கல்கியின் சிறுகதைகள் தொகுப்பு - பாகம் 5
சிறுகதைகள்
Backகல்கியின் சிறுகதைகள் தொகுப்பு (பாகம் 5)
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
-
Source
-
கல்கியின் சிறுகதைகள் தொகுதி- vol 1, 2, 3
ஆசிரியர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
நக்கீரன் பதிப்பகம்,
2ம் பதிப்பு, 2014
---------------------
கல்கியின் சிறுகதைகள் தொகுதி - part 5
உள்ளடக்கம்
61. காதறாக் கள்ளன் | 69. விதூஷகன் சின்னுமுதலி |
62. மாலதியின் தந்தை | 70. அரசூர் பஞ்சாயத்து |
63. வீடு தேடும் படலம் | 71. கவர்னர் வண்டி |
64. நீண்ட முகவுரை | 72. தண்டனை யாருக்கு? |
65. பாங்கர் விநாயகராவ் | 73. சுயநலம் |
66. தெய்வயானை | 74. புலி ராஜா |
67. கோவிந்தனும் வீரப்பனும் | 75. விஷ மந்திரம் |
68. சின்னத்தம்பியும் திருடர்களும் |
கல்கியின் சிறுகதைகள் தொகுதி - part 5
61. காதறாக் கள்ளன்
சில ஆண்டுகளுக்கு முன்னால் திசையெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். (மாவட்டம் என்பது ஜில்லாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை. தமிழ் வளர்த்த திருநெல்வேலியாதலால் 'மாவட்டம்' என்ற சொல்லை போட்டு வைத்தேன்) சாலைகள் வெகு மனோரம்யமாகயிருந்தன. வழியில் தோன்றிய ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு கால்வாயும் ஒவ்வொரு ரஸமான கதை சொல்லும் எனத் தோன்றிற்று. ஆனால் ஊரில் காற்றெனக் கடுகிச் சென்று கொண்டிருக்கையில் கதை கேட்பதற்கு நேரம் எங்கே?
நல்ல வேளையாக, சிற்றாறு ஒன்று எதிர்ப்பட்டது. அதற்குப் பாலம் கிடையாது. நதியில் இறங்கித்தான் போக வேண்டும். டிரைவர் சிற்றாற்றின் கரையில் வண்டியை நிறுத்தினான். அங்கே ஒரு விசாலமான மருத மரத்தின் அடியில் முறுக்கு வடையும், வெற்றிலை பாக்கும் விற்கும் ஒரு பெண் பிள்ளை தம் கூடைக் கடையுடன் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பெண் பிள்ளைக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் வீற்றிருந்தார். அவருடைய பெரிய மீசை நரைத்திருந்த போதிலும் நன்றாக முறுக்கிவிடப்பட்டிருந்தது. அவர் அப்பெண் பிள்ளையிடம் முறுக்கு வாங்கிக் கையினால் அரைத்துத் தூளாக்கி அதை வாயில் போட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்தபடியே எங்களில் ஒருவர், "ஏன் ஐயா, ஆற்றில் தண்ணீர் அதிகமா? கார் போகுமா?" என்று கேட்டார். அதற்குப் பெரியவர், "தண்ணீர் கொஞ்சந்தான்; முழங்காலுக்குக் கூட வராது" என்றார்.
இதைக் கேட்ட டிரைவர் வண்டியை ஆற்றில் இறக்கினான். பெரியவர் சொன்னது சரிதான். தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. ஆகையால் கார் சுலபமாகத் தண்ணீரைக் கடந்து போய்விட்டது. ஆனால் தண்ணீருக்கு அப்பால் நெடுந்தூரம் பரந்து கிடந்த மணலை காரினால் தாண்ட முடியவில்லை. சில அடி தூரம் போனதும் காரின் சக்கரங்கள் மணலிலேயே நன்றாய்ப் புதைந்து விட்டன. காரின் விசைகளை டிரைவர் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். பயங்கரமான சத்தங்கள் உண்டாயின. மணலும் புகையும் கலந்து பறந்தன. முதலில் சிறிது நேரம் சக்கரங்கள் இருந்த இடத்திலேயே சுழன்றன. அப்புறம் சுழலவும் மறுத்துவிட்டுப் பூரண வேலை நிறுத்தம் செய்தன. வண்டிக்குள் இருந்தவர்கள் இறங்கி வெளியே வந்தோம். எங்களாலேதான் வண்டி நகரவில்லை என்று நினைத்தானோ என்னமோ டிரைவர் நாங்கள் இறங்கியதும் மறுபடி ஒரு முறை பிரயத்தனம் செய்தான். அதுவும் பலிக்கவில்லை.
பிறகு டிரைவரும் காரிலிருந்து கீழே இறங்கினான். சிறிது நேரம் காரைச் சுற்றிப் பிரதட்சணம் வந்தோம். எங்களில் ஒரு ஹாஸ்யக்காரர் காருக்கு முன்னால் நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டு "அப்பா! காரப்பா! சரணம்! சரணம்!" என்றார். அதனாலும் அந்தக் கார் அசைந்துக் கொடுக்கவில்லை.
வெயிலில் சுடுகிற மணலில் என்னால் நிற்க முடியாது என்று நான் கோபமாய் சொல்லிவிட்டு ஆற்றின் தண்ணீரைத் திரும்ப காலினால் நடந்தே கடந்து கரைக்கு வந்தேன். மருத மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த பெரியவர் பக்கத்தில் சென்று மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன்.
"ஏன் ஐயா! இப்படிச் செய்யலாமா? கார் ஆற்றைக் கடக்காது என்று சொல்ல வேண்டாமா?" என்றேன்.
"அழகாயிருக்கிறது! தண்ணீர் முழங்கால் வரை கூட வராது என்று சொன்னேன். அப்படியேயிருந்ததா, இல்லையா? உங்கள் ஓட்டை மோட்டார் மணலிலே போகாது என்பது எனக்கு எப்படித் தெரியும்? நல்ல கதை! காதறாக் கள்ளன் மரகதவல்லியைக் குதிரையிலே ஏற்றிக் கொண்டு வந்ததனாலே தப்பிப் பிழைத்தான்! உங்கள் மாதிரி மோட்டார் காரிலே வந்திருந்தால் அகப்பட்டுக் கொண்டு விழித்திருப்பான்!" என்றார்.
நான் அப்போது அடைந்த குதூகலத்துக்கு அளவில்லை. "ஆற்று மணலில் கார் அகப்பட்டுக் கொண்டதே நல்லதாய்ப் போயிற்று; நமக்கு ஒரு நல்ல கதை கிடைக்கப் போகிறது" என்று எண்ணி உற்சாகம் அடைந்தேன்.
"அது என்ன கதை? காதறாக் கள்ளன் என்றால் யார்? அப்படி ஒரு கள்ளனா? நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றேன்.
"நீங்கள் கேள்விப்படாத காரியங்கள் எத்தனையோ இருக்கலாம்! அதற்கு நானா பொறுப்பாளி?" என்று சொன்னார் அந்தப் பெரியவர்.
"கோபித்துக் கொள்ளாதீர்கள்! கதையைச் சொல்லுங்கள்!" என்றேன்.
நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அருமையான கதை ஒன்று கிடைத்தது. 'அருமையான கதை' என்று எனக்குத் தோன்றியதைத்தான் சொல்லுகிறேன். கேட்டுவிட்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
பெரியவர் சொன்ன கதை
அதோ, ஆற்றைக் கடந்ததும், அப்பால் ஒரு கிராமம் தெரிகிறதல்லவா? அதன் பெயர் என்னவென்று தெரியுமோ? 'பரி உயிர் காத்த நல்லூர்' என்று பெயர். ஆமாம்; திருநெல்வேலிச் சீமையில் ஊரின் பெயர்கள் கொஞ்சம் நீளமாகத் தான் இருக்கும். சிலர் 'பரி உயிர் நீத்த நல்லூர்' என்று சொல்லுவதுண்டு. இந்தக் கிராமத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டு சாஸனங்களில் 'பரி உயிர் காத்த நல்லூர்' என்று தான் இருக்கிறது. அதுதான் சரியான பெயர் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
இந்தக் கிராமத்துக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்ற கதையைத் தான் இப்போது சொல்லப் போகிறேன்.
சற்று நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பாருங்கள் அதோ ஒரு 'பொத்தை' தெருகிறதல்லவா? உங்கள் நாட்டில் என்ன சொல்வீர்களோ தெரியாது. இந்த நாட்டில் சிறிய மொட்டைக் குன்றுகளுக்குப் 'பொத்தை' என்ற பெயர். அந்தப் பொத்தைக்கு அப்பாலே ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ, தெரியாது. காரில் பறந்து வருகிறவர்கள் எங்கே பார்க்கப் போகிறீர்கள்? நான் சொல்லுகிறதை நம்ப வேண்டியதுதான். அங்கே ஒரு புளியமர தோப்பு இருக்கிறது. எனக்கு வயது நாற்பது ஆகியிருந்த போது அங்கே புளியஞ்செடி நட்டார்கள். இப்போது மரங்களாகியிருக்கின்றன. இந்த நாளிலே ஒருவரும் மரம் நடுகிறதில்லை. அந்தந்த வருஷத்திலே பயன் தருகிற விவசாயமே செய்கிறார்கள். இப்போதுள்ள புளியமரமெல்லாம் போய்விட்டால், நம்முடைய சந்நதியில் வரும் ஜனங்கள் புளிக்கு என்ன செய்வார்களோ தெரியாது. ஒரு புளியம் பழம் ஒரு ரூபாய்க்கு விற்கும் காலம் வந்தாலும் வரும்! நல்ல வேளை அப்படிப்பட்ட காலத்தை பார்ப்பதற்கு இருக்க மாட்டேன்.
அந்தப் பொத்தைக்குப் பக்கத்தில் இப்போது புளியந்தோப்பு இருக்கும் இடத்தில் அறுபது வருஷத்துக்கு முன்னாலும் ஒரு புளியந்தோப்பு இருந்தது. ஒரு நாள் பௌர்ணமியன்று சாயங்காலம் அந்தப் புளியந்தோப்பில் ஆள்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். ஆள்கள் என்றால் இந்தக் காலத்து மனிதர்களைப் போல் நோஞ்சைகள் அல்ல. ஆறு அடி உயரம், ஆஜானுபாகுவான ஆள்கள். அவர்களில் சிலர் கையில் தடி வைத்திருந்தார்கள். சிலர் கத்தி, கபடா, வேல், ஈட்டி முதலிய ஆயுதங்களும் வைத்திருந்தார்கள். அவர்கள் வாள்களையும் வேல்களையும் விளையாட்டாக ஒன்றோடொன்று மோதவிட்டபோது டணார் டனார் என்று சத்தம் எழுந்தது. தடிகளோடு தடிகள் முட்டிய போது சடமடா என்ற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் ஒருவரோடொருவர் பேசிய வீர வாதங்கள் பாபநாசத்து அருவி விழும் ஓசையைப் போல் பேரிரைச்சலாகக் கேட்டது.
சூரியன் மேற்கே அஸ்தமித்தது. அஸ்தமித்ததற்கு அடையாளமாக மேற்கு வானத்தில் சில சிவப்புக் கோடுகள் மட்டும் தெரிந்தன. அப்போது கிழக்கே பூரண சந்திரன் திருமாலின் கையில் சுழலும் சக்கரத்தைப்போல் தகதகவென்று உதயமானான். அதே சமயத்தில் குதிரைகள் வரும் காலடிச் சத்தம் கேட்டது. உடனே அந்தப் புளியந்தோப்பில் பேச்சு அடங்கி நிசப்தம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காதோடு "மகாராஜா வருகிறார்" என்று சொல்லிக் கொண்டார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் ஏழெட்டுக் குதிரைகள் வந்தன. ஒவ்வொரு குதிரையின் மேலும் ஒரு வீரன் வந்தான். எல்லோருக்கும் முதலில் வந்தவன் அவர்களுடைய தலைவன். அவன் பெயர் தில்லைமுத்துத்தேவன். அவனைத்தான் "மகாராஜா" என்று அந்த வீரர்கள் அழைத்தார்கள். தில்லைமுத்துத்தேவன் ஒரு பெரிய பாளையக்காரன். அறுபது கிராமங்களுக்கு அதிபதி. அவன் சொல்லிவிட்டால், எந்த நேரமும் ஆயிரம் ஆட்கள் வந்து விடுவார்கள். சண்டையில் உயிரைக் கொடுக்கத் தயாராக வருவார்கள்.
பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் புளியந்தோப்புக்கு வந்ததும், தோப்பில் இடைவெளியிருந்த ஒரு இடத்தைப் பிடித்து அங்கே குதிரையிலிருந்து கீழே இறங்கினான். மற்றவர்களும் இறங்கினார்கள். முன்னமே தயாராக வைத்திருந்த ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வந்து போட்டார்கள். அதன் பேரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு தில்லைமுத்துத்தேவன் உட்கார்ந்தான்.
அவனுடைய மதிமந்திரியான நல்லமுத்துத்தேவன் உடனே வெற்றிலை பாக்குப் பெட்டியை எடுத்துப் பாக்கும் வெற்றிலையும் எடுத்துக் கொடுத்தான்.
பாளையக்காரன் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டே "நல்லமுத்து! உனக்கு என்ன தோன்றுகிறது? கருடாசலத்தேவன் சொல்லி அனுப்பியபடி ராஜி பேசுவதற்கு வருவான் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டான்.
"கட்டாயம் வருவான், மகாராஜா! அவன் தலை என்ன இரும்பா? அப்படி வராவிட்டால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாதா" என்றான் நல்லமுத்துத் தேவன்.
"அவன் வராவிட்டால் என்ன நடக்கும்? உன் உத்தேசம் என்ன?" என்று பாளையக்காரன் கேட்டான்.
"முதல் ஜாமம் முடிவதற்குள் அவன் இங்கே வந்து மகாராஜா சொல்கிறபடி நடக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்முடைய காரியத்தை நடத்த வேண்டியதுதான்!..."
"நம்முடைய காரியம் என்றால்..."
"கருடாசலத்தேவனின் அரண்மனை, சவுக்கண்டி களஞ்சியம், வைக்கற்போர், மாட்டுக் கொட்டகை குதிரைலாயம் எல்லாவற்றையும் அக்னி தேவனுக்கு இரையாக்க வேண்டியதுதான்!"
"அட பாவி!..."
"மகாராஜா! யார் பாவி? இருபது வயதான மருமகப் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்காமல் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கிறானே, அவன் பாவியா? நான் பாவியா? பெற்று வளர்த்த பிள்ளையைக் கொஞ்சங்கூட மனத்தில் ஈவிரக்கமில்லாமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தானே அந்த மனுஷன் பாவியா? நான் பாவியா?"
"அது எல்லாம் சரிதானப்பா! கருடாசலத்தேவன் மேல் இரக்கப்பட்டு நான் ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனைக்கு தீ வைத்துக் கொளுத்தினால் அந்தப் பெண் மரகதவல்லிக்கும் ஒரு வேளை ஏதாவது ஆபத்து வரலாம் அல்லவா?"
"வந்தால் வந்ததுதான்! அதற்காக நாம் என்னத்தை செய்கிறது? அந்தக் கிழவனுக்கல்லவா அதைப் பற்றிக் கவலையாயிருக்க வேண்டும்?"
"இருந்தபோதிலும் என்னுடைய யுக்தி பலித்தால் ஒரு ஆபத்தும் இல்லாமல், ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் காரியம் கைகூடிவிடும் அல்லவா?"
"அதிலே என்ன இலாபம்? மகாராஜா இரத்தம் சிந்துவதற்குப் பயப்படும்படியான காலம் இப்போது என்ன வந்துவிட்டது? போயும் போயும் மகாராஜா ஒரு கள்ளப் பயலிடம் நம்பிக்கை வைத்து ஒரு காரியத்துக்கு ஏவுகிறதென்பது எனக்குப் பிடிக்கவில்லை..."
"நல்லமுத்து! அவன் சாதாரணக் கள்ளன் இல்லை. உலகமெல்லாம் சொல்லுகிறார்களே! கள்ளனாயிருந்தாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். சொன்ன சொல் தவறமாட்டான்..."
"இதெல்லாம் பெண் பிள்ளைகள் கட்டிவிட்ட கதை 'காதறாக் கள்ளன்' என்ற பட்டம் அவனுக்குப் பெண் பிள்ளைகள் கொடுத்ததுதானே? அதை எஜமானரும் நம்புகிறீர்களே?"
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புளியந்தோப்பை நெருங்கி ஒரு ஒற்றைக் குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. தோப்பில் கூடியிருந்த ஆட்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் கசு முசு வென்று பேசத் தொடங்கினார்கள்.
"அந்த ஆள் தான் போலிருக்கிறது" என்றான் பாளையக்காரன்.
நல்லமுத்துத்தேவன் எழுந்து நின்று கழுத்தை வளைத்துப் பார்த்துவிட்டு, "ஆமாம்; அவன் தான் போலிருக்கிறது. நீங்கள் ஆச்சு; உங்கள் காதறாக் கள்ளன் ஆச்சு; எப்படியானும் போங்கள். நான் விலகிக் கொள்ளுகிறேன்" என்று சொல்லிவிட்டு அப்பாற் போனான்.
2
'காதறாக் கள்ளன்' என்பவனைப் பற்றி உங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே பெண் பிள்ளைகள் காதிலே பெரிய தொளைகளைப் போட்டுக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்பதாகத் தங்கத் தோடுகளையும் முருகுகளையும் தொங்கவிட்டுக் கொள்வார்கள். இப்போது கூட வயதான பெண் பிள்ளைகளின் காதுகள் அப்படித் தொங்குவதை நீங்கள் பார்க்கலாம். அறுபது வருஷத்துக்கு முன்னால் இது ரொம்பவும் அதிகமாயிருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையின் இரண்டு காதிலும் சேர்த்து கால்வீசை தங்கத்துக்குக் குறையாமல் இருக்கும். அந்த நாளில் இங்கேயெல்லாம் கள்ளர் பயம் அதிகமுண்டு. அதோ தெரிகிறதே, அந்த மாதிரி பொத்தைகள் சாலையில் இருந்தால், கட்டாயம் அங்கே கள்ளர்கள் ஒளிந்திருப்பார்கள். கால் நடையாகவோ, ஒரு வண்டி, இரண்டு வண்டியிலோ யாராவது பெண்பிள்ளைகள் போனால் வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் போக வேண்டும். காதிலே தொங்கும் தங்கத்துக்காக காதை அறுத்துக் கொண்டே போய்விடுவார்கள். இதனால் அந்த நாளில் காது அறுந்த மாதர் பலரை இந்தத் திருநெல்வெலிச் சீமையெங்கும் காணும்படியிருந்தது.
இப்படியிருக்கும் நிலைமையில் ஒரு அதிசயமான பக்காத் திருடன் கிளம்பினான். அவன் மற்றத் திருடர்களைப்போல் கூட்டம் சேர்த்துக் கொண்டு வருவதில்லை. தனி ஆளாகக் குதிரையில் ஏறிக் கொண்டு வருவான். முகத்தில் கீழ்ப் பாதியை, வாய் வரையில், கறுப்புத் துணியைக் கட்டி மறைத்திருப்பான். கையிலே கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பான். சாலையிலே ஒற்றைக் குதிரைச் சத்தம் கேட்டாலே பிரயாணிகள் நின்றுவிடுவார்கள். அவன் ஒருவனாக வந்து, குதிரை மேலிருந்து இறங்கி, எல்லாரையும் மடியை அவிழ்த்துக் காட்டச் சொல்லுவான். மூட்டைகளைப் பிரித்துப் பார்ப்பான். அவனுக்கு இஷ்டமான பொருள்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு குதிரையில் ஏறிப் போய் விடுவான். பெரும்பாலும் அவன் ஏழைகளை ஒன்றும் செய்யமாட்டான். பணக்காரர்களிடமிருந்துதான் பணத்தைப் பறிப்பான். பணக்கார ஸ்திரீகளிடமிருந்து நகைநட்டுகளைப் பறித்துக் கொள்வான். ஆனால் மற்றத் திருடர்களுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஸ்திரீகளின் கழுத்திலும் கையிலும் உள்ள நகைகளைக் கழற்றிக் கொள்வானே தவிர, காதை அறுக்க மாட்டான். இது காரணமாக அவனுக்குக் 'காதறாக் கள்ளன்' என்று பட்டப் பெயர் ஏற்பட்டது. முக்கியமாக, மாதர்கள் இந்தப் பட்டப் பெயரை எங்கே பார்த்தாலும் பிரபலப்படுத்தினார்கள். அவனிடம் நகைகளைப் பறிகொடுத்த ஸ்திரீகள்தான் அவனைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். 'நகை போனால் போகட்டும்; காது தப்பியதே!' என்று அவர்களுக்குச் சந்தோஷம். பெண் புத்தி பேதைப் புத்தி என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? அது மட்டுமல்ல; முட்டாள் ஜனங்கள் இன்னும் என்னவெல்லாமோ அந்தக் கள்ளனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அவன் பணக்காரர்களிடம் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு ஒத்தாசை செய்கிறான் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். என்ன விசித்திரம் பாருங்கள்! செய்கிறது திருட்டுத் தொழில்! அதிலே தான தர்மம் செய்து 'தர்மப் பிரபு' என்ற பட்டம்.
அவன் பிறந்த வேளை அப்படி! வேறு என்னத்தை சொல்லுகிறது? அவனைப் பிடித்துக் கொடுப்பதற்கு யார் யாரோ முயற்சி செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஏன்? பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் கூடக் காதறாக் கள்ளனைப் பிடிக்கப் பார்த்தான்; முடியவில்லை. இப்போது அந்தக் கள்ளனைத் தன்னுடைய காரியத்துக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று வரவழைத்தான்.
காதறாக் கள்ளன் வந்து பாளையக்காரனுக்கு முன்னால் நின்றதும், பாளையக்காரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
"கள்ளா! உன் தைரியத்தை மெச்சினேன்!" என்றான்.
துணியால் மூடியிருந்த வாயினால் கள்ளன் பேசியது கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது.
"என்னுடைய தைரியத்தை மெச்சும்படியாக நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லையே" என்றான் கள்ளன்.
"என்னுடைய ஆட்கள் இருநூறு பேருக்கு நடுவில் நீ தன்னந்தனியாக என் முன்னால் வந்து நிற்கிறாயே அதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!" என்றான் தில்லைமுத்துத்தேவன்.
கள்ளன் இலேசாகச் சிரித்துவிட்டு, "ஆமாம்; அந்த தைரியத்தை மெச்ச வேண்டியதுதான்! ஆனால், இதற்காக, - என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காக - மட்டுமே என்னை வரவழைத்தீர்களா? வேறு ஏதாவது காரியம் உண்டா!" என்று கேட்டான்.
"காரியம் இருக்கிறது; அதிலே உன்னுடைய தைரியத்தோடு சாமர்த்தியத்தையும் பரிசோதிக்க உத்தேசம்!"
"சொல்லுங்கள். கேட்கிறேன்."
"இங்கிருந்து அரைக்காத தூரத்தில் கருடாசலத் தேவரின் அரண்மனை இருக்கிறதே உனக்குத் தெரியுமா?"
கள்ளன் சிரித்துவிட்டு, "மேலே சொல்லுங்கள்!" என்றான்.
"என்ன சொன்னாலும் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாயே? அதற்கு அர்த்தம் என்ன?" என்றான் பாளையக்காரன்.
"அது என் சுபாவம். மேலே சொல்லுங்கள். கருடாசலத்தேவரின் அரண்மனையை எனக்குத் தெரிந்தால் என்ன, தெரியாமற்போனால் என்ன? அங்கே உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்."
"சரி, சொல்லுகிறேன், கேள்! கருடாசலத் தேவர் இரவு இரண்டாம் ஜாமத்தில் இங்கே என்னைப் பார்ப்பதற்காக வருவார். அநேகமாக இதற்குள் அரண்மனையை விட்டுப் புறப்பட்டிருப்பார். உன்னைப் போல் அவர் தனியாக வர மாட்டார். அவருடைய முக்கியமான ஆட்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வருவார். அரண்மனையில் அச்சமயம் காவல் காப்பதற்கு அதிகம் பேர் இருக்க மாட்டார்கள் தெரிகிறதா...?"
"நன்றாகத் தெரிகிறது. அச்சமயம் நான் என்ன செய்யவேண்டும்?"
"இங்கிருந்து நீ சாலை வழியாகப் போகாமல் வேறு குறுக்கு வழியாகப் போக வேண்டும். கருடாசலத்தேவருடைய அரண்மனையை நெருங்கவேண்டும். உன்னுடைய புகழ்தான் எங்கும் பரவியிருக்கிறதே? உன்னைப் பார்த்தவுடனேயே அரண்மனையைக் காவல் காப்பவர்கள் நடுங்கிப் போவார்கள். பிறகு, உன்னுடைய சாமர்த்தியத்தினால் அரண்மனைக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டும். அங்கே கருடாசலத்தேவரின் மருமகள் மரகதவல்லி இருப்பாள். அவளைக் கருடாசலத்தேவர் ஐந்து வருஷமாகச் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார். அவளை விடுதலை செய்து கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்துவிடவேண்டும். கள்ளா, என்ன சொல்கிறாய்? உன்னால் இது முடியுமா?"
கள்ளன் சற்று மௌனமாயிருந்தான். பிறகு "எதற்காக மரகதவல்லியைக் கொண்டுவரச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பெண் விஷயத்தில் உங்களுடைய நோக்கம் என்ன?" என்று கேட்டான்.
"நோக்கம் என்னவாயிருக்கும்? நீதான் ஊகித்துக் கொள்ளேன். மூன்று வருஷத்துக்கு முன்னால் மரகதவல்லியை எனக்குக் கட்டிக் கொடுக்கும்படி கருடாசலத் தேவரைக் கேட்டேன். அவர் கண்டிப்பாக 'முடியவே முடியாது' என்று சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் ஒன்றில் மனதைச் செலுத்திவிட்டால், அதை இலேசில் விட்டு விடுவேனா? பலாத்காரமாக அவருடைய அரண்மனையில் புகுந்து மரகதவல்லியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். அதற்கு இன்றைக்குத்தான் நாள் குறிப்பிட்டிருந்தேன்..."
"பின்னே, என்னை எதற்காகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? இத்தனை ஆட்களோடு நீங்கள் போய்ச் செய்ய முடியாத ஒரு காரியத்தை..."
"செய்யமுடியாத காரியம் என்று யார் சொன்னது? நான் படையெடுப்புக்கு ஆயத்தம் செய்வதைக் கருடாசலத்தேவர் அறிந்து கொண்டு ஆள் மேல் ஆள் விட்டார். கடைசியாக, இன்றைக்கு இந்தப் புளியந்தோப்பில் ராஜி பேச வருவதாகச் சொல்லி அனுப்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்ன ராஜி பேசப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மனுஷர் மூன்று வருஷமாக என்னைக் காக்கவைத்து இழுத்தடித்ததற்குப் பழி வாங்க வேண்டாமா? அவரும் நானும் இங்கே ராஜிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது, நீ அந்தப் பெண்ணைக் கைப்பற்றி இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்தால் அவருக்கே நல்ல புத்தி புகட்டினதாயிருக்குமல்லவா? வீணில் இரத்தச் சேதம் ஏற்படாமல் தடுத்தபடியாகவும் இருக்கும்."
"அப்படி இரத்தச்சேதம் ஏற்பட்டாலும் அது இந்த கள்ளனுடைய இரத்தமாயிருக்கட்டும் என்று உங்கள் உத்தேசமாக்கும்?"
"அப்படியானால் உனக்கு இஷ்டமில்லையா? பயப்படாதே! மனதில் உள்ளதைச் சொல்லிவிடு."
"நீங்கள் சொல்லுகிறபடி செய்து முடித்தால், எனக்கு என்ன லாபம்?"
"இன்று இராத்திரி மரகதவல்லியை இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்து விட்டாயானால் அப்புறம் என்னுடைய ஆட்கள் உன்னைத் தேட மாட்டார்கள். நானும் உன்னுடைய வழிக்கே வரமாட்டேன்..."
"நீங்கள் சொல்லுகிற காரியத்தை நான் செய்யாவிட்டால்?..."
"இன்றைக்கு இங்கிருந்து நீ பத்திரமாய்ப் போய்விடலாம். நாளை முதல் நீ என் விரோதி. என் ஆட்கள் உன்னைத் தேடுவார்கள். நீ எந்த மலைக்குகையிலோ அல்லது மேக மண்டலத்திலோ போய் ஒளிந்து கொண்டாலும் உன்னைப் பிடித்துப் போலீசாரிடம் கொடுத்து விட்டுத்தான் நான் மறுகாரியம் பார்ப்பேன். நல்லது, இப்போது என்ன சொல்கிறாய்?"
கள்ளன் சற்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, "ஆகட்டும், போய்ப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரியத்தில் வெற்றி பெறுவேனோ என்னமோ?" என்றான்.
"நீ வெற்றி பெறாவிட்டால் நான் இருக்கிறேன். என் ஆட்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை" என்றான் தில்லைமுத்துத்தேவன்.
காதறாக் கள்ளன் குதிரைமேல் தாவி ஏறி விரைவாகச் சென்றான்.
3
இந்தச் சமயத்தில் கோழிகூவாப் புத்தூர் கருடாசலத்தேவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். கருடாசலத்தேவர் ஒரு காலத்தில் தில்லைமுத்துத்தேவரைப் போலவே செல்வாக்கு வாய்ந்தவராயிருந்தார். ஆனால் வயது காரணமாக அவர் உடம்பு தளர்ந்து போயிருந்தது. அதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் ஏற்பட்டு அவர் மனம் இடிந்து போயிருந்தது. முக்கியமாக ஐந்து வருஷத்துக்கு முன்னால் அவருக்கும் அவருடைய ஏக புதல்வனுக்கும் சண்டை உண்டாகி பையன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அற்ப விஷயத்தில் மன வேற்றுமை உண்டாயிற்று. தந்தை, மகன் இருவரும் பிடிவாதக்காரர்களாதலால் அந்த வேற்றுமை முற்றி விபரீதமாகி விட்டது. குடி மயக்கத்திலிருந்த கருடாசலத்தேவர் சொன்னபடி மகன் ஏதோ செய்யவில்லை என்பதற்காக நாலு பேர் இருக்கும்போது அவன் மீது செருப்பை விட்டெறிந்தார். ரோஸக்காரனாகிய மகன் "இனி உங்கள் முகத்தில் விழிப்பதில்லை" என்று சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து கிளம்பிப் போனவன் தான்; திரும்பி வரவே இல்லை.
அருமை மகன் வீட்டை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் தேவரின் மனைவி அந்த ஏக்கத்தினாலேயே படுத்த படுக்கையாகி உயிர் துறந்தாள். ஆனால் தேவர் வஜ்ரத்தைப் போன்ற இதயம் படைத்தவர். அவர் கொஞ்சமாவது மகனுக்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மனையாள் இறந்ததைப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. எங்கேயோ மதுரைக்குப் பக்கத்திலே இருந்த அவருடைய தங்கையையும் தங்கை மகளையும் அழைத்து கொண்டு வந்து வீட்டிலே வைத்துக் கொண்டார். இரண்டு வருஷத்துக்கு முன்னால் தங்கையும் காலமாகி விட்டாள். பிறகு மரகதவல்லி மட்டும் கருடாசலத் தேவரின் பிரமாண்டமான அரண்மனையில் தன்னந்தனியாக வசித்து வந்தாள். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாகப் பாளையக்காரன் கேட்டதற்கு "முடியாது" என்று கருடாசலத்தேவர் பதில் சொல்லிவிட்டார். நயத்தினால் முடியாததைப் பயத்தினால் சாதித்துக் கொள்ள எண்ணித் தில்லைமுத்துத்தேவன் ஆள் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். உயிர்ச்சேதம் வேண்டாம் என்று கருதினால் புளியந்தோப்பில் வந்து தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பினான். கிழவரை இவ்விதம் தருவித்துவிட்டு, அந்த சமயத்தில் கள்ளனை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வந்து விடச் செய்யலாம் என்று தில்லைமுத்துத்தேவன் யுக்தி செய்திருந்தான்.
அந்த யுக்தி அநேகமாகப் பலித்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் கருடாசலத்தேவர் தம்முடைய முக்கியமான ஆட்களையெல்லாம் தன் துணைக்கு அழைத்துக் கொண்டு தில்லைமுத்துத்தேவனைச் சந்திப்பதற்கு வந்து சேர்ந்தார். கள்ளன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து விட்டார். தில்லைமுத்துத்தேவன் அவரைத் தக்கப்படி வரவேற்று மரியாதை செய்தான். முக்கியமான விஷயத்துக்கு வருவதற்கு முன்னால் ஊரை வளைத்து என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தான். கள்ளன் தான் ஒப்புக் கொண்ட காரியத்தைச் செய்வதற்குப் போதிய சாவகாசம் கொடுக்க வேண்டும் என்பது பாளையக்காரனின் எண்ணம்.
4
கள்ளன் போன இடத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாய்த் தானிருக்கும். அதை இப்போது சொல்கிறேன். கோழிகூவாப் புத்தூர் அரண்மனையிலிருந்து கருடாசலத்தேவன் ஆட்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார் என்பதைக் கள்ளன் வழியிலேயே தெரிந்து கொண்டான். ஆகையால் ஊருக்குள்ளே தைரியமாக நுழைந்து போனான். வருகிறவன் காதறாக் கள்ளன் என்பதை ஊரார் அறிந்து கொண்டு பயந்து கதவைச் சாத்திக் கொண்டார்கள். அரண்மனையின் வாசலில் வந்ததும் கள்ளன் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு வெடி தீர்த்தான். ஏற்கெனவே பயந்திருந்த காவற்காரர்கள் சிதறி ஓடிப் போனார்கள். முன் வாசல் திறந்திருந்தபடியால் திருடன் அரண்மனை முன் கட்டில் பிரவேசித்தான். ஆனால் இதற்குள் விஷயம் தெரிந்துகொண்டு வேலைக்கார ஸ்திரீகள் பின் கட்டுக் கதவுகளைத் தாள் போட்டார்கள். கள்ளன் முற்றத்தின் நடுவில் நின்று இன்னொரு வெடி தீர்த்தான். கதவுகளையெல்லாம் உடனே திறக்கும்படியும் இல்லாவிட்டால் அதாஹதம் செய்துவிடுவேன் என்றும் கள்ளன் சத்தமிட்டுக் கூவினான். அரண்மனைப் பின் கட்டின் மச்சிலேயிருந்து மரகதவல்லியும் அவளுடைய தாதிப் பெண்களும் இந்தக் காட்சியைப் பார்த்தார்கள். அச்சமயம் கள்ளன் தன் முகத்தின் கீழ்ப் பாதியை மறைத்துக் கட்டியிருந்த துணி தற்செயலாக அவிழ்ந்து விழுந்தது. அப்போது அவனுடைய முகம் பூரண சந்திரனுடைய நிலா வெளிச்சத்தில் நன்றாய்த் தெரிந்தது. தாதிப் பெண்களில் ஒருத்தி ஆச்சரியத்தினால் அலறினாள். மரகதவல்லியின் காதில் ஏதோ சொன்னாள். கள்ளனுடைய அட்டகாசம் இதற்குள்ளே இன்னும் அதிகமாயிற்று. அரண்மனைப் பின் கட்டின் கதவு சீக்கிரத்தில் திறக்கப்பட்டது. மரகதவல்லியும் தாதிப் பெண்ணும் நிலா முற்றத்திற்கு வந்தார்கள்.
கள்ளன் இதற்குள்ளே தன் முகத்தின் பாதியை மூடி மறைத்துக் கொண்டான். அதனால் அவனுடைய உருவம் கோரமாகத்தானிருந்தது. ஆயினும் மரகதவல்லி சிறிதும் அஞ்சவில்லை.
"கள்ளா! ஏன் இப்படிக் கூச்சல் போட்டுத் தடபுடல் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
நிலவின் வெளிச்சத்தில் மரகதவல்லியின் முகத்தை பார்த்த கள்ளன் ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். அவனுடைய இரும்பு மனமும் இளகிப் போய்விட்டது.
மறுபடியும் மரகதவல்லி "இங்கே ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை. பெண்பிள்ளைகள் இருக்கிறோம். இங்கே வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? நகை நட்டுகள் வேண்டுமானால் கழற்றித் தந்து விடுகிறோம். வாங்கிக் கொண்டு பேசாமல் போய்விடு!" என்றாள்.
கள்ளனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தயங்கித் தயங்கி "எனக்கு உன் நகை நட்டுகள் வேண்டாம்" என்றான்.
"வேறு என்ன உனக்கு வேண்டும்?" என்று மரகதவல்லி கேட்டாள்.
"நீ என்னோடு புறப்பட்டு வரவேண்டும்!" என்றான் கள்ளன்.
"இப்போதே வர வேண்டுமா? அல்லது மாமா வருகிற வரையில் காத்திருக்க முடியுமா? மாமா வந்ததும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டால் நிம்மதியாயிருக்கும்."
கள்ளனுக்கு மேலும் திகைப்பு உண்டாயிற்று. "என்னை ஏய்க்கவா பார்க்கிறாய்? அதெல்லாம் முடியாது. உடனே புறப்பட்டு வருகின்றாயா, அல்லது உன்னைப் பலாத்காரமாய்த் தூக்கிக் கொண்டு போகட்டுமா?" என்று கர்ஜித்தான்
"உனக்கு அவ்வளவு கஷ்டம் வேண்டாம். நானே இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மரகதவல்லி அவனுக்கு முன்னால் நடந்தாள்.
கள்ளன் அடங்காத வியப்புடன் அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை வாசலுக்குச் சென்று முதலில் அவளைக் குதிரை மேல் ஏற்றினான். பிறகு தானும் தாவி ஏறிக் கொண்டான். குதிரையை மெதுவாகவே செலுத்தினான்.
மரகதவல்லி அவ்வளவு சுலபமாகத் தன்னுடன் வரச் சம்மதித்தது கள்ளனுக்குச் சொல்ல முடியாத ஆச்சரியத்தை உண்டாக்கியிருந்தது. ஆகையால் கோழிகூவாப் புத்தூரைக் குதிரை தாண்டிச் சென்றதும், "பெண்ணே! என்னுடன் வருவதற்கு உனக்குப் பயமாயில்லையா?" என்று கேட்டான்.
"எனக்கு என்ன பயம்? நீ 'காதறாக் கள்ளன்' என்பது எனக்குத் தெரியும். பெண்களுக்கு எவ்விதத் தீங்கும் நீ செய்யமாட்டாய் என்று உலகமெல்லாம் தெரிந்ததுதானே? ஆகையால் எனக்கு என்ன பயம்?" என்றாள் மரகதவல்லி.
"உலகம் சொல்லுவதை நம்பியா நீ கள்ளனோடு புறப்பட்டாய்?"
"உலகம் வேறுவிதமாய்ச் சொல்லியிருந்தாலும் நான் கிளம்பித்தானிருப்பேன். ஐந்து வருஷமாகக் கூண்டிலே கிளி அடைபட்டிருப்பது போல் அடைப்பட்டிருந்தேன். அப்படி அடைபட்டுக் கிடப்பதைக் காட்டிலும் கள்ளனோடு வெளியே புறப்படுவது கூட நல்லது தான் என்று தோன்றியது."
"பெண்ணே! உன்னை உன் மாமன் அவ்வளவு கஷ்டப்படுத்தி வந்தாரா!"
"ஐயோ! பாவம் அவர் என்னை கஷ்டப்படுத்தவே இல்லை. என் பேரில் உயிராயிருந்தார். ஆனாலும் எனக்கு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தது கஷ்டமாகத்தானிருந்தது. அந்தக் கடும் சிறைச்சாலையிலிருந்து என்னை நீ விடுதலை செய்தாயே! உனக்கு நான் எந்த விதத்தில் கைமாறு செய்யப் போகிறேன்?"
"அசட்டுப் பெண்ணே! அதிகமாகச் சந்தோஷப்பட்டு விடாதே!..."
"ஏன்? நான் அதிகமாகச் சந்தோஷப்படுவது உனக்குப் பொறுக்கவில்லையா?"
"உன்னை நான் எதற்காக அழைத்துப் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டு அப்புறம் சந்தோஷப் படு! பாளையக்காரர் தில்லைமுத்துத்தேவர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"ஆமாம்; அந்த மனுஷர் என்னைக் கல்யாணம் கட்டிக் கொள்ள ஆசைப் படுவதாகக் கேள்விப்பட்டேன்."
"அவரிடம் உன்னைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறேன். அதற்காகவே உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்."
"அடபாவி!"
"ஏன் என்னைத் திட்டுகிறாய்? தில்லைமுத்துத்தேவர் ரொம்பப் பெரிய மனிதர். அவரிடமுள்ள பணத்துக்கு கணக்கே கிடையாது. அவருடைய எல்லைக்குள் அவர்தான் ராஜா. நீ அவரை கலியாணம் செய்து கொண்டால் ராணி மாதிரி இருக்கலாம்."
"சீச்சீ! நான் எதற்கு ராணியாகிறேன்? ஐயையோ இப்படியா செய்யப் போகிறாய்? இது தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே!"
"அதனாலேதான் அவசரப்பட்டுச் சந்தோஷப்படாதே என்று சொன்னேன். இப்போது தெரிகிறதா?"
"கூண்டிலிருந்து கிளியை விடுதலை செய்து காட்டுப் பூனையிடமா ஒப்புவிக்கப் போகிறாய்? இந்த மாதிரிப் பாவம் யாராவது செய்வார்களா?"
"பாவமாவது? புண்ணியமாவது! பெரிய பாவத்தை நான் தடுத்தேன். நான் வந்து உன்னை இப்படி அழைத்துப் போகாவிட்டால் தில்லைமுத்துத்தேவர் இருநூறு ஆட்களோடு வந்திருப்பார். உன் மாமனின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். ஊரே பற்றி எரிந்திருக்கும். எத்தனையோ பேர் செத்துப் போயிருப்பார்கள். இவ்வளவு பாவங்களையும் தடுப்பதற்காகவே நான் வந்தேன்."
"ஐயையோ! என்னாலேயா இவ்வளவு சங்கடம்? மாமா சாயங்காலம் ஐம்பது ஆட்களோடு புறப்பட்டுப் போனாரே? எங்கே போனாரோ தெரியவில்லையே?"
"எனக்குத் தெரியும் சொல்லுகிறேன். அதோ கொஞ்ச தூரத்தில் ஒரு பொத்தை தெரிகிறதல்லவா?"
"ஆமாம், அதோ தெரிகிறது."
"அதற்குப் பக்கத்தில் ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. அதில் தில்லைமுத்துத்தேவரும் அவருடைய ஆட்கள் இருநூறு பேரும் திரண்டு இறங்கியிருக்கிறார்கள். உன்னுடைய மாமன் அங்கேதான் போயிருக்கிறார்."
"ஐயோ! அங்கே இரண்டு கட்சிக்கும் சண்டை வந்திருக்குமோ?"
"வந்திராது. சண்டை நடவாமல் தடுப்பதற்காகத் தான் நான் உன்னைக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். தில்லைமுத்துத்தேவர் இப்போது உன் மாமாவுடன் சமாதானமாகப் பேசிக் கொண்டிருப்பார்."
"என்னை அங்கே கொண்டு போய் விட்டால் அப்புறம் என்ன ஆகும்?"
"நீ பாளையக்காரரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாகச் சொன்னால் சண்டை ஒன்றும் வராது. உன் மாமாவும் ஒத்துக் கொள்வார்."
"உயிர் போனாலும் நான் அதற்குச் சம்மதிக்க மாட்டேன். நான் சம்மதித்தாலும் என் மாமா சம்மதிக்க மாட்டார். சம்மதிக்கிறவராயிருந்தால் இத்தனை நாள் காத்திருப்பாரா?"
"பெண்ணே! உன் மாமாவின் உத்தேசந்தான் என்ன? உன்னை எப்போதும் கன்னிப் பெண்ணாகவே அவருடைய வீட்டில் வைத்திருக்க உத்தேசமா?"
"இல்லை, இல்லை, அவருக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தது."
"அது என்ன பைத்தியக்கார ஆசை?"
"மாமாவின் மகன் ஆறு வருஷத்துக்கு முன்னால் கோபித்துக் கொண்டு ஓடிப்போய் விட்டானாம். அவன் என்றாவது ஒரு நாளைக்குத் திரும்பி வருவான். அவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கலாம் என்று அவருக்கு ஆசை. கள்ளா! இது பைத்தியக்கார ஆசைதானே?"
கள்ளன் இதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாயிருந்தான். குதிரை இரண்டு பேரைத் தாங்கிக் கொண்டு சாலையில் மெள்ள மெள்ளப் போய்க் கொண்டிருந்தது. கள்ளனும் அதை விரட்டவில்லை. அவனுடைய மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. புளியந்தோப்பும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்கெல்லாம் மரகதவல்லி, "கள்ளா! என்ன யோசனை செய்கிறாய்?" என்று கேட்டாள்.
"என்னமோ யோசனை செய்கிறேன். உனக்கென்ன அதைப்பற்றி?"
"அதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் உன்னை ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.
"என்ன கேள்வி? சீக்கிரம் கேட்டுத் தொலை! அதோ புளியந்தோப்பு நெருங்கி வந்துவிட்டது."
"கள்ளா! நீ ஒன்றும் உனக்காகத் திருடுவதில்லை. மற்ற ஏழை எளியவர்களுக்காகவே திருடுகிறாய் என்று உலகத்தார் சொல்லுகிறார்களே, அது உண்மையா?"
"உண்மையாயிருக்கலாம்; அதற்கு என்ன இப்போது?"
"இன்றைக்கு ஒரு நாள் உனக்காகத் திருடலாமே என்று சொல்கிறேன்."
"எனக்காக என்னத்தைத் திருடச் சொல்கிறாய்? நீ நகை நட்டுக் கூட அதிகமாகப் போட்டுக் கொள்ளவில்லையே? எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு வந்திருக்கிறாயே?"
"சே! உன்னைப் போய் நகை திருடும்படி நான் சொல்வேனா?"
"பெண்ணே! வேறு என்னத்தைத் திருடும்படி சொல்கிறாய்?"
"தெரியவில்லையா உனக்கு! உன்னைப்பற்றி என்னவெல்லாமோ பிரமாதமாக்ச் சொலுகிறார்களே? இவ்வளவு புத்தி கட்டையான மனுசனா நீ? அந்தப் பாளையக்காரனுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு நீயே என்னைத் திருடிக் கொண்டு போகும்படிதான் சொல்லுகிறேன்."
இந்த வார்த்தைகளைக் கேட்டக் கள்ளனுடைய உடம்பு சிலிர்த்தது. குதிரையை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு முன்னால் பார்த்து உட்கார்ந்திருந்த மரகதவல்லியைத் தன்னைப் பார்க்கும்படி திரும்பி உட்கார வைத்துக் கொண்டான். இருபுறமும் மரமடர்ந்த அச்சாலையில் அந்த இடத்தில் இடைவெளியிருந்தது. வெண்ணிலாவின் வெளிச்சம் அவளுடைய முகத்தில் பட்டது. கள்ளன் தன் முகமூடியையும் நீக்கிக் கொண்டான். மரகதவல்லியின் முகத்தைத் தூக்கிப் பிடித்துக் கனிவுடன் உற்றுப் பார்த்தான்.
"பெண்ணே! நீ சொல்வது இன்னதென்று தெரியாமால் சொல்லுகிறாய். நான் வீடுவாசல் இல்லாதவன். மலையிலும் காட்டிலும் அலைந்து திரிகிறவன். அரண்மனையில் சுகமாக வாழ்ந்த நீ என்னோடு எப்படி வாழ்வாய்?"
"கள்ளா! உன்னுடைய அரண்மனையே எல்லாவற்றிலும் பெரிய அரண்மனை! பூமியே உன் வீட்டின் தரை, ஆகாசமே கூரை. இதைக்காட்டிலும் பெரிய மாளிகை ஏது? அந்தப் பாளையக்காரனை ஒரு தடவை நான் பார்த்திருக்கிறேன். அன்று இராத்திரியெல்லாம் தூக்கத்தில் பயந்து உளறினேன். அவனிடம் என்னை நீ ஒப்புவித்தால் உடனே உயிரை விடுவேன். ஸ்திரீஹத்தி தோஷம் உனக்கு வரும். உன்னோடு வெளிக் கிளம்பிய பிறகு, மாமா வீட்டிற்குத் திரும்பிப் போகவும் முடியாது. கள்ளா! என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போ!"
"பெண்ணே! என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்கனவே பலர் பிரயத்தனம் செய்கிறார்கள். இன்று முதல் பாளையக்காரரின் இருநூறு ஆட்களும் நம்மை வேட்டையாடுவார்கள்."
"வேட்டை நாய்களைக் கண்டால் நான் கொஞ்சங்கூடப் பயப்படுவதில்லை. கள்ளா! உனக்குப் பயமா?" என்று கேட்டாள் அந்த மரக்குலத்து மங்கை.
5
அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும் ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன் கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும் தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான். அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம் போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான். "உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள். மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!" என்றான். "என்னுடைய ஜமீனில் பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே" என்றார் கருடாசலத்தேவர், "அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?" என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான். "எனக்கோ வயதாகிவிட்டது. வேறு யாரும் உற்றார் உறவினர் இல்லை. அவளும் இல்லாவிட்டால் வீடு பாழடைந்து போகும்" என்றார் ஜமீன்தார். "அதெல்லாம் வெறும் ஜால்ஜாப்பு! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்றான் பாளையக்காரன். கடைசியாக ஜமீன்தார் தம் மனதில் உள்ளதை வெளியிட்டுச் சொன்னார். "ஒரு நாளைக்கு என் மகன் திரும்பி வருவான் என்று ஆசை வைத்திருக்கிறேன். மரகதவல்லியை அவனுக்கென்று உத்தேசித்திருக்கிறேன்!" என்றார். பாளையக்காரன் சிரித்தான். "ஆறு வருஷமாக வராதவன் இனிமேல் வரப்போகிறானா? உமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கப் பார்க்கிறீர். அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது!" என்றான். இப்படி ஜமீன்தாருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே பாளையக்காரனுடைய காது கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. சாலையில் குதிரை வரும் சத்தம் கேட்கிறதா என்றுதான். ஏறக்குறைய சந்திரன் உச்சி வானத்துக்கு வந்தபோது சற்றுத் தூரத்தில் குதிரை காலடிச் சத்தம் கேட்டது. உடனே பாளையக்காரன் எழுந்தான். "நீர் ஏதோ உமது மருமகளைப் பத்திரமாய் அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். நீர் இல்லாத சமயம் என்ன நடக்கிறதோ என்னமோ! வயது வந்த பெண் எத்தனை நாளைக்கு உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருப்பாள்?" என்று சொன்னான். இதைக் கேட்டதும் ஜமீன்தாருக்கு இரத்தம் கொதித்துக் கண்கள் சிவந்தன. "நீயும் ஒரு மனிதனா? உன்னிடம் பேச வந்தேனே?" என்று எழுந்தார். "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும். குதிரையில் யார் வருகிறதென்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தில்லைமுத்துத்தேவன் சாலையை நெருங்கிச் சென்றான். அவனுடைய ஆட்கள் ஜமீன்தாரைச் சூழ்ந்து கொண்டு அவர் போவதைத் தடுக்கும் பாவனையாக நின்றார்கள். "இப்படிப்பட்ட இக்கட்டில் நாமே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டோ மே? இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது?" என்று கருடாசலத்தேவர் யோசனையில் ஆழ்ந்தார்.
தில்லைமுத்துத்தேவன் சாலையருகிலே போய் நின்றான். குதிரை புளியந்தோப்பை நெருங்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. ரொம்பக் கூர்மையான காது உள்ளவனாதலால், வருகிற குதிரை மேல் இரண்டு பேர் ஏறி வருகிறார்கள் என்பதைக் குதிரைக் காலடிச் சத்தத்திலிருந்து தெரிந்து கொண்டான். அவனுடைய உற்சாகம் எல்லை கடந்தது. தன்னுடைய மனோரதம் நிறைவேறி விட்டதென்றே நம்பினான். இவ்வளவு சுலபமாக, உயிர்ச்சேதம் எதுவுமின்றி, காரியம் கைகூடி விட்டதை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.
குதிரை மேலும் நெருங்கி வந்தது. இதோ வந்து விட்டது! அதன் மேலே இரண்டு பேர் இருப்பதும் நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் நின்ற இடத்துக்கு நேரேயும் வந்தது. அதற்கு அப்பாலும் சென்றது. "நில்! நில்!" என்று கத்தினான். ஆனால் குதிரை நிற்கவில்லை. புளியந்தோப்பையும் அதையடுத்து நின்ற பொத்தையையும் தாண்டி மின்னல் மின்னும் நேரத்தில் இராமபிரானுடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய பாணத்தைப் போல குதிரை போயே போய்விட்டது!
அப்புறந்தான் தில்லைமுத்துத்தேவன் விழித்துக் கொண்டான். கள்ளன் தன்னை ஏமாற்றிப் பெண்ணை அடித்துக் கொண்டு போகிறான் என்று தெரிந்து கொண்டான். உடனே "கொண்டு வா குதிரையை!" என்று அலறினான். அவனுடைய குதிரை வந்ததும் தாவி ஏறிக் கொண்டான். "மடையர்களே! என்னோடு வாருங்கள்!" என்று கத்தினான். மற்றும் ஏழு குதிரைகளிலும் ஆட்கள் ஏறிக் கொண்டார்கள்.
முன்னால் சென்ற கள்ளனுடைய குதிரையைத் தொடர்ந்து பாளையக்காரனுடைய எட்டுக் குதிரைகளும் பாய்ந்து சென்றன. குதிரைகளுக்குப் பின்னால் காலாட்களும் தலை தெறிக்க ஓடினார்கள்.
ஜமீன்தார் கருடாசலத் தேவருக்கு இது ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டுத் தம்முடைய ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார்.
6
காதறாக் கள்ளனுடைய குதிரை வாயுவேக, மனோ வேகமாகப் பறந்து சென்றது. ஆயினும் அக்குதிரை ஏற்கெனவே வெகு தூரம் பிரயாணம் செய்திருந்ததல்லவா? அதோடு இரண்டு பேரைத் தன் முதுகில் சுமந்து கொண்டிருந்தது. ஆகையால் பின்னால் வந்த குதிரைகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தன.
