சிறுவர் கதைக் களஞ்சியம் - 5
சுட்டி கதைகள்
Back
சிறுவர் கதைக் களஞ்சியம் - 5
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சிறுவர் கதைக் களஞ்சியம் - 5 (அப்பாத்துரையம் - 36)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 16+320= 336
விலை : 420/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சிறுவர் கதைக் களஞ்சியம் - 5
முதற் பதிப்பு - 1945
இந்நூல் 2002 இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
இளவரசி
மேலையுலகில் வடபுலத்தரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு, பெண்மையின் சாயலும் ஆண்மையின் வடிவழகும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த ஒரு மைந்தன் பிறந்தான். அரண்மனையின் செல்வமாகவும் நாட்டு மக்களின் உயிராகவும் அவன் பாராட்டப்பெற்று வளர்ந்து வந்தான்.
வடபுலத்தரசன் நண்பனான மன்னன் காமாவுக்கு ஒரு புதல்வி யிருந்தாள். அவள் பெயர் ஐடா. நண்பரான அரசரிரு வரும் இளமையிலேயே அவர்களுக்கு மண உறுதி செய்து வைத்திருந்தனர். இச் செய்தியைத் தந்தையரிருவரும் மறவாதது போலவே இளவரசனும் போற்றி வளர்த்தான். இளவரசி ஐடாவின் சிற்றுருவப் படம் அவன் மார்பகத்தில் எப்போதும் இடம் பெற்றிருந்தது.
ஐடாவின் பல்கலைக் கழகம்
ஐடா குழந்தைப் பருவத்திலிருந்தே துடுக்கும் மிடுக்கும் மிக்கவளா யிருந்தாள். விளையாட்டுக் காலத்திலேயே ஆண்களின் ஆணவத்தைக் கண்டு வெறுப்புற்று, அவர்களை விலக்கிப் பெண்களை மட்டும் தோழியராகப் பொறுக்கி யெடுத்து அவர்களிடையேயும் ஆண்கள்மீது வெறுப்பைத் தூண்டிவந்தாள். இதனால், இளவரசன் ஐடாவின் பெயரையும் உருவையும் எவ்வளவு போற்றி வந்தானோ, அவ்வளவுக்கு ஐடா அவன் பெயரையும் பேச்சையும் நினைவையும் விழிப்புடன் தொலைவிலகற்றி வந்தாள்.
காமா அரசன், தன் புதல்வியின் போக்குக்கண்டும் காணாமல் அது சிறு பிள்ளைத் துடுக்குத்தனம் என்று விட்டிருந் தான். அது முதிர்வது கண்டு அவன் கடிந்து கொண்டபோது, அவள், நயத்துடன் அவனை வசப்படுத்தியும், உறுதிகாட்டி அவனைத் தன்னிச்சைப்படி இயக்கியும் வந்தாள். மேலும் பெண்கல்வி, பெண்கள் நலப்பணி ஆகியவற்றில் மனஞ்செலுத்தி அவ்வுயர் குறிக்கோள்களின் பெயரால் தந்தையிடமிருந்து எல்லைப்புறக் காட்டு மாளிகை ஒன்றைத் தனக்கெனப்பெற்று, அதில் மாதர் பல்கலைக் கழகம் ஒன்றை அமைத்தாள். அவளது அரிய செயலாற்றலாலும் ஆர்வத்தாலும் அவள் பல பெண்டிரைத் திரட்டி அதனை ஒரு சிறு ‘அல்லி அரசி’ ஆட்சியாக மாற்றினாள். அதில் தலைவர், ஆசிரியர், எழுத்தாளர், மாணவியர் ஆகியவர் மட்டுமன்றிக் காவலர், ஏவலர், பணியாட்கள் முதலிய யாவரும் பெண்டிராகவே அமர்த்தப் பெற்றனர். ஆடவர் எவரும் உள்ளே வரக் கூடாதென்றும், வந்தால் வருபவரும், வர விடுபவரும் துணைபுரிபவரும், இணங் குபவரும், அச்செய்தியறிந்து உரையாதவரும் யாவரும் தூக்கலிடப்படுவர் என்றும் சட்டம் இயற்றினாள்.
மணப்பேச்சும் இளவரசன் வருகையும்
இளவரசனுக்கு மணவயது வந்ததும், அவன் தந்தை, தன் நண்பனாகிய காமா அரசனுக்கு ஓலை போக்கினான். மண வுறுதியை நிறைவேற்றித் தரும்படி கோரினான். காமா அரசனுக்கும் இது முற்றும் உடன்பாடே. ஆனாலும், ஐடா அதனைச் செவியேற்கவும் மறுத்து விட்டாள். தான் என்றும் ஆடவர் உலகுடன் தொடர்பிலாக் கன்னியுலக அரசியாகவே காலங்கழிக்க முடிவு செய்து விட்டதாகவும் கூறியனுப்பி விட்டாள். வேறு வகையின்றி மன்னன் காமா தன் விருப்பத்தையும் நண்பன் விருப்பத்தையும் தன்னால் நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துவதாகக் கூறியனுப்பினான்.
புதுமை வாய்ந்த இச்செய்தியை, ‘மன்னருக்கு இயல்பான அரசியல் சூழ்ச்சிப் பசப்புரை’, என்று வடபுலவேந்தனும் அமைச்சரும் எண்ணியதில் வியப்பில்லை. தம்மை அவமதித்த அரசின்மீது போருக்கெழுவதென்று அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
இளவரசி ஐடாவைப் பற்றியிருந்த குறிக்கோள் வாழ்வாகிய காற்றின் ஒரு பகுதி, இளவரசனையும் தாக்கியிருந்தது. ஆகவே, அவன் தந்தையிடம் மன்றாடித் “தந்தையே! படபடப்பு வேண்டாம். இச்செய்தி புதுமை வாய்ந்ததேயாயினும், இதில் உண்மை இருக்கவும் கூடும். ஆகவே, முதலில் நான் நேரில் சென்று உண்மை அறிந்து வருகிறேன்.” என்று கூறினான். அரசனும் ஒருவாறு உடன்பட, அவன் தன் தோழர்களான ஸிரில், பிளாரியன் ஆகியவர்களுடன் புறப்பட்டான்.
இளவரசனும் காமா அரசனும்
காமா அரசன், இளவரசனை அன்புடன் வரவேற்றுப் பாராட்டினான். பின் அவன் தன் புதல்வி இருக்குமிடம் அறிவித்து, “உன்னால் அவள் மனதை மாற்ற முடியுமானால், யாவரினும் நானே மகிழ்ச்சியடைவேன். ஆயினும் என் செய்வது? அவள் தன் வாழ்வைத் தன் மதியாலேயே நெரித்துக் கொண்டிருக் கிறாளே!” என்றான்.
இளவரசன், “அரசே! முயற்சியால் முடியாத தொன் றில்லை. தாம் உதவுவதானால். நெறிதவறிய நன்னோக்கத்தை இணக்கமான நன்மதியால் முயன்று வெல்வேன்,” என்று கூறினான்.
அரசன் அவன் விருப்பப்படியே இளவரசனை வரவேற்கு மாறு புதல்விக்குக் கடிதம் எழுதித் தந்து இளவரசனை வாழ்த்தியனுப்பினான்.
புதிய மாணவியர்
இளவரசியின் பல்கலைக் கழகத்திற்குக் காவலராயிருந்த பெண்வீரர் ஆடவரினும் வலிதான உடற்கட்டமைந்தவரா யிருந்தனர். அவர்கள் இளவரசர் குழுவினரைத் தடைசெய்து வெளியே நிறுத்தியதுடன், “விரைவில் பிற பெண்டிர் கண் படாமற் போய்விடாவிட்டால், பல்கலைக்கழகச் சட்டப்படி தூக்கலிடப்படுவீர்”, என்றும் எச்சரித்து அச்சுறுத்தினர்.
மூவரும் ஒதுங்கிச் சென்று தம் நிலையை ஆராய்ந்தனர். ஸிரில் அவர்கட்கு ஒரு புதுவழி கூறினான். அவன் தமக்கை ஸைக் பெருமாட்டி கைம் பெண்ணானபின் இளவரசியின் பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆசிரியையாய்ப் பணியாற்றி வந்தாள். பெண்ணுருவில் அனைவரும் உட்சென்று புது மாணவியராய் அவள் உதவி பெறலாம் என்பதே ஸிரிலின் கருத்து. இதனை அனைவரும் ஏற்கவே, அங்ஙனமே அனைவரும் பெண்ணுருவில் உட்சென்று புது மாணவியராகச் சேர்க்கப்பட்டனர். அவர்கள் விரும்பியபடி ஸைக் பெருமாட்டியே அவர்கள் பயிற்சி ஆசிரியை யாகவும் அமைய இடமேற் பட்டது.
ஸிரிலும் ஸைக்கும்
முதல் வகுப்பின் முடிவிலேயே ஆசிரியை, தன் புதிய மாணவருள் ஒருவர் தன் உடன்பிறந்தான் என்று கண்டு கொண்டாள். அவனை அவள் தனியே அழைத்து, “இதென்ன ஸிரில்! இப்படிப் பெரிய இடரில் மாட்டிக் கொண்டு என்னையும் இடையூற்றுக்காளாக்கி விட்டாய். பல்கலைக்கழகச் சட்டப்படி நான் உன்னைக் காட்டிக் கொடுத்து உயிரை வாங்க வேண்டும். அல்லது அது செய்யாத குற்றத்துக்காளாகி என் உயிரையும் விட வேண்டும்,” என்றாள்.
ஸிரில் துணிவுடன், “உன் உயிரை இழக்கவேண்டாம். என் உயிரை வாங்கிவிடு. அது போதாவிட்டால், என்னுடன் இருக்கும் இளவரசர், நண்பர் இருவர் உயிர்கள் வேறு இருக்கின்றன. எங்கள் உயிரை வாங்கிவிட்டு வீரப் பெண்குல வீரமாதராக வாழ்வாயாக,” என்றான்.
’உன் வழக்கமான குறும்புப் பேச்சுக்கு இது இடமுமல்ல; சமயமுமல்ல; ஸிரில்! என் மீது பொறாமையுற்று என்னை ஒழிக்க வகைத்தேடிக் கொண்டிருக்கும் பிளான்ஷிப் பெருமாட்டிக்கு இது தெரிந்தால், என் பெயருக்கும் உங்கள் உயிருக்கும் ஒருங்கே உலைவைத்து விடுவாளே! என் செய்வது!" என்று கை விரித்து வெதும்பினாள் ஸைக்.
மெலிஸ்ஸாவும் பிளான்ஷிப் பெருமாட்டியும்
பிளான்ஷிப் பெருமாட்டியின் புதல்வி மெலிஸ்ஸா, உள்ளே வந்து “என் தாய் தங்களை அழைக்கிறார்கள்,” என்று கூறவே, அனைவரும் திகிலடைந்தனர். ஸைக் அவளிடம், “நீ யாவும் கேட்டுக் கொண்டுதானே வந்தாய்,” என்றாள்.
மெலிஸ்ஸா, “அம்மணி, நான் வேண்டுமென்று கேட்க வில்லை. நான் கேட்டுவிட்டதற்காக மட்டுமே நீங்கள் அஞ்சவும் வேண்டாம். நானாக உங்களுக்குத் துயர் விளைக்க மாட்டேன். ஆனால், இவர்கள் யாவர் கண்களிலும் படாமலிருந்து இரவே ஓடிவிடச் செய்ய வேண்டும்,” என்றாள். ஸைக் சிறிதளவு தேற்றமடைந்து அப்படியே செய்வதாகக் கூறினாள்.
ஆனால், மறுநாள் பொழுது விடியுமுன்பே மெலிஸ்ஸா பரபரப்புடன் ஓடோடி வந்தாள். அவள் கண்கள் கொவ்வைப் பழங்கள்போல் சிவந்து வீங்கியிருந்தன. மூவரும் இன்னும் ஓடிவிடாதது கண்டு அவள், “உடனே ஓடிவிடுங்கள். என் தாய் தானே யாவற்றையும் உய்த்தறிந்து கொண்டு என்னையும் அச்சுறுத்தி யாவும் வெளியிடச் செய்து விட்டாள். அவள் பகைமையுணர்ச்சிதான் உங்கட்குத் தெரியுமே. அவள் இப்போதே இளவரசியிடம் போகவிருக்கிறாள். ஆகவே, உடனே ஓடிவிடுங்கள்,” என்றாள்.
நண்பர் ஓட ஒருப்பட்டனர். ஆனால் ஸிரில், “நான் உயிருக் கஞ்சவில்லை. பிளான்ஷிப் பெருமாட்டியைக் கூட நான் வசப்படுத்த முடியும். என்னைத் தடுக்க வேண்டாம்.” என்று கூறிச் சரேலென்றகன்றான். நல்ல காலமாக அவனால் பிளான்ஷிப் பெருமாட்டியை வசப்படுத்தவும் முடிந்தது. தம்மைக் காப்பாற்றுவதனால், தான் இளவரசனிடம் சொல்லி இன்னொரு பல்கலைக் கழகமே உருவாக்கிப் பிளான்ஷிப் பெருமாட்டிக்குத் தருவதாக அவன் உறுதியளித்தான். அவளும் அதற்கிணங்கினாள்.
வேட்டையும் விபரீதமும்
புயல் இங்ஙனம் தற்காலிகமாக ஓய்வுபெற்றது. இளவரசி புதிய மாணவருடனும் பிறருடனும் அன்று வேட்டையாடச் சென்றாள். அதன் முடிவில் அனைவரும் குடித்தாடிப் பாடியிருந்தனர். ஸிரில் எளிதில் பெண்குரல் பூண்டு பாடியாடி யாவரையும் களிப்பில் மூழ்குவித்தான். ஆயினும் அவன் தன் எக்களிப்பிடையே தன்னை மறந்து பெண்கள் பாடத்துணியாப் பாட்டுகளைப் பாடலானான். இளவரசியின் ஆணையால் பலர் தடுத்தும் அவன் புறக்கணிக்கவே, இளவரசன் சினமூண்டு தானும் தன்னை மறந்து, “இளைஞனே, உன் துடுக்கை அடக்குகிறேன் பார்,” என்று அவனைத் தாக்கலானான்.
‘இளைஞனே!’ என்ற சொல் கொஞ்சநஞ்சமிருந்த மறைப்பையும் அகற்றிவிட்டது. யாவருங் கலகலத்து நின்றனர். இளவரசி கண்சிவக்க, உடல்துடிக்க எழுந்து, பெண்டிர் யாவரும் பல்கலைக்கழகத்துக்கு விரைக. இவ்வாண்பதர்களின் வாடை வேண்டாம், என்று கூறித்தானும் குதிரை மீதேறிக் காற்றென விரைந்தாள். இளைஞர் மட்டுமே வேட்டுவப்பாடியில் மீந்தனர்.
ஆற்றில் விழுந்த இளவரசி
அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேச முனையுமுன் மற்றொருமுறை பெண்கள் பக்கமிருந்து பெருங்கூச்சல் கேட்டது. கடுஞ்சீற்றத்துடன் குதிரைமீது தாவிச் சென்ற இளவரசியை வழக்கத்திற்கு மாறாகக் கலவரங் கண்ட குதிரை தூக்கித் தள்ளவே, பாலத்தின் கீழ் ஓடிய ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். இதனையுணர்ந்த இளவரசன் தன் பெண்ணுடையிலே ஆற்றில் குதித்து நீந்திச் சென்று அவளைக் கரை சேர்த்தான். பெண்டிர் அவளுக்கு ஆவன செய்து தேற்றினர்.
இளவரசிக்கு உணர்வு வந்தபின் தன்னை இளவரசனேதான் காப்பாற்றினான் என்று அறிந்துங்கூட அவள் தன் உறுதியிலிருந்து மீறவில்லை; சீற்றமும் தணியவில்லை; இளவரசனும் அதுவரை காத்திராமல் தன் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டான். புறங்காட்டில் பிளாரியனுடன் அவன் பேசிக் கொண்டிருப்பதற்குள் இளவரசியின் ஏவற் பெண்டிர் அவர்களைக் கைப்பற்றியிழுத்துச் சென்றனர்.
அப்போது இளவரசி தன் உயர் இருக்கையில் கொலுவிருந்து குற்ற விசாரணை நடத்திக் கொண்டிருந்தாள். ஆற்றில் நனைந்த அவள் தலைமயிரை அப்போதும் இரு பணிப்பெண்கள் கோதிக்கொண்டு நின்றனர். அவள் காலடியில் ஸைக்கின் குழந்தை கிடந்தது. பிளான்ஷிப் பெருமாட்டி முன்னின்று தன் செயலுக்கு விளக்கம் கூறிக் கொண்டிருந்தாள். தனக்கெதிராக ஸைக் பெருமாட்டிக்கு உயர்வு கொடுக்கப்பட்டதனால்தான் தான் மாறாக நடந்து கொண்டதாகக் கூறி, அவள் இளவரசியையே துணிந் தெதிர்த்து எதிர்க் குற்றஞ்சாட்டிக் கடிந்தாள்.
வழக்கு முடிவில் இளவரசி பிளான்ஷியைப் பல்கலைக் கழகத் திலிருந்து நீக்குவதனுடன் அமைந்தாள். ஸைக் பெருமாட்டியை விலகும்படி கூறியதுடனில்லாது குழந்தையைத் தன்னிடமே கொடுத்துவிடும்படிப் பணித்தாள். பிளான்ஷிப் பெருமாட்டி மெலிஸாவை அழைத்துக் கொண்டு வெளியேற இருக்கும் தறுவாயில் கழக அஞ்சற்பெண்டு இரு கடிதங்களை இளவரசி முன் நீட்டினாள். இளவரசி அதை வாசித்ததுமே அவள் முகம் சிவந்தது. அவள், அவைகளை இளவரசனை நோக்கி வீசியெறிந்தாள்.
கடிதங்கள்
அவைகளில் ஒன்று மன்னன் காமா, மகளுக்கு எழுதியது. மற்றது வடபுலனால் எழுதப்பெற்று அத்துடன் வைக்கப் பெற்றிருந்தது.
மன்னன் காமா, கடிதத்தில் தன் நிலைமையை புதல்விக்கு விளக்கிக் கூறியிருந்தான். “அருமைப் புதல்வியே! இளவரசனைக் கடிதத்துடன் உன்னிடமனுப்பியபோது உள்ளே நுழையும் ஆடவருக்கெல்லாந் தூக்குத் தண்டனையென்ற உன் பல்கலைக் கழகத்தின் புதுமை வாய்ந்த சட்டத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆயினும், அரசமதிப்புடைய அவனுக்குத் தீங்கு நேராவண்ணம் நானும் பின்னால் புறப்பட்டு வந்து கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பாராமல் வடபுல வேந்தரின் படையெடுப்பு வீரர் கைப்பட்டு நான் இப்போது அவ்வரசர் பாதுகாப்பிலிருக்கிறேன். அவர் நம் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறார். உன் பல்கலைக் கழகமும் அவரால் முற்றுகையிடப் பட்டுள்ளது. அவர் கடிதமும் காண்,” என்பதே அவர் கடிதம்.
இளவரசன் தந்தையின் கடிதம் இதனினும் அச்சுறுத்துடைய தாயிருந்தது. “எம் புதல்வன் அங்கே இருக்கிறதாக அறிகிறேன். அவனுக்கு மயிரிழையளவும் தீங்கு செய்யத் துணியாதிருக்கக் கடவாய். அவன் பாதுகாப்பாக என்னிடம் அனுப்பப்படுவதுடன் முன்னைய ஒப்பந்தப்படி அவனை நீ மணந்து கொள்ள வேண்டும். இதனை உடனடியாகச் செய்யாவிடில் இன்றே உன் மாளிகை அழிக்கப்படும்.”
இளவரசியின் திடம்
இளவரசன் கடிதங்களை இளவரசியிடம் கொடுத்து விட்டுத்தான் என்றுமே அவள் மீது காதல் கொண்டு அவள் படத்தைப் போற்றி வைத்திருப்பதாகக் கூறி அதனை நெஞ்சகத்திலிருந்து எடுத்துக் காட்டினான். அமைந்த ஆனால் கடுமையான தோற்றத்துடன் அவன் பக்கம் திரும்பி, “நீர் பெருந் தன்மையுடையவர்; அதற்காக உம்மை மதிக்கிறோம். எனக்குப் பேருதவி செய்தவர்; அதற்காக நன்றி. நீர் பெண் உடையில் கூட நயநாகரிகமும், நல் தோற்றமும் உடையவர்தாம். அதற்காகப் பாராட்டு ஆனால், உலகின் செல்வமுழுவதும் உம் மணிமுடிக்குள் வருவதானால் கூட, நான் உம்மை மணக்க முடியாது. எம் தந்தை உம் தந்தையிடம் பிணையமாகச் சிக்கியிராவிட்டால் உம்மைக் கொல்லக்கூடப் பின்வாங்கியிருக்க மாட்டேன். ஆகவே, இனி, என் கண்ணில் விழிக்க வேண்டாம். வெளியே போகலாம்,” என்றாள்.
போரும் ஒப்பந்தமும்
அவள் ஆணைப்படி ஏவற்பெண்டிர் இளவரசரையும் தோழரையும் வெளியே அனுப்பினர். வடபுலப் படைகள் வழிவிட அவர்கள் இரண்டரசரும் இருக்குமிடத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். பெண்ணுடையில் அவலத் தோற்றத்துடன் வந்த அவர்களையும் சிறப்பாக இளவரசரையும் கண்டு பெருமக்கள் மகிழ்ச்சியிடையில் கூட வருந்தாதிருக்க முடியவில்லை. ஏனெனில், அவர்கள் பெண்ணுடைகூடத் தாறுமாறாகவும் கிழிந்தும் சேறுபடிந்தும் இருந்தது.
ஆனால், இதற்குள் இளவரசியின் உடன்பிறந்தார்கள் மூவரும் வேறு படைதிரட்டிக் கொண்டு தந்தையை மீட்கவும் தங்கைக்கு உதவவும் முன்வந்தனர். இரு படைகளும் மோதுமுன் இளவரசன் இடையிட்டு, “எங்களால் வந்த இடருக்கு நாங்களே வகை வகுக்கிறோம். இளவரசிக்காக அவள் உடன்பிறந்தார் மூவரும் போரிடட்டும். அவர்களுடன் நானும் என் தோழரும் போரிடுவோம். வெற்றி அவர்க்காயின் காமா மன்னனை அனுப்பி விடுக; வெற்றி நமதாயின் அவர்கள் இளவரசியை மணஞ்செய்து கொடுக்க இணங்கட்டும்,” என்றான்.
தன் கட்சி வெல்லும் என்ற உறுதியில் இளவரசியும், தாம் வெல்வோம் என்ற உறுதியில் உடன்பிறந்தார்களும் இதனை ஏற்றனர்.
இளவரசன் வீழ்ச்சி
இருசாராரும் நெடுநேரம் சரிநிகராகப் போராடினர். ஆனால், இறுதியில் வடபுலப்படை பின்னடைந்து சரிந்தது. உடன் பிறந்தாரும் தோழருமாக மோதினர். இளவரசன் தோழரும் களைத்துப் போயினர். உடன் பிறந்தாருள் மூத்தோனாகிய அராக்கு இளவரசன் மீது பாய்ந்தான். இளவரசியும் தன் அண்ணனை இச்சமயம் நேரிடையாக ஊக்கினாள். இளவரசன் படுகாயமுற்று வீழ்ந்தான். இளவரசன் மாண்டான் என்ற ஒலி எங்கும் எழுந்தது.
வடபுல வேந்தன் இளவரசன் உடல்மீது சார்ந்து கதறினான், அரற்றினான், மறுகி மறுகிப் புலம்பினான்.
இளவரசியோ வெற்றி வெறியுடன் தன் உடன் பிறந்தார்களைப் பெண்கள் வீரங்காக்க வந்த பெருந்தகைகள் எனப் போற்றி வரவேற்றதுடன், அவர்கள் காயம் ஆறும்படி பல்கலைக் கழக ஒழுங்கையே தளர்த்தி வைத்து அங்கே அவர்களைப் பெண்கள் பண்டுவம் பார்க்கும்படி பணித்தாள். விடுதலை வீரர்களுக்கான வெற்றியாரவாரத்துடன் அவர்கள் இட்டுச் செல்லும்படியும் ஆணை தரப்பட்டது.
மனமாற்றம்
ஆனால், அவள் வெற்றியுடன் பின் செல்லுமளவில் வடபுலமன்னன் அழுகை கேட்டுத் திரும்பினாள். தந்தை துயரையும் பிணம் போல் கிடந்த இளைஞனையும் கண்ட அவள்மனம் சிறிது கனிவுற்றது. அவள் இறங்கி அவன் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தாள். நாடி மென்மையாகத் துடிப்பதை உணர்ந்தும், மகிழ்ச்சியுடனும் ஆறுதலுடனும், “அவன் சாகவில்லை; அரசே வருந்த வேண்டாம். என் உடன் பிறந்தார்களுடன் பல்கலைக் கழகத்திலேயே அவனைக் கவனித்து அவன் உயிரை மீட்கிறேன். என் உயிரை மீட்டவனுக்கு நான் கட்டாயம் இந்த உதவி செய்வேன்,” என்று கூறினாள்.
அவள் குரல் கேட்டுச் சற்றே உயிர் ஊக்கம் பெற்ற இளவரசன் அவளைக் கடிந்து, “என்பால் உன் நன்றி எதுவும் தேவையில்லை. நன்றி காட்டினால், ஸைக் பெருமாட்டியின் பச்சை மதலையிடம் காட்டி, அதனை அதன் தாயிடம் சேர். நேரடியாக உன்னால் கொடுக்க முடியாவிட்டால் நான் கொடுக்கிறேன்,” என்றான். பக்கத்திலிருந்த குழந்தையை இளவரசி முத்தமிட்டு அவனிடம் தந்தாள். அழுது கொண்டிருந்த ஸைக்கினிடம் அவன் கொடுப்பதை அவள் தடுக்கவில்லை. அவள் மனக்கோட்டை வாயில் இன்னும் சற்று அகன்றது. அவள் இளவரசனை மட்டுமின்றி, காயமுற்ற வடபுல வீரர் யாவரையும் வடபுலவேந்தனுடன் பல்கலைக் கழகத்துள் இட்டுச் சென்று எல்லாரையும் கவனிக்கும்படி தன் ஏவற் பெண்டிருக்குப் பணியிட்டாள்.
இளவரசனை ஐடாவே கவனித்தல்
ஸைக் பெருமாட்டி பிளாரியனையும், மெலிஸாஸி ரிலையும் பேணிக் கவனித்தனர். ஐடா தானே இளவரசனை உடனிருந்து கவனித்தாள். உணர்விழந்து நோய் வெறியுடனிருந்த இளவரசன் பல தடவை மருந்து தரும் அவள் கையை உதறியும், அவள் மீது தாக்கியும், பல வகையில் பிதற்றியும், அவள் அன்னையினும் கனிவுடன் அவனைக் கவனித்தாள். இரவு பகல் அவள் தான் ஊன் உண்ணாது அவனை ஊட்டினாள். தன் நலமறுத்து அவன் நலத்திற் கருத்தூன்றினாள்.
ஒருநாள் இளவரசன் வழக்கத்திற்கு மாறான நீண்ட நேர உறக்கத்தில் ஆழ்ந்துகிடந்தான். அவன் காயங்களும் நோவும் காய்ச்சலும் ஆறிவிட்டன. ஆனால், உடல் வலுவிழந்து நாடிகள் தளர்ந்து அவன் உடல் உயிருக்குப் போராடியது. இளவரசி கவலையே வடிவாக அருகில் அமர்ந்து, தன் உயிர் தன் கைவரக் காத்திருக்கும் அரையுயிர்ச் சிலைபோல் காத்திருந்தாள்.
வேடிக்கையான தண்டனை
இளவரசனுக்கு வேண்டும் பணிகளைப் பெண்களுக்கே யுரிய மென்மைக் கனிவுடன் ஆற்றினாள். அவள் ஒவ்வோரசை விலும் அவள் உள்ளத்தில் அன்பு குடிகொண்டு விட்டதை இளவரசன் உணர்ந்தான். அவன் உயிர் உடலை மீறி வளர்ச்சியுற்றது.
“நான் யார் அன்புக்கும் தகுதியற்றவள். ஆனால், என்னை நாடி நீங்கள் உயிர் பெற்றீர்கள். என் உயிரையும் காத்தீர்கள். இப்போதும் அதற்கு நான் தரும் பரிசு எதுவுமில்லை. மற்றுமொரு தண்டனைதான் தர முடியும். இத்தகுதியற்ற பெண்ணை மணந்து வாழுங்கள்,” என்று அவள் இளவரசனிடம் கண்ணீர் ததும்பக் கூறினாள்.
இவ்வினிய தண்டனையை இளவரசன் ஆரா விருப்புடன் ஏற்றான். முன்னைய நண்பர்களும் எதிரிகளும் இத்தண்டனை யால் ஒன்றுபட்டனர். அனைவரும் மகிழ்ந்தனர்.
நெல்லையும் நிலனும்
குடியானவன் வேலனுக்கு நீலன் மகன்; நெல்லை மருமகள். அவர்கள் இருவரையும் கணவனும் மனைவியும் ஆக்க வேண்டுமென்று வேலன் விரும்பினான். நுண்ணறிவுடைய நெல்லை இதை உணர்ந்து கொண்டதுடன், அதற்கிணங்க அவனை நேசித்தும் வந்தாள். ஆனால், நீலன், வேலன் குறிப்பை அறிந்து கொள்ளவுமில்லை; அவளிடம் சற்றும் அன்பு கொள்ளவு மில்லை.
ஒருநாள் வேலன், நீலனைக் கூப்பிட்டு நெல்லையை மணந்து கொள்ளும்படி சொன்னான். நீலன் தனக்கு அவள் மீது சற்றும் விருப்பமில்லை; ஆதலால் அவளை மணந்து கொள்ள முடியாது என்று கூறவே, வேலன் கடுஞ்சினங் கொண்டு, “என் விருப்பப்படி நடக்க முடியாவிட்டால் என் வாயிற்படியிலும் நில்லாதே. வெளியே போ,” என்றான்.
நீலன் மறுமொழி பேசாமல் வெளியே போய்விட்டான். அவன் திரும்பி வரவேயில்லை. கூலியாட்களுடன் சென்று அவன் வேலை செய்தான் என்று அயலார் கூறினர். வேலன் மனம் மாறவில்லை. நெல்லை மனம் வருந்தினாள்.
நீலன் திருமணமும் வாழ்க்கையும்
நீலன், கூலிவேலையிலீடுபட்டிருந்த வள்ளி என்ற ஓர் ஏழைப்பெண்ணை விரும்பி அவளை மணந்தான். நீலன் தன்னை மணக்காததோ, விரும்பிய பெண்ணை மணப்பதோ, அவன் குற்றமாகாது என்று நெல்லை சொல்ல வாயெடுத்தாள். வேலன் கடுமையாகச் சீறி, “அவன் பேச்சே இங்கு வேண்டாம். இனிமேல் அவனுடனோ அவனைச் சேர்ந்தவர்களுடனோ நீ உரையாடவும் கூடாது, எச்சரிக்கை,” என்றான்.
நெல்லை அதற்கப்புறம் நீலனைப் பற்றிப் பேசத் துணியவில்லை.
நீலனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஒரு சில நாள் அவன் மகிழ்ச்சி யோடிருந்தான். ஆனால், வறுமை அவனை வாட்டியது. கூலித் தொழில் செய்தறியாத அவன் உடல் தளர்ந்து நோய்க்கு உள்ளாயிற்று. முன்னைய நீலனின் நிழல்போல் அவன் வேலன் வீட்டின் வழியாக அடிக்கடி போவான். வேலன் மனம் மாறாதா என்று நெல்லை ஏங்குவாள். ஆனால், வேலன் மனம் மாறிற்றோ மாறவில்லையோ, அவன் முகம் சற்றும் மாறவே இல்லை."
நெல்லையின் மனம்
நெல்லை தனக்குக் கிட்டிய சில்லறைக் காசுகளைச் சேர்த்து வைத்து அடிக்கடி நீலனுக்கு அனுப்பி வைப்பாள். அது யாரிடமிருந்து வந்தது என்று நீலனுக்குத் தெரியாது. அவன் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் எண்ணம் முற்றும் தன் மனைவி மக்களைக் காப்பதெப்படி என்ற கவலையிலேயே ஆழ்ந்திருந்தது. வள்ளி, ஓரளவு யார் அதனை அனுப்பியிருக்கக்கூடும் என்பதை உய்த்துணர்ந்தும் ஒன்றும் கூறவில்லை.
அடிக்கடி மனைவியையும் பிள்ளையையும் எண்ணித் தந்தையின் வீடு நோக்கி நீலன் வருவான். நிமிர்ந்து நிற்கும் அவ்வீட்டைக் கண்டதும் அவன் ஆண்மை அவனைப் பின்னுக்குத் தள்ளித் திருப்பி அனுப்பி விடும். “பிள்ளையை ஒட்டி தந்தையின் முன் பிள்ளைக்காக மண்டியிடுவதா?” என்று அவன் நெஞ்சு குமுறும்.
நெல்லையும் வள்ளியும்
வறுமைக்கும், நோய்க்கும் இரையாய் அவன் இறுதியில் உலகுநீத்தான். வள்ளி தன் துணையற்ற சிறுவனிடம் இன்னது செய்வதென்று அறியாமல் கலங்கினாள். அப்போது நெல்லை அவளிடம் வந்து, "வள்ளி! உன் துன்பங்களை நான் அறிவேன். என் மாமன் மனம் மாறும் என்று இதுவரை பார்த்தேன். இனிப் பார்த்திருக்க முடியாது. துணிந்து இனி ஒரு காரியம் செய்யப் போகிறேன்; நீ இணங்க வேண்டும்,’ என்றாள்.
வள்ளி, அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு, “அக்கா! உன் உள்ளத்தை நான் நன்கு அறிவேன். உன் விருப்பப்படி நடப்பேன்,” என்றாள்.
“வள்ளி! உன் குழந்தையை - என் நீலனின் குழந்தையை என்னிடம் கொடு; அவன் முகத்தைப் பார்த்தாவது என் மாமன் மனம் கனியும்,” என்றாள்.
“உன் நல்ல மனத்திற்காகவாவது இறைவன் இரங்கட்டும்,” என்று குழந்தையை வள்ளி நெல்லையிடம் ஒப்படைத்தாள்.
அறுவடைக் காலத்தில்
அஃது அறுவடைக்காலம். வேலன் வயல்கள் அவ்வாண்டு மேனி கொழித்தன. மலைமலையான வைக்கோற் போர் களிடையே குன்று குன்றாக நெல் குவிந்து கிடந்தது. அவற்றிடையே குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டு நேரத்தைப் போக்கினாள் நெல்லை அறுவடையின் செழிப்பினிடையே ஏழை நீலனின் துணையற்ற குழந்தையைக் கண்டால் அவன் மனம் இரங்கும் என்று, அவன் அப்பக்கமாக வருவதை நெல்லை எதிர் பார்த்திருந்தாள்.
அன்று முழுவதும் வேலன் அவ்விடம் வரவில்லை. களம் அடிப்பவர் கூலிக் கணக்கிலேயே ஈடுபட்டிருந்துவிட்டு, அவன் நேராக வீடு சென்று விட்டான்.
மறுநாளும் நெல்லை குழந்தையுடன் அங்கேயே காத்திருந்தாள். மாலையில் அவ்விடம் வந்த வேலன் அவளைப்பார்த்து, “இங்கே உனக்கென்ன வேலை? இஃது ஏது குழந்தை?” என்று கேட்டான்.
வேலன் சினம்
நிலத்தைப் பார்த்தவண்ணம் குழந்தையை அவனிடம் விட்டு அவள், “இது நீலனின் குழந்தை. இதற்கு இனி நீங்கள் தானே தந்தை. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்றாள்.
“உன்னைத்தான் நான் அப்பக்கமே நாடவேண்டாம் என்று சொல்லி யிருந்தேனே! ஏன் அந்தப் பிச்சைக்காரியுடன் சேர்ந்து சதி செய்கிறாய்,” என்று வேலன் கடிந்து பேசினான்.
“என் சதிக்கு என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஒன்று மறியாத இக்குழந்தையை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்றாள் நெல்லை.
நெல்லை வெளியேறுதல்
“சரி அப்படியே ஆகட்டும்; குழந்தையை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், நீ இனி உன் நண்பர்களுடனேயே போயிருக்கலாம். இங்கிருக்க வேண்டியதில்லை,” என்றான் வேலன்.
நெல்லை தன் காரியம் கைகூடிற்று என்று மகிழ்ந்து வள்ளியிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் விரித்துரைத்து, ’இப்போது எனக்கு மனம் குளிர்ந்தது. நீலனுக்கு என்னால் நேர்ந்த தீமைகளில் ஒரு சிறிதேனும் அகன்றதனால் நான் மகிழ்ச்சி யடைகிறேன். இனி நாமிருவரும் உழைத்து, நீலனின் பெயரைக் காப்போம்" என்றாள்.
ஆனால் வள்ளி, “அம்மா, எனக்காக நீ வீட்டை விட்டு வெளிவரும்படி நான் விடமாட்டேன். அஃதோடு குழந்தையையும் இவ்வளவு கல்நெஞ்சமுடைய அந்தக் கிழவனிடம் நான் ஒப்படைக்க விரும்பவில்லை. நீ என்னுடன் வா; அக்குழந்தையை நான் திரும்பவும் அழைத்து வருகிறேன்,” என்றாள். நெல்லை வேண்டா வெறுப்பாய் வள்ளியுடன் சென்றாள்.
வேலனின் மனமாற்றம்
அவர்கள் செல்லும் போது வீட்டுவாயில் திறந்திருந்தது. நீலனின் குழந்தை வேலன் மடியில் உட்கார்ந்து கொண்டு அவன் மூக்குக் கண்ணாடியில் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. நெல்லையையும், வள்ளியையும் கண்டதும் அவன் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு விட்டு எழுந்தான்; குழந்தை தன் தாயிடம் ஓடியது.
வள்ளி, குழந்தையைத் தோளோடு சேர்த்துக் கொண்டு வேலனை நோக்கி, “ஐயனே! என் பிள்ளைக்காக நீங்கள் தங்கள் மருமகளை வெளியேற்ற வேண்டாம். அன்புகூர்ந்து அவளைத் திரும்ப ஏற்றுக் கொள்ளுங்கள். பிள்ளை எவ்வளவு துன்பப் பட்டாலும் என்னிடமே இருக்கட்டும்; தங்களிடமிருந்தால் தங்களைப் போன்றே அதுவும் கல்நெஞ்சம் உடையதாக ஆகிவிடக் கூடும்; அப்படி ஆதல் கூடாது,” என்றாள்.
கிழவன் ஒன்றும் மறுமொழி கூறவில்லை. ஆனால், சற்றுநேரத்தில் அவன் கடுமையெல்லாம் பறந்து போயிற்று. “ஆம்; நான் கடுமையுடையனே; கடுமையால் பிள்ளையை இழந்தேன்; பிள்ளையினும் அருமையாய் வளர்த்த மருமகளை வெளியேற்றினேன். ஆனால், இச்சிறுபிள்ளையிடம் என் கடுமை செல்லவில்லை; அதை விட்டு நீங்கி, என்னாலிருக்க முடியவில்லை; அதன் மூலம் என் பிள்ளையின்அருமையை அறிந்தேன். பிள்ளையை இழந்த என் வீட்டில் நீங்களேனும் இருந்து என் வெறுமையைக் குறையுங்கள்,” என்றான்.
நீலனின் பிள்ளை, அம்மூவருக்கும் நீலனின் வாழ்வை நினைவூட்டித் துன்பமும், இன்பமும் மாறிமாறி அளித்த வண்ணம் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் ஒருவாறு நிறைவுபடுத்தினான்.
விளையும் பயிர் முளையிலே!
வீ. வில்லி விங்கி
இளமையில் அமைதியாயிருக்கும் பிள்ளைகளைவிட இளமையில் துடுக்குமிக்க பிள்ளகைளே பிற்காலத்தில் அறிவுக் கூர்மையும், திறமையும் உடையவர்களாய் விளங்குவர் என்று கூறுவதுண்டு. வீ. வில்லி விங்கியின் இளமைக்காலம் இதற்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு ஆகும்.
வீ.வில்லி விங்கிக்குத் தாய் தந்தையாரிட்ட முழுப் பெயர் பெர்ஸிவல் வில்லியம் வில்லியம்ஸ் என்பதாகும். கண்ட கண்டவர்கட்கெல்லாம் பட்டப் பெயர்கள் கொடுக்கும் அவன் இயல்பு. தன்னைக் கூடச் சும்மா விட்டு விடவில்லை. பழைய சிறுகதை ஒன்றில் அவன் பார்த்த ஒரு கவர்ச்சி மிக்க பெயரை அவன் தனக்குத்தானே சூட்டிக் கொண்டான். அவன் இட்ட பெயர் மற்ற எல்லோரின் வகையிலும் ஒட்டிக் கொள்வது போல், அவன் வகையிலும் ஒட்டிக் கொண்டது. வளர்ந்த பின் அதை அவன் உருட்டித்தள்ள எண்ணின போதும் அது விட்டபாடில்லை.
முரட்டுக் குழந்தை
வில்லியின் தந்தை இந்திய வடமேற்கு எல்லைப்புறத்தில் உள்ள 195-ஆவது பட்டாளத்தின் தலைவரான கர்னல் வில்லியம்ஸின் ஒரே குழந்தை. பிறந்து இரண்டு திங்களாகு முன்பே அவன் பலனற்ற தன் ஈறுகளால் தாயைக் கடித்தும், செம்பட்டை முடிகள் கூடத் தோன்றாத தலையால் அவளை முட்டிக் குடைந்தும் தன் உள்ளார்ந்த “குரங்கு”த் தனத்தைக் காட்டினான்.
அவனை வளர்க்க அரும்பாடுபட்ட செவிலியர்களுக்கும் பணியாட்களுக்கும் அவன் வளர்ச்சியுடன் தொந்தரவும் தொல்லையும்தான் வளர்ந்து வந்தன. அவர்கள் சற்று விலகினால் அல்லது கண் மறைந்திருந்தால் கண்ணாடிக் கோப்பைகள் உடைபடும். கிண்ணத்தில் இருந்த பால் தரையில் ஊற்றி விடப்படும். சிலசமயம் விளக்குகள் உடைந்து அவனுக்கே இடுக்கண் விளைவதுண்டு.
படையின் கட்டுப்பாடுகளுக்குப் பொறுப்புத் தாங்கி பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமையான தூண்களுள் ஒன்றைச் சரிவர நிலைநிறுத்தி வந்த கர்னல் வில்லியம்ஸுக்கு அப்பெரிய வேலையைவிட இச்சிறு குரங்குக் குட்டியைக் கட்டுப்படுத்தும் வேலை அருமையாகப் போயிற்று. குரங்கு சற்று வளரட்டும். என் பட்டைகளின் சட்டங்களால் அவனை இறுக்கி, பணிய வைக்கிறேன்; என்று அவன் கூறிக் கொண்டான்.
வீ வில்லி விங்கி ஆறு ஆண்டு முதிர்ந்து தாய் மடியிலிருந்து தந்தை தோளுக்குத் தாவும் பருவம் ஆயிற்று. கர்னலின் ஆட்சியும் தொடங்கிற்று. இரு என்றால் இருக்க வேண்டும்; இல்லா விட்டால் உதை, வாயை மூடு என்றால் மூடவேண்டும், இல்லையாயின் காதில் ஒரு முறுக்கு.
கர்னலின் அடக்குமுறை
பாறையை உடைக்கும் கடப்பாரை, பஞ்சுப் பொதியை என்ன செய்யும்? போலீசாரைப் பணிய வைக்கும் கர்னலின் ஆட்சிமுறை தம் சிறிய “குரங்குக் குட்டி”யிடம் செல்லவில்லை. அவர் கண் மறைந்ததே, அதுவரை அடங்கியிருந்த அவன் குறும்பெல்லாம் அணை கடந்த வெள்ளம்போல் பீறிட்டு வெளிவரும். செவிலியர்கள், பின் தங்கள் ஆட்சி முறையைத் தொடங்குவார்கள்.
நட்பு, பகை, பிரிவு, ஒறுப்பு என்ற நால்வகை ஆட்சி முறைகளைத் தலைகீழாய்த் திருப்பி, பின் பணியாற்றினார் கர்னல். படையில் ஆட்சி செலுத்தும் ஒறுப்பு பயன்படாமல் போகவே, பிரிவு முறையில் நல்ல பிள்ளை கெட்ட பிள்ளை என்ற பாகுபாட்டைத் தொடங்கினார். பின் திட்டினார். இறுதியில் “நல்ல பிள்ளையாக நடந்தால் உடுப்பில் நல்ல வீரர்களுக்குக் கொடுக்கப்படும் நன்னடத்தைக் குறிப்புத் தரப்படும். அதைக் கண்டபின்தான் தின்பண்டங்களை நண்பரும், உறவினரும், உனக்குக் கொடுக்கலாம்,” என்று அவர் கண்டிப்பான ஏற்பாடு செய்தார்.
வீ வில்லி விங்கிக்குத் தின்பண்டத்தில் விருப்பம் தான். ஆதலால் நன்னடத்தைக் குறிப்பிலும் நாட்டம் ஏற்படவே செய்தது. ஆயினும் அவன், தன் இயற்கைக்கு மாறாக நடந்து அதனைப் பெறுவதுதான் அவனுக்கு முடியாத காரியமாய் இருந்தது.
வில்லியின் ஒரே நண்பர்
வில்லிக்கு நண்பர்கள் மிகக் குறைவு. பட்டப் பெயர்கள் இடும் இயற்கையினால் எந்தப் புதிய மனிதரும் அவனை விரும்புவதில்லை. ஆனால், ஒரே ஒருவர் வகையில் அவன் பட்டப் பெயரால் பகைமையோ வெறுப்போ ஏற்படவில்லை. இம்மனிதர் கர்னல் வில்லியம்ஸின்கீழ் துணைத் தலைவராய் இருந்த பிராண்டிஸ் என்பவர். அவர் தலைமுடி செம்பட்டையாய் இருந்ததால், வில்லி அவரை அண்டிச் செம்பட்டு (Coppy) என்றழைத்தான். அவர் சினங்கொள்ளாமல் புன்முறுவலுடன் வில்லியின் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். அன்று தொடங்கி இருவரும் நண்பர் ஆனார்கள்.
வில்லிக்குத் தந்தை தாய் ஆகியவரிடத்தில் கூட கிடைக்காத நட்பும் உரிமையும் அவரிடத்தில் கிடைத்தன. அவர் தொப்பியை வைத்து அவன் விளையாடுவான். அவர் பெரிய மூக்குக் கண்ணாடியைத் தன் சிறு மூக்கில் வைத்துத் திரிவான். தந்தை, தாய் கண்டித்தாலும் கூடச் செம்பட்டு இதனைத் தடுப்பதில்லை. உண்மையில் (சற்று முன்னெச்சரிக்கையுடன்) தன் வாளைக் கூட வில்லி உருவிக் கொஞ்ச நேரம் கையில் வைத்திருக்கச் செம்பட்டு இணங்குவதுண்டு. இவ்வளவு விளையாட்டுகளிடையேயும் செம்பட்டிடம் மதிப்பு மட்டும் வில்லிக்குக் குறையவில்லை. தந்தைக்கு அடுத்தபடி அவரே மிகவும் பெருந்தன்மைமிக்க மனிதர் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.
வில்லியின் சிறுபிள்ளைக் குறும்புத்தனம் வளர்ந்து இளைஞனான பின் இன்னும் வரம்பு கடந்துவிடப் படாதே என்று எண்ணிய கர்னலால் அவனுக்குப் படைத்துறையில்லாத புதிய ஒழுங்கு முறைகளைத் தேடித் திட்டப்படுத்தியிருந்தார். தாய், செவிலி ஆகியவர்களைத் தவிர வளர்ந்த பெண்களிடம் பேசுவது மதிப்புக்குக் குறைவு என்பது அவன் மனதில் குத்தியேற்றப்பட்டது. மற்ற “வரம்புகளுக்குக் கீழ்ப்படியாத வில்லி, இந்தப் பெரிய கோட்டையைச் சரிவர மதித்து அதன் எல்லை கடவாதிருந்தான். என்ன இருந்தாலும் அவன் படைத்தலைவர் பிள்ளையல்லவா?”
வில்லி கண்ட காட்சி
வில்லி ஒரு நாள் தன் கண்ணைக் கூட நம்ப முடியாத ஒரு காட்சியைக் கண்டான். செம்பட்டு தந்தைக்கடுத்தபடி தானும் பிறரும் மதிக்கும் உயர்வுடைய செம்பட்டு தனிமையில் ஒரு வளர்ந்த பெண்ணுடன் நட்புரிமையுடன் பேசுவதை அவன் கண்டான். தந்தை அப்படிப் பேசுவது மதிப்புக்குக் குறைவு என்று சொல்லியிருக்கிறாரே! ஆண்டிலும் அறிவிலும் முதிர்சசி அடைந்த செம்பட்டு அப்படி நடப்பதேன் என்று அவன் குழந்தையுள்ளம் தனக்குத் தானே வியப்புடன் கேட்டுக் கொண்டது. அது செம்பட்டில்லாமல் வேறு யாராயிருந்தாலும் உடனே தந்தையிடம் ஓடித் தன் ஐயத்தைத் தீர்க்க முயன்றிருப்பான். வழியில் கண்டவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லி அவமதிப்பாய்ப் பேசியிருப்பான். ஆனால், "செம்பட்டு நண்பர், தனக்காக எத்தனையோ தடவை தந்தையிடம் தன்
குற்றங்களைச் சொல்லாதிருந்தவராயிற்றே! நாமும் வேறு யாரிடமும் கூறப்படாது, அவரிடமேதான் கேட்கவேண்டும்," என்று அவன் எண்ணினான்.
செம்பட்டினிடம் கேட்டல்
இத்துணிவுடன் அவன் செம்பட்டு உட்கார்ந்த மேடையண்டை சென்று ஆர்வமிக்க தோற்றத்துடன் “எனக்கு ஒன்று கேட்க வேண்டும், கேட்கட்டுமா? கேட்கவேண்டாமா?” என்றான்.
செம்பட்டு: ஏன் நன்றாகக் கேள்.
வில்லி: என் தந்தை “வளர்ந்த பெண்களிடம் பேசக் கூடாது; அது மதிப்புக்குறைவு,” என்று என்னிடம் சொல்லிக் கண்டித்திருக் கிறார். அது சரி என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள்?
செம்பட்டு: (வியப்புடன்) ஆம் வில்லி! அது தவறுதான்.
வில்லி: அப்படியானால் - அப்படியானால் (என்று தயங்கி) நீங்கள் ஏன் அப்படிப் பேசினீர்கள்?
இக்கேள்வியைக் கேட்டு பிராண்டிஸ் (செம்பட்டு) திடுக்கிட்டார். அவர் பேசியது பெண் மேஜர் அலார்டைஸ் என்ற போர்வீரரின் புதல்வி. அவளுடன் பிராண்டிஸ் சில நாளாக நேசங் கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவள் தந்தை இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என எண்ணி இருவரும் விரைவில் அவருக்குத் தெரியாமலேயே மணம்புரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்றும் புரியாத சிறுவனும் குறும்பனுமாகிய வில்லி இதை அறிந்துவிட்டதனால், இனி இது அம்பலமாய் விடுமே என்று பிராண்டிஸ் கவலை கொண்டார். அதனைக் காட்டிக் கொள்ளாமல் அவர், “நீ சிறு பையன். இதெல்லாம் உனக்குத் தெரிய இன்னும் சில நாள் செல்லும். அப்போது நீயும் இப்படியே பேசுவாய்,” என்றார்.
வில்லியின் சிறிய உள்ளத்திற்கு இது சற்றுப் புரிந்து கொண்டது. செம்பட்டின் வாளைத்தன்னால் எடுக்க முடியாத போது அவர் வளர்ந்தால் நீயும் இதனை எடுக்க முடியும் என்றது அவனுக்கு நினைவிருந்தது. அது போலவே இதுவும் என்று அவன் எண்ணினான்.
இதற்குள் செம்பட்டு அவனிடம், “நீ கண்டதை அப்பாவிடமும் பிறரிடமும் சொல்லிவிட்டாயா?” என்றார்.
வில்லி: சொல்லவும் இல்லை; சொல்லவுமாட்டேன். நான் உங்களுடைய பொருள்களை உடைத்தபோது நீங்கள் அப்பாவிடம் சொல்ல வில்லையல்லவா?
பிராண்டிசின் விளக்கம்
பிராண்டிஸுக்கு உள்ளூர இருந்த கவலை தீர்ந்தது. அவன் வில்லி சிறுவனாயினும் நம்பிக்கையானவன் என்று கண்டு அவன் மனதுக்குப் புரியும் முறையில் செல்வி அலார்டைஸுடனுள்ள தன் உறவைச் சற்று விளக்கிக் கூறினார். “இன்னும் சில நாட்களுக்குள் அவள் எனக்கு உரியவளாய் விடுவாள். அதன்பின் எத்தகைய மறைப்பும் வேண்டியிராது,” என்றார்.
வில்லி இதனையறிந்து கொண்டதாகத் தலையை ஆட்டினான். ஆனால் அவன் தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் மலர்ந்த அவன் அறிவு செம்பட்டு அவளை மனைவியாகக் கொள்ளப் போகிறார் என்பதை உய்த்தறியக் கூடவில்லை. "வாள், குதிரை முதலிய உடைமைகளைப் போலவே சொல்லி அலார்டைஸையும் அவர் வாங்கப் போகிறார் போலும்! என்று மட்டும்தான் அவன் எண்ணிக் கொண்டான்.
சிறைத் தண்டனை
தம் செம்பட்டின் வாள், குதிரை ஆகியவற்றில் கொண்ட பற்றுதல், அவனுக்குச் செல்வி அலார்டைஸிடமும் எற்பட்டது. ஓரிரண்டு வாரம் தொடர்ச்சியாக அடங்காக் குறும்புகள் செய்ததனால், வில்லிக்கு அவன் நன்னடத்தைக் குறிப்பு அகற்றப்பட்டதுடன், உணவின்றி ஒருநாள் முழுவதும் மாடியிலேயே சிறையிருக்க வேண்டும் என்று தண்டனையும் கொடுக்கப் பட்டது.
நல்ல பிள்ளையாய் இருந்து தண்டனையைப் பொறுமையுடன் கழித்தால்தான் நன்னடத்தைக் குறிப்பு மீண்டும் தரப்படும் என்றும் அவனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தன் இயல்புகளையெல்லாம் அடக்கிக் கொண்டு வருத்தத்துடன் வில்லி மாடியிலிருந்து கொண்டு பால்கணி வழியாகத் தற்போக்காகச் செல்லும் மக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் செல்வி அலார்டைஸ் குதிரையேறிச் சென்றதைக்கண்டு, “அல்லி அல்லி! எங்கே செல்கிறாய்?” என்றான்.
அல்லியைப் பின்தொடர்தல்
அல்லி “நான் ஆற்றுக்கப்பால் செல்கிறேன்,” என்று கூறிக்கொண்டு குதிரையைத் தட்டி ஓட்டினாள்.
அந்த ஆறு இந்தியாவின் எல்லையிலுள்ளது. அதற்கு அப்பால் உள்ளவர்கள் காட்டுமக்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள். திருட்டிலும் கொள்ளையிலும் சேர்ந்தவர்கள். வில்லி அவர்கள் பொல்லாதவர்கள் என்பதையும், ஆறு கடந்து சென்றால் பேரிடுக்கண் வரும் என்பதையும் பல தடவை சொல்லக் கேட்டவன். தன் செம்பட்டுக்கு உரியவளாகப் போகும் அவளுக்கு இடையூறு வருமே என்ற கவலையில் அவன் தன் சிறையையும் நன்னடத்தைக் குறிப்பையும் மறந்து தந்தையின் குதிரை மாடஞ் சென்று ஒரு மட்டக் குதிரை மீதேறிக் கொண்டு அவளைப் பின் பற்றினான்.
வில்லி ஆற்றின் கரையை அண்டுமுன் "அல்லியின் குதிரை நட்டாற்றுக்குச் சென்று விட்டது. ஆற்றில் தண்ணீர் இல்லாத தால் அவள் குதிரை மென்மணலிலும் கூழாங்கற்களிலும் சென்றது. இடையில் ஒரு கூழாங் கல்லில் கால் இடறிக் குதிரை விழுந்தது. அல்லியின் கால் குதிரையின் கீழ்ச் சிக்கி மொழி பிறழ்ந்து வீக்கமும் வலியும் எடுத்தது. அவள் பல்லைக் கடித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள்.
அல்லியும் வில்லியும்
அச்சமயம் வில்லி பக்கத்தில் குதிரையிலிருந்திறங்குவது கண்டு, “தம்பி நீ இங்கே ஏன் வந்தாய்?” என்றாள். வில்லி “உன்னை நாடித்தான் வந்தேன். ஆற்றுக்கப்பால் உள்ளவர்கள் பொல்லாதவர்களாயிற்றே! உனக்கு ஏதேனும் இடையூறு வந்துவிடுமே என்று அஞ்சி வந்தேன்,” என்றான்.
அல்லி, இச்சிறு பையன் தன்னைப் பற்றி ஏன், இவ்வளவு அக்கறை கொள்கிறான் என்றறியக் கூடவில்லை. ஆயினும் தன் வலியை அடக்கிக் கொண்டு அவனுதவியைப் பயன்படுத்த எண்ணி, “சரி, நீ கூடாரம் சென்று என் நிலைமைகளைக் கூறி உதவி அனுப்பு,” என்றாள்.
ஆனால், வில்லி திரும்பிச் செல்லவில்லை அதற்கு மாறாக அவன் குதிரையைச் சவுக்காலடித்துக் கூடாரத்தை நோக்கி ஓட்டினான்.
அல்லி: இதென்ன தம்பி இந்த வேலை செய்தாய்?
வில்லி: நீ என் செம்பட்டுக்கு உரியவள். உன்னைத் தனியே விட்டுச் செல்லமாட்டேன். அதோ பார் அந்தப் பொல்லாத மனிதர்களை.
காட்டு மக்கள்
வில்லி கூறியது உண்மையே. காட்டு மக்களுள் ஆற்றின் அக்கறையில் சென்று கொண்டிருந்த ஒரு கூட்டத்தினர் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனியேயிருப்பது கண்டு அவர்களை நோக்கி வந்தனர். அண்டி வந்ததும் அவர்கள் தங்கள் மொழியில், “நல்ல வேட்டையடா? இச்சிறுவனயும் சிறுக்கியையும் பிடித்துப் போவோம். பெண்ணுக்கு உடையவரிடம் இருந்து கை நிறையப் பணம் பெறலாம்,” என்றான்.
வில்லிக்கு அவர்கள் மொழி நன்றாய்த் தெரியும். அவர்கள் கூறியது கேட்டு அவன் அச்சங்கொண்டான். ஆயினும் தன் தந்தையின் பெயரின் பெருமையை விட்டுவிட அவன் விரும்பவில்லை. அவர்கள் மொழியிலேயே அவன், “டேய்! அண்டிவராதீர்கள்! என் தந்தையின் ஆட்கள் கண்டால் உங்கள் குருதியும் உங்கள் ஆட்கள் குருதியும் இவ்வாற்றில் ஓடும்,” என்றான்.
வில்லியின் தந்தையிடம் வேலை பார்த்த ஒருவன் அக்கூட்டத்தில் இருந்தான். அவன் கூட்டத்தில் தலைவனிடம், “பையன் கூறியது உண்மைதான். அவன் அந்த அடம் பிடித்த கர்னல் பிள்ளை. இந்தச் சிறு வருவாயை எண்ணி அவர் கையை விலைக்கு வாங்க வேண்டாம்,” என்று கூறினான். அல்லி அதற்குள் செம்பட்டினிடம் குறிப்பாக அனைத்தும் கூறினாள்.
பாராட்டுதல்
கர்னல், தன் வில்லி வெறும் குறும்பனல்ல, பெரிய வீரன்; வீரர் இயல்பின் வித்து அவனிடம் இருந்தது என்று கண்டான். அது முதல் தன்கட்டுப்பாடுகளை நீக்கி அவனைப் போற்றினான்.
செம்பட்டும் அல்லியும் விரைவில் மணம் செய்து கொண்டனர். வில்லிக்கு அவர்கள் சிற்றப்பனும் சின்னம்மையும் ஆயினர்.
பிற்காலத்தில் வில்லி தந்தையினிடமாக 159-ஆவது படைத்தலைவனாய் கர்னல் பெர்ஸிவல் வில்லியம் ஆனான். செம்பட்டு அவனுக்கடுத்த துணைத் தலைவனாய் இருந்து அவன் வெற்றிகளில் பங்கு கொண்டான். 159-ஆவது படை வீரர் கர்னல் வில்லியமிடம் கொண்ட மதிப்பு மட்டுமின்றி, கர்னல் வில்லியிடமும் மிகவும் உயர்ந்த நேசமுடையவராயினர்.
நளினியும் மல்லர்கோவும்
இரட்ட நாட்டு அரசனான அரிகேசரி சமயப் போர்களிலீடுபட்டு வெற்றியுடன் தாய்நாட்டுக்கு மீளும்போது வேற்றரசர் கையில் சிறைப்பட்டுவிட்டான். அவன் சிறைமீட்கப்பட்டு வருமளவும் அவன் உடன்பிறந்தான் இளவரசன் விசயன் இரட்டநாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தான்.
விசயப் பெருந்தகையின் கடன்
அரிகேசரியிடம் பற்றுக் கொண்ட பெருமக்களுள் கோமகன் ஆகமவல்லன் என்பன் ஒருவன். ஒப்பற்ற வில்வீரனாகிய அவன் விசயப் பெருந்தகை என்ற இன்னொரு பெருமகன் புதல்வியாகிய நளினியைக் காதலித்து வந்தான். விசயப் பெருந்தகையின் புதல்வனான மாதவசேனன் அரிகேசரியுடனேயே சிறைப் பட்டிருந்தான். அவனை மீட்க விசயப் பெருந்தகைக்கு இரண்டாயிரம் பொன்கள் தேவையாயிருந்தன. விசயப் பெருந்தகையிடம் அவ்வளவு பெருந்தொகை இல்லாததனால் உவணகிரி மடத்தலைவனிடம் அத் தொகையைக் கடனாக பெற்று அனுப்பினான்.
அத்தொகையை அனுப்பிய பின்னும் நெடுநாளாக மாதவசேனனைப் பற்றிய செய்தி எதுவும் வரவில்லை உவணகிரிமடத் தலைவனிடமிருந்து கடன் வாங்குகையில் விசயப் பெருந்தகை அதனை ஓராண்டுக்குள் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவன் நிலங்களின் உரிமை முற்றிலும் மடத் தலைவனையே சேர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. ஓராண்டுத் தவணை முடியும் நாள் நெருங்கி வந்தும் விசயப்பெருந்தகையிடம் கடனை மீட்டுக் கொள்ளப் போதிய பணம் சேரவில்லை.
நளினியைக் காதலித்த கோமகன் ஆகவமல்லனிடம் பணம் இருந்தால் நளினியின் காதலை எண்ணி அவன் பணங்கொடுத்து உதவி இருப்பான். ஆனால் அவனிடமும் பணமில்லை. நளினியை அடைய விரும்பிய வழக்கு மன்றத் தலைவன் கோதண்டன் அவளைத் தனக்கு மணம் செய்து கொடுப்பதாயின் அப்பொருளைக் கொடுத்து உதவுவதாகக் கூறினான். புதல்வனையும் காணப் பெறாமல், நிலத்தையும் இழக்க மனமின்றி விசயப்பெருந்தகை மனம் வருந்திச் செய்வதறியாது திகைத்தான்.
கோதண்டன், இளவரசன் விசயனுக்கு உடந்தையானவன். ஆகவே கோமகன் ஆகவமல்லன் இருக்குமளவும் நளினி தன் பக்கம் திரும்பமாட்டாள் என்று எண்ணினான். ஆகவே அவன் ஆகவமல்லன் அரசனுக்குரிய தனிக்காட்டில் நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டி அவனை நாடுகடத்தும்படி இளவரசனைத் தூண்டினான். ஆகவமல்லன் நாடு கடத்தப்பட்டுத் தன் நிலங்களை இழந்த பின், தன் நெருங்கிய நண்பராகிய மலையன், மானவன், (உண்மையில் மிகவும் நெட்டையாயிருந்த) குட்டை மாணிக்கம் ஆகியவருடன் வேனிக் காட்டையடைந்தான். போர் வீரமும் உள நேர்மையும் உடைய அவர்கள் காட்டு வழிப் போக்கர்களில் கோதண்டன் போன்ற கொடிய கொடாக் கண்டராகிய செல்வரைக் கொள்ளையடித்தும், ஏழைகளுக்கும் துணையற்றவர்களுக்கும் துணைபுரிந்தும் நாட்டரசராய்ப் புகழுடன் வாழ்ந்து வந்தனர்.
மல்லர்கோ
ஆகவமல்லனின் புகழைக் கேட்டுச் சில நாட்களில் இளவரசன் விசயனின் கீழிருக்கப் பிடிக்காத பலர் வேனிக் காட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுள் சிலம்பப்போரில் வல்லவரும் துறவியுமாகிய மதங்க அடிகள் ஒருவர். ஆகவமல்லன் தன் உருவை மாற்றிக் கொண்டு மல்லர்கோ என்ற புனை பெயருடன் அவர்களைக் குரங்குப் போர் முறைகளில் பயிற்றுவித்தான். குழல் ஒன்றை ஊதியதும் அவர்களனைவரும் குன்றுகளிலிருந்தும் புதர்களிலிருந்தும் அவனிடம் வந்து சேருமாறும் ஏற்பாடு செய்திருந்தான்.
காட்டில் நளினி
இவர்கள் இங்ஙனம் காட்டில் வாழ்ந்து வருகையில் நாட்டில் நளினி, கோதண்டனின் தொந்தரவையும் இளவரசன் விசயனின் வற்புறுத்தலையும் பொறுக்க முடியாமல் தந்தையையும் உடனழைத்துக் கொண்டு காட்டிற்கே ஓடி வந்து விட்டாள். முதியவனாகிய விசயப் பெருந்தகை தன் சொத்துக்களை இழந்த பின் தன் புதல்வியை நாடுகடத்தப்பட்ட ஒருவனுக்குக் கொடுப்பதைவிடச் செல்வனும் புதிய அரசியலில் செல்வாக்கு உடையவனுமான கோதண்டனுக்கே கொடுத்து விடலாம் என உள்ளூற நினைத்திருந்தான். அதற்கேற்பத் தன் புதல்வியை யாரும் அறியாதிருக்கும்படி அவளுக்கு ஆணுடை யணிவித்தான். அவ்வுடை செந்நிற முடையதாயிருந்ததால் அவளை அனைவரும் செவ்வீரன் என்றே அழைத்தனர்.
அவளுடைய மாற்றுருவத்தில் அவளை இன்னாரென்று ஆகவமல்லனாகிய மல்லர்கோ அறிந்து கொண்டான். அவளும் அவனை அறிந்து கொண்டதுடன் அவனுடன் பெரிதும் அன்பு பாராட்டினாள். ஆயினும், அவனைத் தன்தந்தைக்கு எதிராக மணக்க மாட்டேன் என்றும், மன்னர் அரிகேசரி வருமளவும் யாரையும் மணப்பதில்லை என்றும் பிடிவாதம் செய்தாள்.
தன் காதல் நிறைவு பெறாதோ என்று கவலை கொண்டு காட்டில் கண்ணயர்ந்து கிடந்த மல்லர்கோவின் கனவில் வனதெய்வங்கள் வந்து “நீயே உன் காதலியைப் பெறுவாய்; அஞ்சிச் சோர்வடையாதே!” என்று கூறின. அதை உணர்ந்து அவன் மனந்தேறினான்.
பின்னர் அவன் ஒருநாள் விசயப் பெருந்தகை கூறியதாக ஒரு தூதனை உவணகிரி மடத் தலைவனிடம் அனுப்பி அவன் பணத்தைப் பெற்றுப் பத்திரத்தை வாங்கிச் செல்லும்படிச் சொல்லியனுப்பினான்.
எதிர்பாராதது
மற்றொருநாள் மல்லர்கோ தனியே இருக்கையில் அவனைத் தேடிக் கொண்டு இளவரசன் விசயனும் கோதண்டனும் இன்னொரு போர்வீரனும் வந்தனர். அவர்கள் அவனைக் கண்டுகொள்ளவும் செய்தனர். அச்சமயம் மல்லர்கோவின் துணைவர் யாரும் அவன் பக்கத்திலில்லை. அவர்களை அழைக்க ஊதுகுழலும் அவனிடம் அப்போது இல்லாதிருந்தது. ஆகவே அவன் சட்டென்று ஓடி அண்டை யிலிருந்த ஒரு நரைமூதாட்டியின் வீட்டில் அடைக்கலம் புகுந்தான். அவள் அவனிடம் பற்றுடையவளாதலால் தன் உடையை அவனுக்குக் கொடுத்தாள். அவள் உருவில் அவன் அவர்களை வரவேற்று ஊசிப் போன கருகிய அப்பத்தையும் நீர் பெருக்கிய பழ மோரையும் அவர்களுக்களித்தான். அதனால் நோயுற்று அவர்கள் நாட்டிற்குத் திரும்பினர். திரும்பும் போது மல்லர்கோவின் கணை, ஒன்று அவர்களை நோக்கிப் பாய அவர்களும் எதிர்த்தனர்.
போரும் வெற்றியும்
மல்லர்கோவின் ஆட்களும் வந்து கலக்கவே கடுஞ்சண்டை நிகழ்ந்தது. அதில் விசயப் பெருந்தகை காயமுற்றான். இளவரசனும் அவன் ஆட்களும் தப்பினோம் பிழைத்தோம் என்று நாட்டை நோக்கி ஓடினர்.
இதற்கிடையில் ஒருநாள் அவர்கள் இருக்குமிடத்துக்குப் புதியதோர் வீரன் வந்தான். அவனை மல்லர்கோவும் அவன் வீரரும் விருந்தினனாய் ஏற்று நல்வரவளித்தனர். ஆனால், அவர்கள் வழக்கப்படி மதங்க அடிகள் அவனைச் சிலம்பப் போருக்கு அழைத்தார். சிலம்பத்தில் புதிய வீரன் சற்றுப் பின் வாங்கினான். அதன்பின் குத்துச் சண்டை செய்தனர். அதில் மதங்க அடிகளை மட்டுமின்றிப் பிற வீரரையும் மல்லர்கோவையும் கூடப் பின்னடையும் படி செய்தான்.
மடத் தலைவன் திமிர்
தம்மையெல்லாம் வென்ற இப்புதிய வீரன் யாரோ என அவர்கள் திகிலடைந்திருக்கும் சமயம் மடத்தலைவன் வழக்கறிஞர் ஒருவனுடன் அங்கே வந்து சேர்ந்தான். விசயப் பெருந்தகை காயமுற்றிருப்பதால் தானே பணம் தந்து பத்திரத்தை மீட்டுக் கொள்வதாகக் கூறி மல்லர்கோ தான் கொள்ளையிட்டு வைத்திருந்த பணத்தில் இரண்டாயிரம் பொன்னை எடுத்து வைத்தான். வட்டிப் பாக்கியாக மேலும் நானூறு பொன் உண்டு என்று மடத்தலைவன் கூறவே, மேலும் நானூறு பொன் கொடுத்தான். மடத் தலைவன் பேரவாக் கொண்டு “நான் தவறிக் கூறிவிட்டேன். வட்டி உண்மையில் ஐந்நூறு பொன் ஆகும்,” என்றான். மல்லர்கோ அட்டியின்றி இன்னும் நூறு பொன் வைத்தான். அதன் பின்னும் பத்திரத்தைத் திருப்பிக் கொடுக்காமல் “பத்திரப்படி கொடுக்க வேண்டிய தவணையான ஒரு மணி நேர அளவு கடந்து விட்டது. மேலும் மீட்டுக் கொள்ளப் படுவதாகச் சொன்ன இடம் இஃதன்று; உவணகிரி மடமேயாகும்,” என்று கூறி விதண்டாவிவாதமிட்டான்.
இளவரசன் சூழ்ச்சி
மல்லர்கோ சீற்றங்கொண்டு அவர்களைத் தாக்கப் புகுமளவில், முன்னமேயே மடத்தலைவன் மூலம் உளவறிந்த இளவரசன் விசயனும் அவன் படைஞரும் வந்து அனைவரையும் வளைத்துக் கொண்டனர். மல்லர்கோவும் அவன் வீரரும் காட்டுப் பகுதிகளை நன்கறிந்தவராதலால் ஓடி ஒளிந்து கொண்டனர். செவ்வீரன் உருவில் இருந்த நளினி மட்டும் ஓட முடியாது நின்றாள். அவனை அடையாளம் அறிந்து விசயனும் கோதண்டனும் அவளைக் கொண்டு செல்ல ஆய்த்தமாயினர்.
அரிகேசரி வெளிப்படல்
அச்சமயம் புதிய வீரன் முன்வந்து, “யாரும் ஓரடி கூட எடுத்து வைக்கக் கூடாது. நானே அரிகேசரி அரசன். இவ்வீரமக்களின் பாதுகாப்புடன் ஆட்சியையும் ஏற்றுக் கொண்டேன்,” என்றான்.
அவனே அரிகேசரி என்று கண்டு கொண்டதும்; பேரவாவால் தூண்டப்பட்ட பொய்யானாகிய விசயன் “இவன் அரிகேசரியல்லன்; மன்னர் பேர் சொல்லி நம்மை ஏய்க்க வந்த போலிப் பகைவன். இவனைச் சிறையிடுக,” எனக் கட்டளை யிட்டான்.
ஆனால் மல்லர்கோவும் அவன் வீரரும் வந்து அரிகேசரியை மீட்டனர். விசயன் ஓடிவிட்டான். கோதண்டனும் காட்டரசர் கையில் சிறைப்பட்டான்.
மாதவசேனனை மீட்கப் பொன்னுடன் சென்ற வீரன் அச்சமயம் பொன்னுடன் திரும்பவந்து, “ஐய! மாதவசேனனைக் காணவே முடியவில்லை. அவன் பகைவர் கைப்பட்டிருக்க வேண்டும். இதோ அவனை மீட்கக் கொண்டு போனபொருள்,” என்று பொன்னை விசயனிடம் கொடுத்தான்.
“புதல்வன் போனபின் பொன் எதற்கு,” என்று விசயன் வெறுப்புடன் அதனை வீசி எறிந்தான். அப்போது அரிகேசரி, “ஐயா! புதல்வன் என்றால் பொன் பெரிதன்று. ஆனால் புதல்வி என்றால் பொன்தான் பெரிது போலும்,” என்றான். விசயப் பெருந்தகை வெட்கிப் புதல்வியை ஆகவமல்லனாகிய மல்லர்கோவுக்கே மணஞ்செய்விக்க இணங்கினான்.
நளினியின் திருமணம்
ஆயினும், மல்லர்கோ பின்னரும் மல்லர்கோவாகவே இருந்து விடவில்லை. அவன் தன் நிலவுரிமையினை மீண்டும் பெற்றுத் தன் வீரருடன் நாடு திரும்பி அரசன் முன்னிலையிலேயே நளினியை மணந்து கொண்டான்.
நளினியும் மல்லர்கோவும் நெடுநாள் நலமாக வாழ்ந்தனர்.
லான்வால் பெருந்தகை
ஆர்தரும் வட்டமேசை வீரரும்
பிரித்தானியா முழுமையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னன் ஆர்தர் என்பவன்.
அவன் ஆட்சிக்கு முன் நாடெங்கும் காடும் முட்புதர்களும் நிறைந்திருந்தன. தீய கொடுங்கோலர்கள் மக்கள் உடைமை களையும் உயிர்களையும் மதியாது அழித்து அவர்களைத் துன்புறுத்தி வந்தனர். இவ்வகையில் சிறப்பாக அழகும் செல்வமும் மிக்க உயர்குல மாதரே மிகுதியும் துன்பத்துக் குள்ளாயினர். அரசர் குலப் பெண்கள் கூடி அடிக்கடி கள்வர் அல்லது கொடியோர் கையிற்பட்டுத் துயருழந்தனர்.
குழப்பமும் சீர்குலைவும் நிறைந்த அந்நாட்டில் ஆர்தர் அமைதியும் வாழ்வும் நிலைநிறுத்த முயன்றான். அதில் அவனுக்குத் துணையாக உண்மை வீரர் பலர் முன் வந்து உழைத்தனர். அவர்களுடன் அவன் வட்ட மேசைப் பலகை ஒன்றைச் சுற்றிச் சரி ஒப்பாக வீற்றிருந்து ஆணை செலுத்தி வந்தான்.
துன்புற்றோர் எவரேனும் வந்தால் இவ்வீரருள் ஒருவர் சென்று துன்பந்துடைத்து வெற்றியுடனும் விருதுடனும் மீள்வர். துன்பப்பட்ட பெண்டிர் பலர் இங்ஙனம் பாதுகாப்படைந்து தமக்குப் பாதுகாப்பளித்த வீரரை விரும்பி மணந்து கொள்வதும், அவர்களுக்கு நிறை செல்வமும் உயர் நிலையும் வழங்குவதும் உண்டு.
இவ்வீரர்களின் தொகை வரவர வளர்ந்து கொண்டே வந்தது. நாளடைவில் அவர்கள் நூற்றுவராகத் திகழ்ந்தனர். ஆர்தரும் அந்நூறு வீரரும் செய்த அருஞ்செயல்கள் பிரித்தானியரால் இன்றும் வாய்மொழியாகவும், நூல் வழியாகவும், தெருப்பாட்டகவும், காப்பியமாகவும் புகழப்பட்டு வருகின்றன. அவ்வீரருள் ஒருவன் லான்வால் பெருந்தகை ஆவான்.
லான்வாலும் கினிவீயரும்
லான்வால் பெருந்தகை வெளிநாட்டிலிருந்து வந்தவன். ஆகவே, மற்ற வீரர்கள் முதலில் அவனுடன் நெருங்கிப் பழகவில்லை. ஆனால் விரைவில் அவன் நற்குண நற்செய்கை களும், சலியாத ஈகையும் அவனை அனைவருக்கும் நண்பனாக்கின.
ஓர் உயிர் மட்டும் அவனுடன் என்றும் தீராப் பகைமை கொண்டிருந்தது. அந்த உயிர்தான் அரசன் புதிதாக மணந்த அரசி கினிவீயர். அவள் பார்வைக்கு உயர் ஒழுக்கம் உடையவளாகக் காணப் பட்டாள். ஆனால் உள்ளூறக் கபடும், வஞ்சகமும் சூதும் நிறைந்தவள். ஆர்தரை மணக்குமுன், அவள் லான்வாலை விரும்பி நாடி இருந்தாள். லான் வால் அவளை அசட்டை செய்யவே மனம் புண்பட்டு எவ்வகையிலாயினும் பழி தீர்ப்பதென வாய்ப்பை நோக்கிக் காத்திருந்தாள்.
ஆர்தர் அவளை மணந்ததும், ஆர்தர் வீரருள் அவன் ஒருவனாய்ச் சேர்ந்ததும் அவளுக்குத் தக்க வாய்ப்பாயின. அவள் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு எதிராக ஆர்தரின் மனத்தைத் தூண்டிக் கலைக்கலானாள். ஆகவே ஆர்தர் நடத்திய ஒவ்வொரு போரிலும் அவன் வெற்றி பெறப் பொருதானா யினும் வெற்றிக்குப் பின் வழங்கப்படும் பரிசுகளுள் எதுவும் அவனுக்கு மட்டும் வழங்கப் பெறுவதில்லை. இதனால் வரவர அவன் பொருள் நிலை குறைந்து அவன் ஆடையணிகளுக்கும் உணவுக்கும்கூட வழியின்றித் திண்டாடினான்.
லான்வால் துன்புறல்
அவன் குதிரை, உணவின்றி எலும்புந் தோலுமாயிற்று. அவனும் இளைத்துப் போனான். அவன் அணிந்திருந்த இருப்புக் கவசத்தில் உடைந்த தலையணி ஒக்கிடப் பெறவில்லை. தேய்ந்த காலணி மாற்றப் பெறவில்லை. இந்நிலையில் வெளியில் போகக்கூட முடியாமல் அவன் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடந்தான். அறையின் குடிக்கூலி கொடுபடாததால் நெடுநாள் அங்கும் இருக்க வழி இல்லை. எங்காவது நாட்டுப்புறம் சென்று சாக வகைதேடுவது என்று அவன் குதிரை மீதேறிப் புறப்பட்டான்.
வெளியேறல்
எண்ணெயின் பசைகூட இல்லாமல் தூசி அடைந்து காடாய்க்கிடந்த அவன் தலையையும், உடைந்தும் துருப்பிடித்தும் சிதைந்தும்போன அவன் இருப்புக் கவசத்தையும், கங்காளம் போல் தோன்றிய அவன் குதிரையையும் கண்டு அந்நகர்ச் சிறுவர் சிறுமியர் பலர் ஏளனம் செய்து கைகொட்டி நகைத்தனர். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. தீயவள் ஒருத்திக்காகத் தன்னை துன்புற விடும் இறைவன் செயலின் திறத்தைப் பற்றி மட்டும் எண்ணிக்கொண்டு அவன் வருத்தத்துடன் காட்டை நோக்கிப் போனான். காட்டில் அவன் உணவின்றி நெடுந் தொலை அலைந்து திரிந்து ஒரு கான்யாற்றின் கரையில் வந்ததும் குதிரையை விட்டிறங்கி அதனை இளைப்பாறச் செய்து தானும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டான்.
அவ் ஆறு சற்றுத் தொலைவில் ஓர் அருவியாக விழுந்து வந்து கொண்டிருந்தது. அவ் வருவியின் பக்கமாக அவன் கண்கள் சென்றன. “இவ் வருவியின் சாயலும் இன்னோசையும் உடைய பெண்மை உலகில், கினிவீயர் போன்ற தீயவளும் பிறந்தனளே!” என்று நினைத்தது அவன் உள்ளம். அச்சமயம் அவன் முன் அரம்பையரும், நாணும் அழகும் பொலிவும் உடைய இருமாதர் நின்று, குழலினும் இனிய குரலில் “எல்லோரும் அத்தகைய வரல்லர் பெருந்தகையோய்?” என்று கூறினர்.
இரு பேரழகியர்
“இவ் ஆளற்ற காட்டின் தனியழகிற்கும் அழகே போலத் திகழும் நீவிர் யாவீர்?” என்று அவன் வியப்புடன் வினவினான். அவர்களுள் ஒருத்தி, “ஐய! எம் தலைவி தம்மைத் தன்னிடம் வரும்படி அழைக்கிறாள்,” என்றாள். உடனே அவன் “ஒப்பற்ற அரமகளிரே! உம் இருவருக்கும் வணக்கம். உம்மையும் உம் தலைவியையும் எங்கு வேண்டுமாயினும் பின் தொடருகிறேன்,” என்றான்.
அவன், தன் தோழியையே தலைவி எனக் கொண்டான் என்று கண்டு அவள், “இவள் என் தோழி; எங்கள் தலைவி சற்றுத் தொலைவில் கொலு விருக்கின்றாள். நாங்கள் பணிப்பெண்கள் மட்டுமே,” என்றாள். “பணிப்பெண்களே இவ்வளவு அழகானால் இவர்களை ஆட்கொள்ளும் மங்கையர்க்கரசி எவ்வளவு அழகாக இருக்க மாட்டாள்,” என வியந்து கொண்டே சென்றான் லான்வால்.
அழகுத் தெய்வம்
அவன் வியப்பையும் வியக்கச் செய்யும் முறையில் அக்காட்டின் நடுவில் திங்களங்கல்லால் அமைத்த மணி மண்டபத்தில் பொற்றூண்கள் வாய்ந்த பட்டு மேற் கட்டியின் கீழ் நீல ஆடை உடுத்து வீற்றிருந்தது.
மீன்படை சூழ்ந்த நிறைநாட் பிறைபோன்றதோ அழகுத் தெய்வம்! லான்வால் அவள் காலில் விழப்போகுமுன் அவள் அவனைச் சேர்த்தெடுத்து ஒப்பான இருக்கை தந்தமர்த்தினாள். பின் அவள் அவனைக் கண்குளிரப் பார்த்து நகைத்து, “வள்ளன்மை மிக்க வீரனே நீ என் மனத்தைக் கொள்ளை கொண்டாய். நான் உன்னை காதலிக்கின்றேன். ஆனால் உன்னை என்னுடன் அழைத்துச் செல்லுமுன் நீ மீண்டும் உலகில் சென்று என் பணி செய்ய வேண்டும். ஆனால் நீ நினைத்த நினைத்த நேரமெல்லாம் நான் கட்டாயம் உன்னிடம் வருவேன்,” என்றாள். அவன் அதனை விருப்புடன் ஏற்றான் என்று சொல்ல வேண்டியதில்லை.
லான்வாலின் நற்பேறு
மேலும் அவள் அவனிடம், “உன் கொடைகளை இனிப் பொருட்குறையால் நிறுத்த வேண்டியதில்லை இதோ இப்பையில் நீ எவ்வளவு எடுத்தாலும் குறையாது பொன்வரும். உனக்கு எல்லாச் செல்வமும் நிறைக!” என்று கூறியனுப்பினாள். இன்னும் பளபளப்பு மாறா அங்கி ஒன்றும் மாசுபடாத வெண்ணிறத்துடன் களைப்பென்பதே இன்னதென்றறியாத குதிரையொன்றும் அவள் கைப்பட அவனுக்குக் கொடுத்தனுப்பி னாள். ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் போகும் போது அவளால் அவனுக்குப் பன்முறை வற்புறுத்திக் கூறப்பட்டது. அவளைப் பற்றியோ, அவள் வரவைப் பற்றியோ எத்தகைய நிலையிலும் மனிதர் காதுபட யாதொன்றும் கூறப்படாதென்பதும், அங்ஙனம் கூறின் அவன் அவளை இழப்பான் என்பதுமே அது. லான்வால் அவ் வெச்சரிக்கைப்படி நடப்பதாக வாக்களித்து விடைபெற்றகன்றான்.
அவன் தன் சிறுகுடில் சென்று பார்க்கையில், அது முற்றிலும் மாறி ஒரு சிற்றரசன் மாளிகையினும் சிறப்புடைய தாய்ப் பொன் வெள்ளிக் கலங்களும், தந்தங்களாலும் மணி முத்துக்களாலும் இழைக்கப் பெற்ற இருக்கைகளும், நேர்த்தியான பணியாள் தொகுதிகளும் நன்கு அமைந்திருக்கக் கண்டான். கண்டு ஐயமறத் தன்னைக் காதலித்தவள் மண்மகள் அல்லள்; விண்மகளே என உணர்ந்தான்.
கினிவீயர் சூழ்ச்சி
அன்று முதல் அவன் ஈகை பன்மடங்காய் வளர்ந்தது. அவன் புகழ் அவன் பழம் புகழையும் மங்க வைத்தது. அரண்மனையைவிட நகரிலும் நகரை விட நாட்டிலும் அவன் செல்வாக்கு மிகுதியாகப் பரந்தது. கினிவீயர் ஒருத்தி மட்டிலும்தான் இப்போதும் அவனுடன் இன்முகம் காட்டாதவள். இப்போது முன் போலத் தன் புறங்கூறலால் அவன் கொடையைத் தடுக்க முடியவில்லை என்று கண்டு அவள் பின்னும் மனம் புழுங்கினாள். அவன் வட்டப் பலகை வீரர் பலரை அவனுக்கு எதிராக ஏவிப்பார்த் தாள். பலர் அதற்கு இணங்க வில்லை. இணங்கிய சிலரும் அவனிடம் முறிவு பெற்றார்கள். அவர்கள் வெட்டும் குத்தும் அவன் சட்டையின் பளபளப்பைக் கூட மங்க வைக்க வில்லை. ஏனெனில், அது தெய்வத்தச்சர்களால் மந்திரவன்மையுடன் இணைக்கப் பட்டிருந்தது. இவனை இனி எப்படி அவமதிப்ப தென்று கினிவீயர் அரசி ஆராய்ச்சி செய்தாள். ஒருநாள் அவள், ஆர்தர் வட்டப் பலகை முன் வீற்றிருக்கையில் அதனைச் சூழ்ந்து இருக்கும் வீரர்களை நோக்கி, வீரர்களே! மாதர் மதியாத வீரனும் ஒரு வீரனா?
யாரேனும் ஒரு பெண்ணனங்கைத் தலைவியாகக் கொண்டு அந்நெஞ்சு ஒன்றையேனும் இருக்கையாகப் பெறாதவன் ஆற்றல் வீண் ஆற்றலேயாகும். ஆதலின் இங்குள்ள வீரர் ஒவ்வொருவரும் தம்மை உரிமையுடன் போற்றும் தன் உள்ளத் தலைவியர் பெயரை உரைக்கத் தவறார்," என்றாள்.
வீரர் ஒவ்வொருவரும் பெருமிதத்துடன் தத்தம் விருப்புக் குரிய தலைவியரின் பெயரைக் கூறி அவர்களை வானளாவப் புகழ்ந்தனர். ஆயினும் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையாகத் தம் தலைவியர் மண்கடந்த அழகுடைய அரசி ஒருத்தி நீங்கலாக, பிற மண் மடந்தையரை விட மட்டுமே சிறந்தவர் என்று பேசினர். லான்வால் பெருந்தகையின் முறை வந்த போது அவன் ஒன்றும் கூறாது வாளா நின்றான்.
அவமதித்தலும் அவமதிப்படைதலும்
“உன்னைப் போற்றும் அழகி இல்லையா? இன்றேல் ஏதேனும் ஒரு பணிப்பெண்ணையேனும் விரும்பி அடையப் படாதா?” என்று கினிவீயர் அரசி அவனிடம் அவமதிப்பாகப் பேசினாள். அச்சுடுசொல்லால் ஏற்பட்ட உணர்ச்சி வன்மையில் லான்வால் தன்னை மறந்து “அங்ஙனம் ஏளனம் செய்ய வேண்டாம் அரசியே! தம்மைவிட அழகிலும் குணத்திலும் உயர்விலும் சிறந்த ஒரு மாது என்னை மணந்துளாள் என்று அறிவீராக! என்று வீறு பேசினான். தன்னைத் தன் வீரர் அவையிலேயே தனித்துப் பேசியது பொறாமல், அரசி சீற்றங் கொண்டு எழுந்து போய்,”அத்தெறுதலையின் தலையைத் துணித்தாலன்றி நான் இனி வாழேன்," என்று தன் அறையினுட் சென்று தாழிட்டுக் கொண்டழுதாள்.
