கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 2
சிறுகதைகள்
Backகல்கியின் சிறுகதைகள் தொகுப்பு (பாகம் 2)
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
-
Source
-
கல்கியின் சிறுகதைகள் தொகுதி- vol 1, 2, 3
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
நக்கீரன் பதிப்பகம்,
2ம் பதிப்பு, 2014
---------------------
கல்கியின் சிறுகதைகள் தொகுதி - part 2
உள்ளடக்கம்
16. பரிசல் துறை | 24. ஒன்பது குழி நிலம் |
17. ஸுசீலா எம்.ஏ. | 25. புன்னைவனத்துப் புலி |
18. கமலாவின் கல்யாணம் | 26. திருவழுந்தூர் சிவக்கொழுந்து |
19. தற்கொலை | 27. ஜமீன்தார் மகன் |
20. எஸ். எஸ். மேனகா | 28. மயிலைக் காளை |
21. சாரதையின் தந்திரம் | 29. ரங்கதுர்க்கம் ராஜா |
22. கவர்னர் விஜயம் | 30. இடிந்த கோட்டை |
23. நம்பர் 888 |
16. பரிசல் துறை
காவேரி நதியின் பரிசல் துறையில் அரச மரம் ஒன்று செழிப்பாக வளர்ந்து, கப்பும் கிளையுமாகப் படர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. இளங்காற்று வீசிய போது அதனுடைய இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்பட்ட 'சலசல' சப்தம் மிகவும் மனோகரமாயிருந்தது. அரச மரத்துடன் ஒரு வேப்ப மரமும் அண்டி வளர்ந்து இருந்தது. இவற்றின் அடியில் இருந்த மேடையில் ஒரு கல்லுப் பிள்ளையார் எழுந்தருளியிருந்தார்.
பிள்ளையார் சதா சர்வதா இருபத்திநாலு மணி நேரமும், அவருக்கெதிரே கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு காப்பி ஹோட்டலைப் பார்த்த வண்ணமாய் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அரை கப் காப்பி எப்போதாவது யாராவது கொடுத்தது உண்டோ என்றால், கிடையாது. சில சமயங்களில் காப்பிக் கொட்டை வறுக்கும் போது வரும் வாசனையை அநுபவிப்பதுடன் அவர் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
வேலம் பாளையம் ஒரு சின்னஞ் சிறிய கிராமம். அதற்குச் சமீபத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் பதின்மூன்று மைல் தூரத்திலிருப்பது. கிராம வாசிகள் ரொம்பவும் சாமான்யமான ஜனங்கள். குடியானவர்களும், கைக்கோளர்களும், ஹரிஜனங்களும்தான் அங்கே வசித்தார்கள். காவேரிக் கரையில் இருந்தும் ஜலக் கஷ்டம். அவ்விடம், காவேரி ஆற்றின் தண்ணீர் சாகுபடிக்குப் பயன் படுவதில்லை. பூமி அவ்வளவு மேட்டுப் பாங்காயிருந்தது. சாதாரணமாய், கரையிலிருந்து வெகு ஆழத்தில் ஜலம் போய்க் கொண்டிருக்கும். பெரும் பிரவாகம் வருங்காலத்தில் அரச மரத்தின் அடிவேரைத் தொட்டுக் கொண்டு போகும்.
இப்படிப்பட்ட பட்டிக்காட்டிலே கொண்டு வந்து காப்பி ஹோட்டல் வைத்திருந்தார் ஒரு பாலக்காட்டு ஐயர். அவர் வட துருவங்களுக்குப் போய்ப் பார்த்து, அங்கே கூட ஹோட்டல் அதிகமாகி வியாபாரம் கம்மியாய்ப் போனதைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
பரிசல் துறையிலிருந்து கிராமம் கொஞ்ச தூரத்திலிருந்தது. பரிசல் துறைக்கு அருகில் இரண்டே கூரைக் குடிசைகள். அவற்றில் ஒன்றிலேதான் ஹோட்டல். அதன் வாசலில் இங்கிலீஷிலே "டிரிப்ளிகேன் லாட்ஜ்" என்றும், தமிழிலே "பிராமணாள் காப்பி - டீ கிளப்" என்றும் எழுதிய போர்டு ஒன்று தொங்கிற்று. அன்று சந்தை நாள் ஆகையால் ஹோட்டலில் வியாபாரம் அதிகம். உள்ளே ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் தையல் இலையில் வைத்திருந்த இட்டிலியை வெகு சிரமத்துடன் விண்டு விண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
"ஐயரே! எங்கே, ஒரு கப் காப்பி 'அர்ஜெண்'டாக் கொண்டாரும் பார்க்கலாம்" என்றார் அவர்களில் ஒருவர்.
"ஏஞ்சாமி! நீங்க காப்பியிலே தண்ணீ ஊத்தற வழக்கமா, தண்ணியிலே காப்பி ஊத்தற வழக்கமா" என்று கேட்டார் ஹாஸ்யப் பிரியர் ஒருவர்.
"ஐயர் பாடு இனிமேல் கொண்டாட்டந்தான். காவேரித் தண்ணியெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து காப்பி, டீன்னு சொல்லி வித்துப்பிடுவாரு. காங்கிரஸ் கவர்மெண்டிலேதான் கள்ளுக்கடையை மூடிடப் போறாங்களாமே?" என்றார் மூன்றாவது பேர் வழி.
"ஆமாம், போங்க! இந்த மாதிரிதான் எத்தனையோ நாளாய்ப் பேசிக்கிட்டிருக்கிறாங்கோ!" என்றார் ஒரு சந்தேகப் பிராணி.
"இந்தத் தடவை அப்படியெல்லாம் இல்லை; நிச்சயமாய் சாத்திவிடப் போகிறார்கள். இப்போது காங்கிரஸ்தானே கவர்மெண்டே நடத்தறது? உத்தரவுகூடப் போட்டுட்டாங்களாம். அக்டோ பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரு சொட்டுக் கள்ளு, சாராயம் இந்த ஜில்லாவிலேயே பேசப்படாது."
"கள்ளுக்கடை மூடினால் ஐயருக்கு ரொம்பக் கொண்டாட்டம் என்கிறீங்களே? நிஜத்திலே அவருக்குத்தான் ஜாஸ்தி திண்டாட்டம்" என்றார் ஒரு வம்புக்கார மனுஷர்.
"அது என்னமோ? கொஞ்சம் வியாக்யானம் பண்ணுங்க!" என்றார் ஒரு கல்விமான்.
"ஆமாம்; பொழுது சாய்கிற வரைக்கும் ஐயர் காப்பிக் கடையிலே இருக்கிறாரு. பொழுது சாய்ந்ததும் கடையை மூடிக்கிட்டு எங்கே போறாரு கேளுங்க. என் வாயாலே நான் சொல்லலை. அவரையே கேட்டுக்கங்க..."
அப்போது உள்ளேயிருந்து, "இந்தா கவுண்டரே! இப்படியெல்லாம் பேசினால் இங்கே ஒண்ணும் கிடைக்காது. காப்பி வாயிலே மண்ணைப் போட்டுடுவேன்" என்று கோபமான குரல் கேட்டது.
"சாமி! சாமி! கோவிச்சுக்காதிங்க. இனிமே நான் அப்படி உங்க கிட்டக்கச் சொல்லலை, சாமி!" என்றார் கவுண்டர்.
அப்போது பரிசல் துறையிலிருந்து, "ஏ ஓடக்காரத் தம்பி, எத்தனை நேரம் நாங்க காத்துக்கிட்டிருக்கிறது?" என்று ஒரு கூக்குரல் கேட்டது.
மேற்சொன்ன ரஸமான சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன், "ஐயரே! இட்லி கிட்லி ஏதாவது கொடுக்கப் போகிறாயா, நான் போகட்டுமா?" என்றான்.
அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவன், "அதோ பார்த்தாயா, சுப்பண்ணா! பத்ரகாளி போறாள்!" என்றான் பக்கத்திலிருந்தவனிடம். ஓடக்காரத் தம்பி உடனே எட்டிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி தலையில் கத்திரிக்காய்க் கூடையுடன் பரிசல் துறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவ்விடம் அரசமரத்துப் பிள்ளையார் இருந்த இடத்துக்குக் கீழே சுமார் 30, 40 அடி ஆழம் இறங்கித்தான் தண்ணீர்த் துறைக்குப் போக வேண்டும். ஒரு கையால் தலைக் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கை ஊசலாட, இடுப்பு நெளிந்து நெளிந்து அசைய அந்த இளம்பெண், ஓடத்துறைக்கு இறங்கிக் கொண்டிருந்த காட்சியை அசப்பிலே பார்த்தால் உயர்தர சித்திரக்காரன் எழுதிய ஒரு சித்திரக் காட்சியைப் போல் தோன்றியது.
ஓடக்காரத் தம்பி அவளைப் பார்த்த உடன், "சரி, சரி, இந்த ஐயர் இட்லி கொடுப்பார் என்று காத்திருந்தால், அடுத்த வெள்ளிக்கிழமைச் சந்தைக்குத் தான் போகலாம்" என்று சொல்லிக் கொண்டு எழுந்து விர்ரென்று வெளியே சென்றான்.
அவன் போனவுடன் ஹோட்டலில் பின்வரும் சம்பாஷணை நடந்தது:-
"என்ன, பழனிச்சாமி திடுதிப்பென்று கிளம்பி ஓடிட்டான்."
"காரணமாகத்தான். அந்தப் பொண்ணைக் கட்டிக்க வேணுமென்று இவனுக்கு ரொம்ப ஆசை. அவள் அப்பன் காளிக் கவுண்டன் 'கூடாது' என்கிறான். 'கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனுக்கு இரண்டாந் தாரமாகத்தான் கட்டிக் கொடுப்பேன்' என்கிறான். காளிக் கவுண்டன் பெரிய மொடாக்குடியன். தெரியாதா உனக்கு?"
"அதேன் பத்திரகாளி என்று அவளுக்கு பேரு? அவள் அப்பன் வைச்சது தானா?"
"அவள் நிஜப் பேரு குமரி நங்கை, ரொம்ப முரட்டுப் பெண். அப்பனுக்கு அடங்கமாட்டாள். ஊரிலே ஒருத்தருக்குமே பயப்பட மாட்டாள். அதனால்தான் 'காளிமவள் பத்திரகாளி' என்று அவளுக்குப் பெயர் வந்தது.
"அவளைக் கட்டிக்க வேணுமென்று இந்தப் பையனுக்கு ஆசை உண்டாச்சு பாரேன்! என்ன அதிசயத்தைச் சொல்ல?"
குமரி நங்கை பரிசலின் சமீபம் வந்ததும் அதில் ஏற்கனவே ஏறியிருந்தவர்களைப் பார்த்து, "ஏன், ஓடக்காரர் இல்லையா, என்ன" என்றாள்.
"அதோ பார் பின்னாலே!" என்றான் பரிசலில் இருந்தவர்களில் ஒருவன்.
குமரி நங்கை திரும்பிப் பார்த்தாள். பழனிச்சாமி அவளுக்கு வெகு சமீபமாய் வந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் காரணமில்லாமல் திடுக்கிட்டாள். பரிசலில் இருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.
ஆனால், பழனிச்சாமி இதையெல்லாம் சற்றும் கவனிக்காதவன் போல் விரைவாகச் சென்று பரிசலில் ஏறினான். குமரி நங்கை ஏறினாளோ இல்லையோ, பரிசல் இரண்டு தடவை நின்ற இடத்திலேயே வட்டமிட்டு விட்டு, விர்ரென்று போகத் தொடங்கியது. படகிலிருந்தவர்கள் ஏதேதோ ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழனிச்சாமியாவது குமரி நங்கையாவது வாயைத் திறக்கவில்லை.
அக்கரை நெருங்கியதும், பழனிச்சாமி பரிசலைச் சிறிது நிறுத்தி, "துட்டு எடுங்க!" என்றான். எல்லாரும் இரண்டு அணா கொடுத்தார்கள். ஒருவன் மட்டும் ஒரு அணா பத்து தம்பிடி கொடுத்துவிட்டு, "இரண்டு தம்பிடி குறைகிறது தம்பி! வரும்பொழுது தருகிறேன்" என்றான். குமரி நங்கையும் கையில் இரண்டணாவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்; அதைப் பழனிச்சாமி கவனிக்கவுமில்லை; வாங்கிக் கொள்ளவுமில்லை. பரிசலைக் கரையிலே கொண்டு சேர்த்து விட்டுக் கீழே குதித்தான். எல்லாரும் இறங்கினார்கள். குமரி நங்கை கடைசியாக இறங்கி, இரண்டணாவை நீட்டினாள். பழனிச்சாமி அப்போதும் அதைப் பாராதவன் போல் இருக்கவே, அவள் பரிசலின் விளிம்பில் அதை வைத்து விட்டுப் போய் விட்டாள்.
2
சூரியன் மேற்குத் திக்கில் வெகு தூரத்திலிருந்த மலைத் தொடருக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தான். அங்கே ஆகாயத்தில் சிதறிக் கிடந்த மேகங்கள் தங்க நிறம் கொண்டு பிரகாசித்தன.
பரிசல் துறையின் அந்தண்டைக் கரையில் ஒரு சில்லறை மளிகைக்கடை இருந்தது. உப்பு, புளி, சாமான்கள் அதில் வைத்திருந்தன. வாழைப்பழக் குலைகளும், கயிற்றில் கோத்த முறுக்குகளும் தொங்கின. பழனிச்சாமி அந்தக் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு கடைக்காரச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கவனம் பேச்சில் இல்லையென்று நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில் அடிக்கடி அவன் சாலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய வரவையோ எதிர் பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பவன் போல் காணப்பட்டான்.
கடைசியாக, தூரத்தில் சாலையின் வளைவு திரும்புகிற இடத்தில் குமரி நங்கை வருவதை அவன் கண்டான். உடனே, துள்ளிக் குதித்து எழுந்து, "செட்டியாரே, போய் வாரேன்," என்று சொல்லி விட்டு நதிக்கரைக்குப் போனான். அங்கே அப்போது வேறு யாரும் இல்லை. பரிசல் காலியாக இருந்தது. சந்தைக்கு வந்தவர்கள் எல்லாரும் திரும்பிப்போய் விட்டார்கள்.
குமரி நங்கை தண்ணீர்த் துறைக்குக் கிட்டத்தட்ட வந்த போது, பழனி பரிசலைக் கரையிலிருந்த அவிழ்த்துவிட்டு அதில் ஏறிக் கொண்டான். குமரி தயங்கி நின்றாள். வேறு யாராவது வருகிறார்களா வென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒருவரும் காணப்படவில்லை.
"நீ வரவில்லையா? நான் போகட்டுமா? இனிமேல் திரும்பி வரமாட்டேன். இதுதான் கடைசித் தடவை" என்றான்.
குமரி இன்னமும் தயங்கினாள். மறுபடியும் சாலைப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள்.
"இதோ பார் சந்தைக்கு வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நீ இப்போது உடனே வராவிட்டால், இராத்திரி இங்கேயே தங்க வேண்டியதுதான்" என்றான்.
குமரி ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலை குனிந்தபடி சென்று பரிசலில் ஏறினாள்.
பரிசல் போக ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் வரை வேகமாய்ப் போயிற்று. பிறகு, ரொம்பத் தாமதமாய்ப் போகத் தொடங்கியது.
குமரி நங்கை மேற்குத் திக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூரியன் மலைவாயில் இறங்கி விட்டது. அவ்விடத்தில் சற்று முன் காணப்பட்ட மஞ்சள் நிறம் விரைவாக மங்கி வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருட்டியே போய்விடும். அதற்குள் படகு கரைசேராதா என்ன?
பழனிச்சாமி அவளுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருந்தான். அவள் முகத்தில் அவன் என்னத்தைத் தான் கண்டானோ, தெரியாது. தினம் பார்க்கும் முகம் தானே? அப்படிப் பார்ப்பதற்கு அதில் என்ன தான் இருக்கும்? சற்று நேரத்துக்கெல்லாம் இருட்டிப் போய்விடும். அப்புறம் அந்த முகத்தை நன்றாய்ப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தினால் தானோ என்னமோ, கண்ணை எடுக்காமல் பார்த்த வண்ணம் இருந்தான்.
குமரி நங்கைக்கு உள்ளுணர்வினாலேயே இது தெரிந்திருக்க வேண்டும். அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். "ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?" என்றாள்.
"நீ ஏன் என்னைப் பார்க்கிறாய்?"
"நான் எங்கே பார்த்தேன்?"
"நீ பார்க்காவிட்டால் நான் உன்னைப் பார்த்தது எப்படித் தெரிந்தது?"
குமரி சற்றுப் பேசாமல் இருந்தாள். பிறகு, "பரிசல் ஏன் இவ்வளவு தாமதமாய்ப் போகிறது?" என்று கேட்டாள்.
"காரணமாய்த்தான். இரண்டு வருஷமாய் நான் உன்னை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லவில்லை. இன்றைக்கு பதில் சொன்னால் தான் பரிசலை அக்கரைக்குக் கொண்டு போவேன்" என்றான்.
குமரி பேசவில்லை. பழனி மறுபடியும், "இதோ பார் குமரி! உன் முகத்தை எதற்காகப் பார்க்கிறேன் என்று கேட்டாயல்லவா? சொல்லுகிறேன். இன்று காலையில் நான் உன் முகத்தில் விழித்தேன். முதல் பரிசலில் நீ வந்தாய். அதனால் இன்றைக்கு எனக்கு நல்ல அதிர்ஷ்டம். ஏழு ரூபாய் வசூலாயிற்ரு. இன்னொரு பரிசல் வாங்குவதற்குப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றோடு ரூபாய் ஐம்பது சேர்ந்து விட்டது" என்று சொல்லி, பரிசலின் அடியில் கிடந்த பணப்பையை எடுத்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு மறுபடி கீழே வைத்தான்.
"நீ மட்டும் என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், தினமும் உன் முகத்தில் விழிக்கலாமே, தினமும் எனக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டிருக்குமே என்று பார்க்கிறேன்" என்றான்.
"இப்படி ஏதாவது சொல்லுவாய் என்று தான் உன் பரிசலில் தனியாய் ஏறப்படாது என்று பார்த்தேன்..."
"பின் ஏன் இவ்வளவு நேரங்கழித்து வந்தாய்?"
"சீக்கிரம் போனால், கத்திரிக்காய் விற்ற பணம் அவ்வளவையும் அப்பன் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடும். 'அது' கடைக்குப் போன பிறகு நான் வீட்டுக்குப் போனால் தேவலை என்று கொஞ்சம் மெதுவாய் வந்தேன். இருக்கட்டும்; நீ இப்போது சீக்கிரம் பரிசலை விடப் போகிறாயா, இல்லையா?"
"முடியாது அம்மா, முடியாது!" என்று பழனி கையை விரித்தான். பரிசல் தள்ளும் கோலைக் கீழே வைத்துவிட்டு, குமரியின் சமீபமாக வந்தான். "இன்றைக்கு நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய், சுவாமி கிருபையினால். உன்னை நான் விடப் போவதில்லை. நீ என்னைக் கட்டிக் கொள்கிறதாக சத்தியம் செய்து கொடு. கொடுத்தால் பரிசலை விடுகிறேன். இல்லாவிட்டால் மாட்டேன்" என்றான்.
குமரி இதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் கோபம் ஜொலித்தது.
"கிட்ட வராதே! ஜாக்கிரதை!" என்றாள்.
"கிட்ட வந்தால் என்ன பண்ணுவாய்? சத்தியம் செய்து கொடுப்பாயா! மாட்டாயா?"
"மாட்டேன்."
"பின்னே, அந்தக் கள்ளுக் கடைக்காரனையா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?"
"சீ! வாயை மூடு!"
"அதெல்லாம் முடியாது. உன்னை நான் விட மாட்டேன். நீ என்னைக் கட்டிக் கொள்ள மாட்டேனென்றால், நான் உன்னை கட்டிக் கொள்ளப் போகிறேன்" என்று சொல்லி, பழனி இன்னும் அருகில் நெருங்கினான்.
"என் பெயர் என்ன தெரியுமா? 'பத்திரகாளி!'" என்றாள் குமரி.
"நீ பத்திர காளியாயிருந்தால் நான் ரண பத்திரகாளி" என்று பழனி சொல்லி, அவளுடைய தோளில் கையைப் போட்டான்.
உடனே, குமரி அந்தக் கையை வெடுக்கென்று ஒரு கடி கடித்தாள். "ஐயோ!" என்று அவன் அலறிக் கொண்டு கையை எடுத்ததும், 'தொப்'பென்று தண்ணீரில் குதித்தாள்.
அவள் குதித்தபோது பரிசல் ஒரு பெரிய ஆட்டம் ஆடி ஒரு புறமாய்ப் புரண்டது. அப்போது, குமரியின் கூடை, பழனியின் மேல் துணி, பணப்பை எல்லாம் ஆற்றிலே விழுந்தன.
பழனிக்கு ஒரு நிமிஷம் வரை இன்னது நடந்தது என்றே தெரியவில்லை. பரிசல் புரண்டபோது பரிசல் தள்ளும் கோல் ஆற்றில் போய் விடாதபடி இயற்கை உணர்ச்சியினால் சட்டென்று அதை எடுத்துக் கொண்டான். பிறகு, குமரி நங்கை அந்தப் பிரவாகத்தில் நீந்துவதற்கு முயன்று திண்டாடுவதைப் பார்த்துத்தான் அவனுக்குப் புத்தி ஸ்வாதீனம் வந்தது. "ஐயோ! குடி முழுகிப் போச்சே!" என்று அவன் உள்ளம் அலறிற்று.
அவசரமாய்ப் படகைச் சமாளித்துக் கொண்டு, பிரவாகத்துடன் குமரி போராடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய், "குமரி, குமரி! நான் செய்தது தப்புத்தான். ஏதோ கெட்ட புத்தியினால் அப்படிச் செய்து விட்டேன், மன்னித்துக்கொள். இனிமேல் உன்னைத் தொந்தரவே செய்வதில்லை. சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இப்போது இந்தக் கழியைப் பிடித்துக் கொண்டு மெதுவாய்ப் பரிசலில் ஏறிக்கொள்" என்று கதறினான். குமரி அவனை ஒரு பார்வை பார்த்தாள். பழனி, "என் தலைமேல் ஆணை. உன்னை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். ஏறிக் கொள்" என்றான்.
குமரி அவன் நீட்டிய கழியைப் பிடித்துக் கொண்டு, பரிசலின் அருகில் வந்தாள். ஒரு கையால் கழியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை உயர நீட்டினாள். பழனி அதைப் பிடிப்பதற்குத் தயங்கினான்.
"கையைக் கொடு!" என்றாள். அவன் கொடுத்ததும் ஒரு எம்பு எம்பி பரிசலுக்குள் ஏறினாள். பரிசல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு மறுபடி சரியான நிலைமைக்கு வந்தது.
அவள் ஏறினவுடனே பழனிச்சாமி அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பாராமல் பரிசலில் இன்னொரு பக்கத்துக்குப் போனான். வெகு வேகமாகப் பரிசல் தள்ள ஆரம்பித்தான். குமரி இருந்த பக்கம் பார்க்கவேயில்லை.
குமரி இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய துணியில் இரத்தக் கறை பட்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்குத் துணுக்கென்றது. அவன் அருகில் போய்ப் பார்த்தாள். கையில் அவள் கடித்த இடத்தில் இன்னமும் இரத்தம் பெருகிச் சொட்டிக் கொண்டிருந்தது.
குமரியின் உள்ளத்தில் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. கொஞ்சம் துணி இருந்தால் காயத்தைக் கட்டலாம். பழனியின் மேல் துண்டு கிடந்த இடத்தைப் பார்த்தாள். அந்தத் துண்டைக் காணவில்லை. அங்கிருந்த பணப் பையையும் காணவில்லை! குமரியின் நெஞ்சு மீண்டும் ஒரு முறை திடுக்கிட்டது. தான் நதியில் குதித்த போது பரிசல் புரண்டதில் பணப்பையும் மேல் துண்டும் வெள்ளத்தில் விழுந்திருக்க வேண்டும்!
ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, குமரி தன்னுடைய சேலைத் தலைப்பில் ஒரு சாண் அகலம் கிழித்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து பழனியின் கையில் கடிபட்ட இடத்தில் கட்டிவிட்டாள். பிறகு, பரிசலின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அப்புறமுங்கூடப் பழனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. கீழ் வானத்தின் அடியில் உதயமாகிக் கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய 'கண்ட'த்திலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு உள்ளத்திலே ஏற்படக் கூடிய சாந்தி அவள் மனத்தில் இப்போது ஏற்பட்டிருந்தது. கடவுளே! எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோ டு போயிற்றே! எல்லாம் உன் அருள்தான்!
கையில், குமரி பல்லால் கடித்த இடத்தில் 'விண் விண்' என்று தெறித்துக் கொண்டிருந்தது. அதை அவன் இலட்சியம் செய்யவில்லை. கோலுக்குப் பதிலாகத் துடுப்பை உபயோகித்து முழு பலத்துடனும் தள்ளினான். சிறிது நேரத்துக்கெல்லாம் பரிசல் கரையை அடைந்தது.
இருட்டுகிற சமயம் ஆற்றங்கரையோடு இரண்டு வாலிபர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழனியும் குமரியும் மட்டும் பரிசலில் வந்து கரை சேர்ந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவன் சீட்டி அடித்தான்! இன்னொருவன் தெம்மாங்கு பாடத் தொடங்கினான்.
கரை சேர்ந்ததும் குமரி பரிசலிலிருந்து குதித்தாள். பழனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவசரமாய்க் கரையேறிச் சென்றாள்.
பழனி சற்று நேரம் பரிசலிலேயே இருந்தான். பிறகு அதைக் கரையில் வழக்கமான இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு, வீடு நோக்கி நடந்தான். நடக்கும் போதே அவனுடைய கால்கள் தள்ளாடின. தேகம் நடுங்கிற்று. ஆனால் வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொண்ட பிறகுதான், தனக்குக் கடும் ஜுரம் அடிக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வந்தது.
3
நதிக் கரையில், காப்பி ஹோட்டலுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு கூரை வீடுதான் பழனியின் வீடு. அதில் அவனும் அவன் தாயாரும் வசித்து வந்தனர். ஆனால் இச்சமயம் பழனியின் தாயார் வீட்டில் இல்லை. அவளுடைய மூத்த மகளின் பிரசவ காலத்தை முன்னிட்டு மகளைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்குப் போயிருந்தாள். பழனி, காலையும் மத்தியானமும் காப்பி ஹோட்டலில் சாப்பிடுவான்; இராத்திரியில் சமையல் செய்து சாப்பிடுவான்.
இப்போது சுரமாய்ப் படுத்ததும், அவன் பாடு ரொம்ப சங்கடமாய் போயிற்று. பக்கத்தில் வேறு வீடு கிடையாது. காப்பி ஹோட்டல் ஐயர் கொண்டு வந்து கொடுத்த காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுக் கிடந்தான். ஐயரும் பகலில்தான் காப்பி ஹோட்டலில் இருப்பார். இருட்டியதும் கதவைப் பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த தம்முடைய வீட்டுக்குப் போய் விடுவார்.
சுரமாய்ப் படுத்து மூன்று நாள் ஆய்விட்டது. இந்த நாட்களில் ஆற்றில் பரிசல் போகவில்லை. ஆகையால் ஊரெல்லாம் ஓடக்காரத் தம்பிக்கு உடம்பு காயலா என்ற சமாசாரம் பரவியிருந்தது.
பழனிசாமி முதல் நாளே அம்மாவுக்கு கடுதாசி எழுதிப் போட்டுவிட்டான். நாளை அல்லது நாளன்று அவள் வந்து விடுவாள் என்று எதிர்பார்த்தான். அதுவரை ஒரு நிமிஷம் ஒரு யுகமாகத் தான் கழித்தாக வேண்டும். மூன்று நாள் சுரத்தில் பழனி ரொம்பவும் மெலிந்து போயிருந்தான். கை வீக்கம் ஒரு பக்கம் சங்கடம் அளித்தது. அன்று சாயங்காலம் எழுந்து விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவனுக்கு உடம்பில் சக்தியில்லை. "விளக்கு ஏற்றாமல் போனால்தான் என்ன?" என்று எண்ணிப் பேசாமல் படுத்திருந்தான்.
உள்ளே நன்றாய் இருண்டு விட்டது. திறந்திருந்த வாசற்படி வழியாக மட்டும் சிறிது மங்கலான வெளிச்சம் தெரிந்தது. பழனி அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ஏனெனில், அந்த வாசற்படியில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. அந்த வேளையில் யார் அங்கே வரக்கூடும்?
"யார் அது?" என்று கேட்டான்.
"நான் தான்" என்று குமரி நங்கையின் குரலில் பதில் வந்தது.
பழனி சற்று நேரம் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.
"விளக்கு இல்லையா?" என்று குமரி கேட்டாள்.
"மாடத்தில் இருக்கிறது. இதோ ஏற்றுகிறேன்" என்றான் பழனி.
"வேண்டாம். நீ படுத்திரு. நான் ஏற்றுகிறேன்" என்று சொல்லி, குமரி சுவரில் மாடம் இருக்கும் இடத்தைத் தடவிக் கண்டு பிடித்து விளக்கு ஏற்றினாள்.
"உனக்கு காயலா என்று சொன்னார்கள். பார்த்துப் போகலாமென்று வந்தேன். என்னால் தான் உனக்கு இந்தக் கஷ்டம் வந்தது. என்னால் எல்லாருக்கும் கஷ்டந்தான்..."
"ரொம்ப நன்றாய் இருக்கிறது. நீ என்ன பண்ணுவாய்? நான் பண்ணினதுதான் அநியாயம். அதை நினைக்க நினைக்க எனக்கு வேதனை பொறுக்கவில்லை. என்னமோ அப்படிப் புத்திகெட்டுப் போய்விட்டது. நீ மன்னித்துக் கொள்ள வேண்டும்."
"நான் மன்னிக்கவாவது? என்னால்தான் உனக்கு எவ்வளவோ கஷ்டம். பரிசலில் வைத்திருந்த பணம் ஆற்றோடு போய்விட்டதல்லவா? அதற்குப் பதில் பணம் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சொல்லி, ஒரு துணிப்பையை எடுத்து, அதற்குள்ளிருந்த பழைய பத்து ரூபாய் நோட்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்துவிட்டு பையைப் பழனிச்சாமியின் பக்கத்தில் வைத்தாள்.
பழனி ரொம்பக் கோபமாய்ச் சொன்னான். "இந்தா பேசாமல் இதை எடுத்துக் கொண்டு போ. அப்படி இல்லையானால் நான் நாளைக்கே உன் அப்பனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவேன்" என்றான்.
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? பரிசல் வாங்குவதற்குச் சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே? இனி என்ன செய்வாய்?"
"போனால் போகட்டும்; இந்தப் பரிசலும் போனாலும் போகட்டும். நான் செய்த தப்புக்கு இதெல்லாம் போதாது. குமரி, நான் இந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்து விட்டேன். அப்படிப் போனால்தான் உன்னை என்னால் மறக்க முடியும்?" என்றான்.
அப்போது குமரி நங்கையின் கண்களிலிருந்து பொல பொலவென்று ஜலம் உதிர்ந்தது.
பழனி அதைப் பார்த்துவிட்டு, "இது என்ன குமரி, நான் ஊரைவிட்டுப் போவதில் உனக்கு வருத்தமா?" என்றான்.
"நீ ஆண் பிள்ளை, ஊரை விட்டுப் போவாய்; என்னை மறந்தும் போய் விடுவாய். ஆனால் என்னால் உன்னை மறக்க முடியாது" என்று விம்மிக் கொண்டே கூறினாள்.
"நிஜமாகவா, குமரி! நான் என்ன கனாக் காண்கிறேனா!" என்றான் பழனி.
பிறகு, "அப்படியென்றால், என் மேல் இத்தனை நாளும் ஏன் அவ்வளவு கோபமாய் இருந்தாய்? என்னைக் கட்டிக் கொள்ள ஏன் மறுத்தாய்? கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டனைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறாய் என்கிறார்களே, அது என்ன சமாசாரம்?" என்று கேட்டான்.
"அது பொய். நான் கள்ளுக் கடைக்காரனைக் கட்டிக்கப் போகிறதில்லை. எங்க அப்பன் அப்படி வற்புறுத்தியது நிஜந்தான். நான் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்பன் கள்ளுக் குடிக்கிறவரையில் நான் கல்யாணமே கட்டிக்கிறதில்லையென்று ஆணை வைத்திருக்கிறேன்.."
"என்ன? என்ன?" என்று பழனிச்சாமி வியப்புடன் கேட்டான்.
"சத்தியமாய்ச் சொல்லுகிறேன்; அதுதான் நிஜம்."
"அப்படின்னா, உங்கப்பன் குடிக்கிறதை விட்டுட்டா, அப்புறம்?..."
"நடக்காததைப் பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்?..." என்றாள் குமரி. கண்களிலிருந்து மறுபடியும் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அப்போது தண்ணீர்த் துறையில் யாரோ பேசும் குரல் கேட்டது.
குமரி திடுக்கிட்டு, "நான் போகிறேன். என்னால் உனக்கு எவ்வளவோ கஷ்டம். எல்லாவற்றையும் மன்னிச்சுக் கொள்" என்று கூறி விட்டு, போகத் தொடங்கினாள்.
பழனி "குமரி, குமரி! இந்தப் பணத்தை நீ எடுத்துக் கொண்டு போக வேண்டும். என்னிடம் பரிசல் வாங்கப் பணம் இருக்கிறது. நீ எடுத்துக் கொண்டு போகாவிட்டால், உங்க அப்பனிடம் கொடுத்து விடுவேன்" என்றான்.
"ஐயோ! அவ்வளவும் கள்ளுக்கடைக்குப் போய் விடுமே!" என்று சொல்லிக் கொண்டு குமரி அவன் அருகில் வந்தாள். பழனி பணப்பையை நீட்டினான். குமரி அதைப் பெற்றுக் கொண்டாள். அவளுக்கு அப்போது என்ன தோன்றிற்றோ என்னவோ, சட்டென்று அவனுடைய உள்ளங்கையைத் தூக்கித் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டாள். பிறகு விரைவாக வெளியில் சென்றாள்.
4
குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். "யாராயிருக்கலாம்?" என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே வருவதைக் கண்டதும், அவனுக்குச் சொரேல் என்றது. ஒரு கணத்தில் என்னவெல்லாமோ தோன்றி விட்டது. குமரி அங்கு வந்துவிட்டுப் போனதைப் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறான் என்றும், தன்னைக் கொன்றாலும் கொன்று போடுவான் என்றும் எண்ணினான். தன் கதி எப்படியானாலும், குமரிக்கு என்ன நேருமோ என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு பதை பதைத்தது.
"தம்பி! இரண்டு நாளாய் உனக்குக் காயலாவாமே? உன் ஆயா கூட இல்லையாமே? பார்த்துவிட்டுப் போக வந்தேன்" என்று காளிக் கவுண்டன் பரிவான குரலில் சொன்னபோது பழனிக்கு எவ்வளவு ஆச்சரியமாய் இருந்திருக்கும்? முதலில், அவனால் இதை நம்ப முடியவேயிலை. பரிகாசம் செய்கிறான், சீக்கிரம் தன் உண்மை சொரூபத்தைக் காட்டுவான் என்று பழனி நினைத்தான்.
அப்படியொன்றும் நேரவில்லை. காளிக் கவுண்டன் கடைசி வரையில் ரொம்பப் பிரியமாகப் பேசினான். கிட்டவந்து உட்கார்ந்து உடம்பைத் தொட்டுப் பார்த்தான். "வீட்டிலிருந்து கஞ்சி காய்ச்சிக்கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான். "ஆயா நாளைக்குக் கட்டாயம் வந்து விடுவாளா?" என்று விசாரித்தான். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படி புத்திமதி கூறினான்.
"தம்பி! நான் சொல்கிறதைக் கேளு, நீ இப்படி இன்னமும் கல்யாணம் கட்டாமலிருக்கிறது நன்றாயில்லை. ஒரு பெண்ணைக் கட்டிப் போட்டிருந்தால், இப்படி தனியாய்த் திண்டாட வேணாமல்லவா? உன் ஆயாதான் இன்னும் எத்தனை நாளைக்கு உழைப்பாள்? அவளுக்கும் வயசாச்சோ, இல்லையோ?" என்றான்.
பிறகு, "எது எது எந்தக் காலத்தில் நடக்கணுமோ, அது அது அந்தக் காலத்தில் நடந்து விட்டால்தான் நல்லது. அதுதான் நான் கூட நம்ம குமரியை இந்த ஐப்பசியில் கட்டிக் கொடுத்திடணும்னு பார்க்கிறேன். அவளுந்தான் எத்தனை நாளைக்கு அப்பனுக்கும், சீக்காளி ஆயாவுக்கும் உழைச்சுப் போட்டுண்டே இருக்கறது?" என்று சொல்லி நிறுத்தினான்.
மறுபடியும் அவன் கோபம் வந்தவனைப்போல், "இந்த அதிசயத்தைக் கேளு, தம்பி! நம்ப கள்ளுக்கடை வீரய்யக் கவுண்டன் இருக்கான் அல்லவா, அவனுக்கு இப்போ மறுதரம் பெண் கட்டிக்க வேண்டி ஆசை பிறந்திருக்கிறது. அவன் நாக்கு மேலே பல்லைப் போட்டு என்னிடம் பெண் கேட்டான். நான் கொடு கொடு என்று கொடுத்திட்டேன். 'அடே குடிகெடுக்கிற கள்ளுக்கடைக் கவுண்டா! உனக்கு இனிமேல் கட்டையோட தான் கல்யாணம்!' என்று சொல்லிவிட்டேன்" என்றான்.
கடைசியில் "சரி தம்பி, நாளைக்கு வந்து பார்க்கிறேன். உடம்பை நல்லாப் பார்த்துக்கோ! என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் பேசப் பேசப் பழனிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தது. பேசும் போதெல்லாம் கவுண்டனிடமிருந்து கள்ளு நாற்றம் குப் குப் என்று வந்து கொண்டிருந்தபடியால், அவன் குடி வெறியில் தான் அப்படிப் பேசி இருக்க வேண்டுமெனத் தோன்றியது பழனிக்கு. மதுபானத்தின் எத்தனையோ சேஷ்டைகளில் இப்படித் திடீரென்று உறவு கொண்டாடுவதும் ஒன்றாயிருக்கலாமல்லவா?
மறுநாள் பழனியின் தாய் வந்து விட்டாள். பிறகு இரண்டு மூன்று தினங்களில் பழனிக்கு உடம்பு சரியாய்ப் போய்விட்டது. கை வீக்கமும் வடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு அவன் பரிசல் தள்ளத் தொடங்கி விட்டான்.
ஆனால் அவன் காளிக் கவுண்டனைப் பற்றி எண்ணியது தவறாய்ப் போய் விட்டது. அவன் பழனியிடம் கொண்ட அபிமானம் குடிவெறியில் ஏற்பட்டதல்லவென்று தெரிந்தது. அடிக்கடி அவன் பழனிசாமியின் வீட்டுக்கு வந்து பேசத் தொடங்கினான். பழனியின் தாயாரிடம் பழனியின் கல்யாணத்தைப் பற்றிக் கூடப் பேசலானான்.
"அவன் அப்பனில்லாத பிள்ளை; அவனுக்கு உங்களைப் போல் நாலு பெரிய மனுசாள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்தால்தான் உண்டு" என்றாள் பழனியின் தாயார்.
"அதற்கென்ன, நானாச்சு! கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றான் கவுண்டன்.
காளி கவுண்டனிடம் ஏற்பட்டிருந்த இந்த அதிசயமான மாறுதலின் காரணம் பழனிக்குப் புலப்படவில்லை.
இதில் ஏதாவது "சூது" இருக்குமோ என்று அவன் சந்தேகித்தான். அதனால், அவன் மனத்தில் சாந்தி இல்லாமல் போயிற்று.
ஒரு நாள் காலையில் காப்பி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் காதில் விழுந்த சில வார்த்தைகள் பளிச்சென்று அவனுக்கு உண்மையை உணர்த்தின.
"அடுத்த வெள்ளியிலிருந்து பரிசல்காரத் தம்பிக்குக் கொண்டாட்டந்தான். ஒரு பரிசல் போதாது; மூன்று பரிசல் விடலாம்" என்றான் ஒருவன்.
"அது என்ன அப்படி?" என்று இன்னொருவன் கேட்டான்.
"ஆமாம்; அக்டோ பர் முதல் தேதி தான் இங்கே கள்ளுக்கடை மூடப் போகிறார்களே? அப்புறம் இந்த ஊர்க் குடிகாரன்களெல்லாம் அக்கரைக்குப் போய்த் தானே குடிக்க வேணும்?"
"அப்படி யாரடா இரண்டும் இரண்டும் நாலணா பரிசல் காசு கொடுத்துண்டு குடிக்கப் போறவனுக?"
"எல்லாம் போவானுக, பாரு! போகாதே இருப்பானுகளா? நாலணா கொடுத்தாத்தானா? பரிசல்காரத் தம்பியிடம் சிநேகம் பண்ணிக்கிட்டா சும்மாக் கொண்டு விட்டுடறாரு!"
இந்தப் பேச்சு பழனியின் காதில் விழுந்ததும் "ஓஹோ!" என்ற சப்தம் அவன் வாயிலிருந்து அவனை அறியாமலே வந்தது. பிறகு அவர்கள் பேசியது ஒன்றும் அவன் காதில் படவில்லை. அப்படிப் பெரிய யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
5
செப்டம்பர் 30ம் தேதி வேலம்பாளையம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது. அன்று தான் கள்ளுக்கடை மூடும் நாள். அன்று தான் குடிகாரர்களுக்குக் கடைசி நாள்.
பெருங்குடிகாரர்களில் சிலர் அன்றெல்லாம் தென்னை மரத்தையும் பனைமரத்தையும் கட்டிக் கொண்டு காலம் கழித்தார்கள். சிலர் நடு வீதியில் கள்ளுப் பானையை வைத்துச் சுற்றி சுற்றி வந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள்! உண்மையில் அவர்களுடைய நிலைமை பார்க்கப் பரிதாபமாகத் தானிருந்தது. ஆனால், காளிக் கவுண்டன் மட்டும் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது அநேகம் பேருக்கு ஆச்சரியம் அளித்தது.
காளி அன்று சாயங்காலம் பழனிசாமியிடம் போய், "தம்பி! நாளைக்குப் பொழுது சாய எனக்கு அக்கரையில் கொஞ்சம் வேலையிருக்கிறது. என்னைப் பரிசலில் இட்டுப் போக வேணும்" என்றான்.
"அதற்கென்ன, மாமா? என்னுடைய பரிசல் இருந்தால் அதில் முதல் இடம் உங்களுக்குத்தான்" என்றான் பழனி.
அக்டோ பர் முதல் தேதி பிறந்தது. ஊரிலுள்ள ஸ்திரீ, புருஷர், குழந்தைகள் எல்லோரும் அன்று காலை எழுந்திருக்கும் போது ஒரே எண்ணத்துடன் தான் எழுந்தார்கள்; "இன்று முதல் கள்ளு, சாராயக்கடை கிடையாது" என்று. அநேகர் எழுந்ததும் முதல் காரியமாகக் கள்ளுக் கடையைப் போய்ப் பார்த்தார்கள். அங்கே கள்ளுப் பானைகள் இல்லாதது கண்டு அவர்கள் "இப்பேர்ப்பட்ட அற்புதமும் நிஜமாகவே நடந்து விட்டதா?" என்று பிரமித்துப் போய் நின்றார்கள்.
இந்தப் பரபரப்புக்கு இடையில் இன்னொரு செய்தி பரவிற்று. "பரிசல் துறையில் பரிசலைக் காணவில்லையாம்!" என்று. இது காளிக் கவுண்டன் காதில் விழுந்ததும், அவன் விரைந்து நதிக்கரைக்குப் போனான். அங்கே, பழனிசாமி முகத்தைக் கையினால் மூடிக்கொண்டு அழுது கொண்டு இருப்பதையும், நாலைந்து பேர் அவனைச் சுற்றி நின்று தேறுதல் சொல்லிக் கொண்டு இருப்பதையும் கண்டான். சமீபத்தில் போய் விசாரித்ததில், நேற்று ராத்திரி வழக்கம் போல் பழனி பரிசலைக் கரையிலேற்றி முளையில் கட்டிவிட்டுப் போனதாகவும், காலையில் வந்து பார்த்தால் காணோம் என்றும் சொன்னார்கள்.
காளிக் கவுண்டன், பழனியிடம் போய், "தம்பி! இதற்காகவா அழுவார்கள்? சீ, எழுந்திரு. ஆற்றோரமாய்ப் போய்த் தேடிப் பார்க்கலாம். அகப்பட்டால் போச்சு; அகப்படாமல் போனால், இன்னான் தான் போக்கிரித்தனம் பண்ணியிருக்க வேணுமென்று எனக்குத் தெரியும். கள்ளுக்கடைக் கவுண்டன் தான் செய்திருக்க வேண்டும். உனக்கு வரும்படி வரக் கூடாது என்று. அவனைக் கண்டதுண்டம் பண்ணிப் போட்டு விடுகிறேன். வா, போய்ப் பார்க்கலாம்" என்றான்.
அன்றெல்லாம் பரிசலைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; பரிசல் அகப்படவேயில்லை.
சாயங்காலம், நேற்றுக் கள்ளுக்கடை இருந்த இடத்தில் இன்று பஜனை நடந்தது. காளிக் கவுண்டனும் போயிருந்தான். பஜனையில் பாதி கவனமும், பரிசல் மட்டும் கெட்டுப் போகாமல் இருந்தால் அக்கரைக் கள்ளுக்கடைக்குப் போயிருக்கலாமே என்பதில் பாதிகவனமுமாயிருந்தான்.
கள்ளுக்கடை மூடி ஏழெட்டு தினங்கள் ஆயின. அந்த ஏழெட்டு நாளில் ஊரே புதிதாய் மாறியிருந்தது. அந்த கிராமத்தின் ஆண் மக்களில் கிட்டத்தட்டப் பாதி பேருக்கு மேல் குடித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருந்தான். ஆகவே, கள்ளுக்கடை மூடிய சில நாளைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் காசு மிஞ்சியிருந்தது. கடை சாமான்கள் முன்னை விடத் தாராளமாய் வாங்க முடிந்தது. மனுஷ்யர்களுடைய புத்தியும் அதற்குள் நன்றாய் மாறி ஸ்திரப் பட்டுவிட்டது. முன்னெல்லாம் குடித்துக் கெட்டு அலைந்ததை எண்ணிய போது அவர்களுக்கே வெட்கமாயிருந்தது. இப்படி மாறியவர்களில் ஒருவன் காளிக் கவுண்டன். அவன் ஒரு நாள் பழனியிடம், "தம்பி! பரிசலை எந்தப் பயலோதான் ஆற்றில் இழுத்து விட்டிருக்கிறான். உனக்கு அதனால் எவ்வளவோ நஷ்டம். அவனைக் கண்டால் நான் என்னவேணாலும் செய்து விடுவேன். ஆனாலும் ஒரு விதத்தில் பரிசல் கெட்டுப் போனதும், நல்லதாய்ப் போயிற்று" என்று சொன்னான்.
"அது என்ன மாமா, அப்படிச் சொல்றீங்க? பரிசல் கெட்டுப் போனதில் நல்லது என்ன?" என்று பழனி கேட்டான்.
காளி சிரித்துக் கொண்டு, பழனியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். "தம்பி, நீ குழந்தைப் பிள்ளை. உனக்கு ஒன்றும் தெரியாது. நான் என்னத்துக்காகப் பரிசலில் அக்கரைக்கு வரேன்னு சொன்னேன், தெரியுமா? இந்த ஊரிலே கள்ளுக்கடை மூடி விடறதினால, அக்கரைக் கடைக்கு போகலாமின்னுதான்..."
"அக்கரையிலே மட்டும் ஏன் கடைய வச்சிருக்காங்க?" என்று பழனி கேட்டான்.
"அது திருச்சிராப்பள்ளி ஜில்லா. அந்த ஜில்லாவிலே இன்னும் கடையை மூடலை. அடுத்த வருஷம் தான் மூடப் போறாங்களாம்."
"ஏன் மாமா! அடுத்த வருஷம் நிச்சயம் கடை மூடிட்டால், அப்புறம் எங்க போறது?"
"நல்ல கேள்வி கேக்கறே. அப்புறம் எங்கே போறது? பேசாமல் இருக்க வேண்டியதுதான்!"
"அப்படி இப்பவே இருந்துட்டா என்ன, மாமா?"
"அதற்குத்தான் குடிகாரன் புத்தி பிடரியிலே என்கிறது. எப்படியோ, பரிசல் கெட்டுப் போனாலும் போச்சு, எனக்கும் கள்ளுக்கடை மறந்து போச்சு" என்றான் காளி.
பிறகு, எதையோ நினைத்துக் கொண்டவன் போல், "ஒரு சமாசாரம் கேளு, தம்பி... குமரி இருக்காள் அல்ல, அவள் நான் குடிக்கிற வரையில் கல்யாணம் கட்டிக்கிறதில்லை என்று ஆணை வைத்திருந்தாள். சுவாமி புண்ணியத்திலே குடிதான் இப்போ போயிருச்சே! இந்த ஐப்பசி பிறந்ததும் முகூர்த்தம் வச்சுடறேன். பேசாமே அவளை நீ கட்டிக்கோ. ரொம்ப கெட்டிக்காரி; அந்த மாதிரி பெண் உனக்கு அகப்படமாட்டாள்" என்றான்.
ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் பழனிசாமிக்கும் குமரி நங்கைக்கும் கல்யாணம் நடந்தது. ரொம்பக் கொண்டாட்டமாய் நடந்தது.
கல்யாணம் ஆனதும் பழனிச்சாமி வடக்கே போய்ப் புதுப் பரிசல் வாங்கிக் கொண்டு வந்தான். வழக்கம் போல் பரிசல் துறையில் பரிசல் ஓடத் தொடங்கியது. ஆனால் சாயங்கால வேளைகளில் மட்டும் பழனி குறிப்பிட்ட சில பேரைப் பரிசலில் ஏற்றிக் கொண்டு போக மறுத்து விடுவான்.
பழைய பரிசல் என்ன ஆயிற்று என்பது தெரியவேயில்லை. அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? பரிசலின் சொந்தக்காரனே நடு நிசியில் எழுந்து வந்து, பரிசலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் எறிந்து விட்டிருக்கும் போது, அந்த இரகசியத்தை அவனாகச் சொன்னாலன்றிப் பிறரால் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்?
----------------------
17. ஸுசீலா எம்.ஏ.
நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது. கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை விடக் கஷ்டமானதல்லவா?
ஸ்ரீமதி ஸுசீலா அந்த 1941-ம் வருஷத்திலேதான் எம்.ஏ. பரீட்சையில் புகழுடன் தேறினாள். 1939-ம் ஆண்டில் ஸுசீலாவுக்கு பி.ஏ. பட்டம் கிடைத்து விட்டது. அத்துடன் திருப்தியடையாமல் மேலே எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கத் தீர்மானித்தாள். அந்த வருஷத்தில் சென்னை யுனிவர்சிடிகாரர்கள் எம்.ஏ. பரீட்சைக்கு ஒரு புதிய பாடத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அது தான் பாக சாஸ்திரம். இந்தக் காலத்து யுனிவர்ஸிடி கல்வியானது ஸ்திரீகளைக் குடும்பத்துக்கு லாயக்கற்றவர்களாகச் செய்கிறது என்று தேசத்தில் பெரிய கிளர்ச்சி நடந்ததின் பேரில், யுனிவர்ஸிடி இந்த சீர்திருத்தத்தைச் செய்தது. புதிய விஷயமான பாகசாஸ்திரத்தையே ஸுசீலா எம்.ஏ. பரீட்சைக்கு எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அந்த சாஸ்திரத்தைப் போதிப்பதற்கென்று ஒரு ஐரோப்பிய ஆசிரியை மாதம் ரூ.950 சம்பளத்தில் யுனிவர்ஸிடியினால் நியமிக்கப்பட்டாள். இதிலிருந்தே, நமது காங்கிரஸ் மந்திரிகளின் ஜம்பம் ஒன்றும் யுனிவர்ஸிடியினிடம் மட்டும் பலிக்கவில்லையென்று அறிந்து கொள்ளலாம்.
அந்த ஆசிரியையின் உதவியுடன் பாக சாஸ்திர ஆராய்ச்சியிலும் அப்பியாசத்திலும் இரண்டு வருஷம் பரிபூரணமாக அமிழ்ந்திருந்தாள் ஸுசீலா. இந்த நாட்களில் வேறு எந்த விஷயத்துக்கும் அவளுடைய மனதில் இடம் இருக்கவில்லை. ஒவ்வொரு சமயம், சீமையிலே எலெக்ட்ரிக் என்ஜினியரிங் படிக்கப் போயிருக்கும் அவளுடைய அத்தை மகன் பாலசுந்தரத்தின் நினைவு மட்டும் அவளுக்கு வருவதுண்டு. ஆனால், அடுத்த நிமிஷம், டெமொடோ அப்பத்துக்கு உப்புப் போட வேண்டுமா வேண்டாமா என்ற விஷயத்தில் அவளுடைய கவனம் சென்று, பாலசுந்தரத்தை அடியோடு மறக்கச் செய்து விடும்.
பாக சாஸ்திரம் சம்பந்தமான ஸுசீலாவின் சரித்திர ஆராய்ச்சிகள் அபாரமாக இருந்தன. திருநெல்வேலித் தோசை என்பது ஆதியிலே எப்போது உண்டாயிற்று. எப்போது அது சதுர வடிவத்திலிருந்து வட்ட வடிவமாகப் பரிணமித்தது, எப்போது தோசைக்கு மிளகாய்ப் பொடி போட்டுக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து நூறு பக்கத்தில் ஸுசீலா ஒரு கட்டுரை எழுதினாள். இம்மாதிரியே, கோயமுத்தூர் ஜிலேபி, தஞ்சாவூர் சாம்பார், மைசூர் ரசம், கல்கத்தா ரஸகுல்லா ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும் பல நூறு பக்கம் எழுதினாள்.
இன்னும் ஸுசீலா மகஞ்சதாரோவுக்கு நேரில் சென்று அங்கே கண்டெடுக்கப்பட்ட 5000 வருஷத்துக்கு முந்திய சிலாசாஸனங்களை ஆராய்ந்து, இந்தியாவில் புராதன பாகசாஸ்திரத்தைப் பற்றிப் பல அற்புதங்களைக் கண்டுபிடித்தாள். உதாரணமாக, தமிழ்நாட்டில் கொழுக்கட்டை என்பது ஏற்பட்டு முந்நூறு வருஷங்கள் தான் ஆயின என்று ஸுசீலா கண்டுபிடித்துச் சொன்னாள். இதற்கு அவள் 5000 வருஷத்துக்கு முந்திய மகஞ்சதாரோ கிலாசாஸனத்திலிருந்து அத்தாட்சி காட்டியபோது, அதைப் பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் பிரமித்தே போனார்கள். கொழுக்கட்டையின் மேல் அவர்களுடைய மோகம் பறந்தே போய்விட்டது.
இம்மாதிரி வெறும் ஆராய்ச்சிகளுடன் ஸுசீலா ஒன்றும் நின்று விடவில்லை. அப்பியாச சோதனைகளும் செய்து வந்தாள். ஸுசீலாவின் சோதனைகளுக்காகவே பெண்கள் கலாசாலை ஹாஸ்டலில் ஒரு தனிப் பகுதி ஒழித்து விடப்பட்டது.
ஆரம்பத்தில், ஹாஸ்டலில் வசித்த சக மாணவிகள் அவளுடைய சோதனைகளில் ஒத்தாசை புரிந்து வந்தார்கள். அதாவது, அவள் கண்டுபிடித்த புதிய பட்சணங்களை அவர்கள் ருசி பார்த்து அபிப்பிராயம் சொல்லி வந்தார்கள். ஆனால் வர வர, இது விஷயத்தில் அவர்களுடைய ஒத்துழைப்புக் குறைந்து வந்தது. கடைசியில், ஒருநாள், ஸுசீலா செய்திருந்த 'குளோரோபாரம் பச்சடி'யை அவர்கள் ருசி பார்த்த பிறகு, நிலைமை விபரீதமாகப் போய்விட்டது. ருசி பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் மூன்று நாள் வரையில் தூங்கிக் கொண்டே வகுப்புக்குப் போனார்கள்; தூங்கிக் கொண்டே படித்தார்கள்; தூங்கிக் கொண்டே தூங்கினார்கள்! இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஹாஸ்டல் மாணவிகள் ஒருவரும் ஸுசீலாவின் 'லபரேடரி'க்கு அருகிலேயே வருவது கிடையாது. எனவே, ஸுசீலா 'தன் வயிறே தனக்குதவி' என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
கடைசியாக, பரீட்சை நெருங்கியது. அந்த வருஷம் எம்.ஏ. வகுப்பில் பாக சாஸ்திரப் பரீட்சைக்கு ஆஜரான மாணவி ஸுசீலா ஒருத்திதான். ஆனால், பரீட்சகர்களோ ஒன்பது பேர். அவர்கள் ஸுசீலா எழுதியிருந்த ஆராய்ச்சிகளையெல்லாம் படித்துவிட்டு, 100க்கு 90 மார்க் வீதம் கொடுத்தார்கள். பிறகு ஸுசீலா செய்து கொடுத்த பட்சணங்களைத் தூரத்தில் இருந்தபடியே வாசனந பார்த்து விட்டு, 100க்கு 110 மார்க் வீதம் கொடுத்தார்கள். எனவே, அந்த வருஷம் எம்.ஏ. பரீட்சையில், சென்னை மாகாணத்திலேயே முதலாவதாக ஸுசீலா தேறினாள். அவளுடைய விசேஷ ஆராய்ச்சி முடிவுகளைக் கௌரவிப்பதற்காக 'டாக்டர்' பட்டம் அவளுக்கு அளிப்பதென்றும், ஸிண்டிகேட் சபையார் முடிவு செய்தனர்.
இவ்வளவு மகத்தான கௌரவங்களை அடைந்த ஸுசீலாவுக்கு இந்த இரண்டு வருஷத்தில் ஒரு சின்ன நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். அவளுடைய பாக சாஸ்திர ஆராய்ச்சிகளின் பயனாக அவளுடைய ஜீரணசக்தி அடியோடு போய்விட்டது!
2
பரீட்சை முடிவு வெளியாயிற்றோ, இல்லையோ, ஸுசீலாவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவற்றுடன், டீ பார்ட்டிகளுக்கும், டின்னர் பார்ட்டிகளுக்கும் அழைப்புகள் வரத் தொடங்கின. முதன் முதலில் ராஜதானியில் முதலாவதாக எம்.ஏ. பரீட்சையில் தேறிய பெண்மணி அன்றோ? ஆதலின், மாதர் சங்கங்களின் ஸ்திரீகள் கிளப்புகளிலும் ஸுசீலாவுக்கு உபசார விருந்துகள் நடந்தன. அவள் திருநெல்வேலியைச் சேர்ந்தவளாதலால், திருநெல்வேலி சங்கத்தார் ஒரு விருந்து கொடுத்தார்கள். தங்கள் கலாசாலைக்கே கௌரவம் கொண்டு வந்ததற்காக, கலாசாலை ஆசிரியைகள் ஒரு விருந்து அளித்தார்கள். 'வீரத் தமிழ் மகளிர் சங்க'த்தாரும் இவர்களுக்கெல்லாம் பின்வாங்கிவிடவில்லை. அப்புறம் சினேகிதர்கள் சினேகிதரல்லாதவர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லார் வீடுகளிலும் வரிசையாக விருந்து சாப்பிட வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சிற்றுண்டி விருந்துகளுக்குப் போக வேண்டியதாயிற்று. இந்த விருந்துகளில் எல்லாம் ஸுசீலா ஒன்றும் சாப்பிடாமல் மரியாதைக்கு உட்கார்ந்து விட்டு எழுந்து வர முடிந்தது என்கிறீர்களோ? அதுதானே முடியவில்லை? ஸுசீலா வெறுமனே உட்கார்ந்திருந்தால், "இந்தச் சாப்பாட்டையெல்லாம் நீங்கள் சாப்பிடுவீர்களா? பாக சாஸ்திரத்தில் பரீட்சை கொடுத்தவராயிற்றே?" என்று பக்கத்திலுள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இதற்காக ஸுசீலா ஒவ்வொரு விருந்திலும் கொஞ்சமாவது சாப்பிடத்தான் வேண்டியிருந்தது.
சென்னையில் பிரசித்தமான 'நியோவஞ்சக லஞ்ச் ஹோம்' என்னும் ஹோட்டலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஹோட்டல் முதலாளி ஓரு கெட்டிக்கார மனுஷர். அவர் மேற்படி லஞ்ச் ஹோமின் வருஷாந்தரக் கொண்டாட்டம் நடத்தத் தீர்மானித்தார். பலமான சிபாரிசுகள் பிடித்து, அந்தக் கொண்டாட்டத்துக்கு ஸ்ரீமதி ஸுசீலா அக்கிராசனம் வகிக்கும்படி செய்தார். அவ்வளவுதான்; பிறகு சென்னையிலுள்ள ஒவ்வொரு ஹோட்டல்காரரும், ஸ்ரீமதி ஸுசீலாவைத் தங்கள் ஹோட்டலுக்கு வந்து விட்டுப் போக வேணுமென்று அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எல்லோரிலும் படுகெட்டிக்காரர் ஒருவர் தமது ஹோட்டலின் பெயரையே மாற்றி, "ஸுசீலா லஞ்ச் ஹோம்" என்று போட்டு விட்டார்! இதற்கு மேல் சென்னைப் பட்டணத்தில் இருப்பதே அபாயம் என்று கருதிய ஸுசீலா உடனே திருநெல்வேலிக்குப் பிரயாணமானாள்.
திருநெல்வேலிக்குப் போனால் இந்த விருந்துத் தொந்தரவு ஒழியுமென்று அவள் நினைத்தது பெரிய பிசகாய் முடிந்தது. ஸுசீலாவின் தகப்பனார் திவான் பகதூர் கோமதி நாதப்பர் திருநெல்வேலியில் மிகப் பிரசித்தமானவர். பெரிய வக்கீல் என்பதோடு கூட, பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டவர். அந்த ஊரில் 'சமதர்ம சமாதி சங்க'த்துக்கு அவர்தான் தலைவர். 'கட்டாய விதவா விவாக சபை'க்கு உபதலைவர். 'தனித் தமிழ் வசை மொழிக் கழக'த்தில் அங்கத்தினர். சமூகச் சீர்திருத்தங்களில் அவருக்கு எவ்வளவு அக்கரை உண்டு என்பதை, அவர் மகள் ஸுசீலாவைப் பார்த்தே நாம் நன்கறியலாமல்லவா?
இப்படிப்பட்ட சீர்திருத்தப் பிரமுகரைத் தகப்பனாராகப் பெற்ற ஸுசீலா, அவர் வாழும் ஊரில் தனக்கு விருந்து உபசாரத்தொல்லை இராது என்று நினைத்தாளென்றால், எம்.ஏ. படித்ததின் பலனாக உலக விவகாரங்களில் அவளுடைய அறிவு மழுங்கி விட்டதென்றே நாம் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.
எப்படியோ, ஸுசீலா திருநெல்வேலி போய்ச் சேர்ந்தாள். ரயில்வே ஸ்டேஷனிலேயே அவளை வரவேற்பதற்காக அநேகம் பேர் கூடியிருந்தார்கள். வீடு சேர்ந்ததும் அன்றைக்குப் பெரிய விருந்து. எம்.ஏ. படித்த தமது மகளைத்தம் சிநேகிதர்களுக்கெல்லாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தி வந்தார் கோமதி நாதப்பர். பெருமை இராதா, ஐயா! இருபது வருஷத்துக்கு முன்னால், திருநெல்வேலியில் ஒருவர் எம்.ஏ. பட்டம் பெற்றபோது ஊரெல்லாம் தடபுடல் பட்டது. அந்த மனுஷருக்கு எம்.ஏ. முதலியார் என்றே பெயர் வந்து விட்டது. இப்போது, முதன் முதலாகத் திருநெல்வேலிப் பெண் ஒருத்தி எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறாள். அதிலும் அவள் ராஜதானியிலேயே முதலாவதாக - மீசை முளைத்த ஆண் பிள்ளைகளையெல்லாம் தோற்கடித்து விட்டு - புகழுடன் தேறியிருக்கிறாள். அப்படிப்பட்டவள் தம்முடைய பெண் என்று நினைக்கும்போது, அந்தத் தகப்பனாரின் தோள்கள் பூரித்து உயராமல் இருக்குமா?
வீட்டு விருந்துக்குப்பிறகு வெளியிலும் விருந்துகள் ஆரம்பமாயின. 'சமதர்ம சமாதி சங்க'த்தில் விருந்து; 'கட்டாய விதவா சங்க'த்தில் டீ பார்ட்டி; 'வக்கீல்களின் சங்க'த்தில் விருந்து; கோ ஆபரேடிவ் யூனியனில் டின்னர்; அஞ்ஞான வாசக சாலையில் சிற்றுண்டி; முனிசிபாலிடியில் உபசாராம்; அப்புறம், சிநேகிதர்கள், பந்துக்கள் வீடுகளில் வரிசையாக விருந்து. சாப்பாட்டுக்கோ, சிற்றுண்டிக்கோ உட்கார்ந்தால், பேச்சு ஒரே மாதிரிதான். "ஏனம்மா, ஒன்றும் சாப்பிட மாட்டேனென்கிறாயே? ஆனால், உனக்கு இதெல்லாம் பிடிக்குமா? எங்கள் சாப்பாடெல்லாம் நன்றாயிருக்குமா? பாக சாஸ்திரப் பரீட்சை கொடுத்து மெடல் வாங்கியவளாச்சே?" என்று சொல்லுவார்கள்.
இதனாலெல்லாம் ஸுசீலாவுக்குச் சாப்பாடு என்றாலே விஷமாய்ப் போயிற்று. உணவுப் பண்டத்தைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. சாப்பாட்டைப் பற்றிய பேச்சு எதுவும் காதில் நாராசமாக விழுந்தது. இதையெல்லாம் வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாதிருந்த படியால் சாப்பாட்டில் வெறுப்பும் துவேஷமும் பன்மடங்கு பெருகின. ஐயோ! தன்னுடைய வேதனை தன் தகப்பனாருக்குக் கூடவா தெரியாமல் போக வேண்டும்? 'குழந்தைப் பிராயத்தில் தாயை இழந்த தன்னைத் தாமே தாயும் தந்தையுமாயிருந்து வளர்ந்தவருக்கே தன் கஷ்டம் தெரியவில்லையென்றால், மற்றவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?'
இந்த உலகத்தில் ஒரே ஒரு மனுஷர் தான் தன்னுடைய மனோநிலையை அறிந்து அநுதாபப்படக்கூடியவர். நல்லவேளை, அவர் சீமையிலிருந்து கப்பல் ஏறி விட்டார். சீக்கிரத்தில் வந்து விடுவார். அவர் வந்தவுடன், இரண்டு பேருமாக எங்கேயாவது மனுஷர்களே இல்லாத இடத்துக்குப் போய்க் கொஞ்ச நாள் இருந்து விட்டு வரவேணும்! அப்பா! இந்த எழவெடுத்த சமையல், சாப்பாட்டுப் பேச்சே இல்லாமல் சில நாளாவது கழியாதா?
அந்த ஒரே ஒரு மனுஷர் ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ.பி.இ. என்று சொல்ல வேண்டியதில்லை. பால சுந்தரத்தின் சொந்த ஊர் தென்காசிக்கு அடுத்த நெறிஞ்சிக்காடு. சென்னையில் என்ஜீனியரிங் பரீட்சை தேறி விட்டு, சீமைக்கு உயர்தர எலெக்டிரிக் என்ஜீனியரிங் படிப்பதற்காகப் போயிருந்தான். அங்கும் புகழுடன் பரீட்சை தேறி இப்போது திரும்பி வருகிறான். இவர்கள் இரண்டு பேருக்கும் முன்னமேயே கல்யாணம் நிச்சயமாகி விட்டது. ஆனால், ஸுசீலா, எம்.ஏ. தேறிய பிறகு தான் கல்யாணம் என்று கோமதியப்பர் சொல்லியிருந்தார்.
பாலசுந்தரம் பம்பாய்க்கு வந்து சேர்ந்த செய்தியை ஸுசீலா தினந்தோறும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, ஒரு நாள் தந்தி வந்தது. ஸுசீலா குதூகலமடைந்தாள். அந்த நேரத்தில் அவள் தன்னுடைய படிப்பையும் எம்.ஏ. பட்டத்தையும் மறந்து, சாதாரணமாக, டாக்கிகளில் நாம் பார்க்கும் கதாநாயகிகளைப் போல் காரியம் செய்யத் தொடங்கினாள். ஆடினாள்; பாடினாள்; முகத்தில் பவுடரைப் பூசினாள்; நெற்றியில் பொட்டு இட்டாள்; நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று அழகு பார்த்தாள்; இன்னும் என்னவெல்லாமோ அசட்டுக் காரியங்களைச் செய்தாள். பாலசுந்தரம் வந்தவுடனே, இந்தத் திருநெல்வேலியிலிருந்து தொலைந்து போய் டின்னர்களும் டீ பார்ட்டிகளும் இல்லாத இடத்தில் சிறிது காலம் நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசையினால், அவள் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது.
இரண்டு நாளைக்குப் பிறகு பம்பாயிலிருந்து ஒரு கடிதம் வந்தது. பாலசுந்தரந்தான் எழுதியிருந்தான். ஆரம்பத்தில், ஸுசீலாவிடம் தன் கரைகாணாத காதலை வெளியிட்டிருந்தான். அவளைப் பார்க்க வேணுமென்ற ஆசையினால் தன் இருதயம் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைத் தெரிவித்திருந்தான். பிறகு, பம்பாயில் தான் இன்னும் சில நாள் தங்கியிருத்தல் அவசியமாயிருப்பதையும், அங்குள்ள பருத்தித் தொழிற்சாலைகளில் மின்சார சக்தியை உபயோகப்படுத்தும் விதத்தை ஆராய்ந்து விட்டு, ஒரு மாதத்திற்குள் திரும்பி வந்து விடுவதாயும் உறுதி கூறியிருந்தான். கடைசியாக, அவன் எழுதியிருந்ததாவது:
"நம் மாகாணத்தில் நான் செய்ய உத்தேசித்திருக்கும் வேலைகளைத் தொடங்குவதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் அவசியமாயிருக்கிறபடியால் தான் இங்கே தங்கியிருக்கிறேன். இல்லாவிட்டால், இதற்குள் அவ்விடத்துக்குப் பறந்து வந்திருப்பேன். உன்னைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் ஆசை கடலை விடப் பெரியது. அது மட்டுந்தானா? நம் ஊருக்கு வந்து எப்போது தோசையையும், இட்லியையும், சாம்பாரையும், ரஸத்தையும் கண்ணால் காணப் போகிறோமென்று இருக்கிறது. நல்ல சாப்பாடு என்று சாப்பிட்டு இரண்டு வருஷத்துக்கு மேலாகி விட்டது. இந்த நிமிஷத்தில் ஒரு தோசைக்காக இந்த பம்பாய் நகரையே விற்று விடுவதற்கு நான் தயாராயிருக்கிறேன். ஆகா! ஒரு முறுக்கு மட்டும் இப்போது கிடைத்தால்? சீச்சீ! என்ன காரியம் செய்கிறேன்? பாக சாஸ்திர எம்.ஏ. ஆகிய உனக்குக் கேவலம் தோசையையும் முறுக்கையும் பற்றி எழுதுகிறேனே? தயவு செய்து மன்னிக்க வேணும். கூடிய சீக்கிரம் அவ்விடம் வந்து, நீ செய்யப் போகிற முருங்கைக்காய் ஹல்வா, புளியம்பழப் பாயாஸம், வேப்பங்காய்ப் பொரியல், பம்புளிமாஸ் பொடித் துவட்டல் முதலியவற்றை ருசி பார்க்க நாக்கைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு,
பாலசுந்தரம்
இதை வாசித்ததும், ஸுசீலா கிட்டத்தட்ட வெறி பிடித்தவள் போலானாள். அந்தக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தாள். பிறகு, அந்தச் சுக்கல்களைப் பொறுக்கிச் சேர்த்து, பம்பாயில் பாலசுந்தரத்தின் விலாசத்தைக் கண்டு பிடித்தாள். பிறகு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.
"உன் கடிதம் கிடைத்தது. உன்னை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன்; அடிவயிற்றிலிருந்து உன்னைத் துவேஷிக்கிறேன். உன் முகத்தில் விழிக்கவும் விரும்பவில்லை.
"சீ! இந்தப் பாழும் மனுஷர்களுக்கு உண்பதையும் தின்பதையும் தவிர உலகத்திலே வேறொன்றிலும் ஞாபகம் செல்லாதா?
இப்படிக்கு,
ஒரு காலத்தில் உன்னைக் காதலித்த ஸுசீலா."
மேற்படி கடிதத்தை உறையில் போட்டுத் தபாலுக்கு அனுப்பி விட்டு, ஸுசீலா மிகுந்த மனச்சோர்வுடன் ஸோபாவில் சாய்ந்தாள். அப்போது உலகமே அவளுக்கு ஒரு வரண்ட பாலைவனமாகத் தோன்றியது. பூமியில் எதற்காகப் பிறந்தோம், எதற்காக உயிரோடிருக்கிறோம் என்று சிந்திக்கத் தொடங்கினாள். அச்சமயம், வேலைக்காரப் பையன் ஒரு பத்திரிகையைக் கொண்டு வந்து கொடுத்தான். ஸுசீலா அதைப் பிரித்து மேலெழுந்தவாரியாகப் பார்த்துக் கொண்டு போனாள். கொட்டை எழுத்தில் இருந்த ஒரு தலைப்பு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது.
"ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம்"
என்று படித்ததும், பளிச்சென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
"தமிழ்க் கோவில்கள் தமிழ்த் தெய்வங்களுக்கே!"
"ஆரியத் தெய்வங்களின் அட்டூழியம்"
"சாகும் வரையில் பட்டினி; அதற்குப் பிறகு?"
மேற்படி தலைப்புகளை வரிசையாகப் படித்ததும் ஸுசீலாவின் உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளை யாரால் வர்ணிக்க முடியும்? அளவிலாத ஆவலுடன் அந்தத் தலைப்பின் கீழ் கொடுத்திருந்த விவரங்களைப் படிக்கலானாள்.
3
ஹிட்லர் குருசாமியைப் பற்றித் தமிழர் எல்லாருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும். "ஆம்; தெரியும்" என்று மரியாதையாக ஒப்புக் கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தமிழர்களே இல்லை என்று நான் சொல்லி விடும்படி நேரிடும், ஜாக்கிரதை!
அவருடைய பெயருக்கு முன்னால் 'ஹிட்லர்' என்னும் அடைமொழி ஏன் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். கேளுங்கள், கேளுங்கள்; நன்றாய்க் கேளுங்கள். ஆனால் அதற்குப் பதில் மட்டும் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அது என்னவென்பது எனக்குத் தெரியாது; குருசாமிக்குந் தெரியாது; உங்களுக்கு அது தெரிய வேண்டுமென்று, விரும்புவது வீண் ஆசையேயல்லவா?
நமது ஹிட்லர் குருசாமி தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்திருக்கும் தொண்டுகளைச் சொல்வதைக் காட்டிலும், சொல்லாமலிருப்பதே நலமாகும். ஏனெனில், அவற்றைச் சொன்னால், நீங்கள் "இப்போதே அவருக்கு ஓர் உருவச் சிலை செய்து ஒருவரும் பார்க்காதவிடத்தில் வைத்தாக வேண்டும்" என்று கிளம்பி விடுவீர்கள். அவர் செய்துள்ள தொண்டுகள், ஒன்றல்ல, இரண்டு அல்ல, எவ்வளவோ! உதாரணமாக, அவர் தமது இரண்டாவது வயதிலேயே தமிழின் சுவையைக் கண்டு அனுபவித்தவர். அந்த நாளிலேயே "அம்மா" "அப்பா" என்னும் இனிய தனித் தமிழ்ச் சொற்களைச் சொல்வதற்காக, வாயிலிருந்த விரலை எடுப்பதற்குக்கூட அவர் தயாராயிருந்தார். இன்னும் அவருக்குக் கொஞ்சம் வயதான பிறகு, "அ, ஆ, இ, ஈ" என்னும் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்தத் தமிழ் எழுத்துக்களின் மேல் அவருக்கு இருந்த மோகம் காரணமாக, மொத்தம் மூன்று வருஷம் "அ, ஆ" கற்றுக் கொள்வதிலேயே கழித்தார். இன்னும் தமிழன்பு காரணமாகவே அவர் ஸ்கூல் பைனல் பரீட்சையில், இங்கிலீஷில் மட்டும் நாலு வருஷம் 'கோட்' அடித்துக் கொண்டிருந்தார்.
பிறகு, பெரிய இடத்துச் சிபாரிசு காரணமாக அவருக்கு ஒரு சர்க்கார் காரியாலயத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. ஒரு நாள் காரியாலயத்தில் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் அவர் தமிழின் இன்பத்தில் மிதமிஞ்சிச் சொக்கி விட்டார். அவருடைய கண்கள் மூடின; தலையும் சாய்ந்தது; பெருமூச்சு வந்தது. அப்போது அங்கே வந்த தலைமை அதிகாரி, "குருசாமி தூங்குகிறார்!" என்று முட்டாள்தனமாக எண்ணினார். எண்ணியதோடு இல்லாமல், அவரை வேலையை விட்டும் தள்ளி விட்டார்! எனவே, ஹிட்லர் குருசாமி தமிழுக்காக இந்தப் பெரிய தியாகத்தைச் செய்யும்படியாக நேர்ந்தது.
பின்னர், அவர் வேலை தேடுவது என்ற வியாஜத்தை வைத்துக் கொண்டு, தமிழ் நாடெங்கும் சுற்றிப் பார்த்து வந்தார். தமிழ் நாட்டைப் பார்ப்பதென்றால், தமிழ்நாட்டுக் கோவில்களைப் பார்க்காமல் முடியுமா? தமிழ் நாட்டுக் கோயில்களைப் பார்க்கப் பார்க்க, அவருக்கு வயிற்றைப் பற்றிக் கொண்டு எரிந்தது. "தமிழ்நாடு தமிழர்களுக்கே" என்ற பேச்சு அவர் காதில் எப்போதோ விழுந்திருந்தது. அப்படியானால், தமிழ்நாட்டுக் கோவில்களும் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கே உரிமையாக வேண்டுமல்லவா? ஆனால், இப்போதைய நிலைமை என்ன? தமிழ் நாட்டுக் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் தமிழ் நாட்டுத் தெய்வங்களா? இல்லவே இல்லை. பரமசிவன் எந்த தேசத்தவர்? சிவ சிவா! அவருடைய இருப்பிடம் கைலையங்கிரியன்றோ? கைலையங்கிரி, வடகே, ரொம்ப ரொம்ப வடக்கேயல்லவா இருக்கிறது? ஆகவே, பரமசிவன் அசல் வடக்கத்தித் தெய்வம். அவர் பத்தினி பார்வதியோ, இமவானின் புத்திரி. விநாயகர், சுப்பிரமணியர் எல்லோரும் அசல் ஆரியக் குஞ்சுகள். பெருமாள் கோவிலோ கேட்க வேண்டியதில்லை. மகா விஷ்ணு - பெயரைப் பார்த்தாலே, ஆரியத் தெய்வம் என்று தெரிகிறது. அவருடைய அவதாரங்களும் வடநாட்டிலேதான். இராமர், கிருஷ்ணர், நரசிம்மர் - ராம ராமா! தமிழ் நாட்டுக்குக் கோவில்களில் போயும் போயும் ஒரே திராவிடத் தெய்வத்துக்குத்தான் இடமளிக்கப்படுகிறது. அவர்தான் அனுமார்! - ஆனால் அந்த அநுமாரோ ஆரியத் தெய்வமான ராமரின் சேவகர்; அவருடைய அடிமை!
இந்த மாதிரி அவமானம் தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் வேறு உண்டா? இந்த அவமானத்தைத் துடைக்கும் வழிதான் என்ன? நமது கோவில்களிலிருந்து இந்த வடநாட்டு ஆரியத் தெய்வங்கள் அவ்வளவு பேரையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். பரமசிவனையும் பார்வதியையும், மகா விஷ்ணுவையும், பூதேவி ஸ்ரீ தேவிகளையும், ராமனையும், கிருஷ்ணனையும், நடராஜாவையும், தக்ஷிணா மூர்த்தியையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விட்டு, அவர்கள் இருந்த இடத்தில் தூய தமிழ்த் தெய்வங்களாகிய வீரன் இருளன், சங்கிலிக் கறுப்பன், பெத்தண்ணன், பாவாடை ராயன், வழி மறிச்சான் ஆகியவர்களைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இது தான் வழி. இதைச் செய்யாத வரையில், தமிழர்களின் அவமானம் தீர்ந்ததாகாது.
ஆனால், தமிழர்கள் இந்தக் காரியத்தைச் செய்வதற்கு இலேசில் முன் வருவார்களா? வர மாட்டார்களே? மானமற்ற மக்களாயிற்றே இவர்கள்? இவர்களுக்கு மானத்தை ஊட்டித் துள்ளி எழச் செய்வதற்கு வழி என்ன? ஆ! இதோ கண்டு பிடித்தாயிற்று! காந்தி தான் காட்டியிருக்கிறாரே! உண்ணா விரதம் இருப்பதுதான் வழி. அப்போதுதான் இந்த மானமற்ற தமிழர்களுக்குக் கொஞ்சமாவது சூடு சுரணை வரும்! இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம்; ஒரு மின்னல் மின்னும் நேரத்தில் ஹிட்லர் குருசாமி ஒரு முடிவுக்கு வந்தார். "இதோ உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டேன். தமிழ் நாட்டிலுள்ள கோவில்களிலிருந்து ஆரியத் தெய்வங்கள் அத்தனையும் துரத்தப்படவேண்டும். அவை என்னிடம் வந்து இத்தனை நாளும் தமிழ் நாட்டுக் கோவில்களில் குடியிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போக வேண்டும். அதற்குப் பிறகுதான் நான் உண்ணா விரதத்தை நிறுத்துவேன். இல்லாவிடில் உயிர் போகும் வரையில் சாப்பிட மாட்டேன். அதற்கு பிறகு உசிதம் போல் செய்வேன். இது நிச்சயம்! இது சத்தியம்! வீரன், இருளன், காட்டேரி ஆணையாக இது முக்காலும் சத்தியம்!" என்று அவர் ஓர் அறிக்கை விடுத்தார்.
அவ்வளவுதான், உடனே ஓடி வந்தார்கள். நாலா பக்கத்திலிருந்தும், நாலைந்து வீரத்தியாகிகள், "ஹிட்லர் குருசாமிக்கு ஜே!" என்றார்கள். அவரைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு மச்சு வீடு பிடித்து அதில் கொண்டு போய் வைத்தார்கள். இந்த நெருக்கடியான நிலைமையில், ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் சரிவர நடந்தேறுவதற்காகச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றித் தீவிரமாக ஆலோசித்தார்கள். கடைசியில், ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். அதாவது, "ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரத நிதி!" என்று ஒரு நிதி திரட்டத் தீர்மானித்தார்கள்.
ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதச் செய்தி தமிழ் நாடெங்கும் விஷப் புகையின் வேகத்தில் பரவியது. அந்தச் செய்தியானது ஏற்கெனவே விழித்திருந்தவர்களுக்கு இன்னும் அதிக முழிப்பை உண்டாக்கிற்று; தூங்கினவர்களையோ முதுகில் தட்டி இன்னும் நன்றாய்த் தூங்கப் பண்ணியது; முக்கியமாக அந்த வருஷம் நடக்க இருந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்தவர்களிடையில், அச்செய்தி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்தப் பரபரப்பை நேயர்கள் உள்ளபடி அறிந்து கொள்வதற்கு, அப்போது தமிழ் நாட்டின் அரசியல் நிலைமையைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். இன்னும் காங்கிரஸ் மந்திரிகள்தான் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் மாகாண சுயாட்சி ஏற்பட்டு நாலு வருஷம் ஆகிவிட்டபடியால் சீக்கிரத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. காங்கிரஸுக்கு விரோதிகள் எல்லாரும், காங்கிரஸுடன் போட்டி போடலாமா, வேண்டாமா, போட்டியிட்டால் என்ன சாக்கை வைத்துக் கொண்டு போட்டியிடுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, இந்த உண்ணாவிரதத்தின் செய்தி பரவவே, பரபரப்புக்குக் கேட்கவா வேண்டும்? உடனே அவரவர்களும், "ஹிட்லர் குருசாமி உண்ணாவிரத நிதி"க்குப் பணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். மேற்படி உண்ணா விரதத்துக்குக் காங்கிரஸ் சர்க்காரால் ஏதும் பங்கம் விளையாமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு ஆங்காங்கே தொண்டர்படை சேர்த்தும் சென்னைக்கு அனுப்பினார்கள்.
உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும். ஒரு நாள் காங்கிரஸ் எதிர்ப்புப் பத்திரிகையில் பின்வரும் வீராவேசத் தலையங்கம் வெளியாயிற்று:
"ஒரு தமிழ் மகன் பட்டினி கிடக்கிறார்!
ஏழு நாளாக அன்ன ஆகாரமின்றிக் கிடக்கிறார்! எனினும்,
அவருடைய மன உறுதி குன்றவில்லை!
அவருடைய தேக நிறை குறையவில்லை
அவருடைய உள்ளம் தளரவில்லை!
அவருடைய உடம்பு மெலியவில்லை!
ஆனால் இந்தக் கல்மனக் காங்கிரஸ் மந்திரிகள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி ஒரு காந்தியோ, ஒரு ஜவஹர்லாலோ, ஒரு சுபாஷ்போஸோ பட்டினி கிடந்தால், இந்தப் பாவிகள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? ஆம்; அவர்கள் எல்லாம் வட நாட்டு ஆரியர்கள் - ஆகையால் விழுந்தடித்து ஓடுவார்கள்.
ஆனால் நமது ஹிட்லர் குருசாமி கேவலம் ஒரு தமிழ் மகன் தானே? அவன் பட்டினி கிடக்கட்டும்; பட்டினி கிடந்து சாகட்டும் அல்லது சாகாமலிருக்கட்டும் என்று சும்மா இருக்கிறார்கள்.
தமிழர்களே! மானமில்லாத தமிழர்களே! மதியில்லாத தமிழர்களே! இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை, அநீதியை, ஆரியக் கொடுமையை எத்தனை நாள் சகித்துக் கொண்டிருப்பீர்கள்!"
மேற்கூறிய பத்திரிகை அலறல் பயன்படாமற் போகவில்லை. மறுநாள் முதல், மந்திரிகளின் வீட்டு வாசலில் நாலு பேர் அல்லது மூன்று பேர் அல்லது இரண்டொருவர் பெருங் கூட்டமாக வந்து நின்று கூச்சலிடத் தொடங்கினார்கள்.
"ஹிட்லர் குருசாமி அடியோடு வாழ்க!"
"ஆரியத் தெய்வங்கள் நீடூழி ஒழிக!"
என்ற இவ்விதமான கோஷங்கள் வானத்தைப் பிளந்து கொண்டு சென்று அண்டை அயல் வீடுகளில் கூடக் கேட்கத் தொடங்கின. ஆனால், ஆலயங்களிலுள்ள தெய்வங்கள் மட்டும் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதாயில்லை; காங்கிரஸ் மந்திரிகளும் காது கொடுப்பதாயில்லை.
4
ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் ஆரம்பமானதிலிருந்து, அதைப் பற்றிய செய்திகளைத் தினந்தோறும் வெகு ஆவலுடன் ஸுசீலா கவனித்து வந்தாள். குருசாமியின் பேரில் அவளுக்கு ஏற்பட்ட நன்மதிப்புக்கு ஒரு அளவேயில்லை. "சாப்பாட்டைத் துச்சமாகக் கருதும் ஒரு மனுஷனாவது உலகில் இருக்கிறானல்லவா? வயிற்றைக் கட்டிக் கொண்டு அழாதா இவனல்லவோ வீர புருஷன்? ஆஹா! அவன் தான் எப்படியிருப்பானோ? என்னமாய்ப் பேசுவானோ?" என்று எண்ணாததெல்லாம் எண்ணி, எட்டாத கோட்டையெல்லாம் கட்டினாள்.
ஒரு வாரம் ஆயிற்று. பத்து நாள், பதினைந்து நாள், இருபது நாளும் ஆயிற்று. அதற்கு மேல் ஸுசீலாவுக்குத் திருநெல்வேலியில் இருப்புக் கொள்ளவில்லை. அந்த வீர புருஷனை, இலட்சிய புருஷனை, இருபது நாள் சமையலையும் சாப்பாட்டையும் மறந்திருக்க கூடிய மகாதீரனை, உடனே சென்று நேரில் பார்க்காவிடில் தன் ஆவி ஒரு கணமும் தரிக்காது என்று தீர்மானித்தாள். தகப்பனாரிடம் சொல்லவே, இந்த மாதிரி முன்னேற்றமான இயக்கங்களில் அதி தீவிர அநுதாபங் கொண்டவரான கோமதியப்பர் உடனே தயங்காமல் விடை கொடுத்தார். ஸுசீலா சென்னைக்கு ரயில் ஏறினாள். ஆனால் அந்தோ! அந்த ரயிலுக்கு வழியில் ஆபத்து ஒன்றும் நேரிடவில்லையென்பதை ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறோம். நிற்க.
ஸுசீலா எம்.ஏ. சென்னைக்குப் பிரயாணமான சமாசாரம் அவள் வருவதற்கு முன்பே சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டது. ஹிட்லர் குருசாமி தங்கியிருந்து வீட்டில் இந்தச் செய்தியானது மிகவும் கலக்கத்தை விளைவித்தது. குருசாமி தானே ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ஸுசீலாவை வரவேற்பேன் என்றதால் மேற்படி கலக்கம் நேர்ந்தது. மற்றவர்கள் அவனை ரொம்பவும் கேட்டுக் கொண்டு அப்படிச் செய்யாமல் தடுத்தார்கள். தாங்கள் போய் அவளைத் தக்கபடி வரவேற்று அழைத்து வருவதாகச் சொன்னார்கள். அப்படியே சென்று அழைத்து வந்தார்கள்.
ஸுசீலா அந்த வீட்டுக்குள் காலை வைத்ததும், அவள் கேட்ட முதல் கேள்வி என்னவென்று நினைக்கிறீர்கள்? அவளுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து, "அவர் எங்கே?" என்னும் வார்த்தைகள் மகத்தான தாபத்துடன் வெளிவந்தன. "மாடியில் இருக்கிறார்" என்றதும் அவளுடைய கால்கள் மெத்தைப் படிகளின் வழியாக அவளை மாடியில் கொண்டு போய்ச் சேர்த்தன! ஆஹா! அங்கே ஸுசீலா தன் ஆயுளிலேயே முதன் முதலாக ஹிட்லர் குருசாமியைப் பார்த்தாள்; குருசாமியும் ஸுசீலாவைப் பார்த்தான். வலது கண் வலது கண்ணுடனும் இடது கண் இடது கண்ணுடனும் இரு கண்கள் இரு கண்களுடனும் ஏக காலத்தில் சந்தித்தன. ஆஹா! அந்தச் சந்திப்பின் பெருமையை என்னால் வர்ணிக்க முடியுமா? அதை வர்ணிப்பதற்கு ஒரு கம்பனோ ஒரு காளிதாஸனோ அல்லது ஒன்றரைக் கம்பனோ ஒன்றரைக் காளிதாஸனோ தான் வல்லவர்களேயன்றி என் போன்றோர்களால் அது நினைக்கவும் முடியாத காரியமல்லவா?
ஸுசீலா வந்து சேர்ந்த செய்தி அறிந்ததும், சென்னை 'வீரத் தமிழ்' மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பெண்மணிகள் நாலைந்து பேர் வந்து சேர்ந்தார்கள். அன்று முதல், இவர்களே ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைக்கத் தொடங்கினார்கள்.
இரண்டொரு நாளைக்கு முன் ஒரு பொல்லாத தமிழ்ப் பத்திரிகையில், "ஹிட்லர் குருசாமி உண்ணாவிரதம் ஆரம்பித்து இருபது நாளாகிறது. அவர் இதே முறையில் இன்னும் எண்பது நாள் உண்ணாவிரதம் நடத்தத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். இந்த நூறு நாள் உண்ணாவிரதத்தில் தமது தேக நிலையில் ஒரு அணுவளவு கூடக் குறைவதில்லையென்றும் அவர் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்!" என்பதாக ஒரு கேலிக் குறிப்பு வெளியாகியிருந்தது. ரயில் பிரயாணம் செய்யும் போது ஸுசீலா இதைப் பார்த்தாள். அப்போது அவளுடைய மனதிலும் சிறிது ஐயம் தோன்றியது. இப்போது ஹிட்லர் குருசாமியைப் பார்த்த பிறகு அந்த சந்தேகம் எவ்வளவு அநியாயமானது என்பதை உணர்ந்தாள். ஆகா! சூதுவாதற்ற இத்தகைய சாது முகத்தையுடையவர், இப்படி அசட்டு முழி முழிக்கும் கண்களையுடையவர் - எங்கேயாவது ஏமாற்றும் வேலையில் இறங்குவாரா? ஒரு நாளும் இல்லை. எனினும், சந்தேகப் பிராணிகளுடைய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் பொருட்டு ஸுசீலா ஒரு ஏற்பாடு செய்தாள். அன்று முதல், தினந்தோறும் ஹிட்லர் குருசாமியின் எடையை நிறுத்து அவர் வசிக்கும் வீட்டு வாசலில் போர்டில் எழுதப் போவதாக அறிவித்தாள்.
ஸுசீலா வந்தது முதல், ஹிட்லர் குருசாமி இருந்து வீடு ஜே ஜே என்று ஆயிற்று. அந்த அதிசயமான உண்ணாவிரத வீரனைப் பார்ப்பதற்கும், வீரத் தமிழ் மங்கை ஸுசீலாவைப் பார்ப்பதற்குமாக ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் முப்பது, நாற்பது பேர் ஆகி விட்டார்கள். 'உண்ணாவிரத நிதி வசூல் கமிட்டி'யைச் சேர்ந்தவர்கள், மந்திரிகள் வீட்டு மறியல் தொண்டர்கள், வெளியூர்களிலிருந்து ஹிட்லர் குருசாமிக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள், 'வீரத் தமிழ் மகளிர்', இவ்வாறு நாளடைவில் கூட்டம் பெருகிற்று. இவர்களுக்கெல்லாம் கீழே தினம் மூன்று வேளை சமையல், சாப்பாடு எல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தோ! மேலே ஹிட்லர் குருசாமி, சமையல் வாசனையை மட்டும் முகர்ந்து கொண்டு கிடந்தான். ஸுசீலா வந்தது முதல் அவனுடைய தேகத்தின் நிறையும் மளமளவென்று குறைந்து வந்தது. தோற்றத்திலும் நாளுக்கு நாள் மெலியத் தொடங்கினான்.
முதலில் இரண்டு மூன்று நாட்கள் குருசாமிக்கு இது கஷ்டமாகவே இல்லை. உண்மையில் அவனுக்குப் பசியே தோன்றவில்லை. இடைவிடாமல் ஸுசீலாவின் ஞாபகமாகவே இருந்தான். ஆஹா! இத்தகைய ஒரு பெண்மணியின் நன்மதிப்பைப் பெற்றோமே! இந்த பாக்கியத்துக்காக உண்ணாவிரதம் மட்டுந்தானா இருக்கலாம்? ஒன்றும் சாப்பிடாமலே கூட இருக்கலாமே? - என்று இவ்விதம் எண்ணமிட்டான். முதல் சந்திப்பில், அவளிடம் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு - இவள் தானா எம்.ஏ. ஸுசீலா என்ற ஆச்சரியம் - அந்த இரண்டு மூன்று நாள் நெருங்கிய பழக்கத்தில் பரிபூர்ணமான காதலாகவே மாறிவிட்டது. ஆஹா! இத்தகைய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதல்லலவா வாழ்வு? மற்றதெல்லாம் வாழ்வு ஆகுமா? தகப்பனார் பெரிய வக்கீல் ; சொத்தோ ஏராளம்; இவளோ எம்.ஏ. படித்தவள்; ஓ! இவளுடன் நடத்தும் இல்வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமாயிருக்கும்?
இந்த நினைவுகளுக்கிடையில் இன்னொரு பயங்கரமான எண்ணம் வந்து குறுக்கிடும். சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்? முதலில் தான் உயிரோடிருக்க வேண்டுமே? அப்போதுதானே காதல், கல்யாணம், இல்வாழ்க்கை, இவற்றினாலெல்லாம் பிரயோஜனம் உண்டு? நாளாக ஆக அவனுக்கு இந்த நினைவே அதிகமாக வந்து கொண்டிருந்தது. நாலைந்து நாள் பட்டினிக்குப் பிறகு அவனுக்கு மாரை அடைக்கத் தொடங்கிய போது, உடம்பை என்னமோ செய்த போது, அவன் ஒரு முக்கியமான தீர்மானத்துக்கு வந்தான். அதாவது ஸுசீலாவுக்காக, அவளுடைய காதலுக்காக, தான் உயிர் வாழத்தான் வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்குரிய வழிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். திடீரென்று அவளுக்கு ஏமாற்றமளித்து, அவளுடைய காதல் முறிந்து போகும்படியும் செய்யக் கூடாதல்லவா?
5
இதற்கிடையில், சென்னை நகரெல்லாம் அமளி துமளியாயிருந்தது. தினந்தோறும் ஏழெட்டுப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் கூடியிருந்தவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேரும் ஆச்சரியமான நீள அகலங்கள் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். "பார்க்கப் போனால், இந்தக் கோவில்களிலுள்ள தெய்வங்கள் வெறுங் கல்லே அல்லவா? கல்லுக்கு உயிர் உண்டா? உயிரில்லாத கல்லுக்காக வேண்டி உயிருள்ள மனுஷன் உயிரை விட வேண்டுமா? இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது?" என்று பிரசங்கிகள் கர்ஜித்தார்கள்.
ஸுசீலா சென்னைக்கு வந்து சேர்ந்த ஐந்தாம் நாள் மாலை, கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாகாணம் முழுவதிலிருந்தும் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தமிழ்த்தாய் ஸுசீலாவும் வந்து பேசுவது அவசியம் என்று கருதப்பட்டது. அதிகமான வற்புறுத்தலின் பேரில், ஸுசீலா கிளம்பினாள். அவ்வளவு முக்கியமான கூட்டத்திற்குப் போகாமலிருக்கக் கூடாதென்று உண்ணாவிரத விடுதியிலிருந்து ஒவ்வொருவராக எல்லோருமே கிளம்பிச் சென்றார்கள்.
ஆரம்பத்திலேயே ஸுசீலாவைப் பேசச் சொன்னார்கள். ஸுசீலா பேசினாள். பொதுக் கூட்டத்திலே அவள் பேசுவது இதுதான் முதல் தடவையானாலும் அற்புதமாய்ப் பேசினாள். மனம் உருகப் பேசினாள். கடைசியில், "இங்கே நாம் பொதுக் கூட்டம் போட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் கரகோசம் செய்து கொண்டுமிருக்கிறோம். இந்த நேரத்தில் அங்கே அந்த வீர புருஷரின் - உயிர்..." இந்த இடத்தில் ஸுசீலாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணில் ஜலம் பெருகிற்று. மேலே பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாள். இந்தக் காட்சி, கூட்டத்தில் ஒரு மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆண் பிள்ளைகள் "அந்தோ! அந்தோ!" என்றார்கள். வீரத் தமிழ் மகளிர் விம்மி அழத் தொடங்கினார்கள்.
ஸுசீலாவுக்கு அப்போது மனதில் உண்மையாகவே ஒரு கலக்கம் உண்டாகியிருந்தது. தான் அங்கு உட்கார்ந்திருக்கையில், ஹிட்லர் குருசாமிக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்து கொண்டிருப்பதாக அவளுடைய உணர்வு சொல்லிற்று. உடனே போய் அவனைப் பார்க்க அவள் இருதயம் துடிதுடித்தது. அருகிலிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் மேடையிலிருந்து பின்புறமாக இறங்கிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கழுகுக் கண் படைத்த பத்திரிகை நிருபர்கள். 'ஏதோ ஹிட்லர் குருசாமியைப் பற்றிச் செய்தி வந்துதான் இவள் இப்படிக் கூட்டத்தின் நடுவில் எழுந்து போகிறாள்' என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவர்களும் ஒவ்வொருவராக நழுவிச் சென்றார்கள்.
ஸுசீலா இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, விடுதியின் வாசலில் போய் இறங்கினாள். கதவைச் சப்தமிடாமல் திறந்து கொண்டு மாடி மீது ஏறிச் சென்றாள். அங்கே ஹிட்லர் குருசாமியைக் காணாததும், அவளுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. கீழே இறங்கி வந்தாள். வீட்டில் சமையற்காரன் ஒருவன் தான் இருந்தான். அவனைக் கேட்கலாமென்று சமையலறையின் கதவைத் திறந்தாள். அந்தோ! அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது? சுருங்கச் சொன்னால் தலையில் விழ வேண்டிய இடி தவறிக் கீழே விழுந்தால் எப்படித் திகைப்பாளோ, அப்படித் திகைத்துப் போனாள் ஸுசீலா!
எதிரில் இலையைப் போட்டுக் கொண்டு, அதில் சாம்பார் சாதத்தைத் துளாவிப் பிசைந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான், ஹிட்லர் குருசாமி. அவனுடைய ஆயுள் பலம் கெட்டியாயிருந்த படியால்தான் அந்தச் சமயம் ஸுசீலா வந்தாள் என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில், ஐந்து நாள் பட்டினிக்குப் பிறகு அப்படி ஒரேயடியாகக் குழம்புச் சாதத்தைத் தீட்டியிருந்தால், அவன் கதி என்ன ஆகியிருக்குமென்று சொல்ல வேண்டுமா?
ஸுசீலாவைக் கண்டதும், ஹிட்லர் குருசாமி ஒரு நிமிஷ நேரம் அசட்டு முழி முழித்தான். அப்புறம் துள்ளி எழுந்து வந்து, ஸுசீலாவின் முன்னால் மண்டியிட்டுக் கை குவித்தான். "ஸுசீலா! ஸுசீலா! என்னை மன்னி! உன்னுடைய காதலுக்காகத்தான் நான் இந்த காரியம் செய்தேன்..." என்றான். அப்போது, குருசாமி ஒரு கணம் நிமிர்ந்து ஸுசீலாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு, அந்த முகத்தை அவன் தன் வாழ்நாளில் எப்போதும் பார்க்கவேயில்லை!
அடுத்த நிமிஷத்தில், அந்தோ! அந்தச் சமையலறைக்குள் திமுதிமுவென்று ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வந்து நுழைந்தார்கள்.
6
ஸுசீலா இன்னும் இரண்டு நாள் சென்னையில் இருந்தாள். இத்தனை நாளும் ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைத்தவர்கள் ஸுசீலாவைச் சூழ்ந்து கொண்டு, இனிமேல் இயக்கத்தை அவளே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். "ஹிட்லர் குருசாமி காங்கிரஸின் ஒற்றன்" என்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதைத் தாங்கள் முன்பே சந்தேகித்ததாகவும், ஆனால் அன்றிரவு, உண்ணாவிரத நிதிக்கு அதுவரை வசூலாகியிருந்த ரூ. 350யும் அமுக்கிக் கொண்டு அவன் ஓடிப்போனதிலிருந்துதான் அது நிச்சயமாயிற்று என்றும் சொன்னார்கள். இனிமேல் ஸுசீலாதான் தங்களுடைய தலைவி என்றும், அவள் மட்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் தாங்கள் முன்போலவே கூட இருந்து நடத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார்கள்.
ஆனால், ஸுசீலாவுக்கு இதனாலெல்லாம் போன உற்சாகம் திரும்பி வரவில்லை. அன்றிரவு வெளியான பத்திரிகையைப் பார்த்த பிறகு, அவளுக்கு நிராசையே உண்டாகி விட்டது. பத்திரிகையில் இரண்டு விஷயங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, ஹிட்லர் குருசாமி வெளியிட்டிருந்த அறிக்கை. அது வருமாறு:-
"நான் உண்ணாவிரதத்தை நிறுத்தியது குறித்து பலர் பலவிதமான சந்தேகங்கள் கொள்ளாமலிருப்பதாகத் தெரிவதால், இந்த அறிக்கையை வெளியிடுவது என் கடமையாகிறது. நான் உண்ணாவிரதத்தைக் கை விட்டது, தமிழ் நாட்டின் மேன்மையைக் காப்பதற்காகவே தவிர வேறில்லை. அதாவது, நமது அருமைத் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரின் அருள்மொழியை மெய்யாக்குவதற்குத்தான் அவ்வாறு செய்தேன். ஔவை என்ன சொல்லியிருக்கிறாள்?
-
"மானங் குலங்கல்வி,
வண்மை அறிவுடைமை,
தானந்தவ முயற்சி
தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேற்
காமுறு தல்பத்தும்
பசி வந்திடப் பறந்துபோம்"
என்னுடைய உண்ணாவிரதத்தின் போது எனக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மர்மங்களைப் பற்றியும் ஸ்திரீகளின் ஆழங் காண முடியாத உள்ளத்தின் இயல்பைப் பற்றியும் அநேக விஷயங்கள் தெரிய வந்தன. அவையெல்லாம் தமிழ் மக்களைத் திகைத்து, திடுக்கிட்டு, திக்கு முக்காடச் செய்பவையாயிருக்கும். சமயம் வரும் போது அவற்றை யெல்லாம் தைரியமாக வெளிப்படுத்த நான் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன்."
ஸுசீலா இதைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். ஹிட்லர் குருசாமியின் மேல் அவளுக்கு முதலில் வந்த கோபம் மாறி அநுதாபம் உண்டாயிற்று. பாவம், கள்ளங்கபடில்லாத சாது. தற்சமயம் தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களை விட அவன் எவ்வளவோ மேலல்லவா?
அவளுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பின்வரும் பெரிய தலைப்புகளின் கீழ்க் காணப்பட்டது.
"இந்தியாவின் பயங்கரமான ஜன அபிவிருத்தி"
"உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன?"
இந்தத் தலைப்புகளின் கீழே, சீமையிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ., எம்.இ.ஓ.பி.எச். சின் படமும், அவரைப் பத்திரிகை நிருபர் பேட்டி கண்ட விவரமும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில், ஸ்ரீ பாலசுந்தரம் எல்லாருக்கும் தெரிந்த சில ஆச்சரியமான விஷயங்களை எடுத்துக் காட்டியிருந்தார். 1930-ல் இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி. 1940-ம் வருஷ ஜனக் கணிதியின்படி 39 1/2 கோடு, பத்து வருஷத்தில் 4 1/2 கோடி அதாவது 100-க்கு 12 1/2 வீதம் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. ஆனால், உணவு உற்பத்தியோ 100-க்கு 2 1/2 வீதம் தான் அதிகமாயிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தேசத்தில் பயங்கரமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுத்தானே தீர வேண்டும்? ஆகையால், தேசத்தில் உள்ள அறிவாளிகள் எல்லாரும் உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினாலன்றி, அப்புறம் நிலைமை சமாளிக்க முடியாமல் போய்விடும்.
இது சரிதான்; ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்ரீ பாலசுந்தரத்தின் யோசனைகள் தான் என்ன? அவர் இரண்டு யோசனைகள் கூறியிருந்தார். ஒன்று, உணவுப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சி. இதற்காக, மேனாட்டார் கைக்கொள்ளும் நவீன விவசாய முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, நமது நாட்டில் உள்ள மலை அருவிகளிலிருந்தெல்லாம் மின்சார சக்தி உண்டு பண்ணவும், அந்த மின்சார சக்தியைப் புதுமுறை விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் முயல வேண்டும். தாம் உடனே இந்த முயற்சியில் இறங்கப் போவதாகத் தெரிவித்து விட்டு அவர் மேலும் கூறியதாவது:-
"ஆனால், இது மட்டும் போதாது. எவ்வளவுதான் இந்த வழியில் முயற்சி செய்தாலும், நாற்பது கோடி ஜனங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் தயாரிப்பதற்கே இன்னும் பத்து வருஷம் செல்லும். இதற்கிடையில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே போனால்...? ஆகவே, இந்தியாவில் குறைந்தது ஒரு கோடிப் பேர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருப்பது என்ற விரதத்தைக் கைக் கொள்வது அவசியம். நான் அத்தகைய விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஒரு அகில் இந்திய சங்கம் ஸ்தாபிக்கலாமென்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது..."
ஸுசீலா அவ்வளவுதான் படித்தாள். அளவிலாத அருவருப்புடன் பத்திரிகையைக் கீழே போட்டாள். இதற்கு முன்னால், இவ்வுலகம் வரண்ட பாலைவனமாக அவளுக்குத் தோன்றிற்று என்றால், இப்போது புயற் காற்றினால் அலைப்புண்டு கொந்தளிக்கும் கடலைப் போல் காணப்பட்டது. இந்த தொல்லைகளையெல்லாம் மறந்து, எங்கேயாவது சில காலம், அமைதியாக இருந்து விட்டு வரவேணும். மனுஷ்ய சஞ்சாரமே இல்லாத இடமாக இருந்தால் ரொம்ப நல்லது. அத்தகைய இடம் எங்கே இருக்கிறது? ஏன்? வேறு எங்கே போய்த் தேட? குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம்! ஆம்; குற்றாலத்துக்குப் போவதுதான் சரி. அங்கே பங்களா இருக்கிறது. பக்கத்தில் தோட்டக்காரன் குடித்தனமாயிருக்கிறான். அங்கே நேரே போய்விட வேண்டியது. அங்கிருந்து தகப்பனாருக்குக் கடிதம் எழுதி விட்டால் போகிறது.
7
ஸுசீலா குற்றாலத்துக்குப் போவது என்று தீர்மானித்த போது இரவு எட்டரை மணி. அதற்குள் எக்ஸ்பிரஸ் வண்டி போய்விட்டது. ஆனால் மறுநாள் வரையில் காத்திருக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆதலின் பாஸஞ்சர் வண்டியிலேயே பிரயாணம் ஆனாள். இந்த வண்டி சாவகாசமாக அசைந்து ஆடிக் கொண்டு தென்காசிக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஆறு மணியிருக்கும். உடனே, வண்டி வைத்துக் கொண்டு குற்றாலத்துக்குப் புறப்பட்டாள்.
குற்றாலத்தில் 'கோமதி பங்களா'வின் வாசலில் போய் வண்டி நின்றது. ஸுசீலா இறங்கினாள். பங்களாவுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. பங்களாவில் யார் இருக்கக் கூடும்?
இதற்குள் வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, தோட்டக்காரன் ஓடி வந்தான். ஸுசீலாவைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம், "இது என்ன, அம்மா, இது? எங்கிருந்து வரீக? தனியாகவா வந்தீக? ஐயா பின்னாலே வராகளா?" என்றான்.
"ஐயா வரவில்லை. நான் மட்டுந்தான் வந்தேன். வீட்டிலே யாரு, மாடசாமி!" என்று கேட்டாள்.
"தெரியாதுங்களா? நம்ம நெறிஞ்சிக்காடு ஐயாதான்."
ஸுசீலாவுக்குத் தலை சுழன்றது. இந்த மாதிரி நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாலசுந்தரத்தின் மேல் ஏற்கெனவே வெறுப்பு. அதிலும், தான் இப்படி அவமானப்பட்டு வந்திருக்கும் நிலைமையிலா அவரைப் பார்ப்பது? ஆனாலும் இப்போது திரும்பிப் போவது இயலாத காரியம்.
"நான் வந்திருக்கேன், வீட்டை ஒழித்துக் கொடுத்தால் தேவலை என்று போய்ச் சொல்லு."
தோட்டக்காரன் தயக்கத்துடன் போனான். சற்று நேரம் கழித்துத் திரும்பினான்.
"இராத்திரியிலே இத்தனை நேரத்துக்கப்புறம் எங்கே போறது என்று கேக்கறாக. மெத்தை அறை காலியாய்த்தான் இருக்கு. அதிலே உங்களை இருந்துக்கும்படி சொல்றாக" என்றான்.
