம்முடைய வீட்டை, இங்கே என்னைப் போன்றவர்களின் உயிரைக் காப்பதில் முனைந்திருக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தாருக்கு நன்கொடையாக வழங்கிவிட வேண்டும்.
ரொம்ப ரொம்பச்சரி...
ஊரிலிருக்கும் ரெண்டு ஏக்கர் நிலம் அம்மாவுக்கு, அதை வைத்துக் கொண்டு அவர்கள் தம் மருமகளிடமே இருந்தாலும் இருக்கலாம்; தம்பியின் வீட்டுக்குப் போனாலும் போகலாம்.
ரொம்ப ரொம்பச்சரி...
ஏறக்குறைய ஓர் உயிலைப் போல் இருக்கும் இந்தக் கடிதத்தை இத்துடன் முடித்திருக்கக் கூடாதோ, அவர்? இதற்குமேல்தான்......
கண்ணராவி, கண்ணராவி!
இதற்குத்தான் செய்து கொண்டிருந்த வேலையைக்கூட விட்டுவிட்டு, "சீனாக்காரனை விரட்டப் போகிறேன்!" என்று அவர் போனாரோ?
கடவுளே! அவருடைய நெற்றிப் பொட்டில் பாய்ந்த குண்டு என்னுடைய நெற்றிப் பொட்டிலும் பாய்ந்திருக்கக் கூடாதா? இப்படி எண்ணிக் கொண்டே அமுதா அடிமேல் அடி வைத்து சாளரத்தை நெருங்கியபோது "என்ன சேதி?" என்பதுபோல் நிலா அவளை எட்டிப் பார்த்தது.
முன்பொரு முறை இதே இடத்தில் இதே போன்றொரு நிலவு நாளில், "அமுதா! இந்த நிலவைப்போல் நானும் என்னுடைய வீரத்தால் உலகத்தில் என்றும் வாழ்வேன்!" என்று அவன் சூள் கொட்டிய விதம், நினைக்க நினைக்க அவள் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. "செத்த பிறகும் தாம் வாழவேண்டுமென்று அன்று நினைத்த புண்ணியாத்மாதான், உயிரோடிருக்கும்போதே இன்று நான் வாழக் கூடாது என்று நினைக்கிறார்! இல்லையென்றால் இந்தக் கடிதத்துக்கு வேறு என்ன அர்த்தமாம்? மோசம், ரொம்ப மோசம்! என்னைப்பற்றி இவ்வளவு இழிவான அபிப்பிராயமா கொண்டிருந்தார் அவர், இத்தனை நாளும்? வரட்டும்; கடவுள் அருளால் உடல் தேறி, உயிரும் தேறி அவர் இங்கே வரட்டும். அதுவரை இந்தக் கடிதம் என்னிடம் இருக்க வேண்டுமா, என்ன? வேண்டாம்; வேண்டவே வேண்டாம்!" என்று அவள் அதைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து கொண்டிருந்தபோது "நல்ல காரியம் செய்தாய் அமுதா, நல்ல காரியம் செய்தாய்!" என்று தன்னை யாரோ பாராட்டுவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். "என்னிடம் ஒன்று இருக்கும்போது, உன்னிடம் இன்னொன்று எதற்கு?" என்று சொல்லிக்கொண்டே கவிஞர் காஞ்சிவாணன் கடிதமும் கையுமாக அங்கே வந்து நின்றார்.
"நீங்களா!"
எதிர்பார்க்கப்பட்டவர்கள் என்றாலும் அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்கவில்லையாதலால், இந்தக் கேள்வி வியப்பின் மிகுதியால் அவளுடைய இதய அந்தரங்கத்திலிருந்து எழுவது போல் மெல்ல எழுந்தது.
உண்மை இதுதான் என்றாலும், கவிஞர் அந்தக் கண் கொண்டு அதை நோக்கவில்லை; அதற்கு மாறாகத் தமக்கே உரித்தான கற்பனைக் கண் கொண்டு நோக்கினார். அந்த நோக்கில் அது அன்னாருக்கு வேறு விதமான பொருளைக் கொடுக்கவே, "ஆம் அமுதா, நானேதான்!" என்றார் அவரும் அதே தொனியில்.
ஆனால், அதில் வியப்புத் தொனிக்கவில்லை. அதற்குப் பதிலாக தம்மையும் அறியாமல் தன் நோய்க்குக் காரணமாகிவிட்ட அவள் - அன்றே, அந்தக் கணமே அதற்கு மருந்தாகவும் ஆகிவிடுவாள் என்ற அவசர உணர்வுதான் தொனித்தது.
அவர் கண்ட இந்த ‘வள்ளுவன் வழி'யை உணராத அவளோ, "இந்த நேரத்திலா?" என்றாள் மீண்டும்.
"ஆம்; அம்மாகூடத் தூங்கிவிட்டார்களே, பார்க்கவில்லையா நீ? வா, என் அருகில் வா! இத்தனை நாளும் அந்தப் பாழும் நிலவு உன்னைச் சுட்டதெல்லாம் போதும், வா, என் அருகே வா!"
அவருடைய வேகம் அவருக்கு; அந்த வேகத்தை உணராத அவளோ, "நிலவு என்னைச் சுடவில்லை; நீங்கள் தான் என்னைச் சுடுகிறீர்கள்!" என்றாள் நிதானமாக.
"நானா, உன்னை சுடுகிறேனா இருக்காதே? இந்த நேரத்தில் உனக்கு நான் இளைப்பாறும் ஓடையாக இனிய நிழல் தரும் தருவாகவல்லவா தோன்ற வேண்டும்?"
"தோன்றும் தோன்றும், அதெல்லாம் உங்கள் கவிதையில் தோன்றும்; வாழ்க்கையில் தோன்றாது!"
"வாழ்க்கை வேறு; கவிதை வேறா என்ன?"
"ஆம், உண்மை வேறு; கற்பனை வேறு என்று இருப்பது போல வாழ்க்கை வேறு, கவிதை வேறுதான்!"
"அதெல்லாம் இந்தக் கடிதத்துக்கு முன்னால் உண்மையா யிருக்கலாம். இப்போது கணவன் காட்டிய வழியில் நிற்கக் கடமைப்பட்டவள் நீ; நண்பன் காட்டிய வழியில் நிற்கக் கடமைப்பட்டவன் நான்!"
"இருக்கலாம்; ஆனால் தமக்குப் பிறகு அல்லவா தாம் காட்டிய வழியில் அவர் நம்மை நிற்கச் சொல்லியிருக்கிறார். அதற்குள் அவசரப்படுகிறீர்களே, நீங்கள்! கிணற்றுத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப் போகிறது?"
"ஆஹா! இதைக் கொஞ்சம் இங்கிதமாக அப்போதே சொல்லியிருந்தால் எப்போதே நான் இந்த இடத்தை விட்டுப் போயிருப்பேனே?"
அவர் நழுவினார். அவளைக் கொஞ்சம் 'விட்டுப் பிடிக்கும்' நோக்கத்துடன். அவளோ, அவருடைய கையிலிலுள்ள கடிதத்தைத் தட்டிப் பறிக்கும் நோக்கத்துடன், "அந்தக் கடிதத்தை இப்படிக் கொடுங்கள்!" என்றாள். அதற்கென்றே தன் குரலை மீட்டிய வீணையாக்கி.
அவரா அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பார்? "இதில் மட்டும் அப்படி விசேஷமாக என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை; உனக்கு என்ன எழுதியிருக்கிறானோ, அதையேதான் இதிலும் எழுதியிருக்கிறானாம்" என்றார் அவர், தம் நடைக்குச் சற்றே வேகம் கொடுத்து.
★★★
மணவாழ்க்கையில் வெற்றி கண்டவர்களைவிட தோல்வி கண்டவர்கள் தான் உலகத்தில் அதிகமாக இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருவர் கவிஞர் காஞ்சிவாணன். 'முறைப் பெண்' என்பதற்காக அவர் பெற்றோர் 'காத்தாயி' என்னும் திருநாமம் பூண்ட. ஒரு கிராமத்துக் கட்டழகியை அவருடைய தலையிலே கட்டிவைக்க, அந்தக் கட்டழகி முதல் நாள் இரவு அவரைச்சந்தித்தபோது, "ஆமாம், நீங்கள் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா? இல்லே, கூத்தும் ஆடுவீர்களா?" என்று 'பிரேக் மாஸ்டர்' போல் ஓர் உரசு உரசிக்கொண்டே நீட்டி முழக்கிக் கேட்க, "அட, கர்மமே! ஒரு கவிஞனுக்கா இப்படி ஓர் அழகி?" என்று அடுத்த நாளே, 'கூறாமல் சந்நியாசம் கொண்டு' அந்த கிராமத்தை விட்டே ஓடி வந்துவிட்டார் அவர்!
வந்த இடத்தில்தான் ஆனந்தனின் சிநேகம் மட்டுமல்ல; அவன் மனைவி அமுதாவின் சிநேகமும் அவருக்குக் கிடைத்தது. அவன் அதுவரை "அண்ணா, அண்ணா!" என்று வளைய வந்தாலும் அவள் மட்டும் "உங்களுடைய கவிதையைத்தான் என்னால் ரஸிக்க முடிகிறது; உங்களை என்னால் ரஸிக்க முடியவில்லை!" என்று அவருக்கு நேராகவே சொல்லி விட்டாள். அதற்குக் காரணம், அந்த நாளிலேயே அவருக்குப் பிடிக்காமற்போன அந்தப் பார்வைதான்!
இந்த நிலையில்தான் கவிஞரின் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்டு விட்ட அவர் பெற்றோர், அவருடைய மனைவியை அழைத்துக் கொண்டு வந்து அவரிடம் விட, அவளைக் கண்டதும் ரவி வர்மா படத்தில் மேனகையுடன் காட்சியளிக்கும் விசுவாமித்திரரைப் போல் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க, "இங்கே பாருங்கள், இனிமேல் நீங்கள் கூத்தாட வேண்டாம்; பாட்டு மட்டும் பாடுங்கள், போதும்!" என்று கவிஞரது இல்லத்தரசி அவரைப் பிடித்து இழுக்க, "ஐயோ அண்ணி அவர் கூத்தாடி இல்லை; கவிஞர் அண்ணி கவிஞர்!" என்று ஆனந்தன் சொல்ல, அந்த வீடே சிரிப்பால் கலகலத்தது.
ஒன்றும் புரியாத காத்தாயி, "கவிஞரா" என்று மேலும் ஒரு வினா எழுப்ப, "ஆமாம், அண்ணி! உங்களுடைய முகம் இருக்கிறதே, முகம் - அதைக் 'கவிஞர் பாஷை'யில் என்னவென்று சொல்வார்கள் தெரியுமா? பூரண சந்திரனைப்போல் இருக்கிறது என்று சொல்வார்கள்!" என்று ஆனந்தன் கவிஞருக்குரிய லட்சணத்தைச் சற்றே விளக்க முயல, "பூரண சந்திரன் என்றால் அது பாதி மாதம் தேயும், பாதி மாதம் வளருமே! அப்படியா என் முகம் தேய்வதும் வளருவதுமாயிருக்கிறது?" என்று அவள் தன் முகவாய்க் கட்டையில் கையை வைத்துக் கேட்க, "ஐயோ, பாவம்! கிராமத்தில் உண்மையையே அனுபவித்து அனுபவித்துப் பழகிப்போன அவர்களுக்குப் பொய்யை அனுபவிக்கத் தெரியவில்லை போலிருக்கிறதே!" என்று அமுதா அனுதாபத்துடன் சொல்ல, "போச்சு, போச்சு, என் மானமே போச்சு!" என்று கவிஞர் காஞ்சிவாணன் கதற, "உங்கள் கவிதையை உங்களுடைய மனைவி அனுபவிக்காவிட்டால் என்ன அண்ணா, ஆயிரமாயிரம் மச்கள் அனுபவிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஆனந்தன் அவரை ஒருவாறு சமாதானம் செய்து வைத்ததோடு, தான் இருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலேயே அவர்கள் குடியிருக்க அவர்களுக்கென்று ஒரு தனி வீடும் பார்த்து வைத்தான்.
என்ன பார்த்த வைத்து என்ன பிரயோசனம்? - தன் தோட்டத்து மல்லிகை மணக்கவில்லை அவருக்கு; மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் மணத்தது. இதை அமுதா தான் உணர்ந்திருந்தாளே தவிர, ஆனந்தன் உணரவில்லை , உணர்ந்திருந்தால் சீனனை விரட்டுவதற்காக அவன் சீற: எழுந்து சென்ற போது தன் அம்மா மட்டும் தன்னுடைய மனைவிக்குத்துணையிருந்தால் போதாதென்று, கவிஞர் காஞ்சிவாணனையும் அவளுக்குத் துணையாக வைத்து விட்டுப் போவானா?
போனது தான் போனான்; வெற்றியுடன் திரும்பி வீடாவது வந்து சேர்ந்தானா? அதுவும் இல்லை; வீரமரணத்தை எதிர்பார்த்து ராணுவ மருத்துவ மனையில் தவம் கிடக்க ஆரம்பித்துவிட்டான்.
இந்தச் சமயத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன அதிசயம் என்றால், 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பார்களல்லவா? அதற்கு விரோதமாகக் கவிஞர் நடந்து கொண்டதால்தானோ என்னவோ, காத்தாயி கருவுற்றாள். மகப்பேறுக்காகப் பிறத்தகம் போன அவளோ, அந்தப் பேறை அடைவதற்கு முன்னாலேயே கண்ணை மூடிவிட்டாள். இந்தச் செய்தி ஆனந்தனின் காதுக்கு எட்டியதும், அவன் தன் ஆறாத் துயரை வெளியிட்டுக் கவிஞர் காஞ்சிவாணனுக்கு அங்கிருந்தபடியே ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தால் பெற்ற ஆறுதலைவிட, காத்தாயியின் மரணத்தால் பெற்ற ஆறுதல்தான் அவரைப் பொறுத்தவரை அதிகமாயிருந்தது என்றாலும், அந்த ஆறுதலைக் கொண்டு அமுதாவால் இழந்துவிட்ட அமைதியை அவரால் மீண்டும் பெற முடியவில்லை.
அதை எப்படிப் பெறுவது, எந்த வழியில் பெறுவது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த அந்தக் கடிதம் ஆனந்தனிடமிருந்து அவருக்கு வந்தது.
அதில் அவன் தன் 'சொத்தின் பரிவர்த்தனை'யைப் பற்றி மட்டும் எழுதவில்லை . தன் 'மனைவியின் பரிவர்த்தனை'யைப் பற்றியும் எழுதியிருந்தான். அதாவது, தனக்குப் பிறகு அமுதாவின் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாதென்றும், அரைகுறையான அவளுடைய வாழ்க்கையைப் பரிபூரணமாக்குவதற்காகக் கவிஞர் காஞ்சிவாணன் அவளை மறுமணம் செய்து கொள்ளவேண்டு மென்றும் அதில் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
இதை அவன் அவருக்கு மட்டும் எழுதவில்லை; அவளுக்கும் எழுதியிருந்தான். அதாவது கடிதம் ஒன்று, நகல்கள் இரண்டு - ஒன்று அவருக்கு; இன்னொன்று அவளுக்கு!
