புதுமைப்பித்தன் கதைகள் - தொகுப்பு 3
சிறுகதைகள்
Back சிறுகதைகள் (தொகுப்பு-3)
புதுமைப்பித்தன் எழுதியது.
31. கலியாணி | 46. மகாமசானம் |
32. கனவுப் பெண் | 47. மனக்குகை ஓவியங்கள் |
33.. காஞ்சனை | 48. மன நிழல் |
34. கண்ணன் குழல் | 49. மோட்சம் |
35. கருச்சிதைவு | 50. 'நானே கொன்றேன்!' |
36. கட்டிலை விட்டிறங்காக் கதை | 51. நல்ல வேலைக்காரன் |
37. கட்டில் பேசுகிறது | 52. நம்பிக்கை |
38. கவந்தனும் காமனும் | 53. நன்மை பயக்குமெனின் |
39. கயிற்றரவு | 54. நாசகாரக் கும்பல் |
40. கொடுக்காப்புளி மரம் | 55. நிகும்பலை |
41. கொலைகாரன் கை | 56. நினைவுப் பாதை |
42. கொன்ற சிரிப்பு | 57. நிர்விகற்ப சமாதி |
43. குப்பனின் கனவு | 58. நிசமும் நினைப்பும் |
44. குற்றவாளி யார்? | 59. நியாயம் |
45. மாயவலை | 60. நியாயந்தான் |
31. கலியாணி
வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறுத்தவரை, இது வாணியின் கடைக்கண் பார்வை ஒரு சிறிதும் படாத இடம் என்று எனக்குத் தெரியும்.
வாணிதாஸபுரத்திற்குப் போகவேண்டுமானால், ஜில்லா போர்டு ரஸ்தாவைவிட்டு மாமரம் நிறைந்த வாய்க்கால் கரை மீது அரை பர்லாங்கு நடக்க வேண்டும். ரஸ்தாவின் கீழ்ப் பாரிசத்தில் ஊர். அதன் பக்கத்தில்தான், கிழக்கே பார்த்த சிவன் கோயிலில் தொடங்கி, பத்துப் பதினைந்து வீடுகள் உள்ள அக்ரகாரம். பிறகு ஊர்ப் பொட்டல். சற்று வட பாகமாகப் போகும் சந்து, பிள்ளைமார் சந்து. அதற்கப்புறம் மறவர்கள் தெரு. இவ்வளவையும் கடந்துவிட்டால், வேளாளர் தெருவின் தொடர்ச்சியான மறவர் தெருவின் கடைசிக்கு வந்துவிட்டால், வயலும் குளமும். குளம் தடாகமன்று, வெறும் மண் கரையிட்ட ஏரி. சுற்றிலும் கண்ணுக்கெட்டியவரை கழனிகள். வான வளையத்தைத் தொடும் மூலையில் பச்சை மரங்கள்.
வயல்களின் வழியாக இரண்டு மைல் நடந்தால் நதி. இரு கரையிலும் மருத மரமும் பனையும் கவிந்து நிற்கும். அதிலிருந்துதான் ஊரையொட்டிப் பாயும் வாய்க்கால் புறப்படுகிறது. வேனிற் காலத்தில் குளத்திலும், வாய்க்காலிலும் ஜலம் வற்றிவிடும். அப்பொழுது விடியற்காலையில் ஸ்நானம் செய்வதை இன்பமாகக் கருதுவோர்கள் வாணிதாஸபுரத்திற்கு வந்தால் இரண்டு மைல் நடையைத் துச்சமாகக் கருதுவார்கள்.
வாணிதாஸபுரம், வஞ்சனைச் சுழலிலும் தியாகப் பெருக்கிலும் செல்லும் நாகரிகத்தின் கறைகள் படியாதது. நாயக்கர்கள் காலத்தில் மானியமாகச் சிலருக்குக் கொடுக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அழியாத, மாறுதல் இல்லாத, நித்திய வஸ்துப் போல, பழைய பழகிய பாதைகளிலேயே அது ஓடிக்கொண்டிருக்கிறது.
கிராமவாசிகள் உயிர் வாழ்தலைப் பொறுத்தவரை வெளியூருக்குச் செல்லவேண்டிய அவசியம் கிடையாது. செல்வதுமில்லை. வேண்டியதெல்லாம் சாப்பாட்டிற்கும் துணிக்குந்தானே! உடையைப் பொருத்தவரை 'கும்பினியான்' துணி வியாபாரத்தில் அதிக நம்பிக்கை. கிராமவாசிகளுக்கு உலகம் எந்தத் திக்கில் செல்லுகிறது என்ற அறிவும் கிடையாது. அறிய ஆவலும் இல்லை. சனிக்கிழமைச் சந்தைக்கு இலை காய்கறிகளைத் திருநெல்வேலிக்குக் கொண்டு சென்று, விற்று முதல் செய்துவிட்டு, அன்று 12 மணி நேரத்தில் அரைகுறையாகக் கேட்டதை மறு சனிக்கிழமைவரை பேசிக்கொண்டிருப்பதில் திருப்தியடைந்து விடுவார்கள் அந்த மகாஜனங்கள்.
2
கோயில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி - இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட்சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங்குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம். மறவர்கள் ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைபிடித்தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது.
ஊருக்கு, கிராம முனிஸீப்பு சுந்தரம் பிள்ளை, பண்ணையார் ராமையாப் பிள்ளை, சுப்பிரமணிய பண்டாரம், சிவன் கோயில் அர்ச்சகர் சுப்புவையர் - இவர்கள் எல்லோரும் 'பெரிய' மனிதர்கள். எல்லோரும் ஏக மட்டம்; ஏனென்றால், தற்குறிப் பேர்வழிகள். அவர்களில் 'மெத்தப் படித்தவாள்' என்று கருதப்பட்டவரே பிரமரியை எட்டிப் பார்க்கவில்லை. எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள். தமிழ்ப் படிப்புத் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால் வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; 'படித்தவர்'களைப் போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்லர்.
அர்ச்சகர் சுப்புவையர் ஏறக்குறைய மெஜாரிட்டியைக் கடந்துவிட்டவர். குழந்தை குட்டி கிடையாது. தமது 45வது வயதில் 'மூத்தாளை' இழந்துவிட, இரண்டாவது விவாகம் செய்து கொண்டவர். இளையாள் வீட்டிற்கு வந்து சிறிது காலந்தான் ஆகிறது. அவள் சிறு குழந்தை. 16 அல்லது 17 வயதுள்ள கல்யாணி, சுப்புவையரின் கிரகத்தை மங்களகரமாக்கவே அவரது சமையற்காரியாகக் காலம் கழித்தாள்.
சுப்புவையர் மன்மதனல்லர். அதுவும் 50 வயதில் ஒருவரும் மன்மதனாக இருக்க முடியாது. விதிவிலக்காக ருசியான பக்ஷணங்களுடன் விருந்து சாப்பிடும் யாரும் வயிற்றை ஆலிலை போல் ஒட்டியிருக்கச் செய்ய முடியாது. நரைத்த குடுமியுடன், பஞ்சாங்கத்திற்கு ஒத்தபடி க்ஷவரம் செய்து கொள்வதாகச் சங்கற்பமும் செய்து கொண்டால் நிச்சயமாக எவரும் மன்மதனாக இருக்க முடியாது.
சுப்புவையர் சாதுப் பேர்வழி; கோயிலுண்டு, அவருண்டு. வேறு எந்த ஜோலியிலும் தலையிடுகிறதில்லை. வேளைக்கு வேளை நாவிற்கு ருசியாக உணவு கொடுத்து, தூங்கும்பொழுது கால் பிடித்துவிட்டு, தொந்தரவு செய்யாமலிருப்பதே மனைவியின் லட்சணம் என்று எண்ணுபவர். அதிலும் ஏறக்குறைய இருபது வருடங்களாகப் பழகி, திடீரென்று தன்னை விட்டுவிட்டு இறந்துபோன மூத்தாள் மீது அபாரப் பிரேமை. அவருக்கு அது பழக்கதோஷம். அவளைப் போல் இனி யார் வரப்போகிறார்கள் என்ற சித்தாந்தத்தில், கலியாணியின் பாலிய அழகும் சிச்ருஷையும் தெரியாது போய்விட்டன.
3
கலியாணி அவளும் ஏழைப் பெண்தான். உபாத்திமைத் தொழில் பார்த்துவந்த சாமிநாத கனபாடிகளின் மகள். அவ்வூரிலேயே பிறந்து, வெகுகாலமாக மாமாவென்றும் சித்தப்பாவென்றும் அழைத்துவந்த ஒருவரைக் கணவராகப் பெற்றவள். ஏழையாகப் பிறந்தால் அழகாகப் பிறக்கக் கூடாது என்ற விதியிருக்கிறதா? கலியாணியின் அழகு, ஆளை மயங்கியடிக்கும் மோக லாகிரியில் பிறந்த காமசொரூபம் அன்று. நினைவுகள் ஓடிமறையும் கண்கள், சோகம் கலந்த பார்வை! அவளது புன்னகை ஆளை மயக்காவிட்டாலும் ஆளை வசீகரிக்கும். அப்படி வசீகரிக்கப்படாதவன் மண் சிலைதான். சுப்புவையரும் அவர் வழிபடும் லிங்க வடிவத்திலிருக்கும் 'விரிசடைக் கடவுளின்' உருவச் சிலையின் ஹிருதயத் துடிதுடிப்பை ஏறக்குறையப் பெற்றிருந்தார்.
கலியாணி வாலைப் பருவத்தினள். அதிலும் இயற்கையின் பரிபூரண சக்தியும் சோபையும் கொந்தளிக்கும் நிலையிலுள்ளவள். எதற்கெடுத்தாலும் தன்னை மரக்கட்டையாகக் கருதி, இறந்த மூத்தாளின் பெருமையை நினைத்து உருகும் சுப்புவையரின் எண்ணங்களைத் தன் வசம் திருப்புவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவள்; அதாவது, உள்ளூர அவளறியாமலே இயற்கை அந்த வேலையில் அவளைத் தூண்டியது. அவர் வார்த்தைகள் அவளது வாலிப அழகின் முகத்திலடித்தன. அவரைக் கவர்ச்சிக்கக்கூடியபடியெல்லாம் தனது பெண்மைக் குணங்களைப் பயன்படுத்தினாள். சுப்புவையர் மசிகிற பேர்வழியாகத் தெரியவில்லை. கலியாணியும் ஒரு பெண்ணாயிற்றே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக்குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று சுப்புவையருக்கு.
அப்பொழுதுதான் சைத்ரிகரான சுந்தர சர்மா அங்கு வந்தார்.
அப்பொழுது முன்வேனிற்காலம். பனி நீங்கிவிட்டது. வாய்க்காலில் ஜலமும் வற்றிவிட்டது. பயிர்கள் அறுவடையை எதிர்பார்த்துத் தலைசாய்ந்து நின்றன. குளத்தில் நீர் வற்ற இன்னும் இரண்டு மூன்று மாதமாகும். ஊருக்குக் குடிதண்ணீர் குளத்திலிருந்துதான். ஆற்றிற்கு நடக்க முடியாதவர்களும், நடக்கப் பிரியமில்லாதவர்களும், குளத்திலேயே ஜலம் எடுத்துக் கொள்ளுவார்கள்.
சுந்தர சர்மா அக்ரகாரத்தில் ஒரு காலிக் குச்சு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு, சாப்பாட்டிற்குச் சுப்புவையர் வீட்டில் வாடிக்கை வைத்துக் கொண்டார். வரும்பொழுது அவர் மனம் களங்கமற்ற மத்தியான வானம் போல் இருந்தது. எப்பொழுதும் குளக்கரையிலோ அல்லது வாய்க்கால் கரையிலோ இருந்துகொண்டு, இரண்டு மூன்று மாட்டுக்காரப் பையன்கள் வேடிக்கை பார்க்கச் சித்திரம் தீட்டிக்கொண்டிருப்பது அவரது பொழுதுபோக்கு.
4
சில சமயங்களில் மத்தியானச் சாப்பாட்டிற்கு வர இரண்டு அல்லது மூன்று மணியாகிவிடும். சில சமயம் காலைச் சாப்பாடு இல்லாமலேயே சென்றுவிடுவார். வருவது எந்த நேரமென்பதில்லை.
கலியாணி அவரைத் தனது சகோதரன் போல் பாவித்துவந்தாள். ஆனால், உள்ளம் அவரைக் கண்டவுடன் பயத்தினால் சலிக்கும். அவர் வந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அவருக்குச் சாப்பாடு போடுவது என்றால் வியர்த்து விருவிருத்து முகஞ் சிவந்துவிடுவாள். காரணம் சர்மா வாணிதாஸபுரத்தினரைப் போல் அல்லாது, சற்று நாகரிகமாகவும் சுத்தமாகவும் உடையணிந்துகொள்வதுதான். ஆனால், அவரது கிராப்புத் தலை கழுத்து வரை வளர்ந்து மறைத்திருந்தாலும், எப்பொழுதும் சீர்குலைந்தே முகத்திலும் காதிலும் கிடக்கும். கறுத்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல எதையாவது நோக்கற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்.
சர்மா சைத்திரிகராக இருந்தும் கலியாணியைப் பார்க்காதது ஆச்சரியம் என்று நினைக்கலாம். கனவுகள் அழுத்தும் உள்ளத்தைக் கொண்ட அவர், சுப்புவையரின் இல்லத்தை மறைமுகமான ஹோட்டலாகக் கருதியதினால் சாப்பாடு முடிவது அவர் அறியாமலே நடந்து வந்தது. மேலும் சுப்புவையரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர் போனதன்று. காற்றும் ஒளியும் உள்ளே எட்டிப்பார்க்கக் கூடாது என்று சங்கற்பம் செய்துகொண்ட சுப்புவையரின் மூதாதைகளில் ஒருவரால் கட்டப்பட்டது. பகலில் இருட்டு, இரவில் குத்துவிளக்கின் மங்கலான இருட்டு.
சாதாரண காலத்திலேயே எதிரில் வருவது என்னவென்று உணர்கிற பழக்கமில்லாத சர்மாவுக்குப் புலப்படாமல், இவ்வளவு வெளிச்ச உதவியும் சுப்புவையரின் மனைவியை மறைத்துவிட்டது அதிசயமன்று. மேலும் கலியாணிக்கு அதிகமாக வெளியில் நடமாடும் பழக்கம் கிடையாது. அவள் பொந்துக்கிளி. மேலும் குளம் வாய்க்கால்களுக்குக் கருக்கலிலேயே போய் வந்துவிடுவாள். இதனால் சர்மா கலியாணியைத் தினம் சந்தித்தாலும் பார்த்தது கிடையாது. அவருக்கு, அவளைப் பொறுத்தவரை, உணவு பரிமாறும் கருவளையணிந்த கைகள் மட்டிலும் தெரியுமோ என்னவோ!
அன்று சுந்தர சர்மா வருவதற்குச் சாயங்காலமாகிவிட்டது. காலையிலேயே சென்றவர். மத்தியான போஜனத்திற்குக்கூடத் திரும்பவில்லை. வரும்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. வரும் வழியிலேயே குளத்தில் குளித்துவிட்டு நேராகத் தமது குச்சு வீட்டிற்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, சுப்புவையரின் வீட்டையடைந்தார். அன்று அவருக்குப் பசி.
5
சுப்புவையர் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்ததால் இவரைக் கண்டதும், "என்ன அய்யர்வாள் பகல்லே கூடச் சாப்பிடல்லை என்று சொன்னாளே; இப்படியிருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?... அடியே, சர்மா வந்திருக்கார், இலையைப் போடு! இன்னும் விளக்கை ஏன் ஏற்றிவைக்கவில்லை! நேக்குத் தெரியுமே! அவள் இருந்தா வீடு இப்படிக் கிடக்குமா? பகவான் செயல்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று, குத்துவிளக்கின் மேல் இருக்கும் மாடக் குழியில் தீப்பெட்டியைத் தேடினார்.
சமையல் உள்ளிலிருந்த கலியாணியும் கையில் அகல்விளக்குடன் வந்து குத்துவிளக்கை ஏற்றினாள்.
"என்னடி, விளக்கை ஏன் ஏற்றக் கூடாது? இவ்வளவு நேரமும் என்ன பண்ணினே?"
"ஏற்றினேனே! மங்கியிருக்கும் திரியைத் தூண்டாதிருந்துவிட்டதினால் அணைந்துவிட்டது. சாதத்தை வடிச்சுண்டிருந்தேன்!" என்றாள் கல்யாணி.
"சரி, சரி! எனக்குத் தெரியுமே! வீடும் வாசலும் கெடக்கிற கெடையைப் பார்த்தால் நன்னாயிருக்கு, பெருக்கிவிட்டுச் சீக்கிரம் இலையைப் போடு!" என்றார்.
கலியாணியின் முகம் சிவந்தது. அந்நியர்கள் முன்பாகவும் இம்மாதிரிப் பேசுகிறாரே என்று அவள் உள்ளங் கலங்கியது. 'அவர் என்ன நினைப்பார்!' என்ற நாணம், எல்லாம் சுறுக்குச் சுறுக்கென்று தைக்கும் வார்த்தைகள், இவை அவள் உள்ளத்தைக் குழப்பிவிட்டன. சரேலென்று உள்ளே சென்றுவிட்டாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.
"இன்று எங்கே போயிருந்தேள்?" என்றார் சுப்புவையர்.
"அணைக்கட்டுப் பக்கம் போயிருந்தேன். வேலை முடிவதற்கு நேரமாகிவிட்டது. மத்தியானம் வெய்யிலில் வருவானேன் என்று நினைத்தேன். நாளைக்கு அல்லது மறுநாளைக்குக் கொழுந்து மாமலைப் பக்கம் போகலாம் என்று நினைக்கிறேன். போவதை இப்பொழுதே சொல்லிவிட்டால் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லையல்லவா?" என்று சிரித்தார் சர்மா.
6
இதற்குள் கலியாணி கதவோரத்தில் நின்று கொண்டு, "என்ன செய்றேள்? சொம்பில் ஜலம் வைத்திருக்கிறேன்!" என்றாள்.
"இந்தாருங்கள், கால் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்!" என்று சர்மாவிடம் ஒரு செம்பு ஜலத்தைக் கொடுத்துவிட்டுத் தானும் கால் முகம் கழுவினார்.
இருவரும் உள்ளே சென்று குத்துவிளக்கின் முன்பு போடப்பட்டிருந்த இலைகளின் எதிரே உட்கார்ந்து கொண்டனர்.
அன்று இருவருக்கும் பரிமாறுவதென்றால் பிராணன் போவது போலிருந்தது.
முதலில் சுப்புவையருக்குச் சாதத்தைப் படைத்தாள். கை நடுங்கியதினால் சிறிது சிதறிவிட்டது.
"எனக்குத் தெரியுமே! இப்படிச் சிந்திச் சிதறினால் வாழ்ந்தாற் போல் தான்! பார்த்துப் போடக்கூடாதா? போதும், போதும்!" என்றார். பிறகு மனத்திற்குள்ளாகவே, "அவள் இருந்தால்... கர்ம பலன்!" என்று முனகிக் கொண்டார். இவ்வார்த்தைகள் கலியாணிக்குக் கேட்டன. ஏற்கனவே குழம்பிய மனம் மேலும் கலங்கிவிட்டது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின.
சர்மாவுக்குப் படைப்பதற்காகக் குனிந்தாள். பதற்றத்தில் தட்டிலிருந்த சாதம் முழுவதும் இலையில் கவிழ்ந்துவிட்டது. சர்மா, 'போதும்' என்று இடைமறித்தார். அவரது புறங்கை மீது ஒரு குவியல் மட்டும் தடைப்பட்டு நின்றது. 'போதும்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தட்டிக்கொண்டிருக்கும் பிரகிருதி அசடா அல்லது அதற்குக் குறும்பா என்று நோக்கினார். அவர் சற்று அண்ணாந்து பார்த்ததும் அவர் எதிர்பார்த்ததற்கு விபரீதமான காட்சி! பயம் - கூச்சத்திலும், குத்து வார்த்தைகளிலும் ஏற்பட்ட பயம் - என்பது முகத்தில் எழுதி ஒட்டியது போல் மிரண்ட பார்வை!
7
அவர் பார்த்ததும் அவளுக்கு இன்னும் மிரட்சி யதிகமாயிற்று. அந்தக் குழப்பத்தில் அவர்கள் கைகள் சந்தித்தன. அவள் கண்களில் ஆறுதலை எதிர்நோக்கும் குழந்தையின் வருத்தம்; அழுகை துடிதுடிக்கும் உதடுகள். ஒரு கணம் இருவரும் ஒரே பார்வையில் அசைவற்றிருந்தனர். மறுகணம் அவள் நிமிர்ந்து திரும்பிப் பாராது வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். சர்மாவின் உள்ளத்தில் அது ஒரு விலக்க முடியாத சித்திரமாகப் பதிந்தது.
மறுபடியும் கலியாணி எத்தனையோ தடவை வந்து பரிமாறினாள். ஆனால், ஒரு கணமாவது சர்மாவைப் பார்க்கவில்லை. ஆனால், சர்மா அவளது உள்ளத்தைத் துருவும் பார்வைகளைச் செலுத்தினார். அவை பாறைகளில் பட்ட கல்லைப் போல் பயனற்றுப் போயின. 'காரணம், காரணம்?' என்று அவர் உள்ளம் அடித்துக் கொண்டது. சாப்பிட்டுவிட்டுப் பேசாது நேரே தமது குச்சு வீட்டிற்குச் சென்று, தமது உள்ளத்துடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது உள்ளம் கலியாணியைத் தன்னுள் ஐக்கியமாக்கியது. அவள் அழகு சர்மாவின் சைத்ரிகக் கண்களுக்குப் பல நீண்ட காவியங்களாகத் தோன்றிற்று. அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை; தமது கனவுகளுடன் போராடிக்கொண்டிருந்தார்.
8
அன்று சாப்பாடு முடிந்தவுடன், சுப்புவையர், வெற்றிலைச் செல்லத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போடலாம் என்று பெட்டியைத் திறந்தார். வெற்றிலை பாக்கு எல்லாம் இருந்தன. ஆனால் சுண்ணாம்பு மட்டும் காய்ந்து காறைக் கட்டியாக இருந்தது. "ஜடம்!" என்று கூறிக் கொண்டே, "அடியே!" என்று உள்ளே தலையை நீட்டிக் கொண்டு கூப்பிட்டார். சமையல் உள்ளில் தனது மனத்துடன் போராடிக் கொண்டிருந்த கலியாணி, "என்ன?" என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள்.
"அட ஜடமே! உனக்கு எத்தனை நாள் சொல்லுவது - செல்லத்தில் எல்லாம் சரியாயிருக்கிறதாவென்று பார்த்து வை என்று? மூணாது இல்லையே! அர்த்த ராத்திரியிலே யார் கொடுப்பார்கள்? போய் ஒரு துளி ஜலம் எடுத்துண்டு வா! ஒன்னைக் கட்டிண்டு அழரதைவிட ஒரு உருவத்தைக் கட்டிண்டு மாரடிக்கலாம். தொலை, சீக்கிரம்." அவளும் போனாள். "குடியும் குடித்தனமும் - எல்லாம் சொல்ல வேண்டியதில்லை!" என்று வைதார்.
கலியாணி உள்ளே சென்று, ஒரு டம்ளரில் ஜலம் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவர் பாயையும் தலையணையையும் எடுத்து உதறிக் கூடத்தில் விரித்துவிட்டு, மறுபடியும் உள்ளே சென்று விட்டாள்.
அன்று பசி வேறா வரப்போகிறது! அவள் மனம் எங்கெல்லாமோ சுற்றியது. சர்மாவைப் பற்றி அடிக்கடி அவளையறியாமல் அவள் உள்ளம் நாடியது. ஆனால், தனது கணவர் அந்நியர் முன்பும் இப்படிப் பேசுகிறாரே என்ற வருத்தம். ஏங்கி ஏங்கி யழுதாள். அழுகையில் ஓர் ஆறுதல் இருந்தது போல் தெரிந்தது.
மறுபடியும் "அடியே!" என்ற சப்தம். "என்ன?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்றாள்.
"இன்னும் சாப்பிட்டு முடியவில்லையா? இந்தக் காலைப் பிடி! அப்பா! முருகா! சம்போ, சங்கரா!" என்று கொட்டாவிவிட்டுக் கொண்டே பாயில் படுத்துக் கொண்டார் சுப்புவையர்.
9
உட்கார்ந்து மெதுவாகக் காலைப் பிடித்துக் கொண்டேயிருந்தாள் கலியாணி. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவர் முழங்காலில் விழுந்தது.
"என்னடி, மேலெல்லாம் எச்சல் பண்ராய்? ஓரெழவும் தெரியல்லே, என்ன ஜன்மமடா?" என்றார்.
கலியாணி சற்று நேரம் மௌனமாக இருந்தாள். அவரிடம் ஒன்று கேட்கவேண்டுமென்று துணிச்சல் பிறந்தது.
"பாருங்கோ!" என்றாள்.
"உம், போதும் பிடித்தது!" என்றார் ஐயர்.
அவர் கையை மெதுவாக எடுத்துத் தன் மார்பின் மீது வைத்துக் கொண்டு, "அவாள் முன்னெல்லாம் என்னைப் பேசுகிறீர்களே! நான் என்ன செய்துவிட்டேன்?" என்று சிரிக்க முயன்றாள். கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவள் புன்னகை பரிதாபகரமாக இருந்தது.
"எதற்காக? உனக்குப் புத்தி வரத்தான்! என்ன சொல்லியும் ஒன்னும் உறைக்கவில்லையே! அவள் இருந்தாளே, ஒரு குறையுண்டா? எல்லாம் கணக்கா நடந்தது. கிரகலட்சுமி என்றால் அவள்தான். சொன்னால் போதுமா?"
"அவள், அவள் என்கிறீர்களே? நான் என்ன செய்துவிட்டேன்? இப்படித் திரும்பிப் பாருங்கோ! இப்படியிருக்கும்பொழுது சொன்னால் கேக்கமாட்டேனோ!"
"கையை விடு! எனக்குத் தூக்கம் வந்துடுத்து. என்னைப் படுத்தாதே!" என்று சொல்லிவிட்டுச் சுவர்ப்புறம் திரும்பிக் கொண்டு குறட்டை விடலானார்.
10
கலியாணிக்கு நெஞ்சில் சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது. தனது ஸ்பரிசம் சிறிதாவது அவரை மனிதனாக்கவில்லையே என்றதில் ஒரு ரோஷம், சிறிது கோபமும் கூட. அன்று முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அவள் உள்ளம் எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தது.
அன்று முழுவதும் கலியாணிக்குத் தூக்கம் எப்படி வரும்! தூரத்திலே, எங்கிருந்தோ ஒரு வெளிச்சம் தன்னை அழைப்பதுபோல் ஓர் உணர்வு. அது தன்னை வாழ்விக்குமோ அல்லது தகித்துவிடுமோ என்ற பயம் அவளைத் தின்றுகொண்டிருந்தது.
கணவர் தன்னிடம் என்ன குறை கண்டார்? ஏன் இப்படி உதாசீனமாக இருக்க வேண்டும்? அதற்குக் காரணம் தனது குறையா அல்லது அவரது... அவருக்குக் குறை எப்படிச் சொல்ல முடியும்?
இப்படியே அவள் அன்று முழுதும் தூங்கவில்லை. பாயில் படுத்து புரண்டுகொண்டிருந்தாள். சற்று ஒரு புறமாகப் புரண்ட சுப்புவையர் பிரக்ஞையில்லாது கையைத் தூக்கிப் போட்டார். அது அவள் மார்பில் அம்மிக் குழவி மாதிரிப் பொத்தென்று விழுந்தது. மயக்கம் கலைந்தது. பயம்! பிறகு புருஷனின் கைதான் என்ற உணர்ச்சி. அதில் ஒரு சாந்தி பிறந்தது. அந்தப் போதையில் அவளுக்குக் கண் கிறங்கியது. தூங்கிவிட்டாள். நடைமுறை உலகத்தில் இல்லாவிட்டாலும், கனவு உலகத்திலாவது கணவன் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருப்பது போல் அன்று அவளுக்குத் தோன்றியது.
காலையில் கலியாணி எழுந்திருக்கும்பொழுது என்றும் இல்லாதபடி வெகுநேரமாகிவிட்டது. எழுந்ததும் குடத்தை எடுத்துக் கொண்டு நேராகக் குளக்கரைக்குச் சென்றாள்.
11
அன்று இரவு முழுவதும் சுந்தர சர்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை என்றால் வியப்பில்லை. இத்தனை நாட்களும் தமது மனத்திரையை விலக்கி அவளைப் பார்க்காததற்கு ஆச்சரியப்பட்டார். அந்த ஆச்சரியம் அவரை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு சென்றது. அவரோ சைத்ரிகர் - அழகுத் தெய்வத்தின் அடிமை! கலியாணியின் சோகம் தேங்கிய கண்கள் அவருக்குக் கற்பனைக் கதையாக, காவியமாகத் தெரிந்தது. அன்று இரவு முழுவதும் உள்ளம் கட்டுக் கடங்காமல் கொந்தளித்தது.
சுப்புவையர், பாவம், அது ஒரு பிரகிருதி. அவர் வசம் கலியாணி பிணிக்கப்பட்டால் விதியின் அற்பத்தனமான லீலைகளை உடைத்தெறிய ஏன் மனம் வராது? அவரை மனிதனாகவே சர்மா நினைக்கவில்லை. அவரது சிறையிலிருந்து அவளை விடுவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதில் கலியாணியின் சம்மதம் - அதைப் பற்றிக் கூட அவருக்கு அதிகக் கவலையில்லை.
அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டால்... வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும்! இலட்சியத்திற்கு அவள் எவ்வளவு பெரும் ஊக்கமாக இருப்பாள். மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப்பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில் வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன?
அன்று முழுவதும் அவர் உள்ளத்தில் ஓடிய எண்ணங்கள் ஒரு நிரந்தரப் பைத்தியக்காரனுடைய உள்ளத்தையும் தோற்கடித்துவிடும். இரவு முழுவதும் விளக்கு அணைக்கப்படவில்லை. மூலையில் சன்னலை யொட்டியிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு விளக்கையே கவனித்துக் கொண்டிருந்தார். விளக்கின் சிமினி கரிபிடித்து மேலே புகையடைந்து வெளிச்சத்தை அமுக்கியது. இரண்டு நிமிஷம் விளக்கு 'பக் பக்' என்று குதித்தது. அவ்வளவுதான், அதுவும் அணைந்துவிட்டது.
அறை முழுவதும் இருட்டு. உள்ளே உட்கார்ந்திருக்க முடியவில்லை. மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே சென்றார் விடிந்துவிட்டது. ஆனால் நட்சத்திரங்கள் மறையவில்லை. கிழக்கே சற்று வெளுப்பு - வெள்ளைக் கீறல் மாதிரி.
12
சர்மாவுக்குக் காலையில் நடப்பது மனத்திற்கு நிம்மதியாக விருந்தது. அவர் வாய்க்கால் கரை வழியாகவே நடந்து கொண்டிருந்தார். சற்றுத் தூரம் சென்றவுடன் வயல் வரப்புகளின் மீது நடக்க ஆரம்பித்தார். தேகந்தான் ஏதோ யந்திரம் மாதிரி நடந்து கொண்டிருந்தது. மனம் மட்டும் தங்குதடையின்றிக் கலியாணியின் பின் சென்று விட்டது. "கலியாணியை அழைத்துச் சென்றுவிட்டால்? அதற்கு இசைவாளா? அதற்கு என்ன சந்தேகம்? பிறகு எங்கு போவது? எங்கு போனால் என்ன மனிதன் இருக்கும் இடத்தைத் தவிர...?"
சூரியோதயமாகிவிட்டது. முகத்திற்கு நேரே வெய்யில் விழுந்து கண்கூச ஆரம்பித்ததும், சர்மாவுக்கு 'வெகுதூரம் வந்துவிட்டோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடனே திரும்பி, குளத்தில் குளித்து விட்டுப் போவதென்று அப்பக்கமாகத் திரும்பி நடந்தார்.
வெய்யிலின் சூடு நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகமாகிறது. முதுகு பொசுக்கப்படுவது போல் காலை வெய்யில் தகிக்கிறது.
அப்பா!
குளக்கரை வந்துவிட்டது. குனிந்துகொண்டு மேட்டில் ஏறி, கரையின் மீது வளர்ந்திருந்த மரத்தடியில் நின்று முகத்தைத் துடைத்துக் கொண்டார். இரண்டு மூன்று வினாடிகளில் கண் கூச்சம் விலகியது. குளத்தில் யாருமில்லை.
யாருமில்லையா?
13
மரத்தின் மறைவில் ஜலத்தில் நின்று கொண்டு கலியாணி தனது ஈரப்புடவையைப் பிழிந்து உடுத்திக் கொண்டிருந்தாள். ஈரம் சொட்டும் கூந்தல் முதுகை மறைத்தது. கன்னத்திலும் தோளிலும் குளக்கரையில் நன்றாக விளக்கிவைத்திருந்த குடத்திலும் கிளைகளின் ஊடே பாய்ந்த சூரியவொளி பிரதிபலித்து மின்னியது. "அப்பா! வர்ணப் பெட்டியும் படம் எழுதும் திரைச் சீலையும் எடுத்து வரவில்லையே!" என்று நினைத்தார் சர்மா. கலியாணிக்கு அவர் இருப்பது தெரியாது. தனிமை என்ற மன மறைவில் தனது ஈரப்புடவைகளை எடுத்து உதறிக் கொசுவி உடுத்திக் கொண்டாள். ஈரப்புடவையில் நின்ற அந்த அழகு அவருக்கு மஜும்தாரின் சித்திரத்தை நினைவூட்டியது. குனிந்து குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கலியாணி கரையேறுவதற்குத் திரும்பினாள். அவள் முன்பு சர்மா வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துவிட்டாள். முகம் முழுவதும் சிவந்துவிட்டது. கண்கள் மிரண்டு அவரையே வெறித்து நோக்கின.
போவது என்றால் அவரைக் கடந்து போகவேண்டும். மனம் குழம்பியது. என்ன செய்வது? என்ன செய்வது? வெட்கம் தலை குனியச் செய்துவிட்டது.
சர்மாவுக்கு அவளிடம் பேசவேண்டுமென்ற ஆசை. எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது?
"நான் இன்று கொழுந்து மாமலைப் பக்கம் போகிறேன். நேற்றுப் போல் இன்றைக்கும் பட்டினியாக இருந்துவிடாதீர்கள்? நான் வராவிட்டால் பட்டினி இருப்பதாவது? அதென்ன பைத்தியக்காரத்தனம்?" என்று சிரித்தார். அவர்கள் உள்ளம் இருந்த நிலையில், இம்மாதிரியான பேச்சு, அபாயகரமான துறைகளிலிருந்து விலகி நிம்மதி அளிப்பது போல ஒரு பிரமையை உண்டு பண்ணியது.
கலியாணிக்கு இவ்வார்த்தைகள் கொஞ்சம் தைரியத்தையளித்தன. அவரிடம் பேசுவதற்கு மனம் ஆவல்கொண்டது. உள்ளத்தின் நிம்மதி கன்னத்தின் சிவப்பைச் சிறிது குறைத்தது.
"ஆண் பிள்ளைகள் சாப்பிடுமுன் கொட்டிக் கொண்டு, அவாளுக்குக் கல்லையும் மண்ணையுமா போடுவது? இப்பவே போரேளா? காலையிலே ஏதாவது சாப்பிட வேண்டாமா? அங்கு சாப்பாட்டிற்கு..." என்றாள்.
"இப்பொழுது சாப்பிட வருகிறேன். மத்தியானத்திற்கு என்ன? அதை நான் பார்த்துக்கொள்ளுவேன். ஏது இவ்வளவு நேரம்? எப்பொழுதும் அருணோதயத்தில் ஸ்நானம் ஆகிவிடுமே?" என்றார்.
அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் முகம் மறுபடியும் சிவந்தது. இரவு பட்ட வேதனையும் ஓடிய எண்ணங்களும் மறுபடியும் அவள் மனத்தில் தோன்ற ஆரம்பித்தன.
14
அவரைப் பரிதாபகரமாகப் பார்த்துவிட்டுக் கரையேறி, வீட்டை நோக்கி நடந்தாள். அவரைத் தாண்டிச் செல்லும்பொழுது அவள் ஈரப்புடவை அவர் மீது பட்டது. சர்மாவுக்கு அவளை அப்படியே பிடித்து ஆலிங்கனம் செய்யக் கரங்கள் துடித்தன. ஆனால், தமது கனவுக்கோட்டை இடிந்து பாழாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயந்தான் அவரைத் தடுத்தது.
சர்மா குளித்துவிட்டு நேராகக் கலியாணியின் வீட்டையடைந்தார். அப்பொழுது சுப்புவையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் கலியாணியைத் தவிர வேறு ஒருவருமில்லை.
இவ்வரவை எதிர்பார்த்திருந்த கலியாணி, இலையைப் போட்டுச் சுடுசாதம் எடுத்து வைத்தாள்.
"என்ன! ஏது, இதற்குள் சமையலாகிவிட்டது? ஏன் இவ்வளவு அவசரம்!" என்றார் சர்மா. அவருக்குச் சாப்பாடு செல்லாததற்குக் காரணம் பசியின்மையன்று.
"இன்னும் கொஞ்சம் குழம்பு போட்டுச் சாப்பிடுங்கள்" என்றாள் கலியாணி. அன்று அவளுக்கு வாய்ப்பூட்டுத் திறக்கப்பட்ட மாதிரி இருந்தது. அவரிடம் பேசுவதில் ஓர் ஆறுதல்.
"காலையில் சுடுசாதம் சாப்பிட முடியுமா?...அவர் எங்கே? கோவிலுக்குப் போயிருக்கிறாரா? எப்பொழுது வருவார்?...கொஞ்சமாகப் போடுங்கள், போதும்!" என்றார்.
15
சாப்பாடு முடிந்தது. கை கழுவ ஜலம் வெளியில் வைக்கப்படவில்லை. பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்ற கலியாணி வரச் சிறிது தாமதாயிற்று. சர்மா பின்புறம் சென்று கை கழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கமிருந்த தாழ்வாரத்தின் பக்கம் வந்தார்.
"ஐயோ! ஜலம் வைக்க மறந்துவிட்டேனா! இந்தாருங்கள், இதை மத்தியானத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள்!" என்று ஒரு சிறு பொட்டலத்தைக் கையில் கொடுத்தாள்.
"இதென்ன? எனக்கு ஒன்றும் வேண்டாம் என்றேனே!" என்றார்.
"தோசை! கொஞ்சந்தான் வைத்திருக்கிறேன். மத்தியானம் பூராவும் பட்டினியிருக்கவாவது?" என்றாள் கலியாணி.
அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுவது போல் அவளுடைய கண்கள் அவரை நோக்கின.
சர்மா, "கலியாணி!" என்று கம்மிய குரலில் அவளையழைத்துவிட்டு, அப்படியே இழுத்து ஆலிங்கனம் செய்து அதரத்தில் முத்தமிட்டார். கலியாணியும், கட்டுண்ட சர்ப்பம்போல் தன்னையறியாது கொந்தளித்த உள்ளத்தின் எதிரொலிக்குச் சிறிது செவிசாய்த்துவிட்டாள். பிரக்ஞை வந்தது போல் நடைமுறைச் சம்பிரதாயங்கள் அவளைத் தாக்கின.
தனது வலிமையற்ற கைகளால் பலமுள்ளவரை அவரை நெட்டித் தள்ளிவிட்டு, முகத்தைத் திருப்பி, "என்னை விட்டுவிடுங்கள்!" என்று பதறினாள்.
16
சர்மா தமது கைகளை நெகிழ்த்தினார். கலியாணி விலகி நின்று கொண்டு, "என்ன போங்கள்!" என்று அவரைத் தண்டிப்பது போல் நோக்கினாள்.
சர்மா, "கலியாணி, நான் சொல்வதைக் கேள்!" என்று மறுபடியும் நெருங்கினார். கலியாணி சமையலறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்து விம்மி விம்மி அழும் குரல் கேட்டது.
"கலியாணி! கலியாணி!"
பதில் இல்லை.
சர்மாவும் கலங்கிய உள்ளத்துடன் வெளியே சென்றார். கொழுந்து மாமலைக்குச் செல்வது அவருக்கு நிம்மதியை யளிக்கலாம்.
கலியாணிக்கு அன்று முழுவதும் மனம் ஒன்றிலும் ஓடவில்லை. முதலில் பயம், தவறு என்ற நினைப்பில் பிறந்த பயம். ஆனால் சர்மாவின் ஸ்பரிசம் அவள் தேகத்தில் இருந்து கொண்டிருப்பது போன்ற நினைவு சுகமாயிருந்தது. அவள் உள்ளத்தின் ரகசியத்தில் சர்மாவின் ஆசைகள் எதிரொலித்தன.
அன்று முழுவதும் அவளுக்கு ஓரிடத்திலும் இருப்புக் கொள்ளவில்லை. சுப்புவையர் மத்தியானம் வந்தார். அவருடைய இயற்கைப் பிரலாபத்துடன் போஜனத்தை முடித்துக் கொண்டு நித்திரை செய்ய ஆரம்பித்தார்.
17
கலியாணிக்கு அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பரிதாபமாக இருந்தது. தன்னை 'மூத்தாளைப் போல்' இருக்கவில்லை என்று வைதாலும், தன் மீது ஓர் அந்தரங்கமாக நம்பிக்கை வைத்திருப்பதால் அதை மோட்சம் செய்வதா என்று எண்ணினாள்.
கலியாணிக்கு இரண்டையும் ஏக காலத்தில் பிரிய மனமில்லை. வீடு, பேச்சு, சம்பிரதாயம் இதையெல்லாம் உடைக்க மனம் வரவில்லை. சுப்புவையரை ஏமாற்றவும் மனம் துணியவில்லை. இருளில் வழி தெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு அதை நோக்கிச் செல்லுவது போல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று கலங்கிய உள்ளத்திற்குச் சாந்தியை நாடினாள். கோவில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்று விட்டதாகத் தெரியவில்லை. மூலஸ்தானத்தின் மங்கிய தீபவொளியில் லிங்கம் தெரிவது போல் சர்மாவின் முகம் தான் அவள் அகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அன்று இரவு கலியாணி சுப்புவையர் பக்கத்தில் உட்கார்ந்து கால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதிகாலையில் எழுந்து ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வருவதற்கு அனுமதி கேட்டாள். காரணம், சர்மாவின் மீது ஆசையிருந்தாலும் அவரைச் சந்திக்காதிருக்க வேண்டுமென்ற நினைப்பு.
"விடியக் காலத்தில் ஏன் நதிக்கு...?" என்றார் சுப்புவையர்.
"குளத்தில் ஜலம் வற்றி நாற்றமெடுக்கிறதே என்று யோசித்தேன்!" என்றாள்.
"சரி, சரி, போய்ட்டு வாயேன்; அதுக்கென்ன கேள்வி வேண்டியிருக்கு? நேக்குத் தூக்கம் வருகிறது, சும்மா தொந்தரவு செய்யாதே!" என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.
கலியாணிக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. சர்மாவை நினைக்கும்பொழுதெல்லாம் ஒரு மகிழ்ச்சி, அவர் மறுபடியும் தன்னைத் தழுவமாட்டாரா என்ற ஆசை. இப்படியே தன் பொருளற்ற கனவுகளிடையே அவள் தூங்கினாள்.
கொழுந்து மாமலைக்குச் சென்ற சர்மாவுக்கு வேலை ஓடவில்லை. அன்று முழுவதும், கலியாணி என்ன நினைப்பாளோ, அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது என்பதே யோசனை. அன்று இரவு முழுவதும் காட்டிலேயே இருந்துவிட்டார். அப்பொழுதும் சாந்தி பிறக்கவில்லை. அதிகாலையில் சென்று சாமானை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டே போய்விடுவது என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்.
கொழுந்து மாமலை ஆற்றுக்கு அக்கரையில் இருந்தது. ஊருக்கு வரவேண்டுமானால் ஆற்றைக் கடந்துதான் வர வேண்டும். மணி மூன்று இருக்கும்பொழுது ஆற்றங்கரையை யடைந்தார். மனத்தில் சாந்தி பிறக்கவில்லை. உள்ளம் பேய் போலச் சாடியது.
18
இன்னும் நன்றாக விடியவில்லை. ஆற்றில் யாரோ துணி துவைப்பது போலச் சப்தம். இவ்வளவு அதிகாலையில் அங்கு யார் வர முடியும்?
"யாரது?" என்றார்.
"யாரது?" என்ற பதில் கேள்வி பிறந்தது.
குனிந்து துவைத்துக் கொண்டிருந்த உருவம் நின்றது. ஒரு பெண் - கலியாணி!
"கலியாணி! நீயா இங்கு!... இந்த நேரத்தில்! பயப்படாதே! நான் தான் சர்மா!"
"நீங்களா!"
அவள் சொல்லி முடியுமுன் சர்மா அவளை அப்படியே தழுவிக் கொண்டார். அவள் விலக முயன்றாள். இருவரும் தடுமாறிப் பாதி ஜலத்திலும் பாதி மணலிலும் விழுந்தனர். கலியாணியின் முகத்திலும் அதரத்திலும் மாறி மாறி முத்தமிட்டார். கலியாணி தடுக்கவில்லை. அவருடைய போக்கிற்கெல்லாம் தடை செய்யவில்லை.
சற்று நேரம் கழிந்தது.
"கலியாணி!"
"என்ன?"
"என்னுடன் வந்துவிடு! இந்த மனித நாற்றமே அற்றவிடத்திற்குச் சென்றுவிடுவோம்!"
"ஐயோடி! அது முடியாது!"
அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவளது மிரண்ட பார்வை மின்னியது.
"பிறகு...?"
"எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லுகிற மாதிரி... அதற்குப் பயமாக இருக்கிறது!"
சர்மாவுக்கு உலகம் அர்த்தமற்ற கேலிக்கூத்துப் போலும், அசட்டுத் தனம் போலும் பட்டது.
"கலியாணி, நான் போகிறேன்!" என்றார்.
"எங்கே? போகவேண்டாம்! இங்கேயே இருந்துவிடுங்கள்!"
"சீ! அது முடியாத காரியம். என்னுடன் வா!" என்று கையைப் பிடித்தார்.
"முடியாது!"
மறுபடியும் அக்கரைப் பக்கம் ஒரு மனித உருவம் சென்று இருளில் மறைந்தது.
கலியாணியின் வாழ்க்கை - அலையில் ஒரு குமிழி உடைந்து போயிற்று.
(முற்றும்)
ஊழியன், 15-02-1935
--------------
32. கனவுப் பெண்
1
ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது.
இந்து - சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி...
அதெல்லாம் பழைய கதை, மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக்கும் என்று கண்டானா?
சோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள்.
அகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் உச்சியில் முன்னங்கால்களை உயரத் தூக்கிக் கொண்டு, வாயைப் பிளந்தவண்ணம், பாயும் நிலையில் வார்த்த ஒரு வெண்கலப் புலி. முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. அதன் கண்களுக்கு இரண்டு பெரிய இரத்தினங்கள்! சூரியனுடைய கிரணங்கள், அதன் மிடுக்கை - சாம்ராஜ்யத்தின் மனப்பான்மையை - தன்னையே வென்று கிழிக்க முயலுவதைப்போல் நிற்கும் புலியை - அந்தச் சிற்பியின் கைவன்மையை - எடுத்துக் காட்டின.
ஸ்தம்பத்தின் அடியில் குறுகிய கவசம் அணிந்து, கச்சையைப் போல் வேஷ்டியை இறுக்கிக் கட்டிய மறவர்கள் கையில் எறி - ஈட்டிகளை ஏந்தியவண்ணம் கல்லாய்ச் சமைந்தவர் போல் காத்து நிற்கிறார்கள்.
சற்று உள்ளே ராஜமாளிகை, கல்லில் சமைந்து, தமிழனின் மிடுக்கை, தமிழனின் வீரத்தை, தமிழனின் இலட்சியத்தை ஒருங்கே எடுத்துக் காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ஏகாதிபத்தியச் செருக்கு. சாம்ராஜ்யத்தின் ஹ்ருதயமின்மை அழகுருவத்தில் மனிதனை மலைக்க வைக்கிறது. மிருகத்தன்மை - அதற்கு வீரம் என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் - அழகுடன் கைகோத்து உலாவுகிறது.
உள்ளிருந்து சங்கமும் முரசும் ஏகமாக முழங்குகின்றன.
2
"ராஜ ராஜ அரிகேசரி வர்மன் பராக்...!"
இன்னும் எத்தனையோ முழ நீளம் முடிவில்லாமல் செல்லுகிறது அவன் பெயர்!
முன்பு சிற்றரசர்கள், தானாதிபதிகள், தளகர்த்தர்கள் யாவரும் படிப்படியாக முறை முறை வந்து வழிபட்டு விலகி நின்று அடிபணிகிறார்கள்.
எங்கிருந்தோ மங்கள வாத்தியம் முழங்குகிறது.
உள்ளிருந்து ஒரு யௌவன புருஷன் - ஆணின் இலட்சியம் - வருகிறான். நெஞ்சிலே வைரங்கள் பதித்த குறுகிய கவசம் - மத்தியில் ரத்தினங்களில் புலி - காலில் வீரக் கழல், சிரத்திலே மரகதக் கிரீடம். இடையில் ஒரு சுரிகை.
அகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரக் கண்கள். புருவத்தின் அழகை எடுத்துக்காட்டுவது போன்ற நெற்றி. அகன்ற நெற்றியிலிட்டிருக்கும் கருஞ்சாந்தின் அழகை மங்க வைத்து எடுத்துக்காட்டும் அந்தக் கண்களில் கனிவு, சிற்சில சமயம் மிடுக்கு.
மெதுவாக அசைந்தசைந்து உலகம் பெயர்வது போல் நிகரற்ற நடை. பக்கத்தில் வரும் ஒருவனுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு வருகிறான்.
இருவரையும் பக்கத்தில் பக்கத்தில் பார்ப்பதிலே மனித இலட்சியங்கள் இரண்டையும் காணலாம்: ஒன்று மனிதனின் சக்தி; மற்றது மனிதனின் கனவு.
3
அவனும் அழகன்தான்; அழகும் தெய்வீகமானது. இந்தப் படாடோ பத்துக்குச் சமமாக மதிக்கும் கண்களிலே கனவுகள், இலட்சியங்கள், உருவப்படுத்த முடியாத எண்ணங்கள் ஓடிமறையும் கண்கள். அவனுடைய இடையிலும் ஒரு சுரிகையிருக்கிறது. சம்பிரதாயமாக, வழக்கமாக இருக்கும் போலும்!
பக்கத்தில் பணிப் பெண்கள்... அழகின் பரிபூரணக் கிருபையாலே அரச படாடோ பத்தின் உயிருடன் உலாவும் சித்திரங்கள். மார்பில் கலை கிடையாது. அக்காலத்தில் அரசன் முன் அப்படி நிற்க முடியுமா? முத்துவடங்கள் அவர்கள் தாய்க்கோலத்தை மறைக்கின்றன. இடையில் துல்லிய தூய வெள்ளைக் கலிங்கம். அரசனுக்கு அடைப்பத் தொழில் செய்தலும், சாமரை வீசுவதும் அவர்களுக்குரியவை.
அரசனுக்கு நடக்கும் மரியாதை அந்த அழகனுக்கும் நடக்கின்றது.
4
வெளியே வந்தாகிவிட்டது.
காவிரிப்பூம்பட்டினத்தில் நாவாயேறி இந்து - சீனத்திற்குச் செல்கிறான். அந்தப் பெயர் தெரியாத பிரதேசங்களில் தமிழ் இரத்தத்தைத் தெளித்து வெற்றிக்கொடிகளைப் பயிராக்க. பட்டத்து யானையில் ஏறியாகி விட்டது - கவிஞனுடன்...
நல்ல நிலா... நடுக்கடல்... எங்கு பார்த்தாலும் நீலவான், நீலக்கடல்... நாவாய் கீழ்த் திசை நோக்கிச் செல்லுகிறது. அதன் மேல்தட்டில் கவிஞனும் சோழனும்...
கவிஞனுக்கு அன்று உற்சாகம். ஊர்வசியின் நடனத்தை, அவள் அழகை, ஓர் அற்புதமான கவியாகப் பாடுகிறான். ஊர்வசி அரசனைக் காதலிக்கிறாளாம்; அரசனைக் காண வருகிறாளாம்.
கவிஞன் கற்பனை அரசன் உள்ளத்தைத் தொட்டது. கவிஞன் கனவில்தான் கண்டான். அரசன் முன்பு ஊர்வசியே தோன்றிவிட்டாள்!
வெறுங் கனவு!
சோழனுக்குமா அப்படி?
5
"ஊர்வசீ! ஊர்வசீ! அதோ வருகிறாளே! அதோ, அந்த அலையின் மேல்! அதோ! அதோ! ஊர்வசி!"
கவிஞன் அரசனை யழைக்கிறான். 'ஊர்வசி' என்ற பதில்தான்.
அரசன் கட்டளைப்படி, கடலில் தறிகெட்டுத் தேட ஆரம்பிக்கின்றது நாவாய்.
"அதோ அந்த அலைமீது... அந்தப் பெரிய அலை மறைந்துவிட்டது... அதோ தெரிகிறாள்!... அவளே ஊர்வசி...!"
அந்தப் பெரிய அலையின் கீழே பாறைகள் என்று யாருக்குத் தெரியும்?...
6
கடகடவென்ற சப்தம்!... உள்ளே ஜலம் வெண்மையாகப் பாய்கிறது.
"ஊர்வசி!" என்ற குரல் சோழன் இருக்கும் திசையைக் காட்டுகிறது. அந்த அமளியில் படைத்தலைவன் நெருங்குகிறான்.
அதற்காகக் கப்பல் பொறுத்துக் கொண்டிருக்குமா? இன்னொரு பாறை!
கப்பலில் உச்சி முதல் அடிவரை ஒரு நடுக்கம். பாய்மரம் தடால் என்று ஒடிந்து விழுகிறது!
கப்பல்...?
ஆயிரமாயிரம் மக்கள் கூட்டம், ஜீவனுள்ள உயிர்ப்பிராணிகள், அரசன் சாம்ராஜ்யம், படாடோ பம், புலிக்கொடி, வெற்றி, வீரம்... இன்னும் எத்தனையோ!
சமுத்திர ராஜன் பர்வத ராஜனுடன் ஒத்துழைத்தால் எதிர்த்து என்னதான் செய்யமுடியும்?
அரசனைக் காப்பாற்ற வேண்டியது அவசியந்தான். ஆனால் அகோரமான அலைகளுக்கு மத்தியில் யார் என்ன செய்ய முடியும்?
7
ராஜ மார்த்தாண்டன், வீரன், பலவான். நீந்திக்கொண்டு செல்லுகிறான், ஆனால் தன் இஷ்டப்படியல்ல.
மிதப்புக் கட்டை மாதிரி நீருக்கு மேல், பெரிய அலைகள் மூச்சுத் திணறும்படி வாரியடிக்கும் நுரைக்கு மேல், முகத்தைத் தூக்கிக் கொண்டு நீந்துகிறான்.
வாரியிறைக்கும் நுரைத் திரையிலே ஒரு பெண்ணின் பாதம் தெரிகிறது.
"ஊர்வசி!"
"அவள்தான் வருவாளே! வருகிறாளே!"... தைரியமும் ஊக்கமும் சக்தியைக் கொடுக்கின்றன.
நீந்துகிறான்.
எதிரிலே ஓர் உயரமான பாறை. தலை நிமிர்ந்து உச்சியைக் காண முடியாத நெடும்பாறை!
அதில் நின்று கொண்டால்...
அவன் நீந்த வேண்டாம், அலை வேகமே இழுத்துச் செல்லுகிறது.
அப்பா!
இன்னும் ஒரு கை!
எட்டிப் போடுகிறான்.
பின்புறம் இடிமுழக்கம் போல் ஒரு ஹுங்காரம்! நட்சத்திரங்கள் கண்ணுக்குள் மின்னி மறைகின்றன.
அப்புறம் ராஜமார்த்தாண்ட சோழன் அல்லன் - முங்கி மிதக்கும் ஒரு சரீரம்...
8
எவ்வளவோ நேரம் சென்றது.
கண்களில் ஏன் இந்தச் சூரியன் இப்படித் தகிக்க வேண்டும்?... யாரோ அணைத்திருக்கிறது மாதிரி ஒரு தோற்றம்...
தாயின் கனிவுடன் சற்று மேலோங்கி வளர்ந்தும் வளராத கன்னங்கள். கன்னத்தோடு சாய்ந்து...
"அம்மா அ அ அ!"
என்ன ஹீனஸ்வரம்! என்ன பலவீனம்!
கவிஞனின் கனவு போன்ற கண்கள் அவனைக் கவனித்துச் சிரிக்கின்றன.
திரும்புகிறான் - மாந்தளிரின் நிறம்! மனத்தில் சாந்தியளிக்கக்கூடிய அழகு...
கூந்தல் கறுத்துச் சுருண்டு ஆடையாக முதுகுப்புறத்தை மறைக்கின்றது!
அதுதான் ஆடை!
திடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான்; முடியவில்லை.
அவள் கரங்கள் அவனை அணைத்துக்கொள்கின்றன.
9
உதட்டில் அவளுடைய மெல்லிய விரல்கள் பதிந்து, அவனைத் திரும்பவேண்டாம் என்று சமிக்ஞை செய்கின்றன.
அவன் அரசன்! ராஜ மிடுக்கு! அவளோ தாதிப் பெண்!
"காலைப் பிடி!"
பதில் இல்லை. புன் சிரிப்புத்தான். தாயின் கனிவு அவனையணைத்துக் கொள்ளுகிறது.
"நான் அரசன்! ராஜமார்த்தாண்ட வர்மன்!... ஹும்...?"
பதில் இல்லை.
புன்சிரிப்புத்தான்.
அவ்வளவு தைரியமா?
அவளது கேசத்தை அவள் கழுத்தில் முறுக்குகிறான். வெற்றிப் புலிக்கொடி! அவன் கண்கள் இருள்கின்றன.
"மூச்சு!"
"அம்மா! இருள்! இருள்!"
கண்களுள் நட்சத்திரங்கள் தோன்றி மறைகின்றன...
இருள்!
நீலக் கடல்!
ஒரு பிணம் குப்புற மிதக்கின்றது. அதன் முகத்தில் என்ன சாந்தி!
(முற்றும்)
மணிக்கொடி, 16-09-1934
-------------
33. காஞ்சனை
1
அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.
இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.
உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?
உடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது.
சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.
சீ! என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.
2
துர்நாற்றம் தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.
தும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. "என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?" என்று கொட்டாவி விட்டாள்.
மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.
என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.
"உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா?" என்று கேட்டேன்.
"ஒண்ணும் இல்லியே" என்றாள்.
சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, "ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்" என்றாள்.
விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான்.
3
லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.
துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.
நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.
"ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?" என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்' அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.
"அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.
"உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.
4
நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.
அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, "அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.
நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.
"உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.
"வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.
"நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.
"அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.
"என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.
"சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.
5
வெளியில் நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.
"முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.
உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது!
என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை!
தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.
6
சாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.
"நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு" என்றாள் என் மனைவி.
"ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?" என்றாள்.
"சொல்லேன்; என்ன கதை?" என்று கேட்டாள் என் மனைவி.
"அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.
"இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக் குருவுக்கு..."
7
என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.
திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.
"உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே" என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.
"காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு" என்றாள் பிச்சைக்காரி.
என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா?
நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.
வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, "பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்?" என்ற பாணம் எதிரேற்றது.
காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக் காப்பாற்றுவது?
சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.
நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.
எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.
பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.
எங்கோ கதவு கிரீச்சிட்டது.
8
திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.
நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.
என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.
அவளுடையதுதானா?
எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.
கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!
போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.
ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.
மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.
கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.
திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?
விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.
அங்கே அமைதி.
பழைய அமைதி.
9
மனம் தெளியவில்லை.
மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.
மனித நடமாட்டம் இல்லை.
எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.
பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.
வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.
ஆனால் கீழே!
மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
கீழே இறங்கினேன்.
தைரியமாகச் செல்ல முடியவில்லை.
அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, "என்ன, தூக்கம் வரவில்லையா?" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.
அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.
நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.
"என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!" என்று என் மனைவி எழுப்பினாள்.
10
இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?
தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், "ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?
இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.
இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.
இரவு படுக்கப் போகும்போது என் மனைவி, "காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்" என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.
இது என்ன சூழ்ச்சி!
இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.
"என்ன படுக்கலியா?" என்றாள் என் மனைவி.
"எனக்கு உறக்கம் வரவில்லை" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.
"உங்கள் இஷ்டம்" என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?
நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.
சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.
பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.
இதென்ன வாசனை!
11
பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.
சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.
பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். "ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.
கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.
"பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.
அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள். அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.
கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.
அதிகாரத் தோரணையிலே, "காஞ்சனை! காஞ்சனை!" என்ற குரல்.
என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.
அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.
நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.
நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!
"இங்கே வா" என்று சமிக்ஞை செய்தான்.
12
நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.
போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.
தெருவிற்குப் போனேன்.
"அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே" என்றான்.
விபூதி சுட்டது.
நான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே!
மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.
காலையில் காப்பி கொடுக்கும்போது, "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல?
(முற்றும்)
கலைமகள், ஜனவரி 1943
------------
34. கண்ணன் குழல்
ஞாயிற்றுக்கிழமை காலை.
சென்னை எழுந்துவிட்டது. அந்தப் பரபரப்பு, வேகம், அவசரம், ஆவேசம், போட்டி - அவைகளும் எழுந்துவிட்டன.
அதில் நானும் ஒருவன் தான். நூற்றில் இன்னொன்று. அந்த நாகரிக கதியின் வேகம் என்னையும் இழுத்துக்கொண்டுதான் போகிறது.
காலை.
ட்ராமின் படபடப்பு, மோட்டாரின் ஓலம்.
பந்தயக் குறிப்புடன் பத்திரிகையின் விளம்பரக் கூப்பாடு.
அங்கே.
எத்தனை பேர் ஓடுகிறார்கள்? என்ன அவசரம்!
அங்கே ஒரு பரத்தை.
அவள் பிச்சைக்காரி; இது என்ன ஏமாற்றமோ?
நொண்டிப் பிச்சைக்காரன். நல்ல வியாபாரம்.
நொண்டி கால் இல்லாவிட்டால் மனித உணர்ச்சியில் பேரம் செய்ய முடியுமா?
அதைவிட இந்த குமாஸ்தா எதில் உயர்ந்தவர்? அவன் அங்கமெல்லாம் ஒடிக்கப்பட்ட முடவன். அதற்கு மேல் அவனுக்கு இருக்கும் சுமை - அதிலே அவனுக்குக் கிடைக்கும் 30 ரூபாய், தானம் தான். இந்தச் செல்வத்தில் தனது சட்டை ஓட்டையை மறைத்துக்கொள்ள வேண்டிய கௌரவம்; அதைச் சமூகம் எதிர்பார்க்கிறது.
மறுபடியும் ட்ராமின் கணகணப்பு, மோட்டாரின் ஓலம், நாகரீகமும் அதன் சாயையும்.
வெள்ளையில் கருப்புப் புள்ளிகள்.
என் மனதிலே ஏதோ காரணமில்லாத துயரம் சோகம். ஏன்?
நானும் அந்த மனித மிருகம்தானே.
மற்றவர்களுக்கில்லாத அக்கறை எனக்கென்ன?
கோழை! சீச்சீ...
ஒரு மூலை திரும்பினேன். ஒரு புல்லாங்குழல் ஓசை, அதன் இசையிலே, அதன் குரலிலே ஒரு சோகம்... எல்லையற்ற துன்பம்.
அவனும் ஒரு பிச்சைக்காரன் தான். அழுக்குப் பிடித்த உடல், உடலைக் காண்பிக்கும் உடை, சிறு மூட்டை, தகரக் குவளை.
ஒரு படிக்கட்டிலே உட்கார்ந்து குழலிலே லயித்திருக்கிறான். பிச்சைக்காகவல்ல. எதிரே இரண்டு மூன்று குழந்தைகள். அவனைப் போன்றவை, ஆனால் அவனுடையதல்ல.
அந்தக் குழலின் துன்பத்திலே லயித்துத்தான் நானும் நின்றேன்.
கதவு திறந்தது.
ஒரு பூட்ஸ் கால், 'போ வெளியே!' என்று உதை கொடுக்கிறது.
'படார்'
கதவு சாத்தியாகிவிட்டது.
இவனும் உருண்டான். குழலும் விழுந்து கீறியது.
மறுபடியும் மோட்டாரின் ஓலம்!
"என்ன சாக வேண்டும் என்ற ஆசையா?" என்ற கூப்பாடு.
நானும் விலகினேன்.
உயிரை விட எனக்கும் ஆசையில்லை.
(முற்றும்)
காந்தி, 05-09-1934
----------
35. கருச்சிதைவு
1
டெலிபோன் மணி காதை அறுத்தது.
ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை பம்பாய் சர்க்கார் மின்சாரத்திட்ட அறிக்கையில் மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழி பெயர்த்து எழுதி, 'இருக்கிறது' என்று போட்டு முடித்தார்.
டெலிபோன் மணி விடவில்லை. காதை அறுத்துக் கொண்டிருந்தது.
மேஜையிலிருந்து எழுதின கடுதாசிகளைக் கம்போஸிங் ரூமுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த வடிவேலு ஓடி வந்து, ரிஸீவரைக் காதில் எடுத்து வைத்துக் கொண்டு "ஹல்லோ! யாரது?" என்ற சந்தேக வார்த்தைகளைக் கக்கினான்.
"இந்த மகத்தான திட்டம் பம்பாய் மாகாண வாசிகளுக்கு மட்டுமல்லாமல்..." என்று எழுதியபடி மங்கிய டைப் கடுதாசிகளில் கண்ணைச் செருகிக்கொண்டிருந்த ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர்களிடம், "டெலிபோன், ஸார்!" என்று கொண்டே ரிஸீவரைக் கையில் கொடுத்தான்.
