ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 2
சிறுகதைகள்
Backஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு-2
ஆணும் பெண்ணும் (1953), உதயம் (1954), ஒரு பிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960)
தேவன் வருவானா (1961), சுமை தாங்கி (1962), மாலை மயக்கம் (1962), யுகசந்தி (1963),
உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969),
குருபீடம் (1970), அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் (1972), சர்க்கரம் நிற்பதில்லை (1973),
பபுகை நடுவினிலே (1990), ....... . இவற்றிலிருந்து ஒரு சில சிறுகதைகளை மதுரை திட்டத்தின்
கீழ் வௌியிட உள்ளோம்.
1. டிரெடில் (1958)
'டிரிங்... டிரிங்... டிங்...'
- மை பிளேட் சுற்றுகிறது.
மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன.
'டங் - டட்டங்க்!'
- இம்ப்ரஷன்!
'டடக்... டடக்... டடக்... டடக்...'
- மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம் - அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது!
இந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம்? - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்!
அந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் 'பில் புக்'குகள், 'லெட்டர் பேடு'கள், 'விஸிட்டிங் கார்டு'கள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து 'ஜாப் டைப்கேஸ்'களும் ஒரு சிறிய 'கட்டிங் மிஷி'னும்தான்! - சின்ன பிரஸ்தானே? அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது?
ஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.
கம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்!
மாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை!
வினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..?
'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'
இவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.
'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது?...'
வினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...
- அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது!
அதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.
'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா?... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ!... இந்த எழுத்து இன்னா படலையே! மொக்கையா, இன்னா எழவு? கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்."
இந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே? அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா!" என்று முதலியார் குரல் கொடுத்தார்.
"ஒரு நாலணா குடு ஸார்! காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்..."
"சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு!" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.
"ஆவட்டும், சார்!"
- இது அவனது வழக்கமான பதில்.
காசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்.
2
ஒரு நாள் -
பிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை.
அன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி.
'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ஓர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது.
செஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன...
- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன.
'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்...'
- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான்.
- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நௌிந்தது.
அவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின.
- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்!
'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன!
ஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான்.
காகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்!
அடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது.
- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.
'கி. வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.
பத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை!
"சரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே..."
- செஸ்ஸைக் கழற்றித் துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான்.
"இன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க?... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே! அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்!" என்று முதலியார் இரைந்தார்.
"ஆவட்டும், ஸார்" என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம்.
"மணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்..."
- இது முதலியாரின் உத்தரவு.
3
மணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும்.
கரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது...
'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்..."
சூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள்.
ஹீம்... பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்?...'
- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! சிரித்துவிட்டான்!
"இன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே" என்றார் முதலியார்.
"நீதான் பாரு ஸார்...!" என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன்.
அதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.
'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக...
- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல?...
தரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
"சிரிப்பு இன்னடா, சிரிப்பு? காலிப்பயலே! வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது.
"ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது!
4
இரவு மணி ஏழு!
டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன.
'டடக்... டடக்... டடக்.. டடக்..'
கால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன.
'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்!' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், "இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்!" என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார்.
- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன்.
"ஸார்...!" என்று பல்லைக் காட்டினான்.
"இன்னாடா, சும்மா சொல்லு!" என்று முதலியார் சிரித்தார்.
"ஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்..."
அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்!
'அடடே, கலியாண சமாச்சாரமா?... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்!" என்று முதலியாரும் குதூகலித்தார்.
"அதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா..."
"உம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி!" என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை.
வௌியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்!
'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு? - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்!'
5
பிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது!
'டக் - டக் - டடக் - டடக் -டடக் - '
திடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை...
- "ஆ!" என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது.
கால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து ஓய்ந்தது!
வினாயகத்துக்கு மூச்சு அடைத்தது. கேஸ்மீது சாய்ந்து பற்களைக் கடித்தவாறு அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் என்னவோ உருண்டு அடைப்பது போலிருந்தது - மூச்சுவிடவே திணறினான். மெள்ள மெள்ள நகர்ந்து அருகிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.
- வலி குறைந்தது; ஆனால், வலித்தது!
'இன்னம் கொஞ்சம்தான்; போட்டு முடிச்சிட்டுப் போயிடலாமே?...'
முக்கி, முனகி,கால்மாற்றி, பெருமூச்செறிந்து, பல்லைக் கடித்தவாறு, நிறுத்தி நிறுத்தி ஒருவாறாக வாழ்த்துப் பத்திரம் பூராவும் அடித்து முடித்து விட்டான்.
டிரெடிலிருந்து செஸ்ஸைக் கழற்றக்கூடப் பொறுமையில்லை...
- கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு நடந்தான்.
நடக்க முடியவில்லை; வலி அதிகரித்தது...
வயிற்றில் ஏதோ ஒன்று, இருக்க வேண்டிய இடத்திலிருந்து வேறு எதனுடைய இடத்திற்கோ இடம் மாறி, இடம் பிறழ்ந்து, வேறு எதனுடைய வழியிலோ வந்து அடைத்துக் கொண்டது போல...
"அம்...மா"
- அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.
பக்கத்திலிருந்த டாக்டர் வீட்டுக்கு ஓடிப்போய்... இல்லையில்லை... துடித்துத் துடித்துச் சாடிப்போய் விழுந்தான்.
6
வினாயகத்திற்கு 'ஹெர்ன்யா'வாம். டாக்டரும் முதலியாரும் சேர்ந்து அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
அவனுடைய உடல், வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப் பொருளாகியது. டாக்டர்கள் அவனைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகத் தங்கள் புதிய முறைகளை அவன் மீது பிரயோகம் செய்து தங்களுடைய திறமைகளைப் பரிசீலித்துக் கொண்டனர்...
- நோய்... வேதனை... அவமானம்!
நாட்கள் ஓடின. கடைசியில் அவனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. கடைசியில் ஒரு மாதத்துக்குப் பின் ஒருவாறாக அவனுக்கு விடுதலை கிடைத்தது.
ஆஸ்பத்திரியை விட்டு வௌியேறும்போது அவனுக்கு டாக்டர் சொன்ன புத்திமதி அவன் ஹிருதயத்தினுள்ளே சப்தமில்லாமல் ஒரு அதிர்வேட்டை வெடித்தது.
'நீ கல்யாணம் செய்து கொள்ளாதே!.. உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...'
- அவன் காதுகள் அதற்குமேல் எதையும் கிரகிக்கவில்லை!
7
வினாயகம் மீண்டும் வேலைக்கு வந்து விட்டான். இருண்ட குகை போன்ற அந்தப் பிரஸ்ஸீக்குள் புகுந்து ஒரு மாசமாய்ப் பிரிந்திருந்த டிரெடிலைப் பார்த்தான்; கேஸைப் பார்த்தான்; ஸ்டிக்கைப் பார்த்தான்..
- மனசில் என்ன தோன்றியதோ? - டிரெடிலைக் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான்...
"அதோ, அந்தக் கலியாணப் பத்திரிகை முடுக்கி வச்சிருக்கு. அதை மிஷின்லே ஏத்திக்கோ. நீ இல்லாம ஒரு வேலையும் நடக்கலேடா!... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே?" என்று முதலியார் கண்களைச் சிமிட்டினார்.
அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவனையறியாமல் கைகளிரண்டும் முகத்தைப் புதைத்தன; உடல் குலுங்கிற்று -
அழுதானா?...
"பயலுக்கு ரொம்ப வெக்கம்!" என்று சிரித்தார் முதலியார்.
அவன் மௌனமாக டிரெடிலின் அருகே சென்று யாரோ கம்போஸ் செய்து வைத்திருந்த யாரோ ஒருவருடைய கலியாணப் பத்திரிகையை மனசில் விருப்போ வெறுப்போ சற்றுமின்றி, யந்திரம்போல் மெஷினில் ஏற்றி, காகிதங்களை ஸ்டான்டின்மீது எடுத்து வைத்துக் கொண்டு, மை இழைக்க ஆரம்பித்தான்...
-'டடக்... டடக்...'
அவனது கால் பெடலை மிதித்தது.
'டங்... டட்டங்..!'
- இம்ப்ரஷன்...
அச்சில் வந்தது ஒரு கலியாணப் பத்திரிகைதான்!
மிஷினை நிறுத்திவிட்டு, கேஸ்களுக்கிடையில் செருகி வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்...
கி.வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்...
- ஆமாம்; அந்த 'வேஸ்ட் ஷீட்' தான்...
அன்று வயிறு குலுங்க அவனைச் சிரிக்க வைத்த அந்த விளையாட்டுப் பத்திரிகைதான்...
அதன் மீது, அவன் கண்களில் ஊற்றுப் போல் சுரந்து கரித்த இரண்டு வெப்பமிக்க கண்ணீர்த்துளிகள் விழுந்து தெறித்தன!..
- "இன்னாடா வினாயகம், மிஷின் நிக்குது... அவன் வந்துடுவானே... அதுக்குள்ளே முடிச்சிடணும்!" என்றார் முதலியார்.
"ஆவட்டும் ஸார்..."
"டடக்... டடக் - டடக்... டடக்..."
- ஆம்; இரண்டு 'டிரெடில்'களும் இயங்க ஆரம்பித்து விட்டன!
(எழுதப்பட்ட காலம்: 1958)
நன்றி: ஒரு பிடி சோறு (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: பிப்ரவரி, 1990 -
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2. பிணக்கு ( 1958)
வளையொலி கலகலத்தது.
கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார்.
கையில் பால் தம்ளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கையறைக்குள் நுழைவது தெரிந்தது. தன்மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழ்ந்தது!
- கிழவருக்குக் கொஞ்சம் குறும்புதான்.
கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். 'கிரீச்' சென்ற ஒலியுடன் கதவு மூடியதும் மேலே செல்ல முடியாமல் அவரது பார்வை கதவில் முட்டிக் கொண்டது.
மூடிய கதவின் மீது ஒரு பெண்ணுருவம் சித்திரம் போல் தெரிந்தது. வயது பதினாறுதான் இருக்கும்.
மழுங்கச் சீவிப் பின்னிய சிகையில் உச்சி வில்லை, தளர்ந்து துவளும் ஜடையில் திருகு வில்லை, நெற்றியில் முத்துச் சுடரை அள்ளி விசிறும் சிட்டியும், பவழ உதடுகளுக்குமேல் ஊசலாடும் புல்லாக்கும் முழங்கைவரை இறங்கிய ரவிக்கையோடு, சரசரக்கும் சரிகை நிறைந்த பட்டுப் புடவை கோலமாக, கருமை படர்ந்து மின்னிய புருவக் கொடிகளின் கீழாய், மை தட்டிப் பளபளக்கும் பெரிய விழிகள் மருண்டு நோக்க, இளமையும் மருட்சியும் கலந்து இழையும் வாளிப்போடும், வனப்போடும், நாணமும் நடுக்கமுமாய் நிற்கும் அந்தப் பெண்...
ஆமாம்; தர்மாம்பாள் ஆச்சியின் வாலைப் பருவத் தோற்றம் தான்.
அது, அந்த உருவம், மூடிய கதவிலிருந்து இறங்கி அவரை நெருங்கி வந்தது. வெட்கம், பயம், துடிப்பு, காமம், வெறி, சபலம், பவ்யம், பக்தி, அன்பு - இத்தனையும் ஓர் அழகு வடிவம் பெற்று நகர்ந்து வருகிறது - கைலாசம் தாவி அணைக்கப் பார்க்கிறார்.
- சமையல் அறை வேலையெல்லாம் முடித்துக் கொண்டு, கூடத்திற்கு வந்த தர்மாம்பாள் பேரப் பிள்ளைகளின் அருகே பாயை விரித்தாள்.
அருகே ஆளரவம் கேட்கவே நினைவு கலைந்த பிள்ளை மனைவியைப் பார்த்தார்.
தலை ஒரு பக்கம், கால் ஒரு பக்கமாகப் போட்டபடி உறங்கும் பெரிய பையனைப் புரட்டிச் சரியாகக் கிடத்தினாள்.
"பிள்ளையோ லெச்சணமோ? பகலெல்லாம் கெடந்து ஆடு ஆடுன்னு ஆடறது, ராவுலே அடிச்சிப் போட்டாப்பிலே பெரக்கனையே இல்லாம தூங்கறது. அடாடா... என்னா ஆட்டம்! என்னா குதிப்பு!.." என்று அலுத்துக் கொண்டே பேரனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
- ஏக புத்திரன் கண்ணனின் சீமந்த புத்திரனல்லவா?
"வயசு எட்டு ஆகுது... வயசுக்குத் தகுந்த வளத்தியா இருக்கு?... சோறே திங்க மாட்டேங்கறான்..." என்று கவலையுடன் பெருமூச்சு விட்டாள் தர்மாம்பாள்.
இளையவள் விஜயா, நான்கு வயதுச் சிறுமி. எல்லாம் பாட்டியின் வளர்ப்புத்தான் - பாயை விட்டுத் தரையில் உருண்டு கிடந்தாள். அவளையும் இழுத்துப் பாயில் கிடத்தினாள்.
"ஹீம் பாட்டி" என்று சிணுங்கினாள் குழந்தை.
"ஒண்ணுமில்லேடி கண்ணூ... தரையிலே கெடக்கியே. உம் தூங்கு" என்று முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
கைலாசம், தனது பசுமை மிக்க வாலிபப் பிராய நினைவுகளில் மனசை மேயவிட்டவராய் மௌனமாக அமர்ந்திருந்தார்.
"நீங்க ஏன் இன்னும் குந்தி இருக்கீங்க... உங்களுக்கும் ஒரு தாலாட்டுப் பாடணுமா?... பாலைக் குடிச்சிட்டுப் படுக்கக் கூடாதா? கொண்டு வந்து வச்சி எத்தினி நாழி ஆவுது... ஆறிப் போயிருக்கும்..." என்று சொல்லிக் கொண்டே கலைந்து கிடந்த அவரது படுக்கையை ஒழுங்கு படுத்தினாள்.
"கொஞ்சம் ஒன் கையாலே அந்தத் தம்ளரை எடுத்துக் குடு."
பால் தம்ளரை வாங்கும்போது அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.
"ஆமா படுத்துத் தூங்குடாங்கிறியே, எந்தச் சிறுக்கி மவ எனக்கு வெத்திலை இடிச்சிக் குடுத்தா" என்று அவள் கையை விடாமல் சிரித்துக் கொண்டே கேட்டார்.
"சிரிப்புக்குக் கொறைச்சல் இல்லே; பிள்ளை இல்லாத வீட்டிலே கெழவன் துள்ளி வெளையாடினானாம்... கையை விடுங்க."
"யாருடி கெழவன்...? நானா?" என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.
"இல்லே. இப்பத்தான் பதினேழு முடிஞ்சி பதினெட்டு நடக்கு, பொண்ணு ஒண்ணு பாக்கவா?"
"எதுக்கு நீதான் இருக்கியே?..." அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்...
"ஐய, என்ன இது?"
- மறுபடியும் சிரிப்புத்தான். கிழவர் பொல்லாதவர்...
பாலைக் குடித்த பிறகு, உடல் முழுதும் வேர்த்தது. துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டு, "உஸ் அப்பா, ஒரே புழுக்கம். அந்தப் பாயைக் கொண்டு போய் முத்தத்திலே விரி... நா வெத்திலைச் செல்லத்தை எடுத்திட்டு வாரேன்" என்று எழுந்தார்.
தர்மாம்பாள் பாயைச் சுருட்டிக் கொண்டு கூடத்து விளக்கை அணைத்தாள். முற்றத்தில் பளீரென்று நிலா வௌிச்சம் வீசிய பாகத்தில் பாயை உதறி விரித்தாள்.
"உஸ்... அம்மாடி, என்னமா காத்து வருது..." என்று காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்தாள்.
மேலாக்கை எடுத்து, முன் கையிலும், கழுத்திலும் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். ரவிக்கையின் பித்தானைக் கழற்றி விட்டு முதுகுப் புறத்தை உயர்த்திக் கையிலிருந்த காம்பினால் பின்புறத்தைச் சொறிந்து கொண்டாள்.
கைலாசம் பிள்ளை, மனைவியின் அருகே அமர்ந்து நிலவெரிக்கும் வான் வௌியை வெறித்துப் பார்த்தார்.
ஆகாச வௌியில் கவிந்து மிதந்து செல்லும் மேகத்திரள்கள் நிலவினருகே வரும்போது ஒளிமயமாகவும், விலகிச் செல்கையில் கரிய நிழற் படலங்களாகவும் மாறி மாறி வர்ண ஜாலம் புரிந்தன.
இந்த நிலவொளியில் ஆம்; இதே நிலவுதான் காலம் எத்தனையானாலும் நிலவு ஒன்றுதானே. இந்த நிலவில், பாட்டியின் மடியில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டு பால் சோறு உண்ட பருவம் முதல், தனக்கு வாய்த்த அருமை மனைவி தர்மாம்பாளின் மடியில் தலை சாய்த்து இன்பக் கனவுகளில் மயங்கியபடியே தாம்பூலம் வாங்கிக் கொண்டதெல்லாம்...
அந்த நிகழ்ச்சிகளெல்லாம், நிலவில் படிந்த மேகங்கள் ஒளி பெறுவது போன்று நினைவில் கவிந்து ஒளி பெற்று ஜ்வலித்து, பிறகு விலகி குறைந்து, ஒளி இழந்து கரிய இருள் நிழலாய் மாறி நகர்ந்தன.
மேகம் எங்கே? எங்கோ இருக்கும் நிலவு எங்கே?
நினைவு எங்கே? இப்பொழுது தான் இருக்கும் நிலை எங்கே?...
நினைத்தால்தான் நினைவா? நினைக்காதபோது நினைவுகள் எங்கு இருக்கின்றன? நினைவு ஏன் பிறக்கிறது? எப்படிப் பிறக்கிறது... நினைவு!... அப்படியென்றால்?... நினைப்பதெல்லாம் நடந்தவைதானா? நடக்காதனவற்றை நினைப்பதில்லையா? நினைப்பு என்பது முழுக்கவும் மெய்யா? பொய்யை, ஆசைகளை, அர்த்தமற்ற கற்பனைகளை, அசட்டுக் கற்பனைகளை, நினைத்து நினைத்து நினைவு என்ற நினைப்பிலேயே நிசமாவதில்லையா?
"டொடக்... டொடக்"
தர்மாம்பாளின் கையிலிருந்த பாக்கு வெட்டி இரவின் நிசப்தத்தில் பாக்கை வெட்டித் தள்ளும் ஒலி...
கைலாசம் தன் மனைவியைக் காணும்போது தன்னையும் கண்டார்.
தர்மாம்பாள், உள்ளங் கையில் வைத்திருந்த வெற்றிலையில், உறைந்து போயிருந்த சுண்ணாம்பைச் சுரண்டி வைத்துத் திரட்டி, பாக்கையும் சேர்த்து, இரும்புரலில் இட்டு 'டொடக் டொடக்' கென்று இடிக்க ஆரம்பித்தாள்.
கைலாசத்தின் நாவு பற்கள் இருந்த இடத்தைத் துழாவியது.
'உம்.. எனக்கு எப்பவுமே பல்லு கொஞ்சம் பெலகீனம்தான்...'
உடம்பை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டார். முண்டாவையும் புஜங்களையும் திருகிக் கைகளை உதறிச் சொடக்கு விட்டுக் கொண்டார். ரோமம் செறிந்த நெஞ்சிலும் புஜங்களிலும் சருமம் சற்றுத் தளர்ந்திருந்தாலும் தசை மடிப்புக்கள் உருண்டு தெரிந்தன.
கைலாசம் உண்மையிலேயே திடகாத்திரமான மனிதர்தான். உடம்பில் அசுர வலு இருந்த காலமும் உண்டு; இப்பொழுது நிச்சயம் ஆள் வலு உண்டு!
- போன வருஷம்தான் சஷ்டியப்த பூர்த்தி...
தர்மாம்பாளுக்கு ஐம்பதுக்கு மேல் அறுபதுக்குள்.
அவளுக்கு மூங்கில் குச்சி போல் நல்ல வலுவான உடம்புதான். ஒல்லியாயிருந்தாலும் உடலில் உரமும் உண்டு... இல்லாவிட்டால் ஏறத்தாழ நாற்பத்தைந்து வருஷமாக அந்த உடம்புக்கு ஈடு கொடுக்க முடியுமா?
கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரிசித்தது...
"என்ன?... கொஞ்சுறீங்க, வெத்திலையைப் போட்டுக் கிட்டுப் படுங்க..." என்று இடித்து நசுக்கிய வெற்றிலைச் சாந்தை அவரது உள்ளங்கையில் வைத்தாள்... மீதியை வாயிலிட்டுக் குதப்பி ஒதுக்கிக் கொண்டாள்.
தர்மாம்பாளுக்குப் பற்கள் இருக்கின்றன. என்றாலும் புருஷனுக்காக இடிப்பதில் மீத்துத் தானும் போட்டுக் கொள்வதில் ஒரு திருப்தி. ஆறு வருடமாய் இப்படித்தான்.
அந்தத் தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட இதுவரை நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை. 'சீ... எட்டி நில்!'- என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும், அவர் நாவு தாங்காது...
சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கையைக் கழித்து விட்டார்கள்.
- கழித்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா? இதுவரை வாழ்வை அப்படித்தான் கழித்தார்கள்...
நிலவு இருண்டது! எங்கும் ஒரே நிசப்தம். கூடத்தில் படுத்திருந்த முத்து, தூக்கத்தில் ஏதோ முனகியவாறே உருண்டான்.
- அறைக்குள்ளிருந்து வளையல் கலகலப்பும், கட்டிலின் கிரீச்சொலியும், பெண்ணின் முணுமுணுப்பும்...
எங்கோ ஒரு பறவை சிறகுகளைப் படபடவென்று சிலுப்பிக் கொள்ளும் சப்தம், அதைத் தொடர்ந்து வௌவால் ஒன்று முற்றத்தில் தெரிந்த வான் வௌியில் குறுக்காகப் பறந்தோடியது..
முற்றத்தில் ஒரு பகுதி இருண்டிருந்தது!
நிலவு எதிர்ச் சரகக் கூரைக்கும் கீழே இறங்கி விட்டது. அவர்கள் படுத்திருந்த இடத்தில் நிழலின் இருள் நிலவொளிக்குத் திரையிட்டிருந்தது...
தர்மாம்பாள் தொண்டைக்குள் 'களகள'வென்று இளமை திரும்பி விட்டது மாதிரிச் சப்தமில்லாமல் சிரித்தாள்...
கிழவரின் அகண்ட மார்பில் அவள் முகம் மறைந்தது. பொன் காப்பிட்ட அவளது இரு கரங்களும் கிழவரின் முதுகில் பிரகாசித்தன...
இருளோ, நிலவோ, இரவோ, பகலோ, இளமையோ முதுமையோ எல்லாவற்றையும் கடந்ததுதானே இன்பம்!
ஆம். அது - இன்பம் மனசில் இருப்பது... இருந்தால் எந்த நிலைக்கும் எந்தக் காலத்துக்கும் யாருக்கும் அது ஏற்றதாகத்தான் இருக்கும். தர்மாம்பாளும் கைலாசமும் மனசில் குறைவற்ற இன்பம் உடையவர்கள்... வயசைப் பற்றி என்ன?
'டொக்... டொக்...'
கைலாசம், நிலா வௌிச்சத்தில் பாயை இழுத்துப் போட்டுக் கொண்டு, இரும்புரலில் வெற்றிலை இடிக்கிறார்.
அருகே தர்மாம்பாள் படுத்திருக்கிறாள்... தூக்கம், அரைத்தூக்கம், மயக்கம்தான்!
"நீங்க இன்னும் படுக்கலியா?"
"உம்... நீ வெத்திலை போடுறியா?"
"உம்... அந்தத் தூணோரம் செம்பிலே தண்ணி வச்சேன். கொஞ்சம் கொண்ணாந்து தாரீங்களா? நாக்கை வரட்டுது" என்று தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.
"எனக்கும் குடிக்கணும்!" என்றவாறு எழுந்து சென்று செம்பை எடுத்துத் தண்ணீரைக் குடித்துவிட்டுக் கொண்டு வந்தார் கைலாசம்.
அவர் வரும்போது நிலவொளியில், அந்த திடகாத்திரமான உருவத்தைக் கண்டு தர்மாம்பாளின் மனம், வாலிபக் கோலம் பூண்டு, அந்த அழகில் லயித்துக் கிறங்கி வசமிழந்து சொக்கியது. அவர் அவள் அருகே வந்து அமர்ந்தார்.
தாகம் தீரத் தண்ணீர் குடித்த தர்மாம்பாள், ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் மேல் சாய்ந்தாள். வலுமிக்க அவரது கரத்தை லேசாக வருடினாள். அவளுக்கே சிரிப்பு வந்தது - சிரித்தாள். "என்னடி சிரிக்கிறே?"
"ஒண்ணுமில்லே; இந்தக் கெழங்க அடிக்கற கூத்தை யாராவது பார்த்தா சிரிப்பாங்களேன்னு நெனைச்சேன்!" அவர் கண்டிப்பது போல் அவள் தலையில் தட்டினார். "யாருடி கிழம்?..."
கிழவர் சிரித்தார்! அவளும் சிரித்தாள்.
தர்மாம்பாள் எழுந்து உட்கார்ந்து இன்னொரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டாள். அவள் பார்வை கவிழ்ந்தே இருந்தது.
- கிழவர் அவள் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அவள் விழிகளை உயர்த்திப் பார்த்தாள். அவர் அவள் விழிகளுக்குள்ளே பார்த்தவாறு சிரித்தார்.
"சே!.. நீங்க ரொம்ப மோசம்!" என்று வெட்கத்துடன், கண்டிக்கும் குரலில் சிணுங்கினாள் தர்மாம்பாள். அனுபவித்த சந்தோஷத்தால் காரணமற்றுச் சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது. கிழவருக்குப் பெருமை தாங்க முடியவில்லை.
அவளிடம் ஏதாவது வேடிக்கை பேசி, விளையாடத் தோன்றியது அவருக்கு. உள்ளங்கையில் புகையிலையை வைத்துக் கசக்கியபடி, தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே,
"அந்தக் காலத்திலே நான் அடிச்ச கூத்தெல்லாம் ஒனக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது" என்று சொல்லிவிட்டுத் தலையை அண்ணாந்து புகையிலையை வாயில் போட்டுக் கொண்டார். "ஏன்? சீமைக்கா போயிருந்தீங்க?"
"தர்மு, உனக்குத் தெரியாது. நீ எப்பவும் குழந்தைதான். ஒன்கிட்டே அப்போ நான் சொன்னதே இல்லை. இப்ப சொன்னா என்ன?"
- கிழவர் கொஞ்சம் நகர்ந்து சென்று சாக்கடையில் எச்சில் துப்பிவிட்டு வந்தார்.
"நம்ம சந்நிதித் தெரு கோமதி இருந்தாளே, ஞாபகம் இருக்கா?"
கால்களிலே சதங்கை கொஞ்ச, கரு நாகம் போன்ற பின்னல் நௌிந்து திரும்பி வாலடித்துச் சுழல, கண்களும் அதரங்களும் கதை சொல்ல, 'இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கிருக்குது' என்ற நாட்டியக் கோலத்துடன் முத்திரை பாவம் காட்டி, சதிராடி நிற்கும் ஒரு தங்கப் பதுமை போன்ற கோமதியின் உருவம் தர்மாம்பாளின் நினைவில் வந்து நின்றது. ஒரு கணம் மயல் காட்டி மறையாமல் நிலைத்து நின்றது...
"என்ன, ஞாபகம் இருக்கா?... அந்தக் காலத்திலெ அவளுக்குச் சரியா எவ இருந்தா?... என்ன இருந்தாலும் தாசின்னா தாசிதான். அவளுகளை மாதிரி சந்தோஷம் குடுக்க வீட்டுப் பொம்பளைங்களாலே ஆகுமா?"
"உம்" தர்மாம்பாளின் கண்கள் கிழவரின் முகத்தை அர்த்தத்தோடு வெறித்தன...
மனம்?...
'ஓஹோ! அந்தக் காலத்திலே அவ நாட்டியம்னா பறந்து பறந்து ஓடுவாரே அதுதானா?' என்று பற்பல நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தது மனம்.
கிழவர் குறும்பும் குஷியுமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்.
"என்னை ஒரு தடவை நீலகிரிக்கு மாத்தியிருந்தாங்களே, ஞாபகமிருக்கா? கண்ணன் அப்ப வயத்திலே ஏழு மாசம். இல்லையா..."
"உம்..." தர்மாம்பாளின் விழிகள் வெறித்துச் சுழன்றன. "இது சத்தியம்! இது சத்தியம்!" என்று அவளூள் ஏதோ ஒரு குரல் எழுந்தது.
"அப்போ தனியா போனேன்னா நெனைச்சிட்டிருக்கே... போடி பைத்தியக்காரி! அந்தக் கோமதிதான் என்கூட வந்தா... அவ ஒடம்பு செலை கணக்கா இல்லே இருக்கும்... உம்... அவ என்ன சொன்னா தெரியுமா கடைசியிலே..." கிழவர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். "நானும் இதுவரைக்கும் எத்தனையோ பேரைப் பாத்திருக்கேன் - ஆம்பளைன்னா நீங்கதான்னா..." கிழவர் மறுபடியும் சிரித்தார்.
அது என்ன சிரிப்பு... பொய்ச் சிரிப்பா, மெய்ச் சிரிப்பா...
தர்மாம்பாளின் நெஞ்சில் ஆத்திரமும், துரோகமிழைக்கப்பட்ட - வஞ்சிக்கப்பட்ட ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்தன.
"நெசந்தானா!"
"பின்ன... பொய்யா?... அதுக்கென்னா இப்போ, எப்பவோ நடந்ததுதானே..."
- அடப் பாவி, கிழவா? பொய்யோ மெய்யோ அவள் திருப்திக்காகவாவது மாற்றிச் சொல்லக் கூடாதா?
தர்மாம்பாள் கிழவிதான்! கிழவி பெண்ணில்லையா...?
'துரோகி, துரோகி' என்று அவள் இருதயம் துடித்தது. 'ஆமாம்; அது உண்மைதான். பொய்யில்லை.' ஏனோ அவள் மனம் அதை நம்பிவிட்டது. பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிக்கக்கூட இல்லை - அதெல்லாம் தாம்பத்திய ரகசியம்!
விருட்டென்று எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று கூடத்து இருளில் வீழ்ந்தாள்
தர்மாம்பாள்.
"அடடே, தர்மு கோவிச்சுக்கிட்டியா? பைத்தியக்காரி, பைத்தியக்காரி!" என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே பாயில் துண்டை விரித்துப் படுத்தார் கைலாசம் பிள்ளை.
- விளையாட்டா? அது என்ன விளையாட்டோ? கிழவரின் நாக்கில் சனியல்லவா விளையாடி இருக்கிறது!
மணி பன்னிரண்டு அடித்தது! கிழவர் தூங்கிப் போனார். தர்மாம்பாள் தூங்கவில்லை!
மறுநாள்...
மறுநாள் என்ன, மறுநாளிலிருந்து வாழ்நாள் வரை...
அவருக்கு அவள் தன் கையால் காப்பி கொடுப்பதில்லை; பல் துலக்க, குளிக்க வெந்நீர் கொடுப்பதில்லை. முதுகு தேய்ப்பதில்லை; சோறு படைப்பதில்லை; வெற்றிலை பாக்கு இடித்துக் கொடுப்பதில்லை.
- பாவம்! கிழவர் அனாதைச் சிசுவைப் போல் தவித்தார்.
அவளைப் பொறுத்தவரை, கைலாசம் பிள்ளை என்றொரு பிறவியே இல்லாத மாதிரி, அப்படி ஒருவருக்குத் தான் வாழ்க்கைப் படாதது மாதிரி நடந்து கொண்டாள். அவருடன், யாருடனும் அவள் ஒரு வார்த்தை பேசுவதில்லை.
மகனும் மருமகளும் துருவித் துருவி அவளை விசாரித்தனர்.
- மௌனந்தான்.
கிழவர்? - அவர் வாயைத் திறந்து என்னவென்று சொல்லுவார்?
- மௌனம்தான்.
அன்று இரவு விஜயா கேட்டாள்:
"பாட்டி! நீ தாத்தாவோட 'டூ' வா?..."
- அவள் ஒன்றும் பேசவில்லை.
"ஏன் தாத்தா, பாட்டி ஒன்னோட பேச மாட்டேங்குது? நீ அடிச்சியா?" - என்று முத்து கிழவரை நச்சரித்தான்.
கிழவரால் பொறுக்க முடியவில்லை.
"என்னடி தர்மு - நான் வெளையாட்டுக்கு, பொய்யிதான் சொன்னேன் - என்னை ஒனக்குத் தெரியாதா! மனசார ஒனக்கு நா துரோகம் செஞ்சிருப்பேன்னு நீ நெனைக்கிறியா? இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்தும், என்னை நீ தெரிஞ்சுக்கலையா, தர்மு... தர்மு..."
'சீ! வாழ்ந்தேனா? - ஐயோ, என் வாழ்வே! வாழ்ந்ததாக நெனச்சி ஏமாந்து போனேன்..."
இதைக்கூட அவள் வௌியில் சொல்லவில்லை. குழந்தைகள் தூங்கி விட்டன.
அவர் தானாகவே அன்று வெற்றிலை இடித்துப் போட்டுக் கொண்டார்.
"தர்மு... என்னை நீ நம்ப மாட்டியா..." அவர் கை அவள் தலையை வருடியது...
அடிபட்ட மிருகம் போல் உசுப்பிக் கொண்டு நகர்ந்த அவள் உடம்பு துடித்துப் பதைத்தது.
"சீ" என்று அருவருப்புடன் உறுமினாள். "தொட்டீங்கன்னா, கூச்சல் போட்டுச் சிரிக்க அடிச்சிடுவேன்!"
அவளுக்கு மூச்சு இளைத்தது - உடல் முழுதும் வேர்த்து நடுங்கியது. அப்படி அவரிடம் அவள் பேசியது அதுவே முதல் தடவை. அவரும் திகைத்துப் போனார்!
கிழவர் மனம் குமுறி எழுந்து நடந்தார்...
'என்னை - என்னை சந்தேகிக்கிறாளே' என்று நினைத்த பொழுது மனசில் என்னவோ அடைத்துக் கண்கள் கலங்கின.
"போறா, நல்ல கதிக்குப் போக மாட்டா" என்று மனம் சபித்தது.
யாருமற்ற, நாதியற்ற அனாதைபோல் தெருத் திண்ணையில் வெறுந்தரையில் படுத்துக் கொண்டார்.
தர்மாம்பாளைக் கைப் பிடித்தது முதல் அன்றுதான் முதன் முறையாக வர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
'விதி - விதி!' என்ற முனகல்.
விதிக்கு வேளை வந்து விட்டது!
இரவு மணி எட்டு! தெரு வாசற்படியில் கார் நிற்கிறது.
கூடத்து அறையில் தர்மாம்பாள் படுக்கையில் கிடக்கிறாள். அவளைச் சுற்றிப் பேரனும் பேத்தியும் மகனும் மருமகளும் நிற்கின்றனர் - டாக்டர் ஊசி போடுகிறார்.
தெருவில் திண்ணையோரத்தில் நிற்கும் கைலாசம் பிள்ளை பதைக்கும் மனத்தோடு ஜன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்க்கிறார்.
உள்ளே செல்ல அவருக்கு அனுமதி இல்லை.
டாக்டர் வௌியே வருகிறார். கண்ணன் பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் பின்னே வருகிறான்.
"டாக்டர்... என் உயிர் பிழைக்குமா?" என்ற கைலாசம் பிள்ளையின் குரல் டாக்டரின் வழியில் குறுக்கிட்டு விழுந்து மறிக்கிறது.
டாக்டர் பதில் கூறாமல் தலையைக் குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார்.
கிழவர், தன்னை மீறி வந்த ஆவேசத்துடன், உள்ளே ஓடுகிறார்.
'தர்மு... தர்மு... என்னெ விட்டுப் போயிடாதேடி... தர்மு!'
நீட்டி விரைத்துக்கொண்டு கட்டிலில் கிடக்கும் தர்மாம்பாளின் உடலில், அங்கங்களில் அசைவில்லை; உணர்வில்லை.
உயிர்?...
நெற்றியில் ஒரு ஈ பறந்து வந்து உட்காருகிறது. நெற்றிச் சருமம் - புருவ விளிம்பு நௌிகிறது...
- கண்கள் அகல விரிந்து ஒருமுறை சுழல்கின்றன.
கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருக, தம்ளரிலிருந்த பாலைத் தாயின் வாயில் வார்க்கிறான் கண்ணன்.
'யாரு... கண்ணனா... பாலில்தான்டா உறவு இருக்கு... அந்த உறவும் ரத்தாயிடும்!...'
அதோ, ஸரஸா இப்பொழுது பால் வார்க்கிறாள்.
'ரெண்டு கொழந்தையையும் வச்சுக்கிட்டுத் தவிப்பியேடி கண்ணே!'
பேரன் முத்து - "பாட்டி... பாட்டி..." என்று சிணுங்கியபடியே பாலை ஊற்றுகிறான்...
முத்துவை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடிப்பதுபோல் கண்கள் பிரகாசிக்கின்றன.
பயந்து, ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் விஜியின் பிஞ்சுக் கரங்களால் பாட்டியின் உதடுகளுக்கிடையில் பால் வார்க்கும்போது...
அதில் தனி இனிப்போ! முகத்தில் அபூர்வக் களை வீசுகிறது... 'மடக்... மடக்'கென்று பால் உள்ளே இறங்குகிறது!
மேல் துண்டில் முகத்தை மூடிக் கொண்டு உடல் பதறிக் குலுங்க வந்து நின்றார் கைலாசம்.
'இந்த நிலையிலாவது தன்னை மன்னிக்க மாட்டாளா' என்ற தவிப்பு!
அவர் கைகள் பால் தம்ளரை எடுக்கும்போது நடுங்குகின்றன.
"தர்மு... தர்மு... என்னைப் பார்க்க மாட்டியா, தர்மு?"
'யாரது?' அவள் விழிகள் வெறித்துச் சுழல்கின்றன.
தாளாத சோகத்தில் துடிக்கும் உதடுகளில், கண்ணீருடன் புன்சிரிப்பையும் வரவழைத்துக் கொண்டு பால் தம்ளரை அவள் உதட்டில் பொருத்துகிறார் கைலாசம்.
பற்களைக் கிட்டித்துக் கொண்டு வலிப்புக் கண்டது போல் முகத்தை வெட்டி இழுத்துக் கொண்ட தர்மாம்பாளின் முகம் தோளில் சரிகிறது.
- கடைவாயில் பால் வழிகிறது!
"ஐயோ மாமீ" என்ற ஸரஸாவின் குரல் வெடிக்கிறது...
"அம்மா... பாட்டீ ஹ்ம்" முத்து தாயைக் கட்டிக் கொண்டு அழுகிறான். விஜி ஒன்றும் புரியாமல் விழிக்கிறாள் - கண்ணன் தலையைக் குனிந்துகொண்டு கண்ணீர் வடிக்கிறான்.
கிழவர் நிமிர்ந்து நிற்கிறார். அவர் முகம் புடைத்து, கண்களில் கண்ணீரும் கோபமும் குழம்ப, செக்கச் சிவந்து ஜ்வலிக்கிறது!
கைலாசம் கிழவர்தான். என்றாலும் ஆண் அல்லவா!
"இவளுக்கு என் கையாலே கொள்ளிகூட வைக்க மாட்டேன்" - கையிலிருந்த பால் தம்ளரை வீசியெறிந்துவிட்டு அறையை விட்டு வௌியேறுகிறார்...