★★★
இந்த நிலையில் ஒருநாள் இரண்டு நாட்களாயின; ஒரு வாரம் இரண்டு வாரங்களாயின; ஒரு மாதம் இரண்டு மாதங்களாயின.
ஆனந்தனிடமிருந்து அதற்குமேல் ஒரு கடிதமும் வரவில்லை, கவிஞருக்கு.
ஒருவேளை இறந்து போயிருப்பானோ? இறந்திருந்தால் தந்தி வந்திருக்குமே, வீட்டுக்கு? இருக்காது......
ஒருவேளை பிழைத்துக் கொண்டிருப்பானோ? பிழைத்துக் கொண்டிருந்தால் கடிதமாவது, வராமற் போவதாவது?.......
அதற்காக அவன் இறக்க வேண்டுமென்று தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் அதற்காக அவன் இறந்துவிடுவானா?
தான் இறந்தாலும் தன் மனைவி வாழ வேண்டும் என்று நினைக்கும் அவன் தான் எவ்வளவு பெரியவன்! அவள் மேல் அவன் கொண்டிருக்கும் காதல் தான் எவ்வளவு பெரிது!
அவன்மேல் அவள் கொண்டிருக்கும் காதல் மட்டும் என்ன, சிறிதளவா இருக்கிறது? நீராயிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு போனால் நெருப்பாக அல்லவா இருக்கிறாள், அவள்?
இதன் முடிவு? அவனது முடிவு தெரியும் வரை இதன் முடிவு எங்கே, எப்படித் தெரியப் போகிறது?
எதற்கும் அந்த வீட்டுப் பக்கம் போய்ப் பார்ப்போமா? போனால் அவள் எப்படி வரவேற்பாளோ?
இப்படியெல்லாம் எண்ணிச் சிறிது நேரம் குழம்பிக் கொண்டிருந்த கவிஞர் காஞ்சிவாணன் கொஞ்சம் துணிந்து அந்த வீட்டுப் பக்கமாக அடி எடுத்து வைத்தார் - ஆசை முன்னால் தள்ள, அச்சம் பின்னால் இழுக்க.
என்ன ஆச்சரியம்! - கேட்டது மட்டுமல்ல; அவரை வரவேற்றதும் அந்த வீட்டு மூதாட்டியின் அலறல்தான்!
"என்னம்மா, என்ன நடந்தது?"
கேட்டார் கவிஞர்; "அவன் போய் விட்டான் என்று தந்தி வந்தது; அதைப் பார்த்ததும் 'ஆ!' என்றாள் இவள். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு பேச்சுமில்லை, மூச்சுமில்லை!" என்றாள் ஆனந்தனின் தாயார், வாடிய மலர்ச்சரம்போல் தன் மடியில் விழுந்து கிடந்த அமுதாவை அவருக்குச் சுட்டிக் காட்டி.
கவிஞர் பார்த்தார்; "நீ என் வாழ்வுக்குரியவள் அல்ல; வணக்கத்துக்குரியவள்!" என்று தன் கண் கலங்க அவள் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வெளியே நடந்தார்.
மூன்று பொம்மைகள்
"டேய், உன் அப்பாடா!" என்று தன் சகாக்களில் ஒருவன் தன்னை எச்சரித்ததுதான் தாமதம், அதுவரை கோலி விளையாடிக் கொண்டிருந்த குமார், தன் கையிலிருந்த குண்டைக் கீழே விட்டெறிந்துவிட்டு, விட்டான் சவாரி, வீட்டை நோக்கி.
வந்த வேகத்தோடு வேகமாகக் கை கால் முகத்தைக் கழுவிக் கொண்டு, நெற்றியில் மூன்று பட்டை. வீபூதியையும் மறக்காமல் அடித்துக் கொண்டு, புத்தகமும் கையுமாக விளக்கடியில் உட்கார்ந்துவிட்டான், படிக்க!
"காலை எழுந்தவுடன் படிப்பு.....மாலை முழுதும் விளையாட்டு!" என்றுதான் பாரதியார் கூடப் பாடியிருக்கிறார்; இந்த அப்பாவுக்கு என்னடா வென்றால், எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, படிப்புத்தான்!
இத்தனை மகிழ்ச்சியோடு தொடங்கியதிலிருந்து, தன் கணவர் ஆலாலசுந்தரம் தெரு முனையில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்ட அஞ்சுகம், அடுத்த வீட்டுக்காரியுடன் அளந்து கொண்டிருந்த வம்பை அத்துடன் நிறுத்திக்கொண்டு, அவசரம் அவசரமாக அடுக்களைக்குச் சென்றாள், காபியைப் போட!
இவையனைத்தும் தமக்குத் தெரிந்தும் தெரியாதவர் போல உள்ளே நுழைந்த ஆலாலசுந்தரத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல் தன் பாடத்தைப் படிக்கத் தொடங்கினான் பையன்:
"தீயாரைக் காண்பதும் தீதே - திருவற்ற
தீயார் சொல் கேட்பதும் தீதே!
தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே
அவரோடு இணங்கி இருப்பதும் தீது!"
இந்தப் பாட்டைக் கேட்டதுதான் தாமதம், "பலேடா பையா, பலே! நான் இந்தப் பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்ததற்கும், நீ அந்தப் பாட்டைப் பாடுவதற்கும் என்ன பொருத்தம், என்ன பொருத்தம்!" என்று சொல்லிக் கொண்டே தம் கையிலிருந்த மூன்று பொம்மைகளை மேசையின் மேல் வரிசையாக வைத்துவிட்டு, "பாரடா, பார்! நீ பாடிய பாட்டுக்கும் நான் வாங்கிக்கொண்டு வந்துள்ள பொம்மைகளுக்கும் என்ன பொருத்தம் என்பதை நீயே பார்!" என்றார் அப்பா.
பையன் பார்த்தான் - நகைச்சுவையோடு செய்யப்பட்டிருந்த அந்த மூன்று பொம்மைகளும் குரங்குப் பொம்மைகள் - முதல் குரங்கு கண்ணைப் பொத்திக் கொண்டு இருந்தது; இரண்டாவது குரங்கு காதைப் பொத்திக் கொண்டு இருந்தது; மூன்றாவது குரங்கு வாயைப் பொத்திக் கொண்டு இருந்தது!
"சரி, இப்போது நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டான் பையன் ஒன்றும் புரியாமல்.
"ஒன்றும் செய்ய வேண்டாம்; நீ அவற்றைப் பின்பற்றி நடந்தால் போதும்!" என்றார் அப்பா.
பையன் ஒருகணம் யோசித்தான்; மறுகணம் "முடியாது அப்பா, முடியாது; அவற்றைப் பின்பற்றி நடக்க என்னால் முடியாது!" என்றான் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டே.
"ஏண்டா , முடியாது?"
"மொத்தம் ஆறு கைகள் அல்லவா அதற்கு வேண்டி யிருக்கின்றன? எனக்கு இருப்பதே இரண்டே இரண்டு கைகள்தானே, அப்பா? - வேண்டுமானால் என்னுடைய கைகளால் நான் கண்ணைப் பொத்திக் கொண்டு விடுகிறேன்; உங்களுடைய கைகளால் என் காதைப் பொத்துங்கள்; அம்மா தன்னுடைய கைகளால் என் வாயைப் பொத்தட்டும்!"
"பொத்துவேண்டா, பொத்துவேன்! அதைவிட வேறு என்ன வேலை, எனக்கு?" என்று சொல்லிக் கொண்டே அந்தச் சமயத்தில் அங்கே வந்த அஞ்சுகம், கையிலிருந்த காபியை மேசையின்மேல் வைத்துவிட்டுத் திரும்பினாள்.
"அவள் வாயைப் பொத்திக் கொள்வதற்கே அவளுடைய கைகள் போதாதேடா! உன் வாயைப் பொத்த அவள் கைகளுக்கு எங்கே போவாள்?" என்றார் ஆலாலசுந்தரம்.
"அப்படியானால் முடியாது, அப்பா! என்னால் அந்தப் பொம்மைகளைப் பின்பற்ற முடியவே முடியாது!" என்றான்பையன், அழுத்தந்திருத்தமாக.
"போடா முட்டாள்! அந்தப் பொம்மைகளைப் பின்பற்ற ஆறு கைகள் என்னத்துக்கு, அறிவிருந்தால் போதாதா? - இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல், முதல் பொம்மை என்ன சொல்கிறது?" என்று கேட்டார் அவர்.
"கண்ணைப் பொத்திக்கொள்ளச் சொல்கிறது!" என்றான் அவன்.
"நாசமாய்ப் போச்சு! இப்போது நீ படித்தாயே, 'தீயாரைக் காண்பதும் தீதே!' என்று - அதைச் சொல்லாமல் சொல்லவில்லையா, அந்த பொம்மை?"
"ஆமாம்ப்பா, அதைத்தான் சொல்கிறது போலிருக்கிறது!"
"சரி, இரண்டாவது பொம்மை என்ன சொல்கிறது?"
"காதைப் பொத்திக் கொண்டு இருக்கிறதே, அந்தப் பொம்மைதானே? 'தீயார் சொல் கேட்பதும் தீதே!' என்று சொல்கிறது!"
"மூன்றாவது பொம்மை?"
"வாயைப் பொத்திக் கொண்டு இருப்பதுதானே? 'தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே!' என்று சொல்கிறது!"
"பலேடா, பையா, பலே! இந்த மூன்று தத்துவங்களை மட்டும் நீ வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தால் போதும் - அவற்றால் உனக்கும் நல்லது; இந்த உலகத்துக்கும் நல்லது! - என்ன புரிந்ததா?" என்றார் தகப்பனார், அவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே.
"புரிந்தது அப்பா!" என்றான் மகன்.
மறுநாள் காலை; செலவுக்குப் பணம் எடுப்பதற்காக அலமாரியைத் திறக்கப் போன அஞ்சுகம், "ஐயோ!" என்று அலறினாள்.
"என்ன, என்ன நடந்தது!" என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே வந்தார், ஆலாலசுந்தரம்.
"போச்சு, எல்லாம் போச்சு!" என்றாள் அவள்.
"என்ன போச்சு, எது போச்சு? சொல்லித் தொலையேன்!" என்றார் அவர்.
"நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இந்த மாதச் சம்பளம், என்னுடைய தங்கச் சங்கிலி, வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே போச்சு யாரோ ஒரு திருடன் ராத்திரி வந்து பூட்டை உடைத்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போயிருக்கிறான்!"
"அட., பாவி! வீட்டில் இத்தனை பேர் இருந்தும் அவன் வரும்போது ஒருவர் கூடவா விழித்துக் கொள்ளவில்லை?"
"ஏன் விழித்துக் கொள்ளவில்லை, நான் விழித்துக் கொண்டேனே!" என்றான் பையன்.
"உண்மையாகவா?" என்றார் அப்பா.
"ஆமாம்ப்பா ! திருடனும் தீயோன்தானே, அவனைக் கண்டதும் நான் கண்ணை மூடிக் கொண்டு விட்டேன்!"
"அப்புறம்?"
"அவன், 'கத்தினால் கழுத்தை நெரித்துவிடுவேன்!' என்றான்; தீயோன் சொல்லைக் கேட்கலாமா? கேட்டவரை போதுமென்று காதைப் பொத்திக் கொண்டு விட்டேன்!"
"அட, கடவுளே! இதையெல்லாம் ராத்திரியே நீ ஏண்டா என்னிடம் சொல்லவில்லை?"
"சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் 'தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே!' என்று மூன்றாவது பொம்மை சொன்னதால் வாயையும் பொத்திக் கொண்டு விட்டேன், அப்பா! என்றான் பையன்!
சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்
மொட்டை மாடியிலே காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்து, "ஓர் ஊரிலே ஓர் ராஜாவாம்..." என்று ஆரம்பிப்பாள் பாட்டி. அவள் நீட்டி காலில் படுத்தபடி, வானத்திலிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே "ம்" என்பான் பேரன்.
"அந்த ராஜா ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப் போனானாம்..."
"ம்"
"அந்தக் காட்டிலே ஒரு பறக்கும் குதிரை மேய்ந்து கொண்டிருந்ததாம்..."
"பறக்கும் குதிரையா அது எப்படி இருக்கும் பாட்டி?"
"அது சாதாரணக் குதிரையைப்போலத்தான் இருக்கும். ஆனால், அதன் முதுகிலே பறவைகளுக்கு இருப்பதைப் போல இரண்டு இறக்கைகள் முளைத்திருக்கும்!"
"அதிசயமான குதிரையாயிருக்கிறதே!...அப்புறம்?"
"அந்தக் குதிரையின் மேல் ஆசைப்பட்ட ராஜா, அதை அம்பெய்து கொல்லாமல் அப்படியே வலை வீசிப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டானாம்....."
"வந்து.....?"
"அதை ஒர் அழகான கூண்டிலே அடைத்து வைத்து, அதைப் பராமரிப்பதற்கென்றே ஒர் ஆளையும் போட்டு வைத்தானாம்...."
"பாவம் ஏண்டா அகப்பட்டுக் கொண்டோம்? என்று இருந்திருக்கும் அதற்கு!"
"அகப்பட்டுக் கொண்ட பிறகு அதைப் பற்றி யோசித்து என்ன பிரயோசனம்? - நீ கதையைக் கேளு! - ஒருநாள் அந்த அதிசயக் குதிரையைப் பார்த்துவிட்டுப் போவதற்காக ராஜகுமாரி வந்தாளாம். அப்போது அந்தப் பொல்லாத குதிரை என்ன செய்ததாம், தெரியுமா? அவள் முந்தானையைத் தன் வாயால் கவ்விப் பிடித்து இழு, இழு’ என்று இழுத்ததாம்....."
"பயந்து போனாளா, ராஜகுமாரி....?"
"இல்லை புலி, சிங்கமா பயப்பட? குதிரைதானே!" என்று ‘விடுவிடு என் முந்தானையை விடு!' என்று தன் முன்தானையைப் பிடித்து இழுத்தாளாம் அவள். அதுவோ, 'விடமாட்டேன், விடமாட்டேன்' என்பதுபோல் தலையைத் தலையை ஆட்டிற்றாம். 'இதென்ன வம்பு?' என்று ராஜகுமாரி தன் தோழியைப் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே, 'குதிரை ராஜா, குதிரை ராஜா! பொன்னான முந்தானையை விட்டுவிடு; இந்தப் பெண்ணை உனக்கே கல்யாணம் செய்து கொடுக்கிறேன்!' என்றாளாம் வேடிக்கையாக. அவ்வளவுதான்; குதிரை அவளுடைய முந்தானையை விட்டு விட்டு, 'கக்கக்கக்கா' என்ற ஒரு கனைப்புக் கனைத்ததாம்....!"