ஸுசீலாவுக்கு இது சிறிது திருப்தியையளித்தது. மாடசாமியைச் சாமான்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, நேரே மெத்தை அறைக்குப் போனாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் சமையற்காரப் பையன் வந்தான். "சாப்பாடு கொண்டு வரட்டுமா, அம்மா?" என்று கேட்டான்.
"ஐயா கேக்கச் சொன்னாகளா?"
"நான் தான் ஐயாவைக் கேட்டேன். 'அந்த அம்மாகிட்ட போய்ச் சாப்பாடுன்னு சொன்னாச் சண்டைக்கு வருவாகடா. நீ. வேணாப் போய்க் கேட்டுப்பாரு' என்றாக."
ஸுசீலாவுக்கு ஆத்திரமாய் வந்தது. "எனக்குச் சாப்பாடு வேண்டாம்" என்றாள். சமையற்காரன் போய்விட்டான்.
அப்போது ஸுசீலா, என்னதான் எம்.ஏ. படித்தவளாயிருந்தாலும், பெண்ணாய்ப் பிறந்தவள் பெண்தான் என்பதை நிரூபித்தாள். குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி அழுதாள்.
அன்றிரவு ஸுசீலா வெகு நேரங் கழித்துத்தான் தூங்கினாள். ஆதலின், காலையில் எழுந்திருப்பதற்கும் நேரமாயிற்று. ஏழு மணிக்கு மேல் எழுந்திருந்து கீழே வந்தபோது, தோட்டக்காரன் சமையல் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். சமையற்காரன் கையில் ஒரு பொட்டலத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.
"என்ன இதெல்லாம்? ஐயா எங்கே?" என்று கேட்டாள்.
"ஐயா மலை மேல மரப் பாலத்துக்குப் போயிருக்காக. அவகளுக்குத் தோசை எடுத்துண்டு போறேன். ஜாகையை மாற்றிவிடச் சொல்லிட்டாக" என்றான்.
ஸுசீலாவின் கண்களில் நீர் துளித்தது. தோட்டக்காரனைப் பார்த்து, "நானும் மரப்பாலத்துக்குத்தான் போறேன். ஐயாவைப் பார்ப்பேன். நாங்க திரும்பி வரும் வரை ஐயா சாமான் இங்கேயே இருக்கட்டும்" என்றாள்.
குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது. அதன் நாலு பக்கத்திலும் வெள்ளை வெளேரென்ற சுத்தமான பாறைகள். அந்தப் பாறை ஒன்றின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சமையற்காரனுடன் ஸுசீலாவைப் பார்த்ததும் அவன் சிறிதும் வியப்புக் காட்டவில்லை. "ஏது, இப்படி எதிர்பாராத சந்தோஷம்?" என்றான். "எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்" என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். "அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே? அது வேண்டியதில்லை. நான் இன்று சாயங்காலமே ஊருக்குப் போய் விடுவேன்" என்றாள்.
"ரொம்ப வந்தனம். ஜாகை மாற்றுவது எனக்கும் அசௌகரியந்தான்" என்றான் பாலசுந்தரம். உடனே, சமையற்காரனைச் சற்று எட்டி அழைத்துப் போய், அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தான்.
"இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எத்தனை நாள் பொழுது போக்கியிருக்கிறோம்? அதெல்லாம் நினைத்தால் கனவு மாதிரி இருக்கிறது" என்றாள் ஸுசீலா. அப்புறம் இரண்டு பேரும் சற்று நேரம் பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இருக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது. தோசை எங்கே? சாப்பிடலாம்" என்றாள் ஸுசீலா.
"ஐயையோ! இதென்ன கூத்து?" என்றான் பாலசுந்தரம்.
"என்ன? என்ன?" என்றாள் ஸுசீலா.
"உனக்குப் பசிக்கிறது என்கிறாயே? தோசை கீசை என்றால் உனக்குக் கோபம் வரப்போகிறதென்று, பழனியைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடச் சொன்னேனே?" என்றான்.
ஸுசீலா இடி இடியென்று சிரித்தாள். அந்த மாதிரி அவள் சிரித்து எத்தனையோ காலமாயிற்று.
"சரி; இப்போது என்ன செய்யலாம்?" என்றாள்.
செய்வது என்ன? மத்தியானம் வரையில் காத்திருக்க வேண்டியதுதான். மத்தியானச் சாப்பாடு தேனருவிக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். அங்கே போய் விடலாம்" என்றான் பாலசுந்தரம்.
தேனருவிக்குப் புறப்பட்டார்கள். வழி நெடுகிலும் தங்களுடைய பழைய ஞாபகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்கள். வழியில் அநேக இடங்களில் பாறைகளில் ஏறியும், பள்ளங்களைத் தாண்டியும் போக வேண்டியதாயிருந்தது. அங்கெல்லாம், பாலசுந்தரம் ஸுசீலாவின் கையைப் பிடித்துத் தூக்கி விடுவது அவசியமாயிற்று. கடைசியில் பதினொரு மணிக்குத் தேனருவிக்கு வந்து சேர்ந்தார்கள்.
!!!!!
இந்த ஆச்சரியக் குறிகளையே தேனருவியின் வர்ணனையாக நேயர்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தேனருவியின் சுனையில் இருவரும் ஸ்நானம் செய்தார்கள். துணிமணிகளை உலர்த்திக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, மேலே கவிந்த ஒரு பாறையின் நிழலில் உட்கார்ந்து, பழனியை எதிர்பார்க்கலானார்கள். பசி தெரியாமல் பொழுது போவதற்காக, பாலசுந்தரம் தன்னுடைய சீமை அனுபவங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ஆனால் நடுநடுவே, ஸுசீலா, தன் மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், "இன்னும் பழனி வரவில்லையே?" என்று கேட்டுக் கொண்டும் இருந்தாள். கடைசியாக, ஒன்றரை மணிக்கு, பழனி தலையில் கூடையுடன் தூரத்தில் காணப்பட்டான். உடனே இருவரும் எழுந்து போய்ச் சுனையின் அருகில் உட்கார்ந்தார்கள். பாறையை ஜலத்தை விட்டு நன்றாய் அலம்பிச் சுத்தமாக்கி வைத்துக் கொண்டார்கள்.
ஆச்சு! இதோ பழனி கிட்ட வந்துவிட்டான். அங்கே ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு அவன் தாவிக் குதித்தாக வேண்டும். "அடே! ஜாக்கிரதை! கூடையைப் போட்டுக் கொண்டு விழாதே!" என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை! ஐயோ! கீழே பள்ளத்தில் தண்ணீரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தது. அதிலிருந்த உணவுப் பண்டங்களை மீன்கள் போஜனம் செய்து கொண்டிருந்தன.
பாலசுந்தரம் ஓடி வந்து, பழனியைக் கையைக் கொடுத்துத் தூக்கி விட்டான். அவனும் ஸுசீலாவும், பாவம், பழனியைத் திட்டு திட்டு என்று திட்டினால், பசி நீங்குமா? என்ன செய்வதென்று யோசித்தார்கள். "காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்" என்றான் பழனி. "சரி! போ! மரப்பாலத்துக்கே கொண்டு போ. அதற்குள் நாங்களும் அங்கே வந்து விடுகிறோம்" என்றான் பாலசுந்தரம்.
8
மாலை ஐந்து மணி சுமாருக்கு மரப்பாலத்துக்கருகில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டு விட்டு, ஸுசீலாவும் பாலசுந்தரமும் கீழே போகக் கிளம்பினார்கள். "பசி என்றால் எப்படி இருக்கும் என்று இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது" என்றாள் ஸுசீலா. "நமது நாட்டில் தினந்தோறும் இம்மாதிரி பசிக் கொடுமையை அனுபவிக்கிறவர்கள் கோடிக்கணக்கான பேர்" என்றான் பாலசுந்தரம். "நிஜமாகவா! ஐயோ! எப்படித்தான் பொறுக்கிறார்கள்? இத்தனை நாளும் எனக்கு யாராவது பிச்சைகாரன் 'பசி எடுக்குது, அம்மா! பிச்சைபோடு, அம்மா! பிச்சைபோடு, அம்மா!' என்றால் கோபம் கோபமாய் வரும்" என்றாள் ஸுசீலா.
"இந்தியாவின் ஜனத்தொகை 40 கோடி. இதில் பாதிபேர் - 20 கோடிப் பேர் ஓயாமல் பசித்திருப்பவர்கள். கூடிய சீக்கிரத்தில், நமது தேசத்தில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். இல்லாவிட்டால்..."
ஸுசீலாவுக்கு, பத்திரிகையில் வாசித்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அவள் பெருமூச்சு விட்டாள்.
அப்போது பாலசுந்தரம் ஸுசீலாவைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டிருந்தான். "இப்போது நாம் போவது போலவே, வாழ்க்கை முழுவதும் கைகோத்துக் கொண்டு போக முடியுமானால்..." என்றான்.
ஸுசீலா வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள். "நீங்கள்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத விரதம் எடுத்தவர்களாயிற்றே!" என்றாள்.
பாலசுந்தரம் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு, விஷயம் என்னவென்று விசாரித்தான். ஸுசீலா தான் பத்திரிக்கையில் படித்ததைச் சொன்னாள்.
"படித்ததை முழுதும் படிக்காமல் பாதியில் விட்டு விட்டால், அதற்கு நான் என்ன செய்வது?" என்றான்.
"பின்னால் என்ன சொல்லியிருந்தது?" என்று கேட்டாள்.
"ஆனால், இந்த விரதத்துக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. 'இந்தப் பெரிய தேசத் தொண்டில் ஒருவனுக்கு உதவி செய்யக் கூடிய வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்தால், அந்த நிலைமையில் கல்யாணம் செய்து கொள்வதே அதிக பயனுள்ளதாகும்' என்று கடைசியில் சொல்லியிருந்தேன்."
ஸுசீலா சற்று நேரம் யோசித்து விட்டு, "அம்மாதிரி நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன் என்று தோன்றுகிறதா?" என்றாள்.
"உன்னைப் போல் உதவி எனக்கு வேறு யார் செய்ய முடியும்? நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா?"
ஸுசீலா இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். "ஆமாம்; நீங்கள் ஒரு பக்கம் ஜனங்களின் பசிக்கு உணவு உற்பத்தி செய்தால், நான் இன்னொரு பக்கத்தில் அவர்களுக்குப் பசியேயில்லாமல் அடித்து விட முடியும்!" என்றாள்.
"ஆனால், அவர்கள் குற்றாலத்துக்கு வந்தால், மறுபடியும் பசி உண்டாகி விடும்!" என்றான் பாலசுந்தரம்.
இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலி அருவியின் சலசல சப்தத்துடன் கலந்தது!
ஆனந்தவிகடன் தீபாவளி மலர் - 1938
---------------
18. கமலாவின் கல்யாணம்
"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்துவை!" என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள்! ஆனால் ஜுனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம். நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீந்து வரும்படி செய்வதற்குள் வாய்ப் பிராணன் தலைக்கு வந்து விடுகிறது. ஆயிரம் பொய் சொல்லுவதாம்! கல்யாணம் செய்து வைப்பதாம்? அந்த நிபந்தனையின் பேரில்தான் கல்யாணம் நடக்கும் என்றால் உலகத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாரும் விநாயகர்களாயிருக்க வேண்டியதுதான்.
நல்ல வேளையாக, அப்படியாவது பொய் சொல்லி யாருக்கும் கல்யாணம் செய்துவைக்கும்படியான அவசிய்ம் எனக்கு இதுவரையில் ஏற்படவில்லை. கல்யாணமுயற்சி எதிலுமே நான் தலையிட்டது கிடையாது. ஒரு கல்யாணத்தைத் தடைப்படுத்தும் முயற்சியில் தான் சமீபத்தில் கலந்துகொண்டேன். அந்தக் கதை தான் இது.
ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர் என்று எல்லாரும் கேள்விப்பட்டிருக்கலாம். பிரசித்திபெற்ற வக்கீல். அவரிடம் தான் இரண்டு வருஷமாக நான் ஜுனியராக இருக்கிறேன். மாதம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாத வருமானம். இப்படியே இருபது வருஷமாய் இருந்து வருகிறது. டாக்டர் பெஸண்டு அம்மையின் காலத்தில் இவர் ஹோம் 'ரூல்' கிளர்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால் தான் 'ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர்' என்று பெயர் வந்தது. வீட்டில் அகத்துக்காரியின் ஆட்சி கொஞ்சம் அதிகமாதலால், இந்தப் பெயர் அவருக்கு நிலைத்து விட்டது என்று சில பொறாமைக்காரர்கள் சொல்வதுமுண்டு.
மகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு முன்னணியில் நிற்பார். கதர் தான் அணிவார். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேச இயக்கத்தில் வெகுபாடுபட்டு உழைத்தவர் அவர். இருபது வருஷங்களுக்கு முன்பு ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர். இன்னமும் வஞ்சனையில்லாமல் ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று வருகிறார். தேர்தல்களில் எல்லாம் அவருடைய ஆதரவு காங்கிரஸுக்குத்தான். சென்னையிலிருந்தோ, வெளிமாகாணங்களிலிருந்தோ, தேசீயத் தலைவர்கள் வந்தால், அவருடைய வீட்டில்தான் இறங்கவேண்டும்.
இன்னும் சமூக சீர்திருத்தத் திட்டங்களில் எல்லாம் அவருக்கு அதிகப் பற்று உண்டு. சாரதா சட்டத்துக்கு விரோதமான கிளர்ச்சி நடந்தபோது, சாரதா சட்டத்துக்குச் சாதகமாய்ப் பொதுக் கூட்டங்கள் போட்டதுடன் கையெழுத்துக்களும் வாங்கி அனுப்பினார்.
ருதுமதி விவாகம் விதவா விவாகம் முதலியவை சமீபத்திலுள்ள ஊர்களில் எங்கே நடந்தாலும், இவர் போய் இருந்து நடத்தி வைப்பார். சில கல்யாணங்களில் புரோகிதம் கூடச் செய்து வைத்ததுண்டு.
ஸ்ரீ கோபாலகிருஷ்ண ஐயருக்கு நாலு பெண்கள். ஒரே அருமைப் பிள்ளை. பெண்களுக்கெல்லாம் நல்ல இடங்களில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். ஒரு மாப்பிள்ளை ஐ.சி.எஸ். இன்னொரு மாப்பிள்ளை அக்கவுண்டண்ட் ஜெனரல். இப்படி பிள்ளைக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பையன் சென்ற வருஷந்தான் பி.எல். பாஸ் செய்துவிட்டு வந்து எங்களைப் போல் தானும் தகப்பனாரிடம் ஜுனியராக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். கோபாலகிருஷ்ண ஐயர் நல்ல பணக்காரர் ஆனதால் எவ்வளவோ பெரிய பெரிய இடங்களிலிருந்து கல்யாண சுந்தரத்துக்குப் பெண் கொடுப்பதாக வந்தார்கள். பல காரணங்களால் கல்யாணம் தடைப்பட்டு வந்தது. அப்பாவுக்குப் பிடித்தால் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. அம்மாவுக்குப் பிடித்தால் பிள்ளைக்கு பிடிப்பதில்லை. இவர்கள் மூன்று பேருக்கும் பிடித்திருந்தால் பெண் வீட்டுக்காரர்கள், 'இவர்களுடைய அனாசாரம் பிடிக்கவில்லை' என்று போய் விடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலைமையில்தான், ஒரு நாள் திருவளர்ச்சோலைக் கோவிலில் நடக்கப்போகும் ஒரு கல்யாணத்தைப் பற்றி எங்களுக்குச் செய்தி வந்தது. ஐம்பத்தைந்து வயதான ஒரு கிழவருக்கும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதாக வதந்தி உலாவிற்று. மாமண்டூரில் யாரோ ஒரு உபாத்தியாயராம்; சம்சாரியாம். அவருடைய மூத்த பெண் கமலாவைத்தான் இப்படி ஒரு கிழவருக்குப் பலிகொடுக்க ஏற்பாடாகியிருந்ததாம். மாமண்டூரிலிருந்து வந்த ஒரு கட்சிக்காரர் மேற்கூறிய விவரம் தெரிவித்தார். 'கிழ மாப்பிள்ளை' யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த அநியாயத்தைப்பற்றி ஒருநாள் ஜுனியர்களாகிய நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, பெரியவர் வந்துவிட்டார். 'என்ன சமாசாரம்' என்று அவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் தலைக்குத் தலை வெகு ஆத்திரத்துடன் மேற்படி கல்யாணக் கொடுமையைப் பற்றிச் சொன்னோம். பெரியவர் அப்போது, "நீங்கள் எல்லோரும் இவ்வளவு ஆத்திரமாய்ப் பேசுகிறீர்களே? பேசி என்ன பிரயோசனம்? உங்கள் ஆத்திரத்தைக் காரியத்தில் காட்ட எத்தனை பேர் தயாராயிருக்கிறீர்கள்? இந்தக் கல்யாணத்தை ஏன் நாம் நிறுத்தி விடக் கூடாது" என்றார். "நீங்கள் வந்தால் நாங்களும் தயார்" என்று எல்லோரும் ஒரு முகமாகக் கூறினோம். அந்த மாமண்டூர்க் கட்சிகாரனைக் கூப்பிட்டு மறுபடியும் விசாரித்தோம். "நாளை ஞாயிற்றுக் கிழமை கல்யாணமாம்" என்று அவன் சொன்னான். கிழமை ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது நல்லதாய் போயிற்று. கோர்ட்டு உள்ள தினமாயிருந்தால், ஒரு வேளை எங்களுடைய உற்சாகம் மழுங்கிப்போயிருக்கலாம். விடுமுறை நாளாயிருந்தபடியால் எங்களுடைய சமூகச் சீர்த்திருத்த வேகம் பன்மடங்கு அதிகரித்தது. ஆகவே ஞாயிற்றுக்கிழமையன்று எல்லாரும் திருவளர்ச்சோலைக்குக் கும்பலாகச் சென்று, மேற்படி கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்துவிடுவது என்று தீர்மானம் செய்தோம்.
நடுவில் ஒரே நாள் தான் இருந்தது என்றாலும் ஊரெல்லாம் செய்தி பரவிவிட்டது. திருவளர்ச் சோலையில் நடக்கும் அக்கிரமமான பால்ய விவாகத்தைப்பற்றிப் பலர் பலமாகக் கண்டித்தார்கள். வேறு சிலர் "யார் எப்படிப் போனால் இவர்களுக்கென்ன? உலகத்தை இவர்கள் தான் உத்தாரணம் செய்யப் போகிறார்களாக்கும்" என்று எங்களைக் கண்டித்தார்கள். இதனாலெல்லாம் எங்களுடைய உறுதி குன்றவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருபது பேர் ஏறக்கூடிய ஒரு பெரிய பஸ் வந்து, கோபாலகிருஷ்ண ஐயர் வீட்டு வாசலில் நின்றது. பெரியவர் எல்லாருக்கும் முன்னால் தயாராக வந்து நின்றார். நாங்கள் நாலு ஜுனியர்களும், இரண்டு குமாஸ்தாக்களும் அவ்விதமே தயாராயிருந்தோம் கல்யாணசுந்தரமும் பிரயாணத்துக்குத் தயாராய் வருவதைப் பார்த்து, பெரியவர், "நீ என்னத்திற்காக வருகிறாய்?" என்று கேட்டார். "நானும் வரத்தான் வருவேன்" என்று அவன் முன்னதாக வண்டியில் ஏறிக் கொண்டான். உள்ளூர் காங்கிரஸ் காரியதரிசியும் நாலு தொண்டர்களும், கையில் கொடி பிடித்துக் கொண்டும் "வந்தே மாதரம்", "மகாத்மா காந்திக்கு ஜே", "பால்யவிவாகம் ஒழிக", "காதல் மணம் வாழ்க" என்று கோஷித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்படி இப்படியென்று, பஸ் நிறைய ஆள் சேர்ந்துவிட்டது.
பஸ் கிளம்பி ஐந்து நிமிஷம் இருக்கும். இன்னும் நகர எல்லையைத் தாண்டவில்லை. முதல் நாள் சாயங்காலமே நாங்கள் திருவளர்ச்சோலைக்கு அனுப்பியிருந்த பையன் சைக்கிளில் பறந்து வருவதைக் கண்டோ ம். அவன் கையைக் காட்டுவதற்கு முன்னாலேயே பஸ் நின்று விட்டது. எங்களுக்கு அங்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்காகவும் கல்யாணம் நடக்கும் இடம் முதலியவற்றைக் கவனித்து வைப்பதற்காகவும் அவனை முதல்நாள் அனுப்பியிருந்தோம். அவன் இப்படித் தலை தெறிக்க ஓடி வந்ததைப் பார்த்ததும், எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஏக காலத்தில் எல்லாரும், "என்ன? என்ன?" என்றோம். பையன் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான். "அவர்களுக்கு எப்படியோ சமாசாரம் தெரிந்துவிட்டது. திருவளர்ச்சோலையில் கல்யாணம் நடக்கவில்லை. குலசேகரபுரத்தில் நடக்கப் போகிறதாம்!" என்றான்.
பலே பேஷ்! நல்ல வேலை செய்தார்கள்! திருவளர்ச்சோலை எங்கள் நகரிலிருந்து பன்னிரண்டு மைல். குலசேகரபுரம் நாற்பது மைல். அவ்வளவுதூரம் எங்களுடைய சீர்திருத்த வேகம் எட்டாது என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்! கிழ மாப்பிள்ளை யாராயிருந்த போதிலும் பலே கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் கெட்டிக்காரத்தனத்தில் குறைந்தவர்களா? "விடு பஸ்ஸைக் குலசேகரபுரத்துக்கு" என்றோம். தாலி கட்டியாவதற்குள் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டுமென்பது எங்கள் ஆசை. பஸ் டிரைவருக்கும் இந்த கலாட்டாவில் ருசி ஏற்பட்டுவிட்டது. பஸ் பறந்தது.
அன்றைக்கு முதல் முகூர்த்தம் ஒன்பது மணிக்கு மேல் பத்தரை மணிக்குத்தான் என்பது எங்களுக்குத் தெரியும். பஸ் எட்டரை மணிக்கு குலசேகரபுரத்தை அடைந்துவிட்டது. கொட்டு மேளம் கொட்டுகிற சத்தத்தைக் கொண்டு, கல்யாண வீட்டைக் கண்டு பிடித்தோம். அங்கே நாங்கள் போன சமயம், மாப்பிள்ளை பரதேசக் கோலம் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்! மாப்பிள்ளை எங்கள் ஊர்ப்பேர்வழி; அதோடு வக்கீல் தொழில் செய்பவர்; பெயர் கணபதிராம சாஸ்திரிகள். வயது ஐம்பத்திரண்டு ஆயிற்று. ஆனால் பார்ப்பதற்கு நாற்பத்தைந்து வயது தான் சொல்லலாம். சிவப்பு நிறம், முகத்தில் நல்ல களை. இப்போது மாப்பிள்ளைக் கோலத்தில் அப்படியொன்றும் மோசமாக இல்லை; ஜோராகத்தான் இருந்தார்.
2
பரதேசக் கோலத்தில் சாஸ்திரிகளைப் பார்த்ததும் என்னுடைய சீர்திருத்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிற்று. ஏனெனில், அவருடைய நிலைமையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ரொம்ப நல்ல மனுஷர்; பரமசாது; ஒருவருக்கு ஒரு தீங்குஞ் செய்யாதவர். வக்கீல் வேலையில் அவ்வளவு வருமானம் கிடையாது. கையிலிருந்த பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் பெருக்கியிருந்தார். இப்போது ஐம்பதினாயிரம் ரூபாய் சொத்துக்குக் குறைவில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாதவர். ஒரு மனைவி, பிள்ளையில்லாமலே இறந்து போனாள். துர்பாக்கியவசமாக, அந்தப் பெண் குழந்தையையும் மூன்றாவது வயதில் இழந்தார். மாமாங்கக் கூட்டத்தில் குழந்தை காணாமல் போனதாக வதந்தி, அப்புறம் வெகு காலம் அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. விதந்துவாய் போன அவர் தங்கை இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அந்தக் குழந்தைகளை வளர்த்து முன்னுக்குக் கொண்டு வந்தார். பையன் உத்தியோகமாகி வெளியூர் போய்விட்டான். பெண்ணுக்குக் கல்யாணமாகிப் புக்ககம் போய்விட்டான். அவளுக்குத் துணையாகத் தாயாரும் வந்திருக்க வேண்டுமென்று மாப்பிள்ளை வற்புறுத்திய படியால், அவருடைய சகோதரியும் போய்விட்டாள். தற்சமயம் சாஸ்திரிகள் ஒரு சமையற்காரப் பையனை வைத்துக் கொண்டு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வந்தார். இந்தத் தனிமையின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் தான் அவர் இந்த முதிர்ந்த வயதில் கல்யாணம் செய்து கொள்ளத் துணிந்திருக்க வேண்டும்.
இவ்வாறெண்ணி அவரிடம் நான் கொஞ்சம் அனுதாபங்கொண்டேன். ஆனால், மற்றவர்கள் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் கிளம்பி வந்த போது, "முன்பின் தெரியாத முரட்டுக் கிழவன் யாராவது மாப்பிள்ளையாயிருந்தால் என்ன செய்கிறது?" என்ற பயம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் இருந்தது. "உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்!" என்று முரட்டடியாய் அடித்தால், உண்மையில் நாங்கள் என்ன செய்யமுடியும்? ஆனால், சாது கணபதிராம சாஸ்திரிகள் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், எங்கள் கோஷ்டியில் அனேகருக்கு உற்சாகம் தலைக்கேறி விட்டது.
"வந்தே மாதரம்!" "பால்ய விவாகம் ஒழிக!" என்று கோஷித்துக் கொண்டு நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கியதைப் பார்த்ததுமே கணபதிராம சாஸ்திரிகள் திகைத்துப் போய் நின்று விட்டார். எல்லோருமாகப் போய் அவரைச் சூழ்ந்து கொண்டோ ம். வைதிகர்கள், பெண் வீட்டார், முதலியோர் மிரண்டு போய் விலகி கொண்டார்கள்.
"சாஸ்திரிகளே! நல்ல வேளை செய்தீர் ஐயா!" என்றான் எங்களில் ஒருவன்.
"ராத்திரிக்கு ராத்திரியே, எப்படி ஐயா, பிளானை மாற்றினீர்? ஹிட்லரால் கூட இவ்வளவு துரிதமாய்க் காரியம் செய்ய முடியாதே!" என்றான் இன்னொருவன்.
"கண்ணில் மை இட்டிருக்கிறது ரொம்ப அழகாயிருக்கிறது. கண்ணாடியில் பார்த்துக் கொண்டீரா?" என்றான் மற்றொருவன்.
"தலையில் பூச்சூட்டிக் கொண்டிருக்கிறது அதை விட இலட்சணம்!" என்றான் இன்னொருவன்.
பெரியவர் எல்லாரையும் கையமர்த்திச் சும்மா இருக்கச் செய்துவிட்டு, "சாஸ்திரிகளே! யாரோ பட்டிக் காட்டுக் கிழவனாக்கும் என்று பார்த்தேன். படிப்பும் பகுத்தறிவும் உள்ள நீங்களே இப்படியெல்லாம் செய்தால் நமது தேசம் எப்படி முன்னுக்கு வரும்? ஒரு சின்னப் பெண் குழந்தையை இந்த வயதில் நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால், அந்தப் பெண் சந்தோஷமாக இருக்க முடியுமா? உங்களுக்குத் தான் அதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்? சுத்தமாய் நன்றாயில்லை. அப்படி உங்களுக்கு வேண்டுமென்றால் சம வயதுள்ள ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்வது தானே? நாங்களே கிட்ட இருந்து நடத்தி வைக்கிறோம்" என்று சரமாரியாகப் பொழிந்தார்.
சாது கணபதிராம சாஸ்திரிகள் இந்த 'பிளிட்ஸ்கிரிக்' தாக்குதலினால் அப்படியே அசந்து போனார். முகத்தில் ஈயாடவில்லை. மென்று விழுங்கிய வண்ணம். "எனக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதில் சம்மதந்தான். நேற்றே நான் சொன்னேன். பெண் வீட்டார் தான் ரொம்பவும் ஆட்சேபிக்கிறார்கள். அவர்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்" என்றார்.
இவ்வளவு சுலபத்தில் காரியம் முடிந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எனவே, எங்களுடைய உற்சாகம் பொங்கிற்று. பரதேசக் கோலம் பூண்ட மாப்பிள்ளை திரும்பி வீட்டுக்குள் வர முடியாதபடி அவரைச் சிலர் வளைத்துக் கொண்டு நின்றார்கள். மற்றவர்கள், கல்யாண வீட்டுப் பக்கம் போனார்கள். இதற்குள் ஏதோ கலாட்டா நடக்கிறதென்று தெரிந்து பெண் வீட்டார், ஆண் பெண் அடங்கலும், வீட்டு வாசலுக்கு வந்திருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாயிருந்தது. தலைக்குத் தலை பேசத் தொடங்கினார்கள்.
"பெண்ணின் தகப்பனார் யார்?" என்று கோபாலகிருஷ்ண ஐயர் கேட்டார். "இவர் தான்" என்று ஒருவரை எல்லாருக்கும் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
"ஐயர் வாள்! உள்ளே போவோம் வாருங்கள்; உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேசலாம்" என்றார் கோபாலகிருஷ்ண ஐயர்.
அவர் பெரிய மனுஷர், அந்தஸ்துள்ளவர் என்று எல்லாருக்கும் தெரியுமாதலால், சிலர், "அப்படியே செய்கிறது! வாருங்கள் உள்ளே!" என்று அழைத்துப் போனார்கள். நாங்களும் உள்ளே போனோம். எங்களைத் தொடர்ந்து எல்லாரும் உள்ளே வந்துவிட்டார்கள். தாழ்வாரத்தில் போட்டிருந்த பாயில் கோபாலகிருஷ்ண ஐயரும் சம்பந்திப் பிராமணரும் வேறு சில பெரியவர்களும் உட்கார்ந்தார்கள். நாங்களும் சூழ்ந்து உட்கார்ந்தோம். இம்மாதிரிச் சமயங்களில் காரியத்தை மேற் போட்டுக் கொண்டு செய்கிற மனிதர்கள் சிலர் உண்டு அல்லவா? அப்படிப்பட்ட மனிதர் ஒருவர், "ஸத்து, ஸத்து" என்றார். ஒரு நிமிஷம் மௌனம் குடி கொண்டது. அந்த மௌனத்தைப் பிளந்துகொண்டு விம்மி அழும் குரல் ஒன்று கேட்டது. எல்லோரும் அழுகைச் சத்தம் வந்த பக்கம் பார்த்தோம். அழுதது வேறு யாருமில்லை மணக்கோலத்திலிருந்து மணப்பெண் தான். என் அருகில் இருந்த கல்யாணசுந்தரம், "ராகவன்! இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்கவில்லை! வெளியே போகிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து போனான். வாசற்படியைக் கடக்கும் போது, அவன் ஒரு தடவை திரும்பி, மணப்பெண் இருந்த திசையை நோக்கியதைப் பார்த்தேன். அவன் கண்களில் அப்போது தோன்றிய இரக்கமும் கனிவும் எனக்கு ஒருவாறு நகைப்பை உண்டாக்கி, பெண்ணின் அழுகைக் குரலினால் ஏற்பட்ட வேதனையைப் போக்கிற்று. "பிள்ளையாண்டானுக்கு அசடு தட்டி விட்டது என்று மனதில் எண்ணிக் கொண்டேன். அதற்குத் தகுந்தாற்போல் அவனும் வெளியே போகாமல் நின்ற இடத்திலேயே நின்றான்.
ஒரு ஸ்திரீ - மணப் பெண்ணின் தாயாராய்த்தான் இருக்க வேண்டும் - பெண்ணிடம் வந்து அவள் கையைப் பிடித்து, "அசடே! என்னத்திற்காக அழுகிறாய்? தலையெழுத்துப் போல் நடந்து விட்டுப் போகிறது!" என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.
இதையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் இளகிய கோபாலகிருஷ்ண ஐயர், பெண்ணின் தகப்பனாரைப் பார்த்து, "என்ன சுவாமிகளே! உங்களைப் பார்த்தால் படித்த மனுசர் மாதிரி தோன்றுகிறது. நீங்களெல்லாம் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யலாமா? அந்தப் பெண்ணை இப்படி அழவிட்டுக் கல்யாணம் செய்து கொடுக்காமற் போனால் என்ன?" என்றார்.
அப்போது அந்த பிராமணனுக்குத் திடீரென்று வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்க்கவேண்டுமே!
"நான் வேண்டாம்; வேண்டாம் என்று தான் முட்டிக் கொண்டேன்; பொம்மனாட்டி சொன்னதைக் கேட்டு இப்படியாச்சு! ஸ்திரீ புத்திப் பிரளயாந்தகா!" என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்.
உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீயின் குரல், "ஆமாம், எல்லாப் பழிக்குந்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே?" என்று சொல்வது கேட்டது.
அப்போது கோபாலகிருஷ்ண ஐயர், "இன்னும் ஒன்றும் முழுகிப் போகவில்லையே! சாஸ்திரிகள் இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடச் சம்மதம் என்று சொல்லி விட்டார். நீங்கள் சம்மதிக்க வேண்டியதுதான் பாக்கி" என்றார்.
"இருநூறு ரூபாய் வரையில் பணம் செலவாகியிருக்கிறதே. அதற்கு யார் வழி செய்கிறது!" என்று பெண்ணின் தகப்பனார் ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்டார்.
"இவ்வளவு தானே?" என்றார் கோபாலகிருஷ்ண ஐயர், சட்டைப் பையிலிருந்து பணப் பையை எடுத்து, அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வீசினார். "இந்தாருங்கள் இதை இப்போது வைத்துக் கொள்ளுங்கள் பாக்கி நூறு ரூபாய்க்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். எப்படியாவது அந்தக் குழந்தையை நீங்கள் படுகுழியில் தள்ளாமல் காப்பாற்றினால் போதும்" என்றார்.
கோபாலகிருஷ்ண ஐயரின் தாராள குணத்தைப் பார்த்து அங்கே எல்லோரும் பிரமித்துப் போனார்கள். "ஐயர்வாளுடைய தர்ம குணந்தான் உலகப் பிரசித்தியாச்சே? கேட்கவா வேணும்?" என்றார் ஒரு வைதிகர்.
"நாங்களெல்லாம் ஏழெட்டு மைல் நடந்து வந்திருக்கிறோம். எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேணும். வெறுங்கையோடு போகச் சொல்லக் கூடாது" என்றார் இன்னொரு வைதிகர்.
"பிராமணச் சாபம் உதவாது; தலைக்கு நாலணாவாவது கொடுத்தனுப்புங்கோ" என்று ஒருவர் மத்தியஸ்தமாய்ச் சொன்னார்.
பெரியவர், இன்னொரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து வைதீகர்களில் முதன்மையாயிருந்தவரிடம் கொடுத்து, "எல்லாருக்கும் சரியாய்க் கொடுத்துடுங்கோ" என்றார்.
"கர்ணன் என்றால் கர்ணன்! இந்தக் கலியுகத்திலே இப்படிப்பட்ட தர்மப்பிரபு யார் இருக்கா?" என்று இம்மாதிரிப் பேச்சுக்கள் எழுந்தன.
எல்லாரும் வெளியே வந்தோம். கணபதிராம சாஸ்திரிகளை மறுபடி கல்யாண வீட்டுக்குள் போகவிடவில்லை. அப்படியே பஸ்ஸிலே கொண்டுபோய் ஏற்றி, அவருடைய சாமான்களை யெல்லாம் கொண்டுவரச் சொன்னோம். அவரைச் சேர்ந்த மனுஷர்கள் - பந்துக்களோ, சிநேகிதர்களோ... யாரும் வந்திருக்கவில்லை. ஒரு குமாஸ்தா பையன் மட்டுந்தான் வந்திருந்தான். பாக்கிச் சாமான் வகையராக்களைப் பார்த்து எடுத்துக் கொண்டு வரும்படி அவனிடம் சொல்லி விட்டு, பஸ்ஸை விட்டுக் கொண்டு கிளம்பினோம். எல்லோருக்கும் வெகு உற்சாகம். உத்தேசித்து வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதல்லவா? ஏதோ பெரிய கோட்டையைப் பிடித்து ஜயக்கொடி நாட்டிய சைனியத்தைப் போல் கர்வத்துடன் நகருக்குத் திரும்பி வந்தோம்.
3
கணபதிராம சாஸ்திரிகள் அப்புறம் ஒரு வாரம் வரையில் வெளியில் தலை காட்டவில்லை. கோர்ட்டுக்கும் வரவில்லை. ஆனால் வம்புப் பிரியர்களும் அதிகப் பிரசங்கிகளும் அவரைத் தேடிப்போய், "என்ன சாஸ்திரிகளே? எங்களுக்கெல்லாம் தெரியாமல் கல்யாணத்தை முடிச்சுட்டீர்கள் போலிருக்கே? விருந்து கிருந்து ஏதாவது உண்டா இல்லையா? சம்சாரத்தை அழைச்சுண்டு வந்தாச்சோ இல்லையோ? சீமந்தக் கல்யானத்துக்காவது எங்களைக் கூப்பிடுங்கள்" என்று இப்படியெல்லாம் பரிகாசம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். எனவே இரண்டு நாளைக்கு ஒரு தடவை நான் போய் கொஞ்சம் அனுதாபத்துடன் பேசி அவரைத்தைரியப் படுத்திவிட்டு வந்தேன். அவரும் மனம் விட்டுத் தமது குறைகளைச் சொன்னார்.
"என் தங்கைக்கு நான் எவ்வளவோ செய்தேன். அவளுடைய குழந்தைகளை என் குழந்தைகளைப் போல் வளர்த்தேன். ஆயிரம் ஆயிரமாய்ச் செலவழித்தேன்; கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். கடைசியில் என்ன ஆயிற்று? போய் விட்டார்கள். என்னைத் தனியாய் விட்டு விட்டார்கள். இந்த மாதிரி மனது உடைந்திருந்த போது, அந்தப் பாவி பிராமணன் கலியாணத் தரகன் வந்து சேர்ந்தான். அவனுடைய போதனையில் மயங்கிப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரி அசட்டுத்தனத்திற்கு ஆளாவேனா?" என்று இவ்வாறெல்லாம் சொன்னார். நானும் அவருக்கு அனுசரணையாகப் பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.
இதற்கிடையில் கல்யாண சுந்தரம் என்னுடைய காதைக் கடிக்க ஆரம்பித்திருந்தான். பையனுக்குக் கல்யாணத்தன்றே கொஞ்சம் அசடு தட்டிப் போயிருந்தது என்பதைத் தான் கவனித்திருந்தேனே! ஆனால், பைத்தியம் இவ்வளவு முற்றிப் போய் விடுமென்று எதிர்பார்க்கவில்லை; "ராகவன்! எல்லாருமாய்ச் சேர்ந்து ரகளை பண்ணிக் கல்யாணத்தை நிறுத்தி வந்துவிட்டோ மே! அந்தப் பெண்ணினுடைய கதி என்ன ஆகிறது?" என்று அடிக்கடி என்னைக் கேட்கத் தொடங்கினான்.
ஒரு தடவை அவனுடைய தொந்தரவைப் பொறுக்காமல் நான் "என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? எனக்கோ கல்யாணம் ஆகிவிட்டது. நீ தான் பிரம்மசாரி; வேணுமானால் கல்யாணம் செய்து கொள்ளேன்!" என்றேன். "எனக்குப் பூரண சம்மதம்" என்றான் கல்யாண சுந்தரம். "அப்படியானால் என்ன தயக்கம்" என்று கேட்டேன். "என்ன தயக்கமா? எனக்குச் சம்மதமாயிருந்தால் சரியாய்ப் போய் விட்டதா? அப்பா அம்மா அல்லவா சம்மதிக்க வேணும். ராகவன் இந்த உபகாரம் நீதான் செய்ய வேண்டும். அப்பாவிடம் சொல்லேன்" என்றான். "சரியாய்ப் போச்சு போ! ஏதோ உங்கப்பாவிடம் ஜுனியராயிருந்து, பத்து ஐம்பது சம்பாதிப்பது உனக்குப் பிடிக்கவில்லையாக்கும். என்னால் முடியாதப்பா! உன் அம்மாவின் காதில் விழுந்தால் அப்புறம் நான் இந்த வாசற்படி ஏற வழியில்லாமல் போய் விடும்" என்றேன் நான்.
கல்யாணசுந்தரத்தின் பேச்சை விளையாட்டாகவே பாவித்துத் தள்ளி விடப் பார்த்தேன். அதற்கு அவன் இடங்கொடுக்கவில்லை. வேலை ஒன்றும் ஓடாமல் அவன் தவிப்பதையும், அடிக்கடி பெருமூச்சு விடுவதையும், ராத்திரி தூங்காதவனைப் போல் முகம் வெளிறிக் கிடப்பதையும், அதையும் இதையும் பார்த்த பின், "ஏதேது பெரியவர் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்து விட்டதே!" என்று எனக்குப் பெருங் கவலையாய் போய்விட்டது! பையனோ, "நீ வேணாப் பார்த்துக் கொண்டே இரு ராகவன், ஒரு நாளைக்கு நான் என் அறையில் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து வைக்கப் போகிறேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அப்புறம் சந்தோஷமாயிருக்கட்டும். சஷ்டியப்பூர்த்தி கல்யாணம் கூடத்தான் வரப்போகிறது. பிள்ளை செத்துப் போனால் அவர்களுக்கென்ன?" என்று இம்மாதிரியெல்லாம் தத்துப்பித்தென்று பேச ஆரம்பித்துவிட்டான். "அப்பாவிடம் நீயே சொல்லேன்" என்றால், அதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை.
நாங்கள் எல்லோரும் குலசேகரபுரத்துக்குப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்து ஒரு வாரம் இருக்கும் ஒரு நாள் காலையில் கணபதிராம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு ஆள் பெரியவருக்குக் கடிதம் கொண்டு வந்தான். அப்போது பெரியவரின் அறையில் நான் இருந்தேன். அவர் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு, "கேட்டாயா, ராகவன் சமாசாரத்தை! மாமண்டூர்க்காரர்கள் கணபதிராம சாஸ்திரிகள் வீட்டுக்கு வந்திருக்கிறார்களாம். என்னை அவசரமாய் வந்துவிட்டுப் போக வேணும் என்று எழுதியிருக்கிறார்" என்றார். இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கல்யாணசுந்தரத்தைப் பார்த்து, "வண்டியை எடுக்கச் சொல்லு" என்று அவர் கூறவே கல்யாணம் வெளியேறினான்.
"ஏதேது? அந்த மாமண்டூர்க்காரர்கள் பலே பேர் வழிகள் போலிருக்கிறது. சாஸ்திரிகளை விடமாட்டேன்னென்கிறார்கள். கலியாணத்துக்குச் செலவான பாக்கிப் பணத்தையும் கேட்க வந்திருக்கிறார்களோ, என்னமோ தெரிய வில்லை!" என்று சொல்லிக் கொண்டே பெரியவர் எழுந்து, "நீயும் வா! அந்தத் தமாஷையும் பார்த்து விட்டு வரலாமே" என்றார். அவர் கூப்பிடாமலே நான் போகத் தயாராயிருந்தேன். வீட்டு வாசலுக்கு வந்ததும், நான் எண்ணியபடியே கல்யாணசுந்தரம் டிரைவரின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.
பெரியவர் வண்டிக்குள் உட்கார்ந்த பிறகுதான் அதைக் கவனித்தார். "நீ என்னத்திற்கு வருகிறாய் கல்யாணம்?" என்றார். "டிரைவரைக் காணோம்" என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான் கல்யாணம். ஆனால் டிரைவர் ஷெட்டுக்குள்ளே தான் இருந்திருக்க வேண்டுமென்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டிற்குள் நுழைந்ததும் முன்புறத்து ஹாலில் சாஸ்திரிகளும் மாமண்டூர் வைத்தீசுவர ஐயரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தோம். நாங்களும் போய் உட்கார்ந்தோம். ஹாலினுடைய மற்றப் புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதற்கப்பால் இருந்த காமிரா உள்ளில் இரண்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். ஹாலுக்குள் நுழையும் போதே அவர்கள் இன்னார் என்று நான் தெரிந்து கொண்டேன். வைதீஸ்வர ஐயரின் சம்சாரமும் பெண்ணுந்தான். எதற்காக இவர்கள் சாஸ்திரிகளின் வீடு தேடி வந்திருக்கிறார்கள்? கல்யாணப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்களே. இதென்ன வேடிக்கை?
சாஸ்திரிகள் பேச ஆரம்பித்ததும் ஒருவாறு விஷயம் புரிந்தது.
"ஐயர் வாள்! இவர்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் விட்டிருக்கிறார்கள். பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து 'கல்யாணம் செய்து கொண்டால்தான் ஆச்சு' என்கிறார்கள். நான் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. நீங்கள்தான் இவர்களுக்குப் புத்தி சொல்லி திருப்ப வேண்டும்" என்றார்.
உடனே வைதீசுவர ஐயர் ஆரம்பித்தார். "பணக்கரரகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரிகிறதில்லை என் கையில் காலணாக் கிடையாது; வேலை போய் மூன்று வருஷத்துக்கு மேல் ஆச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். பெண்ணுக்கோ, வயதாகிவிட்டது; இந்தக் காலத்திலே சாதாரணமாய் வரம் கிடைப்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஒரு தடவை நிச்சயமாகித் தட்டிப் போச்சு என்றால், அப்புறம் எவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வருவான்? நீங்கள் பட்டுக்குத் தடபுடலாய் வந்து கல்யாணத்தை நிறுத்தி விட்டு வந்துவிட்டீர்கள். பொறுப்பு என் தலையில் தானே விழுந்திருக்கிறது? நீங்களா வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறீர்கள்...?"
இந்தச் சமயத்தில் உள்ளே கதவோரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாள் ஒரு அடி முன்னால் வந்து "ஏன்? இவாளாத்திலே கூட ஒரு பிள்ளை கல்யாணமாகாமல் இருக்காமே! வேணுமானால் பண்ணிக்கொள்ளட்டுமே!" என்றாள்.
பலே! ஸ்திரீகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?
கல்யாணசுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சட்டென்று எழுந்து வெளியே போனான்.
இதுவரையில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண ஐயருக்கு, கல்யாணம் வெளியில் போனதும் கொஞ்சம் தைரியம் வந்தது.
"சரிதான் ஐயா! உங்களுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கலாம். இந்தக் காலத்திலே வீட்டுக்கு வீடுதான் வாசற்படியாயிருக்கிறது. யாருக்குத்தான் சிரமம் இல்லை? அதற்காக ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் படு குழியில் தள்ளி விடுகிறதா?" என்றார்.
அதற்குள் உள்ளேயிருந்த அம்மாள், "குழியிலே தள்ளுவானேன்? பெத்து வளர்த்தவாளுக்கு இல்லாத அக்கறை அசல் மனுஷாளுக்கு எப்படி வந்துவிடும்? நாங்கள் அப்படி ஒன்றும் காட்டுமிராண்டிகள் அல்ல. பெண்ணின் சம்மதங் கேட்டுக் கொண்டு தான் தீர்மானித்தோம். அவ்வளவு சந்தேகமாயிருந்தால், நீங்களே அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ!" என்றாள்.
"கமலா இப்படி இங்கே வா! மாமா கேட்கிறதுக்குப் பதில் சொல்லு!" என்றார் வைத்தீசுவர ஐயர்.
அவருடைய சம்சாரம், "போடி, அம்மா, போ. வெட்கப்படாமல் உன் மனதிலிருக்கிறதைச் சொல்லு! அப்புறம் எங்களைப் போட்டுத் தொளைக்காதே!" என்றாள்.
வைத்தீசுவர ஐயர் மறுபடியும், "உங்களுக்கு வாஸ்தவத்தைச் சொல்லுகிறேன். ஒரு தடவை தட்டிப் போன பிறகு மறுபடியும் இங்கே வர எங்களுக்கும் இஷ்டமில்லை தான். இந்தப் பெண் தான் பிடிவாதம் பிடிச்சு, இவரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று அடம் பண்ணி எங்களை இழுத்துக் கொண்டு வந்திருக்காள். உண்டா இல்லையா என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.
இதற்குள், கமலா நாங்கள் இருந்த இடத்துக்குச் சமீபம் வந்தாள். கோபாலகிருஷ்ண ஐயரை நேருக்கு நேர் பார்த்தாள். "எங்க அப்பா சொன்னது அவ்வளவும் நிஜம். எனக்கு இவாளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத் தான் இஷ்டம், என் சம்மதத்தின் மேலே தான் எங்க அப்பாவும் அம்மாவும் என்னை அழைச்சுண்டு வந்தா. என்னை ஒருவரும் பலவந்தம் பண்ணவில்லை" என்று கணீரென்று சொன்னாள்.
கோபாலகிருஷ்ண ஐயர் திகைத்துப் போய் விட்டார். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, "அப்படியானால் கல்யாணத்தன்றைக்கு அப்படி ஏன் அம்மா விம்மி விம்மி அழுதாய்?" என்று கேட்டார்.
எப்படியும் பெரிய வக்கீல் பெரிய வக்கீல் தான், என்று நான் மனத்திற்குள் எண்ணினேன். ஆனால், கமலா, அந்தப் பெரிய வக்கீலையும் முதுகுக்கு மண் காட்டி விட்டாள்.
"கல்யாணத்தில் இஷ்டம் இல்லாததற்காக நான் ஒன்றும் அழவில்லை. நீங்கள் எல்லாம் திடீரென்று வந்து அமர்க்களம் பண்ணியதைப் பார்த்துத் தான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் அழுகை வந்தது!"
"பேஷ் அம்மா, பேஷ்! ரொம்பக் கெட்டிக்காரி நீ? உனக்கே சம்மதமானால் எங்களுக்கு என்ன ஆட்சேபம். சாஸ்திரிகளும் நானும் ரொம்ப நாள் சிநேகிதர்கள். அவருக்கு உன்னைப் போன்ற சமத்துப் பெண் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லிவிட்டுக் கோபாலகிருஷ்ண ஐயர் எழுந்திருந்தார்.
"அப்பா, அவாள் கொடுத்த பணத்தை அவாளிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்" என்றாள் கமலா.
வைத்தீசுவர ஐயர் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.
"வேண்டாம் வேண்டாம், என்னால் நேர்ந்த நஷ்டத்துக்கு ஈடாயிருக்கட்டும்" என்று மறுதளித்து விட்டுப் பெரியவர் வெளிக் கிளம்பினார்.
வண்டி கிளம்பி கொஞ்ச தூரம் போனதும், கோபாலகிருஷ்ண ஐயர், "எல்லாம் அந்தப் பொம்மனாட்டியின் வேலை. பலே கைகாரி அவள். புருஷனைக் கண்ணில் விரல் கொடுத்து ஆட்டி வைக்கிறாள். அவன் சுத்த 'ஹென்பெக்டு'. சுயபுத்தியே கிடையாது. தாயாருக்குத் தகுந்த பெண். வெகு சமத்து. அம்மா சொல்லிக் கொடுத்த பாடத்தை நன்றாய் ஒப்பிக்கிறது. என்னமோ பாவம்! அதன் தலையெழுத்து அந்தக் கிழவனைக் கட்டிக்கொண்டு காலங் கழிக்கணும்னு இருக்கு" என்றார்.
கல்யாணசுந்தரம் என்னமோ சொன்னான். சரியாய்க் காதில் விழவில்லை.
நான் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சற்று முன் கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டில் நடந்த நாடகத்தில் ஏதோ ஒரு மறைபொருள் இருப்பதாக எனக்குத் தோன்றிற்று. அது என்னவாயிருக்கும்? நடந்ததெல்லாம் சரிதான். எல்லாரும் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டுப் பேசியது போல் தான் காணப்பட்டது. ஆனாலும் இன்னதென்று விளங்காத ஒரு வேதனை என்னைப் பிடுங்கித் தின்றது. ஏதோ ஒரு இரகசியம் - புலப்படாத மர்மம் - கட்டாயம் இருக்கிறது. அது என்னவாயிருக்கும்?
வழியிலே என்னுடைய சொந்த வீடு இருந்தது. "நான் இறங்கிக் கொள்கிறேன்; சாப்பிட்டுவிட்டு மத்தியானம் வருகிறேன்" என்றேன். அன்று கோர்ட் இல்லை.
என்னை வீட்டில் இறக்கிவிட்டு, வண்டி போய் விட்டது.
4
பிற்பகல் மூன்று மணிக்கு, நான் பெரியவர் வீட்டுக்குப் போனவுடனே, வேலைக்காரன், "நீங்க வந்தாச்சா என்று ஐயா கேட்டாங்க; வந்தவுடனே மேலே வரச் சொன்னாங்க" என்றான்.
மாடியில் பெரியவர் ஏதோ கோபமாகப் பேசும் சப்தமும் அதற்குக் கல்யாணம் படபடவென்று பதில் சொல்லும் சப்தமும் கேட்டது. "சரி பையன் வாயைத் திறந்து பேசி விட்டான். பெரியவர் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சங்கடத்தில் நாம் அகப்பட்டு விழிக்கப் போகிறோமே" என்று எண்ணிக் கொண்டே மேலே போனேன்.
சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த பெரியவர் என்னைக் கண்டதும் நிமிர்ந்து உட்கார்ந்து "கேட்டாயா ராகவன்! இந்தப் பையனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. 'எனக்குக் கல்யாணம் பண்ணி வை' என்று வெட்கமில்லாமல் கேட்க ஆரம்பித்து விட்டான். அதோடு இல்லை. அந்த அதிகப் பிரசங்கிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானாம்?" என்று கூச்சல் போட்டார்.
ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த கல்யாணம் எழுந்து நின்று கொண்டான்.
"யார் அதிகப் பிரசங்கி? அந்தப்பெண் அப்படி என்ன அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி விட்டது? அதிகப்பிரசங்கித்தனம் நாம் தான் செய்தோம். நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்திலே போய்த் தலையிட்டு ஒரு கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்தது அதிகப் பிரசங்கித்தனம் இல்லையாக்கும்?"
"கேட்டாயா, ராகவன்? கேட்டுண்டாயா என்கிறேன். எல்லாத்தையும் நன்னாக் கேட்டுக்கோ!" என்றார் பெரியவர்.
கல்யாணம் மறுபடியும் சீறினான். "என்னத்தைக் கேட்கிறது? அந்த அம்மாள் கேட்டாளே ஒரு கேள்வி, அதற்கு என்ன பதில் சொல்றேள்? 'உங்காத்திலேயும் ஒரு பிள்ளை இருக்காமே, அதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறதுதானே' என்று கேட்டாளோ, இல்லையோ? அதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வாயில்லையே? கல்யாணத்தை மாத்திரம் போய் என்னத்துக்காகத் தடை செய்தேள்?"
"பிசகுடாப்பா, பிசகுதான், என் பேரிலே பிசகுதான். அந்தப் பெண் தொண்ணூறு வயதுக் கிழவனை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும். அந்த அதிகப்பிரசங்கி எனக்கு நாட்டுப் பெண்ணாக வரவேண்டாம். அந்த வாயாடிப் பொம்மனாட்டியும், அந்த 'ஹென்பெக்டு ஹஸ்பெண்டும்' எனக்குச் சம்பந்திகளாக வரவும் வேண்டாம்" என்றார் பெரியவர்.
"உங்களுக்கு வேண்டாமென்றால் சரியாகப் போய்விட்டதா? உலகமெல்லாம் உங்கள் சௌகரியத்துக்காகவே தானா ஏற்பட்டது? தேசத் தொண்டு, சமூகத் தொண்டு என்று பேசுகிறதெல்லாம் இந்த லட்சணந்தான்! சொந்தக்காரியம் என்று வந்தால் பறந்து விடுகிறது. இந்த மாதிரி எல்லோரும் பிறத்தியாருக்கு வாத்தியாராயிருக்கும் வரையில் நம்முடைய தேசம் எங்கே உருப்படப் போகிறது?" என்றான் கல்யாணம்.
"கேட்டுண்டாயா ராகவன். கேட்டுண்டாயான்னேன்! இவன் எப்போ இப்படியெல்லாம் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சுட்டானோ, அப்புறம் நான் இவனோடு பேசறத்துக்கே தயாராயில்லை! எங்கேயாவது போகச் சொல்லு, என்னவாவது பண்ணச் சொல்லு" என்றார் பெரியவர்.
"பேசாமற் போனால் ரொம்ப மோசமாய்ப் போச்சாக்கும்" என்று கல்யாணம் முணு முணுத்தான்.
இதுவரையில் நான் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தேன். இப்போது அப்பா பிள்ளை பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டு விட்டபடியால், நான் தலையிட வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டது.
"கல்யாணம்! இவ்வளவு கோபமும் தாபமும் என்னத்திற்காக? உன் மனதிலிருக்கிறதை நிதானமாகச் சொல்லேன்" என்றேன்.
"நிதானமாவது மண்ணாங்கட்டியாவது? எல்லாம் நிதானமாய்ச் சொல்லி அழுதாயிடுத்து. நான் அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அப்பா சம்மதித்தாலாச்சு; இல்லாவிட்டால்..."
"அடப்பாவி! நான் சம்மதிச்சாலும் உங்க அம்மா சம்மதிக்க மாட்டாளேடா! ஊரை இரண்டு பண்ணி விடுவாளே! நல்ல வேளையா அவள் இப்போது பெண்ணாத்துக்குப் போயிருக்காள். இங்கேயிருந்திருந்தால், இதற்குள்ளே ரகளையாயிருக்குமே?" என்றார் பெரியவர்.
"நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா? அம்மா பண்ணிக்கப் போறாளா? சற்று முன்னாலே மாமண்டூர்க்காரரை 'ஹென்பெக்டு' என்று சொன்னீர்களே? நீங்கள் மாத்திரம் என்னவாம்?" என்று கல்யாணம் பளிச்சென்று கேட்டான்.
இப்படிக் கேட்கிறானே பாவி, பெரியவருக்கு நிஜமாகவே கோபம் வந்து விடப் போகிறதே என்று ஒரு கணம் பயந்து போனேன். நல்ல வேளை, நான் பயந்ததற்கு நேர்மாறாக காரியம் நடந்தது. கோபாலகிருஷ்ண ஐயர் குபீரென்று சிரித்துவிட்டார். பெரியவருக்கு, எப்போதுமே நகைச்சுவையுள்ளவர் என்று பெயர் உண்டு. எதிராளி மடக்கிவிட்டால், அவர் கோபங் கொள்ள மாட்டார். கோபப்பட்டால் கட்சி அடியோடு போய் விடுமென்று அவருக்குத் தெரியும்; ஆகையால் சிரித்து மழுப்புவார்.
இப்போதும் அப்படித்தான் பண்ணினார். சிரித்துக் கொண்டே, "ஆமாண்டாப்பா, ஆமாம்! நான் 'ஹென்பெக்டு'தான். என்னைப் பார்த்தாவது நீ எச்சரிக்கையாயிரு. அசட்டுப் பிசட்டுக் காரியம் பண்ணிவிட்டு அப்புறம் அகப்பட்டுண்டு முழிக்காதே!" என்றார். அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு ஒத்தாசையாகப் பேச்சைத் திருப்ப எண்ணி, நானும், "பையனுக்கும் வயதாகி விட்டதோ, இல்லையோ? நீங்கள் பாட்டுக்கு வந்த பெண்ணையெல்லாம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுகிறது? இப்படித்தான் ஏதாவது விபரீதமாய் வந்து சேரும்" என்றேன்.
"என் மேலே என்ன தப்பு, ராகவன்? அவன் அம்மாதான் அப்படிப் பண்ணின்டிருக்கா. இப்போதுக் கூட கையிலே மூன்று ஜாதகம் இருக்கு. ஒரு ஜில்லா ஜட்ஜின் பெண், ஒரு ஐ.சி.எஸ்.ஸின் பெண், ஒரு முந்நூறு காணிப் பண்ணையாரின் பெண். அடுத்த வாரத்திற்குள்ளே ஏதாவது ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணிக் கல்யாணம் செய்து வைக்கிறேன். இவனை மட்டும் அம்மா பேச்சைக் கேட்காமல் சம்மதிக்கச் சொல்லு" என்றார்.
"அதெல்லாம் முடியவே முடியாது. நான் இந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்" என்றான் பிள்ளையாண்டான்.
இதற்குள் வாசலில் வண்டிச் சத்தம் கேட்கவே, யார் என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். கணபதிராம சாஸ்திரிகள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.
"இதென்ன கூத்து, சாஸ்திரிகள் வருகிறாரே? நம்மை விடமாட்டார் போலிருக்கிறதே!" என்றேன்.
"வரட்டும் வரட்டும்; என்ன வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான். எந்த வேளையிலே அந்தக் கல்யாணத்தை நிறுத்துகிறதற்காகக் கிளம்பினோமோ, தெரியவில்லை" என்றார் பெரியவர்.
5
கணபதி ராம சாஸ்திரிகள் மேல் மாடிக்கு வந்து சேர்ந்தார். ஆனால், காலையில் பார்த்த மாதிரி அமைதியான தோற்றமுடையவராயில்லை. முகமே மாறு பட்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்திருந்தது. நடக்கும் போது கால் தடுமாறிற்று. சுருங்கச் சொன்னால் திடீரென்று பத்து வருஷம் அதிக வயதானவரைப் போல் காணப்பட்டார். என் மாதிரியே, கல்யாணமும் அவனுடைய தகப்பனாரும் அதிசயத்துடன் அவரை நோக்கினார்கள்.
பெரியவர், "என்ன சாஸ்திரிகளே? விஷயம் என்ன? உடம்பிலே ஏன் இவ்வளவு படபடப்பு? உட்காருங்கள். உட்கார்ந்து நிதானமாய்ச் சொல்லுங்கள்" என்றார்.
கணபதிராம சாஸ்திரிகள் சாய்வு நாற்காலியில் தொப்பென்று விழுந்தார்.
தொண்டை அடைக்க, தழுதழுத்த குரலில், "நீங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை மகா பாபத்திலிருந்து காப்பாற்றினீர்கள்" என்றார். உடனே முகத்தைத் துணியினால் மூடிக் கொண்டார். விம்மல் சத்தம் கேட்டது.
அவரை ரொம்பவும் ஆசுவாசப் படுத்தினோம். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மனதில் மட்டும், 'ஏதோ மர்மம் இருக்கிறது என்று நாம் எண்ணியது சரி; அது இப்போது வெளியாகப் போகிறது' என்று தோன்றிற்று.
"அன்று குலசேகரபுரத்துக்கு நீங்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால் எப்பேர்ப்பட்ட விபத்து நேர்ந்திருக்கும். அதை நினைத்தாலே எனக்குப் பயங்கரமாயிருக்கிறது. இதோ பாருங்கள் என் உடம்பில் மயிர் சிலிர்த்திருக்கிறது" என்றார் சாஸ்திரிகள்.
நாங்கள் பார்த்தோம். அவர் உடம்பிலே ரோமங்கள் குத்திக் கொண்டுதான் நின்றன.
"என் கை நடுங்குகிறதைப் பாருங்கள்" என்றார்.
பார்த்தோம்; கை நடுங்கிக் கொண்டிருந்தது.
"சமாசாரம் என்ன, சாஸ்திரிகளே? ஏதாவது நடவடிக்கை எடுத்து கொள்வது அவசியமாயிருந்தால் சீக்கிரம் சொன்னால் தானே தேவலை?" என்றார் பெரியவர்.
அந்த மாமண்டூர்க்காரர்கள், ஒரு வேளை, சாஸ்திரிகளைக் கொலை கிலை செய்ய முயற்சித்தார்களோ என்ற சந்தேகம் பெரியவருக்கும் உதித்திருக்க வேண்டும். அதனால்தான் நடவடிக்கையைப் பற்றி அவர் பிரஸ்தாபித்தார்.
கணபதிராம சாஸ்திரிகள் கொஞ்சம் தயங்கி யோசனை செய்துவிட்டு, "அடியே பிடித்துத்தான் சொல்லியாக வேண்டும்" என்றார்.
"பேஷாய்ச் சொல்லுங்கள். நிதானப்படுத்திக் கொண்டு சொல்லுங்கள்" என்றார் பெரியவர்.
எங்களுக்கெல்லாம் வியப்பையும் பரபரப்பையும் பயங்கரத்தையும் மகிழ்ச்சியையும் மாறி மாறி உண்டாக்கி வந்த பின்னவரும் அதிசயமான விவரத்தைக் கணபதிராம சாஸ்திரிகள் கூறினார்:-
கமலாவின் வரலாறு
"நீங்கள் காலையில் என் வீட்டிலிருந்து கிளம்பிப்போன பிறகு, எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் இஷ்டம் கிடையாது. துர்போதனையில் மயங்கிப் போய்ச் சம்மதித்து விட்டேன். குலசேகரபுரத்தில் கல்யாணத்தன்றைக்குக் கூட எனக்கு மன நிம்மதியேயில்லை. நீங்கள் வந்து தடுத்ததும், நல்லதாய்ப் போயிற்று என்று நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.
இன்றைக்கு இவர்கள் மறுபடியும் வந்து சேர்ந்ததும் உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். நீங்கள் வந்தால் எப்படியும் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவீர்களென்று நினைத்தேன். நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள். நீங்கள் வந்த பிறகு அவர்கள் இன்னும் நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தார்கள். நான் யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். உங்கள் பெண்ணின் இஷ்டத்தினால்தான் வந்திருப்பதாய்ச் சொல்கிறீர்கள். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவளிடம் தனியாய்ச் சற்று நேரம் பேச வேண்டும். பேசி உங்கள் நிர்ப்பந்தத்தினால் அவள் வரவில்லை என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவாகப் பதில் சொல்வேன் என்றேன்.
அவர்கள் கொஞ்சங்கூட ஆட்சேபிக்காமல் அதற்குச் சம்மதித்தார்கள். பெண்ணை அந்த ஹாலிலேயே விட்டு விட்டு உள்ளே சென்றார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'கமலா, உன் அப்பாவிடம் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? உன்னை இவர்கள் நிர்ப்பந்தப் படுத்தவில்லையென்பது நிஜந்தானா?' என்று கேட்டேன்.
"நிஜந்தான். அவர்கள், என்னை நிர்ப்பந்தப்படுத்தவேயில்லை. நான் தான் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வந்தேன்" என்றாள்!
"அப்படியானால் நிஜத்தைச் சொல்லு, என்னத்திற்காக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்கிறாய்? அப்பா அம்மாவைப் பிடிக்கவில்லையா? அவர்களுடன் இருப்பது கஷ்டமாயிருக்கிறதா?" என்று கேட்டேன்.
"கஷ்டம் ஒன்றுமில்லை; ஆனால், அவர்களுடன் இனிமேல் இருக்க எனக்கு இஷ்டமில்லை!" என்று அந்தப் பெண் சொன்னாள்.
"ஏன்?" என்று கேட்டேன்.
அவள் பதில் சொல்லத் தயங்கினாள்.
"நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் உன்னோடு காலங்கழிக்க வேண்டுமே? உன்னிடம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தால்தானே அது முடியும்? இப்பொழுது நீ நிஜத்தைச் சொல்லாவிட்டால், உன்னிடம் எப்படி எனக்கு நம்பிக்கை ஏற்படும்?" என்று கேட்டேன்.
"நான் நிஜத்தைச் சொல்கிறேன். ஆனால் அதற்காக என்னை நீங்கள் நிராகரிக்கக் கூடாது. அப்பா, அம்மாவிடம் நான் சொல்வதைச் சொல்லவுங் கூடாது" என்று கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.
"அதெல்லாம் நான் ஒன்றும் வாக்களிக்க முடியாது. முதலில் நீ நிஜத்தைச் சொல்லு. உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டானால், அதற்குப் பிறகு முடிவு சொல்கிறேன்" என்றேன்.
"அப்பாவும் அம்மாவும் ரொம்ப தரித்திரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவுக்கு வேலை போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. எனக்கு ஐந்து பேர் தம்பி தங்கைகள். வீட்டிலே சில நாளைக்குச் சாப்பாடு கூடக் கிடைக்கிறதில்லை. நீங்கள் பணக்காரர் என்று எனக்குத் தெரியும். உங்களைக் கல்யாணம் செய்து கொண்டால், அவர்களுக்கெல்லம் ஒத்தாசை செய்யலாம் என்ற ஆசைதான். நிஜத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் நீங்கள் விட்டவழி விடுங்கள்" என்றாள்.
என் மனது இரங்கிவிட்டது. ஆனாலும், ஒருவாறு மனதைக் கடினப்படுத்திக் கொண்டு, "அப்படியானால் உங்கள், அப்பா அம்மாவின் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதித்தாய் என்று சொல்லு; அவர்களுக்கு ஒன்றும் ஒத்தாசை செய்ய முடியாது என்று நான் சொல்லி விட்டால் என்ன பண்ணுவாய்?" என்றேன்.
"கல்யாணச் செலவு, எதிர் ஜாமீனாவது இல்லாமல் போய் விடுமோ, இல்லையோ? என்னை இத்தனை நாள் வளர்க்கிறதற்கே அவர்களுக்கு எத்தனையோ பணச் செலவு ஆகியிருக்கிறது."
"ரொம்ப அழகாயிருக்கே நீ சொல்கிறது? பெண்ணை வளர்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறது பெற்றவர்களுடைய கடமை. இதற்காக நீ என்னத்திற்குக் கவலைப்பட வேண்டும்?"
"பெற்றவாளாயிருந்தல் நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால், அவாள் என்னைப் பெற்றவாள் இல்லை. என்னுடைய சொந்த அப்பா, அம்மா இல்லை."
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"என்ன சொல்லுகிறாய், நிஜமாகவா?" என்று கேட்டேன்.
"உங்களுக்குப் புண்ணியம் உண்டு. கொஞ்சம் மெதுவாய்ப் பேசுங்கள். நான் இதையெல்லாம் உங்களிடம் சொன்னதாய் அவர்களுக்குத் தெரியக்கூடாது. ஒரு மாதத்துக்கு முன்னாலே தான் எனக்கே இது தெரிஞ்சுது. ஒரு நாளைக்கு அப்பாவும் அம்மாவும் தனியாகக் கதவைச் சாத்திண்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என் கலியாண விஷயமாய்த்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு நான் ஒட்டுக்கேட்டேன். 'அதுக்காகக் கமலாவைப் பலி கொடுக்கணும் என்கிறாயா?' என்று அப்பா சொன்னார். அதற்கு அம்மா, 'பலி கொடுக்கிறது என்ன? நல்ல பணக்கார இடத்திலே தானே கொடுக்கப் போகிறோம்? நடுச்சாலையிலே அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்துப் பதின்மூன்று வருஷமாக வளர்க்கலையா? அவளுக்கும் நம்ம சொந்தக் குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசம் பாராட்டினோமா? அவள் வந்த முகூர்த்தம் நமக்கு நாலைந்து குஞ்சு குழந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. தரித்திரமோ பிடுங்கித் தின்கிறது. இத்தனை வருஷமாய் அவளை வளர்த்ததற்கு அவளாலே தான் நமக்கு ஏதாவது உபகாரம் ஏற்படட்டுமே! அதிலே என்ன பிசகு?' என்று சொன்னாள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அப்படிப் பதின்மூன்று வருஷம் என்னை வளர்த்தவாளுக்கு நான் பதிலுக்கு உபகாரம் கட்டாயம் செய்யணும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அதனால் தான் உடனே உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். உங்களுடைய நல்ல குணத்தைப் பார்த்த பிறகு அந்த உறுதி அதிகமாயிற்று. நிஜத்தைச் சொல்லிவிட்டேன். நீங்கள் என்னைக் கைவிட்டால், திரும்பி அவர்கள் வீட்டுக்கு நான் போகப் போவதில்லை. வழியில் எங்கேயாவது ரயிலிலேயிருந்து குதித்தாவது உயிரை விட்டு விடுவேன்" என்றாள்.
இந்த அதிசயமான விவரத்தைக் கேட்டுக் கொண்டு நான் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தேன். என் நெஞ்சு மட்டும் எதனாலோ, படீர், படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய சந்தேகம் - பயங்கரமும் ஆனந்தமும் கலந்த சந்தேகம் - என் மனத்தில் உதித்து விட்டது.
"இப்போது உனக்கு என்ன வயது அம்மா" என்று கேட்டேன்.
"பதினாறு" என்றாள்.
"உன் சொந்த அப்பா அம்மாவைப் பற்றி ஏதாவது ஞாபகம் இருக்கா?" என்று கேட்டேன்.
"ஒன்றுமே ஞாபகமில்லை" என்றாள்.
"உன்னை எங்கே கண்டெடுத்தார்களாம். அதாவது தெரியுமா?" என்று கேட்டேன்.
"கும்பகோணம் மகாமகத்தின் போது அகப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள்" என்று அவள் சொன்னதும், என்னுடைய பரபரப்பு அளவு கடந்துவிட்டது.
"இங்கே வா, அம்மா! கொஞ்சம் வலது காதை மடித்துக் காட்டு" என்றேன்.
அவள் தயங்கியதைப் பார்த்துவிட்டு, "பயப்படாதே அம்மா! இப்படி வா! ஒரு அடையாளத்துக்காகக் கேட்கிறேன்" என்றேன். அவள் அருகில் வந்ததும் அவளுடைய வலது காதை மடித்து விட்டுப் பார்த்தேன். அதன் பின்னால் மூன்று கறுப்பு மச்சங்கள் பளிச்சென்று தெரிந்தன.
"என் கண்ணே! நீ என் சொந்தப் பெண்ணடி!" என்று கத்திக் கொண்டே அவளைக் கட்டிக் கொள்ளப் போனேன். திடீரென்று கண் இருண்டு வந்தது. கீழே விழுந்து விட்டேன்.
இப்படிச் சொல்லிவிட்டு கணபதிராம சாஸ்திரி நிறுத்தினார். என் மனதில் காலையிலிருந்து உறுத்திக் கொண்டிருந்த மர்மமான விஷயம் இன்னதென்று இப்போது விளங்கிவிட்டது. அது கணப்திராம சாஸ்திரிக்கும் கமலாவுக்கும் முகபாவத்தில் காணப்பட்ட ஒற்றுமை தான்.
நாங்கள் மூன்று பேரும் எங்கள் அதிசயத்தைப் பல விதத்திலும் தெரிவித்தோம். "நீங்கள் ரொம்பப் புண்ணியம் செய்தவர். அதனால் தான் உங்களைப் பகவான் அப்பேர்ப்பட்ட பாவத்திலிருந்து காப்பாற்றினார். பெண்ணையும் கொண்டு வந்து சேர்த்தார்" என்று அவரைப் பாராட்டினோம்.
"பகவான் உங்கள் மூலமாக என்னைத் தடுத்தாட்கொண்டார். அதனால் பாக்கிக் காரியத்தையும் நீங்கள் தான் செய்து கொடுக்க வேணும். குழந்தைக்குக் கல்யாணம் பண்ணி வைத்த பிறகுதான் என் மனதில் ஏற்பட்டுள்ள பயங்கரம் நீங்கும்; நிம்மதி ஏற்படும் ஐயர்வாள்! வேறு எது எப்படியிருந்தாலும் வித்தியாசம பார்க்காமல் உங்கள் பிள்ளைக்கே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் ஆகி விடவேண்டும்" என்றார் கணபதிராம சாஸ்திரிகள்.
இவ்வாறு கல்யாணசுந்தரத்தின் கட்சியில் பகவானே இருந்து, அவன் மனோரதத்தை நடத்தி வைத்தார். பெரியவரின் சம்மதம் உடனே கிடைத்து விட்டது. அம்மாளின் சம்மதம் பெறுவது அவ்வளவு சுலபமாயில்லை. ஆனால் கணபதிராம சாஸ்திரிகள் கமலாவின் பேருக்குத் தம் முக்கால் லட்சம் சொத்தையும் எழுதி வைத்து உயிலையும் கொண்டு வந்து கொடுத்த பிறகு, அம்மாளின் சம்மதமும் கிடைத்து விட்டது. அடுத்த முகூர்த்த தினத்தில் கமலாவின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
இந்த விஷயத்தில் கல்யாணசுந்தரம் காட்டிய பிடிவாதமும் உறுதியும் அவனிடம் எனக்கு ரொம்ப மதிப்பை உண்டாக்கிவிட்டது என்பதைச் சொல்ல வேண்டும். அவனும் என்னிடம் மிகவும் நன்றியுடனிருக்கிறான்.
இதை எழுதிய பிறகு, இந்தக் கதைக்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் பார்த்தேன். இரண்டு விதத்திலும் அது பொருத்தமாயிருப்பது தெரிய வந்தது. பிள்ளையாண்டான் இப்போது 'கமலாவின் கல்யாண'மாகத்தான் விளங்குகிறான். அப்பாவுக்குப் பிள்ளைதானே?
-----------------
19. தற்கொலை
தற்கொலை! ஆம். அந்தப் பயங்கரமான முடிவுக்கு வந்தான் ஜகந்நாதன். இத்தகைய பேரவமானத்துக்குப் பின்னர், மானமுள்ள ஓர் ஆண் மகன் எவ்வாறு உயிர் வைத்திருக்கக் கூடும்? ஒரு பாகமேனும் தேறியிருக்கக் கூடாதா? அதிலும் இது இரண்டாம் தடவை. இண்டர்மீடியட் பரீட்சையில் ஜெகந்நாதன் முதல் தரத்தில் தேறியவன். அதுவரை ஒரு வகுப்பிலாவது பரீட்சையில் தவறியது கிடையாது. பி.ஏ. வகுப்பில் முதல் முறை இரண்டு பாகத்திலும் தவறியபோது அவன் அடைந்த ஏமாற்றமும் துயரமும் சொல்லத்தரமல்ல. ஆயினும் எப்படியோ சகித்துக் கொண்டு இரண்டாம் முறை அதிகக் கவலையுடன் படித்தான். ஆயினும் பயனென்ன? 'மேல் மாடி காலி' என்பதற்காக அவன் கேலி செய்த 'மண்டுக்கள்' எல்லாரும் தேறிவிட்டார்கள். அவன் மட்டும் அம்முறையும் தவறிவிட்டான் - இரண்டு பாகத்திலும். அவமானம்! அவமானம்! தற்கொலையினாலன்றி இந்த அவமானம் தீருமா?
இது ஒரு புறம் இருக்கட்டும். செல்லத்தின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? தன்னிடம் அளவிறந்த காதல் வைத்துள்ள அப்பேதை இவ் அவமானத்தை எங்ஙனஞ் சகிப்பாள்? பரீட்சைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு செல்லத்தைப் பிறந்தகத்துக்கு அனுப்பியபோது அவளுக்கும் தனக்கும் நிகழ்ந்த விவாதம் ஜெகந்நாதனுக்கு நினைவு வந்தது. அவள் அப்போது கூறினாள் - "என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? நான் உங்கள் படிப்புக்கு எவ்விதத்திலாவது குறுக்கே வருகிறேனோ? நான் இருந்தால் உங்களுக்கு எவ்வளவோ சௌகரியமாயிற்றே! உங்கள் அறையைப் பெருக்கி சுத்தமய் வைக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைக்கிறேன். குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறேன். இரவில் நீங்கள் படிக்கும் போது உங்கள் படுக்கையை விரித்து விட்டே நான் சென்று படுத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு எவ்வளவு நேரம் மீதியாகிறது? ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு தனியறையில் இருந்தால் இவைகளையெல்லாம் நீங்கள்தானே செய்யவேண்டும்? இவ்வளவு சௌகரியம் இருக்குமா? எனக்காக நீங்கள் அதிக நேரம் செலவிடுவதேனும் உண்டா? மாலைப் பொழுதினில் நீங்கள் வெளியிலிருந்து வந்ததும் அரைமணி நேரம் மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எப்போதாவது உங்கள் படிப்புக்குக் குறுக்கே நான் வருகிறேனா? மேலும், உங்கள் தேக சௌக்கியத்தை என்னைப் போல் யார் கவனிப்பார்கள்."
செல்லம்மாளின் இவ்வளவு வாதமும் அப்போது ஜகந்நாதன் செவியில் ஏறவில்லை. சென்ற வருஷம் பரீட்சையில் தவறியதும், அவனது நண்பர்களும் மற்றவர்களும், "ஆம்படையாள் ஆத்துக்கு வந்ததும் பையன் சுழி போட்டு விட்டான்" என்று கேலி செய்தது அவன் மனதை விட்டு அகலவில்லை. இந்தக் கேலிப்பேச்சு அவன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. கடைசியில் தான் பரீட்சையில் தவறியதற்குத் தன் மனைவியே காரணம் என்னும் நம்பிக்கையை உண்டு பண்ணிவிட்டது. எனவே, இம்முறை அவளை ஊருக்கு அனுப்பியே தீரவேண்டுமென்றும், இல்லாவிடில் தனக்குப் பரீட்சை தேறாதென்றும் அவன் நிச்சயம் செய்து கொண்டிருந்தான். இப்போதோ? "அவ்வளவு பிடிவாதமாக என்னை ஊருக்கு அனுப்பினீர்களே? பரீட்சையில் தேறி விட்டீர்களா?" என்று செல்லம் கேட்டால், என்ன விடையளிப்பது? தன் புண்பட்ட மனதை இன்னும் புண்படுத்தக் கூடாதென்று அவள் இவ்வாறு கேளாமலிருக்கலாம்; தேறுதலும் சொல்லலாம். இருந்தாலும், அவள் மனதில் இவ்வெண்ணம் இருக்கத் தானே செய்யும்? அவள் முகத்தில் விழிப்பதெப்படி?
இனி, கிராமத்திலுள்ள பெற்றோர்களோ? அவர்களைப் பற்றி எண்ணியபோதே ஜகந்நாதனுக்கு வயிரு பகீர் என்றது. தகப்பனார் உழையாத உழைப்பும் உழைத்து மூத்த புதல்வனான தன்னைப் படிக்க வைத்தார். இப்போது அவருக்கு தள்ளாத வயது வந்து விட்டது. குடும்பத்துக்கு 1,500 ரூபாய் கடன் இருந்தது. இன்னும் இரண்டு புதல்விகளுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும். ஒரு பையனைப் படிக்க வைத்தாக வேண்டும். நிலத்தில் கிடைக்கும் வருமானம் காலட்சேபத்துக்கே போதும் போதாததாயிருந்தது. ஜகந்நாதனுக்கு வாங்கின வரதட்சணை ரூ. 2000-த்தில் ஒரு பைசாக் கூடத் தொடாமல் அவன் பி.ஏ. படிப்பதற்காகக் கொடுத்து விட்டார். அவன் உத்தியோகம் செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையே குடும்பத்துக்கு இப்போது ஆதாரமாயிருந்து வந்தது. போன வருஷமே அவர்கள் அடைந்த ஏமாற்றம் வருணிக்குந் தரமன்று. இம்முறையும் தவறிப்போன செய்தி கேட்டால் அந்தோ! அவர்கள் மனம் இடிந்தே போய்விடும். அவர்கள் துயரத்தை பார்த்து எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பது. நல்ல வேளை, உயிரை விடுவதும் வைத்துக் கொண்டிருப்பதும் ஒருவனுடைய விருப்பத்தைப் பொறுத்ததாயிருக்கிறதே, அதை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டியதுதான்.
அவமானத்தைப் பொருட்படுத்த வேண்டாம்; மனைவியையும் பெற்றோர்களையும் கவனிக்க வேண்டாம்; எனினும் அடுத்தாற்போல் செய்வதற்கென்ன இருக்கிறது? வரதட்சிணைப் பணம் ரூ. 2000-மும் இந்த மூன்று வருஷங்களில் செலவழிந்து போயிற்று. பாங்கிக் கணக்கில் 30 ரூபாயோ என்னவோதான் பாக்கி. இன்னமொரு வருஷம் படையெடுத்து சென்று பரீட்சைக் கோட்டையை முற்றுகை போடுவதென்பது இயலாத காரியம். மாமனாரிடம் பணம் கேட்கலாமா? சை! அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு உயிர் விடலாம். உத்தியோகத்துக்குப் போவதென்றாலோ, பரீட்சையில் தவறிய பி.ஏ.க்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள்? 30, 35-க்கு மேல் இல்லை. இந்த 35 ரூபாயைக் கொண்டு பட்டணத்தில் மனைவியுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது? சென்ற வருஷத்தில் மாதம் 60 ரூபாய் போதாமல் கஷ்டப்பட்டோ மே? பின்னர், பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவதெப்படி? தம்பியைப் படிக்க வைப்பதும் தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எங்ஙனம்?
"ஆ! பரீட்சையில் மட்டும் தேறியிருந்தால்! நினைத்தபடி இன்கம்டாக்ஸ் ஆபீஸில் ஓர் உத்தியோகமும் கிடைத்திருந்தால்! 'சம்பளத்தைக் கொண்டு நீ உன் காலட்சேபத்தை நடத்திக் கொள். மேல் வரும்படியை மட்டும் மாதாமாதம் எனக்கு அனுப்பிவிடு' என்று தந்தை அடிக்கடி கூறியது அவனது நினைவுக்கு வந்தது. 'மேல் வரும்படி' விஷயத்தில் தானாக யாரையும் ஒரு பைசாவேனும் கேட்பதில்லையென்று அப்போதே தீர்மானித்திருந்ததும் ஞாபகம் வந்தது. இன்கம்டாக்ஸ் ஆபீஸில் உத்யோகம் அகப்படாவிட்டாலும் ரயில்வேயில் ரூ.100 சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தால் போதுமே!... சை, சை என்ன வீண் நினைவுகள்! இவைகளைப் பற்றி இப்போது எண்ணி என்ன பயன்! தற்கொலை! தற்கொலை! தற்கொலை! அதைப் பற்றியன்றோ இப்போது சிந்திக்க வேண்டும்!
ஒரே ஒரு யோசனை, நாம் போய்விட்டால் மனைவி பெற்றோர்களின் கதி என்ன? நல்ல வேளையாக மனைவியின் பெற்றோர்கள் கொஞ்சம் பணக்காரர்கள். எனவே அவளைப் பற்றிக் கவலையில்லை. உயிரோடிருந்தாலும் பெற்றோர்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எல்லாரும் அளவு கடந்த துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்பது உண்மையே. ஆனால், உயிரோடிருந்து அவர்கள் துயரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட இறந்து போய் விட்டால், பிறகு யார் எப்படிப் போனால் நமக்கென்ன தெரியப் போகிறது?
இவ்வளவு எண்ணங்களும் ஜகந்நாதன் மனதில் கோர்வையாக எழுந்து மறைந்தன. அவனுடைய அறிவு அந்த நெருக்கடியான தருணத்தில் மிகத் தெளிவு பெற்றிருந்தது. அச்சமயத்தில், "நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?" என்னும் விஷயமாக ஒரு கட்டுரை வரையச் சொல்லியிருந்தால் அவன் மிக நன்றாக எழுதியிருப்பான். இவ்வளவு தெளிந்த அறிவுடன் பரீட்சையில் எழுதியிருந்தால் எந்தக் குருட்டுப் பரீட்சகனும் அவனைத் தேர்தல் செய்யத் தவறியிரான்!
தற்கொலை செய்துகொள்ளும் விதத்தைப் பற்றி ஜகந்நாதன் அதிகமாகச் சிந்திக்கவேயில்லை. ஒரே கணத்தில் இந்த விஷயத்தில் முடிவுக்கு வந்துவிட்டான். இரவு ஏழு மணியாயிற்று. மனைவிக்கொரு கடிதமும், தந்தைக்கொரு கடிதமும் எழுதினான். மனைவிக்கெழுதிய கடிதம் வருமாறு:-
"என் அன்பே! நான் பரீட்சையில் இம் முறையும் தவறி விட்டேன். இனி உன் முகத்தில் விழிக்க என்னால் முடியாது. தற்கொலை செய்து கொண்டு இன்றிரவு உயிர் விடப் போகிறேன். ஜகந்நாதன்"
தந்தைக் கெழுதிய கடிதமும் இவ்வளவு சுருக்கமானதுதான். இரண்டையும் மடித்து உறையில் போட்டு விலாசம் எழுதி மேஜையின் மீது வைத்தான். மரண விசாரணையில் அடையாளம் தெரிவதற்காகத் தன்னுடைய விலாசம் எழுதிய ஒரு காகிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். (என்ன முன்யோசனை) அறையை பூட்டி விட்டு வெளியே கிளம்பினான்.
2
இரவு ஒன்பது மணி அமாவாசை இருட்டு. தென் இந்திய ரயில் பாதையில் ஒரு சிறு வாய்க்காலின் பாலத்தின் மீது ஜகந்நாதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நிர்மலமான நீல வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டி மனிதர்களின் அறியாமையைக் குறித்துக் கேலி செய்து கொண்டிருந்தன. மேல்வான வட்டத்தின் அடிவாரத்தைக் கரிய மேகத்திரள் மறைந்திருந்தது. ஒவ்வொரு சமயம் அம்மேகத்திரளை மீறிக்கொண்டு ஒரு பொன் மின்னற்கொடி வெளிக் கிளம்பி ஒரு கணம் கண்ணைப் பறித்துவிட்டு உடனே மறைந்தது. கிழக்கே வெகு தூரத்தில் பட்டணத்தில் மின்சார விளக்குகள் மங்கலாகக் காணப்பட்டன. வெறுப்புத் தரும் வாடைக் காற்றில் கலந்து, காட்டில் ஊளையிடும் நரியின் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது மத்திம ஸ்தாயியில் இடிகள் உறுமின. பக்கத்திலிருந்த புளிய மரத்தில் ஒரு கோட்டான் கோரமாகக் கத்திக் கொண்டிருந்தது.
அடுத்த ஸ்டேஷனிலிருந்து போட்மெயில் புறப்பட்டுவிட்டதென்பதற்கு அறிகுறியான ஊதல் சத்தம் கேட்டது. ஜகந்நாதன் எழுந்து சென்று தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டான். இதயம் 'பட்பட்' என்று அடித்துக் கொண்ட சத்தம் அவன் செவியில் நன்றாகக் கேட்டது. அவன் மனைவியும், மாமனாரும், மாமியாரும், தந்தையும், தாயும், தம்பியும், தங்கைகளும் ஒவ்வொருவராக அவன் முன்பு தோன்றி, "ஐயோ பைத்தியமே! இப்படி செய்யாதே" என்று கெஞ்சுவதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இந்தப் பிரமையினின்று விடுபடும் பொருட்டு அவன் கண்களைத் திறந்து ரயில் வரவேண்டிய திக்கை நோக்கினான். அவ்விடத்தில் இரயில் பாதை நேராக அமைந்திருந்தபடியால் வெகுதூரத்தில் ரயில் வருவது காணப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கொள்ளிக் கண்ணன் என்னும் இராட்சதனைப் பற்றிக் கேட்ட கதை அவனுக்கு நினைவு வந்தது. பெரிய கரிய வடிவமும் கொள்ளிக் கண்களும் உடைய ஒரு பூதம் பயங்கரமாக உறுமிக் கொண்டு தன்னை விழுங்க வருவது போல் அவனுக்குத் தோன்றிற்று. இத்தோற்றத்தினால் பீதியடைந்து அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ளப் போனான். ஆனால், அச்சமயத்தில் சுமார் ஐம்பது அடி தூரத்தில் ரயில் பாதை ஓரமாக வெள்ளைத் துணியால் முக்காடணிந்த உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டுவிட்டான்.
பேய், பிசாசுகளிடம் ஜகந்நாதனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் அப்போது அவன் உடலும் நடுங்கிவிட்டது. வியர்வை வியர்த்து துணிகள் எல்லாம் ஒரு கணத்தில் சொட்ட நனைந்து போயின. அச்சமயத்தில் அவன் உணர்வு போனவழி காரியம் செய்தானேயன்றி, அறிவைப் பயன்படுத்தி யோசித்து எதுவும் செய்யவில்லை. அவ்விடத்திலிருந்து உடனே போய்விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து பக்கத்திலிருந்த பாலத்துக்கு வந்து அங்கிருந்து கீழே வாய்க்காலில் சத்தமின்றி இறங்கி விட்டான். ஏற்கெனவே காரிருள்; அதிலும் பாலத்தின் நிழல். அங்கிருந்து அவ்வுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். என்ன அதிசயம்! அவ்வுருவம் சற்று முன் ஜகந்நாதன் படுத்திருந்த இடத்துக்கே வந்து நின்றது. முக்காடு போட்டிருந்த துணியை எடுத்துக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் பண்ணும்போது செய்வது போல் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டது. பின்னர் தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்தது.
அத்தகைய நிலைமையிலும் ஜகந்நாதனால் புன்னகை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்வுருவம் தன்னைப் போலவே ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள வந்த துரதிர்ஷ்டசாலியான ஒரு மனிதனே என்பதை அவன் தெள்ளத் தெளியக் கண்டான். அவனுயிரை அச்சமயம் தான் காப்பாற்றாவிட்டால், அக்கொலை பாதகத்துக்கு உடந்தையாயிருந்த பாவம் தன்னைச் சாரும் என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. ரயிலோ சமீபத்தில் வந்து விட்டது. அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தேறிச் சென்று படுத்திருந்த உருவத்தை முதுகில் தொட்டான். அவ்வுருவம் அப்படியே வீறிட்டுக் கொண்டு துள்ளி விழுந்தது. பாவம்! ரயில் வண்டி தன்மீது ஏறிவிட்டதாக அந்த துரதிர்ஷ்டசாலி நினைத்திருக்க வேண்டும். ஜகந்நாதன் அதனைப் பாதிதூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக் கொண்டும் கீழே பாலத்தின் அடியில் கொண்டு வந்து சேர்த்தான்.
3
"ஆம், மூன்று ஆண்டுகளாக நான் அலையாத இடமில்லை. நான் போகாத ஆபீஸ் இல்லை. விண்ணப்பம் எழுதி எழுதி கையும் சலித்துவிட்டது. நடந்து நடந்து காலும் ஓய்ந்து விட்டது. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியாக வேண்டும். பாங்கியில் இரண்டாயிரம் தான் பாக்கி. அதை வைத்துக் கொண்டு எங்கேயாவது கிராமத்திற்கு போய் அவர்களாவது சௌக்கியமாயிருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் இரண்டு வருஷம் நான் இந்த நகரத்தில் இருந்து வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்தப் பணமும் தொலைந்து போய் விடும். பின்னர், என் மனைவி குழந்தைகளின் கதி என்ன? ஆகையினாலேயே இன்று முடிவாக பி.ஏ. பட்டத்துக்குரிய பத்திரத்தை சர்வகலாசாலை ரிஜிஸ்ட்ராருக்கே திருப்பியனுப்பிவிட்டு, உயிரைவிடும் துணிவுடன் புறப்பட்டு வந்தேன். நீர் அதற்குக் குறுக்கே நின்றீர்" என்று கூறி முடித்தார் மகாதேவஐயர். ஜகந்நாதன் கொல்லென்று சிரித்தான். அவர்கள் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார்கள். "என் வரலாற்றை உம்மிடம் கூறியது குறித்து வருந்துகிறேன். பிறர் துன்பத்தைக் கேட்டு சிரிக்கும் குணமுள்ளவர் நீர் என்பதே எனக்குத் தெரியாது போயிற்று" என்று மகாதேவ ஐயர் சற்றுக் கோபத்துடன் கூறினார்.
"தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூறப்போவதைக் கேட்டால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டென்று நீங்களே சொல்வீர்கள். நான் சென்ற வருஷமும் இவ்வருஷமும் பி.ஏ. பரீட்சைக்குச் சென்று தவறிவிட்டேன். இதன் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே நானும் இங்கு வந்தேன். நீங்கள் திடுக்கிடுகிறீர்களல்லவா! எந்த இடத்தில் நீங்கள் படுத்துக்கொண்டீர்களோ, அதே இடத்தில் ஒரு நிமிஷத்திற்கு முன்பு நான் படுத்துக்கொண்டிருந்தேன். தங்களைக் கண்டு பயந்துகொண்டு கீழிறங்கினேன். பி.ஏ. பரீட்சையில் முதன்மையாகத் தேறிய தாங்கள் அப்பட்டத்தினால் ஒரு பயனுமில்லையெனக் கண்டு அதைத் திருப்பி அனுப்பி விட்டு உயிர் துறக்கத் துணிந்திருக்கையில், அப்படிப்பட்ட பட்டம் கிடைக்கவில்லையேயென்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்ததை எண்ணிய போது, என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள். நான் சிரித்ததில் தவறு உண்டா என்று" என்றான் ஜகந்நாதன்.
இதைக் கேட்டதும் மகாதேவ ஐயருக்கு கூட நகைப்பு வந்துவிட்டது. சற்றுநேரம் இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள். அந்த நிர்மானுஷ்யமான இடத்தில், அந்த நள்ளிரவில் அவர்களுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டு, அதுவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்த பூச்சிகள், தவளைகள் முதலியன பயந்து வாய் மூடிக் கொண்டன. அருகிலிருந்த புளிய மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை கண் விழித்துக் 'கிறீச்' என்று கத்திற்று.
"உயிர் விடும் யோசனையை மறந்துவிடுவோம்" என்று மகாதேவ ஐயர் கூறினார்.
"ததாஸ்து" என்றான் ஜகந்நாதன். பின்னர் அவன் சொன்னான்:- "இன்றிரவிலிருந்து, நாம் இருவரும் உயிர் நண்பர்களானோம். நாமிருவரும் ஒரே நோக்கங்கொண்டு இருவரும் ஒருவரது உயிரை ஒருவர் காப்பாற்றினோம். இருவரும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கிறோம். நம்மிருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்பது கடவுளுடைய திருவுள்ளம்போல் தோன்றிற்று."
"ஆம். நண்பர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே, நான் இவ்வளவு விரைவில் மனஞ் சோர்ந்து விட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. தங்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இனி இருவரும் சேர்ந்து புதிய பலத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்குவோம்."
"அப்படியேயாகட்டும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை."
"இனி பரீட்சைக்குப்போகும் எண்ணத்தை விட்டு விடுங்கள். என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறதென்று சொன்னேனல்லவா? அதை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் நடத்துவோம்." இவ்வாறு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் கை கோர்த்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.
4
மறுநாள் ஜகந்நாதனுக்கு, அவனுடைய காதல் மனைவி செல்லத்தினிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அதன் பிற்பகுதியை இங்கே தருகிறோம்:- "...இந்த துக்க சமாசாரத்தில் நமக்கு ஒரு சந்தோஷமான அம்சமும் இல்லாமற் போகவில்லை. அத்தைக்கு என்னிடம் எப்போதுமே நிரம்பப் பிரியம் என்று தங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா? அந்திய காலத்தில் நான் அவளுக்குச் செய்த பணிவிடை அந்தப் பிரியத்தைப் பதின்மடங்கு வளர்ந்துவிட்டது. எனவே அவளுடைய மரண சாசனத்தில் பாங்கியில் அவள் பெயரால் இருந்த ரூபாய் மூவாயிரத்தையும் எனக்கு கொடுத்து விட்டதாக எழுதி வைத்திருக்கிறாள். இந்தப் பணம் தங்களாலேயே எனக்குக் கிடைத்தது என்பதை நினைவூட்டுகிறேன். தாங்கள் என்னை வற்புறுத்தி பிறந்தகத்துக்கு அனுப்பியிராவிடில் அத்தைக்குப் பணி விடை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்திராது. அப்போது அவள் பணத்தை எனக்குக் கொடுத்திருப்பது நிச்சயமில்லை. ஆதலின், அந்தப் பணம் முழுதும் தங்களுக்கே உரியதாகும். இன்னொரு சமாசாரம், தங்கள் பரீட்சையின் முடிவு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். தேறியிருந்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. பட்டம் பெற்றவர்களுக்கும் கூட இக்காலத்தில் உத்தியோகம் இலேசில் கிடைப்பதில்லையென்று எல்லாரும் சொல்லுகிறார்கள். மேலும் கைகட்டுச் சேவகம் செய்யும் பிழைப்பு தங்கள் இயல்புக்கு ஒத்ததன்று. எனவே இந்த மூவாயிரம் ரூபாயும் மூலதனமாக வைத்துக்கொண்டு, தாங்கள் ஏதேனும் ஒரு தொழில் ஆரம்பித்து நடத்தினாலென்ன? அடியாள் தங்களுக்குப் பிடியாவிட்டால் அதற்காக என்னைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தாங்கள்தான் செல்லங் கொடுத்துக் கொடுத்துத் தங்கள் செல்லத்தைக் கெடுத்து விட்டீர்கள். பிற விஷயங்கள் தங்களை நேரில் தரிசிக்கும்போது."
மேற் சொன்ன சம்பவங்கள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மகாதேவ ஐயரும் ஜகந்நாதனும் "மகாநாதன் கம்பெனி" என்ற பெயருடன் புத்தக வியாபாரமும், பிரசுரமும் நடத்தி, நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார்களென அறிகிறோம். ஜகந்நாதனுடைய தந்தை மட்டும் "என்னதான் இருந்தாலும், மாதா மாதம் சம்பளமும் அதன் மீது கொஞ்சம் மேல் வரும்படியும் கிடைப்பதுபோல் ஆகுமா?" என்று சொல்லி வருகிறாராம்.
------------
20. எஸ். எஸ். மேனகா
அலைகடலின் நடுவில், 'எஸ். எஸ். மேனகா' என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த நாளிலும் அவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்தது கிடையாது. இந்தத் தடவை அதில் ஏற்றியிருந்த பாரம் முக்கியமாகப் பிரயாணிகளின் பாரமேயாகும். கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல் தளம் வரையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பிரயாணிகள், தேனடைகளை மொய்க்கும் தேனீக்களைப் போல் நெருங்கியிருந்தார்கள். அவர்கள் பல தேசத்தினர்; பல சாதியினர்.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வெள்ளைக்காரர்கள் மட்டும் காணப்பட்டார்கள். அவர்களில் ஸ்திரீகளும் குழந்தைகளும் அதிகமாயிருந்தனர். மற்ற பகுதிகளில் கறுப்பு மனிதர்கள் இருந்தார்கள். அவர்களில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தமிழர்கள், வங்காளிகள், மலையாளிகள், பஞ்சாபியர், யாழ்ப்பாணத்தார் முதலியோர் கலந்து காணப்பட்டார்கள். ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள், கிழவர்கள் ஆகிய எல்லா வயதினரும் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் கப்பலில் படுப்பதற்கு இடமோ, ஸ்நான வசதியோ ஒன்றும் கிடையாது. அந்த ஜனங்கள் குளித்து நாட்கணக்கில் ஆகியிருக்க வேண்டும். அத்தகைய அழுக்குப் பிடித்த ஜனக்கூட்டத்தை வேறெங்கும் காண்பது துர்லபம். அவரவர்களுக்கு பக்கத்தில் ஒரு பெட்டியோ, மூட்டையோ வைத்துக் கொண்டு 'சிவ சிவ' என்று உட்கார்ந்திருந்தார்கள். தண்ணீரைக் கண்டு பல தினங்களான அவர்களுடைய முகங்களில் குடிகொண்டிருந்த சோர்வையும், துயரத்தையும் பயங்கரத்தையும் விவரிக்க முடியாது. சிலர் பேயடித்தவர்களைப்போல் இருந்தார்கள். வேறு சிலர் இராத்திரியெல்லாம் கண் விழித்து மயான காண்டம் பார்த்துவிட்டு வந்தவர்களைப்போல் காணப்பட்டார்கள்; இன்னும் சிலரின் முகத்தில் பிரம்மஹத்தி கூத்தாடிற்று; பசி கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தோன்றினர். சாதாரணமாக இவ்வளவு நெருங்கிய கூட்டத்தில் இரைச்சல் அசாத்தியமாய் இருக்குமல்லவா? இங்கேயோ, ஜனங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளக் கூட இல்லை. யாராவது பேசினால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் ஈனஸ்வரத்தில் பேசினார்கள். அவ்வப்போது கிளம்பிய குழந்தைகளின் மெலிந்த, அழுகுரல் இருதயத்தை வேதனை செய்வதாயிருந்தது.
கப்பலில் எந்தப் பக்கம் பார்த்தாலும், கண்வலி வரும்படியாக ஆபாசமும் அழுக்கும் நிறைந்திருந்தன. ஒழுங்கு, சுத்தம் என்பதையே அங்கே காணமுடியாது. துர்க்கந்தமோ கேட்க வேண்டியதில்லை. கப்பலின் புதியபெயிண்டின் நாற்றம், மூலையில் அழுகிக் கிடந்த வெங்காயத்தின் நாற்றம், பழைய ரொட்டித் துண்டுகளின் நாற்றம், மனிதர்களின் வியர்வை நாற்றம், சுருட்டு நாற்றம், குழந்தைகள் ஆபாசம் செய்த நாற்றம் அம்மம்மா! எத்தனை விதமான நாற்றங்கள்? - நரகம் என்பது இதுதானோ?
எஸ். எஸ். மேனகா இந்தக் கதியை அடைந்திருந்ததன் காரணம் என்னவென விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய கப்பல் என்று சொன்னாலே போதும். சிங்கப்பூரை ஜப்பானியர் தாக்குவதற்குச் சில நாளைக்கு முன்புதான் அது கிளம்பிற்று. கிளம்பி இப்போது ஆறு நாளாகி விட்டது. ஆனால், கப்பல் தற்சமயம் கடலில் எந்த இடத்துக்கு வந்திருக்கிறதென்று பிரயாணிகளில் யாருக்கும் தெரியாது. அது எங்கே போகிறதென்றுகூட ஒருவருக்கும் நிச்சயமில்லை. அநேகமாகக் கொழும்புக்குப் போகலாமென்று கருதப்பட்டது. ஆனால், எப்போது போய்ச் சேருமோ கடவுளே அறிவார். போய்ச் சேரும் என்பதுதான் என்ன நிச்சயம்? பிரயாணிகள், கப்பலின் வசதிக் குறைவுகளால் அடைந்த கஷ்டங்களைக் காட்டிலும், மனோபீதியினால்தான் அதிகக் கலக்கம் அடைந்திருந்தார்கள். அவர்களில் பலர், மலாய் நாட்டில் ஜப்பானுடைய வெடிகுண்டுகளினால் நேர்ந்த விபரீதங்களை நேரில் பார்த்தவர்கள். அந்த பயங்கரங்களை இந்த ஜன்மத்தில் அவர்களால் மறக்கவே முடியாது. தரையிலேயே ஜப்பானுடைய வெடி குண்டுகளினால் அப்படிப்பட்ட பயங்கரங்கள் நேரிடக் கூடுமென்றால், நடுக் கடலில் கப்பலின்மேல் குண்டு விழுந்தால் கதி என்ன? அதோ கதிதான்!
ஆகவே, பிரயாணிகளிற் பலர், அடிக்கடி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர்.
ஆனால், ஆகாயத்திலிருந்து மட்டுந்தானா அபாயம் வரக்கூடும்? அபாயம், கடலில் மிதந்தும் வரலாம்! கடலுக்கடியிலிருந்து திடீரென்று வந்தும் தாக்கலாம் ஜப்பானுடைய யுத்தக் கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்துமகா சமுத்திரத்திலும் வங்காளக் குடாக் கடலிலும் சஞ்சரிப்பதாகச் சில நாளாகவே வதந்தி இருந்தது. ஆகவே, உயிருடன் ஊருக்குத் திரும்பிப் போவோம் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில், யாருடைய முகந்தான் களையாக இருக்கமுடியும்.
என்றாலும் அந்த ஆயிரம் பிரயாணிகளுக்குள்ளே ஒரு ஸ்திரீயின் முகம் மட்டும் அப்போது கூட களையாகத் தான் இருந்தது. களை எப்போதாவது குறைந்தால் அந்த ஸ்திரீ தனக்கருகில் வைத்திருந்த பெட்டிக்குள்ளிருந்து களையை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டாள்! அவள் கண்ணிலே இலேசாக மை தீட்டியிருந்தது. நெற்றியிலே பொட்டு இருந்தது. கூந்தல் பின்னி விடப்பட்டிருந்தது. பிரதி தினமும் மூன்று, நாலு தடவை, அவள் எப்படியோ நல்ல ஜலம் சம்பாதித்து முகத்தை அலம்பிப் பவுடர் பூசிக் கொண்டதுடன், மற்ற அலங்காரங்களையும் செய்து கொண்டாள். தலையில் வைத்துக் கொள்ளப் புதிய பூ இல்லாத ஒரு குறைதான். அதற்குப் பதிலாக, வர்ணநெட்டிப் பூ தலையில் வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்குமிங்கும் உலாவும் போது, மெல்லிய மல்லிகை ஸெந்தின் வாசனை மற்ற நாற்றங்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்தது.
இந்த ஸ்திரீயின் விஷயத்தில் மற்றப் பிரயாணிகளெல்லாம் எவ்வளவு அருவெருப்புக் கொண்டிருப்பார்களென்று சொல்ல வேண்டியதில்லை. அவளைப் பார்க்கும் போதே, பலருடைய முகம் சுணுக்கமடைந்தது. அவளைச் சுட்டிக்காட்டி, அநேகர் காதோடு காதாய் இரகசியம் பேசிக் கொண்டார்கள். இன்னும் சிலர், அவள் காதில் விழும்படியாக "சனியன்!" "மூதேவி!" "தரித்திரம் இங்கே என்னத்திற்கு வந்தது?" "பிராணன் போகிற போது கூடப் பவுடர் பூசிக் கொள்ளுவாளோ? யமனையே மயக்கி விடலாமென்ற எண்ணம் போலிருக்கு!" என்று இவ்விதமெல்லாம் பேசினார்கள்.
மற்றும், அந்தப் பிரயாணிகள் பேசிக் கொண்டதிலிருந்து, மேற்படி ஸ்திரீயின் பெயர் ரஜனி என்றும், சிங்கப்பூரில் அவள் துன்மார்க்க வாழ்க்கையில் 'பெயர் எடுத்தவள்' என்றும் தெரியவந்தது. அவள் அருகில் இருந்த பெட்டியின் மேல் 'மிஸ் ரஜனி' என்று அச்சிட்டிருந்தது. அவளுடைய வயது என்ன இருக்கும் என்று ஊகிப்பது மிகவும் கடினம். ஒரு சமயம் பார்த்தால், "இவளுக்கு வயது ரொம்ப ஆகியிருக்க வேண்டும்; பவுடரை அப்பிக் கொண்டு பால்யம் மாதிரி நடிக்கிறாள்" என்று தோன்றும். இன்னொரு சமயம் பார்த்தால், "இவளுக்கு வயசு கொஞ்சம்; துர்நடத்தை காரணமாக வயது அதிகம் காட்டுகிறது" என்று தோன்றும்.
இப்படிப்பட்ட ஸ்திரீயைப் பார்த்து யார் தான் அருவருப்புக் கொள்ளாமலிருக்க முடியும்? அதுவும், அடுத்த நிமிஷத்தில் உயிரோடிருப்போமோ என்பது நிச்சயமில்லாத அந்த சமயத்தில்?
எனினும் அவளிடம் அருவருப்புக் காட்டாத ஒரே ஒரு ஆத்மா அந்தக் கப்பலில் இருக்கத்தான் இருந்தது. அவன் அவளிடம் அருவருப்புக் காட்டாததோடு இல்லை, அவசியத்துக்கு அதிகமான அபிமானம் காட்டுவதாகவும் தோன்றியது. பிரயாணிகளில் ஒருவர் அவ்விதம் நடந்து கொண்டாலே அது ஆச்சரியத்தைத் தரும். அவனோ, கப்பல் உத்தியோகஸ்தரில் ஒருவன், உதவி என்ஜினீயர். பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன் மாதிரி இருந்தான்.
அவன் பெயர் ஜான் என்று மற்ற உத்தியோகஸ்தர்கள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. ஆனால் சுத்தமான தமிழ் பேசினான்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது கப்பல் மேல் தளத்துக்கு உதவி என்ஜினீயர் ஜான் வருவான். ரஜனியும் உடனே அவனை நோக்கிப் போவாள். இரண்டு பேரும் கப்பல் தளத்தில் கிராதியில் சாய்ந்து கொண்டு நிற்பார்கள். அவர்கள் அதிகமாகப் பேசுவது கிடையாது. மேலே ஆகாசத்தைப் பார்ப்பார்கள். சில சமயம், ஜான் ஒரு ரொட்டித் துண்டை மறைத்து எடுத்துக் கொண்டு வருவான். (கப்பலில் உணவுப் பண்டம் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்) ரஜனி வேண்டாம் என்று மறுப்பாள். பிறகு வாங்கிக் கொள்வாள்.