கடைசியாகக் கள்ளனுடைய குதிரை இந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தது. ஆறு இன்றுபோல் அன்றில்லை. வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு போயிற்று. ஆறு அடி உயரமுள்ள ஆளுக்கும் நிலை கொள்ளாது. பிரவாகத்தின் வேகமோ அதிகம். திரும்பிப் போகவோ மார்க்கமில்லை. ஆற்றங்கரையில் தயங்கி நின்றால் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். வேறு வழியில்லாமல் கள்ளன் குதிரையைத் துணிந்து ஆற்றில் இறக்கினான். குதிரை அவர்கள் இரண்டு பேரையும் சுமந்து ஆற்றில் இறங்கி வெள்ளத்தின் வேகத்தைச் சமாளித்துக் கொண்டு நீந்திச் சென்றது. கள்ளனிடம் அந்த வாயில்லாப் பிராணி அவ்வளவு விசுவாசம் வைத்திருந்தது. எப்படியோ தட்டுத்தடுமாறி அக்கரையை நெருங்கியது. ஆனால் துறையில் போய்ச் சேராமல் கொஞ்சம் அப்பால் சென்றுவிட்டது. அங்கே கரை செங்குத்தாயிருந்தது. குதிரை முன்னங்காலை வைத்துத் தாவி ஏற ஆனமட்டும் முயன்றது; முடியவில்லை. கள்ளன் பார்த்தான், மறுகரையிலோ பாளையக்காரனுடைய குதிரைகள் வந்துவிட்டன. பாளையக்காரன் அதட்டும் குரல் கேட்டது. சில குதிரைகள் ஆற்றில் இறங்கிவிட்டன. இந்த நிலைமையில் கள்ளன் ஒரு யோசனை செய்தான். கடவுள் அருளும் இருந்தது. மரகதவல்லியைத் தன் இரு கைகளினாலும் தூக்கிக் கரையில் விட்டெறிந்தான். அவள் கரையில் பத்திரமாய் விழுந்ததைப் பார்த்ததும் தான் குதிரை மீதிருந்து குதித்தான். இரண்டு எட்டில் நீந்திக் கரையேறினான். பிறகு, குதிரையையும் கரை சேர்ப்பதற்காகத் திரும்பிப் பார்த்தான்! ஐயோ! பாவம்! அந்தக் குதிரையின் சக்தி அத்துடன் தீர்ந்து போய்விட்டது. எஜமானனை அக்கரை சேர்ந்ததும் அது வெள்ளத்துடன் போராடும் ஊக்கத்தையும் இழந்துவிட்டது. வெள்ளம் அதை அடித்துக் கொண்டு போய்விட்டது. கள்ளனுடைய நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. ஆயினும் குதிரைக்காகத் துக்கப்பட்டுக்கொண்டு அங்கே நின்றால் தன் காதலியையும் இழக்க நேரிடும். அதற்குள்ளே மரகதவல்லியும் எழுந்து நின்று அவனருகில் வந்தாள். இருவரும் கைகோத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாகச் சென்றார்கள். ஆற்றங்கரையை அடுத்திருந்த காட்டுக்குள் புகுந்து அந்தச் சமயத்துக்குத் தப்பித்துக் கொண்டார்கள்.
பாளையக்காரனுடைய குதிரைகளில் ஒன்றாவது பாதி ஆறு கூடத் தாண்டவில்லை. நாலு குதிரைகள் ஆற்றோடு போய்விட்டன. கள்ளனைப் பிடிக்க முடியாமல் பாளையக்காரன் ஏமாந்து திரும்பினான்.
ஜமீன்தார் கருடாசலத்தேவர் தம் அரண்மனைக்குத் திரும்பிப் போனதும் அங்கே மருமகள் இல்லை என்பதை அறிந்தார். ஆனால் அவளை அழைத்துக் கொண்டு போனவன் தம்முடைய மகன் தான் என்று தாதிப் பெண்கள் மூலமாக அறிந்து திருப்தி அடைந்தார்.
அதோ, ஆற்றுக்கு அக்கரையிலே உள்ள ஊருக்கு 'பரி உயிர் காத்த நல்லூர்' என்ற பெயர் வந்த காரணம் என்னவென்று இப்போது தெரிகிறதல்லவா?
பின்னுரை
மேற்கண்ட கதையை அந்தப் பெரியவர் சொல்லி முடித்தார். இதற்குள்ளே எங்கள் மோட்டார் வண்டியைப் பத்து முப்பது ஆட்கள் வந்து சேர்ந்து தள்ளி அக்கரையிலே கொண்டு சேர்த்திருந்தார்கள். என்னை வரும்படி சொல்லி மோட்டாரின் குரல் அலறியது.
"கதை ரொம்ப நன்றாயிருக்கிறது" என்று சொல்லி கிழவனாரிடம் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தேன்.
அவர் அதை வாங்கி மடியில் செருகிக் கொண்டே, "கதை இல்லை, ஐயா! உண்மையாக நடந்தது!" என்றார்.
"உண்மையாக நடந்ததென்று எப்படிச் சொல்கிறீர்? நீர் பார்த்தீரா?" என்று கேட்டேன்.
"ஆமாம் பார்க்கத்தான் பார்த்தேன்!" என்று கிழவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"ஓகோ! கள்ளன் தப்பித்துக் கொண்டு போவதற்கு நீர் ஒருவேளை உதவி செய்தீரா?" என்று கேட்டேன்.
"இல்லை, ஐயா! நான் அவனுக்கு உதவி செய்யவில்லை. எனக்குத்தான் அவனால் ரொம்ப உதவி ஏற்பட்டது. காதறாக் கள்ளன் உயிரோடிருக்கும் போதும் எத்தனையோ பேருக்கு உதவி செய்தான். இறந்த பிறகும் ஒரு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். அவன் புண்ணியவான்!" என்றார் பெரியவர்.
"உமக்கு அவன் என்ன உதவி செய்தான்?" என்று கேட்டேன்.
பெரியவர் தம்முடைய மடியில் வைத்திருந்த ஒரு பழைய நைந்த காகிதத்தை எடுத்துப் "பாருங்கள்!" என்று சொல்லிக் கொடுத்தார். அதில் இங்கிலீஷில் பின் வருமாறு 'டைப்' எழுத்தில் எழுதிச் சர்க்கார் முத்திரையும் பதிந்திருந்தார்.
"காது அறுக்காத கள்ளன் என்று இந்தப் பக்கங்களில் பிரசித்தி பெற்றிருந்த முத்து விஜய சேதுத்தேவன் என்னும் பக்காத் திருடனைப் பிடிப்பதற்கு உளவுகூறி ஒத்தாசை செய்த கொள்ளை முத்துத்தேவனுக்கு இந்தப் போலீஸ் சர்டிபிகேட்டும் மாதம் பதினைந்து ரூபாய் வீதம் ஜீவிய காலம் வரையில் பென்ஷனும் காருண்ய பிரிட்டிஷ் துரைத்தனத்தாரால் அளிக்கப்படுகிறது."
இதைப் படித்ததும் அந்தப் பெரியவரை கொஞ்சம் அருவருப்புடன் பார்த்துவிட்டு எழுந்தேன்.
"அந்தப் புண்ணியவானுக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். சென்ற ஐம்பது வருஷமாக அவனால் என்னுடைய குடும்பம் பிழைத்து வருகிறது. அவனுக்கு நான் ஏழு தலைமுறையும் கடமைப் பட்டவன்!" என்று சொன்னார் பெரியவர்.
வேகமாக ஆற்றைக் கடந்து அக்கரையில் நின்ற மோட்டாரைப் பிடித்து ஏறிக் கொண்டேன். அந்தக் கிழவனார் இருந்த இடத்திலிருந்து சீக்கிரத்தில் போனால் போதும் என்று இருந்தது.
பாரத தேசம் குடியரசுப் பதவியை அடையப் போகும்நாள் நெருங்கும் சமயத்தில் எனக்கு அந்தக் கிழவனார் சொன்னக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. காதறாக் கள்ளனை காட்டிக் கொடுத்து நன்மையடைந்த அக்கிழவனார் அந்தக் கள்ளனை இன்றுவரை நினைத்துக் கொண்டு அவனிடம் நன்றியோடாவது இருக்கிறார்.
பாரதத்தின் மக்களாகிய நாம் நமக்கு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலையளித்த காந்தி மகாத்மாவை யமனிடம் காட்டிக் கொடுத்துவிட்டோம்! அவரை நன்றியோடு ஞாபகம் வைத்துக் கொண்டாவது இருக்கப் போகிறோமா?
------------
62. மாலதியின் தந்தை
ரயில் சிநேகிதம் என்று வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். 'விமான சிநேகிதம்' என்ற புதிய சொற்றொடரையும் தயவு செய்து அத்துடன் சேர்த்துக் கொள்ள வேணும்.
ஸ்ரீ கே.ஆர். ரங்கபாஷ்யத்துக்கும் எனக்கும் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்றாலும்; விமானப் பிரயாணத்தின்போதுதான் எங்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே அந்தச் சிநேகிதம் முற்றிக் கனிந்தது.
ஒரு தடவை புது டில்லிக்கு விமான யாத்திரை சென்ற போது எனக்குப் பக்கத்தில் ரங்கபாஷ்யம் உட்கார்ந்திருந்தான். விமானத்தில் ஓரத்து ஆசனத்தில் நான் இருந்தேன். எனக்கு அருகில் விமானத்தின் சிறிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. ரங்கபாஷ்யம் எனக்கு அப்பால் உட்கார்ந்திருந்தபடியால் அடிக்கடி கழுத்தை வளைத்து முகத்தை நீட்டி அந்தச் சிறிய கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்க முயன்றான். கீழே அதிகமாக ஒன்றும் அவனால் பார்க்க முடியவில்லை. இது ரங்கபாஷ்யத்தின் முக பாவத்திலிருந்து நன்கு தெரிந்தது.
"நாம் வேணுமானால் இடம் மாறி உட்காந்து கொள்ளலாமே? இந்த ஜன்னல் பக்கத்துக்கு நீங்கள் வருகிறீர்களா?" என்றேன்.
அவன் காதில் அது தெளிவாக விழவில்லை போலும்! எனினும் என்னுடன் பேச்சுக் கொடுக்க அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு "அடுத்த இறங்குமிடம் நாகபுரிதானே?" என்று கேட்டான்.
நான் தலையை அசைத்தேன்.
"நாகபுரியாயிருக்க முடியாது. ஸெகந்தராபாத் ஒன்று நடுவில் இருக்கிறதே!" என்று அவனே மறுத்துக் கூறினான்.
"ஆமாம்; ஸெகந்தராபாத் ஒன்று இருந்து தொலைக்கிறது!" என்றேன் நான்.
"நீங்கள் டில்லிக்கா போகிறீர்கள்?" என்று ரங்கபாஷ்யம் கேட்டான்.
மீண்டும் தலையை அசைத்தேன்.
"நானும் டில்லிக்குத்தான் போகிறேன். ஆகாச விமானத்தில் இதுதான் உங்களுக்கு முதல் பிரயாணமோ?"
இதென்னடா தொல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த வம்புக்காரனுடைய கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? அடுத்த முறை விமானம் இறங்கி ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். பஞ்சை அடைத்துக் கொண்டு இவனோடு யார் ஓயாமல் கத்திக் கொண்டிருப்பது?
இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், விமான உபசரணை ரமணி அங்கு வந்தாள். கையிலிருந்த பெப்பர்மிண்ட் பெட்டியை நீட்டி, "ஸ்வீட்ஸ் வேண்டுமா? காப்பி அல்லது டீ வேண்டுமா?" என்று கேட்டாள். ரங்கபாஷ்யம் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தான். விளக்கெண்ணெய் குடித்தவன் முகம் போல் அவன் முகம் மாறியது.
நான் அந்தப் பெண்மணி மீது இரக்கங் கொண்டு ஒரு பெப்பர்மிண்ட் எடுத்துக் கொண்டேன். "வாயில் ஏதேனும் குதப்பிக் கொண்டு இருப்பது நல்லது. விமான யாத்திரையின்போது தொண்டையில் எச்சில் விழுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் காது வலி வந்துவிடும்" என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.
"இருக்கலாம்; ஆனால் இவளிடமிருந்து வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இந்த மாதிரி பெண் பிள்ளைகளை எதற்காகத்தான் 'ஏர் ஹோஸ்ட்டஸ்' வேலையில் அமர்த்துகிறார்களோ!" என்றான் ரங்கபாஷ்யம். ஸெகந்தராபாத்தில் இறங்கி நாங்கள் காப்பி சாப்பிடப் போன இடத்தில், அவன் மறுபடியும் 'ஏர் ஹோஸ்ட்டஸ்' பேச்சை எடுத்தான். "மேனாட்டாரை இதிலெல்லாம் நாம் காப்பி அடிக்க வேண்டுமா?" என்று கேட்டான்.
"அப்படிச் சொல்லக் கூடாது. ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலும் பெண் நர்சுகள் இருக்கிறார்களே ஏன்? சிகிச்சை, பணிவிடை, உபசரிப்பு, - இவற்றுக்கெல்லாம் மெல்லியலார் அதிகத் தகுதியுடையவர்கள். அதற்காகத்தான் இம்மாதிரி உபசரிப்பு வேலைகளுக்குப் பெண்களை நியமிக்கிறார்கள்!" என்று நான் சொன்னேன்.
"அதெல்லாம் இல்லை. புருஷர்களை நியமித்தால் என்ன குறைவாய்ப் போய்விடும்? இந்த பெப்பர்மிண்டைப் புருஷர்கள் கொடுக்க மாட்டர்களா? இந்த வேலைக்குப் பெண்களை நியமித்தால் பிரயாணிகள் அதிகமாக வருவார்கள் என்று உத்தேசம்?" என்று அழுத்தமாகச் சொன்னான் ரங்கபாஷ்யம்.
"சேச்சே! இது என்ன பேச்சு? நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. 'ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ வேண்டும்' என்று நம் தலைவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். நீ இவ்வளவு கர்நாடகமாகப் பேசுகிறாயே!" என்று சொன்னேன்.
"சரிநிகர் சமானத்திலும் ஒரு வரை முறை வேண்டும். ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் இம்மாதிரி வேலைகளுக்கு வரலாம். நம்முடைய ஹிந்து சமூகப் பெண்களுக்கு இதெல்லாம் லாயக்கில்லை" என்றான் ரங்கபாஷ்யம்.
மேலும் அவன், "ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கின்றன. இவர்கள் வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள்!" என்றான்.
இந்தச் சம்பாஷணையைத் தொடர நான் விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒருவிதமான ஆத்திரம் அவன் மனத்தில் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. அது என்னவென்று அறிந்து கொள்ளுவதில் இலேசாக ஆவலும் உண்டாயிற்று. நாகபுரியில் காலை உணவுக்காக விமானம் இறங்கியபோது அதைபற்றிச் சிறிது விவரமாக நானே அறிந்து கொள்ளவும் முடிந்தது.
2
நாகபுரி விமான நிலையத்தில் நாங்கள் உட்கார்ந்து விமானக் கம்பெனியார் அளித்த காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ரங்கபாஷ்யம் உட்கார்ந்த மேஜையில் உட்காராமல் வேண்டுமென்றே வேறொரு மேஜையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். ஆனால் அடிக்கடி என்னுடைய கவனம் மட்டும் அவன் மீது சென்று கொண்டிருந்தது.
அதுவரை சோர்வும் அலுப்பும் குடிகொண்டிருந்த ரங்கபாஷ்யத்தின் முகத்தில் திடீரென்று ஒரு மலர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்படக் கண்டேன்.
வேறொரு விமான ரமணி அச்சமயம் நிலையத்து அறைக்குள் வந்தாள். அவள் தன்னுடன் வந்த விமான ஓட்டிகளுடன் ஒரு மேஜையில் அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கினாள். அவளுடைய வருகையைப் பார்த்தவுடனே தான் ரங்கபாஷ்யத்தின் முகம் மலர்ந்தது. புதிதாக வந்த விமான ரமணி கதாநாயகிகளின் இனத்தைச் சேர்ந்தவள். கவிகள் பூரண சந்திரனுக்கு ஒப்பிடுகிறார்களே அப்படிப்பட்ட வட்டவடிவமான பிரகாசமான முகம்; பவளமல்லிப் பூவின் நிறம்; கரிய பெரிய கண்கள்! அந்தக் கண்களின் இமைகள் அவ்வப் போது சடசடவென்று பட்டுப் பூச்சியின் இறகுகளைப் போல் மூடி மூடித் திறந்தன. அவளுடைய கண்களின் கருவிழிகள் அங்குமிங்கும் குறுகுறுவென்று சலனம் பயின்று கொண்டிருந்தன. அவள் கூந்தலைக் கழுத்தளவு தொங்கும்படி விட்டுத் தூக்கிச் செருகியிருந்தது அவளுடைய முகத்துக்கு ஒரு தனிச் சோபையைக் கொடுத்தது.
அந்தப் பெண் அறைக்குள் வந்தபிறகு ரங்கபாஷ்யத்தின் கவனம் முழுவதும் அவளிடம் சென்றிருந்ததைக் கண்டேன். மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்ற கூச்சம் சிறிதுகூட இல்லாமல் அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த விமான ரமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக ரங்கபாஷ்யம் இருந்த மேஜைப் பக்கம் அவள் பார்வை சென்றது. ரங்கபாஷ்யத்தைப் பார்த்ததும், அவளுடைய முகத்தில் இளம் புன்னகை அரும்பியது. ரங்கபாஷ்யமும் திரும்பிப் புன்னகை புரிந்தான். அவனுடைய புன்னகையில் அசடு வழிந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் ஏற்கனவே பழக்கமானவர்கள் என்று ஊகித்துக் கொண்டேன். விமான ரமணிகளால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி ரங்கபாஷ்யம் சொல்ல ஆரம்பித்ததில் ஏதோ ஒரு ரஸமான சம்பவம் இருந்திருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!
விமானங்கள் புறப்படும் நேரம் ஆகிவிட்டதென்று ஒலிபெருக்கிகளின் ராட்சதக் குரல் எச்சரித்தது. புதிதாக வந்த விமான ரமணி எழுந்தாள்; ரங்கபாஷ்யம் அதைப் பார்த்துவிட்டு விரைந்து நடந்துபோய் அவள் பக்கத்தை அடைந்தான்.
"நீங்கள் இன்று டில்லி விமானத்தில் வரவில்லையா?" என்று கேட்டான்.
"இல்லை! நான் பம்பாய்க்குப் போகிறேன். விமானத்தில் ஏறினால் இன்னமும் உங்களுக்குத் தலை சுற்றி மயக்கம் வருகிறதா?" என்று கேட்டாள் அந்த ரமணி.
ரங்கபாஷ்யம் லேசாகச் சிரித்துவிட்டு, "உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதே! மிக்க சந்தோஷம்!" என்று சொன்னான்.
அவர்கள் நடந்து கொண்டே பேசியபடியால் அப்புறம் பேசிய வார்த்தைகள் என் காதில் சரியாக விழவில்லை.
அந்தப் பெண் ரங்கபாஷ்யத்திடம் விடைபெற்றுக் கொண்டு பம்பாய் விமானத்தை நோக்கிச் சென்றாள்.
ரங்கபாஷ்யம் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தான். நான் அவன் அருகில் சென்று, "நம்முடைய விமானமும் புறப்படப் போகிறது" என்றேன்.
"நாமும் போக வேண்டியதுதான்!" என்றான் ரங்கபாஷ்யம்.
"ஒருவேளை நீர் அந்த விமான மேனகையுடன் பம்பாய்க்கே போய்விடுவீரோ என்று நினைத்தேன்" என்று நான் அவனை எகத்தாளம் செய்தேன்.
ரங்கபாஷ்யம் அதற்காகக் கோபம் அடையவில்லை.
"போவதற்கு எனக்குச் சம்மதந்தான். ஆனால் டிக்கட்டை வேறு வழியில் மாற்றிக் கொடுக்க மாட்டார்களே!" என்றான்.
விமானத்தில் போய் ஏறிக் கொண்டோ ம். ரங்கபாஷ்யம் ஏதேதோ மனோராஜ்யங்களிலும் பகற் கனவுகளிலும் ஆழ்ந்திருந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் விமானத்தின் 'ஏர்ஹோஸ்ட்டஸ்' கொண்டு வந்து நீட்டிய பெப்பர்மிண்டைக் கூட அருவருப்பில்லாமல் எடுத்துக் கொண்டான்.
குவாலியர் விமானக் கூடத்தில் விமானம் இறங்கியதும் வழக்கம் போல் சிற்றுண்டி சாப்பிடும் இடத்துக்கு சென்றோம். அவனுக்குப் பக்கத்தில் நானாகவே போய் உட்கார்ந்து கொண்டேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
உண்மை வாழ்க்கையிலிருந்து ஏதேனும் ஒரு கதை புனைவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், அதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாதல்லவா?
"அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?" என்று கேட்டாள்.
"நீங்கள் ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்வதில்லையென்றால் சொல்கிறேன். எனக்கும் யாரிடமாவது சொல்லி யோசனை கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது" என்றான் ரங்கபாஷ்யம்.
"ஒன்றும் தப்பான காரியம் இல்லாவிட்டால், அதைப் பற்றி நானும் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை. பிறத்தியாருக்கு யோசனை சொல்ல நான் எப்போதுமே தயார்!" என்றேன் நான்.
மெள்ள மெள்ள அவன் விஷயத்தை சொன்னான். அப்படியொன்றும் பிரமாத விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனோ உலகத்தில் இதை விட முக்கியமானது வேறு என்ன இருக்க முடியும் என்று நினைத்ததாகத் தோன்றியது.
3
ரங்கபாஷ்யம் சென்ற மாதத்தில் ஒரு தடவை டில்லிக்கு வந்துவிட்டுத் திரும்பியபோது, டில்லி விமான நிலையத்தில் சென்னைக்குப் புறப்படும் விமானத்தில் ஏறப்போனானாம். சிறிய ஏணிபோன்ற படிகட்டுகளின் மூலமாகவே விமானத்தில் ஏற வேண்டும். ரங்கபாஷ்யம் அந்தப் படிகட்டுகளில் ஏறி விமானத்தில் ஒரு காலை வைத்தபோது ஊன்றி வையாமல் தடுமாறி விழப் பார்த்தான். அப்போது அங்கே நின்ற விமான ரமணி சட்டென்று அவனுடைய கரத்தைப் பிடித்து நிதானப் படுத்தி விமானத்தில் ஏற்றி விட்டாள். சம்பிரதாயமாக அவளுக்குத் "தாங்க்ஸ்" சொன்னான்.
"விழுந்துவிடப் பார்த்தீர்களே? தலை கிறுகிறுத்ததா?" என்று அந்தப் பெண் தமிழில் கேட்டதும், இவனுக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாகப் போய்விட்டது. ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் விமானத்திற்குள் போய் இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டான்.
மறுபடி அந்தப் பெண் கையில் பெப்பர்மிண்ட் பெட்டியுடன் வந்தபோது, "அப்போது ஒரு கேள்வி கேட்டீர்களே, அதற்கு நான் பதில் சொல்லட்டுமா!" என்றான் ரங்கபாஷ்யம்.
"என்ன கேள்வி கேட்டேன்?" என்றாள் அந்தப் பெண்.
"தலை கிறுகிறுத்ததா என்று கேட்டீர்கள். இந்த உலகத்து மனுஷனுக்கு முன்னால் திடீரென்று தேவலோகத்து மேனகை வந்து நின்றால், தலை கிறுகிறுத்து மயக்கம் வராமல் என்ன செய்யும்?" என்றான். அந்த மேனகை புன்னகை செய்துவிட்டு அப்பாற் போய் விட்டாள்.
ரங்கபாஷ்யமோ தனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்த இடத்தில் விமானம் இறங்கியபோது அந்த விமான ரமணி இவனைத் தேடி வந்து, "என்னிடம் பேசியது போல் வேறு யாரிடமாவது பேசிவிடாதீர்கள். கன்னத்தில் அறை விழுந்துவிடும்!" என்றாள்.
"அதைப் பற்றிப் பயமேயில்லை. வேறு யாரிடம் அப்படி நான் பேச முடியும்?" என்றான் ரங்கபாஷ்யம்.
இவ்விதம் அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சு வார்த்தைப் பழக்கம், பத்திரிக்கைத் தொடர் கதையைப் போல் சென்னைப் போகும் வரையில் நீடித்திருந்தது.
சென்னையில் பிரிந்து போக வேண்டிய சமயம் வந்தபோது, அந்த விமான மேனகையின் விலாசத்தை தெரிந்து கொள்ள ரங்கபாஷ்யம் ஆனமட்டும் முயன்றான். அது முடியவில்லை.
"கடவுளுடைய சித்தம் இருந்தால் மறுபடியும் எப்போதாவது நாம் சந்திப்போம்" என்றாள் விமான மேனகை.
"அப்படிக் கடவுளுக்கே தான் விட்டுவிடப் போவதில்லை, நானும் கொஞ்சம் முயற்சி செய்வதாகவே உத்தேசம்" என்றான் ரங்கபாஷ்யம்.
விமானப் பிரயாணத்தில் இது ஒரு விசித்திரமான அனுபவம் என்று மட்டுமே முதலில் ரங்கபாஷ்யம் நினைத்தான். ஆனால் அந்த விசித்திர அனுபவம் அவனுடைய உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்துவிட்டது என்று போகப் போகத் தெரிந்தது. அந்த அனுபவத்தை அவன் மறக்க முடியவில்லை. அந்தப் பெண்ணையும் மறக்க முடியவில்லை. கிட்டதட்டப் பைத்தியம் மாதிரியே ஆகிவிட்டது.
ஆகையினாலேயே மறுபடியும் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் ஏறிய விமானத்தில் அந்த மேனகையைக் காணாதபடியால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தான். நாகபுரியில் அவளைப் பார்த்த பிறகு தான் ஒருவாறு மறுபடியும் உற்சாகம் ஏற்பட்டது.
4
புது டில்லியில் நான் தங்குமிடத்தை ரங்கபாஷ்யம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். நாலு நாளைக்கு பிறகு ஒரு தினம் என்னைப் பார்க்க வந்தான். வரும்போதே குதூகலத் தாண்டவம் ஆடிக் கொண்டு வந்தான்.
"ரங்கபாஷ்யம், என்ன இவ்வளவு குதூகலம்!" என்று கேட்டேன்.
"அவளை நான் மறுபடியும் பார்த்தேன்" என்றான்.
"அவளை என்றால் யாரை?"
"உலகத்திலேயே எனக்கு இப்போது ஒரு 'அவள்' தான் வேறு யாராயிருக்க முடியும்?"
"அந்த விமான மேனகையைச் சொல்லுகிறாயா?"
"ஆமாம்; ஆனால் அவள் பெயர் மேனகை அல்ல மாலதி!" என்றான்.
"அவளை எங்கே பார்த்தாய்?"
"நான் தங்கியுள்ள ஹோட்டலுக்கே அவளும் நேற்று வந்திருந்தால். ஒரு முக்கியமான செய்தி சொன்னாள்."
"அது என்ன செய்தி? தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று சொன்னாளா?" என்றேன் நான்.
ரங்கபாஷ்யம் சிறிது நேரம் திறந்த வாய் திறந்தபடி ஒன்றும் தோன்றாமல் பிரமித்துப் போய் நின்றான்.
"ஏன் இப்படி விழிக்கிறாய்? மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே! இங்கே தரையில் ரத்னக் கம்பளம் கூடக் கிடையாது!" என்றேன்.
"அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்கவில்லை!" என்றான் ரங்கபாஷ்யம்.
"அதைக் கேட்காமல் மற்றபடி வேறு என்னத்தைக் கேட்டு என்ன பயன்? சரி, போகட்டும். வேறு என்ன அப்படி முக்கியமான செய்தி?"
"மாலதி 'ஏர் ஹோஸ்டஸ்' வேலையை விட்டுவிடப் போகிறாளாம்!"
"அடாடா! எதனால் அப்படிப்பட்ட விபரீதமான காரியத்தை அவள் செய்யப் போகிறாள்?"
"என்னைப் போல் இன்னும் அநேகர் அவளிடம் 'உன்னைக் கண்டதும் தலை கிறுகிறுத்து மயக்கம் வருகிறது!' என்கிறார்களாம். ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கும் நிலையில், தன்னால் வேறு விபத்துக்கள் நேரிட வேண்டாம் என்று, வேலையை ராஜினாமாச் செய்யப் போகிறாளாம். வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கே வந்துவிடப் போகிறாளாம்!" என்றான்.
"சென்னைக்கு ஏதோ துரதிர்ஷ்டந்தான்!" என்று சொன்னேன்.
"சென்னை நகரம் மூவேழு இருபத்தொரு தலை முறையில் செய்த தவத்தின் பயன் என்று சொல்லுங்கள்!"
"அந்த மாஜி விமான மேனகை சென்னை வீதிகளில் போகும் போதெல்லாம், யாராவது தலை கிறுகிறுத்து விழுந்து கொண்டிருப்பார்களே? அதனால் சென்னை நகரின் குழி விழுந்த சாலைகள் இன்னும் மேடு பள்ளமாகி விடுமே என்றுதான் கவலைப்படுகிறேன்!"
"ஆமாம். சென்னை நகரில் சாலைகள் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கும் எனக்கும் என்ன? இவள் இந்தத் தரித்திரம் பிடித்த விமான வேலையை விட்டு விடுகிறாள் என்பது எனக்கு உற்சாகமாயிருக்கிறது. ஆண் பிள்ளைகளுடைய சகவாசமே அவளுக்குப் பிடிக்கவில்லையாம். புருஷர்களுடைய மத்தியில் இருப்பதும், வேலை செய்வதும் அருவருப்பாயிருக்கிறதாம். ஆகையால் ஒரு பெண்கள் கலாசாலையில் ஆசிரியை ஆகிறதென்று தீர்மானித்து விட்டாளாம். அந்த வேலைக்கு மனுப் போட்டிருக்கிறாளாம். ஆசிரியை வேலை கிடைத்தவுடனே சென்னைக்கு வந்துவிடப் போகிறாளாம்!... இப்போது என்ன சொல்லுகிறீர்கள்" என்று கேட்டான்.
"என்ன சொல்லுகிறது? அந்தப் பெண்கள் கலாசாலையைக் கடவுள் காப்பாற்றட்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றேன்.
"அந்தப் பெண்கள் கலாசாலை செய்த பூஜா பலன் என்று சொல்லுங்கள்."
இவ்வாறு எங்கள் சம்பாஷணை அன்றைக்கு முடிந்தது. டில்லியில் அப்புறமும் இரண்டொரு தடவை ரங்கபாஷ்யம் என்னைச் சந்தித்தான். உற்சாக கடலில் முழுகியிருந்தான். மாலதியை மறுபடியும் பார்த்து அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதையும் தெரிந்து கொண்டு விட்டானாம்!
"உன் தலையில் அப்படி விதி எழுதியிருக்கும் போது அவளுக்கு வேறு கலியாணம் ஆகியிருக்க முடியுமா?" என்றேன் நான்.
ரங்கபாஷ்யத்திடம் அப்படி விளையாட்டாகப் பேசினேனே தவிர, அவனிடமும் அந்தப் பெண்ணிடமும் எனக்கு ஒருவித அநுதாபம் உண்டாகியிருந்தது. "உண்மையான காதலர்களை உலகம் முழுவதும் காதலிக்கிறது!" என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. சாவித்திரி - சத்தியவான், ரோமியோ - ஜுலியத், லைலா - மஜ்னூன் போன்ற அமர காதலர்கள் இன்றைக்கும் உலக மக்களின் காதலுக்குப் பாத்திரமாகியிருக்கிறார்கள். அல்லவா? இரண்டு பேர் ஒருவரிடம் ஒருவர் அன்பாயிருந்தால், அதைப் பார்ப்பதிலேயே நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ரங்கபாஷ்யத்தையும் அந்த விமான ரமணியையும் பற்றி நினைத்தபோது எனக்கு அப்படித்தான் மகிழ்ச்சியாயிருந்தது.
"உண்மையான காதலின் பாதை சரளமாக இருப்பதில்லை" என்று ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு. அது காதலர்களின் விஷயத்தில் உண்மையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை ஏனோ என் மனதில் உதித்தது.
5
இப்போதெல்லாம் நாடெங்கும் மாதர் சங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாதர் சங்கத்தை என் நண்பர் ஒருவர் 'மாதர் சங்கடம்' என்று குறிப்பிடுவது வழக்கம். பெண்மணிகள் சங்கம் ஸ்தாபிப்பதும் சமூகத் தொண்டுகள் புரிவதும் சில சமயம் ஆண்பிள்ளைகளுக்குச் சங்கடத்தை உண்டாக்குவது உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளைகள் நடத்தும் சங்கங்களினால் பெண் தெய்வங்களுக்கும் சில சமயம் சங்கடம் உண்டாகத் தான் செய்கிறது. ஆகவே, சங்கங்களினால் ஏற்படும் பரஸ்பர சங்கடத்தைத் தவிர்க்க முடியாதுதான்.
ஒருநாள், மாதர் சமூக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் என்னைப் பார்ப்பதற்கு வந்து சீட்டும் அனுப்பினார்கள். ஏதோ ஒரு சமூகத் தொண்டுக்காக உதவி நாடகம் போடுகிறார்கள் என்றும், அதற்கு டிக்கெட் விற்பதற்கு வந்திருக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்த மாதிரி டிக்கட் விற்பதற்கோ சந்தா அல்லது நன்கொடை வசூலிப்பதற்கோ யார் வந்தாலும் நமக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆயினும் பெண்மணிகள் இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்கு வரும்போது கண்டிப்பாக எப்படி நிராகரிக்க முடியும்? ஏதோ ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணி அவர்களை வரும்படி சொன்னேன். வந்த இரண்டு பேரில் ஒரு பெண்மணியைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் விமான சிநேகிதன் ரங்கபாஷ்யத்தின் உள்ளத்தைக் கவர்ந்த விமான ரமணி தான் அவள்.
"உங்களை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமாயிருக்கிறதே?" என்று மாலதியே முதலில் கேட்டுவிட்டாள்.
"ஆமாம் விமானப் பிரயாணத்தின் போது ஒரு தடவை நாகபுரியில் பார்த்தேன்" என்றேன்.
ஒன்றுக்கு இரண்டாக டிக்கட் வாங்கிக் கொண்டு, மெதுவாக ரங்கபாஷ்யத்தின் பேச்சை எடுத்தேன்.
"நீங்கள் விமான வேலையை விட்டு விடப் போவதாக ரங்கபாஷ்யம் அப்போதே சொன்னார்" என்றேன்.
ஒரு கண நேரம் அவள் ஏதோ யோசித்துவிட்டு, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். "அவரும் இந்த நாடகத்துக்கு வருவார். டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கிறார்!" என்றார்.
இன்னும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்து, எந்த உதவி நாடகத்துக்காக மாலதி நன்கொடை டிக்கட் விற்கிறாளோ, அதில் அவளே வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கப் போவதாக அறிந்தேன்.
நான் எதிர்பார்த்தபடியே சற்று நேரத்திற்கெல்லாம் ரங்கபாஷ்யத்திடமிருந்து டெலிபோன் வந்தது. "சாயங்காலம் ஒரு அமெச்சூர் உதவி நாடகத்துக்கு டிக்கட் வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கியிருக்கிறேன். அவசியம் வர வேண்டும்" என்று குதூகலமான குரலில் கூறினான்.
நாடகத்துக்கு இருவரும் போயிருந்தோம். தலைக்கு இரண்டு டிக்கட் எடுத்துக் கொண்டு போனோம்! அமெச்சூர்கள் போட்ட நாடகம் என்ற முறையில் பார்க்கும்போது அவ்வளவு மோசமாக இல்லை. நன்றாயிருந்தது என்றே சொல்லலாம். ஆனால் ரங்கபாஷ்யத்துக்கு என்னவோ அவ்வளவாக அந்த நாடகம் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
"இது என்ன கதை? போயும் போயும் நாடகம் போட இத்தகைய கதை தானா கிடைத்தது? உலகத்தில் வேறு நல்ல விஷயமா இல்லை?" என்று முனகிக் கொண்டே இருந்தான்.
என்னுடைய அபிப்பிராயத்தில் அப்படி ஒன்றும் மோசமான கதை இல்லை. ஏழ்மையினால் குற்றம் செய்து சிறைப்பட்ட ஒரு கைதியின் கதையை வைத்து நாடகம் எழுதியிருந்தது. சிறையில் அக்கைதி படும் கஷ்டங்கள், அவன் தப்பி ஓடி வந்த பிறகு அடையும் துன்பங்கள் - இவைதான் முக்கியமான நாடக அம்சங்கள். எதற்காக இந்த விஷயம் ரங்கபாஷ்யத்துக்கு அவ்வளவு பிடிக்காமலிருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. பின்னொரு காலத்தில் அதன் காரணம் தெரிந்தது.
நாடகம் முடிந்ததும் "போகலாமா" என்று அவனிடம் கேட்டேன்.
"மாலதியைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லி விட்டுத்தான் போக வேண்டும். கதை நன்றாயில்லாவிட்டாலும் அவள் நடிப்பு என்னமோ அபாரமாகத் தானே இருந்தது?" என்றான் ரங்கபாஷ்யம்.
அப்படியே சபை கலையும் வரையில் காத்திருந்து அரங்க மேடைக்குச் சென்று மாலதியைப் பார்த்தோம். நாடகத்தைப் பற்றி என்னுடைய சந்தோஷத்தை நான் தெரிவித்த பிறகு, ரங்கபாஷ்யமும் தன் பாராட்டுதலைத் தெரிவித்தான்.
"உங்கள் நடிப்பு மிக நன்றாயிருந்தது. ஆனால் நாடகக் கதை சுத்த அபத்தம். அடுத்த தடவை வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றிக் கதை எழுதி நாடகம் போடுங்கள்!" என்று சொன்னா.
அச்சமயத்தில் எங்கள் இருவரையும் தவிர மூன்றாவது மனிதன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். மாலதி அவனைச் சுட்டிக் காட்டி, "தயவு செய்து இவரிடம் சொல்லுங்கள். இவர் எழுதிய நாடகந்தான் இது. நான் கூட முதலிலேயே நாடக விஷயம் நன்றாயில்லையென்று தான் சொன்னேன்" என்றாள்.
அந்த மனிதன், "சபையில் எல்லாருக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்தது. பிரமாதமாகச் சந்தோஷப்பட்டு அடிக்கடி 'அப்லாஸ்' கொடுத்தார்கள்! தலைமை வகித்தவர் கூட நாடக விஷயத்தைச் சிலாகித்தார். இவர் ஏதோ அலாதிப் பிறவி போலிருக்கிறது. இவருக்கு மட்டும் பிடிக்கவில்லை!" என்றான்.
அச்சமயம் ரங்கபாஷ்யத்தின் முகம் போன போக்கு ஒரு கணம் என்னைத் திடுக்கிடச் செய்து விட்டது. மறுநிமிஷம் சமாளித்துக் கொண்டு, "சரி நாம் போகலாம்" என்றான். மாலதியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
6
அப்புறம் சில காலம் ரங்கபாஷ்யம் என்னை சந்தித்துப் பேச அடிக்கடி வந்து கொண்டிருந்தான். தரையில் காலை வைத்து அவன் நடந்ததாகவே தோன்றவில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். இந்த நாட்களில் அவனுக்கு எதைப் பார்த்தாலும் அழகாயிருந்தது; இன்பமயமாயிருந்தது.
பட்டுப் பூச்சி பறப்பதைப் பார்த்தால், "ஸார்! ஸார்! அந்தப் பட்டுப் பூச்சியைப் பாருங்கள்! அது வர்ணச் சிறகை அடித்துக் கொண்டு பறப்பது என்ன அழகாயிருக்கிறது!" என்பான்.
ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து "அடடா ஆகாசத்தின் ஸ்வச்சமான நீல நிறந்தான் எத்தனை அழகு" என்பான்.
அதே வானத்தில் மேகங்கள் படர்ந்திருந்தால் "அடடா! வெள்ளைப் பஞ்சுத் திறனைப் போல் இந்த மேகங்கள் தான் என்ன அழகாயிருக்கின்றன! அவற்றில் சூரியகாந்தி பட்டுவிட்டால் ஒரே பொன் மயமாகி விடுகிறதைப் பார்த்தீர்களா!" என்பான்.
"ஆகா! இந்தத் தென்றல் காற்றுக்கு இவ்வளவு இனிமையும் சுகமும் எப்படித்தான் வந்ததோ? 'மந்த மாருதம்' என்று தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள்?" என்பான்.
ஒவ்வொரு சமயம் மனதை இன்னும் கொஞ்சம் திறந்து விட்டுப் பேசுவான்.
"ஸார்! இந்த அதிசயத்தைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மாலதியை நான் முதலில் சந்தித்தது சில மாதங்களுக்கு முன்னாலே தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனையோ வருடங்களாக எத்தனையோ யுகயுகமாகப் பழகியது போலிருக்கிறது" என்று ஒரு தடவை சொன்னான்.
"அதெல்லாம் சரிதானப்பா! கலியாணச் சாப்பாடு எப்போது போடப் போகிறாய், சொல்லு! தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டேன்.
"தேதி நிச்சயமானால் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? முதலில் உங்களுக்குத்தான் சொல்வேன், ஸார்! எனக்கும் உற்றார் உறவினர் அதிகம் பேர் இல்லை. நீங்கள் தான் கிட்ட இருந்து நடத்தி வைக்க வேண்டும்" என்றான் ரங்கபாஷ்யம்.
இப்படிச் சொல்லிவிட்டுப் போன மறுநாளே அவன் உற்சாகம் அடியோடு குன்றி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.
"என்னப்பா சமாசாரம்? ஒரு மாதிரியாக இருக்கிறாயே?" என்று கேட்டேன்.
"அன்றைக்கு அரங்க மேடையில் பார்த்தோமே, ஸார்! அந்தத் தடியன் ஓயாமல் மாலதியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறான்! எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை!"
"உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? அவள் கன்னிப்பெண். அதோடு படித்த பெண்; சர்வ சுதந்திரமாக வாழ்க்கை நடத்தி வந்தவள். அவள் பேரில் உன்னுடைய பாத்தியதையை நீ ஸ்தாபித்துக் கொள்வதுதானே? உன்னைக் கலியாணம் செய்து கொள்ள அவளுக்கு இஷ்டமா, இல்லையா என்று கறாராகக் கேட்டு விடு! மூடி மூடி வைப்பதில் என்ன பிரயோஜனம்? 'பேசப்போகிறாயோ, சாகப் போகிறாயோ' என்ற பழமொழியைக் கேட்டதில்லை? வாயுள்ள பிள்ளைதான் இந்த காலத்தில் பிழைக்க முடியும்!" என்றேன்.
"உண்மைதான்; உண்டு, இல்லை என்று மாலதியைக் கேட்டுவிடத்தான் போகிறேன்!" என்றான் ரங்கபாஷ்யம். ஆனால் அவ்விதம் கேட்பதற்கு இலேசில் அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. தள்ளிப் போட்டுக் கொண்டே காலங் கடத்தினான். ஆனால் அதே சமயத்தில் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டுமிருந்தான். அவன் மீது கோபித்துக் கொள்வதா, அநுதாபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு நாள் ரங்கபாஷ்யம் பீதிகரமான முகத்துடன் என்னுடைய அறைக்குத் திடீரென்று வந்து சேர்ந்தான்.
"ஸார்! எனக்கு ஏதோ ஒரு பெரிய அபாயம் வரப் போகிறது. நீங்கள் தான் உதவி செய்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்றான்.
அவனுக்கு ஏதாவது மூளைக்கோளாறு நேர்ந்து விட்டதோ என்று எனக்குச் சந்தேகமாகி விட்டது. அவன் முகம் அப்படிப் பேயறைந்தவன் முகம் போலிருந்தது. பேச்சில் அவ்வளவு பதட்டமும் பயங்கரமும் தொனித்தன. சற்று ஆறுதலாகவே பேசி, "என்ன விஷயம் என்று சொல்லு. என்னால் முடிந்த உதவியை உனக்கு அவசியம் செய்கிறேன்!" என்றேன்.
"யாரோ ஒருவன் அடிக்கடி என்னைப் பின் தொடர்ந்து வருகிறான். என்னைக் கொலை செய்ய வருகிறானோ, வேறு என்ன நோக்கத்துடன் வருகிறானோ, தெரியவில்லை. நான் இருக்கும் அறை வாசலில் வந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிறான். யார் என்று பார்க்க அருகில் சென்றால் மறைந்து விடுகிறான். என்னுடைய அறைக்குப் போகவே பயமாயிருக்கிறது. உங்களுடனேயே சில நாள் நான் இருந்து விடட்டுமா?" என்று கேட்டான்.
"பேஷாக இரு, அப்பனே! ஆனால் உன்னுடைய பயம் வீண் பயமாகவும் இருக்கலாம் அல்லவா? யாரோ உன்னைப் பின் தொடர்வதாக நீ நினைப்பது வெறும் பிரமையாக இருக்கலாம் அல்லவா? இந்த மாதிரி பிரமை சில சமயம் நல்ல அறிவாளிகளுக்கும் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் ஒரு பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் ஆராய்ச்சியில் சிறந்த அறிஞர் என்று பிரசித்தி பெற்றவர். ஆனால் உலகமெல்லாம் தம் பெயரைக் கெடுப்பதற்குச் சதியாலோசனை செய்வதாக அவருக்கு ஒரு பிரமை. இரண்டு பேர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால், உடனே, 'பார்த்தாயா? அவர்கள் என்னைப் பற்றித் தான் ஏதோ அவதூறு பேசுகிறார்கள்! அவர்கள் பேரில் வழக்குத் தொடர வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். அம்மாதிரி நீயும் ஆகிவிடக்கூடாது..."
இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ரங்கபாஷ்யம், என் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, அறையின் பலகணி வழியாக வெளியே பார்க்கப் பண்ணினான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் வீதி விளக்கின் வெளிச்சம் விழாத ஒரு கம்பத்தின் மறைவில் யாரோ ஒரு ஆள் நிற்பது தெரிந்தது.
"யாரோ ஒரு மனிதன் சந்தேகாஸ்பதமாகத்தான் மறைந்து நிற்கிறான். அதனால் என்ன? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்கலாம் அல்லவா?" என்றேன்.
சில நாளைக்குப் பிறகு மாலதி நடித்த நாடகம் எழுதிய தினகரனை நான் சந்திக்க நேர்ந்தது. அவன் என்னோடு வலியப் பேச்சுக் கொடுத்தான். "உங்களோடு ஒருவர் நாடகத்துக்கு வந்திருந்தாரே அவர் பெயர் என்ன?" என்று கேட்டான்.
"ரங்கபாஷ்யம்" என்று சொன்னேன்.
"அது அவருடைய உண்மைப் பெயர் அல்ல!" என்று சொல்லி என்னைத் திடுக்கிடச் செய்தான்.
"எதனால் சொல்கிறீர்?" என்றேன்.
"உங்களுக்கு எத்தனை நாளாக அவரைத் தெரியும்?"
"சுமார் ஒரு வருஷ காலமாகத் தெரியும்."
"அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன். இதோ இந்த குரூப் போட்டோ வில் உள்ள இந்த படத்தைப் படத்தைப் பாருங்கள். இதன் கீழே எழுதியிருக்கும் பெயரையும் படித்துப் பாருங்கள்" என்றான் தினகரன்.
அவன் சுட்டிக் காட்டிய உருவம் கொஞ்சம் ரங்கபாஷ்யத்தின் சாயலாக இருந்தது. கீழே கே.ஆர். ராமானுஜம் என்ற பெயரும் போட்டிருந்தது. ஆனால் ஒரு குரூப் போட்டோ வில் உள்ள சிறிய மங்கலான உருவத்தைக் கொண்டு நிச்சயமாக என்ன முடிவு செய்துவிட முடியும்?
"இதிலிருந்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்படியேயிருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் அதைப்பற்றி என்ன கவலை? பெயரை மாற்றிவைத்துக் கொள்ள ஒருவர் இஷ்டப்பட்டால், அதை நாம் எப்படி தடுக்க முடியும்?" என்று கேட்டேன்.
"அதற்காகச் சொல்லவில்லை, ஸார்! ஆள் மாறாட்டம் செய்து ஒரு அபலைப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திக் கொள்வது என்றால், இது மிகவும் மோசமான காரியம் இல்லையா? அப்படிப்பட்ட ஈனச் செயலைத் தடுப்பது நம்முடைய கடமை இல்லையா?" என்றான்.
"எனக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன. இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை" என்று சொல்லிப் பேச்சை வெட்டினேன்.
ஆனால் என் மனம் ஓரளவு நிம்மதியை இழந்து விட்டது.
7
இன்னொரு நாள் ரங்கபாஷ்யம் வந்தான். முகம் அடைந்திருந்த மாறுதலைச் சொல்லி முடியாது. அன்று ஆகாச விமானப் பிரயாணத்தில் அவனைப் பார்த்த போதிருந்த பால்வடியும் முகம் எங்கே? பீதி நிறைந்த பிரம்மஹத்தி கூத்தாடிய இப்போதைய முகம் எங்கே?
அவனைப் பார்த்ததும் நானே பேச்சை ஆரம்பித்து விட்டேன். "என்னடா அப்பா! மாலதி கடைசியில் கையை விரித்து விட்டாளா? ஏன் இவ்வளவு சோகம்?" என்றேன்.
"இல்லை, இல்லை! மாலதி என்னை மணந்து கொள்ளத் தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டாள். ஏதோ ஒரு முக்கியமான பொறுப்பு அவளுக்கு இருக்கிறதாம். அதை நிறைவேற்றும் வரையில் சில நாள் பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்குள் இந்தப் பேரிடி என் தலையில் விழுந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிகைத் துணுக்கை எடுத்து நீட்டினான்.
அதில் பின் வருமாறு எழுதியிருந்தது:-
"ஸ்ரீ மருதாசலம் செட்டியாரின் கம்பெனியில் மானேஜர் வேலை பார்க்கும் ரங்கபாஷ்யத்துக்கு எச்சரிக்கை. அவன் மிஸ் மா... என்னும் பெண்ணை மறந்துவிட்டு ஒரு வாரத்திற்குள் சென்னைப் பட்டணத்தை விட்டுப் போய்விட வேண்டியது. அப்படிப் போகாவிட்டால், அவனுடைய பூர்வாசிரமத்துப் பெயரையும் மோசடிகளையும் பற்றித் தக்க ஆதாரங்களுடன் இந்தப் பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும். ஜாக்கிரதை!"
இதைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது. இதற்காகவா இப்படி இவன் மிரண்டு விட்டான்?
"இந்த மாதிரி ஆபாசப் பத்திரிகைகளை நீ ஏன் வாங்கிப் பார்க்கிறாய்? பார்த்து மனதைக் குழப்பிக் கொள்ளுகிறாய்? உனக்கு வேறு வேலை கிடையாதா?" என்று கேட்டேன்.
"நான் வாங்கவில்லை. இதை மெனக்கெட்டுப் பத்திரிகையிலிருந்து வெட்டி யாரோ எனக்கு தபாலில் அனுப்பியிருக்கிறான். இதை எழுதிய ஆளாகவேதான் இருக்க வேண்டும்" என்றான்.
"இப்படிப்பட்டவர்களின் யுக்தியே இதுதான். அதில் நீ ஏன் விழுந்துவிட வேண்டும்? சுக்குநூறாய்க் கிழித்தெறிந்துவிட்டு நிம்மதியாக உன் வேலையைப் பார்! பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் பொதுக் காரியங்களைப் பற்றி விமர்சனம் எழுதுவது பத்திரிகை தர்மம், அதற்கு மாறாகத் தனிப்பட்ட மனிதர்களின் குட்டை விடுவதாகச் சொல்லுகிறவர்கள் பத்திரிகைக்காரர்களே அல்ல. இதையெல்லாம் படிப்பதும் பிசகு; காதில் போட்டுக் கொள்வதும் பிசகு! இப்படிப்பட்ட அவதூறுகளினால் உனக்கு கெடுதல் ஒன்றும் நேர்ந்துவிடாது தைரியமாயிரு!"
இவ்வாறு கூறிச் சில உதாரணங்களும் எடுத்துக் காட்டினேன். தமிழ் நாட்டில் சில பிரமுகர்களைப் பற்றி என்னவெல்லாமோ வாயில் வைத்துச் சொல்லத் தகாத ஆபாச அவதூறுகள், சில கந்தல் பத்திரிகைகளில் வெளி அந்தன. அதனாலெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்கு என்ன குறைந்து போய்விட்டது? ஒன்றுமில்லை என்பதை எடுத்துச் சொன்னேன்.
அதற்கு ரங்கபாஷ்யம் சொன்ன பதில் என்னை உண்மையில் திணறித் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
"அந்தப் பிரமுகர்களைப் பற்றியெல்லாம் எழுதியவற்றில் உண்மை இருந்திராது. ஆகையால் அவர்கள் கவலையற்று நிம்மதியாயிருந்தார்கள். ஆனால், என் விஷயத்தில் இதில் எழுதியிருப்பது உண்மையாயிற்றே! நான் எப்படி நிம்மதியாயிருக்க முடியும்?" என்றான்!
பிறகு நான் நயமாகப் பேசி வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அவன் தனது பூர்வக் கதையைக் கூறினான்:-
ரங்கபாஷ்யத்தின் உண்மைப் பெயர் இராமானுஜம். அவன் கல்கத்தாவில் ஒரு பெரிய முதலாளியிடம் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்த்து வந்தான்.
முதலாளி பல தொழில்களில் ஈடுபட்டவர். அதோடு யுத்த காண்டிராக்டுகளும் எடுத்திருந்தார். அவருக்குச் சில எதிர்பாராத பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன. இதனால் முறை தவறான காரியங்கள் சிலவற்றை செய்துவிட்டார். எஜமான விசுவாசம் கருதி அதற்கெல்லாம் ராமானுஜமும் உடந்தையாயிருக்க நேர்ந்தது. உண்மையில் மோசடி ஒன்றும் இல்லையென்றும் எல்லாம் சில நாளில் சரிப்படுத்தப்படும் என்று முதலாளி உறுதி சொன்னதை நம்பினான். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவன் நம்பியதெல்லாம் பொய்யாகிவிட்டது. முறைத் தவறுகளும் ஊழல்களும் வெளியாகிவிட்டன. அந்த ஊழல்களில் முதலாளி காண்ட்ராக்டரைத் தவிர பெரிய பெரிய ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள், என்ஜினீயர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் செல்வாக்கின் காரணமாகத் தப்பித்துக் கொண்டார்கள். அதற்கெல்லாம், பாவம், இராமனுஜமே பொறுப்பாக்கப்பட்டான். அவனைக் கைது செய்து விசாரணையும் நடந்தது. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை. இராமனுஜத்தின் பேரில் குற்றம் ருசுவாகி, அவனுக்கு இரண்டு வருஷம் சிறைத் தண்டனை கிடைத்தது!
சிறையில் ஒன்றரை வருஷம் கழித்த பிறகு, இந்தியா தேசம் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திர நன்னாளில், புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் மந்திரிகள் சிறைக் கைதிகள் சிலருக்கு விடுதலை அளித்தார்கள். இராமானுஜத்தைப் பற்றிச் சிறை அதிகாரிகள் மிக நல்ல அறிக்கை அனுப்பியிருந்தபடியால், இராமானுஜமும் விடுதலை பெற்றான். சென்னைக்கு வந்து முற்றும் புதிய வாழ்க்கை தொடங்கினான். மோசடி வழக்கில் அடிபட்ட பழைய பெயர் வாழ்க்கையில் வெற்றிக்கு இடையூறாயிருக்கலாம் என்று கருதிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஸ்ரீ மருதாசலம் செட்டியார் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான். அவனுடைய பொருளாதார அறிவின் காரணமாக அதிசீக்கிரத்தில் உயர்ந்த நிலைமைக்கு வந்தான். புதிய முதலாளியான செட்டியார் தமது தொழில்களின் முழுப் பொறுப்பையும் அவனிடமே பூரணமாக நம்பி விட்டிருந்தார். பழைய கல்கத்தா வாழ்க்கையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களும், ஒரு பயங்கரமான கனவு என்று எண்ணி ரங்கபாஷ்யம் அதையெல்லாம் மறந்து விட்ட சமயத்தில் இந்தப் பேரிடி அவன் தலையில் விழுந்து விட்டது.