"மனிதனா சிரிப்பதற்கு? குதிரையாயிருக்கவே கனைத்த தாக்கும்! அப்புறம்.....?"
"தப்பினோம், பிழைத்தோம் என்று அரண்மனைக்கு வந்து சேர்ந்தாளாம் ராஜகுமாரி. அன்றிலிருந்து அந்தச் சமர்த்துக் குதிரை என்ன செய்ததாம், தெரியுமா? - கொள்ளும் தின்னாமல், புல்லும் தின்னாமல் எப்பொழுது பார்த்தாலும் ஒரே ஏக்கமாயிருந்ததாம்...."
"ஏக்கமா! அது என்ன ஏக்கம் பாட்டி, அப்படிப்பட்ட ஏக்கம்...?"
"அதுதான் தெரியவில்லை, ராஜாவுக்கு! ஒரு வேளை கூண்டில் அடைத்து வைத்திருப்பதால் அப்படி இருக்கிறதோ, என்னமோ என்று அதை உடனே அவன் திறந்து விடச் சொன்னானம். அப்போது தான் எதிர்பார்த்தபடி அது வெளியே பறந்து போகாமல் ராஜகுமாரிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு அவள் முந்தானையைக் கவ்விக் கவ்வி இழுத்ததாம். ஒன்றும் புரியாத ராஜா, 'என்ன விஷயம்?' என்று கேட்க, தோழி நடந்ததைச் சொன்னாளாம். 'அப்படியா சமாசாரம்?' என்று அந்த அசட்டு ராஜா, தன் அருமை மகளைத் தன்னுடைய ஆசைக்குதிரைக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டானாம்......!"
"அட, பாவி! அழவில்லையா ராஜகுமாரி...?"
"அழாமல் சிரிப்பாளா என்ன? அழுதாளாம், அழுதாளாம், அப்படி அழுதாளாம் அவள்! ஒரு நாள் குறிசொல்ல வந்த குறத்தி ஒருத்தி, 'ஏன் அழுகிறாய், பெண்ணே ?' என்று அவளைக் கேட்க, விஷயத்தைச் சொன்னாளாம் ராஜகுமாரி. 'அப்படியா சமாசாரம்? அதற்காக நீ அழாதே! நான் சொல்கிறபடி செய்; எல்லாம் சரியாய்ப்
வி.க. -39 போய்விடும்' என்று அவள் தன் பையைத் திறந்து ஏதோ ஒரு பொடியை எடுத்துக் கொடுத்து, 'ஒரு தட்டு நிறைய நெருப்பை அள்ளிக் கொள்; அந்த நெருப்பில் இந்தப் பொடியைப் போடு, குபுகுபு வென்று புகை வரும், அந்தப் புகையைக் குதிரைக்குக் காட்டு; ராஜகுமாரனாகி விடும்!' என்று சொல்லிவிட்டுப் போனாளாம். அவள் சொன்னபடியே ராஜகுமாரி செய்ய, குதிரை அழகான ராஜகுமாரனாகி விட்டதாம்....!"
"ரொம்ப சந்தோஷமாயிருந்திருக்குமே, ராஜகுமாரிக்கு...?"
"அதுதான் இல்லை; அந்த ராஜகுமாரன் என்ன சொன்னானாம், தெரியுமா? 'ஐயோ பெண்ணே, மோசம் போனாயா!' என்றானாம். 'எது மோசம் குதிரையாயிருந்த உங்களை ராஜகுமாரனாக்கியதா மோசம்?' என்று திடுக்கிட்டுக் கேட்டாளாம் ராஜகுமாரி. 'ஆமாம் பெண்ணே , ஆமாம். குதிரையாயிருந்தாலும் நான் எப்போதும் உன்னுடன் இருந்து கொண்டிருப்பேன், இனி அப்படி இருக்க முடியாது, என்னால்!' என்றானாம் அவன், 'ஏன்?' என்று கேட்டாளாம் அவள், 'பொறுத்திருந்து பார்!' என்று அவன் சொல்ல 'இதென்ன தொல்லை?' என்று அவள் அன்றிரவு பூராவும் தூக்கம் பிடிக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாளாம். மறுநாள் பொழுது விடிந்ததும் அந்தக் குறத்தி வந்து "என்ன, ராஜகுமாரி! எப்படி இருக்கிறான் ராஜகுமாரன்?" என்று அவளை விசாரித்தாளாம். அவன் சொன்னதை அவளிடம் சொன்னாளாம் ராஜகுமாரி. 'கவலைப்படாதே! உன்னுடைய பெயர் என்ன என்று நீ அவனைக் கேள்; அதைச் சொன்னதும் அவன் அப்படிப் பிதற்றுவதையெல்லாம் விட்டு விட்டு உன்னுடன் சந்தோஷமாக இருப்பான்!" என்று சொல்லிவிட்டுப் போனாளாம் குறத்தி. அவள் சொன்னபடியே அன்று மாலை நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, 'உங்களுடைய பெயர் என்ன?' என்று பேச்சோடு பேச்சாக ராஜகுமாரனைக் கேட்டாளாம், ராஜகுமாரி. 'அதை மட்டும் கேட்காதே; என்னை நீ இன்றே இழந்து விடுவாய்!' என்று அவன் அவளை எச்சரித்தானாம். அவன் சொன்னதை அவள் கேட்டிருக்கக் கூடாதா? - அதுதான் இல்லை; 'சொன்னால்தான் ஆச்சு!' என்று ஒரே பிடிவாதம் பிடித்தாளாம். 'சரி நடப்பது நடக்கட்டும்' என்று அந்த ராஜகுமாரன் 'என் பெயர் ஜம்பு ராஜா!' என்று சொல்லி விட்டானாம் - அவ்வளவுதான்; பரியாயிருந்த அவன் உடனே நரியாகி, ஊளையிட்டுக் கொண்டே ஓடினானாம், காட்டுக்கு! - அங்கே போய்ப் பார்த்தால் அந்த நரியுடன் விளையாடிக் கொண்டிருந்தது யார் என்கிறாய்? ராஜகுமாரிக்குக் குறி சொல்ல வந்த குறத்தி....!" கதை இப்படியாகப் போய்க்கொண்டே இருக்கும்; அவ்வளவு சீக்கிரம் முடியாது -அதற்காகத் தூக்கம் வராமல் இருக்குமா, என்ன? - வந்துவிடும்; இருவரும் தூங்கிவிடுவார்கள்!
இந்த வழக்கத்துக்கு விரோதமாக ஒரு நாள் இரவு பாட்டியைக் காணவில்லை - எப்படி இருக்கும், பேரனுக்கு? 'எங்கே போயிருப்பாள்?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு வெளியே வந்தான். அங்கே அவனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்த அவனுடைய அம்மா,"'மணி எட்டு அடிக்கப் போகிறது, உன் அப்பாவை இன்னும் காணோமேடா!" என்றாள்.
"அவர் எங்கே இப்போது வரப்போகிறார்? எனக்கு இருப்பது போல் அவருக்கும் ஓர் அப்பா இருந்தால் அவர் நேரத்தோடு வீட்டுக்கு வருவார்! அது தான் இல்லையே? அவர் எப்போது வந்தால் என்ன, அவரை யார் திட்டப் போகிறார்கள், அவரை யார் அடிக்கப் போகிறார்கள்?" என்றான் பையன்.
"உனக்கு அப்பா மட்டுமா இருக்கிறார்? அம்மாவும் இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே!" என்று 'மாதிரி'க்கு அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அம்மா.
"அப்பாவுக்கு மட்டும் இல்லையா, அம்மா? அந்த அம்மாவுக்கு அப்பா எங்கே பயப்படுகிறார்? அதற்கும் பதிலாக அவளல்லவா அவருக்குப் பயப்படுகிறாள்!"
"கவலைப்படாதே, நீயும் பெரியவனானால் உன் அம்மா உனக்குப் பயப்படுவாள்!"
"அப்பா?"
"அவரும்தான்!"
பையன் பெருமூச்சு விட்டான். "ஏண்டா, பெருமூச்சு விடுகிறாய்?" என்று கேட்டாள் அம்மா.
"இருவரும் இப்போதே எனக்குப் பயப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றான் பையன்.
அம்மா சிரித்தாள்; "ஏன் அம்மா, சிரிக்கிறாய்?" என்று கேட்டான் அவன்.
"ஒன்றுமில்லை; நீ போய்த் தூங்கு!" என்றாள் அவள்.
"ஊஹும்; நான் தூங்க மாட்டேன்"
"ஏனாம்?" 612 "பாட்டி வரட்டும்!"
"அவள் எங்கே வரப் போகிறாள், இப்போது?"
"ஏன், வர மாட்டாளா?"
"ஊஹும், அவள் கதை கேட்கப் போயிருக்கிறாள், கதை!"
"கதையா, பாட்டியா! - ஆச்சரியம் தாங்கவில்லை, பையனுக்கு - தனக்குக் கதைமேல் கதையாகச் சொல்லும் பாட்டி, கதை கேட்கப் போயிருக்கிறாள் என்றால்? அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை, அவனால் - "நிஜமாகவா?" என்று மறுபடியும் கேட்டான்.
"ஆமாண்டா, ஆமாம். தெருவில் யாரோ ஒரு பௌராணிகர் ராமாயணம் சொல்கிறாரே, உனக்குத் தெரியாதா? அதற்குத் தான் போயிருக்கிறாள் அவள்!"
"நானும் அங்கே போகட்டுமா, அம்மா?"
"போனால் அவ்வளவுதான்; காலை ஒடித்துவிடுவார், உன் அப்பா!"
"நீ காதைத் திருகி எடுத்துக் கொண்டு விடுவாய்; அப்பா காலை ஒடித்துக் கொண்டு விடுவார்! இப்படியே ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு போனால் கடைசியில் நான் என்னதான் ஆவதாம்?"
அம்மா சிரித்தாள்; பையனோ அழுதான், பாட்டியிடம் போக முடியவில்லை என்று!
இந்தச் சமயத்தில் ஒரு கையிலே 'ரோஜாப்பூ மாலை' கனக்க, இன்னொரு கையிலே 'சிறுகதை மன்னர், செல்வராஜா!' என்று ஆரம்பமாகும் 'வாழ்த்து மடல்' பொன்னொழுத்திலே ஜொலிக்க, 'இரவல் காரி'லிருந்து இறங்கிய அவன் அப்பா 'ஏண்டா அழுகிறாய்?' என்று கேட்டார் தம்முடைய மகனை அன்போடு அணைத்தபடி.
அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், "அவனுக்கு என்ன வேலை? பாட்டி இல்லையாம் கதை சொல்ல; நீங்க வாங்க, சாப்பிட" என்றாள் அவனுடைய அம்மா குறுக்கிட்டு.
"அவ்வளவுதானே? இதோ நானே சாப்பிட்டு விட்டு வந்துவிடுகிறேன் - உனக்குக் கதை சொல்ல!" என்றார் அப்பா.
அவ்வளவுதான்; பையனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. இத்தனை நாளும் ஏதும் அறியாத பாட்டியிடம் கதை கேட்டுக் கொண்டு வந்த அவனுக்கு இன்று சிறுகதை மன்னன் செல்வராஜனே கதை சொல்வதென்றால்? - குதிகுதியென்று குதித்தான்.
அதற்குள் சாப்பிட்டுவிட்டு வந்த அவன் அப்பா, "மாடிக்குப் போவோமா?" என்றார் அவனிடம்.
"வேண்டாம், ஊஞ்சலிலேயே உட்கார்ந்து கொள்வோம்" என்றான் அவன், அப்பாவின் கால்கள் தனக்குப் படுக்கவா பயன்படப் போகின்றன என்ற எண்ணத்தில்.
"சரி!" என்று ஊஞ்சலிலேயே உட்கார்ந்த சிறுகதை மன்னர், தம்முடைய செல்வத்தைத் தூக்கித் தமக்குப் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொண்டு கதையை ஆரம்பித்தார், கம்பீரமாக.
"அந்தி வானம் செக்கச் செவேரென்று இருந்தது - தீ, தீ! வானமெங்கும் செந்தீ.....!"
"வானத்திலாவது, தீயாவது! என்னப்பா இது? சுத்தப் பேத்தலாயிருக்கிறதே?" என்றான் பையன், ஏமாற்றத்துடன்.
'"தீ என்றால் தீ இல்லை ; அந்தி நேரத்தில் வானம் செந்நிறமாக இருக்கிறதல்லவா, அதைச் சொல்கிறேன்" என்றார் அப்பா, அசடு வழிய.
"ஓஹோ , அப்புறம்?"
"அந்த நேரத்தில் பறவையினங்கள் 'கா, கூ' என்று கத்தியதுகூட, 'தீ,தீ!' என்று கத்துவது போலிருந்தது...!"
"அட, பாவமே! தீயணைக்கும் படையினர்கூட அதைத் தீயென்று நினைத்து, உடனே மோட்டார், பம்பு செட்டுகளுடன் கிளம்பிவிட்டார்களா, என்ன?"
"இல்லைடா, இல்லை; பறவைகள் மட்டும்தான் அப்படி நினைத்தன..."
"நல்ல வேளை, அப்புறம்?"
"சற்றுத் தூரத்திலிருந்த சாமுண்டீஸ்வரி கோயில் மணி ‘ஓம், ஓம்' என்று ஒலித்தது, சந்தியா காலப் பூஜையை அறிவிக்க. அர்ச்சகர்கள் ‘அம்மன்' மேல் ஒரு கண்ணும், அம்மனுக்கு அர்ச்சனை செய்யவரும் 'அம்மாக்கள் கொடுக்கும் தட்சணையின் மேல் இன்னொரு கண்ணுமாகத் தங்கள் பூஜையை ஆரம்பித்தனர். அன்று வெள்ளிக் கிழமையாக இருந்ததால் கோயில் வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரர்களுக்குக்கூட நல்ல வரும்படி..."
"அவர்களுக்கு மட்டுமா? வெற்றிலை, பாக்கு வாலா, தேங்காய் வாலா, பழம் வாலா, பூ வாலா, ஐஸ்கிரீம் வாலா, மிட்டாய் வாலா, பட்டாணி வாலா, வேர்க்கடலை வாலா - இவர்களையெல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டான் பையன்.
"விடுவேனா? கொஞ்சம் பொறு! அவர்களில் ஒருவரைக்கூட விடாமல் உன்னுடைய கண் முன்னால் அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறேன்" என்றார் அப்பா.
"ஐயோ, வேண்டாம்ப்பா! இப்போதே என் தலையை வலிக்கிறது; நீங்கள் அவர்களை விடாவிட்டால் நான் உங்களை விட்டுவிடுவேன்" என்று மிரட்டினான் செல்வம்.
சிறுகதை மன்னர் என்ன செய்வார், பாவம்! அவனுடைய விருப்பம் போல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு "அதோ வருகிறாள் பார், ஒருத்தி" என்று தம் கதையின் அடுத்த பகுதிக்குத் தாவினார்.
அப்போதாவது செல்வம் அவரை விட்டானா? - இல்லை "எங்கே வருகிறாள், அப்பா?" என்று தெருவை எட்டிப்பார்த்தான்.