முற்றத்து நிலவில், பால் தம்ளர் கணகணவென்று ஒலித்து உருண்டு கிடக்கிறது.
அன்று, அந்தக் கடைசி இரவில், அவர்கள் படுத்திருந்த இடத்தில் கொட்டிக் கிடந்த பாலில் நிலவின் கிரணங்கள் ஒளி வீசிச் சிரித்தன.
ஆம்; அதே நிலவுதான்!
(எழுதப்பட்ட காலம்: 1958)
நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000,
கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017. ----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி (1958)
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது.
அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான்.
அதோ அவன் மனைவி முருகாயி வேலியோரத்தில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.
ஆம்; ஆண்டிக்கு மனைவியும் மகனும் உண்டு. அவன் பெயர் மட்டும் தான் ஆண்டி. அவன் இருக்கும் அந்த இடம் தூரத்துப் பார்வைக்குத்தான் நந்தவனம்.
ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில். அதற்காக முனிசிபாலிடியில் மாதம் ஏழு ரூபாய் சம்பளமும், அந்த இடுகாட்டிலேயே வசிக்க ஒரு வீடும் தந்திருக்கிறார்கள்.
ஆண்டி 'ஒரு மாதிரியான' ஆள்; பைத்தியம் அல்ல. மகிழ்ச்சி என்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக்கொண்டே இருக்கும் அவனை 'ஒரு மாதிரி' என்று நினைத்தார்கள். அவன் உடம்பில் எப்பொழுதும் அலுப்போ, சோர்வோ ஏற்படுவதே இல்லை. வயது நாற்பது ஆகிறது; இருபது வயது இளைஞனைப்போல் துறுதுறு வென்றிருப்பான்.
அர்த்தம் புரிந்தோ புரியாமலோ அவன் வாய், உரத்த குரலில் சதா ஒரு பாட்டை அலப்பிக்கொண்டே இருக்கும்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'
குழி வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் அவன் நந்தவன வேலையில் ஈடுபடுவான். அவன் உழைப்பால் தான் அந்த இடுகாடு கூட 'நந்தவன' மாகி இருக்கிறது. அவனுக்குச் சோகம் என்பது என்ன வென்றே தெரியாது.
செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போதும் சரி, பிணங்களுக்கு குழி பறிக்கும் போதும் சரி - சலனமோ, சங்கடமோ ஏதுமின்றி, உரத்த குரலில் கழுத்து நரம்புகள் புடைக்க அந்தப் பாட்டை தனது கரகரத்த குரலில் பாடுவான்.
அவனைப் பொறுத்தவரை அந்தப் பாட்டிற்கு அர்த்தம் கிடையாது; வெறும் பழக்கம்தான்.
அது புதைக்கும் இடமாதலால் பெரும்பாலும் குழந்தைகளின் பிரேதம்தான் அங்கு வரும்.
'மூன்றடி நீளம் மூன்றடி ஆழ'க் குழிகள் வெட்டுவது ஆண்டிக்கு ஒரு வேலையே அல்ல.
தலையின் இறுகக் கட்டிய முண்டாசுடன், வரிந்து கட்டிய வேட்டியுடன், கால்களை அகட்டி வைத்துக் கொண்டு நிற்பான். அவன் கையிலுள்ள மண்வெட்டி அனாயாசமாகப் பூமியில் விழுந்து மேற்கிளம்பும். ஒவ்வொரு வெட்டுக்கும் ஈர மண் மடிந்து கொடுக்கும். பூமியே புரண்டு கொடுக்கும்.
'... கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக்... கூத்தாடிப்... போட்டுடைத்தாண்டி...'
அந்தக் 'கூத்தாடி' என்ற வார்த்தையை அழுத்தி அழுத்தி உச்சரித்தவாறு பூமியின் மார்பை அவன் பிளக்கும்போது அவனை யாராவது கண்டால் அந்தப் பாட்டின் பொருள் தெரிந்துதான் அவன் பாடுகிறான் என்றே எண்ணத் தோன்றும்.
உண்மையில் அந்தப் பாட்டுக்கு உரிய பொருள் அவனுக்குத் தெரியவே தெரியாது.
அவன் அந்தப் பாட்டை, எங்கு எப்பொழுது கற்றுக் கொண்டான்?
நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? ஆனால், ஏதோ ஒரு விசேஷமான வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லி விடுவோம்.
ஆண்டி இந்தப் பாட்டை எப்பொழுது எங்கு முதன் முதலில் கேட்டான்? சற்று நினைவு கூர்ந்தால் அவனால் சொல்லிவிட முடியும்.
---ஃ---ஃ---ஃ---ஃ
ஒரு நாள் காலை, கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கலைந்து எழுந்த ஆண்டி, தன் கண்களைக் கசக்கிவிட்ட பின் கண்ட காட்சி அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
குடிசை வாசலில், கிழிந்த கோரைப் பாயில், வழக்கத்திற்கு மாறாக இன்னும் உறக்கம் கலையாமல் தன்னை மறந்து கிடக்கிறாள் முருகாயி.
அவன், தான் எழுந்தபின் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை, கலியாணம் ஆகி இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் ஒருநாள் கூடப் பார்த்ததில்லை.
"ஏ... முருவாயி..." என்று குரல் கொடுத்தான்.
அவள் எழுந்திருக்கவில்லை; புரண்டு படுத்தாள்.
அவன் கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தான்.
'உடம்பு சுடுகிறதோ' என்ற நினைப்பில் அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
"முருவாயி..." என்று மறுபடியும் உலுப்பினான்.
மயங்கிக் கிறங்கிய நிலையில் முருகாயி கண்களைத் திறந்தாள். எதிரில் புருஷன் குந்தி இருப்பதைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தாள்.
"என்ன முருவாயி... ஒடம்புக்கு என்னா பண்ணுது?" என்று பதறினான் ஆண்டி.
"ஒண்ணுமில்லே... கையி காலெல்லாம் கொடைச்சலா இருக்கு... ஒடம்பு பூரா அடிச்சி போட்ட மாதிரி... கிர்னு தலை சுத்துது..." என்று சொல்லும்போதே கறுத்த இமைகள் ஒட்டி ஒட்டிப் பிரிந்தன.
"கனா ஒண்ணு கண்டேன்."
"என்ன கனா புள்ளே?"
முருகாயி கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கொட்டாவி விட்டாள்.
"கனாவிலே ஒரு பூச்சி... கறுப்பா... சின்னதா..." அவள் உடல் ஒருமுறை குலுங்கிற்று.
"உம்..."
"சொல்லும்போதே திரேகம் சிலுக்குது மச்சான்... அந்தக் கறுப்புப் பூச்சி நவுந்து வந்து எங் கையி மேலே ஏறுச்சி... ஏறினவுடனே அது மஞ்சளா மாறிச்சி - ஊஹீம் மஞ்ச நெறமில்லே... தங்க நெறம்... அப்பிடி ஒரு சொலிப்பு சொலிச்சது... அது எங் கையிலே வந்து குந்திக்கிட்டு... 'என்னெத் தின்னுடு என்னெத் தின்னுடு'ன்னு சொல்லிச்சு."
"உம் அப்புறம்?..."
"தின்னுடு தின்னுடுன்னு சொல்லிக்கிட்டே எங்கையெ கொறிக்க ஆரம்பிச்சது. எனக்கு என்னவோ புத்திக் கொளம்பிப்போய் ஒரு ஆவேசம் வந்திடுச்சி... சீ, இந்த அல்பப் பூச்சி வந்து என்ன தைரியமா நம்மகிட்டே வந்து 'தின்னுடு தின்னுடு'ன்னு சொல்லுது பாத்தியா?... நாம்ப திங்கமாட்டோம்கிற தைரியம் தானேன்னு நெனைச்சி..."
- அவள் முகம் சிவந்தது, சுளித்தது!
"ஒடம்பெல்லாம் கூசுது மச்சான். அந்தப் பூச்சியெ ரெண்டு விரல்லே தூக்கிப் பிடிச்சி வாயிலே போட்டு 'கச முச'ன்னு மென்னு...வ் வோ ஓ!..."
- அவள் சொல்லி முடிக்கவில்லை, குடலை முறுக்கிக் கொண்டு வந்த ஓங்கரிப்பு பிடரியைத் தாக்கிக் கழுத்து நரம்புகளைப் புடைக்க வைத்தது; தலை கனத்தது; மூச்சு அடைக்க, கண்கள் சிவக்க,
"வ் வோ ஓ!..."
"மச்சான்... மச்சான்... அந்தப் பூச்சி வவுத்துக்குள்ளே ஓடுது மச்சான்..."
மறுபடியும் ஓர் பலத்த ஓங்காரம். அடி வயிற்றைப் பிசைந்துகொண்டே தலை குனிந்து உட்கார்ந்தாள். வாயெல்லாம் வெறும் உமிழ் நீர் சுரந்து ஒழுகியது.
"மச்சான்... வவுத்திலே பூச்சி"
- ஆண்டி புரிந்து கொண்டான். அவன் உடல் முழுதும் இன்பக் கிளுகிளுப்பு ஓடிப் பரவியது.
பதினைந்து வருஷமாய் வாய்க்காதது...
எத்தனையோ காலம் நினைத்து நினைத்துப் பார்த்து, ஏமாந்து ஏமாந்து, இல்லை என்ற தீர்க்கமான முடிவில் மறந்தே போனபின்...
- உடலை குலுக்கி, குடலை முறுக்கி ஓங்கரித்தாள்... முருகாயி.
- "ஆ... அதுதான் ஹாஹா... முருகாயி அதுதான்... ஹாஹா!" ஆண்டி சிரித்தான்.
"வ்வோ ஓ!..."
- குத்திட்டுத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த முருகாயியை உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஆண்டி சிரித்தான்.
"ஹாஹாஹ்ஹா... அதுதான் புள்ளே, அது தான்."
பலத்த ஓங்கரிப்புடன் வந்த சிரிப்பைத் தாங்க முடியாது தவித்தாள் முருகாயி.
"மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!..." என்று பதறினாள்.
"சும்மா, இரு புள்ளே, நம்ம வடிவேலு வைத்தியர் கிட்டே போயி எதனாச்சும் மருந்து வாங்கியாறேன்" என்று மேல் துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு கிளம்பினான் ஆண்டி.
முருகாயி சிரித்தாள்.
"ஏ! சும்மாத்தானே இரு மச்சான். யாராவது சிரிக்கப் போறாங்க"
"நீ படற அவஸ்தையைப் பார்க்க முடியலியே புள்ளே..."
"நீ ஏன் பாக்கிறே?...அந்தாலே தள்ளிப்போய் நின்னுக்க..."
ஆண்டி மனசுக்குள் கும்மாளியிடும் மகிழ்ச்சியுடன் இடுகாட்டின் கேட்டருகே நின்றான்.
அப்போதுதான் அந்தச் சாலை வழியே சென்ற காவி தரித்த பண்டாரம் ஒருவன் தன்னை மறந்த லயத்தில் அந்தப் பாட்டைப் பாடியவாறு நடந்தான்.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி."
இதுவரை அனுபவித்தறியாத ஒரு புதிய உணர்வில் மகிழ்ச்சியில் லயித்து தன் நிலை மறந்து நின்ற ஆண்டியின் மனத்தில், தாள லயம் தவறாமல் குதித்தோடி வந்த அந்தப் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய்ப் பதிந்தன.
அதைப் பதிய வைப்பதற்காகவே பாடுவதுபோல் அந்தப் பண்டாரம் அந்த நான்கு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு நடந்தான்.
அன்றுமுதல் தன்னையறியாமல் ஆண்டியும் அந்தப் பாடலைப் பாடிக் குதிக்க ஆரம்பித்தான்.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி"
ஆயிரக்கணக்கான மனித உடல்கள் மாண்டபின் புதையுண்ட அந்த மயான பூமியில் ஒரு மனிதன் பிறந்தான்.
ஆண்டிக்கு ஒரு மகன் பிறந்தான்.
தாயின் கருவில் அவன் ஜனித்த அந்த நாளில் பிறந்த குதூகலம் ஆண்டிக்கு என்றும் மறையவில்லை.
பொழுதெல்லாம் தன் செல்வ மகனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினான்.
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சவங்களுக்குக் குழிபறித்த ஆண்டியின் கரங்கள் தன் செல்வ மகனை மார்போடு அணைத்து ஆரத் தழுவின.
- தனது மதலையை மார்புறத் தழுவி மகிழ்ந்த ஆண்டியின் கரங்கள் ஊரார் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன.
ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை.
ரோஜாச் செடிக்குப் பதியன் போடும் சிறுவனைப் போல பாட்டுப் பாடிக்கொண்டே குழி பறிப்பான்.
அருகிலிருக்கும் அந்தப் பச்சைச் சிசுவின் பிரேதத்தைப் பார்த்தும் - அதோ பக்கத்தில், பீறிவரும் அழுகையை அடக்கிக் கொண்டு நிற்கும் அந்தத் தகப்பனைப் பார்த்தும் - நெஞ்சில் ஈரமில்லாமல் பசை இல்லாமல் பாடிக் கொண்டிருக்கிறானே...
சீசீ இவனும் ஒரு மனிதனா!... அதனால்தான் அவனை எல்லோரும் 'ஒரு மாதிரி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
குழி பறித்து முடித்தபின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான். தூளியில் உறங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.
அந்த மகிழ்ச்சிக்கு, குதூகலத்திற்கு, பாட்டிற்கு, கும்மாளத்துக்கெல்லாம் காரணம் இருளன்தானா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்...
எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு, கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து, ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் குதித்துக் கொண்டிருந்த ஆண்டியின்...
ஆண்டியின்... - சொல்ல என்ன இருக்கிறது?
இருளன் ஒருநாள் செத்துப் போனான்.
வாடியிருந்து வரம் கேட்டு, காத்திருந்து தவமிருந்து காலம் போன ஒரு நாளில், எதிர்பாராமல் - நினைவின் நப்பாசை கூட அறுந்துபோன ஒரு காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன், எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்ததுபோல் போய்விட்டான்.
ஆசைகளையும் கனவுகளையும், பாழுக்கும் பொய்மைக்கும் பறி கொடுத்த முருகாயி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புரண்டு புரண்டு அழுதாள்.
எத்தனையோ சோகங்களின் திரடுகள் கரடு தட்டி மேடிட்டுப்போன அந்த மயான பூமியில் தனது பங்கிற்காக அந்தத் தாய் ஒப்பாரி வைத்து அழுதாள்.
வேப்ப மரத்தடியில், கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே, முழங்கால்களில் முகம் புதைத்துக் குந்தி இருக்கிறான் ஆண்டி.
எங்கோ வெறித்த விழிகள்... என்னென்னமோ காட்சிகள்... எல்லாம் கண்டவை... இனி, காண முடியாதவை...
அதோ இருளன்! -
வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்... தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தலையை மட்டும் தூளிக்கு வௌியே தள்ளித் தொங்க விட்டுக் கொண்டு, கன்னம் குழையும் சிரிப்புடன் 'அப்பா' வென்று அழைத்ததும்...
செடிக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அவனறியாமல் பின்னே வந்து, திடீரென்று பாய்ந்து புறம் புல்லி உடலைச் சிலிர்க்கவைத்து மகிழ்வித்ததும்...
எதிரிலிருக்கும் தட்டத்துச் சோற்றில், வேகமாய்த் தவழ்ந்து வந்து - தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு, பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி, கைதட்டிச் சிரித்துக் களித்ததும்...
நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் உறங்கியதும்...
- பொய்யா?... கனவா?... மருளா?... பித்தா?... பேதைமையா?
ஆண்டி சித்தம் குலைவுற்றவன் போல் சிலையாய் உட்கார்ந்திருந்தான்.
இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம், அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம் ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.
அதோ குடிசையினுள்ளே அந்தச் சிறு பாலகனின் சடலம் ஊதிப் புடைத்துக் கிடக்கிறது. வாயிலும் கண்களிலும் ஈக்கள் மொய்க்கின்றன. நெற்றியில் சாந்துப் பொட்டு; கறுத்துப் போன இதழ்களுக்கிடையே பால் மணம் மாறாத இளம் பற்கள் மின்னித் தெரிகின்றன. கையையும் காலையும் அகல விரித்துக் கொண்டு...
- ஆழ்ந்த நித்திரையோ?...
'இல்லை செத்துப் போய்விட்டான்.'
வெகுநேரம் தன் செல்வ மகனின் - இனிமேல் பார்க்க முடியாத மகனின் - முகத்தை வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.
வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம் கட்டி நின்றன.
மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான். கால்களை அகட்டி நின்று, கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி, பூமியில் பதித்தான்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி!'
அந்தப் பாட்டு!... அவன் பாடவில்லை.
ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும்போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்து வருமே அந்தப் பாட்டு...
'பாடியது யார்?'...
மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'
- மீண்டும் அந்தக் குரல்!...
'யாரது!...'
புலன்களை எல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான்.
மீண்டும் ஒரு குரல்:
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி..."
'ஐயோ! அர்த்தம் புரிகிறதே!'...
- ஆண்டி மண்வெட்டியை வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
தூணைப் பிளந்து வௌிக் கிளம்பிய நரசிம்மாவதாரம் போன்று, பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னஞ்சிறு பாலகன் வௌிவந்தான்.
கைகளைத் தட்டித் தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பாடியது சிசு!
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி...
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி..."
குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின.
அந்த மயான பூமியில் எத்தனையோ காலத்திற்கு முன் புதையுண்ட முதற் குழந்தை முதல் நேற்று மாண்டு புதையுண்ட கடைசிக் குழந்தைவரை எல்லாம் உயிர்பெற்று, உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து, விம்மிப் புடைத்து விகஸித்த குரலில் - மழலை மாறாத மதலைக் குரலில் - பாடிக்கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வௌியெல்லாம் திசைகெட்டு தறிகெட்டுத் திரிந்து ஓடின.
ஆண்டி தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.
அதோ, அவன் இருளனும் அந்தப் பாலகர் நடுவே நின்று நர்த்தனம் புரிகிறான். தாளம் போடுகிறான்.
பாட்டுப் பாடுகிறான்.
என்ன பாட்டுத் தெரியுமா?...
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'
அடைத்துப் புடைத்து நெருக்கிக்கொண்டு ஓடும் சிசுக்களின் மகா சமுத்திரத்தில் தன் இருளனை தாவி அணைக்க ஓடினான்...
இருளனைக் காணோம்... தேடினான், காணோம்... இருளனை மட்டும் காணவே காணோம்...
அந்தச் சிசுக்கள் யாவும் ஒன்றுபோல் இருந்தன.
என்னுடையது என்றும், இன்னொருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும் இதுவென்றும் பேதம் காண முடியாத அந்தச் சமுத்திரத்தில் இருளனை மட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்!...
ஆண்டி தவித்தான்!
ஆ!... என்ன தவிப்பு... என்ன தவிப்பு...
பன்னீர் மரத்தடியில் பிள்ளையின் பிணத்தருகே முகம் புதைத்து வீழ்ந்து கிடக்கும் ஆண்டியைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓடினாள் முருகாயி.
அவனைப் புரட்டி நிமிர்த்தி மடிமீது வைத்துக் கொண்டு கதறினாள்.
அவன் விழிகள் மெல்லத் திறந்தன.
- தெய்வமே! அவனுக்கு உயிர் இருந்தது; அவன் சாகவில்லை.
இன்னும் கூட அவன் அந்த 'நந்தவன'த்தில் தான் வாழ்கிறான். ஆனால் முன்போல் இப்போதெல்லாம் பாடுவதில்லை.
இடுகாட்டிற்கு வரும் பிணங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'கோ'வென்று கதறி அழுகிறான். ஊராரின் ஒவ்வொரு சோகத்திற்கும் அவன் பலியாகிறான்! ஆனால் இப்பொழுதும் ஊரார் அவனை ஒருமாதிரி என்றுதான் சொல்லுகிறார்கள்!
(எழுதப்பட்ட காலம்: செப்டம்பர் 1958)
நன்றி: இனிப்பும் கரிப்பும் (சிறுகதை தொகுப்பு) - ஒன்பதாம் பதிப்பு: அக்டோபர் 1994 -
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -1
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4. நீ இன்னா ஸார் சொல்றே? (1959)
நான் ஒண்ணும் 'லூஸ்' இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா... எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம்.
அதான் ஸார்... நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்... பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கிட்டிருக்கும் போதே அப்படிப் பார்த்தா நா உங்க கண்ணிலே ஆம்பிட்டுக்குவேன்... ஆனா நம்பகிட்டே ஒரு பழக்கம்... அது நல்லதோ, கெட்டதோ... யாருக்கிட்டேயும் அனாவசியமா பேசிக்க மாட்டேன். நான் பேசறதே இல்லே... பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது... ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்... சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான்.
"அந்தா பெரிய ஓட்டல்லே நீ இன்னாடா பண்றே பாண்டியா?"ன்னு கேப்பீங்க. ஐயாதான் மூணாவது மாடியிலே வெயிட்டர் பாய். இன்னா ஸார், வெயிட்டர் பாயின்னா கேவலமா பூடுச்சா... நீ கூடப் போட மாட்டே ஸார், அந்த மாதிரி 'ஒயிட் டிரஸ்'; இடுப்பிலே கட்டியிருக்கிற பெல்டு இருக்கே, அசல் சில்க், சார் சில்க்! பொத்தானெல்லாம் சும்மா பளபளன்னு... ஒரு தடவை வந்து நம்மெ கண்டுகினு போ சார்... யார் வேண்ணாலும் வரலாம்... ரூம் வாடகைதான் பதினைஞ்சு ரூபா... மாசத்துக்கான்னு கேக்காதே... இவன் யாரோ சுத்த நாட்பொறம்னு கேலி பண்ணுவாங்க... ஒரு நாளைக்குப் பதினைஞ்சு ரூபா நைனா; ரூமெல்லாம் படா டமாசா இருக்கும்... சோபாவுங்க இன்னா, கட்டிலுங்க இன்னா... கண்ணாடிங்க இன்னா - பாத்ரூம்லே கண்ணாடிங்க வேற - ஷவர்பாத், 'சுட்' தண்ணி, 'பஸ்' தண்ணி - வேற இன்னா வோணும்! மணி அடிச்சா நா ஓடியாந்துருவேன்... ஒரு தடவை வந்து தங்கிப் பாரு சார். படா மஜாவா இருக்கும்... வந்தா மூணாவது மாடியிலே தங்கு சார்... அப்பத்தான் நான் கண்டுக்குவேன் - மத்த பசங்க மாதிரித் தலையை சொறிஞ்சிக்கினு 'பக்சிஸ்' கேக்க மாட்டேன்... குடுத்தாலும் வாங்கிக்க மாட்டேன் - அதிலே நா ரொம்ப ஸ்டிரிக்ட்!
மூணாவது மாடியிலேருந்து 'ரூப் கார்டனு'க்கு போறது ரொம்ப சுளுவு... நான் ஏன் இம்மா 'கம்பல்' பண்ணிக் கூப்ட்றேன்னு யோசிக்கிறியா சார்? ஒரு விசயம், ஒண்ணு கேக்கணும்; அதுக்குத்தான். இன்னா விசயம்னு கேப்பீங்க... வந்தாத்தானே சொல்லலாம்...
மின்னே மாதிரி இல்லே இப்போ... மின்னேல்லாம் புச்சா யார்னாச்சம் வந்துட்டா, 'சார் ஒரு கடுதாசி எழுதணும் ஒரு கடுதாசி எழுதணும்'னு காயிதத்தைக் கையிலே வெச்சிக்கினு படா பேஜார் குடுப்பேன்... இப்ப அப்படி எல்லாம் இல்லே, நீங்க பயப்படாம வர்லாம்.
கடுதாசின்னு சொன்னப்புறம் ஞாபகம் வருது சார், எங்கிட்ட அந்த மாதிரி எல்லாருகிட்டயும் எழுதி வாங்கின கடுதாசி நெறைய கெடக்குது... எல்லாம் நனைஞ்சு, எழுத்தெல்லாம் கலைஞ்சி பூட்டுது சார்... எப்பிடி நனைஞ்சிது?... அழுது அழுது நனைஞ்சி போச்சி. இப்பல்லாம் நா அழுவறதே இல்லே - அதெல்லாம் நெனச்சா சிரிப்பு வருது. அப்பல்லாம் எனக்கு என்னமோ ஒரு வேகம் பொறந்துடும். கடுதாசி எழுதலேன்னா தலைவெடிச்சிப் போற மாதிரி.
கடுதாசி யாருக்குன்னு கேக்கறியா? ஊர்லே இருக்கிற எங்க மாமனுக்குத்தான். எங்க மாமனை நீங்க பார்த்ததில்லியே சார்... அவரு பெரிய ஜவான்... மீசையெப் பாத்தாவே நீங்க பயந்துடுவீங்க. அவரெ நெனச்சா இப்பக்கூட எனக்குக் கொஞ்சம் 'தில்'லுதான்... தோ, இம்மா ஒசரம், நல்ல பாடி... அந்த ஆளு பட்டாளத்துக்குப் போனவரு ஸார்... சண்டையிலே கொலை யெல்லாம் பண்ணியிருக்காராம். பத்து ஜப்பான்காரன்களைக் கையாலே புடிச்சு அப்படியே கழுத்தை நெரிச்சிக் கொன்னுப் போட்டாராம். அவருதான் சார் எங்க மாமன்! - ஏன் சார்!... எனக்கு ஒரு விசயம் ரொம்ப நாளா கேக்கணும்னு - கொலை பண்ணா ஜெயில்லே பிடிச்சிப் போடறாங்களே... பட்டாளத்துக்குப் போயி கொலை பண்ணா ஏன் சார் ஜெயில்லே போடறதில்லே? மாமனைப் புடிச்சி ஜெயில்லே போடணும் சார். அப்போ பாக்கறத்துக்கு ரொம்ப நல்லாயிருக்கும்! கம்பிக்கு அந்தப் பக்கம் மாமன் நிக்கும். நான் இந்தப் பக்கம் நின்னுக்கிட்டு, 'வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக் கட்டைக்கு வேணும்'னு ஒழுங்கு காட்டிக்கிட்டுச் சிரிப்பேன்... அம்மாடி! அப்போ பாக்கணும் மாமன் மூஞ்சியை... மீசையெ முறுக்கிட்டுப் பல்லைக் கடிச்சிக்கினு உறுமினார்னா - அவ்வளவுதான்... நான் நிப்பனா அங்கே? ஒரே ஓட்டம்! ஹோ; எதுக்கு ஓடணும்? அதுதான் நடுவாலே கம்பி இருக்கே... பயப்படாம... நின்னுக்கிட்டுச் சிரிப்பேன். மாமனுக்கு வெறி புடிச்சி, கோவம் தாங்காம கம்பியிலே முட்டிக்கும் - ஜெயில் கம்பி எம்மா ஸ்ட்ராங்கா போட்டிருப்பாங்க? இவுரு பலம் அதுக்கிட்டே நடக்குமா? மண்டை ஒடைஞ்சி ரத்தம் கொட்டும்...
சீ! இது இன்னா நெனைப்பு?... பாவம் மாமன்... என்னமோ கோவத்திலே என்னை வெட்டறதுக்கு வந்துட்டது. அதுக்கு எம்மேலே ரொம்ப ஆசை. அம்மா, அப்பா இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கினது அதுதானே... மாமன் கிட்டே ஒனக்கு ஏண்டா இம்மாம் கோவம்னு கேப்பீங்க.
இதான் சார் விசயம் - மாமனுக்கு ஒரு மவ இருக்கா சார். அவளெ நான்தான் கண்ணாலம் கட்டிக்கணும்னு மாமன் சொல்லிச்சி. நா மாட்டேன்னிட்டேன். அது இன்னா சார் கண்ணாலம் கட்டிக்கிறது? முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அவன் இன்னா ஆளு? படா கில்லாடியாச்சே, உடுவானா? ஆச்சா போச்சா அறுத்துப் புடுவேன்; வெட்டிப் புடுவேன்னு மெரட்னான் - அவன் பிளான் இன்னா தெரியுமா? கத்தியெக் கையிலே வெச்சிக்கினு 'கட்டுடா தாலியெ'ன்னு சொல்றது. இல்லேன்னா ஒரே வெட்டு; கலியானப் பந்தல்லியே என்னெப் பலி குடுத்துடறதுன்னு... இதெக் கேட்டவுடனே எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே... அவன் செய்வான் சார், செய்வான்... இந்த நியூஸ் எனக்கு யாரு குடுத்தான்னு கேளுங்க... எங்க மாமன் மவதான். அதுக்கு எங்கிட்டே ரொம்பப் பிரியம் சார். ரெண்டு பேரும் சின்னத்திலிருந்து ஒன்னா வெளையாடினவங்க சார். அது வந்து அழுதுகிட்டே சொல்லிச்சி 'மச்சான் என்னெக் கண்ணாலம் கட்டிக்க ஒனக்கு இஸ்டம் இல்லாட்டிப் போனாப் பரவாயில்லே; இஸ்டமில்லாம கட்டிக்கிட்டு இன்னா பிரயோசனம்? மாட்டேன்னு சொன்னா ஒன்னெ வெட்டிப் போடுவேன்னு அப்பன் சொல்லுது, அப்பன் கொணம்தான் ஒனக்குத் தெரியுமே. நீ எங்கேயாவது போயிடு மச்சான்'னு வள்ளி அழுவும்போது - அதான் அது பேரு - ஒரு நிமிசம் எனக்குத் தோணிச்சி; இவ்வளவு ஆசை வெச்சிருக்காளே, இவளையே கட்டிக்கினா இன்னான்னு. ஆனா அந்தக் கொலைகாரன் மவளைக் கட்டிக்கிட்டா, அவன் 'ஆன்னா ஊன்னா' வெட்டுவேன் குத்துவேன்னு கத்தியெத் தூக்கிட்டு வருவானேன்னு நெனைச்சிக்கிட்டேன். அன்னைக்கு ராவோட ராவா ரயிலேறி மெட்றாஸீக்கு வந்துட்டேன். ரயில் சார்ஜீக்கு கையிலே கொஞ்சம் பணம் கொடுத்தது வள்ளிதான். பாவம் வள்ளி! எங்கனாச்சும் கண்ணாலம் கட்டிக்கினு நல்லபடியா வாழணும்.... அந்த விசயம் தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் சார் கடுதாசி எழுதணும். அடிக்கடி தோணும். தோணும் போதெல்லாம் யாருகிட்டேயாவது போயி, சொல்லி எழுதச் சொல்றது. எழுதி எங்கே அனுப்பறது? அப்புறம் மாமனுக்குத் தெரிஞ்சிதுன்னா என்னெத் தேடிக்கிட்டு வந்துட்டா இன்னா பண்றதுன்னு நெனைச்சிக்கிட்டு பேசாம வெச்சிக்குவேன். ஆனா பாவம், வள்ளிப் பொண்ணை நெனச்சா வருத்தமா இருக்கும். அவளைக் கண்ணாலம் கட்டிக்காம போனோமேன்னு நெனச்சா அழுகை அழுகையா வரும். நானே கண்ணாலம் கட்டிக்காம ஓடியாந்துட்டேனே. வேற எவன் வந்து அவளைக் கட்டிக்கப் போறான்? யாருமே கண்ணாலம் கட்டாம அவ வாழ்க்கையே வீணாப்பூடுச்சோ? நெனச்சா நெஞ்சே வெடிச்சிப் போற மாதிரி வருத்தமா இருக்குது சார். ஹம்... பொண்ணுன்னு ஒருத்தி பொறந்தா அவளுக்குப் புருசன்னு ஒருத்தன் பொறக்காமலா பூட்றான்!... எல்லாத்துக்கும் கடவுள்னு ஒருத்தன் இருக்கான் சார்...
அந்தக் கடுதாசியிலே ஒண்ணை எடுத்துப் படிக்கிறேன் கேக்கிறியா சார்?
"தேவரீர் மாமாவுக்கு, சுபம். உன் சுபத்தையும் உன் மவள் அன்புமிக்க வள்ளியின் சுபத்துக்கும் எழுத வேண்டியது. உன் மவளை நான் கட்டிக்கலேன்னு மனசிலே ஒண்ணும் வருத்தம் வெச்சிக்காதே! இவ்வளவு நாளு வள்ளிக்குக் கண்ணாலம் காச்சியெல்லாம் நடந்து, புள்ளைக்குட்டியோட புருசன் வூட்லே வாழும்னு நெனைக்கிறேன். இன்னா பண்றது? நா கொடுத்து வெக்கலே... அதுக்காக எனக்கு ஒண்ணும் வருத்தம் கெடையாது. இந்த சென்மத்திலே இல்லா காட்டியும் அடுத்த சென்மத்திலே நான் வள்ளியெத்தான் கண்ணாலம் கட்டிக்குவேன். ஆனா அப்பவும் அவளுக்கு அப்பனா வந்து நீயே பொறக்காம இருக்கணும். இங்கே நான் ஏதாவது நல்ல பொண்ணா பாத்துக்கிட்டிருக்கேன். கெடைச்சதும் ஒனக்குக் காயிதம் போடறேன். சமாச்சாரம் வந்ததும் நேரிலே வந்து எனக்குக் கண்ணாலம் கட்டிவெக்க வேணும்னு கேட்டுக் கொள்கிறேன்... இப்படிக்கு, உன் அக்கா மவன் பாண்டியன்..."
- நான் சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தார் சார், அவரு. யாருன்னு கேக்கிறியா?... எத்தினியோ பேரு எழுதிக் குடுத்தாங்க. யாருன்னு சொல்றது. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடுதாசி எழுதும்போது சொன்னதைத்தான் அப்பிடியே ஞாபகம் வெச்சுக்கிட்டு திருப்பிச் சொன்னேன். இல்லேன்னா, நான் ரொம்பப் படிச்சிக் கிழிச்சேன்.
.. நெனச்சிப் பாத்தா வள்ளிப் பொண்ணுக்கு என்னம்மோ துரோகம் பண்ணிட்ட மாதிரித் தோணுது. அந்த சமயத்திலே தனியா குந்திக்கினு அழுவேன்.
நம்ம மானேஜர் இல்லே சார் - ஐயிரு அவுரு என்னெப் பாத்து ஒருநாள் சொன்னாரு 'இவன் ஒரு கேரக்டர்'னு... அப்படின்னா என்னான்னு எனக்குத் தெரியலை.
நான் ரொம்ப அழகு சார். நெசமாத்தான்... என்னை மாதிரி இன்னொரு அழகான மனுசனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லே. நான் அவ்வளவு அழகு சார் - என்னெப்பத்தி நானே எப்படி சார் ஒரேயடியா சொல்லிக்கிறது? அதுக்குத்தான் சொல்றேன் ஒரு தடவை இங்கே வந்துட்டுப் போங்கன்னு.
கடுதாசி எழுதற பழக்கத்தை எப்படி உட்டேன்னு கேளுங்க, சுகுணா இல்லே சார், சுகுணா - சினிமாவிலே 'ஆக்டு' குடுப்பாங்களே, பெரிய ஸ்டார் - அந்த அம்மாவை நீங்க பார்க்காமயா இருந்திருப்பீங்க? படத்திலேயாவது பாத்து இருப்பீங்களே... அதான் அந்த அம்மா படம் எல்லா பத்திரிகையிலேயும் வந்துச்சே - கார் ஆக்சிடன்டுலே செத்துப்போன உடனே - அதுக்கு முதல் நாளு நம்ம ஹோட்டல்லே இங்கேதான் மூணாவது மாடியிலே ஒன்பதாம் நம்பர் ரூம்லே தங்கி இருந்தாங்க. பாவம்! பத்து வருசத்துக்கு முந்தி அந்த அம்மாவுக்கு இருந்த பேரும் பணமும்... ஹ்ம்! எல்லாம் அவ்வளவுதான் சார். ஆனா நேர்லே பாத்தா அடாடாடா! 'ஸம்'னு இருப்பாங்க சார். அவங்களுக்கு கடைசி காலத்திலே சான்ஸே இல்லியே, ஏன் ஸார்?
நான் யாரு கிட்டேயும் பேசாதவன். ஆனா அவுங்க கிட்டே மட்டும் ஏனோ ரொம்பப் பேசுவேன். அவுங்களுக்கும் எங்கிட்டே ரொம்ப ஆசை - அதுக்காகத்தான் இங்கே வந்திருந்தாங்களாம். எதுக்கு? - அதான் பழைய மாதிரி மறுபடியும் பேரும் பணமும் எடுக்கிறதுக்காக... என்னென்னமோ திட்டமெல்லாம் போட்டாங்க... யார் யாரோ வருவாங்க, பேசுவாங்க... நமக்கு அதெல்லாம் இன்னா தெரியுது? அவுங்க யார் யாரையோ புடிச்சி சினிமா படம் பிடிக்கறதுக்குப் பிளான் போட்டாங்க சார். அதிலே ஒரு ஆளு என்னைக் கேட்டான் சார்: 'ஏம்பா, நீ படத்திலே ஆக்ட் குடுக்கிறியா, ஹீரோ பர்சனாலிடி இருக்கே'ன்னு. நானும் 'ஈஈ'ன்னு இளிச்சிக்கிட்டு நின்னேன். அப்புறம் அந்த சுகுணா அம்மாதான் சொன்னாங்க: 'பாண்டியா, நீ குழந்தை. சினிமாவெல்லாம் உனக்கு வேணாம்; அது உன்னைப் பாழாக்கிடும்' - அப்படீன்னு. அவ்வளவுதான்! நமக்கு ஒதறல் எடுத்துக்கிச்சி. அந்த ஆசையை விட்டுப் பிட்டேன்.
ரெண்டு மூணு நாளிலே நான் ரொம்ப சினேகம் ஆயிட்டேன். அவங்களோட, வள்ளி மேலே வந்த ஆசை மாதிரி அவங்க மேலேயும் லேசா ஒரு ஆசை உண்டாயிடுச்சி. ஜன்னல் வழியா அவுங்க மொகம் தெரியற இடத்திலே நின்னு அவங்களையே பாத்துக்கிட்டிருப்பேன். அவுங்களும் பாப்பாங்க. அவுங்க சிரிப்பாங்க; நானும் சிரிப்பேன்.
அன்னக்கிப் பாத்து எனக்கு மாமாவுக்குக் கடுதாசி எழுதணுமிங்கிற ஆசை வந்தது. காயிதத்தை எடுத்துக்கிட்டு, சுகுணா அம்மாகிட்டே போனேன். அந்த அம்மா சந்தோசமா கூப்பிட்டு உக்காரச் சொல்லிக் கடுதாசி எழுத ஆரம்பிச்சாங்க. அப்ப அவுங்க பக்கத்திலே ஒரு புஸ்தகம் இருந்தது. அது இங்கிலீஷ் புஸ்தகம். எனக்குப் படிக்கத் தெரியாதே ஒழிய, எது இங்கிலீசு எழுத்து, எது தமிழ் எழுத்துன்னு நல்லாத் தெரியும். இங்கிலீசு எழுத்துத்தான் சார் ரொம்ப அழகு; தமிழ் நல்லாவேயில்லே, என்னமோ புழு நௌியற மாதிரி... அந்த சுகுணா எப்பவுமே ஏதாவது பொஸ்தகத்தைப் படிச்சிகினே இருப்பாங்க - நா அவங்களைக் கேட்டேன்: "நம்ம ஐயிருல்லே - மேனேஜர் - அவரு என்னைப் பார்த்து, 'இவன் ஒரு கேரக்டர்'னு சொன்னார், அப்படின்னா என்னா அர்த்தம்"னு. சுகுணா சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க: "அவரு சொன்னதிலே ஒண்ணும் தப்பில்லே" அப்படீன்னா...
... அவங்க சொன்ன அர்த்தத்தை அப்படியே எனக்குத் திருப்பிச் சொல்ல வரல்லே. அனா அர்த்தம் மட்டும் புரிஞ்சு போச்சு. நான் இன்னா சார் அப்பிடியா?