பிள்ளையவர்கள் சாவதானமாகப் பேனாவை மேஜை மேல் வைத்தார். சொருகு பலகைமேல் சாய்த்து வைத்தெழுதிய அட்டையை மேஜை மேல் வைத்தார். ஒரு பக்கமாகச் சாய்ந்து தமது ஜோல்னாப் பையைத் தேடிப் பிடித்து அதில் கைக்குட்டையைத் தேடி, அங்கில்லாமல் 'பேப்பர் வெய்ட்' அடியிலிருந்த அதை எடுத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டார். ஷர்ட் கைகளைத் தள்ளிவிட்டுக் கொண்டு, "என்ன டெலிபோனா?" என்று ரிஸீவரை வாங்கிக்கொண்டு, "யாரது? ஓஹோ நீங்களா? என்ன இரண்டு மூணு நாளா இந்தப் பக்கத்திலேயே காணலியே... அப்படியா? என்ன, கதையா? அதுக்கென்ன? இன்னிக்கு சாயங்காலமா? ரெடின்னு வச்சுக்குங்க!" என்று சொல்லிவிட்டு, பம்பாய் மாகாண மின்சாரத் திட்டத்தில் ஈடுபட்டார்; மும்முரமாக ஈடுபட்டால் டைப் கடுதாசிகள் எத்தனை நேரந்தான் மேஜைமேல் நிற்க முடியும்? நேராகக் குப்பைக் கூடையில் ஐக்கியமாயின.
"வடிவேலு புரூப்!" என்று காய்தாப் பண்ணிவிட்டு, மேஜைக்குள் இருந்த வெற்றிலைச் செல்லத்தை, - வர்ணம் போன மசாலா டின்னுக்கு, அவர் செல்லமாக இட்டிருக்கும் பெயர் - எடுத்துச் சாவதானமாக வெற்றிலை போட ஆரம்பித்தார்.
அவருக்கு வெற்றிலை போடுவது வெறும் சம்பிரதாயமல்ல - மகாயக்ஞம்.
யந்திரம் எழுதி இந்த இந்தத் திக்கில் இன்னின்ன தேவதைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றிருப்பது போல, அவருடைய செல்லத்தில் இன்னின்ன சரக்குகள் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி; ஆனால், இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. எப்பொழுதும் எல்லாம் இருக்காது என்பதைப் பொது விதியாகக் கொள்ளுவதால் ஸ்ரீசுந்தரம் பிள்ளை தம்மைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டதாகக் கருதமாட்டார்.
2
தென்புலத்தில், அதாவது யமன் திசையில் சுண்ணாம்பு மட்டிலும் எப்பொழுதும் இருக்கும் - காறைக் கட்டியாகவாவது, அதைச் சூரணமாகவோ அல்லது அவகாசமிருந்தால் மத்தித்து அதன் பூர்வாசிரமத்திற்கு அதைக் கொண்டு வந்தோ, வைத்துக்கொண்ட பின், வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து, காம்புகளைக் கீறிவிட்டுச் சுண்ணாம்பைத் தடவுவார். பிறகு அதில் சீவல் பாக்கோ அல்லது அது இருந்த இடத்தில் கிடக்கும் தூசு தும்பட்டமோ, அதைச் சுமை ஏற்றிப் பொட்டலமாக மடித்து ஒரே கவளமாகப் போட்டுக் கொள்ளுவார்.
பிறகு, புகையிலை தேடு படலம். சாதாரணமாக, அது அருகில் இருக்கும் நண்பருடைய பிரதேசத்தில் ஆக்ரமிப்பாகவே இருக்கும். வாய்மொழியாக 'புகையிலை யிருக்கிறதா?' என்று மரியாதைக்கு எச்சரித்துவிட்டு, பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வந்து மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த பின், புகையிலை கற்றியிருந்த கடுதாசியை மட்டும் எறிந்துவிட்டு, மீதியை ஒரு தடவைக்கு உபயோகித்துவிடுவார்.
இது அவர் பொதுவாக அனுஷ்டிக்கும் விதி.
அன்று அவர் தமது சகபாடியின் மேஜைக்கு அருகில் சென்ற பொழுது அவரும் அதே விருத்தியில் ஈடுபட்டிருந்தார்.
"என்னப்பா வந்துட்டியா, எங்கிட்ட ஒரு தரத்துக்குத்தான் இருக்கும்!" என்று அங்கலாய்த்தார் அவருடைய நண்பர். புகையிலையை வாயில் ஒதுக்கிக் கொள்ளும் வரை பிள்ளை அதைக் கேட்கவில்லை.
"என்ன, இல்லையா? நான் வாங்கிக் கொண்டு வரச் சொல்லுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே தம் மேஜைக்கு வந்தவர் ஒரு புஸ்தகத்திற்குள் ஐக்கியமானார்.
3
"ஸார், கொஞ்சம் புரூப் பார்த்துக் கொடுங்கோ! பேஜ் போடணுமாம்!" என்று குழைந்தான் வடிவேலு. அவனுடைய குழைவுக்கு மரியாதை என்று அர்த்தம்.
"புரூப் எங்கே? கொண்டு வந்தால் தானே!" என்று புஸ்தகத்தின் மீதுள்ள கவர்ச்சியால் சீறினார் பிள்ளை.
"அப்பவே கொண்டுவந்து வச்சுட்டேன்" என்று சொல்லிக் கொண்டே எடுத்துக் கையில் கொடுத்தான் வடிவேலு.
பிள்ளைவாள் அவசரத்தில் 'காலி' 'காலி' யாகத் தாவி, மெய்யெழுத்துக்களையும் ஒற்றுக்களையும் கார்வார் செய்து, கையெழுத்திட்டு வடிவேலு கையில் ஒப்படைத்துவிட்டு, மறுபடியும் புஸ்தகத்தில் சரணாகதியடைந்தார்.
மணியும் மூன்றாயிற்று. மறுபடியும், டெலிபோன் மணியடித்தது.
"ஹல்லோ! யாரது?... நீங்கள் தானா? இன்னும் ஒரு மணி நேரத்தில் பையனை அனுப்புங்கோ எத்தனி பக்கம்? நாலு பக்கமா? வரும் வரும்... லெடவுட் பண்ணிடுங்கோ... அப்படின்னா நானே கையிலே எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்; பையன் புறப்பட்டு விட்டானா? அப்படின்னா இங்கேயே இருக்கேன்" என்று சொல்லி விட்டுப் பேனாவையும் கடுதாசியையும் எடுத்தார்.
பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு வெள்ளைக் கடுதாசியைப் பார்த்தபடியே பேனாவை எழுதும் பாவனையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.
சரிப்படவில்லை. மேஜையின் மீது அட்டையையும், பேனாவையும் வைத்துவிட்டுக் கைகளைச் சுடக்கு விட்டார். பிறகு சாவதானமாகக் கொட்டாவி விட்டார்.
4
மேஜையிலிருந்த பேனாவும் அட்டையும் கையிலேறிவிட்டு, மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர்ந்தன.
மேஜையின் சொருகை உருவித் திறந்து நிதானமாக வெற்றிலை மடித்துப் போட்டுக் கொண்டார் ஸ்ரீ பிள்ளை.
புகையிலைக் கட்டத்திற்கு வரும்பொழுது சுறுசுறுப்புத் தட்டியது.
மேஜையிலிருந்த எழுத்துச் சாதனங்கள் கையிலிறங்கின.
"ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்தான்..." என்று எழுதி விட்டுப் பேனாவை மூடி மேஜை மீது வைத்து விட்டார்.
சிறிது நேரம் பேந்தப் பேந்தச் சுற்றுமுற்றும் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார்.
அப்புறம் சில நிமிஷங்கள் கழித்து... "அவன் ஒரு கதைப் பைத்தியம். சண்டைக்கு வந்த எதிராளி ராஜாவிடம், "உனக்குக் கதை சொல்லத் தெரியுமா?" என்று ஒரு தூதுக் கோஷ்டியை அனுப்பிக் கேட்டு விட்டானாம்..."
சுந்தரம் பிள்ளை, மேஜையில் பேனா முதலிய சில்லறைத் தொந்தரவுகளை வைத்துவிட்டு வெளியே வராந்தாவிற்குச் சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தார். ஒரு டம்ளர் ஜலம் குடித்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டு மறுபடியும் பேனாவை எடுத்தார்.
"... அவனுடைய மந்திரிக்குக் கதை என்றாலே பிடிக்காது. கதை கேட்பதால் தன்னுடைய ராஜ்யத்தின் மீதிருந்த ஆதிபத்திய உரிமையை இழந்து வெறும் சிற்றரசனாகப் போன ராஜாவுக்குப் புத்தி சொல்லிக் கொடுக்க ஒரு யோசனை செய்தான் மந்திரி.
"சர்க்கார் சம்பிரதாயப்படி அதற்கு ஒரு திட்டம் வகுக்க ஒரு விசேஷக் கமிட்டி ஏற்படுத்துவது என்று முடிவு கட்டப்பட்டது..."
5
மறுபடியும் பேனாவை மூடி வைத்துவிட்டு, மோட்டு வளையைப் பார்த்து யோசனையிலாழ்ந்தார் ஸ்ரீ பிள்ளை.
"... இந்த விசேஷக் கமிட்டிக்கு பிரிட்டனிலிருந்து சட்ட அனுபவம் வாய்ந்த ஒரு நிபுணரையும், கதாசாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒரு பிரபலஸ்தரையும், பிரிட்டிஷ் ராயல் வைத்திய சங்கத்தைச் சேர்ந்த ஒரு வைத்திய நிபுணரையும் தருவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது."
"இந்த விசேஷச் செலவுக்கு சமஸ்தான கஜானாவில் போதுமான பணம் இல்லாததினால், ஒரு புதிய வரி போடுவதா, அல்லது ஒரு கடன் பத்திரம் பிரசுரிப்பதா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது."
"அதற்குள் இந்தச் சமாசாரம் பெரிய ராஜாவுக்குத் தெரிந்துவிட, இவ்வித முயற்சிகள் செய்யச் சிற்றரசருக்கு சன்னதின் ஷரத்தின்படி உரிமை கிடையாது என்று ஓலை அனுப்பினான்."
"நாலுவிதமாகவும் யோசித்துவிட்டு இந்த யோசனைகளை அப்படியே ஒதுக்கிவிடுவதுதான் நன்மை என்று மந்திரி நினைக்கலானான்."
"மந்திரியின் நினைப்பு காரியாம்சத்திற்கு வருமுன் ராஜாவுக்கு சஷ்டி அப்தபூர்த்தி விழா வந்து விட்டது. பெரிய ராஜா இந்தச் சிற்றரசனுக்கு வெகு மதியாக ஒரு பெரிய கதைப் புஸ்தகத்தை அனுப்பினான். அது ஒரு லக்ஷத்திச் செல்வானம் பக்கங்கள் கொண்டது."
"புஸ்தகத்தைக் கண்டதும் அதைப் பூராவும் படித்து முடிப்பதற்குத் தமக்கு ஆயுசு இருக்குமோ என்று நினைத்து, சிற்றரசன் சிம்மாசனத்திலிருந்து கொண்டே கண்ணீர் விட்டான்."
"மந்திரி பிரதானிகளும் பிரஜைகளும் ராஜாவைத் தனியாக அழவிட்டுவிடுவதா என்று நினைத்து அனுதாபம் காட்டி கூட அழுதார்கள்."
"இந்தச் சமயத்தில் பிரதம மந்திரிக்கு அழுகை வரவில்லை. நெடுமரம்போல நின்றான்..."
"நெடுமரம் போல நி......" என்று மறுபடியும் அடித்துவிட்டு எழுதினார் சுந்தரம்பிள்ளை.
6
கதை தானாகவே, தன்னிஷ்டம் போலவே, பின்னிக் கொண்டு போவதைக் கண்டு பயந்து போன சுந்தரம் பிள்ளை, இந்த நெடுமரம் என்ற மதில் சுவர் வந்ததும் நிம்மதியுடன் பெருமூச்செறிந்தார்.
கதை வண்டியைத் தமக்குப் புரியும் வழியில் திருப்புவதற்காக, அந்த அழாத பிரதம மந்திரியைச் சிரச்சேதம் செய்தார்.
அந்த வேலை முடிந்தபின் கதைக்கு உயிர் சந்தேகமின்றி அகன்று விட்டது என்பதை நாடி பிடித்துப் பார்த்தவர் போல நிச்சயப்படுத்திக் கொண்டு அவனை உயிர்ப்பிக்கப் பரமசிவனைக் கூப்பிடலாமா, அல்லது வெறும் மந்திரவாதியைத் தருவித்து அவனுக்கு ராஜா மகளைக் கட்டிக் கொடுத்துக் கதையை மேளதாளத்துடன் 'மங்களமாக' முடித்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "என்ன ஸார், முடிந்து விட்டதா?" என்று கொண்டே நுழைந்தார் சுந்தரம் பிள்ளையிடம் கதை கேட்ட ஆசிரியர்.
"பையனை அனுப்புகிறேன் என்றீர்களே" என்று சொல்லி எழுந்தார் ஸ்ரீ பிள்ளை.
"பையனிடம் கடுதாசி அனுப்பிவிட்டால் என்றுதான்..." என்று சிந்தித்துக் கொண்டே மேஜையிலிருந்த கடுதாசிகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் ஆசிரிய நண்பர்.
"இதுதானா நாலு பக்கம்? - போஸ்டர் எழுத்தில் போட்டாக் கூட நாலு பக்கம் வருமோ என்னமோ? இதற்கு என்ன அர்த்தம்?" என்றார்.
"நீர் தான் சொல்லுமே!"
"சரி வாருங்க, காபி சாப்பிட்டு வரலாம்!" என்றார் நண்பர்.
"வருவது எதற்கு, நேரா வீட்டுக்குப் போவோமே?" என்றார் சுந்தரம் பிள்ளை.
"அங்கே போனால் எழுதுவீரா?" என்றார் நண்பர்.
"போன பிறகு பார்த்துக் கொள்ளலாம், நீங்க எழுந்திருங்க!" என்று கொண்டு மேஜையை எடுத்துப் பூட்ட ஆரம்பித்தார் பிள்ளை.
7
துண்டை எடுத்து உதறி மேலே போட்டுக் கொண்டு புறப்பட்டார் நண்பர்.
"கொஞ்சம் இருங்க, வெற்றிலை போட்டுக் கொண்டு வருகிறேன்" என்று உட்கார்ந்து கொண்டார் ஸ்ரீ பிள்ளை.
வெற்றிலை போட்டு முடிந்தது.
"ஸார், ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கடைசி வரியை எழுதினார், பிள்ளை.
"தான் படித்த அத்தனை கதைகளையும் படிக்க வேண்டும் என்று ராஜா அந்த மந்திரிக்குத் தண்டனை அளித்தான்" என்று எழுதி, "இப்படி முடித்து விடலாமா" என்றார்.
"எப்படியாவது முடிந்தால் போதும்; என்னிடம் குப்பைக் கூடை இருக்கிறதை மறந்துவிட்டீரா?" என்றார் நண்பர்.
"அது என்னிடமே இருக்கிறதே!" என்று சொன்னார் பிள்ளை.
ராஜாவும் மந்திரி பிரதானிகளும், இங்கிலீஷில் கசங்கும் மாகாண மின்சாரத் திட்டத்துடன் கிடந்து நசுங்கினர்.
(முற்றும்)
'ஆறு கதைகள்', தொகுப்பு - 1941
('அபார்ஷன்' என்னும் தலைப்பிலும் இக்கதை வெளிவந்துள்ளது)
-------------
36. கட்டிலை விட்டிறங்காக் கதை
(நான் பாளையங்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது சில ஏடுகள் மிதந்து வந்தன. உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தவன், ஒன்றை எட்டி எடுத்துக் கவனித்துப் பார்க்க, கதை மாதிரி தெரிந்ததால், கிடைத்ததை எல்லாம் சேகரித்து வாசித்தேன். தேறினது இந்தக் கதைதான். இந்த ஏட்டுக்கு ஆதாரமோ, நான் சாக்கிரதைக் குறைவாக மிதக்கவிட்டுவிட்ட கதையின் முற்பகுதியோ இனிமேல் கிடைக்காதாகையால், இது விக்கிரமாதித்தன் கதையென்று வழங்கும் கதைகளில் இதுவரை வெளிவராத பாடம் என்பதுடன் இவ்வாராய்ச்சியை முடித்துக் கொள்ளுகிறேன். தெரிந்தவர்கள் தொடர்க.)
1
முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை சொல்லிய கட்டிலை விட்டிறங்காக் கதை
நேம நிஷ்டைகள் (ஏடுகள் சிதிலமானதனால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை) செபதபங்கள் யாவும் முடித்து, பார்ப்பனர்களுக்கும் பரிசனங்களுக்கும் கோதானம், பூதானம் வஸ்திரதானம் யாவும் குறைவறக் கொடுத்து, தம் மந்திரிப் பிரதானிகள் சூழ, தோகையர் பல்லாண்டிசைப்ப ஜாம்ஜாமென்று கொலுமண்டபத்திலே புகுந்தருளி, சிங்காதனத்துக்கு அபிடேக ஆராதனைகள் யாவும் முடிப்பித்து, போச மகாராசனானவன் அந்தச் சிங்காதனத்திலே ஏறி அமர்வதற்காகக் காலடி வைப்பானாயினான். முப்பத்தேழாவது படியின்மீது அவன் கால் நிழல் பட்டவுடன் முத்துமோகனவல்லிப் பதுமை என்ற முப்பத்தேழாவது பதுமை அட்டகாசமாய்ச் சிரித்து...
வாரீர் போச மகாராசரே, உமக்கு இந்தச் சிங்காதனம் அடுக்குமோ, இது விக்கிரமாதித்த ராசாவானவர், பட்டி என்கிற மந்திரியோடு, காடாறு மாதமும் நாடாறு மாதமுமாய் அறுபத்தீராயிரம் வருஷம் வரை, மனு நெறி தவறாது, புலியும் புல்வாயும் ஓரிடத்துறையும் பெற்றி வழுவாது, அபேதமாக, அபூர்வமாக அட்டமா திக்குகளையும் கட்டியாண்டு, மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாது நடந்தமை அறியீரோ!
அந்த மகாராசனுடைய கீர்த்தி வல்லபங்களிலே ஆயிரத்தில் ஒரு பங்காவது உமக்கு உண்டோ எனக் கை மறித்தது. போச மகாராசனும், 'ஓகோ இதேது! அதிசயமாகத் தோணுது! மூட்டைப் பூச்சிக்கும் முறைமை வழுவாத செங்கோலாவது!' என அதிசயித்து, அன்று இரவு தான், நடுச்சாமத்திலே, பேயும் உறங்கும் நள்ளிரவிலே, தன் பட்டமகிஷியானவள் சப்ரமஞ்சத்திலே, தாதியர் சிலர் வீசவும், சிலர் பனிநீர் தெளிக்கவும் உறக்கம் செய்யும் சமயத்திலே ஓஹோவெனப் பதைத்தபடி, ஊர்ப் பேய் பிடித்தவள் போலவும், உன்மத்தம் கொண்டவள் போலவும் கூக்குரலிட்டோ லமிட, தான் வீரவாள் எடுத்து, அந்தக் கிருகத்தில் அந்த நேரத்தில் ஆரோகணித்துப் பிரவேசித்து, "என் பட்டத்து ராணியே, பாக்கியவல்லியே, நாட்டின் குலக் கொழுந்தே, என்ன உனக்குச் சம்பவித்தது?" என்று கேட்டும் பதில் வராததனால், கட்டிலைத் தடவி, மூட்டையொன்று விழித்து நிற்கக் கண்டு, கட்டைவிரலால் நசுக்காமல், கட்கத்தினால் கொன்ற சேதி நினைவுக்கு வர, திகைத்துப் பதைத்து அருகில் நின்ற மந்திரி சுமந்திரனை விளித்து, "மூட்டையைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் உண்டா?
"மூட்டைக்கு மனு நெறி உண்டா? சொல்லும், சொல்லும்" என்று கேட்க, மந்திரி சுமந்திரனானவன், ஏதேது, தம் தலைக்குத் தீம்பு வந்ததென்று திட்டப்படுத்திக் கொண்டு தெண்டனிட்டு, "ராச்சிய பாரத்திலே பலவிதமுண்டு. தேசந்தோறும் ராசமும் (ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்) மாறும்; கையில் வெண்ணெய் வைத்து நெய்க்கு அழுவாருண்டோ ? இப்பேர்க்கொத்த அதிசயங்களையும் சொல்லற்கொத்த அதிமோகனப் பதுமை இருக்கும் போது, பறையறைந்து, பார்ப்பனர்களைக் கூட்டுவித்துச் சாஸ்திர விசாரம் செய்து தேவரீர் திரு நேரத்தை வீணாக்குவாருண்டோ ? நான் சுமந்திரனல்லவா? அப்பேர்க்கொத்த ஆலோசனை சொல்லுவேனா?" என்று தலைவணங்கி நின்றான்.
"சவாசு, சவாசு, மந்திரி சுமந்திரனாரே! நீர் சொன்னது ஆயிரத்துக்கு ஒரு வார்த்தை! அதைத் தெரிந்துதானே, நாம் உமக்கு மந்திரிப் பதவி தந்தோம்? இந்தாரும் உம் புத்திக் கூர்மைக்கு மெச்சியும், நம் சந்தோஷத்தைத் தெரிவித்தும், தருகிறோம் இந்த முத்து மாலையை அதை நீரே நேரே சென்று நும்முடைய பத்தினிக்குக் கொடுத்துவப்பீர்" என்று கட்டளையிட்டுவிட்டுப் பதுமையைப் பார்த்து, "வாராய் முத்துமோகனவல்லிப் பதுமையே, உங்கள் விக்கிரமாதித்தன் மூட்டைப் பூச்சிக்கு முறைமை வழுவாது நடந்தமை சொன்னீரே; அதன் வயணமென்ன?" என்று குத்துக்கால் போட்டு, குடங்கையிலே மோவாயை ஊன்றிக் குனிந்து நின்று கேட்டான். அதற்கு அந்த முத்து மோகனப் பதுமையானது, "விக்கிரமாதித்த ராசா கதை என்றால் விடுகதையா விட்டுச் சொல்ல; பொட்டென்று மறக்க? நீர் இந்தப் படியில் இப்படி அமரும்; நான் சொல்லுகிறேன். காது கொடுத்துக் கேளும். இடையிலே கொட்டாவி விட்டால், நட்டாற்றில் சலபானம் பண்ணியவன் பாவம் வந்து சம்பவிக்கும்...
(இதிலிருந்து பத்து ஏடுகளைக் காணவில்லை)
2
...லே, நாமகள் திலதம் போலும், நாரணன் நாபி போலும், அட்டகோண யந்திரத்தின் மையக் கோட்டை போலும், செம்பாலும் இரும்பாலும் கல்லாலும் கருத்தாலும் கட்டிய நகரம் ஒன்றுண்டு. அதற்குப் பகைவர்கள் வரமாட்டார்கள். பாவம் அணுகாது. பசியும் அணுகாது. அதன் கோட்டை வாசலோ எண்ணூறு யானைகளை வரிசையாக நிறுத்தினாலும், அதன் பிறகும் ஒரு பாகம் இடம் கிடக்கும். அந்தக் கோட்டைக் கதவுகள் வயிரத்தினால் ஆனவை. இரவில் கோடி சூரியப் பிரகாசம் போலச் சுடர்விட்டு, நூற்றிருபது காதத்துக்குப் பகைவர்கள் வந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்; பட்டப்பகலிலோ என்றால், அவர்கள் கண்களைக் கூசவைத்துப் பொட்டையாக்கித் திக்குத் தெரியாமல் அலைந்து, முதலைகளும் சுறா மீன்களும், எங்கே, எங்கே என்று நடமாடும் அகழிக்குள் விழுந்து, தம் ஆயுசைப் போக்கும்படி செய்விக்கும். இப்பேர்க்கொத்த கோட்டை வாசலை உடைத்தாயிருக்கிறதனாலே, இந்தப் பட்டணத்துக்கு மாந்தை என்று பெயர். கேளாய் விக்கிரமார்க்க அரசனே, இதற்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லுவார்கள்.
இந்தப் பட்டணத்து மாந்தர்கள் மன்னர் இட்ட கட்டளையை மறவாது, மறையாது, ஒழுகி வந்ததனால், மந்தைபோல் நடக்கும் மாந்தர் வாழ் சாந்தமாம் நகர் இச்செகதலத்திலுண்டோ ? நீர் ஒரு முறை வாரும், அந்த ஊரைப் பாரும். தேவலோகத்து அளகாபுரியும், குபேரபட்டணமும், பூலோகத்து அத்தினாபுரியும் அதற்கு ஈடாகா.
அதில் இல்லாதன இல்லை என்றால் முற்றும் உண்மை, முக்காலும் உண்மை. அந்தப் பட்டணத்திலே, முந்தையோர் வரம்பின் முறைமை வழுவாது, மனு நெறி பிசகாது மன்னவனாம் தென்னவனுக் கிளையான் இணையாரமார்பன், அஜமுகன் என்பான் அரசாட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஐம்பத்தாறாயிரம் பத்தினிமாரும், அதற்கு இரட்டிப்பங்கு வைப்பாட்டிமாரும் உண்டு. அந்த ஐம்பதினாயிரவரில், அவனுடைய கண்ணுக்குக் கண்ணாக, கட்டிக் கரும்பாக, நகத்திற்குச் சதையாக, பூவுக்கு மணமாக, பத்தினிப் பெண்களிலே பதுமினிப் பெண்ணாய், கண்ணால் பார்க்கவும் மயக்கம் போடும் மோகலாகிரி தரும் - அஜமுகி என்பவள் ஆசைக்குகந்த பட்ட மகிஷி. வாஞ்சைக்குகந்த வஞ்சிக் கொடியாளுக்குப் பிள்ளையே பிறக்காமல், சிங்காதனச் சிறப்புக்கு ஆண் வாரிசே அளிக்கமாட்டேன் என்று தெய்வங்கள் யாவும் ஒன்று கூடிச் சங்கற்பித்தது போலவும், பட்டமகிஷியின் பேரிளம் பெண் பருவத்தையும் வெகு துரிதத்தில் ஓட்டி விரட்டியடித்துக் கொண்டு போவான் போல, காலதேவன், நாட்களை வாரங்களாகவும் வாரங்களைப் பட்சங்களாகவும் பட்சங்களை மாதங்களாகவும் மாதங்களைப் பருவமாகவும் பருவங்களை வருஷங்களாகவும் நெருக்கிக் கொண்டு வரவும், வயிற்றுக்குப் பாரமாகப் பிறந்த வைப்பாட்டிப் பிள்ளைமார்கள் நாள் தவறாமல் படித்தரம் பெற்றுப் போக, பட்டி மண்டபத்தில் முட்டி மோதுவதைக் கண்டு ஆறாச் சினமும் அளவிலாப் பக்தியும் கொண்டவனாகி, அதிவீர சூர பராக்கிரம கேதுவான அஜமுகன் என்ற செகதலம் புகழும் மகிபதி, அவனியில் உள்ள சாத்திர விற்பனர்கள் யாவரையும் கூட்டுவித்து, "ஐயன்மீர்! கடையேன் கடைந்தேற ஒரு வழி அருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொள்ள, சகலகலா வல்லவனும், அட்டமா சித்தியில் கெட்டிக்காரனுமான சித்தவல்லப சிரோன்மணி யொருவன் சபாமண்டலத்தே எழுந்தருளி நிமிர்ந்து நின்று, "புவித்தலம் முழுதும், கவித்தொரு குடைக்கீழ், செவித்தலம் தன்னிற் பவத்துயர் கேளாது செங்கோல் நடாத்தும் அங்கண்மா ஞாலத்து அதிவீர மன்னா, நம் சயனக்கிருகத்தில், வடதிசை கிடக்கும் சப்ரமஞ்சக் கட்டிலின் சாபமே நுமக்குப் பிள்ளைப் பேறு வாயாதது; கட்டிலை அகற்றி, கானகத்தின் கீழ்த் திசையில், கருங்காலியும் சந்தனமும் பின்னிப் பிணைந்து வளர்ந்து நிற்கிறது; அதை வெட்டிக் கட்டிலாக்கிக் கால் நீட்டிப் படுத்தால், பத்தாம் மாதம் ஆண் மகவு நிச்சயம்" என்று சொல்லாநிற்க, அத்துறவிக்குப் பசிப்பிணி போக்க மடமும் மான்யமும் கொடுத்து, சைத்தியோபசாரம் செய்விக்கச் சேடிப் பெண்கள் அறுநூற்றுவரையும் உடனனுப்பினான். பிறகு முரசறைவித்து, 'காட்டிலே கருங்காலியும் சந்தனமும் கட்டித் தழுவி வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து தருவோருக்கு ஆயிரம் பொன் பரிசு' என்று பரிசனங்களிடையே சொல்லச் சொல்லி, தச்சர்கள் யாவரையும் அழைப்பித்துக் கட்டில் செய்ய ஆணையிட்டான். காட்டிலிருந்து மரமும் வந்தது. கட்டிலும் செய்து முடித்தார்கள். அப்பொழுதுதான் அரசே, நாங்கள் இருவரும் அந்தக் கட்டிலின் குறுக்குச் சட்டத்தின் கீழ் ஈசான திசையில் இருந்த சிறு பொந்தில் குடிபுகுந்தோம்.
விக்கிரமாதித்த மன்னா வெற்றிவேல் அரசே, நாங்கள் காலெடுத்து வைத்த நேரம், காலன் கரிக்கோடு போட்ட நேரம் போலும்! என்று அந்தப் பெட்டை மூட்டைப் பூச்சி ரெட்டைச் சொட்டுக் கண்ணீர் சிந்தி விட்டு, பட்டியைப் பார்த்துப் பெருமூச்சுவிட்ட விக்கிரமார்க்க மகாராசாவை நோக்கித் தன்னுடைய துயரக் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.
3
தச்சன் வீட்டுத் தடுக்கின் இடுக்கில் பசிக்கு வேளாவேளை எதுவும் கிடைக்காமல், தச்சக் குழந்தைகளின் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் பயந்து நித்திய கண்டமும் பூர்ண ஆயுசுமாகத் தவித்து வரும் நாளில், சந்தனக் கருங்காலி சப்ரமஞ்சக் கட்டில் அதிர்ஷ்டம், எங்களுக்குத் தந்த பேருபகாரமாக, தெய்வம் கொடுத்த வரமாக, எங்களை வாழ்வித்தது. பிறகு கேட்பானேன்? மன்னா, மல்லிகை மொக்கும், பனிநீர்ச் சந்தனமும், பக்குவமான ராச ரத்தமுமே எங்களுக்குக் கிடைத்துவந்தன. என் கண்ணுக்குக் கண்ணாளரும் மூட்டை வம்ச மன்மதனுமான என்னுடைய கட்டழகன், கருநாவற்பழம் போலும், காட்டீச்சைப் பழம் போலும், முதிர்ந்து கனிந்த களாப்பழம் போலும், மேனி பொலிந்து, வண்ணம் மிகுந்து, நடை நிமிர்ந்து என் உயிரைக் கொள்ளை கொண்டதுடன், மாந்தை நகர் மூட்டைக் கதிபதி காட்டு வீரப்பன் என்ற விருதெடுத்து அண்டாண்ட புவனங்களையும் கட்டியாண்டார்.
கோவணாண்டிகள் குபேரபட்டணத்து வாரிசாகப் போன கதையாக நாங்கள் புகுந்து விட்டாலும், தெய்வம் கொடுத்த திருவரத்தால் நியம நிஷ்டைகள் பிறழாது, ஆசார சீலம் அகலாது வாழ்ந்துவரும் நாளில், ஒருநாள் என் கணவர் முகம் சோர்வுற்று, நலங்குலைந்து, முடுக்கில் ஒண்டிக் கிடந்ததைக் கண்ணுற்று, "மூட்டைக்கரசா, என் ஆசைக்குகந்த ஆணழகா, கவலை என்ன?" என்று கால் பிடித்துக் கேட்டேன்.
அதற்கு அவர், "என் பத்தினிப் பெண்ணே, அருந்ததியே, புத்திரப் பேறு வாய்க்காவிடில் நம்முடைய ராச்சியம் சீரழிந்து கெட்டுக் குட்டிச் சுவராகப் போகுமே. க்ஷேத்திராடனம் செய்வோமா, தீர்த்த விசேடம் தரிசித்து வருவோமா என்று கருதுகிறேன்" என்றார். நான் அதற்கு, "அரசே, நேற்றிரவு நான் பசியாற்றப் பவனி சென்றபோது பட்டமகிஷி, மன்னவன் தங்கபஸ்பம் உண்டதனால் உள்ள அருங்குணங்களை வர்ணித்துக் கொண்டிருந்தாள். நீர் போய், மன்னவன் துடையில் நாலு மிடறு ரத்தம் பருகிவாரும். பிறகு யோசிப்போம்" என்றேன். என் கணவரும் என் புத்திக்கும் மெச்சி, "கெட்டி கெட்டி! நீயொருத்தியே, இந்த ராச்சியத்திலே எனக்கு ஏற்பட்ட பட்டகிஷி. இனிமேல் எனக்கு மந்திரி ஏன்?" என்று என்னைக் கட்டித் தழுவிவிட்டு வெளியே சென்றார்.
நானும் என் வாயில் திருடிக் கொணர்ந்த சந்தனத்தைப் பூசி, வாசனையிட்டு அலங்கரித்து என் மன்மதனார் வரவுக்காக காத்திருதேன். கணப்பொழுது கழிந்ததோ இல்லையோ, என் கணவனார் பகையரசரைக் கண்ட பட்டாளம் போலும், மந்திரவாதியைக் கண்ட தந்திரப் பேய் போலும் திடுதிடு என்று ஓடிவந்தார். நானோ பதறிப் போய் என்ன என்ன என்று பயந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன்.
"பெண்ணே, என் பதுமினிக் கண்ணே! பதறாதே. பெண் புத்தி கேட்பவன் பின்புத்திக்காரன் என்று சொல்லுவார்கள். அது வாஸ்தவமாகப் போய்விட்டது. ஆனால் உன் தாலிப் பாக்கியத்தால் நான் இன்று தப்பிப் பிழைத்தேன். நீ பத்தினி என்பதற்கு இது ஒன்றே போதும். முதலில் நம் ராச்சியபாரத்துக்கு ஒரு மந்திரியை நாளை காலையிலேயே அமர்த்தி வைத்திவிட்டுத்தான் மறுகாரியம் பார்க்க வேண்டும்" என்றார். "அது கிடக்கட்டும், அரசே! நாளை விஷயம் நாளையல்லவா கவனிக்க வேண்டும். இன்னும் நாளை வர நாழிகை எத்தனையோ கிடக்கிறதே. நடந்த கதை என்ன இப்பொழுது சொல்லலாமே?" என்று நான் கேட்டேன்.
4
அதற்கு அவர், "இப்பொழுது நான் போன நேரம், சகுனப் பிழையோடு, நேரங்கெட்ட நேரமுமாகும். கண்ணை மூடிக்கொண்டு போகவேண்டியதாப் போச்சு. என்னடா கர்மகாண்டம் என்று பகவத் கீதையில் நாலு சுலோகத்தை உச்சரித்துக் கொண்டே காலிருக்கும் இடம் என்று நினைத்துக் கொண்டு உத்தேசமாகச் சென்று கடித்தேன். அது பிருஷ்ட பாகம். என்னவோ சுருக்கென்றதே என்று மன்னன் எழுந்திருக்க, நான் சற்று விலகாமற் போயிருந்தால் நசுங்கியே போயிருப்பேன். மன்னன் அசங்க, மகாராணி கைகளைக் கட்டிலிலே ஊன்றினாள். அவளுடைய மோதிரத்துக்கிடையில் ஏறி ஒளிந்துகொண்டேன். பிறகு மன்னனும் ராணியும் கட்டிலைத் தேடுதேடென்று தேடினார்கள். அவர்கள் இருந்த நிலையை என்னால் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டே காயத்திரி ஜபித்துக் கொண்டு இருந்தேன். பிறகு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு சல்லாபமாகப் பேசுகையில், "மூட்டையாக இருக்கும்" என்றாள் பட்டத்து ராணி.
அதற்குக் கீர்த்திவாய்ந்த அந்த மகிபதியானவன், "பெண் புத்தி என்பது பின்புத்தி என்ற ஆன்றோர் வாக்கு உன் விஷயத்தில் முற்றும் பொருந்தும். செகதலம் தாங்கும் மகிபதி கட்டிலில், பட்ட மகிஷிக்குத்தான் இடமுண்டேயல்லாமல் மூட்டைப் பூச்சிக்கு இடம் உண்டா? விவரம் தெரியாமல் பேசுகிறாயே! அதிருக்கட்டும். இந்த மாதம் மாதவிடாய் நின்றுவிட்டதா?" என்று கேட்டான்.
அதற்கு அவள், "அரசர்க்கு அரசே, தாங்கள் சொல்லுவது என் விஷயத்தில் முற்றும் பொருந்தும். நான் பெண்தானே? இருந்தாலும், மாதவிடாய் குறித்துத் தாங்கள் கேட்டது அவசரப்பட்ட கேள்வி. கட்டில் வந்து இருபத்தைந்து நாளும் பதினெட்டு நாழிகையுந்தான் கழிந்திருக்கின்றன; அதற்குள் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் மீண்டும் கைகளை ஊன்றினாள். நான் இதுதான் சமயம் என்று தப்பி ஓடி வந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு, நெற்றியில் வடிந்த வியர்வையை ஆள்காட்டி விரல் கொண்டு வடித்து, 'சொட்டி' தரையில் முத்துப் போல் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "என் அருமைக் கதிர்ப்பச்சையே, என் ஆட்சியின் அணிகலனே, நெஞ்சு 'படக்குப்படக்கு' என்று அடித்துக் கொள்ளுகிறது. உன் மடியில் தலையைச் சற்றுச் சரிக்கிறேன்" என்று படுத்துக் கொண்டார். நான் வெளியே உலாவச் சென்றிருந்தபோது திருடி எடுத்துக் கொண்டு வந்திருந்த பனிநீர் தெளித்து வீசினேன். கண்ணயர்ந்தாற்போல் படுத்திருந்தார். எனக்கோ, அவர் ரத்த பானம் பண்ணினாரா, தங்கபஸ்பம் கலந்த ரத்தம் எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். மெதுவாக அவரை உசுப்பிக் கேட்க, என் மூட்டைக்கு அதிபதி சொல்லுவார்:
5
"கேட்டாயோ பத்தினியே, ரத்தம் உண்டது நினைவிருக்கிறது, ஆனால் ருசி நினைவில்லை; பயத்தில் மறந்தே போச்சு. நாளை காலையில் நமக்கு ஒரு மந்திரியை நியமித்த பிற்பாடுதான் அந்தக் காரியத்தைக் கவனிக்க வேண்டும்; அது நம்முடைய ராச்சியத்துக்குட்பட்ட எல்லையானாலும் அன்னிய அனுபோகமாச்சே, ஆருயிருக்கு அச்சமாச்சே! மந்திரி சொல்லாமல் தந்திரம் பண்ண முடியுமா?" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். எனக்கோ ருசி எப்படி என்று தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்தது.
புருஷதிலகத்தின் சிரசை மெதுவாகத் தூக்கி ஆடாமல் அசங்காமல் வைத்துவிட்டு எங்கள் அரண்மனையைவிட்டு வெளியே வந்தேன். மெதுவாகப் படுத்துக் கிடந்த தோள்பட்டையண்டை நெருங்கினேன். இருந்தாலும் சங்கோசமாக இருந்தது. பர புருஷனல்லவா? தொடாமல் எப்படி ரத்தம் பருகுவது? என் ஆசைக் கணவர் என்னை அருந்ததி என்று அழைத்தது ஞாபகம் வர, ஓடோ டியும் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். கற்பிழப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்றல்லவா? பெண் புத்தி பின்புத்திதானே? இந்தச் சமயத்தில் அது சற்றே முன்புத்தியானது, பூர்வ ஜன்ம வாசனைதான்.
மறுநாள் காலை என் மூட்டையழகர் நியம நிஷ்டைகளை எல்லாம் முடித்துவிட்டு, எங்கள் அரண்மனை முற்றத்திலே சற்று நேரம் கொலுவீற்றிருந்தார். வெயில் 'சுள்' என்று காய்ந்து வெளி வாசலை எட்டியவுடன், வழக்கம் போல நாங்கள் எங்கள் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவரப் பவனி புறப்பட்டோ ம். யமன் திசையில் கொஞ்ச தூரம் போகையிலே, வாடி வதங்கித் தள்ளாடி நடந்த மூட்டைப்பூச்சி ஒன்றைக் காண, நான் சங்கோசப்பட்டு என் கணவரின் பின்புறமாக ஒதுங்கி நின்றேன். உடனே என் கணவரானவர், அட்டகாசமாக ஆரோகணித்து நின்று, "அகோ, வாரும் பிள்ளாய், தள்ளாடித் தவிக்கும் புதியவரே, உமக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கண் பொட்டையாங் காணும்! நாம் இந்த மூட்டை ராச்சியத்துக்கு மணிமுடி தரித்த மன்னவன் காணும்; காலில் விழுந்து தெண்டனிட்டு நமஸ்காரம் செய்யும். நாம் உமக்கு உயிர்பிச்சை தந்தோம்; அஞ்சாதீர்" என்றார்.
அதற்கு அந்தப் பரக்கழி மூட்டைப்பூச்சி, 'அக் அக்' என்று சிரித்து, "முடிமன்னரே, நீர் செங்கோல் நடத்த மருந்துக்குக்கூட பரிசனங்கள் உம் ராச்சியத்தில் கிடையாதா? நானும் நாலு நாழிகையாகச் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்; சுஜாதி வர்க்கத்தில் ஒருத்தரையும் காணவில்லையே!" என்றது. மீசை கோபத்தில் துடித்தாலும் அடக்கிக் கொண்டு, "உம்முடைய முதல் பிழை பொறுத்தோம். பரிசனங்கள் இல்லாவிட்டால் ராச்சியம் ஆள முடியாது என்று எந்தச் சாஸ்திரத்தில் படித்தீர்? நாங்கள் ஆண்டுகொண்டிருப்பதைத்தான், இதோதான் நேரில் பார்க்கிறீரே, நமக்கு ஒரு மந்திரி தேவை. உமக்கு வேலை பார்க்க இஷ்டமா?" என்று என் கணவர் அதட்டிக் கேட்க அந்தப் பரக்கழி காலில் விழுந்து 'அபிவாதயே' சொல்லியது; அத்திரேய கோத்திரமாம்; அஷ்டசஹஸ்ரம்; நாலு சாஸ்திரமும் ஆறுவேதமும் படித்த வைதிக வித்து; ஆனால் பிரம்மசாரி. புராதன காலத்திலிருந்தே அமாத்தியத் தொழிலில் பிரக்கியாதி பெற்ற குடும்பமாம்; மந்திரி வேலையையும் போக ஒழிந்த வேளைகளில் வைதிக கர்மாக்களையும் செய்து கிடப்பதற்காக, அவனைத் திட்டம் பண்ணி அமர்த்தினார்.
6
காலை எழுந்தவுடன் கொலு மண்டபத்திலிருந்து என் மன்னர் செங்கோல் செலுத்துவது கண் நிறைந்த காட்சியாக இருக்கும். "அகோ வாராய் மதிமந்திரி! மாதம் மும்மாரி பெய்து வருகிறதா?" என்று கேட்பார். அமாத்திய குலதிலகமான மந்திரி சுமந்திரனும், "ஆம் அரசே, நுங்கோலே செங்கோல்" என்று தெண்டனிட்டுத் தெரிவிப்பான். பிறகு இரண்டு பேருமாய் வெளியே போய் ராச்சியத்தைப் பரிபாலனம் பண்ணிவிட்டு வருவார்கள். இப்படி வெகு காலமாக அரசாட்சி பண்ணி வந்தோம்.
அப்படியிருக்கையில் ஒரு நாள் மந்திரி சுமந்திரனானவன், "ராஜ்யம் என்றால் பரிசனங்கள் இருக்க வேணும். அவர்கள் வந்து திறை கொடுக்க வேணும்; நாம் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அலங்காமல் ராஜ்யபாரம் பண்ணவேணும்; அதுதான் மன்னனுக்கு அழகு; மேலும் பட்டமகிஷியாருக்குச் சேடிப் பெண்கள் வேண்டாமா? தன்னந்தனியாக எத்தனை நாள்தான் தாமே சீவி முடித்துச் சிங்காரித்துச் சிரமப்படுவார்கள்? நான் போய்ப் பரிசனங்களைக் கூட்டி வருகிறேன்" என்று சமுகத்தில் செப்பியது; மன்னனும் என்னைப் பார்த்துச் சரிதானே என்று தலையசைத்தார்.
எங்கள் விருப்பம் தெரிந்ததுதான் தாமதம். அந்த விவேகியான மந்திரி கணப்போதில் கோடானுகோடி பரிசனங்களைக் கட்டிலில் கொண்டுவந்து நிரப்பிவிட்டது. எனக்கு அறுபதினாயிரம் சேடிப் பெண்கள். எனக்குக் களைப்பாயிருந்தால் எனக்குப் பதிலாகக்கூடச் சுவாசம் விடுவார்கள், சாப்பிடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு பணிவிடை. இந்த மாதிரியாக ராச போகத்தில் இருந்தபோது ஒருநாள் நான் என் சேடிப் பெண்களுடன் ரத்தபானம் செய்யப் போனேன். ராணியின் தோள்பட்டையை உறிஞ்சிப் பார்த்தேன். ரத்தம் வேற்றாள் மாதிரி ருசி வேறாக இருந்தது. ஆண்களே இப்படித்தான் என்று மனம் கசந்து கணவர் மீதும் கோபம் வர ஊடலுடன் வந்து அரண்மனைக்குள் ஒண்டி இருந்தேன். அவருடன் பேச்சுக் கொடுக்கக் கூடாது, அவரும் ஒரு புருஷந்தானே என்று இருந்தேன்.
அச்சமயத்தில் என் கணவர் படபடவென்று உள்ளே ஓடிவந்தார்.
"இந்த மானிட வம்சத்திலேயே யோக்கியமான பெண்ணைப் பார்க்க முடியாது போலிருக்கிறது! நான் இன்று போய் ரத்தபானம் செய்ய முயன்றேன். ருசி வேறாக இருந்தது. என் பத்தினியே, நீயே பாரு, மனித ஜந்துக்கள் எவ்வளவு கேவலம்!" என்று அவர் சொல்ல, எனக்குக் கோபம் பின்னும் அதிகமாயிற்று. அவர் பிற பெண்ணையும் என்னைப் போல் ஸ்பரிசித்துவிட்டு, ஆள்மாறாட்டமாகத் தப்பு நினைப்பு வேறு வைத்துக்கொண்டு பெண்பழி வேறு சுமத்துகிறார். எனக்கு அன்று ரத்த ஆசை இருக்கத்தான் செய்தது. கண்மூடித்தனமாகப் போய்ப் பிற புருஷனைத் தொட்டேனா? குருட்டுத் தனமாக நடந்துகொண்டதோடு மட்டும் அல்லாமல் பெண் பழி வேறு சுமத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது? பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பெண்கள் மீது அவருக்கு இருந்த அபார கோபத்தினால் ஊடலாக்கும் என்று நினைத்துக் கொண்டு வெளி வாசலுக்குப் போனார். அமாத்திய சுமந்திரன் ஓடோ டியும் வந்தான். "அரசே, அரசே, நாம் நினைத்தது வீண்தோஷம். ராச்சியம் கைமாறி இருக்க வேண்டும்; கட்டிலில் படுத்துத் தூங்குவோர் ரெண்டு பேருமே வேறு" என்று தெண்டனிட, என் ஊடல் தணிய, அவர் சினம் ஆற, நாங்கள் சமாதானமானோம். எப்படியிருந்தாலும் தொட்டுத் தாலி கட்டின நேசம் போகுமா?
7
நாங்கள் இருவரும் சயனித்துக் கண்ணயர்ந்துவிட்டோ ம். நடுச்சாமம் இருக்கும். எங்கள் கொலு மண்டபத்தில் கடல் பொங்குவது போலப் பெரிய இரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தோம். மன்னர் அது என்னவென்று கேட்டுக்கொண்டே வெளியே போனார். நானும் தொடர்ந்து போய்க் கதவுக்குப் பின்பக்கமாக ஒதுங்கி நின்று கேட்டேன்.
எங்கள் பரிசனங்கள் எல்லாம் கூடியிருந்தார்கள். அவர்களில் மூப்பும் மொய்ம்பும் மிகுந்த அறிவாளி ஒருவர், மன்னர் முன்சாஷ்டாங்கமாகத் தெண்டனிட்டு, "மன்னாதி மன்னா, செகதலம் புகழும் மகிபதி, எங்களுக்கு உயிர்பிச்சை அருள வேண்டும்; முட்டைக் கடி பொறுக்காமல், கட்டிலை வெந்நீரிலிட அங்கே உத்தரவகிவிட்டது. எங்களை எப்படியாவது ரக்ஷிக்க வேணும்" என்று கெஞ்சினார்.
மந்திரிமேல் மன்னருக்குக் கோபாவேசம் பொங்கியது.
"அட அப்பாவிப் பிராமணா, அமாத்தியன் என்று சொல்லிக் கொண்டு என் ஆளுகைக்கே ஆபத்தைக் கொண்டுவந்து விட்டாயே! பரிசனங்கள் இல்லாத காலத்தில் நாங்கள் சந்தோஷமாக ராச்சியபாரம் பண்ணவில்லையா? இப்பொழுது இவர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து கொல்லப் போவதும் அல்லாமல், எனக்கும் என் பத்தினிக்கும் பிராணபத்தைக் கொண்டுவந்துவிட்டாயே. நாட்டைவிட்டு ஓடிய ராசனைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? வா, போய் ஒற்று விசாரித்து வருவோம்" என்று அவரையும் அழைத்துச் சென்றார்.
8
விக்கிரமார்க்க மகிபதியே, அவரைக் கடைசியில் உயிரோடு பார்த்தது அதுவே. மன்னர் மன்னவா! எனக்குத் தாலிப் பிச்சை தரவேண்டும். அவருடைய உடல் நசுங்கிக் கிடந்தது இன்னும் என் கண்முன் நிற்கிறதே, தெய்வமே! அவர் உயிரைக் கொடும். அல்லது நான் உமது ஈட்டியில் கழுவேறி உயிரை மாய்த்துக் கொள்ளுவேன் என்று அந்த மூட்டை பத்தினியானது விக்கிரமார்க்க ராசனுடைய ஈட்டி முனைமேல் ஓடி ஏறி நின்று, தன் உடல் போதுமான கனமில்லாமையால் உயிர்விட முடியாமல் தவிக்க, மன்னர் மன்னவனும் அதற்கு அபயம் அளித்து, "பெண்ணே, பயப்படாதே; நாங்கள் இப்பொழுதுதான் காடாறு மாதம் தொடங்கியிருக்கிறோம்; உன் புருஷன் உயிரை மீட்டுத் தருகிறோம்" என்று உத்தாரம் கொடுத்து விட்டு, மன்னர் மன்னவன் பட்டியைப் பார்த்து, "வாரும் பிள்ளாய், நும் யோசனை என்ன? கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காரியம் கூட்டுவோமா அல்லது மந்திரவாள் எடுத்துக் கதையை முடிப்போமா?" என்று கேட்க, அதற்குப் பட்டியானவன் தெண்டனிட்டு வணங்கி, "சமுகத்திற்குத் தெரியாததை நான் என்ன புதிதாகச் சொல்லப் போகிறேன்? மோசம் செய்த தாசிப் பெண்ணைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்துதானே பரிசு கொடுத்தோம்? மற்றும் மந்திரவாளைத்தான் இரண்டு முறை உபயோகித்துவிட்டோ மே; ஒரே ஒரு செப்பிடு வித்தையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க ஜனங்களுக்குப் பிடிக்குமோ? வேதாளத்தைக் கூப்பிட்டுத்தான் கேட்டுப் பார்க்க வேணும்" என்று சொல்லி வாய்மூடு முன், "ஆ, ஆசைப் பத்தினியே" என்று கூவிக் கொண்டு ஒரு மூட்டைப் பூச்சி ஓடிவர, பெண் மூட்டைப் பூச்சியும் உடல் பூரித்துத் தனக்கு வைதவ்யக் கோலம் நீங்கியது விக்கிரமார்க்க சமுகப் பாக்கியத்தால் என்று நினைத்து அவர் காலில் விழுந்து வணங்கும்படி கணவனிடம் சொல்ல, "அகோ மூட்டை அரசனே! நீர் தப்பிய விதம் எப்படி" என்றார் விக்கிரமார்க்க மன்னன்.
"விக்கிரமார்க்க மகிபதி, நானும் என் மந்திரி சுமந்திரனும் காரியம் விசாரிக்கச் சென்றபோது படுத்திருந்தவர் விரலை நீட்ட, என் ராச்சியத்துக்கே அழிவு தேடின அமாத்தியன் அதில் சிக்கி, வினைக்கேற்ற தண்டனையைப் பெற்றான். நான் தப்பிவரத் தாமதமாயிற்று. அதற்குள் இவள் உங்கள் உதவி நாடினாள். எனக்குத் தங்கள் நேசம் கிட்டியது. இனிமேல் நம் ராச்சியம் உங்களுடைய குடை நிழலில் சிற்றரசாக ஒதுங்கி வாழும்" என்று தெண்டனிட்டது.
காடாறு மாதத்தை இனி எப்படிக் கழிப்பது என்ற விசாரம் மிகுந்தவனாக, விக்கிரமார்க்க மகாராசா, அஜபுத்தி நாட்டு அராஜகத்தை ஒடுக்க எண்ணுவானாயினான்.
அதற்கும் இடம் இல்லாமற் போயிற்று. "அன்று கட்டிலில் படுத்திருந்த வேற்றாள் வேறு ஒருவருமில்லையாம்; அஜபுத்தி ஆசைப்பட்டுப் பெற்ற பட்டத்து இளவரசனாம். மன்னன் இல்லாச் சமயம் பார்த்துச் சேடிப் பெண்ணுடன் சல்லாபம் செய்தானாம். சுமந்திரனைக் கொன்ற பிரம்மஹத்தி அவனைத் தொடரும். தாங்கள் கவலைப்பட வேண்டாம், அரசே" என்றது அந்த மூட்டைப்பூச்சி மகிபன்.
காடாறு மாதத்தை கழிப்பது எப்படி என்று தெரியாத விக்கிரமார்க்க மன்னன் தவியாகத் தவிக்கும்போது, பட்டி என்ற மந்திரியானவன் வணக்கம் செய்து, "சுவாமி....
(இத்துடன் ஏடு நின்றுவிடுகிறது. கதையின் பிற்பகுதி கிடைக்கவில்லை)
(முற்றும்)
கலைமகள், ஜுலை 1943
------------
37. கட்டில் பேசுகிறது
1
கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டுபோய்க் கிடத்தினார்கள்.
எனது இரண்டு பக்கங்களிலும் என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதாரணம் மாதிரி.
ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி - இரண்டிலொன்றைக் காண்பிக்கும் 'சார்ட்' என்ற படம்.
ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும்பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு 'டோம்'.
அதன்கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை, நாற்காலி.
அதில் வெள்ளுடை தரித்து, 'ஆஸ்பத்திரி முக்கா'டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.
ஒன்றையும் பற்றாமல் சலித்துக்கொண்டிருக்கும் மனம்.
ஐயோ! மறுபடியும் அந்த வயிற்றுவலி. குடலையே பிய்த்துக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக் கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! 'ஸ்பிரிங்' கட்டிலாம்! என்னமாக உறுத்துகிறது!
சற்று அயர்வு...
என்ன வேடிக்கை! கட்டில் என்னுடன் பேசுகிறது!
"என்ன வோய்! என் 'ஸ்பிரிங்'கிற்கு என்ன குறைச்சல்? நீர் நாளைக்கு ரொம்ப... என்னிடம் வருகிறவர்களை, மரியாதையாக நாலு பேரோடு, சங்கு சப்தம் அல்லது வேத மந்திரம் சகிதமாகத்தான் நீண்ட பிரயாணமாக அனுப்புவது! என்ன, அர்த்தமாச்சா? உமக்கும் அந்த வழிதான்!
"ஹி! ஹி! ஹி!..."
என்ன கோரமான பிசாசுச் சிரிப்பு!
மறுபடியும்...
"இன்னும் சந்தேகமா? நம்ம 'டயரி'யை வாசிக்கிறேன், கேளும்!"
"உம்..."
"ஒரு ரஸமான காதற் கதை சொல்லட்டுமா?
"ஒரு வாலிபன். நல்ல அழகன். விஷம் உள்ளே போனதால் குடல் வெந்து புண். என் மடியில்தான் கிடத்தினார்கள். எங்கள் டாக்டர் பெரிய அசகாய சூரர்; இரண்டாவது பிரம்மா. புண் குணப்பட்டுத் தான் வருகிறது. ஆள்தான் கீழே போய்க் கொண்டிருக்கிறான். டாக்டர் முழிக்கிறார். எனக்குத் தெரியும் அவன் கதை; அவருக்குத் தெரியுமா? இரண்டு வாலிபர்கள், ஆனால் பெண் ஒருத்தி, இருவருக்கும் அவள் பேரில் ஆசை. அதிர்ஷ்டச் சீட்டு இவனுக்கு விழுந்தது. ஆனால் பெண் அவனைக் காதலிக்கிறாள்.
2
"பிறகு என்ன! அவனுக்குக் காதல், பெண், பஞ்சணை; இவனுக்குச் சோகம், விஷம், நான்! இவன் காதல் தெய்வீகமானது. காரியம் கைகடந்த பின் தெரிந்திருந்தாலும், திருமணம் என்று சொல்லுகிறார்களே அந்த மாற்றமுடியாத உரிமை, அதையுங்கூட விட்டுக் கொடுத்திருப்பான் - அவள் வாழ்க்கையின் இன்பத்தைப் பூர்த்தியாக்க, 'அவள் கை விஷத்தால் சாகிறோம்' என்ற குதூகலம் இருந்தால், பாரேன்! பிறகு... அன்று ராத்திரி மூடிய கண் சிறிது திறந்தது. ஒரு புன்சிரிப்பு. உதட்டின் மேல் அவள் பெயர். காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவு தான்!
"நன்றாயிருக்கிறதா?
"பிறகு... அவன் சிறு பையன். சத்தியாக்கிரகி வயிற்றில்... தடிக் கம்புக் குத்து. அவனுக்கும் வைத்தியம் நடந்தது. பாவி எமனும் அவனைப் பாத்துத்தான் அன்ன நடை நடக்கிறான்! பையனுக்குச் சாவின் மேல் எவ்வளவு ஆசை! நெஞ்சில் குண்டுபடவில்லையே என்ற பெரிய ஏக்கம். அதே புலம்பல்தான். என் கையில் ஒரு துப்பாக்கி இருந்தால்... சாவைக் கண்டதும் என்ன உற்சாகம்! காதலியைக் கண்டது போலத்தான். என்னமோ, 'ஸுஜலாம், ஸுபலாம்' என்று ஆரம்பித்தான். குரல்வளையில் கொர்ர் என்றது... பிறகு என்ன? அவன் தாயாராம், ஒரு விதவை; என்ன அழுகை அழுதாள்! - கருமஞ் செய்யத் தனக்கு ஆள் இல்லை என்றோ!
"ஹி! ஹி!! ஹி!!!
"இன்னும் ஒன்று சொல்லுகிறேன், கேள்...
"ரத்த பேதி கேஸ். அவன் ஒரு மில் கூலி. அப்பொழுது 'ஸீஸன் டல்' என் மேல்தான் கொண்டு வந்து கிடத்தினர். கூட நஞ்சானும் குஞ்சானுமாக எத்தனி உருப்படி! இத்தனைக்குமேல் இவனுடைய ஆயா ஒரு கிழவி. டாக்டர் வந்தார். வந்துவிட்டதையா கோபம்! 'கழுதையை இழுத்துக் கீழே போடு!' என்று கத்தினார். நானா விடுகிறவன்? ஒரே அமுக்கு ஆளை 'குளோஸ்' பண்ணித்தான் விட்டேன்!
"வேறு என்ன?
"நான் யார் தெரியுமா? சூ! கோழை, பயப்படாதே!
"நான் ஒரு போல்ஷிவிக்கி (அபேதவாதி)!
"ஹி! ஹி! ஹி!..."
மறுபடியும் அந்தக் கோரமான கம்பிப்பல் சிரிப்பு! யாரோ என்னை எழுப்பினார்கள்.
"ஏன் முனங்குகிறாய்? தூக்கம் வரும்படி மருந்து தரவா?" என்றாள், என் மேல் குனிந்து கொண்டிருந்த நர்ஸ்.
எங்கோ டக், டக், டக் என்ற பூட்ஸ் சப்தம். டாக்டரோ?
(முற்றும்)
மணிக்கொடி, 13-05-1934
-------------
38. கவந்தனும் காமனும்
1
ஒரு நகரத்திலே...
இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன் - எந்தப் பட்டணத்தையும் இரவில்தான் பார்க்க வேண்டும்.
நீங்கள் இரவு எட்டு மணிக்குமேல் சென்னை மாநகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் நான் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது.
கண்ணைப் பறிக்கும் விளக்குகள், உள்ளத்தைப் பறிக்கும் நாகரிகம்!
மனிதனின் உயர்வையும், உடைவையும் ஒரே காட்சியில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்கள்!
இது கலியுகமல்ல, விளம்பர யுகம் என்பதற்குப் பொருள் தெரியவேண்டுமானால் இந்த நகரத்தின் இரவைக் காணவேண்டும். இந்தக் கூட்டங்கள்! - ஏன் இவ்வளவு அவசரம்? இதுதான் நாகரிகத்தின் அடிப்படையான தத்துவம் - போட்டி, வேகம்!
டிராம் வண்டிகளின் 'கணகண'வென்ற ஓலம். ஒரு வேளை இது நாகரிக யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ என்னவோ?
பெண்களின் பல் வரிசைக்கு முத்துக் கோத்தாற்போல் என்கிறார்கள். இந்த வரிசையான மின்சார விளக்குகளுக்கு உபமானமாகத் தேவலோகத்திலும் இவ்வளவு பெரிய முத்துக் கிடையாதே! புதிதாக வந்தவன் மலைத்துப் போகலாம். உற்சாகப்பட முடியாது.
வெளிச்சம்! வெளிச்சம்! கண்ணைப் பறிக்கும் வெளிச்சம்!
இதுதான்... தெரு மூலை!
இதுதான் மனித நதியின் சுழிப்பு!
இதற்கு உபநதிகள் போல் பெரிய கட்டடங்களுக்கிடையே ஒண்டி ஒடுங்கிப் போகும் ரஸ்தாக்கள்.
இது வேறு உலகம்!
ஒற்றைப் பாதையில் பாதசாரிகள்; மங்கிய மின்சார விளக்குகள்!
இடையிடையே எங்கிருந்தோ வரும் எக்களிப்புச் சிரிப்பைப் போல டிராமின் கணகணப்பு.
மணி எட்டுத்தானே சொன்னேன்? கொஞ்ச நேரம் சென்றுவிட்டால் ஆட்கள் நடமாட்டமிருக்காது. 'ஆசாமிகள்' வருவார்கள். வாடிக்கைக்குக் கிராக்கி உண்டு.
இந்தப் பக்கங்களுக்கு அதற்கு மேல் வரவேண்டுமென்றால் 'ஆசாமி'யாக இருக்க வேண்டும்; அல்லது குருடனாக இருக்கவேண்டும்; அல்லது கண்கள் எல்லாவற்றையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத் தத்துவம் கொண்ட மனிதனாக இருக்க வேண்டும்.
அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! - எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸுக்காகக் கண்ணை மூடவேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்.
வீட்டில் இவ்வளவு 'சீப்'பாகக் காரியம் நடத்த முடியாது. ஆனால், உங்களிடம் தத்துவம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.
2
தன்னினைவில்லாமலே ஒரு வாலிபன் தெரு வழியாக வருகிறான். களைப்பு, பசி இவை இரண்டுந்தான் அப்பொழுது அவனுக்குத் தெரியும். மனிதனை மிருகமாக்கும் இந்தத் தெரு வழியாகத்தான் அவன் ஆபீஸுக்குச் செல்வது வழக்கம். அந்தப் பெயரற்ற ஆபீஸ், அவனை முப்பது ரூபாய்களுக்குச் சக்கையாகப் பிழிந்தெடுத்த பிறகு, இந்த உணர்ச்சிதான் வருமாக்கும்! அதோ அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஒருவன் - இவனைவிட அதிகமாகக் கொழுத்த தீனியா தின்கிறான்? அவன் தன்னை மறக்க - யோகிகளைப் போல் அல்ல - குடிக்கிறான். இவனுக்கு அது தெரியாது.
ஒரு மூலை திரும்புகிறான்; சற்று ஒதுக்கமான மூலை.
அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண்! பதினாறு, பதினேழு வயது இருக்கும். காலணா அகல குங்குமப் பொட்டு, மல்லிகைப் பூ, இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள்.
அவளை அவன் கவனிக்கவில்லை.
"என்னாப்பா, சும்மாப் போரே? வாரியா?"
வாலிபன் திடுக்கிட்டு நிற்கிறான்.
"நீ என்னாப்பா, இதான் மொதல் தரமா? பயப்படுரியே?"
கையை எட்டிப் பிடித்தாள்.
"உன் பெயரென்ன?"
"ஏம் பேரு ஒனக்கு என்னாத்துக்கு?"
இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு வழிதான் புலப்படுகிறது.
அதற்குள் அவள் சந்திற்குள் இழுக்கிறாள்.
வாலிபன் உடனே மடியிலிருந்த சில்லறைகளையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, "போ! போ!" என்று அவளை நெட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான்.
"ஏண்டா, பேடிப் பயலே! பிச்சைக்காரின்னா நெனச்சுகினே!" என்று சில்லறைகளை விட்டெறிகிறாள்.
அவன் அதற்குள் ஓடிப் போய்விட்டான்.
இந்த அசம்பாவிதமான செய்கையினால் அவள் மலைக்கிறாள். சற்றே பயம்.
