ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 3
சிறுகதைகள்
Backஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு-3
ஆணும் பெண்ணும் (1953), உதயம் (1954), ஒரு பிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960)
தேவன் வருவானா (1961), சுமை தாங்கி (1962), மாலை மயக்கம் (1962), யுகசந்தி (1963),
உண்மை சுடும் (1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969),
குருபீடம் (1970), அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் (1972), சர்க்கரம் நிற்பதில்லை (1973),
பபுகை நடுவினிலே (1990), ....... . இவற்றிலிருந்து ஒரு சில சிறுகதைகளை மதுரை திட்டத்தின்
கீழ் வெளியிடுகிறோம்.
21. குருபீடம்
அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.
அவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள்.
ஆனால், இப்போது அவன் நோயாளியோ பைத்தியக்காரனோ அல்ல என்று அவனைப் பார்த்த எல்லாரும் புரிந்து கொண்டார்கள். உண்மையும் அதுதான். சோம்பலும், சுயமரியாதை இல்லாமையும், இந்தக் கோலம் அசிங்கமென்று உணர முடியாத அளவுக்கு அவனிடம் ஊறி உறைந்துபோன தாமசத்தின் மதமதப்பினாலும் அவன் இவ்வாறு திரிகிறான். பசிக்கிறதோ இல்லையோ தன் கையில் கிடைத்ததையும் பிறர் கையில் இருப்பதையும் தின்ன வேண்டுமென்ற வேட்கை அவன் கண்ணில் அலைந்தது. ஒரு குழந்தை சாப்பிடுவதைக்கூட ஒரு நாய் மாதிரி அவன் நின்று பார்த்தான். அவர்களும் அவனை நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார்கள். அவ்விதம் அவர்கள் விரட்டி அவன் விலகிவரும்போது அவன் தனது பார்வையால் பிறர் சாப்பிடும் பொருளை எச்சில் படுத்திவிட்டு வந்தான். அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான். அவன் கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கிக் காய்ந்திருந்தது. யாராவது பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் அவன் கையேந்தினான். அவர்கள் புகைத்து எறிகிற வரைக்கும் காத்திருந்து, அதன் பிறகு அவற்றைப் பொறுக்கி அவர்களை அவமரியாதை செய்கிற மாதிரியான சந்தோஷத்துடன் அவன் புகைத்தான்.
சந்தைக்கு வந்திருக்கிற நாட்டுப்புறப் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும், குனிந்து நிமிர்கையில் ஆடை விலகும்போதும், இவன் காமாதூரம் கொண்டு வெட்கமில்லாமல் அவர்களை வெறித்துப் பார்த்து ரசித்தான்.
அவனுக்கு உடம்பில் நல்ல வலுவும் ஆரோக்கியமும் இருந்தது. எனினும் எப்போதும் ஒரு நோயாளியைப்போல் பாசாங்கு செய்வது அவனுக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. அவனுக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும். கடுமையாக உழைக்காததாலும், கவலைகள் ஏதும் இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி இருந்தது. இளமையும் உடல் வலுவும் ஆரோக்கியமும் இயற்கையால் அவனுக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தும் அவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டது மாதிரி சேற்றில் மேய்கிற பன்றியாய்த் திரிந்தான்.
சந்தைத் திடலுக்கும் ரயிலடிக்கும் நடுவேயுள்ள குளக்கரையை அடுத்த சத்திரத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால், ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. மற்ற நேரங்களில் அவன் அந்தத் திண்ணையில் அசிங்கமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். சில சமயங்களில் பகல் நேரத்தில் கூட உறங்குவது மாதிரி பாவனையில் வேண்டுமென்றே ஆடைகளை விலக்கிப் போட்டுக்கொண்டு தெருவில் போவோர் வருவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ரகசியமாக மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவான்.
இரண்டு தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்து கொண்டிருந்த இரவில் ஒரு பிச்சைக்காரி இந்தச் சத்திரத்துத் திண்ணையில் வந்து படுக்க, அவளுக்கு ஏதேதோ ஆசை காட்டிக் கடைசியில் அவளை வலியச்சென்று சல்லாபித்தான். அதன் பிறகு இவனைப் பழிவாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தனது குறைபட்டுப்போன விரல்களைக் காட்டித் தான் ஒரு நோயாளி என்று அவள் சிரித்தாள். அதற்காக அருவருப்புக் கொள்கிற உணர்ச்சிகூட இல்லாமல் அவன் மழுங்கிப் போயிருந்தான். எனவே, இவள் இவனுக்குப் பயந்துகொண்டு இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே திரும்பவில்லை. இவன் அவளைத் தேடிக்கொண்டு நேற்று இரவெல்லாம் சினிமாக் கொட்டகை அருகேயும், சந்தைப்பேட்டையிலும், ஊரின் தெருக்களிலும் கார்த்திகை மாதத்து நாய் மாதிரி அலைந்தான்.
மனித உருக்கொண்டு அவனிடம் உறைந்துபோன தாமசத் தன்மையினால், சோம்பலைச் சுகமென்று சுமந்து கொள்கிற புத்தியின் மந்தத்தினால் அருவருக்கத்தக்க ஒரு புலை நாய் மாதிரி அவன் அங்கு அலைந்து கொண்டிருந்தான். வயிற்றுப்பசி, உடற்பசி என்கிற விகாரங்களிலும் உபாதைகளிலும் சிக்குண்டு அலைகின்ற நேரம் தவிர, பிற பொழுதுகளில் அந்தச் சத்திரத்துத் திண்ணையில் அவன் தூங்கிக்கொண்டே இருப்பான்.
ஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ
காலை நேரம்; விடியற்காலை நேரம் அல்ல. சந்தைக்குப் போகிற ஜனங்களும், ரயிலேறிப் பக்கத்து ஊரில் படிப்பதற்காகப் போகும் பள்ளிக்கூடச் சிறுவர்களும் நிறைந்து அந்தத் தெருவே சுறுசுறுப்பாக இயங்குகின்ற - சுரீர் என்று வெயில் அடிக்கிற நேரத்தில், அழுக்கும் கந்தலுமான இடுப்பு வேட்டியை அவிழ்த்துத் தலையில் இருந்து கால்வரை போர்த்திக் கொண்டு, அந்தப் போர்வைக்குள் க்ருப்பிண்டம் மாதிரி முழங்கால்களை மடக்கிக் கொண்டு, கைகளிரண்டையும் காலிடையே இடுக்கியவாறு வாயிலிருந்து எச்சில் ஒழுக, ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். தெருவிலே ஏற்படுகிற சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தைக் கலைத்தது. எனினும் அவன் விழித்துக் கொள்ள விரும்பாததனால் தூங்கிக் கொண்டிருந்தான்.
- இதுதான் சோம்பல். உறக்கம் உடலுக்குத் தேவை. அனால், இந்தத் தேவையற்ற நிர்ப்பந்தத் தூக்கம்தான் சோம்பலாகும். இந்த மதமதப்பைச் சுகமென்று சகிக்கிற அறிவுதான் தாமசமாகும்.
விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து - அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.
எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.
மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.
அவன் ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால், தலைமாட்டில் சேகரித்து வைத்திருந்த துண்டு பீடிகளில் ஒன்றை எடுத்தான். பீடியைப் பற்ற வைத்து அவன் புகையை ஊதிய போது அவனது அரைக் கண் பார்வையில் மிக அருகாமையில் யாரோ நின்றிருக்கிற மாதிரி முகம் மட்டும் தெரிந்தது. புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்த்தான்.
எதிரே ஒருவன் கைகளை கூப்பி, உடல் முழுவதும் குறுகி, இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்துகொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான்.
" இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் - பைத்தியமோ ? " என்று நினைத்து உள்சிரிப்புடன் -
" என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே ? இது கோயிலு இல்லே - சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்காரன் ..." என்றான் திண்ணையிலிருந்தவன்.
" ஓ !.. கோயிலென்று எதுவுமே இல்லை.. எல்லாம் சத்திரங்களே ! சாமியார்கள் என்று யாருமில்லை. எல்லாரும் பிச்சைக்காரர்களே ! " என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.
" சரி சரி ! இவன் சரியான பைத்தியம்தான் " என்று நினைத்துக் கொண்டான் திண்ணையிலிருந்தவன்.
தெருவில் நின்றவன் இவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிற பவ்யத்துடன் ' சுவாமி ' என்றழைத்தான்.
இவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கிக் கொண்டு புன்முறுவல் காட்டினான்.
" என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; தங்களுக்குப் பணிவிடை புரியவும், தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும். "
திண்ணையிலிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. " சரி, இப்போ எனக்கு ஒரு டீ வாங்கியாந்து குடு " என்றான்.
அந்தக் கட்டளையில் அவன் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று புரிந்துகொண்ட மகிழ்ச்சியுடன் இடுப்புத் துண்டிலிருந்த சில்லரையை அவிழ்த்துக் கொண்டு ஓடினான் வந்தவன். அவன் கையிலிருந்த காசைப் பார்வையால் அளந்த ' குரு ', ஓடுகின்ற அவனைக் கைதட்டிக் கூப்பிட்டு " அப்படியே பீடியும் வாங்கியா " என்று குரல் கொடுத்தான்.
அவன் டீக்கடைக்குச் சென்று பார்வைக்கு மறைந்ததும் இவன் வந்து சீடனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை எண்ணிப் பெருங்குரலில் சிரித்தான் குரு. " சரியான பயல் கிடைத்திருக்கிறான். இவன் மயக்கம் தெளியாதபடி பார்த்துக்கணும். திண்ணெயெ விட்டு எறங்காமல் சொகமா இங்கேயே இருக்கலாம். பிச்சைக்கு இனிமே நாம்ப அலைய வேணாம். அதான் சிஷ்யன் இருக்கானே... கொண்டான்னா கொண்டுவரான். முடிஞ்சா சம்பாரிச்சுக் குடுப்பான்... இல்லாட்டி பிச்சை எடுத்துக்கினு வரான்.. என்னா அதிர்ஷ்டம் வந்து நமக்கு அடிச்சிருக்கு..." என்று மகிழ்ந்திருந்தான் குரு.
சற்று நேரத்தில் சீடன் டீயும் பீடியும் வாங்கி வந்து நிவேதனம் மாதிரி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு குருவின் எதிரே நின்றான்.
குரு அவனைப் பார்த்து பொய்யாகச் சிரித்தான். அவன் கையிலிருந்த டீயையும் பீடியையும் தனக்குச் சொந்தமான ஒன்று - இதனை யாசிக்கத் தேவையில்லை - என்ற உரிமை உணர்ச்சியோடு முதன் முறையாய்ப் பார்த்தான். அதனை வாங்கிக் கொள்வதில் அவன் அவசரம் காட்டாமல் இருந்தான். தான் சீடனை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்வதற்காக அவன் பீடிகையாகச் சொன்னான்:
" என்னை நீ கண்டுபிடிச்சுட்டே. நீ உண்மையான சிஷ்யன்தான். என்னை நீ இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சே. ஆனால், நான் உன்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கினே இருக்கேன். நான் உன்னைக் கொஞ்சம் கேள்விங்கள்ளாம் கேப்பேன். அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும். அதுக்கோசரம் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதே. எனக்கு எல்லாம் தெரியும் ! தெரிஞ்சாலும் சிலதெல்லாம் கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும். "
இந்த வார்த்தைகளைக் கேட்டு இரண்டு கையிலும் டீயையும் பீடியையும் ஏந்தி இருந்த சீடன் அவனைக் கரங்கூப்பி வணங்க முடியாமல் பார்வையாலும் முகபாவத்தாலும் தன் பணிவைக் காட்டினான்.
" நீ யாரு ? எந்த ஊரு ? பேரு என்ன? நீ எங்கே வந்தே? நான்தான் குருன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ? ... டீ ஆறிப் போச்சில்லே ? குடு " என்று டீயை வாங்கிக் குடித்துக் கொண்டே சீடன் சொல்கிற பதிலை மெத்தனமாகத் தலையை ஆட்டியவாறே கேட்டான்.
" குருவே... நான் ஒரு அனாதை. அதோ இருக்கிறதே முருகன் கோயில், அங்கே ஒரு மடப்பள்ளி இருக்குது. அங்கே தண்ணி எறைச்சுக் கொண்டு வர்ற வேலை. மடப்பள்ளியிலே இருக்கிற ஐயிரு மூணு வேளையும் சாப்பாடு போட்டுச் செலவுக்கு நாலணா தினம் குடுக்கிறாரு. எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியலே.. துன்பத்துக்கெல்லாம் பற்று தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒரு விதப் பற்றும் இல்லே... ஆனாலும் நான் துன்பப்படறேன்... என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே... நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி, ' இந்தச் சத்திரந்தான் குருபீடம், அங்கே வா ' ன்னு எனக்குக் கட்டளை இட்டீங்க குருவே ! நீங்க இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன். தாங்கள் அறியாததா ? விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது.... "
" ம்...ம்... " என்று மீசையை நெருடிக்கொண்டே அவன் கூறுவதைக் கேட்ட குரு, காலியான தம்ளரை அவனிடம் நீட்டினான்.
சீடன் டீக்கடையில் காலித் தம்ளரைக் கொடுக்கப் போனான். கடவுள் இந்தப் பயலை நன்றாகச் சோதிக்கிறார் என்று நினைத்து அவனுக்காக அனுதாபப்பட்டுச் சிரித்தான் குரு. " ம்.. அதனால் நமக்கென்ன ? நமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருக்கிறான் " என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.
சீடன் வந்தபிறகு அவன் பெயரைக் கேட்டான் குரு. அவன் பதில் சொல்வதற்குள் தனக்குத் தெரிந்த பல பெயர்களைக் கற்பனை செய்த குரு திடீரெனச் சிரித்தான். இவன் கூறுமுன் இவனது பெயரைத்தான் சொல்ல முடிந்தால் இந்த நாடகத்தில் அது எவ்வளவு அற்புதமான லீலையாக அமையும் என்று நினைத்தே அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பினால் சீடன் பதில் சொல்லச் சற்றுத் தயங்கி நின்றான்.
அப்போது குருசொன்னான்: " பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா ? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில் ! " என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரிப் பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான்.
" சரி, உன் பேரு என்னான்னு நீ சொல்ல வேண்டாம். நான் குரு. நீ சிஷ்யன் ... எனக்குப் பேரு குரு; உனக்குப் பேரு ச ஷ்யன். நீதான் என்னை ' குருவே குருவே ' ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே.... நானும் உன்னை ' சிஷ்யா சிஷ்யா ' ன்னு கூப்பிடறேன்... என்னா ? சரிதானா ? ..." என்று பேசிக்கொண்டே இருந்தான் குரு.
"எல்லாமே ஒரு பெயர்தானா?" என்று அந்தப் பேச்சிலும் எதையோ புரிந்துகொண்ட சீடனின் விழிகள் பளபளத்தன.
"நான் என்ன இப்படியெல்லாம் பேசுகிறேன்..." என்று குரு தன்னையே எண்ணித் திடீரென வியந்தான். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
மத்தியானமும் இரவும் அந்தச் சீடன் மடப்பள்ளியிலிருந்து தனக்குக் கிடைக்கிற புளியோதிரை, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் பயபக்தியுடனும் அன்போடும் கொண்டுவந்து இந்தக் குருவுக்குப் படைத்தான். அவ்வளவு ருசியும் மணமும் புனிதமும் அன்பும் உபசரணையும் உடைய அமிர்தத்தை இவன் ஜென்மத்தில் ருசி பார்த்ததில்லை. ஆவல் மிகுதியால் தனது நடிப்பைக்கூட மறந்து அவற்றை அள்ளி அள்ளி இவன் உண்பதை அன்பு கனியப் பார்த்துக் கொண்டிருந்தான் சீடன்.
குருவுக்கு எதனாலோ கண்கள் கலங்கின. சீடன் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.
மறுநாள் காலை அதே மாதிரி திண்ணைக்குக் கீழே வந்து காத்து நின்றிருந்தான் சீடன். அவனுக்கு டீயும் பீடியும் வாங்கி வந்தான். குருவை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அவனது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தான். அவனைக் குளிக்க வைத்து அழைத்து வந்தான்.
உச்சியில் வெயில் வருகிற வரை - குருவுக்குப் பசி எடுக்கும்வரை - அவர்கள் ஆற்றில் நீந்திக் குளித்தார்கள்.
"குளிக்கிறது சொகமாகத்தான் இருக்கு. ஆனா, குளிச்சி என்னா பிரயோசனம்... குளிக்க குளிக்க அளுக்கு சேந்துக்கிட்டுத்தானே இருக்கு?... அது அப்படித்தான். பசிக்குது... திங்கறோம்... அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது... குளிக்க குளிக்க அளுக்காகும். அளுக்கு ஆக ஆகக் குளிக்கணும். பசிக்கப் பசிக்கத் திங்கணும்... திங்கத் திங்கப் பசிக்கும்... என்ன வேடிக்கை!" என்று சொல்லிவிட்டு குரு சிரித்தான். சிரித்துக் கொண்டே இருக்கும் போது "என்ன இது, நான் இப்படியெல்லாம் பேசுகறேன்" என்று எண்ணிப் பயந்துபோய்ச் சட்டென நிறுத்திக் கொண்டான்.
சீடன் கை கட்டிக்கொண்டு இவன் சொல்வதைக் கேட்டான்.
ஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ
அன்றும் அதற்கு மறுதினமும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இதே மாதிரி காலையில் டீயும் பீடியும் வாங்கித் தந்து, குளிப்பாட்டி, மத்தியானம் உணவு படைத்து, அவனைத் தனிமையில் விடாமலும், அவன் தெருவில் அலையாமலும் இந்தச் சீடன் எப்போதும் அவன் கூடவே இருந்தான்.
அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் சத்திரத்துத் திண்ணையில் ஓய்வுக்காகத் தங்கி இளைப்பாறும்போது வேடிக்கை பார்த்தார்கள்.
சிலர் குருவை அடையாளம் கண்டு கொண்டு இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்போதே நினைத்ததாகவும், அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி, அழுக்கு சுமந்து, எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள்.
அதில் சிலர், இப்படியெல்லாம் தெரியாமல் இந்தச் சித்த புருஷனை ஏசி விரட்டியடித்ததற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள்.
இந்த ஒரு சீடனைத் தவிர குருவுக்குப் பக்தர்கள் நாள்தோறும் பெருக ஆரம்பித்தார்கள். சந்தைக்கு வருகிற வியாபாரிகளும் மற்றவர்களும் இவனை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு இவனுக்கு டீயும், பீடியும், பழங்களும் வாங்கித் தந்தார்கள்.
இவன் அவற்றைச் சாப்பிடுகிற அழகையும், தோலை வீசி எறிகிற லாவகத்தையும், பீடி குடிக்கிற ஒய்யாரத்தையும், விழி திறந்து பார்க்கிற கொலத்தையும், விழி மூடிப் பாராமலிருக்கிற பாவத்தையும், அவர்கள் புகழ்ந்தும் வியந்தும் பேசினார்கள்.
குருவுக்கு முதலில் இது வசதியாகவும், சந்தோஷமாகவும், பின்னர் ஒன்றும் புரியாமலும் புதிராகவும் இருந்து, கொஞ்ச நாட்களில் எல்லாம் புரியவும் புதிர்கள் விடுபடவும் தொடங்கின.
ஒரு நாள் இரவு குருவுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் எது எது பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தான். அதாவது, அந்தச் சிஷ்யனோடு பேசுகிற மாதிரித் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான்.
அவன் நட்சத்திரங்களைப் பற்றியும், தான் இந்த உலகத்தில் வருவதற்கு முன்னால் இருந்த காலத்தைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், தனக்குப் பின்னால் உள்ள காலங்களைப் பற்றியும் எந்த முடிவிலும் மனம் நிற்க முடியாத விஷயங்களைப் பற்றியெல்லாம் யோசித்தான்.
அவன் தூங்காமலே கனவு மாதிரி ஏதோ ஒன்று கண்டான். அதில் தன் குரலோ, சீடனின் குரலோ அல்லது சந்தையில் திரிகிற இவனை வணங்கிச் செல்கிற யாருடைய குரலோ மிகவும் தெளிவாகப் பேசியதைக் கேட்டான்.
"உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே, அவன்தான் உண்மையிலே குரு... சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்... அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்திலே இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு..."
பறவைகள் பாடிச் சிறகடித்துப் பறந்து சந்தைத் திடலின் மரச் செறிவில் குதூகலிக்கிற காலைப்பொழுது புலர்கிற நேரத்தில் அதே மாதிரியான குதூகலத்துடன் கண் விழித்தெழுந்த குரு, சீடனை வணங்குவதற்காகக் காத்திருந்தான். மானசீகமாய் வணங்கினான். அவன் வந்தவுடன் சாஷ்டாங்கமாய் அவன் பாதங்களில் தான் விழப்போவதை எண்ணி மெய்சிலிர்த்தான்.
ஆனால், அந்தச் சிஷ்யன் வரவே இல்லை. இந்தக் குரு அந்த மடப்பள்ளிக்கு - தன்னை ரசவாதம் செய்து மாற்றிவிட்ட சீடனைத் தேடி ஓடினான்.
மடப்பள்ளியில் உள்ளவர்கள் இவனை வணங்கி வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள்.
குருவுக்கு அப்போது சீடனின் பெயர் தெரியாத குழப்பத்தால் என்னவென்று கேட்பது என்று புரியாமல் "என் சிஷ்யன் எங்கே?" என்று விசாரித்தான்.
அவர்கள் விழித்தார்கள். குரு அடையாளம் சொன்னான். கடைசியில் அவர்கள் ரொம்ப அலட்சியமாக "அவன் நேற்றே எங்கோ போய்விட்டானே" என்றார்கள்.
"அவன்தான் நமக்கெல்லாம் குரு!" என்றான் குரு.
"அப்படியா!" என்று அவர்கள் ஆச்சரியம் கொண்டனர்.
அதுபற்றி அவனது வேதாந்தமான விளக்கத்தை, அவர்கள் எதிர்பார்த்து நின்றனர். ஆனால், இவன் ஒன்றும் பேசவில்லை. அதன் பிறகு, ஒன்றுமே பேசவில்லை. எழுந்து நடந்தான்.
சந்தைத் திடலிலும் ஊரின் தெருக்களிலும் சீடனாகி வந்த அந்த குருவைத் தேடித் திரிந்தான் இவன். சீடனைக் காணோம். இவன் சிரித்தான். தேடுவதை விட்டு விட்டான்.
இப்போதெல்லாம் சந்தைத் திடலில் அழுக்கும் கந்தையும் உடுத்தி ஒவ்வொருவரிலும் எதையோ தேடுவது மாதிரியான கூர்த்த பார்வையுடன் இவன் திரிந்து கொண்டிருக்கிறான். இவனை யாரும் விரட்டுவதில்லை. குழந்தைகள் இவனைப் பார்த்துச் சிரித்து விளையாடுகின்றன. பெண்களூம் ஆண்களும் இவனை வணங்கி இவனுக்கு எதையாவது வாங்கித் தந்து அன்புடன் உபசரிக்கிறார்கள்.
அந்தச் சீடனிடம் என்ன கற்றானோ அதனை இவன் எல்லாரிடத்தும் எல்லாவற்றிலும் காண்கிற மாதிரி நிறைவோடு சிரித்துச் சிரித்துத் திரிந்து கொண்டிருக்கிறான்.
(எழுதப்பட்ட காலம்: 1970)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஏழாம் பதிப்பு: 1995 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
22. டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
வேதகிரி முதலியார் தபால் பார்த்து வருவதற்காக பஸ்ஸை எதிர்நோக்கிப் போகிறார். காலை வெயில் சுரீர் என்று அடிக்கிறது. வீதியில் ஒரு நிழல் இல்லை. இன்னும் கொஞ்ச நாழியில் தெரு மண் பழுக்கிற மாதிரி காய ஆரம்பித்துவிடும். இது ஒன்றும் கோடை இல்லை. என்றாலும் அப்படி ஒரு வெயில். தெருவில் ஒரு பக்கம் மட்டும் ஓர் ஆள் ஒண்டி நடக்கிற அகலத்துக்கு நிழல். சில உயரமான வீடுகளின் ஓரத்தில் கொஞ்சம் நின்று இன்னொருவரோடு பேசுவதற்கு ஏற்ற அகலமான நிழல். சில வீட்டின் முன்னால் எச்சில் இலை கிடக்கிறது. தெருவில் நடமாட்டமே இல்லை. பகலிலேயே இந்த அமைதி. தூரத்தில் செக்கு ஆடுகிற சத்தம் 'ஙொய்' யென்று ரீங்காரம் செய்தாலும் கிராமத்து அமைதிக்கு அது சுருதியே தவிர பங்கம் இல்லை. அதே மாதிரி குடியானத் தெருவில் 'மாக்கு மாக்' கென்று நெல்லோ மாவோ இடிக்கிற சத்தம் பூமி அதிர்கிற மாதிரிக் கேட்கிறது.
அதிலும் அமைதி கெடவில்லை. எதிரே ஆள் வராவிட்டாலும் இந்த நிழலில் போட்டிக்கு ஒரு நாய் வருகிறது. சாதாரண கிராமத்து நாட்டு நாய்தான். ஊர் வழக்கப்படி அதைச் சொன்னால் இப்போதெல்லாம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். 'பறை, பள்ளூ' என்கிற வார்த்தைகள் மனசால் கூடத் தீண்டப்படாததாக மாறிவிட்ட பிறகு நாயைக்கூட அப்படிப் பட்டம் கட்டி அழைக்க முடிவதில்லை. ஆனால் இது சரியான ஹரிஜனப் பகுதி நாய்தான். நிழலை மறித்துக்கொண்டு அது நிற்கிறது. அது நிச்சயம் வழிவிட்டு விலகாது. விலகப் போவதில்லை என்கிற தீர்மானம் அதன் திடீரென உயர்ந்த காதுகளிலும் 'உம்'மென்று வயிற்றுக்குள் அடங்கி ஒலிக்கும் பொருமலிலும் தெரிகிறது. காரணம், நடுவில் இலை கிடப்பதுதான்.
அப்போதுதான் நினைத்தார் வேதகிரி முதலியார்: பொறப்படும் போதே அந்தக் கெழம் - அம்மாதான் - சொல்லிச்சு, 'குடையை எடுத்துக்கிட்டுப் போடா, வெயில் கொளுத்துது'ன்னு...
பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் இந்த மூன்று மாத காலமாக வேதகிரி முதலியார் வெளியே போவதற்குப் புறப்படுகிற போதெல்லாம் அவரது தாயார் செல்லத்தம்மாள் குடை எடுத்துச் செல்லுமாறும் வெயிலின் கொடுமை குறித்தும் ஒரு பாட்டுப் பாடாமலிருப்பதே இல்லை. சில சமயங்களில் அவளே கொண்டு வந்து அவரிடம் கொடுப்பாள். இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு திருக்கோவிலூருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஆறு ரூபாய்க்குத் தான் அந்தக் குடையை வாங்கினதையும், அதற்குப் பிறகு ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு கம்பியும் புதிசாக மேலே வெள்ளைத் துணியும் போட்டுத் தைப்பதற்குத் தான் மூணு ரூபாய் செலவழித்ததையும் குறைந்தது ஒரு பத்துத் தடவையாவது இதுவரை சொல்லி இருப்பாள்.
சரி, நாய்க்குப் பயந்து எத்தனை நாழி இப்படியே நிற்பது? ஒன்று இவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது அதை விரட்டி விட்டு இவர் தன் வழியே தொடர்ந்து நடக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் இவர் நின்றிருந்தால் அதுவும் நின்றிருக்குமா என்ன? அதுவோ நாய், அதுவும் காய்ந்து வரண்ட சேரி நாய். எதிரே இலை, இவர் விரட்டமாட்டார், தயங்குகிறார், பயப்படுகிறார் - என்று தெரிந்ததும் அது இவரை விரட்டுகிற தோரணையில் கொஞ்சம் குரலெடுத்து லேசாகப் பற்களை வெளிக்காட்டி 'உர்'ரென்கிறது.
வேதகிரி முதலியாருக்கு நிஜமாகவே உதறல். மிகுந்த மரியாதையோடு பத்து அடி நிழலிருந்து விலகி வீதியின் நடுவே வெயிலில் வந்து அரைவட்டமாக ஒதுங்கி நாயைக் கடந்து மீண்டும் நிழலில் ஏறி நடந்தார். தான் நாய்க்குப் பயந்து இப்படி வந்ததை யாரும் பார்த்திருப்பார்களோ என்று திரும்பிப் பார்த்தார். ம்ஹீம் யாருமில்லை. அந்த நாய்கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் என்ன? 'பட்டணத்துக்காரன் நாயைக் கண்டு பயப்படறான்' என்று பரிகாசம் பண்ணுவார்களே என்கிற பயம் வேதகிரி முதலியாருக்கு.
அதிலும் அந்த சுப்பராம ஐயர் இருக்கிறாரே, சமயத்தில் அவர் பண்ணுகிற பரிகாசத்தில் முதலியாருக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. கோபத்தைக் காட்டிக் கொண்டால் இன்னும் மானக்கேடாகப் போகும். அவரோடு சேர்ந்து கொண்டு முதலியாரின் தாயாரும் சிரிக்கிறாள்.
யோசித்துப் பார்த்தால் கிராமத்து மனிதர்கள் பார்த்துச் சிரிக்கிற மாதிரிதான் இருக்கிறது பட்டணத்துப் பழக்கங்கள் என்று முதலியாரின் மனசுக்குப் புரிகிறது. இருந்தாலும், பழக்கம் எளிதில் போகிறதா?
கிராமத்துக்கு வந்து இந்த மூன்று மாதமாக முதலியார் சட்டையே போடவில்லை. அவருடைய 'புஷ்' ஷர்ட்டுகளூம், ஸ்லாக்குகளூம் கிராமத்துப் பெரிய மனிதர்கள் - கொஞ்சம் மரியாதையை எதிர்பார்க்கிற வயதுடையவர்கள் - போடுகிற பாஷனாக இல்லை. அதுமட்டுமில்லாமல் ஷர்ட் போட வேண்டிய அவசியமும் அவருக்கு இங்கே நேரவில்லை.
காலையில் எழுந்து குளத்திலோ, கிணற்றடியிலோ குளிக்கிற போது, இவர் பிரஷால் பல் விளக்குவதையேப் பக்கத்து வீட்டு வேலியோரமாய் நின்று குழந்தைகள் வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஒரு பழக்கத்தை மட்டும் இவரால் விட முடியவில்லை. ஒருநாள் பல்பொடி போட்டு விரலால் தேய்த்து ஏற்பட்ட கொப்புளம் ஆறித் தோல் உறிந்த வடு இப்போதும் தெரிகிறது. வெட்கக்கேட்டை எங்கே போய்ச் சொல்வது?
வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பட்டணத்திலிருந்து அவர் வருகையைக் கோரி வரும் தனது மகனின் கடிதத்துக்காகத்தான் தினசரி வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் கிராமத்துக்கு வடக்கே உள்ள டிரங்க்ரோடு வரை நடந்து வந்து காத்திருக்கிறார் முதலியார். அங்கே தான் பஸ் வரும். ஒரு டீக்கடை இருக்கிறது. பெரிய திண்ணை. பஸ்ஸில் தபாலும் பத்திரிகையும் வரும். நாள்தோறும் முதலியாருக்கு ஆங்கிலத் தினசரியும் மகனிடமிருந்து ஒரு கடிதமும் வரும்.
அவருக்கு தினசரி கடிதம் வருவதை டீக்கடைச் சாமியாரும், தபால் ரங்கசாமியும் கேலியாகப் புகழ்வார்கள். நல்லவேளை, கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் இவர் இங்கே வந்து சிக்கிக் கொண்டிருப்பதற்கான ரகசியம் இன்றுவரை அவர்கள் அறியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் இன்னொருவருக்கு வருகிற கடிதமாயிற்றே அதை நாம் படிக்கலாகாது, 'என்ன எழுதியிருக்கிறது கடிதத்தில்?' என்று அநாவசியமாக துளைக்கக் கூடாது என்கிற 'பட்டணத்து மிதப்பு' எல்லாம் இவர்களுக்குத் தெரியாது.
ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்பனையான சமாசாரங்களைக் கடிதத்திலிருந்து 'மொழி பெயர்த்து' அவர்களை ஏமாற்றுவதற்குள் முதலியாருக்குப் போதும் போதும் என்றாகிவிடும்.
அவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். 'ஒண்ணும் முக்கியமான சமாசாரம் இல்லீங்க. நான் வரும்போது பையன்கிட்டே சொல்லிட்டு வந்தேன், தினம் எனக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டுக்கிட்டு இருன்னு. அதான் வேற ஒண்ணும் இல்லீங்க."
ஆனால், அவர்கள் இவரை அவ்வளவு சுளுவில் விடுவதில்லை. "இருக்கட்டும் முதலியாரே - முக்கியமான விஷயமா இருந்துதான் தெரிஞ்சி நாங்க என்ன செய்யப் போகிறோம். என்ன தான் எழுதி இருக்குதுன்னு சொல்லுங்க."
அதிலும் டீக்கடைச் சாமியார் இருக்கிறாரே - அவர் தான் மட்டுமில்லாமல் போகிற வருகிற ஆட்களையெல்லாம் கூப்பிட்டுக் கூட்டமும் சேர்த்துக் கொள்ளுவார். சாமியார் தஞ்சாவூர்ப் பக்கம். அவர் பேசுவதே பரிகாசம் போல் இருக்கும். "ஏலே, நின்னு கேட்டுட்டுப் போலே... பட்டணத்துச் சமாசாரம்... நீங்க படிங்க மொதலியாரே... அவுங்க அப்படித்தான்... பேசிக்கிறதே இங்கிலீசுதான்... ஏங்க - தம்பி பி.ஏ. வா? எம்.ஏ. வா?"
அப்போது மட்டும் வேதகிரி முதலியாருக்கு ஏகப் பெருமையா இருக்கும்.
"பி.ஏ.!" என்பார்.
சாமியார் குரலை அடக்கிக் கேட்பார்:
"மொதலியாரே எது பெரிசு? எம்.ஏ. வா? பி.ஏ. வா?"
"பெரிசு என்ன, பெரிசு! எல்லாம் ஒரு கழுதைதான். வேலை கெடச்சா மதிப்பு, இந்த படிப்புக்கு... நான் அந்தக் காலத்து இன்டர்தான். இப்ப பி.ஏ. படிச்சுட்டு எத்தினி பேர் நம்மகிட்ட கிளார்க்காயிருக்கான்! அதுகூடக் கிடைக்காமல் பாவம், எத்தினி புள்ளைங்க கண்டக்டர் வேலை செய்யுதுங்க..." என்பார் முதலியார்.
"மொதலியாருக்குப் பட்டணத்திலே என்னாங்க உத்தியோகம்?"
"ஒரு வெள்ளைக்கார கம்பெனியிலே மானேஜர் உத்தியோகம்."
"இப்பவும் வெள்ளைக்காரங்க இருக்கிறாங்களா?"
"கம்பெனிங்க இருக்குது."
"என்னா சம்பளங்க?"
இதெல்லாம் கேட்பது நாகரிகக் குறைச்சல் என்று அவர்களுக்குத் தெரியாது. டீக்கடைச் சாமியாருக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது.
"எல்லாம் சேத்து ஆயிரத்து இருநூறு ரூபா..."
"அடி சக்கைன்னானாம்" என்று சாமியார் நாக்கைக் கடித்துத் துள்ளிக் குதிப்பார்.
அதன் பிறகு, முதலியார் இல்லாத சமயத்திலும் மற்றவர்களிடமும் பெருமையாகச் சொல்லுவார்: "இங்க வந்து நம்ம கடைத் திண்ணையிலே உக்காந்து டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்தாரே, மொதலியாரு... சாதாரண ஆளுன்னு நெனச்சிக்காதே; பட்டணத்திலே பெரிய ஆபிசரு. பங்களா என்னா, காரு என்னா... பையன்களும் அதே மாதிரிப் பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க. வீடே வெள்ளைக்காரங்க பாஷன்லேதான். சும்மா - சொந்த கிராமங்கிற பாசம் - இப்படி வந்து சொக்காக்கூட போட்டுக்காம நம்ம டீக்கடையிலே உக்காந்து இருக்கறதிலே ஒரு சந்தோஷம் மொதலியாருக்கு. அவருக்கு எம்மாம் சம்பளம் தெரியுமா? சொல்லேன் பாப்பம்" என்று தாடியை நிமிண்டிக் கொள்வார்.
"ஐந்நூறு ரூபா இருக்குங்குளா - சாமி?" என்று பெருந்தொகையாகக் கேட்பான் ஒருவன்.
சாமியார் 'ஓ'வென்று சிரித்து அவனை முட்டாளாக்குவார்! "அடபோடா, அறிவு கெட்ட இவனே... ஆயிரம் ரூபாடா... ஆயிரம் ரூபா மாசம் மாசம் - கால் காணி நெலம் வாங்கலாம். என்னலே, வாயைப் பொளக்கறே; ஆயிர ரூபா பார்த்திருக்கியா, நீ? கலப்பெதான் பாத்திருப்பே. கலப்பே!" என்று சம்பந்தமில்லாமல் யாரையாவது சாக்கு வைத்துத் தன்னைத்தானே திட்டிக் கொள்வார் சாமியார்.
"உத்தியோகத்துக்கும் சம்பாதனைக்கும்தான் சாமியார் கிட்டேகூட மதிப்புபோல இருக்கு" என்பார் முதலியார்.
"பின்ன என்னங்க? இந்த சாமியார் பொழப்பு ஒரு பொழப்பா? உத்தியோகம் சம்பாதனை எதுவுமில்லாததனாலேதான் ஊருக்குக் கெவுருவமா இந்தத் தாடி, நம்ம மூஞ்சியெக் காப்பாத்துது. தாடி வெச்சவனுக்கு உங்க பட்டணக் கரையிலே பிச்சைக்காரன்னு பேரு. இங்கே சாமியாருன்னு பேரு. வவுறுன்னு ஒண்ணு இருக்குதுங்குளே. சாமியார்னு பேரு வெச்சிக்கினு காட்டுக்கா பூட்டோ ம்? நமக்கும் அஸ்கா போட்ட டீ வேணும்னுதே! டீ சாப்பிடுங்க" என்று பேசிக்கொண்டே கண்ணாடி கிளாஸ்களில் டீயை ஊற்றி எல்லோருக்கும் தந்து - முதலியாருக்கு மட்டும் 'தகதக'வென்று விளக்கிய வட்டா செட்டில் டீ கொண்டு வந்து வைப்பார்.