அந்தச் சுகுணா சொல்வாங்க. என் கண்ணு ரொம்ப அழகாம்; என் உதடு கீழ்உதடு இல்லே. அது ரொம்ப ரொம்ப அழகாம்; நான் மன்மதனாம். எனக்கு அவுங்க அப்படிச் சொல்லும்போது உடம்பெல்லாம், என்னமோ செய்யும். எனக்கு அவுங்க மேலே ஆசை - ஆசைன்னா, காதல் உண்டாயிருச்சி; போ சார், எனக்கு வெக்கமா இருக்கு.
அன்னக்கிக் கடுதாசி எழுதறப்போ நான் என் மனசுக்குள்ளே இருந்த ஆசையைச் சொல்லிப்பிட்டேன். கொஞ்சம்கூடப் பயப்படலே! அவுங்க முகத்தைப் பார்த்தப்போ அப்படி ஒரு துணிச்சல்; ஆனா எல்லாம் பொசுக்குனு போயிடுச்சி சார். என் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு என்னெக் கட்டிப் புடிச்சி, அவுங்க - அந்த சுகுணா - 'ஓ'ன்னு அழுவ ஆரம்பிச்சுட்டாங்க சார். எனக்கும் அழ வந்திடுச்சு. நானும் அழுவறேன். அவுங்களும் அழுவறாங்க... எனக்கு 'ஏன்'னே புரியலே. அப்புறம் அவுங்க சொன்னாங்க... அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
"நான் பாக்கியசாலிதான்! ஆனா என்னோட இந்த வௌிவேஷத்தைக் கண்டு நீ மயங்காதே. நான் வெறும் சக்கை... விஷச் சக்கை... ஒரு மனுஷனுக்குத் தரக்கூடிய இன்பம் எதுவும் எங்கிட்டே இல்லே. உன்னை அடையறதுக்கு நான் குடுத்து வெக்கலே... அந்தப் பாக்கியம் இருந்தும் இல்லாம போன மாதிரி, அடுத்த ஜென்மத்திலாவது நாம்ப ஒருத்தரை ஒருத்தர் அடையலாம்...". இன்னும் என்னென்னமோ சொல்லிக்கினெ என் கையிலே மொகத்தைப் பொதைச்சுக்கிட்டு கதறிட்டாங்க கதறி - யாரு அவங்க? - பெரிய சினிமா ஸ்டாரு சார்!... பாவம் அடுத்த நாளு அநியாயமா பூட்டாங்களே சார்! அவுங்க குடுத்த மோதிரம் ஒண்ணு - தோ- விரல்லே கெடக்கு... ஆனா, அந்த அம்மா ஐயிரு என்னைச் சொல்றமாதிரி - அவங்களே ஒரு கேரக்டருதான் சார். ஆனா, அவுங்க செத்தப்போ நான் வருத்தப்படவே இல்லை சார்! நான் எப்ப சாகறதுன்னுதான் அடிக்கடி யோசிக்கிறேன் சார்; இதிலே இன்னொரு கஷ்டமும் இருக்கு. அடுத்த ஜென்மத்திலே நா யாரைக் கண்ணாலம் கட்டிக்கறது? வள்ளியையா, சுகுணாவையா?...
இந்த ஜென்மத்திலே நான் சொகமாத்தான் இருக்கேன். அடுத்த ஜென்மத்தை நெனைச்சிக்கினா ஒண்ணுமே புரியலை சார்...
இதெப்பத்தி உங்களை ஒரு வார்த்தை கேக்கலாம்னுதான் சார் இந்தப் பக்கம் வந்தா வாங்கன்னு சொல்றேன். இங்கே இருக்கிறவங்க, கேட்டா சிரிக்கிறாங்க சார்...
"நீ ஒரு 'கேரக்டர்" தான்"னு சொல்றாங்க. பார்க்கப் போனா ஒலகத்திலே ஒவ்வொரு மனுஷனும் ஒரு 'கேரக்டர்' தான்! நீ இன்னா சார் சொல்றே...?
(எழுதப்பட்ட காலம்: 1959)
நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன்,
கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017. முதல் பதிப்பு: 2000,
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5. புதிய வார்ப்புகள் (1965)
மாடியறையில் இந்துவைக் காணாமல் அவளது செல்லப் பூனை குறுக்கும் நெடுக்கும் அலைந்துகொண்டு இருந்தது. வராந்தா வழியாக-அவளைத் தேடியவாறு-சுவரோரமாய் நடந்து மாடிப் படியருகே வந்து நின்று, கீழே ஹாலைக் குனிந்து பார்த்தது அந்தக் கருப்புப் பூனை.
பொழுது மங்கி வெகுநேரம் ஆகியும் விளக்கைப் பொருத்த வேண்டுமென்ற உணர்வுகூட அற்றவளாய், முன் ஹாலில் இருண்ட மூலையில் கிடந்த ஸ்டூல் ஒன்றில், யாருக்கோ அஞ்சிப் பதுங்கியவள் மாதிரி உட்கார்ந்திருந்த இந்துவின் தாய் குஞ்சம்மாள், தலை நிமிர்த்தி மாடி வராந்தாவைப் பார்த்தாள்.
இருளில் ஜொலிக்கின்ற அந்தக் கறுப்புப் பூனையின் இரண்டு கொள்ளிக் கண்களையும் காண அவள் அச்சம் கொண்டாள். அந்தப் பூனையும் 'இந்து எங்கே? . . . இந்து எங்கே . . .?' என்று சினம் மிகுந்து அவள் மீது பாய்ந்து குதறுவதுபோல் அலறியவாறு மாடிப் படிகளில் வாலை நௌித்துச் சுழற்றியவண்ணம் இறங்கி வந்து கொண்டிருந்தது.
அந்தப் பூனையின் அலறல் மனிதக் குரல்போல் அவளுக்கு 'உருவகம்' கொண்டது. குஞ்சம்மாள் தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அவள் கண்களுக்கு அந்தப் பூனையின் விழிகள், தன் கணவரின் விழிகளைப் போன்று அச்சம் விளைத்தன.
அந்தச் சமயத்தில் தன் கணவரின் பிரசன்னத்தைக் கற்பனை செய்தே அவள் உடல் நடுங்கினாள்.
மாடிப் படிகளில் அலறியவாறே இறங்கி வந்த கறுப்புப் பூனை, குஞ்சம்மாளின் காலைச் சுற்றிச் சுற்றிப் பரிதாபமாய் அழுதது. குஞ்சம்மாள் குனிந்து பூனையைக் கையில் எடுத்தாள். முகத்தோடு அணைத்துக்கொண்டு அழுதாள். தன்னைக் காணும்போதெல்லாம் விரட்டித் துரத்தும் அவளது இந்தப் புதிய செய்கையில் அந்தப் பூனை ஆச்சரியம் கொண்டதுபோல் அமைதியடைந்தது.
இந்தப் பூனையின் தவிப்பை அவள் உதாசீனப்படுத்திவிடலாம். இதுபோல் மற்றவர்களின் தவிப்பை உதாசீனப்படுத்த தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், சமாதானப்படுத்தி அவர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதிலாவது தான் வெற்றி காணமுடியுமா என்று எண்ணியபோது, அவள் மலைத்துப்போய்க் குழம்பினாள்.
அந்தக் குழப்பத்திலும் மலைப்பிலும் அவள் கையிலிருந்து நழுவிக் குதித்தப் பூனை, மீண்டும் இந்துவைத் தேடி அழைத்தவாறு ஒரு குழந்தைபோல் பின்கட்டை நோக்கி ஓடிற்று. அந்தப் பூனையின் குரல் குஞ்சம்மாள் நெஞ்சத்தைக் குடைத்தது.
பாவம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்துவுக்கு - மாடியறையில் சிறையிடப்பட்டு நாலு வருஷமாய்த் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இந்துவுக்கு - இந்தப் பூனைதான் உற்ற துணையாய் உடன் இருந்தது. அந்த நாலு வருஷத்தின் ஆரம்ப காலத்தில் - தன் குற்றத்தின் பயங்கரத்தையும், அந்தத் தண்டனையின் கொடுமையையும் அறியக்கூட முடியாத அந்த வயதில் - அவள் நாளெல்லாம் பாடிக்கொண்டும் பூனையோடு விளையாடிக் கொண்டும் இருந்தாள் . . பிறகு சில காலத்தில் பாட்டும் ஆட்டமும் குறைந்து, சதா நேரமும் படித்துக்கொண்டே இருந்தாள் . .
சின்னவள் விஜயாவும் லைப்ரரியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து அவளுக்காகக் குவிப்பாள். ஆனால் சமீப காலங்களில் அவள் இவற்றிலெல்லாம் நாட்டமின்றி, தன்னுள்ளேயே அரிக்கப்பட்டவள்போல் குன்றிப் போய், சதா நேரமும் ஆழ்ந்த சிந்தனையும், வானத்தை வெறித்த பார்வையும், குமுறி விடுகின்ற பெருமூச்சுகளுமாய்ச் சாம்பிக் கிடந்தாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஆறுதலாய் அருகில் இருந்து அவள் தனிமையை மாற்றியது இந்தக் கறுப்புப் பூனைதான். அவளும் தனது ஆழ்ந்த சோகங்களின் நடுவே இந்தப் பூனையை எவ்வளவோ அன்போடு பாலூற்றி வளர்த்தாள். இதைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வ்ந்தது! போகும்போது இதைப்பற்றி நினைத்திருப்பாளா? கதறிக் கதறி அழுதாளே . .அந்த அழுகையில் இந்தக் கறுப்புப் பூனைக்கும் பங்கு உண்டா? அவள்தான் சொல்லிவிட்டாளே! 'யாருக்காகவும் தனது வாழ்க்கையைத் தான் பலியிட முடியாது' என்று . . .
'அவள் சொன்னது இருக்கட்டும். அப்படி ஒரு காரியத்தை என்னால் எப்படிச் செய்ய முடிந்தது' என்ற பிரமிப்பில் குஞ்சம்மாளின் விழிகள் வெறித்தன.
செய்த காரியம் சரிதான். ஆனால் சரியான காரியங்களையெல்லாம் செய்துவிட முடிகிறதா? அவ்விதம் தனக்குச் செய்வதற்கான துணிச்சலைத் தந்த அந்த விநாடிகளை அவள் மனத்துள் வாழ்த்தினாள். அதன் விளைவுகளைக் கற்பனை செய்து இப்போது அவள் நடுங்கிக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில்கூட, அது 'சரி' தான் என்று தோன்றும் அளவுக்கு இந்தக் காரியம் சரியானதாய் இருந்தது. எனினும் அந்த நிலைமை இப்போது இருந்தால் - இந்த நிமிஷம் அந்தத் துணிச்சல் தனக்கு இருக்காது என்றே அவளுக்குத் தோன்றியது. அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம், அந்த நேரத்தில் அவளைப் புதிதாய் வார்த்து, அந்தப் புதுமையான துணிச்சலைத் தந்து அந்தக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டுவிட்டது . . .
அப்படி ஒரு நேரத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் நான்கு வருஷத்துக்கு முன் பதினேழு வயதில் இந்து அவனுடன் ஓடிப்போய் இருக்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆமாம்; ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன.
அவளுக்கு நேர்ந்த அந்த நிர்ப்பந்தத்தை நாலு வருஷங்களுக்குப் பிறகுதான் தன்னால் உணரமுடிந்திருக்கிறது என்று நினைத்தபோது, தன்னைப்போல் தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் இதை உணர்ந்துகொள்ள முடியுமா? என்ற் அச்சம் பிறந்தது அவளுக்கு.
'இந்து எங்கே? இந்து எங்கே?' என்று அலறியவாறே மீண்டும் அந்தக் கறுப்புப் பூனை கண்களில் பந்தம் கொளுத்தித் தேடிக்கொண்டு அவள் எதிரே வந்து நின்றது.
இன்னும் சற்று நேரத்தில் இதே மாதிரி தன்னைச் சூழ்ந்து நெருக்கிக் கேட்கப்போகும் தன் குடும்பத்தினருக்கு அவள் என்ன பதில் சொல்லப்போகிறாளோ?
இந்தக் குடும்பத்தின் அதிகாரமும் பொறுப்பும் மிக்க தலைவி அவளே எனினும், குடும்பம் என்ற கூட்டுக்குள் தனக்குத் தரப்பட்ட, தனக்குரிய, அதிகாரத்தைத் தான் வரம்பு மீறி உபயோகித்து விட்டோம் என்ற பயமே தோன்றி எல்லோர் முன்னிலையிலும் தான் குற்றவாளியாகி நிற்பது போலிருந்தது அவளுக்கு.
ஓடிப்போன-தன்னால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட இந்துவைத் தவிர, தற்சமயம் வௌியில் போயிருக்கும் மற்றவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராய் நிச்சயம் திரும்பி வருவார்கள்.
கோயிலுக்குப் போயிருக்கும் மாமியாரோ, டியூஷனுக்குப் போயிருக்கும் அம்பியோ, காலேஜுக்குப் போய்விட்டு ஊர் சுற்றியபின் ஏதேதோ காரணங்கள் கூறிக்கொண்டுவரும் விஜயாவோ, அல்லது இந்நேரம் கிளப்பில் சீட்டாடிக் கொண்டிருக்கும் அவள் கணவரோ - யாரையேனும் அவள் முதலில் சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் யாரைச் சந்தித்தாலும் மொத்தமாக எல்லோரயும் அவள் சமாளித்தே தீரவேண்டும்!
குஞ்சம்மாளுக்கு மீண்டும் முகமெல்லாம் வியர்வை கண்டது.
வீடு இருண்டே கிடந்தது. விளக்கைப் பொருத்தவேண்டும் என்ற உணர்வுகூட அவளுக்கு இல்லை.
பாட்டிதான் முதலில் வந்தாள்.
நாளெல்லாம் மழை பெய்து கோயிலின் பிரகாரமெல்லாம் சேறும் சகதியும் குழம்பி நின்றதோடல்லாமல் எந்த நிமிஷமும் மீண்டும் மழைபெய்யகூடும் என்ற அறிகுறியோடு பகலே ஒரு அந்தியாய் இருண்டு கிடந்ததால் வழக்கமாகக் கோயிலில் நடைபெறும் உபன்யாசம் இன்று உட்பிரகாரத்தில்-சாஸ்திரத்துக்குச் சற்று நேரம் - சுருக்கமாகவே நடந்து முடிந்திருந்தது. இல்லாவிட்டால் பாட்டிதான் எப்போதுமே கடைசியாக வருவாள்.
காம்பவுண்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த பாட்டி, வீடு முழுவதும் இருண்டு கிடப்பதை கண்ணுற்று, "என்னடி பொண்ணே, ஒரே இருளோன்னு கெடக்கே? . . கரண்டு கட்டா? இந்து . . இந்து போன் பண்றத்துக்கு என்ன?" என்று கூப்பாடு போட்டவாறே இருளில் துழாவியவாறு மாடிப்படிகளின் கைப்பிடிச் சுவரை ஒரு கையாலும் வலது முழங்காலை ஒரு கையாலும் தாங்கி விசுக் விசுக்கென்று ஏறி மேலே போனாள்.
ஒரு நாளைக்கு நூறு தடவை மாடிப்படி ஏறி இறங்குவதானாலும் பாட்டிக்கு அலுக்காது. அந்தக் குடும்பத்திலேயே சின்ன உருவம் பாட்டிதான். ராமபத்திர ஐயருக்கு இவள் அம்மா என்று நினைக்க யாருக்கும் ஒரு வியப்பும் சிரிப்பும் நிச்சயம் வரும். ராமபத்திரனுக்கு இந்த மாடியை நினைத்தாலே பயம்; ஒரு முறை ஏறி இறங்குவதற்குள் அவருக்கு மேல்மூச்சு வாங்கும். அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை. ஆகவே மாடிக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. குஞ்சம்மாளுக்கோ மாடியை நினைத்தாலே குடலைப் பிடுங்கிக்கொண்டு வரும். அவ்வளவு ஆத்திரம் இந்துவின்மீது. விஜயாவுக்குப் படிக்க இடைஞ்சலா யிருக்கக்கூடாது என்பதற்காக கீழே பின் கட்டில் தனி அறை. பாட்டியும் அம்பியும் மாடி ஏறி இறங்க அலுக்காதவர்கள். ஏறி இறங்கக் களைப்புத் தெரியாமல் இருக்க பாட்டுப் பாடுவதுபோல் 'இந்து இந்து' என்று பாட்டி அழைப்பாள்.
குழைந்து குழைந்து பேத்தியை இந்தப் பாட்டி அழைப்பதைக் கேட்கும் போதெல்லாம் குஞ்சம்மாளின் முகம் சுருங்கும். அந்தப் பெயரின்மீதே அவளுக்கு அத்தனை வெறுப்பு. நாலு வருஷத்துக்கு முன் எங்கோ ஓடிப்போன இந்துவை ஒன்றரை மாதத்திற்குப்பின் - ஒரு நாள் கண்டு பிடித்துக்கொண்டு வந்து அந்த அறையில் போட்டு அடைத்தாரே ராமபத்திரன், அன்றைக்கு மாடிக்குப் போய் அவள் எதிரே நின்று, உதட்டைக் கடித்து இரண்டு கைகளையும் அவள் எதிரே நீட்டிக்கொண்டு சப்தமில்லாமல் கனத்த குரலில், "செத்துப் போயேண்டி . . இந்த மானங்கெட்ட உயிரை ஏன் வெச்சிண்டிருக்கே? தூ! நீ ஒரு ஜென்மமா?' என்று இந்துவின் முகத்தில் காறித் துப்பிவிட்டு வந்தாளே, அவ்வளவுதான்! அதன்பிறகு அவளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது இன்றுதான்; இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான்.
பாட்டி மாடிக்குப் போய் அறையையும் வராந்தாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த வீடுகளில் விளக்கு எரிவதைக்கண்டு "ஊரெல்லாம் எரியறதே! நம்மாத்திலே மட்டும் என்னடி கோளாறு?" என்று முனகிக்கொண்டே சுவரைத் தடவி ஸ்விட்ச்சைப் போட்டாள்.
பளீரென்று வீசிய வௌிச்சத்தில் அறை கிடந்த அலங்கோலத்தைப் பார்த்தாள் பாட்டி. அலமாரியின் கதவுகள் இரண்டும் யோரோ அள்ளிக்கொண்டு போய்விட்டதுபோல் விரியத் திறந்து, துணிகளும் பொருள்களும் இறைந்து கிடந்தன.
"இந்து . . . அடியே இந்து!" என்று கூவியவாறே மாடிப்படிகளில் இறங்கிவந்த பாட்டி, சமையல் அறையில் தெரிந்த சிறு வௌிச்சத்தைக் கண்டு "குஞ்சு . . . குஞ்சம்மா . . எல்லோரும் எங்கேடி போயிட்டேள்? இந்து . . உள்ளேயா இருக்கே? என்று கேட்டவாறே சமையல் அறையை நோக்கி நகர்ந்தபோது அவள் முதுகுக்குப் பின்னாலிருந்து . . .
"இந்து இல்லே . . ." என்று துயரத்தின் கனமேறிய குரல் இருளிலிருந்து ஒலிக்கக் கேட்டு, நின்ற நிலையிலேயே தோள் வழியே முகம் திருப்பிப் பார்த்தாள் பாட்டி. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சுவரைத் தடவி ஹால் விளக்கின் ஸ்விட்ச்சைப் போட்டாள்.
"இருட்டிலே உட்கார்ந்துண்டு என்னடி செய்யறே?" என்று கேட்டவாறே குஞ்சம்மாளின் அருகே பாட்டி நெருங்கி வந்தாள். குஞ்சம்மாள் துயரத்தால் உதடுகள் துடிக்க ஒரு விநாடி தலைக்குனிந்து அழுகையை விழுங்கிக்கொண்டு முகம் நிமிர்த்தி மாமியாரைப் பார்த்தாள். சில விநாடிகள் ஒன்றுமே பேசாமல் சிவந்த விழிகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். பாட்டியும் ஒன்றுமே விசாரிக்காமல் எதையோ விவர விளக்கங்களற்றுப் பொதுப்படையாகப் புரிந்து கொண்டவள்போல் இடுப்பில் ஒரு கையை ஊன்றி மௌனமாக கலவரத்தோடு குஞ்சம்மாளின் முகத்தைப் பார்த்தாள்.
"எங்கே இந்து?" என்று குரலை அடக்கித் தனது கன்னங்களிரண்டிலும் உள்ளங் கைகளை வைத்து அழுத்திக்கொண்டு கேட்டாள் பாட்டி.
"அவன் வந்தான்;அவனோட அவளும் போயிட்டா" என்று கரகரத்தக் குரலில் கூறினாள் குஞ்சம்மாள்.
"அந்தப் பாவி மகன் எதுக்கு வரணும் இங்கே? இவளை நீ எப்படிப் போகவிட்டே? அவள் அப்பன் கிளப்லே தானே இருப்பான்? போன் பண்ணிருக்கபடாதோ? முன்னே பிடிச்சு ஜெயில்லே போட்ட மாதிரி இந்தத் தடவை தூக்கிலேயே போடுவானே?இப்பிடி அறிவு கெட்டவளா, பயித்தியம் புடிச்ச மாதிரி உட்காந்துண்டு, 'அவ அவனோட போயிட்டா'ங்கரயே? அவ அப்பன் வந்தா உன்னைக் கொன்னுடுவானேடி?" என்று பாட்டி கைகளைப் பிசைந்து, தலையிலடித்துக் கொண்டு அங்கலாய்த்தவாறே பக்கத்தில் கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
குஞ்சம்மாள் எல்லாவற்றுக்கும் துணிந்தவள்மாதிரி, எதற்கும் அஞ்சாதவள் போல் தலைக் குனிந்து மௌனமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். பாட்டியம்மாள் அங்கலாய்த்து ஓய்ந்தபின் தரையைக் கால் விரல்களால் தேய்த்தவாறே குஞ்சம்மாள் தௌிவான குரலில் கேட்டாள்:
"அவனைப் பிடிச்சு ஜெயில்லே போட்டோம் . . .அவன் செய்யாத குத்தமெல்லாம் சொல்லி, அவனுக்குத் திருடன்னு பட்டம் கட்டி, அதுக்கு அவளையே அவனுக்கு எதிரா சாட்சிச் சொல்ல வச்சு, நாலு வருஷம் ஜெயில்லே போட்டோம். என்ன வாழ்ந்தோம்? என் பொண்ணுக்கு என்ன விமோசனம் ஏற்பட்டது? யோசிக்க வேண்டாமா? நகைக்கு ஆசைப்பட்டு மைனர் பொண்ணைக் கடத்திண்டு போனான்னு நாம்ப சொன்னாலும் - ஒரு மாதத்துக்கு மேலே அவா ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்திருக்காங்கறதை நாம்ப மறைக்கப் பார்த்தாலும் - ஊரிலே யாரு நம்பறா? என்னத்தான் காசு பணத்தைக் காட்டினாலும், ரொம்ப வேண்டியவாகூட விஜயாவைத்தான் பார்க்க வராளே தவிர, இவளை யாரு சீந்தரா? . . . அப்புறம் இவ என்னதான் ஆறது? உங்க பிள்ளை அவனைத் தூக்கிலேகூடப் போடுவார் . . . அவருக்கு வர்ர கோபத்திலே தானே தன் கையாலே அவனைக் கொன்னாலும் கொன்னுடுவார் . . சரி, அப்புறம் இந்துவோட பிரச்னை அத்தோடு நமக்குத் தீர்ந்துடுமா? அவ நமக்கு ஒரு பிரச்னை இல்லையா? அந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்த நாலு வருஷமா நாம்ப என்ன பண்ணினோம்? என்னப் பண்ணப்போறோம்? என்ன பண்ண முடியும்? யோசிங்கோ மாமி . . ." என்று யோசித்து யோசித்து ஆழமான தொனியில் குஞ்சம்மாள் கூறுவதைக் கவலையோடும் கலங்குகின்ற கண்களோடும் கேட்ட பாட்டிக்கு சில யோசனைகள் பிறக்க ஆரம்பித்தன.
மீண்டும் சில நிமிஷ மௌனத்தில் இருவருமே தலை குனிந்து அமர்ந்திருந்தனர். திடீரென்று இருவருமே ஒரே சமயத்தில் தலை நிமிர்ந்து பார்த்தனர். இப்போது பாட்டியின் கண்களுக்கு தனது மருமகள் அறிவு கெட்டவளாகவோ, பைத்தியம் பிடித்தவளாகவோ தோன்றவில்லை; ஆனால் இவ்வளவு நேரம் குஞ்சம்மாளை மட்டும் தனியாகப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பயமும் 'எப்படிச் சமாளிக்கப் போகிறோம், இதை' என்ற பிரச்னையும் பாட்டியைப் பிடித்து ஆட்ட ஆரம்பின.
"என்ன நடந்தது? எதுக்கு அப்படிப் பண்ணினே . . இனிமே என்னடி பண்றது? நேக்கு வயத்தையெல்லாம் என்னமோ பண்றதே . . . முன்னேயே அவ ஓடிப்போனப்போ - எல்லாத்துக்கும் நீயும் நானும்தான் காரணம்னு அவன் பேசல்லியா? நீயும் நானும்தான் அவனோட ஆபீஸ் அட்டண்டரை ஆபீஸ் வேலைக்கே விடாம வீட்டுக்குக் கூப்பிட்டுக் கூப்பிட்டு வேலை வாங்கினமாம். ராத்திரி பகல்னு இல்லாம அந்த வேணுவை உக்காத்திவைச்சு சாப்பாடும் பலகாரமும் காபியும் குடுத்துக் குடுத்து இந்த வீட்டிலே ஒருத்தன் மாதிரி ஆக்கினோமாம் . . இப்படி எவ்வளவு பேசினான் . . இப்போ அவன் வந்து கேப்பானடி? ஏண்டி, நோக்கு பயமா இல்லையா?" என்று உடல் நடுங்க, நடுங்குகின்ற கைகளால் மருமகளைத் தொட்டாள் பாட்டி.
குஞ்சம்மாள் தைரியம் அளிப்பவள்போல் தன் கரத்தின் மேல் வைத்த பாட்டியின் கரத்தைப் பற்றிக்கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் மனத்தில் ஒரு தைரியமே பிறந்தது.
பயந்து நடுங்குகிறவர்களுக்குக் கூடத் தன்னைவிடப் பயந்து நடுங்குகிற இன்னொரு துணை இருந்தால் ஒரு தைரியம் பிறக்கும். பயத்தையும் துயரத்தையும் சமாளிக்கவேண்டுமானால் முதலில் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். குஞ்சம்மாள் நடுங்கிக் கொண்டிருந்தது அதற்குத்தான். தனது பயத்தைப் பகிர்ந்து கொள்ளத் தக்கவர்கள் வராமால், யாரை எண்ணிப் பயந்துகொண்டு இருந்தாளோ அந்தக் கணவரே வந்து விடுவாரோ என்றுதான் அவள் தவிக்க வண்ணமிருந்தாள்.
இப்போது பாட்டியம்மாளும் தன்னைப்போல், 'இந்துவின் அந்த ஓடிப்போன குற்றத்துக்குத் தண்டனை தந்தது தவிர அவள் எதிர்கால வாழ்க்கைக்காக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே எதுவும் செய்யவில்லை . . செய்ய முடிந்ததுமில்லை' என்று பொறுப்பான சிந்தனை வயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்தாள் குஞ்சம்மாள். சில மணி நேரங்களுக்கு முன் திடீரெனச் சமையல் அறையிலிருந்து வௌியே வந்து பார்த்தபோது வேணுவும் இந்துவும் நின்றிருந்த முன்
வராந்தாப் பகுதியை அவள் பார்வை இப்போது வெறித்தது.
அவளுக்கும் முதலில் அவனைப் பார்த்தபோது தன் மகளின் வாழ்வைக் கெடுத்த பாவி வந்திருக்கிறானே என்றுதான் வயிற்றைப் பிடுங்கிக் கொண்டு ஆத்திரம் வந்தது ---
அப்போது வௌியே மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது; சாரலைத் தடுப்பதற்காக வராந்தாவின் முன்புறத்தில் தொங்கிய மூங்கில் தட்டியின் மறைவில் கிடந்த பெஞ்சின் மீது அவன் உட்கார்ந்திருந்தான். இந்து அவன் அருகே மிகவும் உரிமையோடு நின்று புடவைத் தலைப்பால் முகத்தை மூடி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.
அவன் கலங்கிய கண்களும், உணர்ச்சி மிகுதியால் துடிக்கின்ற உதடுகளுமாய்ச் சொன்னான்: "இந்து, நான் ஜெயில்லெ இருந்த ஒவ்வொரு நிமிஷமும் 'எனக்கு வேணும்;அறிவில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்த எனக்கு இந்த தண்டனை வேணும், வேணும்'னு அனுபவிச்சேன். ஆனா, என்னைத் 'திருடன்'னு உன் நகைக்கு ஆசைப்பட்டு உன்னைக் கடத்திக்கிட்டு போனவன்னு சொன்னாங்களே . . . போகட்டும்! நீயும்கூட அதுக்கு ஆதரவா சாட்சியம் சொன்னியே - அதை நெனச்சப்போ உன் மேலெ எனக்குக் கோபமே வரலே; பரிதாபமா இருந்திச்சு. இந்தக் கொழந்தையை இழுத்துக்கிட்டு போனதுக்கு இப்படி ஒரு தண்டனையும் வேண்டியதுதான்னு நெனைச்சுக்கிட்டேன் . . . ஆனா நெஜமாச் சொல்லு, இந்து . . நாம ரெண்டு பேரும் ஏதோ முடிவிலே, ஏதொ ஒரு வெறியிலே, ரெண்டுபேரும் சம்மதிச்சுத்தானே ஓடினோம்? இப்போ பயித்தியக்காரத்தனமாகத் தோணினாலும் அப்போ ஏதோ புனிதமான காதல்னு நெனைச்சுத்தானே ஓடினோம்? காதலர்களுக்கு வயிறும் பசியும் உண்டுன்னு ஓடறத்துக்கு முன்னே நமக்குத் தோணல்லே . . .எங்கெங்கேயோ வேலை தேடி அலைஞ்சப்புறம் பட்டினி கிடக்க முடியாம நீயே தானே உன் நகைகளைக் கழட்டிக் கொடுத்து விக்கச் சொன்னே? நானும் முதல்லே மாட்டேன்னு மறுக்கல்லியா? 'நானே உனக்குன்னு வந்தப்புறம் இந்த நகை உனக்கு சொந்தமில்லையா'ன்னு நீ கேக்கலியா? அதெல்லாம் வெறும் நடிப்புன்னு நீ நினைக்கிறயா? இப்போ நீ குழந்தையில்லெ . . நல்லதும் கெட்டதும் தெரியும் - இப்ப சொல்லு, உன் நகைக்கு ஆசைப்பட்டுத்தான் உன்னை ஏமாத்தி நான் அழைச்சிக்கிட்டுப் போனேன்னு நீ நெனக்கிறியா, இந்து? . .. . இந்து . . . அழாதே சொல்லு . . ." என்று அவன் பழைய சம்பவங்களை நினைப்பூட்டிக் கேட்கும்போது இந்து கதறி அழுதாள்.
"வேணு, என்னை மன்னிச்சுடு . . நான் என் கோழைத்தனத்தாலே உன்னை அபாண்டமாய் பழி சுமத்தித் தண்டனைக்கு ஆளாக்கிட்டேன். அப்ப அவ்வளவு பெரிய பாவமா அது தோணலே . . அந்தப் பாவத்தை நான் இப்பொ அனுபவிக்கிறேன் . . சாகற வரைக்கும் அனுபவிப்பேன் . . ." என்று அவள் அழுதாள்.
"ஸ் . . அழாதே இந்து! எனக்கு நீ ஒரு தீங்கும் செய்யல்லே. நீ மனசார என்னை அப்படி நினைக்கலேன்னா எனக்கு அது போதும் . . ம்ஹூம் . . அழக்கூடாது . . ." என்று அவள் தோளைக் குலுக்கி அவன் சமாதானப்ப்டுத்தினான்.
குஞ்சம்மாள் ஒரு விநாடியில் கோபமடங்கி, நெஞ்சம் குழைய அவர்களிடையே குறுக்கிட மனமின்றி ஹாலிலேயே ஒதுங்கி நின்றாள்.
'யார் பெற்ற பிள்ளையோ இவன்? இவ்வளவு நல்ல பிள்ளையான இந்த வேணு, நான் பெற்ற பெண்ணின்மீது வைத்த ஆசையால் என் கணவரின் முன்கோபத்ததுக்கும் பிடிவாதத்துக்கும் பலியாகி, நாலு வருஷம் அநியாயமாய் ஜெயிலில் இருந்துவிட்டு 'நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யலே' என்று தனக்கு எதிராகச் சாட்சி சொன்னவளிடம் வந்து சொல்கிறானே' என்று நினைக்கும்போது குஞ்சம்மாளின் கண்கள் குளமாயின.
அதே சமயத்தில் அவன் அவளிடன் சொல்லிக் கொண்டிருந்தான்:
"சட்டத்தின் தண்டனையிலிருந்து நான் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமா விடுதலையாகிகிட்டே இருந்தேன் . . .அதே நெரத்தில் உன் குடும்பத்திலே நீ ஒவ்வொரு நாளும் மேலே மேலே கடுமையா தண்டிக்கப்பட்டுக்கிட்டிருப்பேன்னு நான் நினைக்காத நாளே இல்லே, இந்து! நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்த ஒரு காரியம் - தப்புதான், என்னைத் தண்டிச்சு விட்டுடுத்து . . ஆனா உனக்கு விடுதலையே கிடையாதா, இந்து? உன் நிலமை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும் . . நான் என்ன செய்யலாம் சொல்லு . . சொல்லு இந்து" - அவன் தவியாய்த் தவித்த போது, இவ்வளவு நேரம் அழுதுகொண்டே இருந்த இந்த அழுகை அடங்கிய விம்மலோடு திணறித் திணறிப் பேசினாள்.
"நாம செய்தது-அப்ப செய்தது-தப்பாகவே இருக்கலாம் . . அந்தக் காரியம் தப்பாப் போனதுக்குக் காரணமே நாம் அதை அப்ப செய்ததுதான். நான் அப்போ என் வாழ்க்கையை நானே தீர்மானிக்கிற வயதிலே இல்லே. அப்போ நான் செய்த காரியத்தினாலே என் வாழ்க்கையே கெட்டுப் போயிருந்தது . . . அதே காரியத்தை நான் இப்ப செய்யல்லேன்னா என் வாழ்க்கை கெட்டே போகும் . . என் வாழ்க்கையை நீயே கெடுத்ததாக இருந்தாலும், இனிமே எனக்கொரு வாழ்க்கை இருக்குன்னா அதை உன்னைத்தவிர வேற யாரும் எனக்குத் தரமுடியாது. ஆனா நான் உனக்குச் செய்த தப்புக்கு நீ திரும்பி என்னைத் தேடி வருவேன்னு நான் நினைக்கவே இல்லே, வேணு . . ." என்று பேச முடியாமல் தொண்டை அடைக்கக் கண் கலங்கினாள் இந்து.
உள்ளே ஹாலில் நின்றிருந்த குஞ்சம்மாள் சுவரில் முகம் புதைத்துக்கொண்டு ரகசியமாய், தோள்கள் குலுங்க அழுதாள்.
"நீ என்ன சொல்றே இந்து? நான் நெனைச்சது போலவேதான் நீயும் நெனைக்கிறியா?" என்று மகிழ்ச்சியும் பதட்டமும் கொண்டு கேட்டான் வேணு.
அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து, அழுது சிவந்த முகத்துடன் நிம்மதியோடு பெருமூச்செறிந்தவாறு புன்னகை பூத்தாள்.
அவளது மூடிய இமைகளின் வழியே கண்ணீர் வழிந்தது.
"வேணு . . நான் உன்னோட வந்துடறேன், என்னை அழைச்சிண்டு போ. போறும், இந்த நரகம் போறும்! அம்மா என்னை 'செத்துப் போயேண்டி, செத்துப் போயேண்டி' ன்னு அடிக்கடி சொல்றா, எத்தனையோ தடவை நானும் தற்கொலை பண்ணிக்கலாம்னுகூட நெனைச்சிருக்கேன். ஏனோ முடியலை என்னாலே . . முடியவே இல்லே வேணு" என்று ஏதோ ஒரு நாள் நிகழ்ந்த சம்பவத்தை ஒரு விநாடி நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தினாள் இந்து. வேணுவும் புறங்கையால் கண்களைக் கசக்கிக்கொண்டு அடித் தொண்டையில் கமறிச் செருமினான்.
"நல்ல வேளை வேணு . . நான் அவசரப்பட்டு செத்துப் போகல்லே. நீ வருவேன்னு நான் கனவுகூட கண்டதில்லே. ஆனா இப்பொ தோண்றது; எனக்குத் தெரியாமலே அப்படி ஒரு நம்பிக்கையிலேதான் நான் உயிர் வாழ்ந்தேன்னு . . இல்லேன்னா இவ்வளவு நாள் நான் இந்த உடம்பிலே உயிரை வச்சுண்டு இருந்த்ததுக்குக் காரணமே இல்லே. சரி, நான் உன்னோட வரேன். நாம போயிடுவோம். ஆனா முன்னே மாதிரி யாருக்கும் தெரியாம ரகசியமாப் போகவேண்டாம். பகிரங்கமாகவே போகலாம். எனக்கு அந்த வயசு வந்தாச்சு! அந்த வயசுக்காகத்தான் இந்த வீட்டு மாடிலே நான் காத்துக்கிடந்தேன் போலிருக்கு. ஆனா இந்தத் தடவை எல்லார் கிட்டேயும் சொல்லிட்டே நாம் போகப் போறோம் . . ." என்று அவள் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட வேணு, அவளது துணிச்சலைக் கண்டு வியந்தவன்போல் விழிகளை மலரத் திறந்து அவள் முகத்தைப் பார்த்தான்.
அந்த முகம்-நான்கு வருஷங்களுக்கு முன் தான் கண்ட உலகம் தெரியாத பேதை முகமல்ல; வாழ்க்கையின் பலத்த அடியை வாங்கிக் கன்றிப்போய், ஏமாற்றம், துயரம், அவமானம் என்ற வடுக்களை ஏற்று, முடிவற்ற தனிமை என்ற இருளில் கிடந்து, இப்போதுதான் காலத்தால் புதிதாக வார்க்கப்பட்டிருப்பதுபோல் அந்த முகத்தில் அஞ்சாமையும் உறுதியும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. பேதையின் சாயல்கூட இல்லாமல் வாழ்க்கையை நெடிது நோக்கும் தீட்சண்யம் அவள் விழிகளில் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.
"இவள் ஒரு புதிய வார்ப்பு! இவளை ஏமாற்றிக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகக் கூறினால், உலகம் நம்பாது. ஆகவே இவளோடு கைகோத்துக் கொள்வதன்மூலம் உலகத்தை அச்சமற்றுத் தலை நிமிர்ந்து பார்க்கலாம்' என்ற நம்பிக்கையில் அவன் கம்பீரமாய் எழுந்து நின்றான்.
அப்போதுதான் ஹால் வாசற்படியில் சுவரோரமாய் ஒண்டி நிற்கும் குஞ்சம்மாளை அவன் கண்டான். அவளைக் கண்டதும் அவனுள் ஒரு தாயைக் கண்ட பாசமே சுரத்தது. எத்தனை தடவை அவன் பசியறிந்து அன்போடு அவனுக்கு அவள் உணவு பரிமாறி இருக்கிறாள்! அவன் அவளைக் கரம் கூப்பி நமஸ்கரித்தான்.