"பேடிப் பயல்! பேமானி!" என்று முணுமுணுத்துக் கொண்டே, இருட்டில் சில்லறையைத் தேடுகிறாள்.
ஆனால் அவனும் அன்று பட்டினி என்று இவளுக்குத் தெரியாது.
எக்காளச் சிரிப்பு மாதிரி எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் கணகணப்பு!
(முற்றும்)
மணிக்கொடி, 22-07-1934 (புனைப்பெயர்: கூத்தன்)
----------------
39. கயிற்றரவு
1
'கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது... ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கிறது. இல்லை - இல்லை.
சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டு கொண்டே வருகிறது. இன்று - நேற்று - நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனை தானே. நான் என்ற ஒரு கருத்து, அதனடியாகப் பிறந்த நானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின் என்று நாமாக வக்கணையிட்டுப் போட்டுக் கொண்ட வரிகள்... இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும்... நான் என நினைத்த - நினைக்கும் - நினைக்கப் போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம்... கூட்டு வாழ்வு என்ற வாசனையையொட்டி, மனசு இழைத்து இழைத்துக் கட்டும் மணற் சிற்றில்தானே இந்த நாகரிகம்... மகா காலம் என்ற சிலந்தியின் அடி வயிற்றிலிருந்து பிறக்கும் ஜீவ நதியின் ஓரத்தில் கட்டி வைத்த மணற்சிற்றில்... என்ன அழகான கற்பனை' என்று உச்சிப் போதில் பனை மூட்டினடியில் குந்தி உட்கார்ந்திருந்த பரமசிவம் பிள்ளை நினைக்கலானார்.
துவர்த்து முண்டில் அவர் கட்டியிருந்த ஒற்றைப் பிரி முண்டாசுக்குத் தப்பிய சிகைத் தலையில் வெயில் தாக்கியது. குனிந்து குந்தியிருந்த பனைநிழல் வாக்கில் வெயில் சற்றும்படாதபடி ஒரு பக்கமாக நகர்ந்தார். முள்ளும் முனையுமாக நின்ற ஊவாஞ்செடி, கருவேலங்கன்று பெருந்துடையில் குத்தியது. மறுபுறமாக விலகிக் கொண்டார். குனிந்து கவனித்துக் கொண்டிருந்தவருக்கு நினைவு பிரபஞ்ச யாத்திரை செய்ததென்றாலும், மலத்தில் மாண்ட குடல் புழு கண்ணில் விழுந்தது. 'மலப்பிறவி... பல ஜன்மம் பல மரணம்'. சீச்சீ..., மனம் குமட்ட வேறு ஒரு பனை மூட்டினடியில் போய் அமர்ந்தார். அது விடலிப் பனை. சற்றுத் தாழ்வாக இருந்ததனால் நிழலும் சுமாராக இருந்தது. முன் குத்தலும் இல்லை. ஆனால் சரல் குத்தியது.
மனமோ 'பிறவா நெறி' காட்டாமல் மீண்டும் மீண்டும் மலப்புழு மாதிரி உடற் கூறின் விளைவாக எழுந்த அவசங்களின் பால் விழுந்து குமைந்தது. மனம் என்ற ஒன்று உடம்பை விட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக் கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத் தானா... நான் பிறப்பதற்கு முன்... என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞை உண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப் பற்றியுள்ள சூழ்நிலைக்குத் தான் பிரக்ஞையுண்டா?
2
'இந்தப் பனை, இந்தப் பனை விடலியெல்லாம் என் பிரக்ஞைக்குள் பட்டது. இது முளைத்தது எனக்குத் தெரியும். இது முளைப்பதற்கு முன் இந்தக் கட்டாந்தரை, இந்த நிழல் கூட அற்று இருந்தது தெரியும். முந்திய ஆடிக் காற்றில் விழுந்ததே அந்தப் பனை - அது எங்கு நின்றது என்று கூட நிதானிக்க முடியாமல் வரட்டுக் கட்டான் தரையாகத்தான் கிடக்கிறது... நான் பிறப்பதற்கு முன்பு... பரமசிவம் பிள்ளை என்ற ஒருவன் விருப்பு வெறுப்பு, ஆசை துயரம், கவலை பொறுப்பு முதலியவற்றுடன் கூடிய ஒரு ஜந்து; வாழையடி வாழையாக வரும் விளையாட்டின் வித்தைகளை வாலாயமாகக் கற்று, அதற்கு இசைந்தோ இசையாமலோ விளையாடி... பிறகு பரமசிவம் என்ற பெயர் மட்டும் போகுமிடத்துக்கு வழி வைத்துவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டோ அல்லது புது வழியிலோ போய்விடும் ஒரு தோற்றம்... ஒரு பொம்மலாட்டம்! பொம்மலாட்டம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? சூத்திரக் கயிறு இழுக்கிறதா அல்லது சூத்திரதாரன் உண்டா?
நிச்சயமாக எப்படி இருக்கிறது அல்லது இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லிவிட முடியும்?... வருகிற வாசல், போகிற திசை இரண்டுந்தான் தெரிகிறது. வருகிறது ஒரு யோனித் துவாரம், போகிறது மற்றொரு யோனித் துவாரம்... பிரகிருதி என்ற அன்னையிடந்தானா? அல்லது கருவூரிலிருந்து கருவூருக்குச் செல்லும் பாதை தான் மனித வாழ்வா? முடிவில்லா வித்தையா? முறையில்லாத் தந்திரமா...?'
கைலாசபுரத்து ஆற்றங்கரை பனைமூட்டடியிலே உட்கார்ந்த பரமசிவம் பிள்ளையின் மனம் 'தான்' இல்லாத ஒரு காலத்தைச் சற்று சிரமத்துடன் கற்பனை பண்ணத் தொடங்கியது.
3
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் கைலாசபுரத்திலும் சூரியோதயம் சூரியாஸ்தமனம் தெரிந்துகொண்டுதானிருந்தது. அப்பொழுது ஆற்றங்கரைக்கு வரும் பாதையில் அத்தனைக் காரைக் கட்டிடங்கள் கிடையாது. புழுதி கிடையாது. சுகமான மருத மர நிழல் உண்டு. மாடு படுத்திருக்கும். மனித நாகரிகமே அந்தப் பிராந்தியத்தில் அப்பொழுது உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருந்த மாதிரிதான் தென்பட்டது.
ஆனால் இயக்கம் இருந்துகொண்டுதானிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மடிந்து திங்கட்கிழமை பிறக்கிறது எந்த வினாடிக்குள் என்று யாருக்காவது நிர்த்தாரணமாகச் சொல்ல முடியுமா? நாமாக முடுக்கிவிட்ட கெடிகாரம் சொல்லுவதும், நாம் சொல்லுவதும் ஒன்றுதான். ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்து கொண்டு வந்தது திங்கட்கிழமை என்று நாம் சொல்லும்படியாகிவிட்ட ஒரு தன்மை போல, நாகரிகம் அங்கே உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருப்பது போலத் தென்பட்டதும் ஒரு தோற்றந்தான்.
அது அப்படியே உட்கார்ந்து கொண்டே இருந்தால், இப்பொழுது காரைக் கட்டிடங்கள் எப்படி முளைத்திருக்கும்? மருத மரத்து நிழல் இன்னும் இருந்து கொண்டிருக்குமே! அப்பொழுது காற்றடித்தது; மழை பெய்தது; நதியில் வெள்ளம் வந்தது. பனை மரங்கள் சாய்ந்தன; விறகாயின... விட்டமாயின. விடலிகள் முளைத்தன. சூரியாஸ்தமனம்... சூரியோதயம்... ஆற்றங்கரைப் படிக்கல்லில் அழகியநம்பியா பிள்ளை வேட்டி துவைப்பார்... உட்கார்ந்திருந்து அழுக்குத் தேய்ப்பார். ஆற்றில் மூழ்கிக் குளிப்பார். நின்று திருநீறு அணிவார்.
அனுஷ்டானாதிகள் செய்வார். படிமீது மருத நிழல்கள் கவிந்திருக்கும். ஆனால் இப்போது படிக்கல் சரிந்துவிட்டது. பாதை உண்டு. மணலிலும் தெற்றுக்குத்தாக நிற்கும் படிகளை மறைத்தும் தண்ணீர் ஓடும். இப்போது மருத மரம் இல்லை. வெயில் உண்டு. கல் வழுக்கும்.
அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால், கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது... அதிலே விளைந்த அனந்த கோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று. நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது. மீனாயிற்று, தவளையாயிற்று, வாலிழந்தது, குரங்காயிற்று. சமாதி நிலையிலே உறங்கலாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது...
4
கைலாசபுரத்திலே மரங்கள் மொக்கு விட்டன. பூ மலர்ந்தது. தேன் வண்டுகள் வரத்துப் போக்கு வைத்துக் கொண்டன. மரமும் சூலுற்றது... பிஞ்சுற்றது...
கருவூருக்கு வடக்கே உதரபுரியிலேயிருந்து ஹுங்காரம் போன்ற அலறல் பிறந்தது. வேதனையிலே குரல் பிறந்தது. கைக்கட்டை விரல்களை உள்மடக்கிப் பிடித்துக்கொண்டு தலை குப்புற வந்து விழுந்தது ஒரு பிண்டம் - ஒரு ஜன்மம். பிரக்ஞை வந்தது. காட்டுமலம் போயிற்று. ஜன்மம் வீறிட்டது. கைகளையும் கால்களையும் சுண்டி உதறிக் கொண்டு அழுதது. கருவூர்க் கயிற்றைக் கத்தரித்து விட்டார்கள். தனி ஜன்மமாயிற்று. தனித்தன்மை பெற்றது. முலை சுவைத்தது... உறங்கியது... அழுதது... முலை சுவைத்தது...
கைலாசபுரத்திலே மரங்கள் காய்த்தன. கொத்துக் கொத்தாக, பச்சைப் பச்சையாகக் காய்த்துத் தொங்கின. மரத்தையே தரையில் இழுத்துக் கிடத்திவிடும் போலிருந்தது அந்த வருஷத்துக் காய்ப்பு.
5
நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகியநம்பியா பிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.
"அப்பா யாரு?" என்று கேட்கிறார் அழகியநம்பியா பிள்ளை.
குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.
"முட்டாப்பயலே; நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம்... பரமசிவம் பிள்ளை!" என்றார் அழகியநம்பியா பிள்ளை.
"அப்பா யாரு?" என்றார் அழகியநம்பியா பிள்ளை.
குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.
"பரமசிவம் யாரு?" என்று கேட்டார் அழகியநம்பியா பிள்ளை.
"நான்" எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.
"போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!" எனக் குழந்தையை மெய்ம்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.
6
குழந்தையும் பரமசிவமாகி நான் - நீ - அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது. அம்மா - அப்பா - தெரு - ஊர் எனப் பரிசய விலாசம் படிப்படியாக வளர்ந்தது. வாத்தியார், பிரம்படி, பிறகு கல்வி, சில்லறை அறிவு, பிரம்புக் கொட்டடியிலும் மற்றப்படி இனிக்கின்ற, அவசியமான, பிரியமான ஞானச் சரக்குகளை வேற்று அங்காடிகளிலும் பரமசிவம் பெற்றார். சீனி இனிக்கும் - நெருப்புச் சுடும் - அப்பா கோபிப்பார் - கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற நேர் அனுபவ, அனுபவ சூன்யக் கருத்துக்களை எல்லாம் நான், என்னுடைய என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் கட்டிடம் அமைக்க ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் - பரமசிவம் - அடி - உதை - பலம் - பலீன் சடுகுடு முதலிய பாதைகளில் செல்ல, கிழமைகள் என்ற கால அமைதி தாராளமாக வசதி செய்து கொடுத்தது.
அழகியநம்பியா பிள்ளையின் வேலைகளை மேற்கொள்ளும் காலம் வந்தது. பரமசிவம், பரமசிவம் பிள்ளையானார். உடல் வாட்ட சாட்டமாக அமைந்தது. உடம்பில் வலு, நெஞ்சில் உரம், மனசில் நம்பிக்கை, தைரியம். வீட்டிலே சமைத்துப் போட... பிறகு வம்ச விருத்திக் களமாக்கிக் கொள்ள யுவதி... உச்வாச நிச்வாசத்தை விட என்ன சுகம்... போகம் - உடலில் உள்ள வலு வீரியமாகப் பெருக்கெடுத்து ஜீவ தாதுக்களை அள்ளி விசிறியது. இப்பொழுது கிழமைக்கும் வாரத்துக்கும் மாதத்துக்கும் ஓடும் வேகந்தான் என்ன. கஷ்டம் - வருத்தம் - கசப்பு - ஏமாற்றம் கடன் வாங்கி அதற்குள் ஐந்து வருஷங்களா?... என்ன ஓட்டமாக ஓடுகிறது.
மணல் கூண்டு கடிகையில் கடைசி மணல் பொதி விரைந்து ஓடி வருவது மாதிரி என்ன வேகம்... நிஜமாக, திங்களும் செவ்வாய்களும் இப்போதுதான் இவ்வளவு வேகமாக ஓடுகின்றனவா... அல்லது நான் தான் ஓடுகிறேனா... நான் யார்... இந்த உடம்பா... தூங்கும்பொழுது, பிறக்கு முன் இந்த நான் எங்கிருந்தது... இந்த நான் தான் ஓடுகிறதா, நாள் தான் ஓடுகிறதா... பெட்டியடிக் கணக்கு... இடுப்பொடிக்கும் உழைப்பு, குனிந்து குனிந்து, இன்னொருவன் பணமூட்டைக்கு தலையை அண்டை கொடுத்து கழுத்தே சுளுக்கிக் கொண்டதே. முதுகிலே கூன் விழுந்துவிட்டது. பிறனுக்கு நலம் பார்த்து நாலு காசு சேர்த்து வைத்துக் கண்ணிலும் வெள்ளெழுத்து. வீட்டிலே பூனை படுத்திருக்கும்... பொய்மை நடமாடும்... வறுமையும் ஆங்கே பெற்றெடுத்த பிள்ளையுடன் வட்டமிட்டுக் கைகோர்த்து விளையாடும்.
மனையாளுக்கு கண்ணிலே இருந்த அழகு - ஆளைத் தூண்டிலிட்டு இழுக்கும் அழகு எங்கே போயிற்று? கையில் ஏன் இந்த வறட்சி? வயலோ ஒத்தி. வீடோ படிப்படியாக மூலப் பிரகிருதியோடு லயமாகிவிட யோக சாதனம் செய்கிறது. விட்டமற்றுப் போனால் வீடும் வெளியாகும்... அப்பொழுது அழகியநம்பியா பிள்ளை எங்கே, அவர் மகன் பரமசிவம் எங்கே... எல்லாம் பரம ஒடுக்கத்திலே மறைந்து விடும். எத்தனை துன்பம் - எத்தனை நம்பிக்கைக்காக எத்தனை ஏமாற்று... எத்தனை கடவுள்கள்... வாய்க்கு ருசி கொடுக்க ஒரு கடவுள்... வயலுக்கு நீர் பாய்ச்ச ஒரு கடவுள்... வியாச்சியம் ஜயிக்க... சோசியம் பலிக்க, அப்புறம் நீடித்து, நிசமாக உண்மையில் பக்தியாய்க் கும்பிட. எத்தனையடா எத்தனை... நான் தோன்றிய பின் எனக்கு என்று எத்தனை கடவுள்கள் தோன்றினார்கள்... எனக்கே இத்தனை என்றால் என்னைப் போன்ற அனந்த கோடி உயிர் - உடம்புகள் கொண்ட ஜீவநதியில் எத்தனை... ஆற்று மணலைக் கூட எண்ணி விடலாம்... இந்தக் கடவுளர்களை? ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனைக் கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்கள் மடிந்து விடுகிறார்களா... 'நான்' மடிந்து விடுகிறதா... அப்பொழுது ஒருவேளை அவர்களும் இந்த நானோடு போய் விடக்கூடும்... இந்த நானையும் மீறித் தங்கிவிடுகிற கடவுளர்களும் உண்டு. அவர்கள் தான் மனம் என்ற ஒன்று கால வெள்ளத்துக்கு அருகே அண்டி விளையாடும் மணல் வீட்டைப் பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள் - பரமசிவம், பரமசிவம் உனக்கு ஏதுக்கடா இந்தச் சள்ளை! அதோ, காலடியில் பாம்புடா, பாம்பு...
கயிற்றரவு!
7
காலம் ஒரு கயிற்றரவு?
பரமசிவம் பிள்ளையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரையில் கிடத்தி விட்டார்கள். பாம்பு கடித்தால் பிழைக்க முடியுமா? போகிற வழிக்கும் புண்ணியம் சேர்க்கத் தலைமாட்டில் உட்கார்ந்து யாரோ தேவாரம் படித்தார்கள். பரமசிவம் பிள்ளை ஏறிட்டுப் பார்த்து சிரமத்துடன், 'தூரத்தில் இருந்து படித்தால் கேட்பதற்குச் சுகமாக இருக்கும்... பக்கத்திலிருந்தால் காதில் வண்டு குடைகிற மாதிரி தொந்தரவாக இருக்கிறது' என்றார்...
கண்ணை முழுவதும் திறக்காமலும் முழுவதும் மூடாமலும் அரைக்கண் போட்டபடி உலகைப் பார்ப்பதிலே அவருக்கு ஓர் ஆனந்தம் இருந்தது. நிம்மதி இருக்கிறது. தூரத்திலே தேவாரம் தண்ணீரடியில் முங்கி உட்கார்ந்திருக்கும்போது கேட்கும் தூரத்து ரீங்காரம் மாதிரி சுகமாக இருக்கிறது. அதோ தெரிகிறது என் புஸ்தகம்... என்னுடைய கால் கட்டைவிரல்தான்... இனி எத்தனை நேரம் எனக்கு இது தெரிந்துகொண்டிருக்கும்... ஸ்மரணையில் கால் இருக்கிறமாதிரி தெரியவில்லையே.
கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா? ஸ்மரணைக்குப் புலனாக வேண்டாமா? கால் கட்டைவிரல் ரொம்ப தூரத்திலிருக்கிறதோ... இரண்டு மைல் தூரத்தில் சீ... எட்டு மைலாவது இருக்க வேண்டும். அதோ அந்தப் புஸ்தகம் இப்பொழுது அதுவும் தூரத்தில் தெரிகிறதே... அதில் என்ன எழுதி வைத்திருந்தேன்... கணக்கா... சுவடியா... அழகிய நம்பியைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டும்... எது இருந்தால் என்ன?... நாம் செத்துப் போனால் இந்தக் கால் கட்டை விரல் சாம்பலாகத்தானே... அது எவ்வளவு நேரம் எனக்குத் தெரியப் போகிறதோ... கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துக்கொண்டே இருப்போமா... அதுவும் சுகமாகத்தானிருக்கிறது... உறக்கம் வருகிறதோ... அசதியாக வருகிறதே நிம்மதியாகக் கண்ணை மூடினால்... அப்பா என்ன சுகம்... மூச்சு நின்றது... கைக்கட்டை விரல்கள் உள்வாங்கின... காட்டு மலம் வந்தது... நான் கழன்றது... ஸ்மரணை சுழன்றது... உயிர் - ஆமாம் - உயிரும் அகன்றது... அன்று கருவூரிலே உருவற்று நிலைத்த பிண்டம் இன்று உருவுடன் வதங்கிக் கிடந்தது.
சுழி
சாம்பல் காற்றோடு போச்சு; பெயர் பெயரோடு போச்சு... மனித மனம் இம்மாதிரி அனந்த கோடிக் கூடுகளைக் கட்டிக்கட்டி விளையாடியது... கைலாசபுரத்து மருத மரம் நிழல் கொடுத்தது. மரம் பூத்துக் காய்த்தது, பழுத்தது... ஆற்றில் தண்ணீர். தண்ணீர் மணலிலும் படியிலும் தவழ்ந்து ஓடியது. கள்ளிப்பட்டியானால் என்ன, கைலாசபுரமானால் என்ன? காலவெள்ளம் தேக்கமற்று ஓடிக் கொண்டே இருந்தது... அதிலே வரையில்லை வரம்பில்லை... கோடுகூடத் தெரியவில்லை... கருவூரிலானால் என்ன? காட்டூரிலானால் என்ன? சமாதியோ... பிரக்ஞையோ எதுவானால் என்ன?...
நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!
பரமசிவம் பிள்ளை எங்கே?
(முற்றும்)
காதம்பரி, ஏப்ரல் 1948
---------------
40. கொடுக்காப்புளி மரம்
1
நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.
நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் - உருவத்தையும் மாற்றிக் கொண்டு - செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். அதற்கு வேறு இடம் இருக்கிறது. ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? இதில் ஒன்றும் அவசியமில்லை.
அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அதாவது அங்கு வசிப்பவர்கள் என்றால், அவர்களுடைய வீடு என்ற ஹோதாவில் ஒரு குடிசை; சில இடத்தில் ஓட்டுக் கட்டிடம் கூட இருக்கும். முக்கால்வாசி சாமான் தட்டுமுட்டுகள் வெளியே. சமையல் அடுப்பும் வெளியே. எல்லாம் சூரிய பகவானின் - அவர்கள் கிறிஸ்தவர்கள் - நேர் கிருபையிலேயே இருக்கும்.
ஆண்கள், ஏகதேசமாக எல்லாரும், பட்லர்கள் அல்லது 'பாய்கள்'. பெண்கள் சுருட்டுக் கிடங்கிலோ அல்லது பக்கத்திலிருக்கும் பஞ்சாலைகளிலோ தொழிலாளிகள். அங்கு அவர்கள் தொழிலைப் பற்றிக் கவனிக்க நமக்கு நேரமில்லை.
காளியக்காவும் இசக்கியம்மாளும் அங்கு குடியிருக்கவில்லை. செபஸ்தியம்மாளும் மேரியம்மாளும்தான் குடியிருந்தார்கள். உண்மையில் காளியக்காள்கள் புதிய பெயர்களில் இருந்தார்களே ஒழிய வேறில்லை. மாதா கோவிலுக்குப் போகும் அன்றுதான் ஆரோக்கியமாதாவின் கடாக்ஷம் இருப்பதாகக் காணலாம். பரிசுத்த ஆவி அவர்களுடைய ஆத்மாவைத் திருத்தியிருக்கலாம்; அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஆத்மா சில வருஷங்கள் தங்கி இருப்பிடத்தைச் சுத்தப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியும்.
ஆரோக்கிய மாதா தெருவில் ஒரு முனையில் அவற்றைச் சேராது தனித்து ஒரு பங்களா - அந்தத் தெருக்காரர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் - இருக்கிறது. அது பென்ஷன் பெற்ற ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் அவர்கள் வீடு. அவர் ஒரு புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். பெரிய பணக்காரர். "ஒட்டகங்கள் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழைந்து விடலாம். ஆனால் செல்வந்தர்கள் மோட்ச சாம்ராஜ்யத்தின் வாசலைக் கடக்க முடியாது" என்றார் கிறிஸ்து பகவான். சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்றோ என்னவோ, கர்த்தரின் திருப்பணியைத் தனது வாழ்க்கையின் ஜீவனாம்சமாகக் கொண்டார். உலகத்தின் சம்பிரதாயப்படி அவர் பக்திமான்தான். எத்தனையோ அஞ்ஞானிகளைக் குணப்படுத்தும்படியும், என்றும் அவியாத கந்தகக் குழியிலிருந்து தப்ப வைத்தும், மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழி தேடிக் கொடுத்திருக்கிறார். நல்லவர்; தர்மவான்; ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார். புதிய ஏற்பாட்டில் மனுஷ குமாரனின் திருவாக்குகள் எல்லாம் மனப்பாடம்.
2
அவர் பங்களா முன்வாசலில் ஒரு கொடுக்காப்புளி மரம் பங்களா எல்லைக்குட்பட்டது. ஆனால் வெளியே அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கும்.
வெறுங் கொடுக்காப்புளி மரமானாலும் அதன் உபயோகம் அதிகம் உண்டு. கொடுக்காப்புளிப் பழம் ஒரு கூறுக்கு ஒரு பைசா வீதம் விலையாகும்பொழுது அதை யாராவது விட்டு வைப்பார்களா? பள்ளிக்கூட வாசலிலும், மில் ஆலைப் பக்கங்களிலும் சவரியாயி காலையில் ஒரு கூடை எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு மணி நேரத்தில் கூடை காலி.
எவ்வளவு வருமானமிருந்தாலும் இந்தக் கொடுக்காப்புளி வியாபாரத்தில் சுவாமிதாஸ் ஐயரவர்களுக்கு ஒரு பிரேமை. 'ஆண்டவன் மனித வர்க்கத்திற்காகவே சகல ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் சிருஷ்டித்தார்.' அதைப் புறக்கணிப்பது மனித தர்மமல்ல. மேலும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இதை மலிவாகக் கிடைக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்கு வழி என்பது அவர் நியாயம். அவர்கள் தான் மோஷ சாம்ராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் இதற்காகத் திருட ஆரம்பித்துப் பாப மூட்டையைக் கட்டிக் கொள்ளாதபடி இவர் இந்தக் கைங்கர்யம் செய்து வருகிறார்.
கொடுக்காப்புளியில் உதிர்ந்து விழும் பழங்கள் சவரியாயிக்குக் குத்தகை. நாளைக்குக் கால் ரூபாய். காலையிலும் மாலையிலும் வந்து எடுத்துக்கொண்டு போக வேண்டியது. பணம் அன்றன்று கொடுத்து விட வேண்டியது. இதுதான் ஒப்பந்தம்.
இதனால் ஒரு ஏழை விதவைக்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கவில்லையா? சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதைவிடத் தனது தர்ம சிந்தனையைக் காட்ட வேறு என்ன செய்ய முடியும்?
3
திங்கட்கிழமை காலை.
சவரியாயி வரக் கொஞ்சம் நேரமாகிவிட்டது.
அந்தத் தெருவின் மற்றொரு கோடியில் பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரன் - பிறப்பினால் அல்ல; விதியின் விசித்திர விளையாட்டுக்களினால்; அகண்ட அறிவின் ஒரு குருட்டுப் போக்கினால். எடுத்த காரியம் எல்லாம் தவறியது. மனைவியும் பெண் குழந்தையின் பொறுப்பைத் தலையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.
இரண்டு உயிர்களுக்கு உணவு தேடுவதற்கு வழியும் இல்லை. இதனால் பிச்சைக்காரன் வீட்டின் முன்வந்து கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு நிற்பான். அது ஹிந்து வீடானாலும் சரி, புரொட்டஸ்டண்ட் அல்லது முகமதிய, எந்த வீடானாலும் சரி. கிடைக்காவிட்டால் முனங்கலும் முணுமுணுப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் அவன் குழந்தையும் - அதற்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் - அதுவும் வரும். அதற்கென்ன? உத்ஸாகமான சிட்டுக்குருவி.
உலகத்தின், தகப்பனின் கவலைகள் ஏதாவது தெரியுமா? எப்பொழுதும் சிரிப்புத்தான். பெர்னாண்டஸின் வாழ்க்கை இருளை நீக்க முயலும் ரோகிணி.
அன்று சுவாமிதாஸ் ஐயர் அவர்களுடைய வீட்டையடைந்தான். வந்தபொழுதெல்லாம் இரண்டணா என்பது சுவாமிதாஸ் அவர்களின் கணக்கு. அது கிடைக்காத நாள் கிடையாது. அதிலே பெர்னாண்டஸ்ஸிற்கு ஐயரவர்களின் மீது பாசம். ஏமாற்றுக்கார உலகத்தில் தப்பிப் பிறந்த தயாளு என்ற எண்ணம்.
4
"தோஸ்தரம் அம்மா! தோஸ்தரம் வருது ஆண்டவனே!" என்றான்.
'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை வராது. அதற்கென்ன? உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால் அன்பில்லாமல் போய்விடுமா?
சுவாமிதாஸ் ஐயர் சில்லறை எடுக்க வீட்டிற்குள் சென்றார்.
கூட வந்த குழந்தை. கொடுக்காப்புளிப் பழம் செக்கச் செவேலென்று அவளை அழைத்தன. ஓடிச்சென்று கிழிந்த பாவாடையில் அள்ளி அள்ளி நிரப்புகிறது.
வெளியே வந்து கொண்டிருந்த சுவாமிதாஸ் ஐயர் கண்டுவிட்டார். வந்துவிட்டது கோபம்.
"போடு கீழே! போடு கீழே!" என்று கத்திக் கொண்டு வெளியே வந்தார்.
குழந்தை சிரித்துக்கொண்டு ஒரு பழத்தை வாயில் வைத்தது. அவ்வளவுதான். சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக் கம்பை எறிந்தார்.
பழத்துடன் குழந்தையின் ஆவியையும் பறித்துக்கொண்டு சற்றுதூரத்தில் சென்று விழுந்தது.
திக்பிரமை கொண்டவன்போல் நின்ற பெர்னாண்டஸ் திடீரென்று வெறிபிடித்தவன் போல் ஓடினான்.
குழந்தையிடமல்ல.
கீழே கிடந்த தடியை எடுத்தான்.
"போ நரகத்திற்கு, சைத்தானே!" என்று கிழவர் சுவாமிதாஸ் மண்டையில் அடித்தான். கிழவரும் குழந்தையைத் தொடர்ந்தார்.
பிறகு...?
கைது செய்தார்கள். கிழவர் அடித்தது எதிர்பாராத விபத்தாம். பெர்னாண்டஸ் கொலைகாரனாம்!
அவனும் நியாயத்தின் மெதுவான போக்கினால் குழந்தையைத் தொடர்ந்து செல்லக் கொஞ்ச நாளாயிற்று. வேறு இடத்திலிருந்துதான் பிரயாணம்.
(முற்றும்)
மணிக்கொடி, 09-09-1934
-------------
41. கொலைகாரன் கை
1
அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது.
ஒரு நாள் சாயங்காலம் எங்கள் ரூமில் நாங்கள் உட்கார்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் நண்பன் பரமேஸ்வரன், "எங்கிருந்து வருகிறேன் என்று தெரியுமா?" என்று சத்தம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
"எங்கிருந்து வருகிறாய் என்று சொல்ல வேண்டுமாக்கும்?" என்று நாங்கள் அவனைப் பார்த்துச் சிரித்தோம்.
"போங்கடா முட்டாள்கள். ஊரிலிருந்து அதிசயம் ஒன்று கொண்டு வந்தால், முட்டாள்தனமாக என்னத்தையும் நினைத்துக் கொள்ளுகிறதா?" என்றான்.
"அதிசயத்தைச் சொல்லுமையா, கேட்போம்" என்றோம்.
பரமேஸ்வரன் வைத்திய கலாசாலை மாணவன். சஸ்திர வைத்தியத்தில் அபாரப் பிரேமை. கையில் ஏதோ ஒன்றைக் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்தான்.
"இதுதான் அதிசயம்" என்று அதைப் பிரித்துக் காண்பித்தான்.
அது ஒரு பிணத்தின் வெட்டுண்ட கை!
வெகு நாள் பட்டது. தோல்கள் சுருங்கி நகங்களுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.
"சீச்சீ! தூக்கி எறி," என்று நாங்கள் கூவினோம்.
"இதன் கதை ரொம்ப சுவாரஸ்யமானது. கேளுங்கள்" என்று சாவதானமாக ஆரம்பித்தான்.
2
"நான் எங்களூருக்குப் போயிருந்தேன். அங்கே எங்கள் தெருவிற்கு மூன்றாவது தெருவில் ஒரு மந்திரவாதிச் சாமியார் இருந்தார். அவர் இப்பொழுதுதான் இறந்து போனார். தனி ஆசாமி. அனாதை. பிரேத சமஸ்காரம் செய்ய அங்கிருந்ததை எல்லாம் ஏலம் போட்டார்கள். அப்பொழுது நான் இதை வாங்கினேன். இந்தக் கை இருக்கிறதே, அதன் கதை வெகு ஆச்சரியமானது. இந்தக் கையுள்ள மனுஷன் ஒரு வெள்ளைக்காரன். கையைப் பார்த்தால் அப்படித் தெரியாது அதில் எண்ணெயும் தூசியும் படிந்து நிறம் மாறி இருக்கிறது. அவன் நூறு வருஷத்திற்கு முன்பு இங்கே வந்தவனாம். பொல்லாத படுபாவி!
இங்கு வரும்போது பட்டாளத்து ஸோல்ஜராக வந்தான். அதை விட்டுவிட்டு ஒரு ஜமீந்தாரின் கையாளாக இருந்தான். கையாள் என்றால் என்ன? ஆட்களை உயர அனுப்பும் வேலைதான். சீமையிலேயே அவன் செய்த அக்கிரமங்கள் கொஞ்சமல்ல. கலியாணமான மறுநாள் தன் மனைவியைக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டுக் கொன்றான். அதற்கு மறுநாள், தனக்குக் கலியாணச் சடங்கை நடத்தின அவன் இனத்து மதகுருக்களை மாதா கோவில் கோரியிலேயே கழுத்தில் சுருக்கு மாட்டி தொங்கவிட்டுக் கொன்றவன். பிறகு இங்கு வந்து இருந்தான்.
அப்பொழுது வெள்ளைக்காரர்களுக்கு அவன் செய்த அட்டூழியங்கள் பெருத்த அவமானமாக இருந்தது. ஒரு நாள் இரவு அவனைச் சித்திரவதை செய்து கொன்று புதைத்து விட்டார்கள். அப்பொழுது அவன் கையிருக்கிறதே, பல கொலைகள் செய்த அந்த வலது கை, அதைத்தான் முதலில் வெட்டினார்கள். பிறகு அந்தக் கையைப் பதனிட்டு எங்கோ தொங்க விட்டிருக்கிறார்கள். இந்த மந்திரவாதி இருந்தானே, அவன் காய சித்தி பெற்றவன் என்று சொல்லிக் கொள்ளுவான். அவனும் அந்தச் சமயத்தில் இருந்தானாம். எப்படியோ அந்தக் கையைத் திருடிக் கொண்டுவந்து ஒரு வெள்ளைக்காரப் பிசாசைத் தனக்கு அடிமையாக வைத்திருந்ததாகக் கதை. இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு அதை வைத்திருக்க வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. உடனே வாங்கி வந்தேன்" என்று கதையை முடித்தான் எங்கள் நண்பன்.
"இதை என்ன செய்யப் போகிறாய்?" என்றேன்.
"இதை அறையில் கட்டித் தொங்கவிட்டிருப்பேன்," என்றான் அவன்.
ராமராஜு என்ற நண்பன் பின்வருமாறு கூற ஆரம்பித்தான். "இம்மாதிரியாகக் கையை இழந்து மரணமடைந்தவனுடைய ஆத்மா, இழந்த கையைத் தேடும். அதை வைத்திருக்கிறவரைக் கொன்றுபோடும் என்று நான் கேட்டிருக்கிறேன்."
உடனே எல்லோரும் சிரித்தோம். இருபதாம் நூற்றாண்டிலும் இம்மாதிரி பைத்தியக்காரப் பேர்வழியுண்டா என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் வைத்திய மாணவன்.
3
எம்.கே.நாயுடு என்ற பெரிய சரீரி, எல்லோரையும் கோட்டா பண்ணுகிறவர். ஒருவரையாவது விட்டுவைக்க மாட்டார். "ஆமாம்! இந்தப் புலி சொல்லுகிறதைக் கேட்டு முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பரமேஸ்வரனுக்கு மாமிசத்தில் கிறுக்கு விழுந்திருக்கிறது. அலைந்து போய் இதைக் கௌவிக்கொண்டு வந்திருக்கிறான்" என்று ஒரு போடு போட்டார்.
சிறிது நேரம் எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தோம்.
நானும் பரமேஸ்வரனும் ஒன்றாக அவன் ரூமிற்குச் சென்றோம்.
அவன் அந்தக் கையைத் தன் கட்டிலுக்குமேல் தொங்கவிட்டு, 'வாழ்வாவது மாயம்' என்று சுவரில் எழுதினான்.
எனக்கும் பக்கத்து அறைதான். நேரமாகிவிட்டதென்று விடைபெற்றுக் கொண்டு சென்றேன்.
இரவு இரண்டு மணி இருக்கும்.
நான் திடுக்கிட்டு விழித்தேன். எங்கோ கூப்பாடு. இரைச்சல்.
கண்ணை விழித்ததும் பரமேஸ்வரனின் வேலைக்காரச் சிறுவன் என் பக்கத்தில் நடுநடுங்கிக்கொண்டு என்னை எழுப்ப முயல்வதை யறிந்தேன்.
முகத்தில் பயம் என்று எழுதியிருந்தது அவன் தோற்றம்.
"எஜமான், கொலை..." என்று என்னவோ அவன் உளறினான்.
நான் அவனைக் கவனியாது எனது நண்பன் அறைக்கு ஓடினேன்.
அறையின் நடுமத்தியில் என் நண்பன் தலைவிரி கோலமாகக் கிடந்தான்.
4
கண்கள் உள்ளே செருகி விட்டன. வெள்ளை விழி மட்டும் பயங்கரமாக விழித்தது. கைகால் தேகம் எல்லாம் முறுக்கிப் பின்னிக் கொண்டு கிடந்தன. அவன் கழுத்தில் சிவப்புத் தடம், வளையம் மாதிரி. அதில் ஐந்து சிறு துவாரங்கள். அதன் வழியாகச் சிறிது இரத்தம் வடிந்து காய்ந்து கிடந்தது. வாயிலிருந்தும் கடைவாயிலிருந்தும் வழிந்த சிறிய இரத்த ஓடை.
பக்கத்தில் போலீஸ், - இரவு பீட் கான்ஸ்டேபிளும் அவன் கூப்பிட்டு வந்த ஒரு இன்ஸ்பெக்டரும், - என்னவோ எழுதிக் கொண்டிருந்தார்கள்.
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் எனது நண்பன் தொங்கவிட்டு வைத்திருந்த கையைக் காணவில்லை. பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறதென்று அதை எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
போலீஸ் பின்வரும் ரிப்போர்ட்டை எழுதியிருந்தார்கள்:
"பரமேஸ்வரன் என்ற வைத்திய கலாசாலை மாணவன் தஞ்சையில் நல்ல பண்ணைக் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பையன். அவன் இரவு வந்ததும், தனக்கு மிகவும் களைப்பா இருக்கிறது என்று வேலைக்காரப் பையனை வெளியே அனுப்பி விட்டுப் படுத்துக் கொண்டான். இரவு ஒன்று அல்லது இரண்டு மணி சுமாருக்கு அவன் அறையில், பெருத்த இரைச்சல் கேட்க, வேலைக்காரன் உள்ளே ஓடிச் சென்று பார்த்தான். தனது எஜமானர் தலைவிரி கோலமாகக் கிடப்பதைக் கண்டதும் வெளியே வந்து ஆட்களை உதவிக்குக் கூப்பிட்டான். உடன் போலீஸார் வந்து விசாரணை செய்யத் தொடங்கினார்கள். டாக்டர் வந்து பரிசோதித்து, கொலை செய்ய முயன்றவன், அமானுஷ்யமான பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கொலைஞனைப் பற்றி வேறு ஒரு புலனும் தெரியவில்லை."
எனது நண்பன் இறக்கவில்லை. ஆனால் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.
அங்கிருந்தும் ஒரே புலம்பல்தான். "கிட்டவருகிறானே விடாதே, பிடித்துக் கொள்ளுங்கள்" இதுதான் ஓயாமல்.
5
ஒருநாள் நான் அவனைப் பார்க்கச் சென்றேன். துரும்பாக இளைத்துப் போனான். ஆளே அடையாளம் தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
அவன் எதிரில் உட்கார்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் என்னைக் கவனிக்கவே இல்லை.
திடீரென்று எழுந்தான் "கழுத்தை நெரிக்கிறானே! விடாதேயுங்கள். கழுத்தை நெரிக்கிறானே!" என்று சத்தமிட்டுக்கொண்டு அறையைச் சுற்றிச் சுற்றி ஓடிவந்து மத்தியில் விழுந்தான். பிராணன் போய்விட்டது.
பிறகு பிரேத சமஸ்காரத்திற்குக் கொண்டு போனோம். அவன் தகப்பனாரும் வந்திருந்தார். ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில்தான் மயானம்.
அவனுக்குச் சிதையடுக்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் சற்று தூரத்தில் இருவர் ஏதோ குழிவெட்டிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று இருவரும் 'மனித எலும்பு' என்று கூவினார்கள். நான் பக்கத்தில் சென்று கவனித்தேன்.
உள்ளே ஒரு இடிந்த சமாதி. அதனுள் ஒரு பெரிய எலும்புக் கூடு. கண்குழியில் ஒரு புழு. அதன் வலது முழங்கையிலிருந்த எலும்பைக் காணோம்!
என்ன?
அந்தச் சமாதிக் குழியில் ஒரு ஓரத்தில், எலும்புக் கூட்டின் இடது கையில் சுருங்கித் தோல் ஒட்டிக்கொண்டிருந்த முழங்கைத் துண்டு கிடந்தது. இடக்கை விட மாட்டேன் என்ற பாவனையாக அதன் மீது கிடந்தது.
அதே கை!
குழி வெட்டிக்கொண்டிருந்தவன், அதைக் கண்டுவிட்டான். "அடேயப்பா, கையை விடமாட்டாயோ?" என்று எடுத்தான். அந்த எலும்புக் கூட்டின் கண் குழியிலிருந்த புழு நெளிந்தது.
"தூ! அதை அங்கேயே போட்டு மூடிவிடு" என்றேன்.
"அப்படித்தான் செய்யவேண்டும் சாமி" என்றான்.
(முற்றும்)
ஊழியன், 14-12-1934 (புனைப்பெயர்: நந்தன்)
(பிரான்சு நாட்டு பிரபல எழுத்தாளர் மாபசான் கதையான La maind Ecorche என்ற கதையை தழுவி எழுதப்பட்டது.)
------------
42. கொன்ற சிரிப்பு
1
சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி உயிர்ப்பு. அந்தகன் என்ற சோழன் பழைய வீர வம்சத்தின் கனவுகளையெல்லாம் பாழாக்கி - படாடோ பத்திற்கும் வீண் மிடுக்கிற்கும் மட்டும் குறைவில்லை - பொம்மையரசனாக அந்த வீரர்களின் சிங்காதனத்தை அபசாரம் செய்து கொண்டிருக்கிறான். தெற்கே பாண்டியர்கள் இவன் நாடுகளைக் கபளீகரித்து விட்டனர். மேற்கே சேரர்கள்... அவர்கள் எந்த நிமிஷத்தில் இவன் சிங்காதனத்தையே காலி செய்துவிடுவார்களோ! வடக்கே, அம்மம்ம! எத்தனையோ பெயர் தெரியாத அரசர்கள்! அவர்களில் புதிதாக என்னமோ மிலேச்சராம், துருக்கராம், இன்னும் எத்தனையோ பேர்! அந்தகன், மனிதன் தனக்கு நித்திய வாழ்வு என்று மனப்பால் குடிப்பதுபோல், கவலையின்றி அரசாண்டுகொண்டிருக்கிறான். அதுவும், சம்பிரதாயமாக அவன் ஆட்சி செய்துகொண்டிருப்பதாகப் பாவனைதான்...
மருதனூர் என்பது ஒரு சிறு கிராமம். இயற்கையின் எழில் கொழிக்கும் ஒரு தனி... என்ன சொல்வது? வனப்பை வருணிக்க அந்தக் கிராமத்தின் தவப்புதல்வன், அந்த இயற்கை யன்னையின் தாய்ப்பால் பருகிய கானப்பிரியன் தான் பாடவேண்டும். என்னால் கூற முடியுமா? அவன் அங்கு யாருக்குப் பிறந்தான் என்று ஊராருக்குத் தெரியாது.
ஒரு நாள் இரவு குழந்தையொன்று காளிதேவியின் கோயில் வாசலில் தாயை நோக்கியழுதது. எந்தத் தாயை நோக்கியோ, அந்தத் தேவிதான் அருளினாளோ என்னவோ! அதிலிருந்து காளி கோயில் பூசாரி எடுத்து வளர்த்தான். காளியின் புத்திரன், பூசாரியின் வளர்ப்புப் பிள்ளை... இதுதான் கானப்பிரியனின் இளமைச் சரிதம்.
அந்த மோகனமான பொழுதிலே இயற்கைத் தாயின், காளியின் கோர ஸ்வரூபத்திலே, குதூகலித்துக் குரலெழுப்பும் பறவைகளிடத்திலே அவன் கல்வி கற்றான். அது கானமாகக் கவிதையாக எழுந்தது. எல்லோரும் கானப்பிரியன் என்றார்கள். அவனும் கானப்பிரியன் என்று தன்னை யழைத்துக்கொண்டான்.
எப்பொழுதும் அந்தத் தடாகத் துறையிலே என்ன அதிசயமோ! கானப்பிரியனை அங்கு காணாமல் இருக்க முடியாது. இல்லாவிட்டால் குரலெழுப்பும் குயில் கிளைகளின் அடியில் அவன் நின்று கவனித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்பொழுது அவன் கண்கள் - அவை என்ன தெய்வ தரிசனத்தைக் கண்டனவோ? அவற்றில் என்ன கனவு, எவ்வளவு உற்சாகம்! என்ன என்ன என்று என்னால் சொல்ல முடியுமா? கவிஞனைக் கேட்டுப் பார்க்கவும்.
2
கானப்பிரியன் சங்கோசப் பிராணி. மனிதர்கள் என்றால் அவன் உற்சாகம் எல்லாம் எங்கோ பதுங்கி ஒடுங்கிவிடும். அதிலும் பெண்கள்... கேட்கவே வேண்டாம். அவனிடம் பேசுவது என்றால் எல்லாருக்கும் ஆசை; அவனுக்கு மட்டும் கூச்சம். அவனைப் பார்ப்பதிலே ஒரு தனிப் பெருமை.
ஊர் அம்பலக்காரரின் மகள் பெண்களின் இலட்சியமாயும் ஆண்களின் கனவாயும் இருந்தாள். அவள் தான் அவனை எப்படியோ பேசவைத்துவிட்டாள். அவன் உள்ளத்தையறிந்தவள் அவள் ஒருத்திதான். அவன் கவிதையின் கனிவைக் கண்டவள் அவளே.
அவளைச் சாயங்காலம் சந்தித்தால் கானப்பிரியனுக்குப் புதிய பாட்டுக்கள் தேவி அருள் புரிவாள். நாவில் ஸரஸ்வதி நர்த்தனம் செய்வாள். இவர்கள் கூட்டுக் களியிலே, தனிப்பட்ட கனவிலே, தேவியின் பாதுகாப்பிலே உலகத்தின் இலட்சியம் மறைந்து வாழும்.
அவள் பெயர் காவேரி. அன்று காவேரியின் கன்னி எழில் கம்பனை வளர்த்தது. அது பழைய கதை. இப்பொழுது காவேரி, இந்தக் காவேரி...
அன்று காவேரி ஜலம் எடுத்துவரச் சற்றுத் தாமதம். கானப்பிரியனுக்குக் குயில் சொன்ன கதையையும், மலர் பாடிய பாட்டையும் அவளுக்குச் சொல்ல ஆவல். அந்தச் சூரியாஸ்தமனத்தை அவளிடம் காண்பிக்க...
அதோ அவள் வருகிறாள். ஆசைக் காவேரி!
3
"கானனா? வா, வா!" என்று குடத்தை ஜலத்தில் நழுவவிட்டு அவன் மீது சாய்கிறாள்.
"இன்று ஏன் இவ்வளவு நேரம், போ! அந்தக் குயில்..."
"கானா, இன்று உனக்கு ஒரு சமாசாரம், நீ ஏன் உன் கவியைக் கொண்டு மன்னனிடம் பரிசு பெறக் கூடாது? இன்று யாரோ ஒரு கவியாம், போகிறானாம். அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீ பாடுவதில் நூற்றில் ஒன்று கூட இல்லை. வெறும் வார்த்தைக் குப்பை. நீயேன்..."
"நானா! அரசனிடமா? நானா!"
"ஏன், கானா? நாம் இருவரும்..." என்று தழுவிக் குழைந்து அவன் கண்களில் உற்று நோக்கினாள். இருவரும் ஐக்கியப்பட்ட வாழ்க்கையின் கனவு அவள் கண்களில் தவழ்ந்தது.
"காவேரி! உனக்காக நான் போகிறேன்...!"
"என்ன, கானா, எனக்காகவா?"
"இல்லை கண்ணே, நமக்காக" ... சற்று மௌனம்.
இருவரும் தழுவி நிற்கின்றனர்.
அந்த மௌனத்தில் அவர்கள் அறிந்தது எவ்வளவோ.
4
சோழ சமஸ்தானம்.
அந்தகன் கொலுவில் உல்லாசமாக இருக்கிறான். பக்கத்தில் அவனது பிரியை - அதாவது, மரியாதையாக வைப்பு - வாஸந்திகை என்ற ஆந்திரப் பெண். மற்றப் பக்கத்தில் அடைப்பைத் தொழில் புரியும் பணிப்பெண்கள். இடையில் மெல்லிய கலிங்கம். மேலே முத்துவடக் கச்சு.
சற்றுக் கீழே இவனுக்கு ஏற்ற மந்திரி பிரதானிகள். அவன் நாட்டிலே மாதம் மூன்று மழை பெய்து வருகிறதா, திருடர்கள் கொஞ்சமாகக் கொள்ளையடிக்கிறார்களா, அந்நியர் வசமாகமல் இன்னும் எத்தனை பிரதேசங்கள் வரி வசூலிக்க இருக்கின்றன என்பதைப் படாடோ பத்துடனும் கூழைக் கும்பிடுடனும் சமூகத்தில் தெரிவித்துக்கொள்ளும் மந்திரிகள்!
சேவகன் ஒருவன் ஓர் ஓலையைக் கொண்டுவந்து அடிபணிந்து நிற்கிறான். அரசன் அதைத் தொட்டுக் கொடுக்க, கற்றுச் சொல்லி பிரித்து, "ராஜாதி ராஜ ராஜ கம்பீர அந்தகச் சோழ மண்டலாதிபதி சமஸ்தானத்திற்குக் கானப்பிரியன் எழுதிக்கொண்டது; எனது கவியைச் சமுகத்தில் அரங்கேற்ற ஆசை - கானப்பிரியன்" என்று படித்தான்.
"என்ன வாஸந்திகா?"
"வரட்டுமே!"
"இந்த நடிகைகள் கொஞ்சம் நன்றாகப் பாடி ஆடுகிறார்களே!"
"அவன் தான் வரட்டுமே!"
"சரி, சேவகா, வரச்சொல்!"
5
கானப்பிரியன் உள்ளே வருகிறான். இயற்கையின் நிமிர்ந்த நடை, நேர் நோக்கு - கண்களில் ஏதோ தோன்றி மறைந்த ஒரு கனவு. சபையைப் பார்க்கிறான். செயற்கையின் திறன், பெருமிதம், இறுமாப்பு - எல்லாம் சற்று மலைப்பை உண்டுபண்ணுகின்றன.
கவிஞன் அரசனைப் பார்க்கிறான். அந்தகன் கானப்பிரியனைப் பார்க்கிறான். வாஸந்திகை இருவரையும் நோக்குகிறாள். இருவரையும் வெல்ல ஒரு வலை வீச்சு. உலகத்தின் சக்தி அவள் காலின் கீழ். ஏன் உலகத்தின் இலட்சியம் அத்துடன் இருக்கக்கூடாது?
கானப்பிரியன் அவளைக் கவனிக்கவில்லை.
அரசனை நோக்கிப் பாடுகிறான்.
ஒரு காதற் பாட்டு.
6
அந்தக் காலத்திலே பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடுக்க வேண்டிய அரசனாக இருக்க வேண்டியது மரபு.
அதெல்லாம் நினைக்கவில்லை. ஏன்? தெரியாது.
அவனது காவேரியின் காதல், அவள் கன்னி எழில், வாழ்க்கைக் கனவு எல்லாம் கவிதையாக வடிவெடுத்துப் பொங்குகிறது. கம்பீரமான, மோகனமான குரலிலே பாடுகிறான்.
அங்கிருக்கும் சிங்காதனம் கூட உருகிச் சிரக்கம்பம் செய்யும் போலிருக்கிறது. ஏன்? கம்பன் குரலைக் கேட்டதுதானே!
அங்கு இரண்டு உள்ளங்களை அது தொடவில்லை. ஒன்று வெற்றியை நினைத்து வலை வீசிய கண்களையுடையது. இன்னொன்று, அவளைக் குறித்துப் பாடுவதாக, அவள் மீது அநாவசியமாகக் காதல் கொண்டுவிட்டதாக நினைத்த நெஞ்சம்.
பாட்டு முடிந்தது!
எங்கும் நிசப்தம்.
திடீரென்று, ஆஸ்தான மண்டபமே எதிரொலிக்கும்படி எக்காளச் சிரிப்பு!
ஏளனத்திலே, பொருளற்ற கேலிக்கூத்திலே, கீழ்த்தரக் காமச் சுவையிலே தோன்றி அலைமேல் அலையாயெழுந்த அந்தகனின் எக்காளச் சிரிப்பு!
"சபாஷ், வென்றுவிட்டாயடி வாஸந்திகா!" என்று அவளுக்குக் கீச்சங் காட்டிக்கொண்டு, அவசரத்தில் எச்சிலை ஸ்படிகத்திற்குப் பதில் யார் முகத்திலோ உமிழ்ந்துவிட்டான். இருந்தாலும் உற்சாகம் ஓயக் காணோம். "என்ன, இருந்தால் உன் அழகு இப்படியல்லவா சபையில் இருக்க வேண்டும்! நூற்றில் ஒரு பெண்! நீதான் என் அரசி!" என்று இன்னும் இடியிடி என்ற ஒரு சிரிப்பு!
இது ஓயுமுன் கானப்பிரியன் அங்கு இல்லை.
7
கானப்பிரியனுக்கு உடலெல்லாம் குன்றி உயிர், உற்சாகம், கவிதை, யாவும் குவிந்தன.
நெஞ்சில் இந்திர தனுசால் அடிபட்ட மாதிரி!
பொருளற்ற, அர்த்தமற்ற மிடுக்கு, படாடோ பம்! அரசியலாம், பரிசிலாம்...சீச்சி...
அன்று இருட்டியபின்...
காளி கோயிலின் முன் கானப்பிரியன் தலைவிரி கோலமாகக் கிடக்கிறான். வெளியே இருந்த இருள் அவன் உள்ளத்தைக் கவ்வியது. இருளில் ஓர் உருவம்.
"காவேரி!"
"கானப்பிரியா?"
பதில் இல்லை.
ஓடிவந்து தரை மீது கிடந்த தனது... எடுத்து மடிமீது கிடத்துகிறாள், மார்புடன் அணைக்கிறாள்.
"கானா! பிரியா!"
"உன் அன்பிலே, தேவி அருளிலே..." அவ்வளவுதான். கானப்பிரியனின் உயிர் தேவியின் திருவருளை நாடிச் சென்றுவிட்டது.
"அடி காவேரி! உனக்கு வேண்டும். கம்பனையே பாடுபடுத்திய சோழ பரம்பரையல்லவா! உனக்கு வேணும்! ஏன் உன் பிரியனையனுப்பினாய்?"
"அடி காவேரி...!"
(முற்றும்)
['புதுமைப்பித்தன் கதைகள்', தொகுப்பு - 1940]
-------------
43. குப்பனின் கனவு
1
அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று வேலை பார்க்கலாம். இப்படி நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தால்...?
குப்பன் ஒரு ரிக்ஷாக்காரன்.
வண்டியை மேற்கும் கிழக்குமாக இழுத்துச் சென்றதுதான் மிச்சம். ஒரு சத்தமாவது கிடைக்கவில்லை.
மேலெல்லாம் நனைந்துவிட்டது. தலையில் போட்டிருந்த ஓட்டைத் தொப்பி - அது எந்த வெள்ளைக்காரன் போட்டதோ - அதுவும் தொப்பலாக நனைந்துவிட்டது. தொப்பியிலும் உள்பக்கம் ஈரம் சுவரியது என்றால், வேஷ்டியைக் கூட பிழிந்துகட்ட நேரமில்லை. அவ்வளவு ஆவல்.
ஒரு நாலணா கிடைத்தால் வீட்டிலே எறிந்துவிட்டாவது முடங்கலாம். போகிற பெரிய மனிதர்களுக்கு ரிக்ஷா என்றால் மழையில் கசந்து கிடக்கிறது. அந்தத் தெருமூலையில் நிற்கிற பிச்சைக்காரன் பாடு குஷிதான். பிச்சைக்காரனாக இருந்தால் கூட... சீ... என்ன மானங்கெட்ட பிழைப்பு!
குப்பன் பொருளாதார சாஸ்திரியல்ல; பொதுவுடைமைக்காரனல்ல. இத்தனை நாளும் அவன் பல்லை இளித்துக்கொண்டு "ஸார்", "ஸார்" என்ற, சட்டைபோட்ட பேர்வழிகளைக் கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. திருட்டுப் பசங்கள்...! ஒரு பயலாவது ஏறக்கூடாதா?
"ஸார்" என்று ஒருவரிடம் வண்டியைத் திருப்புகிறான்.
அவர் "வேண்டாமப்பா" என்று கொண்டே டிராமில் ஏறிக்கொண்டு விடுகிறார்.
அந்த மனிதனைக் கிழித்துவிடலாமா என்ற கோபம்.
2
வண்டியை ஸென்ட்ரல் பக்கம் இழுத்துக் கொண்டு செல்லுகிறான். மனதிலே என்ன என்னவோ ஓடுகிறது. இப்பொழுது ஒரு மொந்தை சாராயம் அடித்தால் என்ன குஷியாக இருக்கும்! நாவில் ஜலம் ஊறுகிறது. 'மெட்ராஸ் பூராவுமே வேகமாக இழுத்துக்கொண்டு ஓடலாமே' என்று அவனுக்குப் படுகிறது. ஆமாம்! இந்த தொலையாத வேலை.
குப்பன் பெண்டாட்டி நாலு காசு பார்க்காமலா இருப்பாள். அவளும் கொஞ்சம் 'தொழில்' நடத்துகிறவள்தான். பிறகு "எந்த .... பத்தினியா இருக்கா?" அவனுக்கும் தெரியும். அவனுக்குத் தெரியும் என்று அவளுக்கும் தெரியும். அவள் நாலு காசு பாத்திருந்தா... வீட்டுக் கவலை ஒயுஞ்சுது... இவனுக்கு அந்த நாலணா கிடைத்தால் சாராயக் கடைக்காச்சு...
குப்பன் வண்டியை இழுத்துக் கொண்டு போகிறான். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி ஓயாமல் தூறல் விழுந்து சொட்டிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மூக்கில் போகாமல் தும்மிக் கொள்கிறான்... வண்டியும் சடசடவென்று அவன் எண்ணத்திற்குத் தாளம் போடுகிறது.
'அந்த டிராமிலே ஏர்ன ஆசாமி மாதிரியிருந்தால்..."
அவ்வளவுதான்...
குப்பன் வண்டியிலே குஷியாக உட்கார்ந்திருந்தான்.
மேலே கோட்டு, உள்ளே சட்டை... மடியிலே காசு. கையிலே பீடி... இல்லை சிகரெட்டு... வண்டியை இழுப்பதும் குப்பன் தான்... குப்பாயியும் உட்கார்ந்துகொண்டால் ஸோக்காக இருக்கும்... அவதான் ஊட்லெ இருக்கிறாளே...
'குப்பா, வண்டியெ வேகமா இஸ்திகினுபோ... சாராயக் கடை... இல்லெடா வெள்ளைக்காரன் குடிக்கர எடத்துக்கு... ஒரு மிஸிகூட...
3
'வண்டி போய் ஒரு மாளிகை முன்பு நிற்கிற மாதிரி... குப்பம் இறங்கி குப்பனுக்குக் காசு கொடுக்கிறான்... இந்தாடா நாலணா... கூட ஓரணா எனாம்!... உம்... உள்ளே போகிறான்... உள்ளே ஸோபா... விசிப்பலகை... நாறுகட்டில் ஸோக்காத்தான் இருக்குது... 'குப்பாயி' என்று கூப்பிடுகிறான். 'போடா குப்பா. வேலை இக்குது' என்று குப்பாயி வருகிறாள்... அப்பொழுது ட்ராமில் ஏறிய கனவான் வருகிறார். 'ஏண்டா குப்பா ஏன் வூட்லே... 'போசாமி... அதெல்லாம் அந்தக் காலம் மலையேறிப் போச்சு... அண்ணைக்கி ஏமாத்தலேயோ? ஏய்! பூடு. அப்படி முழி... அப்போ ஏமாத்னப்ப எப்படி இருந்தது? குப்பாயி, வெளிலே புடிச்சுத் தள்ளு அவனை... வா... ஒனக்கு வேணும்னா நாலணா எடுத்துக்கினு பேசாதே ஓடிப்போ. கூச்சப் போடாதே, இது... குப்பாயி வூடு. தெரிஞ்சிதா... நீ வேண்ணா வெளிலே ரிக்ஸாக்குது; இஸ்து பொயிச்சிகோ...
'ஏண்டா முழிக்கிறே! போலீசைக் கூப்பிடுவேன்...'
படீரென்ற அறை. திடுக்கிட்டு நிற்கிறான். வண்டி லாந்தல் கம்பத்தில் மோதிக்கொண்டது.
"என்ன ரிக்ஷா, பிராட்வேக்கு வாரியா?" என்றார் ஒருவர்.
"ஏறு சாமி!"
"என்னா குடுக்கரே?"
"நாலணா!"
குப்பனுக்கு சற்றுமுன் இழந்த முதலாளிப் பதவியைவிட அந்த நாலணா மிகுந்த களிப்பைத் தந்தது.
நாலணா!
(முற்றும்)
மணிக்கொடி, 04-11-1934
-------------
44. குற்றவாளி யார்?
1
கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும் எதிர்பார்ப்பவர் அல்ல. கைச் சரக்கும் உணர்ச்சி நாடகமும் இல்லாமல் வெறும் விஷயத்தை மட்டும் விளங்க வைத்துவிட்டு உட்கார்ந்தார்.
விஷயம், விஷயம், விஷயம். இதைத் தவிர அமிர்தலிங்கத்திற்கு வேறு கவலை கிடையாது. விஷயமும் தர்க்கமும் கேஸை வாதிப்பதற்கு இருக்கும்பொழுது சோக நாடகம் போட வேண்டியதில்லை என்பது அவர் துணிபு.
அவர் உட்கார்ந்ததும் எதிர்க்கட்சி வக்கீல் திரு. லக்ஷ்மண பிள்ளை குற்றவாளியின் சார்பாக வாதிப்பதற்கு எழுந்தார். திவான் பகதூர் அமிர்தலிங்கத்திற்குப் புன்சிரிப்பு வந்தது. நம்ப முடியாத கதை. ஜுரர்கள், ஆமாம், அவர்கள் எப்படி நம்புவார்கள்? அவருடைய பிரசங்க மழையைச் சிதற அடித்து மாட்சிமை தங்கிய நீதிபதியின் முன் தமது கட்சியை ஸ்தாபிப்பது கஷ்டமல்ல.
அமிர்தலிங்கம் தொழிலில் பழம் பெருச்சாளியானாலும் இந்தக் கேஸில் விவாதிப்பது அவருக்கு மிகவும் உத்ஸாகமாக இருந்தது. இருந்தாலும் அது மிகவும் சிக்கலான கேஸ். ஒரு மோசமான கிரௌன் பிராஸிக்யூடர் கேஸை ஆபாசமாக நடத்திக் குழப்பிவிடலாம்.
குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம். முக்கால்வாசி அவனுக்குத் தூக்குத் தண்டனைதான். ஆமாம் நியாயம் வழங்கப்படாமல் இருக்க முடியுமா? உணர்ச்சியில் பண்பட்ட உள்ளமில்லையாயினும் குற்றவாளியின் மீது சிறிது பச்சாத்தாபம் ஏற்பட்டது. குற்றவாளி அழகன், படிப்பாளி... சகவாச தோஷம்.
எதிர்க்கட்சி வக்கீலின் பேச்சில் இது மட்டுந்தான் அமிர்தலிங்கம் கவனித்தார். அதன் பிறகு தனது நீண்ட யோசனையில் கோர்ட்டை மறந்தார்.
2
எதிர்க்கட்சி வக்கீல் லக்ஷ்மண பிள்ளை பேசி முடித்து உட்கார்ந்தார். அமிர்தலிங்கம் மெதுவாகப் பொடியை உறிஞ்சிவிட்டு கோர்ட்டைக் கவனித்தார். 'லன்ச்'சுக்காகக் கோர்ட்டு ஒத்திவைக்கப்பட்டது.
திவான் பகதூர் அமிர்தலிங்கம் பக்கத்து வாசல் வழியாக வெளியே செல்லும்பொழுது, தனது வழியைத் தடை செய்துகொண்டு ஒரு வாலிபப் பெண் இருப்பதைக் கண்டார்.
"உங்களிடம் சற்று பேசலாமா? ஒரு நிமிஷம்" என்றாள்.
முகம் இளைத்தவள்; கிழிந்த உடைகளைக் கட்டியிருந்தாலும் அவள் நல்ல அழகி என்று கவனித்தார். அவள் மனம் மிகவும் குழம்பியிருப்பது போல் தோன்றியது.
"என் குமாஸ்தாவைப் பாருங்களேன். உங்களிஷ்டப்படி நடக்க முடியாததற்கு வருந்துகிறேன். நீங்களே பாருங்கள் எனக்குக் கொஞ்சமாவது ஒழிவு இருக்கிறதா என்று."
"ஆமாம் நீங்கள் டிபன் சாப்பிட வேண்டியதுதான்."
"ஆமாம் டிபன் சாப்பிடாமல் இருக்க முடியுமா?"
3
அமிர்தலிங்கம் சற்று வெறுப்புடன் பேசினார். திவான் பகதூருக்கும் வயிறு என்று ஒன்றிருக்கிறது என்று யாராவது ஞாபகப்படுத்தலாமா?
"கொஞ்ச நேரமாவது என்னுடன் பேச முடியாதா?"
"நீங்கள்தான் பாருங்களேன். சரி - சரி... காரியத்தையாவது சொல்லுங்கள்."
"இங்கேயா! இந்தக் கூட்டதிலா, சமாசாரம் மிகவும் முக்கியமானது. அதுவும் கொஞ்சம் இரகசியமானது. உங்களைத் தனியாகக் கண்டு பேச முடியுமா?"