அரசனும் பிற வீரரும் கூடச் சினம் அடைந்து அவனைக் கண்டித்தனர். இவையனைத்தும் கொஞ்ச மேனும் லான்வாலை அசைக்க வில்லை. தன் தலைவியின் எச்சரிக்கையை மீறி அவளை இழக்க நேர்ந்து விட்டதே என்ற ஓர் எண்ணம் அவன் எண்சாண் உடலையும் ஒரு சாணாக்கிற்று. இனி என் செய்வது? அவள் அன்பிற்கு அறிகுறியாயிருந்த அவன் ஒண்கவசமும் ஒளி இழந்தது. வீரர் நிறைந்த அவையில் அரசன் வீற்றிருந்து அவன் குற்றத்தை ஆராய்ந்தான். வீரர் ஒருமிக்க அவன் தன் தலைவியைக் கொணர்ந்து தான் கூறியபடி அரசியினும் அழகுடையவள் என்று நிலை நாட்டினால் பிழைக்கலா மென்றும், இன்றேல் தலையிழக்க வேண்டு மென்றும் தீர்ப்புச் செய்தனர்.
அழகுத் தெய்வம் தோன்றல்
லான்வால் தலையிழப்பதே இனி நன்றென நின்றான். தூக்கு மேடையருகே எண்ணற்ற மக்கள் திரளின் நடுவே அக்கொடிய அரசியும், அவளை நம்பிய அப்பாவி அரசனும் வீற்றிருக்கும் இருக்கை முன்னாக அவன் சாவுக்குக் காத்து நின்றான். தூக்கிடும் மணி அடிக்கலாயிற்று. அச்சமயம் வெண் குதிரையேறி வெண்ணிலவுடுத்த விரிகதிர்ச் செல்விபோல் ஒரு விண் மாது விரைந்து வந்து அப்பேரரைவயுட் புகுந்தாள். லான்வால் அவளைக் கண்டதே தன்னை மறந்து, “ஆ! என் தலைவி! என் அரசி! உன்னை மீண்டும் காணப்பெற்றேன்! பெற்றேன்!” என்றரற்றி அவளை அணுகப் போனான். அவள் அவனை அசட்டை செய்ததுபோல் விலக்கி, நேரே அரசி பக்கம் சென்று நின்று நிறை அவையை நோக்கி, “அவையீர்! இதே இவ்வீரன் குற்றமற்றவன், அவன் மொழியின் வாய்மையை நிலைநாட்ட நான் இதோ நிற்கிறேன். உமது முடிவை இனிக் கூறுக,” என்றாள்.
அவையோர் ஒரே குரலில், “லான்வால் கூறியது உண்மை. அவன் குற்றமற்றவன்,” என்றனர் அரசனது காவலர் லான்வாலை விடுவித்தனர். விண்மாது மின்னெனக் குதிரை மீதேறிப் பாய்ந்து சென்றாள்.
நிலைபெற்ற பேரின்பம்
லான்வால் “ஆ! வாழ்வு நீத்த என்னைச் சாவினின்றும் விலக்கி விட்டு ஏன் போகின்றாய்? என்னை யாரிடம் இங்கே எதற்காக விட்டுச் செல்கிறாய்? என் உயிரே!” என்று அவளைப் பின்பற்றிச் சென்றான். அச்சமயம் அவன் அங்கி மீண்டும் ஒளிபெற்றுத் திகழ்ந்தது. வெளியில் அவன் குதிரை அவனுக்காகக் காத்து நின்றது. அதிலேறிக் காற்றிலும் கடிது செல்லும் தன் தலைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அவன் முதலில் காட்டில் கண்ட ஆற்றினுள் அவள் குதிரையுடன் பாய்ந்தாள். அவனும் உடன் பாய்ந்தான். வெள்ளம் யானையை மடக்கும் வன்மையுடன் சுழன்றது சென்றது. அப்படியும் விடாது லான்வால் அவளைப் பின் தொடர்ந்தான். இறுதியில் விண்மாது அவளுடைய குதிரையுடன் நீரினுள் மூழ்கினாள். சற்றும் முன்பின் பாராமல் லான்வால் உடனே தன் குதிரையை மிதக்கவிட்டு விட்டுத் தான் மட்டும் நீரினுள் அவள் மூழ்கிய இடத்தைப் பின்பற்றி மூழ்கினான். ஆற்று வன்மையில் அவன் நிலை தளர்ந்தது. இனித் தாழா நிலையில், “ஆ! என் தேவி!” என்று எதையோ எட்டிப் பிடித்தான். அஃது அவன் தேவியின் ஆடை நுனியேயன்றி வேறன்று. தேவியின் மலர்க்கைகள் அக்கணமே அவனை அணைத்தன. பின் அவன் உணர்வு இழந்தான்.
எழுந்து நோக்கும்போது அவன் விண்ணோர் நாடென்னும்படி வியத்தகு பொற்புடைய இடத்தில் தன் உள்ளங்கவர்ந்த அவ் விண்மாதுடன் இருப்பதாக உணர்ந்தான். அவள், காதொடு காதாக அவனிடம், “வீரவள்ளலே! இனி ஓய்விலாப் பேரின்ப வாழ்வில் இரண்டறக் கலந்து உறைவீர்,!” என்றாள்.
ரேஸாராபும் ரஸ்டமும்
தஃமீனாவும் ரஸ்டமும்
ரஸ்டம் என்பவன் பாரசீக நாட்டின் ஒப்பற்ற வீரன் அவன் சென்ற இடமெல்லாம் வெற்றியே வந்தது. அவன் புகழ், பாரசீக நாட்டில் மட்டுமின்றி உலக முற்றும் பரந்தது.
அவன் குதிரை ரஷ் என்பது. அதுவும் அவனைப் போலவே புகழ்மிக்கது.
ஒரு நாள் ரஸ்டம் பல இடங்களுக்கும் சென்று தார்த்தாரிய நாட்டின் பக்கம் வரும்போது, களைப்படைந்து ஓரிடத்தில் படுத்துறங்கினான்.
வேட்டையாட வந்த குரடநாட்டுச் சிற்றரசன் அவனை இனங் கண்டு அழைத்துப்போய்த் தன் அரண்மனையில் தங்கி விருந்துண்ணும்படி வேண்டினான். அங்ஙனமே அவன் அங்கே தங்கினான். அரண்மனையிலுள்ளோரும் ஊராரும் உலகறிந்த வீரனாகிய அவனை வந்து பார்த்துப் போயினர்.
அரசன் புதல்வியாகிய தஃமீனா அப்பொழுது கன்னி மாடத்திலிருந்தாள். அவளுக்கும் ரஸ்டத்தைப் பார்க்க வேண்டுமென்ற அவா இருந்தது. இளமங்கையாதலின், நேரில் செல்லக் கூசி விடியற் காலையில் அவன் எழுமுன் படுக்கையிலேயே அவனைக் காண எண்ணினாள். அதன்படி பந்தமேந்திய ஓர் அடிமையின் துணையுடன் வந்து அவனைக் கண்டாள்.
அப்போதே விழித்துக் கொண்ட ரஸ்டம், அழகின் இளஞாயிறு எழுந்ததென்னும்படி ஒளி வீசிய அந்நங்கையைக் கண்குளிர நோக்கி, அவளை யாரென உசாவி அறிந்து கொண்டான். அது முதல் மனம் அவளையே நாடியதாகலின், அரசனிடம் சென்று அவளைத் தனக்கு மணஞ்செய்விக்க வேண்டினான். பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் கிடைத்தற் கரிய வீரன் தானாக விரும்பித் தன் பெண்ணை வேண்டியது கண்டு மகிழ்ந்து, அரசன் விருப்புடன் தஃமீனாவை ரஸ்டத்துக்கு மணஞ்செய்து கொடுத்தான்.
ரஸ்டம், தஃமீனாவுடன் தாத்தாரிய நாட்டிலேயே சில காலம் தங்கியிருந்தான். இயற்கையிலேயே போரை நாடிய அவன், அங்கேயே மகிழ்ந்திருக்க முடியவில்லை. ஆகவே மனைவியிடமும் மாமனிடமும் விடை பெற்று கொண்டு தன் நாடு சென்றான்.
தஃமீனாவின் குழந்தை
அப்போது தஃமீனாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அது ஆண்குழந்தை என்று கேள்விப்பட்டால், அவனை ரஸ்டம் இளமையிலேயே போர் வீரனாக்கித் தன்னை விட்டுப் பிரியும்படி செய்துவிடுவான் என்று அவள் நினைத்தாள். ஆகவே, அவள் அது “பெண்,” என்று அவனிடம் சொல்லியனுப்பினாள். வீரனாகிய ரஸ்டம், “தனக்கு வீரமகன் பிறவாது, கேவலம் பெண் குழந்தை பிறந்து விட்டதே,” என்று வருந்தி அவ்வருத்தத்தில் மனைவியிடமும் வெறுப்புற்றுத் தனி வாழ்வு வாழலானான்.
ரஸ்டத்தின் தனி வாழ்வு
இங்ஙனம் ரஸ்டம் தனி வாழ்வு வாழ நேர்ந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. பல தலைமுறைகளாக ரஸ்டமும் அவன் தந்தையாகிய ஸாலும், மற்ற முன்னோர்களும் பாரசீக நாட்டின் தூண்கள் போல் நின்று, பகைவர்களிடமிருந்து அந்நாட்டினையும், நாட்டின் அரச குடும்பத்தையும் காத்து வந்திருந்தனர். அதற்கேற்ப ஆசனவ நகரிலும், அவன் குடும்பத்தினரே முதலிடமும் செல்வாக்கும் உடையவராயிருந்தனர். ஆனால், நாளடைவில் ரஸ்டத்தின் பெயர் கேட்டே நடுநடுங்கிய பகைவர்; பாரசீக நாட்டின் எல்லைப் பக்கத்தைக்கூடக் கனவிலும் நாடாதிருந்தனர். நாட்டில் அமைதி குடி கொண்டது. வாணிகமும் கலையும் வளர்ந்தன. செல்வரும் நாகரிக மக்களும் ஆசனவ நகரில் உயர் இடம் பெற்றனர். பழம் போர் வீரனான ரஸ்டத்தையும், அவன் அருமையையும், மக்கள், சிறப்பாக இளைஞர் மறந்துவிட்டனர். இதனாலும், ரஸ்டம் மனம் நொந்தான். தனக்குப் பிறந்த குழந்தை மட்டும் பெண்ணாயிராமல், ஆணாயிருந்திருந்தால் தனக்கு இத்தலைகுனிவு ஏற்பட்டிராதே, என்று அவன் நினைக்க நினைக்க வாழ்க்கையில் வெறுப்புப் பின்னும் மிகுந்தது. மிகவே அவன் நகரை விட்டுக் காட்டகஞ் சென்று வாழ்ந்தான்.
ஸோராப் தந்தையைக் காணச் செல்லல்
தார்த்தாரி நாட்டில் தஃமீனா தன்குழந்தையை ஸோராப் என்ற பெயரிட்டுத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்தாள். அவன் “எங்கே போருக்குப் போய் விடுவானோ என்ற அச்சத்தால் அவனை அவள் கூடிய மட்டும் வீட்டில் வைத்துப் பெண் போலவே வளர்த்தாள். ஆயினும்,”புலிக்குப் பிறந்தது பூனைக்குட்டி யாகாதன்றோ?" ஸோராப் எளிதில் தன் தந்தை இன்னான் என்பதை அறிந்து அடிக்கடி, தன் தந்தையிடம் தன்னை அனுப்புமாறு தாயைத் தொந்தரவு செய்தான். அவனுக்குப் பதினாறாண்டானபோது அவளால் மேலும் அவனைத் தடுத்து வைக்கக் கூடாமல், தந்தையைப் பார்க்கும்படி அவனை அனுப்பினாள். தந்தைக்குத் தன்னை இன்னான் என்று அறிமுகப்படுத்த, அவன் கழுத்தில் சிறுமையில் பொறித்த ரஸ்டத்தின் கணையாழிப் பொறியைப் பொறித்து, அதைக் காட்டும்படி அவள் அவனுக்குக் கூறினாள்.
ஆனால், இச்சமயம் பார்த்துத் தார்த்தாரிய அரசனுக்கும் பாரசீக அரசனுக்கும் சண்டை மூண்டது. பாரசீக அரசன் இப்போது ரஸ்டத்தைப் புறக்கணித்து விட்டதால், அவன் இப்போது பாரசீகப் படையை நடத்த வரமாட்டான் என்ற துணிவிலேயே தார்த்தாரியர் படையெடுத்தனர். தந்தையைக் காணப்போவது இச்சமயம் அரிதெனக் கண்டதும், எப்படி யாவது தானும் போரில் கலந்து கொண்டால் ரஸ்டத்தை நேரில் காண முடியும் என்றும், ஒருவேளை ரஸ்டம் அங்கு வராவிடினும் கூடத் தன் புகழேனும் அவன் காதிற்கேட்டு அவன் தன்னை அழைக்கக் கூடுமென்றும் ஸோராப் நினைத்தான். நினைத்துத் தார்த்தாரிய அரசன் அஃவ்ராஸியப்பின் (Afrasiab) படையிற் சேர்ந்து சண்டை செய்தான்’.
ஸோராபின் வீரம்
போரில் ஸோராப் இளஞ்சிங்கம்போல் நின்று பாரசீகரை மீண்டும் முறியடித்துத் துரத்தினான். தார்த்தாரியப் படைத்தலைவனான பெரன்விஸா இதனால் அவனிடம் அளவற்ற பற்றுதலும் நன்மதிப்பும் கொண்டிருந்தான். ஆயினும், ஸோராபின் மனத்தில் மட்டும் தன் புகழ் கேட்டு மகிழ்ச்சியே தோன்றவில்லை. தன் தந்தையை வீரர் தலைவனாகிய ரஸ்டத்தைக் கண்டு அவன் முழங்கால்களைக் கட்டியணைக்கும் பேறுகிட்ட வில்லையே என்ற ஒரே கவலை அவனை வாட்டியது எப்படியாவது அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
ஸோராபின் திட்டம்
அதன்படி தலைவனாகிய பெரன்விஸாவிடம் சென்று “தனக்கு ஒரு குறை உண்டென்றும், அதனைத் தவிர்க்க வேண்டு” மென்றும் கேட்டான். வீரத்தில் சிறந்தவனாயிருந்தும் அழகும் மென்மையும் மாறா இளைஞனான ஸோராபைத் தன் மகனெனப் பரிந்து அன்பு கொண்டவன் பெரன்விஸா. ஆதலின், அவன், “நீ கேட்க நான் கொடுக்காத பொருளுமுண்டோ? கூறுக,”என்றான். உடன் தானே ஸோராப், “பாரசீகப் படையும் நம் படையும் சண்டையிடுவதால், எத்தனையோ பேர் இறக்கலாம்; அதனை விட்டு நான் நம்பக்கம் நின்று, பாரசீகருட்சிறந்த வீரனொருவனுடன் சண்டையிட்டே வெற்றி தோல்வியை நிலைநிறுத்தலாமே! அதற்காக எதிரிபக்கம் அழைப்பு விடுக்க வேண்டுகிறேன்” என்றான்.
பெரன்விஸா ஸோராபை இத்தகைய துணிகரச் செயலிலிருந்து விலக்க மிகவும் முயன்றும், அவன் பிடிவாதமா யிருந்ததால், அவன் வேண்டுகோளுக்கிணங்கி அங்ஙனமே அழைப்பு விடுத்தான்.
பாரசீக அரசன் அவ்வiழைப்பைத் தன் வீரருக்குக் காட்டினான். ஸோராபின் கைத்திறனை அறிந்தும், அவன் துணிவைக் கண்டு அஞ்சியும் அவர்கள் செயலிழந்து நின்றனர்.
பாரசீக மன்னனின் கவலை
பாரசீக அரசனுக்கு இப்போதுதான் ரஸ்டம் இல்லாக் குறை தெரிந்தது. “பாரசீக நாட்டின் தூணான வீரர் வணங்கும் தெய்வமாகிய - பேர் கேட்டாலே பகைவரை நடுங்கவைக்கும் போர்யாளியாகிய ரஸ்டமிருந்தால், இப்படி நேற்றுப் பிறந்த மீசையற்ற சிறுவன் கைபட்டுத் தானும் தன்படைகளும் அல்லோல கல்லோலப்பட வேண்டிய தில்லையே,” என்று நினைத்துக் கண்ணீர் விட்டான். தன்னைச் சுற்றி புது நாகரிகப் புகை வளர்த்த கோழைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் அமைச்சர்களைப் பார்த்து, “நம் பிழைகளையெல்லாம் ஏற்று ரஸ்டத்திடம் சென்று அழுதோ, வணங்கியோ, அவன்முன் நின்று முரண்டியோ, எப்பாடுபட்டாயினும் அவனை அழைத்து வந்தாலன்றி, எமக்கு உய்வகையில்லை,” என்றான்.
ரஸ்டம் பேரணிக்கு வருதல்
அதன்படியே அமைச்சர் சென்று மன்றாடி ரஸ்டத்தை ஒருவாறு இணங்கச் செய்து அழைத்து வந்தனர். ஆனால், ரஸ்டத்துக்குப் போர் விவரம் ஒன்றும் தெரியாத புதிய வீரனாகிய ஸோராபுடன் சண்டை செய்ய மனமில்லை. தான் ரஸ்டம் என்று கண்டவுடன் அவன் ஓடி விடக்கூடும்; அல்லது பணிந்து தன்னுடன் நட்புக்கொண்டு விட்டதாகக் கூறித் தன் புகழில் பங்கு கொண்டுவிடக் கூடும் என்று அவன் ஐயப்பட்டான். ஆகவே, தான் வந்து போரிடுவதாயின் மாற்றுருக் கொண்டே போரிடுவதாக அவன் கூறினான். அரசன் அதற்கிணங்கவே, ரஸ்டம் ஏதோ ஒரு வீரனென்ற முறையில் உடையணிந்து, தன் குதிரையையும் உருத்தெரியாமல் மாற்றிக் கொண்டு ஸோராபின் முன் வந்தான்.
ஸோராபின் மயக்கம்
பாரசீகப் படையில் ஒப்பற்ற வீரன், தன் தந்தையாகிய ரஸ்டமேயாதலால், அவனை எளிதில் காணலாம் என்ற எண்ணங்கொண்ட ஸோராப் இவ்வழைப்பை விடுத்திருந்தான். அதற்கு நேர்மாறாக ஏதிலனாகிய வீரன் ஒருவன் வருவது கண்டு வியப்படைந்தான் அவன் ஆண்மையையும் பெருந் தன்மை யையும் கண்டு ஒரு வேளை அவன்தான் ரஸ்டமோ என்றும் எண்ணமிட்டு மயங்கினான்.
போர் தொடங்கு முன்னாகவே ஸோராப் ரஸ்டத்திடம், “நீ ரஸ்டம்தானா?” என்று கேட்டான். உண்மையின்னதென்று உய்த்தறிய இயலாத ரஸ்டம், “இவன் நம்மை இன்னான் என்றறியாது நான் முன் நினைத்தபடி என்னுடன் பசப்பிச் சொல்லவே வந்தான்,” என்று நினைத்து “சிறுவனே! நான் யாராயிருந்தால் என்ன? நீ கேட்டதைப் பார்த்தால் நீ என்னவோ ரஸ்டத்தை ஒரு கிள்ளுக்கீரை என்று மதித்திருக்கிறாய் என்றல்லவோபடுகிறது! ரஸ்டமாவது உன் போன்ற புதுப் புரட்டன் முன் போரிட வருவதாவது? ஏன் வீணில் பசப்புகிறாய்! உனக்குப் போரிட அச்சமாயின், உண்மையைக் கூறிவிடு; வீணில் வீம்பு அடித்துக் கொண்டு உயிரிழக்க வேண்டாம்,” என்றான்.
தந்தையும் மகனும் போரிடல்
ரஸ்டம் என்று ஐயுற்றும், அதனை உறுதிப்படுத்த முடியாமல் தயக்கமுறும் ஸோராபின் காதுகளில், அவனைச் சிறுவனென்றும், கோழை யென்றும் கூறி இச் சொற்கள் புகுந்து மறைந்து கிடந்த அவன் ஆண்மையையும், வீரத்தையும் தட்டியெழுப்பின. எழுப்பவே அவன் சீறியெழுந்து வலசாரி இடசாரியாகச் சுற்றி ரஸ்டத்தை வளைத்துப் போர்புரியத் தொடங்கினான்.
ரஸ்டம் ஆண்டில் முதிர்வுடையவனாய் விடினும், அவன் கைவன்மையும், உடல் வன்மையும் கெட்டுவிடவில்லை. ஆயினும் ஸோராப் இளைஞனாதலால், உடல் வலியுடன் விரையும் கொண்டு, நாற்புறமும் சுற்றி எதிர்ப்பது அவனுக்கு முதலில் ஒத்த போராகப்படவில்லை. அவனை அப்படி ஆடவிடாமல் அடக்க வேண்டுமென்று மனத்துட்கொண்டு தன் வேலால் அவனைத் தாக்கி எறிய முயன்றான். அவ்வேலின் வன்மையையும் கொடுமையையும் ஒரு நொடியில் உய்த்தறிந்த ஸோராப் முயல் குட்டி போல் துள்ளி அதற்குத் தப்பினான். தப்பவே பின்னும் பன்மடங்கு சீற்றத்துடன் ரஸ்டம் அவ்வேலினை விட்டு எறிந்தான். ஸோராப் அப்பொழுதும் விரைந்து விலகவே வேல் தொலைதூரம் சென்று விழுந்தது. ரஸ்டமும் வீசிய வேகத்தில் மண்ணைக் கௌவி விழுந்தான்.
தந்தை கொன்ற மகன்
மாசற்ற உயர் வீரனாகிய ஸோராப், போர்க் கருவியற்று விழுந்த அவனைத் தாக்க விரும்பாமல், அவன் எழும் வரை காத்திருந்தான். ஆனால், எழுந்ததும் ரஸ்டம் தன் நீண்ட கதையைச் சுழற்றிக் கொண்டு தன் போர்க் குரலை எழுப்பி, ‘ரஸ்டம், ரஸ்டம்’ என்று முழக்கிக் கொண்டு அவன் மீது பாய்ந்தான். இயற்கையிலேயே ஐயத்தால் அலுப்புண்ட அவ்விளைஞன், அப்பெயரைக் கேட்டதுமே “ஆ!” என்றலறிக் கொண்டு வாளையும் வேலையும் கை நழுவவிட்டு நின்றான். ரஸ்டமும் நல்ல வீரனேயாயினும் சிறுவனொருவன் தன் வீரத்துக்கு மாசுவரச் செய்கிறான் என்ற சின மிகுதியால் தன்னை மறந்து விட்டானாதலால், அவன் வெறுங்கையனாக நிற்பதுகூடக் கருதாது தடியால் அடித்து வீழ்த்தினான். ஸோராப் “ஆ! என் தாயே! ஆ என் கண்காணாத் தந்தையாகிய ரஸ்டமே! நான் உயிரிழந்தேன், உயிரிழந்தேன்” என்று புலம்பிக் கொண்டு வீழ்ந்தான்.
ரஸ்டத்தின் கலக்கம்
அம்மொழிகள் கேட்டு ரஸ்டம் திடுக்கிட்டான். அச்சிறுவனது பல கூற்றுகளும் அப்போது அவன் மனத்திற் புகுந்து பேரையப் புயல்களை எழுப்பின. ஆயினும், தனக்கு மகனில்லையே! பிறந்த ஒரு குழந்தையும்தான் பெண்ணாயிற்றே! என்று மனத்துட் கொண்டு ஸோராபை நோக்கி, “சிறுவனே, நீ என்ன மதிமயக்கமான மொழிகளைப் பகர்கிறாய். உன் தாய் யார்! தந்தை யார்?” என்றான்.
ஸோராப், “வீரனே! என் தாய் தஃமீனா என்ற குரடநாட்டு இளவரசி; தந்தையோ உலகின் ஒப்பற்ற வீரனாகிய ரஸ்டம். என்னைக் கொன்று - அதுவும் போர்முறை தவறிக் கொன்று - ரஸ்டத்தின் தீராப்பழியைக் கொண்டாய்; உனக்கு இரங்குகிறேன்,” என்றான்.
ரஸ்டம் கம்மிய குரலில், "தஃமீனா பெண்மகவு ஒன்றையே பெற்றாளென்று கேட்டேன். ஆண்மகவு உண்டென்று தோற்றவில்லையே,’ என்றான்.
உண்மையறிந்து பெருந்துயர் அடைதல்
ஸோராப், ஆ! இப்போது நினைவு வந்தது. என் தாய் என்னைப் போரிலிருந்து தடுக்கப் பலகால் முயன்றதுண்டு. அதே எண்ணத்துடன்தான் நான் பெண் என்று தந்தைக்குக் கூடச் சொல்லியனுப்பியதாக அவள் கூறியதைக் கேட்டிருக்கிறேன். அச்செய்தியே உன் காதில் விழுந்தது போலும்," என்றான்.
இம்மாற்றம் கேட்டதே ரஸ்டத்தின் மனத்தில் உண்மை மின்னல் போல் வந்து பேரிடிபோல் வீழ்ந்தது. அவன் ஒரு நொடி தன்னை மறந்து அலறினான். பின் எழுந்து வீழ்ந்தான்; அழுதான். தன் தலையிலேயே அடித்துக் கொண்டு “பாவி! நான் புதல்வனில்லை என்றிருந்துங்கெட்டேன். நான் வாழ்ந்த வாழ்வு, இத்துடன் ஒழிக!” என வாளால் தன்னையே வெட்டிக் கொள்ளப் போனான்.
அச்சமயம் குற்றுயிராய்க் கிடந்த ஸோராப் எழுந்து அவன் காலை அணைத்து, “தந்தையே! ஒரு தடவை ஆத்திரப்பட்டுத் தீமை அடைந்து விட்டோம்.” இனியேனும் பொறுத்துக் காரியம் செய்க. நான் மகிழ்ச்சியுடனேயே இறக்கிறேன்," என்றான்.
நெஞ்சம் துருத்திபோல் எழுந்தெழுந்து சிதற, ரஸ்டம் மந்திரத்திற்குக் கட்டுண்ட ஐந்தலைய நாகமே போன்று நின்று, “மகனே! எவ்வளவுதான் வாழ்வு எனக்குக் கசப்பாயினும் உன் இறுதி விருப்பங்களை நிறைவேற்றுவேன். ஆண்டுகளை நொடிகளாகக் கழித்து நானும் உன் அன்னையும் உன்னுடன் சேர வீரத் துறக்கம் வருவோம்,” என்று கூறி, உயிரை வழியனுப்பும் உடலே போல் அவனைத் தன் மடி மீது கிடத்திப் பிரிந்து மாழ்கினான்.
ஆர்தர் வருகை
ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன் பிரிட்டனில்¹ அதர்² என்றோர் அரசன் இருந்தான். உண்மையில் அவன் பிரிட்டனை அக்காலத்தில் வென்று ஆண்ட ரோமர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகவேயிருந்தான். அவனிடம் அமைச்சனாயிருந்த மெர்லின் என்பவன் ஒரு மாயக்காரன்; அவன் ஒரு சிறந்த அறிஞனும் கூட.
அதர் நாட்களில் நாகரிகமிக்க வல்லரசாயிருந்த ரோம்³ நாட்டை நாகரிகமற்ற காத்தியர்⁴ என்ற முரட்டு மக்கள் படையெடுத்துச் சூறையாடினார். தம் தாய் நாட்டைக் காக்கும் வண்ணம் தாம் ஆண்ட பிரிட்டன் முதலிய மற்ற நாடுகளையெல்லாம் ரோமர்கள் கை விட்டுச் சென்றனர்.
வல்லமையும் நாகரிகப் பண்பும் மிக்க ரோமர் பிடி அகன்றதே. பிரிட்டானியர்⁵ தம் பழைய போர்க்குண மேலிட்டு ஒருவரையொருவர் எதிர்த்தழித்தும், பூசலிட்டும் வந்தனர். செழித்த வயல்கள் நிறைந்த நாடுகளெல்லாம் முட்புதரும் தீய விலங்குகளும் நிறைந்த காடுகளாயின. அதோடு கடற்கரை யெங்கும் ஸாக்ஸனீயர்⁶ என்ற கடற் கொள்ளைக்காரர் தொல்லை மிகுந்தது. வட எல்லையில் விலங்குகள் ஒருபுறமும் விலங்கையே ஒத்த ஸ்காட்டியர்⁷ பிக்டுகள்⁸ ஆகிய காட்டு மக்கள் ஒரு புறமாகச் செய்த அழிவுகளால் நாடு முற்றும் அல்லோலகல்லோலப் பட்டது. இங்ஙனம் பிரிட்டனின் வாழ்வில் சீர்குலைவும் குழப்பமும் ஏற்பட்டன.
அதரும் பிரிட்டானியரும் தமக்கு உதவி செய்யும்படி ரோமருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் தம் நாட்டினுக்காகப் போரிட்டுக் கொண்டிருந்தனராதலால், பிரிட்டானியர் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.
நாட்டின் இக்குழப்ப நிலையில் அதருக்கு இன்னொரு கவலையுமேற்பட்டது. தனக்குப் பின் நாட்டையாளப் புதல்வனில்லையேயென்று அவன் மனமுடைந்தான்.
அதர் கொடுங்கோலனாயிருந்தமையால், அவன் ஆட்சியை யாரும் விரும்பவில்லை. அவன் வாள் வலிமைக்கு அஞ்சியே பெருமக்கள் அவனுக் கடங்கியிருந்தனர். அவன் ஆட்சியிறுதியில் அவன் செய்த கொடுஞ்செயல் ஒன்று இவ்வெறுப்பை மிகுதிப் படுத்திற்று. அவன் கீழ்ச் சிற்றரசர்களாயிருந்தவர்களுள் கார்லாய்ஸ்⁹ என்பவன் ஒருவன். அவன் மனைவி இகெர்னே¹⁰ அழகு மிக்கவள். அதர், அவளை விரும்பி அவள் கணவனைக் கொன்று அவளை வலுவில் மணந்து கொண்டான்.
இகெர்னேயை மணந்து அவன் நெடுநாள் வாழவில்லை. பின்னர் இகெர்னே ஆர்தர்¹¹ என்றொரு பிள்ளையைப் பெற்றாள். இவனே பிற்காலத்தில் பேரரசனான ஆர்தர். இகெர்னேக்கு கார்லாய்ஸ் மூலம் பெல்லிஸென்ட்¹² என்ற ஒருபுதல்வி இருந்தாள். அவள் சிறு பிள்ளையாயிருக் கையில் ஆர்தரின் விளையாட்டுத் தோழியாயிருந்தாள். வயது வந்ததும் அவள் ஆர்க்கினித்¹³ தீவுகளின் இறைவனாகிய லாட்டை¹⁴ மணந்தாள்.
ஆர்தர் இகெர்னேக்கும் அதருக்கும் பிறந்தவனாகக் கொள்ளப்பட்டாலும், உருவிலோ குணத்திலோ மற்றெதிலோ அவன் தாய் தந்தையர்களைச் சற்றும் ஒத்திருக்கவில்லை. உண்மையில் அவன் பிரிட்டன் மக்களைப் போலவேயில்லை. பிரிட்டன் மக்கள் இருண்ட மாநிறமுடையவர். ஆர்தர் தூய வெண்பொன்மேனியுடையவர். பிரிட்டானியர் சற்று மட்டமான உயரமுடையவர். ஆர்தர் உயர்ந்து நெடிய கை கால் உறுப்புக்கள் உடையவர். குணத்தில் ஆர்தரின் தந்தை அதர் கொடுமையும் மனம் போன போக்கும் உடையவர். இகெர்னே குடியினர் கூட ஒருவரை ஒருவர் வஞ்சித் தொழுகிய வர்களே. ஆனால் ஆர்தர் தூய வீரமும் பேரருளும் பெருந்தன்மையும் மிக்கவர்.
ஆர்தரின் இச்சிறப்புக்கேற்ப அவர் பிறப்பையும் இறப்பையும் பற்றிப் பல அரிய கதைகள் கூறப்பட்டன. அவர் வாழ்க்கை தெய்வீகத்தன்மை வாய்ந்ததென்று மக்கள் நம்பியதற்கேற்ப, அதனை முற்றிலும் அறிந்தவனான மெர்லின்¹⁵ அவரைப் பற்றிக் கூறுகையில், “அவர் பேராழியினின்றெழுந்தவர்; பேராழியிற் சென்றொடுங்குபவர். அவர் பிறப்பு இறப்பற்றவர்,” என்று மிகவும் மறை பொருளாகக் கூறி வந்தார்.
ஆர்தர் பிறப்புப் பற்றி மெர்லின் மூலமாக வந்த வரலாறு இது:-
“ஒரு நாள் அதர், மெர்லினுடன் கடற்கரையடுத்திருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில் போய்க் கொண்டிருந்தார். அதர் மனத்தில் அப்போது பிரிட்டன் நாட்டின் குழப்பம் தீரும்படி தமக்கு ஒரு நற்புதல்வனில்லையே என்ற கவலை நிறைந்திருந்தது.அச்சமயம் வானளாவ எழுந்த ஓர் அலை மீது ஒரு கப்பல் தெரிந்தது. அதில் உள்ள மனிதர் அனைவரும் (பிற்காலத்திய ஆர்தருருவைப் போலவே) நெடிய வெண்பொன் உருவமுடையவராகவும், வெள்ளிய ஆடை உடுத்தியவராகவும் இருந்தனர். அதர் கண்களுக்கு அவர்கள் மனிதராகவே தோன்றவில்லை. தேவர்களாகத் தான் காணப்பட்டனர். அவர்களைக் கண்டு அரசன் மிகவும் வியப்படைந்தான். ஆனால், மெர்லின் அவர்களை எதிர்பார்த்தே அரசனுடன் அங்கே வந்ததாகத் தெரிந்தது.”
கப்பல் சற்று நேரத்தில் கண்ணுக்கு மறைந்து விட்டது. மெர்லின் அதரைக் கூட்டிக் கொண்டு குன்றிலிருந்து கடற்கரையில் இறங்கி வந்தான். அப்போது அவர்களை நோக்கித் தெளிவாக ஒன்பது அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வீசின. அவற்றுள் கடைசி அலை ஓரழகிய ஆண் குழந்தையைக் கரைமீது கொண்டு வந்து ஒதுக்கிற்று. மெர்லின் அக்குழந்தையை எடுத்து அதர் கையில் தந்து, “இதோ! உம் கால்வழியில் பிரிட்டனை ஆளப்போகும் உரிமை பெற்றவன்,” என்று கொடுத்தான்.
அதர் மீதுள்ள வெறுப்பைப் பெருமக்கள் இச்சிறுபிள்ளை மீதும் காட்டி விடப்படாதென அஞ்சிய மெர்லின், அதனை ஆண்டன் பெருந்தகை¹⁶ என்ற ஒரு வீரனிடம் விட்டு வளர்க்கச் செய்தான். ஆர்தர் வளர்ச்சியடைந்து வருகையில் மெர்லினே அடிக்கடி வந்து அவருக்குக் கல்வியறிவும் படைக்கலப் பயிற்சியும் தந்தான். அந்நாளைய எல்லாவகை அறிவிலும் மேம்பட்டிருந்த மெர்லின் தன் மாயமும் மந்திரமும் நீங்கலாக எல்லாக் கலைகளிலும் ஆர்தரை ஒப்புயர்வற்ற வராக்கினான்.
ஆர்தர் வீரத்திலும் அறிவிலும் சிறப்பு மிக்க சிறுவராயிருந்ததுடன் அன்பும், கனிவும் மிக்கவராகவுமிருந்தார். தாய் தந்தையர், அவர் தமக்கை பெல்ஸென்டைக் கொடுமைப் படுத்துவதுண்டு. ஆர்தர் அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவார். அவள் மணமான பின்பும் ஆர்தரிடம், உடன் பிறப்பாளரிடமும் கூட பிறர் காட்டாத அளவு அன்பு உடையவளானாள்.
மெர்லின், ஆர்தருக்குக் கல்வி புகட்டியதேயன்றி அவர் வாழ்க்கையில் அவருக்கு வெற்றி தரப் பேருதவியாயிருந்த “எக்ஸ்காலிபர்¹⁷” என்ற வாளைப் பெறவும் உதவியாயிருந்தான். ஒருநாள் ஆர்தர் மெர்லினுடன் ஓர் ஏரிக்கரை யோரமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது முன் ஆர்தர் பிறப்பின்போது ஏற்பட்டது போன்ற அரிய காட்சி ஒன்று தோன்றியது. நீர் நடுவில் வெண்பட்டாடையுடுத்திய ஒரு வெண்மையான கை பேரொளி வீசும் வாள் ஒன்றை ஏந்தி, மேலெழுந்து அவ்வாளை மூன்று முறை சுழற்றியது. மெர்லினின் தூண்டுதலின் பேரில் ஆர்தர் ஒரு படகில் சென்று அதைக் கைக்கொண்டார். உடனேஅக் கை வியக்கத்தக்க முறையில் நீருக்குள்ளேயே போயிற்று.
ஆர்தர் எடுத்த வாளின் பிடி பலவகை மணிக் கற்கள் பதித்த தாயிருந்தது. வாளின் ஓர் புறத்தில் “என்னைக் கைக் கொள்” என்றும், இன்னொரும் புறம் “என்னை எறிந்து விடு” என்றும் எழுதியிருந்தது. பிந்திய தொடர் கண்டு ஆர்தர் முகம் சுண்டிற்று. மெர்லின் அதுகண்டு, “வீசியெறியும் நாள் இன்றில்லை; அண்மையிலுமில்லை. அதற்கிடையில் அதனை வைத்துக் கொண்டு நீ எத்தனையோ வெற்றிகளை அடையப் போகிறாய்,” என்றான்.
ஆர்தருக்குப் பின் அவர் ஆண்ட காமிலெட்¹⁸ அதாவது லண்டன் நகரில் நெடுநாள் அரசரில்லை. பெருமக்கள் சச்சரவினால் பெருங்குழப்ப மேற்பட்டிருந்தது. ஆர்தர் இப்போது இளைஞராய் விட்டபடியால் அவரை அரசராக்கி விட வேண்டுமென்று மெர்லின் முடிவு கொண்டான். ஆனால் ஆர்தர் அதரின் பிள்ளை என்று ஒருவருக்கும் தெரியாது. அதனை அவர்கள் எளிதில் ஏற்கும்படி அவன் ஓர் ஏற்பாடு செய்தான். காமிலட் அரண்மனையின் ஒரு மூலையில் சலவைக்கல் ஒன்றில் ஒருவாள் பதித்து வைக்கப்பட்டிருந்தது. வாளின் பிடி மட்டும் வெளியிலும் மற்றப் பகுதி முழுவதும் கல்லினுள்ளாகவும் இருந்தது. அவ்வாள் பதித்திருந்த கல் மேல் என்னை வெளியே இழுப்பவன் இந்நகருக்கு மட்டுமின்றிப் பிரிட்டன் முழுமைக்குமே அரசனாவான் என்றெழுதியிருந்தது.
மெர்லின் பெருமக்களை அதன் முன் அழைத்து வந்து, “நாடு நெடுநாள் அரசனில்லாமல் சீரழிகின்றது. விரைவில் ஓர் அரசன் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். உண்மையான அரசன் யார் என்பது இப்போது தெரியாமலிக்கிறபடியால் இவ்வாள் மூலம் அதனை ஆராய்ந்து முடிவு செய்வோம்,” என்றான்.
விருந்துக்கு வந்த பெருமக்கள் ஒரு போட்டிப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தனர். அதை விட்டு ஒவ்வொருவராக வந்து வாளையெடுக்க முயன்று ஏமாந்து போயினர். இதற்கிடையே இதே போட்டிப் பந்தயத்தில் ஈடுபட ஆர்தருடன் வந்து கொண்டிருந்த ஆன்டன் பெருந்தகையின் மகனான கேப்பெருந்தகை¹⁹ தன் வாளைக் கொண்டு வர மறந்துவிட்டான். அவன் ஆர்தரை அனுப்பி அதை எடுத்து வரச் சொன்னான். ஆர்தர் செல்லும் வழியில் அரண்மனை மூலையில் பதிந்து கிடந்த வாளைக் கண்டு இது போதுமே என்றெடுத்தான். அதுவும் எளிதில் வந்துவிட்டது. அதன் அருமை தெரியாத ஆர்தர், அதைக் கேயிடம் தரக் கே தந்தையிடம் சென்று தான் அதை எடுத்து விட்டதால் தானே அரசனாக வேண்டும் என்று கூறினான். பெருந்தன்மை மிக்க ஆண்டன் அவனை நம்பாமல் உறுக்கிக் கேட்க உண்மை வெளிப்பட்டது. அதன்பின் ஆண்டன் தன் மகனைக் கடிந்து கொண்டு வாளை மீட்டும் கல்லில் பதித்து அனைவரும் காண அதனை ஆர்தர் எடுக்கச் செய்தான். அதன்பின் மெர்லின் பெருமக்களையும் பொதுமக்களையும் அழைத்து ஆர்தரை அரசராக முடி சூட்டினான்.
ஆர்தர் அரசரானவுடன் பொதுமக்களிடையேயும் பெரு மக்களிடையேயும் உள்ள தம் நண்பர்களை அழைத்து, “குழப்பமடைந்த இந்த நாட்டில் நீங்கள் ஒழுங்கையும் தெய்வீக ஆட்சியையும் நிலை நாட்ட உழைப்பதாக ஆணையிட முன் வர வேண்டும். உண்மைக்குக் கடமைப்பட்டு நன்மையின் பக்கம் நின்று ஏழை எளியோர் ஆதரவற்றோர் பெண்டிர் ஆகியவர்கட்கு இன்னல் வராமல் காக்கவே நான் கொடுக்கும் வாளைப் பயன்படுத்திப் புகழ் பெறுவதாக உறுதி கூற வேண்டும். ஒரு தலைவியையே விரும்பி அவள் அன்பே புணையாகக் கொண்டு அருஞ்செயலாற்ற வேண்டும். இத்தகைய புகழ் வீரருக்கு நான் தூய வீரர் பெருந்தகை²⁰ என்ற பட்டம் தந்து என் வட்ட மேடையில் இடந்தருவேன்” என்றார். அவர்களும் ஒத்து அவர் வட்ட மேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளை நிறைக்கலாயினர்.
அவர்கள் வீரத்தைச் செயலிற்காட்ட விரைவிலேயே ஒரு தறுவாய் ஏற்பட்டது. காமிலியார்டு²¹ நகரிலுள்ள லியொடக்ரான்²² என்ற அரசர் நாட்டில் ஸாக்ஸானியரும் தீய விலங்குகளும் வந்து பேரழிவு செய்தன. ஆர்தரையும், அவர் வீரரையும் அவர்கள் சூளுரைகளையு பற்றிக் கேள்விப்பட்ட அவர் தம் நாட்டிற்கு வந்து தமக்கு உதவுமாறு ஆர்தருக்கு அழைப்பனுப்பினார்.
ஆர்தரும் அவர் வீரர்களும் சென்று பல நாள் காட்டு விலங்குகளை வேட்டையாடி அழித்தும், ஸாக் ஸானியரை நாட்டுக்கு அப்பால் துரத்தியும் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார்கள். அதோடு அவர்கள் வேரோடு படும்படி காடுகளும் அழிக்கப்பட்டு நாடாக்கப்பட்டன.
காமலியர்டில் அரசன் அரண்மனைக்குள் செல்லும் போதே ஆர்தர், மாடத்தல் நின்றிருந்த லியோடகிரான் புதல்வி கினிவீயரைக்²³ கண்டு அவள் அழகில் ஈடுபட்டு அவளையே மணப்பதாக உறுதிசெய்து கொண்டார். இது கினிவீயருக்குத் தெரியாது. விலங்குகளையழித்துக் காடு திருத்தியபின் அவளைக் கண்டு, அவள் காதலைப் பெற அவர் எண்ணியிருந்தார். ஆனால் காமிலட்டில் பெருமக்கள் வெளியிலுள்ள பகைவர்களை எல்லாம் திரட்டிப் படையெடுக்கச் செய்து தாமும் கிளர்ச்சி செய்ததாகச் செய்தி வந்தது. எனவே, வேண்டா வெறுப்பாக அவர் காமிலட்டுக்குச் சென்றார். தம் நலனைக் கருதாது நாட்டு நலனையே எண்ணி அவர் போருக்கு முனைந்தார்.
ஆர்தரை எதிர்த்தவர்களுள், பெரும்பான்மையோர் பிரிட்டனின் அரசர்களும், சிற்றரசர்களும் ஆக இருந்தனர். பெருமக்களிலும் கிட்டத்தட்ட அனைவரும் எதிரிகளுடன் சேர்ந்து போரிட்டனர். ஆர்தர் வீரர்கள் தொகையில் குறைவு. அவர்கள் தம் புதிய வீரப்பட்டத்திற்குப் புகழ் தேட அரும்பாடுபட்டுப் போர் செய்தும் அடிக்கடிப் பின்வாங்க நேர்ந்தது. ஆனால், ஆர்தர் சென்றவிடமெல்லாம் அவரின் வாள் எக்ஸ்காலிபர் எதிரிகளின் குருதி குடித்துக் கொம்மாளமடித்துக் கொக்கரித்தது. மாலையில் ஆர்தரும் வீரரும் தன் கடைசித் தாக்குதலை நடத்தி எதிரிகள் அனைவரையும் வெருண்டோடச் செய்தார்கள். பெருமக்கள் அன்றடைந்த திகில் ஆர்தர் ஆட்சி முடியும் வரை அவர்களை விட்டு நீங்க வில்லை.
போர் முடிந்த பின்னும் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பும் மீந்திருந்த புறப்பகைவரை ஒடுக்கும் பொறுப்பும் ஆர்தரையும் அவர் வீரரையும் சார்ந்தன. ஆகவே, கினிவீயரைச் சென்று காண அவருக்கு நேரமில்லை. ஆயினும், கினிவீயர் இல்லாமலும் அவர் தம் வாழ்க்கை நிறைவடையாதென் றெண்ணினார். ஆகவே, தம் வீரருள் தலைசிறந்தவரான லான்ஸிலட்டை லியோடகிராமிடம் அனுப்பிப் பெண் பேசச் செய்தார்.
லியோடகிராம் முதலில் பெரிதும் தயங்கினார். ஆர்தர் ஆட்சியோ புதிய ஆட்சி, மேலும் பலர், அவர் அதர் பிள்ளையல்லர்; கார்லாய்ஸின் பிள்ளையோ, அல்லது வேறு துணையற்ற எடுப்புப் பிள்ளைதானோ என்று பேசிக் கொள்வதையும், பெருமக்கள் வெறுப்பதையும் கேட்டு அவர் பின்னும் கலக்கமடைந்தார். ஆனால், லான்ஸிலிட்டுடன் சென்ற பெடிவியர்ப் பெருந்தகை²⁴ அவர் பிறப்பைப் பற்றி மெர்லின் கூறியதையும் அவர் கையிலிருக்கும் எக்ஸ்காலிபன் சிறப்பையும் அவர் வெற்றிகளையும் எடுத்துச் சொன்ன பின், ஆர்தர் சார்பாக லான்ஸிலட்²⁵ கினிவீயர் இளவரசியைக் காண அவர் இணங்கினார்.
வாழ்க்கையின் போக்கில் காற்றில் பறக்கத்தகும் சிறிய துரும்புகள் ஊழ்வலியின் ஆற்றலிற்பட்டு மலைகளையும் வீசியெறியும் பெருஞ்சுரங்க வெடிகளாக மாறிவிடுகின்றன. ஆர்தர் நேரில் கினிவீயரை வந்து மணக்க நேராமல் லான்ஸிலட்டை அனுப்பியபோது அவர் வாழ்வின் போக்கையும் லான்ஸிலட், கினிவீயர் ஆகியவர்களையும் பிரிட்டனின் எதிர்காலத்தையும்கூட மிகுதியும் மாற்றும் தீவினையாக மாறிற்று. கினிவீயரின் பார்வையில் ஆர்தர் வீரமும் பெருந்தன்மையும் ஒன்றம் பெரிதாகத் தோன்றவில்லை. லான்ஸிலட்டே அவள் உள்ளங் குடிகொண்ட உரவோன் ஆயினான். அவர்களிருவரும் யார் சார்பில் கூடினோம் என்பதை மறந்து ஒருவருடன் ஒருவர் நட்புப் பூண்டு விட்டனர். ஆனால் அவர்கள் நட்பு மணவினையாக மாறமுடியா தென்பதை இருவரும் உணர்ந்தனர். லான்ஸிலட் தன் தலைவனுக்கு மாறாக நடக்கத் துணியவில்லை. கினிவீயரும் ஆர்தருக்குத் தன்னை மணஞ்செய்து கொடுக்கத் தயங்கிய தன் தந்தை லான்ஸிலட்டுக்குத் தன்னை மணஞ்செய்விக்க ஒருப்படான் என்பதை அறிந்தாள். ஆகவே லான்ஸிலட்டின் கடமையுணர்ச்சி ஒருபுறம்; ஆர்தரை மணந்தால், லான்ஸிலட் இருக்குமிடத்தில் அவன் மீதே உரிமை பெற்ற அரசியாக ஆட்சி புரியலாம் என்ற கினிவீயரின் எண்ணம் ஒருபுறமாக, ஆர்தர் மணவினைக்கே உறுதி தந்தன. அத்துடன் லான்ஸிலட் கினிவீயரை யன்றி வேறு எப்பெண்ணையும் விரும்புவதில்லை என்றும், கினிவீயர் ஆர்தரை மணந்து கொள்வதனால் தான் மணமேயில்லாதிருந்து விடுவதாகவும் கூறவே, கினிவீயரின் தன்னல வேட்கை நிறைவு பெற்றது. தான் ஈடுபட்ட இத்தன்னல வாழ்க்கை ஆர்தரை வஞ்சித்ததாகுமே என்பதை இரண்டகமும் சூழ்ச்சியும் படைத்த அவனுள்ளம் உணரவில்லை.
ஆர்தர் கினிவீயரை, வரவேற்றுக் காமிலம் நகரெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்று அரண்மனை புகுந்தார். அவ்இளவேனில் பருவத்தில் நறுமலர்களிடையேயும், இனிய பறவைகளின் இசையினிடையேயும் ஆர்தர், கினிவீயரின் அழகையும் அவள் இனிய குரலையுமே உணர்ந்தார். ஆனால் அதே சமயம் கினிவீயர், அவற்றிடையே லான்ஸிலட் வீர உருவையும், லான்ஸிலட் வீரக் கழலோசையையுமே உணர்ந்தாள்.
காமிலட் மக்கள் ஆரவாரத்திடையேயும் வட்ட மேடை வீரர் கேளிக்கைப் போட்டிகளிடையேயும் ஆர்தர் கினிவீயரை மணந்து அவளை அரசியாகத் தன் அரசிருக்கையில் கொண்டார்.
இச்சமயம் ரோமிலிருந்து வழக்கமான திறையைப் புதிய அரசனான ஆர்தரிடமிருந்தும் பெறுவதற்காகத் தூதன் வந்தான். “நாட்டைப் பாதுகாக்க முன் வராத பேரரசருக்குத் திறை ஏன்?” என்று ஆர்தர் கேட்டு விடையனுப்பினார். அதன் பின் ரோமர் படை ஒன்று வந்திறங்கிற்று. ஆர்தர் வீரர்கள் அவர்களை முறியடித்து ஓட்டினர்.
பிரிட்டானியரிடையே தனித்தனி நின்று ஒற்றுமையைக் கெடுத்து உள்நாட்டுப் போர்களும் சச்சரவுகளும் விளைவித்து வந்த சிற்றரசர்களையும், குறுநில மன்னர்களையும் ஆர்தரின் வீரர் சென்றடக்கினார். அந்த பிரிட்டன் முழுமைக்கும் பேரரசரானார். பிரிவுபட்டிருந்த பிரிட்டானியரைத் தனித்தனியாக ஆடுகள்போல் ஸாக்ஸன் கடற்கொள்ளைக் காரர்கள் கொத்தி வந்தனர். ஆர்தர் பிரிட்டன் படை களனைத்தையும் திரட்டித் தம் வீரருதவியுடன் அவர்களைக் கண்டவிடமெல்லாம் முறியடித்தார். மொத்தம் பன்னிரெண்டு போர்கள் நிகழ்ந்தன. பன்னிரண்டிலும் பிரிட்டானியருக்கே வெற்றி கிடைத்தது. கடைசிப் போர் பேடன் குன்றில்²⁶ நிகழ்ந்தது. அத்துடன் ஸாக்ஸானியர் பிரிட்டன் இனி நமக்குற்ற இரையல்ல என்றெண்ணி வேறு நாடுகளில் தம் கவனத்தைச் செலுத்தினர்.
ஆர்தரின் வீரர்கள் செய்த அருஞ்செயல்கள் பல. அவற்றால் ஆர்தர் ஆட்சி புகழடைந்தது. அவற்றுட் சிலவற்றை அடுத்துவரும் பக்கங்களில் காணலாம்.
அடிக்குறிப்புகள்
1. Britain
2. Uther.
3. Rome.
4. Goths.
5. Britain.
6. Saxons.
7. Scot.
8. Piets
9. Garlois.
10. Ygeme.
11.Arthur.
12. Bellicent.
13. Orkney.
14. Lot.
15. Merlin
16. Sir Andon.
17. Excalibur.
18. Camelot.
19. Sir key.
20. Knight.
21. Cameliar.
22. Leodogran
23. Guinevere.
24. Sir Bedivere.
25. Sir Lancelot.
26. Badon Hill.
ஆர்தர் காலத்துக்குப்பின் அவர்கள் மீட்டும் வந்து கொள்ளையடித்ததுடன் நில்லாது குடியேறி நாட்டில் பெரும் பகுதியையும் கைப்பற்றினர். அவர்களே இன்று ஆங்கிலேயர் என்று அழைக்கப்படும் இங்கிலாந்துக் குடிகள். பழைய பிரிட்டானியர் மேற்கேயுள்ள மலைநாடுகளாகிய வேல்ஸிலும், கார்ன்வால், கிளைடு ஆகிய இடங்களிலும் சென்று தங்கினர். அவர்களில் பெரும் பகுதியார் இன்று வெல்ஸில் வாழும் வெல்ஸ் மக்கள் ஆவர்.
லான்ஸிலட் பெருந்தகையின் வீரம்
ஆர்தர் அரசருக்கு வலக்கையாய் இருந்து அவரைப் போர்களில் எதிரிகளைத் துரத்தியடித்து அவர் பேரரசை நிலைநிறுத்த உதவிய பெருவீரர் லான்ஸிலிட்டே. அவர் ஆர்தர் வட்ட மேடை வீரருள் தலைசிறந்த வராயிருந்ததுடன் அவருக்கு ஒப்பற்ற தோழராகவும் இருந்தார். ஆயினும் அவருக்கு ஆர்தர் அரண்மனையிலிருந்து விருந்து வாழ்வு வாழப் பிடிக்கவில்லை. நாடெங்கும் சென்று காடுகளிலும் ஒதுக்கிடங்களிலும் மறைந்து மக்களைத் துன்புறுத்திவரும் ஆர்தரின் பகைவரைப் போரிட்டு வென்றழித்துத் தம் புகழைப் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். சிறப்பாக ஆற்றுக் கடலருகிலுள்ள மாளிகைத் தலைவனாகிய துர்க்கைன்¹ என்ற கொடிய வீரனை அழிப்பதிலேயே அவர் மிகவும் கருத்துக் கொண்டார். இந்நோக்கத்துடன் அவர் தம் மருமகனாகிய லயோனெல் பெருந்தகையுடன்² புறப்பட்டுச் சென்றார்.
அந்நாளில் பிரிட்டனெங்கும் நிறைந்திருந்த காட்டு வழிகளில் சுற்றியலைந்து மிகவும் களைப்படைந்து லான்ஸிலட் ஒரு மரத்தடியில் சோர்ந்து கண்ணயர்ந்து உறங்கினார். லயோனெல் பெருந்தகை அவரைக் காத்து அருகில் நின்றிருந்தான்.
அச்சமயம் காற்றினும் கடுக மூன்று வீரர் குதிரை மீதேறியோடினர். நெடிய பாரிய உடலுடைய ஒரு முரட்டு வீரர் அவர்களைப் பின்பற்றித் துரத்தி வந்தான். அவன் கொடிய ஈட்டியால் அவர்களைக் காயப்படுத்தி அதன் பின் அவரவர் குதிரைகளின் கடிவாளங்களால் பிணித்துக் கல்லிலும் முள்ளிலும் கட்டியிழுத்தான். இக்கொடுமையைப் பார்க்கப் பொறுக்காமல் லயோனெல் லான்ஸிலட்டை எழுப்பக்கூடத் தாமதிக்காது முரட்டு வீரன் மீது பாய்ந்தான். ஆயினும், முரட்டு வீரன் லயோனெலை விடப் பன்மடங்கு வலிமையுடைய வனாயிருந்த படியால் லயோனெலையும் மற்ற வீரர்களைப் போலவே கட்டியுருட்டி இழுத்துக்கொண்டு சென்று தன் மாளிகையில் சிறையிட்டான். அங்கு முன்பே பல வீரர்கள் ஆர்தர் வட்டமேடை வீரர் பலர் உட்படச் சிறைப் பட்டிருந்தனர். அவர்களனைவரையும் காலை மாலை குதிரைச் சவுக்கால் குருதி கொப்பளிக்கும் மட்டும் அடிப்பதே அவனுடைய நாள்முறை விளையாட்டாயிருந்தது.
இவ்வீரன் வேறு யாருமல்லன்; லான்ஸிலட் பெருந்தகை தேடிக் கொண்டிருந்த கொடிய வீரன் துர்க்கையனே, அவன் லயோலெனலையும் பிறரையும் அடைத்த மாளிகையே ஆற்றுக்கடலை அடுத்த அவன் மாளிகை.
துர்க்கைனின் கொடுமைகளைக் கேட்டு அவனை எதிர்க்கும் எண்ணத்துடன் எக்டார் பெருந்தகை¹ என்ற ஆர்தரின் இன்னொரு வீரனும் அப்பக்கம் வந்தான். துர்க்கைன் மாளிகையருகே ஒருமரத்தில் ஆர்தர் வீரர் பலரின் கேடயங்களைக் கண்டு அவன் சீற்றமும் மனவருத்தமும் கொண்டு மாளிகையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது வேட்டையாடி மீண்டு வந்து கொண்டிருந்த துர்க்கைன் அவனைப் பின்புறமிருந்து தாக்கினான். எக்டார் தன் திறமெல்லாங் கொண்டு அவனைத் தாக்கியும் பயனில்லாமல் போயிற்று. அவனைத் துர்க்கைன் கீழ்ப்படியும் படிக் கோரியும் தூய வீரனாகிய எக்டார் அதற்கு இணங்க வில்லை. ஆகவே துர்க்கைன் அவனையும் மற்றவர்களைப் போல் முள்ளிலும் கல்லிலும் கட்டி இழுத்துச் சிறையிலிட்டுத் துன்புறுத் தினான். சிறையில் எக்டார், லயோனெலைக் கண்டு வியப்படைந்து “லான்ஸிலட் எங்கே?” என்று கேட்டான். லயோனெல் நடந்த செய்திகளை விரித்துக் கூறி “லான்ஸிலட்டைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை,” என்று சொன்னான்.
இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கிடையிலும் லான்ஸிலெட் உறங்கிக் கொண்டுதானிருந்தார். நெடுநேரம் சென்று எழுந்த போது லயோனெலைக் காணாமல் அவர் அவனைத் தேடலானார். அப்போது எதிரில் வந்த கந்தை ஆடை உடுத்த ஒரு மாது தன்னைத் துன்புறுத்தும் ஒரு போலி வீரனிடமிருந்து தன்னை விடுவிக்கும்படி கோரினாள். அங்ஙனமே செய்த பின் அம்மாது துர்க்கைனைப் பற்றியும், அவனால் கொடுமைக் குட்படுத்தப் படும் வீரரைப் பற்றியும் கூறினாள். லான்ஸிலட் அவள் காட்டிய வழியே துர்க்கைனின் மாளிகை நோக்கிச் சென்றான்.
வழியிலேயே துர்க்கைன் காயம்பட்ட வீரன் ஒருவனை இழுத்துக் கொண்டு வந்தான். லான்ஸிலட் அவ்வீரனை விடுவிக்கும்படி துர்க்கைனுக்கு ஆணையிட்டார். துர்க்கைன் மறுக்கவே, லான்ஸிலட் அவன் மீது போர் தொடங்கினார். லான்ஸிலட்டின் வாள் வீச்சுக்கள் தான் எதிர் பார்த்ததைவிடக் கடுமையாயிருக்கவே துர்க்கைன் அவரை நோக்கி, “உன் வலிமையைப் பார்க்க நீ என் மாபெரும் பகைவன் லான்ஸி லட்டிடம் பழகியவன் போலிருக்கிறதே!” என்றான். லான்ஸிலட், “நான் லான்ஸிலட்டுடன் பழகியவனல்ல; லான்ஸிலட்டேதான். உன் முடிவு நெருங்கிவிட்டதாகையால் உன் முழுத் திறமையையும் காட்டிப் போர் செய்க,” என்றான்.
சிறிது நேரத்தில் துர்க்கைன் பிணமாய் நிலத்தில் வீழ்ந்தான். காயம்பட்டுத் தூக்கிக் கொண்டு வரப்பட்ட வீரனாகிய கஹேரிஸ் பெருந்தகை¹ விடுவிக்கப்படவே அவன் துர்க்கைன் வேலையாளிடமிருந்த திறவுக் கொத்தை வாங்கிக் கொண்டு சிறைப்பட்ட வீரரை விடுவிக்கச் சென்றான்.
லான்ஸிலட் தம் வீரர்களைக் கூடப் பார்க்கத் தங்கவில்லை. அவர்களைக் கூட்டிக் கொண்டு காமிலட்டுக்கு வரும் வேலையைக் கஹேரிஸினிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மேலும் சென்று, இன்னும் பல தீய வீரரையும் மாயாவி வஞ்சகர்களையும் அழித்துப் பிரிட்டன் முற்றிலும் அமைதியைப் பரப்பினார். இறுதியில் ஆர்தர் நடத்திய ஒரு விருந்தினரிடையே அவர் வந்து அரசனையும் தாம் விடுவித்த வீரரையும் கண்டு இன்புற்று வாழ்ந்தார்.
அடிக்குறிப்புகள்
1. Sir Turquine of the manor.
2. Sir Lionel.
3. Sir Ector.
4. Sir Gaheris.
காரத் பெருந்தகையின் அருஞ்செயல்கள்
விட்ஸன்¹ என்ற விழாக் காலத்தில் ஆர்தர் யாருக்காவது ஓருதவி செய்தல்லாமல் உணவு கொள்வதில்லை. ஓராண்டு அவ்விழாவின்போது அவர் அரண்மனை அலுவலாளாகிய கவெயின் பெருந்தகை, ஆர்தரிடம் வந்து, மூன்று குதிரை வீரர் வெளியே காத்திருப்பதாகக் கூறினார். அவர்கள் உள்ளே வந்தவுடன் முதல் வீரன் ஆர்தர் முன் மண்டியிட்டு நின்று, ’அரசே, எனக்கு மூன்று வரங்கள் வேண்டும். ஒன்றை இப்போதே பெற்றுக் கொள்ளுகிறேன். மற்ற இரண்டையும் அடுத்த ஆண்டில் கோருவேன், என்றான்.
ஆர்தர் அப்படியே “அப்படியே ஆகட்டும்; உனக்கு வேண்டுவதைக் கேள்” என்றார்.
வீரன், “ஓர் ஆண்டுக் காலம் எனக்கு அரண்மனையில் அடிசில் வேலையைத் தந்து உண்டியும் உடையும் தருக,” என்றான். அரசர் அப்படியே உத்தரவிட்டார்.
பின் அரசர் வீரனிடம் “உன் பெயர் என்ன? யார்? எவ்விடத்திலிருந்து வந்தாய்?” என்று கேட்டார் வீரன். “சிலகாலம் இவற்றை மறைவாக வைத்திருக்க விரும்புகிறேன்” என்றான். அரசர் அதற்கும் இணங்கினார்.
வீரன் ஓர் ஆண்டுக்காலம் வேலைக்காரருடன் வேலைக் காரனாய் வாழ்ந்து வந்தான். ஆனால், என்ன தொழில் செய்தாலும் அவன் தன் கைகளை அழுக்கடையாமல் தூய்மையாக வைத்துக் கொண்டான். அது கண்ட வேலைக்காரர் அவனை “அழகிய கையன்” என்று பொருள்படும்படி போமென்ஸ் என்று அழைத்தனர்.
அடுத்த ஆண்டு விட்ஸன் விழாவின் போது தூய வெள்ளிய ஆடை உடுத்த லினெட் என்ற ஒரு மங்கை அரசனிடம் வந்து “அரசே! என் தலைவி லியோனிஸ் பெருமாட்டியின் மாளிகையைச் செவ்வெளி நாட்டுச் சிவப்பு வீரன். முற்றுகையிட்டுத் தொல்லைத் தருகிறான். உங்கள் வீரருள் ஒருவனை அனுப்பி அவளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறேன்” என்றாள்.
அரசர் அவளுக்கு விடை தருவதற்கு முன்னால் போமென்ஸ் முன் வந்து, “அரசே! ஓர் ஆண்டுக்கு முன் நான் கோரிய இரண்டு வரங்களும் நிறைவேறவேண்டும் நாள் இது. என்னை இம்மாதுடன் லியோனிஸ் பெருமாட்டியை மீட்கும்படி அனுப்புவது ஒரு வரம். வட்டமேடை வீரருள் தலைமை கொண்ட லான்ஸிலட் பெருந்தகையை என்னுடன் அனுப்பி நான் வேண்டும் போது என்னை வீரனாக்குவிப்பது மற்றொரு வரம்,” என்றான்.
மன்னர் மகிழ்ச்சியுடன் இணங்கினார். ஆனால் லினெட் என்ற பெயருடைய அம்மங்கை முகம் கோணிற்று. “பெரும் புகழ்பெற்ற அரசரென்று இவரிடம் வந்தால், என் பின் மாண்புமிக்க தலைவியை மீட்க ஒரு தூய வீரனை அனுப்பாமல் அதற்கு மாறாக முகத்திலடித்தது போல ஒரு பணிப் பையனையா அனுப்புவது?” என்று அவள் முனகிக் கொண்டாள்.
போமென்ஸ் அவள் முகச் சுளிப்பைக் கவனியாமல் அவள் பின் சென்றான். மன்னனிடம் அவன் கேட்டுக் கொண்டபடியே லான்ஸிலட் பெருந்தகையும் அவனுடன் சென்றார்.
அரண்மனையை விட்டு வெளியே வரும்போது போமென்ஸ் முன், ஒரு சிறுவன் நல்ல கவசத்துடனும் ஓரழகிய குதிரையுடனும் காத்து நின்றான். போமென்ஸ் கவசத்தை அணிந்து குதிரையை நடத்திக் கொண்டு சென்றான்.
போமென்ஸ் அடிசிற்கூடத்தில் வேலையாளாயிருக்கையில் அவனையும் பிறவேலையாட்களையும் அப்பகுதியில் தலைவரான கேப் பெருந்தகை கொடுமையாக நடத்தி வந்தார். தம் கீழ் வேலையாளாய் இருந்தவன் பெரிய வீரனாக முயற்சி செய்வது அவருக்குப் பொறுக்கவில்லை. “ஆர்தர் ஆகட்டும்; வேறு யாராகட்டும், என் கீழ் வேலை செய்யும் வேலையாளை என் இணக்கமின்றி வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது,” என்று கூறிக்கொண்டு அவர் போமென்ஸைத் தடைசெய்ய வந்தார். போமென்ஸ் அவரிடம் "உம் வேலையின் மதிப்புப் பெரிதுதான். ஆனால் உமது உள்ளம் சிறுமைப் பட்டது. ஒருவர் தமக்கு மேலுள்ளவரிடம் கெஞ்சுவதில் பெருந்தன்மை யில்லை. கீழ் உள்ளவரிடம் பரிவு காட்டுவது தான் பெருந்தன்மை என்பதை அறியாத நீர் ஒரு வீரரா? என்றான்.
கேப் பெருந்தகைக்குச் சினம் மூக்கையடைத்தது. அவர் தம் வாளின் பின்புறத்தால் அவனைத் தட்ட எண்ணினார். போமென்ஸ் தன் வாளுறையால் அதனைத் தடுத்து வீசி எறிந்தான். பின்னும் அவர் எதிர்க்க, போமென்ஸ் அவரை எளிதில் வீழ்த்தி, “ஆர்தரிடமே சென்று மன்னிப்புப் பெறுவீராக,” என்று கூறி அனுப்பினான்.
அதன்பின், போமென்ஸ், லான்ஸிலட்டிடம் மண்டியிட்டு நின்று, “என் வீரத்தை ஓரளவு உமக்குக் காட்டினேன்; என்னை வீரனாக்குக,” என்றான். லான்ஸிலட் அகமகிழ்வுடன் தம் வாளால் அவன் தலையைத் தொட்டு “நீ ஆர்தர் வீரருள் ஒருவனாய் எழுந்து பணியாற்றுக,” என்றார்.
அவர் விடைகொள்ளுமுன் போமென்ஸ் அவரிடம் நம்பகமாகத் தான் இன்னான் என்பதைத் தெரிவித்தான். அவன் வேறு யாருமல்லன்; கவேயின் பெருந்தகையின் தம்பியும், ஆர்தரின் மருமகனுமாகிய காரெத்தே என்று கேட்டு லான்ஸிலட் பெருமகிழ்ச்சி கொண்டார்.
போமென்ஸ் என்று இதுகாறும் அழைக்கப்பட்ட காரெத் பெருந்தகை தன் குதிரையை விரைவாகச் செலுத்தி லினெட்டைப் பின்பற்றினான்.
தற்பெருமையும் வீம்பும் மிக்க லினெட், காரெத்தை அருகில் கூட வரவொட்டாமல் அவமதிப்புடன் நடத்திக் கடுமொழிகள் பேசினாள். “சீ! என் அருகில் வராதே! என்னதான் உடை மாற்றினாலும் நீ அண்டி வரும்போது கறிச்சட்டி நாற்றம் வீசுகிறது. அகப்பைகளைக் கழுவும் இக்கையா சூரர்களையும் கலங்கவைத்த செவ்வீரனை எதிர்க்கப் போகிறது? வேண்டாம்! என் தலைவியை மீட்க நான் வேறு யாரையாவது பார்த்துக் கொள்கிறேன். நீ சட்டி துடைக்கத்தானே போ,” என்றாள்.
காரெத்தும் லினெட்டும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றில் பாலம் எதுவுமில்லையாதலால் ஆழமற்ற ஒரு பகுதியில் தான் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அவ்விடத்துக்கெதிராக மறுகரையில் இரண்டு வீரர் நின்று ‘இதைக் கடந்து செல்லக்கூடாது’ என்றனர். மாது, காரெத்தை நோக்கி, “இவர்களை உன்னால் எதிர்க்க முடியுமா? உனக்கு அச்சமாயிருந்தால் வேறு சுற்று வழியில் செல்லலாம்,” என்றாள். காரெத், “அம்மணி!” தங்கள் அவமதிப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஆயினும் இரண்டு தடவை நான் போரிடுவதைக் கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்த அவநம்பிக்கை," என்று கூறிக்கொண்டே குதிரையை ஆற்றினுள் செலுத்தினான். ஆற்று நடுவில் வந்து அவனை எதிர்த்த முதல் வீரன் வெட்டுண்டு போக, ஆறெல்லாம் அவன் குருதியால் சிவப்பாயிற்று. இரண்டாவது வீரனும் அதுபோலவே காரெத் வாளுக்கு இரையானான்.
மாலையில் அவர்கள் ஒரு மரத்தடியில் கறுப்புக் கவசமணிந்த ஒரு வீரனைக் கண்டனர். கறுப்புச் சேணமிட்ட கருங்குதிரை ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. மரக்கிளையில் பறந்து கொண்டிருந்த ஒரு கரங்கொடியின் பக்கம் ஊதுகுழல் ஒன்று தொங்கிற்று. கறுப்பு வீரன் லினெட்டை நோக்கி, “இவன்தான் ஆர்தர் அனுப்பிய வீரனோ! அப்படியானால் குழலை ஊதி என்னுடன் போருக்கு வரட்டும்,” என்றான்.
லினெட், ’இவன் வீரன் அல்லன்; கறிச்சட்டி கழுவும் வேலைக்காரன்," என்றாள்.
காரெத், "அவள் கூறுவது முழுப் பொய்; என் கை சிலகாலம் கறிச்சட்டி கழுவியது உண்டாயினும் என் நாக்கு இவ்வளவு பொய் சொல்லிக் கேட்டதில்லை,’ என்று கூறிவிட்டுக் குழலை ஊதினான்.
காரெத்தும் கறுப்பு வீரனும் நெடுநேரம் சண்டை யிட்டனர். இறுதியில் கறுப்பு வீரன் கொல்லப்பட்டு வீழ்ந்தான். தன் கவசத்தையும் தலையணியையும் விடக் கறுப்பு வீரன் கவசமும் தலையணியும் சிறந்தவை என்று கண்டு, காரெத் அவற்றை அணிந்து கொண்டு புறப்பட்டான்.
சற்றுத் தொலை சென்றதும், கறுப்பு வீரனின் உடன்பிறந்தானாகிய பச்சை வீரன் எதிரே வந்தான். அவன் காரெத்தைக் கறுப்பு வீரன் என்றெண்ணி வணக்கம் செய்யப் போனான். அதற்கு முன், மாது, அவனைத் தடுத்து, “இவன் உன் உடன்பிறந்தானுமல்ல; உன்னைப் போன்ற வீரனுங்கூட அல்ல, மிக இழிந்த பிறப்புடைய ஒரு சமையல் வேலைக்காரனே அதோடு அவன் என் உடன் பிறந்தானாகிய கறுப்பு வீரனைக் கொன்று விட்டு அவன் உடையையும் அணிந்து வந்திருக்கிறான். அவனிடம் பழிக்குப் பழி வாங்கி என்னைப் பிடித்த இப்பீடையையும் அகற்றுவாய் என்று நம்புகிறேன்,” என்றாள்.
நன்றிகெட்ட லினெட்டைக் கடுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டுக் காரெத் பச்சைவீரனைத் தாக்கத் தொடங்கினான். காரெத்தின் வாள் வீச்சைத் தாங்கமாட்டாமல் பச்சை வீரன் பணிந்து உயிருக்கு மன்றாடினான். காரெத், தான் அழைக்கும் போது தன் வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வந்து மன்னிப்புப் பெற்று, அவர் பணியில் ஈடுபட வேண்டும் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு அவனை விடுவித்தான். அவனும் நன்றியுடன் காரெத்தை வணங்கிச் சென்றான். போகும்போது மாதை நோக்கி, “பெருந்தன்மை மிக்க இவ்வீரனை, அவமதிப்பது உனக்கு அழகன்று; நன்றியுமன்று; அவனைப் பாராட்டி மேன்மை அடைக,” என்று கூறி அகன்றார்.
பச்சை வீரனைப் போலவே கறுப்பு வீரனுக்குச் சிவப்பு வீரன் என்று இன்னோர் உடன்பிறந்தான் இருந்தான். அவனும் எதிர்ப்பட்டுத் தோற்க, தன் அறுபது வீரருடன் ஆர்தர் அரண்மனைக்கு வருவதாகக் கூறி அகன்றான்.
லினெட் மனத்தில் காரெத்தைப் பற்றிய எண்ண முற்றும் மாறுதல் அடைந்தது. தான் அவமதிக்க அவமதிக்க அவன் எதிர்க்காது பணிவதையும், தான் கடுஞ்சொல்கூறிப் புண்படுத்துந்தோறும் அவன் மேன்மேலும் இன்சொல்லே வழங்கி வருவதையும் கண்டு, அவள் தான் இதுவரை அவனைக் கடுமையாக நடத்தியதற்கு வருந்தி, மிகவும் பணிவுடனும் கழிவிரக்கத்துடனும் மன்னிப்புக் கோரினாள். “இன்னா செய்தாரையும் நன்மையைச் செய்து ஒறுக்கும் தாங்கள், இழிபிறப்பு உடையவராய் இருக்க முடியாது. தங்களின் உண்மை நிலையறியாது இகழ்ந்ததற்கு ஆயிரம் தரம் தங்களிடம் நான் மன்னிப்பு கோர வேண்டியவளாகிறேன்” என்று அவள் வாய்விட்டுக் கூறினாள். தீமைக்கே நன்மை செய்த பெருந்தகை யாகிய காரெத் அவள் மனமாற்ற மடைந்ததற்கு மகிழ்ந்து அதைப்பாராட்டு முறையில், தான் இன்னான் என்பதை அவளிடம் நம்பகமாகக் கூறினான்.
லயானிஸின் மாளிகைக்கு வெளிப்புறமுள்ள ஒரு படர்ந்த மரத்தில் கவசமணிந்த பல வீரர்கள் விழுதுகள்போல் கட்டப்பட்டுத் தொங்கினர். அதைக் கண்டு காரெத்தின் உள்ளம் பொங்கியெழுந்தது. அவர்கள் அனைவரும் லியோனிஸ் பெருமாட்டியை மீட்க வந்து தோல்வியையடைந்து செவ்வெளிநாட்டுச் செவ்வீரனால் தூக்கிடப்பட்டவர்கள் என்பதைக் காரெத்துக்கு லினெட் கூறினாள்.
காரெத் அம்மரத்தில் தொங்கிய ஒரு குழலை ஊதியதும் செவ்வீரன் கவசமணிந்து முன் வந்தான். மாளிகையிலிருந்து லியோனிஸ் பெருமாட்டி குழல் ஓசை கேட்டுப் பலகணியில் வந்து காரெத்தின் போரைக் கவனித்து நின்றாள். அவள் அப்போது அவனைத் தன் கனிந்த பார்வையால் ஊக்கியும் வந்தாள். பல மணி நேரம் கடுஞ்சண்டை நடந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவும் குத்தவும் தள்ளவும் பார்த்தனர். இறுதியில் செவ்வீரன் கை தாழ்ந்தது; அவன் உடல்வலிமையும் தளர்வுற்றது; அவன் பணிந்து “ஐய! உம் தாக்குதல்களை நிறுத்துக. நான் இனி உமது ஆள். உம் விருப்பப்படி நடப்பேன்,” என்றான்.
காரெத், “நீ எனக்குப் பகைவனல்ல. நீ செய்த தீங்கெல்லாம் என் தலைவி லியோனிஸ் பெருமாட்டிக்கே அவளை மீட்க வந்த வீரரெத்தனையோ பேரை நீ கொன்றிருக்கிறாய்! அவளிடமே மன்னிப்புப் பெற்று உயிரை அவள் தருங் கொடையாகப் பெறுக,” என்றான். லியோனிஸ் பெருமாட்டியிடம் மன்னிப்புப் பெற்றுச் செவ்வீரன் விடுதலையடைந்தான். அதன்பின் காரெத் அவனைக் காமிலெட்டுக்கு அனுப்பி ஆர்தரிடம் அமருமாறு கூறினான்.
லியோனிஸ் பெருமாட்டி காரெத்தை அன்புடன் வரவேற்றாள். ஆயினும் அவள் அனிடம், “உன் வீரவாழ்வு இப்போதே தொடங்கி இருக்கிறது. அதனைப் பிஞ்சிலேயே நான் தடைசெய்யக் கூடாது. இன்னும் பன்னிரண்டு திங்கள் வீரமாதின் அருள் வழி நின்று மீண்டும் வருக. நான் உன் புகழையே என் உயிராய்ப் போற்றி நின்று உன்னையடைவேன்,” என்றாள்.
போமென்ஸ் என்ற பெயர் துறந்து காரெத் என்ற பெயருடன் மன்னரும் மன்னவையும் மகிழ்ந்துப் பாராட்டக் காரெத் பல அரும் பெருஞ் செயல்களாற்றி ஓராண்டிலேயே நூறாண்டுப் புகழ்பெற்று தன் உள்ளத் திறைவியாகிய லியோனிஸ் பெருமாட்டியை மணந்தான். அவன் உடன் பிறந்தானாகிய கரெயின் பெருந்தகை லியோனிஸ் பெருமாட்டியின் தோழியாகிய லினெட்டை மணந்து கொண்டான்.
கெரெய்ன்டின் திருமணம்
பிரிட்டனின் அரசராகிய ஆர்தரின் அரண்மனை வேடர் சிலர், காட்டில் மிகப் பெரியதும் பால் நிறமுடையதுமாகிய ஒரு மானைக் கண்டதாக வந்துரைத்தார்கள். கினிவீயர் அரசிக்கு எப்படியும் அம் மானைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்ற அவா ஏற்பட்டது. உடனே அவள் தன் சேடியருடனும் வேடருடனும் காட்டுக்கு வேட்டையாடப் புறப்பட்டாள். டெவன் வட்டத்தைச் சார்ந்த புகழ்பெற்ற வீரனாகிய கெரெய்ன்டும் உடன் சென்றான்.
நெடுநேரம் காட்டிலலைந்து பார்த்தும் மான் அவர்கள் கையிற் படாமல் மறைந்துவிட்டது. உச்சி வேளையானதும், இனி வேட்டையாட முடியாதென்று அவர்கள் ஒரு மரத்தடியில் வந்து இளைப்பாறியிருந்தனர். அப்போது அப்பக்கமாக ஒரு மங்கையும், அவளைப் பின்பற்றி ஒரு வீரனும், அவர்கள் பணிப்பையனாகிய குள்ளன் ஒருவனும் விரைவாகச் சென்றனர். அவ்வீரன் யார் என்று அறிந்து வரும்படி அரசி, தன் சேடியருள் ஒருத்தியை அனுப்பினாள். அவர்கள் சற்றும் அச்சேடியைப் பொருட்படுத்தாது உரையாடிச் சென்றனர். அது மட்டுமின்றி வீரன் துடுக்குத்தனமாகத் தன் சாட்டையால் தோழியை ஓங்கி அடித்துவிட்டுச் சென்றான்.
கெரெய்ன்டு இதனைக் கண்டதும், மிகவும் சினங் கொண்டு அவர்களிருப்பிடத்தையறிந்து “அவர்களுக்குச் சரியான தண்டனை கொடுத்து வருகிறேன்,” என்று புறப்பட்டான்.
கெரெய்ன்டு நெடுந்தொலைவு அவர்களைப் பின்பற்றிச் சென்று இறுதியில் ஒரு நகரையடுத்துக் காணப்பட்ட ஒரு பெருங் கோட்டையில் அவர்கள் நுழைவதைக் கண்டான். வாயில் காப்போன் அவனைக் கோட்டையினுள் நுழைய விடாமல் வாயிலை அடைத்து விடவே, “எப்படியும் இனி இந்நகரில் தங்கி இவர்களை ஒருகைப்பார்த்துவிட்டுச் செல்வோம்,” என்று எண்ணிக் கொண்டு நகரினுள் நுழைந்தான்.
நகரில் அன்றைய இரவு முற்றும் விளக்கொளியில் மக்கள் விரைந்து வேலை செய்தும் பரபரப்புடன் ஓடியாடியும் விழாவுக்க வேண்டிய ஆயத்தங்கள் செய்பவர்போற் காணப்பட்டனர். செய்தி யாது? என்ற கேள்விக்கு யாரும் மறுமொழி தரக்கூட நேரமின்றிப் பரபரப்புடன் அவனைக் கடந்து சென்றனர். தங்க இடமாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தான்; அதற்கும் வழியில்லை. இறுதியில் ஒரு கிழவன் இன்று உனக்கு இடம் வேண்டுமானால் ஒரே ஓர் இடம்தானுண்டு. நகருக்கு வெளியில் பாழாய்க் கிடக்கும் பழைய கோட்டைக்குச் செல்க, என்றான்.
கெரெய்ன்டு அங்ஙனமே நகர்ப்புறத்துக்கு மீண்டும் வந்தான். வீரனும் மங்கையும் நுழைந்த கோட்டை எதிரில், இடிந்து தகர்ந்த ஒரு பழங் கோட்டையைக் கண்டு அவன் அதில் நுழைந்தான். அங்கிருந்த ஒரு முதியவன் அவனை வரவேற்று அதில் அதிகம் இடிந்து பொடியாகாத ஓர் அறைக்குக் கொண்டு சென்றான். அங்கே அவன் மனiவியாகிய மூதாட்டியும், கந்தையாடையிலும் கட்டழகு மாறாத காரிகையாகிய அவன் புதல்வியுமிருந்தனர். அவர்களும் அவனை விருந்தாக ஏற்று முகமன் கூறினர்.
அவர்கள் வாயிலாக கெரெய்ன்டுக்கு அரசியை அவமதித்த வீரனைப் பற்றிய விவரமும், மறுநாளைய விழவைப் பற்றிய விவரமும் தெரியவந்தன. அவன் அந்நாட்டில் நன்மக்களை நெடுங்காலம் துன்புறுத்தி வந்த பருந்து வீரன் என்ற புனைபெயருடைய எடிர்ன்1 என்பவனே. அந்நகரில் நெடுநாள் வாழ்ந்த பழங்குடியினனாகிய அப்பழங்கோட்டை வீரனை எதிர்த்து அவன் அக்கோட்டையை அழித்து அதிலுள்ள செல்வமனைத்தையும் கொள்ளையிட்டு, அச்செல்வத்தால் புதிய கோட்டை கட்டி நகரில் ஆட்சி புரிந்துவந்தான். அவ்வெற்றி நாளைக் கொண்டாடு முறையில்தான் அதன் ஆண்டு நிறைவாகிய மறுநாளில் அவன் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதில் அவன் தன்னை எதிர்க்க முன்வரும் வீரரனைவரையும் வென்று வெற்றி மாலை சூடவும் திட்டமிட்டிருந்தான்.
கெரெய்ன்டிடம் அப்போது போரிடுவதற்கான கவசமும் போர்க் கருவிகளும் இல்லை. அவை தனக்குக் கிடைத்தால், தானே சென்று அவன் கொட்டத்தை அடக்க விரும்புவதாகக் கூறினான். முதியவனாகிய பழங்கோட்டை வீரன் தன் துருப்பிடித்த கவசத்தையும் கருவிகளையும் வேண்டுமானால் தருகிறேன்,’ என்றான். போரிடுபவர், அக்காலத்தில், தாம் தம் தலைவியாக ஒரு மங்கையை முன்னிட்டுப் போரிடுவது வழக்கம். போரில் வெற்றி பெற்றால் அவள் அவனுக்கு மாலையிட்டு, அவனையே கணவனாகக் கொள்வாள். கெரெய்ன்ட் முதிய வீரன் புதல்வியையே தலைவியாகக் கொள்ள எண்ணினான். பெற்றோரும் அதற்கிசைந்தனர்.
மறுநாள் விழாவுக்கான கேளிக்கைகள் தொடங்கு முன் கெரெய்ன்டு, பருந்து வீரன் முன் சென்று அவனைப் போருக்கழைத்தான். அப்போது போரில் தோற்றால் ஆர்தர் அரசனிடம் பெற்ற விருதுகளை விட்டுக் கொடுப்பதாகவும், வென்றால் தன் தலைவியாகிய பழைய வீரன் புதல்விக்கு, அவள் தந்தையிடம் கொள்ளையிட்ட பொருள்கள் யாவும் கொடுபட வேண்டுமென்றும் அவன் உறுதி கோரினான். பருந்து வீரன் இறுமாப்புடன் எதிருறுதி கூறவே மற்போர் தொடங்கிற்று.
இருவீரரும் முதலில் குதிரைகள் மீதிருந்தும், பின் ஈட்டி கேடயங்களாலும், இறுதியில் வாளாலும் போர் புரிந்தனர். மூன்றிலும் பருந்து வீரன் தோற்றுவிடவே, அவன் கொட்டமும் அவன் தலைவியாகிய மங்கையின் கொட்டமும் அடங்கின. பழைய வீரன் வசம் அவன் செல்வங்கள் யாவும் வந்தன.
கெரெய்ன்டு மறுநாளே தலைநகராகிய காமிலட் சென்று பழைய வீரன் மகளாகிய எனிடை மணக்க விரும்பினான். எனின் தாய் அவளை மணப்பெண்ணுக்கான ஆடையணி வித்தாள். ஆனால், கெரெய்ன்டு, தான் அவளை, அவள் பழைய கந்தையாடையுடனேயே கொண்டு செல்வதாகக் கூறினான். சற்று மனச்சோர்வுடன் எனிட் தன் புத்தாடைகளைத் துறந்து கந்தையாடையுடன் புறப்பட்டாள்.
காமிலட்டில் ஓரிரவுதான் எனிட் கந்தையாடையுடன் படுத்திருந்தாள். கினிவீயர் அரசியின் சேடியர் இரவோடிரவே அவளையறியாது அவளுக்கு, அரசியருக்கும் கிட்டாத வெண்பட்டாடையுடுத்திப் பொன்னும் மணியும் பூட்டினர். எனிட் காலையில் கண்ணாடி முன் சென்று தன்னையே அடையாள மறியாமல் திகைத்தாள்.
கெரெய்ன்டு புன்முறுவலுடன் எதிரே வந்து “உன் கந்தையாடையின் விலை இது. அதுவே என் காதலை உனக்குத் தந்தது. அதற்கு மாற்றாக அரசி கொடுத்த ஆடையணிகள் இவை,” என்றான்.
எனிடும் கெரெய்ன்டும், கினிவீயர் அரசியின் மகனும் மருகியும் போல் சிறக்க இனிது வாழ்ந்தனர்.
கெரெய்ன்டின் ஐயப்பேய்
டெவன் வட்டத்து வீரனான கெரெய்ன்டு ஆர்தர் வட்ட மேடையிலுள்ள நூறு வீரருள் ஒருவனாய்ச் சிறக்க வாழ்ந்து வந்தான். அவன் வெற்றிகளுக்கு அறிகுறியாக வந்த திருமகள் அருள் போன்ற அவன் மனைவி எனிட், கினிவீயர் அரசியின் நட்புக்குரிய தோழியாய் அவளுடன் அளவளாவியிருந்தனர்.
கினிவீயர் அரசிபுற அழகில் ஒப்பற்றவளாயினும், உலகின் ஒப்பற்ற வீர அரசன் தலைவியாயினும், அகத் தூய்மையற்றவள் என்று எங்கும் கூறப்பட்டு வந்தது. அதனைச் செவியுற்ற கெரெய்ன்டு தன் மனைவியின் கறையற்ற உள்ளம் அவளுறவால் மாசடைந்து விடுமே என்று கவலை கொண்டான். ஆயினும், அதனை வெளிக்காட்டாமல், வேறு சாக்குப் போக்குச் சொல்லி மனைவியைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு தன் நாட்டுக்குச் சென்றுவிட எண்ணினான்.
ஆர்தர் அரசரானது முதல் அவர் பிரிட்டனெங்குமுள்ள தீயோர், திருடர், கொடுங்கோலராம் குறுநில மன்னர் ஆகிய அனைவரையும் அடக்கி எங்கும் அமைதியும் நல்வாழ்வும் நிலவச் செய்திருந்தார். ஆனால் டெவன் வட்டத்திலுள்ள காடுகளிடையே இன்னும் பல கொடியோர் இருந்து ஏழை மக்களையும் குடிகளையும் வருத்தி வந்தனர். அரசியலின் பல நெருக்கடி வேலைகளுக்கிடையே அங்கே போக அவருக்கு நேரமில்லை.