இதெல்லாம் மற்ற பிரயாணிகளுக்குப் பிடிக்கவேயில்லை. "கப்பலில் வந்து கூட யாரோ ஒருவனை வலையில் போட்டுக் கொண்டுவிட்டாள், பார்!" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். கப்பல் காப்டனிடம் இதைப் பற்றிப் புகார் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டார்கள்.
அன்று சாயங்காலம் ரஜனி ஜானைச் சந்தித்த போது, "நாம் இரண்டு பேரும் பேசுவது மற்றப் பிரயாணிகளுக்குப் பிடிக்கவில்லை" என்றாள்.
"நாம் இரண்டு பேரும் பேசுகிறோமா, என்ன? நாம் பேசுகிறது இதுவரையில் என் காதிலேயே விழவில்லையே" என்றான்.
ரஜனி, கலீரென்று சிரித்தாள். சொல்ல முடியாத சோகமும் ஆழ்ந்த பீதியும் குடிகொண்டிருந்த அந்தக் கப்பலில் அவளுடைய சிரிப்பின் ஒலி, அபஸ்வரமாய்த் தோன்றியது.
அதை அவளே அறிந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு "நாம் வெறுமனே சற்று நேரம் நிற்பது கூட அவர்களுக்கு பொறுக்கவில்லை. காப்டனிடம் புகார் செய்யப் போகிறார்களாம்!" என்றான்.
"உன்மேல் அவர்களுக்கு என்ன கோபம்?" என்று ஜான் கேட்டான்.
"அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவர்களுடைய சொத்து சுதந்திரத்தையெல்லாம் நானா பறித்துக் கொண்டேன்? ஜப்பான்காரன் மேல் காட்ட வேண்டிய கோபத்தை என் பேரில் காட்டி என்ன பிரயோசனம்? அசட்டு ஜனங்கள்! நான் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கோ நாளைக்கோ சாகப் போகிறோம். இருக்கிற வரையில் சந்தோஷமாக இருந்து விட்டுப் போனாலென்ன? மூதேவி பிடித்தது போல் முகத்தைக்கூட அலம்பாமல் உட்கார்ந்திருப்பதில் என்ன லாபம்?"
"சாவைப் பற்றி ஏன் அடிக்கடி பேசுகிறாய்? செத்துப் போக ஆசையாயிருக்கிறதா?" என்று ஜான் கேட்டான்.
"ஆமாம்" என்று ஒரே வார்த்தையில் ரஜனி பதில் சொன்னாள்.
"ஏன் அப்படி?"
"சாகாமல் இருந்து என்ன ஆகவேண்டும்?"
"இந்தியாவில் பந்துக்கள், தெரிந்தவர்கள், யாரும் இல்லையா?"
"இல்லை"
"உயிரை விடுவதாயிருந்தால், இன்றைக்கு ராத்திரியைப் போல் தக்க தருணம் கிடையாது. ஒன்பது மணிக்குச் சந்திரன் உதயமாகி விடும். அப்புறம் சமுத்திரம் பாற்கடலாயிருக்கும்."
"நான் தயார்" என்றாள் ரஜனி.
2
அன்று சாயங்காலம் அஸ்தமன சமயத்தில், ரஜனி அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்து விட்டுப் பிரயாணிகள் அளவில்லாத வியப்பும் அருவருப்பும் கொண்டார்கள்; அருவருப்பை வெளிப்படையாகவும் காட்டிக் கொண்டார்கள்.
ரஜனி, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. தனக்குள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாய்த் தோன்றினாள். நேரமாக ஆக அவளுடைய பரபரப்பு அதிகமாயிற்று.
ரஜனி, மனோநிலையைப் பிரதிபலிப்பது போல் கப்பல் வழக்கத்தைவிட மிகவும் துரிதமாகச் சென்றது.
அதைப் பற்றி பிரயாணிகள் கவலையுடன் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்.
இரவு சுமார் எட்டு மணிக்கு ஜான் கப்பலின் மேல் தளத்துக்கு வந்ததும், ரஜனி விரைந்து எழுந்து வந்து அவன் பக்கத்தை அடைந்தாள்.
"தயார்தானே? மனதில் சந்தேகம் ஒன்று மில்லையே?"
"கொஞ்சங்கூட இல்லை."
"அப்படியானால் என்னோடு வா!" என்று சொல்லிவிட்டு ஜான் முன்னால் நடந்தான்.
யுத்தகாலமாதலால், கப்பலில் இராத்திரியில் விளக்குப் போடுவது கிடையாது. ஒரே இருட்டாயிருந்தது.
ஜானுடைய வெள்ளை உடுப்பின் அடையாளத்தைக் கொண்டு ரஜினி நடந்தாள்.
ஓரிடத்தில் அவளுக்குக் கால் தடுமாறிற்று.
ஜான் திரும்பி அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான்.
ரஜனிக்கு மயிர் கூச்செறிந்தது.
இரண்டு பேரும் மௌனமாய்க் கொஞ்ச தூரம் நடந்தார்கள்.
"இங்கே படிக்கட்டு, ஜாக்கிரதையாய் இறங்கி வா!" என்றான் ஜான்.
இறங்கிப் போனார்கள்.
இவ்விதம் கால்மணி நேரம் இருட்டில் நடந்த பிறகு, ஜான் ஓரிடத்தில் நின்றான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
வெளியிலிருந்து குளிர்ந்த காற்று 'விர்'ரென்று ரஜனியின் முகத்தில் அடித்தது. அலைத்துளிகளும் தெறித்தன.
"கடைசித் தடவை கேட்கிறேன். கொஞ்சம் கூட உன் மனதில் சந்தேகம் இல்லையே?" என்றான் ஜான்.
"இல்லவே இல்லை."
"இந்தக் கதவுக்கு வெளியில் ஏணி தொங்குகிறது. அதன் வழியாகக் கீழேயுள்ள படகில் நாம் இறங்க வேண்டும். படகு பலமாய் ஆடும். அதற்காகப் பயப்பட வேண்டாம். என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்."
"செத்துப் போவதற்கு இவ்வளவு ஜாக்கிரதையும் தடபுடலுமா?" என்றாள் ரஜனி. ஆனாலும், ஜானின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
வெளியில் தொங்கிய ஏணி வழியாக இருவரும் படகில் இறங்கினார்கள்.
கப்பலின் ஓரத்தில் பயங்கரமாகக் கொந்தளித்த ஜலத்தில் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஜான் ஒரு கையால் ரஜனியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் படகைக் கப்பலுடன் பிணைத்திருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டான்.
கப்பலிலிருந்து விடுபட்டதும் படகு அப்படியும் இப்படியும் வெகு பலமாக ஆடிற்று. ஆனாலும், அது உயிர் காக்கும் படகாதலால் கவிழவில்லை.
சில நிமிஷத்துக்குள் கப்பலுக்கும் படகுக்கும் நடுவில் வெகுதூரம் ஏற்பட்டுவிட்டதென்று மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் தெரிந்தது.
"ஐயோ! மறுபடி கப்பலை எப்படிப் பிடிப்பீர்கள்!" என்றாள் ரஜனி.
"பார்த்தாயா, முன்னாமேதான் சொன்னேனே?"
"எனக்காகக் கேட்கவில்லை. நீங்கள் திரும்பிப் போகவேண்டாமா?"
"எதற்காகப் போகவேண்டும்?"
"எனக்குத்தான் உயிர் வாழ்வதில் சலிப்பு ஏற்பட்டு விட்டது."
"எனக்கும் அப்படித்தான்."
"ஆனால், கப்பலில் உங்களுக்கு வேலை இருக்கிறதே அதை யார் செய்வார்கள்?"
"இன்று இரவு எனக்கு வேலையில்லை, நாளைக்கு யாருமே செய்யவேண்டிய அவசியமிராது."
"என்ன சொல்லுகிறீர்கள்?"
"அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்தால் தெரியும்."
சற்றுநேரம் மௌனமாயிருந்த பிறகு ரஜினி, "நீங்களும் உயிரை விடுவதற்காகத்தான் வந்தீர்களா?" என்று கேட்டாள்.
"இல்லை; உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வந்தேன். சிலமணி நேரத்துக்கு..."
"ஒன்றும் புரியவில்லை."
"அவசியம் புரியத்தான் வேண்டுமானால் சொல்கிறேன். 'மேனகா'வை ஜப்பானி ஸப்மரின் பார்த்துவிட்டது. துரத்திக் கொண்டு வருகிறது. கப்பலில் உள்ளவர்களுக்கெல்லாம் இன்னும் அரைமணி நேரந்தான் உயிர் வாழ்க்கை."
"ஐயோ!"
"அவர்களைக் காட்டிலும் இன்னும் சில மணிநேரம் அதிகமாக நாம் உயிரோடிருக்கலாம்."
"எதற்காக இருக்க வேண்டும்."
"எதற்காக சாக வேண்டும்! பகவான் கொடுத்த உயிரை முடிந்தவரையில் காப்பாற்றிக் கொள்ளலாமே?"
இச்சமயம் பின்புறத்தில் ஏதோ பளிச்சென்று பிரகாசம் தோன்றவே ரஜனி, திரும்பிப் பார்த்தாள்.
இருண்ட கடலின் நடுவில் திடீரென்று தோன்றிய தீயின் ஒளி வெகு பயங்கரமாயிருந்தது.
அதே சமயத்தில் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் இடித்தமாதிரி ஒரு கடூர சத்தம் கேட்டது.
மலாய் நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்தை ரஜனி கேட்டிருந்தாள். இப்போது கேட்ட சத்தத்துக்கு முன்னால் அந்த வெடிகுண்டுச் சத்தம் ஒன்றுமே இல்லையென்று சொல்லும்படி இருந்தது.
அப்போது ரஜனி தன்னுடைய தலை பதினாயிரம் சுக்கல்களாக உடைந்துவிட்டதென்று கருதினாள்.
ஜான் அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு "ஒன்றுமில்லை; பயப்படாதே!" என்றான்.
3
ரஜனியின் அதிர்ச்சி நீங்கி மறுபடியும் கண்ணைத் திறந்து பார்த்தபோது, முன்னர் தீயின் வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து இப்போது கரும் புகைத்திரள் அடர்த்தியாகக் கிளம்பிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
"கப்பல் மூழ்கிவிட்டது" என்றான் ஜான்.
"ஐயோ! அவ்வளவு பேருடனுமா? என்ன கொடூரம்? எத்தனை பச்சைக் குழந்தைகள்? ஜப்பானியர் மனிதர்களா, ராட்சஸர்களா?"
கப்பல் முழுகிய இடத்திலிருந்து கிளம்பிய பிரம்மாண்டமான அலைகள் வந்து படகை மோதத் தொடங்கின. அத்தனைத் தாக்குதலுக்கும் படகு முழுகாமலிருந்தது ரஜனிக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் கரும் புகைப்படலம் நாலாபுறமும் வியாபித்து வானையும் கடலையும் மூடி ஒரே இருள் மயமாகச் செய்து விட்டது. அம்மாதிரியான பயங்கர இருட்டை ரஜனி அதற்கு முன் பார்த்ததே கிடையாது.
பயத்தினால் நடுங்கிய கரங்களினால் அவள் ஜானின் தோள்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் புகைத்திரள் விலகத் தொடங்கியது. வானில் நட்சத்திரங்கள் மறுபடியும் கண் சிமிட்டின.
"ஐயோ! என்னத்திற்காக என்னை இப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? எல்லாரோடு நானும் இதற்குள்..."
"அதோ பார்!" என்றான் ஜான்.
கீழ்த்திசையின் அடிவானத்தில் தங்க நிறமான பிரகாசம் காணப்பட்டது.
"அது என்ன? ஐயோ ஒரு வேளை இன்னொரு கப்பலோ?"
"இல்லை இல்லை; கிழக்கே சந்திரோதயம் ஆகிறது."
பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்திரன் கடலில் குளித்துவிட்டு எழுந்திருப்பதுபோல் மேலே வந்தான். வானும் கடலும் சேருமிடத்தில் கடல் நீர் தங்கம் உருகித் தழலாகியது போல் தக தகா மயமாயிருந்தது.
"ஆகா! என்ன அற்புதம்?"
"அற்புதமாயிருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த அற்புதத்தைப் பார்த்துவிட்டுச் சாகலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்."
"சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும்? இருக்கிற வரையில் சந்தோஷமாயிருக்கலாமே?"
"எப்படிச் சந்தோஷமாயிருப்பது? ஐயோ அவ்வளவு ஜனங்களும் இதற்குள் செத்துப் போயிருப்பார்களல்லவா? பச்சைக் குழந்தைகள் எப்படி தவித்திருக்கும்?"
"பார்த்தாயா? சந்தோஷமாய்ப் பேசலாமென்று சொல்லிவிட்டு?"
"என்ன சந்தோஷமான விஷயம் இருக்கிறது, பேசுவதற்கு?"
"அவரவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான சம்பவத்தைப் பற்றி சொல்லலாம்."
"நீங்கள் ஆரம்பியுங்கள்."
"இந்த நாளில் எந்தக் காரியத்திலும் ஸ்திரீகளுக்கு முதன்மை கொடுப்பதுதான் சம்பிரதாயம்."
"என் வாழ்நாளில் ஒரே ஒரு மாத காலம் நான் சந்தோஷமாயிருந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு மாதத்தை நினைத்துப் பின்னால் எப்போதும் துக்கப்பட்டிருக்கிறேன்."
"துக்கப்பட்டதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். சந்தோஷமாயிருந்ததைப் பற்றிச் சொன்னால் போதும்."
"சொல்ல ஆரம்பித்தால் அழுகை வந்துவிடும்."
"கதை மாதிரி சொல்லப் பாரேன்."
சற்று நேரம் மௌனமாயிருந்துவிட்டு ரஜனி சொல்ல ஆரம்பித்தாள்.
"இருபது வருஷங்களுக்கு முன்னால் ராயபுரத்தில் ஒரு அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பெண்ணும் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். ஒரு காலத்தில் அவர்கள் ரொம்பப் பணக்காரர்களாயிருந்தவர்கள். அப்பா வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்து சொத்தையெல்லாம் இழந்தார். இதனால் அவருடைய மனதே குழம்பிப் போய் விட்டது. இழந்த சொத்தை திரும்பச் சம்பாதிப்பதற்காக அவர் குதிரைப் பந்தயத்திற்கு போகத் தொடங்கினார். வீட்டில் பாக்கியிருந்த நகை நட்டுக்களுக்கும் சனியன் பிடித்தது. அம்மாவும் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுடைய வீட்டின் மச்சில் ஒரு அறை இருந்தது. அதை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கலாமென்று 'டு லெட்' போர்டு போட்டார்கள். அதை ஒரு வாலிபப் பிள்ளை வந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹார்பரில் வேலை. அப்பாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. நாலு நாளைக்கெல்லாம், "நீ என்னத்துக்குகாக ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே?" என்றார். அவரும் 'சரி' என்று சொல்லி, வீட்டிலேயே சாப்பிடவும் ஆரம்பித்தார்.
அந்தப் பேதைப் பெண், தன்னை உத்தேசித்துத் தான் அந்த வாலிபர் அவ்விதம் வீட்டில் சாப்பிட ஒப்புக் கொண்டதாக எண்ணினாள். அவள் ஒரு வருஷத்துக்கு முன்பு வரையில் 'கான்வெண்டு' ஸ்கூலில் படித்து வந்தவள். அதற்குப் பிறகு அகப்பட்ட நாவல்களையெல்லாம் படித்து, 'காதல்' 'பிரேமை' என்னும் உலகத்திலே வசித்து வந்தாள். 'கண்டதும் காதல்' என்பது தங்களுக்குள் நேர்ந்து விட்டது என்று அவள் நம்பினாள். அந்தப் பேதைப் பெண்ணின் நம்பிக்கையை அந்த மனுஷரும் ஊர்ஜிதப்படுத்தினார். அவளைத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அவர் தேடினார். "உன்னைக் கண்ட பிறகு நான் புது மனுஷனாகிவிட்டேன் என்றும், இவ்வளவு சந்தோஷத்துடன் இதற்கு முன் நான் இருந்ததே இல்லை" என்றும் அடிக்கடி சொன்னார். அந்தப் பெண்ணோ, தான் சுவர்க்க வாழ்க்கையையே அடைந்து விட்டதாக எண்ணினாள். ஆனாலும் சங்கோசத்தினால் வாயைத் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவர் சொல்லியதையெல்லாம் மட்டும் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தாள்.
"ஒருநாள் அவர் நான் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருக்கிறேன். நீ வாயை திறக்க மாட்டேன் என்கிறாயே?" என்றார். அதற்கும் அவள் மௌனமாயிருக்கவே இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லு, "நான் இந்த வீட்டில் இருக்கட்டுமா, போகட்டுமா?" என்று கேட்டார்.
"இருங்கள்" என்று அந்தப் பெண் சொன்னாள். உடனே, அவர் வெகு துணிச்சலுடன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு 'ரொம்ப வந்தனம்' என்றார். அப்போது அவர் பார்த்த பார்வையானது, 'உனக்காக என் பிராணனை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன்' என்று சொல்லுவது போலிருந்தது.
ரஜனி சற்று நேரம் மௌனமாயிருந்தாள்.
"அப்புறம்?" என்றான் ஜான்.
"அப்படிப்பட்டவர் இருபது ரூபாயைத் தியாகம் செய்வதற்கு மனமில்லாமல் போய்விட்டார்."
"அந்தப் பெண் இருபது ரூபாய் கேட்டு, அவன் கொடுக்க மறுத்துவிட்டானா?"
"இல்லை, இல்லை. அவரிடம் போய் இருபது ரூபாய் கேட்பதைக் காட்டிலும் அந்தப் பெண் பிராணனையே விட்டிருப்பாள்" என்றாள் ரஜனி.
"இப்படி அவர்கள் இருவரும் ஆனந்த மனோராஜ்ய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் அந்தப் பெண்ணின் அப்பா அவளிடன், 'உன்னுடைய டிரங்குப் பெட்டியின் சாவியைக் கொஞ்சம் கொடு, அம்மா! என்னுடைய மேஜைச் சாவி கெட்டுப் போய் விட்டது. உன் பெட்டிச்சாவி சரியாயிருக்கிறதா, பார்க்கிறேன்' என்றார். அந்தப் பெண் அவ்விதமே சாவியைக் கொடுத்தாள்."
"மறுநாள், மாடி அறைக்காரர் வந்து, 'வீட்டு வேலைக்காரி எப்படி திருட்டு புரட்டு உண்டோ ?' என்று கேட்டார். மாடி அறையில் இருந்த தம்முடைய பெட்டியிலிருந்து பத்து ரூபாய் பணத்தைக் காணோம் என்று சொன்னார். 'பெட்டியைப் பூட்டியிருக்கிறீர்களா?' என்று அந்தப் பெண் கேட்டதற்கு, 'பூட்டியிருந்தாலென்ன? டிரங்குப் பெட்டியை மறுசாவி போட்டுத் திறப்பதுதானா கஷ்டம்?' என்றார். உடனே அந்தப் பெண்ணுக்கு, அவருடைய அப்பா டிரங்குப் பெட்டிச்சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டது ஞாபகம் வந்தது. அதோடு நேற்றுக் குதிரைப் பந்தய தினம் என்பதும் நினைவுவரவே, அவளுடைய மனது குழப்பமடைந்தது. அந்த மனக்குழப்பம் அவள் முகத்திலும் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவர் அதைக் கவனித்தாரோ, மனதில் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியாது. ஒன்றும் சொல்லாமலே போய் விட்டார்."
"அன்று மத்தியானம் அப்பாவிடம் அந்தப் பெண் 'பெட்டிச்சாவி எங்கே?' என்று கேட்டாள் 'எங்கேயோ தொலைந்து போய்விட்டது அம்மா! இன்னொரு சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா?' என்றார். இதனால் அந்தப் பெண்ணின் சந்தேகம் அதிகமாயிற்று. அடுத்து ஐந்தாறு நாள் அவள் தன் மனத்திற்குள் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதை வெளியில் காட்டாமலிருப்பதற்கு முயன்றாள். அந்த வாலிபரும் அவளுடைய மனோ நிலைமையைப் பற்றி அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பணம் திருட்டுப் போனதைப் பற்றி மறுபடியும் பிரஸ்தாபிக்கவும் இல்லை.
"அடுத்த குதிரைப்பந்தய நாளான சனிக்கிழமை வந்தது. அன்று காலையிலிருந்து அப்பாவின் போக்குவரவுகளை அந்தப் பெண் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்தாள். வழக்கம் போல் மாடிக்காரர் காலை எட்டு மணிக்கே ஹார்பருக்குப் போய்விட்டார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அப்பா மாடிப்படி ஏறிப்போவதைப் பெண் பார்த்தாள். அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து போய், என்ன செய்கிறார் என்று கவனித்தாள். செய்கிறது என்ன? அவள் பயந்தபடியேதான் நடந்தது. மாடி அறையில் இருந்த டிரங்குப் பெட்டியைத் திறந்து அதற்குள்ளேயிருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். அந்தப் பெண்ணுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அப்பா தன்னைப் பார்க்காதபடி கீழே ஓடி வந்தாள். வெகு நேரம் யோசனை செய்தாள். அந்தச் சமயத்தில் அப்பாவிடம் அதைப்பற்றிக் கேட்டால் நிச்சயம் கொலை நடந்துவிடும் என்று அவளுக்குத் தெரியும். குதிரைப்பந்தயப் பிசாசு அவ்வளவு பொல்லாதது அல்லவா? தகப்பனார் சாப்பிட்டுவிட்டுப் போகும் வரையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தில் படித்த காலத்திலிருந்து அப்பாவுக்குத் தெரியாமல் சேகரித்து வைத்திருந்த பணம் முப்பது ரூபாய் இருந்தது. அதில் இருபது ரூபாய் எடுத்துக் கொண்டு, தன்னிடமிருந்த டிரங்குப்பெட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் மாடிமேல் ஏறினாள். கைநடுக்கத்துடன் பெட்டியைத் திறந்து இருபது ரூபாய் நோட்டை அதில் வைக்கப் போனாள். அச்சமயத்தில் பின்னால் ஏதோ சத்தம் கேட்டுச் சட்டென்று திரும்பினாள். மச்சுப்படிகளுக்கு மேலே யாரோ ஒருவரின் தலைக் கிராப்புத் தெரிந்தது. தடதடவென்று அவர் கீழே இறங்கிப் போகும் சத்தமும் கேட்டது. அந்தப் பெண் கை கால் வெலவெலத்துப் போய் ஐந்து நிமிஷம் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தாள். பிறகு அவள் கீழே இறங்கிப் போய் பார்த்த போது, அவரைக் காணோம். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை! இரண்டு நாளைக்கெல்லம் அவரிடமிருந்து ஒரு கடிதம் மட்டும் வந்தது. அவசர காரியமாக லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டுப் போவதாகவும், திரும்பி வருவது நிச்சயமில்லையென்றும், வாடகைக்கும் சாப்பாட்டுச் செலவுக்கும் பெட்டியிலுள்ள பணத்தையும் சாமான்களையும் எடுத்துக் கொள்ளும்படியும் அந்தக் கடித்தத்தில் எழுதியிருந்தது."
4
"அந்த சந்தேகக்காரன் அப்படிச் சொல்லாமல் போய்விட்டதைப் பற்றி அவனைக் காதலித்த பெண் ரொம்பவும் துக்கப்பட்டாளா?" என்று ஜான் கேட்டான்.
"ஆமாம்; அவன் போய்விட்டதைப் பற்றி அவள் துக்கப்பட்டாள்; கண்ணீர் விட்டாள்! பைத்தியம் பிடித்தவள் போலானாள். அவளுடைய துக்கத்தை ரொம்ப அதிகமாக்கியது என்னவென்றால், தன்னைக் கேவலம் திருடி என்பதாக நினைத்துக் கொண்டு அவர் போய்விட்டாரே என்பதுதான்" என்றாள் ரஜனி.
"பிறகு அந்தப் பெண் என்ன செய்தாள்?" என்று ஜான் தழுதழுத்த குரலில் கேட்டான்.
"அப்புறம் அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரே துன்பமும் பயங்கரமும் தான். அதைப்பற்றி சொல்வதற்கு இஷ்டமில்லை. தயவு செய்து கேட்கவேண்டாம்."
"அப்படியானால் கேட்கவில்லை" என்றான் ஜான்.
"நீங்கள் கதை சொல்லப் போகிறீர்களா? இல்லையா?" என்று ரஜனி கேட்டாள்.
"நீ சொன்ன கதையைப் பூர்த்தி செய்யட்டுமா?"
"ஆகா!"
"சரி, கேள்."
"மாடி அறையில் அந்தப் பெண் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் பணத்துடன் இருந்ததைப் பார்த்ததும், அந்த வாலிபனுக்கு மண்டை வெடித்து விடும் போல் ஆகிவிட்டது. தன்னுடைய இருதயத்தைக் கொள்ளை கொண்ட மோகினி, அத்துடன் திருப்தியடையாமல், தன் பணத்தையும், திருடுகிறாள் என்பதை அவனால் பொறுக்க முடியவில்லை. யாருக்குத் தன்னுடைய உடல் பொருள் ஆவியெல்லாவற்றையும் தத்தம் செய்ய எண்ணியிருந்தானோ, அவள் கேவலம் இருபது ரூபாய்க்கு ஆசைப்பட்டுத் தன் பெட்டியை மறுசாவி போட்டுத் திறக்கிறாள்! அவளுடைய காதல் கடைக்கண் பார்வையெல்லாம் வெறும் பாசாங்கு! பொய் வேஷம்! மோசம்! இந்த எண்ணத்தினால் வெறி பிடித்தவன் போலாகி அந்த வாலிபன் விரைந்து ஓடினான். அந்த வீட்டின் முகாலோபனமும் இனிமேல் செய்வதில்லை என்று தீர்மானித்தான். பெண் குலத்தையே சபித்தான். தான் அவ்விதம் ஏமாந்து போனதைப் பற்றித் தன்னையே சபித்துக் கொண்டான். ஆனால் நாள் போகப் போக அவனுடைய மனது மாறியது. ஆத்திரம் தணிந்தது. நிதானமாக யோசனை செய்யத் தொடங்கினான். அந்தப் பெண் செய்தது அவ்வளவு கொடிய காரியமா என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று."
"தரித்திரத்தின் கொடுமையினால்தானே அப்படி அவள் செய்திருக்க வேண்டும்? அவளுடைய தாயார் தகப்பனாரைக் காப்பாற்றுவதற்காகத்தானே செய்திருக்க வேண்டும்? இந்த எண்ணம் வலுப்பட்டதும், அவள்மேல் அவனுக்கிருந்த அன்பு இரு மடங்காயிற்று. கொஞ்ச நாள் கழித்து அந்த வீட்டை மறுபடியும் தேடிக்கொண்டு வந்தான். வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். ஏற்கனவே குடியிருந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததும் தகவல் கிடைக்கவில்லை. இதனால் அந்த வாலிபனுக்கு உலக வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு உண்டாகிவிட்டது. துக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக அவன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தான். ஜானகி ராமன் என்ற பெயரை ஜான் என்று மாற்றிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு மனச்சாந்தி உண்டாகவில்லை. ஒரே இடத்தில் இருக்க அவனுக்கு பிடிக்காதபடியால் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஹார்பர் வேலையிலிருந்து கப்பல் வேலைக்குப் போனான். ஆகா! அப்படி அவன் கப்பல் வேலைக்குப் போனது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? இல்லாவிட்டால், இருபது வருஷத்துக்குப் பிறகு அவனுடைய காதலி ராஜத்தை அவன் நடுக்கடலில் சந்தித்திருக்க முடியுமா?"
"நடுக்கடலில் சந்தித்தவள் அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த ராஜம்மாள்தான் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்" என்று ரஜனி கேட்டாள்.
"எப்படித் தெரிந்து கொண்டேனா? என் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் இவள் தான் ராஜம் என்று எனக்குச் சொல்லிற்று. மேலும் அவள் அதிகமாக உருமாறவும் இல்லையே! இருபது வருஷத்துக்கு முன்னால் நான் பார்த்தபடியே தான் இருக்கிறாள். ஆனால் ராஜம் என்னை எப்படித் தெரிந்து கொண்டாள் என்பது தான் அதிசயமாயிருக்கிறது. நான் அடியோடு உருமாறிப் போயிருக்கிறேனே?"
"உருமாறியிருந்தால் என்ன? கண்களை வேணுமானால் ஏமாற்றலாம்; மனதை ஏமாற்ற முடியுமா? நான் சாவதற்குள்ளே அவரை ஒரு தடவை கண்டிப்பாய் பார்க்க வேண்டும். பார்த்து நான் திருடியில்லையென்பதைத் தெரியப்படுத்த வேண்டுமென்னும் தாபம் என் மனதில் இடைவிடாமல் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையும் இருந்தது. இந்தக் கப்பல் பிரயானந்தான் என்னுடைய கடைசிப் பிரயாணம் என்பதாகவும் எனக்குள் ஏதோ சொல்லிற்று. அப்படியானால், இந்தக் கப்பலில் தானே அவரை நான் சந்தித்தாக வேண்டும்? ஜான் என்ற பெயர் காதில் விழுந்ததும், என்னை இருபது வருஷத்துக்கு முன்னால் கைவிட்டுப்போன ஜானகிராமன் தான் என்று என் மனது சொல்லிவிட்டது." வான வட்டத்தில் கால் பங்கு தூரம் சந்திரன் பிரயாணம் செய்து மேலே வந்திருந்தான். அலை அடங்கி அமைதியான கடலில், அவனுடைய வெள்ளி உருவம் ஸ்வச்சமாகப் பிரதிபலித்து, கடலுக்குள்ளே ஒரு சந்திரன் உண்டோ என்ற பிரமையை உண்டாக்கிற்று.
சந்திரன் உதித்த திசையை நோக்கிப் படகு மெதுவாய் மிதந்து சென்றது.
"ஒரு நாள் ராயபுரத்துக் கடற்கரையில் இதே மாதிரி பால் நிலவு எரித்தபோது நாம் இருவரும் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா!" என்று ஜானகி ராமன் கேட்டான்.
"பேஷாய் ஞாபகம் இருக்கிறது" என்றாள் ராஜம்மாள்.
"இன்றைக்கு மறுபடியும் பாடலாமா?"
"ஆகா!"
சாந்தம் குடிகொண்டிருந்த சமுத்திர மத்தியில் இளஞ்சந்திரன் சொரிந்த மோகன நிலவொளியில் ஒரு ஸ்திரீயின் இனிய குரலிலும், ஒரு புருஷனின் கம்பீரமான குரலிலும், பின்வரும் இன்ப கீதம் எழுந்தது.
-
நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே
நானும் வரவேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும்
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
21. சாரதையின் தந்திரம்
"அடி அக்கா, எனக்கு உன்னைத் தவிர வேறு யாரிருக்கிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்லி ஆறுவேன்? இத்தனை நாளாக எட்டிப் பாராமல் இருந்துவிட்டாயே!" என்று சொல்லி, சாரதையின் மடியில் முகத்தை வைத்துக் கொண்டு கண்ணீருகுத்தாள் லக்ஷ்மி.
"அசடே நீ என்ன இன்னமும் பச்சைக் குழந்தையா? பதினெட்டு வயதாகிறது. ஒரு குழந்தை பெற்றெடுத்து விட்டாய். வெட்கமில்லாமல் அழுகிறாயே. சங்கதி என்ன? சொல்" என்று சொல்லி, சாரதை அருமையுடன் லக்ஷ்மியின் கண்ணீரைத் துடைத்தாள்.
இப்பெண்மணிகள் மயிலாப்பூரில் மாடவீதி ஒன்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு தெருவில் ஓர் அழகிய புது வீட்டின் மாடி மீதிருந்த ஹாலில் அமர்ந்திருந்தனர். அவர்களில், சாரதை பத்தரைமாற்று பொன்னொத்த மேனியினாள். விசாலமான நெற்றியும், அறிவு ஊறித்ததும்பும் கண்களும் படைத்தவள். அவள் கண்களினுள்ளே இருந்த கருவிழிகளோ, அங்குமிங்கும் குறுகுறுவென்று அலைந்து கொண்டிருந்தன. தன் கடைக்கண் வீச்சாகிய ஒரே ஆயுதத்தின் துணைகொண்டு ஆடவரையும் பெண்டிரையும் அடக்கியாளும் திறனுடையவள் அவள் என்பது அவ்விழிகளை ஒருமுறை பார்த்த அளவினாலே விளங்கும். அப்போதலர்ந்த ரோஜா மலரின் இதழையொத்த தன் அதரங்களில் புன்னகையிருக்க, வேறு பொன் கல் நகைகள் எதற்கு என்று கருதியே போலும், அவள் அதிக ஆபரணங்கள் அணிந்துகொள்ளவில்லை. தலைப்பில் சரிகைக்கரை போட்ட நீலநிறக் கதர்ப்புடவை அவள் மேனி அழகைப் பதின்மடங்கு மிகுதிப்படுத்திக் காட்டிற்று.
இப்பொன்னொத்த வண்ணமுடையாளினின்றும் பல வகையிலும் மாறுபட்டிருந்தாள் லக்ஷ்மி. அவள் மாநிற மேனியினாள். திருத்தமாக அமைந்திருந்த அவள் திருமுக மண்டலம், இதுகாலை சோகத்தினால் வாட்டமுற்றிருந்ததாயினும், அழகும் அமைதியுமே அதன் இயற்கை அணிகள் என்பது நன்கு விளங்கிற்று. அவள் கண்ணில் அளவிடப்படாத தூய உண்மைக் காதல் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. எல்லோரையும் மகிழ்விக்கும் இனிய குணமும் அளவற்ற அன்பும் அவள் தோற்றத்திலே நிகழ்ந்தன. சோகத்திலும் மலர்ந்திருந்தன அவளது செவ்விதழ்கள். அவள் தரித்திருந்தது. விலையுயர்ந்த சிவப்பு வர்ணப் பட்டுபுடவை. பொன் வைர நகைகளும் அவள் அணிந்திருந்தாள்.
லக்ஷ்மி, முத்து முத்தாகத் துளித்துப் பெருகிய கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பினால் துடைத்து, சாரதையின் இரு கரங்களையும் தன் கரங்களால் பிடித்துக் கொண்டு சொல்வாள். "அக்கா! எனக்கு வயதாகிவிட்டது. உண்மையே. ஆனால் உன்னைக் கண்டால் நான் குழந்தையேயாகி விடுகிறேன். என்னை விட நீ ஒரு வயதுதான் மூத்தவள். ஆயினும் எனக்கு வினாத் தெரிந்தது முதல் நீ எனக்குத் தாய் போல் இருந்து வரவில்லையா? பெற்ற தாய் இறந்த துயரத்தை நான் உணராமல் செய்தது யார்? என் சித்தி கோபித்துக் கொண்டால் உடனே உன்னிடம் ஓடி வந்து ஆறுதல் பெறுவேன்..."
"இந்தக் கதையெல்லாம் இப்போதெதற்கு? இனிமேல் அம்மாதிரி நாம் குழந்தைகளாகப் போகிறோமா?" என்று சாரதை இடைமறித்துக் கூறினாள்.
"இல்லை அக்கா, கொஞ்சம் பொறு. நமது இளம் பிராய நட்பின் நினைவுகள் எனக்கு எத்தனை மகிழ்ச்சி அளிக்கின்றன? அத்தான், பள்ளிக்கூட விடுமுறைக்கு ஊர் வரும்போதெல்லாம், நாம் அளவு கடந்த மகிழ்ச்சியடைவோம். அவரும் நம்மிடம் பிரியமாயிருந்தார். நமக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பார். கதைகள் சொல்லிக் காலங்கழிப்பார். நம்முடன் சேர்ந்து விளையாடுவார். ஊரில் எல்லோரும் அத்தானுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். நீ மட்டும் 'இல்லவே இல்லை. அத்தானுக்கு லக்ஷ்மிதான் வாழ்க்கைப்படப் போகிறாள். அத்தானும் சாது, லக்ஷ்மியும் சாது. அவர்கள் இருவருக்கும்தான் பொருத்தம். நான் நல்ல போக்கிரி ஒருவனுக்கு வாழ்க்கைப்படப் போகிறேன். பின்னர், அவனையடக்கிச் சாதுவாக்கி விடுவேன்' என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டு வருவாய். அப்போதெல்லாம் உன்னிடம் எவ்வளவு நன்றி பாராட்டினேன்? அவ்வளவுக்கு இப்போது உன்னைச் சபிக்கிறேன்" என்று கூறுகையில், லக்ஷ்மி விம்மி விம்மி அழலானாள்.
சாரதைக்குச் சற்று விளங்க ஆரம்பித்தது. "அடியே என்ன சொல்லுகிறாய்? அத்தான் உன்னைத் துன்புறுத்துகிறானா, என்ன சொல்லு?" என்றாள். அவள் கண்களின் ஓரங்கள் சிறிது சிவந்து கோபக்குறி காட்டலாயின.
"ஐயோ, துன்பப்படுத்தினால் பாதகமில்லையே? உன்னிடம் சொல்லியிருக்கவே மாட்டேன்... ஆம், அக்காலத்தில் எல்லாம் நீ சொன்னபடியே ஆயிற்று. தெய்வம் நமக்குச் சகாயமாயிருந்தது. கடைசியாக, அத்தானுக்கு என்னையே கலியாணம் செய்து கொடுத்தார்கள். உனக்கு அகத்துக்காரர் பட்டணத்திலிருந்து வந்தார். நீ சொல்லியபடியே கிராப்பும், உடுப்பும், பூட்ஸும், மூக்குக் கண்ணாடியுமாக அவர் வந்தார். நாங்கள் 'போக்கிரி மாப்பிள்ளை' என்று சொல்லிக் காட்டினோம். 'பேசாமலிரு, இரண்டு வருஷத்தில் எல்லாம் அடக்கிப் போடுகிறேன்' என்று நீ சொல்லிக் கொண்டு வந்தாய். அந்த மாதிரியே செய்து முடித்தாய். காலரும் கழுத்து சுருக்கும் மாட்டிக் கொண்டு வந்தவர். இப்பொழுது நாலுமுழக் கதர்த் துணியுடன் நின்று வருகிறார். ஆனால், என்னுடைய சாது அத்தானோ?"
"அதைச் சொல்! என்ன செய்தான்?"
"நீ அவர் மீது கோபிப்பதில் பயனில்லை. அக்கா! எனக்குச் சாமர்த்தியமில்லை, அழகில்லை, அதிர்ஷ்டமும் இல்லை. அவ்வளவுதான். இருந்தாலும் உன்னிடம் என் குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? மேலும் எல்லாம் உன்னாலேயே வந்தது. நீ ஏன் திருவல்லிக்கேணிக்குப் போனாய்? போனதுதான் போனாய்; எங்களை ஏன் உடன் அழைத்துக் கொள்ளவில்லை? நீ போன பிறகே எனக்கு இத்துயர் வந்தது."
"ஆ, கள்ளி, இந்த ஒரு வருஷமாகவா நீ இப்படிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாய்? ஏன் இத்தனை நாளாக எனக்குச் சொல்லவில்லை?"
2
"இல்லை, அக்கா! இதுவரை எனக்குத் திட்டமாக விவரம் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு தான் தெரிந்தது. அதற்குப் பின் நீ இங்கு வரவேயில்லை. நீ இவ்வூரைவிட்டுப் போவதற்கு முன்பு எங்கள் வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியுமே! அத்தகைய இன்ப வாழ்க்கை இனி இந்த ஜன்மத்தில் உண்டா என்று நான் ஏங்குகிறேன். ஆபீசிலிருந்து அவர் நேரே வீட்டுக்கு வருவார். சில தினங்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து கடற்கரைக்குப் போவோம். என்றாவது ஒரு நாள் சினிமா அல்லது கதை, பாட்டுக் கச்சேரிக்குச் செல்வோம். என்னை அழைத்துக் கொள்ளாமல் அவர் எங்கும் போனதில்லை. வெளியே போகாத நாட்களில் புத்தகம் ஏதேனும் வாசித்துக் காட்டுவார். இல்லாவிடில், பாடச் சொல்வார். ஆபீசுக்குப் போக வேண்டியிருக்கிறதே என்று கஷ்டத்துடன் சொல்வார். வேறெங்கும் நிமிஷமும் தங்கமாட்டார். ஆனால், நீ இவ்வூரை விட்டுப்போன இரண்டொரு மாதங்களில், அதாவது இவ்வருஷ ஆரம்பத்தில், இந் நிலைமை மாறிவிட்டது. சில தினங்களில், வெகு நேரங்கழித்து வீட்டுக்கு வருவார். சனி ஞாயிறுகளில் கடற்கரை முதலிய இடங்களுக்கு என்னை அழைத்துக் கொண்டு போவதை நிறுத்திவிட்டார். என்னுடன் பேசுவதிலேயே அவருக்கு முன்போல் இன்பமில்லையென்பதைக் கண்டேன். ஜனவரி, பிப்ரவரி இவ்விரண்டு மாதமும் இவ்வாறே நிகழ்ந்து வந்தது. பிறகு அவ்வளவு மோசமில்லை யாயினும் முன்னிருந்த அன்பும் ஆதரவும் பார்க்க முடியவில்லை. முன்னெல்லாம் சீட்டாட்டம் என்றால் எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது சீட்டாட்டத்தில் அளவிறந்த பித்துக் கொண்டார். சில தினங்களில் அவருடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு வந்து சீட்டுக் கடை போட்டு விட்டார். எல்லாருக்கும் காபி வைத்துக் கொடுக்கச் சொல்வார். அப்பா! எத்தகைய நண்பர்கள்! அவர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சலாயிருந்தது. ஆயினும், நான் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. உன்னுடைய பிடிவாதத்தில் உன் அகத்துக்காரர் சுருட்டுக் குடிப்பதை விட்டுவிட்டார் என்று சொன்னாயே, அக்கா! இந்த அவமானத்தை எவ்வாறு சொல்வேன்? இதுகாறும் சுருட்டுக் குடிப்பவர்களைக் கண்டாலே அருவெறுத்து வந்தார். இப்போது தாமே சுருட்டுக் குடிக்க ஆரம்பித்து விட்டார். இவையெல்லாம் அற்ப விஷயங்களென்று நான் உன்னிடம் கூடச் சொல்லவில்லை. ஆனால், இந்த டிசம்பர் மாதம் பிறந்த பிறகே எனக்கு உண்மை தெரிய வந்தது. ஒரு நாள், அவரும் அவருடைய நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தபோது, கிண்டிக்கு ரயிலில் போகலாமா, மோட்டாரில் போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது..."
"ஐயோ, துரதிர்ஷ்டசாலியான பெண்ணே!" என்று சாரதை லக்ஷ்மியைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
"முழுவதும் சொல்லிவிடுகிறேன், அக்கா! உடனே என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. கிண்டி குதிரைப் பந்தயத்தால் அடியோடு அழிந்த குடும்பங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அன்று நான் ஒரு தப்புக் காரியம் செய்தேன். அத்தான் வெளியே போயிருந்த போது, அவர் பெட்டியைத் திறந்து, பாங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். இந்த நான்கு வருஷமாக, மாதச் சம்பளத்தில் வீட்டுக்குச் செலவாவது போக, குறைந்தது ஐம்பது ரூபாய் நாங்கள் மீத்து வருகிறோம். முதலும் வட்டியும் சேர்ந்து குறைந்தது மூவாயிரம் ரூபாயாவது இருக்க வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால், பாங்கிக் கணக்கின் கடைசியில் 58 ரூபாய் சொச்சமே பாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டதும், என் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டியது போலாயிற்று. இவ்வருஷ ஆரம்பத்தில் ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களில் சுமார் இருநூறு ரூபாய் பாங்கியிலிருந்து வாங்கப் பட்டதாக எழுதியிருந்தது. இதிலிருந்து, என்னுடைய சந்தேகங்கள் நிவர்த்தியாயின. ஆனால் என் துக்கம் பதின்மடங்கு அதிகமாயிற்று. அதற்கடுத்த சனிக்கிழமையன்று, அக்கா - வெளியில் சொன்னால் வெட்கம். போன வருஷம் இருநூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த வைரமூக்குத்தியை வாங்கிக் கொண்டு போனார். அதற்காக என்னிடம் பொய்யும் சொன்னார். யாரோ நண்பர் ஒருவர் வீட்டில் கலியாணம் என்றும், இரவல் கேட்கிறார்களென்றும் கூறினார்..."
"அயோக்கியன், கோழை, திருடன்..." என்று ஸகங்ரநாம பாராயணம் செய்யத் தொடங்கினாள் சாரதை.
"சை, என்னெதிரில் இப்படியெல்லாம் சொல்லாதே. நகையும் பணமும் நாசமாய்ப் போகட்டும். எங்கள் வாழ்வு குலைந்துவிடும் போலிருக்கிறதே, என்ன செய்வேன்? அவருக்குப் பத்திரிகை வந்ததும் எவ்வளவு ஆவலுடன் வாங்கிப் படிப்பார்? எவ்வளவு உற்சாகத்துடன் பத்திரிகையிலுள்ள விஷயங்களை எடுத்துச் சொல்வார்! இப்பொழுது அந்த உற்சாகமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. இது மட்டுமா? நான் கதர்ப்புடவைதான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று முன்னெல்லாம் எவ்வளவு பிடிவாதமாகச் சொல்வார்? பத்து நாளைக்கு முன் வாசலில் பட்டுப் புடவை வந்தது. வாங்கட்டுமா என்று கேட்டேன். எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார். அந்தப் பாழாய்ப்போன குதிரைப் பந்தயத்தைத் தவிர வேறொன்றிலும் அவருக்கு இப்போது சிரத்தையில்லை. ஒரு மாதமாக இராட்டினம் சுற்றுவதையும் நிறுத்தி விட்டார். என்னிடம் இச் செய்தியை ஒளித்து வைத்திருப்பதால் என்னோடு பேசுவதற்கே அவருக்கு வெட்கமாகயிருக்கிறது. அக்கா! என்ன செய்யலாம், சொல்லேன். அவரிடம் எல்லாம் எனக்குத் தெரியுமென்று சொல்லிவிடட்டுமா? இவையெல்லாம், போனாலும் இன்னும் ஒரு பெரும் பயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் நண்பர்கள் எல்லாரும் குடிகாரர்கள் எனத் தெரிகிறது. ஒரு நாள் அவர் 'அதற்குமட்டும் என்னைக் கூப்பிடாதீர்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். 'இன்னும் எத்தனை நாளைக்கு?' என்று அந்த அழகான நண்பர்களில் ஒருவர் சொன்னதும் காதில் விழுந்தது. அன்றிலிருந்து, 'இன்னும் எத்தனை நாளைக்கு' என்றுதான் நானும் என் மனதில் கேட்டுக் கொண்டு வருகிறேன். குழந்தைப் பருவத்திலிருந்து எனக்குக் கஷ்டம் வந்தபோதெல்லாம் உன்னிடமே தஞ்சம் புகுந்தேன். இப்போதும் உன்னிடமே வந்தேன். நீயே என் வாழ்க்கையைக் காப்பாற்றித் தரவேண்டும்" என்று லக்ஷ்மி சொல்லி முடித்தாள்.
3
சாரதை எழுந்து சென்று ஜன்னலின் பக்கத்தில் தெருவைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து, திரும்பி வந்தாள். "லக்ஷ்மி! இதோ பார், நளாயினி, தமயந்தி, சீதை இவர்களைப்பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று கேட்டாள்.
லக்ஷ்மி ஒன்றும் புரியாமல், "ஆம்" என்றாள்.
"அவர்களுடைய வரலாறுகள் தெரியுமா?"
"தெரியும்."
"அப்படியானால் இந்த விவரங்களையெல்லாம் என்னிடம் ஏன் சொன்னாய்?"
லக்ஷ்மி விம்மி அழ ஆரம்பித்தாள். சாரதை அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு, "அடி அசடே, அழாதே. உன்னுடைய சக்தியை நீ தெரிந்து கொள்ளவில்லை. உன் உள்ளத்தில் காதல் இருக்கிறது. உன் முகத்தில் மோகம் இருக்கிறது. உன் கண்களில் இன்பம் இருக்கிறது. (அச்சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து எழுந்தது). இதோ இந்தச் செல்வன் இருக்கிறான். இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டு உன் கணவனுடன் போராடி வெற்றி பெறாவிட்டால், நீ எதற்குப் பிரயோஜனம்? உன் கணவனுக்கு, குதிரைப் பந்தயத்திலும், சீட்டாட்டத்திலும் உள்ள சிரத்தை உன்னிடம் ஏற்படாவிட்டால் அது யாருடைய தவறு?"
லக்ஷ்மி ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்.
"ஒன்று சொல்கிறேன் கேள். உன் கணவன் தன் குற்றத்தை மறைக்க விரும்பும் வரையில், உனக்கு க்ஷேமம். அதைத் தெரிந்து கொண்டதாக நீ காட்டிக் கொள்ளாதே. அதற்காக உன்னிடம் அவன் ஒருக்காலும் சந்தோஷப்படமாட்டான். ஒன்றும் நேரிடாததுபோல் முன்னைவிட அதிகமாக அன்பு காட்டு. அவன் கவனத்தைக் கவர முடியாவிட்டால், உன் காதல் ஒரு பைசா பெறாது."
அடுத்த சனிக்கிழமை தான் மறுபடியும் வருவதாக உறுதி கூறிவிட்டு, சாரதை புறப்பட்டுச் சென்றாள். வீடு சென்றதும், அவள் தன் கணவன் மேஜையைத் திறந்து கடிதமும் பேனாவும் எடுத்து ஏதோ எழுதினாள். எழுதி முடிந்ததும், "சாது அத்தான் இப்படியா செய்கிறான்? இருக்கட்டும், அவனை இலேசில் விடுகிறேனா பார்க்கலாம்" என்று தனக்குதானே மொழிந்து கொண்டாள். தான் எழுதியதை இன்னொருமுறை பார்த்துவிட்டுக் கைகொட்டிச் சிரித்தாள்.
4
அடுத்த சனிக்கிழமை காலை, ஸ்ரீமான்நாராயணன் பி.ஏ. (ஆனர்ஸ்) தன் வீட்டின் முன்புறத்திலிருந்த ஹாலில் சாய்மான நாற்காலியொன்றில் சாய்ந்து கொண்டிருந்தான். நமது கதாநாயகன், பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்று அரசாங்க உத்தியோகத்தில் ரூ.150 சம்பாதிப்பவனாயினும், கதை ஆசிரியனுக்குள்ள உரிமையால் அவனை, ஏக வசனத்திலேயே அழைக்கின்றோம். கையிலிருந்த ஆங்கில மாதாந்திர சஞ்சிகையொன்றில் அவன் கருத்துச் சென்றிருந்தது. பந்தயக் குதிரையோட்டியொருவன், எப்படி ஒரு கோடீசுவரன் புதல்வியால் காதலிக்கப்பட்டுப் பல இடையூறுகளுக்குள்ளாகி, கடைசியில் அவளை மணம் புரிந்தான் என்று கூறும் ஒரு சிறு கதையை அவன் படித்துக் கொண்டிருந்தான். நாற்காலிச் சட்டத்தின் மீது ஆங்கில தினசரிப் பத்திரிகையும், ஒரு சிறு புத்தகமும் கிடந்தன. பத்திரிகையில் பந்தயங்களையும் மற்றும் விளையாட்டுகளையும் பற்றிய விவரங்கள் உள்ள பக்கம் மேலே காணப்பட்டது. புத்தகம் கிண்டி குதிரைப் பந்தயத்தில் போட்டியிடப்போகும் பற்பல குதிரைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கியது. நாராயணனது முழுக் கவனத்தையும் அக்கதை கவர்ந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்தரை ஆனதும், சஞ்சிகையை மூடி வைத்துவிட்டு "லக்ஷ்மி, சமையல் ஆகவில்லையா இன்னும்?" என்று உரத்த குரலில் கேட்டான்.
"ஆகிவிட்டது, வாருங்கள்."
இச்சமயத்தில் "ஸார், தபால்!" என்று கூறிக் கொண்டு தபால்காரன் வந்தான். நாராயணன் எழுந்து சென்று கடிதத்தை வாங்கி உறையை உடைத்து உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தான். அவன் கண்களிலே அப்போது தோன்றிய அசட்டுப் பார்வை கடிதத்தின் பொருள் அவனுக்கு விளங்கவில்லையென்று காட்டிற்று. கைக்குட்டையை எடுத்துக் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு, மற்றொரு முறை படித்தான். அக்கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
பிரியமுள்ள ஐயா,
-
ஆலகால விஷத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே
தங்கள் நன்மையை விரும்பும்
நண்பன்.
"ஏன் சாப்பிட வரவில்லை?" என்று குயிலோசையினும் இனிய குரலில் கேட்டுக் கொண்டு வந்தாள் லக்ஷ்மி.
"ஏதோ கடிதம் வந்திருக்கிறது போலிருக்கிறதே. எங்கிருந்து வந்தது? விசேஷம் ஏதேனும் உண்டோ ?"
"விசேஷம் ஒன்றையுங் காணோம்" என்று சொல்லி நாராயணன் கடிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சாப்பிட எழுந்து சென்றான்.
அன்று நாராயணன் சாப்பிடும் போது, அதிசயமான ஒரு காரியம் செய்தான். லக்ஷ்மி உணவு பரிமாறுகையில், அவள் தன்னைப் பாராத சமயம் பார்த்து, திரும்பத் திரும்பச் சுமார் இருபது முறை அவளை உற்று உற்றுப் பார்த்தான். இன்னதென்று தெளிவாக விளங்காத பலவகை ஐயங்கள் அவன் உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. சட்டென்று அவனுக்கு ஒன்று நினைவு வந்தது. லக்ஷ்மியின் நடத்தையில் சென்ற ஒரு வாரமாக ஒருவகை மாறுதல் இருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று. வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே இந்தச் சில தினங்களாய் அவள் தன்னிடம் அன்பு காட்டி வருவதாக நினைத்தான். இம்மாறுதலுக்குக் காரணம் என்ன? - இதற்கு விடை கூறிக்கொள்ள அவனுக்கே அச்சமாயிருந்தது.
சாப்பிட்ட பின்னர், நாராயணன் மீண்டும் வந்து நாற்காலியில் சாய்ந்து கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான். கிண்டிக்குப் போகும் முதல் ஸ்பெஷலைப் பிடிக்க வேண்டுமானால் உடனே கிளம்ப வேண்டும். அடுத்த ஸ்பெஷலுக்குத்தான் போவோமே என்று எண்ணிக் கொண்டு அந்தக் கடிதத்தை இன்னொரு முறை எடுத்துப் படித்தான். அதை யார் எழுதியிருக்கக்கூடும்? அந்த எழுத்து? - எங்கேயோ பார்த்தது போலத் தோன்றிற்று. தலையை இரு கரங்களாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு யோசித்தான். பயனில்லை.
இதற்குள் மணி 12.30 ஆகிவிட்டது. இன்று ஒரு நாள் போகாவிட்டால் என்ன?...சை! "இந்தப் பைத்தியக்காரக் கடிதத்துக்காகவா போகாமலிருந்து விடுவது? நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?..." உடனே எழுந்து உடுப்புகளைத் தரித்துக்கொண்டு விரைந்து சென்றான்.
கடைசி ஸ்பெஷல்தான் கிடைத்தது. வழக்கம் போல் நண்பர்கள் முதல் ஸ்பெஷலில் போயிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அவர்களைக் கண்டு பிடிப்பதெப்படி? அன்று அவர்களைக் கண்டுபிடிக்க அவன் அவ்வளவு ஆவல் கொள்ளவுமில்லை.
அதிசயங்களிலெல்லாம் அதிசயம், அன்று நாராயணன் ஒரு பைசாகூடப் பந்தயம் வைக்கவில்லை! உண்மையில் அவன் மனம் பந்தயத்தில் செல்லவேயில்லை. லக்ஷ்மியின் அதிகப்படியான அன்பு - அக் கடிதம் - அதிலுள்ள எழுத்து - இவைகளிலேயே அவன் சிந்தை உழன்று கொண்டிருந்தது.
பந்தயம் முடிந்து, எல்லோரும் திரும்பிய போது, நாராயணனும் புறப்பட்டான். வண்டியில் நண்பர்களை சந்தித்தான். "ஓ! மிஸ்டர் நாராயணன்! உம்மைத் தேடித் தேடிப் பார்த்தோமே! எந்த ஸ்பெஷலில் வந்தீர்?" என்று ஒருவர் கேட்டார்.
"கடிகாரத்தின் தவறு. முதல் ஸ்பெஷல் புறப்பட்டு இரண்டு நிமிஷங் கழித்து வந்தேன்."
"ஓ! ஏதோ நேரிட்டு விட்டதென்று பயந்தோம். ஆனால், முகம் ஏன் வாட்டமுற்றிருக்கிறது? ஏதேனும் பணம் தொலைந்து போயிற்றா?"
அப்பொழுதுதான் நாராயணனுக்குத் தன் சட்டைப் பையிலிருந்த சில்லரையைத் தவிர வேறு பணம் கொண்டு வரவில்லையென்று நினைவு வந்தது. ஆயினும் நமது கதாநாயகன் - எழுத வெட்கமாயிருக்கிறது - மீண்டும் ஒரு பெரும் பொய் சொன்னான். "ஆம், ஸார், இருநூறு ரூபாய்."
"கவலைப்படாதேயும். அடுத்த வாரம் அதிர்ஷ்டம் அடிக்கலாம்" என்றார் அந்த 'அழகான' நண்பர்களில் ஒருவர்.
5
மறுநாள் முதல், தன் கணவனுடைய நடத்தையில் ஒரு வகை மாறுதலைக் கண்டு லக்ஷ்மி அதிசயித்தாள். ஆபீஸ் விட்டதும் நாராயணன் நேரே வீட்டுக்கு வரத்தொடங்கினான். அவனுடைய நண்பர் குழாத்தை அழைத்துக் கொண்டு வருவதில்லை. என்றுமில்லாத வழக்கமாக ஒரு நாள் ஆபீஸ் வேலையிலேயே வீட்டுக்கு வந்தான். இதற்குக் காரணமான தலைவலி, வீட்டுக்கு வந்து பத்து நிமிஷத்தில் மருந்து மாயமில்லாமல் சொஸ்தமாகி விட்டது. லக்ஷ்மிக்குச் சிறிது ஆச்சரியமளித்தது. அவ் வாரத்தில் லக்ஷ்மி பல முறையும் சாரதாவை நன்றியறிதலுடன் நினைத்துக் கொண்டாள். தான் அவள் சொற்படி அதிக அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வதே தன் கணவன் நடத்தையில் மாறுதலேற்படக் காரணமென அவள் நம்பினாள்.
அடுத்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு வழக்கம் போல் நாராயணன் சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கடிகாரத்தை பார்த்த வண்ணமாயிருந்தான். 'தபால்' என்ற சத்தம் கேட்டதும் அவன் நெஞ்சம் திடுக்கிட்டது. கடிதத்தின் உறைமீது விலாசத்தைப் பார்த்ததும். அவன் ஹிருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளலாயிற்று. அக் கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.
பிரியமுள்ள ஐயா,
எச்சரிக்கை! இந்தச் சனிக்கிழமை மாலை விழிப்புடனிருந்தால், நீர் அறிய விரும்பும் விஷயத்தை அறிந்து கொள்ளலாம்.
தங்கள் நன்மை விரும்பும்
நண்பன்.
நாராயணனுக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது. எதிர் வீட்டில் பி.எல் பரீட்சைக்குப் படிக்கும் மாணாக்கர் ஒருவர் இருந்தார். அவர் நாராயணனின் நண்பரல்லர். ஆயினும், கொஞ்சம் பழக்கமுண்டு. அவசரமாக எழுந்து சென்று எதிர் வீட்டு வாயிற்படியில் நின்று கொண்டு, "ஸார்! ஸார்!" என்று கூப்பிட்டான். பி.எல். மாணாக்கர் வெளியே வந்தார். நாராயணன் அவரை ஏற இறங்கப் பார்த்தான். அவர் முகத்தில் எவ்வித மாறுபாடும் காணப்படவில்லை. "ஒன்றுமில்லை, என் கடிகாரம் நின்று போய் விட்டது. தயவு செய்து மணி பார்த்துச் சொல்லுங்கள்" என்றான். மாணாக்கர் உள்ளே போய் அங்கிருந்து ஏதோ சொன்னார். அது சரியாகக் காதில் விழாத போதிலும், "சரி, வந்தனம்" என்று நாராயணன் கூறிவிட்டுத் திரும்பினான்.
அன்று உணவு அருந்தியதும் நாராயணன் ஆடம்பரமாக உடுப்பு அணிந்து கொண்டான். பின்னர் சமையல் அறைக்குச் சென்றான். லக்ஷ்மி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது. சென்ற ஒரு வாரமாகத் தன் கணவர் நடந்து கொண்ட மாதிரியிலிருந்து, ஒரு கால் இன்று போகாமலிருந்துவிட மாட்டாராவென்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால், நாராயணன் உடுப்பணிய ஆரம்பித்ததைப் பார்த்ததும், இந்நம்பிக்கையைக் கைவிட்டாள். அவளையறியாமலே துக்கம் பொங்கிற்று.
"லக்ஷ்மி, நான் போய் வருகிறேன்" என்றான் நாராயணன்.
லக்ஷ்மிக்கு ஆச்சரியமாயிருந்தது. 'ஒரு நாளாவது சொல்லிக் கொண்டு போனதில்லை. கொஞ்சம் மனம் இளகியிருக்கிறது. இதுதான் தருணம்' என்று அவள் எண்ணினாள்.
"எங்கே போகப் போகிறீர்கள்? இன்று போக வேண்டாமே. சாயங்காலம் என்னையும் எங்கேனும் அழைத்துக் கொண்டு போங்களேன்" என்றாள்.
'ஆ! பாசாங்குக்காரி! உலகில் பெண்களை ஆண்டவன் எதற்காகப் படைத்தான்?' என்று நாராயணன் எண்ணிக் கொண்டான். அவனுக்கு வந்த கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, "இல்லை இன்று அவசியம் போகவேண்டும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அன்று பிற்பகலில் மயிலாப்பூர் மாடவீதிகளிலுள்ள வீட்டுமாடி ஒன்றிலிருந்து யாரேனும் பார்த்திருப்பின், ஸ்ரீமான் நாராயணன், பி.ஏ. (ஆனர்ஸ்) அவ்வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டிருப்பதைக் கவனித்து ஆச்சரியமுற்றிருப்பார்கள்.
மணி சுமார் மூன்றரை இருக்கும். நாராயணன் தனது வீடிருக்கும் தெரு முனைக்குப் பன்னிரண்டாவது முறையாக வந்தபோது தன் வீட்டுக்கெதிரில் ஒரு குதிரை வண்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஒரு கணநேரம் அவன் மூச்சு நின்று விடும் போலிருந்தது. அவ்வண்டிக்குள் இளைஞன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் எதிர்ப்புறமாய்க் குதிரையை நோக்கி திரும்பி உட்கார்ந்திருந்தபடியால், முகம் தெரியவில்லை. "வண்டி இப்போதுதான் வந்து நிற்கிறதா? வண்டியில் இருப்பவன் இறங்கப் போகிறானா?" என்று எண்ணி, நாராயணன் திக்பிரமை கொண்டவன் போல் தெரு முனையிலேயே நின்றான். என்ன துரதிர்ஷ்டம்! வண்டிக்காரன் குதிரையைச் சவுக்கால் அடித்தான். நாராயணன் அதே கணத்தில் தன் வீட்டு மாடியை நோக்கினான். ஒரு ஜன்னல் திறந்திருந்தது. அதன் வழியே பெண் கரமொன்றும், புடவைத் தலைப்பும் தெரிந்தன. இரண்டு நிமிஷங்களில் வண்டி தெருக்கோடிச் சென்று மறைந்தது. நாராயணன் அந்த இரண்டு நிமிஷமும் நரக வேதனையனுபவித்தான். மறுபடியும் அண்ணாந்து தன் வீட்டு மாடியின் ஜன்னலை நோக்கியிருப்பானாயின், அங்கே சாரதை நின்று கண்களில் விஷமக் குறிதோன்றத் தன்னைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டிருந்ததைக் கண்டிருப்பான். ஆனால் அப்போது அவன் உள்ளம் இருந்த நிலையில், கண்கள் திறந்திருந்தும் எதிரிலுள்ள பொருளைக் கூட அவன் பார்க்கவில்லை.
முதலில், விரைந்து வீட்டுக்குச் செல்லலாமாவென்று அவன் நினைத்தான். ஆனால் அமைதியுடன் யோசனை செய்தல் இப்போது அவசியமென உணர்ந்தான். எனவே கடற்கரையை நோக்கிச் சென்றான். மாலைக் கடற்காற்று அவனுக்கு கொஞ்சம் சாந்தம் அளித்தது. யோசனை செய்யலானான். முதலில், தான் தெருமுனையில் நில்லாமல் வீதிகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தது தவறு என்று முடிவு செய்தான். பின்னர், நிச்சயமான அத்தாட்சியில்லாமல் அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாதென்று தீர்மானித்தான். பிறகு குதிரை வண்டியைப் பற்றி யாரையும் விசாரித்தால் அவமானத்துக்கும், ஆபத்துக்கும் இடமாகுமென்னும் முடிவுக்கு வந்தான். கடைசியாக உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், தன் மனைவியிடம் சந்தேகங் கொண்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாதென்றும் அவளிடம் அன்பு கொண்டிருப்பதாக நடிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான். நாராயணன் புத்திசாலி! இல்லாவிட்டால், பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் தேறியிருக்க முடியுமா?
6
ஒரு வாரம் சென்றது. அடுத்த சனிக்கிழமையும் வந்தது. நாராயணன் தன் ஐயங்களை அநேகமாக மறந்து விட்டான். "என்ன பைத்தியம்? நமது லக்ஷ்மியைச் சந்தேகிக்கப் போனோமே! குழந்தையைப் போல் கள்ளங்கபடற்ற இவளா அத்தகைய பெருந்துரோகம் எண்ணுவாள்?" என்று அவன் கருதலானான். அத்துடன் வீட்டில் இன்ப விளக்கையொத்த இவளை வைத்து விட்டுத்தான் வெளியில் எங்கேயோ இன்பந்தேடி அலைந்தது எவ்வாறு என்ற வியப்பும் அவன் உள்ளத்தில் சற்றே தோன்றலாயிற்று. எனினும், இன்றைய தினம் கிண்டிக்குப் போய் வருவது என்று அவன் தீர்மானித்தான். மனைவியின் பேரில் தவறான ஐயங்கொண்டு அதற்காக கிண்டிக்குப் போகாமலிருப்பதா? என்ன அவமானம். யாருக்காவது தெரிந்தால் நகையார்களா? இன்னும் இரண்டு வாரந்தான் பந்தயம் நடைபெறும். இழந்த மூவாயிரம் ரூபாயில் ஏதேனும் ஒரு பகுதியையேனும் மீட்க வேண்டாமா?
ஆனால் அந்தக் கடிதங்கள்? அவற்றின் நினைவு இடையிடையே தோன்றி, நாராயணன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அந்த எழுத்தை எங்கேயோ, பார்த்த நினைவாயிருந்தது. ஆயினும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் எங்கே என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்றைய தினம் கடிதம் ஒன்றும் வராவிடின், பழைய கடிதங்களைத் தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டு, எல்லாவற்றையும் மறந்து விடுவதென்று தீர்மானித்தான். எனவே தபால்காரன் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தான். எதிர் நோக்கியது வீண் போகவில்லை. கடிதம் வந்தது. நாராயணனின் அப்போதைய மனோநிலையை வருணித்தல் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. உறையை உடைத்துக் காகிதத்தைப் படித்தான்.
பிரியமுள்ள ஐயா,
இன்று மாலை, உமது மனைவி எங்கேனும் புறப்பட்டுப் போக விரும்பினால், தடுக்க வேண்டாம். அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து செல்லும்.
தங்கள் நன்மையை நாடும்
நண்பன்.
பற்பல ஐயங்கள், மனக்குழப்பம் எல்லாம் மீண்டும் முன்னைவிட அதிகமாகவே ஸ்ரீமான் நாராயணனைப் பற்றிக் கொண்டன. பொறாமையும், கோபமும் அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியலாயின. அவன் உடல் நடுங்கிற்று; கண்களில் நீர் ததும்பிற்று. கள்ளங் கபடற்றவள், தன்னைத் தவிர வேறு கதியில்லாதவள் என்று எண்ணி, தான் அளவற்ற நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கும் ஒரு பெண், தன்னைப் பயங்கரமாக ஏமாற்றி, மகத்தான துரோகம் செய்வது மட்டுமன்று; இந்த அவக்கேடான விஷயம் மூன்றாவது ஆசாமி ஒருவனுக்குத் தெரிந்தும் இருக்கிறது. அவமானம்! அவமானம்! இத்தகைய சந்தர்ப்பங்களில் மனைவியைக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்த பல விவரங்கள் நாராயணன் நினைவுக்கு வந்தன. கைத்துப்பாக்கியின் மீதும், விஷமருந்தின் மீதும் அவன் எண்ணம் சென்றது.
லக்ஷ்மி உள்ளிருந்து வந்தாள். அன்றலர்ந்த தாமரை போன்ற அவள் வதனத்தில் செவ்விதழ்கள் புன்னகை பூத்துத் திகழ்ந்தன. கள்ளமற்ற உள்ளத்தினின்று எழுந்த காதற்சிரிப்போ அது? "சாப்பிடவாருங்கள்" என்ற அவள் மொழிகள், நாராயணன் செவிகளில் இன்பத்தேனெனப் பாய்ந்தன. 'ஒன்று இவள் இவ்வுலகிலுள்ள நூறு கோடிப் பெண் மக்களில் பொறுக்கி எடுத்த இணையற்ற வஞ்ச நெஞ்சப் பாதகியாகயிருத்தல் வேண்டும்; அல்லது... நமக்குப் பகைவன் யார்? நம்மை இவ்வாறு வருத்துவதில் யாருக்கு என்ன லாபம்? எப்படியும் இன்று உண்மையைக் கண்டுவிடலாம்' என்று நாராயணன் எண்ணினான்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் லக்ஷ்மி, "நான் இன்று திருவல்லிக்கேணிக்குப் போய் வரட்டுமா?" என்று கேட்டாள். இக்கேள்வியினால் நாராயணன் உள்ளக் கடலில் எழுந்த கொந்தளிப்பை, லக்ஷ்மி மனக்கண் கொண்டு பார்த்திருப்பாளாயின், அந்தோ அவள் பயந்தே போயிருப்பாள்.
"எதற்காக?" என்று நாராயணன் கேட்டபோது அவன் குரலிலிருந்த நடுக்கத்தை லக்ஷ்மி கவனித்தாளில்லை.
"சாரதை அக்கா, அடிக்கடி வரச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். நீண்டகாலமாய் வரவில்லையென்று கோபித்துக் கொண்டாள். இன்று கட்டாயம் வரச் சொன்னாள்."
"சரி!" என்று ஒரே வார்த்தையில் நாராயணன் பதில் கூறினான்.
"நீங்களும் வாருங்களேன். வேறு அவசியமான வேலையிருக்கிறதா?" என்று லக்ஷ்மி பயத்துடன் கேட்டாள்.
"என்ன மோசம்! என்ன வேஷம்! அப்பா!" என்று முணுமுணுத்தான்.
"என்ன சொல்லுகிறீர்கள்?"
"ஒன்றுமில்லை, நான் வேறிடத்துக்கு போக வேண்டும் நீ போய் வா."
சாப்பாடு ஆனதும் நாராயணன், "வண்டி வேண்டுமா? பார்த்துக் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான்.
"காலையில் தெருவில் ஒரு வண்டி போயிற்று. வண்டிக்காரனிடம் சொல்லியிருக்கிறேன்."
ஏற்பாடு ஒன்றும் பாக்கியில்லை என்று நாராயணன் எண்ணிக் கொண்டு, "சரி நான் போய் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே போனான். ஒரு குதிரை வண்டிக்காக மயிலாப்பூர் எங்கும் அலைந்தான் என்ன துரதிர்ஷ்டம்? அன்றைக்கென்று ஒரு வண்டி கூடக் காணோம். "இந்தப் பாழும் மோட்டார் பஸ்கள் வந்து குதிரை வண்டியே இல்லாமற் செய்துவிட்டன. நாசமாய்ப் போக!" என்று சபித்தான். எங்கும் சுற்றிவிட்டுத் திரும்புகையில், எதிரில் லக்ஷ்மி ஒரு வண்டியில் வருவதைக் கண்டான். அவள் தன்னைப் பாராவண்ணம் குளப்படியில் இறங்கி மறைந்து நின்றான்.
அவன் உள்ளம் தீவிரமாக வேலை செய்தது. வண்டியைத் தொடர்ந்து நடந்து செல்வது இயலாத காரியம். ரிக்ஷாவும் அவ்வளவு வேகமாகச் செல்லாது. குதிரை வண்டியோ கிடைக்கவில்லை. மோட்டார் பஸ்ஸில் ஏறிக் குதிரை வண்டிக்கு முன்னால் திருவல்லிக்கேணிக்குப் போய்விடுவதென்றும், மணிக் கணக்குப் பார்த்து, சாரதையின் வீட்டுக்கு நேரே போய்ச் சேர்கிறாளாவென்று கண்டுபிடித்து விடலாமென்றும் தீர்மானித்தான். அவ்வாறே அவசரமாகச் சென்று, புறப்படவிருந்த மோட்டார் ஒன்றில் ஏறினான். ஆனால் இவ்வுலகில் இடையூறுகள் தனித்து வருவதில்லையே? ராயப்பேட்டை போனதும், மோட்டார் 'பட்பட்' என்று அடித்துக்கொண்டு நின்றுவிட்டது. வண்டி ஓட்டி ஆன மட்டும் வண்டியை முடுக்கிப் பார்த்தும் பயனில்லை. பெட்ரோல் இல்லையென்னும் விவரம் அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. உதவி வேலைக்காரனை டிராம் வண்டியில் ஏறிப்போய் மௌண்ட் ரோட்டிலிருந்து பெட்ரோல் வாங்கிவர ஏவினான். வண்டியில் இருந்தவர்கள் சபிக்கலானார்கள். இன்னும் பணங்கொடாதவர் வண்டியை விட்டிறங்கினர். நாராயணன் எல்லாரையும் விட அதிகமாகச் சபித்தான். மோட்டார் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவனுடைய ஏழு தலை முறையும் நாசமாய்ப் போகவேண்டுமென்று அவன் எண்ணினான். பணங்கொடுத்திருந்தானாயினும், போனால் போகட்டும் என்று இறங்கிவிட்டான்.
பின்னால் வந்த மோட்டார் பஸ்கள் எல்லாவற்றிலும் ஜனங்கள் நிரம்பியிருந்தபடியால், அவனுக்கு இடங்கிடைக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து வந்த டிராம் வண்டியொன்றில் ஏறிக் கொண்டான். வழி நெடுகஜனங்கள் காத்துக் கொண்டிருந்தபடியால், டிராம் அடிக்கடி நின்று சென்றது. உலகமெல்லாம் தனக்கு விரோதமாகச் சதியாலோசனை செய்திருப்பதாய் அவனுக்குத் தோன்றிற்று. மௌண்ட் ரோட்டிலும் சற்று நேரம் காத்திருக்க நேர்ந்தது. திருவல்லிக்கேணி போகும் வண்டிகள் எல்லாம் நிறைந்திருந்தன. கடைசியாக நாராயணன் திருவல்லிக்கேணி சேர்ந்து சாரதை வீடு இருந்த வீதிக்குச் சென்றபோது, மாலை நான்கு மணியாகி விட்டது. வீட்டு வாயிலில் லக்ஷ்மி ஏறி வந்த வண்டி நின்று கொண்டிருந்தது. அவ்வண்டி நேராக மயிலாப்பூரிலிருந்து சாரதை வீட்டுக்கே வந்ததாவென்று கண்டுபிடிப்பது எங்ஙனம்? வண்டிக்காரனையோ வீட்டிலுள்ளவர்களையோ விசாரிப்பது அறிவீனம்; அவமானத்துக்கிடம். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சாரதையின் வீட்டுக்குள்ளிருந்து, சாரதையும், லக்ஷ்மியும், சாரதையின் கணவனும் வெளிவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்கள். எங்கேயோ வேடிக்கை பார்க்கப் புறப்பட்டுச் சென்றார்கள் போலும். நாராயணனின் வயிற்றெரிச்சல் அதிகமாயிற்று. சாரதையும் அவள் கணவனும் எத்தகைய இன்ப வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான். கடற்கரைக்குப் போய் வெகு நேரம் உட்கார்ந்துவிட்டு இரவு வீடு போய்ச் சேர்ந்தான். லக்ஷ்மியை அவள் போயிருந்த விஷயமாக ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை.
7
அன்பார்ந்த ஐயா!
ஜாக்கிரதைக் குறைவினால் இரண்டு முறை உமது முயற்சியில் தவறி விட்டீர். நாளை சனிக்கிழமை மத்தியானம் வெளியே சென்று விட்டுச் சரியாக நான்கு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்லும். உண்மையறிவீர்.
தங்கள் நன்மை விரும்பும்
நண்பன்.
இக்கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான் நாராயணன். சென்ற ஒரு மாத காலமாகத்தான் அனுபவித்து வரும் துன்பங்கள் அத்தனையும் ஒரு பெருங்கனவோ என்று எண்ணினான். கனவன்று, நிஜமே என்பதைக் கையிலிருந்த கடிதம் வலியுறுத்திக் காட்டிற்று. எப்படியும் இன்று உண்மை வெளியாகி விடுமென்று நினைத்துப் பெருமூச்சு விட்டான். ஆனால், அவ்வுண்மை எவ்வளவு பயங்கரமானது? முதல் நாள், தான் ஒரு நண்பரிடம் மிகவும் சிரமப்பட்டு இரவல் வாங்கிக்கொண்டு வந்திருந்த கைத் துப்பாக்கியை மேஜைக்குள்ளிருந்து எடுத்து மீண்டுமொருமுறை பார்த்தான். அதை எவ்வாறு உபயோகிப்பதென்பதை இருபத்தைந்தாம் முறையாக மனத்தில் உறுப்போட்டுக் கொண்டான். அவன் கண்களில் கொலைக் குறித் தோன்றிற்று. பகல் ஒரு மணிக்கு வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான். அப்போது அவன் உள்ளக் கடலில் எழுந்த பேரலைகளின் இயல்பை யாரோ வருணிக்க வல்லவர்.
சரியாக மாலை நான்கு மணிக்கு நாராயணன் வீடு திரும்பினான். வாயிற்கதவு சாத்தித் தாளிடப் பட்டிருந்தது. மாடி அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. ஆயினும், நிதானந்தவறிவிடக் கூடாதென்று எண்ணிப் பற்களை கடித்துக் கொண்டான். கதவை ஓங்கி இடித்தான். இரண்டு நிமிஷங்கழித்துக் காலடிச் சத்தம் கேட்டது, "யார் அங்கே?" அது லக்ஷ்மியின் குரல். "நான் தான்; கதவைத் திற." கதவு திறக்கப்பட்டது. லக்ஷ்மி முகத்தில் வியப்புக் குறிதோன்றிற்று. சந்தேகம் என்னும் திரைவழியே பார்த்த நாராயணனுக்கு அவள் பயத்தினால் திடுக்கிட்டு நடுநடுங்குவதாகத் தோன்றிற்று. வாயிற்படி தாண்டி உள்ளே நுழைந்ததும், உயர்தரக் கம்பெனி ஜோடுகள் நாராயணன் கண்ணில்பட்டன. அவனுக்கு எல்லாச் சந்தேகமும் நிவர்த்தியாயிற்று. தன் கைத்துப்பாக்கிக்கு அன்று இரையாகப் போகிறவன் மாடிமீதிருப்பதாக அவன் உணர்ந்தான். விரைந்து சென்று மாடிப்படிகளில் ஏறலானான். ஆனால், லக்ஷ்மி அவனுக்கு முன்னால் ஓடிப் பாதிப்படிகள் ஏறிய நாராயணனை வழிமறித்துக் கொண்டும், "உயரப் போகாதேயுங்கள்" என்று கொஞ்சும் குரலில் கூவினாள். நாராயணின் கோபவெறி அளவு கடந்தாயிற்று. லக்ஷ்மியை ஒரு கையினால் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இடித்துக் கீழே தள்ளினான். பாவம்! லக்ஷ்மி பத்துப் பன்னிரண்டு படிகளிலும் உருண்டு சென்று கீழே தரையில் விழுந்தாள்.
அவளைத் திரும்பியும் பாராமல், நாராயணன் மேலே ஓடினான். மாடி ஹாலில் கதவை ஓங்கி ஓர் உதை உதைத்தான். கதவு தாளிடப்படாமையால், தடால் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது. அப்போது அவன் அவ்வறையினுள்ளே கண்ட காட்சி அவனைத் திகைக்கச் செய்துவிட்டது. எத்தனையோ விதப் பயங்கர காட்சிகளை அவன் மனத்திலே கற்பனை செய்து பார்த்துத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் முன் தோன்றிய காட்சியை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை. தலையில் இடியே விழுந்துவிட்டது போல் திடுக்கிட்டு நின்று விட்டான்.
அக்காட்சி வேறொன்றுமில்லை. நாராயணன் நீண்ட நாளாய் மூலையில் போட்டிருந்த இராட்டினத்தை எடுத்துச் செப்பனிட்டுச் சாரதையின் கணவன் ஸ்ரீனிவாசன் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். நூல் அடிக்கடி அறுந்து போய்க்கொண்டிருந்தது. சாரதை அருகில் உட்கார்ந்து "நிறுத்துங்கள், இழுங்கள்" என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டும், நூல் அறும்போது இணைத்துக் கொண்டுமிருந்தாள். நாராயணன் தடபுடலாக உள்ளே நுழைந்த சத்தங்கேட்டு அவள் தூக்கிவாரி போடப்பட்டவள் போல் எழுந்தாள். "என்ன அத்தான், கொஞ்சமும் உனக்கு 'நாஸுக்' தெரியாமல் போய்விட்டது. என்ன தடபுடல்? சொல்லிவிட்டு உள்ளே வரக்கூடாதா?" என்றாள்.
நாராயணன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். "இல்லை; நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியாது, மன்னியுங்கள்" என்று தடுமாறிக் கொண்டே கூறினான். "தெரியாதா? லக்ஷ்மி அடுப்புள்ளேயே இருக்கிறாளா என்ன?" லக்ஷ்மி தன்னைத் தடுத்ததின் காரணம் இப்பொழுது நாராயணனுக்குப் புலனாயிற்று. இதற்குள் சாரதையின் கணவன், "அது கிடக்கட்டும், நீங்கள் சற்று இங்கே வாருங்கள். உங்களுக்கு நன்றாக நூல் நூற்கத் தெரியுமே? கொஞ்சம் கற்றுக் கொடுங்கள். என் உயிரை வாங்குகிறாள்" என்றார்.
"இதோ வருகிறேன்" என்று நாராயணன் சொல்லி விட்டுத் தன் சட்டைப் பையில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்த கைத் துப்பாக்கியை அலமாரிக்குள் வைத்துப் பூட்டப் போனான். அதற்குள், "அதென்ன அத்தான்" என்று சாரதை கேட்டுக்கொண்டு அருகில் வந்து, "ஓ! கைத்துப்பாக்கியெல்லாம் எப்போதிருந்து? யாரைக் கொல்லப் போகிறாய்?" என்றாள். பின்னர் சற்று தணிந்த குரலில், "குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர் எல்லாருக்கும் கையில் துப்பாக்கிகூட வேண்டுமா என்ன?" என்று கேட்டாள்.
8
நாராயணனின் மூளை இயந்திரம் இப்போது தான் சுழல ஆரம்பித்தது; பளிச்சென்று அவனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு வந்த கடிதங்களில் கண்ட எழுத்து எங்கோ பார்த்த நினைவாயிருந்ததே! சாரதையின் கையெழுத்தல்லவா அது? லக்ஷ்மிக்குச் சாரதை எப்பொழுதோ எழுதிய இரண்டொரு கடிதங்களிலல்லவா அந்தக் கையெழுத்தைப் பார்த்தது? கொஞ்சம் சிரமப்பட்டு மாற்றி ஏமாற்றி விட்டாள்? லக்ஷ்மியின் மீது தான் கொண்ட சந்தேகங்கள் அவ்வளவும் ஆதாரமற்றவை என அறிந்து நாராயணன் ஆனந்தக் கடலில் மூழ்கினான். அவன் ஹிருதயத்தை அமுக்கியிருந்த ஒரு பெருஞ்சுமை நீங்கியது போலிருந்தது.
சட்டென்று அவனுக்கு இன்னொரு சந்தேகம் உண்டாயிற்று. சாரதையின் கணவனுக்கு இந்த விவரங்கள் தெரியுமோ? தெரிந்திருந்தால் எத்தகைய அவமானம்! அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதெப்படி? அவன் எண்ணத்தைக் குறிப்பாக உணர்ந்த சாரதை தன் கணவரைப் பார்த்து, "நூல் நூற்பது இருக்கட்டும். அத்தானிடம் நாம் வந்த காரியத்தைச் சொல்லுங்கள். நேரமாகிவிட்டதே, போக வேண்டாமா?" என்றாள். அவர், "நாராயணன்! தங்களுக்குச் சங்கதி தெரியுமா? எங்கள் வீட்டில் இப்போது 'ஹோம் ரூல்' தான். இவள் வைத்ததே சட்டம். 'இன்று மாலை சினிமாவுக்கு போக வேண்டும்' என்றாள். உடனே புறப்பட்டு வந்தேன். உங்கள் பாடு பாதகமில்லை. அன்றொரு நாள் இவளை இங்கே கொண்டு விட வந்த போதும், உங்களைக் காணோம். (ஓ! அன்று வீட்டு வாசலில் வண்டியில் இருந்தவர் நீங்கள்தானோ? என்ன அசட்டுத்தனம்? என்று எண்ணிக் கொண்டான் நாராயணன்.) லக்ஷ்மியைத் தனியே விட்டு விட்டு நீங்கள் பாட்டுக்குப் போய்விடுகிறீர்கள். போகட்டும். இன்றாவது வந்தீர்களே. வாருங்கள் போவோம்" என்றார்.
அவருடைய வார்த்தைகள் நாராயணனுக்குச் சுருக்கென்று தைத்தன. ஆனால், அவருக்குத் தன் அசட்டுத் தனத்தைப் பற்றி எதுவும் தெரியாதென்று அறிந்து ஆறுதல் அடைந்தான். நன்றியறிதலுடன் சாரதையைப் பார்த்து விட்டு, "ஓ போகலாம், இதோ கீழே போய்விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றான். சாரதை, அவனுடன் போய் மாடிபடியில் வழியை மறித்துக் கொண்டு, "அசட்டு அத்தான்! லக்ஷ்மியிடம் ஒரு வார்த்தையும் சொல்லாதே, அவளிடம் சந்தேகப்பட்டாய் என்று தெரிந்தால் உயிரை விட்டுவிடுவாள். மேலும் என்னை மன்னிக்கவே மாட்டாள்?" என்றாள். "சாரதை உனக்குக் கைம்மாறு என்ன செய்யப் போகிறேன்?" என்றான் நாராயணன். "கைமாறா? நீ என் மீது கோபித்துக் கொள்ளப் போகிறாயோவென்று பயந்தேன். நல்லது, எனக்குக் கைம்மாறு செய்ய விரும்பினால், குதிரைப் பந்தயத்தை மறந்துவிடு. உன் மனைவியைத் தனியே விட்டு விட்டு ஊர் சுற்றவும், சீட்டு விளையாடவும் போகாதே" என்றாள். "இல்லை, இல்லை. ஆண்டவன் ஆணை! இந்த ஒரு மாதமாய் நான் அனுபவித்தது போதும்" என்று கூறிக் கொண்டு நாராயணன் விரைந்து கீழே ஓடினான்.
லக்ஷ்மி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். தன் கணவனின் கடுங்கோபத்துக்கு உரியவளாவதற்குத் தான் செய்த தவறு இன்னதென்பது அவளுக்குப் புலனாகவில்லை. நாராயணன் கீழிறங்கி வந்து அவளருகில் உட்கார்ந்தான். தாமரை இதழ் போன்ற மிருதுவான அவள் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, "லக்ஷ்மி! என்னை மன்னித்து விடு" என்றான். "ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதேயுங்கள்" என்று லக்ஷ்மி அவன் வாயைத் தன் கரத்தினாள் மூடினாள். "ஒரு வருஷமாக உனக்குத் துரோகம் செய்து விட்டேன். பாழுங் குதிரைப் பந்தயமோகத்தில் மூழ்கிக் கிடந்தேன். பணத்தைத் தொலைத்தேன். இன்றுடன் குதிரைப் பந்தயத்துக்குத் தர்ப்பணம் செய்து விடுகிறேன்" என்றான்.
மாடியின் மீது ஸ்ரீநிவாசனும், சாரதையும் காத்துக் காத்துப் பார்த்தனர். லக்ஷ்மியாவது நாராயணனாவது வரும் வழியைக் காணோம். எனவே சினிமாக் காட்சிக்குச் செல்லும் யோசனையை அவர்கள் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் இதன் பொருட்டு அவர்கள் சிறிதும் வருந்தினார்களில்லை. ஸ்ரீநிவாசன் அன்று நன்றாக நூல் நூற்கப் பழகிக் கொண்டார்.
---------------
22. கவர்னர் விஜயம்
ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், "பொய்கையாற்றுத் தேக்கம்" "கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்" என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். செட்டியாருக்கு மயிர் கூச்சல் உண்டாயிற்று. மார்பு சிறிது நேரம் 'பட்' 'பட்' என்று அடித்துக் கொண்டது. சற்று சமாளித்துக் கொண்டு அத்தலைப்புகளின் கீழ் இருந்த செய்தியை முற்றும் படித்தார். அம்மாதம் 20ம் நாள் காலை 7 மணிக்கு கவர்னர் துரை .... ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பொய்கையற்றுத் தேக்கத்துக்கு மோட்டாரில் செல்வாரென்பதும், மற்றும் பலவிவரங்களும் இருந்தன. செட்டியார் உடனே தமது பிரதம காரியஸ்தர் ஜெயராமையரைக் கூப்பிட்டனுப்பினார். காரியஸ்தர் வந்து சேர்ந்ததும், "ஐயரே, சங்கதி தெரியுமா?" என்றார்.
"தெரியாதே! என்ன விசேஷம்?"
"உமக்கேனையா தெரியும்? இதற்குத்தான் பத்திரிகை படியுமென்று உமக்குப் படித்துப் படித்துச் சொல்கிறேன். வருஷத்தில் ரூ.250 செலவழித்து இவ்வளவு பத்திரிகைகள் தருவிக்கிறோமோ, பின் எதற்காக? நான் மட்டும் ஜாக்கிரதையாகப் படித்துக் கொண்டு வராவிட்டால் இப்போது என்ன ஆகியிருக்கும்?"
"விஷயம் என்னவென்று எஜமான் சொல்லவில்லையே?"
"நம்மூருக்கு 20-ந்தேதி கவர்னர் வருகிறார்!"
காரியஸ்தர் இடி விழுந்தது போல் வாயைப் பெரிதாகத் திறந்தார். "ஓ ஓ..." என்ற சத்தத்தைத் தவிர வேறு வார்த்தை அவர் வாயினின்றும் வரவில்லை.
"சரி, மேலே என்ன செய்கிறது?" என்று செட்டியார் கேட்டார்.
"எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட வேண்டியது தான்."
"20-ந்தேதி காலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். நமது மோட்டார் வண்டியில் ஒரு தூசு இல்லாமல் பளபளவென்று தேய்த்து வைக்கச் சொல்லும்."
"பார்த்தீர்களா? நான் பிடிவாதமாக மோட்டார் வண்டி வாங்கத்தான் வேண்டுமென்றது இப்போது எவ்வளவு பயன்படுகிறது?"
"இந்த முன்யோசனைக்காகத்தானே ஐயரே உம்மிடத்தில் எனக்கு இவ்வளவு பிரியம்? இருக்கட்டும். நமது வீட்டு வாசலை அலங்கரிக்க வேண்டாமா?"
"நமது வீதி வழியாகக் கவர்னர் போகிறாரா?"
"நிச்சயமில்லை. ஒரு வேளை ஸ்டேஷனில் இறங்கி நேரே போய்விடலாம். கலெக்டர் துரையிடம் சொல்லி நமது வீதி வழியாய்ப் போக ஏற்பாடு செய்ய வேண்டும்."
"முடியாவிட்டாலும் பாதகமில்லை. எப்படியும் நமது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிடுமல்லவா?"
"அதுவும் உண்மைதான். இருக்கட்டும். கூர்மாவதாரம் ஐயங்காருக்கு இச்செய்தி தெரியாமலிருக்க வேண்டுமே? அவர் தினம் பத்திரிகை என்னைப்போல் கவனமாகப் படிக்கிறாரா?"
"அவருக்குத் தெரிந்தாலும் பாதகமில்லை. தாங்கள் யோசனை செய்ய வேண்டாம். முதலில் அவரிடம் மோட்டார் கிடையாது. பழைய கர்நாடக கோச்சு வண்டியில்தான் அவர் வரவேண்டும். மேலும் தங்களுக்கு நினைவில்லையா? கலெக்டர் தர்பாரிலே அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டபோது, அவருடைய வேஷத்தையும், அவர் திரும்பத் திரும்பச் சலாம் போட்டதையும் பார்த்து எல்லாரும் 'கொல்' என்று சிரிக்கவில்லையா? அந்த மாதிரிதான் இப்போதும் ஆகும்" என்றார் காரியஸ்தர்.
அச்சம்பவத்தை நினைத்துச் செட்டியார் இப்போதும் சற்று நகைத்தார். "இருந்தாலும், நாம் வீடு அலங்காரம் செய்யும் விஷயம் அவருக்குத் தெரியக்கூடாது. எல்லா ஏற்பாடும் செய்து தயாராய் வைத்துக் கொண்டு, 19-ந்தேதி இரவு பத்து மணிக்கு அலங்காரஞ் செய்துவிடுவோம். ஐயங்காரைக் காலையில் எழுந்து விழிக்கும்படிச் செய்யலாம்" என்றார்.
இன்னும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதைப் பற்றிச் செட்டியாரும் காரியஸ்தரும் நீண்ட நேரம் யோசித்தார்கள். மறுநாள் நடக்கும் நகரசபை கூட்டத்தில் கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தைத் தாம் கொண்டு வரப்போவதாகச் செட்டியார் எழுதி நகர சபையின் தலைவருக்கனுப்பினார். பின்னர், காரியஸ்தர் தமது காரியத்தைப் பார்க்கச் சென்றார்.
2
ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் பெரிய வியாபாரி. அவர் வசித்த சிறு பட்டணத்தில் மூன்று மாடி வைத்த மாளிகை அவர் ஒருவருக்கே உண்டு. இளமையில் அவர் ஒரு ஏழையாகவே இருந்தார். முதலில் ஓர் இரும்புக் கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். லக்ஷ்மிதேவியின் கடைக் கண் பார்வை அவர் மீது விழுந்தது. தனிக்கடை வைத்து வியாபாரம் நடத்தவே, செல்வம் நாளுக்கு நாள் பெருகிற்று. மகாயுத்தத்திற்குச் சற்று முன்பு ஏராளமான இரும்புச் சரக்குகள் அவருடைய கடையில் தங்கியிருந்தன. யுத்தம் ஆரம்பித்த பின்னர், இரும்புச் சாமான்களின் விலை இருமடங்கு, மும்மடங்காயிற்று. செட்டியார் ஒரேயடியாக லட்சாதிபதியாகிவிட்டார். பின்னர், கௌரவங்களில் ஆசை விழுந்தது. அடுத்த வீட்டு வக்கீல் ராவ்பகதூர் கூர்மாவதாரம் ஐயங்காரைத் தமது வாழ்க்கை உதாரணமாகக் கொண்டார். நடை, உடை, பாவனைகளில் அவரைப் பின்பற்றினார். ஆங்கில ஆசான் ஒருவரை அமர்த்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். நாகரிகவாழ்க்கைக்குரிய ஆடம்பரங்களனைத்தையும் ஒவ்வொன்றாகக் கைக்கொண்டார். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி விருந்து நடத்தினார். பெருந்தொகை செலவு செய்து நகரசபை அங்கத்தினராகவும் ஆனார். இப்போது அவருடைய மனம் முழுவதும் 'ராவ்பகதூர்' பட்டத்தைப் பற்றி நின்றது. இதனோடு, தாம் ராவ் பகதூர் பட்டம் பெறுவதற்குள், ஐயங்கார், மேல்வகுப்புக்கு, அதாவது திவான் பகதூர் பட்டத்துக்குப் போய்விடாமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் அவருக்குண்டு. எனவே, கவர்னர் தமது ஊருக்கு விஜயம் செய்யும்போது ஐயங்காரை எந்த விஷயத்திலாவது முந்திக் கொண்டு கவர்னரின் கவனத்தைக் கவர்ந்து பட்டம் பெற்றுவிட வேண்டுமென்பது அவருடைய நோக்கம். மேலே குறிப்பிட்ட சம்பாஷணையில் கூர்மாவதாரம் ஐயங்காரின் பெயர் அடிக்கடி அடி பட்டதற்கு இதுதான் காரணமாகும்.
மறுநாள், ஸ்ரீமான் செட்டியார், மகிழ்ச்சி ததும்பிய முகத்துடனே நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார். கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானத்தைப் பிரேரணை செய்து பேசுவதற்கு ஒரு பிரசங்கத்தைத் தயாரித்துத் தமது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருந்தார். அப்பிரசங்கத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதல் பகுதியிலே, இந்தியாவுக்கு ஆங்கில ஆட்சியின் பயனாக ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி வருணித்திருந்தார். இரண்டாவது பகுதியில் கவர்னர் துரையின் பூர்வோத்தரங்கள், குலப்பெருமை, குணச்சிறப்பு மற்றும் கல்யாண குணங்கள் எல்லாவற்றையும் பற்றி விரித்துக் கூறியிருந்தார். மூன்றாம் பகுதியில் கவர்னர் துரை இம்மாகாணத்தில் வந்து பதவியில் அமர்ந்த பின்னர் செய்த செய்யாத எல்லா நன்மைகளையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் மேலான கவனத்துக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது தமது வருந்தத்தக்க கடமையாயிருக்கிறதென்றும், அவருடைய ஆதிக்கத்தில் இராஜ விசுவாசிகளுக்கு ஆதரவு போதாதென்றும், பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் ஆசாமிகளின் யோக்கியதாம்சங்களைச் சற்றுக் கவனித்து கருணை புரியவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இந்தப் பிரசங்கத்திற்கு நகல்கள் எடுத்துத் தமது காரியஸ்தர் மூலம் எல்லாப் பத்திரிகை நிருபர்களுக்கும் அனுப்பி, பிரசங்கம் முழுவதையும் பத்திரிகைகளுக்கு தந்தியில் அனுப்பும் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், கவர்னர் விஜயத்துக்கு மறுநாள் தமது வீட்டுக்கு வந்து தம்மைக் கண்டுபோகும்படியும் சொல்லியனுப்பினார்.
ஆனால், அந்தோ! அவர் நகரசபைக் கட்டிடத்தை அடைந்து ஆசனத்திலமர்ந்ததும், அவர் மகிழ்ச்சி அவ்வளவும் துயரமாகவும், கோபமாகவும் மாறிற்று. ஏனெனில், ராவ்பகதூர் ஐயங்கார் தம்மை முந்திக்கொண்டு கவர்னர் வரவேற்புத் தீர்மானம் கொண்டு வருவதாக முன்னாடியே அறிவித்துவிட்டாரென்றும், ஆதலால் அவருடைய தீர்மானந்தான் முதலில் வருமென்றும் தெரிய வந்தன. ஆனாலும் செட்டியார் தோல்வியைக் கண்டு அஞ்சி விடுபவரல்லர். முயற்சி திருவினையாக்குவதை அவர் தமது வாழ்க்கையில் கண்டறிந்தவர். எனவே ஐயங்காருக்கு அடுத்தாற்போல் தாமே தீர்மானம் அனுப்பியிருந்ததால் ஐயங்காரின் தீர்மானத்தை ஆமோதிக்கும் உரிமையாவது தமக்கு அளிக்க வேண்டுமெனப் போராடி அவர் வெற்றியடைந்தார். அதன்பின் தீர்மானத்தை ஆமோதிக்கும் வாயிலாக, தாம் எழுதி வைத்திருந்த பிரசங்கம் முழுவதையும் படித்துவிட்டார்.
செட்டியார் மறுநாள் தபாலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து வந்ததும் பத்திரிகைகளை உடைத்துப் பிரித்தும் பார்த்தார். அந்தோ! அவர் ஏமாற்றத்தை என்னவென்று சொல்வது? ஒரு பத்திரிகையிலாவது இவருடைய பிரசங்கம் வெளியாகவில்லை. "ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் தீர்மானத்தை ஆமோதித்தார்" என்ற பாடமே எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்பட்டது. செட்டியாரின் பிரசங்கத்தைப் பத்திரிகைகளுக்கு அனுப்பாமலிருப்பதற்கு வேண்டிய வேலை முன்னமேயே ஐயங்கார் செய்துவிட்டது, பாவம் அவருக்குத் தெரியாது.
அவர் உலகிலுள்ள எல்லாரையும், கடவுளையுங்கூடச் சேர்த்துத் திட்டிக்கொண்டிருக்கையில், காரியஸ்தர் வந்து சேர்ந்தார். அவர் கொண்டு வந்த செய்தி செட்டியாருக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது.
"சங்கதி கேட்டீர்களா? கவர்னர் துரை காலை ஏழு மணிக்குத்தான் ஸ்டேஷனுக்கு வரப்போகிறாராம். ஒன்பது மணிக்குப் பொய்கையாற்றுத் தேக்கத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்குத் திட்டம் செய்யப் பட்டிருக்கிறதாம். சுமார் ஐம்பது மைல் இதற்கிடையில் பிரயாணஞ் செய்தாக வேண்டும். ஆதலால் நகரசபை உபசாரப் பத்திரத்தை, நகரமண்டபத்துக்கு வந்தோ அல்லது ரயில்வே ஸ்டேஷனிலேயோ பெற்றுக் கொள்ளுவதற்கு நேரமில்லையாம். இச்செய்தி இப்போதுதான் கவர்னரின் அந்தரங்க காரியதரிசியிடமிருந்து வந்ததாம். தாங்கள் அத்தீர்மானத்தைப் பிரேரணை செய்யாததே நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இப்போது எவ்வளவு அவமானம் பாருங்கள்" என்றார் காரியஸ்தர்.
"ஆ! கூர்மாவதாரம் ஐயங்காருக்கு நன்றாய் வேண்டும். முந்திக் கொள்ளப் பார்த்தாரல்லவா" என்று கூறிச் செட்டியார் உவகையடைந்தார்.
"ஆனாலும், 20-ந்தேதி காலையில் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமல்லவா?" என்று காரியஸ்தர் கேட்டார்.
"சந்தேகமில்லாமல், மற்ற எல்லா ஏற்பாடுகளும் முன்னரே திட்டம் செய்துள்ளபடி நடத்த வேண்டியதே."
3
கடைசியில், குறிப்பிட்ட தினம் வந்தது. சிவகுருநாதஞ் செட்டியார் அதிகாலையிலேயே எழுந்திருந்து ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டார். பின்னர், நிலைக் கண்ணாடியின் முன்பு நின்று அரைமணி நேரம் உடை தரித்துக் கொண்டார். அவருடைய அருமை மனையாள், அருகிலிருந்து துணிகளைத் தட்டிக் கொடுத்தும், நகைகளைத் துடைத்துக் கொடுத்தும் உதவி புரிந்தாள். அலங்காரம் செய்து கொண்டு முடிந்ததும், காரியஸ்தரை விட்டு மோட்டாரைக் கொட்டகையிலிருந்து கொண்டு வரச் சொன்னார். செட்டியாரின் மனைவி வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். நல்ல சகுனமான தருணத்தில் நல்ல நேரத்தில் செட்டியார் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு மோட்டாரில் அமர்ந்தார். மோட்டார் வண்டியின் முனையில் பெரியதொரு யூனியன் ஜாக் கொடி அழகாக ஆடிக்கொண்டிருந்தது. அடுத்த ஐயங்கார் வீட்டைப் பார்த்ததும், செட்டியாருக்குக் கொஞ்சம் 'சொரேல்' என்றது. தம்மைப் போலவே ஐயங்காரும், முதல் நாள் மாலை வரை பேசாமலிருந்துவிட்டு, இரவுக்கிரவே வீட்டு வாசலைத் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரித்திருப்பதைக் கண்டார். இதற்குள் மோட்டார் வண்டி புறப்பட்டு விட்டபடியால், அதிகமாகச் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் வண்டி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. தமக்கு முன்னால் ஐயங்கார் அங்கு வந்து தயாராகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உள்ளுக்குள் அவர்களிடையே இவ்வளவு போட்டி நடந்து கொண்டு வந்ததாயினும் வெளிக்கு அவர்கள் அத்தியந்த நண்பர்கள். எனவே செட்டியார் "என்ன ஐயங்கார்வாள்! ஏது இவ்வளவு அதிகாலையில் விஜயம் செய்தது?" என்று கேட்டார். "இங்கு ஒரு சிறு காரியமாக வந்தேன். தாங்கள் சென்னைப் பட்டணம் போவதாகக் கேள்விப்பட்டேன். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்கு வந்தீர்களோ?" என்று கேலி செய்யும் பாவனையாக ஐயங்கார் வினவினார். "அதிருக்கட்டும். தாங்கள் வீட்டு வாசலை இரவுக்கிரவே அலங்காரம் செய்திருப்பதாகக் காண்கிறதே! என்ன விசேஷம்?" என்றார் செட்டியார். "தாங்கள் வீட்டு வாசலிலும் இன்று காலையில் தோரணங்களைப் பார்த்தேன். தங்களுக்கு இன்று சஷ்டியப்த பூர்த்தி விவாகம் என்று சொன்னார்கள். அப்படித்தானோ" என்று கிருதக்காய்க் கேட்டார் ஐயங்கார். செட்டியார் இதற்கு கடுமையாகப் பதில் சொல்ல எண்ணினார். ஆனால் அதற்குள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கூட்டம் வந்து நின்றுவிட்டது. நகரசபை அங்கத்தினர்களும், சில வக்கீல்மார்களும், உத்தியோகஸ்தர்களும், பந்தோபஸ்துக்காக வந்த போலீஸ்காரர்களும், பகிஷ்காரப் பிரசாரம் செய்ய வந்து ஏதோ இந்தத் தமாஷையும் கொஞ்சம் பார்க்கலாமே என்று உள் நுழைந்த தொண்டர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த இரகசியப் போலீசாரும், புகைவண்டி நிலைய மேடையில் எள்ளுப் போட்டால் கீழே விழாத வண்ணம் நெருங்கிக் கூடினார்கள். எல்லாரும் கண் பூத்துப் போகும்படி ரயில் பாதையை நோக்கிய வண்ணமாய் நின்றார்கள்.
கடைசியாக, கவர்னர் துரையின் ஸ்பெஷல் வண்டி வந்து சேர்ந்தது. போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்கும் அலைந்து அமைதியை நிலைநாட்டினார்கள். கவர்னர் பிரபு வண்டியை விட்டுக் கீழிறங்கினார். அவர் போவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது. என்னென்னவோ மனோராஜ்யம் செய்துகொண்டு அங்கு வந்திருந்தவர் அனைவரும், அந்த வினாடியில் கெட்டியாக மூச்சுக்கூட விடாமல், மார்பு படபடவென்று அடித்துக்கொள்ள மிக்க ஆவலுடன் அவரை நோக்கி நின்றனர். எங்கே துரை முகமெடுத்துக்கூடப் பாராமல் போய்விடுவாரோ என்று எண்ணி அவர்கள் நடுநடுங்கினார்கள். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவர் உணர்ச்சி மேலீட்டினால் மூர்ச்சையாகி விட்டாரென்றும், ஆயினும் மூர்ச்சை நிலையிலும் அவருடைய தீவிர இராஜபக்தியின் காரணமாக, கீழே விழுந்து குழப்பம் விளைவியாமல் தூணைப் பிடித்துக் கொண்டு மறைவில் நின்று கொண்டிருந்தாரென்றும், பின்னால் தெரியவந்தன.
நிற்க, துரை கீழிறங்கியதும், தொப்பியை மரியாதைக் குறியாகக் கையில் எடுத்துக்கொண்டு, ஒரு மூலையிலிருந்து வரிசையாக எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்தார். அங்கிருந்தோர் அனைவரும், தங்கள் வாழ்வின் இலட்சியம் நிறைவேறி விட்டதென்னும் எண்ணங் கொண்டனர். அவருடைய பார்வை தம்மீது விழக்கூடிய கணத்திலும் குறைந்த நேரத்தில் தாம் சலாம் செய்யத் தவறி விட்டால் என்ன செய்வதென்று எல்லாருக்கும் பயம். எனவே, முதலில் அவர் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து, அவர் கண்கள் கடைசி வரை சென்று முடித்துப் பிறகு அவர் நடக்கத் தொடங்கிய வரையில், அங்கிருந்தோர் அனைவரும் சலாம் செய்து கொண்டேயிருந்தனர். மேலக் காற்று, வீசி அடிக்கும்போது மரங்கள் நிறைந்த தோப்பில் எவ்வாறு கிளைகள் இடையீடின்றி ஆடி அசைந்து கொண்டிருக்குமோ அவ்வாறு ஐந்து நிமிஷ நேரத்திற்கு அங்கிருந்தோர் அனைவருடைய கரங்களும் நெற்றிக்குச் சென்று கீழே வந்த வண்ணமாயிருந்தன.
இவ்விதம் ஒரு முறை இராஜ பார்வை பார்த்து விட்டுக் கவர்னர் துரை வேகமாக நடந்து போய் வெளியில் தயாராய் நின்ற மோட்டாரில் ஏறிச் சென்றார். அவரைத் தரிசிக்க வந்து கூடியிருந்தோர் எல்லோரும் தங்கள் தங்கள் இல்லங்களுக்கு ஏகினர். ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியாரும் சௌக்கியமாக வீடு போய்ச் சேர்ந்தார். உடனே அவருடைய மனைவி, குழந்தைகள், காரியஸ்தர், வேலைக்காரர்கள் எல்லாரும் சூழ்ந்து கொண்டு "என்ன நடந்தது?" என்று ஆவலுடன் கேட்டார்கள். செட்டியார் சற்று இளகிய மனம் கொண்டவர். இவ்வளவு பேருடைய உள்ளங்களையும் அவர் வீணில் புண்படுத்த விரும்பவில்லை. எனவே அவர், "இன்றைய விசேஷம் இவ்வளவு நன்றாக நடந்தேறியதற்காகக் குருக்களைக் கூப்பிட்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும்" என்றார். செட்டியாரின் மனைவி முதலியோர், இன்னும் மிகுந்த ஆவலுடன், "கவர்னர் தங்களுடன் பேசினாரா? தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? விசேஷம் என்ன நடந்தது?" என்று ஒரே மூச்சாகக் கேட்டனர். செட்டியார் சொன்னதாவது:- "கவர்னர் வண்டியை விட்டுக் கீழே இறங்கியதும், ஜில்லா கலெக்டர் முதலிய ஒருவர் இவருடன் சற்றுப் பேசிவிட்டு, நேரே என்னிடம் வந்தார். நான் கொஞ்சமாவது பயப்பட்டேன் என்கிறீர்களோ? இல்லவே இல்லை. என்னருகில் வந்ததும் துரை என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு 'செட்டியார்வாள்! தங்களைப் பற்றி நிரம்பவும் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களும் தாங்கள் பந்து மித்திரர்களும் சுகந்தானே?' என்று கேட்டார். உங்களுக்குத்தான் தெரியுமே? நான் பேச ஆரம்பித்தால் இலேசில் விடுகிற பேர்வழியா? துரையவர்களே! தங்கள் ஆட்சியிலே எவ்வித குறைவுமின்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஒரு விஷயத்தில்தான் தங்கள் அரசாங்கத்தின் மீது குறை சொல்ல வேண்டியதாயிருக்கிறது. பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் மட்டும் தாங்கள் தராதரங்களைக் கவனித்து வழங்குவதில்லை என்று நான்..."
"ஐயையோ! இவ்வளவு கடுமையாய் பேசி விட்டீர்களே? துரை கோபித்துக் கொள்ளவில்லையா?" என்று காரியஸ்தர் பரிந்து வினவினார்.
