ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 4
சிறுகதைகள்
Back சிறு கதைகள் / தொகுப்பு 4
ஆசிரியர்: ஜெயகாந்தன்
32. ஒரு பிரமுகர் | 39. ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் |
33. சட்டை | 40. பலவீனங்கள் |
34. தவறுகள், குற்றங்கள் அல்ல… | 41. கண்ணாமூச்சி |
35. அந்தரங்கம் புனிதமானது | 42. தாம்பத்யம் |
36. சீசர் | 43. பாவம் பக்தர்தானே |
37. ஒரு பிடி சோறு | 44. உண்மை சுடும் |
38. தரக்குறைவு |
32. ஒரு பிரமுகர்
மீசையை நீவி விட்டுக்கொண்டு கம்பீரமான ஆகிருதியுடன் வெளியே வந்தது ஒரு பெரிய கட்டெறும்பு!
“உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்று முனகிக்கொண்டே ஏகாந்தமான வனத்தில் தன்னிச்சையுடன் திரியும் ஒரு சிங்கத்தைப்போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் திருப்பி உலகத்தை நோட்டம் விட்டது எறும்பு!
அவசர அவசரமாய் அதன் எதிரே வந்தது ஒரு சிற்றெறும்பு.
“என்னடா பயலே சொக்கியமா?” என்று கர்ஜனை புரியும் தோரணையில் சிற்றெறும்பைப் பார்த்துக் குசலம் பேசியது கட்டெறும்பு!
கேட்ட கேள்விக்குப் பதில்கூட சொல்ல முடியாமல் நடு நடுங்கிப் போய். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது சிற்றெறும்பு.
“உடம்பில் பயமிருக்கிறதா? பிழைத்துக்கொள்வாய் போ!” என்று முனகிக் கொண்டே மறுபடியும் மீசையை நீவி விட்டுக்கொண்ட கட்டெறும்பு. எழுந்து நின்று. உலகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்தும்போது…
“ இதென்ன குறுக்கே என்னவோ மறைக்கிறதே…”
“ஓ… இந்த மலைதானா?” இரண்டடி முன் நகர்ந்து வந்து மண்ணுருண்டையின்மேல் தனது முன் கைகயை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து. சந்தையிறீருந்து திரும்பி வரும் மனிதர்களைப் பார்த்தது.
கதாயுகத்தைப் பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப் பற்றி அதற்குத் தெரியுமோ என்னவோ? அதன் பாவனை அப்படித்தான் இருந்தது.
“யாரது. மனுசப்பசங்களா? சுத்த சோம்பேறிகள்…”
திடீரென்று அதற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உலகில் மனுசப்பசங்க ஜாஸ்தியா? நம்ம எறும்புக்கூட்டம் ஜாஸ்தியா?
யோசித்து யோசித்துப் பார்த்தது. அந்தக் கணக்கு அதற்குச் சரி வரவில்லை. ‘அவர்களில் யாரையாவது கூப்பிட்டுக் கேட்டால் என்ன? அதுவும் சரிதான்.
மண்ணுருண்டைக்குப் பின்னே நின்று. தலையை நீட்டி இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு கடுகு பிளந்தன்ன வாயைத் திறந்து “ஏ. மனுசப் பயல்களா…உங்களில் ஒருவன் இங்கே வாருங்கள் என்ற கர்ஜனை புரிந்தது.
அவ்வளவுதான்! சாலையில் போய்க் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் சிதறி ஓடினர்… பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
“அடேடே. என்னைக் கண்டு உங்களுக்கு இவ்வளவு பயமா? அட கோழைப் பயல்களா?…” என்று கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு மண்ணுருண்டையைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தது கட்டெறும்பு.
“என்ன இது. இந்த வெய்ய காலத்திலே திடீர்னு மழை புடிச்சிக்கிடுத்தே?”
“கோடைமழை அப்படித்தான்”.
“பாழ் மண்டபத்தி-ருந்த மனிதர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் எறும்புக்குக் கேட்டது. மழையா? என்று அதிசயித்தது எறும்பு.”
“இது என்னடா. சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே…மழையாமில்லே. நான் கூட வெளியேதானே நிக்கறேன்; வானம் என்னமோ இருட்டி இருக்குங்கறது வாஸ்தவம்தான். அதுக்குள்ளே இவ்வளவு பயமா? சுத்தப் பயந்தாங்கொள்ளிப் பசங்க. மழையாம் மழை!” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு குதித்தது எறும்பு…
“இந்த மனுசங்களே இப்படித்தான்; ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் பிரமாதப்படுத்துவாங்க” என்று மனிதர்களை நினைத்து வியந்து கொண்டிருக்கையில் வானம் பளீரென ஒளிவிட்டுப் பிரகாசித்தது.
பாழ் மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையைக் கட்டினர். எறும்பின் கேறீச் சிரிப்பு அவர்கள் காதில் விழவில்லை.
சற்று நேரத்தில். பூமியில் படிந்த நீர்த்திவலைகளிறீருந்து ஆவி கிளம்பியது. உஷ்ணம் தகித்தது.
மற்றொரு கூட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தது!
“உஸ்… அப்பா என்ன புழுக்கம்!” என்று ஒருவன் விசிறிக் கொண்டான்.
வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த் துளிகள் ஒன்றொன்றாய் உருண்டு நடுக்காம்பில் சேர்ந்து பெரிய முத்தாய்த் திரண்டது… திரண்ட முத்து மெள்ளமெள்ள உருண்டது…
கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகணித்திருந்த கட்டெறும்பின் தலையில் விழுந்த நீர் முத்தைத் தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மீது விழுந்தது.
“ஐயோ… பிரளயம்…. பிரளயம்…… வானம் இடிந்து விழுந்து விட்டதே….” என்று கதறியவாறு பழுப்பு இலையை நீக்கிக்கொண்டு வெளியே வந்த கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதைக் கண்டு. கூக்குரலிட்டது.
“அடே மனிதர்களே. பிழைத்துப் போங்கள்… சீக்கிரம் ஓடுங்கள். பிரளயம் வந்து விட்டது…. ஓடுங்களடா ஓடுங்கள்…” என்று அலறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்து முன்னும் பின்னும் ஓடியது!
“அப்பா என்ன உஷ்ணம்” என்று மேல் துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்கினான்.
அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாதற்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாக ஓடுகிறீர்களே – இப்பொழுது பேராபத்து விளைந்துவிட்ட சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே… சீசீ… உங்கள் முகத்தில் விழிக்கக் கூட வெட்கமாயிருக்கிறது. நான் இப்பொழுது எப்படி என்னைப் பாதுகாத்துக்கொள்ளுவேன்? பிரளயம் வந்துவிடும் போறீருக்கிறதே… என்று கூவியவாறு விழுந்தடித்து ஓடி. தனது பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டது கட்டெறும்பு!
---------------
33. சட்டை
வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு எனில், அவன் துறவிதான்.
முப்பது வயதில் அவன் புலனின்ப உணர்வுகளை அடக்கப் பழகிக் கொண்டான் என்று சொல்வதை விட, அவற்றில் நாட்டம் இல்லாததே அவனது இயற்கையாய் இருந்தது என்று சொல்வதே பொருந்தும். இதற்கு அர்த்தம் அவனிடம் ஏதோ குறைஎன்பதல்ல. அவன் நிறைவான மனித வாழ்வின் தன்மையிலேயே குறைகள் கண்டான். ‘ஓட்டைச் சடலம் உப்பிருந்த பாண்டம்’ என்று பாடும் சித்தர்களின் கூற்றைப் பரிகசிக்காமல் அந்தப் பரிகசிப்பின் காரணங்களை ஆராய்ந்து அதில் உண்மைகள் இருக்கக் கண்டான். எனவே, பக்தியின் காரணமாகவோ, மோட்சத்தை அடைய இது தவமார்க்கம்
என்று கருதியோ அவன் துறவு பூணவில்லை.
சொல்லப்போனால் ‘கண்ட கோயில் தெய்வம் என்று கைஎடுப்பதில்லை’ என்ற சிவவாக்கியரின் ஞானபோதனையின்படி எவ்வித ஆசாரங்களையும் கைக்கொள்ளாமல்தான் இருந்தான்.
அவன் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவன் மாதிரி விழித்தானே அல்லாமல், ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டானில்லை.
அவன் அந்தச் சிவன் கோயில் வாழ்ந்து வந்தான். அதற்குக் காரணம் பக்தி அல்ல; அங்கேதான் அவனுக்கு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் அவனுக்கு மடப்பள்ளியிருந்து உணவு தந்தார். அதற்குப் பதிலாய் அவனிடம் வேலை வாங்கிக் கொண்டார். கோயின் பக்கத்திலுள்ள நந்தவனப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் சில சமயங்களில் பூப் பறித்துக் கொண்டு வருவதும் அவனுக்கு அவரிட்ட பணிகள்.
அரையில் ஒரு துண்டும். நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடுமó அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.
பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும். அவன் சோம்பேறி அல்ல. சாமியார் என்ற பட்டம் பெற்ற பிறகும் கூட அவன் நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையை யாருக்கோ செய்து கொண்டிருக்கிறான். வேலையின் தன்மைகளோ அது உயர்வா, தாழ்வா என்றபாகுபாடோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல.
செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். செட்டியார் வீட்டுக்கு…. எள் மூட்டை சுமப்பான்; பட்டாளத்துப் பிள்ளை வீட்டு வண்டியில் ஏறிப்போய் நெல் அரைத்துக்கொண்டு வருவான். அவன் எல்லாருக்கும் தொண்டன்….. ஒரு வேளை பிறவியின் அர்த்தமே இந்தப் பயன் கருதாத் தொண்டில் அவனுக்குக் கிட்டுகிறதோ
என்னவோ?
“பூந்தோட்டத்துச் சாமி” என்று யாராவது கூப்பிட்டுவிட்டால் போதும். சம்பளம் கொடுத்து வைத்துள்ள ஆள்கூட அவ்வளவு கடமை உணர்ச்சியோடு ஓடிவரமாட்டான்…..
எனவே அவனுக்கு வேலையும் வேலையிடும் எஜமானர்களும்
நிறையவே இருந்தனர்.
இரவு பதினோரு மணிக்குமேல் கோயில் பிரகாரத்தில் உபந்நியாசத்துக் காகப் போட்டிருந்த பந்தலடியில் இருளில் – நிலா வெளிச்சம் படாத நிழல்- கருங்கல் தளவரிசையில் வெற்றுடம்போடு மல்லாந்து படுத்திருந்தான் பூந்தோட்டத்துச் சாமி.
பிரகாரம் எங்கணும் கொட்டகையின் கீற்றிடையே விழுந்த நிலவொளி வாரி இறைத்தது போல் ஒளி வட்டங்களை அவன் மீது தெளித்திருந்தன…..
அவன் மனத்தில் அன்று காலையிருந்து உறுத்திக்கொண்டிருந்த ஒரு சம்பவமும். அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும் சம்பந்தமற்றது போலும். சம்பந்தமுடையன போலும் குழம்பின.
செட்டியார் வீட்டு அம்மாளை. பிரார்த்தனையை எண்ணியபோது. வீட்டை விட்டுக் கோபித்துக்கொண்டு வடக்கே வெகு தூரம் ஓடிப்போன அவள் மகனின் நினைவும் அவனுக்கு வந்தது.
இன்று அதிகாலையில். பூந்தோட்டத்துச்செடிகளுக்கு அவன் நீர்வார்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் விம்மலும் அழுகையும் கலந்த பிரார்த்தனை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது. மாணிக்கம் செட்டியாரின் மனைவி. குளித்து முழுகிய ஈரக் கோலத்தோடு கை நிறைய மஞ்சள் குவளை மலர்களை ஏந்திக்கொண்டு விநாயகர் சந்நிதியில் முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.
என் அப்பனே….. விக்னேஸ்வரா….. எனக்கு நீ குடுத்தது ஒண்ணுதான்… அவன் நல்லாயிருக்கும்போதே என்னைக் கொண்டு போயிடு தெய்வமே!…. அந்தக் குறையும் பட்டு வாழ முடியாது அப்பனே!…. அவன் எங்கே இருந்தாலும் ‘நல்லபடியாய் இருக்கேன்’னு அவன் கிட்டேருந்து ஒரு கடுதாசி வந்துட்டா வரவெள்ளிக்கிழமை உன் சந்நிதியிலே அம்பது தேங்காய் உடைக்கிறேன்….”
-தன்னையும், சூழ்நிலையையும் மறந்து அந்தத் தாய் அந்த நட்ட கல்லைத் தெய்வம் என்று நம்பிப் புலம்புவதைப் பூந்தோட்டத்துச் சாமியார் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தத் தள்ளாத சுமங்கக் கிழவியின் தாளாத ஏக்கம் – அவன் கண்களைக் கலக்கிற்று.
அவள் பிரார்த்தனை முடிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தபோது தன்னையே பார்த்தவாறு நிற்கும் பூந்தோட்டத்துச் சாமியாரைப் பார்த்தாள்.
“ரெண்டு நாளா ராத்திரியெல்லாம் தூக்கமில்லே சாமியாரே!….. நம்ம தம்பி இருக்கிறஊர்லேதான் இப்ப கடுமையா சண்டை நடக்குதாம்; ஆஸ்பத்திரி மேலே எல்லாம் குண்டு போடறானுங்களாமே பாவிங்க…… எங்கப்பன் விக்னேஸ்வரரு என்னைச் சோதிக்க மாட்டாரு….. அப்புறம் கடவுள் சித்தம்!” என்று பொங்கி வரும் கண்ணீரை மீண்டும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள் கிழவி.
“விக்னேஸ்வரர் துணையிருப்பாரு; கவலைப்படாதீங்க அம்மா” என்று பூந்தோட்டத்துச் சாமியும் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“சாமியாரே!…. உன் வார்த்தையை நான் விக்னேஸ்வரர் வாக்கா நம்பறேன். நீயும் அவர் மாதிரிதான்! என்று அவனை வணங்கி ஏதோ ஒரு நம்பிக்கையும் ஆறுதலும் தைரியமும் பெற்று அங்கிருந்து நகர்ந்தாள் கிழவி.
பூந்தோட்டத்துச் சாமியார் அந்தப் பிள்ளையார் சிலையை வெறித்துப் பார்த்தான்.
‘நட்ட கல்லைத் தெய்வம் என்று’ பாட்டு அவன் மனத்தில் ஒலித்தது.
“இந்தக் கிழவிக்கு இந்த நட்டகல் தரும் ஆறுதல் பொய்யா?” என்று தோன்றியது.
நல்ல வேளை அந்தப்பாடலை அவள் படித்திருக்கவில்லையே என்றெண்ணி மகிழ்ச்சியுற்றான் அவன்…..
மத்தியானம் பிரகாரத்தில் கொட்டகை வேய்ந்து கொண்டிருந்தார்கள். இன்றிருந்து ஒரு வாரத்துக்குக் கோயில் பகவத் கீதை உபந்யாசம் நடக்கப்போகிறது. யாரோ பெரிய மகான் பட்டணத்திருந்து வந்து கீதை சொல்கிறாராம். சாயுங்காலத்தில் கோயில் கொள்ளாத ஜனக்கும்பல் வந்து விடும். பூந்தோட்டச் சாமியாருக்கும்வேலைக்குப் பஞ்சமில்லை.
கொட்டகை போடுவதற்காக மூங்கில் கட்டி மேலே உட்கார்ந்து ஓலை வேய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு உதவியாய்க் கீற்றையும், கயிற்றையும் ஏந்தி, அண்ணாந்து நின்றுகொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.
அப்போது அவனைத்தேடிக்கொண்டு வந்த தர்மகர்த்தா. “சாமி!
ஓடிப்போயி நம்ப பட்டாளத்துப் பிள்ளை வீட்டிலே அம்மாக்கிட்ட கேட்டு. கல்யாண சமக்காளம் இருக்காம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாங்கன்னு கேளுங்க. ஓடுங்க” என்றதும். கையிருந்த கீற்றைப் போட்டுவிட்டு ஓடினான் அவன்.
அவன் பட்டாளத்துப் பிள்ளை வீட்டருகே வரும்போது அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு கூட்டமே கூடி நின்றிருந்தது.
பட்டாளத்துப் பிள்ளை என்று அழைக்கப்படும் பெரியசாமிப் பிள்ளை காலையிலும் மாலையிலும் பத்திரிகை படிக்கும் பழக்கமே அப்படித் தான்.
பட்சணக்கடை மணி முதலி ஜோசியர் வையாபுரி. எண்ணெய்க்கடை மாணிக்கம் இன்னும் கீழே சில சிறுவர்கள் நின்றிருந்தனர். மடியில் மூன்று வயதுள்ள தன் பேரப்பையனை உட்கார வைத்துக்கொண்டு பெரியசாமிப் பிள்ளை பழுப்பேறிய தமது நரைத்த மீசையைத் திருகிக்கொண்டு உற்சாகமான குரல் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.
பத்திரிகையிருந்து ஒரு செய்தியைப் படித்துவிட்டு,
“போடு…..! இந்தியான்னா இளிச்சவாயன்னு நெனச்சிக்கிட்டு இருக்கானுவளா? நம்ப ஊர்லே செஞ்ச விமானங்கள் ஐயா…. ஓய் செட்டி யாரே. இதைக் கவனியும் – ஜெட் விமானங்களை நொறுக்கிட்டு வருது ஐயா! சபாஷ் நானும் நெனைச்சிருக்கேன் ஒரு காலத்திலே…. நமக்கு எதுக்குப் பட்டாளம் – இந்தத் தேசத்து மேலே எவன் படையெடுக்கப் போறான்னு…. இப்ப இல்லே தெரியுது – அந்தக் காலத்திலே ஹிட்லர் செஞ்ச மாதிரி டாங்கிப் படையெ வெச்செ நம்ப அடிச்சுடலாம்னு திட்டம். இந்தியத் துருப்புகள் கைப்பற்றியிருந்த டாங்கியின் படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததை உட்கார்ந்திருந்தவர்களிடம் காட்டினார் பெரியசாமிப் பிள்ளை.
“பயங்கரமான டாங்கி! அந்தக் காலத்திலே இவ்வளா பெரிசு கெடையாது….. டாங்கின்னா என்னான்னு நெனக்கிறே….. ஊருக்குள்ளே பூந்துடுச்சின்னா அவ்வளவுதான்! ராட்சஸக் கூட்டம் வந்த மாதிரிதான். ஒண்ணும் பண்ண முடியாது – நம்ப ஊரிலே இப்ப டிராக்டர் வச்சு உழவு நடத்தல்லே அந்த மாதிரி ஊரையே உழுதுட்டுப்போயிடும்.. வீடு தெருவு கோயிலு எல்லாம் அதுபாட்டுக்கும் நொறுக்கித் தள்ளிட்டுக் காடு மலைன்னு பாக்காம குருட்டுத்தனமாப் போகும்! சும்மா…. நம்ப படைங்க அந்த மாதிரி டாங்கிகளைப் போட்டு நொறுக்கி விளையாடுது போ! அடடா…. நமக்கு வயசு இல்யே….. இருந்தா போயிடுவேனய்யா பட்டாளத்துக்கு!” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கையில், வையாபுரி சோசியரின் தோளுக்கு மேல் எக்கி அந்த டாங்கியின் படத்தைப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.
அவன் வந்து நிற்பதையே கவனிக்காத பிள்ளை தொடர்ந்து பத்திரிகையைப் படிக்கும்போது திடீரெனக் குரலைத் தாழ்த்தினார்: ஒரு மேஜரின் வீர மரணம் – புதுடெல். செப்டெம்பர் பதினேழு. சென்றபதிமூணாந் தேதியன்று சியால்கோட் அருகே நடந்த டாங்கிப் போரில் பகைவர்களால் சுடப்பட்ட மேஜர் முகமது ஷேக் வீர மரணம் எய்தினார்” என்பதைப் படித்துவிட்டு மௌனமாகத் தலைகுனிந்தார்
பிள்ளை.
அவர் மடியிருந்த குழந்தை அவரது மீசையைப் பிடித்திழுத்துச் சிரித்தது.
சில வருடங்களுக்கு முன் போர் முனையில் வீரமரணமுற்றஇப் பேரக் குழந்தையின் தகப்பனின் – தன் மகனின் – நினைவு வரவே உணர்ச்சி மயமானார் கிழவர்.
“சண்டையினாலே ஏற்படறநஷ்டங்களைப் பார்த்தீரா?” என்றார் சோசியர் வையாபுரி.
சிவந்து கலங்கும் விழிகளோடும் முகம் நிமிர்ந்தார் பிள்ளை.
“நஷ்டம் தான்…. அதுக்காக? மானம் பெரிசு செட்டியாரே. மானம்
பெரிசு!…” என்று குழந்தையை மார்புறத் தழுவிக்கொண்டு கத்தினார் பிள்ளை. “என் வாழ்க்கையிலே பாதி நாளுக்கு மேலே ரெண்டு உலக யுத்தத்திலே கழிச்சிருக்கேன் நான்….. என் ஒரே மகனையும் இந்தத் தேசத்துக்குக் குடுத்துட்டதிலே எனக்குப் பெருமைதான்….. அவன் சொன்னானாமே….. “பூ உதிரும் ஆனாலும். புதுசு புதுசாவும் பூக்கு” மின்னு….. ஆ! அவன் வீரனய்யா…. வீரன்…..” என்று மீண்டும் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்ட பிள்ளை. சற்று தானே தன் உணர்ச்சிகளைச் சமனப்படுத்திக் கொண்டு வழக்கமாய்ப் பத்திரிகை படித்து விவாதிக்கும் தொனியில் பேசினார்.
“நாம சண்டைக்குப் போகலே…. எவ்வளவோ பொறுமையாகவே இருந்திருக்கோம்…. நல்லவங்க எவ்வளவுதான் விரும்பினாலும் கெட்டவங்க உலகத்திலே இருக்கறவரைக்கும் சண்டை இருக்கும் போலத் தான் தோணுது…. ஆனா. எம் மனசுக்கு இது சந்தோஷமாத்தான் இருக்கு…. பாத்துடுவோம் ஒரு கை. சண்டை வேண்டியதுதான்” என்று மீண்டும் உணர்ச்சி வெறியேறி அவர் பிதற்றிக் கொண்டிருக்கையில் மாணிக்கம் குறுக்கிட்டுக் கேட்டார்:
“”சண்டை நடக்கிறது சரி. நீங்க சண்டை வேணும்னு சொல்லறது வேடிக்கையாய் இருக்கு. அதுவும் நீங்க. அந்தக் கொடுமையையெல்லாம் பார்த்த நீங்க – அனுபவிச்ச நீங்க – அப்படிச் சொல்லலாமா?” என்று கேட்டார். அப்போதுதான் பெரியசாமிப் பிள்ளைக்கும் நினைவு வந்தது. செட்டியாரின்மகன் – இப்போது நடக்கும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோத்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்கிற விவரம். அந்த – நினைவு வந்தததும் செட்டியாரின் முகத்தை ஒரு விநாடி உற்றுப்பார்த்துவிட்டு. அவரது தோளைப்பற்றி அழுத்தி. “பயப்படாதீர்! கடவுள் இருக்கிறான்” என்றார்.
அந்தச் சாதாரண நம்பிக்கைதான் செட்டியாருக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது என்பது அந்நிலையிருந்து பார்க்கிறவர்களுக்குத்தான் தெரியும். பூந்தோட்டத்துச் சாமியாருக்கும் தெரிந்தது.
“ஐயோ! எவ்வளவு நாசம். எவ்வளவு அழிவு” என்று முணுமுணுத்துக் கொண்டார் சோசியர்.
“அழியாட்டிப் போனா வளர்ச்சி ஏது? ஒண்ணு சொல்றேன். கேளும். தர்மம்! தர்மம் மட்டும் அழியாது. அதர்மமும் அக்குறும்பும்தான் சண்டை வந்தா அழிந்தே போகும். சத்தியத்துக்குத்தான் போராடறகுணமும் உண்டு; பொறுத்திருக்கிறகுணமும் உண்டு. சண்டைன்னு வந்துட்டா அப்புறம் சண்டையெ நெனச்சி பயப்படக் கூடாது. சண்டையில்லாத காலமே கெடையாதே ஐயா!…. ராமாயண காலத்திலே. மகாபாரத காலத்திலே கூடத்தான் சண்டை இருந்திருக்கு…. யோசிச்சுப் பாரும். எந்தச் சண்டையிலேயாவது அநியாயம் ஜெயிச்சிருக்கா? சொல்லும்!…..”
-வந்த காரியத்தை மறந்துவிட்டு பிள்ளையின் பிரசங்கத்தை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.
“யாரு. பூந்தோட்டத்துச் சாமியா? எங்கே வந்தீங்க?” என்றார் பிள்ளை.
உறக்கத்திருந்து விழித்தவனைப் போல் ஒரு விநாடி சுதாரித்து “தர்மகர்த்தா ஐயா ஜமுக்காளம் வாங்கிகிட்டு வரச்சொன்னாரு” என்றான்.
“உள்ளே போயிக் கேளுங்க…. அம்மா. கௌரி…..பூந்தோட்டத்துச்சாமி வராரு பாரு…. அந்தக் கல்யாண ஜமுக்காளத்தை எடுத்துக்குடு… மத்தியானமே கேட்டாங்க. மறந்துட்டேன்” என்று உட்புறம் திரும்பிக் குரல் கொடுத்தார் பிள்ளை.
“உங்களுக்கு சண்டையெத் தவிர வேறஎன்ன ஞாபகமிருக்கும்ஃஃ என்று உள்ளேயிருந்து ஒலித்த தன் மனைவியின் குரலை அவர் பொருட்படுத்தவேயில்லை.
வீட்டிற்குள்ளே வந்து கூடத்து வாசற்படி அருகே நின்றபூந்தோட்டத்துச் சாமியாரின் விழிகள் கௌரியைப் பார்க்கையில் கலங்கின. அவள் ஜமுக்காளத்தை எடுக்க அறைக்குள் போனாள். அப்போது கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ராணுவ உடையில் – பார்க்கப் பார்க்க விகசிப்பது போன்ற புன்னகையுடன் – உள்ள சோமநாதனின் போட்டோவை வெறித்துப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.
சோமநாதன் ராணுவத்தில் சேர்ந்த அடுத்த வருஷம் லீவில் வந்திருந்த போது கோயிலுக்கு வந்து தன்னோடு பேசியிருந்து குசலம் விசாரித்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது மனத்தில் தோன்றின. பொழுது போகாததால் வீட்டைச் சுற்றிலும் புஷ்பச் செடிகள் பயிராக்க எண்ணித் தன்னிடம் செடிகளும் விதைகளும் வாங்கி வந்து பயிரிட்ட சம்பவங்களெல்லாம் பெருகி வந்து நெஞ்சை அடைத்தன.
அவன் திரும்பி நின்று அந்த வீட்டைச் சுற்றிலும் செழித்துக் கிடக்கும் புஷ்பச் செடிகளைப் பார்த்து மீண்டும் திரும்பி அந்தப் போட்டோவைப் பார்த்தான்.
வெளியே வீட்டுத் திண்ணையில் பெரியசாமிப் பிள்ளை ன்னும் மிகுந்த உற்சாகத்தோடு யுத்தச்செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார்.
அன்று மாலை கோயில் பிரகாரத்தில் ஜனக்கும்பல் நிரம்பி வழிந்தது.
காவி நிறப் பட்டிலே அங்கி தரித்திருந்த அந்தப் பண்டிதர் மிக அழகாக கீதையை உபதேசம் பண்ணினார்; அந்தப் பண்டிதரின் ஒரு பழைய உதாரணம் பூந்தோட்டச் சாமியாருக்குப் புதுமையாகவும் மிகவும் பிடித்ததாகவும் இருந்தது. இந்த உடம்பு நம்ஆத்மாவின் சட்டை; சட்டை பழசானதும் ஆத்மா இதை உதறிவிடுகிறது…. “ஒன்றுமே செய்யாமல் ஒருவனுமே இருக்க முடியாது. எல்லா ஜீவன்களும் இயற்கையான தன்மையினாலே தமது இச்சையின்றியே ஏதாவது ஒரு தொழிலோடு பூட்டப்பட்டிருக்கின்றன. “ஹே! அர்ஜுனா… உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரம் உண்டு. பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதும் இல்லை…. அவ்விதமான கர்மத்தின் பயனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்து கொண்டிருக்கிறானோ அவனே துறவி. அவனே யோகி’ என்பதாகவெல்லாம் பகவான் சொல் யிருக்கிறார்…..
- கூட்டத்தினர் அனைவரும் அந்தப் பண்டிதரின் ஞான வாசகங்களை ஏதோ பாட்டுக் கச்சேரி கேட்பது போல இடையிடையே “ஹா ஹாஃ என்று சிலாகித்தவாறு கேட்டிருந்தனர்.
பூந்தோட்டத்துச் சாமியார் ஒரு மூலையில் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு தாடியை நெருடியவாறு அங்குப் பேசப்படும் மெய்ஞ்ஞானங்களையெல்லாம் ஹிருதய பூர்வமாகக் கிரகிப்பது போல் கூரிய நோக்கோடு நின்றிருந்தான்.
உபந்நியாசம் முடிந்து கூட்டம் கலைந்த பிறகு பிரகாரத்தின் கருங்கல் தள வரிசையில் ஓர் ஓரமாய்ப் படுத்து வானத்தை வெறித்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்கு ஏனோ அடிக்கடி அந்தச் சோமநாதனின் முகமே எதிரில் வந்து தோன்றுகிறது.
பத்து வருஷங்களுக்கு முன் தனக்கு யாருமே பந்தம் இல்லாது போனதன் காரணமாய்ப் பிறந்த ஊரைவிட்டு ஓடிவந்துவிட்ட தன்னைப் பற்றியும் அவன் யோசிக்கிறான்.
வாழ்க்கையின் பெரும்பகுதியை ராணுவத்திலேயே கழித்துவிட்டு. தன் ஒரே மகனையும் யுத்தத்தில் இழந்து விட்டு. இன்னும்கூட மனத் தளர்ச்சியில்லாமல் தர்மத்தின் தன்மைகளைப் பற்றிப் பேசுகின்றபெரியசாமிப் பிள்ளையை விட. கீதை உபந்நியாசம் பண்ணிய அந்த மகா பண்டிதர் எந்த விதத்தில் துறவி என்று எண்ணிப் பார்க்கிறான் அவன்.
அவன் வெகுநேரம் உறக்கமில்லாது வெறித்த விழிகளோடு எதை எதையோ சிந்தித்தபின். ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் அங்கிருந்து எழுந்து நடந்து கோயிலை விட்டு வெளியேறினான்….
பிறகு அவன் திரும்பவே இல்லை!
ஒரு நாள் கடைத்தெருவில் பெரியசாமிப் பிள்ளையைப் பார்த்த கோயில் குருக்கள் மனம் பொறுக்காமல் அங்கலாய்த்துக் கொண்டார். “மடப்பள்ளியிலே ரெண்டு வேளை சாப்பாடு போட்டு நல்லபடியா வெச்சிருந்தேன்…. ஓய் பிள்ளை. இதைக் கேளும்!….. அந்தப் பூந்தோட்டத்துச் சாமியார் பய சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ ஓடிட்டான்…..
நாலைஞ்சு நாளாச்சு….. நீர் எங்கேயாவது பார்த்தீரா?”
அப்போது ஒரு ராணுவ லாரி அவர்களைக் கடந்தது. பெரியசாமிப் பிள்ளை தமது வழக்கமான ஆர்வத்துடன் அந்த லாரி நிறைய நிற்கும் ராணுவ வீரர்களைப் பார்த்தார்.
சற்றுத் தள்ளிச் சென்று லாரி நின்றது…..
அதிருந்து ஒரு ராணுவ வீரன் “தொபீரெனக் குதித்து “சரக் சரக்ஃ கென நடந்து வந்தான்….
தன் மகன் சோமநாதனே வருவது போன்றபிரமிப்பில். வருவது யார் என்று தெரியாமல் பரவசமாகி நின்றிருந்தார் பிள்ளை.
வந்தவன் பேசிவிட்டுப் போகட்டும் என்றநினைப்பிலோ, பட்டாளத்துக்காரன் என்ற பயத்திலோ குருக்கள் தெருவோரமாய் விலகி நின்றார்.
அருகில் வந்த நின்றஅந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்து, “தெரியலயே” என்றார் பிள்ளை.
“நான்தாங்க….. பூந்தோட்டச்சாமி. தெரியங்கள? என்ன சாமி….. உங்களுக்குமா தெரியலை? உங்ககிட்ட எல்லாம் சொல்லிக்காம போறேனேன்னு நெனச்சேன்…. நல்ல வேளை பார்த்துட்டேன்…. ரயிலுக்குப் போறோம். வரட்டுங்களா?” என்று கைகூப்பி நிற்கும் அவனை வெறித்துப் பார்த்த பிள்ளை. அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார்.
மழுங்கச் சிரைத்த மோவாயும் உதட்டுக்கு மேல் முறுக்கிவிட்ட மீசையும்…… கிராப்புத் தலையும். காக்கிச் சட்டைக்குள் புடைத்துக் கவசமிட்டது போல் கம்பீரமாய் உயர்ந்த மார்பும்……
“சபாஷ்” என்று அவன் முதுகில் தட்டினார் பிள்ளை.
சட்டையில்லாத வெற்றுடம்பில் அரைத்துண்டும். தலை நிறைய முடியும். தாடியுமாய் இருந்த அந்தப் பழைய கோலத்தையும் இந்தப் புதிய கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த குருக்கள்-
“சட்டையெல்லாம் போட்டு. தாடியை எடுத்திட்டு…. நம்ப பூந்தோட்டத்துச் சாமியா? நம்ப முடியயே…” என்று கண்களைச் சிமிட்டினார்……
அவன் சிரித்தான்.
“ஆத்மாவுக்கு உடம்பே ஒரு சட்டைதானுங்களே….. இந்த ஆத்மாவுக்கு அந்தச் சட்டையே சம்பந்தமில்லே….. அதுக்கு மேலே எந்தச் சட்டெயப் போட்டுக்கிட்டாத்தான் என்ன? சொல்லுங்க சாமி?” என்றான்.
இந்தக் காக்கி உடுப்புக்குள் இருந்து இந்த வார்த்தை வருவதைக் கேட்கப் பிடிக்காத குருக்கள் குறுக்கிட்டார்:
“இந்தப் பேச்சையெல்லாம் இனிமே விடு. நீ வாழ்க்கையெ வெறுத்துச் சாமியாரா இருந்தப்போ அது சரி….. இனிமே பொருந்தாது” என்றார் அவர்.
“வாழ்க்கையெ வெறுத்தா? வாழ்க்கையெ வெறுத்தவன் தற்கொலை பண்ணிக்குவான் சாமி – சாமியாராகிறதில்லே…..” என்றான் அவன்.
தூரத்தில் அவனுக்காக நின்றலாரி ஹாரனை முழக்கிற்று.
“அப்போ நான் வர்றேன்ஃஃ – என்று பெரியசாமியையும், குருக்களையும் மீண்டும் வணங்கி விட்டு இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு லாரியை நோக்கி அந்தப் ‘பூந்தோட்டச்சாமி’ ஓடுவதைக் குருக்களும் பிள்ளையும் பார்த்தவாறு இருந்தனர்.
“ம் அவன் துறவிதான்” என்று தீர்மானமாகச் சொன்னார் பிள்ளை.
குருக்கள் கண் கலங்கப் பெருமூச்சுவிட்டார்.
- 03 அக்டோபர் 1965
---------------
34. தவறுகள், குற்றங்கள் அல்ல…!
மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகளில் இன்னும் கூட மரியாதை கலந்திருந்தது. அவரைப் பற்றி அவளுக்கு வருத்தம்தான் மிகுந்திருந்ததே தவிர, அவரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமோ, விரோதமோ அவள் முகபாவத்தில் தெரியவில்லை.
‘சீ’ என்று அவள் காறித் துப்பியோ அல்லது ‘யூ டாமிட்’ என்று கத்தியோ தன்னை அவமதித்திருந்தால் கூடத் தேவலாம் போலிருந்தது நாகராஜனுக்கு. அவ்வித அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டதுண்டு.
அது மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று நாகராஜனுக்குத் தெரியும். அவருடைய அதிகாரம், செல்வாக்கு, தோரணை, வயது, சமூக அந்தஸ்து இவை எல்லாமோ, அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றோ அவருக்குத் துணை நிற்கும். ‘என்ன நின்று என்ன? பட்ட அவமானம்
பட்டதுதானே! எவ்வளவு பட்டும் எனக்குப் புத்தி வரவில்லையே!’ என்று தன்னையே தன் மனத்துள் கடிந்துகொண்டபோது, அவரது கண்கள் வெட்கமற்றுக் கலங்கின. அவர் அவமானத்தாலும், தன் மீதே ஏற்பட்ட அருவருப் பாலும் தலைகுனிந்து உட்கார்ந்து, தன்னைப் பற்றிக் கசப்புடன் யோசித்தார்.
‘சீ..! நான் என்ன மனுஷன்! வயது ஐம்பது ஆகப் போகிறது. தலைக்கு உயர்ந்த பிள்ளையும், கல்லூரியில் படிக்கும் பெண்ணும்… அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருந்தால் இந்நேரம் நான்கு பேரக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருப் பேன்! சீ..! நான் என்ன மனுஷன்?’என்று பல்லைக் கடித்துக்கொண்டார். இரண்டு கைகளையும் கோட்டுப் பாக்கெட்டுக் குள் நுழைத்து, விரல்களை நெரித்துக்கொண்டார். கண்களை இறுக மூடி, நாற்காலியில் அப்படியே சாய்ந்து, தன்னை அறி யாமல், ‘வாட் எ ஷேம்!’ என்று முனகியவாறே, தலையை இடமும் வல மும் உருட்டினார். அவ ருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
தெரஸாவின் அந்த முகமே அவர் நினைவில் வந்து வந்து நின்றது.
சற்று முன்…
ரத்தமாகச் சிவந்து, நெற்றியில் சிகை புரள, உதடுகள் தீப்பட்டவை போல் சிவப்புச் சாயம் கலைந்து துடிதுடிக்க, கண்களிலிருந்து கலங்கிச் சுரந்த கண்ணீருடன், ”ப்ளீஸ்… லீவ் மீ! ஐ ரிக்ரெட்… ஃபார் எவ்ரிதிங்…” என்று அவரிடமிருந்து திமிறி விலகிச் சென்று, உடல் முழுவதும் நடுநடுங்க அவள் நின்ற தோற்றம்…
அவள் கண்களிலிருந்து பெருகிய நீர், அவள் தனது ஸ்கர்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்துத் துடைப்பதற்குள் ‘பொட்’டென்று அவரது டேபிளின் மீது… இந்தக் கண் ணாடி விரிப்பின் மேல் விழுந்து, இதோ இன்னும் உலராமல்சிதறிக் கிடக்கிற இரண்டு நீர் முத்துக் கள்…
அவர் எதிரே நின்று தான் அழுதுவிட்ட நாகரிகமற்ற செயலுக்கு வருந்தி, ”…ஆம் ஸாரி” என்று தனக்குள்ளேயே விக்கியவாறு, கர்ச்சீப்பில் முகம் புதைத்துக் கொண்டு அங்கிருந்து தனது அறைக்கு ஓடினாளே… அதோ, அவளது ஸ்லிப்பர் சப்தம் இப்போதுதான் ஓய்ந்து, ‘பொத்’தென அவள் நாற்காலியில் விழுகிற ஓசை…
அவர் காதில் அவளது வார்த்தைகளும்… அவர் நினைவில், அவமானமும் துயரமும்கொண்டு ஓடினாளே அந்தக் காட்சியும்தான் இந்தச் சில நிமிஷங்களில் திரும் பத் திரும்ப வந்து நிற்கின்றன.
அவள் எவ்வளவு பெருந்தன்மையானவள்! எவ்வளவு உயர்ந்த, மென்மையான இயல்புகள் கொண்டவள் என்பதை உணர் கையில் அவருக்கு நெஞ்செல்லாம் வலிக்கிறது.
‘நான் அவளிடம் இப்படி நடந்துகொள்வேன் என்று அவள் கனவுகூடக் கண்டிருக்க மாட் டாள்’ என்பது புரிகையில், தன்னைத்தானே இரு கூறாகப் பிளந்துகொள்ளலாம் போலிருக்கிறது அவருக்கு. ஒரு நிமிஷத்தில் தான் அடைந்துவிட்ட வீழ்ச்சியை எண்ணி எண்ணி அவர் நெஞ்சைப் பிசைந்துகொள்கிறார்.
‘தெரஸாவுக்கு எப்படிச் சமா தானம் கூறுவது? இந்த மாசை எப்படித் துடைப்பது? மறுபடியும் அவள் மனதில் தனது பழைய கௌரவத்தை எவ்விதம் நிலை நிறுத்துவது?’
‘ம்..! அவ்வளவுதான். எல்லாம் போச்சு! கொட்டிக் கவிழ்த்தாகி விட்டது! எவ்வளவு பெரிய நஷ்டம்?’ – நாகராஜன் நினைத்து நினைத்துப் பெருமூச்சு விடுகிறார். நெற்றி வியர்க்க வியர்க்கத் துடைத்துக்கொள்கிறார். எங்கா வது போய் அழலாம் போல் தோன்றுகிறது.
தான் சில நாட்களாகவே அவள்பால்கொண்ட சபலங்களுக்கு அவளது நடவடிக்கைகள், புன்சிரிப்பு, உபசரிப்பு… எல்லாவற் றுக்கும் மேலாகத் தனது வயதை யும், தான் அவளிடம் காட்டுகிற பரிவையும் உத்தேசித்து ஒரு தகப்பனிடம் தெரிவிப்பதுபோல் அவள் தனது வாழ்க்கையின் அவலங்களையும் ஏமாற்றங்களை யும் கூறி மனம் கலங்கியது முதலிய வற்றைச் சாதகமாகக்கொண்டு, அவளுக்குத் தன் மீது நாட்டம் என்று நம்பிய தனது கேவலத்தை எண்ண எண்ண, உள்ளமெல்லாம் குமட்டுகிறது அவருக்கு.
அப்படியரு அசட்டு நம்பிக்கையில்தான், அவள் தடுக்கமாட்டாள் என்ற தைரியத்தில் அவர் அவளிடம் அப்படி நடந்துகொண்டார்.
இந்தப் பத்து நாட்களாய், வழக்கமாகச் சாப்பாடு பரிமாற வருகிற அந்தக் கன்னையா சொல்லிக்கொள்ளாமல் ஓடிப் போனானே, அந்தத் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் ‘லஞ்ச்’ டயத்தில் தெரஸாவும் நாகராஜ னும் ஒன்றாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.
மத்தியானத்தில் ஆபீஸிலேயே சாப்பிடுகிற வழக்கத்தை உண்டாக்கியவன் கன்னையாதான். அவன் அவர் வீட்டோடு வந்து சேருவதற்கு முன்… இரண்டு வருஷத்துக்கு முன்னால் வரை, அவர் லஞ்ச்சுக்கு மத்தியானத்தில் வீட்டுக்குப் போய்த்தான் வரு வார். ஆனால், வீட்டுக்குப் போனால் ‘சாப்பிட்டோம், வந் தோம்’ என்று முடிகிறதா? கொஞ்சம் இளைப்பாற வேண்டும்; படுக்க வேண்டும்; சிறு தூக்கம் போட வேண்டும். திரும்ப ஆபீஸ§க்கு வர, நாலு மணி ஆகிவிடுகிறது.
நாகராஜன் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் ஆபீஸ§க்கு வரலாம்; போகலாம். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். அந்தக் கம்பெனியின் முதலாளிக்கு அடுத்தபடி அதிகாரம் உள்ளவர் அவர்தான். சில விஷயங்களில் முதலாளிக்கும் கொஞ்சம் மேலே என்று சொல்லுகிற அளவுக்குப் பொறுப்பும் உடையவர். இருபத்தைந்து வருஷ காலமாக இந்தத் தலைமை ஆபீஸில் இருந்துகொண்டே மாகாணம் முழுவதும் பல கிளைகளைத் தோற்றுவித்து, இன்றிருக்கும் நிலைக்கு இந்த ஸ்தாபனத்தை உயர்த்தியவர் நாகராஜன் என்றால், அவர் அந்த அளவுக்குப் பொறுப்பும், முதலாளிகளின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதனால்தானே முடிந் திருக்கிறது!
கன்னையா தன் வீட்டோடு வந்த பிறகு, ஆபீஸ§க்குச் சாப்பாடு கொண்டுவந்து, தானே அவருக் குப் பரிமாறிவிட்டுப் போக ஆரம்பித்தான். அவர் முக்கியமாக வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவதற் கான காரணம், தானே போட்டுக் கொண்டு சாப்பிடப் பழகாதது தான். அது அவருக்குப் பிடிப்பது இல்லை.
கன்னையா, நாகராஜன் வீட்டு வேலைக்காரனோ சமையற் காரனோ என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவன் அவரது சொந்த அத்தை மகன் என்பதும், சம வயதுடைய பால்ய கால நண்பன் என்பதும் ரொம்பப் பேருக்குத் தெரியாது. தெரியும்படி அவன் நடந்துகொள்ளவும் மாட் டான்.
அவனுக்குக் குடும்பம், கல்யாணம், வீடு, உறவு என்றெல்லாம் ஒன்றுமே ஏற்படவில்லை. சொந்தக்காரர்கள் வீடுகளில்… அவனைச் சொந்தக்காரன் என ஏற்றுக்கொள்கிற வீடுகளில் வந்து கொஞ்ச நாள் தங்குவான். தங்கி இருக்கிற காலத்தில், அந்த வீட்டுக்கு அவன் ஒரு பலமாக விளங்குவான். குழந்தைகளுக்குத் தாதி மாதிரியும், கூப்பிட்ட குர லுக்கு ஓடி வரும் சேவகனாகவும் இருப்பான். தோட்டங்கள் கொத் துவான்; துணி துவைப்பான்; கடைக்குப் போவான்; கட்டை பிளப்பான்; சுமை தூக்குவான்; சுவையாகப் பேசிக்கொண்டும் இருப்பான்.
‘சொல்லிக்கொள்ளாமல்கூட ஓடிப் போனானே அந்த ராஸ்கல்!’ என்று இப்போது பற்களைக் கடிக்கின்ற நாகராஜன், சற்று முன்னால், தான் செய்த காரியத்துக்குக்கூட அவன்தான் பொறுப்பு என்று சுற்றி வளைத்துப் பழியை அவன் தலையில் சுமத்த முயல்கிறார்.
‘அந்தப் பயல் ஒழுங்காக வந்து மீல்ஸ் ஸெர்வ் பண்ணி இருந்தால், இவள் இவ்வளவு நெருக்கமாக வந்திருக்க மாட்டாளே!’ என்று நினைத்தபோது, கன்னையாவைப் பற்றிய நினைவுகள் அவருக்கு மிகுந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய நாகராஜன், காரை ஷெட்டில் நிறுத்துவதற்காகத் திரும்பியபோது, ஷெட்டின் ஒரு மூலையில் தாடியும் மீசையுமாய் ஒரு பரட்டைத் தலையன் எழுந்து நிற்பதைப் பார்த்து, கார் விளக்கை அணைக்காமல் வெளியே தலை நீட்டி, ”யாரது, அங்கே?” என்று மிரட்டுகிற தோரணையில் கேட்டார்.
அவன் அருகில் ஓடிவந்து, ”நான்தான் கன்னையா. என்னைத் தெரியலியா மாப்பிளே?” என்று ரகசியம் போல் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, நாக ராஜனுக்கு மனசை என்னவோ செய்தது.
”என்னடா இது கோலம்? வா… வா!” என்று அழைத்து வந்து, வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிச்சயம் செய்து வைத்து, அங்கேயே தங்கி இருக்கச் சொன்னார். கொஞ்ச நாட்களில் அவரது குடும்பத்துக்கு அவன் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக மாறி இருந்தான்.
ஆரம்பத்தில், அவனை வீட்டில் சேர்த்துக்கொண்டதற்காக மற்ற உறவினர்கள் எல்லாம் நாகராஜனையும் அவன் குடும்பத் தினரையும் மிகவும் எச்சரிக்கை செய்தவாறு இருந்தனர். ஆனால், நாகராஜன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவனைச் சேர்த் துக்கொள்வது தனது கடமை என்று அவர் நினைத்தார். எனினும், அந்தக் காரணங்களை அவர் யாரிடத்தும் இதுவரை பகிரங்கப்படுத்திக்கொண்டது இல்லை.
அந்தப் பழைய பால்ய அனுபவங்களின் நினைவுகளை, எப்போதாவது தனியாக இருக்கையில் அவனோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வார் நாகராஜன்.
அந்தக் காலத்தில் இந்தக் கன்னையா ரொம்ப நல்ல பிள்ளை யாக இருந்தான். ஒன்றுமே தெரி யாத அவனை புகை பிடிக்கப் பழக்கியதும், மதுவருந்தச் செய்த தும், அந்த மாதிரியான விளை யாட்டுகளில் ஈடுபடுத்தியதும் நாகராஜன்தான். அவற்றை அவர் மறக்கவில்லை. அதன் பிறகு, அவை யாவும் ஏதோ ஒரு பருவத் தின் கோளாறு என்று ஒதுக்கி – அல்லது, உண்மையிலே ஒரு பருவத்தின் கோளாறுகளாக அவை இவரிடமிருந்து நீங்கிய பின், இவரால் பழக்கப்படுத்தப் பட்ட அந்தக் கன்னையன் அவற்றிலேயே வீழ்ந்து அழுந்தி மூழ்கிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்ட காலங்களில், நாகராஜன் குற்ற உணர்வினால் உறுத்தப்பட்டிருக்கிறார்.
நாகராஜனைப் பொறுத்தவரை அந்தப் பழக்கங்கள் யாவும் மகா பாவங்கள் என்று கருதுகிற ஒழுக் கக் கண்ணோட்டம் எதனாலும் அவனுக்காக அவர் வருந்த வில்லை. இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஒருவன் வாழ்க்கை யின் சகல மரியாதைகளையும் இழப்பது பரிதாபகரமான வீழ்ச்சி என்பதனால், அவனிடம் அவர் அனுதாபம்கொண்டார்.
இப்போதும்கூட நாகராஜன் எப்போதாவது பார்ட்டிகளிலும், சில சமயங்களில் வீட்டிலேயேகூட மது அருந்துவது உண்டு. அது யாருக்கும் தெரியாது. நாகராஜ னும் புகை பிடிக்கிறார்; பெண் களை இச்சையோடு பார்க்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரு அத்தும் அளவும் இல்லாதபோதுதானே மனிதன் தலைகுப்புற வீழ்ந்து விடுகிறான்!
அப்படி வீழ்ந்துவிட்டவன் கன் னையா. அவன் அப்படி விழக் காரணம், ஏதோ ஒரு வகையில் தானே என்று நினைக்கையில், அவனைப் பார்த்துப் பெருமூச் செறிவார் நாகராஜன்.
பிறர் பார்வையிலும் சமூக அந்தஸ்திலும் அவன் வீழ்ந்து விட்டவன்தான் என்றாலும்கூட, அவனைத் தனது அந்தரங்கத்தில் சமமாகவே பாவித்தார் நாக ராஜன். அவனும் அதே மாதிரி அந்த எல்லை மீறாது அவரோடு சமத்துவம்கொண்டான்.
எப்போதாவது, தான் மது அருந்தும்போது அவனையும் அழைத்து, அவனுக்கும் கொடுப்பார். தனக்கு மகுடாபிஷேகம் நடந்த மாதிரி களி கொள்வான் அவன். அப்போதும்கூட மிகவும் வெட்கத்தோடு, கையில் தம்ளருடன் ஒரு மூலையில் போய்த் திரும்பி நின்றுகொண்டு, மறை வாகக் குடிப்பான். ”போதும்… போதும்” என்று சொல்லித் தம்ளரை வைத்துவிட்டு ஓடி விடுவான். கேட்டால், ”நமக்கு இந்தச் சரக்கெல்லாம் சரிப்பட்டு வராது. ரெண்டு ரூபா பணம் குடு மாப்பிளே, எதுக்கு இதெ வேஸ்ட் பண்றே?” என்று பணத்தை வாங்கிக்கொண்டு போனால், இரவில் எந்நேரம் வந்து அவன் ஷெட்டில் படுத்துக்கொள்கிறான் என்று யாருக்கும் தெரியாது.
யாருக்கும் தெரியாமல் அந்தச் செலவுக்காக வாரத்தில் இரண்டொரு தடவை அவர் அவனுக்குப் பணமும் கொடுப்பார்.
அவன் சாப்பாடு பரிமாறிச் சாப்பிடுவது, அவருக்கு எப்போ தும் ரொம்பத் திருப்தியாக இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூடச் சில சமயங்களில் அவன்தான் அவருக்குப் பரிமாறுவான். நாகராஜனின் மனைவி ஸ்தூல சரீரி. அவளுக்கு உடம்புக்கு நோய் வந்துவிடும். ஈஸிசேரிலிருந்து அவளை எழுந்து வரச் செய்வதைக் கூடியவரை தவிர்க்கவே விரும்புவார் அவர்.
சில சமயங்களில் டிரைவர் இல்லாதபோது, கன்னையாவோடு தனியே காரில் செல்கையில், அவனோடு தமாஷாகச் சமத்துவமாய் பழைய காலம் மாதிரி பேசி மகிழ்வார் நாகராஜன். அது மாதிரிச் சமயங்களில் அவனும் தன்னை மறந்து ‘டா’ போட்டுக் கூடப் பேசுவான். அது ரொம்ப இயல்பாக, சுருதி பிசகாமல் இருக்கும்.
”டேய், கன்னையா..! நம்ம செக்ரட்டரி அம்மா எப்படி இருக்கா?” – புடவை கட்டாத அந்தச் சட்டைக்காரி எதிர்ப்படும்போது, அவன் நாணிக்கோணி நிற்பதை அவர் பல தடவை கண்டிருக்கிறார். அதனால்தான் கேட்டார். அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் முதலில் அவன் சிரிப்பான்.
”சொல்லு, உனக்கு என்ன தோணுது அவளைப் பார்த்தா?”
”எனக்கு என்ன தோணுது?” – மார்பில் முகவாய் படிகிற மாதிரி தலை குனிந்துகொண்டான் கன்னையா. கொஞ்சம் நேரம் கழித்து ஒரு அசட்டுச் சிரிப்புடன், ”நீ விட்டு வெச்சிருப்பியா மாப்பிளே! எனக்குத் தெரியும்டா!” என்று முழங்கையால் இடித்துக் கொண்டு, கிளுகிளுத்துச் சிரித் தான்.
”சீ… சீ! அதெல்லாம் இல்லை. நீ முன்ன மாதிரியே என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கியா? வயசாச்சே!” என்பார் நாக ராஜன்.
”அப்படின்னா அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது தெரியுது!” என்று கண்களைச் சிமிட்டி, அவரைக் குஷிப்படுத்தினான் அவன்.
‘அந்தப் பாவிதான் இந்த எண்ணத்துக்கு முதல் பொறி வைத்தவனோ?’
இவ்வளவும் அந்தரங்கமாய்ப் பேசுவானே தவிர, அவள் முன்னிலையில் இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்க்காமல், தலை நிமிர்ந்து பார்க்காமல், அவருக்குச் சாப்பாடு பரிமாறுவான். தட்டைப் பார்த்து, எது வாய்க்கு ருசிக்கிறது என்று அறிந்து, கேட்குமுன் பரிமாறுவான்.
அவன் பரிமாறுவதையும், அவருக்குப் பணிவிடை புரிவதையும் தெரஸா பார்த்திருக்கிறாள்.
அதனால்தான், அவன் வராமல் அன்று அந்த டிரைவரே அவருக்குப் பரிமாறத் தெரியாமல், இவர் போட்ட சத்தத்தில் பயந்து, கையில் உள்ளதைக் கீழே போட்டு, இவர் ஒன்றுமே சாப்பிடாமல் ‘எடுத்துக்கொண்டு போ!’ என்று கத்திவிட்டு, அன்று ஓட்டலில் இருந்து டிபன் வரவழைத்துச் சாப்பிட்டதை எல்லாம் கவனித்த தெரஸா, அடுத்த நாள் மத்தியானம் அவர் தானே பரிமாறிக்கொள்ள முனைகையில்…
”உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் பரிமாறலாமா?” என்று விநயத்துடன் ஆங்கிலத்தில் கேட்டாள்.
அப்போது நாகராஜனுக்குக் கன்னையா நினைவு வந்தது. ‘அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது எனக்குத் தெரியுது!’
--------------
35. அந்தரங்கம் புனிதமானது
1
“ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”
சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”
- அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”
“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”
“இல்லே… அதைப்பத்தி… வீட்டிலே பேச எனக்கு விருப்பமில்லே… நீங்க அங்கேயே இருக்கிறதானா, இப்பவே பத்து நிமிஷத்திலே நான் அங்கே வரேன்…”
“ஓ ஐஸீ! சரி… வாயேன்…”
“தாங்க்ஸ்…”
-ரிஸீவரை வைத்துவிட்டு நெற்றியில் பொங்கி இருந்த வியர்வையைத் துடைத்து விட்டுக்கொண்டான் வேணு. இன்னும் கூட அவனுக்கு நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவன் என்னென்னவோ பேசத் தன்னைத்தானே ஒரு மகத்தான காரியத்திற்குத் தயார் செய்து கொள்கிற தோரணையில் உள்ளங்கையில் குத்திக் கொண்டு செருமினான்.
“ம்… இது என்னோட கடமை! இந்தக் குடும்பம் சீர் குலையாம பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை! ஒரு சின்னப்பையன் – தன் மகனே – தன்னைக் கண்டிக்கிற அளவு தான் நடத்தை கெட்டுப் போனதை அவர் உணர வேணாமா? மானக்கேடான விஷயம்தான்!… நான் ஆத்திரப்படாமல் நியாயத்தைப் பேசி, அவரோட கேடு கெட்ட ரகசியத்தை அவருக்கே மொதல்லே அம்பலப்படுத்தணும்…. ‘அதெல்லாம் இல்லை; அப்படி இப்படி’ன்னு அவர் மழுப்பப் பார்ப்பார்…. ம்ஹ்ம்! அவரோட மேஜை டிராயர்லே இருந்த அந்தக் கடுதாசியை… கர்மம்… காதல் கடிதம்… அதெ ஞாபகமா எடுத்துக்கறேன்… என் மேஜை டிராயருக்குக் கள்ளச்சாவி போட்டயோன்னு அவர் ஆத்திரப்படலாம். இவர் கள்ளக் காதலைக் கண்டுபிடிக்க நான் செய்த இந்தக் கள்ளத்தனம் ஒன்றும் பெரிய தப்பில்லை… முந்தாநாள் ராத்திரிகூட அவளோட ரெண்டாவது ஷோவுக்குச் சினிமாவுக்குப் போயிருந்ததைப் பார்த்த அப்புறம்தானே இந்தத் தொடர்பின் முழு உண்மையையும் கண்டு பிடிக்கணும்னு நானே அவர் அறையைச் சோதனை போட்டேன்!….”
-வேணு அவசர அவசரமாக உடையணிந்து வெளியே புறப்படுகிற சமயத்தில், லேடீஸ் கிளப்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவன் தாய் ரமணியம்மாள் எதிர்ப்பட்டாள்.
சில நாட்களாகவே அவனது போக்கும் பேச்சும் ஒரு மாதிரியாக இருப்பதை அவளது தாயுள்ளம் உணர்ந்தது.
இப்போது அவனைத் திடீரெனப் பார்த்ததும் அவனது தோற்றத்தைக் கண்டு அவள் கலவரமடைந்தாள்.
“அவன் சரியாகச் சாப்பிடாமல் தூக்கம் கூட இல்லாமல் இருக்கிறானோ?” என்று, அவனது சோர்ந்திருக்கும் தோற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்டாள். இவன் இளைத்துக் கறுத்துப் போயிருந்தான். க்ஷவரம் செய்து கொள்ளாததால் மேல் உதட்டிலும் மேவாயிலும் கன்ன மூலங்களிலும் இளரோமம் அடர்ந்திருந்தது… அவன் எதைக் குறித்தோ மிகுந்த மனோவியாகூலத்திற்கு ஆளாகி இருக்கிறான் என்று அவன் கண்களில் கலங்கிய சோர்விலும், கீழ் இமைகளுக்கடியில் படிந்திருந்த கருமையிலும் அவள் கண்டு கொண்டாள்.
அவன் வயது வந்த ஆண்மகன். அவனுக்கு ஏதேனும் அந்தரங்கமான பிரச்னைகள் இருக்கலாம். அதில் தான் தலையிடுவது நாகரிகமாகாது என்ற கட்டுப்பாட்டுணர்வுடன் அவள் அவனை நெருங்கி வந்தாள்.
“என்னடா வேணு… எங்கே கிளம்பிட்டே?” என்று ஆதரவாக அவன் தோள்களைப் பற்றினாள். அவனுக்கு உடம்பு கூசிற்று.
“கொஞ்சம் வேலை இருக்கு” என்று அழுத்தமாக அவன் பதில் சொன்னான்.
“வாட் இஸ் ராங் வித் யூ? சரி… என்னவாக இருந்தாலும் – நான் உனக்கு உதவ முடியும்னா சொல்லு…” என்று ஆங்கிலத்தில் கூறினாள்.
“தாங்க்ஸ்” என்று அவளைக் கடந்து போக யத்தனிக்கையில் அவனை நிறுத்தினாள் அம்மா.
“போ… போயி… என்னவோ ஸ்பெஷலா டிபன் பண்ணி இருக்கா சமையல்காரப் பாட்டி… சாப்பிட்டுட்டுப் போயேன்” என்று கொஞ்சி உபசாரம் செய்துவிட்டு, தனக்கும் நாழியாவதைக் கைக்கடிகாரத்தில் பார்த்துவிட்டு அவள் வெளியேறினாள்.
வேணு ஒரு விநாடி தலை குனிந்து யோசித்து நின்றான்.
“இந்த அசட்டு அம்மாவை இந்த அப்பாதான் எப்படி ஏமாற்றித் துரோகம் புரிந்து கொண்டிருக்கிறார்” என்று தோன்றியது வேணுவுக்கு. அதன் பிறகு, இந்த வயதிலும் இவள் செய்து கொள்ளுகிற அலங்காரமும் பவுடர் பூச்சும் உதட்டுச் சாயமும் கையுயர்ந்த ரவிக்கையும் கீச்சுக் குரலில் பேசுகிற இங்கிலீஷ் பேச்சும் காண வயிற்றைப் பீறிக்கொண்டு ஆத்திரமும் அருவருப்பும் பொங்கிற்று அவனுக்கு.
ஹாலில், அப்போதுதான் கான்வென்ட்டிலிருந்து வந்திருந்த அவனது இரண்டு தம்பிகளும் ஆறு வயதுத் தங்கையும் சோபாவில் அமர்ந்து ஷீசையும் ஸாக்சையும் கழற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும்போது வேணுவின் நெஞ்சில் துக்கமும் பரிவும் பொங்கியடைத்தன.
“இந்தப் பொறுப்பற்ற தாயும் ஒழுக்கங்கெட்ட தந்தையும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கிவிடப் போகிறார்கள்” என்று நினைத்தபோது… இதற்குத் தான் என்ன செய்ய முடியும் என்று குழம்பினான் அவன்.
“இதற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்! அது என் கடமை… நான் என்ன இன்னும் சின்னக் குழந்தையா? எனக்கு இருபத்தியொரு வயதாகிறது… லீகலி, ஐ ஆம் அன் அடல்ட்!”
திடீரென்று அவன் தன்னை வளர்த்த தாத்தாவையும் பாட்டியையும் நினைத்துக் கொண்டான்.
“நல்ல வேளை! இந்தக் கேடுகெட்ட சூழ்நிலையில் வளராமல் போனேனே நான்!”
2
வேணுவின் தந்தை சுந்தரமும் தாய் ரமணியும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் வெவ்வேறு ஜாதியினர் என்பதால் பெற்றோரை விரோதித்துக்கொண்டே அவளைக் கைப்பிடித்தார் சுந்தரம்.
ரமணியம்மாள் சிறு வயதில் கான்வென்ட்டில் படித்து வெள்ளைக்காரப் பாணியில் வளர்க்கப்பட்டவள். மேற்கத்திய கலாசாரத்தில் அவளது குடும்பமே திளைத்தது. அக்காலத்தில் சுந்தரத்திற்கு அவளிடம் ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு அதுவே கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.
அந்த ஈடுபாட்டின் காரணமாகப் பெற்றோரையும் விரோதித்து அவளைக் கலப்பு மணம் புரிந்து கொண்ட பின் இரண்டாண்டுக் காலம் பெற்றோருடன் தொடர்பே இல்லாதிருந்தார் சுந்தரம். இரண்டு வருஷங்களுக்குப் பின் வேணு பிறந்தான்.
புத்திர பாசத்தைத் துறந்திருந்த சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளையும் அவர் மனைவி விசாலமும் பேரக் குழந்தையைப் பார்க்க கிராமத்திலிருந்து ரயிலேறிப் பட்டணத்துக்கு ஓடி வந்தார்கள்; கொஞ்சம் கொஞ்சமாய்ப் பகைமை விலகி சுந்தரத்திற்கும் அவன் பெற்றோருக்கும் உறவுப் பாலம் அமைத்தவன் வேணுதான்.