இவற்றை அறிந்து கெரெய்ன்டு அவரிடம் சென்று அரசே! தம் நகரில் தம் மருகன் போன்று கவலையின்றி நெடுநாள் வாழ்ந்துவிட்டேன். என் நாட்டைச் சுற்றி கொடுங்கோன்மையும் தீமையும் தலைவிரித்தாடுகையில் நான் இங்கே வாளா இருத்தல் தகாது! தம் புகழொளியை அங்கேயுஞ் சென்று பரப்ப மனங் கொண்டேன். விடை தருக!" என்றான்.
ஆர்தர் நல்லெண்ணமின்றித் தீய எண்ணங்களுக்கே இடந்தராத தூய உள்ளம் படைத்த மன்னர். தாம் செய்ய வேண்டும் கடமைகளுள் ஒன்று செய்யப்படாமலிருக்கிறது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் சுறுக்கெனத் தைத்தது. ஆயினும் தம் புகழின் தவமணியாகிய கெரெய்ன்டு தன் குறைவை நிறைவுபடுத்தி விடுவான் என்ற கருத்துடன் அவர் அவனுக்கு விடை தந்தார்.
கெரெய்ன்ட் மனைவியுடன் தன் நாடு சென்று அவளுடன் இனிது வாழலானான்.
இன்ப வாழ்வைத் தூய்மைப்படுத்துவது வீரம். ஆர்தரின் வட்டமேடையின் தொடர்பு கெரெய்ன்டின் வாழ்வைத் தூய்மைப்படுத்தியவரை அவன் மனைவியைத் தொலைவி லிருந்தே அன்பு செலுத்திவந்தான். டெவனில் வந்ததும், அவன் மற்றக் கடமைகளையெல்லாம் மறந்து அவளுடைய மாடத்திலேயே இருந்து இன்ப வாழ்க்கையில் மூழ்கினான்.
“பிறர் துன்பந்துடைத்த வீரன்” என்று புகழ் படைத்த கெரெய்ன்டு மணவாழ்வில் புகுந்ததும் “தனது இன்பமே நாட்டமாய் விட்டான். அவன் வீரம் கெட்டு விட்டது,” என்று பலரும் பேசினர். எனிட் காதுவரை இது எட்டிற்று. தோழியர் பலர், “தமது நற்பேறே பேறு. தம் கணவர் தம்மையன்றி வேறெதிலும் நாட்டம் கொள்வதில்லை.” என்பர். எனிடின் காதுகளுக்கு அதுகூடத் தன்னைக் குத்தலாகப் பேசியது என்று பட்டது.
தூய வீரன் என்று பெயர் படைத்த தன் கணவன் தன் உறவால் கெட்ட பெயரெடுக்கும்படியானது தன் குற்றமே என்று அவள் எண்ணினாள்.
ஆனால் அவள், தன் கண்ணெனப் போற்றிய தன் கணவனிடம் அவனுக்குக் கண்ணுறுத்தலாகும் இவ்வுண்மை யினை எங்ஙனம் கூறுவாள்? கடமை ஒருபுறம் செல்லும்படி முன் தள்ள, கணவனிடம் கொண்ட இயற்கைப் பற்றுப் பின் தள்ள, அவள் பலவாறு அலைக்கழிவு எய்தினாள்.
அவள் துயர் அவள் முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்டது. கெரெய்ன்டு அதனைக் கண்ணுற்றான். ஆனால், அது பற்றிய வினாக்கள் அவளைத் தலை குனிந்து முகங் கோணச் செய்தனவேயன்றி வேறெதுவும் விடை தருவிக்கவில்லை.
கினிவீயர் போன்ற பெண்மணிகளின் புற அழகின் பின் அகத்தில் கறையிருக்கக் கூடும் என்ற நச்செண்ணம் அவன் தூய உள்ளத்தில் சற்றே வீசிற்று. அது நிலைக்கவில்லையாயினும் அதன் சாயல் அவன் உள்ளத்தில் அவனும் அறியாமலும் மறைந்து தங்கி நின்றது.
இன்ப வாழ்வில் சொக்கிய கெரெய்ன்டு இரவில் அயர்ந்து உறங்குவான். மக்கள் இகழ்ச் சொற்களெல்லாம் உருப்பெற்று எனிடின் மனக்கண்முன் நின்று அவள் உறக்கத்தைக் கெடுக்கும்.
ஒருநாள் விடியற்காலமாயிற்று. கெரெய்ன்டு இன்னும் உறங்குகிறான். எனிட் அவன் பக்கத்தில் நின்று அவன் மாசற்ற முகத்தை நோக்கிய வண்ணம் தன் மனக்குறையை வாய்விட்டுக் கூறினாள். “என் கணவன் புகழுக்கு இழுக்காக வாழ்வதிலும் மாள்வதே மேல். உண்மையில் போரில் புகழ்பெற்றுக் கணவன் மாண்டு விட்டால்கூட மகிழ்ச்சியுடன் உடன் சாவேன் கெரெய்ன்டுக்கு நான் மனைவியானால் அவன் மாண்டும் நான் புகழ் பெறுக,” என்ற சொற்களை அவளையறியாமல் வெளிவந்தன.
எனிட் இச்சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் கைப்பட்டு எனிட் தலையணி தடாலென்று விழுந்தது. அவ் ஓசையால் அவன் விழித்துக் கொண்டான். விழிக்கும்போது அவள் கூறியவற்றிலுள்ள கடைசி வாசகம் அவன் காதில் விழுந்தது. முன்பின் தொடர்பில்லாமல் கேட்டதால், அது அவனுக்குத் தப்பெண்ணத்தை ஊட்டிற்று. அவன் மாண்டும் நான் புகழ் பெறுக’ என்ற வாசகம். “அவன் மாண்டு நான் புகழ் பெறுக,” என்று அவன் காதில் விழுந்தது.
ஐயத்தின் பழைய சாயல் இப்போது வாலும் தலையும் பெற்று ஐயப் பேயுருவமெடுத்தது. தன் மனைவியின் அன்பு வேறு பக்கம் போயிருப்பதால், தான் மாண்டு அவள் வாழ்வு நிறைவடைய வேண்டும் என்று அவள் விரும்புவதாக அவ் ஐயப்பேய் கதை கட்டிவிட்டது.
தூய உள்ளத்திலும் அன்பு மிகுதியாயுள்ள இடத்திலும் தான் ஐயப்பேய் தன் முழுச் சிறகையும் விரித்துத் தாண்டவமாடும். கெரெய்ன்டுக்குத் தன் இன்ப வாழ்வு எட்டிக்காயாயிற்று. மனைவி மீது சீற்றங் கொதித்தெழுந்தது.
அவளைத் துன்பத்துக்காளாக்கி அவள் உள்ளத்துள் மறைந்து கிடந்த (அதாவது மறைந்து கிடந்ததாகத் தான் கொண்ட) தீய எண்ணங்களை முற்றிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவன் எண்ணினான்.
மறுநாள் கெரெய்ன்டு எனிடிடம் உன் ஆடை அணிகளை எறிந்து விட்டு மாசடைந்த உடையுடன் வருக என்றான். கணவனுக்கெதிராக நாம் என்ன செய்து விட்டோமோ என்று அவள் நடுநடுங்கினாள். நல்ல காலத்தில் நல்லுரை கூறவே நாவெழாத அவளுக்கு இப்போது எங்கே நாவெழப் போகிறது? அவள் மணவினைக்கு முன் தன் தாய் வீட்டில் அணிந்திருந்த பழங்கந்தையுடன் வந்தாள்.
கெரெய்ன்டு அவளை முன்னால் ஒரு குதிரை மீதேறிச் செல்லச் செய்து, தான் பின்னே சென்றான். அதோடு என்ன நேரினும் நான் பேசச் சொன்னாலன்றி என்னிடம் பேசப்படாது என்று கடுமையான உத்தரவிட்டான்.
கணவனுடன் காட்டிற்குள் செல்வது பற்றி அவளுக்குக் கவலையேயில்லை. ஆனால் அவனுடன் உரையாடக் கூடாதென்பது அவளுக்கு மிகவும் துன்பந் தந்தது. அவ்வளவுக்கு அவன் அன்பை இழக்க நான் என்ன செய்திருப்பேன் என்று பலவகையில் ஆராய்ந்து ஆராய்ந்து அவள் தன் மனத்தைப் புண்படுத்திக் கொண்டே சென்றாள்.
கெரெய்ன்டு மனத்திலும் “நான் இவளைத் தெய்வமாகத் தானே நடத்தினேன். எனக்கா இந்நன்றி கொன்றதனம்” என்ற எண்ணமெழுந்து வாட்டியது.
அவர்கள் சென்ற காட்டுவழி, முன் போர் வீரராயிருந்து கொள்ளைக்காரராக மாறித்திரிந்த கொடியோர் வாழ்ந்த இடமாயிருந்தது.
இருவரும் ஒரு மேட்டிலேறிச் சென்ற சமயம் எனிட் ஓர் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். புதரில் மறைந்திருந்த மூவர் தமக்குள் பேசிக் கொண்டது அவள் காதிற்பட்டது. ஒருவன் இந்த அழகிய மாதைப் போக விடு. அந்த கோழைப் பயலைப் பின்னாலிருந்து நொறுக்கி விட்டு எல்லாம் ஒரு கை பார்க்கலாம்," என்றான் அடுத்தவன் “சரி சரி” என்றான்.
கணவன் உயிருக்கு அஞ்சிய காரிகை அவன் ஆணையை மீறத் துணிந்தாள். “இதோ மூவர் உங்களை எதிர்க்கக் காத்திருக்கின்றனர்,” என்றாள்.
கெரெய்ன்டு கடுமையாக “அந்த மட்டும் உனக்கு நன்மைதானே. ஆயினும் யாரும் என்னை வென்றுவிட முடியாது என்று அறி” என்று கூறித் தன் ஈட்டியை எடுத்தான்.
கெரெய்ன்டு முதலில் பெற்றிருந்த புகழைப் போலவே அவனைப்பற்றிய பின்னாலெழுந்த இகழும், காடுவரை எட்டியிருந்தது. ஆனால் பின்னது எவ்வளவு பொய்யானது என்பதை அம் மூவரும் விரைவில் உணர்ந்தனர். ஒருவன் நெஞ்சில் கெரெய்ன்டின் ஈட்டி ஊடுருவிப் பின்புறம் சென்றது. மற்ற இருவரும் வாளுக்கிரையாயினர்.
கெரெய்ன்டு இறந்த வீரரின் கவசத்தை அகற்றி அவர்கள் குதிரை மீதேயிட்டுத் தன் குதிரையுடன் அவற்றையும் ஒட்டி முன் செல்லுமாறு எனிடுக்கு ஆணையிட்டான்.
நான்கு குதிரைகளை ஓட்டுவதில் அவள் படுந்துன்பங் கண்டு அவன் இறங்கி, சற்று அண்டி வந்து உதவினான். அவளுக்கு அது ஆறுலாயிருந்தது. ஆயினும் தன் எச்சரிக்கை கேட்டு அவன் கூறிய மறுமொழிகளின் பொருளறியாமலும் அவற்றுள் புதைந்து கிடந்த வெறுப்பைக் கண்டும் அவள் மனமாழ்கினாள்.
பின்னும் ஒரு தடவை வேறு சில திருடர் மறைந்து கெரெய்ன்டை எதிர்க்க முற்பட்டனர். இத்தடவையும் எனிட் எச்சரிக்கையின் பேரில் கெரெய்ன்டு மூவரையும் தென்புலத்துக் கனுப்பினான். இப்போதும் எனிடிடம் அவன் கடுமை நீங்கவில்லை. முன்னைய மூன்று குதிரைகளுடன் பின்னும் மூன்று குதிரைகள் அவள் பொறுப்பில் விடப்பட்டன.
ஒருநாள் முழுவதும் குதிரை மீது சென்றதால் இருவருக்கும் பசி காதடைத்தது. வெறுப்பினிடையும் கெரெய்ன்டிற்கு எனிட் மீது இரக்கம் பிறந்தது. அவர்கள் காட்டைக் கடந்து ஓர் ஊரை அடைந்ததும் அறுவடைக் களத்துக்கு உணவு கொண்டு சென்ற ஒரு பையனை அழைத்து அவன் உணவு கோரினான். எனிட், கணவன் காட்டிய வெறுப்பினால் உணவில் விருப்பஞ் செல்லவில்லை யாயினும், உண்பதாகப் பாசாங்கு செய்தாள். பசியிடை அதைஅறியாத கெரெய்ன்டு இருவரும் உண்பதாக எண்ணி அத்தனையும் உண்டு தீர்த்தான். பின் பையனிடம் உணவுக்கு மாறாக ஒரு குதிரையையும் கவசத்தையும் கொடுத்தான்.
பையன், கெரெய்ன்டு ஒரு பெரிய வீரன் என்பதை அறிந்து தன் ஊர்த்தலைவனிடம் அவனை இட்டுச் செல்ல விரும்பினான். கெரெய்ன்டு அதனை மறுத்து ஒரு விடுதியில் அறையமர்த்தி அதில் எனிடை ஒரு மூலைக்கனுப்பித் தான் ஒரு மூலையில் இளைப்பாறலானான்.
பையன், ஊரெல்லாம் தன் குதிரையைக் காட்டி வீரன் வள்ளன்மையைத் தமுக்கடித்தான். அதுகேட்ட தலைவன் பரிவாரங்களுடன் கெரெய்ன்டைப் பாராட்ட வந்து விட்டான்.
அத்தலைவன் உண்மையில் முன் எனிடை நாடிச் சென்று அவளைப் பெறாது மீண்ட லிமூர்ஸ்1 என்பவனே. அவன் கெரெய்ன்ட் எனிடைப் புறக்கணித்து நடத்துவதைக் கவனித்து அவளிடம் தனிமையில் உன்னைப் புறக்கணிக்கும் இவனை விட்டு வந்துவிடு. அவனைக் கொன்றுவிட்டுக் கூட உன்னை நான் அடையத் துணிந்திருக்கிறேன் என்றான்.
கணவன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அவனைக் காக்க எண்ணிய எனிட் “அவனைக் கொல்ல வேண்டியதில்லை. நாளைக் காலையில் வா; உன்னுடன் வந்து விடுகிறேன்,” என்று கூறினாள்.
இரவு முற்றும் எனிட் உறங்கவில்லை. விடியுமுன் கெரெய்ன்டிடம் இச் செய்தியைக் கூறினாள். இம்முறை கெரெய்ன்ட் அவளிடம் அவ்வளவு கடுமை காட்டவில்லை. ஏனெனில், அவன் சினத்தின் ஒரு பகுதி நய வஞ்சகனான லிமூர்ஸிடம் சென்றது.
உள்வஞ்சகமுடையவனாயினும் உண்டி தந்த விடத்தில் கலவரம் விளைவிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் கெரெய்ன்டும் எனிடும் தம் குதிரைகளைக் கொண்டு வரச் சொல்லி வெளியேறினர். விடுதிக்காரனது கடனுக்கு ஈடாகக் கெரெய்ன்டு குதிரைகளில் மீந்த ஐந்தையும், அவற்றிலுள்ள கவசங்களையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். காலையில் நரி முகத்தில் விழித்தோம் என்ற மகிழ்ச்சியுடன் விடுதியாளன் அவர்களை விடை கொடுத்தனுப்பினான்.
காடுகளுக்குள் நுழைந்ததும் கெரெய்ன்டு மனம் மீண்டும் கடுமையடைந்தது. “என்னை நீ காப்பாற்ற முயல வேண்டாம். இனி எக்காரணங் கொண்டும் என்னிடம் பேசவும் வேண்டாம். எனக்கு உன் எச்சரிக்கைகளில்லாமலே என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். நீ நினைப்பது போல நான் பேடியல்ல,” என்றான்.
அவன் பேடியென்று தான் நினைக்கவில்லையானாலும், பிறர் அவ்வாறு சொல்லுகிறார்களே என்று கவலைப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது.
அவர்கள்அடுத்தபடி நுழைந்த பகுதி டெவனிலேயே எவரும் அணுகத் துணியாத இடம். அது டூர்ம்² என்ற பெருஞ் செல்வனுக்குரியது. அவனிடம் குடி, சூது, வஞ்சகம், பெண்பழி ஆகிய எல்லாத் தீக் குணங்களும் குடி கொண்டிருந்தன. பிரிட்டன் எங்கும் செங்கோலால் அறம் வளர்த்த ஆர்தருக் கெதிராக டெவனெங்கும் தன் கொடுங்கோலால் மறம் வளர்த்த கொடியோன் அவன்.
இத்தகைய கொடிய நாட்டில் எந்நொடியில் பகைவர்கள் வருவார்களோ என்ற எச்சரிக்கையுடன் சென்றாள் எனிட். எனவே, கெரெய்ன்டு கேளாத குதிரைக் காலடி ஓசை அவளுக்குக் கேட்கவே திரும்பிப் பார்த்தாள். மூன்று குதிரை வீரர் குதிரை நுரை தள்ளும்படி ஓடி வருவதையும், முன் வந்தவன் அண்டி விட்டதையும் அவள் கண்டாள். அவன் லெமூர்ஸே என்றும் அவளே ஒரே நொடியில் கண்டு கொண்டாள்.
கணவன் ஆணையை நினைத்து அவள் வாய் திறவாமலே பின்புறம் நோக்கிக் கையைக் காட்டினாள். கெரெய்ன்டு லெமூர்ஸை எதிர்த்துப் போரிட்டான். இருவரும் மாறிமாறிக் குத்திக் கொள்ள முயன்றும் இறுதியில் லெமூர்ஸ் விழுந்தான். அவனைப் பின்பற்றி வந்த வீரரும் அது கண்டு ஓடி விட்டனர். லெமூர்ஸ் குதிரையும் அவனை இழுத்துக் கொண்டே ஓடிற்று.
போரில் ஈட்டியால் குத்தப்பட்டு நெஞ்சில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டுக் கவசத்தினுள்ளாகக் குருதி கசிவதைக் கூடக் கெரெய்ன்ட் பொருட்படுத்தவில்லை. எனிட் அதனைக் குறிப்பாயறிந்தும் ஒன்றும் பேசத் துணியாமல் மெல்லச் சென்று கொண்டிருந்தாள். ஆயினும், அவன் முற்றிலும் சோர்ந்து விழுந்து விடவே, அவள் உடனே குதித்துச் சென்று, அவன் கவசத்தை அகற்றித் தன் மேலாடையைக் கிழித்துக் கட்டினாள். காயம் படுகாய மானதனாலும், குருதி மிகுதியும் சிந்தியதனாலும் கெரெய்ன்டு தன்னுணர் வின்றிக் கிடந்தான். எனிடின் குதிரை கூட ஓடிப்போய் விட்டதனால், தான் முற்றிலும் தனிமையாய்ப் போய்விட்டதைக் கூட அறியாமல் ஏழை எனிடு அழுது கொண்டிருந்தாள்.
அவ்வழியாக அச்சமயம் வேட்டைக்குப் புறப்பட்டு டூர்மும் அவன் ஆட்களும் வந்தனர். கெரெய்ன்டு இறந்து விட்டவன் போலவே கிடந்ததனால் டூர்ம் என்னைக் கைப்பற்றும் நோக்கங்கொண்டு நன்மை செய்ய எண்ணியவன் போல் கெரெய்ன்டுடன் அவளை அரண்மனைக்குக் கொண்டு போகும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டான்.
அன்று முழுவதும் எனிட், கெரெய்ன்டுக்கு உணர்வு மீளும்படி எல்லா முயற்சிகளும் செய்தாள். அன்று முழுவதும் அவள் உணவு உட்கொள்ளவே யில்லை.
மாலையில் வந்த டூர்ம் நல்ல உணவும் குடியும் தந்தும், நல்லுடையுடன் ஆடையணிகளையும் தந்தும் அவளைத் தன் வயப்படுத்த முயன்றான். கெரெய்ன்டு இறந்து விட்டதாக, அல்லது இறக்கும் நிலையில் இருப்பதாகவே எண்ணியதனால், அவன் அவளை மிகுதியும் வற்புறுத்தியிழுக்கவே அவள் “ஐயகோ” என்றலறினாள்.
பெண்மை முழுவதும் வெளியிட்டலறிய அவ்வலறலில் சற்றுத் தன்னுணர்வு மீண்டு வரும் நிலையில் இருந்த கெரெய்ன்டின் வெறுப்பு முற்றும் பஞ்சாய்ப் பறந்து போயிற்று. அவன் வாளெடுத்துக் கொண்டோடி வந்தான். ஒரு நொடியில் டூர்மின் தலை மண்ணில் புரண்டது.
தலைவன் நிலைகண்ட அவன் ஆட்கள் நெறிகலங்கி ஓடினர்.
கெரெய்ன்டு எனிடின் கையைப் பிடித்துக் கொண்டு, “நான் என் செவியை நம்பி ஏமாந்தேன். அறிவைப் பறி கொடுத்தேன். எதில் ஐயம் கொண்டாலும் இனி உன்னிடம், உன் கால்பட்ட இடத்தில் கூட ஐயங் கொள்ளேன்,” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டான்.
கெரெய்ன்டு குதிரை மீது எனிடுடன் வெளியே வருகையில் முன் அவனை எதிர்த்துத் தோற்றிருந்த வீரனாகிய எடிர்ன்³ அவர்களுக்கு வணக்கம் செய்து தான் தற்போது முற்றிலும் மனந்திருந்தி ஆர்தரின் வீரருள் ஒருவனாய் விட்டதைத் தெரிவித்தான்.
கெரெய்ன்டு இன்ப வாழ்க்கையில் கடமை மறந்து விட்டான் என்று கேட்டு டூர்மைத் தாமே எதிர்க்க வந்த ஆர்தர் நடந்ததனைத்தும் கேட்டுக் கெரெய்ன்டை முன்போல் அன்புடன் வரவேற்றார்.
கெரெய்ன்டையும் எனிடையும் சுற்றிச் சிறிய கெரெய்ன்ட்களும் சிறிய எனிட்களும் தோன்றி அவர்கள் வாழ்வை அழகு செய்தனர்.
அடிக்குறிப்புகள்
1. Limours
2. Doorm.
3. Edyrn
பலினும் பலானும்
மன்னன் ஆர்தரும் அவருடைய வீரரும் வட்டமேடையைச் சுற்றி உட்கார்ந்திருக்கையில் ஓரிளமங்கை குதிரை ஏறி வந்து அவர்கள் முன் இறங்கினாள். அரசனை வணங்கி அவள் தான் போர்த்திருந்த சால்வையை அகற்றியபோது அவள் இடுப்புடன் இடுப்பாக ஒட்டி ஒரு வாள் கிடந்ததைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். அரசர் “நீ ஏன் வாளை அணிந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அவள், அரசே! நான் வாளை அணிந்திருக்க வில்லை. ஒரு மாயக்காரன் மாயத்தால் அது என் உடலுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை என் உடலிலிருந்து பிரித்தெடுப்பவனே வீரருள் சிறந்த வீரனாவான்," என்றாள். வட்டமேடை வீரர்களனைவரும் ஒவ்வொருவராக வந்து அதை இழுத்துப் பார்த்தனர். அவர்கள் அம்மங்கையை இழுத்தனரே யன்றி வாளை அகற்ற முடியவில்லை. அரசரே வந்து முயன்றும் பயன் ஏற்படவில்லை. மங்கை அனைவரையும் கண்டு நகைத்து நின்றாள்.
ஆர்தர் வட்டமேடை வீரருள் பலின் பெருந்தகை¹ ஒருவன். அவன் ஆர்தரின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானைக் கொன்ற தனால் வட்டமேடையினின்று அகற்றப்பட்டு அரண்மனை யினொருபுறம் காவலில் வைக்கப்பட்டிருந்தான். வட்டமேடை வீரரெல்லாம் முயன்று தோல்வியடைந்த அம் முயற்சி யிலீடுபட்டு வென்றால் தான் இழந்த நற்பெயரை மீண்டும் பெறலாமே என்று அவன் எண்ணினான். ஆனால், தன் அறையை விட்டு வெளிவர இடந்தரத்தக்க நல்ஆடை எதுவும் அவனிடம் இல்லை.
வாளணிந்த மங்கை² அரசர் பேரவையிலிருந்து மீண்டும் வரும்போது பலின் இருந்த அறைவழியே போக வேண்டி யிருந்தது. அதற்கே காத்திருந்த பலின் அவள் முன் சென்று “உன் வாளை எடுக்க நானும் முயன்று பார்க்கிறேன்,” என்றான். அவன் அழுக்கடைந்த ஆடையைக் கண்டு “இவன் எங்கே வாளை இழுக்கப் போகிறான்” என்று அவள் நினைத்தாளானாலும் “முயன்றுதான் பாரேன்,” என்று அசட்டையாகக் கூறினாள். ஆனால் பலின் அவள் வியக்கும்படி எளிதாய் அதைத் தன் கையால் இழுத்தெடுத்து விட்டான்.
வாள் அணிந்த மங்கை அவனை அரசரும் பிறரும் இருந்த இடத்துக்கு இட்டுச் சென்று “இவன் உங்கள் அனைவரையும் விடச் சிறந்த வீரன்; இவனையும் மேடை வீரருடன் வீரனாக ஏற்றுக் கொள்,” என்றாள்.
இயற்கையிலேயே பெருந்தன்மை வாய்ந்த ஆர்தர் எளிதில் அவனை மன்னித்து அங்ஙனமே ஏற்றுக் கொண்டார்.
மங்கை அதன் பின் பலினிடம் தன் வாளைத் திரும்பத் தன்னிடமே கொடுக்கும்படி கேட்டாள். பலின் “அது இனி எனக்கே உரியது; அதனை யாருக்கும் தர மாட்டேன்,” என்று கூறிவிட்டான். மங்கை “உன் நன்மைக்காகவே அதனைத் தரும்படி கேட்டேன். ஏனெனில், நீ யாரை மிகுதியாக நேசிக்கிறாயோ அவர்களையே அது கொல்லும்,” என்று எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
வாள் அணிந்த மங்கை கூறியது பொய்க்கவில்லை. இறுதியில் அவ்வாள் பலின் உடன் பிறந்தான் பலான் உயிரைக் குடித்து அவன் உயிருக்கும் இறுதி கண்டது.
இவற்றுக்கிடையே பலின் செய்த அருஞ்செயல்கள் பல. அவனிடம் முன் இருந்த வாளுடன் மங்கையிடமிருந்து கைக்கொண்ட மாயவாளும் இருந்ததனால அவனை மக்கள் “இரட்டை வாய் வீரன்” என்றழைத்தனர். இத்துடன் அவன் இடர்களுக்குள் துணிச்சலாகக் குதிப்பவன். ஆதலால், அவனை மக்கள் “துணிகர வீரன் பலின்” என்றும் கூறினார். அவன் புகழ் நாலா பக்கமும் பரந்தது.
ஒருநாள் பலின் குதிரைஏறிகாட்டு வழியே அருஞ் செயல்களை நாடிச் சென்றான். அப்போது காட்டின் நடுவே ஒரு மாளிகை தென்பட்டது. அதனை நோக்கி அவன் செல்லுகையில் வழியில் ஒரு நெடிய சிலுவை மரம் நின்றது. அதன் குறுக்கு விட்டத்தின் மீது “எந்த வீரனும் இம்மாளிகைக்குள் நுழைய வேண்டாம்.” என்றெழுதியிருந்தது. துணிகர வீரன் என்று பெயரெடுத்த பலினா அதைச் சட்டை செய்பவன்? அவன் அதைக் கடக்கப் போகும் போதுஒரு கிழவனின் உருவம் அவன் முன் தோன்றித் “துணிகரமிக்க பலின்! இன்னும் ஒரு அடிகூட முன் வைக்காமல் பின்னால் சென்றுவிடு,” என்று கூறிற்று. பலின் இதையும் சற்றும் பொருட் படுத்தவில்லை.
சற்று நேரம் சென்றபின் ஒரு குழல் ஊதிய ஓசை கேட்டது. உடனே நூறு பெண்கள் வெளிவந்து பலினை வரவேற்று விருந்து நடத்தினர். விருந்து முடிவில் பெண்களின் தலைவி எழுந்து பலினை நோக்கி “இரட்டை வாள் வீரரே! எங்கள் மாளிகையில் வரன் முறையாக ஒரு வழக்கமுண்டு. இங்கே வருகின்ற எந்த வீரனும் எங்களுக்குரிய அண்மையிலுள்ள தீவைக் காக்கும் எங்கள் வீரனை எதிர்த்துப் போரிட வேண்டும். போரில் வென்றவனே அதன்பின் எங்கள் வீரனாய் இருப்பான்,” என்றான்.
பலின் “இது மிகவும் கெட்ட பழக்கமே. ஆயினும் போரிட நான் அஞ்சவில்லை,” என்று கூறி எழுந்தான். பெண்கள் அவனை ஒரு படகிலேற்றித் தீவில் கொண்டு போய்விட்டனர்.
தீவிலுள்ள மாளிகையிலிருந்து சிவந்த கவசம் அணிந்து செஞ்சேணமிட்ட சிவப்புக் குதிரையின் மேல் ஒரு வீரன் ஏறிவந்து பலினை எதிர்த்தான். அவன் உண்மையில் வேறு யாருமல்லன்; பலினின் உடன் பிறந்தவனான பலானே. பலினிடம் இரண்டு வாள் இருப்பது கண்டு அவன் இவன் நம் உடன்பிறந்தான் பலின் தானோ என்று தயங்கினான். ஆனால் பெண்கள் பலினின் கேடயத்தை மாற்றிப் புதிய கேடயம் கொடுத்திருந்தபடியால் அவன் பலினாக இருக்கமாட்டா னென்று பலான் எண்ணினான். அப்போது அவன் வாய்த்திறந்து நீ யார்? என்று கேட்டிருந்தால் அவர்கள் வாழ்க்கை வீணில் முடிவடைந்திருக்காது.
கடும் போரிட்டதன் பின் ஒருவர் வாளால் மற்றவர் வெட்டுண்டு இருவரும் வீழ்ந்தனர். பலின் பலானை நோக்கி, “உன்னைப் போன்ற வீரமிக்க இளைஞனுடன் நான் இதுகாறும் போரிட்டதில்லை. நீ யார் என்று நான் அறியலாமா?” என்று கேட்டான். பலான், “நான் பலினின் உடன் பிறந்தான் பலான். இத்தீவில் முன் காவல் செய்த வீரனைக் கொன்று அவனிடத்தை அடைந்தேன்” என்றான். பலின் “அந்தோ! நம் தீவினை இருந்தவாறு! நானே உன் உடன்பிறந்தான் பலின். இந்த வாளைக் கொடுத்த மங்கை கூறிய எச்சரிக்கையை அசட்டை செய்ததனால் என் உடன் பிறந்தானையே கொல்லும்படி நேரிட்டது,” என்று மனமாழ்கினான்.
பலினும் பலானும் ஒருங்கே இறந்தனர். இருவரும் ஒரே கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்க்கையின் உள்ளுறை முற்றிலும் அறிந்த மெர்லின் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் ஒரு வீரக் கல் நாட்டி அதில் அவர்கள் உருக்கமான வரலாற்றைப் பொறிக்கும்படி செய்தான்.
அடிக்குறிப்புகள்
1. Sir Balin
2. Maiden with the sword
மாயாவியை மயக்கிய மாயக்காரி
முள்ளடர்ந்து பாம்புப்படைகள் நிறைந்திருந்த காட்டு மரமாகிய பிரிட்டனை, ஆர்தர் அதிலுள்ள முட்களை வெட்டி அறுத்து உருப்படுத்திச் சீவி வீணையாக்க முயன்று வந்தார். ஆனால், கட்டையில் உள்ளூரக் கீறல்களிலிருந்த தென்பதை அவர் அறியார். அத்தகைய கீறல்களில் முதன்மை வாய்ந்தவை கினிவீயர் அரசியின் பொய்ம்மையும், அதற்கு இடந்தந்து ஆட்பட்ட லான்ஸிலட்டின் கோழைமையுமே ஆகும்.
இது தவிர, வீணையின் கீறலினுள்ளாக இருந்து அவ்வப்போது வேலை செய்யும் தச்சரையும் கெடுத்து இறுதியில் தலைமைத் தச்சனாகிய மெர்லினுக்கும் வினை வைத்த நச்சரவு ஒன்றும் இருந்து வந்தது. அதுவே கினிவியரின் தோழியாய் அவள் அரண்மனைக்கு வந்த விவியன்1 ஆவாள்.
விவியன் வனப்பு மிக்கவள். மென்மை வாய்ந்த சிறிய உருவமுடையவள். குழந்தைகள் பேச்சுப் போல் பசபசப்பும் கவர்ச்சியும் உடைய அவள் சொற்கள் அவள் உள்ளத்திலிருந்து வஞ்சகம், பொறாமை, கொடுமை ஆகிய தீக்குணங்களை முற்றிலும் திரையிட்டு மறைத்து அவளுக்கு ஒப்பற்ற நடிப்புத் திறத்தை அளித்தன. மாசற்ற முனிவரையும் மாசுபடுத்தத்தக்க அவள் நயவஞ்சக நடிப்பில் ஆர்தர் வட்டமேடை வீரர் பலரும் ஈடுபட்டனர். கலஹாட், பெர்ஸிவேல், கெரெய்ன்டு, காரெத் முதலிய சிலர் மட்டும் இதில் முற்றிலும் விலகி நின்றார்கள். ஆயினும் ஆர்தரின் தெய்வீக அரசியிலின் கட்டுப் பாட்டை மேற் பூச்சாகவே மேற்கொண்ட பலர் உள்ளூர அதில் பட்டழிந்தும் வெளித் தோற்றத்தில் மட்டுமே ஆர்தர் வீரராக நாடகம் நடித்தனர்.
இங்ஙனம் ஆட்டையும் மாட்டையும் கடித்த நச்சரவு இறுதியில் ஆர்தரிடமே தன் கோரைப் பல்லைக் காட்டிற்று. விவியன் ஆர்தரிடமே தன் பசப்பு வேலையைக் காட்டலானாள். அழுகல் பிணத்தையன்றி நல்ல பொருள்களைக் கழுகினால் காண வியலாதன்றோ! அது போல் ஆர்தர் நற்குணங்கள் அவள் கண்ணுக்குப் படாமல் அரசி அவரை வஞ்சித் தொழுகுவதை அவர் அறிய முடியாதிருந்தனர் என்ற குறை மட்டுமே அவள் கண்களுக்குட்பட்டது. “கினிவீயரின் வஞ்சனைக்கு ஆளானவர் தன் வஞ்சனைக்கும் உட்படுவார்,” என அவள் நினைத்தாள். ஆனால் உலகில் வஞ்சனை என்ற ஒன்று உண்டு என்பதைக் கூட அறியாத தூய மனமுடைய ஆர்தர் அவளை ஏறிட்டுக் கூடப் பாராமல் உதறித் தள்ளினார். இதனால் சினங்கொண்ட அவள் “பார், உன் ஒழுக்கக் கோட்டையின் வேரையே அழித்து விடுகிறேன்,” என்று உள்ளத்துக்குள் வஞ்சினங் கூறிக்கொண்டாள்.
ஆர்தர் ஒழுக்கக் கோட்டைக்கு வேராயிருந்தவன் மெர்லினேயென்று விவியன் அறிவாள். அவன் இயற்கையின் புதைந்த அறிவனைத்தும் திரண்டு உருக்கொண்டது போன்றவன்; நாத்திறமிக்க கவிஞன்; கைத்திறமும் வினைத்திறமும் வாய்ந்த சிற்பி. அவன் மாயமும் மந்திரமும் அறிந்தவனாயினும் அவற்றை நல்லறிவு வகையிலும் உலக நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அருளாளன். ஆயினும் கதிரவன் போல் உலகெங்கும் ஒளிபரப்பும் அவன் புகழைக் கைக்குடை மறைப்பது போலத் தன் சூழ்ச்சியால் அவன் புகழை மறைத்துவிட விவியன் துணிந்தாள்.
மலையில் வளைதோண்ட எண்ணும் எலியைப் போல ‘மெர்லினை எப்பகுதியில் தாக்கலாம்’, என்று அவள் தன் திறமெல்லாம் கூட்டிக் கொண்டு ஆராய முயன்றாள். வெளிப்பார்வைக்குக் குழந்தை போல் ஊடாடும் அவள் விளையாட்டியல்பும் நாநலமும் இவ்வகையில் அவளுக்கு ஓரளவு உதவின. அவள் மெர்லினுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவனைச் சுற்றிச் சுற்றித் திரிவாள். அவன் செல்லுமிட மெல்லாம் சென்று அவனைச் சுற்றிப் பாடியாடுவாள். அவனைத் தந்தை என்றழைத்துப் பிள்ளை போலக் கொஞ்சி மழலை யாடுவாள். அவனையே தன் ஆசிரியரெனக் கொண்டு தனக்குக் கல்வி கற்பிக்கும்படி கோருவாள். மெர்லினின் கூரறிவு, அவள் வெறுமை, கீழ்மை வஞ்சம் ஆகியவற்றை எளிதில் கண்டு கொண்டது. ஆயினும் அறிவுக்கன்றி அன்புக்கு அவ்வளவு இடம் இதுவரை ஏற்பட்டிராத அவன் மனம் அவள் குழந்தை நடிப்பிலும் அரைகுறை மழலைச் சொற்களிலும் ஈடுபட்டது. அவன் தன் மாயத்தால் பெண்களையும் குழந்தைகளையும் களிப்பூட்டத்தக்க சிறிய வித்தைகள் சிலவற்றை அவளிடம் பொழுது போக்காகக் காட்டினான். அவற்றைக் கண்டு மிகவும் களித்து வியப்பவள் போலப் பாசாங்கு செய்த விவியன் அவனை இன்னும் ஊக்கி மேன்மேலும் பலவகை வித்தைகள் காட்டும்படிக் கூறினாள். அவ்வப்போது பேச்சை இவ்வித்தை களின் பாலும் மாயமந்திரங்களின் பாலும் திருப்புவாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவன் தன்னை மறந்து பலவகைப் புதுப்புது வகையான மாயங்களைப் பற்றிப் பேசுவான். அவற்றுளொன்று, பிறரை வசப்படுத்திச் செயலற்றுப் போகும்படி செய்வது. இதைப்பற்றிக் கேட்டது முதலே விவியனின் விளையாட்டு நடிப்பிடையே வெற்றி நடிப்புக் கணப் போதில் கருக்கொண்டு வளைந்து வளர்ந்தது. எப்பாடுபட் டாவது இவ்வொரு வித்தையைக் கற்றுக் கொண்டு விட்டால் கற்பித்த ஆசிரியனாகிய அவனை நடைப்பிணமாக்கி ஆர்தரின் நோக்கங்களை நிறைவேற்றி வைக்கும் வலக்கையாகிய அவனை ஒழித்து விடலாம் என்று அவள் எண்ணினாள். இவ்வெண்ணத் துடன் அதுபற்றி அடிக்கடி பேசி அதனை அவன் வெளியிடும்படி வற்புறுத்தலானாள்.
விளையாட்டு மிஞ்சிவிட்டது எனக் கண்டு மெர்லின் பேச்சை மாற்றி மறைக்கப் பார்த்தான். பின் அவளுடன் பேசுவதையே நிறுத்திப் பார்த்தான். ஆனால் அவன் மாயத்திலும் தன் மாயத்தை அவள் பரக்க விரித்து முற்றுகை யிடுவது கண்டதே அவன் அவளறியாமல் அவளைவிட்டு விலகி வெளிநாடு சென்றான். ஆனால், விவியன் அவன் போக்கு முற்றிலும் மறைந்திருந்து கவனித்து அவனறியாமல் அவனைத் தொடர்ந்தாள். இருவரும் தம்மிடத்திலிருந்து நெடுந்தொலை விலக்கிக் காட்டிற்குச் சென்றபின் மெர்லின் மனதயர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவள் அவன்முன் சென்று, “நான் சிறு பிள்ளை என்று நினைத்து இப்படி ஏமாற்ற வேண்டாம்” என்றும், “ஆண்டில் இளையளாயினும் அன்பில் முதிர்ச்சியுடைய வளானபடியினாலே நான் உன்னைத் தொடர்ந்து வரமுடிந்தது,” என்றும் கூறி முன்போல் அளவளாவினாள். மெர்லினைத் தான் உண்மையிலேயே தந்தையாக எண்ணிவிட்டதாக அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினாள். மேலும் “என்னை நீ வெறுக்கும்படி நான் செய்த குற்றம் என்ன?” என்று அவள் மன்றாடிக் கேட்டாள். தன்மீது அவன் ஐயப்படுவதாகக் கேட்டதே மிகவும் ஆத்திரம் கொண்டவள் போல் நடித்து அழுதாள். தான் மந்திரத்தை அறிய முயல்வது விளையாட் டாகவேயென்றும், தன் மீது ஐயங்கொள்வது தகாதென்றும் அவள் வாதிட்டு அவன் மனத்திலுள்ள ஐயத்தைப் போக்க முயன்றாள். “என் அன்பை எவ்வகையில் வேண்டுமாயினும் தேர்வுக்கு உள்ளாக்குங்கள். நான் யாரிடமும் பற்றுக் கொள்ளாத கன்னி; தாய் தந்தை யாரென்று அறியேன்; பாசங்காட்ட உடன் பிறந்தார் கூடக் கிடையாது; உம்மிடமே என் முழு அன்பையும் வைத்தேன்; உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்; இப்படியிருக்க, என் அன்பை ஏற்று அதற்குக் கைம்மாறாய் என்னை நம்புவதாகக் காட்டி அம்மந்திரத்தை எனக்குக் கற்பிக்கக் கூடாதா?” என்று அவள் மன்றாடினாள்.
ஒருநாள் புயலும் மழையும் எண்டிசையும் ஒரு திசையாக்கி அதிர்ந்தது. அவர்கள் ஒரு படர்ந்த மரத்தின் பிளவில் ஒதுங்கினர். விவியன், மெர்லினின் கால்களை கட்டிக்கொண்டு, “இன்று நாம் இறப்பினும் இறக்கக்கூடும். உமக்குப் பிள்ளையில்லை; எனக்குத் தந்தையில்லை. இருவருக்கும் இறுதி போல் தோன்றும் இவ்விறுதி நாளில் என் வேண்டுகோளை நிறைவேற்றி ஒரு சில நொடிகள் என் உள்ளத்திற்கு நிறைவு தரப்படாதா?” என்று குறையிரந்தாள்.
மெர்லின் மனம் பலவகையில் கலங்கியிருந்தது. பலநாள் மனத்துயரில் உண்டியும் நீருமில்லாதிருந்ததால் கண்கள் பஞ்சமடைந்தன. விவியன் பேச்சும் விளையாட்டும் மட்டுமே அவனுக்கு ஊசலாடும் உயிரிடமாகத் தோற்றின. அவன் அறிந்தும் அறியாமலும் அவளுக்கு அம்மந்திரத்தை ஓதுவித்து, அதனைப் பயன்படுத்தும் வகையையும் கற்பித்தான். அவள் மன நிறைந்தது போல பாசாங்கிட்டு எங்கே அதன் உண்மையைச் சற்றறிகிறேன் என்று அதைக் கையாடிப் பார்ப்பது போல் இறுதியாட்டத்தை முற்றுவித்தாள். மெர்லினும் அவன் மாயமும் அறிவிலும் ஆற்றலிலும் அவனுக்கு பன்மடங்கு கீழ்ப்பட்ட அச்சிறு கள்ளியின் மாயத்திற்குக் கட்டுப்பட்டு அம்மரத்திலேயே புதையுண்டன. எலி, மலையைச் சிறைப்படுத்தியது போல் தனக்கு மந்திரங் கற்பித்த ஆசானைக் சிறைப்படுத்தி நடைப் பிணமாக்கி அவள் வெற்றியுடன் ஆர்தர் நகராகிய காமிலட்டுக்கு மீண்டு வந்தாள். அதுமுதல் ஆர்தரின் ஒழுக்கக் கோட்டையில் ஒழுக்கக் கேடு பெருகி அழிவுப் பயிர் வளரலாயிற்று.
அடிக்குறிப்புகள்
1.Vivien
லான்ஸிலட்டும் ஈலேயினும்
பிரிட்டனின் பேரரசரான ஆர்தர் கார்ன்வாலை யடுத்த லையானிஸ்¹ என்ற நாட்டில் வாழ்ந்து வந்த தம் வளர்ப்புத் தந்தையாகிய ஆண்டன் பெருந்தகை மாளிகைக்குச் சென்று தம் (வளர்ப்பு) உடன்பிறந்தாருடன் பொழுது போக்கியிருந்தார். ஒருநாள் அவர் தாம் இளமையில் திரிந்த காடுகளில் சென்று நெடுநேரம் உலாவினார். உச்சி வேளையாயிற்று. ஆயினும் எதிர் காலக் கனவுகளிலாழ்ந்து கால் சென்ற வழியே சென்றதனால் அவர் வழிதப்பி அதற்கு முன் நெடுநாள் மனிதர் கால்படாத ஒரு குன்றின் அருகே வந்து விட்டார். அக்குன்றில் ஒரு காலத்தில் ஓர் அரசனும் அவன் உடன் பிறந்தானும் நாட்டின் அரசிருக்கைக் காக ஒருவரை ஒருவர் பின்பற்றி போரிட்டுக் கொண்டே சென்றனர். போனவர் இருவருள் ஒருவர்கூட மீண்டு வரவில்லை. இருவரும் ஒருவர் வாளுக்கு மற்றவர் ஒரே சமயத்தில் இரையாய் விட்டதாகக் கூறப்பட்டது. அக்கொடியர் இருவர் உயிர்களும் பேயாய் நின்று ஒருவரை ஒருவர் அதட்டி வந்ததாக மக்கள் கூறலாயினர். ஆகவே, அவ்விடத்தில் இரவிலன்றிப் பகலில் கூட யாரும் செல்வதில்லை.
ஆர்தர் இக்கதையைக் கேட்டிருந்தாரானாலும் தாம் செல்லும் அக்குன்றுதான் அது என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்தாற் கூட அச்சம் என்பதே இன்னது என்று அறியாத தூய வீரனாகிய அவர் பின்னிடைந்திருப்பார் என்று சொல்வதற் கில்லை. மற்றும் தீக் குணங்களாகிய அகப்பேய் உள்ளத்திருந்தால் அல்லவோ புறப்பேய்கள் அணுகும். அரசர் குன்றையெல்லாம் சுற்றிப் பார்த்தபின் அதன் சாரலில் ஓர் அழகிய ஏரியைக் கண்டு அதனை நோக்கி இறங்கி வந்தார். அப்போது அவர் காலிற் பட்டு ஏதோ ஒன்று நொறுங்கிற்று. அவர் குனிந்து அது யாதென்று நோக்க அது நெடுநாள் வெயிலாலும், மழையாலும் கிடந்து இற்றுப் போன ஒரு மனிதனின் எலும்புக் கூடு என்று கண்டார். (அது உண்மையில் நாம் மேற்கூறிய அரசன் எலும்புக் கூடே) அவ்வெலும்புக் கூட்டினின்று ஆர்தர் கவனத்தை இன்னொரு ஓசை ஈர்த்தது. எலும்புக் கூட்டிலிருந்து பளபளப்பான வளையம் போன்ற ஏதோ ஒன்று உருண்டு உருண்டு சென்றது. ஆர்தர் அதன் பின் ஓடிப்போய் அதனை எடுத்துப் பார்த்தார். அதுவே இறந்த அரசன் மணிமுடி. அதில் ஒன்பது வைரமணிகள் பதித்திருந்தன. தன்னலமில்லாத் தகையாளரான ஆர்தர் அவ்வுயர்ந்த பொருளை உயரிய முறையில் நாட்டுக்குப் பயன்படுமாறு செய்ய எண்ணி ஆண்டுதோறும் தம் வீரரையும் நாட்டில் உள்ள பிறரையும் போட்டிப் பந்தயங்களிலீடுபடுத்தி வெற்றி பெற்றவர்க்கு அம்மணி முடியின் வைரமணிகளை ஒவ்வொன்றாகப் பரிசளித்தார்.
எட்டாண்டுகளாக லான்ஸிலிட்டே போட்டியில் வெற்றி பெற்று, எட்டு மணிகளையும் பெற்றார். அவர் இல்வாழ்விலீடுபடாதிருந்த நிலையில் அவற்றை அரசியிடமே காணிக்கையாகச் செலுத்தியிருந்தார். ஒன்பதாவது மணியையும் அவரே பெறுவார் என்று யாவரும் உறுதிகொண்டிருந்தன.
போட்டி விழா நாளுக்கு முந்தின நாள் எல்லாரும் அதற்காகக் காமிலட்டுக்குப் புறப்பட்டனர். அரசிக்கு உடல் நலமில்லாததனால் உடன் போகக் கூடவில்லை. அதுகண்ட லான்ஸிலட் தனக்கும் உடல்நலமில்லை என்று சாக்குக்கூறிப் பின் தங்கினார். அரசர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாத மாக மறுத்து விட்டார். ஆனால் எட்டு மணிகளையும் காணிக்கை யாய்ப் பெற்ற அரசிக்கு ஒன்பதாவதும், எல்லா வற்றிலும் மிகப் பெரிதானதுமான கடைசி மணியையும் ஆரமாக அணிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிற்று. ஆகவே அவள், லான்ஸிலட்டை விழாவிற்குப் போகும்படி வற்புறுத்தலானாள்.
லான்ஸிலட்: அம்மணி இப்போது நான் என்ன செய்யட்டும்? அரசர் கூறிய போது பிடிவாதமாக மறுத்துவிட்டு இப்போது போனால் அவர் மனம் எப்படியாயிருக்கும்?
அரசி: இதுவா பெரிய தடை? அதற்கு எளிதில் நான் வகை சொல்லித் தருகிறேன். “எல்லாரும் என்னை லான்ஸிலட் என்றறிந்து வெற்றியை எளிதில் விட்டு விடுகிறார்கள். இதனால் இகழுரைக்கும் அவமதிப்புக்கும் இடம் ஏற்படுகிறது. ஆகவே ஆளுடை தெரியாத வகையில் மாற்றுருவில் வந்து போட்டியிட எண்ணினேன்” என்று சொல்லிக் கொள்! அதற்கேற்பக் கேடயத்தையும் மாற்றிக் கொண்டு செல்க.
லான்ஸிலட், சரி என்று புறப்பட்டார். ஆளடையாளம் அறியாமலிருக்கும்படி லான்ஸிலட் நேர்வழி விட்டுச் சுற்று வழிகளினூடாகச் சென்றார். அதில் வழி தவறி எங்கு வருகிறோம் என்று தெரியாமலேயே ஒரு மாளிகையுள் நுழைந்தார். அங்கிருந்த ஒரு கிழவர் அவரை வரவேற்று உள் அழைத்துச் சென்றார். அம்மாளிகை ஆஸ்டொலட் மாளிகை² என்பது; அதன் தலைவரே அக்கிழவர். அவருக்கு டார்³ லவேயின்⁴ என்ற இரு புதல்வரும், அல்லி மங்கை⁵ என்றழைக்கப்பட்ட ஈலேயின்⁶ என்ற புதல்வியுமுண்டு. லான்ஸிலட் உள் நுழைந்தபோது அவர்கள் யாரோ ஒருவர் பேசிய துணுக்குப் பேச்சைக் கேட்டுக் கலகலவென்று அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
லான்ஸிலட் பெருந்தகை தனக்கு அவ்விடம் புதியதாகவும் ஆட்கள் புதியவராகவும் தோற்றவே அதனைப் பயன்படுத்தித் தன் பெயரை மறைத்துக் கொண்டார். அதோடு தான் ஆளடையாள மறியாமல் விழாவுக்குச் செல்ல விரும்புவதால் கேடயத்தை அங்கேயே வைத்து விட்டு, வேறு கேடயம் கொண்டு போக விரும்புவதாகவும் அவர் கோரினார். டார்ப் பெருந்தகை முதல் ஆண்டுப் போட்டி விழாவில் காயமுற்றுப் போரில் கலக்க முடியாமல் போய்விட்டதால் அவன் கேடயம் லான்ஸிலட்டுக்குக் கொடுக்கப்பட்டது.
லான்ஸிலட் சற்று ஆண்டு சென்றவராயினும் ஆஸ்டோலட் குடியின் செல்வக் குழந்தையாகிய ஈலேயின் மனத்தில் அவர் மீது பேரார்வம் ஏற்பட்டது. அவளைக் குழந்தை என்ற முறையில் லான்ஸிலட் தங்கை போல் பரிவுடன் பாராட்டியதை அவள் தப்பாகப் புரிந்து கொண்டாள். தன் இளங் குழந்தை மனத்தில் அவர் மீது கொண்ட பற்றதலுக்கு அவள் நீர்வார்த்து அதனை வளர்த்து வந்தாள். பெண்கள் தாம் விரும்பிய தலைவருக்கு அல்லது உறவினர்க்கு விழாவிலணியத் தம் கைக்குட்டையைக் கொடுப்பது வழக்கம். அவளும் அதன்படி லான்ஸிலட்டுக்குத் தன்கைக் குட்டையைக் கொடுத்தாள். லான்ஸிலட் கினிவீயருக்கு முன் கொடுத்த உறுதிமொழியை எண்ணி, நான் இது வரை எந்த மங்கையின் அறிகுறியையும் அணிந்ததில்லை என்றார். உடனே அவள் திறம்பட, “அப்படியாயின் இப்போது என் அறிகுறியை அணிந்த பின் உம்மை யாரும் அறவே அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்றாள். அது உண்மையே என்று கண்டு லான்ஸிலட் இணங்கினார். வற்புறுத்தி வழக்காடிப் பெற்ற அவ்வெற்றியைக் கூட அப்பேதை தன் காதலின் வெற்றி எனக் கொண்டாள்.
போட்டி விழாவில் லான்ஸிலட் மற்றோர் புதிய வீரனென்று அவர் உறவினரும் நண்பரும் நினைத்தனர். தம் லான்ஸிலட்டின் புகழைக் கொள்ளை கொள்ள இவன் யார் என்று தருக்கி அவர்கள் போட்டியில் அவர் வெற்றி பெறும் போதெல்லாம் அவரை வெறிகொண்டு ஒற்றுமையுடன் தாக்கினர். அப்படியும் “தோலா” வீரரான லான்ஸிலட்டே வெற்றிக் கொண்டாராயினும் பலநாள் உயிருக்கு மன்றாடும் நிலையில் படுகாயப் பட்டார். வெற்றியறிகுறியாகிய மணியைக் கூடப் பெறாமல் ஈலேயினுடன் பக்கத்திலுள்ள ஒரு துறவியின் மடத்தில் சென்று தங்கினார்.
லான்ஸிலட் இங்கே இங்ஙனம் இருக்க, ஈலேயின் ஆஸ்டொலாட்டில் லான்ஸிலட்டையே எண்ணி எண்ணித் தன் மனக்கோயிலில் அவர் உருவை வைத்து வழிபடலானாள். அவர் பெயரை அவள் அறியாவிட்டாலும் ஆர்தர் வட்ட மேடையில் அவரே முதன்மை வாய்ந்த வீரராய் இருக்க வேண்டும் என அவள் உறுதியாக நம்பினாள். தன்னிடம் விட்டுப் போன கேடயத்தை அவர் காதலுக்கு அறிகுறி என எண்ணி அதனை அவள் ஓயாது எடுப்பதும் துடைப்பதும் அதிலுள்ள மூன்று அரிமாக்களின் படத்தைப் பார்த்து அவரைப் பற்றி மனக்கோட்டைகள் கட்டுவதுமாயிருந்தாள். அக்கேடயம் அழுக்குப் படாமலிருக்க அவள்தன் சிறந்த பொன்னாடை ஒன்றைக் கொண்டே அதற்கு உறை செய்து அதில் அவர் கேடயத்தின் படங்களைத் தீட்டிப் பூவேலைகளைச் செய்து மிணுக்கினாள். இங்ஙனம் நொடிகளை யெல்லாம் ஊழிகளாகக் கழித்து நாட்கள் பல சென்றதால் அவள் மனத்துக்குள், ‘அவர் வெற்றியடைந்தாரா? ஏன் வரவில்லை,’ என்றெல்லாம் கவலை கொண்டாள்.
லான்ஸிலட்டோ என்று யாவரும் எண்ணும்படி வியக்கத்தக்க முறையில் வெற்றிப்பெற்ற புதிய வீரனைப் பாராட்டி ஆர்தர் அவருக்கு மணியை அளிக்க எண்ணி அவரை அழைத்துப் பார்த்தார். புதிய வீரர் மணியைப் புறக்கணித்துச் சென்றதும் அவர் உயிருக்கே மோசமான நிலையில் படுகாயமடைந்து கிடந்தார் என்று கேட்டதும் அவர் ஆர்வத்தைப் பின்னும் மிகைப்படுத்தின. உரிமைப்படி எப்படியும் மணியை வெற்றிப் பெற்றவருக்குக் கொடுத்தாக வேண்டும் என்றெண்ணிய ஆர்தர், தம் சிற்றப்பன் பிள்ளையாகிய கவெயினிடம்7 அதைக் கொடுத்து எப்படியும் புதிய வீரரைக் கண்டுபிடித்து அதைக் கொடுத்து அவரைப் பாராட்டி வருமாறு அனுப்பினார்.
கவெயின் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து புதிய வீரரைக் காணாமல் ஓய்ந்து தற்செயலாக ஆஸ்டொலட் வந்தார். ஈலேயின் ஆவலுடன் போட்டி விழாவின் முடிவென்ன என்று கேட்டாள். ஆளடையாளமற்ற புதிய வீரர் ஒருவர் வெற்றி பெற்றாரென்று கேட்டதே அவள் மகிழ்ச்சிப் பெருக்கால் தனக்கு அவர் மீதே காதலென்பதையும், அவர் கேடயம் தன்னிடமே இருந்தது என்பதையும் வெளியிட்டுக் கூறி அக்கேடயத்தையும் காட்டினாள். கவெயின் அதன் மூன்று அரிமாக்களைக் கண்டு, ‘ஆ! நான் எண்ணியது சரி; இது லான்ஸிலட்டன்றி வேறன்று,’ என்றார். ஈலேயினும், “நான் எண்ணியதும் சரி; என் தலைவர் ஆர்தர் மேடையில் முதன்மை வாய்ந்த வீரரே,” என்றாள். கவெயின் சோம்பேறியாதலால். “பின்னும் லான்ஸிலட்டைத் தேடவேண்டிய தில்லை,” என்று மணியை ஈலேயினிடமே கொடுத்தார். அத்துடன் அவரிடம் “நாரதர்” பண்பும் சற்று இருந்ததால் லான்ஸிலட்டுக்கு ஒரு காதலி ஏற்பட்டு விட்டதை அரண்மனை எங்கும் பறைசாற்றிக் கினிவீயரிடமும் கூறிவிட்டார்.
அரசியாகும் பேரவாவால் கினிவீயர் லான்ஸிலட்டைத் துறக்கத் துணியினும் தன்னலமும் தன் போக்கும் மிக்க அவர் மட்டும் தம் காதலொப்பந்தத்தை விடாதபடி அவர் மீது உரிமை செலுத்தி வந்தாள். ஆகவே, அவர் தன்னையன்றி இன்னொரு பெண்ணின் காதலில் ஈடுபட்டார் என்று கேட்டதுமே அவள் அவர் மீது பெருஞ் சினங் கொண்டாள்.
ஈலேயின் லான்ஸிலட் படுகாயமடைந்தார் என்று கேள்விப்பட்டது முதல் ஆஸ்லெடாலாட்டில் அவள் கால் தரிக்கவில்லை. தந்தையிடம் சென்று அவள் தானே அவரைப் பக்கத்திலிருந்து பார்க்க வேண்டுமென்று முரண்டினாள். குடும்பத்தின் ஒரே பெண்ணாகிய அவள் சொல்லை அவள் தந்தையும் சரி, தமையன்மாரும் சரி, என்றும் தட்டுவதில்லை. எனவே, டார் பெருந்தகையுடன் அவள், துறவியின் மடத்துக்கு அனுப்பப்பட்டாள். லான்ஸிலட்டின் நிலைமை கண்டு அவள் மிகவும் கலங்கிப் போனாள். ஆயினும் அவள் காட்டிய பரிவும் களங்கமற்ற பற்றுதலும் காதல் வாழ்வில் முறிவுற்றுச் சோர்ந்த லான்ஸிலட்டின் உள்ளத்துக்குக் கிளர்ச்சி தந்ததனால் அவர் விரைவில் உடல் நலமுற்றார். முற்றிலும் அவள் மீது அவர் காதல் கொள்ள முடியாவிடினும் தன்னலமிக்க கினிவீயரின் கட்டுப்பாடு இல்லாதிருந்ததால் லான்ஸிலட் அவள் காதலை ஏற்று அவளுக்காவது நல்வாழ்வு கொடுத்திருக்கக்கூடும். அது முடியாது போகவே அவள் மனத்தை வேறு வகையில் திருப்பி விடலாம் என்று லான்ஸிலட் அரும்பாடு பட்டார்.
தாம் அவளைத் தங்கையாகவே நேசிப்பதாகவும் அவளை விட மூன்று மடங்கு ஆண்டுடைய தன்னை மறந்து அவளுடனொத்த வேறோர் இளைஞனையே மணக்கும் படியும் அவர் கூறிப் பார்த்தார். ஒன்றும் பயனில்லாமல் போகலாயிற்று. அவள் தந்தையும் உடன் பிறந்தாரும் கூடக் கவலை கொண்டனர். சிறுபிள்ளைத்தனமான சிறு விருப்பத்தை நயமாகப் பேசி முறிப்பதை விடக் கடுமையாக நடப்பதாலேயே எளிதில் முறித்தல் கூடும் என்று லான்ஸிலட்டிடம் அவள் தந்தை கூறினார். அதன்படி லான்ஸிலட் மற்றெல்லாரிடமும் விடைபெற்றுச் செல்லும் போது ஈலேயினிடம் மட்டும் சொல்லாமல் சென்று விட்டார். மேலும் அவர் கேடயத்துக்கு அவள் அரும்பாடு பட்டுத் தைத்த உறையை எறிந்து விட்டுக் கேடயத்தை மட்டுமே கொண்டு போனார்.
லான்ஸிலெட்டும் ஈலேயின் தந்தையும் நினைத்தபடி கடுமையால் ஈலேயின் காதல் முறிவு பெறவில்லை. அவள் காதலுள்ளம்தான் முறிவுற்றது. ஆனையுண்ட விளாங்கனி போல் அவள் உடலும் உள்ளூர நோயுற்று, அது ஒரு வாரகாலத்திற்குள் காலன் அழைப்பைப் பெற்றது. இதற்கு முன் அவள் தந்தையிடம் தன் கடைசி விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டாள். அவள் தன் இறந்த உடலை வெண்பூக்களாலும் வெள்ளாடை அணிமணி களாலும் அணி செய்வித்துப் பூம்படகொன்றில் வைத்துக் காமிலட்டுக்கு லான்ஸிலட்டிடம் அனுப்புமாறு அவர்களிடம் கோரினாள். அதோடு அவள் தன் காதல் வரலாற்றைத் தெரிவித்து திருமுகம் எழுதி அதனைத் தன் கையில் வைத்தனுப்ப ஏற்பாடு செய்தாள்.
காமிலட்டில் தம் வீரருடனும் லான்ஸிலட்டுடனும் அரசியுடனும் இருந்த ஆர்தர் கண்காண ஈலேயின் ஆற்றணங்கே பவனி வருவது போல் ஆற்றில் மிதந்து வந்தாள். அவள் கையிலிருந்த கடிதத்தை ஆர்தர் எல்லோருமறிய வாசிக்கச் செய்தார். அதன் மூலம் அவள் காதலின் ஆழமும் லான்ஸிலட்டின் புறக்கணிப்பும் கொடுமையும் யாவருக்கும் புலனாயிற்று. கினிவீயர் அரசியின் சினமும் மாறிற்று. ஆயினும் லான்ஸிலட் மனநிலை யாவர் சினத்திற்கும் வெறுப்புக்கும் அப்பாற் சென்று விட்டது. அவர் தம் வாழ்க்கையின் வெற்றிகளையும் பெருமைகளையும் எண்ணினார்; ஒரு மாதின் தன்னலத்தால் ஒப்பற்ற ஒரு நறுமலர் மலர்ச்சியடையாமல் வாடிப் போகும்படி நேர்ந்ததையும் எண்ணி எண்ணி மனமாழ்கினார். ஆர்தரின் வீரமிக்க உலகில் வெற்றி வீரர் என்று பேர்வாங்கிய அவர் அந்த உலகிலேயே ஏழேழ் நரகினுங் காணமுடியாத துன்பமெய்தி நடைப்பிணமாக வாழ்ந்தார்.
அடிக்குறிப்புகள்
1. Lyonesse. 2. Castle of Astolate.
2. Sir Torre. 4. Sir Lavaine.
3. Lily Maid. 6. Elaine.
4. Sir Gawaine.
தெய்வீகத் திருக்கலம்
ஆர்தர் தம் ஆற்றலால் பிரிட்டனில் தம் அரசாட்சியை நிலை நிறுத்துவதுடன் அமையாது, தெய்வ அருள்வழி நின்று அருளாட்சியும் நிறுவ எண்ணினார்.
இயேசுபெருமானின் திரு அடியவருள் ஒருவரான அரிமாத்தியா யோஸப் என்பவன் இயேசுவின் திருக்குருதி யடங்கிய கலமொன்றைப் பிரிட்டனுக்குக் கொண்டு வந்திருந்தான். அது அருளாளர்க்கன்றிப் பிறர்க்குக் காணவும் கிட்டாதது. தம் நற்செயலாலும் உள்ளத் தூய்மையாலும், தம் வீரர் அருள் நிறைவாலும் இதனை அடைய வேண்டும் என்று ஆர்தர் எண்ணினார். ஆனால், அவர் எவ்வளவோ தூய்மையுடைய வராயினும் அவரைச் சார்ந்தோர் உள்ளத்தின் மாசு காரணமாக அதனை அவர் பெறக் கூடாதிருந்தது.
ஆர்தர் வாழ்வில் மாசுபடரக் காரணமாயிருந்தவர்களுள் தலைமை யானவர்கள் கினிவீயர் அரசியும் லான்ஸிலட்டும் ஆவர். அரசி உள்ளத்தில் கறை மிகுதி; ஆனால், லான்ஸிலட் உள்ள உயர்வுடையவர். அவள் பொய்ம்மைக்காட்பட்டே அவர் கறைப்பட்டார். இந்நிலையில் அவரிடம் தூய காதல் கொண்ட ஒரு மாதின் மூலம் அவருக்குக் கலஹாட் என்ற ஒரு சிறுவன் தோன்றினான். அரசியின் பொறாமைக்கஞ்சிய லான்ஸிலட் தாம் மறைவில் மணந்த அம்மாதையோ அதன் பயனாய்ப் பிறந்த புதல்வனையோ ஏற்கமுடியாதவராயிருந்தனர்.
ஆயினும், வீரத்திலும் நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கலஹாட் புகழ் ஓங்கும்தோறும் அவர் உள்ளூர மகிழ்ச்சி யடைந்தார். ஆர்தராலும் அவர் வீரர் பலராலும் காணமுடியாத திருக்கலத்தை இவன் கண்டு அதன் ஒளியில் இரண்டறக் கலப்பான் என்று எதிர்கால நுனித்தறியும் அறிஞர் கூறக்கேட்டு அவர் இன்னும் மகிழ்ச்சியடைந்தனர்.
மெர்லின் அமைத்த ஆர்தர் வட்டமேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளில் தொண்ணுற்றென்பது நிறைவடைந்தும் இன்னம் ஒன்று நிறைவடையாமலே இருந்தது. அது பொன்னாலான இருக்கை. அதன் மீது மணிகள் அழுத்திய எழுத்துக்களில், “மாசற்ற தூய அருள்வீரனே இதில் அமரலாம்” என்று எழுதியருந்தது.
ஒருநாள் ஆர்தர் கொலுவிருக்கையில் திடுமெனக் கதவுகள் அடைத்துக் கொண்டன. அவ் வைரயிருளில் ஒளி வீசும் வெண்பட்டாடை அணிந்த முதியோன் ஒருவன் பால்வழிந்தோடும் இளமுகமுடைய சிறுவனொருவனை உடன் கொண்டு வந்து “இவனே பிரிட்டனில் யாவரினும் தூய உள்ளமுடைய கன்னிவீரன். வட்டமேடைப் பொன்னிருக்கை இவனுக்கே உரியது,” என்றான். அச்சிறுவனே கலஹாட் பெருந்தகை. அவ்விருக்கையிலும் அப்போது “இது கலஹாட் பெருந்தகையின் இருக்கை” என்ற மணி எழுத்துக்கள் காணப்பட்டன.
அதே சமயம் வாள்பதித்த கல் ஒன்று ஆற்றில் மிதப்பதாக ஒருவன் வந்து கூறினான். அதன்மீது “இதை உருவுபவன் திருக்கலத்தை அடைவதற் குரியவன்” என்றெழுதப்பட்டிருந்தது. மனத்தில் கறையுடைய பலரும் சென்று தோல்வியுறவே அனைவரும் வியப்படைந்தனர். (அது அரசியின் பொய்ம்மை யினால் அவருக்கு நேர்ந்த இழுக்கு என்பதனை அவர்கள் அறியார்) லான்ஸிலட்டோ தம்குற்றம் தாமறிந்தவராதலால் மறுத்து விட்டார். கலஹாட் அனைவரும் காண அதனை எடுத்துக் கொண்டான்.
இதன்பின் திருக்கலம், ஒருநாள் அனைவர் கண்முன்னும் ஒரு கணம் கோடி ஞாயிறு திங்கள் தோன்றினாற் போன்ற ஒளிவீசிக் காட்சியளித்து மறைந்தது. அதன் மீது பட்டுத்துணி போர்த்திருந்தும் அது அவர்கள் கண்களைப் பறிக்கும் அழகுடையதாய் ஒளியும் மணமும் வீசியது. அதனைக் கண்டதே அனைவரும் அதனைச் சென்றடைய எண்ணிப் புறப்படலாயினர்.
ஆர்தருக்கு இம்முயற்சியில் ஆர்வமிகுதியாயினும் கவலையும் மிகுதியாயிற்று. வட்டமேடை வீரர் பலரும் இதனைக் காணத் தகுதியற்றவர்களாதலின் அவர்கள் மீளமாட்டார்கள். ஆதலால், அதன் இருக்கைகள் பல வெற்றிடமாய் விடுமே என்று அவர் வருந்தினர். கலஹாட் போன்ற சிலர் காணக்கூடும் என்று மகிழ்வும் கொண்டார்.
கலஹாட் முதலில் தம் வாளுக்கு இசைந்த கேடயத்தை நாடிச் சென்றார். உள்ளத் தூய்மையற்றவர் எடுத்தால் அவர்களை வீழ்த்தும் திறமுடைய கேடயமொன்று ஒரு மடத்திலிருப்பது கேட்டு அதனைக் காணச் சென்றார். அது அரிமாத்தியா ஜோஸப் இறக்கும் போது விட்டுச் சென்றது. அது தூய வெண்ணிற முடையது. ஜோஸப் தம் குருதியால் அதில் சிவந்த சிலுவைக் குறியிட்டிருந்தார். அதனை எடுத்துக்கொண்டு பலநாள் பயணம் செய்து பல நாடுகளுக்கும் சென்றார்.
லான்ஸிலட் வழியில் ஒரு கோயிலின் பக்கத்தில் செல்லுகையில் பலகணி வழியாய் மூடப்பட்டிருந்த திருக்கிண்ணத்தைக் கண்டும் உள்ளே நுழைய முடியாது போனார். வெளியில் சோர்ந்து படுத்திருக்கையில் கனவில் மற்றொருமுறை அது தோற்றமளித்தது. ஆனால், அப்போதும் அதனை அணுக உடலில் ஆற்றலற்றுப் போயிற்று.
அங்கிருந்து ஒரு மரக்கலத்திலேறிச் செல்கையில் கலஹாட் பெருந்தகை வந்து அவரைக் கண்டார். சில நாள் தந்தையும் மகனும் அளவளாவியிருந்தனர். பின் வெண்கவசம் அணிந்த வீரன் தன் குதிரையில் வரும்படி கலஹாட்டை மட்டும் அழைக்க, அவர் லான்ஸிலட்டிடம் பிரியா விடைபெற்றுச் சென்றார்.
வழியில் கலஹாட், பெர்ஸிவல், பலீஸ் என்ற இருவரையும் கண்டு உடனழைத்துக் கொண்டு முன் லான்ஸிலட் கனாக் கண்ட இடமாகிய கார்போனெக் அரண்மனையை அடைந்தார். இவ்விடத்தில் முதியோன் ஒருவன் திருக்கலத்தை மூடியேந்திக் கொண்டு வந்து காட்சியளித்தான். பின் அவன் அவர்களிடம் “நீங்கள் அனைவரும் கப்பலேறி ஸாராஸ் நகரையடையுங்கள். அங்கு நீங்கள் அதனைத் திரையின்றி ஊனக் கண்ணால் காண்பீர்கள். மனிதர் அதனைக் கடைசியாகக் காண்பது அப்போதுதான். விரைவில் அது வானுலகம் சென்றுவிடும்,” என்றனர்.
கலஹாட் திருக்கலத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய போது அதன் மீதிருந்த திரையகன்று அதன் தண் ஒளி அவன் உடலையும் உளத்தையும் குளிர்வித்து நிறைத்தது. வானவர் எதிர்கொண்டழைப்பத் திருக்கலத்துடன் அவன் ஆவி மேலெழுந்து விண்ணுலகு சென்றது.
லான்ஸிலட்டும், அதன் பின் பெர்ஸிவலும் பலிஸாம் காமிலட் வந்து தாம் தாம் கண்ட அருங்காட்சிகளைக் கூறி கலஹாட்டுக்குக் கிடைத்த அரும்பெறல் பேற்றினைக் குறித்துப் புகழ்ந்தனர். அது கேட்ட ஆர்தரும் மக்களும் மகிழ்ந்தன ராயினும் மீண்டு வராத பலரையும், திருக்கலம் உலகினின்று மறைந்ததையும் எண்ணியபோது, கவலையின் மெல்லிய சாயல் அவர்கள் வாழ்வின் மீது படரலாயிற்று.
ஆர்தர் முடிவு
ஆர்தர் வாழ்வுக்கு மெர்லின் விதைவிதைத்தான். அவன் வீழ்ச்சிக்குக் கினிவீயர் விதைவிதைத்தாள். அவ்விதை லான் ஸிலட்டால் முளைவிட்டு விவியானால் உரம் பெற்று வளர்ந்து மாட்ரெடால் அறுவடையாயிற்று.
மாட்ரெட்¹ - ஆர்தர் உடன்பிறந்தாளான பெல்லிஸென்ட் மகன். தம் நெருங்கிய உறவினனென்ற முறையில் ஆர்தர் அவனையே தமக்கடுத்த இளவரசனாக்க எண்ணினார். ஆனால் உரிமையுடன் அவர் அரசியற் செல்வத்தைப் பெறுவதற்கு மாறாக, அவரை அழித்துப் பெற எண்ணி அவனும் இறுதியில் அழிவுற்றான்.
பாற்கடலில் பிறந்த நஞ்சேபோல ஆர்தர் குடியில் பிறந்த அவனிடம், கீழ்மையும் வஞ்சகமும் நன்றி கொன்ற தன்மையுமே மிகுந்திருந்தன. வஞ்சகன் யாரையும் வஞ்சமிழைப்பவர் என்று நினைப்பது இயற்கை. அதற்கேற்ப அவன் தன் தாய் தந்தையர் பேசும் மறை சொற்களைக் கூட ஒளிந்திருந்து கேட்கும் கயமையுடையவனாயிருந்தான். ஒருநாள் கினிவீயர் அரசி தோழியர் சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவன், மதிலேறிப் பதுங்கி அவர்கள் பேசுவதை உற்றுக் கேட்டான். அச்சமயம் அவ்வழியே வந்த லான்ஸிலட் அவனை வேறு யாரோ திருடன் என்றெண்ணிக் காலைப் பிடித்துக் கீழே மோதினார். அவன் அரசன் மகனென்று கண்டதே வருந்தி, அவனிடம் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு என்பதன் தன்மையையே அறியாத அக்கொடியோன் இதற்குப் பழிவாங்க எண்ணி அதற்காகக் காத்திருந்தான்.
விரைவில் அவனுக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. ஆர்தரின் பரந்த பேரரசின் ஒரு கோடியில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனையடக்கச் சென்ற அவர் தம் இடத்திலிருந்து ஆளும் உரிமையை மாட்ரடுக்கே தந்து போனார். இப்புதிய அரசுரிமையை முற்றிலும் பயன்படுத்தி லான்ஸிலட்டிடம் பழி வாங்குவதுடன், ஆர்தர் நாட்டையும் கைக்கொள்ள அவன் சூழ்ச்சி செய்தான்.
லான்ஸிலட்டுக்கு பிரான்ஸின்² சில பகுதிகளில் குறுநில மன்னருரிமை உண்டு. அப்பகுதியில் கிளர்ச்சி ஏற்பட்டதாகப் பொய்க் கையொப்பமிட்டு மாட்ரெட் லான்ஸிலட்டுக்கு ஒரு கடிதம் வரும்படி செய்தான். ஏற்கெனவே லான்ஸிலட்டுக்கு அங்கே பல வேலையிருந்தும், காமிலட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல் பின் தங்கியிருந்தார். இப்போது இன்றியமையாத நிலைமை ஏற்பட்டு விட்டதால் இதனை ஒட்டி அங்கே சென்று கிளர்ச்சியை அடக்குவதோடு நில்லாது சிலநாள் தங்கிப் பிற வேலைகளையும் முடித்து வர அவர் எண்ணினார். ஆகவே, அவர் கினிவீயர் அரசியிடம் சென்று பிரியாவிடை பெற்றார். கினிவீயர் அரசி அச்சமயம் லான்ஸிலட்டிடம், “நீ இல்லாமல் காமிலட்டில் நான் இருக்க முடியாது. உன்னைப் பார்க்கும் ஆறுதலினாலேயே நான் வேண்டா வெறுப்பான ஆர்தருடன் வாழ இசைந்தேன். இனி நீ இல்லாதபோது அவருடன் வாழ, அவரைக் காணக்கூடப் பொறுக்க முடியாது. ஆகவே நான் ஆல்ம்ஸ்பரியிலுள்ள மடத்தில்³ சென்று என் மீதி நாளைக் கழித்து விடுகிறேன்” என்றாள்.
லான்ஸிலட் எவ்வளவு தடுத்தும், அவள் கேளாமல் அவ்வுறுதியிலேயே நின்றாள். லான்ஸிலட்டும் இறுதியாக விடைபெற்றுச் சென்றார்.
அவர்கள் தனிமையிலிருப்பதாக எண்ணி மறைவாகப் பேசிய அனைத்தையும் மாட்ரெட் மறைந்து நின்ற கேட்டுக் கொண்டான். ஆகவே கினிவீயர் தான் லான்ஸிலட்டிடம் கூறியபடியே யாருமறியாது மாற்றுருவில் ஆல்ம்ஸ்பரி சென்றதும், அவன் அவர்கள் தீய ஒழுக்கத்தை எங்கும் பறை சாற்றியதுடன் கினிவீயர் லான்ஸிலட்டுடனேயே ஓடிப்போய் விட்டாள் என்று துணிந்து ஒரு கதையும் கட்டி விட்டான். நற்செய்தியினும் தீச்செய்தி கடுகிச் செல்லும் இயல்புடைய தாதலின் இப்பழியுரை நாடெங்கும் பரவிற்று.
கிளர்ச்சிக்காரரை அடக்கிவிட்டுத் தம் நகரை நோக்க மீண்டும் வந்து கொண்டிருந்த ஆர்தர் செவியிலும் இது படவே, அவர் காமிலட்டுக்கே வராமல் படை திரட்டி லான்ஸிலட்டின் குறுநிலக் கிழமை மீது படையெடுத்தார்.
லான்ஸிலட் தம் நிலக்கிழமை சென்றெட்டியதும் கிளர்ச்சியெதுவும் இல்லை என்று கண்டார். ஆகவே தமக்கு வந்த கடிதம் மாட்ரெட் சூழ்ச்சியால் அனுப்பிய கடிதம் என்பதை அறிந்து கொண்டார். அதன்பின் கினிவீயர் தம்முடனேயே வந்ததாகப் பரவிய கதை கேட்டு அவர் பின்னும் புண்பட்டார். ஆயினும், அவள் உண்மையிருப்பிடத்தை அவர் கூறவும் துணியவில்லை யாதலால், யாரும் அவரை நம்பவில்லை. ஆர்தர் கூட, கினிவீயரை அவர் தம் கோட்டையில் ஒளித்து வைத்தார் என்றே நினைத்துப் பேரெழுச்சியில் முனைந்தார்.
லான்ஸிலட் ஊழ்வலியால் நெறிதவறினும் வன்னெஞ்சருமல்லர்; வஞ்சகமும் தீங்கும் உடையவருமல்லர். தம் தோழரும் தலைவரும் தம் பிழையால் வாழ்விழந்தவருமான ஆர்தரை எதுவரினும் எதிர்க்க அவர் மறுத்தார். “என் நாடும் என் உயிரும் தங்களைச் சார்ந்தவை. அதோடு தங்களுக்கு மாறாகப் பிழையும் செய்தேன். தங்களை எதிர்த்து மீண்டும் பிழை செய்யேன். என் நாட்டையும் உயிரையும் தாங்கள் கொண்டால், என் தீராக் கடனில் ஒரு பகுதியே தீரும். அங்ஙனமே கொள்,” என்று அவர் ஆர்தருக்குச் சொல்லி யனுப்பினார். எதிர்த்தோரை மட்டுமே எதிர்க்கும் தூய வீரராகிய ஆர்தருக்கு எத்தகைய தீங்கு செய்தவராயினும் கழிவிரக்கமும் தன் மறுப்பும் மிக்க தம் பழைய தோழராகிய லான்ஸிலட்டை எதிர்க்க மனமில்லை. ஆனால், ஆர்தர் மருமகனாகிய கவெயின்4 ஆர்தர் சார்பில் நின்று லான்ஸிலட் கோட்டை வாயிலில் சென்று அவரை மற்போருக்கும் அழைத்தான். லான்ஸிலட் எதுவரினும் என் தலைவரை எதிர்த்துப் போரிடேன்; அவர் உறவினரை எதிர்த்தும் போரிடேன்" என்றார். பார்ஸ், லயோனெல் முதலிய பிற வீரர்கள் சென்றெதிர்த்தனர். ஆனால் லான்ஸிலட் வந்தபோது புலியை எதிர்த்த ஆடுகள் போல் அவர்கள் வெருண்டோடலாயினர். கவெயின் அதுகண்டு, “நான் வந்தால் எளிதில் வெற்றி கிடையாதென்று லான்ஸிலட் ஒழுங்குமுறை பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்,” என்று வசைமொழி கூறினான். அது கேட்டதே லான்ஸிலட் தம் உறுதியைக் கைவிட்டுக் கவெயினை எதிர்த்துப் போருக்கு வந்தார். கவெயின் மீண்டும் மீண்டும் காயமுற்றுத் தோல்வியுற்றும் விடாது குணமடைந்தும் வந்து போரிட்டான். லான்ஸிலட்டும் அவமதித்த வனென்று எண்ணாது காயமுற்ற போதெல்லாம் எதிர்க்காது விட்டார்.
மூன்றாம் முறை கவெயின் காயமுற்றுக் கிடக்கையில் மாட்ரெட், ஆர்தருக் கெதிராகப் பின்னம் சூழ்ச்சி செய்து, அவர் லான்ஸிலட்டுடன் போராடி மாண்டார் என்ற கதையைப் பரப்பித் தன்னையே அரசனென விளம்பரம் செய்து கொண்டு விட்டான். இச்செய்தி கேட்டதே ஆர்தர் காமிலட்டை நோக்கிச் சென்று மாட்ரெட்டை முறியடித்துத் துரத்தினார்.
பேராவல் பிடித்த மாட்ரெட் தோற்றும் தன் சூழ்ச்சி முயற்சிகளை விடவில்லை. கினிவீயரின் பழியைக் கேட்டது முதல் பிரிட்டன் மக்களில் பெரும்பாலோர் அவர் தமக்குச் செய்த நன்மைகளை மறந்து அவரை எதிர்க்கத் துணிந்தனர். ஆர்தர் வீரரால் முறியடிக்கப்பட்டவர்களும் அவர் ஆட்சியில் தம் தீய எண்ணங்கள் நிறைவேறப் பெறாது புழுங்கி வந்த கயவர்களும் மாட்ரெட்டுக்கு ஆதரவு தந்தனர். ஆகவே, ஆர்தர், மாட்ரெட்டை நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல தடவை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று.
ஆர்தரால் முன் பன்னிரண்டு போர்களில் முறியடிக்கப்பட்டுப் பிரிட்டனை நாடாது ஓடிய ஸாக்ஸானியர் பிரிட்டனின் சீர்குலைவைக் கேள்வியுற்றுத் துணிகரமாக ஆங்காங்குப் படையிறக்கிக் கொள்ளையடித்தனர்.
ஆர்தர், பிரிட்டனின் நிலை கண்டு மனம் புழுங்கினார் அப்போது அவருக்கு முன் மெர்லின் கூறிய சொற்கள் நினைவிற்கு வந்தன. தன் முடிவு பிரிட்டனை விட்டுத் தான் வேறு உலகம் செல்லும்-நாள் இனி தொலைவிலில்லை என்பதை அவர் உய்த்துணர்ந்து கொண்டார். தம் வாழ்க்கைத் துணைவியாகிய கினிவீயர் எவ்வளவு நிலை தவறினாலும் அவளுக்கு இறுதியாக அறிவுரை தந்து மன்னித்து வரவேண்டும் என்ற பேரவா அவர் உள்ளத்தில் எழுந்தது.
கினிவீயர் மாற்று உருவில் சென்றாலும் அவளை மடத்துத் தலைவியும் துறவுப் பெண்களும் அறியாமலில்லை. ஆனால் உள்ளூர அவள்பால் அவர்கள் பரிவும் இரக்கமும் கொண்டனர். அரசர் அவள் இருப்பிடம் வந்து அவளிடம் தன் சீரிய வாழ்க்கைக்கு அவள் செய்த இழுக்கை எடுத்துக் கூறிப் பின், “உன்னைக் குறைகூற நான் இங்கே வரவில்லை. உன்னை நான் மனமார மன்னித்து விட்டேன். ஆனால், கடவுளும் மன்னிக்கும்படி உன் மனத்தின் அழுக்கை நோன்பாலும் நல்லெண்ணத்தாலும் நற்பணியாலும் போக்கி, மேலுலகி லாயினும் என்னை வந்தடைக என்று கூறவே வந்தேன்,” என்ற சொல்லிச் சென்றார்.
மாட்ரெட் பல தடவை தோற்றாலும் படைகள் முற்றிலும் அழிவதற்கு முன்னமே அவற்றைப் பின் வாங்கியும் புதுப் படைகள் திரட்டியும் நாட்டின் மறுகோடி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இறுதியில் பிரிட்டனின் தென்கீழ்க் கோடியில் உள்ள லயானிஸ் சென்றதும் மேலும் பின்வாங்க இடமின்றி இறுதிப் போராட்டத்தில் முனைந்து நின்றான்.
போருக்கு முந்திய இரவில் ஆர்தர் ஒரு கனவு கண்டார். அதில் கவேயின் வந்து ஆர்தரிடம் லான்ஸிலேட் வரும்வரை போரை நிறுத்தி வைக்கும்படி கோரினதாகக் கண்டு விழித்தார் பெடிவியர்⁵ முதலிய நண்பருடன் கலந்த பின் அதுவே நன்றெனக் கொண்டு மாட்ரெட்டுக்குச் செய்தி அனுப்பினார். மாட்ரெட்டுக்கும் தாமதம் செய்வது தனக்கு நல்லதென்றே தோன்றிற்று. பிரிட்டனில் பல பகுதிகளிலிருந்தும் உதவிப் படைகள் அனுப்பும்படி அவன் நண்பர்களை வேண்டியிருந் தான். ஆகவே அவனும் போர் நிறுத்தத்துக்கு இசைந்தான்.
ஆயினும், இப்போர் நிறுத்தம் பாம்புக்கும் கீரிக்கும் ஏற்பட்ட போர் நிறுத்தம் போலவே இருந்தது. இருதரப்பாரிடமும் உள்ள வெறுப்புடன் எதிரி சூழ்ச்சியால் நம்மை ஏமாற்றி விடுவானோ என்ற ஐயமும் நிறைந்து இருந்தது. இந்நிலைமையில் மாட்ரெட்டும் அவன் நண்பரும் ஆர்தர், அவர் நண்பர்கள் ஆகியவர்களுடன் இருதரப்புப் படைகளிடையிலும் வந்து போர் நிறுத்தக் கட்டுப்பாடுகளை அமைக்க முன் வந்தனர். அச்சமயம் தீவினையால் ஆர்தர் நண்பர் ஒருவர் காலில் ஓர் அரவம் தீண்ட அதனைக் கொல்ல அவர் வாளுருவினார். ஐயமும் வெறுப்பும் நிறைந்த அச் சூழ்நிலையில் ஏன் என்றோ யார் என்றோ கேட்பவர் யார்? எதிரிகள் சூழ்ச்சி செய்தனர் என்று கொண்டு இருதரப்பாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து விழுந்தனர். பலர் போருக்கு முனைந்திராததனால் கவசம் கூட அணிய நேரமின்றிப் போரில் குதித்தனர். அச்சமயம் நாற்புறமும் உறைபனி வேறு சூழ்ந்ததால் யார் பகைவர் யார் நண்பர் என்று பிரித்தறியக் கூடாமல் பலர் தம் நண்பரையே கூட வெட்டித் தள்ளினர். ஆர்தர், தம் எக்ஸ்காலிபர்⁶ என்ற வாளினால் சென்றவிடமெல்லாம் பிணக் குவியல்களை நிறைத்தார். ஆர்தரின் வட்டமேடையில் மீந்து நின்ற சிலரும் நெற் பயிரிடையே காட்டுப் பன்றிபோல் நாற்புறமும் அழிவு செய்தனர். ஆனால், போரில் எப்பக்கம் வெற்றி என்பதை அறிய முடியாதபடி போர்க்கள முற்றிலும் உறைபனி மூடியிருந்தது.
மாலையில் உறைபனி சற்றே விலகிற்று. அப்போது ஆர்தர் போர் நிலைமையை ஒருவாறு உணர்ந்து கொண்டார். கெரெயின்டும் அவனுடைய டெவன் நாட்டு வீரரும் இவ்வளவு குழப்பத்திடையேயும் அணிகுலையாமல் நின்று, இறுதித் தாக்குதலுக்குக் கச்சை கட்டுவதைக் கண்டு மகிழ்வுற்று அவர்கள் முன்புறம் தாக்கும் போது தாமும் தம் வீரரும் மறுபக்கம் சுற்றி வந்து தாக்கினார்.