யாரோ ஒரு கிராதகன் அவனுடைய பழைய வாழ்க்கையைத் தோண்டி எடுத்து அதன் சம்பவங்களை அம்பலப்படுத்தவும் தயாராயிருந்தான் என்று ஏற்பட்டது!
மேலே கண்ட சோகக் கதையைக் கூறிவிட்டு ரங்கபாஷ்யம் சொன்னதாவது:
"நான் மோசடி வழக்கில் தண்டனை அடைந்த கைதி என்பது வெளியானால் கம்பெனி முதலாளி என்னை உடனே அனுப்பி விடுவார். மாலதியும் என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை. அவள் மனது புண்ணாகும்! எனக்கும் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க இனித் தைரியம் உண்டாகாது. ஆகையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பெங்களூருக்குப் போய் விடுவது என்று தீர்மானித்திருக்கிறேன். என்னுடைய பெங்களூர் விலாசம் உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லவில்லை என்று உறுதியளிக்க வேண்டும்! ஏதாவது முக்கிய விஷயம் இருந்தால் மட்டும் எனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றான் ரங்கபாஷ்யம்.
அவன் மோசடி வழக்கில் அநீதிக்கு ஆளானதைப் பற்றிக் கூறியதை நான் பரிபூரணமாக நம்பினேன். இம்மாதிரி பொய் முதலாளிகள் செய்த குற்றங்களுக்குச் சம்பள ஊழியர்களைப் பொறுப்பாக்கிய வேறு சில சம்பவங்களும் அறிந்திருந்தேன். பிற்பாடு அம்முதலாளிகளே அகப்பட்டுக் கொண்டதைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே, ரங்கபாஷ்யத்திடம் உண்மையில் எனக்கு அநுதாபந்தான் உண்டாயிற்று.
"இது என்ன, பைத்தியம்! உன்னிடம் மாலதில் உண்மைக் காதல் கொண்டிருப்பது உண்மையானால், இதற்காக அவள் மனதை மாற்றிக் கொள்வாளா? உன் கம்பெனி முதலாளியைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் மாலதி அத்தகைய நீசகுணம் உள்ளவள் அல்ல என்று நிச்சயமாய்ச் சொல்லுவேன். உன்னுடைய உண்மை நிலையை அறிந்தால் அவள் உன்னிடம் கொண்ட அன்பு அதிகமேயாகும்" என்றேன்.
"தயவு செய்து மன்னியுங்கள்! இத்தகைய பழியோடு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க என்னால் முடியவே முடியாது!" என்றான் ரங்கபாஷ்யம்.
அவனுடைய முடிவை மாற்றச் செய்ய நான் பட்ட பிரயாசை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின. மாலதி அவனிடம் அத்தகைய சலனமற்ற உறுதியான காதல் கொண்டிருந்ததாகவும் அவன் நம்பவில்லையென்றும் தெரிந்தது; அவளுடைய மனதில் ஏற்கனவே தயக்கம் இருந்தது; அந்தத் தயக்கத்தைப் பலப்படுத்தி அவனை நிராகரிக்கும்படி செய்ய இந்தப் பழைய துரதிஷ்ட சம்பவம் போதுமானதல்லவா? "எல்லம் விதியின்படி நடக்கும்" என்று விதிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ரங்கபாஷ்யம் கூறியதற்கு உடன்பட்டேன். பாவம்! அவன் பட்ட வேதனையை என்னால் ரசிக்க முடியவில்லை. காலமும் கடவுளுந்தான், அவனுடைய துன்பத்தைப் போக்கி நிம்மதி அளிக்க வேண்டும்.
8
ரங்கபாஷ்யம் பெங்களூருக்குப் போன பிறகு பல தடவை மாலதி என்னுடன் டெலிபோனில் பேசி அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா என்று கேட்டாள். நானும் அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணித் "தெரியாது" என்றே சொல்லி வந்தேன். ஒரு நாள் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றாள். என்னுடைய பிரம்மச்சாரி அறைக்கு அவளை வரச் சொல்ல இஷ்டப்படாமல் நானே அவளுடைய ஜாகைக்குப் போனேன். அப்போதுதான் அவள் மனதில் ஒரு பகுதியை நான் அறிந்து கொள்ள முடிந்தது. ரங்கபாஷ்யத்திடம் அவள் உண்மையான காதல் கொண்டிருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. நாடகத்தை எழுதிய தினகரனை அவள் வெறுத்தாள் என்பதிலும் ஐயமில்லை. "என் தந்தை காலமானபோது எனக்கு ஒரு பணி இட்டுவிட்டுப் போனார். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகவே காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் உங்கள் சிநேகிதர் என்ன நினைத்தாரோ, என்னமோ தெரியவில்லை தகவல் தெரிவிக்காமல் எங்கேயோ போய்விட்டார். இந்தப் போக்கிரி தினகரன் அவரிடம் ஏதாவது பொய்யும் புளுகும் சொல்லியிருப்பானோ என்றுகூட சந்தேகிக்கிறேன். இப்படியெல்லாம் உலகத்தில் விஷமக்காரர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் பேச்சையெல்லாம் நம்பி விடலாமா? இப்படி உங்கள் சினேகிதர் செய்து விட்டாரே? இனி என் வாழ்க்கை பாழானது போலத்தான்! நான் பெரிய துரதிஷ்டக்காரி!" என்று மாலதி சொல்லிப் பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள்.
அவளுடைய துயரத்தைத் தீர்க்கும் சக்தி என்னிடம் இருந்தது. ஆனால் அதை உடனே பிரயோகித்துவிட நான் விரும்பவில்லை. மேலும் அவள் மனதை நன்றாய் அறிந்து கொள்ள விரும்பினேன். ரங்கபாஷ்யத்தின் பூர்வோத்திரத்தை அறிந்த பிறகும் இதே மனோபாவம் அவளுக்கு இருக்குமோ என்னமோ, யார் கண்டது? அதைப்பற்றி உடனே சொல்லிப் பரீட்சை பார்க்கவும் நான் விரும்பவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடிக்க எண்ணினேன். ஆனால் தினகரனைப் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்து வைத்தேன்.
"அவன் என் தாயார் வழியில் கொஞ்சம் தூரத்து உறவு. அந்த உரிமையை கொண்டாடி என்னைத் தொல்லைப் படுத்துகிறான். என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று நம்பி, அதைப் பறிக்கப் பார்க்கிறான். ஆனால் பணம் என்னுடையதல்ல என்பது அவனுக்குத் தெரியாது. சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான். ஒரு நாள் அவனை நன்றாய்த் திட்டிப் பாடம் கற்பித்து விரட்டிவிடப் போகிறேன். அப்புறம், இந்தப் பக்கமே வரமாட்டான்" என்றாள்.
தினகரனைப் பற்றிய வரையில், மாலதி பரிபூரண வெறுப்புக் கொண்டிருந்தாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவே ஓரளவு எனக்குத் திருப்தியையும் மனச்சாந்தியையும் அளித்தது.
மற்றொரு நாள் அந்தக் கிராதகன் தினகரன் என்னைத் தேடி வந்தான். ரங்கபாஷ்யத்தைப் பற்றி விசாரித்தான். "தகவல் தெரியாது" என்றேன். "அது என்ன திடீரென்று மறைந்துவிட்டான்? காரணம் ஏதேனும் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது" என்றேன். "எனக்குத் தெரியும்!" என்று சொல்லி ரங்கபாஷ்யம் காட்டிய அதே பத்திரிகைத் துணுக்கின் இன்னொரு பிரதியை என்னிடம் காட்டினான். "இதனால்தான் அந்த மோசக்காரன் ஓடிப் போயிருக்க வேண்டும்!" என்றான்.
தனி மனிதர்களின் சொந்த வாழ்க்கையைப்பற்றி எழுதுவதையே தொழிலாகக் கொண்ட பத்திரிகைகளைப்பற்றி நான் பலமாய்த் திட்டிக் கண்டித்தேன்.
"அதெல்லாம் இருக்கலாம்; ஆனாலும் அவனுடைய தலைக்கு இது தகுந்த குல்லா என்பதில் சந்தேகமில்லை. ஆகையினால்தான் மாலதியிடம் சொல்லிக் கொள்ளாமலும் விலாசம் கூடத் தெரிவிக்காமலும் இந்த ஊரைவிட்டே ஓடிப் போய்விட்டான்!" என்றான் தினகரன்.
தினகரனை மேலும் ஆழம் பார்க்க எண்ணி, "அப்படியானால் மாலதி விஷயத்தில் உங்களுக்கு ஒரு போட்டி ஒழிந்தது என்று சொல்லுங்கள்!" என்றேன்.
"ஆனாலும் ஸ்திரீகளின் விஷயமே விசித்திரமானது. இன்னும் அந்த மோசக்காரனிடமே அவள் ஈடுபட்டிருக்கிறாள். அவன் எங்கே போனான் என்று என்னை விசாரிக்கச் சொல்லுகிறாள். நன்றாயிருக்கிறதல்லவா? ஆனால் இன்னும் இந்தப் பத்திரிகையின் விஷயம் அவளுக்குத் தெரியாது. இன்றைக்குச் சொல்லப் போகிறேன்!" என்றான்.
"இந்த மாதிரி எச்சரிக்கை இப்பத்திரிகையில் எழுதி வெளியிட்டது யார்? நீர் தானா?" என்று கேட்டேன்.
"நான் இல்லை; என்னைப் போலவே ரங்கபாஷ்யத்தின் மோசடியை வெளிப்படுத்துவதில் சிரத்தையுள்ள வேறு யாரோ இருக்க வேண்டும். ஆனால் இதிலுள்ள விஷயம் உண்மை என்பதில் சந்தேகமில்லை. எனக்கே நன்றாய்த் தெரியும். உங்களிடம் தான் முன்னமே சொல்லி இருக்கிறேனே? கொஞ்சம் இருந்த சந்தேகமும் அவன் ஓடிப்போனதிலிருந்து நீங்கிவிட்டது!" என்றான்.
"அப்படியானால் மாலதியிடம் இதை பற்றிச் சொல்லத்தான் போகிறீராக்கும்?" என்று கேட்டேன்.
"இப்பொழுது நேரே அவள் வீட்டுக்குத்தான் போகிறேன்!" என்றான் தினகரன்.
அவன் மாலதியைப் பார்ப்பதன் விளைவு என்ன ஆகப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
9
மறுநாளைக்கு மாலதியே என்னைத் தேடிக் கொண்டு என் அறைக்கு வந்துவிட்டாள். "உங்கள் சினேகிதரை எப்படியாவது உடனே கண்டு பிடிக்க வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது. பத்திரிகையில் விளம்பரம் போட்டு பார்க்கலாமா?" என்றாள்.
"பத்திரிகையில் போடுவதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. நானே வேறுவிதத்தில் தேடிக் கண்டு பிடிக்கப் போகிறேன். ஆனால் அப்படிப்பட்ட முக்கியமான விஷயம் என்ன? எனக்குத் தெரியப்படுத்தலாமா?" என்று கேட்டேன்.
"உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான்! இல்லாவிட்டால் அவரைக் கண்டு பிடிப்பதில் எனக்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்கள்!" என்றாள் மாலதி.
மாலதி கூறியதிலிருந்து நேற்று தினகரன் என்னைப் பார்த்த பிறகு நேரே மாலதியைச் சந்திக்கச் சென்றான் என்று தெரிந்தது. சந்தித்து, மேற்படி பத்திரிக்கைத் துணுக்கை அவளிடம் காட்டினான். மோசடி வழக்கில் இரண்டு வருஷம் தண்டனையடைந்தவன் ரங்கபாஷ்யம் என்றும் அதனாலேயே இந்த விளம்பரத்தைக் கண்டதும் ஓடி மறைந்துவிட்டான் என்றும் தெரிவித்தான்.
ஆனால் இதன் மூலம் அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதற்கு நேர் விரோதமான பலன் தான் உண்டாயிற்று.
"அந்த மோசடி வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?" என்று மாலதி கேட்டாள்.
"நீ கேட்டதனாலே சொல்லுகிறேன். கல்கத்தாவிலே உன் தகப்பனார் நடத்திய கம்பெனியில் வேலை பார்த்தவன் தான் இவன். அந்தக் கம்பெனி வேலையிலே தான் மோசடி செய்துவிட்டான். நீ அப்போது 'கான்வென்ட்' பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாய். உனக்கு ஒன்றும் தெரியாது. உன் தந்தை இவனை முழுதும் நம்பிக் கம்பெனிப் பொறுப்புகளையெல்லாம் ஒப்புவித்திருந்தார். நம்பியவருக்குத் துரோகம் செய்துவிட்டான். இவனுடைய வழக்கு கல்கத்தாவில் நடந்தபோது தற்செயலாக நான் கல்கத்தா வந்திருந்தேன். உன் தந்தையுடன் கோர்ட்டுக்கே போயிருந்தேன். இரண்டு வருஷம் சிறைத் தண்டனை இவனுக்குக் கிடைத்தது. தண்டனை முடிந்த பிறகு இங்கு வந்து பெயரை மாற்றி வைத்துக் கொண்டு காலட்சேபம் நடத்தி வருகிறான். இப்போது பார்க்கும் வேலையிலும் என்னென்ன மோசம் செய்து வந்தானோ தெரியாது. இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவன் தலைமறைவாகி விட்டதிலிருந்தே அவன் யோக்கியதை தெரியவில்லையா?" என்று தினகரன் சாங்கோ பாங்கமாக ரங்கபாஷ்யத்தின் மீது புகார்களைக் கொட்டி அளந்தான்.
அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த மாலதி கடைசியில், "இந்தப் பத்திரிகை விளம்பரம் நீங்கள் தான் போட்டீர்களா?" என்று கேட்டாள்.
"ஆமாம்; நான் தான் போட்டேன். உண்மையைச் சந்தேகமறத் தெரிந்து கொள்வதற்காகப் போட்டேன். அதற்குப் பலன் கிடைத்துவிட்டது. ஆசாமி இந்த ஊரைவிட்டே கம்பி நீட்டிவிட்டான், பார்!" என்றான் தினகரன்.
"ஆனாலும் உம்மைப் போன்ற நீச குணமுள்ளவனை நான் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை!" என்றாள் மாலதி.
இதைக் கேட்ட தினகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மாலதியின் போக்கு அவனுக்குப் புரியவில்லை. பிறகு மாலதி நன்றாகப் புரியும்படி சொன்னாள்:
"ஏதோ ஒருவன் துரதிஷ்டத்தினால் கஷ்டத்துக்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கை நடத்த முயற்சிக்கலாம். இம்மாதிரி மெனக்கெட்டு ஒருவருடைய பூர்வோத்திரங்களை அறிந்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவது போன்ற சண்டாளத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? உம்முடைய முகத்திலேயே இனி நான் விழிக்க விரும்பவில்லை. என்னைப் பார்க்க வேண்டாம்!" என்று கண்டிப்பாகச் சொல்லித் தினகரனை அனுப்பி விட்டாள். தினகரனும் பெண் குலத்தின் முட்டாள்தனத்தையும் இழி குணத்தையும் ஒரு அத்தியாயம் நிந்தித்து விட்டுப் போய்விட்டான்.
பிறகுதான் மாலதி என்னைத் தேடி வந்தாள். "ரங்கபாஷ்யத்தை உடனே பார்த்தாக வேண்டும். என்னால் அவ்ருக்கு நேர்ந்த கஷ்டத்துக்கு அவரிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்!" என்றாள்.
"நீங்கள் மன்னிப்புக் கேட்பானேன்? எதற்காக?" என்றேன் நான்.
"என் காரணமாகத்தானே அவருக்குத் தினகரன் இத்தகைய கஷ்டத்தை உண்டாக்கினான்? அவர் ஊரை விட்டு ஓடும்படியாயிற்று? இதைத் தவிர இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது!" என்று மாலதி கூறினாள்.
அந்த முக்கியமான இன்னொரு காரணத்தைக் கேட்ட பிறகு என்னுடைய தயக்கம் தீர்ந்து விட்டது. பெங்களூருக்கு நானே மாலதியை அழைத்துச் செல்வது என்று தீர்மானித்தேன்.
10
பெங்களூர் மெயில் துரிதமாய்ப் போய்க் கொண்டிருந்தது. வெளியில் காற்றும் மழைத் தூற்றலுமாயிருந்தபடியால் ரயிலின் கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்டிருந்தான். அந்தக் கதவுகளில் சளசள வென்று தூற்றல் அடித்துச் சொட்டுச் சொட்டாய் ஜலம் வடிந்து கொண்டிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் விஷயம் என்னவென்பதை வாசகர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.
இராமானுஜம் கல்கத்தாவில் எந்த முதலாளியிடம் வேலை பார்த்து வந்தானோ அந்த முதலாளிதான் மாலதியின் தந்தை. இராமனுஜம் சிறை சென்ற பிறகு அவருடைய கம்பெனி பலவிதக் கஷ்டங்கள் அடைந்து நஷ்டமாகி வந்தது. தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன் கல்கத்தாவில் நடந்த பயங்கர கலவரத்தில் அவருடைய கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போயிற்று. தேசம் சுதந்திரம் பெற்றவுடன் கல்கத்தாவில் ஏற்பட்ட டாக்டர் பி.சி. கோஷின் கடுமையான ஆட்சியில் கள்ள மார்க்கெட் வியாபாரம் அடியோடு படுத்து விட்டது.
இதனாலெல்லாம் மாலதியின் தந்தை நோயில் விழுந்து படுத்த படுக்கையானார். டாக்டர்களும் கையை விரித்து விட்டார்கள். இறுதிக் காலத்தில் அவருடைய மனசாட்சி அவரை மிகவும் உறுத்தியது. முக்கியமாகத் தம்மைப் பூரணமாக நம்பி விசுவாசத்துடன் வேலை செய்த இராமனுஜத்துக்குச் செய்த அநீதி அவருடைய நெஞ்சில் பெரும் பாரமாக அழுத்தியது. அவனைக் கண்டு பிடிக்க அவர் ஆனமட்டும் முயன்றும் முடியவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவன் வேறு பெயர் வைத்துக் கொண்டு விட்டான் அல்லவா? தம் அருமை மகளாகிய மாலதியிடம் விஷயத்தைச் சொல்லி, "எப்படியாவது இராமனுஜத்தைக் கண்டுபிடித்து, இந்தக் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டும்" என்று ஒப்புவித்தார். தான் அவனுக்குச் செய்த தீங்குக்குப் பரிகாரமாகப் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போனார்.
ரங்கபாஷ்யம் என்கிற இராமனுஜம் கடிதத்தைப் படித்து முடித்ததும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு என்னைப் பார்த்து, "ஸார்! அந்தப் புண்ணியவான் என்னை இவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டு அவ்வளவையும் பத்தாயிரம் ரூபாயினால் துடைத்து விடலாம் என்று பார்க்கிறார்! இந்தாருங்கள்! இந்தப் பணத்தை அவருடைய செல்லக் குமாரியிடமே கொடுங்கள்!" என்று உறையோடு எடுத்தெறிந்தான்.
அப்போது மாலதி தான் பெண் என்பதைக் காட்டிவிட்டாள். கலகலவென்று அவள் கண்ணீர் பெருக்கி விம்மினாள்.
அதைப் பார்த்த இராமானுஜம் எழுந்து அவள் அருகில் ஓடிவந்தான். ஆனால் அருகில் வந்ததும் இன்னது செய்வதென்று தெரியாமல் அவனும் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டான்.
அவர்கள் ஒருவரையொருவர் சமாதானப்படுத்திக் கொள்ளட்டும் என்று வெளியேறப் பார்த்தேன்.
"ஸார்! ஸார்! கொஞ்சம் இருங்கள்!" என்றான் இராமனுஜம்.
நான் தயங்கி நின்றேன்.
கண்களைத் துடைத்துக் கொண்டு, "சொல்வதைப் பூராவும் சொல்வதற்கு முன் அழுதால் நான் என்ன செய்கிறது? இவளுடைய அப்பா எனக்குச் செய்த தீங்குக்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டுமானால் அதற்கு வேறு வழி இருக்கிறது. விலையில்லாச் செல்வமாகிய அவருடைய பெண்ணை எனக்குக் கலியாணம் செய்து கொடுக்க வேண்டும்! அதற்குச் சம்மதமா என்று இவளைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றான் இராமானுஜம்.
மாலதியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு "அது எப்படி ஸார், முடியுமா? சுதந்திர பாரத நாட்டில் பெண்களுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா?..." என்றாள்.
"அப்படியானால் மெனக்கெட்டு எதற்காக என்னைத் தேடி வரவேண்டும்? இந்தப் பணம் யாருக்கு வேண்டும்? இதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள்!" என்றான் இராமானுஜம்.
"சொல்வதை முழுதும் கேட்பதற்குள் எதற்காக இவர் அவசரப்படுகிறார்? ஸார்... நான் தான் என் சொந்த இஷ்டத்தினால் என் சுதந்திரமாக இவருக்கு என்னைக் கொடுத்து விட்டேனே...? என் தகப்பனார் எப்படி என்னை இவருக்குக் கொடுக்க முடியும்?" என்றாள் மாலதி.
அவர்களை விட்டுவிட்டு நழுவுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று நான் வெளியேறினேன்.
ஒரு மாதத்துக்கு முன்பு இராமானுஜம் தம்பதிகளைப் பார்த்தேன். பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது ஆசிரியர் தினகரனைப் பற்றியும் பேச்சு வந்தது. அவனை இரண்டு பேரும் சேர்ந்து நிந்தித்ததை என்னால் பொறுக்கவே முடியவில்லை.
"எதற்காக அந்த அப்பாவியைத் திட்டுகிறீர்கள்? அவன் பத்திரிகையில் அநாமதேயக் கடிதம் விடுத்ததனால் தானே நீங்கள் இன்று இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்?" என்றேன்.
"அநாமதேயக் கடிதம் அவனா எழுதினான்? அழகுதான்!" என்றாள் மாலதி.
திடீரென்று என் மனதில் ஒரு பீதி உண்டாயிற்று. ஒரு வேளை நான் அந்தக் கடிதத்தை எழுதினதாக இவர்கள் சந்தேகப்படுகிறார்களோ என்று.
"பின் யார் எழுதியது? வேறு யாரையாவது சந்தேகிக்கிறீர்களா என்ன?" என்று கேட்டேன்.
"சந்தேகிக்கவில்லை ஸார்! யார் எழுதியது என்று நிச்சயமாய்த் தெரியும்" என்றாள் மாலதி.
இன்னும் அதிக பீதியுடன், "யார் தான் எழுதியது! உனக்கு அது எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று கேட்டேன் நான்.
"நான் தான் எழுதினேன். அது எனக்கு நிச்சயமாய்த் தெரியாமல் எப்படி இருக்க முடியும்?" என்றாள் மாலதி.
இந்தச் சுதந்திர யுகத்துப் புதுமைப் பெண்கள் என்ன செய்வார்கள், என்ன செய்யமாட்டார்கள் என்று யார் தான் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்?
-------------
63. வீடு தேடும் படலம்
துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர் பெற்ற புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டுப் புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும் நைமிசாரண்ய வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் கேட்டுவிட்டு அம்முனிவர்கள் "அடடா! பதினெட்டுப் புராணத்திற்குப் பிறகு பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே! இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக் கொண்டு தூங்குவோம்?" என்று புலம்பினார்கள். அதற்குச் சூதர், முனிவர்களே கவலை வேண்டாம். பத்தொன்பதாவது புராணமாகிய கலி புராணம் ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்குங்கள்!" என்று சொல்லி கமண்டலத்திலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஆசமனம் செய்துவிட்டு, பத்தொன்பதாவது கலி புராணத்தைக் கூறத் தொடங்கினார்.
அவ்வளவு பெருமை வாய்ந்த கலி புராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் அடுத்தபடியான வீட்டுப் படலம் வருகிறது. வீட்டுப் படலம் என்றும் சொல்லலாம்! வீடு தேடும் படலம் என்றும் சொல்லலாம்! அல்லது ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டும் இருக்கலாம். எனினும் "கடமையைச் செய்யுங்கள்!" "கடமையைத் தானே செய்யுங்கள்!" "கடமையைக் கட்டாயம் செய்யுங்கள்!" என்று பகவத் கீதையில் பேராசிரியர் கிருஷ்ணபகவான் முக்காலே மூன்று வாட்டியும் கதறியிருப்பதை முன்னிட்டு, இங்கே நாம் எம் கடமையைச் செய்யத் தொடங்குகிறோம்.
திருவல்லிக்கேணியில் திக்கற்ற விக்ன விநாயகர் கோயில் வீதியில் ஸ்ரீ கடோ த்கஜராயர் என்பவர் பன்னெடுங்காலமாகக் குடியிருந்து வந்தார்.
அந்தத் தெருவில் அவர் குடியிருந்த காலத்தில் அவருடைய குடும்பம் வளர்ந்து கொண்டே வந்தது. ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பனாராகி ஹிந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இந்தத் தொண்டின் பெருமையைச் சிறிதும் அறியாதவனான அந்த வீட்டின் சொந்தக்காரன் ஒருநாள் திடீரென்றுத் தோன்றி, "என் சொந்த வீட்டுக்கு நான் குடிவர எண்ணியிருக்கிறேன். ஆகையால் வீட்டைக் காலி செய்து அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அளித்தது. எத்தனை காலந்தான் மாறுதல் என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை நடத்துவது? ஒரே பாழும் வீட்டில் எத்தனை காலம் குடியிருப்பது? அதைக் காட்டிலும் இன்னொரு பாழும் வீட்டுக்கு குடிபோவது ஒரு மாறுதலாயிருக்கலாமல்லவா? பழைய வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுக்காமல் பல வருஷம் நாமம் போட்டு வந்ததுபோல் புதிய வீட்டுக்காரனுக்கும் நாமம் போடலாம் அல்லவா?
எனவே, புதிய வீடு ஒன்றை வாடகைக்குத் தேடிப் பிடிப்பது என்று கடோ த்கஜராயர் தீர்மானித்தார். அப்போதுதான் மறைந்துபோன அந்தப் பழையக் காலத்தை நினைத்து அவர் பெருமூச்சு விட நேர்ந்தது. அந்த மனிதர் சென்னைப் பட்டணத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை தொடங்கிய போது சென்னை நகரில் எங்கே பார்த்தாலும் 'டு லெட்' பலகை தொங்கிக் கொண்டிருக்கும். மலையாளத்து நம்பூதிரி ஒரு தடவை சென்னைப் பட்டணத்தை வந்து பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றதும் என்ன சொன்னான் என்று ஞாபகமிருகிறதல்லவா? "மதராஸிலே உள்ள பணக்காரர்களிலே டு லெட் துரைதான் பெரிய பணக்காரன். எந்தத் தெருவிலே பார்த்தாலும் பத்து எட்டு வீட்டுக்குக் குறையாமல் டு லெட் துரையின் போர்டு தொங்குகிறது" என்று நம்பூதிரி மலையாளத்தில் சொன்னதை நான் மேலே தமிழில் எழுதியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட வளமையான காலம் இனி எப்போது வரப்போகிறதோ? இன்றைக்குச் சென்னை நகரம் முழுதும் தேடி அலைந்தாலும் 'டு லெட்' பலகை ஒன்றைக்கூடப் பார்க்க முடியவில்லையே!
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டுக் கொண்டு கடோ த்கஜராயர் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் காரியாலயத்தைத் தேடிச் சென்றார். காலி வீடுகளுக்கெல்லாம் அந்த அதிகாரியிடம் ஜாபிதா இருக்கும் என்றும், அவரைக் கேட்டால் ஒருவேளை ஏதேனும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொடுக்கலாம் என்றும் அவர் கேள்விப்பட்டார்.
எனவே, வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் ஆபீஸ் எங்கே என்று துப்பு வைத்து விசாரித்துக் கொண்டு, அந்தக் காரியாலயத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
மேற்படி காரியாலயத்தில் ஒரு மனிதர் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு எதிரில் பெரிய தஸ்தாவேஜிக் கட்டுக்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவருடைய படாடோப தோரணையைப் பார்த்த கடோ த்கஜராயர் மிக்க பயபக்தியுடன் நின்று, "ஸார்! தாங்கள்தான் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியோ?" என்று கேட்டார்.
"ஆம், நாம் தான்! சொல்லுங்கள்!" என்றார் அந்த அதிகார தோரணைக்காரர்.
அவர் 'நாம் தான்' என்று சொன்னது கடோ த்கஜராயருக்குச் சிறிது சந்தேகத்தை அளித்தது.
தஞ்சாவூர் ஜில்லா மிராசுதாரர் ஒருவரின் மனைவிக்கு உடம்பு அசௌகரியம் என்று அறிந்த சலுகையுள்ள பண்ணைக்காரன், "எஜமான்! நம்ப சம்சாரத்துக்கு உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டானாம்! அந்த மாதிரியல்லவா இருக்கிறது கதை? இந்த அதிகாரி 'நாம் தான்!' என்று சொன்னதன் மர்மம் என்ன?
அந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு "வாடகைக்கு ஒரு வீடு தேவையாயிருக்கிறது. உங்களைக் கேட்டால் கிடைக்கும் என்று சொன்னீர்கள்" என்றார் கடோ த்கஜராவ்.
"நீங்கள் கெஜடட் ஆபீஸரா! அல்லது நான் - கெஜடட் ஆபீஸரா?" என்று மேற்படி 'நாம் தான் பேர்வழி' கேட்டார்.
"நான் கெஜடட் ஆபீஸருமில்லை; நான் கெஜடட் ஆபீஸருமில்லை. அதாவது இந்தச் சமயம் நான் ஒரு வித ஆபீஸருமில்லை. நீங்கள் பார்த்து கெஜடட் உத்தியோகமோ, நான் - கெஜடட் உத்தியோகமோ, எது போட்டுக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்கிறேன். நான் பெரிய குடும்பி; ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பன். ஒன்பதுதான் இதற்கு மேலே இல்லை என்று சொல்லவும் முடியாது" என்றார் கடோ த்கஜராயர்.
"விளையாட வேண்டாம்!" என்றார், 'நாம் தான் பேர்வழி'.
"நான் விளையாடவில்லை. விளையாட்டுக்கு நான் பூரண விரோதி! 'விளையாட்டு ஒழிக!' என்று ஓர் இயக்கம் யாராவது ஆரம்பித்தால் அதில் முதலில் நான் தான் சேர்வேன்!" என்றார் ராயர்.
"நீர் கெஜடட் ஆபீஸர் இல்லை; ஆகையால் உமக்கு வீடு கிடைக்காது! போகலாம்!"
"அப்படிச் சொல்லாதீர்கள்! நான் கெஜடட் ஆபீஸருக்கும் மேலே!"
இதைக் கேட்ட அந்த 'நாம் தான்' கொஞ்சம் பயமடைந்து மேசைமேல் கிடந்த தமது பாத தாமரைகளைக் கீழே எடுத்து வைத்துவிட்டு, "அப்படியானால் உட்கார்ந்து கொண்டு பேசுங்கள்!" என்று ஒரு நாற்காலியைக் காட்டினார்.
"கெஜடட் ஆபீஸருக்கும் மேலே என்றால், ஒரு வேளை ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தரோ? அல்லது ரெவினியூ போர்டு மெம்பரோ?" என்று கேட்டார்.
"இல்லை; அதற்கும் மேலே!"
"ஹைகோர்ட் ஜட்ஜோ?"
"இன்னும் மேலே!"
"ஆண்டவனே! அப்படியானால் தாங்கள் சட்டசபை அங்கத்தினரோ?"
"இன்னும் கொஞ்சம் மேலே போங்கள், பார்க்கலாம்."
"எம்.எல்.சி.யோ?"
"இல்லை; இன்னும் மேலே!"
"எம்.எல்.சி.யின் மாமனாரோ? அல்லது மைத்துனரோ? அல்லது ஷட்டகரோ?"
"கிடையாது; இன்னும் கொஞ்சம் மேலே போய்ப் பாருங்கள்!"
"மன்னிக்க வேணும்! ஒரு வேளை தாங்கள் சர்வ வல்லமையுள்ள மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரோ?"
"அதுவும் இல்லை!"
"பின்னே நீ யார்?"
"உம்முடைய சட்டசபை அங்கத்தினர்களையும் மந்திரிகளையும் உண்டாக்கியவன். உம்முடைய ஐ.சி.எஸ். காரர்களுக்கெல்லாம் மாதந்தோறும் சம்பளம் - படி அளக்கிறவன். உமக்கும் கூடத்தான்!"
"அது யார் ஐயா, நீர்?"
"இந்த தேசத்துக்கு ராஜா நான். சர்தார் படேல் அவர்களால் கூட அசைக்க முடியாத ராஜா. 'நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று பாரதியார் சொன்னாரே. அந்த மன்னர்களில் நான் ஒரு மன்னன். அதாவது இந்தியா தேசத்துச் சுதந்திரப் பிரஜை!"
இதைக் கேட்ட அந்த மனிதர் கடகடவென்று சிரித்தார். என்ன ஹாஸ்யத்தைக் கண்டு சிரித்தாரோ தெரியவில்லை.
"ஓஹோ! பாரதியாரின் பாட்டை நம்பிக் கொண்டா வந்தீர்? அழகுதான்! உமக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது. சும்மா வேண்டுமானால் தங்க இடம் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்துக்கும் பெரம்பூருக்கும் நடுவில் அந்த ஜாகை இருக்கிறது. லுனாடிக் அஸைலம் என்று பெயர்."
"அப்படியானால் அந்த ஜாகைக்குத் தான் சீட்டுக் கொடுங்களேன்!"
"நான் இந்த ஆபீஸின் தலைமை அதிகாரி அல்ல. அதிகாரியின் சொந்த அந்தரங்க குமாஸ்தாதான். ஆகையால் உத்தரவு அவர் கையெழுத்தில்லாமல் நான் போட்டுக் கொடுக்க முடியாது. ஆபிஸர் ஒரு வாரம் லீவில் இருக்கிறார். அடுத்த வாரம் வந்து அவரிடம் நேரில் விண்ணப்பம் போடும்."
மிக்க ஏமாற்றத்துடனே கடோ த்கஜராவ் அங்கிருந்து கிளம்பினார். பிறகு இன்னும் சில சிநேகிதர்களை விசாரித்ததில் "ஏதேனும் ஒரு வீடு காலியாயிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும். அதன் சொந்தக்காரனிடம் 'வீட்டை இன்னாருக்குக் கொடுக்கச் சம்மதம்' என்று எழுதி வாங்கிக் கொண்டு வீட்டுக் கண்ட்ரோல் ஆபீஸரிடம் போனால், சல்லிஸாக வீடு கிடைக்கலாம்" என்று சொன்னார்கள்.
இதன் பேரில் சென்னைப் பட்டணத்தில் காலி வீடு எங்கேனும் இருக்கிறதா என்று கடோ த்கஜராவ் பலரிடமும் விசாரிக்க ஆரம்பித்தார். தேனாம்பேட்டையில் சில நாளாக ஒரு வீடு காலியாக இருக்கிறதென்று கேள்விப்பட்டார். அந்த வீட்டைப் பார்த்துவிட்டு, வீட்டுக்காரனையும் கேட்டு வருவதாகக் கிளம்பினார்.
அன்று சகுனம் அவ்வளவு சரியாக இருந்ததென்று சொல்ல முடியாது. பூனை ஒன்று வீட்டு வாசலில் சிறிது நேரம் நின்று குறுக்கே போகலாமா, வேண்டாமா என்று யோசித்துவிட்டு, பிறகு எதிரே ஓடி வந்து கடோ த்கஜராயரின் கால்களின் வழியாகப் புகுந்து சென்றது.
ஆனால் ராயருக்குச் சகுனத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. எத்தனையோ தடவை நல்ல சகுனத்துடன் புறப்பட்டுச் சென்று, காரியம் கைகூடாமல், கைக்குடையையும் தொலைத்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார். ஆகையால் "பூனையும் ஆச்சு, ஆனையும் ஆச்சு!" என்று துணிச்சலுடன் இன்றைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒரு டிராம் வண்டியில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டார்.
அந்த டிராம் வண்டியில் கொஞ்சம் எக்கச்சக்கமான சம்பாஷணை அப்போது நடந்து கொண்டிருந்தது.
ஒருவர் கையில் பத்திரிகையை வைத்துக் கொண்டு அதில் போட்டிருந்த வார பலனை இரைந்து படித்தார்.
இன்னொருவர் குறுக்கிட்டு, "ஜோசியமாவது கீசியமாவது; எல்லாம் சுத்த ஹம்பக்!" என்றார்.
"அப்படி ஒரே அடியாய்ச் சொல்லக் கூடாது! ஜோசியமும் ஒரு ஸயன்ஸ்தானே?" என்றார் இன்னொருவர்.
"எல்லாம் அவரவர்களுடைய நம்பிக்கையைப் பொறுத்தது. வீண் சண்டை எதற்கு?" என்றார் மற்றொரு சமாதானப் பிரியர்.
"பாரதியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? புதிய ஆத்திச் சூடியில் "சோதிடம் தனை இகழ்" என்று ஸ்பஷ்டமாக எழுதியிருக்கிறார்!"
"பாரதியார் சொல்லிவிட்டால் வேதவாக்கோ இப்படியெல்லாம் கண்டதைச் சொன்னதனாலேதான் அவர் திண்டாடிப் புதுச்சேரித் தெருவிலே நின்றார்!"
இப்படியாக விவாதம் தடித்துக் கொண்டிருந்த போது நமது கடோ த்கஜராயர் சும்மா இருக்கக் கூடாதா?
"இவ்வளவு என்னத்திற்கு? பரணி நட்சத்திரத்துக்கு இந்த வாரம் என்ன பலன் போட்டிருக்கிறது என்று படித்துக் காட்டுங்கள். அதன்படி நடக்கிறதா இல்லையா என்று பரிசோதித்துப் பார்த்து விடுவோம்!" என்று சொல்லி வைத்தார்.
பரணி நட்சத்திரத்துக்கு அந்த வாரத்திய பலன் முதல் மூன்று நாளும் அவ்வளவு சுகமில்லை என்று இருந்தது. "எடுத்த காரியத்தில் தோல்வி, மனக் கிலேசம் வியாபாரத்தில் நஷ்டம்' என்று இப்படிப் படுமோசமாகச் சொல்லியிருந்தது.
கடோ த்கஜராயருக்கு ஒரே கோபமாக வந்தது. போகிற காரியத்தில் வெற்றியடையாமல் திரும்புவதில்லை என்று மனதில் தீர்மானித்துக் கொண்டு வெளிப்படையாகவும் சபதம் கூறினார்.
2
தேனாம்பேட்டையில் செல்லாக்காசுச் செட்டியார் சந்தில் எழுபத்தேழாம் நம்பர் வீடு பூட்டிக் கிடந்தது. வெகு காலமாக அதில் யாரும் குடியில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கே இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக் கடோ த்கஜராயர் விசாரித்தார். அவர்கள் வீட்டுச் சொந்தக்காரரின் விலாசத்தை சொல்லிவிட்டு, "இந்த வீட்டுக்குக் குடி வந்தவர் யாரும் இரண்டு நாளைக்கு மேல் இருப்பதில்லை" என்ற செய்தியையும் தெரிவித்தார்கள். ராயர் காரணம் என்ன என்று கேட்டதற்கு முதலில் தயங்குவதுபோல் தயங்கிவிட்டு, பிறகு "இராத்திரியில் அந்த வீட்டில் பேய்கள் நடமாடுவதாகக் கேள்வி!" என்று சொன்னார்கள்.
"இவ்வளவுதானே! என்னைக் கண்டால் பேய்கள் எல்லாம் பறந்துவிடும்!" என்று கடோ த்கஜராயர் சொல்லிவிட்டு வீட்டின் சொந்தக்காரரிடம் போய், வாடகைக்கு வீடு வேண்டும் என்றும், வீட்டின் சாவி தரும்படியும் கேட்டார்.
"எத்தனையோ பேர் இம்மாதிரி வந்து வீட்டுச் சாவி கேட்டு வாங்கிக் கொண்டு போனார்கள். மறுநாளே சாவி திரும்பி வந்துவிடும்! நீரும் அப்படித்தான் செய்யப் போகிறீர். என்னத்திற்கு வீண் சிரமம்?" என்றான் வீட்டுக்காரன்.
"எத்தனை நாளாக இப்படி அந்த வீடு காலியாக இருக்கிறது?" என்று கடோ த்கஜராயர் கேட்டார்.
"நாள் கணக்குச் சொல்ல முடியாது. மூன்று வருஷத்திற்கு மேலாகிறது."
"என்ன வாடகை கேட்கிறீர்கள்?"
"இந்த மாதிரி வீட்டுக்கு, இப்போது இருக்கும் வீடு கிராக்கியில், முந்நூறு ரூபாய் வாடகை வரும். எனக்கு இந்தப் பட்டணத்தில் ஆறு வீடு இருக்கிறது. இருநூறு, இருநூற்றைம்பது, முந்நூறு வரையில் வாடகை வாங்குகிறேன். இந்த வீட்டை நீர் நிஜமாக எடுத்துக் கொள்வதாயிருந்தால் எண்பது ரூபாய்க்குக் கொடுக்கிறேன்."
"சரி! இப்போதே ஒரு மாத வாடகை அட்வான்ஸு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீரா?" என்றார் ராயர்.
"அது எப்படி முடியும்? வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி உத்தரவு போட்டால் அல்லவா நான் வாடகை அட்வான்ஸு வாங்கிக் கொள்ளலாம்!"
"சரி; வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுக்க உமக்குச் சம்மதம் என்று எழுதிக் கொடும். மற்றதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்."
"அப்புறம் பேச்சு மாறக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு நாள், இரண்டு நாள் அந்த வீட்டில் இருந்து பார்த்து விடுங்கள். அப்புறம் என் பேரில் புகார் சொல்ல வேண்டாம்."
"வீட்டில் பேய் நடமாடுகிறது என்ற விஷயத்தைப் பற்றித்தானே சொல்கிறீர்?"
"ஆமாம்; ஊரில் இருக்கிறவர்களுக்கு வேறு என்ன வேலை? இப்படி ஏதாவது கதை கட்டி விடுகிறார்கள். அதனால் பல வருஷமாய் எனக்கு வாடகை நஷ்டம். நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்வதாயிருந்தால்..."
"இருந்தால் என்கிற பேச்சே கிடையாது. சாவியை இப்படிக் கொடும். பேய்களுக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு! ஒரு கை பார்த்து விடுகிறேன்."
சாவியை வாங்கிக் கொண்டு அஞ்சா நெஞ்சரான கடோ த்கஜராவ் புறப்பட்டார். அன்று இரவே விஷயத்தைக் கீறிப் பார்த்து முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்தார். திருவல்லிக்கேணியில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் டெலிபோன் இருந்தது. அந்த வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டு, "தயவு செய்து என் வீட்டில் சொல்லி விடுங்கள். நான் இராத்திரி முக்கிய காரியமாக ஒரு சினேகிதர் வீட்டில் தங்க வேண்டியிருக்கிறது" என்று தெரியப்படுத்தினார்.
3
வெகு நாளாகத் திறக்கப்படாத பூட்டைத் திறந்து கொண்டு கடோ த்கஜராவ் அந்தப் பேய் வாழும் வீட்டுக்குள் புகுந்தார். மின்சார விளக்குப் போடப்பட்ட வீடு. சில அறைகளில் பல்புகள் கழற்றப்படிருந்தன. எனினும் சில அறைகளில் பல்புகள் இருந்தன. ஸ்விச்சைப் போட்டுப் பார்த்ததில் விளக்குகள் எரிந்தன. இது முன்னைக் காட்டிலும் அதிக தைரியத்தைக் கடோ த்கஜராவுக்கு அளித்தது.
வாசற் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு விட்டுக் கொல்லைக் கதவு தாழ்ப்பாள் போட்டிருப்பதையும் பார்த்துக் கொண்டு வந்தார். பிறகு மச்சுமீது ஏறிப் பார்த்தார். அங்கே அவர் பார்த்த ஒரு விஷயம் சிறிது விசித்திரமாகத்தானிருந்தது. ஏனெனில் கீழே இருந்தது போல் மேல் மாடியில் அவ்வளவு குப்பையாக இல்லை. சமீபத்தில் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டதாகத் தோன்றியது. அது மட்டுமல்ல; மனிதர் நடமாடியதற்கு அறிகுறிகளும் காணப்பட்டன. மனிதருடைய நடமாட்டந்தான் என்பதில் சந்தேகமில்லை. பேய்களுக்குக் கால் கிடையாது. இருந்தாலும் அவற்றின் காலடிதான் தரையில் படாதே!
மேலும் கடோ த்கஜராயர் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது மச்சுப் படிகளுக்கு அடிப்புறத்தில் வெளிப்புறமாகத் திறக்கும் கதவு ஒன்று இருப்பதைக் கண்டார். அதற்கு உட்புறத்தில் தாள் இல்லை; அதாவது இருந்த தாளை யாரோ கழற்றிவிட்டிருந்தார்கள். இதுவும் கொஞ்சம் விசித்திரமாகவே தோன்றியது. சிற்சில சந்தேகங்களும் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் இன்று ஒரு இராத்திரி இந்த வீட்டில் கண் விழித்திருந்து பார்த்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.
மின்சார தீபங்களையெல்லாம் அணைத்து விட்டுக் குளிர் அடக்கமான ஒரு அறைக்கு வந்து சேர்ந்தார். நல்ல வேளையாக அங்கே ஒரு பழங்காலக் கட்டில் கிடந்தது. அதில் துணியை விரித்துப் படுத்தார். மறுபடியும் ஏதோ தோன்றவே அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்து படுத்தார்.
இராத்திரி முழுவதும் தூங்குவதில்லையென்ற திடசங்கற்பம் கொண்டிருந்தபடியால், கண்கள் மூடுவதற்கே இடம் கொடுக்கவில்லை. பக்கத்து வீடு ஒன்றில் கடிகாரம் பதினொரு மணி, பன்னிரண்டு மணி அடித்த வரையில் தூக்கம் கிட்ட நாடவில்லை. பன்னிரண்டு மணி அடித்த பிறகு சிறிது தூக்கம் கண்ணைச் சுற்றுவது போலிருந்தது. தூங்கக்கூடாது என்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
எழுந்து உட்கார்ந்து சிறிது நேரத்துக்கெல்லாம் கடோ த்கஜராவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அறைக்கு வெளியே அந்த வீட்டுக்குள் எங்கேயோ 'ஜல்க்' 'ஜல்க்' என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கிட்டக் கிட்ட நெருங்கி வருவதாகத் தோன்றியது. வர வர அந்த 'ஜல்க்' சத்தம் அருகில் வந்து அந்த அறைக்கு வெளியே நின்றது.
கடோ த்கஜராவ் பயப்படவில்லை. ஆனாலும் அவருடைய மார்பு மட்டும் கொஞ்சம் பட் பட் என்று அடித்துக் கொண்டது. மேற்படி 'ஜல்க்' சத்தம் கூட பரவாயில்லை. அது அந்த அறை வாசலில் வந்து சட்டென்று நின்றுவிட்டதுதான் கொஞ்சம் என்னமோ போலிருந்தது.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அறையின் கதவை யாரோ இரும்புக் கம்பியினால் தட்டுவது போல் கேட்டது.
"யார் அது?" என்றார் கடோ த்கஜராவ்.
"நீ யார்?" என்றது ஒரு கம்மலான குரல்.
"நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்" என்றார் ராயர்.
"உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!"
"வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?"
"இல்லை"
"அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்."
"அதெல்லாம் முடியாது. உடனே ஓடிப் போய் விடு!"
மறுபடியும் அந்த 'ஜல்க்' சத்தம் கேட்டது.
"நீ யார் என்னைப் போகச் சொல்வதற்கு?"
"கதவைத் திறந்து பார்! தெரிந்து கொள்வாய்!"
"கதவைத் திறக்காவிட்டால்?"
"கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து உன்னை விழுங்கி விடுவேன்."
"ஓஹோ! அப்படியா! யார் யாரை விழுங்குகிறார்கள் என்று பார்க்கலாம்."
"இவ்விதம் சொல்லிவிட்டுக் கடோ த்கஜராவ் எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். கதவைத் திறந்து பார்த்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அங்கே ஒரு பேய் நின்று கொண்டிருந்தது.
ராயர் மியூஸியத்தில் மனிதனுடைய உடலின் எலும்புக்கூடு வைத்திருப்பதைப் பார்த்திருந்தார்.
அதே மாதிரி இந்தப் பேய் இருந்தது. ஆனால் பேசிற்று. காலையும் கையையும் கழுத்தையும் ஆட்டிற்று. அப்படி ஆட்டியபோது எலும்புப் பூட்டுகள் 'ஜல்க்' 'ஜல்க்' என்று சத்தமிட்டன.
"போய்விடு! போய்விடு!" என்று அந்தப் பேய் காலினால் தரையில் உதைத்துக் கொண்டு அலறியது.
கடோ த்கஜராவ் தம் நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிக் கொண்டு சொன்னார்:- "இதோ பார்! உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிடமாட்டேன். இந்த வீடு பெரியது; தாராளமாய் இருக்கிறது. என்னுடைய குடும்பம் பெரியதுதான் என்றாலும், இதில் நானும் என் குடும்பத்துடன் குடியிருக்கலாம், நீயும் இருக்கலாம். நீ இருப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. இராத்திரி நாங்கள் தூங்குகையில், நீ 'ஜல்க்' 'ஜல்க்' என்று சத்தமிட்டுக் கொண்டு நடமாடக் கூடாது. நடமாடாமலேயிருந்தால் நல்லது. அப்படி நடமாடினாலும் சத்தம் கேட்காதபடி நடமாட வேண்டும். தெரிகிறதா? உன்னுடைய எலும்புப் பூட்டுகளில் இப்போது சதைப்பற்று இல்லாத படியால் இப்படிச் சத்தம் கேட்கிறது. கொஞ்சம் மோபில் ஆயில் வாங்கித் தருகிறேன். அதைப் போட்டுக் கொண்டு நடமாடினால் இவ்வளவு சத்தம் கேட்காது தெரிகிறதா?"
"அதெல்லாம் முடியாது. என்னை எண்ணெய் போட்டுக் கொள்ளும்படி சொல்ல நீ யார்? நான் நடமாடும் போது 'ஜல்க்' 'ஜல்க்' என்று சத்தம் கேட்டால் தான் எல்லோரும் பயப்படுவார்கள்."
"நீ சொல்வது தவறு. அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் பயப்பட மாட்டார்கள். என் குழந்தைகள் பொல்லாதவர்கள், உன்னைப் பார்த்து விட்டால் மியூஸியத்திலிருந்து தப்பி வந்துவிட்டதாக எண்ணி, உன்னை எலும்பு எலும்பாகக் கழற்றி எடுத்து விடுவார்கள்."
இதைக் கேட்டவுடனே அந்தப் பேய் 'ஓ ய் ய் ய் ய்' என்று சத்தம் போட்டுவிட்டு ஓடியது. மச்சுப்படியின் பக்கத்தில் போய் நின்று திரும்பிப் பார்த்து, "இரு, இரு! என் அண்ணனை வரச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடியது.
ஸ்ரீ கடோ த்கஜராவ் நின்ற இடத்திலேயே நின்றார்! மற்றொரு பேய் இரண்டு கையாலும் தலைக்கு மேலே ஒரு பழம் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தது. இதுவும் எலும்புக் கூட்டுப் பேய்தான். ஆனால் காவித்துணியினால் ஆன ஒரு நீண்ட அங்கியைக் கழுத்திலிருந்து கால் வரை போட்டுக் கொண்டு வந்தது.
ராயரின் அருகில் வந்ததும் "போடட்டுமா? போடட்டுமா?" என்றது.
ராயர், "பேயே! நீ ஸினிமா பார்ப்பதுண்டா?" என்று கேட்டார்.
"உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றது பேய்.
"நீ பார்த்த ரத்னகுமார் படத்தை நானுந்தான் பார்த்தேன். அதில் ஒரு பேய் 'போடட்டுமா? போடட்டுமா?" என்று அசடு வழிய உளறுகிறதே, அதைப் பார்த்துத்தானே நீயும் உளறுகிறாய்?"
அதைக் கேட்ட அந்தப் பேய் திடீரென்று பெட்டியைக் கீழே போட்டது. பெட்டி அதன் கால் மேலேயே விழுந்தது! வலி பொறுக்காமல் 'வீல்' என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
பிறகு கடோ த்கஜராயர் இனி நிம்மதியாகத் தூங்கலாம் என்று எண்ணிக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். பயன் என்ன? சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் 'ஜல்க்' சத்தம் கேட்டது. முன்னை விட அதிகமாகவே கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் உடம்பில் இரும்புக் கவசமும், தலையில் இரும்புத் தொப்பியும் தரித்த ஒரு எலும்புக் கூட்டுப் பேய் நின்றது. அது அணிந்திருந்த கவசங்களினால் தான் அதிக சத்தம் என்று ராயர் அறிந்து கொண்டார்.
"பழி! பழி!" என்று பேய் கத்திற்று.
"இதோ பார்! வீண் கூச்சல் போடாதே. நீ ஹாம்லெட் நாடகத்தில் வரும் தகப்பன் - பேய்தானே?"
"ஆமாம்!... பழி! பழி!"
"நீ கையினால் ஆகாத உபயோகமற்ற பேய் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தானே உனக்குத் துரோகம் செய்த மனைவியையும் சகோதரனையும் உன்னால் பழி வாங்க முடியவில்லை? உன் மகனை ஏவி விட்டு அவன் வாழ்வையும் கெடுத்தாய்! சீ! முட்டாளே! கோழைப் பேயே! போ! நீ கெட்ட கேட்டுக்கு கவசம் வேறு கேடா? இங்கே நின்றாயோ, பிடித்து மியூஸியத்துக்கு அனுப்பி விடுவேன்!"
ஹாம்லெட்டின் தகப்பன் - பேய் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
சற்று நேரத்திற்கெல்லாம் வந்த இன்னொரு பேயைப் பார்த்து, கடோ த்கஜராயர் "நீ யார்" என்றார்.
"நான் ஜோசியப் பேய்!"
"எதற்காக வந்தாய்?"
"நீ என்னைப் பற்றி இன்று டிராம் வண்டியில் அவதூறு கூறினாய் அல்லவா! என் உண்மையை நிரூபிக்கவே வந்தேன். உன்னுடைய காரியம் பலிக்காமல் செய்வதற்காகவே வந்தேன்!"
"பாவம்! இதற்காகவா உயிரை விட்டாய்? உன்னுடைய விதி இன்னதென்று உன் ஜோசியத்தில் தெரிந்ததா!"
"தெரியாமல் என்ன? பேஷாய்த் தெரிந்திருந்தது."