அவளுக்கு நெஞ்சைப் பீறிக்கொண்டு அழுகை வந்தது. இருப்பினும் அழுகையோடு அவன்மீது பெருகிச் சுரந்த அன்பையும் அடக்கிக்கொண்டு, "நீ ஏண்டா வந்தே? என் குடியைக் கெடுக்கவா? போ . . .போ . . " என்று விரட்டினாள் குஞ்சம்மாள்.
இந்து திரும்பித் தன் தாயைப் பார்த்தாள்.
"அம்மா!" என்று அழைத்தாள் இந்து. அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. "நானும் போறேம்மா" என்று அழுதாள்.
"போவேடி போவே . . . என்ன நெஞ்சழுத்தம்?" என்று மகளின் கரத்தைப்பற்றி உள்ளே இழுத்து மாடிப்படியருகே தள்ளினாள். "மாடிக்குப் போ! அங்கேயே வைச்சுப் பூட்டச் சொல்றேன் . . வேணு! நீ போறியா, இல்ல போலீசைக் கூப்பிடவா?" என்று திரும்பி நின்று வேணுவை மிரட்டினாள் குஞ்சம்மாள்.
மாடிப்படியில் நின்று சாவதானமாய்த் தாயைப் பார்த்தாள் இந்து: "அம்மா, சட்டம் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லே, என் விருப்பத்துக்கு மாறா என்னெப் பூட்டி வைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லே; நீ போலீசைக் கூப்பிடு. நான் அதை புரிய வைக்கிறேன்" என்று இந்து கூறியபோது குஞ்சம்மாள் மலைத்து நின்றாள்.
"அடிப் பாவி! அவ்வளவு தூரத்துக்கு ஆயிடுத்தா? உன்னைப் பெத்த பாவத்துக்கு வேணும்டி வேணும். தாய் தகப்பனைவிட உனக்கு இவன் ஒசத்தியா ஆயிட்டான் . . இல்லே?" என்று புலம்பி அழுதாள் குஞ்சம்மாள்.
"ஆஹா! மகள் மேலே கொண்ட பாசத்திலேதான் இங்கே என்னை ஆயுள் கைதியா வைச்சிருக்கார் அந்தத் தகப்பனார்! நீயும் அதனாலேதானே, ஒவ்வொரு நாளும் மாடியிலே என் பொணம் விழுந்து கெடக்காதான்னு எதிர்பார்த்துண்டே இருக்கே? போதும் உங்க பாசம்! உங்க வீம்புக்கு நான் பலியாக மாட்டேன். அப்பா வரட்டும், நான் போகத்தான் போறேன் " என்று இந்து ஆவேசம் வந்ததுபோல் கத்தி ஆர்ப்பரித்தாள்.
வேணு வாசற்படியில் இறங்கி மழைச்சாரலில் நனைவதைக் கூடப் பொருட்படுத்தாமல் நின்றிருந்தான்.
குஞ்சம்மாள் மாடிப்படியில் நின்றிருக்கும் இந்துவையும் வாசற்படியில் நின்றிருக்கும் வேணுவையும் நடுவில் நின்று மாறி மாறிப் பார்த்தாள்.
மகளின் ஆவேசம் அவளுக்குப் புரிந்தது. அவள் கூறுவதும் உண்மைதானே? இவள் செத்துப் போகட்டும் என்று எத்தனை முறை தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கொடுமையை நினைத்தபோது, நெஞ்செல்லாம் வலித்தது அந்தத் தாய்க்கு.
'இவளைச் சாகப் பிரார்த்திக்கும் தாய், உயிரோடு வதைக்கும் தந்தை, யாருமே மதிக்காமல் வீட்டுக்குள்ளேயே தீண்டத் தகாதவளாகப் பவிசிழந்து நிற்க வைத்துவிட்ட குடும்பத்தின் ஓரவஞ்சனை - இவற்றுக்கிடையே அவளுக்கு ஒரு வாழ்க்கையைத் தரக் கூடியவன் இந்த வேணு மட்டுமே அல்லவா?' என்று ஒரு நிமிஷ நிர்ப்பந்ததில் அந்தத் தாயுள்ளம் ஆழமாய் அறிந்துணர்ந்தது.
தான் அவனை விரட்டுவதும், அவளை மிரட்டுவதும் உள்ளார்ந்த சம்மத்தோடு அல்ல; மேலெழுந்த வாரியாய்ப் பசையற்று வரண்டு மிதக்கும் வீம்பின் காரணமாகவே தானும் இவ்விதம் இவர்களுக்குக் குறுக்கே நின்று தடுப்பதாகவும் அவளுக்குப் புரிந்தது.
அந்த நிமிஷத்தின் நிர்ப்பந்தம் மகத்தான சக்தி வாய்ந்ததுதான்!
'போறதானா போய்த் தொலை! இப்பவே ஓடு . . பகிரங்கமா ஓடப்போறாளாம் . . நீ ஓடினா போறும்; அது பகிரங்கமாயிடும் . . போ! யாரும் தடுக்கல்லே . . தடுக்கறவா யாரும் வர்ரத்துக்குள்ளே போயிடு" என்று அழுதுகொண்டே கூறினாள் குஞ்சம்மாள். வேணுவும் இந்துவும் ஒரு நிமிஷம் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது, முகத்தை மூடிக்கொண்டு அழுதவாறே குஞ்சம்மாள் சொன்னாள்: "எனக்குப் புரியறது நீ போறது நியாயம்தான்டீ . . இங்கே ஒரு நாடகம் நடத்தாமே நீ இப்பவே போயிடு! அவருக்கு உடம்பு இருக்கிற இருப்பிலே அவர் தாங்க மாட்டார் . . . அவர் குணம் தெரிஞ்சும் அவரோட மோதிக்கவேண்டாம்னுதான் சொல்றேண்டி, இந்து . . நீ இப்பவே போயிடு . . ." என்று இரண்டு கைகளையும் நீட்டி மகளிடம் அவள் கெஞ்சியபோது . . .
"அம்மா . . அம்மா" என்று நெஞ்சு வெடிப்பதுபோல் அரற்றியவாறே தாயின் அருகே வந்து அவளது கைகளுக்கிடையே வீழ்ந்தாள் இந்து!
--- ஓ! அப்படி ஒர் ஆதரவைத் தந்து, அப்படி ஒரு பாசத்தை அனுபவித்து நாலு வருஷம் ஆகிறதே! அழுது ஓய்ந்த பிறகு இருவருமே ஒர் அவசரம் கொண்டனர்.
இந்து மாடிக்கு ஓடினாள்.
குஞ்சம்மாள் ஒன்றும் புரியாத பிரமிப்பில் சுவரில் தலை சாய்ந்துக் கண்களை மூடியவாறு மூலையில் கிடந்த ஸ்டூலின் மீது அமர்ந்தாள்.
சிறிது நேரத்துக்குப்பின் கையில் ஒரு ஸூட்கேசுடன் அவள் எதிரே வந்து நின்று, பாசம் பெருகித் தழுதழுத்த குரலில் "அம்மா!" என்று அழைத்து விடைபெற நிற்கும் மகளைக் கண் திறந்து பார்த்தாள் ..
"இந்து" என்று பதறி யெழுகையில் தனது பாதங்களில் கண்ணீர் சிந்தி நமஸ்கரித்த மகளை மார்புறத் தழுவி ஆசீர்வதித்தாள்.
"இந்து . . என் கண்ணே .. தலை விதிப்படிதான் நடக்கும்! கடவுள் உன் பக்கம் இருப்பார். நீ எங்கே இருந்தாலும் ஒரு வரி கடுதாசி எழுதிப் போடு. உனக்காக நான் கடவுளை வேண்டிண்டே இருப்பேன் . . வேற என்னடி செய்வேன்? என்னை மன்னிச்சுடு இந்து! உன்னைப் பெத்து இப்படியெல்லாம் அலைக்கழிக்கிறேனே . . அதுக்காக என்னை மன்னிச்சுடுடி அம்மா . ." என்று மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
"அம்மா, நான்தான் நீ என்னை வெறுக்கறேன்னு இவ்வளவு காலம் தப்பா நெனச்சிருந்தேன்" என்று இந்துவும் தாயின் மன்னிப்பைக் கோருவதுபோல் கண்ணீர் சிந்தினாள்.
அப்போது- அவன் - வேணு படியேறி உள்ளே வந்தான்.
"இந்து, அதெல்லாம் எதற்கு?" என்று அவள் கொண்டுவந்த பெட்டியைக் காட்டிக் கேட்டான். "வேண்டாம் . . உனக்கு வேணுங்கறதை வாங்கித் தர்ர அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் . . கட்டிய துணியோட வந்தாப் போதும். உன்மேல் இருக்கிற நகைகளையும் கழற்றி கொடுத்துவிட்டுத்தான் நீ என்னோட வரணும்" என்று அவன் சொன்னதைக் கேட்டு திருப்தியுடன் அவள் காதில் இருந்த கம்மலைக் கழற்ற ஆரம்பித்தாள். பிறகு ஒவ்வொன்றாய் மூக்குத்தி, வளையல்கள், சங்கிலி, எல்லாவற்றையும் கழற்றி கை நிறைய வைத்துத் தாயின் முன் நீட்டினாள்.
மொட்டை மரம்போல் நிற்கும் மகளின் கோலத்தைப் பார்க்க முடியாமல் முகம் திருப்பிக்கொண்ட குஞ்சம்மாளால் அவற்றை கை நீட்டி வாங்க முடியவில்லை.
இந்து, மௌனமாய், அவற்றைச் சுவரோரமாய்ச் சாத்தி வைத்த பெட்டியின்மீது வைத்துவிட்டு, "அம்மா" என்று மீண்டும் அழைத்தாள்.
குஞ்சம்மாள் திரும்பி இந்துவின் வெறுங் கழுத்தைப் பார்த்தாள்: "இந்து, மறந்துடாதே! ஏதாவது ஒரு தெய்வ சன்னிதானத்திலே போயி . . இந்த மாதிரி ஒண்ணு கட்டிக்கோடி. பெண்களுக்கு இதுதான் பெரிய நகை!" என்று தன் கழுத்தில் கிடந்த மாங்கல்யக் கயிற்றை வௌியே எடுத்துக் காட்டினாள்.
"சரிம்மா" என்று மீண்டும் தாயின் காலில் அவள் நமஸ்கரித்தபோது - இதுவரை விலகி நின்றிருந்த வேணுவும் நெருங்கி வந்து குஞ்சம்மாளின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.
"போயிட்டு வாங்கோ. நல்லபடியா வாழணும் . . பகவான் கைவிட மாட்டார்" என்று இருவரையும் மௌனமாய் ஆசீர்வத்தாள் குஞ்சம்மாள்.
வௌியில் மழை நின்றிருந்தது. பொழுதும் சாய்ந்திருந்தது. அவர்களிருவரும் புதிய வாழ்க்கையை நோக்கிப் புறப்பட்டு விட்டனர். வீட்டின் படியிறங்கும்வரை இந்துவின் கால்கள் தயங்கித் தயங்கிப் பின்னின. தெருவை மிதித்ததும், காலிலிருந்த கட்டுகள் அறுந்ததுபோல் - முன்னே நடந்துகொண்டிருந்த அவனை நெருங்க - அவள் நடையில் ஒரு வேகம் பிறந்தது. வீதி முனையில் திரும்பும்போது அவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் தெரிந்த தாயின் உருவத்தைக் கண்ணீர் மறைத்தது. குஞ்சம்மாளின் பார்வைக்கும் அவள் மறைந்தாள்.
வீட்டிற்குள் வந்த குஞ்சம்மாள் சுவரோரமாய் கிடந்த பெட்டியையும் அதன்மீது வைத்திருந்த நகைகளையும் பார்த்து பெருமூச்செறிந்தாள். அந்த நகைகளை எடுத்து பக்கத்தில் இருந்த ஸ்டாண்டின்மீது வைத்துவிட்டு, "இப்படி ஒரு காரியத்தை தன்னால் எப்படிச் செய்ய முடிந்தது?" என்று பிரமிப்பில் வெறித்த விழிகளுடன் இருளில் கிடந்த அந்த ஸ்டூலின்மீது உட்கார்ந்தாள்.
நல்லவேளையாக எல்லோருக்கும் முன்பாக பாட்டி வீடு திரும்பியதில் ஒரு வித ஆறுதல் கொண்ட குஞ்சம்மாள் சற்று முன் நடந்த நிகழ்ச்சியை ஒன்று விடாமல் விவரிக்கும்போது பாட்டி அடிக்கடி முந்தானையில் மூக்கைச் சிந்திக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
பாட்டியம்மாள் ரொம்பப் பழைய உலோகம்தான். எனினும் இந்த கலி காலத்தின் அசுரத்தனமான அடிகளில் அவளது தாய்மை உள்ளம் நெகிழ்ந்து குழைந்தது!அவளும் ஆயிரம் யோசனைகளுக்குப் பின் யதார்த்த வாழ்க்கையின் நிர்ப்பந்தத்துக்கு வளைந்து கொடுத்து மருமாளுடன் ஒத்துப்பேசினாள். இருப்பினும் பயமாகவும் வருத்தமாயும் இருந்ததால் அழுதாள். இப்படியெல்லாம் நேர்ந்துவிட்ட காலத்தைச் சபித்தாள். குடும்பத்தின் கௌரவத்தைக் குலைத்துவிட்ட அவளை விரட்டிவிட்டது சரிதான் என்று ஒருவகைக் கோபத்துடன்கூட இந்த முடிவை அவள் ஏற்றாள். இருப்பினும் முன் கோபமும் முரட்டுச் சுபாவமும் உடைய மகனை எண்ணும்போது பீதியடைந்தாள்.
நடந்தவற்றைப் பாட்டியிடம் விவரித்துக் கொண்டிருக்கையில் தெருவில் ஒரு ஸ்கூட்டர் சப்தம் கேட்டது. அதை ஒரு நிமிஷம் உற்றுக்கேட்ட குஞ்சம்மாள் பாட்டியிடம் சொன்னாள்: "விஜயா வரா, காலேஜுக்குப் போன பொண் வீட்டுக்கு வர நேரத்தைப் பாருங்கோ . . ." என்று சலித்துக் கொண்டாள்.
மணி எட்டடித்தது.
திரும்பிப் பார்த்த பாட்டி, யாரையும் காணாமல் "விஜயாவா, எங்கே?" என்றாள்.
"இப்பத்தானே அந்தச் சந்து முனையிலே வந்து ஸ்கூட்டர்லே இறங்கிவிட்டிருக்கான் அவன். வருவா, பாருங்கோளேன் " என்றாள் குஞ்சம்மாள்.
"எவன்?" என்று விழித்தாள் பாட்டி.
"எவனோ? . . அவளைன்னா கேக்கணும். எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனைச்சிண்டிருக்கா அவ. இவ என்னென்ன நாடகம் நடத்தப் போறாளோ? இவ அவளை மாதிரி ஓடிப்போகல்லேன்னா அதுக்குக் காரணம் இந்துதான். அவ பட்டதை எல்லாம் பார்த்திருக்காளோன்னோ? இந்த மாதிரி அப்பாவுக்கு இந்தக் குடுமப்த்திலே வந்து பொறந்திருக்கே பொண்கள்; எல்லாம் என் தலைவிதிடா ஈஸ்வரா" என்று குஞ்சம்மாள் புலம்பிக்கொண்டிருக்கையில் விஜயா வந்தாள்.
வந்தவள் ரொம்ப அவசரமாகத் தன் அறைக்குப் போவதைப் பாட்டியும் தாயும் வெறித்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தனர்.
சற்று நேரத்துக்கெல்லாம் டியூஷனுக்குப் போயிருந்த அம்பியும் வந்து சேர்ந்தான்.
அறைக்குள்ளிருந்து உடை மாற்றிய பின் வந்த விஜயா, பாட்டியும் தாயும் பேசிக்கொண்டதிலிருந்து நடந்தவற்றை ஊகித்துக்கொண்டு மனப் பதைப்பை அடக்கமாட்டாமல் "அப்பா வந்தா என்னம்மா சொல்லபோறே? இப்படி உன்னை மாட்டி வெச்சுட்டுப் போயிட்டாளே அவ?" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டு பதறினாள்.
"ரொம்பதான் அப்பாவுக்குப் பயந்தவள் இல்லியா, நீ?" என்று அவளை விழித்துப் பார்த்தாள் அம்மா.
"நான் என்ன பண்ணினேன்?" என்று முகம் சுளித்துக்கொண்டே பாட்டியின் முதுகுக்குப்பின் ஒண்டினாள் விஜயா.
"நீ ஒண்ணும் பண்ணல்லே; ஒண்ணும் பண்ணாம இருடியம்மா" என்றாள் பாட்டி.
ஒரு நிமிஷ மௌனத்துக்குப்பின் கண்கள் கலங்க விஜயா கேட்டாள்: "அம்மா, இந்து வரவே மாட்டாளா அம்மா? அவளை இனிமே பார்க்கவே முடியாதா? ஐயோ, இந்து! உன்னை நான் எவ்வளவோ கஷ்டப்படுத்தி விட்டேன். சுடு சுடுன்னு எரிஞ்சு விழுந்திருக்கேன் " என்று இந்நேரம் இந்தக் குடும்பத்தை நிரந்திரமாய்ப் பிரிந்து எங்கோ, எவனோடோ போய்க் கொண்டிருக்கும் தமக்கையை எண்ணிக் கண் கலங்கினாள் விஜயா.
இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அம்பிக்கு விஷயங்கள் புரிந்தன எனினும் அதன் கனத்தை உணரும் அளவுக்கு அவன் முதிர்ச்சியடையவில்லை. "இந்து நிஜமாகவே வீட்டில் இல்லையா?" என்று அறிய விரும்புகிறவன்போல் மாடிப்படி ஏறி ஓடி அவள் அறைக்குச் சென்று விளக்கைப் போட்டுவிட்டு இடுப்பில் கையூன்றி நின்று நாலு மூலையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.
அதுவரை ஒரு மூலையில் படுத்திருந்த கறுப்புப் பூனை 'இந்து இல்லே . . இந்து இல்லே ' என்று அவனிடம் முறையிடுவதுபோல் கத்திக்கொண்டே அவன் கால்களைச் சுற்றி வந்தது.
அன்றிரவு இந்துவின் செல்லப் பூனைக்கு அம்பிதான் பால் ஊற்றினான். மாடி வராந்தாவில் அதற்கென்று இருந்த கோப்பையில் அவன் பாலூற்றிக் கொண்டிருந்தபோது காம்பவுண்டு கேட்டருகே அப்பாவின் கார் வந்து நின்றது.
குஞ்சம்மாள ஓடிச்சென்று கேட்டைத் திறந்துவிட்டாள்.
கீழே நிச்சயம் பயங்கரமான ரகளை நடக்கும் என்று ஊகித்த அம்பி, 'மாடிப்படிப் பக்கம்கூடப் போவதில்லை' என்ற தீர்மானத்துடன் பால் கோப்பையைத் தூக்கிக்கொண்டு இந்துவின் அறைக்குள் போனான். பாதிப்பாலைப் பருகிய பூனை மீதிப் பாலுக்கு அலறியவாறே அவனைப் பின் தொடர்ந்தது.
அப்பா வந்துவிட்டார் என்றறிந்த விஜயா, நெஞ்சு 'திக்திக்'கென்று அடித்துக்கொள்ள, தன் அறைக் கதவை இரண்டு அங்குல இடைவௌி விட்டுத் திறந்து வைத்துக் கொண்டு அதன் வழியே ஒரு கண்ணால் ஹாலைப் பார்த்தவாறு ஒளிந்து நின்றாள்.
பாட்டி மட்டும் மருமகளுக்குப் பாதுகாப்பாகக் கூடவே நின்றிருந்தாள்.
காரை ஷெட்டில் விட்டபின் உள்ளே வந்த ராமபத்திரன், கோட்டைக்கூடக் களையாமல் தனது கனத்த சரீரத்தை ஹால் சோபாவில் சாய்த்து 'டை'யைத் தளர்த்தி விட்டுக்கொண்டு "ஃபேனைப் போடேண்டி" என்று கட்டைக் குரலில் பணித்தார். குளிர்ந்த காற்று வீசிய ஆனந்தத்தில் "ஆ . . ஊ ' என்று அனுபவித்து முழங்கினார்:
"இதோ பார் குஞ்சு! எனக்கு சப்பாத்தி வேண்டாம். கிளப்பிலே ஒரு டின்னர். மொதல்லே வேண்டாம்னுதான் நெனைச்சேன். 'ஒரு நாளுதானே, பரவாயில்லே'ன்னு ரொம்ப கம்பல் பண்ணினான் விசு. சாப்பிட்டுட்டேன்" என்று நாலு வீடுகளுக்குக் கேட்பதுபோல் ஒரே உற்சாகத்தில் இரைந்து பேசினார் ராமபத்திரன். அவருக்கு எப்போதுமே மேல் ஸ்தாயில்தான் சஞ்சாரம். குரலை அடக்கிப் பேசவே முடியாது. குரலை அடக்கினால் வார்த்தைகளே வராது. தொண்டையைத் திறந்து கத்திச் சப்தம் எழுப்பினால்தான் பேச வரும் அவருக்கு. மேலும் சாதாரண விஷயங்களுக்குக்கூட ஒன்று அதீத உற்சாகம், அல்லது அதீத கோபம் என்ற இருவேறு எல்லைகளில் அல்லாமல் இடையில் சமனப்பட முடியாத உணர்ச்சி வயப்பட்டவராதலின், அமைதியின் அவசியமே தெர்யாது பழகிவிட்டவர் அவர்.
மனுஷன் வீட்டுக்குள்ளிருந்தால், வீடு களேபரம்தான். காதின் இருமங்கிலும் கறுத்தடர்ந்த ரோமம்; பூனைக்கண்கள்; அவரது ஆகிருதியும், குரலும் யாரையுமே அச்சுறுத்தி விடும். அவரைக் கண்டு பயந்தாலும் எதிர் நின்று பேசத் தகுந்த தைரியம் கொண்ட ஒர் ஆத்மா உண்டு என்றால் அது அவரது தாயார்தான். அருகே நின்றால் அவரது முழங்கை உயரம்கூட இல்லாத பாட்டிதான். "ஏண்டா இப்படி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு ஆர்ப்பாட்டம் பண்றே?" என்று கேட்கையில் "உனக்குத் தெரியாதம்மா" என்று பதில் சொல்லிவிட்டுத் தொடர்ந்து கத்துவார் அவர். கோபமும் சரி, சந்தோஷமும் சரி, வந்ததுபோல் அடங்கியும் போகும் அவருக்கு.
"சரி, மருந்தைக் கொண்டுவா" என்று உத்தரவிட்டார் கோட்டைக் கழற்றியபடியே. விருந்து சாப்பிட்டதிலிருந்தே அவருக்கு 'டாக்டரின் உத்தரவை மீறிச் சாதம் சாப்பிட்டு விட்டோமே' என்ற பயம். குஞ்சம்மாள் தம்ளரில் பாலையும் உள்ளங் கைகளில் மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு அவரிடம் நீட்டினாள். பிறகு அவர் கால்களில் இருந்த பூட்சுகளைக் களைவதற்காகக் காலடியில் உட்கார்ந்தாள். ராமபத்திரன் அண்ணாந்து மாத்திரைகளை வாயிலிட்டு ஒரு மிடறு பாலைக் குடித்தபோது அவரது பூனைக்கண்கள் சுவரோரமாய் இருந்த ஸூட்கேசை வெறித்தன. வாயிலிருந்ததை விழுங்கியதும் 'இதென்ன பெட்டி? ஏன் இங்கே கிடக்கு?" என்று அதட்டினார்.
குஞ்சம்மாளுக்குக் கண்கள் ஒரு விநாடி இருண்டன. சமாளித்துக் கொண்டு பரிதாபமாய் அவர் முகத்தை நோக்கியவாறு ஒர் அடி பின்வாங்கி, ஈனசுரத்தில் கூறினாள்: "இந்து போயிட்டா. அவன் வந்தான். அவனோட . ." என்று அவள் சொல்லி முடிக்குமுன் அவர் கையில் இருந்த பால் தம்ளர் குஞ்சம்மாளின் வலது புறக்காதோரமாய் 'விர்'ரென்று பாய்ந்து சுவரில் மோதி எகிரி உருண்டது.
விசுவரூபம் கொண்டதுபோல் எழுந்து நின்றார் ராமபத்திரன். அவரது பூனைக்கண்கள் புலிக்கண்களாயின.
"நீங்கள்லாம் அப்போ எங்கே ஒழிஞ்சுப் போயிருந்தேள்?" என்று அவர் அலறிய குரல் அந்தத் தெருவிலுள்ள மனிதர்களையெல்லலாம் கேட்பதுபோல் ஓங்காரம் பெற்றது. அவரது கேள்விக்கு அருகிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை; அவரும் எதிர்ப்பார்க்கவில்லை.
அவர் தனது பூட்ஸ் காலைத் தரையில் ஓங்கி மிதித்தார்: "அவ போயிட்டாளாம்! இவ சொல்றா .. உங்களை மாதிரி இளிச்ச வாயா இருந்தா அவளை என்னடி, உன்னையும்கூட எவனாவது வந்து இழுத்துண்டு போயிருப்பான் . . ம்ஹூம் . . பாரு, அவ எங்கே போயிடுவா? விடியறத்துக் குள்ளே அவளைக் கொண்டுவரேன் பாருடி" என்று பெருத்த குரலில் சப்தம் செய்தார் ராமபத்திரன்.
"இப்ப நீ எங்கேடா போறே?" என்று பின்னால் வந்தாள் பாட்டி.
"நான் எங்கேயும் போகல்லே; போலீசுக்குப் போன் பண்ணப்போறேன்" என்று போன் இருந்த மேசையை நெருங்கி ரீஸீவரைக் கையிலெடுத்தார். அவர் டயலைச் சுழற்று முன் வெகு நேர சிரமத்துக்குப் பின் குஞ்சம்மாள் பேசினாள்: "போலீஸ் என்ன பண்ணும்? முன்னே மாதிரி அவள் என்ன மைனர் பொண்ணா? மைனர்ப் பொண்ணைக் கடத்திண்டு போயிட்டான்னு சொல்ல?"
ராமபத்திரன் திரும்பிக் குஞ்சம்மாளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சொன்னார்: "அவ மேலே ஆயிர ரூபாய் நகை இருக்குடி;அதுக்காக கடத்திண்டு போயிட்டான்னுதானே அப்பவும் ரிப்போர்ட் பண்ணினேன் . . " என்று கூறிவிட்டு அவர் டயலை சுழற்றி முடிக்கவில்லை . .
"இந்தாங்கோ, உங்க ஆயிர ரூபாய் நகை! அத்தனையும், ஒரு திருகாணிகூட இல்லாம உரிச்சு வெச்சுட்டுத்தான் போயிருக்கா . . ." என்று கை நிறையக் கொணர்ந்த நகைகளை மேசைமீது அவர் முன் வைத்து விட்டு தைரியமாக நின்றாள் குஞ்சம்மாள்.
அந்த நகைகளை புறங்கையால் வீசித் தள்ளினார் ராமபத்திரன்.
"பயித்தியக்காரி! . . . எனக்குச் சட்டம் சொல்லித்தரயா? திருடன் திருடிண்டு போனானா இல்லையாங்கரது, கோர்ட்லே! அவனைத் திருடன்னு நான் சொன்னா இவா பிடிப்பா . . ." என்று அவர் மூர்க்கமாகச் சொன்னதும் அதே மூர்க்கத்துடன் குஞ்சம்மாள் கூறினாள்:
"நீங்க அவனைத் திருடன்னு சொன்னா, நானே 'இல்லே'ன்னு போய் சாட்சி சொல்வேன்."
ராமபத்திரனுக்குக் கோபத்தால் தலை பற்றி எரிந்தது.
வலது கையில் டெலிபோன் ரிஸீவரோடு, இடது கையால் - ஒரு பிடியில் - அவளை நொறுக்கத் தயாரானதுபோல் கையை ஓங்கி அவர் எழுந்தபோது, பாட்டி அம்மாள் குறுக்கே ஓடி வந்து நின்றாள்.
"ஏண்டா இப்படிப் பேய் மாதிரி நிக்கறே? கொஞ்சம் பொறுமையா யோசிடா . . " என்று கெஞ்சினாள் பாட்டி.
அவர் பார்வை தன்னை எதிர்த்துத் தாயின் முதுகுக்குப் பின்னால் நிற்கிற குஞ்சம்மாளின் மேல் நிலைகுத்தியிருந்த்து.
"நகரு அம்மா. எனக்கு எதிரா சாட்சி சொல்லபோறாளாமே இவ . . ." என்று உருமியவாறு குஞ்சம்மாளை எட்டி பிடித்தார்.
ராமபத்ரனின் கையைப் பிடித்து இழுத்தவாறு பாட்டி கத்தினாள்: "ஆமாண்டா, நானும்கூடச் சொல்லப் போறேன். மொதல்லே என்னைக் கொல்லு. நான் தான் இந்துவை அனுப்பினேன் . . . என்னைக் கொல்லுடா . . ." என்று சன்னதம் கொண்டவள் போல் மார்பில் தட்டிக்கொண்டு எதிரில் வந்த தாயின் குரலைக் கேட்டதும் ராமபத்திரன் குஞ்சம்மாள் மீதிருந்த பிடியைத் தளர்த்தி விட்டுத் திகைத்து நின்றார்.
அவர் கண்கள் வெறித்துச் சுழன்றன . .
சகிக்கவே முடியாத ஒரு துரோகம், தன் உயிரையே கறுவருக்கும் ஓர் அவமானம் தனக்கு நிகழத் தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களே - பெற்ற தாயும், கட்டிய மனைவியும், பிறந்த பிள்ளைகளும் - சூழ்ச்சி செய்து தனக்கு நிரந்தரப் பகைவர்களாய் மாறி விட்டனர் என்ற உணர்ச்சியில் அவரது பெரிய குரல் தொண்டைக் குழியிலேயே சிக்கிக்கொண்டு அமுங்கித் தவித்தது . .
விபரீதமான தொனியில் கிறீச்சிட்டு அலறியவாறே கையிலிருந்த டெலிபோனைத் தூக்கி தரையில் அறைந்தார். அடுத்த விநாடி அந்த ஆஜானுபாகுவான மனிதர் வெட்டி முறித்த மரம் போல் நிலைகுலைவதைக் கண்டு அலறியவாறே குஞ்சம்மாள் ஓடிப்போய்த் தாங்கினாள்.
"ராமு, ராமு" என்று பாட்டியம்மாள் பாசம் மேலிடக் கதறினாள்.
'ஒண்ணுமில்லே . . மயக்கம்தான்" என்று பாட்டிக்குத் தைரியமளித்த குஞ்சம்மாள். 'டாக்டருக்குப் போன்கூடப் பண்ண முடியாதே' என்று உடைந்து கிடக்கும் டெலிபோனைப் பார்த்துக் கை பிசைந்துகொண்டே "அம்பி . . ஓடிப்போயி டாக்டரைக் கூட்டிண்டு வாடா . . " என்று மாடியை நோக்கி அலறினாள்.
அம்பி மாடியிலிருந்து ஓடிவந்தான். ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் சோபாவில் நீட்டிக் கிடங்கும் அப்பாவைப் பார்த்தான். அடுத்த விநாடி தெருவில் இறங்கி டாக்டர் வீட்டை நோக்கி இருளில் ஓடினான். "நானும் வரேண்டா, அம்பி?" என்று அவன் பின்னால் அவனுக்குத் துணையாய் விஜயாவும் ஓடினாள.
பாட்டி, தான் தினசரி வழிபடும் தெய்வங்களையெல்லாம் வேண்டியவாறு கண்ணீர் வடித்தாள்.
குஞ்சம்மாள் தனது ஒரே தெய்வத்தின் உருவகமான மாங்கல்ய சரட்டை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு டாக்டரின் வருகைக்காக காத்திருந்தாள்.
மாடிப் படிக்கட்டில், மேல் மாடியில் வந்து நின்ற அந்த கறுப்புப் பூனை தனது வெள்ளிய விழிகளால் ஹாலில் நடப்பதைக் குனிந்துப் பார்த்தது.
மனிதனே ரொம்பப் பழமையான உலோகம்தான். காலம்தான் அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்.
வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா? அல்லது, இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா?
டாக்டர் வந்தபின் தெரியும்!
(எழுதப்பட்ட காலம்: மார்ச் 1965)
நன்றி: புதிய வார்ப்புகள் (சிறுகதைத் தொகுப்பு) - ஜெயகாந்தன்
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1. ஐந்தாம் பதிப்பு: நவம்பர் 1994
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. சுயதரிசனம் (1965)
அந்த நீளக் கவரின் வாய்ப்புறத்தை இரண்டு விரல்களால் பிடித்து லாகவமாக வளைவு வளைவாய்க் கிழித்துப் பிரிக்கிறான் சிவராமன். அதனுள் ஒரு கத்தைக் காகிதமிருந்தும் அதன் நடுவே இருந்து 'இது கடிதம்' என்று சொல்வதுபோல் தனியாக விழுந்த ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்கிறான் அவன்.
"சிரஞ்சீவி சிவராமனுக்கு அநேக ஆசிர்வாதம். பகவான் கிருபையால் உனக்கு சகல
சௌபாக்கியங்களும் உண்டாகணும்.
உங்கள் எல்லாரையும் பார்த்து நேரிடையாகச் சொல்லிண்டு வராமப் போனதை நெனைச்சா கஷ்டமாத்தான் இருக்கு... இருந்தாலும் பரவாயில்லை. யோசிச்சுப் பார்க்கச்சே, ஆசையும் உறவும் மனசிலே ஆழமா இருந்தா, உதட்டோட சொல்ற வார்த்தையெல்லாம் அநாவசியம்னு தோண்றது. ஆனாலும் அப்படி யெல்லாம் நெனைச்சுண்டு ஒரு தீர்மானத்தோட நான் சொல்லிக்காம வந்துடல்லே. சொல்லிக்கறதுக்கு எனக்குத் தைரியம் வரலே... சொல்லிக்க முடியல்லே... அவ்வளவுதான்; வந்துட்டேன். ஆமாம்; எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறதுகூட சுலபம்; சொல்றதுதான் கஷ்டமாயிருக்கு.... அதான் சிரமம். நன்னா யோசிச்சுப் பாரு. நீ யோசிக்கிறவன்; கதை எழுதறவன்... நல்லதும் கெட்டதுமா எத்தனையோ விஷயங்களைச் செஞ்சுடறோம்... அதையெல்லாம் அலசிப் பிச்சுச் சொல்றதுன்னா முடியற காரியமா? நான் இப்படி ஓடி வந்துடறதுன்னு முடிவு பண்ணிண்டு உங்ககிட்டேயெல்லாம் சொல்லிண்டு போக வந்திருந்தேன்னா... சொல்லி இருப்பேன் - கடைசியிலே மனசு கேக்காம அங்கேயே உக்காந்துண்டிருந்திருப்பேன். எனக்குத் தெரியும்; நான் போறேன்னா நீங்க யாரும் அழமாட்டேள்னு... ஆனா நான் அழுவேனே!... உன் ஆத்துக்காரி என் காதிலே விழட்டும்னே, நான் இருக்கிறது தெரியாத மாதிரி சொல்லுவாளே 'அசட்டு பிராம்ணன்'னு... அது நெஜந்தான்! சரி. இப்ப நான் வந்துட்டேன். எங்கே இருக்கேன், என்ன பண்றேன்னு எல்லாம் தெரிஞ்சுக்க உன் மனசிலே ஒரு துடிப்பு இருக்கும்னு எனக்குப் புரியறது. இந்தக் கடுதாசியோடு ஒரு கத்தைக் காகிதம் கிறுக்கி அனுப்பி இருக்கேனே... அதை எப்பவாவது போது இருக்கச்சே - போது போகலேன்னா படிச்சுப்பாரு. என்னை, என் மனச்சாட்சியை நீ புரிஞ்சுக்கலாம். நீ புரிஞ்சுப்பேன்னு நெனைக்கறேன்... நீ புரிஞ்சுண்டாலும் புரிஞ்சுக்கல்லேன்னாலும் எனக்குக் கவலை இல்லே... இந்த ஒரு மாசமா உனக்கு ஒரு கடுதாசி எழுதணும் எழுதணும்னு ஏனோ தோணிண்டே, எழுதலியேன்னு உறுத்திண்டே இருந்தது. சத்தியமாச் சொன்னா இந்தக் கடுதாசியைத் தவிர மீதி இருக்கற ஒரு கத்தைக் காகிதத்தை உனக்காக நான் எழுதல்லே... நானா, எனக்குத் தோணினதெ யெல்லாம் எதுக்குன்னு தெரியாமலே எழுதிண்டே இருந்தேன்; இன்னும் எழுதிண்டிருக்கேன்... இது என்னை நானே பார்த்துக்கற பார்வை, சுயவிமரிசனம்.... இல்லே, சுயதரிசனம்! திடீர்னு என்னமோ தோணித்து; எழுதின வரைக்கும் அந்த நோட்டு புக்கிலிருந்து பிச்சு எடுத்து உனக்கு அனுப்பறேன். இதுவும் ஒரு அசட்டுத்தனமோ என்னமோ? ஆனா ஒண்ணு, உன் ஆத்துக்காரியிடம் சொல்லு: 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'... அந்தக் குலத்திலே பொறந்து, 'கணபதி'ன்னு பெத்தவா சூட்டினபேரை இழந்து 'அசட்டு சாஸ்திரி, தத்தி சாஸ்திரி'ன்னே அறுபது வருஷமா பட்டம் வாங்கிண்டு இருந்திருக்கேன். சரி, போனது போச்சு. இப்ப நான் சந்தோஷமா கௌரவமா - அறுபது வயசுக்கப்புறம் - இப்பத்தான் சந்தோஷமா இருக்கேன். ப்ராப்தம் இருந்தால் எங்கேயோ எப்பவோ நாம சந்திக்கலாம். என்னை நீங்கல்லாம் மறந்துட்டாலும் பாதகமில்லை. என்னால் எதையுமே மறக்க முடியல்லே...
இப்படிக்கு உன் தகப்பனார்
கணபதி..."
- கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது.
கவருக்குள்ளிருந்து அந்த ஒரு கத்தைக் காகிதத்தைப் பத்திரிகை ஆசிரியர் தோரணையில் கையில் எடுத்து எத்தனை பக்கங்கள் என்று அறிய அவன் கடைசித் தாளை நீக்கிப் பார்க்கிறான். அதில் பக்க எண் எதுவுமில்லை. அந்தக் காகிதங்கள் அனைத்தும் ஒரு நோட்டுப் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுக்கப்ட்டிருந்ததால் ஓரத்தில் ஒழுங்கற்ற பிசிறுகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில பக்கங்களில் பென்சிலாலும் சில பக்கங்களில் பேனாவாலும் - தீர்க்கமான சிந்தனையோடு பல காலம் மனசில் ஊறிவரும் தௌிவு மிகுந்த கருத்துக்களானதால் - அடித்தல் திருத்தல் ஏதுமின்றி எழுதப்பட்டிருக்கிறது. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்ற ஆர்வமிருந்தும் ஆபிசில் அதற்கு நேரமில்லாது வேலை குவிந்திருப்பதால் அந்தக் கடிதத்தைப் பத்திரமாக மடித்துத் தன் கைப்பையில் வைத்துக் கொள்கிறான் சிவராமன். அதைப் பைக்குள் வைக்குமுன் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்றறிய உறையையும் கடிதத்தையும் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். அனுப்பியோர் விலாசம் ஏதும் அதில் இல்லை. எனினும் தபால் முத்திரையிலிருந்து அக்கடிதம் புது டில்லியிலிருந்து வந்திருப்பதைக் கண்டு ஒரு வினாடி பிரமித்து விழிக்கிறான் சிவராமன்.
'இந்த அப்பா என்ன துணிச்சலோடு இவ்வளவு தூரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார்!' என்று எண்ணியபோது, கள்ளங் கபடு அறியாத அந்த அப்பாவி உள்ளம் இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்குக் கைத்து நொந்து போயிருக்கும் என்ற - அறிவில் விளையாத, மனத்தில் சுரந்த - உணர்வில் அவனது கண்கள் கலங்குகின்றன.