"தெருவில் வரவில்லையடா, கதையில் வருகிறாள்?" என்றார் அவர்.
"சரி, வரட்டும் - அப்புறம்?" என்றான் அவன்.
"அள்ளிச் செருகிய கூந்தலிலே கிள்ளி வைத்த ரோஜா, "இதோ நானும் இருக்கிறேன்!" என்று எட்டிப் பார்க்க, நெற்றியிலே கற்பூரப் புகைக்கு மேல் வைத்திருக்கும் குங்குமப் பொட்டு, 'நானும் தி.மு.க. வாக்கும்!' என்று சொல்லாமல் சொல்ல, கண்களிலே இட்ட மை கரைந்து..."
சிறுகதை மன்னர் தம்முடைய . 'படப்பிடிப்'பை முடிக்கவில்லை; அதற்குள் பாட்டி வந்துவிடவே, "நான் வருகிறேன் அப்பா உங்கள் கதாநாயகியை விட பாட்டியின் கதாநாயகியைத்தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. ஏனெனில் வானம் பற்றி எரிந்த பிறகு, பறவைகள் பார்த்துப் பயந்த பிறகு, கோயில் மணி அடித்த பிறகு, குருக்கள் பூஜை செய்த பிறகு, பிச்சைக்காரர்கள் கூட்டம் கூடிய பிறகு அவள் வந்து என் பொறுமையைச் சோதிப்பதில்லை; எடுத்த எடுப்பிலேயே வந்துவிடுகிறாள் - கதை கேட்பவர்களின் நேரமும் பொன்னான நேரந்தான் என்று மதித்து!" என்று சுடச்சுடச் சொல்லிவிட்டு எழுந்தான் செல்வம்.
கூலி வேண்டுமா, கூலி?
"டாக்ஸி! ஏ, டாக்ஸி!"
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் நின்று, அங்கே 'விர், விர்'ரென்று வருவதும் போவதுமாயிருந்த டாக்ஸிக்காரர்களைக் கை தட்டி அழைத்து அழைத்து அலுத்துப் போய்விட்டது அரசுக்கு.
தப்பித் தவறி ஓரிருவர் நின்றாலும் சும்மாவா நிற்கிறார்கள்? - 'எங்கே போக வேண்டும்?' என்று கேட்கிறார்கள். அடுத்தாற் போலிருக்கும் ஏதாவது ஓர் ஓட்டலின் பெயரைச் சொன்னால் அந்தக் கிராக்கி 'சப்'பென்று போய்விடுகிறது. அவர்களுக்கு, மினிமம் சார்ஜ் எட்டணா என்று வைத்தாலும் வைத்தான், ரிக்ஷாக்காரனின் பிழைப்பைவிடக் கேவலமாகிவிட்டது, டாக்ஸிக்காரனின் பிழைப்பு! பெட்டி, படுக்கையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு நடையைக் கட்ட வேண்டிய பயல்களெல்லாம்கூட 'டாக்ஸி! ஏ, டாக்ஸி!' என்று கத்த ஆரம்பித்து விடுகிறார்கள்!' என்று முணுமுணுத்துக்கொண்டே போய்விடுகிறார்கள்.
என்ன செய்வான், அரசு? - இருபத்தோராவது தடவையாக எழும்பூர் ஸ்டேஷன் கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் - மணி ஒன்பது!
'இண்டர்வியூ'க்காகத் தன்னை அழைத்திருப்பவர்கள் காலை பதினோரு மணிக்கல்லவா, வந்து தங்களைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்? மணி இப்போதே ஒன்பது என்றால் எப்போது ஓட்டலுக்குப் போய்ச் சேருவது? எப்போது குளிப்பது? எப்போது சாப்பிடுவது? எப்போது போய் அவர்களைப் பார்ப்பது?
இந்தக் காலத்தில் வேலை கிடைப்பது 'குதிரைக் கொம்பா' யிருக்கிறதென்றால், அதற்கான பேட்டி கிடைப்பது முயற் கொம்பாகவல்லவா இருக்கிறது? அந்த முயற் கொம்புக்கே இந்தப் பாடு என்றால், குதிரைக் கொம்புக்கு இன்னும் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ?
டாக்ஸிக்காரர்கள் சொல்வதுபோல நடையைக் கட்டி விட்டால் என்ன? - கட்டிவிடலாம்தான்; ஆனால் ரிக்ஷாக்காரனுக்கும் டாக்ஸிக்காரனுக்கும் இடையே நின்று ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் அந்த எட்டணா அந்தஸ்து, தனக்கும் தன் சமூகத்திற்கும் இடையேயுமல்லவா நின்று தொலைக்கிறது?
அதனாலென்ன, இது அயலூர்தானே? இங்கே யார் தன்னைக் கவனிக்கப் போகிறார்கள்? - படுக்கையைத் தூக்கித் தோளின்மேல் வைத்துக்கொண்டு, பெட்டியை எடுத்தான் நடக்க!
இரண்டடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம்-இந்தக் கால்கள் ஏன் இப்படிப் பின்னுகின்றன?- தோள்தான் கனக்கிறது, படுக்கையைச் சுமப்பதால்; கைதான் வலிக்கிறது, பெட்டி தன்னை இழுப்பதால் - இந்தக் கால்கள் எதைச் சுமக்கின்றன? ஏன் இப்படிப் பின்னுகின்றன?
அதைப் பற்றி யோசிக்கும் அளவுக்குக்கூட அவனை விடவில்லை, அவனுடைய கால்கள் - ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ‘நடந்தா போகப் போகிறாய், நடந்து!' என்று சொல்லாமல் சொல்லி அவனைக் கீழே தள்ளிவிட்டுச் சிரிக்காமல் சிரித்தன!
"நல்ல யோசனைதான், சாமி! பெட்டி, படுக்கையை மேலே போட்டுக்கொண்டு விழாமல், கீழே போட்டுவிட்டு விழுந்தீர்களே? நல்ல யோசனைதான், சாமி!" என்று அவனைப் பாராட்டினான் ஒரு ரிஷாவாலா.
"இல்லேன்னா, சாமியின் மூஞ்சி சைனாக்காரன் மூஞ்சியாப் போயிருக்காதா?" என்றான் இன்னொரு ரிஷாவாலா.
"விழவே விழுந்தாரு; அந்தப் பிள்ளையார் கோயில் பக்கமாப் பார்த்து விழுந்திருக்கக் கூடாதா? போற வழிக்காச்சும் புண்ணியம் கிட்டியிருக்கும்!" என்றான் அவன்.
"இப்போ மட்டும் என்னவாம்? எழுந்ததும் மூணு சுத்துச் சுத்தி, மூணு குட்டுக் குட்டிகிட்டாப் போச்சு!" என்றான் இவன்.
'பழி தீர்த்துக் கொள்கிறார்கள்; தங்களைக் கூப்பிட வில்லை என்பதற்காக இவர்கள் தன்னைக் கேலி செய்து பழி தீர்த்துக் கொள்கிறார்கள்!' என்று முனகிக் கொண்டே எழுந்தான் அரசு.
பேசாமல் இவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் என்ன? - அதற்கும் குறுக்கே நின்றது மனிதாபிமானம்
என்ன மனிதாபிமானம் வேண்டிக் கிடக்கிறது, இதற்கு மட்டும்? ஒருவேளை உணவுக்குக் கூட வழியின்றி எத்தனையோ பேர் பட்டினியாயிருக்க, தான் மட்டும் நாள் தவறாமல் நாலு வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வில்லையா? அப்போது எங்கே போய் ஒளிந்து கொள்கிறது, இந்த மனிதாபிமானம்?
பார்க்கப் போனால், அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பதுதானா மனிதாபிமானம்? வேலை கொடுப்பது மனிதாபிமானம் இல்லையா?
ஏன் இந்தக் குழப்பம்?-இவர்களில் ஒருவனைப் பிடிப்பதற்குப் பதிலாக யாராவது ஒரு ஸைக்கின் ரிக்ஷாக்காரனைப் பிடித்துக்கொண்டு விட்டால்?- தேவைக்குத் தேவையும் தீரும்; மனிதாபிமானத்துக்கு மனிதாபிமானமும் பிழைக்கும்!
சுற்று முற்றும் பார்த்தான் அரசு; குறிப்பறிந்து ஸைக்கிள் ரிக்ஷாக்காரன் ஒருவன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
"ஹால்ஸ் ரோடுக்கு வருகிறாயா?"
"இந்த மூலையிலா, அந்தக் கடைசியிலா?"
"இந்த மூலையிலேதான்!"
"ஒரு ரூவா கொடுப்பியா?"
"பக்கத்தில்தானே இருக்கிறது, அதற்குப் போய் ஒரு ரூபா கேட்கிறாயே?"
"பக்கத்தில் உன் பெண்டாட்டிதான் இருப்பா; ஹால்ஸ் ரோடு இருக்காது - போய்யா, போ!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.
மேலே என்ன. செய்வதென்று தோன்றவில்லை, அரசுக்கு-இருபத்திரண்டாவது தடவையாக எழும்பூர் ஸ்டேஷன் கடிகாரத்தை எட்டிப் பார்த்தான்; மணி ஒன்பதரை!
இந்தச் சமயத்தில், 'எங்கள் உதவி உங்களுக்குத் தேவையா?' என்று கேட்டுக் கொண்டே யாராவது ஒரு போலீஸ்காரன் தனக்கு உதவ முன்வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
இப்படி நினைத்தானோ இல்லையோ, அவனுக்கு எதிர்த்தாற் போல் ஒரு போலீஸ்காரர் வந்தேவிட்டார்!
ஆனால்........
"அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாதே!" என்று அவனுடைய 'அதிகப் பிரசங்கி'த்தனத்துக்கு அப்பொழுதே ஓர் அணையிட்டு வைத்தான் அரசு.
★★★
தான் தங்க விரும்பிய ஓட்டலை அடைந்ததும் அரசு நாலணாவை எடுத்து, "இந்தா, இதை வைத்துக்கொள்!" என்றான், பெருமாளிடம். அவ்வளவுதான்; "வெச்சிக்கோ , நீயே வெச்சிக்கோ!" என்று எடுக்கும்போதே ஏக வசனத்தில் ஆரம்பித்தான் பெருமாள்.
"ரொம்ப தாங்ஸ்!" என்று சொல்லிக்கொண்டே, எடுத்த நாலணாவை மறுபடியும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான் அரசு.
"இதுக்குத்தான் கோட்டு, கீட்டெல்லாம் போட்டு கிட்டு வந்தியா?" என்று பெருமாள் தன் 'விஸ்வரூபத்தை எடுத்தான்.
"எதற்கு?" என்று கேட்டான் அரசு.
"எதுக்கா, கூலிக்காரனை ஏமாத்தறதுக்கு!"
"நானா உன்னை ஏமாற்றப் பார்க்கிறேன்? நீதான் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்!"
"ஐயோ பாவம், பச்சைக் கொழந்தை இவரு! வாயிலே வெரலை வெச்சாக்கூடக் கடிக்கத் தெரியாது போல இருக்கு? வேணும்னா வெச்சிப் பார்க்கட்டுமா?" என்று பெருமாள் அவன் வாய்க்குள் விரலை வைக்கப் போனான்.
"ஏய், எட்டி நில்!" என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளினான் அரசு.
பெருமாள் தட்டுத் தடுமாறி நின்று, "வ!!, வஸ்தாத்! ஓட்டல்லே கூட்டம், பக்கத்திலே போனு எல்லாம் இரும் தன்னு பார்க்கிறியா? நம்மகிட்ட அதெல்லாம் ஒண்ணும் நடக்காது, நைனா வர்றியா, ஒண்டிக்கு ஒண்டி இடிச்சுக்கு வோம்?" என்று தன் தோள்களை மாறி மாறித் தட்டிக் காட்டினான்.
"போடா, பொறுக்கி! பட்டணத்துக்கு என்னைப் புதியவன் என்று நினைத்துக்கொண்டு விட்டாயா? இதற்கு முன்னாலேயே உன்னைப்போல் எத்தனையோ பொறுக்கிகளை நான் இங்கே பார்த்திருக்கிறேன்!"
"பார்த்திருப்பே, பார்த்திருப்பே! பார்க்காமலா நாலணா பிச்சைக் காசை எடுத்து எங்கிட்டே... குடுக்க வர்றே?"
கூலி போதாது என்றால் கேள்; கொடுக்கிறேன்; அதை விட்டு விட்டு ஏன் மரியாதையில்லாமல் பேசுகிறாய்?" என்று சொல்லிக் கொண்டே எட்டணாவை எடுத்து அவனுக்கு முன்னால் விட்டெறிந்தான் அரசு.
"யாருக்கு வேணும், இந்த எட்டணா? டேசன் படிக்கட்டு மேலே இருக்கிற பொட்டியைத் தூக்கி டாக்ஸியிலே வெச்சா, ஐயாவுக்குக் கூலி எட்டணான்னு தெரியுமா, உனக்கு? தெரிஞ்சா, இம்முட்டுத் தூரம் இஸ்துகிட்டு வந்து நீ ஏன் எட்டணாவை எடுத்துக் குடுக்கப் போறே? மரியாதையா ஒரு ரூபாயைக் கீழே வையா!"
"வைக்கவில்லை யென்றால்?"
"கக்க வெச்சி வாங்குவேன்!"
இந்தச் சமயத்தில், "அவனோடு என்ன ஸார் பேச்சு, பேசாமல் 'அண்ட்ர'டுக்குப் போன் பண்ணுவதை விட்டுட்டு?" என்று சொல்லிக் கொண்டே 'டெலிபோன் டய'லில் கையை வைத்தார் ஓட்டல் முதலாளி.
அவ்வளவுதான்; கீழே கிடந்த, எட்டணாவை எடுத்துக் காதில் செருகிக் கொண்டு, "போனா பண்ணப் போறீங்க, போன்? நான் உங்களைப் பார்த்துக்கிற இடத்திலே பார்த்துக்கிறேன்!" என்று கருவிக்கொண்டே. நகர்ந்தான் பெருமாள்.
★★★
அன்று மாலை; ‘சென்னைக்கு வரவே வந்தோம், ஏதாவது ஒரு சினிமாவுக்கும்தான் போய் விட்டுப் போவோமே?' என்று நினைத்து, ஒரு சினிமா தியேட்டரை முற்றுகையிட்டான் அரசு. அங்கே முதல் இரண்டு வகுப்புகளுக்குரிய டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டு விட்டு இருந்ததால், மூன்றாம் வகுப்புக்குரிய டிக்கெட்டுக்காக நின்று கொண்டிருந்த நீண்ட கியூ'வில் தானும் ஒருவனாக நின்றான் அரசு.
ஆயிற்று; தனக்கு முன்னால் இருப்பவர்கள் இன்னும் எட்டே பேர்தான். ஒன்பதாவதாகத் தான்தான் வாங்க வேண்டும்........