"அது முடியாது."
இப்படிச் சொன்னாலும் அவர் மனம் சிறிது இளகியது. அவள் முகம், சோகம் தேங்கிய முகம் கவர்ச்சித்தது. என்னவென்று அறிய ஆவல்.
"கேஸ் முடிந்ததும் எனது அறைக்கு வாருங்கள். அதாவது நீங்கள் சொல்லப்போகும் விஷயம் அவ்வளவு முக்கியமானது, எனது உதவி அவசியம் என்று பட்டால்" என்று சொன்னார்.
"நீங்கள் மனம் இரங்கியதற்கு நான் என்ன சொல்லுவது. ஆனால் அப்பொழுது நான் உங்களைச் சந்திப்பதில் பிரயோஜனமில்லை." பிறகு மிகவும் தணிந்த குரலில், "கிட்டுவைப் பற்றி" என்றாள். அவள் முகம் சிவந்து வியர்த்தது. எப்படியிருந்தாலும் ஹிந்துப் பெண் அல்லவா? வேறு வழியில்லை.
4
திவான் பகதூர் திடுக்கிட்டார். யாரோ நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல் கலங்கினார்.
"கிட்டுவைப் பற்றி என்ன? நீ யார்?"
"நான் அவருடைய... மனைவி" என்றாள்; நாணம், சோகம், அவர் பெயரைக் கூறுவதினால் ஏற்படும் ஒரு இன்பம் அலைபோல் எழுந்து மறைந்தது.
திவான் பகதூருக்குக் கலக்கம் அதிகமாயிற்று. முகமே அதைக் காண்பித்துவிட்டது.
"கிட்டுவின் மனைவி!"
அவள் அவருடைய முகத்தை ஆவலுடன், சோகத்தில் பிறந்த ஆவலுடன் கவனித்தாள்.
"என் பின்னே வா!" என்று சடக்கென்று கூறினார்.
திவான் பகதூர் அவளைக் கோர்ட்டில் தனக்கென்றிருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் அவளை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவள் உட்காரவில்லை. மூலையில் ஒதுங்கி நின்றாள். திவான் பகதூருக்கு இருக்கும் உள்ள கலக்கம் அவரைப் பரபரப்புடன் அறையைச் சுற்றி நடக்கச் செய்தது.
"என் மகனுடைய மனைவி என்று கூறுகிறாய். அது உண்மையா? நீ சொல்லுவது நிஜமாக அப்படித்தானா? நிஜமாக உங்களுக்குள் கலியாணம் நடந்ததா?" என்று கேட்டார்.
"ஆறு மாசத்துக்கு முன்னே ரிஜிஸ்தர் கலியாணம் செய்துகொண்டோ ம்" என்றாள் அவள். அவள் வார்த்தையில் அவளது களங்கமற்ற உள்ளம் பிரதிபலித்தது.
"அப்படியா?"
"நேற்றுவரை அவர் உங்கள் மகன் என்று எனக்குத் தெரியாது."
"நிஜமாக!" அவர் வார்த்தைகளில் சந்தேகமும் கேலியும் கலந்திருந்தது.
5
"இது ரொம்ப - ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நீ இந்தப் 'பெரிய' சமாசாரத்தைச் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்தே இருக்காது. புது மருமகள் இருக்கிறாள் என்று தெரியாமல் போயிற்று. இந்தச் 'சந்தோஷ' சமாசாரத்தைக் கேட்ட பிறகு காது குளிர்ந்துவிட்டது. இன்னும் என்னமோ சொல்லவேண்டும் என்று வந்தீர்களே! அதைச் சொல்லுங்கள். கேட்கிறதற்குத் தயார். நேரமும் கொஞ்சம். ஆமாம் நான் டிபன் சாப்பிட வேண்டாமா?" என்று கேலியும் குத்தலுமாக மனதிலுள்ள வெறுப்பை எல்லாம் தமது வக்கீல் வேலையுடன் சேர்த்துக் காண்பித்தார். அமிர்தலிங்கத்திற்கு ஒரு புறம் கோபம், ஒரு புறம் வெறுப்பு. "வீட்டு விலாசம் 6, அய்யப்பன் பிள்ளைத் தெரு, மைலாப்பூர்" என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்லயத்தனித்தார்.
"போகாதேயுங்கள். கேட்டுவிட்டுப் போங்கள். இந்தக் கேஸிலிருக்கும் குற்றவாளியைத் தப்பவைக்க முக்கியமான சாட்சியம் அவரிடம் இருக்கிறதென்று சொல்லச் சொன்னார்."
"குற்றவாளி! எந்தக் குற்றவாளி?" என்றார் அமிர்தலிங்கம்.
"இப்பொழுது நடக்கிற கேஸில்... அந்தக் குற்றவாளி..."
"இந்தக் கேஸில் என் மகனுமா! உளறாதே. பயப்படாமல் சொல்லு. என்ன சொல்லுகிறாய்?"
"என்னுடைய அண்ணனை அவர் சாட்சியம் தப்புவிக்கும் என்று."
"உன் அண்ணன்!"
6
திவான் பகதூருக்குப் புதிருக்கு மேல் புதிராக சமாசாரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
"உன் அப்பா பெயரென்ன?"
"ஜம்புநாத அய்யர்."
இந்த குற்றவாளியின் தகப்பனாரும் அவர்தான். உள்ளத்தில் ஏற்பட்ட குழப்பத் திரையை விலக்க முயல்வதுபோல் அமிர்தலிங்கம் முகத்தை, நெற்றியை, துடைத்தார்.
"அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்."
இந்த வார்த்தைகள் வக்கீலைக் கோபமூட்டின.
"அப்படியா! கிட்டு, பிறகு எங்கே ஒளிந்து இருக்கிறான். அவன் ஏன் மனிதன் மாதிரி வெளியில் வரக்கூடாது?"
7
அவள் கலங்கிய கண்களைக் கவனித்தார். அவர் கோபம் விலகியது. அவளுடைய பதிலை அவர் உள்ளம் எதிர்பார்த்தது போல் இருந்தது. அவர் உள்ளமும் உடைந்து உடலும் சோர்ந்தார்.
"அவர் பாயும் படுக்கையுமாய்... மிகவும் அபாயத்திலிருக்கிறார். டாக்டர் பிழைப்பதுகூட..." என்று சொல்லி விம்மி விம்மி ஏங்கினாள். உள்ளத்தின் கஷ்டம் பொருமிக்கொண்டு வெளிப்பட்டது.
"நாம் இருவரும் என்ன கனவு காண்கிறோமா?" என்றார் அமிர்தலிங்கம்.
"டாக்டர் அன்று வந்துவிட்டுப் போன பிறகு உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இன்னும் ரொம்ப நேரங்கூட... இருக்கமாட்டார் என்று டாக்டர் சொன்னார். அவர் எங்கள் அண்ணனைக் காப்பாற்ற முடியுமாம். நீங்கள் தான் அதை முதலில் கேட்க வேண்டுமாம். எங்கள் அண்ணனுக்குத் தெரிந்த வக்கீல் ஒருத்தரையும் கூப்பிடச் சொன்னார். அதை உங்களால் செய்ய முடியுமா? என் அண்ணாவுக்காக இல்லை. அவர் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்கவில்லை. அதுதான் அவரது மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த வக்கீலைப் பார்க்கும்வரை நெஞ்சு வேகாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அண்ணன் உயிரை அவர் காப்பாற்ற முடியுமாம். அது முடியுமா?"
அமிர்தலிங்கம் அவள் சொன்னதைக் கேட்கவேயில்லை.
"நான் அவனைப் பார்க்கவேண்டும். இரு, இதோ வருகிறேன். யாரையும் உள்ளே வரவிடாதே இரண்டு நிமிஷம்."
அவருடைய ஜுனியர் பக்கத்தறையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
"கேஸை நீ பார்த்துக்கொள். நான் ஒரு நோட் வேண்டுமானால் ஜட்ஜிற்கு அனுப்பி வைக்கிறேன்."
ஜுனியரும் நல்ல பழகின ஆசாமிதான்.
8
அமிர்தலிங்கம் தமது வக்கீல் சட்டையைக் கழற்றிவிட்டு, ஜட்ஜிற்கு ஒரு 'நோட்டும்' எழுதி அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து அவளையழைத்துக் கொண்டு பின்புற வழியாக ஒரு வாடகை மோட்டாரில் மகனுடைய வீட்டிற்குச் சென்றார்.
திவான் பகதூர் அமிர்தலிங்கம் தனது மகன் இருக்கும் வீட்டைக் கண்டதும் திடுக்கிட்டார். சென்னையில் பணமில்லாவிட்டால் நல்ல வீடு எங்கு கிடைக்கும்? ஒண்டுக்குடித்தனம்; இருட்டறை; சமையலும் அதற்குள்தான். மகன் கிழிந்த ஓலைப்பாயில் படுத்திருந்தான். அவள் உள்ளே சென்றதும் மாமனாரைப் பற்றிக் கவனிக்கவில்லை. கிட்டுவின் தலை, தலையணையைவிட்டுச் சற்று விலகியிருந்தது. அவனை மெதுவாக எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு தலையணையில் அதை உயரமாக வைத்துச் சாய வைத்தாள்.
"அப்பா வாருங்கள்" என்றான் கிட்டு ஹீனஸ்வரத்தில். "உங்களால் வரமுடியும் என்று நினைக்கவேயில்லை. இருக்கிறதைப் பார்த்தால் இன்னம் கொஞ்ச நேரம் இருப்பேன்."
அமிர்தலிங்கத்திர்கு ஈட்டியால் குத்தியது மாதிரி இருந்தது.
"ஏன் உடம்பிற்கு குணமில்லை என்று முன்னமே சொல்லிவிடக் கூடாது?" என்றார்.
"உங்களை இதுவரை தொந்திரவு செய்தது போதாதா? மங்களத்தைப் பற்றி உங்களிடம் சொல்ல எனக்குக் கொஞ்சம் பயம். நான் சொல்லுவது உங்களுக்கு அர்த்தமாகாது. ஏதாவது கோபமாக சொல்லுவீர்கள்" என்று சொன்னான்.
மங்களம் அவன் பக்கத்திலிருந்து அவனுக்குப் பால் ஆற்றிக்கொண்டிருந்தாள். தனது வாடிய கைகளால் அவளது கரத்தை மெதுவாகத் தடவிக் கொண்டு, அவள் கண்களில் நோக்கினான். ஒரு சோகம் கலந்த அன்பு தவழ்ந்தது. மங்களத்தின் கண்களில் கண்ணீர் பொங்கியது.
9
"எனது வாழ்க்கையில் மங்களம் இடம் பெற்றவுடன் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் கடவுளுக்குக்கூட பொறுக்கவில்லை."
அவன் குரலில் ஒரு புதிய சக்தி பிறந்தது.
"இவளுடைய அண்ணனின் வக்கிலை அழைத்து வந்தீர்களா?" என்றான்.
"அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்."
"இன்னும் கொஞ்ச நேரத்திலா? கொஞ்ச நேரம் கழித்து எதற்கு?"
"நான் தான் உன்னை முதலில் பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். கிட்டு, என்மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?"
"உங்களை நம்பாமலா? ஆனால் எவ்வளவு நேரம் இருப்பேனோ?"
"இந்தக் கேஸில் உனக்கு என்ன சம்பந்தம், முதலில் இருந்து சொல்லு."
10
கிட்டு மறுபடியும் களைத்துவிட்டான். மிகவும் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருந்தது.
"எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறேன். டாக்டர் அன்றைக்குச் சொல்லிவிட்டுப் போன பிறகு எல்லாவற்றையும் எழுதி வைத்தேன். இவளுடைய அண்ணன் வக்கீல் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன். இத்தனை நாள் தாமதியாமல் இருந்தால்... மங்களம் நீ கொஞ்சம் வெளியே போய்விட்டு வா. அப்பாவிடம் பேச வேண்டியிருக்கிறது.
"அவரைக் களைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றாள் மங்களம்.
அமிர்தலிங்கம் தலையை அசைத்தார்.
"மங்களத்திற்கு நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரியாது. அவளுக்கும் உங்களுக்கும் திடுக்கிடும்படியாகத்தான் இருக்கும்."
தலையணையின் கீழ் இருந்த காகிதத்தை எடுத்தான்.
"எல்லாம் இதில் இருக்கிறது. அவர் வந்ததும் கை எழுத்துப் போட்டுவிடுகிறேன்."
அமிர்தலிங்கம் அதை வாங்கி, கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அதை வாசித்து முடித்த பிறகும் அவர் குரல் மாறவில்லை.
"இந்த கேஸில் புதிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறாய். இதனால் உன் குடும்பத்திற்கு என்ன நேரும் என்பதை யோசித்திருப்பாய் என்று நம்புகிறேன். ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை. உனது தாய் நல்ல காலமாக இது எல்லாம் கேட்காமல் இறந்து போகக் கொடுத்து வைத்தவள். நீ உனது மனைவியின் பேரில் மிகவும் பிரியம் வைத்திருக்கிறாய். உனக்கு என் பேரில் கொஞ்சமாவது பிரியம் கிடையாது என்று எனக்குத் தெரியும்."
11
"அப்படியல்ல அப்பா. உங்கள் பேரில் எனக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்களும் எனக்கு எவ்வளவோ செய்து பார்த்தீர்கள். அது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். என் குணத்தில் எங்கோ ஒரு கோளாறு இருந்திருக்க வேண்டும். மங்களம் இதற்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். மங்களம் எனது வாழ்க்கையில் வரும்பொழுது நான் பலவீனமாகிவிட்டேன். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும்" என்றான்.
அமிர்தலிங்கம் முகத்தை மூடிக்கொண்டார்.
"உங்கள் இருவருக்குமாகவாவது வேறு மாதிரி நான் நடந்து கொள்ளலாம். நான் தூக்கிற்குச் செல்லவேண்டிய அவசியமில்லாத பொழுது உண்மையைச் சொன்னால் என்ன? இன்று முழுவதும் இருப்பேனோ என்னவோ?"
அமிர்தலிங்கம் நடுங்கினார். தன்னையறியாமல் மறுபடியும் காகிதத்தை வாசித்தார்.
"இது ஒரு மாதிரி முடிந்துவிட்டால் எனது மனம் நிம்மதியாகிவிடும்."
அமிர்தலிங்கம் பத்திரத்தைக் கவனித்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய வக்கீல் ஆகிவிட்டார்.
"என் முன்பாகக் கையெழுத்துப் போட்டாலே போதும்" என்றார்.
"நீ ஒப்புக்கொள்வதில் ஒரு சந்தேகமும் கிடையாது. உனது மைத்துனன் தப்பித்துக் கொள்ளுவான். ஆனால் உன்னைச் சிறையில் போடுவதற்குள்..."
12
"அப்படியா! அந்தப் பயலைக் கொல்வது குற்றமல்ல. நல்ல மனிதன் எவனும் அவனைக் கொன்றுவிடுவான்."
"எப்படியானாலும் கொலை கொலைதான்" என்றார் வக்கீல்.
கிட்டுவிற்கு அர்த்தமாகவில்லை.
"கொலை கொலைதான். நீ எனது வாழ்க்கையின் ஏமாற்றம். எனது புகழையும் பட்டத்தையும் தேடும் அவசரத்தில் உன்னை மறந்தேன்."
"அப்பா அதற்காக வருத்தப்பட வேண்டாம்."
"கை எழுத்தைப் போடு."
கிட்டு கையெழுத்திட்டான்.
"கவலைப்படாதே. அரை மணி நேரத்தில் இதை கோர்ட்டிற்குக் கொண்டு போய் விடுகிறேன்."
பத்திரத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
"என்னை நம்பு. உம்! உன்னிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டும். கேஸில் சில விளங்கவில்லை. நீ கேஸைப் பேப்பரில் பார்த்தாயா?"
"ஆமாம் நேற்றுவரை அவன் தப்பித்துக்கொள்ளுவான் என்று நம்பியிருந்தேன்."
"இதிலிருந்து கேஸென்றால் உனக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறதே. இறந்தவன் எப்படி இருப்பான் என்று சொல் பார்ப்போம்."
"அப்படி ஒன்றுமில்லையே."
"அவன் கையிலிருந்த மோதிரம் அதைப் பற்றி..."
கிட்டு தலையை அசைத்தான்.
13
"போலீஸார் வரும்பொழுது பிணத்தின் மீது அது இல்லை. ஒரு சாட்சி அதைப் பற்றிச் சொன்னான். கொலை செய்யப்பட்டவன் அதை அவனிடம் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காட்டியிருக்கிறான்."
"ஆமாம்."
"அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? ஞாபகப்படுத்திப் பார்; அது ஒரு மலையாளப் பெண் கொடுத்தது என்று உனக்குச் சொல்லி இருக்கிறானா?"
"ஆமாம் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கிறது."
"அதைப் பிணத்தின் மீது காணோமே! நீ எடுத்தாயா?"
"ஆம்! நான் தான் எடுத்தேன்" என்றான் கிட்டு.
ஒரு மௌனம். அமிர்தலிங்கம் விரல்களைச் சுடக்கிக் கொண்டார். "அதை எங்கே வைத்தாய்?"
"அப்பா நீங்கள் என்னை இந்த ஸ்திதியில் இப்படி 'கிராஸ் எக்ஸாமினேஷன்' செய்தால்! மிகவும் களைப்பாக இருக்கிறது. மங்களத்தைக் கூப்பிடுங்கள்..."
"கிட்டு அப்படி ஒன்றுமில்லை. தெரிந்தவரை சொன்னால் அனாவசியமாக நேரம் கழியாது..."
"அந்த மோதிரத்தை எடுத்து நானே எறிந்துவிட்டேன். எங்கே போட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை."
"மனம் குழம்பியிருந்திருக்கும். ஞாபகப்படுத்திப் பார்."
"பிரயோஜனமில்லை" என்றான் கிட்டு சற்றுநேரம் கழித்து.
"நீதான் அவனுடைய புஸ்தகத்திற்குப் பின் ஒளித்துவைத்தாயா?" என்றார்.
14
கிட்டுவின் முகம் மலர்ந்தது. "ஆமாம் இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. அங்கேதான் வைத்தேன்" என்றான்.
"அப்படியா நன்றாக அர்த்தமாகிவிட்டது. சின்ன விஷயம். குழப்பத்தை விளக்கிவிட்டாய்."
"போய் வாருங்கள் அப்பா! நீங்கள் வந்ததற்கு... மங்களத்தைப் பார்த்துக் கொள்ளுவீர்களா?"
அமிர்தலிங்கத்தின் கண்களில் நீர் துளித்தது.
"இன்னும் சந்தேகமா?" என்றார்.
அமிர்தலிங்கம் வெளியே வந்து மோட்டாரில் ஏறினார். உள்ளிருந்து விம்மியழும் அழுகைக் குரல் கேட்டது.
அந்தக் கேஸில் அமிர்தலிங்கம் கடைசியாகப் பேசும்பொழுது மோசமாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரே குற்றவாளிக்குப் பரிந்து பேசுவது போல பட்டது.
அவர் தமது மகனுடைய கடிதத்தை வெளியில் எடுக்கவேயில்லை.
ஜுரர்கள் அவனைக் குற்றவாளி என்று அபிப்பிராயப்பட்டார்கள். தீர்ப்புக் கூற நீதிபதி கருப்புக் குல்லாவை அணிந்து கொண்டார்.
திவான் பகதூர் அமிர்தலிங்கமும் ஜுனியரும் வெளியே வந்தார்கள்.
"கேஸ்தான் முடிந்துவிட்டதே இவன் தான் குற்றவாளி என்று நீர் திட்டமாக நினைக்கிறீரா?" என்றார்.
ஜுனியர் ஆச்சரியப்பட்டு விழித்தார்.
"கேள்வி அதிசயமாக இருக்கலாம். உமக்குச் சந்தேகம் இருக்கிறதா?"
"சந்தேகம் இல்லை."
15
தனது மகன் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார்.
"இதை வாசியும். இதற்காகத்தான் மத்தியானம் சென்றிருந்தேன்."
அவர் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்தார்.
"அப்புறம்?" என்றார் ஜுனியர் ஆச்சரியத்துடன்.
"எனது மகனைச் சில கேள்விகள் கேட்டேன். செத்தவன் போட்டிருந்த மோதிரத்தைப் பற்றிக் கூறினான்."
ஜுனியருக்கு இன்னும் ஆச்சரியம் அதிகரித்தது.
"அவன் அதை எடுத்துவிட்டானாம். அது அவன் மீது இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லையாம்."
"அப்படியா?"
"அவன் தான் அதை புஸ்தகத்தின் பின்புறம் ஒளித்தானாம்."
"ஆமாம் ஸார். கேஸில் மோதிரத்தைப் பற்றியே பேச்சில்லையே!"
"ஆமாம். அது தான் செத்தவன் மோதிரம் வைத்திருந்ததே கிடையாது. அதைப் பற்றி என் மகனுக்கு எப்படித் தெரியும்? அவன் அங்கிருந்தால்தானே!" என்றார்.
(முற்றும்)
ஊழியன், 04-01-1935 (புனைப்பெயர்: நந்தன்)
-------------
45. மாயவலை
1
என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய எண்ணங்களில் பிரேமை, புதிய அனுபவங்களில் ஆசை, தவறுகள் என்பவற்றைச் செய்வதில் ஒரு குதூஹலம் எல்லாம் இருந்தது. ஆனால் தைரியம் மட்டும் இல்லை.
அவன் ஒரு சந்தோஷப் பறவை. கவலை என்பது வகுப்பு எப்பொழுதும் முடியும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் இவ்வளவிற்குக் கீழும், ஆழமாகப் பொற்சரடுபோல் அவன் உள்ளத்தில் மனித இலட்சியங்களின் ஆவேசம் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் கனவில் அறிவு வளர்ச்சி அடைந்த பெண்கள்தான் இலட்சிய வடிவெடுத்தனர். உடன் படிக்கும் பெண்களின் நாகரிகச் சின்னங்கள்தான் காதல் தெய்வத்தின் உப கருவிகள். மன்மதவேள் தன் பாணங்களைத் தொடுக்குமுன் நாகரிக நாரீமணியை வைத்துக் கொண்டுதான் தனது தொழிலை ஆரம்பிப்பான் என்பது நாயகத்தின் சித்தாந்தம்.
கனவுகளும் இலட்சியங்களும் முட்டாள்தனங்களும் கலாசாலைக் காம்பவுண்டிற்குள்தான் தழைத்து ஓங்கக் கூடியவை. வெளியிலே வந்ததும் உலகத்தின் அதிர்ச்சி அவற்றை நசித்திவிடும். நாயகம் கலாசாலையை விட்டு வெளியேறும்பொழுது இலட்சியவாதியாகவே காலங்கழிப்பது என்ற பிரக்ஞையுடன் வெளியேறினார். இதுவரை தோல்வி என்றால் என்ன என்பதையே அறிந்திராதவர்.
முதல் அதிர்ச்சி அவருக்கு வேலை வடிவில் காத்திருந்தது. இரண்டாவது அதிர்ச்சி இத்தனை நாட்கள் கேட்டவுடன் பணம் கொடுத்துக் கொண்டிருந்த தந்தையே, வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னது. தகப்பனார் தன்னை வீட்டில் வைத்திருக்கப் பிரியப்படவில்லை என்று எண்ணிக் கொண்டார். உலகம், தான் உயிர் வாழ்வதில் பிரியப்படவில்லை என்று தெரிந்து கொண்டார். இதற்கு மேலாக தகப்பனாரும் தாயாரும் இவருக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆத்திரப்படுவது இவருக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் இவருடைய வெறுப்பை பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் இஷ்டப்படி பெண் பார்த்துக் கொண்டிருப்பது இவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
கலியாணமும் கட்டாயத்தின் பேரில் நடந்தது. அவனுடன் அவன் இஷ்டத்திற்கு விரோதமாகப் பிணிக்கப்பட்ட பெண் சாரதா, நல்ல அழகி. ஆனால் படிப்பு என்பது, அதாவது நாயகத்தின் அர்த்தத்தில் சிறிதாவது கிடையாது. பெயர் எழுதத் தெரியும். ஆனால் அந்த அழகில், அவள் குண சம்பத்தில் நாயகத்தால் ஈடுபட முடியவில்லை. தனது மணமே வாழ்க்கையின் தோல்வியாகக் கருதினான். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள், ஏறக்குறைய நெருங்கிப் பழகினார்கள். ஆனால் இருவரும் இரு தனி உலகங்களில் வசித்து வந்தார்கள். சாரதாவிற்கு நாயகத்தின்மீது கட்டுக்கடங்காத பாசம் இருந்தது. ஆனால் வெளிக்குக் காண்பிக்கப் பயம். தனது கணவர் எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கும் பேர்வழி என்று நினைத்தாள். அதில் அவளுக்குப் பயம். அவன் இருக்கும் அறைக்குக் காரியமற்றுச் செல்வதற்குப் பயம். இருவர் வாழ்க்கையும் வீணையும் விரலும் விலகியிருப்பது போன்ற தனிப்பட்ட கூட்டு வாழ்க்கையாக இருந்தது.
கடைசியாக இவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அதையும் வேலை என்று சொல்லிவிட முடியாது. தன் தெருவில் உள்ள செல்வேந்தர் சுந்தரேச பிள்ளையின் மைத்துனிப் பெண், பி.ஏ.யில் தவறிவிட்டாள். அவளுக்கு அரசியல் சாஸ்திரமும் பொருளாதார சாஸ்திரமும் படித்துக்கொடுக்கும் வேலை.
நாயகம் இந்தப் பொறுப்பைத் தன் முழு உள்ளத்துடனும் ஏற்றுக்கொண்டார். சம்பளம் ஏதோ ஐம்பது ரூபாய் என்ற பேச்சு. நாயகத்திற்குச் சம்பளம் பற்றிக்கூடக் கவலையில்லை.
சுந்தரேச பிள்ளையின் மைத்துனியைப் பார்க்குமுன்னரே என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பதை சந்திக்குமுன்னமெ கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்.
2
அன்று சாயங்காலம் 6 மணியிருக்கும்.
நாயகம், சுந்தரேச பிள்ளையின் வீட்டையடைந்தார். நாயகத்திற்குக் கூச்சம். இவ்வளவு பெரிய மாளிகையில் தான் காணாத கனவுப் பெண் இருப்பதில் உள்ளூரப் பூரிப்பு. அவள் எப்படி இருக்கிறாளோ? அறிவில் தனக்கு ஒத்தவளாக, சம்பாஷணையில் இன்பம் ஊட்டுபவளாக இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.
சுந்தரேச பிள்ளை நல்ல குஷிப் பேர்வழி. வக்கீல் தொழிலில் நல்ல வரும்படி வந்தால் ஏன் குஷியாக இருக்க முடியாது?
வெராந்தாவைக் கடப்பதற்கு முன் துடை நடுக்கம். அந்தப் பெண் எப்படி இருப்பாளோ?
வேலைக்காரன் நாயகத்தை உள்ளே அழைத்துச் செல்லுகிறான்.
நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேச பிள்ளை, நாயகத்தைப் பார்த்ததும் ஏக ஆரவாரத்துடன், "வாத்தியார் ஸாரா? வாருங்கள் வாருங்கள்" என்று சிரித்தார்.
"டேய் நீ போய் சின்ன அம்மாளைக் கூப்பிட்டுக்கொண்டு வா" என்று அனுப்பிவிட்டு, "நளினா! நளினா!" என்று வேலைக்காரனுக்குக் கொடுத்த வேலையைத் தானே, நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் செய்யவாரம்பித்தார்.
உடனே உள் ஹாலில் இருந்து ஒரு கதவு திறந்தது. "என்ன அத்தான்" என்ற பெண் குரல்.
நாயகம் அந்தத் திசையை நோக்கினான். நாகரீக உடை, நாகரீக மூக்குக் கண்ணாடி, நெற்றியில் சுருண்டு தவழும் சிறு ரோமச் சுருள், கவலையற்ற மாதிரியாகக் கவலையுடன் உடையணிந்த கோலம், சிரித்த கண்கள், குறும்பு தவழும் அதரங்கள்... பொதுவாக திரு. நாயகம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த பெண்களின் இலட்சியம் தோன்றியது.
அந்தத் திசையை நோக்கிய நாயகத்திற்கு உடல் முழுவதும் வியர்த்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கால்கள் உட்கார வேண்டுவதுபோல் உடலைக் கீழே இழுக்கவாரம்பித்தது. நாயகம் கோழை அல்ல. ஆனால் அன்று அவருக்குப் பரவசத்தினால் ஏற்பட்ட பயம், அச்சுச் சட்டம் போல் அவருக்கு நிரந்தரமான வாய்ப்பூட்டு போட்டது.
"நளினா! இவர்தான் உனது வாத்தியார். மிஸ்டர் நாயகம் அவள்தான் எனது மைத்துனிப் பெண், ஹேமநளினி; இந்த விசையாவது பாஸ் பண்ண வழியைப் பாரு" என்று சிரித்தார் சுந்தரேச பிள்ளை.
திரு. நாயகத்திற்கு அந்தச் சந்தரப்பத்திற்குத் தக்க பதில் என்ன கூறுவது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அந்தப் பிரச்சனை தீருவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.
"ஸார், வாருங்களேன்" என்றாள் நளினி.
நாயகம் பின்னே சென்றான்.
3
"ஸார் இண்டியன் ஹிஸ்டரியில்தான் போய்விட்டது" என்று சிரித்தாள் நளினி.
"அதற்கென்ன கொஞ்சம் ஸ்பெஷலாகப் பார்த்துக் கொண்டால் போகிறது" என்றார் நாயகம். இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருவதற்குள் பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.
"ஸார் கூச்சப்படாதீர்கள். உங்கள் வீடு மாதிரி பாவித்துக் கொள்ளுங்கள்" என்றாள் நளினி.
திரு. நாயகத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. தன்னை அவள் கோழை என்று நினைத்துச் சிரிக்கிறாள் என்று அவருக்கு அவமானம், கோபம். சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.
குரலை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, "நான் கோழை அல்ல" என்று தமது வெற்றிக்கொடி நாட்டினார்.
"உங்களை யார் அப்படிச் சொன்னார்கள்? குரல் ஏன் அப்படிக் கம்மிக் கிடக்கிறதே, காச சம்ஹாரி மாத்திரை இருக்கிறது எடுத்துத் தரட்டுமா?" என்றபடியே அலமாரியைத் திறந்து தேடினாள்.
நாயகத்திற்கு தமது ஜயக்கொடி பறிக்கப்பட்டு தரையில் புரள்வதைக் கண்டார். இத்தனைக்கும் ஒரு சிறு பெண். ஒரு அறை கொடுத்தால்... அலமாரியைப் பார்ப்பதுபோல் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும்? இவனது மானத தத்துவ ஆராய்ச்சியில் ஒரே பொருள்தான் பட்டது. இந்த மதனைக் கண்டதும்...
"இன்று என்ன ஆரம்பிக்கலாம்" என்றார் நாயகம்.
"நான் எல்லாம் படித்திருக்கிறேன். நீங்கள் ஒன்று செய்தால் நன்றாக இருக்கும் சார்" என்றாள் நளினி.
"என்ன?"
"போன பரீட்சைக் கேள்விகள் தவிர நல்ல முக்கியமான கேள்விகள் ஐந்திற்கு விடை எழுதித் தந்தால் சீக்கிரம் பாடங்களைத் திருப்பிப் படித்துவிடலாம். வேலையும் குறைவாக இருக்கும்" என்றாள்.
"அப்பொழுது நான் கேள்வி கொடுக்கிறேன், நீ எழுதி வை."
"எனக்கு மற்றதைப் படிக்க வேண்டியிருக்கிறதே. தயவுசெய்து நீங்கள் எழுதித் தாருங்கள் ஸார்" என்று சிரித்தாள் நளினி.
அவள் புன்சிரிப்பு அவருக்குக் கட்டளை மாதிரி இருந்தது.
"புஸ்தகம் காகிதங்களை எடு" என்று வாங்கி உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.
4
இத்தனை நாள் புரொபஸர்களுக்கு டிமிக்கிக் கொடுத்த நாயகத்திற்கு முதலில் உத்ஸாகமாக இருந்தாலும் நான்காவது பக்கம் போவதற்குள் புளித்துப் போய்விட்டது.
"நான் சொல்லிக்கொண்டு வருகிறேன், நீ எழுது" என்று நோட்டை அவள் கையில் கொடுத்தார். இருவர் கண்களும் சந்தித்தன. திரு. நாயகத்திற்குப் புளகாங்கிதமாக இருந்தது. ஆனால் நளினியின் மீது ஒரு மாற்றமும் கிடையாது.
"சொல்லுங்கள்" என்றாள். சொல்லிக்கொண்டு போக ஆரம்பித்தார்.
"நீங்கள் இப்படி வேகமாகச் சொன்னால் எப்படி எழுதுவது?"
இப்படி இவர் சொல்லுவதும் அவள் தடைசெய்வதுமாக ஒரு பக்கம் கூடச் செல்லவில்லை. மேலும் அவளுக்கு சாதாரண ஆங்கிலப் பதங்களுக்கு எழுத்துக் கூட்டக் கூடத் தெரியவில்லை என்பதிலிருந்தும், சிற்சில விஷயங்களில் பயங்கர அசட்டுத்தனங்களைக் காண்பிப்பதிலிருந்தும், இவள் உண்மையில் அந்த வகுப்பில் படிக்கிறாளா? என்ற சந்தேகம் தோன்றவாரம்பித்தது. ஆனால் அவன் பேசுவதற்கெல்லாம் 'கிண்டலாக' பதில் சொல்லுவது வாயைத் திறப்பதற்கே பயப்படும்படி செய்துவிட்டது.
அன்று பாடம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும்பொழுது திரு.நாயகத்தின் கையில் ஒரு ஹிந்து தேச சரிதம், ஒரு கத்தைக் காகிதம், எப்பொழுது வெளிவருவோம் என்ற மனப்பான்மை, இத்துடன் வெளியேறினார்.
வீட்டிற்குள் செல்லும்பொழுது மனைவி சாரதாவைப் பற்றி மனம் அடிக்கடி காரணமில்லாமல் எண்ணிக்கொண்டிருந்தது. எவ்வளவு சாதுவாகத் தொந்திரவு கொடுக்காமல் இருக்கிறாள். வேலையை ராஜினாமா செய்து தப்பிக்கொண்டால் என்னவென்று பட்டது. 50 ரூபா சும்மாவா?
நாயகத்தின் நினைவுகள் குமைந்தன. அதில் சாரதா முக்கியமாக இருந்தது அவருக்கே விளங்கவில்லை.
5
நாயகம் வீட்டிற்கு வந்தவுடன் மிகுந்த களைப்பு. பள்ளிக் கூடத்திலும் உபாத்தியாயர்களுக்கு டிமிக்கிக் கொடுத்தவர், வெகு காலமாக உழைப்பென்பதே இல்லாதவர், இன்று உட்கார்ந்து கொண்டு சாரமற்ற பரிட்சை பதில்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டுமென்றால், வீட்டில் வந்ததும் தனதறையில் சென்று உட்கார்ந்து இந்து தேச சரித்திரத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதவாரம்பித்தார். மனம் அதில் படியவில்லை. சரித்திரம் படித்து வெகு நாட்களாகிவிட்டது. புத்தகத்தைப் படித்துக் கொண்டு எழுதவேண்டியிருந்தது.
"சாரதா தண்ணீர் கொண்டுவா" என்று அந்தச் சாக்கில் நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.
சாரதா பயந்து நடுங்கிக்கொண்டு அவசர அவசரமாகத் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து மேஜையின் மீது வைத்துவிட்டுத் திரும்பினாள்.
"ஏன் ஓடுகிறாய், உட்காரு. கொஞ்ச நேரம் பேசலாம்" என்றார் நாயகம்.
தனது கணவன் இதுவரைத் தன்னிடம் இப்படிப் பேசியதைக் கேட்காத சாரதா, ஏதோ கோபிக்கத்தான் போகிறார் என்ற பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்றாள்.
"உட்காரு."
சாரதா பயந்துகொண்டு உட்கார்ந்தாள்.
"ஏன் சாரதா? என்னைக் கண்டால் ஏன் இப்படி ஒளிகிறாய்?" என்றார். காரணம் அவர்தான் என்பதை மறந்துவிட்டார் போலும்.
சாரதாவிற்குத் தன்மீது கோபம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் என்ன பதில் சொல்வது என்ற பிரச்னை.
"ஒளியலே" என்றாள்.
"பிறகு..."
பதில் இல்லை.
"இதை எழுதித் தொலைக்கிறேன். கொஞ்சம் உட்காரு. பிறகு பேசுவோம்."
திரு. நாயகம் என்னமோ எழுதிப் பார்த்தார். முடியவில்லை.
அதற்குள் சாரதா அந்தப் பெரிய புஸ்தகத்தில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தையின் உள்ளம்.
"இவ்வளவும் படிக்கணுமா? எவ்வளவு பெரிசு!" என்றாள்.
அதிலே ஒரு ஆச்சரியம், அவளை அறியாது அதில் ஒரு பரிதாபம் கலந்தது.
"இவ்வளவும் படிக்கணும்."
"இவ்வளவுமா?" என்றாள்.
அவள் கையிலிருந்த புஸ்தகத்தை அவர் வாங்கும்பொழுது புஸ்தகம் விழுந்தது. சாரதாவின் தலை அவர் மார்பில் இருந்தது. அந்த நிமிஷம், தமது காதல் கோட்டை இருக்கும் இடத்தையறியாது போனாலும், களங்கமற்ற பாசத்தின் இருப்பிடத்தை அறிந்தார்.
ஹேமநளினிக்கு வாத்தியாரை ஏமாற்ற முடியவில்லை. ஜம்பம் சாயாது என்று கண்டுகொண்டாள். காரணம் தெரியாது. அவளுக்கும் கவலை இல்லை.
(முற்றும்)
ஊழியன், 28-12-1934
-------------
46. மகாமசானம்
1
சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. ஆபீஸிலிருந்து 'எச்சு'ப் போய் வருகிறவர்கள், இருட்டின் கோலாகலத்தை அநுபவிக்கவரும் அலங்கார உடை தரித்தவர்கள். மோட்டாரில் செல்லுவதற்கு இயலாத அவ்வளவு செயலற்ற அலங்கார வேஷ வௌவால்கள் எல்லாம் ஏகமேனியாக, 'எல்லாம் ஒன்றே' என்று காட்டும் தன்மை பெற்றவர்கள் போல் இடித்துத் தள்ளிக்கொண்டு அவரவர் பாதையில் போவார்கள். அன்றும் அம்மாதிரியே போய்க்கொண்டிருந்தார்கள்.
'ஒற்றைவழிப் போக்குவரத்து' என்ற ஸஞ்சார நியதி வந்ததிலிருந்து உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களின் உச்சியின் மேல் நின்று கொண்டு பார்த்தால் அங்கே நாகரிகத்தின் சுழிப்புத் தெரியும். கரையைப் பீறிட்டுக் கொண்டு பாயும் வெள்ளத்தை அணைக்கட்டின்மேல் இருந்து கொண்டு பார்த்தால் எப்படியோ, அப்படி இருக்கும்.
நான் சொல்ல வந்த இடமும் அதுதான். மவுண்ட் ரோட் ரவுண்டாணா. மலைப்பழ மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை. அவர்களுக்குப் பின்புறம் எச்சில் மாங்கொட்டையைக் குதப்பித் துப்பிவிட்டு, சீலையில் கையைத் துடைத்துக் கொள்ளும் 'மெட்ராஸ் பறச்சிங்கோ', கைத்தடியோடு 'சிலுமன்' கொடுத்து உலாவிக்கொண்டிருக்கும் காபூலிவாலா, முகம்மதியப் பிச்சைக்காரன், நொண்டிப் பிச்சைக்காரன், குஷ்டரோகப் பிச்சைக்காரன், ராத்திரித் 'தொழிலுக்கு'த் தயாராகும் யுவதி - பாதையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு, நிம்மதியாகச் சீவிச் சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் - அப்புறம் நானாவித, "என்ன சார் ரொம்ப நாளாச்சே", "பஸ் வந்துட்டுது", "ஏறு" என்கிற பேர்வழிகள் எல்லாம். அவசரம், அவசரம், அவசரம்...
அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
சாவதற்கு நல்ல இடம். சுகமான மர நிழல். வெக்கை தணிந்து அஸ்தமனமாகிவரும் சூரியன். "ஜே ஜே" என்ற ஜன இயக்கம். ராஜ கோலாகலம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்பொழுது அவன் செத்துக் கொண்டிருந்தான்; சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
ஜனங்கள் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது; சிலர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
அவன் கிழட்டுத் துருக்கப் பிச்சைக்காரன். தாடி மிகவும் நரைத்து விட்டது. மேலே அழுக்குப் பிடித்த கந்தை; கையையும் காலையும், மூப்பு போஷணையின்மை இரண்டும் சேர்ந்து சூம்பவைத்துவிட்டன. கால், காய்த்துப் போன கால்.
அவன் பக்கத்தில் தலைமாட்டில் இன்னும் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து கொண்டிருந்தான். தகரக் குவளையில் தண்ணீரை எடுத்துக் கிழவனுடைய தலையைத் தூக்கி ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முயன்றும் முடியாமையால் வாயை மட்டிலும் நனைத்தான். தன்னுடைய கைகளைத் தலைக்குக் கீழ்க் கொடுத்துத் தூக்க முயன்றான். படுத்துக் கிடந்த கிழவன், அதாவது செத்துக் கொண்டிருந்த கிழவன், தன் பக்கத்தில் காருண்ய ஸ்தல ஸ்தாபனத்தார் நிதுத்தி வைத்திருந்தார்களே, அந்தத் தகரப் பீப்பாய், அதை, பிடித்தபடியே தலையை நிமிர்த்த முயன்றான். அவன் கண்களில் ஒளி மங்கி விட்டது. அவன் உதடு நீலம் பூத்துவிட்டது. அவன் கதையெல்லாம் இன்னும் சிறிது நேரத்திற்குள் சம்பூர்ணமாகிவிடும். ஆனாலும் அவன் அந்தத் தகரப் பீப்பாயைப் பிடித்த பிடிப்பை விடவில்லை. பிடிப்பில் ஓர் ஆறுதல் இருந்தது; பலம் இருந்தது. பக்கத்தில் யாரோ தண்ணீர் கொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞை இருந்ததாக மட்டும் தெரியவில்லை. தண்ணீர் வந்தது; குடிக்க வேண்டும்; அவ்வளவுதான் அவன் மனதில். அதற்குமேல் நினைக்க விருப்பமில்லை; தேவையில்லை; திராணி இல்லை.
2
அப்போது டிராம் வண்டி ஏறுவதற்காக இரண்டு பேர் வந்தார்கள். இரண்டு பேரும் நின்றார்கள். ஆனால் டிராம் வரவில்லை. இருவரில் ஒருவர் தகப்பனார்; முப்பது வயசு. இரண்டாவது நபர், சிறு பெண் குழந்தை. நாலைந்து வயசு இருக்கும். அவரைப் பார்த்தால் தம் குடும்பத் தேவைகளைத் திருப்தி செய்துகொள்வதற்குக் கஷ்டப்படுபவராகத் தெரியவில்லை. குழந்தை சாதாரணக் குழந்தை; ஆனால், தாய் சிறிதே கவனமுள்ளவள் என்பது தெரியும்படி, சுத்தமாக, படாடோ பம் இல்லாமல் அலங்கரித்து விடப்பட்டிருந்தது.
குழந்தையும் தகப்பனாரும் டிராமுக்குக் காத்துக் கொண்டு நின்றார்கள். குழந்தை அவருடைய ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு நின்றது. நின்று கொண்டிருந்தவர்களுக்கு எதிர்ச் சாரியிலுள்ள கூடைக்காரி வைத்திருந்த மாம்பழம் நல்லதாகத் தெரிந்தது.
"குஞ்சு, நீ இங்கேயே நிக்கணும். அப்பா அந்தப் பக்கமாப் போய் ஒனக்கு மாம்பழம் வாங்கிண்டு வருவாளாம்" என்றார் அவர்.
"ஆகட்டும்" என்றது குழந்தை.
"நீ ரோட்டிலே இறங்கி வரவே படாது, தெரியுமா? வந்தாப் பழமில்லை" என்றார் அவர். 'குழந்தையைத் தனியே விடக்கூடாது' என்று அவர் மனசு குறுகுறுத்தது.
"இங்கியே நிக்கறேன் அப்பா" என்று கையடித்துக் கொடுப்பது போல அவரை அந்தப் பக்கம் போகும்படித் தூண்டியது குழந்தை.
மாம்பழ வேட்கையில் அவர் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு ரஸ்தாவைக் குறுக்காகத் தாண்டி எதிர்ப்புறமாகச் சென்றார்.
குழந்தை தைரியமானது, இதற்கு முன் இவ்வாறு நின்று பழகியது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பயத்தில் அப்பாவைத் தொடர்ந்த கண்கள் அப்புறம் பராக்குப் பார்ப்பதில் ஒன்றிவிட்டன.
சிவப்பு மோட்டார் ஒன்று அதன் கண்களைக் கவர, அந்தப் பக்கமாகவே பார்த்துக் கொண்டு நின்றது. அவசரப்பட்ட ஜீவன் ஒன்று குழந்தையைக் கவனிக்காமல் நடந்து போகையில் இடித்துவிட - அதன் மனம் எந்த உலகில் ஓடுகிறதோ - குழந்தை தள்ளாடியது. இடிபடாமல் நிற்பதற்காகச் சிவப்பு மோட்டார் பார்க்கும் ஆசையையும் துறந்து நடைபாதை ஓரத்தில் உள்ள சுவர் அருகில்போய் நின்று கொண்டது. சுவரில் ஒன்றி நின்று சாய்ந்து கொண்டு தன்னுடைய பைக்குள் கைபோட்டபடி நாலு திசைகளிலும் சுற்றிப் பார்த்தது.
செத்துக் கொண்டிருக்கும் அக்கிழவனும் அவனுடைய சாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வேறு ஒருவனும் அதன் கண்ணில்பட, 'அதென்ன வேடிக்கை?' என்று பார்க்கத் தயங்கித் தயங்கி அவர்கள் பக்கம் நெருங்கியது.
'பால் குடிக்க மாட்டேன்' என்றால் அம்மா தன்னை மட்டும் வற்புறுத்தி டம்ளரில் வைத்துக் கொண்டு தன்னிடம் மல்லுக்கட்டி அதைப் புகட்டுவதும், அப்பா, 'வேண்டாம்' என்றால் பேசாதிருந்து விடுவதும் அதற்குத் தெரியும். பெரியவர்களுக்கு 'வேண்டாம்' என்று சொல்ல உரிமையுண்டு; அம்மாவானாலும் அவருக்குப் பயப்படுவாள் என்பது அந்தக் குழந்தையின் சித்தாந்தம். அதற்கு அது வேடிக்கையாக இருந்தது. பெரியவர்களுக்கு டம்ளரில் புகட்டுவதா என்று அதற்கு ஆச்சரியம்.
3
இந்த வேடிக்கையைப் பார்க்க அந்த இரண்டு அநாதைகளின் அருகில் சென்றது குழந்தை. கிழவனுடைய தலைப் பக்கம் நின்றது.
இளைய பிச்சைக்காரன் மறுமுறையும் கிழவன் தொண்டையை நனைக்க முயன்று கொண்டிருந்தான். அவனுக்குக் கைப்பழக்கம் போதாது. அவன் ஊற்ற முயன்றபோது, ஒன்று அதிகமாகக் குபுக்கென்று விழுந்து கழுத்தை நனைத்தது; அல்லது டம்ளரிலிருந்து விழவேயில்லை.
கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.
குழந்தை நீரைப் பருகுவதற்கு வாயைக் குவிய வைப்பதுபோல வைத்துக் கொண்டு, தன்னுடைய கையில் உள்ள கற்பனை டம்ளரைப் பிடித்தபடி, "மெதுவா, மெதுவா" என்றது.
தண்ணீர் வார்த்தவன் ஏறிட்டுப் பார்த்தான். "அம்மா, நீ இங்கே நிக்கப்படாது; அப்படிப் போயிரம்மா" என்றான்.
"ஏன்?" எனது குழந்தை.
"இவுரு சாவுறாரு" என்றான் பிச்சைக்காரன்.
"அப்படீன்னா?"
"சாவுறாரு அம்மா, செத்துப்போறாரு" என்று தலையைக் கொளக்கென்று போட்டுக் காண்பித்தான்.
அது குழந்தைக்கு நல்ல வேடிக்கையாகத் தோன்றியது.
"இன்னும் ஒருதரம் அப்படிக் காட்டு" என்றது.
4
'கூட்டம் கூடிவிடக் கூடாது' என்ற பயத்தில் பிச்சைக்காரன் வாயைப் பொத்திக் கொண்டு கையை மட்டும் காண்பித்தான்.
கிழவனுடைய தலைமாட்டில் அவனுடைய அந்திமக் கிரியைக்காக என்பதைக் குறிக்க இரண்டு தம்படிகள் போடப்பட்டிருந்தன. அவை குழந்தையின் கண்களில் பட்டன.
"பட்டாணி வாங்கிக் குடேன்" என்று படுத்துக் கிடந்தவரைச் சுட்டிக் காட்டியது.
தனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதற்கு.
எங்கே பெரியவர் யாராகிலும் வந்து தன் மீது மோசடிக் குற்றம் சாட்டப்போகிறார்களோ என்ற பயத்தில் நாலு பக்கமும் சுற்றிப் பார்த்துக் கொண்டு, "ஒங்கிட்டே துட்டு இருக்கா?" என்று கேட்டான் பிச்சைக்காரன்.
"இந்தா, ஒரு புதுத் துட்டு" என்று குழந்தை அவன் வசம் நீட்டியது.
அவன், குழந்தை கொடுத்ததைச் சட்டென்று வாங்கிக் கொண்டான். அது ஒரு புதுத் தம்படி. கோடீசுவரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப்பிணியைப் போக்கிவிட முயலுவதுபோல், கடலில் காயம் கரைத்து வாசனையேற்றிவிட முயலுவதுபோல் குழந்தையும் தானம் செய்துவிட்டது.
பஞ்சடைந்த கண்ணோடு கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான். ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் அவசரமாகப் போய்க்கொண்டிருந்த நபர் ஒருவரின் கையிலிருந்து ஓரணாச் சிதறிக் கீழே விழுந்தது. அது கூட நினைவில்லாமல் அவரும் நடந்து கொண்டு கூட்டத்தில் மறைந்தார். அவ்வளவு அவசரம். உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் அதைக் கவ்வியெடுத்தான். ஒருவரும் பார்க்கவில்லையேயென்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.
"நீ போம்மா" என்று குழந்தையைப் பார்த்து மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்த்தான்.
குழந்தை, "மாட்டேன்" என்று காலைப் பரப்பிக்கொண்டு நின்றது. முகத்தை வலித்து 'அழகு' காட்டியது.
"பாவா, கொஞ்சம் பாலு வாங்கியாறேன்" என்று சொல்லிக் கொண்டு இளம் பிச்சைக்காரன் எழுந்து எதிர்ச்சாரி ஓட்டலை நோக்கி நடந்தான்.
இது கிழவன் காதில் படவில்லை. அவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.
5
குழந்தைக்கு அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அருகில் போய் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தது. இப்பொழுது விரட்டுவதற்குச் 'சின்னப் பூச்சாண்டி' இல்லையல்லவா? தனக்குப் பக்கத்தில் குழந்தை நிற்பது கிழவனுக்குப் பிரக்ஞை இல்லாததால் தெரியவில்லை. அவன் ஓட்டைப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனும் ஒரு பெரிய "ஓட்டை ஒடசல்" ஜந்துதானே! குழந்தைக்கு அவனுடைய மூஞ்சி, தாடி, அவன் வாயைத் திறப்பது எல்லாம் புதுமை. அவனுடைய நீலம் பார்த்த உதட்டில் ஓர், ஈ வந்து உட்கார்ந்தது; இரண்டாவது ஈ வந்து உட்கார்ந்தது; அதை ஓட்ட அவன் வாயைத் திறந்து உதட்டைக் கோணுவது குழந்தைக்கு வேடிக்கையாக இருந்தது. என்ன நினைத்ததோ மெதுவாகப் "பாவா" என்று இளம்பிச்சைக்காரனைப் போலக் கூப்பிட்டுப் பார்த்தது. உள்ளுக்குள் பயம், பூச்சாண்டி எழுந்து உட்கார்ந்து கொள்ளுமோ என்று.
படுத்துக் கிடந்தவன் கண்கள் விரியத் திறந்திருந்தன; கண்ணின் மணியின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்து...
"என்னடி, அங்கே போய் நிக்கறே; ஒன்னை எங்கெயெல்லாம் பார்க்கிறது?" என்ற ஓர் அதட்டல் கேட்டது. பேரம் தர்க்கமாகி, தம் கணக்குக்குக் கூடைக்காரியை ஒப்புக் கொள்ளவைத்து இரண்டு மாம்பழங்களை வாங்கி வந்தவரின் நியாயமான கோபம் அது.
"இல்லேப்பா, அது பாவாப் பூச்சாண்டி; பாத்துண்டிருந்தேன்" என்றது குழந்தை ஓடி வந்து கொண்டே.
சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்கள்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டார் அவர்; அது பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கி மோந்து, "வாசனையா இருக்கே!" என்று மூக்கருகில் வைத்துத் தேய்த்துக் கொண்டது.
(முற்றும்)
கலைமகள், டிசம்பர் 1941
-------------
47. மனக்குகை ஓவியங்கள்
1
கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து எட்டிப் பார்த்தார்.
கீழே, பல யோஜனைகளுக்கு அப்பால், அவர் கற்பித்த பூமண்டலமும் அதன்மீது ஊர்ந்து திரியும் சகல ஜீவராசிகளும் அவர் தமது சாயையில் சிருஷ்டித்து மகிழ்ச்சியுற்ற ஆதாம் ஏவாளின் வாரிசுகளும் தென்பட்டன.
ஒரு தாயின் பெருமிதத்துடன், ஒரு சிருஷ்டிகர்த்தரின் கம்பீர மகிழ்ச்சியுடன் அப் பூமண்டலத்தைக் கவனித்தார்.
அன்று ஏழாம் நாள். தொழிலை (விளையாட்டை?) முடித்துக் கை கழுவிவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த பொழுது எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் மனிதனைத் தவிர்த்துப் பூமண்டலத்தின் மற்றைய ஜீவராசிகளெல்லாம் அவருக்குத் தென்பட்டன.
மனிதன் மட்டிலும், ஏக்கத்தாற் குழிந்த கண்களோடு, விலாவெலும்பெடுத்த கூனல் உடலை வளைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட, எதையோ குகையொன்றில் வைத்து ஊதி ஊதி உருக்கிக் கொண்டிருந்தான்.
பிதாவின் களங்கமற்ற நெற்றியில், கண்ணாடியில் கலந்த ஆவி போல் சோர்வு போர்த்திய துயரக் களை தோன்றி மறைந்தது.
தம் இரத்தத்தின் இரத்தமான, கனவின் கனவான, லட்சியத்தின் லட்சியமான புதல்வனின் நினைவு தட்டியது போலும்!
இன்னுமா?
"ஹே! மானுடா, ஏனப்பா உன் பார்வை குனிந்தே போய் விட்டது?" என்ற குரல் பல யோஜனைகளுக்கு அப்பால் உள்ள மனிதனுடைய உள்ளத்தில் ஒலித்தது.
மனிதன் தன்னுடைய நம்பிக்கை வறண்ட கண்களைக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்.
"நீர் எப்பொழுதும் அங்கேயே இருக்கிறீரே?" என்று பதில் கேள்வி கேட்டான்.
"நான் என்ன செய்யட்டும்! உன்னை மாசுபடுத்தும் அந்தப் புழுதி தோய்ந்த கரங்களுடன், மார்புடன் என்னைக் கட்டித் தழுவ முயலுகிறாயே?"
"என்னைச் சிருஷ்டிக்க நீர் உபயோகித்த புழுதியைவிட்டு நான் எப்படி விலக முடியும்? அதை விட்டு விலகி நான் உம்மை எப்படி வரவேற்க முடியும்? நான் நிமிர்ந்து நேராக நிற்பதற்கே இந்தப் புழுதிதானே ஆதாரம்? புழுதியைக் கண்டு அஞ்சும் உமக்கு அதன் மீது நிற்கும் என்னை அறிந்து கொள்ளச் சக்தி உண்டா? நீர் அந்தச் சக்தி பெற்றுக் கீழே வரும் வரை நான் இந்தப் புழுதியில் கண்டெடுத்த - அதில் என்னோடு பிறந்த, என் சகோதரனான - இந்த இரும்புத் துண்டை வைத்து, என்னைப் பாதுகாத்துக் கொள்ளுகிறேன்!" என்று குனிந்து நெருப்பை ஊதலானான். குகையுள் பளபளவென்று மின்ன ஆரம்பித்தது.
2
உத்தானபாதனது குழந்தை தெய்வத்திடம் வரம் கேட்பதற்காகத் தபஸ் செய்யக் கானகத்திற்கு ஓடிற்று. மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவியும் ஆகாய மார்க்கமாகச் செல்லும் பொழுது இக்குழந்தையைக் கண்டுவிட்டார்கள்.
ஸ்ரீதேவிக்குப் பசலைக் குழந்தையின் உறுதியைக் கண்டு பரிவு ஏற்பட்டுவிட்டது. தன் கணவருக்கு இருக்கும் அந்தக் 'காத்து அளிக்கும்' சக்தியை விவரம் தெரியாத குழந்தைகள் கூட அறிந்திருக்கின்றனவே என்பதில் ஒரு பூரிப்பு! கணவரைப் பார்த்துக் கொண்டாள்.
ஸ்ரீதேவியின் கடைக்கண் வீச்சுக்கிணங்கி வரங்களை வாரிச் சொரியக் குழந்தையை அணுகினார் மகாவிஷ்ணு.
குழந்தை ஓடிக்கொண்டிருந்தது.
பகற் கனவை ரஸித்துப் பல முறை ஏமாந்த குழந்தை அது. அதற்கு எதிலும் சர்வ சந்தேகம். மனத்தின் பேரில் அதற்கு அசைக்க முடியாத, நிரந்தரமான சந்தேகம்.
உத்தானபாதனது மடியில் உட்கார்ந்து விளையாடுவதாக, கொஞ்சுவதாக நம்பி எத்தனையோ முறை முன் ஏமாந்திருக்கிறதல்லவா?
மகாவிஷ்ணு சங்கு சக்கராயுதராக அதனை வழிமறித்து நின்று "குழந்தாய்!" என்று அழைத்தார்.
"நீ யார்?" என்று கேட்டது குழந்தை.
"குழந்தாய், என்னைத் தெரியாதா? நான் தான் மகாவிஷ்ணு!" என்று புன்சிரிப்புடன் தம்மை அறிவித்துக் கொண்டார்.
"பொய்! நான் என்ன கனவு காண்கிறேனா?" என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டது குழந்தை.
"நிஜந்தான். இந்தா, இந்த வரத்தைக் கொடுக்கிறேன்! இதிலிருந்து தெரிந்து கொள்!"
"ஓஹோ, செப்பிடுவித்தைக்காரனா?"
"நான் தான் மகாவிஷ்ணு; என் பக்கத்திலிருக்கும் ஸ்ரீதேவியைப் பார்!"
"பகல்வேஷக்காரனும் கூடவா? எங்கப்பா கிட்டப்போ! சம்மானம் குடுப்பார். என்னை ஏமாத்த முடியாது!" என்று சிரித்துக் கொண்டே, "நேரமாகிறது; தபஸ் பண்ணப்போறேன்!" என்று காட்டிற்குள் ஓடிவிட்டது அக்குழந்தை.
கொடுக்க விரும்பிய வரத்தை ஒரு நட்சத்திரத்தின் மீது வீசி எறிந்துவிட்டு ஆகாச கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார் பகவான்.
பசியால் தவிக்கும் 'கல்லினுள் சிறு தேரை' தென்பட்டது. அதை நோக்கி விரைந்து சென்றார்.
3
யமபுரி.
மார்க்கண்டச் சிறுவனுக்காகப் பரிந்துகொண்டு வந்த சிவபிரான் கையில் தோல்வியுற்று தர்மராஜன் அப்பொழுதுதான் திரும்பி வந்திருக்கிறான்.
தனது தர்மாசனத்தில் உட்காரவும் அவனுக்கு அச்சம் - தயங்குகிறான்.
ஆசனத்தடியில் விடாப்பிடியாக உட்கார்ந்து கொண்டு முரண்டு செய்துகொண்டிருந்த நசிகேதக் குழந்தை, "மரணம் என்றால் என்ன?" என்று மறுபடியும் தன் மழலை வாயால் கேட்டது.
எத்தனையோ தத்துவங்களைச் சொல்லிப் பார்த்தான்.
குழந்தையை ஏமாற்ற முடியவில்லை. தன் ஒற்றைக் கேள்வியை வைத்துக் கொண்டு அவனை யுகம் யுகமாக மிரட்டி வருகிறது அக்குழந்தை.
தோல்வியின் சுபாவமோ என்னவோ!
"மனிதர்கள் என்னைக் கண்டு ஏன் மிரளுகிறார்கள்? அஞ்சுகிறார்கள்? நான் உதவி செய்யத்தானே செல்லுகிறேன்? எனக்குப் பயந்து என்னையும் விடப் பெரிய எமனான சங்கரனிடம் சரண் புகுந்தாவது என்னை விரட்டப் பார்க்கிறார்களே! இது என்ன புதிர்? என்னைக் கண்டு பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்று அவனது ஏக்கப் படுதாவில் நினைவு - அலைகள் தோன்றி விரிந்தன.
அன்றுதான் அவன் தன் தனிமையை முழுதும் அறிந்தான்.
அப்பொழுதுதான் கிங்கரர் இருவர் தன்முன் கொண்டு வந்து நிறுத்திய மனித உயிரைப் பார்த்துத் தன் அந்தரங்கக் கேள்வியை வாய் குழறிக் கேட்டுவிட்டான்.
"அதோ கிடக்கிறது பார், நான் போட்டுவிட்டு வந்த உடல்; அதில் போய் உட்கார்ந்து கொள். அப்புறம் உன் கிங்கரர்களை ஏவி, உன்னை அழைத்து வரும்படி உத்தரவு செய். அப்பொழுது தெரியும் உனக்கு!" என்று சொல்லிச் சிரித்தது அந்த மனித உயிர்.
பர வெளியிலே, பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்தில், ஆனந்தக் கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான்.
ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்று ஆடுகிறான்.
பக்கத்தில் வந்து நின்றார் நாரதர்.
"அம்மையப்பா! எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க!...அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது தெரியுமா?... துன்பம், நம்பிக்கை - வறட்சி, முடிவற்ற சோகம்..."
தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன!
வீணையை மீட்டிக்கொண்டு வேறு திசை பார்த்து நடந்தார் நாரதர்.
4
கைலயங்கிரியிலே கண்ணைப் பறிக்கும் தூய வெண்பனி மலையடுக்குகள் சிவந்த தீ நாக்குகளைக் கக்குகின்றன.
திசையும் திசைத் தேவர்களும், யாவரும் யாவையும் எரிந்து மடிந்து ஒன்றுமற்ற பாழாக, சூன்யமாகப் போகும்படி பிரான், கோரச்சுடரான் நெற்றிக்கண்ணைத் திறந்து, தன் தொழில் திறமையில் பெருமிதம் கொண்டு புன்னகை செய்கிறான்! கண்ணில் வெறியின் பார்வை!
பார்த்த இடங்களில் எல்லாம் தீ நாக்கு நக்கி நிமிர்கிறது!
இடியும் மின்னலும், இருளும் ஒளியும் குழம்பித் தறிகெட்டு நசிக்கின்றன.
இக்குழப்பங்களையும் மீறி ஒரு சிறு குழந்தை அவனது காலடியை நோக்கி ஓடி வருகிறது.
தோலாடையைத் தன் தளிர் விரல்களால் பற்றி இழுக்கிறது.
பிரான் குனிந்து பார்க்கிறான், புன்சிரிப்போடு.
"அழிப்பதற்குச் சர்வ வல்லமை இருக்கிற தெம்பில் வந்த பூரிப்போ இது?" என்கிறது குழந்தை.
"சந்தேகமா! நீதான் பார்க்கிறாயே!" என்கிறான் பரமன்.
"உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும். உம்மை அழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக் கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்றுவந்த பின்பு நெஞ்சைத் தட்டிப் பார்த்துக்கொள்ளும்!" என்று சொல்லிக் கொண்டே கருகி நசித்தது அக்குழந்தை.
(முற்றும்)
கலைமகள், மே 1938
------------
48. மன நிழல்
1. அவள்...
வாழ்க்கையில் அடிபட்ட சர்ப்பம்போல் அவள் நெஞ்சு துவண்டு நெளிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நெளிவிலும் அதன் வேதனை சகிக்க முடியாமல் தவித்தாள். அடுத்த வீட்டுப் பொருள் கண்ணுக்கு அழகாக இருக்கலாம்; ஆனால் தனக்கு அது சொந்தம் என்று நினைப்பதால் தனக்கே கிடைத்துவிடுமா என்று அவள் ஒருநாள் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது. அப்படி அவள் அன்று நினைத்திருப்பாளானால், இந்த அடியின் வேகம் நெஞ்சில் இவ்வளவு ஆழமாகப் பதிந்திராது.
மூன்று வருஷங்களுக்கு முன்னால் அவனை முதல் முதல் பார்க்கும்போது, இப்படி ஏதாவது வரும் என்று இவள் நினைத்தாளா? எத்தனையோ சிநேகிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள்; அவர்களில் அவனும் ஒருவன் என்றுதான் அப்போது நினைத்தாள். நாளாக நாளாக அவன் பழக்கம் நெருங்கி வளரவே அவளும் அவனிடம் சகஜமாகப் பேசுவாள், பழகுவாள். நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கைப் பாதையில் கண்டெடுத்த நல்முத்தாக அவன் அவளுக்குத் தோற்றமளித்து வந்தான். எதிர்பாராத அந்த தனத்தைக் கையில் இறுக மூடிக்கொள்வதில் தப்பில்லை என்று அவள் நினைத்தாள்.