வேணுவுக்கு ஆறு வயதாகும்போது கணபதியாப் பிள்ளை பேரனைத் தான் அழைத்துச் செல்வதாகக் கூறினார். எவளோ ஒருத்திக்கு, ஏதோ ஒரு நாகரிகத்துக்குத் தாங்கள் ஆசாரமாக வளர்த்த பிள்ளையைப் பறி கொடுத்து விட்டோமே என்ற நிரந்தர ஏக்கத்திற்கு ஆளாகிப் போன கணபதியாப் பிள்ளை அதை ஈடுசெய்து கொள்வதைப்போல் பேரனை ஸ்வீகரித்துக்கொண்டார். வேணு தாத்தாவின் வீட்டிலேயே வளர்ந்து படித்துக் கொண்டிருந்தான். பெற்றோரின் வீடு என்பது அவனுக்கு எப்போதாகிலும் லீவிலே வந்து தங்கிச் செல்லும் உறவுக்காரர்களின் குடும்பம் போலாயிற்று.
சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளை வீர சைவம்; தமிழ்ப் புலமையுடையவர். சிவ பக்தர். அவர் மனைவி விசாலம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்மையின் கடைசிப் பிரதிநிதி. புருஷனின் முன்னே உட்கார்ந்து பேச மாட்டாள்.
வேணு எப்போதேனும் லீவுக்குத் தாய் தந்தையரிடம் வரும்போது அவர்களின் வாழ்க்கைமுறை, நடை உடை யாவும் ஓர் அந்நியத் தன்மை கொண்டு அவர்களே தனக்கு மிகவும் அந்நியமானவர்கள் போல உணர்ந்தான். சிறு வயதில் எல்லாம் அந்த அனுபவம், தாத்தா-பாட்டியிடம் போய்ச் சிரிக்க சிரிக்க விளக்கிச் சொல்லிப் பரிகசிக்கவே அவனுக்கு உதவிற்று. பின்னர் வயது ஏற ஏற அவன் தாத்தா-பாட்டியோடு, தாய் தந்தையரை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தான். அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் லட்சியத் தம்பதியாகவும், நமது பண்பாட்டின் ஆதர்சமாகவும் ஏற்றம் பெற்றனர்.
என்னதான் பாசமிருந்த போதிலும் அவனுக்குத் தன் தாய் தந்தையர் மீது உயரிய மதிப்புத் தோன்றவில்லை.
வேணு ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்டுப் பக்கத்து டவுனாகிய சிதம்பரத்தில் கல்லூரியிலும் சேர்ந்தான். அவன் கல்வி எவ்வளவுதான் நவீன முற்றிருந்த போதிலும் அவனது வாழ்க்கை நவீன முறைகளுக்கு இலக்காகவில்லை.
இப்போது கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அவன் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆயின…
அவனால் தாத்தாவையும் பாட்டியையும் பிரிந்து வரவே முடியவில்லை.
“நான் ஒண்ணும் உத்தியோகம் பார்க்க வேணாம்… படிச்சவங்க எல்லாம் நகரத்துக்கும் உத்தியோகத்துக்கும் போறதனாலேதான் நம்ப தேசம் இப்படி இருக்கு. நான் இங்கேயே இருந்து விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறேனே” என்று அவன் தாத்தாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்; அவன் யோசனை பாட்டிக்கும் கூடப் பிடித்திருந்தது.
ஆனால், வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாத்தா பாட்டியிடம் பதில் சொன்னார்: “நீயும் என்ன அவனோட சேர்ந்து பேசறே? நம்ம பையனை விட்டுட்டு இருந்தப்போ உன் மனசு கேட்டுதா? அது மாதிரிதானே அவனைப் பெத்தவளுக்கும் இருக்கும். படிப்புன்னு ஒரு காரணத்தை வெச்சி இவ்வளவு காலம் இருந்தாச்சு. இப்ப அவன் பெத்தவங்களுக்குப் பிள்ளையா அங்கே போயி இருக்கறதுதான் நியாயம்.”
“நான் வரலேன்னு அங்கே யாரும் அழலே!” என்று மறித்துச் சொன்னான் வேணு.
“வேணு! நீ எங்களோட இருக்கறதிலே உன்னைவிட எங்களுக்கு சந்தோஷம்னு நான் சொல்லணுமா? இப்ப நீ கொஞ்ச நாள் போய் இரு. அப்புறம் போகப் போகப் பாப்பம்… இவ்வளவும் சொல்றேனே… நீ அந்தப் பக்கம் ரயிலேறிப் போனப்பறம் நானும் உன் பாட்டியும் எப்படி நாளைத் தள்ளப் போறமோ?… அதுக்கென்ன, நீ லீவிலே போவியே அந்த மாதிரிப் போயி கொஞ்ச நாள் அங்கே இரு… என்ன நான் சொல்றது?” என்று அவர் எவ்வளவோ சமாதானங்கள் கூறிய பின்னரே அவன் சென்னைக்கு வரச் சம்மதித்தான்.
முன்பெல்லாம் லீவு நாட்களில் வந்து முழுசாக இரண்டு மாதங்கள் தன் தாய் தந்தையோடு தங்கி இருந்தபோது ஏற்படாத சலிப்பு இப்போது இரண்டே வாரங்களில் ஏற்பட்டது! அவனுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை.
தன் தாயும் தந்தையும் டைனிங் டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதும், காலையில் எட்டு மணி வரைக்கும் அவள் தூங்குவதும், தன் தந்தை ஓடி ஓடித் தாய்க்கு ஊழியம் செய்வதும் அவனுக்கு அருவருப்பாக இருந்தன.
அவன் மனதில், அறுபது வயதாகியும் அதிகாலையில் எழுந்து நீராடி மஞ்சளும் குங்குமமுமாய்த் திகழும் பாட்டியின் உருவமே அடிக்கடி எழுந்தது. அவள் தாத்தாவுக்கு இந்த வயதிலும் பணிவிடை புரியும் மகத்துவத்தை எண்ணி எண்ணி ஒவ்வொரு நிகழ்ச்சியாகக் கற்பனையில் கண்டு இவர்களின் நடைமுறையோடு அவன் பொருத்திப் பார்த்தான்.
‘இந்த அப்பா சரியான பெண்டாட்டிதாசன்!’ என்று தோன்றியது அவனுக்கு. இந்த அம்மா பாட்டுக்குச் சினிமாவுக்குப் போவதும் லேடீஸ் கிளப்புக்குப் போவதும் அதைப் பற்றி அவர் ஒன்றுமே கேட்காமலிருப்பதும், அதே மாதிரி அவரைப் பற்றி இவளும் அக்கறையில்லாமலிருப்பதும் – ஐயே! என்ன உறவு? என்ன வாழ்க்கை? என்று மனம் சலித்தது.
“சரி! நமக்கென்ன போயிற்று. தாத்தாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுக் கொஞ்ச நாள் இருந்து விட்டுக் கிராமத்தோடு போய்விட வேண்டியதுதான்” என்றிருந்த வேணுவுக்கு மேலும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் அருவருப்பையும் மூட்டத்தக்க அந்தச் சம்பவம் சென்ற வாரம் நடந்தது.
இரவு எட்டு மணி இருக்கும். டெலிபோன் மணி அடித்தது. சுந்தரம் அப்போது மாடியில் இருந்தார். வேணு ரிஸீவரை எடுத்தான்.
“ஹலோ!” – அவன் போன் நம்பரையும் சொன்னான்.
“நான்தான் வத்ஸலா பேசறேன்… காலேஜிலேயே மீட் பண்ணனும்னு வந்தேன்… நீங்க அதுக்குள்ளே போயிட்டீங்க… ‘ஸவுண்ட் ஆப் ம்யூஸிக்’ இன்னிக்கித்தான் கடைசியாம்… நைட் போலாமா?… என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க!”
வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஒரு ‘ராங் நெம்பர் கால்’ என்று அவன் ஆரம்பத்தில் கொண்ட சந்தேகம், காலேஜில் மீட் பண்ண வந்ததாகக் கூறியதில் அடிபட்டுப் போயிற்று! எதுவும் செய்யத் தோன்றாமல் ரிஸீவரை டெலிபோன் மீது வைத்து விட்டு, அந்த அறையை விட்டே ஓடிப் போய்விட்டான் வேணு. பக்கத்தறைத் தனிமையில் போய் உட்கார்ந்து கொண்ட வேணுவின் மனம் அலை பாய்ந்தது.
‘அப்பாவைத் தவிர வயது வந்த ஓர் ஆணின் குரல் வேறு யாருடையதாகவும் இருக்காது’ என்ற தைரியத்தில் வழக்கமாகப் பேசுகின்ற ஒருத்தியாகத்தான் அவள் – அந்த வத்ஸலா – இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பினான்.
சற்று நேரத்தில் மீண்டும் மணி அடித்தது. அடித்துக் கொண்டே இருந்தது! வேணு இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.
மாடியிலிருந்து இறங்கி வந்த சுந்தரம் தானே போய் ரிஸீவரை எடுத்தார்.
“ஹலோ?”- டெலிபோன் நம்பரைச் சொன்னார்.
வேணு மௌ¢ள எழுந்து சென்று டெலிபோன் இருக்கின்ற ஹாலுக்கும் அவன் இருந்த அறைக்கும் இடையேயுள்ள பலகையில் காதை வைத்துக்கொண்டு உரையாடலைக் கவனித்தான்; ஆம்; ஒட்டுக் கேட்டான். அவன் தந்தை ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“இல்லையே, நான் மாடியில் இருந்தேன்…ம்…த்சொ…”
“……..”
“இட் இஸ் ஆல்ரைட்…”
“…….”
“ஒரு வேளை என் மூத்த மகனாக இருக்கலாம்… ஆமா! அவன் ஊர்லேயே இருந்தான்… இப்பதான்…. ஆமாம்…”
“…….”
“வேறு யாரும் ‘அடல்ட்’ இல்லையே!”
“…….”
“சரி… நான் சமாளித்துக் கொள்கிறேன்… ஓ.கே!….”
“…….”
“டோண்ட் ஒரி!”
“…….”
“ஓ… வாட் ஆர் யூ டாக்கிங்?…”
“…….”
“பை….”
சம்பாஷணை முடிவடைகின்ற தருவாயில் வேணு அறையிலிருந்து நழுவி வெளியேறி விட்டான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்றுவரை அவன் அவர் முகத்தில் விழிக்கவில்லை. ஒரே வீட்டில் இருந்தும் மிக சாமர்த்தியமாக அவர் கண்ணில் படாமல் அவன் தப்பித்துக் கொண்டிருந்தான்.
சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவன் மாடியில் உள்ள தன் தந்தையின் தனியறைக்குச் சென்றான். தனது ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவனுக்கு மேலும் சில துப்புகள் தேவைப்பட்டன.
மாற்றுச் சாவிகள் போட்டு அவரது மேஜை, அலமாரி முதலியவற்றைத் திறந்து துருவினான். அவ்விதம் ஒரு திருடனைப்போல் நடந்து கொள்வதில் அவனுக்கு அவமானமேதும் ஏற்படவில்லை. அதனினும் பெருத்த அவமானத்துக்கு அவனை ஆளாக்கத்தக்க சில துப்புகள் கிடைத்ததால் அந்தத் தனது காரியம் சரியே என்று அவன் நினைத்தான்.
“நான் ஏன் பயப்பட வேண்டும்? தப்பு செய்கிற அப்பாவைக் கண்டு நான் ஏன் ஒளிய வேண்டும்… இதைப்பற்றி அவர் புத்தியில் உறைக்கிற மாதிரி நான் எடுத்துக் கூறி அவரைத் திருத்த வேண்டும்… இது என் கடமை… எப்படி எங்கே அவரிடம் இதைப் பற்றிப் பேசுவது?… வீட்டில் பேசினால் அம்மாவுக்கு விஷயம் தெரிந்து போகுமே!… அவரை வெளியில் எங்காவது சந்தித்துப் பேச வேண்டும்…. என் பேச்சை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்?… அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் தைரியமாக இது விஷயமாய் அவரிடம் உடைத்துப் பேசிவிட வேண்டும்…” என்று இரவு பகலாக இந்த விவகாரம் குறித்து நெஞ்சு பொருமி, நினைவு குழம்பி இறுதியாக நேற்று அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
“எப்படியும் நாளைக்கு அவரிடம் நேருக்கு நேர் உடைத்துப் பேசிவிடுவது. இதில் நான் பயப்பட என்ன இருக்கிறது? நான் என்ன குழந்தையா? ஐ ஆம் அன் அடல்ட்!”
3
கடற்கரையை ஒட்டிப் புதிகாகப் போடப்பட்டுள்ள உட்புறச் சாலையில் அந்த மோரீஸ் மைனர் காரை நிறுத்தினார் சுந்தரம். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வேணு முதலில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். அவன் பார்வை தூரத்துக் கடலை வெறித்தது… காற்றில் அலைபாய்ந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சற்றுத் தள்ளி மணலில் போய் நின்று கொண்டான் அவன். அவன் மனதில் கடந்த பத்து நிமிஷமாய் – த்ன் தந்தையைக் கல்லூரியில் சந்தித்து இங்கு வந்து சேர்ந்தது வரை – எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பம்தான் குடிகொண்டிருந்தது. என்னதான் தப்பு செய்திருந்தாலும் ஒரு தந்தையிடம் மகன் பேசக்கூடாத முறையில், தான் ஆத்திரத்தில் அறிவை இழந்துவிடக் கூடாதே என்ற அச்சம் வேறு எழுந்தது.
காரிலிருந்து இறங்கிய சுந்தரம் தனது கோட்டைக் கழட்டி காருக்குள் மடித்து ஸீட்டின் மேல் போட்டுக் கண்ணாடிகளை உயர்த்திக் காரின் கதவுகளைப் பூட்டி விட்டு வந்தார்.
அவன் பக்கத்தில் வந்து நின்று கைக்கடிகாரத்தைப் பார்த்து “மணி ஐந்துதான் ஆகிறது” என்று அவன் காதில் படுகிற மாதிரி தானே சொல்லிக் கொண்டார் சுந்தரம்.
“அதுதான் கூட்டத்தைக் காணோம்” என்று வலிந்த புன்னகையுடன் அவனும் கூறினான்.
கடற்கரை மணலில் இன்னும் நிழல் இறங்கவில்லை.
அவர்கள் இருவரும் திடீரென மௌனமாகிச் சற்று மணலில் கடலை நோக்கி நடந்தனர். அந்த இருவரையும் பார்க்கும் யாருக்கும் அவர்கள் தந்தையும் மகனும் என்று தோன்றாது. அண்ணனும் தம்பியும் போலவோ, ஆசிரியரும் மாணவனும் போலவோதான் அவர்கள் இருந்தனர். முகச் சாயலில் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. தந்தையின் அளவே உயரமிருந்தும் அவரைப் போல் சதைப் பற்றில்லாத அவனது உருவம் அவரை விடவும் நெடிதாய்த் தோன்றியது.
அவன் தலைகுனிந்து நடக்கையில் மணலில் அழுந்திப் புதையும் தனது பாதங்களையே பார்த்தான்.
மனசில் இருந்த கனம் விநாடி தோறும் மிகுந்தது; நெஞ்சில் குமுறுகிற ஆத்திரம் திடீரென்று தொண்டைக்கு வந்து அடைக்கிறது. முகம் சிவந்து சிவந்து குழம்புகிறது. உதட்டை இறுக இறுகக் கடித்துக் கொள்கிறான்…
அவன் தலைநிமிர்ந்து தூரத்துக் கடல் அலையை வெறித்தபோது அவனது கண் இமைகளின் இரண்டு கடைக்கோடியிலும் கலங்கிய கண்ணீர் வீசியடித்த காற்றால் சில்லென இமைக் கடையில் பரந்து படர்கிறது…
அவர் அவனை மிகுந்த ஆதரவோடு பார்த்தார். ஒருமுறை செருமினார். அவன் அவரைத் திரும்பிப் பார்த்தபோது அவனைச் சாந்தப்படுத்தும் தோரணையில் அவர் புன்முறுவல் செய்தார். அவனது உதடுகள் துடித்தன.
“இங்கே உட்காரலாமா?” என்றார் அவர்.
அவன் பதில் சொல்லாமல் உட்கார்ந்துகொண்டான்.
- எப்படி ஆரம்பிப்பது?
அவன் அவர் முகத்தை வெறித்துப் பார்ப்பதும், பின்னந்தலை குனிந்து யோசிப்பதும், மணலில் கிறுக்குவதுமாகக் கொஞ்சம் நேரத்தைக் கழித்தான்…
அவன் எது குறித்துத் தன்னிடம் தனிமையில் பேச வந்திருக்கிறான் என்று சுந்தரம் அறிந்தே வைத்திருந்தார். அந்த ‘டெலிபோன் கால்’ சம்பவத்துக்குப் பிறகு இந்த ஒரு வாரமாய்த் தான் அவனைப் பார்க்கவேயில்லை என்ற பிரக்ஞை அவருக்கும் இருந்தது. எனினும் அவன் அதனால் பாதிக்கப்பட்டிருந்தும், வயது வந்த இளைஞன் என்ற காரணத்தால் நாகரிகமாக அது விஷயமாய் ஒரு சந்திப்பைத் தவிர்த்து வருகிறான் என்றும் அவர் கருதி இருந்தார்.
ஆனால், இப்போது அது சம்பந்தமாய் அவன் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டு அது குறித்துத் தன்னிடம் பேசவே தயாராகி வந்திருக்கின்ற நிலைமை அவருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றாலும், ஒரு கோழை போல் அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்வது சரியல்ல என்பதனாலேயே அவனிடம் அவர் இப்போது எதிர்ப்பட்டு நிற்கிறார்.
எனினும் அவர் தானாகவே எதுவும் பேச விரும்பவில்லை.
அவன் திடீரென்று தனக்குத்தானே பேசிக்கொள்கிற மாதிரி முனகினான்: “ஐ ஆம் ஸாரி! – இது ரொம்பவும் வெட்கப்படத்தக்க அவக்கேடான விஷயம்” என்று ஆங்கிலத்தில் கூறினான். அதைத் தொடர்ந்து அவன் அவரிடம் கேட்டான்: “நான் எதைக் குறித்துச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?”
அவர் கொஞ்சமும் பதற்றமில்லாமல் ‘புரிகிறது’ என்பதாகத் தலையை ஆட்டினார்.
அவரது பதற்றமின்மையைக் கண்டபோதுதான் அவனுக்கு ஓர் ஆவேசமே வந்துவிட்டது.
“நீங்கள் இப்படிப்பட்ட மனிதராக இருப்பீர்கள் என்று நான் கற்பனைகூடச் செய்ததில்லை…”- அவன் உணர்ச்சி மிகுதியால் முறுக்கேறிய தனது கைகளைப் பிசைந்து கொண்டான். காற்றில் தலை கலைந்து பரக்கக் குமுறுகின்ற உள்ளத்து உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு மார்பு பதை பதைக்க, சீறிச் சீறி மூச்சு விட்டான்.
“வேணு! டோண்ட் பி ஸில்லி… நீ என்ன சின்னக் குழந்தையா?… பொறுமையா யோசி” என்று அவனது தோளில் தட்டிக் கொடுத்தார் சுந்தரம்.
“எஸ்…எஸ்… ஐ ஆம் அன் அடல்ட்” என்று பல்லைக் கடித்தவாறே சொன்னான். பிறகு தொடர்ந்து ஆங்கிலத்திலேயே கூறினான்.
- அந்த அந்நிய மொழியில்தான் ஒரு தகப்பனும் மகனும் இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க முடியும் என்று எண்ணினான் போலும்!
“உங்களுக்கு அந்த டெலிபோன் சம்பவம் நினைவிருக்கிறதா? அன்றிலிருந்து உங்களை நான் கவனித்தே வருகிறேன்… என்னுடைய தந்தை இப்படி ஒரு ஸ்திரீ லோலனாக இருப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. இது நம் குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்லவா?… உங்கள் வயதுக்கும் தரத்துக்கும் உகந்த செயலா இது?… இந்த அம்மா இருக்கே அது ஒரு அசடு! நீங்கள் அவங்களை வாழ்க்கை பூராவும் இப்படியே வஞ்சித்து வந்திருக்கிறீர்கள்!…” அவன் பேசும்போது குறுக்கிடாமல் சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்துக் கொண்டிருந்த அவர், திடீரென இப்போது இடைமறித்துச் சொன்னார்:
“ப்ளீஸ்! உன் அம்மாவை இது சம்பந்தமாய் இழுக்காதே! உனது அபிப்பிராயங்கள் – அது எவ்வளவு வரைமுறையில்லாமலிருந்தாலும் நீ சொல்லு – நான் கேட்கிறேன்… உன் அம்மாவை இதில் கொண்டு வராதே! உன்னைவிட எனக்கு அவளைத் தெரியும். உனக்கு என்னைத் தெரிந்திருக்கிறதே, அதற்கு மேலாக அவளுக்கு என்னைத் தெரியும் – நாங்கள் இருபத்தைந்து வருஷங்கள் தாம்பத்தியம் நடத்தியவர்கள்; எங்கள் இறுதிக்காலம் வரை ஒன்றாக வாழ்க்கை நடத்துவோம்… நீ மேலே சொல்லு!”
“நீங்கள் அம்மாவை வஞ்சித்து ஏமாற்றி ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது…”
உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியமே எனக்கு இல்லை என்பதுபோல் அவர் சிரித்துக் கொண்டார்.
“அந்த போன் நிகழ்ச்சியை மட்டும் வைத்து உங்களைப் பற்றி இந்த முடிவுக்கு நான் வந்துவிடவில்லை… இரண்டாவது முறை நீங்கள் போனில் பேசினீர்களே அந்தப் பேச்சை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன்… அதன் பிறகு இரவு ஒன்பது மணிக்கு மேல் காரை எடுத்துக்கொண்டு ஓடினீர்களே… உங்கள் இருவரையும் நான் தியேட்டரிலும் பார்த்தேன். இதனால் மட்டும் ஒருவரைச் சந்தேகித்துவிட முடியுமா?… அதனால்தான் உங்கள் அறையில் புகுந்து உங்கள் மேஜை டிராயர், அலமாரி யாவற்றையும் நான் சோதித்துப் பார்த்தேன்… உங்களின் காதல் கடிதங்கள் – ஒரு பைலே இருக்கிறதே- அதில் ஒன்று இதோ!” என்று அவன் ஆத்திரத்துடன் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவர் மேல் விட்டெறிந்தான்…
பிறகு அவன் வேறு புறம் திரும்பிக்கொண்டு கண் கலங்கினான். தொண்டையில் அழுகை அடைத்தது.
கடற்கரைச் சாலையில் நீல விளக்குகள் எரிய ஆரம்பித்தன. மணல் வெளியில் ஜனக் கும்பல் குழுமி இருந்தது… ஒரு சிறு கும்பல் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தக் கும்பல் அவர்களைக் கடந்து செல்லும் வரை அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். பின்னர் வேணுதான் பேச்சை ஆரம்பித்தான்:
“நீங்கள் என்னைப் பெற்ற தகப்பன். உங்களுக்கு நான் இதையெல்லாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதை எண்ணினால் எனக்கு வருத்தமாகத் தானிருக்கிறது… இனிமேலாவது நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்… அதற்காகத்தான் சொல்கிறேன்…”
அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் அவன் மௌனமானான். சுந்தரம் மௌனமாகப் பெருமூச்செறிந்தவாறு வானத்தைப் பார்த்தவாறிருந்தார்… இவனிடம் இது குறித்துத் தான் என்ன பேசுவது என்பதைவிட, என்ன பேசக்கூடாது என்பதிலேயே அவர் கவனமாக இருந்தார்.
அவன் திடீரென அவரைப் பார்த்துக் கேட்டான்:
“தாத்தா சொல்லியிருக்கிறார் – நீங்களும் அம்மாவும் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டீர்கள் என்று… இந்தக் காதல் விவகாரங்கள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் ஆகுமோ?” என்று சிறிது குத்தலாகவும் கேலியாகவும் கேட்டு அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
சுந்தரம் சிகரெட்டைப் புகைத்தவாறு சற்றுக் குனிந்த தலையுடன் யோசித்தவாறிருந்தார். ஒரு பெருமூச்சுடன் முகம் நிமிர்ந்து வேணுவைப் பார்த்தார். எதைப்பற்றியோ அவனிடம் விளக்கிப் பேச நினைத்து, ‘வயது வேறு; அனுபவம் வேறு; அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு!’ என்று அவருக்குத் தோன்றியதால், அவர் அவனுக்கு விளக்க நினைத்த விஷயத்தை விடுத்து வேறொன்றைப் பற்றிப் பேசினார்.
“சரி, இதுபற்றியெல்லாம் உன்னைப் பாதிக்கின்ற விஷயம் என்ன? அதைச் சொல்லு.”
அவர் இப்படிக் கேட்டதும் அவனுக்கு ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் இந்த மனிதர் என்னதானாகி விட்டார் என்ற பரிதாபமும் ஏற்பட ஒரு சிறு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தான்.
“அப்பா!… நீங்கள் ஒரு புரபசர்; கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர். நான்கு குழந்தைகளின் தந்தை. இத்தனை வயதுக்குமேல் நீங்கள் ஒரு விடலைபோல் திரிவதனால் உங்கள் குடும்ப அந்தஸ்து, சமூக அந்தஸ்து இவை யாவும் சீர்குலைந்து விடுகிறதே – என்று உங்களின் வயது வந்த மகன் கவலைப்படுவது தப்பு என்கிறீர்களா? அதில் அவனுக்குச் சம்பந்தமில்லை என்கிறீர்களா?”
அவன் பேசும்போது அவர் மகனின் முகத்தை நேருக்கு நேர் கூர்ந்து பார்த்தார். அவன் முகத்தில் ஒரு பக்கம் வெளிச்சமும் மறுபக்கம் இருளும் படிந்திருந்த போதிலும் தன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவனுடைய பார்வை நாலு புறமும் அலைவதை அவரால் கவனிக்க முடிந்தது.
“வேணு… நீ வயது வந்தவன் என்று சொல்லுகிறாய். அது உண்மையும் கூட. ஆனால், வயது வந்த ஒரு மனிதனுக்குரிய வளர்ச்சியை உன்னிடம் காணோமே… முதலில் ஒரு தகப்பன் என்ற முறையில் என்னுடைய ‘பர்ஸனல்’ விவகாரங்களை – அந்தரங்க விவகாரங்களை – உன்னிடம் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. நீ எனது சமூக அந்தஸ்து, குடும்ப அந்தஸ்து முதலியவை பற்றிக் கவலைப்படுவதாகச் சொல்கிறாய். ரொம்ப நல்லது. அந்த எனது தகுதிகளுக்கு ஒரு குந்தகமும் வராது. அதனைக் காப்பாற்றிக் கொள்வதில் உன்னைவிட எனக்கு அக்கறை உண்டு. அவற்றுக்கு இழுக்கு வரும் பட்சத்தில் அதனை எதிர்த்துச் சமாளிக்கும் வலிமை எனக்கு உண்டு என்பதை உனக்கு நான் எப்படி நிரூபிப்பது? ஏன் நிரூபிக்க வேண்டும்?…”
- அவர் குரல் தீர்மானமானதாகவும் கனமானதாகவும் இருந்தது. அவர் கொஞ்சம்கூடப் பதட்டமோ குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்போ இல்லாமல் தன்னிடம் பேசுகிறதைக் கேட்கையில் வேணுவுக்குத் தான் செய்வதுதான் தப்போ என்ற சிறு பயம் நெஞ்சுள் துடித்தது. இருந்தாலும் ‘இத்தனை வயதுக்குமேல் இவ்வளவு கேவலமாக ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தும் என்ன தைரியத்துடன் தன்னிடம் வாய்ச் சாதுரியம் காட்டுகிறார் இவர்’ என்ற நினைப்பு மேலோங்கி வர, அவன் கோபமுற்றான்.
“எனக்கு ஏன் நிரூபிக்க வேண்டும் என்றா கேட்கிறீர்கள்? நான் உங்கள் மனைவியின் மகன். நீங்கள் அவளுக்குத் துரோகம் செய்கிறீர்கள்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆங்கிலத்தில் கூறினான்.
“ம்… அவள் என்னைப்பற்றி உன்னிடம் புகார் செய்தாளா, என்ன?” என்று அவர் அமைதியாகக் கேட்டார்.
“இல்லை…”
“பின் எதற்கு நீ அத்துமீறி எங்கள் தாம்பத்திய விவகாரத்தில் குறுக்கிடுகிறாய்?…”
“ஐ ஆம் யுவர் ஸன்!… நான் உங்கள் மகன் – இது என் கடமை.”
“நோ ஸன்… இது உன் கடமை இல்லை! இதில் தலையிடும் அதிகாரம் ஒரு மகனுக்கு இல்லை மகனே!”
வேணு உதட்டைக் கடித்துக் கொண்டான். அவனுக்கு அழுகை வந்தது… அவரை வாய்க்கு வந்தபடி வைது தீர்த்து விட்டு இனிமேல் அவர் முகத்திலேயே விழிக்கக் கூடாத அளவுக்கு உறவை முறித்துக் கொண்டு ஓடி விடலாம் என்று தோன்றியது.
அவனுடைய தவிப்பையும் மனப் புழுக்கத்தையும் கண்டு அவருக்கு வருத்தமாக இருந்தது. தனக்குச் சம்பந்தமில்லாத, தன்னால் தாங்கமுடியாத விஷயங்களைப் பொருட்படுத்தாமல் ஒதுக்க முடியாத பலவீனத்தால் அந்த இளம் உள்ளம் இப்படி வதைபடுகிறதே என்ற கனிவுடன் அவன் கையைப் பற்றினார் அவர்.
“வேணு…”
சிறு குழந்தை மாதிரி பிணங்கிக்கொண்டு அவன் அவர் கையை உதறினான். இப்போது அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அழுகை அடைக்கும் குரலில் அவன் நெஞ்சு இளகக் கேட்டான்…
“அப்பா… எனக்கு இந்த விஷயம் ரொம்ப அவமானமா இருக்கே… நீங்க… என்னத்துக்கு… இப்படியெல்லாம் நடந்து கொள்ளணும்…”
அவர் தன்னுள் சிரித்துக் கொண்டார்.
“மை பாய், வயது வந்த ஆண் பிள்ளை என்று மீசை முறுக்கற நீ இப்படி கேட்கலாமா? உன்னோட நல்ல உணர்ச்சி எனக்குப் புரியுது. என்னைப் பத்தித் தப்பாத் தோணினால், அதை மனசிலேயே அடக்கி வை… காலப் போக்கிலே எது சரி, எது தப்பு – எந்த அளவுக்கு எது தப்பு எது சரின்னு உனக்க்குப் போகப் போகப் புரியும்… நீ செய்த காரியங்களை எல்லாம் உன்மேல் பாசமுள்ள ஒரு தகப்பன்கிற முறையிலே நான் மன்னிக்கறேன். யோசிச்சுப் பார்… தகப்பனின் தனிப்பட்ட விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு மகனே அவனை உளவு பாக்கறதும், கள்ளத்தனமா அவனது அந்தரங்கங்களில் பிரவேசிக்கிறதும் ரொம்பவும் அவமானகரமானது இல்லையா?… நான் உன்னுடைய ஸ்தானத்தில் இருந்தா இந்தச் செயலுக்காக வாழ்க்கை முழுவதும் வெட்கப்படுவேன்…”
அவர் அவனை மன்னித்து விட்டதாகவும், அவன் செய்த குற்றத்துக்கு அவனை வெட்கப்படும்படியாகவும் கூறுவதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எனினும், தொடர்ந்து அவரிடம் தான் பேசி அவரைத் திருத்துவதோ, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதோ தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று அவன் உணர்ந்தான்.
4
“அம்மா!”
அவர்கள் பெற்ற பிள்ளைகளிலேயே ரமணியம்மாளை அம்மாவென்றும், சுந்தரத்தை அப்பாவென்றும் அழைப்பவன் வேணு ஒருவன் தான். மற்றவர்கள் அனைவரும் ‘மம்மி’ ‘டாடி’ தான்.
மாடி வராந்தாவில் வந்து நின்ற வேணு “அம்மா”வென்று அழைத்தபோது, ரமணி அம்மாள் சாவகாசமாக ஈஸிசேரில் சாய்ந்து, ‘ஜீலியன் ஹக்ஸ்லி’ எழுதின ஒரு புத்தகத்தைப் புரட்டி சுவாரஸ்யமான ஒரு பாராவைப் படித்துக் கொண்டிருந்தாள்.
வேணு அந்தப் புத்தகத்தின் அட்டையைக் கூர்ந்து பார்த்து வாய்க்குள் படித்துக் கொண்டான்.
‘நாலெட்ஜ், மொராலிட்டி, அன்ட் டெஸ்டினி!’
“அம்மா! நீ படிக்கறதுக்கு இடைஞ்சலா வந்துட்டேனா?”
“சீ சீ! இதென்ன ஃபார்மாலிட்டி? வா… இப்படி உக்காரு…” என்று கனிவுடன் அழைத்தாள் ரமணி அம்மாள்.
வேணு வராந்தாவில் கிடந்த ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ரமணியம்மாள் அவனை வாஞ்சையோடும், தனக்கு இவ்வளவு பெரிய பிள்ளை இருப்பதைத் திடீரென உணர்ந்த பெருமிதத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கை விரல்களின் நகத்தை பிய்த்தவாறு குனிந்த தலையோடு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.
இத்தனை நாட்களுக்குப் பிறகு அவன் தன் மனத்தில் உறுத்திக்கொண்டிருக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான அவனது பிரச்சினை குறித்துத் தன்னோடு விவாதிக்கவோ யோசனை கேட்கவோ வந்திருக்கிறான் என்பதாக எண்ணி ஒருவகைப் பூரிப்புக்கு ஆளாகி விட்டிருந்தாள் அவள்.
எனினும் அவன் பேசத் தயங்குவதைக் கண்டு அவளே ஆரம்பித்தாள்.
“என்ன வேணு… இங்கே உனக்கு லைஃப் ரொம்ப போர் அடிக்கிறதோ?”
“ம்…” என்று தலை நிமிர்ந்த வேணு “போர் அடிக்கறதுங்கறது இல்லே… எனக்கு இந்த லைஃப் பிடிக்கலே… நான் என்ன இருந்தாலும் ஒரு மொபஸல் டைப்தானே? நீங்கள்ளாம் ரொம்ப நாகரிகமா – அல்ட்ரா நாகரிகமா – வாழற வாழ்க்கை எனக்குச் சரிப்பட்டு வரலே…” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்து உள்ளங்கையில் விரலால் சித்திரம் வரைய ஆரம்பித்தான்.
சற்று நேர மௌனத்துக்குப் பின் ரமணியம்மாள் சொன்னாள்:
“உன்னுடைய குழப்பம் என்னன்னு எனக்குச் சரியா புரிஞ்சுக்க முடியலே… நாங்க இத்தனை வருஷமா எப்படி வாழ்ந்து வரோமோ அப்பிடித்தான் இருக்கோம்னு நான் நினைக்கிறேன். புதுசா பொருத்தமில்லாத ‘அல்ட்ரா’ நாகரிகம் ஏதும் வந்துட்டதா எனக்குத் தோணலே… உன் மனசிலே இருக்கிறதெ வெளிப்படையா சொன்னாத்தானே எனக்குப் புரியும்…” என்றூ அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே இவன் மனசில் என்னத்தை வைத்துக் கொண்டு இவ்விதம் குழம்புகிறான் என்றறிய அவளும் பிரயாசைப்பட்டாள்.
“எனக்கு இங்கே ஏண்டா வந்தோம்னு இருக்கு… யாரோ அந்நியர் வீட்டிலே இருக்கிற மாதிரி இருக்கு. இங்கேயுள்ள பழக்க வழக்கங்களும் எனக்கு ரொம்ப அந்நியமா இருக்கு… உங்க உறவுகளும் பாசமும் எல்லாம் வெளிப்பூச்சா இருக்கு. நீங்க ரொம்பவும் பொய்யானதொரு வாழ்க்கை வாழறீங்க. நான் திரும்பவும் தாத்தா வீட்டுக்குப் போயிடலாம்னு நெனைக்கிறேன்…” அவன் நிறுத்தி நிறுத்தித் தெளிவாகக் கூறியவற்றை அவளும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
பிறகு இருவருமே சற்று அமைதியாக இருந்தனர். அப்போது மத்தியான நேரம். மணி பதினொன்றாகி இருந்ததால், வீடு அமைதியாக இருந்தது. கீழே சமையல் அறையில் சமையற்காரப் பாட்டிகூடத் தூங்கிக் கொண்டிருந்தாள். வீடும் வீதியும் ஓவென்று வெறிச்சோடிக் கிடந்தது.
“வேணு… திடீர்னு உனக்கு இப்போ இது ஒரு பிரச்னையாகிப் போன காரணம் என்ன?… தாத்தா வீட்டு வாழ்க்கைக்கும், நம்ப வீட்டுச் சூழ்நிலைக்கும் நெறைய வித்தியாசம் இருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா உன் வயசுக்கு நியாயமா அந்த வாழ்க்கைதானே ‘போர’டிக்கணும்! – சரி – ருசிகள்ங்கறதே பழக்கத்தினால் படிகிற பயிற்சிதானே… ஆனாலும் இதுதானே உன் வீடு. உனக்குப் பிடிச்சமாதிரி நீ இங்கே வாழறதெ யாராவது தடுக்கிறாங்களா என்ன? எது இருந்தாலும் இல்லேன்னாலும் இன்னொருத்தர் சுதந்திரத்திலே மற்றவர் தலையிடற, அதிகாரம் பண்ற, ஆட்டிப் படைக்கிற போக்கு மட்டும் நம்ப வீட்டிலே யாருக்கும் கெடையாது… உனக்கு ஞாபகம் இருக்குதோ, என்னமோ?… உங்க பாட்டியும் தாத்தாவும் இங்கே வந்துட்டுப் பொறப்பட்டப்போ – அவங்களோட போகணும்னு நீ அடம் பிடிச்சே!… அவங்களுக்கும் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போயி வெச்சிக்கணும்னு ஆசை!… உன் ஆசைக்காகவே தான் மனசொப்பி அனுப்பினேன்… அந்த அளவுக்கு இந்த வீட்டிலே குழந்தைகளின் சுதந்திரத்துக்குக் கூட அவ்வளவு மதிப்பு என்னைக்கும் உண்டு… உனக்கும் இங்கே உன் விருப்பப்படி இருக்கறதுலே என்ன தடை… ம்… சொல்லு வேணு!” என்று முகத்தைப் பார்த்தபோது அவன் மௌனமாக அவளை வெறித்துப் பார்த்தான்.
“அதனாலே – உனக்கு ஊருக்கே போகணுங்கறதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கணும்னு எனக்குத் தோணுது… என்ன சரிதானே?” என்று லேசான சிரிப்புடன் கேட்டாள் ரமணி அம்மாள்.
“ஆமாம்…வேற காரணம் இருக்கு…” என்று கூறித் தன் மனத்துள் கிடந்து அரிக்கும் தந்தையைப் பற்றிய உண்மைகளை அவளிடம் கூறுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் அவன் தவித்தான்.
“வேணு!… அதுவுமில்லாமல் நீ என்னென்னவோ சொல்றியே; ஏதோ வெளிப்பூச்சுன்னும் பொய்யின்னும் இந்த வாழ்க்கையைப் பத்தி ஏதோ சொன்னே… என்ன விஷயம்? நீ எப்படி எங்களைப் பத்தி அப்படி அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வரலாம்… நீ எதை வெளிப்பூச்சுன்னு நெனைக்கிறே? எல்லா வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அளவுக்கு ஏதோ ஒருவிதமான வெளிப்பூச்சு இருக்கத்தான் செய்யும் வேணு. நீ எதைப்பத்தி சொல்றே? உன் மனசு ரொம்ப ஆழமாக் காயப்பட்டுத்தான் இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வருதுன்னு எனக்குத் தோணுது… என்ன நடந்தது சொல்லேன்…”
இப்போது அவன் சட்டைப் பையிலிருந்து கர்சீப்பை எடுத்து மூக்கையும் கண்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்டான். முகமே சிவந்து குழம்பியிருந்தது.
“அம்மா… எனக்கு அப்பாவின் நடத்தை புடிக்கலே…” என்று வானத்தை வெறித்தவாறு முகம் திரும்பிக் கூறினான். அவளிடமிருந்து பதிலில்லை. அந்தத் தைரியத்தில் அவள் முகத்தைத் திரும்பிப் பாராமல் தொடர்ந்து சொன்னான்:
“உனக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபம் வருமே, உங்கள் குடும்பத்தின் அமைதி என்னாலே கெட்டுப் போகுமேன்னு நெனச்சி நெனச்சித்தான் நான் இத்தனை நாளா குழம்பிக்கிட்டே இருந்தேன். கெட்டுப்போகிற ஒரு குடும்பத்தின், அமைதி மட்டும் கெடாமலிருப்பது எத்தனை நாளைக்கு முடியும்?… அவர் உனக்குத் துரோகம் பண்றாரு அம்மா. இது எனக்குத் தெரிஞ்சும் நான் இதை உன்னிடம் மறைச்சு வெச்சா அந்தத் துரோகத்துக்கு நானும் உடந்தைன்னு அர்த்தம்… அதனால் தான் இந்த அவமானகரமான குடும்பத்திலே இருக்க எனக்குப் புடிக்கலே… அவரை நானா திருத்த முடியும்?… முடிஞ்சா நீ திருத்து… இது உங்க விஷயம்… நான் போறேன்” என்று படபடவென்று கூறிவிட்டு அதற்குமேல் அந்தத் தாயின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லாமல் அவன் அங்கிருந்து ஓடிவிடத் துடித்தான்.
அவன் மனசில், அவள் அழுவாளோ, அழுதுகொண்டே அவரைப்பற்றிக் குத்திக் குடைந்து எதையாவது கேட்பாளோ, ஆத்திரப்பட்டு அந்தத் துரோகமிழைத்த கணவனைச் சபிப்பாளோ, தான் பல காலம் சந்தேகப்பட்டு மனசில் வைத்திருந்த விஷயம் மகன் வரைக்கும் தெரிந்து விட்டதே என்று அவமானத்தால் சாம்பி விடுவாளே என்று அஞ்சியே ஒரு குற்றவாளி மாதிரி அவன் அவளிடமிருந்து தப்பியோட யத்தனித்தான்.
“வேணு!” என்று அமைதியான, உணர்ச்சி மிகுதியால் சற்றுக் கனத்துவிட்ட அவனது தாயின் குரல் அவனைத் தடுத்தது.
அவள் முகத்தில் தான் எதிர்பார்த்த எந்தக் குறியுமில்லாமல் அவள் மிகுந்த கனிவுடன் புன்னகை காட்டி “உட்காரு” என்றதும் நாற்காலியிலிருந்து எழுந்த வேணு மீண்டும் உட்கார்ந்தான்.
“நீ ஏதோ உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்னை எதையோப் பேசப் போறேன்லு நான் நெனைச்சேன். அப்பாவைப் பத்திய பிரச்னையா அது!… நல்ல வேடிக்கை!” என்று அவள் கசிந்து சிரித்தாள்.
“அப்படின்னா உனக்கு ஏற்கனவே அதெப் பத்தியெல்லாம் தெரியுமா?” என்று முனகுவது போல் கேட்டான் அவன்.
“நான் அதெப்பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க விரும்பினதில்லே வேணு…” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினாள் அவள்.
அவள் தொடர்ந்து சொன்னாள்:
“இதோ பார். அவர் உன் அப்பாங்கிறது எவ்வளவு உண்மையோ – என் புருஷன்ங்கிறது எவ்வளவு உண்மையோ – அவ்வளவு உண்மை அவர் ஒரு புரபசர்ங்கிறதும், அவர் ஒரு பெரிய அறிவாளி, படிப்பாளி, சமூக அந்தஸ்து மிக்கவர்ங்கறதும்… இல்லியா?…”
அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
அவளே சொன்னாள்:
“நீ எது எதுக்காக வெல்லாம் உன் அப்பாவை நினைச்சுப் பெருமைப்படலாமோ அதையெல்லாம் விட்டுட்டு, எதைப் பத்தி உனக்கு முழுசாத் தெரியாதோ, எது ரொம்பவும் அந்தரங்கமானதோ அதைக் குடைஞ்சு வருத்தப்படறதும் அவமானப்படறதும் சரின்னு தோணுதா உனக்கு?”
அவன் திடீரென்று கொதித்துப் போய்ச் சொன்னான். “முழுசாத் தெரிஞ்சுதான் அம்மா பேசறேன். ஐ ஹாவ் புரூப்ஸ்! என்னால் நிரூபிக்க முடியும்… அவருக்கு வந்த போன்கால்… அவர் பேசறதை நான் என் காதாலே கேட்டேனே… அன்னிக்கி ராத்திரி தியேட்டர்லே அதுக்காகவே போயி இந்தக் கண்ணாலே பார்த்தேனே… அவர் ரூமில் இருக்கிற டிராயர்லே அவருக்கு வந்த லவ் லெட்டர்ஸ் ஒரு பைலே இருக்கே… அவர் முகத்திலேயே அதை வீசி எறிஞ்சப்ப அவராலேயே அதை மறுக்க முடியலே…. அம்மா!”
“ஓ! இட் ஈஸ் எ ஷேம் ஆன் யூ! புரூப்ஸ் இருக்காம் புரூப்ஸ்! வேணு, பெரிய மனிதர்களையும் பிரபலமானவங்களையும் அவதூறு செய்யறதே தொழிலாகக் கொண்டிருக்கே சில மஞ்சள் பத்திரிகைங்க… அவங்ககிட்டேயும் அதுக்கெல்லாம் புரூப் இருக்கும். அதுக்கெல்லாம் புரூப் இருக்காதுன்னா அதை மஞ்சள் பத்திரிகைன்னு கௌரவமானவங்க ஒதுக்கறாங்க? அது ஒரு மனுஷனுடைய பெருமை திறமை எல்லாத்தையும் விட்டுட்டு அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பத்திப் பேசறதை ஒரு பிழைப்பா வெச்சிருக்கிறதனாலே சமுதாயத்துக்கோ நாகரிகத்துக்கோ கேடுதானே ஒழிய, லாபமில்லே. அதனாலே தான் நாம மஞ்சள் பத்திரிகைகளைக் கண்டா அருவருத்து ஒதுக்கறோம்?… இப்ப நீ பண்ணி இருக்கியே இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு. நீயும் அவங்க மாதிரிதான் ‘புரூப்’ இருக்கு என்கிறே…. வேணு… எனக்கு உன்னை நெனச்சி ரொம்ப வருத்தமா இருக்கு…. ஷேம். இட் ஈஸ் அ ஷேம் ஆன் யூ!” என்று ரமணியம்மாள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
“நீ நெஜமா, இப்படியெல்லாம் செய்தியா… வேணு… எவ்வளவு உயர்ந்த மனுஷனை எவ்வளவு கேவலமா நடத்திட்டே!” என்று கூறுகையில் உடலும் மனமும் அவளுக்குப் பதறின.
“இவள் என்ன மனுஷி! இவள் என்ன மனைவி!” என்று புரியாமல் திகைத்தான் வேணு.
“அம்மா – உன்னுடைய நல்லதுக்கும் இந்தக் குடும்பத்தோட நன்மைக்கும்தான் தப்புன்னு தெரிஞ்சும் நான் அவர் விஷயத்திலே அப்படி நடந்துகிட்டேன்…” என்று அவளுடைய நிலையைப் பார்த்து அவன் சமாதானம் கூற முயன்றான்.
“வேணு… எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா…. அவரை நெனச்சி இல்லே… உன்னைப் பாக்கறப்போ எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா… நீ அப்படி நடந்துக்கலாமா? ஒரு தகப்பன்கிட்டே ஒரு மகன்…. ஐயோ! என்னாலே கற்பனை செய்து பார்க்கக்கூட முடியலே வேணு!”
“அவர் உனக்குத் துரோகம் செய்யறார்னு தெரிஞ்சும்…”
“இட் இஸ் மை பிராப்ளம்!” என்று அவள் இடைமறித்துக் கூவினாள்: “அது என் விவகாரம்!… உனக்கு எங்க தாம்பத்தியம் பற்றிய அந்தரங்கத்தில் தலையிட என்ன உரிமை?” என்று அருவருத்து உடல் சிலிர்த்தாள்.
“சொல்றேன் கேள். நாங்க இருபத்தைஞ்சு வருஷம் அமைதியா வாழ்ந்திருக்கோம். கடைசிவரைக்கும் அப்படியே வாழ்வோம்… அதனால்தான் அந்த அமைதியை – அந்தச் சந்தோஷத்தைக் கெடுத்துக்கற எந்த விஷயத்திலேயும் நான் தலையிட விரும்பறது இல்லே… எனக்கும் லேசாத் தெரியும்… அதனால் என்ன? என்னை விட அவருக்கு இனிய துணை யாரும் இருக்க முடியாது… நீ சொல்றியே அதைப் பத்தி எனக்கு மனசுக்குள்ளே ஆழ்ந்த வருத்தம் உண்டுதான்.” இதைச் சொல்லும்போது எவ்வளவு அடக்கியும் அடங்காமல், அவளது இதயத்தில் பாறையாய் ரகசியமாய்க் கனத்துக் கிடக்கும் ஓர் ஆழ்ந்த துயரம் உருகிற்று… கண்களில் தாரை தாரையாய் வடியும் கண்ணீரை – மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே அங்கிருந்து எழுந்து சென்று வராந்தாவில் ஒரு நிமிஷம் நின்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் மகனின் எதிரே அமர்ந்தாள்.
“வேணு! நீ நினைக்கிற மாதிரி வாழ்க்கை அவ்வளவு ‘ஸிம்ப்பிள்’ இல்லேடா… அது ரொம்ப சிக்கலானது. குழப்பமானது வேணு. அந்தச் சிக்கலிலும் அந்தக் குழப்பத்திலும் எப்படி ஒரு குடும்பத்தை அமைதியாகவும் சந்தோஷமாகவும் நடத்தறதுங்கறதுதான் வாழ்க்கைக் கலை!… பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லேன்னா – அன்பு காதல்ங்கறதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. உன்னை மாதிரி நான் நடந்துகிட்டிருந்தா இந்தக் குடும்ப அமைதியும் அவரோட கௌரவமும் குலைஞ்சு போறதுக்கு நானே காரணமாகிப் போயிருப்பேன்… என்னுடைய ‘பொஸஸ்ஸிவ்னஸ்’காக – என்னுடைய பிடியில் அவர் இருக்கணும்கறதுக்காக, இந்தக் குடும்பத்தோட அமைதியையும், அவரோட கௌரவத்தையும், என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் விலையாக் கொடுக்கிற அளவு நான் சுயநலக்காரியாகறது எவ்வளவு கேவலமானது!… இப்படியெல்லாம் நான் சொல்றதைக் கேட்டு நான் ஏதோ ரகசியமான சோகத்தை அனுபவிச்சிக்கிட்டு வாழறேன்னு நீ கற்பனை செய்து கொள்ளாதே! ஆனால், என் மனசிலே ஒரு சின்னத் துயரம் இல்லாமல் இல்லை. முழுமையான ஆனந்தம் என்பது அவ்வளவு சுலபமானதா என்ன?…”
“பேச எனக்கு உரிமை இருக்கா இல்லியாங்கறது பிரச்னையே இல்லே… அதனாலே என்ன பலன்னு யோசிக்க வேண்டாமா? இப்போ என்ன நஷ்டம்னு நான் யோசிச்சேன்… நான் அதைப் பத்தி பேசாதது ஒரு பண்பு வேணு… ஆமாம், ஒருத்தரை நாம் மதிக்கிறோம்கறதுக்கு என்ன அர்த்தம்? அவங்களோட அந்தரங்கத்தை – பிரைவஸியை – தெரிஞ்சுக்கறதுக்குப் பலவந்தமா முயற்சி செய்யாமே இருக்கறதுதான். ஒருத்தர் மேலே அன்பு செலுத்தறதுன்னா என்ன? அவங்களோட அந்தரங்கமான ஒரு பலவீனம் நமக்குத் தெரிஞ்சபோதிலும், அதுக்காக அவங்களோட மத்த தகுதிகளையும், பெருமைகளையும் குலைக்காமல், அந்தப் பலவீனமும் சேர்ந்தது தான் அவங்கன்னு புரிஞ்சுகொள்றது தான்…”
“ஓ! ஒருவரின் அந்தரங்கம் எவ்வளவு புனிதமானது! இட் இஸ் ஸம்திங் ஸேக்ரட் வேணு! இதிலே இன்னொரு இரண்டாவது நபரின் பிரவேசம் – அது யாராயிருந்தாலும் ரொம்பக் காட்டுமிராண்டித்தனமானது… அசிங்கமானது…”
“அம்மா…நீ அவரோட மனைவி!”
“ஸோ வாட்? அந்த உரிமையை நான் துஷ்பிரயோகம் செஞ்சா அந்த உரிமையே எனக்கு மறுக்கப்படலாம் இல்லையா?”
“உன் விஷயத்தில் அவர் அப்படி இருப்பாரா?”
“இருப்பாரான்னா கேட்டே? இருக்கிறார் வேணு… ஒரு புருஷன் தன் மனைவியையோ, ஒரு மனைவி தன் புருஷனையோ சந்தேகப்படறதுக்கும், பரஸ்பரம் அந்தரங்கமான விவகாரங்களை எல்லை கடந்து ஆராயறதுக்கும் காரணமே கெடையாது. ஒரே ஒரு காரணம் தான். அவங்க தங்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா நினைச்சிக்கறதுதான் காரணம்…”
“புருஷன்… மனைவி – மகன் – தாய் – தகப்பன் எல்லாருமே ஒரு உறவுக்கு உட்பட்டவங்கதான் – ஆனா ஒவ்வொருவரும் ஒரு ஸெபரேட் இண்டிவிஜிவல் – தனி யூனிட் இல்லியா? ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் ஒரு தனிப்பட்ட அந்தரங்கம் உண்டு. அதை கௌரவிக்கணும் வேணு… யார் மேலே நமக்கு ரொம்ப மதிப்போ அவங்க அந்தரங்கத்தை நாம் ரொம்ப ஜாக்கரதையா கௌரவிக்கணும்… உன் அப்பாவை நீ என்னன்னு நெனைச்சே?… என்னாலே நீ கேட்ட மாதிரி அவரைக் கேட்க முடியுமா? கற்பனை பண்ணக்கூடச் சக்தி இல்லேப்பா எனக்கு… ஓ! நீ என்ன செஞ்சுட்டே?”
“பரவாயில்லை. உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ராங் மேன்! இதைத் தாங்கிக்குவார்… அவர் தனது பலவீனங்களையும் தாண்டி வருவார்… நிச்சயம் தாண்டி வந்துடுவார். வாழ்க்கை நொம்பச் சிக்கலானது வேணு. வாழ்க்கையைப் புரிஞ்சுக்கணும். இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பார் – உனக்கு இது மாதிரி சிந்தனைகள் விசாலமான பார்வையைத் தரும்.”
வேணுவுக்கு ஒரே குழப்பமாக் இருந்தது. அவன் மனத்தில் தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான் லட்சியத் தம்பதியாய்த் தோன்றினர்.
அவனுக்கு புரியவே இல்லை – அவர்கள் தாத்தாவும் பாட்டியுமாகவே கலியாணம் செய்து, தாத்தாவும் பாட்டியுமாகவே தாம்பத்யம் நடத்தி வாழ்ந்திருக்கவில்லை என்பது.
5
சில நாட்களுக்குப் பின் ஒருநாள் மாலை. கல்லூரியிலிருந்து வந்த சுந்தரம் உடைகளைக் களைந்து கொண்டிருந்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விட்ட வேணுவிடமிருந்து வந்த கடிதத்தைக் கொண்டு வந்து அவரிடம் தந்தாள் ரமணி அம்மாள்.
அதில் முக்கியமான கடைசி வரிகள் இவைதான்:
“நான் தாத்தாவின் பேரனாகத்தான் இருக்க லாயக்கானவன். வந்துவிட்டேன். உங்கள் வாழ்க்கை நெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு,வேணு.”
கடிதத்தைப் படித்து முடித்ததும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்…
“பழைமைவாதிகள் என்பவர்கள் எழுபது வயதுக்கு மேல்தான் இருக்கணும்கறது இல்லே… இருபது வயசிலேயும் இருக்கலாம்…” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
ரமணி அம்மாள் சற்று நேரம் அவர் முகத்தையே ஏக்கத்தோடு வெறித்து நோக்கினாள்… அவள் கண்கள் சிவந்து கலங்கின…
அவள் தனது ஆழ்ந்த துயரத்தையே ஒரு புன்முறுவலாக்கி அவரிடம் கேட்டாள்: “இன்னுமா… நீங்கள்… நீங்கள்….” என்று துடித்த அவள் உதடுகள் தனது கன்னத்தில் அழுந்தும்படி அவர் அவளைத் தழுவிக் கொண்டார்.
அதன் பிறகு நடந்தவை, அவர்களின் அந்தரங்க விவகாரங்கள்!
-----------------
36. சீசர்
அபவாதத்துக்கு ஆளாகி நிற்கிற மங்களம் – சீதாராமய்யரின் மனைவி – பரிதாபகரமான அழுகைக் குரலில் தெய்வத்திடம் முறையிடுகிற மாதிரி எல்லோரையும் சபித்து அலறுகிற குரல் கேட்கிறது:
“நீங்களெல்லாம் நன்னா இருப்பேளா?… இப்படி அபாண்டமா சொல்றேளே… அவர் வரட்டும்… கை நிறைய நெருப்பை அள்ளிண்டு நான் சத்தியம் பண்றேன்…”
அவள் அலறியபோது வார்த்தைகள் தெளிவாகக் கேட்காமல் ஆங்காரமும் கோபமும் கிறீச்சிட்டு அழுகையில் குழம்புகிறது.
ஏதோ கைகலப்பு மாதிரி, யாரையோ யாரோ பிடித்து இழுக்கிற மாதிரி, கொண்டுபோய்ச் சுவரோரமாகத் தள்ளுகிற மாதிரியெல்லாம் சத்தங்கள் கேட்கின்றன.
“ராஸ்கல்! எங்கேடா ஓடப் பாக்கறே? சீதாராமய்யர் வரட்டும். அவர் கையிலே செருப்பைக் குடுத்து உன்னை அடிக்கச் சொல்லலேன்னா என் பேரை மாத்தி வச்சுக்கோ. அவர் வீட்டில் தண்டச்சோறு திங்கறதுமில்லாமல்… துரோகிப் பயலே! நானானா வெட்டிப் போட்டுடுவேன் உன்னை, இப்போவே” – அப்பா, சாமி வந்த மாதிரி குதிக்கிறார். அப்பாவுக்குத்தான் சாமி வருமே அடிக்கடி. காலையிலிருந்து இது மூணாவது தடவை. இப்போ அம்மாவும் கூடச் சேர்ந்து கொண்டாள்.
“ஐயோ! உங்களுக்கு ஏன்னா தலையெழுத்து? அந்தப் பிராமணர் மொகத்தைப் பார்த்து நாம்ப இடம் கொடுத்தோம். கண்ட செனிகளையும் இழுத்துண்டு வந்து ஆத்திலே விட்டுட்டு அவரானா கார்த்தாலே போயிட்டு ராத்திரி வரார். இங்கே நடக்கற கண்றாவியெல்லாம் நாம்பன்னா பார்க்க வேண்டி இருக்கு… அவர்கிட்டே சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணுங்கோன்னு சொன்னா… உங்களை யார் இப்படி வந்து நிக்கச் சொன்னா? கர்மம்! வாங்கோ உள்ளே.”
“நீ போடி உள்ளே” – இந்த உறுமல் போறும். அம்மா இத்தனை நேரம் உள்ளே போயிருப்பாள்.
“ஸார், நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கோ; சீதாராமய்யர் வரட்டும். அவா எப்படிப் போனா நமக்கென்ன?…” எதிர் போர்ஷன் நாராயணன் அப்பாவைச் சமாதானம் பண்றார்போல இருக்கு.
“நமக்கென்னவா? நாலு சம்சாரிகள் குடி இருக்கிற இடத்தில் இந்த அக்கிரமம் அடுக்குமாங்காணும்? பசு மாதிரி அந்த மனுஷனுக்கு இவா பண்ற துரோகத்துக்கு நாமும் துணை போற மாதிரின்னா ஆயிடும்?” வீடே இடிந்து போகிற மாதிரி அப்பா கத்துகிறார். வீட்டுக்காரர் இல்லையா! எல்லாக் குடித்தனக்காரர்களும் வாசலில் கும்பல் கூடி நிற்கிறார்கள் போல் இருக்கிறது. நல்ல வேளை! சின்னப் பசங்கள் யாரும் இல்லை. எல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கும். இந்த அப்பாவுக்குக் கொஞ்சம்கூடப் புத்தி கிடையாது. சீ! மனுஷன் சுத்த அல்பம். காலையிலேயே எனக்குத் தெரியும், இப்படி என்னமோ நடக்கப் போறதுன்னு. கொஞ்ச நாளாகவே பொம்மனாட்டிகள் எல்லாம் ஒத்துமையாக் கூடிண்டு – இதிலே மங்களத்தை மட்டும் சேர்த்துக்காமல் – ரகசியம் பேசினா. அப்புறம் காலையிலே அம்மா போயிப் போயி அப்பாவோட ரகசியம் பேசினா. அப்பா மூக்கை வெடச்சிண்டு, செருமிச் செருமி உறுமிண்டு, முற்றத்தில் போய் நின்னுண்டு சீதாராமய்யர் வீட்டை மொறைச்சுப் பார்த்தார். அப்பவே எனக்குத் தெரியும், என்னமோ ரகளை நடக்கப் போறதுன்னு. நான் ஒரு மடையன். பத்து மணிக்கிச் சாப்பாடானதும் வழக்கம்போல் எங்கேயாவது வெளியில் போய்த் தொலைந்திருந்தால் இந்தக் கர்மத்தையெல்லாம் காது கொடுத்துக் கேட்க நேர்ந்திருக்காது. பேப்பரிலே ‘வான்டட் காலம்’ பார்த்துண்டே தூங்கித் தொலைத்தேன்.
காலையிலே நான் சாப்பிடும்போதே தட்டிலே சாதத்தைப் போட்டுட்டு அம்மா அப்பாகிட்டே ஒரு தடவை ஓடி என்னவோ கையையும் காலையும் ஆட்டிண்டு ரகசியக் குரலிலே பேசிண்டிருந்தாள். அப்போவே, அவா ரகசியம் அசிங்கமா இருந்தது; அல்பமா இருந்தது.
நான் சாதத்தைத் தட்டில் பிசைந்துகொண்டே மோருக்காகக் காத்திருந்தேன். யார் எப்படிப் போனால் இவாளுக்கென்னவாம்? எதுக்காக யாரைப் பத்தியாவது அபாண்டமா ஏதாவது சொல்லணும்? இதிலே இவாளுக்கு ஒரு சந்தோஷம் இருக்குன்னு தெரிஞ்சப்போ இவாளுக்குப் பிள்ளையாய் பிறந்ததுக்காகச் சுவத்திலே முட்டிக்கலாம் போலிருந்தது.
“அம்மா…”ன்னு பல்லைக் கடிச்சிண்டு கத்தினேன். “எனக்கு மோரை ஊத்தித் தொலைச்சுட்டு அப்புறமாப் போயி ஊர் வம்பு அளக்கலாம்.”
அவ்வளவுதான்; அப்பாவுக்குச் சாமி வந்துடுத்து; “துரைக்கு ஆபிசுக்கு நேரமாயிடுத்தோ?”ன்னு ஆரம்பிச்சவர் நான் சாப்பிட்டு எழுந்திருக்கறதுக்குள்ளே நூறு ‘தண்டச் சோறு’ போட்டுட்டார். நான் தலையைக் குனிஞ்சிண்டு, இன்னும் நன்னா தட்டிலே கவிழ்ந்துண்டு – கண்ணிலேருந்து தண்ணி முட்டிண்டு வந்து சாதத்திலே விழறது – எல்லாத்தையும் சேர்த்துக் கரைச்சுக் குடிச்சுட்டு மாடிக்கு வந்து விழுந்தது தான்.
‘தண்டச் சோறு, தண்டச் சோறு’ன்னு வார்த்தை கேட்டுண்டே வயத்தை நிரப்பிக்கிறது எனக்கு வழக்கமாப் போச்சு. எங்கேயாவது ஓடிடலாமான்னு தோண்றது. எங்கே ஓடறது? எவ்வளவு அப்ளிகேஷன்தான் போடறது? எத்தனைப் பேரைத்தான் பார்த்துப் பல்லைக் காட்டறது? உடம்பாவது வாட்ட சாட்டமா இருக்கா? மிலிட்டிரிக்குப் போகலாம்னு போனா ‘வெய்ட்’ இல்லேன்னு அனுப்பிச்சுட்டான். எஸ்.எஸ்.எல்.சி படிச்சவனுக்கு என்ன உத்தியோகம் கிடைக்கும் இந்தக் காலத்திலே. பி.ஏ., எம்.ஏ., எல்லாம் திண்டாடறான். என்ன வேலையானாலும் நான் செய்யத் தயார்தான். நம்ம சீதாராமய்யர் கிட்டே கூடத்தான், ‘உங்க கான்டீன்லே வந்து சர்வர் வேலை செய்யறேன்’னு சொல்லி வச்சிருந்தேன். ஆனால் அவா கான்டீன்லே போன வாரம் ‘ரிட்ரெஞ்ச்மெண்ட்’ ஆயித்தானே அந்த மணி வந்து இவாத்திலே உட்கார்ந்துண்டு இப்போ இவ்வளவு ரகளையும் ரசாபாசமும் ஆகி இருக்கு.