கடைசி நிமிஷத்தில், 'டிக்கெட் இல்லை' என்று கையை விரித்துவிடுவானோ? எதற்கும் காசை எடுத்துக் கையில் வைத்துக்கொள்வோம்.........
இப்படி நினைத்ததும் சட்டைப் பைக்குள் கையை விட்டான், பர்ஸை எடுக்க! ஆனால், என்ன ஏமாற்றம்? காணவில்லை ; பர்ஸைக் காணவேயில்லை!
அட, பாவிகளா! நல்ல சமயத்தில் கழுத்தை அறுத்து விட்டீர்களே? சினிமா பார்க்காவிட்டால் போகிறது; ஓட்டல் காரனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு ஊருக்காவது போய்ச் சேரவேண்டாமா, நான்?
'அந்தக் கவலை அவர்களுக்கு ஏன் இருக்கப் போகிறது?' என்று முணுமுணுத்துக் கொண்டே 'கியூ'வை விட்டு விலகி நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான் அரசு.
"அங்கே பார்க்காதே; இங்கே பார்!" என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அரசு திரும்பிப் பார்த்தான்; பெருமாள் மீசையை முறுக்கி விட்டபடி அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான்.
"அட, நீயுமா சினிமாவுக்கு வந்திருக்கிறாய்?" என்றான் அரசு, வியப்புடன்.
"ஏன், வரக்கூடாதோ?" என்றான் பெருமாள், இடுப்பின்மேல் கையை வைத்துக்கொண்டு.
"வரக்கூடாது என்று நான் சொல்லவில்லையே?"
"நல்ல ஆளய்யா, நீ! ஏமாந்து எண்பது ரூபா கோட்டை விட்டாலும் விடுவே; ஏமாறாம எட்டணாக்கூடக் குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டியே?"
"அதற்குள் எண்ணிக்கூடப் பார்த்துவிட்டாயா, என்ன?"
"ஆத்திலே போட்டாலும் அளந்து போடுன்னு பெரியவங்க சொல்லி யிருக்காங்களே ஐயா!"
"என்னமோ, அளந்து பார்த்ததோடு நின்றிருந்தால் சரி!"
"நிற்காம ஓடியா போயிட்டேன்? இந்தா, உன் பர்ஸ்! இனிமேலாவது கூலிக்காரர்கள் கேட்பதைக் கொடுத்து விடு; கொடுக்காமல் கோட்டை விடாதே!" என்று அவனை எச்சரித்து, அவனிடமிருந்து எடுத்த பர்ஸை அவனிடமே திருப்பிக் கொடுக்க வந்தான் பெருமாள்.
"தேவலையே, ரொம்ப நல்லவனா யிருக்கிறாயே?" என்று சொல்லிக்கொண்டே பர்ஸுடன் அவனுடைய கையைப் பற்றிப் பக்கத்திலிருந்த போலீஸ்காரரிடம் ஒப்படைத்து விட்டு, “இனிமேலாவது பிரயாணிகள் கொடுப்பதை வாங்கிக்கொள்; 'பிக் பாக்கெட்' அடிக்காதே!' என்று பரஸ்பரம் அவனை எச்சரித்து விட்டுச் சென்றான் அரசு.
ஈசன் விட்ட வழி
நாளை பொழுது விடிந்தால் தீபாவளி. வழக்கத்துக்கு விரோதமாக வெறுங்கையுடன் வேலையிலிருந்து வீடு திரும்பிய வெங்கடாசலத்தைச் சூழ்ந்து கொண்டு, "அப்பா, எனக்குப் பட்டுப் பாவாடை!" என்றது ஒரு குழந்தை; "அப்பா, எனக்குப் பட்டுச் சட்டை!" என்றது இன்னொரு குழந்தை. "எனக்குப் பட்டுப் பாவாடையும் வேண்டாம், பட்டுச்சட்டையும் வேண்டாம்; நிறையப் பட்டாசுதான் வேண்டும்!" என்றது மற்றொன்று; பட்டாசு வாங்கிக் கொண்டு வரும்போது பட்சணம் வாங்கிக் கொண்டு வர மறந்துவிடாதே, அப்பா!" என்றது மற்றும் ஒன்று.
எல்லாவற்றுக்கும், 'ஆகட்டும், ஆகட்டும்' என்று தலையை ஆட்டிவிட்டுக் கடந்த ஆறு மாத காலமாக நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் அப்பா ஆதிமூலனாரின் அறைக்குள் நுழைந்தான் அவன். "இப்போதுதான் வருகிறாயா?" என்றார் அவர், ஈனஸ்வரத்தில், "ஆமாம், அப்பா! உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டான் அவன்.
"என் உடம்புக்கு என்ன? அறுபதாண்டு விழாவைக் கொண்டாடிய அது, நூற்றாண்டு விழாவைக்கூடக் கொண்டாடும் போலிருக்கிறது! நீ போ, போய்க் காபி சாப்பிடு!"
"காபிக்கு இப்போது என்னப்பா, அவசரம்? டாக்டர் வந்தாரா, என்ன சொன்னார்?"
"வந்தார்; 'கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்று சொன்னார்!"
'கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்று சொன்னார் - இரு பொருள் கொண்டது போல் தொனித்த இது, அவனை என்னவோ செய்வது போலிருந்தது; இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் - ஏழு மாதத்துக் குழந்தையிலிருந்து எம்.ஏ பட்டம் பெறுகிற வரையில் அவனைப் பல கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அங்கே மாட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு மேலே அவனைப் பெற்றெடுத்த ஆறாவது மாதத்திலேயே கண்ணை மூடிவிட்ட அவன் அன்னையின் படம் மாட்டப்படிருந்தது - அன்றிலிருந்து, அதாவது தன் தாயார் கண்ணை மூடிவிட்ட அந்த நாளிலிருந்து, தாரம் இழந்த தன் தகப்பனார்-இழந்த தாரத்துக்குப் பதிலாக எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுதாரம் தேடிக் கொள்ளாத தன் தகப்பனார்-தன்னைக் காப்பாற்ற என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? எத்தனை பேருடைய தயவை நாடியிருக்க வேண்டும்? அதற்கெல்லாம் பிராயச்சித்தமாக இன்று வரை தான் அவருக்கு ஏதாவது செய்ததுண்டா, செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையாவது அவர் தனக்கு அளித்ததுண்டா? கடந்த ஆறு மாத காலமாகத் தன்னால் இயலாத நிலையில், 'என்னைக் கொஞ்சம் தூக்கி உட்கார வை, கழிவிடத்துக்கு அழைத்துக் கொண்டு போ, படுக்க வைத்து விடு' என்பதைத் தவிர!
இந்தச் சந்தர்ப்பத்தைக்கூட அவர் தனக்கு அவ்வளவு எளிதிலா அளித்துவிட்டார்? இல்லை; மருத்துவ மனைக்குப் போய் விடுவதாகவல்லவா சொன்னார்?
அப்படிப்பட்ட ஆத்மா 'இன்றோ, நாளையோ?' என்று இருக்கும்போது, இந்த வீட்டில் எப்படித் தீபாவளி கொண்டாடுவது? எனக்கு 'அது வேண்டும், இது வேண்டும்' என்று நச்சரிக்கும் குழந்தைகளை எப்படிச் சமாதானம் செய்வது?
இவ்வாறு அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது ஐந்தாவது குழந்தையின் பிரசவத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத் தன் மகள் தங்கம் முழுகி மூன்று மாதங்கள் ஆவதற்கு முன்னமேயே வந்து விட்டிருந்த அவன் மாமியார் அபயாம்பாள் வந்து, "நான் சொல்கிறேன் என்று நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது; நல்ல நாளும் அதுவுமாக நீங்கள் அந்த மனுஷரை இங்கே வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதில்லை. இதுவோ குழந்தை குட்டிகள் உள்ள வீடு; அக்கம்பக்கத்துக்கு அஞ்சியாவது தீபாவளியை நாம் எப்படியாவது கொண்டாடியே தீர வேண்டும். பேசாமல் அவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்; ஈசன் விட்ட வழியாகட்டும்!" என்றாள், அந்த வயதிலும் மருமகனைப் பார்த்து வெட்கப்படுபவளைப் போல் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு.
அதற்குக் கையில் காபியுடன் அங்கே வந்த தங்கம், "அதை ஏம்மா, நீ சொல்கிறாய்? அவருக்கு நல்லது சொல்வதும் தெரியாது; கெட்டது சொல்வதும் தெரியாது!" என்றாள் தனக்கே இயல்பான 'தனித் தன்மை'யுடன்!
"சொல்ல வேண்டாம் என்றுதான் இருந்தேன், மனசு கேட்கவில்லை!" என்றாள் அவள் பெருமூச்சுடன்.
"வந்ததும் வராததுமாக இருக்கும்போதே அவர் பிள்ளையிடம் சொல்கிறாரே, 'கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்று டாக்டர் சொன்னதாக -அவர் அப்படியா சொன்னார்? 'இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது; இஷ்டப்பட்டதை யெல்லாம் சாப்பிடுங்கள்!' என்றுதானே சொன்னார்?- ஏண்டா, பாலு! சொல்லேண்டா, நீ கூடத்தானே கேட்டுக் கொண்டிருந்தாய்?" என்று தன் மூத்த மகனைச் சாட்சிக்கு அழைத்தாள் தங்கம்.
"ஏன், உன்னுடைய வார்த்தையில் உனக்கே நம்பிக்கை யில்லையா?" என்றான் வெங்கடாசலம், அவளிடமிருந்த காபியை வாங்கி மேஜையின் மேல் வைத்துவிட்டு.
"என்னுடைய வார்த்தையில் எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது; உங்களுக்கு இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் அவனை நான் சாட்சிக்குக்கூப்பிட்டேன்!" என்று அவனை எரித்துவிடுபவள்போல் பார்த்துக்கொண்டே திரும்பினாள் அவள்.
"நீ சொன்னது சரியாய்த்தான் போச்சு! அவருக்கு நல்லதும் தெரியவில்லை, கெட்டதும் தெரியவில்லையே?" என்று சொல்லிக் கொண்டே அவளைத் தொடர்ந்தாள் அபயாம்பாள்.
★★★
இவையைனைத்தையும் படுக்கையில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த ஆதிமூலனார் சிரித்தார் அவருடைய சிரிப்பிலே ஜீவன் இல்லையென்றாலும், சிந்தனையில் ஜீவன் இருந்தது.
பிறர் வெறுக்கும் வரை இருப்பதைவிட, விரும்பும் போதே இறந்து விடுவது எவ்வளவோ நல்லதுதான்! ஆனால், தான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லையே?
சம்பந்தியம்மாளுக்கு இன்று தான் இந்த நிலையில் இருப்பது 'சங்கட'மாக இருக்கிறது என்றால், தன் மகனுக்கோ அது 'தர்மசங்கட'மாக இருக்கிறது! இந்த ஒரு வித்தியாசத்தைத் தவிரவேறு என்ன வித்தியாசம் இருக்கிறது, இப்போதுள்ள சங்கடத்தில்?
மருமகளைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்; அவளுக்கு நான் எப்போதுமே வேண்டாதவன்! அவளுக்கு மட்டுமென்ன, இந்த உலகத்துக்கே இப்போது நான் வேண்டாதவன்தானே?
பேரப் பிள்ளைகளின் சந்தோஷத்தை அவர்கள் விரும்புவது போலவே நானும் விரும்பத்தான் விரும்புகிறேன். ஆனால்........
இவர்கள் சொல்வது போல் தன் மகன் தன்னை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?
அங்கே நான் தீபாவளியும் அதுவுமாக வாயைப் பிளந்துவிட்டால், இங்கே இவர்களால் தீபாவளி கொண்டாடி விட முடியுமா? அப்போதும் அக்கம்பத்துக்கு அஞ்சியாவது இவர்கள் அதைக் கைவிடத்தானே வேண்டியிருக்கும்?
பார்க்கப் போனால் இந்த வருடத்தோடு முடிந்துவிடப் போவதில்லை இந்தத் துக்கம்; அடுத்த வருடமும் தொடரும் - இது சமூக நியதி; இந்த நியதி ஏன் தெரியவில்லை சம்பந்தியம்மாளுக்கு?
எது எப்படி யிருந்தாலும் தான் இந்தச் சமயத்தில் இப்படிப் படுத்திருக்கக் கூடாதுதான் -ஆனால் அதற்கு நானா பொறுப்பு? எல்லாம் வல்ல இறைவனின் சித்தம் அப்படியிருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
ஒன்று வேண்டுமானால் செய்யலாம் - அதாவது, இவர்களுடைய ஏச்சும் பேச்சும் காதில் விழாமல் இருப்பதற்காகத் தீபாவளிக்கு முன்னால் தன் உயிரைத் தானே வேண்டுமானால் மாய்த்துக்கொண்டு விடலாம்- கையில் வைர மோதிரம் அணிந்திருக்கும் தனக்கு அது ஒரு பெரிய காரியமும் இல்லை .......
இந்த எண்ணம் உதித்ததும் ஒளியிழந்த கண்களால் ஒளி மிக்க வைரமோதிரத்தைப் பார்த்தார் பெரியவர்-'உன்னை நீர் மாய்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக என்னை நீ ஏன் மாய்க்கப் பார்க்கிறாய்? நான் இருந்தால் உனக்குப் பின்னால் உன் மகனுக்கு உதவ மாட்டேனா? என்று அது தன்னைப் பார்த்துக் கேட்பதுபோல் இருந்தது அவருக்கு-ஆம், எனக்குச் சில சமயம் உதவியது போல் நீ அவனுக்கும் உதவத்தான் வேண்டும் - மாட்டேன்; வாழ்வுக்குப் பயன்படுத்திக்கொண்ட உன்னைச்சாவுக்கும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன்!
வேறு வழி?.......
விட்டத்தைப் பார்த்தார்; விட்டத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் கயிற்றையும் பார்த்தார் - இரண்டையும் பயன்படுத்தித் தன் வாழ்வை முடித்துக் கொள்வதென்பது அவ்வளவு இலேசா, என்ன? அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து முடிப்பதற்குள் யாராவது எழுந்து விட்டால்? வீட்டில் உள்ளவர்களோடு வீதியில் உள்ளவர்களும் சேர்ந்து விடுவார்கள். அதற்குப் பிறகு போலீஸ், விசாரனை என்றெல்லாம் ஏற்பட்டு, அதனால் தன் மகன் ஏன் அனாவசியமான தொல்லைகளுக்கு உள்ளாக வேண்டும்? - கூடாது; தன் மகன் தன்னால் எந்தவிதமான தொல்லைக்கும் உள்ளாகக் கூடாது!
தொட்டதும் உயிர் சட்டென்று போய்விட ஏதாவது வழியிருந்தால்? - ஏன் இல்லை, மின்சாரத்தைத் தொட்டால் அப்படியே போய்விடும் என்கிறார்களே? -ஆம், அதுவே வழி; அதுவே சரியான வழி!
இந்த முடிவுக்கு வந்ததும், 'பொழுது எப்போது சாயும் இரவு அதை எப்போது தழுவும்?' என்று காத்துக்கொண்டிருந்தார் அவர்!