"ஹும் கோபித்துக் கொள்ளவா? உனக்கு என்ன தெரியும்? நான் இவ்வாறு சொன்னவுடன் கவர்னர் துரை என் கையை மீண்டும் பிடித்துக் கொண்டு 'செட்டியார்வாள், இந்த விஷயத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக நிரம்ப வந்தனம். உடனே கவனித்துத் தக்கது செய்கிறேன்' என்று சொன்னார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் கரகோஷம் செய்தார்கள். ஆனால் நமது ராவ்பகதூர் ஐயங்காரைப் பார்க்க வேண்டுமே? அவர் முகத்தில் ஈயாடவில்லை. அவரை ஒருவரும் கவனிக்கவில்லை. ஒரு மூலையில் பேசாமல் நின்று கொண்டிருந்தார்" என்று செட்டியார் சரமாரியாகப் பொழிந்தார்.
அதே சமயத்தில் ராவபகதூர் கூர்மாவதாரம் ஐயங்கார் வீட்டு அந்தப்புரத்துக்கு யாராவது சென்று ஒட்டுக் கேட்டிருந்தால், ஸ்ரீமான் ஐயங்கார் தமது அருமைக் காதலியிடம், "ஆனால் சிவகுருநாதஞ் செட்டியாரைக் கவர்னர் முகமெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பாவம்! சிவனே என்று இவர் மூலையில் நின்று கொண்டிருந்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்" என்று கூறி முடித்ததும் காதில் விழுந்திருக்கும்.
-------------
23. நம்பர் 888
இல்லையென்றால் நான் சொல்லுகிறேன். கேளுங்கள். "உமக்கெப்படித் தெரியும்?" என்று கேட்பீர்களோ? சரி அந்த விவரத்தை முதலில் கூறுகிறேன். மேற்படி சிறைச்சாலையில் அதே பிளாக்கில் 11-வது அறையில் நான் சில காலம் வாசம் செய்ய நேரிட்டது. ஐயையோ! இப்போது இதற்குக் காரணம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கதையை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். என்னைச் சிறைக்கனுப்பியது யாதெனில், ஒரு கேள்விக்கு உண்மையாகப் பதில் சொன்னதுதான். நம்ப மாட்டீர்களா? ஐயன்மீர்! இது கலியுகம் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்துகிறேன். கேள்வி கேட்டவர், ஒரு வெள்ளைக்கார துரை. அவர் உன்னத ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நானோ, கைதியின் கூண்டில் நின்று கொண்டிருந்தேன். என்னைவிட வயதில் அவர் இரண்டொரு வருஷமே பெரியவராயிருப்பார். இந்நிலையில் எனக்கு ரோசமாயிராதா? ஆம் பாரத நாட்டின் கௌரவத்தைக் காக்கும் பொறுப்பு முழுவதும் அப்போது என் தலைமீது சுமந்திருந்ததாக எனக்கெண்ணம்.
"ஷெடிஷன் (அரசாங்கத்துவேஷம்) என்பதற்கு உமக்குப் பொருள் தெரியுமா?" என்று துரை கேட்டார். "ஓ நன்றாகத் தெரியும், துரையே! சென்ற ஒரு வருஷகாலமாக அந்த வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்" என்றேன். நுணலும் தன் வாயால் கெடும்! அதுதான்! "தெரியாது" என்று சொல்லியிருந்தால், ஒருக்கால், துரை 'பாவம் ஒன்றுந்தெரியாத சிறுவன்' என்றெண்ணி என்னை விட்டிருக்கலாம். உண்மை கூறியதின் பயன், "ஒரு வருஷம் கடுங்காவல்". என் மீது குற்றமில்லை, ஐயா! எல்லாம் காலத்தின் கூற்று. 1922-ம் வருஷ ஆரம்பம், பர்தோலி முடிவுக்கு முன்னால். மேலும், என் ஜாதகத்தில் காராகிரகப் பிரவேசம் என்று நன்றாய்ப் போட்டிருப்பதாக வெளியே வந்த பிறகு ஜோதிடர்கள் சொன்னார்கள்.
நல்லது; முத்தலைநகரின் மத்திய சிறைச் சாலையில் 9-வது பிளாக்கில் 11-வது அறைக்கு நான் வந்தது எப்படி என்பது இப்போது விளங்கி விட்டதல்லவா? இனி முதலில் விட்ட இடத்தில் தொடங்கி, அடுத்த 12-வது அறையிலிருந்த நம்பர் 888-ஐப் பற்றிக் கூறுகிறேன். 888-க்குப் பூர்வாசிரமத்தில் கேசவலு நாயுடு என்று பெயர். அவரைப் பற்றி அச்சிறைச்சாலை வார்டர்களும் மற்றக் கைதிகளும் என்னவெல்லாமோ சொன்னார்கள். அவர் பெரிய வேஷதாரியென்றும், ஏராளமான பணத்தை எங்கேயோ புதைத்து வைத்து விட்டு இங்கே ஏழை போல் நடிக்கிறாரென்றும் கூறினார்கள். விடுதலையாகப் போகும் கைதிகளில் பலர் அவரிடம் வந்து பணம் புதைத்து வைத்திருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கெஞ்சிக் கூத்தாடுவதுண்டு. அவர் "இல்லை" என்றால் யாரும் நம்புவது கிடையாது. இவையெல்லாம் என்னுடைய ஆவலை நிரம்பக் கிளப்பிவிட்டன. எனவே, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, தாழ்வாரத்தில் நாங்கள் இருவரும் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய வரலாற்றை விசாரித்தேன். என் வரையில், அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி என்று எண்ணியிருந்தேன். பொய் சொல்லக் கூடியவரல்லர் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் தமது வரலாற்றைக் கூறிய பான்மையும் அப்படியேயிருந்தது. எனவே அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நம்பினேன். ஆனால், அவர் கூறிய வண்ணமே இங்கே கதை சொல்லுந்திறமை எனக்கில்லை; நான் ஏகசந்தக்கிராகியல்லன். மேலும் சில விஷயங்களை எழுதுதலும் நன்றாயிராது. முக்கியமாக, சிங்கப்பூர் நாயுடுவுக்கு அவர் கொடுத்த சாபங்கள் பத்திரிகையில் எழுதுவதற்குத் தகுதியானவையல்ல. எனவே என்னுடைய சொந்த நடையில் கேசவலு நாயுடு வரலாற்றைச் சுருக்கித் தருகிறேன்.
மேல்குடி கிராமத்தில் நாயுடுமார் வீதிதான் முக்கியமானது. ஊரில் பெரிய பணக்காரர்களும் மிராசுதாரர்களும் நாயுடுமார்களே. சிலர் பரம்பரைச் செல்வர்கள். சிலர் முயற்சியினால் பணக்காரரானவர்கள். ஒருவர் மளிகைக் கடை வைத்துப் பைசாவுக்குப் பைசா லாபம் சேர்த்து விற்றுப் பணக்காரர் ஆனார். மற்றொருவர், லேவாதேவி செய்து 1.50 வட்டிக்குக் குறையாமல் வாங்கிப் பெரிய முதலாளி ஆனார். இன்னொருவர், மலாய் நாட்டுக்குச் சென்று பெரும் பொருள் ஈட்டி வந்தார். இப்படிக் கண்ணெதிரில் எல்லாரும் பணக்காரர் ஆவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கேசவலு நாயுடு மட்டும், அன்றிருந்த நிலைக்கு அழிவின்றி இருந்தார். பாவம்! அவர் மீது தவறில்லை. பணம் சேர்ப்பதற்கு அவர் கைக்கொண்ட முறை அத்தகையது. அதுதான் விவசாயம். விவசாயத்தொழில் நடத்திப் பணக்காரன் ஆனவன் எங்கேயாவது உண்டா? கொஞ்ச காலம் குத்தகை எடுத்துச் சாகுபடி செய்து பார்த்தார். சொந்த நிலத்தின் வருமானமும் அதில் அடித்துக் கொண்டு போவதாயிருந்தது. பின்னர் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, தாமுண்டு தமது நிலமுண்டு என்று இருந்து வந்தார். அவருக்குப் பணக்காரராக ஆசையில்லாமலில்லை. அடுத்த வீட்டுக்காரர் எல்லாரும் பணக்காரர் ஆகி வருகையில், தாம் மட்டும் ஆசைப்படாமலிருக்க அவர் என்ன, சந்நியாசியா? நேற்றுக் கஞ்சிக்கு இல்லாதிருந்தவர்கள் இன்று மூன்று கட்டு வீடு கட்டிவிட்டார்கள் என்னும் விஷயத்தை அவர் மனைவி, அடிக்கடி நினைவூட்டி வந்தாள். "பேசாமலிரு, அதிர்ஷ்டம் வரும்போது, தானே வரும்" என்று சமாதானம் சொல்லி வருவார். இப்படிச் சொல்லிச் சொல்லி ஏதேனும் ஒரு வழியில் தமக்கு அதிர்ஷ்டம் வந்தே தீரவேண்டுமென்று அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அதிர்ஷ்டம் வரக்கூடிய வழிகள் பற்றி அவர் ஓயாது சிந்திப்பார். கடைசியாக அவருடைய யோசனை "புதையல்" என்பதில் வந்து முற்றுப்புள்ளிப் போட்டு நின்றது. அதற்குமேல் ஓடக் கண்டிப்பாக மறுத்துவிட்டது. அதிர்ஷ்டம் தம்மிடம் வந்துசேர வேறு வழி எதுவும் இருப்பதாகப் புலப்படவில்லை. நதிப்படுகையிலும், நாணற்காட்டிலும், வீதியில் வழி நடக்கையிலும், வயல் வரப்பிலும், கொல்லை அவரைக் குழியிலும், வீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு நேர் கீழேயும், தோண்டியிலும், குடத்திலும், தவலையிலும், பெட்டியிலும் அவர் புதையல் கண்டெடுத்துக் கலகலவென்று சிரித்துத் தூக்கத்திலிருந்து விழித்த இரவுகள் அனேகம்...
இங்ஙனமிருக்கையில், சிங்கப்பூர் நாயுடு என்ற ஒருவர் மேல்குடிக்கு வந்து சேர்ந்தார். நாயுடுமார் தெருவின் ஒரு கோடியிலிருந்த பெரிய தனி வீடு ஒன்றை வாடகைக்கு வாங்கிக் கொண்டு அவர் வாசம் செய்யத் தொடங்கினார். அவருடன் வீட்டில் சமையற்காரனைத் தவிர வேறு யாருமில்லை. மனிதர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவமுடையவரல்லர். எனவே அவர் ஏன் அங்கு வந்து தனியாக இருக்கிறார் என்பது குறித்துப் பலர் பல காரணங்கள் சொன்னார்களாயினும், ஒருவருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் நாயுடு சோதிட சாஸ்திரத்தில் மிக வல்லவர் என்று கேள்விப்பட்ட பின்னர், கேசவலு நாயுடுவின் மனம் எப்படியேனும் அவருடன் நட்புக் கொள்ள வேண்டுமென்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் கடைத் தெருவில் சிங்கப்பூர் நாயுடு, "இந்த ஊரில் கறிகாய்கள் ஒன்றும் அகப்படுவதில்லையே" என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேசவலு நாயுடு வீட்டுக் கொல்லைக் கறிகாய்கள் அந்த ஊரில் பிரசித்தி பெற்றவை. எனவே அருகிலிருந்த அவர், மறுநாள் காலையில் கறிகாய்கள் கொண்டு வருவதாக வாக்களித்தார். இதன் மூலம் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது; பின்னர் அறிமுகம் நட்பாக முதிர்ந்தது. ஒரு நாள் சோதிடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கேசவலு நாயுடு, "ஒருவனுக்குப் புதையல் கிடைக்குமா கிடைக்காதா என்று சோதிடத்தில் பார்க்க முடியுமா" என்று கேட்டார். "கண்டிப்பாக முடியும்" என்று பதிலளித்தார் சிங்கப்பூர் நாயுடு.
இதற்குச் சில தினங்களுக்குப்பிறகு ஒருநாள் சிங்கப்பூர் நாயுடு கேசவலு நாயுடு வீட்டுக்கு வந்திருந்தபோது பின்னவர் தமது ஜாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். சிங்கப்பூர் நாயுடு வெகு நேரம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுக் கூறலுற்றார்:- "இந்த ஜாதகனுக்கு வாய்த்த மனையாள் நல்ல உத்தமி. பெண் குழந்தைகள் நாலு; ஆண் பிள்ளைகள் இரண்டு. தொழில் விவசாயம். அவ்வளவு லாபகரமில்லை. ஆனால், சுக ஜீவனம். குழந்தைகளில் ஒன்று இறந்து போயிருக்க வேண்டும். இவையெல்லாம் உண்மைதானா?"
"உண்மை, உண்மை. அவ்வளவும் உண்மை."
"நல்லது! அப்படியானால் தைரியமாகச் சொல்லுகிறேன், இந்த ஜாதகத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது."
கேசவலு நாயுடுவின் ஹிருதயம் 'பட்பட்' என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. "அது என்னவோ?" என்றார்.
"இல்லை, அதைச் சொல்லாமலிருப்பதே நல்லது. சொன்னால் நீர் நம்பப் போவதில்லை. சொல்லிப் பயனென்ன?"
"அப்படிச் சொல்லக்கூடாது. தயவு செய்து தெரிவிக்க வேண்டும்! சோதிடத்தில் எப்போதுமே எனக்கு நம்பிக்கையுண்டு. அதுவும் இப்போது முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது."
"நல்லது; நீர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லிவிடுகிறேன். இந்த ஜாதகனுக்குப் புதையல் ஒன்று அகப்பட்டே தீரவேண்டும். வேண்டாமென்று சொன்னாலும் விடாது."
கேசவலு நாயுடுவின் நெஞ்சம் ஒரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. "இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள், ஐயா! எங்கே எப்போது அகப்படும்? அவ்வளவு தூரம் சொல்ல முடியுமா?" என்று அவர் கேட்டார். இந்தச் சோதிடம் மட்டும் பலித்தால் கொல்லையில் இளங்கத்திரிப் பிஞ்சாக ஒரு கூடை பறித்துச் சிங்கப்பூர் நாயுடுவுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு சிறு நினைவு, அலை வீசிக் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்தில் இடையே தோன்றிற்று.
"கொஞ்சம் சொல்லலாம். புதையல் கிடைக்க வேண்டிய காலம் 42-வது வயது. அதாவது இந்த வருஷந்தான். அனேகமாகச் சொந்த வீட்டிலேயே கிடைக்கலாம். ஜலசம்பந்தமாகக் காணப்படுகிறது. அதன் பொருள் எனக்கு நன்றாக விளங்கவில்லை."
(மேற்சொன்ன சம்பாஷணையெல்லாம் தெலுங்கு மொழியில் நடந்தவை. எனக்கு கேசவலு நாயுடு கூறிய போது பாதி தெலுங்கும் பாதி தமிழுமாகக் கலந்து சொன்னார். நேயர்களின் நன்மைக்காக நான் முற்றும் தமிழ்ப்படுத்தி எழுதியிருக்கிறேன்.)
அன்றிரவு கேசவலு நாயுடு வழக்கம்போல் எட்டரை மணிக்குப் படுத்துக் கொண்டார். படுத்தவுடன் தூங்கிப் போகும் வழக்கமுடைய அவருக்கு இன்று தூக்கமே வரவில்லை. சிங்கப்பூர் நாயுடு சோதிடம், ஜாதகம், புதையல், 42-ஆம் வயது, வீட்டுக்கொல்லை, மண்வெட்டு, குழிதோண்டுதல் ஆகிய இவை அவர் உள்ளத்தில் மாறி மாறி இடம் பெற்று வந்தன. கடைசியில், சுமார் பதினொரு மணிக்கு அவர் உறுதியோடு எழுந்தார். அவர் மனைவி குழந்தைகள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மண் வெட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றார். கொல்லையில் கிளி கொஞ்சிற்று. பெரும் பகுதியில், கத்திரி, கொத்தவரை, வெண்டை, அவரை, புடல் முதலியவை செழித்து வளர்ந்திருந்தன. பயிர் எதுவும் செய்யப்படாமல் ஒரு மூலை மட்டும் கிடந்தது. கேசவலு நாயுடு அந்த இடத்துக்குச் சென்று, மண் வெட்டிப் பிரயோகம் செய்யலானார். "முயற்சியின் பயனாகக் கிடைப்பதானால் பிரயாசைப்படவேண்டும். புதையல் அதிர்ஷ்டவசத்தினால் கிடைப்பதல்லவா? எனவே, தொட்ட இடத்தில் கட்டாயம் அகப்பட்டே தீர வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே, தரிசாகக் கிடந்த பகுதி முழுவதையும் ஒரு முறை கொத்தினார். பின்னர் சோதிடர் "ஜல சம்பந்தம்" இருப்பதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எனவே, அம்மூலையை இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொண்டு ஒரு பகுதியை ஆழமாகத் தோண்ட ஆரம்பித்தார். இடுப்பு ஆழம் தோண்டிவிட்டார். புதையலுக்கு அறிகுறி எதையும் காணோம். இதற்குள் பொழுது விடியும் தருணம் ஆகிவிட்டது. அப்படியே குழியை விட்டுப் போனால், காலையில் அடுத்த வீட்டுக்காரன் ஏதேனும் நினைத்துக் கொள்வானென்ற பயம் உண்டாயிற்று. வெட்டிய மண்ணைத் திருப்பிக் குழியில் தள்ளி மூடினார். சுமார் ஐந்து மணிக்கு உள்ளே போய்ப்படுத்துக் கொண்டார்.
என்றுமில்லாத வண்ணம் காலை எட்டு மணிவரை கேசவலு நாயுடு தூங்குவதைக் கண்டு அவர் மனையாள் பேராச்சரியத்துடன் அவரைத் தட்டி எழுப்பினாள். அவர் எழுந்து கொல்லைப்புறம் போனாரோ, இல்லையோ அடுத்த வீட்டுக் கொல்லையில், தயாராய்க் காத்துக் கொண்டிருந்த பெருமாள் நாயுடு, "என்ன நாயுடுகாரு? அந்த மூலையை எப்போது கொத்தினீர்? நேற்று சாயங்காலம் வரை கொத்தியிருக்கக் காணோமே?" என்று கேட்டார். கேசவலு நாயுடுவுக்கு அவர் மீது அநியாயக் கோபம் வந்தது. முகத்தை வேறு புறமாய்த் திருப்பிக் கொண்டு "இரவில் தூக்கம் வரவில்லை. நல்ல நிலவாயிருந்தபடியால் சிறிது நேரம் வேலை செய்தேன்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளே வந்தார். அமாவாசை அடுத்த நாள் என்பது அப்போது நினைவு வந்தது! 'என்ன அநியாயம்! அவனவன் தன் காரியத்தை பார்த்துக் கொண்டு போனாலென்ன?' என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார்.
அன்றிரவு எட்டரை மணிக்கு வழக்கம்போல் கேசவலு நாயுடு பாயில் படுத்தார். முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்திருந்தபடியால், நிரம்பக் களைப்பாயிருந்தது. நாளைக்குத்தான் பார்த்துக் கொள்ளலாமே என்று எண்ணினார். அப்போது இன்னொரு நினைவு குறுக்கே வந்தது. 'சிங்கப்பூர் நாயுடு நல்லவர்தான், இருந்தாலும், இந்தக் காலத்தில் யாரை நம்புவது? அவருக்கு நன்றாய்த் தெரியும்... நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது... ஆனால், ஜாதகத்தின்படி புதையல் நமக்குத்தானே...' இப்படி எண்ணமிட்டுக் கொண்டே அவர் கண்ணை மூடி நிம்மதியிலாழ்ந்தார். சிங்கப்பூர் நாயுடு தோளில் மண் வெட்டியுடன் கொல்லையில் நிற்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார். உடனே சென்று, கொல்லைக் கதவைத் திறந்தார். என்ன அதிசயம்! கிணற்றங்கரையின் அருகிலிருந்து யாரோ ஒரு மனிதன் ஓடினான். கேசவலுநாயுடு பிரமித்து நின்ற ஒரு கணத்துக்குள் அவன் மறைந்து விட்டான். அமாவாசை இருளாதலின் ஆசாமி நன்றாகப் புலனாகவில்லை? தெரிந்த அளவுக்கு, சிங்கப்பூர் நாயுடுவாகவே தொன்றிற்று. மனத்திற்குள் அவரைச் சபித்துக்கொண்டு உள்ளே வந்து மண் வெட்டியை எடுத்துக் கொண்டு போனார். கேசவலு நாயுடு தரிசாகக் கிடந்த மூலையில், தோண்டாமல் விட்ட பகுதியை இப்போது தோண்டத் தொடங்கினார்.
அர்த்த ராத்திரியாயிற்று. எங்கோ தூரத்தில் நரி ஊளையிட்டது. முறை வைப்பதுபோல் வாயிலில் நாய் குரைத்தது. அடுத்தாற்போல், பக்கத்து விட்டுப் பெருமாள் நாயுடுவின் இருமல் சத்தம் கேட்டது. அடுத்டு 'கடகடா கடகடா' என்று சத்தம் கேட்டது. சரி, அந்தப் பாவி கொல்லைக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டிருக்கிறான். அடுத்த நிமிஷத்தில் கதவைத் திறந்து கொண்டு வருவான். குழி தோண்டுவதைப் பார்த்தானோ, புதையல் அகப்பட்டாலும் உபயோகமில்லை. கேசவலு நாயுடுவுக்கு அந்தக் கணத்தில் அடிவயிற்றில் புளியைக் கரைத்தாற் போலிருந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கிணற்றண்டை சென்று அதனுள்ளே இறங்கத் தொடங்கினார். பாதிக்கிணறு இறங்கினதும், "யாரங்கே" என்று சத்தம் கேட்டது. பீதி அதிகமாயிற்று. இன்னும் விரைவாக இறங்கித் தண்ணீரில் மெதுவாக அமிழ்ந்தார். கிணற்றில் மார்பளவு தண்ணீர் இருந்தது.
சுமார் பதினைந்து நிமிஷத்துக்குப் பின்னர், பெருமாள் நாயுடு திரும்பக் கதவைத் தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டது. கிணற்றின் மத்தியில் நின்ற கேசவலு நாயுடு கரை ஏறுவதற்காகச் சுவர் ஓரமாய் அடிஎடுத்து வைத்தார். காலில் ஏதோ தட்டுப்பட்டது. பித்தளைத் தவளையின் விளிம்புபோல் காணப்பட்டது. அந்தக் கணத்தில் அவருடைய மூளை கறகறவென்று சுழன்றது. ஆ! ஜல சம்பந்தம்! இப்போதல்லவா விளங்குகிறது! நாயுடுகாரு அதிக வேகமாக மேலேறினார். பரபரப்பினால் கால்கள் நடுங்கின. தட்டுத்தடுமாறி ஏறினார். ஜலம் இழுக்கும் தாம்புக் கயிற்றின் ஒரு முனையை ஒரு கட்டையில் கட்டி விட்டு இன்னொரு முனையுடன் மறுபடியும் கிணற்றிலிறங்கித் தவலை விளிம்பில் கட்டினார். சில நிமிஷங்களுக்கெல்லாம் தவலை வெளியே வந்தது. அவ்வளவு கனமாக இல்லை. ஆயினும் நாயுடுகாரும் பரபரப்புடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று கொல்லைக் கதவைப் போய்ப் சாத்திவிட்டு வந்தார். மனைவி மக்கள் நன்கு தூங்குகிறார்களா என்று பார்த்து விட்டு தவலையின் வாய் மூடியைப் பெயர்த்தெறிந்தார். உள்ளே கையை விட்டார். காகிதங்கள்! வயிறு, பகீர் என்றது. ஒரு பிடி வெளியே எடுத்தார். ஓ! ஒரு நிமிஷம் அவருக்கு மூச்சு நின்று போயிற்று. அவ்வளவும் நோட்டுகள்! ரூபாய் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள்!
மொத்தம் எண்ணாயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபாய்க்கு நோட்டுகள் இருந்தன. தவலையில் திரும்பப் போட்டுப் பெரிய மரப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். பின்னர் படுத்துக் கொண்டார். தூங்கவில்லையென்று சொல்ல வேண்டுமா? அவருடைய எண்ணங்கள் பின்வருமாறு ஓடிக் கொண்டிருந்தன:- "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும். வேளை வரும்போது அதிர்ஷ்டம் தானே வரும்:- அடுத்த வீட்டுக்காரன் வந்தல்லவா கிணற்றில் இறங்கும்படி செய்தான்? - காலம் வரவேண்டுமென்று இத்தனை நாளாகக் கிணற்றில் காத்துக் கொண்டிருந்தது. நாலு நாளைக்கு முன் கும்பி எடுத்தபடியால், விளிம்பு மண்ணுக்கு மேலே வந்திருக்க வேண்டும். நல்ல வேளை, ஆட்களுக்கு தெரியாமற் போயிற்று. சிங்கப்பூர் நாயுடு கிணற்றங்கரையில் நின்றதன் காரணம் விளங்குகின்றது. நாளையே நேரில் கொண்டு போய்ப் பணங் கொடுத்துவிட்டு வரவேண்டும்?"
கேசவலு நாயுடுவின் மூத்த புதல்வன் வேணு சமீபத்தில் இருந்த பட்டணத்தில் ஐந்தாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தான். நாயுடுகாருக்குப் புதையல் அகப்பட்ட நான்காம் நாள் வேணு நாலைந்து போலீஸ் ஜவான்கள் புடைசூழ, மேல்குடிக்கு வந்ததைக் கண்டு அவ்வூர் ஜனங்கள் அதிக ஆச்சரியப்பட்டார்கள். கேசவலு நாயுடு கள்ளநோட்டு தயாரித்து வெளியிட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். வீட்டைப் பரிசோதித்ததில் எண்ணாயிரத்து எழுநூறு ரூபாய்க்குக் கள்ள நோட்டுகள் கிடைத்தன. கிணற்றில் கள்ள நோட்டுத் தயாரிக்கும் சில இயந்திரங்கள் அகப்பட்டன. சிங்கப்பூர் நாயுடுவும் அவருடைய பரிசாரகனும் இதற்கு முதல் நாளே ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் பிறகு அகப்படவேயில்லை.
கேசவலு நாயுடுவுக்கு கண்கள் திறந்தன. 'பொன் வெள்ளிப் புதையல் அகப்பட்டதாகக் கேள்விப்பட்டதுண்டு. எங்கேயாவது நோட்டுப் புதையல் கிடைக்குமா? ஆசையினால் குருடாகிப்போனோம்' என இப்போது உணர்ந்தார். தப்புவதற்கு வழியில்லையென்று அவருக்குத் திட்டமாகத் தெரிந்தது. 'இனி மதி மோசம் போகக்கூடாது. நாம் சிறைக்குப் போவதென்னவோ நிச்சயம். மனைவி மக்களாவது உள்ளதை வைத்துக்கொண்டு இருக்கட்டும்' எனத் தீர்மானித்தார். எனவே வக்கீல் வைத்து வாதாடவில்லை. தமக்குத் தெரிந்த அளவு உண்மையைக் கூறிவிட்டு, 'சாட்சியில்லை, வக்கீல் இல்லை' என்று சொல்லிவிட்டார்.
மேல்குடி ஸ்ரீமான் கேசவலு நாயுடு, முத்தலை நகரின் மத்திய சிறைக்கூடத்தில் 9-வது பிளாக்கில் 12-வது அறையில் நம்பர் 888 ஆகா எழுந்தருளிய வரலாறு இதுதான். ஆனால், நான் தலைப்பில் கூறிய மூன்று சிந்தாந்தங்களும் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதுகிறீர்களா?
---------------
24. ஒன்பது குழி நிலம்
நாட்டாங்கரையில் கமலாபுரம் என்ற ஒரு கிராமம் உண்டு. ஸ்ரீமான் சினிவாசம் பிள்ளை அந்தக் கிராமத்திலே பெரிய மிராசுதாரர். கிராமத்தில் பாதிக்குமேல் அவருக்குச் சொந்தம். ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் கிராமத்திலும் அவருக்கு நிலங்கள் உண்டு. ஆடுமாடுகளுக்கும், ஆள் படைகளுக்கும் குறைவில்லை. அவரைவிடப் பெரிய தனவந்தரின் புதல்வியாகிய அவருடைய வாழ்க்கைத் துணைவி அருங்குணங்களுக்கெல்லாம் உறைவிடமாய் விளங்கினாள். செல்வப் பேற்றில் சிறந்த இந்தத் தம்பதிகளுக்கு ஆண்டவன் மக்கட் பேற்றையும் அருளியிருந்தான். மூத்த புதல்வன் சுப்பிரமணியன் சென்னையில் ஒரு கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பற்றிச் சீனிவாசம் பிள்ளை கொண்டிருந்த பெருமைக்கு அளவே கிடையாது. பி.எல். பரீட்சையில் தேறியதும் மைலாப்பூரில் பங்களாவும், 'போர்டு' மோட்டார் வண்டியும் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அவருடைய புகழோ, எங்கும் பரவியிருந்தது. சுற்றிலும் மூன்று தாலுக்காக்களில் கமலாபுரம் பெரிய பண்ணைப் பிள்ளையின் பெயரைக் கேள்விப்படாதவர் எவருமில்லை.
இவ்வளவு பாக்கியங்களுக்கும் நிலைக்களனாயிருந்த சீனிவாசம் பிள்ளையை மூன்று வருஷகாலமாக ஒரு பெருங்கவலை வாட்டிவந்தது. அவருக்கும் ஆற்றின் அக்கரையிலுள்ள கல்யாணபுரம் பண்ணை சோமசுந்தரம் பிள்ளைக்கும் நடந்து வந்த விவகாரமே இக்கவலைக்குக் காரணம். சீனிவாசம் பிள்ளையும், சோமசுந்தரம் பிள்ளையும் நெருங்கிய உறவினர்களேயாயினும், வழக்கு ஆரம்பமானதிலிருந்து ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவது நின்று போயிற்று. மனஸ்தாபம் முற்றிக் கடும் பகையாக மாறிவிட்டது.
விவகாரம் ஓர் அற்ப விஷயங் காரணமாக எழுந்தது. கல்யாணபுரத்தில் சீனிவாசம்பிள்ளையின் வயலுக்கும் சோமசுந்தரம் பிள்ளையின் வயலுக்கும் நடுவே ஒன்பது குழி விஸ்தீரணமுள்ள திடல் ஒன்று இருந்தது. அத்திடலில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. நிலம் நீண்ட காலமாகச் சீனிவாசம் பிள்ளையின் அனுபோகத்தில் இருந்து வந்தது. ஒருநாள் களத்தில் உட்கார்ந்து அறுவடையைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் பிள்ளை தாகம் மிகுந்தவராய் உறவினருடைய மரம் என்னும் உரிமையின் பேரில் தமது பண்ணையாளை ஏவி, அத்தென்னை மரங்களிலிருந்து இளநீர் கொண்டுவரச் சொன்னார். சின்னப்பயல் (அறுபத்தைந்து வயதானவன்) அவ்வாறே சென்று மரத்தில் ஏறி இளநீர் குலையைத் தள்ளினான். தள்ளியதோடு இறங்கினானா, பானையில் வடிந்திருந்த கள்ளையும் ஒரு கை பார்த்துவிட்டான்? இதை தூரத்திலிருந்து கவனித்த சீனிவாசம் பிள்ளை பண்ணையின் தலையாரி ஓட்டமாக ஓடி வந்தான். பாவம்! அவன் கட்டியது திருட்டுக்கள். அதை மற்றொருவன் அடித்துக் கொண்டு போவதானால்? சின்னப்பயல் இறங்கியதும் ஒருவரோடொருவர் கட்டிப் புரண்டார்கள். அவர்கள் அச்சமயத்தில் பிரயோகித்துக் கொண்ட வசைச் சொற்களை இங்கு வரைதல் அனுசிதமாகும்; சின்னப்பயல், இளநீர் இன்றியே சென்று எஜமானனிடம் ஒன்றுக்குப் பத்தாகக் கூறினான். "உங்கப்பன் வீட்டு மரமா என்று அந்தப் பயல் கேட்டான். நாம் சும்மா விடுவதா?" என்று கர்ஜித்தான். கமலாபுரம் பண்ணையின் கண்ணி வழியாகத் தண்ணீர் விட மறுத்தது, பொதுக் களத்தில் போட்டிருந்த பூசணிக்காயை அறுத்துச் சென்றது, பயிரில் மாட்டை விட்டு மேய்த்தது, போரை ஓரடி தள்ளி போட்டது, முதலியவைகளைப் பற்றிச் சரமாரியாகப் பொழிந்தான். சோமசுந்தரம் பிள்ளைக்கு ஒரு பக்கம் தாகம்; மற்றொரு பக்கம் கோபம். காரியஸ்தரை யோசனை கேட்டுக் கொண்டு மேலே காரியம் செய்ய வேண்டுமென்று வீட்டுக்குத் திரும்பினார்.
தலையாரி சுப்பன் கள்ளையிழந்த துக்கமும், அடிபட்ட கோபமும் பிடரியைப் பிடித்துத் தள்ள, ஓடோ டியும் சென்று சீனிவாசம் பிள்ளையிடம் பலமாக 'வத்தி' வைத்துவிட்டான். அன்று மாலையே சீனிவாசம் பிள்ளையின் ஆட்கள் பத்துபேர் சென்று மேற்படி திடலைச் சுற்றிப் பலமாக வேலியடைத்து விட்டு வந்தார்கள். இச்செய்தி அன்று இரவு சோமசுந்தரம் பிள்ளையின் காதுக்கெட்டியது. அவர் உடனே காரியஸ்தரிடம் "நான் சொன்னேனே, பார்த்தீரா? நமக்கு அந்தத் திடலில் பாத்தியம் இருக்கிறது. இல்லாவிடில் ஏன் இவ்வளவு அவசரமாக வேலி எடுக்க வேண்டும்? தஸ்தாவேஜிகளை நன்றாகப் புரட்டிப் பாரும்" என்று கூறினார். காரியஸ்தர் "தஸ்தாவேஜி இருக்கவே இருக்கிறது. சாவகாசமாகப் புரட்டிப் பார்ப்போம். ஆனால் அந்த வேலையை விட்டு வைக்கக்கூடாது" என்றார். "அதுவும் நல்ல யோசனைதான்" என்று பிள்ளை தலையை ஆட்டினார். இரவுக்கிரவே வேலி மறைந்து போய்விட்டது.
மறுநாள் சீனிவாசம் பிள்ளையின் ஆட்கள் பத்து பேருக்குக் கள்ளு குடிப்பதற்காகக் குறுணி நெல் வீதம் கொடுக்கப்பட்டது. அவர்கள் குடித்துவிட்டுச் சென்று கல்யாணபுரம் பண்ணையையும், பண்ணையாட்களையும், பண்ணையைச் சேர்ந்தவர்களையும் 'பாடத்' தொடங்கினார்கள். சோமசுந்தரம் பிள்ளையின் ஆட்களும் பதிலுக்குப் பாட ஆரம்பித்தார்கள். பாட்டு ஆட்டமாக மாறி, ஆட்டம் அடிதடியில் முடிந்தது. மறுநாள் இரண்டு பண்ணைக் காரியஸ்தர்களும் தத்தம் ஆட்களை அழைத்துக் கொண்டு, எட்டு மைல் தூரத்திலுள்ள சப்மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குச் சென்றார்கள். இதற்கிடையில் போலீஸ் எட்கான்ஸ்டேபிள் பண்ணைகளின் வீடுகளுக்கு வந்து ஒவ்வொரு வண்டி நெல் பெற்றுக் கொண்டு சென்றார். நாலைந்து முறைபோய் அலைந்த பிறகு, இரண்டு பண்ணைகளையும் சேர்ந்த ஆட்களில் ஐவருக்கு ஒரு மாதம் கடுங்காவலும் மற்றவர்களுக்குத் தலைக்கு ஐம்பது ரூபா அபராதமும் கிடைத்தன. அபராதத் தொகைகள் பண்ணைகளிலிருந்தே கொடுக்கப்பட்டன.
2
கல்யாணபுரம் பண்ணை காரியஸ்தர் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு பழைய தஸ்தாவேஜிகளைப் புரட்டிப் பார்த்து ஒன்பது குழித்திடல் கல்யாணபுரம் பண்ணைக்குச் சொந்தம் என்பதை நிரூபிக்கத் தக்க தஸ்தாவேஜியைக் கண்டு பிடித்தார். முனிசீப் கோர்ட்டில் மறுநாளே வழக்குத் தொடுக்கப்பட்டது. ஊரில் பெரிய வக்கீலாகிய செவிட்டு ஐயங்காரைச் சோமசுந்தரம் பிள்ளை அமர்த்திக் கொண்டபடியால் சீனிவாசம் பிள்ளைக்குத் தகுந்த வக்கீல் அகப்படவில்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு, முனிசீபின் மைத்துனருக்கு அம்மான் என்ற உறவு கூறிக் கொண்ட இளைஞர் ஒருவரிடம் வக்காலத்துக் கொடுக்கப்பட்டது. முனிசீபின் உறவினராயிருந்தாலென்ன? யாராயிருந்தாலென்ன? செவிட்டு ஐயங்காரிடம் சாயுமா? ஒன்பது மாதம் வழக்கு நடந்த பிறகு சோமசுந்தரம் பிள்ளை வெற்றி பெற்றார்.
சீனிவாசம் பிள்ளை சாதாரணமாகவே பிறருக்குச் சளைக்கிற மனிதரல்லர். அதிலும் பல்லாண்டுகளாக அனுபவித்து வந்த நிலத்தைப் பறிகொடுக்க யாருக்குத்தான் மனம் வரும்? அவருடைய அண்டை அயலார்கள் அவரிடம் வந்து இந்தச் சமயத்தில் மாற்றானுக்கு விட்டுக் கொடுத்து விடலாகாது என்று போதிக்கலானார்கள். தஞ்சாவூர் மேல் கோர்ட்டில் சீனிவாசம் பிள்ளை அப்பீல் வழக்குத் தொடுத்தார். தஞ்சாவூரிலுள்ளவர்களில் பெயர் பெற்ற வக்கீல் அமர்த்திக் கொண்டதோடு சென்ற தேர்தலில் வாக்கு பெறும் நிமித்தம் தமது வீட்டிற்கு வந்து சென்ற சென்னை ஸ்ரீமான் இராமபத்திர ஐயரை அமர்த்திக் கொண்டு வரும்படி தமது காரியஸ்தரை அனுப்பினார். தம்மைக் கண்டதும் ஐயர் பரிந்து வரவேற்பார் என்று எண்ணிச் சென்ற காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளை, பாவம் ஏமாந்தார். ஸ்ரீமான் இராமபத்திரஐயர் தாம் வாக்குத் தேடிச் சென்றவர்களை மறந்து எத்தனையோ நாட்களாயின. கமலாபுரம் பண்ணையிலிருந்து தாம் வந்திருப்பதாக அறிவித்த பின்னரும் வக்கீல் பாரமுகமாக இருந்ததைக் கண்டு காரியஸ்தர் பெருவியப்படைந்தார். கடைசியாக செலவெல்லாம் போக நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாய் தருவதாகப் பேசி முடித்து விட்டுச் சொக்கலிங்கம் பிள்ளை ஊருக்குப் புறப்பட்டார்.
இதற்கு இடையில் இரண்டு பண்ணைகளுக்கும் சில்லரைச் சண்டைகள் நடந்த வண்ணமாயிருந்தன. வாய்க்காலிலும், கண்ணியிலும், வரப்பிலும், மடையிலும், களத்திலும், திடலிலும் இரண்டு பண்ணைகளையும் சேர்ந்த ஆட்கள் சந்தித்த போதெல்லாம் வாய்ச் சண்டை, கைச்சண்டை, குத்துச் சண்டை, அரிவாள் சண்டை, வெட்டுச் சண்டை, இவைகளுக்குக் குறைவில்லை. வெகு நாட்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராயிருந்த கமலாபுரத்தில் வந்து குடியேறி இரண சிகிச்சையில் கைதேர்ந்தவரென்று பிரசித்திப் பெற்று விளங்கிய ஸ்ரீமான் இராமனுஜலு நாயுடுவுக்கு ஓய்வென்பதே கிடையாது. பகலிலும், இரவிலும், வைகறையிலும், நடுச்சாமத்திலும் அவருக்கு அழைப்புகள் வந்த வண்ணமாயிருந்தன. அவ்வூர் 'அவுட் போஸ்ட்' அதிகாரியாகிய எட்கான்ஸ்டேபிள் நாராயணசாமி நாயுடு தமது மனைவிக்கு வைர நகைகளாகச் செய்து போட ஆரம்பித்தார்.
தஞ்சாவூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஓராண்டு நீடித்திருந்தது. இவ்வளவு நாட்களுக்குப் பின், சுமார் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தப் பிறகு, தமது பக்கம் தீர்ப்புச் சொல்லப்பட்டதும், சீனிவாசம் பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மகிழ்ச்சியை நேயர்களே ஊகித்தறிந்து கொள்ள வேண்டும். இதனால் அவருடைய மகிழ்ச்சி நீடித்திருக்கவில்லை. கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளை சென்னை ஐகோர்ட்டில் மறுநாள் அப்பீல் கொடுத்து விட்டார் என்ற செய்தி இரண்டொரு நாட்களில் அவர் காதுக்கெட்டியது. சென்னையில் சட்டக் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த அவர் அருமைப் புதல்வன் சுப்பிரமணியன், ஒன்பது குழி நிலத்துக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழித்தது போதுமென்றும், வழக்கில் வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் நஷ்டமே தவிர வேறில்லையென்றும் பலகாரணங்களை எடுத்துக்காட்டி நீண்ட கடிதம் எழுதினான். ஆனால் சீனிவாசம் பிள்ளையோ, என்ன வந்தாலும், தமது ஆஸ்தியே அழிந்து போவதானாலும் கல்யாணபுரம் பண்ணைக்குச் சளைப்பதில்லையென்றும், ஒரு கை பார்த்தே விடுகிறதென்றும் முடிவு செய்து விட்டார். ஆதலின் சென்னைக்குச் சென்று அங்கேயே தங்கி வழக்கை நடத்தி வரும்படி தமது காரியஸ்தருக்கு உத்தரவிட்டார்.
3
பின்னும் ஓராண்டு கழிந்த பின்னர் ஐக்கோர்ட்டில் தீர்ப்புச் சொல்லப்பட்டது. காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளை 'ஜெயம்' என்று அவசரத் தந்தி கொடுத்து விட்டு அன்று மாலை போட்மெயிலிலேயே ஊருக்குப் புறப்பட்டார். சூரியன் உதயமாகுந் தருணத்தில் சீனிவாசம் பிள்ளைக்குத் தந்தி கிடைத்தது. தந்தியைப் படித்ததும் அவர் ஆனந்தக் கடலில் மூழ்கியவராய், தமது பந்து மித்திரர்களையும் ஆட்படைகளையும் அழைத்து வர ஏவினார். கற்கண்டு, சர்க்கரை, வாழைப்பழம், சந்தனம் முதலியவை ஏராளமாக வாங்கிக் கொண்டுவரச் சொன்னார். கடையைத் திறக்கச் செய்து, ஒரு மணங்கு அதிர்வெடி மருந்து வாங்கி வரும்படி ஓர் ஆளை அனுப்பினார்.
காலை எட்டு மணிக்குக் காரியஸ்தரும் வந்து சேர்ந்தார். அவரைச் சீனிவாசம்பிள்ளை பரிந்து வரவேற்று, "வாருங்கள், வாருங்கள். ஏன் நேற்றே தந்தி வந்து சேரவில்லை?" என்று வினவினார். "நேற்று மாலை ஐந்து மணிக்குத்தான் தீர்ப்புச் சொல்லப்பட்டது. உடனே சென்று தந்தி அடித்துவிட்டு, ஜாகைக்குப்போய் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். பட்டணத்துத் தம்பியிடம் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை. யாரோ மகாத்மா காந்தியாமே! கடற்கரையில் அவருடைய பிரசங்கமாம். தம்பி அங்கே போயிருந்தான். ஆதலால் அவனிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்து சேர்ந்தேன்" என்று சொக்கலிங்கம் பிள்ளை கூறினார்.
சீனிவாசம் பிள்ளை, அங்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் சந்தனம், கற்கண்டு, வெற்றிலைப்பாக்குக் கொடுக்கச் சொன்னார். அதிர்வேட்டு போடும்படி உத்தரவிட்டார். 'திடும்' 'திடும்' என்று வெடிச்சத்தம் கிளம்பி ஆகாயத்தை அளாவிற்று. அப்பொழுது சீனிவாசம் பிள்ளை அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார்:- "நமக்குப் பின்னால் நமது குழந்தைகள் சொத்துக்களை வைத்து நிர்வகிக்கப் போகிறதேது? பாருங்கள்; ஒன்பதினாயிரம் ரூபாய் செலவழித்தாலும் கடைசியில் பிதுராஜித சொத்து ஒன்பது குழி நிலத்தை மீட்டுக் கொண்டேன். நமது குழந்தைகளோ, 'ஒன்பது குழி நிலம் பிரமாதமாக்கும்' என்று சொல்லி விட்டு விடுவார்கள். தம்பி சுப்பிரமணியம் இங்கிலீஸ் படிப்பதன் அழகு, எனக்குப் புத்தி சொல்லி 'ஒன்பது குழி போனால் போகிறது' என்று கடிதம் எழுத ஆரம்பித்து விட்டான். அவன் எவ்வாறு இந்தச் சொத்துக்களை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்பது பெரும் கவலையாக இருக்கிறது..." என்று இவ்வாறு பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று 'நில்' 'நிறுத்து' என்று கூவினார். நிமிஷ நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. அப்போது ஆற்றில் அக்கரையில் 'திடும்' 'திடும்' என்று வேட்டுச் சத்தம் கிளம்புவது நன்றாகக் கேட்டது. அங்கே கூடியிருந்தவரனைவரும் திகைத்துப் போய்விட்டனர். சீனிவாசம் பிள்ளை பிரமித்துக் காரியஸ்தர் முகத்தைப் பார்த்தார். காரியஸ்தரோ கல்யாணபுரம் பக்கமாக நோக்கினார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த திசையிலிருந்து ஒருவன் வந்தான். அவனைப் பார்த்து, "கல்யாணபுரத்தில் வேட்டுச் சத்தம் கேட்கிறதே, என்ன விசேஷம்?" என்று காரியஸ்தர் கேட்டார். "நடுப்பண்ணை சோமசுந்தரம் பிள்ளைக்கு வழக்கில் ஜெயம் கிடைத்ததாம். ஏக ஆர்ப்பாட்டம்; வருவோர் போவோருக்கெல்லாம் கற்கண்டும், சர்க்கரையும் வாரி வாரிக் கொடுக்கிறார். வேட்டுச் சத்தம் வானத்தைப் பிளக்கிறது" என்று அவன் பதில் சொன்னான். சீனிவாசம் பிள்ளை அசைவற்று மரம் போலாகி விட்டார். காரியஸ்தர் சொக்கலிங்கம் பிள்ளைக்கு ஏழு நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. அவர் கைப்பெட்டியைத் திறந்து தீர்ப்பு நகலை எடுத்துக் கொண்டு அவ்வூரில் இங்கிலீஷ் தெரிந்தவரான போஸ்டு மாஸ்டர் வீட்டுக்குப் புறப்பட்டார். சீனிவாசம் பிள்ளையும் ஆர்வம் தாங்காமல் அவருடன் சென்றார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராய் நழுவ ஆரம்பித்தார்கள். ஜோசியர் ராமுவையர் இதுதான் தருணமென்று தட்டில் மீதியிருந்த கற்கண்டு முதலியவைகளைத் தலைகீழாகக் கவிழ்த்து மேல் வேஷ்டியில் முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார்.
போஸ்டுமாஸ்டர் தீர்ப்பைப் படித்துக் கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளைக்கே ஜெயம் கிடைத்திருக்கிறதென்று கூறியதும், சீனிவாசம் பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தையும், துக்கத்தையும் யாரால் கூற முடியும்? சொக்கலிங்கம் பிள்ளையோ திட்டத் தொடங்கினார்:- "அந்த வக்கீல் குமாஸ்தா சாமிநாதையன் என்னை ஏமாற்றி விட்டான். அயோக்கியப் பார்ப்பான்..." அதற்குமேல் அவர் கூறிய மொழிகள் இங்கு எழுதத் தகுதியற்றவை. பிறகு சீனிவாசம் பிள்ளை என்னவென்று கேட்டதற்கு காரியஸ்தர் கூறியதாவது:- "அந்தப் பாவிகள் கோண எழுத்துப் பாஷையில் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் வக்கீல் குமாஸ்தா சாமிநாதையனைக் கேட்டேன். தீர்ப்பு நமக்கனுகூலம் என்று கூறி அவன் என்னிடம் பத்து ரூபாய் பறித்துக் கொண்டான். போதாதற்குக் காபி கிளப்புக்கு மூன்று ரூபாய் அழுததுடன், பவுண்டன் பேனா ஒன்றும் ஆறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தேன். ஏமாந்து போனேன். அவசரத்தினால் தம்பி சுப்பிரமணியத்திடம் கூடத் தீர்ப்பைக் காட்டாமல் வந்துவிட்டேன். அந்தப் படுபாவி" என்று மீண்டும் வக்கீல் குமாஸ்தாவைத் திட்ட ஆரம்பித்தார். சீனிவாசம் பிள்ளை அன்று முழுதும் எரிந்து விழுந்த வண்ணமாயிருந்தார். அன்று அவருடைய ஆட்கள் பட்டபாடு ஐயனுக்குத்தான் தெரியும். அவர் எதிரில் வந்தவர்க்கெல்லாம் திட்டும் அடியும் கிடைத்தன. அன்று மட்டும் சோமசுந்தரம் பிள்ளை எதிர்ப்பட்டிருந்தால் பீமனுடைய சிலையைத் திருதராஷ்டிரன் கட்டித் தழுவி நொறுக்கியது போல் பொடிப் பொடியாக செய்திருப்பார்.
4
துன்பங்கள் எப்பொழுதும் தனித்து வருவது வழக்கமில்லையே? எதிர்பாராத சமயத்தில் தலைமேல் இடிவிழுந்தது போல மற்றொரு துயரச் சம்பவம் சீனிவாசம் பிள்ளைக்கு நேரிட்டது. சட்டக் கலாசாலையிலே படித்துக் கொண்டிருந்த அவரது புதல்வன் சுப்பிரமணியன் காந்திமகான் பிரசங்கம் கேட்டுவிட்டுச் சட்டக் கலாசாலையை பகிஷ்கரித்து வீடு வந்து சேர்ந்தான். வழக்கை இழந்த சீனிவாசம் பிள்ளை தமது புதல்வன் உயர்ந்து நிலைமையிலிருக்கிறானென்னும் ஒரு பெருமையாவது அடையலாமென்று நம்பியிருந்தார். தம்மிடம் வக்கீல்கள் பறித்துக்கொண்ட பணத்தைப்போல் எத்தனையோ மடங்கு பணம் தமது புதல்வன் மற்றவர்களிடமிருந்து பறிப்பானல்லவா என்று நினைத்து அவர் சில சமயங்களில் திருப்தியடைவதுண்டு. ஆனால், அந்த எண்ணத்திலெல்லாம் மண்ணைப் போட்டு, வெண்ணெய் வரும் சமயத்தில் தாழியுடைவதைப் போல் தமது புதல்வன் பரீட்சைக்குப் போகும் சமயத்தில் கலாசாலையை விட்டு வந்ததும் அவருக்குண்டான மனத்துயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
ஆயினும், கண்ணிலும் அருமையாக வளர்த்த ஒரே புதல்வனாதலால், சுப்பிரமணியத்தை அவர் கடிந்து கூறவில்லை. சுப்பிரமணியனும், சமயம் பார்த்து அவருக்குப் பல வழிகளிலும் தனது செய்கையின் நியாயத்தை எடுத்துக் கூறி, அவர் மனத்தைத் திருப்ப முயன்றான். "நீ என்னதான் கூறினாலும் என் மனம் ஆறுதல் அடையாது. இந்தப் பக்கத்தில் நமது சாதியாரிலே உன்னைப் போல் இவ்வளவு சிறு வயதில் எம்.ஏ. பரீட்சையில் தேறி பி.எல். படித்தவர்கள் வெகு அருமை. நீ மட்டும் தொடர்ந்து படித்திருந்தால், நம்முடைய சாதியார்களெல்லாம் தங்கள் வழக்குகளுக்கு உன்னையே நாடி வருவார்களல்லவா? அது எவ்வளவு பெருமையாயிருக்கும்" என்று சீனிவாசம் பிள்ளை கூறினார். "அப்பா! தாங்கள் சொல்கிறபடி நமது சாதியார் அனைவரும் என்னை நாடி வருவார்களென்று நான் நம்பவில்லை. அசூயை காரணமாக வேறு வக்கீல்களைத் தேடிப் போதலும் கூடும். தங்கள் கூற்றை உண்மையென ஒப்புக் கொண்டாலும், நான் நமது மரபினருக்கு நன்மை செய்பவனாவேனா. கோர்ட் விவகாரத்தினால் ஏற்படும் தீங்குக்கு நமது குடும்பமே சிறந்த உதாரணமாக விளங்கவில்லையா? மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பற்றி எனக்கு சிறிதளவிருந்த ஐயமும் இவ்வழக்கினால் நீங்கிவிட்டது. ஒன்பது ரூபாய் பெறக்கூடிய ஒன்பது குழி நிலத்திற்காக நாம் பதினாறாயிரம் ரூபாய் தொலைத்தோம். அவர்களும் அவ்வளவு தொகை செலவழித்திருப்பார்கள். பார்க்கப் போனால் நாமும் அவர்களும் உறவினர்களே. இந்த ஒன்பது குழி நிலத்தை யார் வைத்துக் கொண்டால் தான் என்ன மோசம். பண நஷ்டத்தோடன்றி இந்த வழக்கு நமக்கும் அவர்களுக்கும் தீராப் பகையையும் உண்டாக்கி விட்டது. கோர்ட்டுகளும் வக்கீல்களும் அதிகமாவதற்குத் தகுந்தாற்போல் தேசத்தில் வழக்குகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பெருந் தீங்குகளுக்குக் காரணமாயிருக்கும் இத்தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்திலோ, பெரும் பாகம் மோட்டாருக்கும், பெட்ரோல் எண்ணைக்கும், பீங்கான் சாமான்களுக்கும், மருந்துகளுக்குமாக அன்னிய நாடுகளுக்குச் சென்று விடுகிறது. அன்னிய அரசாங்கம் இந்நாட்டில் நிலைத்து பலம் பெறுவதற்குக் கோர்ட்டுகளும் வக்கீல்களும் காரணமாயிருக்கின்றனர். இத்தகைய தொழிலை செய்வதை விட எனக்குத் தெரிந்த சட்ட ஞானத்தைக் கொண்டு இப்பக்கத்தில் ஏற்படும் வழக்குகளை கோர்ட்டுக்குப் போகவிடாமல் தடுத்து தீர்த்து வைப்பது சிறந்த வேலையென்று தங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று சுப்பிரமணியன் பலவாறாக எடுத்துக் கூறி தந்தையை சமாதானம் செய்ய முயன்றான்.
5
நாட்டாற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத் தோடியது. இரு கரையிலும் மரங்களடர்ந்ததனால், நீரின் மேல் இருண்ட நிழல் படிந்திருந்தது. ஆங்காங்கு ஒவ்வோர் ஒளிக்கிரணம், இலைகளினூடே நுழைந்து தண்ணீரை எட்டிப் பார்த்தது. சீனிவாசம் பிள்ளை ஒரு கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் முன்னால் எதிர்க்கரை ஓரத்தில் நீரில் ஓரு சேலையின் தலைப்பு மிதப்பதைக் கண்டார் - ஒரு பெண்ணுருவம்! சீனிவாசம் பிள்ளை நன்றாக உற்றுப் பார்த்தார். நீலவானத்தில் மெல்லிய மேகத் திரையால் மறைக்கப்பட்ட களங்கமற்ற முழுமதியை போன்று அந்நீல நீர்ப்பெருக்கில் அலைகளால் சிறிதளவே மறைந்து திகழ்ந்த அவ்வழகிய வதனம் யாருடையது? நுனியில் சிறிது வளைந்துள்ள அந்த மூக்கு, அவ்வழகிய செவ்விதழ்கள், திருத்தமாக அமைந்த அந்த முகவாய்க்கட்டை, நீண்டு வளர்ந்து அலையில் புரளும் கரிய கூந்தல் - ஆ! அவருடைய உறவினர் - இல்லை - பகைவர் சோமசுந்தரம் பிள்ளையின் அருமை புதல்வி நீலாம்பிகையே அவள். ஒரு வினாடிக்குள் சீனிவாசம் பிள்ளையின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுழன்றன. உயிரினும் அருமையாக வைத்துப் போற்றி வளர்த்து வரும் ஒரே பெண் இறந்தொழிந்தால் சோமசுந்தரம் பிள்ளையின் கர்வம் அடங்கி விடுமல்லவா? தாம் பேசாமல் போய் விட்டாலென்ன? ஆனால், அடுத்த கணத்தில், அவர் சோமசுந்தரம் பிள்ளையையும், அவரிடம் தமக்குள்ள பகையையும், ஒன்பது குழி நிலத்தையும், ஒன்பதாயிரம் ரூபாய் நஷ்டத்தையும் முற்றிலும் மறந்தார். குழந்தை நீலாம்பிகை ஆற்றில் போகிறாளென்னும் ஒரு நினைவே அவர் உள்ளத்தில் எஞ்சி நின்றது. அவரையும் அக்குழந்தையையும் பிணைத்த இரத்த பாசத்தினால் இழுக்கப்பட்டவராய், அவர் திடீரெனத் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று நீலாம்பிகையைக் கொண்டு வந்து கரை சேர்த்தார்.
ஆனால், அதன் பின்னர் என்ன செய்வதென்று அவருக்குத் தோன்றவில்லை. உணர்ச்சியற்றுக் கிடந்த உடலில் உயிர் தளிர்க்கச் செய்வதெப்படி? அப்படியே தூக்கிக் கொண்டு தமது வீடு சேர்ந்தார். அவர் புதல்வன் சுப்பிரமணியன், உள்ள நிலைமையை ஒரு கணத்தில் குறிப்பாக உணர்ந்தான். சாரணர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றவனாதலால், இவ்வித அபாய காலங்களில் செய்ய வேண்டிய ஆரம்ப சிகிட்சைகளைச் செவ்வையாகக் கற்றிருந்தான். நீலாம்பிகை மீண்டும் உணர்வு பெற்றபோது தான் வேறொருவர் வீட்டில் கட்டிலின் மீது விரிக்கப்பட்ட மெத்தையின் மேல் கிடத்தப் பட்டிருப்பதைக் கண்டாள். அவளுடைய கண்கள், குனிந்த வண்ணம் அவளுக்கு எப்பொழுது உணர்வு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியனுடைய கண்களைச் சந்தித்தன.
நீலாம்பிகையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிகள் ஓட்டமாக ஓடி, சோமசுந்தரம் பிள்ளை வீட்டுக்குச் சென்று அவர்கள் வீட்டுப் பெண் சுழலில் அகப்பட்டு ஆற்றோடு போய் விட்டதாக தெரிவித்தார்கள். சோமசுந்தரம்பிள்ளையும் அவர் மனைவியும் மற்றுமுள்ளவர்களும் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். ஆனால் அவர்கள் சிறிது தூரம் வருவதற்குள் சீனிவாசம் பிள்ளை அனுப்பிய ஆள் அவர்களைச் சந்தித்து, நீலாம்பிகை சீனிவாசம் பிள்ளையினால் காப்பாற்றப்பட்டு அவருடைய வீட்டில் சுகமாக இருப்பதாகத் தெரிவித்தான். அதன்மேல் சோமசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் சிறிது மன ஆறுதல் பெற்றுச் சீனிவாசம் பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். குழந்தை நீலாம்பிகையை பார்த்துச் சிறிது துக்கம் தணிந்த பின்னர், சீனிவாசம் பிள்ளையும் சோமசுந்தரம் பிள்ளையும் முகமன் கூறிக் கொண்டார்கள். எல்லோரும் அன்று சீனிவாசம் பிள்ளை வீட்டிலேயே உணவருந்தினார்கள்.
பழைய உறவினரும் இடையில் பகைவர்களாயிருந்து பின்னர் சேர்ந்தவர்களுமான அவ்விரு குடும்பத்தாருக்கும் விரைவிலேயே புதிய நெருங்கிய உறவு என்ன ஏற்பட்டதென்று வாசகர்களுக்கு நாம் சொல்லவும் வேண்டுமோ?
-------------
25. புன்னைவனத்துப் புலி
திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. எனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என் காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டுவிடுகிறதாக இல்லை. அவன் கேட்க விரும்பவில்லை என்று சொன்ன வார்த்தையையே ஓயாமல் அவன் காது செவிடுபடும்படி டமாரம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "இப்படி எத்தனையோ விசுவாமித்திரர்களைப் பார்த்து விட்டோ ம்!" என்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய நண்பர் கூட்டத்தில் சந்திரசூடன் அகப்பட்டுக் கொள்ளும் போது, "ஒருவேளை நான் புத்தி தடுமாறிக் கலியாணம் செய்து கொண்டாலும் இந்திய தேசத்தின் ஜனத் தொகையை மட்டும் பெருக்க மாட்டேன்" என்று சில சமயம் சொல்வதுண்டு, சொல்வதுடன் நின்று விடாமல் அவன் கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான இலக்கியங்கள், அதே விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் அப்பட்டமாகச் சொல்லும் நூல்கள், இவற்றையெல்லாம் வாங்கிப் படித்தும் வந்தான்.
அத்தகைய சந்திரசூடன் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அதிலும் ஏற்கெனவே குழந்தை உள்ள ஒரு பெண்மணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றால் அவனை அறிந்தவர்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கித் தத்தளிப்பது இயல்பேயல்லவா?
அத்தகைய பரிகாசத்துக்கிடமான காரியத்தை அவன் செய்ய முன் வந்ததன் காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டதிலும் அவ்வளவு வியப்பில்லை அல்லவா?
திருமணக் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவனைக் கண்டுபிடித்து நேருக்கு நேர் கேட்டுவிடுவதென்று பலரும் துடியாயிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடைசியாக அவனை ஒரு நாள் கையும் மெய்யுமாகப் பிடித்து, "அப்பனே! இந்த விபத்தில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்றேன். "சொல்லாவிட்டால் நீர் விடப் போகிறீரா? ஏதாவது கதையும் கற்பனையுமாக சேர்த்து எழுதித் தள்ளிவிடுவீர், அதைக் காட்டிலும் நானே சொல்லிவிடுவது நல்லது" என்றான்.
"அப்படியானால், கதை எழுதுவதற்குத் தகுதியானது என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டேன்.
"எல்லாம் கதையினால் வந்த விபத்துதான்! முழுக் கதை கூட அல்ல; பாதிக் கதையினால் வந்த ஆபத்து. 'தீபம்' என்னும் மாதப் பத்திரிகையில் பாதிக் கதைப் போட்டி ஒன்று நடத்தினார்களே? ஞாபகம் இருக்கிறதா?" என்றான் சந்திரசூடன்.
ஆம்; அது என் ஞாபகத்தில் இருந்தது.
'தீபம்' பத்திரிகையில் அத்தகையப் போட்டி ஒன்று சில காலத்துக்கு முன்பு நடத்தினார்கள். ஓர் இதழில் 'விமான விபத்து' என்ற தலைப்புடன் ஒரு பாதிக் கதையை வெளியிட்டார்கள். அதைப் பூர்த்தி செய்யும்படி வாசக நேயர்களைக் கேட்டு கொண்டிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு வரும் பிற்பகுதிக் கதைகளில் சிறந்ததைப் பத்திரிகையில் வெளியிடுவதுடன் அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்கள்.
இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பரிசு பெற்ற பிற்பகுதிக் கதையும் மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
கதையை அச்சமயம் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தேன். ஓர் ஆகாச விமானம் பிரயாணப்பட்டுச் சென்றது; ஆனால் குறித்த இடத்துக்குப் போய்ச் சேர வில்லை. பிரயாணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டது. எங்கேயோ மேற்குமலைத் தொடரில் மனித சஞ்சாரத்துக்கு அப்பாற்பட்ட இடத்தில் விழுந்து எரிந்து போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. இதுதான் கதையின் முக்கிய சம்பவம். இம்மாதிரி ஒரு துர்ச்சம்பவம் உண்மையாகவே சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.
இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, "ஆமாம்; அந்தப் பாதிக் கதைப் போட்டிக்கும் உன் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.
சந்திரசூடன் அந்தச் சம்பவம் இன்னதென்பதை விவரமாகச் சொல்லித் தீர்த்தான். சொல்லாமற் போனால் யார் விடுகிறார்கள்?
1
பாண்டிய நாட்டையும் மலையாள தேசத்தையும் பிரித்து நிற்கும் நீண்ட மேற்கு மலைத் தொடர் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு பெயருடன் விளங்குகிறது. இந்த மலைத்தொடரை எந்த இடத்திலே பார்த்தாலும் அதன் இயற்கை வனப்பு அற்புதமாக இருக்கும். எனினும், நாகலாபுரம் மலைச்சாரலின் சௌந்தரியத்துக்கு ஒப்புவமை இல்லை என்று அந்தப் பகுதியைப் பார்த்தவர்கள் சொல்வார்கள். அங்கே இயற்கை அரசி பசும் பொன் சிங்காதனத்தில், நீலப் பட்டாடை உடுத்தி, நவரத்தின மாலைகளை அணிந்து, மணிமகுடம் தரித்து, செம்பவள இதழ்களின் வழியாக முத்து நகை புரிந்து, கருங்குவளைக் கண்களில் கருணை ஒளி வீசியவாறு வீற்றிருக்கிறாள் என்று கவிதா ரஸிகர்கள் வர்ணனை செய்வார்கள். மலையும், காடும், அருவியும், பொய்கையும், பல நிற மலர்களும் அப்படி ஒரே வர்ண ஜாலமாகக் காட்சி அளிக்கும்.
அத்தகைய நாகலாபுரம் மலைச் சாரலையொட்டி எத்தனையோ கிராமங்கள் உண்டு. அவற்றில் புன்னைவனம் என்னும் கிராமம் பிரசித்தமானது. அது கிராமம்தான் என்றாலும், பட்டணவாசத்தின் வசதிகள் எல்லாம் அங்கு உண்டு. புன்னைவனத்துக்கும் கொஞ்ச தூரத்தில் பெரிய நீர்த்தேக்கம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவியைக் கொண்டு மின்சார சக்தி உற்பத்தி செய்கிறார்கள். எப்போது மின்சார வசதி இருக்கிறதோ, அப்போது பட்டண வாசத்தின் சகல சௌகரியங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?
வருஷத்தில் ஒன்பது மாதம் புன்னை வனம் கிராமமாகத் தோற்றமளிக்கும். சாரல் காலத்தில் அதாவது ஜுன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் அது நகரமாக மாறி விடும். (ஜன நெருக்கத்தை அவ்வளவாக விரும்பாத 'நாஸுக்குக்காரர்கள்' அந்த மூன்று மாதமும் அது 'நரக'மாக மாறிவிடும் என்பார்கள்.) அந்த மூன்று மாதங்களிலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஜனங்கள் தேக சுகத்தையும் மன உல்லாசத்தையும் தேடிப் புன்னைவனத்துக்கு வருவார்கள்.
சென்ற வருஷத்தில் சந்திரசூடனுக்கு அம்மாதிரி தேக சுகத்தையும் மன அமைதியையும் தேடி எங்கேனும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களைப் பற்றி யோசித்து, பல காரணங்களினால் அவற்றை ஒதுக்கி விட்டு, புன்னைவனம் போவதென்று முடிவு செய்தான். அம்மாதிரி அவன் முடிவு செய்ததற்குச் சிற்சில முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புன்னைவனத்தின் இயற்கை எழிலைப் பற்றி ஒரு சிநேகிதன் மூலமாக அவன் கேள்விப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், அங்குள்ள ஓட்டல்களில் நல்ல சாப்பாடும் கிடைக்கும் என்பது. மூன்றாவது காரணம் சில நாளைக்கு முன்னால் "புன்னைவனத்துப் புலி" என்ற தலைப்புடன் தினப்பத்திரிகைகளில் வெளியான செய்திகள்.
நாகலாபுரம் மலையின் உட்பகுதிகளில் துஷ்ட மிருகங்கள் எப்போதுமே உண்டு. ஆனால் மலையையொட்டி கீழேயுள்ள கிராமங்களுக்கு அவை வருவது அபூர்வம். அப்படி அபூர்வமாக ஒரு புலி புன்னைவனத்தில் ஒரு நாள் காணப்பட்டதாகவும், பின்னர் அடிக்கடி அங்குமிங்கும் தோன்றி ஆடுமாடுகளைக் கொன்று வருவதாகவும், அதைச் சுட்டுக் கொல்லுவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லையென்று தினப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. சந்திரசூடன் கலாசாலை மாணாக்கனாயிருந்த போது இராணுவப் பயிற்சிப் படையில் சேர்ந்து துப்பாக்கியை உபயோகிக்க கற்றுக் கொண்டிருந்தான். அப்படிப் பயின்ற வித்தையைக் காரியத்தில் பயன்படுத்துவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக எண்ணினான். புன்னைவனத்துப் புலி தன் துப்பாக்கிக்கு இரையாவதற்காகவே மலை மேலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறது என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.
'நாகலாபுரம் சாலை' என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி முப்பது மைல் தூரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து புன்னைவனத்தை அடைந்தான். அந்த ஊர் அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததையெல்லாம் விட அமைதியும் அழகும் இனிமையும் எழிலும் பொருந்தியிருந்தது. இனிய புனல் அருவி அங்கே தவழ்ந்து விளையாடியது. இன்ப மலைச்சாரல்களில் தென்றல் உலாவியது. கனி குலவும் சோலைகளில் கரு வண்டு பண் இசைத்தது. புன்னை மரங்களின் கீழ்ப் பூப் படுக்கை விரித்திருந்தது. அமுத நீர்ப் பொய்கைகளில் குமுதமலர் செழித்திருந்தது. அவன் தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் முதல் தரமாயிருந்தது. சென்னையிலுள்ள பாங்கிகாரர்கள் மட்டும் கொஞ்சம் தாராள புத்தியுடன் தான் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால், புன்னை வனத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று சந்திரசூடன் எண்ணமிட்டான்.
இரண்டு தினங்கள் இவ்விதமாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதிலும் கற்பனைக் கனவுகள் காண்பதிலும் கழிந்தன. மூன்றாம் நாள் புன்னைவனம் தபால் ஆபீஸுக்குச் சென்றான். கையில் கொண்டு வந்திருந்த பணம் துரிதமாகக் குறைந்து கொண்டு வந்தது. மேலும் பணம் தருவித்துக் கொள்ளச் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அதோடு, தனக்கு ஏதேனும் தபால் வந்திருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டும். தபால்களைக் காட்டிலும் அதிக ஆவலுடன் 'தீபம்' பத்திரிகையின் அந்த மாதத்து இதழை அவன் எதிர்பார்த்தான். 'விமான விபத்து' என்னும் பாதிக் கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது. உண்மை என்னவென்றால், அந்தப் பாதிக் கதைப் போட்டியில் அவனும் கலந்து கொண்டிருந்தான், தான் எழுதிய பாதிக் கதையை ஒரு வேளை பத்திரிகைக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் பணத்துக்கு பணம் ஆயிற்று, புகழுக்குப் புகழ் ஆயிற்று. இல்லையென்றால், தன்னைவிட நன்றாக அந்தக் கதையைப் பூர்த்தி செய்தவர் யார்? எப்படி பூர்த்தி செய்திருக்கிறார்?' - இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு அவன் மிக்க ஆர்வம் கொண்டிருந்தான்.
தபால் ஆபீஸுக்குச் சந்திரசூடன் போய்ச் சேர்வதற்கும் தபால் கட்டு வந்து சேர்வதற்கும் சரியாயிருந்தது. அவனைப் போல் இன்னும் இரண்டொரு புது மனிதர்களும் அங்கே வந்து காத்திருந்தார்கள். சந்திரசூடன் போஸ்டு மாஸ்டரிடம் தன் பெயரைச் சொல்லி, "ஏதாவது தபால் இருக்கிறதா?" என்று கேட்டான். போஸ்ட் மாஸ்டர் தேடிப் பார்த்து ஒரு தபாலையும், ஒரு சஞ்சிகையையும் எடுத்துக் கொடுத்தார். சஞ்சிகை 'தீபம்' பத்திரிகையின் அந்த மாத இதழ் தான். சந்திரசூடன் இருந்த பரபரப்பில், தபாலைக் கூடக் கவனியாமல் சஞ்சிகையைப் பிரித்துப் புரட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே 'விமான விபத்து' கதையின் இரண்டாம் பகுதி அதில் வெளியாகியிருந்தது. அவன் எழுதியது அல்ல என்று பார்த்தவுடன் தெரிந்து போய் விட்டது. பரிசு பெற்ற கதைப் பகுதி அவ்வளவு என்ன பிரமாதமாக அமைந்திருக்க முடியும் என்ற எண்ணத்துடன், நின்றபடியே அதைப் படிக்கத் தொடங்கினான்.
ஏறக்குறையப் படித்து முடிக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். தனக்கு ஏதாவது தபால் உண்டா என்று விசாரித்தாள். இல்லை என்று அறிந்ததும் அவள் பெரிதும் ஏமாற்றமடைந்ததாகத் தோன்றியது.
"தயவு செய்து நன்றாகப் பாருங்கள், ஸார்! 'தீபம்' பத்திரிகை என் பெயருக்கு ஒன்று வந்திருக்க வேண்டுமே?" என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.
"இல்லை, அம்மா! ஒரே ஒரு 'தீபம்' தான் வந்திருந்தது. அதில் இவருடைய விலாசம் எழுதியிருந்தது. கொடுத்துவிட்டேன்!" என்று போஸ்டு மாஸ்டர் சந்திரசூடனைச் சுட்டிக் காட்டினார்.
உடனே அந்தப் பெண்ணின் பார்வை சந்திரசூடன் மீது சென்றது. அவன் கையில் விரித்து வைத்திருந்த பத்திரிகையை அசூயை கலந்த ஆர்வத்துடன் நோக்கினாள்.
சந்திரசூடனுடைய கவனத்தில் ஒரு பகுதி, பத்திரிகைக் கதையில் சென்றிருந்தது. மற்றொரு பகுதி அந்தப் பெண்மணி தபாலாபீஸுக்குள் வந்ததிலிருந்து நிகழ்ந்தவைகளை மனத்தில் வாங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் கையிலிருந்த பத்திரிகையை ஆசையுடன் பார்க்கிறாள் என்று அறிந்ததும், உடனே படிப்பதை நிறுத்தி விட்டு, "தங்களுக்குத் 'தீபம்' வேண்டுமானால் இதையே எடுத்துக் கொள்ளலாமே?" என்று கூறிப் புன்னகை புரிந்தான்.
அந்தப் பெண், "ஒரு சில வினாடி பார்க்கவேணும். கொடுத்தால் இங்கேயே பார்த்து விட்டுத் தந்து விடுகிறேன்" என்றாள்.
"அவ்வளவு அவசரம் ஒன்றுமில்லை. தாங்கள் வீட்டுக்கு எடுத்துப் போய்ச் சாவகாசமாய்ப் படிக்கலாம். தங்கள் ஜாகை எங்கே என்று சொன்னால் நானே வந்து திரும்ப வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
அந்தப் பெண் தபால் ஆபீஸின் பலகணி வழியாகச் சுட்டிக் காட்டி, "அதோ, அங்கே தான் என் வீடு! போஸ்டு மாஸ்டரின் வீட்டுக்கு அடுத்த வீடு!...அல்லது தங்கள் இருப்பிடத்தைச் சொன்னால் பத்திரிகையை அனுப்பி விடுகிறேன்" என்றாள்.
"வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் தங்களுக்கு வேண்டாம். நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சந்திரசூடன்.
"மிக்க வந்தனம். காலை பத்து மணி வரையில் வீட்டில் இருப்பேன். பிறகு பள்ளிக்கூடம் போய் விட்டு மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வருவேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பத்திரிகையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
2
சந்திரசூடன் அவள் போவதைப் பலகணி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நடக்கும் போதே அவள் பத்திரிகை படித்துக் கொண்டு போனதைக் கவனித்தான். ஒரு தடவை கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணின் கவனத்தை அவ்வளவு தூரம் கவரக் கூடிய விஷயம் 'தீபம்' பத்திரிகையில் என்ன தான் இருக்கும் என்று அதிசயித்தான்.
இதற்குள் தபால் வாங்குவதற்காக அங்கு வந்திருந்த மற்ற இரண்டொருவரும் போய் விட்டார்கள்.
சந்திரசூடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு போஸ்டு மாஸ்டரைப் பார்த்து, "பெண்களுக்குப் படிப்பில் ருசி உண்டாகி விட்டால் ஒரே பைத்தியமாகப் பிடித்துக் கொள்கிறது. இந்தப் பெண்ணுக்குத் 'தீபம்' பத்திரிகையின் மீது எவ்வளவு ஆர்வம்? அப்படியொன்றும் அதில் பிரமாதமான விஷயமும் இல்லை" என்றான்.
"மிஸ். மனோன்மணிக்குப் படிப்பில் ஆர்வம் அதிகந்தான்! அதிலும் இந்த மாதத்துத் 'தீப'த்தில் அவள் அதிக ஆர்வம் கொள்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது" என்றார் போஸ்டு மாஸ்டர்.
"அப்படியா? அந்தக் காரணம் என்னவோ?"
"அதில் ஒரு பாதிக் கதைப் போட்டி வைத்திருந்தார்கள் அல்லவா? அதற்கு இந்தப் பெண்ணும் எழுதியிருந்தாள் போலிருக்கிறது."
"ஓஹோ! அதுதானே நானும் பார்த்தேன்...! மிஸ். மனோன்மணி பிரசித்தமான எழுத்தாளியோ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள்? ஏதோ பள்ளிக் கூடம் போவதாகச் சொன்னாளே!"
"இந்த ஊரில் உள்ள பெண் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயினியாயிருக்கிறாள். சம்பளம் சொற்பம். வீட்டிலே கிழவர்கள் இருவர். ஒரு நொண்டிக் குழந்தை. இவளுடைய சம்பாத்தியத்திலேதான் காலட்சேபம் நடக்க வேணும். தபால் இலாகா, கல்வி இலாகா - இரண்டுந்தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே? ஊருக்கு இளைத்தவர்கள் நாங்கள். ஒழிந்த வேளையில் பத்திரிகைகளுக்கு எழுதினால் ஏதாவது கிடைக்காதா என்று இந்தப் பெண்ணுக்கு எண்ணம். 'தீபம்' பாதிக் கதைப் போட்டியில் மனோன்மணிக்குப் பரிசு வந்திருக்கிறதோ என்னமோ தெரியவில்லை. இதிலாவது அவள் ஏமாற்றமடையாமலிருந்தால் சரி. அந்தப் பெண் சிரித்துச் சந்தோஷமாயிருந்ததை நான் பார்த்ததேயில்லை. ஆறு மாதமாகப் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்."
"ஐயோ பாவம்! வாழ்க்கையில் துன்பப்பட்டவள் போலிருக்கிறது. என்ன கஷ்டமோ, என்னமோ?"
"அதுதான் பெரிய மர்மமாயிருக்கிறது. 'மிஸ்' என்று சொல்லிக் கொள்கிறாள். வீட்டில் நாலு வயது நொண்டிக் குழந்தை ஒன்று வளர்கிறது. இவளை 'அம்மா' என்று அழைக்கிறது. புருஷனால் நிராகரிக்கப்பட்டவள் என்று ஒரு வதந்தி. 'விதவை' என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு ஏதாவது கண்றாவியாயிருந்தாலும் இருக்கலாம். யார் கண்டது? உலகம் வரவரக் கெட்டுப் போய் வருகிறது. நாகரிகம் முற்றிக் கொண்டு வருகிறது. பண்ணையார் சங்கர சேதுராயருடைய சுவீகாரப் பையன் ஒருவன் இந்தப் பெண்ணை இப்போது சுற்றத் தொடங்கியிருக்கிறான். அவனைப் பார்த்தாலே 'கில்லாடி' என்று தெரியும். இந்த ஊருக்கு நீங்கள் புதியவர் தானே!"
"ஆம் ஐயா!"
"புன்னைவனத்தின் அழகு வேரு எந்த ஊருக்கும் வராது. ஆனால் கொஞ்சம் பொல்லாத ஊர். ஜாக்கிரதையாக இருக்க வேணும். போததற்குப் புலி ஒன்று வந்து கழுத்தை அறுக்கிறது!"
"நான் கூட பத்திரிகையில் படித்தேன். அந்தப் புலியை யாரும் இன்னும் சுட்டுக் கொல்லவில்லையா?"
"அது ரொம்பக் கெட்டிக்காரப் புலியாயிருக்கிறது. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டையாடுகிறேன் என்று வருகிறவர்களின் கண்ணில் மட்டும் அது அகப்படுவதேயில்லை!"
"அப்படி ரொம்பப் பேர் வந்திருக்கிறார்களோ?"
"அதோ பாருங்கள் ஒரு வேட்டைக்காரர் போகிறார்! பண்ணையாரின் சுவீகாரப் புத்திரன் என்று சொன்னேனே, அவர் தான் இவர்! வெறுமனே புத்திரன் என்று சொன்னால் போதாது, 'புத்திர சிகாமணி' என்று சொல்ல வேண்டும்!" என்றார் போஸ்டு மாஸ்டர்.
பலகணியின் வழியாகச் சந்திரசூடன் பார்த்தான். பட்டை பட்டையாகச் சிவப்புக் கோடு போட்ட பனியன் ஒன்றை உடம்பையொட்டி அணிந்திருந்த வாலிபன் ஒருவன் சாலையோரம் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தாலே புலிவேஷக்காரன் மாதிரி இருந்தது. அவன் கையில் வெள்ளிப் பூண் போட்ட குட்டையான பிரம்பு ஒன்று இருந்தது. அதை அவன் சுழற்றிக் கொண்டே நடந்தான். அவனுக்குப் பின்னால், துப்பாக்கியும், மற்றும் வேட்டைச் சாமான்கள் அடங்கிய நீண்ட பை ஒன்றும் எடுத்துக் கொண்டு இன்னொருவன் பின் தொடர்ந்தான்.
"நீங்கள் சொன்ன புத்திரசிகாமணி முன்னால் போகிறவன் தானே?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"ஆமாம்; பின்னால் போகிறவன் யாரோ முஸ்லிம் வாலிபன் என்று தோன்றுகிறது. அவன் கொஞ்ச நாளாகத்தான் இவனோட போகிறான். புலி வேட்டையாடுவதற்கு இவனுக்கு ஒத்தாசையாக வந்திருக்கிறான் போலிருக்கிறது. இரண்டு பேரும் தினம் இந்த நேரத்துக்குத் துப்பாக்கி சகிதமாக மலைக்குப் போகிறார்கள். சாயங்காலம் திரும்பி வருகிறார்கள். வரும்போது ஒரு முயல்குட்டி, அல்லது நரிக்குட்டி, அல்லது ஒரு பெருச்சாளியைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள். புலி மட்டும் இவர்களிடம் அகப்படாமல் 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டிருக்கிறது!"
"இவனுடைய சுவீகாரத் தகப்பனார், யாரோ பண்ணையார் என்று சொன்னீர்களே, அவர் யார் ஸார்?"
"இந்தப் பக்கத்திலேயே பெரிய முதலாளி, பண்ணையார் சங்கர சேதுராயர்தான். அவருக்கு இரண்டாயிரம் ஏக்ரா நிலம் இருக்கிறது. அதில் ஐந்நூறு ஏக்ராவில் பயிரிட்டுப் பணத்தை அள்ளிக் குவிக்கிறார். ஆனால் பணம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?"
"பாவம்! புத்திர பாக்கியம் இல்லையாக்கும்!"
"இது ஒரு கண்றாவிக் கதை. மகன் ஒருவன் இருந்தானாம். வெகு புத்திசாலியாம். சாதி விட்டுச் சாதியில் யாரோ ஒரு பெண்ணைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டானாம். 'இனிமேல் எனக்கு நீ மகன் இல்லை; என் முகத்தில் விழிக்காதே' என்று பண்ணையார் அவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாராம்..."
"அப்புறம்...?"
"அப்புறம், பையன் திரும்பி வரவேயில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்னால் அவன் ஏதோவிமான விபத்தில் செத்தே போய் விட்டதாகக் கேள்வி வேண்டு மென்றே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வதந்தி. அவனுக்குப் பதிலாகத்தான் இந்த 'சுப்ரதீப'மான புத்திரனைப் பண்ணையார் சுவீகாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
"சில பேருக்கு அப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது!"
"அதிர்ஷ்டமாவது, மண்ணாங்கட்டியாவது! எல்லாம் நமது கையாலாகாத அரசாங்கத்தினால் ஏற்படுவதுதான். என்னைக் கேட்டால், சுவீகாரம் எடுத்துக் கொள்ளுவதையே சட்ட விரோதமாக்க வேண்டும் என்று சொல்லுவேன். பிள்ளை இல்லாதவர்களின் சொத்துக்களையெல்லாம் சர்க்கார் எடுத்துக் கொள்ள வேண்டும்!"
"ஆமாம்; எடுத்துக் கொண்டு தபாலாபீஸ் சிப்பந்திகளுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் பிரயோஜனம் உண்டு!"
இவ்விதம் போஸ்டு மாஸ்டர் மனம் குளிர ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் சந்திரசூடன் வெளியேறினான்.
3
மறுநாள் மாலை சந்திரசூடன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சிறிது தயக்கத்துடனேதான் சென்றான். ஏனெனில், அதற்குள் பண்ணையார் சங்கரசேதுராயரின் சுவீகாரப் புதல்வன் மனோகரனை பற்றிச் சிறிது அவன் தெரிந்துகொண்டான். மனோகரனும் பெரிய குடும்பத்தில் பிறந்தவன் தானாம். ஆனால் அந்தப் பெரிய குடும்பத்தின் சொத்துக்கள் எல்லாம் எப்படியோ காலியாகி விட்டது. இவன் பிறந்த வேளைதான் என்று சிலர் சொன்னார்கள். பங்களூரில் இவனுடைய தந்தை பெரிய அளவில் வியாபாரம் நடத்தி வந்தார். தடபுடலான நாகரிக வாழ்க்கையும் நடத்தி வந்தார். பையன் இளம் பிராயத்தில் பல வருஷம் பெங்களூரில் கழித்தான். அங்கே தான் படித்தான். நவநாகரிகத்துக்குரிய நடை உடைகள் எல்லாம் பயின்றான். வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டுத் தந்தை 'இன்ஸால்வெண்ட்' ஆனார். இந்த இக்கட்டான நிலைமையில் தான் புன்னைவனத்துப் பண்ணையாரிடமிருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. இரண்டு வருஷங்களாக இங்கே தான் இருந்து வருகிறான். சுவீகாரத் தந்தைக்கு நல்ல பிள்ளையாக நடந்து வருகிறான். ஆனால் ஊரில் உள்ளவர்களிடையே இவனைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லுவார் இல்லை.
"அப்பேர்ப்பட்ட உத்தமமான பிள்ளையைப் பறிகொடுத்து விட்டு, இந்த ஒண்ணாம் நம்பர் கில்லாடியைப் பிள்ளையென்று தாலாட்டிச் சீராட்டுகிறாரே, பண்ணையார்! அவர் தலையில் எழுத்து அப்படி! இவனுக்கு அடித்த யோகம் இப்படி!" என்று சொன்னார்கள்.
இவ்விதம் பெயர் வாங்கிய மனோகரன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்கு அடிக்கடி போவதுண்டு என்று அறிந்த பிறகு, சந்திரசூடனுக்கு அங்கே போவதில் தயக்கம் ஏற்பட்டது இயல்புதானே? ஆயினும் பத்திரிகையைத் திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும்; வருகிறதாக அவளிடம் சொல்லியும் ஆகிவிட்டது! ஆகையால், போய் விட்டு உடனே திரும்பி விட வேண்டும் என்ற உறுதியுடன் சென்றான்.
சுற்றிலும் மதில் சூழ்ந்த ஒரு விசாலமான தோட்டத்தின் முன் பகுதியில் நாலு சின்னஞ்சிறு வீடுகள் ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டிருந்தன. யாரோ முதலாளி அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டியிருக்க வேண்டும் என்று பார்த்தவுடனே தெரிந்தது. அவற்றில், நேற்று மனோன்மணி சுட்டிக் காட்டிய வீட்டை நினைவுப்படுத்திக் கொண்டு சந்திரசூடன் அங்கே சென்றான்.
அந்த வீட்டின் வாசலில், கைவண்டி ஒன்றில், ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தது. கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தது. இலட்சணமான குழந்தை; பிராயம் நாலு இருக்கும். சந்திரசூடனுக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவாகப் பிரேமை இல்லைதான். குழந்தை குலத்தின் எதிரி என்று கூட அவனைச் சொல்லலாம். ஆயினும் இந்தக் குழந்தையிடம் ஏதோ ஒரு தனிக் கவர்ச்சி அவனை இழுத்தது. போகும் வழியில் ஒரு கணம் நின்று, 'என்ன, பாப்பா! என்ன சேதி?' என்றான்.
குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்து, "என்ன மாமா! என்ன சேதி?" என்று சொல்லிப் புன்னை புரிந்தது.
"நீ ரொம்ப சமர்த்துப் பாப்பாவாயிருக்கியே?" என்றான் சந்திரசூடன்.
"நீங்க ரொம்ப சமர்த்து மாமாவாயிருக்கேளே?" என்றது குழந்தை.
"பலே! பலே!" என்றான் சந்திரசூடன்.
"சபாஷ்! சபாஷ்!" என்றது குழந்தை.
இதையெல்லாம் உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டே மனோன்மணி வெளியே வந்தாள். அவள் முகமலர்ச்சி, உள்ளத்தின் உவகையைக் காட்டியது.
"வாருங்கள், வாருங்கள்! ராஜ்மோகனுக்கு உங்களைப் பிடித்துப் போயிருக்கிறது. அதென்னமோ, சில பேருக்குத்தான் குழந்தைகளுடன் சிநேகமாயிருக்கும் வழி தெரிகிறது. வேறு சிலரைக் கண்டாலே குழந்தைகள் அலறத் தொடங்கி விடுகின்றன!" என்றாள் மனோன்மணி.
"ஆமாம்; குழந்தைகளுடன் சிநேகம் பிடிப்பது ஒரு தனி வித்தைதான்!" என்றான் சந்திரசூடன்.
வீட்டின் முன்புறத்தில் இருந்த சிறிய தாழ்வாரத்தில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் காட்டி, "உட்காருங்கள், இதோ நீங்க்ள் கொடுத்த பத்திரிகையைக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு மனோன்மணி உள்ளே சென்றாள்.
ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் ஒரு கப் காபியும் 'தீபம்' சஞ்சிகையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.
சந்திரசூடன் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு, "பாதிக் கதைப் போட்டியில் பரிசு உங்களுக்குத்தானா? நீங்கள் எழுதியதுதான் வந்திருக்கிறதா?" என்று கேட்டான்.
"இல்லை; இல்லை! நான் எழுதியது வரவில்லை, பரிசு எனக்குக் கிடைக்காவிட்டால் போகட்டும். ஆனால் கதையை இவ்வளவு சோகமாக முடித்திருக்க வேண்டாம்."
"அடடா! சோகமாகவா முடிந்திருக்கிறது? நான் நன்றாகப் படிக்கவில்லை!"
"ஆமாம்; நேற்று நீங்கள் கொஞ்சம் படிப்பதற்குள் நான் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். நான் பரிசுப் போட்டிக்கு எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?"
"போஸ்டு மாஸ்டர் சொன்னார்."
"ஓகோ! என்னைப் பற்றி இன்னும் ஏதாவது வம்பு வளர்த்தாரா?"
"இல்லை, இல்லை! தங்களைப் பற்றி ரொம்ப நல்ல மாதிரி பேசினார்."
"போகட்டும்; இந்த மட்டும் விட்டாரே! இந்த ஊரிலேயே வம்புப் பேச்சு அதிகம்!"
"அதைப் பற்றி நமக்கு என்ன? நம்முடைய மனச் சாட்சிக்கேற்ப நாம் நேர்மையாக நடந்து கொண்டால், ஊரில் உள்ளவர்கள் என்ன பேசினால் நமக்கு என்ன கவலை?"
"நம் காதில் விழாமல் என்ன பேசிக் கொண்டாலும் பரவாயில்லை. நம்மிடமே வந்து ஏதாவது வேண்டாத கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பாருங்கள் இதோ இந்தக் குழந்தை இருக்கிறானே, இவன் என் சொந்தக் குழந்தையா, இல்லையா என்று ஊராருக்கு என்ன கவலை? எத்தனை பேர் என்னைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?"
"சில பேருக்கு இப்படிப் பிறத்தியாரைக் குறித்து வம்பு வளர்ப்பதிலேயே ஆனந்தம். அவர்களுடைய சுபாவமே அப்படி! அது போனால் போகட்டும். எப்படி முடித்திருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது? நீங்கள் என்ன மாதிரி கதையை முடித்திருந்தீர்கள்?" என்று கேட்டான் சந்திரசூடன்.
"அதைப்பற்றிப் பேசுவதற்கே எனக்குச் சங்கடமாயிருக்கிறது" என்றாள் மனோன்மணி.
"அடடா! அவ்வளவு சகிக்க முடியாமல் எழுதியிருப்பதற்கா பரிசு கொடுத்திருக்கிறார்கள்?"
"சகிக்க முடியாமல் எழுதியிருப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஒரு விதத்தில் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் என்னுடைய சொந்த அனுபவமும் இந்தக் கதையில் சேர்ந்திருப்பதால் வருத்தம் உண்டாக்குகிறது."
"சொந்த அனுபவமா? ஆச்சரியமாயிருக்கிறதே!"
"சொந்த அனுபவம் என்றால், எனக்கு நேர்ந்தது அல்ல. இந்தக் கதையில் உள்ளது போன்ற ஒரு சம்பவம் என் சிநேகிதி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது..."
"அப்படியா?"
"இப்போது என் மனம் சரியாயில்லை. இன்னொரு நாள் வந்தீர்களானால் சொல்லுகிறேன். யாரிடமாவது சொன்னால் என் மனத்தில் உள்ள பாரம் குறையலாம். ஆனால் அனுதாபத்துடன் கேட்பவர்களாயிருக்க வேண்டும். தங்களைப் பார்த்தால் அவ்விதம் கேட்பீர்கள் என்று என் மனத்தில் ஏனோ தோன்றுகிறது."
"அது என்னுடைய அதிர்ஷ்டந்தான்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்."
இந்தச் சமயத்தில் வாசலில் காலடிச் சத்தம் கேட்டு சந்திரசூடன் திரும்பிப் பார்த்தான். நேற்று போஸ்ட் மாஸ்டர் சுட்டிக் காட்டிய புலி வேட்டை மனோகரன் வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து சென்ற சாயபு எதிரேயிருந்த போஸ்டாபீஸ் தாழ்வாரத்தில் நின்றான்.
வரும் போது மனோகரன், கைவண்டியிலிருந்த ராஜ் மோகனைப் பார்த்து, "ஏண்டா நொண்டிப் பயலே! என்னடா சேதி?" என்றான். அது சந்திரசூடன் காதில் நாராசமாக விழுந்தது. மனோன்மணி முகம் சுருங்குவதையும் கவனித்தான்.
"என்னடா நான் கேட்கிறேன், பேசாமலிருக்கிறாயே?" என்று சொல்லிக் கொண்டே மனோகரன் குழந்தையின் காதைப் பிடித்துத் திருகினான். குழந்தை 'வீல்' என்று அலறத் தொடங்கியது.
மனோன்மணி முகத்தில் கோபம் கொதித்தது. அவள் எழுந்தாள். அதற்குள் மனோகரன் குழந்தையின் காதை விட்டு விட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தான். சந்திரசூடனை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு, இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டான்.
"பேச்சின் நடுவில் 'டிஸ்டர்ப்' பண்ணுகிறேன் போலிருக்கிறது! மன்னிக்க வேணும்!" என்றான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்" என்றாள் மனோன்மணி.
"ஆம்; புறப்பட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் வருவதைப் பார்த்து விட்டுத் தான் தங்கினேன். 'புன்னைவனத்துப் புலி'யைப் பற்றிப் பத்திரிகையில் அமர்க்களப்படுகிறது! தாங்கள் துப்பாக்கி சகிதமாக மலை மேல் போய் விட்டு வருவதை தினம் பார்க்கிறேன். அதைப் பற்றித் தங்களிடம் விசாரிக்க விரும்பினேன்."
"ஓ! தங்களுக்கு வேட்டையில் பிரியம் உண்டா? ரொம்ப சந்தோஷம்! அந்தப் புலி ஒரு மாதமாய் எனக்கு 'டிமிக்கி' கொடுத்துக் கொண்டு வருகிறது. நீங்களும் வருவதாயிருந்தால்..."
"அழைத்துப் போனால் வரலாம் என்று தான் உத்தேசம். நான் இந்த ஊருக்குப் புதிது!"
"அப்படித் தான் நினைத்தேன் மனோன்மணி! இவரை எனக்கு நீ அறிமுகம் செய்து வைக்கவில்லையே?"
"அவருக்கு அந்தச் சிரமம் வேண்டியதில்லை. நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனக்கு மதராஸ். பெயர் சந்திரசுடன். வயது இருபத்து நாலு. போன வருஷம் பி.எல். பாஸ் செய்தேன். இன்னும் தொழில் ஆரம்பிக்கவில்லை. கலியாணம் ஆகவில்லை. செய்து கொள்வதாகவும் உத்தேசமில்லை. இன்னும் ஏதாவது தகவல் வேணுமானால் கேளுங்கள்..."
மனோகரன் இடி இடியென்று சிரித்து விட்டு, "ரொம்ப வந்தனம். நாளை மலை மேல் ஒரு வேளை புலியைச் சந்தித்தால் தங்களைத் தக்கபடி அதற்கு 'இண்டரட்யூஸ்' பண்ணி வைக்கலாம். நாளை வருகிறீர்கள் அல்லவா?" என்றான்.
"கட்டாயம் வருகிறேன், எங்கே சந்திக்கலாம்?"
"பண்ணையார் வீடு என்றால், எல்லோருக்கும் தெரியும். அல்லது நீங்கள் இருக்குமிடத்தைச் சொன்னால்..."
"ஸ்ரீதர் ஹோட்டலில் இருக்கிறேன். நாளை தங்கள் வீட்டுக்கே வந்து விடுகிறேன். போய் வரட்டுமா?"
இவ்விதம் இரண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு சந்திரசூடன் புறப்பட்டுச் சென்றான்.
தற்செயலாக அவன் பார்வை எதிரே தபால் ஆபீஸ் தாழ்வாரத்தில் நின்ற சாயபுவின் பேரில் விழுந்தது. அந்த சாயபு கையில் 'தீபம்' பத்திரிகையை வைத்துக் கொண்டு வாசிப்பதாகத் தோன்றியது.
"அடே அப்பா! 'தீபம்' பத்திரிகைக்கு எத்தனை கிராக்கி?" என்று எண்ணி வியந்து கொண்டே போனான்.
4
மறுநாள் சந்திரசூடன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். மனோகரன் அவனை உற்சாகமாக வரவேற்றுப் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். சந்திரசூடன் பி.எல். பாஸ் செய்தவன் என்று அறிந்ததும் பண்ணையாருக்கு அவன் மீது தனிப்பட்ட சிரத்தை ஏற்பட்டது. மறுபடியும் அவனை வரும்படியாகச் சொன்னார்.
சந்திரசூடன் மனோகரனுடன் சில நாள் மலை மேல் வேட்டையாடுவதற்காகச் சென்று வந்தான். முயல், நரி, பெருச்சாளி முதலிய பிராணிகள் சில அற்பாயுளில் மாண்டன. புலி மட்டும் அகப்படவில்லை.
பண்ணையார் தனிப்படச் சந்திரசூடனைச் சந்கிக்க நேர்ந்த ஒருநாள் 'உயில்' எழுதும் முறைகளைப் பற்றி அவனிடம் விசாரித்தார். தம்முடைய சொத்துக்கள் பெரும்பாலும் சுயார்ஜிதம் என்றும் அவற்றைத் தம் இஷ்டப்படி யாருக்காவது எழுதி வைக்கலாமா என்றும் கேட்டார். சுயார்ஜித சொத்தில் சொந்தப் பிள்ளையின் உரிமை என்ன, பேரனின் உரிமை என்ன, சுவீகார புத்திரனுடைய பாத்தியதைகள் என்ன - என்றெல்லாம் விவரமாகக் கேட்டார்.
மனோகரனும் அதே விஷயத்தைப் பற்றித் தன்னிடம் விசாரித்தது சந்திரசூடனுக்கு வியப்பாயிருந்தது. ஒரு மாதிரி அவர்களுடைய பேச்சிலிருந்து ஊகம் செய்து நிலைமையை அறிந்து கொண்டான். மனோகரன் பண்ணையாரின் சொத்துக்களைத் தன்பெயருக்கு உயில் எழுதி வைத்து விடும்படி வற்புறுத்தி வருவதாகத் தெரிந்தது. பண்ணையாரின் மனத்தில் இது நியாயமா என்ற கேள்வி எழுந்து உறுத்திக் கொண்டிருந்தது. அத்துடன் சட்டப்படி செல்லுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
சந்திரசூடன் பண்ணையாரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகி அவருடைய அபிமானத்தை ஓரளவு சம்பாதித்துக் கொண்ட பிறகு, "நீங்கள் இப்படியெல்லாம் மர்மமாய்க் கேட்டால் ஒன்றும் தெளிவாகாது. மனத்தில் உள்ளதை மனம் விட்டுச் சொன்னால், நான் சட்டங்களைப் பார்த்துத் திட்டமாகச் சொல்ல முடியும்" என்றான்.
அதன் பேரில் பண்ணையாரும் மனம் விட்டுப் பேசினார். தம் ஒரே பிள்ளையாகிய தர்மராஜன், தம் பேச்சைக் கேட்காமல் ஒரு கீழ் சாதிப் பெண்ணை மணந்து கொண்டதைப் பற்றியும், அவனைத் தாம் நிராகரித்து விட்டதைப் பற்றியும் கூறினார். அவன் சில காலத்துக்கு முன் ஒரு விமான விபத்தில் மாண்டு போனதாக வதந்தி என்றும், ஆனால் நிச்சயம் தெரியவில்லையென்றும், அந்தச் செய்தி வருவதற்கு முன்பே மனோகரனைத் தாம் அழைத்துக் கொண்டது பற்றியும் தெரிவித்தார். மகன் வீட்டை விட்டுப் போனதற்குப் பிறகு அவனைப் பற்றியோ, அவன் குடும்பத்தைப் பற்றியோ தாம் ஒன்றும் விசாரிக்கவில்லையென்று கூறினார். ஒரு வேளை அவனுடைய மனைவி இருந்தால், சொத்தில் அவர்களுக்குப் பாத்தியதை உண்டா என்று கேட்டார்.
நிராகரித்த மகனைப் பற்றிப் பண்ணையார் இன்னமும் தாட்சண்யமின்றிக் கடுமையாகவே பேசினார். ஆனாலும், அவனுக்கு நேர்ந்ததாகக் கேள்விப்பட்ட கதியைப் பற்றிப் பேசும்போது அவர் நெஞ்சு சிறிது இளகியிருந்ததாகத் தோன்றியது.
சந்திரசூடன் அவருடைய நெஞ்சு இளக்கத்தை அதிகமாக்குவதற்கு முயன்றான்.
"பையனுடைய தலைவிதி அப்படியிருந்தது. அதற்காக மற்றவர்களை ஏன் கோபிக்க வேண்டும்? அவனுக்குக் குழந்தைகள் உண்டா என்பது பற்றி விசாரிப்பது அவசியம். இந்த உலகத்தில் கடவுளை நேரில் தரிசிப்பது என்றால் குழந்தைகளிடந்தான் தரிசிக்கலாம். உலகப் பற்றுக்களை ஒழித்த பெரிய மகான்கள் கூடக் குழந்தைகளிடம் ஆசை காட்டினார்கள் என்று அறிந்திருக்கிறோம் அல்லவா?" என்றான் சந்திரசூடன்.
"இந்தப் பெரிய வீட்டில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று நானுந்தான் ஏங்குகிறேன். அந்தப் பாவி இப்படி எங்களை விட்டு விட்டுப் போய் விட்டானே?" என்றார் பண்ணையார்.
பின்னர் இந்த விஷயத்தைப் பற்றி அடிக்கடி பேச்சு நடந்தது. பண்ணையாரின் மனைவியும் அதில் சேர்ந்து கொண்டாள். "எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு அவன் தான் போய்விட்டான். அவனுக்கு ஏதாவது குஞ்சு குழந்தை இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டுமென்று நான் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன். இவர் ஒரே பிடிவாதமாயிருக்கிறார். ரொம்ப கல் நெஞ்சுக்காரர்!" என்றாள் பண்ணையாரின் மனைவி.
"எப்படியடி விசாரிக்கிறது? எப்படி விசாரிக்கிறது என்று கேட்கிறேன். பத்திரிகையில் விளம்பரம் போடச் சொல்கிறாயா? அல்லது ஊர் ஊராகப் போய் டமாரம் அடிக்கச் சொல்கிறாயா?" என்றார் பண்ணையார்.
இந்த மாதிரிப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் மனோகர் திடீரென்று உள்ளே வந்து விட்டான். அவன் முகத்தின் சுளிப்பைச் சந்திரசூடன் கவனித்து, உடனே அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
5
முதல் சந்திப்புக்கு நாலு நாளைக்குப் பிறகு ஒரு நாள் சந்திரசூடன் மிஸ். மனோன்மணியைப் பார்க்கச் சென்றான்.
"இந்தப் பக்கம் அப்புறம் நீங்கள் வரவேயில்லையே! ராஜ்மோகன் கூட 'சமத்து மாமா'வைப் பற்றி இரண்டு மூன்று தடவை கேட்டு விட்டான்!" என்றாள் மனோன்மணி.
"மிஸ்டர் மனோகர் ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறாரே என்று நான் வரவில்லை. அன்றைக்கே நான் இங்கே வந்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது."
"மனோகருக்குப் பிடிக்கவில்லையென்பது ஒரு காரணமா?...இருக்கலாம்; நான் என்ன கண்டேன்? அவருடன் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்கள் போலிருக்கிறது. அவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறீர்களாமே!"
"ஆமாம், தினமும் நாங்கள் மலைமேல் வேட்டையாடப் போகிறோம். போகும் போதும் திரும்பும் போதும் அவர் வீட்டுக்குப் போகிறேன்."
"அவருடைய அப்பா அம்மாவைப் பார்த்தீர்களா?"
"ஓ! பார்த்தேன். தினமும் பார்க்கிறேன்; பேசுகிறேன். ரொம்ப நல்ல மனிதர்கள். மகன் விஷயத்திலே மட்டும் பண்ணையார் மோசமாக நடந்து விட்டார். அதற்காக இப்போது கிழவரின் மனத்தில் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது..."
"அப்படியா? சொன்னாரா, என்ன?"
"வாய் விட்டுச் சொல்லவில்லை. பேச்சுப் போக்கில் தெரிகிறது. அவருடைய சொத்துக்களை உயில் எழுதி வைப்பது பற்றி இப்போது ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்."
"பண்ணையாரை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும். நான் வேலை பார்க்கும் பள்ளிக் கூடத்துக்கு அவர் ஒரு டிரஸ்டி. பள்ளிக்கூடத்தின் அபிவிருத்தி பற்றி அவரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இந்த வீட்டில் சில 'ரிப்பேர்'கள் அவசியமாயிருக்கின்றன. தாங்கள் ஒரு தடவை என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைக்க முடியுமா?" என்று மனோன்மணி ஆவலுடன் கேட்டாள்.
"புதிய மனிதனாகிய என்னிடம் கேட்கிறீர்களே; மனோகரிடம் சொன்னால் உடனே காரியம் ஆகிவிடுமே?" என்றான் சந்திரசூடன்.
"அவரிடம் பல தடவை சொல்லியாகிவிட்டது. 'ஆகட்டும்' 'ஆகட்டும்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, அழைத்துப் போகவில்லை."
"இப்படி இரண்டுங் கெட்டானாக உங்களை அழைத்துப் போகாமல் பண்ணையார் வீட்டு எஜமானியாக்கி அழைத்துப் போக விரும்புகிறார் போலிருக்கிறது."
"ஆமாம்; அத்தகைய விருப்பம் அவருக்கு இருக்கிறதென்று என்னிடமும் தெரிவித்தார். ஆனால் இந்தக் குழந்தைதான் அவர் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கிறான். அவனை எங்கேயாவது ஓர் அநாதை ஆசிரமத்தைப் பார்த்து தொலைத்துவிட வேண்டும் என்கிறார்."
"அது இயற்கைதானே?"
"எது இயற்கை! புருஷர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் கல்நெஞ்சர்களாயிருப்பார்கள் போலிருக்கிறது."
"இல்லை, இல்லை! 'மிஸ்டர் மனோகர் அப்படிச் சொல்வது இயற்கைதானே' என்றேன். எல்லா புருஷர்களும் அப்படியிருக்க மாட்டார்கள்."
"அது உண்மைதான்; சிலருக்குக் குழந்தைகள் என்றாலே பிடிப்பதில்லை. அன்றைக்கு மனோகர் இந்தக் குழந்தை விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார் பாருங்கள்! அதிலும் 'நொண்டிப் பயலே!' என்று அவர் அழைத்தபோது எனக்கு அசாத்திய கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். பச்சைக் குழந்தையின் இளம் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது என்று கூடச் சிலருக்குத் தெரிவதில்லை. அடுத்தாற்போல, நீங்களும் ராஜ்மோகனும் பார்த்தவுடனேயே சிநேகமாகி விட்டீர்கள்."
"குழந்தைகள் என்றாலே எனக்கு ஒரு தனி உற்சாகம். மனோகரின் நிலைமையில் நான் இருந்தால், தங்களை இந்த ஒரு குழந்தையோடு மட்டுமல்ல, தாங்கள் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் அத்தனை குழந்தைகளையும் சேர்த்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றாலும் செய்து கொள்ளத் தயாராயிருப்பேன்!"
மனோன்மணி கலகலவென்று சிரித்துவிட்டு, பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் அடிக்கும் கொட்டத்தை நீங்கள் ஒரு நாளைக்குப் பார்த்தால் அப்புறம் இம்மாதிரி சொல்ல மாட்டீர்கள்" என்றாள்.
பின்னர், "நான் தங்களுக்கு அவ்வளவு தொந்தரவு கொடுக்க மாட்டேன். ஒரு உதவி செய்தால் போதும். தயவு செய்து பண்ணையார் வீட்டுக்கு என்னை ஒரு தடவை அழைத்துப் போய் அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா?" என்று கேட்டாள்.
"பரஸ்பரம் நம்பிக்கை உள்ளவர்கள் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்" என்றான் சந்திரசூடன்.
"அதில் என்ன சந்தேகம்?" என்றாள் மனோன்மணி.
"என்னிடம் உங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கிறதா என்பது தான் சந்தேகம்."
"நிச்சயமாயிருக்கிறது. இல்லாவிடில் உங்களிடம் இந்த உதவி கேட்டிருப்பேனா?"
"நம்பிக்கையிருந்தால் என்னிடம் உண்மையைச் சொல்ல வேணும். பண்ணையாரைச் சந்திப்பதற்கு இவ்வளவு ஆவல் ஏன்?"
"நானே அதைச் சொல்லிவிட வேண்டும் என்றிருந்தேன். தாங்கள் கேட்டு விட்டீர்கள். முக்கியமான விஷயத்தை முதலில் சொல்லுகிறேன். ராஜ்மோகன் என் சொந்தக் குழந்தையல்ல" என்றாள் மனோன்மணி.
"அப்படியா? இதை மனோகரிடம் சொன்னீர்களா?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"இரண்டு மூன்று தடவை சொல்ல நினைத்தேன். ஏதோ தயக்கம் வந்து சொல்லவில்லை. சொந்தக் குழந்தையென்று சொல்லும் போதே இப்படி அதனிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்கிறாரே...?"
"ஆம், ஆம்! அவரிடம் சொல்லாமலிருப்பதே நல்லது. மற்ற விவரங்களைக் கூறுங்கள்!"