- அந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராம்மணரின் - தாடி மழிக்காத, நரைத்த ரோமக்கட்டை அடர்ந்த, முன் பல் விழுந்த, அம்மைத் தழும்புகள் நிறைந்த, மாறு கண் பார்வையோடு கூடிய கரிய முக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.
2
கணபதி சாஸ்திரிகள் போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்....
முதல் இரண்டு நாட்கள் அவரது குடும்பத்தினர் - குடும்பத்தினர் என்றால் வேறு யார்? அவரது இரண்டு பிள்ளைகளான சிவராமனும் மணியும்தான் - அவர்கள் அதற்காக அதிகம் கவலை கொள்ள வில்லை.
நான்கைந்து சாஸ்திரிகளோடு அவர் காஞ்சிபுரம் போயிருப்பதாக யாரோ சொல்லக் கேட்டு, "போகிற மனுஷர் ஆத்திலே வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகப்படாதோ? நெனச்சப்போ வரதும் போறதும்... இது என்ன சத்திரமா சாவடியா?" என்று மொறுமொறுவென அவரைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அவரது மாட்டுப் பெண் ராஜம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த நான்கு சாஸ்திரிகளூம் திரும்பி வந்து கணபதி சாஸ்திரிகள் தங்களுடன் வரவில்லை என்று தெரிவித்த அந்த நிமிஷமே ராஜம் ஒரு வினாடி திகைத்து, அந்தத் திகைப்புக்குப் பின்னர் அவரைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டாள்.
'எங்கே போயிருப்பார்? எங்கே போயிருப்பார்?' என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டாள். வேறு மகளோ, அவரை மதித்து அன்புடன் உபசரிக்கும் உறவினரோ யாருமில்லாத அவரது நிலையை எண்ணி யெண்ணித் தனக்குள் பெருமூச்செறிந்தாள். சிவராமனின் மனத்திலும் லேசான கலக்கம் குடிகொண்டது.
தினசரி மாலையில் ஆபிசிலிருந்து வரும்போது, வழியில் உள்ள தெப்பக்குளச் சுவரின்மீது வரிசையாய் உட்கார்ந்து உரத்த குரலில் வாக்கு வாதங்களில் ஈடுபட்டிருக்கும் சாஸ்திரிகளின் சபையில் தன் தகப்பனார் இருக்கிறாரா? என்று சிவராமனின் கண்கள் அலைந்து அலைந்து தேடி ஏமாந்தன.
- அவனுக்குத் தெரியுமா, ஊரில் இருக்கும்போது கூட, இந்தக் கூட்டத்திலிருந்து ஒதுங்கித் தனித்தே அவர் நிற்பார் என்பது... அது சரி, அந்த அசட்டு பிராம்மணரை யார்தான் சேர்த்துக் கொள்வார்கள்.
நாளுக்கு நாள் தன் தந்தையின் மீது 'அவர் என்ன ஆனாரோ, எங்கே நிற்கிறாரோ, அல்லது வேறு ஏதாவது'... என்று எண்ணியெண்ணி அவர்பால் தன் மனத்துக்குள் ஒரு ரகசியமான ஏக்கம் மிகுந்து கனப்பதை அவன் உணர ஆரம்பித்தான். எனினும் அது பற்றி வௌிப்படையாய் விசாரிக்கவோ பேசவோ அவன் வெட்கப்பட்டான். தன் மனைவி ராஜம் 'லோகத்திலே இல்லாத அப்பாவைப் படைச்சுட்டேளே... ஒரேயடியா உருகிப் போகாதேங்கோ' என்று எரிந்து விழுவாளோ என்று அஞ்சினான். தன் தம்பியும் தன்னைப் போலவே உள்ளூர அப்பாவுக்காக ஏங்குகிறானோ, அல்லது, 'அந்த அசட்டுக் கிழம் எங்கே தொலைந்தால் என்ன?' என்று அசட்டையாக இருக்கிறானோ என்று அறிய முடியாமல் தவித்தான். அப்படி அசட்டையாக இருந்தால் அது மகா பாவம் என்று தோன்றியது. சின்ன வயசில் - சின்ன வயசில் என்ன - இப்போது கூடத்தான் அவரை அப்பா என்றூ சொல்லிக் கொள்ளவே தானும் தன் தம்பியும் வெட்கப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.
கணபதி சாஸ்திரிகள் போன்ற ஓர் அழகற்ற கறுப்புப் பிராம்மணர் அசட்டுச் சிரிப்புடன், மாறு கண் பார்வையோடு எதிரில் வந்து நின்றால் யாருக்குமே மதிப்பான எண்ணம் பிறக்காதுதான். அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும்; அவரும் 'ஈஈ' என்று ஓட்டை வாய்ச் சிரிப்புடன் குழந்தைபோல் எதையாவது பேசுவார். பேச்சில் பொதிந்துள்ள அர்த்தத்தை யார் கவனிக்கிறார்கள்? ஆகவே அது பலருக்கு ஒரு, 'போரா'கவே இருக்கும். பரிதாபத்துக்கும் பரிகசிப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் தன்னை அப்பா என்று சொல்லிக் கொள்ளவே தன் பிள்ளைகள் வெட்கப்படுவதில் ஒரு நியாயமிருப்பதாகக் கருதி வந்தார் கணபதி சாஸ்திரிகள். மொத்தத்தில் கணபதி சாஸ்திரிகளை ஊரில் யாரும் மதித்ததில்லை. சில சமயங்களில் அவமதித்ததுண்டு....
மற்ற சாஸ்திரிகளுக்கு எதையாவது பேசி அவர் வாயைக் கிளறி மகிழ அவர் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். வீட்டில் அவரது பிள்ளைகளூக்கு அவரால் அவமானம்; வெட்கம். அவரது மாட்டுப் பெண்ணுக்கு அவர்மீது வெறுப்பு!
ராஜத்துக்கு அவர் மீது தனியாக விசேஷமான வெறுப்பு ஒன்றும் கிடையாது. சதா நேரமும் சிடுசிடுத்துக் கொண்டிருப்பது அவள் சுபாவம். அந்தச் சிடுசிடுப்பில் அடிக்கடி வந்து சிக்கிக் கொள்பவர் அவர்தான் என்றால் அதற்கு அவளா பழி?
இவ்விதம் யாருக்கும் வேண்டாதவராயிருந்த கணபதி சாஸ்திரிகள் எங்கோ ஓடிப் போனதில் யாருக்கு என்ன நஷ்டம்?
"இன்னியோட பத்து நாளாச்சு. இருபது நாளாச்சு..." என்று அவர்கள் ஏன் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்?
"இப்படி நம்ம தலையிலே பழியைப் போடணும்னு காத்துண்டு இருந்திருக்கார் மனுஷர். ஊர்லே என்னைத் தானே சொல்லுவா? நான் அவரை ஒரு வார்த்தை பேசினது உண்டா?... மனுஷன் இருந்தும் என் பிராணனை வாங்கினார். இப்போ இல்லாமலும் என் பிராணனை வாங்கறார்" என்று பொழுது விடிந்து பொழுது போனால் தன் மாமனாரின் பிரிவுக்காக அவளும் தன் சுபாவப்படி ஏங்கிக்கொண்டு தானிருந்தாள்...
- அவர் இருக்கும்போது, ஒரு வார்த்தை கூட அவரைக் கடிந்து தான் பேசினதில்லை என்று நிஜமாகவே நினைக்கிறாள் ராஜம்.
இந்த ஒருமாதப் பிரிவின் காரணமாக - தங்களை விட்டு விலகிப் போன கணபதி சாஸ்திரிகள் உயிருடனாவது இருக்கிறாரா? என்று அறிந்து கொள்ள விரும்பும் துடிப்பில் அவர் குடும்பத்தினருக்கு அவர் மீது ஒருவித ஏக்கமும் அன்பும் பிறந்திருக்கிறது. அவர் இப்படி எங்கோ அனாதை போலப் போய்விட்டதை எண்ணியெண்ணி 'அவர் எங்கே அனாதைப் பிணமாகக் கிடக்கிறாரோ' என்ற பயங்கரமான கற்பனைகளில் சிக்கிக் கொண்டு, 'இந்தப் பாபத்துக்கு நான் தான் காரணமோ?' என்று உள்ளூர விளைந்த நடுக்கத்துடன் ரகசியமாகக் கண்ணீர் வடிக்கிறாள் ராஜம். இந்த விஷயம் சிவராமனுக்கோ மணிக்கோ தெரியாது.
***டிடிடிடி***டிடிடிடி ****
பத்து நாட்களுக்கு முன்பு ஆபிசில் இருந்து வருகின்றபோது, தெப்பக் குளக்கரையில் கூடி நின்ற சாஸ்திரிகள் கும்பலில் சிவராமனின் பார்வை - கட்டை குட்டையாய் கன்னங் கரேலெனத் துண்டாகத் தென்படும் - தன் தந்தையைத் தேடி வழக்கம்போல் துழாவியபோது அவனைப் பார்த்துவிட்டார் வெங்கிட்டுவையர்... அவனைப் பின் தொடர்ந்து கடைத் தெருவரை வந்தார்... பிறகு தன் பின்னால் யாரும் வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு "என்னடா சிவராமா..." என்றழைத்தார்.
சிவராமன் திரும்பினான்.
"என்ன, உங்கப்பாவைப் பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதோ?" என்று நெருக்கமாய் வந்து கேட்டார். வெங்கிட்டுவையர், கணபதி சாஸ்திரிகளின் பால்ய சினேகிதர்; ஒத்த வயது.
சிவராமனுக்கு ஏனோ தான் பெரிய தவறு புரிந்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டுக் குனிந்த தலையோடு, "ஒரு தகவலும் இல்லை... எங்கே போயிருப்பார்ன்னு தெரியல்லே... ஏன் போனார்னும் தெரியல்லே... ஆத்திலே கூட ஒண்ணும் வருத்தம் இல்லே... ம்... உங்களுக்குத் தெரியாதா நாங்க எப்படி அவரை வெச்சிருந்தோம்னு" என்று மென்று மென்று விழுங்கினான் சிவராமன். அவனுக்குக் குற்றமுள்ள மனசு குமைந்தது...
"அட அசடு.. அதுக்கு நீ என்ன செய்வே?... அப்படியே இருந்தாலும் தோப்பனுக்கும் மகனுக்கும் ஆயிரம் இருக்கும்... அதுக்காக ஒருத்தன் ஆத்தை விட்டே போயிடுவானோ? அது சரி, உனக்கு விஷயமே தெரியாதா?..." என்று சுற்று முற்றும் பார்த்தார். பிறகு குரலைத் தாழ்த்தி "இப்படி வா சொல்றேன்" என்று நடுத் தெருவிலிருந்து ஓரமாய், பஜனை மடத்தருகே அவனை அழைத்து வந்தார் வெங்கிட்டுவையர்.
கணபதி சாஸ்திரிகள் ஊரைவிட்டே ஓடிப் போவதற்கு முதல் நாள் தெப்பக் குளக்கரையில் நடந்த சம்பவத்தை அவர் நினைத்துப் பார்த்தார்.
தெரு ஓரமாய் இருவரும் வந்து நின்றபின், தனது இடுப்பில் செருகி இருந்த பொடி மட்டையை எடுத்து ஒரு சிமிட்டா பொடியை விரல்களில் இடுக்கியவாறு அவர் சொன்னார்: "அவனுக்கு மனசே வெறுத்துப் போச்சுடா. அவனை அப்பிடி அவமானப் படுத்திட்டார் வேற யாரு, சுந்தரகனபாடிகள் தான்..." என்று சொல்லி விட்டுக் கையிலிருந்த பொடியைக் காரமாய் உறிஞ்சினார் வெங்கிட்டுவையர். பொடியின் காரத்தில் கலங்கிய கண்களோடு சிவராமனை வெறித்துப் பார்த்தார்.
சிவராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. சுந்தரகனபாடிகள் கணபதி சாஸ்திரிகளை அவமானப்படுத்தினாரா?... ஏன்?
சிவராமனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் சுந்தரகனபாடிகள் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் உண்டு. கணபதி சாஸ்திரிகளின் குருநாதர் அவர்தான். அந்தக் காலத்தில் மகா பண்டிதராய் விளங்கிய கணபதி சாஸ்திரிகளின் தந்தையான பரமேஸ்வர கனபாடிகளின் உயிருக்கு உயிரான சீடர் சுந்தரகனபாடிகள் என்கிற விஷயம், ஒரு குடும்பப் பெருமையாய்ப் போற்றிவந்த செய்தி. அவரிடம் தான் கணபதி சாஸ்திரிகள் வேதம் பயின்றார். 'எழுபத்தைந்து வயதுக்கு மேலாகிப் பழுத்த பழமாய்ப் பார்த்தவர் வணங்கும் தோற்றமும் தன்மையும் பொருந்திய கனபாடிகள், பாவம், தன் தந்தையை என்ன காரணத்தினால் அவமானப்படுத்தி இருக்க முடியும்? அப்படியே கொஞ்சம் முன்கோபியான கனபாடிகள் ஏதாவது சொல்லியிருந்தாலும், யார் என்ன கூறிப் பழித்தாலும் அதனைப் பொருட்படுத்தாத 'பரப்பிரம்மமான' தன் தந்தை, அதற்காகவா ஊரை விட்டு ஓடிப்போயிருப்பார்?' என்றெல்லாம் யோசித்த தயக்கத்துடன் "நீங்க என்ன சொல்றேள்?" என்று வெங்கிட்டுவையரின் முகத்தைப் பார்த்தான் சிவராமன்.
"நான் பார்த்ததைத்தாண்டா சொல்றேன்... நேக்கென்னடா பயம்? மத்தவாள்ளாம் ஒரு கட்சி மாதிரி, இந்த அநியாயத்தைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேங்கறாளே... சுந்தரகனபாடிகள் ரொம்பப் பெரியவர்தான்... நான் இல்லேங்கலே.... ஆனாலும் அவருக்கு இந்த வயசிலே இப்படி ஒரு கோபம் கூடாது... மனுஷன் என்ன, இப்படியா அசிங்க அசிங்கமாப் பேசுவார்? இவர் தகுதிக்கு ஆகுமா?... சீ!" என்று படபடவென்று பேசி அலுத்துக் கொண்ட வெங்கிட்டுவையர், அதற்குமேல் விஷயத்தை அறிந்து கொள்ள அவன் ஆர்வம் காட்டுகிறானா என்று அறிய மௌனமாய் சிவராமனின் முகத்தைப் பார்த்தார்.
"என்னதான் நடந்தது... எனக்கு ஒண்ணுமே தெரியாதே!" பதைத்தான் சிவராமன்.
"எனக்கும்தான் தெரியாது... நான் கோயில்லேருந்து வந்துண்டிருந்தேன். குளத்தங்கரையிலே ஒரே சத்தமா, ஏக களேபரமா இருந்தது. பார்த்தா உங்கப்பன் - கணபதி தேமேன்னு நின்னுண்டிருக்கான். கனபாடிகள் அடிக்கப் போறவர் மாதிரிக் கையைக் கையை ஓங்கிண்டு ஆவேசம் வந்த மாதிரி குதிக்கறார். அவனை அவர் அடிக்கக் கூட பாத்தியதை உள்ளவர்தாண்டா, நான் இல்லேங்கல்லே... ஆனாலும் கன்னா பின்னான்னு - சீ! ஒரு பிராமணன் பேசக் கூடிய பேச்சா? அப்பிடி அசிங்க அசிங்கமா திட்டினார்... கணபதி அப்படியே கூனிக் குறுகி நின்னுண்டிருந்தான்... கடைசியிலே - அவன் மட்டும் என்ன மனுஷன் இல்லியா? நேக்கே தோணித்து... அதை அவன் கேட்டுட்டான்; அப்படி ஒண்ணும் தப்பா பேசிடலே. "ஓய்.. இப்படி அசிங்க அசிங்கமா பேசறீரே... நீர் ஒரு பிராமணனாய்யா"ன்னு கேட்டான்...! எவ்வளவு பேச்சுக்குத்தான் ஒரு மனுஷன் பேசாம இருப்பான்? நறுக்குன்னு கேட்டான்... அவ்வளவுதான்! அந்தக் கிழவரைப் பார்க்கணுமே... கணபதி கழுத்திலே போட்டிருந்த துண்டை இழுத்து முறுக்கிப் பிடிச்சுண்டார்... ஆவேசம் வந்ததுமாதிரி காயத்திரி மந்திரத்தைக் கூவினார். "சொல்லுடா, இதுக்கு அர்த்தம் சொல்லு. நீ பிராமணனுக்குப் பொறந்தவனானா சொல்லுடா.... என்னைப் பார்த்தா கேட்டே... பிராமணனான்னு?... இவன் பிராமணனான்னு எல்லாரும் கேளுங்கோ..."ன்னு அசிங்க அசிங்கமாத் திட்டினார் - ஒரே கும்பல் கூடிடுத்து... நான் போய் விலக்கப் பார்த்தேன். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன பலமோ? என்னைப் பிடிச்சு ஒரு தள்ளு தள்ளினார் பாரு... நான் போயி குளக்கரை சுவர் மேலே விழுந்தேன்.... தள்ளிட்டுக் கத்தறார்.... மனுஷனுக்கு வெறி! ஒண்ணு மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லு.... இல்லேன்னா 'நான் பிராமணன் இல்லே'ன்னு ஒத்துக்கோ... என்னெக் கேட்டியேடா, என்ன தைரியம்?" என்று உறுமினார். அவர் பிடியிலே பாவம், கணபதிக்கு உடம்பே நடுங்கறது. நாங்க அவர்கிட்டே பேச முடியல்லே... அந்தக் கெழம்தான் மூர்க்கமாச்சேன்னு கணபதிகிட்டே கெஞ்சினோம்.... 'சொல்லுமோய்யா... மந்திரத்துக்கு அர்த்தம் சொல்லிட்டுப்போமே... பிடிவாதம் பிடிக்காதீர்'ன்னு நானும் கிட்டே போயி சொன்னேன்... கணபதி என் மூஞ்சியை வெறிச்சிப் பார்த்தான். பார்த்துட்டு 'ஓ'ன்னு கொழந்தை மாதிரி அழுதான்...
- 'நேக்கு மந்தரம் தான் தெரியும்... அர்த்தம் தெரியாதே'ன்னு அவன் அழறப்போ, அம்பது வருஷத்துக்கு முந்தி நானும் அவனும் ஒண்ணா படிச்சதெல்லாம் நேக்கு ஞாபகம் வந்து நானும் அழுதுட்டேன்.
திடீர்னு உங்கப்பன் கனபாடிகள் கையைத் தள்ளி உதறினான். எல்லாரும் என்ன நடக்கப் போறதோன்னு திகைச்சுப் போனோம். பல்லைக் கடிச்சுண்டு உடம்பிலேருந்த பூணூலை வெடுக்குனு பிச்சு அறுத்து, கனபாடிகள் மூஞ்சிலே எறிஞ்சுட்டு 'போங்க... நான் பிராமணன் இல்லே... நான் பிராமணன் இல்லே'ன்னு கோஷம் போடற மாதிரிக் கத்திண்டு ஓட்டமும் நடையுமா நாலுவீதியும் சுத்திண்டு அப்ப போனவன்தான்; என்ன ஆனானோ, எங்கே போனானோன்னு உன்னடை வந்து விசாரிக்கணும்னுதான் நெனைச்சிண்டிருந்தேன்... நீ என்னடான்னா இந்த விஷயமே தெரியாதுங்கறே?..." என்று, தான் சம்பந்தப்படாத - இந்தக் காலத்து பிராமணர்களாகிய தாங்கள் யாருமே சம்பந்தப்படாத - கணபதி சாஸ்திரி என்ற தனிப்பட்ட ஒருவனின் விவகாரம்போல் அன்று நடந்த நிகழ்ச்சியை விளக்கினார் வெங்கிட்டுவையர்.
வெங்கிட்டுவையர் விவரித்த சம்பவத்தில் பொதிந்துள்ள ஒரு சமூகச் சீரழவின் கொடுமையை ஆழ்ந்து உணர்ந்த வேதனையில் வாய்மூடி மௌனியனான் சிவராமன். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளாமலேயே குனிந்த தலையோடு, கலங்குகின்ற கண்களோடு அவன் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்குப் போனதும் ஒரு மூலையில் கவிழ்ந்து படுத்துக் கதறி அழவேண்டும் என்று வழியெல்லாம் நினைத்துக் கொண்டே அவன் நடந்தான்...
ஆனால் அன்று அவன் வீடு சென்றதும் அவ்விதம் செய்யவில்லை. தந்தையின் பிரிவை எண்ணித் தான் அழுவதைக் கண்டு 'அவள்' கோபிப்பாள் என்ற அச்சத்தில் அவன் அந்த 'ஆசை'யைக் கைவிட்டு விட்டான்.
- தாழ்ந்த குலத்தில் பிறந்த கொடுமைக்கு அழுதால் அதற்கு ஓர் அர்த்தமும் இருக்கும்; அனுதாபமும் கிடைக்கும். உயர்ந்த குலத்தில் பிறந்தும் கலியின் விளைவால் விபரீதமாய்ப் போன இந்தக் கொடுமைக்கு அழத்தான் முடியுமா? அனுதாபந்தான் கிடைக்குமா?
3
சிவராமன் ஆபிசிலிருந்து வரும்போது வழியில் குறுக்கிட்ட தெப்பக்குளக்கரை சாஸ்திரிகள் கூட்டத்தில் அவன் பார்வை இன்று யாரையும் தேடவில்லை. வீடு சென்றதும் தபாலில் வந்த அந்தக் காகிதக் கத்தையில் பென்சிலாலும் பேனாவாலும் எழுதப்பட்டிருக்கும் செய்திகளை, காலத்தின் அடியை நெஞ்சில் ஏற்றதால் ஒரு வயோதிக இதயத்திலிருந்து தெறித்து விழுந்த ரகசியமான உதிரத் துளிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத் துடிப்பில் நடந்து கொண்டிருந்த அவன், அந்தக் கூட்டத்தையே கவனிக்கவில்லை.
சிவராமன் வீட்டை அடையும்போது ராஜம் அடுக்களையில் இருக்கிறாள். மணி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவனுக்கு மவுண்ட் ரோடிலுள்ள ஒரு பெரிய பாதரட்சைக் கடையில் சேல்ஸ்மேன் உத்தியோகமானதால், இரவு எட்டு மணிக்குமேல் கடை அடைத்த பின்பே வீட்டுக்கு வர முடியும்...
தனது அறையில் சென்று உடைகளைக் களைந்தபின் முதல் வேலையாகக் கைப் பையைத் திறந்து அந்த நீளக் கவரின் உள்ளே இருந்த காகிதக் கத்தையை எடுத்து அந்தரங்கமாய்ப் படிக்க ஆரம்பிக்கிறான் சிவராமன்.
அவன் படித்த முதல் வரியே ஒரு மகத்தான இலக்கியத்தின் ஆரம்ப வாசகம்போல் அமைந்து இருக்கிறது:
"இதோ! என் கண்முன்னே ஆயிரக்கணக்கான மனுஷா சஞ்சரிச்சுண்டிருக்கா. ஒவ்வொரு மனுஷாளூம் ஒவ்வொரு விதமா இருக்கா. ஒருவிதம் மாதிரி இன்னொரு விதம் இல்லே. ஆயிரமும் ஆயிரம் விதம்! இந்த மைதானத்திலே எனக்கு முன்னேயும் எனக்குப் பின்னேயும் ஆயிரம் ஆயிரமா மனுஷா போயிண்டும் வந்துண்டும் இருக்கா.... சின்ன வயசிலே குடை ராட்டினத்திலே முதல் தடவை சுத்தினப்ப ஏற்பட்ட மயக்கம் மாதிரி இந்த நிமிஷம் என்னைச் சுத்தி ஆயிரம் ஆயிரமா ஜனங்கள் சுத்திண்டு இருக்கச்சே ஒரு பிரமை தட்டறது. நானும் திருவிழாக் கும்பல்லே வழி தவறிச் சிக்கிண்ட கொழந்தெ மாதிரி திருதிருன்னு முழிச்சுப் பாக்கறேன். இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு.
இந்த டில்லி இருக்கே, ரொம்ப புராதன நகரம். அசோகன் என்ன, பாதுஷாக்கள் என்ன, வெள்ளைக்காரா என்ன - இந்த தேசத்தையே எத்தனையோ வருஷங்களா ஆண்டு வர்ர நகரம் இது. இன்னிய தேதியிலே நாமெல்லாம் உக்காந்துண்டு சொந்தம் கொண்டாடறோம். எத்தனை தலைமுறைகளை இந்த லோகம் பாத்துண்டே இருக்கு. இந்த நிமிஷம் உயிர் வாழற மனுஷ ஜாதியிலே ஒரு நபர் கூட இருநூறு வருஷத்துக்கு முன்னாலே இல்லை; இருநூறு வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த மனுஷ ஜாதியின் ஒரு ஜீவன் கூட இப்போ இல்லே. அது ஒரு பிரிவு; இது ஒரு பிரிவு. அந்தப் பிரிவு எப்போ எப்படிப் போயி இந்தப் பிரிவு எப்போ எப்படி வந்ததுன்னு யார் சொல்ல முடியும்? இது மட்டும் சத்தியம். அது முழுக்கப் போயிடுத்து, இது முழுக்க வந்துடுத்து. ஆழமா யோசிக்காம எடுத்த எடுப்பிலே பார்த்த உடனே இந்த உலகத்திலே உள்ள எல்லாமே ஒரு அதிசயமாத்தான் இருக்கு. அதுமாதிரிதான் இந்த விஷயமும் - இருநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தவா முழுக்கப் போனதும், இப்ப உள்ளவா முழுக்க வந்துட்டதும் ஆச்சரியமாத்தான் இருக்கு - அவா கொஞ்சம் கொஞ்சமா போனா; இவா கொஞ்சம் கொஞ்சமா வந்தா. இதுமாதிரிதான் போறதும் வர்ரதும். கடவுள் விதிப்படி இந்தக் காரியம் தடங்கல் இல்லாமல்தான் நடக்கறது. மனுஷ விதிப்படியும் இப்படித்தான் நடக்கணும்; நடக்கும்.
இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை... சிக்கல் விடுபடலேன்னா அதுக்கு நாமதான் பொறுப்பு..."
அந்தக் காகிதங்களில் இதுவரை பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு ஆரம்பமாகிற பக்கங்கள் பேனாவால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வித்தியாசத்தை ஒரு அத்தியாயப் பிரிவு போல் உருவகித்துக் கொண்டு, தான் படித்த கனமான விஷயங்களைக் கருத்தூன்றிச் சிந்திக்கிறான் சிவராமன்... அவனது சிந்தனைகளை மறித்துக் கொண்டு 'இந்த அசட்டு அப்பாவா இப்படி யெல்லாம் சிந்திக்கிறார்' என்ற வியப்புணர்ச்சியே மேலிடுகிறது.
இந்த வினாடி அவன் தனது தந்தையின், அந்த அசட்டுப் பிராமணரின், தாடி மழிக்காத ரோமக்கட்டை அடர்ந்த, முன்பல் விழுந்த, அம்மைத் தழும்பு நிறைந்த, மாறுகண் பார்வையோடு கூடிய கரியமுக விலாசத்தைக் கற்பனை செய்து கண்ணெதிரே காண்கிறான்.
எழுத்தைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு ஒரு பத்திரிகையில் பணியாற்றும் தனது சிந்தனையில் ஏற்பட முடியாத எண்ணங்களூம், தன்னால் எழுத்தில் வடிப்பதற்குக் கைவரப் பெறாத கலையும் - காலமெல்லாம் எல்லோருடைய கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளான அந்த அப்பாவி பிராமணனுக்கு எப்படி சித்தியாயிற்று! என்ற பிரமிப்பில் விளைந்த நடுக்கத்தோடு அவன் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான்.
"என் தகப்பனாரின் முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லே. அவர் சாகறப்ப எனக்கு வயசு ஒன்பது; நியாயமா அது எனக்கு ஞாபகம் இருக்கணும். நான்தான் அசடாச்சே, மறந்துட்டேன். ஆனா வயசு ஆக ஆக அவரைப் பத்தி எல்லாரும் பேசிக்கறதிலே இருந்து நானும் அவரைப்பத்தி ரொம்பத் தெரிஞ்சுண்டேன். அவர் மகா பண்டிதர். எந்த அளவு அவருக்கு சம்ஸ்கிருதத்தில் பாண்டியத்தம் உண்டோ அந்த அளவுக்குத் தமிழிலும் உண்டாம். சுந்தர கனபாடிகள் மாதிரி பெரியவாள்ளாம் அவர்கிட்டே படிக்கக் கொடுத்து வச்சவா. எனக்குத்தான் கொடுத்து வைக்கல்லே. அம்மா சொல்லுவா; அப்பா மாதிரி நானும் மகா பண்டிதனாகணும்னு. அதுதான் அப்பாவுக்கும் ஆசையாம்; ம்.... அதெல்லாம் அந்தக் காலத்துப் பிராமணத் தம்பதிகளின் லட்சியம்; தன் பிள்ளை பிராமண தர்மத்தின் பிரதிநிதியா ஆகணும்கறது. இந்தக் காலத்திலே எவன் இருக்கான்? நான் ஏன் எவனையோ தேடணும்? அப்படிப் பட்டவாளுக்குப் பொறந்த நானிருந்தேனா அவா மாதிரி?...
நான் எவ்வளவோ சொன்னேன்: அந்தச் செருப்புக் கடை வேலை வாண்டாம்னு, இந்த மணி கேட்டானா?... 'உனக்கு ஒண்ணும் தெரியாது. இதுக்கே நான் என்ன சிரமப்பட்டிருக்கேன்... மாசம் இருநூத்தைம்பது ரூபா சம்பளம். வருஷத்திலே மூணுமாச போனஸ் இந்த வேலைக்கு என்ன குறைச்சல்! அங்கே ஒண்ணும் மாட்டை அறுத்துத் தோல் எடுத்துச் செருப்புத் தைக்கிற வேலை இல்லே. டப்பாவிலே வர்ர செருப்பை எடுத்து விக்கறதுதான். உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு பஞ்சாங்கம்... சும்மா இரு'ன்னு என் வாயை அடைச்சுட்டுப் போயிட்டான் அந்த வேலைக்கு.
அது அவன் தப்பா? இல்லை, அது ஒரு தப்பான்னு யோசிச்சுப் பார்த்தா இந்தக் கலியிலே எல்லாம் சரிதான்னு தோண்றது. ஏன்னா, என் பிள்ளைகள் என்னைப் போல குடுமி வச்சுண்டு, உடம்பிலே சட்டையும், கால்லே செருப்பும் போட உரிமை இல்லாம - இந்தக் காலம் பார்த்துப் பரிகசிக்கிற ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமா வாழணும்னு நான் ஆசைப்படலே. அதனாலேதான் அவாளை இங்கிலீஷ் படிக்க வச்சேன். கிராப்பு வச்சுக்கச் சொன்னேன். இதுக்கு அர்த்தம் என்ன? நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டு என்னாலே இருக முடியலையோ அப்படி யெல்லாம் அவாளை ஆக்கித் திருப்தி பட்டுண்டேனா? ஆமாம்; 'ஒதுங்கிப்போ ஒதுங்கிப்போ'ன்னு சொல்லிச் சொல்லி நானேதான் ஒதுங்கிப் போயிட்டேனே!... ஒரு ஜாதி தாழ்ந்தது எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்ததும். இது எப்போ தெரியறதுன்னா தாழ்த்தி ஒதுக்கப்பட்ட ஜாதியைப் போலவே உயர்ந்து ஒதுங்கிப்போன ஜாதியும் படற கஷ்டத்திலே எனக்குத் தெரியறது. என் பிள்ளைகள் பேருக்கு உயர்ந்த ஜாதின்னு சொல்லிண்டாலும், ஊருக்குப் பூணூல் போட்டுண்டாலும் நல்ல வேளை! - என்னைப்போல ஒதுங்கிப் போன ஜாதி ஆயிடலே. ஆனா அவாகூட என்னை ஒதுக்கி வச்சுட்டாளே. என்னை அப்பான்னு சொல்லிக்க, அவ சமமா பழகறவா மத்தியிலே என்னை அப்பான்னு காட்டிக்க எவ்வளவு வெக்கப்பட்டாங்கறதை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.
ம்... முகம் தெரியாத அப்பாவை நெனச்சு நான் பெருமைப் பட்டுண்டிருக்கேன்... கண்ணெதிரே இருக்கிற அப்பனைப் பார்த்து என் பிள்ளைகள் வெக்கப்பட்டுண்டிருக்கு! அது சரி, நானே என்னை நெனச்சு வெக்கப்படறச்சே, அவா படறது தப்பா?"
- மீண்டும் இந்த இடத்திலிருந்து பென்சில் எழுத்துக்கள் ஆரம்பமாகின்றன. சிவராமனின் கண்களில் சுரந்த கண்ணீரால் அந்த எழுத்துக்களும் மறைகின்றன. அவன் சில விநாடிகள் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொள்கிறான். அழுகிறானா? பிறகு ஒரு முறை பெருமூச்செறிந்து சிவந்த கண்களூம் துடிக்கின்ற உதடுகளுமாய்த் தொடர்ந்து படிக்கிறான்:
"பாரதியார் ரொம்ப கோபத்தோடு கடுமையாய்த்தான் சொல்லியிருக்கார்: 'அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்றதைவிட செரைக்கப் போகலாம்'னு. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னே இதை எங்கேயோ படிச்சேன். நான் சொல்ற மந்திரத்துக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியுமா?ன்னு நான் யோசிச்சுப் பார்த்தேன். அன்னிக்குப் பூரா முகந் தெரியாத என் தகப்பனாரை - அந்த மகா பண்டிதரை நெனச்சு, நெனச்சு, நான் அழுதேன். அந்த மகா பண்டிதரிடம் - என் தகப்பனாரிடம் - படிச்ச சுந்தர கனபாடிகளும் மகா பண்டிதர்தான். அவரிடம் படிச்சவன் நான். ஆனா எனக்கு அவர்கிட்டே ஆசான் என்கிற பக்தியைவிட 'அடிப்பாரே' என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது. ஒரு தடவைக்கு மேலே கேட்டா அவருக்குப் பொல்லாத கோபம் வரும். அந்த பயத்திலே அவர் ஒரு தடவை சொல்றதைக் கூட நான் ஒழுங்காப் புரிஞ்சுக்கல்லே. நான் கிளிப்பிள்ளைமாதிரி வேதம் படிச்சேன். அப்போ அது எனக்கு தப்புன்னு தோணலே...
... மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான, பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலேயே அதை நான் மனனம் பண்ணிட்டேன். 'தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குழந்தை குடிக்கிறது! ஆனாலும் அது அவசியமில்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய, ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கிற ஞானம் அவசியமா என்ன? அதுபோலதான் மந்திரம்! உனக்கு அது தேவை; அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை அடையும்'னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப் படிச்சப்பறம்தான் எனக்கு ஒரு ஆறுதல் பிறந்தது. ஆனா, அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்தில் கை கொடுக்கல்லே...
ஒரு தடவை வக்கீல் ராகவைய்யர் ஆத்துக்கு தர்ப்பணம் பண்ணி வைக்கப் போயிருந்தேன். அவர் ரொம்பப் பெரியவர். என் தகப்பனார் மேலே வச்சிருந்த பக்தியை தகுதி இல்லாத என்பேர்லே அப்படியே வச்சிருந்தார். நாற்பது வருஷமா என்னை அவருக்குத் தெரியும். போன வருஷம் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருக்கச்சே, அவர் மருமான், வைத்தியநாத அய்யர்னு டில்லியிலேருந்து வந்திருந்தார். அவருக்கும் அன்னிக்கி தர்ப்பணம் பண்ணி வைக்க வேண்டியிருந்தது. அவரைப் பார்த்தா ஆள் வெள்ளைக்காரன் மாதிரி இருந்தார். அந்தப் பட்டுவஸ்திரத்தை அவர் கட்டியிருந்த முறையிலேயே மனுஷன் வேஷ்டி கட்டிப் பழகாதவர்னு தெரிஞ்சுண்டேன். நாலு அங்குலத்துக்குச் சரிகைக் கரை வேஷ்டியும் பட்டுத் துண்டுமா அவர் மாடியிலேருந்து எறங்கி வர்ரச்சே பளபளன்னு கால்லே சிலிப்பர் வேறே... என்ன பண்றது?... காலம்!
நான் முகத்தைச் சுளிச்சுண்டு 'தர்ப்பணம் பண்ணச்சே அதைக் கழட்டிடணும்'னு சொன்னேன். 'ஐ ஆம் ஸாரி'ன்னு ஞாபக மறதிக்கு அவரும் வெக்கப்பட்டுண்டார். நானும் 'இட் இஸ் ஆல்ரைட்' சொன்னேன்... நானும் அடிக்கடி ஏதாவது ரெண்டு இங்கிலீஷ் வார்த்தையைக் கலந்து பேசறதுதான்!... உலகம் என்னை ஒதுக்கி வச்சிருந்தாலும் ஓடி ஓடி வந்து ஒட்டிக்கிற குணம் அது.
எனக்கும் அன்னிக்கி பல எடத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவசர அவசரமா கடமையை முடிச்சுண்டு எழுந்திருக்கச்சே பார்த்தா தட்சணை குறைவா இருந்தது. 'இந்த மனுஷனுக்கு ஒண்ணுமே தெரியலையே'ங்கற அலட்சியத்தோட, 'என்ன ஸ்வாமி தட்சணை குறையறதே'ன்னேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே 'மந்திரமும் குறைஞ்சிருந்ததே'ன்னார்... அன்னிக்கு மாதிரி வாழ்க்கையிலே அதுக்கு முன்னே நான் இப்படி அவமானப்பட்டதில்லே. அப்புறமான்னா தெரிஞ்சது அவர் டில்லியிலே பெரிய சம்ஸ்கிருத புரொபஸர்னு...
அவர் என்னைக் கேட்டார்: 'உங்க பீடத்துக்கு நாங்க வெச்சிருக்கற மதிப்பை நீங்க காக்க வேண்டாமா? அர்த்தம் தெரியாம மந்திரம் சொல்லித் தரலாமா?'ன்னு... நான் சொன்னேன்: 'மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?'ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, 'மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?'ன்னார்... ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தேன்...! என்ன சொல்றதுன்னு புரியல்லே.... 'மன்னிச்சுக்கோங்கோ ஸ்வாமி'ன்னு கை எடுத்து கும்பிட்டுட்டு சைக்கிள்லே ஏறி ஓடி வந்துட்டேன்."
- மணி எட்டு அடிக்கிறது. ராஜம் அடுக்களையிலிருந்து அறைக்குள் வந்து அவன் முதுகில் உரசியவாறு நின்று அவன் தோள் வழியே அவன் படிக்கும் காகிதங்களைப் பார்க்கிறாள்; ஏதோ ஆபீஸ் விவகாரம் என்ற அலட்சியத்தோடு.
"இன்னும் முடியலையா? சாப்பிட வரேளா?" என்ற குரல் கேட்டு அவன் கவனம் கலைந்து அவளைப் பார்க்கிறான்.
"மணியும் வந்துடட்டுமே" என்று ஒரு பயந்த புன்னகையோடு அவன் வேண்டிக் கொள்கிறான். "இந்தக் குப்பைகளையெல்லாம் ஆபீசோட வச்சுக்கப்படாதோ?" என்று சிடுசிடுத்தவாறு மேஜைமீது கிடந்த ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் பிரித்துக் கொண்டு சுவரோரமாக உட்காருகிறாள் ராஜம்.
அவன் அடுத்த காகிதத்தைப் புரட்டுகிறான்.