"அடே பாலு, இங்கே வாடா! அடி வசந்தி, இங்கே வாடி"-கடைக்குப் போய்விட்டு வந்த சம்பந்தியம்மாள் பெருங்குரலிட்டு தன் பேரக் குழந்தைகளைக் கூப்பிடுவது பெரியவரின் காதில் விழுந்தது. எதற்காகக் கூப்பிடுகிறாள் அவள், அவர்களை?-ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.
அதற்குள், "என்ன, பாட்டி? ஏன் கூப்பிட்டாய், எங்களை?" என்று கேட்டுக் கொண்டே வந்த அவையனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டன. பை நிறைய வாங்கிக் கொண்டு வந்திருந்த பட்டாசுக் கட்டுகளை எடுத்து அவர்களுக்கு முன்னால் வைத்து, "அந்தப் பாவி தான் இருந்த பாடும் இல்லாமல், செத்த பாடும் இல்லாமல் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறானே! தீபாவளியும் அதுவுமாக அவன் உங்களை எப்படி விட்டுவிட்டுப் போவானோ, என்னமோ என்றுதான் இன்றே நான் இந்தப் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு வந்தேன்; எடுத்துக் கொண்டு போய்க் கொளுத்துங்கள்!" என்றாள் பாட்டி.
அவ்வளவுதான்!-அடுத்த நிமிஷம் ‘புஸ்' என்று சீறிப் பொங்கி வழிந்தது பூவாணம்; 'விர்' என்று பறந்து சென்று வெடித்து வீழ்ந்தது வாணவெடி; 'குப், குப்' என்று கொழுந்து விட்டு எரிந்தது மத்தாப்பு; 'கிரு கிரு' என்று சுழன்று சுழன்று வந்தது சங்குச்சக்கரம்; 'டம் டமார்!' என்று வெடித்தது யானை வெடி; 'பட், படார்!' என்று வெடித்தது ஊசி வெடி குழந்தைகளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை ; 'குதி குதி' என்று குதித்துக் கும்மாளம் போட்டன!
ஆயிற்று, பட்டாசும் ஆயிற்று; எல்லோரும் சாப்பிட்டும் ஆயிற்று. இனி தூங்க வேண்டியதுதான் பாக்கி; தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டு விடலாம்........
இப்படி அவர் எண்ணிக் கொண்டிருந்தபோது, "ஏன் அப்பா, நீங்கள் ஒன்றும் சாப்பிடவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் வெங்கடாசலம்.
"கொடு; கடைசியாக உன் கையால் ஏதாவது கொடு" என்று கேட்க வேண்டும்போல் தோன்றிற்று அவருக்கு; ஆனால் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, "எனக்கு ஒன்றும் வேண்டாம்; நீ போய்ப் படுத்துக் கொள்!" என்று சொல்லிவிட்டார். அவனும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த விரும்பாமல் போய்ப் படுத்துக் கொண்டு விட்டான்.
விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன; வீட்டை இருள் கவ்விற்று. 'நொய்' என்ற சுவர்க்கோழியின் சத்தத்தையும், 'கொர், கொர்' என்ற குறட்டைச் சத்தத்தையும் தவிர வேறு சத்தம் இல்லை.
அதுதான் சமயம் என்று பெரியவர் எழுந்தார்; 'மீட்டர் போர்'டை நோக்கித் தட்டுத் தடுமாறி நடந்தார்.
ஒரு சந்தேகம்; நின்றார்.......
அழைப்பதற்கு முன்னால் சென்றால் ஆண்டவன் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?-அந்தக் கவலை தனக்கு ஏன்? எல்லாவற்றுக்கும் காரணமான அவன்தானே தான் இந்த முடிவுக்கு வருவதற்கும் காரணமாயிருந்திருக்க வேண்டும்? தீர்ந்தது சந்தேகம்; மேலே நடந்தார்.........
‘மீட்டர் போர்டு’ கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கைக்குத் தெரிந்தது. ஆம், தடவிப் பார்த்த கைக்குத்தான்! - அதற்குமேல் யோசிக்கவில்லை அவர்; 'மெயின் ஸ்விட்ச்'சைத் திறந்து, 'ராமா!' என்று ராம நாமத்தை ஜபித்துக் கொண்டே 'டக்'கென்று கையை வைத்துவிட்டார்!
ஆனால் என்ன ஆச்சரியம்! எந்த விதமான 'ஷாக்'கும் அடிக்கவில்லை அவருக்கு. ஒருவேளை 'ஆப்'பாயிருக்குமோ?
வராந்தா விளக்கைப் போட்டுப் பார்த்தார்; எரியவில்லை! அட, கடவுளே! இதற்குத்தானா இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டேன், நான்? - ஏமாற்றத்துடன் திரும்பினார் பெரியவர்!
இருந்தாலும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று தோன்றிற்று அவருக்கு. தம்முடைய அறையின் விளக்குக் குரிய ‘ஸ்விட்ச்'சைப் போட்டுவிட்டுக் கட்டிலின் மேல் உட்கார்ந்தார். அது எரிந்ததும் தம்முடைய முயற்சியைத் தொடரலாம் என்ற உத்தேசத்துடன்!
ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அது எரியவில்லை ; அதற்குப் பதிலாகத் தம் வாழ்வைத் தாம் முடித்துக் கொள்ளும்வரை எந்தப் பொழுது விடியக் கூடாது என்று அவர் நினைத்தாரோ, அந்தப் பொழுது விடிந்தது; தீபாவளியும் 'வந்தேன், வந்தேன்!' என்று வந்தது.
"அப்பா! சாஸ்திரத்துக்காக ஒரு துளி எண்ணெய் தொட்டுத் தலையில் வைத்துக் கொள்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே கையில் எண்ணெய் நிரம்பிய கிண்ணத்துடன் அவரை நோக்கி வந்தான் வெங்கடாசலம்.
அந்தச் சமயத்தில்.......
"ஐயோ, அம்மா! நேற்றுக்கூட நன்றாயிருந்தாயே, இன்று எப்படி அம்மா போய்விட்டாய்?" என்ற தங்கத்தின் அழுகுரல் அவன் காதில் விழுந்து, அவனுடைய நெஞ்சைப் பிளந்தது; கையில் இருந்த எண்ணெய்க் கிண்ணத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு ஓடிப் போய்ப் பார்த்தான்-அபயாம்பாள் இந்த உலகத்தில் இல்லை!
மறுபடியும்.....
இன்னும் ஒரு குழந்தைக்குக்கூடத் தாயாகவில்லை அவள்; அதற்குள் அவன் போய்விட்டான்!
'போய்விட்டான்' என்றால் அவனா போய்விட்டான்? 'தர்மராஜன்' என்ற பெயருக்கு முன்னால், நகைச்சுவைக்காகத்தானோ என்னவோ, 'எம' என்ற இரண்டு எழுத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறானோ, அந்தப் புண்ணியவான் அவளுடைய கணவனைக் கொண்டு போய் விட்டான்!
அவன் போனாலும் அவளுக்காக அவன் வைத்து விட்டுப் போன சொத்து சுதந்திரங்களெல்லாம் இருக்கத்தான் இருந்தன. அது தெரிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்; 'அவளுக்கென்ன குறை?' என்று தங்களைத் தாங்களே கேட்டு, 'ஒரு குறையும் கிடையாது' என்று தங்களுக்குத் தாங்களே பதிலும் சொல்லிக்கொண்டு இருக்கத்தான் இருந்தார்கள். ஆனாலும் ஒரு குறை, ஒரே ஒரு குறை அவளுக்கு இருக்கத்தான் இருந்தது. அதுதான் தனிமை; அந்தத் தனிமைதான் அவளைப் பிடித்து 'வாட்டு வாட்டு' என்று வாட்டிக்கொண்டிருந்தது.
அதற்கேற்றாற்போல் இந்த உலகத்தில் எந்த ஜீவன் தான் தனிமையில் வாடுகிறது?
அதோ போகிறதே பெட்டைக் கோழி, அதுகூட ஒரு சேவல் இல்லாவிட்டால் இன்னொரு சேவலுடன் கூடிக் குலாவுகிறது; இதோ வந்து ஜன்னல் கம்பியின்மேல் உட்காருகிறதே சிட்டுக்குருவி, இதுகூட ஓர் இணை இல்லா விட்டால் இன்னோர் இணையுடன் சேர்ந்து கொள்கிறது! அப்படியிருக்கும்போது நான் மட்டும் ஏன் தனியாக இருக்கவேண்டுமாம்? நான் மட்டும் ஏன் தனியாக வாழ வேண்டுமாம்?
இப்படி எண்ணிக்கொண்டே கூடத்தில் மாட்டியிருந்த தன் கணவனின் நிழற் படத்தைப் பார்த்தாள் அவள்; அந்த நிலையில் அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு!
இவருக்கென்ன சிரிக்காமல்? இவர் மட்டும் என்னை விட்டுப் பிரிந்திருந்தால் எனக்காகத் தனியாக இருந்திருப்பாரா? ஊஹும், இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து
கொண்டு..........
ம், இப்போது மட்டும் என்ன? இவரைப்போல் நானும் மறுமணம் செய்துகொண்டால் இவர் வேண்டாமென்றா சொல்லப் போகிறார்?
இப்படி அவள் மருகிக் கொண்டிருந்தபோது, யாரோ வந்து கதவைத் 'தடதட' வென்று தட்ட, "யார் அது?" என்று கேட்டுக்கொண்டே சென்று அவள் கதவைத் திறக்க, "ஸ்ரீமதி ஹேமா சீனிவாசன் நீங்கள்தானே?" என்று கேட்டான், அந்த வட்டத்துக்குப் புதிதாக வந்திருந்த தபாற்காரன்.
'இன்னும் சீனிவாசன் என்ன வேண்டி யிருக்கிறது, சீனிவாசன்! ஸ்ரீமதி ஹேமா என்று மட்டும் சொன்னால் போதாதோ?' என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டு, "ஆமாம், என்ன விஷயம்?" என்றாள் அவள், எரிச்சலுடன்.
"ஒன்றுமில்லை. உங்களுக்கு இருநூறு ரூபாய் மணியார்டர் வந்திருக்கிறது; இங்கே கையெழுத்து போடுங்கள்" என்று மணியார்டர் பாரத்தை நீட்டி, அதற்கென்று அந்தப் பாரத்தில் விட்டு வைத்திருந்த இடத்தைக் காட்டினான் அவன்.
"சரிதான், நான் சொன்னபடி வீட்டைக் காலி செய்ய விரும்பாத எவனோ வாடகைப் பணத்தை மணியார்டரில் அனுப்பி வைத்திருக்கிறான் போலிருக்கிறது? இருக்கட்டும், இருக்கட்டும்!" என்று கருவிக்கொண்டே அவன் காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு அவள் திரும்பினாள்.
"இந்தாருங்கள், உங்கள் பெயருக்கு ஏதோ ஒரு கடிதம்கூட வந்திருக்கிறது!" என்றான் தபாற்காரன், ஒரு கவரை எடுத்து நீட்டி,
"சரி, கொடு!" என்று அதையும் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்தாள் அவள்.
நல்ல வேளையாக அந்தக் கடிதத்தின் முகவரி, 'ஸ்ரீமதி ஹேமா சீனிவாசன்' என்று ஆரம்பமாகவில்லை; 'ஸ்ரீமதி ஹேமா' என்று மட்டுமே ஆரம்பமாகியிருந்தது. அதில் ஒரு திருப்தியுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் அவள்;
"அடி, ஹேமா!.....
எடுக்கும்போதே 'டி' போட்டுக் கடிதம் எழுதும் இவள் யாராயிருக்கும்? கடைசி வரியைப் பார்த்தாள்; 'கலா' என்று போட்டிருந்தது. 'ஓ, இவளா! அந்த நாள் பள்ளிக்கூடத்து 'டி'யை இவள் இன்னும் விடவில்லை போலிருக்கிறது!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மேலே பார்த்தாள்:
......எப்படியடி இருக்கிறாய்? எப்பொழுதோ இறந்து போன அகமுடையானுக்காக மாதம் தவறாமல் அமாவாசை விரதம் இருந்து கொண்டு, வருடம் தவறாமல் திதி கொடுத்துக் கொண்டு இருக்கிறாயா? இரு இரு, இருக்கிற வழிக்கு ஒன்றும் கிடைக்காவிட்டாலும் போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும். இருடியம்மா, இரு! இந்தக் கடிதத்தை இப்போது நான் உனக்கு எழுதுவதாகவே இல்லை; திடீரென்று வந்து உன்னைத் திகைக்க வைக்கவேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் அப்போதிருந்த 'ஏழைச் சிறுமி ஹேமா வா நீ, எப்போது வந்தாலும் வீட்டில் இருக்க? நீதான் இப்போது 'சீமாட்டி ஹேமா'வாகிவிட்டாயே! நான் வரும்போது எங்கே போய் விடுவாயோ என்னமோ என்றுதான் இதை எழுதுகிறேன்: ஆமாம், நாளை மறுநாள் அடியாள் சென்னை விஜயம்; அங்கிருந்து டெல்லி பயணம்; இடையே உள்ள நேரத்தை உன்னுடன் கழிக்க விருப்பம். என்ன, இருக்கிறாயா வீட்டில்?
மற்றவை நேரில்.......
உன் அன்புத் தோழி,
கலா."
கடிதத்தைப் படித்து முடித்ததும், 'ஏக ஜாலியாக எழுதியிருக்கிறாளே, கடிதத்தை! அப்படி என்ன சந்தோஷம் வந்துவிட்டிருக்கும் இவளுக்கு? பார்க்கப்போனால் இவளும் என்னைப் போன்ற ஒரு விதவைதானே! என்னை வாட்டும் தனிமை இவளை மட்டும் வாட்டாமலா விட்டிருக்கும்? என்று நினைத்த ஹேமா, ‘நடுவில் நாளை ஒரு நாள்தானே? மறு நாள் வந்தால் எல்லாம் தெரிந்து விடுகிறது!' என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த கடிதத்தை மடித்து ஒரு புத்தகத்துக்குள் வைத்துவிட்டு எழுந்தாள்.
ஏழெட்டு வருட கால இடைவெளிக்குப் பிறகு அன்று கலாவைச் சந்தித்த ஹேமா, அவள் எழுதியிருந்தபடியே திகைத்துத்தான் போனாள். காரணம், அவள் எதிர்பார்த்தபடி கலா அமங்கலியாக வரவில்லை; சுமங்கலியாக வந்திருத்தாள்!
"மறுபடியும் நீ......"
"ஆமாம், மறுமணம் செய்து கொண்டேன். இவர் என் கணவர்; இவன் எங்கள் செல்வம்!" என்று தனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் கணவரையும், அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தன் மகனையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் கலா.
"எனக்குக்கூடச் சொல்லாமலா?" என்றாள் ஹேமா, வியப்புடன்.
"சொன்னால் நீ வந்திருக்கவா போகிறாய்? மற்றவர்களோடு சேர்ந்து நீயும் சிரித்திருக்கப் போகிறாய்!"