"ராஜ்மோகன் என் அருமைச் சிநேகிதியின் குழந்தை. அவள் பெயர் ஸுசேதா. அவளும் நானும் குழந்தைப் பருவம் முதல் ஒன்றாய் வளர்ந்தோம். ஒன்றாய்ப் படித்தோம். இரண்டு பேரும் கலியாணம் செய்து கொள்வதில்லை யென்றும், உத்தியோகம் பார்த்துச் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஸுசேதாவின் புத்தி தடுமாறி விட்டது. காதல் என்ற மூடத்தனத்தில் விழுந்து, யாரோ ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். அதானால் அவருக்கும் கேடு விளைவித்துத் தனக்கும் கேடு தேடிக் கொண்டாள். கேடு பின்னால் வந்தது. கலியாணமான புதிதில் அவர்கள் சந்தோஷமாய்த் தானிருந்தார்கள். மூன்று உலகத்திலும் தங்களுக்கு நிகரில்லை என்று இருந்தார்கள். பிறகு இந்தக் குழந்தை பிறந்தது. அதனால் அவர்களுடைய கொண்டாட்டம் இன்னும் அதிகமேயாயிற்று. கொஞ்ச நாளைக்குப் பிறகு குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று தெரிந்தது. இதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. கால் ஊனத்தைக் குழந்தைப் பருவத்திலேயே சரிப்படுத்திவிடலாம் என்று கேள்விப்பட்டு அதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். குழந்தையை டாக்டர்களிடம் எடுத்துப் போவதே அவர்கள் வேலையாயிருந்தது.
"ஒரு சமயம் ஸுசேதாவின் கணவன் பம்பாய்க்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே குழந்தையின் கால் சிகிச்சையைப் பற்றியும் தெரிந்து கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போனார். அந்தச் சமயத்தில் என் சினேகிதிக்கு 'டைபாய்டு' சுரம் வந்துவிட்டது. நான் தான் ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். அவளுடைய விருப்பத்தின்படி பம்பாய்க்குத் தந்தி அடித்தேன். அவரும் மறுநாள் புறப்பட்டு ஆகாய விமானத்தில் வருவதாகப் பதில் தந்தி அடித்தார். துரதிர்ஷ்டத்தைக் கேளுங்கள். அவர் மறுநாள் வருவதற்குத் தான் விமானத்தில் 'ஸீட்' ரிஸர்வ் செய்திருந்தார். இதற்குள் அன்றைக்கே பம்பாயிலிருந்து சென்னைக்குப் புறப்படுவதாக இருந்த ஒரு சிநேகிதனைப் பார்த்தாராம். அவன், 'நான் இன்றைக்குப் போக முடியவில்லை; நீ போகிறாயா?" என்று கேட்டானாம். இவரும் 'சரி' என்றாராம். இதையெல்லாம் டிரங்க் டெலிபோன் மூலம் என்னிடம் தெரிவித்து, அன்று, சாயங்காலம் வந்து விடுவேன் என்றார். நானும் ஸுசேதாவிடம் சொன்னேன். அவள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. பேதைப் பெண்! அன்று பம்பாயிலிருந்து புறப்பட்ட விமானம் சென்னைக்கு வந்து சேரவில்லை. புயல் மழை காரணமாக விமானம் தறிகெட்டு எங்கேயோ விழுந்து எல்லோரும் இறந்திருக்க வேண்டும் என்று செய்தி வந்தது. இதை அறிந்த பிறகு ஸுசேதாவின் உடம்பு அதிகமாகிவிட்டது. பிழைத்து எழுந்திருக்கவேயில்லை. கண்ணை மூடுவதற்கு முன்னால் இந்த அநாதைக் குழந்தையைக் காப்பாற்றும்படி என்னிடம் வேண்டிக் கொண்டாள்..."
இச் சமயத்தில் மனோன்மணி விம்மினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின. கண்களை துடைத்து கொண்டு சில நிமிஷம் சும்மா இருந்து விட்டு, "அவ்வளவுதான் கதை! அது முதல் இக் குழந்தையை வளர்ப்பது எனது கடமையென்று கருதி வளர்த்து வருகிறேன்" என்றாள்.
"'தீபம்' பத்திரிகையின் பாதிக் கதையில் உங்களுக்கு ஏன் அவ்வளவு சிரத்தை என்பது இப்போது தெரிய வருகிறது" என்றேன்.
"ஆம்; கதையில் உள்ளது போலவே என் சிநேகிதியின் கதை ஆகிவிட்டது."
"அப்புறம் மிச்சத்தைச் சொல்லுங்கள்."
"மிச்சம் ஒன்றுமில்லையே!"
"பண்ணையாரைத் தாங்கள் பார்க்க விரும்புவது எதற்காக என்று சொல்லவில்லையே?"
"இந்தக் குழந்தையின் கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து சரியாக்க வேண்டுமென்று ஸுசேதாவுக்கு ரொம்ப ஆசை. அதை நிறைவேற்ற வேண்டுமென்று பார்க்கிறேன். சிகிட்சைக்குப் பணம் அதிகமாக வேண்டியிருக்கிறது. பண்ணையார் தம் மகன் விஷயத்தில் கொடுமையாக நடந்து கொண்டாலும், தர்மவான் என்று கேள்வி..."
"போயும் போயும் இதற்காகவா, தெரியாத மனிதரிடம் போய் நிற்பார்கள்? ராஜ்மோகன் சிகிச்சைக்கு நானே ஏற்பாடு செய்வேனே?" என்றான் சந்திரசூடன்.
மனோன்மணி சற்று நேரம் சும்மா இருந்தாள்.
சந்திரசூடன், "நான் வரட்டுமா" என்றான்.
"ஆம்; நீங்கள் சொன்னது ரொம்பச் சரி. பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் எந்தக் காரியமும் செய்ய முடியாது. யாராவது ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டும். தங்களை நம்பிச் சொல்கிறேன். அப்புறம் ஆண்டவனுடைய சித்தம் போல் நடக்கட்டும்! பண்ணையார், மகனுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக, பேரனுக்கும் ஏதேனும் நல்லது செய்யட்டும் என்று பார்க்கிறேன். இந்த ஊர்ப் பண்ணையாரின் பேரன் தான் ராஜ்மோகன். என்னுடைய சிநேகிதி ஸுசேதா பண்ணையாரின் மகன் தர்மராஜனைத் தான் மணந்து கொண்டாள். இருவரும் இப்போது போய்விட்டார்கள். அவர்கள் மேல் பண்ணையாருக்கு இருந்த கோபத்தை இந்தப் பச்சைக் குழந்தையின் மேல் காட்டுவார் என்று நினைக்கிறீர்களா?"
"இந்த விஷயத்தை தங்களிடம் கிரஹிப்பதற்குள், புன்னைவனத்துப் புலியைக் கூடப் பிடித்துவிடலாம் என்று ஆகி விட்டது. இந்த ஊருக்குத் தாங்கள் வந்ததே அந்த உத்வேகத்துடன் தான் என்று சொல்லுங்கள்!"
"ஆம், ஐயா! எனக்கு உதவி செய்ய முடியுமா?"
"ஒரு சிநேகிதியின் குழந்தைக்காகத் தாங்கள் செய்துவரும் தியாகத்தை நினைக்கும் போது எனக்கு இது 'கலியுகம்' என்றே தோன்றவில்லை. 'சத்திய யுகம்' பிறந்துவிட்டதோ என்று நினைக்கிறேன். ஆனால் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். பண்ணையாரின் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கரைக்க வேண்டும். மனோஹரிடம் நீங்கள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையென்பது நிச்சயம்தானே?"
"நிச்சயந்தான். இரண்டு மூன்று தடவை சொல்லலாமா என்று எண்ணிப் பிறகு தயங்கி நிறுத்திக் கொண்டு விட்டேன்."
"இனியும் சொல்ல வேண்டாம், பண்ணையாரைப் பார்ப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்தவர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்."
"பண்ணையார் உயில் எழுதுவது பற்றி யோசிக்கிறார் என்கிறீர்களே? அதை நினைத்தால் கவலையாயிருக்கிறது..."
"அதே காரணத்துக்காகத்தான் நானும் சொல்கிறேன். உயில் விஷயமாகப் பண்ணையார் என்னிடந்தான் யோசனை கேட்கிறார். இந்தக் குழந்தையின் உரிமையைப் பாதுகாப்பது என் பொறுப்பு!" என்றான் சந்திரசூடன்.
6
மற்றும் சில தினங்கள் சென்றன. இந்த நாட்களில் சந்திரசூடன் அடிக்கடி பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவதில் அதிக நேரம் செலவிட்டு வந்தான்.
இடையிடையே வேட்டையாடுவதற்கு மலை மேலும் போய்க் கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரத்தில் சலிப்பு அடைந்துவிட்டான். புலியோ அவர்கள் கண்ணில் சிக்காமலே இருந்துவந்தது. மற்ற சிறிய பிராணிகளைச் சுட்டு கொல்லுவதில் சந்திரசூடனுக்குச் சிரத்தையிருக்கவில்லை.
மனோகரனுடன் தினந்தோறும் வந்த சாயபுவுடன் சந்திரசூடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அப்துல் ஹமீது வாயைத் திறக்கிற வழியாக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்வான்.
சாயபு வேட்டையில் ரொம்பக் கெட்டிக்காரனா என்று மனோகரனைச் சந்திரசூடன் ஒரு நாள் கேட்டான். "அவன் முகத்திலே கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தெரியவில்லையா? ஒரு தடவை ஒரு சிறுத்தைப் புலி அவன் பாய்ந்து விட்டது. அதனுடன் மல்யுத்தம் செய்து ஜயித்தான். அந்தப் போரில் புலி அவனுடைய இரண்டு கன்னங்களையும் பிறாண்டி விட்டது. அப்படியும் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. இந்த ஊர் புலியைக் கண்டு பிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதில் அவன் என்னைவிடத் துடியாயிருக்கிறான். ஆனால் புலி தென்பட்டால் என்னிடம் தான் சொல்லவேண்டும் என்றும் அவன் துப்பாக்கியில் கையை வைக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறேன். இத்தனை நாள் மலைமேல் அலைந்துவிட்டு, புலியை இன்னொருவன் சுடுவதற்கு விடுவேனா?" என்றான் மனோகரன்.
"அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. புன்னைவனத்துப் புலி தங்களுக்குச் சொந்தமா, என்ன? அதுவும் பண்ணையார் சங்கரசேதுராயரின் சொத்தா? என் கண்ணில் அகப்பட்டால் நான் சுடுவேன்" என்றான் சந்திரசூடன்.
அன்று மலைமேல் அவன் மற்ற இருவரையும் விட்டுப் பிரிந்து, "நான் வேறு பக்கம் போய்ப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான். மலைமேல் ஓரிடத்தில் புதர்கள் மனிதனை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வேளை புலி மறைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகையால் சந்திரசூடன் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு போனான். எதிரிலும் இரண்டு பக்கமும் பார்த்தானே தவிர, பின்புறத்தில் பார்க்கவில்லை. திடீரென்று அந்த நிசப்தமான மலைப் பிரதேசத்தில் சாயபுவின் குரல் 'புலி! புலி' என்று கூச்சலிட்டது. அதே சமயத்தில் பின்னால் புதர்களில் சலசலப்புக் கேட்டது. சந்திரசூடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஆம்; புதர்களுக்கு மத்தியில் புலி மறைந்து வந்து கொண்டிருந்தது. புலியின் முகம் தெரியவில்லை. ஆனால் உடம்பின் கோடுகல் தெரிந்தன. சந்திரசூடன் எவ்வளவோ துணிச்சல் உள்ளவனாயினும் அச்சமயம் வெலவெலத்துப் போனான். எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோ ம் என்ற எண்ணம் அவனுக்கு அத்தகைய வெலவெலப்பை உண்டாக்கிற்று. அன்றைக்கென்று அவன் இன்னொரு காரியத்தையும் அலட்சியம் செய்து விட்டான். துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டித்து தயாராக வைத்திருக்கவில்லை. புலியோ வெகு சமீபத்தில் வந்திருந்தது. ஆகையால் ஓடித் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவு செய்த அதே சமயத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. புதருக்குள் மறைந்து வந்து கொண்டிருந்த புலி திடீரென்று இரண்டு கைகளை நீட்டி அக்கைகளில் வைத்திருந்த துப்பாக்கியினால் அவனை நோக்கிக் குறி பார்த்தது. இது என்ன கனவா, மனப்பிரமையா, ஜால வித்தையா என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசிப்பதற்கு நேரமும் இருக்க வில்லை. ஓட்டம் பிடிப்பது ஒன்றுதான் அவன் செய்யக் கூடியதாயிருந்தது, அவ்வளவுதான் 'ஓ!' என்று அலறிக் கொண்டு வழி கண்ட இடத்தில் விழுந்தடித்து ஓடினான். துப்பாக்கிக் குண்டு அவனுக்குச் சமீபமாகப் பாய்ந்து சென்று ஒரு மரத்தைத் தாக்கியதைக் கண்டான். அவனுடைய ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாயிற்று. குடல் தெறிக்க ஓடி மலையிலிருந்து கீழே இறங்கினான். மனோன்மணியின் வீட்டை அடைந்த பின்னர் தான் நின்றான்.
மனோன்மணி வீட்டில் இருந்தாள். "என்ன? என்ன?" என்று ஆவலுடன் கேட்டாள். மூச்சு வாங்கல் நின்ற பிறகு, இனிமேல் நான் வேட்டையாடப் போக மாட்டேன்! போகமாட்டேன்!" என்றான்.
மனோன்மணி ஒன்றும் புரியாதவளாய், "ஒரு வேளை இன்று புலியைப் பார்த்தீங்களோ?" என்று கேட்டாள்.
"ஆமா, பார்த்தேன்! அது ரொம்பப் பொல்லாத புலி" என்றான் சந்திரசூடன்.
"அது பொல்லாத புலி என்று தான் தெரியுமே? எத்தனை ஆடு மாடுகளை அடித்துக் கொன்றிருக்கிறது? இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேட்டைக்கு போயிருக்கக் கூடாது!" என்றாள் மனோன்மணி.
"ஆடு மாடுகளை அடித்துக் கொல்வதோடு அந்தப் புலி நின்றால் பாதகமில்லை. மனிதர்களையும் தாக்க வருகிறது!" என்றான் சந்திரசூடன்.
"மனிதர்களைக் கண்டால், அதுவும் வேட்டையாட போகும் மனிதர்களைக் கண்டால், புலி பிரதட்சணம் செய்து நமஸ்காரம் பண்ணுமா?"
"அப்படிப் பண்ண வேணும் என்று நான் சொல்லவில்லை. எல்லாப் புலிகளையும் போல் மனிதன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. இந்தப் புலி கையில் துப்பாக்கி எடுத்துச் சுட வருகிறது!"
புலியைக் கண்ட கிலியினால் இவருக்கு ஏதாவது மூளைக் கோளாறு வந்து விட்டதோ என்ற பாவத்தோடு சந்திரசூடனை மனோன்மணி பார்த்தாள். அப்புறம் வேறு பேச்சு எடுத்தாள். சந்திரசூடனும் பின்னர் மூளைத் தெளிவுடன் பேசினான்.
"நான் இன்றைக்கு மதராஸ் புறப்பட்டுப் போகிறேன். பண்ணையாரின் உயில் எழுதும் காரியமாகத்தான் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்றாள்.
"எந்த விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்று கேட்டாள் மனோன்மணி.
"பொதுவாக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். குழந்தை ராஜ்மோகன் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்" என்றாள்.
"உண்மைதான், வரவர, மனோகரின் நடத்தையில் முரட்டுத்தனம் அதிகமாகி வருகிறது. அது மட்டும் அல்ல, அவருடன் வரும் சாயபு ஒருநாள் குழந்தையின் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நகர்ந்து விட்டான். அது வேற எனக்கு கவலையாயிருக்கிறது."
"நானும் ஒரு நாள் அதைக் கவனித்தேன், சாயபுவிடம் கேட்டு விட்டேன். 'இந்தக் குழந்தையின் காலில் ஏதோ ஊனம் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் மலையாள வைத்தியம் வரும். அதனால், காலைக் குணப்படுத்த முடியுமா என்று பார்த்தேன்' என்றான். அவனுடைய பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை."
"மொத்தத்தில் இந்த ஊரில் இருக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது. பண்ணையாரைப் பார்க்க முடியாது என்றோ, பார்த்துப் புண்ணியமில்லை என்றோ ஏற்பட்டால், இந்த ஊரைவிட்டுச் சீக்கிரத்தில் போய் விட விரும்புகிறேன்" என்றாள் மனோன்மணி.
"அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள், நான் திரும்பி வந்ததும் ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் சந்திரசூடன்.
இந்தச் சமயத்தில் மனோகரும் வந்து சேர்ந்தான். சந்திரசூடனைப் பார்த்து இடி இடி என்று சிரித்தான். "இத்தனை நாளைக்குப் பிறகு புலி கண்ணுக்குத் தென்பட்டது. அதை அப்படிக் கூச்சல் போட்டு விரட்டி விட்டீரே? அப்பப்பா! என்ன ஓட்டம்! என்ன ஓட்டம்! புலி வேட்டைக்குச் சரியான ஆள் நீர் தான்!" என்று சொல்லி விட்டு மனோகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
7
சந்திரசூடன் மதராஸுக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துப் புன்னைவனத்துக்குத் திரும்பி வந்தான். அதற்கு முதல் நாள் புன்னைவனத்தில் ஒரு விசேஷம் நடந்தது என்று அறிந்தான். மலைமேலுள்ள கோயிலில் இரண்டு நாள் உற்சவம் நடந்தது. அதற்காகத் திரளான ஜனங்கள் மலைமேல் ஏறிச் சென்றார்கள். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். புலியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தபடியால் அனேகர் தடிகள், ஈட்டிகள் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் சென்றார்கள். இந்தத் தடபுடலினால் பயந்துதானோ என்னமோ, புலி பட்டப் பகலில் கீழே இறங்கி வந்து விட்டது. நடுச் சாலையில் ஒரு மாட்டின் மீது பாய்ந்து கொன்றது. இந்த விஷயம் பரவி விடவே உற்சவத்துக்கு வந்திருந்த ஜனங்களில் பலர் கூச்சலிட்டுக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார்கள். தைரியசாலிகள் தடிக் கம்புகளையும் ஈட்டிகளையும் வேல்களையும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்க ஓடி வந்தனர். மனோகரும் துப்பாக்கியை எடுத்து வந்தான். அதற்குள் புலி 'காபரா' அடைந்து ஓடிவிட்டது. புலியைப் பார்த்தவர்கள் அதற்கு ஒரு கால் ஊனம் என்றும், நொண்டி நொண்டி நடந்தது என்றும் சொன்னார்கள்.
'புலி அடித்த மாட்டை அங்கேயே விட்டு வைத்திருந்தால் திரும்பவும் புலி வரும்' என்று அனுபவசாலிகள் சொன்னதன் பேரில் அப்படியே செய்தார்கள். நாலாபுறத்திலும் காவலும் போட்டிருந்தார்கள்.
இந்த நிலையிலேதான் சந்திரசூடன் திரும்பி வந்தான். ஹோட்டலில் மேற்கூறிய விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். துப்பாக்கியைக் குண்டு போட்டுக் கெட்டித்துக் கையில் எடுத்துக் கொண்டான். முதலில் மனோன்மணி வீட்டுக்குப் போனான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டாள் என்று தெரிந்தது. குழந்தை ராஜ்மோகன் 'சமர்த்து மாமா'வைப் பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டான். மழலை மொழிகளில் முதல் நாள் ஊருக்குள் புலி வந்ததைப் பற்றியும் கூறினான்.
"மாமா! எனக்குப் புலி பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. அம்மாவோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்கிறாள். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ப் புலி காட்டறேளா, மாமா!" என்றான்.
"ஆகட்டும், ஆகட்டும்! அந்தப் பொல்லாத புலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலிலேயே கட்டிப் போட்டு விடுகிறேன்" என்று சொன்னான் சந்திரசூடன்.
பிறகு அவன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். அவரிடம் தனியாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் பெரிய அனுபவசாலியான வக்கீல்களுடன் கலந்தாலோசித்து எழுதிக் கொண்டு வந்திருந்த உயில் நகலைப் படித்துக் காட்டினான். அவருக்கும் அது திருப்தி அளித்தது. ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குச் சீக்கிரம் சென்று ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்துவிடவேண்டுமென்றும் அதுவரையில் யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் என்றும் பண்ணையார் கூறினார்.
இதற்குள் ஊரில் ஏதோ அல்லோலகல்லோலம் நடக்கிறது என்பதற்கு அறிகுறியான கோஷங்கள் எழுந்தன. "புலி திரும்பி வந்திருக்கிறதாம்!" என்று வீட்டு வேலைக்காரர்கள் சொன்னார்கள். சின்ன எஜமானர் முன்னமே துப்பாக்கி சகிதமாகப் போயிருப்பதாகவும் தெரிவித்தார்கள். சந்திரசூடனும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். "ஜாக்கிரதை, ஐயா ஜாக்கிரதை! நம்ம முரட்டுப் பிள்ளையையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்!" என்று பண்ணையார் சொல்லி அனுப்பினார்.
சந்திரசூடன் பண்ணையார் வீட்டை விட்டு வெளியேறிக் கூச்சல் அதிகமாகக் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றான். கிட்டத்தட்ட தபாலாபீசை நெருங்கிய போது ஒரு விந்தையான காட்சியைக் கண்டான். அது விந்தையான காட்சிதான்; அதே சமயத்தில் மிகப் பயங்கரமான காட்சியும்தான்.
பிரசித்தி பெற்ற 'புன்னைவனத்துப் புலி' கடைசியாக அவன் முன்னால் தரிசனம் அளித்தது. புலி மரம் ஏறும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆயினும் இந்தப் புலி வளைந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஜனங்கள் கூச்சல் போட்டுக் கொண்டு நாலாபுறமும் துரத்தவே அந்தக் காயம்பட்ட கிழப்புலி வேறு வழி இன்றித் தென்னை மரத்தின் மேல் பாய்ந்து ஏறிக் கொண்டது போலும்! புலி ஏறிய தென்னை மரத்தின் ஒரு பக்கம் மனோகரனும், அவனுடைய உதவியாளனாகிய ஹமீதும் நிற்பதைச் சந்திரசூடன் கண்டான். மனோகரன் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். தென்னை மரத்தின் இன்னொரு பக்கத்தில் - பயங்கரம்! பயங்கரம்! மனோன்மணியின் வீட்டு வாசற்புற மதில்மேல் குழந்தை ராஜ்மோகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். குழந்தை எப்பேர்ப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது, பார்த்த அதே க்ஷணத்திலேயே சந்திரசூடனுக்குத் தெரிந்து விட்டது. மனோகரின் துப்பாக்கிக் குண்டு புலியின் மேல் பட்டாலும் சரி, அல்லது படாவிட்டாலும் சரி, புலி மறுபக்கமாகப் பாய்ந்தால் குழந்தையின் கதி அதோகதிதான்! இவ்வளவு விஷயங்களையும் சில விநாடி நேரங்களில் மனத்தில் கிரகித்துக் கொண்ட சந்திரசூடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று குழந்தையை அணுகினான். குழந்தை, "மாமா! மாமா! புலி புலி!" என்று உற்சாகமாகக் கூவியதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அப்படியே தூக்கி எடுத்துக் கொண்டு மதில் சுவருக்கு அந்தப்புறத்தில் குதித்தான். அவன் குதித்த அதே சமயத்தில் குண்டு ஒன்று அவர்களுக்குச் சமீபமாகத் தலைக்கு மேலே சென்று மனோன்மணியின் வீட்டுச் சுவரில் பாய்ந்தது.
சந்திரசூடன் குழந்தையை அப்படியே கீழே விட்டு விட்டு பக்கத்திலிருந்த மதில் வாசல் வழியாக வெளிவந்தான். புலி இன்னமும் தென்னை மரத்தின் மேல் தான் இருந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தன் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டான். அவன் சுட்ட குண்டு புலியின் மீது பாய்ந்தது என்று தெரிந்து கொண்டான். உடனடியாக இன்னும் இரண்டு மூன்று துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கேட்டது. புலி கீழே தடால் என்று விழுந்தது. ஒரு துள்ளுத் துள்ளி எழுந்திருக்கப் பார்த்து மறுபடியும் தள்ளாடி விழுந்தது. பயங்கரமான ஓர் உறுமல் உருமி விட்டுப் பிராணனை விட்டது.
மறுநிமிடம் ஜனக் கூட்டம் புலியைச் சூழ்ந்து கொண்டது. சந்திரசூடனும் புலிக்கு அருகில் சென்றான். அதற்குள் அங்கே வந்திருந்த மனோகரன் இவனைக் கண் பார்வையினாலேயே சுட்டு விடுகிறவனைப் போல் பார்த்து, "செத்த பாம்பை அடிக்கிற சூரர் உம்மைப் போல் கண்டதில்லை. நான் மூன்று குண்டு போட்டுப் புலியைக் கொன்ற பிறகு, நீ எதற்காக அதைச் சுட்டீர்?" என்று கோபமாகக் கேட்டான்.
"அதனால் என்ன! மூன்றோடு, நாலு! செத்த புலியில் பங்கு கேட்க நான் வரவில்லை; புலியைக் கொன்ற பெருமை முழுவதும் தங்களுக்கே இருக்கட்டும்!" என்றான் சந்திரசூடன்.
"ஒருவர் குறி வைத்த வேட்டையின் பேரில் இன்னொருவர் சுடுவது சட்ட விரோதம் தெரியுமா?"
"வேட்டை சம்பந்தமான சட்டம் ஒன்றும் எனக்குத் தெரியாது, ஸார்! தயவு செய்து மன்னிக்கவும்."
"மன்னிக்கவாவது மண்ணாங்கட்டியாவது? குறி பார்த்துச் சுடவாவது உமக்குத் தெரிகிறதா? மயிரிழை தவறியிருந்தால், குண்டு என் பேரில் அல்லவா பாய்ந்திருக்கும்?"
"அடடா! அப்படியா! ரொம்ப ரொம்ப வருந்துகிறேன். போனது போயிற்று. இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள்!" என்று சொல்லிவிட்டுச் சந்திரசூடன் அங்கிருந்து மெள்ள நகர்ந்தான்.
செத்த புலியை ஜனங்கள் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போனார்கள். புலியைச் சுட்டுக் கொன்ற வீரன் மனோகரனுக்கு மாலை சூட்டி அவனையும் ஊர்வலத்தின் முன்னணியில் அழைத்துச் சென்றார்கள். தமுக்கு தம்பட்ட முழக்கங்களும், "மனோகரனுக்கு ஜே!" என்ற கோஷமும் வானை அளாவின.
8
புலி ஊர்வலம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு சாயபு மட்டும் தனியாக நிற்பதைச் சந்திரசூடன் பார்த்தான். அவனை அணுகிச் சென்று, "நல்ல வேலை செய்தாய், சாயபு!" என்றான்.
"நல்ல சமயத்திலே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினீங்க!" என்றான் சாயபு.
"நானா காப்பாற்றினேன்? நீயல்லவா உன் எஜமானை நல்ல சமயத்தில் அசக்கிவிட்டு குறி தவறச் செய்து காப்பாற்றினாய்?"
அப்துல் ஹமீது அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
"அன்றைக்கு மலைமேல் 'புலி புலி' என்று கத்தினாயே? அது எனக்கு எச்சரிக்கை செய்வதறகாகத்தானே? உண்மையைச் சொல்?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"நம்ம சின்ன எஜமானும் ஒரு சிறு குழந்தைங்க. சில சமயம் விளையாட்டுப் புத்தி வந்திடுங்க! எஜமான் கிட்டச் சொல்லாதேங்க, ஸாமி! நம்ப பிளைப்புப் போயிடப் போவுது!"
"இதோ பார், சாயபு! வெறுமனே வேஷம் போடாதே! நீ பிழைப்புக்காக இவரிடம் வரவில்லை. வேறு காரியார்த்தமாக வந்திருக்கிறாய்? உள்ளதைச் சொல்லு" என்றான் சந்திரசூடன்.
அப்துல் ஹமீது திருதிருவென்று விழித்தான்.
சந்திரசூடன் அவன் காதோடு, "நீ ஸி.ஐ.டி.யைச் சேர்ந்தவன், இல்லையா?" என்றான்.
ஹமீது கண்களை ஒரு சிமிட்டுச் சிமிட்டி, "நீங்க என்னைவிடப் பெரிய ஸி.ஐ.டி.யாக இருக்கீங்களே!" என்றான்.
"உன் பேரில் இன்னொரு குற்றம் இருக்கிறது. 'தீபம்' பத்திரிகையில் கதை எழுதிப் பரிசு வாங்கியது நீதானே?"
சாயபு ஆச்சரியக் கடலில் முழுகியவனாய், "உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரிந்தது?" என்று கேட்டான்.
"சென்ற வாரம் மதராசுக்குப் போயிருந்தபோது 'தீபம்' காரியாலயத்துக்குச் சென்று கொஞ்சம் ரகளை செய்தேன். பத்திரிகாசிரியரைப் பார்த்து, 'பரிசு பெற்றவரின் புனைப் பெயர் மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். விலாசம் கொடுக்கவில்லை. உங்கள் பரிசுத்திட்டமே வெறும் மோசடி!' என்றேன். மனுஷர் பயந்து போய்ப் பரிசு பெற்றவன் பெயர், விலாசத்தைக் கொடுத்ததுடன், உம்முடைய கடித்தத்தையும் காட்டினார்."
"அடே! நம் குட்டு வெளியாயிட்டே? யாரிடமும் சொல்லாதீங்க! நம்ம தமிழ் நடை எப்படி இருந்ததுங்க?"
"தமிழ் நடை நன்றாய்த்தானிருந்தது. ஆனால் கதை முடிவுதான் மோசம். கலியாணத்தில் கொண்டு போய் முடித்திருக்கக்கூடாதா?"
இச்சமயத்தில் சாயபு, "அதோ!" என்றான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பண்ணையார் வந்து கொண்டிருந்தார். சந்திரசூடன், "சரி! இன்னொரு தடவை நாம் சந்திக்க வேண்டும், தெரிகிறதா?" என்றான்.
இருவரும் உடனே பிரிந்து போனார்கள்.
9
சந்திரசூடன் நேரே மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். அதற்குள் மனோமணியும் அங்கே வந்திருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தின் பலகணி வழியாகப் புலி தென்னை மரத்தில் ஏறியதையும் பிறகு நடந்தவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட திகிலின் படபடப்பு இன்னும் முழுவதும் போகவில்லை. குழந்தையைக் கட்டி அணைத்து ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையும் மழலைச் சொல்லில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
சந்திரசூடனைப் பார்த்ததும் மனோன்மணியின் கண்ணில் கண்ணீர் ததும்பியது.
"எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். குழந்தையைக் காப்பாற்றினீர்கள். தங்களுக்கு எந்த விதத்தில் நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை" என்று தட்டுத் தடுமாறிக் கூறினாள்.
"நன்றி சொல்வதற்குக் காலம் வரும்; அப்போது சொல்லுகிறேன்" என்றான் சந்திரசூடன்.
"குழந்தை இப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தான், தெரியுமா? நீங்கள் புலியை இவன் வீட்டுக்குக் கொண்டு வருகிறேன் என்றீர்களாம். அப்படியே செய்து விட்டீர்களாம். அந்த முரட்டு மாமா அநியாயமாய்ச் சுட்டுக் கொன்று விட்டாராம்!"
இதற்குள் ராஜ்மோகன், "மாமா! எனக்கு ஒரு புலியும் துப்பாக்கியும் வாங்கி தரேளா?" என்று கேட்டான்.
"ஆகட்டும் பாப்பா! உனக்குப் புலியைக் கண்டால் பயமாயில்லையா?" என்றான் சந்திரசூடன்.
"எனக்குப் புலிகிட்டப் பயமில்லை. பூனை கிட்டத்தான் பயம்!" என்றான் ராஜ்மோகன்.
"மலைமேல் உங்களைத் துப்பாக்கியால் சுடப் பார்த்தது என்கிறீர்களே? அதன் பொருள் இன்று தான் விளங்குற்று! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னதன் காரணமும் இப்போதுதான் புரிகிறது!" என்றாள் மனோன்மணி.
"ஆமாம்; இன்னும் இரண்டு மூன்று நாள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உயில் தயாராகி விட்டது. ரிஜிஸ்டராவது தான் பாக்கி. உயில் ரிஜிஸ்ராகி இந்தப் பையனை அவனுடைய தாத்தாவிடம் சேர்ப்பித்து விட்டால்..."
"அது முடியும் என்று நினைக்கிறீர்களா?"
"தாங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் முடியும்?"
"ஐயோ! அப்புறம் நான் என்ன செய்வேன்?"
"செய்வது என்ன? யாராவது மனசுக்குப் பிடித்தவனைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு எப்போதும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பது!"
மனோன்மணி தயங்கித் தயங்கி, "தாங்கள் இவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். ஆனால் தங்களிடம் நான் முழு உண்மையையும் சொல்லவில்லை!" என்றாள்.
"ஓஹோ! உண்மையில் இன்னும் கொஞ்சம் பாக்கி வைத்திருக்கிறீர்களா?"
இச்சமயம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதிசயத்திலெல்லாம் அதிசயம்! பண்ணையார் சங்கரசேதுராயர் வந்து கொண்டிருந்தார்.
மனோன்மணி பதறிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள். குழந்தை ராஜ்மோகன் அவளைக் கட்டிக் கொண்டு எழுந்திருப்பதைத் தடை செய்ய முயன்றான்.
"உட்காரு, அம்மா, உட்காரு! இந்தக் குழந்தை இன்று பிழைத்தது புனர்ஜன்மம்!" என்றார் பண்ணையார்.
"பல விதத்தில் அதற்கு இன்றைக்குப் புனர்ஜன்மந்தான்! உட்காருங்கள்!" என்று சந்திரசூடன் நாற்காலியைக் காட்டி உபசரித்தான்.
பண்ணையார் உட்கார்ந்து, "வீதி முனையில் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்! கரணம் தப்பினால் மரணம் என்று இருந்தது. புலி இந்த வீட்டுப் பக்கம் பாய்ந்திருந்தால்! அல்லது துப்பாக்கிக் குண்டு தவறிப் பட்டிருந்தால்...? ஓய்! உம்மை என்னவோ என்று நினைத்தேன். வெகு தைரியசாலி! நீர் அப்படிப் பாய்ந்து ஓடிக் குழந்தையை எடுத்திராவிட்டால்...?" என்றான்.
"எல்லாம் கடவுளுடைய செயல்! நம்மால் என்ன இருக்கிறது?" என்றான் சந்திரசூடன்.
"கடவுளும் மனித ரூபத்தில்தானே காரியம் செய்ய வேண்டியிருக்கிறது? நானும் என் மனையாளும் இந்தச் சாலையில் உலாவ வரும் போதெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்ப்போம். 'இம்மாதிரி ஒரு குழந்தை நம் வீட்டில் வளரக் கூடாதா?' என்று என் மனையாள் ஜபம் செய்வாள்."
சந்திரசூடன், "இந்தக் குழந்தையையே வளர்த்தால் போகிறது" என்று முணுமுணுத்தான்.
"என்ன சொன்னீர்?" என்று கேட்டார் பண்ணையார்.
"ஒன்றுமில்லை. உலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது என்றேன்."
"நூற்றில் ஒரு வார்த்தை! பாப்பா! இங்கே வா! என்னிடம் வா! தாத்தாவைக் கண்டால் உனக்குப் பயமாயிருக்கிறதா" என்றார் பண்ணையார்.
"அவன் புலியைக் கண்டே பயப்படவில்லையே?" என்று சொன்னான் சந்திரசூடன்.
"எனக்குப் பூனைகிட்டத்தான் பயம். புலி கிட்டப் பயமில்லை" என்று சொன்னான் ராஜ்மோகன்.
"உனக்குப் புலி மொம்மை வாங்கித் தருகிறேன். என்னிடத்தில் வா" என்றார் பண்ணையார்.
ராஜ்மோகன் எழுந்து நடக்கப் பார்த்தான். மனோன்மணி அவனைத் தூக்கிக் கொண்டு வந்து பண்ணையார் அருகில் விட்டாள்.
"குழந்தை ஒரு கால் சற்றுக் குட்டை; நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்படும்" என்றான் சந்திரசூடன்.
"அடடா! அப்படியா! நானும் என் மனையாளும் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இந்தக் குழந்தை எப்போதும் கை வண்டியிலேயே உட்கார்ந்திருக்கும். அதன் காரணம் இப்போதுதான் புரிகிறது" என்றார் பண்ணையார்.
"கைவண்டியில் உட்கார வைத்து பெல்ட்டினால் கட்டிப் போட்டு விட்டு இந்த அம்மாள் காரியத்தைப் பார்ப்பாள். இல்லாவிட்டால் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். பாருங்கள்! இன்றைக்குக் கொஞ்சம் கவனிக்காமற் போகவே, எப்படியோ மதில் மேல் ஏறி உட்கார்ந்து விட்டான்." பண்ணையார் குழந்தையைத் தட்டிக் கொடுத்து, "ஜாக்கிரதையாய்க் குழந்தையைப் பார்த்துக் கொள், அம்மா. திருஷ்டி கழித்துப் போடு" என்றார்.
மனோன்மணி பண்ணையாரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
பண்ணையார் சந்திரசூடனைப் பார்த்து, "நான் போய் விட்டு நாளைக்கு என் மனையாளையும் அழைத்துக் கொண்டு வருகிறேன். அவளும் குழந்தையைப் பார்க்க ஆசைப்படுவாள், நீங்கள் ஏதோ முக்கியமான காரியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது!" என்று சொல்லி விட்டு எழுந்தார்.
"அப்படி முக்கியமான விஷயம் ஒன்றுமில்லை, கலியாண விஷயந்தான்!" என்றான் சந்திரசூடன்.
"கலியாணமா? யாருக்குக் கல்யாணம்?"
"இன்னும் நிச்சயமாகவில்லை. பேச்சுத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கலியாணம் ஆகவில்லையா என்று நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? 'தகுந்த மணப்பெண் கிடைக்கவில்லை' என்று பதில் சொன்னேன். மிஸ் மனோன்மணியைப் பார்த்த பிறகு அந்த அபிப்பிராயம் மாறி விட்டது."
"மிஸ் மனோன்மணியா?" என்று பண்ணையார் சிறிது வியப்புடனே கேட்டு விட்டுக் குழந்தையைப் பார்த்தார். நல்ல வேளையாக, குழந்தை அதற்குள் மனோன்மணியின் மடியில் படுத்துத் தூங்கிப் போய் விட்டது.
"அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் குழந்தை இந்த அம்மாளுடைய சொந்தக் குழந்தை அல்ல. அநாதைக் குழந்தை. அதாவது ஒரு சிநேகிதியின் குழந்தை..."
பண்ணையார் மேலும் ஆச்சரியப்பட்டு, "அப்படியா? இந்தக் குழந்தைக்குத் தாய் தகப்பன் இரண்டு பேரும் இல்லையா?" என்று கேட்டார்.
"இல்லையென்று சொல்ல முடியாது. இந்த அம்மாளே தாயாராகவும், தகப்பனாராகவும் இருந்து குழந்தையை வளர்த்து வருகிறாள்..." என்றான் சந்திரசூடன்.
பண்ணையார் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல், "நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்தக் குழந்தையை என்னிடம் ஒப்புவித்துவிடுங்கள்" என்றார்.
"அதற்கென்ன நாட்டில் எத்தனையோ அநாதைக் குழந்தைகள் இருக்கின்றன. தங்களுக்கு முன்னமே சொன்னேன், தங்கள் சொத்தில் ஒரு பாதியையாவது அநாதை ஆசிரமங்களுக்கு எழுதிவைக்கும்படி. நூறு குழந்தைகள் வேணுமானாலும்..."
"நூறு குழந்தைகள் இருக்கட்டுங்காணும்! இந்தக் குழந்தையைக் கொடுப்பதாயிருந்தால் சொல்லுங்கள். எனக்கும் என் மனையாளுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்! கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து, எத்தனை பணம் வேணுமானாலும் செலவழித்துச் சரிப்படுத்துகிறோம். உங்கள் கலியாணத்துக்கும் ஒரு தடை இல்லாமற் போகும்."
"எங்கள் கலியாணத்துக்கு இந்தக் குழந்தையினால் தடை ஒன்றுமில்லை. வேறு தடைகள் இருக்கின்றன. இந்த அம்மாள் ஒரு கிறிஸ்துவப் பெண்."
"இருந்தால் என்ன? சாதியாவது மதமாவது? குணந்தான் பிரதானம். இந்த அனாதைக் குழந்தையை இவ்வளவு அருமையாக இந்தப் பெண் வளர்ந்து வருகிறாளே? வேறு யாருக்கு இப்பேர்ப்பட்ட தயாள குணம் இருக்கும்? இவள் மாதிரி ஒரு பெண்ணை மனைவியாகப் பெறுவதற்கு நீர் ஏழு ஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும். தெரிகிறதா? எல்லாவற்றுக்கும் சாயங்காலம் நம் வீட்டுக்கு வாரும். அப்போது பேசிக் கொள்ளலாம்!" என்று கூறிவிட்டுப் பண்ணையார் நடையைக் கட்டினார்.
அவர் போன பிறகு சந்திரசூடன், "தெய்வ சங்கற்பம் எப்படி இருக்கிறது, பார்த்தீங்களா? பண்ணையாரை நேரே இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது!" என்றான்.
மனோன்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. "எனக்குச் சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்று தெரியவில்லை" என்று விம்மினாள்.
"பெண்கள் சமாசாரமே இப்படித்தான்! எதற்காகத் துக்கப்பட வேண்டும்? துக்கப்படும்படி என்ன நேர்ந்து விட்டது? பேரனைப் பாட்டனிடம் சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். அதற்கு இதோ வழி பிறந்து விட்டது. தாங்கள் இஷ்டப்பட்டால், பண்ணையார் சொன்னது போல், 'மிஸ்' பட்டத்தை நீக்கிக் கொண்டு 'மிஸ்ஸஸ்' ஆகிவிடலாம். கையில் விண்ணப்பத்துடன் காத்திருக்கிறேன்..!" என்றான் சந்திரசூடன்.
"ஐயா! தயவு செய்து அந்தப் பேச்சுப் பேசாதீர்கள். தாங்கள் எவ்வளவோ எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இனியும் தங்களை ஏமாற்றினால், பெரும் பாவியாவேன். நான் இந்தக் குழந்தையின் வளர்ப்புத் தாயார் அல்ல; பத்துமாதம் வயிற்றில் சுமந்து பெற்ற சொந்தத் தாயார்தான்!"
"அட கடவுளே! அப்படியானால் குழந்தை பண்ணையாரின் பேரன் அல்லவா? அது பொய்யா..?"
"பண்ணையாரின் பேரன் தான் இவன்! பண்ணையார் மகனைக் கலியாணம் செய்து கொண்ட பாவி நானே தான். அரண்மனையில் வாழ வேண்டியவரை ஆண்டியாக்கி, கடைசியில் அவருக்கு யமனாக முடிந்தவளும் இந்த மகா பாவி தான்!" என்று கூறிவிட்டு மனோன்மணி விம்மி அழுதாள்.
மனோன்மணியின் விம்மல் நிற்கும் வரையில் சந்திரசூடன் காத்துக் கொண்டிருந்தான்.
பிறகு, "தாங்கள் உண்மையை முழுவதும் இப்போதாவது சொன்னது பற்றிச் சந்தோஷம், மொத்தத்தில் பார்த்தால், வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று. பண்ணையாருக்குத் தங்களை மருமகளாக ஏற்றுக் கொள்வதிலே கூட இப்போது ஆட்சேபம் அதிகமாயிராது..." என்றான்.
"கூடவே கூடாது! தங்கள் தலையின் மேல் ஆணை! அதை மட்டும் அவரிடம் சொல்ல வேண்டாம்; இந்தக் குழந்தையைச் சேர்ப்பித்தால் போதும்!" என்றாள்.
"சரி, சரி! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே செய்வோம். முதலில் உயில் ரிஜிஸ்டர் ஆகட்டும். ஆனால் ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன். எனக்குச் சாதி விட்டுச் சாதி கலியாணம் செய்வதிலும் ஆட்சேபம் இல்லை, விதவா விவாகத்திலும் ஆட்சேபம் கிடையாது!" என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் சந்திரசூடன் வெளியேறினான்.
10
பிறகு காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. சந்திரசூடன் மறுநாள் பண்ணையார் வீட்டுக்குப் போயிருந்த போது மனோகரன் அவனோடு வேண்டுமென்றே சண்டை பிடித்தான்.
"ஏதோ உயில் தயாராகிறதாமே! அது என்ன சமாசாரம்?" என்று கேட்டான்.
"என்னைக் கேட்கிறாயே! உன் தகப்பனாரைக் கேட்டுத் தெரிந்து கொள்" என்றான் சந்திரசூடன்.
அதன் பேரில் மனோகரன் சந்திரசூடனைக் கன்னாபின்னாவென்று திட்டி விட்டு, "ஜாக்கிரதை! நான் வலுச்சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையையும் விடமாட்டேன். என் வழியில் குறுக்கே வருகிறவர்களை இலேசில் விடமாட்டேன். உண்டு இல்லை என்று பார்த்து விடுவேன்" என்று பயமுறுத்தினான்.
இவ்வளவையும் சந்திரசூடன் பொறுத்துக் கொண்டு காரியத்திலேயே கண்ணாயிருந்தான். பண்ணையாரின் சொத்துக்களை அவருடைய மகனின் சந்ததிகளுக்கு உயில் எழுதுவிக்கச் செய்வது, பேரனைப் பண்ணையாரிடம் சேர்ப்பித்து விடுவது ஆகிய இரு நோக்கங்களுடன் அவன் வேலை செய்தான்.
பண்ணையார் தமது பாரியாளையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தடவை மனோன்மணியின் வீட்டுக்கு வந்தார். அநாதைக் குழந்தையைத் தங்களிடம் ஒப்புவித்துவிடும்படி மனோன்மணியைக் கேட்டுக் கொண்டார். யோசித்துப் பதில் சொல்லும்படி கூறி விட்டுப் போய்விட்டார்.
மனோன்மணிக்கு அவளுடைய நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்க நெருங்கப் பீதியும் அதிகரித்து வந்தது; "குழந்தையைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாது; என்னை அவர்களுடைய மருமகள் என்று தெரிவித்துக் கொள்ளவும் முடியாது" என்று பிடிவாதமாகச் சொன்னாள். சந்திரசூடனிடம், "உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. உங்களுடைய முயற்சியை நிறுத்தி விடுங்கள். இல்லாவிடில் நான் இந்த ஊரை விட்டே போய் விடுவேன்!" என்று வற்புறுத்தினாள்.
"இன்னும் ஒரு நாள், இருபத்து நாலு மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு உயில் ரிஜிஸ்டர் ஆகிவிடும். அப்புறம் தீர யோசித்து உசிதப் படி முடிவு செய்து கொள்ளலாம்" என்றான் சந்திரசூடன்.
அந்த ஒரு நாள் - இருபத்து நாலு மணி நேரத்திற்குள் - மிகப் பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.
அன்றிரவு மனோன்மணி குடியிருந்த வீட்டுக் கொல்லைப் பக்கம் தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக பரவி முன் பக்கம் வந்தது. தூங்கிக் கொண்டிருந்த மனோன்மணி திடுக்கிட்டு விழித்தெழுந்தாள். விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வதற்கே சிறிது நேரமாகி விட்டது. பிறகு கிழவனையும், கிழவியையும் தட்டி எழுப்பி விட்டாள். அவர்களை முடிந்தவரையில் சாமான்களைக் கொண்டு வந்து சேர்க்கும்படி சொல்லி விட்டுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசற்பக்கம் ஓடினாள். நடுங்கிய கையினால் வாசற் கதவின் உள் தாளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். பிறகு கதவைத் திறக்க முயன்றாள்; ஆனால் கதவு திறக்கவில்லை. இடித்தாள்; உதைத்தாள்; பிறாண்டினாள்! அப்படியும் கதவு திறக்கவில்லை, வெளியில் யாரோ கதவைப் பூட்டியிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவளுடைய பீதி அதிகமாயிற்று. கொல்லைப் புறமாக ஓடினாள். அங்கே நன்றாய்த் தீப்பிடித்துக் குப்குப் என்று எரிந்து கொண்டிருந்தது. பின்னர், மனோன்மணி பித்துப் பிடித்தவள் போல கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தலைவிரி கோலமாய் அலறிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடிக் கொண்டிருந்தாள். அந்த நிலையில் திடீரென்று வேட்டைக்கார சாயபு அவள் முன் தோன்றி, "குழந்தையை இப்படிக் கொடு!" என்றான். மனோன்மணி மேலும் வெறி கொண்டவளாய், "மாட்டேன்! மாட்டேன்!" என்றாள், சாயபு குழந்தையைப் பலாத்காரமாய்ப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். மனோன்மணி ஜன்னல் பக்கம் வந்து 'ஓ' என்று அலறினாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் வாசற் கதவை யாரோ தடால் தடால் என்று மோதும் சத்தம் கேட்டது. பிறகு ஏதோ பிளந்தது, கதவு திறந்தது. "ஐயோ! குழந்தை!" என்று அலறிக் கொண்டு மனோன்மணி வெளியே ஓடிவந்தாள். சாயபுவையும் சந்திரசூடனையும் ஏக காலத்தில் பார்த்தாள். "சாயபு கொன்று விட்டான்!" என்று கத்தினாள். "அதோ குழந்தை பத்திரமாயிருக்கிறது!" என்றான் சாயபு. மனோன்மணி அந்தத் திசையை நோக்கி ஓடினாள். ஆம், குழந்தை பத்திரமாயிருந்தது. குழந்தையை வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டு அழுவதும் சிரிப்பதுமாயிருந்தாள். குழந்தை சிறிது அழுதுவிட்டு அப்படியே தூங்கிப் போய்விட்டது.
இதற்குள் பக்கத்திலிருந்த வீடுகளுக்கும் தீ பரவி விட்டது. ஊர் ஜனங்கள் எல்லாரும் வந்து கூடி விட்டார்கள். சிலர் தீயை அணைக்க முயன்றார்கள்; சிலர் வெறுங் கூச்சல் போட்டார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சந்திரசூடன் மனோன்மணி இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
மனோன்மணி "நான் சந்தேகப்பட்டது சரியாய்ப் போய்விட்டது. சாயபு வீட்டுக்குத் தீ வைத்தான். சாயபு என் குழந்தையைக் கொல்லப் பார்த்தான்!" என்றான்.
"இல்லை அம்மா, இல்லை - சாயபுதான் உன் குழந்தையையும் உன்னையும் காப்பாற்றினவன். நாங்கள் எல்லோரும் கடைசியில் தான் வந்து சேர்ந்தோம்" என்றான் சந்திரசூடன்.
எவ்வளவு சொல்லியும் மனோன்மணி இதை நம்பவில்லை.
"எது எப்படியிருந்தாலும் சரி, நான் உடனே இந்த ஊரை விட்டுப் போய் விட வேண்டும்" என்றாள்.
சந்திரசூடன் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தான்; மனோன்மணி கேட்கவில்லை.
பண்ணையாரே தம் வீடுகளில் தீப்பிடித்த செய்தி அறிந்து வந்து பார்த்தார். மனோன்மணியையும் குழந்தையையும் தம் சொந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும்படி சொன்னார்.
அதையும் அவள் கேட்கவில்லை.
வெறி பிடித்தவள் போல், "ஊரை விட்டுக் கிளம்பி விட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் அவ்விதமே முதல் பஸ்ஸில் ஏறிச் சென்னைப் பட்டணத்துக்குப் போய்விட்டாள்.
11
சந்திரசூடன் பிறகு இரண்டு மூன்று நாள் புன்னைவனத்தில் இருந்தான். உயிலும் ரிஜிஸ்டர் ஆயிற்று.
இடையில் மனோகரனுக்கும் சந்திரசூடனுக்கும் ஒரு நாள் அடிதடி சண்டை நடந்தது. அப்துல் ஹமீது குறுக்கிட்டு அங்கே கொலை நிகழாமல் தடுத்தான்.
ஆனால் மனோகரனைக் கொலை வழக்கிலிருந்து தப்புவிக்க முடியவில்லை. பெங்களூரில் நடந்த ஒரு கொலை சம்பந்தமாக இரகசியப் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தது. கடைசியில் பெங்களூர் போலீஸாருக்குத் தடயம் கிடைத்தது. அவர்கள் வந்து மனோகரனைக் கைது செய்து கொண்டு போனார்கள்.
அன்றிரவு வீட்டுக்குத் தீ வைத்தவன் மனோகரனாய்த்தானிருக்க வேண்டும் என்று பண்ணையாருக்கு நிச்சயமாயிருந்தது. அவன் இரவில் திருட்டுத்தனமாக எழுந்து போனதையும், பிறகு திரும்பி வந்து படுத்ததையும் அவர் கவனித்திருந்தார்.
ஆகையினால் அவன் போனதே நல்லதாய்ப் போயிற்று என்று முடிவு செய்து கொண்டார்.
தம்மகனுடைய மனைவியைப் பற்றியும், அவர்களுக்குச் சந்ததி உண்டா என்பது பற்றியும் கூடிய சீக்கிரம் விசாரித்துத் தெரிவிக்கும்படி சந்திரசூடனிடம் கேட்டுக் கொண்டார்.
சந்திரசூடன் இது விஷயமாக ஸி.ஐ.டி. சாயபுவின் உதவியைக் கோரினான். "அதற்கென்ன பார்க்கலாம். சென்னையில் பின்னர் சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு அப்துல் ஹமீது சாயபு விடை பெற்றுச் சென்றான்.
பிறகு சந்திரசூடனும் சென்னைக்கு வந்து சேர்ந்தான். சில நாளைக்குப் பிறகு மனோன்மணியிடம் கலியாணப் பேச்சை எடுத்தான். பெண்கள் தனிமையாக வாழ்வது இந்த பொல்லாத உலகத்தில் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்திருந்த மனோன்மணியும் ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக் கொண்டு கலியாணத்துக்குச் சம்மதித்தாள்.
12
சந்திரசூடன் மேற்கூறிய விவரங்களையெல்லாம், கூறினான். "திருமணத்துக்கு அவசியம் வந்து சேர வேண்டும்" என்று வற்புறுத்தி என்னை அழைத்து விட்டுப் போனான். நானும் கலியாணத்துக்குப் போவதாகத்தான் இருந்தேன்.
இந்த நிலைமையில் ஒரு நாள், திருமணம் வைத்திருந்த தேதிக்கு இரண்டு நாளைக்கு முன்னால், "எதிர்பாராத காரணங்களினால் அழைப்பில் குறிப்பிட்டபடி என் திருமணம் நடைபெறாது, சிரமத்துக்கு மன்னிக்கவும்" என்று சந்திரசூடன் கையொப்பமிட்ட கடிதம் வந்தது. எனக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
மறுபடியும் சந்திரசூடனைக் கண்டு பிடித்து, "எனப்பா இப்படி ஏமாற்றி விட்டாயே! ஏன் கலியாணம் நின்று போயிற்று!" என்று கேட்டேன்.
"எல்லாம் அந்த சி.ஐ.டி சாயபுவினால் வந்த வினை!" என்றான் சந்திரசூடன்.
"முன்னால் அந்தப் பாதிக் கதையின் பேரில் பழியைப் போட்டாய். இப்போது சாயபுவின் பேரில் பழிபோடுகிறாயே!" என்று கேட்டேன்.
சந்திரசூடன் பின்வருமாறு கதை முடிவைக் கூறினான்:
சென்னைக்கு வந்த பிறகு சந்திரசூடன் பல முறை அந்த ஸி.ஐ.டி. சாயபுவைச் சந்திப்பதற்கு முயற்சி செய்தான்; அவன் அகப்படவேயில்லை. பின்னர் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கினான்.
கலியாணத் தேதிக்கு நாலு நாளைக்கு முன்பு ஹமீது அவனைத் தேடிக் கொண்டு வந்தான்.
"அந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைக்கும் நீர் உதவி செய்ததெல்லாம் சரிதான். ஆனால் இப்போது செய்ய உத்தேசிக்கும் காரியம் சரியில்லை" என்றான்.
"ஏன்! என்ன தவறு? விதவா விவாகத்தை இப்போது எங்கள் ஹிந்து சமூகம் கூட ஒப்புக் கொள்கிறதே! உமக்கு என்ன ஆட்சேபணை!" என்றான் சந்திரசூடன்.
"அவள் விதவை என்பதற்கு என்ன ருசு! புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்...!"
"அது யோசிக்க வேண்டிய விஷயந்தான். புருஷன் உயிரோடிருந்தால் மறு கலியாணங்கூடச் சட்டப்படி செல்லாது! ஆனால் விமான விபத்தைப் பற்றித்தான் அப்போதே எல்லாப் பத்திரிகையிலும் விவரமாக வெளியாகி இருக்கிறதே!"
"விமான விபத்தில் எல்லோரும் இறந்துதான் போனார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இவள் புருஷன் எங்கேயாவது திண்டாடி விட்டு வந்து சேர்ந்தால்..."
"ஆமாம்! எனக்குக் கூட அதைப் பற்றிச் சிறிது கவலையாகத்தானிருக்கிறது. முன்யோசனை இல்லாமல் ஏற்பாடு செய்துவிட்டேன்."
"இப்போது என்ன மோசம்? ஏற்பாட்டை ரத்துசெய்து விட்டால் போகிறது! அல்லது தள்ளியாவது வைக்கலாமே? புருஷன் நிச்சயமாய் செத்து தொலைந்து போனான் என்று தெரிந்த பிறகு கலியாணத்தை வைத்துக் கொண்டால் போகிறது!"
"நானே போய் அவளிடம் சொல்ல வெட்கமாயிருக்கிறது. எனக்காக நீர் போய் இந்த விஷயத்தைச் சொன்னால் நல்லது. நானும் அச்சமயம் வந்து சேர்ந்து கொள்கிறேன்."
"அந்தப் பெண்பிள்ளை நான் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்ததாகவல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பார்த்ததும் எரிந்து விழுவாளே!"
"அதையெல்லாம் நான் சரிப்படுத்தி விட்டேன். நீர் தான் அவளுடைய குழந்தையைக் காப்பாற்றியவர் என்று காரண காரியத்துடன் எடுத்துச் சொல்லி அவளும் ஒப்புக் கொண்டாள். உமக்கு நன்றி செலுத்துவதற்காகக் காத்திருக்கிறாள். நீர்தான் எனக்காகப் போய் கலியாணத்தைத் தள்ளிப் போடும்படி சொல்ல வேண்டும். காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்."
"அப்படியானால், பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு அப்துல் ஹமீது மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சற்று பின்னால் சந்திரசூடனும் சென்றான்.
சாயபுவைப் பார்த்ததும் மனோன்மணி மகிழ்ச்சி அடைந்து குழந்தையை இரு முறையும் காப்பாற்றியதற்காகப் பலமுறை அவனுக்கு நன்றி கூறினாள்.
பிறகு அப்துல் ஹமீது ஒருவாறு அவளுடைய கலியாணத்தைப் பற்றி பிரஸ்தாபித்தான்.
"தனியாக வாழ்க்கை நடத்துவது இந்த உலகில் மிகவும் கஷ்டமென்று தெரிந்து கொண்டேன். அதற்காகத்தான் மறுமணத்துக்குச் சம்மதித்தேன். இந்தக் குழந்தையின் பேரிலும் அவர் ரொம்ப ஆசையாயிருக்கிறார்!" என்றாள் மனோன்மணி.
"மறுமணம் என்பது நிச்சயமாயிருந்தால் சரிதான், ஆனால் உங்கள் முதல் புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்...?" என்று ஹமீது கூறியதும், மனோன்மணிக்குத் தாங்க முடியாத துக்கம் மீறிக் கொண்டு வந்து விட்டது. கண்ணீர் பெருகியது.
உடனே அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.
அந்தச் சமயத்தில் சந்திரசூடன் வந்து சேர்ந்தான்.
"சாயபு! இது என்ன?" என்று கோபமாகக் கேட்டான்.
மனோன்மணி விம்மலை அடக்கிக் கொண்டு, "அவர் மீது குற்றம் ஒன்றுமில்லை, ராஜ்மோகனுடைய தகப்பனாரை ஞாபகப்படுத்தினார். எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்துவிட்டது" என்று சொன்னாள்.
"இப்போது எதற்காக அதை ஞாபகப்படுத்தினீர்?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"அவர் செத்துப் போனார் என்பது நிச்சயந்தானா என்று கேட்டேன். அதற்கு இந்த அம்மாள் இவ்வளவு அதிகமாய் அழுது விட்டாள்" என்றான் ஹமீது.
"நீர்தான் ஸி.ஐ.டி.காரராயிற்றே! தர்மராஜன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லுமே?" என்றான் சந்திரசூடன்.
"அதற்கென்ன? ஒரு வருஷம் அவகாசம் கொடுத்தால், கண்டுபிடித்துச் சொல்கிறேன்." என்றான் ஹமீது.
"நல்ல வேளை! ஒரு வருஷம் என்னத்திற்கு ஒரு நிமிஷம் போதாதா வேஷத்தைக் கலைப்பதற்கு?" என்று சொல்லிக் கொண்டே, சந்திரசூடன் அப்துல் ஹமீதின் தலைத் தொப்பியையும் முகத்தின் துணிக் கட்டையும் எடுத்து எறிந்தான்.
மனோன்மணி, "ஓ!" என்று அலறிக் கொண்டு போய்த் தர்மராஜனுடைய காலின் கீழ் விழுந்தாள்!
முடிவுரை
மலை உச்சியில் நடுக்காட்டில் விழுந்து எரிந்து போன விமனத்திலிருந்து தர்மராஜன் ஒருவன் மட்டும் எப்படி உயிர் பிழைத்து வந்தான், அவன் முகமெல்லாம் எப்படி எரிந்து தீய்ந்து கோரமாகப் போயிருந்தது, வெகுநாள் காட்டில் கஷ்டப்பட்டுப் பிரயாணம் செய்து எப்படிப் புன்னை வனத்தை வந்து அடைந்தான் என்பதையெல்லாம் சந்திரசூடன் விவரமாக எனக்குக் கூறினான். இந்தக் கதைக்குச் சம்பந்தமில்லாத படியால் அவற்றை இங்கே நான் விவரிக்கவில்லை.
"இவ்வளவு விவரம் சொன்னவன், ஒரு விஷயம் மட்டும் கூறாமல் விட்டு விட்டாயே? அந்தக் குடும்பத்தாரின் விஷயத்தில் உனக்கு இவ்வளவு அக்கறை ஏற்படக் காரணம் என்ன? மனோன்மணியின் பேரில் கொண்ட பரிதாபமா? அல்லது அவளுடைய குழந்தையின் மேல் ஏற்பட்ட மோகமா? அல்லது மனோகரின் பேரில் உண்டான கோபமா?" என்று சந்திரசூடனைக் கேட்டேன்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. தர்மராஜன் பம்பாயிலிருந்து ஆகாய விமானத்தில் புறப்பட்டான் அல்லவா? அன்றைக்குக் கிளம்பியிருக்க வேண்டியவன் நான்! என் டிக்கட்டைத்தான் அவனுக்கு மாற்றிக் கொடுத்தேன். அன்று விமானத்தில் நான் கிளம்பியிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும்? எனக்காக உயிரைக் கொடுத்தவனுக்கு நான் இந்த உதவியாவது செய்ய வேண்டாமா?" என்றான் சந்திரசூடன்.
"அவன் தான் பிழைத்து வந்து விட்டானே? உனக்காக உயிரைக் கொடுத்து விடவில்லையே?" என்றேன்.
"அவன் உயிர் அவ்வளவு கெட்டியாயிருந்தது. இருபது பேரில் அவன் ஒருவன் மட்டும் பிழைத்துவந்தான். நானாயிருந்தால் விமானம் விழுகிற போதே செத்துப் போயிருப்பேன்!"
"உன் உயிர் அவன் உயிரை விடக் கெட்டி அப்பனே! அதனால்தான் நீ அன்று புறப்படவே இல்லை?" என்று கேட்டேன் நான்.
சில நாளைக்குப் பிறகு சந்திரசூடன் மறுபடியும் புன்னைவனத்துக்குப் போய், பண்ணையாரிடம் எல்லா விவரங்களையும் சொல்லித் தந்தையையும் மகனையும், மருமகளையும் பேரனையும் சேர்த்து வைத்து விட்டு வந்தான். பண்ணையார் இப்போது ஒரேயடியாகப் பேரப் பிள்ளையின் மோகத்தில் முழுகிப் போயிருக்கிறாராம்! 'சாதியாவது மதமாவது? குணமல்லவா வேண்டும்? என் மருமகளைப் போல் குணசாலி தவம் செய்தாலும் கிடைக்குமா?' என்று அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்!
பழைய உயிலை ரத்து செய்து விட்டுத், தம்முடைய சொத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை அநாதைக் குழந்தைகளின் பராமரிப்புக்கென்று எழுதி வைத்திருக்கிறாராம்.
கடைசியாக, இவ்வளவு நல்ல முடிவுக்குக் காரணமாயிருந்த புன்னைவனத்துப் புலியின் ஞாபகார்த்தமாக ஒரு சமாதி எழுப்பியிருக்கிறார் என்று அறிகிறேன்.
வாழ்க புன்னைவனத்துப் புலி!
-------------
26. திருவழுந்தூர் சிவக்கொழுந்து
இரவு எட்டு அடித்து முப்பதாவது நிமிஷம் ரயில் ஐயம்பேட்டை ரயில் ஸ்டேஷனில் வந்து நின்றது. பளிச்சென்று வீசிய மின்னலில் ஸ்டேஷன் கட்டடம், பிளாட்பாரம், அப்பால் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம் ஒரு கணம் தெரிந்து அடுத்த கணத்தில் மறைந்தன. மின்னலுக்குப் பிறகு இருட்டு முன்னை விடப் பதின்மடங்கு அதிகமாகத் தோன்றிற்று. மினுக் மினுக்கென்று தோன்றிய ஸ்டேஷன் லாந்தர் அந்த இருட்டை எடுத்துக் காட்டுவதற்காகப் போட்ட வெளிச்சமாகக் காணப்பட்டது, 'நீ என்ன என்னை எடுத்துக் காட்டுவது?' என்று இருள் கோபங் கொண்டு அந்த லாந்தரை அமுக்கிக் கொன்றுவிடக் கவிந்து வருவது போலிருந்தது.
சில பேர் ரயிலில் ஏறி விட்டால் உடனே அவர்கள் கண்ணைச் சுற்றத் தொடங்கி விடுகிறது. வண்டி இரண்டு அசைப்பு அசைந்ததும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் எனக்கு ரயிலில் தூங்க முடிவதே இல்லை. அதிலும் இடியும் மின்னலுமாய் இருந்த அந்த இரவில் தூக்கம் எப்படி வரப் போகிறது? ராத்திரி முழுவதும் ரயிலில் கழித்தாக வேண்டுமே என்று கவலையாயிருந்தது.
ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ரயிலின் ஆட்டத்தில் படிப்பதும் சுலபமாக இல்லை. இந்த நிலைமையில், "ஐயம்பேட்டை ஐயம்பேட்டை!" என்ற போர்ட்டரின் குரலைக் கேட்டதும் சாத்தியிருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து வெளியே பார்த்தேன். கதவைத் திறக்கும் போதே 'தவுல் கந்தப்பனுக்கு இந்த ஊர்தானே?' என்ற நினைவு எழுந்தது.
ஐயம்பேட்டைக் கந்தப்பன் என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவருடைய ஊரையும், பெயரையும் நான் மாற்றியிருக்கிறேன். இந்தப் பெயர் பெற்ற தவுல் வித்வானை நந்தி தேவரின் அவதாரம் என்றே சிலர் சொல்வார்கள். அவர் தவுல் வாசித்தால் அது கேவலம், தவுலாக இராது. தேவ துந்துபி என்று சொல்லும்படியாகத்தான் இருக்கும். ஒரு சமயம் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை இவருடைய தவுல் வாசிப்பைக் கேட்டாராம். உடனே தம்மிடமிருந்த மிருதங்கம், கஞ்சிரா அவ்வளவையும் உடைத்து எறிந்து விட்டு, ஆறு மாதகாலம் தோல் வாத்தியத்தையே தொடாமல் இருந்தாராம்.
அவ்வளவு சிறந்த தவுல் வித்வான் ஐயம்பேட்டைக் கந்தப்பன். அதோடு தேசிய விஷயங்களில் அதிக சிரத்தையுள்ளவர்.
கதர் தான் கட்டுவார். காங்கிரஸ் மாநாடுகளில் அவரை அடிக்கடி பார்த்திருந்ததுடன், ரொம்ப ரசமாகப் பேசக் கூடியவர் என்றும் தெரிந்து கொண்டிருந்தேன். ஆகையினால் தான் அவரைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. ஒரு வேளை கந்தப்பன் தப்பித் தவறி இதே வண்டியில் வந்து ஏறினால் இராத்திரிப் பொழுது போவது தெரியாமல் போகுமல்லவா? என்று எண்ணினேன்.
இப்படி எண்ணியதுதான் தாமதம். இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்தில் அவசர அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. யார் என்று உற்றுப் பார்த்தேன். முதலில் வந்த ஆசாமி, தவுல் கந்தப்பன் தான்! இதைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள்ளாக நானிருந்த வண்டியின் கதவு திறக்கப்பட்டது. கந்தப்ப பிள்ளை உள்ளே ஏறினார். பின்னோடு வந்தவர்கள் இரண்டு தவுல்களையும் பெட்டி படுக்கைகளையும் வண்டியில் ஏற்றினார்கள்.
"எல்லா சாமானும் வந்துடுத்தா?"
"எல்லாம் வந்துடுத்துங்க."
"சரியா இருக்கா, பார்த்திடுங்க."
"போய்ட்டு வரீங்களா, தம்பீ!"
"போய்ட்டு வரோம், அண்ணே!"
"ஓடு! ஓடு! வண்டி கிளம்பிட்டுது. பக்கத்து வண்டியிலே ஏறிக்கோ! விழுப்புரத்திலே தூங்கிடாதே! தெரியுதா?"
ரயில் நகரத் தொடங்கியது. ஒரு நிமிஷத்திலே ஸ்டேஷன் விளக்கு மறைந்தது. காடாந்திரமாகக் கவிந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு ரயில் துரிதமாகச் சென்றது.
"என்ன, கந்தப்பபிள்ளை சௌக்கியமா?" என்று கேட்டேன்.
கந்தப்பபிள்ளை திடுக்கிட்டு, என்னைத் திரும்பிப் பார்த்தார். "சாமி நீங்களா? சௌக்கியந்தானுங்க. உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்" என்றார்.
"உம்மைப் பார்த்தது எனக்கு அதைவிட சந்தோஷம். ஒரு வேடிக்கையைக் கேளுங்கள். ஐயம்பேட்டை ஸ்டேஷனில் வண்டி நின்றதும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன். தப்பித் தவறி இதே வண்டியில் நீரும் வந்து ஏறினால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று எண்ணினேன். அடுத்த நிமிஷம் பார்த்தால் நீரே வந்து இந்த வண்டியில் ஏறுகிறீர். நாளைக்கு சென்னை பட்டினத்தில் என் ஸ்நேகிதர்களிடம் நான் சொன்னால் நம்பவே மாட்டார்கள். 'இயற்கைக்கு விரோதம்' என்பார்கள்" என்றேன்.
"எந்த இயற்கைக்கு விரோதம், ஸ்வாமி" என்று கந்தப்பபிள்ளை கேட்டார்.
"இது என்ன கேள்வி! எந்த இயற்கைக்கு விரோதம் என்றால்...?"
"இல்லை, ஐயா! இப்போது பாருங்கள். இந்த ரயில் இருக்கிறது. தண்டவாளத்தில் ஓடுவது இதன் இயற்கை. அந்த இயற்கையை நம்பித்தான் நாம் எல்லோரும் ரயிலில் ஏறுகிறோம். ஆனால் திடீரென்று எப்போதாவது ஒரு தடவை ரயில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விடுகிறது. அதனால் விபத்து நேரிடுகிறது. இந்த விபத்தை நேரில் பார்க்காதவர்கள் 'அதெல்லாம் இல்லை; அப்படி ஒரு நாளும் ரயில் தண்டவாளத்தை விட்டு நகர்ந்திராது; இயற்கைக்கு விரோதம்' என்று சொல்லலாம் அல்லவா?"
இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்குள் அவர் மேலே பேசத் தொடங்கி விட்டார், "இதோ கேளுங்கள். வானத்தில் இடி இடிக்கிறது. இந்த ஐந்து நிமிஷத்தில் பத்து இடி இடித்துவிட்டது. இம்மாதிரி உலகத்தில் தினம் பதினாயிரம், லக்ஷம் இடி இடித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த இடியெல்லாம் பூமியின் மேல் விழுந்தால், இந்த உலகத்திலே ஒரு மனுஷன், ஒரு பிராணி உயிரோடு இருக்க முடியுமா? முடியாது. ஆகையால், இடி இடித்துவிட்டு ஆகாயத்திலே மறைந்து விடுவதுதான் இயற்கை. ஆனால் எப்போதோ ஒரு தடவை இடியானது பூமியின் மேல் விழுகிறது. அதுவும் ஒரு மனுஷன் மேல் விழுகிறது. அந்தப் பாழும் இடி அவனைக் கொல்லாமல் அவன் கண்ணன் மட்டும் கொண்டு போய் விடுகிறது! இதற்கு என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமி! இது இயற்கையா? இயற்கைக்கு விரோதமா?"
இப்படிக் கேட்டு விட்டு கந்தப்பன் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். வேறு எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.
"என்ன சாமி, பேசாமல் இருக்கீங்க? சொல்லுங்களேன்? இடி விழுகிறது இயற்கையாய் இருந்தால், நம் எல்லோர் தலையிலும் ஏன் இடி விழவில்லை? நம் எல்லார் கண்ணும் ஏன் அவிந்து போகவில்லை? அது இயற்கைக்கு விரோதமாய் இருந்தால் ஒருத்தர் மேல் மாத்திரம் எப்படி விழுந்திருக்கும்! அவர் கண் மட்டும் எப்படிப் போயிருக்கும்? இது நடக்கக் கூடியதா ஸ்வாமி? நடக்கக் கூடியது இல்லாவிட்டால் எப்படி நடந்தது?"
கந்தப்ப பிள்ளையின் அப்போதைய அறிவுத் தெளிவைப் பற்றி எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தஞ்சாவூர் ஜில்லாவில் இன்னும் மதுவிலக்குச் சட்டம் வரவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஒரு வேளை... அப்படி இருக்குமோ? சே! சே! ஒரு நாளும் இல்லை. அவர் அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். காந்திக் குல்லா போட்டுக் கொண்டு கள்ளுக்கடை மறியல் செய்தவர். அப்படிப்பட்ட மனுஷரா மதுபானம் செய்திருப்பார்? இல்லவே இல்லை.
பின்னே, ஏன் இப்படி என்னவெல்லாமோ சம்பந்தமில்லாமல் பேசுகிறார்? இடியாவது? தலையில் விழுவதாவது? இயற்கைக்கு விரோதமாவது? எல்லாம் சர்வ பேத்தலாகவல்லவா இருக்கிறது?
பேச்சை மாற்றுவதற்காக நான், "பட்டணத்துக்குத் தானே வருகிறீர்கள்? அங்கே நாளைக்கு கச்சேரியாக்கும்! கல்யாணக் கச்சேரியா?" என்று கேட்டேன்.
"ஆமாம் சாமி! நாளைக்குப் பட்டணத்திலே கச்சேரிதான்" என்றார் கந்தப்ப பிள்ளை.
இப்படிச் சொல்லிவிட்டு, தவுலை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அதன் உறையை அவிழ்த்தார். தவுலின் இரண்டு புறத்தையும் தடவிக் கொடுத்தார். ஒரு தாயார் தன்னுடைய குழந்தையின் அழகான கன்னங்களைத் தடவுவதுபோல் அவ்வளவு செல்லமாகத் தடவினார்!
மனுஷர் இந்த இரயில் வண்டியில் தனித் தவுல் கச்சேரி ஆரம்பிக்கப் போகிறாரா என்ன? தூக்கம் வருகிறதற்கு நல்ல உபாயந்தான்! - இப்படி நினைத்து மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். அப்போது அவர் சொன்னார்:
"சாமி! நானும் தினம் பொழுது விடிந்தால் தவுல் அடித்துக் கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ நாதஸ்வர வித்வான்களுக்கு வாசித்திருக்கிறேன். ஆனால் நேற்றைக்கு ராத்திரி நான் பரவசமாய் வாசித்தது போல் வாசித்தது வெகு அபூர்வம். இந்தத் தோல் வாத்தியத்திலிருந்து நேற்று என்னெல்லாம் நாதங்கள் வந்தன? நானா வாசித்தேன்? இல்லை, இல்லை. நந்தி பகவானே என் விரல்களிலே வந்து உட்கார்ந்து கொண்டார்!
இதைக் கேட்டதும் அவருடைய பேச்சில் எனக்கு சிரத்தை உண்டாயிற்று. சற்று முன் அவர் தலைகால் இல்லாமல் பேசியதெல்லாம் முதல் நால் கச்சேரியின் ஆவேசந்தான் என்று அறிந்து கொண்டேன்.
"அப்படியா? எந்த ஊரில் ஐயா, அவ்வளவு நல்ல கச்சேரி? நாயனம் யார் வாசித்தது?" என்று கேட்டேன்.
"திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா, சாமி?"
"திருவழுந்தூர் சிவக்கொழுந்தா? அது யார்? நான் கேட்டதில்லையே?" என்றேன்.
வெகு காலத்துக்கு முன்பு சிவக்கொழுந்து என்று பிரசித்து பெற்ற நாயனக்காரர் இருந்ததாக நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அவர் நான் பிறப்பதற்கு முன்னாலேயே காலஞ்சென்ற மனிதர். அவருக்குத் திருவழுந்தூருமில்லை!
"கேட்டதே இல்லையா? நினைத்துப் பாருங்க சாமி. 1929-30இல் நீங்க எங்க இருந்தீங்க?"
"ஓஹோ! 1929-30 லா? பாதி நாள் சர்க்கார் விருந்தாளியா இருந்தேன். பாக்கிப் பாதி நாள் சேலம் ஜில்லாவில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெகு தூரத்திலுள்ள கிராமத்தில் இருந்தேன்.
"சரிதான்; அதனால் தான் நீங்கள் கேள்விப்படவில்லை. திருவழுந்தூர்த் தம்பி அந்த இரண்டு வருஷ காலம்தான் பிரசித்தமாயிருந்தது. ஆனால் அந்த இரண்டு வருஷத்திலேயே அது சங்கீத உலகத்தையே ஜயித்துவிட்டது."
எனக்குப் பகீர் என்றது. கலை உலகில் மகா மேதாவிகளாக கிளம்பும் சிலர் அற்பாயுஸிலே இறந்து விடுவது சகஜமாயிருக்கிறதல்லவா? உடனே, கிட்டப்பாவின் ஞாபகம் எனக்கு வந்தது.
"ஐயோ, பாவம்! கிட்டப்பா மாதிரி..."
"இல்லீங்க, சாமி, இல்லீங்க! உங்கள் வாயாலே, அப்படிச் சொல்லாதீங்க. தம்பி தீர்க்காயுஸா இருக்கட்டும்னு சொல்லுங்க."
"ரொம்ப சந்தோஷம், ஐயா! தீர்க்காயுளாய், சிரஞ்சீவியாய், என்றும் பதினாறாய், மார்க்கண்டனைப் போலிருக்கட்டும். ஆனால், பெயர் ஏன் இப்போது மறைந்து போச்சு? ஏன் அவர் வாத்தியம் வாசிக்கிறதில்லை?"
"ஏன் வாசிக்கிறதில்லை? வாசித்தால் உலகம் தாங்காது. எல்லாரும் பைத்தியம் பிடித்துப் போய் விடுவார்கள். அதனால் தான் நான் கூட அடிக்கடி தம்பியைப் பார்க்கப் போகிறதில்லை. நேற்று ராத்திரி அது வாசித்துக் கேட்டேன். அப்போது முதல் வெறி பிடித்தது போலிருக்கு. தவுலைக் கிழித்து எறிந்து விட்டு, 'இனி மேல் ஒருத்தனுக்கும் தவுல் வாசிக்கிறதில்லை' என்று சபதம் பண்ணத் தோன்றுகிறது. அடாணா ராகம் ராத்திரி வாசிச்சுது பாருங்கள்! ஒரு நிமிஷம் எனக்குக் கண்ணிலே ஜலம் வந்தது. மறு நிமிஷம் எழுந்து ஆனந்தக் கூத்தாடலாம் என்று தோன்றிற்று. அதை நினைக்கும் போதே மயிர்க் கூச்சல் எறிகிறது."
2
கதையே அடியே பிடித்துச் சொல்லும்படி நான் ரொம்பவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் தவுல் கந்தப்ப பிள்ளை சொல்லத் தொடங்கினார்.
"திருவழுந்தூர்த் தம்பியை நான் முதன் முதலில் சந்தித்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு மேலிருக்கும். அப்போதுதான், அதனுடைய பெயர் பிரபலமாக ஆரம்பித்திருந்தது. ஒரு கோயில் கும்பாபிஷேகத்தில் தம்பியின் கச்சேரிக்கு என்னை தவுலுக்கு அழைப்பதற்கு வந்திருந்தார்கள். ஒரு மைனர் பையனின் கச்சேரிக்குப் போய் வாசிக்கிறதாவது என்று நினைத்து முதலில் சாக்குப் போக்குச் சொன்னேன். ஆனால் வந்தவர்கள் என்னை விடவில்லை. 'உங்களைத்தான் தவுலுக்கு அமர்த்த வேணுமென்று சிவக்கொழுந்து பிள்ளை பிடிவாதமாய்ச் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தினார்கள். உடனே அப்படிப்பட்ட பையனைப் பார்க்க வேணுமென்று எனக்கும் தோன்றி, சம்மதம் கொடுத்து அச்சாரமும் வாங்கிக் கொண்டேன்.
கச்சேரி செய்யக் கிளம்பி இரண்டு வருஷத்துக்குள்ளே பிள்ளையாண்டான் இவ்வளவு பேர் எடுத்திருக்கிறானே, ஏதோ சுமாராய் ஊதுவான் என்று நினைத்துக் கொண்டுதான் போனேன். ஆனால், தம்பி நாயனத்தை வாயிலே வைத்து ஊத ஆரம்பித்தானோ இல்லையோ, இது சுமார் வாசிப்பில்லை, பிரமாதம் என்று தெரிந்து போயிற்று. அரைமணி வாசிப்பதற்குள் எனக்குப் பரவசமாய்ப் போய்விட்டது. மன்னார்குடி சின்னப்பக்கிரி, செம்பொன்னார் கோயில் ராமசாமி முதலிய மகாவித்வான்களின் பரம்பரைக்கு வாரிஸாக வந்திருப்பவன் இந்தப் பிள்ளையாண்டான் தான் என்று தீர்மானித்து விட்டேன்.
என்னைத்தான் தவுலுக்கு வைக்க வேண்டுமென்று தம்பி வற்புறுத்திய காரணம் என்னவென்று தெரிய வந்தது. என்னுடைய தவுல் வாசிப்பின் மேல் சிவக்கொழுந்துக்கு அபாரப் பிரியம். அது மட்டுமல்ல, கொஞ்ச காலமாகத் தம்பி எங்கே கச்சேரிக்குப் போனாலும் அங்கே சண்டையாக முடிந்து கொண்டிருந்ததாம். தம்பியின் மேல் மற்ற நாதஸ்வர வித்வான்களுக்கெல்லாம் அவ்வளவு அசூயை உண்டாகியிருந்தது.
சாமி! புகழ் என்பது இருக்கிறதே, அது மகா பொல்லாதது. ஒரு மனுஷனுக்கு ஒரு பக்கத்தில் எவ்வளவு புகழ் பெருகுகிறதோ, அவ்வளவுக்கு இன்னொரு பக்கம் அவன் மேல் கோபமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும், கலை, வித்வத் என்று சொன்னால் போதும். 'நேற்று முளைத்த இந்தப் பையன் இவ்வளவு நன்றாக வாசிக்கிறதா? இவ்வளவு செல்வாக்கு அடைகிறதா?' என்று எல்லாருக்கும் ஒரே வயிற்றெரிச்சல். ஆகவே, நாதஸ்வரக்காரர்கள் கூடுமிடமெல்லாம் திருவழுந்தூர்த் தம்பியை இகழ்ந்து பேசுவதே வேலையாய்ப் போயிருந்தது.
அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் ஒரு பிரசித்தமான கோயிலில் பங்குனி உற்சவத்துக்குச் சிவக்கொழுந்தை வரவழைத்திருந்தார்களாம்.
உள்ளூர் நாயனக்காரர் ஒருவரும் வாத்தியம் வாசித்தார். உற்சவம் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு கோஷ்டிக்கும் புகைந்து கொண்டிருந்தது. திருக்கல்யாண உற்சவத்தின் போது மண்டபத்தில் கச்சேரி நடந்தது. தம்பி வாசித்துக் கொண்டிருக்கையில் உள்ளூர் நாயனக்காரரும் அவருடைய ஸெட்டைச் சேர்ந்தவர்களும் பின்னால் உட்கார்ந்து கேலி செய்து கொண்டிருந்தார்கள். 'நாயனத்தை நிமிர்த்திப் பிடிக்கிறதா, தலை கீழாய்ப் பிடிக்கிறதா என்று தெரியாத பசங்களெல்லாம் கச்சேரி பண்ண வந்துடறாங்க" என்று ஒருத்தன் சொன்னானாம். 'கேட்கிறவனுங்க ஞானசூன்யங்களாயிருந்தால், எவன் வேணுனாலும் தான் வாசிக்க வருவான்' என்றானாம் இன்னொருவன். இதெல்லாம் சிவக்கொழுந்தின் காதில் பட்டும் படாமலும் விழுந்து கொண்டிருந்த போதிலும், அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் தம்பி வாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர் ஸெட்டின் தவுல்காரர் ஒரு தடவை 'தாளம் தப்பிப் போச்சு!' என்று சொன்னபோது தம்பிக்குக் கோபம் வந்து விட்டது. திரும்பிப் பார்த்து, 'யாரடா தாளம் தப்பிப் போச்சு என்று சொல்லுகிறவன்? முன்னாலேயே வந்து தாளம் போடுங்கடா!' என்று காரமாய்ச் சொல்லிற்று. தம்பியின் மேல் அபிமானம் உள்ளவர்கள் பக்கத்தில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பிரமாதமாய்க் கோபம் வந்துவிட்டது. அவர் 'இவன்கள் கிடக்கானுக, தம்பி, ரொம்ப தாளத்தைக் கண்டுட்டானுக! சோத்துக்குத் தாளம் போடறவனுகதானே! நீ பாட்டுக்கு வாசி' என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். கலகம் முற்றி விட்டது. உள்ளூர் நாயனக்காரர் நாயனத்தைத் தூக்கி அடிக்க வந்தார். தவுல்காரர் ஒருவரையொருவர் கோலினால் அடித்துக் கொண்டார்கள். ஜாலர்களைப் பிடுங்கி எறிந்தார்கள். சற்று நேரம் ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. தர்மகர்த்தா, குருக்கள் முதலியவர்கள் வந்து சண்டையை விலக்கி நிறுத்தினார்கள். பிறகு யார் மேல் குற்றம் என்று விசாரணை நடந்தது. சபையிலும் இரண்டு கட்சி, சிலர் உள்ளூர் அபிமானத்தின் மேல் உள்ளூர் நாயனக்காரர் கட்சியில் சேர்ந்து கொண்டார்கள். அதிகம் பேர் தம்பியின் கட்சியில் இருந்தார்கள். ஆனால் தர்மகர்த்தா உள்ளூர்க் கட்சியில் இருந்தார். அவர் தம்பியின் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து, 'நீ வாசித்தது போதும் எழுந்து போகலாம்' என்று கட்டளையிட்டார். ஆனால், கோயில் குருக்கள் ஐயாவுக்கு, தம்பியின் வாசிப்பு என்றால் உயிர். ஆகையால் அவர், 'சிவக்கொழுந்து கோயிலை விட்டுப் போனால் நானும் இதோ கிளம்பி விடுகிறேன்' என்று ஆவேசம் வந்தவர் போல் கிளம்பி விட்டார். அப்புறம் மறுபடியும் மத்தியஸ்தம் பண்ண வேண்டியதாயிற்று. இந்த மாதிரி ஒரு தடவை, இரண்டு தடவை இல்லை; பல தடவைகளில் கலகம் நடக்கவே சிவக்கொழுந்து யோசனை பண்ணி, என்னை எப்படியாவது தவுலுக்குச் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தது. நான் அதோடே சேர்ந்து விட்டால் அப்புறம் எவனும் வாலை ஆட்ட மாட்டான் என்று தம்பிக்கு அவ்வளவு நிச்சயம்.
இதெல்லாம் பிற்பாடு தம்பியே மனசைவிட்டுச் சொல்லித் தான் நான் தெரிந்து கொண்டேன். அது முதல் நாங்கள் இருவரும் சேர்ந்தே கச்சேரிக்குப் போகத் தொடங்கினோம். மற்ற நாயனக்காரர்களுக்கெல்லாம் இதனால் என் பேரில் காய்ச்சல், என்னை பகிஷ்காரம் பண்ணுகிறது என்றும் தீர்மானம் செய்திருந்தார்கள். ஆனால், எனக்கு என்ன வந்தது சாமீ! உண்பது நாழி, உடுப்பது நான்கு முழ கதர் வேஷ்டி. சோற்றுக்குத் துணிக்கு ஏதோ பகவான் கொடுத்திருக்கிறார். 'கிடக்கிறான்கள்' என்று நான் அலட்சியமாய்த் தான் இருந்தேன்.
அந்த சமயத்தில் அவர்களுடைய பகிஷ்காரம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. தினம் பொழுது விடிந்தால் கச்சேரிதான். தம்பியின் வாசிப்போ நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னாலெல்லாம் நான் பணத்துக்காகத் தவுல் வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிக்கு வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னை மறந்து பரவசமாய் வாசித்தேன், ஸ்வாமி! அது என்ன மனோதர்மம்? அது என்ன கற்பனை? அது என்ன பொருளுதயம்? - இத்தனைக்கும் தம்பி, பெரியவர்கள் காட்டிய வழியிலிருந்து அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. இந்தக் காலத்திலே போல், ஒத்துக்குப் பதில் தம்புரா சுருதி வைத்துக் கொள்ளவில்லை. தவுலுக்குப் பதில் தபலா, அப்புறம் பக்க வாத்தியத்துக்கு ஹார்மோனியம், மோர்சிங்கு - இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
இந்த சமயத்தில் நான் குறுக்கிட்டு, "பிள்ளைவாள்! தம்புரா சுருதியைப் பற்றி எதற்காக இவ்வளவு...?" என்று ஆரம்பித்தேன். நான் மேலே பேச அவர் இடங் கொடுக்கவில்லை.
"எனக்குத் தெரியும் சாமி, தெரியும். நீங்கள் தம்புரா சுருதியை ஆதரிக்கிறவர் என்று அந்த விவகாரம் இப்போது வேண்டாம். திருவழுந்தூர் தம்பி அப்படியெல்லாம் புது வழிக்குப் போகவில்லையென்றுதான் சொல்கிறேன். ஆனாலும் வாசிப்பு அற்புதமாயிருந்தது. தேவகானம் என்றால் தேவகானந்தான். அதற்கேற்றார் போல் நாளுக்கு நாள் செல்வாக்கும் அதிகமாகிக் கொண்டிருந்தது, பணம் வந்து குவிந்தது.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு எவ்வளவோ சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால், ஒரே ஒரு விஷயம் மனத்திற்கு மிகவும் துன்பத்தை கொடுத்து வந்தது. கலைக்கும் வித்வானுக்கும் பெரிய சத்ரு எது தெரியாதா, சாமி! தம்பிக்கும் அந்தக் கொடிய மதுபானப் பழக்கம் இருந்தது. எப்படியாவது அந்தப் பழக்கத்திலிருந்து தம்பியை விடுவிக்க வேண்டுமென்று நான் ஆத்திரம் கொண்டிருந்தேன். அடிக்கடி ஜாடை மாடையாகச் சொன்னேன். சில சமயம் தெளிவாகவும் சொன்னேன். தம்பிக்கு, என்னிடம் ரொம்பப் பயபக்தி உண்டு. ஆகவே, நான் சொல்லும் போது பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கும். கெட்ட பழக்கம் என்று அதுக்குத் தெரியாமலுமில்லை. ஆனால் விடுவதற்கு மட்டும் முடியவில்லை. ஏதோ, நான் சொல்லிக் கொண்டு வந்ததன் பயனாக, ரொம்ப மீறிப் போகாமல் கட்டுக்குள் இருந்தது. இந்த மட்டிலாவது இருக்கிறதே என்று நான் ஒருவாறு திருப்தியடைந்திருந்தேன்.
இப்படியிருக்கையில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று. தேசமெங்கும் அமளிதுமளிப்பட்டது. எனக்கு ரொம்ப நாளாகவே தேசிய விஷயங்களில் சிரத்தை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமே! அந்த நாளில் அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தேன். சில சமயம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போவேன். அந்தக் கூட்டங்களில் தலைவர்களுடைய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுத் தம்பியின் மனம் கனிந்து கொண்டிருந்தது என்பதை அறிந்தேன். கடைசியில், காந்தி மகானைக் கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது. அன்று கும்பகோணத்தில் பிரமாண்டமான கூட்டம். பட்டணமே திரண்டு வந்தது போலிருந்தது. தம்பிக்கு இரண்டு வருஷமாகக் கும்பகோணத்தில் தான் ஜாகை. நானும் அடிக்கடி கும்பகோணம் வருவேன். அன்றைய தினம் பொதுக்கூட்டத்துக்கு நானும் தம்பியும் போயிருந்தோம். கூட்டத்தில் அன்று பேசியவர்கள் எல்லாரும் ரொம்பவும் உருக்கமாகப் பேசினார்கள். என் பக்கத்திலிருந்த தம்பியின் கண்களில் ஜலம் பெருகி வழிவதைப் பார்த்தேன்.
கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தபிறகு, திடீரென்று சலசலப்பு உண்டாயிற்று. கொஞ்ச தூரத்தில் போலீஸ்காரர்கள் கையில் குண்டாந்தடிகளுடன் கூட்டமாக வருவது தெரிந்தது. கூட்டங்களைத் தடியால் அடித்துக் கலைத்து விடும்படி அன்றைய தினந்தான் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாம். ஜனங்களுக்கு இது ஒன்றும் தெரியாது. அவர்களில் பெரும்பாலோர் திரும்பிப் பார்த்து, இது என்ன சமாச்சாரம் என்று யோசிப்பதற்குள் போலீஸ்காரர்கள் திடும் பிரவேசமாக கூட்டத்திற்குள் பிரவேசித்து தாறுமாறாக அடிக்கத் தொடங்கினார்கள். உடனே, கூட்டம் கலைய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷத்துக்குள் முக்கால்வாசிப் பேர் ஓடிப் போய் விட்டார்கள். கடைசி வரையில் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன். நான் ஓடவில்லை. தோளிலும் முதுகிலும் நாலைந்து அடி வாங்கிக் கொண்ட பிறகு மெதுவாகத்தான் அங்கிருந்து சென்றேன்.
தம்பி முன்னயே ஓடிப் போய் எனக்காக ஒரு சந்தின் முனையில் காத்துக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டழுதது. இருவரும் அதிகமாகப் பேசாமல் வீட்டை நோக்கிச் சென்றோம். வழியில் கடைத்தெருவில், ஹனுமார் கோயிலண்டை வந்ததும் தம்பி, 'நில்லுங்க, அண்ணே!' என்று கூச்சல் போட்டது. அனுமார் சந்நிதியில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தது.
"ஸ்வாமி! ஆஞ்சநேயா! இன்று முதற் கொண்டு மதுபானம் என்பதையும் கண்ணாலும் பார்க்க மாட்டேன்; கையாலும் தொடமாட்டேன். சத்தியம்! சத்தியம்" என்று பிரமாணம் செய்தது.
பாவி நான், அப்போது, சும்மா இருந்திருக்கக் கூடாதா? "தம்பி, அனுமார் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். அதிலும் கடைத்தெரு அனுமார் ரொம்ப சக்தியுள்ளவர். அவருடைய சந்நிதியில் பிரமாணம் செய்திருக்கிறாய், ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும்" என்றேன்.
அப்போது தம்பி, "அப்படி நான் என் பிரமாணத்தை மீறினால், என் தலையில் இடிவிழட்டும்; என் கண் அவிந்து போகட்டும்" என்று உரத்த குரலில் சொல்லிற்று.
ஸ்வாமி! நிஜமாகச் சொல்கிறேன், அப்போது என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன. 'அட பாவி! இவ்வளவு பயங்கரமான சபதம் ஏன் செய்தாய்?' என்று உரத்த குரலில் சொல்ல விரும்பினேன்; ஆனால் நா எழவில்லை.
3
சிவக்கொழுந்தினிடம் எனக்கு அபிமானம் அதிகமாவதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்தது. என் தமக்கை ஒருத்தி கும்பகோணத்தில் புதுச் செட்டித் தெருவில் இருந்தாள். நான் கும்பகோணம் போனால் அங்கேதான் தங்குவது வழக்கம். அவள் மகள் வனஜாட்சியை இந்த மானக்கேடானா தொழிலுக்கு விடக்கூடாது. நல்ல இடமாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும் என்று நானும் சுந்தர காமாட்சியுமாக யோசித்து முடிவு கட்டி வைத்திருந்தோம்.
நான் கும்பகோணத்தில் இருக்கும் காலங்களில் சிவக்கொழுந்து தம்பி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் நான், "ஆகா! நம்முடைய வனஜாவுக்கும் சிவக்கொழுந்துக்கும் மட்டும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டால் எவ்வளவு மேலாய் இருக்கும்?" என்று எண்ணுவேன். என்னுடைய ஆசை நிறைவேறலாம் என்பதற்கு அறிகுறிகளும் தோன்றி வந்தன. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவர் பிரியம் ஏற்பட்டு வந்ததாகத் தோன்றியது.
வனஜா, பார்க்கிறதற்கு, ரம்பை, ஊர்வசி என்று சொல்கிறார்களே அந்த மாதிரியெல்லாம் பிரமாதமாக இருக்க மாட்டாள். ஆனால், அப்படி அவலட்சணமும் இல்லை. முகத்தில் நல்ல களை. குடித்தனப் பெண் பாங்காய் இருப்பாள். ஆனால் புத்திசாலித்தனத்தில் அவளுக்கு ஈடான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது. ஏனோ என் மருமகளாச்சே என்று நான் சொல்கிறதாக நீங்கள் நினைக்கக் கூடாது. எனக்கே சொந்தத்திலே குழந்தை குட்டிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பற்றி நான் அப்படிச் சொல்கிறேனா? கிடையாது.
வனஜாவை சங்கீதக் கச்சேரிக்கோ நாட்டியத்துக்கோ தயார் செய்யும் உத்தேசம் எங்களுக்கு இல்லை. இந்தத் தொழில் எல்லாம் எங்கள் தலை முறையோடு போகட்டும், குழந்தைகள் எல்லாரும் குடியும் குடித்தனமுமாக இருக்கட்டும் என்று ஆசைப்பட்டோ ம். ஆகையால், வனஜாவைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினோம். ஏழெட்டு கிளாஸ் வரையில் படித்த பிறகு பள்ளிக் கூடத்தையும் நிறுத்தி ஆயிற்று. அப்புறம் வனஜா வீட்டில் சும்மா தான் இருந்தாள்.
என்ன இருந்தாலும் பரம்பரையாக வந்த கலை போகுமா? வனஜாவுக்கு சங்கீதம் நாட்டியம் அபிநயம் எல்லாம் இலேசாக வந்தது. ஆனால் அவ்வளவும் குறும்புத்தனமாக மாறிற்று. வனஜா எங்கே என்னத்தைப் பார்த்தாலும் அதே மாதிரி தானும் செய்து விடுவாள். யார் எப்படிப் பாடினாலும், அதே மாதிரி பாடிக் காட்டுவாள். நாடகம் பார்த்தால், யார் யார் எப்படி நடித்தார்களோ அப்படியே நடித்துக் காட்டுவாள். மனுஷ்யாளுடைய சாதாரண நடை உடை பாவனைகள் அவளுக்கு அப்படியே வந்துவிடும். யார் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எப்படி நடக்கிறார்கள் - அம்மாதிரியெல்லாம் செய்து காட்டி பரிகாசம் பண்ணுவாள். வனஜா இருக்கும் இடமெல்லாம் ஒரே சிரிப்பும் விளையாட்டும் ஆகத்தான் இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாள். அலட்சியமாகத் தூக்கி எறிந்துதான் பேசுவாள். 'இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. பதவிசா இருக்க வேண்டும்' என்று அவளுக்கு நான் அடிக்கடி புத்தி சொல்வதுண்டு.
ஆனால், வனஜாவின் விஷமம், வாய்த் துடுக்கு, சிரிப்பு, விளையாட்டு, எல்லாம் ஒரே ஒரு ஆசாமியின் முன்னால் மட்டும் மாயமாய் மறைந்து போயின. சிவக்கொழுந்து தம்பி வந்துவிட்டால் இல்லாத நாணம் வெட்கம் எல்லாம் வந்துவிடும். தம்பி முன்னால் அவள் அதிர்ந்து பேச மாட்டாள். ஏதாவது கேட்டால் தான் பதில் சொல்வாள். வழக்கம் போல் கலீரென்று சிரிக்க மாட்டாள். தம்பி ஏதாவது வேடிக்கையாகப் பேசினால் இலேசாகச் சிரிப்பாள். சிவக்கொழுந்தின் நாயனம் கேட்பதில் அவளுக்கு ரொம்ப ஆசை. கும்பகோணத்தில் உத்ஸவம், ஊர்வலம் எதற்காவது தம்பி வாத்தியம் வாசித்தால் அதை அவள் கேட்காமல் இருக்க மாட்டாள். அடுத்தாற்போல் சிவக்கொழுந்து வீட்டிற்கு வரும்போது, அந்த ராகம் நன்றாய் இருந்தது, இந்தக் கீர்த்தனம் அபூர்வமாயிருந்தது என்றெல்லாம் சொல்வாள்.
நான் எப்போது வீட்டுக்கு வந்தாலும், பின்னால் தம்பி வருகிறதாயென்று ஆவலுடன் பார்ப்பாள். வராவிட்டால், ஜாடையாக, "அவர் சௌக்கியந்தானே? உடம்புக்கு ஒன்றுமில்லையே?" என்று கேட்பாள்.
சிவக்கொழுந்தின் மனமும் இப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். தம்பி இந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் வனஜா வாசலில் நின்று வரவேற்காவிட்டால், அவனுடைய கண் சுற்றும் முற்றும் பார்க்கும். வீட்டை விட்டுப் புறப்படும் போதும் அப்படித்தான். வனஜாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் போக மாட்டான். "போகலாமா! மாமா!" என்று கேட்டுக் கொண்டு நிற்பானே தவிர, கிளம்பமாட்டான்.
இந்தப் பிள்ளைகளுடைய மனசு எனக்குக் கண்ணாடி மாதிரி தெரிந்து போயிற்று. சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் தான் பகவான் பிணைத்துப் போட்டிருக்கிறார் என்று நான் தீர்மானம் பண்ணிக் கொண்டேன். இதைப் பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. என் சகோதரிக்கும் இது ரொம்பத் திருப்தியாகத்தானிருந்தது.
எங்களுடைய எண்ணம் இவ்வளவு சுலபமாகப் பலிக்கப் போகிறதை எண்ணி நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில், எங்களுடைய சந்தோஷத்தில் மண்ணைப் போடுவதற்கு ஒரு பாவி வந்து சேர்ந்தாள். அவளை உங்களுக்கும் தெரிந்து தான் இருக்கும். திருச்செந்தூர் மனோரஞ்சிதம் என்று பெயர். இப்போது அவள் பெயர் மங்கிப் போயிருக்கிறது. ஆனால், அடேயப்பா! அந்தக் காலத்தில் அவளுக்கிருந்த மவுஸைச் சொல்ல முடியாது. அவளுடைய நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்து சேர்ந்தது. வந்து பத்து நாளைக்குள் கும்பகோணமே பயித்தியமாய்ப் போய்விட்டது.
கதைக்குக் காலில்லை என்பார்களே, அந்தமாதிரி, கலை உலகத்தில் ஒருவருக்குப் புகழ் ஏன் வருகிறது, ஏன் போகிறது என்பதற்குக் காரணமே சில சமயம் இருப்பதில்லை. அந்த மனோரஞ்சிதம் என்கிற பெண் பிள்ளை ரொம்ப சாதாரணம் என்பது என் அபிப்பிராயம். இராத்திரியிலே, முகத்திலே பவுடரை வாரி அப்பிக் கொண்டு, பளபளவென்று சம்கி புடவையைக் கட்டிக் கொண்டு, எலக்டிரிக் லைட்டுக்கு முன்னால் வந்து நின்றால் ஏதோ பிரமாதமாய்த் தானிருக்கும். வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பகலிலே பார்த்தால், என் முகத்திலே இருக்கிற லட்சணம் கூட இருக்காது.
அவள் பாட்டோ ரொம்ப மட்டம். ஹிந்துஸ்தானி மெட்டுகளிலே தளுக்காய் நாடகத்துக்கு வேண்டிய பாட்டுக்கள் பாடுவாள். அவ்வளவுதான். சாரீரம் சுமாராயிருக்கும். ஆனால் கால் மணி நேரம் காம்போதியைப் பிடித்து ஆலாபனம் பண்ணச் சொல்லுங்கள்; வெறும் பூஜ்யம். தாளம் தவறாமல் ஒரு தியாகராஜ கீர்த்தனத்தைப் பாடச் சொல்லுங்கள்; முடியாது! 'தாளத்தை வீட்டிலே வைச்சுட்டு வந்திருக்கேன், எடுத்துக்கிட்டு வரலை' என்று சொல்லக் கூடிய பேர்வழி.
இந்த சாதாரண நாடகக்காரியின் மேலேதான் கும்பகோணம் அப்படி பயித்தியம் பிடித்து அலைந்தது. ஒரு நாளைக்கு டிக்கடி கிடைக்கவில்லை என்று, ஜனங்கள் கொட்டகை மேல் கல்லை விட்டெறிந்தார்கள். எவ்வளவுக் கூட்டம் வந்திருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் அந்தப் பெண் பிள்ளை பகலிலே எங்கேயாவது வெளியிலே கிளம்பினால் போதும், ஆயிரம் ஜனங்கள் பின்னோடு போய்க் கொண்டேயிருப்பார்கள். அவள் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்தால் அன்றைக்கு உற்சவம் மாதிரிதான். அவ்வளவு ஜனங்கள் கூடிவிடுவார்கள். ஆனால் எல்லாரும் அந்த நாடகக் காரியைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, ஸ்வாமியைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.
இப்படி ஊரெல்லாம் பயித்தியமாகப் போனதில் நான் ஆச்சரியப்படவில்லை. பாலாமணி காலத்திலிருந்து இந்த மாதிரி எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திருவழுந்தூர்த் தம்பியும் அந்த மாதிரி பிரமை பிடித்துப் போனதுதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது. அதனால் எனக்கு உண்டான மன வேதனைக்கு அளவே கிடையாது. தம்பியினுடைய வித்வத் என்ன? யோக்யதை என்ன? செல்வாக்கு என்ன? இவன் போய் அந்த நாடகக்காரி காலிலே விழுகிறதாயிருந்தால் அதைவிட அவமானம் வேறென்ன இருக்கிறது சாமி?
4
அந்த நாடகக் கம்பெனி கும்பகோணத்துக்கு வந்ததிலிருந்து சிவக்கொழுந்து ஒரு நாள் நாடகமாவது பார்க்காமலிருந்தது கிடையாது. வெளியூர்களுக்கு எங்கேயாவது கச்சேரிக்குப் போனாலும் நாடகம் நடக்கும் ராத்திரிக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடுவான்.
மனோரஞ்சிதம் மேடைக்கு வந்து விட்டால், நம்ம பையனைப் பார்க்கவே முடியாது. தேன் குடித்த குரங்கு என்பார்களே, அந்த மாதிரிதான்.
வேடிக்கையை வேணுமானால் கேளுங்கள். சிவக்கொழுந்துக்குப் பிடித்திருந்த நாடகப் பைத்தியம் வனஜாட்சியையும் பிடித்துக் கொண்டது. அவளும் தவறாமல் நாடகத்துக்குப் போய் வந்தாள். ஆனால் அவள் நாடகம் மட்டும் பார்க்கப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டு மூன்று நாள் நானும் கவனித்தேன். சிவக்கொழுந்து மேடையையே பார்த்துக் கொண்டிருக்க, வனஜாட்சி சிவக்கொழுந்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கொட்டகையில் அவன் ஒரு மூலையில் இவள் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாலும், எப்படியோ அவளுடைய கண் அவன் இருக்குமிடந்தேடிக் கண்டுபிடித்துவிடும்.
இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வனஜாட்சியின் மனவேதனை எனக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் இந்த அசட்டுப் பிள்ளையை நினைத்து நினைத்து உருகிப் போய்க் கொண்டிருந்தாள் என்பதையும் கண்டேன். நாடகக் கம்பெனி வந்ததிலிருந்து, சிவக்கொழுந்து எங்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. வனஜாட்சி சில சமயம் "ஏன் மாமா! இந்த நாடகக் கம்பெனி எப்போது ஊரை விட்டுப் போகப் போகிறது?" என்று கேட்பாள். கேட்கும் போதே அவள் கண்களில் ஜலம் தளும்பி நிற்கும். நான் அவளுடைய குறிப்பை அறிந்து கொள்வேன். என்னுடைய மனமும் கஷ்டப்பட்ட தென்றாலும், வெளிப்படையாக, "சீ! பைத்தியமே உனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? ஊரில் யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன? ஏதாவது வேலை இருந்தால் பார் போய்!" என்பேன். இன்னும் சில சமயம் அவள், "மாமா! நானும் டிராமாவில் சேரப் போகிறேன்" என்பாள். நாடகத்தில் மனோரஞ்சிதம் பாடியபடியெல்லாம் பாடி, அவள் நடித்தபடியெல்லாம் நடித்துக் காட்டுவாள். "ஐயோ! இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பலமாகப் பிடித்து விட்டதே" என்று எண்ணி வருத்தப்படுவேன்.
நம் ஊர்க்காரர்கள் சாதாரணமாய் ஒன்று என்றால், நூறு என்பார்கள். ஒன்றும் இல்லாத போதே பொய்யும் புளுகும் கற்பனை செய்வார்கள். கொஞ்சம் நிஜமும் இருந்தால் கேட்க வேணுமா? சிவக் கொழுந்தின் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. இந்த மாதிரி மேதாவியான பிள்ளைக்கு இப்படி அசட்டுப் பட்டம் வந்ததேயென்று எனக்கு எவ்வளவோ வருத்தமாய் இருந்தது.
கடைசியாக நாடகம் முடிந்தது. அதாவது கும்பகோணத்தில் மனோரஞ்சிதம் கம்பெனியாரின் நாடகம் முடிந்தது. அவர்கள் அடுத்தபடியாக சென்னை பட்டிணத்திற்குக் கிளம்பினார்கள். அவர்கள் ஊருக்குக் கிளம்புகிற அன்று சிவக்கொழுந்து அந்த நாடகக் காரியின் ஜாகைக்குப் போய் அங்கேயே இருந்ததாகவும், ரொம்பவும் அசட்டுப் பிசட்டு என்று நடந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கும் அவர்களை வழி அனுப்புவதற்குப் போயிருந்தானாம். ரயில் கிளம்பிக் கொஞ்ச தூரம் போன பிற்பாடு கூட, சிவக்கொழுந்து, "நான் பட்டணத்துக்கு வரேன், அவசியம் வந்து உங்களைப் பார்க்கிறேன்" என்று இரைந்து கத்தியதாகவும், அதைக் கேட்டு பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கேள்விப்பட்டேன்.