"அறுபது வருஷமா அர்த்தமில்லாமல் பேத்திண்டே வாழ்ந்திருக்கேன்! என்னைப்போல மனுஷாளாலேதான் பிராம்மண தர்மமே அவமானப் பட்டுடுத்து. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் சந்தியாவதனம் பண்றச்சேயெல்லாம் ஏதோ குத்தம் செய்யறமதிரி ஒரு உறுத்தல். பொய்யாவே வாழ்ந்துட்டமாதிரி ஒரு புகைச்சல்... சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் இந்தக் காலத்தினாலே மதிப்பிழந்து போயிடுத்துன்னு நான் சொல்லமாட்டேன். அதுக்கு உரிய மதிப்பை, மரியாதையை நாமே உணர்ந்துக்கலேங்கறதுதான் எனக்குத் தெரியற உண்மை. இந்த ஒரு மாசமாத்தான் நானே ஒரு மனுஷன்னு எனக்குத் தெரியறது. இதுக்கு முன்னே நாடகத்திலே வர்ரமாதிரி நான் வேஷம் போட்டுண்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசறமாதிரி மந்திரங்களை மனசிலே ஒட்டாம உதட்டிலே ஒட்டிண்டு திரிஞ்சேன்.
... எனக்குத் தெரிஞ்சவா இப்ப யாராவது என்னெப் பார்த்தா அவாளுக்குத் தெரிஞ்ச கணபதிசாஸ்திரி நான்தான்னு சொன்னால் கூட, நம்பவேமாட்டா. எங்கேயாவது கண்ணாடியிலே என் உருவம் திடீர்னு தெரியறப்போ எனக்கே என்னை நம்ப முடியலே. ஆமாம்; என் மனசிலே இருக்கிற என் உருவம் குடுமி வச்சுண்டிருக்கு; பத்தாறு தரிச்சிண்டிருக்கு... அறுபது வருஷ நெனைப்பு அவ்வளவு சீக்கிரம் மாறிடுமா? ம்... நினைப்புத்தான்...
இப்ப நான் பிராமணனும் இல்லே, சாஸ்திரியும் இல்லே. எனக்கு, என் மனசாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான்! நான் பொறந்த குலத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ரொம்பப் பெரியவாள் செய்ய வேண்டிய காரியத்தை எல்லாம் போலித்தனமா நான் செஞ்சுண்டு இருக்கறது, அவாளை நான் மதிக்கிறது ஆகாது. எல்லாரும் என்னைக் 'கிறுக்கு'ன்னுதான் சொல்லுவா இப்பவும். சொல்லட்டுமே... அன்னிக்கி, குளத்தங்கரையிலேருந்து வந்த கோலத்தைப் பார்த்தவா எனக்குப் பயித்தியம் பிடிச்சுடுத்துன்னுதான் நெனச்சுண்டு இருப்பா. சுந்தர கனபாடிகள் மாதிரி இருக்கிறவாளுக்கு புரோகிதம் கௌரவமான ஜீவிதம்தான். அவன் என்னை என்னதான் வைதிருந்தாலும், அவரை நினைச்சு நான் நமஸ்காரம் பண்றேன். என் கண்ணைத் திறந்துவிட்ட குரு அவர்தான். இந்த உலகமே அவர் ரூபத்திலே வந்து என்னைப் பிடிச்சுண்டு 'நீ பிராமணனா சொல்லு, இந்த மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாதவன்... நீ பிராமணனா சொல்லு'ன்னு உலுக்கின மாதிரி இருந்தது... அவர்தான் எனக்கு பிரம்மோபதேசம் செஞ்சு வச்சு பூணூல் போட்டவர்.... அவர் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இத்தனை காலமா சொல்லிண்டு இருந்தேன். அது தப்புன்னு அவரே சொல்லிட்டார். எப்படிப் பார்த்தாலும் அவர்தான் என் குருநாதர். அவரை நான் நமஸ்காரம் பண்றேன்.
இப்போ நான் கிராப்பு வச்சுண்டுட்டேன். சட்டை போட்டுண்டென், செருப்பு போட்டுண்டேன். இதெல்லாம் நன்னாத்தான் இருக்கு. எனக்கு நெனச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வரது. சாஸ்திரிகள்னா செருப்புப் போட்டுக்கப்படாதாமே... ஆனா சைக்கிள்லே மட்டும் போலாமாம். என்னோட சைக்கிள் - நாற்பது ரூபாய்க்கு சிவராமன்தான் வாங்கித் தந்தான். வாங்கும்போதே அது கிழம்... இப்ப யாரு அதை உபயோகப் படுத்திண்டிருப்பா? சிவராமனா? மணியா?... கிழங்களும் உபயோகப்படுமே, சாகற வரைக்கும்."
படித்துக் கொண்டிருந்த சிவராமன் தலைநிமிர்ந்து கூடத்துச் சுவரோரமாக நிறுத்தி இருந்த சைக்கிளைப் பார்க்கிறான். அவன் முகத்தைப் பார்த்து அவன் பார்வை வழியே முகம் திரும்பி, கூடத்தில் நிறுத்தி இருந்த கணபதி சாஸ்திரிகளின் சைக்கிளை ராஜமும் பார்க்கிறாள். அந்த நிமிஷம் வார்த்தைகள் ஏதுமற்ற மௌனத்திலேயே, அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தைப்பற்றிப் பேசாமலேயே மன உறுத்தலைப் பரஸ்பரம் பரிமாறி உணர்ந்து கொள்கின்றனர். திடீரென ஒரு விம்மலுடன் ராஜம் அந்த மௌனத்தைக் கலைக்கிறாள்:
"இந்தப் பாழும் பிராம்மணர் எங்கே போய்த் தொலைஞ்சாரோ? ஒரு சேதியும் தெரியல்லையே... நாள் ஆக ஆக, என் மனசைப் போட்டு என்னென்னமோ செய்யறதே!... உங்ககிட்டே இப்ப மனசை விட்டுச் சொல்றேனே. அவர் இல்லாம எனக்கு இந்த வீடே வெறிச்சுனு இருக்கு; நீங்க ஏதாவது சண்டை போட்டேளா? இப்படி ரெண்டு பிள்ளைகள் மலையாட்டமா இருந்தும், இப்படி அனாதையாய்ப் போகணும்னு அவர் தலையிலே எழுத்தா?" என்று கையிலிருந்த வாரப் பத்திரிகையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் ராஜம்.
'ஒன்றுமே தெரியாத அசடு' என்று தான் தீர்மானித்திருந்த தன் தந்தையின் உள்ளுணர்வுகளை அறிந்து பிரமித்தது போலவே, அவர் மீது வெறுப்பைத் தவிர வேறு பாசமேதும் இல்லாதவள் என்று இதுநாள் வரை தான் எண்ணியிருந்த ராஜத்தின் மன உணர்வுகளைத் திடீரென அறிய நேர்ந்ததும் எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு மகத்துவம் நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வில் மெய்சிலிர்க்கிறான் சிவராமன். மேஜை மீதிருந்த காகிதக் கத்தையில் தான் படித்திருந்த பக்கங்களை எடுத்து மௌனமாய் அவளிடம் நீட்டுகிறான்.
அப்போது அவன் விழிகளில் தைரியமான இரண்டு சொட்டுக் கண்ணீர் துளித்திருந்து பொட்டென உதிர்கிறது!
"என்ன கடுதாசியா... அவரா எழுதியிருக்கார்?" என்ற பரபரப்போடு அவர் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்ற ஒரே திருப்தியில் ஆனந்தமயமாகி அதை வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறாள் ராஜம்.
இப்போதுதான் வீட்டிற்குள் வந்த மணி, அவள் வார்த்தைகளை அரைகுறையாய்க் கேட்டவாறு, "அப்பாவா? எங்கே இருக்கார்? என்று கூவியவாறு ராஜத்தின் அருகே உட்கார்ந்து அவளோடு சேர்ந்து அந்தக் கடிதத்தைப் படிக்க முயல்கிறான்.
மணி ஒன்பது அடிக்கிறது... அவர்களில் யாரும் இன்னும் சாப்பிடப் போகவில்லை. அந்த ஒரு கத்தைக் காகிதம் இப்போது முடிவதாக இல்லை.
தன்னை விட்டு எங்கோ விலகிக் கிடக்கும் அவரை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் ஆளுக்கு ஒரு பக்கத்தை அவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்தக் காகிதத்தில் ஏதோ ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்த மணி திடீரெனக் கூவுகிறான்: "வெல்டன்... பாதர்..."
அந்தக் காகிதங்களில் அவர்கள் அறிவது, அவர்கள் கண்களுக்குத் தெரிவது, அவர்கள் தரிசிப்பது - அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த, இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ நேர்ந்துவிட்ட, கணபதி சாஸ்திரிகள் என்ற தனிப்பட்ட ஒரு பிராம்மணரை மட்டும்தானா?
(எழுதப்பட்ட காலம்: 1965)
நன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட்,
இந்தியா, புது டெல்லி, 1973ல் வௌியிட்டு, இதுவரை பல பதிப்புகள் வௌிவந்துள்ள,
"ஜெயகாந்தன் சிறுகதைகள், - ஜெயகாந்தன்" தொகுப்பு.
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
7. அக்ரஹாரத்துப் பூனை
எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே!
நான் பார்த்த ஊரும் - 'இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது' என்று உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளூம், 'இவர்கள் என்றைக்கும் புதுமையுற மாட்டார்கள்' என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.
நான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்து கொண்டு விட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கி விட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களூக்கப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும் போது - கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா? - காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.
அந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்து கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலே நான் சற்று உட்கார்ந்து கொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும் - கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே - எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்?
வெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லாரும் பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீது வரிசையாக வந்து நின்று, ஒவ்வொருவராக 'தொபுக்' 'தொபுக்' என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு 'ரிப்பன்' கோவணத்தை இழுத்துச் செருகிக் கொண்டு மறூபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.
நான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.
நான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள் என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் 'தேமே'னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம்.... 'சீ, பாவம்டா! அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனா போறது; நீ வாடா அம்பி. அவா உன்னை சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டே... நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்... காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா?...' என்றெல்லாம் என் மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு எனக்கு மனசுக்கு இதமாக வெது வெது என்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கி விடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். 'போ! போ!' என்று ஓடுவேன்.
எனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள். தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவு கூட இல்லை.
என் அம்மா என்னைக் கூப்பிடற பேரே 'ஏ! கடன்காரா' தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் 'தேமே'னென்று தோற்றமளிக்கிற நான் வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன். என்ன விஷமம்? ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது 'தேமே'னென்று உட்கார்ந்திருக்கும் நான் 'தேமே'னென்று குறுக்கே காலை நீட்டுவேன்... கீழே விழுந்து 'ஓ' வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் 'தேமே'னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுது கொண்டே, கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான் தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்து விடும்கள்!
"கடன்காரா! செய்யறதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா?" என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்து விட்டுக் "கையெல்லாம் எரியறது... எருமை மாடே!" என்று நொந்து கொண்டு விரட்டுவாள்.
"ஏண்டி அவனை அடிக்கறே! பாவம், அவன் 'தேமே'ன்னு தானே இருக்கான்" என்று யாராவது அடுத்த வீட்டு - எதிர் வீட்டு மாமி வந்து - அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு நான் சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் 'தேமே'னென்று இருந்து கொண்டே ஏதாவது செய்து விடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக் கொள்வேன்... காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கிறது... திடீர்னு "மாமி... இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா"ன்னு கத்துவேன்.
"வேற யாரு? எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்" என்று அவர்கள் வீட்டுக் 'கடன்கார'னைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்; ஒரு நிம்மதி.
என் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக் கொண்டே இருப்பாள்: "அவனை நம்பாதீங்கோ... பார்த்தா 'மொசு மொசு'ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம்... என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்... அடிச்சா பாவம்னு - அந்த மாதிரி..."
அதைக் கேட்டு "ஏண்டா, அப்படியா?" என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் 'தேமே'னென்று அவளைப் பார்ப்பேன்...
"சீ, போடி! என்னத்துக்குக் கொழந்தையெ இப்படிக் கரிச்சுக் கொட்டறே! நீ வாடா..." என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்! ஆனால் அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக் கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்!
சரி! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்! அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்தி சொல்ல வந்து - அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிண்டு இருக்கேன்! - இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதிலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பார்க்கப் போனா, நான் சொல்லிக் கொண்டு, பேசிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லோருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது, இப்ப எப்பிடி இருப்பான்னு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சில பேர் எக்கச் சக்கமா பட்டணத்தின் 'மெர்க்குரி லைட்' வௌிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக் கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சு போனது, உடைஞ்சு போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப்போனது, அடிபட்டும் 'ஒண்ணுமில்லை'யென்னு உடம்பெத் தொடச்சு விட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக் கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப்பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்குச் சலிப்பே கிடையாது; அலுப்பே கிடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி!
ஆனால், அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப் போச்சுப் போலே இருக்கு... ம்ஹ்ம்! பயமா இருக்குப் போலே இருக்கு... என்னமோ சங்கடப் பட்டுக்கறா, 'என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு'ன்னு.
நான் என்ன பண்ணுவேன்? எனக்குத் தெரிஞ்சதைத் தானே எழுதுவேன். சரி. இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் 'ஆஷாடபூதி' மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.
எனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம் கூடப் பிடிக்கிறது இல்லை. ஒரு அவெர்ஷன்! சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதையெல்லாம் யாருக்குத் தான் பிடிக்கும்? யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது! - அப்போவெல்லாம் எனக்கு பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.
'தேமே'ன்னு உக்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது... ஒரு குச்சியாலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுன்னு ஆராயறது; பல்லியெ அடிச்சு, வால் துடிக்கிறதெப் பாக்கறது. தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி, சங்கீதம் பாட வைக்கிறது. மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்திலே நான் ஒரு யமகிங்கரன்! எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்!
ஜெயா மாமி வீட்டுத் திண்ணையில் நான் பாட்டுக்குத் 'தேமே'ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்துலே ஒரு குவியல் கருங்கல். நானே செலக்ட் பண்ணிப் பொறுக்கு சேர்த்து வச்சது. அதோ! தூரத்திலே ஒரு நாய் வரது. இதுக்கு முன்னேயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓட வச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கிறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுகிற அதுக்கு இருக்காதா? இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்த்திண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து! 'டேய்! அடிப்பியா? நான் பாட்டுக்குப் போயிடறேண்டா' என்பது போல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பாக்காத மாதிரி முகத்தைத் திருப்பிண்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண்டு பின்னங்காலுக்கும் நடுவிலே வாலை இடுக்கிண்டு என் மேலே வச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சுண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது... சீ! அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது! தலையிலே குறி வச்சாதான் காலிலே படும். பட்டுடுத்து! நான் 'தேமே'ன்னு உக்காந்திருக்கேன்.
சத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. 'சடக்'னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.
"ஏண்டா, நாயை யாரு அடிச்சது?"
"ஐயையோ, நான் இல்லே மாமி."
"சரி, யாரையாவது கூப்பிடு. வெந்நீர் உள்ளே ஒரு பெருச்சாளி வௌியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி."
அவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்டு நான் போறேன். மாமி கத்தறா. "வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு. அது உன் மேலே பாஞ்சுடும்."
வெந்நீர் உள் மூலையிலே அதைக் 'கார்னர்' பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து, 'நச்'னு ஒரு அடி. சனியன்! தன்னையே பிரதட்சிணம் பண்ணிக்கிற மாதிரி சுத்திச் சுத்தி வெந்நீருள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி "மாமி மாமி"ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிண்டா. "நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனோன்னா... கருமத்தைப் பார்க்காதே... வா. ராக்காயி வந்தால், கழுவிவிடச் சொல்லலாம்."
பயந்து நின்னுண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கிறாள். பெரியவா அணைச்சுண்டா என்ன சுகமா இருக்கு!
அந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால் நான் அழுதிருப்பேன்.
கொலை செய்யறதைத் தவிர இன்னொரு பொழுது போக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே 'டபிள்ஸ்' தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்ச கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்பலே இருக்கும். சைக்கிள் ஹாண்ட் பார்லே ஒரு காக்கி பை இருக்கும். அதுலெ ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும்; அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வச்சுண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சுக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன். பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலெ வெட்டுவேன். - நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன்? பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்.
எங்க அக்ரஹாரத்திலே ஒரு பூனையும் உண்டு. ரொம்ப 'நொட்டோரியஸ்!' பூனைன்னா, ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரி வரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வச்சிருக்கோ? பூனை மாமிச பட்சிணிதானே! அது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் 'தேமே'ன்னு இருப்பேன். அதுவும் 'தேமே'ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லாராத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.
ஒருநாள் ஜெயா மாமி 'ஓ'ன்னு அலறிண்டு சபிச்சா: "இந்தக் கட்டேல போற பூனை ஒரு படி பாலையும் சாச்சுக் கொட்டிடுத்தே...! அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக் கூடத் தேவலை."
ஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: "வாயெ அலம்புடி... பாவம்! பாவம்! பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகாபாவம்!" - நான் 'தேமே'ன்னு நின்னுண்டு கேட்டுண்டிருந்தேன்.
பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். பெருச்சாளி சீறித்தே - ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி... பூனை மொதல்லே பயப்படும், கத்தும்; ஓடப் பார்க்கும்; ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான்!... எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே... சின்னக் குழந்தையா தவழ்ந்துண்டு இருந்த பருவம்... பூனையைப் பிடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன். எக்குத் தப்பா கழுத்தெப் புடிச்சுட்டேனாம்.... சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டறதாம். நான் 'ஓ'ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறேனாம்.... அம்மா இப்பவும் சொல்லுவா... அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.
அன்னிக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போற போக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சுப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னா திரும்பிண்டு என்னையே மொறைச்சுப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே. கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். 'இது என்ன பயப்பட மாட்டேங்கறதே'ன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது... அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே... 'மியாவ்!'..ன்னு அது கத்தினப்போ - அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.
'அதெல்லாம் பெருச்சாளிக்கிட்டே வெச்சிக்கோ... நம்ம கையிலே நடக்காது.'
'இரு... இரு. ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்...'
'மியாவ் - சும்மா பூச்சி காட்டாதே; முதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே' - சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலே நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.
'எங்கே போயிடப் போறே? உன்னைப் பிடிக்கலேன்னா பேரை மாத்தி வெச்சிக்கோ'ன்னேன் நான்.
அதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் - 'பார்ப்போமா?'ன்னு அதுக்கு அர்த்தம்.
'ம்... பார்க்கலாம்...'ன்னேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேல ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்த்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு 'காச்சு மூச்சு'ன்னு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு... எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேல ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு 'பொத்'துனு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்துண்டிருந்த தாத்தா, தடியை எடுத்துத் தரையிலே தட்டி 'சூசூ'ன்னு வெரட்டறார். ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வௌிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.
அடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து வெந்நீருள்ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்துண்டிருந்தேன்... கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் 'பூனைப் பெரியவாள்' வந்தா.... நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்... மெதுவா அடிமேலே அடி வச்சுப் பூனை மாதிரி போனேன். 'அவா' பின்னம் பக்கம் மட்டுந்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. 'டப்'னு கதவை மூடிட்டேன்... உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே!
"மாமி... மாமி, ஓடி வாங்கோ, 'பெரியவா' இங்கே சிக்கிண்டா"ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா... பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.
"என்னடா, வெந்நீர் உள்ளே பூனையெ வெச்சு மூடிட்டா நாம எப்படி உள்ளே போறது? நாம உள்ளே போறச்சே அது வௌியே போயிடாதோ!"
"இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சிருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்கோ... கடைசி கட்டத்திலே கூப்பிடறேன்."
மாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.
"அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்துக்கும் மகா பாவம், வேண்டாம்."
"நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டு போய் வெரட்டி விட்டுடறேன்..."
"ஆமா... வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக்குள்ளே அது இங்கே வந்து நிக்கும்" - ஜெயா மாமி பரிகாசம் செய்து விட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன்; அதைத் 'திரும்பி வராத ஊரு'க்கு அனுப்பிச்சுட்டுத் தானே வரப் போறேன்.
அக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ! விளையாடும் போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். 'ஹோ'ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.
"ஏ, கடன்காரா, கட்டேலே போறவனே.... அழிஞ்சி போகாதே; பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்... சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி..."
அதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக் கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.
"கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா, வேடிக்கை காட்டலாம்டா"ன்னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது?
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன் கிட்டே குடுத்தாப் போறும். அப்படியே கோணியோட வச்சு ஒரு 'சதக்'... ஆட்டம் குளோஸ்!"
"அவன் கிட்டே நீதான் கேக்கணும்" என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை; பயந்துடுவான்கள்.
"டேய்! நீங்கள்ளாம் ஆத்துக்குப் போங்கோ. அவன் வெட்டறதைப் பாத்து பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா!" பையன்களையெல்லாம் வெரட்டறேன்.
"அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினானே... நீ காட்டினியே... நான் பயந்தேனா?... நான் இருக்கேண்டா."
"ஆனா, ஒண்ணு... இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ!"ன்னு கேட்டேன்.
"சத்தியமா சொல்ல மாட்டோம்." - எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.
கடா மீசைக்காரனை நாங்களெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கோம்.
கடைசியிலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக் கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டான்க. "நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம். நீ போய் கேளுடா"ன்னு என்னைத் தள்ளி விட்டான்கள். எனக்கென்ன பயம்?
கடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட் மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே!
அவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமலே நிக்கறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம்! நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்:
"ஒரு சின்ன உதவி..."
"அதென்ன கோணியிலே?" - அவன் குரல் கிருஷ்ண லீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.
"பூனை... ரொம்ப லூட்டி அடிக்கறது. அதுக்காக அதை கொன்னுடறதுக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்."
"நீயேவா புடிச்சே?" - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.
"வெட்டறதுக்குக் கத்தி வேணுமா?"ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேட்கிறான்.
"ஊஹீம்.... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்."
"ஓ!"ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி! விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்:
"பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா?"
"உவ்வே!... வெட்டிக் குழியிலே புதைச்சுடலாம்."
"அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன்? எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப நீ பார்த்திருக்கிறியா?"
"ஓ, பார்த்திருக்கேனே. நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே."
"மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா? அதுதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசு கீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை; அது பாவம்! என்னா சொல்றே?"
"இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்."
அவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏந்திண்டே சொன்னான்: (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது.)
"வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா, த்சு... த்சு...! வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன்? விளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன?..."
எனக்கு உடல் வெடவெடக்கிறது.
"ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே?"
"நீ வெஷமம் பண்றது இல்லியா? பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே. சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே! வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டி வெக்கச் சொல்லு"ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப்! திரும்பிப் பார்க்காமே ஓடிட்டுது பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்.
அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழுதேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... நான் விளையாட்டா கொலை செஞ்ச வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம்! அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சுண்டு அழுதேன்...
நான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லை. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும்! இல்லையா?
(எழுதப்பட்ட காலம்: 1968)
நன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி,
1973ல் வௌியிட்டு, இதுவரை பல பதிப்புகள் வௌிவந்துள்ள,
"ஜெயகாந்தன் சிறுகதைகள், - ஜெயகாந்தன்" தொகுப்பு.
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
8. அக்கினிப் பிரவேசம்
மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.
நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருக்கின்றனர்.
- வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.
"ஹேய்... பஸ் இஸ் கம்மிங்!" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.
வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது.
"பை... பை..."
"ஸீ யூ!"
"சீரியோ!"
- கண்டக்டரின் விசில் சப்தம்.
அந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.
பஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.
மழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.
வீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.
அதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.
பஸ்ஸைக் காணோம்!
அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று அதன் நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.
எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.
பஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.
"ஹேய்... இட் இஸ் மை பஸ்!..." அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கிறாள்.
"பை... பை..."
"டாடா!"
கும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து 'பிரஸ் பட்டன்' வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... 'இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்' என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்...
அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களூம் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்...
"பஸ் வரலியே; மணி என்ன?" என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.
"ஸிக்ஸ் ஆகப் போறதுடீ" என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின், "அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்" என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.
"ஓ எஸ்! மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேருந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்" என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி...
"சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ" என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.
பஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன. முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.
"பை... பை!"
"தாங்க் யூ! என் பஸ்ஸீம் வந்துடுத்து" என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸீக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களூம் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.
அந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.
அவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட்வரை விழிகளை ஓட்டி ஓர் ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.
அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.
"ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்" என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.
அவனது முகத்தைப் பார்த்த அவளூக்குக் காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; "நோ தாங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழிச்சு... மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..."
"ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்" என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...
அவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவளுக்கு முன்னே அந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப் போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்.
இப்போது அவனும் காரிலிருந்து வௌியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே...
"ம்... கெட் இன்."
இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...
அவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.
அவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வௌிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.
'ஸீட்டெல்லாம் எவ்வளவு அகலமா இருக்கு! தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்' என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளூக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.
"இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இருந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா?... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்! பெரிசா இருக்கும்! அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே?... ஹை, இது என்ன நடுவிலே?... ரெண்டு ஸீட்டுக்கும் மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே! இதுமேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு 'ஜம்'னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹீம். அல்லி மொட்டு மாதிரி! இதை எரிய விட்டுப் பார்க்கலாமா? சீ! இவர் கோபித்துக் கொண்டார்னா!"
- "அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்" அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.
அவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்துப் பார்க்கிறாள். பின்னர் 'பவரை வேஸ்ட் பண்ணப்படாது' என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.
பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.
'ஹம்! இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே' என்று மனத்திற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - 'டப்' என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - 'அட! கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே'- ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.
"தாங்ஸ்" - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - 'அப்பா, என்ன வாசனை!' - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.
ஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் 'அம்மா'' என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களூம் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவமான சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸீம் ஒரு பக்கம் உருளுகிறது.
"ஸாரி" என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.
ஜன்னல் கண்ணாடியினூடே வௌியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வௌியே பார்க்கிறாள்.
தெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக்குக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...!
"இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது?"
"ஓ! எங்க வீடு அங்கே இருக்கு" என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன.
"இருக்கட்டுமே, யார் இல்லேன்னா" என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.
"என்னடி இது வம்பாப் போச்சு" என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.
கார் போய்க்கொண்டே இருக்கிறது.
நகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.
சின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.
தன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளூம் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: "சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ."
'நான் இப்ப அசடாயிட்டேனா? இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்லையோ?... இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே? என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது? எனக்கு அழுகை வரதே. சீ! அழக் கூடாது... அழுதா இவர் கோபித்துக் கொண்டு 'அசடே! இங்கேயே கிட'ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா? எப்படி வீட்டுக்குப் போறது? எனக்கு வழியே தெரியாதே... நாளைக்கு ஜீவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணணுமே! வேலை நிறைய இருக்கு.'
அவளது பார்வை எதிர்ப்புறக் கண்ணாடியின் மீது கிடந்து அவளைப்போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் 'வைய்ப்பரை'யே வெறித்துக் கொண்டிருக்கிறது. கடைசியில் தைரியமாக அவளை அறியாமலேயே அந்த வார்த்தைகளை அவள் கேட்டு விடுகிறாள்.
"இப்ப நாம எங்கே போறோம்" - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.
"எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்..."
"நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா..."
"ஓ எஸ் திரும்பிடலாம்"
- கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைத்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.
காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
திடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: "ஏன் கார் நின்னுடுத்து? பிரேக் டௌனா?"
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடிஇடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வௌிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.
அந்த மங்கிய வௌிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.
அப்போது ரேடியோவிலிருந்து ஒரு 'ட்ரம்ப்பட்'டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ 'ட்ரம்'களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி 'உனக்குப் பிடிக்கிறதா' என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் 'ஆம்' என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.
ரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு 'காட்பரீஸ்' சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.
அவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, 'ஒட்டு உசரமாய்'. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வௌிச்சத்தில் மினுமினுக்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ! அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது! அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவனது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.
"ஐயையோ! மணி ஏழாயிடுத்தே!" சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.
காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.
"எங்கே?" என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வௌியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. "எங்கே போறீங்க?"
"எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்" என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.
அவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.
"என்ன அது?"
"சூயிங்கம்."
"ஐயே, எனக்கு வேண்டாம்!"
"ட்ரை... யூ வில் லைக் இட்."
அவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.
"நோ!" - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின்மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.
அவளூக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறான்: "தாங்க் யூ!"
அவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.
அவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வௌியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.
"டூ யூ லைக் திஸ் கார்?" "- இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வௌிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: "ஓ! இட் இஸ் நைஸ்."
அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: "உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்?" என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.
"ரியலி...?"
"ரியலி!"
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. "டூ யூ லைக் மீ?" 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?'
"ம்" விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.
வௌியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.
"ரொம்ப நல்லா இருக்கு இல்லே?" - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.
"நல்லா இருக்கு... ஆனா பயம்மா இருக்கே..."
"பயமா? எதுக்கு... எதுக்குப் பயப்படணும்?" அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: "எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு..."
"எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம்?" என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.
"மே ஐ கிஸ் யூ?"
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி...
அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.
வௌியே...
வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!
ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.
"நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ! எங்க அம்மா தேடுவா..."
காரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷீஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது 'சளக்' என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.
உடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.
முன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு 'சூயிங்கம்'மை மென்று கொண்டிருக்கிறான்.
இந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு 'ஹோ' வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.
அவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளூக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட - அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே...
நரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த 'ட்ரம்ப்பட்'டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெறியேறிப் பிளிறுகிறதே...
அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். "என்னை வீட்டிலே கொண்டுபோய் விடப்போறீங்களா, இல்லையா?"
அவனது கை "டப்" என்று ரேடியோவை நிறுத்துகிறது.
"டோண்ட் ஷவ்ட் லைக் தட்!" அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். "கத்தாதே!"
அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். "எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களூக்குக் கோடிப் புண்ணியம்" என்று வௌியே கூறினாலும் மனதிற்குள் "என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ! என்னென்னவோ ஆயிடுத்தே" என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.
"ப்ளீஸ்... டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்" என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்...
அந்த இருண்ட சாலையில் கண்களைக் கூசவைக்கும் ஓளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.
"சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ? இன்னும் கூட அழறாளே!" அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். "ஐ ஆம் ஸாரி... உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவுசெய்து மன்னித்துக் கொள்."
...அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.
இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
சந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களூம் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
'இங்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்' என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். "வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு... ம்" அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்று கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.
அந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வௌிச்சத்தில் தன் அருகே குள்ளமாய்க் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே தன்னை எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.
"ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!" என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: "ஐ ஆம் ஸாரி!"
அவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்... ஓ! அந்தப் பார்வை!
அவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துடிக்கின்றன. "என்ன..." என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.
"ஒண்ணுமில்லே" என்று கூறி அவள் நகர்கிறாள்.
அவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வௌிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.
கூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.
மழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்த்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: "என்னடி இது,
அலங்கோலம்?"
அவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வௌிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். "அம்மா!" என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்!
அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்து விட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.
"என்னடி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு" தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: "ஏன்டி, ஏன் இப்படி அழறே? சொல்லு"
தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.
அந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். "மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது... நான் என்ன பண்ணுவேன்? அப்புறம் வந்து வந்து... ஐயோ! அம்மா... அவன் என்னெ..."
- அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.
"அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..." என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.
அது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.
"என்னடி, என்ன விஷயம்?" என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.
"ஒண்ணுமில்லை, இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு? தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிரிருப்பான்" என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.
"சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ?" பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.
வாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக் குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா...
'இவளை என்ன செய்யலாம்?... ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே?... தெய்வமே! நான் என்ன செய்வேன்?' என்று திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்று கொண்டிருந்தன...
'அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன' என்று தோன்றிற்று.
- அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நௌிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது...
'அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா? ஐயோ! மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா?... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்?'
'ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?' அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.
நடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு "ஐயோ அம்மா! என்னைப் பார்க்காதேயேன்" என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்...
"அட கடவுளே! அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்" என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். 'என் தலையெழுத்தே' என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.
'இப்ப என்ன செய்யலாம்? அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா?... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ? அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா? அதுக்கு இவளைக் கொன்னுடலாமே? என்ன செய்யறது!' என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது!
பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.
குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.
கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய்த் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: "உனக்கு அவனைத் தெரியுமோ?..."
"ம்ஹீம்..."
"அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை!"
- பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.
'ம்... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்' - என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பதுபோல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.
ஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். 'அவர் மட்டும் இருந்தாரென்றால் - மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே?'
"இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா? வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு!" என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையைத் துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். "நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்லே. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே? தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பாக்கறியா? என்னடி தெரியப் போறது? எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது? அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா? ம்... ஓண்ணுமே நடக்கலேடி, நடக்கலே! கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ? அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி... உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு... நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே....? ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி.... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாததுளி அவமேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு... கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு... உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..."
கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.
"அதென்ன வாயிலே 'சவக் சவக்'ன்னு மெல்லறே?"
"சூயிங்கம்."
"கருமத்தைத் துப்பு... சீ! துப்புடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா" என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.
சுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்றாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை "கொழந்தே, 'எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு'ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வயசுக்கு வந்த பொண்ணை வௌியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே? என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கிற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே! ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி! இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன்? இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்" ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: "சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..."
"பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆயிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ" என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.
அந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல, அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.
அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.
(எழுதப்பட்ட காலம்: 1966)
நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
9. புது செருப்புக் கடிக்கும் (1971)
அவள் நிஜமாகவே தூங்கியிருந்தால் இந்தச் சத்தத்தில் விழித்திருக்க வேண்டும். இந்தச் சத்தத்தில் பக்கத்துப் போர்ஷன்காரர்கள் யாரேனும் விழித்துக் கொண்டுவிட்டார்களோ என்று தன் செய்கைக்காக அவன் அவமானத்தோடு அச்சம் கொண்டு இருள் அடர்ந்த அந்த முற்றத்தில் மூடியிருக்கும் எதிர் போர்ஷன் கதவுகளைப் பார்த்தான். உள்ளே விடிவிளக்கு எரிவது கதவுக்கு மேலுள்ள 'வென்டிலேட்டர்' வழியாய்த் தெரிந்தது. டேபிள்ஃபேன் சுற்றுகிற சத்தம் 'கும்'மென்று ஒலித்தது. மணி பதினொன்று இருக்கும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருட்டில் தெரியவில்லை. எங்காவது போய்விட்டு விடிந்த பிறகு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. எப்படிக் கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தனிமையில் இவளை விட்டுப் போவது என்ற தயக்கமும் ஏற்பட்டது. அவள் வேண்டுமென்றே அடமாகப் படுத்துக் கொண்டு அழும்பு செய்கிறாள் என்று மனத்துக்குப் புரிந்தது.
அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் மீதே ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது. இதெல்லாம் தனக்கு வீண் தலைவிதிதானே என்று மனம் புழுங்கிற்று. தானுண்டு, தன் வேலையும் சம்பாத்தியமும் உண்டு என்று சுதந்திரமாகத் திரிகிற வாழ்க்கையின் சந்தோஷத்தை அல்லது வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தவனை, அப்படியே வாழ்ந்து விடுவது எனத் தீர்மானித்திருந்தவனை இந்தக் கல்யாணம், பெண்டாட்டி, குடும்பம் என்றெல்லாம் இதில் ஏதேதோ பெரிய சுகம் இருப்பதாகவும், மனுஷ வாழ்க்கையின் அர்த்தமே அதில் அடங்கி இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிற பைத்தியக்காரத்தனத்தில் சிக்க வைத்த அந்தச் சைத்தானின் தூண்டுதலை எண்ணிப்பார்த்த பெருமூச்சுடன் வீட்டிற்குள் போகாமல் வாசற்படியில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு இருளும் நட்சத்திரமும் கவிந்த வானத்தைப் பார்த்தான்.
'அந்தச் சைத்தான்' என்ற முனகலில் அவனுக்குக் கிரிஜாவின் நினைவு வந்தது. அவள் எவ்வளவு இனியவள். இங்கிதம் தெரிந்தவள். சைத்தானைக் கட்டிக் கொண்டு வந்து வீட்டில் வைத்துக்கொண்டு அவளைப் போய்ச் சைத்தான் என்று நினைக்கிறேனே- என்று அந்த நினைவைக் கடிந்து கொண்டான் நந்தகோபால். ஆனாலும், தான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தக் காரணமாக இருந்தவள் அந்த கிரிஜாதான் என்பதால் தனக்கு அவள் மீது வருகிற இந்தக் கோபத்துக்கு நியாயம் இருப்பதாக நினைத்தான் அவன்.
'இப்போது, இந்த நேரத்தில் அவளைப் போய்ப் பார்த்தால் என்ன?' என்ற எண்ணம் வந்தது அவனுக்கு. அவளை எப்போது வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். இந்த ஆறுமாத காலமாக - கல்யாணமாகி ஒவ்வொரு நாளும் இவளோடு மனஸ்தாபம் கொண்டு 'ஏன் இப்படி ஒரு வம்பில் மாட்டிக் கொண்டோம்' என்று மனம் சலிக்கிற போதெல்லாம் அவன் கிரிஜாவை நினைத்துக் கொள்ளுவது உண்டு. என்றாலும் அங்கே போகலாம் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது.
'தான் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளுவதற்கு முன்பு எப்படியெல்லாம் இருந்தபோதிலும், இப்போது இவளை இங்கு தனியே விட்டுவிட்டு, அங்கே போவது இவளுக்குச் செய்கிற துரோகமில்லையா?' என்று நினைத்துப் பார்த்தான். இவள் என்னதான் சண்டைக்காரியாக இருந்தாலும், இவள் மீது தனக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தபோதிலும், தன் மீதுள்ள வெறுப்பினால், அதற்கு ஆறுதலாக இருக்கும் பொருட்டு, இவள் அந்த மாதிரி ஏதாவது செய்தால் அதைத் தன்னால் தாங்க முடியுமா என்றும் எண்ணி அந்த எண்ணத்தையே தாங்க முடியாமல் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
கடிகாரத்தின் ஒற்றை மணியோசை கேட்டது. மணி இன்னும் ஒன்றாகி இருக்காது. மூடியிருந்த கதவை லேசாகத் திறந்து கைக்கடிகாரத்தை உள்ளே இருந்து வீசும் வௌிச்சத்தின் ஒரு கீற்றில் பார்த்தான். இவனது வாட்சில் மணி பதினொன்றரை ஆகவில்லை. அடித்தது பதினொன்றரைதான் என்ற தீர்மானம் கொண்டு கதவின் இடைவௌி வழியாக அவளைப் பார்த்தான். அவள் அசையாமல் புரண்டு படுக்காமல் முன் இருந்த நிலையிலேயே முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்திருந்தாள். இவனுக்குக் கோபம் வந்தது. எழுந்து போய் முதுகிலே இரண்டு அறையோ, ஓர் உதையோ கொடுக்கலாமா என்று ஆங்காரம் வந்தது. "சீ" என்று தன்னையே அப்போது அருவருத்துக் கொண்டான் அவன்.