“சீதாராமய்யர் ஆத்திலே மணி தண்டச்சோறு தின்னால் இந்த அப்பாவுக்கு என்னவாம்? என்னை இவர் ‘தண்டச்சோறு’ன்னு சொல்றப்போதெல்லாம் அந்த மணியையும் சேர்த்துக்கறார்னு எனக்குத் தெரியும். இவர் மட்டும் என்னவாம்! உடம்பு வளைஞ்சு எங்கேயாவது ஒரு மாசம் வேலை செய்திருக்காரா? தாத்தா கட்டிப்போட்ட வீடு. அஞ்சறைப் பெட்டி மாதிரித் தடுத்து நானூத்தி எண்பது ரூபாய் வாடகை வரது. சீட்டாடிண்டே இவர் காலத்தைத் தள்றார். இவரே சம்பாதிச்சு இந்த வீட்டைக் கட்டி இருந்தார்னா, ஒருவேளை கூட இந்த வீட்டிலே நான் சாப்பிட மாட்டேன். இதெல்லாம் கேக்கறதுக்கு ரொம்ப நாழியாகுமா? சில சமயங்களில் கேட்டே விடலாமானு கூடத் தோண்றது. கேட்டுடறது ஒண்ணும் கஷ்டமில்லே. கேட்டுட்டு அப்புறம் என்ன பண்றது? அப்புறமும் இங்கேயே உட்கார்ந்து தண்டச் சோறு தானே திங்கணும்? நான் தண்டச் சோறு திங்கறது உண்மைதானே? இதுக்கு நீங்க திங்கறதும் தண்டச் சோறுதான்னு சொல்றது பதில் ஆயிடுமா? இந்த வீட்டைத் தாத்தா கட்டி இருந்தால் என்ன, முப்பாட்டன் கட்டி இருந்தால் என்ன? இப்போது இந்தக் குடும்பத்துக்கு அதிகாரி அப்பாதானே? அவர் எவ்வளவு முரடனாக இருந்தாலும், முன்கோபியாக இருந்தாலும், அல்பமாக இருந்தாலும், அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவரை நேரில் முகத்துக்கு முகம் பார்த்துட்டா ‘ஆகட்டும்’ ‘சரி’ ‘உண்டு’ ‘இல்லே’ன்னு ஒவ்வொரு வார்த்தைத்தான் பேச முடியறது. அவர் சத்தம் போட்டுட்டால் அதுகூட வரமாட்டேனென்கிறது. இப்போ கொஞ்ச நாளாத்தான் அப்பா என்னை அடிக்கிறதில்லை. ஆனால் அடிச்சுடுவாரோ என்கிற பயம் இப்போதும் இருக்கு. அப்பா இருக்கிற வரைக்கும் அந்தப் பயம் இருக்கும் போல இருக்கு …”
அதோ, அப்பா கூப்பிடறார்.
“இதோ வந்துட்டேன்… இங்கேதான் இருக்கேன்…” வேஷ்டியை இழுத்துச் செருகிண்டு படபடன்னு மாடிப்படியிலே இறங்கி ஓடறேன்.
நான் நினைத்தது போலவே விஷயம் ரொம்ப முற்றித்தான் போய்விட்டது. முற்றத்திலே எல்லாரும் கூட்டமா நிக்கறா. மங்களம் என்னைப் பார்த்துட்டு முறையிடற மாதிரி உதடு பிதுங்க அழறாள். மணி பயந்துபோய் முழங்காலைக் கட்டிண்டு குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்தான். யாரோ பிடிச்சு உலுக்கின மாதிரி அவன் தலை மயிர் கலைந்திருக்கு. சட்டை கூட காலர் கிட்டே கொஞ்சம் கிழிந்திருக்கு. தன் உடம்பு பலத்தாலே அவனை ஒரு பக்கம் அடக்கி உட்கார வைத்துவிட்ட திமிரில் அப்பா மடித்துக் கட்டிய வேஷ்டியோடு காலை அகட்டிக்கொண்டு இடுப்பிலே ஒரு கையை வைத்து நெப்போலியன் மாதிரி நிற்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு பீரங்கிப் படை வரிசை இல்லை. அவ்வளவுதான். அப்பாவின் அட்டகாசத்தில் எல்லாரும் கிலியடித்துப் போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது. யார் என்ன பேசினாலும் இப்போது அவர் எடுத்தெறிந்து பேசிவிடுவார் என்கிற பயத்தால் நியாய அநியாயம் தெரிந்தவர்கள் கூட – பயம் வந்துவிட்டால் நியாய அநியாயம் எங்கே தெரிவது? – என்னை மாதிரியே அப்பாவைச் சார்ந்தவர்கள் மாதிரி அடங்கி இருக்கிறார்கள்.
மங்களம் அழுவது ரொம்பப் பாவமாக இருக்கிறது. மணியை அடித்தோ இழுத்தோ, அவன் மீது கை நீட்டி இருக்கிற அப்பாவின் செய்கை, இவர் எவ்வளவு ரவுடித்தனமானவர் என்று கண்ணெதிரே நிரூபணமாகுகிறபோது அவமானம் என்னைப் பிடுங்கித் தின்றது.
இவருடைய கோபத்துக்கும் இந்தக் காரியங்களுக்கும் உண்மையிலேயே நியாயமிருந்தாலும், இவரே தன் வாயால் பசு என்றும், நல்லவர் என்றும், யோக்கியர் என்றும் சொல்லுகிற அந்த சீதாராமய்யருக்கு இவரது செய்கையால் ஏற்பட்டுவிட்ட அவமானம் புரியாத இவரது அறியாமை எனக்கு இன்னும் வருத்தமாக இருக்கிறது. இந்த அப்பாவின் குணம் எனக்குத் தெரியும். இவர் வெட்டிவிட்டுக் கட்டிக்கொண்டு அழுவார்.
மாடியிலிருந்து இறங்கி வருவதற்குள் ஆத்திரம் தாங்காத அப்பா என்னை மேலும் இரண்டு தரம் கூப்பிட்டு விட்டார். முதல் குரல் ‘டே அம்பி’ இரண்டாவது என் பெயரைச் சொல்லி; மூன்றாவது பல்லைக் கடித்துக் கொண்டு ‘ ஏ, தடியா?’
நான் எதிரே வந்து நிற்கிறேன். உள்ளுக்குள் என்னமோ நடுங்கிற்று.
“அந்தக் கேன்டீனுக்குப் போய்க் கையோட சீதாராமய்யரை இழுத்துண்டு வா… போடா”
அவ்வளவுதான்; ‘இந்த அளவுக்குத் தப்பித்தேன்’ என்று நான் வெளியே ஓடுகிறேன். தெருவுக்கு வந்த பிறகு மெதுவாக நடக்க ஆரம்பித்து நிதானமாக யோசிக்க ஆரம்பிக்கிறேன்.
எவ்வளவு பயங்கரமான, சிக்கலான, ‘ஸென்ஸிடிவா’ன, இன்னொருவர் பெண்டாட்டி சம்பந்தமான விஷயத்தில் முன்யோசனை இல்லாமல் முரட்டுத்தனமாக இந்த அப்பா தலையிட்டு விட்டாரே! இது எங்கே போய் நிற்கும், என்ன ஆகும்? என்று எனக்குப் பயமாக இருக்கிறது.
சீதாராமய்யர் ரொம்ப சாது; நல்லவர். நான் சின்னக் குழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவரைத் தெரியும். அவருக்குக் கோபம் வந்து நான் ஒரு நாள் கூடப் பார்த்ததில்லை. எப்போதும் சிரிச்சிண்டே இருப்பார். இல்லேன்னா யாரையாவது சிரிக்க வச்சுட்டு வாயை மூடிண்டு பேசாமல் இருப்பார். அவர் ‘ஜோக்’ அடிச்சு யாரும் சிரிக்கலேன்னா அவரே சத்தம் போட்டுச் சிரிச்சுடுவார். ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே வரைக்கும், இப்போ நான் இருக்கேனே இந்த மாடி ரூமிலேதான் அவர் ஒண்டிக்கட்டையா இருந்தார். ‘வெயிட் லிப்ட்’ பண்றமாதிரி, கர்லாக்கட்டை சுத்தற மாதிரியெல்லாம் போட்டோ பிடிச்சு ரூம் நிறைய மாட்டி வச்சிருப்பார். நான் சின்னப் பையனா இருக்கிறபோது அந்த விவேகானந்தா உடற்பயிற்சிக் கழகத்துக்கு என்னையும் கூட அழைச்சிண்டு போவார். ஊற வைத்த பச்சைக் கடலையை எனக்கும் ஒரு பிடி அள்ளித் தருவார். அவருக்குக் கல்யாணம் ஆன பிறகு அதையெல்லாம் விட்டுட்டார்.
நாற்பது வயது வரைக்கும் பிரம்மச்சரியம் ரொம்ப உசத்தி என்று கடைப்பிடித்துக் கொண்டு வந்தவர் திடீரென்று ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டு மங்களத்தோடு வந்து நின்றார். அந்தக் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைக் கதை மாதிரி எல்லாரும் பேசிப் பேசி எல்லாருக்கும் அது தெரியும். அவரே சில சமயம் முற்றத்திலே வந்து நின்று கொண்டு குழாயடியிலே தண்ணி பிடிக்கிறவாகிட்டே சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார். மங்களம் வீட்டுக்கு உள்ளே இருந்தே சிரிச்சுக்குவாள்.
கான்டீனுக்கு இன்னும் ஒரு பர்லாங்கு இருக்கு. அது ஒரு ட்யூடோரியல் காலேஜ்லே இருக்கிற கான்டீன். அந்த பிரின்ஸிபால் இவரோட கூடப் படிச்சாராம். அதனாலே இவருக்கு இங்கே ரொம்ப சலுகை. ஆனாலும் சலுகை தருகிறார்கள் என்பதற்காகப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பார் இவர்.
இப்போது அவர்கிட்டே போய் நான் என்னன்னு சொல்லி அழைச்சிண்டு வரது? என் வாயாலே நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை. நான் சின்னப் பையன் தானே… ‘மாமா, அப்பா உங்களைக் கையோட அழைச்சிண்டு வரச் சொன்னார். ஏதோ அவசரமாம்’னு சொல்லப் போறேன்.
சீதாராமய்யரை நான் நேரிலே பார்க்கும்போது ‘மாமா’ன்னுதான் கூப்பிடுவேன். ஆனால் மனசிலே நினைச்சுக்கறது ‘சீதாராமய்யர்’ தான்.
சீதாராமய்யர் இரண்டு வருஷத்துக்கு முன்னே பாலக்காட்டுக்குப் போனார். அவர் அக்கா பெண்ணுக்குக் கல்யாணம்னு பத்திரிகை வந்தது. அந்த அக்காவுக்கு இவர் மாசாமாசம் ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் பண்ணுவார். கலியாணத்தன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காராளோட ஏதோ தகராறாம். தாலி கட்டப் போற நேரத்திலே, ‘கட்டப்படாது’ன்னு தடுத்து அந்த மாப்பிள்ளையோட அப்பா அவனை இழுத்துக் கொண்டு போயிட்டாராம். அந்த மாப்பிள்ளை என்னை மாதிரி சோப்ளாங்கியா இருப்பான் போலிருக்கு… என்ன பண்றது? இவரோட அக்கா வந்து ‘என் மானத்தைக் காப்பாத்துடா தம்பி’ன்னு இவர் கிட்டே அழுதாளாம். உடனே அதுவரைக்கும் எல்லாரையும் உபசாரம் பண்ணிண்டிருந்த பெண் வீட்டுக்காரரான சீதாராமய்யர் ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’னு கத்திண்டே ஓடிப்போய் மணையிலே உட்கார்ந்து மங்களத்தின் கழுத்திலே தாலியைக் கட்டிட்டாராம். இதை அவர் சொல்லும்போது எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அவர் வீட்டிலே இருக்கிறபோது இந்த மாதிரி எதையாவது சொல்லி மங்களத்தையும் மற்றப் பேர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். அவர் கிட்டே ஒளிவு மறைவே கிடையாது. அன்னிக்கு ஒருநாள் எல்லார் எதிரிலேயும் மங்களத்தைக் கேட்டார்:
“சுயம்வரத்திலே யாரையோ நினைச்சிண்டு யார் கழுத்திலேயோ மாலையைப் போட்ட மாதிரி தாலி கட்டற முதல் நிமிஷம் வரைக்கும் யாரையோ புருஷன்னு நினைச்சுண்டு இருந்துட்டு, நீ எனக்குப் பெண்டாட்டி ஆய்ட்டே.” அப்போ மங்களம் குழாயடியில் தண்ணீர் பிடிச்சிண்டிருந்தாள். இவர் விளையாட்டாக அப்படிச் சொன்னது அவளுக்குச் ‘சுருக்’னு தைத்து விட்டது போலிருந்தது. ஆனாலும் அவள் சிரிச்சுண்டே சொன்னாள்:
“நான் யாரையும் நினைச்சுண்டு இல்லே. ‘எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் குடு’ன்னு பகவானைத்தான் நினைச்சுண்டு இருந்தேன். எனக்கு எது நல்லதோ அதை பகவான் நடத்தி வச்சுட்டார்னு நான் சந்தோஷமா இருக்கேன்.”
இதோ, இந்த ட்யூடோரியல் காலேஜ் வந்தாச்சு. கான்டீன் பின்னாலே இருக்கு. கான்டீன் உள்ளே நுழைகிறபோது அவர் அந்தச் சுவர் மூலையிலே மாட்டி இருக்கிற கண்ணாடி முன்னாலே நின்னு தலை வாரிக்கறார். ஆணியிலே தொங்குகிற அரைக்கை சட்டையை எடுத்துச் சட்டைப் பையைக் காலி பண்ணிட்டு, இரண்டு தடவை உதறுகிறார். மணிபர்ஸ், வெத்தலை சீவல் பொட்டலம், தலை வாரிக் கொண்டாரே அந்தச் சீப்பு எல்லாத்தையும் பாக்கெட்டிலே வச்சுண்டு மறுபடியும் கண்ணாடியிலே பார்த்துக்கிறபோது பின்னாடி நிற்கிற என்னைப் பார்த்து விட்டார். திரும்பி என்னைப் பார்த்து சிரிக்கிறார்; சிரிச்சிண்டே கேட்கிறார்.
“வா, காபி சாப்பிடறயா?”
“வேண்டாம். உங்களை அப்பா அவசரமா கையோட அழைச்சிண்டு வரச் சொன்னார்.”
“உங்கப்பாவுக்கு எப்போதான் அவசரம் இல்லே? நீ ஆத்திலே காபி சாப்பிட்டியோ?”
“இல்லே. தூங்கிண்டு இருந்தேன். என்னை எழுப்பி உஙளை அழைச்சிண்டு வரச் சொன்னா, அப்பா.”
“சரி, சரி, உக்காரு” – என்னை உட்கார வைத்துவிட்டு உள்ளே போய் ஒரு தட்டிலே ஒரு கரண்டி கேஸரியும் காராபூந்தியும் கொண்டு வந்து வைத்துவிட்டு, “குண்டுமணி, ஒரு காபி கொண்டு வா” என்று குறுக்கே போகிற யாரிடமோ சொல்கிறார். கேஸரி நன்றாக் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கிறபோதே வயிற்றுக்குள் என்னமோ ‘திக்திக்’ என்று ஒரு பயம். குண்டுமணி காபி கொண்டு வந்து வைக்கிறான். இவர் கல்லா அருகே போய் ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்து தனது பக்கத்தைப் புரட்டி ஏதோ கணக்கு எழுதுகிறார். இப்போது நான் சாப்பிடுகிற கணக்கோ? திரும்பி வந்து நான் உட்கார்ந்திருக்கிற பெஞ்சியில் பக்கத்திலே உட்கார்ந்து வெற்றிலை போடுகிறார். நான் அவசரம் அவசரமாக காபியை விழுங்குகிறேன்.
அங்கே வீட்டிலே இருக்கிற பதட்ட நிலையும், அப்பாவின் சாமியாட்டமும், மங்களத்தின் பரிதாபகரமான அலறலும், மணியின் அவமானமும், மற்றவர்களின் லஜ்ஜை கெட்ட மௌனமும், அப்பாவுக்காகப் பரிந்து கொண்டு பேசுகிற அம்மாவின் புலம்பலும் ஒரு பக்கம் மனசில் வந்து கவிகிறது. இன்னொரு பக்கம் இதெல்லாம் தெரியாத சீதாராமய்யரின் நிதானமும், என்னிடம் அவர் காட்டுகிற அன்பும், இன்னும் சற்று நேரத்தில் நடக்கப் போகிற களேபரமும் மனத்தில் படர்கிறபோது இவர் காட்டுகிற நிதானத்தில் நானும் பங்கு கொண்டு, இவர் அன்போடு தருகிற இவற்றையெல்லாம் சாப்பிடுவது ஒரு குற்றமோ, ஒரு துரோகமோ என்று நினைக்கும்போது எனக்கு நெஞ்சில் அடைக்கிறது.
நான அவசரமாக ஓடிக் கை கழுவிக் கொண்டு வந்து “வாங்கோ மாமா… போகலாம்”னு பறக்கறேன்.
“இரேண்டா… ஒண்ணும் அவசரமிருக்காது. சீட்டாட்டத்திற்கு ஒரு கை குறையுமாயிருக்கும். நானும் ஆத்துக்குத்தான் புறப்பட்டுண்டு இருக்கேன். அது போகட்டும்… நீ என்னமோ மிலிட்டிரியிலே சேரப் போனாயாமே? ஏண்டா அசடே! உன்னை மாதிரி ஆளையெல்லாம் மிலிட்டிரியிலே எடுத்தால் தேசம் உருப்பட்டாற் போலத்தான். ஒரு துப்பாக்கியை உன்னாலே தூக்க முடியுமா? எக்ஸர்ஸைஸ் பண்ணுடா, பண்ணுடான்னு அடிச்சிண்டேனே, கேட்டாயோ…” என்று சொல்லிக் கொண்டே தன் முண்டாவைத் திருகிக் கொள்கிறார். சீதாராமய்யர் இப்போதெல்லாம் ‘எக்ஸர்ஸைஸ்’ செய்வதில்லையென்றாலும் அந்த உடம்பு வாகு அப்படியே இருக்கிறது.
“புறப்படுங்கோ மாமா. அப்புறம் அப்பா என்னைத் திட்டுவார்…” என்று நான் கெஞ்சுகிறேன். செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டவர் அந்த காலேஜ் காம்பவுண்டைத் தாண்டுவதற்குள் ஒரு நாலைந்து பேரிடம் நின்று ஏதேதோ பேசி, எல்லோரும் இவரைத் திரும்பிப் பார்க்கிற மாதிரி அவுட்டுச் சிரிப்புச் சிரித்து வெளியே வருவதற்குள், இந்த நல்ல மனிதருக்கு வீட்டிலே காத்துக் கொண்டிருக்கிற அதிர்ச்சியை எண்ணி எண்ணி எனக்கு அடிக்கடி வயிற்றிலே என்னவோ செய்கிறது. அங்கே படிக்கிற பையன்களுக்கெல்லாம் இவர் மேல் ரொம்பப் பிரியம் போலிருக்கிறது. காம்பவுண்டுக்கு வெளியிலே வந்த பிறகு “மாமா! ஆத்துக்குக் கிளம்பியாச்சா?” என்று ஒரு குரல் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் மாடி வராந்தாவில் நாலு பையன்கள் நின்று கொண்டு நோட்டுப் புத்தகத்தோடு கை ஆட்டுகிறார்கள். இவரும் திரும்பிப் பார்த்து “ஆறு மணிக்கு வந்துடுவேன்” என்று சொல்லிக் கை ஆட்டுகிறார்.
வருகிற வழியில் அந்த மாணவர்களைப் பற்றி ஒரேயடியாகப் புகழ்கிறார்: “எல்லாம் பெயிலான பசங்கள்… இந்தக் குழந்தைகளெல்லாம் ஏன் பெயிலாயிடறது தெரியுமா? அவாளெல்லாம் உன்னை மாதிரி மண்டு இல்லை; மகா புத்திசாலிகள்; அதனாலேதான் பெயிலாயிடறதுகள். நீ ஒரு கிளாஸ்லே கூட பெயிலாகாமத்தான் படிச்சே, என்ன புண்ணியம் சொல்லு? படிச்சுப் பாஸாகிற ஒரு காரியத்தைத் தவிர மத்த எல்லாக் காரியத்திலேயும் மகா கெட்டிக்காரன்கள் இந்தப் பசங்கள். ஆமா, நிஜத்துக்குச் சொல்றேண்டா, மறந்துட்டேனே… அந்த பிரின்ஸிபால் கிட்டே உன்னைப் பத்திச் சொல்லியிருக்கேன். ‘நல்ல பையன்… கான்டீனீலே சர்வர் பணிக்காவது வரேன்ங்கிறான். நம்ம ஆபிஸ்ல ஏதாவது வேகன்ஸி இருந்தால் மறந்துடப்படாது’ன்னு சொல்லி வச்சிருக்கேன். பார்க்கலாம் என்று என்னென்னவோ பேசிக் கொண்டே வருகிறார். எனக்கு எதுவுமே மனசில் தங்கவில்லை.
அதோ வீடு தெரிகிறது.
“எதுக்காக்கும் உங்க அப்பா இவ்வளவு அவசரமா என்னை அழைச்சிண்டு வரச் சொன்னாராம்? என்ன விஷயம்?” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு கேட்கிறார். நான் அழுதே விடுவேன் போல் இருக்கிறது.
“என்னை ஒண்ணும் கேட்காதேங்கோ. நான் தூங்கிண்டு இருந்தேன். எனக்கு ஒண்ணுமே தெரியாது.” நான் இப்படிச் சொன்னது எதனால் என்று அவருக்கு விளங்கவில்லை. சிரித்துக் கொள்கிறார். எல்லாத்துக்கும் எப்போதும் இந்தச் சிரிப்புத்தான்.
“அம்மா சொன்னதும், அப்பா கண்டுபிடித்ததும் ஒருவேளை நிஜமாகவே இருக்கலாமோ என்று இப்போதுதான் நானும் முதல் தடவையாக நினைக்கிறேன். இதுவரை இந்த விஷயத்தில் சம்பந்தப்படாதவனாய் இதற்கு வெளியே நின்று பார்த்த அனுபவம் நீங்கி நானும் இதற்குள் சிக்கிக் கொண்ட மாதிரி எனக்கும் மனசில் ஓர் ஆவேசம் வந்தது. மங்களம் இவருக்கு துரோகம் செய்வாளா? இந்த மணி ஒரு காலிப்பயலா? அப்படியானால் அவனை அப்பா அடிச்சது நொம்ப சரிதானே? அப்பா சொன்ன மாதிரி இந்த மாமா கையிலே செருப்பைக் கொடுத்து அவனை அடிக்க வச்சா அதுவும் நியாயம் தானே?… சரி மங்களத்தை என்ன பண்றது? இந்த மாமாவுக்கும் அவளுக்கும் இருபது வயசு வித்தியாசம்னா… அதுக்காக ஒரு பெண் தப்புப் பண்ணுவாளோ?… என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு துரோகத்தை இந்த மாமாவாலே தாங்கிக்க முடியுமோ… சாது மிரண்டால் காடு கொள்ளாதும்பாளே… அது மாதிரி ஏதாவது நடக்கப் போறதோ…” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு குனிந்த தலையுடன் நான் வேகமாக நடக்கிறேன். என் வேகத்தால் மாமாவின் நடைவேகமும் அதிகரிக்கிறது.
“மணியும் மங்களமும் மத்தியானமெல்லாம் தாயம் விளையாடுவார்கள். மணி நன்றாகப் பாடுவான். மாமாகூட அவனைப் பாடச் சொல்லி கேட்பார். மங்களத்திற்கு ஒத்தாசையாக எல்லா வேலைகளும் செய்வான். அவனுக்கும் பாலக்காடுதான் சொந்த ஊராம். மங்களத்திற்கு அவனை அங்கேயே தெரியுமாம். ஒருவேளை அங்கேயே அவர்களுக்குள்…? இந்த நல்ல மனுஷர் இந்தத் துரோகத்தை எப்படித் தாங்கிக் கொள்வார்? இவருக்கு இப்படி நடந்திருக்க வேண்டாமே…”
வீடு வந்தாச்சு.
இவரைக் கண்டவுடனேயே இவர் பார்வையிலே படறதுக்கு முன்னே ஒளிச்சிக்கணும்னு பயந்து ஓடுகிற மாதிரி, இந்நேரம் வரைக்கும் முற்றத்திலே கூடி நின்று வேடிக்கை பார்த்திண்டிருந்தவா எல்லாரும் அவாவா வளைக்குள்ளே சரசரன்னு நுழையறா. அப்பாதான் தைரியமா அங்கேயே நின்னுண்டு திரும்பிப் பார்க்கிறார். அப்பாவோட அந்தத் தைரியம் எனக்கு ஒரு நிமிஷம் பெருமையாக்கூட இருக்கு.
“வாரும்…வாரும்”னு என்னமோ சொல்ல வரார் அவர். அதுக்குள்ளே மங்களம் அலறி அழுதுகொண்டு ஓடிவந்து சீதாராமய்யர் காலில் விழறாள். அவள் அழுது கொண்டே என்னென்னமோ சொல்வது ஒன்றுமே புரியவில்லை. மணி வெட வெட என்று நடுங்கிக்கொண்டு எழுந்து நின்றான். அப்பாதான் பெரிய குரலில், “நாலு குடித்தனம் இருக்கிற இடத்திலே…” என்று சொல்வதற்குள் சீதாராமய்யார், “சித்த வாயை மூடிண்டி இருங்கோ” என்று கடுமையாகச் சொன்னவுடன் அப்பாவுக்கு வாயடைத்துப் போகிறது. ஆனால் கோபத்தால் பல்லைக் கடிக்கிறார். சீதாராமய்யர் அதைக் கவனிக்காமல் மங்களத்தை ஒரு குழந்தையைத் தூக்குவது மாதிரி தூக்கி நிறுத்தி, “என்னத்துக்கு இப்படி அழறாய்? அழாமல் சொல்லு. என்ன நடந்தது?” என்கிறார். மங்களத்துக்கோ அழ முடிகிற மாதிரி எதையும் சொல்ல முடியவில்லை. அதையும் கேட்க விடாமல் இந்த அப்பா கத்த ஆரம்பித்து விட்டார்.
“எனக்கு என்னங்காணும் போச்சு? உம்ம நல்ல மனசுக்கு இவா பண்ற துரோகம் தாங்க முடியாமல் நான் ஓடி வந்தேன். நான் பொய் சொல்றேனான்னு இந்த ஆத்திலே இருக்கிறவாளை யெல்லாம் கேளும். எங்கே யாரையும் காணோம்? இப்படி ஒரு பொய் சொல்லி எனக்கென்ன ஆகணும்? உம்மை எனக்கு இருபது வருஷமாத் தெரியும்… உமக்குப் பண்ற துரோகம் எனக்குப் பண்ற மாதிரி இருக்கு… வயிறு எரியறது…”
இந்தச் சமயத்தில் அம்மாவும் சேர்ந்து கொள்கிறாள்: “உங்களுக்கு என்ன தலையிலே எழுத்துன்னு அடிச்சிண்டேனே, கேட்டேளா…?” என்று அலறுகிறாள் அம்மா. இரண்டு பேருக்கும் தாங்கள் பொய் சொல்லி விட்டோமா என்ற பயம் வந்து விட்டது. சீதாராமய்யர் கொஞ்சம் கூடப் பதட்டப்படாமல்,
“ராஜாமணி அய்யர்வாள் – நீங்க என் மேல வெச்சிருக்கிற மரியாதை எனக்குத் தெரியாதா? மாமியை அழைச்சிண்டு உள்ளே போங்கோ…” என்று சொல்லி, அப்பாவுக்கு அது காதில் ஏறாமல் போகவே, “மாமி, நீங்களாவது அவரை அழைச்சிண்டு போங்கோ” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, மங்களத்தைத் தோளில் தட்டிக்கொண்டே கேட்கிறார்: “அழாமல் சொல்லு, இங்கே என்ன நடந்தது?” மங்களம் பொங்கிப் பொங்கி இப்பொழுது அதிகமாகவே அழுகிறாள். அழுது அழுது தேம்பிக்கொண்டே சொல்கிறாள்.
“நானும் – நம்ப மணியும்… இதோ அங்கே உட்கார்ந்துண்டு-” வீட்டுக்குள் கூடத்தைக் காட்டிக் கொண்டு அதற்கு மேல் சொல்ல முடியாமல் – கூடத்தைக் காட்டிய கை அப்படியே நிற்கிறது; குரல் விம்மி அடைக்கிறது. அந்த இடத்தில் சற்று முன் நிகழ்ந்த காட்சி அவள் மனசில் வர மறுபடியும் ஒரு பெரிய அழுகை.
“ஸ்.. அழப்படாது… அழாமல் சொல்லு” என்று ஒரு குழந்தையைத் தேற்றுவது மாதிரித் தேற்றுகிறார் சீதாராமய்யர்.
“அங்கே உட்கார்ந்துண்டு தாயம் விளையாடிண்டிருந்தோம்… நேரா வெய்யில் அடிக்கிறதேன்னு நான்தான் வாசக் கதவைச் சாத்தினேன். ஜன்னல் கதவெல்லாம் திறந்துதான் இருக்கு… மணி, தலையை வலிக்கிறதுன்னு படுத்துண்டான். நான் காயெல்லாம் எடுத்து டப்பாவிலே வைக்கிறச்சே… இந்த வீட்டுக்கார மாமா… மாமா… வந்து… வந்து…”
அதற்குமேல் அவளால் சொல்ல முடியவில்லை. அந்தச் சமயம் சுவரோரமாக நின்று கொண்டிருந்த மணியும் அழுகிறான்.
“மண்டு மண்டு! நீ எதுக்காக்கும் அழறாய்? போறும்! நம்ப ராஜாமணி ஐயருக்கு என் மேலே இருக்கிற அன்பு உன்மேலே இன்னும் வரலே… நான் இருபது வருஷம் அவாளோட பழகி இருக்கேன். நீ இப்பத்தானே வந்திருக்காய்…” என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். மங்களம் ஓய்வதாக இல்லை. தொடர்ந்து சொல்கிறாள்: “மணியைப் பிடிச்சுத் தரதரன்னு இழுத்துண்டு வந்து… என்னைப் பத்தி அநியாயமா என்னென்னமோ சொல்றா… நான் கையிலே நெருப்பை அள்ளிண்டு வேணாலும் சத்தியம் பண்றேன்.” என்று அவள் அழுது அழுது சொல்லிக் கொண்டிருக்கும்போது சீதாராமய்யர் சிரிக்கிறார்.
“போறுமே… நெருப்பைப் போய் அள்றாளாம், நெருப்பை; ராஜாமணி அய்யர்வாள், இதெல்லாம் என்ன கூத்து? மங்களம் என் பெண்டாட்டி… மணி எங்க ஆத்துப் பையன். எனக்கு அவாளையும் தெரியும், என்னையும் தெரியும், உங்களையும் தெரியும். மங்களம் இன்னிக்கு வந்தவள் தானே! நான் இருபது வருஷமா இங்கே இருந்து நீங்க சம்சாரம் நடத்தும் அழகை எல்லாம் பார்த்துண்டு இருக்கேனே… எவன் தன் பெண்டாட்டியை நம்பறானோ அவனாலேதான் ஊரிலே இருக்கிறவன் பெண்டாட்டிகளையும் நம்ப முடியும். மாமி, சாயங்காலம் கதை கேட்கப் போறேளே… மகாபாரதம் சொல்றாளாமே. துரியோதனன் பெண்டாட்டியும் கர்ணனும் சொக்கட்டான் விளையாடிண்டிருந்தாளாமே… பாதி ஆட்டத்திலே அவள் எழுந்திருக்கறச்சே கர்ணன் அவள் மேகலையைப் பிடிச்சு இழுத்துட்டான். அதெல்லாம் கேட்டு இருப்பேளே – துரியோதனன் ரொம்பக் கெட்டவன்னு பேர்… ஆனாலும் அவன் ஆம்பளை… அதனாலே தான் பெண்டாட்டி மேலே சந்தேகம் வரலே. பெண்டாட்டியை நம்பாதவன் என்ன பெரிய ஆம்பளை? ராஜாமணி அய்யர்வாள்! இந்த ஆத்திலே இருக்கிறவாளை யெல்லாம் வேற கூப்பிட்டுக் கேட்கச் சொல்றேள். என் பெண்டாட்டியைப் பத்தி… ரொம்ப நன்னாயிருக்கு என்னைப் பத்தி நீங்க வச்சிருக்கிற அபிப்பிராயம்!” என்று சொல்லி “ஓ” வென்று சிரிக்கிறார். சிரித்துவிட்டுச் சொல்கிறார்: “இந்த ஆத்திலே இருக்கிறவாளுக்கெல்லாம் நான் சொல்றேன்; ‘அவனவன், அவனவன் பெண்டாட்டியை நம்பினால் போறும்.’ அதைச் செய்யுங்கோ.”
“ஏண்டா, அழுதுண்டு இருக்கே நீ? நீ போய் முகத்தை அலம்பிக்கோ” என்றதும் மணி குழாயடிக்குப் போகிறான். ஆனால் மங்களம் இன்னும் நின்று அழுது கொண்டிருக்கிறாள்.
“இதோ பார், இவாளெல்லாம் உன்னை நம்பி உனக்கு என்ன ஆகணும் சொல்லு? நான் நம்பறேன். உள்ளே வா” என்று மறுபடியும் சமாதானம் சொல்லிக் கைத்தாங்கலாக மங்களத்தை அழைத்துக்கொண்டு போகிறார்.
“நேக்கு இந்த ஆத்திலே பயமா இருக்கு… வேற ஏதாவது வீடு பார்த்துண்டு நாம்ப போயிடலாமே” என்று மங்களம் உள்ளே போகையில் அவரிடம் சொல்லி இருப்பாள் போலிருக்கிறது. சீதாராமய்யர் சொன்ன பதில் மட்டும்தான் எனக்குக் கேட்டது.
“அடி அசடே, எங்கே போனாலும் லோகம் இப்படித்தான் இருக்கும்” என்று அவர் உரக்கச் சிரித்தார்.
“சீசரின் மனைவி சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள்” என்று படித்தது என் நினைவுக்கு வந்தது. மங்களம் எப்படிப்பட்டவளாயிருந்தால் என்ன, சீதாராமய்யர் சீசர்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
-----------
37. ஒரு பிடி சோறு
“ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’ – அவன்தான் ராசாத்தியின் ஏகபுத்திரனான மண்ணாங்கட்டிச் சிறுவன்.
தென்னாற்காடு ஜில்லாவாசிகளைத் தவிர மற்றவர்களுக்குப் பெயர் வேடிக்கையாகத்தானிருக்கும். ராசாத்தியின் இறந்துபோன அப்பனின் பெயர் அது. கிழவன் மீது கொண்ட ஊமைப்பாசம் இப்பொழுது மகன்மீது சொரிகிறது…
இப்பொழுது மண்ணாங்கட்டிக்கு ஏகக் குஷி – ஏன் தெரியுமா? அடுத்த அடுப்பிலிருந்த சோற்றைத் திருடித் தின்ற எக்களிப்புத்தான்!
பூட்டா, திறப்பா? – பிளாட்பார வாழ்க்கைதானே? நாய் வந்து வாய் வைத்தாலும் அடித்துத் துரத்துவாரில்லை. அதுவும் இந்தத் திருட்டுக் கொட்டுப் பயல் பிறர் காணும்படியா அந்தக் காரிய்த்தை நடத்தியிருப்பான்? – பானையோடு தூக்கிக் கொண்டு தெருக் கோடியிலிருக்கும் அந்தப் பாழ் மண்டபத்துக்குத்தான் ஓடியிருப்பான் – அது அவன் வாசஸ்தலம்.
“ஒன்னெ வெட்டி வெக்க… எங்கேடா போயிருந்தே, சோமாறி?” என்று வரவேற்றாள் அவன் தாய் ராசாத்தி.
“யம்மோவ்… துட்டும்மா, ஹீம் துட்டு குடும்மா…” என்று அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு குதித்தான் சிறுவன்.
ராசாத்தி நிறைமாசக் கர்ப்பிணி. அவன் இழுப்புக்கெல்லாம் அவள் ஈடுகொடுக்க முடியுமா? – அவன் இழுத்த இழுப்பில் கீழே விழத் தெரிந்தாள்; சமாளித்துக்கொண்டு நின்ற வேகத்தில் ஆத்திரத்துடன் மண்ணாங்கட்டியின் முதுகில் இரண்டு அறை வைத்தாள்.
“ஒன்னெ பாடையிலே வெக்க… என்னெ இஸ்துத் தள்ளப் பாத்தியே… எங்கனாச்சும் ஒழிஞ்சு தொலையறது தானே?… துட்டு வேணுமாம், துட்டு… இவன் அப்பன் இங்கே கொட்டி வச்சிருக்கான் பாரு!”
“ஏம்மா, எங்கப்பன் ஆரும்மா?”
- ராசாத்தி என்ன பதில் சொல்லுவாள்?… அவளுக்கே தெரியாது. இப்பொழுது வயிற்றிலிருப்பதற்குத் தகப்பன்?…
- ஒரு நிமிஷம் எங்கோ நினைவு கூர்ந்து, சடையம்மன் கோவில் திருவிழாவில் சந்தித்துச் சில நாட்கள் உறவாடியிருந்த அந்தத் தாடிக்கார வளையல் வியாபாரியை, அவன் முகத்தை, அவன் சிரிப்பை, அவனது சேஷ்டைகளையெல்லாம் மனசில் நினைத்து நிறுத்திப் பார்த்தாள்.
அவள் முகத்தில் சிரிப்புக் குழம்பியது… அந்த ரகஸியங்களெல்லாம் மண்ணாங்கட்டிக்குத் தெரியுமா?…
“இங்கே வாடா, வாந்தி பேதியிலே போறவனே!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எட்டிப் பிடிக்கக் கையை வீசினாள்.
ஒரே பாய்ச்சலில் அவள் பிடியிலிருந்து விலகி நின்ற சிறுவன், “ஹேய்ன்னானாம்!” என்று இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு குதித்தான்.
“வா வா, புண்டம் கொட்டிக்க வருவே இல்லே” என்று விரலை ஆட்டிப் பத்திரம் கூறினாள் ராசாத்தி.
“நான்தான் துன்னுட்டேனே!” என்று வயிற்றில் தாளம் தட்டியவாறே ‘ஏவ்’ என்று பெரிசாக ஒரு ஏப்பம் விட்டுக் காண்பித்தான்.
மண்ணாங்கட்டியின் முதுகில் பின்னாலிருந்து ‘பளீரெ’ன ஓர் அறை விழுந்தது.
“தேவடியா பெத்த பயலே… வெறவு தூக்கிக்கினு போயிருக்கிறவருக்கு சோறு எடுத்து வச்சா அதைத் திருடித் துன்னுட்டு வந்து குதிக்கறதைப் பாரு?” என்று உறுமியவாறே நின்றிருந்தாள் மாரியாயி.
“வாடி, உத்தம பத்தினி… பத்தினி படபடா, பானை சட்டி லொட புடா…” என்று பச்சையான ‘பழமொழி’யை நீட்டி முழக்கி, சேலைத் தலைப்பை வரிந்துகொண்டு வந்தாள் ராசாத்தி.
“ஐய, ஒண்ணுங் கெட்ட மூளிக்கி ரோசத்துக்குக் குறைச்சலில்லே… அப்படியே தொங்கத் தொங்கக் கட்டிக்கினு பெத்தவ மாதிரிதான்” என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள் மாரி.
“ஆமா ஒன்னே மாதிரி, தொங்கத் தொங்கக் கட்டிக்கினு ஊர் மேஞ்சா நல்லாத்தானிருக்கும்!”என்று திருப்பியடித்தாள் ராசாத்தி.
“ஆமா… நான் போவும்போது இவதான் வந்து வெளக்குப் புடிச்சா!”
- மாரிக்குத் தன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது என்ற துணிச்சல்.
“ஏண்டி, ஒரேமுட்டா அலட்டிக்கிறே… ஒன் அட்ரஸீ பூரா எங்கிட்டே இருக்குடி… அன்னிக்கு சொதந்தரத்துக்கு மொத நாளு மோர்மார்க்கட்டுத் துலுக்கனோட போனியே, எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கினியா?”
- மாரிக்குச் ‘சுருக்’கெனப் பொத்துக் கொண்டு கோபம் வந்துவிட்டது. மேலே எதுவும் பேச முடியாமல், “இன்னாடி சொன்னே, அவிசாரி முண்டே!” என்று உறுமிக் கொண்டே ராசாத்தியின் கன்னத்தில் எட்டி அறைந்தாள்.
“அடி, எஞ் சக்காளத்தி” என்று மாரியாயியின் கூந்தலை எட்டிப் பிடித்துச் சிம்பினாள் ராசாத்தி.
வலி பொறுக்க மாட்டாமல் ராசாத்தியின் நெஞ்சில் குத்தினாள் மாரி. ராசாத்திக்கு வெறி அடங்கவில்லை. கூந்தலைப் பிடித்த பிடியை விடாமல் சிம்பினாள். மாரியின் கை வீச்சு காற்றைத் துழாவியது. இரண்டொரு குத்து ராசாத்தியின் நெஞ்சில் விழுந்தன. மூன்றாவது குத்து ராசாத்தியின் வயிற்றில் விழுந்தது.
“அடியே புள்ளத்தாச்சிடீ…” என்ற அலறலுடன் மாரியின் பிடரியில் அறைந்து அவளைப் பிடித்திழுத்தான் அப்பொழுதுதான் அங்கு வந்த மாரியின் புருஷன் மாணிக்கம்.
விலகி நின்ற இருவரின் முகத்திலும் கூந்தல் கலைந்து படிந்திருந்தது… ‘மூஸ்’ ‘மூஸ்’ என்று மூச்சு இளைத்தது. ராசாத்தியின் ரவிக்கை கிழிந்து தொங்க, அங்கமெல்லாம் வெளியே தெரிந்தன. தனது பெரிய வயிற்றை அசைக்க முடியாமல் பெருமூச்செறிந்தாள் ராசாத்தி.
“இன்னாம்மே, நீ என்னா பொம்பளையா, பிசாசா?… வாயும் வவுறுமா இருந்துக்கினு இப்பிடி பேயா அடிச்சிக்கிறியே… படாத எடத்துலே பட்டுதுனா இன்னா ஆவுறது…?”
“நா ஒண்ணுமே பண்ணலே, அண்ணே!” என்று அழ ஆரம்பித்தாள் ராசாத்தி.
கர்ப்பிணியான ராசாத்தி முகம் சிவந்து அழவும் மாணிக்கத்தின் மனசு என்னவோ போல் ஆகிவிட்டது.
“போம்மே, ராச்சஸி!” என்று தன் மனைவியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனான் மாணிக்கம்.
“நீயும் வேற என்னெ அடிக்கிறியா?… அடி அடி… அந்தத் தேவடியா பெத்தது ஒனக்கு வெச்சிருந்த சோத்தைத் துன்னுட்டுப் போயிடுச்சி. அத்தெக் கேக்க வந்தா… அவ, என்னெ அங்கே போனவளே இங்கே போனவளேன்னு பேசறா… நீ வேற என்னெ அடிக்கிறே… நா ஏன்தான் பொண்ணாப் பொறந்தேனோ…” என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டாள் மாரி.
“அதெ வாரிக்கிட்டுப் பூட… அதுதான் திருட்டுக் கொட்டா நிக்குதே. நா, எலும்பெ முறிச்சிப் பாடுபட்டுக் கஞ்சி ஊத்தறேன். இப்பிடித் திருடித் துன்னுட்டு வம்பு வலிச்சிக்கினு வருதே. இன்னிக்கு வரட்டும். கழுத்தெ முறிச்சிக் கூவ ஆத்திலே நுந்திடறேன்” என்று கருவினாள் ராசாத்தி.
ராசாத்தியின் அடி வயிற்றில் ‘சுருக்’கென வலித்தது. வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு தனது கூட்டினுள் போய்ப் படுத்துக் கொண்டாள்.
சட்டைப் பையிலிருந்த இரண்டனாவைத் தடவிப் பார்த்துக் கொண்டே, ‘நாஸ்டா’ பண்ணுவதற்காக டீக்கடையை நோக்கி நடந்தான் மாணிக்கம்.
இந்தச் சந்தடியில் மண்ணாங்கட்டிப் பயல் எங்கே போனான் என்று யாரும் கவனிக்கவில்லை.
2
ராசாத்திக்கோ, மாரியாயிக்கோ விபசாரம் என்பது தொழிலல்ல; அவர்கள் வாழும் பிளாட்பாரத்தின் எதிர்ப்புறத்திலிருக்கும் விறகுக் கடையில் விறகு சுமந்து செல்வது, லாரியில் வரும் விறகுக் கட்டைகளை இறக்கிக் கடைக்குள் அடுக்குவது – இவைதான் பிரதான தொழில். அந்த வேலைகள் இல்லாத சமயத்தில், வேறு ஏதாவது கூலி வேலை. அதுவும் இல்லாத சமயத்தில், மிகவும் வறட்சி ஏற்பட்டு, நல்ல கிராக்கியும் ‘சான்ஸீ’ம் அடித்தால்… வேறு ‘ஏதாவது’…
கோணி + கந்தல் பாய் + மூங்கில் தட்டி + சினிமா போஸ்டர் = ஒரு கூரை! – அந்தக் ‘கோழிப்புறை’யில் நீட்டிப் படுத்திருந்த ராசாத்தியின் அடிவயிற்றுக்குள் என்னவோ ‘சுருக்’கென்று குத்திவாங்கியது. ராசாத்தி நௌ¤ந்து கொடுத்தாள். கீழுதடு பற்களுக்கிடையே மடிந்து கொடுத்தது. நெற்றி சுருங்கிற்று.
- வயிற்றில் வலியா, பசியா?…
கால்களைச் சற்று அகல விரித்து இடுப்புச் சீலையைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள். இடுப்பை வளைத்து, நெஞ்சை உயர்த்தி உடலை முறுக்கிக் கொடுத்தாள். பாதங்களைத் தரையில் உரசி உரசி எழுப்பிய ஒலி அவளுக்கு இதமாக இருந்தது. திரும்பவும் தேய்த்துத் தேய்த்துப் பார்த்துக் கொண்டாள்.
வலியைப் பற்றிய நினைவு இல்லை. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டால் தேவலாம் போன்ற எண்ணம்.
‘கொஞ்சமா? – ஹ்ம்… கஞ்சியெக் கண்டு ரெண்டு நாளாச்சு, ஒரு பானை கஞ்சி இருந்தாலும் நெட்டலாம்’ – அவள் கண்கள் மூலையில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த மூளிப் பானையை நோக்கின. பக்கத்தில் ஓட்டையான அரிசிப் பானை உருண்டு கிடந்தது.
பசி வயிற்றை மென்றது!
அவளுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒற்றைக் காலில் கிடந்த ஈயக் காப்பு ‘தரதர’வெனத் தரையில் தேய்ந்து கரையப் பாதங்களைத் தேய்த்துக் கொண்டாள்.
அடி வயிற்றின் ஒரு பக்கத்தில் சில நிமிஷங்களுக்கு ஒருமுறை ‘சுருக்’கென்ற குத்தல் வேறு…
“உஸ்… அம்மாடி!” என்ற பெருமூச்சு…
“ராசாத்தி, ராசாத்தி!” என்ற குரல் கேட்கிறது. மல்லாந்து கிடந்தவாறே தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் ராசாத்தி. மாரியாயி குனிந்து நின்றபடி தலையை மட்டும் குடிசைக்குள் நீட்டியவாறு, “என்ன ராசாத்தி, இடுப்பு வலியா?” என்று கேட்டாள்.
“ஊஹீம்… அதெல்லாம் ஒண்ணுமில்லே. பசிதான்… நேத்து ஒரு வாய்க் கஞ்சி குடிச்சதுதான்… இன்னிக்குப் பூரா பட்டினி. அதான் வயத்தை என்னமோ பண்ணுது!”
மாரியாயிக்கு மனசை என்னவோ செய்தது.
“பாவம், வாயும் வயிறுமா இருக்கிற பொம்பளே பட்டினி கெடக்கலாமா?”
ராசாத்தியின் குடிசைக்குள் நுழைந்து, குனிந்து நின்றபடி, ஒரு மருத்துவச்சியைப் போல் அவளுடைய உடலைப் பரிசோதித்தாள் மாரியாயி.
இடுப்புச் சீலையைத் தளர்த்தி, அவிழ்த்து, கருச் சிசுவின் சிரம் முட்டி நிற்கும் அவளுடைய அடி வயிற்றைத் தடவிப் பார்த்தாள். வயிறு கனத்து, உருண்டு திரண்டிருந்தது. மேல் வயிறு தளர்ந்து போய், சுருங்கி, விரிந்து மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
ராசாத்தியின் அடி வயிற்றைத் தடவிக்கொண்டே இருந்தாள் மாரியாயி. அந்த வயிற்றுக்குள் ஒரு புதிய உயிர், ஒரு பச்சைப் பசும் சிசு இருக்கிறது என்ற உணர்ச்சியால் மாரியாயிக்கு உடல் முழுவதும் புல்லரித்தது.
“இது இடுப்புவலி போலத்தானிருக்கு. ஆசுபத்திரிக்குப் போயிடேன்!” என்று கூறினாள் மாரியாயி.
“அட, நீ ஒண்ணு… எனக்குத் தெரியாதா? மாசம் எட்டுத்தானே ஆச்சி. சடையம்மா கொயிலு திருநா அப்பத் தானே தரிச்சிது… ஆவணி ஒண்ணு, புரட்டாசி ரெண்டு… என்று கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லே, பசிதான்!” என்றாள் ராசாத்தி.
“நா, என்ன பண்ண? சோறு கூட இல்லையே… அரிசி இருக்கு… அடுப்பைப் பத்தவச்சிக் கஞ்சிகூட காச்சிடலாம்… லாரி நெறைய வெறவு வந்து நிக்குதே… இப்போ விட்டா இன்னும் ரெண்டு நாளைக்குக் காசைக் கண்ணாலே காண முடியாது… உம்…” என்று முனகிக்கொண்டே நின்றாள் மாரியாயி.
“அரிசி இருக்கா?” என்று தலையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.
“இருக்கு ஒன்னாலே கஞ்சி காச்சிக்க முடியுமா?”
“ஓ! அதெல்லாம் முடியும்… சீக்கிரம் கொண்டா!”என்றவாறு சரிந்த கூந்தலை முடிந்து கொண்டாள். கணுக்காலில் ஏறியிருந்த ஈயக் காப்பை இழுத்துவிட்டுக் கொண்டாள். அவிழ்ந்து திறந்து கிடந்த ரவிக்கையை இழுத்து முடிந்து உட்கார்ந்தவாறே சேலையையும் இடுப்பில் சுற்றிக் கொண்டாள்.
- அந்தக் குடிசையில் நிற்க முடியாது. ராசாத்தி நல்ல உயரம் என்பது மட்டுமல்ல, குடிசையும் ரொம்ப தாழ்ந்தது தானே?
உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு மௌ¢ள நகர்ந்து குடிசைக்கு வெளியே வந்ததும் நிமிர்ந்து எழுந்து நின்றாள்.
‘அம்மாடி! வயிறுதான் என்னமாய்க் கனக்கிறது!’
மாரியாயி பழம்பானையில் இருந்த அரிசியை ஒரு தகரக் குவளையில் கொட்டி ராசாத்தியிடம் கொடுத்துவிட்டு மூலைக்கு ஒன்றாய்க் கிடந்த அடுப்புக் கற்களைக் குடிசைக்கு வெளியே சேர்த்து வைத்து, அடுப்புக்குப் பக்கத்தில் கிடந்த சுள்ளிக் கட்டிலிருந்து ஒரு பிடி சுள்ளியை இழுத்து எடுத்து ராசாத்தியிடம் கொடுத்தாள். “சீக்கிரம் காச்சிக் குடி… நா போயிட்டு வந்துடறேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே, விறகுக் கடையை நோக்கி ஓடினாள் மாரியாயி.
உருண்டு கிடந்த சோற்றுப் பானையை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்கப் போனாள் ராசாத்தி.
குழாயடியில் ஒரே கூட்டம்.
ராசாத்தியினால் நிற்க முடியவில்லை. ஒருகால் மட்டும் ‘வெட வெட’வென நடுங்கிற்று. அடி வயிற்றில் ‘சுருக்’கென்ற அந்த வலி…
“அம்மா!” என்று பெருமூச்சு விட்டபடி உட்கார்ந்து விட்டாள்.
“பாவம்! புள்ளைத்தாச்சிப் பொம்பளே, ஒரு பானை தண்ணி விடேன்” என்றாள் ஒருத்தி. தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண் ராசாத்தியைப் பார்த்தாள்.
“ஒரு பானை வேணாம்… பாதி நெறைஞ்சா போதும்!” என்றாள் ராசாத்தி.
- அவள் பசிக்கு அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; அவள் வலிக்கு ஒரு பானை தண்ணீரைச் சுமக்கவும் முடியாது அல்லவா?
“சரி இந்தா பாவம்! நீ ஏன் காத்துக் கெடக்கணும்?” என்று தன் பானையில் இருந்த தண்ணீரை ராசாத்தியின் பானையில் ஊற்றினாள் அவள்.
பானையைத் தூக்கி இடுப்பில் வைக்கும்போது, ராசாத்தியின் நெற்றி சுருங்கிற்று; பற்களைக் கடிக்கும்போது ‘நெறு நெறு’வென்று சப்தம் கேட்டது; ஒரு கால் மட்டும் ‘வெட வெட’வென நடுங்கிற்று…
அதோ, இன்னும் பத்தடி வைத்தால் அவளுடைய இடத்திற்குப் போய்விடலாம். ஒண்ணு… ரெண்டு… மூணு… ஊஹீம். இடுப்பில் பானை நிற்க மாட்டேன் என்கிறது; கை வலிக்கிறது; காலில் நடுக்கம் அதிகரிக்கிறது.
பானை நழுவிக் கீழே விழுந்துவிடாமல்…
…உம்… மௌ¢ள… மௌ¢ள ….
“அப்பா!” – பாதி வழியிலே பானையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டாள்.
தலையை அண்ணாந்து வானத்தை நோக்கி ஒரு பெருமூச்சு! – ஈயக் காப்பு ‘தர தர’வென உரசும்படி பாதங்களைத் தரையில் தேய்த்துக் கொள்கிறாள் – லேசாகத்தான்!
“அம்மா!” – வயிற்றில் என்ன பசியா, வலியா?
- இரண்டும் தான்… இல்லை, இல்லை… பசிதான்!
- ‘அதோ அடுப்பு இருக்கிறது; அரிசி இருக்கிறது; சுள்ளி இருக்கிறது; தீப்பெட்டி…?’
‘… அந்தத் தட்டியிலே சொருகி வச்சேனே… இருக்கும். போய்ப் பத்தவச்சி, அரிசியைப் போட்டுக் காச்சி, அந்தக் கஞ்சிக் கலயத்திலே ஊத்தி உப்பு…?’
‘… அதுவும் இருக்கும். அரிசிப் பானையிலே ஒரு பொட்டணம் போட்டு வச்சது எங்கே போயிடும்?… அது கூடவே, அந்தப் பாதி எலுமிச்ச ஊறுகாய்த் துண்டு – உம்… அதையும் கடிச்சிக்கினு சூடா ஒரு பல்லா கஞ்சி குடிச்சா…’ – அவள் வாயெல்லாம் நீர் சுரந்தது.
எழுந்தாள்; தண்ணீர்ப் பானையை விசுக்கெனத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தாள்.
அடுப்பின் மீது பானையை வைத்துச் சுள்ளிகளைப் பற்ற வைத்தாள். அடுப்பு புகைந்தது… கண்ணெல்லாம் எரிச்சல்…
‘…குனிஞ்சி ஊதினா தீப்புடிச்சிருக்கும் – ‘
ஊஹீம்… அவளால் குனிய முடியவில்லை!
அப்புறம் கஞ்சி…?
வயிறு பூமியில் படாமல் ஒரு காலை மண்டியிட்டு ஊன்றி ஒரு கையைத் தரையில் தாங்கிக்கொண்டு ஒரு மூச்சு இழுத்து ஊதினாள். ‘தபக்’கென்று அடுப்பில் தீ சுழன்று எரிந்தது; ஒரு கணம் அவள் தலையும் சுழன்றது.
- ‘அப்பாடா’. ஒரு வழியா தண்ணி கொதி வந்திடுச்சி. அரிசியைக் கழுவிக் கொட்டி ஒரு உடைந்த சட்டியினால் பானையை மூடினாள். எரிந்து வெளித்தள்ளிய நெருப்புத் துண்டுகளை மீண்டும் அடுப்பின் வாய்க்குள் தள்ளி மேலும் சில சுள்ளிகளையும் முறித்துச் செருகினாள்.
‘பட், பட்’டென்று தீப்பொறிகள் வெடித்துச் சிதறின. அவள் முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் துளிர்த்து வழிந்தன.
பரட்டைக் கூந்தல் கலைந்து நெற்றியிலும் முகத்திலும் வழிந்த வியர்வையில் ஒட்டிக் கொண்டது.
- அவளுக்கு இப்பொழுது அதெல்லாம் கவலை இல்லை. ஒரு வாய்க் கஞ்சி, ஒரு பிடி சோறு – ‘அப்பாடா’ என்று படுத்துக் கொள்ளவேண்டும். அவ்வளவுதான்!
‘சளபுள’ வென்ற சத்தம் பானைக்குள்ளிருந்து ஒலித்தது… மூடியிருந்த சோற்றுப் பானையின் வாயிலிருந்து பொங்கி வழிந்த நுரைத்த கஞ்சி அடுப்பிற்குள் வடிந்து ஒழுகியது.
‘சொர்’ என்ற சப்தம் கேட்டதும் ராசாத்தி அவசர அவசரமாய்ப் பானை மூடியை முந்தானையால் பிடித்து எடுத்துக் கீழே வைத்தாள்.
வெண்ணிறக் கஞ்சியில் சோற்றுப் பருக்கைகள் சுழன்று புரண்டு கொதித்துக் கொண்டிருந்தன.
… மட்டமான புழுங்கல் அரிசிக்கஞ்சி கொதிக்கும்போது கமழ்ந்து பரவும் மணம் இருக்கிறதே…
ஒருமுறை நெஞ்சு விரிய மூச்சை இழுத்து அந்த வாசனையை அனுபவித்தாள் ராசாத்தி.
கஞ்சியின் மணம் அவள் அடிவயிறுவரை சென்று ‘குபு குபு’வெனப் பசியைக் கிளறியது…
“கஞ்சி குடிச்சி மூணு நாளாச்சே…!”
பரபரவென்று உள்ளே சென்று அரிசிப் பானையில் கிடந்த உப்புப் பொட்டணத்தையும், ஊறுகாய்த் துண்டையும் எடுத்துக்கொண்டு வந்து அடுப்பின் முன்னே வைத்து விட்டு, மூலையில் உருண்டு கிடந்த கஞ்சிக் கலயத்தை எடுத்துப் பானையிலிருந்த தண்ணீரை ஊற்றிச் சுத்தமாகக் கழுவினாள்.
அடுப்பிலிருந்த சுள்ளியெல்லாம் எரிந்து தணிந்து விட்டது.
மூங்கில் தட்டி ஓரமாய்ச் சற்று நேரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். அங்கமெல்லாம் தளர்ந்து சுழன்று விடுவதுபோல் சலித்தது.
வரண்டு உலர்ந்து போன உதடுகளை நக்கிக் கொடுத்துக் கொண்டாள்.
மௌ¢ள நகர்ந்து பானையை இறக்கிக் கலயத்தில் கஞ்சியை ஊற்றினாள். சற்று ஆறட்டும் என்று கஞ்சிக் கலயத்தைக் கையிலெடுத்துக் குனிந்து ஊதினாள். ஊதும் போது அவள் வாயில் சுரந்த உமிழ்நீர் உதடுகளில் வழிந்தது. பக்கத்திலிருந்த ஊறுகாய்த் துண்டில் கொஞ்சம் தொட்டு நக்கிக் கொண்டாள்.
“த்டா” என்று சப்புக் கொட்டிக்கொண்டே அதே பொழுதில், கீழுதட்டை மடித்துக் கடித்து நெற்றியைச் சுருக்கி இடுப்பை வளைத்து நௌ¤ந்தாள்…
- அதென்ன பசியா, வலியா?
‘ஒரு வாய்க் கஞ்சியைக் குடிச்சி, ஒரு பிடி சோத்தையும் தின்னா எல்லாம் சரியாப் போயிடும் – ‘அப்பாடா’ன்னு நிம்மதியாத் தூங்கலாம்.’
ஊறுகாய்ப் பொட்டணத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, கஞ்சி நிறைந்த தகரக் குவளையில் வாய் வைத்து உறிஞ்சப்போகும் சமயம்…
“ஹேய்… ஹேய்ன்னானாம்!” என்ற குரல் அவளருகே ஒலித்து மென்னியைப் பிடித்து அழுத்தியது.
“எனக்கும்மா… எனக்கும்மா, கஞ்சி!”என்று அவள் எதிரே நின்று குதிக்க ஆரம்பித்தான் மண்ணாங்கட்டிச் சிறுவன். அவன் கையிலிருந்த கிழிந்த காற்றாடி காற்றில் அடித்து சென்றது கூட அவனுக்குத் தெரியவில்லை.
அவனைக் கண்டவுடன் ராசாத்திக்கு மத்தியானம் நடந்த சம்பவமும், அதன் விளைவாய் எழுந்த சச்சரவும் நினைவுக்கு வரவே ஆத்திரம் குமுறிப் பொங்கியது.
“முடியாது, என் கையாலே ஒனக்கு ஒரு பிடி சோறு போட மாட்டேன்… எங்கேயாவது ஒழிஞ்சு போ… மூஞ்சியிலே முழிக்காதே!” என்று ராக்ஷஸி போல் கத்தினாள்.
“உம் உம் பசிக்குதும்மா… கஞ்சி குடும்மா… ஐய, யம்மா…” என்று முரண்டினான் மண்ணாங்கட்டி.
“நீ என்ன பண்ணினாலும் சரி, ஒனக்கு ஒண்ணும் தர முடியாது. போ… திருட்டு மூதேவி… எங்கேயாவது போயித் திருடித் துன்னுடா, போ…”
“ஐய, யம்மா…”
“முடியாது… இன்னைக்கி என்ன ஆனாலும் சரி!”என்று கலயத்திலிருந்த கஞ்சியை ஒருபுறம் தள்ளிவைத்து மூடிவிட்டு, காவலுக்கு உட்கார்ந்து கொண்டாள் ராசாத்தி.
“ஐயையோ, பசிக்குதே… யம்மாடி, பசிக்குதே!” என்று தரையில் புரண்டு அழுது கல்லுளிமங்கத்தனம் பண்ணினான் சிறுவன்.
ராசாத்தியின் ஆத்திரமெல்லாம் பீறிக்கொண்டு வந்தது. பக்கத்திலிருந்த சுள்ளிக் குச்சியை எடுத்துத் தரையில் விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்த மண்ணாங்கட்டியின் முதுகில் விளாசினாள். சிறுவன் ‘குய்யோ, முய்யோ’ என்று கதறிக் கொண்டு ஓடினான்.
“திரும்பி வந்தா பலி வெச்சிடுவேன்… எங்கேயாவது ஒழிஞ்சி போ, பொணமே!” என்று கருவியவாறு குச்சியை விட்டெறிந்தாள்.
அடிவயிற்றில் ‘சுருக்’கென்றது; பற்களைக் கடித்துக் கொண்டாள்.
- பசியா, வலியா?
‘சனியன்… தின்றப்போ எமன் மாதிரி மென்னியெப் புடிக்க வந்திடுச்சி!” என்று முனகிக்கொண்டே குடிசையின் தட்டி ஓரமாகத் திரும்பி உட்கார்ந்து கஞ்சிக் கலயத்தை அருகில் இழுத்தாள்.
“யம்மா… ஹம்… ஹம்…” என்று சிணுங்கிக்கொண்டே மறுபடியும் அவள் பின்புறம் வந்து நின்றான் மண்ணாங்கட்டி.
“ஹீம், முடியாது!”
அவள் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
மண்ணாங்கட்டிக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் தாயையும் கஞ்சிக் கலயத்தையும் வெறித்து விழித்தன.
“அம்மா… தர்றியா மாட்டியா?” என்று அதட்டிக் கூவினான்.
“முடியாது, நீ என்னெக் கொன்னாலுஞ் சரி”- தன் மகனின் அதட்டலை எண்ணி உள்ளூரச் சிரித்துக் கொண்டே கஞ்சிக் கலயத்தில் கையை விட்டுத் துழாவி ஒரு கவளம் சோற்றை வாயருகே கொண்டு போனாள்…
“எனக்கும்மா, எனக்கு!” என்று அவள் கையிலிருந்த கலயத்தைப் பாய்ந்து பிடுங்கினான் மண்ணாங்கட்டி. அவள் தர மறுத்தாள். சோற்றுக் கையால் அவனைத் தள்ளிக் கொண்டே மறு கையால் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவன் ‘ஓ’ வென்று அலறியவாறே மண் கலயத்தை விடாப்பிடியாய்ப் பறிக்க முயன்றான்…
இந்த மல்லுக்கட்டில் கலயத்திலிருந்த கஞ்சியெல்லாம் கீழே கவிழ்ந்து விட்டது.
- ஒரு கணம் இருவரும் திகைத்தனர்.
அவனை எட்டிப் பிடிக்க வெறிகொண்டு பாய்ந்தாள் ராசாத்தி; அவன் தப்பி விட்டான்…
“அடே, நீ அழிஞ்சி போயிடுவே… ஒன்னெப் பாம்பு புடுங்கும்… நீ மண்ணாய்ப் போக!… சடையம்மாவுக்கு ஒன்னெ வெட்டிப் பலி குடுக்க!” என்று அழுதவாறே சபித்தாள் ராசாத்தி.
அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அழுது கொண்டே தரையில் சிந்திய கஞ்சிச் சோற்றைக் கை நிறைய அள்ளிக்கொண்டு எடுத்தான் ஓட்டம்.