நந்தவனத்தில் எத்தனையோ விதமான பூக்கள் மலர்கின்றன, ஆனால் முள்ளுக்கு நடுவில் நிற்கும் ரோஜாப்பூதான் அவளுடைய கண்களுக்கு அழகாக இருந்தது. அதைப் பறித்தால் கையில் முள்தைக்குமே என்று நினைத்துத் தயங்கி நிற்கும்போது, அதுவே அவள் எதிரில் தரையில் விழுந்தால் கையால் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொள்ளச் சொல்லியா கொடுக்க வேண்டும்? அடுத்த வீட்டுத் தோட்டம் என்பதையும் அவள் மறந்தாள். பூவுக்கு உடையவர் வேறொருவர் என்பதையும் மறந்தாள், ஆசையோடு அதை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள். சாசுவதமாக நெஞ்சில் அதை அமரவைத்தாள்... தன்னுடைய சகலமும் அவனே என்று நினைத்து நிலைகொள்ளாத சந்தோஷத்தில், தன்னையும் மறந்து, தன்னுடையவை என்று சொல்லத்தக்க எல்லாவற்றையுமே அவனது காலடியில் போட்டு, அவனுடைய அடிமையாகிவிட்டாள். தன்னுடைய ஜீவனின் உயிர் நாடியைக்கூட அவனது காலடியில் சமர்ப்பித்துவிட்டாள்.
ஒவ்வொரு நாளும் அவன் வரவுக்காகச் சாயங்காலத்தைக் கூவி அழைத்துப் புழுவாகத்துடித்துக் கொண்டிருப்பாள்.
எவ்வளவு இருட்டிவிட்டாலும், ஒவ்வொரு நாளும் அவன் தரிசனம் கிடைக்காமல் போகாது. மணி அடித்து எழுந்த மாதிரி, ஒவ்வொரு நாளும் அவன் சாயங்காலம் ஆறு மணிக்கு அவள் முன் வந்து நிற்பான். அவனை எதிரில் பார்த்த பிறகுதான் 'அவள் வெப்பிராளம்' சிறிது தணியும். மத்தியானங்களில் தனிமையாக இருக்கும்போதெல்லாம் சாயங்காலம் வரும் அவனிடம் என்னவெல்லாமோ பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அவனை எதிரில் கண்டவுடன் அத்தனையும் மறந்துபோகும். பேசுவதற்கு விஷயம் அகப்படாமல் தவித்து வாய் பேசா ஊமை மாதிரி அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே பரம திருப்தி அடைவாள்.
அவர்களுடைய அன்பு, அணையில்லா வெள்ளம் போல் காலத்தோடு ஒட்டிப் பெருக்கெடுத்துப் போய்கொண்டிருந்தது. சந்தோஷத்தோடு சரிபாதி துக்கமும் கலந்துதான் இருக்கும் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள அவளுக்கு இத்தனை நாட்கள் வேண்டியிருந்தன. தன்னைப் போன்ற பாக்கியசாலி இந்த உலகத்திலேயே இல்லை என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அவளுடைய நினைப்புகள் எல்லாம் ஒரு துரும்பு பட்டாலும் 'டபார்' என்று வெடித்துத் தரையில் துவண்டு விழும் பலூன்மாதிரி சிதறிவிடும் என்று அவள் சொப்பனத்தில் கூட நினைத்ததில்லை. கடிகாரத்தைப் பார்த்துப் பார்த்துப் பகல் பொழுதை உந்தித் தள்ளி விட்டுக்கொண்டு இருந்தாள். இரவிலோ இன்பக்கனவுகள்; நாட்கள் போய்க் கொண்டிருந்ததுகூட அவளுக்குத் தெரியாது.
அவனைப் பார்த்து மாதக் கணக்காகிவிட்டது என்றால், அவள் மனம் பதறித் தவிக்காமல் என்ன செய்யும்? அன்புக் கோட்டையில் அவனைச் சிறை வைத்திருந்தாள். அதிலிருந்து எப்படியோ அவன் தப்பித்துக் கொண்டு போய்விட்டான். எவ்வளவு பிரியமாக இருந்தான்! ஒரு சிறு தலைவலி வந்தால்கூட அவள் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சகியாத அவனா இப்பொழுது மாதக்கணக்காக அவளைப் பார்க்காமல் இருக்கிறான்? எல்லாம் வெறும் வேஷம்தானா? அல்லது புருஷர்களுடைய மனசே இவ்வளவுதானா? அவளை அவன் மறந்துவிட்டானா? அவ்வளவு லகுவில் மறக்கக்கூடிய விதத்திலா அவர்கள் பழகியிருந்தார்கள்? அல்லது அவன் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக்கூடிய விசேஷ அழகு ஒன்றும் அவளிடம் இல்லையா? அவனுக்காக, அவன் அன்புக்காக, விழுந்து விழுந்து பிராணனை விட்டதின் பலன் இவ்வளவுதானா. தம் சௌகரியத்திற்காக மற்றவர் மனசைக் கொலை பண்ணுவதுதான் புருஷர் குணமோ? சீ! இது அப்பொழுதே தெரியாமல் போய்விட்டதே! இவ்வாறு அவள் தனது பின்புத்திக்காக வருந்தினாள். சீ! சீ! ஒருநாளும் அப்படி இராது; ஏதோ என்ன வேலையோ? வர சௌகரியப்பட்டிருக்காது; வராமல் இருக்க மாட்டான்! இப்படிச் சொல்லிக்கொண்டும் மனசைத் தேற்றிக் கொள்வாள்.
அனுபவம் நீடிக்க நீடிக்கப் பாத்திரம் பழசாவது சகஜந்தானே? அதே மாதிரி அன்று அவன் கண்களுக்குப் பிரமாதமாகத் தெரிந்த விசேஷம், இன்று அவளிடம் இல்லாமல் போய்விட்டதுபோலும்! இல்லைதான். வாஸ்தவம். அவன் கண்களை உறுத்தக்கூடிய அழகு அவளிடம் இல்லைதான். ரொம்ப சாதாரணம் என்றாலும் பிறர் கண்ணுக்கு விகாரமாகப்படும்படி அவள் இருக்கவில்லை. அதுதான் அவன் தன்னைவிட்டுப் போய்விடுவானோ என்று அடிக்கடி அவளுக்குப் பயத்தைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. அழகிலிருந்து அனுராகமா, அனுராகத்திலிருந்து அழகா என்பது அவளுக்கு அவன் நடத்தையிலிருந்து இன்னும் புரியவில்லை. நடுச்சந்தியிலும் மூலை முடுக்குகளிலும் கூட அழகைக் கூடை கூடையாக வாரலாம். ஆனால், அன்பு அப்படியா? அதன் மகத்துவம் எவ்வளவு மேலானது என்பது அவனுக்குத் தெரிந்திருக்காது.
ஜீவியத்தில் முதல் முதல் ஏற்பட்ட ஏமாற்றம் இதுவே. இவ்வளவு லகுவில் பிறர்கையில் விளையாட்டுப் பொருளாக அமைந்து விடுவாள் என்று அவள் என்றாவது நினைத்திருந்தாளா? வேண்டிய மட்டும் வைத்து விளையாடிவிட்டு வேண்டாத போது போட்டு உடைத்துவிடும் சிறு குழந்தையா அவன்? அல்லது, பூவுக்குப் பூ தாவித்தேன் குடிக்கும் வண்டைப்போல் ஏதேனும் புது மலரைத் தேடிப் போய்விட்டானா? அப்படியானால், தான் இனி அவன் முகத்திலேயே விழிக்காமல் இருந்து விடலாமா? ஐயோ, அதை நினைக்கும்போது, அவனைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என நினைக்கும்போதே அவள் நெஞ்சைவாள் கொண்டு அறுப்பதுபோல் இருக்கிறது. அப்படி அவன் தன்னை மறந்துவிட்டால், லேசில் விடக்கூடாது.
எப்படியும் தன் காலில் வந்து விழும்படி செய்யவேண்டும். பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்றெல்லாம் நினைத்து, நினைத்து, இன்று பல்லைக் கடித்துக்கொண்டு நாட்களைத் தள்ளி வருகிறாள். கவலை என்பதே என்ன என்று அறியாத அவள் மனசை கரையான் அரிப்பது போல, அவனுடைய நினைவு ஒரு பக்கம் இருந்து அரித்துக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் பலவீனப்பட்டுக் கொண்டே வருகிறாள். ஒவ்வொருநாளும் அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துப் பார்த்து அவள் கண்கள்கூடப் பார்வை மங்கிவிட்டன. "இப்படி என்னை நயவஞ்சகமாகப் பேசி ஏமாற்றிவிட்டானே, என்ன நடிப்பு? எவ்வளவு அன்பு வார்த்தைகள்! அப்பா! நினைக்க நினைக்க அவனையே நேரில் காணுவதுபோல் மனசில் சிறிது சந்தோஷம் தோன்றுகிறதே! அவனை நேரில் பார்க்கும் பாக்கியம் என்றைக்குக் கிடைக்குமோ?" என்று தெய்வங்களுக்கெல்லாம் வேண்டிக் கொள்ளுகிறாள். அவள் மனோரதம் நிறைவேற தெய்வ அருள் உண்டா? ஒரு தடவை அவனைக் கண் குளிர மறைவில் எட்ட நின்று பார்த்தாலே போதும்.
அது கூடவா கிட்டாமல் போய்விடும்? 'நான் படும் அவஸ்தையை, என் நிலைமையை, ஒரு தடவை அவன் நேரில் வந்து பார்த்தாலே போதும். என் வேதனையின் நிழல் பின் தொடர்ந்து விடுமோ என்று அவன் பயப்படுகிறானோ! அப்படியானால், அவன் மனுஷத்துவம் இல்லாத மிருகமா? சீ! ஒருகாலும் அப்படியிராது. அவன் தங்கமான மனுஷன். அவனைப் பற்றி வீணாகத் திட்டின என் புத்தியைத்தான் கண்டிக்க வேண்டும். ஏதோ சௌகரியக்குறைவினால் வராமல் இருக்கலாம். சமயமும் சந்தர்ப்பமும் கிடைத்தவுடன், நிச்சயம் என்னிடம் ஓடிவந்து விடுவான். என் அந்தரங்க அன்பு விக்கிரகத்தை மனசில் வைத்துப் பூஜித்தே பொழுதைப் போக்கிக் கொள்வேன். என் ஆசையும் ஜீவனும், எல்லாமுமே அவன் தான். அவன் ஜீவனோடு சுமந்து திரிவேன். எதற்காக? என்றைக்காவது ஒருநாள் என் அன்பின் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். வராமல் இருக்க முடியாது... நிச்சயம் வருவான், வந்தே தீருவான்...
2. அவன்...
1
"நிச்சயமாக அங்கே போக வேண்டும். ஏன் நிச்சயமாகப் போக வேண்டும், அது முட்டாள்தனம் அல்லவா? மனிதன் என்றால், நிதானம் தவறி விடுவது இயற்கை. தவறின நிலையிலேயே நின்று உழன்று கொண்டிருப்பது என்பது படுமுட்டாள்தனம். நான் யார், அவள் யார்? எப்படி தொடர்பு நிரந்தரமாக அமைய முடியும்? பாவம் இல்லை... அசடு... என்னைப் பிரமாதமாக நினைத்து விட்டாள். ஒரு சமயம் நினைக்கும்போது, பரிதாபமாகத்தான் இருக்கிறது. அதற்காக அவளிடமே விழுந்து கிடக்க முடியுமா? நான் என்ன ஒற்றைக் கட்டையா? எனக்குக் குடும்பம் கிடும்பம் ஒன்றும் கிடையாதா? ஏதோ கொஞ்ச நாட்கள் போனோம் வந்தோம் என்றில்லாமல் இப்படி ஒரே பிடியாகப் பிடித்துக்கொள்வார்கள் என்று தெரிந்திருந்தால், அந்த வழிக்கே போகாமல் இருந்திருக்கலாமே! ஏன் என்னிடம் அப்படிப் பிராணனாக இருக்க வேண்டும்? எனக்கு வேண்டி விழுந்து விழுந்து பணிவிடை செய்திருக்கிறாள். எதற்காக? என் மனசை சாசுவதமாகத் தனக்கு அடிமைப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இருக்கும்... அல்லது அவளுடைய சந்தோஷத்திற்காகவும் இருக்கலாம்... அவைகளை எல்லாம் பொருட்படுத்திக்கொண்டு நான் அவளை எப்பொழுதும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள முடியுமா? மேலும், தன்னை மறந்து புத்தியை இழந்துவிடும்படி அவளிடம் யார் சொன்னார்களா? மனசுக்குக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், அது தறிகெட்ட மிஷின் மாதிரி போய்க் கொண்டிருக்கும்.
அதற்கெல்லாம் நான் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? இனிமேல் அந்தப் பக்கமே போகாமல் இருப்பதுதான்மேல். இனி அவள் முகத்திலேயே விழிக்கப் போகிறதில்லை... இப்படி நினைத்தால் மனசும் கேட்க மறுக்கிறது. அங்கே போகாவிட்டால் இருப்புக்கொள்ளவில்லை. அன்று முழுவதுமே ஒரு வேலையும் ஓட மாட்டேன் என்கிறது... போகலாம்... ஆனால் மனசு இன்னும் பலமாகப் பின்னிக் கொண்டால், அப்புறம்...? அப்புறம் ஏற்படக்கூடிய பொறுப்புக்கு நான் தயார் இல்லை. அதற்காக அவள் அழிந்து போகிறது என்றாலோ, ஆயிரம் ஜீவனில் ஒன்றுதானே என்று, கவலையை உதறித் தள்ளிவிட முடியவில்லை.
இரண்டு வழியாலும் அவளுக்குத் துன்பந்தானே? பந்தம் இறுகிவிட்டால், அதைச் சுமக்க மனத் தைரியம் இருக்குமோ என்பது சந்தேகம், உதறித்தள்ள எனக்கே மனசு வரவில்லையே! அவளுக்கு வரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். தவிரவும் அந்த உறுதி வந்தது என்றுதான் வைத்துக் கொள்வோம். அதனால் அவளுக்குத்தானே கெடுதல்! நிஜமாகவே என் மனசில் அவள் பேரில் ஆசையிருந்தால், விலகி ஓடிப்போவது அல்லவா புத்திசாலித்தனம். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும், சதையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் நகம் பிய்த்துக்கொண்டு வந்தால் வலிக்கத்தான் செய்கிறது. ரத்தம் பெருக்கெடுக்கத்தான் செய்கிறது. ஆனால் புண் ஆறவில்லையா? அதே மாதிரி, நாட்கள் போகப் போக மனவேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவிடும். அதற்காக நான் நிதானத்தை இழந்து விடுவதுதான் தப்பு. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
விலகியே நிற்க வேண்டும். அப்பொழுதுதான் அவளுக்கு நான் நன்மை செய்தாக முடியும். இல்லாவிட்டால், எனக்கு அவள்மீது ஆசையிருப்பதாக நினைத்துக்கொள்வதுவெறும் பிரமை. சந்திக்காது போனால்...? சகிக்க முடியாமல்தான் இருக்கிறது. அதற்காக, சில நிமிஷ நிம்மதிக்காக, சில நிமிஷ உல்லாசத்திற்காக, விலங்கை மீண்டும் நாமே எடுத்துப் பூட்டிக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை. ஒரு தடவைபோய், இதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும், உணர்ச்சி வசப்பட்டு விடாமல் மனசைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேச வேண்டும்; அவள் கேட்கத் தயாராக இருக்க வேண்டும்! அவளுக்கு அது எப்படிப் புரியும்! பெண்கள் தங்கள் மனம் கண்ட உலகத்தைத்தானே உண்மை என்று நம்புகிறார்கள்! அப்படி இருக்கும்போது அவள் மட்டும் யோகீஸ்வரர் மாதிரி, நான்சொல்லுவதை உட்கார்ந்து கேட்டுக்கொண்டு புரிந்துகொள்வாள் என்று எப்படி எதிர்பார்ப்பது?
மேலும், அந்தச் சமயத்தில் எனக்கும் நினைத்ததைத் தெளிவாக எடுத்துச் சொல்லத்தான் முடியுமா? மேலும் உணர்ச்சியை மூலையில் கட்டிவைத்துவிட்டு உபதேசம் செய்துகொண்டிருக்க இது வேதாந்த விவகாரமா? அவள் அழுதால், என் புத்தி பொல பொலத்துவிடுமே! போகாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். விலகிவிடலாம். விலகிவிட வேண்டும்; விலகிவிட முடியும்! முடிகிற காரியத்தைச் செய்வதைப்போல் முடியாத காரியத்தை நோக்கி மனசு எப்பொழுதும் தயங்குவதில்லை. முடிகிற காரியம், விரும்புகிற காரியமாக இருக்க வேண்டும். புத்தி மறக்கச் சொல்லுகிறது; ஆசை அங்கு இழுக்கிறது. உடம்பை இழுத்த இழுப்புக்கு விடுவதுதான் வியாதிக்கு வழி. அந்த மாதிரிதான் மனசுக்கும், பைத்தியத்தில் கொண்டுபோய்விடும். பைத்தியம்தான் தன்னை மறக்க நமக்கு வழிகாட்டும்.
2
ஆனால், எங்கள் ரகசியம் ஊருக்குப் பொதுச் சொத்தாகிவிடுமே! அதனால்... அதனால்... கண்ணைமூடிக்கொண்டு உணர்ச்சியின் இழுப்புக்கு எல்லாம் தலைகுனிய வேண்டியதுதான். அதனால் பயன் உண்டா? யாருக்குப் பயன்? "யார்" என்று நான் குறிப்பிடுவது யார்? நானா அவளா? அவள் என்று நினைத்துக்கொண்டு திருப்தியடைவதுபோல் மனசு பாசாங்கு செய்கிறது. உண்மை அப்படியா? எனக்குத் தெரியவில்லை! நாளைக்கு போய்ப் பார்க்கலாம். தெய்வம் விட்ட வழி. ஆமாம் தெய்வம் எப்பொழுதுந்தான் வழிவிட்டுக்கொண்டே இருக்கிறதே! அதன் தலையில் பொறுப்பைப் போட்டுவிட்டு, விட்டில் பூச்சி மாதிரி நெருப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டால் சிறகு தீய்ந்து போகாமல் என்ன செய்யும்.
ஆசை என்று நினைத்துக்கொண்டு சகதிக்குள் காலை விட்டுக்கொள்ள முடியுமா? முழு மனசையும் ஈடுபடுத்திக்கொண்டு ஒரு காரியத்தில் இறங்குவதைப் போல முட்டாள் தனம் ஒன்றுமில்லை. நினைத்த நேரத்தில் பிடியை விடுவித்துக் கொள்ளுவதற்கு வகை தெரியாமல் கையைக் கொடுக்கலாமா? பிடி தளர்வதற்கு நேரம் கிடைத்தபோது, பிறகும் கையை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், தளர்வு மறைந்து முன் இருந்ததைவிடப் பன்மடங்கு, பலத்துடன் அமுக்கிக் கொள்ளும். இப்பொழுது விலகுவது தான் புத்திசாலித்தனம்... புத்திசாலித்தனம்... இவ்வளவு லேசில் தப்பித்துக்கொள்வேன் என்று நான் நினைக்கவேயில்லையே! உலகம் மாறினாலும் உள்ளன்பு மாறாது என்று கையடித்துக் கொடுத்த மனசு தானா இது? அடடா? நான் எவ்வளவு விவேகி! மனசை அடக்கிக்கொள்ளக்கூடப் படித்துக் கொண்டேன். சுயநலத்துக்காக மனசை அடக்கினால் என்ன? அது யோகியின் சாதனை அல்லவா? லோகத்திலேயே மிகவும் பிரமாண்டமான தன்னலம் உள்ளவன் தானே யோகியும்! நான் யோகியல்ல, விவேகி, புத்திசாலி... போகமாட்டேன்... போகவே மாட்டேன்...
(முற்றும்)
['அவளும் அவனும்' தொகுப்பு (தமிழ்ச் சுடர் நிலைய வெளியீடு), 1953]
(இக்கதை புதுமைப்பித்தனால் எழுதப்பட்டதா இல்லையா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன)
--------------
49. மோட்சம்
1
ராமுவுக்கு எட்டு வயசுதான். ஆனால் வயசிற்குத் தகுந்த வளர்ச்சி இல்லை. கூழை, ஒல்லி, அடிக்கடி வியாதி. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை; அங்கே போகாதே, இங்கே போகாதே என்று கேட்டுக் கேட்டுக் கோழைப்பட்ட மனசு. 'அதைச் செய்யாதே' என்றால் கொன்றாலும் செய்யமாட்டான். அவ்வளவு மோசம்.
அம்மா வீட்டிற்கு விலக்கமாகிவிட்டால் அந்த ஐந்து நாளும் பள்ளிக்கூடத்தில் உதைதான். வீட்டில் கடைக்குப் போக வேண்டும்; அதை இதைச் செய்ய வேண்டும்; அப்பா சமையலுக்கு உட்கார்ந்து விட்டால், அவர் ஆபீஸுக்குப் போக வேண்டாமா? படிக்க, வீட்டுப் பாடம் எழுத நேரம் எங்கே இருக்கிறது? அப்பாவைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து சொல்லச் சொன்னால் நேரமாகிவிடுமாம். அவருக்கு எந்த வாத்தியார் இருக்கார்?
இன்றைக்கும் அப்படித்தான். பயம், போக வேண்டாம் என்று சொல்லுகிறது; அவனால் ஒளிந்து கொள்ள முடியவில்லையே!
'ஸார்' புஸ்தகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது மெதுவாகப் போய் உட்காருகிறான். அதற்குள் அந்தக் கழுகு தெரிந்து கொண்டுவிட்டது.
"டேய்! ராமசாமி, எத்தனை நாள் சொல்லுகிறது, லேட்டா வந்தா வெளியிலே நிற்க வேண்டும் என்று? என்னடா இன்னம் உட்கார்ந்திருக்கே? ஏறு பெஞ்சி மேலே. 'ஹோம் ஒர்க்' போட்டிருக்கையா?"
பதில் இல்லை.
"திருட்டு நாயே! அதுதான் ஒளியற ஜம்பமோ? வா இங்கே."
தயங்கித் தயங்கி நிற்கிறான்.
"வாடா என்றால்... திண்ணக்கத்தைப் பார்."
கையை எட்டிப் பிடித்துத் தரதரவென்று மேஜைப் பக்கம் இழுக்கிறார்.
"நீட்டு, கையை."
"நாளைக்கு கொண்டு வந்து விடுகிறேன், ஸார்."
"நாளைக்கு அடிக்கலை ஸார். நீட்டு கையை. உம்!"
"ஐயோ; ஐயோ! வலிக்குமே ஸார். இல்லை ஸார்."
"வலிக்கத்தான் ஸார் அடிக்கிறது."
பளீல்! பளீல்! பளீல்...
ரணகளம்.
"ஏறு பெஞ்சி மேலே!"
இன்னும் எத்தனை பாடங்கள்! அத்தனை 'ஸார்'களும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டிவிட்டே சென்றார்கள். மறுபடியும் அந்த 'ஸார்' வருகிறாரே பூகோளத்திற்கு!
மணியடிச்சாச்சு; அவரும் வந்தாச்சு.
கண்ணாடியைப் போட்டாச்சு. தலைப்பாகையும் கழற்றி வைத்தாச்சு. ஐயோ அந்தப் பிரம்பு!
"கிருஷ்ணா, இந்தியாவின் வடக்கெல்லை?"
"இமயமலை ஸார்."
"நீதாண்டா பிச்சா, எழுந்திரு. தெற்கே?"
"வங்காளக் குடாக் கடல் ஸார்."
"என்ன?"
"இல்லை ஸார்... அரபிக் கடல் ஸார்... ஸார், ஸார், இந்து மகா சமுத்திரம் ஸார்."
"டேய் ராமசாமி, படித்திருக்கையா? இந்தியாவின் தலைநகரம்?"
2
மெதுவாக 'டெல்லி' என்று முனகுகிறான்.
"என்ன?"
"இல்லை ஸார், இல்லை ஸார்!"
"ஏண்டா முழிக்கிறே! படிச்சாத்தானே? வா இப்படி 'மாப்' (Map)கிட்டே. எங்கே காமி பார்ப்போம்?"
இந்தியா படத்தின்மேல் ஒரு சிறு விரல் ஊர்கிறது; கண், பிரம்பின் மேல்.
"எங்கே காமி! படிச்சாத்தானே!"
'பளீல்' என்று பிரம்பு இறங்குகிறது. தறிகெட்டு வேட்டையாடும் பிரம்பு, தடுக்க முயலும் சிறு கைகள், "ஐயோ, அம்மா, அப்பா, ஹோ உம் ங்... ங்... அம்மாடி!..."
"அம்மாடி! போ கழுதை. வெளியே இருந்து படித்து ஒப்பித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போக வேணும். என்னிடமா?"
வெளியே நெட்டித் தள்ளுகிறார். புஸ்தகத்தோடு போய் விழுகிறான் அப்படியே.
ராமு பெரிய மனிதனாக நாற்காலியிலே! கையில் உலக்கை போல தடிக்கம்பு. அது அவனால்தான் தூக்க முடியும். தலையில் தலைப்பாகை, கண்ணாடி... என்ன சந்தோஷம்!
'பூகோள ஸார்' புஸ்தகம் சிலேட்டுடன் சின்னப் பையன் மாதிரி மெதுவாக வருகிறார்.
"நாயே ஏன் 'லேட்'? இங்கே வா, இப்படி."
"போடு தடியாலே! ராஸ்கல், உனக்கு என்னமா இருக்கு? நீ பிரம்பு, நான் கம்பு. என்னாலேதான் தூக்க முடியும்."
பூகோள ஸார் அழறார்!
"போய் தலைகீழே நின்று படித்து ஒப்பித்துவிட்டு வீட்டிற்குப் போ..." ராமுக்கு என்ன சிரிப்பு!...
3
... பெரிய 'கிளாஸ்'. நல்ல வாத்தியார். பெரிய நாற்காலியில். நரைத்த தலை; சிரித்த முகம். ராமு அவர் மடியில் உட்கார்ந்திருக்கிறான். அவர் முதுகைத் தடவிக் கொண்டே, "இன்றைக்கு ஏன் லேட்? இப்படி வரலாமா? கெட்ட வழக்கம். இந்தா லட்டு. இந்தியாவின் தலைநகர்?"
"டில்லி."
"அதுதான், ஏன் பயப்படறே. நீ நல்ல பையனாச்சே. அந்தப் பூகோள ஸார் அந்தக் குழியிலே உதைபட்டுக் கொண்டு கிடக்கிறார் பார். பயப்படாதே. நான் இருக்கிறேனே..."
'பளீல்!'
"படிக்கச் சொன்னா, நாயே தூங்கறயா? எழுந்திரு."
'பளீல்!'
"ஐயோ இல்லை ஸார்! டில்லி மாநகர் ஸார்! ஐயோ! ஹும்ங்... ஹுங்..."
(முற்றும்)
சுதந்திரச் சங்கு, 25-5-1934
---------------
50. 'நானே கொன்றேன்!'
1
லக்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது. அவர் தொழில் - அதுவும் பொழுதுபோக்காகத்தான் - கதை, நாவல்கள் எழுதுவது. எந்தப் பழைய நைந்த விஷயத்தையும் ரஸமாகவும் மனதைக் கவரும்படியாகவும் ஒரு புதிய தோரணையில் தான் எழுதுவார். அதிலே இவருக்கு நல்ல பெயர். ஏன்? புகழும் உண்டு. ஆள் பார்வைக்குக் கம்பீரமான, மனதை அப்படியே தன்னுள் வசீகரிக்கும் தன்மை வாய்ந்த தோற்றம். நாற்பது வயதிருக்கும் கபோலத்தில் சிறு நரை இருந்தாலும் ஆள் பார்வையில் 'ஒரு கம்பீரம், சிறிது மமதை, இவை எல்லாம் தோன்றும். உலகத்தின் கோழைத்தனம், சிறுமைக்குணம் எல்லாம் இவர் முன் நிற்கக் கூசும். எப்பொழுதும் ஒரு சிரிப்பு - விதியின் அற்ப விளையாட்டுக்களையும் உலகத்தின் அசட்டுத்தனத்தையும் துச்சமாக நினைப்பது போல் ஒரு புன்சிரிப்பு.
இவருக்கு ஒரு இளைய சகோதரன் உண்டு - பெயர் மகரபூஷணம். இருவரைப் போலும் இரண்டு விதமான தனிக்குணம் படைத்த ரத்தக் கலப்புள்ள, ஒரே மரத்தின் இரட்டைக் கிளைகள் போன்ற, இருவரைக் காண முடியாது. அண்ணன் உலகத்தில் வெறுப்பைக் கேவலத்தைப் பார்த்து நகையாடும் தனிச் சிறப்புடையவர். தம்பி உலகத்திலே காதலும், கனவுகளும் கண்டு களிக்கும் இலக்ஷியவாதி. படங்கள் வரைவதில், இவரது கனவுகளைத் திரைச்சீலையில் உருவாக்குவதில் பெரிய மோகம். இப்பொழுது இருக்கும், படம் எழுதும் வாத்தியார்ப் பாடத்தை, ஓவியம் என்று சொல்லிக்கொண்டு வரும் சித்திரக்காரர்களைப் போலல்ல இவருடைய படம். இம்மாதிரியாக தனிப்பட்ட எதிர் எதிரான குணங்கள் படைத்த இரு சகோதரரிடையே இருந்த பாசம், மனித உலகத்தில் காணப்படாதது. அது வெறும் சமாச்சாரமாக மட்டுமல்லாமல் ஒரு பெரும் கதையாக ஒரு இலக்ஷியமாக ஜனங்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.
மகரபூஷணம் இறந்த பிறகு லக்ஷ்மிகாந்தம் சமூகத்திலிருந்தே மறைந்துவிட்டார் என்று சொல்லிவிடலாம். பிறகு எங்குச் சென்றார் என்ன செய்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது.
இப்படியிருக்கையில் இவருடைய நண்பர்களுக்கு ஒரு அழைப்புக் கடிதம் வந்தது. ஒரு புதிய வீடு, பெரிய மாளிகை என்றே சொல்லலாம், மாம்பலத்தில் வாங்கியிருப்பதாகவும் அதற்குப் புண்யாவசனம் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெரிய விருந்து நடத்தப் போவதாகவும் அவசியம் வரவேண்டும் என்றும் எழுதியிருந்தது. அவருடைய நண்பர்கள் அவரைப் பார்க்க வேண்டிய ஆவலில் அன்று அவரைக் காண்பதற்குத் தீர்மானித்ததில் ஆச்சரியமில்லை.
'லக்ஷ்மி விலாசம்' - அதுதான் அவர் மாம்பலத்தில் வாங்கிய பங்களா - ஒரு பழைய கட்டிடம். ஊருக்குச் சற்று வெளியே மரமடர்ந்த சாலையில் ரஸ்தாவிற்குச் சற்று உள்ளடங்கி இருந்தது. பெரிய 'காம்பௌண்டு', கட்டிடத்தை மறைக்கும்படி மரங்கள் ஆகியவை ஒருவிதப் பயத்தைக் கிளப்புவதாயிருந்தன. லக்ஷ்மிகாந்தத்தின் மனப்போக்கையறிந்தவர்களுக்கு அவர் இந்த வீட்டை வாங்கியதில் ஆச்சரியமிருக்காது. வந்த விருந்தினர்கள் எல்லாரும் அதைப் பற்றி ஏகமாகப் புகழ்ந்தார்கள்.
"உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் எனக்கும் திருப்திதான்" என்றார் லக்ஷ்மிகாந்தம். அந்த குரலிலே அவருக்கு இயற்கையான கேலி, கோபம் எல்லாம் கலந்திருந்தது.
2
இந்த விருந்தில் இன்னும் ஒரு விசேஷம். இந்தச் சமயத்தில்தான் இவருக்கும் இவரது சகோதரன் மகரபூஷணத்தின் மனைவிக்கும் இடையே இருந்த மனத்தாங்கல் தீர்ந்து ஒரு சமாதானம் ஏற்பட்டது.
மகரபூஷணத்துடன் இவள் தனது வாழ்க்கையைப் பிணித்துக் கொண்ட பிறகு முதல்முதலாக இப்பொழுதுதான் லக்ஷ்மிகாந்தத்தின் வீட்டிற்கு விருந்தினளாக வருகிறாள். மகரபூஷணம் இறக்குமுன்பு இருவருக்கும் சண்டைதான். லக்ஷ்மிகாந்தம் அந்தக் கலியாணத்தைத் தடுக்கத் தன்னாலானவரை முயன்று பார்த்தார். முடியவில்லை. லக்ஷ்மிகாந்தம் தனது சகோதரனை விட பதிநான்கு வருஷம் மூத்தவர்.
அது ஒரு கடற்கரைக் காதல். சுலோசனா - அவள்தான் மகரத்தின் மனைவி - ஒரு மலையாளப் பெண். அழகு ஆளை மயக்கும் போதை வஸ்து போன்றது. அதில் அழகையே எப்பொழுதும் தியானித்துக் கொண்டிருக்கும் மகரம் விழுந்ததில் அதிசயமில்லை. இருவரும் ரிஜிஸ்டர் கலியாணம் செய்துகொண்டார்கள்.
லக்ஷ்மிகாந்தம் எவ்வளவோ சொன்னார். "அந்தப் பெண்ணின் குணம் உனக்குத் தெரியாது. அவள் மனம் ஒரு பரத்தையின் மனம். தன்னைத் தவிர வேறு யாரையும் அவளால் நினைக்க முடியாது. அவள் உன்னைவிட ஐந்து வயது மூப்பு. கலியாணம் செய்துகொள்ள வேண்டுமானால், ஷாப்பில் வேலை செய்யும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணை வேண்டுமானாலும் கலியாணம் செய்துகொள். நான் எனது உள்ளன்புடன் ஆசிர்வதிப்பேன். உனக்கு வேண்டியது தாயின் பரிவும் மனைவியின் காதலும் கொடுக்கக்கூடிய பெண். இவளோ? தன் சுகத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வாள்."
பிரயோஜனமில்லை. மகரமே அண்ணனுடன் கோபித்துக் கொண்டு ரிஜிஸ்தர் கலியாணத்தை நடத்திவிட்டான்.
பிறகு நடந்தது அந்தக் கோரமான சம்பவம். அவனது மரணம். போன வருஷம் உதகமண்டலத்திற்குக் கணவனும் மனைவியும் சென்றார்கள். அங்குதான்...
அதன் சிகரமான தொட்டப்பெட்டாவைப் பார்க்கச் சென்றார்கள். அந்தப் பாழடைந்த நட்சத்திரச் சாலையின் பக்கத்தில் செங்குத்தான வீழ்ச்சி ஒன்று. அதில் எட்டிப் பார்த்த பொழுது மகரம் சறுக்கி விழுந்து உயிர் துறந்தார். பிறகு ஏதோ ஒருமாதிரி சுலோசனாவிற்கும் லக்ஷ்மிகாந்தத்திற்கும் சமாதானம் ஏற்பட்டது. இருவரும் மகரத்தின் திதியில் சந்தித்தார்கள்; பிறகு ஜி.டி.யில் ஒரு தடவை எங்கோ சந்தித்தார்கள்.
3
இப்பொழுதுதான் முதன்முதலாக லக்ஷ்மிகாந்தத்தின் விருந்தினளாக வருகிறாள். 'லக்ஷ்மி விலாச'த்தின் பெரிய ஹாலில் சுலோசனாவின் படம் - மகரம் இறக்கும்பொழுது எழுதியது - தொங்கவிடப்பட்டிருந்தது. விருந்தினருக்கு எல்லாம் இது அதிசயமாக இருந்தது. எல்லாரும் தாழ்ந்த குரலில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒருவேளை மகரத்தின் மேல் இருந்த அளவு கடந்த அன்பினால் இருக்கலாம்.
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, "உங்களில் யாருக்காவது பேயில் நம்பிக்கை உண்டா?" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"ஏன் இந்த வீட்டில் இருக்கிறதா?" என்றாள் சுலோசனாவின் கூட வந்த ஒரு பெண்.
"ஆம்! அதில்தான் சுவாரஸ்யம். என்னைப் போன்ற பிரம்மசாரிகளுக்குத் துணை யாரிருக்கிறார்கள். ஒரு பேயாவது இருக்க வேண்டாமா?" என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம்.
"இங்கே நடந்த விஷயங்களைக் கேட்டால் ரஸமாக இருக்கும். இந்த வீட்டு மெத்தையில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அந்த ஜன்னல் நீங்கள் எப்படித்தான் மூடித் தாழ்போட்டு வைத்தால் கூடத் தானே திறந்து கொள்ளும்" என்றார் மீண்டும்.
"நன்றாகப் பூட்டிவிட்டால்" என்றார் அங்கிருந்த இன்னொருவர்.
"இருபது வருஷத்திற்கு முன் இங்கே சுமதி என்ற பெண் தனது கணவனை அந்த ஜன்னல் வழியாகப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அன்று அவன் சூரியாஸ்தமனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தானாம். ஒரு தள்ளு, அவ்வளவுதான், கீழே புருஷனைப் பெட்டிவைத்துத்தான் பொறுக்க வேண்டியிருந்தது" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"அவளைத் தூக்குப் போட்டார்களா?" என்றார் பிரகாசம் என்ற நண்பர்.
"இல்லை, இல்லை. அதெப்படி முடியும்? ஏதோ தவறி விழுந்து விட்டதாக நினைத்தார்கள். யாரால் அதை நிரூபிக்க முடியும்? பேயைச் சாட்சியத்திற்குக் கோர்ட்டில் சம்மன் கொடுக்க முடியுமா?" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"தப்பித்துக் கொண்டாள் போலிருக்கிறது" என்றார் துப்பறியும் நாவல்கள் மொழிபெயர்ப்பதில் பெயர்போன பராங்குச நாயுடு.
4
"அப்படியல்ல. பேயை ஒரு தடவை நேருக்கு நேர் பார்த்து பயத்தால் பேச முடியாது வாயடைத்துப் போய் கிலியடித்த வியாதியாலேயே உயிரைவிட்டாள்" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"எல்லாம் வெறும் மனப் பிராந்தி. குற்றமுள்ள நெஞ்சு. பேயாவது உருளைக் கிழங்காவது" என்றார் திவான்பகதூர் சம்பந்த சாரணாலயம்.
"பேயை வேறு யாராவது பார்த்திருக்கிறார்களா?" என்றார் வேறு ஒரு நண்பர்.
"பிறகு ஒரு பெண் பார்த்திருக்கிறாள்" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"பெண்கள் கண்ணுக்குத்தான் தென்படும் போலிருக்கிறது" என்றார் பராங்குசம் நாயுடு.
"ஆமாம் குற்றமுள்ள நெஞ்சுடைய பெண்களுக்குத்தான்" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
எல்லோரும் பின் தொடர்ந்தார்கள். கூரைக்கும் இரண்டாவது மாடிக்கும் இடையில் ஒரு சிறு காமிரா அறை. அதற்குச் செல்லுவதற்கு ஒரு சிறு ஏணி.
"இங்குதான் அவன் உட்கார்ந்திருந்தானாம். இதுதான் அந்தச் சன்னல். அடே! இதை யார் திறந்தது" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"இந்த ஜன்னல்தானா" என்றாள் சுமதி. அவள் தான் சுலோசனாவுடன் வந்தவள்.
"இதுதான். வருஷத்தில் ஒரு நாள்தான் இம்மாதிரித் தொந்தரவு செய்யும். அதுவும் இன்றுதான் போல் இருக்கிறது" என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம்.
எல்லோரும் நெருங்கினார்கள்; உள்ளுக்குள் பயந்தான்.
திடீரென்று எங்கும் இருண்டது. அறையில் ஒருவருக்கொருவர் முகந் தெரியவில்லை.
"அதென்ன என்னவோ இருட்ட...ரதே" என்று சற்று உரத்த சத்தத்தில் நடுநடுங்கிக் கொண்டே கேட்டாள் சுமதி. "ஒன்றுமில்லை, மேகமாக இருக்கும்" என்றார் லக்ஷ்மிகாந்தம். "கீழே விழும்பொழுது என்ன நினைத்தானோ? யார் கண்டார்கள்? ஒரு வேளை ஓலமிட்டிருக்கலாம்..."
5
யாரோ இருட்டில் அசைந்தார்கள். தரையில் காலடிச் சப்தம். யாரோ ஒரு பெண் 'ஐயோ அம்மாடி' என்று ஏங்கும் குரல். "எனக்கிங்கிருக்கப் பிடிக்கவில்லை" என்றாள் சுமதி.
"பின் வாருங்கள் போவோம். ஜன்னலைச் சாத்திவிட்டு வருகிறேன்" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
எல்லோரும் பயம் தெளிந்த மாதிரி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பினார்கள். லக்ஷ்மிகாந்தம் ஜன்னலைச் சாத்திவிட்டுத் திரும்பினார். பாதி அறையைக் கடந்திருக்கலாம். திடீரென்று கூச்சல் போட்டுக் கொண்டு திரும்பினார்.
அந்த ஜன்னல் கதவு மெதுவாகத் தானே திறந்துகொண்டு இருந்தது.
"ஐயோ அங்குப் பாருங்கள்" என்றார் திவான்பகதூர். "மிஸ்டர் பேய்க்கு நம்முடன் பேச இஷ்டம் போல் தெரிகிறது" என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம். இதற்குள் மற்றவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். இவரும் அவர்களைத் தொடர்ந்து கீழே இறங்கினார். "கொஞ்சம் கூல்டிரிங் சாப்பிடுவோமா?" என்று மணியை அடித்தார்.
பேசிக்கொண்டிருக்கும்பொழுதே திடீரென்று விளக்குகள் மங்கிவிட்டன.
எங்கோ தடால் என்ற சப்தம். விருந்தினர்கள் பயத்தில் உளறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். யாரோ ஒரு பெண் பயத்தால் கூச்சலிட்டாள். வெளிச்சம் மறைந்த மாதிரியாகத் திடீரென்று வந்தது. சுலோசனாவின் படம் கீழே சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கிடந்தது. லக்ஷ்மிகாந்தம் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு அதை அப்புறப்படுத்தச் சொன்னார். அதற்குள் பரிசாரகன் கூல் ட்ரிங்குகளைக் கொண்டுவந்தான்.
"இதைச் சாப்பிடுங்கள் பயம் தெளியும்" என்றார் லக்ஷ்மிகாந்தம். "என்ன சுலோசனா பயந்துவிட்டாயா? இதில் என்ன இருக்கிறது? மகரம் எழுதிய படம் வீணாகப் போனது வருத்தந்தான். நீ இதைக் குடி; மேல் எல்லாம் வியர்த்துவிட்டதே!" என்றார் மறுபடியும்.
சுலோசனா கையிலிருந்ததை வாங்கிக் குடித்தாள். அப்பொழுது ஒரு வேலைக்காரன் உள்ளே ஓடிவந்து, "பங்களாக் காம்பவுண்டில் யாரோ இறந்து கிடக்கிறான். வெளியே சென்றபொழுது பார்த்தேன்" என்றான்.
6
எல்லோரும் திடுக்கிட்டுப் பேச நாவெழாமல் மௌனமாக இருந்தனர்.
"அவனை இங்கு எடுத்துக்கொண்டு வாருங்கள். கிழே இரத்தம் கித்தம் சிந்தி இருந்தால் கழுவிவிட்டுவிடு. யாரும் வழுக்கி விழுந்து விடாமல்" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"சரி சார்" என்று வேலைக்காரன் போனான்.
"இன்றைக்கு வேடிக்கையாக இருக்கவில்லையா? துப்பறியும் நாவல் மாதிரி சம்பவங்கள் நடக்கிறதே" என்று விருந்தினரைப் பார்த்துக் கூறினார்.
அந்தச் சமயத்தில் வேலைக்காரர் இருவர், பிணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அங்கிருந்த பெண்கள் மயங்கிவிடுவார்கள் போல நடுநடுங்கினர்.
"அந்த மேஜையில் வையுங்கள்" என்றார் லக்ஷ்மிகாந்தம். எல்லோரும் அதையே நோக்கினர். பராங்குச நாயுடு அதைக் கூர்ந்து கவனிக்க நெருங்கினார்.
அந்தப் பிணம் உண்மையில் துணியினால் செய்யப்பட்ட பொம்மை. சாக்கைப் போட்டு மூடப்பட்டிருந்தது.
"மிஸ்டர் லக்ஷ்மிகாந்தம். நீர் ஒரு பெரிய ஆசாமி!" என்று விழுந்து விழுந்து சிரித்தார்.
மற்றவர்களும் அதை நெருங்கிக் கவனித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.
"இப்பொழுது பிணத்தைப் பார்த்தாகிவிட்டது. இவனை யாரோ வீட்டிலிருப்பவர்களில் ஒருவர் தான் கொன்றிருக்கிறார்கள். உளவுகளை வைத்துக்கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 சிகரெட்டு பந்தயம்" என்றார்.
"நான் தான் துப்பறியும் கோவிந்தன்; நான் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று சிரித்தாள் சுமதி.
"என்ன சுலோசனா குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போறதில்லையா" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
"இந்த முட்டாள்தனமான விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை" என்று முகத்தைச் சுளித்தாள் சுலோசனா.
அந்த அறையைச் சுற்றிக் கவனித்த சுமதிக்கு ஒரு கிழிந்த கடிதம் அகப்பட்டது. அதில் "விருந்திற்குப் பிறகு என்னைச் சந்தி... சனா" என்று மட்டும் தெரிந்தது.
பிணத்தையும் பரிசோதிக்க வேண்டும் என்று அந்தத் துணிப்பதுமைக்கு அணிந்திருந்த சட்டைகளில் என்னவிருக்கிறது என்று கையை விட்டுத் தடவினாள். அதிலே ஒரு கைக்குட்டை கிடைத்தது. அதன் மூலையில் "சு" என்ற எழுத்துப் பின்னப்பட்டிருந்தது.
"சு...சனான, சுலோசனா; அவள் தான் கொலை செய்தவள். அவள் தான் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவள் தான் குற்றவாளி. துப்பறிவனுக்குப் பேசிய 100 சிகரெட்டுகளைக் கொடுத்துவிட வேண்டும்" என்று உரத்த குரலில் சுமதி சிரித்துக் கொண்டு கேட்டாள்.
"அவசரப் படாதே. கோர்ட்டு என்ன தீர்ப்பு செய்கிறதோ அதிலிருந்துதான் முடிவுகட்ட வேண்டும். திவான்பகதூர்தான் ஜட்ஜ். பராங்குச நாயுடு வாதி வக்கீல். நான் பிரதிவாதி வக்கில். மற்றவர்கள் எல்லாம் ஜுரிகள்."
7
"குற்றத்தின் காரணம், அது ஒரு விதத்தில் எப்படி நியாயமானது என்பதும் காண்பிக்கிறேன். பிணத்தின் நிலைமையிலிருந்து உயரத்திலிருந்து விழுந்தது என்று தெரிகிறது. அதன் உள் பையில் இருக்கும் கைக்குட்டை இறந்தவர் குற்றவாளியின் மீது அதிகப் பிரியம் வைத்திருந்தார் என்பதைக் காண்பிக்கிறது. அவருடைய நேசம், பாசம் எல்லாம் தொந்திரவைக் கொடுத்தது. அவன் இல்லாவிட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று பட்டது. அவன் எதிர்பார்க்காத பொழுது ஒரு தள்ளு தள்ளிவிடுகிறது இயற்கைதானே. அவ்வளவு தானே சுலோசனா! அவன் இல்லாவிட்டால் நல்லதுதானே."
விருந்தினர்கள் எல்லாரும் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சுலோசனாவின் முகத்தை கவனித்தவுடன் சிரிப்பு அடங்கிவிட்டது.
"நீங்கள் சொல்வது அர்த்தமாகவில்லை. யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்" என்றாள். முகம் பயத்தால் வெளிறி இருந்தது.
"அவனால் இடைஞ்சல்கள் அதிகமாக இருந்தது. அங்கு ஒருவரும் இல்லை. சான்ஸ் கிடைத்தால்... பிறகு என்ன?"
"அவர் மயங்கித்தான் விழுந்து உயிர் துறந்தார்."
"அவன் பயங்கொள்ளியல்ல தலை சுற்றிக் கீழே விழுவதற்கு. சரியாக ஒரு வருஷமாகிவிட்டது. அப்பொழுது சௌகரியமாகக் கீழே வந்து உன் கதையைச் சொன்னாய். உன்னைத் தடுத்து மறுத்துப் பேச அவன் அங்கு இல்லை."
"சத்தியமாக அவர் மயங்கித் தான் விழுந்துவிட்டார்."
"நிஜமாகவா? அவனை உன் முன்பு கொண்டுவந்து நிறுத்தினால் அப்படி சத்தியம் செய்வாயா?"
"உங்களால் அவரைக் கொண்டுவர முடியாது."
"கொண்டுவர முடியும். மகரம். மகரம். இங்கே வா!" என்று சற்று உரத்த சத்தத்தில் கூப்பிட்டார்.
எங்கும் நிசப்தம்.
பிறகு வெளியே டக், டக் என்று செருப்புச் சத்தம். யாரோ ஜன்னலைத் தட்டுவது மாதிரி...
"அவரை உள்ளே கூப்பிடவேண்டாம். நான் தான் கொன்றேன்... ஐயோ" என்று சொல்லிக்கொண்டே சுலோசனா மயங்கி விழுந்தாள்.
விளக்குகள் மறுபடியும் பிரகாசமாக எரிந்தன.
"ஜுரர்களே கைதி குற்றவாளியா அல்லவா" என்றார் லக்ஷ்மிகாந்தம்.
(முற்றும்)
ஊழியன், 21-09-1934 (புனைப்பெயர்: மாத்ரூ)
(இக்கதை புதுமைப்பித்தனால் எழுதப்பட்டதா இல்லையா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன)
------------
51. நல்ல வேலைக்காரன்
1
மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி என்ற விலங்குகள் அவருக்குத் தெரியாது. பொழுது போக்காக ஒரு மருந்து ஷாப் வைத்திருக்கிறார். அத்துடன் கொஞ்சம் லேவாதேவியும் உண்டு.
அவருடைய வேலைக்காரன் ராமன் தம்பி - அவன் ஒரு மலையாளி - வேலைக்காரர்களுக்கு ஒரு இலக்ஷியம். சமையல் முதல் எல்லா வேலைகளையும் ஒரு தவறு வராமல் செய்து வைப்பதில் நிபுணன். அதிலே பிள்ளையவர்களுக்கு அவன் மீது ஒரு பற்றுதல், ஒரு பாசம். பிள்ளையவர்களின் கண்ணிற்குக் கண் ராமன் தம்பி. இத்துடன் மட்டுமல்ல. பிள்ளையவர்களின் லீலைகளுக்கு ஏற்ற தூதன். அமைத்து வைப்பதில் நிபுணன். இருவருக்குள் அந்தரங்கமே கிடையாது.
அன்று பிள்ளையவர்கள் ஏதோ கடிதம் எழுத உட்கார்ந்த பொழுது ராமன் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.
அதைப் பிள்ளையவர்கள் வாசித்துவிட்டு, "ராமா, அந்த ராமசாமி அய்யர் கவலை ஒரு வழியாக ஓய்ந்தது. வக்கீல் பிள்ளையிடம் சொல்லிக் கேஸ் போடலாம் என்று இருந்தேன். நல்ல காலம், சாயங்காலம் பணத்தைக் கொண்டு வந்து திட்டமாகக் கொடுத்து விடுவதாக எழுதியிருக்கிறான். லாயர் நோட்டீஸ் விடவேண்டாம் என்று சொல்ல வேண்டும்" என்றார்.
"ஆமாம் ஸ்வாமி, ஒரு கவலை ஓய்ந்தது. கேஸென்றால் கொஞ்ச அலைச்சலா? எத்தனை வருஷம் இழுத்தடிப்பார்கள்" என்றான்.
"நம்மிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால் எவ்வளவு சௌகரியம்? ஒரு சாயாக் கடை வைத்தால் கவலை இல்லாமல் முதலாளியாக இருக்கலாமே" என்று நினைத்தான் ராமன் தம்பி.
என்றும்விட அன்று அதிக உற்சாகமாக இருந்தான் ராமன். வேலைகள் எல்லாம் வெகு துரிதமாக நடந்தன.
"என்ன ராமா! இப்படி வேலை செய்தால் நாளைக்கு உனக்கு வேலை இருக்காது போலிருக்கிறதே" என்று சிரித்தார் மார்த்தாண்டம் பிள்ளை.
2
இரவு வந்தது.
எப்பொழுதும்போல் உள் அறையில் சென்று படுத்துக் கொண்டார்.
அன்று நெடுநேரமாக அவருக்குத் தூக்கம் வரவில்லை. என்ன கவலையோ?
இரவு பன்னிரண்டு மணி எங்கோ அடித்தது.
வீட்டில் யாரோ நடமாடும் சப்தம். 'என்ன திருடனா?' மார்த்தாண்டம் பிள்ளை பக்கத்திலிருந்த தீப்பெட்டியைத் தடவி விளக்கைக் கொளுத்த முயன்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது கதவு மெதுவாகத் திறந்தது.
ராமன் தம்பி உள்ளே நுழைந்தான். ஒரு கையில் கொளுத்திய மெழுகுவர்த்தி; இன்னொரு கையில் நீண்ட கத்தி.
மார்த்தாண்டம் பிள்ளை எழுந்தார். உடனே கையிலிருந்த விளக்கையணைத்துவிட்டு, ராமன் கத்தியை ஓங்கிக்கொண்டு இருளில் பாய்ந்தான்.
மார்த்தாண்டம் பிள்ளைக்கு தோள்பட்டையில் ஒரு குத்து. அதைத் தடுக்க முயலுமுன் நெற்றியில் ஒன்று.
"ஐயோ"
அடி வயிற்றில் மற்றொன்று.
"இன்னும் பணம் வாங்கவில்லையடா பாவி, கொன்றுவிடாதே!" என்று ஹீனஸ்வரத்தில் கதறினார் மார்த்தாண்டம் பிள்ளை.
"வாங்கவில்லையா?"
ராமன் கையிலிருந்த கத்தி நழுவிக் கீழே விழுந்தது.
"பொய் சொல்லுகிறாய்."
"சாயங்காலம் தடிப்பயல் மாட்டேன் என்று காகிதம் எழுதிவிட்டான். மேஜையில் இருக்கிறது பார்!" என்றார்.
3
படுக்கையிலிருந்து வெகு கஷ்டத்துடன் மேஜையை அணுகினார். படுக்கை எல்லாம் ரத்தம். மேஜை எல்லாம் ரத்தம்; ராமன் கையில் கறை.
உடனே மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார்.
விடியற்காலம்.
மார்த்தாண்டம் பிள்ளைக்குச் சுய அறிவு வந்தது. எழுந்திருக்க முடியாதபடி பலவீனம்.
மறுபடியும் வந்து உயிருடன் இருப்பதைப் பார்த்தால் கொன்று புழக்கடையில் புதைத்து விடுவானோ?
என்ன செய்வது? எழுந்திருக்க முடியவில்லையே!
எங்கு பார்த்தாலும் இரத்தக்கறை. என்ன நாற்றம் நாறுகிறது! எழுந்திருக்க முடியவில்லையே!
மறுபடியும் கதவு திறக்கிறது. இருக்கிற கொஞ்சப் பிராணனும் போய்விடும் போலிருக்கிறது, மார்த்தாண்டம் பிள்ளைக்கு.
உயிருடன் இருப்பதைக் கண்டால் திட்டமாக கொன்று புதைத்து விடுவான். கண்ணை மூடிக்கொண்டு கிடந்தால் போய்விடமாட்டானோ? என்ன நம்பிக்கை! என்ன ஆசை!
ராமன் தான் உள்ளே வந்தான். ஆனால் கொல்ல வரவில்லை. கையிலே பேஸின், மருந்து, இத்யாதி இத்யாதி.
இந்த காயங்களுக்கு வைத்தியரின் கைத்திறனுடன் மருந்து வைத்துக் கட்டுகிறான்.
"செய்த குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கு ஏற்ற ஊழியம் செய்கிறேன். என்னைக் காட்டிக் கொடாவிட்டால் நீர் பிழைத்துக் கொள்ளுவீர்."
4
குணமான பிறகு பயலைத் தொலைத்து விடுவது என்று எண்ணியிருந்தார் மார்த்தாண்டம் பிள்ளை.
ராமன் எப்பொழுதும் "காட்டிக் கொடுத்தால் என்ன தெரியுமா?" என்று பயங்காட்டி வந்தான்.
ராமனுடைய சேவையில் அவருக்கு புண்கள் குணமடைந்து வந்தன. இப்பொழுது அவருக்கு எழுந்து உட்கார முடியும். அன்று ஒரு யோசனை, ஒரு தந்திரம், அவர் மனதில் பட்டது. நாமும் அவன்மீது பிடி வைத்திருந்தால்தான் குணமடையலாம் என்று பட்டது.
அன்று ராமன் வந்தவுடன் "ராமா, நானும் லாயருக்கு ஒரு ஸீல் போட்ட கடிதம் அனுப்பியிருக்கிறேன். எனக்கு ஏதாவது தீங்கு வந்தால் உன்னைப் பிடித்துக் கொள்வார்கள். எனக்குத் தீங்கு வராமல் இருக்கும்வரை உனக்குப் பயமில்லை" என்றார்.
இன்னும் சில நாட்கள் கழிந்தன. திடீரென்று வீட்டின் வெளிப்பக்கத்தில் ஏகக் கூச்சல். இரண்டு போலீஸார்கள் ராமனை உள்ளே தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.
"கடைசியாகக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே, உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்" என்று போலீஸார் பிடியிலிருந்து திமிறினான்.
"அடே, என்னைக் கொலை செய்ய யத்தனித்ததை யாரிடமும் சொல்லவில்லையே!" என்றார் மார்த்தாண்டம் பிள்ளை.
"ஸார்! நீங்கள் பேசிக் கொள்வது எங்களுக்கு அர்த்தமாகவில்லை. இவன் பக்கத்து வீட்டிலிருந்து நகையைத் திருடியதாகக் கைது செய்திருக்கிறேன். திருட்டுச் சொத்து இவன் பெட்டியிலிருந்தது," என்று ராமனை வெளியே தள்ளிக்கொண்டு போனார்கள் போலீஸ்காரர்கள்.
அப்போது ராமன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!
(முற்றும்)
ஊழியன், 31-08-1934
---------------
52. நம்பிக்கை
1
எனக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை வாயில் அடைத்தால் தாகம் எடுக்காமல் என்ன செய்யும்? கண்ட இடத்தில், அசந்தர்ப்பமான இடத்தில் எல்லாம் இந்தத் தொந்தரவுதான். காப்பி, கலர் குடித்தால் தாகம் தீரக்கூடிய நாஸுக் பேர்வழியில்லை நான்.
அன்று நானும் என் நண்பரும் தெருவில் சுற்றிக்கொண்டு இருந்தோம். அவர் வெற்றிலை போடுங்களேன் என்றார். இதற்கு உபகாரம் வேறு வேண்டியிருக்கிறது. போட்டாய் விட்டது. அதன் உத்ஸாகத்தில் கொஞ்ச நேரம் நடுத்தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் திரும்பிப் பார்க்கும்படியான சல்லாபம். பிறகு... கேட்பானேன். தெரிந்ததுதான். அந்த வெற்றிலைக் கடைக்காரனுக்கு என்னைப் போன்ற பழைய ஏட்டுப் பிரதிகள் வருமென்று தெரியுமா? நண்பர் எனக்கு ஜலவசதிக்காக அவருக்குத் தெரிந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஏன் என்றால் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் நடக்க வேண்டுமென்ற சுத்த ஹம்பக் பேர்வழி நான்.
அந்த ஜோரில் தண்ணீர் பிரச்சினை ஒருவாறு முடிந்தது.
எனது நண்பர் ஒரு அபூர்வப் பேர்வழி; அவர் மேல் எப்பொழுதும் பொறாமை அதிகம். சமூகத்தின் எந்தப் படிக்கட்டிலிருப்பவனும் அவரிடம் வெகு லேசாகத் தனது உள்ளத்தைத் திறந்துவிடுவான். அது மட்டுமன்று. இந்தக் குழந்தைகள்தான், அவரிடம் என்ன வசீகர சக்தியோ?
அந்த ஹோட்டலில் ஒரு குழந்தை. அந்த ஹோட்டல் சொந்தக்காரனுடையது. பார்த்தால் அதை முத்தமிட வேண்டுமென்று தோன்றாதவன் மரக்கட்டை. குழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அவ்வளவுதான் ஏக ரகளை.
"ஓடி வா! ஓடி வா! ஒன்னு ரெண்டு... மூணு!"
குழந்தை... ஒரே பாய்ச்சலில் அவர் ஏந்திய கையில் விழுந்து, ஒவ்வொரு படியிலும் உருண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்று மெதுவாகக் காலை வைத்துத் தடவும் அந்தக் குழந்தை... என்ன நம்பிக்கை!
2
இவ்வளவும் வாசல் படியில். இந்தக் கூத்துக்களையெல்லாம் முன்னே வெளியில் வந்த நான் கவனித்துக்கொண்டு தத்துவம் பண்ணிக்கொண்டிருந்தேன். உத்ஸாகம் அவருக்கு ஜாஸ்தியோ, அந்தக் குழந்தைக்கோ? எனக்குப் பெருமை ஒன்றுதான் மிச்சம்.
நான் சொல்லும் நேரம் சாயங்காலம். சாயங்காலம் என்று மரியாதையாகத்தான் கூறுகிறேன். பட்டணத்தின் மின்சார கோரமும், அதனுடன் குழம்பும் இரைச்சலும் என் மனதில்...
எனது கண்கள் தெருப் பக்கம் அகஸ்மாத்தாகத் திரும்பின.
அங்கே ஒரு ரிக்ஷாவில் ஒரு கனவான். எல்லா விஷயத்திலும். பர்ஸிலிருந்து சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தார். வண்டி நிறுத்தி விடப்பட்டிருந்தது.
பக்கத்தில் ஒரு பிச்சைக்காரி, வாலிபம்... வாலிபத்தின் களை. அழுக்குப் பிடித்த வெள்ளாடை முக்காடு தலையை மறைத்தது. முகத்தை மறைக்கவில்லை. கனவான் பக்கம் கையை நீட்டிய வண்ணம் அசையாது நின்றிருந்தாள். சில சமயம் வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிவந்தன. அது என்னவோ? இரைச்சலில் கேட்கவில்லை. அவள் இடையில் ஒரு குழந்தை சிறியது. நான்கைந்து மாதம்... துயரத்தின் சிற்றுரு தாயிடம் பால் குடித்தவண்ணம் இருந்தது. மூடிய கண்கள் ஏறக்குறைய உயிரற்றது மாதிரிதான்.
சிற்சில சமயம் அதன் தாய் தன்னையறியாமல் அதை இறுக அணைத்துக்கொண்டாள். அதன்மீது அவ்வளவு பாசமோ, கைதான் வலிக்கிறதோ!
3
அந்தத் தாயின் முகத்தில் என்ன துயரம்... என்ன சோர்வு... அதிலே பசி... என்று எழுதிய மாதிரி கலங்கிய கண்கள்... நம்பிக்கையிழந்த கண்கள்... அந்தக் கை கனவானை நோக்கி நீட்டியது சற்றாவது விலகவில்லை. என்ன நம்பிக்கை!
அவளைக் காணவும் மற்றதை மறந்தேன். அவளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று என் உள்ளம் தூண்டியது. ஆனால் சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து. அதை என்னைப் போன்றவர்கள் எளிதில் அனுபவித்துவிட முடியாது. நானும் யார்? அவளைவிட ஒருபடிமேல்... எனது முகம் வாழ்க்கையின் அலை மேல் சற்று உயரத் தள்ளி இருக்கிறது. அதற்கென்ன இப்போது?
அந்த ரகளை இவளை ஓட்டல் பக்கம் திரும்பச் செய்தது.
திரும்பியவள்...
அப்படியே மெய் மறந்து நின்றவள் போல், தெய்வத்தை, இலக்ஷயத்தைக் கண் எதிரில் கண்டவள் போல் அவற்றை... கண்களில் ஒரு பிரமிப்பு.
பிறகு...
4
அந்தச் சோர்வும் சோகமும் நிலவிய கண்களிலிருந்து துயரம் தேங்கிய அதரங்களிலிருந்து, மேகத்தின் பின் ஒளிந்து சந்திரன் வெளிவந்த மாதிரி...
ஒரு புன்சிரிப்பு.
அவள் குறைகள் அவளையறியாமலே பால் சுவைத்துக் கொண்டிருக்கும் குழந்தையை அணைத்துக் கொள்கின்றன.
ஒரு நிமிஷந்தான்.
மறுபடியும் அவள் முகத்தில் வாழ்க்கையின் மேகம் கவிந்தது.
அந்தக் கனவானை நோக்கி ஏதோ கூறினாள்.
அவரோ?
அவரும் அந்தக் குழந்தையின் விளையாட்டில் கண்களைத் திறந்தபடி ஈடுபட்டிருக்கிறார்.
பை மாத்திரம் கைக்குள் பலமாக இறுகப் பிடிபட்டிருக்கிறது.
அந்தத் தாயும் குழந்தையும்... அவள் நீட்டிய கை... அதற்குத் தான் என்ன நம்பிக்கை. அந்தக் கண்கள் ஒளி இழந்துதான் இருக்கின்றன. அதில் என்ன நம்பிக்கை! சோர்வினாலா?... வேறு கதியில்லாமலா... இருந்தாலும் நம்பிக்கைதானே. அந்தப் பிரமையாவது இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன விருக்கிறது?
"ஓடி வா! ஓடிவா! ஒன்று ரெண்டு... மூணு..." குழந்தையின் களங்கமற்ற வெள்ளிக் கிண்ணத் தொனி போன்ற சிரிப்பு... ஒரே பாய்ச்சல், அவர் மீது என்ன நம்பிக்கை!
(முற்றும்)
காந்தி, 15-09-1934
-----------
53. நன்மை பயக்குமெனின்
1
பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு தூக்குத் தூக்கியது. அத்துடன் ஒரு பத்துக் 'கோட்டை நிலம்'; நெல் விலை முன்பு உயர்ந்த பொழுது ஒரு தட்டு; இவைகளினால் சாலைத் தெரு முதலாளி என்று பெயர். தெய்வ பக்தி, உலக நடவடிக்கைகளைப் பொறுத்து கோவிலுக்குப் போதல், நீண்ட பூஜை முதலியன எல்லாம் உண்டு.