மாட்ரெட் படையின் ஒரு பகுதி கெரெய்ன்ட் படைக்கு ஆற்றாது ஓடிற்று. கெரெய்ன்ட் அவர்களைத் துரத்திக் கொண் டோடுகையில் ஓர் அம்பு தலையணியின் பிளவொன்றினூடாக ஊடுருவிச் சென்று, அவனைக் கொன்றது. அவன் வீரர் அவன் வீழ்ச்சிக்குப் பழி வாங்கும் வண்ணம் படை வீரர்களைப் பின்னும் துரத்திக் கொண்டோடினர்.
ஆர்தர் என்றுமே எதிர்ப்பவரைத் தாக்குவதன்றி ஓடுபவரைத் துரத்துவதில்லை. ஒரு சில வீரருடன் வெற்றி வீரராய், ஆயின் வீரரனைவரையும் இழந்தோமே என்ற துயரத்துடன் அவர் நின்றார். அச்சமயம் மாட்ரெட் மறைவிலிருந்து வெளிவரவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். நெடுநேரம் போர் புரிந்து இருவரும் ஒருவரை ஒருவர் படுகாயப்படுத்தினர். இருவரும் சோர்ந்து விழப்போகும் சமயம் முழுவன்மையும் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வாளை ஓச்சினர். மாட்ரெட், ஆர்தர் வாளால் இரு பிளவாகப் பிளக்கப்பட்டு உடனே மாண்டான். ஆர்தர் மண்டையுடைந்து வலிமை முற்றிலும் அற்றுப் படுகாயத்துடன் சாய்ந்தார். அவர் நண்பருள் அப்போது பெடிவீயர் ஒருவரே மீந்திருந்தார். அவர் ஆர்தரைத் தம் தோள் மீது தாங்கி ஸாக்ஸனியரால் பெரும்பகுதி அழிக்கப்பட்டுக் கடற்கரையிலிருந்த ஒரு கோயிலில் கொண்டு சென்று படுக்கவைத்தார்.
ஸாக்ஸானியரை நடுங்க வைத்து, ரோமானியரை முறியடித்து பிரிட்டனெங்கும் ஆணை செலுத்தியதுடன் தீமையையே உலகெங்கும் ஒடுங்கும்படி செய்த வீர கோளரியான ஆர்தர், பெடிவீயரன்றி வேறு துணையற்ற நிலையில், போர் வெற்றியிடையேயும் வாழ்க்கையில் சலிப்பும் முறிவுமுற்றுத் தனியே கிடந்தார்.
ஆர்தர் மனம் அச்சமயம் தன் இளமைக் கனவுகள், தம் அரசாட்சி, தம் வீரர் பெரும்புகழ் ஆகிய யாவற்றையும் எண்ணிப் பெருமூச்சுவிட்டது. தன் வலக்கையாயிருந்த லான்ஸிலட்டையும் தம் உயிருக்கு உறையுளாயிருந்த கினிவீயரையும் எண்ணிற்று; இறுதியில் தெய்வீகக் குருதியேந்தி ஒளி வீசித் தம் கண்முன் வந்த கடவுளருளொளி விளக்கமாகிய தெய்வீகக் கலத்தை எண்ணி அதனை நாடிச் சென்று பெற்ற கலஹாட் பெருந்தகையின்⁷ பெரும்புகழில் திளைத்தது; பின் அதனைப் பெறு மாற்றலில்லாது மாண்ட, தம் உயிரினும் அரிய வீரரை எண்ணி மாழ்கிற்று; இறுதியில் தமக்குக் கண் கண்ட தெய்வமாயிருந்த மெர்லினை யெண்ணிக் கலங்கிற்று.
மெர்லினை எண்ணியதுமே தம் பிறப்புப் பற்றி மெர்லின் கூறிய அருஞ்செய்திகளும் தான் நேரிற்கண்ட அரும்பெருங் காட்சிகளும் தெய்வீகமான திருக்கை ஏரியின் தடத்தில் ஏந்திய எக்ஸ்காலிபரும் அவர் நினைவுக்கு வந்தன. அவர் கண்கள் அவர் முன் கிடந்த எக்ஸ்காலிபரைப் பெருமையுடனும் துயருடனும் நோக்கின. அதன் ஒருபுறம், “என்னை எடுக்க,” என்றும். மறுபுறம் “என்னை எறிக,” என்றும் பொறித்த எழுத்துக்களைக் கண்டதே அதனை எறியும் நாள் வந்ததெனக் கண்டு பெடிவீயரிடம், “பன்மணிகள் பொறித்த என் கண்மணி போன்ற இப் பொன் வாள் மனிதர் கையில் படத்தக்கதன்று, இதனை உன் வலிமை கொண்ட மட்டும் கடலில் வீசி எறிந்து விட்டு நீ காணும் காட்சியை வந்து கூறுக,” என்று ஏவினார்.
தலைவன் பணி மாறாது பெடிவீயர் வாளுடன் சென்றான். ஆனால் ஆர்தர் பெருமையனைத்துக்கும் பிற்காலத்தில் ஒரே அறிகுறியாயிருக்கக் கூடும் அவ்வாளை, பல நாட்டரசாட்சி களையும் கொடுத்துக் கூடப் பெற முடியாத பன்மணிகள் பதித்த அப் பொன்னிழைத்த வாளை எறிய அவனுக்கு மனம் வரவில்லை. “ஆர்தர் மனச் சோர்வுற்றிருக்கிறார். வாளை எறிய வில்லை என்று சொன்னால் வருந்துவார். ஆகவே இவ்வொரு வகையில் ஒரு சிறு பொய் சொன்னால் என்ன! நாளை அவர் நலமடைந்த பின் இத்தவறுதலை அவர் மன்னிப்பதுடனல்லாமல் போற்றவும் கூடும்,” என்றெண்ணி அதனைப் புதரில் மறைத்து வைத்துவிட்டு ஆர்தரிடம் வந்து அதனை எறிந்துவிட்டதாகக் கூறினான்.
ஆர்தர்: அப்படியா! எறிந்தபோது நீ என்ன கண்டாய்?
ஏழை பெடிவீயர் இக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நீ கண்டதை வந்து கூறு என்ற சொல்லின் குறிப்பையும் அவர் உணரவில்லை. ஆகவே மனக் குழப்பமடைந்து பின் ஆர்தருக்கு ஏற்றபடியே பேச எண்ணி, “நான் கண்டது வேறெதுவுமில்லை. அலைகள் கரையில் மோதுவதையும் எக்ஸ்காலிபர் வீழ்ந்த இடத்தில் குமிழிகள் எழுவதையும் மட்டுமே கண்டேன்!” என்றார்.
ஆர்தர் சினங்கொண்டு, “நான் பிரிட்டனை இழந்தேன். ஆட்சியையும் நண்பரையும், மனைவாழ்வையும் இழந்தேன். என் இறுதி நண்பன் வாய்மையையும் இழக்கவாவேண்டும்?” என்று வருந்தி, “இச்சிறு பொருளை எண்ணி என் சொல்லை மறுக்கத் துணிந்த நீ இனி யாது செய்யத் துணியாய், பொருளாசை பொல்லாதது,” என்று இடித்துரைத்தார்.
அது பொறாத பெடிவீயர் மீட்டும் வெளிச் சென்று வாளையெடுத்தான். அதன் கண்ணைப் பறிக்கும் மணிகள் அவனுறுதியை மீண்டும் கலைத்தன. “நான் சற்று வழவழ என்று பேசி ஆர்தர் மனத்தில் ஐயத்தை உண்டு பண்ணிவிட்டேன். இனித் துணிந்து கூறுவேன்,” என்று எண்ணிக்கொண்டு பெடிவீயர் மீண்டும் வாளைப் புதைத்து வைத்து வந்து முன்போலவே கூறினான்.
இத்தடவை சினத்தால் ஆர்தர் உடலெல்லாம் படபடத்தது. “எனக்கு ஒரு நண்பர் மீதி என்ற எண்ணமும் போயிற்று. என் இறுதி முயற்சியில் நான் இறந்தாலும் கேடில்லை. நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்,” என்று எழத் தொடங்கினார்.
பெடிவீயர் அவர் காலில் வீழ்ந்து “பெருந்தகையோய்! மன்னித்தருள்க! என் சிறுமையையும் கோழைமைiயும் பொறுத்தருள்க. தாங்கள் எழ வேண்டாம்; அக் கொடுமைக்கு நான் ஆளாகக் கூடாது. இதோ நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்”, என்று சென்றார்.
இரண்டு மனிதர் சேர்ந்து தூக்க வேண்டும் என்ற அளவில் பளுவுடைய அவ்வாளைப் பெடிவீயர் எடுத்துச் சென்று முழு வலிமையுடன் தலையைச் சுற்றிச் சுழற்றி வீசியெறிந்தான். அப்போது முழுநிலாக் காலமாதலின் நிலவொளியில் அவ்வாள் ஒரு பேரொளிப் பிழம்பு போல் ஒளிர்ந்தது. பெடிவீயர் வியப்பும் துயரமும் கலந்த உணர்ச்சிகளுடன் அதையே பார்த்து நின்றான். ஆனால், அது நீர்ப்பரப்பில் வந்து விழுமுன் வியக்கத்தக்க வகையில் வெண்பட்டாடையணிந்த ஒரு ஒள்ளிய மென் கை அதனை ஏற்று மும்மறை சுழற்றி வீசி அதனுடன் உட்சென்றது. இக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு வியப்பும் அச்சமும் இறும்பூதும் கலந்த தோற்றத்துடன் அவன் ஆர்தரிடம் வந்து மூச்சு விடாமல் அனைத்தும் கூறினான்.
ஆர்தர் அது கேட்டு மனநிறைவு கொண்டார். பெடிவீயரிடம் “நண்பரே! என் நாள் இப்போது அணுகி விட்டது. மெர்லின் கூறியபடி என் யாக்கை இறவா யாக்கை யானாலும் புறப்புண்களும் அகப்புண்களும் சேர்ந்து என் உரத்தைக் குலைத்தன. பிரிட்டன் இன்றிருக்கும் நிலையில் நான் நலமடைய முடியாது. ஆயின், நான் இனிச் செல்லுமிடத்தில் நன்மையன்றித் தீமையோ, ஒளியின்றி இருளோ, அன்பன்றி வன்போ இல்லை. அவ்விடத்தில் சென்று நான் குணமடைந்து வருவேன். தீமைமிக்க இவ்விருட்காலத்தில் உன்னால் உலகைத் திருத்த முடியாதாயினும் கூட உன்னளவில் முக் காரணங்களும் தூய்மையாக நட. இறைவன் முன்னிலையில் ஆலிவானில் (துறக்கத்தில்) ஒன்று கூடுவோம்,” என்று ஆர்தர் கூறிப் பின் தனக்குச் செய்யும் இறுதி உதவியாகக் கடற்கரைக்குத் தன்னைத் தாங்கிச் செல்லும்படி கூறினார். பெடிவீயருக்கு அவர் சொற்கள் விளங்கவில்லை யாயினும் அவர் கேட்டு கொண்ட படி அவரைத் தூக்கிச் சென்றார். போகும்போது ஆர்தர், காலங்கடந்து விடப்படா தென்று விரைபவர்போலப் பட படத்து “விரைந்து செல்க, நேரமாய் விடும்,” என்று முடுக்கினார்.
கடலலைகளின் மீது பெடிவீயர் பேரொளி ஒன்று கண்டான். அதில் சில கரும்புள்ளிகள் தென்பட்டன. சற்று நேரத்தில் அவ் ஒளி அழகு மிக்க பெரியதொரு படகாகவும், புள்ளிகள் அதில் தங்கியிருந்த அரமைந்தரும் அரமங்கை யருமாக மாறின. மங்கையருள் மூவர் இளவரசிகள் போலவும் காணப்பட்டனர். ஆர்தர் தன்னைப் படகில் சேர்க்கும்படி கூறினார், மூன்று பெண்டிரும் அவரை ஏற்றினர். அரசி போன்றிருந்தவள் அவர் தலையை ஆதரவுடன் மடிமீது வைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள். பின் படகு சிறிது சிறிதாக அகன்று மறையலாயிற்று.
பெடிவீயர், “ஐயனே! நான் ஒருவன் தனித்து இவ்வெற்றுலகில் வாழவா?” என்று துயரத்துடன் கேட்டான். ஆர்தர், “அன்பரே! வருந்த வேண்டாம்; என் புண்கள் குணப்பட்டு பிரிட்டனின் கெட்டகாலம் நீங்கிய பின் மீண்டும் வருவேன் இன்றிறந்த வீரர் மீண்டும் எழுவர். அதுவரை நும் கடனாற்றி நாட்கழிக்க. இதுவே இறைவன் அமைதி,” என்று கூறியகன்றார்.
படகு ஒரு புள்ளியாகுமளவும் காத்திருந்து பெருமூச்சுடன் பெடிவீயர் திரும்பிவந்து பிரிட்டன் மக்களுக்கு இவ்வரிய வரலாற்றைக் கூறி அவர்கள் கண்களில் பெருமித உணர்ச் சியையும் வியப்பையும் துயரையும் ஒருங்கே ஊட்டினார்.
லான்ஸிலட்டும் கினிவீயரும் தம் மீந்தநாளை இறைபணியில் கழித்துத் தொண்டாற்றி நோன்பு நோற்று ஆர்தரடி சார்ந்தனர்.
பழைய பிரிட்டானியராகிய வேல்ஷ் மக்கள், இன்னும் ஆர்தர் மீண்டும் வந்து தமக்கு நல் ஆட்சியும் இறையருட்பேறும் நல்குவர் என்று எதிர்நோக்குகின்றனர்.
அடிக்குறிப்புகள்
1. Modred
2. France
3. Abbey at Almsbury
4. Sir Gavaine
5. Bedevere
6. Excalibur.
7. Sir Galahad
வெல்போர்த் தீஸியஸ்
(கிரேக்கர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தெற்கே வந்து நாகரிக மடையுமுன்பே நாகரிக உலகில் தலைசிறந்து வாழ்ந்தவர்கள் கிரேக்கர்கள். கிரேக்க, கிரேக்க நாகரிகக் கலப்பைச் சுட்டிக்காட்டுவது அதேனிய வீரன் தீஸியஸ் கதை)
நடுநிலக் கடலின் நடுவே பதித்த ஒரு மணிப்பதக்கமாகத் திகழ்வது கிரீட் தீவு. அதன் மன்னன் மினாஸ் அறிவுக்கும் வீரத்துக்கும் நேர்மைக்கும் பேர் போனவன். ஆயினும் அவன் கடல் தெய்வம் பாஸிடானின் கடுஞ் சீற்றத்துக்கு ஆளானான்.
மினாஸ் பல போர்கள் நடத்தி வெற்றி பெற்றிருந்தான். அந்த வெற்றிகளுக்காகத் தேவர்களுக்கு நன்றி தெரிவித்து விழாப் பலி அளிக்க விரும்பினான். இதுவரை எவரும் அளித்திராத சிறப்புமிக்க பலி எருது ஒன்றை அவன் நாடித் தேடினான். மினாஸ்மீது பற்றுமிக்க பாஸிடான் தெய்வீகத் தன்மையும் ஆற்றலும் அழகும் உடைய ஒரு வெள்ளெருதை இதற்காக அனுப்பிவைத்திருந்தான். அதன் அழகு மினாஸைக் கவர்ந்தது. அதன் மீதுள்ள ஆவலால், அவன் அதைப் பலியிடாமல் தனக்கென வைத்துக் கொண்டு, வேறோர் எருதைப் பலியாக வழங்கினான்.
தன்னை எமாற்றிய அன்பன் மீது பாஸிடான் கடுஞ்சினமும் பகைமையும் கொண்டான். முதலில் அவன் மினாஸின் எருது வெறிகொள்ளும்படிச் செய்தான். அது செய்த அழிவுக்கு அளவில்லை. ஆனால், இதனாலும் பாஸிடோன் சினம் தணியவில்லை. அவன் மினாஸின் மனைவியின் கருவிலிருந்தே இன்னும் கொடிய ஓர் அழிவுப் பூதத்தை உண்டு பண்ணினான். எருதின் தலையும் மனித உடலும் கொண்ட அந்தப் பூதத்தை மக்கள் எருது அல்லது மினோட்டார் என்றனர். அது ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று பயிர்களை அழித்துப் பெருந்தொல்லை கொடுத்து வந்தது.
மினாஸின் நண்பர்களுள் டேடலஸ் என்ற ஒரு அறிவிற் சிறந்த சிற்பி இருந்தான். மினோட்டாரின் அழிவு வேலையைக் கட்டுப்படுத்த, அவன் தன் கலையைப் பயன்படுத்தி ‘மருட்கோட்டம்’ என்ற ஒரு திறந்த சிறைக்கோட்டம் அமைத்தான். அதன் வெளிவாயில் கவர்ச்சிகரமாகச் செய்யப்பட்டிருந்தது. அதனுள்ளே சென்றவன் திரும்பவும் வாயில்கண்டு மீளமுடியாது. பாதைகள் பலவாகக் கிளைத்தும் சேர்ந்தும் வளைந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் சுற்றிச் சுற்றி இட்டுச் சென்றன. தோட்டங்கள், வாவிகள், குன்றுகள், புதர்கள், காடுகள் எல்லாம் உள்ளே எப்படியோ இடம் பெற்றன. உட்சென்றவர் சுற்றிச் சுற்றி வேடிக்கைப் பார்த்துத் திரிவர். மீளும் எண்ணம் வந்தாலும் மீள முடியாது அலைவர்.
மினோட்டார், இந்த வாயிலினுள் நுழைந்தபின் எதிர் பார்த்தபடியே வெளிவர முடியாமல் சுற்றிச்சுற்றித் திரிந்தது. ஆனால், அதன் அழிவு வேலைக்கு இரையாக அரசன் தன் பகைவர்களை அடிக்கடி அதனுள் செல்லும்படி தூண்டி அதன் கொடுஞ் செயல்களுக்குத் தூண்டுதல் தந்தான். அத்துடன் அவ்வப்போது அக்கோட்டத்தின் தன்மையறியாமல் அதன் அழகில் சிக்கி வேடிக்கை பார்க்க உட்சென்றவர்களும், உள்ளே திரிந்து வெளிவர முடியாமல் மினோட்டாருக்கு இரையாயினர். இது தவிர, ஆண்டுதோறும் அதற்குப் புத்தம் புதிய இரையளிக்க ஒரு தறுவாயும் மினாஸுக்கு ஏற்பட்டது.
மினாஸின் மூத்த புதல்வன் அண்ட்ராசியூஸ் சிறந்த வீரன். அதேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் கேளிக்கைகளில், தொடர்ச்சியாக எல்லாக் கேளிக்கைகளிலும் அவனே பரிசு வாங்கினான். அதேனிய மக்கள் எவருக்கும் பரிசு கிடைக்காமல் போயிற்று. இதுகண்டு அதேன்ஸ் அரசன் ஈஜியுஸ் மனம் புழுங்கிப் பொறாமை கொண்டு அவனைக் கொன்றுவிட்டான். இது கேட்ட மினாஸ் வெகுண்டு, அதேன்ஸ்மீது படையெடுத்து, அதைப்பணிய வைத்தான். தோற்ற நகரத்தார் மினோட்டருக்கு இரையாக ஆண்டுதோறும் ஏழு இளைஞரும் ஏழு இளநங்கை யரும் அனுப்ப வேண்டுமென்று அவன் கட்டளையிட்டான்.
டேடலஸின் சிற்பத் திறனும் மினாஸின் போராண்மையும் சேர்ந்து, பாஸிடான் கிரீட்டுக்குத் தந்த பழியை அதேன்ஸின் பழியாக்கிற்று. எல்லாரும் விரும்பும் இளமைப் பருவம் அதேனியருக்கு, அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும் உரிய துன்பப் பருவம் ஆயிற்று. அப்பருவத்தவரும் அதை அணுகுபவரும் எங்கே அடுத்த ஆண்டின் பலிமுறை தம்மீது வருமோ என்று அஞ்சி வாழ்ந்தனர். தேர்வின் அச்சம் ஒருபுறம் எல்லாரையும் கவலையில் ஆழ்த்திற்று. தேர்ந்தபின் தேரப்பட்டவர் உறவினரை மீளாத் துயரம் ஆட்கொண்டது. கலையாரவாரமிக்க அதேன்ஸ் நகரில் கண்ணீரும் கம்பலையும் நிலையாகத் தங்கின.
மினாஸின் புதல்வி அழகிற் சிறந்த அரியட்னே அவள் ஆண்டு தோறும் பலியாக வரும் இளைஞர் நங்கையர் துயர்கண்டு கண் கலங்கினாள். அவள் எவ்வளவு தடுத்துரைத்தும் கெஞ்சியும் மன்னன் தன் பலி முறையை நிறுத்தவில்லை. ஓராண்டு பலியாக வந்தவர் முகங்களுள் ஒன்று, வழக்கத்திற்கு மேல் அவளைக் கவர்ந்தது. அது மற்ற முகங்களைப் போலத் துயரமோ அச்சமோ உடையதாயில்லை. மணமகளைக் காணச் செல்லும் மணமகன் முகம்போல அது மலர்ச்சியுடையதாயிருந்தது.
அரியட்னேயைக் கவர்ந்த அம்முகம் அதேனிய அரசனின் ஒரே புதல்வன் தீஸியஸின் முகமே.
தன் நகர மக்கள் வாழ்வில் துன்பத்தின் சாயலைப் பரப்பி வந்த மினோட்டாரை ஒழித்துவிடத் தீஸியஸ் துடித்தான். அதற்காகத் தனக்கு வயது வரும் காலத்தை அவன் எதிர்நோக்கியிருந்தான். அந்த ஆண்டு இளைஞர்களைத் தேர்ந்து வலுக்கட்டாயமாகச் சேர்க்குமுன் அவன் தானாகவே அதில் ஒருவனாக முன்வந்தான். கிழ அரசர் ஈஜியஸ் தன் ஒரே புதல்வன் இவ்விடருக்கள் சிக்குவதை விரும்பவில்லை. ஆனால், தீஸியஸ் பிடிவாதம் பிடித்தான். “நம் மக்கள் சாக நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்பா, மேலும் நான் மினோட் டாருக்கு இரையாவதற்காகப் போகவில்லை. என்னுடன் வரும் மற்றப் பதின்மூவரைக் கூட நான் இரையாகவிடப் போவதில்லை. நானே முதலில் சென்று, மினோட்டாரைக் கொன்று அவர்களைப் காப்பேன். ஆகவே, அதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருங்கள். நான் வரும்போதே உங்களுக்கு என் வெற்றியை முன்கூட்டி அறிவிப்பேன். போகும்போது வழக்கம் போலக் கப்பலில் கருங்கொடி பறக்கும். வெற்றியுடன் நான் திரும்பி வந்தால், கருங் கொடியை மாற்றி வெள்ளைக்கொடி பறக்கவிடுவேன்” என்றான் அவன்.
மன்னன் மினாஸும் தீஸியஸின் செய்தியைக் கேள்விப்பட்டு, அவனைத் தடுத்துநிறுத்த முயன்றான். தீஸியஸ் இங்கும் தன் தன்னம்பிக்கையை எடுத்துரைத்தான். “பாஸிடான் அருளால் நான் மினோட்டாரைக் கொன்று விடுவேன்’ என்று அவன் வலியுறுத்தினான். பாஸிடானின் சீற்றத்துக்கு அஞ்சி நடுங்கியவன் மினாஸ். எனவே, பாஸிடானின் அருளில் தீஸியஸ் காட்டிய நம்பிக்கை அவன் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. அவன் உடனே தன் கைவிரலிலிருந்து ஒரு கணையாழியைக் கழற்றிக் கடலில் எறிந்து,”எங்கே பாஸிடானின் அருளால் இதை எடு பார்ப்போம்" என்றான். தீஸியன் உடனே கடலில் குதித்து அதை எடுத்துக் கொடுத்தான். அது கண்டு மினாஸின் பொறாமையும் அச்சமும் உட்பகையும் இன்னும் மிகுதியாயின.
பார்த்த உடனே தீஸியஸிடம் பற்றுக் கொண்ட அரியட்னே, அவன் வீரதீரங்கண்டு அவனிடமே தன் உள்ளத்தை ஓடவிட்டாள். இத்தகைய வீரனுக்கு மினோட்டாரை எதிர்த்தழிக்கத் தன்னாலான உதவி செய்வதென்றும், அம்முயற்சியில் அவன் உயிருக்கு இடையூறு நேர்ந்தால் தானும் அவனுடனே மாளுவதென்றும் அவள் உறுதி பூண்டாள். அதன்படியே அவள் தீஸியஸை அணுகித் தன் காதலையும் தன் உறுதியையும் தெரிவித்தாள். அழகியாகிய அவள் காதலை ஏற்பது தீஸியஸுக்குங் கடினமாகத் தோற்றவில்லை. ஆனால் மினோட்டாரை அழிக்க அவள் எப்படி உதவ முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் சிரித்தாள்.
“தீஸியஸ், நீ பெரிய வீரன்தான். துணிச்சல் மிக்கவன்தான். ஆனால் மினோட்டாரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அதை எப்படிக் கொல்லப் போகிறாய்? கொன்றால், அதன்பின் எப்படி மீண்டு வருவாய்?” என்று கேட்டாள்.
தீஸியஸிடம் இவை பற்றிய திட்டம் எதுவும் இல்லை என்பதை அவள் கண்டாள். பாஸிடானின் அருள் என்ற சொல்லைக் கேட்டு அவள் புன்முறுவல் கொண்டாள்
“அன்பரே, பாஸிடானின் அருள் இப்போது என் வடிவில் உமக்கு வந்திருக்கிறது. அது இல்லாமல் எத்தகைய வீரனும் மினோட்டாரை வெல்ல முடியாது. ஏனெனில், பாஸிடானின் அருட் கட்டளையால் கடலிலிருந்து பிறந்த மினோட்டாரை நிலஉலக வாள் எதுவும் துளைக்காது. நாளைக் காலை நாம் இருவரும் குளித்துப் பாஸிடான் கோவிலுக்குச் செல்வோம். அவர் அருளால் அவர் சிலையருகேயுள்ள வாளை உமக்கு எடுத்துத் தருகிறேன். அதன் பின் மருட் கோட்டம் செல்வோம்” என்றாள்.
அரியட்னே உதவி செய்வேன் என்றது வெறும் காதல் பசப்புரையன்று என்பதைத் தீஸியஸ் கண்டான். ஆனால், பேரிடர் தரும் பணியில் இவ்வாரணங்கை ஏன் இட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணினான். அவ் எண்ணத்தை உய்த்தறிந்தவள் போல அரியட்னே மேலும் பேசினாள்;
“சிறைக்கோட்டத்துக்குள் போன பின்தான் என் உதவி மிகுதி தேவை. நீர், மினோட்டாரின் இடத்தைத் தேடித் திரிய வேண்டும். அதில் உம் கவனம் செல்லும். ஆகவே திரும்பி வருவதற்கு வழி தெரிந்து கொள்ள வேண்டிய வேலையை நான் கவனிப்பேன்” என்றாள்.
“அப்படியா? அதற்கு நீதான் என்ன செய்யக் கூடும்? மருட் கோட்டத்திற்குள் நுழைந்தால் வெளியே வரவே முடியாது என்று நாள் கேள்விப்பட்டிருக்கிறேனே?”
“அப்படியானால் என்ன நினைத்து வந்தீர்?”
“மினோட்டாரை ஒழிப்பதுதான் என் வேலை. மற்றவற்றை அதன்பின் தானே பார்க்க வேண்டும்.”
“உங்கள் வீரத்திற்கு இத்துணிவு நல்ல சான்றுதான். ஆனால் வீரம் மட்டும் இங்கே போதாது. நீர் திரும்பிவர வழி தெரிதல் வேண்டும். அத்துடன் விரைந்து திரும்பி வர வேண்டும். காலதாமதம் நேர்ந்தால், என் தந்தையின் கையில்பட நேரும். மினோட்டாரை ஒழித்தவனை அவர் எளிதில் விடமாட்டார்.”
“அப்படியானால் இதற்கு நீதான் வழி சொல்ல வேண்டும்.”
“மருட்கோட்டத்தை அமைத்த சிற்பியின் மூளை பெரிது. ஆனால், உம் காதலால் என் மூளை அதைவிட மிகுதி வேலை செய்துவிட்டது. நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்.”
தீஸியஸ் மறுநாள் அரியட்னேயுடன் புறப்பட்டுச் சென்று பாஸிடானின் வாளுடன் மருட்கோட்டம் சென்றான். வாயில் கடந்தபின் வழி ஒன்றிரண்டாய், பலவாய், பின் ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்து பலபடியாகப் பெருகிற்று. பல நாழிகை இருவரும் வளைந்து வளைந்து சுற்றி நடந்தனர். பாதைகள் பலவிடங்களில் பெரும்பாதைகளைச் சுற்றிச் சென்றன. பல தறுவாய்களில் வந்துவிடத்துக்கே மீட்டும் வந்ததாகத் தோற்றிற்று.
இறுதியில் அவர்கள் ஒரு திறந்த இடைவெளி கண்டனர். பல பாதைகள் அங்கு வந்து சந்தித்தன. எல்லாப் பாதை யருகிலும் மனித எலும்புகள் சின்னாபின்னமாகக் கிடந்தன. மினோட்டாரின் இருப்பிடத்துக்கே வந்து விட்டோம் என்றுணர்ந்து அவர்கள் விழிப்புடன் நடந்தனர்.
ஏதோ ஒரு பாதைவழி அவர்கள் திரும்பினர். அதுவும் சுற்றிச் சுற்றி அவ்வெளியிடத்துக்கே வந்தது.
இங்ஙனம் நெடுநேரம் சென்றபின் ஒரு புதர்மறைவி லிருந்து அச்சந்தரும் உறுமல் கேட்டது. விரைவில் மினோட்டாரின் கோர உருவம் அவர்கள் முன் வந்து நின்று எக்காளமிட்டது.
மினோட்டாரின் உடல் மனித உடலாயிருந்தாலும் பருமனிலும் உயரத்திலும் மனிதனைவிடப் பெரிதாயிருந்தது. தலையும் மிகப் பெரிய காளையின் தலயைவிடப் பெரிதா யிருந்து. அதன் கண்கள் இருட்டில் புலியின் கண்களைவிட மிகவும் சிவப்பேறியதாய், தீ அழல்வதுபோல் அழன்றன. அதன் மூக்குத் தொளைகள் இரண்டிலிருந்தும் மாறிமாறித் தீயும் புகையும் பாய்ந்தன. இரும்பு போன்ற அதன் காலடிகள் பாறையை அறைந்தன.மற்போர் வீரனைப் போலக் கைகள் இரண்டையும் முட்டியிட்டு வீசிக்கொண்டு தலையையும் கொம்பையும் தாழ்த்தியவண்ணம் அது தீஸியஸ் மீது பாய்ந்தது.
அரியட்னே, மீனோட்டாரின் உருவத்தைப்பற்றிப் பலவும் கேள்விப் பட்டிருந்தும், அதை நேரே கண்டவுடன் நடுநடுங்கிச் செயலிழந்தாள்.
மினோட்டார் பாய்ந்து அருகில் வருமளவும் தீஸியஸ் அசையாமல் நின்று அருகில் வந்ததும் விலகிக் கொண்டு, அதன் கழுத்தில் வாளால் ஓங்கித் தாக்கினான். அது மினோட்டாரைக் காயப்படுத்திற்று. நோவால் அலறிக் கொண்டு அது மீண்டும் அவன்மீது பாய்ந்தது. மீண்டும் மீண்டும் தீஸியஸ் விலகி அதைத் தாக்கினான். ஆனால், கடைசித்தடவை அது மூர்க்கமாகப் பாய்வது கண்டு விலகாமல் வாளை உறுதியுடன் அதன்மீது பாய்ச்சினான். வாளின் வேகமும் மினோட்டாரின் பாய்ச்சலும் ஒருங்கு சேர்ந்து மினோட்டாரைக் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளந்தது. காடெங்கும் அதிரும் வண்ணம் அலறிப் புடைத்துக் கொண்டு அது விழுந்தது.
அரியட்னே அச்சத்தால் உணர்விழந்து ஒரு பாறைமீது சாய்ந்தாள். தீஸியஸ் தன் கைக்குட்டையால் வீசி அவளுக்கு உணர்வு வருவித்தான். புழுதி படிந்து சோர்ந்த அவள் முகத்தின் மீது பாறையொன்றின் பின்புறமாக விழும் கதிரவனின் பொன்னொளிப்பட்டு அதை மாலை நிலாப்போல மிளரச் செய்தது.
மினோட்டாரின் இறுதிக்கூக்குரல் மினாஸையே தட்டி எழுப்பியிருக்கும் என்பதை அரியட்னே அறிவாள். ஆகவே, அவள் தீஸியஸை விரைவுபடுத்தினாள். வெளியே செல்ல அவள் என்ன வழி வகுத்திருக்கிறாள் என்பதைத் தீஸியஸ் அப்போதுதான் கவனித்தான். அவள் ஒரு பெரிய உண்டை நூலைக் கொண்டு வந்திருந்தாள். மருட் கோட்டத்துக்கு வெளியே ஒரு மரத்தில் அதன் ஒரு கோடியைக் கட்டிவிட்டு, வரும்வழி நெடுக உண்டையை அவிழ்த்து நூலை நெகிழ விட்டுக் கொண்டே வந்திருந்தாள். இப்போது அவள் அந்த நூலை மீண்டும் உண்டையில் சுற்றிக்கொண்டே நூலைப் பின்பற்றி வெளியே தீஸியஸுடன் சென்றாள்.
அரியட்னேயுடன் தீஸியஸ் தன் தோழர் பதின்மூவரும் இருந்த கப்பலண்டை வந்தான். அவர்கள் அவனை எதிர்பார்க்கவில்லை. கண்டதும் மகிழ்ச்சிக் கூத்தாடத் தொடங்கினர். ஆனால், தீஸியஸ் இன்னும் அவர்களுக்கு மினாஸால் ஏற்படக்கூடும் துன்பத்தைத் தெரிவித்து, விரைந்து அதேன்ஸுக்குப் புறப்படும்படி கட்டளையிட்டான்.
வழியில் தீஸியஸ் தன் தோழர்களுக்கு அரியட்னே யார் என்பதைத் தெரிவித்து, அவள் உதவிய வகைகளையும் அவ்வுதவி யுடன்தான் மினோட்டாரைக் கொன்ற வகையினையும் விரித்துரைத்தான். அனைவரும் தீஸியஸ் வீரத்தையும் அரியட்னேயின் அரிய அறிவுக் கூர்மையையும் காதலுறுதியை யும் புகழ்ந்தனர்.
மினோட்டார் இறந்ததை அறிந்த மினாஸ், தீஸியஸையும் அதேனிய இளைஞர், நங்கையரையும் பிடித்துக் கொண்டுவர ஆட்களனுப்பினான். அவர்கள் வருமுன் அதேனியர் நெடுந்தொலை கடலில் சென்றிருந்தனர். அதேன்ஸ் நகர்மீது தனக்கிருந்த ஆதிக்கம் அகல்வது கண்டு சினந்தெழுந்த மினாஸ் இளைஞனைப் பிடிக்கச் சென்ற வீரர்களைத் தூக்கிலிட்டான்; ஆனால், தன் புதல்வி அரியட்னேகூட எதிரியுடன் சேர்ந்து ஓடியது கேட்டதே, அவன் சீற்றம் கரைகடந்தது. மருட்கோட்டத்தைப் போதுமான அளவு திறமையுடன் அமைக்கவில்லை என்று கருதி அவன் டேடலஸ்மீது பாய்ந்தான். டேடலஸும் அவன் புதல்வன் இக்காரஸும் கடுஞ் சிறையில் தள்ளப்பட்டனர்.
டேடலஸும், இக்காரஸும் தம் கலைத் திறத்தைப் பயன்படுத்தித் தப்பியோட வழிசெய்தனர். அவர்கள் கழிகளைப் பிணைத்து மெழுகு பூசி இறக்கைகள் செய்தனர். அவற்றின் உதவியால் அவர்கள் வானில் பறந்து சென்றனர். இளைஞனாகிய இக்காரஸ் இப்புதிய ஆற்றலால் மிகுதி கிளர்ச்சி பெற்று முகில் கடந்து பறந்தான். வெங்கதிரவன் ஒளி முழு வேகத்துடன் இறக்கைகளைத் தாக்கியதால் மெழுகு இளகிற்று. இறக்கைள் சிதைந்து அவன் கடலில் வீழ்ந்து இறந்தான். டேடலஸ் மட்டும் கடல் கடந்து அயல்நாடு சென்று, மகன் முடிவால் எச்சரிக்கையடைந்து, தன் கலைத் திறத்தைப் பணிவுடன் பயன்படுத்தி வாழ்ந்தான்.
தீஸியஸ் தன் வெற்றியால் செருக்கடைந்து பல இன்னல்களை வருவித்துக் கொண்டான். அரியட்னே போன்ற அறிவுடைய வெளிநாட்டுப் பெண்ணுடன் வாழ அவன் மனம் இடந்தரவில்லை. வழியில் அவர்கள் ஒரு தீவில் தண்ணீர் குடிக்க இறங்கினார்கள். அரியட்னே இளைப்பாறும் சமயம் தீஸியஸ் அவளை விட்டுவிட்டு வந்து விட்டான். அத்துடன் தந்தைக்கு அவன் கூறிய உறுதியை அவன் மறந்துவிட்டான். கப்பலில் வெள்ளைக் கொடிக்கு மாறாகக் கருங்கொடியே திரும்பி வரும் போதும் பறந்தது. கப்பல் தொலைவில் கடலில் வரும்போதே கரையிலிருந்து ஈஜியஸ் கருங்கொடியைக் கண்டான். கப்பல் கரைவரும் வரை காத்திராமல், மகன் இறந்துவிட்டான் என்ற வருத்தத்தால் அவன் உயிர் நீத்தான்.
காதலியைத் துறந்த பழி தந்தை உயிரைக் கொண்டதே என்று தீஸியஸ் கலங்கினான்.
தீஸியஸ் வாழ்க்கையின் தொடக்க வீரம் அவன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்திருந்தது. அவன் தொடக்கப் பிழைகள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்தமைந்து செய்லாற்றும் அமைதியையும், அநீதி செய்ய அஞ்சும் தன்னடக்கத்தையும் வளர்த்தன. வீரச் செயல்கள் பல புரிந்து, நாட்டில் நல்ல சட்டதிட்டங்கள் வகுத்து, அவன் அதேன்ஸின் புகழைக் கிரேக்க உலகெங்கும் அதற்கு அப்பாலும் பரப்பினான்.
தொலை கிழக்கு நாடாகிய தமிழகத்தில் அன்று வீரமிக்க பெண்டிரே ஆட்சி செய்த பகுதி ஒன்று இருந்தது. அதனைக் கிரேக்கர், பெண்கள் நாடு என்று கூறினர். அந்நாடுவரை தீஸியஸ் தன் வாள்வலியைக் கொண்டு சென்றான். ஆனால், வீரமிக்க அந்நாட்டின் பெண் படைகளை அவன் எளிதில் வெல்ல முடியவில்லை. இறுதிப் போரில் அந்நாட்டின் பெண்ணரசியான அந்தியோப்பியுடன் வாட்போர் செய்து வென்றான். பின் அவன் அவளை மணந்து கொண்டு புதுப்புகழுடன் அதேன்ஸுக்கு வந்து ஆண்டான்.
தீஸியஸ் கதை அதேன்ஸின் புராணக் கதைகளுடன் கதையாயிற்று.
ஒடிஸியஸின் அருஞ்செயல்கள்
(தமிழருக்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் போல, இந்தியருக்கு இராமாயண பாரதம்போல, கிரேக்கருக்கு இலியட், ஒடிஸி ஆகியவை, இரு தனிப்பெரும் காப்பியங்கள் ஆகும். ஒடிஸியின் கதைப் பகுதியே ஒடிஸியஸின் அருஞ்செயல்கள் என்ற இந்தக் கதை.)
கிரேக்க உலகிலேயே அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவன் ஒடிஸியஸ் தான். அவன் இதாகா என்ற சிறு தீவின் அரசன். அவன் பெயரைக் கேட்டாலே வீரரும் வேந்தரும் நடுங்குவர். ஆனால், அவன் மனைவி பெனிலோப்பிடம் அவன் பெட்டிப் பாம்புபோல் அடங்கிக் கிடந்தான்.
கிரேக்கரிடையே ஹெலென் என்ற அழகிய பெண் இருந்தாள். அவள் அகமெம்னான் என்ற பேரரசன் மனைவி. அவளை அயலினத்தானாகிய டிராய் நகர் இளவரசன் தூக்கிக் கொண்டு சென்றான். டிராய்கோட்டை கொத்தளங்களை யுடைய கடல் கடந்த பெருநகரம், தன் இனத்தின் மதிப்பைக் கெடுத்த டிராய் நகரத்தாரை வென்று ஹெலெனை மீட்டுவரக் கிரேக்கர் புறப்பட்டனர். ஒரு பெண்ணுக்காக ஏன் இவ்வளவு பேர் அழிய வேண்டும் என்று ஒடிஸியஸ் வாதிட்டுப் பார்த்தான். யாரும் கேட்கவில்லை. எனவே கிரேக்கருக்கும் டிராய் மக்களுக்கும் பெரும்போர் மூண்டது.
பத்தாண்டு முற்றுகை நடைபெற்றது. எத்தனையோ வீரர் இருபுறமும் மாண்டனர். எத்தனையோ களங்களில் செங்குருதி பெருக்கெடுத்தோடிற்று, இறுதியில் ஒடிஸியஸின் ஆழ்ந்த சூழ்ச்சித் திறத்தின் உதவியால், கிரேக்கர் வெற்றி பெற்று மீண்டனர்.
பெனிலோப்புக்கு ஒடிஸியஸ் அவள் காதலுக்குரியவனாக மட்டுமே காட்சியளித்தான். அவன் நாட்டு மக்களுக்கோ அவன் நல்ல சட்டதிட்டங்களமைத்து, தீமையகற்றி நன்மை பெருக்கிய நாட்டுத் தந்தையாக மட்டுமே தோன்றினான். அதே சமயம் உலகெங்கும் அவன் ஒப்புயர்வற்ற வீரத்தின் புகழும் சூழ்ச்சித் திறத்தின் புகழும் பரவியிருந்தன. ஆனால், ஒடிஸியஸின் உள்ளத்தின் உள்ளே இவை எதனாலும் முழு மனநிறைவு ஏற்படவில்லை. ஏதோ ஒரு குறை அவன் நெஞ்சின் ஆழ்தடத்தில் குருகுருத்துக் கொண்டிருந்தது. அது வேறு எதுவுமல்ல. உலகஞ் சுற்றித்திரிந்து, கடக்கரிய கடல்கள், அணுகுதற்கரிய தீவுகள், குகைகள் நெஞ்சத் துணுக்குறச் செய்யும் இடையூறுகள் ஆகியவற்றில் குளிக்க எண்ணி அவன் உடல் தினவெடுத்தது. டிராய் நகரிலிருந்து மீளும் வழியில், கிரேக்கருடன் சற்று நேர்வழி நீங்கிச் சுற்றித் திரிந்து, இதாகா வர அவன் எண்ணினான்.
சுற்றித் திரியும் ஆவலில்கூட அவன் பெனிலோப்பை மறந்துவிடவில்லை. அவளை விட்டுப் பிரிந்து போரிலேயே பத்தாண்டு சென்றுவிட்டது. ஆனால், பத்தாண்டு சென்ற பின் இன்னும் ஒரு அரையாண்டு கழித்துச் சென்று விடலாம் என்றுதான் அவன் நினைத்தான். பயணத்திடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவ்வெல்லை கடந்து அவனை அலைய வைத்தன.
நெடுநாள் கடலில் அலைந்தும் நேர்வழியில் செல்லாத தால், அவர்கள் உணவு; உடை, தண்ணீர் வசதியில்லாமல் அவதிப்பட்டார்கள். ஆகவே, அவர்கள் ஒரு தீவிலிறங்கி சிகான் என்ற நகரில் புகுந்து தமக்கு வேண்டிய பொருள்பெற எண்ணினார்கள். அங்குள்ள மக்கள் எதுவும் தர மறுக்கவே, போர் மூண்டது. பல நாள் போர் செய்து இருபுறமும் அலுத்தபின், சந்துபேசி, சில பொருள்களே பெற்று மீண்டும் பயணம் புறப்பட்டனர்.
சிகான் தீவு ஒன்றிரண்டு நாள் கழிந்தபின் கொடுங்காற்று ஒன்று வந்து அவர்களைத் தெற்கே இழுத்துச் சென்றது. காற்று விரைவில் தென்றலாக மாறிற்று. இளவெயிலும் இளநிலவும் சேர்ந்து எறிந்தன. இவ்விடத்தில் இறங்கிச் சற்றுத் தங்கிப் போகக் கிரேக்கர் துடித்தனர்.
அந்தத் தீவுக்குத் தாமரைத் தீவு என்று பெயர். அங்கே மாலைப் பொழுதும் தென்றலும் இளவெயிலும் இளநிலவும் மாறாதிருந்தது. எங்கும் தாமரை பூத்துக் குலுங்கிற்று. அங்குள்ள மக்கள் யாவரும் தாமரை இதழையும் பூந்துகளையும் உண்டு, தாமரைத் தேனைக் குடித்துச் செயலற்று அரைத்துயிலில் ஆழ்ந்திருந்தனர். முதலில் சென்ற கிரேக்கர் தாமரை யிதழுண்டு துயிலில் ஆழ்ந்தனர். அதுகண்ட ஒடிஸியஸ் தாமரையைத் தின்னாமல் தன்னை அடக்கிக் கொண்டதுடன், தோழர்களையும் அரும்பாடு பட்டுத் தடுத்தான். துயின்ற தோழரையும் இழுத்துத் தூக்கிக் கொண்டு, அவர்கள் கலங்களிலேறி விரைந்து கடந்தார்கள்.
கடலில் அவர்கள் வழிதவறித் திசை தெரியாது சென்றார்கள். நெடுநாளாகக் கரையே காணவில்லை. பசியும் நீர் வேட்கையும் கடலோடிகளைக் கலக்கின. கடைசியில் இனிய நீரூற்றுகளும் கனி மரங்களும் நிறைந்த ஒரு மிகப் பெரிய தீவைக் கண்டனர். அனைவரும் மனமகிழ்ச்சியுடன் அதில் உண்டு பருகி உறங்கினார்கள். இரவு கழிந்ததும் அவர்கள் எங்கும் சுற்றிப் பார்வையிட்டனர். அங்குள்ள காலடித்தடங்கள் மனிதர் காலடித் தடங்களை விட எவ்வளவோ பெரிதாயிருந்தன. தடங்கள் சென்ற வழிகளில் ஒன்றைப் பின்பற்றி அவர்கள் ஒரு பெரிய குகையை அடைந்தனர். தோழர்கள் உள்ளே செல்ல அஞ்சினார்கள். ஆனால், ஒடிஸியஸ் துணிந்து முன் சென்றான். அவர்கள் பின் சென்றனர். அங்கே ஆடுகள் கும்பு கும்பாக நின்றன. கிரேக்கர் சிலர் ஆவலுடன் அவற்றில் பால் கறந்து குடித்தனர்.
குகையில் அவர்கள் நெடுநேரம் மனமகிழ்ச்சியுடன் இருக்கவில்லை. அதற்குள் தடாலென்ற பெருத்த ஓசை கேட்டது. அதை அடுத்து, மனிதரைப் போல இரண்டு மூன்று பங்கு உயரமுள்ள ஒரு கோர உருவம் அவர்களை அணுகிற்று. அதன் முகத்தில் கண்கள் இருக்குமிடத்தில் எதுவுமில்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு பெரிய கண் இருந்தது. அந்த உருவத்தைக் கண்ட கிரேக்கரனைவரும் நடுநடுங்கினர். தப்பி ஓட வழியில்லை. ஏனென்றால் வரும்போதே உருவம் ஒரு பெருங்கல்லால், குகை வாயிலை அடைத்தது. அந்த ஓசையைத்தான் அவர்கள் முதலில் கேட்டனர். அந்தத் தீவு சைக்கிளப்ஸ் என்ற அரக்கரினத்தவர் வாழ்ந்த இடம். அவர்கள் எல்லாருக்கும் ஒரே ஒரு நெற்றின்கண் தான் உண்டு. அவர்கள் மனிதரை உணவுடன் உணவாக உண்பவர்கள். கிரேக்கர்கள் புகுந்த குகையிலுள்ள சைக்கிளப்ஸ் அவர்களைக் கண்டதும், இரண்டொருவரைப் பிடித்து, இரவு உணவுடன் வைத்து உண்டான். இதைக்கண்ட மற்றக் கிரேக்கர்களின் உடலின் எண் சாணும் ஒரு சாணாகக் குறுகிற்று. தம்மை உள்ளே இழுத்து வந்ததற்காக அவர்கள் ஒடிஸியஸைத் திட்டலாயினர்.
உடலில் வலிமையால் சைக்கிளப்ஸை வெல்ல முடியாது என்று ஒடிஸியஸ் கண்டான். அவன் மூளை வேலை செய்தது. அவன் ஒரு திட்டத்தை வகுத்தான்.
அந்தக் குகையிலுள்ள சைக்கிளப்ஸின் பெயர் பாலிஃவீமஸ். ஒடிஸியஸ் அவனுக்குத் தன்னிடமுள்ள தேறல் வகையில் சிறிது கொடுத்துக் குடிக்கச் செய்து நட்பாடினான். அந்த மகிழ்ச்சியில் பாலிஃவீமஸ் அவனைக் கூடிய மட்டும் கடைசியாகவே கொல்வதாக வாக்களித்தான். அத்துடன் நண்பனென்ற முறையில் அவன் ஒடிஸியஸின் பெயர் அறிய விரும்பினான்.
ஒடிஸியஸ் குறும்பாக, “என் பெயர் யாருமில்லை” என்றான்.
பாலிஃவீமஸ் அன்று முதல் அவனை ‘யாருமில்லை!’ என்றே அழைக்கத் தொடங்கினான். தம் நடுக்கத்திடையேகூட கிரேக்கர் அது கேட்டுச் சிரித்தனர். ஆனால், அப்பெயரின் முழு நகைச்சுவையையும் அவர்கள் அப்போது அறியவில்லை.
ஓய்வு நேரங்களில் ஒடிஸியஸும் தோழர்களும் ஆடு மேய்க்கச் சைக்கிளப்ஸ் வைத்திருந்த கழிகளில் ஒன்றைக் கூராகச் சீவித் தீயில் வாட்டி வைத்துக் கொண்டனர். ஒருநாள் பாலிஃவீமஸ் உள்ளே வந்தபோது குகைவாயிலை அடைக்க மறந்துவிட்டான். அதற்காகவே காத்திருந்தனர் கிரேக்கர். அன்று உண்டு குடித்து அவன் படுத்தபின், அவர்கள் கூரிய கழியைத் தூக்கி அவன் ஒற்றைக் கண்ணில் குத்தி அழுத்திவிட்டனர். அவன் சாகவில்லை. ஆனால், நோவு பொறுக்காமல் அலறிக் கொண்டு அவர்களைப் பிடித்து நொறுக்க நாலுபுறமும் தடவினான்.கண் தெரியாத நிலையில் அவன் தன் உறவினர்களைக் கூவி அழைத்தான். கிரேக்கர் என்ன நேருமோ என்று குகையின் மூலைகளில் பதுங்கினர்.
பல சைக்கிளப்ஸ்கள் வெளியே வந்து நின்று, “என்ன பாலிஃவீமஸ், என்ன?” என்று கூவினர்.
“என்னைக் கொன்றுவிட்டான், என்னைக் கொன்று விட்டான்!” என்று கூவினான் பாலீஃவீமஸ்.
“யார் கொன்றது, கொன்றது யார்?” என்று கடுஞ் சீற்றத்துடன் அவர்கள் கேட்டார்கள்.
“யாருமில்லை, யாருமில்லை” என்றான் பாலிஃவீமஸ்.
கொன்றது யாருமில்லை என்றால், இரவில் இப்படிக் கூவித் தங்கள் உறக்கத்தைக் கெடுப்பானேன் என்று சைக்கிளப்ஸ் சலித்துக் கொண்டனர். அவன் குடித்து உளறுகிறான் என்று நினைத்து அவர்கள் தங்கள் தங்கள் குகைக்குச் சென்று விட்டார்கள்.
ஒடிஸியஸ் ‘யாருமில்லை’ என்ற பெயர் கூறியதன் முழுநகைத் திறத்தைக் கிரேக்கர் அப்போதுதான் உணர்ந்தார்கள்.
பாலிஃவீமஸுக்கு இப்போது பாறை திறந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவன் வாயிலை அடைத்து உட்கார்ந்து கொண்டான். வெளியே போகும் ஆடுகளை மட்டும் ஒவ்வொன்றாக மேயச் செல்லும்படி விட்டான்.
ஒடிஸியஸ் ஆடுகளை மூன்று மூன்றாக இணைத்து அவற்றினடியில் ஓரிரு கிரேக்கர்களைக் கட்டி அனுப்பி விட்டான். தானும் இவ்வாறே வெளியே போய் விட்டான்.
கலங்களில் ஏறியபின் கிரேக்கரால் தம் வெற்றிக் களிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள், “வென்றது ஒடிஸியஸடா, ஒடிஸியஸ்; யாருமில்லை என்று இனிச் சொல்லாதே” என்று கூவினர்.
பாலிஃவீமஸ் தான் ஏமாந்தது கண்டு பின்னும் கூக்குரலிட்டுக் கொண்டு கடற்கரைக்கு வந்து மலை போன்ற கற்களை வீசி எறிந்தான். மற்ற சைக்கிளப்ஸ்களும் இதற்குள் வந்து அரையளவு ஆழம் கடலில் இறங்கி வந்தும் கல் வீசியும் பார்த்தனர். அவர்கள் அரையளவு என்பது மூன்று நான்கு ஆள் ஆழமாதலால், கிரேக்கர் கலங்களுக்கு அவர்கள் கற்கள் மிகவும் இடையூறு விளைவித்தன. ஒன்றிரண்டு கலங்கள் கவிழ்ந்தன. மீந்தவற்றுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலைகளைத் தண்டுகளால் உகைத்துக் கொண்டு கிரேக்கர் தப்பிச் சென்றனர்.
ஈயோலஸ் என்ற அரசன் நாட்டிற்குக் கிரேக்கர் சென்றபோது அவன் அவர்களை விருந்தினராக ஏற்று அன்பு காட்டினான்.
ஐயை என்ற தீவில் மனிதரைவிட மிகவும் நெட்டையான ஸிர்கே என்ற மாயப்பெண் இருந்தாள். அவள் மிக இனிமையாகப் பாடுவாள். பாட்டில் மயங்கியவர்களுக்கு வசியமருந்திட்ட இனிய குடிதேறலுங் கொடுத்து, அதன்பின் தன் மந்திரக் கோலால் தட்டி அவர்களை அவள் பன்றிகளாக்கி மகிழ்வாள். கிரேக்கர்களில் முதலில் சென்ற சிலர் இவ்வாறு பன்றியாகி விட்டனர். இதுகண்ட ஒடிஸியஸ் தன் குடித்தெய்வமான ஹெர்மிஸை வேண்டினான். ஹெர்மிஸ் அருளால் மாயத்திலிருந்து தப்பி, ஸிர்கேயிடம் தன் வாள் வலிமையைக் காட்டினான். அவள் அவனுக்கு அடங்கி நட்பாடி, பன்றியான கிரேக்கரை மீண்டும் கிரேக்கராக்கி அனுப்பினாள். கடலகத்தில் இன்னும் ஏற்படக்கூடும் பல இடையூறுகளையும் அவற்றிலிருந்து தப்பும் நெறிகளையும் ஸிர்கே, ஒடிஸியஸுக்குச் சொல்லி உதவினாள்.
கடலின் ஒரு பக்கத்தில் பாறைகளிடையே ஸிரன்கள் என்ற கடலணங்குகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அழகிய உருவமும் இனிய குரலும் உடையவர்கள். அவர்கள் பாட்டு எவரையும் மயக்கவல்லது. ஆனால், மயங்கியவர்களை அவர்கள் பிடித்துத் தின்றுவிடுவர். ஒடிஸியஸ் முன்பே ஸிர்கேயால் இந்த இடையூற்றை அறிந்தவனாதலால், தன் தோழர்கள் காதுகளை மெழுகினால் அடைத்துவிட்டான். தன்னையறியாமல் தான் பாடலணங்குகளிடம் செல்லாதபடி தன்னைப் படகுடன் கட்டி வைத்துக் கொண்டான்.
பாலணங்குகளைக் கடந்த சில நாட்களுக்குள், விழுங்கு பாறையை அவர்கள் அணுகினர். ஒரு கடலிடுக்கு வழியாகக் கப்பல்கள் வரும்போது, இருபுறமும் உள்ள பாறைகள் வந்து அவற்றை நெரித்து அழித்துப் பின் பழைய நிலைக்கு வந்துவிடுவது வழக்கம். ஒடிஸியஸ் முதலில் ஒரு பறவையை முன்னால் பறக்கவிட்டான். பாறைகள் நெருங்கிப் பறவையைக் கொன்றது. அதன் பின் பாறைகள் விலகின. இச்சமயம் பார்த்து ஒடிஸியஸ் தோழருடன் வேகமாக அக்கடலிடுக்கைக் கடந்தான்.
மற்றோரிடத்தில் கடலின் ஒருபுறம் ஸில்லா என்ற ஆறு தலை அரக்கன் கப்பல்களை விழுங்கக் காத்திருந்தான். எதிர்ப்புறம் அவனுக்குத் தப்பிச் செல்பவர்களை விழுங்கச் சாரிப்டிஸ் என்ற ஒரு நச்சுச்சுழி காத்திருந்தது. ஆறுதலை அரக்கனுக்குக் கிரேக்கரில் சிலர் இரையாயினர்; சுழிக்கும் சிலர் இரையாயினர். ஆனால், இருபுறமும் அழிவு நடக்கும் நேரத்தில் இடைவழியில் ஒடிஸியஸும் தோழர் சிலரும் தப்பிச் சென்றனர்.
திரினேஸியா என்ற தீவில் அவர்கள் ஓரிரவு தங்கினர். இந்தத் தீவிலுள்ள ஆடுகள் தெய்வீக ஆடுகளாதலால், அவற்றைக் கொன்றால் பெருங்கேடு விளையும் என்று ஸிர்கே எச்சரித்திருந்தாள். ஆனால், ஒடிஸியஸ் உறங்கும்போது கிரேக்கர் ஆடுகளைக் கொன்று தின்றனர். இதன் பயனாகக் கடல் வழி முழுவதும் கொந்தளிப்பாயிற்று. கிரேக்கர் அனைவரும் அதில் மாண்டனர். ஒடிஸியஸ் மட்டும் மிதக்கும் பாய் மரத்தில் தப்பிச் சென்று, காலிப்லோ என்ற தெய்வ மாதின் உதவியால் கரை சேர்ந்தான்.அத் தெய்வமாது ஒடிஸியஸிடம் காதல் கொண்டிருந்ததால், எட்டாண்டாகியும் அவனை விட்டுப்பிரிய மனமில்லாது, அவனைத் தன்னுடன் வைத்துக் கொண்டாள். ஆனால் எட்டாண்டுகளின்பின் ஒடிஸியஸ் வேண்டு கோளுக்கிரங்கி அவள் அவனைத் தன் நாட்டுக்கு அனுப்பினாள்.
கடைசியாக மீட்டும் ஒரு தடவை ஒடிஸியஸ் கப்பலுடைந்து அவன் உயிருக்கு ஊசலாடினான். ஆனால் இங்கும் வெள்ளாடையுடுத்த ஒரு பெண் அவனைக் காப்பாற்றினாள். அவள் அந்நாட்டு அரசன் அல்ஸினஸின் புதல்வி நாசிகா. அவளுதவியும் அவள் தாய் தந்தை உதவியும் பெற்று ஒடிஸியஸ் தன் நாடாகிய இதகா வந்து சேர்ந்தான்.
இதகா வந்து சேர்ந்தும்கூட ஒடிஸியஸின் இடையூறு களுக்கு ஒரு முடிவு வரவில்லை. கிரேக்கரின் குல தெய்வமாகிய அதேனெ அவன் முன் தோன்றி மனைவியை நேரே பார்க்கச் செல்லக்கூடாது என்று தடுத்தது.
கணவன் வரவைக் கணந்தோறும் ஒவ்வொரு கணமாக எண்ணிப் பொறுமையுடன் காத்திருந்தாள் பெனிலோப். கணமும் நாழிகையும், நாளும் வாரமும் மாதமும் ஆண்டும் உருண்டுருண்டோடின. ஆனால், அவள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் எல்லோரும் நம்பிக்கை இழந்தனர். ஆண்டுகள் பத்தும் எட்டும் சென்றன; அவளை இனி யாரும் மணக்கலாம் என்று எண்ணிப் பல வீரர் வந்து மொய்த்தனர். அவளால் அவர்களுக்குத் தக்க மறுமொழியும் கூறமுடியவில்லை. தடையும் செய்ய முடியவில்லை. கணவனைத் தவிர எவரைக் கண்டாலும் அவளுக்குள் தோன்றும் தன் கடுஞ் சீற்றத்தையும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் எல்லாரையும் தடுத்து நிறுத்த அவள் ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் தன் கணவன் திரும்பி வந்தவுடன் தருவதற்காக ஒரு கைக்குட்டையில் அழகான பின்னல் பூ வேலை செய்து வந்தாள். தன் மறுமணத்துக்காகவே அதைப் பின்னுவதாக அவள் கூறினாள். “இது முடிந்தவுடன் யாரைத் திருமணம் செய்வது என்று உறுதி செய்வேன்” என்று சொல்லி அவள் நாள் கடத்தினாள். ஒவ்வொரு நாள் செய்த வேலையும் இரவு அழிக்கப்பட்டதால் நாட்கள், மாதங்கள் கழிந்தன.
இறுதியில் கணவன் வராத சீற்றத்தால், அதை முடித்து விட்டாள். பின்னும் அவன் நாட்கடத்தச் சூழ்ச்சி செய்தாள். ஒடிஸியஸின் போர்க் கோடரிகள் பன்னிரண்டை அவள் நிலத்தில் அகல அகல நட்டு வைத்தாள். ஒவ்வொரு கோடரியிலும் ஒரு சிறுதொளை இருந்தது. ஒரே அம்பைப் பன்னிரண்டு கோடாரியின் தொளைகளிலும் செல்லுமாறு எய்பவனைத் தான் மணப்பதாக அவள் கூறினாள்.
ஒடிஸியஸ் தவிரவேறு எவராலும் இதைச் செய்ய முடியாது என்பதை பெனிலோப் அறிந்திருந்தாள். எவரும் தன்னை யடையாதபடி செய்யவே அவள் இச் சூழ்ச்சியை வகுத்திருந்தாள்.
ஒடிஸியஸ் இத்தனையையும் கேள்வியுற்றான். ஆண்டுகள் பல ஆனதாலும், பல இன்னல்களுக்குத் தான் ஆளானதாலும், தன்னைத் தன் மனைவி அடையாளம் காண முடியாது என்பதையும் அதேனெ கூறியிருந்தாள். கணவன் தவிர எவன் அவளை அடுத்தாலும் அவள் கடுஞ் சினத்துக்கு ஆளாக வேண்டிவரும். உலகின் எல்லா இடர்களையும் வென்ற ஒடிஸியஸ், பெனிலோப் ஒருத்தியின் சீற்றத்துக்கு அஞ்சினான். ஆகவே, அவன் அவளை மணந்து கொள்ளப் போட்டியிடும் வீரருள் ஒருவனாய்த் தன் மாளிகையில் புகுந்தான்.
முதலில் அவன் மாளிகையின் வாயில்களை எல்லாம் அடைத்து விட்டான். எல்லா வீரரும் அம்பெய்து தோற்றதும் அவன் கோடரிகளினூடாகத் தன் அம்பைச் செலுத்தினான். வீரரெல்லாம் திகைத்து நின்றபோது, அவன் அம்புகள் அவர்கள் மீது பாய்ந்தன. வெளியே கதவுகள் அடைத்திருந்ததால், அவர்கள் ஓட முடியாமல், அடைபட்டு அம்புக்கு இரையாயினர்.
பெனிலோப் இப்போதும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தன் கணவனை ஒத்த ஒரு வீரன் எவனோ எங்கிருந்தோ வந்து, தன் நம்பிக்கையைக் குலைத்துத் தன் கையைப் பற்றத் துணிந்து விட்டான் என்று மட்டுமே அவள் கருதினாள். அவள் அடுப்பங்கரையில் கையாடிக் கொண்டிருந்த அகப்பைக் கோலைச் சுழற்றிக் கொண்டு ஒடிஸியஸ்மீது பாய்ந்தாள்.
ஒடிஸியஸ் தன் முழு அறிவுத் திறத்தையும் இப்போது காட்டினான். தான் ஒடிஸியஸின் தூதுவன் என்று கூறி அவள் சீற்றம் தணிந்தபின் மெல்லத் தன் நீண்ட பயணக் கதையைக் கூறித் தானே ஒடிஸியஸ் என்று அறிவித்து முடித்தான். சீற்றம் தணிந்தும் பெனிலோப்பின் ஐயம் அகலவில்லை. அதன்பின் ஒடிஸியஸ் பெனிலோப்பைத் தான் காதலித்த நாள் முதற்கொண்டு தம்மிடையே நிகழ்ந்த ஒவ்வொரு செய்தியையும் கூறினான். இப்போது பெனிலோப் அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. உலகஞ் சுற்றிய வீரனை அவனுக்காக இத்தனை நாள் ஓயாது துடிதுடித்துக் காத்திருந்த கைகள் வளைத்தணைத்துக் கொண்டன.
ஒடிஸியஸின் வீரச் செயல்களையும் வெற்றிகளையும் கிரேக்க உலகம் பாடிப் புகழ்ந்தது.
பொன்மறித்தேட்டம்
(பொன்மறி என்பது பொன்மயமான கம்பிளியாடு, அதன் கம்பிளியைக் கைப்பற்றக் கிரேக்க வீரர் ஐம்பதின்மர் செய்த கடுமையான பயணம் கிரேக்க இலக்கியத்தில் பேர் போனது. பொன் அக்காலத்தில் எவ்வளவு அரும்பொருளா யிருந்தது என்பதையும் அதுபற்றி மக்கள் காட்டிய வியப்பார் வத்தையும் இக்கதை காட்டுகிறது. அத் தொல்பழங்காலத்தில் தமிழகத்தில் மட்டுமே தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது.)
பொன்முகிலின் இறைவியாகிய நெஃவேலேயை, அதமஸ் என்ற வேந்தன் மணந்து ஒர் ஆணையும் பெண்ணையும் குழந்தைகளாகப் பெற்றான். அதன்பின் அவன் அவளைப் புறக்கணித்து இனோ என்ற இரண்டாம் மனைவி ஒருத்தியை மணந்து கொண்டான். இனோவின் தீயுரை கேட்டு அரசன் தன் குழந்தைகளைக் கொல்லப் புகுந்தான். நெஃவேலே வெகுண்டு, நாட்டின்மீது பஞ்சத்தை ஏவிவிட்டதுடன், பொன்மறி யொன்றை அனுப்பிப் பிள்ளைகளைக் காப்பாற்றச் செய்தாள்.
பிள்ளைகளை முதுகிலேற்றிக் கொண்டு பொன்மறி வான்வழியாகப் பறந்து கால்சிஸ் என்ற நகரம் சென்றது. பெண் குழந்தை வழியில் நழுவிக் கடலில் விழுந்துவிட்டது. ஆனால், ஆண் குழந்தையைக் கால்சிஸ் அரசன் ஏற்று, பொன்மறியையும் கோயிலில் பலியிட்டான். அதன் பொன்மயமான கம்பிளி ஒரு மரத்தின்மீது தொங்கவிடப் பட்டது. நெஃவேலேயின் கட்டளைப்படி என்றும் உறங்காத ஒரு வேதாளம் அதைக் காத்து வந்தது.
கிரேக்க உலகெங்கும் பொன்மறியின் பொன்மயமான கம்பிளியின் புகழ் பரவிற்று. மனிதர் கனவிலும் கைப்பற்றக் கருத முடியாத ஒரு பொருளாக அது எல்லோராலும் குறிக்கப் பட்டிருந்தது. அதை அடையும் முயற்சிக்கு ஜேஸன் என்ற இளைஞன் ஒருவனே முன் வந்தான்.
ஜேஸன் - இயோல்கஸ் என்ற நகரின் அரசனான ஐஸன் புதல்வன். ஐஸனின் உடன் பிறந்தானான பீலியஸ் அவன் மீது மிகவும் பொறாமை கொண்டவன். அவன் அண்ணனின் இளம் புதல்வனைக் கொன்று தானே அரசைக் கைக்கொள்ளச் சூழ்ச்சி செய்தான். இதை அறிந்த ஐஸன், தன் சிறு புதல்வனை யாருமறியாமல் சிரான் என்ற தன் நண்பனிடம் அனுப்பி வித்தான். அண்ணனைச் சிறையில் அடைத்துவிட்டுத் தம்பி அரசைக் கைக்கொண்டு ஆண்டான்.
சிரான் பல ஆண்டுகள் ஜேஸனைத் தன் புதல்வன் போலப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தான். அரசுரிமைக்கு வேண்டிய எல்லாக் கலைகளையும் அவனே கற்பித்தான். ஜேஸன் கட்டிளைஞனாகி அரசுரிமைக்குரிய பருவத்தை அடைந்தான். அப்போது சிரான் அவனை அழைத்து, “மைந்தனே, உன் தந்தை இயோல்கஸ் நகரின் அரசர். உன் சிற்றப்பன் பீலியஸ் அவரை எதிர்த்து நாட்டைக் கைப்பற்றியிருக்கிறான். ஆனால், நீ இங்கு வளர்வது அவனுக்குத் தெரியாது. மக்கள் அவனை வெறுக் கிறார்கள். நீ இப்போது போனால், அவன் ஆட்சியை உன்னிடம் ஒப்படைத்து விடுவான் என்றே நினைக்கிறேன். போய் அரசு கைக்கொண்டு ஆளுக, தெய்வங்கள் உன்னைக் காப்பாற்றட்டும்” என்று வாழ்த்துக்கள் பலகூறி வழியனுப்பினான்.
ஜேஸன், இயோல்கஸ் செல்லம் வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. அதை அவன் கடக்க முனைந்தான். அச்சமயம் ஹீரா என்ற வானவர் பெருந்தேவி ஏலமாட்டாக் கிழவியுருக் கொண்டு, ஆற்றைக் கடக்கத் தனக்கு உதவும்படி மன்றாடினாள். இரக்க உள்ளங்கொண்ட ஜேஸன் அவ்வாறே செய்தான். ஆறு கடந்ததும், தேவி தன் உருக்காட்டி அவனை வாழ்த்திச் சென்றாள்.
சிரான் எதிர்பார்த்ததுபோல் பீலியஸ் அரசிருக்கையை எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை. எவராலும் செய்ய முடியாத ஏதேனும் ஓர் இடர்பொறியான காரியத்தில் அவனை மாட்டி ஏமாற்றவே அவன் விரும்பினான். ஆகவே, “பொன்மறியின் கம்பிளியை என்னிடம் கொண்டு வந்து கொடு; நான் அதன்பின் அரசுரிமை தருகிறேன்” என்றான்.
ஜேஸன் பொன்மறியைப் பற்றி அதுவரை ஒன்றும் கேள்விப்பட்ட தில்லை. அதுபற்றி உசாவினான். யாருக்கும் அதுபற்றி ஒன்றும் தெரிய வில்லை. “அதை அடைவது எவருக்கும் கைகூடாத ஒரு செயல்; பீலியஸ் அதைக்கூறி ஏமாற்றவே பார்க்கிறான்” என்று பலரும் தெரிவித்தனர். கைக்கூடாதது என்று எதையும் கருத இளைஞனான ஜேஸனின் உள்ளம் மறுத்தது. எப்படியும் பொன்மறியின் பொன்மயமான கம்பிளியைத் தேடுவது என்று கச்சைக் கட்டிக் கொண்டான். அவன் உறுதி கண்டு எல்லாரும் திகைப்படைந்தனர்.
பொன்மறியைத் தேடுவதற்கான பயணம் இதுவரை உலகில் எவரும் செய்திராத நெடும்பயணமாயிருந்தது. அதனைச் செய்து முடிக்க, உலகில் இதுவரை இல்லாத வகையில் வலிமையும் விரைவும் வாய்ந்த கப்பலொன்று வேண்டியிருந்தது. எத்தகைய இடையூற்றுக்கும் அஞ்சாத வீரத் தோழரும் தேவைப்பட்டனர். இவ்விரண்டு ஏற்பாட்டையும் பெறுவதில் ஜேஸன் சில நாட்கள் போக்கினான்.
இப்பெருங்கப்பலைக் கட்டுவதற்கு ஆர்கோஸ் என்ற அருந்தச்சன் முன்வந்தான். அவன் பெயரையே கப்பலுக்கு இடுவதாக ஜேஸன் கூறியதால், தச்சன் தன் முழுத் திறமையையும் காட்டினான். வலிமைமிக்க பெருமரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டன. பலநாள் பல ஆட்கள் ஒத்துழைப்புடன் கப்பல் கட்டி முடிந்தது. அதன் வலிமை, அழகு, விரைவு ஆகியவற்றை எல்லாரும் புகழ்ந்தனர். ஆர்கோநாவம் என்ற அதன்பெயர் எங்கும் பரந்தது.
ஜேஸனின் துணிச்சலையும் கப்பலின் பெயரையும் கேட்டுக் கிரேக்க உலகின் தலைசிறந்த வீரர் பலர் நீ முந்தி நான் முந்தி எனக் கப்பலில் உடன் செல்ல முன்வந்தனர். ஜேஸன் அவர்களில் பேர்போன வீரர்களாக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்தான். ஹெராக்ளிஸ், காஸ்டர், பாலடியூஸிஸ்; மெலீகர், பீலியஸ், லின்ஸியஸ் முதலிய பல மாவீரர் அவர்களிடையே இருந்தனர். தவிர யாழிசையால் கல்லும் உருகப் பாடவல்ல ஆர்ஃவியூஸும் அவர்களுள் ஒருவனாயிருந்தான்.
ஆர்கோநாவத்தின் புகழும், அதன் வீரர்களும் ஜேஸனும் மேற்கொண்ட பெரும் பயணத்தின் புகழும் அவர்களுக்கு முன்னே சென்றிருந்தது. பெண்களே முழுவதும் நிறைந்திருந்த லெம்னாஸ் தீவின் அரசியும், ஸிஸிகஸ் தீவின் அரசனும் அவர்களை வரவேற்று இனிது நடத்தினர்.
ஆயினும் தற்செயலாக வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சி பிந்திய தீவில் நிகழ்ந்தது. ஸிஸிகஸ் தீவின் அரசனிடமிருந்து விடைபெற்று அவர்கள் மீண்டபின், புயல் அவர்கள் கப்பலைத் திரும்பவும் ஸிஸிகஸ் தீவில் கொண்டு வந்தது. அப்போது இருட்டாயிற்று; தாங்கள் திரும்பவும் முன்பு விட்டுச் சென்ற தீவுக்கே வந்ததாக கிரேக்கர் அறியவில்லை. தீவிலுள்ள மக்களும் அவர்கள் தம் நண்பர்களென்பதை அறியாமல், யாரோ கொள்ளைக் கூட்டத்தினர் என்று நினைத்துத் தாக்கினர். கடுங் கைகலப்பு ஏற்பட்டது. அதில் தீவின் அரசன் இறந்தான். விடிந்து தன் பிழையை உணர்ந்த கிரேக்கர் மிகவும் வருந்தினர்.
மிஸியா என்ற தீவில் ஒரு நறுநீர் ஊற்றண்டை நீரருந்தச் சென்ற போது, ஜேஸன் தோழருள் ஒருவன் திடீரென மறைந்துவிட்டான். அவனை அவர்கள் எங்கும் தேடியும் காணாமல் திரும்பிச் சென்றனர். நீரூற்றினுள் வாழ்ந்த ஒரு நீரரமங்கை அவன் அழகில் சிக்கி, அவனை உள்ளிழுத்துக் கொண்டது அவர்களுக்குத் தெரியாது.
சில நாட்களுக்குப் பின் அவர்கள் அரக்கரிடையே அமிக்கஸ் என்ற பெயருடைய ஒரு மற்போர் வீரன் வாழ்ந்த பகுதியில் இறங்கினர். அவன் வந்தவர்களுடனெல்லாம் மற்போரிட்டான். அவர்கள் தோற்றால் அவர்களை மரங்களில் கட்டி வைத்து உணவில்லாமல் சாகடித்து வந்தான். கிரேக்கருள்ளும் பலர் இங்ஙனம் கட்டுண்டனர். ஆனால், கிரேக்கருக்குள் பாலிடியூஸஸ் என்ற சிறந்த மல்லன் இருந்தான். இதை அமிக்கஸ் எதிர்பார்க்க வில்லை. அமிக்கஸ் தோற்றான். உடனே பாலிடியூஸஸ் அவனைப் பிடித்து மரத்தில் கட்டிவிட்டுப் கிரேக்கரனைவரையும் விடுவித்தான். இதுவரை எல்லாருக்கும் அமிக்கஸ் கொடுத்த தண்டனையைத் தன் இடத்திலேயே அவன் அடைந்தான்.
கிரேக்கர்கள் கருங்கடற் கரையிலுள்ள ஸால்மி டெஸ்ஸஸ் என்ற நகருக்கு வந்த போது, அங்குள்ள கண்குருடான அரசர் ஃவினியஸைப் பற்றிக் கேள்விப்பட்டனர். கால்சிஸ் செல்லும் வழியைப் பற்றியும் பொன்மறியை நாடிச் செல்பவர்களுக்கு நேரும் இடர்களைப் பற்றியும் வேறு எவரையும்விட அவனுக்கே மிகுதி தெரியும் என்று அவர்கள் அறிந்தனர். ஜேஸன் தன் தோழர்களுடன் அவனை அணுகித் தன் முயற்சிக்கு உதவியளிக்கும்படி வேண்டினான்.
“கட்டாயம் உதவி செய்கிறேன். ஆனால், முதலில் நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் நான் உண்ண உட்காருவதற்குள் கழுகுகள் வந்து என் உணவை உட்கொண்டு விடுகின்றன. இதனால் என்றும் நான் முக்காலைப் பட்டினியாய் இருந்து வருகிறேன். அந்தக் கழுகுகளை ஒழித்து எனக்கு உதவுங்கள்” என்று அவன் கேட்டான்.
ஜேஸன் இவ்வேலையை மிக எளிதில் செய்து முடித்தான். முதல் நாளிலேயே கழுகுகளில் அவன் அம்புகளுக்கு இரையாயினவைபோக மிகச் சிலவே மீண்டன. மறுநாள் வந்த ஒன்றிரண்டும் வீழ்ந்தபின் ஃவினியஸின் உணவு மேடை பக்கம் ஈ கூட ஆடவில்லை. ஃவினியஸ் மகிழ்ந்து பயணத்துக்கு வேண்டிய எல்லா விவரங்களும் சொன்னான்.
கருங்கடலுக்குச் செல்லும் ஒரு நுழைவாயில் போன்ற ஸிம்பின் கேடிஸின் ஆள்விழுங்கிப் பாறைகளை அவர்கள் அடைந்தனர். ஃவினியஸ் மூலம் அதன் இயல்பை அவர்கள் அறிந்திருந்தனர். பாறைகளினிடையே எது சென்றாலும் பாறைகள் இருபுறமுமிருந்து வந்து நெருக்கி இடையில் அகப்பட்டவற்றை அழிவு செய்துவிட்டுப் பின் மீண்டு விடும். ஜேஸன் ஒரு பறவையைத் தன் கப்பலின் முன்னால் பறக்கவிட்டான். பாறைகள் உடனே நெருங்கிப் பறவையை நெரித்துக் கொன்றன. அதன்பின் அது விரிவுற்றது. கப்பல் வேகமாக வந்தது. அது கண்டு பாறைகள் விரிந்து மீண்டும் மூடத் தொடங்குமுன் ஜேஸனும் ஆர்கோநாவத்துடன் விரைந்து கடலிடுக்கைக் கடந்தான்.
ஜேஸனும் ஆர்கோநாவத்திலுள்ள வீரரும் கடந்த துறைமுகங்கள் பல. இறங்கி இளைப்பாறிய தீவுகளும் பல. இறுதியில் அவர்கள் காக்கஸஸ் மலைகளுக்கப்பால் சென்று கால்சிஸ் நகரை அடைந்தனர்.
கால்சிஸின் மன்னன் அயதிஸ். அவன் அவர்களை வரவேற்று, “வந்த காரியம் என்ன?” என்று உசாவினான். பொன்மறியின் கம்பிளியை நாடி வந்ததாக ஜேஸன் கூறியதும் அவன் திகைத்தான். “அன்பர்களே! நீங்கள் எத்தனையோ இடையூறுகளைக் கடந்து இறுதியில் அமைதியுடன் வந்து சேர்ந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் இதுவரை கடந்தவை இடையூறுகளல்ல. இனித்தான் உண்மையான இடையூறுகள் தொடங்க இருக்கின்றன. அவற்றைச் சந்திக்கு முன் சென்று விடுங்கள்” என்றான்.
ஜேஸன் கேட்பதாயில்லை. அயதிஸ் சொற்கள் கடுமையாயின. எச்சரிக்கும் முறையிலும் அச்சுறுத்தும் முறையிலும் அவன் அவர்கள் கடக்க வேண்டிய இன்னல்களை எடுத்துரைத்தான். “முதலில் பித்தளைக் குளம்புகள் பூட்டிய காளைகளைக் கொண்டு நீங்கள் ஒரு வயலை உழவேண்டும்; பின் வேதாளத்தின் பற்களை அதில் விதைக்க வேண்டும்; விதைத்த இடத்திலேயே படைக்கலந்தாங்கிய கொடும் பூதங்கள் தோன்றிப் போருக்கு எழும்; அவையனைத்தையும் அழிக்க வேண்டும்; இத்தனையும் செய்தபின்தான் தங்க மயமான கம்பிளியைக் கைக்கொள்ள முடியும்” என்றான் அவன்.
பொன்மறியை நாடிப் புறப்பட்டபின் முதல் தடவையாக ஜேஸன் மனம் இடிவுற்றது. வெற்றி பற்றிய அவன் நம்பிக்கை யார்வம் தகர்ந்தது. அன்றிரவு முழுவதும் அவன் பைத்தியம் பிடித்தவன் போல, அரண்மனையையடுத்த தன் மாளிகைப் புறவாரத்தில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான். அவன்முன் அப்போது அழகுமிக்க ஒரு பெண்ணணங்கு நின்றாள். அத்தகைய அழகு உலகில் இருக்குமென்று அவன் அதுவரை கனவு கண்டதே கிடையாது.
அவளும் அதுவரை அவ்வளவு அழகும் வீரக்களையும் ஆணுருவில் இருக்குமென்று கனவுகண்டது கிடையாது.
அவள், மன்னன் அயதிஸின் புதல்வி மீடியா, மாயாவினி யாகிய தன் தாயிடமிருந்து அவள் மந்திரங்கள் யாவும் கற்றுணர்ந்திருந்தாள். அதை அவள் யாருக்காகவாவது பயன்படுத்த வேண்டிவரும் என்று நினைத்ததில்லை. ஜேஸனிடம் அவள் கொண்ட பாசம் அங்ஙனம் அவற்றைப் பயன்படுத்த அவளைத் தூண்டிற்று.
அவள் தன் காதலை அவனுக்குப் புலப்படுத்தி, காதலுக்காகத் தான் அவனுக்கு இவ்வகையில் உதவி செய்து வெற்றிதருவிக்க முடியும் என்று கூறினாள். ஜேஸன் நன்றியுடன் அவள் காதலை ஏற்றான்.
மீடியா அவனுக்கு ஒருவகை நறுநெய் கொண்டு வந்து கொடுத்தாள். அதை உடலில் பூசிக் கொண்டால், நெருப்பு முதலிய எதுவும் உடலைத் தாக்காது. பூதங்களிடமிருந்து தப்பவும் அவள் வகைமுறை கூறினாள். “பூதங்களிடையே ஒரு கல்லை எறிந்துவிடு. பின் அவை ஒன்றுடன் ஒன்று போரிட்டு அழிந்து விடும்” என்று அவள் கூறினாள். ஜேஸன் அவள் கூறியதுபோல உடலில் நறுநெய் பூசிக் கொண்டான். இதனால் பித்தளைக் குளம்பு பூட்டிய தீயுமிழும் காளைகள் இரண்டும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை; அவன் அவற்றை ஏரில் பூட்டி வயலை உழுதான்; பின் வேதாளத்தின் பற்களை எங்கும் விதைத்தான்.
விதை தூவிய இடங்களிலெல்லாம் தூவுமுன் பூதங்கள் படைக் கலங்களுடன் எழுந்து, ஆரவாரத்துடன் ஜேஸன் மீது பாய்ந்தன. ஜேஸன் மீடியாவின் அறிவுரையைப் பின்பற்றி ஒரு கல்லை எடுத்து அவற்றினிடையே வீசினான். ஒவ்வொரு பூதமும் விழுந்த கல்லை அடுத்த பூதம் தன் மீது எறிந்ததாகக் கருதி ஒன்றுடனொன்று போராடி மாண்டன.
ஜேஸன் இப்போது அயதிஸிடம் சென்றான். அவன் கோரியபடி செய்தாய் விட்டபடியால், மன்னனிடமிருந்தே எளிதில் பொன்மறியின் கம்பிளியைப் பெறலாமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால், மன்னன் அது தொங்கிய மரத்தைக் காட்டி, “அதைச் சுற்றி உறக்கமிலா வேதாளம் காவல் கிடக்கிறது. உன்னால் அதைக் கடந்து சென்று எடுத்துக் கொள்ள முடியுமானால், எடுத்துச் செல்க” என்றான்.
உறங்காத வேதாளத்தைக் கடக்கும் வகைதெரியாமல் ஜேஸன் மீண்டும் விழித்தான். இத்தடவை மீடியா அவனுக்கு உதவி செய்யுமுன் அவனிடம் காதலுறுதி கோரினாள். “என்னைத் தவிர இவ்வகையில் யாரும் உதவ முடியாதென்று என் தந்தை அறிவார். ஆகவே உனக்கு உதவி செய்தபின் நான் இங்கிருக்க முடியாது. நீ இல்லாமல் நான் இருந்தாலும் வாழ்வில் பயனில்லை. ஆகவே, என்னையும் இட்டுக் கொண்டு சென்று மனைவியாய் ஏற்றுக் கொள்ளுவதானால் உதவுகிறேன்” என்றாள். ஜேஸன் அவள் கோரியபடி வாக்களித்தான்.
பாவம், அயலின மாதர் மணத்தையோ அயலினத் தாருக்குத் தந்த உறுதியையோ கிரேக்கர் சட்டமும் நீதியும் சிறிதும் மதிப்பதில்லை என்பதை அப்பாவி நங்கை மீடியா அறியவில்லை. அதற்கான தண்டனையையும் அவள் அடையக் காத்திருந்தாள்.
அன்றிரவு மீடியாவும் ஜேஸனும் பொன்மறியின் கம்பிளி தொங்கிய மரத்தை நோக்கிச் சென்றனர். அதைச் சுற்றிக் காத்திருந்த தூங்காத வேதாளம் அலறிக்கொண்டு அவர்களை நோக்கி வந்தது. மீடியா தான் செய்து கொண்டு வந்திருந்த ஒரு பெரிய அப்பத்தைத் தூக்கி அதன்முன் எறிந்தாள். அது அப்பத்தை அடக்க முடியாத ஆவலுடன் தின்றது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கண்மூடி அயர்ந்து உறங்கிற்று.
ஜேஸன் மரத்திலேறிப் பொன்மறியின் கம்பிளியை வெற்றிகரமாக கைப்பற்றி எடுத்துக்கொண்டு தன் தோழர்களுடன் விரைந்து கப்பலில் ஏறினான். மீடியா தான் உயிருக்குயிராய் நேசித்திருந்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை மட்டும் எழுப்பித் தன்னுடன் கூட்டிக்கொண்டு கப்பலில் வந்து சேர்ந்தாள். கப்பல் புறப்பட்டது.
ஜேஸனின் இடையூறுகள் இத்துடன் தீரவில்லை. பொன்மறியின் கம்பிளி கையாடப்படுகிறது என்பதைப் பொன்மறியே கனவில்வந்து அரசனிடம் கூறிற்று. அரசன் உடனே எழுந்து ஏவலாட்களை அனுப்பி உசாவினான். கம்பிளி பறி போனது உண்மை என்று தெரியவந்ததே, அவனுக்கு மீடியாமீது சீற்றம் பிறந்தது. அவளும் ஜேஸனுடன் ஓடிவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அது தெரிந்ததும் அவன் விரைந்து கப்பல்களைத் திரட்டிக் கொண்டு ஜேஸன் கப்பலைப் பின் தொடர்ந்தான்.
பிடிபட்டால், தாம் அரும்பாடுபட்டுத் தேடிய பொன்கம்பிளியை இழக்க வேண்டிவரும் என்பது அறிந்த ஜேஸன் துடித்தான். மீடியாவை நோக்கி, “உன் காதல் உண்மையானால், நீ இதுவரையில் செய்த உதவிகளெல்லாம் போதாது; இப்போது எப்பாடுபட்டாயினும், தப்ப உதவி செய்தாக வேண்டும்” என்று கெஞ்சினான்.
மீடியாவின் காதலில் களங்கமில்லை. அவள் அதன் உறுதியைக் காட்டினாள்; அதற்காக எதையும் துறக்க முன் வந்தாள். ஆனால், அவள் உறுதி எவர் நெஞ்சையும் திடுக்குற வைக்கத்தக்கதாயிருந்தது. தான் உயிருக்குயிராய் நேசித்த தன் தம்பி அப்ஸிர்ட்டஸை அவள் உடன் தானே கொன்று, அவன் உடலைத் துண்டு துண்டாகக் கிழித்து, தந்தையின் கப்பல் அணுகுந்தோறும் அவன் முன் ஒரு துண்டை எறிந்தாள். அப்ஸிர்ட்டஸிடம் மீடியாவைவிட மிகுதியாக உயிர் வைத்திருந்தவன் அயதிஸ். ஆகவே, அவன் இறந்த உடலின் துண்டைக் கண்முன் கண்டதும், கப்பலைச் சற்று நிறுத்தி அதை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பினான். இதனால் பின் தொடரும் வேகம் குறையவே ஜேஸன் தப்பியோட முடிந்தது.
திரும்பிவரும் பயணம் மாதக் கணக்காக நீண்டது. இடையூறுகளும் பல ஏற்பட்டன. ஆனால், ஜேஸனின் வீரமும் மீடியாவின் மாயத் திறமையும் அவர்களைக் காத்தன. கடைசியில் அவர்கள் இயோல்கஸ் வந்து சேர்ந்தனர்.