“அடே பாவி, நீ அழிஞ்சி போவே!” என்று பற்களைக் கடித்துக் கூவிக் கொண்டே கையிலிருந்த கஞ்சிக் கலயத்தை அவன் ஓடிய திசையில் வீசியெறிந்து ‘ஓ’வென்று அலறி அழுதாள். தரையில் மோதிய கலயம் நொறுங்கியது.
“பெத்த வயத்திலே பெரண்டையே வெக்கோணும்…”என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு, ‘படார், படார்’ என்று முகத்திலும் மார்பிலும் அறைந்து கொண்டாள்.
ஒரு கணம் அவள் விழிகள் வெறித்துச் சுழன்றன…
- உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சிரமப்பட்டுக் காய்ச்சிய கஞ்சியெல்லாம் தரையில் சிதறிப் போய் விட்டதே!
‘அட தெய்வமே’ என்று அலறி ‘மடா’ரெனச் சாய்ந்தாள்; புரண்டு புரண்டு அழுதாள்…
திடீரென இடுப்புக்கு கீழே அலகு கொண்டு குத்தி வாங்கியது போன்ற வேதனை!
“ஐயோ!” வென்று அலறிய ராசாத்தி நிலைமையை உணர்ந்து கொண்டாள்.
- ‘இடுப்பு வலிதான்…’
அவளால் நகர முடியவில்லை.
மார்பில் என்னவோ அடைத்தது. மேல் வயிற்றில் யாரோ மிதிப்பது போல் மூச்சு முட்டியது. வயிற்றில் குடல் எல்லாம் கழன்று சரிவதுபோல் என்னமோ புரண்டது. காலும் கையும் விறைத்துக் கொண்டன. கால்களைத் தரையில் உதைத்து உதைத்துத் தேய்த்துக் கொண்டாள். கைகளால் தரையைப் பிறாண்டினாள். உதட்டைக் கடித்து வாயெல்லாம் ரத்தம்!
“ஐயோ… அம்மா… கடவுளே… சடையம்மா தாயே!” என்று என்னென்னவோ பிதற்றினாள்; பிரார்த்தித்துக் கொண்டாள்.
விறைத்த கால்கள் விலகி விலகிப் பின்னிக் கொண்டன.
- பாதங்களைத் தரையில் வெறி கொண்டு தேய்க்கும்போது காலில் கிடந்த ஈயக் காப்பும் இழுபட்டது; தேய்ந்தது.
‘இனி பிழைப்பதாவது, செத்துத்தான் போயிடுவோம்’ என்று தோன்றியது அவளுக்கு.
ஒரு வாய்க் கஞ்சிக்குத் தான் பெற்ற மகனை அடித்து விரட்டி விட்டா…?
தலையைப் பிய்த்துக் கொண்டு, “அடே, மண்ணாங்கட்டி! எங் கண்ணூ… நா செத்துப் போயிடுவேன்டா!” என்று உரத்த குரலில் ‘ஓ’ வெனக் கதறி அழுதாள்.
அந்த ஒரே அலறலில், பின்னிக் கிடந்த அவள் கால்கள் பிய்த்துக் கொண்டு விலகின…
அந்த வேகத்தில் ஒற்றைக் காலில் கிடந்த அந்த ஈயக் காப்பு, காலைவிட்டுக் கழன்று உருண்டு ஓடி எங்கோ விழுந்தது…
ராசாத்தியின் அலறல் லாரியில் விறகு இறக்கிக் கொண்டிருந்த மாரியாயியின் செவிகளுக்கு எட்டியது. அவ்வளவுதான்; கையில் இருந்த விறகைக் கீழே போட்டு விட்டு ஓட்டமாய் ஓடி வந்தாள் மாரியாயி; அவளைத் தொடர்ந்து ஒரு சிறு கும்பலே வந்தது.
“ராசாத்தி!” என்று கூவிக் கொண்டே குடிசைக்குள் நுழைந்தாள் மாரியாயி…
“ஆம்பளெப் பசங்கெல்லாம் போங்க. உம்… ஏ குட்டி! நீ ஏன் நிக்கிறே?… போ…!” என்று சிறுவர்களை எல்லாம் விரட்டினர் சில பெண்கள்.
“ராசாத்தி, ராசாத்தி” என்ற குரல்கள்!
- பதில் இல்லை.
“ஐயோ ராசாத்தி!” என்று அவள் முகத்தைப் பிடித்துக் கொண்டு அலறினாள் மாரியாயி.
ராசாத்தியின் கண்கள் சற்றே திறந்தன; உதடுகள் கோணிக் கோணி வலித்தன.
“எங் கண்ணூ மண்ணாங்கட்டி! எங் கண்ணூ… மண்ணாங்…”
‘கொளக்’கெனத் தலை சாய்ந்தது.
ராசாத்தியின் தலைமாட்டில் விளக்கொன்று ஏற்றி வைக்கப்பட்டது.
அவள் உடல் மீதும், அவள் உடலிலிருந்து பெருக்கெடுத்த உதிர வெள்ளத்தில் குழம்பிக் கிடந்த உயிரற்ற பிண்டத்தின் மீதும் அந்த அகல் விளக்கின் ஒளியும், அங்கே சூழ்ந்திருந்த மனிதர்களின் நிழலும் ஆடிச் சிதைந்து படிந்து படர்ந்தன.
திடீரென “அடி, எம் பொறவி ராசாத்தீ… ஈ… ஈ!” என்ற மாரியாயியின் ஒப்பாரிக் குரல் பயங்கரமாக ஓலமிட்டது.
3
இரவெல்லாம் எங்கோ கிடந்து தூங்கிவிட்டு – பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்தபின் – மாலையில் தாயிடம் திரும்பிக் கொண்டிருந்தான் மண்ணாங்கட்டி.
தெருமுனையில் வரும்போதே குடிசைக்குப் பக்கத்தில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு தாயைப் பார்த்ததும், “யம்மாவ்!” என்று அலறி வீழ்ந்தான்.
“யம்மா… யம்மா… யம்மா!” இதே குரல் நாள் முழுதும் விம்மி விம்மி ஒலித்தது. மண்ணாங்கட்டி சிலையாய் அமர்ந்திருந்தான். கேவிக் கேவி மூச்சு இளைத்தது.
பிரமை தட்டிப் பொறி கலங்கி உட்கார்ந்திருந்த அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் மாரியாயி…
அவனைக் கதறக் கதற விட்டுவிட்டு அவன் தாய் போய்விட்டாள்…!
- இல்லை, தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்!
4
இரவு…
மாரியாயியின் அடுப்பு புகைந்து அடங்கிவிட்டது. புருஷனுக்குச் சோறு போட்டாள்.
- அவள் மனசில் என்னவோ ‘திக்’கென்றது.
“பாவம், இனிமே எங்கே போயி ‘அம்மா, பசிக்குது – சோறு போடு!’ன்னு கேப்பான்?… மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கூட்டியா மச்சான். அவனைப் பார்க்காமெ என்னாலே ஒரு பிடி சோறு துன்ன முடியாது!” என்று அழுதாள் மாரி.
சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு மாணிக்கம் எழுந்து ஓடினான்.
- அதோ… அதோ!
“டேய், மண்ணாங்கட்டி” என்று கூவிக்கொண்டே ஓடுகிறான்.
ஆனால், அது வேறு யாரோ?
- “டேய், மண்ணாங்கட்டியெப் பார்த்தியாடா?”
“இல்லியே…”
- “அவனைப் பார்த்தியா?”
“ஊஹீம்…”
“நீ பாத்தியா?
“சுடுகாட்டுக்குப் போறேன்னு போனான்!”
“சுடுகாட்டுக்கா?”
-”மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி!”
மாணிக்கம் ஓட்டமும் நடையுமாகச் சுடுகாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.
- போகும் வழியில் – அதோ, சடையம்மன் கோயிலில் யாரது? அவனா? மண்ணாங்கட்டியா?…
“மண்ணாங்கட்டி!”
- ஆமாம், அவனேதான்.
ஓடிவந்த மாணிக்கம் அவனை வாரி அணைத்துக் கொண்டான்.
“வாடா, போவோம்!” என்று அவனை இழுத்தான் மாணிக்கம்.
“அம்…மா…வ்…” என்று உணர்ச்சிகள் வெடித்துச் சிதறிக் குழம்பிய குரலில் அலறியவாறே மாணிக்கத்தை இறுகத் தழுவிக்கொண்டான் மண்ணாங்கட்டி.
“எங் கண்ணில்லே, அழுவாதேடா!” என்று ஆறுதல் கூறிய மாணிக்கத்தின் கண்களிலிருந்து நீர் பெருகியது.
5
″சாப்பிடுடா, என் கண்ணில்லே…”
சட்டியில் சோற்றைப் பிசைந்து கொண்டே கெஞ்சினாள் மாரி.
அவன் மௌனமாய் வானத்தை வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.
“உம், சாப்பிடும்மா!” என்று ஒரு பிடி சோற்றை அவன் வாயருகே கொண்டுபோனாள் மாரி. அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் – உணர்ச்சியற்ற, வெறித்த பார்வை.
அவன் கை அவள் கையிலிருந்த ஒரு பிடி சோற்றை வாங்கியது. விழிகள் அந்தக் கவளச் சோற்றை வெறித்தன. வெறித்த விழிகளில் நீர் சுரந்தது…
கையிலிருந்த சோற்றை அருகே இருந்த தகரக்குவளையில் போட்டுக் கந்தல் துணியால் மூடி ஒரு பக்கம் வைத்தான்.
“இன்னாடா இது, இது எடுத்துத் துன்னு!”
“ஊஹீ… அது… அது… எங்கம்மாவுக்கு!”
குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-
“என்னடா, அப்படிப் பார்க்கறே?” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.
“அம்மா…ஆ…ஆ!” – அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.
“மவனே!” என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.
“அம்மா…ஆ…!”
“மவனே…”
-------------
38. தரக்குறைவு
ஐந்தாறு பிரிவு தண்டவாளங்கள் நிறைந்த அந்த அகலமான ரயில்வே லைன் மீது, இருட்டில் கப்பிக் கல் குவியலின் மீது அமர்ந்து அழுதுகொண்டிருந்த அவள், இந்தக் குரலையும் இதற்குரியவனையும் எதிர்பாராதவளாய், இவனைக் கண்டு திகைத்தவள் போன்றும், அஞ்சியவள் போன்றும் பதைத்தெழுந்து நின்றாள்.
அப்போது கனைப்புக் குரலை முழக்கியவாறு சடசடத்து ஓடிவந்த மின்சார ரயிலின் வெளிச்சத்தில், அடிபட்டு உதடுகள் வீங்கிய அவளது முகமும், அழுது கலங்கிய பெரிய கண்களும் அவனுக்குப் பிரகாசமாய்த் தெரிந்தன. அவன் தனது கோலத்தைப் பார்க்கின்ற கூச்சத்தாலும், முகத்தை மூடிக்கொண்டாள் அவள். ரயில் போன பிறகும் முகத்தை மூடியிருந்த கரங்களை எடுக்காமல், இன்னும் அழுந்தப் புதைத்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதாள். அழுகையினூடே அவள் புலம்பினாள்…
”நீ போ! நீ இன்னத்துக்கு வந்தே? நானு இப்படியே போறேன். இல்லாகாட்டி ரயில்லே தலையைக் குடுத்து சாவறேன். உனுக்குப் பண்ண துரோகத்துக்கு எனக்கு இதுவும் ஒணும், இன்னமும் ஒணும்” என்று அழுது புலம்பியபொழுது, அவள் தனக்கிழைத்த துரோகத்தை எண்ணியோ, அதை உணர்ந்து அவள் கதறுவதைக் கண்ட சோகத்தாலோ அவனும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். குமுறிவரும் அழுகையை அடக்கிக் கொள்வதற்காக வானத்தை நோக்கித் தலை நிமிர்ந்து பெருமூச்சுவிட்டான்.
”இப்படியெல்லாம் வரும்னு எனக்குத் தெரியும். ஆமாம்மே! எனக்குத் தெரியும். ம்… இன்னா செய்யலாம்! போனது போவட்டும். அதுக்கோசரம் நீ ஒண்ணும் ரயில்லே தலையெ வுட வேணாம். எங்கே போவணும்னு பிரியப்படறியோ அந்த எடத்தைச் சொல்லு, உன்னை இஸ்தாந்த தோசத்துக்கு, ரெண்டு வருசம் உன்னோட வாய்ந்ததுக்கு பர்த்தியா, அங்கேயே இட்டுக்கினு போயிடறேன். உனுக்கு பட்டணம் ஆவாதும்மே! இந்தப் பொயப்பு ஓணாம்மே. இங்கேயே இருந்தா இன்னம் பாயாப் பூடுவே! ஆமாம்மே… நீ ஊருக்கே பூடும்மே!”
இப்போது அவனுக்கு எதிர்ப்புறத்தி லிருந்து கனைப்புக் குரலை முழக்கிய வாறு சடசடத்து ஓடிவரும் மின்சார ரயிலின் கண் கூச வைக்கும் வெளிச்சத் தில் அவள் அவன் முகத்தைத் தீர்க்க மாகப் பார்த்தாள். தன்னைக் கண்டு அருவருத்து அவன் முகம் சுளிப்பது போல் அவள் அவனது முகத்தோற்றத்தை, வெளிச்சத்தைக் கண்டு கூசும் அவன் விழிகளைக் கற்பனை செய்துகொண் டாள். அவன் தன்னை அருவருத்து ஒதுக்கவும், வெறுத்து விலக்கவும் நியாயம் இருக்கிறது என்ற உணர்வில் தலை குனிந்து நின்றாள். ஆனால், ‘தனக்கு ஆறுதல் கூறவும், தன் விஷயத்தில் இன்னும் சிரத்தை காட்டித் தனது நிராதரவான நிலையில் துணையாய் வந்து நிற்கவும் என்ன நியாயம் இருக்கிறது அவனுக்கு? தனக்குத்தான் அதை ஏற்றுக் கொள்ள என்ன நியாயம் இருக்கிறது?’ என்று யோசித்தவாறு, மண்தரையில் வலதுகாலின் முன் பாதத்தைத் தேய்த்தவாறு நின்றிருந்தாள்.
கணவன் மனைவி என்ற நியாயத்தின் பாற்பட்டோ, வஞ்சிக்கப்பட்டவனும் வஞ்சித்தவளும் என்ற முறையிலோ அல்லாமல், வெறும் மனித நியாயத்தினால் உந்தப்பட்டு, அவள் நிலையை மனித இதயத்தால் மட்டுமே உணர்ந்து அங்கு வந்து நின்றிருக்கும் அவன் அவளிடம் சொன்னான்…
”நீ நெசத்துக்குதான் சொல்றியோ, சும்மனாச்சியும்தான் சொல்றியோ… ரயில்லே தலைய வுட்டுக்குவேன்னு செத்த மின்னே நீ தலைய விரிச்சுப் போட்டுக்கினு அயுதுக்கினே ஓடியாந்தியே, அத்தப் பாத்தப்ப எனுக்கு ‘பக்’குனு வயித்திலே என்னமோ ஆயுடுச்சிம்மே! உம் பின்னாலேயே நா ஓடியாந்தா கும்பலு வந்துடும்னு வண்டிய மெறிச்சிக்கினு கெங்குரெட்டி ரோடு வளியா ஓடியாறேன். நல்லவேளை, கேட்டு சாத்தலே. அப்பக்கூட இன்னா, கேட்டாண்ட வரும்போது ‘லெப்டு’காத்தான் பாத்துக்கிறேன். பாத்தா, நீ ஒம்பாட்டுக்கு ரயில் ரோட்டு மேல போயிக்கினே கீறே! சேத்துப்பட்டு டேசனாண்டயாவது புடிச்சிடமாட்டமானு வேகமா ரெண்டு மெறி மெறிச்சனா, இது ஒரு தெண்டக் கருமாந்தர வண்டி. பூந்தமல்லி ஐ ரோட்டாண்ட வரும்போது ‘மடார்’னு செயின் கயண்டிக்கிச்சு. அத்த ஒரு இஸ்ப்பு இஸ்த்து மாட்டிக்கினு வந்தா, நேரு பார்க்கண்ட வரும்போதே இங்கே நீ நின்னுக்கினு இருக்கிறதப் பாத்தனா… அப்படியே வண்டியப் போட்டுட்டு ஓடியாறேன். ‘இவன் எதுக்கோசரம் வரான்’னு நீ நெனப்பேன்னு எனக்குத் தெரியும். நீ இன்னா நெனச்சா இன்னாம்மே எனுக்கு? உன்னய தாலிகட்டி இஸ்த்தாந்தவன் நானு. உனுக்கு இன்னா நடந்தாலும் அதுக்குக் கார ணம் நாந்தான்னு எனுக்குப் படுது. அதாம்மே நாயம்!
‘அது இன்னாடா நாயம்? நீ இஸ்தாந்தே, சரி! நாந்தான் உன்னை உட்டுட்டு இன் னொருத்தங்கூடப் பூட் டேனே, அப்புறம் இன்னாடா உனக்கு ரைட்டு?’ன்னு நீ நெனப்பே. ஊர்ல உள்ளவனுங்களும் அதாம்மே கேக்கறானுவ. அவனுகளுக்கு இன்னாம்மே தெரியும் என்னப் பத்தி. உனக்காவது தெரியும். தெரியலேன்னாலும் இப்ப சொல்றேன்… கேளும்மே! நீ எவங்கூடப் போனாத்தான் இன்னாம்மே, இப்ப இங்கே வந்து உன்ன இஸ்த்துக்கினு போயி இன்னொரு தடவை வாயணும்னா ஓடியாறேன்? அப்படி நென்ச்சிக்கினு ‘போ… போ’னு வெரட்டாதே! நீ என்னோட வாய்ந்தாலும் வாயாட்டியும் உங் கயுத்தில தொங்கற தாலி நாங் கட்னதுதானே? அது உங் கய்த்திலே இருக்கிற வரைக்கும் எனக்கு ரைட்டு இருக்கும்மே! அநியாயமா எங்கனாச்சும் உய்ந்து, எங்கண்ணு மின்னாடி நீ சாவறதப் பாத்துக்கினு இருந்தா, நாளைக்கி எவனும் வந்து என்னை ஒண்ணியும் கேக்கப் போற தில்ல. ஆனா, எம் மனசு கேக்குமேம்மே! ‘அவதான் பட்டிக்காட்டுப்பொண்ணு…அறிவு கெட்டுப் போனா! அந்தப் பாவத் துக்கு நல்லா கஸ்ட்டமும் பட்டா.அதுக்கெல்லாம் நீதாண்டா காரணம்? அநியாயமா இப்ப பூட்டாளே! எல்லாம் உன்னாலதானே’ன்னு நாளைக்கு எம் மனசே என்னக் கேக்காதாம்மே..? அப்ப இன்னா பதில் சொல்லுவேன்? அதுக் கோசரம்தாம்மே ஓடியாந்தேன்.
இந்த ரெண்டரை வருசத்திலே இப்ப ஆறு மாசமாதானேம்மா நீ எங்கூட இல்ல! ரெண்டு வருசம் வாய்ந்தமே, ஒரு சண்டை போட்டு இருப்பனா, சாடி போட்டு இருப்பனாம்மே? நீதான் ஒரு நாளு சோத்துக்குப் பணம் தரலேன்னு கூவியிருப்பியா? அங்கே போயிக் குடிச்சியே, இங்கே போயி சுத்துனியேனு எங்கிட்டே வந்து கேட்டிருப்பியாம்மே? சந்தோசமாத்தானே வாய்ந்தோம்… பிரியமாத்தானே இருந்தோம்..? எந்தப் பாவி கண்ணு பட்டுச்சோ… திடீர்னு என்னென்னமோ ஆயிடுச்சி! சரித்தான், இப்போ பேசி இன்னா பண்றது? நடந்தது நடந்து போச்சு..! கயுத்திலே கட்ன ஒரு கய்த்த வெச்சுக்கினு, பிரிய மில்லாத ரெண்டு பேரும் கயுத்திலே சுருக்கிக்கினு சாவறதா? என்னமோ புடிக்கலே, அவ பூட்டா! நாமளும் இன்னொருத்தியப் பாத்துக்குவோம் அப்டீன்னு கூட நான் யோசிச்சேன். ஆனா இன்னா, எனக்கு உன்னியுந் தெரியும்; நீ போனியே அவம் பின்னாலே அந்த சோமாறியேயும் தெரியும். உனக்கு இன்னாம்மே தெரியும் ஒலகம்? ம், நீ கொயந்தம்மே! பட்ணம் பளபளப்பா இருக்குது உங்கண்ணுக்கு! நீ அத்தப்பாத்து பல்லக் காட்டிக் கினு நின்னுக்கினே. நீ என்னை ஒண்ணும் ஏமாத்தலேம்மே! உன்னியேவே ஏமாத்திக்கினே. ஆமாம்மே!”
அவன் இடையிடையே பேச்சை நிறுத்திப் பெருமூச்செறிந் தும், சூள் கொட்டியும், ‘ம்… ம்…’ என்று உணர்ச்சி மேலிட்டு உள்ளூ றக் குமுறிக் கூறிய அந்த வார்த்தை கள் அவள் நெஞ்சைக் குத்திக் குழைத்து, உடம்பை நாணிச் சிலிர்க்க வைத்து, அவளது ஆத்மாவை அவன் பாதங்களில் வீழ்ந்து பணிய வைத்தது.
”ஐயோ… நா இன்னத்துக்கு இன்னம் உசிர வெச்சிக்கினு இருக்கணும்?” என்று, தனக்குக் கிடைக்கவொண்ணாததைப் பெற்றிழந்த பேரிழப்பை எண்ணிக் குமுறியவாறே தலையில் கை வைத்துக் தரையில் உட்கார்ந் தாள். அவளைப் பார்க்கும்போது, இந்த ஆறு மாதமாக அவளுக்காகப் பட்ட வேதனைகளைப் போலவே, இப்பொழுது சற்று அதிகமாக அவன் மனம் வேதனையுற்றது. அழுகையையும் உணர்ச்சி மேலீட் டையும் அடக்கி அடக்கி, நெஞ்செல்லாம் புண்ணாகிப்போனது போன்ற உணர்வு தொண்டைக் குழி வரை வந்து நொந்தது.
அவன் கரகரத்த குரலில் பேசி னான்… ”நானு உனுக்குத் தாலி கட்ன புருசன்றத மறந்துட்டுத் தாம்மே பேசறேன். இந்த ஒறவு இப்பத்தானம்மே? ரெண்டு வருச மாத்தானம்மே? அதுக்கு மின்னே உன்னை தெம்மாங் கொயந்தே லேர்ந்து எனக்குத் தெரியும்மே! ‘மாமெ, மாமெ’னு கூப்புட்டுக்கினு கம்பங்கொல்லைலேயும், மல்லாக் கொட்ட காட்லயும் ஓடியாரு வியே… அப்ப இன்னாம்மே ஒறவு நமக்கு? நானு பட்ணத்லேர்ந்து வந்தன்னா, நீயும் உன் தங்காச்சியும் ஓடியாந்து காசி வாங்கிக்கினு, கத சொல்லணும்னு ரோதனை பண்ணுவீங்களே, அப்ப நானு உங்கிட்டே காட்டின பிரியமெல் லாம் இன்னா ஒறவுலம்மே? உன்னக் கண்ணாலங் கட்டிக் கினும்னு நானு நெனச்சது கூட இல்லேம்மே அப்போ! ஏதோ கூடப் பொறந்தது இல்லாத கொறையிலே வெச்ச பாசந்தா னம்மே! பட்ணத்திலே கெடக்கிற கய்திங்களப் பார்க்குறப்போ, ‘சீசீ! இந்த மாதிரி நமக்கு வேணாம்.நம்ப பக்கத்திலே நல்ல மாதிரி ஒரு பொண்ணப் பாத்துக் கட்டிக் கினம்னு நானு எண்ணம் வெச்சிருந்து மெய்தான்! ஆனா, அய்யனாரப்பன் மேல ஆணையாச் சொல்றேன், ஊர்ல வந்து மித்த வங்க சொல்ற மின்னாடி நானு உன்ன நெனைக்கவே இல்லம்மே! அப்புறம் யோசிச்சேன். ‘நம்ப கிட்டே ரொம்பப் பிரியமா இருக் குமே அந்தப் பொண்ணு… கட்டிக் கினாத்தான் இன்னா? அத்தங் காட்டியும் நல்ல பொண்ணு எங்கே கெடைக்கும்’னு யோசிச்சு, உன் னக் கட்டிக்கினேன். கட்டிக்கினு வாய இஸ்டம் இல்லேன்னா போ! அதுக்கு மின்னாடி இருந்த பிரியம் எங்கேம்மே பூடும்? ஒண்ணா வாய்ந்தப்போ காட்ன ஆசையெல்லாம் பொய்யா வாம்மே பூடும்? அந்த மாதிரி ஒறவுலேதாம்மே இப்ப இங்க வந்து நிக்கிறேன்.
போனதுதான் போனியே, ஒரு ஒயுங்கானவனாப் பாத்துப் போனியா? சரி, எங்கனாச்சும் நல்லா இருக்கட்டும்னு நானு நிம்மதியா இருப்பேன். அவன் சரியான எச்சப்பொறுக்கி! நல்லா வாயறவங்கள இஸ்த்துகினு வந்து ரெண்டு மாசம் மூனு மாசம் வெச்சிருந்து அப்புறம் தெருவுல வுடறதே அவனுக்குத் தொயிலு! தன் வவுத்துக்குத் தன் கைய நம்பாத சோமாறி! எனக்கு உன்னி யப் பாத்து அய்வுறதா சிரிக்கிறதானு தெரியலம்மே!
அதுக்கோசரந்தாம்மே நானும் ஆறு மாசமா ஒரே கொயப்பத்திலே இருக்கேன். இன்னா கொயப்பம்னு கேளு? நீ அறிவு கெட்டுப் போயி மின்னே பின்னே யோசிக்காம அந்தச் சோமாறி கூட பூட்டே! எனக்கு நல்லாத் தெரியுது, நாளைக்கி நீ தெருவுலே நிக்கப் போறேன்னு. உன்ன வெச்சுக்கினு நானு வாயப் போறதில்லேன்னாலும், உன்னப் பத்தி ஒரு முடிவு தெரியாம இன்னொருத்தியைக் கொண்ணாந்து வெச்சிக்கினு நானு எப்படிம்மே வாய்றது? அப்படி வாய்ந்தா இப்ப இங்கே வருவனாம்மே? வரலேன்னா நீ ரயில்லே வுயுந்து சாவறேனு வெச்சிக்கோ, அந்தப் பாவம் யாருக்கும்மே? அந்த சோமாறிக்கா, இல்ல, அவனைத் தெரிஞ்சிருந்தும் உன்னை இங்கே கொண்ணாந்து அவங் கையிலே உட்டுட்ட எனக்கா? நல்லா யோசிச்சுப் பாரும்மே!”
அவன் பேசப் பேச, அவனது வார்த்தைகள் அவளது மன இருளில் எத்தனையோ முறை ஒளி மழை சொரிந்து, தன்னைத்தான் உணரத் தன்மை தந்து கொண்டிருந்தது.
சில விநாடிகள், அமைதியாய் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துப் புகைத்தவாறே, தூரத்தில் பூந்தமல்லி ஐரோடில் நிற்கும் தனது சைக்கிள் ரிக்ஷாவையே வெறித்துப் பார்த்திருந்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் பேசினான் அவன்…
”இந்த ஆறு மாசமா நா ஒண்ணும் சம்பாதிக்கலம்மே! இன்னாத்த சம்பாதிக்கிறது? இன்னாத்துக்கு சம்பாதிக்கிறது? வண்டிய ரிப்பேருக்கு உடணும். மூணு மாசத்துக்கு மிந்தியே… பசி தாங்க லேன்னா ஒரு சவாரி. சவாரி போறதுக்கு மனசு இல்லேன்னா பட்டினி! இப்பிடியாம்மே நா இருந்தேன் இதுக்கு மிந்தி? இந்த மாதிரிக் கியிஞ்ச சட்ட போட்டுக் கினு இருப்பனாம்மே?” என்று அவன் நிமிர்ந்தபோது, ஒரு விநாடி அவன் மீது வீசிய தூரத்து ரயிலின் வெளிச்சத்தில் அவள் அவனை நன்றாகப் பார்த்தாள்.
பரட்டைத் தலையும், முகமெல்லாம் கட்டை பாய்ச்சி நின்ற தாடியும், வியர்வையில் ஊறிக் கிழிந்த சட்டையும், கிழிசலினூடே தெரிந்த எலும்பெடுத்த மார்பும்…
அவள் ஒரு குமுறலையே தனது பதிலாகச் சொல்லித் தலையை பிடித்து சற்றுக் குரலை உயர்த்தி அழுதாள்.
”இதுக்கோசரம் இன்னும் கொஞ்சம் அயுவாதம்மே! போனது போச்சு! நெதம் ராவும் பகலும் அந்தப் பொறுக்கி குடிச்சிட்டு வந்து ஒன்ன மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறப்போ, ‘அடப்பாவி! உன் தலை எயுத்தா’னு எத்தினி நாளு நா அய்திருக்கேன் தெரியுமா? எவ்வளவு சீரா வாய்ந்தா… இப்படி மவ சீரழியறா ளேனு ஒரு அப்பங்கார மாதிரி, ஒரு அண்ணங்கார மாதிரி, ஆரோ ஒரு பரதேசி மாதிரி ஒனக்காக அய்து இருக்கேன்!
அந்த மாதிரிதான் இப்பவும் வந்திருக்கேன். உனுக்குத் தாலி கட்னவங்கிற மொறையில வரலே. உன் நல்ல காலம், இவ்வளவு சீக்கிரமே உன்ன அவன் ஒதைச்சி வெரட்டிப்பிட்டான். உன்ன ஊர்ல கொண்டு போயி உட்டுடறேன். நம்ப சாதி வயக்கப்படி பஞ்சாயத் துக் கூடி பேசி ரத்துப் பண்ணிட்டு வந்துடறேன். அப்புறம் உம் பாடு. நானும் வேற யாரையாவது பாத்துக்கினு நிம்மதியா வாய்ந்து டுவேன். ரெண்டு பேரும் வாய்நாள வீணாக்கிக்க வேணாம். இன்னா சொல்றே? சொல்றது இன்னா… எந்திரி, போவலாம்! பத்தரை மணிக்கு இருக்கு ரயிலு. அதான் நல்லது. உன்ன எனுக்கு நல்லாத் தெரியும். உம் மனசுக்கு நீ இன் னிக்கி இல்லேன்னா இன்னொரு நாளு வந்து இந்த ரயில்ல தலைய வுட்டுக்குவே. ஆமாம்… உனக்கு ஒலகம் தெரியாதும்மே! நீ கொயந்தம்மே. அதனாலதான் எனக்கு ஒம் மேலே கோவமே வரலே!”
”வேணாம், நான் ஊருக்குப் போகமாட்டேன். உன் கையா லேயே என்னை ரயில் முன்னே புடிச்சுத் தள்ளிடு. சத்தியமா, சந்தோசமா சாவேன். ஆமா, உன் கையால” என்று அவன் எதிரே எழுந்து நின்று, கதறி அழுதவாறு கைகூப்பிக் கெஞ்சினாள் அவள்.
”இன்னாம்மே சுத்தப் பைத்தி யமா இருக்கே! உன்ன ரயில்ல தள்றதுக்கா ஒங்க ஆத்தாளும் அப்பனும் உன்னிய எனுக்குக் கட்டி வெச்சாங்க?” என்று அவளைக் கண்டிப்பது போல் சற்றுக் குரலை உயர்த்திக் கத்தினான் அவன்.
”ம்… பொறப்படு, பொறப்படு! போவலாம்” என்று, கப்பிக்கல் குவியலின் மீதிருந்த அவன், இன்னும் இங்கேயே நின்றிருந்தால் அவளது தற்கொலை எண்ணமே வலுக்கும் என்ற உணர்வில், கீழே இறங்கினான்.
அவன் தன்னருகே வந்தவுடன் எழுந்து நின்ற அவள், அவன் முகத்தைத் தாங்கொணாத் துயரத்தோடும் ஏக்கத்தோடும் பார்த்தாள். அந்தப் பார்வையில் விளைந்த சோகம் கண்ணீராய்ப் பெருகிப் பார்வையை மறைத்தது. அவளால் தனது தவிப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. திடீரென அவன் கரங்களைப் பிடித்துக்கொண்டு ‘ஓ’வென்று கதறினாள்.
”என்னக் கொண்டு போயி நீ ஊர்ல விட்டாலும், இங்கேயே ரயிலு முன்னால தள்ளினாலும் ஒண்ணுதான். நானு பாயாப் பூட்டவள்” என்று அழுது புலம்பினாள்.
”இன்னாம்மே, இப்ப இன்னா நீ மட்டும் பெஸலா பாயா பூட்டே? மனுசாள்னா தப்பே பண்றதில்லியா, அப்படியும் இது தப்பே இல்லியே! புடிக்காத ஒருத்தனோட வாய முடியலேனு ஒருத்தி பூட்டா, அது தப்பா? போன எடமும் சரியில் லேன்றதுதான் நீ செஞ்ச தப்பு! சர்தான், ஊருக்கே போயி உனுக்குப் புடிச்சவனாப் பாத்துக் கட்டிக்கறது…”
”ஐயோ! என்னக் கொல்லாதி யேன். நானு உன்னப் புடிக்காம ஒண்ணும் ஓடிப் போவலே. ஏன் ஓடிப்போனேன்னு எனக்கே புரியலே. அல்பத்தனமா இன்னா இன்னாத்துக்கோ ஆசைப்பட் டேன். நீ இன்னா ரிக்ஸாக்காரன்தானே… என்னிக்கும் இதே கதிதான் உனுக்குன்னு யார் யாரோ சொன்னதக் கேட்டு… நீ சொன்னது மாதிரி பளபளப்புக்கு ஆசப்பட்டுப் பல்லைக் காட்டிப் பாயாப் பூட்டேன். பாவி… நான் பாவி…”
அப்போது சிக்னல் இல்லாத தால் மெதுவாக வந்து நின்ற மின்சார ரயிலின் வெளிச்சத்தில் இருவருமே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் முழுமையாகக் கண்டனர்.
அவன் கண்கள் சிறுத்து, முகமெல்லாம் அழுகையில் சுருங்கித் துடிக்க, வறண்ட உதடுகள் அசைய, கேட்டான்…
”அப்படியா..? நெசம்மாவா..? என்னப் புடிக்காம, என்னோட வாய இஸ்டமில்லாம நீ என்ன வுட்டுப் போவலியா? நெசம்மா சொல்லும்மே! இன்னம் உனுக்கு எம்மேல பிரியம்தானா? என்னோட வாய இஸ்டம்தானா?” என்று ஒவ்வொரு கேள்வியையும் குரலைத் தாழ்த்தித் தாழ்த்தி, கடைசியில் ரகசியமாக அவள் முகத்தருகே குனிந்து ‘இஸ்டந்தானா?’ என்றவாறு அவளது தோளை இறுகப் பற்றினாள்.
அந்தக் கேள்விக்கும் அந்த ஸ்பரிசத்துக்குமே காத்திருந்தவள் போன்று மெய்சிலிர்த்து இதயங் கனிந்து, ஆர்வமும் ஆவேசமும் கொண்டு அவன் மீது சாய்ந்து அவனைத் தழுவிக்கொண்டு அவள் அழுதபோது, காத்திருந்த ரயிலுக்கு சிக்னல் கிடைத்து நகர்ந்தது.
”மாமா… என்ன மன்னிப்பியா? நான் உனுக்குத் துரோகம் பண்ணிட்டுப் பாயாப் பூட்டவளில்லியா?”
”அட சீ, கய்தே! பெரிசா கண்டுப்பிட்டே! மனசு தங்கமா இருந்தாப் போதும்மே! நானு கூடத்தான் எவ்வளவோ பாயாப் போனவன், உன்னக் கட்டிக்கிறதுக்கு மிந்தி…”
”மாமா! ம்…”
”அட கய்தே! அய்வாதம்மே!”
”அப்பிடிக் கூப்புடு மாமா! நீ கய்தேன்னு மின்ன மாதிரி கூப்பிட்டப்புறம்தான் எனக்கு மின்ன மாதிரி நெனப்பும் ஆசையும் வருது. நடுப்புற நடந்ததெல்லாம் மறந்தே போவுது!”
”அட கய்தே! இதுக்குத்தான் கய்தே சொன்னேன், நீ கொய்ந்தே இன்னு!”
அவளை அவன் காதல் மொழி பேசிக் கொஞ்சுகிறான்.
அந்த பாஷை தரம் குறைந்திருக்கிறதா?
ஆமாம். பாஷை மட்டுமே மட்டமாக இருக்கிறது.
தரம் என்பது, பேசுகின்ற பாஷையை மட்டும் வைத்துக் கணிக்கப்படுவதா என்ன?
- 16-6-1963
------------------
39. ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
அவன் இப்போது – ராணுவ வாழ்க்கை மென்று எறிந்த சக்கை.
அவனது வருகையை எதிர்பார்த்து வரவேற்கவோ, கொண்டாடவோ அவனுக்கு யாருமில்லை. அது அவனுக்குத் தெரியும். எனினும் வேறு வழியின்றி, தான் வெறுத்து உதறிவிட்டுப் போன அந்த தாழ்ந்த சேரிக்கே அவன் திரும்ப வேண்டி நேர்ந்தது.
அம்மாசி போரைக் கைப்பிடித்து, ராணுவத்தைப் புக்ககமாய்க் கொண்டிருந்தான்…
வேற்று நாடுகளில் விதேசி மனிதரிடையே திரிகின்ற அனுபவத்தை, அவனை ஜாதியறிந்து ‘தள்ளி நில்’ என்று விலக்கி வைக்காத விரிந்த உலகத்தோடு உறவாடும் ராணுவ வாழ்க்கையை அவன் நேசித்ததில் ஆச்சரியமில்லை.
தாழ்ந்து கிடந்த இந்திய சமுதாயத்தால் தாழ்த்தி வைக்கப்பட்ட தனது சமூக வாழ்க்கையின் சிறுமையை வெறுத்தே முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்தில் சேர்ந்து பதினெட்டு வயதிலேயே கடல் கடந்து செல்லும் பேற்றினை அடைந்தவன் அம்மாசி.
ஆயினும் அப்பொழுது ஒரு முறை சில காலம் கழித்து யுத்தம் நின்றபின் அதே வாழ்க்கைக்கு அவன் திருப்பி அனுப்பப்பட்டான். உலகையே வலம் வந்து அவன் சேகரித்துக் கொணர்ந்த அறிவும் அனுபவமும் அந்தச் சமூகத்தினரால் ‘ஆ’ வென்று வாய் பிளந்து கேட்டுத் திகைக்கும் மர்மக் கதைகளாகவும், ‘பொய்’யென்று அவன் முதுகுக்குப் பின்னால் உதட்டைப் பிதுக்கிக் கேலி செய்யும் மாய்மாலப் பேச்சுக்களாகவுமே அன்று கொள்ளப்பட்டன.
அவ்வாறு அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமல், பட்டும் படாமல் வாழ்ந்து கொண்டிருந்த அம்மாசியை மீண்டுமொரு பொன்னான சந்தர்ப்பமாய் வந்து வலிய அழைத்தது இரண்டாவது உலக மகா யுத்தம். நாற்பது வயதுக்கு மேல் மீண்டும் அவனுக்கு ராணுவ வாழ்க்கை கிட்டிய மகிழ்ச்சியில், தனது சேரிக்கு ஒரு சலாமடித்து விட்டு ராணுவ விறைப்போடு கம்பீரமாகப் புறப்பட்டு விட்டான் அம்மாசி.
யுத்த களத்தில் மார்போடு இறுக்கிப் பிடித்த யந்திரத் துப்பாக்கியைத் தாங்கி எதிரிகளோடு போராடிக் கொண்டிருக்கையில் எதிரிகளின் குண்டு வீச்சுக்கு அவன் இலக்கானான். சில மாதங்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் கிடந்தான். அதன் பிறகு அவன் ராணுவத்துக்கு உபயோகமற்றவனாகி விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
அவனால் இப்போது ‘அட்டென்ஷ’னில் கூட நிற்க முடியாது. யந்திரத் துப்பாக்கியை இரு கரங்களிலும் தாங்கி அணைத்துப் பிடித்துச் சுடும்போது, எப்படி உடலும் கரமும் அதிர்ந்து நடுங்குமோ அது போல், எழுந்து நின்ற வெற்றுடம்பே நடுங்கிக் கொண்டிருக்கிறது அவனுக்கு.
ராணுவ விறைப்போடு கம்பீரமாக ஊரை விட்டுப்போன அம்மாசிக்கு – தலையாட்டம் கண்டு உடல் நடுக்கம் கொண்டு கூனிக் குறுகித் திரும்பி வருகின்ற தன்னை, சலாமடித்து வரவேற்க யாரும் வரமாட்டார்கள் என்று தெரியும். இருப்பினும் அவன் வந்தான்.
அந்தக் குக்கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் வண்டிகள்தான் நிற்கும். அதுவும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிகள் மட்டுமே நிற்கும். ஆனால், சில சமயங்களில் பல காரணங்களின் நிமித்தம் அந்தப் பகல் நேரப் பாசஞ்சரை முந்திக்கொண்டு இரவு வந்து விடும். அப்படிப்பட்ட விதிவிலக்கான சமயங்களில் இரவிலும் அங்கே ரயில்கள் நிற்பதுண்டு.
அப்படி ஒரு விதிவிலக்கான சமயத்தில் – நேற்று இரவு – வடக்கே இருந்து வந்த அந்தப் பகல் நேரப் பாசஞ்சர் வண்டி இந்த ஒற்றைப் பிரயாணியான அம்மாசியை மட்டும் இறக்கிவிட்டபின் அந்த ரயில்வே ஸ்டேஷனில் கொஞ்ச நஞ்சமிருந்த வெளிச்சத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது. உலகத்திலிருந்தே தனிமைப் பட்டு விட்ட ஒற்றை மனிதனாய் அவன் நான்கு புறமும் இருளில் சுற்றிப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
பிறகு தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஊரில் திரிவது போல் தோள்மீது தன் கான்வாஸ் பைச்சுமையுடன், தான் பிறந்த ஊருக்குள்ளே போய் நான்கைந்து தெருக்களை அர்த்தமற்றுச் சுற்றிப் பார்த்தான். அப்புறம் ஊருக்கு வெளியே வந்து பல்லாண்டுகளாய் ஒதுக்கி வைத்திருக்கும் தனது சேரியை தூரத்திலிருந்தே பார்த்தான். மனமில்லாமல் தானே சேரியை நோக்கி நடந்து கொண்டிருப்பதைத் திடீரெனெ உணர்ந்து ஒரு நிமிஷம் நின்றான். வாய்க்கால் மதகு என்ற சேரியின் எல்லைக்கு வந்து விட்டோம் என்று தெரிந்தபோது – மேலே நடந்து சென்று சேரிக்குள் போய் யாரைப் பார்த்து, யாரோடு உறவாடுவது? என்றெல்லாம் யோசிப்பதற்காக மதகுக் கட்டையின் மீது சுமையை இறக்கி வைத்து விட்டுச் சற்று உட்கார்ந்தான்.
அவன் காலடியில் வாய்க்கால் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அவன் தலைக்கு மேல் சிள் வண்டுகளின் நச்சரிப்பு ரீங்கரித்துக் கொண்டிருந்தது. சாலையின் இரு மருங்கிலும் இருளில் நின்றிருந்த கரிய மரங்களின் நிழல் உருவங்களின் மேலெல்லாம் ‘மினுக்கட்டாம் பூச்சிகள்’ மொய்த்துக் கொண்டிருந்தன. தூரத்தில் தெரியும் சேரியும் சிறு வெளிச்சமும், குடிசை வீடுகளின் மீது புகையும் தெரிந்தன. குழந்தைகளின் அழுகுரலும் ஒரு கிழவியின் ஒப்பாரிச் சத்தமும் லேசாகக் கேட்டது.
அம்மாசிக்குத் திடீரெனத் தன் தாயின் நினைவு வந்தது.
இதே மதகுக் கட்டையின் மீது எத்தனை முறை அவன் உட்கார்ந்திருக்கிறான்! சலசலத்தோடும் இந்த வாய்க்கால் தண்ணீரில் அவன் தாய் புல்லுக்கட்டைப் போட்டு அலசிக் கொண்டிருந்த போதெல்லாம் வெறும் கோவணத்துடன் சின்னஞ்சிறு பையனாய்க் கையிலொரு கரும்புத் துண்டுடன் நின்று கொண்டிருந்த நாளெல்லாம் அவனுக்கு இப்போது நினைவு வந்தது. அவன் தாய்க்கு அன்றிருந்த ஆசையெல்லாம் தன் மகன் வளர்ந்து ஒரு கண்ணாலம் கட்டிக்கொண்டு நாலு பேரைப் போலப் பயிர்த்தொழில் செய்தோ, மாடு மேய்த்தோ வாழ வேண்டுமென்பதுதான். அந்த ஆசைகளையெல்லாம் கேலி செய்து பழித்து விட்டுத்தான் அவன் முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்துக்குப் போனான். அவன் ராணுவத்தில் இருந்த காலத்தில் அவள் செத்துபோன சங்கதியைத் திரும்பி வந்தபோது தான் அவன் அறிந்தான். அவளுக்காக அவன் அழக் கூட இல்லை…
அம்மாசிக்கு மரணம் என்பது ரொம்ப அற்பமான விஷயம். அவன் சாவுகளின் கோரங்களோடு நெருங்கி உறவாடியவன். இப்போது அவனுக்கு தாங்கொணாக் கொடுமையாக இருந்தது, உயிர் வாழ்பவன் உபயோகமற்று வெறும் ‘உயிர் சுமக்கும்’ காரியந்தான்.
‘சண்டையில், தான் செத்துப் போயிருந்தால் எவ்வளவு சௌகரியமாய் இருந்திருக்கும்!’ என்று இப்போது கற்பனை செய்து பார்த்தான் அவன். அவனுக்கு இப்போது யார் இருக்கிறார்கள்? அவன் யாருக்காக வாழ்வது? அவன் மடியில் இப்போது சில நூறு ரூபாய்கள் இருக்கின்றன. அதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது…?
ஐம்பது வயதுக்குள்ளாக அடைந்துவிட்ட முதுமையையும் இந்த நிராதரவான திக்கற்ற வெறுமையையும் அனுபவிப்பதைவிட, மரணம் சுகமான கற்பனையாய் இருந்தது அவனுக்கு.
அப்போது ‘கிரீச் கிரீச்’ என்று சக்கரத்தில் அச்சாணி உரசிக் கொள்ளும் சங்கீதமும் ‘கடக் கடக்’ என்று மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும் தாளகதியும் ஒலிக்க, தூரத்தில் ஒரு கட்டை வண்டி சேரியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
வண்டி நெருங்கி வரும்போது அதிலிருந்து ஒரு பெண்ணின் குரல் “தே! சும்மா கெட… அதோ ஆளு யாரோ குந்திக்கினு கிறாங்க” என்று தன்னைக் குறித்து எச்சரித்த ரகசியக் குரலிலிருந்து ஏதோ வாலிப சேஷ்டை என்று யூகித்துக் கொண்ட அம்மாசி தனது பிரசன்னத்தை ஒரு செருமலின் மூலம் உணர்த்தினான்.
“யாருய்யா அது மதகு மேலே?” என்று வண்டிக்காரன் குரல் கொடுத்தான்.
“அசலூரு… மடுவங்கரைக்குப் போறேன்” என்று பதில் குரல் காட்டினான் அம்மாசி.
வண்டி அவனைக் கடந்து சற்று தூரம் சென்றதும் வண்டி சப்தத்தையும் மீறி அந்தப் பெண் பிள்ளையின் கலகலத்த சிரிப்பொலி அம்மாசியின் காதில் வந்து ஒலித்தது…. அவர்கள் பேசிய தோரணையிலிருந்து இருவருமே கொஞ்சம் காதல் போதையில் மட்டுமல்லாமல் சிறிதே கள்ளின் போதையிலும் இருக்கிறார்கள் என்று அறிந்த அம்மாசி, “ம்… வயசு!” என்று முனகிக் கொண்டான்.
‘நான் வீணாக எதையெதையோ நாடி, இந்த வாழ்க்கையையும் வெறுத்து ஓடி என்ன பயன் கண்டு விட்டேன்?’ என்று அவன் மனத்தில் ஓர் இழை ஓடிற்று இப்போது.
சற்று முன் வண்டியில் அவனைக் கடந்து போன இளமையின் கலகலப்பு, கடந்துபோன தனது இறந்த காலமே தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு.
“ஆ!… வயசு, அதெல்லாந்தான் பூடிச்சே!… எனக்குந் தான் இருந்திருக்கு… பதினெட்டு வயசும், இருபது வயசும், முப்பதும் நாப்பதும்… ம், அப்போ அதை கெவுனிக்காம நானு… ஓடினேன்… அத்தோட பெருமை அப்போ தெரியல்லே… ஓடினேன்… மனுசங்க என்னாதான் சாதின்னும் மதமின்னும் ஒதுக்கி வெச்சாலும் கடவுள் கருணையோட எல்லாருக்கும் சமமா குடுத்திருக்கிற வயசையும் வாலிபத்தையிம் எட்டி உதைச்சுட்டு என்னா வேகமா ஓடினேன்டா நானு! ஓடிக்கினு இருக்கும் போதே அது என் கிட்டே இருந்து ஓடிக்கினு இருந்திச்சுன்னு அப்ப தெரிஞ்சுதா? நானு ஓடறதுக்கே அந்த வயது திமிருதானே காரணமா இருந்திச்சு! ஓடிஓடி ஓய்ந்தப்புறம் இப்ப தெரியுது… ஆ! பூட்டுதேன்னு… என்னா லாபம்” என்று தன்னுள் அவலமாய் அழுது முனகிக் கொண்டான் அம்மாசி.
- ஆம்; இழந்த ஒன்று – ‘இருக்கிறது’ என்ற நினைப்பிலேயே இழக்கும்போது, ‘இழந்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரியாத அளவுக்கு இழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியாகவும் இருந்து, முற்றாக இழந்துவிட்ட பின் ‘இழந்து விட்டோமே’ என்ற நினைப்பிலேயே அந்த இழந்த ஒன்று – அது எதுவாக இருந்தாலும் எத்தனை மகத்தானதாக மாறிவிடுகிறது! ஒன்று மகத்தானது என்பதற்கான இலக்கணமே அதுதான்…
அம்மாசி இரவு வெகு நேரம்வரை சேரியில் நுழைய மனமில்லாமல் மதகுக் கட்டையின் மீதே உட்கார்ந்திருந்தான். இன்னும் சேரியிலிருந்து மனிதக் குரல்களும், நாய்களின் ஓலமும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.
சேரியைச் சேர்ந்த முண்டாசு கட்டிய ஒருவன் வாயில் சுருட்டின் நெருப்புக் கனிய, காற்றையே நாற்றப்படுத்தும் புகையுடன் இருண்ட வழியில் பயத்தை விரட்ட உரத்த குரலில் பாடிக்கொண்டே வந்தான். மதகின் மீதுள்ள உருவத்தைக் கண்டதும் “யாரு அது?” என்று திகிலடித்த குரலில் கேட்டவாறு, பாட்டு நின்றது போலவே, தானும் திடீரென நின்றான்.
“ஆளுதான், பயப்படாதே!” என்று எழுந்து நின்று பூமியில் தன் பூட்ஸ் காலைத் தேய்த்து ஓசை காட்டினான் அம்மாசி.
முண்டாசு கட்டிய ஆள் அம்மாசியை அடையாளம் கண்டு கொள்வதற்கு நெருங்கி வந்து, “யாரது?” என்று வினவியவாறே பார்த்தான். அந்த நிமிஷம் திடீரென அம்மாசிக்குத் தன் ஒன்று விட்ட தங்கச்சி காசாம்பூவின் நினைவு வந்தது. உடனே அவள் கணவன் சடையாண்டியின் பேரைச் சொல்லி அவர்களைத் தேடி வெளியூரிலிருந்து வந்திருப்பதாக அறிவித்துக் கொண்டான்.
“சடையாண்டிக்கி… ரயில்வே போட்டர் வேலை கெடைச்சது; அவன் பட்டணத்துக்குப் பூட்டானே… பொஞ்சாதியையும் கூட்டிக்கினு…. தெரியாதா உனக்கு?” என்று முண்டாசுக்காரன் கூறியதும், அம்மாசிக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவன் காசாம்பூவையோ அவள் கணவனையோ எதிர்பார்த்து வரவில்லை. இருப்பினும் சேரிக்குள் புகாமல் திரும்புவதற்கு அதுவே போதுமான காரணமாயிருந்தது அவனுக்கு. “பட்டணத்தில் எங்கே இருக்காங்கன்னு தெரியுமா?” என்று விசாரித்தான்.
“எய்ம்பூர் டேசன்லேதான் போட்டர் வேலை செய்யறானாம் சடையாண்டி; போனா பாக்கலாம்” என்று கூறிவிட்டு முண்டாசுக்காரன் சேரியை நோக்கி நடந்தான்.
அம்மாசி அவன் முதுகுக்குப் பின்னால் நின்று அந்தச் சேரியை வெகு நேரம் வெறித்துப் பார்த்துவிட்டுத் தனது கான்வாஸ் பையைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கித் திரும்பி நடந்தான்.
அன்பு காட்டவும் அரவணைத்துக் கொள்ளவும் யாருமில்லாத தனியனான தனக்கு உள்ள ஒரே பிடிப்பு அந்த ஒன்று விட்ட தங்கையும், அவள் புருஷனும், அவள் குழந்தைகளும்தான் என்ற தீர்மானம் அவன் மனத்தில் உருவான அந்த நிமிஷமே அவன் நடையில் ஒரு தெம்பு பிறந்தது.
மறுநாள் காலை, பொழுது விடிந்து வெகு நேரம் கழித்துச் சில மணி நேரங்கள் தாமதமாக – பகல் நேரத்திலேயே வந்து சேர்ந்தது அந்தப் பாசஞ்சர் வண்டி.
வண்டியில் ஏறி நின்ற அம்மாசி தனது கிராமத்தை, தூரத்தில் தெரியும் சேரியை, வாய்க்கால் மதகைக் கண்கள் பளபளக்க வெறித்துப் பார்த்தான்.
அவனது சேரியைச் சேர்ந்த கோவணாண்டிச் சிறுவர்களும், மேல் சட்டையில்லாமல் இடையில் அழுக்குப் பாவாடை தரித்த கறுப்புச் சிறுமிகளும் அந்தக் கிராமத்தின் விளைபொருள்களான நுங்கு, வெற்றிலை, வெள்ளரிப்பிஞ்சு முதலியவற்றை விலை கூறி விற்றவாறு ரயிலின் அருகே ஓடித் திரிவதை ஒரு புன்னகையுடன் பார்த்தவாறிருந்த அம்மாசி, எதையாவது அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று சற்று நேரம் கழித்தே ஆசை கொண்டான்.
வெள்ளரிப் பிஞ்சு விற்ற ஒரு சிறுமியை, சட்டைப்பைக்குள் கையை விட்டுச் சில்லறையை எடுத்தவாறே அவன் கூவி அழைத்த நேரத்தில் ரயிலும் கூவி நகர ஆரம்பித்தது. உடனே அவன் அந்தச் சிறுவர் சிறுமியரை நோக்கிச் சில்லறையை வாரி வீசினான்.
அவர்கள் ஆர்வத்தோடு அவற்றைச் சேகரித்துக் கொண்டு தலை நிமிர்ந்த போது வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. அம்மாசி குழந்தையைப் போல் குதூகலத்தில் வாய்விட்டுச் சிரித்தான். அவர்கள் இந்தப் பட்டாளத்துக்காரனுக்குப் பதில் புன்னகையுடன் சலாம் வைத்தவாறு வரிசையாக நின்றனர்.
பிறந்த மண்ணுக்கே விடை கூறிக்கொள்வது போல், நடுங்கிக் கொண்டிருக்கும் தலைக்கு நேரே கரம் உயர்த்திச் சலாமிட்டான் அம்மாசி. அவன் கண்ணிமைகளில் கண்ணீர் சிதறிப் பரந்திருந்தது.
வண்டியில் கூட்டமில்லை. அம்மாசியின் தலைக்கு மேல் சாமான் வைக்கும் இடத்தில் காலில் மேஜோடும் இடுப்பில் வேட்டியின் மேல் பச்சை நிற சிங்கப்பூர் பெல்ட்டும் அணிந்த ஒரு பட்டிக்காட்டு மைனர் பீடி புகைத்தவாறு படுத்திருந்தான்.
அவனுக்கு எதிரில் ஒரு தாய் தனது தூங்குகின்ற பெண் குழந்தையை மடியில் கிடத்தித் தானும் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அம்மாசி அவளை வெறித்துப் பார்த்தான். அவளது தோற்றத்திலிருந்து அவள் ஓர் இளம் பிராமண விதவை என்று தெரிந்தது. நாட்பட்ட க்ஷயரோகத்தால் அரிக்கப்பட்டு வெறும் அஸ்திக் கூடே உயிர் தரித்து அயர்ந்தது போல் தோற்றம். அவளது தொண்டைக் குழியில் பிராணன் துடித்துக் கொண்டிருந்ததும் தெரிந்தது.
பட்ட மரத்திற் படர்ந்த பசுங்கொடியில் ஒற்றை மலர் பூத்தது போன்று அவள் மடியில் படுத்திருந்த அந்த அழகிய பெண் குழந்தை உறக்கத்தில் முகத்தைச் சுருக்கிப் பின் மலர்ந்து சிரித்தது.
ரயிலின் மெதுவான ஓட்டத்தின்போது ஏறிய டிக்கட் பரிசோதகர் வாசற்படியிலேயே சற்று நின்று சிகரெட்டைப் புகைத்தெறிந்துவிட்டுச் சாவதானமாய் வந்து அம்மாசியின் அருகில் அமர்ந்தார். சற்றுநேரம் ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்த டிக்கட் பரிசோதகர், பக்கத்து ஸ்டேஷனை வண்டி நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, அம்மாசியின் தலைக்குமேல் படுத்திருந்த பட்டிக்காட்டு மைனரை நோக்கி டிக்கட்டுக்காகக் கை நீட்டினார். அம்மாசியும் தனது கோட்டுப் பைக்குள் கிடந்த டிக்கட்டைத் துழாவி எடுத்தான்.
அவற்றை வாங்கிப் பின்புறம் கையெழுத்திட்டுக் கொடுத்த பின், உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பிராமண விதவையை எழுப்புவதற்காகக் கையிலிருந்த பென்சிலால் பலகையில் தட்டினார் டிக்கட் பரிசோதகர்.
அந்தத் தாய் உள்ளூற மனத்தாலும் உடலாலும் என்னென்னவிதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாளோ?… உயிரின் பசையற்ற தனது வரண்ட விழிகளை அவள் ஒரு முறை திறந்து பார்த்தாள். பிறகு அப்படியே கிறங்கிப்போய் விழிகள் மூடிக் கொண்டன. உள்ளூற வருத்தும் உபாதை பொறுக்க முடியாதவள் போன்று வெளிறிய உதடுகளைக் கடித்துப் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு ‘தெய்வமே’ என்று சிணுங்கினாள் அவள்.
“அம்மா… இந்தாங்க. டிக்கட் கேக்கறாரு பாருங்க” என்று கனிவோடு அவளை எழுப்பினான் அம்மாசி.
நிமிர்ந்து உட்கார முடியாமல் அப்படியே விழித்துப் பார்த்த அவள் “டிக்கட்டா?…” என்று ஈனசுரத்தில் முனகினாள்.
“டிக்கட் இல்லியா? – வர்ர ஸ்டேஷன்லே எறங்கிடும்மா…” என்று நிர்த்தாட்சண்யமாய்ச் சொல்லிவிட்டு வேறு புறம் திரும்பி வெளியே எட்டிப் பார்த்தார் டிக்கட் பரிசோதகர்.
அம்மாசி அவளது பரிதாபத்தை ஆழ்ந்த சிந்தனையோடு கூர்ந்து பார்த்தவாறிருந்தான். அடுத்த ஸ்டேஷன் நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் மிகவும் பிரயாசைப்பட்டு எழுந்திருக்க முயன்றபோது மடியில் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு பசியினாலும், தூக்கம் கலைந்த எரிச்சலினாலும் அழுதது…
“எவ்வளவு தூரம்மா போகணும் நீங்க?” என்று அம்மாசி அவளை விசாரித்தான்.
“பட்டணத்துக்குப் போகணும் ஐயா!” என்று அவலமாய்ப் பெருமூச்செறிந்தாள் அந்தத் தாய்.
“ஸார்.. பட்டணத்துக்கு ஒரு டிக்கட் போட்டுக் குடுங்க… நான் பணம் தர்ரேன்…” என்றவாறு தனது கோட்டுப் பையிலிருந்து உப்பிக் கனத்த தோல் பர்ஸை எடுத்தான் அம்மாசி.
டிக்கட் பரிசோதகர் அவனை ஒரு விநாடி பார்த்து அவனது பெருந்தன்மையைப் பாராட்டுவதுபோல் புன்னகை பூத்துவிட்டு, நின்ற நிலையிலே ஒரு காலை தூக்கிப் பெஞ்சின் மீது வைத்து முழங்காலின் மீது நோட்டுப் புத்தகத்தைத் தாங்கி ரசீது எழுதினார்.
அந்த விதவைப் பெண் அம்மாசியைப் பார்த்து, “உங்க குழந்தை குட்டியெல்லாம் தீர்க்காயுசா இருக்கணும், ஐயா” என்று நன்றியுடன் குச்சுக் குச்சாய் இருந்த விரல்களோடு கும்பிட்டாள். தூக்கம் கலைந்து அழுத குழந்தை மீண்டும் தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டது.
அந்த வாழ்த்துக்களைக் கேட்டு ஒரு விநாடி யோசித்துத் தலை குனிந்து உள்ளூறச் சிரித்துக் கொண்டான் அம்மாசி.
டிக்கட் பரிசோதகர் ஒருபுறம் கீழே இறங்கியதும் மறுபுறத்தில் டிக்கட் இல்லாத ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனும் அவனது மனைவியும் ஏறி உள்ளே வந்தனர்.
அந்தப் பிச்சைக்காரத் தம்பதிகள் – பெஞ்சுகளில் இடமிருந்தும் – கையில் டிக்கட் இல்லாததால் பிரயாணம் செய்யவே உரிமையற்றவர்களான தாங்கள் பெஞ்சின் மீது உட்காரக் கூடாது என்ற உணர்வோடு – ஒரு மூலையில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தனர். அந்தப் பிச்சைக்காரன் தன் கையிலிருந்த கம்பைக் கீழே ஓர் ஓரமாகக் கிடத்திவிட்டு மடியிலிருந்த வேர்க்கடலையை எடுத்து மனைவிக்குப் பாதி பகிர்ந்து கொடுத்தான். இருவரும் அதைக் கொறிக்க ஆரம்பித்தனர்.
ரயில் அந்தச் சிறிய ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு நீண்ட கூக்குரலை முழக்கிக் கொண்டு வேகமாய் ஓடிற்று.
ஒரு பெரிய ஜங்ஷனில் இந்தப் பாசஞ்சர் வண்டி அதிக நேரம் நின்றிருந்தது…
பிரக்ஞை இல்லாதவளாய் மயங்கிக் கிடந்த தாயின் மடியில் படுத்திருந்த குழந்தை விழிப்புற்று மலரத் திறந்த விழிகளோடு வெளியே பார்த்தாள். பிஸ்கட்டுகள் நிறைந்த தட்டுடன் ஜன்னல் அருகே நின்றிருந்தவனைப் பார்த்ததும், தாயின் கன்னத்தை நிண்டி நிண்டி “அப்பிச்சிம்மா… அப்பிச்சி” என்றூ வெளியே கையைக் காட்டி குழந்தை அழுதாள்.
குழந்தைக்கு ஏதாவது வாங்கித் தரலாம் என்று எண்ணிய அம்மாசி, தனது பிறப்பையும் அவர்கள் குலத்தையும் எண்ணித் தயங்கியவாறே குழந்தையைப் பார்த்துப் புன்னகை காட்டினான். குழந்தை அவன் முகத்தைப் பார்த்தவாறு, “ம்… அப்பிச்சீ” என்று உரத்த குரலில் அழுதது.
அப்போது நினைவு திரும்பிய தாய் கண் விழித்தாள்.
“அம்மா… கொளந்தை அளுவுதுங்க; ஏதாவது வாங்கித் தரட்டுங்களா?” என்று விநயமாகவும் அன்புடனும் கேட்டான் அம்மாசி. அவள் கலங்கிய கண்களோடு பார்வையிலேயே தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
அம்மாசி வண்டியிலிருந்து இறங்கி பிளாட்பாரத்திலிருந்த ஸ்டாலுக்குச் சென்றான். ஒரு ‘பன்’னும் ஒரு கப் பாலும் வாங்கினான். அதை வாங்கிக் கொண்டு திரும்பும்போது திடீரென என்னவோ நினைத்துக் கொண்டவன் போல், இன்னொரு கப் பாலும் பாலும் இன்னொரு ‘பன்’னும் கேட்டான். காகிதத்தில் சுற்றிய இரண்டு ‘பன்’களையும் கோட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டு, நடுங்குகின்ற கைகளில் இரண்டு வடாக்களை ஏந்தியவாறு அவன் ரயில் பெட்டியை நோக்கி நடந்து வந்தான்.
பார்க்கிறவர்களுக்கு ‘இந்தத் தள்ளாத உடம்போடு இவன் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறான்?’ என்று தோன்றலாம். ஆ! அவனுக்கல்லவா தெரியும், பிறருக்காகப்படும் சிரமத்தின் சுகம்!
வண்டிக்குள் வந்து பெஞ்சின்மீது பால் நிறைந்த தம்ளர்கள் கவிழ்ந்துள்ள வட்டாக்களை வைத்துவிட்டுக் குழந்தையிடம் ஒரு ‘பன்’னை எடுத்துப் புன்னகையுடன் நீட்டினான். குழந்தை ஆர்வத்துடன் தாவி வாங்கி இரண்டு கைகளிலும் வைத்துப் பிடித்துக் கொண்டு ‘பன்’னைக் கடித்தாள்.