அப்படிப்பட்ட குரூரமான ஆபாசமான சம்பவங்களை அவன் சிறுவயதில் அடிக்கடி சந்தித்திருக்கிறான். திடீரென நள்ளிரவில் அவனுடைய தாயின் தீனமான அலறல் கேட்கும். விழித்தெழுந்து உடலும் உயிரும் நடுங்க இவன் நின்றிருப்பான். இவனுடைய தந்தை வெறி பிடித்தாற்போல் ஆவேசம் கொண்டு இவனுடைய தாயை முகத்திலும் உடலிலும், காலாலும் கையாலும் பாய்ந்து பாய்ந்து தாக்க, அவள் "ஐயோ பாவி சண்டாளா..." என்று அழுதுகொண்டே ஆக்ரோஷமாகத் திட்டுவாள். இவள் திட்டத் திட்ட அவர் அடிப்பார்...
அந்த நாட்கள் மிகக் குரூரமானவை. மறுநாள் ஒன்றுமே நடவாத மாதிரி அவர்கள் இருவரும் நடந்து கொள்ளுவது - அவள் அவருக்குப் பணிவிடை புரிவதும், அவர் அவளைப் பேர் சொல்லி அழைத்து விவகாரங்கள் பேசுவதும் - இவனுக்கு மிக ஆபாசமாக இருக்கும். இதெல்லாம் என்னவென்றே புரியாத அருவருப்பைத் தரும்.
பதினைந்து வயது வரைக்கும் இந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கிறான் அவன். அவர்களது சண்டையை விடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனசை மிகவும் அசிங்கப்படுத்தியிருக்கின்றன. அவன் தகப்பனாரை மனமார வெறுத்திருக்கிறான். 'குடும்ப வாழ்க்கையும் தாம்பத்தியம் என்பதும் மிகவும் அருவருப்பானவை' என்ற எண்ணம் இள வயதிலே அவனுக்கு ஏற்பட இந்த அனுபவங்கள் காரணமாயின போலும்.
இப்போது அவன் தகப்பனார் இல்லை. அவனுடைய விதவைத் தாய் வயோதிக காலத்தில் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தான் சாகுமுன் இவனுக்குக் கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற தன் ஆசையை இவனிடம் தெரிவிக்கும் போதெல்லாம் அவளது வாழ்க்கையைச் சுட்டிக் காட்டித் தாயைப் பரிகாசம் செய்வான். அவளுக்கு அப்போது வருத்தமாகவும் கோபமாகவும் கூட இருக்கும். விட்டுக் கொடுக்காமல், 'நான் வாழ்ந்ததற்கு என்ன குறை?' என்று பெருமை பேசுவாள். கடைசியில் ' கலியாணம் பண்ணிக்க முடியாது' என்று அவள் முகத்தில் அடித்துப் பேசிவிட்டு வந்துவிடுவான் நந்தகோபால்.
பட்டனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு தனி வாழ்க்கைக்குப் பழகி இப்படியே முப்பது வயது கடத்திவிட்ட அவனுக்குக் கல்யாண ஆசையையும் குடும்பத்தைப் பற்றிய சுய கற்பனைகளையும் வளர்த்து அதற்குத் தயாராக்கியது கிரிஜாவின் உறவுதான். கிரிஜாவுக்கு முன்னால் அவனுக்கு அது மாதிரியான உறவு வேறு எந்தப் பெண்ணோடும் ஏற்பட்டிருந்ததில்லை. அவளுக்கு இவன் மிகவும் புதியவனாக இருந்தான். ஆனால், அவள் அப்படியல்ல என்று இவனுக்கு மாத்திரமல்லாமல் வேறு பலருக்கும் பிரசித்தமாகி இருந்தது. அவளும் அதையெல்லாம் மறைக்கக் கூடிய நிலையில் இல்லை. எனினும் இவனோடு இருந்த நாட்களில் அவள் மிகவும் உண்மையாகவும் அன்பாகவும், ஒரு பெண்ணின் உடனிருப்பும் உறவும் ஓர் ஆணுக்கு எவ்வளவு இன்பமானது, வசதியானது என்பதை உணர்த்துகின்ற முறையிலும் வாழ்ந்தாள். அந்த இரண்டு மாத காலம் மிக மேன்மையான இல்லறம் என்று இந்த நிமிஷம் - இவனை அவமதித்தும் புறக்கணித்தும் வாசற்படிக்கு வௌியே இந்த நள்ளிரவில் நிறுத்தி வைத்துவிட்டு இறுமாப்போடு படுத்துக் கொண்டிருக்கிறாளே, அவள் மீது பற்றிக்கொண்டு வருகிற கோபத்தில் - நினைத்துப் பெருமூச்சும் கண்ணீருமாய்ப் பரிதாபமாக மறுபடியும் உள்ளே திரும்பிப் பார்த்தான் நந்தகோபால்.
நிச்சயம் அவள் எழுந்திருக்கவோ சமாதானமுறவோ போவதில்லை. இந்த ஆறு மாத அனுபவத்தில் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அவனுக்குப் பழக்கமாகிப் போனதால் இதன் தொடக்கமும் இதன் போக்கும் இதன் முடிவும் அவனுக்கு ஒவ்வொரு தடவையும் முன் கூட்டியே தெரிகிறது. என்றாலும் இதனைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. பிறகு யோசித்துப் பார்க்கையில் அவனது அறிவுபூர்வமான எந்த நியாயத்துக்கும் இந்தச் சச்சரவுகள் ஒத்து வருவதில்லை. நாளுக்கு நாள் இந்த வாழ்க்கை அவமானகரமானதாகவும் துன்பம் மிகுவதாகவும் மாறிக்கொண்டே இருப்பதை எப்படித் தாங்குவது என்று புரியவில்லை.
உள்ளே மங்கிய விளக்கொளியில், கொடிகளில் கிடக்கும் துணிகளும், நிழலில் தெரிகிற சமையலறையினுள் பாத்திரங்களின் பளபளப்பில் அவை இறைந்து கிடக்கிற கோலமும் மிகச் சோகமாய் அவனுக்குத் தெரிந்தன.
ஒரே அறையும் அதைத் தொடர்ந்து கதவில்லாத ஒரு சுவரால் பிரிகிற சிறு சமையல்கட்டும் அதனுள்ளேயே அடங்கிய தொட்டி முற்றமாகிய பாத்ரூம் உள்ள அந்தப் போர்ஷனுக்கு நாற்பத்தைந்து ரூபாய் வாடகை. குடும்பச் செலவுக்கு மாதம் நூற்றைம்பது ரூபாய் ஆகிறது. நந்தகோபாலுக்கு சம்பளம் கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய். மனமொத்து வாழ்ந்தால் இந்த நெருக்கடி ஒரு துன்பமல்ல. ஆறேழு பேர் சேர்ந்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து எல்லா வசதிகளோடும் வாழ்ந்த அந்த 'மெஸ்' வாழ்க்கைக்கு இப்போது மனசு ஏங்க ஆரம்பிப்பதன் பரிதாபத்தை நினைத்து அவன் மனம் கசந்தான்.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தான். கிரிஜாவைப் போய்ப் பார்த்துவிட்டு இரவை அவளுடன் கழிப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்று தோன்றியது. 'வேறு எதற்காகவும் இல்லை' என்ற நினைப்பில் இதைப் பற்றிய உறுத்தலை உதறி ' அவளோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு நிம்மதியைத் தரும்' என்கிற சமாதானத்தோடு புறப்பட்டான். உள்ளே போய் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். நைட்லாம்ப் எரிந்து கொண்டிருந்த மங்கிய வௌிச்சத்துடன் நாற்பது வோல்ட் விளக்கையும் போட்டவுடன் வௌிச்சம் கண்ணைக் கூசிற்று.
"ஏய்!..." என்று அவளை மெல்லத் தட்டினான். அவள் அசையவில்லை.
"இப்ப உன்னை கொஞ்சறதுக்கு எழுப்பலே; நான் வௌியே போறேன். கதவைத் தாப்பாப் போட்டுக்க" என்று அவள் புஜத்தைக் கொஞ்சம் அழுத்தி வலிக்கிற மாதிரிப் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பினான்.
அவள் எழுந்து உட்கார்ந்து அவனை வெறுப்புடன் முகம் சுளித்த எரிச்சலுடன் பார்த்தாள்.
இவ்வளவு நேரம் எழுந்திருக்காதவள், தான் போகிறோம் என்றதும் கதவைத் தாழிடத் தயாராய் எழுந்து உட்கார்ந்திருப்பது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.
'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்' என்று கேட்பதுதானே நியாயம்? ஆனால், அவள் கேட்கவில்லை. 'போறதானால் தொலைய வேண்டியதுதானே... நான் நிம்மதியாகப் படுத்துக் கொள்ளுவேன்' என்கிற மாதிரி அவள், அவன் சட்டையை மாட்டிக்கொண்டு நிற்பதைப் பொருட்படுத்தாமல் எழுந்து எரிச்சலுடன் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவன் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடினான். கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிற அவளது சேலையின் நிழலோ காலின் நிழலோ மறைத்தது. தான் கட்டிலுக்கடியில் குனிந்து செருப்பைத் தேடும்போது அவள் இப்படி மறைத்துக் கொண்டு - தான் மறைக்கிற விஷயம் அவளுக்குத் தெரியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது - கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிற காரியம் அவமரியாதை என்று அவனுக்குத் தோன்றியது. அந்தக் கோபத்துடன் அவன் செருப்பைத் தேடி எடுத்துக் கொண்டு நிமிரும்போது கட்டிலின் விளிம்பில் தலையை இடித்துக் கொண்டான். கண்ணில் தண்ணீர் வருகிற மாதிரி வலித்தது. அவள் கொஞ்சம்கூடப் பதட்டம் காட்டாதிருந்தாள். இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவளுக்கு இப்படித் தலையில் ஓர் இடியோ, விரலில் ஒரு காயமோ ஏற்பட்டால் தன்னால் பதட்டமுறாமலிருக்க முடியாதே என்று எண்ணிய நினைப்பில் அவன் தன்னிரக்கத்தோடு முகம் திருப்பிக் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.
திறந்த கதவை மூடாமல் நிதானமாக அவன் முற்றத்தில் நடந்து தாழ்வாரத்தில் தூணோரமாக நிறுத்தியிருந்த சைக்கிளின் 'லாக்'கைத் திறக்கையில் இருட்டில் நிற்கிற தன்னை அவள் பார்க்க முடியாது என்பதால் அவள் வௌியே தலை நீட்டிப் பார்க்கிறாளா என்று கவனித்தான். அவன் மனம் சோர்வு கொள்ளத் தக்க வண்ணம் அவள் கதவைப் பட்டென்று மூடித் தாழிட்டுக் கொண்டாள். அவள் வௌியே தலை நீட்டிப் பார்க்காதது மிகவும் வருத்தம் தந்தது இவனுக்கு. அறைக்குள் எரிந்த நாற்பது வோல்ட் வௌிச்சம் அணைந்து நைட்லாம்பின் வௌிச்சம் வெண்டிலேட்டர் வழியே தெரிந்தது.
நந்தகோபால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். வாசற்புறத்தில் முறைவாசல் செய்கிற கிழவி தன் படுக்கையில் உட்கார்ந்து இருமிக்கொண்டிருந்தவள், அவன் வௌியே சென்றதும், 'திரும்பி எப்போ வருவே அப்பா' என்று கேட்டு, இவன் 'இல்லை' என்று சொன்னதும் பிறகு கதவைத் தாழிட்டாள். வௌியில் வந்து நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டபோது, தெரு விளக்குகள் திடீரென அணைந்தது. டைனமோ வௌிச்சம் பளீரென்று வழிகாட்ட அவன் சைக்கிளில் ஏறி மிதித்தான்.
---ஃஃஃ---ஃஃஃ---ஃஃஃ---ஃஃஃ
கிரிஜாவின் வீடு மேற்கு மாம்பலத்தில் குண்டும் குழியும் சாக்கடையும் எருமை மாடும் நிறைந்த ஒரு தெருவில் இருக்கிறது. தெருப்புறம் மாடிப் படியுள்ள ஒரு வீட்டின் மேல் போர்ஷனில் அவள் சுதந்திரமாக வாழ்கிறாள். அவளுக்குத் தாய் இருக்கிறாள். அவள் எங்கோ ஒரு பணக்காரர் வீட்டில் ஆயாவாக வேலை செய்கிறாள். எப்போதாவது வந்து மகளைப் பார்த்துவிட்டு அசைவச் சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போவாள். அவள் வேலை செய்கிற வீட்டில் அது கிடைக்காதாம். கிரிஜாவுக்கு இருபத்தைந்து வயதான தம்பி ஒருவன் உண்டு. அவனுக்கு ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியில் வேலை. அவனும் எப்போதாவது தான் வருவான். அவள் பத்தாவதுவரை படித்திருக்கிறாள். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் டெம்ப்ரரியாகவே அவள் ஒவ்வோரிடமாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். முப்பது வயதாகிறது. இப்படியொரு நிராதரவான நிலையற்ற வாழ்க்கையிலும் அவள் நிறைவோடும் மலர்ச்சியோடும் இருக்கிறாள்.
நந்த கோபால் வேலை செய்கிற காஸ்மெடிக்ஸ் கம்பெனியார் எக்ஸிபிஷனில் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்கள். அங்கு அவள் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் போன டிசம்பரில் அவளை இவன் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்தவுடன் அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்த மாதிரியானதொரு இணக்கம் அவள் முகத்தில் இவனுக்குத் தோன்றியது. இந்த ஸ்டாலில் விற்பனைப் பணிப் பெண்ணாக வேலை செய்வதற்காகக் கொண்ட முகபாவமோ அது என்றுதான் முதலில் அவன் நினைத்தான். பிறகுதான் தெரிந்தது; அவன் டெஸ்பாட்சிங் கிளார்க்காக வெலை செய்யும் அந்த காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் நாள்தோறும் பார்சல் பார்சல்களாக அனுப்பப்படுகிற அந்தப் பவுடர் டின்களின் மேல் இருக்கின்ற உருவமே அவளுடையதுதான் என்று. இரண்டு மாத காலம் மாலை நேரத்தில் மட்டும் 'பார்ட் டய' மாக அவனும் எக்ஸிபிஷனிலே வேலை செய்த காலத்தில் அவளுடன் ஏற்பட்ட நட்பின்போது அவளைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். ஒரு கௌரவமான நிரந்தர உத்தியோகத்துக்காக அவள் ஒவ்வொருவரிடமும் சிபாரிசு வேண்டியபோது இவன் அவளுக்காகப் பரிதாபப்பட்டான். ஆனாலும் அவளுக்கு உதவும் காரியம் தனது சக்திக்கு மீறியது என்று அவளைப் பற்றிய கவலையிலிருந்து ஒதுங்கியே நின்றான்.
அவள் எல்லோருடனும் கலகலவென்று பேசுவாள். இவனை அவள்தான் முதலில் டீ சாப்பிட அழைத்தாள். இவனோடு பேச்சுக் கொடுத்தாள். இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பும்போது சில நாட்களில் அந்த ஸேல்ஸ் மானேஜர் தான் காரில் போகும் வழியில் இவளை இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் செல்வார். அவரைப் பற்றி ஆபிசில் ஒரு மாதிரி பேசிக் கொள்வார்கள். அவருடன் அவள் போவது இவனுக்கு என்னமோ மாதிரி இருக்கும். ஒருநாள் அதுபோல் மானேஜர் தன்னுடன் அவளை அழைத்தபோது அவள் நந்தகோபாலைக் காட்டி, " மிஸ்டர் நந்தகோபால் எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் சார் இருக்காரு. நாங்க பேசிக்கிட்டே போயிடுவோம் சார்... என்னாங்கோ மிஸ்டர்?" என்று இவனைப் பார்த்துச் சிரித்தபோது இவனும் சம்மதித்தான்.
அவள் பேசுவது இவனுக்கு வேடிக்கையாக இருக்கும். 'என்னாங்கோ, சரீங்கோ... ஆமாங்கோ..' என்று அவள் கொஞ்சம் நீட்டிப் பேசுவாள். அவள் வீட்டில் பேசுகிற பாஷை தெலுங்கு என்று பின்னால் தெரிந்தது இவனுக்கு. படித்ததெல்லாம் தமிழ்தான். தெலுங்கு என்றால், மெட்ராஸ் தமிழ் மாதிரி மெட்ராஸ் தெலுங்காம்.
- 'அவள் எப்படிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள்!' என்று நினைத்துக் கொண்டு சைக்கிளை வேகமாய் மிதித்தான் நந்தகோபால்.
அவள் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறாள் என்று, அவளோடு பழகிய பிறகுதான் இவன் தெரிந்து கொண்டான். எக்ஸிபிஷன் ஸ்டால் வேலை முடிந்த பிறகு டெலிபோன் சுத்தம் செய்து அதில் ஸென்ட் போடுகிற ஒரு கம்பெனியில் வேலைக்கமர்ந்து டெலிபோன் இருக்கிற வீடுகளிலும் கம்பெனிகளிலும் ஏறி இறங்கி வருகையில் ஒருநாள் தெருவில் அவளை இவன் பார்த்தான். இப்படி ஏதாவதொரு கௌரவமான உத்தியோகம் செய்து அவள் சம்பாதித்தாள். வயது முப்பது ஆவதால் இதற்கிடையில் நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கிறது என்றாலும் அதை ஒரு பிழைப்பாகக் கொள்ளும் இழி மனம் அவளுக்கு இல்லை என்று அவன் அறிந்தான்.
எப்போதாவது இவன் அவளைத் தேடிக் கொண்டு போவான். இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். இவனுக்கு அவள் காபி மட்டும் தருவாள். அவள் சினிமாப் பத்திரிகைகள் எல்லாம் வாங்குவாள். கையில் காசு இருக்கும் போதெல்லாம் சினிமாவுக்குப் போவாள். நேரம் இருக்கும்போதெல்லாம் சினிமாக்களைப் பற்றியும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் ரொம்பத் தெரிந்தவள் மாதிரி சுவாரஸ்யமாக அரட்டை அடிப்பாள். சினிமா கம்பெனியில் வேலை செய்கிற அவளுடைய தம்பி ' நீ என்ன வேணும்னாலும் செய்... ஆனா சினிமாவிலே சான்ஸீ குடுக்கறேன்னு எவனாவது சொன்னா - அத்தெ நம்பிக்கினு மட்டும் போயிடாதே... நான் அங்கே இருக்கறதுனாலே என் மானத்தெக் காப்பாத்தறதுக்கோசரம் அந்தப் பக்கம் வராதே' என்று எப்போதோ சொல்லி வைத்திருந்ததைத் தான் உறுதியாகக் கடைபிடிப்பதை இவனிடம் அவள் ஒரு முறை கூறினாள்.
- அவளோடு அவன் இரண்டு மாதம் வாழ்ந்திருக்கிறான். அதை நினைக்கையில் இப்போதும் மனசுக்குச் சுகமாக இருக்கிறது.
அருமையாக நேர்ந்த அந்த வாழ்க்கையை விடுத்து வேறு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட குற்றத்துக்கான தண்டனைதானோ இப்போது தான் அனுபவிக்கிற வேதனைகளும் அவமானங்களும் என்று எண்ணியவாறே அவன் சைக்கிளை மிதித்தான். இன்னும் ஒரு மைலாவது இருக்கும்.
தொடர்ந்து ஒரு வேலையும் கிடைக்காமல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நந்தகோபால் வேலை செய்யும் இடத்துக்கு இவனைத் தேடி வந்தாள் கிரிஜா. ஆபீஸ் முடிகிற நேரமானதால் இவளைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் செய்த பின் இவளுடனே அவனும் வௌியில் வந்தான். இருவரும் ஓட்டலுக்குப் போயினர். அவள் மிகவும் களைத்திருந்தாள். இவன் இரண்டு காபிதான் சொல்ல இருந்தான். அதை எப்படியோ புரிந்து கொண்டு அவள் சொன்னாள்: "எனக்கு வெறும் காபி மட்டும் போதாதுங்கோ... எதனாச்சும் சாப்பிடணுங்கோ"
அவள் மனசின் வெண்மை இவனைக் கனிய வைத்தது. அன்று அவளை மிகுந்த அன்போடு இவன் உபசரித்தான். பகல் முழுதும் அவள் சாப்பிடாதிருந்தாள் என்றும் இப்போது வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறாள் என்றும் தெரிந்தபோது அவளுக்காக மனம் வருந்தினான். அவள் அவனிடம் ஏதாவது வேலைக்குச் சிபாரிசு செய்யச் சொன்னாள். நம்பிக்கை இல்லாமலே அவன் அவளுக்கு வாக்குறுதி தந்தான். மாலையில் அவளுடன் அவனும் அவள் வீடுவரைச் சென்று சமையலுக்கான பொருள்களைக் கூட இருந்து வாங்கி, அதற்கு இவன் பணம் கொடுத்தான். அன்றிரவு இவனை இவள் தன்னுடன் வீட்டில் சாப்பிடச் சொன்னாள்.
அவள் சமையல் செய்கிற அழகைப் பக்கத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அங்கு அவன் சாப்பிட்டான். அவனுக்குத் தன் தாயின் பரிவும் அவள் கைச் சமையலின் ருசியும் நினைவுக்கு வந்தது. அவள் தன் சமையல் அவன் ருசிக்கு ஏற்கிறதா என்று மிகவும் பக்தி சிரத்தையுடன் வினவி வினவிப் பரிமாறினாள்.
அன்றிரவு இவன் அங்கே தங்க நேர்ந்தது. அந்த இரவில் தான் அவள் தன்னைப் பற்றியும் தன் தாய் தம்பி வாழ்க்கை நிலைமைகளைப் பற்றியெல்லாம் இவனோடு மனம் விட்டுப் பேசினாள். திடீரென்று தோன்றிய ஒரு யோசனையை அவனிடம் அவள் வௌியிட்டாள். அவள் சொன்னாள்: "நீங்க மெஸ்ஸீக்குக் குடுக்கிற பணத்தை இங்கே கொடுத்தால் உங்களுக்கும் சமைச்சுப் போட்டு நானும் சாப்பிடுவேன்... என்னாங்கோ- உங்களுக்கு சௌகரியப்படுமாங்கோ?..."
அவன் வெகுநேரம் யோசித்த பிறகு சம்மதித்தான். இதுவரை அவர்களிடையே வெறும் நட்பாக இருந்த உறவு அன்று அவனுக்கொரு புதிய அனுபவமாயிற்று. அது வாழ்க்கையிலேயே அவனுக்குப் புதிது. அதே மாதிரி ஒரு புதிய மனிதனைச் சந்திப்பது அவளுக்கும் முதலும் புதிதுமான அனுபவம்.
தான் எதனாலோ வெறுத்தும் பயந்தும் ஒதுக்கி வைத்த குடும்ப வாழ்க்கை என்பது, ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்தல் என்பது எவ்வளவு சுகமான, சுவையான, அர்த்தமுள்ள அனுபவம் என்பதை அவன் கண்டு மயங்கினான்.
அந்த வீடும் அந்த வாழ்க்கையும் மிக மிக எளிமையானது. மாடியின்மீது கூரை போட்ட ஒரே அறையில் தான் சமையல், படுக்கை எல்லாம். குளிப்பதற்குக் கீழே வரவேண்டும். குண்டும் குழியுமான தரையில் பாய் விரித்துப் படுக்க வேண்டும். அவளுடைய அம்மாவோ, தம்பியோ - அவர்கள் பகலில்தான் வருவார்கள் - அப்போது அங்கே இருக்க நேர்ந்தால் இப்போதுதான் வந்ததுபோல் நடிக்க வேண்டும். இதெல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
தான் கல்யாணமே வேண்டாம் என்று பயந்திருந்த காரணங்களை அவளிடம் சொன்னபோது அவள் சிரித்தாள். "உங்க நைனா, அம்மாவைக் கொடுமைப்படுத்தினாருன்னா பயந்துகினு இருந்தீங்கோ? ஒரு பொண்ணுக்கு இந்த பயம் வந்தா நாயம்... ஆம்பளைக்கு இதிலே என்னாங்கோ பயம்?... அவரை மாதிரி நீங்க உங்க பெண்சாதியே அடிக்காம இருந்தா சரியாப்பூடுது..."
அவன் அவளிடம் கல்யாணத்தைப் பற்றியும், ஊரிலிருந்து அம்மா எழுதுகிற கடிதங்களைப் பற்றியும் பேசினான். இருவரும் ஒன்றாக வாழ்ந்துகொண்டு தான் இன்னொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்கிற விஷயமாக அவன் அவளிடம் பேசுவதும், அதற்கு உடன்பாடாக அவளும் அவனை வற்புறுத்துவதும் முரண்பாடான விஷயமாகவோ பொருத்தமற்றதாகவோ இருவருக்குமே தொன்றவில்லை. தனித்தனியாக இருக்கிற நேரத்தில் மனசின் ஆழத்தில் அந்த முரண்பாடு தோன்றியதன் காரணமாகவே அவர்கள் அது குறித்து மிகச் சாதாரணமாகவும் அதிகமாகவும் பேசினார்கள் போலும்.
கடைசியில் ஒருநாள் நந்தகோபால் தன் தாய் வற்புறுத்திச் சொல்கிற, தனது சொந்தத்துப் பெண்ணும், பத்தாவது படித்தவளும், மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவளூம், இதற்கு முன்னால் இவனே பார்த்து அழகிதான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவளுமான வத்ஸலாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதியபின் அந்தச் செய்தியை கிரிஜாவிடமும் கூறினான்.
அவள் மனத்தினுள் அவளே உணராத வண்ணம் ரகசியமான ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தாலும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் அவனைப் பாராட்டினாள். 'புது மாப்பிள்ளை புது மாப்பிள்ளை' என்று பரிகாசம் செய்தாள். என்னென்னவோ புத்திமதிகள் கூறினாள். அவனைவிட அனுபவமும் முதிர்ச்சியும் உடையவள் என்பதால் அவனுக்கு நிறையவும் கற்றுத் தந்தாள். அதற்காக அவன் அவளிடம் மிகுந்த நன்றி பாராட்டினான். பெண் என்றாலே பயந்தும் வெறுத்தும் ஓடிய தன்னைக் கல்யாணத்துக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் தயார்ப்படுத்திய பொறுப்பு அவளுடையதுதான் என்று அவன் நம்பியது மாத்திரமல்லாமல் அவளிடமே அதைத் தெரிவித்தான். அப்போதெல்லாம் என்னவென்று விளங்காத ஓர் உணர்ச்சியுடன் வாய்க்குள் அவள் சிரித்துக் கொள்வாள்.
அவளோடு சேர்ந்து இவன் இருந்த அந்த இரண்டு மாத காலத்தில், பக்கத்திலுள்ள ஒரு நர்சரி பள்ளியில் 'அன்ட்ரெயின்ட்' டீச்சராக, ஒரு டெம்பரரி வேலையும் அவள் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரங்களில் தையல் கிளாசுக்குப் போனாள். ஏற்கனவே அவளுக்கு டெய்லரிங் கொஞ்சம் தெரியுமாம்.
அவனுடைய கல்யாணத்துக்குத் தேதி குறிக்கும்வரை அவன் அவளோடுதான் இருந்தான். பின்னர் அவளேதான் கூறினாள். "நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்கோ. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு. நீங்க உங்க மெஸ்ஸீக்கே போயிடுங்கோ. உடம்பெ நல்லாப் பாத்துக்குங்கோ... நல்லாச் சாப்பிடுங்கோ... கல்யாணத்துக்கு அப்பாலே ஒரு ஃபிரண்டு மாதிரி வந்து பாருங்கோ. எனக்குச் சந்தோஷமா இருக்கும்."
- அப்போது அவள் கண் கலங்கியதை எண்ணி இப்போது மனம் பொருமிய நந்தகோபால் அவள் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மாடியை அண்ணாந்து பார்த்தான். மாடி மீதுள்ள கூரையின் சிறிய ஓட்டைகளினூடே உள்ளே விளக்கு எரிவது தெரிந்தது. தீக்குச்சியைக் கிழித்து வாட்சில் மணி பார்த்தான். பன்னிரண்டு.
திடீரென்று தன்னைப் பார்க்கும் அவளுடைய ஆச்சரியத்தை எண்ணிக்கொண்டு, அவளைப் பார்க்கப் போகிற ஆவலில் நெஞ்சு படபடக்க அவன் படியேறினான்.
மேல் படியிலிருந்து அவன் தலை தெரியும்போது காலடிச் சத்தம் கேட்டுத் தையல் மிஷின் அருகே ஸ்டூலில் உட்கார்ந்து, எதையோ ஊசியால் பிரித்துக் கொண்டிருந்த கிரிஜா, "யாரது?" என்ற அதட்டல் குரலுடன் எழுந்தாள்.
"நான் தான்" என்று இவன் பேரைச் சொல்லுவதற்கு முன் அவள் சந்தோஷம் தாங்க முடியாமல் "ஹை! நீங்களா! வாங்கோ" என்று வரவேற்றாள். அவனைத் தழுவிக் கொள்ளப் பரபரத்த கைகளின் விரல்களைத் திருகித் திருகி நெட்டி முறித்துக் கொண்டே, "என்ன இந்த நேரத்திலே? உக்காருங்கோ. சாப்பாடெல்லாம் ஆச்சா?" என்று பலவாறு கேட்டுக்கொண்டே பாயை எடுத்து விரித்து உட்காரச் சொன்னாள்.
"திடீர்னு உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சு - வந்தேன்" என்றான். அவள் கலவரமடைந்தாள். அது அவனுக்குத் தெரியாத வண்ணம் சமாளித்துச் சிரித்தாள். "தாகத்துக்குச் சாப்பிடுங்கோ" என்று தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.
இருவருக்குமே திகைப்பும் படபடப்பும் அடங்கச் சற்று நேரம் பிடித்தது. அவன் அந்தப் புதிய தையல் மிஷினைப் பார்த்து அதைப் பற்றி விசாரித்தான். அவள் தான் டெய்லரிங் பாஸ் பண்ணியதையும், இன்ஸ்டால்மெண்டில் இதை வாங்கி இருப்பதையும், இதில் நிறையச் சம்பாதிப்பதையும், இந்த மாதம் மூணு பவுனில் ஒரு செயின் வாங்கிப் போட்டுக் கொண்டதையும் காட்டி - "ஸ்கூல் வேலையை விட்டுடலீங்கோ" என்று கூறித் தனது நல்ல நிலைமையை விளக்கி அவனைச் சந்தோஷப்படுத்தினாள். அவன் மனசுக்கு அவள் கூறியவை மிகவும் இதமாக இருந்தன. அவன் ரொம்ப மகிழ்ச்சியடைந்தான்.
"நீங்க எப்படி இருக்கிறீங்கோ?... உங்க 'வய்ப்' நல்லா இருக்காங்களாங்கோ?" என்று குதூகலமாய் அவள் விசாரித்தபோது அவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்து வருத்தமாகச் சிரித்தான்.
அவள் தையல் மிஷின் மீது குவிந்து கிடந்த தைத்த, தைக்க வேண்டிய, வெட்டிய, வெட்ட வேண்டிய புதுத்துணிகளையெல்லாம் எடுத்துப் பிரித்து ஒவ்வொன்றாக ஒரு பெட்டியினுள் மடித்து வைத்து இவனோடு பேசிக் கொண்டிருப்பதற்காக வேலைகளை 'ஏறக் கட்டி'க் கொண்டிருந்தாள். அவன் ஏதோ வருத்தத்தில் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. அதற்காகத்தான் அவன் சந்தோஷப்படத்தக்க விஷயங்களை முந்திக்கொண்டு அவள் சொன்னாள். இதனை புத்திசாலித்தனத்தால் செய்ய வில்லை; நல்லியல்பால் செய்தாள். எனவே இப்போது அவன் வருத்தம் அறிவுக்குப் புரிய, தானும் வருந்தினாள்.
அவன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நெஞ்சு நிறையப் புகையிழுத்துக் கூரையை நோக்கி நீளமாக ஊதிவிட்டான். சிகரெட்டின் சாம்பலை மிகக் கவனமாக விரலிடுக்கில் உருட்டி தட்டிக்கொண்டே அவள் முகத்தைப் பாராமல் வருத்தம் தோய்ந்த குரலின் சொன்னான்: "நான் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிக்கிறேன். நான் உன்னையே கல்யாணம் பண்ணிக் கிட்டிருக்கலாம். ஓ! இப்ப என்ன பண்றது?" என்று புலம்பிக்கொண்டிருந்தவனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டாள் கிரிஜா.
கல்யாணம் முடிந்து தன்னோடு புறப்பட்டபோது அவள் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தவில்லை என்றும், அவளுக்குத் தன்னோடு வாழ்வதில் சந்தோஷமில்லை என்றும், தன்னை அவள் அவமதிப்பதையும், இன்று கூடத் தலையில் அடித்துக் கொண்டதையும் அவன் வாய் ஓயாமல் வத்ஸலாவைப் பற்றிப் பேசித் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.
தையல் மிஷினுக்குப் பக்கத்திலிருந்து எண்ணெய் போடுகிற 'ஆயில் கேனை' எடுத்துக் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையேயுள்ள புண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டே, அவன் புலம்புவதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் கிரிஜா.
"பாவங்கோ அது. அறியாப் பொண்ணு தானேங்கோ?" என்று அவள் சொன்னதைக் கேட்டு அவன் ஒன்றும் புரியாமல் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கினதுனாலேயே உங்களுக்குச் சமமா ஆயிடுவாங்களாங்கோ அவுங்க?... அப்பா அம்மாவுக்கு ரொம்பச் செல்லப் பொண்ணுன்னு நீங்க தானேங்கோ சொல்லியிருக்கீங்கோ? எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு ஊரிலே தனியா உங்களேட வந்து வாழறப்ப அந்தக் கொழந்தை மனசு எப்படிங்கோ இருக்கும்? அதெப் புரிஞ்சு நீங்கதான் - அட்ஜஸ்ட் பண்ணி நடக்கணும். நீங்க 'டிரெய்ன்ட்' இல்லீங்களா? ஒரு ஆம்பிளைங்கறதே அவுங்களுக்குப் புதுசு இல்லீங்களா? பயமா இருக்கும்ங்கோ; அருவருப்பாகூட இருக்கும்ங்கோ... நான் உங்ககிட்ட அப்படியெல்லாம் இருந்தேன்னா அதுக்குக் காரணம் என்னாங்கோ? நான் 'எக்ஸ்பீரியன்ஸ்ட்' இல்லீங்களா? யாருங்கோ 'வய்ஃபா' இருக்கிறதுக்கு டிரெய்ன்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே - என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு - அப்ப ஏங்க அது தோணலே? நான் ஏற்கனவே 'டிரெய்ன்ட்'ங்கற 'டிஸ்குவாலிஃபிகேஷன்' தாங்கோ அதுக்குக் காரணம்! அதனாலே, உங்க வய்ஃபை விட நீங்க அனுபவஸ்தர்ங்கிறதை நெனைப்பிலே வெச்சிக்கணும். அவுங்க கொழந்தைன்னு புரிஞ்சுக்கணும். நான் உங்ககிட்டே இருந்த மாதிரி நீங்க அவுங்ககிட்டே இருக்கணும். அப்படித்தான் போகப் போக எல்லாம் சரியாப் போயிடுங்கோ..." என்று அவள் எல்லாவற்றையும் லேசாக்கி விட்டதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான். இவளிடம் வரவேண்டுமென்று தான் நினைத்தது எவ்வளவு சரியானது என்று எண்ணினான்.
அவன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததால் நிறுத்தியிருந்த - கால் விரலிடுக்கில் எண்ணெய் விடுகிற - காரியத்தில் மறுபடியும் முனைந்தாள்.
"என்ன காலிலே?" என்று அவள் அருகே நகர்ந்து குனிந்து பார்த்தான் அவன்.
"போன வாரம் புதுசா செருப்பு வாங்கினேன். கடிச்சிடுச்சுங்கோ. மிஷின் தைக்கறதிலே விரல் அசையறதனாலே சீக்கிரம் ஆற மாட்டேங்குது" என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்: "பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ... அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?"
அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான்.
(எழுதப்பட்ட காலம்: 1971)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஏழாம் பதிப்பு: 1995
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
-----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
10. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)
நாற்பது வருஷம் ஆச்சு... இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து... கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு... அப்பா தூக்கிண்டு வந்து விட்டாளே... அப்போ அம்மா, - அவர்தான் எங்க மாமியார் இருந்தார்... மாமியாருக்கு மாமியாரா அம்மாவுக்கு அம்மாவா... பெத்த தாய்க்கு மகளாயிருந்தது அஞ்சு வருஷ காலந்தானே!... மிச்ச காலத்துக்கும் மாமியாருக்கு... மாட்டுப் பொண்தானே... கூடத்துலே என்னை இறக்கி விட்டுட்டு மேல் துண்டாலே முகத்தை மூடிண்டு அப்பா என்னத்துக்கு அழுதார்னு இப்பவும் நேக்குப் புரியலை... இதோ இந்த முற்றத்துலே - அப்பவே அடத்துக்குக் குறைச்சலில்லே. அந்தச் செங்கல் தரையிலேதான் பம்பரம் விட்டாகணும்னு நாக்கைத் துருத்திக் கடிச்சுண்டு சொடுக்கிச் சொடுக்கிப் பம்பரம் விட்டுண்டு நிக்கறாரே, இவர் நேக்கு ஆத்துக்காரர்னு, புரியறதுக்கே ரொம்ப நாளாச்சே... அதுக்காக 'நறுக் நறுக்' குனு வந்து தலையிலே குட்டறதோ?... 'போடா'ன்னு ஒரு நாள் நன்னா வெசுட்டேன்... சமையலுள்ளே காரியமா இருந்த அவர், ஓடி வந்தார். "ஐயையோ... என்னடீது? அவன்... இவன்னு... அவனை." "அவன் மட்டும் என்னைக் குட்டலாமோ?"... அம்மாவுக்கு ஒரு பக்கம் சிரிப்பா வரது... என்னைக் கட்டி அணைச்சுண்டு எங்க உறவைப் பத்தி விளக்கிச் சொல்றார்... ஆனால், எல்லாம் புரியும் காலம் வரச்ச தானே புரியறது.... நெனைச்சுப் பார்த்தா, எல்லாமே ஆச்சரியமா இருக்கு... இவர் கிட்டே நேக்கு எப்படி இத்தனை பயம் வந்தது! பயம்னா, அது சந்தோஷமான பயம்... மரியாதையான பயம், பயம்ங்கறதைகூடச் சரியில்லே... அது ஒரு பக்தின்னு தோண்றது... எப்படியோ வந்துடுத்தே... ம்..ம்!... நாற்பது வருஷத்துக்கு மேலே ஆச்சு...
'இந்த மனுசனைக் கட்டிண்டு நான் என்னத்தைக் கண்டேன். ஒரு அது உண்டா, ஒரு இது உண்டா'ன்னு குளத்தங்கரைலேயிருந்து கோயில் பிரகாரம் வரைக்கும் அலுத்துண்டு அழுதுண்டு சில பேர் அழிச்சாட்டியம் பண்ணிண்டு திரியறாளே, அவாளெல்லாம் என்ன ஜன்மங்களோ அம்மா!