கொடுங்கோலன் பீலியஸ், இதற்குள் ஜேஸனின் தந்தையைக் கொன்றுவிட்டான். அத்துடன் பொன்மறியின் கம்பிளியைக் கொண்டு வந்தபின்னும் ஜேஸன் கோரிய வண்ணம் முறைப்படி அரசுரிமையை அவனுக்குத் தர மறுத்துவிட்டான். ஜேஸன் மனம் மீண்டும் சோர்வுற்றது. ஆனால், மீடியா பீலிஸை ஒழிக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டாள்.
பீலியஸ் இப்போது கிழவனாயிருந்தான். தான் அரிதிற் பெற்ற ஆட்சியை நீடித்து ஆள இப்போது இளைஞனா யிருந்தால் எவ்வளவு நல்லது என்று அவன்அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வான். தன் மாயத்தால் இதை அறிந்த மீடியா, அவன் புதல்வியரிடம் சென்று, “உங்கள் தந்தையை என்னால் இளைஞனாக்க முடியும்” என்றாள்.
இதை மெய்ப்பிப்பவள்போல அவள் ஒரு கிழ ஆட்டைத் துண்டு துண்டாக்கி ஒரு மருந்து கலந்துமிடாவிலிட்டுக் கொதிக்க வைத்தாள். புதல்வியர்கள் கண்கள் வியப்புடன் கண்டு களிக்க, இளஆடு ஒன்று அதிலிருந்து கத்திக் கொண்டு வெளிவந்தது. இவ்வருஞ் செயலைப் புதல்வியர் தந்தையிடம் கூறினர். இந்த முறையை அவன் விரும்பா விட்டாலும், இளமை பெறும் ஆவல் அவனைத் தூண்டிற்று. அவன் இணங்கினான். மீடியா, புதல்வியர் கண்காண அவனைத் துண்டு துண்டாக்கினாள். ஆனால், எதிர்பார்த்தபடி அவனை இளைஞனாக்க மறுத்தாள்.
புதல்வியரிருவரும் வெகுண்டு தம் தம்பியிடமும் பிறரிடமும் கூறிக் கலகம் விளைவித்தனர். அதன் பயனாக ஜேஸனும் மீடியாவும் நகரை விட்டுத் துரத்தப்பட்டனர்.
காதலரிருவரும் கொரிந்த் நகர் சென்று அதன் மன்னனான கிரியானிடம் அடைக்கலம் புகுந்தனர். அவன் ஜேஸனை அன்புடன் வரவேற்றான். அவனுக்கு ஆதரவளிக்கவும் இணங்கினான். ஆனால், அயலினத்தாளாகிய மீடியாவைக் கைகழுவிவிட்டால், தன் மகள் கிளாகியை அவனுக்கு மணஞ்செய்வித்து அரசுரிமையையும் அளிப்பதாக உறுதி கூறினான்.
மீடியாவிடமிருந்து பல உதவி பெற்றும், ஜேஸனுக்கு அவளிடம் உள்ளூரக் காதல் கிடையாது. அத்துடன் அவள் மாயத்திறமை கண்டு, அவன் பொறாமையும் அச்சமும் கொண்டான். ஆகவே, அவன் கிரியான் விருப்பத்துக்கு இணங்கினான். இஃதறிந்த மீடியா, தான் அவனுக்காகச் செய்த தியாகங்களை எடுத்துக்கூறி மன்றாடினாள். பயனில்லாது போகவே, அவள் பழி வாங்க உறுதி கொண்டாள்.
புதிய பெண்ணிடம் நட்பாடுவதாகப் பாசாங்கு செய்து அவளுக்கு மீடியா உயர்ந்த மணிமுடி ஒன்றும் துகிலும் பரிசளித்தாள். அவையிரண்டிலும் கொடு நஞ்சு தோய்க்கப் பட்டிருந்த தென்பதைஅறியாமல், கிரியானின் புதல்வியாகிய கிளாகி அவற்றை அணிந்தாள். அவள் உடல் உடனடியாக வதங்கிச் சுருண்டது. அவளைப் பிடிக்கச் சென்ற அரசன் கிரியானும், தொட்டாதே அந்நஞ்சுக்கு இரையானான். ஜேஸன் இதைக் கேட்டு, மீடியாவைப் பழி வாங்க ஓடினான். அதற்குள் மீடியாவால் கொல்லப்பட்டுக் கிரியானின் மற்றுமிரண்டு புதல்வரும் கிடந்தனர். மனம் முற்றிலும் இடிந்து போய், ஜேஸன் நிலத்தின்மீது புரண்டான்.
பொன்மயமான ஒரு விமானம் அச்சமயம் அவன் மீதாகப் பறந்து சென்றது. அதில் இருந்த ஓர் அழகிய பெண்ணுருவம் பேய்ச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு அதேன்ஸ் நகர் நோக்கிச் சென்றது. அந்த உருவம்தான் மீடியா.
ஜேஸனுடனும் வாழ முடியாமல், தாயகமும் செல்ல விரும்பாமல், மீடியா அதேன்ஸைத் தன் இருப்பிடமாக்கினாள். ஆனால், இங்கே அவள் மனித உருவில் அமரவில்லை. தெய்வமாகிச் சிலை வடிவில் இடம் பெற்றாள். தன் மாயத்தை எல்லாம் அவள் அதேன்ஸின் கலைமயமாக்கினாள்.
மெலீகரின் வீர மறைவு
(மெலீகர் ஜேஸனுடன் சென்று பொன்மறியின் கம்பிளியைக் கைப்பற்ற உதவிய ஆர்கோநாவ வீரருள் ஒருவன். காதலுக்குப் பலியான பெண்டிர் கதைகள் பல. மெலீகர் அதே வகையில் வாழ்விழந்த ஒரு ஆடவன், தாயும் மனைவியும், கண்டு மகிழ, அவன் தன் காதலிக்கும் நாட்டுக்கும் கடமையாற்றி மாண்டான்.
குழந்தை ஒன்று வேண்டுமென்று தவங்கிடந்தாள் கிரேக்க மாதாகிய அல்தெயா. இளமை அவளைவிட்டு நீங்கிய நேரம் அவள் துயரகற்றி மகிழ்வூட்டும் வண்ணம் வந்து பிறந்தான் மெலீகர். ஆனால், பிள்ளைப் பேற்றின் அயர்ச்சி தீரப் பல நாளாயிற்று. பிள்ளை பிறந்த ஏழாம் நாள் அவள் அரைத்துயிலுடன் சாய்ந்து கிடந்தாள். சற்று முன் அவள் அடுப்பிலிட்ட கட்டை ஒன்று தளதளவென்று பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தீயின் ஒளி அவள் கண்களின்முன் நிழலாடிற்று. நிழல் வளைந்து மூன்று கூறுகளாய், ஒவ்வொரு கூறும் ஒரு கிழவி வடிவத்தில் நிலையாகப் படிந்தது. அவள் கூர்ந்து கவனித்தாள். ஆம், அவர்கள்தான் ஊழ் மாதர் மூவர் - மூவரும் உடன்பிறந்தவர்கள். ஒவ்வொரு மனிதர் ஊழையும் ஒரே தவறில் ஒன்றுபட்டு நெய்து உருவாக்குபவர்கள் அவர்களே!
“மூவர் ஏன் என் முன் வரவேண்டும்? இது நல் லறிகுறியா? தீய அறிகுறியா?” அவள் மனம் இக்கேள்விகளால் அலைப் புண்டு ஊசலாடிற்று.
“உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்றது ஒரு குரல்.
“நீ மகிழ்ச்சியுடனிருக்கிறாய்” என்றது மற்றொன்று.
“ஆனால்,” என்று தொடங்கிக் கண்சாடை காட்டிற்று மூன்றாவது குரல்.
அதைத் தொடர்ந்து, “அதோ அடுப்பில் இப்போது எரிகிறதே அந்தக் கட்டை”, என்று ஒரு குரல் தொடங்கிற்று; இது முதற்குரல்.
“முழுவதும் எரிவதற்குள்ளாகவே,” இது இரண்டாவது குரல்.
“உன் புதல்வன் வாழ்வு முடிந்துவிடும்,” இது மூன்றாவது குரல்.
மூன்று உருவங்களும் மறைந்தன. தாய் நடுங்கினாள்.
பிள்ளைப்பாசம் அவளைத் தட்டி எழுப்பிற்று. அவளுக்கு அறிவையும் சிந்தனையாற்றலையும் அளித்தது. அவள் விரைந்து எழுந்தாள். படபடப்புடன் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த அந்தக் கட்டையை வெளியே எடுத்து நீருற்றி அணைத்தாள்.
கட்டை முழுதும் எரியவில்லை. பாதி எரிந்தபடியே இருந்தது. அதை எவரும் எரித்துவிடாமல் தன் அணிமணிப் பெட்டியின் உள்ளறையில் வைத்துப் பூட்டினாள். இனி பிள்ளையின் வாழ்வு பற்றிய கவலை இல்லை என்று அவள் தேறி இருந்தாள்.
ஊழின் வாயிலிருந்து தன் பிள்ளையின் வாழ்வை அவள் பறித்தெடுத்துக் காத்தாள். ஆனால், அதே தாய் கையே அந்தப் பிள்ளையின் வாழ்வை மனமறிய ஊழின் கையில் கொண்டு சென்று திணித்தது. தாய் மட்டுமல்ல, தாயும் அவளுடன் போட்டியிட்டு அவனை உரிமையுடன் நேசித்த இன்னொரு பெண்ணும் - அவன் மனைவியும் - மனமார அவன் ஊழின் கட்டைக்குத் தாமே தீவைத்து அது எரிவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தாயின் உள்ளத்தில் இத்தகைய மாறுதலை ஏற்படுத்திய நிகழ்ச்சி எது? அல்லது நிகழ்ச்சிகள் யாவை?
மெலீகர், பொன்மறியின் பொன் கம்பிளி நாடிச் சென்ற வீரர்களுள் ஒருவன். அவன் தந்தை காலிடோன் மன்னன் ஒளியஸ், பொன்மறித் தோட்டத்திலிருந்து திரும்பி வந்த பின், மெலீகர் நீண்ட பயணத்தைப் பற்றியும் அதில் நேர்ந்த இடையூறுகள் பற்றியும் தந்தையிடம் விரித்துரைத்தான்.
காலிடோனுக்கு வடபால், பல முரட்டு வகுப்பினர் நாடோடிகளாகத் திரிந்து வந்தனர். அவர்கள் அடிக்கடி காலிடோனுக்குத் தொல்லை கொடுத்தும் படையெடுத்துச் சூறையாடியும் வந்தனர். இம்முரட்டு மக்களுக்கு இப்போது புதிய ஊக்கமும் ஏற்பட்டிருந்தது. ஒளியஸ் குடியினர் சில தலைமுறைகளாக ஆர்ட்டெமிஸ் இறைவிக்குப் பலியிடும் வழக்கத்தை நிறுத்தியிருந்தனர். இச்சமயம் பார்த்து முரட்டு வகுப்பினர் அத்தேவிக்குப் பலியிட்டு அவள் ஆதரவைப் பெற்றனர். தேவி அருளால் அவர்களுக்கு மேன்மேலும் வெற்றி கிடைத்தது. வெற்றி கிடைக்கக் கிடைக்க அவர்கள் துணிச்சலும் துடுக்குத்தனமும் பெருகின.
மெலீகர் இந்நாடோடிகளை எதிர்த்தடக்கிவிட உறுதி கொண்டான். தந்தையை இவ்வகையில் ஊக்கி அவன் இணக்கம் பெற்று, படையுடன் சென்று அவர்களைப் பல இடங்களிலும் மடக்கி ஒடுக்கினான்.
தோற்ற நாடோடிகள் ஆர்ட்டெமிஸுக்கு வழக்கமான பலியைக் கொடுக்காமலே குறையிரந்து முறையிட்டனர்.
ஆர்ட்டமிஸ் தன் ஆதரவு பெற்ற புதிய மக்களுக்கு எதிராக வெற்றி கண்ட காலிடோன்மீது கடுஞ்சீற்றங் கொண்டு அதன்மீது பழிவாங்க ஒரு காட்டுப்பன்றியை ஏவிவிட்டாள். அதுகாலிடோன் எல்லையில் புகுந்து பயிர்களை அழித்தும், ஆடுமாடுகளையும் உழவர்களையும், குத்திக் கிளறியும் பேரழிவு செய்தது. இதனால் அழகிய பூங்காவனங்களெல்லாம் புதர்க் காடுகள் ஆயின. புல் மேடுகளெலல்லாம் புழுதிமேடுகளாயின.
மெலீகர் மீண்டும் போர்க்கோலம் பூண்டான். பன்றியின் பின்னணியிலிருந்து முரட்டு வகுப்பினர் அட்டூழியங்கள் செய்ததால் அவள் தலைச்சிறந்த வேட்டைக்காரரையும் வீரரையும் திரட்டி ஒரு படை சேர்த்து, அதனுடன் பன்றி மீதும் படர்ந்தழித்த முரட்டுக் கூட்டத்தினர் மீதும் போர் தொடுத்தான்.
மெலீகருடன் சரிசமமாக நின்று பன்றியையும் படுகள வீரரையும் எதிர்த்துத் தாக்கியது ஒரு பெண்மணி. அவள் பெயர் அட்லாண்டா. அவள் பத்து ஆடவராலும் தாக்குப் பிடிக்க முடியாத உடல் வலிமையும் வீரமும் உடையவள். அவள் திறங்கண்டு மெலீகர் அவளை மிகவும் நன்கு மதித்து நேசித்தான். அவள் மணமாகாதவளாயிருந்தால், கட்டாயம் அவளை மணந்திருப்பான். அவளும் அவனை ஏற்றிருப்பாள். ஆனால், காதலுக்கு இடமில்லாமலே அவர்களிடையே ஒருவர்க் கொருவர் மதிப்பும் நேசமும் வளர்ந்தன. போரில் இருவர் குதிரைகளும் ஒன்றையொன்று வளையமிட்டன. வேட்டையில் ஒருவர் அம்பும் தம்முன் இணைந்து பழகின.
பலநாள் திரிந்து வேட்டையாடி அவர்கள் பன்றியைக் காலிடோன் எல்லையிலிருந்து நெடுந்தொலை துரத்தினர். ஆனால், அதை ஒழிக்காமல் இருவரும் ஓய்வு கொள்ள இணங்கவில்லை. இரண்டுநாள் இருவரும் கண்ணயராமல் தொடர்ந்தும் அது அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஏய்த்துக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் ஒருபெரும் பாறை ஒன்றை அவர்கள் அணுகியபோது, பின்னாலிருந்து அவர்கள் பன்றியின் உறுமலைக் கேட்டனர். அச்சமயம் பின்னாலிருந்து வந்து வேடுவர் படை முழுதும் அதன்மீது பாய்ந்தது. அது அத்தனை பேரையும் கால்வேறு கைவேறாகப் பெயர்த் தெறிந்து பின்னும் கும்மாளமடித்தது. தொலைவிலிருந்து வந்த சிலரும் அதை அணுக அஞ்சி நடுங்கினர்.
அட்லாண்டா சட்டெனத் திரும்பித் தன் வில்லை வளைத்து நாணேற்றி அம்பெய்தாள். அது பன்றியின் நெற்றிப் பட்டத்தில் தைத்தது. அதுஅலறிக் கொண்டு விழுந்து புரண்டது. அதன் குருதி எங்கும் பரந்தது; ஆனால், அப்போதும் அது வாளா இறக்க மனமின்றி முழு மூச்சுடன் திமிறி எழுந்தது. அது இறுதி நேரப் பாய்ச்சலென்றும் பாராமல், மெலீகர் அதன்மீது தன் ஈட்டியைப்பன்றி ஒழிந்தது என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் வந்து அதன் தோலை உரித்து மெலீகரிடம் தந்தனர்.
மெலீகர் அதை அட்லாண்டாவிடம் தந்த வண்ணம், “அம்மணி! கும்மாளமடிக்கும் இவ்விலங்கின்மீது முதல் அம்பு எய்து வீழ்த்தியது நீங்களே. உங்களுக்கும் அதன் தோல் உரியது” என்று கூறினான்.
அட்லாண்டா அதை வாங்க மறுத்தாள். “நான் எய்தேன். ஆனால் கொல்லவில்லை. கொன்ற உங்களுக்கே அதுஉரியது” என்றாள்.
மெலீகர் மேலும் வற்புறுத்தி, “நான் கொல்லாவிட்டாலும் உங்கள் அம்பால் இது சிறிதுநேரத்தில் செத்தேயிருக்கும். நான் உடனே அதைக் கொன்றது வேட்டுவரின் தோழமை உரிமையினால்தான். ஆகவே, அதே தோழமை உரிமைப்படி தோலைப் பெற்றுக்கொள்க” என்றான்.
அவன் பெருந்தன்மையையும், உள்ளன்பையும் கண்டு அவள் உள்ளம் பூரித்தாள். அவன் மீது தனக்கு அடக்க முடியாத பாசம் இருப்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள்.
அவன், அவளிடம் கொண்ட ஆழ்ந்த நேசமும் விரைவில் எல்லோருக்கும் விளங்கிற்று.
மெலீகரின் தாய்மாமன்மார் இருவர் இருந்தனர். அவர்களும் பன்றி வேட்டையில் பங்கு கொண்டிருந்தனர். பன்றியின் தோலைத் தம் குடும்பத்தவருக்கும் நகரத்தவருக்கும் இல்லாமல் வேறொருவருக்கு மெலீகர் உரிமையாக்கியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அத்துடன் அது ஆடவனா யிராமல், ஒரு பெண்ணாயிருந்தது அவர்களுக்கு இன்னும் புழுக்கத்தை உண்டு பண்ணிற்று. எப்படியும் அதை அவளிடமிருந்து பறிக்க அவர்கள் திட்டமிட்டனர்.
பெண்ணாயினும் அவளை நேரடியாகத் தாக்க அவர்களுக்குத் துணிவும் வீரமும் போதவில்லை. ஆகவே, அவள் தனியே செல்லும் சமயம் பார்த்து முன்பின்னாகச் சென்று அவளை மடக்கி அதை அவளிடமிருந்து பறிக்க முயன்றனர். எதிர்பாராத் தாக்குதலால் அட்லாண்டாவும் செயலிழந்து நின்றாள்.
கோழைத்தனமான இச்செயலை மெலீகர் தற்செயலாக அவ்விடம் வந்து காண நேர்ந்தது. தன் தாயுடன் பிறந்தவர்கள் என்றுகூடப் பாராமல் அவன் அவர்களை வாளால் தாக்கினான். கோழையாகிய இருவரும் ஓட முயன்று வாளுக் கிரையாயினர்.
அவர்கள் வீழ்ந்தபோதுகூட, மெலீகர் வருத்தப்பட வில்லை. அவர்கள் தன் தாய்மாமன்மார் என்பதை உன்னி, அவர்கள் கோழைத்தனத்துக்காக அட்லாண்டாவிடம் மன்னிப்புக் கோரினான்.
அவன் தன்மீது கொண்ட பாசத்தை இச்செயல் அட்லாண்டாவுக்க வெட்ட வெளிச்சமாகக் காட்டிற்று. வீரரின் பெருந்தன்மை உருவில் வந்த அந்தப் பாசத்தை அவள் பெருமிதத்துடன் ஏற்றுப் புன்முறுவல் செய்தாள். “இவ்வுலகிலில்லாவிட்டாலும் இனி ஒரு உலகில்….” என்று கூறிப் புன்முறுவலுடன் அவள் தன் கையை நீட்டினாள்.
“கட்டாயம் இணைவோம்” என்று முடித்து அவன் அக்கையைத் தன் கையால் அழுத்திக் கொண்டான்.
அல்தெயாவும், மெலீகரின் மனைவி கிளியோப் பாத்ராவும் தம் மாளிகை முன்றிலிலிருந்து அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தனர். மெலீகர் பன்றியைக் கொன்ற செய்தி அவர்களிடம் முதலில் வந்து எட்டிற்று.
தாயின் உடல் பூரித்தது; மனைவியின் உடல் புல்லெறித்தது. மகன் பெருமை பேசி எக்களித்தாள் தாய்; கணவன் தனிச்சிறப்பெண்ணித் தருக்கினாள் மனைவி. தான் ஒரு தாயானதற்காகத் தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்தாள் அல்தெயா; தன்னை ஒரு பெண்ணாய்ப் பிறப்பித்ததற்குத் தெய்வங்களுக்கு வாழ்த்தெடுத்தாள் கிளியோப்பாத்ரா.
இரண்டு அன்புக்கோட்டைகளிலும் ஒரே செய்தி அம்பாக வந்து மீண்டும் துளைத்தது - தன் உடன்பிறந்தார் இறந்தனர் - தன் மகன் கையால்-ஒரு பெண்ணின் உரிமை காக்க! தாய் இதுகேட்டுச் சீற்றங் கொண்டாள்! மனைவி இது செவியில் புகாமுன் தன்வயமிழந்தாள்!
“ஆ, இதற்கா தவங்கிடந்து பெற்றேன்?” என்று அலறினாள் அல்தெயா.
கணவனை அணைக்க எழும் தன் கைகளைப் பிசைந்து முறித்தாள் கிளியோப்பாத்ரா.
“ஆ, எரிகிற கட்டையை இதற்கா அணைத்தெடுத்தேன்” என்றாள் தாய்.
தாயின் உள்ளத்தைவிட மனைவியின் உள்ளம் விரைந்து வேலை செய்தது.
“மாமி”
“என்னை அம்மா என்று கூப்பிடு.”
“ஏன்?”
“பழைய உறவு போய்விட்டது. அது வேண்டா?”
“அம்மா, இப்போதே அந்தக் கட்டையை எரித்து விடேன்.”
அல்தெயாவின் செயலற்ற துயருக்குக் கிளியோப் பாத்ரா குரல் கொடுத்துவிட்டாள். கட்டையை அணைத்தெடுக்க அன்று விரைந்ததைவிட அதை எடுத்துத் தீக்கிரையாக்க இன்று அவள் தாயுடல் விரைந்தது.
பாதி எரிந்த கரிக்கட்டை, அது மீண்டும் பற்றிற்று. பற்றிப் புகைந்து, எரிந்தது.
தாய் சிரித்தாள்.
மனைவி அது எரியும்வரை பொறுக்காதவள்போல், அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அனலுடன் அனலாகத் தன் கண்பார்வையால் அதை எரிப்பதுபோல, அவள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை எரிப்பதுபோலக் கட்டை எரியப் பார்த்திருந்தாய் - கட்டையைத் தீ எரிப்பது போதாமல், கண்ணில் கனலை எழுப்பி அதை எரிப்பவள் போலப் பார்த்திருக்கும் மனைவி-இக்காட்சியை கண்டான் மெலீகர்!
கடமை, உரிமை, காதல் ஆகிய மூன்றும் இழந்த அவன் வாழ்வு உள்ளூரப் புகைந்தழன்றது!
அகஉலகின் இப்புயல்களிடையே புறஉலகின் ஒரு காற்று வந்து புகுந்தது.
“முரட்டு வகுப்பினர் பன்றிக்காகப் பழிவாங்கப் புகுந்து விட்டனர்” என்ற செய்தி அவன் காதில் விழுந்தது.
அவர்கள் காதுகளிலும் விழுந்தது. ஆனால், அவர்கள் பேசவில்லை.
மற்றக் காலிடேரனியர் நெஞ்சுகள் துடித்தன - மெலீகர் குடும்பப் புயல்களிடையே சிக்கிவிட்டான்.
இனி தமக்கு உதவுவானோ மாட்டானோ என்று அவர்கள் உள்ளங்கள் தத்தளித்தன.
“நான் கடமையாற்றுகிறேன் - கட்டை விரைந்து எரியட்டும்” என்று கூவிக் கொண்டு மெலீகர் வெளியேறினான்.
அதிர்ச்சி, மகிழ்ச்சி, பாராட்டு, மாளாத்துயரம் ஆகிய பல்வகை உணர்ச்சிகளுக்கும் ஒருங்கே ஆளாயினர் காலிடோனியர் - ஆனால், தாயும் மனைவியும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளாய், மரக்கட்டை எரிவதையே ஆர்வத்துடன் பார்த்திருந்தனர்.
முரட்டு வீரர் வீசிய முதல் அம்புக்கு அவன் பலியானான். ஆனால், அந்த அம்பை வீசிய கையும், இலக்கு நோக்கிய கண்ணும் பட்டுவிழத் தன் அம்பை வீசினாள் அட்லாண்டா!
மெலீகர் இறந்தான். அவனுக்காகத் தாய் கலங்கவில்லை. மனைவி அழவில்லை. ஆனால், என்றும் எதற்கும் கண்ணீர் விடாத வீர அணங்கு அட்லாண்டா ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாள்!
அட்லாண்டாவின் ஓட்டப்பந்தயம்
(ஆண்மையில் ஆடவரை வென்ற ஒரு நங்கை! வீரன் மெலீகரின் மதிப்புக்குரியவளாகியும், அவன் காதலை வெறுத்து வாழ்ந்தாள் இறுதியில் காதல் அவள் வாழ்வில் புகுந்து அவளை மாற்றிய வரலாறே அட்லாண்டாவின் கதையாகக் காட்சி தருகிறது)
ஷேணியஸ் என்ற அரசனுக்குப் பெண் குழந்தை என்றாலே பிடிக்கவில்லை. அவனுக்கு ஆண் குழந்தைகள் பிறந்த போதெல்லாம் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், இறுதியில் அட்லாண்டா பெண் குழந்தையாய்ப் பிறந்த போது, அதை ஏற்க மறுத்தான். அதை மலைப் பாறைகளில் கொண்டு போட்டு விடும்படி கட்டளையிட்டான்.
குட்டியை இழந்த ஒரு கரடி குழந்தை அட்லாண்டாவைச் சிலநாள் பேணி வளர்த்தது. காட்டில் கரடி வேட்டையாடிய சில வேடர் அவளைக் கண்டெடுத்துத் தம் பிள்ளையாக வளர்த்தனர். அவளும் நாளடைவில் வேட்டையில் வல்லவ ளானாள். ஆடவரைவிடத் திறமையாக ஓடவும் குதிரை யேறிச் செல்லவும் இலக்குத் தவறாது அம்பு செலுத்தவும் அவள் பழகினாள்.
அட்லாண்டா நெட்டையான அழகான வடிவமைப் புடையவளாயிருந்தாள். ஆயினும், மற்ற அழகிய பெண்களைப் போல அவள் இன்ப வாழ்வு விரும்பவில்லை. ஓட்டப் பந்தயங் களில் அவளை வெல்லும் ஆடவர் கிடையாது. வேட்டையிலும் போரிலும் அவள் முதன்மை பெற்று விளங்கினாள். பெண்களின் இயற்கைப்படி அவள் இளைஞர்களைக் காதலிக்கவோ, அவர்கள் காதலுக்கு இடங்கொடுக்கவோ இல்லை.
அவள் ஆடவரிடையே ஒருதடவை தான் ஒருவனிடம் ஆழ்ந்த நட்புக் கொண்டாள். மெலீகர் என்ற ஒப்பற்ற வீரனிடம் அவள் கொண்டிருந்த மதிப்பு அத்தகைய நட்பாயிற்று. ஆனால், அச்சமயம் அவனுக்கும் அட்லாண்டாவுக்கும் இடையே வயது, வாழ்க்கைநிலை ஆகியவற்றில் மிகுதி தொலை இருந்தது. அவன் இளமை தாண்டியவன். அவளோ இன்னும் கட்டிளமையை எட்டிப் பிடிக்கவில்லை. அவன் மணமானவன்; அவன் மனைவி அவனிடமே உயிரை வைத்திருந்தாள். அவளோ அவன் படை வீரருள் ஒரு படைவீரன் போலவே நடந்து வந்தாள். இந்நிலையிலும் ஒருவரையறியாமல் ஒருவர் உள்ளத்தில் காதல் பிறந்தது. ஆனால் அது கைகூடாக் காதலாய்ப் போயிற்று. அட்லாண்டாவை எதிர்க்கத் துணிந்த சில எதிரிகளைத் தாக்கி அவன் உயிர்நீத்தான். அவனைக் கொன்றவர்களை ஒழித்த அவள் நட்புக் கடன் தீர்ந்தது.
“மணஞ் செய்வதானால் மெலீகர்போன்ற அஞ்சா உறுதியுடைய வீரனை மணம் செய்ய வேண்டும். அல்லது மணம் நாடாத கன்னியாகவே காலங்கழிக்க வேண்டும்” இதுவே அட்லாண்டாவின் உள்ளுறுதியாயிற்று.
அட்லாண்டாவின் வீரப்புகழ் அவள்தந்தை காதுக்கும் எட்டிற்று. சில அடையாளங்களால் அதுதன் மகளே என்று அவன் தெரிந்து கொண்டான். பெண் குழந்தை வேண்டாம் என்று முன்பு அவளை அவன் வெறுத்துத் தள்ளியிருந்தான். இப்போது ஆண்களைவிட அவள் வீரமுடையவளாயிருந்தது கண்டு அவன் அவளை மீண்டும் வரவழைத்துத் தன் மகவாக ஏற்றான்.
அவளை யாராவது நல்ல அரசிளஞ் செல்வருக்கோ, வீரனுக்கோ மணமுடித்துவிடவும் அவன் விரும்பினான்.
அட்லாண்டா தன் உறுதியைத் தந்தையிடம் தெரிவித்தாள். “என்னுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுபவனையே நான் மணந்து கொள்வேன். அத்துடன் போட்டிக்கு வந்தவர் வெற்றி பெறாவிட்டால், அவர்கள் உயிரிழக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்கவேண்டும்” என்று அவள் கூறினாள்.
அரசன் இக்கடுமுறையை விரும்பவில்லை. ஆயினும், வேண்டா வெறுப்பாக அதற்கு இணங்கினான்.
எத்தனையோ கட்டிளங்காளைகள் வந்துவந்து முயன்றனர். அவர்கள் உயிரிழந்ததுதான் மிச்சம். அட்லாண்டாவை எவராலும் ஓட்டத்தில் வெல்ல முடியாது என்ற எண்ணம் பரந்தது.
நாளடைவில் எவரும் போட்டிக்கு வருவதே அரிதாயிற்று. அட்லாண்டா இனி, கன்னியாகவேதான் காலங் கழிப்பாள் என்று பலரும் கருதி இருந்தனர்.
மிலானியின் என்பவன் ஒரு வேட்டுவ இளைஞன். அவன் வேடிக்கைப் பார்க்க ஷெணியஸின் நகருக்கு வந்திருந்தான். அன்றுதான் அட்லாண்டாவுடன் கடைசித் தடவையாக ஓர் இளைஞன் போட்டியிட்டான். மிலானியின் அப்போட்டியில் கண்ணும் கருத்துமாயிருந்தான். இளைஞன் போட்டியில் வென்றால், போட்டியிட்ட அப்பெண்ணை மணந்து கொள்வான் என்று பிறர் கூறக் கேட்டான். இளைஞன் போட்டியில் வெல்வான் என்றே அவன் எண்ணினான்.
மிலானியின் எதிர்பாராதவகையில், அரசனும் பொது மக்களும் இளைஞன் பக்கமே ஆதரவு காட்டினர். ஒருவர்கூட அந்த அழகிய நங்கை வெல்ல வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இது கண்டு அவன் வியந்தான். ஆனால், எல்லோரும் இளைஞனை ஊக்கியும், முதற் சுற்றிலேயே அந்தப் பெண்ணுடன் ஓட முடியாமல் அவன் சோர்வுற்றான். இரண்டாவது சுற்றுக்குள் பெண் இளைஞனைத் தாண்டி நெடுந்தொலை சென்று விட்டாள்.
இளைஞன் தோற்றுவிட்டான். எல்லார் முகத்திலும் ஊக்கக்கேடு மட்டுமல்லாமல், வருத்தமும் மேலிட்டது. இதற்கான காரணத்தையும் இளைஞன் உணரவில்லை.
ஆனால் கூட்டம் கலையவில்லை. பெரிய வாளுடன் ஒரு வீரன் வந்தான். இளைஞன் கைகால் கட்டுண்டு களத்தின் நடுவே நிறுத்தப் பட்டான்.
அப்போதுதான் மிலானியனுக்கு எல்லாரும் வருந்தியதன் காரணம் தெரிந்தது. போட்டியில் தோற்றதனால், இளைஞன் தான் விரும்பிய நங்கையை இழந்ததுடன் நிற்கவில்லை. அவன் உயிரையும் இழக்க வேண்டி வந்தது.
அழகிய இளைஞனின் தலை மண்ணில் உருண்டது. அவன் பொன் முடியில் அவன் குருதியும் மண் புழுதியும் படிந்தன.
இத்தனைக்கும் காரணமான நங்கையின் முகத்தை அவன் இப்போது தான் ஏறிட்டுப் பார்த்தான். அவனை அறியாமல் அது அவன் மனத்தைக் காந்தம்போலக் கவர்ந்தீர்த்தது.
இளைஞனின் சாவுக்காட்சி கூட அவன் நெஞ்சை அச்சுறுத்தவில்லை.
எப்படியும் அவளைப் பெற முயல்வது என்று அவன் துணிந்தான்.
மறுநாளே மிலானியன் மன்னனிடம் சென்று அட்லாண்டாவைத் தான் மணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்டதும் மன்னன் திடுக்கிட்டான்.
மன்னன்: நேற்றுத்தானே அழகிய ஓர் இளைஞன் உயிரைப் பலி கொடுத்தான். அதைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லையா?
மிலானியன்: நானே நேரில் வந்து பார்த்தேன்.
மன்னன்: பார்த்ததும் ஏன் இப்படி வந்தாய்? சாகவழி தேடித்தான் வந்தாயா?
மிலானியன்: இல்லை, எத்தனையோ ஆடவர் உயிரைக் குடித்த அந்த அழகைப் பெற்று வாழவே விரும்பிகிறேன்.
மன்னன்: அது முடியுமென்று நீ நினைக்கிறாயா?
மிலானியன்: ஆம், ஒரு மாதம் கழித்துப் பந்தய நாள் குறித்து, அதுவரை பயிற்சி ஏற்பாட்டுக்கு வாய்ப்பு அளித்தால் முடியுமென்று கருதுகிறேன்.
மன்னன்: சரி, அப்படியே ஆகட்டும். ஒரு மாதங்கழித்து நாட்குறித்துப் பறைசாற்றுவிக்கிறேன்.
ஓட்டம் விளையாட்டு, வேட்டை ஆகியவற்றுக்குரிய தெய்வம் அஃவ்ரோடைட் என்ற தேவி. மிலானியன் ஒரு மாத முழுவதும் ஒருநாள் கூட வீட்டில் தங்கவில்லை. ஒவ்வொரு நாளும் இறைவி அஃவ்ரோடைட்டுக்குரிய ஒவ்வொரு கோவிலிலும் சென்று வழிபாடாற்றினான். மாத முடிவும் அடுத்தது.
அர்கோலிஸ் என்ற இடத்தில் கடற்கரையையடுத்து இறைவியின் தலைக்கோயில் இருந்தது. இறைவிக்குப் பலியாகவும் நன்கொடையாகவும் தன்னால் வாங்கக்கூடிய பொருள்கள் அத்தனையும் அன்று அவன் வாங்கி வந்தான். அவற்றை அடுக்கி வைத்துக்கொண்டு அவன் இறைவியையே சிந்தித்து நின்றான்.
மாலையாயிற்று. மறுநாள் பந்தயத்துக்கான நாள்!
இறைவி அருள்பாலித்தால் போவது. இல்லாவிட்டால் அட்லாண்டாவுக்காக, அங்கே மாள்வதை இங்கே இறைவிக்காக மாள்வது என்று துணிவுடன் நின்றான். பலநாளாகக் காலுணவில் நோன்பிருந்து அன்று முழு நோன்பிருந்ததால், தலை சுழன்றது; கால்கள் தளர்ந்தன. ஆனால், அவன் அசையவில்லை, நின்ற நிலையிலேயே நின்றான்.
கதிரவன் கடலில் குளிக்கும் நேரம், அரையிருளைக் கிழித்துச் செந்நிற முகில் ஒன்று கோயிலை நோக்கி மிதந்து வந்தது. அதன் ஒளி தாளாமல் மிலானியன் கண்களை நிலத்தில் பதியும்படி தாழ்த்தினான்.
முகிலினின்று புறப்படுவது போல வெள்ளிமணி ஓசை போன்ற ஓர் ஒலி பிறந்தது.
"உன் ஆழ்ந்த அன்பழைப்புக்கேட்டு இறைவி அஃவ்ரோடைட் உளங்கனிந்தாள்; உன் காரியம் கைகூடும். பலிபீடத்தருகே மூன்று பொற்பந்துகள் இருக்கக் காண்பாய். பந்தயத்தில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அட்லாண்டாவின் முன், அவள் காலடியருகே, ஒன்றை உருட்டுக’.
இதைக் கேட்ட மிலானியன் இறைவியின் ஒளியுருவத்தின் கருணையைப் புகழ்ந்து விழுந்து வணங்கினான். பலிபீடத்தருகே உள்ள பொற் பந்துகள் கண்கண்ட இறைவியின் திருவருட் பேறுகளாக மிளிர்ந்தன.
பந்தய நாள்வந்தது. ஒருமாதம் முன்னறிவிப்பு இருந்தபடியால் செய்தி நெடுந்தொலை பரந்திருந்தது. பல நகரங்களிலிருந்தும் இந்தப் புதுமை வாய்ந்த போட்டியைக் காணப் பல பெருமக்களும் பொதுமக்களும் திரண்டு வந்தனர். மிலானியின் முகத்திலிருந்த நம்பிக்கையொளி கண்டு யாவரும் வியந்தனர்.
அவன் நம்பிக்கை அட்லாண்டாவுக்குக்கூட வியப்பூட்டிற்று. அவள் முதல் தடவையாகத் தன்னுடன் போட்டியிடும் இளைஞனை நிமிர்ந்து பார்த்தாள். முதல் தடவையாகவே அவள் பந்தயத்தில் தனது தோல்வியில் சிறிது ஆர்வங்கொண்டாள். ஆனால், பந்தயத்தில் இறங்கிய பின் வழக்கமான போட்டியார்வம் இம்முதலுணர்ச்சியை மறக்கடித்தது.
கிளர்ச்சியுடன் மிலானியன் அட்லாண்டாவுக்கு இணையாக முதற் சுற்று முடிவு அணுகும்வரை ஓடினான். ஆனால் முடிவில் அட்லாண்டாவின் வலுதுகால் மிலானியனின் வலதுகாலைத் தாண்டி ஒரு அடி முன்செல்லத் தொடங்கிற்று. அச்சமயத்துக்கே காத்திருந்த மிலானியன் மடியிற் சொருகி வைத்திருந்த பொற்பந்தில் ஒன்றை அவள்முன் உருட்டினான்.
பொற்பந்து அட்லாண்டாவின் கண்களை மருட்டிற்று. அது அஃவ்ரோடைட் இறைவியின் ஆடற்பந்து என்பதை அவள் அறிவாள். அருந்தவங்கிடந்தும் பெறற்கரிய அப்பந்து காலடியில் வந்துவிழ, அதை அசட்டை செய்து அப்பால் செல்ல அவள் மனம் ஒருப்படவில்லை. ஓட்டத்திலேயே சற்றுத் தயங்கினாள். பின், நின்று குனிந்து, அதை எடுத்துக் கொண்டு மீண்டும் ஓடினாள்.
இந்தச் சிறிது நேர ஓய்வுக்குள், மிலானியன் சிறிது தொலை முன் சென்றிருந்தான். ஆனால், அட்லாண்டா இரண்டாம் சுற்றின் தொடக்கத்துக்குள் பழையபடி அவனை எட்டி வந்துவிட்டாள். அவள் தன்னம்பிக்கை பெரிதாயிற்று. இரண்டாம் சுற்றிலும் மூன்றாம் சுற்றிலும் மீண்டும் பொற்பந்தை எடுக்க அவளுக்கு அது துணிச்சல் தந்தது.
ஆனால், முதல் இரண்டு சுற்றிலும் பொற்பந்துகளை எடுக்கத் தயங்கியதால், அட்லாண்டா முந்திக் கொள்ள முடியவில்லை. மூன்றாம் சுற்றிலோ அவள் பின்தங்கிவிடவே நேர்ந்தது. அவள் பந்தை எடுத்துக் கொண்டு எட்டிப்பிடிக்கத் தொடங்குமுன், மிலானியின் இலக்கை எட்டிப் பிடித்துப் பந்தயத்தில் வெற்றிப் பெற்றான்.
மன்னனும் மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கும் காட்டிய ஆர்வத்துக்கும் கிளர்ச்சிக்கும் எல்லை இல்லை. அட்லாண்டா கூடப் பந்தய வெறி தீர்ந்ததே தான் தோற்றது பற்றி மகிழ்ந்து, “பந்தயத்தில் தோற்றேன்; வாழ்க்கையில் வெற்றி பெற்றேன்” என்று ஆர்வத்துடன் கூறினாள்.
அட்லாண்டாவின் போட்டியற்ற வீரம் மிலானியனின் காதலில் முற்றிலும் தன் வயமிழந்து நின்று நிறைவெய்திற்று.
பெர்ஸியஸ்
(கிரேக்க புராணக் கதைகளிடையே ஓர் அழகிய சிறு காவியம் பெர்ஸியஸ் கதை. அதே சமயம் பல காவியங்களின் கதைக் கூறுகளையும் காட்சிப் பின்னணிகளையும் அதில் காணலாம். கன்னியைச் சிறையடைக்க உதவும் கடல் சூழ்ந்த பித்தளைக் கோபுரம், தொட்டியில் கடலில் மிதக்கவிடப் படும் தாயும் சேயும் முதலியன இவற்றுட் சில)
ஆர்கஸ் நகரின் அரசன் அக்ரிசீனுக்குத் தானே என்ற ஒரு புதல்வி இருந்தாள். அவள் வளர வளர அவள் அழகும் வளர்ந்தது. ஆனால், அவள் தந்தை அவள் வளர்வது கண்டு மகிழ்வதற்கு மாறாகக் கவலை கொண்டான். ஏனென்றால், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே பாட்டனைக் கொன்று நாட்டைக் கைக்கொள்ளும் என்று வருபொருளுரைப்போன் ஒருவன் கூறியிருந்தான்.
அவளைக் கொன்றுவிடலாமென்று அவன் அடிக்கடி நினைப்பான். அதற்கு மனம் வரவில்லை. ஆகவே, அவள் பிள்ளையே பெறாமலிருக்கும்படியாக, அவளை ஆண்கள் கூட்டுறவிலிருந்து விலக்கி வைத்துவிட எண்ணினான். இவ் எண்ணத்துடன் அவள் பருவமடையு முன்பே அவன் கடற்கரை யடுத்து எவரும் அணுக முடியாத கொடும்பாறை ஒன்றின் மீது பித்தளையால் இழைத்த ஒருபெருங் கோபுரம் கட்டுவித்தான். அதன் கீழறைகள் ஒருசிறு வாயில்தவிர, வேறு பலகணியோ வாயில்களோ இல்லாமல் செய்யப்பட்டிருந்தன. கீழறைகள் நிறைய உணவுப்பொருள்கள் நிரப்பப்பட்டிருந்தன. மேல் தளத்தில் பெண்களுக்கு வேண்டிய எல்லாத் தனியறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
தானே பருவமடையும் தறுவாயில் அரசன் அவளையும், அவள் பாங்கியர்களையும் கோபுரத்தைப் பார்வையிடும்படி அழைத்துச் சென்றான். கீழறைகளில் உணவுப்பண்டங்கள் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். ஆனால், மேலே போகப் போகக் கோபுரத்தின் பளபளப்பான பித்தளைச் சுவர்களின் அழகும், பெண்டிர் இன்ப வாழ்வுக்கும் ஒப்பனைக்குமுரிய மாட கூடங்களும் அவர்கள் கண்களைக் கவர்ந்தன. அவர்கள் அவற்றில் தம்மை மறந்து விளையாடியிருந்தனர். அரசனும் அவனுடன் வந்த ஒரு சில ஏவலாளரும் இதுசமயம் பார்த்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். கோபுரத்தினுள் நுழைவதற்கான ஒரே வாயில் வெளியிலிருந்து அடைபட்டது. அதனை அடைவதற்கான ஒரே பாலமும் அழிக்கப்பட்டது.
பெண்டிர் நெடுநேரம் சென்றபின்பு தாம் தனிப்பட்டு விட்டதையும் கோபுரத்தில் அடைப்பட்டதையும் கவனித்தனர். அவர்கள் கூக்குரலிட்டனர். அழுதனர்; தொழுதனர். ஆனால், அலைகளின் தொலை இரைச்சல் தவிர அவர்களை எதுவும் அணுகவில்லை. அவர்களுக்குத் துணையாக விடப்பட்ட ஏவலாள் ஒருவனே. அவனும் ஊமையும் செவிடுமான ஓர் அலி. அவர்களுக்கு உணவு வட்டிக்கும் பொறுப்பும், நாள்தோறும் படகில் வரும் புதிய பால் முதலிய பொருள்களைக் கயிறு கட்டிக் கூடைகளில் பலகணி வழியே பெறும் பொறுப்பும் அவனிடம் விடப்பட்டிருந்தது.
நாட்கள்பல சென்றன. தானே பருவமடைந்து முன்னிலும் அழகுடையவளாய்த் திகழ்ந்தாள். ஆனால், அவள் வாழ்வில் மகிழ்ச்சியில்லை. தன் தந்தையே தன்னைச் சிறைப்படுத்தியதை எண்ணி அவள் மனமாழ்கினாள். தேவர்கள் தந்தையாகிய ஜீயஸ் பெருமானை அவள் நாள்தோறும் வழிபட்டுக் குறையிரந்தாள்.
தானேயின் கனவில் ஜீயஸ் பொன்முகில்மீது தவழ்ந்து வந்து காட்சி யளித்தான். அவள் தன் வழிபாடு நிறைவேறியது கண்டு மகிழ்ந்து மெய்ம் மறந்தாள். கனவு அரைக்கனவாக நீண்டது. ஜீயஸ் அழகிய மனித உருவுடன் வந்து அவளுடன் உரையாடினான். அவன் ஜீயஸ் என்பதை அவள் சிறிது நேரத்தில் மறந்தாள். இளைஞன் உருவில் ஜீயஸ் அவளுடன் அளவளாவிப் பேசினான்.
அடுத்தநாள் முதல் தானேயின் வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது. இரவில் கண்ட பொன்மயமான அழகிய வடிவிடம் அவள் ஈடுபட்டாள். தொடுத்து மூன்று இரவுகள் கழிந்தபின், ஜீயஸ் பழையபடி தன் ஒளி உருவம் காட்டி விடைபெற்றுக் கொண்டான். “கண்மணி தானே, நான் உன் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டேன். ஆனால், அதற்காக மட்டும் வரவில்லை. என் கூறாக உனக்கு இப்போது கரு விளைந்துள்ளது. உன் மகன் உலகில் அரும்புகழ் நிறுத்துவான்” என்று கூறி அவன் அகன்றான்.
தானேயின் நாட்கள் முன்னிலும் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அவள் ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றாள். பாங்கியரும் இச் சிறைக்கூடத்திலிருந்தே அவள் தெய்வ அருளால் இத்தகைய அருங்குழவி பெற்றதை எண்ணி மகிழ்ந்து கூத்தாடினர். பெர்ஸியஸ் என்ற பெயருடன் குழந்தை சிறைக் கோபுரத்தில் வளர்ந்தது.
சிறைக்குள்ளிருந்தே தானே தெய்வ அருட்குழவி ஒன்றை ஈன்றாள் என்ற செய்தி அரசனுக்கு எட்டிற்று. அவனால் இப்புதிய இடரைப் பொறுக்க முடியவில்லை. இருவரையும் தடங்கெட அழிக்க அவன் புதிய சூழ்ச்சி செய்தான்.
தாயையும் சேயையும் அவன் சிறையிலிருந்து யாரும் அறியாமல் வெளியேற்றினான். ஒருவர் குந்தியிருக்கப் போதுமான மரத்தொட்டி ஒன்றில் இருவரையும் வைத்துக் கப்பலிலேற்றி, நடுக்கடலில் விட்டுவிடும்படி அவன் கட்டளை யிட்டான். தானேயின் கதறலோ, பிள்ளையின் மருட்சியோ அவன் உறுதியைக் குலைக்கவில்லை.
தானேயின் கதறலை மனிதர் யாரும் கேட்கவில்லை. ஆனால், இறைவன் ஜீயஸ் காதுக்கு அது எட்டிற்று. அவன் தென்றலை அனுப்பி, அத்தொட்டியை அப்படியே மிதக்க விட்டு, இறுதியில் ஸெரிஃவஸ் என்ற தீவில் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தான்.
ஸெரிஃவஸ் வலைஞர்கள் வாழ்ந்த தீவு. பாலிடெக்டிஸ் என்ற வலைஞரின் தலைவனே அத்தீவின் அரசனாயிருந்தான். அவன் தம்பி டிக்டிஸ் வலைகளை உலர்த்தக் காலையில் கடற் கரைக்குச் சென்றபோது, தானேயும் குழந்தையும் மிதந்துவந்த தொட்டியைக் கண்டான். இருவரும் குளிராலும், ஈரத்தாலும், பசியாலும் குற்றுயிராயிருந்தனர். அவன் அவர்களை வீட்டுக்கு இட்டுச் சென்று, உலர்ந்த ஆடைகள் கொடுத்து உணவூட்டினான். கடலில் மிதந்த அயர்வுதீரப் பலநாட்கள் ஆயின.
அவர்கள் துயரக்கதையை ஒருவாறு கேட்டறிந்த டிக்டிஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறி, இருவரையும் தன் மகள், மகள் பிள்ளையாகவே வளர்த்து வந்தான்.
பாலிடெக்டிஸ் அடிக்கடி தன் தம்பி இல்லத்துக்கு வருவதுண்டு. அச்சமயங்களில் அவன் தானேயைக் கண்டான். அவள் அழகு அவனை மயக்கிற்று. அவன் அவளை மனம் செய்துகொள்ள விரும்பினான். அடிக்கடி அவளிடம் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினான். ஆனால், பெருந் தெய்வமாகிய ஜீயஸூக்கே தானே தன்னை உரியவளாகக் கருதிவிட்டாள். எந்த மனிதரையும் அவள் மணக்க விரும்ப வில்லை. ஆதலால், பாலிடெக்டிஸ் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் இணங்கவில்லை.
தானேயை வயப்படுத்தும் எண்ணத்துடன் பாலிடெக்டிஸ் பெர்ஸியஸிடம் வெளிநட்புக் காட்டி வந்தான். ஆனால், வீரமும் கட்டழகும் வாய்ந்த அந்த இளைஞனை அவன் உள்ளூர வெறுத்தான். தாய் திருமணம் செய்யாமலிருப் பதற்கு, இத்தகைய மகன் இருப்பதே காரணம் என்று அவன் நினைத்ததனால், பெர்ஸியஸ்மீது அவன் வெறுப்பு இன்னும் மிகுதியாயிற்று. எப்படியாவது பெர்ஸியஸை ஒழித்துவிட வேண்டும் என்று பாலிடெக்டிஸ் திட்டமிட்டான்.
ஒருநாள் பாலிடெக்டிஸ் பெர்ஸியஸை ஒரு விருந்துக்கு அழைத்தான். நட்புப் பேச்சுக்கிடையே அவன் பெர்ஸியஸிடம், “நான் கேட்ட எதுவும் நீ கொடுப்பாயா?” என்று வினவினான். அதை விளையாட்டாக எண்ணி, பெர்ஸியஸ் “ஓகோ, கட்டாயம்” என்றான்.
இதுதான் வாய்ப்பு என்று கருதிய பாலிடெக்டிஸ், “எனக்கு நீ வல்லரக்கி மெடூசாவின் தலையைக் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?” என்றான்.
பெர்ஸியஸ் திடுக்கிட்டான். மெடூசாவைப்பற்றி அவன் கோரமான செய்திகளைக் கேட்டிருந்தான். அவள் இருந்த இடத்துக்கே யாரும் சென்றதில்லை. யாருக்கும் அதன் திசைகூடத் தெரியாது. அவள் அழகிய பெண் முகத்துடன், பாம்புகளையே தலைமுடியாகக் கொண்டு, கழுகுகளின் இறக்கை போன்ற பெரிய இறக்கைகளை உடையவள். மேலும் அவள் முகத்தைப் பார்த்தவர்கள் உடனே கல்லாய் விடுவார்கள். இத்தகைய வல்லரக்கியின் தலையை வெட்டிக் கொண்டுவரச் சொல்வதென்றால், சாகும்படி சொல்வதாகத் தான் பொருள். ‘இங்ஙனம் சொல்பவன் நம் மாறாப் பகைவனே’ என்று பெர்ஸியஸ் தனக்குள் கூறிக் கொண்டான்.
கொடுத்த வாக்குறுதியை உயிர்கொடுத்தும் காக்கவேண்டும் என்ற எண்ணத்தால் பெர்ஸியஸ் கவலையுடன் அலைந்து திரிந்தான். ஒருநாள் கடற்கரையோரமாக அவன் உலவும்போது ஒரு பேரொளி உருவம் அவன் முன் தோன்றிற்று. அதுதான் அதேனாதேவி.
“பெர்ஸியஸ்! தேவர்களுக்கு உன்மீது பாசம் மிகுதி. உனக்கு என் மூலம் அவர்கள் எல்லாவகை உதவியும் செய்ய முன் வந்திருக்கினறனர். இதோ பார், அவர்கள் உனக்கு அனுப்பியுள்ள பரிசுகளை! இது வெண்கலத் தலையணி; இதை அணிந்தால் நீ எவர் கண்ணுக்கும் புலப்படாமல் எங்கும் திரியலாம். இதோ இறக்கைகள் பூட்டிய மிதியடிகள். இவற்றில் ஏறிக்கொண்டு நீ நிலம், காடு, கடல், எதுவும் கடந்து செல்லலாம். இந்தக் கேடயம் உன்னை இடர்கள் எல்லாவற்றிலிருந்தும் காக்கும். இந்தக் கொடுவாள் உன் பகைகள் எதுவாயினும் ஒழிக்கும்” என்று தேவி கூறினாள்.
பெர்ஸியஸ் துயர்நீங்கி அகமகிழ்வுடனும், நன்றியறி தலுடனும் மீண்டும் மீண்டும் தேவியை வணங்கினான். போகும்வழி, நடந்து கொள்ளும் முறைமை, இடர்களிலிருந்து தப்புவதற்கான எச்சரிக்கைகள் ஆகிய அறிவுரைகள் பலவற்றையும் அதேனா பெர்ஸியஸுக்கு அறிவித்தாள்.
பெர்ஸியஸ் தன் தாயிடம் சென்று நடந்தவை யாவும் கூறி விடை கோரினான். ’தாய் மகனைப்பற்றிக் கவலைப்பட்டாள். அதேனா திருவருளும் தெய்வப் படைக்கலங்களின் உதவிகளும் தனக்குக் கிடைத்திருப்பதை நினைவூட்டிப் பெர்ஸியஸ் தாய்க்கு ஆறுதல் கூறினான். ஆனால், அவன் தாயைப்பற்றிக் கவலைப் பட்டான். தான் இல்லாதபோது தன் தாயிடம் பாலிடெக்டிஸ் கொடுமை பண்ணுவானே என்று அவன் மறுகினான். அதற்கும் அதேனாவையே நம்புவதென்று அவன் தீர்மானித்தான். அதேனாவின் கோவில் எல்லைக்குள் இருப்பவரைத் தாக்க அரசர்களும் அஞ்சுவர் என்பதை அவன் அறிவான். ஆகவே, அவன் தாயை அதேனாவின் கோயிலெல்லையில் கொண்டு தங்க வைத்துச் சென்றான்.
அதேனா கூறிய வழியே பெர்ஸியஸ் தெய்வீக மிதியடிகளிலேறிப் பறந்து சென்றான். அந்நாளைய நாகரிக உலகமாகிய தென் ஐரோப்பா கடந்து அவன் நடு ஐரோப்பா, வட ஐரோப்பா மீது பறந்தான். உலகின் வடகோடியை அடுத்து மனிதரின் ஊழை வகுத்த மூன்று கிழக்கன்னியர் வாழ்ந்த கிரேயா நாட்டை அவன் அடைந்தான். இம்மூவரும் குருடர்கள்; ஆனால், மூவருக்கும் பொதுவாக ஒரே கண் இருந்தது. அதை மாறி மாறிப் பெற்றுத்தான் அவர்கள் பார்க்க வேண்டும்.
மெடூசாவைப்பற்றிய விவரங்கள் யாவும் அவள் இருந்த நாட்டின் திசையும் வழியும் தெரிந்தவர்கள் இக்கிழக் கன்னியர்கள் மட்டுமே. அவர்களிடமிருந்துதான் அதைப் பெர்ஸியஸ் பெற வேண்டும் என்று அதேனா கூறியிருந்தாள். அவள் கூறியபடியே செயலாற்ற எண்ணிப் பெர்ஸியஸ் அவர்கள் அருகே சென்றான்.
பெர்ஸியஸ் பின்புறமிருந்து வருவதைக் காற்றசைவால் கிழக்கன்னியருள் ஒருத்தி அறிந்தாள். உடனே வருபவனைப் பார்ப்பதற்காக அவள் பக்கத்திலிருந்தவளிடம் கண்ணைக் கேட்டாள். கண் கைக்குக் கை மாறியது. அந்த நேரத்துக்கே பெர்ஸியஸ் காத்திருந்தான். கண் ஒரு கையிலிருந்து ஒரு கைக்கு மாறுமுன் அவன் அதைத் தட்டிப் பறித்துக் கொண்டான். மூவருக்கும் உயிரினும் மேலான செல்வம் அந்தக் கண். அதை யாரோ பறித்துவிட்டது உணர்ந்த மூன்று குருட்டுக் கிழவியரும் கோவெனக் கதறினார்கள்.
“மெடூசாவைக் காணும் வழியைக் கூறுங்கள், உங்கள் கண்ணை அப்போதுதான் தருவேன்” என்றான் பெர்ஸியஸ்.
அவர்கள் மேலும் அழுதனர். ஏனென்றால், மெடூசாவிடம் அவர்களுக்குப் பாசம் மிகுதி. ஆனாலும் கண்ணைப் பெற வேறு வழியில்லாமல். அவர்கள் மெடூசா பற்றியாவும் கூறினர்.
கிழக் கன்னியரிடமிருந்து வழியறிந்தபின், பெர்ஸியஸ் மீண்டும் தெற்காகத் திரும்பிப் பறந்தான். உலகின் தென்கோடி கடந்தபின் பகலாட்சி தாண்டி இரவாட்சியின் பரப்பில் சென்றான். உலகிற்கப்பாலுள்ள எல்லையற்ற புறக்கடல் எங்கும் கருங் கும்மென்று இருளில் இருளாகத் தோற்றிற்று.
இருண்ட கடலின் நடுவே ஓர் அகலமான தீவு இருந்தது. அதில் மூன்று பெண்கள் இருந்தனர். இருவர் உறங்கினர். ஒருத்தி மட்டும் சுற்றிச் சுற்றி நடந்தும் பறந்தும் அவர்களைக் காத்தாள். அவள் தலையின் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு பாம்பாகச் சீறிற்று. அவள் முகம் அழகாகயிருந்தாலும், உடல் அருவருப்பாயிருந்தது. பெரிய இறக்கைகள் ஆடைகள்போல மூடியிருந்தன. அவளே வல்லரக்கி மெடூசா என்று பெர்ஸியஸ் அறிந்து கொண்டான்.
எவரும் வரமுடியாத தன் தீவில் எவரோ வந்திருப்பதை மெடூசாவும் உணர்ந்து கொண்டாள் என்பதை அவள் சுற்றிச்சுற்றி பார்த்த பார்வை தெரிவித்தது.
பெர்ஸியஸ் இப்போது இருந்தது நாலு திகைளிலுமில்லை. உச்சிக்கு நேர்மேலே அவன் பறந்து கொண்டிருந்தான். இதனால் அவன் மெடூசாவின் பார்வையில் படவில்லை. முகத்தையும் இன்னும் மேலே காணவில்லை. அத்துடன் அம்முகத்தைக் கண்டவர் கல்லாய்ப் போய் விடுவார்கள் என்பதை அவன் மறக்கவில்லை. அவள், தன்னைக் காணாமல் அவன் தன் தலையணியால் தன்னைக் கண் புலப்படாமல் மறைத்துக் கொண்டான். ஒரு கையில் வாளுடனும் மற்றக் கையில் கேடயத்துடனும் அவன் மெடூசாவை அணுகினான். மெடூசாவைப் பாராமலே அவள் தலையை அறிந்து வெட்டும்படி, அவன் தன் கேடயத்திலுள்ள அவள் நிழல் வடிவத்தைப் பார்த்துக் கொண்டே சென்றான்.
மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸின் தெய்வீக வாள் முதல் வெட்டிலேயே துண்டுபடுத்திவிட்டது. அச்சமயம் அவள் வீறிட்டுக் கூக் குரலிட்டாள். தூங்கியிருந்த அவள் தோழியர் இருவரும் எழுந்து பறந்து கொலைகாரனைக் கொல்ல விரைந்து வட்டமிட்டனர். ஆனால், அதற்குள் பெர்ஸியஸ் மெடூசாவின் தலையைப் பார்க்காமலே அதை ஒரு பையிலிட்டு, அதனுடன் வானில் எழுந்து பறந்தான். அவன் தலையணி அணிந்திருந்ததால், மெடூசாவின் தோழியர் அவனைக் காணாமல் அலறிக் கொண்டே இருந்தனர். நெடுந்தொலை செல்லும் வரை பனிக்காற்றுடன் பனிக்காற்றாக அவர்கள் அலறல் பெர்ஸியஸுக்குக் கேட்டது.
காற்றுவெளியில் பறந்து வந்துகொண்டிருக்கும்போது, பெர்ஸியஸ் காதுகளில் ஒரு பெண்ணின் அழுகைக் குரல் கேட்டது. குரல் பாறைகளிலிருந்து மிதந்து வந்ததாகத் தோன்றிற்று. அவன் பாறைகளைச் சுற்றிப் பறந்து பார்த்தான். எவரும் அணுக முடியாத ஒரு கொடும்பாறையில் அழகே உருவெடுத்தாற்போன்ற ஒரு பெண்மணி சங்கிலியினால் அசைய முடியாதபடி கட்டப் பட்டிருந்தாள். அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் தாங்க முடியாதபடி வேதனையால் துடித்தன. கதறியழுது அவள் தொண்டையடைத்து முகம் வீங்கியிருந்தது.
பெர்ஸியஸ் மனம் பாகாய் உருகிற்று. அவன் உடனே தன் வாளின் மொட்டைப் பக்கத்தால் சங்கிலிகளை உடைத்தெறிந்து அவளை விடுவித்தான். நீண்டு வேதiனால் அவள் சோர்ந்து உணர்விழந்தாள். பெர்ஸியஸ் அருகில் உள்ள பாறைகளில் பறந்து சென்று தேடி, நீர் கொணர்ந்து தெளித்து, உணர்வு வருவித்தான். அதன்பின், அவன் அப் பெண்மணியிடம் கனிவுடன் பேசினான். “நீ யார் அம்மா? இங்கே எப்படி வந்தாய்? இந்த இடரை உனக்கு யார், எதற்காகச் செய்தார்கள்?” என்று கேட்டான்.
பெண்மணியின் உடலில் இப்போதும் நடுக்கம் தீரவில்லை. அவள் கைகால்கள் புயலில்பட்ட தளிர்கள் போலத் துடிதுடித்தன. அவள் தன் துயரக்கதையைச் சுருக்கமாகக் கூறினாள்.
’எனக்கு உதவ வந்த அன்பரே! என் இடம் இன்னும் முற்றிலும் தீரவில்லை. இங்கிருந்து போக முடியுமானால் விரைந்து போய்விட வேண்டும். ஆகவே, சுருக்கமாகக் கூறுகிறேன்" என்று தன் வரலாற்றைக் கூறலானாள்.
“என் பெயர் அண்ட்ரோமீடா. என் தந்தை கெஃவியஸும் தாய் கஸியோபியாவும் அருகிலுள்ள நாட்டை ஆள்பவர்கள். நான் பருவமடைந்த போது என் தாய் என்ன காலக் கேட்டினாலோ என் அழகைப்பற்றி எல்லை கடந்து பெருமைப் பட்டாள். கடலிறைவி நெரியஸ் அழகுகூட என் அழகுக்கு ஈடாகாது என்று அவள் புகழ்ந்துவிட்டாள். கடலிறைவன் தன் ஒற்றர்கள் மூலம் இதை அறிந்து என்மீதும் எங்கள் நாட்டின் மீதும் ஒரு பெரும்பூதத்தை ஏவி விட்டான். என்னை அப்பூதத்துக்கு இரையாக அனுப்பி விட்டால், நாடும் பிறரும் காப்பாற்றப் படலாம் என்று செய்தி கேட்டு, என் தாய் தந்தையரே கண்ணீருடனும் கதறலுடனும் என்னை இங்கே கட்டிவிட்டுச் சென்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அப்பூதம் வந்துவிடும். நாம் அதற்குள் ஓடிவிட வேண்டும்.”
பெண்மணி இவ்வளவு கூறுமுன் பாறை நடுங்கும்படி பூதம் அலறிக் கொண்டு வந்தது. அண்ட்ரோ மீடாவுக்கு வந்த உணர்வும் போயிற்று. ஆனால், பெர்ஸியஸ் விரைந்து தன் வாளைச் சுழற்றிப் பூதத்தை வெட்டி வீழ்த்தினான். அண்ட்ரோ மீடாவை மீண்டும் உணர்வுபெறச் செய்விப்பது பெருங்காரிய மாய்ப் போய்விட்டது. அவள் உணர்வு பெற்றதும் தானும் இளைஞனும் உயிருடன் இருப்பது கண்டு வியந்தாள். அருகே அச்சந்தரும் பூதத்தின் உருவம் துண்டு பட்டுக் கிடப்பது கண்ட பின்னரே, தன் துன்பம் ஒழிந்தது என்று அவளால் நம்ப முடிந்தது.
பெர்ஸியஸும் அண்ட்ரோமீடாவும் மன்னன் கெஃவியஸிடமும் அரசி கஸியோபியாவிடமும் வந்தனர். அரசன் அரசியரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. செய்தி முழுவதும் கேட்டபின் அரசி அண்ட்ரோமீடாவையும், அரசன் பெர்ஸியஸையும் அணைத்து இன்பக் கண்ணீராட்டினர்.
“எங்கள் பழியைப் போக்கி எங்கள் இன்னுயிர்ப் பாவையையும் உயிருடன் எங்களுக்குத் தந்த உமக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்” என்றான் அரசன்.
“உங்கள் இன்னுயிர்ப் பாவையை என் இன்னுயிர்ப் பாவை ஆக்கினால் போதும்” என்றான் பெர்ஸியஸ்.
பெண்ணின் விருப்பமறிய அரசன் அவளை நோக்கினான்.
அண்ட்ரோமீடா தாயைக் கட்டிக்கொண்டு “உங்களை விட்டு நான் எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று கண்கலங்கினாள்.
இருவர் குறிப்புமறிந்த தாய் தந்தையர் பெர்ஸியஸுடன் அண்ட்ரோ மீடாவின் திருமணத்தை நாடு களிக்க ஆரவாரத்துடன் நடத்தினர்.
சிலநாள் மனவியின் நகரில் இருந்தபின் அண்ட்ரோ மீடாவுடன் பெர்ஸியஸ் ஸெரிஃவ்ஸ் தீவுக்குப் புறப்பட்டான். மெடூசாவின் தலையடங்கிய பை அவன் கையில் எப்போதும் தொங்கிற்று.
அதேனாவின் கோயிலில்கூட பாலிடெக்டிஸின் தொல்லை தானேயை விடவில்லை. அவன் அவளிடம் தன் ஒற்றர்களை அனுப்பியும் தூதர்களை அனுப்பியும் நச்சரித்தான். எதற்கும் அவள் அசையாதது கண்டு, அவன் அதேனாவின் கோயிலென்றும் பாராமல் படைவீரரை அனுப்பி, அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிவர உத்தரவிட்டான். படைவீரர்களைக் கண்டு, தானே துடிதுடித்தாள்.
பெர்ஸியஸ் இந்தச் சமயத்தில் திடுமென வந்து சேர்ந்தான். தாயைக் கைப்பற்றத் துணிந்து படைவீரர் நின்ற காட்சி கண்டு அவன் குருதி கொதித்தது. ஆனால், படை வீரரைப் பின்பற்றி வந்த பாலிடெக்டிஸ் பெர்ஸியஸைக் கண்டு வியப்பும் சீற்றமும் கொண்டான். அவனைப் பிடித்துக் கொல்லும்படி அவன் தன் படைவீரர்க்கு ஆணையிட்டான். பெர்ஸியஸால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவன் பையிலிருந்து மெடூசாவின் தலையை எடுத்து அனைவர் முன்பும் நீட்டினான். எல்லாரும் கல்லாய் விட்டனர். பாலிடெக்டிஸும் அவர்களில் ஒருவரானான்.
தாயை மீட்டுக் கொண்டு பெர்ஸியஸ் மனைவியுடன் ஆர்கஸுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் டிக்டிஸை அவன் ஸெரிஃவஸின் அரசனாக முடி சூட்டினான்.
ஆர்கஸ் செல்லும் வழியில் ஒரு புயல் வந்து பெர்ஸியஸின் கப்பலைத் தெஸ்ஸலி நாட்டுக்கரையில் ஒதுக்கிற்று. தெஸ்ஸலி அரசன் அவர்களை வரவேற்றான்.
தெஸ்ஸலி நாட்டின் தலைநகரான லாரிஸாவில் அப்போது ஒரு வீரக் கேளிக்கைப் போட்டி நடந்தது. அரசன் பெர்ஸியஸை அதில் கலந்து கொள்ளும்படி வேண்டினான். ஆர்கஸின் கிழ அரசன் அக்ரிசீனும் அதில் ஈடுபட்டிருந்தான். பெர்ஸியஸ் போட்டியில் எறிந்த சக்கரப்படை தவறி அவன் மீது விழ, அவன் உயிர்நீத்தான். இங்ஙனம் பெர்ஸியஸ் தான் அறியாமலே அவன் தன் பாட்டனைக் கொன்றுவிட நேர்ந்தது.
ஆர்கஸின் மக்கள் பெர்ஸியஸையே அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஊழமைதியை முற்றிலும் நிறைவேற்றிவிடப் பெர்ஸியஸ் மறுத்தான். மெகபரந்திஸ் என்ற டிரின்ஸ்நகர் அரசனையே அவன் ஆர்கஸ் அரசனாக்கினான். பெர்ஸியஸ் தன் மனைவி ஆண்ட்ரோ மீடாவுடனும், தன் தாய் தானேயுடனும் டிரின்ஸ் நகரில் புகழுடன் ஆண்டுவந்தான்.
பறக்கும் குதிரை
(குதிரையை அடக்கும் வீரச்செயல் பற்றிய செய்தி பல நாட்டுக் கதைகளிலும் வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. பறக்கும் குதிரையைப் பற்றிய செய்திகளும் மிகப் பழங்காலக் கதைகளில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சாத்தன் என்ற பண்டைப் பழந்தெய்வத்தின் ஊர்தியாகப் பறக்கும் குதிரை இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் சிற்றூர்களில் ஒன்றில் இன்னும் ஆண்டுக்கு ஒருநாள் பறக்கும் குதிரை விழா நம்பிரான் விழா என்ற பெயருடன் பழைய சாத்தன் அடியவர்களின் பரம்பரையினரால் நடத்தப்பட்டு வருகிறது. கிரேக்கரின் பறக்கும் குதிரையாகிய “பெகாஸஸ்” பற்றிய கதையை இவ்ஒப்புமை களுடன் இங்கே தருகிறோம்)
கொரிந்த் நகரில் ஒரு பறக்கும் குதிரை இருந்தது. அதை யாராலும் பிடிக்கவோ அதன்மேல் ஏறவோ முடியவில்லை. பிடிப்பவர் அணுகுமுன் அது அவர்களை உதைத்துத் தள்ளி வானில் பறந்து வட்டமிட்டு, வீறுடன் மீண்டும் இறங்கி வந்து, “எவரும் ஏறாக் குதிரையாக” இறுமாந்து நின்றது. அதன் பெயர் பெகாஸஸ். அது தூய வெள்ளை நிறமுடையதாய், மண்ணுலகக் குதிரைகளைவிட உயரமும் பருமனும் உடையதாயிருந்தது.
மக்கள் அக்குதிரையைத் தெய்வீகப் பிறவி என்றே கருதினர். மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸ் வெட்டிய பொழுது, அதினின்று தெறித்த குருதி, ஒருகுதிரை உருவில் படிந்தது. தேவர்கள் அதை ஒரு தெய்வீகக் குதிரை ஆக்கினர். இக்குதிரையையே பெகாஸஸ் என்று கொர்ந்த் மக்கள் கூறினார்.
பெகாஸஸைப் பிடிக்கப் பலதடவை முயன்று தோல்வி யுண்டவர்களுள் கொரிந்த் அரசன் மகனான பெல்லராஃவான் ஒருவன். ஆனால், மற்றவர்களைப் போல அவன் தோல்விகளால் மனமுறிவடையவில்லை. ஒவ்வொரு தோல்வியும் அவன் ஆவலைப் பெருக்கிற்றேயன்றித் தணிக்கவில்லை. விடாமுயற்சி யுடன் அவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே யிருந்தான்.
கடைசியில் அவன் ஒருநல்லறிவனிடம் சென்று அறிவுரை கோரினான். அதேனே இறைவியின் திருக்கோயில் சென்று இரவு முற்றும் விழித்திருந்து வழிபாடற்றி அத்தெய்வத்தின் அருளுதவியை நாடும்படி அவன் கூறினான். பெல்லராஃவான் அவ்வண்ணமே சென்று வழிபாடாற்றினான். ஓரிரவு கழிந்தும் தயங்காது அடுத்த இரவும், அதற்கடுத்த இரவும் இருந்து கடுவிழிப்புடன் இடைவிடா வழிபாடியற்றினான். மூன்றாம் நாளிரவு அவன் கண்கள் அவனை மீறித் துயில் கொண்டன. அதுகண்டு அதேனே இரங்கி அவனுக்குத் துயிலில் காட்சியளித்தாள். அவள் கையில் பொன்னாலான கடிவாளம் ஒன்று இருந்தது. அதை அவனிடம் நீட்டிக்கொண்டே அவள், “பெல்லராஃவான்! உன் அன்புறுதிக்கு உன்னை மெச்சினேன். இதோ இந்தப் பொற்கடிவாளம் உனக்க உதவும், போ!” என்றாள்.
பெல்லராஃவான் கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பறக்குங் குதிரை பெகாஸஸ் ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன் மெல்லக் குதிரையை அணுகி, பொற் கடிவாளத்தை அதன் தலைமீது வீசினான். கடிவாளத்தின் அழகொளியில் மயங்கிப் பெகாஸஸ் அசையாது நின்றது. கடிவாளத்தைப் பூட்டியதும் அவன் சட்டென்று அதன்மீது தாவி ஏறினான். இப்போது பெகாஸஸுக்குத் தன்னுணர்வு வந்துவிட்டது. அது சீற்றமும் வீறும் கொண்டு வானில் எழுந்து பறந்தது. குட்டிக் கரணங்களிட்டுத் தன்மீது ஏறிய பெல்லராஃவானைக் கீழே தள்ள முயற்சி செய்தது. ஆனால், எவராலும் அணுகமுடியாத குதிரையை ஒரு தடவை அணுகி ஏறியபின்பு, அவன் கடிவாளத்தின் பிடியை விடாமலும், குதிரைமீது அணைத்த தன் கால்களை நெகிழ விடாமலும் கெட்டியாக உட்கார்ந்து கொண்டான். குதிரை எத்தனை குட்டிக் கரணமிட்டதன்றி வேறெவ்வகையிலும் அவன் அசையவில்லை. தன்னாலியன்ற மட்டும் தள்ளிவிட முயன்றும் பயனில்லாததால், பெகாஸஸ் இறுதியில் பெல்லராஃவானைச் சுமந்து காடும், மலையும் கடலும் தாண்டி உலகெங்கும் சுற்றித் திரிந்தது.
பெல்லராஃவானும் பெகாஸஸும் சிலகாலம் கொரிந்த நகரைச் சுற்றித் திரிந்து அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால், அரசன் நண்பன் ஒரு பெல்லராஃவானுடன் பகைத்துக் கொண்டான். பெல்லராஃவான் அவனுடன் ஒருநாள் போராடுகையில் அவனைக் கொன்றுவிட நேர்ந்தது. இச்செயலுக்குப்பின் அவன் கொரிந்திலிருக்க விரும்பாமல், திரேஸன் நகர் சென்றான்.
திரேஸன் நகரில் மன்னன் மகள் பெல்லராஃவானிடம் காதல் கொண்டாள். இருவரும் மணந்து கொள்ளப் போகும் சமயம் கொரிந்திலிருந்து வந்த தூதன் பெல்லராஃவான் செய்த கொலையைப் பற்றி மன்னனிடம் கூறித் திருமணத்தை நிறுத்திவிட்டான். இதனால் மனமுடைந்து பெல்லராஃவான் பெகாஸஸுடன் பறந்து சென்று, டிரின்ஸ் நகரை ஆண்ட மன்னன் பிரேட்டஸிடம் போனான். பிரேட்டஸ் அவனுடன் மிகவும் நட்பாடி அளவளாவி, அவனுக்கு வேண்டிய வாய்ப்பு நலங்கள் செய்து தந்தான்.
பிரேட்டஸின் மனைவி ஸ்தெனோபீயா மிகவும் அழகுடையவள். ஆனால், அழகுக்கேற்ற நற்குணம் அவளிடம் இல்லை. அவள் பெல்லராஃவானிடம் தகாப்பற்றுக் கொண்டாள்; பெல்லராஃவானிடம் பறக்கும் குதிரை இருந்ததைச் சுட்டிக்காட்டி, தன்னை மட்டும் இட்டுக் கொண்டு ஓடிவிடும்படி கோரினாள். பெல்லராஃவான் தன் நண்பனுக்கு நன்றி கேடனாக விரும்பவில்லை. இதனால் ஸ்தெனோபீயாவுக்கு அவன்மீது சீற்றம் வந்தது. தான் செய்ய எண்ணியதை அவன் செய்ய முனைந்ததாக அவள் தன் கணவனிடம் கூறி அவனைச் சினமூட்டினாள்.
மன்னன் இப்போது பெல்லராஃவானுக்குத் தெரியாமலே அவன்மீது பகைமை கொண்டான். ஆனாலும், அவன் நேரில் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. லிஸியாவிலுள்ள அரசன் அயோபேட்டிஸ் அவன் மாமன்; ஸ்தெனோபீயாவின் தந்தை. அவனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஸ்தெனோபீயா கூறிய குற்றச் சாட்டைத் தெரிவித்தான். அதற்குரிய தண்டனையை அளிக்கு மாறும் வேண்டியிருந்தான். சூதுவாதற்ற பெல்லராஃவானிடமே இந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினான்.
அயோபேட்டிஸ் கடிதத்தில் கண்ட செய்தியையும், அதில் குற்றஞ் சாட்டப்பட்டவனே ஐயுறவு எதுவுமின்றி அதைக் கொண்டுவந்து கொடுத்ததையும் கண்டு வியந்தான். முதலில் களங்கமற்ற பெல்லராஃவானின் முகத்தைக் கண்டதும், இதை நம்ப முடியவில்லை. ஆயினும், தன் மகனையும் மருமகளையும் நம்பாதிருக்க வழியின்றி, அவன் தக்க நடவடிக்கையில் முனைந்தான்.
லிஸியா அருகே வெள்ளாட்டின் உடலும், பாம்பின் வாலும், சிங்கத்தின் தலையும் உடைய ஒரு கொடுவிலங்கு இருந்தது. அதனை மக்கள் சிமேரா என்று அழைத்தனர். அதை அணுகிய எவரையும் அது விழுங்காது விடுவதில்லை. அயோபேட்டிஸ் அதைக் கொல்ல அனுப்பும் சாக்கில், பெல்லராஃவானை அதற்கு இரையாக்க எண்ணினான்.
ஆனால், பெகாஸஸ் செயல் இவ்வகையில் பெல்லராஃவானுக்குப் பெரிய உதவியாயிற்று. அவன் மிக நீண்டவாளை எடுத்துக்கொண்டு பறந்து சென்றான். சிமேரா அறியாமல் அவன் தாழ்ந்து அதன் தலைமேலாகப் பறந்து சென்றான். அதன் அருகே பறக்கும்போது தன் நீண்ட வாளால் அதன் தலையை வெட்டி வீழ்த்தினான்.
பெல்லராஃவானின் அருஞ்செயல் கேட்டு அயோ பேட்டிஸ் ஒருபுறம் அச்சமும், மற்றொருபுறம் வியப்பும் கொண்டான். அவனைக் கொல்ல அவன் பல்வேறு முயற்சிகள் செய்தும் பயனில்லாது போயிற்று.
தேவர்களின் அருளை இந்த அளவுபெற்ற இளைஞன் தன் மகளைக் கவர்ந்துகொண்டு செல்ல முயன்றான். என்ற செய்திமீது அவனுக்கு மீண்டும் பெருத்த ஐயுறவு ஏற்பட்டது. ஒருநாள் அவன் பெல்லராஃவானிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டான். பெல்லராஃவான் அது கேட்டுத் திடுக்கிட்டான். மன்னன் தன் மருமகன் அனுப்பிய கடிதத்தைக் காட்ட, அவன் திகைப்பும் திகிலும், சீற்றமாக மாறிற்று. அவன் அயோபேட்டிஸிடம் ஒன்றும் கூறாமல், இரவே டிரின்ஸ்நகர் சென்றான்.
அரசன் அரசி அறியாமல் சிலநாள் அங்கேயே தங்கியிருந்தது. தனியாக ஸ்தெனேபீயா உலவிய சமயம் அவள் முன் சென்றான். அவள் முதலில் அச்சங் கொண்டாள். ஆனால், பெல்லராஃவான் அவளுக்கேற்றபடி நடித்தான். அவள்மீது தனக்கு இப்போது புதிதாகப் பாசம் ஏற்பட்டு அவள் திட்டப்படி நடக்கவே வந்திருப்பதாகக் கூறினான். ஸ்தெனோபீயா தன் விருப்பம் நிறைவேறப் போவதாக எண்ணி மகிழ்ந்து கூத்தாடினாள்.
பெல்லராஃவான் ஸ்தெனோபீயாவைக் குதிரை மீதேற்றினான். அவனும் தன் பின்னால் ஏறுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவன் ஏறாமல் பெகாஸஸின் காதில் ஏதோ கூறினான். குதிரை உடனே வானோக்கிப் பறந்தது. ஸ்தெனோபீயா நடுநடுங்கிக் கதறினாள்; குதிரையைத் தன் வலுக்கொண்ட மட்டும் இறுகப் பற்றிக் கொண்டாள்.
ஆனால், பெகாஸஸ் கதிரவனை எட்டிப்பிடிக்க எழுவது போல நேரே செங்குத்தாகப் பறந்தது. ஸ்தெனோபீயாவின் தலை சுழன்றது. திடுமெனப் பெகாஸஸ் கீழ்நோக்கிப் பறந்தது. தன்கீழே கடல் தொலைவில் தெரிவது கண்டு ஸ்தெனோபீயா பின்னும் நடுக்கமடைந்து கதறினாள். அவள் கைகால்கள் உதறலெடுத்தன. குதிரை நடுக்கடலில் வந்தவுடன் சட்டெனத் திசை திரும்பிக் குட்டிக் கரணங்களிட்டு மீண்டது. ஸ்தெனோபீயா பிடியகன்று கடலில் விழுந்து இறந்தாள்.
பெல்லராஃவான் திரும்பி டிரின்ஸுக்கும் லிஸியாவுக்கும் வந்தான். பிரேட்டஸ் தன் மனைவியைப் பற்றியோ, அயோபேட்டிஸ் தன் மகளைப் பற்றியோ எதுவும் கேட்கத் துணியவில்லை. ஆனால், அவன் சீற்றம் தம்மீது பாயாதிருந்தது கண்டு அமைந்தனர். அத்துடன் ஸ்தெனோபீயாவின் தங்கை அவன்மீது காதல்கொண்டதறிந்து, அவளை அவனுக்கு மணம் செய்து வைத்தனர்.
பெல்லராஃவான் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானான். ஆனால், ஸ்தெனோபீயா தனக்குச் செய்த பழியை அவனால் மறக்க முடியவில்லை. மூத்த பிள்ளையை நாடாளவிட்டு அவன் பெகாஸஸுடன் உலகம் சுற்றப் போவதாகக் கூறிப் புறப்பட்டான்.
பெல்லராஃவானுக்கு இந்த மண்ணுலகைச் சுற்றுவதில் விருப்பமில்லை. ‘ஒன்று தேவருலகுக்குச் செல்ல வேண்டும்; அல்லது அம்முயற்சியில் மாள வேண்டும்’ என்று கருதினான். பெகாஸஸிடம் இதை அவன் கூறியபோது, அது தன் வாழ்விலேயே முதல் தடவையாகக் கனைத்தது. அதன் கண்ணில் இன்னதென்று கூறமுடியாத பேரொளி தோன்றிற்று.
இத்தடவை பெகாஸஸ் தலையை உயர்த்திக் கொண்டு மேனோக்கிப் பறந்துகொண்டே இருந்தது. வானுலகு அருகே வரும்போது தேவர்களின் தந்தையான ஜீயஸ் ஒரு தேவனை அனுப்பி ஈ வடிவில் சென்று குதிரையின் கண்களைக் கடிக்குமாறு பணித்தார்.
கண் கடிக்கப்பெற்று குதிரை நோவு தாங்காமல் தலையைக் கவிழ்த்துக் கைகால் உதறிற்று. பெல்லராஃவான் குதிரையிலிருந்து நழுவி விழுந்தான். அவன் உடல் மண்ணுலகத்தை எட்டுமுன் அது எரிந்து சாம்பலாயிற்று. பெகாஸஸை ஜீயஸ் தம்மிடம் அழைத்துத் தம் ஊர்தியாக்கிக் கொண்டார்.
பெகாஸஸ், ஜீயஸுக்கு எப்போதும் அடங்கி நடந்தாலும், ஒவ்வொரு சமயம் பெல்லராஃவானை நினைத்து முரண்டிக் கொள்ளும். அதன் உள்ளக் குறிப்பறிந்த ஜீயஸ் புன்முறுவலுடன் அதன் மனத்துயர் அகலும் வரை அதை வாளா விட்டுவைத்து வந்தார். பெகாஸஸும் நாளடைவில் இணக்கமாகவே நடக்கத் தொடங்கிற்று.
ஆண்டியின் புதையல்
அல்ஹாம்ரா நீருற்று: கிரானடா வெப்பம் மிகுந்த நாடு. குடி தண்ணீருக்குக்கூட அங்கே பஞ்சமாயிருந்தது.
கிரானடா மன்னன் அரண்மனையின் பெயர் அல்ஹாம்ரா என்பது. அதன் அருகே தண்ணீருக்குப் பஞ்ச மில்லை. நிழலும் குளிர்ச்சியான காற்றும் போதுமான அளவு இருந்தன. ஏனென்றால் அங்கே ஒரு நறுநீர்க் கேணி இருந்தது. அதிலிருந்து நீரூற்றுப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதன் குளிர் நீர் வனத்தால் சுற்றும்முற்றும் குளிர்மரக்காவும் தென்றலும் படர்ந்தன. மக்கள் தங்கியிருக்கப் படிக்கற்களும் மண்டபங்களும் இருந்தன. நகரின் செல்வர்களும் இளைஞர் களும் இங்கே அடிக்கடி வந்து தங்கிப் பொழுது போக்கினர். கேணியில் தண்ணீர் எடுக்கப் போகிறவர்கள். தண்ணீர் எடுத்து வருகிறவர்கள் அவ்வழியாக எப்போதும் திரள் திரளாகச் சாய்ந்து கொண்டிருந்தனர்.
கேணியருகேயுள்ள மக்களிடையே அடிக்கடி ஒரு குரல்.
பன்னீர் போலத் தண்ணீர்,
மன்னரும் விரும்பும் நன்னீர்,
அல்ஹாம்ராவின் அமுதம்,
தண்ணீர் வாங்கலையோ தண்ணீர்!
என்று களிப்புடன் பாடிச் செல்லும். அதுதான் தண்ணீர் விற்கும் பெரிகிலின் குரல்.
தாமே நேரில் சென்று அல்ஹாம்ராவின் அமுதத்தை எடுத்துக் கொண்டு வரமுடியாத உயர்குடிச் செல்வர்களுக்குப் பெரிகிலும், அவனைப் போன்று தண்ணீர் விற்கும் தண்ணீர் காரரும் அந்நீரைக் கொண்டு சென்று விற்றுப் பிழைத்தார்கள்.
பெரிகில் பார்வைக்கு அந்த சந்தமானவன் அல்லன். ஆனால், அவன் நல்ல உழைப்பாளி; சுறுசுறுப்பானவன்; எனவே அவன் உடல் உருண்டு திரண்டு உறுதியுடையதா யிருந்தது. அவன் சலியாமல் உழைத்ததனால், அவன் கையில் பணம் பெருகிற்று. தண்ணீர்க் குடங்களைச் சுமப்பதற்குப் பதில், ஒரு நல்ல கழுதையை வாங்கி அதன் மீது குடங்களை ஏற்றிச் சென்று, அவன் தன்தொழிலை இன்னும் வளர்த்தான்.
பெரிகிலின் சுறுசுறுப்பையும், கலகலப்பையும் பார்ப்பவர்கள் அவன் கவலையற்றவன் என்று நினைப்பார்கள். ஆனால், அவன் எவ்வளவு உழைத்துப் பொருள் ஈட்டினாலும், அவன் குடும்ப நிலை மட்டும் உயரவில்லை. அவன் மனைவியின் தான்தோன்றித்தனமான நடையே இதற்குக் காரணம். அவள், அவன் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிட்டு இன்ப வாழ்க்கை வாழ்ந்து, பகட்டும் ஆரவாரமும் மேற்கொண்டாள். ‘பசியோபசி’ என்று வாடும் பிள்ளைகள் பலர் அவளுக்கிருந்தும், அவள் அவர்களை வீட்டில் கணவனிடம் விட்டுவிட்டு, ஊர் சுற்றி வம்பளந்தாள். கணவனை ஓயாது கடிந்தும் திட்டியும் தொல்லைக்கு ஆளாக்கினாள். பெரிகில் இத்தனையும் பொறுத்துக் கொண்டு, வீட்டு வேலைகளை எல்லாம் தானே செய்து, பிள்ளைகளையும் தன்னாலானவரை பேணி வளர்த்தான். வெளியிலேயுள்ள கடுமையான உழைப்பு, வீட்டுவேலை, குழந்தைகள் தொல்லை ஆகிய இத்தனைக் கிடையே கூட அவன்மன உறுதியும் கிளர்ச்சியும் குன்றாமல் எப்போதும் போலக் கலககலப்பாகத் தொழில் நடத்தனான்.