இச்சமயத்தில் "ஜயபேரிகை கொட்டடா!" என்ற ஒரு கம்பீர முழக்கம் கேட்டது.
முழக்கம் வந்த திசையைப் பார்த்தால் பாரதியார் வந்து கொண்டிருந்தார். அதே அல்பாகா சட்டை; கழுத்தில் அதே விதத் துண்டு; அதே மீசை; தலையில் அதே மாதிரி குஞ்சம் விட்ட தலைப்பாகை.
"பயமெனும் பேய்தனை அடித்தோம்!" என்று பாரதியார் முழங்கினார்.
அவ்வளவுதான்; ஜோசியப் பேய் ஓட்டம் பிடித்தது. அந்தப் பேயைத் துரத்திக் கொண்டு பாரதியார் விரைந்து ஓடினார்.
மறுபடியும் இன்னொரு அனல்வாய்ப் பேய் வந்தது. அது வாயைத் திறந்தால் தணல் சுடர்விட்டது. மனோகரன் நாடகத்துப் பேய் அது என்று கடோ த்கஜராவ் உடனே தெரிந்து கொண்டார்.
"ஏ பேயே! நானே மனோகரன் நாடகத்தில் பேயாக நடித்திருக்கிறேன். உன்னைவிடப் பிரமாதமாக என்னுடைய வாயிலிருந்து அனலைக் கக்குவேன். தெரியுமா!" என்றார் ராயர்.
அந்தப் பேயும் ஓட்டம் எடுத்தது.
கடைசியாக கடோ த்கஜராவ் கூடச் சிறிது மிரளும்படியாகப் பத்துப் பதினைந்து பேய்கள் சேர்ந்தாற் போல் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன. "பசி பசி" என்று அவை கூச்சலிட்டன.
கடோ த்கஜராவ் இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு நிமிஷம் யோசனை செய்தார். அதற்குள் அப்பேய்கள், "பசி! உன்னை விழுங்கி விடப் போகிறோம்!" என்று ஆவேசமாக ஆர்ப்பரித்தன.
"ஏ பேய்களே! உங்களுடைய பொய் எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்! பஞ்சத்தினால் நீங்கள் செத்துப் போனதாகப் பொய் சொல்லி ஊரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்! காங்கிரஸ் மந்திரிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காகவே இப்பேர்பட்ட சதியாலோசனை செய்திருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் பஞ்சத்தினாலோ பசியினாலோ இறக்கவில்லை. வயது முடிந்ததனாலேயே செத்தீர்கள். அது உங்கள் தலைவிதி; யார் என்ன செய்ய முடியும்? உடனே எல்லோரும் ஓடிப் போய் விடுங்கள்! இல்லாவிட்டால் எங்களுடைய உணவு மந்திரி கனம் முன்ஷியைக் கூப்பிட்டுக் கொண்டு வருவேன்!" என்றார் ராயர்.
"உணவு மந்திரி முன்ஷி வந்தால் எங்களை என்ன செய்து விடுவார்?"
"எலும்பிலே பாஸ்பரஸ் என்னும் சத்து இருக்கிறது. பூமிக்கு அது மிக நல்ல உரம். உங்கள் எலும்புகளையெல்லாம் சுக்கு நூறாய் இயந்திரத்தில் கொடுத்து உடைத்து நிலத்துக்குப் போட்டு உழும்படி செய்து விடுவார்!"
இதைக் கேட்டதும் அந்தப் பஞ்சப் பேய்கள் ஒரே ஓட்டம் பிடித்தன. அப்போது எழுந்த பெரும் 'ஜல்க்' ஓசையில் கும்பகர்ணன் கூட விழித்தெழுந்திருப்பான். ஸ்ரீ கடோ த்கஜராவ் விழித்துக் கொண்டதில் வியப்பு இல்லையல்லவா? தாம் தூங்காமலிருக்கத் தீர்மானித்திருந்தும் எப்படியோ தூங்கிப் போய் விட்டதையும், அத்தனை நேரம் கண்டது கனவுதான் என்பதையும், உணர்ந்து கொண்டார்.
எழுந்து உட்கார்ந்து தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"பேயுமில்லை, கீயுமில்லை! எல்லாம் பிரமை!" என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போது மறுபடியும் ஏதோ சத்தம் கேட்டது. 'ஜல்க்' 'ஜல்க்' என்றும், 'சல்' 'சல்' என்றும் 'கலீர்' 'கலீர்' என்றும் ஓசைகள் எழுந்தன.
இது என்ன கூத்து?
கடோ த்கஜராவ் நன்றாக விழித்துக் கொண்டார். அறைக் கதவைத் திறந்தார். அந்த வீட்டின் மாடியில் ஏதோ ஒரு மூலை அறையிலிருந்து அந்தச் சத்தங்கள் வந்தன. அடிமேல் அடிவைத்து மெள்ள மெள்ள நடந்து மச்சுப்படி ஏறினார். சத்தம் வந்த அறைக்கு அருகே சென்று பார்த்தார். ஜன்னல் கதவு ஒன்றே ஒன்று மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே ஐந்தாறு ஆசாமிகள் உட்கார்ந்து பணம் வைத்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளிப் பணத்தை அங்குமிங்கும் நகர்த்திய சத்தந்தான் அவர் கேட்ட சப்தம். மேலே கூறிய விநோதமான கனவை உண்டாக்கிய ஓசையும் அதுதான் போலும்!
கடோ த்கஜராவ் அடிமேல் அடிவைத்து நடந்து சென்று திறந்திருந்த வாசற்படி வழியாக வெளியேறினார். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைத் தேடிப் போனார் கதவை இடித்தார். ஒரு போலீஸ் சேவகர் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்து கதவைத் திறந்தார்.
"அங்கே ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது. உடனே வந்தால் குற்றவாளிகளைக் கைப்பிடியாகப் பிடிக்கலாம்!" என்று சொன்னார் ராயர்.
"உமக்கு எப்படித் தெரியும்?" என்று போலீஸ்காரர் கேட்டார்.
"வாடகைக்கு அந்த வீட்டைப் பேசியிருக்கிறேன். அந்த வீட்டில் இராத்திரி படுத்துக் கொண்டிருந்தேன்..."
"எந்த வீட்டில்?"
வீதியையும் வீட்டு நம்பரையும் கடோ த்கஜராவ் சொன்னதும், "ஐயோ!" என்று கூச்சல் போட்டு விட்டுப் போலீஸ்காரர் கதவைச் சாத்திக் கொண்டார்.
தம்மைப் பேய் என்று நினைத்து அவர் பயந்து போய்விட்டார் என்பது ராயருக்குத் தெரிந்து போயிற்று. அதிலிருந்து ஒரு யுக்தி உதயமாயிற்று.
திரும்பவும் அந்த வீட்டுக்கே போனார். திறந்த கதவு வழியாகப் பிரவேசித்தார்.
"ஓய்ய்ய்ய்" என்று ஒரு கூச்சல் போட்டார். "இய்ய்ய்ய்" என்று இன்னொரு சத்தம் போட்டார்.
சீட்டாடிய அறையிலிருந்து குழப்பமான குரல்கள் வந்தன.
மறுபடியும் ராயர் 'கிறீச்' என்றும் 'ஐயோ!' என்றும் கத்தினார். கனவில் பேய்கள் போட்ட சத்தத்தையெல்லாம் இவரும் போட்டார்.
மாடிப்படியில் இரண்டு முறை தடதடவென்று ஏறி இறங்கினார்.
சீட்டாட்ட அறைக் கதவு திறந்தது. சீட்டு ஆடியவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள்.
மச்சுப் படியில் பத்து அடிக்கு மேலே கடோ த்கஜராவ் நின்று கொண்டார். தன்னுடைய கறுப்புக் கம்பளியை எடுத்துத் தலை முதல் கால் வரை போட்டு மறைத்துக் கொண்டு நின்றார்.
அறையிலிருந்து வந்தவர்களில் ஒருவன் அந்த உருவத்தைப் பார்த்தான். 'அதோ!' என்று பீதி நிறைந்த குரலில் சொன்னான். மற்றவர்களும் பார்த்தார்கள் அவ்வளவுதான்! ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள். அவசரத்தில் கொஞ்சம் ரூபாய்களைக்கூட இறைத்து விட்டுப் போனார்கள்.
4
மறுநாள் காலையில் கடோ த்கஜராவ் அந்த வீட்டுச் சொந்தக்காரரிடம் சென்று வீட்டைக் கட்டாயம் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகச் சொல்லிப் போனார்.
வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி லீவு முடிந்து காரியாலயத்துக்கு வந்ததாகத் தெரிந்தது. அவரைப் போய் பார்த்தார். எல்லா விபரமும் சொன்னார்.
அதிகாரி அவரைப் பார்த்து, "விடு ரொம்பப் பெரியதா? சௌகரியமானதா?" என்று கேட்டார்.
"ஆமாம், பெரிய வீடுதான். மிகவும் வசதியானது."
"நியாயமாக, அந்த வீட்டுக்கு என்ன வாடகை கொடுக்கலாம்?"
"மாதம் இருநூறு ரூபாய் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம்."
"வீட்டுக்காரச் செட்டியார் என்ன வாடகை கேட்கிறார்?"
"தொண்ணூறு ரூபாய்க்குத் தருவதாகச் சொல்கிறார்."
"ஒரு வேளை இன்னும் கொஞ்சம் குறைக்கவும் சம்மதிக்கலாம் அல்லவா?"
"அதுவும் சாத்தியந்தான்!"
"சரி, நீர் போகலாம். தீர விசாரித்து உத்தரவு போடப்படும்."
மறுநாள் ராயர் வீட்டுக்காரச் செட்டியாரைப் போய்க் கேட்கலாம் என்று போனார். வழியில் மேற்படி வீட்டைச் சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து வியப்படைந்தார்.
செட்டியாரைப் போய் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது.
வீட்டு வாடகை உத்தியோகஸ்தர் மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுகாரு மேற்படி வீட்டை அறுபது ரூபாய் வாடகைக்குத் தாமே எடுத்துக் கொண்டு விட்டார்!
அந்த வீட்டுக்கு குடிவந்தவரின் பெயர் பொருத்தம் ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு மிக்க திருப்தி அளித்தது. அதோடு இன்னொரு ஆறுதலும் அடைந்தார். மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுவும் தம்மைப் போல் பெரிய குடும்பிதான் என்று தெரிய வந்தது. ராயரைக் காட்டிலும் நாயுடுவுக்கு மூன்று குழந்தைகள் அதிகம்! மொத்தம் ஒரு டஜன்!
"புது வீட்டில் அம்மனிதர் குடியும் குடித்தனமுமாக நன்றாயிருக்கட்டும், குடும்பத்தை மேலும் பெருக்கிக் கொள்ளட்டும்!" என்று ராயர் மனதிற்குள் ஆசீர்வதித்தார். ததாஸ்து!
---------------
64. நீண்ட முகவுரை(பாங்கர் விநாயகராவ்)
ஈரோட்டிலிருந்து சென்னை மாநகர் போவான் வேண்டி இரவு ஒன்பது மணிக்குச் செல்லும் நீராவித் தொடர் வண்டியைப் பிடிப்பதற்காக அந்தப் புரவி வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்...என்ன சொல்கிறீர்கள்? முன்னுரை கொஞ்சம் முன்னேறட்டும் என்று தானே? என்ன செய்யட்டும் ஐயா, ஜட்கா வண்டி முன்னேறினால்தானே கட்டுரையும் முன்னேறும்? அந்த ஜட்கா வண்டியை இழுத்த குதிரை அன்று ஏனோ சண்டித்தனம் செய்தது. முன்னால் பத்தடி சென்றால் பின்னால் பதினைந்தடி சென்றது. வண்டிக்காரன் குதிரையை இருபது அடி அடித்தான். கொஞ்ச நேரம் இப்படி நடந்த பிறகு நான் ஒரே அடியாகப் பிடிவாதம் பிடித்து ஜட்கா வண்டியிலிருந்து கீழே இறங்கி விட்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தே போக ஆரம்பித்தேன். ஆனாலும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை; ரயிலுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ, என்னமோ, அது எனக்காகக் காத்திராமல் போயே போய் விட்டது!
அவ்விதம் அன்றைய ரயிலைப் பிடிக்க முடியாதபடி 'டன்கெர்க்' செய்த ஜட்கா வண்டிக்கு இன்று என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். அது இப்போது எந்த உலகத்திலிருந்தாலும் அதன் ஆத்மா சாந்தி பெறுவதாக!
ஏனெனில், அன்று ரயிலைப் பிடிக்க முடியாமற் போன காரணத்தினால் என் வாழ்க்கையில் இணையில்லாத பாக்கியத்தை அடைந்தேன். இரவு ரயில் தவறிப் போய் விட்டபடியால் மறுநாள் காலை ரயிலுக்குப் போகும்படி ஆயிற்று. ரயில் நேரத்துக்கு ஒரு மணி முன்னாலேயே புறப்பட்டு ஒற்றை மாட்டு வண்டியில் சென்று ரயிலைப் பிடித்தேன். நான் ஏறிய மூன்றாம் வகுப்பு ரயில் வண்டியில் இருந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் அவருடைய செல்வக் குமாரி லக்ஷ்மியும் இருந்தார்கள். இருவரும் கோயமுத்தூரிலிருந்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்குப் போய்க் கொண்டிருந்ததாக அறிந்தேன். திருச்செங்கோடு போவதற்குச் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும் என்றும் தெரிந்தது.
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சில மாதங்களுக்கு முன்னாலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் கோயமுத்தூரில் உறவினர் வீட்டிலிருந்த குமாரி லக்ஷ்மியை ராஜாஜி அவர்கள் அப்போதுதான் முதன் முதலாகக் காந்தி ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதாகத் தெரிந்து கொண்டேன்.
அந்தக் காலத்திலேயே ராஜாஜியிடம் எனக்குப் பக்தி அதிகம். ஆனால் பழக்கம் மிகச் சொற்பம். ஆகையால் நானாக அதிகம் பேசுவதற்குத் துணியவில்லை. ராஜாஜி "எங்கே போகிறாய்?" என்று கேட்டார்கள். "கதர் போர்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டேன். சென்னையில் 'நவசக்தி' பத்திரிகைக்கு உதவி ஆசிரியராகப் போகிறேன்" என்றேன்.
கதர் போர்டு வேலையை நான் விட்டு விட்டதை ராஜாஜி விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் ஏன் விட்டேன் என்பது பற்றிக் கேள்விகளும், குறுக்குக் கேள்விகளும் போட்டு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டார்கள். நல்ல வேளையாக, சங்கரி துர்க்கம் ஸ்டேஷன் சீக்கிரத்தில் வந்து என் சங்கடத்தைத் தீர்த்தது!
ராஜாஜி ரயிலிருந்து இறங்கும் சமயத்தில் "காந்தி ஆசிரமத்திலிருந்து மதுவிலக்குப் பத்திரிகை ஒன்று நடத்துவதாக உத்தேசம்; அதற்கு உன்னை அழைத்துக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தேன்" என்றார்கள். பாதாள லோகத்திலிருந்து திடீரென்று சொர்க்க லோகத்துக்குத் தூக்கி விட்டால் எப்படி இருக்கும்? அம்மாதிரி இருந்தது எனக்கு. இதற்குள் ரயில் நின்று விட்டது. ராஜாஜி இறங்கத் தொடங்கி விட்டார்கள். அவசர அவசரமாக, "தாங்கள் பத்திரிகையை எப்போது ஆரம்பித்தாலும் என்னை அழைத்தால் உடனே வருகிறேன்!" என்று சொன்னேன். என்னுடைய பதில் அவர்களுடைய காதில் சரியாக விழுந்ததோ இல்லையோ என்ற கவலை சென்னைக்குப் போய்ச் சேரும் வரையில் என்னைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.
எழுத்தாளர்கள் ஒரு பத்திரிகையிலிருந்து இன்னொரு பத்திரிகைக்கு மாறியதாகவோ, தாங்களே புதிய பத்திரிகை ஆரம்பித்ததாகவோ கேள்விப்படும்போது நான் சிறிதும் வியப்படைவதில்லை. எழுத்தாளர் என்போர் ஒரு விநோதமான இனத்தினர். ஓர் இடத்தில் நிலையாக இருக்க அவர்களால் முடிவதில்லை. தம் இஷ்டம் போல் சுயேச்சையாக எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எழுத வேண்டும் என்ற ஆவல் பெரும்பாலான எழுத்தாளர் உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். மேலேயுள்ளவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் சரிதான்; மாறுதல் வெறி திடீரென்று சில சமயம் தோன்றத்தான் செய்யும். ஸ்ரீ திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களைப்போல் நல்ல மனிதர் வேறொருவர் இருக்க முடியாது. எவ்வளவோ அன்பும் ஆதரவுமாக அவர் என்னை நடத்தி வந்தார். ஒரு தடவையாவது ஒரு குற்றம் கூறியது கிடையாது. ஆயினும் மூன்று வருஷத்துக்கெல்லாம் "நவசக்தி"யை விட்டு வேறுவித வேலை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டாகிவிட்டது. 'வெறி' என்று சொன்னாலும் தவறில்லை. எனவே ஒரு நாள் திரு.வி.க. அவர்களிடம் என் மனோநிலையைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
மறுநாள், ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநகருக்கு வந்திருப்பதாகப் பத்திரிகைகளில் படித்து அறிந்தேன். (தினப் பத்திரிகைகளில் போக்கு வரவுச் செய்திகளை வெளியிடுகிறார்களே, அவர்கள் அடியோடு வாழ்க!) திருச்செங்கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போகும் மார்க்கத்தில் சென்னையில் இறங்கி, ஒரு சினேகிதர் வீட்டில் தங்கியிருப்பதாகத் தெரிந்தது. "இதென்ன, காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் சரியாயிருக்கிறதே?" என்று எண்ணிக் கொண்டே ஸ்ரீ ஆச்சாரியாரைப் பார்க்கப் போனேன். (அப்போதெல்லாம் ராஜாஜி என்னும் அருமையான மூன்று எழுத்துப் பெயர் வழக்கத்துக்கு வரவில்லை. அந்த நாளில் பாடப்பட்ட ஒரு தேசியப் பாட்டில், "சேலம் வக்கீல் ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆ ஆர்" என்று தொகையராவின் ஒரு வரி முழுவதையும் அவருடைய பெயர் அடைத்துக் கொண்டிருந்தது.) ஸ்ரீ ஆச்சாரியார் என்னைப் பார்த்ததும், "முன்னொரு தடவை சொன்னேனே நினைவிருக்கிறதா? மதுவிலக்குப் பத்திரிகையொன்று ஆசிரமத்தில் தொடங்கப் போகிறேன். மூன்று மாதத்திற்குள் வர முடியுமா?" என்று கேட்டார். "மூன்று மாதத்துக்குள் வர முடியாது, இன்றைக்கே வரமுடியும்!" என்று பதில் சொன்னேன். "அதெப்படி?" என்று கேட்டார்.
"நவசக்தி"யை நான் விட்டு விட்ட விவரத்தைச் சொன்னேன்.
ஆச்சாரியார் ஐந்து நிமிஷம் கோபமாயிருந்தார். அம்மாதிரி சஞ்சல புத்தி உதவாது என்று கண்டித்தார். பிறகு, "போனது போகட்டும்; பட்டணத்தில் வேலை இன்றிச் சும்மாத் திரியக்கூடாது; கெட்டுப் போவாய்; இரண்டு நாளைக்குள் ஆசிரமத்துக்குப் புறப்பட்டுவிடு! அங்கே சந்தானம் இருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொள்வார். நான் வடக்கே இருந்து திரும்பி வந்ததும் பத்திரிகையைப் பற்றி யோசிக்கலாம்!" என்று கூறினார்.
எனக்கு ஏற்பட்ட குதூகலத்தைச் சொல்லி முடியாது. ஆயினும் குதூகலத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளாமல் "அதற்கென்ன? அப்படியே செய்கிறேன்!" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
2
காந்தி மகானிடம் எனக்கு இருந்த பக்தி அப்போது ராஜாஜியிடமும் இருந்தது. ஒருபடி அதிகமாகவே இருந்தது. ராஜாஜியின் தோற்றம், பேச்சு, அவருடைய ஒழுக்கத்தையும் தியாக வாழ்க்கையையும் பற்றி நான் தெரிந்து கொண்டிருந்த விவரங்கள் எல்லாம் அத்தகைய பக்தியை எனக்கு உண்டாக்கி இருந்தன.
காந்தி மகாத்மா எவ்வளவோ பெரிய மகாத்மா தான். ஆனாலும் அவர் தமிழ் அறியாத குஜராத்திக்காரர்தானே? எனவே, அவருடைய போதனை உள்ளத்தில் ஒட்டுவது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. ஆனால் ராஜாஜியோ, நமது சொந்தத் தமிழ் நாட்டவர். நமது தாய் மொழியில் நமது உள்ளத்தில் ஒட்டும்படி பேசக் கூடியவர்.
ராஜாஜி "சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்!" என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.
சென்னை ராயப்பேட்டையில் நான் இருந்த போது ஒருநாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்குக் கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. "ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா? அல்லது நான் தான் காணாமற் போய்விட்டேனா?" என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக்கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்!
எனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன் தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது! ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக்கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா! அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...!)
சங்கரிதுர்க்கம் ஸ்டேஷனில் இறங்கித் திருச்செங்கோட்டுக்கு ஐந்து மைல் பஸ்ஸில் போகவேண்டும். திருச்செங்கோட்டிலிருந்து ஏழு மைல் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ போக வேண்டும். பழைய குதிரை வண்டி அநுபவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, மாட்டு வண்டியிலேதான் போனேன். மாட்டு வண்டி அவசரப்படாமல் நிதானமாக ஆடி அசைந்து கொண்டு சென்றது. சாலையின் இரு பக்கமும் புன்செய் நிலக்காடுகள். சில இடங்களில் மொட்டைப் பாறைகள். ஒரு இடத்தில் ஒரு பெரிய பனந்தோப்பு. அதில் சுமார் ஆயிரம் பனை மரங்கள் இருக்கும். இப்போது நினைத்தாலும் அந்தப் பனந்தோப்பு என் கண் முன் நிற்கிறது!
மனசுக்கு அவ்வளவு உற்சாகமளிக்கக்கூடிய காட்சிகள் அல்ல; கண்ணுக்கினிய காட்சிகளுமல்ல. ஆனாலும் மனசு என்னமோ பிரமாத குதூகலத்தை அநுபவித்துக் கொண்டிருந்தது. பனைமரங்களுக்கெல்லாம் மேலே பறந்து, பறந்து, பறந்து வான வெளியிலே உல்லாசமாக உலாவிற்று. ஆகா! இந்த மனசின் பொல்லாத்தனத்தை என்னவென்று சொல்ல? ஆகாச விமானத்தில் பதினாயிரம் அடி உயரத்தில் மணிக்கு இரு நூறு மைல் வேகத்தில் பிரயாணம் செய்யும்போது இந்த மனசு பூமியில் ஒரு சின்ன வீட்டில் சின்ன அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு அசைய மாட்டேன் என்கிறது! ஆனால் பட்டிக் காட்டுச் சாலையில் கட்டை வண்டியில் உட்கார்ந்து செல்லும்போது மனசு வான வெளியில் உயர உயரப் பறந்து நட்சத்திர மண்டலங்களை க்ஷேமம் விசாரித்து விட்டு வருகிறது! அடடா! நம்முடைய மனசே மனசுதான்!
"அதோ தெரிகிறதே தோப்பு! அதுதான் புதுப்பாளையம்! அந்த தோப்பிலேதான் ஆசிரமம் இருக்கிறாங்க!" என்றான் வண்டிக்காரன். காந்தி ஆசிரமத்தைப் பற்றித்தான் அப்படி மரியாதையாக பேசினானோ, அல்லது ஆச்சாரியாரை நினைத்துக் கொண்டுதான் சொன்னானோ தெரியாது.
ஆசிரமத்தை நெருங்க நெருங்க உற்சாகம் அதிகமாயிற்று. என் வாழ்க்கையில் ஒரு புதிய அற்புதமான அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்ற உணர்ச்சி உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. வண்டியிலிருந்து குதித்து ஓடலாமா என்று தோன்றியது. அவ்விதமெல்லாம் மனசில் ஏற்பட்ட உற்சாகம் பொய்யாகப் போய்விடவில்லை. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் வசித்த மூன்று வருஷந்தான் என் வாழ்க்கையிலேயே உற்சாகமும் குதூகலமும் நிறைந்திருந்த காலமாகும்.
3
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் அப்போது மானேஜராக இருந்த ஸ்ரீ க.சந்தானம் எம்.ஏ.பி.எல்., ஏற்கனவே எனக்குப் பழக்கமானவர். திருப்பூர் கதர்போர்டில் அவரிடம் நான் வேலை பார்த்ததுண்டு. புத்தி சொல்லி நல்ல வழியில் நடத்தக் கூடிய தமையனாரைப் போல் அவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தேன். 1920-ம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் போதனையை மேற்கொண்டு வக்கீல் வேலையை உதறித் தள்ளிய ஐந்தாறு அறிவாளிகளில் ஸ்ரீ சந்தானம் ஒருவர். ராஜாஜியிடம் அவருடைய பக்திக்கு எல்லையே இல்லை. ராஜாஜியுடன் சம நிலையில் நின்று வாதம் செய்யக் கூடியவர் அவர் ஒருவரைத் தான் நான் கண்டிருக்கிறேன். ராஜாஜியும் அவருடைய அபிப்பிராயங்களுக்கு மிக்க மதிப்புக் கொடுப்பார். மூளைக்கு அதிக வேலையைத் தரக்கூடிய எந்தக் காரியத்தையும் ஸ்ரீ சந்தானத்திடந்தான் ராஜாஜி ஒப்புவிப்பார்.
நான் வருவதற்கு முன்னாலேயே ராஜாஜியின் கடிதம் வந்திருந்தபடியால் ஸ்ரீ சந்தானம் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பனை ஓலை வேய்ந்த ஒரு குடிசையை "இதுதான் உன்னுடைய வீடு!" என்று காட்டினார். "இப்போதைக்கு ஆசிரமத்துக் கணக்கு எழுதும் வேலை தருகிறேன். ஆச்சாரியார் ஊரிலிருந்து வந்ததும் உசிதம் போல் மாற்றிக் கொள்ளலாம்" என்றார். எனக்குக் கணக்கு எழுதும் வேலை ரொம்பப் பிரியம். தினசரிக் கணக்குப் புத்தகத்திலிருந்து பேரேட்டில் பெயர்த்து எழுதி, மாதக் கடைசியில் மொத்தம் கூட்டிப் போட்டு, இரண்டு பத்தியிலும் மொத்தத் தொகை சரியாக வந்து விட்டால், ஏதோ இமய மலையின் சிகரத்தைக் கண்டு பிடித்து விட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாகும். எனவே சந்தோஷத்துடன் கணக்கு எழுதச் சம்மதித்தேன்.
பிறகு, "சம்பளம் என்ன வேண்டும்" என்று கேட்டார். "இங்கு ஏற்பாடு எப்படியோ அப்படிச் செய்யுங்கள்!" என்றேன். "ஐம்பது ரூபாய் சம்பளம் போடுகிறேன்!" என்றார். மானேஜரான ஸ்ரீ கே.சந்தானம் எம்.ஏ.பி.எல். அவர்களுக்கும் சம்பளம் ஐம்பது ரூபாய் தான் என்று அறிந்த போது ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனேன். ஆசிரமத் தொண்டர்களுக்குள்ளே சம்பள வித்தியாசம் அதிகம் கிடையாதென்று தெரிந்தது. குடும்பஸ்தர்களுக்கு மாதம் ரூபாய் ஐம்பது; பிரம்மசாரிகளுக்கு அவர்களுடைய அவசியத்தை அநுசரித்துச் சம்பளம் இருபது முதல் நாற்பதுவரை தரப்பட்டது.
ராஜாஜியின் குமாரர் ஸ்ரீ சி.ஆர்.நரசிம்மன் ஆசிரமத் தொண்டர்களில் ஒருவர். அவருக்கு மாதம் ரூபாய் நாற்பது சம்பளம். இந்த நாற்பது ரூபாயிலேதான் ராஜாஜி, நரசிம்மன், நரசிம்மனுடைய சகோதரி லக்ஷ்மி, மேற்படி குடும்பத்துடன் வலிய ஒட்டிக் கொண்ட ஒரு நாய் இவ்வளவு பேருக்கும் காலட்சேபம் நடந்தது என்று தெரிந்தது.
பிரபல வக்கீலாயிருந்து ஆயிரக் கணக்கில் பணம் சம்பாதித்துத் தாராளமாய்ச் செலவழித்து நவநாகரிக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த குடும்பம் திடீரென்று வாழ்வு முறையை அடியோடு மாற்றிக் கொண்டு கிராமத்துக் குடிசையில் மாதம் நாற்பது ரூபாயில் வாழ்க்கை நடத்தியதை நினைக்க வியப்பாயிருந்தது. காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தியின் பெருமைக்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணிக் கொள்வதுண்டு.
காந்தி ஆசிரமத்தில் அப்போது நடந்த முக்கியமான வேலை கதர் உற்பத்தி. சுற்றுப் புறக் கிராமங்களில் பல வீடுகளில் பழைய இராட்டைகள் பரண்களில் கிடந்தன. முன்னொரு காலத்தில் அவற்றில் நூல் நூற்றுக் கொண்டிருந்த ஸ்திரீகளும் நூற்றுக்கணக்காக இருந்தார்கள். அவர்களைத் தூண்டி பஞ்சு கொடுத்து, நூற்கும்படி செய்ய, ஆரம்பத்தில் மிகவும் பிரயாசையாக இருந்தது. நான் ஆசிரமத்துக்குச் சென்றபோது மேற்படி ஸ்திரீகளில் பலர் நூற்க ஆரம்பித்தார்கள். நூற்ற நூலை வாரத்திற்கு ஒரு முறை ஆசிரமத்தில் கொண்டு கொடுத்து நூற்ற கூலியும், மேலும் நூற்கப் பஞ்சும் வாங்கிக் கொண்டு போவார்கள். நூலை எடை போட்டு வாங்க வேண்டும். பஞ்சை நிறுத்துக் கொடுக்க வேண்டும். கணக்குப் பார்த்துக் கூலி கொடுக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்களான அந்த ஸ்திரீகளுடன் பேரம் பேசிக் கணக்குச் சொல்லிக் கூலிப் பணம் கொடுத்து அனுப்புவது, பிரம்மப் பிரயத்தனமான காரியம். பல ஸ்திரீகள் ஏக காலத்தில் பேசுவார்கள். புதிதாக அந்த ஸ்திரீகளின் பேச்சைக் கேட்பவர்களுக்கு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே விளங்காது. சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாலோ, கேட்க வேண்டியதேயில்லை.
இப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தைச் செய்து சமாளித்துக் கொண்டிருந்த தொண்டரின் பெயர் ஸ்ரீ இராமதுரை. இன்றைக்குச் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்னால் திருச்செங்கோடு தேர்தல் சம்பந்தமாகத் தமிழ் நாட்டில் பிரசித்தியடைந்தாரே, அந்த இராமதுரைதான்! அவர் மேற்படி ஸ்திரீகளின் கூச்சலையெல்லாம் சமாளித்துக் கொண்டு, அவர்களுடைய பேச்சையும் புரிந்து கொண்டு, அவ்வப்போது சரியான பதில்களைச் சொல்லிக் கொண்டு, இடையிடையே தமாஷ் செய்து சிரிக்கப் பண்ணிக் கொண்டு, கூலி தீர்த்துக் கொடுத்து அனுப்புவதை அளவில்லாத ஆச்சரியத்துடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தப் பெண்களின் பேச்சை எப்படித்தான் இராமதுரை புரிந்து கொண்டு பதிலும் சொல்கிறாரோ என்று எனக்கு ஒரே அதிசயமாயிருக்கும்.
ஆரம்பத்தில் எனக்கு அந்தக் கிராமத்துப் பெண்களின் பேச்சு விளங்குவதே இல்லை. இராமதுரையின் பேச்சோ அதைக் காட்டிலும் விளங்காமலிருக்கும். சுருங்கச் சொன்னால், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் தமிழைப் போலவும், தற்கால தனித் தமிழ்ப் பேராசிரியர்களின் வசன நடையைப் போலவும் அபாரமான தெளிவுடன் அவர்களுடைய சம்பாஷணை விளங்கும்! வித்வான் பரீட்சைக்குப் பாடமாக வைப்பதற்குக்கூடத் தகுதியாக இருக்கும்!
சில காலம் கவனித்துக் கேட்டுப் பழகிய பிறகு, அவர்களுடைய பேச்சு ஓரளவு விளங்க ஆரம்பித்தது. விளங்க ஆரம்பித்ததும் வேடிக்கையாகவும் இருந்தது. இராமதுரைக்கும் ஒரு கிராமத்துக் கிழவிக்கும் ஒருநாள் பெரிய விவகாரம் நடந்து கொண்டிருந்தது.
வார்த்தைகள் வர வரத் தடித்து உப்பிக் கொண்டே இருந்தன. கடைசியில் ஒரே கூச்சலாயிற்று. இவ்வளவு கலாட்டாவுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், விஷயம் இதுதான்: அந்தக் கிழவி தன்னுடைய கணக்குப் பிரகாரம் "நூல் நூற்ற கூலி ஐந்தே காலணா வரவேண்டும்" என்கிறாள். நமது இராமதுரையோ, "அதெல்லாம் இல்லை; உன் கணக்கு தப்பு. என் கணக்குப்படி ஐந்தணா எட்டுத் தம்பிடி ஆகிறது. ஆகையால் ஐந்தணா எட்டுத் தம்பிடிதான் கொடுப்பேன்" என்கிறார்.
"இல்லை! ஐந்தே காலணாதான். நான் சரியாகக் கணக்குப் பார்த்துக் கொண்டுதான் வந்தேன்" என்கிறாள் அந்தக் கிழவி.
"சும்மா இரு; என்னை விட உனக்கு ரொம்பக் கணக்குத் தெரியுமோ? ஐந்தணா எட்டுத் தம்பிடிதான்! வாங்கிக் கொள்ளாவிட்டால் போ! உனக்குக் கூலி கிடையாது" என்கிறார் இராமதுரை.
"கூலி கிடையாதா? இதென்ன நாயம்? கை வலிக்க கொட்டை நூற்றுக் கூலி இல்லையென்றால் அடுக்குமா? நான் போய் வக்கீல் ஐயா ("வக்கீல் ஐயா" என்று அந்த ஸ்திரீ குறிப்பிட்டது ராஜாஜி அவர்களைத்தான்) கிட்டச் சொல்கிறேன்" என்றாள் அந்த ஸ்திரீ.
"வக்கீல் ஐயா கிட்டச் சொல்லி விடுவாயோ? சொல்லு போ! வக்கீல் ஐயா அலகாபாத்தில் இருக்கிறார்; போய்ச் சொல்லு!" என்று ஆத்திரமாய்ப் பேசுகிரார் இராமதுரை.
"அந்த ஊரு எங்கே இருக்கு?" என்று அந்த மூதாட்டி கேட்கிறாள்.
"எல்லாம் கிட்டத்தான் இருக்கு. சங்கரியிலே இன்று ராத்திரி ரயில் ஏறினால் நாளைக்கு மறுநாள் பாதி தூரம் போய்விடலாம்" என்று சொல்லிவிட்டு இராமதுரை இடி இடி என்று சிரிக்கிறார். பக்கத்திலே நின்ற என்னைப் பார்த்து, "என்ன பாருங்க, ராவன்னா கீனா! இந்த மாதிரி அறியாத ஜனங்களோடு பேசித் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகிறது. ஐந்தே காலணாவைக் காட்டிலும் ஐந்தணா எட்டுத் தம்பிடி அதிகம் என்று இவர்களுக்குத் தெரிகிறதில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்! எப்படி இருக்கிறது கதை?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்கிறார்.
"என்ன ஐயா, எகத்தாளம் பண்ணுகிறே! உங்களைப் போல நாங்கள் பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கோமா?" என்று கிழவி சண்டைக்கு வருகிறாள்.
இராமதுரை அந்தக் கிழவியை விட உரத்த சத்தம் போட்டு, "அதென்னமா நான் எகத்தாளம் பண்ணறேன் என்று நீ சொல்லலாம்?" என்று சண்டை பிடிக்கிறார்.
இப்படியாக, மிகவும் தொல்லையான காரியத்தைத் தமாஷும் வேடிக்கையுமாகச் செய்து கொண்டு இராமதுரை ஆசிரமத்தில் தொண்டு செய்து வந்தார்.
அவரைப் போலவே ஸ்ரீ நாராயண ராவ், டாக்டர் ரகுராமன், சிவகுருநாதன், அனந்தராமன், வெங்கட்ராமன், விசுவநாதன், அங்கமுத்து, முனுசாமி முதலியவர்களும் ஆசிரமத்தில் வசித்துப் புனிதமான கிராமத் தொண்டில் ஈடுபட்டிருந்தார்கள்.
சிலர் ஆசிரமம் ஆரம்பமானதிலிருந்து தொண்டு செய்து வந்தார்கள். எனக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்களும் உண்டு. டாக்டர் ரங்கநாதன், எம்.கே. வெங்கட்ராமன், ஏ.கிருஷ்ணன், வி.தியாகராஜன் முதலியவர்கள் பிற்பாடு வந்து சேர்ந்தவர்கள்.
4
பஞ்சு கொடுத்து நூல் வாங்கும் வேலைக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தில் பெரிய வேலை, வாங்கிய நூலையெல்லாம் பக்கத்துக் கிராமங்களிலுள்ள தறிக்காரர்களிடம் கொடுத்துக்கதர் நெய்யச் செய்தல். இதுவும் சங்கடமான வேலைதான். நூலை நிறுத்துக் கொடுத்து, துணியை நிறுத்து வாங்கி, கூலி கணக்கிட்டுக் கொடுத்துப் பைசல் செய்வதற்குள்ளாக பிராணன் போய்விடும்!
நூல் நூற்கும் ஸ்திரீகளாவது, நூலை நெய்யும் தறிக்காரர்களாவது தியாக வாழ்க்கையை மேற்கொண்டு தங்களுக்காகத் தொண்டு செய்த ஆசிரமத் தொண்டர்களிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. விஷயம் அறிந்த ஒரு சிலர் தொண்டர்களிடம் மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் எப்போதும் அதிருப்தியுடன் சண்டை பிடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார்கள்.
எல்லாவற்றுக்கும் தரித்திரக் கொடுமைதான் காரணம். வறுமையோடு அறியாமையும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? ஒரு சிலர், "வடக்கேயிருந்து யாரோ ஒரு புண்ணியவான் நமக்குக் கொடுப்பதற்காக ஏராளமாய்ப் பணம் அனுப்புகிறார்; அதை முழுவதும் நமக்குக் கொடுக்காமல் இந்தத் தொண்டர்கள் நடுவில் நின்று தடை செய்கிறார்கள்" என்று நம்பினார்கள்!
ஆசிரமத்திற்கு நான் போய்ச் சேர்ந்ததற்கு முதல் வருஷம் அந்த ஸ்தாபனத்துக்கு ஒரு பெரிய 'கண்டம்' ஏற்பட்டது. அதன் காரணம் பின்வருமாறு:-
திருச்செங்கோட்டுப் பிரதேசத்தில் ஆசிரமம் ஏற்படுவதற்குச் சில வருஷங்களுக்கு முன்னாலிருந்து சரியான மழை பெய்யவில்லை. மழை பெய்யாதபடியால் கேணிகளில் தண்ணீர் இல்லை. எனவே, வயற்காடுகளில் வெள்ளாமையும் இல்லை.
ஏறக்குறைய பஞ்சப் பிரதேசம் என்று சொல்லக் கூடிய நிலைமை திருச்செங்கோடு தாலுக்காவில். காந்திஜி ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்கள் பூராவிலும் ஏற்பட்டிருந்தது.
இதை முன்னிட்டுத்தான் ராஜாஜி ஆசிரமத்தை ஸ்தாபிப்பதற்குப் புதுப் பாளையத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கே நடந்த கதர் உற்பத்தித் தொழிலைப் பஞ்ச நிவாரண வேலையென்றே சொல்லும்படியிருந்தது. பஞ்சத்தில் அடிபட்ட கிராமங்களுக்கு நூற்றல் கூலி நெசவுக் கூலி மூலமாக லக்ஷக்கணக்கான ரூபாய் வருஷந்தோறும் விநியோகமாயிற்று. அந்த அளவுக்குக் கிராமங்களில் சுபிட்சம் ஏற்பட்டது.
ஆனால், அறியாமையும் மூடநம்பிக்கையும் மிக்க பலம் பொருந்திய சக்திகள் அல்லவா? ஆதி காலத்திலிருந்து இன்று வரையில் எங்கெங்கும் வியாபித்து, பற்பல உருவங்கள் எடுக்கும் ஆற்றல் கொண்டவையல்லவா? இத்தகைய அறியாமை, மூட நம்பிக்கை முதலிய சக்திகளை நமது முன்னோர்கள் அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் உருவகப்படுத்திப் புராண இதிகாசங்களை எழுதினார்கள். மகாவிஷ்ணு ஒன்பது அவதாரங்கள் எடுத்து, அறியாமை மூட நம்பிக்கை என்னும் தீய சக்திகளை அழிக்கப் பார்த்தார். ஆயினும் அவை அழிந்தபாடில்லை. இன்னமும் பல்வேறு உருவங்களில் அவை நின்று நிலவுகின்றன. கிராமங்களிலும் இருக்கின்றன. நகரங்களிலும் இருக்கின்றன. அர்த்தமற்ற சமயச் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் சாதி வேற்றுமைகளாகவும் அவை உரு எடுக்கின்றன. நாஸ்திகப் பிரசாரமாகவும், கம்பனைக் கொளுத்தும் பகுத்தறிவு இயக்கமாகவும் சில சமயம் ஓங்கி வளருகின்றன. சில சமயம் "அறிவு வேண்டாம்" என்று சொல்லும் முற்போக்குச் சக்திகளாகவும் வேஷமெடுக்கின்றன!
இப்படிப்பட்ட சர்வ வியாபியான அறியாமையும் குருட்டு நம்பிக்கையும் புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலே மட்டும் இல்லாமற் போகுமா? இருக்கத்தான் இருந்தன! ஆனால் முற்போக்கு சக்தி என்றோ, பிற்போக்கு சக்தி என்றோ, சநாதன தர்மம் என்றோ, பகுத்தறிவு இயக்கமென்றோ இவை படாடோ பமான பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. கலப்பற்ற அப்பட்டமான அறியாமையாகவும் மூட நம்பிக்கையாகவுமே மேற்படி கிராமங்களில் எழுந்தருளியிருந்தன.
எனவே, மேற்படி கிராமவாசிகளில் சிலர், தங்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்ட காந்தி ஆசிரமத்தைத் துவேஷிக்கும்படியான நிலைமை ஒரு சமயத்தில் ஏற்பட்டது. மழை பெய்யாமல் பஞ்சம் பரவி இருந்தது காரணமாகவே அந்தப் பிரதேசத்தில் காந்தி ஆசிரமம் ஸ்தாபிக்கப் பட்ட தென்பதை முன்னமே குறிப்பிட்டேன். ஆனால் ஆசிரமம் ஏற்பட்டதனாலேயே மழை பெய்யவில்லை என்று காரண காரியங்களைத் திருப்பிச் சில விஷமிகள் துஷ்பிரசாரம் செய்தார்கள். அறியாமையில் மூழ்கிய கிராம வாசிகள் அதை நம்பினார்கள்! காந்தி ஆசிரமத்துக் குடிசைகளை இரவுக் கிரவே அக்கினி பகவானுக்கு இரையாக்கி விடுவதென்று ஒரு சமயம் சதியாலோசனையும் செய்தார்கள்!
இதற்கெல்லாம் ஒரு வகையில் காரணமாக இருந்தவர் மன்னார்குடி வேங்கடராமன் என்னும் தொண்டர். இந்த மனிதர் அந்த நாளில் பிரம்மச்சாரி. எப்பொழுதுமே அவர் பிரம்மச்சாரியாயிருந்துவிடுவார் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியில் நாமத்தையோ, விபூதியையோ குழைத்துப் போட்டுவிட்டு, இவர் சில வருஷங்களுக்கு முன்னால் கலியாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இயற்கை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறார்.
பிரம்மச்சாரியா யிருந்தது போதாது என்று ஸ்ரீ வேங்கடராமன் யோகாசனங்கள் பயின்று கொண்டிருந்தார். யோகாசனங்களில் சிரசாசனம் என்பதாக ஒன்று உண்டு. தரையில் தலையை வைத்துக் கொண்டு காலை மேலே நிறுத்திக் கொண்டு நெட்டுக்குத்தாக நிற்பதுதான் சிரசாசனம். நமது பெரிய தேசீயத் தலைவர்கள் எல்லாரும் ஒரு சமயம் வெகு சிரத்தையாகச் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தின்போது, "ஜவாஹர்லால் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று ஒரு பிரதிநிதி கேட்டார். அந்த வருஷம் ஜவாஹர்லால் காங்கிரஸ் அக்கிராசனர். மேற்படி பிரதிநிதியின் கேள்விக்கு ஒரு தொண்டர், "ஜவாஹர்லால்ஜி தலை கீழாக நிற்கிறார்!" என்று பதில் சொன்னார். தொண்டர் ஜவாஹர்லாலை எகத்தாளம் செய்கிறார் என்று எண்ணிப் பிரதிநிதி அவருடன் சண்டைக்குப் போய்விட்டார். அப்புறம் விசாரித்ததில் அவர் எகத்தாளம் செய்யவில்லை, ஜவாஹர்லால்ஜி உண்மையாகவே சிரசாசனம் செய்து கொண்டிருந்தார் என்று தெரிய வந்தது!
பண்டிட் ஜவாஹர்லால் நேருவைப் போன்ற தலைவர்களே தலை கீழாக நின்றபோது, தொண்டர்கள் நிற்பதற்குக் கேட்பானேன்? காந்தி ஆசிரமத் தொண்டர் ஸ்ரீ வேங்கடராமனும் சிரசாசனம் செய்து வந்தார். ஒரு நாள் பொழுது விடிந்து சூரியோதயம் ஆகும் சமயத்தில் ஸ்ரீவேங்கடராமனும் சிரசாசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது நூல் கொண்டு வந்த ஒரு ஸ்திரீ தற்செயலாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அவ்வளவு தான்; அந்த மூதாட்டி தான் கொண்டு வந்த நூலைப் போட்டுக் கூலி வாங்கிக் கொள்ளக் கூட இல்லை. கிராமத்துக்குத் திரும்பிப் போய், தான் பார்த்த அதிசயக் காட்சியைப் பலரிடம் தெரிவித்தாள். கேட்டவர்களில் ஒரு புத்திசாலி, "அதனாலேதான் மழை பெய்யவில்லை!" என்றான். மேற்படி வதந்தி கிராமம் கிராமமாய்ப் பரவிற்று. இன்னொரு பக்கத்தில் மழை பெய்யாததற்கு வேறொரு காரணமும் கற்பிக்கப்பட்டது. ஆசிரமத் தொண்டர்களில் அங்கமுத்து, முனுசாமி என்று இரண்டு ஹரிஜனங்கள் இருந்தார்கள். மற்றவர்களைப் போலவே இவர்களுக்கும் எல்லா விதத்திலும் சம உரிமை அளிக்கப் பட்டிருந்தது. சமையல் பொதுவாக இருந்த காலத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். எல்லோருடனும் சேர்ந்து உட்கார்ந்து பிரார்த்தனை செய்தார்கள். எவ்வித வித்தியாசமும் காட்டப்படவில்லை. ஆனால், ஆசிரமத்தைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்த கவுண்டர் மார்களோ தீண்டாமையில் வெகு கடுமையான நம்பிக்கை கொண்டவர்கள். "தீண்டாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் மழை ஏன் பெய்யும்?" என்ற பேச்சுக் கிளம்பியது. கிளம்பி அதிவேகமாகப் பரவிற்று.
ஆகக்கூடி காந்தி ஆசிரமம் ஏற்பட்டதனாலே தான் மழை பெய்யவில்லை என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டு விட்டது. மேற்படி குருட்டு நம்பிக்கையைத் துஷ்டர்கள் சிலர் தூபம் போட்டு வளர்த்தார்கள். "ஒருநாள் இரவு ஆசிரமத்துக் குடிசைகளையெல்லாம் கொளுத்தி விட வேண்டும்" என்று கிராமங்களில் பேச்சு நடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வந்தன. ஆசிரம வாசிகள் அப்படி ஏதாவது நடக்கலாம் என்று பிரதி தினமும் இரவெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலமும் உண்டு.
ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நடவாததற்குக் காரணம் மேற்படி குருட்டு நம்பிக்கைகளையெல்லாம் மிஞ்சிய இன்னொரு குருட்டு நம்பிக்கைதான். அதாவது "வக்கீல் ஐயா இருக்கும்போது நமக்குக் கெடுதல் ஏற்பட விடமாட்டார். அவரிடம் சொன்னால் சரிப்படுத்தி விடுவார்" என்ற நம்பிக்கை மிகப் பலமாக அந்தக் கிராம வாசிகளிடையே குடி கொண்டிருந்தது. இது காரணமாகவே விஷமிகளின் துஷ் பிரசாரமெல்லாம் காரியத்துக்கு வராமல் போயிற்று. ஆகா! எழுதப் படிக்கத் தெரியாத நிரட்சரக் குட்சிகளான அந்தக் கிராமவாசிகள் வக்கீல் ஐயாவிடம் கொண்டிருந்த குருட்டு நம்பிக்கை மட்டும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் வாதிகள் அனைவருக்கும் இருந்திருக்குமானால் சென்ற சில வருஷங்களில் தமிழ் நாடு எவ்வளவோ மேன்மையடைந்து, தேசம் பார்த்துப் பிரமிக்கும் உன்னத நிலையை அடைந்திராதா? அடடா! என்ன துரதிருஷ்டம்! அத்தகைய குருட்டு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இல்லாமலல்லவா போய்விட்டது?
5
ஆசிரமத் தொண்டர்களில் முக்கியமான இன்னொரு மனிதர் ஸ்ரீ சிவகுருநாதன். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சாதாரணமாக யாழ்ப்பாணத்தார் தமிழ் பேசும் விதம் நம்முடைய பேச்சு முறையோடு கொஞ்சம் மாறுபட்டிருக்கும். ஸ்ரீ சிவகுருநாதன் பேசும் தமிழைத் தமிழ் என்று தெரிந்து கொள்வதே கடினம், மறுமலர்ச்சித் தமிழைக் கூடத் தெரிந்து கொண்டாலும் கொள்ளலாம். ஸ்ரீ சிவகுருநாதனுடைய தமிழை ஆதிசிவனாலும், அகத்தியனாலும் கூடத் தெரிந்து கொள்ள முடியாது. பேச்சினால் புரிய வைக்க முடியாததை ஸ்ரீ சிவகுருநாதன் சிரிப்பினால் விளங்க வைத்து விடுவார். பாதி வாக்கியத்தைச் சொன்னதுமே கலகலவென்று சிரித்து விடுவார். "அந்தப் புன்சிரிப்புக்கு எவ்வளவோ அர்த்தங்கள்" என்று கதைகளில் அடிக்கடி படித்திருக்கிறோமல்லவா? வெறும் புன் சிரிப்புக்கே அவ்வளவு அர்த்தம் இருக்குமானால் சிவகுருநாதனுடைய கலகலச் சிரிப்புக்கு எவ்வளவு அர்த்தம் இருக்க வேண்டும்?
ஸ்ரீ சிவகுருநாதனுக்குத் தெரியாத விஷயம் உலகத்தில் ஒன்றுமே இல்லை.
"மூன்று புளிய மரங்கள் சேர்ந்து ஒன்றேகால் வருஷத்தில் எவ்வளவு காய்க்கும்?" என்றால் பதில் சொல்வார்.
"ஒரு சேர் பசும்பால்; ஒரு சேர் ஆட்டுப்பால் ஒரு சேர் புலிப் பால்... இவற்றின் சராசரி நிறை என்ன?" என்று கேட்டால், பளிச்சென்று பதில் கிடைக்கும்.
"இந்தக் கிணற்றிலே, மூன்று அடி தண்ணீர் இருக்கிறதே? இதற்கு நாலு அடிக்கு அப்பால் தோண்டி எடுக்கும் கிணற்றில் ஏன் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை?" என்று கேட்டால் அதற்கும் ஏதாவது விடைக் கிடைக்கும்.
எனினும் அவர் என்ன சொன்னால்தான் என்ன? நமக்கு ஒன்றுமே தெரியப்போவதில்லை!
சில மாதங்களுக்கு முன்னால் ஸ்ரீ சிவகுருநாதன் ஒரு பெரிய விசாலமான பெட்டியை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். தமது சகதர்மிணியையும் அழைத்துக் கொண்டு வந்தார். பெட்டியைத் திறந்து ஏதேதோ சட்டங்களையும் சக்கரங்களையும் மற்றச் சிறிய பெரிய கருவிகளையும் எடுத்து அறை முழுவதும் பரப்பினார். அந்தக் கருவிகளின் மீது கால் வைக்காமல் அங்குமிங்கும் தாவிக் குதித்து அவற்றைப் பார்க்க வேண்டியிருந்தது.
"இது ஒரு புது விதச் சர்க்கா; பழைய சர்க்காவைப்போல் ஒன்றுக்கு மூன்று மடங்கு நூல் நூற்கும். இதை அக்கக்காகக் கழற்றலாம்; மறுபடியும் பூட்டலாம்" என்றார். (அப்படி அவர் சொன்னதாக அவருடைய முகபாவங்களிலிருந்தும் சமிக்ஞைகளிலிருந்தும் தெரிந்து கொண்டேன்.)
அவர் சொன்னபடியே அக்கக்காகக் கழற்றிக் காட்டினார்; திரும்பப் பூட்டிக் காட்டினார்!
"இந்தப் புது இராட்டையின் ஒவ்வொரு பகுதியையும் படம் எழுதிப் பிளாக் செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். பிளாக் செய்து தரமுடியுமா?" என்று கேட்டார். "ஆகட்டும்" என்றேன். "நான் இப்போது வர்தா ஆசிரமத்தில் இருக்கிறேன். பிளாக்குகள் செய்து வைத்தால் மறுபடி வந்து எடுத்துப் போகிறேன்" என்று சொன்னார். அவ்விதமே மேற்படி புது இராட்டையின் பகுதிகளைத் தனித்தனியாகப் படம் எழுதச் செய்து பிளாக்கும் செய்து வைத்தேன். ஆனால், ஸ்ரீ சிவகுருநாதன் இன்று வரை வந்தபாடில்லை. அவருடைய புது மாதிரி இராட்டையைப் பச்சைக் கீரைத்தண்டு என்று நினைத்து வர்தா ஆசிரமத்தில் யாராவது சாப்பிட்டு விட்டார்களோ என்னமோ?