நாடகக் கம்பெனி ஊரை விட்டுப் போன பிறகு, வனஜாவுக்குக் கொஞ்சம் உற்சாகம் பிறந்தது. "ஏன், மாமா! இனி மேல் திருவழுந்தூர்த் தம்பி நம் வீட்டுக்கு வருவாங்கல்ல?" என்று கேட்டாள். அவள் கேட்டதற்கு தகுந்தாற்போல், சிவக்கொழுந்தும், இரண்டொரு தடவை வீட்டுக்கு வந்தான். அப்போதெல்லாம் வனஜாவின் தோரணையைப் பார்க்க வேண்டுமே? அடேயப்பா! ராணி தான்! குறுக்கே நெடுக்கே போவாள். சிவக்கொழுந்தை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாள். ஏதாவது கேட்டால், பதில் சொல்லவும் மாட்டாள். காதில் கேட்காதது போல் போய்விடுவாள்.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் வேடிக்கையாகவும் ஒரு பக்கம் வருத்தமாயுமிருந்தது. நான் அவர்களுக்கு, புத்தி கித்தி ஒன்றும் சொல்லவில்லை சாமி! என்னுடைய உலக அனுபவத்திலே தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி இளம் பிள்ளைகள் காரியத்திலே, புத்தி சொல்கிறதனால் பிரயோசனமே ஏற்படுவதில்லை. அதனால்தான் சிவக்கொழுந்து அந்த நாடகக்காரி மையலில் அகப்பட்டிருந்தபோது கூட நான் ஒன்றும் சொல்லவில்லை. இதிலேயெல்லாம் அவர் அவர்களும் பட்டுப் பட்டுத் தேற வேண்டும். கஷ்டமோ, சுகமோ, அனுபவித்துத்தான் புத்தி வர வேண்டும். குறுக்கே ஏதாவது சொன்னோமானால் பைத்தியம் முற்றிப் போய்விடுகிறது.
இப்படி இரண்டு மூன்று மாதம் ஆயிற்று. சென்னைப் பட்டணம் கந்தஸ்வாமி கோயில் உற்சவத்திற்கு சிவக்கொழுந்தை அழைத்துக் கொண்டு வரும்படி எனக்குக் கடிதம் வந்தது. பட்டணத்தில் அந்தப் பழிகாரி இருக்கிறாளே என்று அப்போதே மனசில் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அதற்காக வந்தக் கச்சேரியை விட முடியுங்களா? கிளம்பிப் போனோம். ஆகா! சாமி! அந்தக் கச்சேரியில் சிவக்கொழுந்து என்னமாய் வாசித்தது என்கிறீர்கள்? அது தான் கடைசி கச்சேரி என்று தம்பியின் அந்தராத்மாவுக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. அதனால்தான், அவ்வளவு அற்புதமாய் அமைந்ததோ, என்னமோ? ஒரு நாள் ராத்திரி தம்பி பைரவிராகம் வாசித்த போது, கேட்டவர்கள் எல்லாம் அழுது விட்டார்கள். தம்பியின் வாசிப்பில் முன்னைக்கு இப்போது கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. முன்னேயெல்லாம், கல்யாணி, சங்கராபரணம், ஹம்ஸத்வனி, நாட்டை, கேதாரம் இந்த மாதிரி ராகங்கள் வாசிப்பதிலேதான் தம்பிக்கு உற்சாகம். எனக்கும் தவுல் வாசிக்க ரொம்ப உற்சாகமாய் இருக்கும். கொஞ்ச நாளாகத் தம்பி காம்போதி, கேதாரகௌளம், உசேனி, முகாரி, கமாசு - இப்படி அதிகமாக வாசிக்க ஆரம்பித்திருந்தது. இந்த ராகங்களெல்லாம் வாசிக்கும் போது, எனக்குச் சில சமயம் கண்ணில் ஜலம் வந்துவிடும். உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு எறியும். தவுல் வாசிப்பதற்கே ஓடாது! ஏதோ விரல் வழக்கம் போல் தட்டிக் கொண்டிருக்குமே தவிர, மனசெல்லாம், தம்பியின் வாசிப்பில் ஈடுபட்டிருக்கும். நடு நடுவே, இரண்டு கையையும் தூக்கிக் கும்பிட்டு, 'ஹர ஹர! மகாதேவா!' என்பேன். இதைப் பார்த்துவிட்டு, சிலபேர் சிரிப்பார்கள்; முட்டாள்கள்! சங்கீதம் அனுபவிக்கும் விதம் அவர்களுக்கென்ன தெரியும்?
மூன்று நாள் கச்சேரியும் முடிந்தது. நாலாம் நாள் பொழுது விடிந்தது. "இன்றைக்கு ஊருக்கு புறப்படலாமா, தம்பி!" என்றேன்.
"கொஞ்சம் பொறுங்கள் மாமா. புதன் கிழமை தானே சிதம்பரத்தில் கச்சேரி? நேரே காரிலேயே போய் விடலாம்" என்றது தம்பி.
சிவக்கொழுந்துக்குக் கொஞ்ச நாளாக மோட்டார் கார் பைத்தியமும் ஏற்பட்டிருந்தது. 'டிரைவ்' பண்ணக் கத்துக் கொண்டிருந்தான். அடுத்த தடவை பட்டணம் போகும்போது கார் வாங்கி வர வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அன்று பகலெல்லாம் சுற்றி, கடைசியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு 'ஸெகண்ட் ஹாண்ட்' கார் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சொற்ப மைலே ஓடியிருந்த படியால், 'ஸெகண்ட் ஹாண்டா'ய் இருந்தாலும் வண்டி பார்ப்பதற்கு ரொம்ப நன்றாயிருந்தது.
நல்ல வேளை; கச்சேரியிலும் கார் வாங்குவதிலும் புத்தி சென்றதனால் மனோரஞ்சிதத்தை மறந்துவிட்டான் என்று நான் எண்ணி சந்தோசப்பட்டேன். ஆனால், அது அற்ப சந்தோஷமாய் போயிற்று. அன்று இராத்திரி சிவக்கொழுந்து நாடகத்துக்குப் போனான். "நீங்களும் வரீங்களா அண்ணே!" என்று அரைமனசாய்க் கூப்பிட்டான். "ரொம்ப சிரமமாய் இருக்கிறது; நான் வரவில்லை" என்று சொல்லி விட்டேன். அன்று இராத்திரியெல்லாம் என் மனசில் வேதனை குடி கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் தம்பி ரொம்ப நேரம் கழித்து தான் எழுந்தான். எழுந்ததும் பரபரப்புடன் ஸ்நானபானாதிகளை முடிக்கத் தொடங்கினான். ஜோராக டிரஸ் பண்ணிக் கொண்டான். எல்லாம் ஆனதும் "மாமா! கொஞ்சம் வெளியிலே போய் விட்டு வருகிறேன். சாப்பாட்டுக்கு எனக்காகக் காத்திருக்க வேண்டாம். திரும்பி வருவதற்கு நேரம் ஆனாலும் ஆகும்" என்றான்.
"தம்பி! இதென்ன பேச்சு? நாளைப் பொழுது விடிந்தால் சிதம்பரத்தில் இருக்க வேண்டுமே? புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யாமல் எங்கேயோ போகிறேன் என்கிறாயே?"
"கட்டாயம் இன்று இராத்திரியே கிளம்பி விடலாம் மாமா! ராத்திரி பத்து மணிக்குக் காரில் கிளம்பினால், பளபளவென்று பொழுது விடியும் போது சிதம்பரம் போய்விடலாம். உங்களுக்குத் தூக்கம் விழிக்க வேண்டாமென்றிருந்தால் நீங்கள் வேணுமானா ராத்திரி ரயில் ஏறி விடுங்கள்" என்றான்.
இப்படிச் சொல்லிவிட்டு வெளியே போனவன் இனிமேல் சாயங்காலம் தான் திரும்பி வருவான் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்குள் அவன் திரும்பி வந்துவிடவே எனக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று.
"என்ன தம்பி! அதற்குள்ளே வந்துவிட்டாய்?" என்று நான் கேட்டதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், உள்ளே போய் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அவன் விம்மி அழும் சத்தம் கேட்டது.
தம்பியுடன் சோக்ரா பையனும் போயிருந்தான். அவனைக் கூப்பிட்டு "என்னடா சமாசாரம்?" என்று விசாரித்தேன். அவன் எல்லா விவரமும் சொன்னான். ஸாந்தோமில் இருந்த மனோரஞ்சிதத்தின் பங்களாவுக்குப் போனார்களாம். வாசலில் ஏற்கனவே ஐந்து ஆறு மோட்டார் வண்டிகள் காத்துக் கொண்டிருந்தனவாம் "கும்பகோணம் சிவக்கொழுந்து பிள்ளை வந்திருக்கார்" என்று தம்பி சொல்லியனுப்பிச்சுதாம். வாசல் சேவகன் திரும்பி வந்து, "இப்போது அம்மாவுக்கு வேலை இருக்காம். பார்க்க முடியாதாம். இன்னொரு சமயம் வரச் சொன்னாங்க" என்று தெரிவித்தானாம். தம்பிக்கு முகம் அப்படியே சிறுத்துப் போச்சாம். வண்டியைத் திருப்பச் சொல்லி நேரே ஜாகைக்கு வந்து விட்டதாம்.
சாமி! இந்த விஷயம் எனக்கு ஆச்சர்யத்தை விளைவிக்கவில்லை. அந்தப் பெண் பிள்ளையை மதறாஸ்காரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். பெரிய பெரிய வக்கீல்கள் என்ன, ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் என்ன, ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள் என்ன இப்படிப்பட்ட சீமான்களெல்லாம் அவள் வீட்டு வாசலில் போய்க் காத்துக் கொண்டிருந்தார்களாம்! இப்படியெல்லாம் பெருமை வந்தால், நல்ல மனுஷ்யர்களுக்கே கர்வம் தலைக்கேறிப் போய்விடும். ஒரு சாதாரண பெண் பிள்ளைக்குக் கேட்க வேண்டுமா? கேவலம் ஒரு மேளக்காரனை அவள் மதிப்பாளா?
சிவக்கொழுந்தின் மேல் எனக்குக் கோபமாய் வந்தது, இவனுடைய வித்வத் எங்கே? அவள் எங்கே? அந்த அற்பப் பெண்பிள்ளை எங்கே? அவள் வீட்டை தேடிக்கொண்டு இவன் ஏன் போகிறான்? இந்த அவமானம் அவனுக்கு நன்றாய் வேண்டும்! அப்போதுதான் புத்தி வரும். அழட்டும் நன்றாய் அழட்டும்.
இப்படி எண்ணி, அவனை சமாதானப்படுத்துவதற்கு நான் போகவில்லை. எனக்கு சில மனுஷ்யர்களை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என்று வெளியே போய்விட்டேன்.
சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்குத்தான் திரும்பி வந்தேன். வந்ததும், தம்பியைப் பற்றி விசாரித்தேன். சுமார் நாலு மணிக்குத் தம்பி அறையிலிருந்து எழுந்து வந்ததாகவும், நான் எங்கே என்று விசாரித்ததாகவும், உடனே வண்டியில் ஏறிக் கொண்டு புறப்பட்டுச் சென்றதாகவும், தெரிந்தது. ரயிலில் ஏறி நாம் பாட்டுக்குப் போய்விடலாமா, தம்பி எப்படியாவது திண்டாடிக் கொண்டு வந்து சேரட்டும் என்று முதலில் நினைத்தேன். அப்புறம் இந்த மாதிரி நிலைமையில் அவனைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கூடாது என்று தோன்றிற்று. மனத்திலே என்னமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருவேளை தம்பி வந்து சேராவிட்டால் நாளைக்குச் சிதம்பரத்தில் கச்சேரி என்ன ஆவது? அவன் தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டால், அதற்காக நாமும் அசட்டுத் தனமாகப் போகலாமா என்று நினைத்து, அவன் வரவுக்காகக் காத்திருந்தேன்.
சாயங்காலம் ஏழு மணிக்குத்தான் வாசலில் வண்டி வந்து நின்றது.
"மாமா வந்துட்டாங்களா?" என்று சிவக்கொழுந்து உற்சாகமாகக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த போது, 'போகிறது, பிள்ளைக்குப் புத்தி சரியாய்ப் போய்விட்டது போலிருக்கு' என்று நான் நினைத்துச் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நிமிடங்கூட இல்லை. உள்ளே வந்த தம்பியைப் பார்த்தேனோ இல்லையோ, அவனுடைய உற்சாகத்துக்குக் காரணம் என்னவென்று தெரிந்து போய்விட்டது. அப்படியே என் மனம் இடிந்து போயிற்று.
'அடி பாவி! சண்டாளி! உன்னால்தானே விபரீதம் வந்தது!' என்று அந்த நாடகக்காரியை மனத்திற்குள் திட்டினேன். நான் அன்று சாயங்காலம் தம்பியைத் தனியாய் விட்டு விட்டுப் போனதற்காக என்னையே நொந்து கொண்டேன். 'இப்போது நான் ரயிலில் போவது என்பது முடியாத காரியம். கூட இருந்து தம்பியை அழைத்துக் கொண்டு தான் போக வேண்டும்.'
இந்த இடத்தில் கந்தப்ப பிள்ளை சொன்னது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. எதையோ சொல்ல விட்டு விட்டார் என்று தோன்றிற்று. "நீர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை, ஐயா! அப்படிச் சிவக்கொழுந்தினிடம் என்ன மாறுதலைக் கண்டீர்?" என்று கேட்டேன்.
"தெரியவில்லையா, சாமி! அதைச் சொல்வதற்குக் கூட எனக்குச் சங்கடமாயிருக்கிறது. பையன் நன்றாகத் 'தண்ணி' போட்டுவிட்டு வந்திருந்தான்! அவ்வளவுதான். அனுமார் கோயிலிலே செய்த சத்தியம் போச்சு! மறுபடியும் 'சோக்ரா' பையனை விசாரித்தேன். சாயங்காலம் இன்னொரு தடவை அந்த நாடகக்காரி வீட்டுக்குப் போனதாகவும், அப்போதும் 'பார்க்க முடியாது' என்றே பதில் கிடைத்ததாகவும், இவர்கள் வாசலில் நிற்கும் போதே அவள் வெளியில் கிளம்பி வந்து மோட்டாரில் ஏறிக் கொண்டு போய்விட்டதாகவும் தம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லையென்றும் 'சோக்ரா' சொன்னான். அதற்குப் பிறகு தம்பி கொஞ்ச நேரம் எங்கெல்லாமோ சுற்றி அலைந்து விட்டுக் கடைசியில் ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில் வண்டியை விட்டுக் கொண்டு போயிற்றாம். நாசமாய்ப் போகிறவன்கள் தான் மதுபானக் கடைகள் வைத்திருக்கிறார்களே? சக்கைப் போடு போட்டு விட்டு வந்து விட்டான்!
இதையெல்லாம் கேட்டபோது ஒரு புறத்தில் எனக்குத் தம்பியின் பேரில் கோபம் வந்தாலும், இன்னொரு பக்கம் இரக்கமாயுமிருந்தது. அவன் மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருந்தால், இந்த மாதிரி கோயிலில் செய்த பிரமாணத்தைக் கைவிட்டு மது பானம் செய்யத் தோன்றியிருக்கும்? பாழும் பெண் மோகத்தின் சக்திதான் என்ன? - போனது போகட்டும், இந்த தடவை எப்படியாவது பையனை ஜாக்கிரதையாய் ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், அப்புறம் கவலையில்லையென்று நினைத்தேன். 'இந்த நாடகக்காரிப் பைத்தியம் இத்துடன் இவனுக்கு விட்டுப் போயிற்று. பிறகு வனஜா இருக்கிறாள், பார்த்துக் கொள்கிறாள்!' என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
5
சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு இரவு பத்து மணி ஆகிவிட்டது. கம்பெனிக்காரர்கள் அனுப்பியிருந்த டிரைவர் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். சிவக்கொழுந்து டிரைவருக்குப் பக்கத்தில் முன் ஸீட்டில் உட்கார்ந்தான். நாங்கள் எல்லாம் பின்னால் இருந்தோம். தம்பி வண்டி ஓட்ட ஆரம்பிக்காமலிருக்க வேண்டுமே என்று என் மனசு திக்திக் என்று அடித்துக் கொண்டது. ஆனால் அவனிடம் அதைப் பற்றி நான் சொல்லவில்லை. சொன்னால், ஒரு வேளை 'குரங்கை நினைத்து கொண்டு மருந்து தின்னாதே' என்று சொன்ன கதைபோல் ஆகிவிடலாமல்லவா? ஆகையால் வாயை மூடிக் கொண்டு இருந்தேன்.
அன்றிரவு வானத்தில் மப்பும் மந்தாரமுமாயிருந்தது. ஆனால் நாங்கள் கிளம்பும் போது மழை பெய்யுமென்று தோன்றவில்லை. செங்கற்பட்டு தாண்டுகிற பொழுதுதான் சிறு தூற்றல் போட்டது. அப்போது ஆகாயத்தைப் பார்த்தேன். ஒரே காடாந்தகாரமாயிருந்தது. பெருமழை பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமேயென்று கவலைப்பட்டேன்.
இப்படி எண்ணிச் சற்று நேரத்துக்கெல்லாம் நான் கண்ணசந்திருக்க வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. பெரிய இடிச் சத்தத்தைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன்.
ஆஹா! அந்த மாதிரி மின்னலையும் இடியையும் என் ஜன்மத்தில் நான் பார்த்தது கிடையாது. அந்த இடிச் சத்தமானது ஆகாயத்தில் எங்கேயோ ஒரு மூலையில் கிளம்பி, மேகங்களைக் கீறிப் பிளந்து கொண்டு, ஆகாயத்தின் இன்னொரு மூலைக்குப் பிரயாணம் செய்வது போலிருந்தது. அதுவும் சட்டென்று அவசரமாய்ப் போய்விடவில்லை. அண்டகடாகங்களையெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கச் செய்து கொண்டு நிதானமாகப் பிரயாணம் செய்தது. அதே சமயத்தில் பளீரென்று மற்றொரு மின்னல் கிளம்பிற்று. கோடி சூரியன் ஒரே சமயத்தில் கிளம்பினால் எப்படியிருக்கும்? அவ்வளவு பிரகாசமான மின்னல் அரை நிமிஷம் நின்று உலகத்தை ஜகஜ்ஜோதியாகச் செய்தது. அந்த ஜகஜ்ஜோதியின் வெளிச்சம் தாங்காமல் என் கண்கள் மூடிக் கொண்டன. ஆனால் அப்படி மூடிக் கொள்வதற்குள், என் வயிற்றில் நெருப்பைக் கட்டும்படியான காட்சியைப் பார்த்துவிட்டேன் சாமீ! எனக்கு முன்னால் டிரைவரின் ஸீட்டில் உட்கார்ந்து சிவக்கொழுந்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.
'ஐயோ! விபரீதம் வரப் போகிறதே!' என்று என் மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் தோன்றியது. அவ்வளவுதான், விபரீதம் வந்துவிட்டது!
அந்த ஒரு வினாடியில் நேர்ந்த சம்பவங்களை எப்படி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்? படீர் என்று ஒரு பெரிய பயங்கரமான சத்தம்; என் ஜன்மத்தில் அந்த மாதிரி சத்தத்தை நான் கேட்டதே இல்லை; இனிமேல் கேட்கப் போகிறதுமில்லை. ஆகாயம் அப்படியே இடிந்து திடீரென்று நம் தலையில் விழுந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் தோன்றிற்று. அந்தப் பெரும் சத்தத்தினால் என் காது செவிடானது ஒரு வினாடி. அடுத்த வினாடியில் ஒரு பெரிய அதிர்ச்சி; பூலோகத்திலிருந்து என்னை யாரோ தூக்கிப் பாதாளத்தில் எறிவது போலிருந்தது.
எனக்குப் புத்தி தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது, நான் கண்ட பயங்கரமான காட்சியை என் ஆயுள் உள்ள வரையும் மறக்க மாட்டேன். எனக்கு எதிரே, ஒரு பெரிய ஆலமரம், பச்சை ஆலமரம், நெருப்புப் பற்றி எறிந்து கொண்டிருந்தது! அந்த மரத்துக்கு அடியில் ஒரு மோட்டார் வண்டியும் தீப்பற்றி எறிந்து கொண்டிருந்தது. ஆகாயத்திலும் பூலோகத்திலும் சூழ்ந்திருந்த காடாந்தகாரத்துக்கு நடுவில், இம்மாதிரி ஒரு பச்சை மரமும், அதனடியில் ஒரு மோட்டாரும் நெருப்புப் பிடித்து எரிந்து கொண்டிருந்தால் என்னமாயிருக்கும்? அப்போது சிறு தூற்றல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. அந்த மழைத்துளிகள், எரிகின்ற தீயின் ஜ்வாலையில் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது, அக்னி பகவான், நாக்கை நீட்டி அந்த மழைத் துளிகளை ருசிப்பது போலவும், 'என்னுடைய பெருந் தாகத்துக்கு இந்தத் துளிகள் போதுமா?' என்று மேலும் மேலும் மேக மண்டலத்தை நோக்கிப் போவது போலவும் இருந்தது. இந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் கிடந்த இடத்திலேயே கிடந்தேன். தெய்வாதீனமாக, அப்போது காரில் என் தவுல் இருந்தது ஞாபகம் வந்தது! உடனே எனக்கு உயிர் வந்து விட்டது, மறு நிமிஷம் பாய்ந்து சென்று வண்டியின் அருகில் போனேன். வண்டி மரத்தில் முட்டி நொறுங்கிக் கிடந்தது. நல்ல வேளையாக என்ஜினில்தான் நெருப்புப் பிடித்து கொண்டிருந்தது. இன்னும் அடிப்பாகத்துக்கு வரவில்லை. தவுலையும், நாயனங்களையும் எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, மனுஷர்களின் நிலைமை என்னவென்று பார்த்தேன். டிரைவர் அப்போதுதான் எழுந்து வந்து கொண்டிருந்தான். அவன் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "அடபாவி! இப்படிப் பண்ணிவிட்டாயேடா! நீ நாசமாய்ப் போக!" என்று வைது விட்டு, தம்பி எங்கே என்று பார்த்தேன். கொஞ்சம் தூரத்தில் அவன் கிடந்ததைக் கண்டதும் இரண்டு எட்டில் பாய்ந்து ஓடினேன். கட்டை மாதிரி கிடந்தான். ஐயோ! பாவி போய்விட்டானோ? மாரைத் தொட்டுப் பார்த்தேன்; அடிக்கிற சத்தமே கேட்கவில்லை. கையைப் பிடித்துப் பார்த்தேன்; நாடி அடிக்கவில்லை. மூக்கின் அருகில் கையை வைத்தேன்; இலேசாக மூச்சு வருவது போல் தோன்றிற்று; கொஞ்சம் எனக்கு உயிர் வந்தது.
இதற்குள்ளாக ஜனங்கள் பேசுகிற கலகல சப்தம் கேட்டுச் சுற்று முற்றும் பார்த்தேன். எழெட்டுப் பேர் கையில் லாந்தர்களுடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு வெகு சமீபத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்ததாகப் பின்னால் தெரிந்து கொண்டேன். கடவுளுடைய செயலைப் பாருங்கள் ஐயா! அவர் தண்டனை அளிக்கும் போதுகூட, கொஞ்சம் கருணையும் காட்டுகிறார்; சஞ்சாரமே இல்லாத இடத்தில் இந்த மாதிரி விபரீதம் நடந்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்...?"
"பிள்ளைவாள்! எனக்குப் புரியவில்லை! என்ன தான் நடந்தது? ஏன் மரம் பற்றிக் கொண்டது? ஏன் மோட்டார் எரிந்தது?" என்றேன்.
"தெரியவில்லையா ஐயா! பச்சை மரம் ஏன் எரியும்? நீங்கள் தான் சொல்லுங்களேன்? இடி விழுந்து தான்..."
"ஐயோ, அனுமார் கோயிலில் செய்த சபதம்..."
"ஆமாம் சாமி, ஆமாம்! அனுமார் கோயிலில் சிவக்கொழுந்து செய்த சபதம் பலித்து விட்டது. அவ்வளவு சமீபத்தில் இடிவிழுந்த அதிர்ச்சியினால் தம்பியின் மூளைகலங்கிப் போயிருக்க வேண்டும். ஸ்டீரிங்கிலிருந்து கை நழுவியது. வண்டி மரத்தின் மேல் முட்டியது. மூலைக்கு ஒருவராய்ப் போய் விழுந்தோம். ஆனால், அதிசயத்தைக் கேளுங்கள்! யாரும் சாகவில்லை. எங்களுக்கெல்லாம் சிறு காயங்களுடன் போயிற்று. தம்பிக்கு மட்டும் - தம்பிக்கு மட்டும்... சாமி! அதை நினைக்கும் போது தெய்வத்தின் தண்டனை என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்தச் சமயம் இதைப் பற்றியெல்லாம் நான் நினைக்கவில்லை. தம்பிக்கு மூர்ச்சை தெளிவிப்பதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தோம். மூர்ச்சை தெளியவில்லை. அடுத்த ரயிலில் கும்பகோணத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். ரயிலில் தம்பியின் முகத்தை உற்றுப் பார்த்த போது தான் 'ஐயோ! இது தெய்வ தண்டனைதானோ' என்று எனக்குச் சந்தேகம் உதித்தது.
கட்டை மாதிரி அவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபடியால் உயிர் இருக்கிறதோ இல்லையோ என்று எனக்கு அடிக்கடி பயம் ஏற்படும். உடனே தம்பியின் முகத்தைப் பார்ப்பேன். அந்த முகத்தில் ததும்பிய ஜீவ களையைப் பார்த்து தைரியம் அடைவேன். இப்படி ஒரு தடவை பார்த்த போது மூடியிருந்த தம்பியின் கண்களின் ஓரத்தில் ஏதோ பளபளவென்று சிவப்பாகத் தெரிந்தது. உற்றுப் பார்த்தேன், பகவானே!
அப்போதுதான் என் நெஞ்சை யாரோ ஈட்டியால் குத்திப் பிளப்பது போல் இருந்தது. ஏனெனில் மூடியிருந்த இரண்டு கண்களின் முனையிலும் இரத்தத் துளிகள் காணப்பட்டன! எலக்டிரிக் லைட்டின் பிரகாசத்தில் அவை அப்படி உயர்ந்த ரத்தினக் கற்களைப் போல் பிரகாசித்தன!
என் மனசில் அப்போது ஏற்பட்ட பயங்கரமான சந்தேகம் நாலு நாளைக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் உறுதிப்பட்டது. கும்பகோணத்தில் நம்முடைய பிரபல காங்கிரஸ் டாக்டர் இருக்கிறார் அல்லவா? அவருடைய ஆஸ்பத்திரிக்குத்தான் அழைத்துச் சென்றேன். முதல் மூன்று நாலு நாளும் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை. நாலாம் நாள், என்னைக் கூப்பிட்டு, ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டார். "பையனுக்கு மனம் கொஞ்சம் குழம்பியிருக்கிறது. கொஞ்ச நாளில் இது சரியாகப் போய்விடும். ஆனால் கண் இரண்டும் போனது போனதுதான்" என்று சொன்னார். அவரை நான் காரணம் ஒன்றும் கேட்கவில்லை. எனக்குத்தான் காரணம் தெரியுமே? ஹனுமார் கோயிலில் தம்பி செய்த பிரமாணம் அப்படியே பலித்து விட்டது. இனிமேல் மதுபானம் செய்தால், என் தலையில் இடி விழட்டும், என் கண் அவிந்து போகட்டும் என்று சபதம் செய்தபடியே ஆகிவிட்டது.
6
தம்பி மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக புத்தி தெளிவடைந்து வந்தது. பத்து நாளைக்குள் நான் இன்னாரென்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தான். கண்ணுக்கு இன்னும் கட்டுப் போட்டிருந்தது. கண் போய் விட்டது என்ற செய்தியைச் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. நான் இல்லாத சமயத்தில் டாக்டரையே தெரிவிக்கும்படி சொல்லிவிட்டேன். இனிமேல் தனக்குக் கண் தெரியவே தெரியாது என்று அறிந்ததும் அவனுக்கு மறுபடியும் சித்தப் பிரமை மாதிரி ஆகிவிட்டது. சம்பந்தமில்லாமல் தனக்குத்தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். இவ்வளவு கூத்தில் அவன் அந்த நாடகக்காரியை மட்டும் மறக்கவில்லை. அடிக்கடி 'மனோரஞ்சிதம்', 'மனோரஞ்சிதம்' என்று சொல்லிக் கொண்டும் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டும் இருந்தான். இதனால் வனஜாவை அவனைப் பார்ப்பதற்கு அழைத்து கொண்டு வருவதற்கு எனக்குப் பிடிக்கவில்லை.
வனஜாவோ, தான் அவரைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். யாரும் பார்க்கக் கூடாது என்று டாக்டர் கண்டிப்பாய் கட்டளையிட்டிருப்பதாகச் சொல்லிக் காலம் ஓட்டிக் கொண்டிருந்தேன். கடைசியில் அவளுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் ஒரு நாளைக்கு அழைத்துக் கொண்டு வந்தேன். அவள் பார்க்க வரும் விஷயத்தைத் தம்பியிடம் தெரியப்படுத்த வேண்டாமென்று இரண்டு பேருமே பேசித் தீர்மானித்திருந்தோம். அவ்வாறே அவள் அவன் படுத்திருந்த அறையில் வந்து பேசாமல் மௌனமாய் நின்றாள்.
நான் பயந்தபடியே ஆயிற்று. சிவக்கொழுந்து தனக்குத் தானே பேசிக் கொள்கையில், 'அடி மனோரஞ்சிதம்! என் கிளியே! மடமயிலே! மானே! தேனே, என்றெல்லாம் பிதற்றினான். நான் மிகுந்த கவலையுடன் வனஜாவைப் பார்த்தேன். ஐயா! ஸ்தீரிகளின் இதயத்தை ஆண் பிள்ளைகளால் கண்டு பிடிக்க முடியாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களல்லவா? அது உண்மையென்று அப்போது எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி சிவக்கொழுந்து இன்னும் மனோரஞ்சிதத்தின் பெயரை ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, வனஜா மனம் வெறுத்துப் போய்விடுவாள் என்றும், தம்பியின் மேல் அவளுக்கிருந்த பாசம் போய்விடுமென்றும், அப்புறம் அவனைப் பார்க்க வர வேண்டுமென்றே சொல்ல மாட்டாள் என்றும் நினைத்தேன். ஆனால் நடந்தது இதற்கு நேர்மாறாக இருந்தது. வனஜாவின் மனம் கொஞ்சம் கூட சலிக்கவில்லையென்று கண்டேன். உண்மையில் அவளுடைய பாசம் முன்னைவிட அதிகமானதாகத் தோன்றிற்று.
தினந்தோறும் தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டுமென்றும் ஆனால் தம்பிக்குச் சொல்லக் கூடாதென்றும், அவள் பிடிவாதம் பிடித்தாள். தம்பிக்குத் தன் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டு வர வேண்டுமென்றும் சொன்னாள். அவளே சில சமயம் எடுத்துக் கொண்டு வந்தாள். இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. முன்னே சிவக்கொழுந்துக்கும் வனஜாவுக்கும் கலியாணம் பண்ணி வைக்க வேண்டுமென்று நான் எண்ணியது வாஸ்தவந்தான். ஆனால் இப்போது அது நடக்கக் கூடிய காரியமா? அவளுடைய தாயார் சம்மதிப்பாளா? இந்தப் பைத்தியக்காரப் பிள்ளைதான் சம்மதிக்கப் போகிறானா? இவ்வளவுக்குப் பிறகு இன்னும் அவனுக்கு 'மனோரஞ்சிதம் பிரேமை' போகவில்லையே! பின்னே வனஜாவின் பாசத்தை வளர விடுவதில் என்ன பிரயோஜனம்?
இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் வனஜா சொன்ன ஒரு விஷயம் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது. "மாமா, நான் சொல்கிறதற்கு நீங்கள் சம்மதிக்க வேணும்" என்று அவள் ரொம்ப நேரம் பூர்வ பீடிகை போட்டுவிட்டுக் கடைசியில், "நான் என் பெயரை மாற்றி மனோரஞ்சிதம் என்று வைத்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் சம்மதம் கொடுக்க வேணும்" என்றாள். முதலில், அவளுடைய நோக்கம் இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை. பிற்பாடு அவளுடன் பேசித் தெரிந்து கொண்டேன். தம்பிக்குத் தான் கண் தெரியாதல்லவா? இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு வனஜா தன்னை மனோரஞ்சிதமாக மாற்றிக் கொள்ளப் போவதாய்ச் சொன்னாள். மனோரஞ்சிதம் மாதிரியே தன்னால் பேசவும் பாடவும் முடியுமென்றும் சொல்லி, அந்தப் படியெல்லாம் எனக்குச் செய்து காட்டினாள். குரல் பேச்சு எல்லாம் தத்ரூபம், நாடக மேடையில் நான் பார்த்தபடியே இருந்தது.
எனக்கென்னமோ தம்பியை இப்படி ஏமாற்றுவது பிடிக்கவேயில்லை. அதனால் என்ன கேடு விளையுமோ என்னமோ என்று பயமாயுமிருந்தது. ஆனாலும் வனஜாவின் பிடிவாதத்தையும் கண்ணீரையும் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. 'மாமா! எனக்கு அவரைத் தவிர வேறு கதி கிடையாது. வனஜாவை அவருக்குப் பிடிக்காதபடியால் மனோரஞ்சிதமாகி விடுகிறேன். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை விட்டு விடுவேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் உங்களை விடாது" என்றாள்.
பல நாள் தயங்கித் தயங்கி, கடைசியாக இந்த மோசடிக்கு நான் சம்மதித்தேன். அந்தப் பெண்ணின் துயரத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஒரு வேளை யுக்தி பலித்தால், சிவக்கொழுந்து மனந்தேறி முன்போல் மனுஷனாகலாம் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. ஆனால் கவலையும் திகிலும் ஒருபுறம் இல்லாமற் போகவில்லை. முதலில் யுக்தி பலிக்க வேண்டும்; பிறகு உண்மை வெளியாகும் போது, தம்பி என்ன செய்வானோ, என்னமோ? பகவான் இருக்கிறார், நடக்கிறபடி நடக்கட்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
மறுநாள், வனஜாவை அழைத்துக் கொண்டு தம்பியின் வீட்டுக்குப் போனேன்.
தம்பியிடம் இந்தப் பேச்சை எப்படி எடுக்கிறது என்று நான் தயங்கிக் கொண்டிருக்கையில், தற்செயலாக வனஜாவின் கைவளைகள் குலுங்கின. அதைக் கேட்டதும் தம்பிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போயிருக்க வேண்டும்.
"மாமா! யார் அது?" என்று கேட்டான்.
நல்ல வேளையாய்ப் போச்சு என்று நான் நினைத்துக் கொண்டு "தம்பி! உன்னைப் பார்ப்பதற்காகப் பட்டணத்திலிருந்து மனோரஞ்சிதம் வந்திருக்கு" என்றேன்.
"என்ன மனோரஞ்சிதமா?" என்று கேட்டுக் கொண்டு தம்பி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். ஒரு நிமிஷம் எனக்கு ரொம்பப் பயமாய்ப் போய்விட்டது.
அதே சமயத்தில் வனஜா சட்டென்று அருகில் வந்து "ஆமாம், நான் தான் வந்திருக்கிறேன். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடைய தோள்களைப் பிடித்து மெதுவாக படுக்க வைத்தாள்.
ஐயோ! அப்போது தம்பி பார்த்த பார்வை இன்னும் என் மனசில் அப்படியே நிற்கிறது. ஒளி இழந்த அவனுடைய கண்களால் அப்படி வெறிக்க வெறிக்க விழித்துப் பார்த்தான். ஒரு பொருளை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை மனுஷர்களுக்கு நன்றாய்த் தெரிகிறதல்லவா? அவ்விதமே, கண் பார்வையின் அருமையை அந்த சமயத்தில் தம்பி ரொம்பவும் உணர்ந்திருக்க வேண்டும். 'போன பார்வை திரும்பி வராதா?' என்ற அளவில்லாத ஆத்திரத்தை அச்சமயம் அவனுடைய முகத்திலே பார்த்த போது, எனக்கு பெரிய வேதனை உண்டாயிற்று. இவனை ஏமாற்றுகிறோமே என்ற பச்சாதாபமும் ஏற்பட்டது. ஆனால், எப்படியோ அந்தப் பெண்ணின் வார்த்தையைக் கேட்டு இந்த மோசடியில் இறங்கியாகி விட்டது. இனிமேல் தயங்கி என்ன பிரயோஜனம்?
முன்னாலேயே நானும் வனஜாவும் யோசித்துக் கற்பனை செய்திருந்த கதையை அப்போது சொன்னேன். தம்பி ஸ்மரனையிழந்திருந்த போது அடிக்கடி 'மனோரஞ்சிதம்' என்று சொல்லிக் கொண்டிருந்ததாகவும், அவள் வந்தால் தான் அவனுக்குக் குணமாகுமென்று நினைத்து நான் கடிதம் எழுதினதாகவும், அதன் பேரில் அவள் வந்திருப்பதாகவும் பாடம் ஒப்புவித்தேன்.
வனஜா நான் சொன்னதை ஆமோதித்தாள். "மாமாவின் கடிதம் பார்த்ததும் ஓடி வந்தேன்; உங்களுக்கு உடம்பு நன்றாய் சௌக்கியமான பிறகுதான் திரும்பிப் போகப் போகிறேன்" என்றாள்.
கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்த பிறகு, "எங்கே, அம்மா! ஒரு பாட்டுப் பாடுங்கள். தம்பி கேட்கட்டும்" என்றேன் நான். இதையும் முன்னாலேயே பேசி வைத்திருந்தோம்.
மனோரஞ்சிதம் நந்தன் சரித்திரத்தில் நந்தன் வேஷம் போட்டுக் கொள்வதுண்டு. அப்போது 'பட முடியாதினித் துயரம்' என்னும் அருட்பாவை ராக மாளிகையில் பாடுவாள். இப்போது வனஜா அந்தப் பாட்டை அதே மாதிரி ராகமாளிகையில் பாடினாள். குரல், பாடும் விதம், அங்கங்கே விழுந்த சங்கதிகள் முதற்கொண்டு அப்படியே இருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். தம்பியோ பாட்டைப் பரவசமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். ஒளி இழந்த அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வந்து கொண்டிருந்தன.
எங்களுடைய யுக்தி இவ்வாறு பலித்து விட்டதைப் பற்றி நாங்கள் இருவரும் அசாத்தியமான சந்தோஷம் அடைந்தோம். பிறகு, வனஜா தினந்தோறும் தம்பியைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள். பகலெல்லாம் பெரும்பாலும் அவனுடைய வீட்டிலேயே கழிப்பாள். தம்பிக்கு நெருங்கிய உற்றார் உறவினர் யாரும் இல்லை. வீட்டில் தவசிப் பிள்ளையையும் சோக்ராவையும் தவிர வேறு யாரும் கிடையாது. அவர்களை நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் நான் வேறு நாதஸ்வர வித்வான்களுடன் கச்சேரிக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு தடவை அந்த மாதிரி போய் விட்டுத் திரும்பி வந்த போது சிவக்கொழுந்து மிகவும் உற்சாகத்துடனே, "மாமா! நானும் மனோரஞ்சிதமும் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறோம். இனிமேல், அவள் நாடக மேடை ஏறி நடிப்பதில்லை என்றும் தீர்மானமாகி விட்டது" என்று சொன்னான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இது என்ன விபரீதமாக அல்லவா இருக்கிறது? ஏனோ, தம்பிக்கு உடம்பு குணமாவதற்காக இந்த ஏமாற்றத்துக்கு நான் சம்மதித்தேன். எப்போதுமே அவனுக்கு உண்மை தெரியாமல் இருக்குமா? தெரியும்போது என்ன கதி ஆவது?
ஆனால் இந்த ஆட்சேபம் ஒன்றும் வனஜாவிடம் பலிக்கவில்லை. "பிற்பாடு நானல்லவா கஷ்டப்பட போகிறேன்? உங்களுக்கு என்ன?" என்றாள். அழுது கண்ணீர் விட்டு எப்படியோ என்னை சம்மதிக்கப் பண்ணிவிட்டாள். அவளுடைய தாயாரையும் சம்மதிக்கச் செய்தாள்.
அடுத்த மாதம் திருநாகேசுவரம் கோயிலில் அவர்களுக்குக் கல்யாணம் நடத்திக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.
இப்படிச் சொல்லி விட்டு, கந்தப்ப பிள்ளை சும்மா இருந்தார். ஏதோ பெரிய யோசனையில் ஆழ்ந்தவர் போல் தோன்றினார்.
"அப்புறம் என்ன?" என்று கேட்டேன்.
"அப்புறம் என்ன? மாப்பிள்ளையும், மருமகளும் சௌக்கியமாயிருக்கிறார்கள். மணிமணியாய் இரண்டு ஆண் பிள்ளைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன" என்றார்.
எனக்குத் திருப்தி உண்டாகவில்லை. அவர் சொல்ல வேண்டியது இன்னும் பாக்கி இருப்பதாகத் தோன்றியது.
"இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.
"முந்திரிச் சோலை என்று கேட்டிருக்கிறீர்களா, சாமி? காரைக்காலுக்கும் முத்துப்பேட்டைக்கும் நடுவே மத்தியில் சமுத்திரக் கரையோரத்தில் இருக்கிறது. முந்திரிச் சோலை மாரியம்மன் கோயில் வெகு பிரசித்தம். கிராமம் வெகு அழகாயிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் முந்திரி மரங்களும், சவுக்கு மரங்களும் தான். ஊருக்குக் கிழக்கே கொஞ்ச தூரம் வரையில் இந்தத் தோப்புகள்; அப்புறம் நாணல் காடு. நாணல் காட்டைத் தாண்டினால் வெண் மணல். அதற்கும் அப்பால் அலை வீசும் சமுத்திரம். இடைவிடாமல் அலைகளின் 'ஓ' வென்ற சப்தமும், சவுக்குத் தோப்புகளின் 'ஹாய்' என்ற சப்தமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த முந்திரிச் சோலைதான் என்னுடைய பூர்வீக கிராமம். இங்கே எனக்கு ஒரு சின்ன வீடும் கொஞ்சம் காணியும் உண்டு. சிவக்கொழுந்து, பெயரும் புகழுமாய் நன்றாயிருந்த காலத்தில், இந்த கிராமத்துக்கு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறான். ஊர் தனக்கு ரொம்பப் பிடித்திருப்பதாகவும், எப்போதாவது கச்சேரி செய்வதை நிறுத்தினால், இந்த ஊரில் வந்து வசிக்கப் போவதாகவும் அடிக்கடி சொல்வான்.
கல்யாணம் ஆன சில நாளைக்கெல்லாம் தம்பி, "மாமா! நான் முந்திரிச் சோலைக்குப் போகப் போகிறேன். உங்கள் வீட்டை எனக்குக் கொடுக்க வேணும்" என்றான். அதெல்லாம் கூடாதென்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். "கண் பார்வை இல்லாமற் போனால் என்ன, தம்பி? அதற்காக நீ வாத்தியம் வாசிப்பதை நிறுத்தி விடக்கூடாது. அந்த காலத்தில் சரப சாஸ்திரியார் கண்ணில்லாமல் புல்லாங்குழல் வாசிக்கவில்லையா? கச்சேரி வராதோ என்று நினைக்காதே எதேஷ்டமாய் வரும்" என்றேன்.
எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. "வேணுமானால் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். சில வருஷமாவது நான் கிராமத்தில் இருக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு நாயனத்தையே நான் தொடப் போவதில்லை" என்று பிடிவாதமாய்ச் சொன்னான். அந்தபடியே அவனும் வனஜாவும் முந்திரிச் சோலைக்குப் போய்விட்டார்கள். இன்னமும் அங்கேதான் இருக்கிறார்கள்.
7
இவ்வாறு கந்தப்ப பிள்ளை மறுபடியும் கதையை முடித்தார். ஆனால் என் மனம் சமாதானம் அடையவில்லை. அவருடைய கதையில், இடி விழுந்து சிவக்கொழுந்தின் கண் போனதைக் கூட நான் நம்பினேன். ஏனெனில், இம்மாதிரி அபூர்வ சம்பவங்களை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் வனஜா மனோரஞ்சிதமாக மாறி, சிவக்கொழுந்தை மோசம் செய்த விஷயத்தை மட்டும் என்னால் நம்ப முடியவில்லை. என்னதான் கண் குருடாயிருந்தாலும் இந்த மாதிரி ஏமாற்றுவது சாத்தியமா?
அப்படிக் கலியாணம் நடந்திருந்தாலும், பின்னால் தெரியாமல் இருந்திருக்குமா?
இப்படி எண்ணி, "அப்புறம், சிவக்கொழுந்துக்குத் தெரியவேயில்லையா? உங்களுடைய மோசத்தைக் கண்டு பிடிக்கவில்லையா?" என்று கேட்டேன்.
"ஸ்வாமி! இந்த எண்ணத்தினால் எத்தனை நாள் தூக்கம் பிடிக்காமல் கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தம்பி எப்போது உண்மையைத் தெரிந்து கொள்வானோ, அப்போது அவனுக்கு எப்படிப்பட்ட கோபம் வருமோ, என்ன செய்வானோ என்று எனக்குத் திக்திக்கென்று அடித்துக் கொண்டுதானிருந்தது. இந்த பயத்தினாலும், அவர்கள் பேரில் எனக்கிருந்த பிரியத்தினாலும் அடிக்கடி முந்திரிச் சோலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது கட்டாயம் போய் விடுவேன். இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்து நானும் சந்தோஷமடைந்தேன்.
இந்த மாதிரி ஒரு தடவை போயிருந்தபோது, வீட்டுக் கூடத்தில் தம்பியின் வாத்தியம் வைத்திருந்ததையும், அதன் பக்கத்தில் சுருதிப் பெட்டி ஒன்று இருந்ததையும் பார்த்தேன். வனஜாவை, "தம்பி இப்போது வாத்தியம் வாசிப்பதுண்டா?" என்று கேட்டேன். சில சமயம் ராத்திரியில் வாசிப்பாங்க; நான் சுருதி போடுவேன்" என்று சொன்னாள்.
நல்ல வேளையாகத் தவுல் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அன்று ராத்திரி ரொம்பவும் பிடிவாதம் செய்து தம்பியை நாயனம் வாசிக்கச் சொல்லி, நானும் தவுல் அடித்தேன். ஆகா! அது என்ன வாசிப்பு? என்ன வாசிப்பு! சாமி! அது மனுஷ்யர்களுடைய சங்கீதமல்ல; தேவ சங்கீதம். ஒரு சமயம் அழுகை வரும்; ஒரு சமயம் சிரிப்பு வரும். ஒரு நிமிஷம் எங்கேயோ ஆகாயத்தில் தூக்கிக் கொண்டு போவது போலிருக்கும்; அடுத்த நிமிஷம் மலை உச்சியிலிருந்து பாதாளத்தில் உருட்டி விடுவது போலிருக்கும்; ஒரு சமயம் ஊஞ்சலாடுவது போலிருக்கும், இன்னொரு சமயம் எழுந்திருந்து கூத்தாட வேண்டுமென்று தோன்றும். நடுவில் நடுவில் நான் தவுல் அடிப்பதை நிறுத்திவிட்டு, ஆஹா! ஆஹா! என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பேன்.
இம்மாதிரி தம்பி வாத்தியம் வாசிக்கிற விஷயம் தெரிந்ததிலிருந்து முன்னைக் காட்டிலும் அதிகமாகவே முந்திரிச் சோலைக்குப் போகத் தொடங்கினேன். நாளாக ஆக, தம்பியை ஏமாற்றிய விஷயமாய் எனக்குப் பயம் குறைந்து வந்தது. இனிமேல் அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என்றே நினைத்து விட்டேன்.
முந்திரிச் சோலையில் தம்பியும் வனஜாவும் போய்த் தங்கி மூன்று, நாலு வருஷம் இருக்கும். ஒரு தடவை நான் அங்கே போயிருந்தபோது, தம்பியின் முன்னால் ஞாபக மறதியாக 'வனஜா' என்று கூப்பிட்டு விட்டேன். உடனே, என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டேன்.
"வனஜாவா? அது யார் மாமா?" என்றான் சிவக்கொழுந்து.
"இங்கே யாருமில்லை, அப்பா! என் மருமகள் ஞாபகமாகக் கூப்பிட்டு விட்டேன்!"
"அதனால் என்ன மாமா, இவளும் உங்கள் மருமகள் தானே? வனஜா என்ற பெயர் உங்களுக்குப் பிடித்திருந்தால், அப்படியே கூப்பிடுங்களேன்" என்றான்.
"நல்ல வேளை, பிழைத்தோம்" என்று நினைத்துக் கொண்டேன்!
அன்று ராத்திரி வழக்கம் போல் சிவக்கொழுந்து வாத்தியம் வாசித்தான். அவன் சஹானா ராகம் வாசித்த போது என்னால் சகிக்கவே முடியவில்லை. ஒரு பரவசமாய் 'ஆண்டவனே! என்று அலறி விட்டேன். வாசித்து முடிந்ததும், 'தம்பி! கடவுளுக்கு அல்லவா கண்ணில்லை போலிருக்கிறது? இப்பேர்ப்பட்ட நாத வித்தையை உனக்குக் கொடுத்து விட்டு, உன் கண்ணை எடுத்துக் கொண்டு விட்டாரே?' என்று வாய் விட்டுக் கதறினேன்.
அப்போது சிவக்கொழுந்து புன்னகை செய்தபடி, "மாமா! ஸ்வாமி என் கண்ணை எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையில் எனக்குக் கண்ணைக் கொடுத்தார். வனஜாவைக் காட்டிலும் இன்னொருத்தி ஒசத்தி என்று நினைத்தேனே? என்னை விடக் குருடன் யார்?" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன சொல்கிறாய், தம்பி" என்றேன்.
"மாமா! எனக்குக் கண்ணில்லையென்று என்னை நீங்கள் ஏமாற்றப் பார்த்தீர்கள். ஆனால் உண்மையில் உங்களைத்தான் நான் ஏமாற்றினேன். முதல் நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த போதே இவள் வனஜாதான் என்று எனக்குத் தெரியும்" என்றான்.
அச்சமயம் அங்கு வந்த வனஜாவின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய புன்சிரிப்பிலிருந்து அவளும் இதற்கு உடந்தைதான் என்று தெரிந்து கொண்டேன்.
"வனஜா! நீயும் சேர்ந்து தான் இந்தச் சூழ்ச்சி செய்தாயா? தம்பிக்குத் தெரியுமென்பது முதலிலேயே உனக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
"இல்லை, மாமா! கல்யாணத்துக்கு மறுநாள் தான் எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்குச் சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாங்க! நீங்க அவரை ஏமாற்ற நினைத்ததற்காக உங்களை தண்டித்தார்களாம்!" என்றாள்.
"எப்படியும் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாய்ப் போய் விட்டீர்களல்லவா? நான் தானே பிறத்தி மனுஷனாய்ப் போய்விட்டேன்? எனக்கென்னவேலை இங்கே? நான் போகிறேன்" என்று சொல்ல்விட்டுக் கிளம்பினேன்.
என் மனத்திற்குள் எவ்வளவோ சந்தோஷம். ஆனால் வெளிக்கு மட்டும் கோபித்துக் கொண்டவன் போல் நடித்தேன். அவர்கள் இரண்டு பேரும் ரொம்பவும் சிரமப்பட்டு என்னை சமாதானப்படுத்தினார்கள்.
ஒரு மாதிரியாகக் கோபம் தீர்ந்தபிறகு, "போனது போகட்டும், தம்பி! முதல் நாளே இவள் வனஜாதான் என்று உனக்குத் தெரிந்து விட்டது என்றாயே? அது எப்படித் தெரிந்தது?" என்று கேட்டேன்.
அதற்குச் சிவக்கொழுந்து சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் பிரமிக்கும்படி செய்து விட்டது.
"பகவான் ஒரு அவயத்தை எடுத்துக் கொண்டால், இன்னொரு அவயத்தைக் கூர்மையாக்கி விடுகிறார். மாமா! எனக்குக் கண் போச்சு! ஆனால் காது கூர்மையாச்சு. வளையல் குலுங்கிய போதே வனஜாதான் என்று தெரிந்து கொண்டேன். மேலும் மனோரஞ்சிதம் வந்திருக்க மாட்டாள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் என் பிரதிக்ஞைக்கு பங்கம் செய்து கொண்டிருக்கும் போது, அடுத்த அறையில் அவளுடைய போதைச் சிரிப்பைக் கேட்டேன். அப்போதே என் மனம் 'சீ!' என்று வெறுத்து விட்டது. அப்படிப்பட்டவளா என்னைப் பார்க்க வரப் போகிறாள்? ஒரு நாளுமில்லை. எனக்கேற்பட்ட ஆச்சரியமெல்லாம் நீங்கள் ஏன் அவ்வளவு பெரிய பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் என்பது தான். அதன் காரணமும் நானே ஊகித்துக் கொண்டேன். நான் 'மனோரஞ்சிதம், மனோரஞ்சிதம்' என்று வெறுப்பினால் சொல்லிக் கொண்டிருந்ததைத் தப்பாக நினைத்துக் கொண்டு இப்படி என்னை மோசம் செய்யப் பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். இவள் 'பட முடியாதினித் துயரம்' என்று பாடியதும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் எனக்குப் போய் விட்டது. மாமா! நீங்களும் ஒரு சங்கீத ரஸிகர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே? அந்த நாடகக்காரியின் பாட்டுக்கும், உங்கள் மருமகள் பாட்டுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் போச்சு? ராகம், குரல், சங்கதிகள் எல்லாம் அப்படியே இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடகக்காரியின் பாட்டிலே ஆத்மா கிடையாது; அது தொண்டைக்கு மேலிருந்து வந்த பாட்டு. ஆனால் உங்கள் மருமகளோ இருதய அந்தரங்கத்திலிருந்து பாடினாள். இந்த வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லையா?" என்றான்.
இப்படி மருமகனும் மருமகளும் சேர்ந்து எனக்கு அசட்டுப் பட்டம் கட்டினார்கள். ஆனால் அதைக் குறித்து நான் வருத்தப்படவில்லை. ஐயா! என் தலையிலிருந்து ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. எப்படியாவது குழந்தைகள் இரண்டு பேரும் சந்தோஷமாயிருந்தால் சரி! எனக்கென்ன வந்தது? சாமி! காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது. இந்த உலகத்தின் சுகதுக்கங்களெல்லாம் அனுபவித்தாகிவிட்டது. தம்பியின் நாத வித்தையில் சொர்க்கத்தின் சுகத்தைக் கூட அனுபவித்து விட்டேன். பகவான் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போது போகத் தயாராயிருக்கிறேன்.
வண்டி விழுப்புரம் ஸ்டேஷனில் நின்றது. கந்தப்ப பிள்ளையின் 'சோக்ரா' பையன் வேறு வண்டியிலிருந்து வந்து ஏறி, அவருடைய பிரிக்காத படுக்கையையும் பெட்டியையும் தூக்கிக் கொண்டான். கந்தப்ப பிள்ளை தவுலை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்து விட்டு அதைத் தாமே கையில் எடுத்துக் கொண்டு இறங்கினார். "போய் வருகிறேன், ஐயா! பட்டணத்துக்கு வந்தால் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்றிரவு பாக்கி நேரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஐயம்பேட்டைக் கந்தப்பன் கூறிய அதிசயமான சம்பவங்கள் திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா? அல்லது, அவ்வளவும் கந்தப்ப பிள்ளையின் கற்பனையா? மறுபடியும் அவரைப் பார்க்கும் போது விசாரித்து உண்மை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நிஜமாயிருந்தாலும் சரி, கதையாயிருந்தாலும் சரி, ஒரு விதத்தில் பரம திருப்தியாயிருந்தது. என்னுடைய கதைகளைப் போல் துயரமாக முடிக்காமல் 'பிள்ளை குட்டிகளுடன் சௌக்கியமாயிருக்கிறார்கள்' என்று மங்களகரமாகக் கதையை முடித்தாரல்லவா?
-----------
27. ஜமீன்தார் மகன்
சிலர் பிறக்கும் போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள். இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படுகிறார்கள்.
மூன்றாவது கூறிய எழுத்தாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். கொஞ்சங்கூட எதிர்பாராத விதத்தில் எழுத்தாளன் ஆனவன். இன்றைய தினம் நான் 'வாடா மலர்' பிரசுராலயத்தின் தலைவனாக இருந்து, தமிழ் நாட்டுக்கு இணையில்லாத் தொண்டு செய்து, தமிழைக் கொன்று வருவதற்குப் பொறுப்பாளி யார் என்று கேட்டால், நிச்சயமாக நான் இல்லை. என் கைக்குள் அகப்படாத சந்தர்ப்பங்களின் மேலேயே அந்தப் பொறுப்பைச் சுமத்த வேண்டியவனாயிருக்கிறேன். இல்லையென்றால், முதன் முதலாக நான் பேனாவைக் கையில் பிடித்துக் கதை எழுதத் தொடங்கிய வேளையின் கூறு என்று சொல்ல வேண்டும்.
அப்படி எழுத்தாளர் உலகத்தில் என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளக் காரணமாயிருந்த எனது முதல் கதை என்ன என்று தெரிய வேண்டாமா? அது என்னுடைய சொந்தக் கதையே தான். பர்மா நாட்டிலே, ஒரு அகாதமான காட்டு மலைப் பாதையிலே, மாலை நேரத்தின் மங்கிய வெளிச்சத்திலே அதை எழுதினேன். நான் அவ்விதம் எழுதிக் கொண்டிருந்தபோது, பக்கத்து மரத்தடியிலேயிருந்து இரண்டு அழகிய, விசாலமான, கருநீல வண்டுகளை யொத்தகண்கள், இமை கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன! சற்று எழுதுவதை நிறுத்தி, நான் சுற்றுமுற்றும் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, அந்த மரத்தடியை நோக்குவேன். அப்போது அந்தக் கண்கள் ஒரு குறுநகை புரிந்து விட்டு, வேறு பக்கம் நோக்கும். மறுபடி நான் எழுதத் தொடங்கியதும், அந்தக் கண்கள் இரண்டும் என்னை நோக்குகின்றன என்பதை என் உள்ளுணர்ச்சி மட்டுமல்ல - என் உடம்பின் உணர்ச்சியே எனக்குத் தெரியப்படுத்தும்.
மலர்ந்து விழித்த அந்த நயனங்களிலேதான் என்னமாய் சக்தி இருந்ததோ, எனக்குத் தெரியாது. அந்த நயனங்களுக்குரியவளான நங்கையிடம் வேறு என்ன மந்திரம் இருந்ததோ, அதுவும் எனக்குத் தெரியாது. அவள் தன் கண்களின் தீட்சண்யமான பார்வையினால், என் உடைமை, உள்ளம், ஆவி எல்லாம் ஒருங்கே கவர்ந்து, என்னை அடிமை கொண்டு, சுய புத்தியுடன் இருந்த காலத்தில் நான் ஒரு நாளும் செய்யத் துணியாத காரியங்களையெல்லாம் செய்யப் பண்ணினாள் என்பது மட்டுந்தான் தெரியும்.
ஆம்; ஒருவிதக் கஷ்டமும் இன்றிச் சுயபுத்தியுடனே தாய் நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் இருக்கத்தான் இருந்தது. அதை நான் வேண்டுமென்று தவற விட்டதை நினைத்தால், விதியைத் தவிர வேறு காரணம் எதுவும் சொல்வதற்கு முடியாமலிருக்கிறது.
2. ரங்கூன்
1941 ஆம் வருஷம் டிசம்பர் 23• உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அந்தத் தேதியை உங்களில் அநேகர் ஞாபகம் வைத்துக் கொள்வதற்குக் காரணம் இல்லாமலிருக்கலாம். ஆனால், நான் அந்தத் தேதியை ஒரு நாளும் மறக்க முடியாது. அன்றைய தினம் ரங்கூன் நகரில் இருக்க நேர்ந்த எவரும் அதைத் தங்கள் வாழ்நாள் உள்ள வரையில் மறக்க முடியாது.
அன்று தான் முதன் முதலாக ரங்கூனில் ஜப்பான் விமானங்கள் குண்டு போட்டன.
குண்டு விழுந்தபோது நான் என் காரியாலயத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அபாயச் சங்கு ஊதிச் சற்று நேரத்துக்கெல்லாம் 'விர்' என்று விமானங்கள் பறக்கும் சத்தம், 'ஒய்' என்று குண்டுகள் விழும் சத்தம், 'படார்' என்று அவை வெடிக்கும் சத்தம், கட்டிடங்கள் அதிரும் சத்தம், கண்ணாடிகள் உடையும் சத்தம் எல்லாம் கேட்டன. ஆனாலும், கட்டிடத்துக்குள் பத்திரமாயிருந்த நாங்கள் அவற்றையெல்லாம் அவ்வளவு பிரமாதமாக எண்ணவில்லை.
அபாய நீக்கச் சங்கு ஒலித்து வெளியிலே வேடிக்கை பார்க்க வந்த பிறகு தான், விஷயம் எவ்வளவு பிரமாதமானது என்று தெரிந்தது. ரங்கூன் நகரில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். விளைந்த சேதத்தை ஒன்றுக்குப் பத்தாக மிகைப்படுத்திச் சொன்னார்கள். எல்லாம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது.
டல்ஹௌஸி தெருவில் வீடுகள் பற்றி எரிகிறதென்று கேள்விப்பட்டதும் எனக்கு வயிற்றிலேயே நெருப்புப் பிடித்துவிட்டது போலிருந்தது. ஏனெனில், அந்தத் தெருவும், கர்ஸான் தெருவும் சேரும் முனையில் ஒரு வீட்டு மச்சு அறையிலேதான் நான் வாசம் செய்தேன். என்னுடைய துணிமணிகள், கையிருப்புப் பணம் முதலிய சகல ஆஸ்திகளும் அந்த அறையிலேதான் இருந்தன. மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, கம்பெனியின் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்து விழுந்து கொண்டு சென்றேன். ஆனால் என்னுடைய வீடு எரியவில்லை. அதற்கு மாறாக, நான் சற்றும் எதிர்பாராத ஒரு காட்சி அங்கே தென்பட்டது.
நான் குடியிருந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு சிறு காம்பவுண்டு உண்டு. அந்தக் காம்பவுண்டில் ஓரிடத்தில் இருபது முப்பது ஸோல்ஜர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். வாசல் கேட்டுக்கு அருகில் இரண்டு ஸோல்ஜர்கள் காவலுக்கு நின்றார்கள்.
மோட்டாரைச் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, வீட்டின் 'கேட்' அருகில் சென்றேன். காவல் ஸோல்ஜர்கள் வழி மறித்தார்கள். அது நான் குடியிருந்த வீடு என்றும், என் சாமான்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் சொன்னேன். நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. வீட்டுக்காரர்கள் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள் என்றும், என்னை உள்ளே விட முடியாது என்றும் சொன்னார்கள். அப்புறம் அங்கே எதற்காக ஸோல்ஜர்கள் நிற்கிறார்கள் என்று விசாரித்தேன். மத்தியானம் அங்கே ஒரு குண்டு விழுந்தது என்றும், அது பூமிக்குள்ளே வளை தோண்டிக் கொண்டு போய் புதைந்து கிடக்கிறதென்றும், அதை அபாயமில்லாமல் எடுத்து அப்புறப் படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும் அறிந்தேன். அவர்களுடன் விவகாரம் செய்வதில் பயனில்லை என்று திரும்பிப் போனேன்.
திரும்பி எங்கே போனேன். அது எனக்கே தெரியாது. கை போனபடி காரை விட்டுக் கொண்டு, ரங்கூன் நகரமெல்லாம் சுற்றினேன். அன்று ரங்கூன் நகரம் அளித்த கோரக் காட்சியை என் வாழ் நாள் உள்ள அளவும் என்னால் மறக்க முடியாது.
வீதிகளிலெல்லாம் செத்த பிணங்கள், சாகப் போகிற பிணங்கள், அங்கங்கே தீப்பற்றி எரியும் காட்சி, நெருப்பணைக்கும் இயந்திரங்கள் அங்குமிங்கும் பறந்து விழுந்து ஓடுதல், ஜனங்களின் புலம்பல், ஸ்திரீகளின் ஓலம், குழந்தைகளின் அலறல்.
இத்தகைய கோரக் காட்சியைப் பார்த்து விட்டு சூரியாஸ்தமனம் ஆகி நன்றாய் இருட்டிய பிறகு மறுபடியும் என்னுடைய வீட்டுக்கே திரும்பிச் சென்றேன். வாசற்புறத்தில் மோட்டாரை ஒரு மூலையில் நிறுத்தி விட்டு, காம்பவுண்டு சுவரின் பின்பக்கமாகச் சென்றேன். நான் குடியிருந்த வீட்டிலிருந்து என்னுடைய சொந்த சாமான்களை எடுத்து வருவதற்குத் திருடனைப் போல் சுவர் ஏறிக் குதித்து இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் சென்று வீட்டின் பின்புறத்தை அடைந்தேன். சத்தம் செய்யாமல் உள்ளே புகுந்து மாடிப்படி வழியாக மேலே ஏறினேன். சாதாரணமாக மாடி அறையை நான் பூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. அன்றைக்கும் கதவைப் பூட்டவில்லை. "நல்லதாய்ப் போயிற்று" என்று எண்ணிக் கொண்டு கதவைத் திறந்தேன்.
திறந்ததும் மாடி அறைக்குள்ளே நான் கண்ட காட்சி விழித்துக் கொண்டிருக்கிறேனா, கனவு காண்கிறேனா என்ற சந்தேகத்தை எனக்கு உண்டாக்கி விட்டது. வியப்பினாலும் திகைப்பினாலும் என் தலை 'கிறுகிறு' வென்று சுற்ற ஆரம்பித்தது.
அந்தக் காட்சி என்னவென்றால், அந்த மச்சு அறையின் பலகணியின் அருகில் ஓர் இளம்பெண் நின்று ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். காம்பவுண்டில் ஸோல்ஜர்கள் வைத்துக் கொண்டிருந்த டார்ச் லைட்டிலிருந்து வந்த மங்கிய வெளிச்சத்தில், அந்தப் பெண்ணின் முதுகுப் பக்கம் 'ஸில் ஹவுட்' படம் மாதிரி தெரிந்தது. அவள் யாராயிருக்கும்? ஜன சூன்யமான வீட்டில், இந்த நேரத்தில் தன்னந்தனியாக அவள் என்னுடைய அறையில் இருப்பது எப்படி?
மனத்தில் துணிச்சலை வருவித்துக் கொண்டு, "யார் அங்கே?" என்று கேட்டேன். வெளியிலிருந்த ஸோல்ஜர்களுக்குக் கேட்கக் கூடாதென்று மெல்லிய கள்ளக் குரலில் பேசினேன். அந்த இடத்தில் அந்த வேளையில் என்னுடைய குரல் எனக்கே பயங்கரத்தை அளித்தது என்றால், அந்தப் பெண் அப்படியே பேயடித்தவள் போல் துள்ளித் திரும்பி என்னைப் பீதி நிறைந்த கண்ணால் பார்த்ததில் வியப்பு இல்லை அல்லவா?
ஆனால் திரும்பிப் பார்த்த மறுகணத்தில் எங்கள் இருவருடைய பயமும் சந்தேகமும் நீங்கி, வியப்பு மட்டும் தான் பாக்கி நின்றது. என்னைப் பொருத்த வரையில் மனத்திற்குள்ளே ஒருவகையான ஆனந்த உணர்ச்சி உண்டாகவில்லையென்று சொல்ல முடியாது.
"நீயா?"
"நீங்களா?"
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்பாத்தி ஹோட்டலுக்குப் பக்கத்து வீட்டு வாசலில் சில சமயம் அந்தப் பெண்ணை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவளையும், தாய் நாட்டிலே எனக்கு மாலையிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த என் அத்தைப் பெண்ணையும் மனம் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. (நான் பர்மா நாட்டுக்கு வந்ததின் காரணங்களில் ஒன்று அத்தை மகளுடன் என் கலியாணத்தை ஒத்திப் போடுவதற்கு என்னும் இரகசியத்தை இந்த இடத்தில் சொல்லி வைக்கிறேன்). மற்றபடி வேறுவிதமான எண்ணம் அந்தப் பெண்ணைப் பற்றி என் மனத்தில் உண்டானதில்லை. ஏனெனில் அந்த வீட்டிலேயே குடியிருந்த ராவ்சாகிப் ஏ.வி. சுந்தர் என்பவர், ரங்கூனில் உள்ள தென்னிந்தியர்களுக்குள்ளே ஒரு பிரமுகர் என்றும் மாதம் இரண்டாயிரம் மூவாயிரம் வருமானம் உள்ளவரென்றும் எனக்குத் தெரியும். அப்பேர்ப்பட்டவருடைய புதல்வியைக் குறித்துக் கனவு காண்பதிலே என்ன பிரயோஜனம்?
அந்தப் பெண் இப்போது என் அறையில் இருட்டில் தன்னந்தனியாய் நிற்பதைக் கண்டதும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.
3. கிழக்கு ரங்கூன்
என் வியப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு "இங்கே எப்படி வந்தாய்? எப்போது வந்தாய்?" என்று கேட்டேன்.
"நீங்கள்?" என்று அவள் திருப்பிக் கேட்டதில் பல கேள்விகள் தொனித்தன.
சற்றுக் கோபத்துடன், "அப்படியா? உனக்கு அவசியம் தெரிய வேண்டுமா? இது என்னுடைய அறை! என் அறையிலிருந்து என் சாமான்களைத் திருடிக் கொண்டு போவதற்காக வந்தேன். கொல்லைப் புறச் சுவர் ஏறிக் குதித்து வந்தேன். வந்த வழியாகத்தான் திரும்பிப் போகப் போகிறேன்! உனக்கு இங்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாகத் தெரிகிறது. கவலைப்படாதே! இதோ போய் விடுகிறேன்" என்று சொல்லி, என் கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டேன்.
"ஐயோ! என்னையும் அழைத்துக் கொண்டு போங்கள். உங்களுக்குப் புண்ணியம் உண்டு!" என்று அவள் கூறிய போது, அவளுடைய நெஞ்சு 'பட் பட்' என்று அடித்துக் கொள்ளும் சத்தமே நான் கேட்கக் கூடியதாயிருந்தது.
அவளிடம் நான் உடனே இரக்கம் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் அவளைக் கெஞ்சப் பண்ண வேண்டுமென்ற அசட்டு எண்ணத்தினால், "அதெல்லாம் முடியாது. புண்ணியமும் ஆச்சு, பாவமும் ஆச்சு! எனக்கு வேறே வேலை இல்லையா?" என்றேன்.
உடனே அந்தப் பெண், "அப்படியா சமாசாரம் இதோ நான் 'திருடன், திருடன்' என்று கூச்சல் போடுகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே, ஜன்னல் பக்கம் போனாள். நான் அவசரமாய்ச் சென்று அவளைக் குறுக்கே மறித்து, "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய கரங்களைப் பற்றினேன். மேலே போகாமல் அவளைத் தடுப்பதற்காகவே அவ்விதம் செய்தேன். அவளோ திருப்பி என் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "என்னை அழைத்துக் கொண்டு போவதாகச் சத்தியம் செய்து கொடுங்கள்; இல்லாவிட்டால் கூச்சல் போடுவேன்" என்றாள்.
அவளுடைய கைகளைத் தொட்ட அதே நிமிஷத்தில் நான் என் சுதந்திரத்தை அடியோடு இழந்து அவளுக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும், அவளுடைய சுண்டு விரலால் ஏவிய காரியங்களை எல்லாம் சிரசினால் செய்யக் கூடிய நிலையில் இருந்தேன் என்பதையும், நல்ல வேளையாக அவள் அறிந்து கொள்ளவில்லை. நானும் அவளுக்கு அச்சமயம் தெரியப்படுத்த விரும்பவில்லை.
"ஆகட்டும் பயப்படாதே! உன் அப்பா, அம்மா?" என்று கேட்டேன்.
"அப்பா, அம்மாவா?" என்று அந்தப் பெண் பெருமூச்சு எறிந்தாள். மறுபடியும் "நல்ல அப்பா! நல்ல அம்மா!" என்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.
அழுகையும் ஆத்திரமுமாக அவள் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளிவந்தன.
அன்று மத்தியானம் அந்தப் பெண் ஸ்நான அறையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஸைரன்' ஊதிற்றாம். அவசர அவசரமாக அவள் குளித்து முடிப்பதற்குள் 'டுடும்' 'டுடும்' என்று காது செவிடுபடும் சத்தம் கேட்டதுடன், வீடே அதிர்ந்ததாம். அந்த அதிர்ச்சியில் அவள் தடாலென்று தரையில் விழுந்தாளாம்! தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி விட்டாளாம். மூர்ச்சை தெளிந்து எழுந்து, உடை உடுத்திக் கொண்டு ஸ்நான அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வீட்டிலே ஒருவரும் இல்லையாம்; கொஞ்ச தூரத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி தென்பட்டதாம். அவள் வீட்ட்டுக்கு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்து வீடுகளில் அப்பா அம்மாவைப் பற்றி விசாரிக்கலாமென்று ஓடி ஓடிப் பார்த்தாளாம். சில வீடுகளில் ஒருவருமில்லையாம். சில வீடுகளில் சாமான்களை அவசரமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்களாம். இவளை கவனிப்பாரோ, இவளுடைய கேள்விக்குப் பதில் சொல்வாரோ யாரும் இல்லையாம்! கடைசியில் இந்த வீடு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே வந்தாளாம். வீட்டில் ஒருவரும் இல்லாமலிருக்கவே, மச்சு அறையில் யாராவது இருக்கலாமென்று மேலே ஏறினாளாம். அவள் மச்சு அறையில் இருக்கும் போது ஸோல்ஜர்கள் வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டார்களாம். பிறகு வெளியே வர பயப்பட்டுக் கொண்டு மச்சு அறையிலேயே ஒளிந்து கொண்டிருந்தாளாம்.
இதையெல்லாம் கேட்டபின் "உன் அப்பா அம்மாவுக்குத் தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் இந்த ஊரில் பலர் இருப்பார்களே? அவர்களுடைய விலாசங்கள் ஏதாவது உனக்குத் தெரியுமா? ஒருவேளை எந்தச் சிநேகிதர் வீட்டுக்காவது போயிருக்கலாமல்லவா?" என்று விசாரித்தேன்.
"போயிருக்கலாம்" என்று சொல்லி, கிழக்கு ரங்கூனில் இரண்டு மூன்று வீடுகளையும் அவள் சொன்னாள்.
உடனே, ஒரு முடிவுக்கு வந்தேன். என் கைப் பெட்டியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு அவளை இன்னொரு கையினால் பிடித்துக் கொண்டு கிளம்பினேன். மச்சிலிருந்து கீழே இறங்கி, வீட்டின் கொல்லைப் புறமாகச் சென்று, காம்பவுண்டுச் சுவரின் மேல் முதலில் அவளை ஏற்றி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொடுத்தேன். பிறகு நான் ஏறிக் குதித்து அவளையும் இறக்கி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்க் காரில் வைத்தேன்.
டிரைவர் ஆசனத்தில் நான் உட்கார்ந்ததும், அவள் காரின் பின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டில் உட்கார்ந்தாள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. அரைப் படிப்புப் படித்து நாணம் மடம் முதலிய ஸ்திரீகளுக்குரிய குணங்களைத் துறந்த பெண் அவள் அல்ல என்பதற்கும் அது அறிகுறியாயிருந்தது.
அதிர்ஷ்டவசமாக, முதல் முதல் நான் காரைக் கொண்டு போய் நிறுத்திய வீட்டிலேயே அந்தப் பெண்ணின் அப்பா, அம்மா இருந்தார்கள். ராவ்சாகிப் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அவருடைய பெண் காரிலிருந்து இறங்கியதும், அவர் வரவேற்புக் கூறிய விதம் எனக்குத் திகைப்பை அளித்தது.
"வந்துவிட்டாயா, வஸந்தி! வா!" என்றார். உடனே வீட்டுக்கு உட்புறம் பார்த்து "அடியே! தவித்துக் கொண்டிருந்தாயே, இதோ வஸந்தி வந்து விட்டாள்" என்றார். ஓர் அம்மாள் உள்ளிருந்து வாசற்படியண்டை வந்து, "வந்து சேர்ந்தாயாடி, அம்மா. ஏதோ பகவான் இருக்கிறார்!" என்றார்.
அந்தப் பெண் வீட்டுக்குள்ளே போனதும் அவளுடைய அப்பாவும் உள்ளே போய்க் கதவைப் படீரென்று சாத்தினார்.
பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தவனுக்கு ஒரு வார்த்தை வந்தனம் கூடச் சொல்லவில்லை!
4. மாந்தலே
ரங்கூனிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் யாரை வேணுமானாலும் விசாரித்துப் பாருங்கள்.
"ரங்கூனுக்குச் சமானமான நகரம் உலகத்திலேயே உண்டா?" என்று தான் கேட்பார்கள்.
அப்படிக் குதூகலத்துக்கும் கோலாகலத்துக்கும் பெயர் போனதாயிருந்த ரங்கூன் நகரம், மேற்படி டிசம்பர் 23• சம்பவத்துக்குப் பிறகு, சில தினங்களில் அடைந்த நிலைமையை எண்ணிப் பார்த்தால், இப்போது கூட எனக்கு என்னமோ செய்கிறது.
கோலாகலம் குதூகலம் எல்லாம் போய்ச் சாவு விழுந்த வீட்டின் நிலைமையை ரங்கூன் அடைந்து விட்டது. ஜனங்கள் அதி விரைவாக நகரைக் காலி செய்து போய்க் கொண்டிருந்தார்கள். மனுஷ்யர்களை நம்பி உயிர் வாழ்ந்த நாய்கள், பூனைகள், காக்கைகள் முதலிய பிராணிகளும் பட்சிகளும் உணவு கிடைக்காமையால் எலும்புக் கூடுகளாகி தீனக் குரலில் ஊளையிட்டுக் கொண்டும் முனகிக் கொண்டும் அங்குமிங்கும் அலைந்த காட்சி பரிதாபகரமாயிருந்தது.
ரங்கூனில் வசித்த இந்தியர்கள் எத்தனையோ பேர் தென்னிந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். கப்பல்களில் இடத்துக்கு ஏற்பட்டிருந்த கிராக்கியைச் சொல்ல முடியாது. எனினும் நான் முயன்றிருந்தால் டிக்கெட் வாங்கிக் கொண்டு கிளம்பியிருக்கலாம். பல காரணங்களினால் நான் கிளம்பவில்லை. முக்கியமான காரணம், நான் வேலை பார்த்த கம்பெனியின் இங்கிலீஷ் மானேஜர் அடிக்கடி, 'இந்தியர் எல்லாரும் பயந்தவர்கள்!' 'அபாயம் வந்ததும் ஓடிப் போய் விடுவார்கள்!' என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். நான் ஒருவனாவது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியே தீர்வது என்று உறுதி கொண்டிருந்தேன்.
1942ஆம் வருஷம் பிறந்தது. ஜனவரி முடிந்து பிப்ரவரியில் பாதிக்கு மேல் ஆயிற்று. பர்மாவின் தென் முனையில் ஜப்பானியர் இறங்கி விட்டார்கள் என்றும் முன்னேறி வருகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. சிட்டாங் பாலத்துக்காக சண்டை தொடங்கிவிட்டதென்றும் தெரிகிறது.
என் மனமும் சலனமடைந்தது. எவ்வளவுதான் நான் தைரியமாயிருந்தாலும் என் விருப்பத்துக்கு விரோதமாக இந்தியாவுக்குப் போக வேண்டி நேரலாமென்று தோன்றிற்று. இந்த நிலைமையில் கையில் எவ்வளவு பணம் சேகரித்துக் கொள்ளலாமோ, அவ்வளவும் சேகரித்துக் கொள்ள விரும்பினேன்.
சில மாதங்களுக்கு முன்னாலிருந்து பர்மாவில் மோட்டார் வண்டிக்கு அளவில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. சைனாக்காரர்கள் வந்து பர்மாவில் மோட்டார் வாங்கிக் கொண்டிருந்தது தான் காரணம். பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நல்ல லாபம் கிடைத்தது. நான் மோட்டார் கம்பெனியில் வேலையிலிருந்தபடியால், என் சொந்த ஹோதாவில் அந்த வியாபாரம் கொஞ்சம் செய்து கொண்டிருந்தேன்.
கடைசியாக, ரங்கூனில் குண்டு விழுந்த போது நான் வாங்கி வைத்திருந்த வண்டி விற்பனையாகாமல் என்னிடமே இருந்தது. அதை எப்படியாவது பணம் ஆக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ரங்கூனில் அதை விற்பதற்கு வழியில்லையாகையால் மாந்தலேக்குக் கொண்டு போய் விற்று விட எண்ணினேன். எனவே, கம்பெனி மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, பிப்ரவரி 18ந் தேதி மோட்டாரை நானே ஓட்டிக் கொண்டு பிரயாணமானேன்.
பெகு வழியாகச் சுமார் 360 மைல் பிரயாணம் செய்து மறுநாள் 18• தேதி மத்தியானம் மாந்தலேயை அடைந்தேன். மாந்தலேயின் பிரசித்தி பெற்ற கோட்டைச் சமீபத்தில் வந்ததும், வண்டியை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று அபாயச் சங்கு ஒலித்தது. "இதென்ன கூத்து" என்று ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே, 'விர்' என்று சத்தம் வரவரப் பெரிதாகக் கேட்டது. விமானங்கள் என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில் பறந்து போயின. அடுத்த கணத்தில் 'டுடும்' 'டுடும்' என்ற பயங்கர வெடிச் சப்தங்கள் கேட்டன. சொல்ல முடியாத பீதியும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆவலும் என்னைப் பற்றிக் கொண்டன. காரிலேயே பாய்ந்து ஏறி, திக்குத் திசை பாராமல் அதிவேகமாக வண்டியை விட்டுக் கொண்டு சென்றேன். அந்தச் சமயத்தில் அந்தப் பாழும் மோட்டார் எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, டடடட டடடட என்று அடித்துக் கொண்டு நின்று போய் விட்டது. வண்டி நின்று போய் விட்ட இடத்துக்குப் பக்கத்திலே ஒரு தபால் ஆபீஸைப் பார்த்தேன். அதற்குள் புகுந்து கொள்ளலாமென்று ஓடினேன். உள்ளேயிருந்த பர்மியப் போஸ்டு மாஸ்டர் படாரென்று கதவைச் சாத்தித் தாளிட்டார். ஜன்னல் வழியாக அவரைத் திட்டினேன். அவர் பர்மியப் பாஷையில் திருப்பித் திட்டினார். வேறு வழியின்றிப் போஸ்டாபீஸ் வாசல் முகப்பிலேயே பீதியுடன் நின்று கொண்டிருந்தேன்.
அந்த பிப்ரவரி மாதம் 19• இந்த யுத்தத்திலேயே ஒரு விசேஷமான தினம் என்று பிற்பாடு எனக்குத் தெரிந்தது. இந்தியாவுக்கு வந்திருந்த சீனத் தலைவர் சியாங் - காய்ஷேக் திரும்பிச் சீனா போகையில், அன்று மாந்தலேயில் இறங்கினார். கோட்டையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவருக்கு விருந்து அளித்தார்கள். அதைத் தெரிந்து கொண்டுதான், ஜப்பான் விமானங்கள் அன்றைக்கு வந்து கோட்டையில் குண்டு போட்டன. ஆனால் அதிர்ஷ்டம் சீனாவின் பக்கம் இருந்தபடியால், ஜப்பான் விமானங்கள் ஒரு மணி நேரம் பிந்தி விட்டன!
இந்த விவரம் ஒன்றும் அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ள விரும்பவும் இல்லை. அப்போது ஒரே ஓர் எண்ணம், ஒரே ஓர் ஆசை, என் உள்ளம், உடம்பு எல்லாவற்றிலும் புகுந்து கவிந்து கொண்டிருந்தது! அது தாய் நாட்டுக்குச் சென்று, என் வயது முதிர்ந்த தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதுதான்.
அபாய நீக்கச் சங்கு ஊதியதும், வண்டியை ரிப்பேர் செய்து கிளம்பிக் கொண்டு எந்தச் சினேகிதர் மூலமாக வண்டியை விற்க நினைத்தேனோ, அவர் வீட்டை அடைந்தேன். வீட்டில் நண்பர் இல்லை. அவர் மனைவியிடம் வண்டியை ஒப்படைத்து, நண்பர் திரும்பி வந்ததும் கிடைத்த விலைக்கு விற்றுப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு, அன்று மாலை மாந்தலேயிலிருந்து ரங்கூனுக்குக் கிளம்பும் ரயிலில் கிளம்பினேன்.
சாதாரணமாக, மாலையில் மாந்தலேயில் கிளம்பும் ரயில், மறுநாள் காலையில் ரங்கூன் போய்ச் சேருவது வழக்கம். வழியிலே 'பின்மானா' என்னும் ரயில்வே ஸ்டேஷன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், அந்தத் தீயின் கோரமான வெளிச்சத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தனி மனிதராக நின்று கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாலும் எனக்கு மயிர்க் கூச்சல் உண்டாகிறது.
கடைசியாக 20• சாயங்காலம் ரயில் ரங்கூன் ஸ்டேஷனை அடைந்தது.
ஸ்டேஷனை ரயில் நெருங்கும்போதே, அங்கு ஏதோ அல்லோலகல்லோலமாயிருக்கிறதென்று தெரிந்து விட்டது. ரங்கூன் ஸ்டேஷனில் எத்தனை ரயில் பாதைகள் உண்டோ அவ்வளவு பாதைகளிலும் ரயில்கள் புறப்படத் தயாராய் நின்றன. எல்லா ரயில் என்ஜின்களும் மாந்தலேயே நோக்கியிருந்தன. ரயில்களில் கூட்டத்தைச் சொல்ல முடியாது. பிளாட்பாரத்திலோ இறங்குவதே அசாத்தியமாயிருந்தது.
எப்படியோ இறங்கியவுடன், எனக்குத் தெரிந்த ஆசாமி யாராவது உண்டா என்று பார்த்தேன், என் கம்பெனியைச் சேர்ந்த ராமபத்திர ஐயர் தென்பட்டார். அவரைப் பிடித்து 'இது என்ன கோலாகலம்?' என்றேன். அவர் சொன்னார்.
"ரங்கூனை, 'எவாகுவேட்' பண்ணும்படி சர்க்கார் உத்திரவு பிறந்து விட்டது! சிறைச்சாலைகளையும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளையும் திறந்து விட்டு விட்டார்கள். மிருகக் காட்சிச் சாலையில் துஷ்ட மிருகங்களைக் கொன்று விட்டார்கள். குரங்குகளை அவிழ்த்து விட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட சமயம் பார்த்து நீ திரும்பி வந்திருக்கிறாயே?"
என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!
5. பக்கோக்கூ
அன்றிரவே சென்று கப்பலுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்கும்படி உத்தியோகஸ்தரைச் சந்தித்தேன். அவர் "அப்பனே! டிக்கெட் என்னமோ வாங்கித் தருகிறேன். ஆனால், டிக்கெட் வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உனக்கு முன்னால் கப்பலுக்கு டிக்கெட் வாங்கிய எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்களே?" என்றார்.
பிறகு அவர், "நாளைக்கு நானே காரில் மாந்தலேக்குப் புறப்படுகிறேன். நாலு பேர் போகிறோம். நீயும் வந்தாயானால், உன்னையும் அழைத்துப் போகிறேன்" என்றார்.
என் பேரில் உள்ள கருணையால் அவர் அவ்விதம் சொல்லவில்லை. எனக்கு மோட்டார் விடவும் ரிப்பேர் செய்யவும் தெரியுமாதலால் வழியில் உபயோகப்படுவேன் என்று எண்ணித்தான் சொன்னார். தாம் மட்டும் மாந்தலேயில் தங்கப் போவதாகவும், மற்ற மூவரும் அங்கிருந்து 'கலாவா' மார்க்கமாக இந்தியாவுக்குப் புறப்படுவதாகவும் கூறினார். அவர்களுடன் நானும் சேர்ந்து போகலாம் என்ற எண்ணத்துடன் 'சரி' என்று சம்மதித்தேன்.
'பெகு' மார்க்கம் அபாயமாகி விட்டபடியால் 'புரோமி' வழியாகப் பிரயாணஞ் செய்தோம்! இந்தப் பிரயாணத்தால் நேர்ந்த எத்தனையோ அனுபவங்களைப் பற்றி நான் இங்கே விஸ்தரிக்கப் போவதில்லை. 21• ரங்கூனில் கிளம்பியவர்கள் 24• மாந்தலே போய்ச் சேர்ந்தோம் என்று மட்டும் குறிப்பிடுகிறேன்.
இவ்வளவு சிரமப்பட்டு மீண்டும் மாந்தலேயே அடைந்த பிறகு, அங்கே மற்றோர் ஏமாற்றம் எனக்குக் காத்துக் கொண்டிருந்தது.
மாந்தலேயிலிருந்து 'கலாவா' போகும் ரயிலுக்கு டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். மறுபடியும் எப்போது கொடுக்க ஆரம்பிப்பார்கள் என்று தெரியவில்லை.
டிக்கெட் கிடைக்காமற் போனதில் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும், துக்கத்தையும் சொல்லவே முடியாது. ஆனால், இப்போது நினைத்துக் கொண்டால் பகவானுடைய கருணை எப்படியெல்லாம் இயங்குகிறது என்று ஆச்சரியக் கடலில் மூழ்கிவிடுகிறேன்.
முன் தடவை மோட்டாரை ஒப்புவித்து விட்டு வந்த நண்பரைச் சந்தித்தேன். நல்லவேளையாக அவர் வண்டியை விற்றிருந்தார். ஆயிரத்து நூறு ரூபாயும் கொடுத்தார். இந்தப் பணத்தைக் கடவுளே கொடுத்ததாகப் பின்னால் நான் கருதும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அதே நண்பர்தான் இன்னொரு யோசனையும் சொன்னார். மாந்தலேயில் ரயிலுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், 'பக்கோக்கூ'வுக்குப் போய் அங்கிருந்து 'டம்மு' வரையில் போகும் மோட்டார் லாரிகளில் போகலாம் என்றார்.
'பக்கோக்கூ' என்னும் ஊர் மாந்தலேக்குக் கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஐராவதிக்கு அக்கரையில் இருக்கிறது. அங்கே போய்ச் சேர்ந்து விசாரித்தேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அங்கும் என்னைத் தொடர்ந்து வந்ததாகத் தோன்றியது. ஏனெனில், மறுநாள் காலையில் அங்கிருந்து நாலு லாரிகள் 'டம்மு'வுக்குக் கிளம்புவதாகவும், ஆனால் அவற்றில் ஒன்றிலும் கூட இடம் இல்லை என்றும் தெரிந்தது. லாரிகளின் சொந்தக்காரனான பஞ்சாபியிடம் நேரில் போய் எனக்கு மோட்டார் வேலை தெரியும் என்றும் வழியில் உபயோகமாயிருப்பேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். 'இடமில்லை' என்ற ஒரே பதில் தான் வந்தது.
அன்றிரவு நடுநிசிக்கு அதே பஞ்சாபிக்காரன் என்னைத் தேடிக் கொண்டு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான். எனக்கு மோட்டார் வண்டி நன்றாய் ஓட்டத் தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன். அவன் ஏற்படுத்தியிருந்த டிரைவர்களில் ஒருவன் வராமல் ஏமாற்றி விட்டபடியால் அவன் என்னைத் தேடி வந்தான் என்று தெரிந்தது.
"டம்மு வரையில் லாரி ஓட்டிக் கொண்டு போய் சேர்த்தால் 200 ரூபாய் தருகிறேன்" என்றான் அந்தப் பஞ்சாபி.
சற்று முன்னால் தான் அவனிடம் நான் மேற்படி பிரயாணத்துக்கு 200 ரூபாய் தருவதாகச் சொன்னேன். இப்போது அதே பிரயாணத்துக்கு அந்த ரூபாய் எனக்குக் கிடைப்பதாயிருந்தது. ஆனால், மோட்டார் லாரி ஓட்டுவதிலும் எனக்குக் கௌரவம் இருக்க வேண்டும் என்று எண்ணி, "எனக்கு உன் ரூபாய் வேண்டாம்; பிரயாணத்தின் போது எனக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தால் போதும்" என்றேன்.
மறுநாள் காலையில் லாரிகள் நின்ற இடம் போனேன். பிரமாண்டமான லாரிகள் நாலு நின்று கொண்டிருந்தன. ரொம்ப ரொம்ப அடிபட்டுப் பழசாய்ப் போன லாரிகள். அவற்றில் நான் ஓட்ட வேண்டிய வண்டியைச் சுற்றுமுற்றும் வந்து பார்த்தேன். இந்த லாரிப் பூதத்தைக் காட்டு மலைப் பாதையில் 300 மைல் ஓட்ட வேண்டும் என்று நினைத்த போது பகீர் என்றது.
பிறகு, லாரிகளில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தேன். வங்காளிகள், பஞ்சாபிகள், ஆந்திரர்கள், தமிழர்கள் முதலிய பல மாகாணத்தவர்களும் இருந்தார்கள். அப்படி நின்றவர்களுக்கு மத்தியில், சென்ற இரண்டு மாதமாக நான் கனவிலும் நனவிலும் தியானித்துக் கொண்டிருந்த பெண் தெய்வமும் நின்று கொண்டிருந்தது.
அவளுடைய பெற்றோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்புறம் வண்டி கிளம்புகிற வரையில் லாரியின் என்ஜினுக்குப் போட்டியாக என் நெஞ்சம் அடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னுடைய வண்டியில் ஏறுவார்களா, வேறு வண்டியில் ஏறுவார்களா என்று தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிதுடித்தது. ஒரு வேளை ராவ்சாகிப் என்னைத் தெரிந்து கொண்டால் வேண்டுமென்றே வேறு வண்டியில் ஏறினாலும் ஏறுவார் என்று, கூடிய வரையில் அவர்கள் பக்கம் பார்க்காமலே இருந்தேன். ஆயினும் இரண்டொரு தடவை பார்த்த போது அவளும் என்னைத் தெரிந்து கொண்டாள் என்றும் அவளுடைய நெஞ்சும் ஆவலினால் துடிதுடித்துக் கொண்டிருந்தது என்றும் அறிந்தேன்.
கடவுள் என் பக்கத்திலே இருக்கிறார் என்றும் விரைவிலேயே தெரிந்து விட்டது.
அவர்கள் என்னுடைய லாரியில் தான் ஏறினார்கள்!
வண்டிகள் கிளம்ப வேண்டிய சமயம் வந்ததும், நான் டிரைவர் பீடத்திலிருந்து இறங்கிச் சென்று, வண்டிக்குள்ளே பார்த்து, "எல்லோரும் ஏறியாயிற்றா?" என்றேன். பிறகு அந்த மனுஷரின் முகத்தை உற்றுப் பார்த்து, "குட்மார்னிங் ஸார்! சௌக்கியமா?" என்று கேட்டுவிட்டுச் சட்டென்று திரும்பிப் போய் என் பீடத்தில் உட்கார்ந்தேன். அப்போது வஸந்தியின் முகத்தில் நாணங்கலந்த புன்னகை மலர்ந்ததையும், கீழே நோக்கியபடி கடைக்கண் பாணம் ஒன்றை என்மீது எறிந்ததையும் சொல்லாமல் விட முடியவில்லை.
6. கங்கோ
பர்மா தேசப் படத்தைப் பார்த்தால் ரங்கூனிலிருந்து ஏறக்குறைய நேர் வடக்கே, பர்மாவின் நடுமத்தியில் ஐராவதி நதிக்கரையில் பக்கோக்கூ என்னும் ஊர் இருப்பதைக் காணலாம். பக்கோக்கூவிலிருந்து மீண்டும் ஏறக்குறைய நேர் வடக்கே 360 மைல் அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளின் வழியாகச் சென்றால் அஸ்ஸாமிலுள்ள மணிப்பூர் எல்லையை அடையலாம். வழியில் உள்ள முக்கியமான ஊர்கள் 'கங்கோ', 'கலன்மியோ', 'டம்மு' 'மீந்தா' என்பவை.
பக்கோக்கூவிலிருந்து நாங்கள் புறப்பட்ட பத்தாவது நாள் 210 மைல் பிரயாணம் செய்து கலன்மியோ என்னும் இடத்தை அடைந்தோம். சாதாரண சாலையில் எவ்வளவு மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் லாரி ஓட்டினாலும் பத்து மணி நேரத்தில் அவ்வளவு தூரம் போயிருக்கலாம். எங்களுக்குப் பத்து நாள் ஆயிற்று என்பதிலிருந்து நாங்கள் பிரயானம் செய்த பாதை எவ்வளவு லட்சணமாயிருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். உண்மையில் அதைப் பாதை என்றே சொல்வதற்கில்லை. காட்டிலும் மலையிலும் எங்கே இடம் கிடைத்ததோ அந்த வழியாகவெல்லாம் லாரியைச் செலுத்திக் கொண்டு போனோம். எங்களுக்கு முன்னால் போயிருந்த லாரிகளின் சுவடுதான் எங்களுக்குப் பாதையாயிற்று. முன்னால் போனவர்கள் ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டிக் கொஞ்சம் இடைவெளியும் உண்டு பண்ணியிருந்தார்கள். அது தான் பாதையென்று மரியாதைக்குச் சொல்லப்பட்டது. செங்குத்தான மேட்டிலும் கிடுகிடு பள்ளத்திலும் லாரி ஏறி இறங்கும் போதெல்லாம் உயிர் போய் விட்டுத் திரும்பி வருவது போலத் தோன்றும்.
இப்படியாகக் காட்டு மலைப் பாதையில் முட்டி மோதிக் கொண்டு, இடித்துப் புடைத்துக் கொண்டு, எலும்பெல்லாம் நொறுக்கும்படியாக அலைப்புண்டு, அடியுண்டு, உயிருக்கு மன்றாடிக் கொண்டு, பிரயாணம் செய்த பத்து தினங்கள் தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாட்கள் ஆயின. அவையே என் வாழ்க்கையின் ஆனந்தம் மிகுந்த நாட்களாகவும் ஆயின.
அந்த வண்டியில் வஸந்தியும் வருகிறாள் என்ற எண்ணமே, பிரயாணத்தின் அசௌகரியங்களையெல்லாம் மறக்கச் செய்யும்படியான அளவற்ற உற்சாகத்தை எனக்கு அளித்தது.
அந்தப் பத்து தினங்களிலும் எங்களுக்குள் ஓயாமல் சம்பாஷணை நடந்து கொண்டேயிருந்தது. எங்களுடைய கண்கள் அடிக்கடி பேசிக் கொண்டன. வாய் வார்த்தையினாலும் சில சமயம் நாங்கள் பேசிக் கொண்டோம்.
அந்தப் புதுமை உணர்ச்சியினாலும், இருதயக் கிளர்ச்சியினாலும் ஏற்பட்ட உற்சாகத்தில், நான் ஓர் எழுத்தாளனாகக் கூட ஆகிவிட்டேன் என்பதை இந்தக் கதையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அந்த அற்புத சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு இதுதான்:
பக்கோக்கூவிலிருந்து கிளம்பிய நாலாம் நாள் மலைப் பாதையில் அதலபாதாளமான ஒரு பள்ளத்தை நாங்கள் கடக்க வேண்டியிருந்தது. அந்தப் பள்ளத்தின் அடியில் கொஞ்சம் ஜலமும் போய்க் கொண்டிருந்தது. இதைத் தாண்டுவதற்கு தண்ணீரின் மேல் பெரிய பெரிய மரக்கட்டைகளை வெட்டிப் போட்டிருந்தார்கள். மேற்படி மரங்களின் மேலே எப்படியோ முதல் லாரி போய் விட்டது. இரண்டாவது லாரி வந்த போது ஒரு மரம் விலகிச் சக்கரம் அதில் மாட்டிக் கொண்டது. மேலே போகவும் முடியவில்லை; பின்னால் தள்ளவும் முடியவில்லை; எனவே எல்லா லாரிகளும் அங்கே வெகு நேரம் நிற்க வேண்டியதாயிற்று.
அச்சமயம் காட்டு மரங்களின் அடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான், எங்களுக்குள் ஒவ்வொரு வரும் தத்தம் கதையைச் சொல்ல வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. "எங்களுக்குள்" என்னும் போது அந்த நாலு மோட்டார் லாரிகளிலும் வந்த தமிழ் நாட்டார்களைத்தான் சொல்கிறேன். அப்படித் தமிழர்களாக நாங்கள் மொத்தம் 15 பேர் இருந்தோம். தினந்தோறும் சாப்பிடுவதற்காகவோ இளைப்பாறுவதற்காகவோ, இரவில் தூங்குவ்தற்காகவோ எங்கே தங்கினாலும், நாங்கள் ஓரிடத்தில் சேர்வது வழக்கமாயிருந்தது. எனக்கு உணவளிக்கும் பொறுப்பை லாரி சொந்தக்காரன் ஏற்றுக் கொண்டிருந்தபடியால், இது விஷயத்தில் மற்றவர்களை விட எனக்குக் கிடைத்த ரொட்டி, பிஸ்கோத்து முதலியவைகளை மற்றவர்களுடன் சில சமயம் நான் பகிர்ந்து கொண்டேன்.
பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று நான் தான் யோசனை கூறினேன். அவர்களும் கதை சொல்லிக் கொண்டிருக்கையில், நானும் வஸந்தியும் எங்களுடைய அந்தரங்க நினைவுகளையும் எதிர்கால கனவுகளையும் வார்த்தை தேவையில்லாத இருதய பாஷையில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருக்கலாமல்லவா?
என்னுடைய யோசனையை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு முதன் முதலில் சுயசரிதையைச் சொல்ல ஆரம்பித்தவர் ராவ்சாகிப் தான். அப்பப்பா! அந்த மனுஷர் பீற்றிக் கொண்ட பீற்றலையும், அடித்துக் கொண்ட பெருமையையும் சொல்லி முடியாது. அவ்வளவு சொத்துக்களை வாங்கினாராம்! அவ்வளவு ஸோபாக்களும் பீரோக்களும் அவர் வீட்டில் இருந்தனவாம். அவ்வளவு டின்னர் பார்ட்டிகள் கொடுத்திருக்கிறாராம். கவர்னருடன் அவ்வளவு தடவை கை குலுக்கியிருக்கிறாராம்.
என்ன பீற்றிக் கொண்டு என்ன? என்ன பெருமை அடித்துக் கொண்டு என்ன? ஆசாமி இப்போது பாப்பர்! அவருடைய அவ்வளவு சொத்துக்களும் பர்மாவிலேயே இருந்தபடியால், சர்வமும் கயா! பழைய கதையைச் சொல்லி விட்டு, வருங்காலத்தில் அவருடைய உத்தேசங்களையும் ஒருவாறு வெளியிட்டார். இந்தியாவுக்குப் போனதும், அவர் இன்ஷியூரன்ஸ் வேலையை மேற்கொள்ளப் போகிறாராம். அவருடைய பெண்ணை ஒரு பெரிய பணக்காரனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறாராம். சாதி வேற்றுமை கூட அவர் பார்க்கப் போவதில்லையாம்! எவனொருவன் கலியாணத்தன்று லட்ச ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்கிறானோ, அவனுக்குக் கொடுத்து விடுவாராம்!
இந்தப் பேராசை பிடித்த தற்பெருமைக்கார மனிதர், ஒரு வேளை எங்களுடன் வந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரை மனத்தில் வைத்துக் கொண்டு தான் மேற்கண்டபடி சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது.
ராவ்சாகிப்புக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் அப்போது நான் வெறுத்த மனுஷர் ஒருவர் உண்டு என்றால், அவர் இந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார் தான். உலகத்திலே பல விஷயங்களைப் பற்றியும் என்னுடைய கொள்கைகளையும் அபிப்ராயங்களையும் தெரிந்து கொள்வதில் இந்த மனுஷர் கொண்டிருந்த பெருந் தாகம் சமுத்திரத்துக்குச் சமமாக இருந்தது. இந்த தாகத்தைத் தணித்துக் கொள்ள அவர் சமயா சமயம் தெரியாமல், சந்தர்ப்பா சந்தர்ப்பம் பார்க்காமல், எனக்கு அளித்த தொந்தரவை நினைத்தால், அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்திருந்தும் கூட இன்னமும் என் கோபம் தணிந்தபாடில்லை.
நானும் வஸந்தியும் மரத்தடியில் தனியா உட்கார்ந்து இரண்டு நிமிஷம் அந்தரங்கமாகப் பேச நினைத்தோமானால், இந்த மனுஷருக்கு மூக்கிலே வியர்த்துவிடும்! எங்கள் இரண்டு பேருக்கும் நடுவிலே சம்பாஷிக்க வந்து உட்கார்ந்து கொண்டு, "ஏன் ஸார்! இன்ஷியூரன்ஸைப் பற்றி உங்களுடைய கொள்கை என்ன?" என்று கேட்டார்.
"இன்ஷியூரன்ஸ் என்பது மகா முட்டாள்தனம். இன்ஷியூரன்ஸ் செய்து கொள்கிறவர்களுக்கு ஈரேழு பிறவியிலும் நரகம் தான் கிடைக்கும்" என்று நான் சொன்னேன்.
"அதனால் தான் கேட்டேன்! இருக்கட்டும், பாரதியாரைப் பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன?" என்று கேட்டார்.
"கூடியவரையில் நல்ல அபிப்ராயம் தான்" என்றேன்.
"பாரதியார் தேசிய கவியா? மகா கவியா?" என்று வினவினார்.
"அவரைத் தான் கேட்க வேண்டும்!" என்றேன்.
"ரொம்ப சரி. காதல் மணத்தைப் பற்றி உங்கள் கொள்கை என்ன?" என்று கேட்டார் செட்டியார்.
காதல் மணம் ரொம்ப ரொம்ப அவசியமானது. அதைப் போல அவசியமானது ஒன்றுங் கிடையாது. காதல் மணத்துக்குத் தடை செய்கிறவர்களைப் போன்ற மகாபாவிகள் வேறு யாரும் இல்லை" என்றேன்.
"என் அபிப்ராயமும் அதுதான்" என்று சொல்லி விட்டு செட்டியார் எழுந்திருப்பதற்குள், ராவ்சாகிப்பும் வந்து தொலைந்து விட்டார்.
இந்த சி.த.ப.வுக்கும் பர்மாவில் இருந்த திரண்ட சொத்தெல்லாம் போய் விட்டது. அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யவில்லை. "இந்தியாவிலே எனக்கு வேண்டிய சொத்து இருக்கிறது" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவிலுள்ள சொத்தும் இவர் அங்கே போவதற்குள் தொலைந்து போய்விடக் கூடாதா என்று நான் வேண்டிக் கொண்டேன்.
நாங்கள் புறப்பட்டு எட்டு நாளைக்குள், எங்களில் பத்துப் பேர் தங்கள் வரலாற்றைச் சொல்லியாகி விட்டது. நானும், வேல்முருகதாஸரென்னும் சுமார் அறுபது வயதுள்ள கிழவருந்தான் பாக்கி. இந்த தாஸர் ரங்கூனில் ரொட்டிக் கடை வைத்திருந்தாராம். அதிகமாக வாய் திறந்து இவர் பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்பார்.
என்னுடைய கதை மிகவும் சோகமான கதையாதலால் என்னால் அதைச் சொல்ல முடியாதென்றும், எழுதி வேணுமானால் படிக்கிறேன் என்றும் சொன்னேன். அவ்விதமே கதையை எழுதி அதைக் 'கங்கோ' என்னும் ஊரில், அதே பெயருடைய சிற்றாற்றங்கரையில் நாங்கள் தங்கியிருந்தபோது படித்தேன். அளவில்லாத உணர்ச்சியும் வேகமும் வாய்ந்த நடையிலேதான் எழுதியிருந்தேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையே அந்த வரலாற்றைப் பொருத்தது என்ற உணர்ச்சியுடனே எழுதினேன். துரதிருஷ்டவசமாக அதைப் படித்துக் காட்டிய பிறகு, கிழித்துக் காங்கோ ஆற்றில் போட்டு விட்டேன். எனவே, நான் எழுதியிருந்ததன் சாராம்சத்தை மட்டும் இங்கே தருகிறேன்.
"தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் வேங்கைப்பட்டி ஜமீன் ரொம்பவும் பிரசித்தமானது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால், அந்த ஜமீனுக்குக் கடன் முண்டிப் போய் சர்க்கார் கோர்ட் ஆப் வார்ட்ஸில் எடுத்துக் கொண்டு விட்டார்கள். இதனால் மிக்க அவமானம் அடைந்த ஜமீன்தார் தம் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தேசாந்திரம் போய்விட்டார். அப்போது அவருக்கு எட்டு வயதுள்ள மகன் ஒருவன் இருந்தான். அந்த மகன் பெரியவனாகித் தகப்பனை அவன் மன்னித்து விட்டதாகவும் கோர்ட் ஆப் வார்ட்ஸிலிருந்து ஜமீன் திரும்பி வந்துவிட்டதாகவும் தெரிந்த பிறகுதான், தாம் மீண்டும் ஊருக்கு வரப் போவதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தது.
மகனுக்குப் பதினெட்டு வயதானதும், தகப்பனாரின் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் தெரிந்து கொண்டான். அவர் பர்மாவிலே ஜீவிய வந்தராக இருப்பதாகப் பராபரியாகக் கேள்விப்பட்டான். அவரை எப்படியாவது தேடி அழைத்து வருவதாக அம்மாவிடம் சொல்லி விட்டுப் பர்மாவுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்தான். அவன் கலாசாலையில் படித்த பையன். தன் தகப்பனார் காலத்து அவமானத்துக்குப் பிறகு, பிதிரார்ஜித ஜமீன் சொத்தைக் கொண்டு ஜீவனம் நடத்த அவன் விரும்பவில்லை. எனவே, பர்மாவுக்கு வந்த இடத்திலே ஒரு கைத் தொழில் கற்றுக் கொண்டு போய் இந்தியாவில் பெரியதொரு தொழில் நடத்த விரும்பினான். ஏற்கெனவே அவனுக்கு மோட்டார் ஓட்டத் தெரியுமாதலால், இரங்கூனில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்தான். அதே சமயத்தில் அவனுடைய தகப்பனாரையும் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. அந்த ஜமீன்தார் மகனுடைய பெயர் சிவகுமாரன், அந்த சிவகுமாரன் தான் நான்!"
இதை நான் படிக்கக் கேட்டு வந்தவர்கள் எல்லாரும் ஒரேயடியாக ஆச்சரியக் கடலில் மூழ்கித்தான் போனார்கள். ஆனால் இதுவரை வாய் திறவாத மௌனியாக இருந்து வந்த ரொட்டிக் கிடங்கு வேல்முருகதாஸருடைய நடத்தை தான் எனக்கு மிகுந்த வியப்பை அளித்து வந்தது. அவர் நான் கதையைப் படித்து வருகையிலேயே சில சமயம் விம்மியதுடன், கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டு வந்தார். நான் கதையை வாசித்து முடித்ததும், அவர் எழுந்து ஓடி வந்து, "என் மகனே!" என்று என்னைக் கட்டிக் கொண்டு தரையிலே விழுந்து மூர்ச்சையானார்.
7. டம்மு
நான் என் அருமைத் தந்தையைக் கண்டுபிடித்த, அதாவது என் அருமைத் தந்தை என்னைக் கண்டுபிடித்த - மேற்படி அற்புத சம்பவம், பக்கோக்கூவிலிருந்து நாங்கள் கிளம்பிய எட்டாவது நாள் நடந்தது.
அதற்கடுத்த எட்டாவது நாள் 'டம்மு' என்னும் ஊரில் எங்கள் லாரிப் பிரயாணம் முடிவடைந்தது.
இந்த எட்டு நாளும் என்னுடைய வாழ்க்கையில் சுப தினங்களாகும். இந்த தினங்களில் என் தந்தைக்கு நான் செய்த பணிவிடைக்கு ஈடாகச் சொல்வதற்குக் கதைகளிலும் காவியங்களிலும் கூட உதாரணம் இல்லையென்று சொல்ல வேண்டும்.
பல வருஷ காலத்தில் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் அந்த ஏழு நாளில் நான் செய்து விட்டேன். இந்தத் தினங்களில் வஸந்தியைக் கூட நான் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.
அவளுடைய மனோபாவத்திலும் அவளுடைய தந்தையின் மனோபாவத்திலும் ஏற்பட்ட மாறுதல்களை மட்டும் கவனித்து வந்தேன். அன்று முதல் ராவ்சாகிப்புக்கு என்னிடம் அபாரமான அபிமானமும் மரியாதையும் ஏற்பட்டு விட்டன. என் தந்தையிடம் நான் காட்டிய பக்தியை அவர் பெரிதும் பாராட்டினார். வஸந்தி முதலில் இரண்டு மூன்று நாள் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவளும் பழையபடி ஆகி வந்தாள்.