பெரிகில் இளகிய உள்ளம் உடையவன். யாராவது அவன் உதவி கோரினால், அவன் தன் வேலையைக்கூடக் கவனியாமல் அவர்களுக்கு உதவி செய்வான். அவன் மனைவி இதற்காக அவனைக் குறைகூறிக் கண்டிப்பதுண்டு. “பிழைக்கும் மதியிருந்தால் உன் காரியத்தையாவது ஒழுங்காகப் பார். அடுத்தவர் காரியங்களை மேற்கொண்டு எனக்குத் தொல்லை வருவிக்காதே!” என்பாள். ஒருநாள் இவ்வகையில் அவனுக்குப் பெருத்த சோதனை ஏற்பட்டு விட்டது.
அன்று பகல் முழுவதும் வெப்பம் மிகுதியாயிருந்தது. தண்ணீர்க்காரர் எல்லோருக்குமே நல்ல வருவாய் கிடைத்தது. எனவே, எல்லாரும் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆர அமரப் பொழுது போக்கப் போய்விட்டனர். ஆனால், இரவில் முழுநிலா எறித்தது. மக்கள் அதன் அழகில் ஈடுபட்டு இரவிலும் பொழுது போக்க எண்ணி வெளியே நடமாடினர். வேறு தண்ணீர்க்காரர் இல்லாததால், பெரிகில் தனக்கு இன்னும் வேலையிருப்பது கண்டான். அன்று சற்று மிகுதிப்படி காசு ஈட்டித் தன் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று ஏதாவது வாங்கிக் கொடுக்க அவன் எண்ணினான். ஆனால் அங்ஙனம் செய்வதற்குள் ஒரு தடை ஏற்பட்டது.
பெரிகிலின் இரக்கச் செயல்: மூர் மரபைச் சேர்ந்த ஓர் ஆண்டி கேணியண்டை உட்கார்ந்திருந்தான். அவன் தோற்றம் இரக்கமூட்டுவதாயிருந்தது. பெரிகில் பையில் கையிட்டு ஒரு காசைப் பிடித்த வண்ணம் அவனை அருகே வரும்படி சைகை செய்தான். ஆண்டி அசையவில்லை. ஆனால், அவன் முகத்தில் ஏக்கம் தென்பட்டது. பெரிகில் அவனை அணுகினான். அவன் ஈனக்குரலில், “இரக்கமுள்ள ஐயனே! முதுமை, பிணி, அலுப்பு ஆகி மூன்றானாலும் பேசக்கூட முடியாதவனாகிவிட்டேன். எனக்குக் காசு வேண்டாம். நகரத்துக்கு உன் கழுதை மீது இட்டுக் கொண்டு போய்விடு. உனக்குப் புண்ணியம் உண்டு. தண்ணீர் விற்பதனால் உனக்கு வரக்கூடும் ஊதியத்தில் இரண்டத்தனை கொடுத்துவிடுகிறேன்” என்றான்.
பெரிகில் அவன்நிலை கண்டு உருகிவிட்டான். அவன் மிகுதி ஆதாயத்தை விரும்பவில்லை. விரைந்து அவனை நகரில் கொண்டு விட்டான். வேண்டுமானால், பின்னும் உழைக்கவே எண்ணினான். “நான் உதவி செய்கிறேன்; ஆனால் பணம் வேண்டாம். துன்ப மடைந்தவருக்கு உதவி செய்யும்போது பணம் வாங்கப்படாது!” என்றான்.
ஆண்டி அசைய முடியவில்லை. அவனைக் கிட்டத்தட்டத் தூக்கியே கழுதைமீது ஏற்ற வேண்டியிருந்தது. கழுதை நடக்கத் தொடங்கிய பின்னும் தன்பிடி சாயவிட்டால் அவன் விழுந்து விடுவான் என்று கண்டு பெரிகில் அவனைக் கையால் தாங்கிக் கொண்டே சென்றான்.
நகருக்குள் வந்தபோது பெரிகில் “அன்பனே! நகரில் எங்கே போக வேண்டும்?” என்று கேட்டான்.
அவன், “அப்பனே! தண்ணீர் கண்ட இடம் தானே ஏழைக்குத் தங்குமிடம்? நான் அயலான். அயல் மரபினன். எனக்கு நகரில் இடம் ஏது? நீ பெருந்தன்மை உள்ள நாயன். உன் வீட்டில் ஓரிரவு தங்க இடம் கொடு. உனக்கு நன்மை உண்டு” என்றான்.
பெரிகிலுக்கு இக்கோரிக்கையை மறுக்கவும் மணம் இல்லை. ஏற்கவும் முடியாது கலங்கினான். மனைவியின் பொல்லாக் கோபம் அவன் மனக்கண் முன்பு நின்று அவனை அச்சுறுத்தியது. ஆயினும் மன உறுதியில்லாமலே, ஆண்டியுடன் வீடுநோக்கி நடந்தான்.
கழுதையின் காலடியோசை கேட்டு, அவன் பிள்ளைகள் ஆவலுடன் வழக்கம்போல ஓடிவந்தனர். அயலான் முகமும் தோற்றமும் கண்டு அவர்கள் அஞ்சி விலகினர். ஒவ்வொருவராகத் தாயின் கால்களைச் சுற்றி நின்று ஒளிந்தனர். தாய் குஞ்சுகளைப் பாதுகாக்க வரும் பெட்டைக்கோழிபோல் திமிறிக்கொண்டு ‘என்ன காரியம்?’ என்று பார்க்க வந்தாள்.
“இது யார்? என்ன சாதிப்பயல்? இந்த மதத்துரோகியை ஏன் இங்கே கொண்டு வந்தாய், அதுவும் இந்நேரத்தில்?” என்று அவள் அலறினாள்.
“நான் செய்தது தப்புத்தான். ஆனால், என்மீது காட்டும் கோபத்தை இந்த ஏழைமீது காட்டாதே. அவன் ஆளற்றவன்; சத்தியற்றவன்; ஓர் இரவு தங்கியிருந்துவிட்டுப் போகட்டும்” என்றான் பெரிகில்.
அவள் கேட்கவில்லை. “உடனே வெளியே அனுப்பி விடு” என்று ஆர்ப்பரித்தாள்.
அவன் வாழ்க்கையில் முதல் தடவையாக, அவன் கேட்கவில்லை. “இன்று இந்த இரவில் நான் அனுப்ப முடியாது; நாளை அனுப்பலாம்” என்றான்.
அவன் துணிவு கண்டு மனைவி மலைப்படைந்தாள். வெறுப்புடன் ‘சீ, நீ ஒரு மனிதனா’ என்ற குறிப்பை வீசி எறிந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். குழந்தைகள்கூட அவளுடன் சென்று பதுங்கின.
எவர் உதவியுமின்றிப் பெரிகில் ஆண்டியைத் தானே இறக்கி, ஆதரவாகத் தாங்கி, படுக்கை விரித்து, கிடத்தினான். அவன் சோதனை பெருகிற்று. ஆண்டியின் நோய் அவன் கழுதையில் ஏறிவந்த அதிர்ச்சியால் பன்மடங்காயிற்று. பெரிகில் செய்வதொன்றும் அறியாமல், கவலையே வடிவாய் அருகில் இருந்தான்.
ஆண்டியின் கண்கள் அவனை நோக்கின. ஒரு முழு வாழ்நாளின் கனிவு அதில் இருந்தது. அவன் நெஞ்சிலிருந்து எறும்பின் குரல்போல மெல்லிய ஓசை எழுந்தது. “அன்பனே! உன் அன்புக்கு ஓர் எல்லையில்லை. என் வாழ்வின் இறதியில் வந்த தெய்வம் நீ! நீ எனக்காகக் கவலைப்படாதே. என் இறுதி அணுகிவிட்டது. உன் அன்புக்குக் கைம்மாறு தரமுடியாது. ஆயினும் இதோ இதை ஏற்றுக் கொள்” என்று கூறித் தன் இடுப்பிலிருந்து ஒரு சந்தனப் பெட்டியை எடுத்துக் கொடுத்தான். பெரிகில் அதை வாங்குமுன் ஆண்டியின் உயிர் உடலை விட்டுப் போய்விட்டது.
துயரமும் கழிவிரக்கமும் - பெரிகிலுக்குச் சந்தனப் பெட்டியைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. அதை அவன் மறந்துவிட்டான். “தங்க இடம் கொடுத்த இடத்தில், வந்தவன் பிணமானான். இனி, பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று கலங்கினான்.
“என் சொல்லை மீறி நடந்து கொண்டதன் விளைவு பார்த்தாயா? உன்னை நான் கட்டிக் கொண்டழுகிறேனே!” என்று மனைவி பிலாக்கணம் தொடங்கலானாள்.
“செய்தது செய்துவிட்டேன். நீ ஓசையுண்டு பண்ணினால் இன்னும் காரியம் கெட்டுவிடும். விடிய இன்னும் நேரம் இருக்கிறது. வெளிக்குத் தெரியாமல் பிணத்தை அப்பால் கொண்டுசென்று புதைத்துவிட வேண்டும். என்ன சொல்கிறாய்?” என்று தொடங் கினான் பெரிகில்.
பொது ஆபத்து மனைவியின் வழக்கமான ஒத்துழை யாமைக்குத் தடை விதித்தது. இருவரும் ஒத்துழைத்துப் பிணத்தை நகர்ப்புறத்துள்ள பாலைவன மணலில் புதைத்து விட்டனர்.
அவர்கள் செயலை வேறு யாரும் அறியவில்லை. ஆனால் அறியக் கூடாத ஒருவன் கண்களில் அவர்கள் திரும்பிவரும் கோலம் ஐயத்தைக் கிளப்பிவிட்டது. அவன் அந்த ஊர் அரண்மனை அம்பட்டன் பெட்ரூக்கோ. இன்னது என்ற தெரியாவிடினும், எதையும் துளைத்தறியும் திறம் உடையவன் அவன். அவன் கூரிய பார்வையைக் கண்டு எவருமே நடுங்குவர். இரவு ஓர் ஆண்டியைப் பெரிகில் இட்டுச் சென்றதையும் இரவே என்றும் ஒருங்கே கூடிச் செல்லாத கணவன் மனைவியர் அவ்வளவு தொலை ஒன்றாகச் சென்று மீள்வதையும் சேர்த்து இணைத்து அவன் கற்பனை ஊகம் வேலை செய்தது.
அவன் அவர்கள் வந்த திசையில் சென்று, புதுமணல் கிளறப் பட்டிருப்பதைக கண்டான். அதைத் தானும் கிளறினான். அவன் எதிர் பார்த்ததற்கு, மேலாக அவன் கண்ட காட்சி அவன் ஆவலைக் கிளப்பிவிட்டது. பிணத்தைக் கண்டதே அவன் முதலில் மலைப்படைந்தான். பின் கிளர்ச்சியும் எழுச்சியும் கொண்டு, மன்னனிடம் ஓடோடியும் சென்று விவரமறிவித்தான்.
மன்னன் அல்காதியும் பேராசையுடையவன்; கொடியவன்; மக்கள் உயிரோ, பணமோ அவன் கைப்படுவதுதான் தாமதம். அவன் கொடுமையும் பேராசையும் இறக்கை விரித்துப் பறக்கும்! அம்பட்டன் சொற்கள் அவனைக் கிளர்ந்தெழச் செய்தன. “ஒரே இரவில் கொள்ளை நடந்து, கொலை நடந்து, பிணமும் புதைக்கப்பட்டு விட்டதா! இதில் பணத்தின் தொடர்பு நிறைய இருக்க வேண்டும். அப்படியானால் பார்ப்போம்” என்று அவன் துடையைத் தட்டிக் கொண்டு வீறிட்டான்.
உண்மையைத் தவிர வேறு எதுவும் தன்னைக் காக்க முடியாது என்று பெரிகில் தெரிந்து கொண்டான். ஆனால் அவன் உண்மையைக் கூறியும் பயனில்லை. பொருளில்லாத ஆண்டிக்கு ஒருவன் இரக்கப்பட்டான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் நம்பவில்லை ஆனால் இறக்கும்போது அவன் தந்த சந்தனப்பெட்டியின் செய்தி வந்ததே, மன்னன், “ஆ, அப்படிச் சொல்லு. எங்கே அந்தப் பெட்டி? அதைக் கொடுத்துவிடு. நீ போகலாம்” என்றான்.
பிணத்தைப் புதைக்கும்போது பெட்டியைப் பெரிகில் கழுதை மீதிருந்த ஒரு பையில் செருகி வைத்திருந்தான். அது இன்னும் அதில்தான் இருந்தது. அதைச் சுட்டிக் காட்டினான். மன்னன் பெரும்பொருள் அல்லது அணிமணி இருக்குமென்று ஆவலுடன் அதைத் திறந்து பார்த்தான். ஆனால், அதில் பாதி எரிந்து போன ஒரு மெழுகுவர்த்தியும் புரியாத ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு தாளுந்தாம் இருந்தன. இதனைக் கண்டு ஏமாற்றமடைந்து மன்னன், இனி வழக்கினால் பயனில்லை என்று கண்டு, பெரிகிலை விடுதலை செய்தான். சந்தனப் பெட்டியையும் அவன் மீதே வீசி எறிந்துவிட்டான்.
பெரிகில் இப்போது உண்மையிலேயே தன் இரக்கச் செயலுக்காக வருத்தப்பட்டான். அவன் மனைவி அவன் மடமையைச் சுட்டி இடித்துக் காட்டிப் பின்னும் மிகுதியாகக் கொக்கரித்தாள். ஆனால், உள்ளூர இருவரும் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று கருதி அமைதியடைந் தார்கள்.
சந்தனப்பெட்டி - பெரிகிலின் மனத்தில் மட்டும் தான் செய்த நற்செயல் தனக்கு இவ்வளவு தொல்லை தந்ததே என்ற எண்ணம் இருந்து அறுத்துக் கொண்டிருந்தது. ஆண்டியின் முகத்தில் படர்ந்த இறுதிக் கனிவை நினைக்குந்தொறும், தன் செயல் எப்படியும் தீங்கு தராது என்று அவன் ஆறுல் பெறுவான். அத்தகைய தருணங்களில் ஒருநாள் அவன் நினைவுத் திரையில் சந்தனப்பெட்டி நிழலாடிற்று. அதை ஒரு பெரிய பரிசைத் தருவது போலல்லவா தந்தான் ஆண்டி! அவன் ஆண்டியேயானாலும், செப்புக்காசுகூடப் பெறாத வெறுந்தாளையா தருவான் என்று அவன் எண்ணம் உருண்டோடிற்று.
“தாளில் எழுதப்பட்ட எழுத்துக்களில்தான் ஏதோ இருக்க வேண்டும்!” என்று அவன் உள் மனம் கூறிற்று.
“அஃது என்ன மொழி என்று தெரியவில்லை. மூர் மரபினர் இன மொழியாகிய அரபு மொழியாகத்தான் இருக்க வேண்டும். அம்மரபினரைத் தேடிச் சென்று கேட்போம்” என்று அவன் எழுந்தான்.
அடுத்த நாள் சட்டைப் பையில் அந்தத் தாளைச் செருகிக் கொண்டு பெரிகில் வெளியேறினான். தண்ணீர்விற்கும் தன் வாடிக்கைக்காரரான மூர்மரபுக்காரர் ஒருவர் கடையில் இறங்கி அதைக் காட்டினான். கடைக்காரன் அதைக் கூர்ந்து நோக்கினான். “இது ஒரு வழிபாட்டு மந்திரம். இதைப் படித்தால் புதையல்கள் எங்கிருந்தாலும் அதற்க வழி ஏற்படும். இடையே எத்தனை பெரிய பாறை இருந்தாலும் அதைத் தகர்த்து வழி உண்டாக்கும்” என்றான்.
பெரிகிலுக்கு இதைக் கேட்பதில் சிறிதும் உணர்ச்சி ஏற்படவில்லை. அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டே “இதைப் படிப்பதால் இஃதெல்லாம் வருமென்று நீ நம்புகிறாயா?” என்று கேட்டான்.
“ஆம். ஏன்?”
“இப்போது நீ படித்தாயே! உனக்கு என்ன நேர்ந்தது?”
“அதற்குள் நீ ஏன் இப்படிக் கலவரப்படுகிறாய்? இதோ, சிறு எழுத்துக்களில் பக்கத்திலும் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. படித்து ஆய்ந்தோய்ந்து பார்க்க வேண்டும்” என்றான்.
“நீயே படித்துப் பார்த்துவை. நான் பிறகு வருகிறேன்” என்று பெரிகில் கூறித் தாளையும் அவனிடமே விட்டு வந்தான்.
அடுத்த நாள் பெரிகில் தாளைப்பற்றிய எதுவும் மறந்து வழக்கம்போல் வேலை செய்தான். அச்சமயம் பலர் பேசிய பேச்சுகள் அவன் காதில் விழுந்தன. பலரும் ஒரே பேச்சுப் பேசுவதாகத் தெரியவே. அவன் கவனித்து ஒட்டுக் கேட்டான்.
அல்ஹாமராவிலிருந்து ஏழு கல் தொலைவில் ஏழு கோபுரங்கள் இருந்தன. ஏழாவது கோபுரத்தின் உள்ளே எங்கோ புதையல் இருப்பதாக அறிந்த பல மூர் மரபு ஆண்டிகள் அங்கே சுற்றித் திரிந்து வந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.
பெரிகிலுக்கு உடனே சந்தனப் பெட்டியிலுள்ள தாள் நினைவுக்கு வந்தது. அதைக் கொடுத்தவன் ஒரு மூர் மரபினன் என்பதும், அதை மூர் மரபினன் ஒருவனே வாசிக்க முடிந்தது என்பதும் அவன் மூளையில் மின்னல் போல் ஒளி வீசின. “தன் வீட்டில் வந்து இறந்த ஆண்டி அப்புதையலைத் தேடி அலைந்த ஒரு மூராகத்தான் இருக்க வேண்டும். பாவம், அதை அடையுமுன் அவன் இறக்க நேர்ந்திருக்க வேண்டும். தன் கைம்மாறு கருதாத உதவிக்குக் கைம்மாறாகவே அவன் தன் உள்ளத்தின் உள்ளவாவுக்குரிய இரகசியத்தைத் தனக்குத் தந்திருக்கவேண்டும்.” இவ்வெண்ணங்கள் அவன் உள்ளத்தில் அலையாடின. அடுத்து அவன் தான் அணிமையில் செய்த செயலை அவன் எண்ணினான். “இந்தப் பெரிய இரகசியத்தை நாம் சிறிதும் கருத்தில்லாமல் இன்னொருவனிடம் விட்டு வந்துவிட்டோமே. அந்தக் கடைக்காரன் நம்மிடம் அதை முழுதும் வாசித்து ஏன் கூற வேண்டும்? அவனே சென்று எடுத்துக் கொள்ளலாமல்லவா?” என்று எண்ணியபோது அவன் புறமனம் அவனை மீண்டும் சுட்டது.
அடுத்த நாள், அவன் கடைக்காரனைச் சென்று கண்டான். கடைக்காரன் தான் வாசித்தறிந்ததை முற்றிலும் விளங்கக் கூறினான். “அன்பனே! நீ நல்லவன். ஆனால் மிகவும் அவசரப்பட்டு விடுகிறாய். உன் கையில் கிடைத்தது கிட்டத்தட்ட ஒரு புதையலேதான். நீ அதன் அருமை அறியாதவன் என்பதில் ஐயமில்லை. இல்லையென்றால், அதை என்னிடம் விட்டுவிட்டுப் போயிருக்க மாட்டாய்!” என்றான்.
தான் எண்ணியதை அவனும் எண்ணியது கண்டு பெரிகில் வியப்படைந்தான்.
“உண்மைதான்; ஆனால், அதன் அருமை அறிந்த நீ இப்போது என்னை ஏமாற்ற எண்ணியதாகத் தெரியவில்லையே!” என்றான்.
கடைக்காரன் முகத்தில் பெருமித ஒளி ஒன்று பரந்தது. “அன்பனே! உன்னை நான் நன்கு அறிவேன்; நீ வேறு இனம் தான். நான் வேறு இனம் தான்; நீ வேறு மதம், நான் வேறு மதம்; ஆனால் எல்லா இனங்களையும் மதங்களையும் படைத்த ஆண்டவன் ஒருவன்தான். நீ மத வேறுபாடு, இன வேறுபாடு கடந்த நல்லவன் என்பதை நான் அறிவேன். நீ அன்று கூறிய சந்தனப்பெட்டியின் கதை என்னை உருக்கிவிட்டது. என் குலத்தான் ஒருவனுக்கு நீ செய்த மறக்க முடியாத நன்மைக்கு அவன் செய்த நன்றி இது. இஃது உனக்கே உரியது. இதில் நான் குறுக்கிட்டால், நான் இனத் துரோகி மட்டுமல்ல; மனித இனத்துரோகி; ஆண்டவனுக்குத் துரோகி ஆவேன். இதன் அருமை அறியாத உனக்கு இதன் அருமை காட்டி உனக்கு நன்மை செய்துவிட்டால், ஆண்டவன் திருமுன்னில் செல்லும்போது நானும் தன்னலமற்ற ஒரு நற்செயலாவது செய்திருக்கிறேன் என்று ஆறுதல் என் கால்களுக்கு உரம் தரும்” என்றான்.
‘தன் மனைவி அறிந்த உலகத்தினும் பரந்த ஒரு உலகம் உண்டு’ என்ற நம்பிக்கையால் பெரிகில் உள்ளம் குளிர்ந்தது. “அண்ணா, நானும் ஒரு வகையில் ஆண்டவனை நேசித்ததுண்டு. ஆனால் நம்பிக்கையும் உறுதியும் என்னிடம் இல்லை. எனக்கு நீ அதை அளித்தாய். நான் செய்த நற்செயலுக்கு இதுவரை நான் எவ்வளவோ கழிவிரக்கப்பட்டு என்னையே நொந்து கொண்டிருந்தேன். நீ ஆறுதல் தந்தாய். இந்தத் தாளின் இரகசியத்தால் நன்மை வராவிட்டால் அதற்காக நான் இனி வருந்த மாட்டேன். ஆனால் நன்மை வந்தால், இருவரும் பகிர்ந்து கொள்வோம். இம் முயற்சியில் என்னிடம் உண்மையாய் இருந்த உனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்றான்.
கடைக்காரன் இதை மனமுவந்து ஏற்றான்.
தாளில் சிறு எழுத்தில் குறித்திருந்தவற்றை அவன் இப்போது பெரிகிலுக்கு விளக்கினான். "இந்தத் தாளுடன் பெட்டியில் ஒரு மெழுகுவர்த்தி இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதைக் கையிலெடுத்துக் கொண்டு ஏழு கோபுரங்களில் ஏழாவது கோபுரத்தின் அடிவாரம் செல்ல வேண்டும்; நடு இரவு நேரத்தில் இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே அதனை ஏற்ற வேண்டும்; அப்போது புதையலை நோக்கி வழி ஏற்படும். கையில் விளக்கு இருக்கும்வரை வழியில் எந்த இடருக்கும் அஞ்ச வேண்டாம். ஆனால், விளக்கு அணையத் தொடங்கும்போதே வெளியே வந்துவிட வேண்டும். ஏனென்றால், அணைந்தவுடன் திறந்த வழி அடைத்துக் கொள்ளும்.
பெரிகிலுக்கு இப்போது பெட்டியிலிருந்த பாதி எரிந்த மெழுகுவர்த்தி நினைவுக்கு வந்தது. நல்லகாலமாக அஃது இன்னும் தன் கழுதையின் மேலுள்ள பையிலேயேதான் இருந்தது. அடுத்தநாள் இரவு மனைவி மக்கள் தூங்கிய பிறகு அந்த மெழுகுவர்த்தித் துண்டை எடுத்துக் கொண்டு கடைக்காரனுடன் புறப்பட்டு ஏழுகோபுரத்தை நோக்கிச் சென்றான்.
புதையல் - நள்ளிரவு. பாலைவனத்தில் அனல்மாரியும், மண்மாரியும் ஓய்ந்திருந்தன. ஆனால், பனிக்காற்று எல்லா வற்றையும் துளைத்துக் கொண்டிருந்தது. நீண்ட அங்கியும் தலைப்பாகைகளும் அணிந்து, போர்வைகளால் உடல் முழுதும் போர்த்துக் கொண்டு இரண்டு உருவங்கள் ஏழாவது கோபுரத்தை அடைந்து அதன் அடிவாரத்தில் குந்தியிருந்தன. தொலைவில் எங்கிருந்தோ நள்ளிரவுத் தொழுகைக் கூக்குரல் காற்றில் மிதந்து வந்தது. அதன் பின்பேயும் அஞ்சும் இரவின் பேரமைதி எங்கும் நிலவிற்று.
கடைக்காரன் நெஞ்சின் ஆழத்திலிருந்து அரபு மொழி மந்திரம் பனிக்காற்றினுடன் கலந்து பரந்தது. பெரிகில் மெழுகுவர்த்தியை ஏற்றினான். ஏற்றினவுடன் கோபுரத்தின் ஒரு பக்கமுள்ள பாறை வெடித்து ஒரு சுரங்கவழி தெரிந்தது. அவ்வோசைகேட்டு முதலில் இருவரும் கலங்கினர். பின் தேறி, பெரிகில் முன்செல்ல, கடைக்காரன் பின் சென்றான்.
கீழே படிக்கட்டுகள் வழியாக அவர்கள் உட்குகை ஒன்றை அடைந்தார்கள். வாயிலில் இரு பூதங்கள் உருவிய வாளுடன் நின்றன. கடைக்காரன், “அஞ்சாமல் செல்” என்றான். இருவரும் உட்சென்றனர். பூதங்கள் ஒன்றும் செய்யவில்லை. குகை மிக அகலமுடையதாக இருந்தது. அதன் நடுவே ஒரு பெரிய இரும்புப் பெட்டி இருந்தது. நான்கு மூலைகளிலும் நான்கு பூதங்கள் காவலிருந்தன. கடைக்காரன் முணுமுணுத்த மந்திரம் கேட்டு அவைகள் ஓங்கிய வாளைக் கீழே தொங்கவிட்டன. பெரிகில் கையில் ஏந்திய விளக்கொளி பட்டதும் அவை இருளுடன் இருளாக விலகின.
பெட்டியினுள் குடங்குடமாகத் தங்க வெள்ளி நாணயங்கள் மணிக்கற்கள் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன. இருவரும் கைகொள்ளு மட்டும் எடுத்து, மடிகொள்ளும் மட்டும் போர்வையில் சுற்றினர். அதற்குள் விளக்கொளி மங்கத் தொடங்கியது. கடைக்கதரன் ‘போதும், தம்பி; மூடி விடு; புறப்பட வேண்டும்’ என்றான். அவர்கள் மூடிவிட்டுப் புறப்பட்டு வெளிவந்தனர். அவர்கள் வரும்போதே விளக்கணைந்து விட்டது. படாரென்ற ஓசையுடன் கதவடைத்துக் கொண்டது. நல்லகாலமாக இருவரும் அதற்குள் வெளி வந்துவிட்டனர். பெரிகிலின் தலைப்பாகை மட்டும் அடைபட்ட கதவால் தள்ளப்பட்டு, குகைக்குள் சிக்கிவிட்டது!
தாம் தப்பி வந்துவிட்டது பற்றி அவர்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர். விளக்கு வகையில் இனி முன்னெச்சரிக்கை யாயிருக்க வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்துகொண்டனர்.
நகருக்குள் நுழையுமுன் கடைக்காரன் பெரிகிலுக்குப் பல அறிவுரைகள் கூறினான். “தம்பி, நீ நல்லவன். ஆனால் நீ எச்சரிக்கையா யிருக்கவேண்டும். நாம் திடீரென்று பணக்காரராய் விட்டதாகக் காட்டிக் கொள்ளப்படாது. மன்னன் பேராசைக் காரன். ஊரோ பொல்லாதது. மேலும் இந்தச் செய்தி ஊருக்குத் தெரியாமலிருக்க வேண்டும். நீ உன் மனைவியிடம் இதைக் கூறினால்கூட, எல்லாம் கெட்டுவிடும். விழிப்பாயிரு” என்று எச்சரித்தான். பெரிகிலும் உறுதி கூறிவிட்டுத தனியே வீட்டிற்குள் சந்தடியின்றி நுழைந்து படுத்துக் கொண்டான்.
பெரிகிலும் கடைக்காரனும் விரைவில் பெருஞ் செல்வராயினர். அவர்கள் நட்பும் வளர்ந்தது. அவர்களிடம் பலர் பொறாமை கொண்டனர். அவர்கள் விரைந்து செல்வரானது பற்றிப் பலர் வியப்படைந்தனர். ஆனால், எவரும் இரகசியத்தை உணரவுமில்லை; மலைக்கவுமில்லை; கடைக்காரன் அவன் தொழிலாலும் பெரிகில் தன் உழைப்பாலும் முன் வந்ததாக எவரும் நம்ப முடிந்தது. கடைக்காரன் முன்பே பெரிகிலுக்கு நல்ல வாடிக்கைக் காரணாதலால் அவர்கள் நட்பும் வியப்புக்கு இடம் தரவில்லை.
பெண்புத்தி-ஆனால் உழைப்பின் பயனையே ஊதாரித்தன மாகச் செலவிட்ட பெரிகிலின் மனைவி இப்போது நினைத்த ஆடையணிகளை யெல்லாம் வாங்கத் தலைப்பட்டாள். கேட்டதையெல்லாம் அவன் சிறிது கண்டித்தபின் தருவது கண்டு, அவளே வியப்படைந்து அவன் இரகசியத்தைத் துளைக்கத் தொடங்கினாள்.
“பெரிகில், நீ எங்கிருந்து இத்தனை பணமும் கொண்டு வருகிறாய்? நீ முன் ஆண்டிப்பயல்களுடன் உறவாடி எவ்வளவோ இக்கட்டுகளைக் கொண்டு வந்தாயே. இப்போது ஒன்றும் திருட்டு, கொள்ளைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு…?”
மனைவி தன்னிடம் கொண்ட அவநம்பிக்கை பெரிகில் உள்ளத்தைச் சுட்டது. அவளிடம் இரகசியத்தைச் சொல்லவும் விரும்பவில்லை. ஆயினும் அவள் ஐயமகற்ற எண்ணி, “நீ ஏன் எப்போதும் இப்படித் தவறாகக் கருதுகிறாய்? அப்படி நான் என்றும் தவறான வழியில் சென்றவனும் அல்லன்; செல்கிறவனும் அல்லன்; இந்தப் பணம் ஒவ்வொரு காசும் நல்ல வழியில் வந்ததுதான்” என்றான்.
“உழைத்து வந்ததுதானா இத்தனையும்?”
அவன், ஆம்; என்று கூறமாட்டாமல் மௌனமாய் இருந்தான்.
“முன்பே நீ ஆண்டிப்பயலை நம்பி ஏமாந்தாய். இப்போதும்….”
“முன்பும் ஏமாறவில்லை. அந்த ஆண்டி செய்த நன்மைதான் எல்லாம்!” என அவன் கூறவேண்டியதாயிற்று.
அவள் அத்துடன் விடவில்லை. “அப்படியா! அவன் என்ன செய்தான். சொல்லு!” என்றாள்.
“அஃது ஓர் இரகசியம். அது யாருக்கும் தெரியக் கூடாது. தெரிந்தால் கெடுதல் வரும்” என்று அவன் எச்சரித்தான்.
கணவன் தனக்குத் தெரியாத இரகசியம் வைத்திருப்பதறிந்த அவள் பெண்மனம் அதை அறியத் துடிதுடித்தது. “உன் மனைவி உனக்கு வேண்டாதவளா? எனக்கு மட்டும் தெரிவித்தால் என்ன? நான் உன் நேர் பாதியல்லவா?” என்று அவள் அவனைக் கரைத்தாள்.
எப்போதும் கடிந்து கொள்ளும் மனைவி, இப்போது கனிந்து கேட்டால் அவன் எப்படிக் கடுமையாயிருப்பான்? அவன் மெள்ள மெள்ளச் சந்தனப் பெட்டியினால் வந்த செல்வத்தின் வரலாறு யாவும் கூறிவிட்டான். அத்துடன் தான் முன் ஆண்டிக்குச் செய்த நற்செயலுக்கு அவள் தன்னைத் தடுத்ததையும் பின் திட்டியதையும் சுட்டிக்காட்டி, “இனி நற்செயல் செய்வதைத் தடுக்காதே” என்றும் அறிவுரை கூறினான்.
ஆனால், நாய்வாலை நிமிர்க்க யாரால் முடியும்? அவள் பண ஆசை, பகட்டாரவார ஆசை, சமூக ஆதிக்க ஆசை ஆகிய யாவும் அவள் உடலின் ஒவ்வோர் அணுவையும் துளைத்தரித்தன. அவளால் பெரிகிலும் அவன் நண்பனும் நடித்த நடிப்புக் கோட்டைக்குள் அடங்கியிருக்க முடியவில்லை.
அவள், தான் எண்ணப்படித்த அளவும் பொன் காசுகளை எண்ணுவாள்; அப்படி எண்ணி எண்ணிச் சேர்ந்தவைகளை எண்ணிப் பூரிப்பாள்; அரசி இளவரசியர் அணியக்கூசும் அணிமணிகளில் தன்னை ஒப்பனை செய்து கண்ணாடிமுன் நின்று தன் அழகில் தானே சொக்குவாள்; ஆடுவாள், பாடுவாள்.
தன்னையொத்த பிறரிடம் தன் செல்வத்தைக் காட்ட அவள் துடித்தாள். ஆனால், பெரிகில் எதையும் வெளியில் காட்டிக் கொள்ள கூடாதென்று பன்முறை எச்சரித்திருந்தான். இதனால் அவள் முழு ஆட்டமும் வீட்டுக்குள்ளேயே ஆட வேண்டியதாயிற்று. என்றாலும் வெளியில் அவள் பிறரிடம்-சிறப்பாக மற்றப் பெண்களிடம் - முன் போலப் பேசிப் பழக முடியவில்லை. புழுப் பூச்சிகளிடையே பறவைகள் பறப்பது போலப் பறந்தாள். அவள் நடையுடைகள் ஊரெங்கும் பேச்சாயிற்று.
பொறாமைப் பேய் - அம்பட்டன் பெருகுவோவுக்குப் பெரிகில் என்றால் பிடிப்பதில்லை. முன்தான் அவனை மாட்டி வைத்த பொறியினின்றும் அவன் தப்பிவிட்ட போது, அவன் பெரிகிலால் தனக்கு அவமதிப்பு நேர்ந்ததாகக் கருதினான். இப்போது அவன் செல்வனானதும் வெறுப்புப் பன்மடங் காயிற்று. ஆகவே, பெரிகில் மனiவியின் ஆர்ப்பாட்டங்களைப் பற்றிக் கேள்வியுற்றதே அவன் வழக்கமான கற்பனை ஊகம் வேலை செய்தது. பெரிகிலை மீண்டும் சிக்க வைக்க, அவன் இரகசியம் ஏதேனும் இருந்தால் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அவனிடம் எழுந்தது.
அவன் பெரிகிலின் போக்குவரத்தை ஒற்றாடினான். அவன் வீட்டினருகே அடிக்கடி சுற்றி நோட்டமிட்டான். அத்துடன் அவன் கடை பெரிகிலின் வீட்டுக்கு எதிர்ப்புறம்தான் இருந்தது. அதன் வாயிலுக்கு எதிராகப் பெரிகில் வீட்டுப் பலகணி ஒன்று உண்டு. அவன் வாயிலில் வந்து நின்று பலகணி வழியாக என்ன நடக்கிறது என்று கவனிப்பான்.
ஒருநாள் பெரிகிலின் மனைவி வழக்கத்திற்குமேல் பட்டும் அணிமணிகளும் அணிந்து கண்ணாடிமுன் வந்து தன்னைப் பார்ப்பதும் பித்துக் கொள்ளிபோல் அறைக்குள் உலாவுவதுமாக இருந்தாள். இந்தக் கோலத்துடனேயே வெளியே ஏதோ அரவங்கேட்டு, பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள். அச்சமயம் அம்பட்டன் பெட்ரூகோ தன் கடையின் வாயிலில் எதிரேதான் நின்று கொண்டிருந்தான். அவள், அவனைக் கவனிக்கவில்லை. ஆனால், அவன் கவனித்தான். முற்றிலும் வியப்பும் மலைப்பும் கொண்டான். பெரிகிலின் செல்வம் உழைத்து ஈட்டியவன் செல்வமல்ல; ஒரு புதையல் செல்வமாயிருக்க வேண்டும் என்று கண்டான்.
சூழ்ச்சியில் வல்ல பெட்ரூகோ மீண்டும் மன்னன் சீற்றத்தைக் கிளறி விட்டான். “அரசே! முன்பு அந்தப் பயல் பெரிகில் சொல்லை நம்பி என் சொல்லைத் தட்டிவிட்டீர்கள். அவன் காட்டிய சந்தனப் பெட்டியை நம்பி அவனை விடுதலை செய்தீர்கள். நான் கூறியது முற்றிலும் சரி என்று இப்போது அறிகிறேன். ஆண்டியிடமிருந்து பெற்றது சந்தனப்பெட்டி என்று ஏமாற்றியிருக்கிறான். உண்மையில் அவன் பெற்ற செல்வம் அஃது அன்று. உங்கள் அரண்மனைச் செல்வத்தைவிட மிகுதியான செல்வம் அவன் மனைவியின் அணிமணிகளிலேயே அடங்கிக் கிடக்கிறது. அவள் அவற்றுடன் வெளிவருவதில்லை - நான் பலகணி வழியாகக் கண்டேன்” என்றான்.
பெரிகில் பொய் சொல்வதில் வல்லவன் அல்லன். மன்னனுக்கு இவ்வளவு தெரிந்தபின் பொய் சொல்வதும் யாருக்கும் அரிது. அவன் மீண்டும் உண்மை முழுவதும் சொன்னான். அந்தோ! இதனால் அவன் தன்னை மட்டுமன்றிக் கடைக்காரர் நண்பனையும் காட்டிக் கொடுக்க வேண்டிய தாயிற்று.
பெரிகிலையும் அவன் நண்பனையும் சிறையிலிட்டு அவர்கள் செல்வ முழுதும் பறிமுதல் செய்யும்படி மன்னன் கட்டளை யிட்டான்.
பண ஆசை கொண்ட தன் மனைவியைத் தான் நம்ப நேர்ந்ததற்காகப் பெரிகில் வருந்தினான்.
சூழ்ச்சிக்கு எதிர் சூழ்ச்சி - கடைக்கார நண்பன் மூளை மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. அவன் தன்னையும் தன் அப்பாவி நண்பனையும் காப்பாற்ற ஒரு சூழ்ச்சித் திட்டம் செய்து கொண்டான்.
“அரசே! எங்கள் செல்வம் முழுதும் உங்களுடையது தான். உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்க நாங்கள் தயங்கவில்லை. சிறையில் தங்கள் விருந்தாளியாக இருப்பதிலும் மகிழ்ச்சியே. ஆனால் இவ்வளவும் உங்களுக்குச் செய்தால் போதாது. இன்னும் எவ்வளவோ பணம் இருக்கும் இரகசியக் குகையைச் சிறை செல்லுமுன் தங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். உலகத்தின் செல்வ முழுதும் அதற்கு ஈடில்லை. அதை நீங்கள் அனுபவிக்க வேண்டும்” என்றான்.
மன்னன் உள்ளத்தில் பேராசைத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அவன் “சரி, அப்படியே செய்” என்றான்.
“அரசே! இந்த இரகசியத்தை நீங்கள் மட்டும் அறிய வேண்டும். பெட்ரூகோவையும் மற்ற எல்லோரையும் அனுப்பி விடுங்கள்” என்றான்.
எல்லாரும் வெளியே சென்றனர். பெட்ரூகோ காரியம் போகும் போக்குப் பிடிக்காவிட்டாலும் வேறு வழி காணாமல் நண்பர் பக்கம் திரும்பிக் கறுவிக் கொண்டே சென்றான்.
பெரிகில் ஒன்றும் தெரியாமல் விழித்தான்!
விளக்கணைவதால் ஏற்படும் செய்தி தவிர மற்ற எல்லாவற்றையும் கடைக்காரன் மன்னனுக்குச் சொல்லி நள்ளிரவில் ஏழாம் கோபுரத்தண்டை செல்ல ஏற்பாடு செய்தான். தனியே இருக்கும் சமயத்தில் பெரிகிலிடம் தன் திட்டத்தையும் கூறி எச்சரித்தான்.
அன்று மூவரும் பாலைவனத்தின் வழியே சென்றனர். மந்திரத்தின் உதவியாலும், மெழுகுவர்த்தியின் உதவியாலும் மூவரும் குகைக்குள் புகுந்தனர். வெளியே மன்னன் கழுதைகள் மூன்று காத்திருந்தன. முதலிரு கழுதைகளும் கொள்ளும் அளவு பொன்னைக் கடைக்காரனும் பெரிகிலும் எடுத்துக் கொண்டனர். மன்னன் சுமக்க மாட்டாத அளவு வாரிச் சுற்றிக் கொண்டிருந் தான்.
கடைக்காரன் மெழுகுவர்த்தியைத் தான் வாங்கிக் கொண்டான். பெரிகில் வெளியே வந்துவிட்டான்.
விளக்கணையுமுன் கடைக்காரனும் வெளியே ஒடி வந்துவிட்டான். மன்னன் தன் பளுவான சுமையுடன் பின்தொடர்ந்து வருமுன் கதவு மூடிக் கொண்டது.
மன்னன் பாறையினுள் பூதங்களுடன் அடைப் பட்டான்.
பெரிகிலும் கடைக்காரனும் இரவே மூட்டை முடிச்சு களுடன் அந்நகர் விட்டு வெளியேறி விட்டனர். பெரிகிலின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. மன்னன் சிறையிலிருந்து தப்பியோடி வந்ததாக மட்டும் கூறி அவர்களையும் விரைவுபடுத்திக் கூட்டிக் கொண்டு சென்றனர்.
கிரானடா மன்னன் ஆட்சி மட்டுமன்றி, அவன் பெயர் கூட எட்டாத தொலை நாட்டில், குகையின் பெருஞ் செல்வத்துடன் அவர்கள் வாழ்ந்தனர்.
மன்னன் மாண்ட கதையை மட்டும் பெரிகில் என்றும் தன் மனைவியிடம் கூறவேயில்லை.
நெய்தலங்கானல்
மலாகி - கார்ன்வால் மாவட்டத்தின் கடற்கரை; ஒரேபாறை மயமானது. பாறைகள் செங்குத்தாகவும் அடிக்கடி கடற்கரை நெடுகப் பலகல் தொலைவுவரை தொடுப்பாகவும் கிடந்தன. அத்துடன் அவை சுவற்போல் அலைகள் வந்து மோதும் இடத்திலேயே திடுமென இறங்கி முடிவுற்றதனால், கடற்கரைப் பக்கம் எவரும் எளிதில் வர முடியாமல் இருந்தது. பாறைகளில் ஒரு சில இடுக்குப் பிளவுகள் இருந்தன. இவற்றின் வழியாகக்கூட மக்கள் மிக அரும்பாடுபட்டே ஏறி இறங்கிக் கடலின் அலைவாய்க்குச் செல்ல முடியும். அப்படிச் செல்வதும் பேரிடர் தருவதாகவே இருந்தது. ஏனென்றால் பாறைக்கும் அலைக்கும் இடையே மண்திடலோ மணலோ எதுவும் கிடையாது. எப்போதேனும் சிறிது மணல் திரண்டால்கூட, அஃது ஒரு வேலி ஏற்றத்தில் காணப்பட்டு, அடிக்கடி அதே வேலி இறக்கத்திற்குள் காணாமல் மறைந்துவிடும். வேலி ஏற்றத்தில் அலைகள் பொங்கிவரும் வேகத்தில் எவரும் பாறை ஏறுமுன் அலைகளுக்கு இரையாக வேண்டி வரும்.
கார்ன்வால் நிலப்பகுதி வேளாண்மைக்குப் பேர் போனதல்ல. ஆனாலும் ஓரளவு வேளாண்மைக்கு ஏற்ற வசதியை மக்கள் அங்கே தேடிக் கொண்டிருந்தனர். கடற்கரையில் அலைகள் பாறையருகே பேரளவாகக் கடற்பாசிகளைக் கொண்டு ஒதுக்கிவந்தன. அக்கடற்பாசி நிலத்துக்கு நல்ல ஊட்டம் தருவது என்று கண்ட மக்கள், ஆண்டுதோறும் அதைப் புதிய புதிய உரமாகப் பயன்படுத்தி நிலவளங்கண்டனர். இதனால் வேளாண்மைக்கு உறுதுணையான முக்கிய தொழில்களாகக் கடற்பாசி திரட்டும் தொழிலும், அதைத் தொலை உள்நாட்டுப் பகுதிவரை கொண்டுசென்று விற்கும் தொழிலும் வளர்ச்சியடைந்தன.
கடற்பாசி இயற்கை தரும் வளமானாலும், அதைத் திரட்டும் தொழில் உண்மையில் அவ்வளவு எளிதாயில்லை. கடலின் பாசிவளத்தில் மிகச் சிறு பகுதியே கரையில் ஒதுக்கப்பட்டது. பெரும்பகுதி திறந்த கடலிலேயே மிதந்து சென்றுவிடும். அத்துடன் வேலி ஏற்றத்தில் கரையில் ஒதுக்கப்பட்ட பாசியிலும், பெரும்பகுதி மீண்டும் அடித்துக் கொண்டு செல்லப்பட்டுவிடும். பாசி சேகரம் செய்பவர் வேலி ஏறி இறங்குமுன் விரைந்து தொழில் செய்து அதைத் திரட்டிவிட வேண்டும்.
பாசி சேகரிப்பவர் கையில் நீண்டு வளைந்த கழைக்கோல் இருக்கும். கரடுமுரடான, வழுக்கலான பாறைகளில் நின்றுகொண்டு, கழைக்கோலை நீட்டி நீர்ப்பரப்பில் மிதக்கும் பாசிகளையும் அரிப்பர். இவ்வேலையில் இடையூறு மிகுதி. ஏனென்றால் பாறைகள் வழுக்கும். குண்டு குழிகள் நிறைந்த பாறைகளினிடையே ஆழ்கசங்கள் இருந்தன. கடல் அடிக்கடி அவற்றினிடையே குமுறிக் கொந்தளிக்கும். ஆரிடர் மிக்க சுழிகளும் மிகுதி. இவற்றிடையே சிறிது தவறினாலும் கடலின் குமுறலுக்கும் குமிழிகளுக்கும் சுழிகளுக்கும் இரையாக வேண்டியதுதான்!
கடற்பாசித் தொழிலில் ஈடுபட்ட எல்லாருக்கும் மலாகி டிரெங்க்ளாஸ் என்றால் தெரியும். வேளாளர் நிலங்களில் பயன்படுத்தும் பாசியில் பெரும் பகுதியும் கடலகத்திலிருந்து அவன் மீட்டுக்கொண்டு வந்ததாகவே இருக்கும் - அத்தொழிலில் அவன் அவ்வளவு இரண்டற முழுநேரமும் ஈடுபட்டிருந்தான். மக்களிடையே மிகவும் வயது சென்றவர்களுக்குக்கூட எப்போதிருந்து அவன் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தான் என்று தெரியாது. அவனை மக்கள் ‘பாறையுடன் பாறையாக வளர்ந்தவன்; கடலலையுடன் அலையாக விளையாடியவன்’ என்றுதான் எண்ணினார்கள். அலைகளிடையே அவன் கைகளும் பாறைகளிடையே அவன் கால்களும் அவ்வளவு இயல்பாக ஈடுபட்டுத் தொழிலாற்றி வந்தன!
மலாகியின் குடிசை செங்குத்தான பாறையின் இடையில், பாறையின் உச்சிக்கும் கடலலைக்கும் கிட்டத்தட்ட நடு உயரத்தில்தான் இருந்தது. கடலிலிருந்து பார்ப்பவருக்கு அது சுவர் போன்ற பாறையில் ஒட்ட வைத்திருப்பது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அது பாறையின் சரிவில் ஒரு குறுகிய பிளவின் நடுவேயுள்ள சிறிதளவு அகன்ற ஒரு திட்டில்தான் இருந்தது. மலாகியின் முன்னோர்கள் அந்த திட்டைக் கண்டுபிடித்து, அதில் வீடுகட்டி வாழ்ந்து, பிளவையும் அதன் வழியாகக் கடலுக்கு இறங்கும் பாதையையும் தம் தனி உரிமையாக்கிக் கொண்டிருந்தனர். நீண்டகாலமாக எவரும் இவ்வுரிமையில் போட்டியிட எண்ணவில்லை. ஏனென்றால் பாறைகளிடையே புயற்காற்றுடன் தோழமை கொள்ளப் பலர் விரும்ப முடியாது. பிளவில் ஏறுவதும் இறங்குவதும் எளிதான காரியமும் அல்ல.
மலாகி, பாசி சேகரம் பண்ணி விற்பதுடன் தன் தொழிலை நிறுத்தி விடவில்லை. அவன் தன் உடலுழைப்பால் அப்பாசிக்கும் அதைச் சேகரம் பண்ணிக் கொண்டு செல்லும் வழிக்கும் உள்ள தன் காப்புரிமையைப் பெருக்கிக் கொண்டான். கடும் பாறைகளிடையே அவன் முன்னோர்கள் காலடிபட்டு ஏற்பட்ட முரட்டுத்தடத்தை அவன் அருமுயற்சியால் படிப்படியாய் ஏறும் ஏணிப்படிகளாக்கினான். பாசிகளை மிகுதியாகக் கொண்டு செல்ல ஒரு கழுதையை வாங்கி, அந்தப் படிகளில் ஏறியிறங்கும்படி அதைப் பழக்கினான். மலாகியைப் போலவே அவன் கழுதையும் அக்கடுமையான வேலையில் பழக்கப்பட்டு உடலுரம் பெற்றிருந்தது.
கிழவனான பின்புகூட மிலாகியின் உடல் இரும்பு உடலாகத்தான் இருந்தது. ஆனால், இரும்பு உடல்கூட இரும்பாய் இருக்க முடியாதன்றோ! அவன் கைகள் சிறிது சிறிதாகத் தளர்ந்தன. அவன் கால்கள் படிப்படியாகச் சற்றே தள்ளாடத் தொடங்கின. தன் கிழப்பருவம் பிறர் இளமைக்கு ஈடானாலும், அக் கிழப்பருவத்துக்கும் கிழப்பருவம் வரத் தொடங்கிவிட்டது என்று அவன் அறிந்தான். எனவே, அவன் தன் வேலையின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டி வந்தது.
அவன் கடலுக்குப் போவதையே நிறுத்தும் காலமும் வந்துவிட்டது! பன்னிரண்டு மாதமாக அவன் கடலுக்குள் இறங்கிச் சென்றதேயில்லை. ஆறுமாதமாக அவன் கடற்பாசி விற்றுப் பணத்தை எண்ணிப் பைகளிலிட்டுப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது தவிர வேறு எவ்வகையிலும் தொழிலில் ஈடுபட முடியாதவன் ஆனான்.
ஆனால் அவன் தொழில் மட்டும் நிற்கவேயில்லை.
மாலி - அவனுடன் அவன் சின்னஞ்சிறு பேர்த்தி. மாலி பாறையில் ஏறி இறங்கிப் பழக்கப்பட்டிருந்தாள். வாழ்நாளின் பெரும்பகுதியிலும் இயற்கை அவனுக்குத் தந்த வளம் இப்போதும் மாலியின் உருவில் அவனுக்குக் கிட்டிற்று என்னலாம். அவள் அவன் தளர்ந்த நரம்புகளின் தளர்ச்சி தோன்றாமல் உடனிருந்து உழைத்துப் படிப்படியாக அவன் வேலையை ஒவ்வொன்றாக அவனிடமாக நின்று தானே மேற்கொண்டு விட்டாள்.
மலாகி பாறையுடன் பாறையாக வளர்ந்ததாக மக்கள் கருதினார்களென்றால், மாலியைப் பாறை, கடல் ஆகியவற்றின் பிள்ளையாகவே கருத இடமிருந்தது. அவள் தன் தாய் தந்தையரை அறிய மாட்டாள். அவள் தாய் மலாகியின் மகள். அவள் தந்தை கப்பலுடைந்து மலாகியின் பாறை வீட்டின் பக்கம் நீந்தி வந்த ஒரு கப்பலோட்டி. மாலி பிறக்கும் முன்பே தந்தையும், பிறந்த சில மாதங்களில் தாயும் இறந்ததனால், மலாகியே அவளுக்குத் தாயும் தந்தையுமாய் அவளை வளர்க்க வேண்டி வந்தது. ஆயினும் தன் தொழிலில் இரண்டற ஈடுபட்ட அவனைவிட, மலையின் செல்வியாகிய அவன் தாய் மரபும் கடலின் செல்வனாகிய அவன் தந்தை மரபுமே உள்ளூர நின்று அவளை வளர்த்தன என்னலாம். நிலத்தின் செல்வியர்களுக்கு இருக்கும் அழகு அவளிடம் இல்லை. ஆனால் மலையின் பலமும் கடலின் தங்குதடையற்ற போக்கும் அவள் உடலில் இடங்கொண்டு வளர்ந்தன. மலைமீது மலை யாடுகளின் தடம் பிறழ்ந்தாலும் பிறழலாம். அவள் தடம் பிறழ்வதில்லை. கடலின் மீன் குஞ்சுகளுக்குத் தெரிந்த அளவு நீச்சல் அவளுக்கும் தெரிந்திருந்தது.
பாட்டன் கடற்பாசியிடையே பழகியிருந்தான். அவளோ கடற்பாசியாகவே காணப்பட்டாள். பெண்கள் அணியும் ஆடையணிகளை அவள் அறியமாட்டாள். தாம் அணிந்திருந்த ஆடைகளே கந்தையுருவில் அவள் ஆடையாயின. வெளியே போகும்போது மட்டும் அவற்றை உடுத்துப் பாசியுடன் பாசியாய் அவள் இருப்பாள். அலைகளைத் தவிர வேறு விளையாட்டுத் தோழர் தோழியர் அவளுக்குத் தெரியாது. சங்கு சோழிகள் அவள் விளையாட்டுப் பொருள்களாகவும் சிற்சில சமயம் அணிமணியாகவும் பயன்பட்டன. ஊரில் பாசிக்கட்டுகளைக் கொண்டு விற்பது தவிர, ஆண் பெண்கள் எவருடனும் அவள் பழகவில்லை. ஆடவரிடம் பழகும் முறை வேறு, பெண்களிடம் பழகும் முறை வேறு என்பதையோ சிறியவரிடமும் பெரியவர்களிடமும் பழகும் முறைகள் வேறு என்பதையோ அவள் அறியாள். நாணம், அச்சம் முதலிய பெண்கள் இயல்புகளை மலையாடுகள் எவ்வளவு அறியுமோ, மகர மீன்கள் எவ்வளவு அறியுமோ அவ்வளவு தான் அவளும் அறிந்திருந்தாள்.
மலாகியிடம் மக்கள் பழகிய அளவுகூட எவரும் அவளுடன் பழகவில்லை. அவள் நடமாட்டத்தில் அத்தனை விரைவு இருந்தது. அவள் பேச்சில் அத்தனை கண்டிப்பு! அவள் பாசி விற்பனைப் பேரத்தின்போது எப்போதாவது பாசியைப் பிறரிடமிருந்து கைப்பற்ற நேர்ந்தால், அவள் கையின் வலு புயலின் வலுவாயிருந்தது. அவள் பாசிக்காக அவளை நாடிய மக்கள் பாசிகடந்து அவளுடன் பழக அஞ்சினர்.
மலாகியின் உழைப்பைவிட மாலியின் உழைப்புக் கடுமையாயிருந்தது. மலாகி ஒரு வாரத்தில் திரட்டும் பாசியை அவள் ஒரு நாளில் திரட்டினாள். அது மட்டுமன்று, மலாகி பாசிக்கு ஊரார் கொடுத்த விலையை ஏற்றுக் கொண்டான். மாலியோ பாசியின் விலைக்கள நிலையறிந்து, உச்ச விலைக்கே அதை விற்றாள். வேளாண் மக்களுக்கு உயிராயிருந்த அந்தப் பாசிக்கு அவள் வைத்த விலை உயர்விலையாகவேயிருந்தது. மற்ற மாந்தர் கடலினருகே போகவே அஞ்சும் கோரப் புயலிலும் அவள் புயலுடன் விளையாடிப் பாசியை மலைபோலக் குவித்து வந்ததாள், அவள் கேட்ட விலை கொடுத்து மக்கள் அதை வாங்க வேண்டியிருந்தது. மக்கள் அவள் கடுமையை வெறுத்தனர். ஆனால், மலையையும் கடலையும் எந்த அளவு மனிதர் மாற்றமுடியுமோ அந்த அளவுதான் அவள் கடுமையையும் மாற்ற முடிந்தது.
மாலிக்கு வயது இருபதாயிற்று. ஆயினும் அவளைப் பற்றி நல்லெண்ணமோ நல்மொழியோ உடைய எந்த இளைஞனும் நங்கையும் கிடையாது. அவளைப் போற்றிப் புகழ விரும்பியவர் கிழவர் கிழவியர் மட்டுமே. வயது சென்ற பாட்டனை அவள் குழந்தையை நடத்தும் தாய் போல, அதே சமயம் முழு மதிப்புடன் நடத்தியதுதான் அவர்கள் உள்ளங்கவர்ந்த அவளது ஒரே நற்பண்பு.
மாலியின் அகவிலை காரணமாகப் பாசிக்குக் கிராக்கி மிகுந்தது. தொழிலில் போட்டியும் எழுந்தது. மலைப்பிளவில் ஏறி இறங்குவது எவ்வளவு கடு உழைப்பானாலும், அதைச் செய்ய இளைஞர்கள் முன் வந்தனர். மாலி திரட்டும் பாசியின் முன், அவர்கள் திரட்டியது மலையின் பக்கமுள்ள மண்மேடு போலத்தான் இருந்தது. ஆயினும் இம்முயற்சிகள் கண்டு மாலி புகையாமலிருக்க முடியவில்லை.
மலையும் கடலும் எவருக்கும் தனியுரிமைப்பட்டவை யல்லவே என்று இளைஞர் ஒருவரிடம் ஒருவர் முணுமுணுத்துக் கொண்டு பேசுவதை அவள் கேட்டிருந்தாள். ஆனால் மலையிடுக்கு! அத்துடன் அப்பாதையும் முற்றிலும் இயற்கையாய் அமைந்த பாதையல்லவே! படிக்கற்கள் ஒவ்வொன்றும் அவள் பாட்டன் மலாகி தொலைவிலிருந்து தூக்கி வந்தவைகள் என்பதை அவள் எப்படி மறக்க முடியும்? அவற்றுக்கு அண்டை கொடுத்து நிலைக்க வைக்கப் பொடிக்கற்களையும் பாசி கலந்த மண்ணையும் சிறுமியாயிருக்கையில் அவள் தானே தன் சின்னஞ்சிறு கைகளில் தூக்கி வந்தாள்! அவர்களுக்கும் அவர்கள் கழுதைக்கும் இருக்கும் உரிமை எப்படி ஊராருக்கும் அவர்கள் கழுதைகளுக்கும் இருக்க முடியும் என்று அவள் கள்ளமில்லா முரட்டு உள்ளம் உள்ளூர வாதாடிற்று.
ஏழைச் சிறுவர் போட்டி, மாலியை அவ்வளவாக உறுத்தவில்லை. செல்வர் வீட்டுச் சிறுவரும் இதில் வந்து கலந்து கொள்வதைக் கண்டபோது அவள் பொறுக்க முடியவில்லை. வேளாளன் ஃகன்லிஃவ் பெரும் பண்ணையாளன். அவன் நிலபுலங்களுக்கு மாலியின் பாசியுரத்தில் ஐந்தில் ஒரு பங்குக்குமேல் தேவையாயிருந்தது. அவள் கேட்ட விலையை யெல்லாம் அவன் கொடுக்க இசைந்தும் தேவையளவுக்கு அருந்தல் காலத்தில் பாசி பெற முடியவில்லை அவன் மகன் ஃபார்ட்டி இருபத்திரண்டு வயது இளைஞன். அவன் தானே சென்று சேகரித்து அருந்தல் காலத்துக்கும் சேமித்து வைப்பதென்று துணிந்தான். அதற்காக அவன், ஒரு கழுதையையன்று, ஒரு மட்டக் குதிரையையே வாங்கிவந்தான்.
ஏழையுரிமையில் செல்வர் போட்டி, கழுதை உரிமையில் குதிரை போட்டி என்று மாலி கறுவினாள்.
ஒரு கழுதைக்குமேல் செல்ல முடியாத பாதை இடுக்கில் அடிக்கடி ஃபார்ட்டி குதிரை நின்று மேய்ந்து கொண்டிருந்தது. இது கழுதையும் அவளும் செல்லும் இடத்தை அடைந்தது. அவள் உள்ளம் மேலும் புகைந்தது. ‘குதிரையின் கால்களை முறித்துவிடுகிறேன்’ என்று கூறிக் கொண்டாள் அவள்.
அவனைக் கண்டபோதெல்லாம் அவள் சீறி விழுந்தாள். “நீ வேளாளன் பிள்ளையாயிருக்க முடியாது; பாசி விற்பவன் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். உன் குதிரையும் குதிரையாயிருக்க முடியாது. அது போன தலைமுறையில் ஒரு கழுதைக்குட்டியாகத்தான் இருந்திருக்கும்” என்ற அவள் ஒருநாள் அவனை இடித்துக் கூறினாள்.
ஃபார்ட்டி அவன் வயதுக்கு முரடனல்லன். அமைதி யுடையவன்தான். ஆண்கள் அவன் செல்வம் கண்டு அவனை மதித்தனர். பெண்களோ அவன் அந்தசந்தமான தோற்றத்திலும் நாகரிக நடையுடைய இயக்கங்களிலும் ஈடுபட்டு அவனிடம் நய இணக்கத்துடன்தான் நடந்து வந்தனர். ஆகவே, மாலியின் இக்கடுமொழி அவனுக்குச் சுட்டது.
“இதோ பார் மாலி. வழக்காடுவது சரி. நாகரிகமாகப் பேசி வழக்காடினால் என்ன?” என்றான்.
“நாகரிகமாம், நாகரிகம்! பிறர் உரிமையில் தலையிடுவதுதான் நாகரிகமான செயல்போலும்?”
“கடல் யாருக்கும் தனி உரிமைப்பட்டதல்லவே!”
“ஓகோ! வானமும் யாருக்கும் தனியுரிமைப்பட்டதல்ல தானே. அதற்காக உன் வீட்டுமோட்டில் ஏறி நின்று வானத்தைப் பார்க்கிறேன் என்று ஒருவன் சொன்னால்?”
“இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு?”
“என்ன தொடர்பா! என் வீட்டு வழியாக எங்கள் கடலில் வந்து ஏன் பாசி எடுக்க வேண்டும்? நேர்மை என்பது இன்னதென்று இம்மியளவு தெரிந்திருந்தால் இது புரியுமே!”
“உன் உரிமையில் குறுக்கிடும் எண்ணம் எனக்குச் சிறிதும் கிடையாது. மாலி! நான் விற்பதற்காகப் பாசி எடுக்கவில்லை. சொன்ன விலை கொடுத்தாலும்கூட எங்களுக்கு வேண்டிய பாசியை நீ கொடுக்க மறுக்கிறாய். எங்களுக்கு வேண்டிய பாசியைத்தான் நான் எடுக்க வருகிறேன். அதுவும் என் உழைப்பாலேயே! இதில் உன் உரிமை எங்கே குறுக்கிட்டது? கடலில் அலைகள் எவ்வளவோ பாசியை உன் கடலிலிருந்து அடித்துக் கொண்டு செல்கிறதே! உன் உரிமையையா அடித்துக் கொண்டு போகிறது?”
“கடல் கொண்டுபோகட்டும், நீ கொண்டுபோகப் படாது!”
“என்னை ஒரு நண்பனாகக் கருதிக் கொள். வீண் கோபம் வேண்டாம்” என்றான் அவன்.
“நண்பன்! உன்னைப் போன்ற கேடுகெட்டவன் நட்பு இங்கே யாருக்கு வேண்டும்?” என்று கூறி அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்துவிட்டுச் சென்றாள் மாலி.
மாலியிடமிருந்து செய்தி கேட்டபோது உள்ளூர மலாகிக்குக் கோபம் தான் வந்தது. ஆனால், ஃபார்ட்டி செல்வர் வீட்டு இளைஞன். ஆகவே அவன், “போகட்டும், விட்டுவிடு, மாலி. கடவுள்தான் அவனுக்குத் தண்டனை தர வேண்டும். அவன் அந்தப் பாசியுடன் பாசியாகக் கடலில் அழுந்திச் சாகட்டும்!” என்றான்.
“ஆம். அப்படித்தான் நேர வேண்டும், நேரும். குறளிக் கசத்தில் அவன் ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் அகப்படாமல் போவதில்லை. அப்போது அவனைக் காப்பாற்ற நான் ஒரு சுண்டுவிரலை உயர்த்தினால், நான் மாலியில்லை!” என்று அவள் உறுமிக் கொண்டாள்.
குறளிக்கசம் - பாசிகள் மற்ற இடங்களைவிட மலாக்கியின் வீட்டை அடுத்த கடலில் மிகுதியாக ஒதுங்குவதற்குக் காரணமாயிருந்தது குறளிக் கசம்தான். கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைதியாகத் தூங்கும் ஒரு பாறையினருகே அது அமைதிக் காலங்களில் ஒரு சிறு தெப்பக்குளமாகக் கிடந்தது. ஆனால் புயல் காலத்தில் அதன் சிறிய பரப்புக்குள் ஏழு கடல்கள் கொந்தளித்துக் குமுறிக் கொம்மாளம் அடித்தன. அதன் உள்ளிடம் கடலின் ஆழத்துடனும் பாறையின் அடியிலுள்ள நிலக்குகைகளுடனும் தொர்புடைய தாயிருந்தது. அதன் ஆழமோ உள்வளைவு குடைவுகளோ சொல்லித் தொலையாது. மக்கள் அதைக் குறளிக்கவசம் என்று கூறியதில் வியப்பில்லை. ஏனெனில் புயற்காலத்தில் மீன்கள்கூட அதன் பக்கம் வர அஞ்சும்! ஆழ்கடல் நண்டுகள் கூட அதன் அருகே உள்ள பாறைகளில் தங்குவதில்லை!
குறளிக்கசத்தின் அருகிலுள்ள தூங்கும் பாறையில் மலாகி கூடக் கால் வைத்ததே கிடையாது. அதன்மீது அச்சமின்றி நடமாடிய ஒரே உயிரினம் மாலி மட்டுமே! அமைதிக் காலத்தில் கடலில் நீந்தியும் அந்தக் கசத்தில் முக்குளித்தும் அவள் அதன் சுற்றுப்புறங்களில் வளைவு நெளிவுகளையும் அதன் உட்புறக்குடைவுமுடைவுகளையும் நன்கறிந்திருந்தாள். அத்துடன் நீர்ச்சுழிகளையும் குமுறல்களையும் அவள் எதிர்த்துப் போராடுவதில்லை. அவற்றைத் தன் தோழர்களாக்கி வேண்டிய திசையில் செல்ல அவற்றைப் பயன்படுத்திக் கொள்வாள்!
கடல் இன்னதென்றறியாத வேளாண் செல்வர் வீட்டுப் பிள்ளையாகிய ஃபார்ட்டி என்றேனும் ஒருநாள் குறளிக்கசத்தின் எளிமை அழகிலும், தூங்கும் பாறையின் கவர்ச்சியிலும், புயற்காலங்களில் கசத்தில் புரளும் பாசி வளத்தின் அளவிலும் சிக்காது இருக்கமாட்டான் என்று மாலி கருதினாள். அவள் கருதியது தவறாகவும் இல்லை. அவன் அடிக்கடி அக்கசத்தைக் கண்டேங்குவதையும் தூங்கும் பாறையில் நின்று பாசித்திரளை வாரக் கை ஏந்துவதையும் அவள் அடிக்கடி பார்த்திருந்தாள்.
ஒருநாள் மாலை அமைதியிடையே மெல்லக் காற்று வீசத் தொடங்கிற்று. காற்றுப் புயலாகத் தோற்றவில்லை. கடலில் அலைகளும் எழவில்லை. ஆனால் கடல் மலாகியின் கடலை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. கடற்பாசிகள் கடலுக்குள் பாயும் ஆறுகள் போல நாற்புறமிருந்தும் பாய்ந்து வந்து குறளிக்கசத்துக்குள் சுருண்டு தூங்கும் பாறைமீது புரண்டன. கடல், புயல், பாறை ஆகியவற்றின் தூங்கு நாடிகளையும் விழிப்பு நாடிகளையும் நன்கு அறிந்த மாலிக்கு இவ்வடையாளங்களின் பொருள் தெரியும். அது பாசி சேகரிப்பதற்குரிய வேளையல்ல; பாசி வளத்தை வாளா பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நேரம்! அந்தக் கோரப் புயலின் வேகம் அடங்கியபின்தான் ஒதுங்கிய பாசிகளைத் திரட்ட முற்படலாம். ஆகவே, அவள் கடலின் கலையிலுள்ள உயர்பாறை ஒன்றிலிருந்து கடலை ஆவலுடனும் ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஃபார்ட்டிக்கு மாலியின் செய்தி தெரியாது. ‘அவள் பெண்தானே, கடலுக்குள் செல்ல அஞ்சி, தொங்கம் பாசியை நம்பியிருக்கிறாள்’ என்று நினைத்து அவன் முன்னேறிச் சென்றான். செல்லட்டும் என்று முதலில் இருந்தவள், அவனுக்குத் தான் பின்னடைவானேன் என்று எண்ணித் தானும் சென்று பாசியை வாரினாள்.
போட்டியுணர்ச்சியால் ஃபார்ட்டி மேலும் மேலும் முன்னேறிச் சென்றான். தூங்கும் பாறையருகே அவன் நாட்டமும் சென்றது. காலடியும் மெல்ல அதை நோக்கி நகர்ந்தன.
அவள் மனித உள்ளம், உள்ளூரப் பெண்மை நலந் தோய்ந்த பெண்மையுள்ளம், அவளை அறியாமல் எச்சரிக்க முன் வந்தது.
“ஃபார்ட்டி! நீ அறியாச் சிறுபிள்ளை. அந்தத் தூங்கும் பாறையில் கால் வைக்காதே. அஃது ஆபத்து. அதிலும் இன்றைய புயல்….”
அவள் எச்சரிக்கையை அவன் எச்சரிக்கையாகக் கருதவில்லை. ஏளனமாக எண்ணினான். அவன் வேண்டுமென்றே துணிவுடன் தூங்கும் பாறையின் மறுகோடிவரை சென்று, அதில் நின்று பாசிகளை மலை மலையாக வாரிப் பாறையில் குவித்தான்.
இந்த நிலை வர வேண்டுமென்றுதான் அவள் விரும்பி இருந்தாள். ஆனால், வரும்போது அவள் மகிழவில்லை. அவன் அறியாத் துணிச்சல் கண்டு முதலில் கோபப்பட்டாள். பின் இரக்கப்பட்டாள். அவள் நெஞ்சு அவளையுமறியாமல் படபடத்தது.
ஆனால் நெஞ்சு படபடக்க நேரமில்லை. அதற்குள் குறளிக்கசம் படபடத்தது. அலை எழாமலே கடல் புளித்த தோசைமாவைப்போலப் பொங்கித் தூங்கும் பாறையின் கழுத்தளவு உயர்ந்துவிட்டது.
“வந்துவிடு, ஃபார்ட்டி, வந்துவிடு” என்று கூவினாள் மாலி.
அவன் வரத்தான் முயன்றான். ஆனால், அவன் கையின் பேராசை வளைகோலில் சிக்கிய பாசியுடன் வர முயன்றது. குளறிக்கசம் பாசியைச் சுழற்றி உள்ளிழுத்தது. பாசி கையை வளைத்திழுத்தது. அவன் கால் சறுக்கிற்று. அவன் குறளிக்கசத்தின் குமுறலுடன் குமுறி அதன் நீரில் கவிழ்ந்து சென்றதும் மேல் வந்ததும் அலறினான்.
மாலியின் அகமும் ஆகமும் பற்றி எரிந்தன. ஆனால் அவள் அமைதி நிலையை விடவில்லை. அவன் நீரில் மேலெழும் சமயம் பார்த்துத் தன் வளைகோலை அருகில் நீட்டி “இதைப் பிடித்துக்கொள், ஃபார்ட்டி!” என்றாள்.
கிலியும் கலக்கமும் அதிர்ச்சியும் ஃபார்ட்டியை அப்போதே அரையுயிர் ஆக்கியிருந்தன. ஆனால் அவன் கைகள் மட்டும் அந்த வளைகோலைச் சாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டன. அத்துடன் அவன் உணர்வு முற்றிலும் இழந்தான். ஆயினும் நீருடன் அவன் போராடிய போராட்டம் முடிந்தது. நல்ல காலமாக அவனைக் காட்டிலும் நீரின் உணர்ச்சியறிந்து பழகிய மாலியே அப்போராட்டத்தை இப்போது மேற்கொண்டாள். அவளிடம் தோழமை பூண்ட குறளிக்கசம் மெள்ள மெள்ளத் தான் விழுங்க எண்ணிய இரையை அவளிடம் ஒப்படைத்தது.
உடலைக் கரைக்குக் கொண்டுவருவது அவளுக்கு எளிதாயிருந்தது. ஏறிவரும் கடலின் பிடிக்கு எட்டாமல் அதை உயரத்தில் ஏற்றுவது அவளுக்குக் கடினமாயிருந்தது. அவள் பலம் மிகுதியானாலும், பாறையின் வழுக்கலிடையே அவள் அரும்பாடுபடத்தான் வேண்டி வந்தது. ஓரளவு அலையின் பிடிக்கு அப்பால் கொண்டுவந்தபின் அவனை அவள் உணர்வு நிலைக்குக் கொண்டு வர முயன்றாள். அவனுக்கு எத்தகைய பேரிடையூறும் வரவில்லை. ஆனால் தலையடி பட்டுக் குருதி கொட்டிற்று. அதை ஓரளவு அவள் தன் ஈரத்துணி கிழித்துக் கட்டினாள். ஆனால் குருதிப் போக்கை விடக் கிலி அவன் நாடித்துடிப்பைத் தாக்கிவிட்டது. அவன் கண்களைச் சற்றுத் திறந்தபின் மீண்டும் மூடிச் செயலற்றவனாய்விட்டான்.
அவளுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஓடோடிச் சென்று பாட்டனை அழைத்து வந்தாள். செங்குத்தான மலைப்பாறை மீது அவனைக் கொண்டு செல்ல அவனாலும் உதவ முடியவில்லை. அவன் கடலருகே இறங்கி வந்ததே பெருமுயற்சி யாய் விட்டது.
ஃபார்ட்டியையும் அவளையும் கிழவன் ஏற இறங்கப் பார்த்தான்.
“மாலி. நீ செய்த செயல் நன்றாயில்லை. நீ அவனைக் காப்பாற்றினாய் என்று யார் சொல்வார்கள்? அவனைச் சாகவிட்டிருந்தால் கூட நமக்குக் கேடில்லை. இப்போது நீ தான் கொன்றுவிட்டாய் என்றல்லவா கூறுவார்கள்?” என்றான் அவன்.
ஆனால் அவள் உள்ளமோ இப்போது வேறு எதுபற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் உயிருக்காக மட்டுந்தான் அது கவலைப் பட்டுத் துடித்தது. “தாத்தா! யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும்; அவனை நானாகக் கொன்றாலும் என்னால் கொல்ல முடியும். இப்படித் தெரியாத் தனத்தால் சாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் போய் அவர் வீட்டில் சொல்லி உதவிக்கு ஆளனுப்பச் சொல்லி வருகிறேன்” என்று கூறி விரைந்தாள்.
அடாப்பழி - மாலி பாறை உச்சிவரை ஓடிச்சென்று, அங்கிருந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். இருபுறத்திலும் ஒரு காகத்தைக்கூடக் காணவில்லை. மறுபுறம் இறங்கி நகருக்குள் சென்றாள். தெருக்களெல்லாம் வெறிச்சென்றிருந்தது. புயலும் மழையும் கலந்து வீசிய அந்த நேரத்தில் எல்லாரும் கதவையும் பலகணிகளையும் சார்த்தி வீட்டில் அடைபட்டுக் கிடந்தனர். ஆனால் மாலி மட்டும் உடலுக்கோ காலுக்கோ தலைக்கோ எத்தகைய பாதுகாப்புமற்ற நிலையிலேயே தன்னை மறந்து ஓடினாள்!
ஃபன்லிஃவ் குடும்ப மாளிகையின் பக்கம் அவள் அதுவரை சென்றதில்லை. ஆனால், இன்று அவள் பரபரவென்று சென்று அதன் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த பணியாள் ‘ஏன் கதவை வந்து தட்டுகிறாய், போ வெளியே!’ என்று கடுகடுத்தான் ‘திருவாட்டி ஃகன்லிஃவ்வைக் காண வேண்டும்’ என்று அவள் கூறியதற்கும் இதைவிட மோசமான மறுமொழிதான் வந்தது. ஆகவே அவள் ஃபார்ட்டியின் நிலைபற்றிப் பணியாளிடமே கூற வேண்டியதாயிற்று. அது கேட்டதும் நிலைமை மாறிற்று. திருவாட்டி ஃகன்லிஃவ்வும் திரு. ஃகன்லிஃவ்வும் ஓடோடி வந்தனர். ஒரே அமளி குமளிப்பட்டது. விரைந்து உதவி யாளுடன் போக வேண்டும் என்று மாலி துடித்தாள். ‘இந்நேரம் எப்படி யிருப்பாரோ, உடன் ஆளனுப்பிப் பாருங்கள்’ என்றாள்.
செய்தி கொண்டுவந்தவளைப் பற்றிக் கவலைப் படுபவரோ கவனிப்பவரோ அங்கே யாரும் இல்லை. அவளுக்கு நன்றியாக ஒரு சொல் தெரிவிக்கக்கூட யாரும் கனவு காண வில்லை. ஏழையின் மனிதப் பண்பை யார் மதிப்பர்! அது மட்டுமன்று. அந்த உயிராபத்தான வேளையிலும் அவர்களுக்கு மாலியைக் குறுக்குக் கேள்விகள் கேட்க, அவள் மீது ஐயப்பட மனத்தில் இடமிருந்தது.
திருமதி ஃகன்லிஃவ் “ஐயோ, அந்தக் கீழ்மக்களுடன் போட்டிக்குப் போக வேண்டாமென்றேனே, கேட்கவில்லையே! ஐயோ! கொன்று விட்டார்களே உன்னை!” என்று கதறினாள்.
யாரோ திரு. ஃகன்லிஃவ்வின் காதில் ஏதோ சொன்னார்கள். உடனே அவன் மாலியின் பக்கம் திரும்பி “கொன்றது நீயானால், பழிக்குப் பழி வாங்குவேன்; நினைவிருக்கட்டும்” என்றான்.
எந்த உயிரைக் காக்க அவள் தன் பழம்பகையை விடுத்துத் தன் உயிரையும் இடருக்குள்ளாக்கினாளோ, அந்த உயிரைத் தானே கொன்றதாக அவர்கள் முடிவு காணாமலே ஐயுறுவதை அவள் உணர்ந்தாள். பாட்டன் எண்ணியது தவறல்ல என்று கண்டாள்.
செல்வம் படைத்தோரின் நன்றிகெட்டதனத்தையும், உணர்ச்சியற்ற அன்பற்ற தன்மையையும் கண்டு அவள் மனம் கசந்தது. “அதையெல்லாம் சிந்திக்கலாம், பின்னால்! இப்போது மருத்துவரை அழைத்துக் கொண்டு போய், உயிர் மீட்க வழியுண்டா என்று பாருங்கள்” என்று கூறி வெறுப்புடன் தன் வழியே திரும்பி விரைந்தாள்.
எப்படியும் அவர்கள் இனி வருவார்கள் என்ற எண்ணத்துடன் மாலி வழி நடந்தாள். அவள் உள்ளத்தில் சீற்றமில்லை; வெறுப்பும் கசப்புமே இருந்தன. “என் மீதும் என் பாட்டன் மீதுமே அவர்கள் ஐயமுறுகிறார்கள். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவன் பிழைக்கா விட்டால் இந்த நன்றி நலங்கெட்ட சமூகத்தில் இருந்தாலென்ன? இல்லாது போனாலென்ன்?”
ஃபார்ட்டியுடலின் அருகில் பாட்டன் இருந்த காட்சி எண்ணத் தொடரை அறுத்தது. “தாத்தா! அவர் கண் விழித்தாரா” என்றாள்.
“இல்லையம்மா! நீ போகும்போது இருந்த நிலையிலேயே தான் அவன் இருக்கிறான்” என்றான் மலாகி.
திரு. ஃகன்லிஃவ் வருமுன் ஃபார்ட்டி ஒரு தடவை இலேசாகக் கண் திறந்தான். அவன் கண் மாலியை அரை யுணர்வுடன் வியப்புடன் பார்த்தது. ஆனால், அடுத்த கணம் அது மூடிக் கொண்டது. அதன்பின் அசைவே காணவில்லை. மாலி கலவரப்பட்டாள்.
தாய் தந்தையர் வந்து அவன் நிலையைக் கண்டதும் மீண்டும் அமளி குமளியாயிற்று. ஃபார்ட்டியை எழுப்ப முயன்றதில் பயன் ஏற்படவில்லை. இறந்துவிட்டதாகவே எண்ணினர். மீண்டும் ஐயமும் குறுக்குக் கேள்விகளும் எழுந்தன. மாலியும் கிழப்பாட்டனும் கூறிய செய்தியை அவர்கள் நம்பவில்லை. தலையிலுள்ள காயம் கண்டு அவர்கள் மாலியும் அவள் பாட்டனும் அவனைக் கல்லாலடித்துக் கடலில் தள்ளிப் பின் கதை கட்டுவதாகச் சாட்டிப் பேசி அச்சுறுத்தினர்.
உணர்வற்ற நிலையிலேயே அவர்கள் ஃபார்ட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றனர். போகும்போது ஃகன்லிஃவ் மாலியிருந்த திசை நோக்கி, “குருதிக்குக் குருதி வாங்குகிறேனா இல்லையா பார்” என்று கறுவிக் கொண்டு சென்றான்.
மலாகி தன் பேர்த்தியின் செயலுக்கு முதல் தடவையாக அவளை நொந்து கொண்டான். அவளும் பித்துப் பிடித்தவள் போலானாள். ஆனால் அவள்தான் செய்ததற்காக வருந்தவில்லை. அங்கும் மனச்சான்று அவள் பக்கம் நின்றது. அதோடு ஃபார்ட்டி ஒரு தடவை கண் திறந்த போது நன்றியும் ஆர்வமும் கலந்த அவன் பார்வை… அது அவள் மனக்கண் முன் நின்று எல்லா மனக்கசப்புக்கும் மாற்றமளித்தது. அவன் மட்டும் பிழைக்கட்டும்! அஃது ஒன்றே அவள் ஓயாக் கவலையாயிருந்தது.
அன்பின் வெற்றி - காலையில் யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்று அவள் ஃபார்ட்டியின் நலம் உசாவச் சென்றாள். இரவு முழுவதும் அவன் அப்படியேதான் கிடந்திருந்தான். இறந்துவிட்டதாக முடிவு கட்டிய தாய் தந்தையரும் பிறரும் அழுதரற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் இறந்திருக்க முடியாது என்று மாலி எண்ணிக் கொண்டு அருகே சென்றாள். அவன் கை சற்றே ஆடியது. உடனே அவள், “ஃபார்ட்டி இறந்து போகவில்லை, ஃபார்ட்டி இறந்து போகவில்லை. உயிருடன் இருக்கிறார்” என்று கூவினாள்.
தாய் ஓடோடி வந்து, “ஃபார்ட்டி என் கண்ணே! நீ பிழைத்துவிட்டாயா?” என்று கேட்டாள்.
ஃபார்ட்டி மெள்ளக் கண் திறந்தான். தாயின் முகம் அவன் கண்ணில் பட்டது. ஆனால், அவனால் பேச முடியவில்லை. கண்களும் விரைவில் மூடிக் கொண்டன. ஆனால் அந்த நிலையிலும் அவன் “மாலி… மாலி எங்கே?” என்று முனகினான்.
மாலி அவனைக் கொன்றிருக்க முடியாது என்பதற்கு இந்த ஒரு சொல்லே அண்டையிலுள்ளவர்களுக்குச் சான்றாயிற்று. அவன் பிழைத்துக் கொண்டான் என்ற மகிழ்ச்சியைத் தன் பாட்டனிடம் சொல்ல அவள் ஒடோடிச் சென்றாள்.
அன்று மாலையெல்லாம் ஃபார்ட்டி பிழைத்தது பற்றிய மகிழ்ச்சியுடன் வழக்கம்போலத் தன் வேலையில் ஈடுபட்டாள். இருள் கவிந்துவிட்டது. கழைக் கோலினால் கடைசிப் பாசிச் சுருளைக் கரைமீது கொட்டிக் கழுதையுடன் திரும்ப எண்ணினாள். அச்சமயம் ஒரு விளக்கொளி பாறை உச்சியிலிருந்து அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது.
வந்தது திரு ஃகன்லிஃவ். அரையிருளிலிருந்தே அவன் “யாரது! மாலியா?” என்றான்.
“ஆம்! ஃபார்ட்டிக்கு எப்படி இருக்கிறது?” என்று அவள் உசாவினாள்.
“நீயேதான் வந்து பார்க்க வேண்டும் மாலி! அவன் உன்னிடம் பேசிய பின்தான் எதுவும் அருந்துவேன் என்று பிடிவாதம் செய்கிறான்” என்றான்.
ஃபார்ட்டியின் உயிர் தன் மீது ஏற்பட்ட ஐயப் பேயையும் அடாப்பழியையும் முற்றிலும் மாற்றிவிட்டது என்பதை மாலி ஒரு நொடியில் ஊகித்துக் கொண்டாள். “ஃபார்ட்டி விரும்பினால் நான் வருகிறேன்” என்று கூறிப் பாட்டனிடம் சென்றாள். கிழவன் மலாகிக்குக் கொஞ்ச நஞ்சம் காலையில் மீந்திருந்த அச்சமும் அகன்றது. “போய்ப் பார்த்துவிட்டு விரைவில் வா அம்மா!” என்று கூறி மாலியை அனுப்பினான்.
பணியாட்களின் ஐயப்பார்வைகளின் தடையில்லாமல் ஃகன்லிஃவ் மாளிகையில் அன்றுதான் இவள் இயல்பாகச் சென்றாள். ஆனால், இம் மாறுதலை அவள் கவனிக்கவில்லை. ஃபார்ட்டி இன்னும் உடல் நலிவுடன் எழுந்திருக்க முடியாமல் தான் இருந்தான். மாலி அருகே செல்லும் போதே அவன் ‘மாலி வந்துவிட்டாளா?’ என்று கேட்டது அவள் செவிப்பட்டது. தாய் ‘இதோ மாலி வந்திருக்கிறாள்’ என்றாள்.
‘மாலி! என் உயிரை நீ காப்பாற்றியதற்கு நானே உன்னிடத்தில் நேரில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்’ என்றான்.
அதே சமயம் திருமதி ஃகன்லிஃவ், “நாங்களும் உன்னை ஐயுற்றுக் கடுமொழிகள் கூறியதற்கு மன்னிப்புக் கோருகிறோம். நாங்களும் நன்றி தெரிவிக்கிறோம்” என்றாள்.
“நான் செய்த செயலுக்கு நான் என்றும் வருந்தியிருக்க மாட்டேன். ஆனால், அது பயனடைந்து நீங்கள் பிழைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்றாள் மாலி.
ஃபார்ட்டி “இனி நீ என்னை நண்பனாகக் கருதலாமல்லவா?” என்றான்.
“தாராளமாக! ஏன்?” என்று கேட்டாள் வியப்புடன்.
“இல்லை! நான் இனியும் பாசி சேகரிக்க வரத்தான் எண்ணுகிறேன். ஆனால் எனக்காக அல்ல. உனக்காக” என்றான்.
அவளுக்கு அவன் கூறியதன் பொருள் விளங்கவில்லை. ஆனால், அவன் இன்னும் முற்றிலும் நலமடையாத நிலையில், அவனுடன் நீடித்து உரையாட அவள் விரும்பவில்லை. அத்துடன் பாட்டன் தனியே இருப்பதையும் நினைத்துக் கொண்டு அவள் விடைபெற்றுத் திரும்பினாள்.
ஃகன்லிஃவ் குடும்பத்தினர் இத்தடவை விளக்குகளுடன் இரண்டு பணியாட்களையும் உடன் அனுப்பினர். அவள் “எனக்கு ஏன் இத்தகைய துணை?” என்று மறுத்தும் அவர்கள் அவளுடன் பாறை வீடுவரை வந்து சென்றனர்.
அவள் உள்ளம் இரவெல்லாம் உறங்காமல் ஃபார்ட்டியின் சொற்களையே நினைத்து வட்டமிட்டது. ஆனால், அவள் மகிழ்ச்சியைவிடக் கிழவன் மகிழ்ச்சி பெரிதாயிருந்தது. அவன் தன் அரைத்தூக்கத்திடையே “ஆ, நான் என்றும் மறக்க மாட்டேன்” என்றான்.
மாலி அவனை எழுப்பி, “என்ன தாத்தா! மறக்கமாட்டேன் என்கிறீர்கள்?” என்றாள்.
அவன் சிரித்துக் கொண்டு மீண்டும் படுத்து உறங்கினான். ஆனால் ‘ஆ, நான் என்றும் மறக்க மாட்டேன்’ என்ற பல்லவி அவள் கண்ணயரும் வரை கேட்டது.
பிளவு தீர்ந்தது-ஃபார்ட்டி உடல் நலம்பெற, அவனை ஃகன்லிஃவ் மாளிகையில் தங்க வைப்பது கடினமாயிற்று. அவன் மாலியின் நினைவைத் தவிர வேறெதிலும் கருத்தற்றவனானான். தாய் தந்தையரும் இப்போது அவனைத் தடுக்கவில்லை. மாலிக்கே அவன் உயிர் உரியது என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் திருவாட்டி ஃகன்லிஃவ் மகனை நோக்கி, “ஃபார்ட்டி! மாலியை நான் இங்கே கொண்டுவந்துவிட எண்ணுகிறேன்” என்றாள்.
“ஏனம்மா?”
“உன்னை இங்கே தங்க வைக்கத்தான். அத்துடன் மாலியிடம் எனக்கும் இப்போது பாசம் ஏற்பட்டிருக்கிறது.”
“அவள் பாட்டன் மலாகி…!”
“பாட்டனும் இங்கேயே இருக்கட்டும். தள்ளாத வயதில் அந்தக் காட்டு வீட்டிலிருப்பானேன்?”
“பாசி சேகரிக்கும் வேலை….”
திருவாட்டி ஃகன்லிஃவ் சிரித்தாள்.