பக்கத்து வீட்டுச் சட்டைநாத பிள்ளை, புஸ்தகப் புழு, இவருக்கு இருந்த சொத்து வகையறாக்களைப் புஸ்தகமாக மாற்றுவதில் நிபுணர். வீட்டிலேயே ஒரு புஸ்தகசாலை. கிடைக்காத புஸ்தகங்கள், வேண்டாத புஸ்தகங்கள், வேண்டிய புஸ்தகங்கள், பழைய பிரதிகள், அபூர்வ ஏடுகள் எல்லாம் இவர் வீட்டில் பார்க்கலாம். ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் நீண்ட காலமாக. அவர் புஸ்தகம் எழுதுவது வெகுகாலமாக வெறும் சமாச்சாரமாக இருந்து பழங்கதையாக மாறிவிட்டது. இவருக்கு உலகமே புஸ்தகம்; அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம் அதுதான்.
இந்த இரண்டு பேர்களும் அத்தியந்த நண்பர்கள். சாயங்காலம் நான்கு மணி முதல் சட்டைநாத பிள்ளை பூவையாப் பிள்ளையின் பேச்சு இன்பத்தை நாடுவார். இருவரும் வெளியே உலாவி வருவார்கள். இதுதான் இவர்கள் சந்திக்கும் நேரம். பணத்தைப் புஸ்தகமாக மாற்றும் சட்டைநாத பிள்ளை, தமது நண்பரிடம் கடன் வாங்கியிருந்தார் என்றால் அதிசயமல்ல. கொஞ்சம் நாளாகிவிட்டது.
சட்டைநாத பிள்ளை தனது புஸ்தகக் கூட்டத்தில் அளவளாவிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெண் தங்கம் ஒரு காகிதத் துண்டைக் கொண்டு வந்து கொடுத்து "மேல வீட்டு பெரியப்பா குடுத்தாஹ" என்றாள்.
உயர்திரு அண்ணாச்சி அவர்களுக்கு,
நம்ம விஷயத்தை கொஞ்சம் தாங்கள் துரிசாப் பார்க்கணும். இன்று சாயங்காலம் மேற்படி விஷயத்திற்கு வருவேன். மறக்கக்கூடாது.
இப்படிக்குத் தங்கள் உயிர் நண்பன் பூவையாப் பிள்ளை
என்று வாசித்தார்.
2
"சதி. அண்ணாச்சிக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்கணும். நெறுக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு" என்று சொல்லிவிட்டார்.
கொடுக்க வேண்டியது 500 ரூ. அதிகமாக 200 ரூ. சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகிவிட்டது. எதற்கு? எல்லாம் புஸ்தகத்திற்குத்தான்.
"ஏலே! சவுந்திரம், இதைப்போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே! போ! போ!" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த 'செந்த அவஸ்தா' முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.
ஒரு மணிநேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்துவிட்டான்.
எல்லாம் 100 ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம் குறித்துக் கொண்டார். அப்பொழுதும் ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.
பூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.
3
"அண்ணாச்சி வரணும், வரணும், ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்" என்று பூஜையின் 'கியரை' மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார். 'மந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்பலம்' என்று முடித்துவிட்டு, "என்ன அண்ணாச்சி? என்ன விசேஷம்" என்றார்.
"ஒண்ணுமில்லை, அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்"
"ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனோ?"
"அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே" என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார். அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு மடியில் வைத்துக் கொண்டார்.
"சரியாப் பாருங்க."
"அதுக்கென்ன! எல்லாமிருக்கும், எங்கே போகுது?"
"அண்ணாச்சி நம்மகிட்டே ஒரு விசயமில்லா?..."
"சொல்லுங்க..."
"நம்ம பையன் பீ.ஏ.தானே?"
'தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ' என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.
"ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்துவிட்டதே. எல்லாம் நாளும் கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்" என்றார் பூவையாப் பிள்ளை.
4
"அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது. எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு காணமற் போயிட்டது என்று விலையைக் கொடுத்துவிடுவோம்" என்றார்.
"இம்பிட்டுதானே? ஏலே! அய்யா! நடராசாவை எங்கே?"
"நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்துவரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாது சின்னப் பையன்."
நடராஜன் வந்தான்.
"அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு."
பெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகிவிட்டது.
"பொறவு, நான் போயிட்டு வாரேன்."
"என்ன அதுக்குள்ளே! வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பாக்கணும்."
"நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா? போயிட்டு வாரேன்" என்று விடைபெற்றுக் கொண்டார்.
5
பூவையாப் பிள்ளை பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டுமுன் எண்ணினார். அதிகமாக இருந்தது. கொண்டு போய் கொடுத்துவிடலாமே என்று நினைத்தார். 'அவராக வரட்டுமே; என்ன இவ்வளவு கவலை ஈனம்' என்று நினைத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.
அன்று முழுவதும் சட்டைநாத பிள்ளை வரவில்லை. இரண்டு நாள் பார்த்துக் கொண்டு பாங்கிக்கு அனுப்பலாம் என்று நினைத்துச் சும்மாயிருந்தார்.
சாயங்காலம் நடராஜன் புஸ்தகத்தைக் கொண்டுவந்தான். பிள்ளையவர்கள் அதைக் கொண்டு கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றிப் பேசவில்லை.
6
இரண்டு நாளாயிற்று.
சட்டைநாத பிள்ளைக்குப் புஸ்தகம் வாங்கப் பணம் தேவையாக இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தார். ஒரு நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. ஒருவேளை தவறுதலாகக் கொடுத்துவிட்டோ மோவென்று பூவையாப் பிள்ளையிடம் சென்றார். கேட்டவுடன் அவர் வெகு சாந்தமாக 'இல்லையே' என்று சொன்னவுடன் வீட்டில் எங்கும் தேடினார். பணத்தைக் காணோம் என்று வீட்டில் ஒரே அமளி; களேபரம்.
ஒன்றும் தெரியவில்லை.
பாங்க் காஷியரிடம் சென்று நம்பர்களைக் குறித்துக் கொடுத்து, வந்தால் சொல்லும்படி தெரிவித்துவிட்டு வந்தார்.
அன்று சாயங்காலம் காஷியர் அவர்கள் பூவையாப் பிள்ளை செலுத்திய 600 ரூபாயில் இவர் கொடுத்த ஆறு நம்பரும் இருக்கின்றன என்று தெரிவித்துச் சென்றார்.
முதலில் சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டுவிட்டார். இருந்தாலும் பணத்தாசை யாரை விட்டது என்று நினைத்துக் கொண்டு வெகு கோபமாகப் பூவையாப் பிள்ளை வீட்டிற்குச் சென்றார்.
"என்ன அண்ணாச்சி? நீங்க இப்படி இருப்பிஹ என்று நினைக்கவே யில்லை. நீங்க குடுத்த அறுநூறு ரூபாயில் எனது ஆறு நம்பர்களும் இருக்கிறது என்று காஷியர் பிள்ளை இப்பத்தான் சொல்லிவிட்டுப் போனார். நீங்கள் இப்படிச் செய்யலாமா...?" என்று அடுக்கிக் கொண்டே போனார். ஸ்வரம் ஏறிக்கொண்டே போயிற்று.
7
பூவையாப் பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அகப்பட்டுக் கொண்டோ ம். மானம் என்றெல்லாம் ஒரு நிமிஷம் மனம் கொந்தளித்தது. திடீரென்று ஒரு யோசனை; வழிபட்ட தெய்வந்தான் காப்பாற்றியது.
"சவுந்திரம் மத்தியானந்தான் அவன் கடனுக்கு நீங்க உதவி செய்ததாகக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்கென்ன?"
"அப்படியா, திருட்டு ராஸ்கல். சவத்துப் பயலே என்ன செய்கிறேன் பாருங்கள்! நம்ம இடையில் சண்டை உண்டாக்கிவிட்டானே" என்று இரைந்து கொண்டு வீட்டிற்கு ஓடினார்.
சவுந்திரம், 'கண்ணாணை' 'தெய்வத்தாணை' எல்லாம் பலிக்கவில்லை. வேலைபோய்விட்டது.
"நீ நாசமாய்ப் போகணும்" என்று ஒரு கைப்பிடி அள்ளிவிட்டுப் போகும்பொழுது, தான் கொடுக்கவேண்டிய, தாங்க முடியாத பாரமாகிய கடன் சுமை தெய்வச் செயலாகத் தீர்ந்துவிட்டதை எண்ணவேயில்லை. என்ன நன்றி கெட்ட உலகம்!
8
ஒரு வாரமாகிவிட்டது.
புஸ்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
நடராஜன் சட்டைநாத பிள்ளையை நாடிச் சென்றான்.
"மாப்பிள்ளை வாருங்கோ." சட்டைநாத பிள்ளை நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.
"அந்தப் புஸ்தகம் வேண்டுமே; நாளாகிவிட்டது."
"அதைத்தான் சொல்ல வந்தேன். புஸ்தகத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்துவிடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.
நடராஜன் திடுக்கிட்டுவிட்டான். இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.
9
"இந்தாருங்கள் 20 ரூபாய் இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்" என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.
"புஸ்தகம் அதோ இருக்கிறதே?"
சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டார்.
பிறகு சமாளித்துக் கொண்டு, "என்ன மாப்பிள்ளை! அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா?"
"அது திருட்டுத்தனம். என்னால் முடியாது."
"நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்."
"என்ன இது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது! புஸ்தகத்தைக் கொடுமென்றால்..."
"அதைக் கொடுக்க முடியாது... இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக்கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொள்ளுகிறேன்."
"அண்ணாச்சியாவது, ஆட்டுக்குட்டியாவது? புஸ்தகத்தைக் கொடும் என்றால்..."
10
வார்த்தை அதிகப்பட்டது. ஏகவசனமாக மாறியது.
"அப்பா அதைத்தான் கொடுத்துவிடுங்களேன்" என்றது, தழுதழுத்த குரல் கதவு இடையிலிருந்து.
கண்கள் மாத்திரம் நடராஜன் மனதில் பதிகிறது. தங்கம்தான்! என்ன தங்கம்! மனதிற்குள், "இவனுக்கா இந்தப் பெண்" என்ற நினைப்பு.
"போ கழுதை உள்ளே. உன்னை யார் கூப்பிட்டது? நியாயம் சொல்ல வந்தாயாக்கும்! போ நாயே!"
நடராஜன் கோபமாகத் தகப்பனாரிடம் சென்றான்.
"என்ன அப்பா இப்படிச் செய்கிறாரே?"
"அதற்கென்ன செய்யலாம்? நீ எப்படியாவது முடித்துவிடு. வீண் சச்சரவு வேண்டாம். உனக்கு உலகம் தெரியவில்லையே!"
"திருட்டுத்தனமல்லவா?"
"திருட்டுத்தனம்தான். யார் இல்லையென்று சொன்னது? எனக்காக முடித்துவிடு."
"நீங்களும் இப்படிச் சொல்லலாமா? அவர் பெண்ணுக்கு இருக்கிற புத்தி கூட..."
கண்களுக்குப் பின் நின்ற முழு உருவம் எப்படியிருக்குமென்று நினைத்துக்கொண்டே காரியத்தைச் சரிபடுத்தச் சென்றான்.
(முற்றும்)
மணிக்கொடி, 02-09-1934
-----------
54. நாசகாரக் கும்பல்
1
டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல் தயாரித்துவிட்டு, பென்ஷன் பெற்று, திருச்செந்தூர் ஜில்லா போர்டு ரஸ்தாவில் பாளையங்கோட்டைக்கு எட்டாவது கல்லில் இருக்கும் அழகியநம்பியாபுரம் என்ற கிராமத்தில் குடியேறினார். (என் திருநெல்வேலி நண்பர்கள் அழகியநம்பியாபுரத்தைத் தேடி ஜில்லாப் படத்துடன் மோதி மூளையை வரள வைத்துக் கொள்ள வேண்டாம். அதில் இல்லை.)
ஏறக்குறைய அதே சமயத்தில் தான், குடிமகன் மருதப்பனும் இலங்கைத் தோட்டத் துரைகளுக்கு க்ஷவரகனாக இருந்து, படிப்படியாகக் கொழும்பு கோட்டைத் தெருக்களில் ஸலூன் வைக்கும் அதிர்ஷ்டமடைந்து, அதில் ஒரு பத்து வருஷ லாபத்தாலும், அங்கு சிறிது மனனம் செய்து கொண்ட 'வாகட சாஸ்திரம்', 'போகர் இருநூறு', 'கோரக்கர் மூலிகைச் சிந்தாமணி' இவற்றின் பரிச்சயத்தாலும் உயர்திரு. மருதப்ப மருத்துவனாராகி அழகியநம்பியாபுரத்தில் வந்து குடியேறினான்.
இவ்விருவரும் இவ்வூருக்கு ஒரே சமயத்தில் படையெடுத்தது தற்செயலாக ஏற்பட்ட சம்பவம். ஆனால், அழகியநம்பியாபுரத்தில் இவர்கள் வருகைக்கப்புறம் ஒரு மறைமுகமான மாறுதல் ஏற்பட்டது.
ஸ்ரீ விசுவநாத பிள்ளை சாதாரண வேளாளர் வகுப்பில் பிறந்து, வைத்தியத் தொழில் நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கையில் வாலிப காலத்தில் அதில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் வைத்தியக் கல்வி படிக்க வருகிறவர்களுக்கு 'ஸ்டைப்பன்ட்' (உபகாரச் சம்பளம்) கொடுத்ததும் இவருக்கு இந்தத் தொழிலில் ஆசை விழ ஒரு தூண்டுகோல் என்று சொல்ல வேண்டும். மேலும், அக்காலத்தில் சர்க்கார் உத்தியோகம் கைமேலே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளைக்கார வைத்திய சாஸ்திரம் இவ்வளவு பிரமாத அபிவிருத்தியடையவில்லை. உளுத்துப்போன அந்த 'மெடீரியா மெடிகா'வும் சீமையிலிருந்து தளும்பி வழிந்த வைத்திய சாஸ்திரமுமே இந்திய விதேசி வைத்தியசாலை 'வடிகால்களில்' ஓடின. ஆகையால், பாஸ் செய்வதற்கும் உத்தியோகம் பார்ப்பதற்கும் அவ்வளவாகச் சிரமமில்லாதிருந்தது. மேலும் வெள்ளைக்காரர்கள் தங்கள் வைத்திய சாஸ்திரத்தைப் பிரசாரம் செய்வதிலேயே ஊக்கங் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ விசுவநாத பிள்ளை படித்துத் தேறி, பணம் சம்பாதித்தது ஒரு பெரிய வசன காவியம்; அதற்கு இங்கு இடமில்லை. ஆனால், அந்தப் 'பிணமறுக்கும் தொழில்' அவரை நாஸ்திகராக்கிவிடவில்லை. அவருக்கு 'மெடீரியா மெடிகா'வில் எவ்வளவு அபார நம்பிக்கையோ, அவ்வளவு சைவ சித்தாந்த நூல்களிலும் உண்டு. சிவஞான போதச் சிற்றுரையும், 'ஸ்டெதாஸ்கோப்'பும், உத்தியோக காலத்தில் அபேதமாக இடம்பெற்றன. மேலும் திருநீறு முதலிய புறச் சின்னங்களின் உபயோகத்தையும் அவர் நன்கறிந்தவர்.
ஸ்ரீ விசுவநாத பிள்ளை பொதுவாக நல்ல மனுஷ்யர். நாலு பெயரிடம் சுமுகமாகப் பேசிப் பழகக்கூடியவர். எடுப்பு, மாஜி சர்க்கார் உத்தியோகஸ்தர் என்ற மிடுக்கு, ஒன்றும் கிடையாது.
2
பிள்ளையவர்களின் குடும்பம் விசாலமானதன்று. பெரிய கட்டுக் கோப்பில் தம் வம்சம் விருத்தியாகி லோகத்தின் அஷ்ட திக்கிலும் சென்று ஜயக்கொடி நாட்ட வேண்டும் என்று அவர் ஆசை கொள்ளாதவர் என்பதை அவருடைய ஏகபுத்திரன் மிஸ்டர் கிருஷ்ணசாமி நிரூபித்தான். ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை - அதாவது 'சாலாச்சியம்மா' (விசாலாட்சியம்மாள்) - நிரந்தரமாக, பிள்ளையவர்களின் சலித்துப் போன வைத்தியத்திற்கும் மீறின வயிற்று சம்பந்தமான வியாதி உடையவள் என்பதை மத்தியானத்தில் மட்டிலும் அருந்தும் கேப்பைக் கஞ்சி எடுத்துக் காட்டுகிறது. சாலாச்சியம்மாள் பழைய காலத்து வேளாளக் குடும்ப நாகரிகத்து மோஸ்தர் பின்கொசுவம் வைத்துக் கட்டிய உடையுடனும், கழுத்து காதணிகளுடனும் வீடு நிறைந்து காட்சியளிப்பாள்.
மிஸ்டர் கிருஷ்ணசாமி அப்பாவின் வறுபுறுத்தலுக்காகப் 'பட்டணத்தில்' வைத்தியப் படிப்பில் தகப்பனார் சென்ற பாதையில் நம்பிக்கைகொள்ள முயலுகிறான்.
உயர்திரு. மருதப்ப மருத்துவனார் வாழ்க்கை இதே ரீதியில் செல்லவில்லை. மேடு பள்ளங்களைக் கண்டது. தலை நரைக்கும்வரை உழைப்பில் காய்த்துப்போன கை, காசு பணத்தை நிறையக் காணவில்லை.
அநுபவத்தின் கொடூரமான அல்லது இன்பகரமான சாயை விழாத, நம்பிக்கையும் நேசப்பான்மையும் நிறைந்த வாலிபப் பருவத்தில் குடிமகன் மருதப்பன் தூத்துக்குடியில் கொழும்புக்குக் கப்பலேறினான். திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களிடை கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள். உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையேதான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்ற அர்த்தம். மருதப்பன் நம்பிக்கையும் மேற்சொன்ன விதத்தில்தான்.
நூரளைத் தோட்டத் துரைகளுக்கும் உயர்தரத் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் க்ஷவரத் தொழில் செய்து, கை நிறையக் கொடுத்த பக்க்ஷிஸ், சம்பளம், உணவு இவற்றுடன், இடையிடையே தொல்லைப்படுத்திய மலைக்காய்ச்சலும் பெற்று, கடைசியாகத் தன் முப்பதாவது வயதில் கொழும்பில் ஸலூன் வைத்தான். அந்தக் காலத்தில் ஸலூன் தொழிலில் அவ்வளவு போட்டி கிடையாது. இந்தியாக்காரர்கள் அவனுக்கு ஆதரவு அளித்தனர். தொழில் வளர்ந்தது. எப்பொழுதோ ஒரு முறை செய்த அவனுடைய இந்தியப் படையெடுப்பும் கலியாணமும் இடையிடையே நடைபெற்ற சம்பவங்கள்.
ஸலூன் முயற்சியில் நல்ல பலன் ஏற்பட்டதோடு, சித்த வைத்தியசாஸ்திரத்தில் சிறிதளவு பரிச்சயம் பெற்றுக்கொள்ள அவகாசமும் கிடைத்தது. இதனுடன் சமீபகாலமாக, இலங்கை மருத்துவ குல அன்பர்களின் சர்ச்சைகளின் மூலஸ்தானமாக விளங்கும் இலங்கைத் தினசரி ஒன்றும் அவன் மன விசாலத்திற்கு உற்ற துணையாக இருந்தது.
3
மருத்துவனார் தம் ஐம்பதாவது வயதில் தாய் நாடு திரும்பும் இலங்கைக் குடியேற்ற விருதுகளுடன் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பொழுது கையில் ரொக்கமாக ரூ.5,000 மும், மேற்கொண்டு அழகியநம்பியாபுரத்தில் மூன்று கோட்டை நன்செய்யும், கொழும்பு ஸலூனில் வாரிசாக அவர் புத்திரனும் உண்டு.
அழகியநம்பியாபுரத்திற்கு பஸ் வந்துவிட்டது என்பதற்கு ரஸ்தாவின் இடப்பக்கத்துப் புளியமரத்தடியில் இருக்கும் எட்டாவது மைல் கல், அதற்குப் பக்கத்தில் உள்ள வயிரவன் பிள்ளை வெற்றிலை பாக்குக் கடை, டாக்டர் விசுவநாத பிள்ளையின் நந்தவனம் என்ற புன்செய்த் தோப்பின் மூங்கில் கேட், இவை எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கும் மருதப்ப மருத்துவரின் இரண்டடுக்குக் காறை வீடு - யாவும் பறைசாற்றினாற்போல் அறிவிக்கும்.
ரஸ்தாவில் இரு புறமும் மிகவும் நெருக்கமாக வளர்ந்த புளிய மரங்கள்; பஸ் நிற்கும் ஸ்தானத்துக்கு அருகில் எப்போதோ ஒரு காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்; அதன் குறுக்குக் கல் யதாஸ்தானத்தைவிட்டுக் கீழே விழுந்து எத்தனை காலமாயிற்றோ! பொதுவாக, நம்மில் பலர் தம்மை எந்த ஹோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்களோ, அதே உரிமையில் அதற்குச் சுமைதாங்கி என்ற பெயர் கிடைத்திருக்கிறது.
நேரம் நல்ல உச்சி வெய்யில், ஆனாலும், சாலையில் இம்மிகூடச் சூரிய வெளிச்சம் கிடையாது. பலசரக்குக்கடைச் சுப்புப் பிள்ளை பட்டறையில் உட்கார்ந்து, சுடலைமாடன் வில்லுப்பாட்டுப் புஸ்தகம் ஒன்றை ரஸமாக உரக்கப் பாடி, கடைச் சாய்ப்பின் கீழ் துண்டை விரித்து முழங்காலைக் கட்டி உட்கார்ந்திருக்கும் இரண்டொரு தேவமாரை (மறவர்) மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.
தம்பலத்தால் வாயில் எச்சில் ஊற்று நிறைய நிறைய, வாசிப்புக்கு இடையூறு ஏற்படாதபடியும், கீழே உட்கார்ந்திருப்பவர் மீது சிறிதும் தெறிக்காதபடியும் லாவகமாகத் தலையை வெளியே நீட்டி அவர் துப்பும்போது, கடையின் பக்கத்துச் சுவரில் துப்பாமலிருப்பதற்கு நீண்ட நாள் அனுபவம் மட்டும் போதாது; அதற்குத் தனித் திறமையும் வேண்டும் என்பது தெரியும். ஆனால் கப்புப் பிள்ளையின் தனித் திறமை கேட்டிருக்கும் மறவர் கண்களில் படவில்லை. உலகத்தில் புகழையும் பெருமையும் சமாதி கட்டித்தானே வழிபடுகிறார்கள்! அழகியநம்பியாபுர மறவர்களுக்கும் இந்தத் தத்துவ இரகசியம் தெரிந்திருந்தது என்றால் அவர்களைப் பற்றி மனிதர்கள் என்று நம்பிக்கை கொள்ளாமல் வேறு என்ன செய்வது?
மலையாளம் போனியானா, ஏ, சுடலே! நீ மாறி வரப் போரதில்லை!...
என்று இழுத்தார் பிள்ளை.
4
"ஆமாமிய்யா! மலையாளத்திலே அந்தக் காலந்தொட்டே கொறளி வேலைக்காரனுவ இருக்கானுவளா?" என்றான் பலவேசத் தேவன் என்ற அநுபவமில்லாத இளங்காளை. அவனுடைய முறுக்கேறிய சதை அவன் வேலை செய்கையில் உருண்டு நெளிவதைச் சாப்பாடில்லாமலே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் தலையாரித் தேவனின் மகன்.
"நீ என்னலே சொல்லுதே? அந்தக் காலத்துலேதான் இந்த வித்தை பெரவலம். சொடலையையே சிமிளிலே வச்சு அடச்சுப் பிட்டானுவன்னா பார்த்துக்கிடேன்!" என்றான் வேலாண்டி. அவன் ஒரு கொண்டையன் கோட்டையான் (மறவர்களுக்குள் ஒரு கிளை). வயது விவேகத்தைக் குறிக்க வேண்டிய நரைத்த தலை அந்தஸ்தைக் கொடுத்தது; ஆனால் உடல் அநுபவமற்ற இளங்காளைகளின் கட்டு மாறாமல் இருந்தது. வாரத்திற்கு நிலத்தைக் குத்தகை எடுத்து, அதில் ஜீவிக்க முயலும் நம்பிக்கையின் அவதாரமான தமிழ்நாட்டு விவசாயிகளில் அவன் ஒருவன். இடுப்பில் வெட்டரிவாள் ஒன்று வைத்திருப்பான். அதன் உபயோகம் விறகு தறிப்பது மட்டுமல்ல என்று தெரிந்தவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், நாணயஸ்தன்; பொய் சொல்லுவது மறக் குலத்தோர்க்கு அடுக்காது என்று பழக்கத்திலும் அப்படியே நடப்பவன்.
இந்த இடைப் பேச்சைக் கேட்ட சுப்புப் பிள்ளை, கண்ணில் போட்டிருந்த பித்தளைக் கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்தி, சிறிது அண்ணாந்து பார்த்து, "அட்டமா சித்தியும் அங்கேயிருந்துதான் வந்திருக்கிறது. புராணத்திலேயேதான் சொல்லியிருக்கே!" என்று ஒரு போடு போட்டார்.
இப்படிப்பட்ட விஷயங்களில் சுப்புப் பிள்ளையின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது; ஏனெனில், பெரும்பாலும் அழகியநம்பியாபுரவாசிகளில் பலர் அவரிடமே குட்டுப்பட்டு சுவடிப் பாடம் கற்றிருக்கின்றனர். பலவேசமும் இதற்கு விதிவிலக்கல்லன். இப்பொழுது அவன் கோணல் மாணலாகக் கையெழுத்துப் போடுவதெல்லாம் அவர் புண்ணியத்தில்தான்.
"நம்மவூர்லே இருந்தானே கள்ளப்பிரான் பிள்ளை, கட்டேலே போவான், அவன் வேலெமானத்தைப் பாத்திரச் சாமான் விக்கிறவன் தடுக்காட்டி... நானே நேர்லே கண்டெனே! நம்ம வைத்தியர் வாளுக்குந்தான் தெரியும்!" என்று தலையை எதிர்வாடையை நோக்கி நிமிர்த்தி ஆட்டினார் சுப்புப் பிள்ளை.
5
சம்பத்துக் காரணமாக ஜாதி வித்தியாச மனப்பான்மையைச் சிறிது தளர்த்தி, ஒரு விதத்திலும் பட்டுக் கொள்ளாமல் 'வைத்தியர்வாள்' என்று மருதப்ப மருத்துவனாரை அழைப்பது அவரது சமீபத்திய சம்பிரதாயம்.
'வைத்தியர்வாள்' இச்சந்தர்ப்பத்தில் வீட்டு முற்றத்தில் ஏதோ பச்சிலைகளை ஸ்புடமிட்டு முகம் வியர்க்க ஊதிக் கருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பாம்புச் செவியில் சம்பாஷணை அரை குறையாக விழுந்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்த மருத்துவனார், "பிள்ளையவாள், என்ன சொல்லுதிஹ?" என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.
"என்ன! நம்ம கள்ளப்பிரான் பிள்ளே இருந்தானே... அவனைத் தான் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேன்... அவனைப் பத்தித்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே..." என்று கடையிலிருந்தபடி குரலெழுப்பினார்.
உடலைத் துடைத்துக்கொண்டு, வேஷ்டியை உதறிக்கட்டியவண்ணம் கடையை நோக்கி நடக்கலானார் வைத்தியர்.
6
அப்பொழுது தூரத்தில் மோட்டார் ஹார்ன் சப்தம் கேட்டது.
"ஏது மணியும் ஒண்ணாயிட்டுது போலிருக்கே. அன்னா கேக்கது மெயில் பஸ்தானே! பிள்ளைவாள் தானம் (ஸ்நானம்) பண்ணியாச்சா? வாரியளா - செல்லுமா?" என்றார் சாய்ப்புக் கம்பைப் பிடித்து நின்ற வைத்தியர்.
"போகத்தான். ஏலே, ஐயா பலவேசம், கடையெச் சித்தெ பாத்துக்கிட மாட்டியா?" என்று பஸ் வரும் திக்கை நோக்கினார். மெயில் பஸ் என்றும் மத்தியானம் ஒரு மணிக்கு அழகியநம்பியாபுரத்தைத் தாண்டிச் செல்வது ஒரு விசேஷமான சம்பவம். கடைப்பிள்ளைக்குத் திருநெல்வேலி டவுனிலிருந்து ஏதாவது சாமான் வரும்; டாக்டர் விசுவநாத பிள்ளை (வகுப்புவாரிப் பிரதிநிதித்வம், சைவத்தின் உயர்வு, ஆரியர் சூழ்ச்சி இத்யாதி விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்தான், ஆனாலும்...) அவர்களுக்கு 'ஹிந்து' பத்திரிகை வரும்; சமயா சமயங்களில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் வரக்கூடிய தொலைப் பிரயாணிகள் வருவார்கள்.
இரண்டொரு நிமிஷத்தில் பஸ் வந்து ஏக ஆர்ப்பாட்டமாகக் காய்ந்த சருகுகளை வாரி வாரி இறைத்துக் கொண்டு சுமைதாங்கி முன் நின்றது.
பஸ் டாப்பில் இருந்த கடைச்சரக்கை உருட்டித் தள்ள கண்டக்டர் டாப்பில் ஏறினான். டிரைவர் - ஐயா பீடி பற்ற வைக்க இறங்கிக் கடைப்பக்கம் வந்தார். இவ்வளவு நேரமாக வாமனாவதாரமெடுத்துக் கால்களைச் சுருட்டிக் கிடந்த பிரயாணிகளில் இரண்டொருவர் கீழே இறங்கினார்கள்.
7
முன்புறம் க்ஷவரம்; பின்புறம் பின்னல்; ஈய வளையம் இழுத்துத் தோளோடு ஊசலாடும் காது; இடையில் வேஷ்டியாகக் கட்டிய பழைய கிழிந்த கண்டாங்கிச் சேலை - இக்கோலத்தில் இடுப்பில் சாணிக்கூடை ஏந்திய இரண்டொரு பறைச் சிறுமிகள் எட்டி நின்று கார் வினோதத்தைப் பார்த்தனர்.
கடைச் சரக்கை மேலிருந்தபடியே எறிந்த கண்டக்டர், "ஸார், ஸுட்கேஸ் பெட்ஷீட் வேங்கிக்கிடுங்க!" என்று குரலெடுத்தான்.
டிரைவர் பக்கத்தில் இருக்கும் 'ஒண்ணாங் கிளா'ஸிலிருந்து, கையில் வதங்கிப் போன பத்திரிகை ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஒரு 'மோஸ்தர்' வாலிபன் நாஸுக்காக இறங்கினான். அவனது 'சென்னை பிராட்வே' பாஷன் பிளேட் மூஞ்சியும், விதேசி மோஸ்தர் உடையும் யதாஸ்தானத்தை விட்டகன்ற மூலவர் போன்ற ஒரு விசித்திர சோபையை அவனுக்கு அளித்தன. அந்தக் காட்டு மிராண்டி ரஸ்தாவில் அந்தப் பழைய பசலி பஸ் எப்படியோ, அப்படி, லண்டனில் பழசானாலும் சென்னையின் நிகழ்காலமான அவனது உடை மோஸ்தர், அந்தக் கி.மு. உலகத்தில் அவனை வருங்கால நாகரிகனாக்கியது.
"ஏடே! தெரஸரய்யா மவன்லா வந்திருக்காவ!" என்று சொல்லிக் கொண்டே ஓடினான் பலவேசம் பெட்டியை இறக்க.
மாஜி உத்தியோகஸ்தர் மகன் என்றால் கிராமத்தில் எப்பொழுதும் ஓர் அந்தஸ்து உண்டே! அதைக் கொடுத்தனர் கடையில் பொழுது போக்க முயன்ற நபர்கள்.
"அதாரது?" என்று பொதுவாகக் கேட்டான் வேலாண்டி, கையைத் தரையில் ஊன்றி எழுந்திருக்க முயன்றுகொண்டு.
8
"என்னப்பா, இன்னந் தெரியலையா? நம்ம மேலவீட்டு தெரஸர் பிள்ளை இருக்காஹள்லா - அவுஹ மகன் மகராச பிள்ளை! - என்னய்யா சௌக்கியமா?" என்று கடைப் பட்டறையிலிருந்தபடியே விசாரித்தார் சுப்புப் பிள்ளை.
மகராஜன் அவர் திசையைப் பார்த்துச் சிரித்தான்.
"என்ன எசமான் சவுக்கியமா - அங்கே பட்டணத்திலே மளெ உண்டுமா? - ஐயா, உடம்பு முந்தி பாத்த மாறுதியே இரிக்கியளே!" என்றான் வேலாண்டி.
பீடியை இரண்டு தம் இழுத்து எறிந்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்ட டிரைவர், ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு, 'வண்டி புறப்படப் போகிறது. பிரயாணிகள் ஏறிக்கொள்க!' என்ற பாவனையில் ஹார்ன் அடித்தான். கண்டக்டர் அப்பொழுதுதான் தனக்கு ஞாபகம் வந்த 'ஹிந்து' பத்திரிகையை அவசர அவசரமாகக் கடைக்கு எடுத்து ஓடினான்.
தங்கள் தேக உபாதையை நீக்கிக் கொள்ளச் சென்றிருந்த பிரயாணிகள் அவசர அவசரமாக ஓடி வந்தனர். அதில் ஒரு முஸ்லீம் அன்பர் - பார்வைக்குச் செயலுள்ளவர் போல் முகத்தில் களை இருந்தது - அவர் முன் ஸீட்டைப் பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் அவசரமாக அதில் குறிவைத்து ஓடிவந்தார்.
இவ்வளவு கூட்டத்தையும் கவலையின்றிக் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர், "என்ன மரைக்காயர்வாளா? ஏது இப்படி?" என்று முகமலர்ந்து குசலப் பிரச்னம் செய்தார்.
9
மரைக்காயர்வாள் செவியில், அவர் ஸீட்டைப் பிடித்து மேல் துண்டைப் போட்டு ஏறி உட்காரும் வரை, அது ஏறவில்லை. ஏறி உட்கார்ந்து வெளிக்கம்பியைப் பிடித்து உடலை முறுக்கிக் கொண்டு, தலையணி ஒருபுறம் சரிய, "வைத்தியர்வாள்! வரவேணும், ஒரு அவசரம், ஒரு நிமிட்!" என்றார்.
மருதப்ப மருத்துவனார் முகம் மலர்ந்தது. "ஏது மரைக்காயர்வாள், எங்கே இப்படி?" என்று சொல்லிக் கொண்டே பஸ் அருகில் ஓடினார்.
"நம்ம மம்முது கொளும்புக்குப் போரான் இல்லெ! டவுன் இஸ்டேஷன் வரை கொண்டுபோயி வளியணிப்பிப்புட்டு வருதேன். வாவன்னா கோனா இருக்காஹள்லா, அவுஹ அளெச்சுக்கிட்டுப் போரதாவச் சொன்னாஹ. அதிரியட்டும், நமக்கு ஒரு லேஹியஞ் செஞ்சு தாரதாவ சொன்னிஹள்லா? அதெத்தாங் கொஞ்சம் ஞாபகப் படுத்தலாமிண்டுதான்... இம்பிட்டுத்தான்... நீங்க வண்டியெவிடுங்க - சலாம்!" என்று அவர் பேச இடங்கொடாமல் காரியத்தை முடித்துக் கொண்டார் மாப்பிள்ளை மரைக்காயர்.
"சதி, சதி!" என்று சொல்லிக்கொண்டே பின் தங்கினார் மருத்துவனார். வண்டி புகையிரைச்சலோடு கிளம்பியது.
"பிள்ளைவாள்! என்ன வாரியளா?" என்று துண்டை உதறிவிட்டுத் தோளில் போட்டுக் கொண்டார் மருத்துவனார்.
"வாரியலா வைக்கச்சண்டா" என்று முணுமுணுத்துக்கொண்டே பட்டறையைவிட்டு இறங்கினார் சுப்புப் பிள்ளை.
இதுவரை பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு சிகரட் பிடித்து நின்றது அலங்காரப் பொம்மை.
"நான் சின்ன எசமாஞ் சாமானெ எடுத்துக்கிட்டுப் போகுதேன், ஐயா, கடயெ பார்த்துக்கலே, பலவேசம் - வாங்க எசமான்!" என்று மேல் துண்டுச் சும்மாட்டில் படுக்கையையும் தோல் பெட்டி மேல் துண்டுச் சும்மாட்டில் படுக்கையையும் தோல் பெட்டி ஒன்றையும் தூக்கிக்கொண்டு முன்னே நடந்தான் வேலாண்டி.
வைத்தியரும் கடைக்காரப் பிள்ளையும், டாக்டர் விசுவநாத பிள்ளை தோட்டத்திற்குள் மூங்கில் கதவைத் தள்ளிவிட்டு மறைந்தனர்.
சாலையில் முன்போல உயிரற்ற அமைதி. சுள்ளி பொறுக்கும் சிறுமிகள் கூட மறைந்துவிட்டனர்.
10
டாக்டர் விசுவநாத பிள்ளையின் தோட்டம் வெய்யிலுக்கு உகந்தது. வியர்க்க விருவிருக்கச் சுற்றியலைகிறவர்களுக்கு வேப்ப நிழலுக்கும் எலுமிச்சைக் காட்டுக்கும் மத்தியில் கட்டப்பட்டிருக்கும் சவுக்கை பூலோக சுவர்க்கம். சாப்பாட்டு நேரங்களைத் தவிர மற்றப் பொழுதைப் பிள்ளையவர்கள் சவுக்கையிலேயே மெய்கண்ட சிவாச்சாரியார் உறவிலேயே கழிப்பார். மத்தியானப் பொழுதில் 'ஹிந்து'ப் பத்திரிகையோடு விளங்குவார்.
இருபக்கமும் நந்தியாவட்டையும் அரளியும் செறிந்த பாதை வழியில், வைத்தியருடன் சென்ற கடைக்காரப் பிள்ளை, "ஐயா! என்ன அங்கெ இருக்கியளா? மஹராசன் வந்திருக்கான் போலிருக்கே!" என்று குரல் கொடுத்தார்.
சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த பிள்ளை எழுந்து, குனிந்த வண்ணம் மூக்குக் கண்ணாடியின் மேல்வழியாகப் பார்வையைச் செலுத்தி, "லீவு! வர்ரதாக எளுதியிருந்தான் - எங்கே?" என்று கேட்டுக்கொண்டே அந்தஸ்தாக எழுந்திருந்தார்.
"வேலாண்டி வீட்டுக்கு அளச்சுக்கிட்டுப் போனான். இந்தாருங்க உங்க பேப்பர்!... சண்டை எப்பிடி யிருக்கு?" என்று பதில் எதிர் பார்க்காமலே மருத்துவரைத் தொடர்ந்தார் பிள்ளை.
சிறிது நேரத்தில் பிள்ளை மூங்கில் கதவையடைத்துக்கொண்டு போகும் சப்தம் கேட்டது.
விசுவநாத பிள்ளை தோட்டத்துக் கமலைக் கிணறு குளிக்க மிகவும் வசதியுள்ளது. கல் தொட்டியில் தண்ணீரை இறைத்து விட்டுவிட்டு நாள் பூராவும் குளித்துக் கொண்டிருக்கலாம்.
11
சுப்புப் பிள்ளை தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு, துலாக் கல்லில் காலை வைத்து நின்று, வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டார்.
மருத்துவர், தொட்டியில் பாதியளவு கிடந்த தண்ணீரைத் திறந்து விட்டுத் தொட்டியைக் கழுவ ஆரம்பித்தார்.
"ஐயா, ஒங்ககிட்ட ஒரு சமுசாரமிலா கேக்கணுமிண்ணு இருக்கேன்... நம்ம கொளத்தடி வயலிருக்கெ, முக்குருணி வீசம், அது வெலைக்கி வந்திருக்கரதாவப் பேச்சு ஊசலாடுது; அதான் நம்ம பண்ணையப் பிள்ளைவாள் வரப்புக்கு மேக்கே இருக்கே, அதான். நம்ம மூக்கம் பய அண்ணைக்கு வந்தான். ஒரு மாதிரி பேசறான். வாங்கிப் போட்டா நம்மது ஒரு வளைவ அமஞ்சு போகுதேன்னு நெனச்சென். நீங்க என்ன சொல்லுதிய?"
'உஸ்' என்றபடி முதல் வாளித் தண்ணீரைத் தொட்டியில் ஊற்றிவிட்டு, கிணற்றுக்குள் மறுபடியும் வாளியை இறங்கினார் சுப்புப்பிள்ளை. வாளியில் தண்ணீர் நிறைந்தது. நிமிர்ந்து வைத்தியரைப் பார்த்தார்.
"வே! ஒமக்கு என்னத்துக்கு இந்தப் பெரிய எடத்துப் பொல்லாப்பு? அது பெரிய எடத்துக் காரியம். மூக்கம் பய படுத பாட்டெப் பாக்கலியா! பண்ணையார்வாள்தான் கண்லே வெரலே விட்டு ஆட்ராகளே! ஒரு வேளை அது மேலே அவுகளுக்குக் கண்ணாருக்கும் - சவத்தெ விட்டுத் தள்ளும்!"
"என்னய்யா, அவுகளுக்குப் பணமிருந்தா அவுஹமட்டோ டே; அவுக பண்ணையார்ன்ன கொடிகட்டிப் பறக்குதா? அதெத்தான் பார்த்து விட்ரணும்லா! நான் அதுக்கு அஞ்சுனவனில்லெ. நாளெக்கே முடிக்கேன். என்னதான் வருது பாப்பமே!" என்று படபடத்தார் மருதப்பனார்.
"என்னமோ நாஞ் சொல்லுததெச் சொன்னேன்; உம்ம இஸ்டம்!" என்றார் பிள்ளை.
12
அன்று மாலை பொழுது மயங்கிவிட்டது. மேல்வானத்துச் சிவப்புச் சோதியும், பகல் முழுதும் அடங்கிக் கிடந்து மாலையில் 'பரப்பரப்' என்று ஓலை மடல்களில் சலசலக்கும் காற்றுந்தான் சூரியன் வேலை ஓய்ந்ததைக் குறிக்கின்றன.
குளக்கரைக்கு (ஏரிக்கரை) மேல் போகும் ரஸ்தாவில், முண்டாசு கட்டிக் கொண்டு கையில் இரண்டொரு பனை மடல்களைப் பிடித்த வண்ணம் நடந்து வருகிறார் சுப்புப் பிள்ளை.
குளத்துக்குக் கீழ்புறமிருந்து ரஸ்தாவுக்கு ஏறும் இரட்டை மாட்டு வண்டித்தடத்தின் வழியாக, வண்டிக்காரனுடைய தடபுடல் மிடுக்குகளுடன், மாட்டுச் சலங்கைகள் கலந்து புரள, குத்துக்கல்லில் சக்கரம் உராயும் சப்தத்துடன் ஒரு இரட்டை மாட்டு வண்டி மேட்டிலிருந்த ரஸ்தாவில் ஏறிற்று.
மங்கிய இருளானாலும் தொப்ளான் குரல், பண்ணையார் வண்டிதான் என்பதை நிச்சயப்படுத்தியது.
சாலையில் ஒதுங்கி நின்ற சுப்புப் பிள்ளை, "என்ன அண்ணாச்சி, இந்த இருட்லெ எங்கெ போயிட்டு வாரிய?" என்று குரல் கொடுத்தார்.
வண்டியுள் திண்டில் சாய்ந்திருந்த பண்ணையார் சிதம்பரம் பிள்ளை, "ஏடே, வண்டியை நிறுத்திக்கொ" என்று உத்தரவிட வண்டி சிறிது தூரம் சென்று நின்றது.
13
பிள்ளையவர்கள் உள்ளிருந்த செருப்பை ரஸ்தாவில் போட்டுவிட்டு மெதுவாக அதில் காலை வைத்து இறங்கினார்.
"கீளநத்தம் மேயன்னா இருக்காஹள்லா..."
"ஆமாம் நம்ம நாவன்னா கோனாவோட மச்சினப்பிள்ளை..."
"அவுஹதான்... அவுஹளோட சமுசாரத்தோட ஒடப்பிறந்தாளெ மருந்தூர்லே குடுத்திருந்தது - அவ 'செல்லா'யிப்போனா... பதினாறு... போயிட்டு வாரேன்!"
"மதினி போகலியா...?"
"அவ வராமெ இருப்பாளா? கூடத்தான் வந்தா; அங்கே ஆள் சகாயம் ஒண்ணுமில்லே - இருந்துட்டு வாரனேன்னா - விட்டுட்டு வந்திருக்கேன்; இப்பொ அவ இங்கெ சும்மாதானெ இருக்கா?..." என்றார்.
"ஆமாம், அதுக்கென்ன!... வயசென்ன இருக்கும்?" என்றார் சுப்புப் பிள்ளை மீண்டும்.
"வயசு அப்படி ஒண்ணும் ஆகலெ - முப்பது இருக்கும்!" என்றார்.
"புள்ளெக ஏதும் உண்டுமா?... சரி, அதிருக்கட்டும். அண்ணாச்சி, ஒங்கிட்ட ஒரு சமுசாரம்லா சொல்லணும்னு நெனச்சேன். ஏங்காதுலே ஒரு சொல் விழுந்தது. ஒங்கிளுக்கு அதெத் தெரிவியாமே இருந்தா, நாயமில்லை!" என்றார்.
14
பணத்திற்கு ஏதோ அடிப்போடுகிறாரோ என்று பயந்த பண்ணையார் "ஏது, அனுட்டானமாச்சா?" என்று கேட்டுக்கொண்டே குளத்தினுள் இறங்கினார்.
கரைச் சரிவில் செருப்பை விட்டுவிட்டுத் தண்ணீருள் இறங்கிய பண்ணையார் பலத்த உறுமல்கள், ஓங்காரங்கள் முழங்க, கால் முகம் கழுவ ஆரம்பித்தார்.
முன்பே தம் மாலைப் பூஜை விவகாரங்களை ஒரு மாதிரி முடிவுகட்டிய சுப்புப் பிள்ளை, வேஷ்டி துவைக்கும் கல்லில் அமைதியாக உட்கார்ந்து காரியம் முடியட்டும் என்று எதிர்பார்த்திருந்தார்.
திருநீறிட்டு, திருமுருகாற்றுப்படையையும் திருவாசகத்தில் இரண்டொரு செய்யுட்களையும் மனனம் செய்துவிட்டு, "சிவா!" என்ற குரலெழுப்பிக் கரையேறினார் பண்ணையார்.
"நம்ம மருதப்பன் இருக்கான் இல்லியா, பய கொளும்புலெ ரெண்டு காசு சம்பாரிச்சிட்டான்னு மண்டெக் கருவம் தலை சுத்தியாடுது. இண்ணக்கி புதிய தெரஸர் புள்ளெவாள் கெணத்துலெ குளிச்சுக்கிட்ருக்கப்பச் சொல்லுதான், 'பண்ணையப் பணம்னா அவுகமட்டோ ட, ஊரெல்லாம் என்ன பாவட்டா கட்டிப் பறக்குதா?' என்று; உங்களெ ஒரு கை பாத்துப்பிட்டுத்தான் விடுவானாம்; பாருங்க ஊரு போரபோக்கை!"
"சவம் கொலைச்சா கொலைச்சுட்டுப் போகுது! அவர் இப்ப மருத்துவர்லா! அப்படித்தான் இருக்கும் - எதுக்காம் இவ்வளவும்?"
15
"ஒங்க வயக்காட்டுப் பக்கம் முக்குருணி வீசம் இருக்குல்லா - நம்ம மூக்கன் பய நெலம், அதுக்குத்தான் இம்புட்டும். வாங்கப் போரேன்னு வீரியம் பேசுதான்."
"மூக்கப்பய நெலமா?... எங்கிட்டல்லா கால்லெ விழுந்து கெஞ்சிட்டுப் போனான்; அந்த நன்னிகெட்ட நாய்க்கு ஒதவப் படாதுன்னு தான் வெரட்னேன். அவன் கால்லெ போய் விளுந்தானாக்கும்! அதுலெ என்ன வீராப்பு?"
"'ஒனக்கு எதுக்குடா அந்த நெலம், அதெ வாங்குததுலெ பிள்ளைவாளுக்குத்தானே சௌகரியம்'ணேன். அவ்வளவுதான். இந்தவூரு புள்ளெமாரே அப்படித்தானாம்; எப்பவும் அடாபிடியாம்; அவன் கிட்ட காரியம் நடக்காதாம்!"
"அப்பிடியா சேதி! ஏலே தொப்ளான், நாங்க நடந்து வருதோம்; வண்டியைக் கொண்டுபோய் அவுத்துப் போட்டுப்புட்டு, எந்த ராத்திரியும் மூக்கன் பயலே கையோட புடிச்சா!"
"நாம வாங்குதாப்லியே காம்பிச்சுக்கப்படாது; தெரஸர் பிள்ளை வாள்தான் வேணும்னாஹள்ளா - அவக பேரச் சொல்லி வைக்கது."
"அதெதுக்கு? கூட நாலு காசெ வீசினா போகுது. அந்த நாய்கிட்ட பொய்யெதுக்கு?"
"இல்லெ அண்ணாச்சி, உங்களுக்கு தெரியாது; நான் சொல்லுதைக் கேளுங்க!"
"ராத்திரி கடையடச்சம் பொரவு இப்படி வீட்டுக்குத்தான் வாருங்களேன், பேசிக்கிடலாம்!"
16
"அப்பா! அம்மைக்கி உடம்பு என்ன அப்படியே இருக்கே; நீங்க கெவுனிக்கரதில்லெ போல்ருக்கு!" என்றான் மகராஜன்.
எதிரிலிருந்த ஹரிக்கன் லைட் மீது ஒரு விட்டில் வந்து மோதியது. சிறிது மங்க ஆரம்பித்த திரியைத் தூண்டினான்.
"நம்ம கையிலே என்ன இருக்கு? இருவது வருஷமா குடுக்காத மருந்தா?" என்று மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுக் கண்களை நிமிண்டியவண்ணம் கூறினார் விசுவநாத பிள்ளை.
"நீங்க பென்ஷன் வாங்கினதோட, வைத்தியமும் உங்ககிட்ட பென்ஷன் வாங்கிட்டுதா? - நீங்களே இப்பிடிப் பேசுனா?"
"பேசுரதென்ன? உள்ளதத்தான் சொன்னேன். குடல் பலகீனப் பட்டுப் போச்சே! எது குடுத்தாலுந்தான் ஒடலோட ஒட்டமாட்டேங்குதே!"
"நான் ஒரு முறையைப் பிரயோகம் பண்ணிப் பாக்கட்டுமா? இயற்கை வைத்தியம். முதல்லே கொஞ்சம் பட்னி இருக்கணும்; அப்பொ ஒரு 'கிரைஸிஸ்' (வியாதி நிலையில் நெருக்கடி, கவலைக்கிடமான நிலை) ஏற்படும். அப்புறம் சிகிச்சையை ஆரம்பித்தால் பலனுண்டு."
"என்னடா, நீ மெடிக்கல் ஸ்கூல்லெதானெ படிக்கிறே! இயற்கை வைத்தியம் எங்கெ வந்துது? வீணாக் காலத்தைக் கழிச்சு பெயிலாப் போகாதே!"
"அதுக்கும் படிக்கத்தான் செய்யரேன். இந்த முறையிலே எத்தனையோ பேருக்கு உடம்பு குணமாயிருக்கிறதே! நானெ செய்திருக்கிறனே!"
"சரி, பாரேன்! நானா வேண்டாமுங்கேன்?"
17
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் சவுக்கைக்கு வெளியில் செருப்புச் சப்தம் கேட்டது. தொப்ளான், ஹரிக்கன் லைட்டோ டு ஒதுங்கி நிற்க, பண்ணையார்வாளும் சுப்புப் பிள்ளையும் உள் வெளிச்சத்தில் பிரசன்னமாயினர்.
"அட, பண்ணையார்வாளா? ஏது இந்த இருட்லெ? இந்த நாற்காலியிலே உக்காரணும்; சுப்பு பிள்ளை, நீர் இந்த பெஞ்சிலே இப்டி இரியும். ஏது அகாலத்திலே?" என்று தடபுடல் காட்டி எழுந்து நின்றார் விசுவநாத பிள்ளை.
"விசேசமென்னா! இப்படி வந்தேன்! ஒங்களெ எட்டிப்பாத்துட்டுப் போகலாமெண்ணுதான் நொளஞ்சேன். ஏது மாப்ளெ எப்ப வந்தாப்லெ? ரசாவா?" என்றார் பண்ணையார். மகராஜனை மாப்பிள்ளை என்றழைப்பதில் அவருக்குப் பரமதிருப்தி.
"ஆமாம், கோடை அடைப்பு; மதியந்தான் வந்தான். ராசா, நீதான் பிள்ளைவாள் கடையிலே போயி ஒரு பொகயிலைத் தடை வாங்கிட்டு வா..." என்று வருகிறவர்களுக்காகத் தாம்பாளத்தில் வைத்திருக்கும் வெற்றிலையை அடுக்கிப் பண்ணையார் முன்பு வைத்தார்.
"நான் அப்பமே கடையடைச்சிட்டனே!..."
"எனக்கா இந்தச் சிருமம்? தடைப் போயிலைண்ணாத்தான் நமக்கு ஆகாதே. ஏலே தொப்ளான், செல்லத்தை வைய்யென்லே! என்னலே முளிக்கே!" என்று சுப்பு சிதம்பரம் பிள்ளைகள் ஏக காலத்தில் பேசினார்கள்.
18
வெளியே புறப்பட்ட மகராஜன் மறுபடியும் தூணில் சாய்ந்து உட்கார்ந்தான்.
"சவுக்கெலெயே காத்தைக் காணமே, ஊருக்குள்ள பின்ன ஏன் வெந்து நீறாகாது! அண்ணாச்சி இந்த வருஷம் காய்ப்பு எப்படி?" என்று தலையை இருட்டில் நீட்டி எச்சிலைத் துப்பிக் கொண்டே கேட்டார் சிதம்பரம் பிள்ளை.
"காய்ப்பென்ன, பிரமாதமா ஒண்ணுமில்லெ - ஏதோ வீணாக காயிரதுக்கு கெணத்துத் தண்ணி வேரடியிலே பாயிது..."
"இல்லெ, ஒரு பத்து முப்பது ரோசாக் கம்பு வச்சுத் தளுக்க வச்சா பிரயோசனமுண்டு - ஒரு பயலைப் போட்டாப் போகுது" என்றார் சிதம்பரம் பிள்ளை.
பேச்சில் சோர்வு தட்ட அவர் சுப்புப் பிள்ளையைப் பார்த்தார்.
"தெரஸர் பிள்ளைவாள், ஒங்ககிட்ட ஒரு விசயமா கலந்துகிட்டுப் போகலாமுண்ணு வந்தேன் - ஐயாவும் வந்தாஹ - ஊர் விசயம் - தலை தெறிச்சுப் போய் அலயரான்கள் சில பயஹ - இப்பிடி வாருங்க..." என்று எழுந்து விசுவநாத பிள்ளையை வெளியில் அழைத்துக் கொண்டு போனார் சுப்புப் பிள்ளை.
"ஆமாம், ஆமாம், சரிதான்... வாங்குதவன் பாடு குடுக்கவன் பாடு, நமக்கென்ன?... அப்படியா! பிள்ளைவாளுக்கு எடைலேயா வந்து விளுந்தான்... அப்பமே எனக்குத் தெரியுமே... காறை வீடு கட்னா கண்ணவிஞ்சா போகும்?..." என்ற விசுவநாத பிள்ளையின் பேச்சுக்கள் இடைவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தன.
19
இருவரும் சில நிமிஷங் கழித்துச் சவுக்கைக்குள் ஏறினர்.
"என்ன!..." என்று சிரித்தார் பண்ணைப் பிள்ளை.
"இதுக்கு நீங்க எதுக்கு வரணும்? சொல்லிவிட்டா நான் வரமாட்டனா?... ராசா, நீ வீட்டுக்குப் போயி கண்ணாடி அலமாரியிலே சாவிக் கொத்தை வச்சிட்டு வந்துட்டேன்... எடுத்தா... அப்பிடியே அம்மைக்கி அந்த டானிக்கை எடுத்துக் குடு... எல்லாம் நாளைலேயிருந்து ஒன் வயித்தியத்தெப் பாக்கலாம்..." என, மேல்வேஷ்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறினான் மகராஜன்.
"வீட்டுலே உடம்புக்கு எப்படி இருக்கு - தாவளையா?... நம்ம மாப்ளைக்கி இன்னம் எத்தனை வருஷம் படிப்பாம்?... காலா காலத்லெ கலியாணத்தெ கிலியாணத்தெ முடிச்சுப் போட வேண்டாமா?..."
"நானும் அப்பிடித்தான் நெனச்சேன். அடுத்த வருசத்தோட படிப்பு முடியிது... வார தை மாசம் நடத்திப் போடணும்னு உத்தேசம்... மூக்கம் பயலெ எங்கே இன்னம் காணம்?..." என்று வெளிக்குரலை எதிர்பார்த்துத் தலையைச் சாய்ந்தபடி கேட்டார்.
"சவத்துப் பய இப்பம் வருவான்... ராத்திரி பத்திரத்தை எளுதி முடிச்சுக்கிடுவோம்... காலெலெ டவுனுக்குப் போயி ரிஸ்தர் பண்ணிப் போடுதது... கூச்சல் ஓஞ்சப்பரம் பத்திரத்தெ எம்பேருக்கு மாத்திக்கலாம்..."
"அது அவாளுக்குத் தெரியாதா?... காரியம் முடிஞ்சாப் போதும்..." என்றார் சுப்புப் பிள்ளை.
20
நாலைந்து நாள் கழிந்து ஒரு நாள் மத்தியானம். நல்ல உச்சி வெய்யில் 'சுள்' என்று முதுகுத் தோலை உரிக்கிறது.
வயல் காட்டு வரப்புகளில் படர்ந்து கிடக்கும், அவருக்கு மட்டும் தெரிந்த, சில மூலிகைப் பச்சிலைகளைக் கை நிறையப் பிடுங்கி வைத்துக் கொண்டு, குளக்கரை மேல் போகும் ரஸ்தாவில் ஏறி, மறுபுறம் செங்குத்தாக இறங்கும் கல்லடுக்கிய சரிவு வழியாக இறங்கி, மருத்துவ மருதப்பனார் பச்சிலைகளைக் குளத்திலிட்டு அலச ஆரம்பித்தார். தலையில் முக்காடாக அணிந்திருந்த துணி, விலகி விலகிக் குனிந்து வேலை செய்வதற்கு இடைஞ்சல் கொடுத்ததால் நிமிர்ந்து நின்று தலையில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு மறுபடியும் குனிந்தார்.
"வைத்தியரய்யா! என்ன, தெரஸர், பிள்ளைவாள் ராவோட ராவா மூக்கன் நெலத்தைக் கொத்திக்கிட்டுப் போயிட்டாகளாமே!" என்ற குரல் மருத மரக்கிளை ஒன்றிலிருந்து கேட்டது.
அண்ணாந்து பார்த்தார். மருதக் கிளை ஒன்றிலிருந்து கீழே நிற்கும் ஆடுகளுக்குக் குழை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் வேலாண்டி.
"ஊர் வெள்ளாளன்மாரு கூடிக்கிட்டா என்ன? ஆனைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வரும். பண்ணையப் பிள்ளைவாளுக்கு அந்த நெலம் வந்துதான் நெரயணுமாக்கும்; வாங்கினா ஒரே வளவாப் போயிடுமேன்னு நெனச்சேன். சவத்துக்குப் பொறந்த பயஹ பேச்சேத் தள்ளு!"
"ஆமாம். மூக்கம் பய கொளும்புக்கில்லா போயிட்டானாம்... அந்தப் பயலுக்கு என்ன அவசரம் இப்பிடி அள்ளிக்கிட்டுப் போவுது..."
21
"மூதி தொலைஞ்சுட்டுப் போகுது. அண்ணெக்கி வந்து மூக்காலே அளுதானேன்னு பாத்தேன்... ஊர்லே தேவமாருன்னு பேர் வச்சுக் கிட்டு பூனையாட்டம் ஒண்டிக்கெடந்தா என்னதான் நடக்காது... புள்ளைமாருக்குன்னுதான் இந்த வூரா... அப்போ நாங்க போயிருந்தோம்... அதெத்தான் அத்துப் பேசட்டுமே... என்னடே தொப்ளான், எங்கே அவசரம்?" என்றார் வைத்தியர்.
தலை தெறிக்க ஓடிவந்த தொப்ளான், "நீங்க இங்கியா இரிக்கிய, தெரஸய்யா சமுசாரத்துக்குத் தடபுடலாக் கெடக்கு, ஒங்களெ சித்த சத்தங்காட்டச் சொன்னாவ - டவுன் பஸ்ஸு போயிட்டுதா? பாத்தியளா?" என்று பஸ் எதிர்பாக்கப்பட்ட திசையை வெறிக்கப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
"அதுவும் அப்பிடியா! காத்தெக் கட்டிப்போட முடியுமா? வேலாண்டி, நான் அப்பம் ஒரு சேதி சொன்னேனே பாத்தியா - பாத்துக்கோ..."
ஈரம் சொட்டும் பச்சிலை முடிப்போடு குறுக்குப் பாதை வழியாக ஊரை நோக்கி நடந்தார் மருத்துவர்.
"என்னடே! தொப்ளான் - நீ எங்கலே போரே...?"
"நான் ஒரண்டையும் போகலே... பட்டணத்து எசமான் பெரிய டாக்குட்டரெக் கூப்பிட டவுனுக்குப் போராவ..."
"என்னடே பஸ் வந்துதா?" என்று கொண்டே 'மெட்ராஸ்' மெருகிழந்து, கவலை தேங்கிய முகத்துடன் வந்தான் மகராஜன்.
"இல்லே எசமான், ஒண்ணையும் காங்கலியே!" என்றான் தொப்ளான்.
22
நேற்றிரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை - அதாவது 'சாலாச்சி ஆச்சி' - இறந்துபோனாள். கிராமம் என்றால் கேட்கவா வேண்டும், இழவு வீட்டுச் சம்பிரமத்தை? அப்பொழுது பிடித்து ஓயாது ஒழியாது அழுகையும் கூச்சலும்.
வெளியே விசுவநாத பிள்ளை தலை குனிந்தவண்ணம் பெஞ்சியில் உட்கார்ந்திருக்கிறார். மகராஜன் தூணில் சாய்ந்து தலை குனிந்த வண்ணம் நகத்தை நிமிண்டிக் கொண்டிருக்கிறான். வெளிப் பெஞ்சியில் பண்ணையார் சிதம்பரம் பிள்ளை தமது ஓயாத வெற்றிலைத் துவம்சத்துடன் துஷ்டிக்கு வருகிறவர்களோடு பேசியும், சிற்றாள்களையும் சுப்புப் பிள்ளையையும் வேலை ஏவிக்கொண்டும் இருக்கிறார்...
சாலாச்சியம்மையின் தேகம் பலஹீனப்பட்டுப் போயிருந்தாலும் மகராஜனது இயற்கை சிகிச்சை பிரயோகிக்கப்பட்டிராவிட்டால் இவ்வளவு சீக்கிரத்தில் விழுந்துவிட்டிருக்காது.
'கிரைஸிஸை' எதிர்பார்த்துப் பூர்வாங்க சிகிச்சை நடத்தினான் மகராஜன். வியாதியே 'அன்னத் துவேஷமாக' இருக்கையில் பட்டினி முறை உடலை ஒரேயடியாகத் தளர்த்திவிட்டது. இரண்டே நாள் உபவாசம் நாடியையும் அரைகுறையாக்கியது.
அந்த நிலையில்தான் மருதப்ப மருத்துவனார் அழைக்கப்பட்டார். கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, "இன்னும் நாற்பத்தெட்டு நாழிகை கழித்துத்தான் ஏதும் சொல்ல முடியும்; அதுவரை உடம்பில் சூடு விடாமல் தவிட்டு 'ஒத்தடம்' கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்" என்று அபிப்ராயம் சொல்லிவிட்டு வெளியேறினார். இரவு எட்டு மணிக்கு வந்த டாக்டர் கொடுத்த இரண்டு 'இஞ்செக்ஷேன்கள்' சுமார் ஒரு மணிநேரம் கவலைக்கிடமான தெளிவை உண்டாக்கின. 'மகனுக்குப் பண்ணையப் பிள்ளை மகளை முடிச்சுவைக்கப் பார்க்கக் கொடுத்து வைக்கலியே' என்ற ஏக்கத்தோடு ஆவி பிரிந்தது...
23
"ஏலே தொப்ளான், என்னலே இன்னங் குடிமகனைக் காணலெ; போனியா?" என்று அதட்டினார் பிள்ளை.
"வூட்லெதான் இருந்தாரு; 'நீ போ, இதாவாரென்'னு சொன்னாரு!" என்றான் தொப்ளான்.
"என்ன இன்னமா வர்ரான் - ரெண்டு மணி நேரமாச்சே... நீ போய் இன்னொரு சத்தங் குடு..."
இரண்டு தென்னங் கீற்றுகளை இழுத்துவந்து தொப்பென்று போட்ட பலவேசம், "மாடசாமியத்தானெ கேக்கிய? அவன் வைத்யரு வீட்டெப் பாத்துப் போகுததெக் கண்டேன்!" என்றான்.
"நீதான் போயி அவனெ இப்படிக் கையோட கூட்டியா... நேரம் என்ன ஆகுது பாரு..." என்றார் சிதம்பரம் பிள்ளை.
"ஆகட்டும், எசமான்!" என்று சென்றான் பலவேசம்.
கால் மணி கழித்து, தனியாகவே திரும்பி வந்தான் பலவேசம். ஆனால் ஓடி வந்தான்.
"எசமான், நான் போனேன். வெளிலே மருதப்பரு நிண்ணுக்கிட்டிருந்தாரு. 'இனிமே, குடிமகன் இந்த வேலைக்கு வரமாட்டான்; அவன் தொளில் இதில்லே; இனிமேச் செய்ய முடியாதாம்ணு போய்ச் சொல்லு'ன்னு சொல்லிப்பிட்டாரு!" என்றான் பலவேசம்.