காந்தி ஆசிரமத் தொண்டர்களில் இன்னொருவரான ஸ்ரீ நாராயணராவுக்கு அந்தக் காலத்தில் "சாயக்கார நாராயண ராவ்" என்று பெயர். கதர்த் துணிக்கு நாட்டு மூலிகைகளையும் நாட்டுச் சரக்குகளையும் கொண்டு சாயம் போடும் முறையை அவர் கற்றுக் கொண்டு வந்திருந்தார். காந்தி ஆசிரமத்தில் உற்பத்தியாகும் கதர்த் துணியில் ஒரு பகுதிக்குச் சாயம் போடும் வேலையையும், விதவிதமான கரைகளும் பூக்களும் அச்சடிக்கும் வேலையையும் செய்து வந்தார்.
ஸ்ரீ நாராயண ராவ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1921-ல் ஒத்துழையாமை செய்த பிரபல வக்கீலான ஸ்ரீ எம்.ஜி.வாசுதேவய்யாவின் நெருங்கிய உறவினர். இப்போது காந்தி ஆசிரமத்தின் மானேஜராயிருந்து திறமையாக நடத்தி வருகிறார்.
குழந்தை போன்ற குணமுடைய விசுவநாதன் தேனீ வளர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்ற பிள்ளை. நீங்களும் நானும் தேனீயின் அருகில் சென்றால் அது நம்மைக் கொட்டும். விசுவநாதன் தேனீயிடம் சென்றால் முத்தம் கொடுக்கும்! அப்படிப் பட்ட விசுவநாதன் இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. எங்கே இருந்தாலும் அவர் சௌக்கியமாக நன்றாயிருக்கவேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.
டாக்டர் ரகுராமன் நான் சென்ற ஒரு வருஷத்துக்குப் பிறகு காஞ்சி நகருக்குப் போய் விட்டார். அங்கு ஹரிஜனத் தொழிற்சாலை முதலிய பல பொது ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து நடத்தி வருகிறார்.
டாக்டர் ரகுராமன் பத்தரை மாற்றுத் தங்கம் என்றால், அவருக்குப் பதிலாக வந்த டாக்டர் ரங்கநாதன் பத்தே முக்கால் மாற்றுத் தங்கம். இன்னும் திருச்செங்கோட்டில் தொண்டு புரிந்து வருகிறார்.
உப்பு சத்தியாக்ரஹ இயக்கம் நடந்த வருஷத்தில் தேசத் தொண்டில் ஈடுபட்டு ஆசிரமத்துக்கு வந்த ஸ்ரீ தியாகராஜன் இன்று வரையில் அரிய சேவை புரிந்து வருகிறார்.
மொத்தத்தில் காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எல்லாருமே ஒரு தனி இனமாகத் தோன்றினார்கள். சுறுசுறுப்பும், ஊக்கமும், தொண்டு செய்யும் ஆர்வமும் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
காந்தி ஆசிரமத்தை விட்டு நான் விலகி மீண்டும் பத்திரிகைத் தொழிலுக்கு வந்த சில வருஷங்களுக்குப் பிறகு மகாத்மா காந்தி தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணத்துக்கு வந்திருந்தார். அப்போது "மகாத்மா சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும்" என்று கிளர்ச்சி செய்யும் அளவுக்கு நமது அருமைத் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை! "முற்போக்குச் சக்தி" அவ்வளவு தூரம் தமிழ்நாட்டை ஆட்கொண்டிருக்கவில்லை! தமிழ் மக்கள் அனைவரும் மகாத்மாவிடம் பக்தியுடன் இருந்த காலம். அவர் சொன்னபடி எல்லா விஷயத்திலும் நடக்க முடியாவிட்டாலும் மகாத்மாவின் வாக்கை வேதவாக்காக அனைவரும் மதித்தார்கள். அந்தச் சுற்றுப் பிரயாணத்தின் போது மகாத்மா காந்தி தமது பெயரைக் கொண்ட புதுப்பாளையம் ஆசிரமத்தில் இரண்டு நாள் ஓய்வுக்காகத் தங்கினார். பழைய உறவை நினைத்துக் கொண்டு நானும் அச்சமயம் காந்தி ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னுடன் இன்னும் சில நண்பர்களும் சென்னையிலிருந்து வந்தார்கள். பிரயாணத்தின் போது அவர்கள் காந்தி ஆசிரமத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் "காந்தி ஆசிரமத் தொண்டர்கள் எப்படி? நீர் 'பூரி யாத்திரை'க் கட்டுரையில் வர்ணித்திருக்கும் தொண்டர்களைப் போன்றவர்கள்தானோ?" என்று கேட்டார். 'பூரி யாத்திரை' என்ற கட்டுரையில் 1927-ல் நடந்த டில்லி காங்கிரஸ் அநுபவத்தைப் பற்றி நான் எழுதி இருந்தேன். அதில் குறிப்பிட்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர் வர்ணனை பின்வருமாறு:-
"காங்கிரஸுக்கு வெளியூர்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திறங்குவார்கள். ரயிலை விட்டிறங்கியதும் அவர்கள் பிளாட்பாரத்தில் மூட்டைகளையும் பெட்டிகளையும் குவித்துக் கொண்டு நிற்பார்கள். உடனே நாலைந்து காங்கிரஸ் தொண்டர்களை அங்கே காணலாம்; அவர்களில் தலைவராயிருப்பவர், ரயிலிலிருந்து இறங்கிய பிரதிநிதிகளின் மூட்டைகளும் பெட்டிகளும் மோட்டாருக்குப் போக வேண்டுமென்று தீர்மானம் செய்வார். மற்றத் தொண்டர்கள் அத்தீர்மானத்தை ஆமோதிப்பார்கள். அத்துடன் தொண்டர்களின் கடமை தீர்ந்தது. வந்த பிரதிநிதிகள் தத்தம் மூட்டைகளையும் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டுபோய் மேற்படி தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்!"
இவ்விதம் நான் எழுதியிருந்ததைப் படித்திருந்தபடியால்தான் என்னுடன் வந்த நண்பர் "காந்தி ஆசிரமத் தொண்டர்களும் அப்படிப்பட்டவர்கள்தானோ?" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் சொன்னேன்:- "இல்லை, ஐயா, இல்லை. அந்த மாதிரி வெறும் தீர்மானம் செய்வதோடு நிற்கக்கூடிய ஒரே ஒரு தொண்டர் காந்தி ஆசிரமத்தில் ஒரு காலத்தில் இருந்தார். அந்த வேலையை அவர் நல்ல வேளையாக விட்டு விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்குப் போய்விட்டார்! தற்சமயம் காந்தி ஆசிரமத்தில் உள்ள தொண்டர்களில் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் யாரும் இல்லை. தீர்மானம் செய்வது ஒருவர், அதை நிறைவேற்றி வைப்பது இன்னொருவர் என்பதையே அறியார்கள். ஆகையால் நீங்கள் சங்கரி துர்க்கம் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து இறங்கிய உடனே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காந்தி ஆசிரமத் தொண்டர்கள் அங்கு விருந்தினரை வரவேற்பதற்கு வந்திருப்பார்கள். உங்களுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிப் போய் பஸ்ஸில் எறிவது போல் உங்களையும் எறிந்தாலும் எறிந்து விடுவார்கள்!"
இவ்விதம் நான் சொன்னபடியே அன்றைக்கு ஏறக்குறைய நடந்தது. என்னுடன் வந்த நண்பர்கள் தங்கள் பெட்டி படுக்கைகள் படும்பாட்டைக் கண்ட பிறகு, தங்களையும் தொண்டர்கள் அந்த மாதிரி பஸ்ஸில் தூக்கி எறிவதற்குள்ளே தாங்களே அவசர அவசரமாக ஏறிக்கொண்டார்கள்!
6
காந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது. சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.
காலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு "முக்தி நெறி அறியாத" என்னும் திருவாசகமும், "மாற்றறியாத செழும் பசும் பொன்னே!" என்னும் அருட்பாவும் பாடப் பெறும். "பாடப்பெறும்" என்று சம்பிரதாயமாகத்தான் சொல்லுகிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடிருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீ மதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ்ஸ்லெட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.
பிரார்த்தனை ஒருவாறு முடிந்த பிறகுதான் உண்மையில் சுவாரஸ்யமான கட்டம் ஆரம்பமாகும். அதாவது, பொது விஷயங்களைப் பற்றிச் சம்பாஷணை நடைபெறும். அரசியல் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள், சமய சம்பந்தமான சந்தேகங்கள் எல்லாம் விவாதிக்கப்படும். ஆசிரமத் தலைவர் ராஜாஜி, ஆசிரமத்தில் இருக்கும் காலங்களில் மேற்படி சம்பாஷணைகள் வெகு ரஸமாயிருக்கும். அத்தகைய சம்பாஷணைகளில் கலந்து கொண்டு அநுபவிப்பதற்காக இன்னும் ஒரு ஜன்மம் இந்த பூமியில் எடுக்கலாம் என்று தோன்றும்.
ஆசிரமத்துக்கு நான் போய்ச் சில மாத காலத்திற்குப் பிறகு ராஜாஜி ஒரு நாள் என்னை அழைத்து "மது விலக்கு வேலையைத் தீவிரமாக ஆரம்பிக்கத் தீர்மானித்திருக்கிறேன். மதுவிலக்குப் பத்திரிகையையும் உடனே ஆரம்பித்துவிட வேண்டியது தான்" என்றார். அந்த வேலைக்காகவே நான் ஆசிரமத்துக்குச் சென்றேனாதலால், கணக்கு எழுதும் வேலையை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஆசிரமக் காரியாலயத்திலிருந்து ராஜாஜியின் சொந்தக் காரியாலயத்துக்கு வேலை பார்ப்பதற்காகச் சென்றேன்.
ராஜாஜியின் காரியாலயம் அவருடைய வீட்டிலேயே இருந்தது. ஆசிரமத் தலைவருக்கு மரியாதை செய்வதற்காக அவருடைய வீடு கொஞ்சம் விசேஷ முறையில் கட்டப் பெற்றிருந்தது. மற்றவர்களுடைய வீடுகளுக்கும் ஆசிரமக் காரியாலயத்துக்கும் மேற்கூரை பனை ஓலையினால் வேயப்பட்டிருந்தது. ராஜாஜியின் வீட்டிற்கு மட்டும் கள்ளிக் கோட்டை ஓடு போட்டிருந்தது. நானும் எனக்கு உத்தியோகத்தில் ஏதோ 'பிரமோஷன்' கிடைத்து விட்டதாகவே எண்ணிக் கொண்டு கொஞ்சம் கர்வத்துடனேயே புதுக் காரியாலயத்துக்குப் போனேன். போன பிறகு தான் புதுக் காரியாலயத்தின் இலட்சணம் தெரிந்தது.
ஆசிரமத் தலைவரின் வீடு மொத்தம் பதினேழு அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்டது. நடுவில் ஒரு குறுக்குச் சுவர், மேற்படி பிரம்மாண்டமான மாளிகையை, சமையலறையாகவும் ஆபீஸ் ஹாலாகவும் பிரித்திருந்தது. சமையல் அறை ஏழு அடிக்குப் பத்தடி அளவு கொண்டது. இதிலேதான் ராஜாஜியின் அருமைப் புதல்வி லக்ஷ்மி (பிற்பாடு ஸ்ரீமதி தேவதாஸ் காந்தி) தகப்பனாருக்கும் தமையனுக்கும் சமையல் செய்தார். பத்து அடிக்குப் பத்தடி இருந்த விஸ்தாரமான ஹால், ராஜாஜியின் காரியாலயமாகவும் வந்தவர்களை வரவேற்கும் டிராயிங் ரூமாகவும் இரவில் ராஜாஜிக்குப் படுக்குமிடமாகவும் விளங்கியது! பகல் வேளையில் எல்லாம் கயிற்றுக் கட்டில்களும் படுக்கைகளும் வெளியில் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும். இரவில் ஹாலுக்குள் இடம் பெறும்.
ராஜாஜி அஞ்சா நெஞ்சம் படைத்தவர் என்பதும், வானம் இடிந்தாலும் மனம் கலங்காதவர் என்பதும் யாவரும் அறிந்த விஷயம். ஆயினும் ஒரு விஷயத்தில் அவருக்குப் பெரும் பயம் உண்டு. "பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் மூட்டைப் பூச்சி இருந்ததாம்!" என்று யாராவது சொல்லி விட்டால் போதும். அன்றிரவு விளக்குப் போட்டுக் கொண்டு அரை மணி நேரம் தாம் படுக்கும் கட்டிலைப் பரிசோதனை செய்வார்! கயிற்றுக் கட்டிலின் மரச் சட்டங்களிலும் கால்களிலும் எத்தனையோ இடுக்குகள் இருக்குமல்லவா? அவ்வளவையும் துப்புரவாகப் பரிசோதனை செய்து பார்ப்பார்! படுக்கைத் துணிகளையும் தலையணைகளையும் பல முறை உதறுவார்! இது ஒரு புறமிருக்க, தினந்தோறும் சாதாரணமாகக் கட்டில்களும் படுக்கைகளும் வெயிலில் கிடந்து காய்ந்தே தீர வேண்டும்.
மேற்படி பத்து அடிக்குப் பத்தடி விஸ்தீரணமுள்ள ஆபீஸ் ஹாலுக்கு நான் போய் ராஜாஜியின் பக்கத்தில் வேலை பார்க்க உட்கார்ந்த போது அளவில்லாத உற்சாகம் கொண்டேன். அரைமணி நேரத்துக்குள்ளே உற்சாக மெல்லாம் வியர்வையாக மாறி உடம்பெல்லாம் ஸ்நானம் செய்வித்தது.
உஷ்ணம் பொறுக்க முடியாமல் "உஸ் உஸ்" என்றேன். பக்கத்தில் கிடந்த காகித அட்டையை எடுத்து விசிறிக் கொண்டேன்.
"என்ன சமாச்சாரம்? என்ன 'உஸ் உஸ்' என்கிராய்?" என்று ராஜாஜி கேட்டார்.
"ஒன்றுமில்லை; இந்தக் கள்ளிக் கோட்டை ஓட்டுக்கு இவ்வளவு சக்தி உண்டு என்பது இது வரையில் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! வான வெளியிலுள்ள வெயில் கிரணங்களையெல்லாம் இழுத்து நம் தலை மேல் அல்லவா விடுகிறது? இந்த உஷ்ணத்தில் உட்கார்ந்து எப்படித்தான் வேலை செய்கிறீர்களோ?" என்று சொன்னேன்.
அவ்வளவு தான்; ராஜாஜி மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு, வெயிலின் உயர்ந்த குணங்களைப் பற்றி எனக்குச் சொல்ல ஆரம்பித்தார்.
"சென்னைப் பட்டணத்தில் இருப்பவர்கள் வெயிலில் கெடுதல் இருப்பதாக நினைக்கிறார்கள். ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போகிறார்கள். இதைப் போல் அறிவீனம் வேறு கிடையாது. வெயில் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதிலும் நம்முடைய நாட்டுச் சுதேசி வெயில் இருக்கிறதே, அதனுடைய மகிமையைச் சொல்லி முடியாது. நாம் இந்த ஊர் வெயிலில் பிறந்து, இந்த ஊர் வெயிலில் வளர்ந்தவர்கள். வள்ளுவரும், கம்பரும் இந்த வெயிலில்தான் வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார்கள்? வெயிலிலுள்ள 'அல்ட்ராவயலெட்' கிரணங்களின் நோய் போக்கும் மருந்து குணத்தைப் பற்றி நீ அறிந்ததில்லையா? அதிலும் மேற்படி கிரணங்கள் கள்ளிக் கோட்டை ஓட்டின் வழியாக உஷ்ணமாய் மாறி வரும் போது அபார சக்தி உள்ளதாகின்றன. வெயிலுக்குப் பயப்படுவது சுத்தப் பிசகு!" என்று ராஜாஜி சொன்ன வார்த்தைகளை பக்தி சிரத்தையுடன் கேட்டுக் கொண்டேன். "வெயில் உடம்புக்கு நல்லது!" என்று எனக்கு நானே பல தடவை மந்திரத்தைப் போல் ஜபித்தேன். ஆனாலும் அந்தப் பாழாய்ப் போன வெயில் என்னை வறுத்து எடுக்கத்தான் செய்தது. கொஞ்ச நாளில் வேலையின் சுவாரஸ்யத்தில் தன்னை மறக்கும் நிலை ஏற்பட்ட பிறகே வெயிலின் கொடுமையையும் என்னால் மறக்க முடிந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் சென்னைக்கு வந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது ஒரு மாதப் பத்திரிகையில் (அது இப்போது மறைந்து போயிற்று) ராஜாஜியைப் பற்றி ஒரு விசித்திரமான செய்தி வந்திருந்தது. அது என்ன வென்றால், "ராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு போய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்து விட்டு வந்தார்!" என்பதுதான்.
ராஜாஜியின் கவனத்துக்கு இது கொண்டு வரப்பட்டதும் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, "அந்தப் பத்திரிகையின் மேல் வழக்குத் தொடரப் போகிறேன்!" என்றார். செய்தி கொண்டு வந்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அழகாய்த்தான் இருக்கிறது! தாங்கள் அந்தப் பத்திரிகையின் மேல் கேஸ் போடவாவது? அதை எத்தனை பேர் படித்திருக்கப் போகிறார்கள்? படித்திருந்தால்தான் யார் நம்பப் போகிறார்கள்? தாங்கள் கேஸ் போட்டால் அந்தப் பத்திரிகைக்கு அல்லவா பிரபலம் ஏற்படும்" என்றார் அந்த நண்பர்.
அதற்கு ராஜாஜி சொன்ன பதிலாவது:-
"அப்படி அந்தப் பத்திரிகைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டுப் போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவோ, யாராவது அந்த அவதூறை நம்பப் போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை. பத்திரிகை நடத்துகிறவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப் போவதில்லை; ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால் பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்" என்றார்.
அவ்விதமே வழக்குத் தொடரப்பட்டது. காலஞ்சென்ற ஜனாப் அப்பாஸ் அலி அவர்கள் அப்போது தலைமைப் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட். அவருடைய கோர்ட்டில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அன்று நானும் ஆஜராகியிருந்தேன். ராஜாஜியின் சிநேகிதர்களும் பந்துக்களும், இன்னும் பலரும் வந்திருந்தார்கள்.
ஜனாப் அப்பாஸ் அலிகான் வழக்கு இன்னதென்று ஒருவாறு தெரிந்து கொண்டாலும், குறிப்பிட்ட பத்திரிகையை வாங்கி விஷயத்தைப் படித்துப் பார்த்தார். பிறகு வழக்கில் எதிரியான பத்திரிகை ஆசிரியரை ஏற இறங்கப் பார்த்தார். "என்ன ஐயா! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
"எதிர் வழக்காடப் போகிறேன்" என்றார் பத்திரிகாசிரியர்.
"நிஜமாகவா? இந்த மாதிரி வழக்கிலா எதிர் வழக்கு ஆடப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
பத்திரிகாசிரியர் சிறிது திகைத்து நின்றுவிட்டு, "ஆமாம்" என்று பதிலளித்தார்.
மாஜிஸ்ட்ரேட் ராஜாஜியைப் பார்த்து, "தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார்.
"வழக்கை நடத்த வேண்டியதுதான்" என்றார் ராஜாஜி.
மாஜிஸ்ட்ரேட் அப்பாஸ் அலிகான் இன்னும் ஒரு தடவை மேற்படி பத்திரிகை விஷயத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, ராஜாஜியை நோக்கி, "மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார்! இந்தக் கேஸை மேலே நடத்துவதற்கு முன்னால் தங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பதில் சொல்லலாமா?" என்றார்.
"கேளுங்கள்!" என்றார் ராஜாஜி.
"மிஸ்டர் ராஜகோபாலாச்சாரியார்! தாங்கள் எப்போதாவது கொடைக்கானலுக்குப் போனதுண்டா?" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்டார்.
"இல்லை" என்று ராஜாஜி பதில் சொன்னதும், கோர்ட்டில் அப்போது கூடியிருந்த அவ்வளவு பேரும் (குமாஸ்தாக்கள், பியூன்கள், அடுத்த கேஸுக்காக வந்து காத்திருந்த குற்றவாளிகள் உள்பட) ஒரேயடியாகச் சிரித்ததில், கோர்ட்டே அல்லோலகல்லோலப் பட்டுப் போயிற்று.
சிரிப்புச் சத்தம் அடங்கியதும், ஜனாப் அப்பாஸ் அலி மறுபடியும் பத்திரிகாசிரியரைப் பார்த்து "மிஸ்டர்! இன்னமும் எதிர் வழக்காடப் போகிறீர்களா?" என்று கேட்டார்.
பத்திரிகாசிரியர் விழித்துக் கொண்டு நின்றார். அதைப் பார்த்த எனக்கே அவர் விஷயத்தில் பரிதாபம் உண்டாகி விட்டது.
மீண்டும் ஜனாப் அப்பாஸ் அலி, "மிஸ்டர்! என் புத்திமதியைக் கேளுங்கள். பேசாமல் தாங்கள் எழுதியதை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். சி.ஆர். நல்ல மனிதர் என்று எல்லாருக்கும் தெரியும். நீர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அவரும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வார்!" என்றார்.
பத்திரிகாசிரியர் தமது வக்கீலையும் இன்னும் இரண்டொரு நண்பர்களையும் கலந்து கொண்டு அப்படியே செய்வதாகக் கூறினார். வழக்கு முடிந்தது.
காந்தி ஆசிரமத்தில் ராஜாஜி நடத்திய வாழ்க்கையையும், வெயிலின் மேல் அவருக்கிருந்த அபார பிரேமையையும் நன்கு அறிந்தவனாதலால், மேற்படி "கொடைக்கானல் வழக்கு" எனக்கு மிகவும் ரஸமாயிருந்தது. அதை நான் மறக்கவே முடிவதில்லை. அதனால் தான் அவ்வளவு சம்பந்தமில்லாவிட்டாலும், பாதகமில்லையென்று மேற்படி சம்பவத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.
7
மீண்டும் விட்ட இடத்தில் தொடங்குகிறேன். மது விலக்குப் பிரச்சாரத்துக்காக ஒரு மாதப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்றும், அதற்கு 'விமோசனம்' என்று பெயர் வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் ராஜாஜி கூறியபோது எனக்குப் பல சந்தேகங்கள் தோன்றின.
"மது விலக்கு என்கிற ஒரு விஷயத்துக்கு மட்டும் தனிப் பத்திரிகையா? அவ்விதம் நடத்த முடியுமா?" என்று கேட்டேன்.
"ஏன் நடத்த முடியாது? பேஷாக நடத்த முடியும்?" என்றார் ராஜாஜி.
"பத்திரிகையின் பக்கங்கள் எத்தனை?"
"நாற்பது பக்கங்கள்."
"நாற்பது பக்கமும் மதுவிலக்கு விஷயமேயா?"
"ஆமாம்."
"நாற்பது பக்கத்துக்கு மது விலக்கு விஷயம் எப்படித் திரட்டுவது? அப்படித் திரட்டி பத்திரிகை கொண்டு வந்தாலும் ஜனங்கள் வாங்குவார்களா?"
"ஏன் வாங்க மாட்டார்கள்? வாங்கா விட்டால் வாங்கச் செய்ய வேண்டும்."
"எப்படி வாங்கச் செய்வது? அடிபிடி கட்டாயம் செய்ய முடியுமா? படிக்க சுவாரஸ்யமாயிருந்தால் தானே பத்திரிகையை வாங்குவார்கள்?"
"படிக்க சுவாரஸ்யமா யிருக்கும்படிச் செய்யலாம். நீ பார்த்துக் கொண்டேயிரு. முதல் இதழை நான் தனியாகவே தயாரித்துக் காட்டுகிறேன்!"
அவ்விதமே ராஜாஜி 'விமோசனம்' முதல் இதழைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு வாரத்தில் தயாரித்தும் முடித்து விட்டார். அட்டைப் பக்கத்துக்கு மதுப் புட்டியாகிய அரக்கனை ஜனங்கள் விரட்டியடிப்பது போன்ற படம். உள்ளே முதல் பக்கத்துக்கு பாரதியாரின் "ஜய பேரிகை கொட்டடா!" என்ற பாட்டைத் தழுவி "மது வெனும் பேய்தனை அடித்தோம்!" என்று ஒரு பாட்டும் படமும். மதுவிலக்கின் அத்தியாவசியத்தைப் பற்றிய தலையங்கம்.
குடியின் தீமையை விளக்கும் இரண்டு கதைகள். இன்னும் சில கட்டுரைகள். "கடற்கரைக் கிளிஞ்சல்" என்னும் தலைப்பில் அநேக சிறு குறிப்புகள். ஆங்காங்கே மதுவிலக்குப் பிரசாரப் படங்கள். இவ்வளவும் தயாராகி விட்டன. படங்களுக்கு ஒருவாறு உருவங்களையெல்லாம் குறிப்பிட்டு ராஜாஜி பிளான் போட்டுக் கொடுத்து விடுவார். அவற்றைப் பார்த்து சரியான படங்களைச் சென்னையில் ஸ்ரீ செட்டி என்பவர் செய்து கொடுத்து வந்தார். [துரதிருஷ்டவசமாக ஸ்ரீ செட்டி அகால மரண மடைந்தார். இவருடைய இளைய சகோதரர்தான் பிற்காலத்தில் பிரசித்தியடைந்த ஸ்ரீசேகர்.]
அமெரிக்காவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல மதுவிலக்குப் பிரசார நூல்களும் பத்திரிகைகளும் ராஜாஜி தருவித்திருந்தார். அவற்றைப் படித்து "மது விலக்கு வினாவிடை" என்னும் ஒரு விஷயத்துக்கு மட்டும்முதல் இதழுக்கு நான் எழுதிக் கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது. விஷயம் எல்லாம் தயாரான பிறகு பத்திரிகையை எங்கே அச்சடிப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. காந்தி ஆசிரமத்தில் அச்சுக் கூடம் இல்லை. பல யோசனைகள் செய்த பிறகு அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த ஹிந்தி பிரச்சார அச்சுக்கூடத்தில் அச்சடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
"திருவல்லிக்கேணியில் பத்திரிகை அச்சடிப்பது சரிதான். அச்சடித்த பிரதிகளை என்ன செய்வது?" என்று கேட்டேன்.
"ஒரே பார்சலாகக் கட்டி இங்கே கொண்டு வந்து சந்தாதார்களுக்கு அனுப்புவது. காந்தி ஆசிரமம் தபாலாபீசுக்கும் வேலை வேண்டுமோ, இல்லையோ?" என்றார் ராஜாஜி. "சந்தாதார் இருக்கும் இடமே தெரியவில்லையே? அவர்களை எப்படிப் பிடிப்பது?" என்று கேட்டேன். "பார்த்துக் கொண்டேயிரு; போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள்!" என்று ராஜாஜி சொன்னார். அப்போது தமிழ் மக்களிடையே பத்திரிக்கை படிக்கும் வழக்கம் நன்கு பரவியிருக்கவில்லை.
ஸ்ரீ வ.வே.சு. ஐயர் அவர்களின் 'பால பாரதி'யும் ஸ்ரீ ஏ.மாதவய்யா அவர்களின் 'பஞ்சாமிர்தம்' என்னும் பத்திரிகையும் எவ்வளவு கஷ்டப்பட்டன என்பதை நான் அறிந்திருந்தேன். 'பால பாரதி'க்கு 800 சந்தாதார்களுக்கு மேலும், 'பஞ்சாமிர்த'த்துக்கு 400 சந்தாதார்களுக்கு மேலும் சேரவில்லை. ஸ்ரீ மாதவய்யா பத்திரிகை போட்டுப் பண நஷ்டமும் அடைந்தார். எத்தனையோ விதவிதமான ரஸமான விஷயங்களை வெளியிட்ட பத்திரிகைகளே இவ்வளவு இலட்சணத்தில் நடந்திருக்கும்போது மது விலக்குப் பிரசாரத்துக்காக மட்டும் நடத்தும் பத்திரிகை எவ்விதத்தில் வெற்றியடையப் போகிறது? குடிகாரர்கள் இந்தப் பத்திரிகையை ஒரு நாளும் படிக்கமாட்டார்கள். குடிப்பழக்கமில்லாதவர்களுக்கோ இப்பத்திரிகை தேவையேயில்லை. அப்படியிருக்கும்போது மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஒரு தனிப் பத்திரிகை நடத்துவதில் என்ன பயன்? யார் வாங்கப் போகிறார்கள்? வீண் கஷ்டத்தோடு நஷ்டமும் ஏற்படுமே?
இப்படிப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் மனதில் குடி கொண்டிருந்தன. ஆனால் 'விமோசனம்' முதல் இதழைப் பார்த்ததும் என் சந்தேகங்கள் எல்லாம் பறந்தன. ராஜாஜியே சென்னைக்குச் சென்றிருந்து ஹிந்தி பிரசார சபையில் முதல் இதழை அச்சடித்துக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த விமோசனம் பத்திரிகைக் கட்டைப் பிரித்து ஆவலுடன் ஒரு பிரதியை எடுத்துப் பார்த்தேன். "நம்முடைய பயங்கள் எல்லாம் வீண்; இந்தப் பத்திரிகை வெற்றியடையப் போகிறது!" என்று எனக்குத் தைரியம் உண்டாகி விட்டது.
முதல் இதழ் ஆயிரம் பிரதிகள்தான் அச்சிட்டோ ம். அதுவரை சேர்ந்திருந்த சந்தாதார்களுக்கு அனுப்பிய பிறகு, தமிழ் நாட்டிலிருந்த கதர் வஸ்திராலயங்களுக்கெல்லாம் விற்பனைக்காக அனுப்பினோம். என்னுடைய சந்தேகங்கள் பறந்து போய் பத்திரிகைப் பிரதிகளும் பறந்து போய் விட்டன!
இரண்டாவது இதழிலிருந்து நானே பொறுப்பை எடுத்துக் கொண்டேன். ராஜாஜி ஒவ்வொரு இதழுக்கும் மதுவிலக்கைப் பற்றி கதையோ கட்டுரையோ எழுதுவார். நானும் இதழுக்கு ஒரு மதுவிலக்குக் கதை தவறாமல் எழுதி வந்தேன். ராஜாஜியின் கருத்துக்களையொட்டி மதுவிலக்குப் பிரசாரக் கட்டுரைகள், குறிப்புகள் முதலியவற்றையும் எழுதி வந்தேன். மாதம் ஒரு தடவை சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று பத்திரிகையை அச்சடித்து பைண்டு செய்து எடுத்து வருவேன். சில சமயம் ராஜாஜிக்குச் சென்னையில் வேறு காரியங்கள் இருக்கும். எனவே, இரண்டு பேருமாகச் சென்னைக்குப் போவோம். மூன்று நாளைக்குள் ஹிந்தி பிரசார அச்சுக் கூடத்தார் பத்திரிகையை அச்சிட்டு பைண்டு செய்து கொடுத்து விடுவார்கள்! இந்த மூன்று நாளும் அப்போது திருவல்லிக்கேணியிலிருந்த ஹிந்தி பிரசார சபையிலேதான் எங்களுக்கு வாசம். இரவு நேரங்களில் சபைக் கட்டிடத்தின் மேல் மச்சில் மொட்டை மாடியில் படுத்து உறங்குவோம். தூக்கம் வருகிற வரையில் ராஜாஜியுடன் பேச்சுக் கொடுத்து அவருடைய பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி ஏதாவது கேட்பேன். அவர்களும் ரஸமான சம்பவம் ஏதாவது சொல்வார்கள்.
'விமோசனம்' பத்திரிகையின் மூலம் எனக்குக் கிடைத்த மேற்படி பாக்கியத்தை நான் என்றும் மறக்க முடியாது.
'விமோசனம்' விற்பனை ஒவ்வொரு இதழுக்கும் அபிவிருத்தி அடைந்து வந்தது. மொத்தம் பத்து இதழ்கள்தான் வெளியிட்டோ ம். ஒன்பதாவது பத்தாவது இதழ்கள் நாலாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.
அந்தக் காலத்து நிலைமையில் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பற்றிய பத்திரிகை அவ்வளவு பிரதிகள் விற்பனை ஆனது ஒரு மகத்தான வெற்றி என்றே கருத வேண்டியிருந்தது.
8
'விமோசனம்' பத்திரிகை நடந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் இரட்டை ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இரட்டையாட்சி சர்க்கார் மாகாணத்தில் மது அரக்கனுடைய தீமைகளைப் பிரசாரம் செய்வதற்காக ஒவ்வொரு ஜில்லாவிலும் கமிட்டிகளையும் பிரசாரகர்களையும் ஏற்படுத்தியிருந்தார்கள். "டெம்பரன்ஸ் கமிட்டி" என்று பெயர் கொண்டிருந்த இந்தக் கமிட்டிகளைச் சிலர் "மிதக்குடி பிரசாரக் கமிட்டி" என்று பரிகாசம் செய்தார்கள். ஆயினும் மேற்படி கமிட்டிகள் சில ஜில்லாக்களில் சிறந்த வேலை செய்து வந்தன. அந்தக் கமிட்டிகளின் வேலைக்கு 'விமோசனம்' மிக்க உதவியாயிருந்தது. சில ஜில்லாக் கமிட்டிகள் பத்துப் பிரதிகள் பதினைந்து பிரதிகள் தருவித்து மது விலக்குப் பிரசாரகர்களுக்குக் கொடுத்தன.
பொதுவாக அச்சமயம் தமிழ் நாடெங்கும் மதுவிலக்குப் பிரசாரத்தில் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. காந்தி ஆசிரமத் தொண்டர்கள் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்தார்கள். விமோசனத்தில் வெளியான படங்கள் பிரசாரத்துக்கு மிக்க உதவியாயிருந்தன. மேற்படி படங்களைப் பெரிதாக எழுதச் செய்து துணியில் ஒட்டி வைத்திருந்தோம். மொத்தம் சுமார் முத்திரண்டு படங்கள் இருந்தன. இந்தப் படங்களையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தின் பெரிய கட்டை வண்டியில் ஏறி வாரத்துக்கு இரண்டு நாள் கிராமப் பிரசாரத்துக்குப் போவோம். ஆசிரமத்தில் ராஜாஜி இருந்த போதெல்லாம் அவர்களும் வருவார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும் முதலில் கிராமச் சாவடிக்குச் சென்று பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றிக் கொள்வோம். பிறகு மதுவிலக்குப் பாட்டுப் பாடிக் கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் நாமக்கல் கவிஞர் மதுவிலக்குப் பாட்டு ஒன்று பாடிக் கொடுத்தார்:
-
குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்க விட்டுத் தீமையை
விதைப்ப தென்ன விந்தையே
பாடுபட்ட கூலியைப்
பறிக்கு மிந்தக் கள்ளினை
வீடு விட்டு நாடு விட்டு
வெளியிலே துரத்துவோம்!"
நாமக்கல் கவிஞர் பாட்டுப் புத்தகத்துக்கு ராஜாஜி எழுதியுள்ள முன்னுரையில் "சில அம்சங்களில் நாமக்கல் கவிஞர் பாரதியாரைக் காட்டிலும் மேல்" என்று எழுதியிருப்பதை நேயர்கள் பலர் கவனித்திருக்கலாம். ராஜாஜி உபசாரத்துக்காக இப்படி ஒரு விஷயத்தை எழுதக்கூடியவர் அல்ல. மனதில் உண்மையாகப் பட்டதையே எழுதுவார். எனவே, நாமக்கல் கவிஞரைப் பாரதியாருக்கு மேலே மதிப்பிட்டதற்குக் காரணம் இருக்க வேண்டுமல்லவா? அதற்குக் காரணம் மேற்படி மதுவிலக்குப் பாட்டுத்தான் என்று நான் கருதுகிறேன். மதுவிலக்கு இயக்கம் ராஜாஜியின் உள்ளத்தில் அவ்வளவு முக்கியமான ஸ்தானம் பெற்றிருந்தது.
புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் ஏற்பட்ட பிறகு நூற்றல் கூலி, நெசவுக் கூலி மூலமாய் பக்கத்துக் கிராமங்களுக்கு லட்சக் கணக்கான ரூபாய் பட்டுவாடா ஆகி வந்தது. ஆயினும் கிராமவாசிகளின் நிலைமை மொத்தத்தில் அபிவிருத்தியடையவில்லை. தரித்திர நாராயணர்களின் வாசஸ்தலங்களாகவே கிராமங்கள் இருந்து வந்தன. இதற்குக் காரணம் கள்ளு, சாராயக் கடைகளே என்பதை ராஜாஜி கண்டார். மதுபானத்தில் ஏழை எளிய மக்களின் வீடுகள் நரகக் குழிகளாகியிருப்பதையும், அவர்கள் நாளுக்கு நாள் க்ஷீணமடைந்து வருவதையும் ராஜாஜி பார்த்தார். கள்ளுக் கடைகளை மூடினால் ஒழிய கிராமவாசிகளுக்கு விமோசனமே கிடையாது என்ற உறுதியான எண்ணம் அவர் மனதில் நிலை பெற்றது. தேசத்தில் வேறு எந்த திட்டமும் இதைப் போல் முக்கியமானதல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையினால்தான் மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஆரம்பித்த பத்திரிகைக்கு 'விமோசனம்' என்று பெயரிட்டார். அவ்வளவு பரம முக்கியமாக அவர் கருதிய மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பாடிய நாமக்கல் கவிஞர் மீது அவருக்கு மிக்க மதிப்பும் அபிமானமும் ஏற்பட்டதில் வியப்பில்லையல்லவா?
பெட்ரோமாக்ஸ் விளக்கைப் பொருத்தி வைத்துவிட்டு மதுவிலக்குப் பாட்டைப் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். எங்களைத் தொடர்ந்து கிராமவாசிகள் சிலரும் வருவார்கள். வரவரக் கூட்டம் அதிகமாகும். கடைசியில் வசதியான இடம் ஒன்றில் ஊர்வலம் முடிந்து, பொதுக் கூட்டம் ஆரம்பமாகும். மதுவிலக்குப் பிரசாரப் படங்களை ஒவ்வொன்றாக விரித்து விளக்கு வெளிச்சத்தில் ஒருவர் காட்ட, இன்னொருவர் அதைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசியது கிராமவாசிகளின் மனதில் மிகவும் நன்றாகப் பதிந்தது. 'விமோசன'த்தில் வெளியான படத் தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தொகுதியைக் கிராமவாசிகள் - முக்கியமாகப் பெண்கள் - மிகவும் ரஸித்துச் சிரிப்பார்கள்.
அந்தப் படத் தொகுதியில் சட்டைத் தொப்பி போட்ட மனிதன் ஒருவன் ஒரு சாராயப் புட்டியை முதலில் ஒரு மாட்டினிடம் கொண்டு நீட்டுகிறான். மாடு குடிக்க மாட்டேன் என்கிறது. பிறகு குதிரையிடம் போகிறான். குதிரையும் வேண்டாம் என்கிறது. பிறகு நாய் குடிக்க மறுக்கிறது. பன்றி கூட 'வேண்டாம்' என்று மறுதளிக்கிறது. கடைசியில் அந்தச் சட்டைக்காரன் ஒரு கிராமத்துக் குடியானவனிடம் கொண்டு போய் புட்டியை நீட்டுகிறான். அந்தக் குடியானவன் அதை வாங்கிக் குடிக்கிறான். "நாயும் பன்றியுங் கூட விஷம் என்று குடிக்க மறுக்கும் மதுவை மனிதன் குடிக்கிறான், பார்த்தீர்களா?" என்று படத்தைச் சுட்டிக் காட்டிப் பிரசங்கி சொன்னதும் கூட்டத்தில் உள்ள ஸ்திரீகள் எல்லாரும் சிரிப்பார்கள். ஆண்களில் சிலர் சிரிப்பார்கள்; இன்னும் சிலர் "ஆமாம்; அது வாஸ்தவம் தானே?" என்பார்கள்.
கிராமவாசிகளின் மனதைக் கவர்ந்த இன்னொரு படம்:-
முதலில் ஒரு குடித்தனக்காரர் பெண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காட்டுகிறது; பத்து வருஷம் குடித்த பிறகு அவர் வீடு பாழாய்க் கிடப்பதையும், உடைந்த புட்டிகளுக்கும் கலயங்களுக்கும் மத்தியில் அந்த மனிதன் தலையில் கையை வைத்துக் கொண்டு தனியே உட்கார்ந்திருப்பதையும் காட்டுகிறது.
இரண்டாவது படத்தைக் காட்டி விஷயத்தைச் சொன்னதும் கிராம வாசிகள், "ஆஹா!" "ஐயோ!" என்று பரிதபிக்கும் குரல்கள் கேட்கும். இப்படியெல்லாம் கிராமவாசிகளின் மனதில் படும்படி பிரசாரம் செய்யும் முறை ராஜாஜியின் மனதிலேதான் முதன் முதலாக உதித்தது. மேற்படி மதுவிலக்குப் படங்கள் பின்னால் அச்சிடப்பட்டு தொகுதி தொகுதியாகப் பல இடங்களுக்கு பிரசாரங்களுக்காக அனுப்பப்பட்டன.
படங்களைச் சுட்டிக் காட்டி நாங்கள் ஒவ்வொருவரும் பிரசங்கம் செய்வதுண்டு. படங்களின் உதவியில்லாமல் வாசாம கோசரமாக மதுவின் தீமைகளைப் பற்றிப் பேசுவதும் உண்டு. ஆயினும் ராஜாஜி பேசும்போது கிராமத்து ஜனங்களின் மனதிலே பதிவது போல் எங்களுடைய பேச்சு பதிவதில்லை. ஏனெனில் ராஜாஜியைப் போலக் கிராமத்து ஜனங்களின் கஷ்டங்களை நாங்கள் உணரவில்லை. எங்களுடைய பேச்செல்லாம் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிப்பது போலிருக்கும். ராஜாஜியின் பேச்சோ குழந்தையிடம் உயிரை வைத்திருக்கும் தாயார் அன்புடன் புத்தி சொல்வது போலிருக்கும்.
9
'விமோசனம்' ஒன்பதாவது இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது தேசத்தில் உப்பு சத்தியாக்கிரஹப் பேரியக்கம் ஆரம்பமாயிற்று. நூறு சத்தியாக்கிரஹிகள் அடங்கிய தொண்டர் படையுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்குக் கால்நடை யாத்திரை புறப்பட்டார். எனக்கு அந்த முதற் படையிலே சேர்ந்து புறப்பட வேண்டுமென்று எவ்வளவோ ஆசையிருந்தது. ஆனால், நான் வரக் கூடாது என்றும், 'விமோசனம்' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ராஜாஜியின் கட்டளை பிறந்தது. எனக்கு இது பிடிக்கவும் இல்லை; அர்த்தமாகவும் இல்லை. தேசத்தில் மகத்தான சுதந்திர இயக்கம் நடக்கப் போகிறது. அதில் வெற்றி பெற்றால் சுயராஜ்யமே வந்து விடப் போகிறது. ஒரு நொடியில் மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றி மதுவை அடியோடு எடுத்துவிடலாம். அத்தகைய நிலைமையில் மதுவிலக்குப் பிரசாரப் பத்திரிகையை நடத்துவது முக்கியமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஆயினும் ராஜாஜியுடன் எதிர்த்து வாதாட முடியாதவனாயிருந்தேன். வேதாரண்ய யாத்திரையின் மகத்தான விவரங்களைப் பத்திரிகையில் படிக்கப் படிக்க எனக்கு ஆத்திரம் அதிகமாகி வந்தது. ராஜாஜி சிறை புகுந்த பிறகு ஒரே ஒரு 'விமோசனம்' இதழ் மட்டும்தான் வெளிக் கொண்டு வந்தேன். அந்த இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது ராஜாஜிக்கு மன்றாடிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். "தாங்கள் எழுதாமல் பத்திரிகை நன்றாகவும் இராது; ஜனங்களுக்கும் சிரத்தை குறைந்து விடும்; இது வரை ஏற்பட்ட வெற்றி நஷடமாகி விடும்" என்று பல முறை வற்புறுத்தி எழுதி, பத்தாவது இதழோடு பத்திரிகையை நிறுத்த அனுமதி பெற்றுக் கொண்டேன். அவ்விதமே பத்தாவது இதழில் அறிக்கை பிரசுரித்து நிறுத்தி விட்டேன்.
உண்மையிலேயே பத்திரிகையை அதே முறையில் என்னால் தொடர்ந்து நடத்தியிருக்க முடியாதுதான்.
ராஜாஜி பக்கத்தில் இருந்தவரையில் அவருக்கு மதுவிலக்கில் இருந்த உணர்ச்சியின் வேகம் என்னையும் ஆட்கொண்டிருந்தது. அவர்கள் அப்பால் சென்றதும் என்னுடைய உணர்ச்சியின் வேகமும் குறைந்து போய் விட்டது. உணர்ச்சியில்லாத எழுத்தில் சக்தி என்ன இருக்கும்? பத்திரிகைதான் எப்படி நடத்த முடியும்?
'விமோசனம்' பத்திரிகையின் இதழ்களில் நான் எழுதிய மதுவிலக்குக் கதைகள் இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் சர்க்கார் இப்போது மதுவிலக்குச் சட்டம் செய்து வருவதால் இந்தக் கதைகள் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று நம்பித் தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை வெளியிடுகிறார். ராஜாஜியுடன் வாதம் செய்தாலும் செய்யலாம் சின்ன அண்ணாமலையுடன் என்னால் வாதம் செய்ய முடியாது. நான் 'வேண்டாம்' என்று தடுத்தாலும் அவர் கேட்கப் போவதில்லை. இந்த நீண்ட முன்னுரையைப் பார்த்துப் பயந்து போயாவது ஒரு வேளை ஸ்ரீ சின்ன அண்ணாமலை புத்தகம் வெளியிடுவதை நிறுத்திவிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை மனதின் ஒரு சிறு மூலையில் எட்டிப் பார்க்கிறது. அந்த ஆசை என்ன ஆகிறதோ, பார்க்கலாம்!
ரா.கிருஷ்ணமூர்த்தி
"கல்கி"எட்டயபுரம் 17-4-47
----------------
65. பாங்கர் விநாயகராவ்
நேரம் : காலை ஒன்பது மணி.
இடம் : மயிலாப்பூர், "பத்ம விலாசம்" பங்களாவில் முன்புறத்து ஹால்.
பாத்திரங்கள் : விநாயகராவ், எம்.எல்.சி., அவருடைய மகன் கங்காதரன்; யுவர் சங்கத் தொண்டர்கள்.
*****
தொண்டர்கள் : நமஸ்காரம், நமஸ்காரம்.
விநாயகராவ் : வாருங்கள்; உட்காருங்கள். [உட்காருகிறார்கள்.]
விநாயகராவ் : நீங்கள் யார், எதற்காக வந்தீர்கள், தெரியவில்லையே?
முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த வாரம் சட்டசபையில் பூரண மதுவிலக்குப் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? அதைத் தாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வந்தோம்.
இரண்டாம் தொண்டர் : வேறொரு வேண்டுகோளும் இருக்கிறது. தயவு செய்து தாங்கள் தங்களுடைய தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடக்கூடாது.
முதல் தொண்டர் : சட்டசபையில் தாங்கள் நியமன அங்கத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் தங்களுடைய வாக்களிக்கும் சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது.
விநாயகராவ் : ஏழைகள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்படுவது குறித்துச் சந்தோஷம். நானும் என் கடமையைச் செய்வேனென்று நீங்கள் நம்பியிருக்கலாம்.
தொண்டர்கள் : நமஸ்காரம், போய் வருகிறோம். [போகிறார்கள்]
விநாயகராவ் : முன்னுக்கு வரக்கூடிய பிள்ளைகள் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்...ஓஹோ! மணி பத்தாகி விட்டது. [எழுந்து உள்ளே செல்கிறார்.]
*****
இரண்டாம் காட்சி
நேரம் : மாலை மூன்று மணி
இடம் : "மஹாராஜா ஹொடே"லில் ஓர் அறை.
பாத்திரங்கள் : விசுவநாதன், அப்பாசாமி, பத்பநாபன், அனந்தகிருஷ்ணன், ராமநாதன், கங்காதரன்
*****
பத்மநாபன் (மோட்டார் சப்தம் கேட்டு) : அடே விசுவம்! பேபி வருகிறது.
விசுவநாதன் : பொஸொட்டோ வுக்குப் போய் அங்கிருந்து சினிமா போகலாம்.
[வாசலில் மோட்டார் வந்து நிற்கிறது. கங்காதரனும் ராமநாதனும் இறங்கி உள்ளே வருகிறார்கள்.]
அனந்தகிருஷ்ணன் : அடே, ராமநாதன் கூடவா? இவனை எங்கே பிடித்தாய்?
கங்காதரன் : வழியில் அகப்பட்டான்; அழைத்து வந்தேன்.
ராமநாதன் : உளறாதே! நானல்லவா உன்னைப் பிடித்தேன்?
பத்ம (கையைத் தட்டி) : அடே பையா! இரண்டு பேருக்கு டிபன் கொண்டு வா! அனந்த : ஏன்? எல்லோருக்கும் கொண்டு வரச் சொல்லேன்? இன்னொரு முறைதான் சாப்பிடுவோமே?
விசுவ : சை! சை! பொஸொட்டோ வுக்குப் போக வேண்டும். மறந்துவிடாதே.
ராம : பாவிப் பசங்களே! புதுச்சேரிக்குப் போனீர்களாமே?
அனந்த : பாவியாவது? நீதான் கொடுத்து வைக்காத பாவி!
[இதற்குள் சிற்றுண்டி வருகிறது. சாப்பிடத் தொடங்குகிறார்கள்.]
அப்பா : பட்டணத்தில் ஒன்பது ரூபாய்க்கு விற்கும் 'சாம்பேன்' அங்கே மூன்று ரூபாய். எவ்வளவு வித்தியாசம் பார்!
ராம : உண்மையாகவே நீங்கள் குடித்ததாகவா சொல்கிறீர்கள்? என்ன துணிச்சல் உங்களுக்கு?
அனந்த : சுகமனுபவிக்கப் பிறந்தவர்கள் வெள்ளைக்காரர்கள்தானப்பா!
ராம : கங்காதரன் துணிந்த தல்லவா எல்லாவற்றையும்விட ஆச்சரியம்?
கங்கா : எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாய்த் தானிருக்கிறது. நாம் அவ்வளவு தூரத்துக்குப் போவது சரியல்ல என்ன நினைக்கிறேன்.
விசுவ : நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பாய். காரியத்தில் ஒன்றும் குறைவில்லை.
கங்கா : ஒரு சமாசாரம்; இன்று எங்கள் வீட்டுக்கு 'யூத் லீக்' தொண்டர் இருவர் வந்தார்கள். சட்டசபையில் வரப்போகும் மதுவிலக்குப் பிரேரேபணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களை லா காலேஜில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
பதும : எனக்குத் தெரியும் அவர்களை, கதர்ப்பித்தர்கள்.
ராம : ரொம்ப சரி; ஒரு சிகரெட் கொடு.
பதும : அதுதான் கிடையாது. வாங்க வேண்டும்.
விசுவ : வழியில் வாங்கிக் கொள்ளலாம். கிளம்புங்கள்.
கங்கா : எங்கே போவதாக உத்தேசம்?
விசுவ : முன்னமே சொன்னேனே? சினிமாவுக்கு - வழியில் பொஸொட்டோ வில் இறங்கிவிட்டு.
கங்கா : எனக்குப் பிடிக்கவில்லை.
ராம : எனக்கும் பிடிக்கவில்லை.
பதும : சை! சை! ராமு! உனக்காகத்தானே முக்கியமாய்ப் போகவேண்டுமென்பது?
கங்கா : வோட்டு எடுத்துவிடலாம்.
விசுவம் : நல்ல யோசனை. பொஸொட்டோ வுக்குச் சாதகமானவர்களெல்லாம் கை தூக்குங்கள்.
[கங்காதரனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கை தூக்குகிறார்கள்]
கங்கா : பெரும்பான்மையோர் வாக்கின்படி நடக்க நான் கடமைப்பட்டவன்.
அப்பா : மாட்டேனென்றால் யார் விடுகிறார்கள்?
[எழுந்து வெளியே போகின்றனர்.]
*****
மூன்றாம் காட்சி
நேரம் : காலை ஏழு மணி.
இடம் : "பத்ம விலாஸம்" கொல்லைப்புறம்.
பாத்திரங்கள் : விநாயகராவின் மனைவி சிவகாமியம்மாள், வேலைக்காரி தாயி.
*****
சிவகாமி : ஏண்டி, தாயி! நேற்று ஏன் வரவில்லை? உன் மகளை அனுப்பினாயே? அவளால் என்ன வேலை செய்ய முடிந்தது? இப்படிப் பண்ணினால் உன்னைத் தள்ளிவிடுவேன்.
தாயி (கண்ணில் நீர் ததும்ப) : அப்படிச் செய்யக் கூடாது, அம்மா! காப்பாற்றவேண்டும். புருஷன் சண்டைபோட்டு அடித்துவிட்டார். நேற்றெல்லாம் எழுந்திருக்கவே முடியவில்லை.
சிவகாமி : ஐயோ! உன் புருஷன் அவ்வளவு பொல்லாதவனா? ஐயாகிட்டச் சொல்லிப் போலீஸில் எழுதிவைக்கச் சொல்லட்டுமா?
தாயி : அவர் நல்லவரம்மா! பாழுங்கள்ளு அப்படிப் பண்ணுகிறது. முந்தாநாள் சம்பளங் கொடுத்தாங்க. குடித்துவிட்டு வந்துவிட்டார்.
சிவகாமி : சம்பளம் எவ்வளவு?
தாயி : பஞ்சுஸ்கூலில் மாதம் 22 ரூபாய் சம்பளம். சௌக்கியமாய் இருக்கலாம். ஆனால் சம்பளத்தில் முக்கால்வாசி குடிக்குப் போகிறது. ஆறு ஏழு ரூபாய் கூட இட்டேறுவதில்லை.
சிவகாமி : நல்லவரென்று சொல்கிறாயே? நீ சொல்லிக் குடிக்காமல் செய்யக்கூடாதா?
தாயி : எவ்வளவோ செய்து பார்த்துவிட்டேன். நல்ல புத்தியா யிருக்கும்போது குடிப்பதே இல்லை என்று சொல்லுவார். சாமியை வைத்துக்கூட சத்தியம் செய்திருக்கிறார். ஆனால் ஆலையிலிருந்து எந்தப் பாதையாக வந்தாலும் வழியில் பாழும் கடை ஒன்று...
சிவகாமி : இந்தக் கடைகளை ஏன் தான் வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை.
தாயி : காந்தி மகாத்மா வந்து கள்ளு சாராயக் கடைகளை மூடப்போகிறார் என்று முன்னே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒன்றையுங் காணோம்.
சிவகாமி : சரி, காப்பிக்கு நேரமாகிவிட்டது. சீக்கிரம் காரியத்தைப் பார்.
[உள்ளே போகிறாள்.]
*****
நான்காம் காட்சி
நேரம் : இரவு ஒன்பது மணி.
இடம் : "பத்ம விலாஸம்" தோட்டத்தில் சலவைக் கல் மேடை.
பாத்திரங்கள் : விநாயகராவ்; சிவகாமி அம்மாள்; கங்காதரன்; மாப்பிள்ளை பரமேஸ்வரன்.
*****
பரமேஸ்வரன் : நாளை சட்டசபையில் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? நீங்கள் எப்படி வாக்களிக்கப் போகிறீர்கள்?
விநாயக : நான் தான் அரசாங்கக் கட்சியாயிற்றே?