"ஆமா, மொதலியாரே, ஆயிரமும் இரண்டாயிரமுமா சம்பாதிச்சுக்கிட்டு மகன் நீங்க இருக்கிறீங்க... வயசான காலத்திலே உங்கள் தாயார் மட்டும் ஏன் இங்கே கெடந்து அவதிப்படணும்? இப்ப பாத்துக்கற சுப்பராம ஐயரு - அப்ப மட்டும் வெவசாயத்தைப் பாத்துக்க மாட்டாரா?" - இதுமாதிரி சில நாட்களுக்கு முன் சாமியார் ஏதோ சொல்லும் போது பக்கத்தில் நின்றிருந்த சுப்பராம ஐயர் திடீர் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
"ஓய் சாமியாரே! நான் மட்டும் எவ்வளவு நாளைக்கு ஐயா காட்டையும் மேட்டையும் கட்டிண்டு நிப்பேன். என் பையன், அவளையும் அழைச்சுண்டு டில்லிக்கே வந்துடச் சொல்லி ஒவ்வொரு தடவையும் எழுதறான். நம்ப கோரை வாய்க்கால் கரை நஞ்சைக்கும் - நல்லாந்தோப்புக்கும் யாராவது நல்ல விலை குடுத்தா நாளை ரயிலுக்கே ஏறிடுவேன்... நீர்தான் பாருமே - இருபதினாயிர ரூபா - ஜாடா எல்லா அய்ட்டத்தையும் இப்பவே குடுத்துடறேன்."
"இந்தாங்க ஐயரே, யாரும் ஆளு இல்லேன்னு நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறீங்களே... நானே இருபதினாயிரத்துக்கு உங்க சொத்துக்களையும் வாங்கிட்டுப் பேசாம கிராமத்திலேயே 'டிக்கானா' போட்டாலும் போட்டுடுவேன்..." என்று சொல்லி வைத்தார் முதலியார்.
"நான் இப்பவே ரெடி! சாமியாரே நீர் சாட்சி" என்று கையடித்துச் சொன்னார் சுப்புராம ஐயர்.
"என்னாங்க மொதலியாரே... எதாவது நடக்கிற காரியமா பேசுங்க. ஐயரு வேற யாருக்காவது தன் நிலத்தைக் குடுத்துட்டுப் போனாவே, உங்க நிலத்தெப் பாத்துக்க ஆள் வேணும்... இந்த லெச்சணத்திலே அவுரோட நிலத்தெயும் நீங்களே வாங்கிக்கினு ஆயிரரூபா உத்தியோகத்தையும் உட்டுட்டு இந்தக் கிராமத்திலே நெரந்தரமா நீங்க இருக்கப் போறீங்களாக்கும்?" என்று சிரித்தார் சாமியார்.
தான் கிராமத்துக்கு வந்து இந்த மூன்று மாதமாய் அடைந்து கிடக்கிற ரகசியம் தெரியாத சாமியாரை நினைத்து முதலியார் சிரித்துக் கொண்டார்.
விஷயத்தை சொன்னால் சாமியார் மூச்சடைத்துச் செத்துப் போகமாட்டாரோ?
வேதகிரி முதலியாருக்கு வேலை போய்விட்டது. இப்போது உத்தியோகம் இல்லை. ஆறு மாசமாயிற்று. மேலிடத்தில் என்னமோ காரணம் கூறித் திடீரென இவருக்குச் சேரவேண்டிய தொகை இருபதினாயிரம் ரூபாயைக் கையிலே கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
முதலில் இந்தச் செய்தியை முதலியார் தன் மனைவியின் காதில் மட்டும் தான் போட்டு வைத்தார். அவள் அப்படியே இடிந்து போனாள். பிறகுதான் முதலியாருக்கு அவள் சமாதானம் கூறினாள்.
"இப்ப என்ன கெட்டுப் போச்சு! விடுங்க. இதுவே பத்து வருஷத்துக்கு முன்னேன்னா ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்போம். இப்பதான் பெரியவனும் சம்பாதிக்கிறான். பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணியாச்சு. சின்னவங்க ரெண்டு பேருக்கும் இந்த வருஷம் காலேஜ் படிப்பைப் பல்லைக் கடிச்சிக்கிட்டு முடிச்சுட்டோ ம்னா நம்ப கவலை விட்டது..." என்று எவ்வளவோ கூறினாள் அவர் மனைவி மங்களம்.
"எத்தனை பிள்ளைகள் சம்பாதிச்சாலும் அவனவன் சம்பாதிக்கிற வரைக்கும் தான் அவனுக்கும் அவன் பெண்டாட்டிக்கும் மதிப்பு இருக்கும்" என்று அவர் மனமொடிந்து போனார்.
தனக்கு வேலை போய்விட்ட செய்தியையும் அதனால் ஏற்பட்ட வருத்தத்தையும் அவர் மனைவியிடம் மட்டும் ஒரு ரகசியம் போல் சொல்லி வைத்திருந்தார்.
ஆனாலும் மறுநாளிலிருந்து முதலியாரைப் போனிலும் நேரிலும் துக்கம் விசாரிக்கும் நண்பர்களின் தொல்லையால் அவரது பிள்ளைகளூக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. சில பேர் வீட்டுக்கு வந்து - ஏதோ வேதகிரி முதலியாரை வேலை நீக்கம் செய்த அந்த முதலாளிமார்களே இந்த வீட்டில் இருப்பதாக பாவித்துக் கொண்டு, 'ஓ' வென்று கூக்குரலிட்டனர்.
"இது என்னங்க நியாயம்! கேள்வி முறை கிடையாதா? இதை நீங்க சும்மா விடக்கூடாது, இது சட்டவிரோதமானது - நோட்டீஸ் விடுங்க" என்றெல்லாம் யோசனை கூறினார்கள்.
"ஆமாம்பா - அதெச் செய்யலாம் - சும்மா விடக் கூடாது" என்று முதலியாரின் பெரிய மகனும் அப்பாவுக்கு அனுசரணையாகப் பேசினான்.
வீட்டில் எல்லோருமே அவரவர்கள் சந்தோஷங்களைக் கூட அப்பாவுக்கு வேலை இல்லை என்ற காரணத்தை நினைத்து விலக்கி வைத்தனர்.
வீட்டில் நல்ல சாப்பாடுகூட சமைப்பதற்கு மங்களத்துக்கு நாட்டமில்லை: "என்ன வேண்டிக் கிடக்கு? அவருக்கோ வேலை இல்லை!"
ரேடியோவைச் சின்னவன் திருப்பினால், பெரியவன் வந்து நிறுத்திவிட்டு ரகசியமாய்ச் சொல்லுவான்: "ஸ்!... போடா அப்பா பாவம், வேலை போச்சேன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கிறார். மியூசிக் என்ன மியூசிக்?"
உள்ளூரிலேயே இருக்கிற பெண்ணை வீட்டுக்கு அழைப்பதற்குக்கூட 'அப்பாவுக்கு வேலை இல்லை' என்கிற காரணம் தடுத்துவிட்டது.
நூறு ரூபாய் சம்பளத்துக்குப் பத்து வருஷமாய் இவர்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்த டிரைவர் லோகநாதனையும் நிறுத்தியாகி விட்டது.
நோயில் படுத்து விட்டவனை வந்து பார்த்துச் செல்வது மாதிரி தினசரி மாலை நேரங்களில் ஆபீஸ் ஊழியர்கள் கோஷ்டி கோஷ்டியாக வந்து பார்க்கலாயினர்.
வீட்டில் சும்மா இருக்க முடியாமலும், தேக ஆரோக்கியம் கருதியும் அவர் தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தார். இரண்டு நாட்களில் தோட்டக்காரனும் நின்று விட்டான். காம்பவுண்டுக்குள் காய்கறிகளும், பூச்செடிகளும் காய்த்துப் பூக்கிற சீஸன் ஆனபடியால் அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் வழக்கமாக எட்டணா பத்தணாவுக்குத் தோட்டக்காரனிடம் பேரம் பேசி பூ வாங்கிச் செல்கிற மாதிரி இப்போதும் வந்தனர். அவர்களிடம் தமாஷாகவும் பொழுது போக்காகவும் பேரம் பேசி பூ விற்க ஆரம்பித்த முதலியாரை தாங்கொணா வறுமையின் கொடுமையாக பார்ப்பவர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். அவர் மனைவி 'தலை குனிவாகப் போகிறது. உங்களுக்கு என்ன இப்படி புத்தி?" என்று ஒரு நாள் அழுதாள். 'அப்பாவுக்கு வேலை போனதிலிருந்து தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது, புத்தியே கெட்டுப் போய்விட்டது' என்று பிள்ளைகள் தலையிலடித்துக் கொண்டு பின்னால் வருத்தமாகவும் கேலியாகவும் பேச ஆரம்பித்தனர்.
வேதகிரி முதலியாருக்கு இந்தச் சூழ்நிலையில்தான் பயித்தியம் பிடித்துவிடும்போல் வேதனைகள் பிடுங்கின.
கடைசியில்தான் முடிவு செய்தார்: "பேசாமல் கிராமத்துக்குப் போய் அம்மாவோடு கொஞ்சநாள் இருந்து விட்டு வருவது என்று. அதற்குள் ஏதாவது செய்து அப்பாவுக்கு அந்த வேலையையே மீண்டும் வாங்கித் தருவதோ, அல்லது வேறு வேலை பார்ப்பதோ தன் பொறுப்பு என்று பெரிய மகன் வாக்குறுதி தந்தான். அவர் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். வருஷத்துக்கு ஒருமுறை எப்போதாவது காரில் குடும்ப சகிதமாகக் காலையில் வந்து தாயாரைப் பார்த்து மாலையில் போனதைத் தவிர சென்னைக்குப் போன இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு தடவை கூட இங்கு வந்து இராத் தங்கியதில்லை அவர். அதற்குள்ளாக அவர் மனைவி மங்களம் "கிராமம் 'போர'டிக்கிறது" என்று முணுமுணுக்க ஆரம்பித்து விடுவாள்.
செல்லத்தம்மாள் கிராமத்தின் எல்லையைத் தாண்டி காலடி வைப்பதே அபூர்வம்.
பட்டணத்துக்கு வந்து ஒரு பத்து நாளைக்கி இருக்க அழைத்தால் கூட அவள் சம்மதிக்க மாட்டாள். இந்த எண்பது வயதில் ஒற்றைத் தனி மனுஷியாக அந்த வீட்டில் வாழ்ந்து எல்லாக் காரியங்களையும் நிர்வகித்து வருகிற அம்மாவை, உடன் இருந்து பார்க்கப் பார்க்க வேதகிரிக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அவள் பொழுது விடியுமுன் எழுந்திருக்கிறாள். பச்சைத் தண்ணீரில் குளிக்கிறாள். பழையதும் தயிரும் சாப்பிடுகிறாள். கண்ணாடியில்லாமல் அரிசியில் கல் பொறுக்குகிறாள். நாள் முழுவதும் வேலை செய்கிறாள். அவளைப் பார்த்துத் தன் மனைவியையும் நினைப்பார். அவளுக்கு ஆஸ்த்துமா. பச்சைத் தண்ணீரை நினைத்தாலே உதறல். உட்கார்ந்த இடத்தில் காய்கறி நறுக்கிச் சமையல்காரிக்குக் கொடுப்பதற்குள் இடுப்பு போய்விடுகிறதாம். மாதத்துக்கு இரண்டு தடவை டாக்டர் வர வேண்டும்; மூன்று வேளையும் மருந்து, டானிக், கண்ணாடி இல்லாமல் பூசணிக்காய் கூடத் தெரியாது. மன நிம்மதிக்காகச் சினிமா, சங்கீதம் எல்லாம் வேண்டும். தாயோடு மனைவியை ஒத்திட்டுப் பார்த்தால், தன் மனைவிக்குப் பிறகுகூட இவள் இருப்பாள் போல் தோன்றுகிறது அவருக்கு.
தனக்கு வேலை போய்விட்ட சமாசாரத்தை அவர் தாயிடம் கூடச் சொல்லவில்லை. சும்மா ரெண்டு மாசம் லீவு போட்டு விட்டுக் கிராமத்தில் தங்க வேண்டும் என்கிற விருப்பத்தில் வந்திருப்பதாகத்தான் கூறினார்... அதைக் கேட்டுக் கிழவிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் மகன் வந்து தன்னோடு தங்கியிருக்கிற செய்தியை ஊர் முழுதும் தமுக்கடித்து விட்டாள். டவுனுக்குப் போய் காப்பிக் கொட்டை வாங்கி வரச் சொல்லித் தினசரி மகனுக்காகக் காப்பி வேறு போடுகிறாள். மத்தியானத்தில் வகை வகையான டிபன் செய்கிறாள்.
வேதகிரி முதலியாருக்குத்தான் பொழுதே போகவில்லை. காலையில் காப்பி சாப்பிட்டபின் தபால் பார்க்கிற சாக்கில் புறப்பட்டுச் சாமியார் டீக்கடைக்கு வந்து மத்தியானம் வரைக்கும் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார். மத்தியானம் சாப்பாட்டுக்குப் பின் தூங்கி எழுந்து கடிதம் எழுதுவார். சாயங்காலம் சுப்பராம ஐயருடன் தோப்பு துரவு சுற்றுவார். மாலையில் தாயாருடன் உட்கார்ந்து கொண்டு, பழைய கதைகளைப் பேசுவார். தப்பித் தவறிக் கூட வேலை போய்விட்ட சமாச்சாரம் வாயில் வந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருப்பார்.
அவர் வந்திருக்கும் இந்த சீஸனில் கிராமத்திலேயே வேலை இல்லை. அடுத்த மாதம் தான் உழவு தொடங்கும். அதற்குப் பிறகு சில மாதங்கள் நல்ல வேலை இருக்குமாம். இப்போதும் கூடச் சில நாட்களில் தென்னந்தோப்பில் காய் பறிப்பும், வாழைத்தார் விலை பேசலும் - வேலைகள் நடக்கிறது. முதலியாருக்கு அதுபற்றிய விவரங்கள் தெரியாததால் சுப்பராம ஐயருடன் 'அப்பரண்டிஸ்' மாதிரி வந்து நின்று கவனிப்பார்.
முதலியாருக்கு சில சமயங்களில் வாழ்க்கை ரொம்ப நிறைவாக இருக்கிறது. தன் வீட்டில் நிலத்தில் விளைந்த அரிசியும், தோட்டத்துக் காயைச் சாப்பிடுவதும், சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் சுதந்திரமாக இருக்கிறது. இந்த நிறைவில் தான் தன் தாய் கவலையற்று எண்பது வருஷச் சுமையோடு இவ்வளவு நிறைவுடன் இங்கே இருக்கிறாள் என்றும் தோன்றுகிறது.
முப்பது வருஷத்தில் ஊர் கொஞ்சம் மாறி இருப்பது உண்மைதான். 'எலெக்ட்ரிஸிடி' வந்திருக்கிறது. சில வீடுகளில் ரேடியோ பாடுகிறது. பம்ப்செட் தண்ணீர் இறைக்கிறது. பண்ணை வேலை செய்கிற சில பேர் சட்டை போட்டுக்கொண்டு கண்ணில் தென்படுகிறார்கள். ஊரில் ஒரு ஹைஸ்கூல் ஏற்பட்டு இருக்கிறது. பெண் குழந்தைகள் அதிகம் படிக்கின்றன. பட்டணத்து நாகரிகம் சில வாத்திமார் உருவில் பஸ்ஸில் வந்து இறங்கி ஏறிச் செல்கிறது.
ஆனாலும் உலகம் ஓடுகிற வேகத்தில் அதன் கையைப் பிடித்துக் கொள்ளத் தவறி, அநாதையாய் நின்றுவிட்ட மாதிரிதான் இந்தக் கிராமம் இன்னமும் இருக்கிறது.
அதோ தபால் வருகிற பஸ் வந்துவிட்டது. வேதகிரி முதலியார் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு தார் ரோட்டில் ஏறினார். செருப்பில் மண்டியிருந்த புழுதியைப் போக்குவதற்காகப் பாதங்களை 'தட் தட்'டென்று இரண்டு முறை தார் ரோட்டில் மிதித்தார். புழுதி பறந்தது.
"முதலியார் ஐயா, நமஸ்காரம்" என்று டீக்கடைச் சாமியாரின் குரல் ஒலித்தது.
ரங்கசாமி தபால்களைச் சரிபார்த்து அடுக்கிக் கொண்டே திரும்பி "ஐயா வாங்க" என்று வரவேற்றான்.
பஸ், பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு போயிற்று.
பஸ்ஸில் இருந்து இறங்கியவர்கள் அஞ்சாறு பேர். அதில் மூணு பேர் - இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமான ஹைஸ்கூல் டீச்சர்கள். ஊருக்குள் போகிற மண்சாலையில் இறங்கி நடந்தனர்.
ரங்கசாமி தந்த கடிதத்தையும் பத்திரிகையையும் வாங்கி முதலில் கடிதத்தைப் பிரித்தார் முதலியார்.
"பிள்ளை இன்னிக்கு என்ன எழுதியிருக்கார் - படியுங்க" என்று பாய்லரிலிருந்து டிக்காஷனுக்காக கொதிக்கிற தண்ணீரைத் திறந்து பிடித்த சாமியார் -
"இருங்க. அதோ ஐயர் வராரு. வாங்க ஐயிரே - நமஸ்காரம்" என்று மீண்டும் கூவினார்.
முதலியார் கடிதத்தை ஒருமுறை மனசுக்குள் தாம் மட்டும் படித்துக் கொண்டார். அப்போதுதானே கற்பனை மொழி பெயர்ப்புக்கு வசதி.
கடிதத்தைப் படிக்கும்போது முதலியாரின் முகத்தில் ஏற்படுகிற மாற்றத்தை மூவரும் கவனித்தனர்.
"என்னமோ முக்கிய சமாசாரம்போல எனக்குத் தோணுது" என்றார் சாமியார்.
"ஒண்ணும் முக்கியம் இல்லே... நாளைக்கி எல்லோருமாய் பொறப்பட்டுக் காரிலேயே வராங்களாம்... உடனே நானும் அவங்களோட பொறப்படணுமாம். வேலை கெடச்சுட்டுதாம்." என்று உளறிய பின், அதற்காக நாக்கைக் கடிந்து கொண்டார் முதலியார்.
"வேலை கெடச்சிருக்கா? யாருக்கு?" என்று பிடித்துக் கொண்டார் சாமியார். முதலியார் பாவம், ஒரு விநாடி திக்குமுக்காடிப் போனார். கடைசியில் ஒருவாறாகச் சமாளித்தார்.
"நம்ப கடைசிப் பயல் - ஒரு இடத்தில் ஏதோ மனு எழுதிப் போட்டான். அது கெடச்சிருக்கும் போல இருக்கு."
"அப்படியா! சந்தோஷம் - அந்தத் தம்பியும் வருதுங்களா?" என்றார் சாமியார்.
"அவன் எப்படிங்காணும் வருவான்? அவனுக்குத்தான் வேலை கெடைச்சிருக்கு இல்லே" என்று அகாரணமாய் அவர்மீது எரிந்து விழுந்தார் சுப்பராம ஐயர்.
"மொதலியாரே, வாரும் போகலாம். போயி, பெரியம்மா கிட்டே, விஷயத்தைச் சொன்னாத்தான் நாளைக்கே பொறப்படறதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க" என்று முதலியாரை இழுத்தார் ஐயர்.
"அவங்க என்ன ஏற்பாடு பண்ண இருக்கு?" என்று தயங்கினார் முதலியார்.
"உமக்கு ஒண்ணும் தெரியாது - சரியான பட்டணம் நீர்! - மூணு மாசம் வந்து தங்கி இருக்கீர். நாளைக்கு வீட்லே எல்லாரும் வரா. உங்களை எல்லாரையும் பெரியம்மா வெறுங் கையோட அனுப்பிச்சுடுவாளா? ரெண்டு முறுக்குப் பிழிஞ்சு குடுத்தனுப்புவா... இப்பவே போய்ச் சொன்னாதான் நனைச்சு வைப்பா. வாரும் வாரும்..."
"மொதலியார் ஐயா, இப்பவே சொல்லிட்டேன். பட்டணத்துக்குப் போயி எனக்கு ஏதாவது ஒரு பியூன் வேலை பார்த்துக் குடுங்கோ - தாடியெ எடுத்திட்டு ஓடி வந்துடறேன்" என்று சிரிப்பிடையே கூவிச் சொன்னார் சாமியார்.
*****டிடிடிடிடிடி*****டிடிடிடிடிடி*****
காலையிலே இருந்து வேதகிரி முதலியார் வீட்டின் முன் அந்தக் கறுப்புக் கார் நின்றிருந்தது. கால் சராயும் ஷர்ட்டும் அணிந்து கண்ணாடியுடன் நின்றிருக்கும் முதலியாரின் மூத்த மகனைத் தெருச் சிறுவர்கள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.
உள்ளே கூடத்தில் மாமியாருக்காக வாங்கி வந்திருக்கும் புடவையையும் ஒரு கம்பளிப் போர்வையையும் எடுத்துப் பிரித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறாள் முதலியாரின் மனைவி மங்களம்.
"இரு, இதோ வந்துட்டேன். உலை கொதிச்சிருக்கும்" என்று கிழவி எழுந்தபோது மங்களம் இடைமறிக்கிறாள்.
"இன்னிக்கு ஒரு நாள் நீங்க இருங்க, நான் பாத்துக்கறேன்."
கிழவி சிரிக்கிறாள்: "ஐய, என் அருமை மருமகளே - போதும் போதும்! 'இன்னிக்கு ஒரு நாளு'ன்னு ஜாக்கிரதையாச் சொல்லிக்கறியே! ஒரு நாளைக்கு நீ செய்தால் போதுமா? மீதி நாளைக்கு யார் செய்யறதாம்? நீயே இருந்து எப்பவும் பார்த்துக்கறதானா உன் அதிகாரத்தை நான் பறிக்கல்லே. ஒரு நாளுன்னா வேண்டாண்டி அம்மா! நான் பாத்துக்கறேன்..." என்று விளையாட்டாகவும் காரியமாகவும் சொல்லிக் கொண்டே எழுந்து போகிறாள் செல்லத்தம்மாள்.
"என்ன, அம்மா சொல்றமாதிரி இங்கேயே இருந்துடலாமா?" என்று கண்களைச் சிமிட்டியவாறு மங்களத்தைக் கேட்கிறார் வேதகிரி.
"ஐயோடி, என்னாலே ஆகாதம்மா" என்கிறாள் மங்களம்.
வேதகிரி விஷமமாய்ச் சிரித்துக் கொள்கிறார்.
அப்போது உள்ளே வந்த அவரது மகன் சொன்னான்:
"ரெண்டு மணி நேரத்துக்கு மேலே தொரைகிட்டே நான் விவாதம் பண்ணினேன். கொஞ்சத்திலே அவன் மசியல்லே அப்பா... என்னென்னமோ சொன்னான். ஒரு மாசத்துக்கு மேலே இழுத்தடிச்சான். ஆனா, எனக்குத் தெரியும், 'ஹி வில் ரீகன்ஸிடர்'னு"
வேதகிரி மெளனமாகப் பெருமூச்செறிந்தார்.
அப்போது சுப்பராம ஐயர் வந்தார். "நமஸ்காரம் அம்மா! செளக்கியமா?" என்று மங்களத்தம்மாளை விசாரித்தவாறே அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். மங்களத்தம்மாள் எழுந்து நின்று கொண்டாள்.
"உடனே பொறப்படணும்னு எழுதி இருந்தேள். எப்பவோ வர்றவா ரெண்டு நாளு இருந்துட்டுப் போகப் படாதோ?"
"இல்லே, அப்பாவுக்கு வேலை இருக்கு" என்றான் பையன்.
"ஆமா, பட்டணத்திலே இருக்கிறவங்க எல்லாரும் வேலை இருக்கறவங்க. இங்கே கிராமத்திலே இருக்கறவங்க எல்லாம் சும்மா வேலையத்து இருக்கிறவங்க. என்ன ஐயரே அப்படித்தானே? அதனாலே தான் நீங்களும் போகப் போறீங்க, இல்லே?"
எல்லாரும் முதலியாரைப் பார்த்தனர். முதலியார் சொன்னார்:
"நான் இனிமே இங்கேதான் இருக்கப் போறேன். கண்டவன் காலிலேயும் விழற மாதிரி பல்லிளிச்சி நிக்கிற உத்யோகப் பெருமை போதும் - எனக்கு அது வேணாம். அந்த ஆயிரம் ரூபாய்க்கு இங்கே சம்பாதிக்கிற நூறு ரூபாய் சமம். ஐயரே, இன்னிக்கே ரூபாய் இருபதினாயிரம் தர்றேன்... உம்ம கோரை வாய்க்கால்கரை நஞ்சையையும் நல்லாந்தோப்பையும் என் பேருக்குக் கிரயம் பண்ணி வச்சிடும்... இனிமே எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு."
"அது முதலியாரே..." என்று இழுத்தார் ஐயர்.
"அதெல்லாம் சொல்லப்படாது - சாமியார் சாட்சி" என்று முதலியார் சொல்லிக் கொண்டிருக்கும்போது, "அம்மா, நமஸ்காரம் - செளக்கியமா" என்று கேட்டவாறே படியேறிக் கொண்டிருந்தார் டீக்கடைச் சாமியார். அவர் கையில் ஒரு சீப்பு பேயன் பழம் இருந்தது.
"சாமியாரே, நீர் சாட்சி" என்று முதலியார் சொன்னதும், சாமியார் சிரித்தார். பிறகு முதலியாரே சொன்னார்:
"நிச்சயம் சுப்பராம ஐயர் வாக்குத் தவற மாட்டார். அவர் இன்னும் பட்டணவாசி ஆகலியே!"
இப்போதெல்லாம் டீக்கடைச் சாமியார் - ஆயிரம் ரூபாய் தருகிற உத்தியோகத்தையும் பெண்டாட்டி பிள்ளைகளையும் பட்டணவாசத்தையும் உதறிவிட்டுத் தாய்க்கு உதவியாக கிராம வாசத்தைத் தேர்ந்தெடுத்து, சட்டை கூட அணியாமல் டிராக்டர் வைத்து உழுது விவசாயம் பார்க்கிற வேதகிரி முதலியாரை 'டிராக்டர் சாமியார்' என்று அழைத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
(எழுதப்பட்ட காலம்: 1969)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஏழாம் பதிப்பு: 1995 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
23. நிக்கி (1970)
செம்படவக் குப்பம். இரண்டு நாளாக மழை வேறு. ஒரே சகதி. ஈரம்.
ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம். இரண்டு குடிசைகளின் நடுவேயுள்ள இடைவெளியில் அவ்விரு கூரைகளின் ஓலைகளும் அந்த இடத்தில் சேர்ந்து ஒரு கூரையாகி, ஒரு சிறு திட்டில் ஈரம் படாமல் காய்ந்த மிருதுவான புழுதி மண்ணைக் குவித்து நடுவில் குழி பரத்தியது போன்ற இடத்தில் இரண்டு நாட்கள்வரை ஐந்து நாய்க்குட்டிகளை பிரசவித்த ஒரு குப்பத்து நாய் மடியைத் தரையில் தேய்த்துக் கொண்டு தாய்மை பெருமிதத்துடன் 'பாரா' கொடுத்துத் தன் குட்டிகளைப் பாதுகாவல் செய்தவாறு கிடந்தும் திரிந்தும் அலைந்து கொண்டிருந்தது. காலையிலிருந்து காணோம்!
இனிமேல் அந்த நாய் வராது என்று செய்தியைக் குப்பத்துச்சிறுவன் ஒருவன் எல்லோருக்கும் அறிவித்தான்.
" ஐஸவுஸாண்டே பஸ்லே அடிபட்டு அந்த நாய் கூய் கூயாப் பூட்ச்சி."
இந்த அறிவிப்புக்குப் பிறகு குப்பத்துச் சிறுவர்கள் தைரியமாக இந்த குட்டிகளைத் தேடி வந்தனர். ஆளுக்கு ஒரு குட்டியை எடுத்துக் கொண்டபின் கடைசியாக ஒன்றைமட்டும் எல்லோரும் நிராதரவாக விட்டுப் போய்விட்டார்கள். அதன் நிறம் கறுப்பு, இரண்டு காதுகளிலும் வாலிலும் மட்டும் வெள்ளைத் திட்டுக்கள். "சீ! அது பொட்டடா!" என்று அதனை அவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்வதுபோல் விட்டுச் சென்றனர்.
அந்தப் பெட்டை நாய்க்குட்டி ஒரு புழுமாதிரி நாளெல்லாம் சிணுங்கியவாறு புழுதியிலும் சகதியிலும் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தது. கண்ணைத் திறந்து முதல் முறையாக உலகைப் பார்த்தது. பசியால் சிணுங்கிச் சிணுங்கி அழுதது. தான் கவனிக்க யாருமில்லாத அநாதை நாய் என்று புரிந்து கொண்டுவிட்டது மாதிரி, நடக்கக்கூடப் பயிலாத அந்த நாய்க்குட்டி கால்களைத் தரையில் இழுத்து இழுத்து நடை பழகியபோதே தனது ஜீவித யாத்திரையை மேற்கொண்டது. அந்தத் தாழ்ந்த இரண்டு குடிசைகளின் நடுவே இருந்து வெளியே வந்து ஈரமும் சகதியுமான குப்பத்துத் தெருவில் அது புரண்டு புரண்டு நடந்த காட்சியைச் சிறுவர்கள் கூடி ரசித்தனர்.
அது தனக்கு ஓர் எஜமானனை அவர்கள் மத்தியில் யாசிப்பது மாதிரி அவலமாக அழுதது. அவர்களூம் அதற்குப் பரிதாபப்பட்டனர். ஒரு குடிசையின் திண்ணையில் அதற்குப் புகலிடம் தந்து கஞ்சித் தண்ணீர், சோறு, டீ என்று படிப்படியாகத் தங்களின் தரித்திரத்தை அதற்கும் அறிமுகம் காட்டினர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுவர்களுக்கு இந்த நாய் விளையாட்டுச் சலித்துப் போயிற்று. அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.
விழுந்த வேகத்தில் வசமாக அடிபட்டது. நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது.
கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்திக் கொண்டு, விதியை நொந்துகொண்டு போவது மாதிரி மெளனமாய் - காலை இழுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே - நடக்க ஆரம்பித்தது. பயந்து பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமாகக் கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும் மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்றச் சாக்கடைப் பாலத்தருகே வந்து விட்டது. அதற்கு மேல் திசை புரியாமல் அரை நாள் யோசனையில் அங்கேயே கிடந்து உறங்கி விழித்துக் கத்திக் கத்திக் குரல் தேய்ந்த பிறகு தைரியமாகப் பாலத்தைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தது.
பெரிய கட்டிடங்கள் நிறைந்த வீதி. ராட்சஸத்தனமாய்ப் பஸ்களும் லாரிகளூம் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜன சந்தடி மிகுந்திருக்கிறது. அந்தச் சின்னப் பெட்டை நாய் தைரியமாக வீதியின் குறுக்கே நடந்தது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மனிதன் என்ன என்ன சாகசங்களை எவ்வளவு ஆர்வத்தோடு நடத்திக் காட்டுகிறான்! இந்த நாய் இந்தத் தெருவில் நடக்கக்கூட கூடாதா என்ன? நடந்தது.
ஒரு மாடி பஸ் வந்தது. அந்த டிரைவர் நல்ல மனுஷன். இந்தச் சிறிய நாய்க்காக அந்த பெரிய பஸ்ஸையே சில விநாடி நிறுத்தினான். அது குறுக்கே நடந்து போனபிறகு, ' எவ்வளவு சின்ன நாய்! அடிகிடிபட்டுச் சாகப்போகுது. நமக்கு ஏன் அந்தப் பாவம்!" என்று அதற்காக விசனம் கொண்டவன் மாதிரி அதைப்பார்த்துக் கொண்டே அந்தப் பெரிய பஸ்ஸைத் திருப்பினான.
நாய் ரோட்டைக் கடந்துவிட்டது. பிறகு எங்கே போவது? எங்காவது போகவேண்டியதுதானே? போயிற்று.
மெயின் ரோட்டைக் கடந்து குப்பம் மாதிரி இல்லாத ஆனால் குப்பத்துத் தெரு போன்றதேயான ஒரு குறுகிய தெருவில் நடக்கையில் அதன் எதிரே ஒரு இலை வந்து விழுந்தது. இலை விழுந்ததும் அதற்காகப் பாய்ந்தோடுவதற்கான அநுபவமோ அறிவோ அதற்கு இன்னும் வராததனால் 'பொத்' தென்ற சத்தத்துக்குப் பயந்து பின்னால் பதுங்கியது அது. பதுங்கியதோ, பிழைத்ததோ!
ஒரு பெரிய நாய் அந்த இலையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. இந்தக் குட்டிக்கு அது தன் இனத்தைச் சேர்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாகவும் மூர்க்கமாகவும் இருந்ததனால் இது பதுங்கிக்கொண்டு அதை அச்சத்தோடு பார்த்தது. அந்த இலையில் இருப்பது சாப்பிடத் தகுந்தது என்பதைச் சுவரோரமாகப் பதுங்கிக்கொண்டு பார்த்ததனால் இந்தக் குட்டி புரிந்துகொண்டது.
ஆனாலும் இந்தக் குட்டிக்குப் பசி வந்தபோது எதிரே இலை விழுந்தும், இலை விழுந்தபோதெல்லாம் போட்டிக்கு மூர்க்கமாக மோதிச் சாடிக்கொண்டு பெரிய நாய்கள் வந்ததனால், இலையில் இருப்பதைச் சாப்பிடலாம் என்று அறிவு வந்தும் அதை அநுபவமாக்கிக் கொள்ள வாய்ப்பு வரவில்லை.
ஆனால் பசி மட்டும் வந்துகொண்டே இருந்தது.
மழையிலும் குளிரிலும் முனகி அழுதவாறு தெரு ஓரங்களில் ஓடும் சாக்கடை அருகே போட்டிக்கு யாரும் இல்லாததனால் பொறுக்கித் தின்று உழன்றுகொண்டே அந்தக் குறுகிய தெருவில் சில நாட்கள் இந்த நாய் வாழ்ந்தது.
பின் ஒரு நாள் வெயிலடித்தபோது உடம்பின் ஈரம் காய்ந்து, அழுகலையும் கழிவையும் தின்று உடம்பில் ஏறிய பலத்தால் கொஞ்சம் தெம்பும் வளர்ச்சியும் பெற்றிருந்த இந்தக் குட்டி அந்தக் குறுகிய தெருவிலிருந்து வேறொரு பெரிய தெருவுக்கு தனது யாத்திரையைத் தொடங்கிற்று.
அந்த நாளை இந்த நாய்க்கு ஒரு சோபன தினம் என்று சொல்ல வேண்டும்.
அழுது அடம் பிடித்த ஒரு குழந்தையை அதன் தாய் மல்லுக்கட்டி எங்கேயோ தூக்கிக்கொண்டு போகிறாள்.
குழந்தை பிடிவாதமாய் அவள் பிடியில் அடங்காமல் திமிறித் திமிறித் தாயின் இடுப்பிலிருந்து நழுவி நழுவி வழிகிறது.
ஒரு கையில் சிலேட்டும் பையும் வைத்துக்கொண்டு அந்தத் தாய் அந்தக் குழந்தையை ஒரு கையால் சமாளிக்க முடியாமல் வைது அடிக்கிறாள். அடம் பிடித்த குழந்தை அலறி அழுகிறது. அழுகிற குழந்தையை அவள் சமாதானம் செய்து கொஞ்சுகின்ற வேளையில் இந்தக் குட்டி அங்கே போய் சேர்ந்தது. இந்த நாயை வேடிக்கை காட்டி அந்தக் குழந்தையைத் தாய் சமாதானப்படுத்தினாள்.
இப்போது அந்தக் குழந்தை இந்த நாய் வேண்டுமென்று அடம் பிடித்தது.
அந்த மனித நேசத்தைப் புரிந்துகொண்ட இந்த அநாதை நாய் குழைந்து வாலை ஆட்டிற்று.
நல்ல வேளை. மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் இது சுத்தமாக இருந்தது. நேற்றுவரை இது தின்ற அழுகலும் கழிவும் மனிதர்களுடையதுதானே! நாய்க்குட்டியை எடுத்து முத்தம் கொடுத்துக் குழந்தையிடம் கொஞ்சி அதன் கையில் கொடுத்தாள் தாய்.
இந்த நாய் ஜென்ம சாபல்யம் அடைந்தது.
சிலகாலம் அந்த வீட்டின் திண்ணை தூணில் சணல் கயிற்றால் கட்டப்பட்டுக் குழந்தையின் காட்சிப் பொருளாகவும் விளையாட்டுச் சாமானாகவும் அது வளர்ந்தது. அதற்கு அந்தக் குழந்தை தன்
மழலையில் 'பப்பி' என்றோ 'நிக்கி' என்றோ பேரிட்டது.
இப்போது பார்வைக்குப் பெரிய நாய் மாதிரி உருவம் கொண்டிருந்த அந்தப் பெட்டை நாய் நிக்கி, ஒரு நாள் அந்த வீட்டு எஜமானி வெளியில் போனபோது நன்றியுணர்ச்சியுடன் அவளைத் தொடர்ந்து ஓடிற்று. அவள், "வீட்டுக்குப் போ!" என்று எத்தனையோ முறை விரட்டியும் குழந்தைமாதிரி போக்குக் காட்டியும் ஒளிந்து ஒளிந்தும் அவளைத் தொடர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு துள்ளித் துள்ளி ஓடிற்று. அப்படி அவள் தன்னை விரட்டுவதும் அவள் விரட்டியவுடன் சில அடிகள் ஓடிப் பின்பு திரும்பிப் பார்த்து, அவளைத் தொடர்ந்து ஓடிப் பிடிப்பதும் நிக்கிக்கு ஆனந்தமான விளையாட்டாக இருந்தது. அந்த அம்மாவுக்கு வேலை இல்லையா என்ன? கடைசியில் 'வீட்டுக்குப் போய்விடும்' என்ற நம்பிக்கையோடு அவள் பஸ்ஸில் ஏறிப் போய்விட்டாள். கொஞ்சதூரம் பஸ்ஸைத் தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிற்று நிக்கி. அந்த நெடிய சாலையில், பிடிக்க முடியாத, எட்ட முடியாத வேகத்தோடு விலகி விலகி எஜமானியோடு வெகுதூரத்தில் போய் - கடைசியில் அந்தத் திருப்பத்தில் பார்வைக்கும் மறைந்து விட்டது பஸ். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பஸ் மறைந்த பிறகும் அந்தத் திருப்பம் வரைக்கும் ஓடிற்று நிக்கி.