"மாடசாமியா அப்படிச் சொன்னான்?" என்று தென்னங்கீற்றைத் தடுக்காக முடைந்துகொண்டிருந்த சுப்புப் பிள்ளை எழுந்தார்.
"இல்லெ, மருதப்பருதான் சொன்னாரு."
24
"அவன் சொன்னான், இவன் கேட்டுகிட்டு வந்தானாம். நீ சாதி மறவனாலே! அப்பிடியே அலகிலே, ரெண்டு குடுத்துக் கூட்டியாராமே! என்ன வேலாண்டி, நீ என்ன சும்மா நிக்கே? ரெண்டு சிறுக்கி மகன்களையும் பின்கட்டுமாறாக் கட்டிக் கொண்டா - முதுகுத் தொலியே உறிச்சுப்பிடரேன்!" என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.
"என்னண்ணாச்சி, நாலு காசுக்குப் பால்மார்றான் போலே, விசிறி எறிஞ்சாப் போகுது..." என்று சமாதானம் செய்ய வந்தார் விசுவநாத பிள்ளை.
"ஒங்கிளுக்கு ஊரு வளமே தெரியாது; அம்பட்டப் பயலா காரியமாத் தெரியலியே! ஏலே, நீ புளிய மிளார் நல்ல பொடுசாப்பாத்துப் பறிச்சுக்கிட்டு வாலே, தொப்ளான்!" என்று மறுபடியும் கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.
கால்மணிக்கூறு கழிவதற்கு முன் சிதம்பரம் பிள்ளை சுக்ரீவாக்ஞையின் பலன் ஏக இரைச்சலோடு விசுவநாத பிள்ளை வீடு நோக்கி வந்தது.
மேல்துண்டை வைத்துப் பின்கட்டுமாறாக மருதப்பரையும், மாடசாமியையும் கட்டிக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான் வேலாண்டி.
"திரும்பினியா, பாளெ யறுவாளெக்கொண்டு தலையைச் சீவிப்புடுவேன் - நடலெ! என்ன முளிக்கே!" என்ற அதிகாரத் தொனி பின்னால் வயிற்றிலடித்துக் கொண்டு ஓலமிட்டுவரும் நாவிதக் குடும்பத்தின் இரைச்சலுக்கு மேல் கேட்டது.
"ரெண்டு பயல்களையும் அந்தத் தூணோடு வச்சுக்கட்டு! என்னலே மாடசாமி, சோலியப் பாக்கியா இன்னமும் வேணுமா?" என்றார் சிதம்பரம் பிள்ளை.
"முடியாதையா!" என்று முணுமுணுத்தான் மாடசாமி.
25
உள்ளே அழுதுகொண்டிருந்த பெண்களும் ரகளை பார்க்க வந்துவிட்டனர்.
"மிளாரெ எங்கடா?" என்று ஒன்றை வாங்கி முழங்காலிலும் முதுகிலும் மாறி மாறிப் பிரயோகித்தார். அவன் வலி பொறுக்கமாட்டாமல் குய்யோ முறையோவென்று கத்த ஆரம்பித்தான்.
அவன் மனைவி போட்ட ஓலத்தால் மருதப்பர் தூண்டுதல் என்பதும் எல்லோருக்கும் வெளியாயிற்று.
"பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? பிரிடீஸ் ராச்சியமா என்ன? ரொம்ப உறுக்கிரஹளே! மனிசனைக் கட்டிப் போட்டு அடிக்கதுன்னா நாய அநியாயமில்லையா - இண்ணக்கி சிரிக்கிரவுஹ நாளைக்கி வாரதையும் நினைச்சுப் பாக்கணும்!" என்றார் மருதப்பர்.
"நாசுவப் பயலா காரியமாத் தெரியலெயெ; வேலாண்டி, அவன் மொளியை (முழங்காலை)ப் பேத்துக் கையிலெ குடு! அவனுக்குக் குடுக்கிற கொடைலே இவன் சங்கெத் தூக்கணும்; என்ன பாத்துக்கிட்டு நிக்கே?"
வேலாண்டி கையிலிருந்த குறுந்தடியை ஓங்கி முழங்கால் குதிரையில் ஒரு போடு போட்டான். "ஐயோ அம்மா! என்னியப் போட்டுக் கொல்ராண்டோ ! ஊர்லே நாயமில்லியா! நீதியில்லியா!" என்று கதறினார் வைத்தியர்.
26
விசுவநாத பிள்ளை ஓடியே வந்து வேலாண்டியிடமிருந்த குறுந்தடியைப் பிடுங்கிக் கொண்டு, "அண்ணாச்சி, பாக்கச் சகிக்கலே - காரியத்தைப் பாத்துச் செய்யணும். சவத்துப்பய போரான்... அவ அதிட்டம் இப்படியிருந்தது; இந்தப் பயல்களுக்கும் இப்படிப் புத்தி போகுது..." என்று ஆரம்பித்தார்.
"எங்கை எப்படியிருக்குன்னு பார்லே!" என்று மறுபடியும் ஒரு குத்துவிட்டான் வேலாண்டி. மருதப்பன் பல்லில் முன்னிரண்டும் விழுந்துவிட்டன.
ரத்தங் கண்டதும் பீதியடித்துப் போன மாடசாமி, கண்களில் நீர் பெருக, சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தான்.
"சவத்தெ அவுத்து விடுடா! இந்தத் தெசேலே தலைவச்சுப் படுத்தா மாறுகால் மாறுகை வாங்கிப் போடுவேன், ஓடிப்போ நாயே!" என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை. அவிழ்த்துவிடப்பட்ட மருதப்பரும் மனைவியின் கைத்தாங்களில் நொண்டிக் கொண்டே தூரத்தில் சென்று, ஒரு பிடி மண் எடுத்து வானத்தில் எறிந்து, "இப்பிடி சுட்ட மண்ணாப் போகணும்! என் வயிரெரியிராப்லே போணும்" என்று ஏச்சு அழுகையுடனே கூவிவிட்டுச் சென்றார்.
அப்படியும் இப்படியுமாகப் பிரேத சம்ஸ்காரம் முடிந்து திரும்ப மணி நான்காகிவிட்டது.
27
மாடசாமி முதுகுவலிக்குக் காரணமே வைத்தியர் மருதப்பர் அவனுக்கு முன்பு கொடுத்திருந்த சிறுகடன் தான் என்றும், 'அதைத் திருப்பிக் கொடு அல்லது இந்த வேலை செய்' என்று போதிக்கப்பட்டது என்றும் சிதம்பரம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது. அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
"போலீஸுக்கு கீலீஸுக்கு எட்டுச்சுன்னா அவன் தலை அவன் களுத்திலே இருக்காது!" என்று மருதப்பருக்கு வேலாண்டி மூலம் எச்சரித்தனுப்பிவிட்டு, விசுவநாத பிள்ளைக்குத் தக்க சமாதானங்கள் சொல்ல ஆரம்பித்தார்.
மனைவியையிழந்தது, தெருக்கூத்தாகக் கிரியை நடந்தது, உத்தியோக காலத்தில் சர்க்காரின் அதிகார எல்லையைத் தெரிந்து கொண்டிருந்தது - எல்லாம் அவரை ஒரேயடியாகப் பீதியடிக்க வைத்துவிட்டன.
பரஸ்பரப் பேச்சில் மனைவியின் கடைசி ஆசையையும் சொல்லி வைத்தார் விசுவநாத பிள்ளை, பேச்சுவாக்கில்.
"நீங்க சொன்னாப்லெ வர்ர தை மாசம் முடிச்சிப்புடுவம்!" என்று அந்தப் பேச்சை முடிவு கட்டினார் பண்ணையார்.
மருதப்பர் அன்று வீட்டுக்குள் சென்று படுத்தவர், மானத்தாலோ மனக்கொதிப்பாலோ அல்லது அடி பலத்தாலோ வெளியேறவில்லை.
28
இரகசியமாக இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பிராது அனுப்பினார். ஏற்க மறுத்து எச்சரித்து விரட்டப்பட்டான் போன ஆள். ஊரே திரண்டு எதிர்க்கும் பொழுது பணமிருந்து என்ன பயன்? போதாக் குறைக்குத் தாழ்த்தப்பட்ட, கிராமங்களில் அவமானகரமானது என்று கருதப்படும் ஒரு தொழிலைச் செய்யும் ஜாதி! சில சமயத்தில் ஊரையே அழித்துவிட வேண்டும் என்ற நபும்ஸகக் கோபம் அவரைத் தகித்தது. அடுத்த நிமிஷம் ஒரே மலைப்பு!
சம்பவமும், செய்தி பாதி வதந்தி முக்காலாக 'உஸ் ஆஸ்' என்று பக்கத்தூர்களில் பரந்தது. வேளாளருக்கு நெஞ்சு விரிந்தது. "சவத்துப் பயல்களைச் சரிக்கட்டிப் பாருங்க, இல்லாட்டா அங்கயெப்போல மலையாளத்து அம்பட்டனெ குடியேத்திப் போடுவோம்..." என்று மூட்டை கட்டி வந்து இலவச அபிப்பிராயம் சொல்லிவிட்டுச் சென்றனர் பலர்.
மகராஜனுக்கு அழகிய நம்பியாபுரத்தில் இருப்பே கொள்ளவில்லை. 'எப்பொழுதடா பதினாறு கழியும், சென்னைக்குப் போய்விடுவோம்' என்ற துடிதுடிப்பு.
இப்படியிருக்கையில் மருதப்பரைக் காணோம் என்ற பேச்சுக் கிளம்பியது. இது ஊர்க்காரருக்கே அதிசயத்தை விளைவித்தது. வீடு அடைத்துப் பூட்டிக் கிடந்தது. எங்கு போனார், எப்படிப் போனார் என்பதே ஆச்சரியம்.
29
சிதம்பரம் பிள்ளை இதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. "சவம் தன்னைப் பயந்து கொளும்புக்கு ஓடியிருக்கும்!" என்று திருப்தி கொண்டார்.
விசுவநாத பிள்ளைக்கு இப்பொழுது சாப்பாட்டுக்குக் கூட வீட்டுக்குப் போவதென்றால் வேம்பாகிவிட்டது. மகராஜனே சமயாசமயங்களில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவான். "அப்பாவைத் தனியாக இங்கே விட்டுவிட்டுப் போவதா, உடன் வந்தால் என்ன?" என்று நினைத்தான். ஆனால் சவுக்கை மோகம் கொண்ட பிள்ளையவர்கள் மறுத்துவிட்டார்கள். பிள்ளையும் பண்ணையாரும் அன்னியோன்னியம். பிரிந்து காண்பது துர்லபம். அப்படி ஒட்டிக் கொண்டனர்.
சிதம்பரம் பிள்ளையின் முரட்டுத் தைரியத்தில் டாக்டருக்கு நிலைதளராத நம்பிக்கை; டாக்டரின் குருட்டுக் குழந்தைத் தன்மையில் அவருக்கு ஒரு முரடனின் பிரேமை. சுப்புப் பிள்ளைக்கு நினைப்பு புது மாதிரியாக ஓடியது. இவ்வளவு கோளாறுக்கும் அந்த நிலந்தான் காரணம் என்ற உண்மையைக் கண்டுபிடித்து, பிள்ளையவர்கள் காதில் ஓதினார். அதிரடித்துப்போன நெஞ்சில் இது சடக்கென்று வேரூன்றியது. அதனால் அவரையறியாது வெளிக்காட்டிக் கொள்ள தைரியமற்ற ஒரு பயங்கர வெறுப்பும் உறவாடியது. அதை வைத்தே தன் மகளை இரண்டாந்தாரமாக டாக்டருக்கு முடித்துவிட்டால் என்ன என்று கோட்டை கட்டினார் சுப்புப் பிள்ளை. சொத்துக்குச் சொத்தாச்சு. இந்த அல்லற் பிழைப்பும் ஒழியும்.
பதினாறும் கழிந்தது. சமயம் பார்த்து விதை ஊன்றினார் சுப்புப் பிள்ளை. பயிரிட வேண்டியதுதானே பாக்கி! தானாகவே முளைவிடும் என்பதில் சுப்புப் பிள்ளைக்கு அபார நம்பிக்கை.
அடுக்களைத் தாலி கட்ட வைத்தால் போகிறது!
30
பதினாறு முடிந்த ஐந்தாவது நாள் விடியற்காலம் மூன்றரை மணி. முண்டிதமான தலையுடன் பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கிறான் மகராஜன். கூடவே தகப்பனாரும், பண்ணைப் பிள்ளையும், சுப்புப்பிள்ளையும் நிற்கின்றனர்.
பஸ் வந்து நின்றது. இருட்டில் ஒருவர் இறங்கினார்.
மகராஜன் ஏறினான்; சாமான்களும் ஏற்றப்பட்டன. வண்டி புறப்பட்டது.
"போனதும் லெட்டர் போடு!" என்றார் விசுவநாத பிள்ளை.
"என்ன தெரஸர் பிள்ளையா? யாரு போராஹ?" என்றது அந்தப் புதிய குரல்.
"மரைக்காயர்வாள்! ஏது இப்படி!"
"பண்ணையார்வாளெப் பாக்க வந்தேன்; அன்னா, அவுஹளே நிக்காஹளே! நீங்க மூக்கன்கிட்ட வாங்கினிஹளாமில்லா, அந்த நெலத்தை எனக்கு முன்னாலேயே அடமானம் வச்சிருந்தான் - சமுசாரத்தைச் சொல்லிப்புட்டுப் போகலாமுண்ணு வந்தேன். நம்ம வைத்தியர்வாளும் அவுஹ பொஞ்சாதியும் நேத்துத்தான் இஸ்லாத்தைத் தளுவினாஹ! இந்த பஸ்லேதான் நம்ம கடெலே மானேசராயிருக்க கொளும்புக்குப் போராஹ!" என்றார் மரைக்காயர்.
"கோடு இருக்கே, நடத்திப் பார்ப்போமே!" என்றார் சிதம்பரம்பிள்ளை.
(முற்றும்)
'மணிக்கொடி, 01-11-1937
-----------
55. நிகும்பலை
விடிந்து வெகு நேரமாகிவிட்டது.
அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை.
எதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர் மாணவன் கையிலிருந்த புத்தகத்தில் ஏகாக்கிர சிந்தையாக இருந்தான்.
அன்று இரவு அவனுக்குச் சிவராத்திரி; பரீட்சை நெருங்கினால் பின் மாணவர்களுக்குச் சிவராத்திரி ஏன் வராது?
வெளியே தடதடவென்று கதவைத் தட்டும் சப்தம் அவனது யோகத்தைக் கலைத்தது.
"மிஸ்டர் ராமசாமி! மிஸ்டர் ராமசாமி!" என்று அவன் நண்பனின் குரல்.
கதவைத் திறக்கிறான்.
"என்னவே! நீரெல்லாம் இப்படி 'ஸ்டடி' செய்தால் பரீட்சை தாங்குமா? 'கிளாஸ்' தான்!" என்று வந்தவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.
"ஏது, ரொம்ப நேரமாகிவிட்டது போலிருக்கே? நீர் உள்ளேயிரும்; நிமிஷத்தில் ஜோலியை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்; 'இண்டியன் ஹிஸ்ட்ரி'யை முடித்துவிடலாம். 'எ மினிட்' " என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினான்.
"உம்ம படிப்புக்கு நான் எங்கே?" என்றார் வந்தவர்.
2
இருவரும் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். உள்ளே தங்கியவர் பெயர் நடேசன். இல்லை, மிஸ்டர் நடேசன்.
"என்னவே! அதுக்குள்ளையா குளித்துச் சாப்பிட்டு விட்டீர்?"
"ஆமாம், ஆமாம்!" என்று ஈரம் சொட்டிக் கொண்டிருந்த தலையைத் துடைத்துக்கொண்டே வின்சென்ட் ஸ்மித் என்பார் எழுதிய இந்திய சரித்திரத்தை எடுத்துப் புரட்டினான்.
'அடிமை அரசர்களினால் உண்டான நன்மைகள்' என்ற பகுதியைத் திருப்பி வைத்துக்கொண்டு நாலாயிரப் பிரபந்தத்திற்காகத் தொன்று தொட்டு ஏற்பட்ட ராகத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.
மிஸ்டர் நடேசனும் தனது மூளைக்குப் பக்கபலமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு இருந்தவர், இரண்டு மூன்று நிமிஷம் கழித்து, "இதெல்லாம் 'எக்ஸாமினேஷனு' க்கு வராதுவே; வந்தாலும் ஜமாய்த்துவிடலாம். நம்ப புரொபெஸர் கொடுத்த நோட்ஸை எடுத்து நல்ல 'டாப்பிக்கலா' இரண்டு 'சப்ஜெக்ட்ஸ்' வாசியும்!' என்றார்.
இருவரும் ஐந்து நிமிஷமாகத் தேடினார்கள். அட்டைகள் இரண்டும் அந்தர்த்யானமாகி, பக்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழையாமை செய்து கொண்டிருந்த ஒரு காகிதக் குப்பையை எடுத்தார்கள். அதை நோட்டுப் புஸ்தகம் என்பது உயர்வு நவிற்சி. எழுத்துக்கள் பிரம்மலிபி; ஆதியும் அந்தமும் இல்லாத சிவனார் போல் விளங்கியது.
இவ்வளவு அனந்த கல்யாண குணங்களும் நிறைந்த அந்த 'நோட்டுப் புஸ்தகத்தை'ப் பலவிதமாகப் புரட்டி, ஒரு மாதிரித் திருப்தியடைந்தவன்போல் 'பர்மிய யுத்தங்களின் சுருக்கம்' என்ற பகுதியைப் படிக்க ஆரம்பித்தான்.
3
"என்ன மிஸ்டர் இதைப் படிக்கிறீர்? போன ஸெப்டம்பருக்கு கேட்டாச்சே. மேலும், இந்த 'லெவன்த் அவரில் தரோ ஸ்டடி' முடியுமா? 'வார்ஸ்' வந்த காரணங்களைப் படியும். 'ஈவண்ட்ஸ்' விட்டுவிடும்; 'எப்பெக்டஸ்' படியும். 'பிரிப்பேர்' பண்ணவே தெரியலையே" என்று கடிந்து, சுருக்க வழி சொல்லித் தந்த மிஸ்டர் நடேசன் அதற்குள் அணைந்துபோன சிகரெட்டைப் பற்றவைத்துக் கும்பரேசக பூர்வமாக பிரம்ம பத்திரத்தின் சூக்ஷ்ம சக்தியை வெகு சுவாரஸ்யமாக ஆகர்ஷித்துக்கொண்டு இருந்தார்.
பரீட்சைப் பாராயணம் நடந்தது.
"என்ன மிஸ்டர்! மணி 'ஒன்' ஆகிவிட்டது போலிருக்கே! மத்தியானம் வந்து முடித்துவிடுவோமே!" என்றார் மிஸ்டர் நடேசன்.
"சரி."
4
மத்தியானம்.
அகோரமான வெயில்.
"இந்த 'ஹாட் ஸ்ன்'லே வந்தது ரொம்ப 'டயர்டா'க இருக்கு!" என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்த நடேசன், ஒரு பாயை விரித்துக் கொண்டு சாய்ந்தான்.
"எனக்கும் 'டயர்டா'த்தான் இருக்கிறது. ஆனால் முடியுமா? சாயங்காலத்திற்குள்ளாவது 'இண்டியன் ஹிஸ்டிரி'யை முடித்துக்கொண்டு 'பாலிட்டிக்ஸ்' ஆரம்பித்து விடலாம்!" என்றார் மிஸ்டர் ராமசாமி.
"ஸ்! இந்த 'ஹெவி ஸ்ன்'லே 'சப்ஜெக்ட'ஸா? ஏதாவது 'லைட்'டா 'நான் டீட்டெயி'லை எடுத்துப் படி."
ஒரு மேல்நாட்டு நாவலாசிரியர் எழுதிய நாவல் ஒன்றை எடுத்து முதலிலிருந்து ஆரம்பித்தான்.
"என்ன மிஸ்டர் உமக்குச் சொன்னாலும் தெரியவில்லையே. சட்டர்ஜி 'நோட்ஸ்' எடுத்துப் படியும். இதில் மூன்று 'டாபிக்ஸ்'. அதை அவன் நல்லா 'டீல்' பண்ணியிருக்கிறான்."
படிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் மிஸ்டர் நடேசன் பரீட்சையை மறந்தார். இருவரும் சுவாரஸ்யமாகக் குறட்டைவிட்டார்கள்.
"'ஹால் டிக்கட்ஸ்' வந்துவிட்டதாம்!" என்று இரைந்து கொண்டே உள்ளே வந்தார் ஒரு மாணவர்.
"என்ன தூக்கம்? 'ஹால் டிக்கட்ஸ்' வந்துவிட்டதாம் ஸார்" என்று மறுபடியும் சொல்லி எழுப்பினான் வந்தவன்.
"எப்போ? எப்போ?" என்று எழுந்திருந்தார்கள் இருவரும்.
"'மார்னிங்'தான் வந்ததாம்; போய் வாங்கிக் கொண்டு வந்துவிடுவோமே" என்றார் வந்தவர்.
"புறப்படுவோம், 'எ மினிட்'..." என்று சொல்லிக்கொண்டு இருவரும் மேல்சட்டையைப் போட்டுக்கொண்டார்கள்.
5
"என்ன மிஸ்டர் சண்முகம்? 'சப்ஜெக்ட்' எல்லாம் முடிச்சாச்சா?" என்று கேட்டான் ராமசாமி.
"என்ன பிரதர், 'சப்ஜெக்ட்ஸ்' எல்லாம் அப்படியே இருக்கு; இங்கிலீஷைத் தொடவே இல்லை. நீங்கள் எதுவரைக்கும் முடித்திருக்கிறீர்கள்?" என்றார் சண்முகம்.
"என்ன 'பிரதர்?' அன்னிக்கே நீங்க 'ஹிஸ்டரி'யை எல்லாம் முடித்தாய்விட்டது என்றீர்களே!" என்று சிரித்தான் நடேசன்.
"ஒரு தடவை 'டச்' பண்ணா போதுமா? 'ஸ்டடி' பண்ண வேண்டாமா?" என்றார் சண்முகம்.
"எங்களுக்கு ஒரு தடவை 'ரிவைஸ்' பண்ணவே 'டயம்' இல்லையே. பிரதர்! கொஞ்சம் ஒங்க 'எக்கனாமிக்ஸ்' நோட்டைக் கொடுங்கள். 'மார்னிங்' தந்துவிடுகிறேன்" என்றான் ராமசாமி.
"இல்லை 'பிரதர்'; அதைத்தான் இப்போ நான் 'ஸ்டடி' பண்றேன். நாளைக்குக் கொண்டுவாரேனே!"
"ஏன் பிரதர், நீங்களும் நம்ப ரூமிற்கு வந்தால் ராத்திரியிலேயே எல்லோரும் 'ஸ்டடி' செய்துவிடலாமே, எப்படி?" என்றான் நடேசன்.
"சரி."
"இப்படி ஹோட்டலுக்குப் போவோம். 'டய'மாகி விட்டது!" என்றான் ராமசாமி.
6
மூவரும் கலாசாலையை நெருங்கினார்கள். அப்பொழுதுதான் கலாசாலை ரைட்டர் தனது அறையைச் சாத்திப் பூட்ட எத்தனித்தார்.
"பிரதர், கொஞ்சம் தயவு செய்யணும்!" என்று சண்முகம் ஓடிப்போய்க் கையைப் பிடித்தான்.
"ஏன் சார், 'ஆபீஸ் அவர்'ஸில் வரக்கூடாது? எனக்குக் கொஞ்சம் 'பிஸினெஸ்' இருக்கிறது. சார்" என்று பிரமாதப் படுத்திக்கொண்டார் ரைட்டர் அனந்தராம் அய்யர்.
சண்முகத்தின் கையிலிருந்த ஏதோ ஒரு சிறிய விஷயம், ரைட்டர் பையில் 'கிளிங்' என்ற சப்தத்துடன் விழுந்தது. வேதாரண்யத்தில் கதவைத் திறக்கச் செய்யும்படி பாடினார்களாமே, அந்தப் பாட்டைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தது! உடனே ரைட்டர் முகம் மலர்ந்து உபசரிக்க வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
மூவரும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தனர்.
எதிரே இவர்களுடைய சரித்திர ஆசிரியர் வந்தார். இவர் மூளையில் இல்லாதது சரித்திரம் சம்பந்தப்பட்ட மட்டில் பரீட்சைக்கு அவசியமில்லாதது என்று சொல்லிவிடலாம். அட்சரம் பிசகாமல் அவர் படித்த புத்தகங்களின் கதம்பமாக இருக்கும் அவர் பிரசங்கங்கள், சரித்திரங்களை யூனிவர்சிட்டி கேள்விகளின் விடைகளாக மாற்றிக் கற்றுக்கொடுப்பதில் நிபுணர்; பரீட்சையில் மாணவர்கள் தோற்காதபடி பார்த்துக் கொள்வதிலும் நிபுணர்.
7
இவர்களைக் கண்டதும், "என்னடே! 'ஸ்ப்ஜெக்ட்ஸ்' எல்லாம் ஆகிவிட்டதா? 'இண்டியன் ஹிஸ்டரி' முடித்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
"ஆம் சார்" என்றான் நடேசன்.
"இந்த மார்ச்சில், 'டல்ஹௌ'ஸியில் ஒரு கேள்வி வருமப்பா. படித்தாகிவிட்டதா?" என்றார்.
"'பாலிஸி ஆப் லாப்ஸ்' தான் சார் அதில் முக்கியம்!" என்றான் நடேசன்.
"அதைச் சொல்லு பார்ப்போம்" என்றார் புரொபெஸர்.
நடேசன் தனது சொந்த இங்கிலீஷில் சொல்லிக்கொண்டு வந்தான்.
புரொபெஸர் இடைமறித்து, "இப்படி எழுதினால் உனக்குச் சுன்னம்தான். நீ என் 'நோட்ஸை'ப் படித்தாயா?" என்று கேட்டுவிட்டு, "ராமசாமி, நீ சொல்லு பார்ப்போம்" என்றார்.
ராமசாமி பிளேட் வைத்தான். இடையில் ஒரு வார்த்தை திக்கிற்று; புரொபெஸர் அதைத் தொடர்ந்தே பாராயணம் பண்ணி முடித்தார். "கேர்புல்லாகப் படியுங்க. இன்னும் ஒரு வாரந்தான் இருக்கிறது" என்று புரொபெஸர் விடைபெற்றுக் கொண்டார்.
8
"ராமசாமிக்குக் 'கிளாஸ்'தான்!" என்று சிரித்தான் நடேசன்.
"இதைத் தவிர தெரியாதே. நீயாவது சொந்தமா ஏதும் அடிச்சு விடுவாய்" என்றான் ராமசாமி.
"மிஸ்டர், ஒங்க நம்பர் என்ன?" என்றான் நடேசன்.
"உம்முடையதைச் சொல்லுமேன்" என்றார் சண்முகம்.
"நமக்கு கோளாத்தான்!" என்றான் நடேசன்.
"அதென்ன ஜோஸியம்?" என்றான் ராமசாமி.
"நம்பரில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒற்றை நம்பராக 1, 3, 5 உள்ளதாக வந்தால் பாஸ். இல்லாவிட்டால் கோளா?"
"என்னுடையது 8700" என்றான் ராமசாமி.
"கொளுத்திவிட்டீர். 'கிளாஸ்' தான். அப்பவே சொன்னேனே!" என்றார் நடேசன்
"என் நம்பர் 7743" என்றார் சண்முகம்.
"உமக்குப் பாஸ்தான், சந்தேகமா?"
"மிஸ்டர் நடேசன், உம்ம நம்பர் என்ன?"
"அப்பவே சொன்னேனே கோளா என்று."
"சொல்லுமையா. எங்கே இங்கு கொடும்" என்று ஹால் டிக்கெட்டைப் பிடுங்கிப் பார்த்தார்கள்.
நடேசன் நம்பர் 7744.
மூவரும் ஹோட்டலுக்குள் சென்றார்கள்.
9
ஒரு வாரம் கழித்து.
பரீட்சை தினம். பட்டம் பெறுவதற்கோ அல்லது திரும்பப் பணங்கட்டி அதிர்ஷ்ட தேவதையை வரிக்க முயலுவதற்கோ ஏற்பட்ட திருநாள். கிண்டிக்கும் சர்வகலாசாலைக்கும் ஒரே விதமான நியாயம், ஒரே விதமான போட்டி ஜயிக்கும்வரை அல்லது பணம் இருக்கும்வரை, வரையாது கொடுக்கும் வள்ளல்களாக இருக்க வேண்டும். அதுவும் தினம் சராசரி வருமானம் 0.1.3வாக இருக்கும் இந்தியப் பெற்றோரின் குழந்தைகள்.
நடேசன் கோஷ்டியார் வாசித்துவந்த கலாசாலையில் காலை எட்டு மணியிலிருந்தே ஆர்ப்பாட்டம். உண்மையில் கலாசாலை மைதானத்திலும் வராந்தாவிலுமே இந்த அமளி, இரைச்சல்.
உள்ளே பரீட்சைப் புலியைப் பத்து மணிக்கு மாணவர்களுக்காகத் திறந்துவிடுவதற்காகவோ என்று எண்ணும்படி, கதவுகள் சிக்கென்று அடைக்கப்பட்டிருந்தன. கலாசாலை வேலைக்காரன் பொன்னுசாமி - வேலைக்காரன் என்றால் பொன்னுசாமிக்குக் கோபம் வந்துவிடும்! 'பியூன்' என்று சொல்லவேண்டும் - ரைட்டர் அய்யரைப் பின்பற்றி ஒரு பெரிய காகித மூட்டையை எடுத்துச் செல்லுகிறான். உள்ளே எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு இரண்டு மூன்று மாணவர்கள் தொடருகிறார்கள். அந்தச் சிதம்பர ரகஸியம் லேசாகக் கிடைத்துவிடுமா? மூக்குத்தான் தட்டையாகிறது.
10
இன்று தான் மாணவர்கள் வெகு கோலாஹலமாக உடுத்தியிருக்கிறார்கள். அதில் இரண்டு மூன்று முழுத் துரைகளையும் (உடுப்புவரைதான்) காணலாம். ஒவ்வொருவர் கையிலும் கத்தைப் புஸ்தகங்கள். இதில் சிலர், 'எப்பொழுதும்போல் இருப்பேன் இன்னும் பராபரமே!" என்பவர் போல் கவலையற்ற உடையுடன் வந்திருக்கிறார்கள். இந்த ரகம் மாணவர்கள்தான் அதிகப் படிப்பு. சிலர் 'என்ன வரும்' என்ற தர்க்கம்; 'வந்தால் என்ன எழுதுவது' என்ற பிரசங்கம். சிலர் புரொபெஸர்களை வளைத்துக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைக்கெடியாரம். ஒரு மாணவன் பிக்-பென் (Big-Ben)னையே தூக்கிக்கொண்டு வந்து விட்டான். ஒவ்வொருவர் வசத்திலும் குறைந்தது இரண்டு பௌண்டன் பேனாக்கள்; சிலரிடம் ஒரு பெரிய ஸ்வான் இங்க் புட்டி. மாணவர்களிலும் சில அபூர்வ பிரகிருதிகள் உண்டு. அவை, டார்வின் கூற்றுக்கு உதாரணமாக, மோட்டுக் கிளைகளில் உட்கார்ந்து புஸ்தகத்தை ஆழமதியுடனே படிப்பதைக் காணலாம்.
நடேசன் கோஷ்டியும் அதோ வருகிறார்கள்.
11
கலாசாலை மணி.
பரீட்சை ஆரம்பமாகிவிட்டது!
சாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும், 'போர் முடிந்தது. இன்று போய் நாளை வா!' என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும், "ஸ்டாப் பிளீஸ்" என்று காவலிருந்த புரொபெஸர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வார்த்தை அதிகமாக எழுதிவிட்டால் பாஸாகிவிடும் என்ற நம்பிக்கை, ஒரு பையனைப் பண்டிதர் இழுப்பிற்கும் விடாமல் எழுதச் செய்கிறது.
சிலர் தங்கள் நம்பர்களைப் போட மறந்துவிட்டு வெளியேறி விடுவார்கள். ரைட்டர் அய்யர், பொன்னுசமி முதலியோர் அவனைக் கண்டுபிடித்து நம்பரைப் போடச் செய்யுமுன் மூளை கலங்கிவிடும். இப்படி வெளியேறியவர் ஒருவர் இருவர் தாங்களே வந்து போட்டுவிட்டு, கலாசாலைத் தொழிலாளிகளின் வசைமொழி பெற்றுத் திரும்புவார்கள்.
நடேசன் கோஷ்டியும் வெளியே வந்தார்கள். ஆனால் உற்சாகமில்லை. ஒரு வேளை களைப்பாகவும் இருக்கலாம். "எல்லாம் 'டவுட் புல்' லாக இருக்கிறது!" என்று பேசிக் கொண்டார்கள். அவர்களுக்குள் ஒரு கேள்விக்கு எப்படி விடை எழுதுவது என்ற தர்க்கம்.
இப்படித்தான் மற்ற நாட்களும்.
பரீட்சை ரிஸல்ட் வந்துவிட்டது. மூவரும் தேறி விட்டார்கள்.
இப்பொழுது செர்விஸ் கமிஷன் பரீட்சை எழுதுவதாகத் தீர்மானம். அதிலும் தேறிவிடுவார்கள்.
(முற்றும்)
-------------
56. நினைவுப் பாதை
மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள். தம்பதிகள் இருவரும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல், வாழ்க்கையின் மேடு பள்ளங்களையெல்லாம் ஒன்றாகவே கடந்து வந்திருக்கின்றனர். வள்ளியம்மையாச்சி இறந்து போனாள். ஏதோ தெய்வ சங்கற்பம் அப்படி. இன்று காடேற்று (இரண்டாம் நாள் கிரியை). நீண்ட நாள் வியாதி ஒன்றும் இல்லை. போன சனிக்கிழமை புழக்கடையில் கால் வழுக்கி விழுந்தாள். இடுப்பிலும் விலாவிலும் ஊமையடி. அதில் படுத்தவள் தான் எழுந்திருக்கவில்லை.
வயதில் மூத்தவர் இறந்தால், அழுகைக்கும் ஓலத்திற்கும் குறைவில்லாவிட்டாலும், வருத்தமிருக்காது. பெண்கள் ரஸித்து அழுவார்கள் - வார்த்தைகள் முத்து முத்தாய்க் கோவையாக வந்து விழும். அத்துடன் ஓரிரண்டு துளி கண்ணீரும் கலந்திருக்கலாம். ஆனால் அது அழுகிறவர்களின் சொந்த அந்தரங்க வருத்தத்தைப் பற்றியதாகயிருக்கும்.
அன்று இன்னும் விடியவில்லை. விடிவெள்ளி எதிர்வீட்டுக் கூரைக்கு ஒரு முழ உயரத்தில் தொங்குவது போல் தெரிகிறது. வாசல் தெளிக்கும் சப்தங்கூடக் காலையின் வரவை எதிரேற்கவில்லை. ஏன், 'துஷ்டிக்காக' (இழவுக்காக) அழுகிறவர்கள் கூட எழுந்திருக்கவில்லை என்றால்...
வைரவன் பிள்ளை வளைவின் வெளிக் குறட்டில், கோரைப் பாயின் மீது முழங்காலைக் கட்டிக் கொண்டு ஓர் உருவம் உட்கார்ந்திருக்கிறது. வேறு யாருமில்லை, அவர்தான். அன்று அவ்வீட்டில் தூங்காதவர் அவர் ஒருவர்தான். முழங்காலைக் கட்டியபடி, மேலே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். குறிப்பாக எதன் மீதும் பார்வையை உபயோகிக்கவில்லை. வெளியே, வாசலில், வீசிப் பலகையின் மேல் முழுதும் போர்த்த உடலங்கள், சமயா சமயங்களில் குறட்டை விட்டு, உயிர் இருப்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றன.
வைரவன் பிள்ளை மனது, அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு, மறுபடியும் மறுபடியும் வள்ளியம்மையாச்சியின் கிடத்தப்பட்ட கற்பனைப் பிரேதத்தின் மீது வந்து கவிகிறது.
2
ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்திலும் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது... மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?... விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்... அப்பொழுது அவர் மனக்கண் முன் வள்ளியம்மையாச்சி புதுப்பெண் கோலத்தில் தம் கைபிடித்து வந்த காட்சி தோன்றியது.
வைரவன் பிள்ளை தூங்குவதற்காக உட்கார்ந்த இடத்தருகில் ஒரு சிறு ஜன்னல் - பனங் கம்பு 'அழி' வைத்தது. உள்ளிருந்து குசுகுசு என்ற சப்தம்.
"ஏட்டி, அஞ்சு கொத்துச் சவடி (சங்கிலி) உனக்குன்னு தானேட்டி சொன்னா, பேச்சியம்மை கேக்கதுக்கு மின்னே நீ போய் உங்க தாத்தாக்கிட்டே கேட்டு வாங்கிக்க!"
"ஆமாம் எனக்குத் தூக்கம் வருதுங்கே - என்னைப் போட்டுப் படுத்தாதே!..." என்று வெடுக் கென்னும் ஓர் இளம் பெண் குரல்.
உடனே 'வீல்' என்று தொட்டிலில் அழும் குழந்தைக் குரல்...
"சவமெ, நீயும் ஆரம்பிச்சிட்டியா?... ஒன் வாய் ஓயாதா?... செத்த ஒரு நிமிட்டு சும்மா இரியாதா? எனக்குன்னு தான் வந்திட்டுதம்மா...!" என்ற அங்கலாய்ப்பு...
"அதாரது பாப்பாத்தியா...?" என்று நினைத்தார் வைரவன் பிள்ளை. அவள்தான் பிள்ளையின் நாற்பது வயதான முதல் புத்திரி பாப்பாத்தியம்மாள். அவளுக்கு, வயது வந்த ஒரு பெண்ணும், நான்கு வயதுச் சிறுவனும், பத்து மாதக் கைக்குழந்தையும் உண்டு...
3
இதைக் கேட்ட வைரவன் பிள்ளைக்குக் கைக்குழந்தை பாப்பாத்தி, சமைந்து (பருவமெய்தி) சடங்கு நடக்கும் போது அவள் நின்ற கோலம்... அப்புறம் மணப் பந்தலில் அவள் நின்ற காட்சி... எல்லாம் அவர் மனக்கண் முன் சலனப்படமாக விரிந்தது. பாப்பாத்தி எப்பொழுதும் அப்படித்தான்... அவள் பிறக்கும்போதுதானே கடை முறிந்து நாலு பக்கமும் பணமுடை... கஷ்டத்தில் வளர்ந்த பெண் - காசில் இருந்த கருத்து அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது... அவள் மகளுக்கென்று சொல்லியிருந்தால், அவள் மகளுக்குத்தானே. அதற்குள் எதற்கு இந்தச் சின்னப் புத்தி... "ஏட்டி, இந்த வெத்திலையைத் தட்டு" என்று எடுத்த வாய் - அதிகாலையில் எழுந்திருந்ததும் அவர் போட்டுக்கொள்வதற்காகத் தயாராக வெற்றிலையை இடித்து வைத்தல் அவரது பல் போனதிலிருந்து தட்டாது நடந்துவரும் பழக்கம் - சடக்கென்று நின்றது... உள்ளத்தின் குழப்பம் புதிய மாறுபாட்டில் மேலும் குழம்பியது.
வீட்டில் பக்கத்தில் நின்று குடிமகன் சுடலை ஊதிய இரட்டைச் சங்கின் அலறல் மறுநாள் வந்ததைப் பிள்ளையவர்கள் பிரக்ஞைக்குக் கொணர்ந்தது... அதே சமயத்தில் உள்ளிருந்து பெண்களின் அழுகைக் குரல், சங்கத்தின் ஏக்க அலைகளுடன் தொடர்ந்து மனப் பாரத்தை அதிகப் படுத்தியது... வைரவன் பிள்ளையின் பார்வை விடிவெள்ளியை நாடியது... அது அவர் கண்ணில் தென்படவில்லை. எதிர்வீட்டுக் கூரை, முன்பே அதை விழுங்கிவிட்டது. கூரையின் உச்சிக்கோடுதான் வானத்திற்கு ஓர் எல்லை காட்டியது.
தெருக்கோடி முனையில் 'ஜல் ஜல்' என்ற மாட்டுச் சலங்கையின் சப்தம்... சிறிது நின்றது. யாரோ இறங்கினர்... தெருக் கோடியிலிருந்தே... "என்னைப் பெத்த தாயாரே!" என்ற பிலாக்கணம்... பார்வதியும் வந்து சேர்ந்துவிட்டாள் என்ற திருப்தி வைரவன் பிள்ளைக்கு... பார்வதி கடைக்குட்டிப் பெண்... தூரத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்...
அப்பொழுது விசிப்பலகை ஒன்றிலிருந்த உருவம் எழுந்து, சடசடவென்று சோம்பல் முறித்த வண்ணம், "சம்போ மகாதேவா!" என்று கொட்டாவி விட்டுக்கொண்டே, "பாட்டையா, நல்லாத் தூங்கினியளா? அதாரது?" என்று சொல்லிக்கொண்டே, வண்டி வந்த திசையை நோக்கியது...
அதற்குள் வண்டி மெதுவாக வாசற்படியில் நின்றது... முன்னால் பார்வதி நெஞ்சிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்... உள்ளே அழுகைக் குரல் பலமாயிற்று...
"கரிசங்கொளத்து மாப்பிள்ளை வாராஹ!" என்று சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுக் கள்ளர் பிரான் பிள்ளை - அவர்தான் மற்றொரு பலகையில் படுத்திருந்தவர் - எழுந்திருந்தார்.
4
மாப்பிள்ளை மௌனமாக வந்து பிள்ளை யவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தார்... தலை குனிந்த வண்ணம் கேட்டார்: "அத்தைக்கு என்ன செஞ்சது? லெட்டர்லெகூட ஒண்ணையும் குறிப்பிடலியே...!" வைரவன் பிள்ளை பதில் பேசவில்லை.
"ஆச்சிக்கு என்ன? கெடப்பிலே கெடந்தாளா என்ன... அண்ணைக்கு என்ன, கால் கொஞ்சம் தவறிச்சு. நல்ல ஊமையடி... இப்படி வரும்னு யார் நெனச்சா... வயசாச்சில்லியா? எல்லாம் தெய்வ சங்கல்பம். அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்!... ஆச்சி திரேகம் கல்லுன்னா கல்லுத்தான்... எண்ணைக்காவது ஒரு நா மண்டையிடிண்ணு தலையெச் சாச்சிருக்காளா?... அந்தப் பெரிய டாக்டரு இருக்கானே - அவன் எமன் தான்! - அவனே அவ்வளவு தான்னுட்டான்!" என்று வாசாமகோசரமாக விஷயத்தைச் சொல்லி, தேறுதலும் சொல்ல ஆரம்பித்தார் முதலில் எழுந்தவர்...
அப்பொழுதுதான் எழுந்த சுந்தரம் பிள்ளை, நெற்றியில் விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டே, "போன மாசமேதான் சுப்பு பிள்ளை அண்ணாச்சி சொல்லலே, ஆச்சிக்கு ஒரு கண்டமிருக்குன்னு!... நானும் அண்ணைக்கு விளை (விளையுமிடம்)யைப் பார்த்துட்டு வரப்போ பேசிக்கிட்டுதானே வந்தேன்... எல்லாம் வெள்ளிக்கிழமை களிஞ்சாத்தானின்னார்... காலன் வாரத்துக்கு கணக்கிண்ணும், நேரமிண்ணும் உண்டுமா?" என்று சொன்னார்.
வைரவன் பிள்ளை யோசனையைச் சுடலையின் மற்றொரு சங்கொலி கலைத்துக் குழப்பி அதனுடன் ஒன்று பட்டது.
அதற்குள் நன்றாய் விடிந்துவிட்டது.
வீட்டினுள்ளிருந்த நான்கு வயதுப் பையனொருவன் இடை அரைஞாண் கயிற்றில் மூலை மட்டும் சொருகிய பட்டுக் கரைத்துண்டு ஒன்றைப் பிரம்மப் பிரயத்தனம் செய்து மேலே இழுத்துப் போட்டும் முக்கால்வாசிப் பாகம் புழுதியில் புரள, வெளியே வந்து குறட்டின் மேல் ஏறினான்.
5
வைரவன் பிள்ளை, உணர்வற்ற நிலையிலே, அவனை ஒரு கையால் அணைத்தார்.
அவர் பக்கம் ஒண்டிக்கொண்டு அவரை அண்ணாந்து ஏறிட்டுப் பார்த்த வண்ணம், "நாந்தான் ஆச்சிக்கு நெய்ப் பந்தம் பிடிச்சேனே!" என்று தன் திறமையை விளக்கிக் கொண்டான் சிறுவன்.
"பயலெப் பாருங்களேன்!... ஏலே, ஒங்க ஆச்சியே எங்கடா?" என்றார் சுந்தரம் பிள்ளை.
"செத்துப் போயிட்டா!" என்று அர்த்தமில்லாமல் சொன்னான் சிறுவன்.
"அது பசலெ, அதுக்கென்ன தெரியும்?" என்றார் வைரவன் பிள்ளை.
"அவனா? வலுப் பயல்லே, அவனுக்கா தெரியாது!... ஏலே, ஒங்க ஆச்சியை..." என்பதற்குள், உள்ளிருந்து தாம்பாளத்தில் இளநீர், பால் முதலிய கிரியைக்கு வேண்டியவற்றையும், குடம், சொம்பு முதலியவற்றையும் எடுத்து வந்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை, "எல்லாம் காலா காலத்திலே போயிட்டு வந்திட்டா நல்லதுதானே! நீங்க மேல வீட்டு அண்ணாச்சியைச் சத்தங் காட்டுங்க!..." என்றார்.
சுடலை மறுபடியும் மெழுகு வைத்த இரட்டைச் சங்கை முழக்கினான். எல்லோரும் துண்டை உதறித் தோள் மேல் போட்டுக்கொண்டு எழுந்தனர். சுடலை முன்னால் முழக்கிக் கொண்டே நடந்தான்.
வைரவன் பிள்ளை கைத்தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்தார். அவருக்கு முன்னால், தலை முண்டிதமான அவருடைய ஒரே மகன் செல்லுகிறான்... மனசிலோ நடையிலோ கவலை தள்ளாடவில்லை.
வைரவன் பிள்ளை மனக்கண்முன், மணக் கோலத்தில் பதினாறு வயதில் பார்த்த வள்ளியம்மை யாச்சியின் உருவம் நின்றது...
சுடலை சங்கை முழக்கினான்...
இனிப் பார்க்கப் போவதை வைரவன் பிள்ளை மனது நினைக்க மறுத்தது...
"ஏலே நீயுமா? திரும்பலையா?" என்ற சுந்தரம் பிள்ளை குரல்... பேரன் தொடர்வதைத் திரும்பிப் பார்த்தார்.
மறுபடியும் சுடலை சங்கை முழக்கிக் கொண்டே சந்து திரும்பினான்.
(முற்றும்)
தினமணி, வருஷமலர் - 1937
-----------
57. நிர்விகற்ப சமாதி
ஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை.
கிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது நாளும் தபால்தான் கிடையாதே என்று மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு வெளியே நடந்துவிட முடியாது. வெற்றுப் பையை அரக்கு முத்திரை வைத்து ஒட்டி, 'ரன்னர்' எப்போது வந்து தொலைவான் என்று காத்திருக்க வேண்டும். அவனிடம் காலிப் பையைக் கொடுத்துவிட்டு, மற்றொரு காலிப் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.
நிற்க. எப்போதோ ஏதோவென்று தபால் பெட்டியில் வந்துவிழும் காகிதங்களை குருக்களையாவுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். குருக்களையாவுக்கு கடுதாசி வாசிக்கும் பழக்கம், பட்டணத்துக்காரரின் பேப்பர் படிக்கும் தன்மையை ஒத்திருந்தது என்று சொல்லவேண்டும். காந்திஜி பட்டினி கிடக்கிறார் என்றால் ஊரே அல்லோலகல்லோலப்படும்; பத்திரிகையும் மகாலிங்கய்யர் ஓட்டல் இட்டிலி மாதிரி விற்பனையாகும். ஆனால், அதற்காக ஊர்க்காரர்கள் எல்லாம் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அர்த்தமா? அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது.
இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டடத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய 'ஒரு சிலர்' கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் "இந்தப் பசங்களே இப்படித்தான் சார்" என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம்! மேலும் ஹோம் மாத்திரைக்கு விலாசம் தெரிந்துகொள்ள பேப்பர் ரொம்ப முக்கியம். இதே மாதிரிதான் குருக்களையாவுக்கு வேற்றாரின் கடுதாசிகளும் கார்டுகளும்.
2
உலகநாத பிள்ளைக்கு சோம்பல் ஜாஸ்தி; அதனால்தான் கடுதாசி படிக்கும் வழக்கம் வேப்பங்காய்.
குருக்களையா வந்துவிட்டார் என்றார் ஐயாவுக்கு சிம்ம சொப்பனந்தான்.
வரும்போதே, "என்னவே, அந்த மேலத்தெரு கொசப் பய, பணத்துக்கு எழுதினானே, பதில் வந்ததா?" என்று கேட்டுக் கொண்டுதான் நடைப் படியை மிதிப்பார். 'மேலத் தெரு கொசப்பயல்' என்று சூட்சுமமாகக் குறிப்பிடுவது சுப்பையர் என்ற முக்காணிப் பிராமணனைத்தான்.
தென்னாட்டில், திருச்செந்தூர் பிராமணர்கள் முன்குடுமி வைத்திருப்பார்கள்; குயத்தொழிலில் ஈடுபட்டுள்ள வகுப்பினரும் முன் குடுமி வைத்திருப்பார்கள். இதனால்தான் இந்த ஏச்சு.
நிற்க, ஸ்மார்த்தர்கள் யாவரும் ஏகான்மவாதிகள்; ஆகையால் அவர்களை வைவது சங்கர சித்தாந்தத்தை நோக்கி எய்யும் பாசுபதாஸ்திரம் என்பது குருக்களையாவின் அந்தரங்க நம்பிக்கை. இம்மாதிரி சொல்வதால் இவரை சைவ சித்தாந்த பவுண்டுக்குள் அடைத்துவிடலாம் என்பது அதற்கு அடுத்தபடியான நம்பிக்கை.
உலகநாத பிள்ளைக்கு இது தைக்காது; ஏனென்றால், சுப்பையரிடம் ஏதோ பாக்கி தண்ட வேண்டும் என, சென்ற பத்து வருஷங்களாக குருக்களையா சொல்லிவரும் புகார், மனசை அந்தத் திசையிலேயே திருப்பிவிடும்.
சுப்பையர் ஏன் பணத்துக்கு கடிதம் எழுத வேண்டும்? அதற்கு இதுவரை பதில் ஏன் வராதிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உலகநாத பிள்ளை சிந்தித்தது கிடையாது. சிந்திக்கும்படி மனம் தூண்டியதும் கிடையாது. வேலாயுதத் தேவரின் தாயார் மருதி, கொளும்பில் உள்ள தன் பேரனுக்கு முக்காலணா கார்டில் மகாபாரதத்தில் ஒரு சர்க்கத்தையே பெயர்த்து எழுதுகிற மாதிரி, ஒரு மாத விவரங்களை எழுதுவதற்கு பிள்ளையவர்கள் வீட்டு நிழலை அண்டி நிற்பதும் அதை எழுதி முடிப்பதை ஹடயோக ஸித்தியாக நினைத்து பெருமைப்படுவதுடன் மறந்துவிடுவதும் பிள்ளையவர்கள் குணம்.
3
அதேமாதிரிதான் வேலாயுதத் தேவரின் எதிர்வீட்டு பண்ணையாரான தலையாரித் தேவரின் தேவைக்கும் ஊரில் உள்ள கேட்லாக்குகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, சாம்பிள் காலண்டர் இனாம் என்று இடங்களுக்கெல்லாம் காலணா கார்ட் காலத்திலிருந்து முக்காலணா கார்ட் சகாப்தம் வரை எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கும் வைபவத்துக்கு உலகநாத பிள்ளையின் ஒடிந்துபோன இங்கிலீஷ் அத்யாவசியம்.
பூர்வ ஜென்மாந்திர வாசனைபோல் எங்கே உள்ளூர ஒட்டிக்கொண்டிருக்கும் ஷெப்பர்ட் இலக்கண பாஷைப் பிரயோகத்தை அனுசரிப்பதாக நினைத்து ரிலீப்நிப் பேனா வைத்து வாட்ட சாட்டமாக உட்கார்ந்து எழுதி, தபாலை எடுத்துவந்து பையில் போட்டு, அரக்கு முத்திரைவைத்து ஊர்வழி அனுப்புவது உலகநாத பிள்ளையின் கடமை. பிறகு ஒரு வாரமோ அல்லது பத்து நாளோ கழித்து ரன்னர் மத்யானம் இரண்டு மணிக்குக் கொண்டுவரும் பட்டணத்து கடுதாசி வைபவங்களைக் கொண்டு போய் தேவரவர்கள் சன்னிதானத்தில் காலட்சேபம் செய்ய வேண்டும். இங்கிலீஷ் வருஷ முடியும் கட்டம் வந்துவிட்டால் அதாவது டிஸம்பர் மாதத்தில் உலகநாத பிள்ளையின் 'இலக்கிய சேவைக்கு' ரொம்ப கிராக்கி உண்டு. பண்ணைத் தேவர் வாங்கின ரவிவர்மாப் படம் போட்டு வெளியான காலண்டர் நன்றாக இருந்துவிட்டால் கம்பனிக்கு இன்னும் சில கடிதங்கள் எழுத வேண்டியேற்படும்.
ஆனால் அவற்றிற்கு இந்தப் பத்து வருஷங்களாக பதில் வராத காரணம் உலகநாத பிள்ளைக்குப் புரியவில்லை. ஏக காலத்தில் பல விலாசத்தில் ஒரே கையெழுத்தில் இலவச காலண்டர்களுக்கும் சாம்பிள்களுக்கும் கடிதம் போனால் கம்பனிக்காரன் சந்தேகப்படக்கூடுமே என்பதை உலகநாத பிள்ளை அறிவார். அவ்வாறு அறிந்ததினால்தான் ஒவ்வொரு கடிதத்தின் கீழும், 'கடிதம் எழுதுகிறவருக்குக் காலண்டர் தேவை இல்லை. விலாசதாரர்களுக்கு இங்கிலீஷ் தெரியாததினாலும் தாம் ஒருவர் மட்டுமே அந்த பாஷையை அறிந்தவரானதினாலும், அவர்களுக்காக கடிதம் எழுத வேண்டியிருக்கிறது' என்பதை ஸ்பஷ்டமாக குறிப்பிடுவார்.
அப்படி எழுதியும் அந்தக் கம்பனிக்காரர்கள் நம்பாத காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் பண்ணையாருக்கு தவிர வேறு யாருக்கும் அச்சடித்த படம் எதுவும் வந்தது கிடையாது.
இதிலே கொஞ்ச நாள் உலகநாத பிள்ளை பேரில் சந்தேகம் ஜனித்து, அவர் தபால் பைக்குள் கடிதங்களைப் போட்டு முத்திரையிடும் வரை ஒரு கோஷ்டி அவரைக் கண்காணித்தது. கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டு பண்ணையாருக்குப் போட்டியாக வேறு யாரும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் அர்த்தமற்ற சந்தேகமாயிற்று. அதன் பிறகுதான் பண்ணைத் தேவர் அதிர்ஷ்டசாலி என்ற நம்பிக்கை ஊர் ஜனங்களிடையே பலப்பட்டது. அவர் எடுத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும் என்று ஊர் ஜனங்கள் நினைப்பதற்கு இந்தக் காலண்டர் விவகாரமே மிகுந்த அனுசரணையாக இருந்தது. இதன் விளைவாக விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் தேவரின் கைராசி நாடாத ஆள் கிடையாது.
4
பண்ணைத் தேவர் பண்ணைத் தேவரல்லவா; இந்த விவகாரங்களில் எல்லாம் ஜனங்களின் ஆசைக்கு சம்மதித்து இடம் கொடுப்பது, தமது அந்தஸ்துக்கு குறைவு என்று நினைத்தார். உலகநாத பிள்ளையின் கைராசி என்றும் கடிதம் எழுதும் லக்னப் பொருத்தமே அதற்குக் காரணம் என்றும் சொல்லித் தட்டிக் கழித்துப் பார்த்தார். நம்பிக்கையும் வெறுப்பும் கொடுக்கல் வாங்கல் விவகாரமா? நினைத்தால் நினைத்த நேரத்தில் மாறக் கூடியதா?
உலகநாத பிள்ளை இவ்வளவு செய்கிறாரே இத்தனை வருஷ காலங்களில் தமக்கு என்று சொந்தமாக ஒரு காலணா செலவழித்து கார்ட் எழுதியது கிடையாது. இப்போது முக்காலணா கார்ட் யுகத்தின் போது கடிதம் எழுதிவிடப் போகிறாரா?
குருக்களையாவின் சேர்க்கையினால் அவருக்கு ஊர் விவகாரம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் அவருக்குத் தெரியாது. ஏன், சொல்லப்போனால் அவருடைய சொந்த வீட்டு விவகாரமே தெரியாது.
சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்கு போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தை சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பதுபோல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது நின்ற கடவுள், ஏதோ எப்போதோ ஒரு சங்கரர் சொன்னதை உலகநாத பிள்ளை வாஸ்தவமாக நம்புகிறாரா? இல்லையானால் சோதிக்கவா மூட்டை கட்டிக்கொண்டு வரப்போகிறார்?
கடவுள் தமது நம்பிக்கையை பரிட்சை பண்ணி சுமார் முப்பத்தி ஐந்து சதவிகிதமாவது பாஸ் மார்க்கெடுக்க வரவேண்டும் எனவோ அல்லது வருவார் எனவோ எதிர்பார்த்தது கிடையாது.
5
வராமலிருக்க வேண்டுமே என அவர் எதிர்பார்ப்பது எல்லாம் இரண்டு பேரைத்தான். ஒன்று ரன்னர்; இரண்டாவது குருக்களையா. ரன்னரைக்கூட சமாளித்துவிடலாம்; குருக்களையாவை சமாளிக்கவே முடியாது.
அன்று நால்வர் ஏககாலத்தில் வந்து சேர்ந்தார்கள். 'ஐயாவோ' என்று கூப்பாடு போட்டுக் கொண்டு வெளியே வந்து நின்ற ரன்னர் முத்தையா தொண்டைமான்.
இரண்டாவது ஆசாமி கார்டும் கவர் கூடும் வாங்க வந்த சுப்பையர்.
மூன்றாவது ஆசாமி குருக்களையா, அவர் தமது வழக்கப் பிரகாரம் 'பத்திரிகை' படிக்க வந்திருந்தார்.
நாலாவது ஆசாமி ஏதோ ஊருக்குப் புதிது. பட்டணத்துப் படிப்பாளி போல் இருந்தது. சுமார் நாற்பது நாற்பத்தி ஐந்து வயசிருக்கும். அவரும் ஏதோ ஸ்டாம்பு வாங்குவதற்காக உலகநாத பிள்ளை வீடு தேடி வந்து வெளியில் சைக்கிளை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தார்.
6
"யாரது?" என்று கேட்டார் உலகநாத பிள்ளை.
"ஸ்டாம்பு வேணும். வாங்கலாம் என்று வந்தேன்" என்றார் வந்தவர்.
"என்னேடே முத்தையா கடுதாசி எதுவும் உண்டுமா?" என்று முழங்காலை தடவினார் குருக்களையா.
"எனக்கென்ன தெரியும்? பைக்குள்ள என்னவோ. ஆனா எசமானுக்கு சர்க்கார் கடுதாசி வந்திருக்கு" என்றான் முத்தையா.
"பிள்ளைவாள் நமக்கு ஒரு காலணா கார்ட் குடுங்க; கடையிலே யாருமில்லே; சுருக்கா போகணும்" என்றார் சுப்பையர்.
"சுப்பையர்வாள்! என்னமோ செவல்காரன் உங்கள் பாக்கியை குடுத்துடுவான்னு விடேன் தொடேன்னு கடுதாசி எழுதினியளே பார்த்தீரா? ஒரு பதில், உண்டு, இல்லை என்று வந்துதா?" என்று அதட்டினார் குருக்களையா.
"நான் எழுதினது உமக்கு எப்படித் தெரியும்; பதில் வரவில்லை என்று உமக்குக் கெவுளி அடித்ததோ" என்றார் சுப்பையர்.
"ஊர்த் தபால் எல்லாம் உலகநாத பிள்ளை வாசல் வழியாகத்தான் போக வேண்டும்! தெரியுமா? எனக்குக் கெவுளி வேறே வந்து அடிக்கணுமாக்கும்!" என்றார் குருக்களையா மிதப்பாக.
"தாலுக்கா எசமானை மாத்தியாச்சு; நாளைக்கு புது ஐயா வாராரு; இங்கே நாளண்ணைக்கு செக்கு பண்ண வருவாகன்னு சொல்லிக்கிடுராவ" என்றான் முத்தையா.
"அது யாருடா புது எஜமான்!" என்று சற்று உறுமினார் குருக்களையா.
7
"போடுகிற கடுதாசியையெல்லாம் படிக்கிற வழக்கமுண்டா" என்று புதியவர் உலகநாத பிள்ளையை வினயமாகக் கேட்டார்.
"நாங்க படிப்போம், படிக்கலை, நீ யார் கேட்கிறதுக்கு. படிக்கிறோம்; நீர் என்ன பண்ணுவீர்; ஏன் பிள்ளைவாள், மக்காந்தை மாதிரி உட்காந்திருக்கீர்; தபால் ஸ்டாம்பு குடுக்க முடியாதுன்னு சொல்லி அய்யாவெ வெளியேற்றும்" என்று அதட்டினார் குருக்களையா.
"நீங்க சும்மா இருங்க; ஸார் ஸ்டாம்பு ஸ்டாக்கு ஆயிட்டுது. கையில் இரண்டு ஒரணா ஸ்டாம்பு தானிருக்கு; கார்ட் தரட்டுமா?" என்றார்.
"ஏன் முன்கூட்டியே வாங்கி வைக்கவில்லை?" அதட்டினார் வந்தவர்.
"என்னவே அதட்டுரே?" என்று பதில் அதட்டு கொடுத்தார் குருக்களையா.
"ஏனா நான் தான் புது போஸ்ட் மாஸ்டர்; உம்மை செக் பண்ண வந்தேன். உம்மமீது 'பிளாக் மார்க்' போட்டு வேலையை விட்டு நீக்க ஏற்பாடு செய்கிறேன்; கடுதாசி படிக்கிற வழக்கமா?" என்றார் புதியவர்.
"எனக்குக் குத்தம் என்று படல்லே; இதுவரை... புகார்..."
"பரம ஏகான்மவாதமோ... பகிர் நோக்கு இல்லையாக்கும்" என்று குத்தலாகக் கேட்டார் புதியவர்.
"நான் அப்பவே இந்த ஏகான்ம மாயாவாதம் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீரா; இனிமேலாவது..." என்று தலையில் அடித்துக் கொண்டார் குருக்களையா.
8
உலகநாத பிள்ளை பகிர் முகமற்று பேச்சற்று நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கினார். அந்த மௌனத்திலும் தம் நடத்தை குற்றம் என்று படவில்லை அவருக்கு.
"என்ன பிள்ளைவாள்! அந்தப் பய காலண்டர் அனுப்பலியே" என்று கேட்டுக்கொண்டே வேலாயுதத் தேவர் உள்ளே நுழைந்தார்.
எல்லோரும் மௌனம் சாதிப்பது கண்டு "என்ன விசேஷம்" என்றார்.
"இவகதான் புதுசா தாலுகாவுக்கு வந்த போஸ்ட் மாஸ்டராம்! உலகநாத பிள்ளை வேலையெ போக்கிடுவோம் என்று உருக்குதாவ" என்று ஏளனம் செய்தார் குருக்களையா.
"இவுகளா? சதி. இந்த ஊரு எல்லையெத் தாண்டி கால் வச்சாத்தானே அய்யாவுக்கு வேலை போகும். இங்கே வேலாயுதத் தேவன் கொடியல்ல பறக்குது" என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு மீசையில் கைவைத்தார் வேலாயுதத் தேவர்.
"ஊர் எல்லை தாண்டினாத்தான் என் அதிகாரம்; நான் போணும்னு அவசியம் இல்லெ; என் பொணம் போனாலும் போதும்" என்றார் புதியவர்.
"மயானத்துக்குக் கால் மொளச்சு நடந்துபோன காலத்தில் பாத்துக்குவம். இப்ப பேசாமே சோலிய பாத்துக்கிட்டுபோம்!" என்றார் தேவர்.
"சதி, சதி விடுங்க. குருக்களையாவாலே இவ்வளவும். எவனையா வேலெமெனக்கட்டு வேறொருத்தன் கடுதாசியைப் படிப்பான்" என்றார் சுப்பையர்.
(முற்றும்)
நவசக்தி பொங்கல் மலர், 1945
----------
58. நிசமும் நினைப்பும்
"அடேடே! வி.பி.யா? வாருங்க; ஏது இந்தப் பக்கம் வந்து வெகு நாளாச்சே!" என உத்ஸாகத்துடன் வரவேற்றார் என்.பி.ராமலிங்கம்.
மூன்று நாள் தாடியைப் புறங்கையினால் பலமாகத் தேய்த்துப் பிறகு சிக்கிப் பின்னிப் பறந்து கொண்டிருந்த சிகையைக் கோதி விட்டுவிட்டு உள்ளே நுழைந்தார் வி.பி. அரைமணி நேரத்துக்கு மேல் உட்காரக் கூடாது. அவனிடம் இருக்கிறதை வாங்கிக்கொண்டு கடைசிப் பஸ் புறப்படுமுன் புறப்பட்டுவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மனசு தனது நாட்டத்தின் பலன் காயா பழமா என்பது பற்றி அலமந்தது.