"இப்போது மட்டும்......?"
"நீ சிரிக்கமாட்டாய்; அதற்குப் பதிலாக அழுவாய் என்று எனக்குத் தெரியும்!"
"ஏன் அழுகிறேனாம்?"
"தனிமை அப்படிப்பட்டதடி, தனிமை அப்படிப் பட்டது! அதனால்தான் காலேஜில் நம்மோடு படித்துக் கொண்டிருந்த வாசு, 'கலைக்கும் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் காதலை விட்டால் வேறு கதி கிடையாது!" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதன் உண்மையை இப்போதாவது உணருகிறாயா, நீ?"
"உணர்ந்தேன், உணர்ந்துதான் இருக்கிறேன்!" என்ற ஹேமா, அதற்குள் தன் கண்களில் துளிர்க்க ஆரம்பித்து விட்ட நீரைத் துடைத்துக்கொண்டே வந்தவர்களை உபசரித்து வழி அனுப்பிவைத்தாள்.
அவர்கள் சென்றதும் கதவைத் தாளிட்டு விட்டு வந்து உள்ளே படுத்த அவளுக்கு என்னவோபோலிருந்தது. 'கலா இப்போது மாதம் தவறாமல் அமாவாசை விரதம் இருக்க மாட்டாள்; வருடம் தவறாமல் திதி கொடுக்க மாட்டாள்' என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டாள்.
அந்தச் சமயத்தில் கதவை யாரோ தட்டுவது போலிருக்கவே, "இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!" என்று அலுத்துக்கொண்டே சென்று கதவைத் திறந்தாள் ஹேமா; வாசலில் நின்றுகொண்டிருந்த வாசு, "இப்போதாவது நான் உள்ளே வரலாமா?" என்றான் அவளை ஏற இறங்கப் பார்த்தபடி.
'அவனை அப்போது அங்கே கொஞ்சமும் எதிர்பார்க்காத ஹேமா, 'வா!' என்றும் சொல்லவில்லை, 'வரவேண்டாம்!' என்றும் சொல்லவில்லை; திறந்த கதவைத் திறந்தபடி விட்டுவிட்டு உள்ளே வந்தாள்.
அவளைத் தொடர்ந்து வந்த வாசு, "நல்ல வேளை இன்றாவது என்னைக் கண்டதும் கதவை அடைக்காமல் விட்டாயே? ரொம்ப சந்தோஷம்/" என்றான் தன் பேச்சையும் மேலே தொடர்ந்து.
ஆம்; ஏற்கெனவே சூடு கண்ட பூனைதான் அவன். ஆனாலும் அப்போதிருந்த நிலையில் அந்தப் பூனையை ஏனோ' விரட்ட விரும்பாத ஹேமா, அதற்கும் மெளனமாக இருக்கவே, "இன்று உன் வீட்டுக் கதவு திறந்தது போல் நாளை உன் மனக் கதவும் திறந்தால்?" என்று தன் பேச்சைமேலும் தொடர்ந்த வாசு, 'அதற்கு மேல் வார்த்தை என்னத்துக்கு?' என்று எண்ணித்தானோ என்னமோ, தன்னுடைய நீண்டகால வேட்கையை ஒரு நீண்ட பெருமூச்சின் மூலம் வெளிப்படுத்தினான்.
தன் பிடரியைத் தொட்டுச் சென்ற அந்த வெதவெதப்பான மூச்சுக் காற்றிலே ஏதோ ஓர் இதத்தைக் கண்ட ஹேமா சற்றே திரும்பி, "அன்றுபோல் இன்று நான் கன்னி அல்ல வாசு, கைம்பெண்!" என்றாள் மெல்ல.
"இருக்கலாம்; வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத வறட்டுச் சித்தாந்தவாதிகளுக்கு, அன்று நீ கன்னியாகவும், இன்று நீ கைம்பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு? அன்றும் நீ கன்னிதான்; இன்றும் நீ கன்னிதான்; என்றும் நீகன்னிதான்!" என்றான் அவன், தனக்கே உரித்தான சவடால், தனத்துடன்.
"நிஜமாகவா சொல்கிறாய்?"
"சத்தியமாக!"
"அப்படியானால்........?"
அவள் முடிக்கவில்லை; அதற்குள், "நீ 'ம்' என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி; நாளைக் காலை நான் டாக்ஸியுடன் வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டுவேன்!" என்றான் வாசு.
"எதற்கு?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் ஹேமா.
"இப்படியும் ஒரு பெண் கேட்பாளா, இந்தக் காலத்தில்? வேறெதற்கு, பதிவாளர் அலுவலகத்துக்குப் போய்ப் 'பதிவுத் திருமணம்' செய்து கொள்ள!" என்றான் அவன், சிரித்துக்கொண்டே.
அவள் சிரிக்கவில்லை; அதற்குப் பதிலாக, "அவ்வளவு அவசரம் வேண்டாம், வாசு! எதற்கும் நீ இன்னும் கொஞ்ச நாள் பொறு: அதற்குள் நான் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறேன்!" என்றாள் அவள், தன் கண்களில் ஏதோ ஓர் இனம் தெரியாத பீதி தேங்க.
"சரி, யோசி! நீ யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் உனக்கும் எனக்கும் ஒரு முடிவு வராமல் இருந்தால் சரி!" என்றான் அவன், சலிப்புடன்.
இம்முறை மட்டுமல்ல; இதற்கு முன் எத்தனையோ முறை ஹேமாவின் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு அலுப்பும் சலிப்பும் அடைந்திருக்கிறான் வாசு. ஆயினும் அவள் மேல் கொண்ட காதலை அவளுக்குக் கல்யாணமான பிறகும் கூட அவனால் கைவிட முடியவில்லை. காரணம், அவளிடமிருந்த பணமா, குணமா, கவர்ச்சியா?-எதுவென்றும் அவனுக்குத் தெரியவில்லை!
இந்த நிலையில்தான் அவனுடைய அதிர்ஷ்டமோ, அல்லது ஹேமாவின் துரதிர்ஷ்டமோ, அவளுடைய கணவன் சீனிவாசன் கண்ணை மூடினான். அதுதான் சமயமென்று தன் காதலுக்குப் புத்துயிர் அளிக்க வந்தான் வாசு. வந்தவனை 'வா!' என்றுகூட அழைக்காமல், "எங்கே வந்தாய்?" என்று கேட்டாள் அவள்.
"உன்னுடைய துன்பத்தில் பங்கு கொள்ள வந்தேன், ஹேமா!" என்றான் அவன்.
"துன்பத்தில் பங்கா!" ஆமாம்."
"அப்படியானால் நீயும் என் தோழிகளைப் போல என்னைக் கட்டிக்கொண்டு அழப்போகிறாயா, என்ன?" என்றாள் அவள் எகத்தாளமாக.
அதற்கும் சளைக்கவில்லை அவன்; "அதற்கு நீ தயாராயிருந்தால் நானும் தயார்தான்!" என்றான்.
"இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை உனக்கு? போ, போ! இன்னொரு முறை இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நீ இங்கே வராதே! போ, போ!" என்று அன்று அவனை விரட்டிக் கதவை அடைத்தவள் இன்று.......
சரித்திரப் பிரசித்தி பெற்ற மும்தாஜ்கூட ஏற்கெனவே ஒருவனின் மனைவியாக இருந்தவள்தான்! அவள் ஷாஜஹானைக் காதலிக்கவில்லை? அந்தக் காதலுக்காக உலகத்தின் எட்டாவது அதிசயமான தாஜ்மஹாலை அவன் எழுப்பவில்லையா?........
இப்படி எண்ணிக்கொண்டே கூடத்தில் மாட்டியிருந்த தன் கணவனின் நிழற் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தாள் அவள்; அப்போதும் அது தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு!
'இங்கே இருந்தால் இவர் இப்படித்தான் என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்' என்று தனக்குத் தானே முணுமுணுத்த வண்ணம் அந்தப் படத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு போய்ப் பரண்மேல் வைத்துவிட்டு, "அன்பில் இவருக்கு ஒன்றும் குறைந்தவனல்ல, அந்த வாசு! அன்று அவன் என் இன்பத்தில் பங்கு கொள்ள வந்தான்; நான் மறுத்தேன்; அப்போதும் அவன் என்மேல் கொண்ட அன்பு மாறவில்லை. இன்று அவன் என் துன்பத்தில் பங்கு கொள்ள வந்தான்; நான் மறுத்தேன்; இப்போதும் அவன் என்மேல்... சொல்லிக்கொண்டே தன் அறைக்குச் சென்று பீரோவின் கண்ணாடிக்கு முன்னால் நின்றாள். நின்று, "ஸ்ரீமதி ஹேமா வாசுதேவன் நீங்கள் தானே?" என்று தன்னைப் பார்த்துத் தானே தன் பெயரை மாற்றிக் கேட்டாள்; "ஆமாம், நான்தான்!" என்று அதற்குப் பதிலையும் தனக்குத் தானே தயங்காமல் சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள்.
"டாக்ஸி கொண்டு வரட்டுமா, நாளைக்கு?"
நூறாவது நாள், நூறாவது தடவையாக இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தான்-அப்போது சொல்லி வைத்தாற்போல் அங்கே வந்து நின்ற வாசு.
இப்போது, "ஏன்?" என்று கேட்கவில்லை அவள்; "எதற்கு?" என்றும் கேட்கவில்லை அவள், "கொண்டு வா!" என்று சொல்லிவிட்டாள்; ஆம், சொல்லியே விட்டாள்!
அவ்வளவுதான்; வானத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டே சென்றான் அவன்!
மறுநாள் காலை; மணமகள் போல் தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்ட ஹேமா, டாக்ஸி வந்து வாசலில் நிற்கும் சத்தத்தையும், அதிலிருந்து வாசு இறங்கிக் கதவைத் தட்டும் சத்தத்தையும் எதிர்பார்த்தபடி, கூடத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்குள்ள வேகம் அவனுக்கும் இருக்காதா? எதிர் பார்த்தது எதிர்பார்த்தபடி டாக்ஸி வந்து வாசலில் நின்றது; அதிலிருந்து இறங்கிய வாசு, கதவைத் தட்டும் சத்தமும் கேட்டது.
அவ்வளவுதான்; பறந்து போய்க் கதவைத் திறந்தாள் ஹேமா. என்ன ஆச்சரியம்! வந்தது வாசு அல்ல; கலா!
கலா என்றால் சுமங்கலி கலா அல்ல; அமங்கலி கலா!
"மறுபடியும்........"
அதற்குமேல் கேட்க நா எழவில்லை ஹேமாவுக்கு; விழித்தது விழித்தபடி நின்றாள்.
"ஆமாம், மறுபடியும் நான் அமங்கலியாகிவிட்டேன்!" என்றாள் அவள், கண்களில் நீர் மல்க.
"மகன் செல்வம்?"
"அதை ஏன் கேட்கிறாய்? என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி அது!"
"எது?"
"அந்தச் சின்னஞ் சிறுசு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டது!"
"காரணம்!"
"நான்தான்!"
"நீயா?"
"ஆமாம்; அவனுடன் படித்த சிறுவர்களில் சிலர் அவனைப் பார்க்கும்போதெல்லாம், 'இவன் யார் தெரியுமா? இவனுக்கு அம்மா ஒன்றாம்; அப்பா இரண்டாம்!" என்று சொல்லிச் சொல்லிக் கை கொட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்களாம். அந்த அவமானம் தாங்காமல் ஒரு நாள் குழந்தை பள்ளிக்கூடத்துத் தோட்டத்திலிருந்த பாழுங்கிணற்றில் விழுந்து........"
அவள் முடிக்கவில்லை; அதற்குள் அங்கே வந்து நின்ற இன்னொரு டாக்ஸியிலிருந்து கீழே இறங்கிய வாசு, "எல்லாம் தயார், ஹேமா! நீ ஏற வேண்டியதுதான் பாக்கி!" என்றான் பரபரப்புடன்.
அவனையும் அவன் கொண்டு வந்திருந்த டாக்ஸியையும் ஒரு கணம் மாறி மாறிப் பார்த்த ஹேமா, மறுகணம் என்ன நினைத்தாளோ என்னமோ, அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக் கதவைப் படாரென்று அடித்துச் சாத்தித் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தாள். பரண்மேலிருந்த தன் கணவனின் படத்தை எடுத்துப் பழையபடி கூடத்தில் மாட்டிவிட்டுக் 'கோ' வென்று அழுதாள்!
அப்போதும் அந்தப் படம் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல்தான் இருந்தது அவளுக்கு!
இளைய பாரதத்தினன்
ஏறக்குறைய ஒருமாத காலம் டெல்லியில் முகாம் செய்திருந்த பின்னர், சென்னையிலிருந்த தம் வீட்டுக்கு அன்றுதான் திரும்பியிருந்தார் திரு. ஆத்மநாதன் ஐ.ஏ.எஸ்.
"சார், போஸ்ட்!" என்று வாசலிலிருந்து குரல் வந்தது.
"துரை உள்ளே வரமாட்டார் போல் இருக்கிறது; வெளியிலேயே இருந்துதான் குரல் கொடுப்பார்போல் இருக்கிறது!" என்று முணுமுணுத்த அவர், 'அபராஜிதா, அபராஜிதா! என்று குரல் கொடுத்தார்; பதில் இல்லை ; "அசோக், அசோக்!" என்றார்; அதற்கும் பதில் இல்லை; "எல்லாரும் இதற்குள் எங்கே போய் விட்டார்கள்?" என்று கேட்டுக்கொண்டே தம் அறையை விட்டு அவர் வெளியே வந்தார்.
அன்று மாலை 'மாதர் சங்க'த்தில் தான் நிகழ்த்தவிருந்த அரும்பெரும் உரையை அவசரம் அவசரமாகத் 'தயார்' செய்து கொண்டிருந்த அவருடைய மனைவி அனுசூயா, 'ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?' என்பது போல் எரிச்சலுடன் தலை நிமிர்ந்து, "அவர்களெல்லாம் பத்து நிமிஷத்துக்கு முன்னால்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனார்களே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்றாள்.
அவளுடைய பொறுமையை மேலும் சோதிப்பதுபோல் "அவர்கள்தான் பள்ளிக்கூடம் போனார்கள்; சமையற்காரன் எங்கே போய்விட்டான்?" என்றார் அவர்.
"அவன் வேலைதான் முடிந்துவிட்டதே, எங்கேயாவது அரட்டை.படிக்கப் போயிருப்பான்!"
"தோட்டக்காரன்?"
"அவனுக்கு நீங்கள் கலியாணம் செய்துவைத்து, 'அவுட்- ஹவு'ஸை ஒழித்துக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள், அதைவிட்டு அவன் எங்கே வெளியே வருகிறேன் என்கிறான்?" என்றாள் அவள்.
அவர் திரும்பினார்; அவள் மறுபடியும் உரை ‘தயா'ரிப்பதில் மூழ்கினாள்.
‘டிரிங்...டிரிங்...!'