டம்முவில் சர்க்கார் 'எவாக்குவேஷன்' விடுதிகள் இரண்டு இருந்தன; ஒன்று இந்தியர்களுக்கு, மற்றொன்று வெள்ளைக்காரர்களுக்கு.
அது போலவே டம்முவிலிருந்து இந்தியா போவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று இந்தியர்களுக்கு, இன்னொன்று வெள்ளைக்காரர்களுக்கு.
கடவுள் வெள்ளைக்காரர்களையும் கறுப்பு மனிதர்களையும் தனித்தனி நிறத்தோடு படைத்ததுமல்லாமல், அவர்கள் பர்மாவிலிருந்து இந்தியா போவதற்குத் தனித்தனிப் பாதைகளையும் படைத்திருந்த அதிசயத்தை எண்ணி எண்ணி வியந்தேன்.
இரண்டு பாதைகளையும் பற்றிய விவரங்களைக் கேட்ட பிறகு, மேலெல்லாம் சுண்ணாம்பைப் பூசிக் கொண்டு நானும் வெள்ளைக்காரனாக மாறி விடலாமா என்று யோசித்தேன். ஆனால், அதற்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று பன்னிரண்டு வருஷப் பிரிவுக்குப் பிறகு கடவுளின் அற்புதத்தினால் எனக்குக் கிடைத்த என் தந்தை; இன்னொரு தடை வஸந்தி.
இவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் இந்தியப் பாதையிலேயே கிளம்பினேன்.
டம்முவிலிருந்து இந்தியாவுக்குக் கிளம்புகிறவர்களுக்கு, குடும்பஸ்தர்களாயிருந்தால் அரிசி, பருப்பும், என்னைப் போன்ற தனி ஆள்களாயிருந்தால், அவலும் வழியில் சாபாட்டுக்காகக் கொடுக்கும்படி, சர்க்காரிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப்படியே நாங்களும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
டம்முவிலிருந்து பதினெட்டு மைலிலுள்ள 'மீந்தா' வரையில் சமவெளிப் பாதையாகையால் சுலபமாகப் போய் விடலாம். அதற்குப் பிறகு, 56 மைல் மலைப் பாதையில் சென்று, மணிப்புரி சமஸ்தானத்து எல்லையிலுள்ள லம்டி பஜார் அடைய வேண்டும்.
இந்த வழியில் சாமான் தூக்கிக் கொண்டு போவதற்கு ஆளுக்குப் பத்து ரூபாய் கூலி என்று சர்க்கார் விகிதம் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், உண்மையில் இருபது ரூபாய்க்குக் கூடக் கூலி ஆள் கிடைப்பது துர்லபமாயிருந்தது. ராவ்சாகிப் சந்தாகூலி விகிதத்தில் பேரம் பேச முயன்றதினால், ஆள் கிடைப்பது இன்னும் கஷ்டமாய் போயிற்று.
கடைசியில், நாங்கள் டம்முவை அடைந்த மூன்றாம் நாள் காலை, தென்னிந்தியர்கள் சுமார் இருபத்தைந்து பேர் அடங்கிய கோஷ்டியார், ஜன்மதேசம் போவதற்காகக் கால்நடையாகக் கிளம்பினோம்.
ராவ்சாகிப் கையிலே ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டும், அவ்வப்போது அதைச் சுழற்றி வீசிக் கொண்டும், எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்த காட்சியை, இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பாக வருகிறது.
வழியில் சில இடங்களில் பர்மியர்கள் பிரயாணிகளை கொள்ளை அடிக்க வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருந்தபடியால், ராவ்சாகிப் அப்படிக் கையில் கத்தி எடுத்துக் கொண்டு வந்திருந்தார். 'கத்தியை வைத்துக் கொண்டு ஏன் எல்லோருக்கும் பின்னால் வருகிறீர்கள்?' என்று நான் கேட்டதற்கு, "அப்பனே! உனக்குத் தெரியாது, பர்மியர்கள் ஒருவேளை தாக்க வந்தால், பின்பக்கமாக வந்து தான் தாக்குவார்கள்" என்று ராவ்சாகிப் சாதுர்யமாகப் பதில் கூறினார்.
8. லம்டி பஜார்
டம்முவிலிருந்து கிளம்பிய ஏழாவது தினம் பர்மாவில் என்னுடைய கடைசியான கால்நடை யாத்திரை மணிப்பூர் சமஸ்தானத்தில் லம்டி பஜார் என்னும் இடத்தில் முடிவுற்றது.
டம்முவில் கிளம்பும் போது இருபத்தைந்து பேரில் ஒருவனாகக் கிளம்பிய நான், லம்டி பஜாருக்கு வந்து போது மூன்று பேரில் ஒருவனாக இருந்தேன்.
எங்கள் கோஷ்டியில் பலர் முன்னால் போய்விட்டார்கள். சிலர் பின்னாலும் தங்கி விட்டார்கள்.
நாங்கள் மூன்று பேர் மிஞ்சியவர்கள் யார் யார் என்றால், நானும் வஸந்தியும் சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாருந்தான். அந்த மனுஷர் எங்களை விட்டு நகர்வதில்லை என்று ஒரே பிடிவாதமாயிருந்தார்.
என்னுடைய தந்தை என்ன ஆனார் என்று கேட்கிறீர்களா? ஆஹா! டம்முவிலிருந்து கிளம்பிய முதல் நாளே அவர் என்னைக் கைவிட்டுப் போய்விட்டார்.
இந்தக் கடைசிப் பிரயாணம், அவருடைய வாழ்க்கையிலேயே கடைசிப் பிரயாணமாய் முடிந்து விட்டது.
மீந்தாவைத் தாண்டியபிறகு மேலே மேலே ஏற வேண்டியதாயிருந்த மலை வழியில், முதல் மலை ஏறியவுடனேயே, அவர் "அப்பா! குழந்தாய் எனக்கு என்னவோ செய்கிறதே!" என்றார். நான் உடனே உட்கார்ந்து, அவர் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டேன்.
"குழந்தாய்! நான் உனக்குச் செய்த துரோகத்தையெல்லாம் மன்னித்து விடுவாயா?" என்றார்.
"அப்பா! நீங்கள் நிம்மதியடையுங்கள். என் வாழ்க்கையிலேயே மிகவும் அபூர்வமான அனுபவத்தை அளித்தீர்கள். மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை" என்றேன்.
மோட்டார் என்ஜின் கெட்டுப் போய் நிற்கும் சமயத்தில் வண்டியைக் குலுக்கிப் போட்டு விட்டு நிற்பது போல், அவருடைய ஆவியும் மூன்று தடவை உடம்பை ஆட்டி விட்டுப் பிரிந்து சென்றது.
அழுது புலம்புவதற்கு எனக்கு நேரமில்லை; மனமும் இல்லை. ஆனாலும் தந்தையின் உடலைக் குழி தோண்டிப் புதைத்து விட்டுத்தான் வருவேன் என்று சொல்லி, மற்றவர்களை முன்னால் போகச் சொன்னேன்; நாங்கள் வந்த வழியில் ஏற்கனவே பாதை ஓரமாக அனாதைப் பிரேதங்கள் கிடந்த கண்றாவிக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வந்திருந்தேனாதலால், அந்த மாதிரி என் தந்தையை விட்டுப் போக முடியாது என்று பிடிவாதமாயிருந்தேன். செட்டியாரும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லிப் பின் தங்கினார்.
மலையிலே குழி தோண்டுவதென்றால் இலேசான காரியமா? எப்படியோ ஒரு பள்ளத்தைக் கண்டுபிடித்து மேலே தழையும் மண்ணும் போட்டு மூடிவிட்டு, எங்கள் பிரயாணத்தைத் தொடங்கினோம்.
சி.த.ப. கேட்டார்: "பிரேதஸம்ஸ்காரத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? புதைப்பது நல்ல வழக்கமா? தகனம் செய்வது நல்லதா?" என்று.
"உங்களுடைய விருப்பத்தைச் சொன்னால் அதன்படியே உங்களுக்கும் செய்துவிடுகிறேன்!" என்று பதில் சொன்னேன்.
"நல்ல பதில்!" என்று கூறிச் சிரித்தார்.
நாங்கள் வேகமாக நடந்து மற்றவர்களை அன்று சாயங்காலமே பிடித்து விட்டோம்.
ஆனால், மறுபடியும் நாங்கள் மூன்று பேராகப் பின் தங்கும்படி நேர்ந்த காரணம் என்ன? அதைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.
இரண்டாம் நாள் மத்தியானம் ஒரு செங்குத்தான மலை உச்சியில் நாங்கள் ஏறிக் கொண்டிருந்தபோது, வஸந்தி திடீரென்று, "ஐயோ! என்னமோ செய்கிறதே!" என்று சொல்லி விட்டு உட்கார்ந்தாள். அவள் உடம்பெல்லாம் வெடவெட வென்று நடுங்கியது.
தாயார் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்த்து, "ஐயோ! கொதிக்கிறதே" என்றாள்.
தகப்பனார் "அடி பாவி! சண்டாளி! கெடுத்தாயா காரியத்தை!" என்று திட்டத் தொடங்கினார்.
மனைவியைப் பார்த்து "இவளை வைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாருடனும் கப்பலில் ஏற்றி அனுப்பி விடலாம் என்று சொன்னேனே கேட்டாயா? இப்போது வாயிலே மண்ணைப் போடப் பார்க்கிறாளே?" என்று கத்தினார். அப்போது வஸந்தி நடுங்கிய குரலில் "அப்பா! நீங்கள் ஏன் மனத்தை வருத்தப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்னை இங்கேயே விட்டு விட்டு நீங்கள் போங்கள். நான் உங்கள் மகள் இல்லையென்று நினைத்துக் கொள்ளுங்கள்" என்றாள்.
"அடி சண்டாளி! உன்னை உயிரோடு எப்படி விட்டு விட்டுப் போகிறது? செத்துத் தொலைத்தாலும் நிம்மதியாகப் போகலாம்" என்றார் ராவ்சாகிப்.
என் காதில் இது எவ்வளவு நாராசமாக விழுந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சண்டை போட அது சமயமில்லையென்று எண்ணி, "ராவ்சாகிப்! ஒரு யோசனை சொல்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வயதானவர்கள். கூட்டத்தோடு நீங்களும் போய் விடுவதுதான் சரி. என்னிடம் உங்கள் பெண்ணை ஒப்புவித்து விட்டுப் போங்கள். உயிர் கெட்டியாயிருந்து பிழைத்தால் அழைத்து வருகிறேன். இல்லாவிட்டால், என் தந்தைக்குச் செய்ததை இவளுக்கும் செய்துவிட்டு வருகிறேன்" என்றேன்.
"அதெப்படி ஐயா, நியாயம்? அன்னிய மனுஷனாகிய உம்மிடம் எப்படி இந்த இளம் பெண்ணை ஒப்புவித்துவிட்டுப் போவது?" என்றார் ராவ்சாகிப்.
"ராவ்சாகிப்! நான் அன்னிய மனுஷன் அல்ல! வஸந்தியை நான் கலியாணம் செய்து கொள்வதாகத் தீர்மானித்து விட்டேன். அவளுக்கும் அது சம்மதம். உங்கள் முன்னிலையிலே, ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாக, இப்போதே இவளை நான் பாணிக்கிரகணம் செய்து கொள்கிறேன்" என்று கூறி வஸந்தியின் பக்கத்தில் உட்கார்ந்து, அவளை என் மடி மீது படுக்க வைத்தேன். ஜ்வரதாபத்தினால் தகித்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் விரல்களை என்னுடைய கை விரல்களுடன் கோத்துக் கொண்டேன்.
9. முடிவுரை
என்னையும் வஸந்தியையும் தவிர மற்றவர்கள் எல்லாம் வெகு தூரம் போன பிறகு, வஸந்தி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். "ஏன் கண்ணே! ஏன் அழுகிறாய்? நம்முடைய கலியாணம் உனக்குப் பிடிக்கவில்லையா?" என்றேன்.
வஸந்தி சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டுப் புன்னகை புரிந்தாள். கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.
"உங்களை மணந்து கொள்ளும் பாக்கியத்துக்கு இந்த ஜன்மத்தில் நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லை. பூர்வ ஜன்மத்திலே செய்திருக்க வேண்டும்" என்றாள்.
பிறகு, "உங்களுக்கு ஒரு பெரிய துரோகம் செய்து விட்டேன். என்னை மன்னிப்பீர்களா?" என்று கேட்டாள்.
"ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்!" என்றேன்.
"விளையாட்டு இல்லை. நிஜமாகவே உங்களை மோசம் செய்து விட்டேன். நான் ராவ்சாகிப் சுந்தரின் மகள் இல்லை. அவர் வீட்டுச் சமையற்காரியின் மகள். அம்மாவை அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் கப்பலில் அனுப்பி விட்டார்கள். மாமிக்குத் துணையாக என்னை மட்டும் வைத்துக் கொண்டார்கள்."
இது மாதிரி ஏதோ இருக்கும் என்று நானும் சந்தேகித்திருந்தேன். எனவே, சிறிதும் வியப்படையாதவனாய், "என் கண்ணே! அந்த மூர்க்கத் தற்பெருமைக்காரருடைய மகள் நீ இல்லை என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்" என்றேன்.
அப்போது எங்களுக்குப் பின்னாலிருந்து "மிஸ்டர் சிவகுமார்! நீங்களும் நிஜத்தைச் சொல்லி விடுவதுதானே!" என்று ஒரு குரல் கேட்டது. அது சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரின் குரல் தான். போனவர்களுடன் சேர்ந்து போவது போல் செட்டியார் ஜாடை காட்டிவிட்டு, எங்களுக்குத் தெரியாமல் திரும்பி வந்து மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தார். பழனி மலையில் வீற்றிருக்கும் பழனியாண்டவரே வந்தது போல், அச்சமயம் செட்டியார் வந்தார் என்று சொல்ல வேண்டும். அவர் தான் வஸந்தி உயிர் பிழைப்பதற்கும், நாங்கள் பத்திரமாய் இந்தியா போய்ச் சேருவதற்கும் காரணமாயிருந்தார்.
அல்லது அவருடைய காந்தி குல்லா காரணமாயிருந்தது என்றும் சொல்லலாம். தலையில் காந்தி குல்லாவுடன் அவர் அந்தமலைப் பிரதேசத்திலுள்ள பர்மிய கிராமம் ஒன்றுக்குச் சென்று மனிதர்களை ஒத்தாசைக்கு அழைத்து வந்தபடியால் தான் வஸந்தி பிழைத்தாள். ஆனால் இதெல்லாம் பின்னால் நடந்த சம்பவங்கள், அச்சமயம் செட்டியாரைப் பார்த்ததும் எனக்கு அசாத்தியமான கோபம் வந்தது.
"நீர் ஏன் போகவில்லை? இங்கே எதற்காக ஒளிந்து கொண்டு நிற்கிறீர்?" என்று நான் கேட்டதும், செட்டியார் சாவதானமாக, "உமது குட்டை உடைத்து விடத்தான்; நீர் ஜமீன்தார் மகன் இல்லை என்று வஸந்திக்குச் சொல்வதற்குத்தான்!" என்றார்.
அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவும் இருந்தது. எப்படியும் அந்த உண்மையை வஸந்தியிடம் சொல்லியாக வேண்டும் அல்லவா?
சிறிது வெட்கத்துடன் வஸந்தியின் முகத்தைப் பார்த்தேன். அவள் சொல்ல முடியாத ஆவலுடன் "செட்டியார் சொல்வது நிஜமா?" என்றாள்.
"நிஜந்தான் வஸந்தி? நான் ஜமீன்தார் மகன் இல்லை. ராவ்சாகிப் உன் தந்தை என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அவருடைய மதிப்பைப் பெறுவதற்காக அந்தக் கதையைக் கட்டினேன்" என்றேன்.
வஸந்தி பலஹீனமடைந்த தன் மெல்லிய கரங்களினால் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "ரொம்ப சந்தோஷம்! நீங்களே அந்தக் கதையைச் சொன்னவுடன் எனக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது" என்றாள்.
"ஏன்?" என்று கேட்டேன்.
"சமையற்காரி மகளுக்கும் ஜமீன்தார் மகனுக்கும் பொருந்துமா?" என்றாள் வஸந்தி.
அப்போது செட்டியார் குறுக்கிட்டு, "ஆமாம்; சிவகுமார்! கல்யாணச் சடங்கைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? தாலி கட்டுவது நல்லதா, மோதிரம் மாற்றிக் கொள்வது நல்லதா, மனம் ஒத்துப் போனாலே போதுமா?" என்று கேட்டார்.
"அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். நான் எழுதி வாசித்தது பொய்க் கதை என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டேன்.
"பேஷான கதை; அதைக் கேட்டவுடனே இந்தியா போனதும் உங்களை வைத்துக் கொண்டு ஒரு புத்தகப் பிரசுராலயம் நடத்துவது என்று தீர்மானித்து விட்டேன். அதிலும் அந்த வேல்முருகதாஸரைப் பத்து நாள் நீர் கட்டிக் கொண்டு அழுததை நினைத்தால், எனக்குச் சிரிப்பாய் வருகிறது. வேங்கைப்பட்டி ஜமீன்தார் ஆகிவிடலாமென்று நினைத்த அந்த மோசக்காரன் பேரில் கை நிறைய மண்ணை வாரிப் போட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!" என்றார்.
"செட்டியாரே உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?" என்று மறுபடியும் கேட்டேன்.
"எனக்கு ராமநாதபுரம் ஜில்லாதானே? வேங்கைப்பட்டி ஜமீன்தாரை எனக்குத் தெரியும்."
"அப்படியா?"
"ஆமாம்; பழைய ஜமீன்தாரையும் தெரியும்; புதிய ஜமீன்தாரையும் தெரியும். பத்து வருஷத்துக்கு முன்னால் கடன் முண்டிப் போய் ஏலம் போட்டதில் ஜமீன் கை மாறிற்று" என்றார்.
"ஓஹோ" என்றேன்.
"பழைய ஜமீன்தார் பெயர் ராஜாதி ராஜ வீர சேதுராமலிங்க முத்து ரத்தினத் தேவர்; அவர் காலமாகி விட்டார்!"
"இப்போதைய ஜமீன்தாரின் பெயர் என்ன?" என்று கேட்டேன்.
"சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார்" என்று பதில் வந்தது.
ஆஹா! வேங்கைப்பட்டி ஜமீன்தார் சி.த.ப. பழனி சுப்பாஞ் செட்டியார் நன்றாயிருக்கட்டும்! அவர் மகாராஜனாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் அன்று செய்த உதவியினாலே அல்லவோ, இன்று வசந்தியும் நானும் இந்த உலகத்திலேயே சொர்க்க இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!
---------------
28. மயிலைக் காளை
கிருஷ்ணக் கோனான் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னால் அதிலிருந்து பல தவறுகள் நேரிடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமல்லவா? இருபது வருஷத்திற்கு முன்னால் கிருஷ்ணன் இந்தப் பூமியில் பிறந்தான். அதன் பிறகு அவனுடைய அனுமதியைக் கேளாமலே வயது ஆகிக் கொண்டு வந்தது. இருபது பிராயம் நிரம்பும் காலம் சமீபித்தது.
நேற்று அவனுடைய மயிலைக்காளை கெட்டுப் போய் இன்று அதை அவன் தேடி அலையும்படி நேரிட்டதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? என்னுடைய அபிப்பிராயம், அவனுடைய பிராயந்தான் அதற்குக் காரணம் என்பது. ஒரு வேளை நீங்கள் வித்தியாசமாய் நினைக்கக்கூடும். அவன் மாட்டை கவனிக்க வேண்டிய நேரத்தில் பூங்கொடியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம் என்று சொல்லக்கூடும். உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் அவனுடைய பிராயந்தான் என்று நான் கருதுகிறேன்.
மாசி மாதம்; அறுவடை, போரடியெல்லாம் ஆகிவிட்டது. இந்நாட்களில் கிருஷ்ணன் மத்தியானம் சாப்பிட்ட பிறகு மாடுகளை ஓட்டிக் கொண்டு அவற்றை மேயவிடுவதற்காக போவது வழக்கம். சாதாரணமாய் அறுவடையான வயல்களிலே மாடுகள் மேயும், லயன்கரை மேஸ்திரி எவனும் வரமாட்டனென்று தோன்றுகிற சமயத்தில், கிருஷ்ணன், மாடுகளை இராஜன் வாய்க்காலுக்கு அப்பால் ஓட்டுவான். கொள்ளிடத்துக்கும் இராஜன் வாய்க்காலுக்கும் மத்தியிலுள்ள அடர்ந்த காட்டில் மாடுகள் மேயும், பொழுது சாய்வதற்குள் திரும்பி ஓட்டிக் கொண்டு வந்துவிடுவான். நன்றாக இருட்டுவதற்கு முன் வீட்டுக்கு வராவிட்டால் அவனுடைய தாயார் ரொம்பவும் கவலைப்படுவாள்.
நேற்று வழக்கம்போல் அவன் மாடுகளை வயல்களில் மேயவிட்டு இராஜன் வாய்க்காலின் கரையில் உட்கார்ந்திருந்தான். பூங்கொடியின் மேல் ஞாபகம் போயிற்று. அவளைப் பார்த்தே ஒரு மாதம் இருக்கும். நெருங்கிப் பேசி எத்தனையோ நாளாகி விட்டது. இப்போதெல்லாம் அவள் வெளியிலேயே வருவது இல்லை. பாவம் நோயாளி மாமனுக்குப் பணிவிடை செய்துகொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறாள்.
பெருமாள் கோனான் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி செத்தும் சாகாமலும் கிடப்பான்? அவன் செத்துப் போனால் அப்புறம் பூங்கொடியின் கதி என்ன? அவள் பிறகு அந்த வீட்டில் இருக்க முடியுமா? பெருமாள் கோனான் பெண்டாட்டி பெரிய பிசாசு அல்லவா? அவளிடம் பூங்கொடி என்ன பாடுபடுவாள்? இப்போது-மாமன் இருக்கும் போதே இந்தப் பாடுபடுத்துகிறாளே?
என்னவெல்லாமோ யோசித்த பின்னர் கடைசியாக அவன் மனம் கல்யாணத்தில் வந்து நின்றது. ஏழைப் பெண் தான்; மாமன் செத்துவிட்டால் நாதியற்றவளாகி விடுவாள்.
இக்காரணத்தினால் தன் தாயார் ஒரு வேளை தடை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தாயார் மறுத்துச் சொன்னால் கூடக் கேட்க முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று...
இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் மயிலைக் காளை இராஜன் வாய்க்காலில் இறங்கி அக்கரை போவதை அவன் கண்கள் பார்த்தன; மூளைக்குச் செய்தியும் அனுப்பின. ஆனால், அந்தச் சமயம் அவன் மூளை வேறு முக்கிய விஷயத்தில் ஈடுபட்டிருந்தபடியால் அச் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொரு சமயமாயிருந்தால் 'பொழுது போகிற சமயம்; இப்போது மயிலைக் காளையை அக்கரை போகவிடக்கூடாது; காட்டில் புகுந்துவிட்டால் தேடுவது கஷ்டம்' என்று சொல்லி உடனே ஓடிச்சென்று மறித்து ஓட்டியிருப்பான். 'த்தா! த்தா! ஏ மயிலை! என்று இரண்டு அதட்டல் போட்டால் கூட அநேகமாய் அது திரும்பியிருக்கும். இப்போதோ பார்த்துக் கொண்டே சும்மா இருந்துவிட்டான்.
கடைசியில், மயிலைக்காளை இல்லாமலே இரவு வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அதன் பலனாகத்தான் கிருஷ்ணன் இன்று ஊரெல்லாம் மாசிமகத்துக்காக ஓமாம்புலியூருக்குப் போயிருக்க, தான் மாத்திரம் காட்டிலே அலைந்து கொண்டிருக்க நேர்ந்தது.
அன்று காலையில் எழுந்ததும்; அவன் பச்சை மிளகாயும், உப்பும் கடித்துக் கொண்டு பழைய சோறு சாப்பிட்டுவிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் கிளம்பினான். கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்தால் வெகு அபூர்வமாயிருக்கும். நல்ல சங்கீதம் கேட்டுப் பண்பட்ட காதுகளையுடையோரை அவனுடைய வேணுகானம் துரத்தி துரத்தி அடிக்கும் வல்லமையுடையது. ஆனால், அவனுடைய மாடுகளை அழைப்பதற்கு அந்த அபூர்வ கானமே போதுமாயிருந்தது. [இதை உத்தேசிக்கும் போது தான், பழைய பிருந்தாவன கிருஷ்ணனுடைய வேணுகான மகிமையிலும் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டாகிறது.]
இராஜன் வாய்க்காலைக் கடந்து அப்பாலுள்ள காட்டில் புகுந்தான். காடு என்றதும் வானமளாவிய விருக்ஷங்களையும், புலிகளையும், கரடிகளையும் எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் கொள்ளிடக்கரைக் காட்டில் மூன்று ஆள் உயரத்துக்கு மேற்பட்ட மரம் ஒன்றுகூடக் கிடையாது. ஆனாலும் காடு காடுதான். முட்புதர்களும், மற்றச் செடி கொடிகளும் அடர்ந்து மனிதன் பிரவேசிப்பது அசாத்தியமாயிருக்கும். அபூர்வமாய் அங்குமிங்குமுள்ள ஒற்றையடிப்பாதை வழியாய் ஒருவன் உள் புகுந்துவிட்டால் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பது பிரம்மப்பிரயத்தனம் தான். பாம்புகள், கீரிகள், நரிகள் ஆகியவைதான் இந்தக் காட்டில் உள்ள துஷ்டப் பிராணிகள்.
இப்படிப்பட்ட காட்டில் கிருஷ்ணன் காலை நேரமெல்லாம் சுற்றி அலைந்தான். மத்தியானம் வரையில் தேடியும் பயனில்லை. கடைசியாக மாடு போனதுதான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். தண்ணீர் குடிப்பதற்காகக் கொள்ளிடத்தின் கரையோர மடுவில் இறங்கி முதலைக்கு இரையானாலும் ஆகியிருக்கலாம். அவனுடைய நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல் பாரமாயிருந்தது.
இவ்வளவும் பூங்கொடியினால் ஏற்பட்டது என்பதை நினைக்க அவனுக்கு அவள் மேல் கோபம் வந்தது. எதற்காக அவளைப் பற்றித் தான் நினைக்க வேண்டும்? இவ்வளவுக்கும் அவள் தன்னைப்பற்றி நினைப்பதாகவே தெரியவில்லை. என்ன தான் வீட்டிலே வேலையென்றாலும், மனத்திலே மட்டும் பிரியம் இருந்தால் இப்படி இருப்பாளா? அவள் வீட்டுப்பக்கம் தான் போகும்போது கூட வெளியில் வந்து தலைகாட்டுவதில்லை. சே! அப்படிப்பட்டவளிடம் தான் ஏன் மனத்தை செலுத்த வேண்டும்? அருமையான மயிலைக் காளை நஷ்டமானதுதான் லாபம்! ('ஓய் கிருஷ்ணக் கோனாரே! உம்முடைய மூளைக் குழப்பத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வீர் போலிருக்கிறது! நஷ்டம் எப்படி ஐயா லாபம் ஆகும்?')
இருக்கட்டும்; ஆயாளையாவது திருப்தி செய்யலாம் நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணாகப் பார்த்துக் கட்டிக் கொள்ளலாம். இந்த அநாதைப் பெண் யாருக்கு வேண்டும். இவளை நினைக்காமல் விட்டுவிட வேண்டியதுதான். தள்ளு!
2
சலசலவென்று சப்தம் கேட்டது. கிருஷ்ணன் சப்தம் வந்த இடத்தை நோக்கினான். யாருடைய நினைவை ஒழிக்க வேண்டுமென்று தீவிரமாகத் தீர்மானம் செய்து கொண்டிருந்தானோ அந்தப் பெண்ணின் உருவம் புதர்களை நீக்கிக் கொண்டு வெளிவந்தது. கிருஷ்ணனைப் பார்த்ததும், திருதிருவென்று விழித்தது.
கிருஷ்ணன் - வேகமாய் நடந்துகொண்டிருந்த கிருஷ்ணன் - நின்று விட்டான்.
இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் நின்றார்கள். பிறகு சமீபத்தில் வந்தார்கள்.
அவர்களுடைய சம்பாஷணை சாதாரணமாய் இத்தகைய சந்தர்ப்பங்களில் காதலர்களின் சம்பாஷணை எப்படியிருக்குமோ அப்படியில்லையென்பதை வெட்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொஞ்ச நேரம் சும்மா நின்றபின், கிருஷ்ணன், "நீ மகத்துக்குப் போகலையா?" என்று கேட்டான்.
"நீ போகலையா?"
"நான் தான் இங்கே இருக்கேனே; எப்படிப் போயிருப்பேன்?"
"நானுந்தான் இங்கே இருக்கேனே, எப்படிப் போயிருப்பேன்?"
"நீ என்ன, சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா?" என்று சிரித்துக் கொண்டே கிருஷ்ணன் கேட்டான்.
பூங்கொடி பெருமூச்செறிந்தாள். "கிளியாயிருந்தால் எவ்வளவோ நல்லாயிருக்குமே? ஒரு கஷ்டமுமில்லாமல் காட்டிலே சுகமாய் பறந்து திரிந்து கொண்டிருக்கலாமே?" என்றாள்.
கிருஷ்ணனுக்கு அவனையறியாமல் அசட்டுத்தனமாய்ப் பேச வந்தது. "நாம் இரண்டு பேரும் கிளியாய்ப் போய் விடலாம்" என்றான். பிறகு, ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், "ஆமாம்! பூங்கொடி! நீ ஏன் முன்னைப் போலெல்லாம் வெளியிலேயே வருவதில்லை? உன்னைக் காணவே முடிகிறதில்லையே?" என்று கேட்டான்.
"உனக்குத் தெரியாதா? சொல்ல வேணுமா? ஒரு வருஷமாய்த்தான் என்னுடைய மாமன் பக்க வாயு வந்து படுத்த படுக்கையாய்க் கிடக்காரே. மாமி ஒன்றும் அவரைச் சரியாய்க் கவனிக்கிறதில்லை. நான் தான் எப்போதும் அவர் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் அக்கம் பக்கம் போனால் கூட மாமன் கூப்பிட்டு விடுகிறார். எப்படி வெளியே வருகிறது?"
"நிஜந்தான். ஆனால் இரண்டொரு தடவை என்னைப் பார்த்தபோது கூடப் பாராதது போல போய் விட்டாயே! அது ஏன்?" என்றான் கிருஷ்ணன்.
வெட்கத்துடன் கூடிய புன்னகை அவள் முகத்தில் ஒரு கணம் தோன்றியது. "நாம் இன்னும் சின்னப்பிள்ளைகளா, என்ன? ஆண்பிள்ளைகளுடன் பேசக் கூடாதென்று மாமி ஒரு நாள் கண்டித்தாள். அவள் சொல்கிறது நியாயந்தானே? யாராவது ஏதாவது சொல்ல மாட்டார்களா?" என்றாள்.
இப்போது கிருஷ்ணன் உள்ளத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. இன்றைய தினம் பூங்கொடி எதற்காக இக் காட்டுக்கு வந்தாள்? - இந்தக் கேள்வி முன்னமே தனக்கு தோன்றாதது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. ஒருகணம், "ஒரு வேளை நம்மைப் பார்க்கத்தான் வந்திருப்பாளோ?" என்று எண்ணினான். அந்த எண்ணமே அவன் உடம்பை ஓர் அங்குலம் பூரிக்கச் செய்தது. உடனே அப்படி இருக்க முடியாதென்று தெரிந்தது. தான் காட்டில் மயிலைக் காளையைத் தேடுவது அவளுக்குத் தெரிந்திருக்க இடமில்லை. மேலும் தன்னைப் பார்த்ததும் அப்படித் திடுக்கிட்டு நின்றாளே? ஏதோ மர்மம் இருக்க வேண்டும்.
"ஆமாம், இன்று எதற்காக காட்டுக்கு வந்தாய்?" என்று கேட்டான்.
"அதைச் சொல்லக் கூடாது" என்று கூறி பூங்கொடி பக்கத்திலிருந்த புதரிலிருந்து இலைகளைக் கிள்ளிப் போடத் தொடங்கினாள்.
கிருஷ்ணனுடைய மனத்தில் இப்போது பயங்கரமான ஒரு சந்தேகம் உண்டாயிற்று. வேறு யாரேனும் ஓர் ஆண்பிள்ளையைச் சந்திப்பதற்காக ஒரு வேளை வந்திருப்பாளோ? கண்ணால் கண்டிராத - வாஸ்தவத்தில் இல்லாத - ஒரு மனிதனின் பேரில் கிருஷ்ணனுக்கு அளவிலாத அசூயை உண்டாயிற்று; சொல்ல முடியாத கோபம் வந்தது.
பூங்கொடி சற்று நேரம் தரையில் கால் கட்டை விரலால் கோடு கிழித்துக் கொண்ட முகத்துடன் கூறினாள்.
"நான் ஒன்று சொல்கிறேன். கேள்; நான் தப்புக் காரியம் எதுவும் செய்யவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன்; தப்பு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், நான் இன்று இந்தக் காட்டுக்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பாயா?"
"ஒருவரிடமும் நான் சொல்லவில்லை. ஆனால் எதற்காக வந்தாய் என்று என்னிடம் மட்டும் சொல்லிவிடு," என்றான் கிருஷ்ணன்.
"அதுவும் இப்போது சொல்லமுடியாது. சமயம் வரும் போது நானே சொல்கிறேன். அதுவரையில் நீ என்னைக் கேட்கக்கூடாது. இது ஒரு முக்கியமான காரியம். என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் தப்பான காரியம் செய்வேனென்று உனக்குத் தோன்றுகிறதா?"
இப்படிச் சற்று நேரம் வாக்குவாதம் நடந்தது. கடைசியில் பெண்மைதான் வெற்றி பெற்றது. "இதோ பார், பூங்கொடி! உன்னை நான் நம்புகிறேன். ஆனால், எனக்குத் துரோகம் செய்தாயென்று மட்டும் எப்போதாவது தெரிந்ததோ, அப்புறம் என்ன செய்வேனென்று தெரியாது" என்றான் கிருஷ்ணன்.
"துரோகமா? அப்படியென்றால் என்ன?" என்றாள், பூங்கொடி.
இருவரும் இராஜன் வாய்க்கால் வரையில் சேர்ந்து போனார்கள். அங்கே கிருஷ்ணன் பின் தங்கினான். பூங்கொடி போய்க் கொஞ்ச நேரத்துக்கு பிறகு வீடு சென்றான். வீட்டுக் கொல்லையிலே மயிலைக்காளை சாவதானமாய் அசை போட்டுக் கொண்டு நின்றது.
வேறு சமயமாயிருந்தால், கிருஷ்ணன் அதை நாலு அடி அடித்திருப்பான். மகத்துக்கு ஓமாம் புலியூர் போக முடியாமல் செய்துவிட்டதல்லவா? ஆனால், அச்சமயம் அவன் உள்ளம் மிகவும் குதூகலம் அடைந்திருந்தது. எனவே, மயிலைக் காளையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அதன் கன்னங்களை தடவிக் கொடுத்தான்.
3
பெருமாள் கோனாரை நேயர்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன். ஏனெனில், கதையில் அந்தக் கட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னால் அவர் காலமாகி விட்டார்.
அதற்காக வருத்தப்பட வேண்டாம். அவருக்குப் பதிலாக அவருடைய மனைவியைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த அம்மாளுடைய உண்மைப் பெயர் என்னமோ நமக்குத் தெரியாது. ஊரிலே எல்லாரும் பிடாரி என்று அவளை அழைத்தார்கள். அந்தப் பெயரே நமக்குப் போதுமானது.
பிடாரி, பெருமாள் கோனாருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாள். முதல் மனைவியிடம் கோனார் ரொம்ப ஆசை வைத்திருந்தார். அவளுக்குக் குழந்தை பிறக்காதது ஒன்று தான் கோனாருக்குக் குறையாயிருந்தது. அவள் இறந்த பிறகு, நம்முடைய சொத்துக்கு வாரிசு இல்லாமல் போகிறதே என்பதற்காக இன்னொரு தாரத்தை மணந்து கொண்டார். இரண்டாவது மனைவி அவருடைய விருப்பத்தை என்னவோ நிறைவேற்றி வைத்தாள். மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனாலும், இந்தப் பிடாரியை ஏன் கல்யாணம் செய்து கொண்டோ மென்று அவர் பலமுறை வருத்தப்பட்டதுண்டு. கோனார் இறந்ததும், பிடாரி தன் தலையிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் பெருமூச்சு விட்டாள். இனிமேல் வீடு வாசல் நில புலன் எல்லாவற்றிற்கும் தானே எஜமானி. ஐந்து வயதுப் பிள்ளை மேஜராகும் வரையில் தன் இஷ்டப்படி எல்லாம் நடக்கும். ஊரையே ஓர் ஆட்டு ஆட்டி வைக்கலாம்.
ஸ்ரீமதி பிடாரிதேவியிடம் நீங்கள் அனுதாபம் காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவள் கட்சியிலும் கொஞ்சம் நியாயம் உண்டென்பதைக் கவனிக்க வேண்டும். கோனார் ரொம்பக் கண்டிப்புக்காரர். அவரிருந்த வரையில் அவளுடைய பிடாரித் தனத்தின் முழுச் சக்தியையும் வெளிக் காட்ட முடியாமலிருந்தது. அதிலும் அவர் நோயாய்க் கிடந்த காலத்தில் படுத்தி வைத்த பாடு சொல்லத் தரமல்ல. பூங்கொடி தான் அவர் பக்கத்தில் இருக்கலாம். வேறு யாராவது பக்கத்தில் போனாலும் 'வள்வள்' என்று விழுகிறது. இதனால் இந்தப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு கர்வம்! அந்தக் கொட்டத்தையெல்லாம் இப்போது பார்க்கலாம்.
கோனார் காலஞ்சென்று நான்கு நாள் ஆயிற்று. வர வேண்டிய உறவு முறையினர் எல்லாரும் வந்து போய் விட்டார்கள். பிடாரி அம்மாள், வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் வாசல் கதவைத் தாழிட்டு விட்டு வந்தாள். கூடத்தின் மத்தியிலிருந்த களஞ்சியத்தண்டை சென்றாள். அதன் ஓர் ஓரத்தில் பெயர்த்திருந்த இரண்டு கல்லைப் பிடுங்கி அகற்றினாள். அவ்வாறு ஏற்பட்ட துவாரத்தில் கையை விட்டாள். அச்சமயம் அவளுடைய முகத்தைப் பார்த்தவர்களுக்கு ஆட்டுப் பட்டிக்குள் நுழையும் நரியின் முகம் ஞாபகத்துக்கு வந்திருக்கக் கூடும்.
ஆனால், அடுத்த நிமிஷம் அந்த முகத்திலேயே ஏமாற்றமும் திகிலும் கலந்து காணப்பட்டன. மறுபடியும் மறுபடியும் கையை விட்டுத் துழாவினாள். கந்தல் துணி ஒன்றுதான் அகப்பட்டது.
அந்தப் பணம் எங்கே போயிருக்கும்?
பத்து நாளைக்கு முன் நரசிம்மலு நாயக்கர் வந்திருந்தார். கோனார் பெட்டியிலிருந்து அவருடைய பிராமிஸர் நோட்டை எடுத்து வரும்படி சொல்லவே, பிடாரி கொண்டு போய்க் கொடுத்தாள். நாயக்கர் அதை வாங்கிக் கொண்டு ரூ.150 நோட்டுகளாக எண்ணி வைத்தார். கோனார் அதை வாங்கி ஒரு கடுதாசியில் சுற்றித் தலையணைக்குள் செருகி வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பிடாரி அவரிடம் வந்து, "பணத்தைப் பெட்டியில் வைக்கட்டுமா?" என்று கேட்டபோது "சீ! போ! உன் காரியத்தைப் பார்!" என்று எரிந்து விழுந்தார்.
அன்றிரவு பிடாரி சமையலறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்தாள். தூங்குவது போல் பாசாங்கு செய்தாலேயொழிய கண் கொட்டவேயில்லை. இரவு ஜாமத்துக்குக் கோனார் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் தூங்குகிறார்களா என்று பார்த்துவிடுத் தலையணைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டார். பிறகு மெள்ள மெள்ள நகர்ந்து சென்று களஞ்சியத்தை அடைந்தார். அந்தக் கல்லுகளைப் பெயர்த்தெடுத்த பின்னர் உள்ளே கையை விட்டு ஒரு சின்னஞ்சிரு தகரப் பெட்டியை எடுத்தார். அதற்குள் நோட்டுகளை வைத்த பிறகு மறுபடியும் முன்போல் அதைத் துவாரத்துக்குள் வைத்து மூடி விட்டுத் திரும்பப் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார்.
இவ்வாறு கோனார் ரொக்கம் வைத்திருந்த இடத்தைப் பிடாரி கண்டு கொண்டாள். கோனார் இருக்கும் வரை அதை எடுப்பதற்கு வழியில்லை. சீக்காளி மனிதன்; களஞ்சியத்துக்கு எதிரிலேயே படுத்திருந்தார். நன்றாய்த் தூங்குவதும் கிடையாது. ஆனாலும் பணம் எங்கே போய் விடப் போகிறதென்று பிடாரி தைரியமாயிருந்தாள். அவர் இறந்த பிறகு பிடாரி விட்டை விட்டு நகரவில்லையாதலால் யாரும் எடுத்திருக்க முடியாது. பின் எப்படி அந்தப் பெட்டி மாயமாய்ப் போயிருக்கும்?
வீட்டிலுள்ள சந்துபொந்து எல்லாவற்றையும் பிடாரி சோதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படவில்லை. போனது போனதுதான்.
சட்டென்று பூங்கொடியின் மேல் அவளது சந்தேகம் வந்து நின்றது. 'அவள் தான் எடுத்திருக்க வேண்டும். திருடி; சாகஸக்காரி. அவளை ஒரு கை பார்க்கிறேன்' என்று பிடாரி மனதுக்குள் எண்ணினாள்.
மறுநாள் பூங்கொடியைக் கூப்பிட்டு, "இதோ பார்! நிஜத்தைச் சொன்னாயானால் பேசாமல் விட்டு விடுகிறேன். நீ ஏதாவது பணம் எடுத்தாயா?" என்று கேட்டாள். பூங்கொடி அதற்கு, "நான் ஒருத்தர் பணத்தையும் எடுக்கவில்லை. பிறத்தியார் பணம் எனக்கு எதற்கு?" என்றாள். எவ்வளவோ நயத்திலும் பயத்திலும் கேட்டும் வேறு பதில் அவளிடமிருந்து வரவில்லை.
கோனாருக்குப் பதினாறாம் நாள் சடங்கு முடிந்தது. அதற்கு மறுதினம் பிடாரி பூங்கொடியைக் கூப்பிட்டு, "அடியே, இங்கே பார்! நீதான் பணத்தை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரும் திருடன் வந்து விடவில்லை. பணத்தைக் கொடுத்தாயோ இந்த வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறிவிடு!" என்றாள்.
"அப்படியே ஆகட்டும். நீ இப்படிச் சொல்ல வேண்டுமென்றுதான் காத்துக் கொண்டிருந்தேன். என் மாமன் இருந்த வீட்டில் அவர் இல்லாமல் கொஞ்ச நேரமும் இருக்கச் சகிக்கவில்லை. இப்பொழுதே போய் விடுகிறேன்" என்றாள் பூங்கொடி.
4
அன்று காட்டில் பூங்கொடியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து கிருஷ்ணக் கோனாருடைய மனம் ரொம்பக் குழம்பியிருந்தது. காரியமெல்லாம் தாறுமாறாகச் செய்து வந்தான். பிண்ணாக்கைக் கொண்டு போய்த் தொட்டியில் போடுவதற்குப் பதிலாகக் கிணற்றில் போட்டான். எருமைக் கன்றுக் குட்டியை பசுமாட்டில் ஊட்டவிட்டான். கறவை மாட்டுக்கு வைக்க வேண்டிய பருத்திக் கொட்டையைக் கடாமாட்டுக்கு வைத்தான்.
தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கினான்.
"நாம் இரண்டு பேரும் கிளியாய் பறந்து போய்விடுவோமா?" என்று இறைந்து சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரிப்பான். "எனக்கு மட்டும் துரோகம் செய்தாயோ?" என்று கூறிப் பல்லை நறநறவென்று கடிப்பான். அன்று இராஜன் வாய்க்கால் கரையில் பூங்கொடியைப் பிரிந்த சமயத்தில் ஒரு கையினால் அவளுடைய மோவாய்க்கட்டையை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு தன்னுடைய முகத்தை அருகில் கொண்டு போனதும், அவள், "சீச்சீ! நாம் இன்னும் சின்னப் பிள்ளைகளா?" என்று உதறிக் கொண்டு ஓடிப்போனதும் எப்போதும் அவன் மனக்கண்முன் நின்றது. சில சமயம் அவளுடைய உருவம் அதே நிலையில் எதிரில் நிற்பதுபோல் தோன்றும். அப்போது அவனுடைய கைகளும் முகமும் கோரணிகள் செய்யும் "தெரியுமா? என்னை மறக்கக்கூடாது!" என்பான்.
இவற்றையெல்லாம் கவனித்த அவனுடைய தாயார் "ஐயோ! என் மகனுக்கு மோகினி பிடித்து விட்டதே!" என்று தவித்தாள். அவளுடைய உறவு முறையாருக்குள் கலியாணத்துக்குத் தகுதியாயிருந்த பெண்களைப்பற்றியெல்லாம் விசாரிக்கத் தொடங்கினாள்.
இலையிலே சோற்றை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் மகன் என்னவோ யோசனை செய்து கொண்டிருப்பதைக் காணும்போது, "அடே அப்பா! உனக்கென்னடா இப்படி வந்தது?" என்பாள். கிருஷ்ணன், "சீ! போ! உன்னை யார் கேட்டது?" என்று வள்ளென்று விழுவான். "ஐயோ! என் மகன் இப்படி ஒரு நாளும் இருந்ததில்லையே, மாரியாத்தா என் மகனைக் காப்பாற்றடி! உனக்குப் படையல் வைக்கிறேன்," என்று வேண்டிக் கொள்வாள்.
பெருமாள் கோனார் செத்துப் போனதிலிருந்து கிருஷ்ணனுடைய மனக்குழப்பம் இன்னும் அதிகமாயிற்று. பூங்கொடி தாய் தந்தையற்ற அநாதையென்பதும் அவளுக்கு மாமன் வீட்டைத் தவிர வேறு போக்கிடம் கிடையாதென்பது ஊரில் எல்லாருக்கும் தெரியும். பெருமாள் கோனார் உயிரோடிருக்கும் வரை அபிமானமாய் வைத்துக் கொண்டிருந்தார். இனிமேல் அவளை யார் கவனிப்பார்கள்? பிடாரி அவளை வதைத்து விடுவாளே?
ஒரு நாள் கிருஷ்ணன் தாயாரிடம் "ஏன், ஆயா பெருமாள் கோனார் செத்துப் போனாரே? இனி மேல் அந்தப் பெண் என்ன செய்யும்?" என்று கேட்டான்.
"எந்தப் பெண்ணடா?"
"அதுதானம்மா, பூங்கொடி!"
"அவளை அந்தப் பிடாரி துரத்தி விடுவாள் சீக்கிரம். இப்போதே திருட்டுப்பட்டம் கட்டி விட்டாளே, தெரியாதா உனக்கு?"
"அது என்ன, அம்மா?" என்று கிருஷ்ணன் பரபரப்புடன் கேட்டான்.
"கோனார் ரொக்கப் பணம் வைத்திருந்தாராம். அதைக் காணுமாம். பிடாரி அந்த அநாதைப் பெண் மேலே பழியைப் போடுகிறாள். அவள் தான் எடுத்து விட்டாள் என்கிறாள். அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கவே செய்திருக்காது. ஏதாவது பழிவைத்துத்தானே வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்?"
கிருஷ்ணனுடைய நெஞ்சில் முள் தைத்தது போல் சுருக்கென்றது. அன்றைய தினம் காட்டிற்கு அவள் தனியாக வந்திருந்ததும், தன்னைக் கண்டு திகைத்து நின்றதும், எதற்காக வந்தாய் என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மூடு மந்திரம் செய்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உண்மையில் அந்தப் பெண் திருடிதானோ? இந்த எண்ணம் அவனுடைய நெஞ்சில் அளவிலாத வேதனையை உண்டாக்கிற்று.
எவ்வளவுதான் யோசித்தாலும், அவன் ஒரு முடிவுக்கே வர வேண்டியிருந்தது. பிடாரி சொல்வது நிஜந்தான். பூங்கொடி தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்! அதை எங்கேயோ ஒளிப்பதற்குத்தான் அன்று காட்டிற்கு வந்திருக்கிறாள். இந்தச் சந்தேகம் தோன்றவே, அன்றைய தினத்திலிருந்து கிருஷ்ணன் மாடுகளை ஓட்டிக் கொண்டு காட்டிற்குப் போன போதெல்லாம் சுற்று முற்றும் பார்த்த வண்ணம் இருந்தான். பூங்கொடி பணம் ஒளித்து வைத்திருக்குமிடம் தன் கண்ணில் ஒரு வேளை பட்டுவிடுமோ என்று அவனுடைய நெஞ்சில் திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது.
5
பெருமாள் கோனாரின் கருமாதிக்கு மறுநாள் காலை கிருஷ்ணன் பழையசோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அடுத்த வீட்டுக்காரி, "அமிர்தம்! சங்கதி கேட்டாயா?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.
"என்ன சமாசாரம்?" என்று அமிர்தம் கேட்டாள்.
"பிடாரி, பூங்கொடியை வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள். அந்தப் பெண் அழுதுகொண்டே கிளம்பிப் போகிறது."
"ஐயோ பாவம்! அது எங்கே போகும்?" என்றாள் அமிர்தம்.
"அது என்ன கர்மமோ? போக்கிடம் ஏது அதற்கு? எங்கேயாவது ஆத்திலே குளத்திலே விழுந்து செத்து வைத்தாலும் வைக்கும்..."
கிருஷ்ணன் அதற்குமேல் கேட்கவில்லை. சட்டென்று எழுந்திருந்து கையலம்பிவிட்டு வாசலில் வந்து பார்த்தான். பூங்கொடி தெருவைத் தாண்டி அப்பாலுள்ள பாதையில் போவதைக் கண்டான். இவன் குறுக்கு வழியாக வயல்களில் விழுந்து சென்று அந்தப் பாதையில் அவளுக்கு முன்னால் சென்று ஏறினான்.
பூங்கொடியின் எதிரில் சென்று வழிமறித்து நின்று கொண்டு, "எங்கே போறே?" என்று கேட்டான்.
"நான் எங்கே போனால் யாருக்கென்ன?" என்று பூங்கொடி சொல்லிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"சொல்லாது போனால் நான் விடமாட்டேன்," என்றான் கிருஷ்ணன்.
"சீர்காழிக்குப் போறேன்; அங்கே மில்லிலே வேலை செய்து பிழைக்கலாமென்று"
"ஏன் இத்தனை நாள் இருந்த ஊரை விட்டுப் போக வேணும்?"
"போகாதே பின்னே எங்கேயிருக்கிறது? மாமி வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள்."
"ஏன் அப்படிச் சொன்னாள்? அவளுக்கு உன் மேலே என்ன கோபம்?"
பூங்கொடி சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு, "உனக்கென்ன அதைப்பற்றி? எனக்கும் அந்த வீட்டிலே இருக்கப் பிடிக்கலை; நான் போகிறேன்," என்றாள்.
"நான் சொல்கிறேன் கேள் பூங்கொடி! அந்த நாயின் பணம் உனக்கு வேண்டாம். ஒருத்தருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து அந்த வீட்டிலேயே எறிந்துவிடு...நாம்"
"நீ கூட என்னைத் திருடி என்று தானே நினைக்கிறாய்? நான் எதற்காக உயிரோடு இருக்கவேணும்? விடு நான் போகிறேன்" என்று சொல்லிப் பூங்கொடி அழத் தொடங்கினாள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் சும்மா இருந்தான். பிறகு, "சரி, வா! போகலாம்!" என்றான்.
"எங்கே?"
"வீட்டுக்கு."
"எந்த வீட்டுக்கு?"
"எந்த வீட்டுக்கா? என் வீட்டுக்குத்தான். சீர்காழிக்கு நீ போகவும் வேண்டாம்; மில்லில் வேலை செய்யவும் வேண்டாம். நானிருக்கிற வரையில் அது நடக்காது."
"உன் வீட்டுக்கு வந்தால்...அப்புறம்?"
"புரோகிதரைக் கூப்பிட்டுக் கல்யாணத்துக்கு நாள் வைக்கச் சொல்றது!"
"திருடியைக் கட்டிக் கொண்டாய் என்று ஊரிலே சொல்ல மாட்டார்களா? உனக்கு வெட்கமாயிராதா?"
"யாராவது உன்னை அப்படிச் சொன்னால் அவர்கள் நாக்கை அறுத்துவிடுவேன். அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது."
"உன் ஆயா சம்மதிப்பாளா? அங்கே போய் மறுபடியும் வீட்டை விட்டுப் போகச் சொன்னால்?"
"ஆயா அப்படிச் சொன்னால் உன்னோடு நானும் வீட்டை விட்டுக் கிளம்பி வந்துவிடுகிறேன். அப்பொழுது இரண்டு பேருமாய்ப் போவோம்."
"சத்தியமாய்ச் சொன்னால் தான் வருவேன்."
"சத்தியமாய்ச் சொல்றேன். வா, போகலாம்!"
6
சுபதின, சுபலக்னத்தில் கிருஷ்ணக் கோனானுக்கும் பூங்கொடிக்கும் விவாக மகோற்சவம் நடந்தேறியது. ஸ்ரீமதி பிடாரி அம்மாளைத் தவிர மற்றபடி ஊராரெல்லாம் விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்தார்கள். இவ்வளவு நல்ல பெண்ணின் பேரில் திருட்டுப் பழியைச் சுமத்தி வீட்டை விட்டுத் துரத்திய பிடாரியைத் தூற்றாதவர்கள் இல்லை. அவ்வாறே கிருஷ்ணனைப் புகழ்ந்து போற்றாதவர்களும் அந்த ஊரில் கிடையாது. எல்லாரிலும் அதிக குதூகலத்துடன் விளங்கியவள் கிருஷ்ணனுடைய தாயார் அமிர்தம்தான். தனக்குப் பேச்சுத் துணைக்கும், ஏவின வேலை செய்வதற்கும் மருமகள் ஆச்சு; பிள்ளைக்கும் புத்தி தெளிந்து முன்னைப் போல் நன்றாயிருப்பான்.
கலியாணச் சந்தடி அடங்கிய அடியோடு ஒரு நாள் காலையில் பூங்கொடி கிருஷ்ணனிடம் "காட்டுக்குப் போய் விட்டு வரலாம், வா!" என்று சொன்னாள்.
"இப்போது எதற்குக் காட்டுக்கு?"
"ஒரு காரியம் இருக்கிறது. 'நீ ஒன்றும் என்னைக் கேட்காதே; நானாகச் சொல்கிறேன்' என்று அப்போது சொல்லவில்லையா? அந்தச் சமாசாரத்தை இன்று தெரிவிக்கிறேன், வா!"
கிருஷ்ணனுக்கு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலாயிருந்தது; ஆனால் காரியம் என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாய் வருவதாக ஒத்துக் கொண்டான்.
பூங்கொடி இராஜன் வாய்க்காலில் குளிக்கச் செல்வது போல் முதலில் போனாள். கிருஷ்ணன் பின்னோடு மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான்.
அக்கரைச் சேர்ந்ததும், பூங்கொடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடத் தொடங்கினாள். மெதுவாகத் தயக்கத்துடன் நடந்த கிருஷ்ணனைச் சில சமயம் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். கிருஷ்ணனுடைய நெஞ்சு மேலும் மேலும் படபடவென்று அடித்துக் கொண்டது. கடைசியாக ஓர் ஆலமரத்தடியில் போய்ச் சேர்ந்ததும், பூங்கொடி கிருஷ்ணன் கையை விட்டுவிட்டு அந்த மரத்தின் மேல் தாவி ஏறினாள். இரண்டு கிளைகளுக்கு மத்தியில் புல்லுருவிகளால் மூடப்பட்டிருந்த ஒரு பொந்தினுள் கையைவிட்டு, அதற்குள்ளிருந்து ஒரு சிறு தகரப்பெட்டியை எடுத்தாள். "இந்தா!" என்று கிருஷ்ணனிடம் நீட்டினாள்.
"என்ன அது?"
"வாங்கிப் பாரேன்"
கிருஷ்ணன் பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தான். உள்ளே ரூபாய் நோட்டுகளும் பவுன்களும் இருந்தன.
'கடைசியில், இவள் திருடிதானா?' என்று கிருஷ்ணன் எண்ணினான். அந்த நினைப்பை அவனால் சகிக்கவே முடியவில்லை. அதிலும் 'பிடாரி சொன்னதும் நிஜம். அவள் இவளை வீட்டைவிட்டுத் துரத்தியதும் நியாயம்' என்று எண்ணியபோது அவனுடைய தலையை யாரோ பிளப்பது போலிருந்தது.
"இதை எதற்காக என்னிடம் கொடுத்தாய்?" என்று கிருஷ்ணன் கோபமாய்க் கேட்டான்.
"சொத்தைச் சொத்துக்குரியவர்களிடம் கொடுத்து விடவேண்டுமென்று நீ அப்போதே சொல்லவில்லையா?"
"ஆமாம்; என்னைக் கொண்டு போய்ப் பிடாரியிடம் கொடுக்கச் சொல்கிறாயா?"
"நீ என்ன வேண்டுமானாலும் செய்; யாரிடம் வேண்டுமானாலும் கொடு. உன்னுடைய சொத்தை உன்னிடம் நான் சேர்ப்பித்து விட்டேன்," என்றாள்.
கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ புதிர் போடுவது போலிருந்தது. "என்ன உளறுகிறாய்?" என்று கேட்டான்.
"நான் ஒன்றும் உளறவில்லை. அதற்குள் ஒரு கடுதாசி இருக்கிறது; எடுத்து வாசித்துப் பார்!" என்றாள் பூங்கொடி.
கிருஷ்ணன் ஆவலோடு கடுதாசை எடுத்து வாசித்தான். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது;
"முத்துக் கோனான் மகன் பெருமாள் கோனான் சுயப் பிரக்ஞையுடன் மனப்பூர்வமாய் எழுதி வைப்பது என்னவென்றால் இந்தப் பெட்டியில் நானூற்றிருபது ரூபாய் பணமும், பன்னிரண்டு முழுப்பவுனும் இருக்கின்றன. இந்தப் பணம், பவுன் எல்லாம் என்னுடைய சுயார்ஜிதம். இந்தத் தொகை முழுவதையும் என்னுடைய கண்ணான மருமகள் பூங்கொடிக்குக் கலியாணப் பரிசத்துக்காக எழுதி வைக்கிறேன். அவளைக் கலியாணம் பண்ணிக் கொள்கிறவன் இது எல்லாவற்றையும் அடைய வேண்டியது. பணத்தை வீண் செலவு செய்யாமல் நிலம் வாங்குவதற்காவது வீடு கட்டிக் கொள்ளவாவது உபயோகிக்க வேண்டியது.
"இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், பூங்கொடியை என்னுடைய பெண்சாதி கஷ்டப்படுத்தி ஒருவேளை உயிருக்கே அபாயம் செய்வாளென்று பயந்தும், இன்னும் பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது உபயோகமற்றவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள முயற்சிக்கலாமென்று நினைத்தும் பூங்கொடிக்குக் கலியாணம் ஆகும்வரை இந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாய் வைத்திருக்கவேணுமென்று சத்தியம் வாங்கியிருக்கிறேன். பெட்டியை எங்காவது பத்திரமாய் ஒளித்து வைத்திருக்கும்படி பூங்கொடியிடம் ஒப்புவித்திருக்கிறேன்.
"இந்தச் சொத்தை அடைகிறவன் என்னுடைய மருமகளுக்கு ஒருவித மனக்குறையுமின்றி எப்போதும் சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டியது."
மேற்படி கடிதத்தைப் படித்துவிட்டுச் சற்றுநேரம் யோசித்ததில், கிருஷ்ணனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மாசி மகத்தன்று வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பெருமாள் கோனார் பூங்கொடியிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துப் பத்திரப்படுத்தும்படி சொல்லியிருக்க வேண்டும். மயிலைக் காளை கெட்டுப் போன அன்று, தான் காட்டில் அவளைச் சந்தித்தன் இரகசியம் அதுதான்.
பூங்கொடியும், அவளுடைய சீதனமும் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்துக்கெல்லாம் மூலகாரணம் மயிலைக் காளை தான் என்பது கிருஷ்ணனுடைய நம்பிக்கை. யாராரோ வந்து நல்ல விலைக்கு அதை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்கள். கிருஷ்ணன் அதை விற்க மறுத்து விட்டான். ஒரு சின்ன வண்டி வாங்கி அதில் மயிலைக் காளையை ஓட்டிப் பழக்கினான். தன்னையும் பூங்கொடியையும் தவிர அந்த வண்டியில் வேறு யாரும் உட்காருவதற்கு அவன் அனுமதிப்பதில்லை.
-----------
29. ரங்கதுர்க்கம் ராஜா
1
இரவு பத்து மணி (கதை ஆரம்பமாகிவிட்டது) "எச்.எம்.எஸ்.பிரிட்டானியா" என்னும் கப்பலின் இரண்டாம் வகுப்புத் தளத்தில், கப்பலின் கைப்பிடிக் கம்பிகளில் சாய்ந்து கடலை நோக்கிக் கொண்டு நிற்கிறான் ஓர் இளைஞன். அந்தக் கப்பல் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பி இங்கிலாந்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. நாளைக் காலையில் ஏடன் துறைமுகத்தைச் சேருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பலில் அந்த நிமிஷத்தில் ஐரோப்பிய நடனம் நடந்து கொண்டிருந்தது. பாண்டு வாத்தியம் முழங்கிற்று. வெள்ளைக்காரப் பிரயாணிகள் அநேகமாய் எல்லாரும் நடனத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப் பிரயாணிகள் - தூங்கச் சென்றவர்கள் போக, பாக்கிப் பேர் - துரைமார்களும் துரைசானிகளும் நடனமாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நமது இளைஞன் மட்டும் தன்னந்தனியாக இங்கே நின்று கொண்டிருந்தான். ஏன்? (ஆமாம். மறந்து போனான். நியாயமாய் உங்களைக் கேட்கக் கூடாதுதான். கதை சொல்வது நீங்கள் இல்லையே? நான் அல்லவா?)
அமைதியான கடல்; தாவள்யமான நிலவு; அகண்டமான ஆகாயம்; அநந்தமான நட்சத்திரங்கள். இந்த அற்புதக் காட்சியில் கருத்தைச் செலுத்தியிருந்தான் அவ்விளைஞன். அந்த நேரத்தில் அவன் மனத்திலே ஓர் அபூர்வமான எண்ணம் உண்டாயிற்று. அது விரைவில் தீர்மானமாக மாறியது. அத்தீர்மானம் என்னவென்று உங்களால் ஊகிக்க முடியுமா? - ஒரு நாளும் முடியாது என்றான். கப்பலிலிருந்து குதித்துக் கடலில் மூழ்கி உயிரை விட்டு விடுவது என்பதே அத்தீர்மானம்! இவ்வளவு உசிதமான - புத்திசாலிகள் அனைவருக்கும் முன் மாதிரியாயிருக்கக் கூடிய - தீர்மானத்துக்கு அவன் வந்ததன் காரணம் என்னவென்று சற்றே பார்க்கலாம்.
2
கே.ஆர். ரங்கராஜன் ஓர் அதிசயமான இளைஞன். அவனிடம் அநேக அதிசய குணங்கள் இருந்தன. அவற்றில் எல்லாம் முக்கியமானது தனிமை வாழ்வில் அவன் கொண்டிருந்த பற்றுதான். இதற்குக் காரணம் இந்த ஏழை உலகத்தின் மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பேயாகும். இந்த உலகத்தில் அவனுக்குப் பிடித்த மனிதர்கள் யாருமே இல்லை. யார் என்ன பேசினாலும் அது அசட்டுத்தனமாகவே அவனுக்குத் தோன்றும். (நமக்குள் இருக்கட்டும், நேயர்களே! - உண்மையும் அதுதான் போலிருக்கிறதே? நாம் இன்று பேசுகிறதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குப் பின் யோசித்துப் பார்த்தால் ஒரு மாதிரியாகவே தோன்றுகிறதல்லவா?) எனவே யாரிடமும் அவன் கலகலப்பாகப் பேசுவதே கிடையாது.
பிறருடைய அசட்டுத்தனத்தில் அவனுக்கு எவ்வளவு தீவிரமான நம்பிக்கை இருந்ததென்பதற்கு ஒரே ஓர் உதாரணம் சொன்னால் போதுமானது. அவன் பி.ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியவன். அப்புறம் எம்.ஏ. பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான். பணமும் கட்டி விட்டான். ஆனால், பரீட்சைக்குப் போகவில்லை. இதற்குக் காரணம், 'நாம் எழுதுகிற விஷயத்தை அறிந்து சீர் தூக்கிப் பார்க்க யோக்கியதை உள்ளவர் இங்கே யார் இருக்கிறார்கள்?' என்று அவன் எண்ணியதுதான். பி.ஏ. பரீட்சையில் நியாயமாகத் தான் தேறியிருக்கக் கூடாதென்றும் கைத் தவறுதலினால் தன்னுடைய நம்பரைத் தேறியவர்களின் ஜாபிதாவில் சேர்த்து விட்டார்களென்றும் அவன் சொல்வான்.
இந்த உலகத்தில் அவன் அலுத்துக் கொள்ளாமலும் விருப்பத்துடனும் பேசக் கூடியவர்களாக வெவ்வேறு காலத்தில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் அவனுடைய தாய்மாமன். தாயார் தகப்பனார் இருவரும் காலஞ்சென்ற பிறகு அவனை அருமையுடன் வளர்த்துப் படிக்க வைத்தவர் அவர் தான். அவர் ஆங்கிலக் கல்வி பயிலாதவர். ஆனால், உலக விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவர். இயற்கையாக அமைந்த நகைச்சுவையுடன் வெகு ரஸமாகப் பேசக் கூடியவர். நவீன இலட்சியங்களையும் இயக்கங்களையும் பற்றிச் சொன்னால் மிக நுட்பமாக அறிந்து கொள்ளக் கூடியவர். அவருடன் எத்தனை நேரம் பேசினாலும் ரங்கராஜனுக்கு அலுப்புண்டாகாது.
அவ்வளவு அரிய குணங்களும் ஆற்றல்களும் படைத்த அந்த மனிதருக்கு ஒரே ஒரு சாமர்த்தியம் மட்டும் இல்லாமல் போயிற்று. யமனுடன் வாதாடி, "என் மருமகனை விட்டு வரமாட்டேன்" என்று சொல்லிச் சாதிப்பதற்கு அவருக்குச் சக்தி போதவில்லை. சென்ற வருஷம் அவர் காலஞ் சென்ற போது ரங்கராஜனுக்கு உலகவே சூனியமாகி விட்டதாகக் காணப்பட்டது. மூன்று மாத காலம் வரையில், "மேலே என்ன செய்யப் போகிறோம்?" என்று யோசிப்பதற்கே அவனுடைய மனம் இடங்கொடுக்கவில்லை. 'மாமா போய் விட்டார்', 'மாமா போய் விட்டார்' என்று அது ஜபம் செய்து கொண்டிருந்தது.
அடுத்தபடியாக, அவனுடைய மதிப்புக்குரியவராயிருந்தவர், அவன் படித்த கிராமப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர். முன்னெல்லாம் அவருடைய சிநேகத்திலும் ஸல்லாபத்திலும் அவன் பெரிதும் சந்தோஷமடைவதுண்டு. ஆனால், நாளாக ஆக அவருக்கும் தனக்கும் இடையில் ஒரு பெரிய அகழ் ஏற்பட்டு வருவதை அவன் கண்டான். அவருடைய மூப்பு அதிகமாக ஆக, புதிய இலட்சியங்கள், புதிய கருத்துக்கள் முதலியவற்றைக் கிரஹிப்பதற்கு வேண்டிய சக்தியை அவர் துரிதமாக இழந்து வருவதை நேருக்கு நேரே அவன் பார்த்தான். சில நாளைக்கெல்லாம் அவர்களுடைய சம்பாஷணை பழைமைக்கும் புதுமைக்கும் - அல்லது இளமைக்கும் முதுமைக்கும் நடக்கும் விவாதமாகவே மாறி வரத் தொடங்கியது. இந்த விவாதத்தின் காரம் அதிகமாக ஆக, உபாத்தியாயரின் பழைமைப்பற்று அபரிமிதமாகி ஏற்கெனவே இல்லாத மூட நம்பிக்கைகள், குருட்டுக் கொள்கைகள் எல்லாம் அவர் உள்ளத்தில் குடிகொள்ளத் தொடங்குவதை ரங்கராஜன் கண்டு மிக்க பீதியும், துயரமும் அடைந்தான். கடைசியில், அவருடன் தான் எவ்விதச் சம்பாஷணையும் வைத்துக் கொள்ளாமலிருப்பதே அவருக்குச் செய்யக் கூடிய பெரிய உபகாரமாகும் என்று தீர்மானித்தான்.
மற்ற ஹைஸ்கூல் உபாத்தியாயர்கள், கலா சாலை ஆசிரியர்கள் இவர்களில் யாரிடமும் ரங்கராஜனுக்கு மரியாதையாவது, சிநேகமாவது ஏற்பட்டது கிடையாது. அவர்கள் ஏதோ தண்டத்துக்கு வந்து அழுதுவிட்டுப் போனார்கள். இவன் கடனுக்குக் கேட்டுத் தொலைத்தான். அவனுடைய சகோதர மாணாக்கர்கள் விஷயத்திலும் அப்படித்தான். முதன் முதலில் அவன் ஹைஸ்கூலில் வந்து சேர்ந்தபோது, தன் பக்கத்திலிருந்த மாணாக்கனோடு பேச்சுக் கொடுத்தான். அவன் சென்ற வருஷமும் அதே வகுப்பில் இருந்தவன் என்று அறிந்ததும், "ஏன் அப்படி?" என்று கேட்டான். "ஏனா? இந்த வாத்தியார்ப் பயல் மார்க்குக் கொடுக்கவில்லை. அவன் தாலியறுக்க!" என்று பதில் வந்தபோது, அவனுடைய சகோதர மாணாக்கர்களிடன் அவனுக்கு ஏற்பட்ட அருவருப்பு, கலா சாலையை விட்டு வெளியே வரும் வரையில் சற்றும் குறைந்ததாகச் சொல்ல முடியாது.
இந்தப் பொது விதிக்கு விலக்காக ஒரே ஒருவன் மட்டும் இருந்தான். அவன் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து காலேஜில் இரண்டு வருஷம் வரையில் ரங்கராஜனுடன் சேர்ந்து படித்தவன். இந்தப் பால்ய சிநேகிதனின், ஸகவாசம் எப்போதும் ரங்கராஜனுக்கு மகிழ்ச்சியளித்து வந்தது. ஆனால் இண்டர்மீடியட் பரீட்சையில் ஒரு முறை தேறாமல் போகவே, தர்மலிங்கம் கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தோடு போய் விட்டான்.
ரங்கராஜன் காலேஜ் படிப்பு முடிந்ததும் தனது பால்ய நண்பனைத் தேடிக் கிராமத்துக்குச் சென்றான். சாயங்காலம் ஆனதும், பழைய வழக்கத்தைப் போல் "ஆற்றங்கரைக்குப் போய் வரலாம்" என்று கூப்பிட்டான். தர்மலிங்கம், "என் வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்" என்று உள்ளே போனதும், ரங்கராஜனுக்கு கண்கள் திறந்தன. உள்ளே போனவன் தன் ஒரு வயதுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவுடன் ரங்கராஜனுக்கு நிராசை ஏற்பட்டது. நண்பனும் தானும் இப்போது வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாகி விட்டதை அவன் கண்டான். மறுநாளே சிநேகிதனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
3
மாமா இருந்தபோது ஒரு சமயம் கல்யாணத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். "கல்யாணம்" என்றதும் ரங்கராஜன் காதைப் பொத்திக் கொண்டான். சராசரியில் ஸ்திரீகளை விடக் கல்வியறிவில் சிறந்தவர்களாயிருக்கும் புருஷர்களுடைய ஸகவாசத்தையே அவனால் ஐந்து நிமிஷத்துக்கு மேல் சகிக்க முடிவதில்லை. வாழ்நாளெல்லாம் பிரிய முடியாதபடி ஒரு ஸ்திரீயை யாராவது கழுத்தில் கட்டிக் கொள்வார்களா? சனியனை விலை கொடுத்து வாங்குவது போல் அல்லவா? "மாமா அம்மாமியைக் கட்டிக் கொண்டு நீங்கள் அவஸ்தைப் படுவது போதாதா? என்னையும் அப்படிக் கெடுப்பதற்கு ஏன் விரும்புகிறீர்கள்?" என்றான். "அசடே! உனக்கு என்ன தெரியும் நானும் அம்மாமியும் சில சமயம் சண்டைப் போட்டுக் கொள்கிறோம் என்பது வாஸ்தவந்தான். அதைக் கொண்டா எங்கள் இல்வாழ்க்கையை நீ மதிப்பிடுவது? உன் அம்மாமி எனக்கு இல்வாழ்க்கையில் எவ்வளவு மன நிம்மதி, எவ்வளவு உற்சாகம், எவ்வளவு ஹாஸ்யரஸம் அநுபவிப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அளித்திருக்கிறாள் என்பதெல்லாம் உனக்கு என்ன தெரியும்?" என்று மாமா சொன்னார். "அப்படியானால், அந்தப் பாக்கியம் முழுவதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்கு வேண்டாம்," என்றான் ரங்கராஜன்.
மாமா எவ்வளவோ சொல்லியும் பயனில்லை.
அவ்வாறே உத்தியோகத்தைப் பற்றியும் பிரஸ்தாபம் வந்தது. வேலை ஒன்றும் இல்லாமலிருந்தால் இப்படித்தான் ஏதேனும் குருட்டு யோசனைகள் தோன்றிக் கொண்டிருக்குமென்றும் ஏதேனும் ஓர் அலுவலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியும் மாமா சொன்னார். பலவித உத்தியோகங்களைப் பற்றியும் வாதித்தார்கள். அதிலிருந்து நம் கதாநாயகனுடைய யோக்கியதைக்குத் தகுந்ததாக ஒருவித உத்தியோகமும் இல்லை என்பது வெளியாயிற்று. சர்க்கார் உத்தியோகமா? சிவ சிவா! அந்த வார்த்தையைக் கேட்டதுமே கிராமத்து ஜனங்களைப் போல் அறிவுத் தெய்வமும் பயந்து மிரண்டு அருகில் கூட வராதே! வக்கீல் வேலையா? பகவானே! முட்டாள் கட்சிக்காரர்களுடனும் மூட ஜட்ஜுகளுடனும் அல்லவா இழவு கொடுக்க வேண்டும்? வைத்தியத் தொழிலா? அதைப் போல் அறியாமையை அடிப்படையாகக் கொண்ட தொழிலே வேறு கிடையாது! வாத்தியார் வேலையா? மந்தபுத்தியுள்ள மாணாக்கர்களுடன் நாளெல்லாம் மாரடிப்பதைவிட வேறு எது வேண்டுமானாலும் செய்யலாம் - இப்படியே, படித்தவர்கள் பிரவேசிப்பதற்குரிய நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் விலக்கப்பட்டது.
"இதெல்லாம் உனக்கு ஒன்றும் பிடிக்காவிட்டால் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவது தானே? காங்கிரஸில் சேர்ந்து வேலை செய்யலாமே? உயர்ந்த மேதாவிகள் காங்கிரஸில் இருக்கிறார்களே?" என்று மாமா கேட்டார்.
அரசியல் என்றாலே ரங்கராஜனுக்குப் பிடிப்பதில்லை. ஞானசூனியர்களும், அரை குறை அறிவுள்ளவர்களுந்தான் அரசியல் முன்னணிக்கு வருகிறார்கள் என்று அவன் சொல்வான். காங்கிரஸைச் சேர்ந்தவர்களில் ஒரு நாலைந்து பேர் மட்டும் அறிவுத் தெளிவுடையவர்கள் என்று அவன் ஒப்புக் கொள்வதுண்டு; ஆனால், அவர்கள் பாடுபடுவதெல்லாம் வியர்த்தமென்றும், இந்த மூட ஜனங்கள் ஒரு நாளும் முன்னுக்கு வரப்போவதில்லை என்றும் கூறுவான்.
மேற்கண்டவாறு மாமா யோசனை சொன்னதும் ரங்கராஜன் அன்றைய தினசரிப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தான். அதில் வெளியாகியிருந்த ஓர் அரசியல் பொதுக் கூட்டத்தின் நடவடிக்கைகளையும் முதல் நாள் சட்டசபை நடவடிக்கைகளையும் படித்துக் காட்டினான்.
"மாமா! மகாத்மாவும், வல்லபாயும், இராஜகோபாலாச்சாரியும், ஜவஹர்லாலும் சுயராஜ்யத்துக்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் இந்த ஜனங்களை வைத்துக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதென்பது அசாத்தியமென்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படியே நம்மை ஆள்வோரும் முட்டாள்களாயிருக்கும் காரணத்தினால் நாம் சுய ராஜ்யம் அடைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அதை வைத்து நிர்வகிக்கப் போகிறவர்கள் யார்? இதோ இப்போது வாசித்தேனே, அதைப் போலெல்லாம் அர்த்தமில்லாமல் பிதற்றக் கூடிய ஏழாந்தர, எட்டாந்தர மூளையுள்ள மனிதர்கள் தானே? இவர்களிடம் இராஜ்யபாரத்தைக் கொடுப்பதற்காக நான் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்?" என்றான்.
ரங்கராஜனுடைய காலத்தில் பெரும்பகுதி படிப்பில் போய்க் கொண்டிருந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள உயர்தர இலக்கியங்களில் அவன் படிக்காதது ஒன்றுமில்லை. நேரம் போவது தெரியாமல், ஊன் உறக்கங்களை மறந்து படித்துக் கொண்டிருப்பான். ஆனால், படிப்புங்கூடக் கசந்து போகும்படியான ஒரு சமயம் வந்தது. பண்டைக்கால ஆசிரியர்களின் சிறந்த நூல்களையெல்லாம் படித்தாகி விட்டது. இக்காலத்து ஆசிரியர்கள் எழுதுவதோ அவனுக்கு ஒன்றும் பிடிப்பதில்லை. வோட்ஹவுஸ் போன்றவர்களின் வெறும் 'புருடை' நூல்களில் எப்போதும் ஐந்தாறு பக்கத்துக்கு மேல் அவனால் படிக்க முடிவதில்லை. நாளடைவில் ஷா, செஸ்டர்டன், பெல்லாக் முதலியவர்கள் கூடச் சுவை நைந்த பழங்கதைகளையே படைக்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு உயிர் வாழ்க்கையே ஒரு பாரமாய் விட்டது. மனத்தைச் செலுத்துவதற்கு ஏதேனும் ஒரு வழி விரைவில் காணாவிடில் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது.
அத்தகைய வழி அவன் யோசனை செய்யாதது ஒன்றே ஒன்று தான் பாக்கியிருந்தது; வெளி நாடுகளுக்கு யாத்திரை சென்று வரவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வெகு நாளாய் உண்டு. மாமா இருந்தவரையில் அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு அவ்வளவு அவசியத்தையும் அவன் அப்போது காணவில்லை. இப்போது அவசியம் அதிகமான போது சந்தர்ப்பமும் சரியாயிருந்தது. பிதுரார்ஜிதச் சொத்தில் பெரும் பகுதியை ஒன்றுக்கு பாதி விலையாக விற்றுப் பிரயாணத்துக்குப் பணம் சேர்த்துக் கொண்டான். முதலில், இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்துப் பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பிரிட்டானியா' என்னும் கப்பலில் பிரயாணமானான்; மூன்று நாள் கப்பல் பிரயாணத்துக்குப் பிறகு அவனுடைய மனோநிலை எவ்வாறிருந்தது என்பது கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
4
ரங்கராஜன், அதுவரையில் வெள்ளைக்காரர்களுடன் நெருங்கிப் பழகியதில்லை. சினிமா டாக்கிகளில் பார்த்தது தவிர அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவனுக்கு வேறு எதுவும் தெரியாது. 'பிரிட்டானியா' கப்பலில் பிரயாணம் செய்தவர்களில் பெரும்பாலோர் துரைமார்களும் துரைசானிகளுமே. மூன்று நாள் அவர்கள் சமீபத்திலிருந்து அவர்களுடைய நடை உடை பாவனைகளைப் பார்த்ததன் பயனாக அவனுடைய உத்தேசம் பெரிய மாறுதல் அடைந்தது. இந்த மாதிரி ஜனங்களிடையே இன்னும் பத்து நாள் பிரயாணம் செய்ய வேண்டும். அப்புறம்? இதே மாதிரி ஜனங்கள் மத்தியில் தான் அயல் நாட்டில் வசிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வந்தாலோ? மறுபடியும் இந்த அசட்டு மனிதர்களிடையேதான் வாழ வேண்டும். சீச்சீ! இதென்ன வாழ்க்கை!
நீலநிறக் கடலில் கம்பீரமாய் எழுந்து விழுந்து கொண்டிருந்த அலைகள் அவனை, "வா! வா!" என்று சமிக்ஞை செய்து கூப்பிட்டன. கடல் நீரில் பிரதிபலித்த சந்திர பிம்பத்தின் சலன ஒளி அலைகளும் அவ்வாறே அவனை ஆதரவுடன் அழைத்தன. வெகு தூரத்தில் வான வட்டமும் கடலும் சந்திக்கும் இடத்தில் தோன்றிய ஒரு தனி நட்சத்திரம் கண் சிமிட்டி அவனைக் கூப்பிட்டது. சமீபத்திலே பறந்த ஒரு கடற்பறவையின் குரல் அவன் செவியில், "அகண்டமான இந்தக் கடலும், வானமும் வெளியும் இருக்கையில் மனிதப் புழுக்கள் வாழும் குறுகிய இக்கப்பலுக்குள் ஏன் இருக்கிறாய்?" என்று பரிகாசம் செய்வது போல் தொனித்தது. தூரத்தில் மற்றொரு கப்பல் வருவதை ரங்கராஜன் பார்த்தான். அதிலும் இவர்களைப் போன்ற அறிவீனர்களும், மந்த மதியுடையோரும் குறுகிய புத்திக் காரர்களும், அற்பச் சிந்தனையாளர்களும் இருக்கப் போகிறார்கள். என்னே இந்த உலக வாழ்க்கை!
அடுத்த விநாடி ரங்கராஜன் தலைகுப்புறக் கடலில் விழுந்தான். படாலென்று மண்டையில் ஏதோ தாக்கியது. ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் நீருக்குள்ளிருந்து கிளம்பிக் குமிழி குமிழியாய் மேலே போய்க் கொண்டிருந்தன. அவனோ கீழே கீழே போய்க் கொண்டிருந்தான். ஐயோ மூச்சுவிட ஏன் இவ்வளவு கஷ்டமாயிருக்கிறது! இந்தச் சொக்காய் மென்னியை இறுகப் பிடிக்கின்றனவே! அவற்றைக் கிழித்தெறியலாம். ரங்கராஜன் கோட்டை கழற்றிவிட்டு ஷர்ட்டைக் கிழிக்கத் தொடங்கினான். அடுத்த நிமிஷம் அவன் ஸ்மரணை இழந்தான்.
*****
அதல பாதாளத்திலிருந்த எங்கேயோ மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறோமே; எங்கே போகிறோம்? அப்பா! இதோ கொஞ்சம் வெளிச்சம் காண்கிறது. மூச்சு நன்றாய் விட முடிகிறது. அடிவாரத்திலிருந்து மேல் பரப்புக்கு வந்து விட்டோ ம் போலிருக்கிறது. கண்களைச் சற்றுத் திறந்து பார்ப்போம். இது என்ன அதிசயம்? இங்கே எப்படி வந்தோம்? இந்த இளம்பெண் யார்? இவள் ஏன் இப்படி நம்மைப் பார்க்கிறாள்? என்ன அலட்சிய புத்தி கொண்ட பார்வை? அது என்ன மாறுதல், அவள் முகத்தில் இப்போது? என்ன சிந்தனை செய்கிறாள்? அதோ கொஞ்சம் வயதானவளாய்த் தோன்றும், அந்த ஸ்திரீ யார்? இங்கே நிற்பவர் டாக்டரைப் போல் காணப்படுகிறாரே? நாம் எங்கே இருக்கிறோம்? இது கப்பல் அறை போல் தான் இருக்கிறது. ஆனால், நாம் வந்த கப்பலில் இவர்களைக் காணவில்லையே? எல்லாம் புது முகமாயிருக்கிறதே? ஒரு வேளை தண்ணீரில் மூழ்கி இறந்து போன நாம் இப்போது ஆவி உலகத்தில் இருக்கிறோமோ? இவர்கள் எல்லாம் ஆவிகளோ? ஒரு வேளை கனவோ? கடலில் விழுந்தது கூடக் கனவில் தானோ? நிஜம் போல் தோன்றுகிறதே, மறுபடியும் கண்ணை மூடிப் பார்ப்போம்.
ஒரு நிமிஷம் திறந்திருந்த ரங்கராஜனுடைய கண்கள் மறுபடியும் மூடிக் கொண்டன.
---------------
இரண்டாம் பாகம்
1
ரங்கராஜன் இரண்டாவது முறை கண் விழித்த போது, அவன் படுத்திருந்த அறையில் ஒருவருமில்லை. ஆனால், சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் காலடிச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் ஒருவர் முன் தடவை கண் விழித்த போது பார்த்த இந்திய டாக்டர், இன்னொருவர் வெள்ளைக்கார டாக்டர்.
ரங்கராஜன் விழித்திருந்ததைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஏக காலத்தில், "ஹலோ!" என்று கூவினார்கள். பிறகு வெள்ளைக்கார டாக்டர், "ராஜா சாகிப்! உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
'ராஜா சாகிப்பாவது, நாசமாய்ப் போனதாவது' என்று ரங்கராஜன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஆனால், வெளியில், "எனக்கென்ன தெரியும்? நானா டாக்டர்! நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும்?" என்றான்.
டாக்டர்கள் சிரித்தார்கள். வெள்ளைக்கார டாக்டர் "பேஷ்! ராஜாசாகிப் தண்ணீரில் ஓர் அமுங்கு அமுங்கியது அவருடைய மூளையை கூர்மைப்படுத்தியிருக்கிறது போல் காண்கிறது," என்றார்.
"உங்களுக்கும் அந்தச் சிகிச்சை கொஞ்சம் தேவை போல் காண்கிறதே!" என்றான் ரங்கராஜன்.
டாக்டர்கள் மறுபடியும் சிரித்தார்கள். பிறகு, "ராஜா சாகிப்! போனது போகட்டும். இனிமேலாவது மிதமாய்க் குடியும். மது மயக்கம் பொல்லாதது" என்றார் வெள்ளைக்கார டாக்டர்.
"மது மயக்கமோ, காதல் மயக்கமோ?" என்றார் இந்திய டாக்டர்.
இப்போது ரங்கராஜனுக்கு உண்மையிலேயே தலை மயங்க ஆரம்பித்தது.
"கனவான்களே! தயவு செய்து ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறீர்களா?" என்று கேட்டான்.
"ஒன்றல்ல, நூறு சந்தேகங்களை வேண்டுமானாலும் நிவர்த்தி செய்கிறோம், ராஜா சாகிப்! ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜாவுக்கு நாங்கள் அவ்வளவுகூடச் செய்ய வேண்டாமா!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
"எனக்குள்ளது ஒரே சந்தேகந்தான். நான் பைத்தியமா, நீங்கள் பைத்தியமா என்பதை மட்டும் சொல்லி விட்டால் போதும்."
ஒரு பெரிய அவுட்டுச் சிரிப்புக் கிளம்பிற்று. வெள்ளைக்கார டாக்டர் அருகில் வந்து ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்து, "பேஷ்! பேஷ்! நல்ல கேள்வி! ஏ! ஹஹ்ஹஹ்ஹா!" என்று மறுபடியும் சிரித்தார். அவருடைய திருவாயிலிருந்து சாராய நாற்றம் குபுகுபுவென்று வந்தது.
"டாக்டரே! தயவு செய்து தூரநின்று பேசும். நான் வைதிகப் பற்றுள்ள ஹிந்து. உம்மைத் தொட்டால் தலை முழுக வேண்டும்," என்றான் ரங்கராஜன். பிறகு, "நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. உங்களுக்கும் அது சந்தேகம் போலிருக்கிறது. போகட்டும், நீங்கள் யார் என்றாவது தயவு செய்து சொல்வீர்களா?" என்று கேட்டான்.
வெள்ளைக்கார டாக்டர் ஒரு நிமிஷம் யோசனையிலாழ்ந்தவர் போலிருந்தார். இந்திய டாக்டர், "ஆஹா! ராஜா சாகிப் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள அநுமதி கொடுங்கள். நான் தான் டாக்டர் சிங்காரம், குமாரபுரம் ஜமீன்தாரின் குடும்ப வைத்தியன். இவர் டாக்டர் மக்டானல். இந்தக் கப்பலின் வைத்தியர். -போதுமா? இன்னும் ஏதாவது தெரிய வேண்டுமா?"
"இந்தக் கப்பலின் பெயர் என்ன?"
"எச்.எம்.எஸ்.ரோஸலிண்ட்."
"நிஜமாகவா? இதன் பெயர் 'பிரிட்டானியா' அல்லவென்று நிச்சயமாகத் தெரியுமா?"
டாக்டர் சிங்காரம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஆனால், டாக்டர் மக்டனால் சிரிக்கவில்லை. அவர் ஒரு சீட்டில், "கொஞ்சம் மூளை பிசகியிருப்பதுபோல் காண்கிறது" என்று எழுதி டாக்டர் சிங்காரத்திடம் காட்டினார்.
"ஓ டாக்டர் கனவான்களே! இன்னும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள். நான் யார்?" என்று கேட்டான் ரங்கராஜன்.
இப்போது டாக்டர்கள் சிரிக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு டாக்டர் மக்டனால், "நாங்கள் யாரென்று தெரியப்படுத்திக் கொண்டோ ம். நீர் யாரென்று நீரல்லவா தெரியப்படுத்த வேண்டும்? உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார்.
"என் பெயர் ரங்கராஜன் என்று இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியோ தப்போ என்று இப்போது சந்தேகமாய் விட்டது."
"இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?"
"என்னை நீங்கள் 'ராஜாசாகிப்' என்று அழைப்பதனால்தான்."
"அப்படியா? அது போகட்டும். இன்னும் தூக்கக் கலக்கம் உமக்குப் போகவில்லை. சற்று நேரம் தூங்கும். அப்புறம் நாங்கள் வந்து உம்முடைய சந்தேகங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்கிறோம்" என்று டாக்டர் மக்டானல் சொல்லிவிட்டு, டாக்டர் சிங்காரத்தையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியேறினார். அறைக்கு வெளியில் சென்றதும் அவர் டாக்டர் சிங்காரத்திடம், "இது ஒரு விசித்திரமான கேஸ். தண்ணீரில் அலை வேகமாய்த் தாக்கியதால் மூளை சிறிது குழம்பியிருக்கிறது. தம்மை வேறு யாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பழைய ஞாபகம் கொஞ்சம் இருக்கிறது. அதனால்தான் ரங்கராஜ் என்று பெயர் சொல்கிறார். ரங்கதுர்க்கம் ராஜா என்பதில் 'துர்க்கம்' தழுவி விட்டது. இங்கிலாந்துக்குப் போகும் போது இவர் 'பிரிட்டானியா' கப்பலில் போயிருக்க வேண்டும், விசாரித்தால் தெரியும்," என்று கூறினார்.
2
டாக்டர்கள் வெளிச் சென்றதும் ரங்கராஜன் படுக்கையிலிருந்து எழுந்தான். முதலில் தான் அணிந்திருந்த உடைகளைக் கவனித்தான். அவை தன்னுடையவை அல்ல என்பது நிச்சயம். பிறகு அறையைச் சோதித்தான். அந்த அறையை அதற்கு முன் அவன் பார்த்ததில்லை. அதிலிருந்த சாமான்களும் அப்படியே. பெட்டிகளைத் திறந்து சோதிக்கலானான். அவற்றில் சாதாரண உடுப்புகளுடன் சரிகைப் பூவேலைகள் செய்த வெல்வெட் சட்டைகள், குல்லாக்கள் முதலியவை காணப்பட்டன. சாராயப் புட்டிகள், சிகரெட் பெட்டிகள் முதலியவை இருந்தன. இந்த அறையில் யாரோ ஓர் இளம் ஜமீன்தார் பிரயாணம் செய்திருக்க வேண்டும். டாக்டர்கள் அவனை அந்த ஜமீன்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பரிசோதனை செய்தபோது, "ஹிஸ் ஹைனஸ் ரங்கதுர்க்கம் ராஜா" என்று தலைப்பில் அச்சிட்ட சில காகிதங்கள் அகப்பட்டன. மறுபடியும் புரட்டியபோது, சில புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்றைப் பார்த்ததும் ரங்கராஜன் திடுக்கிட்டான். ஏனெனில், அப்படத்திலிருந்த உருவம் அவனைப் போலவே இருந்தது. மூக்கு, முழி, உதடு, நெற்றி, தலைக்கிராப்பு எல்லாம் தத்ரூபம். உடையில் மட்டுந்தான் வித்தியாசம் காணப்பட்டது.
இன்னொரு புகைப்படம் ரங்கராஜனுடைய உள்ளத்தில் விசித்திரமான உணர்ச்சியை உண்டாக்கிற்று. அவ்வுணர்ச்சியின் இயல்பு எத்தகையதென்பது அவனுக்கே சரியாக விளங்கவில்லை. அது ஓர் இளம் கன்னிகையின் படம். முதல் தடவை தான் கண்விழித்துப் பார்த்தபோது எதிரில் நின்ற பெண் இவளாய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். இவள் யார்? தன்னிடம் சிரத்தைக் கொண்டு தன்னைப் பார்க்க வந்த காரணம் என்ன? சீ! அவள் தன்னைப் பார்க்கவா வந்தாள்? வேறு யாரையோ அல்லவா பார்க்க வந்தாள்? அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? அச்சமயம் ரங்கராஜனுக்குத் தான் முன்பின் பார்த்திராத ரங்கதுர்க்கம் ராஜாவின் மீது கொஞ்சம் கோபம் வந்தது.
ஆனால், உடனே சாமாளித்துக் கொண்டான். 'என்ன நமக்குக் கூட அசடு தட்டுகிறதே!' என்று நினைத்தான். ஆனால் உடனே, 'நமக்கு அசடு தட்டினால் அதுவும் கொஞ்சம் உயர் தரமாய்த்தான் இருக்கும்' என்று எண்ணிக் கொண்டான். பெட்டிகளை மூடிவிட்டு எழுந்தான்.
குழப்பம் நீங்குவதற்கு அவன் இன்னும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
உண்மையாகவே இந்தக் கப்பல், தான் பம்பாயில் ஏறி வந்த கப்பல் இல்லையா? இல்லையென்றால், இது எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இரண்டாவது, தன்னை யார் என்று இவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த பேர்வழியின் சங்கதியென்ன? தன்னை அவனென்று இவர்கள் தவறாக எண்ணங் கொண்டிருப்பதை எவ்வாறு நிவர்த்திப்பது?
ரங்கராஜன் அறையிலிருந்து வெளிவந்து நடக்க முயற்சித்தான். கொஞ்சம் பலஹீனத்தைத் தவிர, மற்றபடி தேகம் சரியான நிலைமையிலிருப்பதாக உணர்ந்தான். தளத்தின் விளிம்பு வரை சென்று கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றான். அன்று தான் இவ்வாறு நின்றதும், அப்போது தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களும், கடைசியில் தலைக்குப்புறக் கடலில் விழுந்ததும் எல்லாம் தெளிவாக ஞாபகம் வந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறதென்றும், அதை நிவர்த்திப்பது தன் கடமையென்றும் உறுதி கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தபோது, கப்பலின் ஒரு பக்கத்தில் 'எச்.எம்.எஸ். ரோஸலிண்ட்' என்று பெரிதாக எழுதியிருந்தது தெரிய வந்தது. எனவே, தான் வந்த கப்பல் இது இல்லையென்பது நிச்சயம்.
அப்போது அந்தப் பக்கம் மாலுமி ஒருவன் வந்ததைக் கண்டதும் அவனை, நிறுத்தி "இந்தக் கப்பல் எங்கிருந்து கிளம்பி எங்கே போகிறது? இப்போது எங்கேயிருக்கிறோம்?" என்று கேட்டான். அந்த மாலுமி ரங்கராஜனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் குப்பென்று சிரித்தான். "ஓ! கடலில் விழுந்த ராஜா இல்லையா நீர், இன்னொரு தடவை விழப் போகிறீரா?" என்று கேட்டான். ரங்கராஜனுக்குக் கோபம் வந்தது. "ஓய் உம்முடைய பரிகாசமெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இந்தக் கப்பலின் காப்டனை நான் உடனே பார்க்க வேண்டும். அவரிடம் தயவு செய்து என்னை அழைத்துப் போகிறீரா?" என்று கேட்டான்.
"ராஜாசாகிப் ரொம்பக் கோபமாயிருப்பது போல் காண்கிறது. வாரும், போகலாம்" என்றான் மாலுமி. ரங்கராஜன் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். போகும் வழியில் அந்தக் கப்பல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் போகிறதென்றும், ஏடனைத் தாண்டியாகிவிட்டதென்றும், இரண்டு நாளில் பம்பாய்த் துறைமுகத்தை அடையுமென்றும் அந்த மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டான். ஒருவாறு அவனுக்கு நிலைமை தெரியவந்தது. 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து, தான் கடலில் குதிக்க எத்தனித்த அதே சமயத்தில் எதிரே ஒரு கப்பல் வரவில்லையா? அந்தக் கப்பல் தான் இது. தான் கடலில் குதித்த அதே சமயத்தில் இந்த முட்டாள் ராஜாவும் எக்காரணத்தினாலோ கடலில் விழுந்திருக்க வேண்டும். அவனை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை எடுத்திருக்கிறார்கள், இந்தக் கப்பல்காரர்கள். தன்னுடைய தோற்றமும், அவனுடைய தோற்றமும் விபரீதமாக ஒத்திருந்தபடியால் அவர்கள் இந்த ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ராஜாவின் கதி என்னவாயிற்றோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்; தன்னுடைய கடமை தெளிவானது; தான் ரங்கதுர்க்கம் ராஜா அல்லவென்பதை உடனே கப்பல் தலைவனிடம் தெரியப்படுத்தி விடவேண்டும்.
3
"ஓகோ! ராஜாசாகிபா? என்ன அதற்குள் அலையக் கிளம்பிவிட்டீரே! டாக்டர் உத்தரவு கொடுத்தாரா?" என்றான் காப்டன்.
"டாக்டர் உத்தரவு கொடுக்கவில்லை. ஆனால், உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக வந்தேன்."
"அந்த முக்கியமான விஷயம் இன்னும் மூன்று நாளைக்கு பம்பாய் போய்ச் சேரும் வரையில் காத்துக் கொண்டிருக்காதா? இதோ பாரும், ராஜா சாகிப்; வானம் ஒரு மாதிரியாய் இருக்கிறது. புயல் அடிக்கும் போல் இருக்கிறது."
"நான் சொல்ல வேண்டிய விஷயம் மூன்று நாள் காத்திராது. மிகவும் அவசரமானது. முக்கியமானது."
"அப்படியானால் சொல்லும் சீக்கிரம்."
"நீர் என்னை 'ராஜாசாகிப்' என்று அழைக்கிறீர். என்னை ரங்கதுர்க்கம் ராஜா என்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். இது தவறு. நான் ரங்கதுர்க்கம் ராஜா அல்ல. சாதாரண மனிதன். என் பெயர் ரங்கராஜன். தற்செயலாகப் பெயர் இப்படி ஏற்பட்டிருக்கிறது."...
இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் டாக்டர்கள் இருவரும் அங்கு வந்தார்கள். பெரிய டாக்டர் கப்பல் தலைவனுடைய காதில் ஏதோ சொன்னார். உடனே காப்டன் 'ஹஹ்..ஹஹ்ஹா' என்று சிரிக்கத் தொடங்கினார்.
கொஞ்சம் சிரிப்பு அடங்கியதும் ரங்கராஜன் கூறினான்: "நீரும் இந்த டாக்டர்களைப் போன்ற மழுங்கல் மூளை உள்ளவர் என்று நான் நினைக்கவில்லை. போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்து விடுகிறேன். இங்கிலாந்திலிருந்து இந்தக் கப்பலில் கிளம்பிய ரங்கதுர்க்கம் ராஜா நான் அல்ல. ஐந்து நாளைக்கு முன்பு பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கிளம்பிய 'பிரிட்டானியா' கப்பலில் நான் இங்கிலாந்துக்குப் பிரயாணமானேன்."
"அப்படியானால் இங்கே எப்படி வந்து குதித்தீர்?" என்று கேட்டார் காப்டன்.
"அது எனக்குத் தெரியாது. ஏடனுக்கு இப்பால் 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து கடலில் குதித்ததுதான் தெரியும்"
"ஏன் குதித்தீர்?"
"உங்களைப் போன்ற மூடர்கள் வாழும் உலகத்தில் உயிர் வாழப் பிடிக்காமல் போனபடியால் தான்."
"போதும், போதும், டாக்டர் ராஜாசாகிபை அழைத்துக் கொண்டு போங்கள். சரியானபடி சிகிட்சை செய்யுங்கள்," என்றார் காப்டன்.
டாக்டர்கள் ரங்கராஜனை அழைத்துக் கொண்டு சென்றதும், காப்டன் அங்கிருந்த மாலுமியிடம், "இந்தப் பையன் கதை சொல்லத் தொடங்கியதும் நான் கூட மிரண்டு விட்டேன். டாக்டர் சொன்னதுந்தான் ஒரு மாதிரி நிச்சயமாயிற்று. இந்தப் பையனுடைய கதை நிஜமென்றால், இவனைப் போன்ற இன்னொரு முட்டாள் இருக்க வேண்டுமல்லவா? உலகம் ஏககாலத்தில் இத்தகைய இரண்டு அசடுகளைத் தாங்குமா?" என்று கூறவே இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
டாக்டர்கள், ரங்கராஜனை நேரே அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் உட்கார வைத்தனர். அதே சமயத்தில் தலைப்பாகை சகிதமாக ஓர் இந்தியக் கனவான் அங்கே வந்தான். மெஸ்மெரிஸம் என்னும் வித்தையில் தாம் கை தேர்ந்தவர் என்றும், ரங்கதுர்க்கம் ராஜா தம்மை வேறு யாரோ என்று எண்ணி மயங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததென்றும், அவருடைய பிரமையைத் தாம் போக்கிவிட முடியுமென்றும் கூறினார்.
"எங்கே, உமது சாமர்த்தியத்தைக் காட்டும்," என்றார் வெள்ளைக்கார டாக்டர்.
மெஸ்மெரிஸ்ட் ரங்கராஜன் அருகில் சென்றார். "தம்பி! நீ நான் சொல்வதைக் கேட்பாயாம். நல்ல தம்பியல்லவா? நீ சாதாரண மனிதனாய் இருப்பதற்குப் பதில், பெரிய ஜமீனுக்குச் சொந்தக்காரனாக வேண்டுமானால், நான் சொல்வதைக் கொஞ்ச நேரம் தடை சொல்லாமல் கேட்க வேண்டும். தெரிகிறதா? ஹும், ஹும்" என்றார். ரங்கராஜன் மௌனமாய் இருப்பது கண்டு, "அது தான் சரி, நல்ல பிள்ளை எங்கே சாய்ந்து கொள். கைகால்களைத் தளரவிடு. என் கணகளையே உற்றுப் பார். தூங்கு தூங்கு..." என்று பல தடவை உச்சரித்தார்.
ரங்கராஜன் கண்களை மூடினான். மெஸ்மெரிஸ்ட் கையால் அவனுடைய நெற்றியைத் தடவிக் கொண்டே சொல்கிறார். "நீ இப்போது உன்னை யாரோவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ ரங்கதுர்க்கம் ராஜா. உனக்குச் சொத்து சுதந்திரங்கள் ஏராளமாய் இருக்கின்றன. நீ குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவியை காதலிக்கிறாய். (இப்போது ரங்கராஜனுக்குச் சிரிப்பை அடக்குவது பிரம்மப் பிரயத்தனமாயிருந்தது). நீ ரங்கதுர்க்கம் ராஜா... ரங்கதுர்க்கம் ராஜா..." இவ்வாறு பல தடவை கூறிவிட்டு, "இப்போது எழுந்திரு" என்று ஆக்ஞாபித்தார் மெஸ்மெரிஸ்ட்.
ரங்கராஜன் எழுந்து உட்கார்ந்தான். "இப்போது இவரை யார் என்று கேளுங்கள்," என்று டாக்டர்களைப் பார்த்து கூறினார். டாக்டர் மக்டானல், "நீர் யார்?" என்று கேட்கவே, "நான் ரங்கராஜன்" என்று கண்டிப்பாகப் பதில் வந்தது. மெஸ்மெரிஸ்டின் முகம் விழுந்து போயிற்று. அவர், "இன்னும் மூன்று நாள் சேர்ந்தாற் போல் மெஸ்மெரிஸம் செய்தால், ராஜாவுக்குத் தமது சுய உணர்வு நிச்சயம் வந்து விடும்," என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றார்.
டாக்டர் சிங்காரம் தமது சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தார். "நான் செய்கிறேன். இப்போது மெஸ்மெரிஸம்" என்று சொல்லிக் கொண்டே அந்தக் கடிதத்தை ரங்கராஜன் பக்கம் நீட்டினார். "இந்தக் கடிதம் யார் எழுதினது, என்ன எழுதியிருக்கிறது என்று தயவு செய்து பாரும்" என்று சொல்லி ரங்கராஜன் கையில் கொடுத்தார்.
ரங்கராஜன் கடிதத்தை பிரித்து பார்த்தான். அதன் ஆரம்பம் அவன் மனத்தைக் கவர்ந்தது. அது ஒரு காதல் கடிதம் என்று உடனே தெரிந்து போயிற்று. அதைப் போன்ற ஆச்சரியமான காதல் கடிதத்தை யாரேனும் எழுதக் கூடுமென்பதாக அவன் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டான். எனவே, முகத்தில் புன்னகை ததும்ப அதை வாசித்துக் கொண்டு போனான்.
இதைப் பார்த்த டாக்டர் சிங்காரம், "வாருங்கள் மெஸ்மெரிஸம் வேலை செய்யட்டும்; நாம் போய்ப் பிறகு வரலாம்" என்று கூறி டாக்டர் மக்டானலை அழைத்துச் சென்றார்.
*****
இரண்டு மணி நேரங்கழித்து அவர் குமாரபுரம் ஜமீன்தாரிணியையும் அழைத்துக் கொண்டு ரங்கராஜனுடைய அறையை நோக்கி வந்தபோது, கப்பல் விளிம்புக்கருகில் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு ரங்கராஜனும் குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி பிரேமலதா தேவியும் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது அவரும் குமாரபுரம் ஜமீன் தாரணியும் அடைந்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. டாக்டர் சிங்காரத்துக்கு ஏற்பட்ட ஆச்சரியமிகுதியினால் அவர் வாயிலிருந்த சுருட்டு லபக்கென்று விழுந்து போய் விட்டது.
---------------
மூன்றாம் பாகம்
1
ரங்கராஜனுடைய கவனத்தைக் கவர்ந்த ஆச்சரியமான காதல் கடிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனல்லவா? அதைக் கடிதம் என்று சொல்வதைவிடக் காவியம் என்று சொல்வது பொருத்தமாயிருக்கும். அதனுடைய சில பகுதிகளைச் சற்று ருசி பாருங்கள்:
"என் உடல் பொருள் ஆவியைக் கொள்ளை கொண்ட என் கண்ணில் கருமணி போன்ற, அருமையில் சிறந்த, பெருமையில் மிகுந்த, தேனைப் போல் இனித்த மானைப்போல் விழித்த....குமாரபுரம் இளைய ஜமீன்தாரிணி ஸ்ரீமதி பிரேமலதா தேவிக்கு ரங்கதுர்க்கம் ராஜாவாகிய நான் எழுதிக் கொண்டது.
பெண் பாவாய்!
என் இருதயமானது உமக்காக எவ்வாறு துடிதுடித்துக் கொண்டிருக்கிறதென்பதும், இரவிலும், பகலிலும் கனவிலும், நனவிலும் நான் எப்படி உம்மையே கண்டு, கேட்டு, வருந்தி, மகிழ்ந்து வருகிறேன் என்பதும், எல்லாம் நீர் அறிந்ததே. என்னுடைய இருதயத்தை உமக்குத் திறந்துகாட்டி, 'நான் இருப்பதா? இறப்பதா?' என்னும் கேள்வியை உம்மிடம் கேட்டுப் பதில் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நானும் இந்தக் கப்பல் டோ வர் துறைமுகத்திலிருந்து கிளம்பியது முதல் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதற்கு இதுவரையில் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 'நாளைக்கு நாளைக்கென்று' நாள் போய் வருகிறது. 'பொறுத்ததெல்லாம் போதும். இனிப் பொறுக்க முடியாது' என்பதற்கேற்ப இக்கடிதம் எழுதத் துணிந்தேன்.
இரண்டு மூன்று தடவைகளில் உம்மிடம் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்திருக்கிறேன் என்பது வாஸ்தவமே. அப்போதெல்லாம் நீர் 'முடியாது' என்று செப்பியிருக்கிறீர். ஆனால் மனப்பூர்வமாக அப்படி நீர் சொல்லவில்லையென்பது எனக்குத் தெரியும். ஸ்திரீகள் 'முடியாது' என்று சொன்னால், அது 'சரி' என்பதற்கு அடையாளம் என்பதை நான் அறியாதவன் அல்ல. மேலும் நான் மனப்பூர்வமாகக் கேட்கவில்லையென்றும் விளையாட்டுக்குக் கேட்கிறேன் என்றும் நீர் நினைத்திருக்கலாம். அவ்வாறு இல்லையென்றும், இந்த மாதிரி விஷயங்களில் விளையாடும் வழக்கம் எனக்கில்லையென்றும் உறுதி கூறுகிறேன்.
சுருங்கச் சொன்னால், நீர் என்னை மணம் புரிய இசைந்து என்னைப்போல் பாக்கியசாலி உலகில் வேறு யாருமில்லாமல் செய்ய வேண்டுமென்பதற்கு என்னுடைய காரணங்கள் வருமாறு:
(1) நான் உம்மைக் காதலிக்கிறேன்.
(2) நீர் என்னைக் காதலிக்கிறீர்.
(இதை நீர் மற்றவர்களிடமிருந்து எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் என்னிடமிருந்து மறைக்க முடியாது. மனத்திற்கு மனமே கண்ணாடியல்லவா?)
(3) என்னைப்போல் எல்லா வகையிலும் சிறந்த குணம், பணம், கல்வி, உருவம், அந்தஸ்து எல்லாம் பொருந்திய மணாளன் உமக்குக் கிடைப்பது அரிது.
(4) உம்மைப்போல் அழகும், குணமும், கல்வியும் பொருந்தியவர்கள் அநேகர் இருக்கலாமாயினும், அவர்களுடைய துர்ப்பாக்கியத்தினால் அப்படிப்பட்டவர்கள் மேல் என் மனம் செல்லவில்லை. அதிர்ஷ்டம் உமக்கு இருக்கும்போது அவர்கள் மேல் எப்படி என் மனம் செல்லும்?
(5) உமக்காக என்னையும், எனக்காக உம்மையுமே கடவுள் படைத்திருக்கிறார் என்பது திண்ணம். இதை நான் மட்டும் சொல்லவில்லை; இந்தக் கப்பலில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆகவே, கடவுளுடைய விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டுமல்லவா?