சற்று அழுக்குப் பிடித்த நீண்ட கதர் ஜிப்பா, கரையோரத்தில் கால்பட்டுக் கிழிந்த வேஷ்டி, கீழே விழுவோமா வேண்டாமா எனத் தோளில் தொத்திக் கொண்டு தொங்கும் கதர் மேல்வேஷ்டி, அவருக்குத் தேசபக்தர் என விலாசம் ஒட்டின. குதிகாலடியில் அர்த்தசந்திர வட்டமாகத் தேய்ந்து போயும் விடாப் பிடியாகச் சேவை வைராக்கியத்துடன் மிளிரும் மிதியடியைத் தலைவாசலில் நிறுத்திவிட்டு, "என்ன ராமலிங்கம், எல்.எஸ்.பி. எங்கே?" என்று கேட்டுவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடி கதவோரத்தில் இருந்த பெஞ்சின்மேல் உட்கார்ந்தார். "எல்.எஸ்.பி. பிரஸ்ஸுக்குப் போயிருக்கான். சித்தக் கழிச்சு வந்துடுவான்" என்றார் ராமலிங்கம். பிறகு சற்றுக் கழித்து "என்ன விசேஷம்" என்றார்.
"விசேஷம் ஒன்னுமில்லெ; ஒரு அஞ்சு ரூபா பணம் இருந்தாத் தேவலை" என முழங்காலைத் தேய்த்தார் ஸ்ரீமான் வி.பி.
"ஏது, ரொம்ப அவசரமோ?" என்று சற்று நிதானித்தார் ராமலிங்கம்; பிறகு விவகாரத்தை விளக்குகிறவர் மாதிரி, "இன்னிக்கு மணியார்டர் எதுவுமே வறல்லே; ஸ்டார் புக் ஸ்டால்காரப்பயல் அடுத்த வாரம் வாடான்னுட்டான். அதிருக்கட்டும்; நீ போன மாசம் எழுதினியே, அந்தக் கதை, அதைப் பத்தி புரொபஸர் சிதம்பரலிங்கம் என்ன சொன்னார் தெரியுமா? லோகத்திலேயே அந்த மாதிரிக் கதை என்று பொறுக்கி எடுத்தால் பத்துக் கூடத் தேறாதாம்; அவ்வளவு உயர்வாம்; தமிழுக்கு யோகம்னு தலைகால் தெரியாம கூத்தாடினார்." ராமலிங்கம் சற்று நிதானித்து வி.பி. முகத்தைப் பார்த்தார்.
2
"அந்தச் சிதம்பரலிங்கம், அதான் இங்கிலீஷ் புரொபெஸர், அவன் தானே? அவன் மகா கண்டுட்டானாக்கும்! எல்லாரைப் பத்தியும் அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பான். நீ அவனிடம் முகவுரை கேட்டுக் காவடி எடுத்தியா? எவண்டா வர்ரான்னு கொக்கு மாதிரி உக்கார்ந்திருக்கிற கிழட்டுப் பொணத்துக்கு மின்னாலே நின்னு காக்கா புடிச்சா இது மட்டுமா சொல்லுவான்? இன்னும் சொல்லுவான். அவனுக்குத் தமிழைப் பத்தி என்ன தெரியும்? இங்கிலீஷைப் பத்தித்தான் என்ன தெரியும்? அவனுடைய இங்கிலீஷ் இலக்கியம் போன தலைமுறை இங்கிலீஷ்காரர்களுடன் போச்சே; பாட புஸ்தக வாத்தியாருக்கு..."
"ஏன் ஸார் வி.பி. அவரை ஏன் இப்படித் திட்டுகிறீர்? அவர் உம்மைப் புகழத்தானே செய்தாராம்?"
"என்னைப் புகழ அவன் யார்? அவனுடைய வறட்டு இங்கிலீஷும், விதரணை இல்லாத தமிழும்..."
"அதிருக்கட்டும் வருணேந்திரன் இந்த மாதம் விலாசினி பத்திரிகையிலே புதுத் தோரணையிலே..."
"புதுத் தோரணையிலே சரசுவதிக்கும் குடம் உடைச்சான்; என்னமோ தத்துப்பித்துன்னு..."
"சரி விடுங்கோ, உங்களுக்கு ஒத்தரையுமே புடிக்காது... ஸார், உங்களையாவது உங்களுக்குப் பிடிக்குமோ" என்று சற்று எகத்தாளமாகக் கேட்டார் ராமலிங்கம்.
"என்னை எனக்குப் பிடிக்கிறதோ பிடிக்கலியோ அதெல்லாம் உமக்கென்ன? அஞ்சு ரூபாய்க்கு விதியெக் காணோம்; உமக்கு ஆராய்ச்சி, பிரசங்கம், நையாண்டி வேறு ஒரு கேடா..." என்று உறுமினார் வி.பி.
"மிஸ்டர் வி.பி., நீங்க போயிட்டு நாளைக்குக் காலையிலே வாருங்க. எல்.எஸ்.பி. இருப்பார்; வந்து அவரோடே பேசிக்கிங்கோ; சரி, நாழியாறது..." என்று எழுந்திருந்தார் ராமலிங்கம்.
3
அந்தச் சமயம் பார்த்து எல்.எஸ்.பி. ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு, செருப்பை நடைவாசலில் போட்டபடி, "ஏது, உள்ளே பி.பி.யா?" என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தார்.
வி.பி.யும் ராமலிங்கமும் முகத்தில் ஈயாடாதபடி நின்றிருந்ததைக் கண்டதும், நிலைமையை ஊகித்துக் கொண்டு, "ஸார் வி.பி. உங்களை சந்திக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறவர் ஒருத்தர் வந்திருக்கார்; நீங்களே இங்கே வந்துவிட்டீர்கள்; தெய்வ சங்கல்பம்னா இதுதான்; அவர் யார் தெரியுமோ, பெரிய புரொபெஸர், பழுத்த பண்டிதர், அபார ரஸிகர். சிதம்பரலிங்கம்" என்று சொல்லிக் கொண்டே அடுக்கினார்.
"புரொபெஸர்வாள் இப்படிக் கொஞ்சம் வரணும்; இவாள்தான் இன்னித் தேதிக்குத் தமிழிலே கதை எழுதறத்துக்குண்ணே பொறந்திருக்கறவர். வி.பி.ன்னு நாங்கள் கூப்பிடுவோம். பெயர் விக்கிரமசிங்கபுரம் பலவேசம் பிள்ளை" என ஓர் ஆவர்த்தி வாசித்து நிறுத்தினார் எல்.எஸ்.பி.
புரொபெஸர் சிதம்பரலிங்கம் உள்ளே வந்தார். தலையிலே பனிக்குல்லா, உடம்பிலே பிளானல் ஷர்ட்டும் கம்பளிப் போர்வையும், கண்ணில் தங்க விளிம்புக் கண்ணாடி, இடுப்பில் மல்வேட்டி.
"இவாள்தான் விக்கிரமசிங்கபுரம் பலவேசம் பிள்ளையோ? பலே பேர்வழி ஐயா - என்னை அப்பிடியே பிரமிச்சு உக்காரும்படி பண்ணிவிட்டீரே; திருநெல்வேலிச் சைவமோ!" என்றார்.
"இல்லை, செட்டியப் பிள்ளைமார்" என்று சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார் வி.பி.
"ராமலிங்கம், நம்ம ராம விலாஸ்லெ போய் நாலு கப் காப்பி ஸ்டிராங்கா எடுத்தாறாச் சொல்லேன்; வி.பி., டிபன் எதுவும் கொண்டாரச் சொல்லட்டா? முகம் சோர்வாக இருக்கே. ராமலிங்கம், முறுகலா இரண்டு ஊத்தப்பமும் போட்டுக் கொண்டு வரச் சொல்லு; வெத்திலை பாக்குப் புகையிலையை மறந்துடாதே; வி.பி. இருக்கும்போது மறக்கலாமா?..."
4
"பத்மநாப ஐயர்வாள், எனக்கு இந்த வயசிலே, இந்த ராத்திரியிலே காபி சாப்டாத் தூக்கம் வருமா? ஒன்னும் வாண்டாம்னா."
"அப்போ ஓவல்டின் கொண்டுவரச் சொல்லுகிறேனே... ஏதாவது கொஞ்சம் சிரமபரிகாரமா" என்று சொல்லிக்கொண்டே மேஜையைத் துழாவினார் எல்.எஸ்.பி. "இதுதான் இவருடைய புஸ்தகத்தின் கடைசி பாரம். இதிலேதான் நான் சொன்னேனே, அந்தக் கதை வந்திருக்கு; இந்த மனுஷனுக்குக் கற்பனை எங்கிருந்து தான் வருதோ; நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்; முகத்து முன்னாலே வச்சுச் சொல்லப்படாது; குணமும் அப்படித்தான்னா" என்று மேலும் தொடர்ந்து நாமாவளி நடத்தினார்.
சிதம்பரலிங்கம் சாவதானமாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, "ஏன் நிக்கறேள்? உட்காருங்கோ" என்று கையமர்த்திவிட்டு, "நானும் உங்களை வி.பி.ன்னே கூப்பிடப் போறேன்" என்று அபூர்வ ஹாஸ்யம் பிடித்தது போல சிரித்தார்.
எதிரில் இருந்த இருவரும் ஒத்துச் சிரித்தனர்.
"மிஸ்டர் வி.பி., நான் சொல்லுகிறேனேன்னு வருத்தப்படப்படாது; உங்களுடைய கற்பனை ரொம்ப ரா (raw : சாணை பிடிக்காதது), ரொம்ப ஒயில்ட் (wild : வளமுறை மீறிய அபூர்வ கற்பனைகளை ருசிபேதத்தைப் பாராட்டாமல் பிரயோகிப்பது). நம்ம ஜனங்கள் ரசிக்கிறதுக்குச் சித்தெ நாள் பிடிக்கும்..."
"என்னைப் படித்து ரசிக்கிறவாள் இங்கிலீஷ் ஞானம் அவ்வளவு இல்லாத நம்ம ஜனங்கள்தான்" என்றார் வி.பி.
"நீங்கள் சொல்றது வாஸ்தவம்தான். நம்ம ஜனங்கள்னு நான் சொல்லவறப்போ, இங்கிலீஷ் படித்த நம்ப ஜனங்களைத்தான் சொன்னேன். அவாள் ரஸித்தால்தான் உங்களுக்குப் பேர் வரும். அதற்கு நான் ஒரு வழி சொல்றேன்; உங்கள் கதைகளை இங்கிலீஷில் நான் மொழிபெயர்த்துச் சீமைக் கம்பெனியில் பிரசுரிக்கிறேன்; அப்புறம் உங்களுக்கு உலகப் புகழ் வராத போனா..."
5
விவகாரம் தம் கையைவிட்டுத் தாண்டிவிடுமோ என்று பயந்த எல்.எஸ்.பி., "நான் இன்னொன்னு உனக்குச் சொல்ல மறந்து போச்சே... இதோ காப்பி வந்துட்டுது, முதல்லெ சாப்பிடு" என்று ஸர்வரிடம் இருந்த ஓவல்டினை வாங்கி மரியாதையாக ஆற்றிப் புரொபெஸரிடம் கொடுத்துவிட்டு, "கிட்டு, நம்ப ஸாரிடம் முதல்லெ ஊத்தப்பத்தை எடுத்து வையடா; என்ன, முறுகலாக் கொண்டாந்தியா? காபியெ அப்படியே ஆத்தாமே பெஞ்சிலே வய்யி. எங்கே ராமலிங்கம், இப்படி வெத்திலையெ எடுத்தா" என்றார் எல்.எஸ்.பி.
"சீமையிலா! என் புஸ்தகமா?" என்ற பெருமிதத்தில் எதிரில் இருந்த கண்ணாடி அலமாரியில் தோன்றிய மங்கிய பிம்பத்தைப் பார்த்துத் தலையைக் கோதிவிட்டுக் கொண்ட வி.பி.க்கு ஊத்தப்பத்தில் விசேஷ ருசி தென்பட்டது. புரொபெஸரது மேதையும் ஊத்தப்ப ருசியும் தம்முள் எது பெரியது என்பதற்காக அவரது மன அரங்கில் போட்டியிட்டன.
"நம்ம புரொபெஸர் தமிழிலே லிட்ரரி கிரிட்டிஸிஸம்னா என்னான்னு ஒரு புஸ்தகம் எழுதப் போறார்; அதுவும் நம்ம கம்பெனிக்கு எழுதப் போறார்; அதிலே தமிழ்ப் புது இலக்கியம் என்பது பற்றி ஒரு அநுபந்தமும் உண்டு" என்றார் எல்.எஸ்.பி.
"சபாஷ்! இப்பொ அதுதான் வேணும், வாசிக்கிறவாள் எல்லாம் மாடு பருத்திக்கொட்டை தின்கிற மாதிரி, எதையானாலும் விதரணை இல்லாமல் வாசிக்கிறா."
"மாடு பருத்திக்கொட்டை தின்கிறாப்போலே, என்ன அபூர்வமான கற்பனை!..." என்று கண்ணை மூடிக்கொண்டு அந்த 'அபூர்வ கற்பனை'யை அசைபோட்டார் புரொபெஸர்.
"என்ன வி.பி. மணி பத்தரை ஆயிட்டுது. லாஸ்ட்டு பஸ் போயிடப்படாது; நீ எதுக்கு வந்தேன்னு தெரியும்! நாளைக்குப் பத்து மணிக்கு இந்தப் பக்கமா வா..." என்றார் எல்.எஸ்.பி.
"என்னடா எல்.எஸ்.பி. என்னை ஒனக்குத் தெரியாதா? நாளை இல்லாட்டா, நாளன்னிக்கே வர்றேன்; வெளியே ஒரு நிமிஷம்..." என்று கொண்டே எழுந்து நடையைத் தாண்டி நின்றார்.
6
எல்.எஸ்.பி. நடைவாசலில் நின்றார்.
"ஒரு எயிட் அனாஸ் இருந்தாக் குடு" என்றார் எழுத்தாளர்.
கையில் வைத்திருந்த எட்டணாவை எல்.எஸ்.பி. இலக்கிய சேவைக்காகச் சம்பாவனையாக அளித்துவிட்டு, இருளில் மறைந்த திருவுருவத்தைத் திரும்பிப் பாராமல் உள்ளே வந்து உட்கார்ந்தார்.
"அபூர்வ ஆசாமிதான்; ஒத்தைக் கட்டை; உக்காத்தி வச்சு எழுத வைக்கறதுதான் கஷ்டம்" என்று புரொபெஸரிடம் விளக்கினார். சம்பிரதாயபூர்வமாகச் சிதம்பரலிங்கம் பிள்ளை காட்டிய இங்கிலீஷ் மோகத்தை வேட்டுவைப்பதாக அவர் பாவனை.
"அதென்ன அப்படி எண்ணிவிட்டீர்கள்! எனக்கு இந்த வயசுக் காலத்திலே படிக்கிறதாவது, மொழி பெயர்க்கிறதாவது!..." என்றார் சிதம்பரலிங்கம்.
"செய்ய வேண்டியதுதான்; நீங்கள் செய்யாட்டா, யார் செய்யறது? அதிருக்கட்டும்; உங்கள் புஸ்தகத்தை இந்த மார்ச்சில் முடித்துவிட்டால் வருகிற வருஷத்துக்குப் பாட புஸ்தகமாக வைக்க முடியுமா? முன்னுரையும் சுருக்காகக் கொடுத்துடுங்கோ. அப்புறம் வேறே என்ன?..."
7
ராமலிங்கம் ஒரு செக் புஸ்தகத்தை நீட்டினான். "ஏதோ ஐந்நூறு ரூபா போட்டிருக்கேன்; என் சக்திக்கு ஏற்றது" என்று செக்கில் கையெழுத்திட்டுவிட்டு மரியாதையாக இரண்டு கைகளாலும் நீட்டினான்.
"அது கெடக்கட்டும்னா; செக்தானா பிரமாதம்? நாளைக்கு வந்து முன்னுரையை வாங்கிக்கொண்டு போயிடச் சொல்லி விடுங்கோ; புஸ்தகம் ரெடியாத்தான் இருக்கு; ஒரு வாரத்திலே அனுப்பறேன்" என்று சொல்லி எழுந்தார்.
"நானே காலையில் வருகிறேனே" என வழி அனுப்பினார் எல்.எஸ்.பி.
சிதம்பரலிங்கக் கையெழுத்துப் பிரதி, பிரசுராலய க்ஷேத்திராடனம் புரிந்து புண்ணியம் சம்பாதித்தது என்பதை அறியாததற்குக் காரணம் தொழிலில் அவர் புதிது என்பதுதான்.
"ராமலிங்கம் அந்தப் பித்துக்குளி கணக்கிலே ஒரு எட்டணா கைப்பத்தெழுது; பொணம் எப்பப் பாத்தாலும் சமய சந்தர்ப்பம் தெரியாமெ வந்து கழுத்தை அறுக்கிறது, எதாவது தத்துப்பித்துனு..."
"எல்லாம் நீ குடுக்கற எளக்காரந்தான், அந்த நாய் மூஞ்சிலியே வந்து நக்க வருது. இந்தப் பயகள்கிட்ட நீ பொஸ்தகத்தை வாங்காதே, வாங்காதே, மானம் போறதுன்னு நான் எத்தினி நாள் மண்டையை உடைச்சுக்கிறது?" என்று கடிந்து கொண்டார் பங்காளி ராமலிங்கம்.
"போகட்டும் பொழைச்சுப் போறான். அவன் கதைதானே நிறைய விக்கிறது? இந்தக் கிழட்டு ராஸ்கல் பிடிச்ச பிடியில் ரூ.500 கறந்துவிட்டானே!"
"நீ வடிகட்டின முட்டாள்!"
"புஸ்தகம் பாடபுஸ்தகமா வந்தா அப்ப யார் முட்டாளோ!"
"வராவிட்டாலோ?"
"இந்த வருஷம் இல்லை என்றால் அடுத்த வருஷம்; அது லாஸ் இல்லை(நஷ்டமில்லை)."
"இந்த எழுதற பயல்கள் எல்லாருமே திருட்டுக் கூட்டம்; சொன்னாச் சொன்னபடி நடக்க மாட்டான்கள்; பொஸ்தகக் கடை வக்கிறதைவிடப் பொடலங்காய் விக்கலாம்."
"புடலங்கா அழுகிப் போகும்டா முட்டாள்!"
8
ராம பத்மா பிரசுரகர்த்தர்கள் லிமிட்டெட் என இலக்கிய சேவைக்கெனவே உதயமான கம்பெனியின் நடையைவிட்டு இறங்கி, இருட்டுக்குள் தான் என்ற பேதம் அற்று லயித்துப் போன வி.பி.யை யார் என்ன சொன்னாலும் அவர் பிறவி எழுத்தாளர்தாம்.
இந்த இலக்கிய சிங்காதனம் கிடைக்கு முன்பே, தம்முடைய பெயரின் மேல் அவருக்கு வெறுப்பு உண்டு. இலக்கிய சிங்காதனம் தம்முடைய மானஸிக நிச்சயத்தைப் பொறுத்தவரையாவது கிடைத்துவிட்ட பிற்பாடு, தம்முடைய தகப்பனார் வழிப் பாட்டன் பேரில் இந்தப் பெயரை முன்னிட்டு வெறுப்பு ஸ்திரப்பட்டது. "மாட்டுக்கு பருத்தி விதை வச்சியா, வண்டியை இழுத்துக் குறட்டு ஓரமாக விட்டுவிட்டு, போயி சுப்பையாத் தேவனைச் சத்தங் குடுத்துட்டு வா" என்று அதிகாரம் செய்வோரிடம், இடுப்பில் துண்டை வரிந்துகொண்டு கும்பிக் கொதிப்பை ஆற்றிக் கொள்ள முயலும் ஜீவன்களுக்குப் பலவேசம் என்று பெயர் இருந்தால் முழுவதும் பொருத்தமாக இருக்கும்.
அன்று, சென்ற யுகம் என மனக்குறளி காலநிர்ணயம் செய்யக்கூடிய ஒரு காலத்தில், தகப்பனாருடைய சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு அம்பாசமுத்திரம் உயர்தரப் பாடசாலைத் தலைமை ஆசிரியர் முன்பு, சிவப்பு உல்லன் குல்லாவுக்கு வெளியில் நாய்வால் மாதிரி நீட்டிக் கொண்டிருந்த வாழை நார் முடிப்புச் சடையும், எண்ணெய்க்கசடு வழியும் நெற்றியில் சாந்துப்பொட்டும், காதில் தட்டும், பச்சைக் கோட்டும், பிறந்த நாளுக்கு ஆச்சி வாங்கித் தந்த ஜரிகைக் கரை நீலப்பட்டு வேட்டியும் சிலேட்டும் கையுமாக நின்று நாமகள் கோட்டை வாசல் திறக்க வரங் கிடந்தபோது, "என்னடா, பேருக்கு ஏற்றாற் போலப் பலவேசமாக இருக்கியே; பின்னாலே புலிவேசம் போட்டுடப்போறெ, கையில் என்ன இருக்கு, தெரியுமா?" என்று பிரம்பைக் காட்டி அவர் வரவேற்றது, மனசில் சிலாசாசனம் போலப் பதிந்து கிடந்தது. அதிலிருந்து தொடங்கிய இந்த நாமாவளி ஆதமசோதனை இன்றுவரை தீர்ந்தபாடில்லை.
குற்றாலநாதனான குறும்பலா ஈசனைச் சூசிப்பிக்கும்படி பலா ஈசன் என்பதன் திரிபா அல்லது திருடனிலும் தியாகியிலும் திபெத் என்ற வார்த்தையிலும் தன்னைக் கரந்து சகல ரூபனாக விளங்கும் அந்தச் சாட்சாத் பரம்பொருளின் கற்பனை இந்த இலக்கிய சோபையைப் பெற்றபோது... காலில் எதையோ சதக் என மிதித்தார். சாணிதான், வெறும் சாணி; பட்டணத்து ரோட்டில் சாணி என்பது அவருக்கு அபூர்வமாகத் தென்பட்டது; தமது ஊர் வளமைகளை நினைவுக்குக் கொண்டுவந்தது. கற்பனை இவ்வாறு பிறழ்ந்தது ஒரு விநாடிதான்; மறுபடியும் ஈசன் பலவேஷனாகத் தென்படுவது மாறி, பலவேசம் பிள்ளையே ராமலிங்கமும், எல்.எஸ்.பி.யும், சிதம்பரலிங்கமும், தாமுமாகக் காட்சியளித்துத் தம்முள் தர்க்கம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.
9
இருட்டோ , நல்ல நிம்மதியான இருட்டு; தேனாம்பேட்டை கண்ணாயிரம் பிள்ளை தெரு, 1/27 நம்பர் மேல் மாடியில் உள்ள 'கல்கத்தா இருட்டறை'க்கு (இது சரித்திரப் புளுகு அல்ல; சாசுவத உண்மை) போன மாசத்து வாடகைப் பாக்கிக்கும் இந்த மாதத்து வாடகைக்குமாக அந்திக்கால நாமாவளி செய்யவரும் வீட்டுக்கு உடமஸ்தரான பட்டணத்து முதலியார், இதுவரை காத்துக் கொண்டிருக்க வயிறுதான் பசிக்காதா, அவருக்கு வீடு வாசல் பிள்ளை குட்டி என்ற உலக பந்தங்கள் இல்லாத தனிக் கட்டையா? நிச்சயமாகப் போயிருப்பார்; நிம்மதியாகப் போய்ப் படுத்துத் தூங்கலாம்; சிறிது விடியற்காலையிலேயே எழுந்து வெளியே புறப்பட்டுவிட்டால், இந்தக் கடன்காரப் பயலிடம் எதையாவது வாங்கி, அவர் கடையண்டை கொண்டுபோய்க் கொடுத்துத் திருப்தி செய்துவிடலாம். இருந்தாலும் இந்த ராமலிங்கம் பயலுக்கு என்ன இவ்வளவு துடுக்கு?
நான் புஸ்தகம் கொடுக்காமல் போயிருந்தால் அந்தப் பயல் கதிதான் என்ன? இவன் என்ன மகா பங்கு போட்டானாம்! 200 ரூபா செக், அது ரொக்கமாகிறதுக்கு முன்னால் ஆயிரத்தெட்டு தடவை அமிஞ்சி செக்கென்று எல்.எஸ்.பி. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தானாமே. சிவனேன்னு பேப்பர் வித்தவனெக் கொண்டுவந்து இந்தப் புஸ்தகக் கம்பெனியிலே மாட்டிவிட்டு விட்டான். என் புஸ்தகம் வராதெ போனா, கடையைச் சாத்த வேண்டியிருந்திருக்கும்னு எல்.எஸ்.பி.தான் என்கிட்டச் சொன்னானே. என்னா, எல்.எஸ்.பி. பேசாமெ உட்கார்ந்திருக்கே. ராமலிங்கம் என்னைப் பார்த்து, பல்லு மேலே நாக்கைப் போட்டு, வெளியே போன்னு சொன்னானே, அவனை என்ன பண்ணினாத் தேவலை? நீதான் சொல்லு! நான் எவனையாவது என்னிக்காவது மரியாதைக் குறைவாக...
'அதை விடுங்க சார் வி.பி. ராமலிங்கம் பெரிய மனுஷ்யன், அவனை இப்படிப் பிரமாதப்படுத்தினா? நீங்கதானே தன்னை என்னமோ பெரிய மனுஷன்னு அவனையே நினைச்சுக்கும்படி செய்யறேள். போய்க் காபி வாங்கிண்டு வாடான்னு சொல்ல வேண்டியவனை ஒரு பொருட்டாக மதித்துப் பேசினால் தலைக்கொழுப்பு ஏறாதா? நான் தான் உங்களுக்கு மிந்தியே அவனுடைய யோக்கியதையைச் சொல்லியிருக்கிறேனே... நான் வேணும்னா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!'
'என்ன எல்.எஸ்.பி. உங்களை எனக்குத் தெரியாதா? நீங்களாவது மன்னிப்புக் கேட்பதாவது? நீங்க அன்னிக்கு வறத்துக்குக் கொஞ்சம் லேட்டாயிருந்தா பல்லை உதுத்துக் கையிலே குடுத்திருப்பேன் - ரைட்டர்னு மதிப்புக் கொடுக்காத மாட்டுக்குப் புத்தி வருத்த வேண்டாம்...'
'நீங்க அவனிடம் பேச்சு எதுக்கு வச்சுக் கொள்ளுகிறீர்கள்? இனிமேலிக்கி, எதானாலும் என்னிடம் சொல்லுங்கள், என்னிடம் கேளுங்கள்... கடைசி பாரம் புரூப் வந்திருக்கு; ராத்திரி கொண்டு போய்ப் பாத்துப்பிட்டுக் காத்தாலே எட்டு மணி வாக்கிலே அனுப்பிச்சுடுங்கோ... அந்தப் பாரத்தை ஏத்தி இறக்கிவிட்டா இந்த வாரத்துக்குள்ளாறயே புஸ்தகத்தைக் கொண்டு வந்துடலாம்..."
(அப்படி வாடா மகனே. புரூப்பா வேணும்? கொடுத்தனுப்புறேன்... வாங்கிப் போட்டு வச்சாப் போறது. மன்னிப்புக் கேக்கட்டும். என் வீட்டு நடை வாசல்லெ வந்து நிக்க வைக்கிறேன்...)
10
'எல்.எஸ்.பி., அந்தப் பாரத்தை இப்படிக் குடுங்கொ. காத்தாலெ தானே வேணும்? நானும் லைபரரிக்கு வர்றேன்; அப்பொ கொண்டு வந்து போட்டுவிட்டுப் போயிடறேன்...'
'என்ன ஸார் வி.பி., என் கஷ்டம் உங்களுக்குத் தெரிய மாட்டேன்கிறதே..."
'எல்.எஸ்.பி. உங்களைப் பற்றி எனக்கு மனஸிலே கல்மிஷமே இல்லை. ராமலிங்கம் வரட்டும்; புரூப்பை வாங்கிக்கொண்டு போகட்டும்... ஒரே பேச்சுத்தான்... ரெண்டு வார்த்தைக்காரன் நான் அல்ல.'
'...ஸார்... ஸார்...'
'...யார்... அது?...'
'நான் தான் ராமலிங்கம், என்ன ஸார். என் பேர்லெ பிரமாதமாகக் கோவிச்சுண்டியளாமே? அன்னிக்குப் பேப்பர் கம்பெனி சிவசாமி இருக்கான்னோல்லியோ, அவன் பில்லுலெ பேசினதுக்கு மாறா, பவுண்டுக்கு ஒரு தம்பிடி ஜாஸ்தி பண்ணிக் கணக்குப் பண்ணி அனுப்பிட்டான். பாரம் கம்போஸாயி ரெடியான பிறகு பிரஸ்காரன் டிலே பண்ணுவானோ? சிவசாமி என்னைக் கேக்காமே காயிதத்தைப் பிரஸ்ஸுக்கே அனுப்பிச்சிட்டான். பிரஸ்காரனும் இங்கே ஒரு வார்த்தை சொல்லாமே பாரத்தை மிஷின்லே உட்டுப்புட்டான்; அப்புறம் பில் வறது. அந்தச் சமயத்திலே மனசு எப்படி இருந்திருக்கும்! இந்தப் புஸ்தக வியாபாரமே கேப்மாறி ஜாதிக்குத்தான் சரி... நீங்களும் வந்தியள்... நானும் என்னமோ எக்குத் தப்பா..."
'என்ன ராமலிங்கம், உன்னை எனக்குத் தெரியாதா? வா, இப்படி உட்காரு; புரூப் அன்னிக்கே ரெடியாகிவிட்டது; நீ பாரு, குழந்தைப் பிள்ளை மாதிரி இருக்கக்கூடாது; ராம பத்மா கம்பெனி பங்காளி நீ; அடுத்த தடவை நான் பார்க்கிறப்போ...'
'எக்ஸ்யூஸ் மி ஸார்' என்றான் ராமலிங்கம். எழுத்தாளர் ஸ்ரீமான் வி.பி. மன அரங்கில் ஒரு வெற்றி.
11
இந்த வெற்றி ஸ்ரீமான் வி.பி. அவர்களை 1/27 கண்ணாயிரம் பிள்ளை தெரு மாடியாகிய கல்கத்தா இருட்டறையின் வாசலுக்கே கொண்டுவந்துவிட்டது.
பூட்டில் கையை வைத்தார். இரண்டு பூட்டு!
உடம்பு ஜில்லிட்டது. வீட்டுக்காரப் பயல் எதிர்ப் பூட்டுப் போட்டுவிட்டானா?
'சட்! என்ன அசட்டுத்தனம். நேற்றுச் சாவியைத் தொலைத்த விபரீதத்தினால்தானே இந்த இரட்டைப் பூட்டு?'
"வெறும் கயிற்றரவு!" என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று படுத்தார்.
வெற்றி நிம்மதியிலே அசதி தாலாட்ட, தம்மை மறந்தார்.
12
"ஸார்! ஸார்!"
அயர்ந்த நித்திரையில் ராமலிங்க வெற்றி நாடகத்தில் மறுபடியும் மறுபடியும் உழன்று ரஸித்துக் கொண்டிருந்த இலக்கிய மேதை வி.பி.யை இந்த விகற்ப உலகுக்குச் சடபடவென்ற சத்தமும், ஏழாம் கிணற்றடியிலிருந்து வரும் "ஸார்" என்ற அழைப்பும் மல்லுக் கட்டி இழுத்து வந்தன.
"ஏது, வீட்டுக்கார முதலி விடியறத்துக்கு மிந்தியெ முற்றுகை போட்டுவிட்டானா?" என்ற உதைப்புடன், "என்ன முதலியார்வாளா, நேற்று வந்திருந்தீர்களோ? நான் ஒரு ஜோலியாய்ப் போனேன். வர்றத்துக்கு லேட்டாயிட்டது" என்று சமாதானம் சொல்லிக்கொண்டு கதவைத் திறந்தார்.
எதிரே ராமலிங்கம் நின்று கொண்டிருந்தார்; நீண்ட ஜிப்பா, மொராக்கோ தோல் பை சகிதம் நின்றிருந்தார்.
"ஏது! ராமலிங்கமா! வாருங்க உள்ளே" என்று அழைத்துக் கொண்டு சென்று நேற்றிரவு தமக்கு ஹம்ஸ தூளிகா மஞ்சமாக அசதியைப் போக்கிய ஜமுக்காளத்தின் பேரில் உட்கார வைத்துவிட்டு, காகிதப் பொட்டலத்தில் சுருட்டி வைத்திருந்த வெற்றிலை மடிப்பை எடுத்துக் கொண்டு அந்த ஜமுக்காளத்தின் வேறு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, காய்ந்து போன சுண்ணாம்பைச் சூர்ணமாக்கி, வெற்றிலையில் போட்டு மடக்கி வாயில் மென்று அதக்கிக்கொண்டு, "என்ன இவ்வளவு காத்தாலேலெ?" என்றார்.
ராமலிங்கம் வாய் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்திருந்தார். அதில் ரொக்கமாக ஒரு பத்து ரூபாயும் ஐந்து நாட்கள் தவணை கழித்துத் தேதியிட்ட 50 ரூபாய் செக்கும் இருந்தன. "ராமலிங்கம் கைவசமுள்ள புரூப்பைப் பார்த்துக் கையோட அனுப்பிச்சுட்டா ரொம்ப ஒத்தாசெயா இருக்கும்; புஸ்தகம் சீக்கிரம் வெளிவந்தால் எல்லாருக்கும் சவுகரியந்தானே?" என்று எழுதியிருந்தது.
"புரூப் எங்கே?" என்றார் வி.பி.
13
ராமலிங்கம் பேசாமல் எடுத்துக் கொடுத்தான்.
பேசாமல் எழுத்தெழுத்தாகப் பார்த்துத் திருத்திக் கொடுக்கலானார் எழுத்தாளர்.
மனசு ஒரு புதுமாதிரியான சுரம் பேச ஆரம்பித்தது.
நேத்துச் சோமாறிப் பயல் மாதிரி இந்த ராமலிங்கத்துடன் மல்லுக்கு நிற்காமல் உறுதியைக் காட்டினதுதான் செக்கும் பணமும் காலையில் சிட்டாகப் பறந்து வந்திருக்கிறது. ராமலிங்கம் என்ன பெட்டிப் பாம்பாக உட்கார்ந்திருக்கிறான்! என்ன மரியாதை! தாராளமாகப் பேசக்கூடப் பயப்படுகிறானே! இதுக்குத்தான் ஆத்ம சக்தின்னு பேரு. அறிஞ்சுதான் அஹிம்சையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் மகாத்மா. எனக்கு நேத்தே இந்த மாதிரிதான் நடக்கும்னு தெரியும்.
"என்ன ராமலிங்கம், உங்க பிரஸ்காரனுக்கு 'வந்தால்தான்' என்று எழுதினால் ஏன் இத்தனை தடவை திருத்தினாலும் இரண்டு வார்த்தை மாதிரி ஸ்பேஸ் போட்டு வைக்கிறான்? முதல் புரூப், இரண்டாவது புரூப், இப்போ கடைசி பாரம் புரூப். எல்லாத்திலேயும் ஒரே மாரடிப்பாக இருக்கு."
"மெட்ராஸ் பிரஸ்களில் எல்லாம் கம்பாஸிட்டர்கள் அப்படித்தான் போட்டுத் தொலைக்கிறான். என்ன எழவைப் பண்ணுகிறது..."
"எப்படியோ பார்த்துச் செய்; இந்த வாரக் கடைசியிலே புஸ்தகம் வந்து விடாது?" என விரல்களைச் சுடக்கு முறித்துக் கொண்டே கேட்டார்.
"ஏன், வெள்ளிக்கிழமையே வந்துடும். வெள்ளிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்குப் புஸ்தகம் ரெடியாயிடும்..."
"ராமலிங்கம், ஒரு நிமிஷம் இரேன், காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்; நான் தலையில் தண்ணியைக் கொட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்."
"இல்லெ ஸார்; எனக்கு வேலை இருக்கு; மாம்பலம் போகணும்..."
"அடே ஒரு நிமிஷம் இருடான்னா; என்னிக்கோ ஒரு நாள் தான் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, வேகமாக மாடிப்படி வழியாக இறங்கினார் எழுத்தாளர்.
"நீயா கூப்பிடுகிறாய்..." என்று யாரும் இல்லாத அறையில் சிரித்துக் கொண்டான் ராமலிங்கம்.
14
வீட்டுக்கார முதலியாரவர்களுக்கு,
அநேக கோடி நமஸ்காரம். தாங்கள் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் இங்கு வந்து சென்று கொண்டிருப்பது கேட்க வருந்துகிறேன். இத்துடன் ரூ.50க்கு ஒரு செக் வைத்து அனுப்பி வைத்திருக்கிறேன். நாளது தேதி வரையில் உள்ள பாக்கியையும் வருகிற மாத வாடகையையும் எடுத்துக்கொண்டு மீதியைத் தங்கள் வசம் வைத்திருந்தால், நான் கடைப்பக்கமாக வரும்போது பெற்றுக் கொள்ளுகிறேன்.
இப்படிக்கு தங்கள் வி.பி.
1/27, கண்ணாயிரம் பிள்ளை தெரு, தேனாம்பேட்டை, சனிக்கிழமை
ராம பத்மா பிரசுரம் லிமிட்டெட் முதலாளி ஸ்ரீ எல்.எஸ்.பி அவர்களுக்கு
நமஸ்காரம்.
தாங்கள் தங்களது சகபாடி ஸ்ரீ ராமலிங்கம் மூலமாக ரூ. 50க்கு அனுப்பியிருந்த செக்கைப் பாங்கியில் எடுக்க மறுத்துவிட்டார்கள். இதன் மூலம் எனக்கு இரண்டாவது தடவை அவமானம் விளைவித்துவிட்டீர்கள். எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டுக் கொத்தடிமை என நினைத்துக் கொண்டீர்களோ? இது ஜனநாயக உலகம். எழுத்துக்கும் எழுதுகிறவனுக்கும் எங்கும் மதிப்பு உண்டு. ராம பத்மா பிரசுராலயம் தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே தனக்கென ஒரு மாசு விளைவித்துக் கொண்டிருப்பது கண்டு பரிதபிக்கிறேன். தங்கள் செக்குக்குக் கௌரவம் கொடுத்து, நான் வேறு ஒரு நண்பரிடம் அனுப்பியதனால் ஏற்பட்டுள்ள விபரீத பலனை, இலக்கிய நலனை முன்னிட்டாவது கூடிய சீக்கிரத்தில் நேர்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.
(குறிப்பு: திரும்பவும் தாங்கள் ராமலிங்கத்தை அனுப்பவேண்டாம்.)
தங்கள் வி.பி.
1/27, கண்ணாயிரம் பிள்ளை தெரு தேனாம்பேட்டை புதன்கிழமை
15
கிணற்றில் கல் போட்ட மாதிரி ராம பத்மா கம்பெனி பேசாதிருந்துவிட்டது. அதையும் குற்றம் சொல்ல முடியாது. கவனத்தை இலக்கிய சேவையில் திருப்பி இருந்ததனால் இலக்கிய ஊழியரைப் பற்றிக் கவனிப்பதற்கு அதற்குப் போதில்லை.
வி.பி. நாளுக்கு நாள் துர்வாச விகாரம் படைக்க ஆரம்பித்துவிட்டார். அந்த நாய்ப் பயலுடைய புஸ்தகக் கம்பெனிக்கே போவதில்லை என்று தீர்க்கமாக வீட்டோ டு உட்கார்ந்திருந்தார். அனுப்பப்பட்டிருந்த பத்து ரூபாய் அவரது வைராக்கியத்துக்கு ஒத்தாசையாக இருந்தது.
வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும். வீட்டுக்கார முதலியார் வக்கீல் மூலம், வீட்டை 24 மணி நேரத்துக்குள் காலி செய்யும்படி கொடுத்திருந்த நோட்டீஸ் வந்தது.
"அயோக்கிய ராஸ்கல்; இந்த நொள்ளை ரூமுக்கு நோட்டீஸ் வேறெயா? கார்ப்பரேஷன் ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் சொல்லி இந்தப் பயலுக்குத் தண்ணிக் காட்டுகிறேன்" என்று காலி அறையினிடம் கறுவிக் கொண்டிருந்தார்.
"வி.பி. கதவைத் திற, என்ன, இந்த நேரத்திலா தூங்குகிறாய்?" என்ற எல்.எஸ்.பி. குரல் கேட்டது.
16
தமது கோபத்தை தெரிவிக்கும் பாவனையில் பதில் பேசாமல் கதவைத் திறந்தார் வி.பி.
"என்ன சொன்னாலும் வி.பி. நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. உன் வேலைன்னா பிரஸ்காரன் ஒரு நொடியிலே முடிச்சுக் குடுத்துடறான். இந்தக் கவர் டிசைனைப் பாரு. இங்கிலீஷ் கெட்டப் மாதிரி; யாரு இந்த காலத்திலே உனக்கு இந்த மாதிரி இன்டரஸ்ட் எடுத்துண்டு செய்யறா?
"புஸ்தகம்னா இதல்லவா புஸ்தகம்? உனக்குத்தான் பொஸ்தகம் போடற விவகாரம் அத்துப்படியாயிருக்கு; உன்னைப்போல யாரிருக்கா.
"அதிருக்கட்டும்; அன்னிக்கி என்ன அப்படி கன்னா பின்னான்னு கடுதாசி எழுதிவிட்டே? நிதானம் வேண்டாம்? பின்னெ உனக்கும் ராமலிங்கத்துக்கும் வித்தியாசம் என்னா? அதெப் பார்த்த பிற்பாடு என் மனசு நொந்தே போச்சு. உனக்கு என்ன புள்ளையா குட்டியா?... ஏகக்கட்டை. அந்த ஒம் பணந்தான் பத்திரமா என்னிடம் இருக்கட்டுமே..."
"அது உனக்குத் தெரியாதா? வீட்டுக்காரன் நோட்டீஸ் கொடுத்து விட்டான்; அதுதான் அவ்வளவு கோபம்; உன்னை எனக்குத் தெரியாதா?" என்றார் இரண்டாவது பிரம்மா.
"இதுதானா பிரமாதம்! நாளைக்கே கிளியர் பண்ணிட்டா போச்சு. ஏன் இங்கே கெடந்து திண்டாடறே? வாடகைக்கு வாடகை மிச்சம்; குஷியாப் போதுபோக்கக் கம்பெனிக்குக் கம்பெனி ஆச்சு..."
"நான் வாடகை கட்டாயம் குடுக்கத்தான் செய்வேன்; அப்படியானா வறேன். சும்மா வந்திருக்க முடியாது..."
"அட சட்! வாடகையா பிரமாதம்! உனக்கு எவ்வளவு எடம் வேணும்? சும்மா இருக்கிற நேரத்திலே அங்கே வருகிற புரூப்பைப் பார்த்தா கணக்கு அட்ஜஸ்ட் ஆயிடுது; நீ உன் மூட்டையை இப்பவே கட்டு. ரிக்ஷாவிலேயே போய்விடலாம்."
(முற்றும்)
கலைமகள், ஏப்ரல் 1945
------------
59. நியாயம்
தேவ இறக்கம் நாடார் - அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ, எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த 'டமிலில்' எழுதுவது போலவே எழுதி விடுவோம். நல்ல கிறிஸ்தவர். புரோட்டஸ்டாண்ட், ஸர்கில் சேர்மனாக இருந்து, மிஷனில் உபகாரச் சம்பளம் பெற்று வருபவர். இந்த உலகத்திலே கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காகப் பாடு பட்டதனால் ஏற்படப்போக இருக்கும், இந்த உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்திருக்கிறார்.
ராஜ பக்தியும், சமூக சேவையும் ஒத்துவராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவியில் கொஞ்சம் பெருமையுண்டு. ஒரே கல்லில் இரண்டு காக்கையடித்தால் பெருமையடையமாட்டார்களா? அவரும் மனிதன் தானே?
அவருடைய மதபக்தி, ராஜ பக்தியுடன் போட்டியிடும். ஞாயிற்றுக்கிழமை வரத் தவறினாலும், அவர் கடவுளால் கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாளில் கோவிலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டார். சில சமயம் பால்ராஜ் ஐயர் அவர்கள், ஓர் இருபதாம் நூற்றாண்டு இந்திய யோவான் ஸ்னானகனைப் போல், "ஏ! விரியன் பாம்புக் குட்டிகளே! உங்கள் பாபங்களை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி, கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வழியாக, அந்த மனுஷகுமாரன் வழியாக, பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை முழங்கால் படியிட்டு வேண்டிக் கொள்ளுங்கள்.
ஏ! விரியன் பாம்புக் குட்டிகளே!..." என்று உற்சாகமாகப் பிரசங்கிக்கும்பொழுது, தமது அருமை மேரிக் குஞ்சு முதல், அங்கு வந்திருக்கும் வெள்ளைக்கார பிஷப் உள்பட எல்லாம் இரட்டை நாக்குகளை நீட்டிக் கொண்டு நெளிவதுபோல் தோன்றும். வெகு உருக்கமாக மன்றாடுவதற்காகக் கண்களை இறுக மூடிக் கொள்வார். அவ்வளவு மதபக்தி. பைபிலை இந்த உலகத்துக்கே சரியான ஓர் இந்தியனின் பீனல் கோடாகவே மதித்தார். சமணரைக் கழுவேற்றியதாக மார் தட்டிக் கொள்ளும் திருவாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கூட அவ்வளவு இருக்குமோ என்னவோ?
2
அன்று கோர்ட்டில் கூட்டம் எப்பொழுதும்போல். நியூஸென்ஸ் சார்ஜ், லைசென்ஸ் இல்லாத குற்றம், சின்னத் திருட்டு, 'பெரிய' விவகாரங்களுக்குப் பிள்ளையார் சுழி, சின்னக் கடன் இத்யாதி.
பஞ்சபாண்டவர் மாதிரி இருந்த அந்த மாஜிஸ்திரேட்டுகள், வெகு ஊக்கமாக நியாயத்தை நிறுத்துப் பறிமாறிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஒரு கேஸ்தான் அப்பா!
ஒரு எஸ்.பி.ஸி.ஏ. இன்ஸ்பெக்டர், அவர் பிடித்த கேஸ், காயம் பட்ட குதிரையையும் வண்டிக்காரனையும் பிடித்த விதத்தை விரிவாகக் கூறிவிட்டு இறங்கினார்.
தேவ இறக்கம் நாடாருக்கு இந்த அநியாயமான குற்றத்தைக் கேட்டவுடன் தாங்கமுடியாத கோபம். இனிமேல் இம்மாதிரி நடக்காதபடி ஒரு 'முன்மாதிரி'யாகத் தண்டிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்.
"யாரு ஓம்பேரென்னா!"
"சொள்ளமுத்துப் புள்ளெ."
"சொள்ளமுத்து இன்னு சொல்லுமேவே, புள்ளை என்ன புள்ளை! கூண்டுலே ஏறுனாப்ப? நீரு புண்ணாப் போன குருதையெ வண்டிலே மாட்டலாமா? என்னா மரங்கணக்கா நீக்கிராவே; ஒமக்கு புத்தியில்லே? வாயில்லாச் சீவனை; ஊமையாகவே! என்ன நிக்கிரா?"
"தரும தொரைகளே! எங்குருதயெ புள்ளமாருதி வளக்கேன். வவுத்துக் கொடுமை; இல்லாட்டாகே நாம் போடுவேனா சாமி? இனி மேலே இப்பிடி நடக்காது சாமி. ஒரு தடவை, தருமதொரைக மன்னிக்கணும்."
"நல்லாச் சொன்னீரு! வேலையத்துப் போயாவே நாங்க இங்கெடந்து பாக்கம்? 5 ரூபா அவராதம்; தவறினா ஒரு மாசம். சரிதானே... அப்புறம்" என்று மறுபக்கம் திரும்பினார்.
3
சுடலைமுத்துப் பிள்ளை ஆவேசம் கொண்டவன்போல் ஓடிவந்து காலைப் பிடித்துக் கொண்டு, "தரும துரைகளே! இந்த ஒரு தடவை மன்னிக்கணும். புள்ளே குட்டி வவுத்துல அடியாதிங்க..."
"பின்னாலே போசாத்தானே!" என்று தேவ இறக்கம் நாடார் கர்ஜித்தார். கோர்ட் ஆர்டலி, சுடலைமுத்துப் பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே போனான்.
இரவு, தேவ இறக்கம் நாடார் படுத்துக் கொள்ளுமுன் முழங்கால் படியிட்டு ஜபம் செய்கிறார்.
"பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! உமது நாமம் பரிசுத்தப்படுவதாக! உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய அப்பத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே... ஆமென்!"
கண்ணை விழித்து எழுந்தார். அந்த அஞ்ஞானி வண்டிக்காரனைப் பற்றி ஞாபகமேயில்லை!
(முற்றும்)
மணிக்கொடி, 22-07-1934
-----------
60. நியாயந்தான்
வடலூர் குமாரு பிள்ளை கொழும்புக்குப் போவதென்று ரெயிலேறிய பொழுது ஐ.பி. கொடுத்துவிட்டு மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டுதான் புறப்பட்டார். தகப்பனாரது திடீர் மரணத்தால் மேல் விழுந்து அமுக்கிய கடன்காரர்களுக்குப் புகல் சொல்ல அந்த ஒரு வழிதான் தெரிந்தது. மேலும் அவர் மற்றவர்களைப்போல் 'ஒதுக்கிவைத்து'க் கொண்டு கைகளை விரிக்கவில்லை. அப்பொழுது அவருக்கு அநுபவம் போதாது. பள்ளிக்கூடம் என்ற சொப்பன உலகத்தின் வாசகங்களை உண்மையாகவே நம்பி மோசம் போனார். உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுக்கவும், பெரியவர்கள் பிரசங்க மேடையில் வாசாமகோசரமாகப் பேசவும் முன்னோர்கள் எழுதி வைத்துப் போனதை உபயோகித்துப் பார்த்தார். கை சுட்டது. தூத்துக்குடி போகும் வண்டியின் மூன்றாவது வகுப்பில் உட்கார்ந்த பின்புதான் சுமையை இறக்கி வைத்த ஆசுவாசம் ஏற்பட்டது.
கொழும்பிலும் அவரது லக்ஷ்யம் பிரமாதப்பட்டுப் போகவில்லை. வர்த்தக உலகைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை ஒன்றும் அவருக்கு இல்லை. ஏதாவது வெங்காயக் கிட்டங்கியில், சொன்னதைச் செய்துவிட்டு நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்பதே நோக்கம். தாமோ தனிக்கட்டை! ஊரில் உள்ள தாய்க்கு மாசம் மூன்று ரூபாய் அனுப்ப வழி கிடைத்தால் போதும் என்பதே அவரது பரிபூரணமான ஆசை.
கொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்கிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும். அது பிள்ளையவர்களுக்குத் தெரியாது. டிக்கட்டுக்குப் பணம்; அதற்கு மேல் ஒருவேளைச் சாப்பாட்டுக்குச் சில்லறை; இதுதான் அவரது ஆஸ்தி. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கொழும்புக்கு வருகிறவர்கள், மேல்துண்டையே மூலதனமாகவும் ஜாமீன் பேர்வழியாகவும் கொண்டு வருகிறவர்களிடம் வசூல் பட்டியலையோ, ஸ்டோ ர் அறையின் சாவியையோ ஒப்படைத்து விடுவார்களா? அவ்வளவு வேண்டாம் - நட்ட நடுப் பகலில் கடைக்குள் ஏறி அவர்கள் கண் முன்பே நடமாட விடுவார்களா?
வெள்ளைக்காரர் 'ஸ்லேவ் ஐலண்ட்' என்ற யதார்த்தமான பெயரைக் கொடுத்திருக்கும் சரகத்தில் வசிக்கும் கிட்டங்கிப் பிள்ளைமார்களும் முதலாளிமார்களும் பிள்ளையவர்களை நம்பாததில் அதிசயமில்லை. அவர் அந்தப் பக்கத்தில் ஏறியிறங்காத கடை பாக்கியில்லை; ஜனசங்கியைக் கணக்கு உத்தியோகஸ்தரின் நுணுக்கத்துடன் கடை க்ஷேத்திர யாத்திரை நடைபெற்றது. இதற்குள் மூன்று நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. அன்னிய நாட்டான் பிச்சை எடுக்க ஆரம்பித்தால் இங்கிலாந்து முதலிய இடங்களில் தாய்நாடு திரும்புவதற்காவது வழியுண்டு. பிடித்துக் கப்பலேற்றி விடுவார்கள். கொழும்புச் சட்டங்கள் எப்படியோ? வடலூர் குமாரு பிள்ளையின் மனம் பிச்சை எடுக்க ஒப்பவில்லை. அதனால்தான் அப்படிப்பட்ட சட்டம் அங்கிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல் போய்விட்டது.
வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம். இந்த உண்மையைப் பிரிட்டிஷ்காரர் மட்டிலும் தெரிந்துகொண்டிருக்கவில்லை; கொழும்புப் பிள்ளைமாரும் தெரிந்து கொண்டிருந்தனர். ராணுவ பலத்தைப் பொறுத்தவரையில் யானைக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்பொழுது அதன்மீது ஊரும் எறும்புக்கும் அது கிடைக்கும் அல்லவா?
2
அதனால் வெள்ளைக்காரனுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் தம் நம்பிக்கையைப் போட்டுவிட்டு, பக்தி விஷயத்திற்காக மட்டிலும் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலைக் கட்டி அதற்குப் பக்கத்தில் கிணறு ஒன்றையும் வெட்டிப் போட்டார்கள். பெரிய முதலாளிமார்கள் தர்பாராக வந்து, கடைச் சிப்பந்திகள் தண்ணீர் இறைத்து ஊற்ற, குளித்துவிட்டுப் பிள்ளையாரை அவரவர் உயர்வு ஏர்வைகளுக்குத் தக்கபடி வழிபட்டுவிட்டுச் செல்வார்கள். தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு, டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகிவிடவில்லை. அதிகாலை ஏழு மணிக்கு அந்தப் பகுதியில் நோக்கும் திசை எல்லாம் 'நடமாடும் கோயில்கள்' தாம். பிள்ளையார் கோயிலின் நைவேத்திய விசேஷங்கள் சிறிய சிப்பந்திகளிடையே பக்திக் கவர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தது.
வடலூர்ப் பிள்ளையும் சித்தி விநாயகர் பக்கத்தில் கோயில் கொண்டருளினார். பிள்ளையார் மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ள, எனக்குத் தேவதையின் மனோதத்துவ சாஸ்திரம் தெரியாது. பிள்ளையவர்கள் மனசில் மட்டிலும் கசப்பு, கசப்பு, கசப்பு. கோயில் ஐயர் ஒரு நாளைக்கு மட்டிலும் ஏதோ கொடுத்தார். அதில் அவர் மனசு அபார மகிழ்ச்சி கொண்டுவிடவில்லை. மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின; நியாயமானவை என்று அறிவை நம்பும்படி வற்புறுத்தின.
இப்படிப்பட்ட தத்துவ ஆசிரியனாகப் பரிணமிக்கும் சமயத்தில்தான் உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பக்திக் கண்கள் வடலூர்த் துயரத்தின் பிண்டத்தைக் கண்டன. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கண்கள் மூன்று தினங்கள் அவரை அதே இடத்தில் பார்த்தன. உமையாள்புரத்து ஆசாமி ஆற அமரச் சிந்திப்பதில் விசேஷத் தன்மை வாய்ந்தவர். அதனால்தான் மூன்றாம் முறையாக வடலூர்க் குமாரு பிள்ளையைக் கண்டபொழுது அவர் மூர்ச்சையுற்றிருக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பிள்ளையவர்கள் காற்றைப் புசித்து வாழும் கரடிவித்தை கற்றவரல்ல. கற்றிருந்தால் இந்தக் கொழும்புப் பிரயாணமே சித்தித்திருக்காது. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதான் அவருக்கு மூர்ச்சை தெளிவித்து, "உனக்கு என்ன செய்கிறது?" என்றார். "பசிக்கிறது" என்றார் வடலூர்ப்பிள்ளை சுருக்கமாக. உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஓர் உயிர்ப்பிராணிக்கு உதவி செய்வது என்று உறுதி கொண்டுவிட்டார். காரணம், அன்று விடியற்காலந்தான் வேலைக்காரப் பையன் ஒருவன் முறைத்துக் கொண்டு வெளியேறி விட்டான். எண்ணெய் தேய்த்துவிடுவதிலும் கால் பிடிப்பதிலும் நிபுணன் அவன்.
உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கடையில் சிப்பந்தியாயிருப்பதில் அவருக்கு அவ்வளவு அபார மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. சேவகம் என்பதற்காக அதிருப்தியும் ஏற்படவில்லை. கடைசியாக விநாயகக் கடவுளின் அருள் என்ற நம்பிக்கை ஏற்படாததும் ஆச்சரியந்தான். ஏனென்றால் விருத்தாந்தத்தைக் கேட்ட ஐந்தாறு நாட்களுக்கு முன் தான் 'வேலையில்லை போ' என்று விரட்டிய உமையாள்புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, விநாயகக் கடவுளின் பரிபூரணமான அருள் அது என்று நினைத்தார். ஆனால் பிள்ளையவர்கள் தமது பிரக்ஞையிழப்பின் அருள் என்று நம்பினார்; அப்படி வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை.
3
பிள்ளையவர்களுக்கு இருந்த ஒரே ஆசையெல்லாம் திருநெல்வேலிக் கடன்காரர்களைத் தம் காலடியில் வைத்து ஆட்டிப் பார்க்க வேண்டும் என்பதே. அது சாத்தியமில்லாததால், தம்முடன் நெருங்கி, தாம் வசிக்க நேர்ந்த சமுதாயத்தைக் காலடியில் கொண்டுவந்து வைத்து, ஒரு நாளைக்காவது கண்ணில் விரலைவிட்டு ஆட்ட வேண்டும் என்பதே! இந்த ஆசை, பசியின் சாயை மறைய மறையப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்தது. உமையாள்புரம் பிள்ளை, வடலூர்ப் பிள்ளையைப் பண வசூலுக்கும் சரக்குப் பிடிக்கவும் அனுப்ப ஆரம்பித்தார். பல முதலாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்.
கொழும்புக் கடையில் உதவித் தொழிலுக்குப் போகிறவர்களுக்கு எப்பொழுதாவது தனிக்கடை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்; அல்லது ஏற்படும். பிள்ளையவர்கள் விஷயத்திலும் இது ஏற்பட்டது.
வடக்கத்தி சேட் ஒருவன் இவரை நம்பிப் பணம் கொடுக்க உத்தேசித்தான். தவிரவும் உமையாள்புரம் பிள்ளையும் ஏதோ உதவினார். ஒரு நல்ல நாளில் வடலூர்ப் பிள்ளையின் சொந்தக் கடை திறக்கப்பட்டது. முதலாளி ஸ்தானத்தைப் பெற்றுவிட்டால் வியாபார அநுபவம் வந்துவிடுமா? அதனால்தான் ஆள்வைத்துக் கடை நடத்த வேண்டியதாயிற்று. வியாபார நுணுக்கம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் முதலாளியான பிறகு வைப்பாட்டி வைத்துக் கொள்ளாமல் இருப்பது கௌரவக் குறைவு. அதை உத்தேசித்தோ அல்லது இயற்கையின் தேவையாலோ மலிவான சிங்கள வைப்பாட்டியை வைத்துக்கொண்டார்.
பிள்ளையவர்கள் தொழிலை ஆரம்பித்த நேரத்தின் விபரீதமோ என்னவோ? வர்த்தக உலகத்தில் பணம் புரளுவது கஷ்டமாயிற்று. பெரிய பெரிய விலாசங்கள் இரண்டு மூன்று தொடர்ந்தாற்போல் முறிந்தன. கடன்காரரின் பிடுங்கல் அதிகமாயிற்று. பிள்ளையவர்களின் வியாபார ஓட்டமும் அவ்வளவு தெளிவில்லை. திருநெல்வேலிக் கதை மறுபடியும் கொழும்பிலும் 'ஒன்ஸுமோர்' அடித்துவிடுமோ என்ற பீதி அதிகமாயிற்று. ஆனால் மிரண்டுவிடவில்லை. பேச்சு வெளிவராமல் இருக்க, சரக்குகள் அதிகமாக வாங்க ஆரம்பித்தார். திடீரென்று மூன்று கிடங்குகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன.
அன்று சாயங்காலத்திற்குள்ளாகவே அவ்வளவிலும் லக்ஷ ரூபாய்க்குச் சரக்கு. சாயங்காலம் கடையடைக்கும்பொழுது சிப்பந்திகளைக் கூப்பிட்டுச் சம்பளமும், அதற்குமேல் ஐந்தும் பத்தும் கொடுத்து, கணக்குத் தீர்ப்பதுபோல் காட்டிக் கொள்ளாமல் கண்களில் மண்ணைத் தூவினார். கடை, கிடங்கு எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டி சீல் வைத்தார்; சிங்களத்தியின் வீட்டுக்குப் போய்விட்டார்.
4
மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் கடை திறக்கப்படவில்லை. வடலூர்ப் பிள்ளையும் முறிந்துபோனார் என்ற செய்தி காட்டுத் தீப்போலப் பரவியது. சேட்ஜிகளும், சிறிய கடைக்காரர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளவில்லை; மனமார, வாயாரத் திட்டினார்கள்.
சிங்களத்தியின் வீட்டில் இருப்பதாகத் துப்புத் தெரிந்தது. எல்லாரும் ஒருமிக்க வீட்டுக்குள் புகுந்தார்கள். "பேமானிப் பயலே!..." என்று ஆரம்பித்தார் சேட்ஜி. மற்றவர்களும் அவர்கள் குலாசாரப்படி திட்டினார்கள்.
பிள்ளையவர்கள் அமைதியாகக் கல்லைப்போல் இருந்தார்... சந்தடி ஓய்ந்ததும், "உங்களை ஏமாற்றுவது என் நோக்கம் அல்ல... கடன் எல்லாவற்றையும் பைசா விடாமல் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெரிய முதலாளிகளே தயங்குகிறார்கள். ஒரே சமயத்தில் எல்லாரும் கேட்டுவிட்டால் எல்லாருக்கும் நஷ்டமாகுமே என்பது என் வருத்தம். இப்பொழுது சொல்லுகிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் கடனைத் தவணையாகப் பெற்றுக் கொள்ளுகிறீர்களா? அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன்.
இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்" என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். 'இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ? அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம்?' - ஒரு வழியாக நிர்ணயிக்க முடியவில்லை. முடிவில் அவரைத் திட்டிவிட்டுச் சென்றார்கள்.
வடலூர்ப் பிள்ளை அதனுடன் தூங்கப் போய்விடவில்லை; அல்லது ஊருக்கும் கம்பி நீட்டவில்லை. ஒரு முரட்டு வக்கீலைப் பிடித்து அமர்த்தினார். அவன் கையில் தம் வழக்கையும் யோசனையையும் ஒப்படைத்தார். வக்கீல், கடன் கொடுத்திருந்தவர்களின் பட்டியல் தயாரித்து அவரவர்கள் தொகைக்குத் தக்கபடி விகிதாசாரம் போட்டு, முடிவு கூற ஒரு மாதம் நோட்டீஸ் கொடுத்து அனுப்பினான். சிறு கடன்காரர்கள் கிடைத்தது போதும் என்று ஒன்றுக்குக் காலாக வாங்கிக்கொண்டு ஓடினர். இப்படி மெஜாரிட்டித் தொல்லை ஒழிந்தது. மற்றும் பெரிய புள்ளிகள் வேறு விதியில்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்.
5
கையில் மூலதனம் போடாமல் ஒரு லக்ஷ ரூபாய் சரக்கு; அது இருக்கும்பொழுது தவணை செலுத்துவதற்குமா வலிக்கிறது? மாதம் முதல் தேதியன்று 'டணார்' என்று ரொக்கம் நபருக்குப் போய்விடும். ஆனால், மார்க்கெட்டில் பிள்ளையவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார். நெடுங்காலம் வரையில் அந்தக் கறுப்புப் புள்ளி மாறவில்லை. தவணை குறியாகச் செலுத்தியது அவரிடம் நம்பிக்கையை கிழடு தட்டிய பின்பே வருவித்தது. அவருடைய தொழிலும் நன்றாக வளர்ந்தது. பத்து வருஷங்கள் கொழும்பு வியாபாரமே அவரது கைக்குள் என்ற நிலைமை உண்டாயிற்று.
மூலதனம் பெறுவதற்கு வடலூர்ப் பிள்ளை செய்தது சரியா, தப்பா? சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அப்புறம் நாணயஸ்தனாக இருந்தாரே? முதலில் அவரது கை ஓய்ந்து கிடக்கும்பொழுது அவரை நசுக்கிப் போட வேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே! அவர் செய்தது தவறானால் முதலில் அவர் ஐ.பி. போட வேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா? ஓய்ந்து சள்ளுச் சள்ளென்று இருமும் காலத்திலும் வடலூர்ப் பிள்ளைக்கு ஓயாத வேதாங்கமாகிவிட்டது இந்தமாதிரிப் பேச்சு.
(முற்றும்)
ஜோதி, மே - 1938
-------------
புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் - தொகுப்பு : முந்தைய வெளியீடுகள்
PM 389-1
1. அகல்யை | 9. தெரு விளக்கு |
2. செல்லம்மாள் | 10. காலனும் கிழவியும் |
3. கோபாலய்யங்காரின் மனைவி | 11. பொன்னகரம் |
4. இது மிஷின் யுகம் | 12. இரண்டு உலகங்கள் |
5. கடவுளின் பிரதிநிதி | 13. மனித யந்திரம் |
6. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | 14. ஆண்மை |
7. படபடப்பு | 15. ஆற்றங்கரைப் பிள்ளையார் |
8. ஒரு நாள் கழிந்தது |
PM389-2
16. அபிநவ ஸ்நாப் | 24. ஞானக் குகை |
17. அன்று இரவு | 25. கோபாலபுரம் |
18. அந்த முட்டாள் வேணு | 26. இலக்கிய மம்ம நாயனார் புராணம் |
19. அவதாரம் | 27. 'இந்தப் பாவி' |
20. பிரம்ம ராக்ஷஸ் | 28. காளி கோவில் |
21. பயம் | 29. கபாடபுரம் |
22. டாக்டர் சம்பத் | 30. கடிதம் |
23. எப்போதும் முடிவிலே இன்பம் |
-------------
கருத்துகள்
கருத்துரையிடுக