பஸ்ஸைக் காணோம்! வேறு வேறு பஸ்களூம் கார்களூம் மனிதர்களூமாகப் பெரும் சந்தடி நிறைந்திருந்தது அந்த வீதியில். வீட்டுக்குத் திரும்ப மனம் கொண்டு நிக்கி வந்த வழியே ஓடி வரலாயிற்று. வரும் வழியில் ஒரு சிறிய சந்து.
அங்கேயிருந்து மசால்வடை வாசனை எண்ணெய்க் கமறலுடன் வீசிற்று. நிக்கி சற்று நின்று காதுகளை உயர்த்தி, வேர்வையின் ஈரம் துளித்த நாசி விரிய வாடை பிடித்தது. மகிழ்ச்சியுடன் ஒரு துள்ளலில் சந்துக்குள் நுழைந்தது.
ஒரு கிழவி, மரத்தடியில் அடுப்பைச் சுற்றிலும் தகர அடைப்பு வைத்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலுள்ள குப்பை மேட்டில் ஏறிப் படுத்துக்கொண்டு மிகுந்த சுவாரசியத்துடன் வடை வாசனையை வாயில் நீரொழுக அநுபவித்துக் கொண்டிருந்தது நிக்கி. எப்போதாவது ஒரு வடையில் கொஞ்சம் பிய்த்துத் தன்னிடம் எறிய மாட்டாளா என்ற கற்பனையோடு அவளையே தன் எஜமானியாகப் பாவித்து வாலாட்டிற்று.
ஏதோ ஒரு சமயம் அவளும் ஒரு சிறு துண்டு வடையை நிக்கியிடம் வீசி எறிந்தாள். சந்தோஷம் தாங்கவில்லை நிக்கிக்கு. ஒரு சுற்றுச் சுற்றிப் பரவச நடனம் ஆடிற்று. அந்த வடைத் துண்டைத் தின்னாமல் தரையில் போட்டு, இரண்டடி பின்னால் நகர்ந்து அதன் அழகை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் யாரோ அந்த வடைத் துண்டை அபகரிக்க வந்துவிட்ட அவசரத்தோடு, அந்தக் கற்பனை எதிரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து தன்னுடைய பொருளை ஸ்வீகரிக்கும் அவசரத்தோடு அதைக் கவ்வியது. மறுபடியும் போட்டியில் ஜயித்த ஆனந்தத்தில் வாயில் கவ்விய அந்த வடைத் துண்டைக் கீழே போட்டுச் சுற்றிச் சுற்றிப் பரவச நடனமாடிச் சுழன்றது.
திடீரென மழை பெய்தது. கிழவி அடுப்பையும் பிற சாமான்களையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீட்டின் திண்ணைக்கு ஓடினாள். நிக்கியும் மழைக்காக அந்தத் திண்ணையோரமாக ஒதுங்கி நின்றது. நல்ல மழை சடசடத்துப் பெய்து சற்று நேரத்தில் ஓய்ந்தது. மழை நின்ற பின் தெருவில் ஜனங்கள் நடமாடினார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் திரும்பின.
நிக்கிக்குத் தன் எஜமானியும் தனக்குப் பேரிட்ட அந்தப் பாப்பாவும் நினைவுக்கு வந்தனர். பாப்பாவின் நினைவு வந்ததும் அதற்கு ஒரு விநாடி கூட அங்கே கால் தரிக்கவில்லை. பாய்ந்து பாய்ந்து ஓடிற்று. பாதைகள் பல திசைகளில் பிரிந்தன. வந்த வழி எதுவென்று அதற்குப் புரியவில்லை. எந்த திசையில் பாப்பாவின் வீடு இருக்கிறதென்று பிடிபடவில்லை. நாலு திசையும் ஓடிற்று. எஜமானியின் பின்னால் ஓடி வந்தபோது அந்த அவசரத்திலும் பல இடங்களில் உட்கார்ந்து திரும்பி வருவதற்கு வழி தெரியும் பொருட்டுச் சிறுநீர் கழித்திருந்தது நிக்கி. சற்று முன் பெய்த நல்ல மழையில் தெருவெல்லாம் சுத்தமாகியிருந்தது.
நிக்கி நம்பிக்கை இழக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. பொழுதும் இருட்டிப் போயிற்று. தெரு விளக்குகளெல்லாம் எரிய ஆரம்பித்தன. நிக்கிக்குப் பயம் பிறந்தது. தன் எஜமானியையோ பாப்பாவையோ பார்க்கவே முடியாதோ என்ற ஏக்கத்தில் அது வானத்தைப் பார்த்து அழுதது. இரவெல்லாம் அழுது அழுது ஏதோ ஒரு தெருவில் எங்கோ ஒரு மூலையில் படுத்து உறங்கி விழித்து அடுத்த நாள் காலை மறுபடி அனாதையாயிற்று!
தெருவில் போகிறவர்களையெல்லாம் தன் எஜமானியோ என்று நினைத்து நினைத்து ஓடி அவர்களால் விரட்டியடிக்கப்பட்டுப் பரிதாபமாகத் திரும்பியது நிக்கி.
இப்போதெல்லாம் தெருவில் எச்சிலை விழுகிறபோது பெரிய நாய்களுக்குப் பயப்படாமல் பாய்ந்து அவற்றோடு சண்டையிட்டுத் தன் பங்கை எடுத்துக் கொள்ளுகிற அளவுக்கு நிக்கி வளர்ந்திருந்ததனால் அதன் வயிற்றுப் பிரச்னை ஒருவாறு தீர்ந்துவிடுகிறது.
ஆனாலும் வாழ்க்கையின் பிரச்னை வயிறு மட்டுமா? அதற்கு மனித நேசம் பசிக்கு உணவு மாதிரி ஓர் அவசியத் தேவையாயிற்று.! அந்தப் பாப்பாவையும் எஜமானியையும் எண்ணி எண்ணி எல்லா இரவுகளிலும் தனிமையில் 'ஓ' வென்று அழுதது நிக்கி.
ரோட்டில் சங்கிலியால் பிணித்துக் கையில் ஒய்யாரமாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் எஜமானர்களின் பின்னால் ஓடுகிற சிங்கார நாய்களையும், சங்கிலியால் பிணைப்புண்டு மதர்ப்போடு எஜமானர்களையே இழுத்துக் கொண்டு முன்னால் செல்கின்ற கம்பீர நாய்களையும், கார்களில் எஜமானர்களோடு சமதையாக வீற்றிருந்து வெளியே தலைநீட்டிப் பார்க்கிற செல்ல நாய்களையும் பொறாமையோடும் கவலையோடும் பார்த்து அழுதது நிக்கி.
சில சமயங்களில் அந்த நாய்கள் நிக்கி தங்களைப் பார்ப்பதைக் கண்டு, பற்கள் வெளித் தெரிய உறுமியவாறு பாய வரும். அப்போதெல்லாம் அந்த எஜமானர்கள் நிக்கியைத்தான் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி பாவனை காட்டி விரட்டுவார்கள்.
அப்போதெல்லாம் தொலைவில் வந்து திரும்பிப் பார்த்து ஒரு முறை குரைத்த பின் ஓடிப்போகும் நிக்கி.
ஒருநாள் மத்தியானம். பங்களாக்கள் நிறைந்த ஒரு தெரு. ஜனசந்தடியே இல்லை. நல்ல வெயில். பகலெல்லாம் ஓடி ஓடி, ஊரெல்லாம் பொறுக்கித் தின்று வயிறு புடைத்துக் கொண்டிருந்தது நிக்கிக்கு. எங்காவது சுகமான இடம் தேடி, ஒரு நிழலில் படுத்துக் கிடக்கும் உத்தேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
யாரோ தன்னைக் கூப்பிடுவது மாதிரி குரலோ சிணுங்கலோ கேட்டது. ஓடிக் கொண்டிருந்த நிக்கி நின்று திரும்பிக் காதுகளை உயர்த்திப் பார்த்தது.
ஒரு பங்களாவின் பூட்டிய கேட்டுக்குப் பின்னால் ஒரு நாய் முன்னங்கால்களைத் தூக்கி இரும்பாலான அந்தக் கேட்டின்மீது வைத்து எம்பி நின்றுகொண்டு நிக்கியை அழைத்தது.
அதன் உடம்புதான் என்ன வெள்ளை! சடை சடையாய் வெள்ளி மாதிரி சுருள் முடி வழிகின்றது. அது நின்ற நிலையில் ஆண் நாய் என்று தெரிகிறது. நிக்கி சற்று நின்றது. கம்பியைப் பிறாண்டிச் சிணுங்கிச் சிணுங்கி அது தன்னை அழைக்கும் தவிப்பை ரசித்துப் பார்த்தது. நிக்கியைப் பார்த்துக் குரைக்காமல், கூப்பிடுகிற முதல் நாயே இதுதான்.
நிக்கி லேசாக வாலை ஆட்டிற்று. நிக்கியின் சம்மதம் தெரிந்த அந்த ஜாதி நாய் முன்னிலும் மும்முரமாகக் கதவுகளைப் பிறாண்டித் தாவியது. தரைக்குக் கேட்டுக்கும் இடையே உள்ள சந்தில் நுழைந்து வெளியில் வர முயன்றது. ம், நடக்கவில்லை! அந்தச் சந்தில் நுழைய முடியாத அளவு அது பருமனாக இருந்தது. ஜாதி நாய் பரிதாபமாகக் கொஞ்சியது.
நிக்கிக்கும் அதன் அருகில் போகவேண்டும் போலிருந்தது. அந்த ஜாதி நாய், தான் மனித நேசத்துக்காகத் தவிக்கிற மாதிரி, இன்னொரு நாயின் நேசத்துக்காகத் தவிப்பதை நிக்கி புரிந்து கொண்டது. அது தனக்காகத் தவிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தது. அதுவும் இவ்வளவு பெரிய இடத்து உயர்ந்த ஜாதி நாயின் நேசம் கிடைக்கும்போது ஓர் ஆதரவுமின்றித் தெரு நாயாக அலையும் நிக்கியால் எப்படி இந்தக் காதல் மிகுந்த அழைப்பை மீறிப்போக முடியும்?
போயிற்று. கேட்டுக்குக் கீழே இருந்த இடைவெளி வழியாக அந்த ஜாதி நாய்தான் போக முடியவில்லை. எனினும் இந்தத் தெரு நாய் நுழைந்து உள்ளே வர முடியும் என்று கனக்கிட்டு வைத்ததுபோல் அந்த ஜாதி நாய் நிக்கியை ' இதன் வழியாக வா' என்று கூறுவது போல் நிக்கியின் முன்னங்கால்களில் ஒன்றைப் பிடித்து இழுத்தது.
நிக்கிப் பங்களாக் காம்பவுண்டுக்குள் ஓடிப் போய் விட்டது. இரண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒன்றன்மீது ஒன்று தாவிப் புரண்டு கவ்வி விளையாடின. நிக்கி அதன் பிடிகளிலிருந்து விலகித் திமிறி ஓடி ஓடி ஆனந்த நடனம் ஆடியது. இதனுடைய ஆட்டத்தைச் சற்று விலகி இருந்து அநுபவித்த ஜாதி நாய் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று நிக்கியின் மீது தாவியது. அவ்வளவுதான்; அந்தப் பிடியிலிருந்து அசைய முடியாமல் கட்டுண்டு கண் கிறங்கியது.
பங்களா வீட்டினுள்ளிருந்து நாயைக் காணோமே என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டு எஜமானி, ' ஏ... சீ! சர்தார்!... சர்தார்!' என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். அதற்குள் இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாததாகப் போகவே, தன்னை யாராவது கவனித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே போய்க் கதவை மூடிக் கொண்டாள் எஜமானி.
இப்போதெல்லாம் நிக்கி எங்கே போனாலும் எல்லோருமே விரட்டுகிறார்கள். எந்த வீட்டின் அருகேயும் யாரும் அதனை நெருங்க விடமாட்டேனென்கிறார்களே!
எங்கேயாவது இந்தத் தெரு நாய், குட்டி போட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர்கள் விரட்டுகிறார்கள் என்று நிக்கிக்குப் புரியவே இல்லை. விரட்டுவதும் ஓடுவதும் அதற்குப் புதிதா என்ன? ஆனாலும் இப்போதெல்லாம் ஓடுவது சிரமமாக இருக்கிறதே, இந்த அநுபவந்தான் அதற்குப் புதிதாக இருந்தது.
சுத்தமான திண்ணையிலும் காம்பவுண்டுகளிலும் இந்த அசுத்தம் பிடித்த நாய்க்கு இடம் தர மறுத்து விரட்டியபின் கடைசியில் ஒருநாள் இரவில் மிகுந்த வேதனையோடும் விரக்தியோடும் அசுத்தம் பிடித்த ஒரு சேரிக்குள் நுழைந்தது நிக்கி.
அது பிறந்ததே, அந்த மாதிரி இன்னொரு குப்பம்.
ஈரம், சகதி. ஒரு குடிசையின் பின்னால் உள்ள மூலையில் சுகமான புழுதி மண்ணில் ஐந்து அழகிய நாய்க் குட்டிகளைப் பிரசவித்தது நிக்கி.
எல்லோரும் வந்து அந்தக் குட்டிகளின் அழகைப் புகழ்ந்தார்கள். ஏதோ ஜாதி நாயின் கலப்பு என்று பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் அவை அனைத்தும் நிக்கியிடமிருந்து பறிபோயின.
வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!
காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக் கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஓடுகிறது. ஒருவேளை, தனது குட்டியை அது தேடுகிறதோ? நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?
அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்து விட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்?
(எழுதப்பட்ட காலம்: 1970)
நன்றி: குருபீடம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஏழாம் பதிப்பு: 1995 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
24. ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது (1969)
வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் 'திக்'கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக் கொண்ட அந்தப் பயத்தினால்தான் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா என்று நிச்சயிக்க முடியாத நிலையில் அவனை அடையாளம் கண்டதும் அச்சம் கொண்டதும் சுப்புக் கோனாருக்கு ஒரே சமயத்தில் நிகழ்ந்தன.
அது பனிக்காலம்தான். இன்னும் பனிமூட்டம் விலகாத மார்கழி மாதக் காலை நேரம்தான். அதற்காக உடம்பு திடீரென்று இப்படி உதறுமா என்ன? பாதத்தின் விரல்களை மட்டும் பூமியில் ஊன்றி, குத்திட்டு அமர்ந்திருந்த கோனாரின் இடது முழங்கால் ஏகமாய் நடுங்கிற்று. எழுந்து நின்று கொண்டான். உடம்பு நடுங்கினாலும் தலையில் கட்டியிருக்கும் 'மப்ள'ருக்குள்ளே திடீரென வேர்க்கிறதே!
முண்டாசை அவிழ்த்துத் தலையை நன்றாகச் சொறிந்து விட்டுக் கொண்டான் கோனார்.
காலனி காம்பவுண்டின் இரும்பாலான கதவுகளை ஓசையிடத் திறந்து பெரிய ஆகிருதியாய் உள்ளே வந்து கொண்டிருந்த அவன், தன்னையே குறி வைத்து முன்னேறி வருவது போலிருந்தது கோனாருக்கு.
அவன் கால் செருப்பு ரொம்ப அதிகமாகக் கிறீச்சிட்டது. அவன் கறுப்பு நிறத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தான். உள்ளே போட்டிருக்கும் பனியனும், இடுப்பிலணிந்த நான்கு விரற்கடை அகலமுள்ள தோல் பெல்ட்டும், அந்த பெல்ட்டிலே தொங்குகின்ற அடர்ந்த சாவிக் கொத்தின் வளையத்தை இணைத்து இடுப்பில் செருகி இருக்கும் பெரிய பேனாக் கத்தியும் தெரிய அணிந்த மஸ்லின் ஜிப்பா; அதைப் பார்க்கும்போது சாவிக் கொத்திலே இணைத்த ஒரு பேனாக் கத்தி மாதிரி தோன்றாமல் கத்தியின் பிடியிலே ஒரு சாவிக் கொத்தை இணைத்திருப்பது போல் தோன்றும் அளவுக்கு அந்தக் கத்தி பெரிதாக இருந்தது.
அவன் சுப்புக் கோனாரைச் சாதாரணமாகத்தான் பார்த்தான். தான் வருகிற வழியில் எதிரில் வருகிற எவரையும் பார்ப்பதுபோல்தான் பார்த்தான். போதாதா கோனாருக்கு? ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பால் கறக்கவும் முடியாமல், பசுவின் காலை அவிழ்க்கவும் முடியாமல் தன்னைக் கடந்து செல்லும் அவனது முதுகைப் பார்த்தவாறு உறைந்து போய் நின்றிருக்கும் கோனாரைப் பார்த்து வேப்ப மரத்தில் கட்டிப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிக்கு என்ன மகிழ்ச்சியோ? ஒரு துள்ளூத் துள்ளிக் கட்டை அவிழ்த்துக் கொண்டு பசுவின் மடியில் வந்து முட்டியதைக் கூட அவன் பார்க்கவில்லை.
வழக்கம்போல் படுக்கையிலிருந்து எழுந்ததும் பசுவின் முகத்தில் விழிப்பதற்காக ஜன்னல் கதவைத் திறந்த முதல் வீட்டுக் குடித்தனக்காரரான குஞ்சுமணி இந்த மஸ்லின் ஜிப்பாக்காரனின் - காக்கை கூடு கட்டிய மாதிரி உள்ள கிராப்பையும், கிருதாவையும் பார்த்து முகம் சுளித்துக் கண்களை மூடிக் கொண்டார். கண்ணை மூடிக் கொண்ட பிறகுதான் மூடிய கண்களுக்குள்ளே அவனை அவருக்கு அடையாளம் தெரிந்தது. மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தார். அவனேதான்!
அவனைத் துரத்திக் கொண்டு யாராவது ஓடி வருகிறார்களா என்று பார்ப்பதற்காகக் குஞ்சுமணி வெளியில் ஓடி வந்தார்.
அப்போது அவன் அவரையும் கடந்து மேலே போய்க் கொண்டிருந்தான். வெளியில் வந்து பார்த்த குஞ்சுமணி, பசுவின் காலைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் கால்களையும் பயத்தால் கட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் சுப்புக் கோனாரைப் பார்த்தார். கோனாருக்குப் பின்னால் காம்பவுண்டு 'கேட்'டுக்கு வெளியே நின்றிருந்த அந்த ஜட்கா வண்டியிலிருந்துதான் இவன் இறங்கி வருகிறானா என்று குஞ்சுமணியால் தீர்மானிக்க முடியவில்லை.
ஏனெனில் - தெருவோடு போகிற வண்டி தானாகவே அதன் போக்கில் நின்றிருக்கலாமென்று தோன்றுகிற விதமாக அந்த ஜட்கா வண்டியின் குதிரை, பின்னங்கால்களை முழங்கால் வளையப் பூமியில் உந்தி விறைத்துக் கொண்டு புழுதி மண்ணில் நுரை கிளம்பச் சிறுநீர் கழித்த பின், கழுத்துச் சலங்கை அசைய அப்போதுதான் நகர ஆரம்பித்திருந்தது. காலையில் தனக்கு வரிசையாகக் காணக் கிடைக்கின்ற 'தரிசன'ங்களை எண்ணிக் காறித் துப்பினார் குஞ்சுமணி. துப்பிய பிறகுதான் 'அவன் திரும்பிப் பார்த்துவிடுவானோ' என்று அவர் பயந்தார். அந்தப் பயத்தினால், தான் துப்பியது அவனைப் பார்த்து இல்லை என்று அவனுக்கு உணர்த்துவதற்காக "தூ! தூ! வாயிலே கொசு பூந்துட்டது" என்று இரண்டு தடவை பொய்யாகத் துப்பினார் குஞ்சுமணி.
அவன் அந்தக் காலணியின் உள்ளே நுழைந்து இரண்டு பக்கமும் வரிசையாய் அமைந்த அந்தக் குடியிருப்பு வீடுகளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல், அவற்றின் உள்ளே மனிதர்கள் தான் வாழுகிறார்களா என்றூ அறியக் கூட சிரத்தையற்றவனாய், தனது இந்த வருகையைக் கண்டபின் இங்கே உள்ள அத்தனை பேருமே ஆச்சரியமும், அச்சமும், கவலையும், கலக்கமும் கொள்வார்கள் என்று தெரிந்தும், அவர்களின் அந்த உணர்ச்சிகளைத் தான் பொருட்படுத்தவில்லை என்று காட்டிக் கொள்ளுகிற ஓர் அகந்தை மாதிரி, 'இங்கே இருக்கும் எவனையும் போல் எனக்கும் இங்கு நடமாட உரிமை உண்டு' என்பதைத் தனது இந்தப் பிரசன்னத்தின் மூலம் ஒரு மெளனப் பிரகடனம் செய்கின்ற தோரணையில், பின்னங் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்புறம் கோத்த உள்ளங்கைகளைக் கோழிவால் மாதிரி ஆட்டிக் கொண்டு, 'சரக் சரக்' என்று நிதானமாய், மெதுவாய், யோசனையில் குனிந்த தலையோடு மேலே நடந்து கொண்டிருந்தான்.
அந்த அகந்தையும், அவனது மெளனமான இந்தப் பிரகடனத்தையும்தான் குஞ்சுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், தாங்கிக் கொள்ளாமல் வேறென்ன செய்வது? ஏற்கனவே ஒரு பக்கம் பயத்தால் படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனத்துள், அவனது இந்த நடையைப் பார்த்ததும் கோபமும் துடிதுடிக்க ஆரம்பித்தது. ஆனால், அறிவு நிதானமாக வேலை செய்தது அவருக்கு.
"இவன் எதற்கு இங்கு வந்திருப்பான்! இவன் நடையைப் பார்த்தால் திருடுவதற்கு வந்தவன் மாதிரி இல்லை. எதையோ கணக்குத் தீர்க்க வந்து அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிற நிதானம் இவன் நடையில் இருக்கிறதே.... ஆள் அப்போ இருந்ததை விட இப்போ இன்னும் கொஞ்சம் சதை போட்டிருக்கான். அப்போ மட்டும் என்ன.... சுவரேறிக் குதிச்ச வேகத்திலே கீழே விழுந்து, முழங்காலை ஒடிச்சுக்காமல் இருந்திருந்தான்னா அத்தனை பேரையும் அப்படியே அள்ளித் தூக்கித் தூர எறிஞ்சுட்டு ஓடிப் போயிருப்பான்... அன்னிக்கு முழங்கால்லேருந்து கொட்டின ரத்தத்தையும், பட்டிருந்த அடியையும் பார்த்தப்போ, இவனுக்கு இன்னமே காலே விளங்காதுன்னு தோணித்து எனக்கு. இப்போ என்னடான்னா நடை போட்டுக் காட்டறான், நடை! அது சரி! இப்போ இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?... என்ன பண்ணினாப் போவான்?... இவன் வந்திருக்கறது நல்லதுக்கில்லைன்னு தோணறதே. இன்னிக்கு யார் மொகத்திலே முழிச்சேனோ? சித்தமின்னே இவன் மொகத்திலே தான் முழிச்சேனோ?..." என்ற கலவரமான சிந்தனையோடு சுப்புக் கோனாரைப் பரிதாபமாகப் பார்த்தார், குஞ்சுமணி. அந்தப் பார்வையில் சுப்புக் கோனாரின் உடம்பையும், அந்த 'அவனு'டைய உடம்பையும் ஒப்பிட்டு அளந்தார்.
'கோனாருக்கு நல்ல உடம்புதான்... தயிர், பால், வெண்ணெய், நெய்யில் வளர்ந்த உடம்பாச்சே! சரிதான்! ஆனால், அடி தாங்குமோ? அவனுக்கு அன்னிக்கு முழங்காலிலே அடி படாமல் இருந்திருந்தா, இந்த சுப்புக் கோனார், கீழே விழுந்திருந்த அவன் முதுகிலே அணைக்கயத்தாலே வீறு வீறுன்னு வீறி இருப்பானா! அந்தக் கயறே ரத்தத்திலே நனைஞ்சு போயிடுத்தே!... அடிபட்டு ரத்தம் கொட்டற அந்த முழங்காலிலே ஒண்ணு வச்சான். அவ்வளவுதான்! பயல் மூர்ச்சை ஆயிட்டான். அதுக்கப்புறம் பொணம் மாதிரின்னா அவனை இழுத்துண்டு வந்து, வேப்பமரத்தோட தூக்கி வச்சுக் கட்டினா... அப்புறம் அவன் முழிச்சுப் பார்த்தப்போன்னா உயிர் இருக்கறது தெரிஞ்சது... 'தண்ணி தண்ணி'ன்னு மொனகினான். நான்தான் பால் குவளையிலே தண்ணி கொண்டு போய்க் குடுத்தேன். குடுத்த பாவி அத்தோடே சும்மா இருக்கப் படாதோ! 'திருட்டுப் பயலே! உனக்குப் பரிதாபப் பட்டா பாவமாச்சே!'ன்னு பால் குவளையாலேயே கன்னத்திலே ஓங்கி இடிச்சேன்... தண்ணி குடிச்ச வாயிலேருந்து கொடகொடன்னு ரத்தம் கொட்டிடுத்து... அவன் கண்ணைத் திறந்து கறுப்பு முழியைச் சொருகிண்டு என்னைப் பார்த்தான். அதுக்கு அர்த்தம் இப்போன்னா புரியறது...'
'எலே பாப்பான், இருடா வந்து பாத்துக்கறேன்'ங்கற மாதிரி அன்னிக்கே தோணித்து. இப்போ வந்திருக்கான்... நான் தண்ணி குடுத்தேனே... அதை மறந்திருப்பானா என்ன? எனக்கென்ன - மத்தவா மாதிரி 'ஒருத்தன் வகையா மாட்டிண்டானே, கெடைச்சது சான்ஸ்'னு போட்டு அடிக்கற ஆசையா? 'இப்படித் திருடிட்டு, ஓடிவந்து, இவா கையிலே மாட்டிண்டு, அடி வாங்கி, தண்ணி தண்ணின்னு தவிக்கறயே... நோக்கென்னடா தலையெழுத்து?'ன்னு அடிச்சேன். இல்லேங்கல்லை... அடிச்சேன்... அவனுக்கு அடிச்சது மட்டும்தான் ஞாபகம் இருக்கும். இப்போ திருப்பி அடிக்கத்தான் அவன் வந்திருக்கான். எனக்கு நன்னாத் தெரியறது. அவன் நடையே சொல்றதே! நன்னா, ஆறு மாசம் ஜெயில் சாப்பாட்லே உடம்பைத் தேத்திண்டு வந்திருக்கான். வஞ்சம் தீக்கறதுக்குத்தான் வந்திருக்கான்... பாவம்! இந்த சுப்புக் கோனாரைப் பார்க்கறச்சேதான் பாவமா இருக்கு.. அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானே? இவன் கணக்குத்தான் அதிகம். என்னமா அடிச்சான்! அடிக்கறச்சே மட்டும் நன்னா இருந்ததோ?... இப்போ திருப்பி தரப் போறான்... நேக்கும்தான்... என் கணக்கு ஒரு அடிதான்... ஆனால், அதை நான் தாங்கணுமே!.. இந்தக் காலனிலே இருக்கிறவாள் எல்லாருமே ஆளுக்கு ஒரு தர்ம அடி போட்டா... அப்படி இவன் என்ன மகா சூரன்? எல்லாரையுமா இவன் அடிச்சுடுவான்?" என்ற எண்ணத்தோடு மறுபடியும் சுப்புக் கோனாரின் உடம்பை அளந்து பார்த்தார் குஞ்சுமணி. அவன் உடம்போடு தன் உடம்பையும் - ஏதோ இலங்கைக்குப் பாலம் போடும்போது அணில் செய்த உதவி மாதிரி தன் பலத்தையும் கூட்டி அதன் பிறகு தானும் சுப்புக் கோனாரும் சேர்ந்து போடுகிற கூச்சலில் வந்து சேருவார்கள் என்று நம்புகிற கூட்டத்தின் பலத்தையும் சேர்த்துப் பெருக்கிக் கொண்ட தைரியத்தோடு குஞ்சுமணி பலமாக ஒருமுறை - இருமினார்! அவர் என்னமோ அவனை மிரட்டுகிற தோரணையில் கனைத்து ஒரு குரல் கொடுக்கத் தான் நினைத்தார். அப்படியெல்லாம் கனைத்துப் பழக்கமில்லாத காரணத்தினாலோ, அல்லது நாள் முழுவதும் அந்த நடராஜா விலாஸில் சரக்கு மாஸ்டராக அடுப்படிப் புகையில், கடலை எண்ணெயில் உருட்டிப் போட்ட புளி உருண்டை தீய்கிற கமறலில் இருமி இருமி நாள் கழிக்கிற பழக்கத்தினாலோ கனைப்பதாக நினைத்துக் கொண்டு அவரால் இருமத்தான் முடிந்தது.
அவன், அவரையோ, அவர் இருமலையோ கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டு வாசற்படிகளில் ஏறினான்.
"நல்ல இடம்தான் பார்த்திருக்கான். திண்ணையிலே உக்காந்துக்கப் போறான். பக்கத்திலே இருக்கிற குழாயடிக்கு எப்படிப் பொம்மனாட்டிகள் வந்து தண்ணி பிடிப்பா?... இதோ! இன்னும் சித்த நாழியிலே எங்க அம்மா ரெண்டு குடத்தையும் கொண்டு வந்து திண்ணையிலே வச்சுட்டு, 'குஞ்சுமணிக் கண்ணா! என் கண்ணோல்லியோ? ரெண்டே ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்து குடுத்துடுடா'ன்னு கெஞ்சப் போறாள். பாவம். அவளுக்கு உக்காந்த இடத்திலே சமைச்சுப் போடத்தான் முடியும். தண்ணிக் குடம் தூக்க முடியுமா என்ன? ரெண்டு குடத்தையும் எடுத்துண்டு நான் குழாயடிக்குப் போகப் போறேன். அப்படியே அலாக்கா என்னைத் திண்ணை மேலே தூக்கி... சொல்லிடணும்.... 'ஒரு அடி தாம்பா தாங்க முடியும். அதோட விட்டுடணும்... அவ்வளவுதான் என் கணக்கு'ன்னு சொல்லிடணும். நியாயப்படி பார்த்தா அவன் முதல்லே சுப்புக் கோனாரைத்தானே அடிக்கணும்? இந்தக் கோனாருக்கு அவனை அடையாளம் தெரியலியோ?..."
"ஏய், சுப்பு! பாத்துண்டு நிக்கறீயே... ஆளை உனக்கு அடையாளம் தெரியலையா?" என்று குரலைத் தாழ்த்திச் சுப்புக் கோனாரை விசாரித்தார், குஞ்சுமணி.
"அடையாளம் எனக்குத் தெரியுது சாமி. என்னையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோன்னுதான் யோசிக்கிறேன்" என்று முணுமுணுத்தான் சுப்புக் கோனார்.
அந்த நேரம், கையில் பால் செம்புடன் வெளியில் வந்த குஞ்சுமணியின் தாயார் சீதம்மாள், சுப்புக் கோனார் பாலைக் கறக்காமல் தன் பிள்ளையாண்டானுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதுவும் அவன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதைத் தானும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், காதை மறைத்திருந்த முக்காட்டை எடுத்துச் செவி மடலில் செருகிக் கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள்.
சாதாரணமாகக் குஞ்சுமணி யாருடனும் பேசமாட்டார். காலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியாகப் பசுவைத் தரிசனம் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டு வெற்றிலை சீவல் போட ஆரம்பிப்பார். சீதம்மாள் பாலை வாங்கிக் கொண்டு போய், காப்பி கலந்து, அவரைக் கூப்பிடுவதற்கு முன் இரண்டு தடவையாவது வெற்றிலை போட்டு முடித்திருப்பார் குஞ்சுமணி. காப்பி குடித்த பிறகு இன்னொரு முறை போடுவார். வெற்றிலை, சீவல், புகையிலை அடைத்த வாயுடன் இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு குழாயடிக்கு வருவார். அவர் அதிகமாகப் பேசுகின்ற பாஷையே 'உம்', 'ம்ஹீம்' என்ற ஹீங்காரங்களும் கையசைப்பும்தான். அப்படிப்பட்ட குஞ்சுமணி காலையில் எழுந்து வெற்றிலை கூடப் போடாமல் இந்தக் கோனாரிடம் போய் ஏதோ பேசுகிறார் என்றால், அது ஏதோ மிக அவசியமான, சுவாரசியமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த சீதம்மாள், மோப்பம் பிடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு நாலு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்தாள். அவ்விதம் அவள் பார்க்கும்போது அந்தப் பூட்டிக் கிடக்கும் வீட்டின் முன்னால் நின்றிருக்கும் அவன், இவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தான்.
"இங்கேதான் பார்க்கறான்... அம்மா, நீ ஏன் அங்கே பார்க்கறே?" என்று பல்லைக் கடித்தார் குஞ்சுமணி.
"யார்ரா அவன்? பூட்டிக் கிடக்கற வீட்டண்ட என்ன வேலை? கேள்வி முறை கிடையாதா? யாரு நீ?" என்று அவனைப் பார்த்த மாத்திரத்தில் குரலை உயர்த்திச் சப்தமிட்டவாறே பால் செம்புடன் கையை நீட்டி நீட்டிக் கேட்டுக்கொண்டு, அவனை நோக்கி நடந்த சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார் குஞ்சுமணி.
"அவன் யாரு தெரியுமோ? முன்னே ஒரு நாள் காலையிலே எங்கேயோ திருடிட்டு, அவா துரத்தறச்சே ஓடி வந்து நம்ப காம்பவுண்டுச் சுவரிலே ஏறிக் குதிச்சுக் காலை ஒடிச்சிண்டு, இந்தக் கோனார் கையிலே மாட்டிண்டு அடிபட்டானே...."
"சொல்லு..."
"பத்து மணிக்குப் போலீஸ்காரன் வரவரைக்கும் வேப்பமரத்திலே கட்டி வச்சு, போறவா வரவா எல்லாரும் ஆளுக்கொரு தர்ம அடி போட்டாளே..."
"ஆமா..."
"நான் கூடப் பால் குவளையாலே கன்னத்திலே ஓங்கி இடிச்சேனே... அவன்தான் - அந்தத் திருடன்தான் வந்திருக்கான்... திருடறதுக்கு இல்லே. எல்லாருக்கும் திருப்பிக் குடிக்கறத்துக்கு..."
"குடுப்பான்... குடுப்பான். மத்தவா கை பூப்பறிச்சுண்டிருக்குமாக்கும்... திருடனைக் கட்டி வச்சு அடிக்காம கையைப் பிடிச்சு முத்தம் குடுப்பாளாக்கும்...? என்ன கோனாரே! இந்த அக்கிரமத்தைப் பாத்துண்டு நிக்கறீரே? மரியாதையா காம்பவுண்டை விட்டு வெளியே போகச் சொல்லும்... இல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன்னு சொல்லும்" என்றூ அந்தக் காலனியையே கூட்டுகிற மாதிரி 'ஓ' வென்று கத்தினாள் சீதம்மாள்.
அவளுடைய கூக்குரல் கிளம்புவதற்கு முன்னாலேயே அந்தக் காலனியில் ஓரிருவர் பால் வாங்குவதற்காகவும், குழாயடியில் முந்திக் கொள்வதற்காகப் பாத்திரம் வைக்கவும் அங்கொருவர், இங்கொருவராய்த் தென்படலாயினர்.
இப்போது சீதம்மாளின் குரல் கேட்ட பிறகு, எல்லாருமே அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணையின் மேல் வந்து உட்கார்ந்திருக்கும் அந்த அவனைப் பார்த்தனர்; பார்த்ததும் அடையாளமும் கண்டனர். சுப்புக் கோனார் மாதிரியும், குஞ்சுமணி மாதிரியும் அவனது பிரசன்னத்தைக் கண்டு அவர்களும் அஞ்சினர்.
கூட்டம் சேர்ந்த பிறகு கோனாருக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. 'என்ன இவன்?... பெரிய இவன்!... திருட்டுப் பயல்தானே? அன்னிக்கு வாங்கின அடி மறந்திருக்கும். என்ன உத்தேசத்தோட வந்திருப்பான்னுதான் யோசிச்சேன்...'
மப்ளரை உதறித் தோளில் போட்டுக் கொண்ட கோனார், பலமாக ஒரு கனைப்புக் கனைத்தான்.
'ம்...' என்று குஞ்சுமணி அந்தக் கனைப்பை மனசுக்குள் சிலாகித்துக் கொண்டார்.
கோனார், தைரியமாக, கொஞ்சம் மிரட்டுகிற தோரணையுடனேயே அவன் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையை நோக்கி நடந்தான். அவனுக்குத் துணையாக - ஏதாவது நடந்தால் விலக்கி விடவோ, அல்லது கூச்சலிடவோ ஒரு ஆள் வேண்டாமா? அதற்காக - குஞ்சுமணியும் கோனாரின் பின்னால் கம்பீரமாக நடந்து சென்றார்.
"எலே!... உன்னை யாருன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும்... இடம் தெரியாம வந்துட்டே போல இருக்கு. வேறே ஏதாவது தகராறு வரதுக்கு முன்னாடி இந்தக் காம்பவுண்டை விட்டு வெளியே போயிடு" என்று கோனார் சொல்லும் போது -
"ஆமாம்பா... தகராறு பண்ணாம போயிடு... நோக்கு இடமா கிடைக்காது?" என்று குஞ்சுமணியும் குரல் கொடுத்தார்.
அவன் மெளனமாக ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். பின்னர் சாவதானமாய் இடுப்பை எக்கி பெல்ட்டோ டு தைத்திருந்த ஒரு பையைத் திறந்து, நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தைத் கோனாரிடம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து ஒரு சாவியைத் தேடி எடுத்து, அந்தப் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
கோனார் அந்தக் காகிதத்தைக் குஞ்சுமணியிடம் கொடுத்தான். குஞ்சுமணி அதை வாங்கிப் பார்த்ததும் வாயைப் பிளந்தார்.