பரமே : அதற்காக மனச்சாட்சியை அடியோடு விற்றுவிடலாமா?
விநாயக : ரொம்பத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே? உண்மையில், இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் சரி என்பது என் கருத்து. நீங்கள் யோசனையே செய்யாமல் பிறர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு குதிக்கிறீர்கள்.
சிவகாமி : என்ன சண்டை? எனக்கும் சொல்லுங்களேன்.
கங்கா : கள்ளு, சாராயக் கடைகளை எல்லாம் எடுத்துவிட வேண்டுமென்று நாளை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப் போகிறார்களாம். அப்பா அதற்கு விரோதமாக ஓட்டுக் கொடுக்கிறாராம். இதற்காக மாப்பிள்ளை சண்டை பிடிக்கிறார்.
சிவகாமி : அந்த இழவு கடைகள் என்னத்திற்காக? நான் மாப்பிள்ளை கட்சிதான்.
விநாயக : நீ கலால் மந்திரியாகும்பொழுது அப்படியே செய்யலாம்.
பரமே : சந்தேகமென்ன? சட்டசபையில் ஸ்திரீகள் மட்டும் பெரும்பான்மையோரா யிருந்தால் இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்கள் எல்லாம் செய்திருப்பார்கள்.
சிவகாமி : இன்று காலையில் வேலைக்காரி சொன்னாள். எனக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் புருஷனுக்கு ஆலையில் இருபத்தைந்து ரூபாய் சம்பளமாம். முக்கால்வாசிக்குமேல் குடியில் தொலைத்து விடுகிறானாம். ஏழைகள் ஏன் இப்படி அவதிப்பட வேண்டும்?
விநாயக : ஏனா? நீ சுகமாகக் கைகால் அசக்காமல் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும், உன் மாப்பிள்ளை எஞ்ஜினியருக்குப் படித்து உத்யோகம் பெறுவதற்கும், கங்காதான் மோட்டாரில் சவாரி செய்வதற்கும் தான்.
சிவகாமி : ஏதாவது தத்துப் பித்தென்று பேசாதீர்கள். அதற்கும் இதற்கும் என்ன வந்தது?
விநாயக : கள்ளுக்கடைக்குச் சென்று குடிக்கத்தான் வேண்டுமென்று சர்க்கார் ஜனங்களைக் கட்டாயப்படுத்துகிறார்களா?
கங்கா : கள்ளுக்கடையை வைத்துக் கொண்டு குடிக்காதே என்றால் என்ன பிரயோஜனம்?
பரமே : விளக்கில் வந்து விழுந்து சாகும்படி விட்டில் பூச்சிகளை யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா?
விநாயக : நீங்கள் உலகமறியாதவர்கள். ஆலையில் வேலை செய்வதும், மூட்டைகள் சுமப்பதும் எவ்வளவு கஷ்டமான வேலைகள் தெரியுமா? இத்தகைய வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சந்தோஷம் வேண்டாமா? குடி ஒன்று தான் இருக்கிறது. அதையும் நீங்கள் ஒழித்துவிடச் சொல்கிறீர்கள்.
பரமே : குடியினால் உடம்புக்குக் கெடுதல் என்று எத்தனையோ வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்களே?
விநாயக : வைத்தியர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்வார்கள். கள்ளு உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
சிவகாமி : எப்படியிருந்தாலும் ஏழைகள் பணமெல்லாம் கள்ளுக்கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
விநாயக : பத்துப் பாத்திரம் தேய்க்கவும், வீடு வாசல் பெருக்கி மெழுகவும் நீ தயாராய் இருக்கிறாயா, சொல்.
சிவகாமி : எனக்கேன் தலையிலெழுத்து? ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்கிறீர்களே?
விநாயக : அவசரப்படாதே! உன் பெண்ணாவாது நாட்டுப் பெண்ணாவது அந்த வேலைகளைச் செய்யத் தயாரா?
சிவகாமி : ஒரு நாளும் செய்யமாட்டார்கள்.
விநாயக : வேலைக்காரி உங்களுக்கு அவசியம் வேண்டுமல்லவா?
சிவகாமி : ஆமாம்.
விநாயக : சரி, உன் வேலைக்காரி புருஷன் வாங்கும் சம்பளம் ரூபாய் இருபத்தைந்தையும் வீட்டுக்குக் கொண்டு வந்தால், அவல் ஒன்றரை ரூபாய் சம்பளத்துக்கு உனக்கு வேலை செய்ய வருவாளா? யோசித்துப் பார்.
சிவகாமி : ஏன் வரமாட்டாள்?
விநாயக : ஏனா? அந்த இருபத்தைந்து ரூபாயைக் கொண்டு அவர்கள் சௌக்கியமாகக் காலட்சேபம் செய்வார்கள். புருஷன் அவளை வேலைக்கு அனுப்ப மாட்டான். அப்படி வந்தாலும் பணிந்து வேலை செய்ய மாட்டாள். ஒரு வார்த்தை அதட்டிப் பேசினால் "போ, அம்மா, போ" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள்.
பரமே : அது உண்மைதான். நமக்கு அவசியமானால் அதிகச் சம்பளம் கொடுத்துத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
விநாயக : இப்பொழுதே நமது கிராமத்தில் பண்ணை ஆட்கள் சொன்னபடி கேட்பதில்லை என்று காரியஸ்தர் எழுதுகிறார். கள்ளுக்கடையும் இல்லா விட்டால் என்ன ஆகும் தெரியுமா? இருக்கட்டும். நீ எஞ்ஜினியரிங் காலேஜுக்குச் சம்பளம் என்ன கொடுக்கிறாய்?
பரமே : 140 ரூபாய்.
விநாயக : கங்காதரன் காலேஜுக்கு 180 ரூபாய் சம்பளம் கொடுக்கிறான். ஆனால் உங்களுடைய படிப்புக்காக மொத்தம் எவ்வளவு செலவு ஆகிறது தெரியுமா? நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைப் போல் குறைந்தது ஐந்து மடங்கு செலவாகிறது. சமீபதத்தில் முத்துக்கருப்பஞ் செட்டியார் கலா சாலைக்காக கணக்குப் பார்த்தார்கள். மொத்தம் வருஷத்தில் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகுமென்றும், அதில் ஒரு லட்சம் ரூபாய்கூட மாணாக்கர் சம்பளத்தில் கிடைக்காதென்றும் ஏற்பட்டன. இதற்குத்தான் கள் வருமானம் வேண்டும்.
பரமே : இது அதர்மமல்லவா? ஒரு சிலர் படித்து ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் வாங்குவதற்காக எத்தனையோ ஏழைகள் கண்ணீர் விட வேண்டுமா? இது என்ன நியாயம்?
விநாயக : அதற்கென்ன செய்வது? ஹிம்ஸை தான் இயற்கை தருமம். புழு, பூச்சிகளைத் தின்று பட்சிகள் உயிர்வாழுகின்றன. பட்சிகளைத் தின்று மிருகங்கள் பிழைக்கின்றன. மிருகங்களைக் கொன்று தின்றும், வேலை வாங்கியும் மனிதன் ஜீவிக்கிறான். மனிதர்களுக்குள்ளே ஏழைகளை வேலை வாங்கிப் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாய்ப் போவதாயிருந்தால் ஒன்றும் வேண்டியதில்லை. உலகத்தில் வாழ்வதாய் இருந்தால் பிறருக்குத் துன்பம் கொடுத்தே ஆக வேண்டும்.
சிவகாமி : எல்லாம் அவரவர் தலை எழுத்தின் படிதான் நடக்கும் போலிருக்கிறது.
பரமே : தலையாவது? எழுத்தாவது? எல்லாம் மனிதன் செய்வதுதான். கள்ளுக்கடைப் பணம்தான் கல்விக்கு என்பது ஏன்? மற்றும் எத்தனையோ செலவுகளைக் குறைக்கக்கூடாதா?
விநாயக : அதுதான் முடியாத காரியம். அரசாங்கத்தார் இராணுவச் செலவைக் குறைக்க மாட்டார்கள். உத்தியோகஸ்தர் சம்பளத்தையும் குறைக்க முடியாது. பாக்கி எல்லாம் போகட்டும். தென்னை மரங்களைக் கள்ளுக் குத்தகைக்கு விடுவதில் நமக்குச் சராசரி மாதம் எண்ணூறு ரூபாய் வருகிறது. ஒரு சிரமம் கிடையாது. இந்த வருமானத்தை நான் எப்படி விட முடியும்? வேறு யார்தான் விடுவார்கள்?
சிவகாமி : ஏழைகளின் பாவம் வீண் போகாது.
[எழுந்து போகிறார்கள்.]
*****
ஐந்தாம் காட்சி
நேரம் : இரவு எட்டரை மணி.
இடம் : "பத்ம விலாஸம்" முன்புறத்து ஹால்.
பாத்திரம் : விநாயக ராவ், சிவகாமி, பரமேசுவரன்.
*****
பரமேசுவரன் : சட்டசபையில் முடிவு என்ன ஆயிற்று?
விநாயகராவ் : சரியான முடிவுதான்.
பரமே : பிரேரேபணை தோல்வி யடைந்துவிட்டதல்லவா?
விநாயக : முதல்தரமான தோல்வி; மூன்றில் ஒரு பங்கு வோட்டுக் கூடக் கிடைக்கவில்லை.
பரமே : இந்த அநியாயத்திற்கு எப்போது விமோசனமோ தெரியவில்லை.
சிவகாமி : சாப்பிடப் போகலாமா? கங்கு இன்னும் வரக்காணோமே?
விநாயக : ஏன் இவ்வளவு தாமதம்? சினிமாவுக்குப் போயிருந்தாலும் இதற்குள் திரும்பியிருக்கலாமே?
பரமே : மோட்டார் சத்தம் கேட்கிறது. நான் போய்ப் பார்த்து வருகிறேன்
[வெளியே போகிறான்]
சிவகாமி (இரகசியமாக) : ஒரு சமாசாரம் அல்லவா? ரொம்பக் கவலையாய் இருக்கிறது. கொஞ்ச நாளாகக் கங்கு ஒரு மாதிரியாக இருக்கிறான்.
விநாயக : என்ன சொல்கிறாய்? கங்குவுக்கு என்ன?
சிவகாமி : நாட்டுப் பெண் இன்றுதான் சந்தேகப்பட்டுச் சொன்னாள். அதன் மேல் எனக்கும் சந்தேகமாயிருக்கிறது. இரவில் முன்போல் சீக்கிரம் வருவதில்லை. வாயில் துர்வாசனை வீசுகிறது என்று சொல்கிறாள்.
விநாயக : சீச்சி! என்ன உளறுகிறாய்? கங்காதரனா அப்படி எல்லாம் போகிறவன்?
சிவகாமி : ஒன்றுமில்லாமலிருக்க வேண்டுமென்றுதான் தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனக்கலக்கமா யிருக்கிறது. வெள்ளைக்கார ஓட்டல்கள் இருக்காமே? அங்கே போகிறானோ என்று தோன்றுகிறது. சேர்வாரோடு சேர்ந்து எத்தனையோ பிள்ளைகள் கெட்டுப் போகிறார்களே?
[பரமேசுவரன் உள்ளே வருகிறான்]
பரமே : வேறு யாருடைய வண்டியோ போயிற்று. கங்காதரனைக் காணோம்.
[டெலிபோனில் மணி அடிக்கிறது.]
விநாயக : அது யார், பாரப்பா.
பரமே (டெலிபோனில்) : யார்? போலீஸ் ஸ்டேஷனா? - ஆமாம். - துக்க சமாசாரமா? என்ன? என்ன? - (அரை நிமிஷங் கழித்துத் திரும்பி) ஐயோ விபத்தாம், கங்காதரனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்களாம். படுகாயமாம்.
சிவகாமி : அடபாவி! மோசம் செய்துவிட்டாயா ஐயோ! என்ன செய்வேன்?
விநாயக (பதைபதைப்புடன்) : ஓடு! டிரைவரைக் கூப்பிட்டு மோட்டார் கொண்டு வரச்சொல்லு. (டெலிபோன் அருகில் சென்று) ஹலோ! யார் அங்கே விபத்து எப்படி ஏற்பட்டது தெரியுமா?
டெலிபோன் குரல் : ராயரிடம் சொல்ல வேண்டாம். நன்றாய்க் குடித்திருந்தானென்று போலீஸ் சார்ஜெண்டு சொல்லுகிறார்.
விநாயக : என்ன? நம்முடைய டிரைவரா குடித்துவிட்டிருந்தான்?
டெலிபோன் குரல் : டிரைவர் அல்ல. ராயர் மகனே வண்டி ஓட்டினானாம். குடிவெறியில் எதிரே வந்த பஸ்ஸுடன் மோதிவிட்டான். நீங்கள் யார்?
விநாயக : ஐயோ!
[கீழே விழுந்து தரையில் தலையை மோதிக் கொண்டு அழுகிறார்.]
----------------
66. தெய்வயானை
"பாதகமில்லை, சொல்லுங்கள்" என்றேன். ஓமக்குட்டி முதலியார் சொல்லத் தொடங்கினார்:
நாங்கள் ஜாதியில் நெசவுக்காரர்கள்; ஆனாலும் எங்கள் குடும்பத்தில் மட்டும் இரண்டு தலைமுறையாய் நெசவுத் தொழில் செய்வது கிடையாது. எங்களுடைய பாட்டனார் எங்கள் ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்தார். ஆனால் என் தகப்பனார் காலத்தில் எங்கள் சொத்தெல்லாம் பல வழியில் அழிந்துவிட்டது. என்னையும் என் தாயாரையும் ஏழைகளாய்விட்டுத் தந்தை இறந்துபோனார். அப்பொழுது எனக்கு மூன்றே வயது; கடன்காரர்கள் எங்கள் சொத்தெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டார்களாம்.
என் தாயைப் பெற்ற பாட்டனார் ஒருவர் இருந்தார். அவர் அப்போது எங்களுடன் வந்து வசிக்கத் தொடங்கினார். அவர் கிழவர்; வேலை செய்யத் தள்ளாதவர். ஆனால் நல்ல கெட்டிக்காரர். எங்களுக்கு மிஞ்சிய சொற்ப நிலத்தின் சாகுபடிக்கு வேண்டிய ஏற்பாடு செய்து குடும்ப காரியங்களைச் சீராக நடத்தி வந்தார். நான் தினந்தோறும் பகலில் எங்கள் மாடுகளை ஓட்டிச்சென்று வருவேன். மாலையில் விட்டுக்கு வந்து மாடுகளைக் கட்டிவிட்டுப் பாட்டன் பக்கத்தில் உட்காருவேன். அவர் இராமாயண, பாரதக் கதைகள் சொல்லுவார். விக்கிரமாதித்தியன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியனவும் சொல்லுவார். இவைகளையெல்லாம் நான் மிகவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
ஒருநாள் அவர் நளன் கதை சொல்லிக்கொண்டிருந்தார். தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் என்பதாக நளனுக்குச் செய்தி வந்த இடத்தில் கதையை நிறுத்தி, 'உடம்பு சரியில்லை, அப்பா! ஏதோ ஒரு மாதிரியாயிருக்கிறது. பாக்கிக் கதையை நாளைக்குச் சொல்லுகிறேன்' என்றார்.
கதையை அவர் முடிக்கவேயில்லை. மறுநாள் அவருக்கு உடம்பு அதிகமாய்விட்டது. ஊரார் அவர் செத்துப்போய் விடுவாரென்று பேசுவதைக் கேட்டேன். செத்துப் போவதென்றால் அது என்ன வென்று எனக்கு அப்போது முழுதும் புலப்பட வில்லை. எலி, பெருச்சாளி, பூச்சியின் சாவுதான் தெரியும். ஆனாலும் எல்லாரும் பேசிக் கொள்வதைக் கேட்டு ஒருவிதத் துக்கம் உண்டாயிற்று. அதைவிடக் கதை பாக்கியாய் நின்று விட்டதே என்ற துக்கம்தான் அதிகமாயிருந்தது. எனக்கு இப்போது நன்றாய் ஞாபகமிருக்கிறது; அவர் அருகில் சென்று "தாத்தா! நீ செத்துப் போகிறாயா? வேண்டாம்! கதையை முடிக்காமல் செத்துப் போக வேண்டாம்" என்று சொல்லி அழுதேன். அப்போது அவர் புன்சிரிப்புச் சிரித்து "குழந்தாய்! இதற்காக நீ வருத்தப்படாதே; நீ புத்தகம் படிப்பதற்குக் கற்றுக்கொள். நான் உனக்குச் சொன்ன கதைகளை விட இன்னும் எவ்வளவோ நல்ல கதைகள் புத்தகங்களில் இருக்கின்றன. நீ படிக்கக் கற்றுக் கொண்டால், ஆயிரங்கதைகள் படிக்கலாம். மற்றவர்களுக்கும் சொல்லலாம்" என்றார். மறுநாள் அவர் இறந்து போனார்
பாட்டன் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவேயில்லை. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தாயிடம் உத்தரவு பெற்று அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் வரையில் நான் அங்கே இருந்தேன். வீட்டு வேலை, வயல் வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆனால் படிப்பதை மட்டும் விடவில்லை. எங்கே, யாரிடத்தில் கதைப் புத்தகம் இருந்தாலும் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன். விளங்கினாலும், விளங்காவிட்டாலும் தட்டுத் தடுமாறி வாசித்து முடிப்பேன். ஒரு கந்தல் ஏடு அகப்பட்டால்கூட விடுவதில்லை. இவ்வாறு இராமாயணம், பாரதம், கந்தபுராணம், நளமகாராஜன் கதை, அரிச்சந்திர மகாராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை, அல்லி அரசாணி மாலை முதலிய பல நூல்களைப் படித்து முடித்தேன்.
இப்படி பல வருஷம் சென்றன. ஒருநாள் எனக்கு ஒரு "நாவல்" கிடைத்தது. ஆஹா! அதைப் படித்தபோது நான் அடைந்த சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. அது முதல், நாவல் பைத்தியம் என்னை நன்றாய்ப் பிடித்துக் கொண்டது. ஒரு முறை ஊரிலிருந்து சிலர் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்கப் பட்டணத்திற்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து வந்தேன். அவர்களெல்லாம் ஏதேதோ சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? மூர்மார்க்கட்டில் பழைய கிழிந்த நாவல்களில் ஒரு கட்டு வாங்கிக்கொண்டு போய்ச்சேர்ந்தேன். இரவு பகல் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். இப்பொழுது நினைத்தால் மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது. குப்பைத் தொட்டியில் போடுவதற்கே தகுந்தவை என்று இப்போது நான் கருதும் நாவல்களை அப்போது எத்தனை ஆவலுடன் படித்தேன், தெரியுமா?
["இருக்கட்டும். நீங்கள் என்னைக் கேலி செய்வதில்லை என்று உறுதி கூறினால்தான் இனி மேல் கதை சொல்லுவேன்" என்றார் ஓமக்குட்டி முதலியார். "ஒரு நாளும் கேலி செய்யமாட்டேன். சொல்லுங்கள்" என்றேன்.]
சாதாரணமாய் நாவல்கள் என்றால் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியுமே? எல்லாம் காதல் மயம். நமது வாழ்வுக்குச் சற்றும் பொருந்தாதவை. ஆனால் நான் அப்போது பதினெட்டு வயது வாலிபன். இவ்வளவு தூரம் பகுத்தறியும் சக்தி எனக்கில்லை. ஆகவே மேற்படி நாவல்களைப் படித்ததன் பயனாகக் காதலைப் பற்றியும், விவாகத்தைப் பற்றியும், வருங்கால வாழ்வைப் பற்றியும் ஏதேதோ மனோராஜ்யம் செய்யத் தொடங்கினேன்.
எங்கள் கிராமத்தில் அப்பொழுது பெரிய பணக்காரர் அப்புக் குட்டி முதலியார். அவர் தான் கிராம முன்சீப்புக்கூட. அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் தெய்வயானை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அவள் ஒரு சர்வ சாதாரணமான பெண் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்போது "நாவல்" கண்ணுடன் பார்த்த எனக்கு அவள் ஓர் அப்ஸர ஸ்திரீயைப் போல் காணப்பட்டாள். பூலோகத்திலும் சரி, தேவலோகத்திலும் சரி, அவளைப் போன்ற அழகி வேறொருத்தியில்லை என்று நிச்சயமடைந்தேன். புத்தகத்தில் படித்த கதாநாயகர்களைப் போலவே நானும் அவளைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் உயிர் பிழைத்திருக்க முடியாதென்று உறுதி கொண்டேன்.
இது வரையில் நாவல் படிப்பு பயன்பட்டது. இதற்குமேல் என்ன செய்வதென்பதற்கு நாவல்களின் உதவி கிடைக்கவில்லை. நானோ தன்னந் தனியனான வாலிபன்; தகப்பனற்றவன்; ஏழை. அப்புக்குட்டி முதலியாரோ பெரும் பணக்காரர்; ஊருக்கு எஜமானர். அவரிடம் போய் "உன் பெண்ணைக் கொடு" என்று கேட்டால் கட்டி வைத்து அடிப்பார். நாவல்களில் படித்ததைப்போல் பெண்ணை நேரே பார்த்து என் காதலை வெளியிடுவதற்கு வேண்டிய தைரியம் இல்லை. அதெல்லாம் நாவல்களில் நடக்கும். வாழ்க்கையில் நடைபெறாது. ஆதலால் ஓயாமல் சிந்தித்த வண்ணம் இருந்தேன். கடைசியாக ஒரு யுக்தி தோன்றியது. அந்த ஊரில் சமீபத்தில் கள்ளு சாராயக்கடைகள் ஏலம் போட இருந்தார்கள். அந்தக் கடைகளை ஏலம் எடுப்பதென்று தீர்மானித்தேன். விரைவில் பணம் சம்பாதித்து அப்புக்குட்டி முதலியாருக்குச் சமமாவதற்கு இது ஒன்றுதான் வழி என்று எண்ணினேன்.
தன் நகைகளை விற்றும், பத்துப் பன்னிரண்டு வருஷங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தும் என் தாயார் இருநூறு ரூபாய் வரையில் பணம் வைத்திருந்தாள். ஏலப்பணத்தைக் கட்டுவதற்கு அத்தொகையைக் கொடுக்கும்படி கேட்டேன். தாயார் முதலில் ஆட்சேபித்தாள். "அந்தப் பாவத் தொழில் நமக்கு வேண்டாமப்பா; ஏதோ உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தி அடைவோம்" என்றாள். நான் பிடிவாதம் பிடித்ததன் மேல் அவள் "குழந்தாய்! நம்முடைய குடும்ப சொத்தெல்லாம் எப்படி அழிந்தது தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியாதே! எப்படி?" என்றேன். "எல்லாம் உன் தகப்பன் குடித்தே ஒழித்துப் போட்டான். அந்தப் பாவம் என்னத்திற்கு?" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதுவரையில் அந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஆனால் தெய்வயானையை நினைத்துக் கொண்டேன். தாயார் சொன்ன செய்தியிலிருந்து என்னுடைய தீர்மானம் இன்னும் உறுதிபட்டது. "அம்மா! கள்ளுக் கடையில் போன சொத்தை கள்ளுக்கடை மூலமாகவே சம்பாதித்துத் தீருவேன். அதுதான் தெய்வத்தின் சித்தம். இல்லாவிட்டால் எனக்கேன் இந்த யோசனை தோன்ற வேண்டும்?" என்றேன்.
கள்ளுக்கடைக்குப் போட்டி அதிகம். எடுக்க முடியவில்லை. சாராயக்கடை மட்டும் எடுத்தேன். வியாபாரம் நன்றாய் நடந்தது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தேன். ஆனால் என் கையிலும் பணம் அதிவேகமாகச் சேர்ந்து கொண்டு வந்தது. அடுத்த வருஷம் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண்டையும் எடுத்தேன். அப்புக்குட்டி முதலியாருடைய பெண்ணுக்காக நான் செய்த காரியங்களெல்லாம் அவர் மனதில் பொறாமையைத்தான் உண்டாக்கின. ஏனெனில் அப்போது அவருடைய கை இறங்கி வந்தது. கடன் அதிகமாயிற்று. "கள்ளுக்கடைக்காரப் பயல்" என்று என்னைப் பற்றி அவர் அவமதிப்பாய்ப் பேசியதாய்க் கேள்விப் பட்டேன். அவருடைய அகம்பாவத்தை அடக்குவது எப்படி என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டு வந்தேன். என் எண்ணம் நிறைவேறுவதற்கான ஒரு சம்பவம் விரைவிலேயே நடந்தது. கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்று தோன்றிற்று!
ஒரு சமயம் அப்புக்குட்டி முதலியார் தம் குடும்பத்துடன் ஏதோ வியாதியைச் சொஸ்தப்படுத்திக் கொள்ளப் பட்டணத்துக்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்தார். இங்கே அவர்களுக்கு பந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அவர் திரும்ப ஊருக்கு வந்த அன்று அவருடைய ஆள் ஒருவன் சாராயக்கடைக்கு வந்து ஒரு புட்டி சரக்கு வாங்கிக்கொண்டு போனான். எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் பந்துக்கள் வீட்டில் கற்றுக்கொண்டார் போலும் என்று எண்ணினேன். மூன்று நாள் கழித்து மறுபடியும் அந்த ஆள் வந்து இன்னொரு புட்டி வாங்கிக் கொண்டு போனான்.
அப்போது எனக்குண்டான சந்தோஷத்தை அளவிட முடியாது. "சரி, முதலியார் நமது வலையில் வீழ்ந்தார். அவர் கர்வம் ஒழிந்தது; இந்த ஊரில் நம்மைத் தவிரக் கடன் கொடுப்பார் யாருமில்லை. தெய்வயானை நம்மைத் தப்பி எங்கே போகிறாள்?" என்று இவ்வாறெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினேன்.
எல்லாம் நான் எண்ணியபடியே நடந்து வந்தது. ஒரு வருஷத்திற்குள் அப்புக்குட்டி முதலியார் ஊரறிந்த பெருங் குடிகாரர் ஆனார். கடன் விஷம் போல ஏறி வந்தது. ஏராளமான பூமி அவருக்கு இருந்தாலும் வட்டி கொடுப்பது எளிதன்று. நிலத்தை விற்றுக் கடனைத் தீர்ப்பதற்கும் நிலத்தை வாங்குவார் யாருமில்லை. இந்த நிலைமையில் ஒரு கோர்ட்டு வாரண்டு அவர்மீது பிறந்தது. வாரண்டில் தப்புவதற்காகக் கையிலிருந்த சர்க்கார் கிஸ்திப் பணத்தைக் கொடுத்துவிட்டார். இவர் குடிகாரரென்றும், கடன்காரரென்றும் மொட்டை விண்ணப்பத்தின் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிந்து சோதனைக்கு வந்துவிட்டார்கள். முதலியார் தம் கர்வத்தை எல்லாம் விட்டு என்னிடம் ஓடிவந்தார். என் காலில் விழுந்து கெஞ்சினார். எண்ணூறு ரூபாய் கடன் கொடுத்து அவர் தலைக்கு வந்த விபத்திலிருந்து அவரைத் தப்புவித்தேன்.
நான் கொஞ்சம் குறிப்புக் காட்டியதுதான் தாமதம், முதலியார் தெய்வயானையை எனக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார். விவாகத்திற்கு நாள் குறிப்பிடுவது தான் பாக்கி. இந்தச் சமயத்தில் அப்புக்குட்டி முதலியார் ஒருநாள் திடீரென்று மரணமடைந்தார். நல்ல திடதேகியாயிருந்த அவர் இப்படி அகால மரணமடைந்ததற்கு மிதமிஞ்சிய குடிதான் காரணமாயிருக்கவேண்டும். இந்தத் துக்க சம்பவத்தினால் என்னுடைய உத்தேசங்களைப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நான் தெய்வயானையை விவாகம் செய்து கொண்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் அவர்கள் வீட்டில் வயது வந்த ஆண் மக்கள் யாருமில்லை. அப்புக்குட்டி முதலியாருடைய இரண்டாந்தாரம் சிறு பெண். அவளும், அவளுடைய கைக்குழந்தையும், தெய்வயானையும்தான் வீட்டிலுள்ளவர்கள். இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், குடும்பத்தின் கடனைத் தீர்த்துச் சீர்ப்படுத்தும் பொறுப்பையும் நானே வகிக்க வேண்டியவனாவேன். இப்படி எல்லாம் மனதில் சந்தேகங்கள் உண்டாயின. ஆனாலும் முடிவில் தெய்வயானையை மணந்துதான் தீர வேண்டும் என்று தீர்மானித்தேன்.
இப்போதெல்லாம் கள்ளு, சாராயக் கடைகளுக்கு நானே நேரில் போவதில்லை. சம்பள ஆள்கள் வைத்துவிட்டேன். அன்றாடம் சாயங்காலத்தில் மட்டும் சென்று கூடுமுதல் தொகையை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு நாள் அவ்வாறு சென்றபோது, கிராம முன்சீப்பு வீட்டு வேலைக்காரன் அப்பொழுதுதான் கையில் புட்டியுடன் கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் அவன் சாலையோரமாய்ப் பதுங்கிக் கொண்டு சென்றான்.
"இவன் இப்போது யாருக்குச் சாராயம் வாங்கிப் போகிறான்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு குருட்டு எண்ணத்தினால் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தோன்றிற்று. ஆகவே அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் ஊர்த் தெருவின் புறமாய்ச் சென்று அப்புக்குட்டி முதலியாரின் வாயிற்படி வழியாய் நுழைந்தான். இதை முற்றும் ஆராய வேண்டுமென்று எண்ணி, தெருவீதிக்குச் சென்று முதலியார் வீட்டுக்குள் நுழைந்தேன். நடைக்குச் சென்றதும் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது நான் கண்ட காட்சி இடிவிழுந்தாற்போல் என்னைத் திகைக்கச் செய்து விட்டது.
தெய்வயானையும் அவளுடைய சிறிய தாயாரும் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். முதலியாருடைய மனைவியின் கையில் சாராயபுட்டி. இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தெய்வயானையிடம் கொடுத்து மற்றொன்றைத் தான் அருந்த ஆரம்பித்தாள். பலவருஷ காலமாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்த காதல் அத்தனையும் அந்த ஒரு கண நேரத்தில் விஷமாகிவிட்டது. சொல்ல முடியாத அருவருப்பு எனக்குண்டாயிற்று. சத்தம் செய்யாமல் வெளியே வந்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.
என் மனோரதத்தில் இடி விழுந்தது. என் ஆசை எல்லாம் நிராசையாயிற்று. முதலில் அப்புக் குட்டி முதலியார் வீட்டில் சாராயபுட்டி புகுந்ததைப் பார்த்தபோது, நான் ஆசைப்பட்ட பழம் கிட்டிவிட்டது என்று சந்தோஷப்பட்டேன். வீட்டிற்குள் சென்ற அந்த சாராயபுட்டி, பின்னால் செய்த வேலையைப் பார்த்ததும், அந்தப் பழம் விஷமாய்ப் போவதற்கு காரணமாயிற்று. அளவில்லாத துக்கத்துடன் அன்று படுத்தேன். பாட்டன் சொன்ன பழங்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. நாவல்கள் எல்லாம் ஆபாசமாய்த் தோன்றின.
அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கள்ளு, சாராயக் கடைகளைத் தொலைத்துத் தலை முழுகினேன். அக்கடைகளில் சம்பாதித்த சொத்தை எல்லாம் அந்த ஊர்க் கோவிலுக்கும், பஜனை மடத்திற்கும், பள்ளிக்கூடத்திற்குமாகப் பகிர்ந்து எழுதி வைத்தேன். இந்த தர்மங்கள் சரிவர நடப்பதற்கும் ஏற்பாடு செய்தேன். கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தாயாரும் நானும் இந்தச் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம்" என்று கூறி நண்பர் கதையை முடித்தார்.
---------------
67. கோவிந்தனும் வீரப்பனும்
கோவிந்தனுக்குப் பருத்தி ஆலையில் வேலை; வாரம் ஆறரை ரூபாய் சம்பளம். வீரப்பனுக்கு ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை; அவனுக்கும் வாரம் ஏழு ரூபாய் சம்பளம். மனைவியும் இரண்டு குழந்தைகளும் கோவிந்தனுக்கு உண்டு. வீரப்பனுக்கும் அப்படியே. கோவிந்தன் வாரத்திற்கு முக்கால் ரூபாய் வாடகை கொடுத்து ஐந்தாறு குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சின்ன அறையில் குடியிருந்தான்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. வீரப்பன் ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு சாராயக் கடை உண்டு. அவன் அந்தக் கடை வழியாகத் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். கோவிந்தன் ஆலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியிலும் கள்ளுக்கடை, சாராயக் கடை, பீர்க்கடை எல்லாம் உண்டு. ஆனால் அவன் குறுக்கு வழியாகச் சந்து பொந்துகளில் புகுந்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்தச் சிறு வித்தியாசத்தினால் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நேர்ந்த பெரும் வேற்றுமைச் சொல்கிறேன் கேளுங்கள்.
சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கோவிந்தனுக்கு ஆலையில் சம்பளம் கொடுத்தார்கள். ரூபாய் ஆறரையையும் அவன் வாங்கிப் பத்திரமாய் முடி போட்டுக் கொண்டு குறுக்கு வழியாய் வீடு வந்து சேர்ந்தான். அவன் மனைவி சுந்தரமும், மகன் நடராஜனும் சந்தோஷத்துடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தார்கள். நடராஜன் திம், திம் என்று குதித்துக் கொண்டு "அப்பா! சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும். சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும்!" என்று கூச்சலிட்டான்.
பிறகு கோவிந்தனும் அவன் மனைவியும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள். பின் வருமாறு செலவு ஜாபிதா போட்டார்கள்:-
ரூ. | அ. | பை | |
வீட்டு வாடகை | 0 | 12 | 0 |
அரிசி | 1 | 8 | 0 |
பருப்பு, உப்பு, புளி சாமான்கள் | 0 | 8 | 0 |
மோரும், நெய்யும் | 1 | 8 | 0 |
எண்ணெய் | 1 | 4 | 0 |
காய்கறி முதலிய சில்லறை செலவுகள் | 0 | 8 | 0 |
மொத்தம் | 4 | 0 | 0 |
வழக்கமாக சேவிங்ஸ் பாங்கியில் போட்டு வந்த முக்கால் ரூபாயையும் சேர்த்து ரூ. 4-12-0 தனியாக எடுத்து வைத்தார்கள். பாக்கிச் செலவு செய்வதற்கு ரூ. 1-12-0 கையில் இருந்தது.
"சரி, சமுத்திரக் கரைக்குப் போகலாம், புறப்படு!" என்றான் கோவிந்தன்.
சுந்தரம் மகனுக்குச் சட்டையும் குல்லாவும் போட்டு நெற்றியில் பொட்டு வைத்தாள். தானும் முகங்கழுவிக் கண்ணாடி பார்த்துக் குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டாள். பிறகு கைக்குழந்தைக்குக் கம்பளிச் சட்டை போட்டு இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு கிளம்பினாள். வழியில் கோவிந்தன் காலணாவிற்குப் பெப்பர்மெண்டு வாங்கி மகனுக்குக் கொடுத்தான்.
கடற்கரையில் காற்றுவாங்கப் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் பெரிய மனிதர், சின்ன மனிதர் எல்லாருக்கும் ஒரே காற்றுத்தான் அடித்தது. கோவிந்தனும் சுந்தரமும் அலையோரத்தில் உட்கார்ந்து ஆனந்தமாய் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மோட்டாரில் வந்தவர்களைவிட இவர்கள் அருபவித்த இன்பந்தான் அதிகமென்று சொல்லலாம். நடராஜன் குதித்து விளையாடினான். அலை மோதிக்கொண்டு வரும்போது கரைக்கு ஓடுவதும், அலை திரும்பிச் செல்லும்போது அதைப் பிடிக்க ஓடுவதும் அவனுக்கு அற்புதமான விளையாட்டாயிருந்தது.
இந்த சமயத்தில் தூரத்தில் பட்டாணிக் கடலை முறுக்கு விற்பவன் போய்க் கொண்டிருந்தான். நடராஜன் ஓடிச் சென்று அவனை அழைத்து வந்தான். அரையணாவுக்கு முறுக்கும் முக்காலணாவுக்குக் கடலையும் வாங்கினார்கள். நடராஜனுக்குத் தலைகால் தெரியவில்லை. திரும்பி வீடுபோய்ச் சேரும் வரையில் தனக்குக் கிடைத்த பங்கைத் தின்று கொண்டிருந்தான்.
பொழுது போனதும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். மத்தியானமே சமைத்து வைத்திருந்த சாப்பாடு தயாராயிருந்தது. எல்லாரும் சாப்பிட்டுவிட்டுக் கவலையின்றித் தூங்கினார்கள். கடற்கரைக்குப் போய் வந்ததற்காக கோவிந்தனுக்கு உண்டான செலவு ஒன்றரை அணாதான்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். பீப்பிள்ஸ் பார்க்குக்குப் போக வேண்டுமென்று தீர்மானமாயிற்று. சுந்தரம் அவசர அவசரமாய்ச் சமையல் செய்தாள். கோவிந்தன் மார்க்கட்டுக்குப் போய்க் காய்கறி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேஷ்டி சட்டைகளுக்குச் சவுக்காரம் போட்டுத் துவைத்தான். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நடராஜன் வீட்டுக் கணக்குகளைப் போட்டான்.
எவ்வளவோ அவசரப்படுத்தியும் கிளம்புவதற்கு மணி ஒன்றாகி விட்டது. சுந்தரம் சிற்றுண்டிக்காகக் கொஞ்சம் அப்பம் செய்து ஒரு பொட்டணத்தில் கட்டி எடுத்துக் கொண்டாள். புரசவாக்கம் வரையில் அவர்கள் நடந்துசென்று அங்கிருந்து டிராம் வண்டியில் போனார்கள். மாலை நான்கு மணி வரையில் பீப்பிள்ஸ் பார்க்கைச் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தார்கள். நடராஜனுக்குக் குரங்குகளைவிட்டுப் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. மூர்மார்க்கட்டில் ஊதல் வாங்கித் தருவதாய்ச் சொன்னதின் மேல்தான் அவன் வந்தான்.
இதுவரை டிராம் சத்தம் ஒன்றறை அணாவும், பீப்பிள்ஸ் பார்க் டிக்கட் மூன்றணாவும் ஆக நாலரை அணா செலவாயிருந்தது. மூர்மார்க்கட்டில் அவர்கள் பின்வரும் சாமான்கள் வாங்கினார்கள்:-
ரூ. | அ. | பை | |
கோவிந்தனுக்குப் பித்தளை டிபன்பாக்ஸ் | 0 | 11 | 0 |
சுந்தரத்திற்கு ஒரு தந்தச் சீப்பு | 0 | 2 | 6 |
நடராஜனுக்கு ஒரு ஊதலும் பெல்ட்டும் | 0 | 3 | 0 |
குழந்தைக்கு ஒரு ரப்பர் பொம்மை | 0 | 2 | 6 |
சாயங்காலம் 5 மணிக்கு அவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். போகும்போது டிராம் சத்தமும் சேர்ந்து ரூ. 1-9-0 செலவாயிற்று. நேற்று ஒன்றரை அணா செலவாயிற்று. ஆக ரூ. 1-10-6 போக பாக்கி இருந்த ஒன்றரை அணாவை ஒரு சிமிழில் போட்டு வைத்தார்கள். சுந்தரத்துக்குச் சேலை வாங்குவதற்காக இந்த மாதிரி ஏற்கனவே ரூ. 2-8-0 வரையில் சேர்ந்திருந்தது.
மறுநாள் திங்கட்கிழமை காலையில் சுந்தரம் புதிய தந்தச் சீப்பினால் தலையை வாரி முடித்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டுக் காரியங்களைச் செய்தாள். ஏழரை மணிக்குள் கோவிந்தனுக்குச் சோறுபோட்டு, மத்தியானத்திற்கும் பலகாரம் பண்ணிக் கொடுத்தாள். கோவிந்தன் ஸ்நானம் செய்து, சுத்தமான வேஷ்டியும் சட்டையும் அணிந்து, புதிய டிபன்பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஆலைக்குப் புறப்பட்டான். நடராஜன் இடுப்பில் புதிய பெல்டு போட்டு அதில் ஊதலைத் தொங்கவிட்டுக் கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான். குழந்தை கையில் ரப்பர் பொம்மையை வைத்துக் கொண்டு ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தது.
*****
இனி அடுத்த வீட்டில் வீரப்பனுடைய குடும்பத்தார் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தார்களென்று பார்ப்போம்.
சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வீரப்பனுக்கு ஏழு ரூபாய் கிடைத்தது. அவன் அதை வாங்கி அலட்சியமாய்த் தன் கந்தல் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் பீர்க்கடையைக் கண்டதும் ஒரு நிமிஷம் நின்று தயங்கினான். அப்போது உள்ளிருந்து ஒருவன் "அண்ணே! ஏன் நிற்கிறாய்? வா!" என்றான். வீரப்பன் கடைக்குள் நுழைந்தான். முதலில் ஒரு சீசா குடித்துவிட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். ஆனால் ஒரு சீசா குடித்ததும் இன்னொரு சீசா குடித்தால்தான் தாகம் தணியுமென்று தோன்றிற்று. ஆனால் தடுத்துக் கொண்டான். ஒரு ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டான்.
சில்லறை கொடுக்கச் சற்று நேரமாயிற்று. இதற்குள் சில சிநேகிதர்கள் வந்தார்கள். அவர்கள் குடிக்கும்போது தான் மட்டும் சும்மாயிருக்கக் கூடாதென்று இன்னொரு சீசா கேட்டான். அதையும் குடித்த பிறகு "இன்று இரண்டு சீசா பீர் குடித்தாகிவிட்டது. நாளைக்கு வரக்கூடாது. ஆகையால் சாராயக் கடையில் ஒரு திராம் வாங்கிக் குடித்து விடலாம்" என்று யோசித்து அப்படியே சாராயக் கடைக்குப் போனான். ஒரு திராம் வாங்கிக் குடித்து விட்டுப் பிறகு இன்னொரு அரை திராம் போடச் சொன்னான். கடைக்காரன் கொடுத்த சில்லறையில் ஒரு அரைக்கால் ரூபாய் செல்லாப்பணம். வீரப்பனுக்கு போதை நன்றா யேறியிருந்தபடியால் அது தெரியவில்லை. கடைக்காரன் கொடுத்த சில்லறையை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். அவற்றில் நல்ல இரண்டணா ஒன்று சட்டைப் பையில் விழாமல் தரையில் விழுந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. ஆகவே சாயங்காலம் ஆறு மணிக்கு நல்ல பணம் ரூ. 5-12-0ம் செல்லாப் பணம் இரண்டணாவும் எடுத்துக் கொண்டு அவன் வீடு போய்ச் சேர்ந்தான்.
வீட்டில் அரிசி, பருப்பு சாமான் ஒன்றும் கிடையாது. அன்று காலைச் சாப்பாட்டுக்கே நாகம்மாள் அரிசி கடன் வாங்கிச் சமைத்திருந்தாள். எனவே மிகுந்த எரிச்சலுடன் அவள் வீரப்பன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். வந்ததும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். வீரப்பன் தன்னிடமிருந்த பணத்தை அவள் முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் தானும் கூச்சல் போட்டான். இதைக் கண்டு அவர்களுடைய மகன் ராமன் - ஏழு வயது பையன், பயந்து வாசல்புறம் ஓடிப் போனான். நாகம்மாள் அதற்குப் பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வந்து சமையல் செய்தாள். சாப்பிட்டு முடிய இரவு பத்து மணியாயிற்று. அப்புறம் அரைமணி நேரம் அவர்கள் காட்டுப் பூனைகள் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு தூங்கிப் போனார்கள்.
மறுநாள் காலையில் கறிகாய் வாங்கி வருவதற்காக வீரப்பன் பணம் கேட்டான். நாகம்மாள் செல்லாப்பணம் இரண்டணாவைக் கொண்டு வந்து கொடுத்தாள். வீரப்பன் உடனே சண்டை பிடிக்கத் தொடங்கினான். முதல் நாள் இரவு கடைசாமான் வாங்கியபோது நாகம்மாள் ஏமாந்து செல்லாப்பணம் வாங்கி வந்திருக்க வேண்டும் என்று சொன்னான். "குடி வெறியில் நீதான் வாங்கிக் கொண்டு வந்தாய்" என்றாள் நாகம்மாள். இந்த சண்டையின்போது ராமன் நடுவில் வந்து "நோட்டு பென்சில் வேண்டும்" என்றான். அவனுக்கு ஒரு அறை கிடைத்தது. நாகம்மாள் போட்டிக்குக் கைக் குழந்தையை அடித்தாள். ஏக ரகளையாயிற்று. வீரப்பனுக்கு வேஷ்டி துவைக்க நேரங் கிடைக்கவில்லை.
இத்தனை தொந்தரவுகளுக் கிடையில் நாகம்மாள் சமைத்தபடியால் குழம்புக்கு உப்புப்போட மறந்து போனாள். சாப்பிடும்போது வீரப்பன் குழம்புச் சட்டியைத் தூக்கி நாகம்மாள் மேல் எறிந்தான். அது குழந்தை மீது விழுந்தது. மறுபடிய்ம் ரணகளந்தான்.
இன்று பீர்க்கடைக்குப் போகவேண்டாமென்று முதல்நாள் வீரப்பன் தீர்மானித்திருந்தான். ஆனால் மாலை மூன்று மணி ஆனதும் இந்தத் தொல்லைகளையெல்லாம் மறந்து சற்று நேரம் "குஷி"யாக இருந்து வரலாமென்று தோன்றிற்று. ஆகவே முழு ரூபாய் ஒன்றை எடுத்துக் கொண்டு சாராயக் கடையைத் தேடிச் சென்றான்.
சாராயக் கடையில் பன்னிரண்டணா தொலைந்தது. அடுத்த சந்தில் சூதாடும் இடம் ஒன்று உண்டு. வீரப்பன் அங்கே போனான். பாக்கி நாலணாவையும் அங்கே தொலைத்தான். இருட்டிய பிறகு வீட்டுக்குக் கிளம்பினான். வழியில் குடிமயக்கத்தில் விளக்குக் கம்பத்தில் முட்டிக் கொண்டான். ஒரு புருவம் விளாங்காய் அளவுக்கு வீங்கிப் போயிற்று. வீட்டுக்குப் போனதும் படுத்துத் தூங்கிப் போனான்.
நாகம்மாள் சாயங்கால மெல்லாம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். இரவு சமைக்கவில்லை. ராமன் மற்றப் பிள்ளைகளுடன் தெருவிலும் சாக்கடையிலும் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். நாகம்மாள் மத்தியானம் மீதியிருந்த சோற்றை அவனுக்கும் போட்டுத் தானும் சாப்பிட்டான். வீரப்பனை எழுப்பிச் சோறு போடவில்லை.
திங்கட்கிழமை காலையில் வீரப்பனுக்குத் தலை நோவு பலமாயிருந்தது. புருவம் வீங்கி ஒரு கண் மூடிப்போயிற்று. முணு முணுத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். நாகம்மாள் மெதுவாகத்தான் எழுந்திருந்தாள். முதல் நாள் அழுது அழுது இப்பொழுது அவள் முகம் பார்க்க முடியாதபடி கோரமாயிருந்தது. தலைமயிர் ஒரே பரட்டை. முனகிக் கொண்டே குழம்பும் சோறும் செய்தான். வீரப்பன் அவசர அவசரமாய் அறை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு மத்தியானச் சோற்றுக்காகச் சண்டை போட்டு இரண்டணா எடுத்துக்கொண்டு அழுக்குச் சட்டையும் கந்தல் வேஷ்டியுமாய் ஓடினான்.
ராமனுக்கு அன்று காலை இரண்டு மூன்று தடவை அடி விழுந்திருந்தது. கணக்குப் போடவில்லையாகையால் பள்ளிக்கூடத்துக்கும் போய் அடிபடி வேண்டுமேயென்று அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் சென்றான். கைக் குழந்தையைக் கவனிப்பார் யாருமில்லை. அது ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தது.
வீரப்பனைப் போன்ற எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை கள்ளு, பீர், சாராயக் கடைகளினால் பாழாகி வருகின்றது. அந்தக் கடைகளைத் தொலைக்க நீங்கள் என்ன உதவி செய்யப் போகிறீர்கள்?
-------------
68. சின்னத்தம்பியும் திருடர்களும்
அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- "குழந்தாய்! உன்னுடைய தகப்பன் உனக்குத் தேடி வைத்த சொத்து இந்த வைரம் ஒன்றுதான். இதை நீ வெகு ஜாக்கிரதையாகக் கொண்டு போக வேண்டும். பட்டணத்தில் இதற்கு நல்ல விலை கொடுப்பார்கள். இதை விற்று வரும் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு நாணயமாக வியாபாரம் செய்தால் சீக்கிரம் நல்ல பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பலாம். வழியிலே திருடர் பயம் அதிகம். வழிபோக்கர்கள் யாரையும் நம்பிவிடாதே. சிலர் உன்னோடு சிநேகமாய்ப் பேசிக்கொண்டே வந்து சமயம் பார்த்து வைரத்தை அடித்துப் பறித்துக் கொள்வார்கள். ஜாக்கிரதையாயிருந்து பிழை" என்றாள்.
அந்த வைரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் அறிவு.
சின்னத்தம்பி வைரத்தை வாங்கிப் பத்திரமாய் முடிந்துகொண்டு புறப்பட்டான். சாலையில் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் ஒரு வழிப் போக்கனைக் கண்டான்.
"தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?" என்று கேட்டான் வழிப்போக்கன்.
"பட்டணத்துக்குப் பணம் சம்பாதிக்கப் போகிறேன். ஐயா!" என்றான் சின்னத்தம்பி.
"அப்படியா? நானும் பட்டணத்துக்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்" என்று வழிப்போக்கன் சொன்னான்.
சின்னத்தம்பி தன் தாயார் சொல்லிய புத்திமதிகளை நினைத்துக் கொண்டான். "உன் பெயரென்ன?" என்று கேட்டான்.
"என் பெயர் சோம்பல்" என்றான் வழிப்போக்கன்.
"ஓகோ! உன்னைப்பற்றி என் தாயார் சொல்லியிருக்கிறாள். நீ பொல்லாத திருடன். உன் சகவாசம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.
திருடன் "இந்தா! பிடி!" என்று கூச்சலிட்டுக் கொண்டே தொடர்ந்து ஓடினான். என்ன ஓடியும் சின்னத்தம்பியை அவனால் பிடிக்க முடியவில்லை.
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் வேறொரு ஆள் எதிர்ப்பட்டான்.
"தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?" என்று கேட்டான். "பட்டணத்துக்குப் போகிறேன்" என்றான் சின்னத்தம்பி.
"அப்படியா? சந்தோஷம். நாம் இருவரும் பேசிக் கொண்டே போகலாம்" என்றான் அம்மனிதன்.
"நீ யார்?" என்று கேட்டான் சின்னத்தம்பி.
"என்னைத் தெரியாது? நான் தான் வியாதி" என்று அம்மனிதன் கூறினான்.
"ஐயோ; நீ சோம்பலை விடப் பொல்லாத திருடனாயிற்றே! நீ என் சுகத்தைத் திருடிக்கொள்வாய் வேண்டாம் உன் உறவு எனக்கு" என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.
வியாதி ஓடி ஓடிப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை.
இன்னும் போகப் போக வழியில் சூதாட்டம், கோபம், சண்டை, மூர்க்கம் விபசாரம் முதலிய திருடர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்பட்டுச் சின்னத் தம்பியை வழி மடக்கப் பார்த்தார்கள். எல்லாரையும் ஏமாற்றிப் பின்னால் விட்டுவிட்டுச் சின்னத்தம்பி முன்னால் போய்க்கொண்டிருந்தான்.
மேலே சொன்ன சோம்பல், வியாதி, விபசாரம் முதலிய திருடர்கள் எல்லாரும் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் மதுசாரம். இவன் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டுக் கொள்வதில் தேர்ந்தவன். கள்ளு, சாராயம், ஒயின், பிராந்தி, விஸ்கி, பீர், அபினி, கஞ்சா என்று விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பெயருக்கேற்ப வெவ்வேறு வேஷங்கள் போட்டுக் கொள்வான்.
கடைசியாக, இத்திருடர் தலைவனை நமது சின்னத்தம்பி சந்தித்தான்.
"தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?" என்றான் திருடர் தலைவன்.
"பட்டணத்துக்குப் போகிறேன். நீ யார்?" என்று சின்னத்தம்பி கேட்டான்.
"என் பெயர் மதுசாரம்" என்றான் திருடன்.
சின்னத்தம்பி தனக்குள் யோசித்துக் கொண்டான்:- "இவனைப் பற்றி என் தாயார் ஒன்றும் சொல்லவில்லை. இவன் வெகு உற்சாக புருஷனாகக் காணப்படுகிறான். உடல் பருத்து நல்ல உடையணிந்து பெரிய மனிதன் போல் தோன்றுகிறான். இவன் திருடனாயிருப்பானா? எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தாயார் ஒரு வேளை இவனைப் பற்றிச் சொல்ல மறந்திருக்கலாம்."
இப்படியெண்ணிச் சின்னத்தம்பி வேகமாய் நடக்கலானான்.
அப்பொழுது திருடர் தலைவன், "ஏனப்பா இவ்வளவு விரைவாக ஓடுகிறாய்? கொஞ்சம் மெதுவாய் நட; என்ன அவசரம்? பட்டணத்தில் நான் ரொம்ப அனுபவமுள்ளவன். பணஞ்சம்பாதிக்கும் வழியெல்லாம் உனக்கு நான் சொல்லித் தருகிறேன்" என்றான்.
சின்னத்தம்பி இந்த ஆசை வார்த்தையில் மயங்கிவிட்டான். "இவன் திருடனாயிருக்க மாட்டான். இவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் முன்னாலேயே போய்க் கொண்டிருக்கலாம். அப்படி ஒரு வேளை இவன் திருடனாயிருந்து நம்மை பிடிக்க வந்தாலும், ஒரே ஓட்டமாய் ஓடித் தப்பி விடலாம். இத்தனை திருடர்களை ஏமாற்றி வந்த எனக்கு இந்தப் பொதியனைத்தானா ஏமாற்ற முடியாது?" என்று அவன் எண்ணினான். அதனால் கொஞ்சம் மெதுவாய் நடந்தான்.
திருடர் தலைவன் இனிமையாகப் பேசிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தான். "ஆஹா! இவனுடன் பேசினால் எவ்வளவு உற்சாகமாயிருக்கிரது?" என்று சின்னத்தம்பி நினைத்தான். அவன் அருகில் வந்ததும் திருடர் தலைவன் ஒரே தாவலாய்த் தாவி சின்னத்தம்பியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.
சின்னத்தம்பி ஆனமட்டும் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான். ஒன்றும் முடியவில்லை. திருடன் அவனைச் சோதனை போட்டு அவன் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த வைரத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதற்குள் பின்னால் தங்கிய வியாதி, விபசாரம், சூதாட்டம், சோம்பல் முதலிய திருடர்களும் ஓடிவந்து சின்னத்தம்பியை சூழ்ந்து கொண்டார்கள்.