“நீ வேண்டுமானால் செய். மாலிக்கு அது வேண்டாம்.”
“மாலி என்ன சொல்லுவாள்!”
“அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.”
திரு. ஃகன்லிஃவ் ஏற்கனவே மலாகியிடம் பேசி எல்லாம் ஒழுங்கு படுத்தியிருந்தான். காட்டு வீட்டில் ஃகன்லிஃவ் குடும்பத்தினர் ஒரு சிறு கோடைகாலக் குடிசை கட்டினர். மாலியும் மலாகியும் ஃகன்லிஃவ் மாளிகைக்கு வந்துவிட்டனர்.
மாலி, ஃகன்லிஃவ் குடியின் மருமகளானாள். அவ்வப்போது மாலியும் ஃபார்ட்டியும் தங்கள் பாறைக் குடிசையில் தங்கிக் கடலில் மலாகி கடலை நோக்கித் தம் முற்காலச் சந்திப்புக் கனவுகளில் கருத்துச் செலுத்தி மகிழ்வார்கள்.
நாரை அரசு
பல நூறு ஆண்டுகளுக்குமுன் பாரசீக நாட்டில் மசூக் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் இன்ப விருப்பினன். இரக்க நெஞ்சுடையவன். ஆனால் முன் கோபி. சிறிது அடம் பிடிப்பவன். ஆயினும் அவன் தீய குணங்களுக்கு அவன் குடிகள் ஆளாக வில்லை. அவர்களுக்கு அவன் நல்லரசனாகவே இருந்தான். அவனது தீயகுணங்கள் யாவும் அவனிடம் மாறாப் பற்றுடைய நல்லமைச்சனிடமே காட்டப்பட்டன.
மசூக்கின் நல்லமைச்சன் மன்சூர் வயது சென்றவன். உடல் பருத்து ஆள் அருவருப்பான தோற்றமுடையவனாயிருந்தாலும் அவன் அறிவிற் சிறந்தவன். தங்கமான குணம் உடையவன். மன்னனிடம் அவன் கொண்ட பற்றுக்கு எல்லையில்லை. மன்னன் விருப்பத்துக்கும் கோபதாபங்களுக்கும் ஏற்ப நடக்கும் அவன் பொறுமைக்கும் எல்லையே கிடையாது. ஒரு சமயம் ஏதோ காரணத்தால் கோபித்து அமைச்சன் முகத்தில் மன்னன் எட்டி உதைக்க அவன் பற்கள் இரண்டும் போய் விட்டன. மற்றொரு சமயம் மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது அவன் விiயாட்டுக் குறும்பின் சின்னமாக மன்சூரின் ஒரு கண் போயிற்று. ஆனால் இத்தகைய இன்னல்கள் கூட மன்சூரின் பணிவிணக்கத்தையோ, மன்னனிடம் அவன் கொண்ட பாசத்தையோ குறைக்கவில்லை.
மசூக்குக்கு இஸ்லாம் நெறியில் அளவற்ற பற்று. பாரசீக மக்களிடையே இன்னும் நிலவிவந்த பழைய ஜாதுஷ்டிர நெறியையும் புத்த நெறியையும் அவன் வெறுத்தான். தான் மேற்கொண்ட மெய்ந்நெறியை ஏற்க மறுத்தவர் யாரும் பாரசீக நாட்டில் இருக்கக் கூடாதென்று அவன் கட்டளையிட்டான். புறச்சமயத்தவர் பலர் இதனால் தண்டிக்கப்பட்டனர். பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். கஸ்ரூ என்ற மாயாவி ஒருவனும் அவன் புதல்வன் ஆமீன் ஆதாப் என்பவனும் மட்டும் இந்துஸ்தானத்துக்கு ஓடிச் சென்று பருகச்ச நகரில் தங்கினர். அங்கே அவர்கள் தம்மையே பாரசீக அரசன் என்றும் இளவரசன் என்றும் கூறிக் கொண்டு வாழ்ந்தனர். நகைச்சுவை மிக்க மன்னன் மசூக் இதைக் கேள்விப்பட்ட போது சினங் கொள்ளவில்லை. “கரும்புத் தோட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடட்டும். கரும்பை நான் சுவைக்குமட்டும் அதுபற்றி எனக்கு என்ன கவலை?” என்று கூறி அவன் நகைத்தான்.
மன்னன் மசூக்கின் நகைத்திறம் எப்போதும் ஒளி வீசுவதில்லை. அவன் எப்போதும் சுமூகமாயிருப்பதுமில்லை. இவ்விரண்டையும் பேணுவதில் அரண்மனை மருத்துவர், விகடகவி, கதைவாணர், பாடகர் ஆகிய பலர் அரும்பாடு பட்டனர். அமைச்சன் அரசாங்கக் கடமைகளில் மிகக் கடினமான கடமையும் அதுதான்! ஆனால் அரசன் ஓயாது தின்ற இனிப்புப் பண்டங்களும் இனிய குடிவகைகளும் அவர்கள் முயற்சியை அடிக்கடி வீணாக்கின. மன்னன் அடிவயிற்றுச் செரிமானம் குறைந்தவுடன் நகைச்சுவைக்குப் பஞ்சம் உண்டாகிவிடும். அரண்மனை அல்லோல கல்லோலப் படும். அமைச்சனுக்குப் பொறுக்கமுடியாத தலையிடியும் அலைச்சலும் ஏற்படும்.
அரசன் உள்ளத்தில் கடுகடுப்பும் நேரம் போக மாட்டாத நிலையும் ஒருநாள் ஏற்பட்டது. அன்று விகடகவியை அவன் வேம்பென வெறுத்தான். கோமாளியைக் காண அவன் குமுறினான். கதைவாணர் வாய் திறக்க விடாமல் கடுகடுத்தான். அமைச்சனோ அணுக அஞ்சினான். அரசனுக்குப் புதிய பொழுதுபோக்குக்கான வழிதேடி அவன் புறப்பட்டான். நகரின் ஒரு பக்கத்தில் மக்கள் கும்பல் கூடி இரைந்து கொண்டிருந்ததை அவன் கண்டான். அவர்கள் நடுவே ஒரு கிழவி தமிழகத்தி லிருந்து கொண்டு வரப்பட்ட வகைவகையான வண்ணப் பொருள்களை விற்றுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அமைச்சன் வாடிய முகத்தில் தெம்பு உண்டாயிற்று. ‘ஆம்! அரசன் மனநிலையை மாற்றத்தக்க புதுமை இதில்தான் இருக்க வேண்டும்’ என்று கருதியவனாய், அவளை அரசனிடம் இட்டுச் சென்றான்.
மாயப்பொடி - அவன் கருதியது தவறன்று. கிழவியிடம் இருந்த பொருள்கள் எல்லாமே அரசனுக்குப் பிடித்திருந்தன. ஒவ்வொன்றையும் ஆவலுடன் பார்த்தபின் அத்தனையையும் ஒருங்கே விலைபேசி வாங்கி விட்டான். ஆனால், தட்டு முழுவதையும் அரசனிடம் ஒப்படைக்கும் போது கிழவி ஒரு சிறு புட்டியை மட்டும் தனியாக மறைத்தெடுத்து இடுப்பில் ஒளித்து வைக்கப் போனாள். அரசன் அதுகண்டு “எனக்குரிய பொருளை ஒளிக்கப் பார்க்கிறாயா?” என்று சீறினான்.
அவள் நடுநடுங்கி, “ஐயா! இஃது ஒன்றுமில்லை. ஒரு சிறு புட்டி. யாருக்கும் உதவாது. எங்கள் குடும்ப உரிமைப் பொருளாதலால், எனக்கு மட்டுமே அருமை உடையது” என்றாள்.
“வெறும் புட்டியா? அதில் என்ன இருக்கிறது?”
“ஒன்றுமில்லை, ஆண்டவரே! ஒரு சிறிது வெள்ளைத் தூள் மட்டும்தான்!”
“ஓகோ, நஞ்சு, நஞ்சு! ஆகா, அப்படியா செய்தி? இதோ உன்னைத் தூக்கிலிடுகிறேன் பார்!” என்று அரசன் இரைந்தான். அமைச்சன் இடையில் வந்து தடுக்காவிட்டால், அவன் அவளைக் கொன்றே இருப்பான்!
கிழவி எண்சாணும் ஒரு சாணாகக் குறுகி, “ஐயா! அது நஞ்சல்ல என்று காட்ட நானே அதை உட்கொள்கிறேன், பாருங்கள்!” என்றாள்.
அரசன் கோபம் குறும்பாக மாறிற்று. அவன் கிழவியின் நீண்டு வளைந்த மூக்கை இரு விரல்களால் இறுகப் பிடித்துக் கொண்டான். புட்டியிலுள்ள தூளில் ஒரு கரண்டி அவள் நீட்டிய நாக்கிலிடப்பட்டது.
தூள் நாக்கிலிடப்பட்டதுதான் தாமதம். மன்னன் கைப்பிடியிலிருந்த மூக்கையும் காணோம்; நாக்கையும் காணோம். அவற்றிற்குரிய கிழவியையும் காணவில்லை. மன்னன் கைப்பிடி மட்டும் மூக்கைப் பிடிக்கும் பாவணையில் வெட்ட வெளியில் எதையோ பிடித்துக் கொண்டிருப்பது போல் தொங்கிற்று.
ஒரு மாடப்புறா மன்னன் கையினிடையே ஓடிப் பக்கத்திலுள்ள மரத்தில் அமர்ந்து, பின் நகரைக் கடந்து பறந்தது.
கிழவி எப்படி மறைந்தாள் என்று எல்லோரும் மலைப்பும் திகைப்பும் அடைந்தனர். தூள் ஒரு மாயத் தூளாயிருக்கலாம். ஏனென்றால், திடீரென்று பறந்து சென்ற மாடப்புறாவாக அவள் மாறியிருக்கக்கூடும் என்றான் மன்சூர்.
தூளை இன்னொருவனுக்குக் கொடுத்துப் பார்க்க அவர்கள் விரும்பினார்கள். மன்னன் அமைச்சன் பக்கம் குறும்பு நகையுடன் திரும்பினான். ஆனால் அமைச்சனுக்கும் இத்தகைய காரியங்களில் கைப்பாவையான ஓர் ஆள் இருந்தது. அதுவே அரண்மனைப் பணியாட்களின் தலைவன் ஹட்ஜ்பட்ஜ். அவன் வேண்டா வெறுப்பாக அத்தூளை அருந்தவேண்டி வந்தது. ஒரு கரண்டி அருந்தியும் எந்த மாறுதலும் காணவில்லை. கரண்டி மேல் கரண்டி அவன் வாயில் திணிக்கப் பட்டும் எந்தப் பயனும் ஏற்படாதது கண்டு, எல்லோரும் ஏமாற்றமடைந்தனர். ஹட்ஜ்பட்ஜ் மட்டுந் தான் தப்பினேன் பிழைத்தேன் என்று மகிழ்ச்சியுடன் நழுவி ஓடினான்.
தூளின் மருமம் - தூளின் மருமம் அறியப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றன. புட்டியை மூடப் பயன்படுத்தி இருந்த தாள் சுருளில் ஏதோ எழுதப்பட்டிருந்தது என்பது தவிர வேறு எதையும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் அவ்வெழுத்துகள் எவருக்கும் புரியாத வடிவம் உடையனவா யிருந்ததனால் அதன் செய்தியும் தெரியவில்லை.
மன்னன் அவைப் புலவர்களெல்லாரும் இது தமக்குத் தெரியாத ஏதோ புதுமொழி என்று கூறிக் கைவிரித்தனர். ஆனால் மன்னன் அமைச்சனிடம், “நாளை உச்சிப் பொழுதுக்குள் இதை யாரைக் கொண்டாவது நீ புரிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலை போய்விடும்” என்றான்.
உச்சிப் பொழுதுவரை அவைப் புலவர் மூளையைக் குழப்பிக் கொண்டனர். அமைச்சனோ என்றும் தொழாத முறையில் எல்லா நெறிகளுக்கும் உரிய தெய்வங்களுக்கும் மாறிமாறித் தொழுகை புரிந்தான். ஆனால் உச்சிப் பொழுதில் “அம்மொழி எனக்குத் தெரியும்” என்று கூறி ஒருவன் வந்தான். அது பாலி மொழி, “கிழக்கு நோக்கி மூன்று தடவை தலைவணங்கி இத் தூளை உண்பவன் உண்ணும்போது விரும்பிய எந்தப் பறவை அல்லது விலங்கு வடிவத்தையும் அடைவான். அத்துடன் அவ்வப்பறவை அல்லது விலங்கு மொழியையும் அப்பொடியின் ஆற்றலாலேயே உணர்ந்து அவற்றுடன் உரையாடுவான். அவன் பழைய உருவமடைய விரும்பினால் புத்தகுரு என்ற இறைவன் பெயர் கூறிக் கிழக்கு நோக்கி மூன்று தடவை வணங்க வேண்டும். ஆயினும் விலங்கு அல்லது பறவை வடிவத்திலிருக்கும்போது அவன் எக்காரணங் கொண்டும் சிரித்துவிடக் கூடாது. சிரித்தால் சொல்லவேண்டிய இறைவன் பெயர் மறந்துவிடும். விலங்கு அல்லது பறவை வடிவத்திலேயே இருக்க வேண்டி வரும்” என்று அவன் அப்பாலிமொழி எழுத்துகளைப் படித்துக் கூறினான்.
மன்னன் இது கேட்டு எல்லையிலா உவகை கொண்டான். பாலி மொழியாளன் வாய் நிறையச் சர்க்கரையிட்டுக் கை நிறையப் பொற்காசுகள் கொடுத்தனுப்பினான். அனுப்புமுன் அமைச்சன், “அரசே! சொன்னது சரியா என்று பாராமல் அவனை அனுப்பலாமா?” என்று கேட்டான்.
அரசன்! “ஆகா! அப்படியே செய்தால் போயிற்று. வா! இங்கே வந்து நீயே அதை மெய்ப்பித்துக் காட்டு. எங்கே என் நல்லமைச்சனை ஒரு கறுப்பு நாயாக நான் என் கண் முன்னே காணட்டும்!” என்றான்.
மன்னன் குணமறிந்த அமைச்சன் மறுத்துப் பேசாது தூளை முறைப்படி உட்கொண்டான். மறுகணம் அவன் ஒரு கறுப்பு நாயாகி மன்னனை நோக்கி வால் குழைத்து நின்றான். அந்த உருவத்திலும் அமைச்சன் கண் ஒன்று குருடாகவும் பல் உடைந்தும் இருப்பதைக் கண்ட மன்னன் குலுங்க குலுங்க நகைத்தான். அமைச்சன் மட்டும் வருந்தித் தன்னையடக்கிக் கொண்டு சிரிக்காமலிருந்தான். சிரித்தால் திரும்ப அமைச்சனாக முடியாது என்பதை அவன் மறக்கவில்லை. விரைவில் அவன் நாயுருவம் மாற்றி மன்னனுடன் மாயப் பொடியின் உதவியால் பல உருவெடுத்து நாடு சூழ்ந்து வந்து வேடிக்கை பார்த்துக் களித்தனர்.
குயிலுருவிலும் மயிலுருவிலும் இருவரும் அடிக்கடி சென்று பிறர் அறிய முடியாத பல செய்திகளையும், பிறர்மறை செய்திகளையும் அறிந்து உலாவினர். இந்த உலாவில் ஒரே ஒரு புது நிகழ்ச்சிதான் மன்னனுக்கு அதிர்ச்சி தந்தது. ஒரு தடவை ஈ உருவெடுத்து ஒரு மதில் பக்கம் குந்தியிருக் கையில் மன்னனை ஒரு சிலந்தி பரபரவென்று வந்து விழுங்க விருந்தது. அமைச்சன், ஈ மன்னனை வெடுக்கெனக் கடித்திழுத்துச் சென்றிராவிட்டால் மன்னன் சிலந்தியின் வயிற்றுக்கு இரையாகியிருப்பான். மாற்றுருவில் ஏற்படும் இவ்விடையூறறிந்து அவர்கள் அது முதல் ஈ முதலிய நோஞ்சல் உயிர் வடிவம் எடுப்பதில்லை.
மாய நாரைகள் - ஒருநாள் மன்னனும் மதியமைச்சனும் கடற்கழிகளின் பக்கமாக உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் உடை பொதுநிலை உடையாயிருந்ததனால், யாரும் அவர்களை மன்னனென்றும் மதியமைச்சனென்றும் கண்டு கொள்ள முடியாது. கடலடுத்த ஏரிக்கரையில் அவர்கள் கண்ட ஒரு காட்சி அவர்கள் ஆர்வத்தைத் தட்டி எழுப்பிற்று. ஓர் அழகிய பால்வண்ணச் செங்கால் நாரையிடம் சென்றனர்.
செங்கால் நாரை தன் நாரை விருந்தினரைக் கண்டு அகமகிழ்ந்து ஒரு மீன் துண்டத்தை விருந்தாக அளித்தது. அரச நாரையோ நாரையுருவிலிருந்தாலும் அரசனானதால் நாரை உணவை உண்ண விரும்பவில்லை. அது கண்ட செங்கால் நாரை அதனிடம் இன்னும் பரிவுடன் பழகிற்று. அப்போது அமைச்ச நாரை அதன் ஆட்டபாட்டத்தின் காரணம் கேட்டது. அதற்குச் செங்கால் நாரை அழகிய குழைவு நெளிவுடன், ‘அதுவா, நாரை அரசனும் பெருமக்களும் கூடிய அவையில் நான் முதன்முதலாக ஆடல் அரங்கேற்றப் போகிறேன். அதற்காகப் பழக்கிக் கொள்கிறேன்’ என்று கூறிப் பின்னும் ஒருமுறை தன் நீண்ட கழுத்தை வளைத்துக் கால்களை முடக்கிக் கண்களை உருட்டிக் காட்டிற்று. அது கண்ட அரச நாரைக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அறிவாற்றல் மிக்க அமைச்ச நாரையும் அரசன் செய்வது போல் செய்யும் பழக்க மிகுதியால் சிரித்தது. தன்னைக் கண்டு சிரித்த விருந்தினர் மீது கடுங்கோபங் கொண்டு செங்கால் நாரை பறந்து போய்விட்டது.
மன்னன் நாரையும் மதியமைச்சன் நாரையும் இப்போது மனித உருவம்பெற முயன்றன. ஆனால், அந்தோ! பழைய உருவமடைவதற்கான மந்திரத் தெய்வத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை. தாம் செங்கால் நாரையின் ஆடல் கண்டு சிரித்ததற்கு இப்போது மன்னன் வருந்தினான். மதியமைச்சனும் வருந்தினான். நாரை தந்த உணவை உண்ணாததால் கடும்பசி உண்டாயிற்று. ஆனால், இப்போதும் மன்னன்நாரை யுணவை நாடவில்லை. அரசவை உணவையே நாடினான். தங்கிடமும் வேறு காண முடியாமல் அவர்கள் அரண்மனை நோக்கிப் பறந்து சென்றனர்.
அரசனுக்காகக் கொண்டுவரப்பட்ட உணவு திரும்பக் கொண்டு போகப்பட்டது. அரசன் அதை அணுகுமுன் பணியாட்கள் அவனைத் துரத்திவிட்டனர். அதைப் பணியாட்களே தின்பதையும் அரசன் கண்டான். இரவு முற்றிலும் பட்டினி கிடந்தபின் காலையில் வேறுவழியின்றி இரு நாரைகளும் ஏரி தேடிச் சென்று மீன் நாடி உண்டன.
மன்னனும் அமைச்சனும் நாரைகளாகவே மன வருத்தத்துடன் நாடும் காடும் திரிந்தனர். மக்களோ மன்னனை நெடுநாள் காணாததால் பருகச்ச நகரிலிருந்த மாயாவி கஸ்ரூவையே அழைத்து மன்னனாக்கினர்.
மாயாவி மன்னனாகப் பவனி வந்தான். மன்னன் நாரை வடிவில் செயலற்றுப் பார்த்துக் கொண்டு பறந்து திரிந்தான்.
கிழவியாக வந்து பொடி விற்றதும், நாரையாக வந்து தம்மை ஆவலூட்டிச் சிரிக்க வைத்து நாரையாக்கியதும் அந்த மாயாவியே என்று அமைச்ச நாரை உணர்ந்து கொண்டது. ஆனால் மாயாவியின் மாயத்தில் அதன் நன்மதி சிக்குண்டு கிடந்தது.
மாய ஆந்தை - மாய நாரைகளிரண்டும் எங்கும் திரிந்தன. மன்னன் நாரை அடிக்கடி மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று கருதும். ஆனால், அமைச்சன் நாரை மாயாவிகளின் பழங்கதைகள் பலவற்றை எடுத்துரைத்து, “மாயம் எப்போதும் சில காலந்தான் வெல்லும்; அஃது இறுதியில் அழிவது உறுதி” என்று அறிவுறுத்தித் தேற்றிற்று.
ஒருநாள் நாரை மனிதமொழியிலேயே மனங்கவரும் சோகப் பாடல் ஒன்றைக் கேட்டு மருட்சி கொண்டது. பாட்டு ஓசை வந்த திசையில் சென்று இரண்டும் தேடின. அப்போது முழுநிலா எறித்துக் கொண்டிருந்தது. நீரோடைகளிலெல்லாம் பாலோடைகள் பளபளத்தன. நாணற் கொடிகள் அப்பாலோடைகளை நாடி வளையும் கருநாகங்கள்போல் காட்சியளித்தன. அவற்றைப் பார்த்துத் தூங்கிய ஏக்கக் கண்களுடன் ஓர் ஆந்தை பட்ட மரக் கொம்பொன்றில் பரிவுடன் குந்தியிருந்தது. பாட்டுப்பாடுவது அந்த ஆந்தைதான் என்று கண்டு அரசன் நாரையும் அமைச்ச நாரையும் அதனிடம் சென்று மனித மொழியிலேயே பேச்சுக் கொடுத்தன. ஆந்தையும் மனிதமொழி தெரிந்த நாரைகளைக் கண்டு வியப்படைந்து, தானும் மனித மொழியிலேயே பேசிற்று.
“ஆந்தை நங்கையே! உன் பாட்டின் இசை என்னைப் பரவசப் படுத்துகின்றது. நீ ஆந்தையன்று. ஓர் அரசிளங் குமரியாயிருக்க வேண்டும்” என்று மன்ன நாரை புகழ்ந்தது.
“ஆம்! நாரையரசே! நான் இந்துஸ்தானத்து மன்னன் மகள் ரோது மக்கன்தான். ஒரு மாயாவி என்னைத் தன் மகனுக்கு மணம் செய்விக்க எண்ணினான். நான் இணங்காததால் ஒரு மாயப்பழத்தைத் தின்ன வைத்து ஆந்தையாக்கிவிட்டான். நான் என் தந்தையையும் சுற்றத்தாரையும் பிரிந்து இரவில் இடுகாடும் பாழ்வெளியும் திரிந்து வருந்துகிறேன்” என்று ஆந்தை நங்கை இனிய சோகக்குரலில் அழுதது. மன்னனும் உடனழுதான்.
ஆந்தை மீண்டும் மன்னனைப் பார்த்து “நாரை இளைஞரே! நீரும் நாரையாயிருக்க முடியாது. நல்ல நாகரிகமுடையவராயும் காணப்படுகிறீர். நீர் யாரோ?” என்றது.
மன்னன் நாரை “ஆம். நானும் ஓர் அரசன்தான். இதோ என் தோழன் என் அமைச்சன்” என்று கூறித் தன் கதையைச் சொல்லிற்று.
ஆந்தை, “ஆகா! நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். பாரசீக அரசன் மசூக்கும் அமைச்சன் மன்சூரும் திடீரென்று காணாமற் போய்விட்டார்கள் என்று. நீங்கள் நாரையாகவா வாழ்கிறீர்கள். அது கேட்டு நான் வருந்துகிறேன். ஆனால் இன்னொரு வகையில் நான் மகிழ்கிறேன். எனக்கு ஒரு நாரையால் நன்மை ஏற்படும் என்று என் இளமையில் ஒரு குறிகாரன் கூறியிருந்தான். என்னை நீர் மணந்து கொள்ள இசைந்தால் எனக்கு மகிழ்ச்சி உண்டாகும்” என்றாள்.
மன்னன், “நான் என் அமைச்சனுடன் அதுபற்றிப் பேசி பின் மறுமொழி கூறுகிறேன்” என்று அகன்றான்.
மன்னன் தனியிடம் சென்று அமைச்சனைப் பார்த்து, “ஆந்தை நங்கையிடம் எனக்கு இரக்கம் தோன்றிவிட்டது அதற்கு உதவி செய்ய வேண்டும்” என்றான்.
அமைச்சன், “அரசே! முன்னே ஒரு மாயக் கிழவியையும் மாய நாரையையும் கண்டு ஏமாந்து போனோம். இந்த மாய ஆந்தை கூறுவதை நம்பி ஏமாறக் கூடாது. மேலும் தாங்கள் போயும் போயும் இந்த அந்தசந்தம் கெட்ட ஆந்தையையா மணப்பது!” என்றது.
மன்னன், “அதெல்லாம் முடியாது. அந்த ஆந்தை இளவரசியை மணக்கத்தான் வேண்டும்” என்றது.
அமைச்சன், "சரி. தங்கள் விருப்பம் அதுவானால் அதன்படி நடக்கட்டும். ஆந்தையை நீங்கள் மணந்து கொள்ளுங்கள் என்றான்.
மன்னன், “மணப்பது நானன்று; நீதான். நீ அதை அந்தசந்தம் கெட்டது என்றாய், நீ அந்தசந்தம் கெட்டவன் என்பதை மறந்து! நீதான் அதை மணக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறேன்” என்றான்.
அமைச்சன் மனக் கிளர்ச்சியில்லாமலே சரி என்றான்.
ஆனால், அவர் பேச்சுக்கிடையே ஆந்தை கடுஞ்சினத்துடன் அலறிற்று. “ஆகா, அரசே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய். நான் மணந்தால் ஓர் அரசனை மணப்பேன். இல்லாவிட்டால் இதோ….”
ஆந்தை கழுத்து முறிந்து விடுவதுபோல் பாவித்தது.
அரசன் ஓடோடி ஆந்தையைத் தாங்கி “உன்னை நான் மணப்பதாக உறுதி கூறுகிறேன். மனம் கலங்காதே!” என்றான்.
ஆந்தை மனமகிழ்ந்தது. ஆனால், அடுத்த கணம் அது கீழே விழுந்தது.
கீழே ஆந்தையைக் காணவில்லை. அழகான இளவரசி நின்றாள்.
இளவரசி இப்போது நாரைகளை ஏறிட்டுப் பார்க்கக் கூடவில்லை. சரேலென்று நடந்தாள். நாரைகள் பின் தொடர்ந்தன.
பாரசீகம் கடந்து காடுமேடு நடந்து இளவரசி இந்துஸ்தானத்துக்குள் நுழைந்தாள்.
நாரைகளும் உடன்சென்று இந்துஸ்தானத்தின் எல்லை யில்லா அழகைக் கண்டு வியந்தன.
யமுனைக் கரையில் இளவரசி வந்து நின்று, ஆற்று நீரின் அழகைக் கண்டு பரவசப்பட்டு நின்றாள். அச்சமயம் ஆற்றில் ஓர் அழகிய பொன்படகு மிதந்து வந்தது. அதில் தாடி மீசையுடன் அழகிய அரசவை உடையில் ஒருவர் அரியணையில் வீற்றிருந்தார்.
அவரைக் கண்டதும் இளவரசி கைதட்டி, ‘அப்பா, அப்பா!’ என்று கூவினாள்.
அவன் இந்துஸ்தானத்தின் அரசன்; அவன் படகைக் கரைப்பக்கம் செலுத்தினான். இளவரசி படகிலேறி மன்னனை அணைத்துக் கொண்டாள். மன்னனும் கண்ணீர்விட்டு, ‘இத்தனை நாளும் எங்கே சென்றிருந்தாய் என் கண்மணி!’ என்று கலங்கினான்.
நாரைகள் இளவரசியை விடாது பின் தொடர்ந்தன. படகோட்டி அவற்றை விரட்ட எண்ணி ஒரு கழியை எறிந்தான்.
அமைச்ச நாரையின் ஒரு கால் முறிந்தது. ஆயினும் நாரைகள் படகிலேயே வந்து ஒண்டிக் கொண்டன. அரச நாரை அச்சமயம் தன் மனித மொழியையும் அரச பதவியையும் பயன்படுத்தி “இந்துஸ்தானத்தின் அரசனான என் சோதரரே! வணக்கம்!” என்றது.
நாரை பேசுவதைக் கேட்டு இந்துஸ்தானத்து மன்னன் மலைத்தான். ஆனால், அதே சமயம் ஒரு நாரை தன்னுடன் சமத்துவ தோரணையில் உரையாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவன் படகை விரைந்து ஓட்டும்படி படகோட்டிக்குக் கட்டளையிட்டான்.
ஆனால், தற்செயலாகப் படகோட்டியின் பெயரே நாரைகள் மறந்துவிட்ட இறைவன் பெயர் ‘புத்தகுரு’ வாயிருந்தது. இந்துஸ்தானத்து மன்னன் படகோட்டியை ‘புத்தகுரு’ என்று அழைத்துப் பேசினான். அந்தப் பேரைக் கேட்டவுடன் இரண்டு நாரைகளும் துள்ளிக் குதித்தன. கிழக்கு நோக்கி நின்று அவசர அவசரமாக தலையை மூன்று தடவை தாழ்த்தின. இரண்டும் ஒரே மூச்சில் ‘புத்தகுரு’ என்றன. உடன் இந்துஸ்தான அரசன், இளவரசி ஆகியவர்களின்முன் இரண்டு நாரைகளிருந்த இடத்தில் அழகும் இளமையும் மிக்க ஓர் அரசனும் கிழ அமைச்சர் ஒருவரும் நின்றனர்.
மன்னன் உடலில் வழக்கமான பாரசீக அரசன் உடையும் உடைவாளும் கிடந்தன. வைரங்கள் பதித்த அந்தப் பளபளப்பான உடைவாள் இந்துஸ்தானத்து அரசன் கண்களைப் பறித்தன. வாளின் தலையில் அந்த வாளைவிட ஒளிவீசும் மணிக்கல் ஒன்று கண்களைப் பறித்தது. அஃது உண்மையில் ஒரு நூற்று நாற்பதினாயிரம் பொன் பெறுமானமுள்ள அந்நாளைய உலகின் மிகச் சிறந்த மணிக்கல் ஆகும். இளவரசி அந்த மணியையும் வாளையும் பாரசிக அரசன் முகத்தையும் மாறி மாறி மலைப்புடன் பார்த்தாள்.
இந்துஸ்தானத்து அரசன், பாரசீக அரசனை முறைப்படி வணக்கம் செய்து வரவேற்றுத் தழுவினான்.
பாரசீக அரசன் மசூக் இளவரசியின் முன் மண்டியிட்டு, “உனக்கு வாக்களித்தபடி உன்னை மணக்க விரும்புகிறேன். உன் விருப்பமும் என் சோதர அரசன் விருப்பமும் அறியக் காத்திருக்கிறேன்” என்றான்.
இந்துஸ்தானத்து அரசன் மனமகிழப் பாரசீக அரசன் மசூக் இளவரசி ரோதுவை மணந்து அணி செய்விக்கப் பெற்ற உச்சைனி நகரத் தெருக்களில் ஊர்வலம் வந்தான்.
சில நாட்களுக்குள் மாமனிடமும் மனைவியிடமும் பிரியா விடைபெற்று, நூறாயிரம் படைவீரருடன் பாரசீகத்தின்மீது மசூக் படையெடுத்துச் சென்றான். கஸ்ரூ போரில் தோற்றுக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டான். அவன் மகன் ஆமீன் ஆதாப் அவன் தந்தையின் மாயத்தாலேயே ஒரு நாரையாக மாற்றப்பட்டு உருமாறி வெளியே போகாதபடி ஒரு பெரிய கூண்டில் அடைபட்டு வாழ்நாள் முழுதும் அல்லற்பட்டான்.
மசூக் தன் மனைவியான இந்துஸ்தானத்து இளவரசியை அழைத்து அவளுடன் மீண்டும் பட்டஞ் சூட்டிக் கொண்டான். மதியமைச்சன் மன்சூரை அவன் இதன்பின் என்றும் தன் கடுஞ் சீற்றத்துக்கும் குறும்புக்கும் ஆளாக்காமல், அன்பாக நடத்தினான். அவன் அறிவமைந்த நல்லுரையுடன் ஆட்சி இனிது நடந்தது.
ஆற்றுமுயல்
உருசிய நாட்டுக் கதை
ஒரு சிற்றூரில் ஓர் ஏழைக்குடியானவன் இருந்தான். அவன் கடுமையாக உழைக்கும் திறம் உடையவன். அத்துடன் சுறுசுறுப்பும் அறிவுக் கூர்மையும் உடையவன். ஆனால், அவன் மனைவி இதற்கு நேர்மாறாக இருந்தாள். அவள் வாயாடியாகவும் விவரமற்ற வளாகவும் இருந்தாள். ஆயினும், அவள் கணவனிடம் பாசமுள்ளவள். சூதுவாதற்றவள். குடியானவன் தன் மனைவியிடம் அன்பாகவே இருந்தான். ஆனால், அடிக்கடி அவள் சூதுவாதற்ற தன்மையினாலும் வாயாடித்தனத்தாலும் அவனுக்கு இக்கட்டுகள் ஏற்பட்டன. இவற்றை அவன் தன் அறிவுத் திறத்தால் சமாளித்து வந்தான்.
ஒருநாள் குடியானவன் தன் தோட்டத்தில் மண்வெட்டி கொண்டு வேலைசெய்து கொண்டிருந்தான். மண்வெட்டி ‘டங்’ என்று எதன்மீதோ பட்டு ஓசையிட்டது. அவன் சற்று ஆழமாகக் கல்லினான். அவனுக்கு வியப்பாயிருந்தது. அது ஒரு இரும்புப்பெட்டி. அது மிகவும் கனமாயிருந்தது. ஏனென்றால், அதில் பொன்னும் வெள்ளியும் மணிகளும் நிரம்பி இருந்தன.
குடியானவன் பொழுது சாய்ந்து ஒளிமங்கும்வரை காத்திருந்தான் அதன்பின் அவன் மனைவியிடம் சென்றான். செய்தியைச் சுருக்கமாகக் கூறினான்; அதை ஒருவரே தூக்க முடியாதாதலால், மனைவியையும் துணையாகக்கொண்டு, வீட்டிற்குள் கொண்டுவந்தான்.
புதையல் கிடைத்த மனை குடியானவனுக்கு உரியதல்ல. அவர்கள் பண்ணைக் குடிகள். புதையல் எடுத்தது பற்றிப் பண்ணையாருக்குத் தெரிந்தால், அவர் அதை முழுவதும் தனக்கே எடுத்துக்கொள்வார். ஒரு செப்புத்துட்டுக்கூட அவர்களுக்குக் கொடுக்கமாட்டார். ஆகவே, அவருக்குத் தெரியாமல் அதைச் சிறுகச் சிறுக எடுத்துச் செலவுசெய்ய அவன் எண்ணினான்.
தற்போதைய செலவுக்குச் சிறிதுபணம் எடுத்துக்கொண்டு அவன் பெட்டியைப் புதைத்து வைத்தான். புதைத்துவைக்கும் போது மனைவியும் உடனிருந்தாள். அந்த இடத்தில் நீரூற்றிப் புல்கரண் பதியவைக்க வேண்டும் என்றான் குடியானவன். ஆகவே, அவள் தண்ணீர் கொண்டுவரச் சென்றாள்.
குடியானவனுக்கு இப்போது புதையலைப்பற்றி ஒரே ஒரு கவலை இருந்தது. அவன் மனைவி அதை யாரிடமாவது எப்போதாவது சொல்லாமல் இருக்க முடியாது. இதற்கு என்ன செய்வது என்று அவன் இருந்து ஆராய்ந்தான்.
முதலில் அவன் மனைவி வருவதற்குமுன், புதைத்த இடத்திலிருந்து புதையலைத் தோண்டி எடுத்தான். அதை வேறோர் இடத்தில் புதைத்து மறைத்தான். புதைத்த இடத்தில் அவன் ஒரு சிறு மரக்கன்றை நட்டு வைத்தான்.
மனைவி திரும்பிவந்தபின், முதலில் புதைத்த இடத்தின் மீதே புல்கரண் பதித்துத் தண்ணீர் ஊற்றினான்.
நள்ளிரவில் மனைவி படுக்கையில் புரண்டு நெளித்துக் கொண்டாள். அவளுக்குப் புதையலின் எண்ணம் வந்தது. அது பற்றிக் கணவனிடமாவது பேச வேண்டும் என்று அவள் நாக்குத் துடித்தது. குடியானவன் இந்தக் குறிப்பை அறிந்தான். அவன் திடுமென விழித்தெழுபவன் போல எழுந்து மனைவியையும் தட்டி எழுப்பி உட்கார வைத்தான். ஏதோ முக்கியமான செய்தி கூறுபவன்போல முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “விடிந்தது விடியாமல் நாம் எழுந்து காட்டுக்குப் போக வேண்டும்,” என்றான். அவள், “ஏன்?” என்றாள்.
“காட்டில் நாளை நாம் மீன்பிடிக்கப் போக வேண்டும்,” என்றான்.
அவன் சிரிக்காமல் சொன்னதால், அவளும் ஐயப்படாமல் நம்பிக்கையுடன் கேட்டாள். சிறிதுநேரம் கழித்து அவள் மீட்டும் நெளித்தாள். குடியானவன் மீட்டும் அவளை எழுப்பினான். அவள், “என்ன, என்ன?” என்றாள்.
“இப்போது சற்று நேரத்திற்குமுன் சடசடவென்று ஓசை கேட்டது. வெளியே பார்த்தேன்; மழையே இல்லை. அதனால் காட்டில் அப்பமழை பெய்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்,” என்றான்.
அவள் அதையும் அட்டியில்லாமல் நம்பிவிட்டாள்.
விடிய இரண்டு யாமம் இருக்கும்போது அவள் பின்னும் நெளிந்தாள். இத்தடவை அவன் அவளிடம், “நான் நேற்று மாலையில் ஆற்றில் தூண்டில் போட்டு விட்டு வந்தேன். இரவில் அதில் ஏதாவது முயல் அகப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றான்.
“ஆற்றில் மீன்தானே அகப்படும். முயல் அகப்படுமா?” என்று அவள் கேட்டாள்.
“அதற்குத்தான் இரவில் தூண்டில் போடுவது. தண்ணிருக்குள் இருக்கும் முயல்கள் இரவில்தான் தூண்டிலில் சிக்கும்,” என்றான் அவன். சூதுவாதற்ற அவன் மனைவி அதையும் அப்படியே நம்பித் தன் நெஞ்சிலுள்ள செய்திப் பட்டியலில் குறித்துக் கொண்டாள்.
விடிய ஒரு யாமத்தில் குடியானவன் மெல்ல எழுந்தான். மனைவி இப்போது நன்றாகத் தூங்கினாள். அவனிடம் முந்தினநாள் பிடித்த ஒரு முயலும், உணவுக்காக வாங்கிய தித்திப்பு அப்பங்களும், புதிதாகப் பிடித்த சில மீன்களும் இருந்தன. அவற்றையும் தூண்டிலையும் கையில் எடுத்துக் கொண்டான் காட்டில் அடையாளம் தெரியும் இடங்களாகப் பார்த்துப் புதர் மறைவில் மீன்களை வைத்து மூடினான். தித்திப்பு அப்பங்களை இலைமறைவான இடங்களில் கிளைகளில் கட்டி, அந்த இடங்களைக் கீழே அடையாள மிட்டுக் குறித்து வைத்தான்.
தன் கையிலிருந்த முயலைத் தூண்டில்முள்ளில் குத்தி ஆற்றில் இட்டான். இவ்வளவும் செய்துவிட்டு அவன் திரும்பி வீட்டுக்கு வந்து ஒன்றுமறியாதவன் போலத் தூங்கினான்.
மனைவி விடிந்தவுடன் எழுந்தாள், கணவனைத் தட்டி எழுப்பினாள். “காட்டுக்குப் போகவேண்டாமா?” எழுந்திருங்கள், எழுந்திருங்கள், என்றாள்.
அவன் திடுதிடுப்பென்று எழுந்து “ஐயையோ, தூங்கி விட்டேன். வா, விரைவில் போவோம். அப்பங்களைப் பறவைகள் தின்றுவிடப்படாது,” என்றான். காட்டில் குடியானவன் சில புதர்களைக் கிளப்பி மண்ணைக் கிளறினான். அதில் சில மீன்கள் அகப்பட்டன. அதைக் கண்ட மனைவி கைகொட்டி ஆர்ப்பரித்து “ஆகா, காட்டில் மீன், காட்டுமீன்,” என்று குதித்தாள்.
“இது ஒரு வியப்பா? இது ஆண்டுக்கு ஒரு தடவை இருதடவை கிடைப்பதுதானே!” என்றான் குடியானவன்.
சில மரங்களருகில் நின்று கழியால் இலைகளைக் கலைத்தான். தித்திப்பு அப்பங்கள் தொங்கின. “பார்த்தாயா, அப்பமழை பெய்தபோது இவை மரங்களில் சிக்கிக்கொண்டன. கீழே விழுந்தவற்றைப் பறவைகளும் உயிரினங்களும் தின்று விட்டன,” என்றான். அப்பங்களை அவள் மகிழ்ச்சியுடன் முந்தானையில் கட்டிக் கொண்டாள்.
ஆற்றங்கரையில், அவன் தூண்டிலின்பிடி கிடந்தது. அவன் தூண்டிலை இழுத்தான். அதில் சிக்கியிருந்த முயல் வெளிவந்தது. “பார்த்தாயா, இதுதான் ஆற்றுமுயல்,” என்றான். மனைவி, “இது நம் காட்டு முயல் மாதிரியே இருக்கிறதே,” என்றாள்.
அவன், “ஆம். காட்டாற்றில் இருப்பது பின் வேறு எப்படி இருக்கும்,” என்றான். இரண்டு மூன்று நாளாயிற்று. ஊரெங்கும் குடியானவனுக்குப் புதையல் கிடைத்த செய்திபற்றிய பேச்சே பேச்சாயிருந்தது. குடியானவன் காதுக்கும் அது எட்டிற்று. ஆனால், அவன் கவலையில்லாமலிருந்தான்.
காட்டில் மீன் அகப்பட்டது. அப்ப மழை பெய்தது. ஆற்றில் தூண்டிலில் முயல் சிக்கியது ஆகியவற்றைப் பற்றி அவன் மனைவியிடம் அடிக்கடிப் பேசி மகிழ்ந்தான். புதையலின் செய்தி பண்ணையாருக்கு எட்டிற்று.
அவர் குடியானவனை அழைத்துக் கேட்டார்.
’ஆண்டே, புதையல் எடுத்திருந்தால் நான் உங்களிடம் தானே கொண்டுவருவேன். அப்படி உங்களுக்கு ஒளித்து எடுத்தாலும், எடுத்தவன் இன்னும் குடியானவனாகவா காலம் கழிப்பேன்," என்றான் அவன்.
“உன் மனைவியைக் கேட்டாலல்லவா தெரியும்!” என்றார் பண்ணையார்.
“நீங்கள் வேண்டுமானால் கேளுங்கள். அவள் பைத்திய மாயிற்றே! உங்களிடம்கூட அவள் ஏதேனும் உளறுவாள்,” என்றான் குடியானவன். மனைவி அழைக்கப்பட்டாள். புதையலைப்பற்றிய செய்தி முழுவதும் அவள் விவரமாகக் கூறினாள்:
பண்ணையார்: புதையல் என்று அகப்பட்டது?
அவள் சற்று ஆர்ந்தமர்ந்து சிந்தித்தாள்.
குடியானவன் மனைவி: நாங்கள் காட்டுக்குப்போய் மீன் பிடித்தோம்; அதற்கு முந்தினநாள்.
பண்ணையார்: திகைத்தார்; “என்ன என்ன? காட்டுக்குப் போய் மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார்.
“ஆம். அதுமட்டுமல்ல, இரவு முழுதும் அப்பமழை பெய்திருந்தது. மரங்களில் சிக்கிக்கொண்டிருந்த அப்பங்களை எடுத்து வந்தோம்” என்று கூறினாள். அருகே நின்றவர்கள் மெல்லச் சிரித்தார்கள். அவளுக்குச் சிறிது சீற்றம் உண்டாயிற்று.
“அன்று இரவு தூண்டிலிட்டு என் கணவர் ஆற்றில் ஒரு முயல் பிடித்தார். அந்த முயலையும் மீனையும் அப்பத்தையும் வைத்து நாங்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டோம்,” என்று மேலும் அவள் கூறினாள்.
பண்ணையாருக்கு அவளைக் கூப்பிட்டுக் கேட்டதே வெட்கமாயிற்று. ஆயினும் கடைசியாக ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.
பண்ணையார்: இப்போது அந்தப் புதையல் எங்கே இருக்கிறது?
குடியானவன் மனைவி: நாங்கள் புதைத்த இடத்தில்தான். அதன் மேலே புல்கரண் வைத்திருக்கிறோம்.
பணியாட்கள் சென்று புல்கரணைப் பெயர்த்துப் பார்த்தனர். அதில் ஒன்றும் இல்லை.
பண்ணையார் அவளைப்பார்த்து, “நீ ஒரு பைத்தியம். இனி இப்படிப் பித்துப்பிடித்து உளறாதே!” என்றார்.
“எனக்கா பித்து. நான் இத்தனையையும் கண்ணால் கண்டேன். அந்தக் காட்டுமீனும் ஆற்றுமுயலும் மர அப்பமும் எவ்வளவோ சுவையாயிருந்தனவே,” என்று கூறிக்கொண்டே, சென்றாள், குடியானவப்பெண்.
பேராவல் பெண்டு
ஜெர்மன் நாட்டுக் கதை
கோழிக் கூடு போன்ற ஒரு சிறு குடிசையில் ஒரு செம்படவனும் அவன் மனைவியும் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் செம்படவன் வெளியே சென்று மீன் பிடிப்பான். அவன் மீன் கொண்டு வந்தாலும் கொண்டு வருவான். கொண்டு வராவிட்டாலும் கொண்டு வராமலிருப்பான். அவர்கள் இரவு ஏதேனும் சாப்பிட்டாலும் சாப்பிடுவார்கள். சாப்பிடாமல் இருந்தாலும் இருப்பார்கள். செம்படவன் மனைவி அப்போ தெல்லாம் வந்ததை வரவேற்று வேறு எதுவும் விரும்பாமல் காலங்கழித்தாள்.
ஒருநாள் செம்படவன் கடலோரத்தில் தூண்டிலிட்டு, மீனுக்காகக் காத்திருந்தான். கடலில் எத்தனையோ மீன்கள் இருக்கலாம். அவன் தூண்டிலை எந்த மீனும் அன்று கவனிக்க வில்லை.
மாலைநேரம். வழக்கத்திற்கு மாறாகக் கடல் செக்கச் செவேலென்று ஒளி வீசிற்று. அச்சமயம் தூண்டில் சட்டென்று அவன் கையிலிருந்து நழுவிற்று. அது வேகமாகக் கடலுக்குள் சென்றது. ‘அது மிகப் பெரிய மீனாகத்தான் இருக்க வேண்டும்’ தூண்டிலையே இழுத்துக்கொண்டு போவதற்கு, என்று எண்ணி அவன் அதைத் தன் வலுக்கொண்ட மட்டும் பிடித்து இழுத்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே அது ஒரு பெரிய மீனாகத்தான் இருந்தது. ஆனால், அது அவனிடம் மனித குரலிலேயே பேசிற்று. “அன்பனே, அருள் கூர்ந்து என்னை விட்டுவிடு. நான் மாயத்தால் மீனுருவாக மாற்றப்பட்ட ஓர் இளவரசன்,” என்றது. செம்படவன் மீனை விட்டுவிட்டான்.
வீடு வந்து சேர்ந்ததும் அவன் தன் மனைவியிடம் இச்செய்தியைக் கூறினான். “நீ அந்த மீனிளவரசனிடம் ஒன்றும் கேட்க வில்லையா?” என்று கேட்டாள் மனைவி.
“இல்லை. என்ன கேட்க விரும்புகிறாய்?” என்று கேட்டான் அவன். “நமக்கு ஒரு நல்ல சிறிய வீடு வேண்டுமென்று கேள்!” என்றாள்.
செய்த நல்லுதவிக்கு விலை கேட்பது என்பது செம்படவனுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவன் கடற்கரை சென்றான். கடல் அப்போது பொன் கலந்த பச்சை நிறமாகப் பளபளத்தது. அவன் கரையிலிருந்தபடியே,
"கடல் இளவரசே,
கவனித் தருள்வாய்
அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என் மனையாள்,
திடங்கொண் டொருவரம்
தேடுவாய் என்றே!"
என்று கூவினான். மீன் உடனே அலைகளை ஒதுக்கிக் கொண்டு அவனை நாடி வந்தது. “அன்பனே! அவள் என்ன வேண்டு மென்கிறாள்?” என்று அது கேட்டது.
“உன்னை விடுதலை செய்யுமுன் உன்னிடம் நான் ஏதாவது கேட்டிருக்க வேண்டுமென்று அவள் கருதுகிறாள். நாங்கள் ஒரு சிறு கோழிக் கூட்டில் அடைபட்டிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். ஒரு சிங்காரச் சிறுவீடு வேண்டுமென்று விரும்புகிறாள்,” என்றான் செம்படவன்.
“அப்படியே அவளுக்கு கிடைத்துவிட்டது, நீ வீட்டுக்குப்போ,” என்றது மீன்.
அவன் திரும்பிச் சென்றபோது கோழிக்கூட்டைக் காணவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு சிங்காரச் சிறு வீடு இருந்தது. அதன் சிங்காரவாயிலில் நின்று அவன் மனைவி அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆ, வாருங்கள்! வாருங்கள், வந்து பாருங்கள்! பழைய குடிலைவிட இது எவ்வளவு சிறந்தது! இதில் ஒரு அறைவீடு, படுக்கயறை, கூடம், அடிசிற்களம் ஆகியவை தனித்தனியாய் இருக்கின்றன. பின்கட்டில் ஒரு சிறு தோட்டம். அதில் என்னென்ன பூஞ்செடிகள், காய்கறி பழச்செடி கொடிகள், மரங்கள்! நம் பழைய குடியளவு பெரிதான கோழிக்கூட்டில் அழகழகான சேவல்கள், பெடைக் கோழிகள், கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன பாருங்கள்! என்றாள் அவன் மனைவி,”
“சரி, இனி நாம் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வோம்!” என்றான் செம்படவன்.
“கூடியமட்டும் அவ்வாறு இருக்க முயலுவோம்,” என்றாள் அவள்.
ஓரிருவாரம், புதிய வீட்டில் செம்படவன் மனைவியின் உள்ளம் அமைந்திருந்தது. அதன்பின் அவள் பாராட்டுரைகளில் சிறுசிறு பாராட்டுரைகள் கலந்திருந்தன. இந்த வீடு மிகச் சிறிதுதான். தோட்டமும் இன்னும் பெரிதாயிருக்கலாம் என்று தொடங்கினாள். செம்படவன் கூறிய ஒவ்வோர் அமைதியுரையும் அவள் சிறு குறைகளை விரிவுபடுத்தி வளர்த்தன. இறுதியில் அவள் ஒரு பெரிய மாளிகையே வேண்டுமென்று விளம்பினாள். மீண்டும் மீனிளவரசனிடம் சென்று மனுப்போடும்படி வற்புறுத்தினாள்.
செம்படவன் விரும்பா விட்டாலும் வேறுவகையின்றிப் புறப்பட்டான். கடல் இப்போது நீல நிறமாக இருந்தது. கடற்கரையில் நின்றுகொண்டு,
"கடல் இளவரசே,
கவனித் தருள்வாய்!
அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என் மனையாள்-இன்னும்
திடங்கொண் டொருவரம்
தேடுவாய் என்றே!"
என்று கூவினான்.
“அன்பனே! அவள் இன்னும் என்ன வேண்டு மென்கிறாள்?” என்று மீன் கேட்டது.
“அவள் ஒரு மாளிகையே வேண்டும் என்கிறாள்” என்றான் அவன்.
“அப்படியே ஒரு மாளிகையே அவளுக்குக் கிட்டியுள்ளது. அவளிடம் போ,” என்று சொல்லிவிட்டு மீன் மறைந்தது.
மனைவி முன்போலப் புதிதாக அமைந்த மாளிகை வாயிலில் ஆடையணிமணிகளுடன் நின்றிருந்தாள். விலை யுயர்ந்த தட்டுமுட்டுப் பொருள்கள் வாய்ந்த அறைகளை எல்லாம் அவள் கணவனை இட்டுக்கொண்டுபோய்க் காட்டினாள். வகைவகையான வேலையாட்கள், பணியாட்கள், ஏவலாட்களை யெல்லாம் கணவன் காண அழைத்துப் பல பணிகளிலும் ஏவினாள்.
“இந்த அழகிய மாளிகையில் நம் இன்பம் நிறைவு அடைந்துவிட்டது” என்றான் செம்படவன்.
இத்தடவை செம்படவப் பெண்டின் உள்ளம் ஒரு வாரமாவதற்குள் புது வாழ்வில் சலிப்புற்றது. ஒருநாள் விடியற்காலையில் அவள் கணவனை நெக்கி எழுப்பினாள். “அன்பரே, இந்த வேலையாட்களைக் கட்டியாள்வதில் என்ன பயன்? நாம் நாட்டுமக்களையல்லவா கட்டியாள வேண்டும். போங்கள், மீனிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்,” என்றாள்.
“மீன் நம்மை எப்படி ஆட்சியாளராக்க முடியும்? நாம்தான் எப்படி ஆளமுடியும்?” என்று கணவன் அங்கலாய்த்தான்.
“தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு எல்லாம் முடியும். போய்க் கேளுங்கள். உங்களால் ஆள முடியாவிட்டால் நான் ஆளுவேன்,” என்றாள் மனைவி.
அவன் மீண்டும் சென்றான். கடலகம் இப்போது ஒளிகுன்றி அரையிருளார்ந்த சாம்பல் நிறமாகத் தோற்றிற்று கரையோரத்தில் நின்று அவன் மீண்டும்,
"கடல் இளவரசே,
கவனித் தருள்வாய்!
அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என் மனையாள்-மீண்டும்
திடங்கொண் டோருவரம்
தேடுவாய் என்றே!"
என்று கனிவுடன் பாடினான்.
“மீண்டும் என்ன கோருகிறாள், உன் மனைவி?” என்று கேட்டது மீன்.
“அவள் அரசாள விரும்புகிறாள்,” என்றான் செம்படவன்.
“அவள் அரசாள்கிறாள், போய்ப்பார்,” என்றது மீன்.
இத்தடவை மனைவி அவனை வாயிலில் நின்று வரவேற்கவில்லை. அவள் ஒரு தங்க அரியணைமீது வீற்றிருந்தாள். ஆனால், அவள் அனுப்பிய படைத்தலைவன் படையுடனும் படைமுரசு முழக்குடனும் வந்து செம்படவனை வரவேற்றான். அரச ஆடை அணிந்த தன் மனைவியைக் கண்டு அவளுடன் அரியணையில் அமர்ந்தான்.
செம்படவப் பெண்டு அமைச்சர் படை முதலியவைகளுக் கெல்லாம் தக்க ஆணைகள் கட்டளைகள் பிறப்பித்து ஆண்டாள்.
“நம் ஆவலின் உச்சியை நாம் எட்டிவிட்டோம். இனி நாம் அமைதியாய் வாழ்நாள் கழிக்கவேண்டியதுதான்,” என்றான் அரசனாகிவிட்ட செம்படவன்.
“உச்சிக்கு நாம் நெடுந்தொலைவில் இல்லை,” என்றாள் அரசியாகி விட்ட செம்படவப் பெண்டு.
அவள், ‘ஆவலின் உச்சியை எப்போதுதான் காணப் போகிறாளோ,’ என்று மலைத்தான் செம்படவ மன்னன்.
“அரசனுக்குக் குடிகள் இறை கொடுக்கின்றனர். ஆனால், அரசர்களுக்கு அரசன் உண்டு என்று தெரிகிறது; அவனுக்கு அரசர்கள் திறை செலுத்துகிறார்களாம். நாம் அரசர்க்கரசரானால் தான் நம் ஆட்சி ஒளிவீசும். விடியற்காலமே சென்று அதற்கான முயற்சி செய்யுங்கள்,” என்றாள் அரசி.
அவன் சென்றான். அவன் உள்ளம் கேட்டுக் கேட்டுப் புண்பட்டிருந்தது. கடலகம் கருங்கும்மென்றிருந்தது. அதன் கருவில் ஒரு புயல் இரைந்தது. அவன் கரையோரம் நின்றகொண்டே.
"கடல் இளவரசே,
கவனித் தருள்வாய்!
அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என்மனையாள்-பின்னும்
திடங்கொண்டொருவரம்
தேடுவாய் என்றே!"
என்று பாடினான்.
“இப்போது என்ன வேண்டுமாம்?” என்றது மீன். “அரசர்ககரசராக விளங்க வேண்டும் என்று அவள் அவாவுகிறாள்,” என்றான் அவன். “ஆய்விட்டாள், போய் கண்டு மகிழ்,” என்று கூறி அகன்றது மீன்.
செம்படவ மன்னன் இத்தடவை முன்னிலும் பெரிய விருதுகளுடன் வரவேற்கப்பட்டான். இரு வரிசை அரியிருக்கை களிடையே அமைந்த ஓர் உயர் அரியிருக்கை மீது செம்படவப் பெண்டு பேரரசியாய் வீற்றிருந்தாள். மடத் தலைவர்களும் குருமார்களும் வீறார உட்கார்ந்திருந்தனர். செம்படவ மன்னனும் இப்போது மன்னர் மன்னன் என்ற முறையில் அவன் மனைவி வீற்றிருந்த அரியிருக்கை அருகேயுள்ள இணை அரியிருக்கையில் அமர்ந்தான்.
செம்படவப் பெண்டு ஆலிஸ், இப்போது ஒரு கணம் கூட அமைதியாயிருக்க முடியவில்லை. “மன்னர் மன்னன் நிலைதான் உச்ச நிலையா, அதற்குமேல் உயர்ந்த நிலை வேறு ஏதாவது இருக்கிறதா,” என்ற ஆராய்ச்சியில் அவள் வெறித்திருந்தாள்.
செம்படவன்: இதற்குமேல் இனி உன்னால் எண்ணிப் பார்க்கக்கூட உயர்நிலை இல்லை.
செம்படவன் மனைவி: அஃதெப்படி உறுதியாகக் கூற முடியும்?
செம்படவன்: இதைவிட உயர்ந்தபடி வேறு கிடையாதே!
செம்படவன் மனைவி: கிடையாதா? பேரரசனுக்கு முடி சூட்டியது யார்?
செம்படவன்: வேறு யார்? குருமார்தான்.
செம்படவன் மனைவி: அல்ல, உலக குரு.
செம்படவன்: அதனாலென்ன?
செம்படவன் மனைவி: முடி சூட்டப்பெறுபவரைவிடச் சூட்டுபவர் உயர்வுடையவர் அல்லவா?
செம்படவன்: அஃதெப்படி? நீ சொல்வது உண்மை யானால், மன்னருக்கு முடிசூட்டும் குருமார் அவரைவிட உயர்ந்தவர்களாக வேண்டுமே?
செம்படவன் மனைவி: இல்லை. மன்னருக்குமேல் மன்னர் மன்னன் ஒருவன் உண்டு. மன்னர் மன்னருக்கு முடிசூட்டும் உலக குருவின் ஆட்களாகவே மற்ற குருமார் மன்னனுக்கு முடிசூட்டுகின்றனர். ஆகவே குருமார் மன்னருக்கு முடி சூட்டினாலும் அவர்கள் நேரடியாக மன்னனுக்கு மேற்பட்ட உரிமை உடையவரல்ல. மன்னனுக்கும் மன்னனுக்கு மேற்பட்ட, மன்னர் மன்னனுக்கும் உயர்ந்த உலக குருவின் பெயரால்தான் அவர்கள் அத்தகைய உரிமையுடையவர்கள். செம்படவப் பேரரசன் மனைவியின் வாத எதிர்வாதத் திறனைக்கண்டு வியந்தான்.
செம்படவன்: இது எல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?
செம்படவன் மனைவி: நம்மைவிடத் தாம் உயர்ந்தவர் என்பதை இந்த வாதங்களால் உலககுரு என்முன் நிலைநாட்டப் பார்த்தார்.
செம்படவன்: நீ அதை ஒத்துக்கொண்டாயா?
செம்படவன் மனைவி: ஆம், ஒத்துக்கொண்டதால்தான், ‘இனி மன்னர் மன்னராக நாம் இருந்தால் போதாது; உலக குருவாக வேண்டும்’ என்று திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் நாளையே போய் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பேரரசன் பெருமூச்சுவிட்டான். ஆனால், வேறு வகையின்றிப் புறப்பட்டுக் கடற்கரை சென்றான். கடல் முழுவதும் இப்போது செக்கச்செவேலென்று குருதி நிறமாயிருந்தது. புயலும் மின்னலும் இடியும் அதன் பரப்பைத் துளைத்துக் கிழித்தன. அவன் கரையில் நின்றவாறே,
"கடல் இளவரசே,
கவனித் தருள்வாய்!
அடம் பிடிக்கின்றாள்
ஆலிசு என் மனையாள்-மேலும்
திடங்கொண் டொருவரம்
தேடுவாய் என்றே!"
என்று இறைஞ்சினான்.
“சரி, இன்னும் உன் மனைவிக்கு என்ன வேண்டுமாம்?” என்று கேட்டது மீன். “அவள் உலக குருவாக விரும்புகிறாள்.” “இப்போதே உலக குருவாய் விட்டாள், போ!”
பாட்டுகளுடன் செம்படவன் இப்போது வரவேற்கப் பட்டான். அவன் செல்லுமிடமெல்லாம் மணிக்கம்பளமும் பொன்னுடையும் விரிக்கப்பட்டன. வெள்ளி பொன் மலர்கள் அவன்மீது தூவப்பட்டன.
பிறர் இருக்கைகளுக்கு மேற்படி இருபதடி உயரத்துக்கு மேல் பொன் மேனி அரியிருக்கையில் வீற்றிருந்தாள் செம்படவப் பெண்டு. வழக்கம் போலச் செம்படவனுக்கும் இணையிருக்கை இருந்தது.
செம்படவன் ஒரு நீண்ட மூச்சு வாங்கினான். இனி மனைவிக்கு நாம் தூதுபோக வேண்டியிராது என்று எண்ணினான். ஆனால், அவன் எண்ணியது தவறாயிற்று. ‘மன்னர் என் சொற்படி நடக்கின்றனர். மன்னர் மன்னன் நம் விருப்பமறியக் காத்திருக்கிறான். மன்னுயிரெல்லாம் நம் ஆணைக்குள் இருக்கின்றன. நாம் கடவுளின் ஆட்பேர். ஆனால், இன்னும் கடவுளின் ஆற்றல் நமக்கு முழுதும் வரவில்லை. கடலும், காற்றும், கதிரவனும், நிலவும், விண்மீனினங்களும் நம்மை இன்னும் மதிப்பதில்லை. ஆகவே, நாம் இயற்கைகைய இயக்கும் இறைவன் ஆகவேண்டும். போங்கள், நாளை சென்று ஏற்பாடு செய்யுங்கள்,’ என்றாள்.
செம்படவனுக்கு முதன் முதலாகக் கால் கடுத்தது; மனம் சோர்ந்தது; உடல் வேர்த்தது. ஆயினும் வேறு வழியின்றிப் புறப்பட்டான்.
இத்தடவை கடலும் வானமும் ஒருங்கே காரிருள் சூழ்ந்திருந்தது. கடலலைகள் பனிமலைகள் போலச் சறுக்கி வந்தன. அவன் கரையில் நின்ற வண்ணமே,
"கடல் இளவரசே நீ
கவனிப்பாயா?
அடம் பிடித்த என் மனைவி
ஆலிசு இன்னும்
திடங் கொண்டே மெத்தவரம்
தேடுகின்றாள்!"
என்று கூவினான்.
“இன்னும்தான் என்ன கேட்கிறாள்?” என்று கேட்டது மீன். “இயற்கையை இயக்கும் இறைவன் ஆக விரும்புகிறாள்.” என்றான் செம்படவன்.
“அப்படியா? அவரவர் இயற்கை வாழ்வுதான் அவரவர்களுக்குச் சரி. பழைய கோழிக் கூட்டிலேயே அவள் இருக்கட்டும். ஏனென்றால், எம் மாயம் அவள் பேராவல் கண்டு நீங்கி விட்டது. பேராவலின் உச்சி கண்டபின் நான் மறுபடி இளவரசனாகி விட்டேன்” என்றது.
மீண்டும் மீன் இளவரசனாகி மறைந்தது. செம்படவப் பெண்டு செம்படவப் பெண்டேயானாள். அவள் பேராவல் ஒழிந்தது.
சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை
நார்வே நாட்டுக்கதை
நாட்டுப்புறப் பண்ணை ஒன்றில் ஒரு குடியானவன் தன் மனைவியுடன் காலங்கழித்தான். குடியானவன் முன் கோபி; ஆத்திரக்காரன்; ஆணவம் உடையவன். பண்ணையில் அவனுடன் வேலை செய்தவர்களும் அவனுக்குக் கீழ் வேலை செய்தவர்களும் அவனைக்கண்டு நடுங்கினார்கள்.
ஆனால், அவன் மனைவி தன் வாய்த்திறத்தாலும், இன்முகத்தாலும் அவன் கோபத்தைத் தணித்து, அவனை இயக்கி வந்தாள். ஒரு பெண் இப்படித் தன்னை ஏய்த்து வருவது கண்டு. அவன் அவளுக்குச் சரியான பாடம் படிப்பிக்க வேண்டுமென்று விரும்பினான்.
முதுவேனில் காலத்தில் களத்தில் போரடித்து அலுப்போடு அவன் வீட்டுக்கு வந்தான். வீட்டில் அன்று சமையல்வேலை அப்போதுதான் தொடங்கியிருந்தது. இதுகண்டு, “பகலெல்லாம் நான் வேலைசெய்து வருகிறேன். நீ வீட்டிலிருந்துகொண்டு சோம்பேறியாய் இருக்கிறாய். இதெல்லாம் இனி நடவாது. நாளை முதல்…” என்று அவன் வானமளாவச் சீறினான்.
அவள் அவனை முடிக்கவிடவில்லை. “நாளைமுதல் என்ன? ஒரு நாளாவது நான் களத்தில் உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இங்கே இருந்து கொஞ்சம் சோம்பேறியாக வேலை பாருங்கள்,” என்றாள்.
அவன், “ஓகோ, நீ பகல் முழுதும் செய்வதை ஒரு மணி நேரத்தில் செய்துவிட்டு, நான் சோம்பேறியாகவே இருக்கப் போகிறேன். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை காரியம் வேறு என்பதை நீ நாளை பார்க்கலாம்” என்றான்.
மறுநாள் பொழுது விடிவதற்குள் குடியானவன் மனைவி அரிவாள் எடுத்துக் கொண்டு மற்ற வேலையாட்களுடன் களத்துக்குச் சென்றாள். வீட்டாண்மையைக் கணவனிடமே ஒப்படைத்துவிட்டாள்.
அவன் முதலில் வேம்பாவில் வெந்நீருக்காக நீருற்றித் தீ முட்டினான். உச்சி நேரம் மனைவிக்கு உணவு கொண்டு போக வேண்டுமென்று நினைத்துப் பானையில் உலை வைத்து அரிசி களைந்து இட்டான். அதன்பின் காலை யுணவுக்கான பாலேட்டை எண்ணிப் பாலைக் காயவைத்து இறக்கி, ஏடு எடுக்கும் பொறியில் ஏடெடுக்க உட்கார்ந்தான்.
பாதி ஏடெடுப்பதற்குள் வேம்பாவிலிருந்து ஆவி கிளம்பிற்று. வெந்நீரைத் தான் குளிப்பதற்கான கலத்தில் பெய்து கொள்ள எண்ணி அவன் எழுந்து சென்றான். வேம்பாவின் திருக்கைத் திறக்கும்போது அது கையுடன் வந்துவிட்டது. அதைத் திரும்பவும் மாட்டமுனைந்தான். ஆனால், அதற்குள் சோறு பொங்கி வழிவது கண்டு உலையின் பக்கம் சென்றான். உலையைக் கிளறி விட்டான். இது முடிந்து திரும்பிப் பார்க்கும்போது, பக்கத்தில் தோட்டத்திலிருந்த பன்றி வந்து பாலைக் கொட்டிப் பாலேட்டைத் தின்பதைக் கண்டான்.
உலையை அப்படியே போட்டுவிட்டு அவன் விரைந்து சென்று பன்றியைக் காலால் உதைத்தான். உதை பொறுக்க முடியாமல், அது பக்கத்திலிருந்த தயிர்ப்பானையையும் உடைத்து அதைக் கொட்டிவிட்டு, வீல் வீல் என்று கத்திக்கொண்டு ஓடிற்று.
குடியானவனுக்குப் பன்றிமீது எழுந்த கோபத்தில் அவன் அதைத் துரத்திக்கொண்டே தோட்டம்வரை ஓடினான். ஓடும்போது தோட்டத்தில் புதிதாகப் பாவியிருந்த காய்கறிப் பாத்திகள் பல சிதைந்தன. அவன் அத்துடன் பன்றியை விட்டுவிட்டுத் திரும்பினான்.
வேம்பாவின் திருகு இன்னும் தன் கையிலிருப்பதை அவன் அப்போது தான் உணர்ந்தான். உடனே வேம்பாவின் பக்கம் ஓடினான். கீழேயிருந்த வெந்நீர்க் கலம் நிறைந்து வெந்நீர் வீணானதுடன் உலையடுப்பின் தீயும் அதனால் அவிந்துவிட்டது.
உலையை மீண்டும் ஊதித் தீப்பற்றவைக்க அவன் அரும்பாடுபட்டான். காலையுணவுக்கு வேண்டிய பாலேடும் தயிரும் கெட்டதனால் அவன் வெறுமையாக அப்பத்தை உண்ண வேண்டியதாயிற்று.
உச்சி நேரமாகியும் அருகில் புறத்திண்ணைமீது கட்டப்பட்டிருந்த பசுவை யாரும் அவிழ்த்துவிடவில்லை. தண்ணீரோ புல்லோ வைக்கவும் இல்லை. அது கட்டறுத்துக் கொண்டு வெளியே வந்தது. குடியானவன் அதைப் பின் பற்றிச் சென்று பிடித்தான். அதற்கு வைக்கோல் வைத்து விட்டுத் தண்ணீர் மொள்ளச் சென்றான்.
அடுப்பில் கறிக்கு வேண்டிய காய்களை இன்னும் நறுக்கவில்லை யாதலால், அதை மறக்காதிருக்கக் காய்கறிகளைத் தோள்குட்டையில் கட்டி வைத்துக் கொண்டு கேணியில் நீர் இறைக்கச் சென்றான். கேணியில் நீரிறைக்கக் குனிந்தவுடன் காய்கறிகளின் மூட்டை கிணற்றினுள்ளே விழுந்துவிட்டது. எடுத்ததெல்லாம் தோல்வியானது கண்டு அவன் எரிச்சலுடன் தண்ணீர் இறைத்துப் பசுவுக்கு வைத்தான்.
பசுவைக் கட்டும் கயிறு அறுந்துபோனதுடன் கட்டுத்தறியும் முறிந்துப்போயிருந்தது. ஆகவே, அதைப் போரடிக்கும் நீண்ட தாம்புக் கயிற்றில் கட்டி மறு முனையை வீட்டின் மேல் மாடியின் பலகணி வழியாக எறிந்தான். பின் வீட்டினுள் சென்று அதைத் தன்னுடலிலேயே கட்டிக் கொண்டு கயிற்றுடன் மற்ற வேலைகளைக் கவனிக்கக் கீழே இறங்கினான்.
அவன் இதுவரை தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கவனிக்கவில்லை. அது அழுது பார்த்தது. அப்போது அவன் மாட்டுக்குத் தண்ணீர் இறைப்பதில் ஈடுபட்டிருந்ததால், அழுகை கேட்கவில்லை.
குழந்தை தானாக இறங்கி வந்தது. பாலையும் பாலேட்டையும் தேடிப் பார்த்தது; காணவில்லை; அடுப்பில் சோறு கொதித்துக் கஞ்சியாக வழிந்து கொண்டிருந்தது.
பசியின் கொடுமையால் அதைக் கையாலெடுக்க அது முயன்றது. கஞ்சி சுட்டுவிடவே அது தடுமாறி விழுந்தது. அதனுடன் கொதிக்கும் சோற்றுப் பானையும் விழ, கஞ்சிநீர் அதன் மீது பட்டு உடலெல்லாம் வெதும்பிற்று. நோவு பொறுக்காமல் அது கூவிய குரல் கேட்டு குடியானவன் ஓடோடி வந்தான்.
குழந்தையின் புண்ணாற்ற அவனுக்கு எதுவும் வழி தோன்றவில்லை. அதற்கிடையில் பசு எதையோ கண்டு கலைந்து தாம்புக் கயிற்றை இழுத்துக் கொண்டு திண்ணையிலிருந்து குதித்தது. அதன் பளுவால் தாம்புக் கயிற்றுடன் குடியானவன் உயரத்தூக்கிச் செல்லப்பட்டு, மாடித்தளத்தில் தொங்கினான். மறுபுறம் பசுவும் கீழே நிலத்தில் விழாமல் தொங்கிற்று. தன் நோவு ஒருபுறம்; தந்தையின் முன்பின் பாராநிலை ஒரு புறம்; குழந்தைக்குக் கிலியாயிற்று. அது ‘அம்மா, அம்மா’ என்று கூவிற்று.
களத்தில் ஆடவருடன் ஆடவனாகக் குடியானவன் மனைவி எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுக் கணவனுக்காகக் காத்திருந்து பார்த்தாள். கணவனையும் காணவில்லை. உணவையும் காணவில்லை. என்னவோ ஏதோ என்ற கவலையுடன் ஓடோடி வந்தாள். தொலைவிலிருந்தே குழந்தையின் கதறல் தாயுள்ளத்தைக் குலுக்கிற்று. பசு தொங்குவது கண்டு அவள் பின்னும் பதைபதைத்தாள். உள்ளே கணவனும் குழந்தையும் இருந்த நிலை கண்டு திகிலடைந்தாள்.
அவள் குழந்தையை ‘இருடா கண்ணே’ என்று கூறிக்கொண்டே அரிவாள் மணையுடன் சென்று கயிற்றை அறுத்துக் கணவனை விடுவித்தாள். ஆனால், மறுபுறக் கயிறை விடாமல் பலகணியில் கட்டிவிட்டு ஓடோடி மறுபுறம் கயிற்றை அறுத்துப் பசுவை விடுவித்தாள். மற்ற வேலைகளைச் சீர்திருத்த அவளுக்கு அரைநாழிகை போதுமானதாயிருந்தது.
ஒரு நாழிகை கழித்து வழக்கம் போலக் குழந்தையும் தாயும் உண்டார்கள். குழந்தையின் நொந்த புண்ணுக்குத் தாய் எண்ணெய் தடவி நோவாமல் பச்சிலையும் பஞ்சும் வைத்துக் கட்டித் தொட்டிலிலிட்டாள். சிறிது நேரத்துககுள் மருத்துவரை அழைத்துவந்து பண்டுவங்கள் முறைப்படி செய்தாள்.
அன்றுமுதல் கணவன் களத்துக்கு ஒழுங்காகச் சென்றான். மனைவி எப்போதும்போல வீட்டுவேலையைக் கவனித்தாள். எத்தனை வேலைகளை அவள் தன்னந்தனியாக இருந்து திட்டமிட்டுச் செய்கிறாள் என்பதைக் கவனித்து அவன் அவள் திறமையை வியந்தான். அவளிடம் அவனுக்கு முன்னைவிட மிகுதி பாசம் ஏற்பட்டது; அவன் முன்கோபமும், பின் என்றும் தலைகாட்டாமல் மறைந்தது.
அந்த ஒருநாள் ஏற்பட்ட நட்டம் பெரிதாயிருந்தது. ஆனால், குடியானவப் பெண்மணியின் திறமையாலும் திருந்திய குடியானவன் பண்பாலும், அந்தப் படிப்பினை அவர்கள் வாழ்க்கையையே முழுதும் செப்பம் செய்யத் தக்கதாயிருந்தது.
மனiவி மட்டும் கணவனைச் சாடைகாட்டிக் குழந்தையிடம், “அப்பா, சாண்பிள்ளை! நீயும் உன் அப்பா ஆண்பிள்ளையும் சேர்ந்து குடும்பம் நடத்துகிறீர்களா,” என்பாள். குடியானவன் தன் தவறுகளை எண்ணிச் சிரிப்பான்.
நான்கு புதிர்கள்
சாயம் நாட்டுக்கதை
பண்டைக் காலத்தில் வயதில் இளைஞனான ஓர் அரசன் இருந்தான். அவன் எப்போதும் இன்ப வாழ்விலேயே மூழ்கி இருந்தான். இதனால் அரசியல் வாழ்வில் பல தொல்லைகள் ஏற்பட்டன. அரசன் எதிர்பார்த்தபடி கவலை யில்லாமல் இன்பம் துய்க்க முடியவில்லை. இன்பம் நாடிய இடமெல்லாம் துன்பமும் கவலையும் பெருகின.
ஒருநாள் அரசன் தலைநகரிலிருந்து சற்றுத் தொலைவி லுள்ள காட்டில் வேட்டையாடச் சென்றான். வழியில் ஒரு விறகு வெட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்தான்.
அருகே அவன் மனைவி வெட்டிய விறகை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி நடமாடிற்று. கவலையின் சிறு தூசுகூட இருவர் முகத்திலும் இல்லை.
“எவ்வளவோ செல்வமும் வாய்ப்பு நலங்களும் இருந்தும் நமக்குக் கவலை இல்லா இன்பம் கிட்டவில்லை. இந்த ஏழை விறகுவெட்டிக்கு அது எப்படி எளிதாகக் கிட்டிற்று. இதைக் கேட்டறிய வேண்டும்,” என்று அரசன் எண்ணினான். அவனை அணுகி அரசன் பேச்சுக் கொடுத்தான்.
அரசன்: அன்பனே, உனக்கு எப்படி இவ்வளவு இன்பமாகக் கவலையில்லாமல் வாழ முடிகிறது?
விறகுவெட்டி: நானும் என் மனைவியும் விறகு வெட்டி விற்கிறோம், இதில் வருகிற வருவாய் எங்களுக்குப் போதியதாக இருக்கிறது. ஆகவே, நாங்கள் இன்பமாகக் காலங் கழிக்கிறோம்.
அரசன்: அப்படியா? இந்தச் சிறு வருவாய் உங்கள் செலவுகள் எல்லாவற்றுக்கும் முழுதும் போதுமானதாய் இருக்கிறதா?
விறகுவெட்டி: ஆம்; செலவுக்கு மட்டுமல்ல. நான் அதில் சிறிது மீத்தும் வைக்க முடிகிறது.
அரசன்: மீத்து வைக்கிற தொகையை நீ என்ன செய்வாய்?
விறகுவெட்டி: அதை நான்கு கூறாகப் பிரிக்கிறேன். முதற் கூற்றை நான் மண்ணில் புதைக்கிறேன். இரண்டாம் கூற்றைக் கொண்டு என் பழங்கடன் அடைக்கிறேன். மூன்றாவது கூற்றை நான் ஆற்றில் எறிகிறேன். நான்காவது கூறு என் எதிரிக்குச் செல்கிறது. அரசனுக்கு விறகுவெட்டி கூறியது ஒன்றும் புரியவில்லை.
அரசன்: இது என்ன? புதிர் போடுகிறாய் போலிருக்கிறதே! மீத்து வைக்கும் உனக்குக் கடன் ஏது? பணத்தை யாராவது புதைத்து வைக்கவோ ஆற்றில் போடவோ எதிரிக்குக் கொடுக்கவோ செய்வார்களா?
விறகுவெட்டி: ஆம். நான் புதிர்தான் போடுகிறேன் உங்களிடம் தனியாகப் புதிரை விளக்கிக்கூறத் தடையில்லை?
அரசன் தன் ஊழியர்களையும் விறகுவெட்டியின் மனைவியையும் விட்டு, விறகுவெட்டியைச் சற்று அப்பால் கூட்டிக்கொண்டு சென்றான். விறகுவெட்டி தன் புதிருக்குத் தானே விளக்கம் தந்தான்.
விறகுவெட்டி: என் மீப்புப் பொருளில் முதற்கூற்றை நான் மண்ணில் புதைக்கிறேன் என்று சொன்னேன். அது - நான் ஏழை எளியவர்களுக்காக உதவும் சிறு பொருள். மண்ணுக்குள் புதைத்துவைத்த நெல் முதலிய கூலமணிகள் வீணாய்ப் போவது போலத் தோற்றுகின்றன. ஆனால், நிலம் நமக்கு அவற்றைப் பன்மடங்காக வளர்த்துத் தருகிறது. ஏழை எளியவர்க்குச் செய்த உதவியும் உடனடியாகப் பயன்தாராவிட்டாலும், நம் இனத்தை வளர்த்து நமக்குப் பன்மடங்காகப் பயனைத் தருகிறது.
இரண்டாவது கூற்றை, நான் பழங்கடனடைக்கப் பயன்படுத்துகிறேன். நாம் எவ்வளவு கொடுத்தாலும் என்ன செய்தாலும் தீராத கடன், நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையே. இவ்வகையில் இரண்டாங் கூறு செலவிடப்படுகிறது.
மூன்றாவது கூற்றை, நான் ஆற்றில் எறிந்து விடுகிறேன். நம் இன்பங்களுக்காக நாம் செலவுசெய்யும் பணம் ஆற்றில் பணம்போல நம் கையை விட்டு வீணாகப் போய்விடுகிறது. இது ஆற்றில் எறிவது போலத்தான்.
நான்காவது கூறு, என் எதிரிக்குச் செல்கிறது. நம் நெஞ்சிலுள்ள மறை மெய்ம்மைகளை வாங்கி அவற்றை அடக்கிக் கொள்ள முடியாமல் தூற்றும் பெண்களே நம் எதிரிகளாவர். அவர்கள் வீணான இன்பக் பகட்டுவாழ்வு நாடுபவர்கள்.
நம்மையும் இன்பம் நாடவைத்துப் பின் துன்பத்துக்கு ஆளாக்குபவர்கள். அவர்கள் இன்பப் பகட்டுகளுக்காகச் செலவுசெய்யும் பணந்தான் நம் எதிரிகளுக்கு நாம் கொடுக்கும் பணம் ஆகும்.
அரசன் விறகுவெட்டியின் கூர் அறிவை வியந்து பாராட்டினான். ஆனால், அவன் விளக்கங்களில் முதல் மூன்றைமட்டுமே அவன் ஒத்துக் கொண்டான். பெண்களைப் பற்றிய கடைசி விளக்கம் தவறானது என்று கருதினான்.
“அரசே, செயலறிவுமூலம் இதன் உண்மையை நீங்களே உணரலாம்,” என்றான் விறகுவெட்டி.
அரசன் சிறிதுநேரம் சிந்தித்தான். பின் விறகு வெட்டியைக் கூட்டிக் கொண்டு அவன் மனைவியும் தன் ஊழியரும் நின்ற இடத்துக்கு வந்தான். யாவரும் அறிய விறகுவெட்டியிடம், “இந்த நான்கு புதிர்களின் விளக்கத்தையும் வேறு யாரிடமும் கூறாதே. கூறினால், உன் தலையை வாங்கிவிடுவேன்,” என்று எச்சரித்துச் சென்றான்.
அரசன் அரண்மனைக்குச் சென்றதும் விறகுவெட்டி சொன்ன நான்கு புதிர்களையும் பெரிய தாள் அட்டைகளில் எழுதுவித்தான். நாட்டின் பல பகுதிகளிலும் அவை பொதுமக்கள் காணும்படி வைக்கப்பட்டன. இப்புதிர்களுக்கு விளக்கம் தருகிறவர்களுக்கு அவர்கள் தலையளவு பெரிய தங்கப் பிழம்பைப் பரிசளிப்பதாகப் பறை சாற்றுவித்தான். மாதங்கள் பல சென்றன. யாராலும் புதிர்களுக்கு விடையளிக்க முடியவில்லை.
விறகுவெட்டியின் மனைவியின் காதுக்கு இச்செய்தி தெரியவந்தது. புதிர்கள், கணவன் அரசனிடம் சொன்ன புதிர்களே என்பதை அவள் அறிந்தாள். கணவன் அவற்றைத் தனியாகச் சென்று அரசனுக்கு விளக்கியதையும், அவற்றை யாருக்கும் வெளியிடக்கூடாது என்று அரசன் கண்டிப்பாகக் கூறியதையும் அவள் நேரடியாகக் கேட்டிருந்தாள்.
அரசன் பரிசுச்செய்தி தெரிவதற்கு முன்பே அவள் கணவனிடம் பசப்பிப்பேசி, தான் யாரிடமும் கூறுவதில்லை என்ற உறுதியுடன் அந்த விளக்கங்களைக் கேட்டறிந்திருந்தாள்.
விளக்கங்களை இப்போது அரசனிடம் கூறி அந்தப் பரிசைப் பெறலாம் என்ற ஆவல் ஒருபுறம் அவளை வாட்டிற்று. அதைக் கணவன் தன்னிடம் சொல்லிவிட்டதறிந்தால் அவன் தலை போய் விடுமே என்றும் அவள் தனக்குள்ளாகக் கவலைப்பட்டாள். ஆயினும் இறுதியில் பண ஆவல் கணவன் உயிர்பற்றிய எண்ணத்தை வென்றது.
அவள் அரசனிடம் சென்று புதிர்களுக்குச் சரியான விளக்கங்கள் தந்தாள்.
அரசன் தான் பறைசாற்றியிருந்தபடி அவளுக்குப் பரிசில் தந்தான்.
அவள் போகுமுன் அரசன் அவளைக் கூர்ந்து கவனித்தான்.
அரசன்: உன்னை எங்கோ இதற்குமுன் பார்த்திருக் கிறேனல்லவா?
விறகுவெட்டியின் மனைவி: ஆம், அரசே. நீங்கள் காட்டில் சந்தித்த விறகுவெட்டியின் மனைவி நான்.
அரசன்: புதிர்களுக்கான விளக்கம் உனக்கு எப்படித் தெரிந்தது?
விறகுவெட்டியின் மனைவி: என் கணவரிடமிருந்து அறிந்தேன், அரசே!
மன்னன் உடனே விறகு வெட்டியை வரவழைத்தான்.
“என் கட்டளையை மீறிப் புதிர்களின் விளக்கங்களை உன் மனைவியிடம் ஏன் தெரிவித்தாய்?” என்று அவன் கேட்டான்.
“என் மனைவியிடம் கொண்ட பாசத்தால் அறிவிழந்து தவறாகக் கூறிவிட்டேன், மன்னிக்கவேண்டும்,” என்றான் குடியானவன்.
’மனைவியின் பாசத்தால் என்னை மீறினாய். மனைவியின் பாசத்துக்காகவே உயிர் இழக்கக்கடவாய்!" என்றான் மன்னன்.
காவலர் விறகுவெட்டியை நெக்கித் தள்ளிக் கொண்டு போயினர். போகும் சமயம் அவன் அரசனைப் பார்த்து, "நான் தவறு செய்தது உண்மை அரசே! அதற்காகத் தண்டனையும் பெறுகிறேன்.
ஆனால், என் நான்காவது புதிர் உண்மை என்பதை என் தண்டனை மெய்ப்பிக்கிறது. இன்பப் பகட்டு விரும்பும் பெண்ணை நம்பித்தான் நான் கூறினேன். நீங்கள் கருதியபடி அவள் என் எதிரியல்லவானால், என் மறை செய்தியை உங்களிடம் வெளியிட்டிருக்கமாட்டாள். என் தலையைவிட தலையளவு பொன் உயர்வுடையதென்று கருதியிருக்கவும் மாட்டாள்," என்றான்.
அரசன் விறகு வெட்டியின் ஆழ்ந்த உலகியல் அறிவை மதித்து அவனை விடுவித்துப் பரிசுகள் பல கொடுத்து அனுப்பினான்.
அன்புச் செல்வம்
கிழக்காப்பிரிக்கக் கதை
ஒரு விறகு வெட்டிக்கு ஒரு புதல்வனும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவன் இறக்கும் தறுவாயில் தன் இருபிள்ளை களையும் அழைத்தான். புதல்வியைப் பார்த்து, “அம்மா, என்னிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன; அன்புச் செல்வமும் பொருட் செல்வமும்! உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன்,” என்றான்.
பெண், “தங்கள் அன்புச் செல்வமே போதும், அப்பா,” என்றாள்.
மகனிடம் கேட்டபோது அவன், “பொருட்செல்வமே எனக்கு வேண்டும்,” என்றான். அடுத்துச் சில நாட்களில் தாயும் இறக்கும் தறுவாய் அடைந்தாள். அவளும் தன் இரு பிள்ளைகளிடமும் இது போலவே கேட்டாள்.
தங்கை முன்போலவே அன்புச் செல்வத்தையும் அண்ணன் பொருட் செல்வத்தையும் தனதாக்கிக் கொண்டனர். தாய் தந்தையர் காலமானபின் அண்ணன் அவர்கள் இருவர் செல்வத்தையும் ஒரு சிறு பகுதிகூடத் தங்கைக்கு வைக்கவில்லை. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், “அப்பா, உன் தங்கைக்கு ஏதேனும் தரலாமல்லவா?” என்று கேட்டனர். அவன் “யார் சென்னது, தரலாம் என்று, ஒரு செம்பாலடித்த காசுகூடக் கொடுக்க நேர்மையில்லை. தாய் தந்தையரிருவரிடமும் அவள்தான் செல்வம் வேண்டாம், அன்பே போதும் என்றாளே. அன்பையே அவள் முழுவதும் எடுத்துக் கொண்டு போகட்டும். செல்வம் எதுவும் வேண்டியதில்லை,” என்றான்.
தங்கையினிடம் இப்போது ஒரு சமைக்கும் பானை மட்டுமே மீந்திருந்தது. அத்துடன் தாயிடம் இருந்த சில பூசணி விதைகளையும் அவள் பாதுகாப்பாக எடுத்துத் தோட்டத்தில் விதைத்தாள். தாயின் வீட்டிலேயே இருந்தாள்.
தாயினிடம் அன்புகொண்ட அந்த நங்கையைப் பட்டினியாகக் கிடக்க எவரும் விரும்பவில்லை. ஆகவே, அவள் சமையற் பானையை மக்கள் இரவலாகப் பெற்றுச் சமைத்து, பானையைச் சிறிது சோறுடன் கொடுத்து வந்தனர். இது செய்தியறிந்த அண்ணன் அந்தப் பானையைத் திருடி எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். அவள் வகையறியாது திண்டாடினாள்.