"என்னய்யா கோனாரே... முதலியார் கிட்டே இரண்டு மாச அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் கட்டி, ரசீது வாங்கிண்டு வந்திருக்கானய்யா..." என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டார்.
"நன்னா இருக்கே, நாயம்! சம்சாரிகள் இருக்கற எடத்துலே திருட்டுப் பயலைக் கொண்டு வந்து குடி வெக்கறதாவது? இந்த முதலியாருக்கென்ன புத்தி கெட்டா போயிடுத்து? ஏண்டா குஞ்சுமணி! நானும் இந்த வீடு காலியான பதினைந்து நாளா சொல்லிண்டு இருக்கேனோன்னோ? நம்ப சுப்புணி பிள்ளை பட்டம்பி இங்கே ஏதோ 'கோப்பரேட்டி' பரீட்சை எழுத வரப் போறேன்னு கடிதாசி எழுதினப்பவே சொன்னேனே.... 'அந்த முதலியார் மூஞ்சியிலே அம்பது ரூபாக் காசை 'அடுமாசி'யா விட்டெறிஞ்சுட்டு இந்த இடத்தைப் பிடிடா'ன்னு சொன்னேனோன்னோ?... நேக்கு அப்பவே பயம்தான்... வயசுப் பொண்கள் இருக்கற எடத்துலே எவனாவது கண்ட கவாலிப் பயல் வந்துடப்படாதேன்னு... பாரேன்.... அவனும் அவன் தலையும்.... கட்டால போறவன்... பீடி வேறே பிடிச்சுண்டு... என்ன கிரகசாரமோ?" என்று முடிவற்று முழங்கிக் கொண்டிருந்த சீதம்மாளை வாயைப் பொத்தி அடக்குவதா, கழுத்தை நெரித்து அடக்குவதா என்று புரியாத படபடப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேரே இரண்டு கையையும் நீட்டி -
"அவன் காதுலே விழப் போறது. வாயை மூடு.... அவன் கையால எனக்கு அடி வாங்கி வெக்கறதுன்னு கங்கணம் கட்டிண்டு நிக்கறயா? எவனும் எங்கேயும் வந்துட்டுப் போறான். நமக்கென்ன?" என்று கூறிச் சீதம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் குஞ்சுமணி.
"நேக்கு என்னடா பயம்? நோக்கு பயமா இருந்தா, நீ ஆத்துக்குள்ளே இரு... புருஷாள்ளாம் வெளிலே போயிடுவேள்; நாங்க பொம்மனாட்டிகள்னா வயத்துலே நெருப்பைக் கட்டிண்டு இங்கே இருக்கணும்... இப்பவே குழாயடியிலிருந்த தவலையைக் காணோம்... கொடியிலே உலர்த்தியிருந்த துணியைக் காணோம்... போறாக்குறைக்கு திருடனையே கொண்டு வந்து குடி வச்சாச்சு... காதுலே மூக்கிலே ரெண்டு திருகாணி போட்டுண்டிருக்கற கொழந்தைகளை எப்படித் தைரியமா வெளிலே அனுப்பறது? ஓய்.... கோனாரே, பேசாம போய் போலிசுலே ஒரு 'கம்ப்ளேண்டு' குடும். இதே எடத்துலே இவனைப் பிடிச்சுக் குடுத்திருக்கோம்" என்று வழி நெடுக, வாயைப் பொத்துகிற மகனின் கையைத் தள்ளித் தள்ளிப் புலம்பியவாறு வீட்டுக்குள் சென்ற சீதம்மாள், உள்ளே இருந்தும் உரத்த குரலில் அந்தத் தெருவுக்கே அபாய அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையில், சுப்புக் கோனார், வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த பசுவின் மடியில் பாலை ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பார்த்துவிட்டுக் கோபமாக வைது கொண்டு ஓடி வந்தான். பசுவின் மடியில் கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல், உறிஞ்சிவிட்ட எக்களிப்பில், வாயெல்லாம் பால் நுரை வழியத் துள்ளிக் கொண்டிருந்தது கன்றுக் குட்டி. பசு, கோனாரைக் கள்ளத்தனமாகப் பார்த்தது. ஆத்திரமடைந்த கோனார் பசுவின் காலைக் கட்டியிருந்த அணைக் கயிற்றை அவிழ்த்துச் 'சுரீர்' என்று ஒன்று வைத்தான். அடுத்த அடி கன்றுக் குட்டிக்கு. பசுவும் கன்றும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடின.
கையில் பால் செம்புடன் வெளியில் வந்த சீதம்மாளைப் பார்த்துச் சுப்புக் கோனார் கத்தினான்: "பாலுமில்லை ஒண்ணுமில்லை, போங்கம்மா... கன்னுக்குட்டி ஊட்டிப்பிடுத்து... இந்தத் திருட்டுப் பய முகத்திலே முழிச்சதுதான்" என்று சொல்லிக் கொண்டே இது தான் சந்தர்ப்பமென்று அவனும் அங்கிருந்து நழுவினான்.
திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டிருந்த குஞ்சுமணி, "மத்தியானத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு" என்று குரல் கொடுத்தார். 'அதற்குள்ளே இங்கு என்னென்ன நடக்கப் போகிறதோ?' என்று எண்ணிப் பயந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் காலனி முழுவதும், ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் விடியற்காலையில், எங்கோ திருடிவிட்டு, தப்பி ஓடிவந்து, சுவரேறிக் குதித்து, இங்கே சிக்குண்டு, எல்லோரிடமும் தர்ம அடி வாங்கி, போலீசில் ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்ற ஒரு பழைய கேடி, இங்குள்ள, இத்தனை நாள் காலியாக இருந்த, இதற்கு முன் ஒரு கல்லூரி மாணவன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அந்தக் கடைசிப் போர்ஷனில் குடி வந்திருக்கிறான் என்கிற செய்தி பரவிற்று.
திண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களூக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.
'அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு - சைக்கிளிலே வந்தவன் - சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே... அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்... இப்போ திரும்பி வந்திருக்கான்! அவனை இவன் சும்மாவா விடுவான்? இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான்? பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே...' என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் 'பிலுபிலு'வென வளர்ந்திருக்கிறது. தோளூம் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.
'ஐயையோ... கத்தியை வேற எடுத்துண்டு வரானே... நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்... இங்கேதான் வரான்!' என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று 'படா'ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.
அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.
'ஏண்டாப்பா... எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே?... இந்த அம்மா கடன்காரி வேற உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா... நேக்குப் புரியறது... மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே 'லேசா' ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு... என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே?' என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.
அந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். 'அடப் போறாத காலமே! ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்!' என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு.
'எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன?' என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும் பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் - சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, 'படக்'கென்று அரை அடி நீளத்துக்கு 'பளபள'வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான்.
குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு, சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: 'நல்ல வேளை! தப்பிச்சே... ஆத்தை விட்டு வெளிலே வராதே... பலி போட்டுடுவான், பலி!'
அவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார்.
அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும் குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு அவனே எழுந்து உள்ளே போனான்.
அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும் அவன் வெளியே தலை காட்டவே இல்லை.
அந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், "வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி.
"ஆமாம் ஆமாம்" என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.
அப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.
காலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான்.
வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டு விட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான்.
இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான்.
காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து 'தப தப'வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.
திடீரென்று,
"மாமா... உங்க பனியன் மண்ணிலே விழுந்துடுத்து..." என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.
அப்போதுதான் அவன் பயந்தான்.
தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை யாராவது பார்த்து விட்டார்களோ? என்று சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.
"நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?... உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா... அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு... அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு..."
அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.
அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: "அம்மா பாத்தா அடிப்பா... சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்..."
அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.
ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.
திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! 'இது உன் வீடு' என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.
அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். 'யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?' என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.
"பாப்பா... பாப்பா" என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.
'உஸ்' என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு கதவுக்குப் பின்னால் ஒளிந்து, காத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.
"இங்கேதான் இருக்கேன்... வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ" என்று அவனை இழுத்து உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.
குழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.
"எல்லாம் எனக்கே எனக்கா?"
"ம்..."
இரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில் இனிப்பின் சாறு வழிந்தது.
"இந்தா! உனக்கும் ஒண்ணு" என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது -
"ராஜி... ராஜி" என்ற குரல் கேட்டதும் குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.
"அம்மா தேடறா..." என்று அவனிடம் சொல்லி விட்டு "அம்மா! இங்கேதான் இருக்கேன்" என்று உரத்துக் கூவினாள் குழந்தை.
"எங்கேடி இருக்கே?"
"இங்கேதான்... திருட வந்திருக்காளே புது மாமா! அவாத்திலே இருக்கேன்."
அவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, "அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்புறமா வா" என்று கூறினான் அவன்.
"மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா... இதோ! மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்புறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷீக்குக் கூட..."
குழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான்.
மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன் வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டுச் சற்று நேரம் படுத்து உறங்கினான்.
நான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினான்.
குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது.
போலீஸ்காரரை வணங்கிய பின் தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.
"தெரியும்டா... பொல்லாத ரசீது... ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா? உடனே யோக்கியனாயிடுவியா, நீ? மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன? நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு... என்னைக்கிடா நீ ரிலீஸானே?" என்று மிரட்டினான் போலீஸ்காரன்.
"முந்தா நாளுங்க, எஜமான்" என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.
அப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார்.
முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.
"உங்களுக்கே நன்னா இருக்கா? நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா?"
'வாக்கிங் ஸ்டிக்'கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.
"அட அசடே! அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும்? திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா? அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு... அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே?" என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.
முதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன் வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.
"இங்கே உனக்கு என்ன வேலை?" என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.
"இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்."
முதலியார் அவனையும் போலீஸ்காரனையும் மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.
"என்னுடைய 'டெனன்டை' காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார்? மொதல்லே 'யூ கெட் அவுட்'!"
முதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான்.
"எஸ், ஸார்" என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.
"அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க? திருடாதப்போ அவன் எங்கே போறது? அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ" என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.
"ஓய், குஞ்சுமணி! இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர் திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்." என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.
"என்ன கோனாரே... நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா?... நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே?..." என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.
கடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:
"இந்தாப்பா... உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்..." என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.
அன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தன். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது.
காலையில் பால் கறக்க வந்த கோனார் அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான்.
குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து பசுவைத் தரிசனம் செய்தார்.
குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது.
அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.
மத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று...
இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.
அந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும் ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது.
மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
"ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?" என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை.
(எழுதப்பட்ட காலம்: 1969)
நன்றி: அனைத்திந்திய நூல் வரிசையில் நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி, 1973ல் வெளியிட்டு, இதுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ள, "ஜெயகாந்தன் சிறுகதைகள், - ஜெயகாந்தன்" தொகுப்பு.
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
25. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் (1968)
ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்... அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?... அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்... அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே... 'ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா... உக்காந்துண்டிருக்கா'ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவிலே நின்னு பார்த்தா இந்த வீடு ரொம்ப லட்சணமா இருக்கோ இல்லியோ? அந்த லட்சணமே இந்த ஜன்னல் ரெண்டினாலேதான். ஜன்னல் இல்லேன்னா பார்க்கச் சகிக்குமோ? இந்த வீடு ரொம்பப் பழசுதான். பழசுன்னாலும் பழசு, அறதெப் பழசு... பழசானால் என்ன? அழகாகத்தானே இருக்கு! தாத்தாவோட தாத்தாவெல்லாம் இங்கேதான் பொறந்தாளாம். இப்போ இந்த வீட்டுக்கு ரெண்டு பக்கத்திலேயும் பெரிசு பெரிசா மாடி வீடு வந்துட்டுது. ரெண்டு பெரியவா கையைப் பிடிச்சுண்டு ஒரு சின்னக் கொழந்தை நிக்கற மாதிரி இந்த வீடுதான் குள்ளமா நடுவிலே நின்னுண்டு இருக்கு... சின்ன வீடு, ஓட்டு வீடு; வீட்டுக்கு முன்னே ரெண்டு பக்கமும் திண்ணை; நடுவிலே வாசற்படி; ரெண்டு திண்ணைக்கு நேராவும் ரெண்டு ஜன்னல்; இந்த வீடு ரெண்டு கண்ணையும் தெறந்துண்டு தெருவைப் பார்க்கற மாதிரி இருக்கும். இந்த ரெண்டு ஜன்னலும் இந்த வீட்டுக்கு ரெண்டு கண் மாதிரி. ஜன்னல் வீட்டுக்குக் கண்தானே? யார் சொன்னா அப்படி?... யாரும் சொல்லலே. எனக்கே அப்படித் தோன்றது... நான்தான் சொல்றேன்.
வீட்டுக்கு ஜன்னல் எதுக்கு வெச்சாளாம்? காத்து வரதுக்கு; வீடு தெருவைப் பாக்கறதுக்கு; வீட்டில இருக்கிறவா மூச்சு விடறதுக்கு. வீட்டிலெ இருக்கிறவா தெருவிலே நடக்கிறதையெல்லாம் பாக்கறதுக்கு...
ஏன் பார்க்கணும்னா கேக்கறேள்? நன்னா கேட்டேள்! ஏன் பார்க்கப்படாதுன்னு நான் கேக்கறேன். அதுக்குப் பதில் சொல்லுங்கோ. ஏன் மூச்சு விடணும்? ஏன் காத்து வரணும்னு கூடக் கேப்பேளா? இதெல்லாம் என்ன கேள்வி? ஜன்னலே இல்லாமெக் கட்டினா அதுக்கு வீடுன்னா பேரு? அது சமாதிடீ அம்மா, சமாதி!
காலமெல்லாம் இது ஒரு பேச்சா? 'ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா... ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா'ன்னு கரிக்கறேளே...
எனக்கு ஜன்னலண்டேதான் சித்தே மூச்சு விட முடியறது. இந்த வீட்டிலே வேறே எங்கே போனாலும் மூச்சு முட்டறது; புழுங்கறது; உடம்பு தகிக்கிறது. இந்த வீட்டிலேயே... ஏன்? இந்த லோகத்திலேயே இதைவிட சொகமான இடம் கிடையாது. அடீ அம்மா! இங்கேதான் என்னமா ஜிலுஜிலுன்னு காத்து வரது! நான் உக்காந்துண்டிருக்கேனே, இந்த ஜன்னல் கட்டைதான் என்னமா வழவழன்னு இருக்கு! சேப்புக் கலர் சிமிட்டி பூசி இருக்கா... என்னதான் வெய்யல் நாளா இருந்தாலும் இது மட்டும் தொட்டா ஜில்லுனு இருக்கும்! ஜன்னலுக்கு நேரா தெரியறதே ஒரு அரச மரம்... எப்பப் பார்த்தாலும் அது 'சலசல'ன்னு என்னமோ பேசிண்டே இருக்கு. இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி 'ஜம்'னு உக்காந்துண்டு இந்த அரச மரத்தைப் பார்த்துண்டே இருந்தா நேரம் போறதே, காலம் போறதே தெரியறதில்லே - அப்படித்தான் நான் உக்காந்துண்டிருக்கேன்! இன்னிக்கி நேத்திக்கா உக்காந்திண்டிருக்கேன்? இதிலே உக்காந்துண்டா எனக்கு அது ஒரு பாந்தமாத்தான் இருக்கு. ஜன்னலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற சுவத்திலே ஒரு பக்கம் முதுகைச் சாச்சுண்டு இன்னொரு பக்கம் ரெண்டு பாதத்தையும் பதிய வச்சு உதைச்சுண்டா 'விண்'ணுனு எனக்கு ரொம்பக் கச்சிதமா இருக்கு. இதெ எனக்காகவே கட்டி வெச்சிருக்கா. இது என்னோட ஜன்னல். நான் இந்த ஜன்னலோட நான்! எனக்காக இதைக் கட்டி வச்சு, இதுக்காக என்னைக் கட்டி வச்சுட்டா. யாரும் வெக்கல்லே; நானே வச்சுண்டேன்! எப்படிச் சொன்னாத்தான் என்னவாம், இப்போ?
இந்த மாதிரி ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு உக்காரணும்னு எவ்வளவு காலம் பிரயாசைப் பட்டிருக்கேன் தெரியுமா, நான்? அப்போவெல்லாம் எனக்குக் காலே எட்டாது. கால் எட்டினா முதுகைச் சாச்சிக்க முடியாது! அப்பல்லாம் ஜன்னல் கட்டையிலே ஏறி நின்னுண்டா எனக்கு உசரம் சரியா இருக்கும்!
எப்படி நிக்கணும் தெரியுமா? ரெண்டு கம்பிக்கு நடுவே ஒரு காலை வச்சுக்கணும். வலது காலை வச்சுண்டா வலது கையாலே கம்பியை இழுத்துப் பிடிச்சுண்டுடணும்... அப்புறம் இந்தப் பக்கமா இடது கையையும் இடது காலையும் நீளமா வீசி வீசி அரை வட்டமா சுத்திச் சுத்தி ஆடணும்... ரயில் போறதாம்!... வேக வேகமா போறதாம்; தந்திக் கம்பியெல்லாம் ஓடறதாம்! அப்பறம் கும்மாணம் வரதாம்... தஞ்சாவூர்லே நிக்கறதாம்; மறுபடியும் போறதாம்; திரும்பி இங்கேயே வந்துடறதாம்...
அடீ அம்மா! இந்த ஜன்னல் கட்டையிலே உக்காந்துண்டே நான் எத்தனை பிரயாணம் பண்ணி இருக்கேன்!...
காலையும் கையையும் வீசி வீசிச் செஞ்ச பிரயாணம்; கண்ணையும் மனசையும் வெரட்டி வெரட்டிச் செஞ்ச பிரயாணம்; ஆடாமல் அசங்காமல் செஞ்ச பிரயாணம்; அழுதுண்டு செஞ்ச பிரயாணம்; சிரிச்சுண்டு செஞ்ச பிரயாணம்; ஆனந்தமான பிரயாணம்; பிரயாணத்தின் அலுப்பே இல்லாமல் செஞ்ச பிரயாணம்...
ஜன்னலுக்குப் பொருத்தமாகப் பொருந்தி உக்காந்துண்டு நான் எவ்வளவு பிரயாணம் போயிருக்கேன்! பிரயாணம் போனவாளையும் பார்த்திருக்கேன். எவ்வளவோ பேர் போறா... சும்மா போறவா, சொமந்துண்டு போறவா, தனியாப் போறவா, கூட்டமாப் போறவா, ஜோடியாய் போறவா...
இந்த ஜன்னல் வழியாக மொதல்லே யார் பார்த்திருப்பா? மொதல்லே என்னத்தைப் பார்த்திருப்பா?... யாரோ பார்த்திருப்பா... எதையோ பார்த்திருப்பா... நான் மொதல்லே என்ன பார்த்தேன்? எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் நெனைவே இந்த ஜன்னல் வழியாப் பார்த்ததுதான்... என்னைப் பெத்தவளை நான் பார்த்த ஞாபகமே இலை... உயிரோடு பார்த்த ஞாபகமில்லை. எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் விஷயமே அதுதான்.
அம்மாவைத் தூக்கிண்டு போனாளே அதுதான்!... யார் யாரோ அழுதுண்டு வாசல் வரைக்கும் ஓடி வந்தாளே... அவா அழ அழ அவசர அவசரமா அம்மாவைத் தூக்கிண்டு நாலு பேர் ஓடினாளே... நான் இந்த ஜன்னல் மேலே நின்னுண்டு, ஜன்னல் வழியாப் பார்த்துண்டிருந்தேனே!...
அதுக்கப்பறம் அந்த மாதிரி எத்தனையோ பார்த்திருக்கேன். சந்தடியில்லாமத் தூக்கிண்டு திடுதிடுன்னு ஓடுவா... சில பேர் தாரை, தப்பட்டை, சங்கு எல்லாம் வச்சுத் தெருவையே அமக்களப்படுத்திண்டு போவா. சில சமயத்திலே அவா போனப்புறம் கூடத் தெருவெல்லாம் ரொம்ப நாழி ஊதுவத்தி மணக்கும்...
அதே மாதிரி, கல்யாண ஊர்கோலமும் பார்த்திருக்கேன்! அது ரொம்ப நன்னா இருக்கும். அதென்னமோ யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் நமக்குச் சந்தோஷமா இருக்கு. ஊர்கோலம் ஜன்னல் கிட்டே வர்றதுக்கு முன்னே ரொம்ப நாழிக்கி முன்னயே - திடும் திடும்னு மேளம் கொட்டற சத்தம் தூரத்திலே கேக்க ஆரம்பிச்சுடும். அதுவும் கல்யாண மேளச் சத்தம்னா அது மட்டும் தனியாத் தெரியறது. அது வந்து போறவரைக்கும் நான் ஜன்னலை விட்டு நகரவே மாட்டேன்...
அந்த ஜன்னல் வழியாத் தெரியற தெரு, அதோ... அந்த அரச மரத்தடி பிள்ளையார் தெரியறதே அங்கே ஆரம்பிச்சு இந்தப் பக்கம் சிவானந்தம் வீடு வரைக்கும் தான் தெரியும். அதுவும் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையை நன்னா சாச்சுச் சாச்சுப் பார்த்தால்தான் இந்த அளவுக்குத் தெரியும். கல்யாண ஊர்கோலம் வரச்சே, அந்த லைட்டுத் தூக்கிண்டு வர ஒருத்தன் மொதல்லே அரச மரத்தடிக்கு வருவான். சில பேர் லைட்டை அங்கேயே எறக்கியும் வச்சுடுவான். ஆயிரந்தான் எலக்டிரிக் லைட் இருக்கட்டுமே, கல்யாணம்னா இந்த லைட்தான் வேண்டியிருக்கு. 'ஓ'ன்னு பாயிலர் எரியறமாதிரி... நாதசுர சப்தம் பக்கத்திலே கேக்கும். அதென்னமோ கல்யாண நாதசுரத்தைக் கேட்டா மட்டும் வயத்துக்குள்ளே என்னமோ குளு குளுங்கும். அப்புறம் நெறைய பெட்ரோமாக்ஸ் லைட்... வரிசையா வந்துடும்... உடம்பெல்லாம் வேர்த்து நனைய நனைய அந்தத் தவுல்காரனும் நாதசுரக்காரனும் போட்டி போட்டுண்டு வாசிப்பா. எனக்கு ஒத்து ஊதறவனைப் பார்த்தாச் சிரிப்பு சிரிப்பா வரும். பல் வலிக்காரன் மாதிரி அவன் வாயிலே துணியை வச்சுண்டு நிப்பான். அதுக்கப்புறம் கல்யாண ஊர்கோலத்துக்காகவே சேஞ்சு வச்ச மாதிரி ஒரு கார்... அந்தக் காருக்கும் அன்னிக்கிக் கல்யாணம்! மாலையெல்லாம் போட்டிருக்கும். அந்தக் காரிலே யார் இருந்தாலும் இல்லாட்டாலும் வாண்டுப் படைகள் மட்டும் நிச்சயமா இருக்கும். சில சமயங்களிலே மாப்பிள்ளை மட்டும் தனியா, கொழந்தைகள் உண்டு; அதாவது பொண் இல்லாமல் வருவார். சில சமயத்திலே பெண்ணும் மாப்பிள்ளையும் ஜோடியா வருவா. பொண்ணு தலையைக் குனிஞ்சிண்டிருக்கும். ஆனா மனசுக்குள்ளே ஒரே சந்தோஷம்னு மொகத்திலேயே தெரியும்! எல்லாப் பொண்களும் தலையைக் குனிஞ்சிண்டுதான் இருக்கும். ஆனா என்னோட படிச்சாளே சுமதி அவளுக்கு என்ன தைரியம்! ஊர்வலம் ஜன்னலண்டை வரும்போது என்னைப் பார்த்து சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமாப் போயிடுத்து... எல்லாரும் திரும்பி என்னை வேற பார்க்கறா. அப்போதான் நானும் பார்த்தேன். எல்லார் ஆத்து ஜன்னல்லேருந்தும் எல்லாருந்தான் பார்க்கறா. ஆமா; என்னை மட்டும் பெரீசா சொல்றாளே... கல்யாண ஊர்கோலம் வந்தா அவாளுந்தானே வேடிக்கை பார்க்கறா... அவாளுக்கு கல்யாண ஊர்கோலம் மட்டும்தான் வேடிக்கை; எனக்கு எல்லாமே வேடிக்கை. நான் பார்க்கத்தான் பார்ப்பேன். காலத்துக்கும் இது ஒரு வழக்கா; இது ஒரு பேச்சா?
இந்த வீட்டிலேயே எத்தனையோ கல்யாணம் நடந்திருக்கு. எவ்வளவோ ஊர்கோலம் பொறப்பட்டிருக்கு. நான் அதையெல்லாம் கூட இந்த ஜன்னல் வழியாத்தானே பார்த்திருக்கேன். எனக்குத் தெரிஞ்ச இந்த ஆத்திலே நடந்த மொதல் கல்யாணம் அப்பாவோட கல்யாணம். ஆனா அதுக்கு ஏனோ ஊர்கோலம் இல்லை. சித்தி அப்போ ரொம்ப அழகாயிருந்தா... அப்போல்லாம் எனக்கு அவளைக் கண்டா பயமே இல்லை. மொத மொதல்லே இந்த வாசல்லே ஜட்கா வண்டி வந்து நின்னு, அதிலேருந்து சித்தி எறங்கினாளே, அப்போ நான் இந்த ஜன்னல் மேலே ஏறி நின்னுண்டுதான் பார்த்தேன். சித்தி ரொம்ப நன்னாயிருந்தா... அப்பறந்தான் போகப் போக... பாவம், சித்தி! என்னமோ மாதிரி ஆயிட்டா. அவ அடிக்கடி அவ அம்மா ஆத்துக்குப் போயிடுவா. அவ ஊரு வைத்தீஸ்வரன் கோயில். சில சமயம் அப்பாவும் கூடப் போவார். ஆனா, அநேகமா சித்தி மட்டும் தனியாத்தான் போவா; தனியாத்தான் வருவா... தனியாவா? பிரசவத்துக்காகப் போய்ட்டு வரச்சே பொறந்த கொழந்தையையும் தூக்கிண்டு, துணைக்குப் பாட்டியையும் அழைச்சுண்டுதான் வருவா. பாபு பொறந்தப்பவும், நாணு பொறந்தப்பவும் அந்தப் பாட்டி வந்தா... அப்புறம் வரல்லை. ஒரு தடவை அவ செத்துப் போயிட்டான்னு அடிச்சுப் பொரண்டு அழுதுண்டு சித்திதான் போய்ட்டு வந்தா. அப்புறமெல்லாம் சித்தி மட்டும் தனியாப் போய்க் கொழந்தையைப் பெத்துண்டு வந்துடுவா. அப்பா, நான், மத்த கொழந்தைகள் எல்லாரும் இங்கேயேதான் இருப்போம். அப்பாதான் சமைப்பா... நான் கொழந்தைகளை யெல்லாம் ஜன்னல்லே உக்காத்தி வச்சுண்டு வெளையாடிண்டிருப்பேன். கொழந்தைகளுக்கெல்லாம் சாதம் ஊட்டுவேன். அப்பா எனக்குச் சாதம் போடுவா. கொஞ்ச நாளைக்கி அப்புறம் நானே சமைக்க ஆரம்பிச்சேன். நான் சமைச்சு, கொழந்தைகளுக்குப் போட்டு, அப்பாவுக்கும் போட்டு, எல்லாத்தையும் அழைச்சிண்டு ஸ்கூலுக்குப் போய்டுவேன். சித்திக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவா. வந்து கூடத்திலே தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா; கொஞ்சம் எழுந்து கூடமாட ஒத்தாசை சேஞ்சுண்டு வளைய வருவா. மறுபடியும் தலையைச் சுத்தறது, வாந்தி வரதுன்னு படுத்துண்டுடுவா. அதுக்கப்பறம்... வைத்தீஸ்வரன் கோயில்... ஜட்கா வண்டி... கூடத்தில் தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா.
நான் எட்டாங் கிளாஸ் படிச்சிண்டிருந்தப்போ என்னை ஸ்கூலை விட்டு நிறுத்திட்டா. சித்திதான் வேண்டாம்னுட்டா. அப்புறம் நாள் பூரா அடுக்களை வேலைதான். புகை, கரி, புழுக்கம்... அடி அம்மா! மொகத்தைத் துடைச்சுண்டு ஓடி வந்து சித்தெ இந்த ஜன்னலண்டை நின்னா, எவ்வளவு சொகமா இருக்கும்! ஸ்! அப்பாடீ...
அப்படி நிக்கறச்சேதான் ஒரு தடவை என்னோட படிச்சாளே சுமதி, அவ கல்யாண ஊர்கோலம் வந்தது. அவளுக்கு என்ன தைரியம்! ஜன்னலண்டை வரச்சே என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமா போய்டுத்து. நெஜமாகவே எனக்கு வெக்கமா இருந்தது, அவமானமா இருந்தது. நான் எட்டாவதோட நின்னுட்டேன்; அவ அதுக்குமேலே படிச்சா, பத்தாவது பாஸ் பண்ணினா, பாட்டு கத்துண்டா, வீணை கத்துண்டா, கல்யாணமும் பண்ணிண்டா; ஊர்கோலம் வரா; இப்ப என்னைப் பார்த்துக் கையை ஆட்டறா. எனக்கு வெக்கமா இருக்காதா? அவமானமா இருக்காதா? ம்... நான் என்ன பண்ணப் போறேன்?
பாத்திரம் தேய்க்க வேண்டியது; தெனம் ஒரு மூட்டை துணி தோய்க்க வேண்டியது. அடுப்படியிலே உக்காந்து நானும் வெந்துண்டே எதையாவது வேக வைக்க வேண்டியது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ட்டுச் சித்தி கொண்டு வந்து தந்திருக்காளே அரை டஜன் தம்பிகள் - அதையெல்லாம் வளர்க்க வேண்டியது. இதுக்கு இடையிலே ஏதாவது கொஞ்சம் அவகாசம் கெடச்சா ஜன்னலண்டை வந்து சித்தெ மூச்சுவிட வேண்டியது. வேற நான் என்ன செய்யப் போறேன்?
சுமதி கையை ஆட்டினாளே! அன்னிக்கிச் சித்தி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தா. அப்பாவும் நானும் மாத்திரம் தனியாயிருந்தோம். பசங்களைக் கூடக் காணோம்.
'என்னம்மா கண்ணெல்லாம் செவந்திருக்கு'ன்னு அப்பா கேட்டார். வழக்கமா நான் அழும்போது யாராவது பார்த்துட்டா, 'அம்மாவை நெனச்சிண்டேன்'னு பொய் சொல்லுவேன். ஏன்னா எனக்குப் பேரே தாயில்லாப் பொண்ணுதானே! அதிலே எனக்கு ஒரு செளகரியம். ஆனா, அன்னிக்கி நான் அப்படிச் சொல்லலை. நம்ப அப்பாதானேன்னு கொஞ்சம் தைரியமா மனசை விட்டுக் கேட்டேன்: "அப்பா அப்பா... எனக்கு எப்போப்பா கல்யாணம் பண்ணப் போறேள்?"னு கேட்டேன். என்ன தப்பு அதிலே?...
எனக்கு இன்னிக்கும் இது ஒரு தப்புன்னு தோணவேயில்லை. ஆனா, நான் கேட்டேனோ இல்லியோ உடனே அப்பா மொகம் மாறிடுத்து. என்னத்தையோ அசிங்கத்தை பார்க்கறமாதிரி மொகத்தை சுளிச்சுண்டு என்னெ மொறைச்சுப் பார்த்தார். நான் பயந்து நடுங்கிட்டேன். அதுக்கப்புறம் நான் அப்பா மொகத்தைப் பார்த்ததே இல்லை; செத்துப் போனப்புறம் கூடப் பார்க்கலை.
நான் கேட்டேனே அதுக்குப் பதில் சொன்னாரோ மனுஷர்? கோவம் வந்துட்டாப் போறுமா? கோவம் இவருக்கு மட்டுந்தான் வருமோ? எனக்கு வராதோ? கேட்டதுக்குப் பதில் சொல்ல வக்கில்லே. பெரிசாப் பேசினா எல்லாரும். நான் அப்பிடிக் கேட்டிருக்கப் படாதாம், நான் மானங்கெட்டவளாம், எனக்குக் கல்யாணப் பித்தாம், ஆம்பளைப் பயித்தியமாம். என்னென்னமோ அசிங்கம் அசிங்கமாப் பேசினா. எல்லாரும் கூடிக் கூடிப் பேசினா. எல்லாத்துக்கும் இந்த அப்பாதான் காரணம். சித்தி வந்ததும் வராததுமா அவகிட்டெப் போய் இதெச் சொல்லி வச்சிருக்கார். எனக்கு வேணும். நன்னா வேணும். 'நம்ப அப்பாவாச்சே'ன்னு சொந்தமா நான் கேட்டேன் பாருங்கோ; அதுக்கு இதுவும் வேணும். இந்த மனுஷன் எனக்கா அப்பா? சித்திக்கின்னா ஆம்படையான்! அதுக்கப்புறம் இவர் கிட்டே எனக்கென்ன பேச்சு? இவர் மொகத்தை என்ன பார்க்க வேண்டியிருக்கு? செத்தப்புறமும் நான் பார்க்கல்லே. இப்ப நெனச்சுப் பார்த்தாக்கூட அவர் மொகம் ஞாபகம் வரமாட்டேங்கறதே!...
அப்படி என் மனசை வெறுக்கப் பண்ணிப்பிட்டா... ம்!... என்னைக் கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கா... அடீ அம்மா! பொண்ணாப் பொறந்ததுக்கு எனக்கு ஒரு ஜன்மத்துக்கு இது போறுமே, போறுமே...
நான் ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். குளத்தங்கரை அரச மரத்தடி மேடையிலே யாரோ வந்து வந்து உக்காந்துக்கறானாம். அவனைப் பார்க்கறதுக்குத் தான் நான் போயிப் போயி நிக்கறேனாம். அங்கே யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார் தான் உக்காந்திருக்கார். பிள்ளையாரைப் பார்த்துண்டுதான் நானும் உக்கார்ந்துண்டிருக்கேன், பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷப் பிள்ளையார். அவர் ஆம்பிள்ளைப் பிள்ளையார். நான் பொம்பிளைப் பிள்ளையார்.
அப்புறம் அங்கே சில சமயத்துலே நாய்கள் மேஞ்சுண்டு நிக்கும். சண்டை போட்டுண்டு நிக்கும். வெரட்டிண்டு திரியும். சரசமாடிண்டு வெளையாடும். குரைக்கும். அழும். மனுஷா மாதிரி படுத்துண்டு தூங்கும். முன்னே ஒரு நாய் அந்த அரசமரத்தடி மேடையிலே, அதோ ஒரு மூலை மாதிரி இருக்கே - அங்கே குட்டி போட்டு வச்சிருந்தது.
இதையெல்லாம் பாத்துண்டு நான் உக்கார்ந்திருக்கேன். நேக்கு இதெல்லாம் பிடிக்கறது. பார்க்கறேன். யாருக்கு என்னவாம்?
நான் ஜன்னலண்டை உக்காந்திருக்கறச்சே எனக்குத் தெரியாம பூனை மாதிரி அடி மேல் அடி வச்சு வந்து என் முதுகு மேலெ எக்கிண்டு பார்ப்பா சித்தி. தெருவிலே யாராவது போனா அவனுக்காகத்தான் நான் அங்கே வந்து நிக்கறேன்னு நெனைச்சுக்குவா. அரசமரத்தடியிலே எவனாவது ஒரு சோம்பேறி உக்காந்து பீடி குடிச்சிண்டிருப்பான். அவனைப் பார்த்துத்தான் நான் மயங்கிப் போறேன்னு இவ நெனச்சுக்குவா. யாராவது இருந்தா, அவனைப் பார்க்கறேனாம். யாருமே இல்லைன்னா யாருக்காகவோ காத்துண்டு இருக்கேனாம்! அப்படியெல்லாம் பேசிக்குவா. எனக்கென்ன போச்சு? யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் நெனச்சுண்டு போகட்டுமே! அவா அவா புத்தி; அவா அவா நெனப்பு; அவா அவா குணம்...
யாரோ என்னைப் பார்க்கறாளாம். பாக்கட்டுமே! பார்த்தா என்னவாம்? ஜன்னலும் பாக்கறதுக்குத்தான் இருக்கு. ஜன்னல்ங்கறது உள்ளே இருக்கிறவா வெளியே பார்க்கறதுக்குத்தான். வெளியே இருக்கிறவா உள்ளே பார்த்தா, அதுக்கு நான் என்ன செய்யறது? நெனைக்கறது சரியாயிருந்தா பாக்கறதிலே ஒண்ணும் தப்பேயில்லை.
போகப் போக எனக்கு மனசிலே பட்டது. யாரையோ நான் தேடிண்டுதான் இருக்கேனா? யார் அது? தேடினால் தப்பா? நான் தேடவே இல்லையே. சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கறேன்... தேடினாக்க தப்பா? நான் யாரைத் தேடறேன்? நான் யாரைத் தேடறேனோ அவனே வந்துட்டா, ஜன்னல் வழியாவா நான் அவனோடு ஓடிப் போக முடியும்? இவாள்ளாம் நெனைக்கறாளேன்னு நானும் வெளையாட்டா ஒரு நாளைக்கித் தேடிப் பார்த்தேன். எனக்கு ஒருத்தருமே தென்படலே. பாவம்! ஒவ்வொருத்தரும் அவாவா பாட்டுக்கு என்னவோ போறா, வரா; நிக்கறா; பேசறா; என்னை ஒருத்தரும் பார்க்கலை. இவாதான் தெருவிலே போறவன் வரவன் எல்லாரையும் என்னோட முடிச்சுப் போட்டுக்கறா. சீ! எவ்வளவு அசிங்கமா நெனைக்கறா! இந்தச் சித்தி ஒரு நாள் என்னை என்னமோ அசிங்கமா கேட்டா... நேக்குக் கோபம் வந்துட்டுது.
"உனக்குப் புத்தி அப்படித்தான்... வருஷத்துக்கு ஒரு தடவை ஓடறியே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு"ன்னு என்னமோ நன்னாக் கேட்டுட்டேன்... பின்னே என்ன? இவமட்டும் என்னெக் கேக்கலாமோ?