திருடர் எல்லாரும் சேர்ந்து அவனைத் தங்கள் இருப்பிடத்துக்கு வரும்படி அழைத்தார்கள். சின்னத்தம்பி பார்த்தான். "வைரந்தான் போய்விட்டது. பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது? இவர்களுடன் தான் போவோமே?" என்றெண்ணினான்.
பாவம்! இவ்வாறு சின்னத்தம்பி திருடர் தலைவனுக்கு அடிமைப்பட்டான். மற்ற எல்லாத் திருடர்களுக்கும் அவன் குற்றேவல் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு சில காலம் அடிமையாயிருந்து உழைத்து விட்டுக் கடைசியில் அவன் மாண்டு போனான்.
வாழ்க்கைப் பிரயாணம் தொடங்கும் எத்தனையோ ஏழை ஜனங்கள் சின்னத்தம்பியைப் போல் மதுசாரம் என்னும் கொள்ளைத் தலைவனுக்கு அடிமையாகிறார்கள். முதலிலேயே அவன் பெரிய கள்ளன் என்பதை அறிந்து அருகில் நெருங்கவிடாதிருந்தால் பிழைத்திருக்கலாம். அவனுடைய இனிய பேச்சுக்குக் கொஞ்சம் செவி கொடுத்து விட்டால் பிறகு வலையில் விழ வேண்டியதுதான். நயவஞ்சகத்தில் அவன் மிகத் தேர்ந்தவனாதலால் அறியாத ஜனங்கள் எத்தனையோ பேர் அவனை நெருங்க விட்டு அதோகதி அடைகிறார்கள். இந்தக் கொடிய கள்ளனைப் பிடித்து நாட்டைவிட்டுத் துரத்துவது சர்க்காரின் கடமையல்லவா? ஆனால் அதற்குப் பதிலாக ஆங்கில சர்க்கார் இவனுடன் சண்டைபோட முடியாதென்று இந்தப் பாதகனுக்கு 'லைஸென்ஸ்' கொடுத்து வழிப்போக்கர்களைத் தன் வலையில் போட்டுக் கொள்ளும்படி விட்டிருக்கிறார்கள்!
----------
69. விதூஷகன் சின்னுமுதலி
கூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம் கோணங்கிக் குல்லா தரித்து, புலி வேஷத்தைப் போல் கோடுபோட்ட கால்சட்டையும், மேற்சட்டையும் போட்டுக் கொண்டு வருவான். அவனுடைய நடை, உடை, பாவனை ஒவ்வொன்றும் ஜனங்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும். அவனுடைய பொய் மீசை நிமிஷத்துக் கொருமுறை மேலும் கீழும் போய் வரும். பேசுவதற்கு அவன் வாயைத் திறந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. நாடகக் கொட்டகை கிடுகிடாய்த்துப் போகும். சில சமயம் வெள்ளைக்காரனைப் போல் தொப்பி போட்டுக் கொண்டு வருவான்.
"லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்" முதலிய ஐந்தாறு இங்கிலீஷ் வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். இவைகளை வைத்துக் கொண்டு அரை மணி நேரம் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்வான். "அசல் வெள்ளைக்காரன் கெட்டான்!" என்று சொல்லி ஜனங்கள் குதூகலப்படுவார்கள்.
என்னதான் பேசினாலும், பாட்டுப்பாடத் தெரியாவிட்டல் "விதூஷக பார்ட்" ரஸப்படுமா? சின்னுமுதலிக்குப் பாட்டுப் பாடவும் தெரியும்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதல், சிங்கார ரஸக்கீர்த்தனைகள் வரையில் அவன் வாயில் அகப்பட்டுப் படாத பாடுபடும். சுயமாகப் பாடும் சக்தியும் அவனுக்கு உண்டு.
-
"இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம் பாட்டாகாதா-சும்மா
இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்
பெருங்காள மேகம் பிள்ளாய்"
2
சின்னுமுதலியின் பரம்பரைத் தொழில் கைத்தறி நெசவு. ஆனால் அந்தத் தொழிலை அவன் மறந்து வெகுகாலமாயிற்று. அவனுக்கு மனைவியும், ஒரு பிள்ளையும், ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவியும், பதினைந்து வயதான பிள்ளையும் நன்றாக நெசவு செய்வார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தினால்தான் குடும்ப நிர்வாகம் நடந்துவந்தது. மகள் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள். சின்னுமுதலி நாடகம் நடிக்கும் இடங்களில் தனக்குக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தேங்காய், வாழைப்பழம், வடை, முறுக்கு முதலிய பரிசுப் பொருள்களைக் கொண்டு வருவான். அப்பொழுதெல்லாம் குழந்தைகள் அவனை ஆவலுடன் எதிர்க்கொண்டு அழைப்பர்கள். அவனுக்குப் பணங்காசும் கிடைப்பதுண்டு. ஆனால் அதுமட்டும் வீட்டுக்கு வராது. பின், எங்கே போயிற்று என்று சொல்லவேண்டியதில்லையல்லவா?
ஆம்; சின்னுமுதலியின் விதூஷக சாமர்த்தியங்களுக்கெல்லாம் பெரும்பாலும் ஆதாரமாயிருந்தது கள்ளு, சாராயந்தான். ஆரம்பத்தில் கள்ளுக் குடித்து வந்தான். ஆனால் நாளடைவில் கள்ளில் அவ்வளவு 'ஜோர்' பிறப்பதில்லை யென்றறிந்து, சாராயத்தில் புகுந்தான். கூத்து நடத்துபவர்கள், சாராயக்கடை எவ்வளவு தூரத்திலிருந்தாலும், முன்னாடியே ஆள் அனுப்பி இரண்டு புட்டி சாராயம் வாங்கி வந்து தயாராய் வைத்திருப்பார்கள். ஆனால் வருஷம் 365 நாளுமா கூத்து நடக்கும்? கூத்தில்லாத நாட்களுக்கும் சாராயம் வேண்டுமல்லவா? எனவே, கூத்தில் கிடைக்கும் பணம் மற்ற நாட்களுக்கு உபயோகமாகும். அத்துடன், சின்னுமுதலிக்குத் தறிகள் செப்பனிடத் தெரியும். சிறுவயதில் பழகியிருந்தான். இந்த வேலையில் கிடைக்கும் கூலிப்பணத்தையும் சாராயக்கடைக்கே அர்ப்பணம் செய்து வந்தான். அவன் மனைவி பத்மாவதிக்கு இது மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? 1921-ம் வருஷத்தில் நடந்த காந்தி இயக்கத்தின் போது ஊரில் ஒரு முறை கட்டுப்பாடு செய்தார்கள், யாரும் குடிக்கக் கூடாது; குடித்தால் பதினைந்து ரூபாய் அபராதம் என்று. ஆனால் பஞ்சாயத்தார் முதல் ஊர்ஜனங்கள் வரையில் எல்லாரும் ஒருமுகமாகச் சேர்ந்து சின்னுமுதலி விஷயத்தில் மட்டும் விலக்குச் செய்துவிட்டார்கள். அவன் குடிக்காவிட்டால் 'விதூஷக பார்ட்' போட முடியாது. அவன் விதூஷகனாய் வராவிட்டால் கூத்து எதுவும் ரஸப்படாது. ஆகவே, அவனை மட்டும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருந்தார்கள். இந்த நிலைமையில் பத்மாவதி "குடிக்கவேண்டாம்" என்று சொன்னால் நடக்கிற காரியமா?
3
கலியாணம் ஆன புதிதில் பத்மாவதிக்குத் தன் கணவனைப் பற்றி மிகவும் பெருமையா யிருந்தது. எல்லாரும் அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் கூத்தைப் பார்க்கப் போகாமலிருந்தாள். பார்க்கவேண்டு மென்னும் ஆவல் அவள் மனத்திற்குள் நிரம்பி யிருந்தது. ஆனால் வெட்கம் தடை செய்தது. கடைசியாக ஒருநாள் பக்கத்து ஊரில் கூத்துப் போட்டபோது அயல் வீட்டுப் பெண்கள் வற்புறுத்தி அவளைக் கூட்டிச் சென்றார்கள். கூட்டத்தின் ஓரத்தில் உட்கார்ந்து பத்மாவதி தன் புருஷன் மேடைக்கு வருவதை ஆவலுடன் எதிர் நோக்கி யிருந்தாள்.
கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசங்கியமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்.
இதற்குப் பிறகு, கூத்தாடப் போக வேண்டாமென்றும், குடிக்க வேண்டாமென்றும் அவள் சின்னுமுதலிக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. அவன் ஒரு வேளை கேட்பதாயிருந்தாலும் ஊரார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இவ்வாறு நாள் போய்க்கொண்டிருந்தது. அவனைச் சீர்திருத்தலாம் என்ற எண்ணத்தையே பத்மாவதி விட்டுவிட்டாள். தன் குழந்தைகளே கதி என்றிருந்தாள். வீட்டுக்கு வந்தால் அவனுக்குச் சோறு போடுவாள். மற்றபடி அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று கேட்பதில்லை. அவனும் எப்போதும் ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்தால் சாப்பாட்டு வேளைக்கு வருவான். உடனே போய்விடுவான். குடித்துவிட்டு வீட்டுக்கு மட்டும் வருவதில்லை.
4
ஒருசமயம் இரண்டுமாத காலம் வரையில் வெளியூர்களில் சுற்றிவிட்டு ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். உடம்பு சரியாயில்லை யென்றும் தலைவலிக்கிறதென்றும் கூறினான். உடம்பெல்லாம் பற்றி எரிகிறதென்று சொன்னான். அவன் முகம் மினுமினுவென்று பிரகாசித்தது. கண்கள் திறுதிறுவென்று விழித்தன. பத்மாவதி அவனுக்குச் சோறுபோட்டு வீட்டிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னாள். அப்படியே படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வராமல் முனகியவண்ணம் புரண்டு கொண்டேயிருந்தான். காலையில் வைத்தியனை அழைத்துக் காட்டவேண்டுமென்று பத்மாவதி எண்ணினாள். அவளும் குழந்தைகளும் பகலெல்லாம் வேலை செய்தவர்களாதலால் விரைவில் தூங்கிப் போனார்கள்.
பத்மாவதி ஏதோ சத்தம் கேட்டு விழித்தெழுந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை நடுநடுங்கச் செய்தது. அர்த்தராத்திரி; மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. சின்னுமுதலி தலையில் ஒரு பழைய முறத்தைக் கவிழ்த்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருந்தான். முறம் கீழே விழாவண்ணம் அவன் உடம்பையும் கைகளையும் நெளித்துக் கொடுத்து ஆடினான். பத்மாவதி இன்னதென்று சொல்லத் தெரியாத பயங்கர மடைந்தாள். மெதுவாக எழுந்து அவனருகில் சென்றாள். சின்னுமுதலி ஆடுவதை நிறுத்தி அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். உடனே "கண்ணே பொண்ணே" என்னும் விகாரமான கூத்தாடிப் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான். பத்மாவதியின் முகவாய்க்கட்டையைப் பிடித்தான்; பல்லை இளித்தான்.
பத்மாவதி தன்னையறியாமல் பயங்கரமான கூச்சல் ஒன்று போட்டாள். இதனால் குழந்தைகள் விழித்துக் கொண்டார்கள். மறுபடியும் சின்னுமுதலி பக்கத்திலிருந்த கூடை ஒன்றைத் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு ஆடினான். இதைப் பார்த்ததும் குழந்தைகளும் அழத் தொடங்கினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அயல் வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். எல்லாரும் சேர்ந்து சின்னுமுதலியைப் பிடித்துச் சமாதான வார்த்தைகள் சொல்லிப் படுக்க வைத்தார்கள்.
மறுநாள் காலையில் கொங்கணப்பட்டியிலிருந்து சமாசாரம் கிடைத்தது. அவ்வூரில் கூத்து நடந்து கொண்டிருந்தபோது, சின்னுமுதலியின் ஆர்ப்பாட்டம் வழக்கத்தைவிட அதிகமா யிருந்ததென்றும், அவன் திடீரென்று ஒரு கூச்சல் போட்டு, ஸ்திரீ வேஷம் தரித்திருந்தவனின் மூக்கைக் கடித்துவிட்டு, நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து ஓடினானென்றும், சிலர் இதுவும் ஒரு விகடம் என்று நினைத்துச் சிரித்தார்களென்றும், மற்றும் சிலர் "இன்று போதை அதிகம்" என்று பேசிக் கொண்டார்களென்றும், அப்படி ஓடியவன் திரும்பி வரவேயில்லையென்றும் கொங்கணப்பட்டியிலிருந்து வந்தவன் சொன்னான்.
சின்னுமுதலியின் விதூஷக நடிப்பை இன்னும் நீங்கள் பார்க்கலாம். சந்திரப்பட்டிக்கு நீங்கள் சென்றால், அவன் தன் பிதிரார்ஜித வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடித்தவண்ணமிருப்பதைக் காண்பீர்கள். கவிதைகளும், கீர்த்தனங்களும், அகட விகடங்களும், சிருங்காரப் பேச்சுகளும் அவன் சரமாரியாய்ப் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்பீர்கள். ஆனால், கொங்கணப்பட்டி கூத்தில் செய்தபடி நடுவில் விழுந்தடித்து ஓடாவண்ணம், அவன் கால் ஒன்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும். உங்களைக் கண்டதும் அவன் ஒண்ணரை டிராம் வாங்கி வரும்படி கெஞ்சிக் கேட்பான். "ஆகட்டும்" என்று சொன்னால் சந்தோஷமாய்ப் பேசிச் சிரிக்கப் பண்ணுவான். "மாட்டேன்" என்றீர்களோ திட்டுவான். அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குங்கூட இன்னும் அவன் சிரிப்பு மூட்டித்தான் வருகிறான். ஆனால் அவன் மனைவி பத்மாவதி அவனைக் காணும்போதெல்லாம் துக்கந்தாங்காமல் கண்ணீர் விடுகிறாள்; குழந்தைகளோ வெட்கித் தலைகுனிகிறார்கள்.
-----------
70. அரசூர் பஞ்சாயத்து
அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம் சொத்துக்காரன். ஆகையால் முதல் தாரம் செத்துப் போனதும் இரண்டாவது மனைவி கலியாணம் செய்து கொண்டான். இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கொஞ்ச காலத்துக்கெல்லாம் சின்னசாமிப் படையாச்சி இறந்து போனான். அப்போது அமிருதத்துக்கு வயது பதினாலு.
காமாட்சி - இதுதான் சிறிய தாயார் பெயர் - அமிருதத்தைப் பிரியமாய் வளர்த்து வந்தாள். அமிருதம் பார்வைக்கு லக்ஷணமாயிருப்பாள். பள்ளிக்கூடத்தில் நாலாவது வரையில் படித்திருந்தாள். அவளைத் தன் தம்பி வைத்தியலிங்கத்துக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்று காமாட்சிக்கு ஆசை.
அமிருதத்துக்குச் சொந்தத் தாய் மாமனின் மகன் சந்திரகாசன். அமிருதமும் அவனும் குழந்தை பிராயம் முதல் கூடி விளையாடியவர்கள். அமிருதத்தின் தாயார் உயிர் வாழ்ந்தபோது சந்திரகாசு சில சமயம் அரசூருக்கு வருவான். சில சமயம் அமிருதம் சேமங்கலத்திற்குப் போவாள். அப்போதிருந்தே அமிருதத்தைச் சந்திரகாசனுக்குக் கொடுப்பதாகப் பேசி வந்தார்கள். அமிருதத்தின் தாயார் அடிக்கடி இதைப்பற்றிச் சொல்லுவாள். குழந்தைக்குப் பல் முளைப்பதற்கு முன்னிருந்து, - ஏன்? சில சமயம் கர்ப்பத்திலிருக்கும்போதே - கல்யாணப் பேச்சுப் பேசுவது நம் ஊர்களில் வழக்கமல்லவா?
வெகு நாளாகப் பழகி நேசங்கொண்ட சந்திரகாசனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று அமிருதம் பிடிவாதம் பிடித்தாள். வைத்தியலிங்கம் அவளுக்குத் திருட்டுத் தாலி கட்டிவிட எண்ணினான். ஆனால் காமாட்சி இதற்கு இடங் கொடுக்கவில்லை. அவள் அமிருதத்துக்கு எவ்வளவோ போதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படாமற் போகவே கடைசியில் அவள் சொன்னதாவது:- "நல்லது; உன் இஷ்டப்படியே செய். உன் மாமன் மகனையே கட்டிக்கொள். உங்கப்பனை உத்தேசித்துக் கல்யாணம் மட்டும் செய்து கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு இந்த வீட்டு வழி நீ அடி எடுத்து வைக்கக்கூடாது. செருப்பாலடித்த சல்லிகூடக் கொடுக்க மாட்டேன். அப்புறம் என்மீது குறைப்படாதே. சந்திரகாசு கள்ளுக் குடிக்கிறான் என்று சொல்லுகிறார்கள். அவனுக்குச் சொத்து கிடையாது. ஓட்டைக்குச்சு வீடுதான் ஆஸ்தி. யோசித்து முடிவு செய்" என்றாள்.
அரசூரில் பாதிப் பேருக்குமேல் குடிப்பவர்கள். ஆகையால் சந்திரகாசு கள்ளுக் குடிப்பது அமிருதத்துக்குப் பெருங் குற்றமாகத் தோன்றவில்லை. இருந்தாலும் அவளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இந்தக் குற்றம் அவன்மீது சிறிய தாயார் சொல்லும்படியாயிற்றே என்று எண்ணினாள். குடிக்காமலிருந்தால் நன்றாகத்தான் இருக்கும். எப்படியும் கல்யாணம் ஆகிவிட்டால் குடியை விடும்படி செய்துவிடலாம் என்று நினைத்தாள். கல்யாணம் ஆயிற்று.
*****
அமிருதம் ரொம்ப ரோஸக்காரி. சிற்றன்னையின் வார்த்தை அவள் மனதில் நன்றாய்ப் பதிந்திருந்தது. கல்யாணத்திற்குப் பிறகு அவள் தன் பிறந்தகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. தம்பியின் கல்யாணத்துக்கு மட்டும் ஒரே ஒரு தடவை போனாள். அப்போது அவளுக்கு ஒரு பட்டுச் சேலை கொடுத்தார்கள். கல்யாணத்தன்று மாத்திரம் அதை உடுத்திக்கொண்டு உடனே திருப்பிக் கொடுத்துவிட்டாள். தம்பியும் சிறிய தாயாரும் எவ்வளவோ கெஞ்சியும் அவள் அதைத் தன்னுடன் எடுத்துவரவில்லை.
அவர்களுடைய வாழ்க்கை கூடியவரை சந்தோஷமாகவே இருந்து வந்தது. சந்திரகாசு ஒரு ஏர் பயிர்ச் செலவு செய்து வந்தான். சாகுபடி இல்லாத காலத்தில் கூலி வேலைக்குப் போவான். ஏதோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்து வந்தது. ஏழை வீட்டில் பிறந்த அவன் பள்ளிக்கூடம் போனதில்லை. அமிருதத்தின் சகவாசத்தால் அவனுக்கு இப்போது படிப்பில் ருசி உண்டாயிற்று. கொஞ்ச காலம் இரவுப் பள்ளிக் கூடத்துக்குப் போய் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான். அமிருதமும் சில சமயம் தெரிந்த வரையில் சொல்லிக் கொடுத்தாள். கள்ளுக்கடை ஒன்றுதான் அவர்கள் சந்தோஷத்துக்குத் தடையாயிருந்தது.
ஆனமட்டும் முயன்றும் சந்திரகாசுவினால் குடியை நிறுத்த முடியவில்லை. சில சமயம் ஒரு வாரம் இரண்டு வாரம் பல்லைக் கடித்துக் கொண்டிருப்பான். அப்புறம் ஒருநாள் புத்தி பேதலித்துவிடும். ஆயினும் அவன் பெருங் குடிகாரனாகவில்லை. அமிருதத்தின் அன்பு அவனை அடியோடு படுகுழியில் விழாமல் காப்பாற்றி வந்தது.
பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. அன்று முதல் சந்திரகாசு குடியை எப்படி விடுவது. பணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான். ஒரு நாள் முருகப்பக் கங்காணி சேமங்கலத்துக்கு வந்ததும் கினாங்குக்குப் போவதுதான் வழியென்று தீர்மானித்து விட்டான்.
2
இரவு பன்னிரண்டு மணி. இன்பமான வெண்ணிலவு. சந்திரகாசுவும் அவன் மனைவியும் வீதியில் விரித்திருந்த ஒரு பழம் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் இன்னும் ஒரு வயது நிரம்பாத அவர்கள் குழந்தை பாயில் தூங்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் தொங்கிய சுருட்டை மயிர் இளங்காற்றில் சிறிது அசைந்தாடிற்று. குடிசைத் திண்ணையில் கிழவி - சந்திரகாசுவின் தாயார் - படுத்துப் பெருங் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
"எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு வருஷம் பொறுத்திரு. உன்னையும் குழந்தையையும் விட்டுவிட்டு நான் ரொம்ப நாள் இருப்பேனா? கையில் ரூபாய் சேர்ந்ததோ இல்லையோ, ஓடிவந்து விடுகிறேன்" என்றான் சந்திரகாசு.
"ஐயோ! அதெல்லாம் முடியாது. நமக்குப் பணமும் வேண்டாம்; எதுவும் வேண்டாம். ஏதோ நாலு காசு நீ சம்பாதித்து வருவதே போதும். கூழோ கஞ்சியோ குடித்துவிட்டுச் சிவனே என்று இருப்போம்" என்றான் அமிருதம்.
"இதுதான் பெண்பிள்ளை புத்தி. கொஞ்சநாள் கஷ்டப்பட்டால் பின்னால் எப்போதும் சுகமாய் இருக்கலாமென்பது உனக்குத் தெரியவில்லையே" என்றான் சந்திரகாசு.
"நீ மாத்திரம் புத்தியாய்ப் பேசுகிறாயா? நீ அக்கரை சீமைக்குப் போய்ப் பணம் தேடி வருவது என்ன நிச்சயம்? அக்கரைச் சீமை போனவர்கள் எத்தனையோ பேர் திரும்பி வருவதேயில்லை" என்று அமிருதம் சொன்னாள்.
சந்திரகாசு சிரித்தான். அன்று மாலை முழுவதும் அவன் கங்காணியிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பி வந்தபடியால் அமிருதத்தின் பேச்சைக் கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"முருகப்பக் கங்காணிக்கு இப்பொழுது ஒரு லட்ச ரூபாய் சொத்திருக்கிறது. அவன் பினாங்குக்குப் போனபோது கையில் ஓட்டாஞ் சல்லிக் கூடக் கிடையாது" என்றான்.
"ஏன் இப்படிப் பணம் பணம் என்று அடித்துக் கொள்கிறாய்? இந்தக் குஞ்சானின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதாதா?" என்று சொல்லி அமிருதம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
ரோஜா மொட்டு ஒன்று திடீரென வெடித்து மலர்ந்தாற்போல அப்போது குழந்தையின் இதழ்கள் சற்றே விரிந்து புன்னகை பூத்தது. கண்மட்டும் திறக்கவில்லை. பின்னர் மறுபடியும் அதன் இதழ்கள் குவிந்தன. தூக்கத்திலுங்கூடத் தாயின் அன்பு அதற்கு மகிழ்வூட்டியதோ? அல்லது இன்பக் கனவு கண்டதோ? யார் கண்டார்கள்?
"இவனுக்காகத்தான் நான் போக வேண்டுமென்கிறேன். நீயும் நானும் மட்டுமானால் கவலையில்லை. கிழவி இரண்டொரு வருஷத்துக்குமேல் இருக்கமாட்டாள். ஆனால் குழந்தையை நினைத்தால் தான் எனக்குப் பணம் சேர்க்கும் ஆசை உண்டாகிறது. ஐந்துவயதில் நான் மாடு மேய்த்தது போல் இவனையும் மாடு மேய்க்க விடப் போகிறோமா? பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாமா? சொக்காய் குல்லாய் வாங்கிக் கொடுக்க வேண்டாமா? பார், இப்பொழுதுகூட இவன் கைக்குத் தங்கக் காப்பு செய்துபோட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்றான் சந்திரகாசு.
"நீ கள்ளுக் குடிக்கிற காசை என்னிடம் கொடு. நாலு மாதத்தில் குழந்தைக்குத் தங்கக் காப்பு அடித்துப் போடுகிறேன்" என்றாள் அமிருதம்.
சந்திரகாசுவுக்குக் கண்ணில் நீர் ததும்பியது. அவன் சொன்னதாவது:- "இந்த மாதிரி நீ எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. நானும் எவ்வளவோ பார்க்கிறேன். என்னால் முடியவில்லை. கள்ளுக் கடையைக் கண்டதும் வெறி வந்து விடுகிறது. ஊரை விட்டுப் போனால்தான் இந்த வெறி போகும். இரண்டு வருஷம் கண்காணாமல் இருந்தால் மறந்து போய்விடும். அதற்காகவே முக்கியமாய் நான் போக வேண்டும்."
"அங்கே மாத்திரம் கள்ளுக்கடை கிடையாதா?" என்று அமிருதம் கேட்டாள்.
"அதெப்படி அங்கே கள்ளுக்கடை இருக்கும்? இருக்காது" என்றான் சந்திரகாசு. பாவம்! போகுமிடத்திலும் 'பீர்'க்கடையும் பிராந்திக் கடையும் இருக்குமென்னும் எண்ணம் அவனுக்கு இதுவரை தோன்றவில்லை. மறுநாள் கங்காணியைக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். ஆனால் மறுநாள் பிரயாண தடபுடலில் மறந்து போனான்.
"எப்படியானாலும் நீ போகக்கூடாது. உன்னைப் பிரிந்து நான் இருக்க மாட்டேன். அப்படி என்ன பிரமாதமாகக் குடித்து விடுகிறாய்? போனால் போகட்டும். நீ சம்பாதிக்கும் பணம்தானே? இப்போது நாம் பட்டினியா கிடக்கிறோம்? வேணுமானால் இனிமேல் நானும் கூலி வேலைக்குப் போகிறேன்" என்றாள்.
"இப்படியெல்லாம் பேசாதே, அமிர்தி! நீ பிறர் வீட்டில் நெல்லுக் குத்தப் போவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? எல்லாம் முடிவாகி விட்டது. மாட்டை இன்று விற்றுவிட்டேன் எண்பது ரூபாய்க்கு. ஐம்பது ரூபாய் வழிச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உனக்கு முப்பது ரூபாய் கொடுத்து விட்டுப் போகிறேன். நாலு மாதத்திற்குக் குதிரில் நெல் இருக்கிறது. அதற்குள் கட்டாயம் பணம் அனுப்புகிறேன். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து எனக்குப் போக உத்தரவு கொடு. தடை சொல்லாதே!" என்றான் சந்திரகாசு.
"அப்படியானால் நானும் வருகிறேன். குழந்தையையும் எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் போவோம்" என்றாள் மனைவி.
"கிழவியை என்ன செய்வது? அவளைச் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்க விட்டு விடலாமா?" என்று சந்திரகாசு கேட்டான்.
"ஐயோ! எனக்கு அழுகை வருகிறது" என்றாள் அமிருதம். அப்படியே அழத் தொடங்கினாள். சந்திரகாசன் வெகு நேரம் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
3
சந்திரகாசு பினாங்குக்குப் புறப்பட்டுச் சென்ற நான்காவது மாதத்தில் அமிருதம்மாளுக்கு ஒரு கடிதம் வந்தது. தபால்காரன் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டணா கேட்டான். அமிருதம் வீட்டிற்குள் ஓட்டமாய் ஓடிப் பழைய பெட்டியொன்றில் துழாவி, இரண்டணா எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். கடிதத்தை வாங்கி உடைத்துப் படித்தாள். அதிலே சந்திரகாசன் எழுதியிருந்த மொழிகளையும், பிரியமான வசனங்களையும் அவன் எங்கேதான் கற்றுக் கொண்டானோ தெரியாது. ஒவ்வொரு வரி படிக்கும் போதும் அமிருதத்துக்கு மயிர்க் கூச்சல் எறிந்தது. நாலுவரி படித்துவிட்டு, அவள் அழுதாள். இன்னும் நாலு வரி படித்துவிட்டுச் சிரித்தாள். இடையிடையே கடிதத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாள். இரண்டு மூன்று தடவை படித்தாள். பிறகு அதைக் கிழவியிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டினாள். மறுபடி குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கடிதம் முழுவதையும் அதற்குப் படித்துக் காட்டினாள். குழந்தையும் ஏனோ சிரித்தது. அதன் முகத்தில் கடிதத்தை வைத்து முத்தமிடச் செய்தாள். கடைசியாகப் பெட்டியில் பத்திரமாக வைத்துப் பூட்டினாள்.
இரண்டு மாதங் கழித்து இன்னொரு கடிதம் வந்தது. அடுத்த மாதம் கட்டாயம் பணம் அனுப்புவதாக அதில் எழுதியிருந்தது. பின்னர் இரண்டு மாதங் கழித்து வந்த கடிதத்திலும் இப்படியே எழுதியிருந்தது. இதற்குள் குதிரில் இருந்த நெல்லெல்லாம் தீர்ந்து போயிற்று. பணத்திலும் பத்து ரூபாய் செலவழிந்து விட்டது. பாக்கி இருபது ரூபாயும் ஆபத்துக்கு வேண்டுமென்று அமிருதம் பத்திரப் படுத்திவிட்டுக் கூலி வேலை செய்ய ஆரம்பித்தாள். நெல்லுக் குத்தவும் களையெடுக்கவும் போனாள். அந்த நேரங்களில் கிழவி குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே ஒன்றரை வருஷ காலம் சென்றது. இரண்டு மாதத்திற்கொரு முறை சந்திரகாசுவிடமிருந்து தவறாமல் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஆனால் பணம் மட்டும் ஒரு தம்பிடி கூட வந்தபாடில்லை. அமிருதத்துக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பகலெல்லாம் வெளியிலும், இரவில் வீட்டிலும், உழைத்து உழைத்து அவள் அலுத்துப் போயிருந்தாள். வெகுநாளாய், 'அனுப்புகிறேன், அனுப்புகிறேன்' என்று தன் புருஷன் ஆசை காட்டி வரும் பணம், உண்மையில் எப்போதுதான் வந்து சேருமோவென்று அவள் ஏக்கப்படலானாள். தபால்காரனைக் கண்டபோதெல்லாம் விசாரித்தாள். ஆனால் அவள் சந்திரகாசனுக்கு எழுதிய கடிதங்களில் இந்த ஆவலை அதிகம் வெளிக்காட்டவில்லை. கடைசியாக எழுதிய ஒரு கடிதத்தில் பணம் வந்து சேரவில்லையென்றும், மணியார்டர் தப்பிப் போயிருக்குமோவென்று சந்தேகப்படுவதாகவும், ஒருவேளை இதுவரை அனுப்பியிராவிட்டால் தெரிவிக்க வேண்டுமென்றும், கொஞ்சம் பணம் வந்தால் குழந்தைக்கும் கிழவிக்கும் சௌகரியமாய்த்தான் இருக்குமென்றும் எழுதினாள்.
இதற்குச் சந்திரகாசுவிடமிருந்து வந்த பதிலை படித்ததும் அமிருதம் இடி விழுந்ததுபோல் திடுக்கிட்டுப் போனாள். அவன் எழுதியிருந்தான்:- "உன்னிடம் இத்தனை காலமாய் ஒரு விஷயம் மறைத்து வைத்திருந்தேன். இனிமேல் சொல்லாமலிருக்கக்கூடாது. நான் கிளம்பிய அன்றைக்கு முதல் நாளிரவு நாம் நிலவில் உட்கார்ந்து பேசியது நினைவிலிருக்கிறதா? முக்கியமாக, கள்ளுக்கடையை மறப்பதற்குத்தான் நான் அக்கரை சீமைக்குப் போவதாகச் சொன்னேன். இங்கே கடை இராதென்று நினைத்தேன். ஐயோ! ஏமாந்து போனேன். அந்தப் பாழும் கடைகள் இங்கேயும் இருக்கின்றன. சம்பளம் அதிகம்தான் கொடுக்கிறார்கள். ஆனால் சாப்பாடுப்போக மிச்சமெல்லாம் குடிக்குத்தான் போகிறது. ஊரிலாவது எனக்குப் புத்தி சொல்லித் தடுக்க நீ இருந்தாய். இங்கே நீயும் இல்லை. அப்படியும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முப்பது வெள்ளி சேர்த்து உனக்கு அனுப்பலாமென்று வைத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்பு நான் குடித்துவிட்டுப் புத்தி தப்பியிருக்கையில் யாரோ பாவிகள் அதைக் கொண்டுபோய் விட்டார்கள். ஐயோ! நீங்கள் படும் கஷ்டத்தை நினைத்தால் வயிறு பகீரென்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவாகவே யிருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் எப்படியும் பணம் அனுப்புகிறேன்."
அமிருதம் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. ஓயாமல் அழுதுகொண்டேயிருந்தாள். புருஷன் க்ஷேமமாய் ஊர் வந்து சேர வேண்டுமென்று தெய்வங்களையெல்லாம் வேண்டினாள். மறுநாள் ஒரு கடிதம் எழுதினாள்.
பணம் சம்பாதித்தது போதுமென்றும், உடனே புறப்பட்டு வந்து விடும்படியும் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். "உங்கம்மாள் மேல் ஆணை; என் தலை மேல் ஆணை; குழந்தை மேல் ஆணை; மாரியம்மன் மேல் ஆணை; நீ இனிமேல் கள்ளுக்கடை வழிபோகக்கூடாது" என்று சபதம் வைத்தாள்.
சந்திரகாசு இதற்கெழுதிய பதிலில் தான் குடிப்பதை விட்டு விட்டதாகவும், இனிமேல் பணம் சேர்ந்து விடுமென்றும், இரண்டு மாதத்தில் நூறு ரூபாய் அனுப்புவதாகவும், பின்னர் ரூபாய் இரு நூறு சம்பாதித்துக் கொண்டு திரும்பி விடுவதாகவும் எழுதியிருந்தான்.
இப்படியே ஐந்து வருஷம் சென்றது. சந்திரகாசனாவது, பணமாவது வந்து சேர்ந்தபாடில்லை. இதற்கிடையில் கிழவி செத்துப் போனாள். அமிருதம் ஆபத்துக்கென்று வைத்திருந்த இருபது ரூபாயைக் கிழவியின் அந்நிய காலத்தில் அவளுக்கு வேண்டியது செய்வதற்குச் செலவழித்து விட்டாள். அடுத்த வருஷம் அவளே காயலாவாய்ப் படுத்துக் கொண்டாள். ஒரு மாதம் ரொம்பவும் கஷ்டப்பட்டாள். அந்தச் சமயத்தில் கல்லும் உருகும்படியான ஒரு கடிதம் அவள் சந்திரகாசுவுக்கு எழுதினாள்.
4
கடிதம் ஒன்று வந்தது. "ரூபாய் நூறு மணியார்டர் செய்திருக்கிறேன்" என்ற வார்த்தைகளை படித்தபோது அமிருதத்தால் நம்பவே முடியவில்லை. உண்மையாகவே அப்படி எழுதியிருக்கிறதாவென்று திரும்பி திரும்பிப் படித்தாள். பிறகு ஓடிப்போய்த் தபால்காரனை வழிமறித்துக் கேட்டாள். "கடிதம் முதலில் வந்துவிடும். பணம் மெதுவாய்த்தான் வரும். பதினைந்து நாள் ஆகும்" என்று தபால்காரன் சொன்னான்.
ஒரு வாரத்திற் கெல்லாம் குழந்தைக்கு வைசூரி வார்த்தது. அமிருதம் பெரிதும் கவலைப்பட்டாள். பணம் வந்ததும் ஊர்க் கோயில்களுக்கெல்லாம் அபிஷேகம் செய்து வைப்பதாய் வேண்டிக் கொண்டாள். ஒவ்வொரு நாள் காலையும் தூக்கம் விழித்ததும், 'இன்று பணம் வராதா?' என்று எண்ணிக் கொண்டே எழுந்திருந்தாள்.
வெள்ளிக்கிழமை வந்தது. "ஐயோ! இன்று பணம் வந்தால் மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாமே?" என்று நினைத்தாள். தபால்காரன் வருகிறானாவென்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசியாக, உச்சி வேளையில் தபால்காரன் வந்தான். மணியார்டரும் கொண்டு வந்தான். அமிருதம் தன் கலி தீர்ந்துவிட்டது, தான் தெய்வங்களை வேண்டியதெல்லாம் வீண் போகவில்லையென்று எண்ணினாள்.
தபால்காரன் சாட்சி போடுவதற்கு ஒருவனைக் கூட அழைத்து வந்திருந்தான். அவன் அந்த ஊர்க் கள்ளுக்கடைக் குத்தகைக்காரன். தபால்காரன் அமிருதத்தினிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு குத்தகைக்காரனிடம் சாட்சியும் வாங்கிக்கொண்டான். பிறகு, தொண்ணூற்றெட்டு ரூபாய் எண்ணிக் குத்தகைக்காரனிடம் கொடுத்தான். பிறகு அமிருதத்தைப் பார்த்து, "நூறு ரூபாய் வந்தால் ஐந்து ரூபாய் வாங்குவது வழக்கம். நீங்கள் ஏழையானதால் இரண்டு ரூபாய் எடுத்துக் கொண்டேன்" என்றான் தபால்காரன்.
அமிருதம் அவர்கள் செய்தது, சொன்னது, ஒன்றும் புரியாமல், பணம் பெற்றுக் கொள்வதற்காகக் கையை நீட்டினாள்.
குத்தகைக்காரன் "அம்மா! இது எனக்குச் சேர வேண்டிய பணம். உன் புருஷன் எனக்கு நாற்பது ரூபாய்க்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தான். வட்டியும் முதலும் சேர்ந்து இப்பொழுது நூற்றுப் பத்து ரூபாய் ஆகிறது. தொண்ணூற்றெட்டு ரூபாய் போனால் பாக்கி பன்னிரண்டு ரூபாய்" என்று சொன்னான்.
இடி விழுந்ததுபோல் அமிருதம் திகைத்துப் போனாள். அவள் தலை கிறுகிறுவென்று சுழன்றது. எங்கேயோ அவளையே உயரத் தூக்கிக்கொண்டு போவதுபோல் இருந்தது. அப்போது குத்தகைக்காரன், "உன்னை அடியோடு வயிற்றிலடிக்க எனக்கு மனமில்லை. இதை வாங்கிக் கொள்ளு" என்று சொல்லி, நாலு ரூபாய் எடுத்துக் கொடுக்க வந்தான். அமிருதத்துக்கு அப்போதுதான் நிலைமை என்னவென்பது கொஞ்சம் விளங்கிற்று. "ஐயோ! இதென்ன அநியாயம்! இந்த ஊரிலே கேட்பாரில்லையா?" என்று அவள் கூச்சலிட்டாள்.
கூக்குரல் போட்டதும் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் நாட்டாண்மைக்காரரில் ஒருவன் வந்தான். "இதைப் பஞ்சாயத்துப் பண்ணித்தான் தீர்க்க வேண்டும். அதுவரையில் பணம் என்னிடம் இருக்கட்டும்" என்று சொல்லி வாங்கிக் கொண்டான். அன்று சாயங்காலம் ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அந்த ஊரில் வழக்க மென்னவென்றால், எந்த வழக்குக்காகப் பஞ்சாயத்துக் கூடினாலும் வாதி பிரதிவாதி இரண்டு பேரும் சேர்ந்து பஞ்சாயத்துக்காரர்களுக்காகக் கள்ளு வாங்கி வைத்துவிட வேண்டும். வெள்ளையப்பன் உள்ளே போனால் தான் நியாயம் நன்றாய் விளங்குமென்பது அந்த ஊர்ப் பிரமுகர்கள் அபிப்பிராயம். ஆனால் இந்த வழக்கிலே வாதி ஏழைப் பெண்பிள்ளை யானதினாலும், பிரதிவாதி கள்ளுக் கடைக்காரனாதலாலும் பிரதிவாதியே எல்லாருக்கும் கள்ளு 'சப்ளை' செய்ய வேண்டியதென்று தீர்மானித்தார்கள்.
ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடிற்று. மொந்தைகள் ஏராளமாய் உருண்டன. பஞ்சாயத்துக்காரர்களுக்கு மட்டுமின்றி வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குங்கூட அன்று வெகு 'மஜா'. நெடு நேரம் நியாயம் பேசியான பிறகு, பத்திரம் காலாவதியாகி இருந்தாலும் வாங்கிய கடனைக் கொடுக்கத்தான் வேண்டுமென்றும், ஆகையால் பணம் கள்ளுக் குத்தகைகாரனுக்கே சேர வேண்டுமென்றும், இருந்தாலும் அமிருதத்தின் ஏழ்மையை உத்தேசித்து, அவளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து விட்டு 88 ரூபாய் அவன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், பத்திரத்தைக் காது கிள்ளி அவளிடம் கொடுத்து விட வேண்டுமென்றும் பஞ்சாயத்து சபையார் தீர்ப்பளித்தார்கள்.
அமிருதத்தின் அம்மை வார்த்த பையன் நாலு நாளைக்கெல்லாம் இறந்து போனான். பஞ்சாயத்துச் செய்தவர்கள் உள்பட ஊரார் மிகவும் இரக்கப் பட்டுப் பொதுச் செலவில் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்தார்கள். அன்றைய தினமே அமிருதத்துக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரகாசன் மிகவும் நீளமாய் எழுதியிருந்தான். ஆனால் கரை காணாத துக்கத்தில் மூழ்கியிருந்த அமிருதத்துக்குப் பின்வரும் விஷயங்கள் தான் அதில் புலப்பட்டன:- "பணம் அனுப்பியதும், ஊருக்கு வந்து உன்னையும் குழந்தையையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று - வெறி பிடித்தாற்போல் இருந்தது - கையில் பணமில்லை - ஐம்பது ரூபாய் திருடிக் கொண்டு கிளம்பினேன் - பிடித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள் - இரண்டு வருஷம் கடுங்காவல் - இதுவும் நல்லதுதான் - ஜெயிலில் கள்ளு சாராயம் கிடையாது - இரண்டு வருஷத்தில் மறந்து விடுவேன் - விடுதலையானதும் உன்னைப் பார்க்க ஊருக்கு ஒரே ஓட்டமாய் ஓடி வருவேன்."
*****
மறுநாள் அமிருதம் காணாமற் போனாள். அரசூருக்கு எட்டு மைல் கிழக்கே ஒரு ஸ்திரீயின் பிரேதம் ஆற்றில் மிதந்து வந்து ஒதுங்கிற்று. அவ்வூர் கிராமாதிகாரி அதை எடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, விஷயத்தைப் போலீசுக்குத் தெரியப் படுத்தினார்.
*****
இரண்டு வருஷம் கழித்துச் சந்திரகாசு வெகு ஆவலாக ஊருக்குத் திரும்பிவந்து சேர்ந்தபோது தன் குடிசை இருந்த இடத்தில் குப்பைமேடு போடப்பட்டிருப்பதைக் கண்டான்.
------------
71. கவர்னர் வண்டி
மறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின் பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன் சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன. பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான். அஞ்சலை "கூடாது, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்" என்றாள்.
தலையாரி முத்து அவசரமாய் உள்ளே நுழைந்தான். "நான் போய்த் தொலைய வேண்டும். இந்தப் பாழும் சர்க்கார் உத்தியோகம் இப்படித்தான். நாள், கிழமை கூடக் கிடையாது" என்றான்.
"ஐயோ! இதென்ன அநியாயம்? எங்கே போக வேண்டும்? அதெல்லாம் முடியாது. இராத்திரி எப்படியும் வந்துவிட வேண்டும்" என்றாள் அவன் மனைவி மதுரம்மா.
"நான் என்ன செய்யட்டும்? யாரோ கவர்னர் துரை வருகிறானாம். ரயில் பாதை முழுவதும் காவல் காக்க வேணுமாம். கணக்குப்பிள்ளை, மணியக்காரர், தலையாரி எல்லோரும் போகிறார்கள். இந்தத் தாலூகா முழுவதும் அப்படி. ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயாகூடத் தடியைப் பிடித்துக் கொண்டு காவல் காப்பாராம்" என்று சொல்லி முத்து சிரித்தான். ரெவினியூ இன்ஸ்பெக்டரை அத்தகைய நிலைமையில் எண்ணிப் பார்த்தபோதே அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"அது எப்படியாவது பாழாய்ப் போகட்டும். பண்டிகை யன்றுதானா இந்த இழவு வந்து தொலைய வேண்டும்? எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா? ஐயோ! வெள்ளைப் பணியாரம் செய்ய மாவு அரைத்திருக்கிறேனே? நீ இல்லாமற் போனால் சந்தோஷமாகவே இராது" என்றாள் மதுரம்.
"இராத்திரி வரப்போகிறாராம் துரை. அதற்கு சாயங்கால முதல் காவல் காக்க வேண்டுமாம். வண்டி போனவுடனே புறப்பட்டு ஓடி வந்து விடுகிறேன்" என்றான் முத்து.
இதற்குள் அஞ்சலை ஓடிவந்து தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு, "அப்பா, அப்பா, எனக்குப் பூ மத்தாப்பு வாங்கிக் கொண்டு வா." என்றாள்.
சின்னான் ஓடிவந்து அரை வேட்டியைப் பிடித்துக் கொண்டு, "அப்பா, எனக்குத் துப்பாக்கி வாங்கி வர வேண்டும். என்ன, வாங்கி வருகிறாயா, சொல்லு. இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன்" என்றான்.
"பணியாரமெல்லாம் ஆறிப்போகும். சுடச் சுடச் தின்றால்தானே தேங்காயப்பம் நன்றாயிருக்கும்? உனக்குப் பிடிக்குமே? நீ போகாதிருந்து விட்டாலென்ன? உடம்பு காயலாவென்று சொல்லி விடேன்" என்றாள் மதுரம்.
"ஐயோ! தலை போய்விடும். இருபது வருஷமாய் வேலை பார்த்துவிட்டு இப்போது கெட்ட பெயர் எடுக்கலாமா? இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள்? சர்க்கார் உத்தியோகம் இலேசா?" என்றான் முத்து. தான் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்னும் விஷயத்தில் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பெருமையுண்டு.
பிறகு, மத்தாப்புப் பெட்டியும், விளையாட்டுத் துப்பாக்கியும் வாங்கி வருவதாகக் குழந்தைகளுக்கு வாக்களித்துவிட்டு முத்து புறப்பட்டுச் சென்றான்.
2
ஐப்பசி மாதத்து அடை மழை. வானம் ஓயாது கறுத்து இருண்டிருந்தது. பகலிலேயே வெளிச்சம் சொற்பம். இரவில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த அந்தகாரத்தினிடையே ஒவ்வொரு சமயம் மின்னல் பளிச்சென்று வீசி ஒரு மணிநேரம் பிரகாசம் உண்டு பண்ணி வந்தது. சில சமயம் 'சோ' வென்று மழை கொட்டும். சில சமயம் தூற்றல் போடும். அபூர்வமாக ஒவ்வொரு சமயம் தூற்றல் நிற்கும். ஆனால் ஊதல் காற்று மட்டும் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.
அதோ வரிசையாக வெகு தூரத்துக்கு மின் மினிபோல் தெரிகின்றதே, அதெல்லாம் என்ன? கம்பங்கள் நாட்டிய விளக்குகளா? - இல்லை. ரயில் பாதையின் இருபுறமும் சுமார் ஐம்பது கஜத்துக்கு ஒருவர் வீதம் மனிதர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் லாந்தர்கள் அவை. அப்படி நின்று கொண்டிருப்பவர்களில் நமது தலையாரி முத்துவும் ஒருவன். ஒரு கையில் லாந்தரும், மற்றொரு கையில் தடியும் பிடித்துக் கொண்டிருக்கிறான். வாடைக்காற்று 'விர்' என்று அடிப்பதால் அவன் உடம்பு குளிரினால் 'வெடவெட' வென்று நடுங்குகிறது. பல்லுக் கிட்டுகிறது. மேலே மழைக்கு ஒரு கோணிப் பை. மழை கோணிப் பைக்குள் நுழைந்து முதுகுக்கு வந்து வெகு நேரமாயிற்று. உடுத்திய வேட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
சர்க்கார் உத்தியோகத்துக்குத் தலை முழுகிவிட்டு ஓடிப் போகலாமா என்று நினைத்தான் முத்து. மதுரம் சொன்ன புத்திமதியை அப்போதே கேட்காமற் போனோமே என்று வருந்தினான். இத்தனை நேரம் கஷ்டப்பட்டது பட்டோ ம், இனிக் கொஞ்ச நேரந்தானே, இருந்து தொலைப்போம் என்று தைரியமடைந்தான். இதனிடையில் அடிக்கடி தன் மனைவி சுடச் சுடப் பணியாரம் செய்து கொண்டிருப்பாளென்பது ஞாபகம் வந்தது. "போகட்டும், பெண்சாதியும் குழந்தைகளுமாவது தின்பார்களல்லவா?" என்று எண்ணி ஆறுதல் அடைந்தான்.
சாயங்காலம் நாலு மணிக்கு ஆரம்பித்த காவல் இரவு ஏழு மணி, எட்டு மணி, ஒன்பது மணியாகியும் முடியவில்லை. முத்துவுக்கு அந்த ஐந்து மணி ஐந்து யுகமாயிருந்தது. "ஏது? இனிமேல் தாங்காது" என்று அவன் தீர்மானித்த சமயத்தில், அங்கே கையில் தாழங்குடையும், உடம்பில் கம்பளிச் சட்டையும், தலையில் குரங்குக் குல்லாயும் தரித்து ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் கிராம முன்சீப் குருசாமி உடையார். ஊரில் பெரிய பண்ணைக்காரர் அவர்தான். நாற்பது வேலி நிலமும், ஒரு 'ல'கரம் ரொக்கமும் அவருக்குண்டு; ஆனாலும் தலையெழுத்து யாரை விட்டது?
"முத்து உஷார்! ஆயிற்று, இன்னும் அரை நாழிகைக்குள் வண்டி வந்துவிடும்" என்றார் கிராம முன்சீப்.
"எங்கப்பனாணை! இனிமேல் என்னால் முடியாது. நான் ஓடிப்போகிறேன், சாமி!" என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் முத்து.
குருசாமி உடையாருக்கு முத்துவின் மேல் அபாரப் பிரியம். வேலையில் எப்போதும் முத்து கொஞ்சம் இழுப்புத்தான். ஆனால் பொய், புனைசுருட்டு, திருட்டுப் புரட்டு என்பது அவனிடம் கிடையவே கிடையாது. ஒரு வகையில் முத்துதான் கிராம முன்சீப்புக்கு மந்திரி என்று கூடச் சொல்லலாம். குருசாமி உடையாரின் குடும்ப யோக க்ஷேமம் எதுவும் முத்துவுக்குத் தெரியாததில்லை.
"அடே! புத்தி கெட்டவனே! இங்கே வா, நான் சொல்றதைக் கேளு" என்றார் முன்சீப்.
சட்டைப் பையிலிருந்து நாலணா எடுத்து, முத்துவின் கையில் கொடுத்தார். "இதோ பார்! உன் ஆசாரம், பக்தி, பூஜையெல்லாம் மூட்டை கட்டி வை. பக்கத்தில் அதோ கடையிருக்கிறது. போய் ஒரு புட்டி குடித்துவிட்டு வா. குளிரெல்லாம் பறந்து போய்விடும். அதுவரையில் நானே இங்கே பார்த்துக் கொள்ளுகிறேன். ஓடிவந்து விடு." என்றார்.
*****
முத்துவுக்கு மதுபானம் கெடுதல் என்ற நம்பிக்கை உண்டு. அவன் தெய்வ பக்தியுள்ளவன். கள்ளுக் குடித்தால் சுவாமிக்கு கோபமுண்டாகுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. அதிலும் அவன் மனைவி இது விஷயத்தில் மிகவும் கண்டிப்பாய் இருந்தாள். ஒருநாள் அவன் கொஞ்சம் புத்தி பிசகிச் சகவாச தோஷத்தினால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது மதுரம் படுத்திய பாடு நன்றாய் அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. "கிணற்றில் விழுந்து உயிரைவிடுகிறேன்" என்று அவள் ஓடியதும், அவளைத் தடுத்து நிறுத்தத்தான் பட்ட கஷ்டமும் அவனுக்கு ஞாபகம் இருந்தன. அது முதல் அவன் தப்பித் தவறிக் கூடக் கள்ளு சாராயக் கடைப்பக்கம் போவதில்லை. ஆனால் இப்போதோ?...
கிராம முன்சீப்பின் போதனையும், குளிரின் கொடுமையும் சேர்ந்து அவன் உறுதியை மாற்றிவிட்டன. "அவளுக்குத் தெரியப் போவதில்லை" என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். பணத்தை வாங்கிக் கொண்டுபோய்க் கால்மணி நேரத்தில் திரும்பி வந்தான்.
"தாகசாந்தி செய்து கொண்டாயா? அதுதான் சரி முத்து! குளிரெல்லாம் பறந்து போயிற்றல்லவா? இன்னும் கொஞ்சம் பொறு; ஊருக்குப் புறப்பட்டுவிடலாம்" என்று சொல்லி விட்டுக் குருசாமி உடையார் தமது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
3
முத்துவின் குளிர் பறந்து போயிற்று. ஆனால் அத்துடன் இன்னும் ஒன்றும் பறந்துவிட்டது. அது என்ன? உணர்ச்சி! உணர்ச்சி இருந்தால் அல்லவா குளிர் தெரியும்? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புத்தி தடுமாற ஆரம்பித்தது. பிறகு மயக்கம் அதிகமாயிற்று. உலகம் கிறுகிறுவென்று சுழன்றது. கையிலிருந்த விளக்குக் கீழே விழுந்து உடைந்து அணைந்தது. ஒரு தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு முத்து நின்றான். கம்பங்கூடச் சரியாய் நிற்காமல் சுழல ஆரம்பித்தது. ஏற்கெனவே காரிருள். இப்போது கண்ணும் இருண்டபடியால் கனாந்தகாரமாயிற்று.
திடீரென்று தூரத்திலே ஒரு பெரிய வெளிச்சம் காணப்பட்டது. "அதென்ன பேயா? பூதமா? ஆமாம், தெரிந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு! பயங்கரமான சத்தமிட்டுக் கொண்டு அது மேலே மேலே அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. இதோ அருகில் வந்து விட்டது. என்ன கொடிய பெரிய உருவம்! அதன் வாயில் எவ்வளவு பயங்கரமான தீ! ஐயோ! அது என்னை இழுக்கின்றதே! இதென்ன? நேரே அதன் வாயில் போய் விழுகிறேனே! ஓஹோ! உடையார் ஐயா! மாரியாயி!" அடுத்த கணத்தில் கவர்னர் துரையின் ஸ்பெஷல் ரயில் முத்துவின் உடம்பை ஆயரந் துகளாகச் செய்துவிட்டுப் பறந்து சென்றது. முத்துவின் உயிரும் இப்பூவுலகை விட்டுப் பறந்து போயிற்று.