நேக்கு ஒரு குறையும் இல்லை... ஆமாம்... எந்தக் கோயிலிலே வந்து வேணாலும் நின்னு ஈரத் துணியைக் கட்டிண்டு சொல்வேன் - எனக்கு ஒரு குறையும் இல்லை... பாக்கறவா சொல்லுவா... நேக்கு குழந்தை இல்லைங்கறதைப் பெரிய குறையாச் சொல்லுவா... சொல்றா... நானே கேட்டிருக்கேன். எதுக்கு... பொய் சொல்லுவானேன்... நேக்கும் அப்படி ஒரு குறை கொஞ்ச நாள் இருந்திருக்கு. அது எவ்வளவு அஞ்ஞானம்னு அப்பறமாத்தான் புரிஞ்சது... நேக்கே சொந்தமா ஒண்ணும் புரிஞ்சுடலை... அவர் புரிய வச்சார். அவராலேதான் அது முடியும். பேச ஆரம்பிச்சார்னா எங்கேருந்துதான் அந்தச் சூத்திரங்களெல்லாம் கையைக் கட்டிண்டு வந்து நிக்குமோ! சாஸ்திரங்களிலேருந்தும் வேதங்களிலேருந்தும் நிரூபணங்கள் எடுத்துக் காட்டி... எப்பேர்ப்பட்ட சந்தேகங்களானாலும் சரி, என்ன மாதிரியான அஞ்ஞானக் கவலைகளானாலும் சரி, அவரோட பேச்சினாலேயே அடிச்சு ஓட்டற சாமார்த்தியம்... அப்படி ஒரு வாக்கு பலம்... அப்படி ஒரு ஞானம்... அது அவருக்கு மட்டுந்தான் வரும்... ஏதோ, எங்க ஆத்துக்காரர்ங்கறதுக்காக ஒரேயடியாப் புகழ்ந்துடறேன்னு நெனைச்சுக்காதேங்கோ... அவரைப் புகழற அளவுக்கு நேக்கு ஞானம் போறாது. அப்பேர்ப்பட்ட வித்துவானுக்குச் சரியான நிரட்சரகுஷி வந்து சகதர்மிணியா வாச்சிருக்கேன் பாருங்கோ. இதைப் பத்தி நானே ஒரு தடவை அவர் கிட்டே சொன்னேன். பெரிய பிரசங்கமே பண்ணிட்டார். அவருக்கு நான் சகதர்மிணியா இருக்கறது எவ்வளவு பாந்தம்கிறதைப் பத்தி... அவருக்கு... அதுலே எவ்வளவு சந்தோஷம்கிறதைப் பத்தி. அவர் என்கிட்டே சொன்னதெல்லாம் நான் எப்படிச் சொல்றது? அவருக்குச் சகதர்மிணியாக இருக்கறதுக்கு நேக்குத் தகுதி இருக்குங்கறது வாஸ்தவமாகவே இருக்கட்டுமே! அதனாலே அவரைப் புகழற தகுதி நேக்கு வந்துடுத்துன்னு அர்த்தமாயிடுமா?
மகா வித்துவான் ஸரீாமான்..னு சொன்னா இந்த ராஜதானி பூராத் தெரியும். இவரோட பிரக்கியாதி சென்னைப் பட்டணம் என்ன, காசி வரைக்கும் பரவி இருந்தது...
இவர்கிட்டே படிச்சவாள், இந்தாத்துலே நேக்குக் கூடமாட வேலை செஞ்சவாள் எத்தனை பேர் கலெக்டராகவும் பெரிய பெரிய உத்தியோகத்திலேயும் இருக்கா தெரியுமோ?
நாமே பெத்து, நாமே வளத்து, நாயும் பூனையுமா நின்னிண்டிருந்தாத்தானா?
"இதோ, இப்பவும் சங்கர மடத்துத் திண்ணையிலே, எதிரே வரிசையாக் குழந்தைகளை உட்கார்த்தி வச்சுண்டு அவர் வித்தியாப்பியாசம் பண்ணி வச்சிண்டிருக்கார்... அவர் குரல் மட்டும் தனியா, ஒத்தையா, கனமா, நாபிலேருந்து கிளம்பி ஒலிக்கறதைக் கேக்கறச்சே, உடம்பெல்லாம் சிலிர்க்கறது. அப்புறம் இந்த வாண்டுப் 'படை' களெல்லாம் கூடச் சேர்ந்துண்டு முழங்கறதே... அந்தக் குழந்தைகள் அத்தனை சிரத்தையோட, பக்தியோட மெல்லீசுக் குரலிலே அவர் மாதிரியே சொல்லணும்னு பிரயாசைப் பட்டு, அந்தக் கனம் இல்லாம அந்த ஸ்தாயியை மட்டும் எட்டறதுக்கு வயத்தை எக்கிண்டு, மார்மேலே கையையும் கட்டிண்டு உச்சாடனம் பண்றாளே... அது வந்து காதிலே விழறச்சே, வயத்தை என்னமோ செய்யறதே, அது பெத்தவாளுக்கு மட்டுந்தான் வருமோ?..."
அவர்தான் சொல்லுவார்... 'குழந்தையைப் பெத்துக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லை; அதுக்கு வயத்தை அடைச்சு வளத்துடறதும் ஒண்ணும் பெரிய காரியமில்லை. அறிவையும் ஒழுக்கத்தையும் தந்து அவனை ஞானஸ்தனாக்கறதுதான் பெரிய காரியம். நாமெல்லாம் சாதாரணக் குழந்தைகளைப் பெத்தவாள்ங்கற பெயரைவிட இந்த மாதிரி ஞானஸ்தர்களை உற்பத்தி பண்ணினவாள்ங்கற பேருதான் சிரேஷ்டமானது...' இன்னும் என்னென்னமோ சொல்லுவார். நேக்கு எங்கே அதெல்லாம் திருப்பிச் சொல்ல வரது?... ஆனா, அது எவ்வளவு சத்தியம்னு மனசுக்குப் புரியறது.
இவர்ட்டே படிச்சுட்டு இப்போ பட்டணத்துலே ஏதோ காலேஜிலே ஸம்ஸ்கிருத புரபசரா இருக்கானே சீமாச்சு... இப்போ பண்டித ஸரீனிவாச ஸாஸ்திரிகள்னு பேராம்... கேக்கறச்சே என்னமா மனசுக்குக் குளிர்ச்சியா இருக்கு... பெத்தாத்தான் வருமோ... பெத்தவள் இங்கேதான் இருக்காள்... தன் பிள்ளை தன்னைச் சரியாகக் கவனிக்கலேன்னு காலத்துக்கும் சபிச்சிண்டு...
ஒண்ணொண்ணும் அவர் சொல்றச்சே, என்னமோ சமத்காரமா தர்க்கம் பண்ணிச் சாதிக்கற மாதிரித் தோணும். திடீர்னு, அன்னிக்கே அவர் எவ்வளவு சரியாச் சொன்னார்னு நெனச்சு நெனச்சு ஆச்சர்யப்படற மாதிரி ஒண்ணொண்ணும் நடக்கும்.
அன்னிக்குக் கோயிலுக்குப் போயிட்டு வரச்சே சீமாச்சுவோட அம்மா, ஒரு நாழி நிறுத்தி வச்சு, அந்தச் சீமாச்சு இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமே மாமியார் வீடே கதின்னு போய்ட்டதையும், அவனை வளக்கறதுக்கும் படிக்க வைக்கறதுக்கும் அவள் பட்ட கஷ்டத்தையெல்லாம் கொஞ்சங்கூட நன்றியில்லாமல் அவன் மறந்துட்டதையும் சொல்லிப் புலம்பிண்டு, அழுதுண்டு அவனைச் சபிச்சாளே... அப்போ நேக்குத் தோணித்து... இப்படிப் பெக்கவும் வேண்டாம், இப்படிச் சபிக்கவும் வேண்டாம்னு... ஏதோ அவள் மனசு சமாதானத்துக்காக நானும் தலையைத் தலையை ஆட்டிண்டிருந்தேனே ஒழிய, நேக்குப் புரிஞ்சது; இந்தக் கிழவி பொறாமையாலே கிடந்து எரிஞ்சுண்டிருக்காள்னு... கிழவிக்கு இங்கே ஒரு குறைச்சலும் இல்லே... நன்னா சௌக்கியமாத்தான் இருக்காள்... இருந்தாலும் தான் பெத்த பிள்ளையினாலெ மத்தவா இன்னும் சுகப்பட்டுடுவாளோங்கற ஆத்திரம், கிழவி மனசை அலக்கழிக்கறது... பாத்யதை கொண்டாடறவாளாலே எப்படிப் பாசம் கொண்டாட முடியறதே இல்லேன்னு---
எல்லாம் இவர் சொல்லித்தான் நேக்கும் புரியறது... இல்லேன்னா இந்தக் கிழவியோட சேந்துண்டு நானும் சீமாச்சுவை ஒரு பாட்டம் பாடிட்டுத்தானே வந்திருப்பேன்.
இவர் எல்லாத்தையும் எப்படித்தான் கறாரா, தீர்க்கமா அலசி அலசிப் பாத்துடறாரோ? தனக்கு அதனாலே நஷ்டமா லாபமானுகூட யோசிக்க மாட்டார். எத்தனை பேர் அதை ஒத்துக்கறா, எத்தனை பேர் ஒத்துக்கலேங்கறதெப் பத்தியும் கவலைப்பட மாட்டார். அவரோட சாஸ்திரத்துக்கு, தர்க்கத்துக்கு ஒத்துவராத ஒரு காரியத்தை லோகமே அவர் மேலே திணிச்சாலும், 'தூ'னு தள்ளி எறிஞ்சுடுவார் - அப்படி அதைத் தூர எறிஞ்சது எவ்வளவு நியாயம்னு, லோகத்தையே இழுத்து வச்சுண்டு வாதம் பண்ணவும் தயாரா இருப்பார். நானும் இத்தனை காலமா பாத்துண்டிருக்கேனே... ஒத்தராவது, 'அதென்னமோ, நீங்க சொல்றது சரியில்லை ஸ்வாமி'ன்னு சொல்லிண்டு போனதில்லை. அப்படிச் சொல்லிண்டு வருவா.
அவாளோடெல்லாம் திண்ணையிலே உக்காந்து இவர் பேசிண்டிருக்கறச்சே, நான் அவர் முதுகுக்குப் பின்னாலே அறையிலே உட்கார்ந்து கேட்டுண்டிருப்பேன். அவர் பேசறதிலே ரொம்ப விஷயங்கள் எனக்குப் புரியறதே இல்லை. அவர் என்னமா இங்கிலிஷ் பேசறார். நேக்குத் தெரிஞ்சு இருபது வயசுக்கு மேலே இவர் இங்கிலீஷ் படிச்சார். ஒத்தருக்கு ஸம்ஸ்கிருத பாடம் சொல்லிக் கொடுத்துண்டு - அவருக்கு இவரைவிட வயசு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் - அவர்கிட்டே இவர் இங்கிலீஷ் கத்துண்டார். இங்கேருந்து கும்பகோணத்துக்குப் போயிப் போயி என்னென்னமோ பரீட்சையெல்லாம் எழுதினார்.
இப்போ, இவர் எழுதின புஸ்தகங்களை அங்கெல்லாம் படிக்கிறவாளுக்குப் பாடமா வெச்சிருக்காளாம்.
பத்து வருஷத்துக்கு முன்னே காசியிலே ஏதோ மகாநாடுனு இவர் போறச்சே, நானும் கூடப் போனேன். இவருக்கு என்னென்னமோ பட்டம் எல்லாம் குடுத்தா... நேக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. நான் வெள்ளிக் குடத்து நிறைய கங்கா தீர்த்தம் எடுத்துண்டு வந்து, ஊர்லே இருக்கிறவாளுக்கெல்லாம் குடுத்தேன். நேக்கென்ன குறைச்சல்?
அப்போதான் காசிலேருந்து திரும்பி வரச்சே சென்னப் பட்டணத்துலே சீமாச்சு ஆத்திலே தங்கினோம். பட்டணத்துப் பெரிய ரயிலடிக்கு, சீமாச்சு மோட்டார் காரோட வந்திருக்கான். ரயிலடியிலேயே எங்களை நிறுத்தி வச்சு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிண்டான். சமுத்திரக் கரையை எல்லாம் சுத்திக் காட்டினான். சென்னப் பட்டணத்துலே மோட்டார் கார் இல்லாமே ஒண்ணும் முடியாதாம். அப்பவும் முன்னே மாதிரியே இவர்கிட்டே வந்து கையைக் கட்டிண்டு நின்னுண்டு ஏதேதோ சந்தேகமெல்லாம் கேட்டுண்டான். ஆனால், அவன் காலேஜீக்குப் போறச்சே அவனைப் பாக்கறதுக்கு நேக்கே பயமாயிருந்தது. துரை மாதிரி என்னென்னத்தையோ மாட்டிண்டிருக்கான். இவர் என்னடான்னா அதைப் பார்த்துட்டு 'ஓ'ன்னு சிரிக்கிறார்.
அதுக்கு அப்பறந்தான் ஒரு நாள் இந்தாத்துக்கு முன்னாடி ஒரு பெரிய கார் வந்து நின்றது. யார் யாரோ பெரிய மனுஷாள் - சீமாச்சு புரபசரா இருக்கானே அந்தக் காலேஜை சேர்ந்தவாளாம் - எல்லாம் வந்து - இந்தாத்துத் திண்ணையிலேதான் உட்கார்ந்துண்டா... சீமாச்சு மட்டும் சொந்தமா அடுக்களை வரைக்கும் வந்துட்டான். நான் அவன்ட்டே அடிக்கடி ஒரு நடை வந்து தாயாரைப் பார்த்துட்டுப் போகப்படாதோன்னு கேட்டேன்... 'எனக்கெங்கே முடியறது... என்னோட வந்துடுனு கூப்பிட்டாலும் வரமாட்டேங்கறாளே'ன்னு சொல்லி வருத்தப்பட்டுண்டான். அப்பறமா அவன் வந்திருக்கிற காரியத்தைச் சொன்னான்.
அவன் வேலை பாக்கற காலேஜிலே இவரை ஏதோ பெரிய உத்தியோகத்துலே வச்சுக்கறதுக்குத் தவம் கெடக்கறாளாம். ஆனால், இவரைக் கேக்கறதுக்குப் பயப்படறாளாம். 'நான் கேட்டு அவரைச் சம்மதிக்க வெக்கறேன்'னு தைரியம் குடுத்து இவன் அழைச்சிண்டு வந்திருக்கானாம்... இன்னும் என்னென்னமோ சொன்னான்... நேக்குக் கூட ரொம்ப ஆசையாத்தான் இருந்தது.
இவர் வந்ததும், எல்லாரும் திண்ணையிலே உக்காந்துண்டு பேசினா, பேசினா அப்பிடிப் பேசினா. நான் அறைக்குள்ளே உக்காந்து கேட்டுண்டே இருந்தேன். நேக்கு அவர் பேசினது ஒண்ணும் புரியலை. ஆனால், ஒண்ணு புரிஞ்சது... அவா ஜம்பம் இவாகிட்டே சாயலைன்னு...
கடைசியிலே அன்னிக்கு அவாள்ளாம் போனப்பறம் நானே கேட்டுட்டேன்:
"உங்களுக்கு இந்த உத்தியோகத்தெ ஒத்துண்டா என்ன? அங்கே படிக்கிறவாளும் மாணவர்கள்தானே?... உங்களுக்கு என்ன இப்படி ஒரு பிடிவாதம்? பாவம்! சீமாச்சு ரொம்ப ஆசை ஆசையா நம்பிக்கையோட வந்தான்!" - நான் சொன்னதெக் கேட்டு அவர் சிரித்தார்.
இவருக்கு இது ஒண்ணு. உடம்போடயே பொறந்தது அந்தச் சிரிப்பு. அதுவும் இந்தச் சிரிப்பு இருக்கே என்கிட்டே மாத்திரம்தான்.
சிரிச்சுண்டே சொன்னார்:
"சீமாச்சு கட்டிண்டு திரியறானே அந்த மாதிரி என்னை வேஷம் கட்டிப் பாக்கணும்னு நோக்கு ஆசையா இருக்காக்கும்... வித்தியாப்பியாசம் பண்ணி வெக்கறதுக்கு கூலி வாங்கப் படாதுங்கறது உனக்குத் தெரியாதா? ஆசிரியனுக்குக் கூலி கொடுத்துட்டப்பறம் மாணாக்கனுக்கு அவர் கிட்டே என்ன மரியாதை இருக்கும்? எப்படி மரியாதை இருக்கும்? இவன் கூலி வாங்கறவன் ஆயிடறானே... கூலி பத்தாதுன்னு கொடி புடுச்சிண்டு கொஷம் போட்டுண்டு - என்னைக் கொடி புடிக்கவும் கோஷம் போடவும் கூப்பிட மாட்டான்னாலும் - அந்தக் கும்பலுக்குத் தலைவரா வாங்கோம்பா... எனக்கு இதெல்லாம் ஆகிற காரியமா? நீயே சொல்லு"ன்னார்.
நான் என்னத்தைச் சொல்றது?... பேசாம அவர் பேசிண்டிருந்ததெ வாயை மூடிண்டு கேட்டுண்டு இருந்தேன்.
இவர் உடம்பிலே ஒரு சட்டையெப் போட்டுண்டு நிக்கற மாதிரி நெனச்சுப் பாக்கிறப்பவே நேக்குச் சிரிப்புச் சிரிப்பா வரது? அந்த நெனப்பே ஒரு பாந்தமில்லாம இருக்கே... நானும் அவரோட சிரிச்சிட்டு, அந்த விஷயத்தை அதோட விட்டுட்டேன்.
அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சிருந்தும் நான் போயி அவரைக் கேட்டதை நெனச்சித்தான் வெட்கப்பட்டேன். ஆனாலும், இந்த நாற்பது வருஷத்தில் அசடாவேதான் இருக்கேன்... புதுசு புதுசா ஏதாவது அசட்டுத்தனம் பண்ண வேண்டியது. அவர் சிரிக்க வேண்டியது - இப்படி ஒரு ஜன்மமாயிட்டேன்.
ஒரு பத்து நாளக்கி முன்னே பாருங்கோ... இப்படித்தான் - இவர்ட்டே படிக்கிற பையன் ஒருத்தன்... ஏதோ ஒரு சீட்டை எடுத்துண்டு வந்து, மாமி மாமி... இது கெவர்மண்ட் நடத்தற பரிசுச் சீட்டோ அதிர்ஷ்டச் சீட்டோ... என்னமோ சொல்லி, ஒரு ரூபாதான் வாங்கிக்கோங்க... கெடைக்கறதே கஷ்டம்... உங்களுக்காகச் சேத்து நான் வாங்கிண்டு வந்தேன்னு தந்தான்... நானும் அதெப் பத்தி ஒண்ணும் பிரமாதமா நெனச்சுக்காம, ஏதோ கொழந்தை நம்மை நெனச்சிண்டு அக்கறையோட வாங்கி வந்திருக்கேன்னு ஒரு ரூபாயைக் கொடுத்து வாங்கிட்டேன்.
அந்தக் கொழந்தை அதெப்பத்தி பெரிய பிரசங்கமே பண்ணினான்.... எத்தனையோ பேர் அதிலே பிரைஸ் வந்து லட்சாதிபதியா ஆயிட்டாளாம்... ஏழைகளுக்குத்தான் அதுவும் விழறதாம்... இன்னும் என்னென்னவோ சொன்னான்.... நான் சும்மா ஒரு வெளையாட்டுக்குத்தான் வாங்கினேன்... ஆனாக்க அன்னிக்கி சாயந்திரமே இவர் திண்ணையிலே உக்காந்துண்டு ஒரு அஞ்சாறு பேர்கிட்டே இந்தப் பரிசுச் சீட்டைக் கிழிச்சிக் கட்டிண்டிருந்தாரே பார்க்கலாம்.
அறையிலே உக்காந்து கேட்டுண்டு இருக்கறப்ப - என்னை அப்படியே செவுள்லே 'பளார் பளார்'னு பிடிச்சிண்டு அறையற மாதிரி இருந்தது.
அதுவும் அன்னிக்கி அவர் பேசறச்சே, அது சாதாரணமா எப்பவுமே பண்ணுவாரே அந்த மாதிரி நிதானமா வாதம் மாதிரி இல்லே. இந்த லோகத்தையே சபிக்கப் பொறப்பட்டவர் மாதிரி ஆவேசமா கத்தினார்.
என்னத்துக்கு இவருக்கு இதிலே இவ்வளவு கோபம்னு நேக்குப் புரியவே இல்லே.
"இந்த தேசத்திலே இது நடக்கலாமாங்காணும்... சூதாடி சூதாடட்டும். சோரம் போறவா சோரம் போகட்டும்... ராஜரீகம் பண்றவா, லோக பரிபாலனம் பண்றவா இதைச் செய்யலாமாங்காணும்... கலி முத்தி, நாம அழியப் போறொம்கறத்துக்கு இதாங்காணும் அத்தாட்சி. நெறி தவறாம ராஜபரிபாலனம் பண்ணின தருமன் எப்பிடி அழிஞ்சான்?... யோசிச்சுப் பாரும்... தருமனே சூதினாலேதானே அழிஞ்சான்.... சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது... சூதாட்டத்துக்கும் ஒரு தர்மம் இருக்கு, கேளும்.... சம அந்தஸ்திலே இருக்கிறவாதான் சூது ஆடலாம்... அதுவே பாவம்தான்... அந்தப் பாவத்துக்கும் ஓர் அத்து வெச்சிருக்கா... ராஜரீகம் பண்றவா, ராஜ்ய பரிபாலனம் செய்யறவா பாமர மக்களை எல்லாம் இப்படி மாயாஜாலம் பண்ணி சூது ஆடறாளே, இது அடுக்குமா? போச்சு... எல்லாம் போச்சு... இனிமே இந்த ஜன சமூகத்திலே எந்த விவஸ்தையும் இருக்காது... ஓய வறுமையினாலே அழியறதைவிட சூதினாலேதான் ஜன சமூகமே அழிஞ்சு போயிடும். திருவள்ளுவருக்குத் தெருத் தெருவா சிலை வெச்சு பிரதிஷ்டை பண்ணாப் போறுமா... அவர் சூதுன்னு பொருள்பால்லே ஓர் அதிகாரமே எழுதி வெச்சிருக்காரே..."ன்னு அந்தப் பத்துப்பாட்டையும் எடுத்தெடுத்துச் சொன்னார். அர்த்தம் சொன்னார்... மகாபாரதத்திலேருந்து ஸ்லோகங்கள் பாடினார். 'உருப்படமாட்டேள்... உருப்படமாட்டேள்'னு தலையிலே அடிச்சிண்டார்...
எனக்கு வயத்திலே புளி கரைக்க ஆரம்பிச்சுடுத்து... ஏண்டா, இந்தச் சனியனை ஒரு ரூபா குடுத்து வாங்கினோம்னு இருந்தது. ஆனாலும், என்னத்துக்கு இவர் இதுக்காகப் போயி இவ்வளவு ஆவேசம் காட்டறார்னும் புரியலை. இவர் சட்டை போட்டுக்கறதில்லே; லோகமே அதுக்காக இவர் மாதிரி சட்டையில்லாம, குடுமியும் வெச்சுண்டு, பஞ்சாங்கம் பாத்து க்ஷவரம் பண்ணிண்டு இருக்கணும்னு சொல்வாரோன்னு நான் பண்ணின காரியத்துக்கு வசதியாக மனசுக்குள்ளே, எதிர்வாதம் பண்ணிண்டேன்.
அந்தச் சீட்டை வாங்கி வச்சுண்டதனாலேயே இப்ப என்ன கெட்டுப் போயிட்டுதுன்னு சமாதானப்பட்டுண்டாலும், திடீர்னு நம்ம போறாத வேளை ஒரு நூறு ரூபா விழுந்து வெக்கறதுன்னு வெச்சுக்கோங்கோ... ஊரு பூரா இதுன்னா ஒரே அக்கப்போராயிடும்!...
அதுவும் இவர் இந்த மாதிரிப் பேசிண்டு இருக்கறச்சே... நான் வாங்கி அது பரசியமா ஆயிடுத்துன்னா, இவரோட நாணயத்தைன்னா, எல்லாரும் சந்தேகப்படுவான்னு நேக்கு மனசைக் கொழப்பிண்டே இருந்தது...
அந்தக் கொழந்தை - அவன்தான் சீட்டுக் குடுத்தவன் - சொல்லித்து. பத்திரிகைக்காரா எல்லாம் போட்டோ பிடிக்கறவனையும் அழைச்சிண்டு எந்தப் பட்டிக்காடா இருந்தாலும் தேடிண்டு வந்துடறாளாம்... சென்னப் பட்டணத்திலே இதுக்காகப் பெரிய திருவிழா நடத்தி, ரொம்பப் பெரிய பெரிய மனுஷாள் கையாலேதான் இதெத் த்ருவாளாம்...அட கஷ்ட காலமே!...
சரி, என்னமோ வாங்கிட்டேன்; இதெல்லாம் என்ன வீண் கற்பனைன்னு அவர்கிட்டே இது விஷயமா நான் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கலே...
வேணும்னே அன்னிக்கு அவருக்கு சாதம் போடறச்சே நானே பேச்சைக் கிளப்பினேன்...
"என்ன அது? என்னமோ பிரைஸ் சீட்டாம்... ஒரு ரூபா குடுத்து வாங்கினவாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கெடைக்கறதாம் - கெவர்மெண்டாரே நடத்தறதனாலே பொய், மோசடி ஒண்ணும் கெடையாதாம். நாணயமா நடக்கறதாம். பக்கத்தாத்துப் பொண்ணு பத்து ரூபாய்க்கு ஒரேயடியா வாங்கி இருக்காளாம். அது என்ன அது?..."ன்னு கேட்டு வெச்சேன்.
"அது நம்மாத்து அடுக்களை வரைக்கும் வந்தாச்சா? அது ராஜாங்கம் நடத்தற சூதாட்டம் - அவ்வளவுதான். வாந்தி பேதி மாதிரி ஜனங்களை வெரட்டி வெரட்டிப் புடிக்கறது இது. வாந்தி பேதி, வைசூரி வராம தடுக்கிற காரியத்தைச் செய்யற கெவர்மெண்டார் தான் இதையும் செய்யறா. அதனாலே அவாளுக்குப் பணம் கெடைக்கறதாம். ஏழைகள் லட்சாதிபதியாறாளாம்... எப்படியும் போகட்டும். நீயும் நானும் லட்சாதிபதியாகலேன்னா அழறோம்? நமக்கென்ன அதைப்பத்தி"ன்னார்.
"ஒரு லட்சத்தைக் கொண்டு வந்து உங்களண்ட கொடுத்தா, வேணாம்னு சொல்லிடுவேளா?"ன்னேன்.
இவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். எனக்கு அவமானமா இருந்தது... உடம்பு கூசித்து.
"நாற்பது வருஷம் என்னோடே வாழ்ந்த உனக்கா, இப்படி ஒரு சந்தேகம் வந்தது"ன்னு கேக்கற மாதிரி இருந்தது அந்தச் சிரிப்பு... நான் தலையைக் குனிஞ்சிண்டேன்.
"நீங்க வேணாம்னு சொல்லுவேள்; அது எனக்குத் தெரியும். ஏன் அப்படிச் சொல்லணும்னு கேக்கறேன்?... உங்க கொள்ளூப் பாட்டனாருக்கு மானியமா கெடச்ச இந்த வீட்டுக்கு, அந்த மேற்கு மூலையிலே மூணுவருஷமா சுவத்திலே விரிசல் கண்டு, மழை பேயறச்சே ஒரே தெப்பமா ஆறதே - அதெ சரி பண்றதுக்கு வழி இல்லாம இருக்கோமே - நமக்கும் பணம் அவசியமாத்தானே இருக்கு... எதுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை அலட்சியம் பண்ணணும்னு யோசிக்கிறேன். அது தப்பா?"ன்னு கேட்டேன்.
"ஓ! நீ பேசறதெப் பாத்தா உனக்கு அந்தச் சீட்டு வாங்க ஒரு ஆசை; அப்படித்தானே?"ன்னு கேட்டார்.
நான் பேசாம இருந்தேன்.
"அசடே... அசடே... ஆசைதான் மானத்துக்குச் சத்ரு. அதிலே பரிசு வராதுங்கறதினாலே நான் அது தப்புன்னு சொல்லலே. வந்தாலும் அது அதர்மமா வந்த, பலபேரை வயிறெரிய வச்சு சம்பாதிக்கிற பணம்னு சொல்றேன். தரும வழியில் சம்பாதிக்காம வர்ற செல்வம், பாப மூட்டைன்னா... நீ சொன்னயே எங்க கொள்ளுப் பாட்டனாரைப் பத்தி... அவாள்ளாம் உஞ்சவிருத்தி பண்ணித்தான் மகா மேதைகளா இருந்தா... நேக்கு நன்னா ஞாபகமிருக்கு... அப்பா, இதே சங்கர மடத்திலே பகலெல்லாம் வித்தியாப்பியாசம் பண்ணி வைப்பார்... சாயங்காலம் காலக்ஷேபம் பண்ணுவார். காலையிலே உஞ்சவிருத்திக்கிப் போவார்... மறுவேளைக்கு மீதி இல்லாம சேருகிற அளவுதான் அந்தப் பாத்திரம் இருக்கும். ஸ்லோகத்தெச் சொல்லிண்டு அவர் நடு வீதியிலேதான் நடப்பார்... வீட்டுக்குள்ளேயிருந்து அந்தாத்துக் கொழந்தை கையினாலே ஒரு பிடி அரிசி அளவா எடுத்துண்டு நடு வீதியிலே வந்து அவருக்கு பிக்ஷை தருவா... எதுக்குத் தெரியுமா கொழந்தையின் கையை அளவா வெச்சா... பெரியவா கை அளவானா நாலு வீட்டோட பாத்திரம் நெறைஞ்சி போயிடும்... மத்தவா வீட்டிலே வெச்சுண்டு காத்திருப்பாளே, அந்தப் பிக்ஷயைத் தடுத்த பாவம், அதிகமா போட்டவாளுக்கு வந்துடாதோ?... அதுக்காகத்தான். அந்த மாதிரிப் பாத்திரம் நெறைஞ்சப்புறமும் யாராவது கொண்டு வந்தா, அதெ வாங்க மாட்டார் - பிக்ஷை போட வந்தவா தலையிலே ரெண்டு அட்சதையை இவர் பாத்திரத்திலேருந்து போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு வருவார்... அந்த வம்சத்திலே வந்த புண்ணியம்தான் இந்த ஞானம் பிடிச்சிருக்கு. இதைவிட அதிர்ஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியலே... இந்த நிம்மதியை இந்த மனஸ் ஆரோக்கியத்தை எத்தனை லட்சம் தரும்?... சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்"னு அன்னிக்குப் பூரா, போய் வந்து போய் வந்து என்னண்ட பேசிக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் நடந்து பத்து நாளைக்கு மேலே ஆயிடுத்து... அந்தச் சீட்டுச் சமாசாரத்தையே நான் மறந்துட்டேன்...
நேத்து அந்தக் கொழந்தை - சீட்டு கொண்டு வந்து குடுத்தானே - ஒரு பேப்பரை எடுத்துண்டு வந்து 'பரிசு கெடைச்சவா நம்பரெல்லாம் வந்திருக்கு... உங்க சீட்டைக் கொண்டு வாங்கோ பார்க்கலாம்'னு உற்சாகமாக் கத்திண்டு ஓடி வந்தான். நல்ல வேளை! அந்தச் சமயம் அவர் ஆத்துலே இல்லை...
எனக்கு வயத்தை என்னமோ பண்ணித்து.
'ஈஸ்வரா, என்னைக் காட்டிக் குடுத்துடாதே'ன்னு வேண்டிண்டப்ப, ஒரு யுக்தி தோணித்து.
'அதெ எங்கே வெச்சேனோ காணோம்டா அப்பா'ன்னு அவனண்ட பொய் சொல்லிட்டேன்... அதிலே ஏதாவது நம்பர் வந்து தொலைஞ்சிருந்தா, ஊரே வந்து இங்கே கூடிடாதோ?'
அந்தக் கொழந்தெக்கு அப்பிடியே மொகம் வாடிப் போயிடுத்து.
கோவிச்சுக்கற மாதிரி பாத்துட்டு அந்தப் பேப்பரையும் போட்டுட்டுப் போயிட்டான்.
அவன் போனப்பறம் நான் அந்தப் பேப்பரை எடுத்துண்டு அறைக்குள்ளே போயி, தனியா வெச்சிண்டு பார்த்தேன்.
நேக்குப் படிக்கத் தெரியாதுன்னாலும் எண்கள் தெரியும். அந்த எண்களுக்கு முன்னாலே ஏதோ எழுத்துப் போட்டிருக்கு... அது என்னன்னு தெரியலை. ஆனா, அதே மாதிரி இந்தச் சீட்டிலே இருக்கான்னு தேடிப் பார்த்தேன்.
தெய்வமே! எடுத்தவுடனே மொதல் மொதல்லே அதே மாதிரி ரெண்டு எழுத்து... அப்பறம் அதே மாதிரி மூணு...ஏழு, சுன்னம்... ஒண்ணு... ஒண்ணு... ஆறு!...
அப்படீன்னா, ஒரு லட்ச ரூபாய் எனக்கே அதிர்ஷ்டம் அடிச்சிருக்கா?... ஐயையோ... இப்ப நான் என்ன செய்வேன்?
மத்தியானம் அவர் வந்தப்ப, சீட்டைக் கொண்டு போயி அவர் காலடியிலே வெச்சு ' என்னை மன்னிச்சுடுங்கோ'ன்னு அழுதேன்.
"நான் வெளையாட்டா அந்தக் கொழந்தை வற்புறுத்தினானேன்னு வாங்கிட்டேன். இதெப்பத்தி நீங்க இவ்வளவு கோவமா இருக்கேள்ன்னு அப்பறம்தான் தெரிஞ்சது... நமக்கு எங்கே விழப்போறதுன்னு அசட்டையா இருந்துட்டேன்... பிரைஸ் விழப்படாதுன்னு ஸ்வாமிய வேண்டிட்டேன்.... இப்போ இப்படி ஆயிடுத்தே... மன்னிச்சு இதையும் என்னையும் ஏத்துண்டே ஆகணும்"னு அழுதேன்.
அவர் அதே மாதிரி சிரிச்சார். சிரிச்சிண்டே என்னெத் தூக்கி நிறுத்தினார். முகத்திலே அந்தச் சிரிப்பு மாறாமலே சொன்னார்:
"அடியே!... நீ இப்ப லட்சாதிபதியாய்ட்டே... சபாஷ்...! இது நான் சம்பந்தப்படாம நீயே தேடிண்ட சம்பத்து. என்னத்துக்கு என் காலண்டை கொண்டு வந்து வச்சு இந்தப் பாவத்தை என் தலையில் கட்டப் பாக்கறே! நேக்கு லட்சம் வேண்டாம்னு சொன்னது வெளையாட்டுக்கு இல்லே. நெஜமாவே நேக்கு வேண்டாம். நேக்கு இருக்கற கவலையெல்லாம் முன்னே மாதிரி... இப்ப வர வர வேதாப்பியாசம் பண்றவா கொறைஞ்சிண்டு வராளேங்கறதுதான்... இன்னும் ஒரு பத்துப்பிள்ளைகள் இதுக்குக் கெடைச்சாப் போதும்... பணத்தாலே அவா வரப்படாது... பணத்துக்காகவும் வரப்படாது... இது உனக்குப் புரியாது. சரி, இது உன்னோட பிரச்னை. நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் - எல்லோரும் வந்த வழி அதுதான். லட்சாதிபதிக்கு புருஷனா இருக்கற அந்தஸ்து, கொணம் எதுவும் எனக்குக் கெடையாது..."ன்னு பேசிண்டே போனாரே அவர்.
"ஏன் இப்படி யெல்லாம் பிரிச்சுப் பிரிச்சுப் பேசறேள்?... இப்ப நான் இதுக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்கோ... நான் செய்யறேன்... நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்காதது; நடந்துடுத்து... இனிமே நான் என்ன செய்யணும்"னு அவரைத் திரும்ப திரும்ப நான் கேக்கறேன்...
கொஞ்சம்கூட மனசிலே பசை இல்லாம என்னைப் பார்த்து அவர் சிரிக்கிறார்.
கடைசிலே அவருக்குப் பாடசாலைக்குப் போக நேரமாயிடுத்தாம்... போகும்போது அதே மாதிரி சிரிச்சுண்டே சொல்லிட்டுப் போனார்:
"இந்த அதிர்ஷ்டச் சீட்டைப் பயன்படுத்திக்கறதுன்னு முடிவு பண்ணினா அது உன் இஷ்டம். நேராப் போயி படம் புடிச்சுண்டு பத்திரிகையிலே போட்டோ போட்டுண்டு ஜம்னு நீ வாழலாம்... நான் இன்னார் சகதர்மிணின்னு சொல்லிக்கப்படாது... ம், உன் திருப்திக்கு அந்தப் பொய்யைச் சொல்லிண்டு காலம் தள்ளிக்கோ. இல்லேன்னா 'இந்த மாயை வலையிலே நான் மாட்டிக்கலே; எனக்கு இது வேண்டாம்'னு அந்தத் தரித்திரச் சீட்டைக் கிழிச்சு எறி. ஆமாம் கிழிச்சு எறிஞ்சுடு. வேறே யார் கிட்டேயாவது குடுத்து அதுக்கு வட்டி வாங்கிண்டாலும் ஒண்ணுதான், நன்றியை வாங்கிண்டாலும் ஒண்ணுதான். சூது மனசுக்கு அதெல்லாம் தோணும். அதுக்கெல்லாம் பலியாகாம எந்த விதத்திலயும் அந்தச் சூதுக்கு ஆட்படாமே அதை கிழிச்சு எறிஞ்சுடு. இரண்டும் உன்னோட இஷ்டம். அது பாவமா, பாக்கியமான்னு முடிவு பண்ண வேண்டியது நீ; எனக்கு நாழியாறது!"ன்னு சொல்லிட்டுப் போயிண்டே இருக்காரே!
இதுக்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கோ. தெய்வமே! ஒரு லட்சம்! இந்த ஒரு லட்சத்தை, அதிர்ஷ்ட லட்சுமியை நிர்த்தாட்சணியமா கிழிச்சு எறியறதா? அவர் கையிலே குடுத்தா, கிழிச்சு எறிஞ்சுடுவார். அவர் மாதிரி ஞானிகளுக்கு அது சுலபம்.
நம்பளை மாதிரி அஞ்ஞானிகளுக்கு அது ஆகற காரியமா, சொல்லுங்கோ?
எத்தனை லட்சத்தையும் விட இவர் உசந்தவர்தான். நான் இல்லேங்கலே. அந்த லட்சத்தைக் கால்தூசா மதிக்கிறாரே இந்த மகா புருஷர். உஞ்சவிருத்தி பண்ணினார்னா இவருக்கு ஒரு குறையும் வந்துடாது. இப்பேர்ப்பட்டவரோட சம்சாரம் பண்ணினா, அந்த உஞ்சவிருத்தி வாழ்க்கையிலேயும் நேக்குப் பெருமை உண்டு.
பணம் பெரிசா, ஞானம் பெரிசாங்கிறதெல்லாம் நேக்குத் தெரியாது. ஆனால், பணம் - அது எவ்வளவு அதிகம்னாலும் எப்படி நிலையில்லையோ அதே மாதிரி மனுஷாளும் எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் வாழ்க்கை சாசுவதமில்லையே!
அப்படி நினைக்கிறதோ சொல்றதோ மகா பாவம். ஆனால் இந்தக் காலத்திலே எப்பேர்ப்பட்ட பதிவிரதையும் உடன்கட்டை ஏறிடுறதில்லையே! இவருக்கு அப்புறம் ஒருவேளை நான் இருக்க வேண்டி வந்ததுன்னா... சிவ! சிவா!...
உஞ்சவிருத்தி பண்றதிலே எனக்கென்ன பெருமை! எல்லோரும் பிச்சைக்காரின்னு சொல்லுவா. கட்டினவளைப் பிச்சைக்காரியா விட்டுட்டான்னு இந்த மகா ஞானியைப் பத்தியும் பேசுவா.
அவர் கிழிச்சு எறியலாம். நான் அதைச் செய்யலாமா? ஆனால், அவர் அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டார்.
நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன். கனக்கறது. இதுக்கு நான் என்ன செய்யட்டும் - சொல்லுங்கோ?
(எழுதப்பட்ட காலம்: 1967க்கும் 1969 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலம்)
நன்றி: இறந்த காலங்கள் (கதைத் தொகுப்பு), ஜெயகாந்தன்
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1 ஏழாம் பதிப்பு: ஜீலை 1995
கருத்துகள்
கருத்துரையிடுக