என்னுடைய கோரிக்கைக்கு இணங்க நீர் தயங்குவதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். உம்முடைய தகப்பனாருடைய நிலைமை எனக்குத் தெரியாதோ என்று நினைக்கலாம். ஆனால் அப்படி நினைக்க வேண்டாம். நான் அவ்வாறெல்லாம் ஏமாறுகிற பேர்வழியல்ல. உம் தகப்பனாருடைய ஜமீன் கடனில் மூழ்கியிருக்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். பின் ஏன் இந்தச் சம்பந்தத்துக்கு நான் சம்மதிக்கிறேன்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உம்முடைய தகப்பனாரிடம் இராஜதந்திரம் இருக்கிறது. என்னிடம் பணம் இருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்துவிட்டால், சென்னை அரசாங்கமே எங்கள் கையில் தான் - இந்த அபிப்பிராயம் எனக்கும் டாக்டர் சிங்காரம் அவர்களுக்கும் ஏககாலத்தில் தனித் தனியே தோன்றியது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்னொரு விஷயம்; நானும் டாக்டர் சிங்காரமும் சில சமயம் ஒரே விஷயத்தைச் சொல்ல நேர்ந்த போது, அவர் சொல்லிக் கொடுத்ததையே நான் சொன்னதாக நீர் சந்தேகப்பட்டீர். இந்தக் கடித விஷயத்தில் அத்தகைய சந்தேகம் உமக்கு ஏற்பட சிறிதும் நியாயம் இல்லை. இதை நானே எழுதினதுமல்லாமல் அவரிடம் காட்டக் கூடவில்லையென்பதை வற்புறுத்தி அறிவிக்கிறேன்.
கடைசியாக, என்னை மணம்புரிய இசையும்படி உம்மை நான் கேட்டுக்கொள்வது ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் என்பதை இங்கே தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியம்; அது என்னவெனில், நம்முடைய, சமஸ்தானத்தின் மானேஜர் மிஸ்டர் ஹுட்துரை சம்மதத்தின் பேரில் தான் இந்தக் கல்யாணம் நடக்கக்கூடும். சமஸ்தானம் மன்னர்களின் கல்யாணம் மற்றச் சாதாரண மனிதர்களின் கல்யாணங்களைப் போலல்ல. இது ஓர் இராஜாங்க விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மிஸ்டர் ஹுட் துரைக்கு உம்மைப் பிடித்திருக்குமென்று எனக்கும் பூரண நம்பிக்கை உண்டு. ஏனெனில், உம்மைப்போன்ற நாகரிகமடைந்த பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவர் பல தடவைகளில் சொல்லியிருக்கிறார். உம்மைப்பற்றி நான் தக்க முறையில் எடுத்துக் கூறினால் அவர் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியிராது.
இந்த நிபந்தனைக்குட்பட்டு நமது கல்யாணத்தை இப்போதே நிச்சயம் செய்துவிட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன்!
இந்தக் கடிதத்துக்குத் தாங்கள் உடனே சம்மதமான பதிலைத் தெரிவிக்க வேண்டியது. இன்று மாலைக்குள் தங்களிடமிருந்து அநுகூலமான பதில், கடித மூலமாகவோ வாய்மொழியாகவோ கிடைக்காவிட்டால் இன்றிரவு நான் தற்கொலை செய்து கொள்வேன்; அல்லது அந்த முயற்சியில் பிராணனை விடுவேன் என்பது சத்தியம், சத்தியம், சத்தியம்.
இங்ஙனம்,
நளின பூஷண ராவ்
ராஜா ஆப் ரங்கதுர்க்கம்
2
மேற்படி கடிதத்தைப் படித்ததும் முதலில் கொஞ்ச நேரம் ரங்கராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. அப்புறம் சிறிது விளங்க ஆரம்பித்தது. புத்தகங்கள் நிறையப் படித்து ஜீரணிக்கப் பெறாதா பொறுக்கி எடுத்த முட்டாள் ஒருவனால் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஜமீன்தார்கள், ராஜாக்கள் முதலியோரிடம் ரங்கராஜன் எப்போதுமே அதிக மதிப்பு வைத்ததில்லை. ஆனால் இத்தகைய கடிதம் எழுதக் கூடிய புத்திசாலி ஒருவன் அவர்களிடையே இருப்பான் என்று அவன் கூட எதிர்பார்த்தது கிடையாது. அதிலும் அந்தக் கடைசி வாக்கியம்!
ஒரு விஷயம் அவனுக்கு திருப்தியளித்தது. இந்தக் கடிதம் யாருக்கு எழுதப் பெற்றதோ, அந்தப் பெண்மணி இந்த வடிகட்டின அசட்டினுடைய அதிசயமான காதலை ஏற்றுக் கொள்ளவில்லையென்பது நிச்சயம். ஆனால் உடனே இன்னோர் எண்ணம் தோன்றியது; அப்பெண் தன்னைப் பார்த்தபோது, இக்கடிதத்தை எழுதிய புள்ளி என்று தானே நினைத்திருப்பாள்? ஐயோ! அவமானமே!
ரங்கராஜனுக்கு வெகு கோபம் வந்தது. அந்த முட்டாள் டாக்டரைக் கண்டு இரண்டு திட்டுத் திட்டி விட்டுக் கடிதத்தை அவரிடம் கொடுத்து வர வேண்டுமென்று கிளம்பினான். அறைக்கு வெளியே நாலடி வைத்ததும் ஓர் இளம்பெண் எதிரில் வருவதைக் கண்டான். முதன் முதலில் தனக்கு ஸ்மரணை வந்தபோது எதிரில் நின்றவளும், புகைப்படத்திலிருந்தவளும் இந்தப் பெண் தான் என்பதில் சந்தேகமில்லை. சட்டென்று ஒரு யோசனை உதித்தது. அந்தப் பித்துக்கொள்ளி டாக்டரைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதிலாக இவளிடம் கடிதத்தை கொடுத்து விட்டாலென்ன?
நல்ல யோசனைதான். ஆனால் எனது கதாநாயகனைப் பற்றி இதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதை நிறைவேற்ற அவனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. சர்வகலாசாலையின் பரீட்சை மண்டபம் எதிலும் ஏற்படாத மயக்கமும் தயக்கமும் இப்போது அவனுக்கு ஏற்பட்டன. இந்த நெஞ்சு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறது? பகவானே! இதோ நெருங்கி வந்துவிட்டாள், ஆனால் இந்த நாக்கு ஏன் இப்படி ஒட்டிக் கொள்கிறது? -இந்த அசந்தர்ப்பமான நிலைமையிலிருந்து அவனை என் கதாநாயகியாக்கும் விடுதலை செய்தாள்.
"என்னுடைய கடிதம் ஒன்று தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அப்படியானால் அதைத் தயவுசெய்து கொடுத்து விடுகிறீர்களா?" என்று ஸ்ரீமதி பிரேமலதா கேட்டபோது, ரங்கராஜன் இரண்டாந்தடவை சமுத்திரத்திலிருந்து தன்னை யாரோ தூக்கி எடுத்துக் காப்பாற்றியது போன்ற உணர்ச்சியடைந்தான். ஆனால், இன்னமும் சிறிது தடுமாற்றத்துடனேயே, "மன்னிக்க வேண்டும், அந்தக் கடிதம் என்னிடம் வந்ததற்கு நான் ஜவாப்தாரியல்ல. இப்போது அதைத் திருப்பிக் கொடுப்பதற்காகத்தான் அந்தப் பைத்தியக்கார டாக்டர்" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தை நீட்டினான். பிரேமலதா அதை வாங்கிக் கொண்டு "அவர்கள் பேரிலெல்லாம் குற்றம் சொல்லக் கூடாது. என்னுடைய தவறுதான். நான் உடனே அதைக் கிழித்தெறிந்திருக்க வேண்டியது. இருந்தாலும் ரொம்ப விசித்திரமான கடிதமாயிருந்தபடியால் வைத்திருக்கலாமென்று தோன்றிற்று," என்று சொல்லிக் கொண்டே அதைச் சுக்கு சுக்காய்க் கிழித்துச் சமுத்திரத்தில் எறிந்தாள். இதற்குள் அவர்கள் கைப்பிடிக் கம்பிகளின் ஓரமாய் வந்திருந்தார்கள்.
"அந்த டாக்டர் பைத்தியம் அக்கடிதத்தை நான் எழுதினேன் என்று நினைத்துக் கொண்டிருப்பது தான் பெரிய வேடிக்கை," என்றான் ரங்கராஜன்.
"அவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியவில்லை. ஒருவர் நான் இன்னார் இல்லையென்றால் 'இல்லை; நீர் அவர் தான்' என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? என்னை அப்படி யாராவது சொன்னால் கோபந்தான் வரும்," என்றாள் பிரேமலதா.
இவள் சொல்வதில் ஏதேனும் உள்ளர்த்தம் இருக்குமோ என்று ரங்கராஜன் சந்தேகம் கொண்டான். அதாவது உண்மையில் தான் ரங்கதுர்க்கம் ராஜாவென்றே எண்ணி, ஆனால், புத்தி மாறாட்டமாயிருக்கும் நிலைமையில் அதை வற்புறுத்திச் சொல்லாமலிருப்பதே நலமென்று கருதி இப்படிக் கூறுகிறாளோ என்று நினைத்தான்.
இதைப் பற்றி அவன் சிந்திப்பதற்குள் பிரேமலதா "ஆமாம், நீங்கள் மூடர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ விருப்பமின்றிக் கடலில் குதித்ததாகக் காப்டனிடம் சொன்னீர்களாமே, அது உண்மையா?" என்று கேட்டாள்.
"உண்மைதான். ஆனால், அப்படிச் செய்தது தவறு என்பதை இப்போது உணர்கிறேன்" என்றான் ரங்கராஜன்.
"ஜலத்துக்குள் முழுகினதும் பயமாயிருந்ததாக்கும்!" என்று சொல்லி பிரேமா புன்னகை புரிந்தாள்.
இவ்வாறு ஒரு பெண்ணினால் பரிகசிக்கப்படும் நிலைமையைத் தான் அடையக் கூடுமென்று ரங்கராஜன் கனவிலும் கருதியதில்லை. ஒரு பக்கம் கோபம்; ஒரு பக்கம் வெட்கம்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. பயம் என்பது எப்படியிருக்குமென்றே எனக்குத் தெரியாது." இப்படிச் சொன்னதும் ரங்கராஜனுக்கு வெட்கமும் கோபமும் இன்னும் அதிகமாயின. ஒரு பெண்ணிடம் தான் தைரியசாலி என்பதைத் தெரிவித்துக் கொள்ளும்படியான நிலைமை வந்ததே! என்ன வெட்கக் கேடு! எக்காரணத்தினாலோ அவளை விட்டுச் செல்வதற்கும் மனம் வராததால் ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று.
"பின்னர் இந்தப் பச்சாதாபம் ஏன் ஏற்பட்டது?" என்றது பிரேமாவின் பரிகாசக் குரல்.
"என்ன பச்சாதாபம்?"
"கடலில் விழுந்தது தவறு என்ற எண்ணம்."
இதற்குத் தக்க விடை கண்டுபிடிக்க ரங்கராஜன் ஒரு பெரிய மானஸிக முயற்சி செய்தான். "தங்களைப் போன்ற பெண்மணி வசிக்கக்கூடிய உலகத்தை விட்டுப் போக முயல்வது தவறேயல்லவா?" என்றான். இவ்வளவு தைரியம் தனக்கு எப்படி வந்தது என்பதை நினைக்க அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.
பிரேமலதாவின் முகத்தில் நாணத்தின் ஒரு மெல்லிய சாயை தோன்றி மறைந்தது. பின்னர் அவள், "அதுதான் உண்மையான காரணமென்றால் நீங்கள் கடலில் விழுந்ததில் தவறில்லையே!" என்றாள்.
"அது எப்படி?"
"கடலில் விழுந்ததனால் தானே என்னைப் போன்ற பெண்மணி ஒருத்தி இருப்பது உங்களுக்குத் தெரிய வந்தது?"
ரங்கராஜன் தன் மனத்திற்குள், "அப்பனே! உனக்கு நன்றாய் வேண்டும்! நீ தான் மகா மேதாவி, உலகத்திலேயே பாக்கியெல்லாம் முட்டாள்கள் என்று எண்ணியிருந்தாயல்லவா? இப்போது கேவலம் ஒரு சிறு பெண்ணுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழி!" என்று சொல்லிக் கொண்டான்.
3
"உங்களுக்கு ஆட்சேபமில்லையென்றால் இந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசலாமென்று தோன்றுகிறது," என்றாள் பிரேமலதா.
"இதில் ஆட்சேபம் என்ன இருக்கக் கூடும்?" என்றான் ரங்கராஜன்.
"இல்லை; உலகத்தில் எல்லாருந்தான் உட்காருகிறார்கள். ஆனால், புத்திசாலிகளும், அவர்கள் உயிர் வாழ்வதற்கு இந்த உலகத்தைத் தகுதியாக்குகிறவர்களும் உட்காரலாமோ என்னவோ என்று சந்தேகமாயிருந்தது."
ரங்கராஜன் வாய்விட்டுச் சிரிக்க வேண்டி வந்தது. பார்த்தால் பரம சாதுவாய்த் தோன்றும் இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாய்த்துடுக்கு எப்படி வந்தது என்று வியந்தான்.
இருவரும் உட்கார்ந்தார்கள். வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் வெளி வந்து கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசிற்று. அலைகளினால் மோதப்பட்ட கப்பல் தொட்டில் ஆடுவது போல் அசைந்து கொண்டிருந்தது.
"இந்த உலகம் சிலருக்கு வெறுத்துப் போவது ஏன் என்பது எனக்கு விளங்குவதேயில்லை. உலகத்தில் அநுபவிப்பதற்கு எவ்வளவு இன்பங்கள் இருக்கின்றன! உதாரணமாக, சாயங்கால வேளைகளில் கப்பல் பிரயாணத்தைப் போல் இன்பமளிப்பது வேறென்ன இருக்கக்கூடும்?"
"உண்மைதான், ஆனால், இவையெல்லாம் இரண்டாந்தரமான சந்தோஷங்களே. ஒத்த மனமுள்ளவர்களின் சல்லாபமும் சேரும்போதே இயற்கை இன்பங்கள் கூட உயிருள்ளவையாகின்றன."
இந்தக் கட்டத்திலேதான், இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூறியபடி டாக்டர் சிங்காரமும் ஜமீன்தாரிணியும் அங்கே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலேயே சிறிது பிரமித்து நின்ற பிறகு, அவர்கள் அருகில் வந்தார்கள். "ராஜா சாகிப், நான் செய்த மெஸ்மெரிஸம் பலித்துவிட்டதல்லவா? ஹஹ்ஹஹ்ஹா!" என்று சிரித்துக் கொண்டு டாக்டர் சிங்காரம் ரங்கராஜன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ஜமீன்தாரிணி, "என்ன ராஜாசாகிப்! உடம்பு சௌக்கியமாயிருக்கிறதா?" என்று கேட்டாள்.
ரங்கராஜன் எழுந்து நின்று, "சௌக்கியம் தான், அம்மா! உட்காருங்கள்," என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினான்.
"இல்லை, இல்லை. நாங்கள் வேறு காரியமாகப் போகிறோம். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்" என்றாள் ஜமீன்தாரிணி.
டாக்டர் சிங்காரம், "பிரேமா! ஜாக்கிரதை! ராஜா சாகிப் மறுபடியும் கம்பிக்கு அருகே போனால் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்," என்றார்.
"நானும் கூட விழுவதற்கா? அவ்வளவு தியாகத்திற்கு நான் தயாராகயில்லை," என்றாள் பிரேமா. ஆயினும் அச்சமயம் அவள் ரங்கராஜனைப் பார்த்த பார்வை அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவிப்பதாயிருந்தது.
டாக்டரும் ஜமீன்தாரிணியும் போன பிறகு ரங்கராஜன், "இந்த டாக்டரைப் போன்ற மனிதர்களுடனேயே ஒருவன் பழக வேண்டுமென்றிருந்தால் கடலில் விழுந்து பிராணனை விடலாமென்று தோன்றுவது ஆச்சரியமா?" என்றான்.
"நான் அப்படி நினைக்கவில்லை. அசட்டுப் பேச்சுக்களைக் கேட்பதிலும் அசட்டு மனிதர்களுடன் பழகுவதிலுங்கூட ஒரு ரஸம் இல்லையா? கடவுள் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் அநேக சந்தோஷங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாமே? உதாரணமாகப் பாருங்கள்; நான் இப்போது கிழித்தெறிந்த காதல் கடிதம் எவ்வளவு ரஸமாயிருந்தது? இம்மாதிரி கடிதம் ஓர் ஆசிரியரின் கற்பனையிலிருந்து தோன்றியிருந்தால், நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போம்?"
"வாஸ்தவந்தான். இந்தக் கடிதத்துக்கு உபமானமாகச் சொல்லக் கூடிய கட்டம் ஒன்று ஜேன் ஆஸ்டின் எழுதிய "பிரைட் அண்டு பிரெஜுடிஸ்" என்னும் நாவலில் வருகிறது."
"காலின்ஸ், எலிஸபெத்திடம் தன் காதலை வெளியிடுகிறானே, அதைத்தானே சொல்கிறீர்கள்?"
ரங்கராஜனுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. ஜேன் ஆஸ்டின் நாவல்களின் சுவையை அறிந்து அநுபவிப்பது எல்லாருக்கும் சாத்தியமில்லையென்பது அவன் எண்ணம். இந்தப் பெண் அதைப் படித்திருந்ததுமல்லாமல், தான் எந்த கட்டத்தை மனத்தில் நினைத்தானோ, அதையே சொல்கிறாள்.
"ஜேன் ஆஸ்டின் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்குமோ?" என்று கேட்டான்.
அவ்வளவுதான்! அப்புறம் இரண்டு மணி நேரம் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக ஒருவருக்குப் பிடித்த ஆசிரியர்களும் புத்தகங்களும் இன்னொருவருக்கும் பிடித்திருந்ததாகத் தெரியவந்தது.
கடைசியாக, அவர்கள் பிரிந்து செல்லும் தருவாயில் பிரேமலதா, "நீங்கள் ரங்கதுர்க்கம் ராஜா இல்லையென்று எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை. நானாயிருந்தால் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும் என்று பேசாமல் இருந்து விடுவேன்," என்றாள்.
4
ரோஸலிண்ட் கப்பல் பம்பாய்த் துறைமுகத்துக்குச் சாதாரணமாய் வந்து சேர வேண்டிய தினத்துக்கு மூன்று நாளைக்குப் பிறகு வந்து சேர்ந்தது. துறைமுகத்துக்குச் சுமார் இருநூறு மைல் தூரத்தில் கப்பல் வந்தபோது பெரும் புயலடித்ததாகவும், அதன் காரணமாகக் கப்பல் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தன. துறைமுகத்துக்குச் சமீபத்தில் வந்து கப்பல் நின்றதும் தயாராய் அங்கே காத்திருந்த படகு ஒன்றிலிருந்து அவசரமாய் ஒரு மனிதன் கப்பலில் ஏறினான். அவன் நேரே கப்பல் தலைவரிடம் சென்று ஒரு தந்திச் செய்தியைக் கொடுத்தான். அதைப் படித்ததும் காப்டனுடைய முகம் சிவந்ததைப் பார்த்தால், தலைகால் தெரியாத கோபம் அவருக்கு அதனால் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று ஊகிக்க இடமிருந்தது. சாதாரணமாய், மிதமிஞ்சிக் குடித்திருக்கும் போது கூட அவர் முகம் அவ்வாறு சிவந்தது கிடையாது. வந்த தந்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, "எங்கே அந்த மோசக்கார பையன்?" என்று கேட்டுக் கொண்டே அவர் விரைந்து நடந்தார். கடைசியாக, அவர் ரங்கராஜனைக் கண்டுபிடித்ததும், "மிஸ்டர்! எங்களையெல்லாம் நீர் ஏமாற்றி விட்டீரல்லவா? இந்தியர்களே இப்படித்தான்," என்றார்.
"நானா ஏமாற்றினேன்? என்ன ஏமாற்றம்?" என்று புன்னகையுடன் ரங்கராஜன் கேட்டான்.
பக்கத்திலிருந்த டாக்டர் சிங்காரம், "என்ன காப்டன் இந்தியர்களைப் பற்றி இப்படி அவதூறு கூறுகிறீர்? யார் என்ன ஏமாற்றினார்கள்?" என்றார். ஜமீன்தாரிணியும் கூடச் சேர்ந்து, "என்ன, என்ன?" என்று கேட்டாள்.
"இதோ பாரும் இந்தத் தந்தியை," என்று காப்டன் தந்தியை நீட்டினார்.
ரங்கராஜன் கையை நீட்டி தந்தியை வாங்கினான். அவன் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக் கொண்டது. தன் ஜீவியத்தின் அபூர்வ இன்பக் கனவு இந்த க்ஷணத்தோடு முடிவடையப் போவதாக அவனுக்குத் தோன்றிற்று.
-------------
நான்காம் பாகம்
1
"கொண்டு வா கத்தி! இதோ இந்தக் கண்களைத் தோண்டி எறிந்து விடுகிறேன். இப்படி ஏமாற்றுகிற கண்கள் இருந்தாலென்ன? இல்லாமல் நாசமாய்ப் போனாலென்ன?" என்று அலறினார் டாக்டர் சிங்காரம். அவர் கையில் ரங்கராஜனிடமிருந்து வாங்கிய தந்தி இருந்தது.
"என்ன? என்ன?" என்று தவித்தாள் ஜமீன்தாரிணி.
இதோ பாருங்கள் என்று தந்தியை அவளிடம் கொடுத்தார். பிறகு ரங்கராஜனை ஒரு நொடிப் பார்வை பார்த்துவிட்டு, "பேர்வழி முழிப்பதைப் பார்!" என்றார்.
ஜமீன்தாரிணியும், பிரேமலதாவும் ஏக காலத்தில் தந்தியைப் படித்தார்கள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.
"மால்டா: உங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கதுர்க்கம் ஜமீன்தாரைக் கடலிலிருந்து மீட்டோ ம். அவர் தம்மைப் பற்றிச் சரியான தகவல் கொடுக்க இரண்டு மூன்று நாளாகி விட்டது. அவருடைய சாமான்களையெல்லாம் லண்டனுக்குத் திருப்பியனுப்பி விடவும். எங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கராஜன் என்னும் வாலிபனைப் பற்றித் தகவல் தெரியவில்லை. ஒரு வேளை அவன் தங்களால் மீட்கப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். அவனுடைய பெட்டியிலிருந்த ரூ. 1000 சொச்சத்தைக் குறிப்பிடும் விலாசத்துக்கு அனுப்பி விடுகிறோம். - காப்டன் கட்லெட்."
ஜமீன்தாரிணி அதைப் படித்ததும் முன்னால் வந்து "காப்டன்! இது நிஜந்தானா?" என்று கேட்டாள்.
"எது நிஜந்தானா?"
"இந்தத் தந்தி நிஜந்தானா?"
"இதோ உங்கள் அருமையான டாக்டர் இருக்கிறாரே. அவருடைய கழுத்தின் மேல் தலை இருப்பது நிஜந்தானா?"
"அதுதான் நானும் கேட்கிறேன். நீர் நிஜந்தானா? நான் நிஜந்தானா? இந்த உலகம் நிஜந்தானா?" என்று டாக்டர் சிங்காரம் அடுக்கினார். "வாழ்வாவது மாயம்; இது மண்ணாவது திண்ணம்" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
"பிரேமா! வா, போகலாம்" என்று சொல்லி ஜமீன்தாரிணி பிரேமாவைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். டாக்டர் சிங்காரமும் பின்னால் போனார். அவர்கள் மூலை திரும்பும்போது, "அந்த மெஸ்மெரிஸ்டும் கப்பல் டாக்டரும் எங்கே காணோம்?" என்று பிரேமா கூறியது ரங்கராஜன் காதில் விழுந்தது. உடனே, அந்தப் பக்கம் பார்த்தான். அதற்குள் அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சற்று முன்பாகவே அவன் அந்தப் பக்கம் பார்த்திருந்தால் பிரேமாவின் கண்கள் அறிவித்த செய்தியை அவன் பெற்றிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக அவன் இப்போது காப்டனுடைய கடுகடுத்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது.
"என்ன சொல்கிறீர இப்போது?" என்றார் காப்டன்.
"நீர் அல்லவா சொல்ல வேண்டும்?"
"சொல்வது என்ன? இனிமேல் ஒரு நிமிஷங்கூட உம்மைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. இந்தப் படகிலேயே இறங்கிப் போய் விடும்."
"பரஸ்பரம் அப்படித்தான், காப்டன்! இதோ நான் போகத்தான் போகிறேன். ஆனால் ஒரு விஷயம்; அன்றைய தினம் நான் உம்மிடம் வந்து, 'நான் ரங்கதுர்க்கம் ராஜா இல்லை'யென்று படித்துப் படித்துச் சொல்லவில்லையா? என் பேரில் இப்போது எரிந்து விழுகிறீரே, ஏன்?"
"அதற்கென்ன செய்வது? ரங்கதுர்க்கம் ராஜாவைப் போன்ற இரண்டு முட்டாள்களை உலகம் ஏககாலத்தில் தாங்காது என்று நினைத்தேன்."
"இரண்டு பேர் அல்ல, நாலு பேரைக் கூட தாங்க முடியுமென்று இப்போது தெரிந்து விட்டதல்லவா?"
"அது என்ன?"
"ஆமாம், ரங்கதுர்க்கம் ராஜா ஒன்று, டாக்டர் சிங்காரம் ஒன்று, உங்கள் கப்பல் டாக்டர் ஒன்று, அப்புறம் தாங்கள்."
காப்டன் பயங்கரமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவசரமாய்த் திரும்பிச் சென்றார்.
2
ரங்கராஜன் எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள் ஒன்றுமில்லை. எனவே, உடனே கப்பலிலிருந்து படகில் இறங்கினான். படகு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. புயலடித்து ஓய்ந்திருந்த கடல் இப்போது வெகு அமைதியாயிருந்தது. ஆனால் அவனுடைய உள்ளக் கடலிலோ அதற்கு நேர்மாறான நிலைமை குடி கொண்டிருந்தது. அங்கே வெகு வேகமுள்ள புயல்காற்று, சுழற்காற்று, சூறைக்காற்று எல்லாம் சேர்ந்து அடித்தன. பிரமாண்டமான அலைகள் எழுந்து விழுந்தன.
'பிரிட்டானியா' கப்பலிலிருந்து கடலில் குதித்த வரையில் அவனுடைய ஜீவிய சம்பவங்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் அதிவிரைவாய்த் தோன்றி மறைந்தன. பின்னர், 'ரோஸலிண்ட்' கப்பலில் அவனுடைய ஐந்து நாள் வாழ்க்கையைப் பற்றி எண்ணிய போது மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. "இவ்வளவு பெரிய சந்தோஷம் நீடித்திருக்க முடியாது. கண் விழித்ததும் பொய்யாகும் கனவைப் போல் விரைவிலே மறைந்து மாயமாய்விடும்" என்று இடையிடையே தன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்த பயம் உண்மையாகிவிட்டதே!
"இந்தியர்களுடைய வாழ்க்கையில் இந்நாளில் புதுமை ரஸிகத்துவம் எதுவும் இருக்க முடியாது. சாரமற்ற வாழ்வு. இத்தகைய வாழ்க்கை நடத்துவதை விட இறப்பதே மேல்" என்று நான் எண்ணியது தவறு என்பதை நிரூபிப்பதற்காகவே பகவான் இந்த ஆச்சரியமான அநுபவத்தை அளித்தார் போலும்!
நிகழ்ந்தது எல்லாவற்றையும் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கினான். முதல் நாள் அந்த அசட்டுக் காதல் கடிதத்தை வியாஜமாகக் கொண்டு அவர்களுக்குள் சம்பாஷணை ஏற்பட்டதும், நெடு நேரம் பேசிக் கொண்டிருந்ததும், அன்றிரவெல்லாம் லவகேசமும் தூக்கமின்றித் தனது வாழ்க்கையில் நேர்ந்த இந்த அதிசயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தன. இரவு சென்று பொழுது விடிந்ததும் ஒரே நினைவுதான். பிரேமலதாவை எப்படிச் சந்திப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடிப் போவது?
ஆனால் கப்பலாகையால் இந்தக் கஷ்டம் அவ்வளவாகத் தோன்றவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தால் ஒருவரையொருவர் சந்திக்கச் சந்தர்ப்பங்களுக்குக் குறைவு கிடையாது. எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே சந்திப்பு ஏற்பட்டது. பேச்சிலே அவர்கள் ஆழ்ந்துவிட்டபோது உலகத்தையே மறந்து விட்டார்கள். ஜமீன்தாரிணி உணவு நேரத்தை ஞாபகமூட்டுவதற்கு வந்தாள். ரங்கராஜனையும் தங்களுடன் வந்து சாப்பிடுமாறு அழைத்தாள். அது முதல் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் பெரும்பாலும் அவர்கள் சேர்ந்திருக்கத் தொடங்கினார்கள்.
கரையோரமாகப் பலத்த புயல் அடிக்கும் காரணத்தினால் கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறதென்றும் பிரயாணம் நீடிக்கலாமென்றும் தெரிய வந்த போது ரங்கராஜனுடைய இருதயம் சந்தோஷமிகுதியினால் வெடித்து விடும் போல் இருந்தது.
அந்த ஐந்து தினங்களில் முதல் இரண்டு நாளைக்கும் பிந்தைய மூன்று நாட்களுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி ரங்கராஜன் நினைத்தான். முதலில் நேரமெல்லாம் பேச்சிலேயே போயிற்று. பின்னால் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதில் சென்றது. முதலில் எவ்வளவு நாள் பேசினாலும் போதாது போலவும், அவ்வளவு விஷயங்கள் பேசுவதற்கு இருப்பது போலவும் தோன்றியது. ஆனால் போகப் போகப் பேசுவதற்கு விஷயமே இல்லை போல் ஆகிவிட்டது. ஹிருதயம் நிறைந்துள்ள போது பேச்சு வருவதில்லை. பேசினால் தன் இருதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் அதுவோ பேச்சு வரம்பைக் கடந்து நின்றது. அதிலும் அந்த அசட்டுக் காதல் கடிதத்தைப் படித்த பின்னர், அணுவளவேணும் அறிவுள்ளவர்கள் காதல் பேச்சுப் பேச முடியுமா? ஒன்றுந்தான் பேசுவதற்கில்லையே; விடைபெற்றுக் கொண்டு பிரிந்து போகலாமென்றால், அதற்கும் மனம் வருவதில்லை. வாய் பேசாவிட்டால், பேச்சு இல்லையென்று அர்த்தமா? கண்களோடு கண்கள், ஹிருதயத்தோடு ஹிருதயம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன.
இடையிடையே வாய்க்கும் பேசுவதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தபோது, விஷயம் ஹிருதய சம்பாஷணையுடன் ஒத்ததாகவே இருந்தது.
"இளம்பிராயத்தில் நான் ஓர் இலட்சிய கன்னிகையை என் உள்ளத்தில் உருவகப்படுத்துவதுண்டு. அவளிடம் இன்னின்ன அம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் நேரம் போவது தெரியாமல் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். ஆனால், நாளாக ஆக, 'இது சுத்தப் பைத்தியம்; இந்த மாதிரி நமது நாட்டில் இருக்கவே முடியாது' என்று எண்ணி விட்டு விட்டேன். வெகு நாளைக்குப் பின்னர் இன்று என் மனோராஜ்யக் கன்னிகையை நேருக்கு நேர் காண்கிறேன். ஆகையாலேயே, ஒவ்வொரு சமயம் இதெல்லாம் வெறும் பொய்யோ என்று தோன்றுகிறது," என்றான் ரங்கராஜன்.
"நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். என்னுடைய இலட்சியத்தைப்பற்றி நான் அப்படிச் சொல்லிக் கொள்வதற்கில்லை," என்றாள் பிரேமா.
ரங்கராஜனுடைய முகம் வாடிற்று. பிரேமாவின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று தூரத்திலே பறந்த கடற்பறவையை வெகு கவனமாக பார்க்கத் தொடங்கினான்.
"ஆமாம், நானும் சிறிது காலமாக ஓர் இலட்சிய புருஷரை மனத்தில் உருவகப்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்புவரை என் லட்சியத்துக்கு கிட்டத்தட்ட வரக்கூடியவரைக்கூட நான் சந்திக்கவில்லை. கடைசியாக ஒருவரைச் சந்தித்த போது, 'இவர்தான்' என்று தோன்றிற்று. ஆனால் அருகில் நெருங்கிப் பார்த்தால் என்னுடைய இலட்சியத்தைவிட மிக உயர்ந்து விளங்குகிறார். இன்னும் கொஞ்சம் கீழே இருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது" என்றாள்.
இது என்ன உண்மையா, பரிகாசமா? அவளுடைய புன்னகை இரண்டுக்கும் இடம் தருவதாயிருந்தது.
மற்றொரு நாள் தமிழில் நவீன இலக்கியங்கள் அதிகம் இல்லாமலிருப்பது குறித்துப் பேச்சு வந்தது.
"இவ்வளவெல்லாம் படித்திருக்கிறீர்களே, நீங்கள் ஏன் தமிழில் நல்ல நாடகம் ஒன்று எழுதக் கூடாது?" என்று பிரேமா கேட்டாள்.
"அந்த எண்ணம் எனக்கு வெகு நாளாக உண்டு. ஆனால் ஆனால்... இதுவரையில் அதற்குத் தூண்டுதல் ஏற்படவில்லை."
"நான் வேண்டுமானால் சொல்கிறேன்; உங்களால் நாடகம் ஒரு நாளும் எழுத முடியாது."
"ஏன் இத்தகைய சாபம்?"
"நாடகம் என்றாள் அதில் எல்லாப் பாத்திரங்களும் மேதாவிகளாகவும் புத்திசாலிகளாகவுமே இருக்க முடியாது. நடுத்தரமானவர்களும் அசடுகளும் கூட வேண்டும். நீங்களோ முதல் தர மேதாவிகளைத் தவிர வேறு யாரோடும் பேச மாட்டீர்கள்; பழக மாட்டீர்கள். ஆகையால், இயற்கையாய்த் தோன்றக்கூடிய நாடக பாத்திரங்களை உங்களால் சிருஷ்டிக்க முடியாது."
"உங்களிடம் அந்தக் குறை கிடையாதல்லவா? நீங்கள் தான் டாக்டர் சிங்காரம் உள்பட எல்லாருடனும் பழகுகிறீர்களே! நீங்களே எழுதலாமே?"
"என்னால் முடியாது. ஆனால் உங்களுக்கு நான் உதவி செய்யக்கூடும்."
"அப்படியானால் நாம் நாடகம் எழுதி முடிக்கும் வரையில் புயல் நீடித்திருக்க வேண்டுமே? கரை சேர்ந்தால் நான் எங்கேயோ, நீங்கள் எங்கேயோ?"
"உண்மையாகவா? கரை சேர்ந்ததும் நாம் பிரிந்து போவது நிஜமாயிருந்தால், இப்போதே பிரிந்துவிடலாமே?" என்று பிரேமலதா எழுந்து செல்லத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தி உட்காரச் செய்ய வேண்டியிருந்தது.
அப்படியெல்லாம் நடித்தவள் அந்தத் தந்தியைக் கண்டதும் எப்படி மாறிவிட்டாள்! சீ! இதென்ன உலகம்! இவ்வளவு கல்வி, அறிவு, சாதுர்யம், சாமர்த்தியம் எல்லாம் கேவலம் பட்டம், பணம் என்னும் பைசாசங்களுக்குப் பலியாவதற்குத்தானா? - கடலில் விழுந்த தன்னைத் தப்புவித்த முட்டாளை ரங்கராஜன் அப்போது மனமாரச் சபித்தான்.
ஆனால் உடனே வேறோர் எண்ணமும் தோன்றிற்று. ஏன் இவ்வாறு தான் மனக்கசப்பு அடைய வேண்டும்? தன் வாழ்நாளில் இத்தகைய இனிய கனவு ஒன்று ஏற்பட்டது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கலாமே? அதைப் பற்றிய சிந்தனையில் சந்தோஷம் அடைந்திருக்கலாமே? - இப்படி எண்ணியபோது அந்தக் கனவு நிகழ்ந்த இடமாகிய 'ரோஸலிண்ட்' கப்பலை ரங்கராஜன் நிமிர்ந்து பார்த்தான். தானும் அவளும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசிய அதே இடத்தில் பிரேமலதா துயர முகத்துடன் நின்று தன்னை நோக்குவது போல் ஒரு க்ஷணம் தோன்றிற்று. அடுத்த க்ஷணம் ஒன்றுமில்லை. சீ! இதென்ன வீண் பிரமை! இதற்குள் படகு கரையை அடைந்தது. பம்பாய் நகரில் பிரவேசித்ததும், ஸ்வப்ன உலகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தது போல் ரங்கராஜன் உணர்ந்தான்.
3
'இனி என்ன செய்வது?' என்னும் பிரச்சனை அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுவது போல் ரங்கராஜனுடைய சொந்த வாழ்க்கையில் இப்போது அதி தீவிரமாக ஏற்பட்டது. சீமைக்கு மறுபடியும் போகும் யோசனையைக் கைவிட வேண்டியதுதான். அது கடவுளுக்கே இஷ்டமில்லையென்று தோன்றுகிறது. போதும் சீமைப் பயணம்.
'பம்பாயில் தங்கி ஏதேனும் ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து விட்டால்?' என்று எண்ணிய போது, தானே வயிறு குலுங்கச் சிரித்தான். நாடோ டி வாழ்க்கையை வெறுத்துப் புதிய அநுபவங்களைத் தேடி அவன் புறப்பட்டதற்கு அது தக்க முடிவாயிருக்குமல்லவா?
இவ்வாறு பல யோசனைகள் செய்து கொண்டேயிருந்த போது திடீரென்று அவனுடைய ஜீவிய இலட்சியம் என்னவென்பது மனத்தில் உதயமாயிற்று. அவனுடைய கை விரல்கள் துடித்தன. "கொண்டா பேனாவும் காகிதமும்" என்று அவை கதறின. நூலாசிரியத் தொழிலுக்கு வேண்டிய அஸ்திவாரம் ஏற்கனவே அவனிடம் அமைந்திருந்தது. தூண்டுகோல் ஒன்று தான் பாக்கி; அதுவும் இப்போது ஏற்பட்டு விட்டது.
ஊருக்குப் போக வேண்டியதுதான்; நாவல்களும் நாடகங்களுமாக எழுதிக் குவித்துத் தமிழ் மொழியை ஆகாயத்தில் உயர்த்தியே விடுவது என்று தீர்மானித்தான்.
'பிரிட்டானியா' கப்பலில் விட்டிருந்த பணம் வந்து சேரும் வரையில் பம்பாயில் இருந்ததாக வேண்டும். அந்த நாட்களில் அவன் அந்த நகரை முழுதும் சுற்றிப் பார்த்து விட விரும்பினான். பம்பாயில் முக்கியமாக 'விக்டோ ரியா டெர்மினஸ்' ஸ்டேஷன் அவனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்ததாகத் தோன்றியது. தினந்தோறும் சாயங்காலம் 'மெட்ராஸ் மெயில்' புறப்படும் சமயத்துக்கு ரங்கராஜன் பிளாட்பாரத்தில் உலாவி வருவதைக் காணலாம். அப்படிச் செய்ததில் அந்தரங்க நோக்கம் ஒன்றும் அவனுக்கு லவலேசமும் கிடையாது. (அவ்வாறு அவன் நம்பினான்). முன்னைப் போல் ஜனங்களைக் கண்டு வெறுப்படைவதற்குப் பதிலாக, ஜனங்களைப் பார்ப்பதிலும் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனிப்பதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த புதிய உற்சாகமே அதன் காரணம். (இதுவும் அவனுடைய அபிப்பிராயமே.) ஆகையினால், ஒரு நாள் மாலை அவன் அவ்வாறு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, பிரேமலதா தீடீரென்று எதிர்ப்பட்டு, புன்னகையுடன், "ஓ! உங்களை நான் எதிர்பார்த்தேன்," என்று சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது.
"அப்படியா? ஆனால், தங்களை நான் எதிர்பார்க்கவில்லை" என்றான்.
"பொய்! பொய்! நீங்கள் சொல்வது பொய்," என்றாள் பிரேமா.
"ரொம்ப சந்தோஷம். ரங்கதுர்க்கம் ராஜா அப்புறம் கோபித்துக் கொள்ளப் போகிறார். நான் போய்..."
இந்தச் சமயம் பிரேமாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் ததும்பி நிற்பதை ரங்கராஜன் பார்த்தான். உடனே, "... போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று முடித்தான்.
"நானும் கூட வருவதில் ஆட்சேபம் இல்லையே!"
"எனக்கு ஆட்சேபம் இல்லை; ஆனால், ஒரு வேளை ராஜா சாகிப்பிற்கு"
"ரங்கதுர்க்கம் ராஜாவின் பாக்கியமே பாக்கியம்! உங்களைப் போன்ற ஒருவர் தம் பேரில் இவ்வளவு அசூயை கொள்வதற்கு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?
ரங்கராஜன் பிரேமலதாவைத் திரும்பி பார்த்தான். "அப்படியானால், நீ என்னை ரங்கதுர்க்கம் ராஜாவென்று எண்ணவில்லையா?" என்றான்.
"என்னைப்பற்றி இவ்வளவு தாழ்வாக நீங்கள் நினைத்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அபஸ்மாரக் காதல் கடிதத்தை எழுதக் கூடியவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தீர்கள்?"
ரங்கராஜன் மிக்க ஆச்சரியத்துடன் பிரேமலதாவின் முகத்தை நோக்கினான். "அப்படியானால், அந்தத் தந்தியைப் படித்ததும் நெருப்பை மிதித்தவர்கள் போல் எல்லாரும் சென்று விட்டீர்களே, அது ஏன்?" என்றான்.
"கடவுளே! அதுதானா கோபம்? கொஞ்சம் உங்களை வேடிக்கை செய்யலாமென்று நினைத்தோம். கப்பல் கரையோரமாய் போய் நிற்பதற்குள், நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் படகிலிறங்கிப் போய் விடுவீர்களென்று கண்டோமா?"
4
டிக்கட் வாங்கிக் கொண்டதும், "இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறதே, வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமா?" என்று ரங்கராஜன் கேட்டான்.
"அதையேதான் இப்போது சொல்ல நான் வாயெடுத்தேன்," என்றாள் பிரேமலதா. இவ்வாறு பிரேரணை ஏகமனதாக நிறைவேறவே, இருவரும் வெயிட்டிங் ரூமுக்குச் சென்றார்கள்.
"இந்தச் சிறு விஷயம் முதற்கொண்டு நம்முடைய மனம் இவ்வளவு ஒத்திருப்பது பெரிய ஆச்சரியமல்லவா?"
"அந்தத் தைரியத்தினால்தான் உங்களைக் கட்டாயம் இன்று ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்போம் என்று நிச்சயமாய் நம்பியிருந்தேன். இல்லாவிட்டால், இந்த ஒரு வாரமும் என்னால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது."
"நாம் ஒரு தவறு செய்தோம். அதனால் தான் இவ்வளவு நேர்ந்தது. கப்பலில் நம்முடைய ஹிருதயத்தின் நிலைமையை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
'நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை
நைந்த பழங் கதைகள் நானுடைப்பதோ'
என்று இருந்து விட்டேன். வாய்ப்பேச்சும் சில சமயம் அவசியம் என்று இப்போது தெரிகிறது."
"நடுக்கடலில் நாம் சந்தித்தது ஒரு பெரிய ஆச்சரியமல்லவா?"
"அதை ஆச்சரியமென்றா சொல்வது? நம்ப முடியாத அற்புதம் என்றே சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் உள்ள பதினெட்டுக் கோடி சொச்சம் ஸ்திரீகளில் பிரேமலதா ஒருத்தியைத் தவிர, வேறு யாரும் என்னைப் பைத்தியமாய் அடித்திருக்க முடியாது. நான் அன்று கடலில் குதித்திராவிட்டால் அவளைச் சந்தித்திருக்கவே முடியாது. இதைக் கடவுள் சித்தமென்பதா, விதி என்பதா, பூர்வஜன்ம சொந்தம் என்பதா என்று தெரியவில்லை."
இந்த முறையில் சம்பாஷணை போய்க் கொண்டிருந்தது. பைத்தியம்! எவ்வளவு சரியான வார்த்தை! இந்தத் தினுசு பைத்தியம் பிடிக்கும் போது, மகா மண்டூகங்களான ரங்கதுர்க்கம் ராஜாக்களுக்கும், மகா மேதாவிகளான ரங்கராஜாக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் போகிறது!
"பிரேமா! உன்னிடம் எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. நீ ஜமீன்தார் பெண்ணாயிருப்பது ஒன்று தான் பிடிக்கவில்லை" என்று பேச்சினிடையில் ரங்கராஜன் கூறினான்.
"அப்படியானால், நீங்கள் கவலையின்றி இருக்கலாம். உங்கள் காதலி மாசு மறுவற்றவள் என்று திருப்தி கொள்ளுங்கள். ஏனென்றால், நான் ஜமீன்தார் பெண் அல்ல!" என்றாள்.
"என்ன? என்ன? இது நிஜமா? அப்படியானால் நீ யாருடைய பெண்?" என்று கேட்டான்.
"டாக்டர் சிங்காரத்தினுடைய பெண் நான்" என்று பதில் வந்தது.
பிரேமலதா விஸ்தாரமாகக் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளியாயின.
டாக்டர் சிங்காரம் ஒரு தமாஷ் மனிதர். அவர் வைத்தியப் பரீட்சையில் தேறிய தம் பெண்ணை இங்கிலாந்தில் உயர்தரப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சமயம் பிரேமலதாவைப் பார்த்துப் பிரேமை கொண்ட ரங்கதுர்க்கம் ராஜா டாக்டர் சிங்காரத்திடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவள் குமாரபுரம் ஜமீன்தார் பெண் என்றும் தாம் அவர்களுடைய குடும்ப வைத்தியர் என்றும் இவர் குறும்புக்குச் சொல்லி வைத்தார். இவர்கள், ஏறிய கப்பலிலேயே ராஜாவும் ஏறவே, அந்தத் தமாஷைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ரங்கராஜன் முதன் முதலில் ஸ்மரணை தெளிந்து பார்த்தவுடனேயே, அவருக்கு இவன் வேறு ஆசாமி என்று தெரிந்து போயிற்று. ஆனால், கப்பல் காப்டனும் டாக்டரும் தம்மை அலட்சியமாய் நடத்தினார்களென்று அவருக்கு அவர்கள் மீது கோபம் இருந்தது. அவர்களுக்கு அசட்டுப் பட்டம் கட்டுவதற்காகவும், பொதுவாகத் தமாஷில் உள்ள பற்றினாலும், அவன் தான் ராஜாசாகிப் என்று வறுபுறுத்திக் கொண்டு வந்தார். ரங்கராஜன் இதையெல்லாம் கேட்டு அளவிலாத ஆச்சரியம் அடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. டாக்டர் சிங்காரத்தைப் பற்றித் தான் கொண்டிருந்த அபிப்பிராயம் எவ்வளவு தவறானது என்பதை நினைக்க அவனுக்குச் சிறிது வெட்கமாயிருந்தது.
பிரேமலதா கடைசியில், "என் தந்தை கப்பலிலிருந்து இறங்கிய அன்றே சென்னைக்குப் போய் விட்டார். என்னையும் அம்மாவையும் ஒரு வாரம் பம்பாயில் இருந்து விட்டு வரச் சொன்னார். அதற்குள் உங்களுக்குப் 'பிரிட்டானியா' கப்பலிலிருந்து பணம் வந்து விடுமென்றும், எங்களை ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் சந்திப்பது நிச்சயம் என்று கூடச் சொன்னார். உங்களை நான் மணம் புரிந்து கொள்வதற்கு என் தாய் தந்தை இருவரும் கப்பலிலேயே சம்மதம் கொடுத்து விட்டார்கள்" என்று கூறியபோது, ரங்கராஜன் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தான். வறண்ட பாலைவனம் போல் இருந்த தனது வாழ்க்கை இரண்டு வார காலத்தில் எவ்வளவு அதிசய அநுபவங்கள் நிறையப் பெற்றதாகிவிட்டதென்று எண்ணியபோது அவன் உள்ளம் பூரித்தது.
டிங், டிங், டிங் என்று மணி அடித்தது. ரங்கராஜனும் பிரேமலதாவும் கைகோர்த்துக் கொண்டு நடந்து வந்து வண்டியில் ஏறினார்கள். பிரேமலதாவின் தாயார் அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். வண்டி புறப்பட்டது. ரங்கராஜன் பிரேமலதா இவர்களுடைய புதிய வாழ்க்கைப் பிரயாணம் ஆரம்பமாயிற்று.
[இவ்வாறு நமது கதை ஆரம்பத்திலேயே முடிவடைகிறது. ஆதலின், "ஆரம்பத்திலே முடிவின் வித்து இருக்கிறது; முடிவிலே ஆரம்பத்தின் வித்து இருக்கிறது" என்னும் சிருஷ்டித் தத்துவம் இக்கதையினால் விளக்கப்படுகிறது. நான் சற்றும் எதிர்பாராதபடி இந்தக் கதை தத்துவப் பொருளை உள்ளடக்கியதாய் அமைந்து விட்டது குறித்து, தானே ஆரம்பமாயும், தானே முடிவாயும் விளங்கும் பரம்பொருளை வாழ்த்துகிறேன்.]
---------------
30. இடிந்த கோட்டை
சமீபத்தில் ஒரு பழைய சிநேகிதர் வீட்டுக்கு நான் போயிருந்த போது அவருடைய குழந்தை என்னை ஒரு கேள்வி கேட்டாள். "மாமா! இப்போதெல்லாம் நீங்கள் ஏன் கதையே எழுதுவதில்லை?" என்றாள். யுத்தத்தினால் காகிதம் ரொம்பக் கிராக்கியென்றும், நானே எழுதிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் எழுதுவதை விகடனில் போட முடியாதல்லவா என்றும், இம்மாதிரி அவளுக்கு ஏதேதோ சால்ஜாப்பு சொன்னேன். முக்கியமான காரணத்தை மட்டும் அவளுக்குச் சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன்:
உலக வாழ்க்கையில் உண்மையாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்க பார்க்க கதையாவது காரணமாவது என்று எனக்குத் தோன்றிவிடுகிறது. கதையில் கற்பனை செய்ய முடியாத அத்தனை அதிசயமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. ஒரு விசேஷமென்னவென்றால், அந்த அதிசய சம்பவங்களைக் குறித்து யாருக்கும் சந்தேகம் உண்டாவதில்லை. இப்படியும் நடக்குமா என்று எண்ணுவதில்லை. வெகு தூரத்தில் நடந்த சம்பவமானாலும் பத்திரிகைகளில் வந்து விட்டால் பூரணமாய் நம்பிவிடுவார்கள்.
உதாரணமாக, சென்ற மாதத்தில் நடந்த ஒரு விபரீத அதிசயத்தைக் கேளுங்கள்: பெங்களூரில் ஒரு விவாகம் நடந்தது. மணமகனும் மணமகளும் ஏழைகள். கல்யாணம் ஆனதும், மாப்பிள்ளையும் பெண்ணும் இன்னும் அவர்களைச் சேர்ந்தவர்களும் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். வழியில் மணப்பெண் அவளுடைய தோழி ஒருத்தியுடன் ஒரு மரத்தடியில் ஒதுங்கிச் சற்று இளைப்பாற உட்கார்ந்தாள். அப்போது அந்த மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து விழுந்தது. அது அந்த மணப்பெண்ணின் தலையில் விழுந்தது! மணப்பெண் தட்சணம் உயிர் துறந்தாள்!
இந்தப் பரிதாப சம்பவம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு கதையில் வந்திருந்தால், நாம் இலேசில் நம்பிவிடுவோமா? "அந்த மணப்பெண் அந்த மரத்தடிக்குத் தானா போயிருக்க வேண்டும்? வேறு மரத்தடிக்குப் போயிருக்கக் கூடாதா? அந்த மரக்கிளை ஐந்து நிமிஷத்துக்கு முன்பே ஒடிந்து விழுந்திருக்கக் கூடாதா? அதுவும் மணப்பெண் தலையில் பார்த்துத்தானா விழ வேண்டும்? பக்கத்திலுள்ள யார் தலையிலாவது விழக்கூடாதா?" என்று ஆயிரம் ஆட்சேபங்களைச் சொல்வோம்.
இதை நினைக்கும் போது தான், எனக்குக் கதை எதற்காக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது. என் நண்பனின் பெண்ணைப் போன்றவர்களைத் திருப்தி செய்வதற்காக ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்றால் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஒன்றையே எழுதிவிடலாமென்றும் தோன்றுகிறது! அத்தகைய வாழ்க்கைச் சம்பவம் ஒன்றைத்தான் இப்போது எழுத உத்தேசித்திருக்கிறேன்.
2
ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை நானும் என் சிநேகிதர்கள் இருவரும் திருவண்ணாமலைக்குப் போனோம். அண்ணாமலைநாதர், ரமணரிஷிகள், எஸ்.வி.வி. ஆகிய இந்த மூன்று பேரையும் பார்த்துவரும் நோக்கத்துடன் நாங்கள் புறப்பட்டோ ம். அப்போது எஸ்.வி.வி. தமது ஆங்கிலக் கட்டுரைகளில் "ஜயா" என்னும் நாகரிக நங்கையைப் பற்றி அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார். "இப்படிப்பட்ட மாதரசியை வாழ்க்கைத் துணையாக அடைந்த பாக்கியசாலி யாரோ? அவரை அவசியம் பார்க்க வேண்டும்!" என்று எங்களுக்கு ஆவலாயிருந்தது.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குப் போகும் வழியில் செஞ்சிக் கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கு வெகு நாளாக உண்டு. போகும் போது கோட்டைக்கு அருகில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு, அந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற பிரதேசத்துக்குள் சென்று சுற்றிப் பார்த்தோம். பாழடைந்த அரண்மனைகளையும், அந்தப் புரங்களையும், மண்டபங்களையும், மதில்களையும், நெற்களஞ்சியங்களையும், குதிரைக் கொட்டாரங்களையும் பார்க்கப் பார்க்க, பிரயாண ஆரம்பத்தில் எங்கள் உள்ளத்தில் இருந்த உற்சாகமெல்லாம் போய் சோர்வு அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆனாலும் அந்தக் காட்சியில் ஏதோ ஓர் அபூர்வமான கவர்ச்சியுமிருந்தது. வெகுநேரம் சுற்றிச் சுற்றி களைத்துப் போன பிறகு, கிளம்ப மனமில்லாமல் தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றோம்.
திருவண்ணாமலைக்கு இரவு போய்ச் சேர்ந்தோம். இராத்திரிக்கு ராத்திரியே கதவை இடித்து, எஸ்.வி.வி.யை எழுப்பி, "நீங்கள் தானே எஸ்.வி.வி. என்கிறது? ஜயா சௌக்கியமா? அவளுடையப் பொய்ப்பற்கள் இப்போது எப்படியிருக்கின்றன?" என்றெல்லாம் விசாரித்து அளவளாவித் திருப்தியடைந்தோம்.
மறுநாள் அண்ணாமலைநாதரையும் ரமண ரிஷிகளையும் தரிசனம் செய்து கொண்டோ ம். சாயங்காலம் வெயில் தாழ்ந்த பிறகு சென்னையை நோக்கிக் கிளம்பினோம்.
சூரியாஸ்தமான சமயத்தில் வண்டி செஞ்சியை அடைந்தது. எனக்கு இன்னொரு தடவை அங்கே இறங்கிப் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று தோன்றிற்று. என் நண்பர்களுக்கு அது சம்மதமில்லை. "நீர் வேண்டுமானால் போய்ப் பார்த்து விட்டு வாரும். நாங்கள் ஊருக்குள் போய் ஒரு கப் காப்பி கிடைக்குமா என்று பார்க்கிறோம்" என்றார்கள். காப்பி என்றதும், நான் அங்கு இறங்காமல் வந்து விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் என் மனத்திலிருந்த தாகம் காப்பியின் மோகத்தை வென்று விட்டது. "சரி நீங்கள் போங்கள். நான் இன்னொரு தடவை பார்த்துவிட்டுத் தான் வருவேன்" என்று சொல்லிவிட்டு இறங்கினேன். "அரைமணிக்குள் திரும்பி வந்து ஹாரன் அடிக்கிறோம். அதற்குள் பார்த்து விட்டு வந்து விட வேணும்" என்றார்கள். தடதடவென்று சத்தம் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பிச் சென்றது.
வண்டி போயிற்றோ, இல்லையோ, அந்த ஏகாந்தப் பிரதேசத்தில் நிசப்தம் குடிகொண்டது. என்னுடைய கால் செருப்பின் சப்தத்தைக் கேட்டு நானே திடுக்கிட்டேன். அந்தி நேரத்தில் அந்த நிர்மானுஷ்யமான பிரதேசத்துக்குள் தன்னந்தனியாகச் சென்ற போது மனத்தில் ஒரு விதக் கலக்கமும் பரபரப்பும் உண்டாயின. "சீ! இதென்ன காரணமில்லாத பயம்?" என்று என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன்.
மேற்குத் திசையிலிருந்த குன்றுகளுக்குப் பின்னால் சூரியன் திடீரென்று மறைந்தது. வெகு சீக்கிரத்தில் கையெழுத்து மறையும் நேரம் வந்து விட்டது. அப்போது நான் பழைய பாழடைந்த கட்டிடங்களைத் தாண்டிக் கொண்டிருந்தேன். இருளடைந்த பாழும் மண்டபங்களிலிருந்து வௌவால்கள் 'இறக்கை'யை அடித்துக் கொள்ளுகிற சத்தம் கேட்டது. என் மனத்தில் பய உணர்ச்சி அதிகமாயிற்று. நல்ல வேளையாக அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தான். நிமிஷத்துக்கு நிமிஷம் நிலவின் பிரகாசம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அன்று பௌர்ணமியாக மட்டும் இராவிட்டால், நான் மேலே போயிருக்க மாட்டேன். பாதி வழியிலேயே திரும்பி இருப்பேன்.
பாழுங் கட்டிடங்களைத் தாண்டிப் போன பிறகு, குன்றின் மேல் ஏறுவதற்கு அமைந்த படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளில் கொஞ்ச தூரம் ஏறிச்சென்று அங்கிருந்துப் பார்த்தால் அந்த இடிந்த கோட்டைப் பிரதேசம் முழுவதையும் பார்க்கலாம் அப்படி ஒரு தடவை பார்த்து விட்டுத் திரும்பிப் போக வேண்டுமென்று தான் இவ்வளவு தூரம் நான் வந்தது. படிகளில் ஏறத் தொடங்கினேன். இருபது முப்பது படிகளுக்கு மேல் ஒரு திருப்பம் இருக்கிறது. அங்கு நான் திரும்பியதும் மேலே அடி எடுத்து வைக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றேன்! ஏனெனில், அங்கே திருப்பத்தின் முதல் படியில் ஒரு மனுஷன் உட்கார்ந்திருந்தான்! அவன் ஓர் இளைஞன். நாகரிகமாக வேஷ்டி, ஜிப்பா அணிந்தவன். தலையை அழகாகக் கிராப் செய்து வாரி விட்டுக் கொண்டிருந்தான். முகம் களையான முகம்; புத்திசாலி என்றும் தோன்றியது. இப்படிப்பட்ட பையனைச் சாதாரணமாக வேறு எங்கே பார்த்தாலும், பயமோ, அதிசயமோ உண்டாக நியாயமில்லை. ஆனால் அந்த வேளையில், அந்த நிர்மானுஷ்யப் பிரதேசத்தில், அவனைத் திடீரென்று வெகு சமீபத்தில் பார்த்ததும் பாம்பை மிதித்தவன் போல் துணுக்குற்றுப் போனேன்.
அந்த வாலிபன் முகத்திலும் ஆச்சரியமும் திகைப்பும் காணப்பட்டன. ஆனால் அவன் தான் முதலில் சமாளித்துக் கொண்டான். "யார் ஸார் நீங்கள்? இந்த ஊர் இல்லை போலிருக்கிறதே?" என்றான். பேச்சுக் குரல் கேட்டதும் எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது. 'நல்ல வேளை! இங்கே ஒரு மனுஷன் இருக்கிறானே! போகிற போது சேர்ந்து போகலாம்' என்று மனதிற்குள் நினைத்தேன். பிறகு நான் அங்கு வந்த காரணத்தைக் கூறினேன்.
"ஆமாம்; இந்த இடத்திலிருந்து வெண்ணிலாவில் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எனக்குக் கூட ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி இங்கு நான் வருவதுண்டு," என்றான்.
அவனருகில் நானும் உட்கார்ந்து, "உமக்கு இந்த ஊர் தானா?" என்று கேட்டேன். "இல்லை. என் சொந்த ஊர் பெரிய குளம். பக்கத்து ஊர்ப் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயராகயிருக்கிறேன். வந்து மூன்று வருஷமாயிற்று," என்றான்.
அவன் செகண்டரி ட்ரெயினிங் ஆனவன் என்றும், பெயர் குமாரஸ்வாமி என்றும் தெரிந்து கொண்டேன். தன் கையால் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவன் சொன்னபோது, "கல்யாணம் ஆகவில்லையா?" என்று கேட்டேன்.
"கல்யாணமா?" என்று சொல்லி அவன் வானத்துச் சந்திரனை நோக்கினான். பிறகு, பெருமூச்சு விட்டுக் கொண்டு என்னைப் பார்த்து "இதுவரைக்கும் இல்லை," என்றான். அப்போது அவனுடைய பார்வையும் புன்னகையும் ஏதோ ஒரு மாதிரியாக இருந்தன.
பின்னர் அவனாகவே, "ஆனால் பெண் நிச்சயமாகியிருக்கிறது," என்றான்.
"எந்த ஊரில்?" என்று கேட்டேன்.
"இதே ஊரில், இதே இடத்தில்தான். பெண் நிச்சயமாகி முந்நூறு வருஷமாகிறது..." என்று கூறி, ஒரு நிமிஷம் தயங்கினான்.
பிறகு, "இன்றைக்குத்தான் கல்யாணம்" என்று சொல்லி முடித்தான்.
என்னுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளத் தொடங்கிற்று. ஐயோ! இவனுக்குச் சித்தப் பிரமை போலிருக்கிறதே! இந்த ஏகாந்தமான பிரதேசத்தில் அஸ்தமன வேளையில் இவனிடம் வந்து அகப்பட்டு கொண்டோ மே?
மெதுவாக அங்கிருந்து கிளம்புவதற்கு நான் யத்தனைக்கையில், அவன், என் மனதிலுள்ளதைத் தெரிந்து கொண்டவன் போல், "எனக்கு மூளை சரியாயில்லையென்று நினைக்கிறீர்களாக்கும். அப்படித்தான் தோன்றும். எனக்கே சில சமயம் இதெல்லாம் சித்தப் பிரமையோ என்று தோன்றுகிறது. உங்களுக்குச் சாவகாசமிருந்தால் முழு விவரமும் சொல்கிறேன். எத்தனையோ நாளாக, யாரிடமாவது என்னுடைய அநுபவங்களைச் சொல்ல வேண்டுமென்று எனக்கு ஆசையுண்டு," என்றான்.
அவன் பைத்தியக்காரன் என்ற எண்ணம் எனக்கு மாறிவிட்டது. ஏதோ ரொம்பவும் துக்கப்பட்டவன், துக்க மிகுதியினால் இப்படிப் பேசுகிறான் என்று தோன்றியது. அவனுடைய கதையைக் கேட்டுவிட்டு கூடுமானால் அவனுக்கு யோசனை சொல்லி உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையும் உண்டாயிற்று.
"சீக்கிரமாகச் சொல்லி முடித்தால் கேட்டு விட்டுப் போகிறேன்," என்றேன்.
குமாரஸ்வாமி நன்றி ததும்பிய கண்களுடன் என்னைப் பார்த்தான். "ஆகட்டும்! சுருக்கமாக முடித்து விடுகிறேன்," என்றான். ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மேலே சொல்லத் தொடங்கினான்.
"பக்கத்துக் கிராமத்தில் நான் உபாத்தியாயர் வேலைக்கு வந்து வருஷம் மூன்று ஆயிற்றென்று சொன்னேனல்லவா? வந்து ஆறு மாதத்துக்கெல்லாம் சில சினேகிதர்களுடன் இந்தச் செஞ்சிக் கோட்டைக்கு ஒரு முறை வந்திருந்தேன். இந்தப் பாழடைந்த பிரதேசம் எப்படியோ என் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. அடிக்கடி இங்கே வர வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. யாராவது துணைக்குக் கிடைத்த போதெல்லாம் அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். கொஞ்ச நாளில் யாரும் துணை கிடைப்பது அருமையாகி விட்டது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும், 'வெறுமே அந்தச் சுடுகாட்டில் என்ன வேலை?' என்று சொல்லி வர மறுத்து விட்டார்கள். பிறகு பள்ளிக் கூடத்துப் பசங்கள் சிலரை அழைத்துக் கொண்டு வரத் தொடங்கினேன். நாளடைவில் அவர்களுக்கும் அலுப்பு வந்து விட்டது.
அப்புறம் நான் இங்கே தனியாகவே வருவதற்கு ஆரம்பித்தேன். ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களில் பிற்பகலில் இங்கு வந்து சுற்றிச் சுற்றி அலைந்து விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவேன்.
அம்மாதிரி ஒரு நாள் தனியாக இங்கு வந்திருந்த அன்று தற்செயலாகப் பௌர்ணமியாயிருந்தது. இது நடந்து சுமார் ஒரு வருஷம் இருக்கும். இன்று போல் தான் அன்றும் பூரண சந்திரன் வெள்ளி நிலாவைப் பொழிந்து கொண்டிருந்தான். இந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் ஏதேதோ ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு இதே நேரத்தில் இந்த பிரதேசம் எவ்வளவு கலகலப்பாய் இருந்திருக்கும். தூரத்திலே கோட்டைக் கதவுகளைச் சாத்துவார்கள்; அரண்மனையில் மேளவாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும்; குதிரையேறிய கோட்டைக் காவலர்கள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருப்பார்கள்; கோயிலில் தீபாராதனை மணி அடித்துக் கொண்டிருக்கும்; மண்டபங்களில் மட மாதர்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ராஜகுமாரிகள் அந்தப்புரங்களில் பாதச் சிலம்பு ஒலிக்க நடமாடுவார்கள்...
இப்படி நான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மயிக்கூச்சல் எறிந்தது. இது என்ன ஆச்சரியம்! நிஜமாகவே சதங்கை ஒலி கேட்பது போலிருக்கிறதே? காது கொடுத்துக் கேட்டேன். எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, ஒரு பெண்மணி பாதச் சிலம்பு கிலுகிலுவென்று சப்திக்க நடந்து வருவதுபோல் ஒரு பிரமை உண்டாயிற்று. அது இந்த உலகத்து ஒலிதானோ? அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்ததோ? அந்த ஒலியை முன் ஒரு தடவை எப்போதோ, எங்கேயோ, கேட்டிருப்பது போன்ற உணர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று.
ஒரு நிமிஷத்தில் என் உடம்பெல்லாம் சொட்ட நனைந்து போகும்படி வியர்த்துவிட்டது. அந்த மாயையிலிருந்து விடுதலை பெறுவதற்காக தேகத்தை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டி எழுந்து நின்றேன். விரைந்து ஊர் போய்ச் சேர்ந்தேன். அன்று ராத்திரி நான் ஒரு கண நேரமும் தூங்க வில்லை. காலையில் என்னைப் பார்த்தவர்கள், "என்னப்பா, முகம் இப்படி வெளிறிப் போயிருக்கிறது? பேயடித்தவன் போலிருக்கிறாயே?" என்றார்கள். உண்மையில், நேற்றிரவு பேயுலகத்துக்குப் போய் விட்டுத் தான் நான் திரும்பினேனோ? மறுபடியும் இந்தக் கோட்டைப் பக்கமே வருவதில்லையென்று அன்றைய தினம் தீர்மானம் செய்து கொண்டேன். ஆனால், நாளாக ஆக இந்தத் தீர்மானத்தின் பலம் குறைந்து வந்தது; பௌர்ணமி நெருங்க நெருங்க, இங்கே வரவேண்டுமென்ற என் ஆசையும் வளர்ந்து வந்தது. கடைசியில் அடுத்த பௌர்ணமியன்று அந்த ஆசையை அடக்க முடியாமல் கிளம்பினேன். ஏதோ ஒரு பெரிய சக்தி என்னைப் பிடித்துக் கவர்ந்து இழுப்பதாகவே தோன்றியது.
இதே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன். பொன்வட்டத் தகட்டைப்போல் பூரண சந்திரன் மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அஸ்தமித்து இரண்டு மூன்று நாழிகை ஆயிற்று, 'சரி, அன்று நாம் கேட்ட சிலம்பொலி வெறும் பிரமைதான்' என்று எண்ணி எழுந்திருக்க முயன்றேன். ஆனால் பாதி எழுந்தவன் மறுபடியும் உட்கார்ந்து விட்டேன். ஏனெனில், அந்த இனிய சிலம்பொலி அப்போது கேட்கத் தொடங்கியது. முதலில் வெகு தூரத்தில் வேறு லோகத்திலிருந்தே வருவது போலிருந்தது நேரம் ஆக ஆக, நெருங்கி வருவது போல் தோன்றியது. அதற்குமேல் என்னால் அங்கிருக்க முடியவில்லை. எழுந்திருந்து ஓடத் தொடங்கினேன். சிலம்பொலி என்னைப் பின் தொடரவில்லையென்று தெரிந்த பிறகு, கொஞ்சம் சாவதானமாக நடந்தேன். ஆனாலும், ஊர்ப் போய்ச் சேரும் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டுதானிருந்தது.
பிறகு, இங்கே வரக்கூடாதென்ற எண்ணத்தை முழுதும் விட்டு விட்டேன். சாவகாசம் கிடைத்த போதெல்லாம் வரத் தொடங்கினேன். அடிக்கடி பல தடவைகளில் வந்தும் அந்த மாதிரி அநுபவம் எதுவும் ஏற்படாத படியால் ஏமாற்ற மடைந்தேன். ஒரு வேளை பௌர்ணமிக்கும் அந்தச் சிலம்பொலிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தினால், அடுத்த பௌர்ணமியன்று போனேன். சந்தேகம் உறுதியாயிற்று. முன் போலவே, சிறிது நேரத்துக்கெல்லாம் சிலம்பொலி கேட்டது. இம்முறை நான் எழுந்து போகவில்லை. என்ன தான் நடக்கிறது என்று பார்க்கத் தீர்மானித்து உட்கார்ந்திருந்தேன். சிலம்பின் ஒலி நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் அதோ அந்தப் படியண்டை வந்ததும் சப்தம் நின்றது. அந்த ஒலி நெருங்கி வந்த போது, ஓர் அபூர்வ பரிமள வாசனை பரவி வந்ததாகத் தோன்றியது. சந்தன வாசனை மாதிரி இருந்தது. ஆனால் மிக மிக இலேசாயிருந்தது. அது வாசனை தானா? அல்லது வாசனையின் ஞாபகமா? எனக்குத் தெரியவில்லை.
சிறிது நேரம் நான் மெய்ம்மறந்து சிலை போல் உட்கார்ந்திருந்தேன். பிறகு, சற்று முன் நின்ற இடத்திலிருந்து மறுபடி சிலம்பின் ஒலி கேட்க ஆரம்பித்தது.
அது படிகளின் மீது ஏறுவது போலவும் எனக்குப் பின்னால் இருந்த மேல் படியில் வந்து நிற்பது போலவும் தோன்றியது. அந்த மிருதுவான சந்தனவாசனை என்னை முற்றும் சூழ்ந்து கொண்டது. தேகத்தின் ஒவ்வொரு ரோமத் துவாரம் வழியாகவும் நான் அந்த இன்ப மணத்தை அநுபவித்தேன். இப்படி எத்தனை நேரம் மதி மயங்கி இருந்தேனோ தெரியாது. என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில், இருதயத்தைப் பிளக்கும்படியான ஒரு விம்மல் சத்தம் கேட்டது. அடுத்த விநாடி என் மீது சலசலவென்று நீர்த்துளிகள் விழுந்தன. அளவிலாத திகில் கொண்டவனாய்த் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தேன். அப்படி எழுந்திருந்த போது என் மேலே மிக மிருதுவான பட்டுத்துணி உராய்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பிறகு இவ்விடத்தில் நிற்பதற்குத் தைரியமில்லாமல், அவசரமாய்ப் படிகளில் இறங்கத் தொடங்கினேன். போகும்போது உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.
மறு பௌர்ணமி எப்போது வரப் போகிறதென்று காத்திருந்தேன். அன்று ஏன் அவ்வளவு அவசரப்பட்டு எழுந்து வந்தோம் என்று என்னை நானே நிந்தித்துக் கொண்டிருந்தேன். அடுத்த பௌர்ணமியும் வந்தது. வழக்கம் போல் இந்தப் படியில் வந்து உட்கார்ந்திருந்தேன். அன்று சதங்கையொலி ரொம்பவும் தயங்கித் தயங்கி வந்ததாகத் தோன்றியது. எனக்கு முன்னால் சற்று நின்றது. பிறகு மேலே ஏறி, எனக்குப் பின்னால் போய் நின்றது. முன் போலவே, அந்த இனிய சந்தன வாசனை என்னைச் சூழ்ந்தது. ஆனால் முன் தடவையைப் போல் இலேசாக இல்லை. சந்தேகமற உணர்ந்து அநுபவிக்கக் கூடியதாயிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பூப்போன்ற மெல்லிய கரங்களால் யாரோ என் தோள்களைக் கட்டித் தழுவுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. தலையிலிருந்து கால் வரையில் நான் புளங்காகிதங் கொண்டேன். அந்த ஸ்பரிசம் அவ்வளவு உண்மையாகத் தோன்றியபடியால் தழுவிய கைகளைப் பிடித்துக் கொள்ள என் கரங்களை உயர்த்தினேன். ஆனால் என் கைகள் ஒன்றையும் பிடிக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். வெறும் வெட்ட வெளிதான் இருந்தது. அப்படியே நான் மூர்ச்சையடைந்து விழுந்திருக்க வேண்டும். எனக்கு மூர்ச்சை தெளிந்த போது சந்திரன் ஆகாயத்தில் வெகு தூரம் உயர வந்து விட்டது. தள்ளாடிக் கொண்டு நடந்து வீடு சென்றேன். என்னை இன்பப் பரவசத்தில் ஆழ்த்தி மூர்ச்சடையச் செய்த அந்த ஆலிங்கனத்தை நினைக்கும் போதெல்லாம் மயிர்க் கூச்சல் உண்டாயிற்று.
மறுநாள் சூரியோதயம் ஆனபோது முதல் நாள் மாலை அனுபவம் வெறும் பொய்யென்று தோன்றிற்று. எனக்கு ஏதோ சித்தப் பிரமைதான் உண்டாகி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதென்று நினைத்து, பயந்து போனேன்.
இனி மேல், இந்தக் கோட்டைப் பக்கம் வரக் கூடாதென்றும் உறுதி செய்து கொண்டேன். ஆனால், அந்த உறுதி வெகு சீக்கிரத்திலேயே குலைந்து போயிற்று. அன்று பள்ளிக்கூடத்துக்குப் போனதும் பிள்ளைகள் சிலர், "ஏன், ஸார்! உங்களிடம் என்ன சார் சந்தன வாசனை கம்மென்று வருகிறதே! எங்கேயாவது கல்யாணத்துக்குப் போயிருந்தீர்களா?" என்றார்கள்.
ஆகவே, என்னுடைய அனுபவம் வெறும் பிரமையல்ல; மயக்கமல்ல. உண்மையாகவே, பிரதி பௌர்ணமியும் ஒரு மாயரூப மோஹினி என்னைத் தேடி வருகிறாள். அவள் யார்? எப்படிப் பட்டவள்? எதற்காக இந்த ஏழை உபாத்தியாயரைத் தேடி வருகிறாள்? என்றாவது ஒரு நாள் அவளை ரூபத்துடன் நான் காண்பேனா? இந்த அற்புத அனுபவத்தின் மர்மம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்வேனா?
இதற்குப் பதில் அடுத்த பௌர்ணமியன்று எனக்குக் கிடைத்தது. அன்று வழக்கம்போல் சதங்கையொலி கேட்டதும் நான் ஒலி வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். மெய் சிலிர்த்துத் திகைத்துப் போனேன். உண்மையாகவே ஒரு பெண்ணுருவம் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வுருவம் நடந்து வருவதாகத் தோன்றவில்லை; காற்றில் மிதந்து வருவதாகத் தோன்றியது. அது உண்மை உருவந்தானா? அல்லது, உரு வெளித் தோற்றமா? அருகில் நெருங்க நெருங்க, ஒரு நிஜப் பெண் தான் வருகிறாள் என்று நிச்சயமாயிற்று.
படங்களிலே நாம் பார்த்திருக்கும் ராஜபுத்திர கன்னிகைகளைப் போல் அவள் பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். ஆபரணங்களும் அம்மாதிரியே இருந்தன. தாவணியின் தலைப்பைத் தலையில் முக்காடுப் போட்டுக் கொண்டிருந்தாள். வெண்ணிலாவின் ஒளி அவள் முகத்தில் பட்டபோது, உண்மையில் அந்த முகத்திலிருந்து தான் நிலவொளி வீசுகிறதோ என்று தோன்றியது.
அருகில் அவள் நெருங்க நெருங்க, முகம் தெரிந்த முகம் போல் காணப்பட்டது. எப்போதோ, எங்கேயோ, அவளை நான் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். குலாவியிருக்கிறேன். ஆனால் எங்கே? எப்போது - இப்படி நான் சிந்தித்துக் கொண்டிருக்கையிலே, அவள் என் அருகில் வந்து நின்றாள். அவளுடைய பரந்த கண்களால் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் ததும்பிய நீர்த்துளிகள் வெண்ணிலவில் முத்தைப் போல் பிரகாசித்தன. அப்படிப் பார்த்த வண்ணம், 'குமார்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டாள். அந்த இனிய குரல் என் காதில் விழுந்ததும், என் இருதயம் விம்மி வெடிப்பது போலிருந்தது. எப்போதோ ஒரு சமயம், அவளுடைய கையை நான் பிடித்துக் கொண்டு 'இந்த ஜன்மத்தில் மட்டும் அல்ல, ஏழேழு ஜன்மத்திலும் உன்னை நான் மறவேன்; இது சத்தியம்!" என்று அவளுக்கு வாக்கு கொடுத்தது மிகப் பழைய ஒரு கனவைப் போல் ஞாபகம் வந்தது. அவளுடைய கேள்விக்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தேன். அந்தக் கணத்தில் ஸ்மரணையற்றுக் கீழே விழுந்தேன்..."
3
குமாரஸ்வாமி சொன்ன கதையை ஏட்டில் படிக்கும் போது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறதோ, என்னவோ, தெரியாது. ஆனால் எனக்கென்னவோ அவன் சொல்லி வந்த போது எல்லாம் நிஜமாகவே தோன்றிக் கொண்டிருந்தது. அந்த இடமும் அந்த நேரமும் சேர்ந்து அப்படி என்னை மயக்கியிருக்க வேண்டும். தான் மூர்ச்சையடைந்த கட்டத்தில் குமாரஸ்வாமி கதையை நிறுத்தி விட்டு எழுந்திருந்து நின்றான். நாற்புறமும் ஒரு தடவை சுற்றிப் பார்த்தான். பிறகு, மறுபடியும் உட்கார்ந்தான்.
"அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆவலுடன் கேட்டேன்.
குமாரஸ்வாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினான்.
"எனக்கு மூர்ச்சை தெளிந்தபோது, ஒரு பெண்ணின் மடியில் நான் தலையை வைத்துப் படுத்திருப்பதையும் அவள் தன் மென்மையான கரங்களால் என் நெற்றியைத் தடவிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். உடனே துள்ளி எழுந்து சற்று விலகி உட்கார்ந்தேன்.
"குமார்! ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்? என்னை ஞாபகம் இல்லையா? நான் தான் உங்கள் மாலதி," என்று அவள் கூறியது இனிய சங்கீதம் போல என் செவியில் விழுந்தது.
மாலதி! மாலதி! - எவ்வளவு இனிமையான பெயர்! என் மனதுக்குள் நாலு தடவை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
'நினைத்துப் பாருங்கள், குமார்! இதே மாதிரி பால் போல் நிலவு எரித்த ஒரு பௌர்ணமியில், இதே இடத்தில் நீங்கள் என்னிடம் விடைபெற்றுக் கொள்ளவில்லையா? என்னை மறக்காதீர்கள் என்று நான் சொன்னேன். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன் என்று என் கையில் அடித்து, சத்தியம் செய்து கொடுத்தீர்கள். ஞாபகம் இல்லையா?' என்று மாலதி கேட்டாள்.
நான் மூர்ச்சையடைவதற்கு முன்பு இந்தக் காட்சிதான் புகையுண்ட சித்திரம்போல் என் மனக் கண்ணின் முன் தோன்றிற்று என்று சொன்னேனல்லவா? அவளும் அதைச் சொன்னது, அது வெறும் தோற்றமல்ல - உண்மையில் நடந்த சம்பவம் என்பது எனக்கு நிச்சயமாயிற்று.
மாலதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். கங்கு கரையில்லாத பிரேமையுடன் என்னை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய விரிந்த கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் கண்டேன். என் உள்ளம் உருகிற்று. அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு 'ஞாபகம் இருக்கிறது. மாலதி! அந்த வாக்குறுதியை இன்னொரு தடவையும் அளிக்கிறேன். உன்னை ஏழேழு ஜன்மத்திலும் மறக்கமாட்டேன்,' என்றேன்.
பிறகு, அவள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய பூர்வ சரித்திரத்தை ஞாபகப்படுத்தினாள். அவள் சொல்லச் சொல்ல, முந்நூறு வருஷத்துக்கு முந்திய அந்தச் சம்பவங்கள் எல்லாம், தெளிவில்லாத ஒரு பழைய கனவைப் போல் எனக்கு ஞாபகம் வந்தன."
குமாரஸ்வாமி இங்கே நிறுத்தி, "இந்தச் செஞ்சிக் கோட்டையின் பூர்வ சரித்திரத்தைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான்.
"இங்கே தேசிங்குராஜா என்று ஒருவன் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறொன்றும் தெரியாது," என்றேன்.
தேசிங்குராஜன் கதை வெறும் கட்டுக்கதை. அதற்குச் சரித்திரத்தில் ஆதாரம் கிடையாது. நானோ உண்மைச் சம்பவத்தைக் கூறப் போகிறேன். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்தச் செஞ்சியில் பிரிதிவிசிங் என்னும் ராஜா இருந்தார். அவர் வீர ராஜபுத்திர வம்சத்தவர். அவருடைய முன்னோர் ஒருவர் டில்லியில் பட்டாணியர் ஆண்ட காலத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க மனமில்லாமல் தெற்கு நோக்கி வந்து இந்தக் கோட்டையைக் கட்டிக் கொண்டாராம். இந்தக் கோட்டையையும், இதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசத்தையும் அந்த வம்சத்தார் சுதந்திரமாக ஆண்டு வந்தார்கள். மொகலாய சைன்யங்களால் பலமுறை முயன்றும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை. பிரிதிவிசிங்கும் சுதந்திர ராஜாவாக இந்தச் சிறு ராஜ்யத்தை ஆண்டு வந்தார்.
அந்த ராஜாவுக்கு ஒரு புத்திரி இருந்தாள். அவளுடைய பெயர், மாலதி. குழந்தைப் பிராயத்தில் அவளுக்குக் கல்வி கற்பித்த தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவனுக்குச் சுகுமாரன் என்று பெயர். குழந்தைகளாய் இருந்தபோது இவர்கள் இருவரும் ஒருங்கே கல்வி பயின்றார்கள். சுகுமாரனுக்குச் சங்கீதத்தில் ரொம்பவும் ஆர்வம் இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் வயதானதும் தேச யாத்திரை செய்து சங்கீதத்தில் உயர்ந்த பயிற்சி பெற்று வருவதற்காகக் கிளம்பினான். தஞ்சாவூரிலும், விஜய நகரத்திலும் கொஞ்ச காலம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டான். பிறகு மகாராஷ்டிரத்துக்குப் போய் அப்போது பிரசித்தியாகிக் கொண்டிருந்த அபங்கங்கள் கற்றுக் கொண்டான். அங்கிருந்து டில்லிக்குப் போய் பெயர் பெற்ற தான்சேனுடைய சிஷ்யர்களிடம் இந்துஸ்தானி சங்கீதமும் பயின்றான்.
அவன் திரும்பி வந்ததும் செஞ்சி ராஜசபையில் அவனுடைய சங்கீதக் கச்சேரி நடந்தது. ராஜகுமாரி மாலதியும் திரைபோட்ட மேன்மாடத்திலிருந்து தன் பால்ய நண்பனுடைய சங்கிதத்தைக் கேட்டாள். இது சுகுமாரனுக்கும் தெரிந்திருந்தது. அதனால் தானோ என்னவோ அன்று அவன் அற்புதமாய்ப் பாடினான். அவனுடைய பாட்டு கேவலம் பூலோகத்துச் சங்கீதமாக இல்லை; நாரதர் தும்புறு முதலிய தெய்வலோகத்து இசைவாணர்கள் இப்படித்தான் பாடுவார்களோ என்று நினைக்கும்படி, தேவகானமாகவே பொழிந்தான். அந்தக் கானத்தைக் கேட்டு சபையோர் அனைவரும் பரவசமானார்கள். ஆனால், எல்லாரிலும் அதிகமாக அந்தக் கானத்தின் இன்பத்தை அனுபவித்தவள் ராஜகுமாரி மாலதிதான். அவள் அந்தத் தெய்வ கீதத்தின் இன்பத்துக்குத் தன்னுடைய இருதயத்தையே பரிசாகக் கொடுத்தாள்.
சில நாள்களுக்குப் பிறகு சுகுமாரனிடம் தான் சங்கீதம் கற்றுக் கொள்ள விரும்புவதாக மாலதி தகப்பனாரிடம் தெரிவித்தாள். அந்தக் காலத்தில் ராஜகன்னிகைகள் கோஷா அனுசரிப்பார்கள். ஆனால், உபாத்தியாயர் மகன் தானே என்ற எண்ணத்தினாலும் தன்னுடைய அருமை புதல்வியின் விருப்பத்துக்கு மாறு சொல்ல மனமின்றியும் ராஜா சம்மதித்தார்.
மாலதி, ராஜபுத்திர வம்சத்தினள் ஆனதால் அவளுக்கு இயற்கையாக வடநாட்டுச் சங்கீதத்தில் தான் ஆசை இருந்தது. சுகுமாரனிடம் அவள் இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொண்டு வந்தாள். பரஸ்பரம் அவர்களுடைய காதலும் வளர்ந்து வந்தது. இந்தக் காதல் விபரீதத்தில் தான் முடியும் என்று சுகுமாரன் பல தடவை எடுத்துச் சொன்னான். ஆனால் மாலதி கேட்கவில்லை. தான் சுகுமாரனைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், தகப்பனாரை எப்படியாவது அதற்குச் சம்மதிக்கச் செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டு வந்தாள். இப்படியிருக்கையில், எதிர்பாராத விதத்தில் ஒரு பெரிய ஆபத்து வந்தது. செஞ்சி ராஜாக்களை ஆற்காட்டு நவாபுகள் வெகு காலமாகச் சிநேகிதர்களாக நடத்தி வந்தார்கள். வடக்கேயிருந்து வந்த மொகலாய சைனியங்களுடன் அவர்கள் சண்டையிட்ட காலங்களில் செஞ்சி ராஜாக்களின் உதவியைக் கோரிப் பெற்றார்கள். அவர்களிடம் கப்பம் வாங்குவது கிடையாது.
அப்போது ஆற்காட்டில் நவாபாய் இருந்தவர் மாலதியின் ரூபலாவண்யங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். டில்லி பாதுஷாக்கள் சிலர் ராஜபுத்திர கன்னிகைகளை மணந்திருக்கும் விஷயமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களைப் போல் தாமும் ஒரு ராஜபுத்திர கன்னிகையை மணக்க வேண்டுமென்று நவாப் தீர்மானித்து, பிரிதிவிசிங்குக்கும் தூது அனுப்பினார். பிரிதிவிசிங்குக்கும் தமக்கும் உள்ள சிநேக பாந்தவ்யத்தை விவாக சம்பந்தத்தின் மூலம் நிரந்தரமாகச் செய்து கொள்ள விரும்புவதாய் அவர் சொல்லி அனுப்பினார். பிரிதிவிசிங் இஷ்டப்பட்டு அவ்விதம் செய்யாவிட்டால், பின்னால் கட்டாயத்தின் மேல் செய்ய வேண்டியதாயிருக்குமென்றும் எச்சரிக்கை செய்தார். செஞ்சியின் மேல் படையெடுப்பதற்கு ஒரு பெரிய சைனியம் தயாராயிருப்பதாகவும் தூதன் தெரியப்படுத்தினான்.
இந்தச் செய்தி கேட்டதும் பிரிதிவிசிங் அளவிலாத கோபங்கொண்டு துடிதுடித்தார். மந்திராலோசனை சபை கூட்டி, யோசனை கேட்டார். சபையில் யாரும் யோசனை சொல்லத் துணியவில்லை. ராஜகுமாரியை நவாபுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தால் யுத்தத்திற்குத் தயாராக வேண்டும். முந்நூறு வீரர்களை வைத்துக் கொண்டு முப்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய சைனியத்தோடு சண்டை போட முடியுமா? 'நவாபுக்கு உங்கள் பெண்ணைக் கொடுங்கள்' என்று சொல்லவும் யாருக்கும் தைரியம் வரவில்லை.
இந்த நிலைமையில், உபாத்தியாயரின் புதல்வன் சுகுமாரன் எழுந்து யோசனை கூற முன் வந்தான். நவாபின் கோரிக்கையை மறுத்து விட வேண்டியது தான் என்று அவன் தைரியமாய்க் கூறினான். 'நவாப் படையெடுத்து வந்தால் வரட்டும். இந்தக் கோட்டைக்குள் இருந்து கொண்டு குறைந்தது ஆறு மாதம் நவாபின் படைகளை எதிர்த்து நிற்கலாம். மகாராஷ்டிரத்தில் சிவாஜி மகாராஜா இந்து தர்மத்தை ரக்ஷிப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். அவருக்குச் செய்தி அனுப்பினால் கட்டாயம் நம்முடைய உதவிக்கு வருவார். நானே போய் அழைத்து வருகிறேன்' என்றான். பிரிதிவிசிங் மிகவும் சந்தோஷமடைந்து சுகுமாரனை மகாராஷ்டிரத்துக்கு அனுப்ப இசைந்தார்.
மாசிமகத்துப் பௌர்ணமியன்று இரவு மாலதியைச் சுகுமாரன் சந்தித்து, தான் சிவாஜி மகாராஜாவிடம் தூது போகப் போவதைத் தெரிவித்து விடை கேட்டான். இந்தக் காரியத்தைத் தான் செய்து முடித்தால், மகாராஜா மன மகிழ்ந்து மாலதியைத் தனக்கு மணம் செய்து கொடுக்க இசையலாம் என்றும் கூறினான். மாலதிக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆனாலும் சுகுமாரனைப் பிரிவது அவளுக்குப் பெருந்துன்பத்தையளித்தது. அப்பொழுது தான் "என்னை மறந்துவிடாதீர்கள்" என்று அவள் மனமுருகிக் கூறினாள். சுகுமாரனும் "ஏழேழு ஜன்மத்திலும் மறக்க மாட்டேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தான்.
சுகுமாரன் போய்ச் சில நாளைக்கெல்லாம் பிரிதிவிசிங்குக்கு மற்ற மந்திரிகள் துர்போதனை செய்து அவருடைய மன உறுதியைக் குலைத்தார்கள். 'சிவாஜியாவது இங்கே வருவதாவது; நடக்காத காரியம். சுகுமாரன் பைத்தியக்காரன்; உலகம் தெரியாதவன்; ஏதோ போயிருக்கிறான். அவன் சிவாஜியைப் பார்ப்பதே நிச்சயமில்லை; நவாபுடன் சமாதானம் செய்து கொள்வதே நலம்,' என்றார்கள்.
மாலதியும் ஒரு தவறு செய்தாள். ஒரு நாள் தந்தையிடம் பிரியமாய்ப் பேசிக் கொண்டிருந்த போது சுகுமாரனிடம் தான் கொண்டிருந்த காதலைப் பற்றிச் சொல்லி, தன்னை அவனுக்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். இதனால் பிரிதிவிசிங்கின் மனம் அடியோடு மாறிவிட்டது. 'சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வியாஜத்தில் இப்படியா என் பெண்ணின் மனத்தை அந்தப்பாவி வசப்படுத்தி விட்டான்!' என்ற எண்ணம் அவருக்குப் பெரிதும் ஆத்திர மூட்டியது. அதைவிட, நவாபுக்குக் கொடுப்பதே நலம் என்று எண்ணினார். பெரிய பெரிய ராஜபுத்திர மன்னர்கள் ஏற்கெனவே மொகலாயர்களுக்குப் பெண் கொடுத்து வழி காட்டியிருக்கவில்லையா? நாம் மட்டும் கொடுத்தால் என்ன தப்பு? நம்முடைய பெண்ணும் - அவளுடைய அழகுக்கும் சாமர்த்தியத்திற்கும் ஒரு நூர்ஜஹானைப் போல் ஆகலாமல்லவா?
இப்படியெல்லாம் நினைத்தார் அந்தப் பேராசை பிடித்தக் கிழவர். தம் குமாரியின் மன விருப்பத்தை அவர் ஒரு பெரிய காரியமாகவே கருதவில்லை. நவாபுக்குத் தம்முடைய சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்.
மாலதிக்கு இது தெரிந்தபோது இடியுண்ட நாகத்தைப் போல் துடிதுடித்தாள். 'ஏழு ஜன்மத்திலும் தன்னை மறப்பதில்லை' என்று வாக்களித்துவிட்டுப் போன சுகுமாரனுக்குத் துரோகம் செய்து, இன்னொருவனை மணப்பதென்பது அவளால் நினைக்கவே முடியாத காரியமாயிருந்தது. தகப்பனாரிடம் எவ்வளவோ சொல்லி மன்றாடிப் பார்த்தாள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியாக, ஒரு நாள் இரவு, அரண்மனையிலிருந்து யாரும் அறியாமல் எழுந்து சென்று, இந்தக் கோட்டையின் அதிதேவதையான காளி கோயிலுக்குச் சென்றாள். அந்தக் கோயிலுக்கு அருகில் மிக ஆழமான சுனையொன்று இருக்கிறது. அம்மனைத் தியானித்துக் கொண்டே அந்தச் சுனையில் விழுந்து உயிர் துறந்தாள்.
பிரிதிவிசிங்கிற்கு இந்த விபத்தினால் பைத்தியம் பிடித்து விட்டது. அவருக்கு வேறு புதல்வர்கள் இல்லை. எனவே, கோட்டையை இலேசாக ஆற்காட்டு நவாபு கைப்பற்றிக் கொண்டார்.
சிவாஜியைக் காணச் சென்ற சுகுமாரன், எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாகி கடைசியில் அந்த மகாவீரரை நேரில் கண்டான். அவனுடைய வேண்டுகோளை சிவாஜியினால் நிராகரிக்க முடியவில்லை. அவருக்கும் வெகு காலமாகத் தெற்கு நோக்கி வரவேண்டுமென்ற எண்ணமிருந்தபடியால், ஒரு பெரிய சைனியத்துடன் கிளம்பி வந்தார். கோட்டை ஒரே நாளில் சிவாஜி வசமாயிற்று. ஆனால் சுகுமாரன் கோட்டைக்குள் வரவில்லை. மாலதியின் கதியை அறிந்ததும், அவனுக்கு உலக வாழ்க்கையில் வைராக்கியம் உண்டாகி விட்டது. கையில் சுரைக்காய்த் தம்பூர் ஏந்திய வண்ணம், அவன் உலக அநித்யத்தைப் பற்றியும் காதலின் மேன்மையைப் பற்றியும் பாடிக் கொண்டு தேச சஞ்சாரம் செய்யப் போய் விட்டான்.
அந்தச் சுகுமாரன் தான் நான். ஆறு ஜன்மத்துக்குப் பிறகு ஏழாவது ஜன்மத்தில் இங்கு வந்து சேர்ந்தேன்.
சரி, ரொம்ப நேரமாகி விட்டதே! நீங்கள் போக வேண்டாமா? உங்கல் சிநேகிதர்கள் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களா?" என்றான் குமாரஸ்வாமி.
4
ஆமாம்; ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வாஸ்தவந்தான். மணி ஏழரை, எட்டுக்கூட இருக்கும். சாலைப் பக்கம் காது கொடுத்துக் கேட்டேன். மோட்டார் ஹாரன் சப்தம் கேட்கவில்லை.
குமாரஸ்வாமி முன்பைவிட அதிகப் பரபரப்பு அடைந்திருப்பதையும், நான் அவ்விடம் விட்டு போக வேண்டுமென அவன் விரும்புகிறானென்பதையும் கண்டேன். அவன் கூறியதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? இன்று பௌர்ணமி ஆயிற்றே! ஒரு வேளை அந்த ஆவி உருவ மோகினி இன்றைக்கு இங்கு வருவாளோ? என் கண்ணுக்குக் கூடப் புலப்படுவாளோ?
ஒரு பக்கம் எனக்குப் பயமாயிருந்தது; இன்னொரு புறத்தில் உண்மையை அறியாமல் அவ்விடம் விட்டுப் போகவும் மனம் வரவில்லை.
"முக்கியமான விஷயம் நீர் சொல்லவில்லையே? சுனையில் விழுந்த மாலதி என்ன ஆனாள்? நீர் ஏழாவது ஜன்மம் எடுத்து வரும் வரையில் அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?" என்று கேட்டேன்.
"ஓஹோ! அதை நான் சொல்லவில்லையே? இப்படித் தான் எனக்குச் சில சமயம் மனம் குழம்பிப் போகிறது," என்றான் குமாரஸ்வாமி. அப்புறம் அவன் சொன்னது முன்னே கூறியதெல்லாம் தூக்கி அடிப்பதாயிருந்தது. அப்படி நம்பத்தகாததாயிருந்தது. அதோடு கொஞ்சம் முன்பின் குழப்பமாகவும் இருந்தது. அவன் கூறியதை ஒழுங்கு படுத்தி நானே இங்கே சுருக்கமாக சொல்லி விடுகிறேன்:-
காளி கோயில் சுனையில் மாலதி விழுந்தால் அல்லவா? விழும்போதே அவளுக்கு ஞாபகம் தவறிவிட்டது. மறுபடி உணர்வு வந்த போது தன்னை காளித்தாய் தன் கரங்களில் ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்! 'குழந்தாய்! என்ன காரியம் செய்தாய்? நரபலி வாங்கிக் கொண்டேன் என்று என்னையல்லவா ஜனங்கள் நிந்திப்பார்கள்? இப்படிச் செய்யலாமா?' என்று காளிமாதா கூறியது அவள் காதில் விழுந்தது. மாலதி தான் இப்போது சூட்சும சரீரத்தில் இருப்பதையும் உணரவில்லை. முன் போலவே ஸ்தூல தேகங் கொண்டிருப்பதாகவும் காளித்தாய் தனக்கு மரணம் நேராமல் காப்பாற்றியதாகவும் எண்ணினாள். உடனே காளிமாதாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
'தாயே! ஒரு வரம் எனக்கு கொடுக்க வேண்டும். கொடுத்தால் தான் காலை விடுவேன்' என்று கதறினாள். தாயார் கொடுப்பதாக வாக்களித்து, 'என்ன வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'அம்மா, நான் சொல்ல வேண்டுமா? உனக்குத் தெரியாதா? நான் சுகுமாரனையே பதியாக அடைய வேண்டும். இந்த வரந்தான் எனக்கு வேண்டும்' என்று கோரினாள்.
அப்போது மாதா அவளுக்கு அவளுடைய உண்மை நிலைமையை உணர்த்தினாள். அவள் தேகத்தை இழந்து விட்டதையும் ஆவி ரூபத்தில் இருப்பதையும் தெரிவித்து, ஆகையால் இன்னொரு ஜன்மம் எடுத்துத் தான் சுகுமாரனைக் கணவனாக அடைய முடியுமென்று சொன்னாள்.
மாலதி மாதாவின் காலை விடவில்லை. 'மறு ஜன்மத்தில் எனக்கு ஞாபகம் இருப்பது என்ன நிச்சயம்? அதெல்லாம் முடியாது. இந்த ஜன்மத்தில் நான் இந்த நினைவோடேயே சுகுமாரனை அடைய வேண்டும்', என்று பிடிவாதம் பிடித்தாள். 'அப்படியானால், நீ முந்நூறு வருஷம் காத்திருக்க வேண்டும் அத்தனை நாளும் இந்த மலை பிரதேசத்தில் ஆவி ரூபத்தில் அலைய வேண்டும். ஒவ்வொரு விநாடியும் உனக்கு ஒரு யுகமாக இருக்கும். இதற்குச் சம்மதமா?' என்று காளி அம்மன் கேட்டாள். மாலதி 'எவ்வளவு யுகமானாலும் காத்திருப்பேன்' என்றாள். 'சரி' அப்படியானால் நீ கேட்கும் வரம் கொடுக்கிறேன்; இந்த ஞாபகத்துடனேயே நீ சுகுமாரனை அவனுடைய ஏழாவது ஜன்மத்தில் அடைவாய். ஒவ்வொரு ஜன்மத்திலும் அவன் இங்கு ஒரு முறை வருவான். நீ அவனைக் காண்பாய்; ஆனால் அவன் உன்னைக் காண மாட்டான். ஏழாவது ஜன்மத்தில் அவன் வரும் போது உன்னுடைய உருவம் அவனுடைய கண்ணுக்குப் புலப்படும். என்னுடைய சந்நிதியில் நீங்கள் கல்யாணம் செய்து கொள்வீர்கள்' என்று காளி மாதா வரங்கொடுத்தாள்.
மாலதி அன்று முதல் ஆவி உருவத்தில் செஞ்சிக் கோட்டையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கோட்டையில் நடந்த சகல விஷயங்களையும் அவள் பார்த்து வந்தாள். ஆனால் அவளை யாரும் பார்க்கவில்லை. காளி மாதா கூறியது போலவே அவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. நாளுக்கு நாள் சுகுமாரனிடம் அவள் கொண்டிருந்த பிரேமையின் தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. தேகம் இல்லாதபடியால் கண்ணீர் விட்டு அழ முடியவில்லை. புலம்ப முடியவில்லை. இம்மாதிரி வழிகளில் தாபத்தைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தாபமும் உள்ளத்துக்குள்ளேயே குமுறி வெடித்துக் கொண்டிருந்தது.
காளி மாதாவின் வாக்கின்படி, ஒவ்வொரு ஜன்மத்திலும் சுகுமாரன் ஒரு தடவை செஞ்சிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போதெல்லாம் மாலதி அநுபவித்த வேதனைக்கு அளவேயில்லை. அவனை இவள் ஒவ்வொரு தடவையும் தெரிந்து கொண்டாள். அவனுக்கு இவள் இருப்பதே தெரியவில்லை. ஆனால், அவனும் கூட அவ்விடம் வந்ததும் இன்னதென்று தெரியாத கிலேசத்தை அடைந்து ஒவ்வொரு முறையும் அவ்விடத்தை விட்டுப் போவதற்குத் தயங்கினான்.
கடைசியில், சுகுமாரன் இந்த ஏழாவது ஜன்மம் எடுத்து வந்தபோது தான் காளித்தாய் அருளிய வரத்தின் பிரகாரம் அவளுடைய மனோரதம் நிறைவேறிற்று. குமாரஸ்வாமியின் முன்னால் அவள் உருவம் பெற்று வரவும் அவனுடன் வார்த்தையாடவும் முடிந்தது. குமாரஸ்வாமிக்கும் அவள் சொன்னவுடனே அந்தப் பூர்வஜன்ம சம்பவங்கள் எல்லாம் ஒருவாறு ஞாபகத்திற்கு வந்தன.
"அவ்வளவுதான் கதை. உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா?" என்று சொல்லி எழுந்திருந்தான் குமாரஸ்வாமி.
நானும் எழுந்து நின்று, "நீர் வரவில்லையா? இங்கேயே இருக்கப் போகிறீரா?" என்று, கேட்டேன்.
குமாரஸ்வாமி ஆகாயத்தில் மேலே வந்து கொண்டிருந்த பூரண சந்திரனைப் பார்த்தான். "இன்று பௌர்ணமி என்பது தெரியவில்லையா?"
இத்தனை நேரமும் என் மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்வியை இப்போது கேட்டேன்.
"உம்முடைய மாலதி இப்போது வருவாள் என்று எதிர்பார்க்கிறீரா?"
குமாரஸ்வாமி சிரித்தான். "நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கையே ஏற்படவில்லை போலிருக்கிறது?" என்றான்.
அந்தச் சமயத்தில், தூரத்தில் கிணு கிணு வென்னும் கால் சதங்கைச் சப்தமும், கைவளையல்கள் குலுங்கும் சப்தமும் கேட்டது. எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்தது. சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். சற்றுத் தூரத்தில், செடிகளின் மறைவில் ஒரு பெண் உருவம் காணப்பட்டது. தெரிந்த வரையில் மணப்பெண்ணைப் போல் அந்த உருவத்துக்குச் சிங்காரிக்கப்பட்டிருந்தது. குமாரஸ்வாமி இரண்டே பாய்ச்சலில் அந்தப் பக்கம் பாய்ந்து சென்றான்.
எனக்கு உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கிற்று. அதே சமயத்தில் சாலையில் மோட்டார் ஹாரனின் சப்தம் அலறியது. அது கொஞ்ச நேரமாய்ச் சப்தமிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். எனக்கு அப்போதுதான் காதில் விழுந்தது.
மோட்டார் ஹாரனின் சப்தம் வந்த திசையை நோக்கி நான் விரைவாக நடந்தேன். திரும்பிப் பார்க்கப் பயமாயிருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் பயம் அதிகமாயிற்று. சற்று நேரத்துக்கெல்லாம் ஓடத் தொடங்கினேன்.
5
சாலைக்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் நான் வந்த போது என் நண்பர்கள் எதிரில் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நான் ஒருவாறு சமாளித்துக் கொண்டேன். ஆனாலும் நான் பயந்து ஓடிவந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்து போயிற்று. மெதுவாகக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் மோட்டாரில் சேர்த்தார்கள்.
கார் கிளம்பியதும் எனக்குத் தைரியம் உண்டாயிற்று. அவர்கள் வருவதற்கு ஏன் அவ்வளவு தாமதம் என்று கேட்டேன். ஊருக்குள்ளிருந்து கிளம்பிய போது கார் தகராறு செய்ய ஆரம்பித்ததென்றும், 'ஸ்டார்ட்' ஆகவில்லையென்றும், அதைக் கிளப்புவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டதென்றும் சொன்னார்கள். ஆனாலும், அரை மணிக்கு முன்பே அங்கு வந்து விட்டதாகவும், ஹாரன் அடித்து அடித்துப் பார்த்தும் நான் வரக் காணாதபடியால் அவர்கள் பயந்து போய் என்னைத் தேடிவதற்கு வந்ததாகவும் சொன்னார்கள்.
எனக்கு ஏன் அத்தனை நேரம், வழி தவறி விட்டதா என்று கேட்டார்கள். ஆமாம் என்று நான் சொன்னேன். என்னுடைய அனுபவத்தைக் கூறினால் நம்பமாட்டார்கள். பரிகாசம் செய்வார்கள் என்று பயந்தேன்.
செஞ்சிக்கு அடுத்தாற்போல் மின்னலூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் வீதி வழியாக நாங்கள் சென்றபோது அங்கே ஒரு பெரிய கொட்டாரப் பந்தல் வீதியை அடைத்துப் போட்டிருப்பதைப் பார்த்தோம். காரைத் திருப்பி வேறு வழியாகப் போக வேண்டியிருந்தது. அங்கு என்ன விசேஷம் என்று கேட்டதற்கு, அந்த ஊர் ஜமீன்தார் மகளுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் என்றும், அதற்காகப் பந்தல் போட்டிருக்கிறதென்றும் தெரிந்தது.
கல்யாணப் பேச்சு வந்ததும், "இன்று ராத்திரி செஞ்சிக் கோட்டையில் ஒரு கல்யாணம் நடக்கும்" என்று நான் வாய் தவறிச் சொல்லிவிட்டேன். உடனே, என் சிநேகிதர்கள் பிடித்துக் கொண்டார்கள். என்ன, என்ன என்று குடைந்து கேட்டதன் மேல் அவர்களுக்கு விவரம் கூறினேன். நான் எதிர்பார்த்தது போலவே அவர்கள் கதையை முழுதும் நம்பவில்லை. ஆனாலும், நான் உடம்பெல்லாம் நடுங்கிக்கொண்டு திரும்பி வந்ததை எண்ணி நான் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்குமோ என்றும், சந்தேகித்தார்கள்.
சென்னை சேர்ந்து இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் என்னுடைய செஞ்சி அனுபவத்தில் எனக்கே சந்தேகம் உண்டாகி விட்டது. வேறு காரியங்களில் மனத்தைச் செலுத்தி அதை மறப்பதற்கு முயன்றேன்.
மூன்றாம் நாள் மாலை வெளியான தினசரிப் பத்திரிகைகளில் ஒரு மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்த பின்வரும் செய்தி எனக்குச் செஞ்சியை மறுபடியும் நினைவூட்டியது.
ஒரு பரிதாப சம்பவம்
"பிரசித்தி பெற்ற செஞ்சிக் கோட்டையில் நேற்றுப் பௌர்ணமியன்று மிகவும் பரிதாபமான ஒரு சம்பவம் நடந்தது. அன்று இரவு அங்கேயுள்ள அம்மன் கோயிலுக்கு முன்னால், சுனையின் கரையில் ஒரு வாலிபனும், ஓர் இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். அவர்கள் நஞ்சு அருந்தி உயிர் விட்டிருக்க வேண்டுமென்று வைத்திய பரிசோதனையில் வெளியாயிற்று.
இளைஞன் இவ்வூர் எலிமெண்டரி பாடசாலையில் உபாத்தியாயர். சமீபத்தில் அவனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் உத்தரவு வந்திருந்ததாம். காலஞ்சென்ற பெண் இவ்வூர் ஜமீன்தார் சேஷாசல ரெட்டியாரின் ஏக புதல்வி. இந்தப் பெண்ணுக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் நடக்க ஏற்பாடாகியிருந்ததென்பது குறிப்பிடத் தக்கது. குமாரஸ்வாமி என்கிற அந்த இளைஞனும் இந்தப் பெண்ணும் பரஸ்பரம் காதல் கொண்டிருந்தார்களென்றும், அவர்களுடைய கல்யாணத்துக்கு ஜமீன்தார் சம்மதிக்காமல் வேறு பணக்கார இடத்தில் பெண்ணைக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தபடியால் இந்த விபரீத சம்பவம் நேர்ந்ததென்றும் சொல்லப்படுகிறது. அந்த இளங் காதலர்களின் பரிதாப முடிவைக் குறித்து எல்லாரும் வருத்தப் பட்டாலும் 'இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட காதல் உண்டா?' என்று அதிசயத்துடன் பேசிக் கொள்கிறார்கள்..."
இந்தச் செய்தியைப் படித்ததும், சாதாரணமாய்க் கல் நெஞ்சனென்று பெயர் வாங்கிய என் கண்களிலிருந்து கலகலவென்று நீர் பொழிந்தது. அந்த இளங் காதலர்களின் அகால மரணத்தினால் விளைந்த துக்கத்துடன், "ஆகா! தமிழ்நாடு ஓர் அபூர்வ கதாசிரியனையல்லவா இழந்துவிட்டது!" என்று எண்ணியும் வருந்தினேன்.
அடப் பாவி! என்னிடம் மட்டும் கதை சொல்லாமல் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடாதா? அப்படிச் சொல்லியிருந்தால், "அசட்டுப் பிள்ளை! காதல், பிரேமை என்பதெல்லாம் மூன்று நாள் பைத்தியம்! தேசத்துக்காக உயிரைக் கொடுத்தாலும் புண்ணியம் உண்டு," என்று உபமான உபமேயங்களுடன் புத்தி சொல்லிக் காப்பாற்றியிருப்பேனே?
-------------
கருத்துகள்
கருத்துரையிடுக