நான்தான் நெஜத்தைச் சொல்றேனே, எனக்கு மத்த இடத்திலெல்லாம் மூச்சு முட்டறது. இங்கே வந்து நின்னாதான் சித்தெ மூச்சுவிட முடியறதுன்னு. நான்தான் வெளியிலேயே போக முடியாது. வெளியே போறவாளையாவது பாக்கப்படாதா?
ஐயோ! அதெ நெனைக்கவே எனக்குப் பயமாயிருக்கு! ஒரு நாள், என் கழுத்தைப் புடிச்சு அமுக்கின மாதிரி, ஒரு பானையிலே போட்டு என்னைத் திணிச்சு அடச்ச மாதிரி, என்னைப் படுக்க வச்சு என்மேல ஒரு பாறாங்கல்லை வச்சு அழுத்தின மாதிரி... இந்த ஜன்னலை மூடிட்டா!... நேக்குக் கண்ணே குருடாயிடுத்து. அதெவிட அவா என்னெக் கொன்னுருக்கலாம். அலறி, மோதி, அடிச்சுண்டு அழுதிருக்கேன் பாருங்கோ... இன்னும் கொஞ்ச நாழி ஜன்னலைத் தெறக்காம இருந்திருந்தா நான் நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிருப்பேன். அப்...பா, தெறந்துட்டா, அன்னிக்கி இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி உக்காந்தவதான்! நான் ஏன் எறங்கறேன்? நான் அந்தப் பக்கம் போனா இந்தப் பக்கம் மூடிடுவாளே!...
ஜன்னலைத் தெறந்து விட்டுட்டா... அத்தோட போச்சா? திண்ணை நெறய ஒரே வாண்டுப் படைகள்! எனக்கு ஒண்ணும் புரியலை. என்னை எதுக்கு எல்லாரும் இப்பிடி வேடிக்கை பார்க்கறா? நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து என்னால தாங்க முடியாம ஒரு நாள் வெரட்டினேன். அடிக்கலே; வையலே... 'என்ன ஏன்டா இப்பிடி எல்லாருமாப் படுத்தறேள்'னு அழுதேன். அதெப் பாத்து எல்லாரும் 'ஓ'ன்னு சிரிக்கறா...
அப்பா வந்தார். நான் அவர் மொகத்தைப் பார்க்கலே; ஆனா எங்கேயோ பாத்துண்டு 'அப்பா'ன்னு அழுதேன். அவரும் எங்கேயோ பாத்துண்டு பக்கத்திலே வந்து நிக்கறார்னு புரிஞ்சுது. "அப்பா! நான் தெரியாமக் கேட்டுட்டேன். நேக்கு கல்யாணமே வேண்டாம். இந்த ஜன்னலண்டையே நான் உக்காந்திண்டிருக்கேன். அது போறும்"னு சொன்னேன். "ஜன்னலை மட்டும் மூட வேண்டாம்னு சொல்லுங்கோ"ன்னு கெஞ்சினேன்.
"இனிமே நான் கல்யாணம் வேணும்னு கேக்கவே மாட்டேன்... ஏதோ எல்லார் மாதிரியும் இருக்கணும்கிற ஆசையிலே, எனக்குத்தான் அம்மா கெடையாதே, அப்பாகிட்டே கேட்டா தப்பில்லைன்னு கேட்டுட்டேன்... அதுக்காக என்னை இப்பிடிப் படுத்தி வெக்கறேளே... ஜன்னலை மூட வேண்டாம்னு சொல்லுங்கோ"ன்னு அழுதேன்.
"உனக்கு ஜன்னல்தானே வேணும்? ஜன்னலையே கட்டிண்டு அழு"ன்னு அப்பா சொன்னப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்தது!
அப்புறம் ஒரு நாள்... "வாடீ என்னோட வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்"னு வாசல்லே வண்டியைக் கொண்டு வந்து வச்சுண்டு அப்பாவும் சித்தியும் என்னெ வேண்டி வேண்டி, உருகி உருகி அழைச்சா... நானா போவேன்? முடியாதுன்னுட்டேன். ஜன்னல் கம்பியை இறுக்கமாகப் புடிச்சுண்டு வரவே மாட்டேன்னுட்டேன்.
"நேக்கு வைத்தீஸ்வரன் கோவிலும் வேண்டாம்! இன்னொண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட ஜன்னல் போறும். இங்கேருந்தே நான் எல்லாத்தையும் பாத்துக்குவேன். என்னெ சித்தெ நிம்மதியா மூச்சுவிட விட்டுவிட்டு நீங்கள்ளாம் எங்கே வேணும்னாலும் போங்கோ"ன்னு இருந்துட்டேன்.
எனக்கு இந்த ஜன்னலே போறும்!
அப்புறம் திடீர்னு ஒரு நாள் என்னெச் சுத்தி ஒரே ஜன்னல்... பெரிய பெரிய ஜன்னல்.... சுவரே இல்லாம ஜன்னல்... ஐயையோ இது கூண்டுன்னா? தெய்வமே! நேக்கு கூண்டு வாண்டாமே! நான் என்ன புலியா? சிங்கமா? என்னெ எதுக்குக் கூண்டுலே போட்டேள்? எப்படிப் போட்டேள்? ஏன் போட்டேள்? எப்பப் போட்டு அடைச்சேள்?... நான் என்னடீ பண்ண?... அடீ அம்மா!...
வெறும் ஜன்னல் மட்டுந்தான் இருந்தது; அரச மரத்தைக் காணோம்; அதுக்குப் பின்னாலே இருக்கிற குளத்தைக் காணோம். சிவானந்தம் வீட்டைக் காணோம். கல்யாணமும் இல்லே, சாவும் இல்லே... வெறும் ஜன்னல். அதுவும் நம்பாத்து ஜன்னல் மாதிரி அழகா, சின்னதா இல்லே. ஜன்னல் கட்டை இல்லே... ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு ம்ஹீம்... ஒண்ணும் முடியாது.
அப்பிடி ஒரு இடமா? அப்பிடிக்கூட ஒரு இடம் இருக்குமா? கூண்டு மாதிரி, குகை மாதிரி, ஜெயில் மாதிரி. ஒரு வேளை அது பொய்யோ, கனவு கண்டிருப்பேனோ?... நேக்கு ஒண்ணும் தெளிவா சொல்லத் தெரியலை... விடுங்கோ... இப்பத்தான் ஜன்னலண்டையே, மறுபடியும் இங்கேயே வந்துட்டேனே!...
ஒரு சமயம் உள்ளே ஜன்னல் வழியா ஒரு யானை வந்துட்டுது! ஸ்வாமி ஊர்வலம் போறச்சே அந்த யானையை நான் பார்த்திருக்கேன்... அதே யானை! அடீ அம்மா! எவ்வளவு பெரியா யானை! எவ்வளவு நைஸா மொதல்லே தும்பிக்கையை நீட்டி ஏந்தி என்னெக் கூப்படற மாதிரி வந்து நின்னுது. அசைஞ்சி அசைஞ்சி ரெண்டு கம்பிக்கும் நடுவிலே தும்பிக்கையை விட்டு என் கன்னத்துலே 'சில்'னுனு தொட்டப்போ நன்னாவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.
ஜன்னல் கட்டையிலே உக்கார்ந்திருந்த நான் எறங்கி வந்து அறை நடுவிலே நின்னுண்டேன். அந்த யானை நீளமா தும்பிக்கை முழுசையும் அறைக்குள்ளே நீட்டிண்டு என்னெப் பிடிக்கறதுக்கு துழாவறது... அப்புறம்...
அடீ அம்மா! இந்த அதிசயத்தைப் பாருங்கோளேன்... பார்க்கறவரைக்கும்தான் அதிசயம்.. இப்ப ரொம்ப சர்வ சாதாரனமா இருக்கு... அந்த யானையோட உடம்பு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா தட்டையாகி ஒரு கறுப்புத் துணி மாதிரி - யானை உருவத்துக்கு ஒரு படுதாவிலே கத்தரிச்சுப் பெரிசா தொங்க விட்டா எப்படி இருக்கும் - அந்த மாதிரி ஆடி ஆடி ஜன்னல் கம்பிக்கு நடுவே நொழஞ்சு முழுக்க உள்ளே வந்துட்டுதே! நடு அறையிலே கூரையிலே முதுகு இடிக்கிற மாதிரி மறுபடியும் முன்னே மாதிரியே யானையா நிக்கறதே... தும்பிக்கையாலே 'ஜில்'லுனு என்னெத் தொடறதே!
அடீ அம்மா! என்ன சொகமா இருக்கு!... எவ்வளவு சந்தோஷமா இருக்கு!.. பயமாவே இல்லே. கொஞ்சம் கூடப் பயமே இல்லே.
திடீர்னு சித்தி வந்துட்டாள்னா என்ன பண்றதுன்னு நெனச்சவுடனே தான் பயம் வந்துட்டுது.
"போ... போ"ன்னு நான் யானையை வெரட்டறேன். அது என் கழுத்தைத் தும்பிக்கையாலே வளைச்சுப் பிடிச்சுண்டு என்னையும் "வா வா"ன்னு இழுக்கறது.
ஐயையோ! எவனோடயோ ஓடிட்டாள்னு பழி வருமேன்னு நெனக்கறச்சே வயத்துலே 'பகீர்'ங்கறது!...
"சனியனே! ஏன் வந்தே?... என்னெ எங்கே இழுக்கறே?"ன்னு அந்த யானையோட நெத்தியிலே ரெண்டு கையாலேயும் குத்தறேன்... யானை என்னைத் தும்பிக்கையாலே வளைச்சுத் தூக்கிண்டு கொஞ்சம் கொஞ்சமா வந்த மாதிரியே பின்னம் பக்கத்திலே துணி மாதிரி அலை அலையா மெதந்துண்டு ஜன்னல் கம்பிக்குள்ளே நுழைஞ்சு போயிண்டே இருக்கு. நான் ஜன்னலண்டை வந்ததும் ஜன்னல் பக்கத்துலே நன்னா முதுகைச் சாச்சுண்டு, ரெண்டு பாதத்தையும் எதிர் சுவத்திலே உதைச்சுண்டு குறுக்கா நாதாங்கி போட்டா மாதிரி உக்காந்துண்டேண். யானை நொழைஞ்ச மாதிரி நான் நொழைய முடியுமா?...
பாவம்! அந்த யானை வெளியிலே நின்னுண்டு பரிதாபமாப் பார்த்தது. என்ன பண்றது? நானும்தான் அப்பிடிப் பார்த்துண்டிருக்கேன்... எவ்வளவோ பேர் அப்பிடித்தான் பார்க்கிறா. அதுக்கு நான்தான் என்ன பண்றது? அவாதான் என்ன பண்றது? பார்த்துண்டே இருக்க வேண்டியதுதான்...
அப்பிடியே என்னெப் பார்த்துண்டே அந்த யானை பின்னம் பக்கமாவே நடந்து போயி, அரச மரத்தடியிலே பிள்ளையாரா மாறிடுத்து...
அதிசயமாயிருக்கு இல்லே! எனக்கு இது சர்வ சாதாரணமா இருக்கு. ஏன்னா, இந்த மாதிரி அடிக்கடி நடக்கிறது. ஆனை மட்டும் தான் வரும். நான் போறதில்லே - முடியுமா என்ன?
இப்பல்லாம் எனக்கு ஜன்னலண்டையே சாப்பாடு வந்துடறது. எங்க பாபுவோட ஆம்படையாள் இருக்காளே குஞ்சு, தங்கம்னா தங்கம். எனக்கு அப்பிடி சிசுருஷை செய்யறா போங்கோ! நன்னா இருக்கணும்.
நாணுவும், அவன் பொண்டாட்டியும் நெய்வேலியிலே இருக்கா... பாபு எங்கே இருக்கானோ அங்கேதான் நானும் இருப்பேன். அவனும் என்னெ விடமாட்டான்.
இப்ப சித்தி இல்லை. அவ செத்துப் போயி ரொம்ப நாளாச்சு!
புதுசு புதுசாப் பொறக்கறாளே அந்த மாதிரி மனுஷா பழசு பழசா செத்தும் போறா.
நான் மாத்திரம் எப்பவும் ஜன்னலண்டையே உக்காந்திருப்பேன். உக்காந்துண்டே இருப்பேன். இந்த வீடெல்லாம் இடிஞ்சு போனாலும் இந்த ஜன்னல் மாத்திரம் இருக்கும். நான் இதிலே சாஞ்சுண்டு காலை உதைச்சுண்டு பார்த்துண்டே இருப்பேன். லோகத்தை ஜன்னலாலே பார்த்தா பிரயாணம் போற மாதிரி நன்னா இருக்கு.
இந்தப் பிரயாணம் நன்னா இருக்கு. இந்த வீடு ஒரு ரயில் மாதிரி ஓடிண்டே இருக்கு. ரயில் பெட்டி மாதிரி இந்த அறை ஜன்னல்லே உக்காந்துண்டு பார்த்துண்டே நான் பிரயாணம் போறேன்... எல்லாம் ஓடறது. மனுஷா, மரம், வீடு, பிள்ளையார், தெரு, நாய், சொந்தக்கார மனுஷா, அந்நிய மனுஷா, செத்தவா, பொறந்தவா எல்லாரும் ஓடறா.
ரயில்லே போகச்சே நாம ஓடிண்டிருக்கோம். ஆனாக்க தந்திக் கம்பியும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ? அதே மாதிரிதான் இங்கே நான் உக்காந்திண்டிருந்தாலும் ஜன்னலுக்கு வெளியே எல்லாரும் ஓடறதனாலே நானே ஓடிண்டிருக்கிற மாதிரி இருக்கு, யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான். நாமே ஓடினாத் தானா?
இப்ப யாரும் என்னைப் பாத்து சிரிக்கிறதில்லை; என்னெ வேடிக்கை பாக்கறதில்லை. ஆனாலும் எனக்குச் சில சமயத்திலே அவா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைப் பத்தி அவா 'ஜன்னலண்டை உக்காந்திருக்கா, உக்காந்திருக்கா'ன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி இருக்கு. யாரு சொன்னா எனக்கு என்ன? எங்க குஞ்சு அப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாள். அவ தங்கம்னா தங்கம்தான் குஞ்சு - அதான் பாபுவோட ஆம்படையாள். கொழந்தைகளைக் கொண்டு வந்து எங்கிட்டேதான் விட்டுட்டு அடுக்களைக் காரியங்களைப் பார்ப்பா.
இப்பல்லாம் நான் ஒரு வேலையும் செய்யறதில்லே. என்னெ வேலை செய்ய விடவே மாட்டா குஞ்சு.
நான் கொழந்தைகளை வெச்சிண்டு ஜன்னல் வழியா வேடிக்கை காட்டிண்டு இருக்கேன் - இல்லே, வேடிக்கை பாத்துண்டிருக்கேன்...
ஜன்னலுக்கு அன்னண்டை தெரியறதெல்லாமே வேடிக்கையாத்தான் இருக்கு!
"பாட்டி! ஜன்னலண்டை உக்காந்துண்டு என்ன பார்க்கறே?"
அடீ அம்மா! இதென்ன வேடிக்கை? பாட்டியாமே நான்? "யார் அது யாருடி நீ?"
"நான்தான் சரோவோட பொண்ணு - ஊர்லேருந்து நேத்து வந்தேனே"ன்னு என்ன வக்கணையாய்ப் பேசறது பாருங்கோ.
சரோவுக்குப் பொண்ணா? இவ்வளவு பெரியவளா? சரோ வந்து... பாபுவோட பொண்ணு... அப்போ நீ குஞ்சுவோட பேத்தியா?...
அடீ அம்மா! ஜன்னலுக்கு இந்தப் பக்கம் இவ்வளவு வேடிக்கையா நடந்திருக்கு? நான் கவனிக்கவே இல்லியே...
குஞ்சு! அடீ அம்மா! இங்கே வாயேன்! இந்த வேடிக்கையை சித்தெ வந்து பாரேன்... நான் பாட்டியாமே பாட்டீ.... உன் பேத்தி சொல்றாடி... குஞ்சு... குஞ்சு...!
(எழுதப்பட்ட காலம்: 1968)
நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017.
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
26. குருக்கள் ஆத்துப் பையன் (1973)
ஒட்டுத் திண்ணையின் சாய்ப்பில் சாய்ந்து தலைக்கு மேல் இரண்டு கைகளையும் பிடரியில் சேர்த்துக் கொண்டு அம்மாவின் புலம்பலை எல்லாம் கண்ணை மூடியவாறு கேட்டுக் கொண்டிருப்பான் பையன். சில சமயங்களில் பெருமூச்செறிவான். பேசிக்கொண்டே, புலம்பிக் கொண்டே அம்மா தூங்கி விடுவாள். அதன் பிறகு அவனும் பெரிய திண்ணையில் ஏறிப் படுத்துக் கொள்வான்...
அம்மாவை நினைக்கையில் அவனுக்குப் பாவமாக இருக்கும். சில சமயம் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடிப்பாள். அவன் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு அவளுக்கு வெந்நீர் வைத்து ஒத்தடத்துக்குத் தருவான். அவள், கை பொறுக்காத சூட்டுடன் அந்த வெந்நீர்ச் செம்பை வயிற்றில் வைத்து உருட்டிக் கொண்டே, 'என்னை அழைச்சிண்டு போயிடுங்கோளேன்.." என்று அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவாள்.
எப்போதுமா அப்படி? இதே திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நிலாவில் அவள் சொல்லிய திவ்யமான கதைகள் எத்தனை! எவ்வளவு அழகாக அம்மா பாடுவாள்! தெளிவாக அபிராமி அந்தாதி நூறு பாடலையும் ஒரே மூச்சில் அம்மா பாடுவாளே!
அம்மா தூங்கி விட்டாள் என்று தெரிந்த பிறகு அவன் நிம்மதியாகத் தூங்குவான். அவள் எழுந்திருக்கும் முன் எழுந்து, குளித்து, வெண்கலப் பானையில் சோற்றுடன் ஓடிப் பிள்ளையார் கோயிலைத் திறந்து, அவருக்கு இரண்டு குடம் கிணற்று நீரை அபிஷேகம் செய்து - பக்கத்தில் தாமரைக் குளம் இருக்கிறது - கிணற்று நீர்தான் விசேஷம் என்று அவன் அப்பா சொல்லி இருக்கிறார் - நைவேத்யம் செய்து பூஜை முடித்த பின் வெண்கலப் பானையில் உள்ள பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்து - அதற்குள் அம்மா ஒருவாறு சமாளித்து எழுந்து நடமாடிக் கொண்டிருப்பாள் - அவள் கையால் தானும் அவளும் அந்தப் பிரசாதத்தைப் பகிர்ந்து கொண்டு ... இதுவரைக்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. நாளைக்கு?
"அம்மா, நேக்கு ஒரு யோசனை தோண்றதே, நான் பட்டணத்துக்குப் போயி..." - அவள் தூங்கி விட்டாள். இல்லாவிட்டால் இந்நேரம் மறுபடியும் புலம்பத் தொடங்கி இருப்பாள். 'பட்டணத்துக்குப் போயி? பட்டணம் எப்படி இருக்குமோ? பட்டணத்துக்கெல்லாம் போக வேண்டாம்; மாயவரம், சீர்காழி, சிதம்பரம் ... எங்காவது போயி ஏதாவது!' - அந்த ஏதாவதுக்கு மேல் அவனால் எதையும் தொடர முடியவில்லை. 'என்னவானாலும் சரி, இனி ஒரு நாள் இந்த அன்னவயலிலே இருக்கப்படாது' என்ற தீர்மானத்துடன், பிடரியில் கோத்த கைகளின் மேல் அவிழ்ந்து கிடந்த குடுமியை உதறி முடிந்து கொண்டு எழுந்தான். மேல் துண்டால் உடம்பைப் போர்த்திக் கொண்டு நிலா வெளிச்சத்தில் சற்று உலாவினான். 'கோயில் பக்கம் போய் வரலாமே' என்று தெருவில் இறங்கி நடந்தான் ...
அக்ரஹாரத்திலிருந்து திரும்பியதும் தாமரைக் குளமும், பிள்ளையார் கோயிலும், ஆலமரத்தடியும் தெரிகிறது. அந்த ஆலமரத்தடியில் பகலில் சிறு கும்பல் இருக்கும். சிறுவர்கள் கோலி விளையாடுவதற்காகப் பறித்த குழிகளும், கிழித்த கோடுகளும், நிரந்தரமாய் இருப்பதை, அவன் நடந்து வந்தபோது வெறும் பாதங்களால் உணர்ந்தான். அவன்கூட எப்போதாவது சில பெரியவர்களுடன் அங்கு 'ஆடு புலி' விளையாடுவான்.
பிள்ளைமார் தெருவிலிருந்து பெரியவர்களும், லீவுக்கு வந்திருக்கிற வாலிபர்களும், ஆலமரத்தடியில்தான் வந்து பொழுது கழிப்பார்கள். சிலர் ரகசியமாகச் சீட்டு விளையாடுவார்கள். பத்திரிகை படிப்பார்கள். அரசியல், சினிமா பற்றியெல்லாம் அவரவர்க்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு மிகுந்த சத்தத்துடன் விவாதிப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிற இந்தப் பையனுக்கு அதனால் ஏற்பட்ட 'கேள்வி ஞானம்' நிறைய உண்டு. அவர்கள் இவனையும் சில சமயங்களில் வம்புக்கிழுப்பார்கள். இவனது குடுமியையும், ஜாதியையும், பிள்ளையாரையும் கூட அந்தப் பையன்கள் பரிகாசம் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் எப்போதும்போல் அவன் சிரித்துக் கொண்டே இருப்பான்.
அவனை விசுவநாதன் என்று யாரும் பெயரை நினைப்பதே இல்லை. பன்னிரண்டு வயதில் அந்தப் பிள்ளையார் கோயிலுக்குக் குருக்களாக மாறியிருந்தும் கூட - இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயதாகியும் - இன்னும் அவனைக் குருக்களாத்துப் பையன் என்றே அந்தக் கிராமம் அழைக்கிறது.
அப்பா இருந்தபோது அவருக்கு ரொம்ப மரியாதை. கோயிலும் அதனைச் சார்ந்து வாழ்கிற வாழ்க்கையும் அர்த்தமுடையது என்று அவர் தன்னளவில் நம்பி இருந்தார். இந்தப் பிள்ளையார் கோயிலுக்கு குருக்கள் பாத்தியதை உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் சாமிநாத ஐயர் என்பவர். அப்பாவுக்கு ஒன்றுவிட்ட தம்பி அவர்; அவர் பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்கப் போய்விட்டார். ஆனாலும் அந்தப் பாத்தியதைப் பெருமையை விட மனமில்லாமல், கோயில் மானிய வீட்டை அவரே வைத்துக் கொண்டு எப்போதாகிலும் வந்து பூட்டித் திறந்து கொண்டு போகிறார். கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிற நாட்களில் கோயிலுக்கு வந்து அதிகாரம் செய்வார். அப்பாதான் எப்போதும் குருக்கள் வேலை பார்த்து வந்தார்.
அப்பா திடீரென ஒருநாள் மத்தியானம் இறந்துவிட்ட போது, இவன் ஆலமரத்தடியில் மாட்டுக்காரப் பையன்களோடு கோலி விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பிறகு இவன் கோலி விளையாடியதே இல்லை. 'குருக்களானப்புறம் அதெல்லாம் படாது' என்று அம்மா சொல்லியிருந்தாள்.
நிராதரவாகிவிட்ட இவனையும், நோயாளித் தாயாரையும் ஆதரிப்பதற்காக ஊர் கூடி இவனைக் குருக்களாக நியமிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். சாமிநாத ஐயர்தான் அதற்கு முன் நின்றார். நல்ல வேளையாகப் பையனுக்கு ஏற்கனவே பூணூல் போட்டிருந்தார்கள்.
அப்போது உத்திராபதிப் பிள்ளை - இப்போது இருக்கிறானே நாகபூஷணம் இவன் தகப்பனார் - தர்மகர்த்தாவாக இருந்தார். அவர் நல்ல சிவ பக்தர். அவருடைய தகப்பனார் காலத்தில் ஏற்பட்ட பிள்ளையார் கோயிலைப் பரிபாலிப்பதில் பிதுர்க்கடன் செய்த நிறைவை அனுபவித்தார் உத்திராபதிப்பிள்ளை.
அவர்தான் விசுவநாதனைக் கேட்டார். "என்ன ஐயரே, உங்கப்பாரு கூட இருந்து எல்லாம் பாத்திருப்பீரே... ஒழுங்கா செய்வீரா, இல்லையா?" என்று கேட்டபோது அப்பாவை நினைத்துக் கண்கலங்கத் தலையாட்டினான் பையன். அப்போது ஊருக்கு வந்திருந்த சாமிநாத ஐயர் இவனிடம் தமிழில் எழுதிய சில ஸமஸ்கிருத ஸ்லோகப் புத்தகங்களைக் கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் அதை மனப்பாடம் செய்யச் சொல்லி இவனை 'வதையாய் வதைத்து' விட்டுப் போனபின், இவன் குருக்கள் பணியை மேற்கொண்டான்.
வருஷத்துக்கு இவ்வளவு நெல், இவ்வளவு தேங்காய், இவ்வளவு எண்ணெய், இவ்வளவு ரூபாய் என்று ஏதோ ஒரு காலத்து நிலைமைக்கேற்ப எழுதி வைத்தபடி, ஒரு கடமைக்காகக் 'கடவுள் நம்பிக்கை தனக்கில்லை' யென்று சொல்லிக் கொண்டே தருகிறான் நாகபூஷணம். சிறு வயதிலிருந்தே ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இவனைக் கேலி செய்து பழகியவன் அவன்.
அவன் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று ஜெயித்தபோது அவன் மனைவியும் குழந்தைகளும் பிள்ளையார் கோயிலுக்கு வந்து அபிஷேகம் நடத்தினார்கள். அவன் மனைவி நூற்றியெட்டுத் தேங்காய்களை இந்தக் குருக்கள் பையன் மூலமே உடைக்க வைத்தாள். இவனும் மிக உற்சாகமாகத் தேங்காய்களை உடைத்தான். 'பிள்ளையாரையே உடைக்க வேண்டும்' என்கிற நாகபூஷணம் அங்கு வந்து தேங்காய் உடைக்கிற குருக்களைப் பார்த்து பரிகாசம் செய்துதான் தனது பகுத்தறிவுக் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. குருக்கள் பையன் இதையெல்லாம் ரசித்துச் சிரிக்காமல் வேறு என்ன செய்வான்? - இப்படி எதையெதையோ நினைத்துக் கொண்டு நிலா வெளிச்சத்தில், ஆலமரத்தடியில் கிடந்த - உடைந்து போய்ப் பாதி மண்ணில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தின் மீது வந்து உட்கார்ந்தான் குருக்கள் பையன். என்னதான் குருக்களாத்துப் பையனாக இருந்தாலும் ஒருவன் எப்போதும் சிவலிங்கத்தையே நினைத்துக் கொண்டிருக்கவா முடியும்? அந்த சிவலிங்கம் உடைந்து போயிருந்தாலும் ஒரு பக்கம் மண்ணில் சாய்ந்து புதையுண்டிருந்தாலும், 'அது சிவலிங்கம்' என்கிற விஷயத்தையே எல்லாரும் மறந்திருந்தார்கள். அதன் மீது உட்காருவது ஓர் அபசாரமாக எவருக்குமே பட்டதில்லை. ஆனால், இவனுக்குப் படும். இவன் அதன்மீது உட்கார்ந்ததே இல்லை. இப்போதுள்ள மனக்குழப்பத்தில் ... "அம்மா ரொம்பப் பாவம்... எட்டு வயசிலே கலியாணம் செய்து கொண்டவள். முப்பது வயதிலே ஒரு பிள்ளை பெற்று அதிலேயிருந்து தீராத நோயாளி..." அவளுக்கு என்ன வியாதி என்று யாரும் சொல்ல முடியாது. வயிற்றில் கட்டி என்று வைத்தியர் சொன்னார். ஆப்ரேஷனுக்கோ, ஆஸ்பத்திரிக்கோ அவளைச் சம்மதிக்க வைக்க முடியாது.
இந்த அன்னவயல் கிராமத்தை எட்டு வயதில் வந்து மிதித்தாளாம். அதன் பிறகு இந்த ஊரின் எல்லையை அவள் தாண்டியதேயில்லையாம்; அது இந்த ஜென்மத்தில் கிடையாதாம். அவளது புலம்பலுக்கிடையே இப்படிப் பட்ட வைராக்கிய வாசகங்கள் நிறைய வரும். பையன் அதையும் ரசிப்பான்.
இந்த ஊரைத் தாண்டிப் போய்விடுவது நிச்சயமாக அவளுக்குச் சாத்தியமில்லை. பஸ்ஸைப் பிடிப்பது என்றாலே வண்டி இருப்பவர்கள் ஐந்து மைல் வண்டிப் பாதையிலும், நடந்து போகிறவர்கள் மூன்று மைல் ஒற்றையடிப் பாதையிலும் பயணம் போகவேண்டும். ரயிலடி என்பதோ இருபது மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு செய்தி என்றே அவர்களுக்குத் தெரியும். அவள் ரயில் சத்தத்தைக்கூடக் கேட்டதில்லை.
ஒரு காலத்தில் இந்த அக்ரஹாரம் களையோடும், பொலிவோடும் இருந்தது. ஆனால், இப்போது பெரும்பான்மையான வீடுகள் நமது புராதன வாழ்க்கைப் பெருமைகள் போலவே இடிபாடுகளாகிவிட்டன. நிராதரவான சில விதவைக் கிழவிகளும், பிள்ளைகளை யெல்லாம் எங்கோ பறிகொடுத்து விட்டது மாதிரிப் பிரிந்து வாழ்கிற இரண்டு வயதான தம்பதிகளும், பிள்ளை இல்லாத ஒரு குடும்பமும், குருக்களாத்து அம்மாவும், பையனும் ... இவ்வளவுதான். குழியில் தேங்கிய வெள்ளத்து நீர் மாதிரி இப்போது அங்கே தங்கியிருந்தார்கள்.
அக்ரஹாரத்தைச் சேர்ந்த இவனுடைய விளையாட்டுத் தோழர்கள் குறைய ஆரம்பித்த பிறகுதான் இவன் மாட்டுக்காரச் சிறுவர்களுடன் கோலி விளையாடத் தொடங்கினான். அந்த அக்ரஹாரத்துப் பையன்களெல்லாம் இப்போது எங்கெங்கோ இருக்கிறார்கள். எப்போதாவது சிலர் நேரிலும் பலர் நினைவிலும் வருகிறார்கள். அவர்களில் யாரும் இவனோடு தோழமை கொண்டாடுவதில்லை. அவனும் அதற்காகவெல்லாம் ஏங்கியதும் இல்லை. இந்த வாழ்க்கை - காலையிலும் மாலையிலும் குளித்து ஜெபம் செய்வதும், பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றுவதும், தெரிந்த பாடல்களைச் சுதந்திரமாகப் பாடி மலர்களை அர்ச்சிப்பதும், கோயிலுக்கு வந்தவர்களின் முன் கற்பூரத் தட்டை ஏந்தி விபூதி கொடுப்பதும் - ஒரு தொழில் என்று போனவாரம் வரை அவனுக்குத் தோன்றியதே இல்லை.
ஆரம்பத்தில் சாமிநாத ஐயர் கொடுத்த அந்தப் புத்தகங்களைப் படிக்குமாறு அம்மா அவனை நச்சரிப்பாள். அப்போதே ஒருநாள் அவளிடம் அவன் சொல்லி விட்டான்: "அம்மா, நான் அங்கே என்ன சொல்றேன்னு யாருமே கவனிக்கறதில்லை; நேக்குத் தெரிஞ்சதையெல்லாம் நான் எந்தப் பாஷையில் பிள்ளையார்கிட்ட முணுமுணுத்தா யாருக்கு என்ன? நீ பாடிண்டிருக்கியே அதையெல்லாம் கேட்டு நான் பாடறேன்; அதைவிட என்ன மந்திரம் வேணும்? நான் பிள்ளையாரை ஒவ்வொரு தடவையும் மனப்பூர்வமா நமஸ்காரம் பண்றேன். அர்ச்சனைத் தட்டத்தை என் கையிலே தரச்சே என் மனசு நடுங்கறது. தீபாராதனை காட்டறச்சே நான் என்ன பிரார்த்தனை பண்றேன் தெரியுமோ; "விக்னேஸ்வரா, இவாள்ளாம் இந்தக் குழந்தையை குருக்கள்னு நம்பறா; நான் உன்னை நம்பறேன்.
இவா நன்னா இருந்தா நேக்கு ஒரு கொறையும் வராது. எல்லாரும் நன்னா இருக்கணும்... 'ஸர்வேஜனா, ஸீகினோ பவந்து' ன்னு நெனச்சுக்கறேன். அதுக்கு மேலே எந்த ஸ்லோகமும் நேக்கு முழுக்க வரலே? உடனே 'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' சொல்லிடுவேன். போறாதா?"
- எல்லாரிடமும் சாதுவாக இருந்துகொண்டு தன்னிடம் மட்டும் இப்படி விதண்டாவாதம் செய்கிறானே என்று அம்மா நினைத்துக் கொள்வாள்.
இப்போது கொஞ்ச காலமாய் அம்மாவின் கவலை அதிகமாகி விட்டது. பையனுக்குக் கல்யாணம் செய்து வைத்து பார்க்க முடியவில்லையாம். அதைச் சீக்கிரமாகச் செய்து பார்த்துவிட்டுத் தானும் சீக்கிரமாகக் கண்ணை மூடிவிட வேண்டுமாம். ரெண்டுத்துக்கும் நேரம் வரவில்லையாம். இந்தக் குக்கிராமத்தில் குருக்களாக இருக்கிற பையனுக்குப் பெண் கிடைக்க மாட்டேன் என்கிறதாம். இப்போதே இவனுக்கு வயதாகி விட்டதாம்... இப்படிப்பட்ட மன உளைச்சலினால் சில சமயங்களில் 'இந்த வெண்கலப் பானைச் சாதத்துக்காக என் பிள்ளையின் வாழ்க்கையை நான்தான் பாழ்படுத்திட்டேனா?' என்று சொல்லி அப்படி நினைத்த அபசாரத்துக்காகக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாள் அம்மா.
"அம்மா அம்மா, பகவானை நம்பறவா இப்படியெல்லாம் அஞ்ஞானமா அவஸ்தைப்படலாமோ? இதே கோயில்லே குருக்களாயிருந்த அப்பாவுக்கு நீ வரலியா?"
"ஆமா, நான் வந்து வாழ்ந்தேனே! அவர் என்ன பாவம் பண்ணினாரோ! அவர் பிள்ளைக்கும் அப்படி ஆக வேண்டாம். நேக்கு லட்சுமி மாதிரி ஒருத்தி வருவா, பாரேன்" என்று அந்தக் கற்பனையிலே மகிழ்ந்து போவாள்.
"வரலேன்னாதான் என்னவாம்; பிள்ளையார் ஒரு ஒண்டிக்கட்டை; நானும் ஒரு ஒண்டிக்கட்டை; அவருக்கு அபிஷேகம் பண்ணிண்டு ஆனந்தமா இருப்பேன். வெண்கலப்பானை சாதம்னு அவ்வளவு அலட்சியமா சொல்லிட்டா ஆச்சா? அந்த சாதத்துக்காகத்தான் பட்டணத்திலே ஏகக்கலவரமாம்; பேப்பர்லே கூடப் போட்டிருக்கான்" என்று தன்னைப் பார்த்துச் சிரிக்கிற இந்த உலகத்தையே அம்மாவின் முன்னால் மட்டும் பரிகசித்துச் சிரிப்பான். வெளியே இது மாதிரியெல்லாம் அவன் பேசுவானா என்ன?
'ஐயோ! இதென்ன, சிவலிங்கத்தின் மீது உட்கார்ந்திருக்கிறோம்' என்று பதறி எழுந்தான். அதைத் தொட்டு வணங்கிவிட்டு இன்னும் கொஞ்சம் நடந்து ஆலமரத்து நிழலுக்கு வெளியே நிலா வெளிச்சத்திலிருந்த சுமை தாங்கிக் கல்லுக்குப் போய் உட்கார்ந்தான். மேல் துண்டையெடுத்துத் தலைப்பாகையாகக் கட்டினான். ஆலமரத்தையும் தாமரைக் குளத்தையும் பார்த்து 'அன்னவயல் அழகாய்த்தான் இருக்கிறது' என்று நினைத்துக் கொண்டான்.
தற்கால வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளையும் ஒரு வேடிக்கையாகவே பார்த்துக் கொண்டு வாழ்ந்திருந்த இந்தக் குருக்களாத்துப் பையனுக்கு இந்த வாழ்க்கைக்கும் ஒரு பிரச்னை உண்டு என்று போனவாரம் தெரிந்தது. சாமிநாத ஐயர் எழுதிய கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நாகபூஷணம் இவனிடம் ஒருநாள் சொன்னான்:
"உங்க சித்தப்பா ரிடையர் ஆகிட்டாராம்... சம்சாரம் போனத்துக்கப்புறம் பையனோட இருக்கப் பிடிக்கலையாம். கடைசிக் காலத்தில் இங்கே வந்து கோயில் திருப்பணி செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டாராம். 'விசுவநாதன்தான் பெரிய பையனா வளர்ந்துட்டானே, இனிமேலாவது வேற ஏதாவது வேலை செய்து தாயாரை காப்பாத்த வேணாமா' ன்னு அவர் கேக்கறார்... சரிதானே?" என்று நாகபூஷணம் இவனிடம் கேட்டபோது, 'சரிதான்' என்று தலையாட்டினான்: "அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்கோ."
"உங்க சித்தப்பா வந்த உடனே கோயிலை அவர் கையில் ஒப்படைக்கணும்..."
"ஓ, பேஷா!" என்று சொல்லிவிட்டு வந்தான்.
"நீ என்னடா சொன்னே?" என்று வாசற்படியில் தலைசாய்த்துப் படுத்திருந்த அம்மா, இருட்டில்
எழுந்து உட்கார்ந்து கேட்டாள்.
ஒட்டுத்திண்ணையில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த
விசு சொன்னான்: "சரி, அப்படியே ஆகட்டும்னேன்."