அப்போது கண்களைத் திறந்த அந்தத் தாய் அவனைப் பார்த்தாள். அவன் தயக்கத்தோடு அவளிடம் ஒரு ‘பன்’னை நீட்டினான். அவள் ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தாள்.
“இந்தப் பாலையாவது குடிங்க அம்மா… ரொம்பக் களைப்பா இருக்கீங்களே?…” என்று வட்டாவிலிருந்த தம்ளரை எடுத்துப் பாலை மெதுவாக ஆற்றி அவளிடம் கொடுத்தான்.
அவளும் நடுங்குகின்ற கைகளால் அதை வாங்கித் தணியாத தாகம் கொண்டவள் போல் ஒரே மூச்சில் ‘மடக் மடக்’கென அதைக் குடித்தாள். அவள் குடிக்கக் குடிக்க வட்டாவிலிருந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தம்ளரில் வார்த்துக் கொண்டிருந்தான் அம்மாசி. அவள் அடங்காத பசியும், தணியாத தாகமும், தீராத சோர்வும் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்த அம்மாசி, குழந்தைக்காக வாங்கி வந்த பாலையும் அவளுக்கே ஆற்றிக் கொடுத்தான். அவள் அதில் பாதியைக் குடித்தபின், “போதும்” என்று கூறிவிட்டுக் களைப்பு மேலிட்டவளாய்ச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
குழந்தை, தன் தாயைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு அவளைத் தூக்கித் தன் அருகே உட்கார வைத்துக் கொண்டு ‘பன்’னைப் பிய்த்துப் பாலில் நனைத்து ஊட்டினான் அம்மாசி. குழந்தை ரொம்ப சொந்தத்தோடு அவன் மடியில் ஏறி உட்கார்ந்து சாப்பிட்டாள். பிறகு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பால் தம்ளர்களைக் கொண்டு கொடுத்தபின், ஸ்டாலிலேயே ஒரு கப் பால் வாங்கிக் குழந்தைக்குப் புகட்டினான். தானும் ஒரு கப் டீ வாங்கிக் குடித்தான். குழந்தை அவனோடு வெகுநாள் பழகியிருந்தவள் போல் சிரித்து விளையாடினாள். அவன் குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையும் வாங்கினான். அழுத்தினால் ‘கிறீச் கிறீச்’ சென்று கத்தும் அந்த வாத்துப் பொம்மையை வைத்துக் கொண்டு குழந்தை அமர்க்களமாய்ச் சிரித்தாள்… அம்மாசியும் உலகையே மறந்து குழந்தையின் விளையாட்டோடு ஒன்றிக் கலந்திருந்தபோது வண்டி புறப்படுவதற்கான மணி அடித்தது. குழந்தையோடு வேகமாய் ஓடி வண்டியில் ஏறினான் அம்மாசி. அவனுக்கு வாலிபம் திரும்பியது போல் உற்சாகம் மிகுந்திருந்தது இப்போது.
வெகு நேரமாய் அந்த ஜங்ஷனில் நின்றிருந்த பாசஞ்சர் வண்டி நிதானமாக நகர்ந்து புறப்பட்டது.
பசி நீங்கிய தெம்பிலும், விளையாட்டுப் பொம்மை கிடைத்த குதூகலத்திலும் அந்த முகமறியாத புதிய மனிதனின் மடியில் முகத்தைப் புதைத்தும், அவன் மோவாயைப் பிடித்திழுத்தும் சிரித்து விளையாடும் தன் குழந்தையைப் பார்த்து அந்தத் தாய் புன்னகை புரிந்து கொண்டாள்.
அதைக் கவனித்த அம்மாசி அவளிடம் பேச்சுக் கொடுத்தான்: “பட்டணத்திலே எங்கேம்மா போறீங்க?”
அவள் அதற்குப் பதில் சொல்லுமுன் அவலமாய்ப் பெருமூச்செறிந்தாள். பிறகு மெலிந்த விரல்களால் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே பலஹீனமான குரலில் சொன்னாள்:
“பட்டணத்திலே தெரிஞ்சவா இருக்கா… என் சிநேகிதி ஒருத்தி… எப்பவோ ஒரு தடவை ஊருக்கு வந்தப்ப ‘நுங்கம்பாக்கத்திலே இருக்கோம்’னு சொன்னா; அட்ரஸீம் சரியாத் தெரியலே… அவ்வளவு பெரிய ஊர்லே போயி எங்கே தேடறதுன்னு நெனைச்சுண்டு இருந்தேன்… ஆனா இப்ப… போய்ச் சேரவே மாட்டேன்னு தோண்றதே!” என்று சொல்லும்போது அவளுக்கே தொண்டை அடைத்துக் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“ஏம்மா அப்படி சொல்றீங்க?… நீங்க எங்கே போகணுமோ அங்கே கொண்டுபோயி நான் சேக்கறேன்” என்று தைரியம் தந்தான் அம்மாசி.
அவனது நல்ல தன்மைகளை மனத்துள் பாராட்டியவாறே அந்தத் தாயின் மனம், தான் நிராதரவாய்த் தவிக்க விட்டு விடப் போகும் குழந்தையைப் பார்த்துக் குழைந்தது.
அவள் திடீரென்று அவனிடம் பேசினாள்: “ஐயா! நீங்க யாரோ? தெய்வந்தான் உங்களை அனுப்பியிருக்கு…. இந்த நிமிஷம் எனக்கு ஆதரவு, சொந்தக்காரன், உடன் பொறந்த சகோதரன் எல்லாம் நீங்கதான்…”
அந்த வார்த்தைகளைக் கேட்டு அம்மாசி மெய் சிலிர்த்தான்.
அப்போது தாயின் நினைவே இல்லாத குழந்தை அந்த வாத்துப் பொம்மையை அவன் காதருகே அழுத்தி ஓசைப் படுத்தினாள். அவன் தலையை ஆட்டிக்கொண்டு, சப்தம் பொறுக்காதவன்போல் காதைப் பொத்திக் கொள்வதைக் கண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்ந்தாள். குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த அம்மாசியை அந்தத் தாயின் பார்வை தீர்க்கமாய் அளந்தது.
அம்மாசி, அவள் தன்னிடம் என்னவோ சொல்லி ஆறுதல் பெறவோ, எதையோ கேட்டு உதவி பெறவோ எண்ணித் தவிக்கிறாள் என்று உணர்ந்து அதைத் தர அந்த உதவியைச் செய்ய சித்தமானவன் போன்று அவள் முகத்தையே கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தக் குழந்தையோ அவனிடம் இதுவரை யாருமே காட்டாத பாசத்துடன் அவன் மடிமீது ஏறிச் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் இருதயத்தையே தன்பால் ஈர்த்துக் கொண்டிருந்தது.
திடீரென்று குழந்தையின் தாய் மீண்டும் அவனிடம் பேசினாள்:
“ஐயா! எனக்கு யாருமே… ஒத்தருமே நாதியில்லே…” என்று அவள் விம்மி விம்மி அழுதாள். சற்று நேரம் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து அழுதபின், முகத்தைத் துடைத்துக் கொண்டு, அழுததால் கம்மிப் போன குரலில் கூறினாள்:
“போன வருஷம் அவ – பொறந்த ஒரு வருஷத்துக்குள்ளே – பெத்தவரை எடுத்துத் தின்னுட்டா” என்று அவள் அங்கலாய்த்தபோது, அம்மாசி குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான்:
“ஏம்மா, கொளந்தையைத் திட்டறீங்க?” என்று அவன் கேட்டபோது அவளூம் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு முனகினாள்: “பாவம், அந்தச் சிசு என்ன பண்ணும்? அவருக்கும் சாகிற உடம்புதான்… கலியாணத்தப்பவே அவருக்கு வயசு அம்பதுக்கு மேலே… எங்கப்பா ஏழை! வரதட்சிணைக்கு வழியில்லாம மூணாந்தாரமா கட்டி வெச்சார்… அடுத்த வருஷம் எங்கப்பாவும் போய்ட்டார். இவ அப்பா தங்கமாத்தான் என்னெ வெச்சிண்டிருந்தார்… தெய்வத்துக்கே பொறுக்கலே… கண்ணவிஞ்ச தெய்வம்!” என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு திட்டினாள்.
அவள் மூக்கை சிந்திக் கொண்டு பேசினாள்: “இவ அப்பாவுக்கு ஓட்டல்லே வேலை. அவருக்கு க்ஷயரோகம் வந்துடுத்து. அப்புறம் வேலைக்கு யாரும் வச்சுக்க மாட்டேன்னுடா – நாலு கொழந்தெங்க பெத்தேன். ஒண்ணொண்ணா வளத்து வளத்து வாரிக் குடுத்துட்டேன். கடைசிலே இவ! இவளும் இல்லேன்னா எங்கேயோ ஆறோ கொளமோ பாத்து விழுந்து பிராணனே விட்டுடுவேன்… தாங்க முடியலே ஐயா, இந்த நோயோட இம்செ. தாங்க முடியலே! இனிமே பொழைக்கறதாவது! கொஞ்சம் கொஞ்சமா வதைபட்டு சாகறதெ விட ஒரேயடியா போயிடலாம்னா, இந்தக் கொழந்தெ நேக்கு ஒரு கழுத்தறுப்பு! அவராலே எனக்குக் கெடச்ச சம்பத்தெப் பார்த்தீங்களா? இந்தக் கழுத்தறுப்பும் இந்தப் பிராணாவஸ்தையும் தான்!” – கோபத்தாலும் விரக்தியாலும் அவள் உடம்பில் ஒரு படபடப்புக் கண்டது. பேச முடியாமல் மூச்சிளைக்க வெறித்துப் பார்த்தவாறு மௌனமானாள் அவள்.
அந்தப் பாசஞ்சர் வண்டி ஏகமாய் இரைச்சலிட்டுக் கொண்டு ஓடிய போதிலும் அந்தப் பெட்டிக்குள் ஓர் அமைதியே நிலவுவது போல் தோன்றியது. அவள் மெல்ல மெல்லக் கண் மூடினாள். வண்டியின் ஆட்டத்திற்கேற்ப, கண்களை மூடிச் சாய்ந்திருந்த வளது சிரம் இடமும் வலமும் கொள கொளத்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அம்மாசி, ‘அவள் செத்துக் கொண்டிருக்கிறாளோ’ என்று ஒரு விநாடி திடுக்கிட்டான்.
நல்லவேளை; அவள் தன் உடலிலோ மனத்திலோ விளைந்த வேதனையைத் தாங்க மாட்டாமல் உதட்டைக் கடித்தவாறு முகத்தைச் சுளித்துக் கொண்டே கண் திறந்தாள், ஒரு கைத்த சிரிப்புடன்.
“பொண் ஜென்மம் எடுக்கவே படாது. அப்படிப் பொண்ணாப் பொறந்தாலும் ஏழையாய்ப் பொறக்கப் படாது” என்று சொல்லி விட்டு, எதையோ யோசித்துத் தான் சொன்னதை மறுப்பதுபோல் தலையை ஆட்டிக் கொண்டாள்: “ஏழையாப் பொறந்தாத்தான் என்ன? நீங்க என்ன ஜாதியோ, என்ன குலமோ? உங்களவாள்லே, ஏழையாய் பொறந்த பொண்களும் ஏதோ அவாளுக்கேத்த மாதிரி சந்தோஷமா வாழல்லியா, என்ன? பொண்ணாப் பொறந்தாலும் ஏழையாப் பொறந்தாலும் எங்க ஜாதியிலே பொறக்கப்படாது ஐயா; அதெவிடச் சேரியிலே பொறந்துடலாம்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது அம்மாசியின் நினைவில் – நேற்று கட்டை வண்டியில், இருளில் சென்ற சேரிப் பெண்ணின் எக்காளச் சிரிப்பு எதிரொலித்தது.
“என்ன பாவம் பண்ணினேனோ பொண்ணாப் பொறந்து ஒரு பொண்ணையும் பெத்து வெச்சிருக்கேன்! இது என்னென்ன படப்போறதோ?” என்று கண் கலங்க அவள் பெருமூச்செறிந்தபோது, அம்மாசி தன் மடியில் கிடந்த குழந்தையின் மிருதுவான கேசத்தை வருடியவாறு கூறினான்:
“ம்… நீங்க வாழ்ந்த காலம் மாதிரியே இந்தப் பொண்ணு வாழப் போற காலமும் இருந்துடுமா என்னா?”
“காலத்தெ சொன்னாப் போறுமா ஐயா, மனுஷா பண்ற அக்ரமத்துக்கு! நான் கிராமத்துலே பொறந்தவ. டவுனுக்கு வந்தப்பறம் ஜாதியும் ஆசாரமும் அர்த்தமில்லாததுன்னு நன்னா மனசுக்குத் தெரியறது. யார் தைரியமா விடறா, சொல்லுங்கோ? நீங்க யார் – எவர்னு தெரியாம – ‘ஐயோ பாவம், ஒருத்தி மயங்கிக் கிடக்கிறாளே’ன்னு பால் வாங்கிண்டு வந்து தந்தேள்… நானும் சாப்பிட்டேன். இதையே நாலு மனுஷா மத்தியிலே என்னாலே செய்ய முடியுமோ? செய்வேனா? ‘நகந்துக்கோ, நகந்துக்கோ’ன்னுதான் சீலம் கொழிச்சிருப்பேன். என்ன காரணம்? என்ன காரணம்னு எனக்கெ புரியாத – ‘நாலு மனுஷா என்ன சொல்லுவாளோ?’ங்கற காரணம்தான். இந்த ‘நாலு மனுஷா பயம்’தான் எல்லார் கிட்டேயும் இருக்கு. வேற என்ன ‘காரணம் மண்ணு’ இருக்கு. இந்த மாதிரி நிராதரவான நெலையிலே இருந்தா அந்த நாலு மனுஷாள்லே மூணு மனுஷா இப்படித்தான் நடந்துப்பா. இல்லேன்னா – ஜாதியையும் ஆசாரத்தையும் – ஏதாவது ஒரு காரணத்தோட எல்லாரும் மனப்பூர்வமா… நெஜத்துக்கு ஏத்துண்டிருந்தா, அது எப்பவோ மாறிப்போயிருக்கும். ஒவ்வொருத்தரும் அதெப் பொய்யா, ஒரு ஒப்புக்குப் போலியா ஏத்துண்டிருக்கிறதனாலேதான் அது இன்னும் வாழ்ந்துண்டு என்னெப் போல ஏழைகளோட கழுத்தை அறுக்கறது!”
சற்று நேரத்துக்கு முன் அருந்திய பாலினால் விளைந்த தெம்பும், மாலை நேரக் குளிர்ந்த காற்றும் தொடர்ந்து சில நிமிஷங்கள் அவளுக்குப் பேசச் சக்தி அளித்தன. ஆனால் பேசிய பிறகு அவளுக்கு மூச்சுத் திணறியது. இவ்வளவு நேரப் பேச்சுக்குப் பிறகும் அவள் அவனிடம் என்ன சொல்ல நினைத்துப் பேச ஆரம்பித்தாளோ அதை அவனிடம் சொல்லவில்லையே என்று அவளுக்குத் தோன்றியது. மிகவும் அவசரத்தோடு அவள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“இவ்வளவு பேசறயே – நீயாவது அந்த ஜாதிக் கட்டை மீறி ஏதாவது செய்திருக்கிறதுதானேன்னு நீங்க கேக்கலாம். ஆமா, இதுவரைக்கும் நான் செய்யலே – செய்யற மாதிரி என்ன வளர்க்கலே…. ஆனா, நான் செய்யப் போறேன்… ஆமா, எனக்குக் கெடச்ச தண்டனை என் மகளுக்காவது கெடைக்காம இருக்கணுமோல்லியோ? நான் செய்யத்தான் போறேன்” என்று பலமான தீர்மானத்தோடு யார்மீதோ பழி தீர்த்துக் கொள்வதுபோல் உதட்டைக் கடித்தவாறு தலையாட்டிக் கொண்டாள்.
இதற்கிடையே ரயில் பல சிறிய ஸ்டேஷன்களில் நின்று நின்று கடகடத்து ஓடிக்கொண்டிருந்தது.
அவள் திடீரென்று நெஞ்சை அழுத்திக்கொண்டு ஓங்கரித்து வாந்தியெடுத்தாள். இரண்டு மணி நேரத்துக்கு முன் குடித்த பால் முழுவதும் ஜீரணமாகாமல் வெளி வந்தது. மடியிலிருந்த குழந்தையை பெஞ்சின் மீது உட்கார வைத்துவிட்டு அம்மாசி எழுந்து நின்று அவள் தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மூலையில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரக் கிழவி எழுந்தோடி வந்தாள். அவள் கையிலிருந்த தகரக் குவளையைப் பார்த்ததும் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான் அம்மாசி. கிழவி பாத்ரூமிலிருந்து அதில் தண்ணீர் கொணர்ந்து அவள் முகத்தைத் துடைத்து விட்டு இரண்டு மிடறு தண்ணீர் புகட்ட முயன்றாள். தண்ணீர் கடைவாயில் வழிந்தது. தண்ணீரோடு ஒரு கோடு ரத்தம் கடைவாயிலும் நாசித் துவாரத்திலிருந்தும் வழிந்தது.
“ஐயோ ரத்தம் வருதே!” என்று கிழவி அலறினாள். அம்மாசி தனது மேல் கோட்டால் ரத்தத்தைத் துடைத்து அந்தப் பெஞ்சின் மீது அவளை மெல்லச் சாய்த்துப் படுக்க வைத்தான். அவளுக்குக் கையும் காலும் சில்லிட்டிருந்தது. முதுகில் மட்டும் சூடு இருந்ததை அவளைப் பெஞ்சின்மீது கிடத்தும்போது உணர்ந்தான் அம்மாசி. அவளைப் படுக்க வைத்த பின் குழந்தையைத் தூக்கி அவள் அருகில் உட்கார வைத்தான். குழந்தை தாயின் மார்பில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தாள்.
குழந்தையின் தாய் அம்மாசியின் பக்கம் கை நீட்டினாள். பெஞ்சின் அருகே முழந்தாளிட்டு உட்கார்ந்திருந்த அம்மாசியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு ரகசியம் பேசுவது போன்ற குரலில் அவள் சொன்னாள்: “நீங்க யாராயிருந்தாலும் எனக்குத் தெய்வம் மாதிரி! அடுத்த ஸ்டேஷனிலே இந்த உடம்பெ எறக்கி செய வேண்டியதெ செஞ்சுடுங்கோ… செய்வேளா?” என்று கேட்ட போது, எவ்வளவோ மரணங்களைச் சந்தித்திருந்த அம்மாசியும் கூடக் கண்ணீரை அடக்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டான்.
“உதவின்னு கேக்காமலே செய்யற மனுஷன் நீங்க… நான் ரொம்ப நாழியா… சொல்ல நினைச்சிருந்ததைச் சொல்லிடறேன்… இவளை.. என் குழந்தையை…” – அவள் கண்களில் நிறைந்த கண்ணீர் காதோரமாய் வடிந்தது – “உங்க குழந்தையா வளர்க்கணும்… அவள் நன்னா வாழ்ந்துடுவா என்கிற நம்பிக்கை வந்துடுத்து… என் குழந்தையை உங்க குழந்தைகள்லே ஒருத்தியா… வளர்ப்பீங்களா, ஐயா…?” என்று மலர்ந்த முகத்தோடு அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டு கேட்டாள் அந்தத் தாய்.
அவன் அவளைக் கும்பிட்டான்.
அவள் பிடி அவன் மணிக்கட்டின்மேல் இறுகி இருந்தது….
ஒரு திறமையற்ற நடிகை உயிர் விடுகின்ற காட்சியில் நடிப்பதுபோல் முகத்திலுள்ள புன்முறுவல் மறையும்முன் அவள் கண்களை மூடிக்கொண்டாள். மெல்ல மெல்ல அவளது வாய் திறந்தபோதும், உதட்டின்மீது ஒரு ஈ வந்து அமர்ந்தபோதும் தான், அவள் உயிர் வாழ்க்கை சம்பூர்ணமெய்தி விட்டது என்பதை அறிந்த அம்மாசி எழுந்து தலைகுனிந்து நின்றான்…
ஏதோ ஒரு சின்ன ஸ்டேஷனில் வண்டி நின்றதும், பிச்சைக்காரக் கிழவி ஓலமிட்டதைத் தொடர்ந்து அந்தப் பெட்டியைக் கும்பல் சூழ்ந்தது. கும்பலை விலக்கிக் கொண்டு ஒரு ரயில்வே அதிகாரி உள்ளே நுழைந்தார்…
மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.
தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக் கடன்களை யெல்லாம் நேற்று ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டு அந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தான் அம்மாசி.
இன்று சரியான நேரத்திலேயே அந்த பாசஞ்சர் வண்டி வந்து நின்றது. தலையும் உடம்பும் ஆட்டம் கண்டு விட்ட அம்மாசி, குழந்தையோடு தனது பைச் சுமையையும் ஒன்றாய் எடுத்துச் செல்ல முடியாமல் முதலில் குழந்தையை ஜன்னல் வழியாக ஒரு அம்மாளிடம் கொடுத்துவிட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
வண்டியில் இருந்தவர்கள் எல்லாரும் குழந்தையையும் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தனர். ‘இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு’ என்று நினைத்தார்களோ?
“பொண்ணு… மகளா, பேத்தியா?” என்று விசாரித்தாள் சன்னல் வழியாகக் குழந்தையை வாங்கிய அந்த அம்மாள்.
பிள்ளையே பெறாத அம்மாசி ஒன்றும் யோசிக்காமல் உடனே “பேத்தி!” என்று பதில் சொன்னான்.
குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டியவாறே மீண்டும் அந்த அம்மாள் “என்ன பேரு?” என்று வினவினாள்.
அந்த நேரத்தில் ரயில் ‘கூ’வென்று கூவிச் சிரித்தது. ‘குழந்தையின் தாயிடம் பெயரைக் கேட்க மறந்து விட்டோமே’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் அம்மாசி. ரயிலின் கூவல் நின்ற அதே விநாடியில், தான் கண்டுபிடித்த பெயரைப் பிரகடனம் செய்தான் அம்மாசி: “பாப்பாத்தி!”
“பாப்பாத்தி! பொருத்தமான பேருதான்!” என்று சிலாகித்தாள் அந்த அம்மாள்.
பொருத்தமோ, இல்லையோ…. இனிமேல் அது ஒரு பெயர்தான்!
----------------
40. பலவீனங்கள்
பெங்களூரில் ஓர் உயர்தர நவீன ஹோட்டலின் மாடி அறையின் உட்புறம். அறைக் கதவு வெளியே பூட்டியிருக்கிறது. அறையிலிருப்பவன் மத்தியானமே வெளியே போயிருக்க வேண்டும். வலது கோடியில் உள்ள டைனிங் டேபிளின் மேல் சாப்பிட்ட தட்டுகள் சுத்தம் செய்யாமல் கிடக்கின்றன. அது ‘சிங்கிள் ரூம்’ ஆனதால் டைனிங் டேபிளுக்குப் பின்னால் அந்த ஒற்றைக் கட்டில் இருக்கிறது. கட்டிலின் மேல் டிரஸ்ஸிங் கவுனும் நாலைந்து புத்தகங்களும் இறைந்து கிடக்கின்றன. நேரே சுவரில் உள்ள அல்லிப்பூ மாதிரி அமைந்த இரண்டு பல்புகளுக்கடியில் கடிகாரம் மாட்டப்பட்டிருக்கிறது. அறைக்குள் விளக்குகள் ஒன்றும் எரியாததால் இருளில் மணி என்னவென்று தெரியவில்லை. இடது கோடியில் உள்ள அறையின் கதவுக்கு மேலுள்ள ‘வென்ட்டிலேட்டரின்’ வழியாக வெளியே இருந்து ஒரு துண்டு வெளிச்சம் அறைக்குள் கட்டிலின் மீது விழுந்திருக்கிறது. கடிகாரத்துக்குக் கீழே ஒரு மேஜையில், படுக்கையில் படுத்தவாறே கை நீட்டி எடுத்துக் கொள்ள ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீரும், அதன் மீது கவிழ்த்த தம்ளரும் பக்கத்தில் டெலிபோனும், ஒரு சிறு நாற்காலியும், ஒரு ஈஸி சேரும்… அறையிலுள்ள பொருட்கள் யாவும் அந்த வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிகின்றன. அறையின் வலதுபுறச் சுவரில் பாத்ரூம் கதவு தெரிகிறது!…
அறைக்கு வெளியே மாடிப் படிகளில் இருவர் ஏறி வரும் ஷீஸ் அணிந்த காலடிச் சப்தம் கேட்கிறது. முதலில் லேசாக ஆரம்பித்து நெருக்கமாய் ஒலிக்கிறது காலடியோசை… (ஒரு கரகரத்த ஆணின் குரல் கேட்கிறது.)
ஆண்குரல்: ஹே! ஸ்டெல்லா வாட் ஆர் யூ டூயிங் தேர்? கமான் பேபி (ஏ! ஸ்டெல்லா, என்ன செய்கிறாய் அங்கே?… வா பேபி)
(அவனுக்குப் பதில் சொல்வது போல் சற்று தூரத்திலிருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கிறீச்சிட்டு ஒலிக்கிறது.)
ஆண்குரல்: (அதட்டுகிற தொனியில்) உஷ்! டோண்ட் ஷவ்ட், திஸ் இஸ் எ ஹொட்டேல். (உஸ்! சப்தம் போடாதே, இது ஒரு ஹோட்டல்.)
ஸ்டெல்லாவின் குரல்: ஸோ, வாட்? எ ஹொட்டேல் இஸ் அ ஹொட்டேல்… டு யூ மீன் டு ஸே இட் இஸ் அ சர்ச்? (அதனால் என்ன, ஹோட்டல் என்ன மாதா கோயிலா?)
(அவளது குழறிய குரல் நெருங்கி வந்து ஒலிக்கிறது. அறைக் கதவின் மேல் அவள் சாய்ந்த சப்தத்தோடு கதவு அதிர்வது தெரிகிறது.)
ஸ்டெல்லாவின் குரல்: ஹேய்! ராபர்ட்ஸ்! ஸீ… மை ஸ்லிப்பர்… ஒன் ஆஃப் மை ஸ்லிப்பர்ஸ் ஸ்லிப்டு அவே (ஏ! ராபர்ட்ஸ்… என் ஸ்லிப்பரில் ஒன்று கழன்று விழுந்து விட்டது.)
(மீண்டும் சிரிப்பொலியுடன் அவள் சாய்ந்திருக்கும் அறைக்கதவு அதிர்கிறது.)
ராபர்ட்ஸின் குரல்: (அவன் மாடிப் படியின் கீழே கிடக்கும் ஸ்லிப்பரை எடுக்கப் போய் அங்கிருந்து பேசுவதால் தூரத்திலிருந்து கேட்கிறது.) டோண்ட் ஸிட் தேர்… ஹேய்! (குரல் நெருங்கி வருகிறது.) வாட் இஸ் திஸ்? லெட் அஸ் கோ இன்டு தி ரூம். கெட் அப்.. ம்.. கெட் அப்! (அங்கே உட்காராதே! ஏய், என்னது? நாம் அறைக்குள்ளே போகலாம். எழுந்திரு.. ம்… எழுந்திரு!)
(கதவருகே சரிந்து உட்கார்ந்தவளைத் தூக்குகிறான் போலும்)
லிப்ட் யுவர் புட்! நோ, தெ அதர் ஒன்! (பாதத்தைக் காட்டு; அந்தப் பாதத்தை…)
ஸ்டெல்லாவின் குரல்: தாங்க் யூ… ராபர்ட்ஸ்…
அறைக் கதவு திறக்கப்படும் சப்தம்; கதவு திறக்கிறது. கோட்டணிந்த ஓர் ஆணுருவம் உள்ளே வந்து லேசாக விசில் அடித்தவாறு விளக்கின் ஸ்விட்சைப் பொருத்துவதற்காக ஒரு தீக்குச்சியைக் கிழித்துச் சுவர் முழுவதையும் தேடி அறையின் இடது கோடியின் பக்க வாட்டிலுள்ள வாசற்கதவை ஒட்டியிருக்கும் ஸ்விட்சைப் போட அறை முழுதும் வெளிச்சம் பரவுகிறது. வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி நிற்கும் அந்த ஆங்கிலோ – இந்தியப் பெண் ஸ்டெல்லா உள்ளே வருகிறாள். இருவரும் அறையை நோட்டம் விட்ட பின் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்முறுவல் செய்து கொள்கின்றனர்.
அவள் தூய வெண்மையில் ‘ஸ்கர்ட்’ அணிந்து கழுத்தில் ஒரு கறுப்பு ‘ஸ்கார்ப்’பை சுற்றியிருக்கிறாள். நல்ல உயரம்; நல்ல வெண்மை; செம்பட்டை முடி, தோள்வரை புரள்கிறது. காலில் வெள்ளை ஸ்லிப்பர். கையில் ஒரு கைப்பை.
அவள் கட்டிலுக்குப் பக்கத்தில் அறையின் சுவரோரமாக இருக்கும் டிரெஸிங் டேபிள் கண்ணாடியில் இடமும் வலமும் திரும்பித் திரும்பிப் பார்த்துத் தன்னைத் தானே ரசித்துக் கொள்கிறாள். கையிலுள்ள சாவியைச் சுழற்றிக் கொண்டே அவன் சற்று உலவி நடக்கிறான்.
அவள் ஸ்கார்பை எடுத்துக் கட்டிலில் எறிந்து விட்டுக் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன – கையகல – டிரான்ஸிஸ்டரை எடுத்து டிரஸிங் டேபிளின் மேல் வைத்த பின், சீப்பை எடுத்துச் சிகையை ஒதுக்கி விட்டுக் கொண்டு திரும்புகையில் கால் தடுமாறிய போது அவன் அவளைப் பிடித்துக் கொண்டு சிரிக்கிறான்.
ஸ்டெல்லா: (சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகி) கிவ் மீ எ சிகரெட். (எனக்கு ஒரு சிகரெட்.)
(அவன் அவளுக்குச் சிகரெட்டைத் தந்து, பற்ற வைத்துக் கொள்ள உதவி, அந்தப் பாக்கெட்டை அவளிடம் கொடுக்கிறான்.)
ராபர்ட்ஸ்: கீப் இட் (வைத்துக் கொள்.)
பிறகு அவன் கடிகாரத்தைப் பார்க்கிறான்.
ராபர்ட்ஸ்: (அவளிடம் திரும்பி) பேபி, இட்ஸ் நைன் தர்ட்டி; ஐ ஆம் கோயிங் (மணி ஒன்பதரை; நான் போகிறேன்.)
(… என்று கூறியவாறு ஒரு பாட்டிலைக் கோட்டுப் பையிலிருந்து எடுத்து டெலிபோன் உள்ள மேஜையின் மீது வைக்கிறான். பாட்டிலைப் பார்த்ததும் அவள் எழுந்து மேஜையின் அருகே வந்து மகிழ்ச்சியுடன் கூறுகிறாள்.)
ஸ்டெல்லா: ஓ! ஹவ் நைஸ் இட் ஈஸ்!
ராபர்ட்ஸ்: (அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி) ஓ.கே. ஷெல் ஐ கோ நவ்? (சரிதானே நான் போகலாமா? – என்று தன் கையிலிருந்த அறைச் சாவியை அவளிடம் தருகிறான்.)
ஸ்டெல்லா: (கண்களைச் சிமிட்டி ஒரு புன்னகையுடன்) தாங்க்யு வெரிமச்! வில் ஹி கம் வெரி லேட் இன் தி நைட்? (நன்றி, அவன் இரவு வெகுநேரம் கழித்து வருவானோ?)
ராபர்ட்ஸ்: (தோள்களைச் சுருக்கி) ஐ திங்க் ஸோ! ஸோ வாட்? யூ ஹாவ் யுவர் கம்ப்பானியன் (அப்படித்தான் நினைக்கிறேன். அதனால் என்ன? நீதான் உனது துணையைப் பெற்றிருக்கிறாயே… என்று பாட்டிலைக் காட்டுகிறான்.)
ஸ்டெல்லா: (அவனை லேசாக அடிக்கிறாள்) ஏய்! பை தி பை இஸ் ஹி அன் ஆங்கிலோ – இன்டியன்? (அது சரி. அவனுங்கூட ஒரு ஆங்கிலோ – இந்தியனா?)
ராபர்ட்ஸ்: ஹீ (யார்?)
ஸ்டெல்லா: தி மேன் ஹீ லிவ்ஸ் ஹியர்? (இங்கே இருக்கின்ற அந்த ஆள்…)
ராபர்ட்ஸ்: நவ் எடேஸ் எவ்ரி இன்டியன் இஸ் அன் ஆங்கிலோ – இன்டியன் டூ!
(இப்போது, ஒவ்வொரு இந்தியனும் ஒரு ஆங்கிலோ – இந்தியன் தான்.)
ஸ்டெல்லா: ஐ டோண்ட் ஃபாலோ யூ (நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.)
ராபர்ட்ஸ்: (சிகரெட்டைப் பொருத்தியவாறு கேலிக் குரலில்) ஐ ஸே, நவ் எ டேஸ் இட் இஸ் இம்ப்பாஸிபில் டு ஸே, ஹீ இஸ் நாட் அன் ஆங்கிலோ இன்டியன்! அன்ட் ஐ ஸப்போஸ், எவ்ரி இன்டியன் ஹேஸ் பிகம் அன் ஆங்கிலோ இன்டியன் டூ! (இந்தக் காலத்தில் யார் ஆங்கிலோ – இந்தியன் யார் இந்தியன் என்று இனம் காண்பது ரொம்பவும் கஷ்டம். எல்லா இந்தியனும் ஒரு ஆங்கிலோ இந்தியனாகவும் மாறிவிட்டான் என்றே நான் கருதுகிறேன்!)
ஸ்டெல்லா: (எரிச்சலுடன்) டோன் டாக் நான்ஸென்ஸ்! மை ஹஸ்பன்ட் வாஸ் அன் இன்டியன்… அஃப்கோர்ஸ் ஹி வாஸ் எ ட்ரூ கிறிஸ்டியன் டூ! குட் ரோமன், எ குட் மேன்! ஓ! மோரீஸ்…! (உளறாதே! என் கணவர் ஒரு இந்தியனாகத்தான் இருந்தார். அதே சமயத்தில் அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவராகவும் இருந்தார். ஒரு நல்ல ரோமன்… ஒரு நல்ல மனிதன்… ஓ! மோரீஸ்…!)
(பேசிக் கொண்டே அவள் கண்கள் கிறங்கத் தன் கணவனின் நினைவில் லயிக்கிறாள்.)
ராபர்ட்ஸ்: ஐ ஆம் ஸாரி! (என்று அவள் தோளைத் தொடுகிறான்.)
ஸ்டெல்லா: (அவன் குரல் கேட்டு அந்த லயம் கலைகிறது.) யூ ஆர் கோயிங்…? ஸோ, குட்நைட் ராபர்ட்ஸ்.
- என்று அவனிடம் கை குலுக்குகிறாள்.
ராபர்ட்ஸ்: யு ஹாவ் டிரங்க் டூ மச்…! ( – என்று எச்சரிப்பது போல் கூறிவிட்டு) குட்நைட் பேபி… ஸீ யூ இன் தி மார்னிங்… ஐ வில் கம் அன் டேக் யூ! அறைக் கதவைத் திறக்கிறான். அவள் கதவருகே போய் நின்று அவன் வெளியே போனதும், கதவை மூடித் தாழிட்டுவிட்டு உள்ளே வருகிறாள்…)
மாடிப் படிகளில் ஷீஸ் அணிந்த பாதங்களின் சப்தம் ஒலித்துத் தேய்கிறது.
அவள் கதவருகேயிருந்து அறையின் நடுவே வந்து நின்று கண்ணாடியில் தெரியும் தனது தோற்றத்தைப் புகை பிடித்தவாறே பார்க்கிறாள். பின்னர், திரும்பி அறையில் மேலும் கீழும் சுற்றி உலவி வருகிறாள்… பிறகு கட்டிலின் ஓர் ஓரமாய்ச் சிந்தனை தோய்ந்த முகத்துடன் எங்கோ பார்வை வெறித்தவாறு உட்காருகிறாள். திடீரென நினைவு வந்தது போல் கால் மேல் கால் போட்டு முழங்கால் வரை அவளது மேனியின் நிறத்துக்குப் பேதமில்லாமல் அணிந்திருந்த நைலான் ஸாக்ஸை உருவி எடுத்து ஈஸி சேரின் மேல் போடுகிறாள். மேஜை மீது இருந்த ஆஷ்டிரேயில் சிகரெட்டை நெறித்து அணைத்து விட்டு எழுந்து, தனது மெலுடைகளைக் கழற்றி ஈஸி சேரின் மீது ஒழுங்காக மடித்து வைத்த பின் – தோள் பட்டையிலிருந்து முழங்கால் வரை இறுக்கமாய் அணிந்திருந்த வெண்மையான உள்ளுடையுடன் மேஜையின் பக்கமிருந்த நாற்காலியில் வந்தமர்ந்து டிரான்ஸிஸ்டரைக் கையிலெடுத்துத் திருப்புகிறாள்.
இனிய மேற்கத்திய ‘டுவிஸ்ட்’ இசை ஒலிக்கிறது… முதலில் சற்று நேரம் உட்கார்ந்த நிலையில் உடலை நௌ¤த்து விரலைச் சொடுக்கிக் கொண்டிருந்தவள் எழுந்து நின்று இடையை நௌ¤த்து நௌ¤த்து அடி எடுத்துக் கால் மாற்றி முன்னும் பின்னும் நகர்ந்தும், நிமிர்ந்தும், வளைந்தும் ஆடுகிறாள்.
இசையின் கதியில் முறுக்கேறுகிறது!
சற்று நேரம் ஆடிக் களைத்த பின், கட்டிலின் மீது விழுகிறாள்… பிறகு மேஜையின் மீதிருந்த பாட்டிலை எடுத்து அதன் கழுத்தை முறிப்பது போலத் திருகித் திறக்கிறாள்.
ஸ்டெல்லா: (தனக்குள்) ஓ மை குட்நஸ்! ஸோடா? என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கட்டிலருகேயுள்ள காலிங்பெல் ஸ்விட்சை அழுத்தச் சில வினாடிகளில் கதவு தட்டப்படுகிறது. எழுந்து கட்டிலின் மீது கிடந்த டிரஸிங் கவுனை எடுத்து அணிந்து இடுப்புக் கயிற்றை இறுகச் சுருக்கிட்ட பின் சென்று கதவைத் திறக்கிறாள்.
வெள்ளுடை தரித்த ஹோட்டல் பணியாள் ஒருவன், உள்ளே வந்து நிற்கிறான்!
ஸ்டெல்லா: (அவனிடம்) ஒரு அரை டஜன் ஸோடா வேணும்; ஐஸில் வச்சது இருக்கா?
பணியாள்: பாக்கறேன்… இல்லேன்னா ஐஸ்லே வெக்காதது இருந்தா கொண்டு வரட்டா…?
ஸ்டெல்லா: ஐஸ்லே வெச்சது கெடச்சா நல்லா இருக்கும்; இல்லாட்டியும் பரவாயில்லே, கொண்டு வா.
வெயிட்டர் கதவை மூடிக் கொண்டு போகிறான்.
டிரான்ஸிஸ்டரிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த இசையை அவள் நிறுத்தி விட்டு மேசையின் மீது இருந்த ஒரு ‘ரைட்டிங் பேடை’யும் சில சிறிய புத்தகங்களையும் எடுத்துப் பார்க்கிறாள். அவை யாவும் மது எதிர்ப்புப் பிரசார வெளியீடுகள். சில ஆங்கிலத்திலும் சில தமிழிலும் இருக்கின்றன.
மீண்டும் கதவில் தட்டி ஓசை எழுப்பிய பின்னர், அந்த ஓட்டல் பணியாள் சோடா பாட்டில்களைக் கொண்டு வந்து மேஜையின் மீது வைக்கிறான். அவள் அந்தப் பிரசுரங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறாள். பிறகு கையிலிருந்த புத்தகத்தை மூடி அதன் மேல் எழுதியிருந்த தலைப்பைப் படிக்கிறாள்.
ஸ்டெல்லா: (வாய்விட்டு) ஒய் வி கன்டம் லிக்கர்? ஆல்க்கஹால்… இஸ் – தி – டெவில்!
(அந்த ஹோட்டல் பையனைப் பார்த்துப் புன்முறுவல் காட்டி)
ஸ்டெல்லா: உனக்கு மதராஸா?
பணியாள்: ஆமாம்…
ஸ்டெல்லா: உனக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா?
பணியாள்: தெரியும்…
ஸ்டெல்லா: அப்படின்னா, இதெ படி, எனக்கும் மதராஸ் தான்… சரியா சொன்னா திருச்சி… நீ திருச்சி போயிருக்கியா? இல்லே…? அங்கே பொன்மலை… ரயில்வேயிலே வேலை செஞ்சுக்கிட்டிருந்தார் என் புருஷன்… சரி; இதெப்படி…
(என்று அந்தப் புத்தகங்களில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைத் தேடி எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.)
பணியாள்: (படித்துக் காட்டுகிறான்.) நாம் ஏன் மதுவை எதிர்க்கிறோம்…
ஸ்டெல்லா: ஓ! ஒய் வி கன்டம் லிக்கர்?… நான் இது படிக்கிறேன்… கேளு…
(என்று ஒரு புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு எழுத்தாகப் படிக்கிறாள்.)
ஸ்டெல்லா: ம-து-அ-ர-க்-கன்… மது அரக்கன் சரியா… சோடாவுக்குப் பணம்?
பணியாள்: ரூம் கணக்கிலே சேர்ந்துடும்…
ஸ்டெல்லா: இந்தா உனக்கு…
(என்று தனது கைப் பையிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்துத் தருகிறாள்.)
பணியாள்: தாங்க் யூ மேடம்…
ஸ்டெல்லா: குட் நைட்…
(கதவைத் தாழிட்டு விட்டு வருகிறாள்.)
பின்னர் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு எங்கோ பார்த்தவாறு தானே வாய்விட்டுக் கேட்டுக் கொள்கிறாள்.
ஸ்டெல்லா: ஒய் வி கன்டம் லிக்கர்! ஹீ… கன்டம்ஸ்… லிக்கர்…? மீ? ஹஹஹ! (சிரிக்கிறாள்.)
(மேஜையருகே சென்று தம்ளரில் மது ஊற்றிச் சோடாவைக் கலக்கிறாள்.)
ஸ்டெல்லா: (தனக்குள்) ஐ டோன்ட் கன்டம் லிக்கர்… ஒய்? ஒய் ஐ டோன்ட் கன்டம் லிக்கர்? (நான் மதுவை வெறுத்து ஒதுக்கவில்லை? நான் ஏன் மதுவை மறுத்து ஒதுக்கவில்லை? – என்று கூறிக் கொண்டே தம்ளரைக் கையிலேந்தி ஆழ்ந்த யோசனையுடன் நின்றிருக்கிறாள்.)
அவள் முகம் மாறுகிறது. உதடுகள் துடிக்கின்றன. சப்தமில்லாமல் அவள் உதடுகள் ‘ஒய் ஐ டோன்ட் கன்டம் லிக்கர்?… ஒய்?… ஒய்?’ என்று அசைகின்றன.
ஸ்டெல்லா: பிக்காஸ் ஐ ஆம் வீக்! ஐ நீட் இட். இட் இஸ் மை வீக்னஸ். (ஏனென்றால் அது எனக்குத் தேவையாய் இருக்கிறது. அதுதான் எனது பலவீனம்.)
அவள் அதனை ஒரு வெறியுடன் உறிஞ்சிக் குடித்து விட்டுத் தம்ளரை மேஜையின் மீது வைக்கிறாள்…
தலையை நிமிர்த்திக் கண்களை மூடிக் கொண்டு தன்னையே சபித்துக் கொள்வது போலப் பற்களைக் கடித்தவாறு இரண்டு கைகளையும் இறுக முறுக்கிக் கொண்டு அவள் சப்தமில்லாமல் அலறுகிறாள்.
ஸ்டெல்லா: (கனமான ரகசியக் குரலில்) லெட் தி டெவில் கில் மீ! லெட் தி டெவில் டேக் மீ டூ ஹெல்! ஓ! மோரீஸ்… ஐ ஹேவ் பிகம் எ பிட்ச்! எ டிரங்கட்… எ ஸின்னர். ஓ!.. மோரீஸ்! (இந்த அரக்கன் என்னைக் கொல்லட்டும்; இந்த அரக்கன் என்னை நரகத்தில் கொண்டு சேர்க்கட்டும். ஓ மோரீஸ்… நான் ஒரு வேசியாகிப் போனேன். நான் ஒரு குடிகாரியாகிப் போனேன். நான் ஒரு பாபியாகிப் போனேன்.)
அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதவாறே கட்டிலில் போய் விழுகிறாள்.
ஸ்டெல்லா: (புலம்பும் குரலில்) மோரீஸ்! மை டார்லிங்! யு ஆர் நோ மோர்… யு டைட் இன் அன் ஆக்ஸிடென்ட்… ஸ்டில் ஐ எக்ஸிஸ்ட் – பை அன் ஆக்ஸிடென்ட் (ஓ! மோரீஸ், என் கண்மணி! நீ இப்போது இல்லை! நீ செத்துப் போய் விட்டாய் ஒரு விபத்தினால். நான் இன்னும் உயிர் தரித்திருக்கிறேன் – ஒரு விபத்தினால்…)
சற்று நேரம் அமைதி! பிறகு அவள் மெல்ல எழுந்து வந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கண்களைத் துடைத்துக் கூந்தலை ஒதுக்கிச் சரி செய்து கொள்கிறாள். மேஜையருகே சென்று இன்னொரு முறை தம்ளரில் மதுவையும் சோடாவையும் கலந்து ஏந்தியவாறு கட்டிலில் அமர்கிறாள். அதை அவள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருக -
விளக்கு மங்கலாகி… சிறிது சிறிதாய் இருள் படர்கிறது. முற்றிலும் இருளாகிறது.
காட்சி 2
இருளில் படுக்கையில் அமர்ந்திருக்கும் ஸ்டெல்லா புகை குடிக்கையில் கனன்று பிரகாசிக்கும் சிகரெட்டின் நெருப்புக் கனிகிற வெளிச்சம் மட்டும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து வெளிச்சம் மிகுந்து அறை முழுமையும் வெளிச்சமாகிறது. ஸ்டெல்லா கட்டிலின் மீது கையில் மது நிறைந்த தம்ளருடன் உட்கார்ந்திருக்கிறாள். இப்போது அவள் தலை சற்றுக் கலைந்து, கண்கள் சிவந்து, லேசான முக மாற்றமும் போதை மிகுதியால் உடம்பே சற்றுத் தொய்ந்தும் காணப்படுகிறாள்.
அவள் படுக்கையிலிருந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க மணி பன்னிரண்டாகிறது. பின்னர் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறாள். டிரான்ஸிஸ்டரை ஒரு கையால் திருப்புகிறாள்… வெறும் சப்தம் மட்டும் வர எரிச்சலுடன் அதை நிறுத்தி விட்டுக் கையிலிருந்த மதுவைக் குடித்த பின்னர் மீண்டும் அதை நிரப்பிக் கொள்ளும்போது -
கதவு தட்டப்படும் சப்தம் லேசாகக் கேட்கிறது. ஸ்டெல்லா அவசர அவசரமாகத் தம்ளரை மேஜையின் மீது வைத்து, பின்னர் கண்ணாடியருகே ஓடி, தலையை ஒழுங்கு பண்ணிக் கொண்டு திரும்புகையில் மீண்டும் கதவு லேசாகத் தட்டப்படுகிறது. “எஸ்… கம்மிங்” என்று குரல் கொடுத்தவாறே தான் அணிந்திருக்கும் அவனது டிரஸ்ஸிங் கவுனைக் களைந்து விடலாமா என்று யோசித்துப் ‘பரவாயில்லை’ என்ற நினைப்புடன் கதவைத் திறக்கிறாள்.
சுமார் நாற்பது வயதுள்ள ஓர் உயரமான மனிதன் முழங்கையில் மடித்துப் போட்ட ஓவர்கோட், தொப்பி, கையிலொரு பைல் சகிதம் உள்ளே வர -
ஸ்டெல்லா: ஹலோ!
வந்தவன்: ஹலோ! ஐ ஆம் பார்த்தசாரதி.
ஸ்டெல்லா: மிஸஸ் மோரீஸ்…
இருவரும் கை குலுக்கிக் கொண்டதும் அவனிடமிருந்து ஓவர்கோட்டையும் தொப்பியையும் வாங்கிக் கொண்டு போய்க் கட்டிலுக்குப் பின்னாலிருந்த ஹாங்கரில் மாட்டுகிறாள். அப்போது அந்தப் பார்த்தசாரதி முகம் மாறி ஏதோ ஒரு நெடியை மோப்பம் பிடிப்பவன் போல் சுற்றிலும் பார்த்து மேஜையின் மீது இருக்கும் பாட்டிலையும் தம்ளரையும் அவளது தள்ளாட்டத்தையும் பார்த்துத் திகைத்துப் போகிறான். கர்ச்சிப்பை எடுத்து மூக்கை மறைத்துக் கொண்டு அறைக்குள் வந்து நின்ற இடத்திலேயே நின்றிருக்கும் அவனை அவள் திரும்பிப் பார்த்துப் பின்னர் மேஜை மீதிருந்த பாட்டிலையும் தம்ளரையும் அவன் பார்வை வழியே தானும் பார்த்துப் புன்முறுவல் செய்கிறாள்.
ஸ்டெல்லா: ஹவ் அபவுட் எ டிரிங்க்?
பார்த்தசாரதி: ஐ ஆம் ஸாரி… ஐ டோண்ட் டிரிங்க் (நான் குடிப்பதில்லை.)
ஸ்டெல்லா: (சற்றுத் தயங்கி) எஸ்… ஐ ஸா ஸம் புக்லெட்ஸ் ஹியர்! ஆர் யூ கனெக்டட் வித் தட் சொஸைடி?… (ஆம்; நான் இங்கு சில புத்தகங்களைப் பார்த்தேன்… நீங்கள் அந்த சொஸைட்டியைச் சேர்ந்தவரா?)
பார்த்தசாரதி: எஸ்!
நறுக்கென்று சொல்லிவிட்டு அவளோடு பேசிக் கொண்டிருக்க மனமில்லாமல், பாத்ரூமுக்குள் போகிறான்… பின்னர் கதவைத் திறந்து ஹாங்கரில் தொங்கிய நீளக் கோடுகள் நிறைந்த பைஜாமாவையும் சட்டையையும் எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை மூடிக் கொள்கிறான்… ஸ்டெல்லா தனியாக உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்கிறாள்… சிறிது நேரத்துக்குப் பின் தனது உடைகளையெல்லாம் மடித்து எடுத்துக் கொண்டு நீளக் கோடிட்ட பைஜாமாவும் சட்டையும் அணிந்து வெளியே வரும் அவன், துணிகளை ஒரு பெட்டியின் மேல் ‘பொத்’தென்று போடுகிறான்… பின்னர் ஈஸிசேரில் கிடந்த அவளது ஆடைகளை அள்ளிக் கட்டிலின்மீது ஒருபுறம் வைத்து விட்டு ஈஸிசேரை இழுத்துப் போட்டு உட்காருகிறான். தனது ஆடைகளை அவன் எடுத்தது கண்டு…
ஸ்டெல்லா: ஐ ஆம் ஸாரி… (என்று அவற்றை ஒழுங்குற மடித்து வைக்கிறாள்.)
ஸ்டெல்லா: (ஆடைகளை மடித்துக் கொண்டே) மிஸ்டர் பார்த்தசாரதி… நீங்க மெட்ராஸ்தானே?… (எனத் திடீரெனத் தமிழில் கேட்டதும் அவன் ஆச்சரியமுறுகிறான்.) என்ன அப்படி பாக்கறீங்க?… இந்தச் சட்டைக்காரி தமிழ் பேசறாளேன்னா?… எனக்கு சொந்த ஊர் திருச்சி – பொன்மலை. நான் தமிழ் தெரிஞ்சவங்ககிட்டே எல்லாம் தமிழ்லே தான் பேசுவேன்…. இந்த பெங்களூர்லே பேசற தமிழைவிட என் தமிழ் சுத்தமா இருக்கும்; இருக்கா இல்லையா?
பார்த்தசாரதி: (இதுவரை இருந்த முகச் சுளிப்பு மாறிப் புன்முறுவலுடன்) ஐ நெவர் தாட்… யூ ஸ்பீக் டமில் ஸோ நைஸ்லி!…
அவள் சப்தம் போட்டுச் சிரிக்கிறாள். அவனுக்கு அது எரிச்சலாக இருக்கிறது… அவள் சிரித்தவாறே அவன் எதிரே கட்டிலில் சாய்ந்து உட்காருகிறாள்.
பார்த்தசாரதி: (தனக்குள்) தமிழ் பேசிட்டா ஒருத்தி தமிழச்சி ஆய்டுவாளா?
ஸ்டெல்லா: (சிரிப்படங்கி) என்ன… என்னமோ சொன்னீங்களே…
பார்த்தசாரதி: (திகைப்புடன்) நோ! நோ!… ஒண்ணுமில்லே!…
ஸ்டெல்லா: நீங்க மட்டும் இங்கிலீஷ்லே பேசினீங்களே; அதைப் பார்த்துத்தான் சிரிப்பு வந்தது எனக்கு… (சிரித்தவாறே சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.)
ஸ்டெல்லா: சிகரெட்…
பார்த்தசாரதி: (ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டே, ஜென்ரலி… என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து) சாதாரணமா நான் சிகரெட் பிடிக்கிறதில்லை… எப்போதாவது…
(என்று சொல்லிக் கொண்டிருக்கையில் நெருப்புக் குச்சியை உரசி, எரிகின்ற குச்சியுடன் நெருங்கி வர அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அவளது நெருக்கத்தில் மதுவின் நெடி வீச முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.)
ஸ்டெல்லா: ஸாரி… உங்களுக்கு லிக்கர்னாவே ஒரு ‘அவெர்ஷன்’… ம்?… இல்லாட்டி அந்த அளவுக்கு நீங்க ஒரு மாரலிஸ்டோ? (என்றவாறே தானும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொள்கிறாள்…)
பார்த்தசாரதி: மாரலிஸ்ட்!… (ஒரு லேசான சிரிப்புடன் புகையை ஊதியவாறு) நான், நீ சொல்ற மாதிரி, ஒரு மாரலிஸ்டா இருந்தா உன்னை இந்த நேரத்தில் இங்கே சந்திச்சு இருப்பேனா?
ஸ்டெல்லா: மாரல்ங்கிறது… (ஒழுக்கம்) செக்ஸ் சம்பந்தப்பட்டது மட்டும்தான்னு நெனைக்கிறீங்களா?… நான் அந்த நெனப்பிலே சொல்லலே… குடிக்கற விஷயத்தில் நீங்க அதை ‘இம்மாரல்’னு நெனைக்கிறீங்களோன்னு…
பார்த்தசாரதி: (அவளை ஆச்சரியத்துடன் பார்க்கிறான்) ஒரு டிபேட்டுக்கு தயாராகிற மாதிரி இருக்கே!… நானும் நாளைக்கு நடக்கற ஸெமினார் விஷயமாகத்தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு வந்தேன்… இப்ப நாம்ப பேசறமே இதுதான் சப்ஜக்ட்! பிளீஸ்! அந்த பைலை எடு… (ஸ்டெல்லா எழுந்து போய் பைலைக் கொணர்ந்து தருகிறாள். அதை வாங்கி அவன் புரட்டிப் பார்க்கிறான்.)
பார்த்தசாரதி: ஸீ… இதான் என்னுடைய சப்ஜக்ட்! ஒய் ஐ கன்டம் லிக்கர்?..
ஸ்டெல்லா: அதைத் தமிழ்லே சொல்லுங்க…
பார்த்தசாரதி: நான் ஏன் மதுவை – கன்டம் – வெறுக்கிறேன் – வெறுத்து ஒதுக்குகிறேன்?
ஸ்டெல்லா: நானும் அதைத்தான் கேக்கறேன்… ஒய் டூ யூ – (பேசிக் கொண்டே அவள் மேஜையருகே போய்க் கண்ணாடித் தம்ளரில் நிரப்பி இருந்த மதுவைக் கையிலெடுத்துக் கொண்டு அவனிடம் அனுமதி கேட்கிறாள்.)
ஸ்டெல்லா: மெ ஐ ஹாவ் மை டிரிங்க்!
பார்த்தசாரதி: (தர்மசங்கடத்துடன்) ம்… கேரி ஆன்! நான் இப்போ சைத்தானிடம் வேதம் படிக்கிறேன்…
ஸ்டெல்லா: என்னைச் சைத்தான்னு சொல்றீங்களா!…
பார்த்தசாரதி: இல்லே மிஸஸ் மோரீஸ்… நான் உன்னை சைத்தான்னு சொல்லலே… உன் உள்ளே இருப்பது – உன் கையிலே இருக்கிறது – சைத்தான்னு சொல்றேன்…
ஸ்டெல்லா: உங்கள் நலத்துக்காக – (என்று கூறிக் குடிக்கிறாள்.) நீங்கள் ஒரு டாக்டர்தானே?
பார்த்தசாரதி: இல்லை… நீயே கண்டுபிடி… நான் என்னவென்று?…
ஸ்டெல்லா: புரபஸர்?
பார்த்தசாரதி: ம்ஹீம்…
ஸ்டெல்லா: சோஷல் ஒர்க்கர்?…
பார்த்தசாரதி: நீ சொன்னது எல்லாமே பாதி சரி….
ஸ்டெல்லா: ம்… மீதியை நீங்க சொல்லுங்க…
பார்த்தசாரதி: ஐ ஆம் எ ஸைக்கியாட்ரிஸ்ட்!
ஸ்டெல்லா: ஸைக்காட்ரிஸ்ட்! ஓ! டாக்டர்னா உடம்புக்கு வந்த வியாதியைக் கண்டு பிடிச்சு அதுக்கு மருந்து தருவாங்க… நீங்க மனசுக்கு வர நோயைக் கண்டுபிடிச்சு மருந்து தருவீங்க – என்ன, சரிதானே?
பார்த்தசாரதி: (பாராட்டும் தோரணையில்) ரொம்பச் சரியாகச் சொல்லிட்டே…
ஸ்டெல்லா: அப்டீன்னா நீங்க ஏன் இதை வெறுக்கணும்! (மதுவைக் காட்டி) இதுதான் மனசைப் பிடிச்ச வியாதிக்கு மருந்து!…
(என்று மதுவை உறிஞ்சிக் குடிக்கிறாள். அவன் அவளைப் பரிதாப உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் போதை தலைக்கேறி – தடுமாறியவாறு அவனருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்கிறாள்… மது நெடி அவனுக்குத் தொண்டையை குமட்டுகிறது…)
ஸ்டெல்லா: டாக்டர்… நான் ஒரு பேஷண்ட்! ஸைக்கோ பேஷன்ட்! ஸீ… (அவள் முகத்தை, சிவந்து கலங்கும் கண்களை ஊடுருவிப் பார்க்கிறான். அவள் தொடர்ந்து பேசுகிறாள்.)
ஸ்டெல்லா: டாக்டர்… இது எனக்கு வேணும்… ஐ நீட் திஸ் லிக்கர்… யூ மே கால் இட் ஸாட்டன்… நீங்க இதை சைத்தான்னு சொல்லலாம்… ஒரு சைத்தான் கிட்ட போகறத்துக்கு இன்னொரு சைத்தானின் துணை வேண்டி இருக்கே டாக்டர். (என்று கூறியவாறே அவளும் அவன் முகத்தை வெறித்துப் பார்க்கிறாள்… அவள் முகத்தில் ஒருவகைக் கடுமைக் குறி தோன்றுகிறது. மௌ¢ள மௌ¢ள மாறிச் சிரிப்பு விகசிக்கிறது!…)
ஸ்டெல்லா: (ஒரு சிறு மௌனத்துக்குப் பின்) ஹேய்!… லீவ் இட்!… சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துலே… என்னத்துக்கு இந்தப் பேச்செல்லாம்?… டாக்டர்… வுட் யூ லைக் டு டான்ஸ்?… கமான்.. ஐ… ஃபீல் லைக் டான்ஸிங்!… கமான் டார்லிங்!
எழுந்து நின்று கண்களை மூடிக் கொண்டு அவனை நடனமாட அழைக்கிறாள். அப்போது அவளுள்ளே இனிய இசை எழுந்து ஒலிக்கிறது. அதற்கேற்ப செங்குத்தாய் நின்று தன் கைகளுக்குள் ஓர் ஆடவனின் தோள்கள் இருப்பது மாதிரிக் கரங்களை ஏந்தி, ஒரு ஆடவனின் கைக்குள் தான் சிக்கி இருப்பது போன்ற நளினத்துடன் கண்களை மூடி அந்தக் கற்பனைத் தோள்களில் கன்னம் உரசி உடல் சிலிர்க்க, அவள் மிகுந்த லாகவத்தோடு பாதங்களை எடுத்து வைத்துச் சுற்றிச் சுழன்று அறை முழுமையும் ஆடி வலம் வருகிறாள். அவன் இரண்டு கைகளிலும் மோவாயைத் தாங்கிப் பொறுமையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் ஆடி அசைந்து வருகையில் அவன்மீது வந்து மோதிக் கொண்டபோது அவளைப் பிடித்து நிறுத்த – திடுமென அந்த இசை நின்று விடுகிறது.
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்!… மியூஸிக் இல்லாமல் இது என்ன டான்ஸ்?
ஸ்டெல்லா: (கனவு கலைந்தது மாதிரி சுற்றும் பார்த்து ஒரு சிரிப்புடன்) மியூசிக் இல்லையா? உங்களுக்குக் கேக்கலே… நான் கேட்டேனே… அ… இப்போது தூரத்தில்.. ரொம்ப தூரத்தில் கேக்கலே. ஓ! வாட் எ ஒண்டர்ஃபுல் மியூசிக்…
(என்று சற்று முன் அவளுள் ஒலித்த இசையை விசிலில் பாடியவாறு அவள் மீண்டும் ஆட ஆரம்பிக்கையில் – அந்த இசை தூரத்தில் ஒலிக்கிறது! அவனுக்கு அது புரியாததால் அவளைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருக்கிறது… சற்று நேரம் அவள் ஆடிய பிறகு, எழுந்து நின்று கைகளைத் தட்டி அவளைப் பாராட்டுவதாய்ப் பாசாங்கு செய்கிறான். அவன் கைதட்டியதும் அவள் ஆட்டத்தை நிறுத்திப் புன்முறுவலுடன் மேற்கத்திய பாணியில் அவனுக்கு நன்றி தெரிவித்த பின் ஈசிசேரில் வந்து பொத்தெனச் சாய்கிறாள்.)
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்! ஃபீலீங் டையர்ட்?… களைப்பா இருக்கா?
ஸ்டெல்லா: நோ… நோ… ஒரு நைட் பூரா என்னாலே டான்ஸ் ஆட முடியும்… பிளீஸ்… கிவ் மீ எ டிரிங்க்!…
(என்று அவள் மேஜையைக் காட்டவும், மனமில்லாமல் வேறு வழியில்லாமல் அவனே தம்ளரில் மதுவைக் கலக்குகிறான். அவள் கண்களை மூடியவாறு விசிலில் அந்த இசையைப் பாடுகிறாள் – அவன் மது தம்ளரை அவளிடம் நீட்டி…)
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்!
ஸ்டெல்லா: தாங்க்யூ டார்லிங் (என்று அதனை வாங்கி அருந்துகிறாள்.)
அவன் அவள் எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்து அவளது சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் எடுத்து அவளிடம் தந்து தானும் ஒன்றை எடுத்து, அவளுக்கும் பற்ற வைத்துத் தானும் கொளூத்திக் கொள்கிறான். ஸ்டெல்லா புகையை ஊத, இருவருக்கும் இடையே சூழ்ந்த புகைத் திரட்சியைக் கையால் விலக்குகிறாள். பின்னர் அவனையே கூர்ந்து பார்க்கிறாள்.
ஸ்டெல்லா: ஆமாம்… நீங்க இங்கே என்னை எதுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொன்னீங்க?…
பார்த்தசாரதி: (சற்றுத் தயங்கி) நீதான் சொன்னியே – ஒரு சைத்தான் கிட்டே போறதுக்கு உனக்கு இன்னொரு சைத்தானின் துணை வேண்டி இருக்குன்னு… உனக்கே புரியலியா? – மிஸஸ் மோரீஸ்!… நீ இதை மருந்துன்னு நெனச்சிக் குடிக்கிறே?… ஆனா இதுதான் உன் வியாதி!
ஸ்டெல்லா: (குறுக்கிட்டு, தன் கையிலுள்ள கண்ணாடித் தம்ளரைக் காட்டி) யூ மீன் திஸ் – இதுவா வியாதின்னு சொல்றீங்க?… யூ டோண்ட் நோ!… ஹாவ் யூ எவர் பீன் டிரங்க்!… நீங்க எப்பவாவது குடிச்சிருக்கீங்களா?… குடிச்சு இருக்கீங்களா?…
பார்த்தசாரதி: குடியெப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னா… (என்று ஏதோ சொல்ல வருகையில் அவள் குறுக்கிடுகிறாள்.)
ஸ்டெல்லா: (உயர்ந்த ஸ்தாயியில்) கேக்கறதுக்குப் பதில் சொல்லணும். நீங்க குடிச்சு இருக்கீங்களா? இல்லே, குடிச்சது இல்லே… அப்போ இதைப்பத்திப் பேச உங்களுக்கு ரைட் இல்லே… யூ ஹாவ் நோ ரைட் டு டாக் எபவ்ட் லிக்கர்!