சைக்கிள் மணியைத் தொடர்ந்து "சார், போஸ்ட்!" என்ற குரல் மீண்டும் வாசலிலிருந்து ஒலித்தது.
அந்த 'நாமம் போட்ட பெரியவ'ராக இருந்தால் நேரே உள்ளே வந்து காதும் காதும் வைத்தாற்போல் தபாலைக் கொடுத்துவிட்டுப் போவார். இவன் யாரோ தெரியவில்லை, வெளியே இருந்தபடியே குரல் கொடுக்கிறான்!' என்று முணு முணுத்துக் கொண்டே வராந்தாவுக்கு வந்த ஆத்மநாதன், "உள்ளேதான் வாயேன்!" என்றார் வாசலில் கொஞ்சம் வாலிப மிடுக்கோடு நின்றிருந்த தபாற்காரனை நோக்கி.
"வெளியே 'நாய்கள், ஜாக்கிரதை!' என்று போர்டு போட்டிருக்கிறதே சார், நான் எப்படி உள்ளே வருவேன்?" என்றான் அவன்.
"இந்தக் காலத்து நாய்கள்கூடச் சாப்பிடுவதற்கு மட்டுந்தானே வாயைத் திறக்கின்றன? நீ தைரியமாக உள்ளே வா!" என்றார் அவர், தம் வீட்டு வேலைக்காரர்களின் மேல் தமக்கிருந்த அதிருப்தியை நாயின் வாயிலாகக் காட்டிக் கொண்டே.
அதைப் பற்றி அவனுக்கு என்ன?- அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.
"ஆமாம், முன்பெல்லாம் ஒரு 'நாமம் போட்ட பெரியவர்' இந்தப் பக்கம் வருவாரே, அவரை எங்கே இப்போது காணோம்?"
"அவர் ‘ரிடைய'ராகிவிட்டார் சார், அவருடைய மகன்தான் நான்!"
"ஐ ஸீ!"
"மோட்டார் டயர் 'ரிடைய 'ரானால் 'ரீட்ரெட்' செய்து மறுபடியும் உபயோகிக்க முடிகிறது. மனிதன் ‘ரிடைய'ரானால் அவனை எங்கே சார் ரீட்ரெட்' செய்ய முடிகிறது?" என்றான் அவன் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனத்துடன்.
"அது முடியாதுதான்; ஆனாலும் தபாற்காரன் மகன் தபாற்காரனாகத்தானா ஆகவேண்டும்? 'குலத்தொழில் கல்லாமல் வரும்' என்கிறார்களே, அது மாதிரியல்லவா இருக்கிறது இது? ஏன், இப்பொழுதுதான் மத்தியானம் சாப்பாடு இலவசம், படிப்பு இலவசம், எல்லாம் இலவசம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, நீ எஸ். எஸ். எல், ஸி. வரையிலாவது படித்து, குறைந்த பட்சம் ஒரு குமாஸ்தாவாகவாவது ஆகியிருக்கக் கூடாதா?"
"அதெல்லாம் அரசியல் வாதிகளின் பிரசாரத்துக்குப் பயன்படும் அளவுக்கு அடித்தளத்திலுள்ள மக்களுக்கு எங்கே சார், பயன்படுகிறது?"
"ஏன் பயன்படவில்லை?"
"அவர்கள் இன்னும் 'இரண்டு கால் பிராணிக'ளாகத் தானே இருந்து கொண்டிருக்கிறார்கள்? இல்லாவிட்டால் மாதம் நூறு ரூபாய்கூடக் கிடைக்காத வேலையில் இருந்து கொண்டு என் அப்பா என்னையும் சேர்த்து ஏழு பிள்ளைகளையும் இரண்டு பெண்களையும் 'நவக்கிரகங்கள்' மாதிரி பெற்று வைத்திருப்பாரா? அதனால் என்ன ஆயிற்று? இன்று அவருக்கும் கஷ்டம்; எங்களுக்கும் கஷ்டம். அன்பு இருக்க வேண்டிய இடத்தில் அலுப்பும் சலிப்பும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த லட்சணத்தில் எல்லாருக்கும் மூத்தவனான என்னை இந்த அளவுக்கு ஆளாக்கிவிடவே அவர் எத்தனையோ பேரிடம் தலையைச் சொறிந்து கொண்டு நின்றிருக்கவேண்டுமே!"
இதைக் கேட்டதும் ஏனோ தெரியவில்லை, ஆத்மநாதனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர் சிரித்துக் கொண்டே, "ஆமாம் ஆமாம், அதிலும் தீபாவளியும் பொங்கலும் நெருங்கும்போது அவருடைய தலை அடிக்கடி நமைக்க ஆரம்பித்துவிடும். சொறி, சொறி' என்று சொறிந்து கொண்டே வந்து நிற்பார்!" என்றார்.
"உங்களைப் போன்ற பெரிய மனிதர்களிடமிருந்து இனாம் வாங்குவதென்றால் சும்மாவா, சார்? தலையையும் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும்? உங்கள் காலிலும் விழுந்து எழுந்திருக்க வேண்டுமே!" என்றான் அவன் பெருமூச்சுடன்.
இது அவருக்கு என்னவோபோல் இருந்தது. "சரிசரி, நீ கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போ!" என்றார் சற்றே சிடுசிடுப்புடன்.
அவன் கொடுத்துவிட்டுச் சென்றான்.
அந்த ஆண்டு தீபாவளி வழக்கம்போல் நெருங்கிக் கொண்டிருந்தது. கடை வீதிகளில் மட்டுமல்ல; ஆத்மநாதன் போன்ற பெரிய மனிதர்களின் வீடுகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் முன்கூட்டியே கேட்டுக் கொண்டிருந்தது. குமாஸ்தா வீட்டுக் குழந்தைகளே பட்டாசு வெடிக்கத் தீபாவளி வரும்வரை காத்திருக்காதபோது, அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகளா காத்திருக்கும்? அவை அடம்பிடித்து வாங்கி வெடித்தால், இவை அடம் பிடிக்காமலே வாங்கி வெடித்துக் கொண்டிருந்தன.
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதே சகதர்மினி சகிதம் கடை வீதிக்குச் சென்று, தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் வேண்டிய புத்தாடைகளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் ஆத்மநாதன். இன்னும் வேலைக்காரர்களுக்கு எடுக்க வேண்டியதுதான் பாக்கி. 'அதைத் தீபாவளிக்கு முதல் நாள் எடுத்துக் கொண்டால் போச்சு!' என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, பற்றுத் தேய்க்கும் பாப்பாத்தி வந்து அவருக்கு எதிரே நின்று தலையைச் சொறிந்தாள்.
"என்ன?" என்றார் ஆத்மநாதன்.
"இந்த வருசம் எனக்குத் தீபாவளிப்புடவை வேண்டாமுங்க!" என்றாள் அவள்.
"ஏன்?" என்றார் அவர்.
"இன்னொரு வீட்டிலும் நான் பத்துத் தேய்க்கிறேன் இல்லைங்களா? அந்த வீட்டிலே எனக்குத் தீபாவளிப் புடவை வாங்கிட்டு வந்திருக்காங்க!"
"அதற்காக?"
"நீங்க புடவைக்குப் பதிலாப் பணமாக் கொடுத்திடுங்க!"
"எதற்கு?"
"என் பொண்ணுக்கு ஏழெட்டு வயசு ஆயிடிச்சிங்க. இதுவரையிலே அவ வெட்கம்னா என்னன்னே தெரியாம திரிஞ்சிக்கிட்டிருந்தா..."
"இப்போ?"
"பாவாடை, ஜாக்கெட் இல்லாம அவள் வெளியே போகமாட்டாளாம்!"
"நல்ல வேடிக்கைதான்! வெட்க மென்றால் என்னவென்று தெரியும் வரை உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் துணிமணிவாங்கிக் கொடுக்க மாட்டீங்களா, என்ன?"
"மாட்டார்கள், சார்! 'மானமும் மரியாதையும் இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கட்டும், நமக்கு வேண்டாம்' என்று நினைப்பவர்கள் சார், அவர்கள்!"
இந்த 'இடைச் செருகல்' யாருடையது என்று தெரியாமல் பாப்பாத்தி மட்டுமல்ல, ஆத்மநாதனும் திடுக்கிட்டுத் திரும்பினார். கையிலிருந்த அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இரண்டை அவருக்கு முன்னாலிருந்த 'டீபா'யின் மேல் வைத்துவிட்டு நின்றான் அந்தத் தபாற்காரப் பையன்.
"நீதானா?" என்றார் அவர்.
"ஆமாம் சார், நானேதான், சார்!" என்றான் அவன்.
"இந்த வேலை எத்தனை நாட்களாக?"
"எந்த வேலை?"
"வீட்டுக்கு வீடு பத்திரிகை போடும் வேலைதான்!"
"இரண்டு மாத முயற்சிக்குப் பிறகு இன்றுதான் சார், எனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது!"
"இதை முடித்துக் கொண்டு நீ தபாலாபீசுக்குப் போகிறாயா?"
"ஆமாம் சார், அது முடிந்ததும் நேரே சைனா பஜாருக்குப் போய்விடுகிறேன்."
"எதற்கு?"
"கைக்குட்டை விற்க!"
"தேவலையே, ஒரே நாளில் இரண்டு வேலைகள் பார்ப்பதோடு ஒரு வியாபாரமும் செய்கிறாயே நீ?"
"எல்லாம் என் அப்பாவின் அருள்."
"உன் அப்பாவின் அருளா!"
"ஆமாம், சார்! அவர் என்னை மட்டும் பெற்று வைத்திருந்தால் எனக்குத் தபாற்காரன் வேலையே போதும்; எனக்குப் பின்னால் எட்டுப் பேரையல்லவா அவர் பெற்று வைத்திருக்கிறார்? அவர்களுக்கெல்லாம் தீனி போட வேண்டுமே சார், தீனி!" என்று சொல்லிக் கொண்டே அவன் சைக்கிளில் ஏறிப் பறந்தான். "வேடிக்கையான பையன்!" என்று சொல்லிக்கொண்டே அவர் பாப்பாத்தியின் பக்கம் திரும்பி, "உனக்குப் பணந்தானே வேண்டும், உன் பெண்ணுக்குப் பாவாடை, ஜாக்கெட் வாங்கிக் கொடுக்க? அப்படியே தருகிறேன். போ!", என்று சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டு எழுந்தார்.
'வருகிறேன், வருகிறேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருந்த தீபாவளி ஒருநாள் வந்தேவிட்டது. 'கங்கா ஸ்நானம்' முடிந்ததும் தம் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை வழங்கி மகிழ்ந்த ஆத்மநாதன், "வாடா, உனக்குத்தான் முதலில்!" என்று சமையற்காரனை அழைத்தார். வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டே வந்து அவன் நின்றான். அவனிடம் ஒரு வேட்டியையும் ஒரு துண்டையும் எடுத்து அவர் கொடுக்க, அவன் அவற்றைப் பெற்றுக்கொண்டு அவரை வணங்க, அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
அடுத்தாற் போல் தோட்டக்காரன் தம்பதியரை அழைத்தார் அவர்.
அவர்களும் வழக்கம் போல் வந்து தலையைச் சொறிந்து கொண்டு நின்றனர். அவர்களிடம் வேட்டி, துண்டுடன் ஒரு புடவையையும் எடுத்து அவர் கொடுக்க, அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு அவரை வணங்க, அவர் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.
அவர்களுக்கு அடுத்தாற் போல் பாப்பாத்தியை அழைத்தார் அவர். அவளும் வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டு வந்து நின்றாள். அவளிடம் இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தார் அவர். அதைப் பெற்றுக் கொண்டு அவள் அவரை வணங்க, அவர் அவளையும் ஆசீர்வதித்து அனுப்பினார்.
அப்போது வழக்கம் போல் அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இரண்டைக் கொண்டு வந்து அவருக்கு முன்னால் வைத்து விட்டு அந்தத் தபாற்காரப் பையன் திரும்பினான்.
"ஏண்டா, வேட்டி துண்டு இல்லா விட்டாலும் உனக்குத் தீபாவளி இனாமாவது வேண்டாமா?" என்றார் அவர்.
"மன்னியுங்கள், சார்! என் அப்பாதான் 'தன்னை மதிக்கத் தெரியாதவ'ராக வாழ்ந்து விட்டார், நானாவது 'என்னை மதிக்கத் தெரிந்தவ'னாக வாழ வேண்டாமா, சார்?-அதிலும் இந்த இனாம் இருக்கிறதே இனாம், அது பிறரை மதிக்க, பிறருக்கு மரியாதை காட்டத்தான் உதவுகிறதே தவிர, மதிக்க தனக்கு மரியாதை காட்டிக் கொள்ள உதவுவதில்லை, சார் அப்படி நீங்கள் என்னை வாழ்த்தத்தான் வேண்டுமென்று நினைத்தால் 'மனம் உயர' என்று வாழ்த்துங்கள், சார்" என்று சொல்லிக்கொண்டே வந்து அவன் அவரை வணங்கி நின்றான்.
"அது என்ன மனம் உயர?" என்றார் அவர், ஒன்றும் புரியாமல்.
"அவ்வை 'வரப்புயர' என்று ஒரு சமயம் யாரையோ வாழ்த்தவில்லையா, சார்? அந்த மாதிரிதான் இதுவும். வரப்புயர்ந்தால் நீர் உயரும்; நீர் உயர்ந்தால் பயிர் உயரும்; பயிர் உயர்ந்தால் களத்தில் நெல் உயரும்; நெல் உயர்ந்தால் மக்கள் உயர்வார்கள்; மக்கள் உயர்ந்தால் மன்னன் உயர்வான்; மன்னன் உயர்ந்தால் நாடு உயரும்; நாடு உயர்ந்தால் உலகம் உயரும். அதே மாதிரி மனம் உயர்ந்தால் மானம் உயரும்; மானம் உயர்ந்தால் மரியாதை உயரும்; மரியாதை உயர்ந்தால் தன்னம்பிக்கை உயரும்; தன்னம்பிக்கை உயர்ந்தால் ஒருவன் இன்னொருவனிடம் எதற்கும் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கமாட்டான் அல்லவா?" என்றான் அவன்.
இப்போது அவருக்குப் புரிந்து விட்டது - அவன் 'முந்திய பாரதத்தினன்' அல்ல, 'இளைய பாரதத்தினன்' என்று. அதற்குமேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை; அவன் விரும்பியபடியே 'மனம் உயர' என்று மட்டும் அவனை வாழ்த்தி அனுப்பினார்.
போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் 'ரஸாயன'ங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சாரச் சிகிச்சை'யளிக்கும் புத்தம்புது முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த - இருந்து வருகிற 'மனித மிருக'ங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழி தேட முயலும் நவயுகக் கதைகளை இன்று போல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும்; தமிழ் நாட்டை மேம்படுத்த வேண்டும் - இதுவே என் எண்ணம்; இதுவே என் இருபது வருட கால எழுத்து.
15.5.56
விந்தன்
கருத்துகள்
கருத்துரையிடுக