'அசடே அசடே' என்று அம்மா முனகிக் கொண்டாள். "வேறே என்ன செய்யறதா யோசனை? நீ
என்னடா கொழந்தை செய்வே?" என்று இருட்டில் இரண்டு உள்ளங்கைகளையும் ஏந்தியவாறே கேட்டாள் அம்மா. அவன் அவளைத் திரும்பிப் பார்த்தபொழுது இருட்டில் கவிழ்த்து வைத்திருந்த வெண்கலப் பானை பளபளத்தது.
"என்ன செய்யறது? மொதல்லே அதோ இருக்கே அந்த வெண்கலப் பானையையும், இரும்புச் சாவியையும் கொண்டு பொயி அவாகிட்ட குடுத்திட வேண்டியதுதான்."
"அப்புறம்? நோக்குப் படிப்பும் கிடையாது; விதரணையும் கிடையாது; நோக்கு வேற ஒண்ணும் தெரியாதேடா?"
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்: "என்னத்தைத் தெரிஞ்சுண்டு அம்மா நாம இவ்வளவு காலம் வாழ்ந்தோம்? கடவுள் காப்பாத்துவார்" என்று சொல்லிவிட்டு யோசித்தான்: "என்னடா இவன் வேதாந்தம் பேசறானேன்னு நோக்குத் தோண்றதா? இந்தக் காலத்திலே இப்படி வாழ்ந்திண்டிருக்கிற நாமதாம்மா வேதாந்தத்தைப் பேசவாவது முடியும்."
"நோக்கு என்னடா கொழந்தை. நீ ரெக்கை முளைச்ச பறவை; என் கனத்தையும் கழுத்திலே கட்டிண்டு உன்னலே பறக்க முடியுமோ? என்னை இப்படி ஒரு ஜென்மமா பகவான் இன்னம் வெச்சிண்டிருக்க வேண்டாம். நேக்கு உடம்பு மண்ணாகவும் உசிரு கல்லாகவும் ஆயிடுத்து. பெத்தவளை இப்படி விட்டுடுப் போனா அந்தப் பாவம் உன்னை விடுமோன்னு நீ தவிக்கறே! பொழுது விடியறதுக்குள்ளே நேக்கு உயிர் போயி என்னை இழுத்துப் போட்டுட்டு நீ போகணும்னு நான் தவிக்கறேன். அதுக்கும் ஆகாம அனாதைப் பொணமாப் போயிடுவேனோ?..."
"அப்படியெல்லாம் பேசாதே அம்மா. எங்கே இருந்தாலும் ஆதிசங்கரர் வந்தமாதிரி நான் வந்துட மாட்டேனா?" என்று அவளை உற்சாகப்படுத்துவதற்காகச் சிரித்தான். அவன் வார்த்தை அவளுக்கும் இதமாக இருந்தது... அந்த இதத்தில் சற்று அமைதி அடைந்து நம்பிக்கையுடன் சொன்னாள்: "கொழந்தை! ஒரு காரியம் செய்யறயா? நாகபூஷணம் நல்ல பையன். நீ அவன்ட்ட போயி நல்லதனமா சொல்லு. எங்கம்மா இப்படி இருக்கா... அவளை விட்டுட்டு நான் ஓரெடத்துக்கும் போறத்துக்கில்லே... அது மகா பாவம்... அவ இன்னும் ரொம்ப நாளைக்கு உசிரோடு இருக்க மாட்டா... அவ உடம்பிலே உசிர் இருக்கிறவரையும் நானே கோயிலைப் பார்த்துண்டிருக்கேன்னு கேட்டுக்கோ... அவனையே விட்டு அந்தப் பிராமணனுக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டுடச் சொல்லு..."
விசுவநாதனுக்கு இந்த யோசனை சரியெனப்பட்டது. ஆனாலும், அவளது சாவை ஒரு கெடுவாக வைத்துக் கொண்டு இதை ஒரு வேலையாகக் கேட்பது அவனது மனத்திற்கு மிகுந்த வெட்கத்தைத் தந்தது. ஏதேதோ நினைத்துக் கொண்டு நாகபூஷணத்தின் எதிரே ஒருவாறு போய் நின்றான். நாகபூஷணத்திற்கு இவனைப் பார்த்தாலே ஒரு கேலி உணர்ச்சி வந்துவிடும். இப்போதும் 'கடவுள் உண்டா இல்லையா?' என்பது மாதிரி விளையாட்டாக ஏதோ பேச ஆரம்பித்தான்.
"இதோ பாரும். கடவுள் உண்டா, இல்லையான்னெல்லாம் நேக்கு வாதம் பண்ணத் தெரியாது; நேக்கும் எங்கம்மாவுக்கும் சுவாசம் விடற மாதிரி அது ஒரு அவசியம்; உமக்கு எவ்வளவோ ஐசுவரியம் இருக்கு; எவ்வளவோ தொல்லையும் இருக்கு. நேக்கு ஒரு தொல்லையும் கிடையாது... ஐசுவரியம்னாலே ஈஸ்வர அனுக்ரகம்னு பேரு... ஈசுவர என்கிற வார்த்தையிலிருந்துதான் ஐசுவரியம்னு வரது... இதெல்லாம் பெரியவா சொன்னது... நீ கல்லுன்னு நெனைக்கறதை இத்தனை வயசு வரையும் பிள்ளையார்னு நம்பிண்டு புஷ்பம் போட்டுண்டு விச்ராந்தியா நான் இருக்கேன்... நோக்குப் புரியற மாதிரி சொல்றேன். ஒரு வெண்கலப் பானை சோத்தை நம்பிண்டு அந்தப் பிள்ளையாருக்குச் சாட்சியா என் தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்திண்டிருக்கேன்... உங்க தாத்தா காலத்திலே ஆரம்பிச்ச இந்தப் புண்ணியத்திலே - நீர் நம்பினாலும் நம்பலேன்னாலும் - உமக்கும் ஒரு பங்கு உண்டுன்னு அம்மா உம்மகிட்ட சொல்லச் சொன்னா... 'அன்ன தாதா சுகீபவ'ன்னு பெரியவா சொல்லியிருக்கா... அம்மா உயிர் இருக்கற வரைக்கும் நானே கோயிலைப் பாத்துக்கறதுக்கு நீர்தான் பெரிய மனசு பண்ணனும்..."
"என்னப்பா இது தர்மசங்கடமாப் போச்சு... அப்பவே நீ சொல்லியிருந்தா நான் அவருக்கு எழுதியிருப்பேன் இல்லே? நீ சரின்னதுனாலே நானும் அவரை வரச்சொல்லி எழுதிட்டேனே" என்று யோசித்தான் நாகபூஷணம்.
இன்று காலை சாமிநாத ஐயரே அன்னவயலுக்கு வந்துவிட்டார். வயது காரணமாகவோ, இவ்வளவு நாள் பட்டணத்தில் வாழ்ந்த காரணத்தினாலோ சாமிநாத ஐயர், நாகபூஷணம் தெரிவித்த தகவலைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்.
நாகபூஷணம் கூப்பிட்டனுப்பியதாக குருக்களாத்துக்கு ஆள்வந்து சொன்னான்.
பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் ஆலமரத்தடியில் ஆட்கள் நாற்காலிகள் கொண்டு வந்து போட, சித்தப்பாவும் நாகபூஷணமும் வந்து உட்கார்ந்தார்கள்.
"நீ என்ன ரொம்ப பெரியவாளா ஆயிட்டதாக நினைப்போ?" என்று பையனை மிரட்டினார் சித்தப்பா.
"சிவசிவா; பெரியவா என்னை மன்னிக்கணும்... அம்மா சொன்னா; அதை அவர்கிட்ட சொல்லிண்டிருந்தேன்" என்று வாய் மீது கைபொத்திச் சொன்னான் பையன். "அம்மா சொன்னா, ஆட்டுக்குட்டி சொன்னா! நோக்கு வயசாகலே? உடம்பை வளைச்சு வேலை செய்யச் சோம்பலா? நான்தான் பார்த்திண்டிருக்கேனே, நீ அர்ச்சனை பண்ற லட்சணத்தை!" என்று அவர் எப்போதும்போல் அவனைக் கண்டித்தார். நாகபூஷணம் அந்தச் சமயத்தில் சிரித்தது அனாவசியம்.
"சித்தப்பா, நீங்க ரொம்பப் பெரியவர்... அதுக்காக நான் ஆண்டவனுக்குச் செய்யறதைக் குறைச்சுச் சொல்றது உங்களுக்கே நன்னாயில்லை... நான் எப்படி அர்ச்சனை பண்றேன்னு அந்த விக்னேஸ்வரருக்குத் தெரியும். நீங்க என்னை இவ்வளவு அவமதிப்பா பேசறதனாலே உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்... அறுபது வயசுக்கப்புறம்தான் உங்களுக்கு இந்தப் பிள்ளையார் மகிமை தெரிஞ்சிருக்கு... நேக்கு இருபது வயசுக்குள்ளே தெரிஞ்சுடுத்து... அதனால்தான் அவர்கிட்ட நான் அப்படி சொன்னேன்... வேண்டாம்னா போயிடறேன்." - மேல் துண்டையும் பூணூலையும் சேர்த்து அவன் மார்போடு கைகளை இறுகக் கட்டியிருந்தான்.
சாமிநாத ஐயர் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.
"இவனுக்கோ, இவன் அப்பனுக்கோ கூட இதிலே ஒண்ணும் பாத்தியதை இல்லையாம். இவன் சோம்பேறியாம். துப்புக் கெட்டவனாம். இந்த வேலையைக் கூட இவன் சரியா செய்யறதில்லையாம். இவர் எவ்வளவோ தலைப்பாடா அடிச்சிண்டும் இவன் அர்ச்சனை மந்திரம் கூடச் சரியாய்ச் சொல்றதில்லையாம்..."
'இவர் ஏன் நாகபூஷணத்தையும் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்' என்று குழம்பினான் விசுவநாதன்.
நாகபூஷணம் மிகவும் இளக்காரத்துடன் இவனுக்கு ஆறுதல் சொன்னான்: "உமக்குத் தகுந்த மாதிரி ஏதாவது வேலைப் பார்த்து வைக்கலாம்... எதுக்கு அரையும் குறையுமா இந்த வேலையைக் கட்டிக்கிட்டு அழறீர்? விடும்" என்று சொல்லிச் சிரித்து மறுபடியும் சொன்னான்: "நீர் எப்பவாவது வந்து சூறைத் தேங்காய் ஒடையும்... இத்தனை காலமா மந்திரம் தெரியாமலா நீ அர்ச்சனை பண்றே! மந்திரம் தெரியாம பூசை பண்றதைவிட ..." என்று அவன் சொல்ல வந்ததை முடிக்குமுன் ஒரு நம்பிக்கையின் ஆவேசமாய்ச் சீறினான் குருக்கள் பையன்: "நாகபூஷணம் பிள்ளை, நாக்கை அடக்கிப் பேசும்..." அதைச் சொன்ன பிறகு மேலே வார்த்தைகள் வராமல் அவன் உதடுகள் துடித்தன. உடனே தனது கோபத்துக்காக வருந்துகிறவன் மாதிரி குரல் இறங்கிப் பேசினான்: "அவர் என்னைக் கண்டிக்கலாம். நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது பிள்ளை. உங்க அப்பா ரொம்பப் பெரிய மனுஷர். அவர்தான் எனக்கு இந்தப் பிள்ளையார்கிட்ட கைகாட்டி விட்டார். உம்மையுந்தான் படிக்க வெச்சார்... உமக்குப் படிப்பு ஏறலே... அதுக்காக உம்மை என்ன வேணும்னாலும் செய்யச் சொல்லலாமோ? நமக்கு அது மட்டும் சுத்தமா செய்யத் தெரியுமாக்கும்... அப்படியெல்லாம் எந்தத் தொழிலையும் கேவலமாப் பேசப்படாது பிள்ளை..." என்றெல்லாம் தனது கோபத்தினால் தானே பயந்து நாகபூஷணத்திற்குப் புத்திமதியும் சமாதானமும் கூறினான்.
"நான் தெரியாத்தனமா ஏதாவது செஞ்சிருந்தா பெரியவா மன்னிச்சுக்கணும். இதோ இப்போ எல்லாத்தையும் கொண்டு வந்து ஒப்படைச்சுடறேன்" என்று சித்தப்பாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் வெண்கலப் பானையையும் கோயில் சாவியையும் கொண்டு வந்தான். வீட்டிற்குப் போனபோது, "என்னடா கொழந்தை சொன்னா" என்று அம்மா விசாரித்ததை அவன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
சாவியைச் சித்தப்பாவின் கையிலும், பானையை அவர் அருகிலும் வைத்துவிட்டு, அவரை அவன் நமஸ்காரம் செய்து கொண்ட போதுதான், 'இந்த அன்னவயலில் இனி ஒரு நாள் இருக்கப்படாது' என்று மனத்துள் முனகியவாறு எழுந்தான்.
அம்மா இன்று கொஞ்சம் அதிகமாகவே புலம்பினாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு இத்தனை நாள் தூங்குவது மாதிரி இன்றைக்கு அவனால் தூங்க முடியவில்லை. தூங்கினால் ஒரு நாள் ஆகிவிடுமே.
அவளிடம் சொல்லாமலே போய் விடுவதுதான் உசிதம் என்ற முடிவுடன் சுமைதாங்கியிலிருந்து இறங்கி வீட்டிற்குத் திரும்பினான்.
'ஆத்திலே அரிசி இருக்கு; அம்மாவுக்கு மட்டும்தானே? ஒரு மாசத்துக்கு தாராளமா வரும்; பக்கத்திலே உதவிக்கு அவளை மாதிரியே மனுஷா இருக்கா. பட்டணத்துக்கெல்லாம் ரொம்ப தூரம் போகாம மாயவரம், சீயாழி எங்கேயாவது போயி ஏதாவது' என்று அவன் எண்ணம் தேய்ந்தபோது, 'ஏதாவதென்ன? ஒரு காபி கிளப்பிலே போயி, மாவாட்டிப் பிழைக்கிறது" என்று தெம்புடன் நினைத்துக் கொண்டான்.
வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவின் பாதங்களைத் தொடாமல் நமஸ்காரம் செய்து கொண்டபோது, 'எங்கே இருந்தாலும் ஆதிசங்கரர் மாதிரி வந்துட மாட்டேனா?' என்று சற்றுமுன் அவளிடம் வேடிக்கை மாதிரி சொன்னதை மனப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டான். சாமிநாத ஐயர், பிள்ளையாருக்கு நைவேத்தியம் முடித்து வெண்கலப்பானை மீது ஈரத்துணி போட்டு எடுத்துக் கொண்டு வருகையில் அக்ரஹாரத்துக் கிழவியொருத்தி சொன்னாள்: "இந்த குருக்களாத்துப் பையன் எங்கேயோ போயிட்டான் போல இருக்கு... அவன் அம்மா அழறா... பாவமா இருக்கு." சாமிநாத ஐயருக்கு மனம் சங்கடப்பட்டது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் - "உங்களுக்கு அறுபது வயசில் தெரியற மகிமை எனக்கு இருபது வயசுலே..." என்று சொன்னானே அந்த வார்த்தைகள்... அவருக்கு நன்றாகத் தைத்திருந்தது. அதற்கும் மேலே அந்த நாகபூஷணப் பயல் கொஞ்சம் மரியாதை தவறிப் பேசியபோது அவனை நம்பாத்துப் பையன் சரியாகக் கொடுத்து அடக்கினானே என்று ஒரு பாராட்டுணர்வும் இருந்தது.
விசுவநாதன் வீட்டு வாசற்படியில் வந்து நின்று உள்ளே தலை நீட்டி, "மன்னி மன்னி" என்று அழைத்தார். படுத்துக் கிடந்த அம்மா, முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, "ஆரது?" என்று எழுந்தாள்.
"நான்தான்" என்று சொல்லிக் கொண்டு அந்த திண்ணையில் உட்கார்ந்தார் ஐயர்.
"இந்தக் கொழந்தை எங்கே போயி நிக்கும்? அவனுக்கு லோகமே தெரியாதே" என்று புலம்பிக்கொண்டே எழுந்து வந்தாள் அம்மா.
"நீங்க ஒண்ணும் கவலைப்படாதேங்கோ... நானும் அவனை அப்படித்தான் நெனைச்சேன். ஆனா அவன் மகா சமர்த்து. அவன் குழந்தையாயிருக்கிறது ஒண்ணும் குத்தமில்லே... வாக்கும் மனமும் சுத்தமா இருக்கே. போறாதோ? நீங்க வேணுமானா பாருங்கோ, அவன் செளக்கியமா சீக்கிரமா வருவான். சித்தமின்ன அவனை நெனைச்சுண்டே நான் பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணினேன். எப்படி அவனை நெனைக்காமலிருக்க முடியும்? பத்து வயசிலேருந்து தன் பிஞ்சு விரலால் அவரைத் தொட்டு அபிஷேகம் பண்ணிண்டிருந்திருக்கானே, அது மாதிரி - என்னென்னவோ செய்துட்டு கடைசிக் காலத்திலே என் பாவத்தைப் பிள்ளையார் தலையிலே கழுவ வந்திருக்கிற - என் கையாலே பண்ற அபிஷேகம் விநாயகருக்கு உகக்குமோ? அந்தக் கையாகுமா என் கை?" என்று அவனைப் புகழ்ந்து பேசிக் கொண்டே பேச்சுவாக்கில், "இந்தாருங்கோ மன்னி, பிரசாதத்தை உள்ளே எடுத்து வைங்கோ!" என்று மறக்காமல் சொன்னார் சாமிநாத ஐயர்.
(எழுதப்பட்ட காலம்: 1973)
நன்றி: சக்கரம் நிற்பதில்லை (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஐந்தாம் பதிப்பு: ஜீலை,
1995 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1.
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
27. முன் நிலவும் பின் பனியும் (1962)
கிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது.
சின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்து விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் 'டக் டக்'கென்ற சப்தம் ஒலிக்க, கல் வீட்டிற்குள், தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ, சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்லாத பெரியவரை, அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம், குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக் கோனார் அண்ணன் என்ற உறவுக்காக, அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியை 'கெளரவப் பதவி' யாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான்.
முப்பது வருஷங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம், நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனது 'புத்திரச் சுமை' யோடு சபாபதியையும் சின்னக் கோனார் ஏற்றுக் கொண்டதுதான்!
ஆனால் சபாபதி, தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான். யாரையும் மதியாத அவன் போக்கும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த நஷ்டமும், கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின.
பிறகு ஒருநாள் - தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார்.
தன் பிள்ளையின் செயலாலும், அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து, இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது - பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் - தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன.
"அண்ணே... நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன்? நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா..." என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு 'வந்து வாய்த்ததும்' 'வயிற்றில் பிறந்ததும்' மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.
"என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு... அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்... அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம்?... நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை!... வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு... நான் தானே உன் பிள்ளை... நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க?... என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும்? என் சொத்து உன் சொத்து இல்லியா?... என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா?..." என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார்.
அன்று வேறு வழியின்றி விரக்தியுடன் 'மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால் என்ன' என்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு ஜாகை மாற்றிக்கொண்டு, 'கிருஷ்ணா கோவிந்தா' என்று இருபது வருஷமாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு, பதினைந்து வருஷங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது.
ஆமாம்; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்... பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி: "நீ ஒண்ணும் பயப்படாதே நைனா... இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே... எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது."
"அது சரிதான்டா தம்பி... ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்..." என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். "அதுக்கென்னா, கட்டிக்கிட்டாப் போச்சு... அங்கேயே 'கோட்டர்ஸ்' தராங்க... குடும்பத்தோட போயிருக்கலாம்... பொண்ணு பார்த்து வெச்சிருக்கியா?"
"அட போடா... பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி? உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே!..." என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு குஷியில் பேசினார்.
"இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனுஷன்!" என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
அந்த வருஷமே தஞ்சாவூரில் பெண் பார்த்து, சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வருஷத்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு செல்வது வழக்கமாகி விட்டது.
இந்தப் பத்து வருஷமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வருஷங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்... அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வருஷம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர்.
'பாபு'... என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்... கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த ஸ்பரிசத்துடன் தெரியும்... அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்... எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு "பாபூ..." என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்... பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர... அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்... இந்த லயத்தில்தான் கழிகின்றன.
அது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே? அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி?
தன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன?...
வானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து... ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்!... அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே... எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்!
போன வருஷம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். 'என்னப் பேச்சுப் பேசுகிறான்?'... ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே! அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். 'ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு' என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன? -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்.
பாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி, காலில் ஜோடு அணிந்து, ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா? ஊஹீம், தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்லுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப் 'போ போ' என்று விரட்டிவிட்டு, பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து, அவன் காலடியில் அமர்ந்து, வாதுமை, கல்கண்டு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை- ஒரு டப்பியில் அவனுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து, பாஷை தெரியாத அவனிடம் பேசி, அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர்.
அவன் அவரைத் 'தாதா' என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத் 'தாத்தய்யா' என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து "நை... நை... தாதா" என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள்: "அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாமா... இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை... அங்கே பக்கத்து வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு... நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான். உங்ககிட்ட வரமாட்டேங்கிறானே... அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். அவரைத்தான் ' தாதா தாதா'ன்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்... அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது, 'சீக்கிரம் வந்துடுங்க'ன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு, அந்த சர்தார் தாத்தா" -என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கிழவருக்குத் தனக்குச் சொந்தமான பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு, நாளெல்லாம் கொஞ்சி விளையாடி, தன்னையும் விட அதிக நெருக்கமாகி, அவன் பாஷையைக் கற்றுக் கொடுத்து, தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்... அந்தப் பெருமூச்சில்- வருஷத்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும், வருஷத்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே, இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது.
ஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும், அவனுக்கு ஒரு வயது கூடுகிறது என்ற மகிழ்ச்சியும், தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும்.
'அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோ' என்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும்.
இந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம். சபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார். ஜபல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால், மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய், தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர்! அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார், சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார்.
மனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி.
'பாபு வருவான், பாபு வருவான்' என்று வீட்டுக் குழந்தைகளும், பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.
கோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம் உண்டு.
ராந்தல் கம்பம் என்றால், சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான். சிக்கனம் கருதியோ, நிலாவை ரசிக்க எண்ணியோ, அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படாமல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும் 'தாச்சி' யாகக் கலந்து கொள்ளும்.
அறுபது வருஷங்களுக்கு முன் பெரிய கோனாரும், அவருக்குப்பின் சின்னக் கோனாரும், இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வருஷங்களில், அவர்களின் பிள்ளைகள், இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம்; சிரிப்பு; கூச்சல்.
அப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார்.
எதிர் வீட்டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பின் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும், குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது.
தெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன்.
"ஆர்ரா அவன்? அடடே தம்பையாவா?... ஏன்டா கண்ணு, நீ போயி விளையாடலியா?"
"ம்ஹீம்... நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா!"
"கதை இருக்கட்டும்... பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா, பாரு..." என்று சொல்லிக் கொண்டே, தலை மாட்டிலிருந்து சுருட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார்.
"அவுரு எப்பவோ போயிட்டாரே" என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா.
தம்பையா- சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள், அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன, சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு! தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி!
பெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.
"தாத்தா... உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா?"
"பயமில்லேடா... மரியாதை!?
"ம்... அவருக்குத்தான் கண்ணு தெரியலியே... நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு?"
"அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன?... எனக்குக் கண்ணு தெரியுதே... அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை... சரி, நீ போய் விளையாடு!"
"ம்ஹீம்... நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்."
"நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே?"
"நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்!" என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.
"அடடே, உனக்கு விசயமே தெரியாதா?... அந்த இந்திக்காரப் பயலும், அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ... அவுங்க வரல... அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்.." என்று சின்னக் கோனார் சொன்னதை நம்ப மறுத்து, தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான்.
"ஐயா... பொய்யி, பொய்யி... நீ சும்மானாச்சுக்கும் சொல்ற... நாளைக்கு அவுங்க வருவாங்க!"
"பொய்யி இல்லேடா, நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே... திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து... அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்... அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்..."
"கடுதாசி எங்கே? காட்டு" என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.
"கடுதாசி பெரியவர்கிட்டே இருக்கு!"
"நான் போயி பார்க்கப் போறேன்" என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.
"இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே? விடிஞ்சி பாத்துக்கலாம்" என்று தடுத்தார் சின்னவர்.
"அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே" என்று பதில் சொல்லிவிட்டு, தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா.
தம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது, குடிசையின் முன், சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர்.
கிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மெளனமாய் நின்றான் தம்பையா.
கிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும், இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு. அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால், இருளில் எரியும் நெருப்பையோ, வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும்.
அவர் பார்வை எதிரில் நிற்கும் தம்பையாவை ஊடுருவி, அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவன் பின்னால் வானத்தில் வட்டமில்லாத, பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு, நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார்.
"குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிருஷ்ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே, அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர, கிழவரின் உதடுகளில் மந்தஹாஸமான ஒரு புன்னகை தவழ்ந்தது. "பாபூ!"
"பாபு இல்லே தாத்தா, நான் தான் தம்பையா."
"தம்பையாவா?... நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே?"
"பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா?... நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே?... சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்..." என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.
பாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசேஷ வாஞ்சை பிறந்தது. "ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்... அதனாலே வரல்லே..." என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.
"பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே?" - என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.
முகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: "அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா?... டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே... அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு... ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது... அதனாலேதான் இப்பவே சுடறேன்... உக்காரு. நீயும் உரி..." என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத் தட்டி உரிக்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ, தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொண்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார்: "நீ நல்ல பையனாச்சே... கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே... நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய... உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்..." என்று தம்பையாவை தாஜா செய்வதற்காக, சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார்.
"எனக்கு வேண்டாம், தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே... சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் கஷாயம் குடுத்திச்சே..." என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான்.
"ஏந்தாத்தா! இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா? எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே?"
"ஆமா... நிறைய வெச்சிருந்தேன்... கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்..." என்று சொல்லும்போதே, தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார்:
"பரவாயில்லே, நீ ரெண்டு எடுத்துக்கடா... பாபுவுக்குத் தான் இவ்வளவு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு" என்றார்.
தம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்துவிட்டு, இப்பொழுது தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்.
"ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே? இல்லாட்டி பாபுவுக்கு... நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே?" என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.
இவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.
எதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, "உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே... பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே... நீ நல்லா படிக்கிறியா?... நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும்" என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார்.
அவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு "தாத்தா, தாத்தா..." என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா. "என்னடா வேணும்?"
"நானும் உன்கூட டேசனுக்கு வர்ரேன் தாத்தா... பாபுவைப் பாக்கறத்துக்கு..." என்று கெஞ்சினான்.
"விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோ ட எந்திரிச்சுப் போவேனே... நீ எந்திருப்பியா? இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்... உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது?..." என்று தயங்கினார் கிழவர்.
"நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும்? ராந்தல் வெளக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்... நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு..." என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.
"ஆ! கெட்டிக்காரன் தான்டா நீ... சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு! விடிய காலையிலே வந்து எழுப்பறேன்."
"நான் இங்கேதான் படுத்துக்குவேன்."
"அங்கே தேடுவாங்களே."
"சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்..."
"சரி... கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்துக்க..." என்று கிழவர் சொன்னதும் ஜமுக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.
கிழவர் இரும்புரலில் 'டொக் டொக்'கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.
நடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, "ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா?" என்று கண்களைக் கசக்கிக் கொண்டான்.
"இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் கழுவிக்க..." என்றதும் தம்பையா குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். "அப்பா...!" என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது...
"தாத்தா... ஒரே பனி... குளிருது" என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.
தாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிருஷ்ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். "பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது... பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா? மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு... தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்... சீக்கிரம் நாழியாவுது" என்று அவசரப்படுத்தவே, தம்பையா சட்டையையும் நிஜாரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான்.
சற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு, அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும் தம்பையா போடும் கூக்குரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.
ராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பாவுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர்.
"நான் ரெடி தாத்தா, போகலாமா?" என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, "தம்பையா, இதெக் கொஞ்சம் புடி... வர்றேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, "இது ஒரு ரூபா தானே?" என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து "ஆமாம்" என்றான். பிறகு, "பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது?" என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார்.
மெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர்.
அவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ரஸ்தாவில் ஏறியபோது, பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும், சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி, முகவாய்க்குக் கீழே துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார்.
"தனது பேரனைப் பார்க்க இந்தக் குளிரில் தான் போவதுதான் சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான்" என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். "எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்... ஆனா, நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா... அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே கஷ்டப்படுவியே, உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்..."
-தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது...
அந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின், ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, இருள் விலகுவதற்குள்ளாக, அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர்.
அவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜீவன் இல்லை. 'ஹோ' வென்ற தனிமையும், பனி கவிந்த விடியற்காலை இருளும், இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார். சட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குளிரைத் தாங்கும்?
வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.
திடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, "அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்" என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.
இப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் "வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்?" என்று கேட்டார்.
"இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்" என்று பதிலளித்தான் போர்ட்டர்.
"ஹீம்... இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்" என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வருஷம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. "சீசீ! இதுக்குப் போயி பொறாமைப் படலாமா?... பாவம், அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக் கொஞ்சி திருப்திப் படறானோ" என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய கோனார்.
-அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின.
"டே... தம்பையா! வண்டி வந்துட்டுது... நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா... நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது.
கிழவர் "பாபூ...பாபூ..." வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் "சவாதி மாமாவ்...மீனா மாமீ...பாபு" என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் ஜன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன...
"பாபூ...பாபூ" என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ?
-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு குருட்டுக் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா?
வண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது.
ஒரு நிமிஷம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும், ஒரு தடவை அந்தப் பிஞ்சு விரல்களை ஸ்பரிசித்து இன்பமடையவும், இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், கிழவரின் கண்கள் கலங்கின. ரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா, ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து, கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான்.
கிழவர் வானத்தைப் பார்த்தவாறு "பாபூ" வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். அப்போது இஞ்சினுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த ஜன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரிய கோனாரைத் "தாதா" வென்று அழைத்தது.
அந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால், கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து, அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார்.
"நை ஹோனா, நை" என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி வந்த தம்பையா, பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால், குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் "பாபு பாபு" என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான்.
கிழவர் டப்பியைத் திறந்து "உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு" என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான்.
"எல்லாம் உனக்குத்தான்" என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர்.
அப்பொழுது, வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட ஸ்தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் "கோன்ஹை" என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும் குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள்.
இரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில்- அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள்: "தாதாகோ நமஸ்தேகரோ பேட்டா." குழந்தை கிழவரைப் பார்த்து "நமஸ்தே தாதாஜி" என்று வணங்கினான். கிழவரும் பாசத்தால், பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி "நமஸ்தே பாபு" என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான், அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோ டி, குழந்தையிடம் நீட்டினார்...
அதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ?... அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி ஹிந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.
"சபாபதி தூங்கறானா மீனா? எழுந்ததும் சொல்லு" என்று கிழவர் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்காது.
வண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். "அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ" என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.
"இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே" என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்...
தம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை!...
(எழுதப்பட்ட காலம்: ஆகஸ்ட் 1962)
நன்றி: யுகசந்தி (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - ஒன்பதாம் பதிப்பு: 1999 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
28. முற்றுகை
இரண்டு மணி நேரமாய் அந்த எவளோ ஒரு 'மிஸ்'ஸுக்காகத் தனது மாடியறையில் காத்திருந்தான் வாசு. பொறுமை இழந்து முகம் சிவந்து உட்கார்ந்திருந்தவன் கடைசில் கோபத்தோடு எழுந்துசென்று 'கப்'போர்டைத் திறந்தான்.
அதனுள் அழகிய வடிவங்களில் வடிக்கப்பட்ட கண்ணாடி மதுக் கிண்ணங்களும், கால் பாகம் குறைவாயிருந்த ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலும் இருக்கின்ற கோலத்தை ஏதோ ஒரு கலைப்பொருளைப் காண்பதுபோல் ரசித்துப் பார்த்தான் அவன்.
அந்த மதுக் குப்பியும், கிண்ணங்களும் மதுவின் விரோதிகளைக்கூடக் குடிக்கத் தூண்டும் அளவிற்கு மயக்கத் தக்க கலையழகு பெற்றிருந்தன.
"அதிருஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ ஒழுக்கம் என்ற அளவுகோலினால் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ள விஷயங்களெல்லாம் உலகத்தில் மகத்தான செளந்தர்யங்களாய் மாறியிருக்கின்றன!" என்று முணுமுணுத்தவாறே தன்னுள் கிளர்ந்தெரிகின்ற உணர்ச்சிகளைத் தணிக்கவோ வளர்க்கவோ கொண்ட வெறியுடன் குப்பியிலிருந்ததைக் கிண்ணத்தில் வடித்துக் கலப்படமற்ற பிரசாதம் போல் ஒரே மடக்கில் விழுங்கிக் கிண்ணத்தை மீண்டும் நிரப்பிக்கொண்டு வராந்தாவுக்கு வந்தான் வாசு.
அந்த வராந்தாவும் அவனது ஏர்கண்டிஷண்ட் அறையும் முழுக்கவும் மேநாட்டுப் பாணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவனும்கூட சிந்தனையிலும் ரசனையிலும் விதேசி மயமாகத்தான் இருந்தான்.
நாணல் தட்டையைப் போன்ற பிளாஸ்டிக்கினால் உருவாக்கபட்ட தட்டிகள் தொங்க விடப்பட்டிருக்கும் அந்த வராந்தாவின் ஒரு மூலையிலிருந்த 'ரேடியோ கிராமி'ன் அருகே அவன் வந்தான். மதுக் குப்பியை அதன் மீது ஒரு புறம் வைத்து ஒரு இசைத் தட்டை எடுத்து 'ரேடியோ கிராம்' பெட்டியில் வைத்தான்.
அடுத்த வினாடி 'நெம்பர் ஐம்பத்தி நாலு மூங்கில் வீடு' என்ற ஆங்கில வரிகளைத் தாளத்தோடு ஒலிக்கின்ற இசைக்கு ஏற்ப விரலைச் சொடுக்கிக்கொண்டு அந்த வராந்தாவின் மேலும் கீழும் உலவிக்கொண்டிருந்தான் வாசு.
அங்கே நடுவில் இரண்டு குஷன் சோபாக்களுக்கு இடையே இருந்த டீபாயின் மீது சதுரங்கப் பலகையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காய்களை அந்தப் பாடல் முடியும்வரை அவன் கவனிக்கவேயில்லை. பாட்டு முடிந்ததும் அவன் மீண்டும் ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப்பார்த்தான். பிறகு ஹாலிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பின்னர் மத்தியானம் இரண்டு மணியிலிருந்து - அவனால் நிறுத்தி வைக்கப்பட்டுக் காத்துக்கொண்டிருக்கும் - அந்த சதுரங்கப் படை வரிசையைப் பார்த்தான். மூண்று மணிக்கு வருவதாய்ச் சொல்லியிருந்த அந்த மிஸ் . . .?
நேற்றிரவு ஒரு விருந்தில் அவனைச் சந்தித்து அவனைக் கவர்ந்தும், அவனால் கவரப்பட்டும் இங்கு வருவதாக வாக்களித்திருந்த அவள் பெயர்கூட அவனுக்கு மறந்துபோய் இருந்தது.
அவனுக்கு பெயர்கள் முக்கியமல்ல; உறவுகள் பொருட்டல்ல. அவன் உணர்ச்சிகளை வழிபடுகிறவன். அழகுகளை ஆராதிப்பவன்; வெறும் உருவ அழகிலேயே அவன் மனம் பறி கொடுப்பான். அப்படிப் பறிகொடுப்பது தவறல்ல என்று வாதிப்பான். பிறரைக் கவர தனது உருவத்திலும், நடையுடை பாவனையிலும், பேச்சிலும் ரசனையிலும் ஒரு வித அழகினை வளர்த்துக் கொள்வதே வாழ்க்கை என்று நம்பியிருந்தான். இந்த முப்பத்தைந்து வருட வாழ்க்கையனுபவத்தில் அந்த நம்பிக்கை அவனுக்குப் பயனளித்தே வந்திருக்கிறது. அவனோடு பழகுகின்ற மனிதர்களுக்கு எது பிடிக்குமோ, அதனை எப்பாடு பட்டேனும் அவன் தேடிவைப்பான். ஆனால் பெரும்பான்மையான சமயங்களில் அவ்விதம் தேடவேண்டிய அவசியமில்லாமலே அவனிடம் அவை கையிருப்பிலேயே இருந்து விடுவதும் உண்டு.
நேற்று அப்படித்தான் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, 'அவளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டு, அவளொரு 'செஸ் சாம்பியன்' என்றறிய நேர்ந்ததில் அவன் மிகவும் மகிழ்ச்சியுற்றான். ஏனெனில் அவனுக்கும் அதில் பரிச்சயம் உண்டு. எனவே அவளுக்கு அவன் விளையாட்டாய் சவால் விடுத்தான்.
"என்னோடு விளையாடி என்னை நீ ஜெயிப்பாயா?" என்று அவன் அகங்காரத்தோடு கேட்டபொழுது, "இயன்றவரை முயன்று பார்ப்பேன்" என்று அவள் ஆங்கிலத்தில் கூறி, அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டாள்.
"விளையாட்டில் வெற்றி என்பது எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானதே தோல்வியும்" என்று அவன் தத்துவார்த்தமாய்ச் சொன்ன பதில் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனைப் பொறுத்தவறை அவன் அழைப்பை அவள் ஏற்றுக்கொண்டதே அவனுக்கு வெற்றியாய் இருந்த்து. அவனது நாட்டம் அவளது வருகையில்தானேயொழிய அவள் வந்த பின் நிகழும் விளையாட்டில் 'யார் வெற்றி பெறுகிறார்கள்? யார் தோற்கிறார்கள்' என்பதில் அல்ல. ஒரு ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட விளையாட்டு - அது எத்தகையதாய் இருந்தாலும் வென்றவர் தோற்றவராவதும், தோற்றவர் வென்றவராவதும் இயல்பு என்று அவன் அறிந்திருந்தான்.