(தனது குரலின் ஸ்தாயியின் உச்சத்தை அவளே உணர்ந்து உயர்த்திய கையுடன் பிளந்த வாயுடன் அப்படியே ஸ்தம்பித்து அந்த அமைதியில் சுற்றிலும் ஒரு முறை பார்த்து…)
ஸ்டெல்லா: உஷ்! ஹேய்… யூ நோ?… தி டைம் இஸ் மிட் நைட்! பிளேஸ் இஸ் எ ஹொட்டேல்! யூ ஆர் எ ரேக் அன்ட் ஐ ஆம் எ ஹோர்!.. நோ மோர் ஷவ்டிங்… டார்லிங், பிளீஸ் ஹாவ் யுவர் டிரிங்க். லெட் அஸ் கோ டு பெட்… டோன்ட் வேஸ்ட் யுவர் மணி அன்ட் டைம்… கமான் டார்லிங்!… (உஷ்!.. நேரமோ நடுநிசி! இடமோ ஒரு ஹோட்டல். நீயோ ஒரு ஸ்திரீலோலன்; நானோ ஒரு வேசி… சப்தங்கூடாது… வா… மதுவைக் குடி… நாம் படுக்கப் போவோம்… உனது காலத்தையும் பணத்தையும் விரயமாக்காதே… வா.)
பார்த்தசாரதி: (லேசாகச் சிரித்து) நீ சொல்றதெல்லாம் உண்மைதான். ஆனா முழு உண்மை இல்லை… நான் ஒரு டாக்டர்… நீ ஒரு பேஷன்ட்… நீ உன் தொழில்னு நெனச்சி வந்த இடத்திலே நான் என் தொழிலைச் செய்யறேன்…
ஸ்டெல்லா: (கிளுகிளுத்துச் சிரித்தவாறே) ஏய்!.. டாக்டர்… நீ நல்லா பேசறே! யூ டாக் வெரி லாஜிக்கலி மைபாய்! உன் தொழிலை ஆரம்பி… ம்! ஸ்டார்ட் இட்…
பார்த்தசாரதி: ஆல் ரைட்… ஐ ஹாவ் ஸ்டார்ட்டட். மிஸஸ் மோரீஸ்… யூ லைக் டிரிங்க்ஸ் வெரிமச்… மோர் தென் எனிதிங் எல்ஸ் இன் திஸ் ஓர்ல்ட்…
ஸ்டெல்லா: டாக்டர், தமிழ்லே பேசணும்… நான் திருச்சியிலே பொறந்தவ. என் புருஷன் ஒரு தமிழ்க் கிறிஸ்தவர். ஓ மை மோரீஸ்…
(அவளது நினைவு தடம் புரள்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அவன், அவளது தோள்களைக் குலுக்கி)
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ், நான் தமிழ்லேயே பேசறேன்… உனக்கு குடிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்… இந்த உலகத்திலே அதைவிடப் பிடிச்சது இன்னொன்று இல்லே…
ஸ்டெல்லா: என்னா?… உலகத்திலே…
பார்த்தசாரதி: (குறுக்கிட்டு) நோ.. கேக்கறதுக்கு மட்டும்தான் பதில்… ம் (புன்னகையுடன்) உனக்குக் குடிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும்… இல்லியா?…
ஸ்டெல்லா: எஸ்… ஐ லவ் இட்…
பார்த்தசாரதி: அதைவிடப் புடிச்சது உனக்கு ஏதாவது இருக்கா உலகத்திலே…
ஸ்டெல்லா: (தலையை உலுப்பி) நோ! அட் திஸ் மோமண்ட் – நத்திங்! (இல்லே… இந்த நிமிஷத்தில் ஒன்றும் இல்லை.)
பார்த்தசாரதி ஸ்டெல்லாவின் கண்களுக்குள் உற்றுப் பார்க்கிறான். அவள் ஒரு குழந்தை மாதிரிச் சிரிக்கிறாள். சிரித்துக் கொண்டே நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு அவன் முகத்தருகே நெருங்கி வருகிறாள்.
ஸ்டெல்லா: என்னத்துக்கு என்னை இப்படிப் பார்க்கிறீங்க?… ம்… என்னத்துக்கு… (என்று ஒரு கண்ணைச் சிமிட்டுகிறாள்.)
பார்த்தசாரதி: (ஒரு பெருமூச்சுடன்) கேவலம்! இந்தக் குடியெவிடப் பிடிச்ச விஷயம் உலகத்திலே இன்னொண்ணு இல்லேங்கற விதமா இந்தக் குடி ஒரு பொண்ணை மாத்திட்ட மாயையை நெனச்சிப் பார்க்கிறேன்!.. ம்… உன் உடம்பிலே உயிர் இருக்கிறதனாலே இந்தக் குடியெ உன்னாலே ரசிக்க முடியுது – உயிர் இனியது இல்லியா!…
ஸ்டெல்லா: (ஒன்றுமே தெரியாத ஒரு அப்பாவிச் சிறுவனைப் பார்க்கிற மாதிரி, பரிகாசமாய்ச் சிரித்தவாறு) மிஸ்டர் பார்த்தசாரதி! நீங்க சரியான ராஜா வூட்டுக் கன்னுக்குட்டி போல இருக்குது. உங்களுக்கு உயிர் இனிதா இருக்கும்… எனக்கு உயிர் ஒரு பாரம்! சுமை! அந்தக் கஷ்டத்துக்குத்தான் குடிக்கிறது.
பார்த்தசாரதி: (உதட்டைக் கடித்துச் சூள் கொட்டியவாறு அவள் சொன்னதைக் கவனமாய்க் கேட்டபின்) ஓ! ஐ ஆம் ஸாரி! உனக்கு உயிர் ஆரம்பத்தில் இருந்தே சுமையாவோ, பாரமாவோ, கஷ்டமானதாகவோ இருந்திருக்க முடியாது. ஆமாம்… உயிர் இனிதுதான்… இயற்கையிலே… உனக்கு உன் உயிர் வாழ்வே சுமையாப் போனதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கணும்… அந்தக் காரணத்துக்கு முன்னே உனக்கு உயிர்மேலே ஆசை கொள்ளையா இருந்திருக்கும்; உனக்கு அருமையான சங்கீத ரசனை இருக்கு. அழகு உணர்ச்சி இருக்கு… கற்பனைகள் இருக்கு… இதெல்லாம் இருக்கிற மனுஷாளுக்கு உயிர் மேலே வெறுப்பு சாதாரணமா வந்துடாது…
ஸ்டெல்லா கையிலிருந்த மதுவைக் குடித்துத் தம்ளரைக் காலியாக்குகிறாள்… அவள் தம்ளரை வைப்பதற்காக எழுந்ததும் சற்றுத் தள்ளாடுகிறாள்…
பார்த்தசாரதி: ப்ளீஸ்… ஸிட்டௌன். ஐ வில் ஹெல்ப் யூ… வாண்ட் ஸம்மோர் டிரிங்க்?… (உட்காரு… உனக்கு என்னும் கொஞ்சம் குடிப்பதற்கு வேண்டுமா?)
ஸ்டெல்லா: நோ!.. இன்னிக்கு நான் ரொம்ப ரொம்ப குடிச்சிட்டேன்… ஓ! ஹவ் நைஸ் இட் இஸ்! – ஹேய்… யூ!… டாக்டர்… உஷ்! லிஸன்!… தெர்… தட் மியுஸிக்!… ரா… ரான்… ரா… ரரன் ரரரரா!…
கண்களை மூடியவாறு அவள் லயித்து நிற்கையில், அவளது கையிலிருந்து நழுவிய கண்ணாடித் தம்ளரைக் கீழே விழுந்து விடாமல் பிடித்து வாங்கி, மேஜையின் மீது வைக்கிறான். அவனது இரண்டு கரங்களையும் பற்றியவாறு கண்களை மூடிப் பிதற்றுகிறாள் ஸ்டெல்லா.
ஸ்டெல்லா: ஓ! மோரீஸ்!…
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்… (அவள் கண் திறந்து பார்க்க) நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன்… நீ ஏன் அடிக்கடி உன் புருஷனைக் கூப்பிடுகிறாய்?
ஸ்டெல்லா: டோண்ட் ஒரி! ஹி வில் நெவர் கம்… (பயப்படாதீர்கள், அவர் வரவே மாட்டார்.)
பார்த்தசாரதி: (மன்னிப்புக் கேட்பது போல) நோ நோ! நான் தப்பாக் கேக்கலே… நீ அடிக்கடி உன் புருஷனின் பெயரைச் சொல்லுகிறாயே… அப்படிப்பட்ட உணர்ச்சி ஏன் உனக்குத் தோணுதுன்னு தெரிஞ்சிக்கவே கேட்டேன்.
ஸ்டெல்லா: (பழைய நினைவுகளில் லயித்த ஒரு சிரிப்புடன்) உங்களுக்கு என் புருஷனைப் பத்தித் தெரிஞ்சிக்கணும் போல இருக்கா?…
பார்த்தசாரதி: உன்னைப் பத்தியே நெறையத் தெரிஞ்சுக்கணும்.
ஸ்டெல்லா: என்னைப் பத்தி மட்டுமா? தனியாவா? ம்… அது அவ்வள்வு இன்ட்டரஸ்டிங்கா இருக்காது… யோசிச்சுப் பாத்தா முடியாதுன்னே தோணுது… அன் இன்டிவிஜீவல்’ஸ் லைப் இஸ் நாட் ஜஸ்ட் அன் இன்டிவிஜீவல் லைப்! (ஒரு தனி நபரின் வாழ்க்கை என்பது ஒரு தனித்த வாழ்க்கையல்ல.)
பார்த்தசாரதி: யு ஆர் ரைட்!
ஸ்டெல்லா: நீங்களோ ஒரு டாக்டர்… மனசுக்கு ட்ரீட்மென்ட் தர்ர டாக்டர்… உடம்பைப் பத்தின கேஸா இருந்தா சௌகரியம்… இன்டிவிஜீவல்னாலே உடம்பு தானே? ஆனா மனசு? இன்டிவிஜீவலோட மனசுன்னு சொல்லலாமே தவிர தட் இட்ஸெல்ப் இஸ் நாட் அன் இன்டிவிஜீவல்! – ஸாரி டாக்டர், ஆம் ஐ டாக்கிங் ஸம் நான்சென்ஸ்?
பார்த்தசாரதி: ஓ! யூ டாக் ரியல் சென்ஸ்!
ஸ்டெல்லா: தாங்க் யூ! இவ்வளவு ஏன் சொல்றேன் தெரியுமா? என்னைப் பத்தி எனக்கு எதுவுமே தனியா நெனச்சுப் பார்க்க முடியலே, டாக்டர்… இட் ஸ்டார்ட்ஸ் லைக் திஸ்… மம்மா!… என்னுடைய சின்ன வயசை நெனக்கறப்போ… என்னோட அம்மா அப்பா நெனப்பு கூடவே வருது… என் அப்பாவுக்கு ரயில்வேயிலே… கோல்டன் ராக் ஒர்க்ஷாப்பிலே வேலை… ஆர்டினரி பிட்டராகத்தான் சேர்ந்தாராம்… அவர் சாகறப்போ… போர்மனா இருந்தாராம். எனக்கு அப்போ பத்து வயசு… மை மம்மா பிகேம் எ விடோ. எனக்குப் பெரியவங்க மூணு பிரதர்ஸ் இருக்காங்க. ஐ ஆம் தி ஒன்லி டாட்டர்… நான் எல்லோருக்கும் பெட்! என் பிரதர்ஸ்லே பெரியவர் இப்போதும் அங்கே தான் கோல்டன்ராக்லே இருக்கார். அவர் ரயில்வே ஆபீஸ்லே இருக்கார். டூ மெனி சில்ட்ரன்.. பெரிய ஃபேமிலி… இப்ப அவரோட செல்லத் தங்கச்சியெ பத்தியெல்லாம் நெனைக்க நேரம் இருக்குமா?… த்சொ… இன்னொரு பிரதர் – ஸம்வேர் இன் மலபார்… என்னவோ கெமிகல் இன்டஸ்ட்ரீஸ்லே சேல்ஸ் மானேஜரோ – ஸ்டோர் சூபரிண்ட்டோ ஸம் பிக் போஸ்ட்லே இருக்கார்… அவரும் மாரீட் – தி லாஸ்ட் பிரதர் – ஹி வாஸ் ஸடடியிங்… இப்ப என்ன பண்றாரோ?… இவர்களை எல்லாம் பார்த்து அஞ்சு வருஷம் ஆயிடுச்சி. (பார்த்தசாரதி கொட்டாவி விடுவதைக் கண்டு) ஃபீல் லைக் ஸ்லீப்பிங்? (தூக்கம் வருதா?…)
பார்த்தசாரதி: நோ நோ!
ஸ்டெல்லா: அஞ்சு வருஷத்துக்கு முந்தி நான் அவரைப் பார்த்தேன், நான் இப்போ மோரீஸைப் பத்திச் சொல்றேன்… மோரீஸ்! அவர் ஆங்கிலோ இண்டியன் இல்லே. இண்டியன் கிறிஸ்டியன். அவர் எங்க கிளப்புக்கு வருவார். வாலிபால் பிளேயர்… என் லாஸ்ட் பிரதர்னு சொன்னேனோ, அவரோட கிளாஸ் மேட். ஆனா அவர் ஹைஸ்கூல் படிப்போட நிறுத்திட்டு, சர்வீஸ்லே ஜாயின் பண்ணிட்டாரு. அவர் பயர்மேனா இருந்தார். ஓ! ஹவ் ஹாண்ட்ஸம் ஹி வாஸ்! நாங்க ரொம்ப பிரன்ட்லியா இருந்தோம்; அவருக்கும் கேர்ல் பிரண்ட்ஸ் நெறையப் பேர் இருந்தாங்க… எனக்கும் பாய் பிரண்ட்ஸ் உண்டு. அப்ப எனக்கு ட்வன்டி திரீ – ட்வன்டி ஃபோர் இருக்கும். அதுக்கு முன்னே எனக்கு ஒரு பிரண்ட் கிட்டே அட்ராக்ஷன் இருந்திச்சி. அவனைத்தான் நாம்ப லவ் பண்றோமோன்னு கூட நெனச்சிருக்கேன். அவன் எங்க கம்யூனிட்டி! அவனைத்தான் நான் லவ் பண்றதா வீட்டிலே நெனச்சிக்கிட்டிருந்தாங்க. ஆனா – அப்புறம் அது மோரீஸ்னு தெரிஞ்சவுடனே எல்லாரும் அப்ஸெட் ஆயிட்டாங்க!…
(அவள் பேசும்போது அடிக்கடி கண்கள் செருகின. இரண்டொரு தடவை கொட்டாவி வந்ததை அவள் அடக்கிக் கொண்டாள். அவள் தொடர்ந்து பேசுவதை, கூறுகின்ற விஷயங்களை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.)
ஸ்டெல்லா: (சற்று நேரம் மௌனமாக யோசித்தபின்) எனக்கொண்ணும் அது தப்பா தோணலே. ஆங்கிலோ – இன்டியன்ஸ்தானே நம்ப? இன்டியன்ஸ்னா நமக்கேன் கேவலம்? அதே சமயத்திலே ஒரு ஈரோப்பியன் வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுலே இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாம். இன்டியன்னா அவமானமாம். ஹவ் ஸ்டுபிட் இட் ஈஸ்; சரிதான் போங்கடான்னேன்; ஐ ஹாவ் அன்டகனைஸ்ட் எவ்ரிஒன் இன்மை பேமிலி பார் தி ஸேக் ஆப் மை மோரீஸ்! (என் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் எனது மோரீஸின் பொருட்டு நான் பகைத்துக் கொண்டேன்.)
(ஒரு சிகரெட்டை எடுத்து உதடுகளில் வைத்துக் கொண்டு அவள் தீப்பெட்டியைத் தேட, கீழே விழுந்து கிடந்த பெட்டியை எடுத்து அவள் சிகரெட்டில் நெருப்பைப் பொருத்துகிறான் அவன்.)
ஸ்டெல்லா: தாங்க் யூ! (எதையோ நினைத்துச் சிரித்தவாறே) யூ நோ மோரீஸ் வாஸ் அ ஸ்ட்ராங்மேன். (மோரீஸ் ரொம்பவும் பலசாலி.) ஸ்போர்ட்ஸ் மேன். என் கடைசி பிரதர் என்னவோ விஷமம் பண்ணி இருக்கான். அவ்வளவுதான்… ஹி நாக்டு ஹிம் அவுட். (என்று வீர சாகஸக் கதை சொல்கிறவள் மாதிரி முஷ்டியை மடக்கிக் கொண்டு அபிநயித்துக் காட்டுகிறாள்.)
ஸ்டெல்லா: அதுக்கப்புறம் விஷயம் ரொம்ப ஸீரியஸா ஆயிடுச்சி. என்னை மோரீஸை பார்க்கக் கூடாதுன்னு சொல்லா ஆரம்பிச்சாங்க. போங்கடான்னுட்டேன் நான். அப்டீன்னா ‘யூ கெட் அவுட்’னாங்க… ஐ ஸெட் ஓ.கே… ஐ கேம் அவுட்! வெளியே வந்துட்டேனே தவிர, என்னா செய்யறதுன்னு புரியலே. எனக்கு ஒண்ணுமே தெரியாது. வீட்டை மெயின்டெய்ன் பண்ணத் தெரியும். ஐ கேன் வாஷ், ஐ கேன் குக் மீல்ஸ். எனக்கு அதான் பிடிக்கும். அதைத்தான் என் பிரதர்ஸீக்கெல்லாம் நான் செய்தேன். அந்த சமயம் மோரீஸ் டூட்டி மேலே போயிருந்தார். டூ டேஸ்!… இட் வாஸ் ஹெல்! கடைசியிலே அவர் வந்ததும் நாங்க மாரேஜீக்கு ஏற்பாடு பண்ணி அந்த மாசமே வீ காட் மாரீட். தென். அவருக்கு அந்த மாசமே வேலை இந்த ஊருக்கு மாறிச்சு. இங்கே வந்து ஸெட்டில் ஆனோம். ஓ! வாட் எ ஒண்டர்புல் லைப்! வேலை மாத்தி வரப்போ எங்க கையிலே ஆளுக்கு ஒரு ஸீட் கேசும், ஒரு படுக்கையும் தான்… ஆனா அவர் ஹார்ட்ஸ் வெர் ஃபில்ட் வித் டிரீம்ஸ் அன்ட் ஹோப்ஸ்! ( எங்கள் இதயங்கள் கனவுகளாலும், நம்பிக்கைகளாலும் நிறைந்து கிடந்தன.)
(அவளது தலை அண்ணாந்து கையிலிருந்து எதிர்பாராமல் நழுவி மேலே உயர்ந்து உயர்ந்து பறந்து போய்க் கொண்டிருக்கும் காஸ் பலூனைப் பார்த்து ஏங்குகிற குழந்தை மாதிரி பார்வை முகட்டில் அலைகிறது.)
ஸ்டெல்லா: (சிகரெட்டைப் புகைத்தவாறே பிதற்றுகிற மாதிரி) நாங்க மூணே மாசம்தான் வாழ்ந்தோம்… பதிமூணு ஸண்டேஸ்!… ஐ ரிமம்பர்… பதிமூணு ஞாயிற்றுக்கிழமையிலேயும் நாங்க என்னென்ன செய்தோம். எங்கே எங்கே போனோம். என்னென்ன பேசினோம்னு கூட சொல்றத்துக்கு முடியும் என்னாலே. வி வென்ட் டு பிக்சர்ஸ்… என் கஸினும் அவ ஹஸ்பன்ட் ராபர்ட்ஸீம் எங்க வீட்டுக்கு வந்தாங்க… அன்னக்கித் தான் ஃபஸ்ட் டைம் இன் மை லைப், நான் லிக்கர் சாப்பிட்டேன்… எங்க வீட்டிலே இருக்கிறபோது எப்பவாவது உண்டுனாலும் நான் சாப்பிட்டதே இல்லை. நான் அப்பல்லாம் நெனப்பேன்: ‘கடவுளே! எனக்கு இதுலே ஒரு ருசியும், குடிக்கிற பழக்கமும் ஏற்படாம இருக்கட்டும்’னு வேண்டிக்குவேன்… இதை மோரீஸ் கிட்டே நான் சொன்னபோது மோரீஸ் சிரிச்சாரே பார்க்கணும்! நவ் ஐ ஹியர் தட் லாஃப்டர்! ஓ! மோரீஸ்! அவர் சிரிப்பு… அவர் கடகடன்னு சிரிச்சா அதிலேயே எனக்கு ஒரு எக்ஸைட்மென்ட்! சில சமயத்திலே – என்ன சொல்றது? எனக்கு எல்லாமே ஆயிடும்.. அப்பிடி ஒரு மான்லினஸ்! ஓ! மை மோரீஸ்.
(அவள் சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து அணைக்கிறாள்.)
பார்த்தசாரதி: யூ வெர் டெல்லிங். ஃபார் தி ஃபர்ஸ்ட் டைம் யூ ட்ரேங் தட் டே வென் யுவர் கஸின் அன்ட் ஹர் ஹஸ்பன் கேம் டு ஸீ யூ. (நீ சொல்லிக் கொண்டிருந்தது – உன் கஸினும் அவளது புருஷனும் உன் வீட்டுக்கு வந்த அன்று முதன் முதலாக நீ குடித்ததைப் பற்றி.)
ஸ்டெல்லா: எஸ்! இட் வாஸ் மை ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்! எனக்கு என்னமோ புடிக்கல்லே. நான் மோரீஸ் கிட்டே அப்புறம் சொன்னேன். என்னைக் கம்பல் பண்ண வேணாம். இதுதான் ஃபஸ்ட் அன்ட் லாஸ்ட்! இனிமே மாட்டேன்; எனக்கு புடிக்கலைன்னு சொன்னப்போ… மோரீஸ் கோவிச்சுக்கப் போறார்னு நெனைச்சேன். ஹி டின்ட்! ஹி வாஸ் அ ‘ஹீ மேன்!’ அவர் பொம்பளைங்க கிட்டே கோவிச்சுக்க மாட்டார். அவர் சொன்னார்: யூ ஆர் நைன்ட்டி நைன் பர்ஸன்ட் சரியான தமிழச்சின்னு. அதெக் கேட்டப்போ எனக்கு சந்தோஷமாதான் இருந்தது.
சற்று அமைதியாக இருந்த பின்னர் – அவள் தானே எழுந்து சென்று மதுவைத் தம்ளரில் நிரப்பி அங்கேயே நின்று பாதியை மடமடவென்று குடித்த பின், மீண்டும் தம்ளரை நிரப்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அவளது முகம் சிவந்து, கனிந்து, உப்பி இருந்தது…
ஸ்டெல்லா: மோரீஸ் அப்பவே அவங்களைப் பற்றி சொல்லுவார்… என் கஸினும் அவ ஹஸ்பண்ட் ராபர்ட்ஸீம். யூ நோ ஹிம்?
பார்த்தசாரதி: விச் ராபர்ட்ஸ்? ஹவ் டு ஐ நோ?
ஸ்டெல்லா: ஹேய்!.. ராபர்ட்ஸ்… என்னை யாருகிட்டே கூட்டியாரச் சொன்னீங்க? டாலா… ஸீட் போட்டுகிட்டு…
பார்த்தசாரதி: ஓ! யூ மீன் தட்…
ஸ்டெல்லா: எஸ். தட் பிம்ப்! அவங்களைப் பத்தி மோரீஸீம் நானும் பேசுவோம் – எங்களுக்கு அப்பவே அவங்க நடவடிக்கையிலே சந்தேகம். நமக்கென்ன? இட் இஸ் தெர் பிஸினஸ்! தெரிஞ்சவங்களே இல்லாத ஊர்லே சொந்தக்காரவங்கன்னு சொல்லிக்கிற மாதிரி அவ ஒருத்தி இருந்தா மை கஸின். கொஞ்சம் கொஞ்சமா ராபர்ட்ஸீம் மோரீஸீம் ரொம்ப நெருக்கமான பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. எனக்கு மனசுக்குள்ளே திக்திக்குனு இருக்கும்… நான் மோரீஸ்கிட்டே இத்தெப் பத்திப் பேசினேன். என்னோட ட்யூடி இல்லியா அது? ஆனா அவருக்கு குடிக்கறதுக்கு அவன் ஒரு கம்பெனிங்கற இன்ட்ரஸ்ட் மட்டும்தான். அதெ அவரே எங்கிட்டே சொன்னாரு… இட் இஸ் ஆல்ரைட்னு விட்டுட்டேன். மோரீஸ் யூஸ்ட் டு டிரிங்க் டெய்லி! வாட் இஸ் ராங் இனிட்? ஆப்டர் எ ஹார்ட் லேபர்… கடுமையா உழைக்கிற மனுஷன்… நான் கண்டுக்கலே… எல்லாம் மூணு மாசத்துக்குள்ளேதான்… அப்பறம் ஒரு நாளு… ஓ! மை காட்! அதோ அந்த ஸீன் என் கண்ணிலேயே நிக்குது. சாயங்காலம் நாலு மணிக்குக் கையிலே டிபன் பாக்ஸை எடுத்துக்கிட்டு ஹாட்டை மாட்டிக்கிட்டு தெருக் கோடிக்குப் போறதுக்குள்ளே நாலு தடவை திரும்பித் திரும்பிப் பாத்து கையை ஆட்டறாரு… நானும் கையைக் கையை ஆட்டறேன். அவ்வளவுதான்… நான் அவரைக் கடைசியா… ஓ! மோரீஸ்! தட் வாஸ் தி என்ட்! அதான் கடைசி. அப்புறம் நான் அந்த முகத்தைப் பார்க்கவே இல்லை… மை மோரீஸ்! வேர் ஆர் யூ!
(என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பிக்கிறாள்… அவள் கையிலிருந்த தம்ளரிலிருந்து மது தளும்பிச் சிந்துகையில் பார்த்தசாரதியின் புறங்கை மீதும் சிறிது வழிகிறது. அவன் அதைப் பொருட்படுத்தாமல் துடைத்துவிட்டு அவளது தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுக்கிறான்.)
பார்த்தசாரதி: பிளீஸ்… பிளீஸ் ஹாவ் யுவர் டிரிங்க்… ம்…
குழந்தை மாதிரி அவள் முகமும், உதடுகளும் அழுகையில் துடிக்கின்றன… அவன் அவள் கூந்தலை நெற்றியிலிருந்து ஒதுக்கி விடுகிறான்… அவள் விம்மியவாறே இரண்டு மிடறு மதுவை அருந்திய பின் சற்று அமைதி அடைகிறாள்.
பார்த்தசாரதி: வான்ட் எ சிகரெட்? (ஸ்டெல்லா தலை அசைக்கிறாள். அவள் வாயில் சிகரெட்டை வைத்து இரண்டு மூன்று தீக்குச்சிகளை வீணாக்கியும் தன்னால் பற்ற வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து சிகரெட்டை அவனிடம் நீட்டி…)
ஸ்டெல்லா: பிளீஸ்… லைட் இட்…
அவன் தனது உதடுகளில் ஈரம் படாமல் வைத்து நெருப்பைப் பொருத்திய பிறகு அவளது உதடுகளில் வைத்த பின் அதை அவள் புகைக்கிறாள். அவள் மனமும், கண்களும் கலங்கி இருக்கின்றன. பார்வை எங்கோ வெறிக்க முகம் பயங்கரமாய் மாறியிருக்கிறது.
ஸ்டெல்லா: (திடீரென்று தானே பேசுகிறாள்.) எனக்கு அதை யார் வந்து எப்படி சொன்னாங்க, நான் எப்படி அந்த எடத்துக்குப் போனேன் – இதெல்லாம் எவ்வளவு யோசிச்சு யோசிச்சுப் பார்த்தாலும் ஞாபகம் வரல்லே… ஒரு பிரிட்ஜீக்குப் பக்கத்திலே ரயில்வே டிராக் மேலே நாலைஞ்சு கம்பார்ட்மெண்ட் நிக்குது. ரெண்டு கம்பார்ட்மெண்ட் பிரிட்ஜீக்கும் ஆத்துக்கும் நடுவாலே தொங்குது… தண்ணியிலே தலை குப்புற முழுகிப் பாதி இன்ஜின் வெளியே தெரியுது… மோரீஸ் அதுக்கும் கீழே இருக்காராம். ஓ! இதைத்தான் நான் போய்ப் பார்த்தேன். ஐ நெவர் ஸா ஹிம். தட் இஸ் ஆல்! ஐ ஹாட் டு பிலீவ்… தட் ஹி இஸ் நோ மோர்!
பார்த்தசாரதி: த்சொ… த்சொ…
ஸ்டெல்லா: எனக்கு ஒண்ணுமே புரியலே… எனக்கு அழ முடியலே; தூங்க முடியலே; பசிக்கலே… நான் மரத்துப் போயிட்டேன். ஐ ஹாவ் பிகம் நம்ப்… அந்த மாதிரி எத்தினி நாளுன்னு எனக்குத் தெரியாது. செத்துப் போயிருந்தா நல்லா இருக்கும்னு இப்ப தோணுது. ஆனா அதுகூட அப்ப தோணலே. உயிரோட இருக்கிற மாதிரித் தோணினாக்காத்தானே சாகணும்னு தோணும்? அப்பல்லாம் ராபர்ட்ஸீம் என் கஸினும் தான் கூட இருந்தாங்க. ஒரு நாள் என் கஸின் என்னைக் கம்பல் பண்ணிக் குடிக்கச் சொன்னாள். அது நல்லதுன்னு சொன்னாள். நான் மறுப்பு சொல்லலே போல இருக்கு… ஐ டிரேங்க்… அதுக்கப்பறம் தூங்கினேன் – ஆனந்தமா தூங்கினேன்; கனவு கண்டேன். மோரீஸைப் பாத்தேன். திடீர்னு முழிச்சேன்… ‘ஐ வான்ட் ஸம் மோர் டிரிங்க்’னு கத்தினேன். அறைக் கதவைத் திறந்துக்கிட்டு ராபர்ட்ஸ் ஓடி வந்தான். நான் அவனைக் கெஞ்சினேன். எனக்கு டிரிங்க்ஸ் வேணும்னு. அப்போ என் கஸின் இல்லே போலிருக்கு – யார் கூடவோ சினிமாவுக்குப் போயிருக்கணும்! ராபர்ட்ஸ் எனக்கு லிக்கர் கொண்டு வந்தான். அவனும் குடிச்சான். கொஞ்ச நாழிக்கப்புறம் திடீர்னு என் பக்கத்திலே உக்காந்து மோரீஸ் குடிக்கிற மாதிரி இருந்தது. உடம்பிலேயும் மனசிலேயும் எனக்கு திடீர்னு டென்ஷன் விண்விண்ணுனு தெறிக்க ஆரம்பிச்சுது. நான் ‘மோரீஸ் மோரீஸ்’னு சொல்லிக்கிட்டே ராபர்ட்ஸைக் கழுத்தைக் கட்டிக்கிட்டு அழுதேன்; எனக்குத் தெரியுது… இது மோரீஸ் இல்லே – ராபர்ட்ஸ்ன்னு… ஆனாலும் அவனை மோரீஸா நெனச்சிக்கிட்டு அணைச்சிக்கிறதுலே ஒரு சுகம் இருந்தது. அந்த டென்ஷனுக்கு அது வேணும்! தென் ஹி கிஸ்டு மீ… வீ ஸ்லெப்ட் டுகெதர்…
பார்த்தசாரதி: (உதட்டைக் கடித்து விரல்களைச் சொடுக்கி) எக்ஸாக்ட்லி! திஸ் இஸ் மை பாயிண்ட்.
பார்த்தசாரதி எழுந்து போய் ஒரு பெட்டியைத் திறந்து ஒரு டேப் ரிக்கார்டரைக் கொண்டு வந்து கட்டிலின் மீது வைக்கிறான்.
பார்த்தசாரதி: நீ கேட்டியே, ஒய் டு யூ கன்டம் லிக்கர்னு? இதுக்குத்தான்! இதைப்பத்தி மெட்ராஸ்லே நான் ஒரு இடத்திலே பேசினேன். அப்ப உனக்கு ஏற்பட்ட மாதிரி அனுபவத்தைக் குறிச்சு நான் சொன்னேன். லிஸன்! அது தமிழிலே இருக்கு… உனக்குத்தான் தமிழ் நல்லா வருதே…
(என்று சொல்லிக் கொண்டே டேப் ரிக்கார்டரை ‘ஸ்விட்ச் ஆன்’ செய்கிறான். அவள் மதுவைப் பருகிக் கொண்டே கன்னத்தில் கையூன்றி அதைக் கவனிக்கிறாள்.)
பார்த்தசாரதியின் குரல்: (டேப் ரிக்கார்டரிலிருந்து)
மது மறுப்புச் சங்கத்தினராகிய நமக்கெல்லாம் இந்தியாவின் பல பகுதிகளில் மது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டிருப்பதில் ரொம்ப மகிழ்ச்சியே. எனினும் மது மறுப்புக் கொள்கை என்பது இங்கு ஒரு சிந்தனா பூர்வமான நெறியாகப் பயிலப்படவுமில்லை; பயிற்றுவிக்கப்படவுமில்லை. மது என்பது ஒரு பாவம், ஒரு தோஷம் என்ற கருத்தில் சட்டத்தின் துணையுடன் தடுக்கப்பட்டிருப்பதால், தடுக்கப்பட்ட வேறு இன்பங்களைப் போலவே இதுவும் பரவலாகவும் ரகசியமாகவும் மீறப்பட்டு வருகிறது. எனவே மது மறுப்பு என்பதை, ஒவ்வொருவர் மனத்திலும் உருவாக்க அறிவு ரீதியான – விஞ்ஞானரீதியான – விளக்கங்களை நாம் செய்தல் வேண்டும். அதுதான் நிரந்தரமான பயனைத் தரும். மது மயக்கம் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு தனி மனிதனையும் பாழாக்கி, அவனது தனிப்பட்ட சமூக அந்தஸ்தையும் ஆன்மீக அந்தஸ்தையும் சீர் குலைக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். இதனை வெறும் ஒழுக்கம் என்ற அளவு கோலினால் அளந்து பார்ப்பது சரியில்லை. நான் இந்த மது மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பது ஒழுக்கத்தின் அடிப்படையில் அல்ல. ஒழுக்கத்தைப் பற்றி எனக்கு நடைமுறை அர்த்தங்களுக்கு மாறுபட்ட கொள்கைகள் உண்டு. ஒழுக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதோ, அவற்றை மீறுவதோ ஒரு மனிதனின் சுயேச்சையான நெறியாகும். ஆனால் மது மயக்கமோ ஒரு தனி மனிதனின் சுயேச்சைத் தன்மையைத்தான் முதலில் அழிக்கிறது. ஒருவன் அல்லது ஒருத்தி ‘தான்’ என்ற தன்மையை மறந்து ஒரு காரியத்தைச் செய்யலாகாது. நான் செய்யப்படும் காரியத்தின் தாரதம்மியத்தைக் கணக்கில் கொள்ளவில்லை. ஒருத்தி அல்லது ஒருவனால் செய்யப்படும் காரியம் – பாப காரியமோ, புண்ணிய காரியமோ, ஒழுக்கமானதோ, ஒழுக்கக் கேடானதோ – எதுவாயினும் ‘இதை நான் செய்தேன்’ என்று பொறுப்பேற்றுக் கொண்டு செய்வது தான் சுயேச்சை என்பது; அது தான் சுயமரியாதை. அது உயர்வானதாகவும் இருக்கலாம்; இழிவானதாகவும் இருக்கலாம். ஆனால் மது மயக்கம் முதலில் ஒருவனைத் தன்னிலை இழக்கச் செய்கிறது. தன்னை அறியாமல் செய்த காரியங்களுக்கு – தன்னை இழந்த நிலையில் செய்த காரியங்களுக்கு யாரும் பொறுப்பேற்க முடிவதில்லை. அது சைத்தானின் செயலாகிப் போகிறது. எனவே மது மயக்கத்தில் செய்த காரியத்திற்கு ஒருவரைப் பொறுப்பேற்கச் செய்வது நியாயமாகாது என்று நீதியும் கூட மயங்குகிறது. மது மயக்கம் உள்ளே நுழைந்து விட்டால், ஆத்மாவைக் கொன்று விடுகிறது. மது மயக்கம் தலைக்கேறி விட்டால் கணவனின் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண் தெய்வம் தன்னை ஒரு சைத்தான் கற்பழித்து விட்டுப் போகக்கூட அனுமதித்து விடுகிறாள்…
இந்த இடத்தில் அவன் ரெக்கார்டரை நிறுத்தினான். இவ்வளவு பொருத்தமாகக் கூறியிருக்கும் தனது பிரசங்கத்தைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்றறிய அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் அவனைப் பார்த்துக் கிறங்கிய கண்களுடன் புன்முறுவல் செய்தாள்.
ஸ்டெல்லா: இட் இஸ் யுவர் வியூ… தட் இஸ் ஆல்! (இது உங்கள் கருத்து, அவ்வளவுதான்.)
பார்த்தசாரதி: தட் இஸ் தி ட்ரூத் டூ! (அது உண்மையும் கூட.)
ஸ்டெல்லா: ட்ரூத்?… இட் இஸ் மோர் டீப்பர்; (உண்மையா? அது இன்னும் ஆழமானது.)
பார்த்தசாரதி: உனக்கு நடந்ததே ஒரு உதாரணமில்லையா அந்த உண்மைக்கு?
ஸ்டெல்லா: நோ… இட் இஸ் நாட். ஹி டின்ட் ரேப் மீ. (அப்படி இல்லை; அவன் என்னைக் கற்பழிக்கவில்லை.)
பார்த்தசாரதி: (அமைதியாக) தென் ஹீ? (பின்னே யாரு?)
ஸ்டெல்லா: இட் இஸ் தி டீப் ரூட்டட் மெமரி ஆப் மை ஹஸ்பன்ட் இன் மீ! தட் மேக்ஸ் மீ எவ்ரி திங். (அதுதான் என் உள்ளே ஆழமாக வேர் விட்டிருக்கும் என் புருஷனின் நினைவு; அதுதான் என்னை எல்லாம் ஆக்குகிறது.)
அவள் கையிலிருந்த மதுவை இறுதியாகக் குடித்த பின்னர் – தம்ளரை ஈஸி சேரில் எறிந்துவிட்டு எழுந்து நின்று இரண்டு கரங்களையும் அவனை ஏற்றுக் கொள்வதற்காக ஏந்தி நிற்கிறாள்.
ஸ்டெல்லா: (வாய் குழறுகிறது.) டார்லிங்! மை மோரீஸ்! யூ ஆர் ஹியர்! கமான்… ஓ! டார்லிங்.. ஹவ் லாங் ஐ ஆம் வெயிட்டிங் டார்லிங்! கிஸ் மீ!
அவள் அவன்மீது தாவி அவனை இறுகத் தழுவிப் பின்னி அவன் உதடுகளிலும் கழுத்திலும் முத்தம் சொரிகிறாள். அவன் அவளை நளினமாக விலக்கி அணைத்தவாறே படுக்கையில் கிடத்துகிறான்… அவள் படுக்கையில் கிடந்து காலை உதைத்துக் கொண்டு துடிக்கிறாள்.
ஸ்டெல்லா: டார்லிங்! நீ எங்கே போறே? வா… வா… மோரீஸ்… மோரீஸ்!
அவன் கட்டிலின் பக்கத்தில் நின்று கண்டிப்பான – தீர்மானமான – குரலில் அழைக்கிறான்.
பார்த்தசாரதி: ஸ்டெல்லா!
ஸ்டெல்லா: எஸ் டார்லிங்?
பார்த்தசாரதி: லுக் அட் மீ! ஐ ஆம் நாட் யுவர் மோரீஸ்… நான் மோரீஸ் இல்லை.
அவள் தலையை உயர்த்தி அவனை வெறித்துப் பார்க்கிறாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிகிறது.
ஸ்டெல்லா: (கெஞ்சுகிற குரலில்) பி மை மோரீஸ்… திஸ் மோமன்ட்!… ரிலீஸ் மீ ஃப்ரம் திஸ் டென்ஷன்!… ஓ… (என் மோரீஸாக இரு… இந்த சமயம்! இந்த ‘டென்ஷனி’லிருந்து என்னை விடுவி!)
பார்த்தசாரதி: நோ! ஐ ஆம் நாட் யுவர் மோரீஸ்… ஐ ஆம் மைஸெல்ஃப். (முடியாது! நான் உன் மோரீஸ் அல்ல, நான் – நான்தான்.)
ஸ்டெல்லா: (தனக்குள் அடங்கிய குரலில்) எஸ், யூ ஆர் நாட் மோரீஸ்… மோரீஸ் இஸ் நோமோர். ஐ ஆம் அலோன். ஐ ஹாவ் நோபடி! (ஆமாம், நீ மோரீஸ் இல்லை! மோரீஸ் செத்துப் போயிட்டார். நான் தனியா ஆயிட்டேன். எனக்கு யாருமே இல்லே.)
விம்மியவாறே படுக்கையில் முகத்தை அவள் புதைத்துக் கொள்கிறாள். அவன் பக்கத்தில் அமர்ந்து ஆதரவாக அவளது முதுகைத் தட்டிக் கொடுக்கிறான். இரண்டொரு முறை விம்முகின்ற சத்தம் ஒலிக்கிறது. பின்னர் அமைதியாக அவள் தூங்கிவிட அவன் எழுந்து அவள்மீது போர்வையை இழுத்துப் போர்த்தி விடுகிறான். டேப் ரெக்கார்டரை மூடி எடுத்து வைக்கிறான். கண்ணாடி ஜாடியிலிருந்து அப்படியே தண்ணீரை எடுத்துக் குடிக்கிறான். ஈஸீ சேரிலிருந்த தம்ளரை மேஜையின் மீது வைத்துவிட்டு, ஒரு பெட்ஷீட்டுடன் ஈஸி சேரில் படுத்து நாற்காலியில் கால் நீட்டி ஓரளவு சவுகரியமாகப் படுத்துக் கொள்கிறான். ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்க்கிறான். வாழ்க்கையின் விபரீத லீலைகளை எண்ணி ஒரு கைத்த சிரிப்பு உதட்டில் நௌ¤கிறது.
விளக்கு மங்கி இருள் படிகிறது.
காட்சி 3
அறை முழுதும் இருளாக இருந்தும் – இடது புறமுள்ள பாத்ரூம் கதவுக்கு மேல் பதித்திருக்கும் கண்ணாடியினூடே தெரியும் வெளிச்சத்தால் அறையிலுள்ள பொருள்கள் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன. ஈஸிசேரில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி அதில் லேசாகப் புரள்கிறான். பாத்ரூமுக்குள்ளிருந்து ஷவரில் தண்ணீர் இரைகின்ற சத்தம் கேட்கிறது. பின்னர் அடங்குகிறது.
அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விளக்கைப் பொருத்துகிறாள். முதல் காட்சியில் இருந்தது போல் உடையணிந்து நிற்கும் அவள் தோற்றத்திலும், முகத்திலும் இப்போது ஆச்சரியப்படத் தக்க மாற்றம் காண்கிறது. அவள் நடை அமைதியாக இருக்கிறது. இவள் வேறு ஒருத்தி என்பது போல பாவனைகளே மாறி இருக்கின்றன. அங்கே இறைந்து கிடக்கும் சாமான்களை ஒழுங்குற எடுத்து வைக்கிறாள்.
கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி ஆறு ஆகிறது. ஒரு பக்கம் திரும்பி மறைவாகக் காலுறைகளை அணிந்து கொண்ட பின் ஒரு விருந்தினர் வீட்டில் வந்து சிக்கிக் கொண்டு தவிக்கிற குழந்தைமாதிரிக் கட்டில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு நகத்தைக் கடிக்கிறாள்.
அப்போது கதவு லேசாக இரண்டு முறை தட்டப்படுகிறது. காலடிச் சப்தம் கேட்காமல் மெதுவாக நடந்து போய்க் கதவைத் திறக்கிறாள். பான்ட்டும் ஸ்வெட்டரும் அணிந்த ராபர்ட்ஸ் உள்ளே வருகிறான்.
ஸ்டெல்லா: (மெதுவான குரலில்) குட்மார்னிங்!
ராபர்ட்ஸ்: ஓ! இட் இஸ் வெரி சில் அவுட்ஸைட்! (ஓ! வெளியே ரொம்பக் குளிராக இருக்கிறது என்றவாறு கைகளைத் தேய்த்துக் கொள்கிறான்.
ஸ்டெல்லா: ஸிட் டௌன்.
அவன் கட்டிலின் மீது உட்கார்ந்து ஈஸிசேரில் படுத்துறங்கும் அவனை வினோதமாகப் பார்க்கிறான். பின்னர் பாட்டிலைப் பார்க்கிறான்; அதில் மது பாதி இருக்கிறது. ‘அவன் குடிக்கவில்லையா’ என்று சைகையால் கேட்கிறான். அவளும் ‘இல்லை’ யென்று தலை அசைக்கிறாள். அவன் கண்களைச் சிமிட்டி எதையோ கேட்கிறான்.
ஸ்டெல்லா: ஹி இஸ் அன் ‘ஏ’ கிளாஸ் ஜென்டில்மன்…
அவன் பரிவாகத் தலையை ஆட்டிக் கொள்கிறான்.
ராபர்ட்ஸ்: ஷெல் ஐ ஆர்டர் ஸம் காபி? (நான் காப்பி கொண்டு வரச் சொல்லவா?.. என்றவாறு காலிங் பெல்லை அழுத்துகிறான். சற்று நேரத்தில் கதவு தட்டப்படுகிறது.)
ராபர்ட்ஸ்: கம் இன்.
ஹோட்டல் பணியாள் உள்ளே வருகிறான்.
ராபர்ட்ஸ்: காபி – திரீ.
பணியாள் போகிறான்.
பார்த்தசாரதி கைகளை விரித்துச் சோம்பலை உதறியவாறு தலை நிமிர்த்தி விழித்துப் பார்க்கிறான்… நிமிர்ந்து உட்கார்ந்து…
பார்த்தசாரதி: குட்மார்னிங்.
ஸ்டெல்லா – ராபர்ட்ஸ்: (இருவரும்) குட்மார்னிங்.
பார்த்தசாரதி எழுந்து போர்வையை மடித்து வைத்த பின் பாத்ரூமுக்குள் போய் வருகிறான். அந்த நேரத்தில் ராபர்ட்ஸ் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மேஜை மீது கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கிறான்.
பணியாள் காப்பி கொண்டு வருகிறான். அந்த டிரேயை வாங்கி மேஜையின்மீது வைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு கப்பை எடுத்துத் தந்து தானும் ஒன்றை எடுத்துக் காப்பியை அருந்துகிறாள் ஸ்டெல்லா.
காப்பியைக் குடித்து முடித்த பின் ஸ்டெல்லா பார்த்தசாரதியின் அருகே வருகிறாள். அவனை நோக்கிக் கை நீட்டுகிறாள். அவள் கரத்தைப் பற்றி அவன் குலுக்குகிறான்.
ஸ்டெல்லா: தாங்க் யூ வெரி மச்! ஐ வுட் லைக் டு மீட் யூ எகைன்!… ஐ ஆம் ஸாரி… ஐ டின்ட் நோ தட் யூ ஹாவ் ஸச் அன் அவெர்ஷன் ஃபார் லிக்கர்… (நன்றி, உங்களை நான் மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன். எனக்குத் தெரியாது, உங்களுக்கு மதுவின் மீது இப்படி ஒரு வெறுப்பு இருக்கும் என்று…)
பார்த்தசாரதி: மே பி – இட்ஸ் மை வீக்னஸ்… (ஒருவேளை அது எனது பலவீனமாக இருக்கலாம்…)
ஸ்டெல்லா: நோ!… யுவர் வீக்னஸ் இஸ் சம்திங் எல்ஸ்… (இல்லை. உங்கள் பலவீனம் மற்றொன்று…)
பார்த்தசாரதி: (சிரிக்கிறான்.)
ஸ்டெல்லா: (ரகசியமாக) யூ ஆர் தி பஸ்ட் மேன் இன் மை லைப் – லீவிங் மீ லைக் திஸ் ஈவன் ஆப்டர் மை டிரிங்ஸ்! (நான் குடித்துவிட்ட பிறகும் என்னை இப்படி அனுப்புகின்ற முதல் மனிதன் நீங்கள்தான் என் வாழ்க்கையில்…)
பார்த்தசாரதி: தி கிரடிட் கோஸ் டு லிக்கர் – நாட் டு மீ… (அந்தப் பெருமை மதுவைச் சேர்ந்தது – என்னைச் சேர்ந்தது அல்ல…)
ஸ்டெல்லா: ஆர் யூ லீவிங் டு டே? (நீங்கள் இன்றைக்குப் போகிறீர்களா?)
பார்த்தசாரதி: எஸ்… ஸீ யூ ஸம்டைம். (ஆம், அப்புறம் எப்போதாவது பார்க்கிறேன் உன்னை.)
ஸ்டெல்லா: ஐ வில் டிரை டு கம் விதவுட் மை வீக்னஸ். ( எனது பலவீனத்துக்கு ஆளாகாமல் நான் வருவதற்கு முயல்கிறேன்.)
பார்த்தசாரதி: ஓ கே… ஆல் தி பெஸ்ட்…
ஸ்டெல்லா: பை…
ஸ்டெல்லா வெளியேறுகிறாள். அவளைத் தொடர்ந்து கதவருகே வந்து நிற்கிறான் பார்த்தசாரதி. ராபர்ட்ஸ் அந்த பாட்டிலை எடுத்து பான்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு புறப்படுகிறான். அருகே வந்த போது அவனை நிறுத்துகிறான் பார்த்தசாரதி.
பார்த்தசாரதி: (ரகசியமாக ராபர்ட்ஸிடம்) ஷீ இஸ் அன் ஏஞ்சல்… டேக் கேர் ஆஃப் ஹெர்! (அவள் ஒரு தேவதை; அவளை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்!…)
ராபர்ட்ஸ்: தாங்க் யூ ஸார்…
வெளியேறுகிறான். மாடிப் படிகளில் ஷீஸ் அணிந்த பாதங்களின் சப்தம் கேட்கிறது. காலடி ஓசை தேய்ந்து மறைந்த பின், கதவை மூடிவிட்டு – ஒருமுறை அறைக்குள் தனிமையில் சிந்தனையோடு நாலு புறமும் உலவி நடக்கிறான் பார்த்தசாரதி. பின்னர் பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறான். ஷவரிலிருந்து தண்ணீர் பிரவகிக்கின்ற சப்தம் கேட்கிறது.
---------------
41. கண்ணாமூச்சி
அவள்தான் அவனைப் படத்துக்குக் கூப்பிட்டாள். இதொன்றும் முதல் தடவையல்ல; தேவகி, நடராஜனை எத்தனையோ தடவை சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறாள். நடராஜனை மட்டுமா? அவனை அழைத்துக் கொண்டு போனது பிறர் கண்களை உறுத்துமோ என்கிற அச்சத்தில், தனது டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் கண்ணப்பனோடும், ரங்கசாமியோடும் தனித்தனியாகவும் சில சமயங்களில் கும்பலாகப் பலரோடு சேர்ந்தும் அவள் சினிமாவுக்குப் போவதுண்டு.
ஆனால் அதெல்லாம் வேறு. நடராஜனோடு சினிமாவுக்குப் போகும் அனுபவம் வேறு என்பது அவள் மனசுக்குத் தெரியும்; நடராஜனுக்கும் தெரியும். அதனை வெளிப்படையாக நடராஜனிடம் ஒப்புக்கொள்ள அவளுக்குத் தைரியமில்லை. இதற்கு என்ன தைரியம் வேண்டும்? என்னவோ ஒன்று அவளை உள்ளூரத் தடுக்கிறது. அவனும் அவள் மனத்தைத் திறந்து பார்த்துவிட என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறான். எல்லாம் பரஸ்பர, சமத்காரப் பேச்சாகவும், வார்த்தைகளில் மூடி மறைத்துத் தேடிப் பிடிக்க, ஓடி ஒளியும் விளையாட்டுக்களாய் வியர்த்தமானது தவிர, உண்மையான உணர்ச்சிகளை வார்த்தை மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ள ஒரு தைரியம் வேண்டுமே அது அவளுக்குப் பிறந்ததே இல்லை.
நடராஜன் இன்று கூட நினைத்தான். ‘ஒருவேளை பெண்களே இப்படித்தானோ? இதிலேயே அவர்கள் சுகம் கண்டு விடுகிறார்களோ! ஒருவேளை என்னை தேவகி நம்பவில்லையோ? நம்பா விட்டால் என்னோடு ஏன் பழக வேண்டும்? இந்த அளவு ஏன் நெருக்கம் கொள்ள வேண்டும்? இப்படி ஓர் ஆணை ஏங்க வைப்பதில் பல பெண்கள் தங்கள் பெண்மைக்கு அர்த்தம் காண்கிறார்களோ? இதற்கு நான் தானா கிடைத்தேன்? என்னைத்தான் சரியான அசடு; கைக்கேற்ற விளையாட்டுப் பொம்மை என்று நினைத்தாளோ?… இன்றைக்கு நான் அவளை நேரிடையாகவே கேட்டு விடட்டுமா? கேட்டால் மட்டும் என்ன? அதே கண்ணாமூச்சி விளையாட்டுப் பேச்சுதான்! உதடு கடிப்புத்தான்; முகச் சிவப்புத்தான்! – இன்னும் குழந்தைன்னு நினைப்புப் போல இருக்கு! முப்பது வயசாகுது… தலையிலே நரை கூட ஆரம்பிச்சுடுத்து… எப்படியும் போறா… எனக்கென்ன? இவளுக்காக நான் ஏன் காத்துக் கிடக்கணும்? ஊருக்குப் போயி – அம்மா அழுது அழுது, மோவாயைப் புடிச்சிக்கிட்டுக் கெஞ்சினாங்களே, ஒவ்வொரு தடவையும்… அவங்க மனசாவது திருப்தியாகட்டுமே – அவளை, வத்சலாவோ வள்ளியம்மாவோ? எவளையாவது கட்டிக்கிட்டு வந்துட்டா இவள் சள்ளையாவது விடும்! இன்னிக்கு என்கிட்டே ஏதாவது பேச வரட்டும்… ஆபீஸ் விஷயம் இருந்தா பேசுங்க, இல்லாட்டி வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட வேண்டியதுதான்’ என்று ரொம்ப ரோசமாக முடிவு செய்து கொண்டுதான் நடராஜன் ஆபிசுக்கு வந்திருந்தான்.
அந்த முடிவு, ரோசம் எல்லாம் அவளைப் பார்த்தபோது மேலும் கொஞ்சம் உறுதிப்பட்டு, அவள் அவனிடம் ‘என்ன மிஸ்டர்! உங்களோட போகணும்னுதான் காத்துக் கிட்டிருக்கேன். ஒரு வாரமா, டைமே கிடைக்கலை…. ‘அனுபமா’ பார்க்கலாம் வர்றீங்களா?’ என்று அவள் அழைக்கும்போது, அவனது முடிவுகள் எல்லாம் உடைபட்டுப் போயின.
அவர்கள் இருவரும் சினிமாவுக்குப் போகிறார்கள் என்றால், படம் எதுவானாலும் முக்கியமில்லை; இருவரில் யாருமே படம் பார்க்கப் போவதில்லை என்று இருவருக்குமே தெரியும்.
அந்த மங்கிய வெளிச்சத்தில் இருவரும் பளபளக்கும் விழிகளை அடிக்கடி சந்தித்துக் கொள்வர். சில சமயங்களில் வெள்ளைப் பல் வரிசை பளீரிடும். அப்போதுகூட அவள் தன் கீழுதட்டை ஓரமாய் லேசாகக் கடித்துக் கொள்வது அவனுக்குத் தெரியும். அவன் பெருமூச்செறிவான்.
எவ்வளவு நாட்களுக்கு இந்த விளையாட்டு? எவ்வளவு நாட்களுக்கு இந்த ஏமாற்று?
ஒரு நாள் நடராஜன் “நீ என்னை காதலிக்கவில்லையா?” என்று அவளிடம் கேட்டான். “டோண்ட் யூ லவ் மீ?”
அவள் ஏன் அதற்கு அப்படிச் சிரித்தாள்? அவனுக்கு அழுகை வருகிற மாதிரி அவள் சிரித்தாள்!
“இதெல்லாம் என்ன? சினிமாவிலே, டிராமாவிலே கேட்கிற மாதிரி கேட்டுக்கிட்டு… வெக்கமா இல்லே?… ஐ லைக் யூ! அவ்வளவுதான் எனக்குச் சொல்லத் தெரியும்.”
அதன் பிறகு நடராஜன் மனசுக்குள்ளே ரொம்ப வெட்கப்பட்டு விட்டான்? ‘என்ன அசட்டுத்தனமாய் நான் அவளிடம் கேட்டேன்? ஹைஸ்கூல் மாணவன் மாதிரி நடந்து கொண்டேனே!’ இரண்டு நாட்கள் அவள் கண்ணில் பட்டாலும் அவளிடம் சிக்கிக் கொள்ளாமல் நழுவி ஓடினான்.
ஒருமுறை ஊர் சென்று வந்தபோது கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று தன் தாய் ரொம்பவும் தன்னை வற்புறுத்துவதாகத் தேவகியிடம் வந்து அலுத்துக் கொண்டான் நடராஜன்.
“பாவம், வயசான காலத்திலே பெத்தவங்களுக்கு இருக்காதா ஆசை!” என்று ரொம்பச் சாதாரணமாக அவள் கூறினாள்.
நடராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தானாக ஏதோ கற்பனை செய்து கொண்டு தவிக்கிறோம் என்று நினைத்து ஒதுங்கி விடும்படியாகவும் இல்லை அவளுடைய பழக்கம்!
ஏழு வருஷமாக இதே விதமான ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு அவனுக்கு அலுத்துப் போய் விட்டது. அவளுக்கு அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது போலும்!
மணிக்கணக்கில் தனித்திருந்து இவனோடு அவள் பேசுவாள். சினிமாவுக்கு, கடற்கரைக்கு, ஹோட்டலுக்கு எங்கும் எவருடனும் போவாள். அவளைத் தடுக்கவோ, அவள் போக்கில் குறுக்கிடவோ, அவளுக்கு யாருமில்லை. அவளுடைய தாய் மகளுக்கு மூன்று வேளை சமைத்துப் போடவும், எப்போதாவது வருஷத்துக்கு ஒரு மாசம் திருநெல்வேலியில் இருக்கும் மகன் வீட்டில் போய் இருந்து விட்டு வரவுமே உரிமை பெற்றிருந்தாள்.
தேவகி கலியானமே செய்து கொள்ள மாட்டாள் என்று திருநெல்வேலியில் இருக்கும் அவளது அண்ணன் – கல்யாணம் செய்து கொண்டு, ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்று, ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்த பின் காச நோயோடு அவதியுறும் மனைவியுடன் – தாம்பத்திய வாழ்க்கையின் கோர முகங்களையே தரிசித்து மனம் கோணிப் போன அவளது அண்ணன் – மகிழ்ச்சியோடு முடிவு செய்து கொண்டான்.
எனவே, தேவகி அவர்கள் கண்களில், அன்புள்ளம் கொண்ட அவர்களின் எண்ணத்தில், மிகவும் கொடுத்து வைத்த பாக்கியசாலியாக, மிகவும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் கொண்ட வாழ்க்கை நடத்துகிறவளாகவே உருவகம் கொண்டாள்.
அவளுக்கென்ன, பட்டதாரி! மாதம் அறுநூறு ரூபாய் சம்பாதிக்கிறவள். பிக்கலா, பிடுங்கலா? நம்முடையா வாழ்க்கைதான் இப்படி ஆயிற்று. அவளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று எண்ணிய போக்கினால், அவளுக்குத் திருமணம் என்கிற நினைப்பே, அவளைத் துன்புறுத்தக்கூடிய சாத்தானின் வேலை என்று, அது பற்றிய பேச்சையே எவரும் எடுப்பதில்லை.
மேலும் கலியாணம் செய்து கொள்ளாமல் கன்னி வாழ்க்கை நடத்துவது அவளது மதத்தில் ரொம்பவும் அங்கீகரிக்கப்பட்ட, அதிகப் பரிச்சயமுள்ள ஒரு பழக்கம்.
ஆம், தேவகி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அவளது முழுப்பெயர் தேவ இரக்கம்! கூப்பிட வசதியாக இருக்கவும், கொஞ்சம் லௌகிகமாக விளங்கவும், தேவகி என்று அவளே மாற்றிக் கொண்டாள்.
அப்படி அவளே ஒருவனை விரும்பினாலும், தான் அவனை மணந்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவளது குடும்பத்தில் அவளுக்குச் சுதந்திரம் இருப்பதால் தேவகியின் அண்ணனோ தாயோ அந்த முயற்சியில் இறங்கவில்லை.
அந்த அளவுக்குச் சுதந்திரமே அவளுக்குப் பெரிய தடையாகி நிற்கிறதோ?
அந்தச் சுதந்திரத்தை தேவகியால் இவ்வளவு தூரம்தான் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அதற்காக அவ்வளவுதான் அவளுக்குத் தேவையாயும் இருந்தது என்று முடிவு கட்டி விடலாமா?
அவள் இவ்வளவு தூரத்துக்குச் சுதந்திரமான, தன்னிச்சையான, பழக்க வழக்கங்கள் கொண்டிருந்த ஒரு காரணத்தினாலேயே அவளோடு பழக நேர்ந்த ஆண்கள் இதற்கு மேல் அதிகமான உரிமை எடுத்துக் கொண்டு அவளைத் தம் வழியில் இழுக்க அஞ்சினர். ‘அவளிடமிருந்தே முதல் சமிக்ஞை வரட்டும். இவளுடைய தன்மைக்கு வரவேண்டுமே’ என்று காத்திருந்து, அது வராமல் போகவே, அது இல்லை என்பதாக மனம் மாறி அவர்கள் விலகினர். தேவகியின் முப்பது வயதில், நான்கு வருஷக் கல்லூரி வாழ்க்கையின் போதும், இந்த எட்டு வருஷ உத்தியோக வாழ்க்கையின் போதும் இந்த மாதிரி அவளை நெருங்கி வந்து, பின்னர் நீங்கிப் பிரிந்த நல்ல நண்பர்கள் எத்தனையோ பேர்.
அந்த நட்பே அவளுக்கு நிறைவாகவும் மகிழ்வாகவும் இருந்தது. எனினும், அந்தப் பிரிவுகள் எல்லாமே பெரும் சோகங்கள் தான். அந்தச் சோகங்களை மனம் எண்ணாத அளவு வேகத்தோடு புதிய நட்புகள் முளைத்து விடுகின்றன.
வாழ்க்கை ரொம்பவும் உல்லாசமான பிரயாணமாகவும், சில சமயங்களில் ஓடி மறைந்து விளையாடும் பொழுதுபோக்காவும் போய்க் கொண்டிருந்தது.
அவள் சந்தித்த எத்தனையோ பேரில் இந்த நடராஜன் தான் – அவளுக்கு ஒத்த வயதோ அல்லது சிறிதே இளையவனாகவோ இருக்கலாம். இந்த ஒருவன்தான் ஏழு வருஷமாக இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் இதுவரை சலிப்பின்றி இவளோடு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.
முதலில் தேவகி இவனை இங்கே, தான் வேலைக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகே சந்தித்தாள். இவனுக்கு இந்த செக்ஷனில் வேலை சொல்லிக் கொடுத்தவளே தேவகிதான். முதலில் நடராஜன் அவளிடம் நடுங்குவான். ஒரு வார்த்தை பேசுமுன், வேர்த்து வேர்த்து நனைந்து போவான்.
அப்போது அவனுக்குச் சரியாக மீசைகூட முளைக்கவில்லை.
ஏழு வருஷங்களுக்குப் பிறகு இவனைப் போலவே இவர்களில் ஒருவனாகப் பழகி, இவன் அளவுக்குத் தன்னிடம் மோகம் கொண்டு, பின்னர் பின்வாங்கி வேறு யாரையோ கலியாணம் செய்து கொண்டு இப்பவும் கூட மூங்கைத்தனமான அந்த மோகத்தை எப்போதாவது அசிங்கமாக உளறிக் கொண்டு, தன்னோடு பணியாற்றும் கண்ணப்பனையும் கந்தசாமியையும் எண்ணிப் பார்த்த ஏளனத்தில்தான் அன்று நடராஜன் ‘டோண்ட் யூ லவ் மீ?’ என்று கேட்டபோது, அவ்வளவு அர்த்தத்தோடு ஆண்களின் உருவில் தெரியும் இந்த ஆன்ம நபும்சகர்களை எண்ணி அவள் சிரித்தாள்.
அவள் முதன்முதலாக இந்த ஆபீசில் வந்து வேலை ஏற்றுக் கொண்டபோது அவளோடு மிக நெருக்கம் கொண்டு அவள் மனசைக் கவர்ந்திருந்தவன் கண்ணப்பன் தான்.
அதன் பின்னர் தேவகியிடம் தானும் மனத்தைப் பறி கொடுத்து, அதற்குமேல் வரத் தைரியம் இல்லாமல் நின்றவன் கந்தசாமி.
இப்போது இந்த நடராஜன்!
மனசைக் கவர ஒருவன், மனசைக் கவர்ந்ததும் தன்னிடம் மனம் பறி கொடுக்க ஒருவன், மனம் கவர்ந்து மனம் பறிகொடுத்து, ‘நீ என்னைக் காதலிக்கவில்லையா?’ என்று மனம் விட்டு, அதுவும் எதிர்மறையாகக் கேட்க ஒருவன்!
‘இப்படியே ஒவ்வொருவனும் ஒவ்வொரு அங்குலமாக முன் வந்து முன் வந்து… என்னை எவனோ ஒருவன் முழுமையாக அடைவதற்குள் நானே முழுமை கண்டு முடிந்து போய் விட மாட்டேனா?’ என்ற நினைப்பில்தான் அவள் சிரித்தாள்.