"மேன்மை தங்கிய கவர்னர் துரையும் அவருடைய பரிவாரங்களும் சௌக்கியமாகத் துவரை நகரம் சேர்ந்தார்கள்" என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று.
தலையாரி முத்துவின் மனைவி தீபாவளியன்று காலையில் பணியாரம் செய்து வைத்துக் கொண்டு புருஷன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். சின்னானும், அஞ்சலையும் நிமிஷத்துக் கொருமுறை வாசல்புறம் போய் மத்தாப்பூ, துப்பாக்கியுடன் அப்பா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
*****
சமீபத்தில் நான் மாயவரம் போனபோது கிராம முன்சீப் குருசாமி உடையாரிடமிருந்து மேற் சொன்ன விவரங்களைக் கேட்டறிந்தேன். உடையார் இப்போது மதுவிலக்கு இயக்கத்தில் பிசாசு பிடித்தவர் போல் வேலை செய்து வருகிறார். தற்போது அவரிடம் யாராவது சென்று கள்ளு, சாராயத்துக்குச் சாதகமாகப் பேசிவிட்டால் அவர்கள் தப்பிப் பிழைத்து வருவது கஷ்டந்தான்.
------------
72. தண்டனை யாருக்கு?
இருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் போகிறார்கள் பாருங்கள்! அதிலும் மறுநாள் பொங்கல் பண்டிகை. ஆதலால் குதூகலம் அதிகம். ஆனால் சந்தோஷம், சிரிப்பு, குதூகலம் எல்லாம் கடைக்குள் நுழையும் வரையில்தான். கடையில் நுழைந்து இரண்டு புட்டி குடித்துவிட்டால்?
2
சந்தோஷமாய்ப் பேசிச் சிரித்துக்கொண்டு கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வருகையில் விரோதிகளானார்கள். குடிவெறி ஏறியதும் காரணமில்லாமல் திடீர் திடீரென்று கோபம் வந்தது. பேச்சு வலுத்துக் கூச்சலாயிற்று. முகங்கள் கோரமாயின. வாய்ச் சண்டை முற்றிக் கைச் சண்டையாக முடிந்தது. சிறியதோர் கலவரம். ஆனால் இது இவ்வளவுடன் போகுமா?
3
சில சமயம் பெரிய சண்டையும் ஆகும். குடி வெறியில் தலைகால் தெரியாது. கத்தியோ, அரிவாளோ, மண்வெட்டியோ கையில் அகப்பட்டதை எடுத்துக் கொள்வார்கள். கொலை நடப்பதும் உண்டு.
4
போலீஸார் சும்மா இருப்பார்களா? சர்க்கார் லைஸென்சு பெற்ற கள்ளுக்கடையில்தானே குடித்தான் என்று அவர்கள் தாட்சண்யம் காட்டுவதில்லை. கலகம் செய்தவனைப் பிடித்துக் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு போகிறார்கள். இப்போது குடிவெறி கொஞ்சம் தணிந்தது. ஆனால் என்ன செய்யலாம்? 'ஐயோ! கெட்டேனே!' என்று கண்ணீர்விட்டு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. வீட்டையும் மனைவி மக்களையும் நினைக்கும்போது துக்கம் அதிகமாகிறது.
5
வெளியில் போன புருஷன் வரக்காணோமே என்று மனைவியும் மக்களும் வீட்டுவாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எத்தனை நேரம் காத்திருந்தால்தான் என்ன பயன்? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனவன் வீட்டுக்கு எப்படி வருவான்? மறுநாள் பொங்கல் பண்டிகை எவ்வளவோ சந்தோஷமாய்க் கொண்டாடலாமென்று எண்ணியிருந்தார்கள். பாழுங்கள்ளினால் அது பெரிய துக்க தினமாயிற்று.
6
சண்டையில் குத்தப்பட்டவன் இறந்து போனான். குத்தியவன் மீது கொலைக்குற்றம் சாட்டிக் கச்சேரியில் விசாரணை நடக்கின்றது. "நீ கத்தியால் குத்திய துண்டா?" என்று மாஜிஸ்ட்ரேட் கேட்கிறார். "குத்தியதுண்டு, எஜமானே! ஆனால் சுயபுத்தியுடன் செய்யவில்லை, குடிவெறியில் குத்திவிட்டேன். கள்ளுதான் காரணம்" என்று பதில் சொன்னான். மாஜிஸ்ட்ரேட் என்ன தீர்ப்பளிப்பார்?
7
குடியானவனுக்கு தூக்குத் தண்டனை அளித்தார். ஆனால் அது நீதியாகுமா? அதற்கு மாறாக -
8
தூக்குத்தண்டனை கள்ளுக்கு விதிப்பதன்றோ நியாயமாகும்? உண்மைக் குற்றவாளி அந்தப் பாழும் கள்ளே யல்லவா?
----------
73. சுயநலம்
கள்ளுக்கடை மூடுவதா? கூடவே கூடாது. ஏழு கள்ளுக்கடை குத்தகை எடுத்திருக்கிறேன். வருஷத்தில் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. சர்க்காருக்கு அதைப்போல் மூன்று பங்கு கந்தாயம் கட்டுகிறேன். கள்ளுக்கடை ஏன் மூடவேண்டும்?
2
நான் எப்படி சிறைக்கு வந்து சேர்ந்தேன் என்றா கேட்கிறீர்கள்? கள்ளுக்கடை வழியாகத்தான். சிறைச்சாலையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு கள்ளுக்கடையைப்போல் குறுக்கு வழி வேறு கிடையாது.
3
முன்னோர் அரும்பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கள் இறக்கப் பயனாகி நாசமாய்ப் போகின்றன. ஆனால் கைமேல் வரும் ரொக்கப் பணத்தை வேண்டாமென்று சொல்ல முடியுமா? கள்ளுக்கடை போய்விட்டால் நமக்குப் பிழைப்புப் போய்விடுமே! பாவம், பழியென்று பார்த்தால் இந்தக் காலத்தில் முடியாது.
4
என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுகிறார்கள். முட்டாள் ஜனங்கள். பைத்தியத்தின் ஆனந்தம் அவர்களுக்கு என்ன தெரியும்? அந்த ஆனந்தத்தை அநுபவிக்க வேண்டுமானால் முதலில் கள்ளுக் குடித்துப் பயிலுங்கள். அதன் மூலம் கொஞ்சங்கொஞ்சமாகப் புத்தியைக் கடந்து நின்று பழகி வந்தால், கடைசியில் என்னைப் போன்ற நிரந்தர ஆனந்த நிலைக்கு வந்து சேரலாம்.
5
பிரிட்டிஷ் சர்க்காரின் பெருமையே பெருமை! அந்த சர்க்கரைத் தாங்கி நிற்கும் இந்தக் கள்ளுப் பீப்பாயின் மகிமையே மகிமை! சென்னை சர்க்காரின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கள்ளுக்கடை கொடுக்கிறது. இதில் பெரும் பகுதியை ஏழை எளியவர்கள், அன்றையக் கஞ்சிக்கில்லாதவர்களிடமிருந்து வசூல் செய்கிறோம்! வேறு எந்த இலாகாவேனும் இவ்வளவு அரிய ஊழியம் செய்கிறதா? கள்ளுக்கடையை மூடினால் இவ்வளவு பணமும் அல்லவா நஷ்டமாகும்? அத்துடன் எங்களுடைய உத்தியோகமும் போய்விடும். கூடவே கூடாது.
6
என் புருஷன் இன்னும் கள்ளுக் கடையிலிருந்து வரவில்லை. குழந்தைகள் பசி தாங்காமல் அழுகின்றன. ஏதாவது மீத்துக்கொண்டு வருவானோ, வெறுங்கையுடன் வருவானோ, தெரியாது. கள்ளுக்கடைகளில் இடி விழாதா?
7
கள்ளுக்கடை மூடிவிட்டால் என்னைப் போன்ற போலீஸாருக்கு பாதிவேலை மீதியாகும். ஆனால் ஒருவேளை உத்தியோகமே போய்விட்டால்? ஆமாம்! போதிய வேலையில்லையென்று பாதிப் பேரைத் தள்ளி விடுவார்கள். கூடாது, கூடாது. கள்ளுக்கடை மூடக்கூடாது.
8
நான் சாக்கடையில் விழுந்து கிடக்கிறேனென்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்களா? நல்லது; உங்கள் பிள்ளைகள் அல்லது பேரர்களுக்கு இந்தக் கதி நேரிடாதென்று யார் கண்டது? கடவுள் புண்ணியத்தில் கள்ளுக் கடைகளை மட்டும் மூடாதிருக்க வேண்டும்!
----------
74. புலி ராஜா
நமது கதாநாயகர் பிரிதிபந்தபுரம் மகாராஜா அவர்களை, ஹிஸ் ஹைனஸ் ஜமேதார் - ஜெனரல், கிலேதார் - மேஜர், சத வியாக்ர ஸ்ம்ஹாரி, மகா ராஜாதி ராஜ விசுவபுவன ஸம்ராட், ஸர் ஜிலானிஜங்ஜங் பகதூர் எம்.ஏ. - டி.ஏ.ஸி.டி.சி., ஸி.ஆர்.ஸி.கே என்றும் சொல்வதுண்டு; 'புலி ராஜா' என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. அவருக்குப் 'புலி ராஜா' என்ற பெயர் ஏன் வந்தது என்பதைத்தான் இங்கே சொல்ல முன் வந்திருக்கிறேன்; ஆனால் முன் வருவது போல் வந்துவிட்டுப் பின் வாங்கும் உத்தேசம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. "ஸ்டூகா' பாம்பர் விமானம் வந்தாலும் நான் பயப்படப் போவதில்லை, 'ஸ்டூகா'தான் என் கதைக்குப் பயந்து ஓடும் படியிருக்கும்.
புலி ராஜாவைப் பற்றி மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுவது அவசியமாகிறது. ஏனெனில், அவரைப் பற்றிப் படிக்கும் போது, அப்பேர்ப்பட்ட அஸகாய சூரனைக் கண்ணால் பார்க்கவேண்டுமென்ற ஆசை எல்லாருக்கும் அளவில்லாமல் உண்டாகி விடும். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்கு வழி கிடையாது. பரதன் ராமனிடம் தசரதரைக் குறித்துச் சொன்ன பிரகாரம் உலகிலே பிறக்கும் ஜீவர்களெல்லாம் கடைசியாக எந்த இடத்துக்குப் போய்ச் சேருகிறார்களோ, அங்கே நமது புலி ராஜாவும் விஜயமாகிவிட்டார். சுருங்கச் சொன்னால், புலி ராஜா இறந்து போனார்!
அவர் எப்படி இறந்து போனார் என்பது ஒரு அதிசயமான விஷயம். அதைக் கதையின் கடைசியிலேதான் சொல்ல வேண்டும். ஆனால், அவருடைய மரணத்தில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால், அவர் பிறந்த காலத்திலேயே, அவர் ஒருநாள் இறந்தும் போவார் என்று ஜோசியர்கள் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார்கள்!
"குழந்தை வீராதி வீரனாகவும் சூராதி சூரனாகவும் தீராதி தீரனாகவும் விளங்குவான். ஆனால்..." என்று மென்று விழுங்கினார்கள். "என்ன சமாசாரம்" என்று அழுத்திக் கேட்டதன் பேரில், "சொல்லக்கூடாது; ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜாதகனுக்கு ஒரு காலத்தில் மரணம் நேரிடும்" என்றார்கள்.
அந்தச் சமயத்தில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. பிறந்த பத்து தினங்கள்தான் ஆன ஜிலானி ஜங்ஜங் பகதூர் வாயிலிருந்து ஒரு ஆச்சரியமான வார்த்தை கிளம்பிற்று. "பிரகஸ்பதிகளே!" என்பதுதான் அந்த வார்த்தை.
எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் நின்று விட்டார்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள்.
"நான் தான் பேசினேன், பிரகஸ்பதிகளே!"
இந்தத் தடவை சந்தேகத்துக்கே இடமில்லை. பிறந்து பத்தே நாளான குழந்தைதான் அவ்வளவு திவ்வியமாகப் பேசியிருக்கிறது!
தலைமை ஜோசியர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி விட்டு குழந்தையை உற்றுப் பார்த்தார்.
"பிறந்தவர் யாவரும் இறந்துதானே தீர வேண்டும்? அதற்கு நீங்கள் என்ன ஜோசியம் சொல்வது? மரணம் எந்த விதத்தில் நேரும் என்று சொன்னாலும் அர்த்தம் உண்டு" என்று சின்னஞ்சிறு கீச்சுக் குரலில் யுவராஜா திருவாய் மலர்ந்தார்.
ஜோசியர் தலைவர், மூக்கிலே விரலை வைத்து அதிசயித்தார். பத்து நாள் குழந்தை பேசுகிறது. அதோடு இல்லை - இவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி கேட்கிறது என்றால் இதென்ன, யுத்த இலாகா அறிக்கைகளைப் போல் தோன்றுகிறதே தவிர, நம்பக் கூடியதாயிருக்கிறதா.
தலைமை ஜோசியர், மூக்கிலிருந்து விரலை எடுத்துவிட்டு யுவராஜாவை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்:-
"ரிஷப லக்கினத்தில் யுவராஜா ஜனனம். ரிஷபத்துக்கும் புலிக்கும் பகை. ஆகையால், புலியினால் மரணம்."
புலி என்ற வார்த்தையைக் கேட்டதும் யுவராஜா ஜங்ஜங் பகதூர் பயந்து நடுங்கியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. புலி என்று கேட்டதும் யுவராஜா ஒரு உறுமல் உறுமினார். பிறகு இரண்டு பயங்கரமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளி வந்தன:-
"புலிகள் ஜாக்கிரதை!"
மேலே கூறிய சம்பவம் பிரதிபந்தபுரத்தில் வழங்கி வந்த வதந்தியேதான். ஆனால், பின்னால் நடந்தவைகளைக் கொண்டு பார்க்கும்போது அது உண்மையாயிருக்கலாமென்றே தோன்றுகிறது.
2
யுவராஜா ஜங்ஜங் பகதூர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். மேற்கூறிய சம்பவத்தை தவிர அவருடைய குழந்தைப் பருவத்தில் வேறு அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. மற்றச் சுதேச சமஸ்தானங்களின் யுவராஜாக்களைப் போல்தான் அவரும் இங்கிலீஷ் பசுவின் பாலைக் குடித்து, இங்கிலீஷ் நர்ஸினால் போஷிக்கப்பட்டு, இங்கிலீஷ் உபாத்தியாயரால் இங்கிலீஷ் கற்பிக்கப்பட்டு, இங்கிலீஷ் சினிமாக்கள் பார்த்து - இப்படியாக வளர்ந்து வந்தார். வயது இருபது ஆனதும், அது வரைக்கும் 'கோர்ட் ஆப் வார்ட்'ஸில் இருந்த ராஜ்யமும் கைக்கு வந்தது.
ஆனால், ராஜ்யத்தில் மட்டும் மேற்சொன்ன ஜோசியக் கூற்று எல்லாருக்கும் நினைவிருந்தது. அநேகர் அதைப் பற்றிப் பேசியும் வந்தார்கள். மெதுவாக மகாராஜாவின் காதிலும் இந்தப் பேச்சு விழுந்தது.
பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தில் காடுகள் ஏராளமாக உண்டு. அவற்றில் புலிகளும் உண்டு. "தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம்" என்ற பழமொழி மகாராஜாவுக்குத் தெரிந்திருந்தது. தன்னைக் கொல்லவரும் புலியைக் கொல்லுவதைப் பற்றி என்ன ஆட்சேபனை? - மகாராஜா புலி வேட்டையாடக் கிளம்பினார்.
முதல் புலியைக் கொன்றதும் மகாராஜாவுக்கு ஏற்பட்ட குதூகலத்துக்கு அளவில்லை. சமஸ்தானத்தின் ஜோசியர் தலைவரைக் கூப்பிட்டு அனுப்பினார். செத்த புலியைக் காட்டி, "இப்போது என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.
"மகாராஜா இந்த மாதிரியே 99 புலிகளைக் கொன்று விடலாம்; ஆனால்..." என்று ஜோசியர் இழுத்தார்.
"ஆனால் என்ன? தைரியமாகச் சொல்லும்!"
"ஆனால் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்."
"சரி, நூறாவது புலியையும் கொன்று விட்டால் அப்புறம்?"
"அப்புறம் என்னுடைய ஜோசியப் புத்தகங்களையெல்லாம் கிழித்து நெருப்பு வைத்துவிட்டு..."
"வைத்துவிட்டு..."
"தலையில் கிராப்பு வைத்துக் கொண்டு இன்ஷுரன்ஸ் கம்பெனி ஏஜண்டாகப் போய்விடுகிறேன்?" என்று ஜோசியர் சம்பந்தமில்லாமல் முடித்தார்.
3
பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தின் காடுகளிலிருந்த புலிகளுக்கெல்லாம் அன்று முதல் கொண்டாட்டந்தான்.
மகாராஜாவைத் தவிர வேறு யாரும் புலி வேட்டை ஆடக்கூடாது என்று உத்தரவு பிறந்தது.
தப்பித் தவறி யாராவது ஒரு புலியின் மேல் கல்லை விட்டெறிந்தால் கூட, அப்படிப்பட்ட ராஜத் துரோகத்தைச் செய்தவனுடைய சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்யப்படுமென்று தண்டோரா போடப்பட்டது.
மகாராஜா நூறு புலிகளை முழுசாகக் கொன்ற பிறகுதான் மற்ற காரியங்களில் கவனம் செலுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார். அவருடைய உத்தேசம் நன்கு நிறைவேறியும் வந்தது.
அபாயங்கள் அவருக்கு நேரிடாமல் இல்லை. சில தடவை துப்பாக்கிக் குறி தவறிப் புலி அவர் மேல் பாயவும், அதனுடன் கைகலந்து சண்டை போடவும் நேரிட்டது. ஒவ்வொரு தடவையிலும், அவர் தான் கடைசியில் வெற்றி பெற்றார்.
இன்னொரு சமயம் அவருடைய சிம்மாசனத்துக்கே ஆபத்து வருவதாயிருந்தது. ஒரு பெரிய பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் பிரதிபந்தபுரத்துக்கு விஜயம் செய்தார். அவருக்குப் புலி வேட்டையில் ரொம்பப் பிரியம். அதைக் காட்டிலும், தாம் கொன்ற புலிக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிகப் பிரியம். வழக்கம் போல் அவர் பிரதிபந்தபுரம் சமஸ்தானத்திலும், புலி வேட்டையாட விரும்பினார். ஆனால் மகாராஜா கண்டிப்பாக மறுத்துவிட்டார். "வேறு என்ன வேட்டைக்கு வேணுமானாலும் ஏற்பாடு செய்கிறேன். பன்றி வேட்டையா? ஆடுங்கள். எலி வேட்டையா? நடத்துங்கள். கொசு வேட்டையா? இதோ தயார். ஆனால் புலி வேட்டை மட்டும் இங்கே முடியாது" என்றார் மகாராஜா.
"துரைதான் புலியைக் கொன்று ஆகவேண்டுமென்று அவசியமில்லை, மகாராஜாவே கொல்லலாம். செத்த புலிக்குப் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதுதான் துரைக்கு முக்கியம்" என்று மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் காரியதரிசி சமஸ்தான திவான் மூலமாகச் சொல்லியனுப்பினார். இதற்கும் மகாராஜா சம்மதிக்கவில்லை. இப்போது கொஞ்சம் இடங்கொடுத்து விட்டால், அப்புறம் இன்னும் சில பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களும் புலி வேட்டைக்கு வந்து சேரலாமல்லவா?
இப்படி ஒரு பெரிய ஆங்கில உத்தியோகஸ்தரின் விருப்பத்துக்குக் குறுக்கே நின்றதன் பயனாக மகாராஜாவின் கையைவிட்டு ராஜ்யமே போய்விடுமோ என்று பயம் உண்டாயிற்று.
இதைக் குறித்து மகாராஜாவும் திவானும் கலந்தாலோசித்தார்கள். உடனே கல்கத்தாவிலுள்ள ஒரு பெரிய இங்கிலீஷ் நகைக் கம்பெனிக்குத் தந்தி போயிற்று:- "வைர மோதிரங்களில் சில உயர்ந்த மாதிரிகள் அனுப்பி வைக்கவும்" என்று.
அவ்விதமே வைர மோதிரங்கள் சுமார் ஐம்பது தினுசுகள் வந்தன. அவற்றை அப்படியே மகாராஜா மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் தர்ம பத்தினிக்கு அனுப்பி வைத்தார். துரைசானி அம்மாள் ஏதாவது ஒன்றிரண்டு பொறுக்கிக்கொண்டு பாக்கியைத் திருப்பி அனுப்பி விடுவாளென்று மகாராஜாவும் திவானும் எதிர் பார்த்தார்கள்.
ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் துரைசானியிடமிருந்து பதில் வந்துவிட்டது:- "நீங்கள் அனுப்பிய பரிசு மோதிரங்களுக்காக மிகவும் வந்தனம்."
இரண்டு நாளைக்கெல்லாம் நகைக் கம்பெனியாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய்க்குப் 'பில்' வந்தது. மூன்று லட்ச ரூபாய் போனாலும், சிம்மாசனத்துக்கு ஆபத்தில்லாமல் தப்பியது பற்றி மகாராஜாவுக்குச் சந்தோஷந்தான்.
4
மகாராஜாவின் புலிவேட்டை விரதம் நன்கு நிறைவேறி வந்தது. பத்து வருஷ காலத்தில் எழுபது புலிகள் வரையில் வேட்டையாடிக் கொன்றுவிட்டார். அதற்குப் பிறகு ஒரு பெரிய இடையூறு எதிர்ப்பட்டது. பிரதிபந்தபுரம் காடுகளில் புலிகளே அற்றுப்போய் விட்டனபோல் தோன்றியது. புலிகள் ஒருவேளை கருத்தடை முறைகளைக் கையாண்டனவோ, அல்லது 'ஹரிகரி' செய்து கொண்டனவோ, அல்லது வெள்ளைக்காரர்களின் கையினால்தான் சாக வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டு நாட்டைவிட்டு ஓடிப் போயினவோ, தெரியவில்லை.
மகாராஜா ஒரு நாள் திவானைக் கூப்பிட்டார். "திவான் சாகிப், இன்னும் முப்பது புலி இந்தத் துப்பாக்கிக்கு இரையாகித் தீரவேண்டுமென்று உமக்குத் தெரியுமா இல்லையா?" என்று கேட்டார்.
திவான் துப்பாக்கியைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டே, "மகாராஜா! நான் புலியில்லை..." என்றார்.
"நீர் புலி என்று எந்த முட்டாள் சொன்னது?"
"இல்லை, நான் துப்பாக்கி இல்லை" என்றார் திவான்.
"நீர் புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை திவான் சாகிப்! உம்மைக் கூப்பிட்ட காரணம் வேறு. நான் கல்யாணம் செய்து கொள்வதென்று தீர்மானித்து விட்டேன்" என்றார் மகாராஜா.
திவானுக்கு உளறல் இன்னும் அதிகமாகிவிட்டது. "மகாராஜா! ஏற்கனவே எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்; உங்களையும் கல்யாணம் செய்துகொண்டு."
"சட், என்னங்காணும் உளறுகிறீர்? உம்மை எதற்காக நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்? எனக்கு வேண்டியது புலி..."
"மகாராஜா! வேண்டாம், யோசனை செய்யுங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள் கத்தியைக் கல்யாணம் செய்து கொண்டார்கள். நீங்கள் வேணுமானால் துப்பாக்கியைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இந்த சமஸ்தானத்துக்குப் புலி ராஜா இருப்பது போதும்; புலி ராணி வேறு வேண்டாம்!"
இதைக் கேட்ட மகாராஜா குபீரென்று சிரித்து விட்டு "புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை. மனுஷப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். தற்சமயம் எந்தெந்த சமஸ்தானத்தில் புலி இருக்கிறதென்று முதலில் கணக்குத் தயார் செய்யும். பிறகு, புலி இருக்கிற சமஸ்தானத்தில் ராஜ்வம்சத்தில் கல்யாணத்துக்குப் பெண் இருக்கிறதா என்று பாரும்" என்றார்.
திவான் அப்படியே பார்த்தார். கடைசியில் மகாராஜாவின் விருப்பத்தின்படியே புலிகள் நிறைய உள்ள சமஸ்தானத்தில் பெண் பார்த்துக் கல்யாணமும் செய்து வைத்தார்.
மகாராஜா ஜங்ஜங் பகதூர் ஒவ்வொரு தடவை மாமனார் வீடு சென்றபோதும், ஐந்தாறு புலிகளைக் கொன்று எல்லாப் புலிகளின் தோலும் - சரியாக 99 தோல் - அரண்மனை ஆஸ்தான மண்டபத்தின் சுவர்களை அலங்கரித்தன.
5
கடைசியில் நூற்றுக்கு இன்னும் ஒரு புலிதான் பாக்கி என்ற நிலைமை ஏற்பட்டதும் மகாராஜாவின் பரபரப்பு மிகவும் அதிகமாயிற்று. பகலில் அதே நினைவு; இரவில் அதே கனவு. இதற்குள்ளே மாமனார் சமஸ்தானத்திலும் புலிப் பண்ணை வறண்டு போய் விட்டபடியால் புலிகள் அகப்படுவது மிகவும் பிரயாசையாய்ப் போயிருந்தது. ஆனாலும், இன்னும் ஒன்றே ஒன்றுதானே? இன்னும் ஒரு புலியை மட்டும் கொன்றுவிட்டால், அப்புறம் பயமே இல்லை. புலி வேட்டையையே விட்டுவிடலாம்.
ஆனால், இந்தக் கடைசிப் புலி விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். காலஞ் சென்ற தலைமை ஜோசியர் என்ன சொன்னார்? 99 புலிகளை மகாராஜா கொன்றபோதிலும் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்! "உண்மைதான் புலி பொல்லாத மிருகம்; ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த நூறாவது புலிக்கு எங்கே போகிறது? புலி கிடைப்பது புலிப்பால் கிடைப்பதைவிடக் கஷ்டமாகிவிட்டதே?"
மகாராஜா இப்படிப்பட்ட கவலையில் ஆழ்ந்திருந்த போது, அந்தக் கவலையைப் போக்கக்கூடிய ஒரு அருமையான சந்தோஷச் செய்தி வந்தது. அந்த சமஸ்தானத்திலேயே மலைக்கிராமம் ஒன்றில் திடீர் திடீரென்று சில ஆடுகள் காணாமல் போய்வந்தன. 'முழு ஆடு விழுங்கின' என்று பெயர் பெற்ற காதர் மியான் சாகிபுவையும், வீராசாமி நாயக்கரையும் விசாரித்து அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று தெரிய வந்தது. புலிதான் வந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாயிற்று. கிராமவாசிகள் ஓடிப் போய் மகாராஜாவிடம் தெரிவித்தார்கள். அந்தக் கிராமத்துக்கு மூன்று வருஷம் வரி, வாய்தா குவிட்ரெண்ட், ஜமாபந்தி, புறம்போக்குப் பட்டி ஒன்றுமே கிடையாது என்று மகாராஜா தெரிவித்துவிட்டு, உடனே வேட்டைக்குக் கிளம்பினார்.
புலி இலேசில் அகப்படவில்லை. வேண்டுமென்று மகாராஜா கையில் அகப்படக் கூடாதென்றே, அது ஒளிந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. மகாராஜாவோ, புலி அகப் பட்டாலொழியக் காட்டை விட்டு வரமாட்டேனென்று பிடிவாதம் பிடித்தார். அதோடு நாளாக ஆக மகாராஜாவின் கோபமும் பிடிவாதமும் அதிகமாகி வந்தன. அதன் பயனாய் அனேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை போய் விட்டது.
ஒருநாள் ரொம்பக் கோபம் வந்தபோது, மகாராஜா திவானைக் கூப்பிட்டு, "சமஸ்தானத்தில் நிலவரியை உடனே இரண்டு பங்கு செய்யுங்கள்" என்றார். திவான், "பிரஜைகளுக்கு அதிருப்தி உண்டாகும், மகாராஜா! அப்புறம் நம் சமஸ்தானத்திலும் ஸ்டேட் காங்கிரஸ் ஏற்பட்டுவிடும்" என்றார். "அப்படியானால், உம்முடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போம்!" என்றார் மகாராஜா.
இதற்குமேல் மகாராஜாவுக்குப் புலி அகப்படாதிருந்தால் விபரீதந்தான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குப் போனார் திவான். அங்கே சென்னை பீப்பிள்ஸ் பார்க்கிலிருந்து வாங்கிக் கொண்டுபோய் இரகசியமாய் வைத்திருந்த புலியைப் பார்த்ததுந்தான் அவருக்கு உயிர் வந்தது.
அன்று இரவு நடு நிசியில் ஊரெல்லாம் அடங்கிய பிறகு, திவானும் அவருடைய வயது முதிர்ந்த மனைவியும் மேற்படி புலியை இழுத்துக் கொண்டு வந்து மோட்டாரில் ஏற்றினார்கள். 'திவான்' தாமே மோட்டாரை ஓட்டிக் கொண்டு போய், மகாராஜா வேட்டையாடிக் கொண்டிருந்த காட்டுக்குப் பக்கத்தில் புலியை இறக்கினார். மோட்டாரிலிருந்து இறங்க மாட்டேனென்று சத்தியாகிரகம் செய்த அந்த புலியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளுவதற்குள் திவானுக்கு மேல் மூச்சு வாங்கிவிட்டது. மறுநாள் மகாராஜாவின் முன்னால் மேற்படி கிழப்புலியானது வந்து, "எஜமானே! என்ன ஆக்ஞை?" என்று கேட்பது போல் நின்றது. மகாராஜா அளவிறந்த உற்சாகத்துடன் துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து சுட்டார் உடனே புலி சுருண்டு விழுந்தது.
"நூறாவது புலியைக் கொன்று விட்டோ ம்; விரதம் நிறைவேறிவிட்டது!" என்ற மகத்தான குதூகலம் மகாராஜாவின் மனதில் தோன்றிற்று. அந்த நூறாவது புலியை தமது தலைநகரில் ஊர்வலமாகக் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, மகாராஜா மோட்டாரில் ஏறிவிரைந்து முன்னால் சென்றார்.
அவர் போன பிறகு, மற்ற வேட்டைக்காரர்கள் புலியின் அருகில் சென்று பார்த்தார்கள். புலியும் கண்களைப் பேந்தப் பேந்த விழித்து அவர்களைப் பார்த்தது! புலி சாகவில்லையென்றும், அதன்மேல் குண்டே பாயவில்லை யென்றும், அவர்கள் கண்டார்கள். குண்டு சமீபத்தில் போன அதிர்ச்சியினாலேயே அது அப்படி மூர்ச்சையாகி விழுந்திருந்தது! வேட்டைக்காரர்கள் யோசனை செய்தார்கள். குண்டு தவறிப்போன செய்தி மகாராஜாவுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் தங்களுடைய உத்தியோகத்துக்கு ஆபத்து என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவன் புலிக்கு ஓர் அடி தூரத்திலிருந்து குறி தவறாமல் அதைக் கொன்று தீர்த்தான்.
பிறகு, மகாராஜாவின் கட்டளையின்படி, அந்தச் செத்தப் புலியை நகரில் ஊர்வலம் விட்டுக் கொண்டு போய்க் கடைசியில் அதைப் புதைத்து, சமாதியும் எழுப்பினார்கள்.
மேற்கூறிய விசேஷ சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு மகாராஜாவின் குமாரனுக்கு மூன்றாவது பிறந்த தினக் கொண்டாட்டம் நடந்தது. இது வரையில் புலிவேட்டையிலேயே கவனமாயிருந்த மகாராஜா பட்டத்து இளவரசனைப் பற்றிக் கொஞ்சமும் கவனிக்கவில்லை. இப்போது அவருடைய கவனம் குழந்தையின் மீது சென்றது. பிறந்த தினத்தற்கு குழந்தைக்கு ஏதாவது பரிசு கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். பிரதிபந்தபுரம் கடைத்தெருவுக்குப் போனார். கடை கடையாகத் தேடியும் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பொம்மைக் கடையில் ஒரு சின்ன மரப் புலியைப் பார்த்தார். "இதுதான் சரியான பரிசு" என்று உடனே தீர்மானித்து விட்டார்.
அந்த மரப் புலியின் விலை இரண்டே காலணாதான். ஆனால், மகாராஜா கேட்கும்போது அவ்வளவு குறைந்த விலை சொன்னால் நிச்சயம் அவசரச் சட்டத்தின் கீழ்த் தண்டனை கிடைக்குமென்று தெரிந்த கடைக்காரன் "மகாராஜா! இது ரொம்பக் கலைத்திறமை பொருந்திய பொம்மை; விலை முந்நூறு ரூபாய்தான்!" என்றான்.
"ரொம்ப சந்தோஷம்! யுவராஜாவின் பிறந்த தினக் கொண்டாட்டத்துக்கு இது உன்னுடைய காணிக்கையாயிருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு, மகாராஜா அதை எடுத்துச் சென்றார்.
யுவராஜாவின் பிறந்த தினத்தன்று, தகப்பனாரும் குழந்தையும் அந்தச் சின்னஞ் சிறு மரப்புலியை வைத்துக் கொண்டு விளையாடினார்கள். யாரோ பட்டிக்காட்டுத் தச்சன் செய்த பொம்மை அது ஆகையால் அதன் மேலெல்லாம் சிலாம்பு சிலாம்பாய் நின்றது. மகாராஜா அதைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடிய போது வலது கையில் ஒரு சிலாம்பு குத்தியது. இடது கையால் சிலாம்பைத் தட்டி எறிந்துவிட்டு மகாராஜா மேலும் விளையாடிக் கொண்டிருந்தார்.
சிலாம்பு குத்திய இடத்தில் மறுநாள் சின்னக் கொப்புளம் புறப்பட்டது.
இரண்டு நாளில் அது பெரிய சிரங்காயிற்று. நாலு நாளைக்கெல்லாம் கை முழுவதும் புரையேறிவிட்டது.
சென்னைப் பட்டணத்திலிருந்து பெரிய ஸர்ஜன்கள் மூன்று பேர் வரவழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் கூடி ஆலோசித்து, "ஆபரேஷன் செய்ய வேண்டியதுதான்" என்று தீர்மானித்தார்கள்.
ஆபரேஷன் நடந்தது.
மூன்று ஸர்ஜன்களும் ஆபரேஷன் செய்துவிட்டு வெளியில் வந்து பின்வரும் செய்தியைத் தெரிவித்தார்கள்.
"ஆபரேஷன் வெற்றிகரமாய் நடந்தது; மகாராஜா காலமாகிவிட்டார்."
இவ்விதமாக நூறாவது புலியானது கடைசியில் புலிராஜாவின் மேல் வஞ்சம் தீர்த்துக் கொண்டது.
-------------
75. விஷ மந்திரம்
"பக்திமான்" என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர் மாலைகளால் அலங்கரித்துத் திருவிளக்கேற்றி வைப்பாள். போஸ்டுமாஸ்டர் தம்புராவில் சுருதி கூட்டிக் கொண்டு ராமஜெபம் செய்வார். சனிக்கிழமை ஏகாதசி தினங்களில் பஜனை நடைபெறும். சுண்டல், வடை, பாயசம் - குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்!
நாராயண ஐயருக்கு சொந்தத்தில் குழந்தைகள் இல்லை. ஆனால் ஊரிலுள்ள குழந்தைகள் எல்லாம் அவருடைய குழந்தைகள் போல்தான். இத்தனைக்கும் உபாத்தியார்! 'ஸார்' என்றால் பிள்ளைகளெல்லாம் உயிரை விடுவார்கள். பயத்தினாலன்று; பிரியத்தினால். அவருடைய மாணாக்கர்களுக்கு இராமாயணம், மகாபாரதம், பாகவதம் இவற்றிலுள்ள கதைகள் ஒன்று விடாமல் தெரியும். தாயுமானவர் பாடலில் மூன்று பாடல் நெட்டுருவாய் ஒப்புவிக்கும் மாணாக்கனுக்குக் கற்கண்டு வாங்கித் தருவதாகச் சொல்வார். ஒருவரும் ஒப்புவியாவிட்டால் கற்கண்டை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவார்!
மார்கழி மாதம் வரப்போகிறதென்று நாராயண ஐயர் மனைவி புரட்டாசி மாதத்திலிருந்தே சாமான்கள் சேகரித்து வைப்பாள். அம்மாதத்தில் தினந்தோறும் வைகறையில் சிறுவர்கள் பஜனை செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். ஊர்வலம் போஸ்ட்மாஸ்டர் வீட்டில் வந்து முடியும். பின்னர் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கள் வகையறாக்கள் குழந்தைகள் உண்டு ஆனந்திப்பதைக் கண்டு கணவனும் மனைவியும் பெருமகிழ்ச்சி எய்துவார்கள்.
நான் அவருடைய பழைய மாணாக்கனாதலால், அவரைப் பற்றி மிகைப்படப் புகழ்ந்து கூறுகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். எங்கள் ஊருக்குச் சுற்றுப்புறம் ஐந்நூறு மைல் தூரத்திற்குச் சென்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் ஒரு முகமாய் என்னை ஆதரித்துச் சாட்சி சொல்லுவார்கள். அப்பக்கத்தில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு, மரியாதை.
அவருடைய செல்வாக்குக் காரணம் செல்வமன்று. அவருக்குப் பொருட் செல்வம் அவ்வளவு இல்லை. மற்று, அவருடைய தூய ஒழுக்கமும், தெய்வபக்தியுமே முக்கிய காரணங்களாகும். இத்துடன் அவருக்கு விஷக்கடி மந்திரத்தில் விசேஷ தேர்ச்சியுண்டு. அவரிடம் ஜனங்கள் விசுவாசம் கொண்டிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். பகலிலும், இரவிலும், எந்த நிமிஷத்திலும், பாம்புக்கடி என்று வந்தால் அவர் சிறிதும் தயங்குவதில்லை. தலைவலியையும், மலைச்சுரத்தையும் பொருட்படுத்தாமல் அவர் உடனே தலை முழுகி ஈரத்துணியுடன் மந்திரஞ் செய்யத் தொடங்குவார். மூர்ச்சையாகி வந்தவர்கள் விஷம் இறங்கப் பெற்று தெளிவடைந்து 'தபால் ஐயரை' வாழ்த்திக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஐயரோ இரண்டு மூன்று தினங்கள் பொறுக்க முடியாத தலையிடி உபத்திரவத்தினால் வருந்திக் கொண்டிருப்பார்.
நாராயண ஐயருக்குக் காந்தியடிகளிடம் பக்தி அதிகம் உண்டு. அவர் தேச பக்தருங்கூட. வங்காளப் பிரிவினைக் காலத்திலிருந்து சுதேசி விரதம் அனுஷ்டித்து வருபவர். ஆனால், மகாத்மா காந்தியின் திட்டங்களுள் 'தீண்டாமை விலக்கு' மட்டும் அவருக்கு விலக்கு. எனக்கும் போஸ்டு மாஸ்டருக்கும் இது சம்பந்தமாய் நடந்த விவாதங்களுக்கு எல்லையில்லை. அவற்றை இங்கு எழுதுவதனால், கந்தபுராணமாக - முருகனடியார் மன்னிக்க - விரிந்து விடும். அவருடைய அம்பறாத் தூணியில் எல்லா பாணங்களும் விட்டான பிறகு கடைசியாக அவர் பிரயோகிக்கும் பாணம் இதுவே:-
"எல்லாம் சரி! நான் உனக்குப் பிரத்தியக்ஷமாகக் காட்டுகிறேன். கொடிய விஷ சர்ப்பம் தீண்டியவன் ஒருவன் இங்கு வரட்டும். மூன்றாவது மூர்ச்சை போட்டவனாகவே இருக்கட்டும். இதோ மந்திரம் செய்து விஷம் இறங்கச் செய்கிறேன் பார்! நீயே பலமுறை இந்த மந்திர சக்தியைப் பார்த்திருக்கிறாய். ஆனால், ஸ்நானம் செய்த பின்னர் ஒரு பறையனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டுவிடட்டும், அப்போது மந்திரம் பலிப்பதில்லையே! விஷம் இறங்குவதில்லையே! இதற்கென்ன சொல்கிறாய்?"
அவருடைய இந்தப் பாசுபதாஸ்தரத்தை வெல்வதற்குத் தகுந்த அஸ்திரம் என்னிடம் வேறு எதுவும் இல்லை. ஆகவே, எங்களுடைய வாதங்களை எவரேனும் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் பக்கமே முடிவாகத் தீர்ப்புச் சொல்லி விடுவது வழக்கமாயிருந்தது.
2
தபால் ஆபீஸ் சோதனைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார் என்று ஒருநாள் கேள்விப்பட்டேன். சற்று நேரம் வம்பு வளர்த்துவிட்டு வரலாமென்று சென்றேன். தபால் இன்ஸ்பெக்டர் பெத்த பெருமாள் பிள்ளை சரசமாகப் பேசும் சுபாவமுடையவர். சிடுமூஞ்சித்தனம் அவரிடம் இல்லை. போதாததற்குக் கதர்த் துணியால் உட்சட்டை அணிந்து கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அவரிடம் காதல் கொண்டு விட்டேன். "இவர் ஒரு நாள் - கோ - ஆபரேட்டர்" என்று போஸ்ட் மாஸ்டர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பொது அரசாங்கக் காரியங்களில் உத்தியோகஸ்தர்கள் நடந்து கொள்ளும் பான்மையைப் பற்றி எப்படியோ பேச்சு வந்தது. "நமது அடிமை வாழ்க்கையின் பயன் என்றே சொல்ல வேண்டும். முப்பது ரூபாய் சம்பளம் பெறும் ஒரு குமாஸ்தா, தன்னிடம் யாரேனும் ஒரு சிறு காரியத்துக்காக வந்துவிட்டால், என்ன பாடுபடுத்துகிறான். எத்துணைக் கர்வம்? இந்தத் தமிழ் நாட்டிலே எந்தத் தபால் சாவடிக்காவது, ரயில்வே ஸ்டேஷனுக்காவது போய் அங்குள்ள சிப்பந்திகளிடம் ஒரு சமாசாரம் தெரிந்து கொண்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம். ஒரு நிமிஷத்திற்குள் 'போ வா' என்று நூறுமுறைக் கூறிச் 'சள்' என்று விழுகிறார்கள். தாங்கள் பொது ஜன ஊழியர்கள், பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதச் சம்பளம் பெறுகிறவர்கள், என்பதைக் கனவிலும் நினைப்பதில்லை. மனிதருக்கு மனிதர் காட்ட வேண்டிய மரியாதையும் கிடையாது. மறந்தும் இவர்களிடமிருந்து ஓர் இன்சொல் வராது. மற்றவர் நம்மிடம் சிறு உதவி நாடி வந்தால் அதை ஒரு பாக்கியமாகக் கருதும் சுபாவம் நம்மவரிடம் எப்போது ஏற்படுமோ தெரியவில்லை!" என்று இவ்வாறு சீர்திருத்தக்காரரின் உற்சாகத்துடன் சரமாரியாக பொழிந்தேன்.
"நீங்கள் சொல்வதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆனால், அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அவர்கள் சிடுமூஞ்சிகளாவதற்கு வேலை மிகுதியே பெரும்பாலும் காரணம். இவ்வளவு வேலைத் தொந்தரவிலும் இனிய சுபாவமுடையவர் சிலர் இல்லாமற் போகவில்லை" என்றார் இன்ஸ்பெக்டர்.
"சந்தேகமில்லாமல்! இவ்வாறு பொது விதிக்கு விலக்காயுள்ளவர்களில் நமது போஸ்டுமாஸ்டரும் ஒருவர்" என்றேன்.
"இன்னும் எத்தனையோ தீமைகளை இந்நாட்டில் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பரிகாரம் சுயராஜ்யம் தான்" என்று போஸ்டு மாஸ்டர் இடையில் புகுந்து கூறினார்.
சுயராஜ்யம், மகாத்மா காந்தி, ஒத்துழையாமைத் திட்டம் - என்று இவ்வாறு பேச்சு வளர்ந்து கொண்டே போய்க் கடைசியில், தீண்டாமையில் வந்து நின்றது.
"தீண்டாமைச் சாபம் தொலையாத வரையில் இந்நாட்டிற்கு விடுதலை கிடையாது" என்று ஒரேயடியாகக் கூறினேன்.
"அப்போது நமது வேத சாஸ்திரங்கள் மந்திரங்கள் எல்லாவற்றையும் ஆற்றில் கட்டிவிட வேண்டியதுதான். அத்தகைய விடுதலை எனக்கு வேண்டாம்!" என்றார் நாராயணய்யர்.
இன்ஸ்பெக்டர் பெத்தபெருமாள் பிள்ளை எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்வதற்காக நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவருடைய முகம் இருண்ட மேகத்தால் மறைக்கப்பட்டது போல ஒரு கண நேரம் கருத்தது. மறுகணத்தில் அவர் எப்போதும் போல் புன்னகை புரிந்து கொண்டு ஒரு பக்கத்து மீசையைத் தடவிக் கொண்டே, "போஸ்டு மாஸ்டர் வைதீகத்தில் மிகுந்த பற்றுள்ளவர் போலிருக்கிறது" என்றார்.
"பறையனிடம் தீட்டு இருக்கிறது என்று தங்கள் கண்முன் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் போஸ்ட் மாஸ்டர். எனக்கு உள்ளுக்குள் பயம் தோன்றிற்று. இன்ஸ்பெக்டரையாவது நமது கட்சிக்கு இழுத்துக் கொள்வோமென்று, "தங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டேன். "எனக்கு இவ்விஷயத்தில் அபிப்பிராயம் ஒன்றுமேயில்லை" என்று அவர் கையை விரித்துவிட்டார். தோல்வி நிச்சயம் என்று எண்ணினேன். அப்போது என் முகம் மிகவும் சிறுத்து போயிருக்க வேண்டும். ஆனால் கையில் கண்ணாடி இல்லாமையால் நிச்சயமாக சொல்வதற்கில்லை.
"இருக்கட்டும். பறையனிடம் உள்ளத் தீட்டைப் பிரத்தியட்சமாய்க் காட்டுவதாக சொன்னீர்களே அதென்ன?" என்று பெத்தபெருமாள் பிள்ளை கேட்டார். நான் போஸ்டு மாஸ்டரை முந்திக் கொண்டு அவருடைய விஷ மந்திரத்தின் வலிமையைப் பற்றிச் சொல்லிவிட்டு தீண்டாதவர் அருகில் வந்து விட்டால், மந்திரம் பலிப்பதில்லையென்று அவர் கூறுவதைக் கேட்பவர் அவநம்பிக்கை கொள்ளும்படியாக எப்படிச் சொல்லலாமோ அம்மாதிரி சொன்னேன்.
ஆனால், அந்தோ! தெய்வமும் போஸ்டுமாஸ்டர் கட்சியையே ஆதரிக்கிறதா என்ன? நான் சொல்லி முடித்தேனோ இல்லையோ, போஸ்டுமாஸ்டருக்கு துணை செய்யவே வந்ததுபோல, பாம்பு கடித்தவன் ஒருவனை நாலைந்து பேர் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்கள். "ஐயா! காப்பாற்ற வேண்டும். இப்போது இரண்டாவது மூர்ச்சை போட்டிருக்கிறது. பெரிய சர்ப்பம், இரண்டு பற்கள் நன்கு பதிந்திருக்கின்றன" என்று அவர்களில் ஒருவன் கூவினான். அப்போது நாராயணையரைப் பார்க்க வேண்டும்! ஐம்பது வயதுக்கு மேற்பட்டவரும், மலைச்சுரத்தில் அடிபட்டுப் பலங்குன்றித் தள்ளாடி நடப்பவருமாகிய அவரிடம் அப்போது இருபது வயது இளைஞனுடைய சுறுசுறுப்புக் காணப்பட்டது. கடைக்கு ஓர் ஆளை அனுப்பிக் கற்பூரமும் மஞ்சளும் வாங்கிக் கொண்டு வரச் செய்தார். மற்றொருவனைச் சிறு கூழாங்கற்கள் இருபத்தியொன்று பொறுக்கிக் கொண்டு வரச் சொன்னார். தான் இன்ஸ்பெக்டரிடம் உத்தரவு பெற்று எதிரிலிருந்த குளத்திற்குச் சென்று தலைமூழ்கி வந்தார். அவர் ஸ்நானம் செய்துவிட்டு வருகையில் அந்தப் பக்கத்திலேயே தீண்டாதவர் யாரும் வராதபடி பார்த்துக் கொள்ளச் செய்திருந்தார். மிக விரைவாகத் தபால் ஆபீஸ் கட்டிடத்துக்குள்ளே வந்து, ஈரத் துணியுடன் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார். தபால் இன்ஸ்பெக்டரும் அருகில் உட்கார்ந்து ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
தம்முடைய உத்தரீயத்தின் ஓரத்தில் ஒரு துண்டு கிழித்து மஞ்சளில் நனைத்தார். இருபத்தொரு கூழாங்கற்களையும் அதில் வரிசையாகவும், தனித்தனியாகவும் முடிந்தார். இவ்வாறு முடிகையில் மந்திரமும் ஜபித்துக் கொண்டேயிருந்தார். சுமார் பதினைந்து நிமிஷம் இவ்வாறு ஜபம் நடந்தது. இத்தனை நேரமும் எதிரில் ஒரு தாம்பாளத்தில் பரப்பப்பட்டிருந்த விபூதியின் மத்தியில் கற்பூரம் இடைவிடாமல் எரிந்து கொண்டிருந்தது. ஜபம் முடிந்ததும், நாராயணையர் எழுந்து கூழாங்கற்கள் முடிந்த துணியை விஷந் தீண்டியவன் கழுத்தில் மாலையாகப் போட்டு முடிந்துவிட்டு, மந்திரித்த விபூதியை மேலே முழுவதும் பூசச் செய்தார். மூர்ச்சையுற்றுக் கிடந்தவனுக்குச் சில நிமிஷத்தில் பிரக்ஞை வந்தது. அரைமணி நேரத்திற்குள் அவன் பழைய நிலையை அடைந்து வீட்டுக்குச் சென்றான்.
3
போஸ்டுமாஸ்டர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்: "ஏதோ இறைவன் அருளால் இந்த மந்திரம் எனக்குச் சித்தியாயிருக்கிறது. இதனால் வேறு எந்த வகையிலும் பரோபகாரம் செய்ய இயல்பு இல்லாத நானும் பிறருக்கு உபகாரமாயிருக்கிறேன். நான் தீண்டாமை விலக்குக்கு விரோதமாயிருக்கிறேனென்று இந்த வாலிப நண்பர் என் மேல் கோபம் கொள்கிறார்..."
இப்போது இன்ஸ்பெக்டர் புன்னகை செய்தார். எனக்கு பெரிதும் அவமானமாயிருந்தது. காந்தியைத் திட்டலாமாவென்றுத் தோன்றியது.
"ஆனால், நானோ ஒரு ஜீவிய காலத்தின் அனுபவத்தின் மீது சொல்கிறேன். இதோ வைகுண்டத்தை எட்டிப் பார்த்தவனை இந்த மந்திரம் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால் ஒரு பஞ்சமனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டிருந்தால், தூரத்திலுள்ள பறையன் ஒருவனைப் பார்த்தால் எப்போதும் மந்திரம் பலிப்பதில்லை. மறுபடியும் தலைமுழுகி விட்டு மந்திரிக்க வேண்டும். ஆகவே பறையனிடம் தீட்டு இல்லையென்று நான் எவ்வாறு ஒப்புக் கொள்ளமுடியும்?"
தபால் இன்ஸ்பெக்டர் பெத்த பெருமாள் பிள்ளைக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படி இடி இடி என்று சிரிக்கிறார்? என்னுடைய தோல்வியைக் கண்டு ஆனந்தமா? அல்லது திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டதா?
இவை ஒன்றுமில்லையென்று அடுத்த நிமிஷத்தில் தெரிய வந்தது. உண்மைக் காரணத்தை அவர் வெளியிட்டார். இடி விழுந்தது போல் நான் திகைத்துப் போய் விட்டேன்.
"நாராயணையர்! தாங்கள் பெரிதும் ஏமாந்து போனீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் ஒரு பறையன்!" என்றார்.
நாங்கள் இருவரும் வாய் திறக்கவில்லை.
"நான் பறையன் என்று சொல்லிக் கொண்டு வெகு நாளாயிற்று. ஒருவருக்குமே தெரியாது. நான் பிறந்தது சிங்கப்பூரில். இளமையில் என் பெற்றோர் இறந்து விட்டனர். அதிர்ஷ்டவசமாகக் கொஞ்சம் பொருள் சேகரித்து வைத்திருந்தனர். அங்கேயே கொஞ்சம் கல்வியும் அளித்திருந்தனர். அவர்கள் காலஞ்சென்ற பிறகு, இந்த நாட்டுக்கு வந்து கலாசாலையில் படித்துத் தேறி உத்தியோகமும் பெற்றேன். பின்னர் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்று கல்யாணமும் செய்து கொண்டு வந்தேன். வேறு இந்நாட்டில் எனக்கு உற்றார் உறவினர் இல்லை. இதுவரை பறையன் என்று நான் யாரிடமும் தெரிவித்தது கிடையாது. தெரிவிக்கச் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை" என்று இன்ஸ்பெக்டர் சவிஸ்தாரமாகக் கூறினார்.
போஸ்டுமாஸ்டர் சிறிது நேரம் திக்பிரமை கொண்டவர் போல இருந்தார். பின்னர், "நல்லது, மிகவும் சந்தோஷம். ஆகவே தீண்டாதவரிடம் தீட்டு இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. என்னுடைய குரு கூறியதை நான் தப்பாக அர்த்தம் செய்து கொண்டிருக்க வேண்டும். சரிதான் நினைவு வருகிறது. மாதவிடாயாகும் பெண்களின் தீட்டைப் பற்றியே அவர் முக்கியமாய் எச்சரிக்கை செய்தார். ஆனால் தீண்டாத வகுப்பினர் இந்தத் தீட்டை அனுசரிப்பதில்லையாதலால், அவர்களுடைய நெருக்கமுங்கூடாதென்று சொன்னதாக ஞாபகம். தாங்கள் நீண்ட காலமாகத் தூய வாழ்க்கை நடத்தி வருவதால் தாங்கள் அருகில் இருந்தும் மந்திரம் கெடவில்லை. எங்ஙனமாயினும் பிறப்பில் தீட்டில்லை என்பது எனக்கு நிச்சயமாகிவிட்டது. என் கண்களும் திறந்தன!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொள்பவர் போல் உரைத்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் சொன்னார்:- "என் கண்களும் இன்று தான் திறந்தன. இதுவரையில் என்னுடைய பிறப்பில் ஏதோ தாழ்வு இருப்பதாகவே எண்ணியிருந்தேன். நான் பறையன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டேன். ஆனால் இறைவன் எல்லா மனிதர்களையும் ஒரு தரமாகவே படைத்துள்ளார் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். இனிமேல் என்னுடைய பிறப்பை மறைக்க அவசியமில்லை."
"பறையருக்கும், தீயருக்கும், புலையருக்கும் விடுதலை!" என்று நான் பாடினேன்.
--------------------
கருத்துகள்
கருத்துரையிடுக