இப்பொழுது அவன் மனப் புழுக்கமெல்லாம் தன் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவள் வராமலிருப்பதால் விளைந்த ஏமாற்றத்தினால்தான்.
ரேடியோகிராம் மீது இருந்த மதுவை எடுத்து ஒரு வெறியுடன் அவன் உறிஞ்சித் தீர்த்தான்; அப்போது மணி ஐந்தரை அடித்தது.
மூன்று மணிக்கு வருவதாய் இருந்தவள், ஐந்தரை மணிவரை வராததாலும், அவளிடமிருந்து டெலிபோன் மூலம் கூட ஒரு செய்தியும் தெரியாததாலும் அவள் தன்னிடம் பொய் வாக்குத் தந்து ஏமாற்றிவிட்டாள் என்று ஆத்திரமுற்ற வாசு, ஒரு ஏமாளியைப்போல் அவளுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்த அவமானத்தால் திடீரெனச் சினம் மிகுந்து அந்த இரண்டு சோபாக்களின் இடையே இருந்த டீபாயைக் காலால் எற்றினான்.
வெள்ளையும் கறுப்புமாய்ச் சதுரங்கக்காய்கள் லினோலியம் விரிக்கப்பட்ட தரையில் சிதறி உருண்டன.
தனது ஆத்திரத்தைத் தானே சமனம் செய்துகொள்ள வேண்டி அந்த சோபாவில் சாய்ந்து கண்களை மூடினான் வாசு.
அமைதியான அந்த வினாடிகளில் அவனது செவிகளில் வீணையின் இனிய நாதம் மெல்லென வந்து ஒலித்தது.
அந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் இரண்டுமணி நேரங்களாக அல்ல, இரண்டு வருஷங்களாக அவனுக்காகக் காத்துக் கிடக்கும் அந்தப் பெண்ணின் - அவன் மனைவி சீதாவின் நினைவு அவனுக்கு இப்போது மிகவும் சாதாரணமாக அந்த வீணையின் நாதத்தால் ஏற்பட்டது.
இரண்டு வருஷங்களுக்கு முன், மனம் போன போக்காய் தனிவாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் வாசுவை ஒரு குடும்பக் கட்டுக்குள் நிறுத்துவதன் பொருட்டு அவனுக்கு மனைவி என்ற புதிய உறவை ஏற்படுத்தினர் அவனது பெற்றோர்.
அந்த முயற்சியை மறுக்காமல் அவன் ஏற்றுக்கொண்டான். அந்த அளவுக்கு அவன் நல்லவனாக இருந்ததில் அவனது பெற்றோருக்கு மெத்த மகிழ்ச்சி.
'நான் சுதந்திர புருஷனாக இருப்பதைத்தவிர எந்த விதத்தில் யாருக்குத் தீயவன்?' என்று கேட்கும் அவனது கேள்விக்கு இன்றுவரை அவனது குடும்பத்தில் தக்க பதில் சொல்ல யாரும் முன் வர வில்லை.
சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் -பூர்வீகச் சொத்து எவ்வளவோ இருந்தும் அவற்றை எதிர்ப்பார்க்காமல் -சுதந்திரமாக 'பில்டிங் காண்ட்ராக்ட்' தொழிலில் இவ்வளவு சம்பாதித்திருக்கும் தனது மகனை எண்ணி அவன் தந்தைக்கு எவ்வளவு பெருமிதமிருந்தும் வாசுவின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை ஒன்றே அவருக்கு பெருங் குறையாக இருந்தது.
மனைவியென்று ஒருத்தி வந்தால் அவன் மாறுவான் என்று நம்பியே சீதா அவனுக்கு வாழ்க்கைத் துணையாக்கப்பட்டாள். இன்னும்கூட அவன் அவ்விதமே மாற்றமில்லாமல் இருக்கிறான் என்றால் அதற்கு அவளே பொறுப்பு என்று தீர்மானம் செய்து விட்டார்கள் அவர்கள்.
அவள் என்ன தீர்மானத்திலோ, தன்னை அவன் பொருட்படுத்தாதது போலவே அவனது நடவடிக்கைகளை தானும் பொருட்படுத்தமல் தனி வாழ்க்கை நடத்தி வருகிறாள்.
தனி வாழ்க்கையா?
இணைந்து கலந்து இரண்டு ஆத்மாக்கள் இருவேறு உலகங்களில் பிரிந்து கிடந்தாலும் அந்த அனுபவமே தாம்பத்யம் தான்! இரண்டு ஆத்மாக்கள் சஙகமமில்லாமல் உடல்கள் என்னதான் ஒட்டிக் கலந்து உறவாடியபோதிலும் அந்த வாழ்வே ஒரு தனி வாழ்க்கைதான்.
அவ்விதம் ஒரே வீட்டில் வாழ்ந்தும், கணவன் கூப்பிட்ட மாத்திரத்தில், ஒவ்வொரு விநாடியும் அழைப்பை எதிர் நோக்கிக் காத்திருந்தவள் போன்று ஓடிவந்து எதிர்நின்றும் அவன் விரும்புவதை விரும்பியவண்ணம் அளித்துப் பணிவிடை செய்தும் ஒரு ஹிந்து மனைவியின் பண்புகளோடு வாழ்க்கை நடத்தி வந்தாலும், அவளது வாழ்க்கை தனிமைப் பட்டுக் கிடப்பது போன்ற ஒரு அமைதியான சோகம் சீதாவின் விழிகளில் நிரந்தரமாகப் படிந்திருந்தது.
எத்தனையோ நாட்களில் இரவில் வெகுநேரம்வரை ஆண்களும் பெண்களுமாய் அந்த வீட்டின் மாடிப் பகுதியில் அவனோடு குழுமியிருந்து கும்மாளமடித்துக் கொண்டிருந்த நேரங்களில் சமையற்காரப் பாட்டி மனம் பொறுக்காமல், "இப்படிக் கூட ஒரு கூத்து உண்டோ ?" என்று வியப்பது போல் பொருமியபோது, வாழ்க்கையின் கோலங்களை விலகி நின்று ரசிக்கும் ஒரு ஞானியைப்போல் புன்முறுவல் காட்டிய தல்லாமல், ஒரு வார்த்தை பாட்டியோடு சேர்ந்து பேசியதில்லை சீதா.
சீதாவைப்பற்றி மிகவும் சாதாரணமாக எண்ணிய வாசு, சீதா என்ற பெயரில் ஒரு சாதாரணப் பேதையைத் தான் கண்டான். தனக்கு மனைவியாய் வாய்த்த அந்தப் பெயரில் அவன் அறியாமல் ரகசியமாய் மறைந்துகிடக்கும் மகத்தான அர்த்தங்களை அவன் கண்டானில்லை. இப்போது அவன் அவளை நினைத்ததற்கு நேரிடையான ஒரு காரணமுண்டு.
இன்று காலை அவன் அழைத்ததன் பேரில் அவள் மாடிக்கு வந்திருந்தாள். அவனது உடைகளையெல்லாம் சலவைக்குப் போடுவதற்காக - அந்த அழுக்குகளை சுமந்து செல்ல அவள் வந்திருந்தாள். அப்போது அழுக்கோடு அழுக்காய் அவனது கோட்டுப் பையில் நேற்று இரவு அந்த எவளோ ஒரு மிஸ் அவனிடம் கோடுத்திருந்த விசிட்டிங் கார்டை வைத்த நினைவு - அதை வைக்கும்போது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையில் தற்சமயம் இருக்கும் அவனுக்கு நினைவில் வந்தது.
வீணை ஒலியைத் தொடர்ந்து சீதாவும், சீதாவைத் தொடர்ந்து தனது அழுக்குகளும், அந்த அழுக்கில் ஒன்றாய் அந்த மிஸ்ஸின் விசிட்டிங் கார்டும் தனது நினைவுக்கு வந்ததையெண்ணித் தானே சிரித்துக் கொண்டான்.
அருகிலிருந்த 'காலிங்' பெல்லை அவன் அழுத்தினான்; வீணை இசை நின்றது.
மனைவியைக்கூட மணியடித்து அழைக்கும் பழக்கத்திற்குக் காரணம் அவன் எதை முன்னிட்டும் அந்த வீட்டின் கீழ்பகுதிக்கு பிரவேசிப்பதில்லை என்று தீர்மானம் செய்திருந்ததுதான். அதற்குக் காரணம், தனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் பிறர் உணர்ச்சிகளை மதிக்கும் நாகரிகம் அவனிடம் இருந்ததுதான்; ஒரு முறை செருப்புக் காலோடும், சிகரெட்டுக் கையோடும் உள்ளே நுழைந்த பொழுது, இந்திய நாகரிகமே ஒரு பெண்ணுருவில் வந்து எதிரில் நின்றது போல் அவள் மிகுந்த கோபத்தோடு அவனைத் தடுத்து நிறுத்தி, 'இது பூஜை அறை' என்று கூறியது தான். தனது இங்கிதமற்ற செயலுக்கு வருந்தியவன் போல். 'ஐ யாம் ஸாரி' என்று முனகிக்கொண்டே திரும்பி வந்த பிறகு இந்த இரண்டு வருஷக் காலத்தில் அவனை யாரும் அங்கே அழைத்ததுமில்லை; அவன் போனதுமில்லை. அப்படிப் போயிருந்தாலும் துளசி மாடமும், பூஜை அறையும், சாணி மெழுகலும், சாயக்கோலமும் அவனுக்குப் பிடித்திருக்காது.
அவனுக்கு அவள் தேவையான பொழுது இருந்த இடத்திலிருந்து அவளை அழைக்க இந்த நவீன காலத்தில் வசதிகளா இல்லாமல் போயின?
அதோ மாடிப்படிகளில் மெட்டின் ஒசை ஒலிக்க அவள் வந்து எதிரே நிற்கிறாள்.
அப்போது அங்கு வீசிய வாடையிலிருந்து அவனது நிலையை அவள் ஊகித்துக்கொண்டாள். முகத்தில் ஒரு சுளிப்பு இருக்கவேண்டுமே! புன்னகையோடு எதிரே நிற்கும் மனைவியை சிவந்த விழி திறந்து பார்த்துப் புன்னகை புரிந்தான் வாசு.
"சலவைக்குத் துணி போடறச்சே பாக்கெட்டெல்லாம் பார்க்கணும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?"
"ஆமாம், சொல்லியிருக்கேள்."
"இன்னிக்குப் பார்த்தியா?"
"பார்த்தேன் . . இதுதான் இருந்தது. கேக்கும்போது தருவோம்னு பத்திரமா எடுத்து வைச்சேன் " என்று அவனிடம் அவள் நீட்டிய அந்த விஸிட்டிங் கார்டை ஒரு முறை பார்த்துவிட்டு அவளை நோக்கித் தலைநிமிர்ந்து, "தாங்க்ஸ் . ." என்று அவன் நன்றி தெரிவித்ததும் ஒரு புன்முறுவலால் அவனுக்குப் பதிலளித்து விட்டு அவள் திரும்பினாள்.
"சீதா . . ." என்ன நினைத்தோ அவளை அழைத்தான்.
அவள் நின்றுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
"இங்கே வா" என்று அவன் அவளை அருகே அழைத்தான். அவள் அருகே வந்ததும், " நீ தான் உங்க ஊர்லே பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கியே . . எங்கே இதைப்படி" என்று அவளிடம் அந்த விஸிட்டிங் கார்டைக் கொடுத்தான்.
"மிஸ் சுகுணா - இங்கிலீஷ் லெக்சரர்" என்று பெண்கள் கல்லூரி ஒன்றின் பெயரையும் சேர்த்துப் படித்தபின், அதிலிருந்த அவள் வீட்டு டெலிபோன் எண்ணையிம் வாசித்துக் காட்டினாள் சீதா.
அதைப் படித்த பின்னர் அவள் முகத்தில் ஏதேனும் சலனமிருக்கிறதா என்று கூர்ந்து பார்த்தான் வாசு. வழக்கம் போன்ற புன்னகையோடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத உணர்ச்சிகளோடு அவள் நின்றிருப்பதைப் பார்த்த வாசுவுக்கு, "இவளால் எப்படி இவ்விதம் இருக்க முடிகிறது?" என்ற எண்ணம் முதலாக எழுந்தது.
அவன் அவள் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தான். அதிலே ஆழ்ந்து துயிலும் சோகம் அவனுக்குக் தெரிந்ததோ இல்லையோ? இவளிடம் தனக்கு ஒர் ஆழ்ந்த லயிப்பு இல்லாமல் போனதன் காரணத்தை அவன் எண்ணிப் பார்த்தான். அதைத் தொடர்ந்து தன்னிடம் இவளுக்கு ஏதேனும் லயிப்பு இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தான். 'லயிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டபூர்வமாய் இவள் என் மனைவி,' என்ற மூன்றாம் பட்சமான, ஆனால் மிகவும் முரட்டுத் தனமான ஒரு பிடிப்பைப் பற்றி ஆராய்ந்துப் பார்த்தான்.
வெகு நேரமாய் ஒரு துணையை நாடிக் காத்திருந்து வெறுப்புத் தட்டிய அவனுக்கு ஏதோ ஒரு துணை தேவைப் பட்டது. எனவே அவளை அங்கே உட்காரச் சொல்லிப் பணிந்தான்.
அவள் அவன் எதிரே இருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தாள். கீழே இறைந்து கிடந்த சதுரங்கக் காய்களில் ஒன்று அவள் பாதத்தில் தட்டுப்பட்டது. அதை அவள் கையிலெடுத்து குனிந்த தலையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அது என்ன சொல்லு, பார்ப்போம்?" என்று ஒரு குழந்தையைக் கேட்பதுபோல் அவன் கேட்டான்.
அவள் தனது பெரிய விழிகளைச் சற்றே உயர்த்தி அவனைப் பார்த்துப் பதில் சொன்னாள்: "செஸ் காய்ன்".
"ம்ஹ்ம், " என்று அவள் ஞானத்தை சிலாகித்துவிட்டு, "அது என்ன 'காய்ன்'னு தெரியுமோ?" என்று கேட்டான்.
"வய்ட் பிஷப்."
"உனக்கு செஸ் விளையாடத் தெரியுமா?"
"சுமாராகத் தெரியும்."
"லெட் அஸ் ஸீ. போர்டை எடுத்து வைச்சி அடுக்கு பார்ப்போம்" என்று கூறியபின் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான் வாசு.
அவள் குனிந்து தரையில் கிடந்த அந்தச் சதுரங்கக் காய்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கையில் அவளையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். சில விநாடிகளுக்குப் பிறகு அவள் அழகைத் தான் ரசித்துக் கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.
டீபாயின்மீது சதுரங்கப்பலகையில் இரண்டு தரப்பிலும் காய்களை அணிவகுத்து நிறுத்திவைத்தபின் 'அவள் காய்களைச் சரியாக அடுக்கிவைத்திறாளா?" என்று ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துவிட்டு, 'உனக்கு எது? பிளாக் ஆர் வய்ட்?" என்று கேட்டான்.
"பிளாக்' என்று சொல்லி அவன் தனது காயை நகர்த்துவதற்காக அவள் காத்திருந்தாள்.
அவன் ஒரு முறை காய் நகர்த்தியபின் பதிலுக்கு அவள் நகர்த்தினாள். இவ்விதம் மாறி மாறி நான்கு 'மூவ்'கள் ஆயின.
அவன் அவளிடம் கேட்டான்: "நீ ஏதாவது தியரி படிச்சிருக்கியா?"
"இல்லே . . எப்பவோ விளையாடின பழக்கம்தான்."
அப்போது டெலிபோன் மணி அடித்தது. இரண்டு மூன்று முறை அந்த ஓசையைப் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் முனைந்திருந்தான் வாசு.
"அது யாருன்னு கேளு, " என்று அவளிடம் சொல்லி அனுப்பினான். சீதா எழுந்துச் சென்று டெலிபோன் ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.
"ஹலோ . . எஸ் . . எஸ் . . மிஸ்டர் வாசு'ஸ் ஹவுஸ் . . ஐ ஆம் ஹிஸ் வய்ப் . .சொல்றேன் . . நோ மென்ஷன் பிளிஸ் ' என்று ரிஸீவரை வைத்துவிட்டு வந்த சீதா முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அவனிடம் தெரிவித்தாள்.
"மிஸ் சுகுணா . . நேத்திக்கு எங்கேயோ பார்ட்டியிலே சந்திச்சேளாம். இன்னிக்கு மூணு மணிக்கு வர்ரதா சொல்லி இருந்தாளாம். காலேஜுலே ஏதோ திடீர்னு வேலை வந்துடுத்தாம் - இப்ப உடனே வராளாம் " என்று சொல்லிவிட்டு ஆட்டத்தைத் தொடர்வதற்காகச் சோபாவில் அமர்ந்தாள் சீதா.
அவள் தன் காயை நகர்த்திய பிறகும்கூட அவளையே அவன் வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.
"உங்க மூவ்தான் " என்று அவள் அவனுக்கு நினைவூட்டினாள். அதை காதில் ஏற்றுக் கொள்ளாமலேயே அவன் அவளைக் கேட்டான்.
"நீ என்னைப்பத்தி என்ன நினைக்கிறே?"
"என்ன நினைக்கணும்? நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கறவர் - அதாவது என்னோட புருஷன்னு நினைக்கிறேன்."
அவன் நெற்றியைச் சொறிந்துகொண்டு தலை குனிந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவன் கேட்டான்: "என் மேலே உனக்கு ஏதாவது கோபம் . . ?"
"இல்லே . . ."
"வருத்தம்?"
"ம்ஹ்ம் . . "
"கவலை?"
"இல்லை."
"ஏன் இல்லை?"
"ஏன் இருக்கணும்?"
- அவனது கேள்விகளுக்கெல்லாம் அவளால் பதில் சொல்ல முடிந்தது. அவனது கேள்விகளுக்குப் பதிலாய் இன்னொரு கேள்வியையே அவள் திருப்பிப் போட்டபொழுது அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
'இவள் தன்னைப்பற்றி என்னதான் நினைக்கிறாள்' என்று அறியத் துடிக்கும் அவனது ஓர் ஆர்வத்திற்கு, 'ஒன்றுமே நினைக்கவில்லை' என்ற பதில் உகந்ததாய் இல்லை. அப்படியொரு பதில் அவளிடமிருந்து வரும்பொழுது இவள் தன்னால் எப்படிப்பட்ட மறைவான துயரத்தை அனுபவித்து எவ்வளவு கொடிய மர்மமான பகைமையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அறிய முடிந்தது. இன்னும்கூட 'என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்வியை அவள் கேட்பாளா என்று அவன் ஏங்கினான். அப்படிக் கேட்கவேண்டுமென்ற ஓர் உணர்வுகூட அவளிடம் இல்லை என்று புரிந்து கொள்கையில் அதில் விளைகின்ற ஒரு சூன்யமான, கசப்பான உணர்ச்சியை அவனால் விலக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் அவன் தவித்தான். உண்மையில் அந்த உணர்ச்சி அவனால் ஏற்க முடியாததாகவும் விலக்க முடியாததாகவும் அவனை முற்றுகையிட்டு விலகாமலும் சேராமலும் வியூகம் அமைத்திருந்தது.
'நான் அழைத்தபோது இவள் வந்திருக்கிறாள் . . நான் அமரச் சொன்னால் அமர்கிறாள். போகச் சொன்னால் போகிறாள். சிரிக்கச் சொன்னால் சிரிக்கிறாள். ஆனால் இவள் என்னை எதுவும் சொல்வதுமில்லை . . இவளுக்காக நான் எதுவும் செய்வதுமில்லை . . இவள் என்னால் ஆக்கிரமிக்கப்பட்டவள் . . இவளுக்கு என்னிடம் அன்பு இல்லை; பகையுமில்லை. அன்பு செலுத்தவும் பகைமை பாராட்டவும் கூட ஒருவகைப் பற்று வேண்டும். இவள் என்னிடம் பற்றற்று வாழ்கிறாள். . . "
"என்னைப்பற்றி நீ கவலைப்படாத மாதிரி - உன்னைப் பத்திக் கவலைப் படாம நானும் இருக்கணும்னு நெனைக்கிறியா? அது உனக்கும் ரொம்ப செளகரியமா இருக்கா? என் இஷ்டப்படி நான் இருக்கிறதைப் பத்தி நீ கவலைப் படாமல் இருக்கிறதற்கு அர்த்தம் - உன் இஷ்டப்படி நீ இருக்கணும்கிறத்துக்குத் தானே?" என்று மது வெறியில் அவள் மனதைத் தைப்ப்துபோல் கேட்டான் வாசு.
அவள் கண்கள் அந்த விநாடியில் கலங்கின. எனினும் அவள் அழவில்லை. "இதுதான் பெண்ணின் தலைவிதி. எப்படி யிருந்தாலும் கெட்ட பெயர்தான்!" என்று தனக்குள் முனகிக்கொண்டாள் சீதா. பின்னர் சொன்னாள்: "நான் ஒரு ஹிந்துப் பெண். யாரும் யாரையும் கெட விடறதில்லெ . . .கெடறவாளை யாரும் ஒண்ணும் பண்ணவும் முடியாது."
அவளது வார்த்தைகளைக் கேட்டு அவனது சிந்தனை கிளர்ச்சியுற்றது. எழுந்து சென்று மேலும் ஒரு கிண்ணம் மது அருந்த எண்ணி எழுந்தான்; பிறகு ஏனோ 'வேண்டாம்' என்று முகத்துக்கு நேரே தானே கை வீசி அந்த எண்ணத்தை விரட்டிவிட்டு உட்கார்ந்தான் வாசு.
"எஸ் . . லெட் அஸ் பிளே . . " என்று வெகுநேர மெளமான சிந்தனைக்குப்பின் ஒரு பெருமூச்சுடன் கூறினான் வாசு.
"உங்க மூவ்தான்" என்று அமைதியாய்ப் பதில் சொன்னாள்.
'இவளை ஆட்டத்திலாவது வெல்ல வேண்டும்' என்ற முனைப்பில் காயை நகர்த்தலானான் வாசு.
சீதா தனது சக்தி வாய்ந்த காய்களை எல்லாம் ஒவ்வொன்றாய் அவனுக்குப் பறி கொடுத்துக் கொண்டிருந்தாள். வாசுவின் காய்கள் முன்னேறி முன்னேறி அவளது காய்களை வெட்டி வெட்டி எடுத்துகொண்டிருந்தன.
திடீரென்று சீதா அவனுடைய ஒரே ஒரு 'காய்'னை எடுத்து, "செக் அண்ட் மேட்' என்று ஆட்டத்தை முடித்தாள்.
வாசு, அவனது ஒவ்வொரு காய்க்கும் செக்கிலிருந்து தனது ராஜாவை விடுவிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தான். அவை யாவும் முற்றுகையில் இருந்தன. அவனது காய்கள் முன்னேறி இருந்தது உண்மையே; அவளது சக்தி மிக்க காய்களை எல்லாம் அவனிடம் அவள் பறி கொடுத்திருந்ததும் வாஸ்தவம் தான். ஆனால் அவனது ராஜா அவளது முற்றுகையில் சிக்கியிருந்தது எல்லாவற்றையும் விட உண்மை.
'வெல்டன் சீதா!" என்று அவளது தோளில் உற்சாகமாய்த் தட்டினான் வாசு.
அவள் எப்போதும் போல் அமைதியான புன்னகையே பூத்தாள்.
அப்பொழுது கீழே இருந்து 'காலிங் பெல்'லின் ஓசை கேட்டது. சீதா எழுந்தாள்.
"சீதா . . அவளாத்தான் இருக்கும். நான் இல்லேன்னு சொல்லிடு" என்று வாசு பயந்துகொண்டு பொய் கூறியதும், அவள் ஒரு கசந்த புன்னகையோடு மாடிப் படி இறங்கப் போனாள்.
"அவளை அனுப்பிவிட்டு நீ வா " என்று கூறியபின் வாசு இரண்டாவது ஆட்டத்திற்காகச் சதுரங்கப் பலகையில் காய்களை அடுக்கலானான்.
சற்று நேரம் கழித்து மாடிப்படிகளில் ஒலித்த மெட்டியின் நாதம் கேட்டு அவன் உடல் சிலிர்த்தது. அவள் அவன் எதிரில் வந்து நிற்கையில் வாசுவின் விழிகளில் இதுவரை அவள் சந்திக்காத ஒரு புதிய உணர்ச்சி மின்னியது. ஆனால் அவளது விழிகளில் நிரந்தரமாகப் படிந்திருந்த அந்தச் சோகம் மட்டும் மாறவே இல்லை.
அவன் அவளை விளையாடச் சொன்னான்; அவள் விளையாடினாள்.
(எழுதப்பட்ட காலம்: 1966)
நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் - எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
29. சுமைதாங்கி (1962)
காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?... அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன்.
வீட்டுக் கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த அந்த அம்மாளைப் பார்க்கும்போது, அவன் கண்கள் கலங்கின. அவள் போலீஸ்காரனைப் பார்த்து, "ஏன்.. இருக்கான்; என்ன விஷயம்? ஏலே ஐயா! இங்கே வா" என்றதும் உள்ளிருந்து ஒரு பையன் ஓடி வந்து, போலீஸ்காரனின் தலையைக் கண்டதும், "நான் வரமாட்டேன்" என்று பயந்து உள்ளே ஒளிந்து கொண்டான்.
"எதுக்குடாய்யா பயப்படறே? ஒண்ணும் பண்ண மாட்டாரு, வா" என்று பையனை அழைத்தாள் தாயார்.
போலீஸ்காரன் பெருமூச்சுவிட்டான்: "கூப்பிடாதீங்கம்மா... இருக்கட்டும். தோ, அங்கே ஓவர் பிரிட்ஜீகிட்ட, லாரியிலே சிக்கி ஒரு பையன் போயிட்டாம்மா... அப்படியே மண்டெ செதறிப்போச்சம்மா... ஸ்" என்று சொல்ல முடியாமல், சற்று நேரத்துக்கு முன் தன் பாபம் செய்த விழிகளால் கண்டதை எண்ணும்போதே போலீஸ்காரனின் உடம்பு சிலிர்த்தது.
"ஐயோ தெய்வமே! அப்புறம் என்ன ஆச்சு? புள்ளை உசிருக்கு..." என்று அவள் கேட்டு முடிக்குமுன் மற்றொரு பெருமூச்சையே பதிலாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான் போலீஸ்காரன். அங்கிருந்து போகும்போது, "இந்தக் காலனியிலே இருக்கற புள்ளைதான்னு சொன்னாங்க... புள்ளைங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்குங்கம்மா" என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டின் முன் நின்று, ஒரு பெரிய சோகத்தை எதிர்நோக்கித் தவிக்கும் தனது நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை..." என்று ஆரம்பித்தான் போலீஸ்காரன்.
"எங்க வீட்டிலே கொழந்தையே கெடையாதே" என்றாள் வீட்டுக்குள்ளிருந்து வந்தவன்.
"அம்மா! நீ புண்ணியவதி!" என்று அந்தப் பெறாதவளை எண்ணி மனத்துள் பெருமைப்பட்டவாறே பெற்று வளர்த்து இன்று தெருவிலே ரத்தமும் சதையுமாய்த் தன் செல்வத்தைச் சூறையிட்டுவிட்ட குழந்தைக்குரிய "பாவி"யைத் தேடிச் சென்றான் போலீஸ்காரன்.
2
ஒவ்வொரு வீட்டின் முன் நிற்கும்போதும், 'அது அந்த வீடாய் இருக்கக் கூடாதே' என்று அவன் மனம் பிரார்த்தித்தது. ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும்போதும், 'ஐயோ! இவள் அந்தத் தாயாய் இருக்க வேண்டாமே' என்று அவன் இதயம் கெஞ்சியது. 'எப்படி இருந்த போதிலும் இந்தக் காலனிக்குள் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஒரு தாயின் இதயத்தில் அந்த 'டைம்பாம்' நேரம் வந்ததும், வெடித்துச் சிதறத்தான் போகிறது' என்ற நினைப்பு வந்ததும் போலீஸ்காரன் தயங்கி நின்று திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தான். அந்தச் சோகத்தைத் தன்னால் தாங்க இயலாது என்ற நினைப்பிலேயே அந்தக் காட்சி அவன் மனத்தில் உருவாகி உடம்பும் முகமும் வேர்த்து, நாக்கு உலர்ந்தது.
ஒரு வீட்டின் திண்ணைமேல் 'உஸ்' என்ற ஆஸ்வாசப் பெருமூச்சுடன் உட்கார்ந்து, தொப்பியைக் கழற்றி, கர்ச்சிப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டான்.
'திரும்பிப் போய்விட்டால் என்ன?' என்று மனசு மீண்டும் உறுதியற்றுக் குழம்பியது.
'நான் போய்விட்டால், அதனால் அந்தக் குழந்தைக்கு ஒரு தாய் இல்லாமல் போய்விடுவாளா? ஐயோ! அது தாயில்லாக் குழந்தையாய் இருக்கக் கூடாதா! ஒருத்தி பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை இப்படிக் கேள்வி முறையில்லாம எடுத்துக்கக் கடவுளுக்குத்தான் என்ன நியாயம்?.. சீசீ! கடவுள்தான் உயிருங்களை உண்டாக்கறார் - இந்த யமன் தான்... யமனை உண்டாக்கினது யாரு? அவன் இப்படி அக்குரும்பு பண்ண இந்தக் கடவுள் எப்படிச் சம்மதிக்கிறாரு? அந்தக் கடவுளே பத்து மாசம் சொமந்து பெத்திருந்தாத் தெரியும்... எப்படித்தான் தாங்கப் போவுதோ அந்தப் பெத்த வயிறு... மனுசன் சாகறது பெரிய சோகமில்லே; அதைப் பாத்து மத்தவங்க துடிக்கிற கோலமிருக்கே... அட கடவுளே!'
'ஊரிலே தான் ஒவ்வொருத்தியும் ஒண்ணுக்குப் பத்து பெத்து வெச்சி இருக்காளே, ஒண்ணு போனாத்தான் என்ன? ஐயோ! அப்படியும் நினைக்க முடியுமா?... முடியாது, முடியாது. பெறாத என்னாலேயே - பிள்ளைப் பாசம்ன்னா என்னான்னு தெரியாத என்னாலேயே - யாருதோ போச்சி, நமக்கென்னான்னு இருக்க முடியாத மனுஷ மனசுக்கு, தன்னோடதே போச்சின்னா? - நேரமும் காலமும் வந்து கெடப்பாக் கெடந்து போனாலும் பரவாயில்லே... இப்படித் திடீர்க் கொள்ளையிலே அள்ளிக் குடுக்கப் பெத்த மனசு தாங்குமா? 'ஐயோ'ன்னு ஒரே அலறல்லே அவ உசிரே போயிடுமே! அடத் தெய்வமே! சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னு ஒண்ணையும் ஏன்டாப்பா உண்டாக்கினே?... கொஞ்ச நாழிக்கு முன்னே, சிட்டுக்குருவி மாதிரி ஒரே சந்தோஷமா பறந்து திரிஞ்சி ஓடிக்கிட்டிருந்தானே!...'
'கையிலே ஐஸ்கிரீம் குச்சியைப் புடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். நான் தான் பாவி பாத்துகிட்டு நிக்கறனே... அது நடக்கப்போவுதுன்னு தெரியுது... விதிதான் என் கையைக் காலை வாயையெல்லாம் கட்டிக் கண்ணை மட்டும் தெறக்கவச்சி எவ்வளவு கோரமான விளையாட்டை நடத்திக் காட்டிடுச்சி?... பையன் கத்தினானா? ஊஹீம்! அதுக்குள்ளே வந்திடுச்சே சாவு! போற உசிரு ஐஸ்கிரீமுக்காக இல்லே தவியா தவிச்சிருக்கும்! சாவுலே இருக்கற கோரமே அதுதான். திடீர்னு வந்து சாதாரண அல்ப ஆசையைப் பெரிசாக்கி ஏமாத்திடும். இன்னும் இவ்வளவு நாழிதான்னு முன்னெச்சரிக்கை கொடுத்து வந்திச்சின்னா மனுசன் சந்தோஷமாச் செத்திடுவானே - அது பொறுக்குமா அந்தக் கொலைகாரத் தெய்வத்துக்கு?'
'சாவும் போது எல்லா உசிருங்களுக்கும் ஒரு ஏமாத்தம் தான் மிஞ்சி நிக்கும் போல இருக்கு. ஆமா... இருக்கும்போது எவ்வளவு அனுபவிச்சாலும் சாகும்போது கெடைக்கப் போறது ஒரு ஏமாத்தம் தான்... ஐயோ.. என்ன வாழ்க்கை!'
'அந்த மாதிரி தான் அன்னிக்கி ஒரு நாளு, டேசன்லே, ஒரு சிட்டுக்குருவி 'கீச்கீச்'னு கத்திக்கிட்டு, பொட்டையோட ஒரே சேட்டை பண்ணிக்கிட்டுத் திரியறப்பெல்லாம் இனிஸீபெக்டரு ஐயா கூட வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு... பொட்டைமேலே ஆண் குருவி திடீர்னு எங்கிருந்தோ விசுக்குனு பறந்து வந்து தாவி ஏறினப்போ, அந்தக் கழுதை 'காச்மூச்'னு கத்திக்கிட்டு எதிர்ச் சுவத்திலே இருந்த ஒரு பொந்திலே போயி உக்காந்துக்கிட்டுக் 'கிரீச்' 'கிரீச்'னு ஏக்கம் காட்டிச்சி... அந்த ஆணுக்கு ஏமாந்த வெறியிலே படபடன்னு நெஞ்சி அடிச்சிக்குது. உடம்பைச் சிலிப்பிக்கிட்டு ஒரு நிமிஷம் பொட்டையை மொறைச்சிப் பார்த்தது. அந்தப் பார்வையிலேயே பொட்டைக்கு மனசு மாறிப்போச்சி. மனசு மாறினப்புறம் இந்தச் சனியனே ஆண் குருவிக்கிட்டப் போயிருக்கக் கூடாதா? பொல்லாக் கழுதை மவளுது... இந்தப் பொந்திலேயே, வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பி உக்காந்துக்கிடுச்சி. அது திரும்பினதுதான் தாமஸம். விருட்னு ஒரு பாய்ச்சல் பாஞ்சுது ஆணு... நானும், இனிஸீபெக்டரும் நடக்கப் போற காரியத்தைப் பாக்கறதுக்குத் தயாராத் திரும்பினோம்; இனிஸீபெக்டரு என்னைப் பாத்துக் கண்ணைச் சிமிட்டினாரு.'
"அதுக்கென்னாங்க, எல்லா உசிருங்களுக்கும் உள்ளதுதானே"ன்னேன். நான் சொல்லி வாய் மூடல்லே... 'கிரீச்'சினு ஒரு சத்தம்! ஆண் குருவி 'பொட்'டுனு என் காலடியிலே வந்து விழுந்தது. தலை பூரா 'செவ செவ'ன்னு ஒரே ரத்தக் களறி! ஐயோ கடவுளேன்னு அண்ணாந்தேன். 'கடகட... கடகட'ன்னு சாவோட சிரிப்பு மாதிரி அந்தப் பழைய காலத்து 'பேன்' சுத்திக்கிட்டு இருக்குது...
இனிஸீபெக்டரு எந்திரிச்சி ஓடியாந்து அதைக் கையிலே எடுத்தாரு...
"ம்... போயிடுச்சு ஐயா!... நீ சொன்னியே இப்ப, 'எல்லா உசிருங்களூக்கும் உள்ளதுதான்'னு... சாவைப் பத்தி தானே சொன்னே?" ன்னு கேட்டுக்கிட்டே சன்னல் வழியா அதைத் தூக்கி வெளியே போட்டார்.
'அந்த ஆண் குருவி 'பேன்'லே அடிபட்டுச் செத்தது ஒண்ணும் பெரிய விஷயமில்லே. ஆனா, அந்தப் பொட்டை - எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பொட்டைக் குருவி தவிச்ச தவிப்பு இருக்கே... ஐயோ! ஐயோ!.. அப்பத்தான் தோணிச்சு - கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். கடை கெட்ட அரக்கனுக்குமில்லாத, சித்திரவதையை ரசிக்கிற குரூர மனசு படைச்சவன்னு. இல்லேன்னா, சாவுன்னு ஒண்ணு இருக்கும்போது பாசம்னும் ஒண்ணை உண்டாக்குவானா?...'
'வாங்கின ஐஸ்கிரீமைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே ஒரு கொழந்தைக்குச் சாவு வரலாமா? அட, இரக்கமில்லாத தெய்வமே! உன்னைத்தான் கேக்கறேன்; வரலாமா சாவு? - அவ்வளவு அவசரமா? குழந்தை கையிலேருந்து விழுந்த ஐஸ்கிரீம் கரையறதுக்குள்ளே உசிர் கரைஞ்சு போயிடுச்சே...' - மனசு என்னென்னவோ எண்ணியெண்ணித் தவிக்கத் திண்ணையிலேயே வெகு நேரம் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.
கழற்றி வைத்திருந்த தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு நிமிரும்போது பார்வை அகஸ்மாத்தாக அந்த வீட்டுக்குள் திரும்பியபோது ஒரு பெண் - இளம் பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தவாறே உட்கார்ந்திருந்தாள்.
அது ஓர் அற்புதமான காட்சிதான்.
"அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி தர்ரியா?" என்று கேட்டவாறு மீண்டும் திண்ணைமேல் உட்கார்ந்தான் போலீஸ்காரன்.
குழந்தையை மார்போடு அணைத்தவாறே எழுந்து உள்ளே சென்று கையில் ஒரு செம்பில் தண்ணீரோடு வெளியே வந்தாள் அந்த இளம்பெண். குழந்தை மார்பில் முகம் புதைத்துப் பாலருந்தும் சத்தம் 'மொச் மொச்' சென்று ஒலித்தது.
போலீஸ்காரன் தண்ணீர்ச் செம்பை வாங்கிக் கொண்டதும் தாய்மைச் சுகத்தோடு குழந்தையின் தலைமுடியை மிருதுவாகத் தடவினாள் அவள்.
திடீரெனப் போலீஸ்காரனின் கண்கள் மிரண்டன.
'ஒருவேளை இவள் அந்தத் தாயாக இருக்க முடியுமோ? சீ, இருக்காது. சின்ன வயசா இருக்காளே!'