‘என்ன காதல் வேண்டியிருக்கிறது, காதல்! எதைக் காதல் என்று நானே நம்பிச் சொல்ல முடியும்?’ என்று புதிர் புரியாத குழப்பத்தினாலும் அவளால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
முதன் முதலாகக் காதல் வசப்படுகின்ற எல்லோரும் நினைத்துக் கொள்கின்ற மாதிரி இதுவேதான் வாழ்க்கை என்ற நம்பிக்கையும், இனிமையான கனவுகள் பலவும் அவள் கன்னி மனத்தில் செழிக்கக் காரணமாயிருந்த அந்தக் கண்ணப்பனின் தொடர்பைக் காதல் என்பதா? அல்லது மனசின் கன்னித்தன்மை ஒருமுறை கண்ணப்பனுக்குப் பறிபோனதால் கெட்டுப்போய், ‘நட்பு’ என்ற வசதியான சொற்றொடரில் விருப்பத்தோடு தன்னை ஏமாற்றிக் கொண்டு அது காதலாகவே கனியுமென்று காத்திருந்து, அது கனியாமலே வெம்பிப் போய், இப்போதும் அந்த வசதியான சொற்றொடரான ‘நட்பு’ என்கிற முடிவு பெறாத நாடகமாகவே நிலைபெற்றிருக்கிறதே அந்த ரங்கசாமியின் தொடர்பு. அதைக் காதல் என்பதா?
ஒரே ஒரு அம்சத்தில் மட்டும் – அதாவது இந்த உறவில் சலிப்புற்று இன்னொருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவளுக்கு ஓர் அழைப்பிதழைக் கொண்டு வந்து நீட்டுகின்ற அந்த ஒரு விஷயத்தில் மட்டும் இந்த நிமிஷம் வரை வேறுபட்டு இருக்கின்ற இந்த நடராஜன், ‘நீ என்னைக் காதலிக்கவில்லையா?’ என்று கேட்டும், அந்த எதிர்மறைக் கேள்விகூட ஒருநாள் ‘மிஸ் தேவகிக்கு’ என்று எழுதிக் கொண்டு வந்து நீட்டப் போகும் அந்தக் கலியாண அழைப்பிதழ் எங்கோ தயாராகிக் கொண்டு இருக்கிறது என்று உணர்த்துவதற்கான சமிக்ஞையோ என்று எண்ணியே அவள் சிரித்தாள்.
‘ஐ லவ் யூ’ என்று தன் காதலைத் தைரியமாகத் தான் காதலிக்கும் ஒருத்தியிடம் சொல்வதே அவளுக்குத் தான் செய்யும் மரியாதை என்பதே இந்த ஆண்களுக்கு ஏன் தெரியவில்லை?
அவள் அதற்குச் சம்மதிக்காவிட்டால் தங்களுக்கு அது ஒரு அவமானமென்று ஆண்கள் கருதுவதே சரியென்றால் அவ்விதமே ஓர் ‘அவள்’ கருதுவது எவ்விதம் தவறாகும்? அந்த ‘அவமான’த்திற்குத் தயாராகாத காதல் என்ன காதல்? அந்த அவமானத்திற்கு ஓர் அவனே தயாராகாவிட்டால் ஓர் அவள் எப்படித் தயாராக முடியும்?
உண்மையான காதல் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதத்திற்குக் காத்திருக்காது. ஏனெனில் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதம் பெறப்பட்ட பிறகே அது பிறக்கிறது. என் சம்மதத்தைத் தந்த பிறகும் அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எதிலேயோ உணர்ச்சிகள் இருண்டுபோன இவர்களுக்கு அதைச் சொல்லுவதன் மூலமாகவா வெளிச்சம் பிறந்துவிடப் போகிறது என்ற முடிவிலேயே எல்லா சந்தர்ப்பங்களிலும் தன் சம்மதத்தைத் தருவதற்கு அவள் மறுத்திருக்கிறாள். அது கூடச் சரியில்லை; ஏற்கனவே தந்திருந்த தன் சம்மதத்தை ‘இல்லை’ என்று மறுக்கிற மாதிரி அவள் திரும்பப் பெற்றிருக்கிறாள்.
ஆனால் நடராஜன் விஷயத்தில் அவள் இன்னும் அவ்விதம் செய்யவில்லை.
ஏனெனில் இவன் ஒருவன்தான் “நீ என்னைக் காதலிக்கவில்லையா?” என்று எதிர்மறையாகக் கேட்கும் அளவுக்காவது நெருக்கமுற்றவன். அவன் அவ்விதம் கேட்கின்ற அளவுக்கு அவன் சந்தேகமும் கொண்டிருக்கிறானே என்பதனால்தான் தனது சந்தேகத்தையும், தனது சம்மதத்தை, சந்தேகிக்கின்ற முறையிலேயே ஒரு சிரிப்புடன் ‘நான் உன்னை விரும்புகின்றேன்’ என்று தன் விளையாட்டை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டு விட்டாள் தேவகி.
ஆனால் அந்த வார்த்தை விளையாட்டிலேயே வடுப்பட்டு அவன் தன்னிடமிருந்து விலக முயலும் போக்கினைத் தடுப்பதற்காகவே அவனை அவளே இன்று வலிய அழைத்திருந்தாள் சினிமாவுக்கு.
திடீரெனத் திரையில் தோன்றிய தேசியக் கொடியைக் கண்டு படம் முடிந்துவிட்டதை உணர்ந்தார்கள் இருவரும்.
இரண்டு மணி நேரமாய்ப் படம் பார்க்கிறோம் என்ற பேரில் இருளில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதிலும், ஒருவரைப் பற்றி ஒருவர் எண்ணமிடுவதிலும் படம் தொடர்பற்றுத் துண்டு துண்டாக மனசில் பதியாமல் பார்வையில் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.
தியேட்டரிலிருந்து வெளியில் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்த கும்பலில் தேவகி முன் செல்ல, அவள் பின்னால் ஒட்டி வந்து கொண்டிருந்த நடராஜன், உயர்த்தி முடிந்த கொண்டைக்குக் கீழே மிருதுவான ரோமம் நிறைந்த வெண்மையான அவளது அழகிய கழுத்தில் முகம் புதைத்துக் கொள்வதாய்க் கற்பனை செய்து உடல் சிலிர்த்தான்.
அவளிடமிருந்து மிதந்த மணம் அவன் மனசைக் கிறுக்கிற்று.
தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது லேசான மழைத் தூறல்கள் விழுந்து கொண்டிருந்தன. சில்லென்று வீசிய காற்றில் பறந்த தேவகியின் பட்டுப் புடவையின் தலைப்பு நடராஜனின் முகத்தில் விழுந்து மறைத்த போது…
“ஓ! ஸாரி!” என்று தேவகி சிரித்து உடம்பைப் போர்த்திக் கொண்ட போது -
“எஸ், ஸாரிதான்!” என்றான் நடராஜன்.
“போதும், பெரிய ‘விட்’ தான்!” என்று அவனைக் கேலி செய்தாள் தேவகி.
“என்ன அசட்டுத்தனமாய் நடந்து கொண்டேன்?” என்று நாக்கைக் கடித்துக் கொண்டான் நடராஜன்.
வெளியில் வந்து டாக்சி பிடித்துக் கொண்டு புறப்பட்ட போது மணி ஒன்பதரை ஆகியிருந்ததைப் பார்த்தாள் தேவகி.
“ஹவ் வாஸ் தி பிலிம்?” என்று தேவகி தலை சாய்த்து அவனைக் கேட்டபோது -
“எஸ், குட்!” என்றூ சம்பிரதாயமாகச் சொன்னான்.
“நான் படத்தையே பார்க்க முடியலே!” என்று கொஞ்சலாக, முகத்தில் ஒரு வாட்டத்துடன் சொன்னாள் தேவகி.
“ஏன்?”
அவள் அவன் செவியருகே நெருங்கி வந்தாள்:
“ஏனா! கேள்வியைப் பார்க்கலே? படம் பார்க்க விட்டாத்தானே? – என்னையே நீங்க பார்த்துக்கிட்டிருந்தீங்க!… நான் மட்டும் எப்படிப் படம் பார்க்கிறது?” என்று அவள் டாக்சி டிரைவர் காதில் விழாமல் கூறினாள்.
நடராஜனுக்கு உடம்பெல்லாம் ஒரு நடுக்கம் பரவி மனம் தவிக்க ஆரம்பித்தது.
“நோ நோ, நீங்க என்னவோ தப்பா நெனச்சி… நான் சாதாரணாமா நீங்க படத்தை எப்படி ரசிக்கிறீங்கன்னு பார்த்தேன்!” என்று முகம் சிவந்து கூறினான் நடராஜன்.
சற்று முன் தன் செவியருகே குனிந்து அவனது கன்னத்தைத் தொடவேண்டுமென்று துடித்த அவளது விரல்கள் இப்போது நடுங்கித் தளர்ந்தன.
“திருவல்லிக்கேணியில் என்னை விட்டுட்டு நீங்க போகணும்… ஆமா, இந்நேரத்துக்கு உங்க மெஸ்ஸிலே மீல்ஸ் இருக்குமா? ஏன் எங்க வீட்டிலேயே சாப்பிட்டுட்டுப் போயிடலாமே!… மணி ஒன்பதரை தானே ஆச்சு?… அப்புறம் பஸ்கூடக் கிடைக்கும் உங்களுக்கு அங்கே இருந்து!” என்று மிகுந்த பரிவுடன் கூறினாள் தேவகி.
“அதனால் என்ன, பரவாயில்லை. உங்க மதர் உங்களை மட்டும்தானே எதிர்பார்த்துச் சமைச்சி இருப்பாங்க?… நான் எப்படியும் மானேஜ் பண்ணிக்குவேன்.”
“எங்க மதர் எல்லாம் ரெடியா எடுத்து வந்து டைனிங் டேபிளில் வெச்சுட்டு இந்நேரம் தூங்கியிருப்பாங்க…. என்ன இருக்கோ அதை ரெண்டு பேரும் ‘ஷேர்’ பண்ணிக்குவோம்… என்ன?” என்று அவள் மிகுந்த சொந்தத்தோடு சொன்னபோது அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை. மனசுக்கு இதமாக இருந்தது அந்த அழைப்பு.
திடீரென அவன் உள்ளூறப் பயந்தான். ‘இவள் சாதாரணமாக, இயல்பாக, பெருந்தன்மையாக சமத்துவமாகப் பழகுவதை நான் தவறாகப் புரிந்து கொள்கிறேனோ?” என்ற அச்சம் வரும்போது -
நடராஜனும் தேவகியும் நெருங்கிப் பழகுவதைக் கண்ட கண்ணப்பனும் ரங்கசாமியும், “போகப் போகத் தெரியும், அசட்டு பிசட்டுன்னு உளறி வைக்காதே!” என்று இவனை ஜாடை மாடையாக எச்சரித்ததும் அவன் நினைவுக்கு வந்தன.
ஆபீசில் தன் டிபார்ட்மெண்டுக்கு சூப்பிரண்டெண்டான அவளை, அந்தப் பதவிக்குரிய நாற்காலியில் உட்கார வைத்து, மனசால் கண்டான் நடராஜன். அவளுக்கு ஆபிசிலிருக்கின்ற மரியாதைகளும், அந்தஸ்தும், அவளை நெருங்க முடியாமல் நீங்கி வந்த கண்ணப்பன், ரங்கசாமி அனுபவங்களூம் ஒன்றன்பின் ஒன்றாய் நடராஜன் நினைவில் கவிந்து, அவளை நெருங்க விடாமல் பின்னுக்கு இழுத்தன.
‘அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு எனக்கென்ன இருக்கிறது?’ என்று எண்ணியபோது, டாக்சியில் இரண்டு முழங்கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு குறுகி உட்கார்ந்து, தன்னையறியாமல் ஓர் ஓரமாய் அவன் உடம்பு நகர்ந்தது.
“சௌகரியமாக உட்காருங்கள், மிஸ்டர் நடராஜன்!” என்று அவனுக்குத் தள்ளி நகர்ந்து, தன் அருகே வர வசதியாக இடம் தந்த தேவகி கனிவாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனுக்கு ஒரு தைரியத்தைத் தந்தது. இருந்தாலும் உள்ளூரப் பயமும் இருந்தது.
“அதோ… அந்த லைட் போஸ்ட் கிட்டே!” என்று டாக்சி டிரைவருக்கு வீட்டை அடையாளம் காட்டுவதற்காக அவள் ஒரு பக்கமாகச் சாய்ந்தபோது, அவளது மிருதுவான தோள் அவன்மேல் உரசிற்று. அப்போது மிக நெருக்கமாக அவன் முகத்தை அவள் பார்த்தாள்.
அவன் அந்த ஸ்பரிசத்தை உணராதவன் மாதிரி பாவனை புரிந்தான்.
கீழே இறங்கியதும் டாக்சிக்கு அவன் பணம் கொடுக்கப் போனபோது, “நோ” என்று அவள் அவன் கரத்தைப் பிடித்தாள். பிடித்தபின் சற்று அழுத்திக் கூறினாள். “நான் தான் தருவேன்!”
நடராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இது சோஷலாகப் பழகுவதா? அல்லது காதலா? இந்தப் பெண்கள் திடீரென்று எப்படி வேண்டுமானாலும் மாறுவார்களே! அதனால் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.
டாக்சிக்காரனை அனுப்பிவிட்டு நடராஜனின் பக்கம் திரும்பிக் கண்களைச் சிமிட்டியவாறே தேவகி சொன்னாள்: “அந்த டாக்சிக்காரன் நம்பளைப்பத்தி ஏதோ ஃபிஷ்ஷியாக நினைச்சிட்டுப் போறான்!” அதற்கு என்ன விதமாய்ப் பதில் கூறுவது என்று தெரியாமல் தூரத்தில் போகும் டாக்சியைப் பார்த்து ஒரு பொய்யான கோபத்துடன் முனகிக் கொண்டான் நடராஜன்: “ராஸ்கல்!”
தேவகி வீட்டின் கதவைத் தட்டியபின் பத்து வயதுள்ள அந்த வேலைக்காரச் சிறுமி கதவைத் திறந்தாள்.
“ஏண்டி, நீ இன்னிக்கி வீட்டுக்குப் போகலியா?”
“மழையா இருந்திச்சம்மா!… பெரியம்மா இங்கேயே படுத்துக்கச் சொன்னாங்க.”
“சரி சரி, கடைக்குப் போய் நாலு மழைப்பழம் வாங்கிட்டு வா?” என்று கைப்பையிலிருந்த சில்லறையை எடுத்துச் சிறுமியிடம் தந்தாள் தேவகி.
அந்தத் தெருவில் எதிர்வரிசையில் உள்ள அந்த வெற்றிலை பாக்குக் கடையை நோக்கிச் சிறுமி நகர்ந்தாள்.
“உள்ளே வாங்க!” என்று நடராஜன் பின்தொடர விளக்கில்லாத ஹாலுக்குள் இருவரும் நுழைந்தனர். அந்த நிமிஷம் -
நடராஜனுக்கு மின்னலடித்தது மாதிரி மனசில் ஒரு தைரியம் பிறந்தது. அந்தத் தைரியத்திற்குச் சாதகமாக இப்போது அவர்கள் பிரவேசித்திருக்கும் ஹாலின் இருட்டு, அந்தச் சிறுமியை அவள் வாழைப்பழம் வாங்க அனுப்பியது, அந்த டாக்சிக்காரனைப் பற்றிக் கூறியது என்று ஒரு நூறு காரணங்கள் ஒரே சமயத்தில் சரசரவென வண்டியிலிருந்து மணல் சரிவது மாதிரி அவன் உள்ளே குவிந்த சுமையோடு அவனுக்கு மிக நெருக்கமாய்ச் சுவரருகே நின்று விளக்கின் சுவிட்சைத் தேடிக் கொண்டிருந்த தேவகியின் தோளைப் பின்னாலிருந்து இறுகப் பற்றினான் அவன்.
அந்த ஹாலின் மங்கிய இருளில் உயர்த்தி முடிந்த கொண்டைக்குக் கீழே மிருதுவான ரோமம் நிறைந்த வெண்மையான அவளது கழுத்து பளீரெனத் தெரிந்தது.
அதிலே முகம் புதைத்துக் கொள்கிற கற்பனை, நடைமுறை அனுபவமாக….
அவளால் அந்த விநாடிகளைக்கூட எண்ணிக் கணக்கிட முடிந்தது. அவள் மனசும் நெஞ்சமும் அந்தத் திடீர் ஸ்பரிசத்தில் விம்மி விம்மிக் கனத்தபோது, அவளது ஹிருதயத்தின் தாள கதியில் அலை அலையாக எழுந்த துடிப்பையே தன்னையறியாமல் தன்னுள் அவள் கணக்கிடலானாள். ஒன்… டூ… திரீ – எப்போதோ ஒருமுறை சிறுவயதில் அவளுக்கு நடந்த டான்ஸில்ஸ் ஆபரேஷனுக்கு முன் மயங்க வைப்பதற்காக ‘ஈதர்’ கொடுக்கும்போது ஒன்… டூ… திரீ என்று எண்ணிக் கொண்டே தன்னை இழந்தாளே, அது மாதிரி…
அந்த மயக்கத்தில் என்னமோ குழறினாள். தன்னை இழந்த அந்தத் தவிப்பில் எப்படியோ திமிறினாள். அந்த உணர்ச்சியின் நெருப்புத் தீண்டிய சுகத்தில் அவள் எப்படியோ துடித்துப் போனாள்! அவளிடம் ஏற்பட்ட இந்த சலனங்களினால் பயந்து, தீப்பிடித்த ஆடையை உதறுவது மாதிரி, “ஐ யாம் ஸாரி” என்று விலகி நின்று உடல் நடுங்கினான் நடராஜன்.
கண்களை மூடிய இமைகள் பனிக்க, விளக்கின் சுவிட்சைப் பொருத்தி, உயர்ந்த கரம் தாழ்த்தாமல், விரல்களைக் கூட நீக்காத நிலையில் சுவரில் சாய்ந்து, உடல் முழுதும் வியர்க்க, உயர்த்தி முடிந்த கொண்டை அவிழ்ந்து கழுத்தில் சரிய உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த அவளது கோலத்தைக் கண்டதும் நடராஜனுக்கு அழுகையே வந்து விட்டது.
அவன் இரண்டாவது முறையாக “ஐ யாம் ஸாரி… என்னை மன்னிச்சிடுங்க!” என்று குரல் நடுங்கக் கூறிய போதுதான் ஏதோ சம்பந்தமில்லாத உலகத்தின், அர்த்தமில்லாத பாஷையைக் கேட்ட மாதிரி அவள் இமை திறந்து அவனைப் பார்த்தாள். வெளிச்சத்தில் அவனைப் பார்க்கும் பொழுது தனது முழுச் சம்மதத்தையும் வெளிப்படுத்த அவளது இதழ்களில் பிறந்த புன்னகை அவனது கோலத்தைக் கண்டதும் அரைகுறையாக வதங்கிச் செத்தது.
அந்த ஏழு விநாடியில் பெருகிய மயக்கம் ஒரே விநாடியில் தெளிந்தது. சரிந்த கூந்தலைச் சட்டென உயர்த்தி முடிந்து கொண்டாள்.
கையில் நாலு வாழைப் பழங்களுடன் வேலைக்காரச் சிறுமி உள்ளே வந்ததால் இருவருக்கும் வசதியாகப் போயிற்று.
ஒன்றுமே நடக்காதது மாதிரி “வாங்க, உள்ளே வாங்க! உட்காருங்க!” என்று அவனை அழைத்தபின் தனது அறைக்குள் போனாள் தேவகி.
உள்ளேயிருந்து அவள் விம்முகிற மாதிரி நடராஜனுக்குத் தோன்றிற்று. அது உண்மைதானோ?
‘அவள் வெளியே வருவதற்குள் பேசாமல் எழுந்து போய் விடலாமா?’ என்று ஒரு விநாடி யோசித்தான் நடராஜன். ‘இல்லை, நான் செய்த தவறுக்கு என்ன தண்டனையோ, அதை அவளிடம் பெற்றுக் கொண்டு போவதுதான் அதற்குப் பிராயச்சித்தம். சீ! நான் எவ்வளவு மட்டமான மனிதன்! இப்போது பேசாமல் இருந்து விட்டு, நாளைக்கு ஆபீசிலே என் மானத்தை வாங்கி விடுவாளோ?’ என்று நினைக்க நினைக்க அவனுக்கு அழுகை நெஞ்சை அடைத்தது. ‘எவ்வளவு ஆனந்தமான மாலை நேரத்தை அவள் எனக்குத் தந்தாள்! அதற்குத் தகுதியில்லாத நான், தரமில்லாத நான், எவ்வளவு அசிங்கமான இரவாக முறித்துவிட்டேன்?’ என்று அவன் தன்னைத் தானே மனத்தில் சபித்துக் கொண்டிருக்கும்போது அவள் வெளியே வந்தாள்.
மௌனமாக இருவரும் சாப்பிட அமர்ந்தனர். முதல் கவளத்தை வாயருகே கொண்டு போகும் போது அவளை ஒரு முறை கலங்கிய கண்களோடு ஏறிட்டு நோக்கினான் நடராஜன். “ஐ யாம் ஸாரி!”
“ஷட் அப்!” என்று அடைத்த குரலில் அமைதியாகச் சொன்னாள் தேவகி. அவனது தவிப்பையும், இதற்காக அவன் வருந்துவதையும் பார்க்கும் போது அவளுக்கு வேதனையாக இருந்தது. அந்த ஏழு விநாடிகளில், எப்படிப்பட்ட ஒருவனுக்காக அவள் காத்திருந்தாளோ அவன் இவன் தானென்று திடம் கொண்டது எவ்வளவு பேதைமை என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்க்க பார்க்க அவளுக்கு எரிச்சலாய் வந்தது.
‘எனக்குச் சம்மதம்’ என்று ஒருத்தி எழுந்து ஆடவா முடியும்? அப்படி ஒருத்தி ஆடினால் அதைத் தாங்கிக் கொள்ள எத்தனை ஆண் பிள்ளைகள் இருப்பார்கள்?’ என்று எண்ணும் போது அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அந்தச் சிரிப்பு, ‘ஏ, அசடே! உனக்கு லவ் ஒரு கேடா?’ என்று அவள் தன்னைப் பார்த்து இளிப்பது மாதிரி இருந்தது நடராஜனுக்கு.
அவள் ஒரு விநாடி யோசித்தாள். ‘என் மனசைத் திறந்து காட்டி இதற்காக அவன் வருந்துவது எவ்வளவு அறிவீனம் என்று அவனுக்கு உணர்த்தித் தனக்கு இது இவ்வளவு மகிழ்ச்சி அளித்த அனுபவம் என்பதனை விளக்கி, இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று தனது ஆசையைப் பரசியமாகப் போட்டு உடைத்தால்தான் என்ன? ம்… அப்போது மட்டும் அவன் அதைச் சரியாக விளங்கிக் கொள்வானாக்கும்! இதுமாதிரி எத்தனை அனுபவமோ இவளுக்கு? அதனால்தான் இவளால் இதை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று நினைப்பான். ஐயோ, எனது இந்த முதல் அனுபவத்தை இவன் அவ்விதம் நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமை! இவ்விதம் இவனை நான் நினைக்க விடுவது எவ்வளவு பெரிய மடமை. மனசின் பாஷைகளை வாய் வார்த்தைகளா மொழி பெயர்த்துவிட முடியும்? அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடமே என் மனசு போய்ப் போய்ப் பேசிப் பேசித் தோற்கிறதே!’ என்ற கசப்பையே உண்ணுகின்ற உணவோடு சேர்த்து விழுங்கினாள் தேவகி.
அவள் அவனிடம் சாப்பிட்டு முடியும் வரை எதுவுமே பேசவில்லை. அவனுக்கு அவளிடம் பேச இனி எதுவுமே இல்லை. அவன் விடைபெறும் பொழுது மட்டும் தெரு வாசற்படியில் நின்று சற்றுத் தயங்கிய பின்னர் அவளிடம் எதையோ யாசிப்பது மாதிரிச் சொன்னான்:
“நான் செய்த தப்பை மறந்திடுங்க!”
“ஓ, என்னால் அது முடியாது!” என்று தேவகி சொல்லும்போது அவளது மனசின் பாஷை அவனுக்கு இப்பொழுதும் புரியாததால், தன் தவற்றை இவள் மன்னிக்கவில்லை என்பதாக எண்ணி வருத்தம் தீராமலே விடைபெற்றுப் போனான்.
அவன் போகும் வரை அமைதியாகத் தெரு வாசலில் நின்றிருந்த தேவகி, புயல் மாதிரி உள்ளே போனாள். தெருக் கதவை அறைந்து தாழிட்டு விட்டு ஓடிப் படுக்கையில் குப்புற விழுந்தாள்; அழுதாள்.
தன்னைத் தனது ஆளுமையால் சொந்தத்தோடு ஆளுகின்ற ஆண் மகன் வரவே மாட்டானோ என்ற ஏக்கத்தில் அவள் விழிகள் பரிதாபமாக, வறட்சியோடு வெகு நேரம் உறக்கமின்றிக் கூரை முகட்டை வெறித்தவாறிருந்தன.
அடுத்த இரண்டு நாட்கள் நடராஜன் ஆபீசுக்கு வரவில்லை. அவன் வர மாட்டான் என்பதைத் தேவகி எதிர்பார்த்தே இருந்தாள். இதைக் கூட எதிர்பார்க்கவில்லையென்றால் தேவகியின் அனுபவங்களுக்குத்தான் என்ன அர்த்தம்?
மூன்றாம் நாள் தேவகி சற்றுத் தாமதமாக ஆபீசுக்கு வந்தாள். அவளது டிபார்மெண்டுக்குள் அவள் நுழைந்த போது, அவள் வருவதைக் கண்ட நடராஜன் தலையைக் குனிந்தவாறு தனது இருக்கையில் அமர்ந்திருந்தான்.
இருமருங்கிலும் வரிசையாகப் போடப்பட்டிருந்த மேஜைகளின் நடுவே நடந்து வந்த தேவகியின் பாதரட்சைகளின் சத்தத்தை நடராஜனின் செவிகள் துல்லியாகக் கேட்டன. அந்தக் காலடியோசை தன்னை நெருங்கி நெருங்கி வருவதை அறிந்து, அது தன்னைக் கடந்து போகிற வரைக்கும் தலை நிமிரக் கூடாது என்ற தீர்மானத்துடன் ஒரு பெரிய லெட்ஜரில் அவன் முகம் கவிந்திருந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவள் காலடி ஓசை அவனைக் கடந்து போய்த் தேய்ந்து மடியாமல் அவன் அருகே வந்து உறுதியாக நின்றது.
“குட்மார்னிங், மிஸ்டர் நடராஜன்!”
“குட்மார்னிங், மேடம்!” என்று எழுந்தான் நடராஜன்.
“சி.எல். ரிப்போர்ட் பண்ணியிருந்தேனே?” என்று ரொம்ப உத்தியோகத் தோரணையில் பதில் சொன்னான் நடராஜன்.
தேவகி சிரித்தாள்: “ஸிட் டவுன்!”
பாதரட்சைகள் சப்திக்கத் தனது இருக்கையை நோக்கி நடந்த தேவகி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்:
‘மிஸ் தேவகிக்கு – என்று விலாசம் எழுதிக்கொண்டு வந்து என்னிடம் இந்த நடராஜன் மிக விரைவிலேயே நீட்டப் போகின்ற அந்தக் கலியாண அழைப்பிதழ் எங்கேயோ தயாராகிக் கொண்டிருக்கிறது!
--------------
42. தாம்பத்யம்
தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல் – ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்ஷாக்கார – கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான்.
அந்த ஐந்து ரூபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா மூன்றணாவாகச் சேர்த்தான். தன் கையிலிருந்தால் செலவாகி விடும் என்று பயந்து மூலைக்கடை சாயபுவிடம் கொடுத்துச் சேமித்தான். அதற்குள்தான் அந்த ரஞ்சிதத்துக்கு என்ன அவசரம்.
முதலில் மருதமுத்து கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது அவசியம் இல்லையென்று கருதினான். அங்கு வாழ்ந்தவர்களின் வளமுறை – பூர்வீகமாகவே அல்ல – தற்காலிகமாக சந்தர்ப்பவசமாக அப்படித்தான்!
ஆனால் அதற்குப் பட்டிக்காட்டுப் பெண்ணான ரஞ்சிதம் ஒப்பவில்லை. “மேளதாளம் இல்லாட்டியும், கூறையும் தாலியுமாவது கட்டிக்க வேணாமா? சாமி முன்னாலே நின்று சத்தியம் செஞ்சுக்குவோம், இதுகூட இல்லாட்டி கட்டிக்கறத்துக்கும், ‘சேத்து வெச்சிக்கிறதுக்கும்’ என்னா மச்சான் வித்தியாசம்?” என்று தர்க்கம் புரிய ஆரம்பித்தாள். மருதமுத்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று படவே ஒப்புக் கொண்டான். ரஞ்சிதத்துக்குத் தன் மச்சான் ஒப்புக் கொண்டதில் பரம சந்தோஷம். பாவம், அவளும்தான் யாருமற்ற அனாதையாக எத்தனை காலம் இருப்பது?
அவள் பட்டணத்துக்கு அனாதையாகவா வந்தாள்? அவள் அப்பன் பட்டணத்தில் கை வண்டி இழுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தபொழுது அவள் திண்டிவனத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் தன் தாயுடன் ‘பயிர் வேலை’ செய்து கொண்டிருந்தாள். அவள் தாய் இறந்த செய்தி கேட்டுப் பட்டணத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் வந்த அவள் தகப்பன் திரும்பிப் போகும்போது ரஞ்சிதத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். பட்டணத்தில் தகப்பனும் மகளும் வாழ்க்கை நடத்த… இருக்கவே இருந்தது பிளாட்பாரம்… கந்தல் பாய், மண் சட்டிகள்! கை வண்டி ஓட ஓட வாழ்க்கையும் நகர்ந்தது… ஒருநாள் அவனால் நகர முடியவில்லை.
அவன் நகராவிட்டால் நகரம் நகராமலா இருந்து விடும்?… அது நகர்ந்தது!
பிளாட்பாரத்தில் கிடக்கும் கூலிக்காரனின் சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அது நகர்ந்தது!…
நாகரிகம் நௌ¤ந்து நகர்ந்து கொண்டிருந்த அந்த வீதியில் நாலு பேர் தோள் மீது கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கி விட்ட அப்பனின் பிரிவைச் சகிக்க முடியாத அனாதை ரஞ்சிதம் புலம்பிப் புரண்டு கதறிக் கொண்டிருந்தாள்!
“நான் அனாதை ஆயிட்டேனே…” என்று கதறிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் செவிகளில் “அழாதே, நான் இருக்கிறேன்” என்ற கனிவுமிக்க ஒரு குரல் ஒலித்தது. ரஞ்சிதம் திகைத்தாள். திரும்பிப் பார்த்தபொழுது தன் மச்சான் மருதமுத்து நிற்பதைக் கண்டவுடன் ‘கோ’வென்று கதறினாள்; அவன் அவளைத் தேற்றினான்.
வரவர அவள் தன் அப்பனை நினைத்து அழுவதையே நிறுத்தி விட்டாள். அதற்குத்தான் அவன் அவசியம் இல்லாதபடி செய்து விட்டானே. அப்படி என்ன செய்தான்? ஒரு வார்த்தைதான் சொன்னான்.
“நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்ணாலம் கட்டிக்கிறேன். வீணா அழாதே!” என்று அவன் ஆறுதல் சொன்னதும் அழுது கொண்டிருந்த அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். கலங்கிய விழிகள் பரவசத்தால் படபடத்தன. ” என் கண்ணான…. உன்னை நான் கண்ணாலம் கட்டிக்குவேன்” என்று கூறி அவன் லேசாகச் சிரித்தான். அவள் உதடுகளில் மகிழ்ச்சி துடிதுடிக்க நாணத்தால் தலை குனிந்தாள்.
அதன் பிறகு தினந்தோறும் அவள்தான் அவனுக்குச் சோறு பொங்கிப் பரிமாறினாள். அவளும் அவனும் கண்ணாலம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று அடுத்த ‘அடுப்புக்காரி’களெல்லாம் (அடுத்த வீட்டுக்காரர்கள் என்று சொன்னால் சரி வராது… பிளாட்பார வாசிகளின் குடும்பங்களைப் பிரித்துக் காட்டுவது அடுப்புகள்தான்!) பேசிக் கொண்டார்கள்.
மருதமுத்து கொத்தவால் சாவடியில் தலைச்சுமைக் கூலி! தினசரி கிடைக்கும் ஆறணா எட்டணா வருமானத்தில் இரண்டணா ஓரணா எப்படியோ மீதம் பிடித்துக் கொண்டு மிகுதியை ரஞ்சிதத்திடம் கொடுத்து விடுவான். பகலெல்லாம் கூலி வேலை… மாலை நேரங்களில் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதன் விளைவாய் இரவு நேரங்களில் அவன் மனம் அவளை எண்ணித் தவியாய்த் தவிக்கும்; எதிர்கால இன்பத்திற்காக நிகழ் காலத்திலேயே துடியாய்த் துடிக்கும். ஆனால் ரஞ்சிதம் அதற்கெல்லாம் மசிபவள் அல்ல; ஏனென்றால் அவள் பட்டணத்திற்கு வந்து அதிக நாளாகிவிடவில்லை; இன்னும் ‘பட்டிக்காட்டுத்தனம்’ இருந்தது.
“சாமி முன்னாடி நின்னு சத்தியம் பண்ணித் தாலி கட்டினாத்தான்…” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
கடைசியில் எப்படியோ காசு சேர்ந்து விட்டது.
சோறு விற்கும் கிழவி ஒருத்தி மருதமுத்துவையும் ரஞ்சிதத்தையும் பார்த்து “மவராசியா வாழணும்…” என்று ஆசிர்வதித்தாள்.
“என்ன மச்சான், கண்ணாலச் சாப்பாடு எப்போ?…” என்று பரிகாசம் பேசி மகிழ்ந்தான் அவன் சகாக்களில் ஒருவன்.
சிறுவர்கள் சிலர் அவனிடம் ‘வெகுமானம்’ கேட்டனர்.
அவனும் சிரித்துக் கொண்டே இரண்டு மூன்று காலணாக்களை ‘வெகுமானம்’ அளித்தான்.
லோன்ஸ்குயர் பார்க்கின் கம்பி வேலியின் ஓரமாக எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் புறாக் கூண்டு போன்ற மகா சன்னிதானத்தில் அவன் ஏற்றி வைத்த தரும விளக்கு ஜோதியாய், சுடராய், ஒளியாய், மஹா ஹோமமாய் எரிந்து கொண்டிருந்தது.
ஓரணா கடலை எண்ணெய் அல்லவா ஊற்றியிருக்கிறான்.
பார்க்குக்கு எதிரே, மாதா கோயில் சுவர் ஓரமாகக் கட்டை வண்டி, கை வண்டி, குப்பைத் தொட்டி முதலியவற்றின் இணைபிரியா ஒட்டுறவுடன் நிலைத்து விட்ட அடுப்பில் மீன் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. கஞ்சி மொடமொடக்கும் புதுப்புடவையின் விறைப்போடு கூடிய கொசுவத்தை மடக்கிக் கால்களுக்கிடையே செருகிக் கொண்டு குனிந்து நின்று குழம்பைத் துழாவிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களிலும், கழுத்தில் தொங்கிய மஞ்சள் சரட்டிலும், மஞ்சள் பூசிய கன்னக் கதுப்பிலும், நெற்றியில் ஜொலித்த குங்குமப் பொட்டின் ஜிகினாத் தூளிலும் அடுப்பில் கனன்ற தீ ஜீவாலை – நாற்புறமும் சுழன்று நௌ¤ந்து குழம்புச் சட்டியின் அடிப்பாகத்தை நக்கி நிமிர்ந்த தீ நாக்குகளின் செவ்வொளி – படர்ந்து பட்டுப் பிரகாசித்தது.
அவள் அடுப்பை, கனன்று எரியும் கங்குகளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். அவள் கண்களில் கங்குகளின் பிம்பம் பிரதிபலித்தது. அவள் முகத்தில் புதிய, இதுவரை அவன் காணாத, அனுபவிக்காத ஒரு அழகு, ஒரு தேஜஸ், ஒரு மயக்கம், ஒரு லாகிரி… என்னவோ தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவளருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தான் மருதை. அவன் இதழ்க்கடையில் சிரிப்பு சுழித்தது. கீழுதட்டை அமுக்கிப் பற்களால் கடித்தவாறு, புருவங்களை உயர்த்தி, முகத்தைச் சாய்த்து ஒரு கோணல் பார்வையோடு பெருமூச்செறிந்தான்.
“ஏ குட்டி, கொஞ்சம் நெருப்பு எடு.” ஒரு பீடையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு கேட்டான்.
“ஐய… கூப்பிடறதைப் பாரு… குட்டியாமில்லே, குட்டி” என்று முனகிக் கொண்டே தீ பற்றிய சுள்ளி ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். சுள்ளியை வாங்கும்போது அவள் கையையும் சேர்த்துப் பற்றிக் கொண்ட மருதமுத்து, அவள் கரங்களில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களோடு விளையாடிக் கொண்டே கொஞ்சுகின்ற குரலில்,
“கண்ணாலம் கண்ணாலமின்னு கண்ணாலம் கட்டியாச்சு, இப்ப என்ன சொல்லுவியாம்…” என்று குரலைத் தாழ்த்தி அவள் காதருகே குனிந்து ரகசியமாக என்னவோ கூறினான். அதைத் தொடர்ந்து கண்ணாடி வளையல்களோடு அவள் சிரிப்பும் சேர்ந்து கலகலக்க, “கையை வுடு மச்சான்… அடுப்பிலே கொழம்பு கொதிக்குது” என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டே ரஞ்சிதம் முன்றானையால் முகத்தை மூடி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். அப்படி அவன் என்னதான் கேட்டானோ? அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஊஹீம், சொன்னாத்தான்…”
“இனிமே என்னை என்னா கேக்கறது?…” என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி அடுப்பைக் கவனிக்க முனைந்தாள் ரஞ்சிதம். அவள் முதுகில் என்னமோ நமைத்தது, உடல் முழுவதும் சிலிர்த்தது.
சோறு சமைத்துக் குழம்பு காய்ச்சிப் புருஷனுக்கு விருந்து படைத்துவிட்டுத் தானும் சாப்பிட உட்கார்ந்தாள் – எல்லாம் நடுத்தெருவில்தான்!
“ரஞ்சி, நான் பார்க்கிலே அந்த மூலை பெஞ்சியிலே படுத்திருக்கேன்” என்று மற்றவர்கள் காதில் விழாதபடி சொல்லிவிட்டுச் சென்றான் மருதமுத்து.
சோறும் குழம்பும் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் ரஞ்சிதத்திற்கு சோறு கொள்ளவில்லை.
***** ***** *****மணி பத்துக்கு மேலாகிவிட்டது. பார்க்கிலுள்ள மூலை பெஞ்சில் மருதமுத்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பெஞ்சுக்குக் கீழே கிழிந்த பாயும் பழைய போர்வையும் கிடந்தன. அவன் விரல்களுக்கிடையே பீடி நெருப்புக் கனிந்து கொண்டிருந்தது. இன்னும் தெருவில் சந்தடி அடங்கவில்லை.
ரஞ்சிதம் தயங்கித் தயங்கி மௌ¢ள மௌ¢ள அசைந்து பார்க்குக்குள் நுழைந்தாள். அவனருகே தலைமாட்டில் அவனுக்குத் தெரியாமல் வந்து நின்றாள். தன் பின்னால் அவள் வந்து நிற்பதை அறிந்தும் அறியாதவன் போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் மருதமுத்து. தான் தூங்கிவிட்டதாக அவள் எண்ணிக் கொள்ளட்டும் என்று லேசாகக் குறட்டை விட்டான். ஆனால் அவன் கையில் புகைந்து கொண்டிருந்த பீடித்துண்டு அவனை அவளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மௌனமாய் நின்றிருந்தாள். அவளுக்குக் கழுத்து நரம்புகளில் உள்ளூர என்னவோ உரசிக் கிளுகிளுத்து ஓடி உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. அவனுக்கும் அங்கு நிலவிய மௌனம் சிரிப்பை மூட்டியது; அவன் அடக்கிப் பார்த்தான்; அவன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் ஓடிப் பாய்ந்து களுக்கென்று குரலும் வெடித்துவிட்டது. அவளும் சிரித்தாள். இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காரணமின்றியோ காரணத்தோடோ விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்து ஓய்ந்த பின் ரஞ்சிதம் பெஞ்சின் மறுகோடியில் நாணிக்கோணி உட்கார்ந்தாள். “ரஞ்சி, வெத்தலை பாக்கு வெச்சிருக்கியா? குடு!” அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். மருதமுத்து வெற்றிலையைச் சுவாரஸ்யமாக மென்று கொண்டே அவளருகில் உட்கார்ந்து கொண்டான்…
நல்ல நிலவு…
நிலா வெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்பமளிக்க வில்லை; இடைஞ்சலாய் இருந்தது…
பெஞ்சின்மீது அமர்ந்திருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஓங்கி வளர்ந்த அரசமரக் கிளைகளின் ஊடே பாய்ந்து வந்த நிலவின் ஒளிக் கதிர்கள் விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளியில் அவள் விழிகள் மின்னின. வெற்றிலைக் காவி படிந்த உதடுகளில் ஊறிப் படர்ந்த வெற்றிலைச் சாற்றின் மினுமினுப்பு மருதமுத்துவின் உதடுகளை என்னவோ செய்தது. அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்தான். அவள் கழுத்திலே கிடந்த கருவ மணியும் மஞ்சள் கயிறும் முறுக்கிக் கொண்டு மார்பின் நடுவே தடுமாறி நெகிழ்ந்து கிடந்தது. நழுவிப் போன மேலாக்கினூடே, ரவிக்கையில்லாத – கருங்காலிக் கடைசல் போன்ற தேகத்தின் வனப்பு மறைந்தும் மறையாமலும் மருதமுத்துவை மயக்கிற்று.
“ரஞ்சி!”
அவள் பெருமூச்சு விட்டாள்.
விம்மி மேலெழுந்து அவள் நெஞ்சம் புடைத்ததனால் நிலை குலைந்த மருதமுத்து அவளை – அவளுடைய வெற்றுடலை மார்புறத் தழுவிக் கொண்டான்.
“வுடு மச்சான்” என்று திமிறிக் கொண்டு தன்னைச் சரி செய்துகொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சி.
எதிரிலிருக்கும் ‘முஸ்லிம் ரெஸ்டாரண்ட்’ இன்னும் மூடப்படாததை அப்பொழுதுதான் கவனித்தான் மருதமுத்து.
“சீச்சீ… இந்தப் பார்க் ரொம்ப ‘நாஸ்டி’யாப் போச்சு” என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரன் இவர்களைப் பார்த்தவாறே தம்மருகில் வந்தவரிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். மருதமுத்துவின் உடல் நாணிக் கூசியது – ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.
“நம்ம ஊரிலேயே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்தா?” என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் ரஞ்சியின் குரல் அடைத்தது.
அவனும் பெருமூச்சு விட்டான்.
“கஞ்சியில்லாட்டியும் நமக்குன்னு ஒரு குடிசையாச்சும் இருக்குமில்லே. பட்டினியோட ஒருத்தருக்கும் தெரியாம கவுரவமா படுத்துக் கெடக்கலாமில்லே… சீச்சீ! இது என்ன பொழைப்பு? தெருவிலே கண்ணாலம் கட்டிக்கிணு, தெருவிலே புள்ளை பெத்துக்கினு, தெருவிலே செத்தும் போறது” என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக் கொண்டாள் ரஞ்சி. அவன் மௌனமாய் இருந்தான்.
சற்று நேரம் கழித்து ஒரு பெருமூச்சுடன் சொன்னான்:
“என்னா பண்றது ரஞ்சி?… அவுங்க அவுங்க தலையெழுத்துப்படிதா நடக்கும். ஊர்லே ஒலகத்திலே எவ்வளவோ பேரு கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பங்களா என்னா! காரு என்னா! அதிலாட்டிப் போனாலும் ஒரு சின்ன வீடு, ஒரு பஞ்சு மெத்தை – அதாவது இருக்கும். எல்லாத்துக்கும் குடுத்து வைக்கணும். நம்ம விதி இப்படி” என்று வருத்தத்தோடு புலம்பினான். “என்னா மச்சான், இதுக்கா நீ கவலைப்படறே? நீ இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லே; காரும் பங்களாவும் வெச்சிருக்கிறவங்க கதையெல்லாம் தெரியாது போலிருக்கு. ஆம்படையான் பெண்டாட்டி விசயம் கச்சேரி வரைக்கும் சிரிக்குதே… நம்ம மாதிரி அவுங்களுக்கு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆசையிருக்குமா…?”
‘இனிக்கும் இன்ப இரவே நீ வா வா…” என்று ஹோட்டல் ரேடியோ விரகத்தால் உருகிக் கொண்டிருந்தது!
ஜன சந்தடி அடங்கிவிட்டது. ஹோட்டலில்கூட ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை.
மணி பன்னிரண்டு அடித்தது.
பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தனர். பனி மூட்டம் அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் அழுக்குக் கந்தல்களினுள் அந்த ஜீவன்கள் முடங்கிக் கிடந்தன. பச்சைக் குழந்தைகள் தாயின் மார்பினுள்ளே மண்டிக் காந்தும் வெப்ப சுகத்தில் பம்மிக் கொண்டன. அவர்கள் தலைமாட்டில் சொறி நாய்களூம், கிழட்டு மாடுகளூம் அரைத் தூக்கத்துடன் காவல் காத்தன.
பார்க்கில் நிசப்தம் நிலவியது; மருதமுத்து பெஞ்சியிலிருந்து எழுந்து செடி மறைவில் விரித்திருந்த பழம்பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த ரஞ்சிதத்தின் அருகே சென்று அமர்ந்தான்.
“ரஞ்சி… தூங்கிட்டியா?”
“இல்லே…”
“ஒனக்குக் குளிருதா?”
“உம்.”
இருவரும் மொடமொடக்கும் அவளுடைய புதிய சிவப்புப் புடவையால் போர்த்திக் கொண்டார்கள்.
போர்த்தியிருந்த புடவை மௌ¢ள மௌ¢ள அசைந்தது.
“மச்… சான்…” அழுவதுபோல் திணறியவாறே முனகினாள் ரஞ்சிதம்.
திடீரென அந்தத் தெருவிலிருந்து ஒரே வெளிச்சம் அவர்கள்மீது பாய்ந்தது!
“ஐயோ!…” என்று பதறினாள் ரஞ்சி.
“காருதான்… போயிடும்…”
அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரஞ்சிதம்.
கார் சென்ற பிறகு, உலகத்தையே, தங்களையே, மறந்திருந்த அவர்களின் அருகே காலடி ஓசைகளூம் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டன.
மினர்வா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிவடைந்து கும்பல் வீதியில் பெருகி வந்து கொண்டிருந்தது.
மருதமுத்து எழுந்து சென்று பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டான்.
ரஞ்சிதத்திற்கு அழுகையே வந்துவிட்டது!
மருதமுத்துவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. யார் மீது ஆத்திரப்படுவது?…
கும்பலில் ஒரு பகுதி முஸ்லிம் ரெஸ்டாரண்டிற்குள் படையெடுத்தது. வெகுநேரம் வரை சந்தடி அடங்கவில்லை.
***** ***** *****
மணி ஒன்று அடித்தது.
முஸ்லிம் ரெஸ்டாரெண்டில் ஆளரவமே இல்லை. பார்க் அருகே ஒரு ரிக்ஷாக்காரன் நின்றிருந்தான். அவனருகே ஒரு மஸ்லின் ஜிப்பாக்காரன்… “அப்புறம் என்ன சொல்றே?”
“வா சாமி… நல்ல ஸ்டூடன்ஸீங்கதான்; பிராமின்ஸ் சார்… வண்டியிலே ஏறு சார்… போவும்போது பேசிக்குவோம்.”
மஸ்லின் ஜிப்பாக்காரனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து, பிராட்வேயிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் நுழைந்து விரைந்து மறைந்தது ரிக்ஷா.
“தூ… இதுவும் ஒரு பிழைப்பா? கஸ்டப்பட்டு வண்டி வலிக்கிற அந்தக் ‘கயிதை’க்கு ஏன் இந்தப் பேமானிப் புத்தி?” என்று காறி உமிழ்ந்தான் மருதமுத்து.
“என்ன மச்சான் திட்டறே?”
“ஊரும் ஒலகமும் இருக்கறதைப் பார்த்தா திட்டாமெ எப்படி இருக்கிறது? இன்னம் ஒனக்குத் தூக்கம் வரல்லியா…
உம்… எப்படி வரும்” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் மருதமுத்து.
நிலவு மேகத்தில் மறைந்தது.
ஒளி மிக்க அந்த பூர்ணிமை இரவும் இருண்டது. முஸ்லிம் ரெஸ்டாரெண்டும் மூடப்பட்டது. மனித சந்தடியே அற்றுப் போயிற்று.
ஒரே அமைதி!
பார்க்கினுள் நெடிது வளர்ந்திருந்த அரசமரக் கிளைகளில் காகங்கள் சலசலத்தன; விடிந்து விட்டது போன்ற பிரமை போலும்… சில காகங்கள் கரைந்தன. வெளிறிய இருளின் பிடிப்பில் ஊமைத்தனம் போல் நட்சத்திர ஒளி ஜாடை காட்டிற்று. நாய் ஒன்று எழுந்து நின்று உடலை வளைத்து முறித்துச் சடசடத்து உதறிக் கொண்டு அலுப்புத் தீர்ந்ததுபோல் எங்கோ நோக்கி வேகமாக ஓடியது. மணி இரண்டு அடித்தது.
“ரஞ்சி…”
“…”
“ரஞ்சி…”
“உம்…”
பெஞ்சு காலியாயிருந்தது.
செடி மறைவில் இலையோ இருளோ அசைந்தது.
“டக்… டக… டக்.”
முதலில் அந்த ஓசையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
“டக் டக்… டக் டக்…” ஓசை அவர்களைச் சமீபிக்கவே அவர்கள் சலனமின்றி ஒன்றிக் கிடந்தனர்.
“ஏய், யாரது? எழுந்து வாம்மே” என்ற போலீஸ்காரனின் முரட்டுக் குரல், வலுக்கட்டாயமாக – மிருகத்தனமான – மனித உணர்ச்சிகளிலிருந்து, மனித நாகரிகத்தின் புதை குழிக்கு – அவளிடமிருந்து அவனைப் பிய்த்தெறிந்தது. அவன் உடல் பதை பதைக்க உதடுகள் துடிதுடிக்க எழுந்து வந்தான். அவள் செடி மறைவில் நின்று தனது புடவையைச் சுற்றிக் கொண்டாள்.
“வெளியே வாம்மே” என்று போலீஸ்காரன் அசூயையுடன் உறுமினான்.
“பயம்மா இருக்கே மச்சான்…” என்று அந்தப் பட்டிக்காட்டு யுவதி பரிதாபகரமாகத் தன் கை பிடித்த கணவனிடம் குழறினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“பயப்படாதே வா, ரஞ்சி” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பார்க்கின் இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து வெளியே வந்தான் மருதமுத்து. விளக்குக் கம்பத்தடியில் போலீஸ்காரன் நின்றிருந்தான்.
“யார்ரா நீ?” என்று சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டான் போலீஸ்காரன்.
“வந்து வந்து கூடைக்காரன், சாமி…”
“ஏய், இப்படி வெளிச்சத்துக்கு வாம்மே” என்று அவளைக் கூப்பிட்டான் போலீஸ்காரன். அவள் பயந்து நடுங்கிய வண்ணம் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றாள். நெற்றித் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து, சிகையில் சூடிய கதம்பம் சிதைந்து சிதறிக் கிடந்தது.
“ஏம்மே, இங்கதான் இடமா? ஒம் பேரு என்னாம்மே?” என்று பாக்கெட்டிலிருந்த சிறு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் கையிலெடுத்தான் போலீஸ்காரன். அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்,
“ரஞ்சிதம், சாமி” என்றாள்.
“சார்… சார்…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் மருதமுத்து.
“நீ ஒண்ணும் பயப்படாதே! ‘இவதான் என்னைக் கூப்பிட்டா’ன்னு ஸ்டேஷனுக்கு வந்து ரிப்போர்ட்டு குடுத்துடு. ஒன்னே விட்டுடுவோம்” என்றான் போலீஸ்காரன்.
ரஞ்சிதத்திற்கு விஷயம் விளங்கி விட்டது.
“நாங்க புருஷன், பெஞ்சாதி சாமி…” என்று பதறினாள் ரஞ்சிதம். போலீஸ்காரன் சிரித்தான். அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.
“சத்தியமாத்தான் சாமி… இந்தப் புள்ளையார் சாட்சியா நாங்க புருஷன் பெஞ்சாதிங்க சாமி. இதோ பாருங்க” என்று அவள் கழுத்தில் கிடந்த கயிற்றை வெளியே இழுத்துக் காண்பித்தான் மருதை.
சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலீஸ்காரனால் தலையை நிமிர்த்தி அந்த மஞ்சள் கயிற்றைக் காண முடியவில்லை.
அவன் சட்டம் ‘இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி’ என்றுதான் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனசைத் துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.
அவன் கண்டுபிடித்தது குற்றம். குற்றவாளியைக் கைது செய்ய வேண்டியது சட்டம். சட்டத்தின் வாரிசு போலீஸ்காரன்! அவன் ஒழுக்கத்தின் பிரதிநிதியோ உண்மையின் தூதுவனோ அல்ல.
“உம், நட நட… அதெல்லாம் ஸ்டேஷனிலே பேசிக்கலாம்” என்று அவளைத் தள்ளினான்.
“ஐயா… ஐயா…” என்ற அந்தக் காதல் ‘குற்றவாளி’ – ரஞ்சிதம் கெஞ்சினாள். தன் கணவனின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். அவன் தலையைக் குனிந்த வண்ணம் போலீஸ்காரனுடன் நடந்து கொண்டிருந்தான். அவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.
ஊரே அடங்கிய அந்த அமைதியான இரவில் அந்த நகரத்தின் பெரிய வீதியில் சட்டத்தின் ஹிருதயத் துடிப்பு போல் ஜீவனுடன் கம்பீரமாக போலீஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது. ரஞ்சிதத்திற்குத் தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பதுபோல் ‘பக் பக்’ என்று நெஞ்சு துடித்தது.
எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்து செல்லும் சட்டத்தின் காலடியோசை…
அதோ, ‘டக்… டாக்… டாக்… டக்…”
---------------
43. பாவம் பக்தர்தானே!
ஊரின் நடுவே அந்தக் கோயில் இருந்தது. இருந்தாலும் சந்தடியின்றி அமைதியாக இருந்தது. கோயிலென்றால் ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலிருந்தே தரிசித்து ‘உயர்ந்த சிகரக் கும்பம் தெரியுது’ என்று பாடத் தகுந்த பெரிய கோபுரங்கள் ஏதும் கிடையாது. பார்த்துப் பிரமித்து நிற்காமல், சொந்தத்துடன் நம் வீட்டுக்குள் நுழைகிற உணர்வோடு அந்தக் கோயிலில் எவரும் பிரவேசிக்கலாம். பெரிய கதவுகள் அடைத்துத் தடுக்காது. கோயிலைச் சுற்றி நாலு அடி அகலத்துக்குப் பிரகாரமும் மதிலும் உண்டு. கருங்கள் தளவரிசை, பக்கத்தில் அடர்ந்து நிற்கும் புன்னை மரத்தின் பூக்களாலும் நிழலாலும் எந்த நேரத்தில் கால் வைத்தாலும் சில்லென்று இருக்கும். ஜிலுஜிலுவெனக் காற்றும் அடிக்கும். அங்கே பக்தர்கள் உள்ள இலுப்பைத் தோட்டத்தில் மாடுகளை மேயவிட்ட பின், அந்த மாட்டுக்காரச் சிறுவர்கள் விளையாடும் ஆடு – புலி ஆட்டத்திற்குக் கிழித்த கோடுகள் நிரந்தரமாகி விட்டிருந்தன. பகல் வேளைகளில் அவர்கள் அங்கே விளையாடியோ, படுத்து உறங்கியோ பொழுதைக் கழிப்பார்கள். அதற்கெல்லாம் கோயிலில் ஒரு தடையும் இல்லை. இதன் நடுவே, அந்தக் கம்பிக் கதவினூடே கை நீட்டித் தொட்டுவிடும் தூரத்தில், ஓரடி உயரத்தில், கை ஏந்தி அழைத்தால் தாவி ந்து இடுப்பில் உட்கார்ந்து கொள்ளுமோ என்கிற பாவனையில் – ஒரு பாலகிருஷ்ணன் சிலை.
அந்தப் பகுதியில் உள்ள தெலுங்கு பேசும் ஒரு வகுப்பினரின் அபிமானத்திற்குரிய அந்தக் கோயிலுக்கு ஒரு தமிழ்ப் பிராமணரே அர்ச்சகராய் இருந்தார். கோயிலுக்குச் சுமாரான சொத்து வசதி இருந்ததால் அங்கு சதா நேரமும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையிலும் மாலையிலும் பூஜையும், வருஷத்துக்கு ஒரு முறை பத்து நாட்கள் சற்று ஆடம்பரமாகவே திருவிழாவும் நடந்தது. மாலை நேரங்களில் பெண்கள் வருவார்கள். அப்போது மாட்டுக்காரச் சிறுவர்கள் வீடு திரும்பியிருப்பார்கள். இலுப்பைத் தோப்பில் குயில்கள் கூவிக் கொண்டு இருக்கும். மத்தியானம் பூராவும் நிலவிய சூழ்நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு களை குடிகொள்ளும் அப்போது. இரவு எட்டு மணி வரைக்கும் அந்த அர்ச்சகர் அப்பண்ணா கோயிலிலே இருந்து, சமயத்தில் ஒன்பது மணிக்கு மேலே பாலகிருஷ்ணனை சிறை வைத்த மாதிரி அந்தக் கம்பிக் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொண்டு செல்வார்.
இப்போதெல்லாம் சில கோயில்களில் பூசாரிகள் ஏதோ கடமைக்கு என்று செய்கிறார்களே – அது மாதிரியில்லாமல், உண்மையிலேயே ஒரு சிரத்தையும், அதில் ஒரு சுகானுபவமும் கொண்டு அந்த பாலகிருஷ்ணனுக்கு அவர் அலங்காரம் செய்வார். ஒரு குழந்தைக்கு அதன் தாய் சிங்காரம் செய்கிற மாதிரி செய்வார். அதிலே என்னவோ அவருக்கு அப்படி ஒரு சுகம். அப்பண்ணாவுக்குக் குழந்தை இல்லாத குறையைப் பாலகிருஷ்ணனிடம் தீர்த்துக் கொள்ளூகிறார் என்று சிலர் பரிகாசமாகச் சொல்லுவார்கள். அதற்காகக் குறைபட்டுக் கவலைப்பட்டு, ஏக்கப்பட்டு, எதிர்பார்த்திருந்த காலமெல்லாம் தீர்ந்துபோய் விட்டது இப்போது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலேயும், அவர் மனைவிக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயதும் ஆகிவிட்டதால் அந்தக் கவலைகூட அவர்கள் மனத்திலிருந்து கழன்று போய்விட்டது.
அவர் மனைவி பட்டம்மாளும் சில நாட்கள் கோயிலைச் சுற்றியுள்ள பூச்செடிகளில் பூப்பறிக்க வருவாள். அநேகமாக எல்லா நாட்களிலும், அப்பண்ணாதான் காலையில் வந்து பூப்பறித்துக் கொண்டு போவார். அதை அவள் ரொம்பச் சிரத்தையோடு விதவிதமாகத் தொடுத்துத் தருவாள்… காலைப் பலகாரத்தைப் பாலகிருஷ்ணனுக்காகவே அவள் தயார் செய்வாள். அதனைக் கொண்டு வந்து அவர் நைவேத்யம் செய்து எடுத்துக் கொண்டு போன பிறகுதான் சாப்பிடுவார்கள்.
அவர்கள் வீட்டு வாசலில் ‘கோயில் பிரசாதம் கிடைக்கும்’ என்று தகரத்தில் சுண்ணாம்பால் எழுதிய போர்டு ஒன்று தொங்கும். அதுதான் அவர்களின் ஜீவனோபாயம் என்றுகூடச் சொல்லலாம். என்றாலும் அதனை ஜீவனோபாயம் என்று கருதி ஆசாரமில்லாமல் அவர்கள் தயாரிப்பதில்லை. அது உண்மையிலேயே நைவேத்யம் செய்யப்பட்ட பவித்திரமான பிரசாதம்தான் என்பதை அவ்வூர் மக்கள் அறிவர்.
கிருஷ்ணன் கோயில் பிரசாதம், கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர், கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரம்மாள் என்றெல்லாம் அந்தக் கோயிலோடு சம்பந்தப்பட்டு, பெயரேற்றியிருக்கும் இவர்களைத் தவிர, கிருஷ்ணன் கோயிலோடு எவ்வித சம்பந்தமுமில்லாத இன்னொரு நபரும் உண்டு. அவளைக் கிருஷ்ணன் கோயில் கிழவி என்று அழைப்பர். அவளது பூர்வோத்திரம் யாருக்கும் தெரியாது. சில வருஷங்களுக்கு முன்பு அவளை இந்தப் பிரதேசத்தில் மக்கள் கண்டனர். ஒரு கையில் ஊன்றுகோலும், மாற்றுப் புடவையைச் சுருட்டிய ஒரு கந்தல் மூட்டையுமாய் அவள் ஒரு நாளின் அந்திப் பொழுதில் இந்த இலுப்பைத் தோப்பில் பிரவேசித்தாள். வாழ்ந்த வாழ்க்கை போதும் என்று சொல்வது மாதிரி கழுத்துக்கு மேல் அவள் தலை, சதா ஆடிக்கொண்டு இருக்கும்.
இந்த இடத்துக்கு வந்த பிறகு, ஏதோ இந்த இலக்கை நாடித்தான் அவள் இவ்வளவு காலம் நடந்து வந்தது மாதிரி இங்கே நிரந்தரம் கொண்டுவிட்டாள். அதிகாலை நேரத்திலேயே அங்கிருந்து அவள் புறப்பட்டு விடுவாள். உச்சிப்போதிலேயோ, பிற்பகலிலேயோ கந்தலில் முடிந்த அரிசியோடு அவள் திரும்பி வருவாள். வந்த உடனே பொங்கித் தின்றுவிட வேண்டுமென்ற அவசரமில்லாமல் சாவதானமாகப் படுத்துத் தூங்குவாள். இரவு ஒன்பது மணிக்குமேல் அர்ச்சகர் அப்பண்ணா பாலகிருஷ்ணனை சிறைவைத்துக் கம்பிக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது அந்த இலுப்பை மரத்தடியில் மூன்று கற்களை வைத்துத் தீ மூட்டிய அடுப்பின் மீது அந்தக் கிழவி தனது ஒற்றை வயிற்றுக்கு உணவு சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பார். மறுநாள் காலை அவர் பூக்கொய்வதற்காக வரும்போது மரத்தடியில் அந்தக் கரி படிந்த மண் பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அவள் கோயிலுக்கும் வந்து போயிருக்கிறாள் என்பதற்கு அடையாளமாகக் கோவில் பிரகாரம் சுத்தம் செய்யப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு, அவள் தலையாட்டம் மாதிரியே ஆடி நெளிந்து அலங்கோலமாகக் கோலமும் இடப்பட்டிருக்கும்.
அவளைக் கோயிலுக்குள்ளே அப்பண்ணாவோ அவருடைய மனைவியோ, மாட்டுக்காரச் சிறுவர்களோ யாரும் இதுநாள் வரை பார்த்ததில்லை.
ஆனாலும் அவளுக்குக் கிருஷ்ணன் கோயில் கிழவி என்று பெயர் வந்துவிட்டது.
அவள் யாரிடமும் பேச முடியாத ஊமை என்பதால் அவள் பெயரும் யாருக்கும் தெரியாது. தனக்கு இட்ட பெயரை அவள் ஒப்புக்கொண்டாளா இல்லையா என்பதும் யாருக்கும் தெரியாது.
ஒருநாள் அப்பண்ணா பக்கத்து ஊருக்கு ஏதோ காரியமாகப் போயிருந்தார். திரும்பி வரும்போது நடுநிசி ஆகிவிட்டது. ரயிலடியிலிருந்த இலுப்பைத் தோப்பின் வழியாகக் கிருஷ்ணன் கோயிலைக் கடந்து அவர் வந்தபொழுது கோயிலினுள்ளிருந்து மனிதக் குரல் கேட்கவே, சற்று நின்றார். உள்ளே எட்டிப் பார்க்கையில் பாலகிருஷ்ணனின் சந்நிதியில் உட்கார்ந்திருக்கும் கிழவியின் முதுகுப்புறம் தெரிந்தது.
‘இந்த நடுநிசியில் இவள் அங்கே என்ன செய்கிறாள்? வெளியே மழை கூட இல்லையே!’ என்று வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சந்தடியின்றிக் கோயிலுக்குள் நுழைந்தார் அப்பண்ணா. இப்போது கிழவியின் முதுகுப்புறம் மட்டுமல்லாது அவளுக்கு முன்னால் பாலகிருஷ்ணனுக்கும் அவளுக்கும் நடுவே உள்ள இடைவெளியில் உடைந்து மூளியாகிப் போன மண் சட்டியும் அதிலே உள்ள சோறும் கூட அந்தச் சிறிய எண்ணெய் விளக்கின் ஒளியில் தெரிந்தன.
கிழவி சட்டியிலிருந்து ஒரு கவளம் எடுத்துக் கம்பிக் கதவினூடே பால கிருஷ்ணனின் முகத்துக்கு நேரே அதைக் காட்டித் தனது ஊமைப் பாஷையில் உருகி உருகிக் கெஞ்சியபின், கிருஷ்ணன் அதை உண்டுவிட்ட பாவனையில் திருப்தி கொண்டு தான் புசிக்கலானாள். இப்படி ஒவ்வொரு கவளத்தையும் அவள் சாப்பிடுவதற்கு முன் அவனுக்கு ஊட்டிய பாவனையில் அவள் கொஞ்சிச் சிரித்து மகிழ்ந்து உண்டாள்.
அப்பண்ணாவுக்கு முதலில் கோபமும், பின்னர் இந்தப் பைத்தியக்காரக் கிழவியின் செய்கையிலே ஒருவிதப் பரிதாபமும் பிறந்தது. என்றாலும் அந்தத் தெய்வ சந்நிதானத்தை இவள் இவ்வாறு அசுத்தப் படுத்துவதைக் காண அவருக்கு மனம் பொறுக்கவில்லை… அவளது பேச்சை அவர் சற்று உற்றுக் கவனித்தார். அவளது செய்கையைப் புரிந்து கொள்ள முடியாதது போலவே அவளது மொழியும் அவருக்குப் புரியவில்லை. இதுவரை ஒரு கிழவியாக மட்டுமே அறிந்திருந்த அவளை இப்போது ஒரு நான்கு வயது சிறுமி மாதிரி அவர் கண்டார்.
அந்தக் காரியம் நடக்கிற தினுசிலிருந்து இது ஏதோ இன்று மட்டும் நடக்கிற ஒரு திடீர் நிகழ்ச்சி அல்ல; கிழவி இந்தப் பிரதேசத்துக்கு வந்த நாள் தொட்டு தினசரி நடக்கின்ற ஒரு வழக்கமான காரியம் என்று அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. தினசரி அவள் கோயில் சந்நிதானத்தைச் சுத்தம் செய்து, நீர் தெளித்துக் கோலம் இட்டு வைப்பதற்கு இதுதான் காரணமாயிருக்க வேண்டும் என்று அவரால் ஊகிக்க முடிந்தது.
“ஏ கிழவி!” என்று அவர் அதட்டிய குரல், அவள் செவிகளில் விழவே இல்லை.
அவளது ஆனந்தமயமான அந்த அனுபவத்தில் தான் குறுக்கிட்டு இடையூறு செய்வதுகூட ஒரு பாபமாகி விடுமோ என்று பயந்தார் அவர். சற்று நேரம் அங்கேயே நின்று அதைப் பார்த்த பின்னர், தான் வந்தது அவளுக்குத் தெரியாமல் தன் வழியே திரும்பி நடந்த அப்பண்ணாவுக்கு வீட்டுக்குச் சென்ற பிறகு கூடத் தூக்கம் வரவில்லை.
அந்தக் கோயிலின் அர்ச்சகர் என்ற முறையில் அவளை தான் அடித்துத் துரத்தாமல் வந்தது தவறே என்று அவர் மனம் குமைந்தது.
அவள் என்ன என்ன கர்மத்தை எல்லாம் சமைக்கிறாளோ? அதையெல்லாம் கொண்டு வந்து பகவானுடைய சந்நிதியில் இப்படி அசுத்தப்படுத்த அவளுக்கு எப்படித்தான் மனம் வருகிறது என்று பலவாறு எண்ணிக் குழம்பிய அப்பண்ணா, மறுநாள் முதல் அந்தக் கோயிலின் வெளிப்புற வாயிற் கதவுகளையும் தான் வரும்போது இழுத்துப் பூட்டிக் கொண்டு வந்துவிடுவது என்று முடிவு செய்தார்.
***** ***** *****
இப்பொழுதெல்லாம் கிருஷ்ணன் கோயிலுக்குள்ளே அதிகாலையில் சில மணி நேரங்களிலும், மாலைப்போதின் சில மணி நேரங்களிலும் தவிர பிற சமயங்களில் யாரும் பிரவேசிக்க முடியாது. கோயிலின் முன்புறப் பிரகாரக் கதவுகளை – வெகு நாட்களாக அடையா நெடுங் கதவாய்த் தரையோடு தரையாய் அழுந்தி, அறுகம்புல் முளைத்து அழுந்திப்போன அந்த இரும்புக் கதவுகளை – ஒருநாள் பூராவும் பிரயாசைப்பட்டுப் புற்களிலிருந்தும், துருவிலிருந்தும் விடுதலை செய்து, கீல்களுக்கு எண்ணெய் போட்டுச் சென்ற வாரத்தில் ஒரு நாள் சாத்திக் கோயிலையே சிறை வைத்தார் அப்பண்ணா.
மாட்டுக்காரச் சிறுவர்கள் ஆடு – புலி ஆட்டத்திற்காக இப்போது கோயில் படிகளில் கோடு கிழிக்க ஆரம்பித்து விட்டனர். இலுப்பைத் தோப்பில், மாடுகள் மேய்வதும், குயில்கள் கூவுவதும் மட்டும் நிற்கவில்லை. அந்தக் கிழவி மட்டும் இப்போது எங்கும் போகாமல் அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்துகொண்டு மூடிய கம்பிக் கதவுகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டு இருந்தாள். சில சமயங்களில் அங்கிருந்து எழுந்து சென்று எங்காவது போய் யாராவது தரும் எச்சிலைப் புசித்தாள். நேரம் காலம் வித்தியாசமில்லாமல் மரத்தடியிலேயே படுத்துத் தூங்கினாள். இலுப்பை மரத்தடியில் மூன்று கற்களுக்கிடையே மூண்டெரியும் அவளது அடுப்பு, இப்போதெல்லாம் சூனியமாகவே கிடக்கிறது.
பூஜை செய்வதற்கும், பூப்பறிப்பதற்கும் அப்பண்ணா கோயிலுக்கு வந்து போகும்போது, கிழவி அவரைப் பரிதாபமாக ஏறிட்டுப் பார்ப்பாள். ஏனோ அப்பண்ணாவுக்கு அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவே பயம். அவளைக் கவனிக்காதது மாதிரி வேகமாகப் போய்விடுவார். அன்று நள்ளிரவில் தான் கண்ட காட்சியைப் பற்றித் தன் மனைவியிடம் கூட இன்னும் அவர் சொல்லவில்லை.
***** ***** *****
பத்து நாட்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணன் கோயிலுக்குத் திருவிழா வந்தது. கோயில் முன்னால் கொட்டகை போட்டார்கள்; கொடியேற்றினார்கள். சாதாரண நாட்களிலே பார்த்துப் பார்த்துப் பாலகிருஷ்ணனுக்கு சிங்காரம் செய்கின்ற அப்பண்ணாவோ திருவிழா நாளன்று அதிசிரத்தை கொண்டு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்.
பாலகிருஷ்ணனுக்கு முன் கையில் கங்கணத்தை எடுத்துப் பூட்டினார்.
‘அட பைத்யமே! இதென்ன கால் தண்டையை எடுத்துக் கையில் பூட்டி விட்டேன்? அதுதான் இவ்வளவு தொள தொளவென்று இருக்கிறது’ என்று தன்னையே எண்ணிச் சிரித்தவாறு அதனைக் கழட்டிப் பார்த்தார்.
அது கால் தண்டையல்ல; கங்கணம்தான்!
‘எப்படி இவ்வளவு பெரிதாகி விட்டது? போன வருடம் – அவன் கைகளில் எவ்வளவு பதிவாய் அழகாக இருந்தது? எப்படிப் பெரிதாகி விட்டது’ என்று மனத்துள் ஓர் அரிப்புடன் தண்டையை எடுத்து அணிவித்தார்.
அதுவும் காலில் சேராமல் தனி வளையாமாய்ப் பாதத்தில் வீழ்ந்து கிடந்தது…
அரைவடத்தை எடுத்துக் கட்டினால் அதுவும் பெரிதாகி இருந்தது.
‘என்ன சோதனை இது?’ என்று ஏக்கத்துடன் அவர் பாலகிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தார்.
ஓ! அந்த முகம்கூடச் சுண்டிச் சுருங்கி வாடி வதங்கிப் புன்முறுவல் இன்றித் தோன்றுவதைக் கண்டார். ‘பாலகிருஷ்ணன் இளைத்துப் போய்விட்டானா?’
ஆமாம்! பாலகிருஷ்ணன் இளைத்தேதான் போய் விட்டான்.
‘இதைப்போய் யாரிடம் சொல்வது? பகுத்தறிவு வாதம் என்கிற பேரில் நாஸ்திகவாதம் பெருத்துப்போன இக்காலத்தில், என்னைப் பைத்தியக்காரன் என்று அல்லவா சிரிப்பார்கள்! நாத்திகர்கள் சிரிப்பது இருக்கட்டும். இந்தக் கோயிலுக்கு வந்து பக்தியோடு பாலகிருஷ்ணனைத் தரிசித்துச் செல்லும் எந்த ஆஸ்திகனாவது நான் சொல்லுவதை நம்புவானா?…’ என்று அப்பண்ணா ஒன்றும் புரியாமல் வெறிக்க விழித்தவாறு வெகுநேரம் உட்கார்ந்திருந்தார்.
இரவு ஒன்பது மணிக்கு அவர் கோயிலுக்கு வெளியே வந்தபோது, அந்தக் கிழவியைப் பார்த்தார். திருவிழாக் கொட்டகையின் விளக்கு வெளிச்சத்தில் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் ஏக அமர்க்களம் செய்து விளையாடிக் கொண்டிருப்பதைத் தன்னை மறந்த லயத்தோடு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் கிழவி.
அப்பண்ணா அவள் முகத்தை உற்றுப் பார்த்தார். அவள் வாய் பேசமுடியா ஊமை எனினும், அந்த முகத்தில் எத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகள்… எத்தனை அனுபவ ரேகைகள்! எத்தனை சோக முத்திரைகள்…!
அப்பண்ணா அந்தக் கிழவியைப் பற்றி யோசித்தார். ‘இவள் இப்போ இங்கே ஒரு அநாதைக் கிழவியா தனிச்சுக் கிடந்தாலும் இவள் வயதுக்கு இவளும் பிள்ளைகள் பெற்றுப் பெருகி வாழ்ந்திருப்பாள், இல்லையோ? என்ன நடந்ததோ? யார் சொல்ல முடியும்? ஒருவேளைச் சாப்பாட்டைக் கூடத் தனியா சாப்பிட்டு அவளுக்குப் பழக்கமில்லாதிருந்திருக்குமொ? அதனாலேதான் பாலகிருஷ்ணனைத் துணைக்கு வச்சுண்டு சாப்பிட்டாளோ? இதைப் போயி இவளிடம் கேட்க முடியாது. ஊமைகள் பேசாது… உணர்த்தும். அப்படி எதையோ பாலகிருஷ்ணனுக்கு இவள் உணர்த்தி விட்டாளோ? – பாலகிருஷ்ணன் மட்டும் பேசறானா? அவனும் இப்ப எனக்கு எதையோ உணர்த்தறானோ?… இதையெல்லாம் பேசி உணர்த்த முடியாது. அறிவு, பக்திக்குப் பகை! நைவேத்யம் பண்றதை பகவான் ஏத்துக்கிறார்னு நான் நம்பறதும், பகவான் பிரசாதம்னு ஊர் நம்பறதும் சரின்னா, அந்தக் கிழவி அந்தரங்கமாயும், அன்பாயும் தர்றதை அவன் ஏத்துக்க மாட்டான்னு நினைக்க நான் யாரு? அதுக்காக அவன் காத்துண்டு இருக்கான். பத்து நாளா நான் பாலகிருஷ்ணனை பட்டினி போட்டேனோ’ என்றெல்லாம் அப்பண்ணாவின் மனம் குடைந்தது.
அன்று வீடு திரும்பும்போது அவர் கோயிலின் வெளிப் பிரகாரக் கதவுகளை இழுத்து மூடாமல் – நன்கு விரியத் திறந்து வைத்துவிட்டே போனார்.
சில நாட்களுக்குப் பிறகு இரவு ஒன்பது மணிக்கு மேல் இலுப்பைத் தோப்பில் ஒரு மரத்தடியில் அடுப்பு எரிந்து கொண்டிருந்ததை அப்பண்ணா பார்த்துக் கொண்டே வீட்டுக்குப் போனார். அதில் என்னமோ கொதிக்கிறது. அப்பண்ணா மேல் துண்டால் மூக்கைப் பிடித்துக் கொள்ளுகிறார்.
பாவம், அவர் பக்தர்தானே! பகவானா என்ன?
-----------------
44. உண்மை சுடும்
அது சோமநாதனின் கண்களை உறுத்திற்று. பரமஹம்சரும் விவேகானந்தரும் இருபுறமும் இருக்க, அந்த வரிசையில் தனது படத்தையும் வைத்திருக்கும் கோலத்தை முகம் சுளித்து யோசித்தவாறு மூக்குக் கண்ணாடியை நன்றாக உயர்த்திவிட்டுக் கொண்டு எழுந்து, சுவரருகே சென்று கூர்ந்து நோக்கினார் சோமநாதன்.
அப்போது ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு வர உள்ளே சென்றிருந்த அவரது மருமகள் கோதை, கையிலேந்திய கப் அண்ட் ஸாஸருடன் ஹாலுக்குள் வந்தாள். சோமநாதன் அவளைத் திரும்பிப் பார்த்தார்.
“இதெல்லாம் யாருடைய வேலை?” என்று தன் படத்தை ஆள் காட்டி விரலால் சுட்டியவாறு கேட்டார்.
கையிலிருந்ததை டீபாயின் மீது வைத்துவிட்டு அவரருகே வந்து நின்று அந்தப் படங்களைப் பார்த்தவாறு கோதை சொன்னாள்: “நான் இந்த வீட்டுக்கு வர்ரதுக்கு முன்னாலிருந்தே இந்தப் படம் இங்கே இருக்கு. தன் வணக்கத்துக்குரிய மேதைகளின் திருவுருவங்கள் இவைன்னு நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் அவர். என் கிட்டேயும் அப்படித்தான் சொன்னார்?…” அவள் அதைச் சொல்லி முடிக்குமுன், மூக்குக் கண்ணாடியைக் கழட்டி மேலே போர்த்தியிருந்த சால்வையில் துடைத்தவாறு கிளுகிளுத்த சிரிப்புடன் அவர் சொன்னார்: “என்ன விசித்திரமான இணைப்பு… ஆஸ்திகச் செம்மல்களான அவர்கள் நடுவே, நிரீச்வரவாதியான என் படமா?…” என்று முனகியவாறே, முழங்கையில் தொங்கிய கைத் தடியை வலது கையில் எடுத்து மௌ¢ள ஊன்றி நடந்து சோபாவில் வந்தமர்ந்தார் சோமநாதன்.
கோதை ஹார்லிக்ஸை எடுத்து அவர் கையில் தந்தாள். வயோதிகத்தால் தளர்ந்த கைகள் நடுங்க அவர் அதைப் பருகினார். சூடான பானத்தைப் பருகியவுடன் அவரது நெற்றி வேர்த்திருப்பதைக் கண்ட கோதை, மின்சார விசிறியைச் சுழல விட்டாள். காற்றில் அவரது நரைத்த அடர்ந்த கிராப்புச் சிகை நெற்றியில் விழுந்து கொத்தாய்ப் புரண்டது. சோமநாதனின் பார்வை ஹாலை நோட்டமிட்டு அங்கிருந்த ரேடியோ, அந்த மூலை ஸ்டாண்டில் உள்ள புத்தர் சிலை, ஜன்னலுக்குப் போட்டிருந்த வெளிறிய நீல நிறத் திரைச் சீலை முதலிய பொருட்களைக் குறிப்பாகக் கவனித்த பின், கோதையின் மேல் வந்து நிலை பெற்றது. அவர் விழிகளில் அன்புணர்ச்சி மின்னிப் புரள ஒரு குழந்தைபோல் புன்னகை காட்டினார்.
அந்தப் புன்னகை ‘அடி, சமர்த்துப் பெண்ணே, வீட்டை ரொம்ப அழகா வெச்சிருக்கே’ என்று பாராட்டுவது போலும், ‘சந்தோஷமாயிருக்கிறாயா மகளே’ என்று விசாரிப்பது போலும், ‘உன்னைப் பார்க்க எனக்கு மிகத் திருப்தியாயிருக்கிறது’ என்று பெருமிதத்தோடு குதூகலிப்பது போலும் அமைந்திருந்தது.
அத்தனை அர்த்தங்களுக்கும் பதில் உரைப்பதுபோல் அடக்கமாய், பெண்மை நலன் மிகுந்த அமைதியோடு பதில் புன்னகை சிந்தினாள் கோதை. அவர் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்து, “ஓ! மணி அஞ்சாகிறதே… காலேஜிலிருந்து வர இவ்வளவு நேரமா! எனக்கு ஏழு மணிக்கு ரயில்…” என்றவாறு வெளியே எட்டிப் பார்த்தார்.
அதே நேரத்தில் காம்பவுண்ட் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டுக் கோதை ஆவலுடன் வெளியே நடந்தாள். பரமேஸ்வரனை இரு கைகளிலும் அணைத்துக் கொள்ள பரபரத்த உடலுடன் எழுந்து நின்றார் சோமநாதன்.
“அவர் இல்லை… போஸ்ட்மேன் – அவருக்கு ஏதோ ஒரு கடிதம்” என்று கூறியவாறு, அந்தக் கவரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே உள்ளே போனாள் கோதை. சோமநாதன் அருகிலிருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்துப் புரட்டியவாறு பரமேஸ்வரனின் வருகைக்குக் காத்திருந்தார்.
பரமேஸ்வரன் தற்போது தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றும் அதே கல்லூரியில்தான் பத்தாண்டுகளுக்கு முன் ஆங்கிலப் புரபஸராகப் பணியாற்றினார் சோமநாதன். அவரிடம் ஒரு மாணவனாக இருந்து அவர் ஓய்வு பெறுவதற்குள் அதே கல்லூரியில் பரமேஸ்வரன் விரிவுரையாளராகப் பணியேற்கும் அந்த இடைக்காலத்தில், வேறு எவரிடமும் ஏற்பட்ட உறவினும் வலுமிக்க பாந்தவ்யமும் நட்பும் அவர்களிடையே உருப்பெற்றது.
சோமநாதன் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றுச் சொந்தக் கிராமத்துக்குப் போய்விட்ட பிறகு பரமேஸ்வரனுக்கும், சோமநாதனுக்குமிடையே ஏதோ சில சமயங்களில் கடிதப் போக்குவரத்து இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன் சோமநாதன் ஏதோ காரியமாகச் சென்னைக்கு வந்தபோது பத்தாண்டுகளுக்குப் பிறகு சோமநாதனும் பரமேஸ்வரனும் சந்திக்க நேர்ந்தது. பரமேஸ்வரனைக் கண்ட சோமநாதன் ஒரு விநாடி திகைத்தே போனார். அதற்குக் காரணம் மாணவராய் இருந்து, விரிவுரையாளரான பரமேஸ்வரன் பேராசிரியராய் உயர்ந்திருப்பது மட்டுமல்ல; புஷ் கோட்டும், கண்ணாடியும் தரித்த, காதோரம் சிகை நரைத்த – சோமநாதன் எதிர்பாராத – பரமேஸ்வரனின் முதிர்ந்த தோற்றம்தான். அதனினும் முக்கிய காரணம் நாற்பது வயதாகியும் அவர் பிரம்மச்சாரியாய் வாழ்ந்து வருவது…
தன் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசானைக் கண்டதும் அவரது கைகளைப் பற்றி அன்புடன் கண்களில் ஒற்றிக் கொண்டு நின்ற பரமேஸ்வரனைப் பாசத்துடன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறு, “நீங்கள் இன்னும் பிரம்மச்சாரியாக இருந்து வருவதைக் காணா ஏதோ ஒரு குற்ற உணர்வு என் மனத்தை உறுத்துகிறது… இந்த உறுத்தல் அர்த்தமற்றது என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் சோமநாதன்.
சோமநாதன் எப்போதும் தனது அபிப்பிராயத்தை அழுத்தமாகக் கூறிவிடுவார். ஆனால் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டார். யாரிடம் தன் அபிப்பிராயத்தைக் கூறுகிறாரோ அவரிடமே ஒரு வகை ஆமோதிப்பை, அல்லது உடன்பாட்டை, விரும்புகிற வகையில் மற்றவரின் அபிப்பிராயத்தையும் எதிர்பார்ப்பார். அது அவரது சிறப்பான பண்புகளில் ஒன்று என்பதைப் பரமேஸ்வரனும் அறிவார்.
பரமேஸ்வரனுக்குப் பெற்றோரோ மிக நெருங்கிய பந்துக்களோ யாரும் தற்போது இல்லை. அவர் தனியன். பரமேஸ்வரனைப் போன்ற அடக்கமான தனியர்களின் வாழ்க்கையில் ‘திருமணம்’ என்ற வாழ்வின் திருப்பம் நிகழ்வதெனின், நமது இன்றைய சமூகத்தில் நண்பர்களின் – பொறுப்பும் அந்தஸ்தும் மிகுந்த நண்பர்களின் – உதவியால்தானே நடந்தேற வேண்டும்! அப்படிப்பட்ட நண்பனாய், வழிகாட்டியாய், ஞானாசிரியனாய் இருந்து வந்த சோமநாதனின் கடமையல்லவா அது? – என்பனவற்றையெல்லாம் நினைத்துத் தான் அவர் தன்னிடம் இவ்விதம் கேட்கிறார் என்பதைப் பரமேஸ்வரன் உணர்ந்தார்.
“ஏன்? பிரம்மசரியம் ஒரு குற்றமா?” என்று சிரித்த வண்ணம் கேட்டார் பரமேஸ்வரன்.
“அது குற்றமுமில்லை; சரியுமில்லை. குறையற்ற ஓர் ஆண் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க ஒரு லட்சியம் வேண்டும். இப்படி ஒரு காரியத்தோடு இருந்தால் அந்தப் பிரம்மச்சரியம் சரியானது ஆகும். இல்லாமல் பிரம்மச்சரியத்துக்காகவே ஒருவன் பிரம்மசாரியாயிருந்தால் அது சரியற்றதும், பின்னால் ஒரு காலத்தில் குற்றமும் ஆகும். எதற்குமே ஓர் அர்த்தம் வேண்டும்; அர்த்தமே இல்லையென்றால் அதுக்குப் பெயரே அனர்த்தம்! உங்கள் பிரம்மச்சரிய விரதத்துக்கு ஒரு அர்த்தம் உண்டுன்னா, நான் என் அபிப்பிராயத்தை மாத்திக்கிறேன்” என்றார் சோமநாதன்.
பரமேஸ்வரன் ஒரு விநாடி யோசித்தார்; அது யோசனையல்ல; அது ஒருவகை பிரமிப்பு. பிறகு புன்னகை புரிந்தார். அது புன்னகையல்ல! அது ஒருவகை சரணாகதி.
அந்தச் சந்திப்பின்போது அவர்கள் இருவரும் வெகுநேரம் சம்பாஷித்தனர். பத்து வருஷங்களுக்கு முன்பு சோமநாதனுடன் பழகியபோது அவரை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டு எந்த அளவுக்கு அவரிடம் மதிப்பு வைத்திருந்தாரோ, அதை விடவும், பத்தாண்டு முதிர்ச்சியின் பிறகு தனது முதிர்ந்த அறிவோடு அவருடன் சம்பாஷிக்கையில் பன்மடங்கு அதிகம் புரிந்து கொண்டு சோமநாதனிடம் முதிர்ந்த மதிப்பும் முழுமையான சரணும் அடைந்தார் பரமேஸ்வரன்.
பரமேஸ்வரனைப் பிரிந்து ஊர் திரும்பும்போது சோமநாதன் லீவில் தனது கிராமத்துக்கு வரவேண்டுமென்று அவரை அழைத்தார்.
“இந்த அழைப்பைக் கடமை உணர்ச்சியோடு விடுக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறிப் பின் தமிழில் தொடர்ந்து சொன்னார்: “சிறு வயதிலிருந்தே தாய் தகப்பனில்லாம என் தங்கை மகள் ஒருத்தி என் கிட்டே வளர்ப்புப் பெண்ணாய் இருக்கா… அவளும் கல்யாணமே வேணாம்னு இருந்தவ… இப்ப அவள் மனம் அதற்குப் பக்குவப்பட்டிருக்கிற மாதிரி தோணுது. எதுக்கும் நீங்க ஒரு தடவை வாங்க. பரஸ்பரம் சரின்னா நடத்தி வைக்கிறது என் கடமை…” – குலம் கோத்திரம் விசாரிக்காமல், மனிதனின் தரத்தையும் நட்பையும் உத்தேசித்து நடக்கும் அவரது உயரிய பண்பை உள்ளூரப் போற்றினார் பரமேஸ்வரன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தத் திருமணம் நடந்தது. திருமணம் நிகழுமுன் பரமேஸ்வரனுக்கு ஒரே ஒரு விஷயம் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.
கோதைக்கு இருபது வயது. பரமேஸ்வரனுக்கு நாற்பது வயது.
பரமேஸ்வரனின் இந்தத் தயக்கத்தை உணர்ந்தபோது சோமநாதன் விளக்கினார்: “வயதில் இவ்வளவு வித்தியாசம் வேணாம்னு நீங்கள் நெனச்சா உங்கள் தனிப்பட்ட விருப்பம்ங்கற முறையில் அது சரிதான். அதற்கு வேறே காரணம் இல்லேன்னாலும் அப்படி ஒரு தனிப்பட்ட மனோபாவனை உங்களுக்கு இருக்குங்கற ஒரு காரணத்தை உத்தேசிச்சே இந்த யோசனையைக் கைவிட்டு விடலாம்; நீங்களே யோசிச்சு முடிவு செய்ய வேண்டியது இது.”
கறாராக, முடிவாக என்ன கூறுவது என்று பரமேஸ்வரனுக்குப் புரியவில்லை. சோமநாதன் தனது அபிப்பிராயத்தை வற்புறுத்துகிறவருமில்லை. அவரது யோசனையை மறுத்துவிட்டால் வருத்தப்படக் கூடியவருமில்லை என்று பரமேஸ்வரன் நன்கு உணர்ந்ததனாலேயே, இதில் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் குழம்பினார்.
அவரது மேலோட்டமான குழப்பத்தையும் உள்ளார்ந்த சம்மதத்தையும் புரிந்துகொண்ட சோமநாதன் பரமேஸ்வரனிடம் தீர்மானமான தோரணையில் கேட்டார்: “ஆமாம், உங்கள் தயக்கத்திற்கான பிரச்னைதான் என்ன?”
பரமேஸ்வரன் – தனது நாற்பது வயதை மறந்து – ஒரு வாலிபனுக்கே உரிய சங்கோஜத்துடன் தலைகுனிந்து மெல்ல இழுத்தவாறு கூறினார்: “வயது வித்தியாசம்தான்…”
“ஓ!” என்று கூறிச் சிரித்தார் சோமநாதன்: “நான் தான் சொன்னேனே, இந்த வித்தியாசம் அதிகம்னு நீங்க நெனைச்சா, இந்த முயற்சியைக் கைவிட்டுடலாம்னு… உங்க மனசிலே விருப்பம் இருந்து, பார்க்கறவங்க என்ன சொல்லுவாங்களோங்கற போலிக் கூச்சத்திற்காக ஒரு காரியத்திலே தயக்கம் காட்டறது அவசியமில்லாதது; அர்த்தமில்லாதது…”
“உலகத்திற்காகவும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு இல்லையா?” என்று உள்ளங்கையில் கோடு கீறினார் பரமேஸ்வரன்.
“ஆமாம் ஆமாம்; உலகத்திற்காகக் கொஞ்சம் என்ன, முழுக்க முழுக்க யோசிக்கணும். ஆனால், பரமேஸ்வரன்… உலகம்ங்கறது உங்களைச் சுத்தியுள்ள சிறு வட்டம் மட்டுமில்லை; அது எத்தனையோ கண்டங்களாய், நாடுகளாய்ப் பரந்து கிடக்கு… யோசிச்சுப் பார்த்தா அங்கெல்லாம் இந்த வித்தியாசம் ஒரு பொருட்டில்லை; நியாயமானது கூட! உங்கள் வசதிக்கு உங்கள் உலகத்தைச் சுருக்கிக் கொள்ள நீங்கள் விரும்பினா – ஒரு சின்ன அரட்டைக் கூட்டமே உலகம்னு பார்க்காதீங்க – அந்த உலகத்தை உங்களுக்குள்ளேயே உங்க ஹிருதயத்துக்குப் பக்கத்திலே எளிமையா ஒரு மனிதனின் உலகம்னாவது பாருங்களேன்! அதன்படி சுயமான முடிவு செய்யுங்களேன்..” என்று சொல்லி, மௌனமாய்ச் சற்று கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார் சோமநாதன்.
‘இந்த மனிதர்தான் மனுஷனின் மனத்துக்குள் நுழைந்து எப்படி தீர்க்கமாய்ப் பார்க்கிறார்!’ என்று வியந்து நோக்கினார் பரமேஸ்வரன்.
கண்களைத் திறவாமலே தொடர்ந்து பேசினார் சோமநாதன். “ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் முடியும். கல்யாணத்தின் உண்மைத் தாத்பரியம் அதுவல்ல. தனக்காக வாழ்ந்துகிட்டிருந்த ஒருவனோ ஒருத்தியோ இன்னொருவர்க்காக வாழறதின் ஆரம்பமே திருமணம். சமூக வாழ்வின் சிறு வட்டம் – அடிப்படை வட்டம் – தாம்பத்யம். இந்த அடிப்படைக் கூட்டுறவிலேயே இந்தத் தியாக உணர்வு ஏற்பட்டாத்தான் சமூக வாழ்வே சிறப்பாய் அமையும். ஆனால், ‘எனக்காக, என் சுகத்துக்காக’ங்கற நோக்கிலேயே ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிற ஒரு சுயநலப் போக்கினாலேதான், தனி மனுஷனின் குடும்ப வாழ்க்கையும் சரி, சமூக வாழ்க்கையும் சரி, அதிருப்தியும் துன்பமுமா மாறிப்போகுது… நீங்க உங்களுக்காக அவளைக் கல்யாணம் செய்து கொள்றதாக நினைக்கக் கூடாது… அவளுக்காக…! இதையேதான் நான் அவளுக்கும் சொல்லியிருக்கேன்… உறவின் அடிப்படையே இந்த பரஸ்பர உணர்வுதான்னு நீங்க நினைக்கிறீங்களா…?”
பரமேஸ்வரன் ஒரு விநாடி யோசித்தார். அது யோசனையல்ல…
இந்த இரண்டு வருட மணவாழ்க்கை, வாழ்க்கையின் அர்த்தத்தை அவருக்கு உணர்த்திற்று. கோதையில்லாமல் அவரால் இனி வாழ இயலாது என்ற உணர்வை, ஒரு பந்தத்தை – அவர் ஏற்படுத்திக் கொண்டு விட்டார் – அல்லது அவள் ஏற்படுத்தி விட்டாள். தன்னை ஒரு முழு மனிதனாகச் சோமநாதனும், தனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கோதையும் உருவாக்கி விட்டதை உணர்ந்து அவரைத் தனது வணக்கத்துக்குரிய வழிகாட்டியாகவும் அவளைத் தனது உயிருக்கிணையான துணையாகவும் ஸ்வீகரித்தார் பரமேஸ்வரன்.
தங்களது தாம்பத்ய வாழ்க்கை ஆனந்தமாயிருப்பதை, பரஸ்பரத் திருப்தியும் நிறைவும் மிகுந்து விளங்குவதை ஒருநாள், இந்த வயது வித்தியாசம் குறித்துக் கோதையிடம் அவர் கேட்டு, அவளுரைத்த பதிலில் அவர் நன்கு உணர்ந்தார்.
மங்கிய ஒளி வீசும் சிறு விளக்கின் வெளிச்சத்தில் சயன அறையின் அந்தரங்கச் சூழ்நிலையில் அவரது மார்பில் சித்திரம் வரைந்தவாறு சாய்ந்து, செவியருகே இதழ்கள் நெருங்க, ஆத்மார்த்தமான ரகசியக் குரலில் அவள் பேசிய போது அவருக்கு ரோமாஞ்சலி செய்தது…
“நீங்க கேட்டது மாதிரி, ஆரம்பத்திலே எனக்கும் இப்படி ஒரு நெனைப்பு இருந்தது… ஆனா, ஆனா… இப்ப தோணுது; எல்லோருமே உலகத்திலே இந்த வித்தியாசத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாருடைய வாழ்க்கையும் சொர்க்கமாயிருக்கும்னு… ஒத்த வயசாயிருந்தா விட்டுக் குடுக்கற குணமோ இணக்கமாகிற குணமோ இருக்காதுன்னு தோணுது… இந்த வித்தியாசத்தினாலேயே ஒரு அந்நியோன்யமும், ஒரு… ஒரு… எனக்குச் சொல்லத் தெரியல்லே… நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். அவ்வளவுதான் சொல்ல முடியுது” என்று அவரது கேள்விக்குப் பதிலாக அவள் வெகு நேரம் சிரமப்பட்டு வார்த்தைகளைத் தேடிப் பிடித்துத் தன் மனத்தைத் திறந்து அவர் மனத்துள் கொட்டியபோது, இருவர் உள்ளமும் நிறைந்தே வழிந்தன…
காஷ்மீரத்து ஏரிகளிலிருந்து கன்னியாகுமரி முக்கடல் வரை, பின்னணியாகக் கொண்டு அவர்கள் இணைந்து காட்சி தரும் போட்டோக்கள் நிறைந்த அந்த ஆல்பத்தின் மூலமே அவர்களின் ஆனந்தமயமான குடும்ப வாழ்க்கையை உணர்ந்தார் சோமநாதன்.
ஆல்பத்தின் கடைசி ஏட்டைப் புரட்டி அதை மூடியபோது, தன் எதிரே “எப்போ வந்தீங்க?” என்று ஆர்வமாய்ப் புன்னகை பூத்து, கரம் குவித்து நிற்கும் பரமேஸ்வரனை ஹால் வாசற்படியில் கண்டு, இரண்டு கைகளையும் விரித்தவாறு எழுந்து நின்ற சோமநாதன் குழந்தைபோல் சிரித்தார். பிறகு அருகில் வந்த பரமேஸ்வரனின் கையைக் குலுக்கித் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“திடீர்னு ஒரு அவசர வேலையா வந்தேன். இப்ப ஏழு மணி ரயில்லே போகணும்” என்று அவர் கூறியது கேட்டு பரமேஸ்வரனின் முகம் சுருங்கிற்று; “இப்பவே மணி அஞ்சரை ஆகுது. சரி, நான் உங்களோட ஸ்டேஷன் வரை வரேன்” என்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
“ஆஹா! அதற்கென்ன அவசரம்? இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு. நீங்க உடை மாத்தி, காபி சாப்பிட்டுட்டுப் புறப்படலாம்.”
அந்த நேரத்தைக் கூட வீணாக்க மனமில்லாமல் ஹாலில் நின்று சோமநாதனைப் பார்த்தவாறே கோட்டைக் கழற்றினார் பரமேஸ்வரன். பக்கத்தில் வந்து தயாராய்க் கை நீட்டி அதை வாங்கிக் கொண்டு உள்ளே போன கோதை திரும்பி வரும்போது டவலுடன் வந்தாள். டவலைத் தோள்மீது போட்டுக் கொண்டு சோபாவிலமர்ந்து பூட்ஸ்களைக் கழற்ற ஆரம்பித்த பரமேஸ்வரனிடம், ஹாலில் இருந்த அந்தப் படங்களைப் பார்த்தவாறு கூறினார் சோமநாதன்: “இந்த வினோதமான இணைப்பைப் பார்க்க எனக்கு வேடிக்கையாக இருக்கு!”
பரமேஸ்வரனும் தலை நிமிர்ந்து பார்த்தார்: “இதில் என்ன வேடிக்கை? – ஒருத்தர் எனக்கு அசைக்க முடியாத இறைநம்பிக்கை தந்தவர். இன்னொருத்தர் பிரம்மச்சரியத்தின் மேன்மையை எனக்கு உணர்த்தியவர். நடுவில் இருக்கிறவர் பிரம்மச்சரியத்தின் அர்த்தத்தை உணர்த்தி வாழ்க்கைக்கு வழி காட்டியவர்… தாயும் தகப்பனும் இல்லாத எனக்கு இரண்டுமாகிய குருநாதர். என் பெற்றோரின் படம் என் கிட்டே இல்லாத குறையையும் இந்தப் படம் தீர்த்து வச்சிருக்கு… இந்த மூவரும் எனது வணக்கத்துக்குரிய ஞானிகள்…”
“ஓ! டூ மச்! நீங்கள் என்னை அதிகமாய்ப் புகழறீங்க” – என்று தோளைக் குலுக்கிக் கொண்டு எளிமையுணர்வோடு சிரித்தார் சோமநாதன்.
“- இல்லை, நான் உங்களை எளிமையாய் வழிபடுகிறேன்” என்று புனித உணர்வுடன் எழுந்து நின்றார் பரமேஸ்வரன்.
“வழிபாடா?” என்று புருவங்களைச் சுளித்தார் சோமநாதன். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
“வழிபாட்டில் நம்பிக்கை, வழிபடுகிறவனுக்குத்தானே தேவை! அதன் மூலம் எனக்கொரு மனோபலம் உண்டாகுது… உங்களுக்கு அதில் ஆட்சேபணையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனார் பரமேஸ்வரன்.
“மிகவும் உணர்ச்சி வயப்பட்ட மனிதர்!” என்று முனகிக் கொண்டார் சோமநாதன்.
சற்று நேரத்திற்குப்பின் தூய வேட்டியும் முழுக்கைச் சட்டையும் அணிந்து, நெற்றியில் பளீரெனத் தீட்டிய விபூதியுமாய் வந்த பரமேஸ்வரன் சோபாவில் வந்து அமர்ந்தார். கோதை ஹார்லிக்ஸ் ‘கப்’புடன், சற்று முன் வந்த கடிதத்தையும் கொண்டு வந்து நீட்டினாள். பரமேஸ்வரன் அமைதியாய் ஹார்லிக்ஸைக் குடித்தபின் கவரைப் பிரித்துக் கடிதத்தைப் படித்தார்.
“பேராசிரியர் பரமேஸ்வரன் அவர்களுக்கு!
இது ஒரு மொட்டைக் கடிதம் என்று தூக்கி எறிந்து விட முடிவு செய்வதற்கு முன், மொட்டைக் கடிதங்களும் உண்மைகளைக் கூற முடியும் என்றறியவும்.
உமது வாழ்க்கையே ஒரு மகத்தான பொய்யை அடித்தளமாகக் கொண்டு எழுந்து நிற்கிறது. நீர் வணங்கத் தகுந்த தெய்வமாகக் கருதியிருக்கிறீரே, அந்த சோமநாதன் – அவர் எத்தகைய பேர்வழி என்பதை நீர் அறிய மாட்டீர்! கோதையைப் போன்ற குணவதி உமக்கு மனைவியாக வாய்த்தது குறித்து குதூகலப்படுகிறீரே, அந்தக் கோதையின் கடந்த காலம் பற்றியும் நீர் அறிய மாட்டீர்! திருமணவாவதற்கு முன் அவள் ஒருவனின் காதலியாய் இருந்து, கர்ப்பமுற்ற பின் கைவிடப்பட்டவள். தெய்வாதீனமாகவோ, அந்தப் பெரியவரின் ஆலோசனையின் விளைவாகவோ அது குறைப் பிரசவமாகப் போயிற்று. உம்மை ஏமாற்றி அவளைக் கட்டி வைத்து விட்டார் உமது குருநாதர். நீர் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தலாம். உம்மை நீரே ஏமாற்றிக் கொள்வதன் விளைவே இந்த மகிழ்ச்சி.”
கையெழுத்தில்லாத அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தவுடன் அதைக் கிழித்தெறிந்துவிட அவரது விரல்கள் துடித்தன. ஒரு விநாடி தயக்கத்துக்குப் பின், ஏனோ அக்கடிதத்தை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
“ஏதாவது விசேஷமான செய்தியா?” என்று கேட்டார் சோமநாதன்.
“ம்… அதில் ஒண்ணுமில்லை…” என்று பொய்யாகச் சிரித்தார் பரமேஸ்வரன். அந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாக்காமல் மனத்திலிருந்து ஒதுக்கி விடவே முயன்றார் அவர். அவர் பார்வை ஹாலில் மாட்டியிருந்த அந்தப் படங்களின் மீதும், பிறகு சுவரோரமாகக் கையில் ஒரு பத்திரிகையுடன் தேவதை போல் நின்றிருக்கும் கோதையின் மீதும், இறுதியாகத் தனது மௌனத்தையும், தவிப்பையும் எடை போடுவது போல் தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் சோமநாதன் மீதும் மாறி மாறித் திரும்பியபோது, திடீரென அவருக்கு ‘இந்த மனிதர் தனது உள்ளத்து உணர்வுகளைக் கண்டுபிடித்து விடுவாரோ’ என்ற அச்சம் பிறந்தது.
அவர் முகம் திடீரெனக் கலவரமுற்றிருப்பதைக் கோதை உணர்ந்து கொண்டாள். அருகில் வந்தாள். “ஏன் தலை வலிக்கிறதா?” என்றாள்.
“இல்லை…” என்று அவர் விழிகளை உயர்த்தி, அவளைப் பார்த்தபோது, அவரது கண்கள் சிவந்து பளபளத்தன.
“கண்ணெல்லாம் திடீர்னு செவந்து இருக்கே” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். “லேசாச் சூடும் இருக்கு.”
“எங்கே பார்ப்போம்” என்று எழுந்து வந்த சோமநாதன் பரமேஸ்வரனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து, “ஒண்ணுமில்லே… களைச்சுப் போயிருக்கீங்க. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க… நான் புறப்படறேன். அடுத்த வாரம் நான் வரும்போது ரெண்டுநாள் தங்குவேன்…” என்று தோளில் தட்டிக் கொடுத்தார்.
“எனக்கு ஒண்ணுமில்லே… கொஞ்சம் வெளியே போனாலும் நல்லாத்தானிருக்கும்… நான் உங்களுடன் ஸ்டேஷன் வரை வருவேன்… நேரம்தான் இன்னும் இருக்கே… இதோ வரேன்” என்று மிகுந்த சிரமத்தோடு புன்னகை காட்டி விட்டு எழுந்து சென்று, கண்ணாடியில் தானே தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டார் பரமேஸ்வரன். பிறகு சற்று நேரம் தனியாக இருக்க வேண்டி, மாடியில் போய் வானத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தார். சட்டைப் பையிலிருந்த கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தார். ‘மொட்டைக் கடிதங்களும் உண்மைகளைக் கூற முடியும் என்றறியவும்… உமது வாழ்க்கையே ஒரு மகத்தான பொய்யை அடிப்படையாய்க் கொண்டு எழுந்து நிற்கிறது’ என்ற இரண்டு வாக்கியங்களும், அந்தக் கடிதத்தை நம்பவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் அவரை வதைத்தன.
திடீரென அவர் அந்தக் கடிதத்திடம் கேட்டார்.
‘சரி, அப்படியே இருந்தால்தான் என்ன? கோதையின் கடந்த காலம் எத்தகையது என்பது பற்றி எனக்கென்ன கவலை? இன்று அவள் எனக்கு ஏற்ற மனைவி. அப்பழுக்கில்லாத தாம்பத்தியம் நடத்துகிறோம் நாங்கள்… ஒரு தவறே நடந்திருந்தாலும் அதனால் ஒருவருக்கு வாழவே உரிமை அற்றுப் போகுமா, என்ன?…’ என்று வாழத் தெரிந்த தெம்புடன் கேட்டபோது, காற்றில் அந்தக் கடிதம் படபடத்தது. அவர் தன் விரல்களைச் சற்றி நெகிழ்த்தினால் அது பறந்தே போயிருக்கும்… ஆனால் அவர் விரல்கள் அதை இறுகப் பிடித்திருந்தன. அதைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்தெறிய, ஒரு வெறியும், அதைச் செய்ய முடியாமல் ஓர் உணர்வும் அவரைத் தடுத்தன.
‘இந்தக் கடிதம் என் மனைவியைப் பற்றிப் பேசுகிறது… இது கூறுவது உண்மையாயினும் சரி, பொய்யாயினும் சரி, எங்கள் உறவு எவ்வகையிலும் ஊனமுறாது. ஆமாம், அவள் இல்லாமல் என்னால் வாழ இயலாது. நடந்தது பற்றிக் கவலையில்லை’ என்று ஆன்ம உறுதியோடு தலை நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். அடுத்த விநாடி அவர் நெற்றி சுருங்கிற்று… கண்கள் இடுங்கின… உள்ளில் ஒரு குரல் ரகசியமாகக் கேட்டது.
‘எனினும் நடந்ததா என்று தெரிய வேண்டுமே! உண்மை எனக்குத் தெரிய வேண்டுமே!’ என்ற ஓர் எண்ணம் பெருகி வந்து சித்தம் முழுவதும் கவிந்தது. ‘சீ, இந்த அற்பத்தனமான கடிதம் என்னை இவ்வளவு நிலைகுலையச் செய்வதா?…’ என்று எண்ணி அதை எடுத்துக் கிழிக்கையில், பாதியில் அவர் கைகள் தடைப்பட்டு நின்றன. கடிதம் சரிபாதியில் கால்பாதி கிழிக்கப்பட்டிருந்தது. அதில்…
‘மொட்டைக் கடிதங்களும் உண்மைகளைக் கூற முடியும்!…’ என்று வரிகள்!
‘ம்… உண்மையா? நீ கூறுவது அனைத்தும் சில பொறாமைக்காரர்களின் விஷமத்தனம் என்று அறிந்தபின் நானும் கோதையும் சேர்ந்து உன்னைக் கிழித்தெறிவோம். அல்லது ‘கடந்த காலத்தின் நினைவே, எங்கள் வாழ்விலிருந்து விலகிப் போ’ என்று இருவரும் சேர்ந்து உன்னைக் கொளுத்துவோம்’ என்று தீர்மானம் செய்து கொண்டார்.
‘ஆனால், உண்மையை யார் மூலம் அறிவது? இந்தக் கடிதத்தை நிர்மூலமாக்கவே இன்று அவர் வந்திருக்கிறாரோ?’ என்று எண்ணிய ஆர்வத்தில், வேகமாய் மாடியிலிருந்து இறங்கினார் பரமேஸ்வரன்.
ஒரு டாக்ஸியில் ஸ்டேஷனை நோக்கி இருவரும் போய்க் கொண்டிருக்கையில், மௌனம் கலைந்து பேசினார் பரமேஸ்வரன்.
“உங்களுக்கு என்னைத் தெரியும்… நாங்கள் – நானும் கோதையும் உங்கள் ஆசிர்வாதத்தால் எவ்வளவு புனிதமான வாழ்க்கையை நடத்தறோம்னு தெரியும்” என்று சொல்லிவிட்டு, மேலே பேசமுடியாமல் பாக்கெட்டிலிருந்து அந்தக் கவரை எடுத்தார்.
சோமநாதனுக்கு ஒரு விநாடி திகைப்பு.
பரமேஸ்வரன் டாக்ஸிக்குள்ளிருக்கும் சிறு விளக்கின் ஸ்விட்சைப் போட்டு, அந்த வெளிச்சத்தில் அக்கடிதத்தை நீட்டியவாறு சொன்னார்: “சுத்தி வளைக்காமல் ‘இது உண்மை’ அல்லது ‘பொய்’… ரெண்டில் ஒண்ணு சுருக்கமாகச் சொன்னாப் போதும். நீங்க சொல்ற உண்மையான பதில் – எதுவாயிருந்தாலும் – யாரையும் எதையும் பாதிக்காதுங்கறது உறுதி” என்று கடிதத்தைத் தன்னிடம் நீட்டும் பரமேஸ்வரனின் கரம் நடுங்குவதைக் கவனித்தார் சோமநாதன். பின்னர் அமைதியாய் முகத்தில் எவ்விதச் சலனமுமில்லாமல், பாதி கிழிந்த அக்கடிதத்தைப் படித்தார். அவர் முகத்தையே வெறித்திருந்த பரமேஸ்வரன் “எனக்கு உண்மை தெரிய வேணும். ஆமாம்!… அவ்வளவுதான்” என்று படபடத்தார்.
சோமநாதன் அவரைப் பார்த்துக் குழந்தைபோல் சிரித்தார். அந்தச் சிரிப்பு ‘உங்கள் பலஹீனம் இந்த உண்மையை அறியத் துடிக்கும் துடிப்பில் ஒளிந்து கிடக்கிறது’ என்பது போல் இருந்தது.
பரமேஸ்வரனைத் தட்டிக் கொடுத்தவாறு சமாதானப்படுத்தினார் சோமநாதன்: “நீங்க இவ்வளவு உணர்ச்சி வயப்பட்டவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சதில்லே; இது கெடுதி… இப்படி இருந்தா உங்களுக்கு ‘பிளட் பிரஷர்’ வந்துடும்.”
“நான் உண்மையைத் தேடித் தவிக்கிறேன்” என்று கெஞ்சினார் பரமேஸ்வரன்.
“உண்மையைத் தேடியா? அது எதுக்கு நமக்கு? அது சகலமும் துறந்த துறவிகளின் தொழிலாச்சே!” என்று சிரித்தார் சோமநாதன்.
பரமேஸ்வரனுக்கு சோமநாதனிடம் கொஞ்சம் கோபம் கூட வந்தது, அவரது விளையாட்டுப் பேச்சைக் கேட்க. எனினும் மௌனமாயிருந்தார்.
“மிஸ்டர் பரமேஸ்வரன்! முதல்லே இந்தக் கடிதத்தின் நோக்கம் கீழ்த்தரமானதுங்கறதெ நீங்க புரிஞ்சு கொள்ளணும்” – ஏதோ சொல்ல ஆரம்பித்தார் சோமநாதன். பரமேஸ்வரன் குறுக்கிட்டுப் பிடிவாதமான குரலில் சொன்னார்: “இது சம்பந்தமா எனக்கு ஒரு வார்த்தையில்தான் பதில் வேணும் – உண்மை அல்லது பொய்.”
அந்தக் குரலின் கண்டிப்பையும், அந்தக் குரல் வழியே அவரது மன நிலையையும் உணர்ந்த சோமநாதன் “ஒரு வார்த்தையிலா?” என்று கேட்டுவிட்டு அவர் முகத்தைப் பார்த்தார்.
“ஆமாம், ஒரே வார்த்தையில் – அதை நீங்க சொன்னா நான் நிச்சயம் நம்புவேன்.”
ஒரு குழந்தையின் அல்லது ஒரு குடிகாரனின் வாக்குறுதியைக் கேட்டவர் போல் நம்பிக்கையற்றுச் சிரித்தார் சோமநாதன்.
“எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்தக் கடிதம் உங்களை இவ்வளவு தூரம் மாற்றிவிட்டதைக் காண… சரி கேளுங்கள் எனது பதிலை! ஒரே வார்த்தையில் சொல்லுகிறேன். பொய்!” என்று உதடுகள் துடிக்கக் கூறி அந்தக் கடிதத்தை அவரிடமே தந்தார் சோமநாதன்.
அதன் பிறகு இருவருமே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
சோமநாதனை ரயிலேற்றி விடை தந்து அனுப்பும்போது கூட, அவர் பரமேஸ்வரனிடம் அந்தக் கடிதம் குறித்துப் ‘பொய்’ என்ற அந்த வார்த்தைக்கு மேல் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
ஆனால் பரமேஸ்வரனுக்கோ சோமநாதன் தன்னிடம் இதுவரை பேசிய எவ்வளவோ பேச்சுக்களில் அவர் கூறிய அந்த ஒரு வார்த்தைதான் – ‘பொய்’ என்ற அந்த ஒரு பதம்தான் பொய்யெனத் தோன்றியது. அடுத்த நிமிஷம் தன் மனத்தில் அவ்விதம் தோன்றுவதற்காகத் தன்னையே அவர் நொந்து கொண்டார்.
‘சீ! எவ்வளவு அற்பமாக, கேவலமாக இந்தக் கடிதம் என்னை மாற்றி விட்டது! இதை நான் அவரிடம் காட்டி இது பற்றி கேட்டதே தப்பு… என்னைப் பற்றி அவர் எவ்வளவு மோசமான முடிவுக்கு வந்திருப்பார்…!’ என்று தனது செய்கைக்காக வருந்திக் குழம்பியவாறு வீடு வந்து சேர்ந்தார் பரமேஸ்வரன்.
அவர் வீட்டுக்குள் நுழையும் போது கோதை மாடியிலிருந்தாள். அவ்விதம் இருக்க நேர்ந்தால் பரமேஸ்வரன் நேரே மாடிக்குப் போவதுதான் வழக்கம். ஆனால் இன்று ஹாலிலேயே சோபாவில் உட்கார்ந்து எதிரே இருந்த அந்தப் படங்களை வெறித்துப் பார்த்தவாறிருந்தார்.
அவரை மாடியில் எதிர்பார்த்து, அவர் வராததால் கோதை ஹாலுக்கு இறங்கி வந்தாள்.
‘ஏன்? என்ன உடம்புக்கு?’ என்று அருகே வந்து நெற்றியைத் தொட்டாள். இப்போது சூடு இல்லை. தன் நெற்றியின் மீது வைத்த அவள் கரத்தை இறுகப் பற்றினார் பரமேஸ்வரன்; அவர் கை நடுங்கியது.
“என்ன… என்ன உங்களுக்கு?” என்று பதறியவாறு அவர் முகத்தை நிமிர்த்தியபோது, அவரது உதடுகளில் அழுகை துடித்தது. பார்வை பரிதாபமாய்க் கெஞ்சியது. அதே போழ்தில் அவர் மனத்துள் ஒரு குரல் ஒலித்தது! ‘நான் ஒரு மூடன்; இதோ சத்தியத்தின் சொரூபமாய் என் மனைவி நிற்கிறாள். இவளிடமே அந்தக் கடிதத்தைக் காட்டி உண்மையைக் கேட்பதை விடுத்து – நான் ஏன் இப்படித் தவிக்க வேண்டும்?’
அவர் முகத்தில் திடீரென ஒரு மலர்ச்சியும் புன்னகையும் ஒளிவிட, “எனக்கு ஒண்ணுமில்லை, இப்படி உட்கார்… என் மனத்திலே ஒரு பிரச்னை… நீதான் தீர்க்க முடியும்… என்னை உனக்குத் தெரியும்… நீ இல்லாமல் என்னால் வாழ முடியாதுங்கறதும் உனக்குத் தெரியும்…” அவருக்குத் தொண்டையில் என்னவோ அடைத்தது… “இதைப்படி… சுத்தி வளைக்காமல் ‘உண்மை’ – அல்லது ‘பொய்’ இரண்டில் ஒரு பதில் – அவ்வளவு போதும். நீ சொல்ற பதில் எதுவாயிருந்தாலும் அது யாரையும், எதையும் பாதிக்காது… இது சத்தியம்… எனக்கு உண்மை தெரியணும்… என் வாழ்க்கையின் அடிப்படை ஒரு பொய் இல்லைன்னு எனக்கே தெரியணும்…” என்று கடிதத்தை அவளிடம் தந்து அவர் பேசிக் கொண்டேயிருக்கையில் அந்தக் கடிதத்தை அமைதியாய்ப் படித்து முடித்துவிட்டுக் கண்களை மூடி மனத்தை இரும்பாக்கிக் கொண்டு, உறுதியான குரலில் அடக்கமாய் அவள் சொன்னாள்: “உண்மை.”
அவர் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தார். அவள் நிஷ்களங்கமான குரலில் தொடர்ந்து சொன்னாள்:
“அது என் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட ஒரு தவறு. அதுக்காக நான் யாரையும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை… என் வாழ்க்கையே மூளியாகிப் போச்சுன்னு அப்படியே வாழ்ந்துவிடத்தான் தீர்மானிச்சேன். அது சரியில்லேன்னு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு அறிவுறுத்தினார் மாமா. அப்படி ஒரு சந்தர்ப்பத்திலேதான் நான் உங்களை மணக்கச் சம்மதிச்சேன்.
“மாமா சொன்னார். ‘பொய்யாய்ப் போன ஒரு விஷயத்துக்கு நாம் உயிர் கொடுக்கிறது அவசியமில்லே… இறந்த காலம் இறந்துவிட்ட காலமாகவே போகட்டும். உண்மைங்கறதின் பேராலே ஒரு பொய்க்கு உயிரூட்ட வேணாம். சில உண்மைகள் நெருப்பு மாதிரி, அதைத் தாங்க ஒரு பக்குவம் வேணும். நெருப்போட தன்மையே சுடறதுதான். அதைத் தாங்கிக் கொள்ள எல்லா மனிதர்களுக்கும் மனோபலம் இருக்காது’ன்னார் மாமா. இதை மறைக்க வேணாம்னோ, இந்தக் கடிதத்திலே இருக்கிற மாதிரி உங்களை ஏமாத்தணும்னோ யாருக்கும் எண்ணமில்லை. நான் உங்கள் மனைவி. இந்த உணர்வு வந்தப்பறம் உங்ககிட்டே எதையும் மறைக்கிறது சரியில்லைங்கிறதனாலேயே இந்தச் சந்தர்ப்பத்திலே இவ்வளவும் சொல்லிவிட்டேன். இந்த உண்மை சுடலாம். எனக்குத் தெரியும். அதைத் தாங்கிக்கிற பக்குவம் உங்களுக்கு உண்டு” என்று அவள் சொல்லும்போது, பரமேஸ்வரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர் உடல் பதறிற்று. சோமநாதன் தன்னிடம் பொய்யுரைத்த துரோகத்தை எண்ணிய போது, தன் இருதயத்தையே சுட்டதுபோல் அவர் அலறினார்: “நான் உன்னை மன்னிக்கிறேன்… கோதை!… ஆனால், ஒரு மணி நேரத்துக்கு முன்னே கூட… இந்தக் கடிதத்தைக் காட்டினப்போ ‘பொய்’ன்னு மனமாரப் பொய் சொன்னாரே, அந்தப் பெரிய மனுஷன் – அவரோட நயவஞ்சகத்தை என்னாலே மன்னிக்க முடியாது… முடியவே முடியாது…!” என்று கூவியவாறு சோபாவிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து ஓடினார் பரமேஸ்வரன். சுவரிலிருந்த படங்களில் – அந்த வரிசையின் நடுவே இருந்த, அவரது வணக்கத்துக்குரிய ஸ்தானத்திலிருந்த சோமநாதனின் படத்தை இழுந்து வீசி எறிந்தார்…
ஹாலின் மூலையில் விழுந்து நொறுங்கியது அந்தப் படம். “சீ! இவன் மேதையாம்… ஞானியாம்” என்று அவ்விதம் எண்ணியிருந்த தன்னைத்தானே நொந்துகொண்டு மாடியை நோக்கி ஓடினார்.
அவர் தன் அறைக்குச் சென்று கதவை அறைந்து சாத்தித் தாழிடும் ஓசை ஹாலில் நின்றிருந்த கோதைக்குக் கேட்டது.
“ஓ! உண்மை சுட்டுவிட்டது” என்று முனகிக் கொண்டாள் கோதை.
ஒன்றும் புரியாத பிரமிப்பில், உலகத்தின் மாய்மாலத் தோற்றத்தில் கசப்பும் விரக்தியும் கொண்டு யாரையும் பார்க்க மனமின்றித் தனிமையில் குமுறிக் கொதித்து அடங்கிய மனநிலையோடு அறைக்குள் கட்டிலில் பிரேதம் போலக் கிடந்தார் பரமேஸ்வரன்.
… அப்போது அறைக் கதவு லேசாகத் தட்டப்பட்டது.
அந்தச் சப்தத்தைக் கேட்டும் சலனமற்று முகட்டை வெறித்துப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தார். மீண்டும் தட்டப்படும் என்று எதிர்பார்த்தார். அடுத்தமுறை தட்டப்படாததால், மேலும் ஒரு நிமிஷம் காத்திருந்தார். பிறகு எழுந்து வந்து தானாகவே கதவைத் திறந்தார் பரமேஸ்வரன்.
அங்கே கையிலொரு சிறு பெட்டியுடன், விடைபெற்றுக் கொள்வதற்காகக் காத்து நின்றாள் கோதை. சில விநாடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டனர். – அவள் அவரிடம் தெளிவான குரலில் பேசினாள்!
“மாமாவின் மேல் நீங்கள் அர்த்தமற்ற பக்தி வெச்சிருக்கறதா நானும் நெனைச்சதுண்டு. அந்தப் படத்தை நீங்க எடுத்து எறிஞ்சப்பறம்தான் அவர் உண்மையிலேயே பெரிய மேதை – மனுஷ மனத்தின் எல்லா இருண்ட மூலைகளையும் பார்க்கத் தெரிஞ்சவர்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. உண்மை சுடும்னு சொன்ன அந்த மேதை – உங்களாலே அதைத் தாங்க முடியாதுன்னும் தெரிஞ்சு வைச்சிருந்தார்… நீங்க என்னெ மன்னிக்கிறதாகச் சொல்றதுதான் உங்களை நீங்களே ஏமாத்திக்கிறது. அந்தக் காரியம் என் குற்றம்னு நெனச்சா என்னைத் தண்டிக்க வேண்டியதுதானே நியாயம்?… உங்களாலே என்னைத் தண்டிக்க முடியாது… உங்க நெஞ்சுக்கு அவ்வளவு உரம் இல்லே. அந்தக் குற்றத்துக்கு யாரையாவது தண்டிக்காம இருக்க உங்களாலே முடியாது. அதனாலேதான் நீங்க மாமாவைத் தண்டிக்கிறீங்க. தாய்கிட்டே அடி வாங்கின குழந்தை தம்பியைக் கிள்ளிவிடற மாதிரி, நீங்க என்னைத் தண்டிக்காதது உங்க பலவீனம்; சுயநலம். இல்லாவிட்டாலும் நாம் சேர்ந்து வாழற வாழ்க்கையே நம்ம ரெண்டு பேருக்குமே ஒரு தண்டனைதான் இனிமேலே… எனக்கு உங்க மேலே கொஞ்சமும் வருத்தமில்லே. உண்மை சுடும்னு சொன்னாரே, அந்தப் பெரியவர் கிட்டேப் போயி, ‘உண்மை சுடுகிறது மட்டுமில்லே – சிலரைச் சுட்டுப் பொசுக்கிடும்கிற உண்மை எனக்குத் தெரியாம ஒருத்தரைச் சுட்டு எரிச்சுட்டு வந்துட்டேன்’னு மன்னிப்புக் கேட்டுக்க நான் போறேன்…” என்று சொல்லிவிட்டு, அவரது பதிலைக் கூட எதிர்பாராமல், மாடிப்படிகளில் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்தவாறு மௌனமாக நின்றார் பரமேஸ்வரன்.
‘உண்மையைத் தேடியா? அது எதுக்கு நமக்கு? அது சகலமும் துறந்த துறவிகளின் தொழிலாச்சே!” என்ற சோமநாதனின் விளையாட்டான வார்த்தையை எண்ணிப் பார்த்து – அதன் அர்த்தங்களை யோசித்தார் பரமேஸ்வரன்.
அது யோசனையல்ல, அது ஒரு பிரமிப்பு. பிறகு தனக்குள்ளாக லேசாகப் புன்னகை செய்து கொண்டார். அது புன்னகையல்ல, அது ஒரு சரணாகதி.
தடதடவென மாடிப்படிகளில் இறங்கி ஹாலுக்குள் ஓடிவந்தார்.
அப்போது கோதை வெளிக் கதவருகே வந்து கம்பிக் கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.
“கோதை!” என்ற பரமேஸ்வரனின் தெளிவான குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே…
சுவரில் மூளியாய் இருந்த அந்த இடத்தில் தனது வழிபாட்டுக்கும் மரியாதைக்கும் உரிய அந்தப் படத்தை எடுத்து மாட்டிக் கொண்டிருந்த பரமேஸ்வரன், அவளைத் திரும்பிப் பார்த்து மனம் திறந்த புன்னகை பூத்து நின்றார்.
தன் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்று அவர் கருதிய ஒரு பிரச்னையில் பொய்யுரைத்த சோமநாதனையே தன் வழிபாட்டிற்குரிய மேதையாக மீண்டும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமானால், அதே பிரச்னையில் உண்மையைக் கூறிய தன் அன்பு மனைவியை அவரால் துறந்துவிட முடியுமா என்ன?
-------------
Earlier releases
Part 1
1. யுக சந்தி
2. இல்லாதது எது
3. இரண்டு குழந்தைகள்
4. நான் இருக்கிறேன்
5. பொம்மை
6. தேவன் வருவாரா?
7. துறவு
8. பூ உதிரும்
9. குறைப் பிறவி
10. யந்திரம்
--------
Part 2
11. டிரெடில் (1958)
12. பிணக்கு ( 1958)
13. நந்தவனத்தில் ஓர் ஆண்டி (1958)
14. நீ இன்னா ஸார் சொல்றே? (1959)
15. புதிய வார்ப்புகள் (1965)
16. சுயதரிசனம் (1965)
17. அக்ரஹாரத்துப் பூனை (1969)
18. அக்கினிப் பிரவேசம் (1965)
19. புது செருப்புக் கடிக்கும் (1971)
20. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)
--------
Part 3
21. குருபீடம்
22. டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும
23. நிக்கி, மின்பதிப்பு
24. ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
25. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
26. குருக்கள் ஆத்துப் பையன்
27. முன் நிலவும் பின் பனியும்.
28. முற்றுகை
29. சுமைதாங்கி, (1971)
30. நடைபாதையில் ஞானோபதேசம்
31. ஒரு பக்தர்
-------
கருத்துகள்
கருத்துரையிடுக