"ஏம்மா! இதுதான் தலைச்சன் குழந்தையா?" என்று ஆரம்பித்தான்.
"இல்லே... பெரிய பையன் இருக்கான். அவனுக்கு அப்புறம் ரெண்டு பொறந்து செத்துப் போச்சு... இது நாலாம் பேறு..."
"இப்ப பெரிய பையன் எங்கே?"
"பள்ளிக்கூடம் போயிருக்கான்."
"பள்ளிக்கூடமா... என்ன சட்டை போட்டிருந்தான்?"
"பள்ளிக் கூடத்திலே காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போடணும்னு சொல்லி இருக்காங்கன்னு உசிரை வாங்கி நேத்திக்குத் தச்சிக் குடுத்தப்பறம்தான் ரெண்டு நாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போறான்... எதுக்கு இதெல்லாம் கேக்கிறீங்க...?"
போலீஸ்காரன் ஒரு நிமிஷம் மெளனமாய் நின்றுவிட்டு, "பையனுக்குப் பள்ளிக்கூடம் ஓவர்பிரிட்ஜ் பக்கமா இருக்குதா?" என்று சாதாரணமான குரலில் கேட்டான்.
"இல்லே. இந்தப் பக்கம் இருக்கு... ஆனா, அது ஊரெல்லாம் சுத்தும். வாலுத்தனம் அதிகமாப் போச்சு... சொன்ன பேச்சைக் கேக்கறதில்லே... காத்தாலே 'ஐஸ்கிரீம் வாங்க அரையணா குடு'ன்னு உசிரை வாங்கினான். நான் தரமாட்டேன்னுட்டேன். அப்புறம் எனக்குத் தெரியாமப் பொட்டியெத் தொறந்து அரையணா எடுத்துக்கிட்டுப் போகும்போது நான் பாத்துட்டு ஓடியாந்தேன். அவன் ஓட்டத்தை நான் புடிக்க முடியுதா? விரட்டிக்கிட்டே வந்தேன். ஓடிட்டான். என்ன கொட்டம்! என்ன கொட்டம்! எனக்கு வெச்சிச் சமாளிக்க முடியல்லே... வந்த ஆத்திரத்திலே 'அப்படியே ஒழிஞ்சு போ, திரும்பி வராதே'ன்னு திட்டினேன்..."
போலீஸ்காரன் இடைமறித்து, 'ஐயையோ! அப்படி நீ சொல்லி இருக்கக் கூடாதும்மா... கூடாது' என்று தலையைக் குனிந்து கண்ணீரை மறைத்துக் கொண்டான். பிறகு சற்றே மெளனத்துக்குப் பின் ஒரு செருமலுடன் 'எனக்கென்ன, என் கடமையைச் செய்கிறேன்' என்ற தீர்மானத்தோடு, தலையை நிமிர்த்தி, கலங்குகின்ற கண்களை இறுக மூடிக் கொண்டு இமை விளிம்பில் கண்ணீர் கசியச் சிலைபோல் ஒரு வினாடி நின்றான். அவன் இதயமே இறுகி, துருவேறிய உணர்ச்சிக் கரகரப்புடன் உதட்டிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன: "ஓவர் பிரிட்ஜீகிட்டே லாரியிலே அடிபட்டு ஒரு பையன் செத்துக் கிடக்கான். போ! போயி, உம் புள்ளைதானான்னு."
'ஐயோ ராசா!' என்ற அலறலில் அந்த வீடே - அந்தக் காலனியே அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில் போலீஸ்காரன் செயலற்றுத் திண்ணையின் மீது சோர்ந்து விழுந்தான்.
பாலருந்தும் குழந்தையை மார்புற இறுகத் தழுவிக்கொண்டு வெறிகொண்டவள்போல் அந்தத் தாயார் வீதியில் ஓடிக் கொண்டிருக்கிறாள்...
3
"இன்னும் ஒரு தெருவு தாண்டிப் போகணுமே... என்ற பதைபதைப்புடன் கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு, மேல் துகில் விலகி ஒற்றை முலை வெளித்தெரிய தன் உணர்வு இழந்து, தாய்மை உணர்வின் வெறிகொண்டு பாய்ந்து பாய்ந்து ஓடி வருகிறாள் அவள்.
விபத்து நடந்த இடத்தை வேடிக்கை பார்த்துவிட்டு எதிரில் வரும் கூட்டம் தாய்மையின் சொரூபமாக இவள் வருவதைக் கண்டு, திரும்பி இவளைப்பின் தொடர்ந்து செல்கிறது...
- கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்!
'என்னா ஆச்சு?' - செய்தித்தாள் விவகாரம்போல் ஒருவர் கேட்ட கேள்விக்கு மேம்போக்காய் ஒருவர் பதில் சொல்கிறார்:
"ஒரு பையன் லாரியிலே மாட்டிக்கிட்டான்..."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? ஹேஹே... குளோஸ்..." என்று ஒரு ஹிஸ்டிரியாச் சிரிப்புடன் கை விரிக்கிறான் ஒருவன்.
"லாரிக்காரனுங்களுக்குக் கண்ணுமண்ணு தெரியுதா?... அவனுங்களை வெச்சி மேலே ஏத்தணும் லாரியை" என்கிறார் ஒரு மனுநீதிச் சோழன் பரம்பரை!
- அவர்களுக்கு ஆத்திரப்படுவதே ஒரு சுவாரஸ்யம்!
வீதியின் மறுகோடியில் அந்தப் போலீஸ்காரன் ஓடி வருகிறான். திருடனைத் துரத்திப் பிடிக்கும் திறனுள்ளவன்தான். பாசத்தின் வேகத்தைத் தொடர முடியாமல் பின்தங்கி விட்டான்.
இடுப்புப் பிள்ளையுடன் ஓடோ டி வந்து கடைசித் தெருவையும் தாண்டி விபத்து நடந்த தெருவுக்குள் நுழைந்தபோது கூட்டத்தின் நடுவே இருந்து ஒருத்தி, தரையில் விழுந்து புரண்ட கோலத்துடன் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, 'அட கடவுளே!.. உனக்குக் கண்ணில்லையா?' என்று கதறி அழுவதைக் கண்டதும் இந்தத் தாய் நின்றாள்.
கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிய இவள் சிரித்தாள். 'அது நம்ம ராசா இல்லேடி, நம்ம ராசா இல்லே' என்று கைக்குழந்தையை முகத்தோடு அணைத்துக்கொண்டு சிரித்தாள். ஹிருதயம் மட்டும் இன்னும் தேம்பித் தேம்பி விம்மிக் கொண்டிருந்தது. இப்பொழுதுதான் தாய்மை உணர்வின் வெறி அடங்கி, தன்னுணர்வு கொண்டாள். மார்புத் துணியை இழுத்துவிட்டுக் கொண்டாள். அருகில் வந்து நின்ற போலீஸ்காரனிடம், 'ஐயா, அது எம் பையன் இல்லே... வேற யாரோ ஐயா.. அது என் பையன் இல்லே...' என்று கண்களை மூடித் தெய்வத்தை நினைத்துக் கரம் கூப்பினாள்.
'சீ... இவ்வளவுதானா! தாய்ப் பாசம்ங்கிறது இவ்வளவு அல்பமா! ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே மொடங்கிப் போறதுதானா?' என்று முகம் சுளித்த போலீஸ்காரன் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்தான்.
கும்பலின் நடுவே வீழ்ந்து கதறிக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் போலீஸ்காரன் திடுக்கிட்டான்.
அங்கே அவன் மனைவி - மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் இந்தக் கோரத்தைப் பார்த்து விட்டாளோ?... அதோ, காய்கறிப் பை கீழே விழுந்து சிதறிக் கிடக்கிறதே!
'அடிப் பாவி!... உனக்கேன்டி தலையெழுத்து!' என்று முனகினாலும் போலீஸ்காரனால் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் குழந்தை மாதிரி விம்மி விம்மி அழுதான்.
'தங்கம்... இதெல்லாம் என்னாடி?' என்று அவளைத் தூக்கப் போனான். புருஷனைப் பார்த்ததும் அவள் குமுறிக் குமுறி அழுதாள்.
'ஐயோ! பாத்தீங்களா இந்த அநியாயத்தை? இதைக் கேக்க ஒரு போலீசு இல்லியா? ஒரு சட்டம் இல்லியா...? இருவது வருசமா நாம்ப எவ்வளவு தவமாத்தமிருந்து வரமா வரங் கேட்டும் குடுக்காத அந்தக் கண்ணவிஞ்ச தெய்வம் இப்படி அநியாயமா ஒரு வைரப் பொதையலே வாரி எறைச்சு இருக்கே!...' என்று கதறினாள்.
'தங்கம்!... அவுங்க அவுங்க விதிக்கு நாம்ப அழுதாப் போறுமா?... எந்திரி... பைத்தியம் மாதிரிப் புலம்பறியே! வீட்டுக்குப் போகலாம் வா...!' என்று மனைவியின் கையைப் பிடித்துத் தூக்கினான் போலீஸ்காரன். அவள் அவனைத் திமிறிக் கொண்டு விலகி நின்றாள். அழுத கண்கள் அவன் முகத்தை வெறிக்க, 'இது என் குழந்தை! ஆமா, இது என் குழந்தைதான்' என்று பிதற்றினாள்.
போலீஸ்காரனின் கண்கள், 'இறந்தது தன் குழந்தையல்ல' என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, அதோ வேடிக்கை பார்க்கும் உணர்ச்சியில் வருகிறாளே, அந்தப் பரிதாபகரமான தாயை வெறித்தன.
ஐயோ, பாவம் அவள்!...
அடுத்து அங்கே நிகழப்போகும் ஒரு கொடிய சோகத்தைக் காண விரும்பாமல், தன் மனைவிக்கும் அதைக் காட்ட விரும்பாமல், அவளை வீட்டுக்கு அழைத்துப் போக அவன் கரத்தைப் பற்றித் தூக்கினான். அவள் அவனோடு புலம்பிப் புலம்பி அழுதவாறு தளர்ந்து நடந்தாள்.
கும்பல் இரண்டாகப் பிரிந்து இந்தப் போலீஸ்காரத் தம்பதிகளின் சோக நாடகத்தை வேடிக்கை பார்த்தவாறு அவர்களின் பின்னே வந்தது.
"பாவி! ஒரு குழந்தையைப் பெத்துக் கொஞ்சறத்துக்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன், செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா?" என்று திமிறிய அவளை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான் போலீஸ்காரன்.
அந்தத் தெருக்கோடியில் உள்ள தன் வீட்டருகே மனைவியை அழைத்து வரும்போது, தூரத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து அந்த 'டைம்பாம்' வெடித்தது! போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். "ஐயோ! என் ராசா!" என்று காலனியில் ஒலித்த அதே குரல் வீதியே அதிர வெடித்தெழுந்தபோது, தன் பிடியிலிருந்து திமிறியோட முயன்ற மனைவியை இரு கைகளிலும் ஏந்தித் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் போலீஸ்காரன்.
4
போலீஸ்காரனது ஏந்திய கரங்களில் மனைவியின் உடல் பாரம் மட்டுமா கனத்தது?
அவள் தன் இதயத்தில் தாங்கும் உலகத்தின் சுமை - தாய்மையின் சோகம் - அதன் அவனால் தாங்க முடியவில்லை.
உள்ளே போனதும் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு 'ஓ'வென்று கதறியழுதனர். திடீரெனத் திரும்பிப் பார்த்த போலீஸ்காரன் வாசலிலும் சன்னல் புறத்திலிருந்தும் கும்பல் கூடி நிற்பதைப் பார்த்து எழுந்து போய்க் கதவைப் 'படீர் படீர்' என்று அறைந்து சாத்தினான்.
போலீஸ்காரன் வீட்டு முன்னே கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்துக்கே ஓடியது.
- ஆமாம்; கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்.
(எழுதப்பட்ட காலம்: ஜனவரி 1962)
நன்றி: சுமைதாங்கி (சிறுகதைத் தொகுப்பு) - ஜெயகாந்தன்.
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
30. நடைபாதையில் ஞானோபதேசம் (1972)
இடம்: மூர் மார்க்கெட்டுக்குள் மிருகக் காட்சிச் சாலைக்குப் போகிற வழியில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலுக்கு நேரே வேலியோரப் பிளாட்பாரம்.
நான் போகிற நேரத்தில் அந்த மாந்திரீகக்காரக் கிழவர் கடையைக் கட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிறார்.
"அடடா, கொஞ்சம் முந்திக் கொள்ளாமல் போய்விட்டோ மே" என்று அங்கலாய்க்கிறார் கூட வந்தவர்.
"அதனாலென்ன? போய்க் கொஞ்சம் நெருக்கமாக நாம் நின்றோமானால், சற்று நேரத்தில் இன்னும் பலர் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் இந்த 'ஆடியன்ஸை' விட முடியாமல் கட்டிய கடையைப் பிரிக்க ஆரம்பித்து விடுவார் ம்னுஷன்" என்று கூறினேன். நானும் நண்பரும் போய் நிற்கிறோம். பெட்டி மேல் பெட்டியாக அடுக்கி வைத்துத் துணியாலும் கயிற்றாலும் இறுக்கி இறுக்கி மூட்டையைக் கட்டிக் கொண்டே பக்கத்திலிருந்த ஒரு நாட்டுப்புறவாசியிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார், மாந்திரீகர். அவர் பேச்சில் பல இடங்களில் குறில்-நெடில் வித்தியாசம் இல்லாமல் எல்லா வார்த்தைகளும் நீண்டே ஒலிக்கிறது.
"மந்திரேம் மாயம் எல்லாம் ஒரு பக்கம் தள்ளூய்யா. வாக் ஸீத்தம் ஓணும். சுத்தமான வாக்குதான் மந்தரம். சொல்லுதான்யா நெருப்பூ. மனஸ் சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, 'இவனே அயிச்சுடணும்', 'அவனே ஒயிச்சுடணும்'னு நெனக்கிற மனஸ் இருக்கே- அதான்யா ஷைத்தான். ஷைத்தான் இங்கே கீறான்யா..இங்கே! வேறே எங்கே கீறான்? மானத்திலே இல்லை... ஷைத்தானும் இங்கேதான் கீறான். ஆண்டவனும் இங்கேதான் கீறான். நல்ல நெனப்பூ ஆண்டவன்; கெட்ட நெனப்பூ ஷைத்தான்" என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.
"எல்லாரும் நல்லாருக்கணூம்னு நெனைக்கிறான் பாரூ... அவனே மந்திரேம், மாயம், பில்லீ, சூனீயம், பேய் பிசாசூ ... ஒண்ணும் (ஒரு நாசுக்கில்லாத வார்த்தையைக் கூறித் தன் கருத்துக்கு அழுத்தம் தந்து) செய்ய முடியாது...இத்தெ மனசிலே வெச்சுக்க..."
"துட்டூக்கோசரம்...வவுத்துக்காக அக்குரமம் பண்ணறது நம்ம தொயில் இல்லே... எதுவோ தமாஷீக்குத்தான் மந்திரேம், மாயமெல்லாம்... தொயில் மருந்தூ குடுக்கறது... ஆனா, மருந்து செய்யறதுக்குத் துட்டூ ஓணும்பா... இந்த மருந்தூ தெருவிலே வெளையுதூன்னு நெனைச்சிக்கீனியா?... அபுரூபமான மூலிகைங்க... வேருங்க... மஸ்தான சரக்குங்க... எல்லாம் சேத்து உடம்பே கசக்கிப் பாடு பட்டு செய்யறது இந்த மருந்தூ... நோவு வந்துட்டா துட்டெப் பார்க்கலாமா?... வர் ரூபா வர் ரூபாவா இருவது ஊசி போட்டுக்கினு நோவை வெச்சிக்கினு இருக்கறாங்க... பத்து ரூவா பத்து ரூவாவா ரெண்டு ஊசி போட்டுக்கினா நோவு ஓடுது... அத்தெ நென்சிப் பார்க்கறதில்லே..."
"அந்தக் காலத்திலே தொரைங்களுக்கு, நவாப்புங்களுக்கெல்லாம் மருந்தூ குடுத்து, வித்தெ காமிச்சி மெடல் வாங்கி இருக்கேன்... செட்டீ நாட்டுப் பக்கமெல்லாம் போயிருக்கேன். அப்பல்லாம் இந்த பாபாவுக்கு ரொம்ப மரியாதி, அந்த ஸைட்லே. அப்பல்லாம் வெள்ளைக்கார தொரைங்க அள்ளிக் குடுப்பானுங்க... எண்ணீக் குடுக்கற பயக்கமே கெடையாது... இப்பத்தான் நம்ம மாதிரி தாடி வெச்சிக்கினு கால்லே செருப்பூ இல்லாமெ வெள்ளைக்கார தொரைங்க பிச்சேக்காரனுங்க மாதிரி இங்கே சுத்தறானுங்க..." (இங்கே அவர் குறிப்பிடுவது நாமெல்லாம் 'ஹிப்பீஸ்' என்று சொல்கிறோமே, அவர்களை.)
"நாம்பள் செகந்தரபாத், பூனா, பம்பாய், கான்பூர் எல்லாம் சுத்தினவன்தான்... அந்தக் காலத்திலே ரெண்டு கோழி இருவது ரொட்டி துண்ணுவேன்... இப்பத்தான் சோத்துக்கே தாளம் போடுது... அடே! அதிக்கென்னா... அதி வர் காலம்; இதி வர் காலம்... ஆனா மருந்து அன்னக்கிம் இதான்... இன்னக்கிம் அதான்... வித்தேகூட அப்பிடித்தான். நல்ல மனஸ் ஓணும்பா. வாக் சுத்தம்... மனஸ் சுத்தம் இருக்கு... ஆண்டவன் நம்ப கூட இருக்கறான்..."
"இன்னொருத்தனுக்குக் கெடுதி நெனைக்காதே. நீ கெட்டுப் பூடுவே... நல்லதே நெனை. ஆண்டவனை தியானம் பண்ணு. எதிக்கோசரம் ஆண்டவனை தியானம் பண்ணூ சொல்றேன்... ஆண்டவனுக்கு அதினாலே எதினாச்சும் லாபம் வருதூ... இல்லேடா, இல்லே! உனுக்குத்தான் லாபம் வருது. கெட்ட விசயங்களை நெனைக்கிறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே... ஆண்டவனை நெனைச்சிக்கடான்னா மேலேயும் கீயேயும் பார்த்துக்கினு யோசனை பண்றே... எல்லாத்துக்கும் நல்ல மனஸ் ஓணும்..."
"சரிப்பா... நாயி ஆவுது... வெயிலு பட பேஜாரா கீது... சைதாப்பேட்டைக்குப் போவணும்... நா வரேம்பா. ஆமா, நீ எப்போ ஊருக்குப் போறே?" என்று அந்த நாட்டுப்புறத்துக் கஸ்டமரை விசாரிக்கிறார்.
"சாயங்காலம் ஆவும்" என்கிறார் கஸ்டமர்.
"போற வயிமேலே சைதாப்பேட்டையிலெ வூட்டாண்டேதான் இருப்பேன்... வந்தூ பாரூ... மருந்தூ தயார் பண்ணி வெச்சிருக்கேன். வாங்கிக்கினு போ. இன்னாப்பா யோசிக்கிறே? துட்டூ கொண்டாரலியா?"
-நாட்டுப்புறத்துக் கஸ்டமர் பல்லைக் காட்டுகிறார்.
"துட்டூ கெடக்குது. மருந்து வந்து வாங்கிக்கினு போ. நோவு இருக்கும் போது மருந்தூ குடுக்கணும். துட்டூ இருக்கும்போது துட்டூ வாங்கிக்கறேன்... அப்புறமாக் கொடு. உடம்புக்கு நோவு வந்தா மருந்தூ இருக்குது... மனஸ் நோவுக்கு ஆண்டவன்தான் பாக்கணும்... நல்ல மனஸ்தான் ஆண்டவன். கெட்ட மனஸ் ஷைத்தான்.." என்ற ஒரு சூத்திரத்தைப் பல தடவை திருப்பிச் சொன்னார் அந்த
பாபா.
அவர் பெயர் பாபா என்று அந்தக் கஸ்டமரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
மூட்டை கட்டியான பிறகு சில வினாடிகள் கண்களை மூடி மார்புக்கு நேரே இரு கைகளையும் ஏந்தி, சிறிது கடவுளைத் தியானம் செய்த பிறகு காவடி மாதிரி ஒரு கம்பின் இரு முனைகளிலும் மூட்டையைக் கட்டித் தொங்க விட்டுத் தோளில் தூக்கிக் கொண்டு எழுபது வயதுக்கு மேலான பாபா தெம்புடன் நடக்க ஆரம்பித்தார்.
நான் காஞ்சிப் பெரியவாளிடமும், ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும், பைபிளிலும், நீதி நூல்களிலும் பயில்கிற ஞானத்தையே- இந்த நடைபாதைப் பெரியவர் தன்னிடம் வந்து கூடுகிறவர்களுக்கு உபதேசம் செய்வதைக் கண்டேன்.
ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மகான்களையும், வேத வித்துக்களையும், நீதி நூல்களையும் நாடிச் சென்று ஞானம் பெற எல்லா மனிதர்க்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம் அது மூர்மார்க்கெட் நடைபாதையில் கூட விநியோகிக்கப்படுகிறது.
இந்த பாபா ஒரு ஞானவான் தான்.
(எழுதப்பட்ட காலம்: 1972 வாக்கில், "நான் மீண்டும் சந்திக்கிறேன்" என்னும் தொடரில் வெளிவந்த இந்தப் படைப்பு "அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்ற புத்தகத்தில் "நான் சந்தித்த இவர்கள்" என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது.)
நன்றி: அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், ஜெயகாந்தன் - ஐந்தாம் பதிப்பு: 2000 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
----------
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
31. ஒரு பக்தர் (1972)
அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே அந்த ஒருவரின் பைத்தியத்திற்கு ஆட்பட்டது. பகுத்தறிவு உடைய எவனுமே சற்று யோசித்தால் கற்பனையிலும் தாங்க முடியாத காரியங்களை ஒரு தேசத்தின் ராணுவமே செய்தது. அது பிற தேச ராணுவங்களையும்- தன்னுடைய பைத்தியக்கார வெறியை ஒரு நோய்போல் தொற்ற வைத்துத் தொடர்பும் உறவும் ஏற்படுத்திக் கொண்டது. ஒரு தலைவனின் ஆணை அல்லது ராணுவக் கட்டுப்பாடு என்பதன் பெயரால் உலகத்தையே அந்தக் கொலைவெறி குலுக்கி வைத்தது. அன்றைய ஜெர்மனியில் 'அடால்ப் ஹிட்லருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது' என்று ஆராய்ந்து கண்ட வைத்திய நிபுணர்களும் அதை வெளியே சொல்ல அஞ்சினர்.
ஒரு தனி மனிதனின் பைத்தியக்காரத்தனம் அவனது அதிகார பீடத்தால், அவனது சமுதாய அந்தஸ்தால், அவனது தேசியத் தலைமையால், ஒரு தேசத்தின், ஒரு காலத்தின் பைத்தியக்காரத்தனமாயிற்று.
முன்பு ஒருமுறை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரிடம் நான் கேட்டேனே, அந்தக் கேள்வியையும் அவரது பதிலையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.
'இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, நாம் குறைந்து போனால், நாம் உள்ளேயும் அவர்கள் வெளியேயும் இருக்க நேரிடும் அல்லவா?'
-'எண்ணிக்கையில் எவ்வளவு அதிகரித்தாலும் அவர்கள் ஒன்றிணைந்த பலமாக ஆக முடியாது... ஏனெனில், தனித்தனி நியாயங்களும் தனித்தனி நடைமுறைகளும் கொண்ட அவர்கள் சிதறுண்டு போன உலகங்கள். அவர்கள் ஒரு உலகத்தை நிர்வகிக்கவோ, அதன் தன்மையைத் தீர்மானிக்கவோ முடியாதவர்கள்' என்று நண்பர் சொன்னார்.
ஹிட்லரைப் பற்றிய, நாஜி ராணுவத்தைப் பற்றிய இந்த உதாரணம் நமது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு முரணாயிருக்கிறதே என்று தோன்றுகிறதல்லவா?
மனவியல் நிபுணர்கள் ஹிட்லருக்கு மட்டும்தான் பைத்தியம் என்று கண்டுபிடித்தார்கள். நாஜி ராணுவத்தைச் சேர்ந்த அனைவருக்கும் (அவர்களது பைத்தியக்காரத்தனத்தால் உலகமே பாதிக்கப்பட்டிருப்பினும் கூட) பைத்தியம் என்ற நோய் முற்றாகப் பிடித்து விட்டது என்று மருத்துவ சாஸ்திரம் சொல்லவில்லை. இங்கு நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.
'பைத்தியம்' என்கிற நோய் வேறு. 'பைத்தியக்காரத்தனம்' என்கிற அறியாமை வேறு.
'வக்கரிப்பு' என்கிற மன நோய்க்கு ஆளான ஒருவனை ஒரு ஜன சமூகமே சர்வ வல்லமை பொருந்திய தலைவனாக ஏற்றுக் கொண்ட 'பைத்தியக்காரத்தனம்' என்ற அறியாமையினால் அல்லது தெய்வத்துக்கு நிகரான சர்வ வல்லமை பொருந்திய ஒரு தலைவனுக்குப் பைத்தியம் என்ற நோய் பிடித்த பிறகும் அதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஜன சமூகத்தின் பைத்தியக்காரத்தனம் என்கிற அறியாமையினால்தான் அந்தக் காரியங்கள் நடந்தேறின என்று புரிந்து கொண்டால், எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு இந்த உதாரணம் முரணல்ல என்பது தெளிவாகும்.
ஒரு பைத்தியக்காரனின் மூளைக்கோளாறு அவனுக்கு இருக்கும் அந்தஸ்தாலும், அவன் மீது பிறருக்கு இருக்கும் மதிப்பு மரியாதைகளினாலும் பல காலம் மறைந்திருக்கலாம். பைத்தியங்கள் புத்திசாலிகளாக - அதீத புத்திசாலிகளாகவும் இருக்க முடியும். அதே காரணத்தினாலேயே ஒரு மன நோயாளியின் மீது அறியாமல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளின் காரணமாக அவனது நோய் மற்றவர்களையும் பாதிக்கிறது. சிலருக்குச் சில சமயங்களில் அந்த நோயே தொற்றி விடுவதும் உண்டு. சிறுகச் சிறுக அந்நோய்க்கு ஒரு தேசமே கூட இரையாகும்.
இந்த விதமாக, ஒரு குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்ட மனநோய் ஒரு குடும்பத்தையே பாதித்த சம்பவத்தை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பர் விளக்கிக் கூறினார்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சிகிச்சையின் மூலம் விரைவாகவே குணமடைந்து விட்டார்கள். ஆனால் அந்தக் குடும்பத் தலைவர் இன்னும் கூடச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். ரொம்பவும் முற்றிய கேஸ்!
அவர் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபிஸர். வீர வைஷ்ணவர். குடும்பமே பக்தி நெறியில் தழைத்தது. வீடே ஏறத்தாழ ஒரு கோயில் மாதிரி. இரவு பன்னிரண்டு மணிவரை- சில பண்டிகை நாட்களில் விடியும்வரை கூட- அவர் வீட்டில் பக்தர்களின் கும்பல் நிறைந்திருக்கும். நமது பக்தர், சிப்ளாக் கட்டையுடன் தன்னை மறந்த லயத்தில் ராம நாம சங்கீர்த்தனத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருப்பார். அவரது இளைய சகோதரரும், மனைவியும், ஆபிஸ் சிப்பந்திகளும் மற்றும் அவருடைய தாட்சண்யத்துக்காக, அவர் அழைப்பைத் தட்ட முடியாமல் அங்கு வந்து மாட்டிக் கொண்டவர்களும், அவருடன் சேர்ந்து அவரவர் பக்தியின் அளவிற்கேற்ப பகவான் நாமத்தைப் பூஜித்துக் கொண்டிருப்பார்கள்.
'பக்தியினால் ஒருவன் அமர நிலை எய்தலாம்' என்றும், 'எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்' என்பதுவும் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உடன்பாடான கொள்கை. சொல்லப்போனால் அந்தக் கொள்கையே அவர்களுடையதுதான். சமூக வாழ்வுக்கு ஒரு வரைமுறை உண்டு அல்லவா?
ஒரு குடும்பத்துக்குரிய லட்சணமே இல்லாமல், சதா நேரமும் பக்தி என்ற பெயரால் களேபரம் மிகுந்த ஆண்டிமடமாக ஆயிற்று அந்த வீடு. தெரு வழியே போகின்ற எவனும் இந்த வீட்டிற்குள் தாராளமாய் நுழையலாம். நுழைந்தவன் எவனாயிருந்தாலும் "அடியேன் தாஸானுதாஸன்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவன் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிடுவார் ஆபிஸர்.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் என்றிருந்த பஜனை, பன்னிரண்டு மணி நேரம், இருபத்து நாலு மணி நேரம் என்று வளர்ந்து, இரண்டு சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் கூடத் தாண்டுகிற அளவுக்கு எல்லை மீறிய போது, பக்தருக்கு ஆபிசிலிருந்து அழைப்பு வந்தது. கால வரையின்றி பஜனை தொடர்ந்து நீண்டதால் கூட்டமும் குறைந்து போயிற்று. வேறு வழியில்லாது அவரது பியூன் மட்டும் "இது என்ன பக்தியோ? இது என்ன பஜனையோ!" என்று அலுத்துக் கொண்டு, அங்கேயே கிடந்தான்.
ஆபிசரின் மனைவியும், தம்பியும், அவரை ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் உட்கார வைத்து, கும்மி அடிப்பது போல் சுற்றிச் சுற்றி வந்து, அவர் முகத்திற்கு எதிரே வர நேரும்போதெல்லாம் ஒருமுறை வணங்கி எழுந்து, அவரை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தனர். அவரில் அவர்கள் ராமனைக் கண்டு வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர் எதனில், எதைக் கண்டாரோ?... சிலையாய் அமர்ந்திருந்தார், இராமர் பட்டாபிஷேக பாணியில் அபயஹஸ்தம் காட்டி... கையிலே கோதண்டமும் காலடியில் ஹனுமானும்தான் இல்லை, போங்கள்!
ஆபிசாவது, அழைப்பாவது?
கேவலம், அடிமைத் தொழில் யாருக்கு வேண்டும்?...
தபாலில் வந்த வேலை நீக்க உத்தரவைச் சற்றுத் தெளிந்த நிலையில் தம்பிதான் வாங்கிப் படித்தார்.
'இராமரின் கொலு மண்டபத்'திற்குச் சென்று மிகுந்த பணிவுடன் கைகட்டி, வாய் பொத்தி, "அண்ணா" என்று அழைத்தார்.
"லட்சுமணா!" என்று புன்முறுவலோடு கண் திறந்தார்! "அதென்ன ஓலை?"
"அண்ணா! உங்க உத்தியோகம் போயிடுத்து!"
"எந்தையின் விருப்பம் அதுவெனில் இன்னும் ஒரு முறை வனம் ஏகலாம்."
"நான் இல்லாமலா?" என்று அவர் தர்ம பத்தினியும் கிளம்பி விட்டாள்.
"லட்சுமணா! பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்!"
இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கார நாயுடுவுக்குக் கை கால் உதறல் கண்டுவிட்டது. "ஐயையோ" என்று ஒரு அலறலுடன் மனுஷன் ஓட்டம் எடுத்திருக்கிறார் பாருங்கள்... நேரே போலீஸ் ஸ்டேஷனில் போய்த்தான் நின்றிருக்கிறார். ஒரு பக்கம் பயம். ஒரு பக்கம் தாங்கமுடியாத சோகம். எப்படிப்பட்ட குடும்பம் எப்படிப்பட்ட வீழ்ச்சி அடைந்து விட்டது...
பக்தியின் பெயரால், பகவானின் பெயரால் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு விட்டன. பக்தி என்ற போதையில் ஏற்பட்ட பரவசத்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு நஷ்டப்பட்டு விட்டனர்.
படித்தவர், செல்வாக்கு மிகுந்தவர், அரசாங்க உத்தியோகஸ்தர் என்ற மதிப்புகளெல்லாம்- பக்தி என்பதன் பெயரால் அவருக்கு ஏற்படும் தெய்வ சந்நதம் ஒருவித 'ஹிஸ்டீரியா' என்று எவருமே சந்தேகிக்க இடமில்லாமல் செய்துவிட்டன.
புருஷன் மீது கொண்ட காதலால் ஒரு மனைவிக்கு அவன் தெய்வமாகவே இருக்கலாம். அந்தப் புருஷன் தன்னை ராமனாக உணர ஆரம்பித்த பிறகு, எல்லா விதங்களிலும் அவனது ஆளுகைக்கு உட்பட்ட அவளுக்குத் தானும் சீதையாக மாறுவதற்கு கசக்குமா என்ன? அவர்கள் மனப்பூர்வமாகவே அவ்விதம் பரஸ்பரம் நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு ஆதாரமான நியாயங்கள் அவர்களுக்கு மட்டுமே புரிவன.
மனோதத்துவ நிபுணர்கள் அவற்றினை ஆழ்ந்து பரிசீலித்து அவர்களது நியாயங்களை ஓரளவுக்கு கணிக்கலாம்.
நமது சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கையைவிட, பக்தர்களின் மீது கொள்ளும் மதிப்பே அதிகமானது. தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை மிகையாகக் காட்டிப் பகிரங்கப்படுத்திக் கொள்வதில் பக்தர்களுக்குப் பரம சுகம் இருக்கிறது. அடிபணிந்து அடிபணிந்தே தமது பக்தர்கள் எவரையும் அடிமை கொள்கின்றனர்.
இந்த இன்கம்டாக்ஸ் ஆபிசரின் பக்தியில் மாசு கிடையாது. அது ஒரு பொய் வேஷமாக இருந்திருந்தால், அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்.
ராமநாம உச்சரிப்பின் மூலம், தானே ராமனாகி விடும் அளவுக்கு அதை ஒரு மந்திரமாகவே இவர் கைக்கொண்டு விட்டார். இறைவனின் திருவிளையாடல்கள் எவ்வளவு ரசமானவை. கடவுள் மனித அவதாரம் எடுக்கலாம் எனில், மனிதன் கடவுள் அவதாரம் எடுக்கக் கூடாதா என்ன?
தாளமும், இசையும், ஆவேசக் குரல்களும் சேருகின்ற போது ஏற்படும் பரவசத்தின் உச்ச கட்டத்தில் விளைகின்ற ஆனந்தம் குடிவெறி மாதிரி, ஒரு தடவைக்கு ஒரு தடவை மிகுதியான அளவில் இந்தப் பக்தர்களுக்கு தேவைப்படுகிறது.
நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி, ஒருவனின் அறிவை எது மயங்கச் செய்கிறதோ, அதுவே போதை. அது கடவுள் பக்தியானால் என்ன? கள்ளின் போதையானால் என்ன?
ஒரு சம்சாரிக்கு, ஒரு கிருகஸ்தனுக்கு எந்த அளவு பக்தி இருக்கலாமோ அந்த அளவு இருப்பதுதான் லெளகிகம். இதை அவருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு அவரைவிட ஞானஸ்தர்களோ, கல்விமான்களோ, பெரியவர்களோ யாரும் அவருடன் இல்லாது போயினர்.
அந்தத் தம்பி இந்த அண்ணனால் வளர்க்கப்பட்டவன். சிறு வயதிலிருந்தே அண்ணன் மீது தம்பிக்கு ஒரு 'ஹீரோ ஒர்ஷிப்' - வீர வழிபாட்டுணர்வு - இருந்திருக்க வேண்டும்.
இந்த வீட்டில் நேரம், காலம் இல்லாமல் நடந்துவரும் களேபரத்தைக் குறித்து ஏற்கனவே இரண்டொரு புகார்கள் போலீசுக்குப் போயிருந்தன. கடைசியில் அந்த வீட்டிலிருந்தே ஒரு ஆள் வந்தவுடன் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இன்ஸ்பெக்டரைக் கண்டதும்,
"குகனே வருக! நின்னொடும் ஐவரானோம்" என்று தழுவிக் கொண்டார், பக்தர்.
மூன்று மாதங்கள் அந்த பஜனைக் கூடத்தில் தூண்டாமணி விளக்குகள் எரியாமல் கிடந்தன. அந்தத் தெருவைப் பொறுத்தவரை அது ஒரு மங்கல சூசகமாக இருந்தது.
சில வாரங்களில் ஆபிசரின் மனைவியும், சகோதரரும் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணம் அடைந்து, சாதாரண மனிதர்களாக வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டனர். பாவம்! அவர் இன்னும் உள்ளேயே இருக்கிறார். யார் நம்பினால் என்ன, நம்பா விட்டால் என்ன? அவர் உறுதியாக நம்புகிறார். அவர் ராமாவதாரம்தானாம்!
அவருக்குத்தான் அந்த நோய் பீடித்து முற்றிவிட்டது. அவரது மனைவியும் சகோதரரும் அவர்மீது கொண்ட நம்பிக்கையில் அவரைச் சந்தேகிக்காமல் அவரால் பாதிக்கப்பட்டு விட்டனர். நடந்து போன நிகழ்ச்சிகளை எண்ணி அவர்கள் இப்போது வருத்தமுறுகின்றனர். அவரது நோய் இந்த அளவுக்கு முற்றுவதற்குத் தாங்களும் காரணமாகி விட்டோ மே என்று எண்ணியெண்ணி மனம் புழுங்குகின்றனர்.
அவரைப் பார்க்க வந்திருந்த அவர்களையும் நான் 'உள்ளே' தான் சந்தித்தேன். என்னோடு வெளியே வரும்போது- "பகவான் பெயரைச் சொன்னதுக்கு இப்படி ஒரு பலன் கிடைக்கக் கூடாது" என்று கண்கலங்கக் கூறினாள் அவர் மனைவி.
"இதைப் பத்தி எழுதுங்க சார்! ரொம்ப நல்லது. ஆனால், கடவுள் மேலே பழி போட்டுடாதேங்கோ. நம்மோட பைத்தியக்காரத்தனத்துக்குக் கடவுள் என்ன பண்ண முடியும்?" என்றார் அவரது சகோதரர்.
(எழுதப்பட்ட காலம்: 1972)
நன்றி: அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், ஜெயகாந்தன் - ஐந்தாம் பதிப்பு: 2000 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
கருத்துகள்
கருத்துரையிடுக