அச்சமயம் பூகணி விதைகளின் நினைவு அவளுக்கு வந்தது. தோட்டத்தில் சென்று பார்த்தாள்; பூசணி செழித்துக் காய்த்திருந்தது. அவள் பூசிணியை விற்று அந்த வருவாயுடன் காலங்கழித்தாள். அவள் பூசணி மிகவும் சுவையுடையதா யிருந்ததால், அவளுக்குத் தட்டாமல் வருவாய் பெருகிற்று.
அண்ணன் மனைவிக்கு இந்தச் செய்தி எட்டிற்று. அவள் கொஞ்சம் கூலம் கொட்டிக்கொடுத்து பூகணிக் காய் பெற்றுவரும்படி வேலைக்காரியை அனுப்பினாள். “விற்பனைக்குப் பூசணி இப்போது இல்லை,” என்று தங்கை முதலில் கூறினாள்.
பின், வந்தது அண்ணன் வீட்டு வேலைக்காரி என்று அறிந்து கூலத்தை பெற்றுக் கொள்ளாமலே தன் கடைசிப் பூசணிக்காயை அனுப்பினாள். மறுநாள் தங்கையை நாடி அண்ணனே போய்ப் பூசணிக்காய் கேட்டான்.
தங்கை: பூசணிக்காய் எல்லாம் ஆய்விட்டது. இனி காய்த்துத்தான் ஆகவேண்டும்.
அண்ணன்: அது காய்க்காமல் வெட்டிவிடுவேன்.
தங்கை: என் வலது கையை முதலில் வெட்டு, அப்புறம் கொடியை வெட்டலாம்.
அவன் அப்படியே தங்கையின் வலது கையை ஈவிரக்கமின்றி வெட்டி விட்டு, பூசணிக் கொடியையும் அழித்தான். ஆதரவற்ற தன் தங்கையை வீட்டிலும் இருக்கவொட்டாமல் அவன் அடித்துத் துரத்தினான். அப்பாவிப் பெண் நோவு பொறுக்கமாட்டாமல் அழுதாள். பின் மருந்து வைத்துக் கைக்குக் கட்டுக் கட்டிக்கொண்டு ஊர்ஊராக அலைந்தாள். ஒருநாள் காட்டுவழியாக அவள் போய்க் கொண்டிருந்தாள். களைப்பால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள்.
வேட்டையாட வந்த அரசன் மகன், அவளைக் கண்டு “நீ யார்?” என்று உசாவினான். அவள் தன் துயரத்தை மட்டும் கூறினாள். விவரங்களைக் கூறவில்லை. ஆனால், இளவரசன் அவளிடம் மாறா அன்பு கொண்டான். அவன் அவளைத் தன் தாய் தந்தையரிடம் இட்டுச் சென்று, மணந்தால் அவளையே மணக்க விரும்புவதாக வன்மையாகச் சொன்னான்.
அரசனும் அரசியும் தன் மகனுக்கு ஒரு கை முடமான பெண்ணை மணஞ் செய்துவைக்க விரும்பவில்லை. ஆயினும் மகன் பிடிவாதத்துக்கு அவர்கள் இணங்க வேண்டியதாயிற்று. இளவரசியாய்விட்ட நங்கைக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அரசனும் அரசியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்கள்.
இச்சமயம் அண்ணன் தற்செயலாக அந்த நாட்டுக்கு வந்தான். அந்நாட்டரசன் மகன் கையிழந்த ஒரு நங்கையை மணஞ்செய்ததாக அவன் கேள்விப்பட்டதே, அவன் பொறாமை உள்ளம் மீண்டும் புதைந்தது. கையை வெட்டிய பின்னும் தங்கை நல்வாழ்வு வாழ்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவன், “அப்படியா செய்தி? அந்தப் பெண் இதுவரை எத்தனையோ பேரை மணந்து கொன்றுவிட்டாளே! உங்கள் இளவரசர் இன்னும் எத்தனை நாள் இருக்கப்போகிறாரோ, தெரிய வில்லை!” என்று கவலை தோய்ந்த முகமுடையவன்போல நடித்துப் பேசினான். அவன் சொற்கள் எங்கும் பரந்தன.
இளவரசன் இச்சமயம் நாட்டுப்புறங்களைச் சுற்றி வரச் சென்றிருந்தான். அரசன் இளவரசிபற்றிய அம்பலுரையை, நம்பி அவளையும் குழந்தையையும் துரத்தி விட்டான்.
இளவரசியாயிருந்த நங்கை மீண்டும் நாடோடியாய் அலைந்தாள். இப்போது அவளுக்குத் தன்னைக் காக்கும் பொறுப்போடு, தன் குழந்தையைப் பார்க்கும் பொறுப்பும் ஏற்பட்டிருந்தது. காட்டில் பழங்கள் கிடைத்தபோது அவள் அவற்றைப் பொறுக்கி ஒரு கூடையில் வைத்துக் கொள்வாள். நீர் கிடைத்த இடம் பழமும் நீரும் உண்டு வழிநடந்து அலைந்தாள்.
ஒருநாள் குழந்தையுடனும் கூடையுடனும் அவள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தாள். இப்போது ஒரு பாம்பு வேகமாக அவளை நோக்கி வந்தது. அது தன்னைக் கடித்துக் கொன்றுவிடுவது உறுதி என்றே அவள் நினைத்தாள். ஆனால், பாம்பு அவளைக் கடிக்கவில்லை. அது மனித மொழியில் பேசிற்று. “நான் பேரிடரில் சிக்கியிருக்கிறேன். எனக்கு உன் கூடையில் சிறிது இடங்கொடு,” என்றது. அவள் கூடையைத் திறந்து பாம்புக்கு அடைக்கலமளித்தாள்.
சற்று நேரத்தில் இன்னும் ஒரு பெரிய பாம்பு விரைந்து வந்தது. அதுவும் அவளைக் கடிக்கவில்லை. ஆனால், அது முதலில் வந்த பாம்பை எக்காரணத்தாலோ தேடிவந்ததாகத் தோற்றிற்று. “இவ்வழியாக ஒரு பாம்பு போயிற்றா” என்று அது கேட்டது.
நங்கை பொய்கூறவும் விரும்பவில்லை. காட்டிக் கொடுக்கவும் விரும்பவில்லை. “ஆம். அது இவ்வழியாகக் கொஞ்சநேரத்துக்கு முன்தான் போயிற்று,” என்றாள். பாம்பு மீண்டும் வேகமாகப் போய்விட்டது.
இரண்டாவது பாம்பு சென்ற சிறிது நேரத்துக்குள் முதல் பாம்பு கூடைக்குள்ளிருந்து, “இடர் நீங்கி விட்டது. இப்போது என்னை வெளியே விட்டுவிடு,” என்றது.
“எனக்குத் தங்கிடம் எதுவுமே கிடையாது. சும்மா அலைந்து திரிகிறேன்,” என்றாள் அவள்.
“அப்படியானால் என்னுடன் வா,” என்று இட்டுச் சென்றது பாம்பு. போன வழியில் ஓர் ஏரி தென்பட்டது. பாம்பு நங்கையிடம், “வெயில் வெப்பு நீங்க, இதில் குழந்தையையும் நீராட்டி, நீயும் நீராடு,” என்றது. நங்கை முதலில் தான் நீராடினாள். அப்போது குழந்தை நீரில் விழுந்துவிட்டது. அவள் அழுதாள். பாம்பு அழுகுரல் கேட்டு, “என்ன செய்தி?” என்றது.
நங்கை: ஐயோ! என் குழந்தை நீரில் விழுந்துவிட்டது காணவில்லை.
பாம்பு: கையைவிட்டு நீரில் துழாவு; அகப்படும். அவள் துழாவினாள். காணவில்லை.
பாம்பு: இரண்டு கையையும் விட்டுத் தேடு.
நங்கை: எனக்கு ஒரு கை முடமாயிற்றே!
பாம்பு: நான் சொல்வதை அப்படியே செய்.
அவள் முடமான கையையும் விட்டாள். குழந்தை கையுடன் வந்தது. ஆனால், வியக்கத்தக்க முறையில் முடமான கை முழுக்கையாக வெளிவந்தது. நங்கை மகிழ்ந்து பாம்புக்கு நன்றி தெரிவித்தாள். “இப்போதே நன்றி தொவித்துவிடாதே. நான் உனக்கு முழு நன்மையும் செய்யும் மட்டும்,” என்றது பாம்பு.
“பாம்பின் தாய் தந்தையருடன் நங்கை தன் குழந்தையோடு வாழ்ந்து வந்தாள்.”
நங்கையின் கணவனான இளவரசன் திரும்பி வருவதற்குள் அரசனும் அரசியும் நங்கை இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பினார்கள். அவள் கல்லறையாக ஒரு கல்லறையும் செப்பனிட்டு வைக்கப்பட்டிருந்தது. அவள் குழந்தையும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் அருகில் ஒரு கல்லறை சமைக்கப்பட்டிருந்தது.
மனைவியும் குழந்தையும் இறந்ததுகேட்டு இளவரசன் புழுவாய்த் துடித்தான். கல்லறைகளைச் சென்று பார்த்து அதனருகே அடிக்கடி சுற்றிப் புலம்பினான்.
நங்கையைப்பற்றி அவதூறு கூறிய அவள் அண்ணன் இப்போது அரசியிலில் ஓர் உயர்பணி பெற்றுப் பகட்டாக வாழ்ந்தான். அவன் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தங்கை ஒழிந்துவிட்டாள் என்ற எண்ணம் அவனுக்கு அமைதி தந்தது.
நங்கை எப்படியும் தான் போய்த் தன் கணவனைக் காணவேண்டுமென்று துடித்தாள். பாம்பு, “அப்படியானால் என் தாய் தந்தையர்களிடம் விடைபெற்றுக் கொண்டு போ. அவர்கள் ஏதாவது பரிசளிப்பதாயிருந்தால், வேறு எதையும் வாங்காமல், என் தந்தை கையிலுள்ள கணையாழியை மட்டும் கேள்,” என்றது.
பாம்பின் தாய்தந்தையரிடம் விடைகேட்டபோது, அவர்கள் முதலில் பிரிய மனம் இல்லாது வருந்தினர். பின் அளவற்ற செல்வக் குவைகளைப் பரிசாகக் கொடுத்தார்கள். அவள், “இவற்றை நான் எப்படிச் சுமந்து செல்வேன். இவை வேண்டாம்,” என்றாள்.
“பின் உனக்கு என்ன வேண்டும்?” என்று தந்தைப் பாம்பு கேட்டது. அவள் கணையாழியைக் கேட்டாள்.
தந்தைப் பாம்பின் முகம் சிறிது கறுத்தது. “இதைக் கேட்க உன்னிடம் யார் சொன்னார்கள்? என் மகன் தானே!” என்றது. அவள், “இல்லை, நானாகத்தான் கேட்கிறேன்,” என்றாள்.
தந்தைப் பாம்பு கணையாழியை அவளிடம் கொடுத்தது. “உனக்கு உணவோ, உடையோ பணியாட்கள் நிரம்பிய வீடோ எது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இதனிடம் கேள். கிடைக்கும்,” என்று கூறிற்று.
நங்கை கணவன் வாழ்ந்த நகரத்தின் எல்லையில் கணையாழியின் உதவியால் ஒரு பெரிய வீடு தருவித்து அமர்ந்தாள். தானாகக் கணவனிடம் செல்ல அவள் துணியவில்லை. ஆனால், அப்புதிய வீட்டினையும் அதன் செல்வத்தையும் பற்றிய செய்தி இளவரசனுக்கு எட்டிற்று. அவன் தன் தாய் தந்தையர், பணியாளாயிருந்த நங்கையின் அண்ணன், மற்றும் பல ஊழியர்களுடன் சென்று அதைப் பார்வையிட்டான்.
நங்கை அவர்களை வரவேற்று விருந்தளித்தாள். விருந்தின் போது அவளைப்பற்றி இளவரசன் கேட்ட கேள்விக்கு விடையாக அவள் மெள்ள மெள்ளத் தன் கதை முழுவதும் கூறினாள். கதை முடிக்கும்வரை அண்ணன் ஐயுறாதபடி பொதுமொழியில் கூறி, இறுதியிலேயே விவரம் தெரிவித்தாள்.
இளவரசனுக்கு அவள் தன் மனைவி என்பது விளங்கிற்று. வயதுவந்த இளைஞனாகிவிட்ட மகனையும் நங்கை அவன் முன் நிறுத்தினாள். இளவரசன் அவளை வரவேற்று அவளுடன் மகிழ்ச்சி யுடன் வாழ்ந்தான். அண்ணனை இளவரசன் தூக்கி லிடவே விரும்பினான். ஆனால், நங்கையின் இடையீட்டினால், அவன் சிறிது செல்வத்துடன் தொலைநாடு சென்று பிழைக்கும்படி நாடுகடத்தப்பட்டான்.
நங்கையின் சிறுவன் இளவரசனைத் தந்தை என்றும், அரசனையும் அரசியையும் பாட்டன், பாட்டி என்றும் அறிந்து அவர்களுடன் அளவளாவினான்.
பொருட் செல்வத்தைவிடத் தாய் தந்தையர் அன்புச் செல்வத்தையே உயர்வாக நாடிய நங்கை எல்லாவகை இன்பச் செல்வங்களும் பெற்று வாழ்ந்தாள்.
கொடாக்கண்டனும் விடாக்கண்டனும்
அர்மீனிய நாட்டுக் கதை
இடிந்து சோர்ந்த ஒரு பண்ணைக் குடும்பத்தில் இரண்டு உடன் பிறந்தார்கள் இருந்தனர். சீர்கெட்ட அந்தப் பண்ணையைத் திருத்த அவர்களிடம் பணம் இல்லை. குடும்ப செல்வமாகிய அதை விற்றுவிடவும் அவர்களுக்கு மனமில்லை. ஆகவே, இருவரில் ஒருவர் வெளியே சென்று உழைத்துப் பணம் ஈட்டி அனுப்புவதென்றும், மற்றவன் பண்ணைக் காரியங்களை மேற்பார்ப்பதென்றும் அவர்கள் தீர்மானித்தனர். மூத்தவன் தானே வெளியே சென்று பணம் ஈட்டுவதாகச் சொன்னான். இளையவன் வீட்டிலேயே இருந்து பண்ணையைப் பார்ப்பதாக ஒப்புக் கொண்டான்.
மூத்தவன் அடுத்த மாவட்டத்திலுள்ள ஒரு செல்வனிடம் போய் வேலை கேட்டான். அச்செல்வன் ஒரு கொடாக்கண்டன். சூழ்ச்சிப் பொறிகளிலும், சொற்பொறிகளிலும் தன் கீழ் வேலைக்கு வருபவர்களை மாட்டி ஆதாயம் பெற நாடுபவன்.
“நீ ஒரு ஆண்டு முழுவதும் - அடுத்த ஆண்டு குயில் கூவும் காலம் வரை - வேலை பார்ப்பதாக உத்தரவாதம் தரவேண்டும். அத்துடன் அந்த ஒரு ஆண்டுக் காலத்துக்குள் இருவருள் யார் சினங்கொண்டு பேச நேருகிறதோ, அவர் ஆயிரம் வெள்ளி தண்டமாகத் தரவேண்டும்,” என்றான்.
“என்னிடத்தில் பணம் இல்லையே!” என்றான் மூத்தவன். “அதனாலென்ன? ஆயிரம் வெள்ளிக்கு மாறாக இன்னும் பத்து ஆண்டு வேலை செய்ய ஒத்துக் கொள்ளலாம்,” என்றான்.
மூத்தவன் முதலில் தயங்கினான். பின் என்ன வந்தாலும் தான் கோபப்படாமல் அவனைக் கோபமூட்டி அவனிட மிருந்தே ஆயிரம் வெள்ளி பெறுவது என்று எண்ணித் துணிந்தான்.
காலையில் செல்வன் பணியாளை எழுப்பி வேலைக்கு அனுப்பினான். “போ, வெளிச்சமிருக்குமட்டும் வேலை செய்துவிட்டு வா,” என்றான்.
பணியாள் காலையிலிருந்து வேலை செய்தான். பொழுதுசாய வீடு திரும்பினான். “ஏன், இப்பொழுதே திரும்பி வந்துவிட்டாய்?” என்றான் செல்வன். “பொழுது சாய்ந்து விட்டதே. அதன்பின்தானே திரும்பியிக்கிறேன்,” என்றான் பணியாள்.
“நீ பொழுது சாயும்போது வருவதாகச் சொல்லிப் போகவில்லையே. வெளிச்சம் இருக்கும்வரை வேலை செய்கிறேன் என்றல்லவா போனாய்?”
“பொழுது சாய்ந்தபின் வெளிச்சம் ஏது?”
“ஏன், நிலா இருக்கிறதே! அது வெளிச்சம் தராமல் இருட்டா தருகிறது?” பணியாளுக்கு கடுஞ்சினம் மூண்டெழுந்தது. “பகல் முழுவதும் வேலைசெய்தபின் எனக்கு ஓய்வே வேண்டாமா?” என்று கேட்டான்.
“ஓகோ, சினங்கொண்டு விடுகிறாயா?” என்றான் செல்வன். பணியாள் தன் நாக்கைத் தானே கடிந்து கொண்டான். “நான் சினங் கொள்ளவில்லை. சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் செல்கிறேன்” என்றான்.
அப்படியே சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் சென்று நிலவில் வேலை செய்தான். அன்று முழுநிலா நாள் ஆனாதால் இரவு முழுதும் வேலை செய்ய வேண்டி வந்தது.
ஆனால், அதற்குள் விடிந்தது. செல்வன் வந்தான். “காலை ஆகி விட்டது. வீட்டுக்குப் போவதானால் போய் உடனே திரும்பிவந்து வேலை செய்,” என்றான்.
பணியாளுக்கு இருபத்துநான்கு மணிநேர வேலையால் உடலெல்லாம் நொந்துபோய்விட்டது. குடியானவன் சூது கண்டு அவன் கனன்றெழுந்தான். அவன் மீது தன்கையிலிருந்த அரிவாளை வீசி.
“நீயும் உன் வேலையும் உன் பண்ணையும் நாசமாய் போக!” என்றான்.
மறுகணவே அவனுக்குத் தன் பிழை தெரிந்தது.
செல்வன், “நீ இப்போது கடுஞ்சீற்றம் காட்டிவிட்டாய். எடு ஆயிரம் வெள்ளியை அல்லது பத்தாண்டு வேலை செய்வதாக உறுதிமொழி எழுதிக் கொடு,” என்றான்.
பணியாளன் இருதலைப் பொறியில் பட்டான். வெள்ளி கொடுக்க அவனிடம் பணம் இல்லை. ஆனால், இம்மாதிரி பத்தாண்டென்ன, பத்துநாள் வேலை செய்ய ஒத்துக்கொள்வது கூடப் பைத்தியக்காரத்தனம்.
அவன் நீண்டநேரம் ஆராய்ந்தான். இறுதியில் ஆயிரம் வெள்ளிக்கு ஒரு பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு கையில் காசு எதுவுமில்லாமலே வீடு திரும்பினான்.
தம்பியிடம் நடந்தவை யாவும் கூறித் தன் அவப்பேறுக்கு அவன் வருந்தினான்.
தம்பி அண்ணனைத் தேற்றினான். “நான் அதே செல்வனிடம் சென்று அவனுக்குப் பாடம் படிப்பித்து வருகிறேன்,” என்று கூறிவிட்டுச் சென்றான்.
செல்வன் மூத்தவனிடம் செய்துகொண்ட அதே கட்டுப்பாட்டையே இளையவனிடமும் செய்து கொண்டான். ஆனால், தம்பி அவ்வுடன்பாட்டின் பணத்தையும் கால எல்லையையும் இரட்டிப்பாக்கினான்.
இருவரில் யார் சினமடைந்தாலும் இரண்டாயிரம் வெள்ளி கொடுக்க வேண்டும். இரண்டாயிர வெள்ளி கொடுக்க முடியாதவர் இருபதாண்டு வேலை செய்ய வேண்டும்.
செல்வன் இதை மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டான். காலையில் செல்வன் பண்ணையாளை எழுப்பினான்
“பொழுதுவிடிந்து நேரமாயிற்று. விரைவில் உச்சி வேளையாய்விடும். நீ இன்னும் தூங்குகிறாய்?” என்றான்.
“ஏதோ சினங்கொள்கிறாய் போலிருக்கிறது” என்றான் வேலையாள். செல்வன் தணிந்தான்.
“நேரமாய்விட்டது என்றுதான் சொன்னேன்,” என்றான்.
“சரி, போ. எனக்குத் தெரியும்” என்று கூறிய வண்ணம் பணியாள் மேலும் தூங்கினான். செல்வனுக்கு எதுவும் கூற அச்சமாய்விட்டது. ஏனென்றால் புதிய பணியாள் நடத்தை தன்னைக் கோபமூட்டுவதாக இருந்தது. கடைசியில் அவன் எழுந்திருந்துபோகக் கிட்டத்தட்ட உச்சி வேளையாயிற்று.
“விரைந்து செல், அப்பா. இன்னுமா தாளமிடுகிறாய்?” என்றான் செல்வன். “சினமா இது சீற்றமா?”
செல்வன் மீன்டும் பணிந்தான். “நேரமாயிற்றே என்று கூறினேன். அவ்வளவுதான்,” என்றான்.
“சரி, சரி நம் உடன்படிக்கையை மீறாமல் விழிப்பாயிரு,” என்று பணியாள் எச்சரித்தான்.
வேலை தொடங்கிப் பத்துக்கணம் ஆவதற்குள் மற்ற வேலையாட்கள் உச்சியுணவு உட்கொள்ளத் தொடங்கினார்கள். பணியாள் செல்வனை நோக்கி, “இப்போது யார் வேலை செய்வார்கள். இது உணவு நேரம்; எல்லாரும் உண்ணும்போது நாமும் உண்ணுவோம்” என்றான். இருவரும் உண்டனர்.
“உண்டபின் நீங்கள் சிறிது உறங்குவது உண்டல்லவா?” என்றான் பணியாள். “ஆம்” என்றான் செல்வன்.
“அதுதான் சரி. வேலைசெய்யும் நாட்களில் கட்டாயம் உண்டபின் சிறிது உறங்கவேண்டும். அதிலும் வேலை செய்யாத நீங்கள் உறங்கும் போது, வேலைசெய்யும் நான் உறங்குவது இன்னும் அவசியம்,” என்றான்.
செல்வனுக்கு அன்று உறங்கவே முடியவில்லை. ஆனால், பணியாள் பொழுதுசாய ஒரு மணிவரை தூங்கினான். அவனை எழுப்பச் செல்வன் துணியவில்லை. எழுந்தவுடன் அவன் அடக்கிவைத்திருக்கும் உணர்ச்சி அத்தனையும், அவனால் கொட்டாமலிருக்க முடியவில்லை. “எல்லாரும் தத்தம் வயலில் கதிர் அறுத்தாய்விட்டது. நம் வயலில் மட்டும் அரிவாள் கதிரில் படவே இல்லை. இம்மாதிரி வேலையை நான் ஒப்புகொள்ள முடியாது,” என்றான்.
இளையவன்: கோபமல்லவா இது?
செல்வன்: இல்லை, இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போகலாம் என்றுதான் சொன்னேன்.
இளையவன்: அப்படியா, அது சரி.
அன்றிரவு செல்வன் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். செல்வன் பணியாளை அழைத்து விருந்துக்கு ஒரு ஆடு வெட்டும்படி கூறினான். எந்த ஆட்டை வெட்டுவது என்று பணியாள் மிகப் பணிவாகக் கேட்டான். ஏதோ வந்த ஆட்டைக் கொல்லேன் என்றான்.
மேய்ச்சலிலிருந்து ஆடுகள் வந்து கொண்டிருந்தன. பணியாள் வழியில் உட்கார்ந்து கொண்டான். வந்த ஆட்டை ஒவ்வொன்றாக வரவர வெட்டி வெட்டி வீழ்த்தினான்.
செல்வனிடம் சிலர் வந்து, “உன் பணியாளுக்கென்ன பைத்தியமா? எல்லா ஆடுகளையும் வெட்டுகிறானே!” என்றார்கள். செல்வன் போவதற்குள் அவன் ஆடுகள் பெரும்பாலும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் வெட்டியாயிற்று.
செல்வன்: என்ன செய்கிறாய், முட்டாளே! எத்தனை ஆடுகளை வீணாக வெட்டிவிட்டாய்!
இளையவன்: வந்த ஆட்டை வெட்டு என்றுதான் சொன்னீர்கள். எல்லாம்தான் வந்தன. அஃதிருக்கட்டும், நீங்கள் சீற்றம் கொண்டிருக்கிறீர்களா, என்ன?
நெஞ்சிலிருந்து எழுந்த நெருப்பை அடக்கிக் கொண்டு, “அஃதெல்லாமில்லை; ஆடுகள் வீணாகப் போயினவே என்றுதான் வருந்துகிறேன்,” என்றான் செல்வன்.
“அவ்வளவுதானா? சரி! சீற்றம் வராதவரை என்னால் வேலைசெய்யத் தடையில்லை,” என்றான் பணியாள்.
ஒருசில மாதங்கள் சென்றன; பணியாளைக் குறை சொல்லவும் முடியாமல், சொல்லாமலிருக்கவும் முடியாமல், செல்வன் திண்டாடினான். அவனுக்கு ஊரில் இருந்த மதிப்புப் போயிற்று; பெரும் பொருளழிவு ஏற்பட்டது; நெஞ்சில் ஓயாத கவலையும் தொல்லையும் உண்டாயின.
எப்படியாவது பணியாளை விட்டொழித்தால் போதும் என்று அவன் நினைத்தான். ஆனால், தலைவன் சீற்றமடைந்து தானாக அவனை அனுப்பினால் இரண்டாயிர வெள்ளி கொடுக்கவேண்டும். அவனாகப் போக வேண்டுமானால் ஒப்பந்தப்படி குயில் கூவும் காலம் வரவேண்டும். இப்போது குளிர்காலமாதலால் இன்னும் மூன்றுமாத காலம் காத்திருக்கவேண்டும். இவற்றையெல்லாம் எண்ணி அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
அவன் தன் மனைவியை ஊர் எல்லையில் உள்ள ஒரு மரத்தில் விடியற்காலம் காத்திருக்கும்படி செய்தான். பணியாளுடன் தான் வரும்போது குயில்போல அவள் கூவவேண்டும் என்று ஏற்பாடு செய்தான். பணியாளை அவன் வேட்டைக்குச் செல்வோமென்று அவ்வழி அழைத்து வந்தான்; மனைவி குயில் போலக் கூவினாள்.
“ஆகா, குயில் கூவுகிறது பார். உன் வேலைக்காலம் முடிந்துவிட்டது,” என்றான் செல்வன்.
பணியாள் இந்தச் சூழ்ச்சியின் தன்மையை உடனே உய்த்துணர்ந்து கொண்டான்.
குளிர்காலத்தில் கூவும் இந்தக் குயில் நல்ல சாதிக் குயிலாயிருக்க வேண்டும். இதை நான் கண்டெடுத்துக் கொண்டே போவேன் என்று துப்பாக்கியை நீட்டிக் குறி வைத்தான்.
செல்வனுக்குக் கிலி ஏற்பட்டது. “அட பாவி! அது குயிலல்ல; என் மனைவி; நீ செய்த அட்டூழியம் ஒன்றல்ல; பல. என் மனைவியையும் கொன்றுவிடாதேடா! இப்போதே போய் ஒழி,” என்றான்.
“நீ சீற்றப்பட்டு விட்டாயல்லவா?” என்றான் பணியாளன்.
சீற்றமில்லையென்றால் பணியாள் ஒழியமாட்டான். ‘சீற்றம் என்று சொன்னால் இரண்டாயிரம் வெள்ளி கொடுக்கவேண்டும். ஆனால், இரண்டாயிரம் வெள்ளி போனால்கூடக் கேடில்லை. இந்தப் பணியாள் நம்மை விட்டுத் தொலைந்தால் போதும்’ என்று செல்வனுக்குத் தோன்றிற்று.
“ஆம். நான் என் சீற்றத்தை இனி அடக்கிவைக்க முடியாது. அடக்கி வைக்கவும் போவதில்லை. இதோ நம் ஒப்பந்தப்படி இரண்டாயிரம் வெள்ளி தந்துவிடுகிறேன். நீ திரும்ப இத்திசை வராமல் போய்த்தொலை,” என்றான்.
தம்பி இரண்டாயிரம் வெள்ளியுடன் வீடு திரும்பினான். மூத்தவன் கொடுக்கவேண்டிய ஆயிரம் வெள்ளி போக, ஆயிரம் வெள்ளிக்கொண்டு அவர்கள் தங்கள் பண்ணையைச் சீர்செய்து சிறப்புடன் வாழ்ந்தார்கள்.
கற்சிங்கம்
திபெத் நாட்டுக்கதை
செழிப்பான ஒரு பள்ளத்தாக்கில் இரண்டு உடன் பிறந்தார்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தந்தை இல்லை. தளர்ந்த வயதுடைய தாய்தான் இருந்தாள்.
அண்ணன் மிகவும் நல்ல உழைப்பாளி. திறமையும் உடையவன். ஆனால் அவன் குறுகிய தன்னலம் உடைய வனாகவும், மிகுந்த பண ஆவலுடையவனாகவும் இருந்தான். தம்பி இதற்கு நேர்மாறாக அண்ணனிடமும் தாயிடமும் பாசம் உடையவனாயிருந்தான். ஆனால், அவனால் அண்ணனளவு உழைக்கவும் முடியவில்லை. அவனைப் போலத் திறமையுடன் பணம் திரட்டவும் முடியவில்லை.
தன் பணத்தில் தாய் மட்டுமல்லாமல் தம்பியும் பங்கு கொண்டு வாழ்கிறானே என்று அண்ணன் மனத்துக்குள் குறு குறுத்தான். ஒருநாள் அவன் தம்பியை அழைத்தான். “என்னால் இனி உன்னை வைத்துக் காப்பாற்ற முடியாது. நீ எங்காவது போய், உன் உழைப்பைக் கொண்டே வாழத் தொடங்கு” என்றான்.
அண்ணன் சொன்னது சரி என்றுதான் தம்பி நினைத்தான். ஆனால், அண்ணனையும் தாயையும் விட்டுப்பிரிய அவனுக்கு வருத்தமாயிருந்தது. அண்ணன் தன்னிடம் இவ்வளவு கண்டிப்பாகவும் கடுமையாகவும் இருப்பான் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
வேறு வழியில்லாமல் அவன் வீட்டைவிட்டு வெளியே போகப் புறப்பட்டான். தாயிடம் சென்று செய்தியைச் சொல்லி, “போய் வருகிறேன், அம்மா!” என்றான்.
வயது சென்ற தாய் இதைக் கேட்டு மனவருத்தம் அடைந்தாள். “தம்பியைப் போகச் சொல்லாதே,” என்று அவள் கெஞ்சிக் கேட்டும் பயனில்லை. மூத்த மகன்மேல் அவளுக்குக் கோபம் வந்தது. “என் பிள்ளைக்கு இடமில்லாத வீட்டில் எனக்கென்ன வேலை?” என்று அவளும் இளைய மகனுடன் புறப்பட்டாள்.
தாய் போனதற்கும் அண்ணன் அவ்வளவாகக் கவலைப்பட வில்லை. “செலவு இன்னும் குறைவுதான்,” என்று ஆறுதல் கொண்டான். தாயும் மகனும் மெள்ள மெள்ள நடந்து சென்றனர். வழியில் காயும் கிழங்கும் உண்டனர். குளம் குட்டைகளில் கையால் நீர் மொண்டு குடித்தனர். சிலநாள் கழித்து அவர்கள் ஒரு சிறிய நகருக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார்கள்.
நகரிலிருந்து கொஞ்சந் தொலைவில் ஒரு குன்று இருந்தது. அதன் சரிவும் முழுவதும் காடும் புதரும் நிறைந்திருந்தது. அதன் அடிவாரத்தில் ஆளில்லாத ஒரு வீட்டை அவர்கள் கண்டார்கள்.
முதலில் அவர்கள் ஒன்றிரண்டு நாள் அதில் தங்கினார்கள்; வீட்டுக்கு யாரும் வரவில்லை. யாரும் அதில் வாழவில்லை என்று தெரிந்தபின் அவர்கள் அதிலேயே நிலையாகத் தங்கினார்கள்.
இளையமகன் காலையில் எழுந்து வெளியே சென்றான். எப்பாடு பட்டாவது வயது சென்ற அன்னையைக் காப்பற்ற வேண்டும் என்று அவன் துணிந்தான்.
அவன் முதலில் ஒரு கோடரி வாங்கினான். பகல் முழுதும் அவன் நல்ல விறகாகப் பார்த்து வெட்டினான். அருகிலிருந்த நகரத்தில் மாலையில் அதைக் கொண்டு போய் விற்றான். விறகில் கிடைத்த பணம் தாய்க்கும் அவனுக்கும் தாராளமாகப் போதுமானதாயிருந்தது.
“அம்மா! நான் திறமையில்லாதவன் என்பதற்காக நீங்களும் அண்ணனைப் போல் கவலைப்பட வேண்டாம், இதோ நான் ஒருவழி கண்டு பிடித்து விட்டேன். இந்த வரும்படியைக் கொண்டு நீங்களும் நானும் நன்றாக வாழலாம்,” என்றான் அவன். தாய் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, “நான் எனக்காகக் கவலைப் படவில்லை. குழந்தாய்! உனக்காகத்தான் கவலைப் பட்டேன். இனிக் கவலையில்லை,” என்றாள்.
அடுத்தநாள் அவன் இன்னும் நல்ல விறகு தேடிக்குன்றில் ஏறினான்; அங்கே ஒரு புறமாகப் பாரிய அரிமாவின் உருவம் ஒன்றைக் கண்டான். அது, கல்லில் உயிருடையது போல அழகாகச் செதுக்கப்பட்டிருந்தது. காற்று அதன் அகன்ற மூக்குத் தொளைகளின் வழியே செல்லும்போது அது உண்மையிலேயே உறுமுவது போலவும், வெயில் அதன் கண்களிலும் பிடரியிலும் படும்போது அது உண்மையிலேயே பிடரிமயிரைச் சிலிர்க்க வைத்து உறுத்துப் பார்ப்பது போலவும் தோன்றிற்று.
இந்த அரிமாவின் உருவம் இம் மலைக்காட்டின் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என்று இளைய மகன் எண்ணினான். அதன் அருகே சென்று அவன் அதற்கு வணக்கம் செலுத்தினான். “நாளை முதல் என் வரும்படியில் ஒரு பகுதியைச் செலவுசெய்து உனக்குப் பூசனை செய்கிறேன்,” என்று அவன் சொல்லிக் கொண்டு திரும்பினான். அவன் சொற்களைக் கேட்டு அரிமா தலையைச் சிறிது அசைத்தாக அவனுக்குத் தோன்றிற்று.
அன்றுமாலை விறகு விற்றபின் அவன் வீட்டுக்கு வேண்டிய பொருள்களுடன் பொருளாக, இரண்டு மெழுகுத்திரி விளக்குகள் வாங்கினான். மறுநாள் மாலையில் அவன் அரிமாவின் முன் இருபுறங்களிலும் இரண்டு விளக்குகளையும் ஏற்றிவைத்தான். நிலத்தில் விழுந்து அரிமாவை வணங்கினான். அப்போது அவன் வியக்கும்படியாக அரிமா உருவத்திலிருந்து மனிதக்குரல் கிளம்பிற்று, “அன்பனே! நீ இங்கே ஏன் வந்தாய்? என்ன செய்கிறாய்?” என்றது அது.
முதலில் இளைஞன் சிறிது அச்சம் கொண்டான். பின் எழுந்து நின்று தன் கதையைக் கூறினான். “தெய்வமாகிய நீங்கள் இரண்டு நாள் உதவியது போலவே என்றும் உதவவேண்டும்,” என்றான். இத்தடவை அரிமாவின் வாய்திறப்பதையும் அது பேசுவதையும் அவன் கண்ணாரக் கண்டான்.
“நல்லது. நீ நாளை முதல் விறகுவெட்டித்தான் பிழைக்கவேண்டும் என்றில்லை. ஒரு மரத்தொட்டி வாங்கிக் கொண்டு நாளை இந்நேரம் வா. உனக்கு வேண்டிய அளவு பணம் தருகிறேன்,” என்றது.
“நல்லது. நன்றி,” என்றுகூறி இளைஞன் நகர் சென்றான். அன்று அவன் முன்னாள் வழக்கப்படி இரண்டு மெழுகுத் திரிகளுடன், ஒரு மரத் தொட்டியும் வாங்கிக் கொண்டான். மறுநாள் அவன் மரம் வெட்டப்போகவில்லை. மாலையில் அரிமாவின்முன் விளக்கேற்றிவைத்துத் தொட்டியையும் அதன்முன் வைத்து வணங்கி நின்றான். அரிமா வாய் திறந்தது.
“அன்பனே! தொட்டியை என் வாய்க்கு நேர் எதிராக வைத்துவிட்டு நில். என் வாயிலிருந்து அதில் பொன் காசுகள் விழும். தொட்டி கிட்டத்தட்ட நிரம்பியதும், நீ போதும் என்று கூறிவிடவேண்டும். ஏனென்றால், ஒரு காசு கீழே விழுந்தால்கூடப் பெரிய தீமைகள் ஏற்படும்,” என்றது அரிமா.
இளைஞன் அது கூறியபடியே செய்தான். அரிமாவின் கண்களில் பொன்நிலவொளி வீசிற்று; அதன் வாய் திறந்தது; வாயிலிருந்து சரசர அருவி போல் பொன்காசுகள் சொரிந்தன; தொட்டியில் அவை கணகணவென்று ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தன; விரைவில் தொட்டி நிறையலாயிற்று. வியப்பாலும் மகிழ்ச்சியாலும் இளைஞன் சிறிது நேரம் உணர்வற்று நின்றான். ஆனால், அரிமாவின் எச்சரிக்கை அவனைத் தட்டி எழுப்பிற்று. தொட்டி கிட்டத்தட்ட நிறைந்ததும் அவன், “போதும்” என்றான். அருவி நின்றது. அரிமாவின் வாயும் மூடிற்று. அவன் மீண்டும் அரிமாவுக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.
அது முதல் அவன் வறுமை வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இளைஞன் வீடு இருந்த இடத்தில் இப்போது ஒரு இடமகன்ற பண்ணை இருந்தது. ஆட்டுக் கொட்டில், மாட்டுக் கொட்டில், கோழிக் கூண்டுகள், புறாக் கூண்டுகள் அதில் நிரம்பியிருந்தன. வேலையாட்கள் பலர் இருந்தனர். இளைஞனும் அவன் முதிய தாயும் கவலையற்று இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
மூத்தமகன் தன் தாயையும் இளைய தம்பியையும் விரைவில் மறந்து விட்டான். அவர்கள் போனதால் தனக்கு ஏற்படும் மிச்சத்தைக் கணக்கிட்டும், தன் செலவுகளை இன்னம் குறைத்துப் பொருள் திரட்டும் வகைகளைக் கணக்கிட்டும் அவன் நாள் போக்கினான். ஆனால், அவன் முயற்சி பெரிதானாலும், சேர்ந்த பொருள் சிறிதாகவே இருந்தது. சிலசமயம், எதிர்பாராத நோய் ஏற்பட்டு, அவன் உழைப்பைக் குறைக்கும். சிலசமயம், மற்றப் பண்ணைகளின் விளைச்சல் பெருகியதால், பொருள் மலிவாகி விடும். அவன் விளைச்சல் பெரிதானாலும், கணக்கிட்ட அளவு விலை அவனுக்குக் கிட்டாது. இந்நிலையில் பணத்தை எண்ணிக்காத்து அவன் மனமுளைந்து வாழ்ந்தான்.
இளையமகனின் புதிய பண்ணையின் புகழ் இந்நிலையில் அவனுக்கு எட்டிற்று. அது யாரோ ஒருவர் என்று எண்ணியபோதே அவனுக்குப் புழுக்கம் பெரிதாயிருந்தது. ‘நான் எவ்வளவு ஈயாகத் தேடி எறும்பாகச் சேர்த்து வைத்தும் இந்தப் புதுச் செல்வனவ்வளவு திரட்ட முடியவில்லையே!’ என்று அவன் மனமாழ்கினான். புதிய செல்வன் வேறு யாருமல்ல; திறமையற்றவன், சோற்றுக்குப் பாரமாயிருந்தான் என்று தாயுடன் தான் வெளியேற்றிய தன் தம்பியே, என்று தெரிந்தபோது அவனுக்குப் புழுக்கத்துடன் பொறாமையும் வீறிட்டெழுந்தது.
அவன் தன் மனைவியிடம் தன் அவப்பேற்றைக் குறித்து நொந்து குறைப்பட்டான். மனைவி, “அவர்களைப் போய்த்தான் பார்ப்போமே! அவர்கள் வளத்தையும், அது வந்த வகையையும் உசாவி உணர்ந்து வரலாம்?” என்றாள். அவனும் ‘சரி’ என்று புறப்பட்டான். தம்பிக்குப் பரிசளிப்பதற்காக ஒரு மலிவான ஆடையையும் எடுத்துக் கொண்டான்.
அவர்கள் இளையமகன் வீட்டுக்கு வந்தபோது அவன் வெளியே போயிருந்தான். ஆனால், தாய் தன் மூத்த மகனையும் அவன் மனைவியையும் அன்பாக வரவேற்றாள். தங்கு தடையில்லாமல் அவள் உயரிய உணவும் வாய்ப்பு நலங்களும் அவர்களுக்கு அளித்தாள். தம்பி வந்ததும் அவனும் மற்றுமொரு முறை இன்மொழிகளால் இருவரையும் வரவேற்றான்.
தம்பி செல்வத்தைக் கண்டு அண்ணன் மகிழவில்லை. அவன் அன்பு வரவேற்புக்கும் மகிழ்ச்சி கொள்ளவில்லை. தாய் இதைக் கண்டு உள்ளூர வருத்தம் அடைந்தாள். ஆனால், தம்பி ‘அவனுக்கு வேறு ஏதேனும் வருத்தமிருக்குமானால், அறிந்து ஆவன செய்வோம்,’ என்று கருதினான். “அண்ணா உங்கள் உள்ளத்தில் ஏதோ சிந்தனை செய்வதாகத் தோன்றுகிறது. தங்கள் கவலை என்ன? நான் உங்கள் தம்பி. முடியுமட்டும் உங்கள் கவலையைப் போக்குவேன்,” என்றான்.
அன்பின் தன்மை அறியாத அண்ணன், இதில் தன் ஆவல் தீரவகை உண்டு என்பதை மட்டும் கண்டான். “இவ்வளவு செல்வத்தை நீ எப்படி எய்தினாய்? எனக்கு அது தெரிய வேண்டும்! என்று கேட்டான்.” கள்ளமும் கபடும் அற்ற தம்பி தன் கதை முழுதும் கூறினான். அத்துடன், “நீ மட்டும் இவ்வளவு பாடுபட்டு உழைப்பானேன், அண்ணா! என்னைப் பின்பற்றி நீங்களும் கல் அரிமாவிடம் சென்று வேண்டிய பணம் பெறலாம்,” என்றான்.
பாம்புக் குஞ்சுக்கு நீந்தப் பழக்கியா தரவேண்டும்? தம்பி சொல்வதற்கு முன்பே அண்ணன் உள்ளம் அந்த எண்ணச் சுழலிலேயே சுழன்றது. கதையின் பிற்பகுதியைக் கேட்க அவனுக்குப் பொறுமையில்லை. கீழே ஒரு பொன்கூட விழாமல் முன்னெச்சரிக்கையுடன் இருந்து, “போதும்” என்று சொல்லிவிட வேண்டும் என்று தம்பி வற்புறுத்தியைதையும், அவன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
அவன் விரைந்து தம்பியிடம் விடைபெற்றுக் கொண்டு மனைவியுடன் சென்றான். மனைவியை வீட்டில் கொண்டு போய் விட்டதுதான் தாமதம். அவன் புறப்பட்டுவிட்டான்! நகருக்குச் சென்று பெரிய மரத்தொட்டிக்காகக் கடைத்தெரு முழுதும் அலைந்தான்.
அவன் விரும்பிய அளவு பெரிய மரத்தொட்டி எங்கும் அகப்படவே யில்லை. ஆனால், கடைகளில் இருந்த தொட்டிகளில் மிகப் பெரியதான ஒன்றை அவன் வாங்கினான். அதுகூட அவனால் எளிதில் தூக்கமுடியாத அவ்வளவு பெரிதாயிருந்தது. பணப் பேரவாவால் இதுவரை தூக்கியறியாத அவ்வளவு பளுவுடைய அத் தொட்டியைச் சுமந்து கொண்டு, அவன் மலையேறிச் சென்றான்.
தம்பியைப் போலவே அவன் தான் கொண்டு வந்திருந்த மெழுகுத்திரி விளக்குகளை இருபுறமும் ஏற்றிவைத்தான். பின் உரத்த குரலில் அரிமாவுக்கு வணக்கம் தெரிவித்தான். அவன் குரலில் பணிவு இல்லை. உள்ளத்தில் வணக்க உணர்ச்சி இல்லை. பணப் பேரவா ஒன்றுக்கே அதில் இடமிருந்தது.
தனக்கு இவ்வழியை ஒளியாது கூறிய தம்பியிடம் அவனுக்கு நன்றி யில்லை. அவனைவிடத் தான் மிகப் பேரளவில் பணம் திரட்டி, அவனைவிடப் பெரிய பண்ணை வைத்தாளவேண்டும் என்ற போட்டியுணர்ச்சியும், வீம்பு உணர்ச்சியுமே அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன. அவன் அரிமாவிடம் இரைந்து பேசினான்;
“எனக்குப் பெருஞ் செல்வம் வேண்டும். மிகப் பெருஞ்செல்வம் வேண்டும்.” இதுவே அவன் வணங்கிய வணக்க வழிபாடாயிருந்தது. அரிமா வாய்திறந்து பேசிற்று.
“நீ யார்? உனக்கு ஏன் பெருஞ்செல்வம் வேண்டும்?” என்று கேட்டது. “சில நாட்களுக்கு முன் நீ ஒரு மரத்தொட்டி நிறையப் பொன் காசு கொடுத்தாயே, அந்த மனிதன் அண்ணன் நான். நீ சொல்லாமலே அவனைவிடப் பெரிய தொட்டியும் வாங்கி, அவனைவிடப் பெரிய மெழுகுத்திரிகளும் கொண்டு வந்திருக்கிறேன். அவனைவிட மிகுதியான செல்வம் எனக்கு வேண்டும். விரைவில் கொடு,” என்றான்.
அரிமாவின் உள்ளிருந்து ஒரு கனைப்புக்குரல் கேட்டது. அது கூறிற்று. “அப்படியா? சரி. தொட்டியை என் முன்வை. ஆனால், தொட்டி எவ்வளவு பெரிதாயிருந்தாலும், ஆது நிரம்பி வழியுமுன் நீ ‘போதும்’ என்று கூறிவிட வேண்டும். ஏனென்றல், ஒரு காசு கீழே மண்ணில் விழுந்துவிட்டால் கூட, அதற்குப்பின் ஏற்படும் தீமைக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றான்.
“ஓகோ, அஃதெல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ மட்டும் வாயை அகலத்திறந்து நிறையப் பொன் சொரிய வை!” என்று அவன் படபடப்புடன் கூறினான். அரிமா வாய்த்திறந்தது. பொன்னருவி பாய்வது போலப் பொற்காசுகள் கலகலவென்ற இனிய குரலுடன் தொட்டியில் வந்து விழுந்தன. பேராவலுடனும் பெருமகிழ்ச்சியுடனும் பொன்னருவியையே பார்த்தவனாய் அவன் உணர்ச்சி பொங்க நின்றான்.
தொட்டி விரைவில் நிறைந்துவிடாதபடி அவன் அடிக்கடி அதைக் குலுக்கினான். பொன் காசுகளை அதில் அடர்த்தியா யிருக்கும்படி திணித்தான். அப்படியும் தொட்டி நிரம்பத் தொடங்கிற்று. அவன் தொட்டி நிரம்புவதில் கருத்துச் செலுத்தாமல் பொன்னருவியையே பார்த்துக் கொண்டிருந் தான். போதும் என்று அவன் சொல்லவில்லை.
பொன் காசுகள் வழிந்து கீழே விழுந்தன. பொன் அருவி நின்றுவிட்டது. அவன் கையை அதன் வாயில் நுழைத்தான். அரிமா வாய் மூடிற்று. அவன் கை கல் பிளவில் இறுக்கமாகப் பற்றப்பட்டுவிட்டது. அவன் கையை இழுத்துப் பார்த்தான். ஆடினான், அலறினான்; அரிமாவைத் திட்டினான். அதன் மீது காலால் ஏற்றினான்; அல்லல்பட்டான்; எதுவும் பயனில்லை; கல் அரிமா கல்லாகவே இருந்துவிட்டது.
மூத்தவன் மனைவி தன் கணவன் பெரும் பொருளுடன் திரும்பி வருவான் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தாள். மாலை சென்று இரவு ஏறஏற அவள் படபடக்கும் நெஞ்சுடன் அவன் வரவை எதிர்பார்த்தாள். நள்ளிரவாகியும் அவன் வராதபோது, அவளைக் கவலைகள் பிடுங்கித்தின்றன.
இளையவன் கூறிய செய்தி உண்மைதானோ அல்லவோ என்று ஐயுற்றுச் சிலசமயம் அவள் மனம் ஊசலாடிற்று. பணப்பேரவா வரவரத் தணிந்தது. பணமில்லாவிட்டாலும் போகட்டும். கணவன் திரும்பி வரவேண்டும் என்று அவள் ஏங்கினாள். பொழுது விடிந்ததும் அவள் தானே மலையேறி வந்தாள்.
கணவன் இருந்த நிலைகண்டு அவள் திகைத்தாள். கல்லில் சிக்கிய கையுடன் அவன் இரவு முழுதும் கல்லில் சாய்ந்தே நின்றிருக்க வேண்டியதாயிற்று. உட்காரவோ படுக்கவோ முடியாமல் கல்லில் சிக்குண்டகை தடுத்தது; பசியாலும் நீர் வேட்கையாலும் அவன் உணர்வு குன்றினான். மனைவி அருகிருந்து நீர் கொண்டுவந்து கொடுத்தாள். வீடுசென்று உணவு கொண்டுவந்து கொடுத்தாள். ஆனால் இனி என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை.
தனக்கு நடந்த எல்லாவற்றையும் அவன் தன் மனைவி யிடம் கூறினான். தன் பேரவாவுக்கு அப்போதும் அவன் வருந்தவில்லை. எப்படித் தப்புவது என்று எண்ணமிட்டுத்தான் கவலையுற்றான். “சரி, நீ தொட்டியில் நிரப்பிய பொன் என்னவாயிற்று” என்று கேட்டாள் மனைவி. அவன் எதிரே சுட்டிக் காட்டினான். தொட்டி நிறையக் கற்கள்தான் இருந்தன. அரிமா வாய்மூடியதும் பொன் காசுகள் கற்களாயின.
மனைவி நாள்தோறும் உணவும் நீரும் கொண்டு வந்து கொடுத்து, அவனுக்கு ஆறுதல் கூறினாள். ஆனால், இப்படி நெடுநாள் இருக்கமுடியாது என்பதை அவளும் அறிந்தாள். ஒருநாள், அவள் அழாக் குறையாக அவனிடம் தன் இக்கட்டுகளை எடுத்துக் கூறினாள்.
“வரும்படி இல்லாத நிலையில் நான் என் நகையை விற்று இதுவரை என் வாழ்வு கழித்து, உங்களுக்கும் உணவு முதலியன கொண்டுவந்தேன். என்னிடம் இப்போது ஒரு செப்புத் துட்டுக்கூட இல்லை, என்ன செய்வது?” என்றாள் அவள்.
அரிமாவின் கல் உடல் குலுங்கிற்று. அது, “ஆகா, ஆகாகா,” என்று சிரித்தது. அந்த நேரம் பார்த்து மனைவி விழிப்புடன் கணவன் கையை வெளியே இழுத்தாள். இருவருமாக இப்போது இளையவனை நாடிச் சென்றார்கள். அவர்கள் கதை முழுதும் கேட்ட இளையவன் வருத்தமுற்றான்.
அண்ணனுக்கு ஒரு சிறிய பண்ணை புதிதாக ஏற்படுத்து வதற்குப் போதிய பணம் தருவதாகக் கூறினான். ஆனால், தாய் குறுக்கிட்டு, மூத்த மகனிடம், “அப்பா, உனக்கு இதுவரை கிடைத்த தண்டனை தகுதியுடையது என்பதை மறந்து விடாதே. அது உன் பேராவாவினால் வந்தது. அதுமட்டு மல்ல கல் அரிமாவின் செய்தியை உனக்குச் சொன்ன தம்பியிடம், உனக்கு நன்றியும் இல்லாமல் போயிற்று. அவன் பணமில்லாதபோது நீ அவனை உன் தாயுடன் வெளியேற்றினாய். இப்போது நீயும் உன் மனைவியும் அதே நிலையில் வந்தபோது அவன் எப்படி நடந்துகொள்கிறான், பார்,” என்றாள்.
அண்ணன் தன் பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்து விட்டுத் தம்பியிடம் நன்றிகூறிச் சென்றான்.
தம்பி நாகன்
தென் அமெரிக்கா நாட்டுக் கதை)
ஒரு காட்டின் அருகே மாரிகிதா என்ற ஓர் அழகிய இளம்பெண், தன், இரண்டு அண்ணன்மாருடனும் தந்தை யுடனும் வாழ்ந்தாள். அண்ணன் மாருக்குத் தான் ஒரு தங்கை இருப்பது போல, தனக்கு ஒரு தம்பி இல்லையே என்று மாரிகிதா அடிக்கடி வருந்தினாள். ஆனால், அவள் வாழ்வில் எப்படியோ எதிர்பாராத வகையில் ஒரு எதிர்பாராத தம்பி வந்து சேர்ந்தான். அவன்தான் தம்பி நாகன். அவன் ஒரு மனிதஇனத் தம்பியல்ல, நாகஇனத் தம்பி.
ஒருநாள் மாரிகிதா தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு கொடிய கழுகுக்கு அஞ்சி ஒரு சிறு பாம்புக்குஞ்சு அவளருகே ஓடிவந்தது. அவள் உடனே இரக்கமுற்று அதைத் தன் வெற்றிலைச் செல்லத்துக்குள் எடுத்து வைத்துக் கொண்டாள்.
பாம்புக்குஞ்சு செல்லத்துக்குள் இருந்தபடியே “அக்கா, நீ செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்,” என்றது.
அவளைத் தங்கையென்று அழைத்தவர் உண்டு. அக்கா என்று அழைத்தவர் யாரும் கிடையாது. “அக்கா” என்று அழைத்த பாம்பிடம் அவள் தம்பிக்காக அலந்த அலப்பு முழுதும் சென்றது. அவள் நாள்தோறும் தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை அதற்கு அளித்தாள். தன் துணிமணிகளில் ஒவ்வொன் றாகக் கத்தரித்துத் தைத்து அதற்குத் தனியாக ஒரு பெட்டி யினுள்ளே படுக்கை தலையணை ஆகியவை செய்தாள். நாகத் தம்பியாகிய தம்பிநாகன் அவள் அன்பாதரவால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
ஓய்ந்த நேரமெல்லாம் மாரிகிதா தனியிடம் சென்றிருப்பாள். “தம்பி நாகா, தம்பி நாகா, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டவாறே அவள் தன் பெட்டியைத் திறந்து நாகனுக்குத் தான் சேமித்துவைத்த உணவுப் பண்டங்களைக் கொடுப்பாள். நாகனும் தலையை உயர்த்தி எல்லாவற்றையும் தின்றுவிட்டு, “அக்கா மாரி, அக்கா மாரி! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கும். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்தான் இரவில்கூட மாரிகிதா தூங்குவாள்.
மாரிகிதா அவளுக்குக் கொடுத்த உணவுப் பண்டங்கள் யாவற்றையும் விரைந்து தின்னாமல் மீதி வைக்கப் பார்ப்பதையும், அடிக்கடி தனிமை நாடியதையும் அவள் தந்தை கவனித்தார். அவள் தனிமையில் என்ன செய்கிறாள் என்பதை வேலையாட்கள் மூலம் அவர் ஆராய முற்பட்டார். நாகன் இதற்குள் பெரிய பாம்பாக வளர்ந்துவிட்டதனால் வேலையாட்கள் அதைக்கண்டு அஞ்சி, தந்தையிடம் கூறினார்கள். அவர் உடனே பாம்பைக் கைப்பற்றி அதைக் காட்டில் கொண்டு சென்று கொன்றும் விடும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டார்.
தம்பி நாகன் உயிர்போனால் என் உயிரும் போய்விடும் என்று கூவினாள் மாரிகிதா. அதன் பேரில் தந்தை, “சரி, அவளுக்காக அதைக் கொல்லாமலே காட்டில் விட்டு விடுங்கள்,” என்றார்.
நாகன் போகுமுன் மாரிகிதாவிடம் தேறுதல் மொழிகள் சொல்லிற்று. "அக்கா மாரி, அக்கா மாரி! நான் பிழைத்திருக்கும் மட்டும் உன்னை மறக்க மாட்டேன். ஆனால், நீ என்னை மறந்துவிடாமலிருக்க நான் ஒரு ஏற்பாடு செய்துவைத் திருக்கிறேன்.
இன்று முதல் நீ சிரிக்கும் பொழுதெல்லாம் முத்துமணிக் கற்கள் உதிரும்; நீ சீவி முடிக்கும்போதெல்லாம் உதிர்கிற தலைமுடிகள் மறு நாளைக்குள் பொன் கம்பிகளாகும்; நீ கை கழுவும் நீரெல்லாம் ஒரு நாளைக்குள் வெள்ளிப் பாளமாகும்; இவற்றைக் கண்டதும் நீ என்னை நினைத்துக் கொள்," என்றது.
அவள் பாம்பின் சொற்களை அவ்வளவாக நம்பவில்லை. ஆனால், அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்த ஒருவன் அதை மெய்ப்பிக்க நேர்ந்தது.
“அம்மா, நாங்கள் பாம்பை விட்டுவிட்டுத் திரும்பி வருகையில், திடீரென்று பின்னே சலசல என்ற அரவம் கேட்டது. நாகள் எங்களைத் தொடர்ந்து விரைந்து வருவதுகண்டு அஞ்சினோம். எங்கள் உயிரைத்தான் குடிக்க வருகிறான் என்று நடுநடுங்கினோம். ஆனால், கிட்டவந்ததும், தன் வாயில் சுருட்டி வைத்திருந்த மூன்று பழங்களை எங்கள் முன் வைத்துவிட்டுப் பறந்தோடிற்று. நாங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றியாக, அந்தப் பழங்களை எங்களுக்குத் தரவே அது இவ்வளவு விரைந்து வந்து எங்களை அச்சுறுத்தியது என்று அறிந்தோம்,” என்றான் வேலையாள்.
இது கேட்ட மாரிகிதா களுக்கென்று சிரித்தாள்.
அவள் சிரித்த சிரிப்பிலிருந்து உதிர்ந்த முத்து மணிக்கற்கள் அந்த முறை முழுதும் சிதறின.
தம்பி நாகன் வரங்கள் மூன்றில் ஒன்றின் உண்மை மெய்யாகிவிடவே, மாரிகிதா மற்ற இரண்டையும் தேர்ந்து பார்த்தாள். அன்று அவள் உதிர்த்த முடியும் கைகழுவிய நீரும் மறுநாள் தங்கக் கம்பிகளாகவும் வெள்ளிப்பாளமாகவும் மாறி இருந்தன.
மாரியின் அண்ணன்மார்கள் இவற்றையெல்லாம் பார்த்தனர். இத்தகைய புதுமைவாய்ந்த தங்கையை ஓர் அரசனைத் தவிர வேறு யாரும் மணம்புரியக் கூடாதென்று அவர்கள் முடிவுகட்டினர். இந்த எண்ணத்துடன் அவர்கள் அரசவையில் சென்று அவையோருடன் கலந்து கொண்டனர். அரசன் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் சமயம்பார்த்து, அவர்கள் தங்கள் குடும்பச் பேச்சை எடுத்தனர். “அரசே, எங்களுக்கு மிகப் புதுமை வாய்ந்த ஒரு தங்கை இருக்கிறாள். அவள் சிரிக்கும்போது முத்துக்கற்கள் உதிர்கின்றன. கை கழுவியநீர் வெள்ளிப் பாளமாகிறது. சீவி உதிர்ந்த முடி தங்கக் கம்பியாகிறது,” என்றார்கள்.
“அப்படியா? அப்படியானால் அவளை நான் மணந்து கொள்கிறேன்,” என்றான் அரசன். அடுத்த நாளே அரசனின் தூதுவர்கள் மாரிகிதாவின் தந்தையிடம் சென்று பெண் கேட்டனர். அவனும் மகிழ்வுடன் இணங்கினான். மாரிகிதாவை எஃச்திஃவானியா என்ற தோழியுடனும் அவள் தாயான செவிலியுடனும் அனுப்பிவைத்தான்.
செவிலியும் அவள் மகள் எஃச்திஃவானியாவும் பேராவற்காரிகள். அவர்கள் இருவரும் மாரிகிதாவின் நல்வாய்ப்புக் கண்டு பொறாமை கொண்டனர். அவளைக் கொன்றொழித்து அவள் இடத்தில் அவள் வாய்ப்பு நலங்களைத் தானே பெற எஃச்திஃவானியா விரும்பினாள். ஆகவே, தாயும் மகளும் காட்டுவழியில் மாரிகிதாவைத் தாக்கி அவள் கண்களைப் பிடுங்கினர். அந்நிலையில், காட்டு விலங்குகளுக்கு இரை யாகட்டும் என்று அவளை விட்டுவிட்டு, அவர்கள் அரசனிடம் சென்றனர் எஃச்திஃவானியாவையே மாரிகிதா என்று நம்பவைத்ததனால், அரசன் அவளை மணந்துகொண்டான்.
மாரிகிதாவின் கண்கள் அழகாயிருந்ததனால், எஃச்திஃவானியாவின் தாய் அவற்றை எறிந்துவிடாமல் ஒரு கண்ணாடிச் சிமிழில் அடைத்து வைத்துக்கொண்டாள்.
எஃச்திஃவானியாவிடம் மாரிகிதாவின் அண்ணன்மார் கூறிய பண்புகள் இருக்கின்றனவா என்று மன்னன் முதல்நாளிலேயே தேர்ந்து பார்த்தான். அப்பண்புகள் ஒரு சிறிதும் இல்லை என்று கண்டவுடனே, அவனுக்கு அவர்கள்மீது கடுஞ்சீற்றம் ஏற்பட்டது. அவனைப்போலவே அவர்களுக்கும் மாரிகிதாவின் இடத்தில் எஃச்திஃவானியா இருப்பது தெரியாதாதலால், அவர்கள் விழித்தார்கள். அரசன் அவர்களைக் கொன்று பிணங்களைக் கோட்டைக்கு வெளியே எறியச் செய்தான்.
மாரிகிதா என்று நினைத்த எஃச்திஃவானியா மன்னன் சீற்றத்துக்கு ஆளாகவில்லை. அரசி என்ற பெயரால் அவள் தப்பினாள். அவளும் அச் சீற்றத்துக்கு அஞ்சி நடந்து கொண்டாள். நல்ல காலமாக அவள் விரைவில் கருவுற்றாள். நல்ல காலமாக அவன் விருப்பமறிந்து நடக்க முயன்றாள். அவளும் ஒவ்வொரு நாளும் தான் கண்ட ஏதேனும் ஒரு புதுப்பொருளை வாங்கி மனமகிழ்ச்சியுடன் இருந்தாள்.
காட்டில் விடப்பட்ட மாரிகிதா கண் தெரியாமல் மயங்கினாள். அதேசமயம் காட்டில் பலவகைக் கொடு விலங்குகளின் குரல்களும் அவள் செவிகளிற்பட்டு அவளைக் கலங்கவைத்தன. சிறிது நேரத்தில் இடியும் மின்னலும் புயலும் மழையும் வந்து அவளை இன்னும் அலைக்கழித்தன. காலையில் புயலில் அடிப்பட்ட இழைதழை சகுருகளுடன் அவளும் ஒரு இலை தழை சருகு மூடிய இளந்தளிராகச் சோர்ந்துகிடந்தாள்.
காட்டில் விறகுதேடப் புறப்பட்ட ஒரு கிழவன் புயலில்சிக்கி, விறகுக்காக கொண்டுவந்திருந்த கழுதையுடன் திரும்பிக் கொண்டிருந்தான். மாரிகிதாவின் நிலை கண்டு இரங்கி அவளை ஓரளவு தேற்றி உணர்வு வருவித்துத் தன் கழுதையிலேற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தான்.
கிழவன் பிள்ளையற்றவன் அல்ல. அவனுக்கு ஐந்து பெண்மக்கள் இருந்தார்கள். அவன் எப்போதும் கழுதையுடன் கழுதையாக உழைத்தாலும், அவர்கள் அவனை ஓயாது கடிந்து குறைகூறியே வந்தனர். விறகுக் கட்டினிடமாக ஒரு பெண்ணை அவன் கூட்டிக்கொண்டு வந்ததே, அவர்கள் அவன்மீது சீறி விழுந்தார்கள். மாரிகிதாவையும் அவர்கள் வைதும் அடித்தும் இழிவு படுத்தினர். இதைக்கண்ட கிழவன் உள்ளம் பெரிதும் துணுக்குற்றது.
மாரிகிதாவின் பொறுமை அந்த ஐவரில் ஒருத்தியின் மனத்தைச் சிறிது இளக்கிற்று. அவள் மற்றவர்கள் கொடுமை களைக் கடிந்து மாரிகிதாவைத் தன்னுடன் படுக்கவைத்துக் கொண்டாள். மாரிகிதா அவளுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்க விரும்பினாள்.
அவள் தன் கைகளைக் கழுவ நீர் கோரினாள். மற்றவர்கள், “போய் ஆற்றில் கழுவு போ,” என்றார்கள். ஆனால், இளகிய மனமுடையவள் வட்டிலில் நீர் கொண்டு வந்தாள். மாரிகிதா கை கழுவியபின், “இதே நீரை நாளை வைத்திருந்து கொடு,” என்றாள்.
அவள் புதிதாகத் தண்ணீரைச் செலவுசெய்ய அஞ்சு கிறதாக அத்தோழி எண்ணினாள். ஆனால், மாரிகிதா மீண்டும் வற்புறுத்தவே, மற்றவர்களுக்குத் தெரியாமல் வட்டிலைப் புதரிடையே மறைத்துவைத்தாள். வைக்கும்போது ஒன்றிரண்டு சொட்டுத் தண்ணீர் நிலத்தில் சிந்திற்று.
இரவு தலை கோதியபின் முடிகளையும் மாரிகிதா வைத்திருந்தாள்.
மறுநாள், வட்டில்நீரை விறகுவெட்டி மகள் சென்று எடுக்கப்போனாள். தண்ணீர் சிந்திய இடத்தில் வெள்ளித் துண்டுகள் கிடந்தன. வட்டில் உட்புறம் ஒரே வெள்ளிப் பாளமாய் இருந்தது. அதை அவளால் எளிதில் தூக்க முடிய வில்லை. தூக்கிய போதும் பளுவால் வட்டில்தான் உடைந்தது; பாளம் அப்படியே கையில் நின்றது.
மாரிகிதா அத்தோழியிடம், “இந்த வெள்ளியை உன் தந்தையிடம் கொடுத்து விற்கச் சொல். அவர் இனி விறகுவெட்ட வேண்டியதில்லை,” என்றாள்.
இன்னொரு மகளை அழைத்துத் தங்கக் கம்பிகளாய் விட்ட தலை முடிகளைக் கொடுத்து, “உன் தந்தையிடம் இவற்றைக் கொடுத்து விற்கச் சொல். அவர் இனி விறகு வெட்டவேண்டிய தில்லை,” என்றாள்.
விறகுவெட்டியின் வீடு இப்போது செல்வர் வீடாயிற்று. அவன் புதல்வியரும் நல்ல ஆடையணி மணி பூண்ட உயர் நங்கையராயினர்.
மாரிகிதாவின் செல்வம் உண்டுபண்ணும் ஆற்றல்களைக் கண்ட விறகுவெட்டியின் மக்கள் அனைவருமே இப்போது அவள் குறிப்பறிந்து நடக்கும் தோழிகள் ஆயினர்.
ஒருநாள் தோட்டத்தின் பின்புறம் காட்டை நோக்கி இருந்த வாசற் படியிலிருந்த மாரிகிதா தலைகோதிக் கொண்டிருந்தாள். அவள் தோழியர் சற்றுத் தொலைவில் பேசிக் கொண்டிருந்தனர். திடுமென அவர்கள் அச்சத்துடன் அவளை அணுகி,
“மாரி, உடனே ஓடிவிடு உன்னை நோக்கி ஒரு பெரும்பாம்பு விரைவாக வருகிறது,” என்றனர்.
மாரிகிதா பாம்பைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அது தம்பி நாகனாயிருக்கலாம் என்று எண்ணி அவள் வாளா இருந்தாள். “அது ஒன்றும் செய்யாது. அஞ்சாதேயுங்கள்” என்றாள்.
அவள் நினைத்தபடி அது தம்பிநாகன்தான். அது அவள் அருகே வந்து உராய்ந்தது அவள் அதைத் தடவிப் பார்த்தாள். உடனே அதற்கு ஏதோ ஐயம் ஏற்பட்டது. அது தலையை உயர்த்தி அவள் முகத்தை உற்றுப் பார்த்தது. “ஐயோ அக்கா, நான் கேள்விப்பட்டேன். அந்தப் படுபாவி உன் கண்ணைப் பிடுங்கியது உண்மைதான் கண் தெரியாமல் நீ என்ன துன்பம் அடைகிறயோ!” என்று கூறி பாம்பு வருந்தியது.
அவள் பாம்புடன் பழக்கமாகிப் பேசுவது கண்ட தோழியர் பின்னும் வியப்படைந்தனர். அதனால், அவள் மதிப்பு இன்னும் உயர்ந்தது.
தம்பி நாகன் இப்போது மாரிகிதாவிடம் ஒரு அழகிய பூஞ்செண்டைக் கொடுத்தது. “இதை யாரிடமாவது அனுப்பி எஃச்திஃவானியாவிடம் விற்பனைக்குக் கொண்டுபோகச் சொல். ஆனால், இதற்கு விலை இரண்டு கண்கள் என்று சொல்லட்டும். உன் கண்கள் அவள் தாயிடம் இன்னும் இருக்கின்றன. அவை வந்ததும் உன் கண்களைக் குணப்படுத்துகிறேன்,” என்றது.
மாரிகிதா அவ்வாறே செய்தாள். விறகுவெட்டியாக முன் இருந்த அவள் தோழியரின் தந்தையே அதைக் கொண்டு சென்றான். எஃச்திஃவானியா புதுப்பொருள் கண்டதும் வாங்கும் வழக்கப்படி, அதை வாங்க முனைந்தாள். அதற்கு விலை இரண்டு கண்கள் என்று கேட்டதும் அவள் என்ன செய்வது என்று விழித்தாள். ஆனால், அவள் தாய் உடனே மாரிகிதாவின் கண்களை நினைத்துக் கொண்டு, அவற்றைப் போய் எடுத்து வந்தாள்.
கண்கள் வந்து சேர்ந்ததும் தம்பி நாகன் அவற்றை ஒவ்வொன்றாகத் தன் பிளந்த நாவின் நுனியில் வைத்து அவள் கண்குழியில் ஊதிற்று. கண்கள் உடனே பொருந்திக் கொண்டன. கண்கள் முன்னிலும் அழகா யிருந்தன. அவள் பார்வை முன்னிலும் கூர்மையுடையனவாயிருந்தன.
அவள், தம்பிநாகனை எடுத்து முத்தமிட்டுக் கொண்டாள். அவள் கண்பெற்ற கதை கேட்டுத் தோழியரும் அவர்கள் தந்தையும் மகிழ்ந்தனர்.
தம்பிநாகன் ஒருநாள் மாரிகிதாவிடம் வந்து மற்றுமோர் திட்டம் கூறிற்று. அவள் பாம்பு இனத் தம்பியின் அறிவை மெச்சி அதன்படி நடக்க இணங்கினாள்.
அடுத்த நாள் இருவரும் அரசன் அரண்மனை சென்றனர். தம்பிநாகன் எளிதில் காவல் கடந்து சென்றான். மாரிகிதா தன் பை நிறையத் தங்கக் காசுகள் கொண்டு சென்றிருந்தாள். அவற்றைக் காவலர் முன் வீசி எறிந்தாள்.
கீழே சிதறிக்கிடந்த அக்காசுகளைப் பொறுக்க அவர்கள், ‘நீ முந்தி நான் முந்தி!’ என்று போட்டியிட்டனர். இதுதான் சமயம் என்று மாரிகிதாவும் உள்ளே சென்றாள்.
மன்னன் எஃச்திஃவானியாவுடன், பேசிக்கொண்டிருந்தான்.
“தம்பிநாகா, தம்பிநாகா, என்ன பார்க்கிறாய்?” என்றாள் மாரிகிதா.
“அக்கா மாரிகிதா, அக்கா மாரிகிதா! மன்னன் மடியில் எஃச்திஃவானியாவல்லவா இருக்கிறாள்,” என்றது தம்பி நாகன்.
“ஆ, நான் இங்கிருக்க, என் வேலைக்காரியா அங்கிருக்கிறாள்,” என்றாள் மாரிகிதா. மன்னன் உடனே எஃச்திஃவானியாவைத் தள்ளிவிட்டு வெளியே வந்தான்.
அதற்குள் மாரிகிதா பொன்காசை மீண்டும் காவலர் களிடையே எறிந்துவிட்டு வெளியே வந்தாள். தம்பி நாகனும் வெளியே வந்து அவளுடன் சேர்ந்தான். இந்த நாடகம் மறுநாளும் நடந்தது.
அவளைப் பிடிக்கும்படி அரசன் தன் காவலர்களுக்கு ஆணை யிட்டிருந்தும் அவர்கள் பொன்னாவலால் கடமை தவறிவிட்டனர்.
மூன்றாவதுநாள் மன்னன் தானே முன்னேற்பாடா யிருந்தான். பேச்சுகளைப் பேசிமுடிக்குமுன்பே அவன் மாரிகிதாவை வந்து பிடித்துக் கொண்டு நீ கூறுவது உண்மையா? என்று கேட்டான். “உண்மையென்பதை எஃச்திஃவானியாவை முன்தேர்ந்தாராய்ந்தது போல, இப்போது ஆராய்ந்து காண்பதுதானே!” என்று தம்பி நாகன் கூறிற்று.
பாம்பு பேசியது கேட்டு மன்னன் வியப்படைந்தான். ‘உனக்கு என்ன தெரியும் நீ பாம்புதானே!’ என்று மன்னன் தம்பி நாகனைப் பார்த்துக் கேட்டான்.
“ஆம். நான் அரசனல்ல!” என்றது தம்பி நாகன். மாரிகிதா உடனே சிரித்தாள். மன்னன் ஆடைகளிலெல்லாம் முத்தும் மணிக்கற்களும் சென்று உருண்டன. மன்னன் ஒரு தேர்வைக் கண்கூடாகக் கண்டுவிட்டான். அவன் எஃச்திஃவானியாவையும் அவள் தாயையும் உடனே சிறை செய்வித்தான். அன்று, அவனே அவள் தலையைக் கோதி உதிர்ந்த முடிகளைச் சேமித்தான். அவனே வட்டிலில் தண்ணீர் கொண்டுவந்து அவளைக் கைக்கழுவ வைத்தான்."
முடிகள் பொன்முடிகளானதையும், நீர் வெள்ளிப்பாள மானதையும் அவன் கண்டான். அவன் மாரிகிதாவைக் கட்டியணைத்துக் கொண்டான். ‘உன்னை நான் மணந்து கொள்வது உறுதி. ஆனால். இவளைத் தூக்கிடப் போகிவேன்,’ என்றான்.
மாரிகிதா, “வேண்டாம். அவள் அரசியாயிருந்தவள். அவளுக்கு வேண்டிய பொன்னும் மணியும் தந்து வேறு நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். பிழைத்துப் போகட்டும்,” என்றாள்.
பின் தம்பி நாகனை நோக்கி, “தம்பி, நீ எனக்குக் கண்ணும் தந்தாய், கணவனையும் அளித்தாய்; உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என்றாள்.
அவள் குறிப்பறிந்த அரசன், பாம்புக்குப் பாலும் பழமும் தருவித்து அதை அன்புடன் உண்பித்தான்.
மாரிகிதா மன்னனை மணந்து அரசியானாள்.
அரசி மாரிகிதாவுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தன. ஒருவன் தொட்டிலிலும் ஒருவன் கையிலும் இருந்தான். அவள் மன்னனிடம் இருவரையும் காட்டி “இவர்களில் எந்தப் பிள்ளை உங்களுக்குப் பிடித்திருக்கிறது,” என்று கேட்டாள்.
“இருவருமே எனக்குப் பிடித்திருக்கிறது,” என்றான் அரசன். இச்சமயம் தம்பிநாகன் குரல் அருகில் கேட்டது.
“அக்காமாரி, அக்காமாரி! இந்தக் குழந்தைகளை நீ உயிரைவிட மேலாக நேசிக்கிறாய் அல்லவா?” என்றது.
“ஆம் அதற்கென்ன!” என்றாள் அவள்.
“உனக்கு நான் இப்போது ஒரு இக்கட்டான புதிர் போடப் போகிறேன். இறந்துவிட்ட உன் அண்ணன்மார் உயிர் உனக்குப் பெரிதா? புதிதாக வந்த இந்த உயிர்கள் பெரிதா? உனக்கு எது முக்கியமோ, அது கிடைக்க நான் வழிசெய்ய முடியும்!” என்றது.
மன்னனும் தான் தெரியாத்தனத்தால் அவர்களைக் கொன்று விட்டதறிந்து வருந்தினான். அரசியின் கருத்துச் சரியே என்று அவனும் கூறினான்.
தம்பிநாகன் குழந்தைகள் இரண்டின் கழுத்தையும் முறித்தது. பின் அரசனையும் அரசியையும் கோட்டைக்கு வெளியே இட்டுக் கொண்டு சென்றது. அங்கே மாரிகிதாவின் அண்ணன்மார் உடல்கள் கிடந்தன. அரசனையும் அரசியையும் கண்டதும் பிணங்களாகக் கிடந்த அண்ணன் மார்கள் உயிர்பெற்றெழுந்து தங்கையையும் அரசனையும் கண்டு மகிழ்ந்தனர்.
முதல் மகிழ்ச்சியும் ஒருவரொருவர் நல உசாவலும் கழிந்தன. அண்ணன்மார் தங்கையிடம், “உனக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?” என்றார்கள். அவள் அழுதாள். தம்பி நாகன் அவளையும் அவர்களையும் அழைத்துக் கொண்டு அரண்மனை வந்தது. குழந்தைகள் முன்போலவே புன்முறுவ லுடன் கிடந்தன. மாரிகிதா அவற்றை எடுத்து முத்தமிட்டாள். “தம்பி நாகா, நீ ஒரு தெய்வம்,” என்றாள்.
“ஆம் நான் ஒரு தெய்வம்தான். உன் தாய் இறக்கும்போது என்னை வணங்கி, என்னிடம் உன்னை ஒப்படைத்தாள்; நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன். இனி நீ நீடுவாழ்க!” என்று கூறி மறைந்தது.
உப்பின் சுவை
துருக்கி நாட்டுக் கதை
“குழந்தைகளே! எனக்கு ஓர் உடல்தான் இருக்கிறது. ஆனால் மூன்று உயிர்கள் இருக்கின்றன. அவ்வுயிர்களே நீங்கள். உடலின் முன் நிற்கும் உயிர்களாக உங்களை நான் கருதுகிறேன். நீங்கள் என்னை எவ்வாறு கருதுகிறீர்கள், எவ்வளவு நேசிக்கிறீர்கள். என்பதை என் காதாரக் கேட்க விரும்புகிறேன்,” என்று இவ்வாறு மன்னன் தன் மூன்று புதல்வர்களிடமும் பேசினான்.
“என் இன்னுயிரினும் எனக்கு அருமையான தந்தையே! தங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நான் எவ்வாறு, என்ன மொழிகளில் கூறுவேன்? நான் கற்ற கல்வி முழுவதும் அதை எடுத்துரைக்கப் போதாது. ஆனால் தாங்கள் என் சொல்லை வைத்து அளக்காமல் அதன் ஆர்வத்தால் அளந்து காண்பதானால், தங்கள்பால் எனக்குள்ள நேசத்தை நான் ஒருவாறு எடுத்துரைப்பேன்.”
“பொன்னையும் மணியையும்விட, இப்பூவுலகு முழுதும் ஆளும் பேற்றைவிட, உலகத்தின் செல்வத்திரள் அத்தனையையும் விட நான் தங்களை மிகுதியாக, எவ்வளவு மடங்கோ மிகுதியாக, நேசிக்கிறேன்,” என்று கூறினான் மூத்த புதல்வன்.
மன்னன் முகம் மலர்ச்சியடைந்தது.
அண்ணனுக்குப் பின்னிடையக் கூடாதென்ற எண்ணத் துடன் நாடக மேடையில் நடிகன் நடப்பதுபோல நடந்து முன் வந்தான், இரண்டாவது புதல்வன்.
“அரசருள் சிறந்த அரசே, தந்தையருள் சிறந்த தந்தையே! உங்கள் தகுதியை உங்கள் மக்கள் அளந்து கூற முடியுமோ? அது முடியாதது போலவே, நான் உங்களிடம் கொண்ட நேசத்தையும் என்னால் அளக்க முடியாது.”
“அது என் அறிவுக்கு அப்பாற்பட்டது, என் ஆற்றல் கடந்தது, என் அன்பு, நட்பு இன்பம் ஆகிய யாவற்றையும் தாண்டியது.”
“பாலையும் தேனையும் பழத்தையும்-இனிய சிற்றுண்டி களையும் நான் உங்கள்பால் கொண்ட நேசத்துக்கு ஒப்பிட முடியுமா? என் நேசத்தின்முன் பால் உவர்க்கும், தேன் புளிக்கும், பழம் கசக்கும். இனிய சிற்றுண்டிகள் யாவும் உவட்டும்,”
“உங்களிடம் நான் கொண்ட நேசம் கடலினும் ஆழமுடையது, மலையினும் உயரியது, வானகத்தினும் அகன்றது. அது கதிரவனைவிட ஒளி மிக்கது, நிலவைவிடக் குளிர்ச்சியானது, சோலைகளைவிட வளமானது. அதற்கு அளவுகோலும் உவமையும் அதுவே,” என்றான் அவன்.
மன்னன் உவகைக் கடலுள் ஆழ்ந்தான்.
மூன்றாவது புதல்வன் இருவரினும் இளையவன், அவன் முகம் பால் வடியும் இளமைநலம் உடையதாயிருந்தது. அவன் சொற்களில் இன்னும் மழலை மொழியின் இனிமை மாறிவிட வில்லை. அவன் தந்தைமுன் வந்து நின்றான். தந்தைக்குத் தலைகுணிந்து வணக்கம் செய்துவிட்டு வாய்திறந்து பேசினான்.
மூத்தவன் கவிதை பேசினான்; அடுத்தவன் காவியம் காட்டினான்; இளையவன் என்ன கலைப்பண்பு காட்டுவானோ என்று ஆவலுடன் நின்றனர் அவையோர்.
“அரசே! நீங்கள் என் தந்தை; நான் உங்கள்பிள்ளை. தந்தையின் பாசம் உங்களுக்கு என் மீது உண்டு. பிள்ளையின் கடமை தங்கள் மீது எனக்கு உண்டு. ஆனால், என் நேசத்தின் பான்மையைக் கூறுவதானால் அது உப்பின் சுவைபோன்றது,” என்றான் அவன்.
மன்னன் முகம் சுண்டிற்று. கழிபேருவகைக் கடலுள் மிதந்த அவன் உள்ளம் கடுஞ்சினம் என்னும் எரிமலையின் தீக்குழம்பில் பட்டதுபோல் கனன்றது.
அவையோர் அஞ்சினர்; மக்கள் கலங்கினர்.
“என்முன் இவ்வாறு பேசத்துணிந்த இந்தத் தலையை உச்சி மலைமீது இட்டுச்சென்று உருட்டித் தள்ளுங்கள். அவன் உடல் சந்துசந்தாகச் சிதைந்தபின், அதன் குருதியை என்முன் கொண்டு வந்து காட்டுங்கள்,” என்று அவன் ஆணையிட்டான்.
திண்ணிய தோள் படைத்த வீரர் நால்வர் இளவரசனைச் செந்தூக்காகத் தூக்கிச் சென்றனர். புலிக் கூட்டத்தால் கௌவிச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போல, அவன் மலைமீது விரைந்து கொண்டு போகப்பட்டான்.
இளவரசன் திடுக்கிட்டான். திண்டாடினான். செய்வது இனி ஏதுமில்லையெனத் தேறினான். தன் உயிர் இனி நில்லாது என்று துணிந்து சென்றான்.
அவர்கள், அவனைக் கீழே இறக்கினர். சாகத் துணிந்து, சாவை எதிர்பார்த்து நின்றான் இளவரசன்.
ஆனால், வீரர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வாளாநின்றனர்.
ஒருவன் இருமினான்!
ஒருவன் கனைத்தான்!
ஒருவன் ஒரு பொட்டுக் கண்ணீர் வடித்தான்!
நாலாவது வீரன்-நால்வரினும் திண்ணிய உடலும், அஞ்சா நெஞ்சமும், கொடுந்தோற்றமும் உடையவன். அவன் முதன் முதலாக வாய்த் திறந்தான்.
“இளவரசே! உங்களிடம் நாங்கள் கொண்டுள்ள பாசம் பெரிது. உங்களை நாங்கள் கொல்லமுடியாது. நாங்கள் கொல்லத் துணிந்தாலும், எங்கள் கைகள் எழமாட்டா; கைகள் எழுந்தாலும் எங்கள் வீரவாள்கள், கொலைவாள்கள் எங்கள் கைக்கு இணங்கமாட்டா.”
“ஆனால், நாங்கள் ஏவலாட்கள். எங்கள் அரசர் ஆணையை நாங்கள் மீறக்கூடாது,”
“ஆகவே, உம் சட்டையைக் கழற்றிக்கொடும். நேரமாகிறது. எங்களை மன்னிக்கவேண்டும்,” என்றான்.
இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், சட்டையைக் கழற்றிக் கொடுத்தான். அவர்கள் தன் சட்டையை அகற்றிவிட்டுக் கொல்ல நினைப்பதாகத்தான் அவன் அப்போது எண்ணினான்.
“இளவரசே, அரசராணைப்படி உம்மை மலையில் கொண்டுவந்து விட்டோம். அரசராணைப்படி கொன்று குருதி காட்டவேண்டும். ஆம் நாங்கள் கொல்வோம் ஏதேனும் ஒரு மலைவிலங்கைப் பிடித்துக் கொன்று குருதியை இந்தச் சட்டையில் தோய்த்துக் காட்டிவிடத் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், நீர் இனி இந்த நாட்டுக்கே வரக்கூடாது. மன்னன் அறிய நீர் மாண்டவராகவே இருக்கவேண்டும். இது எங்கள் கட்டளை இல்லை, இல்லை-மன்னிக்க வேண்டும். எங்கள் வேண்டுகோள்,” என்று மேலும் கூறினான்.
இளவரசன் அவர்கள் அன்புள்ளத்தின் அங்கலாய்ப்பைக் கண்டு, அவர்கள் முடிவுக்கு மகிழ்ந்தான். அவர்கள் அன்புக் கட்டளையை நிறை வேற்ற உறுதி கூறினான்.
சாவினின்று மீண்டான் இளவரசன்; ஆனால், அவன் உள்ளம் மகிழவில்லை; அவன் காடுகளும் மலைகளும், கானாறுகளும் தாண்டி நடந்தான்; எங்கே செல்வது, என்ன செய்வது என்ற திட்டம் எதுவும் அவனிடம் கிடையாது.
அவன் சாக விரும்பவில்லை; ஆகவே, சாவிலிருந்து மீண்டதற்கு மகிழ்ந்தான்; ஆனால், வாழ்விலும் அவனுக்குப் பற்று எழவில்லை; உலகை விட்டொழிந்து சாகவும் விருப்பமில்லாமல், உலகிலிருந்து வாழவும் மனங்கொள்ளாமல் அவன் அலைந்து திரிந்தான்.
பல நாட்களுக்குப் பின்னர் அவன் தொலைவிலுள்ள ஒரு நாடு சென்றடைந்தான்.
அவன் கால்கள் நடக்க மறுத்தன. அவன் அந்நாட்டில் தங்க எண்ணினான்.
நகரில் நுழையாமல் முதல்முதல் கண்ட வீட்டிலேயே சென்று அவன் கதவைத் தட்டினான். மூதாட்டி ஒருத்தி வந்து கதவைத் திறந்தாள். இளவரசன் அவளிடம், “ஒருநாள் ஓய்ந்திருக்க இடமும் உணவும் வேண்டும்,” என்று மன்றாடினான்.
“அன்னையே, நான் மிகப் பெருந் தொலைவிலிருந்து நெடுநாள் நடந்து வந்திருக்கிறேன். சற்று மனமிரங்கி உதவ வேண்டும்,” என்றான்.
கிழவி குழந்தையற்றவள், இளவரசன் பால்வடியும் இளமுகம், அவள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அவனிடம் அவளுக்குப் பிள்ளைப்பாசம் ஏற்பட்டது. அவள், அவனிடம் அன்புமொழிகள் பேசி அவனுக்கு ஆதரவு தந்தாள். பெற்ற தந்தையின் வெறுப்புக்காளான தனயனுக்குப் பெறாத தாய் ஒருத்தி கிட்டினாள்.
அந்த நாட்டில் சிலநாளாக அரசன் இல்லை. பழைய அரசன் காலமாகித் துயர் வரம்பு கழிந்துவிட்டது. அந்நாட்டு வழக்கப்படி புதிய அரசன் தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. நகரமக்கள் அனைவரும் அதற்காக நகர் நடுவேயுள்ள நகர்ப் பொதுவில் கூடினர். அரசவைக்குரிய மணிப்புறா கூட்டிலிருந்து திறந்துவிடப் பட்டது. அது பறந்து இறங்கி யார் தலைமீது தட்டுகிறதோ, அவனையே அந்நாட்டின் அரசனாக ஏற்பது அந்நாட்டின் பழம்பெரும் மரபு.
நகர் வெளியில் கூட்டத்துடன் கூட்டமாகக் கிழவி இளவரசனுடன் சென்றிருந்தாள்.
புறா மேகங்கடந்து பறந்து வட்டமிட்டது. அது யார் தலையில் வந்து இறங்கப் போகிறதோ என்று மக்கள் வியந்து மேல்நோக்கி இருந்தனர்; பலர் தம்மீதுதான் அது இறங்க விருக்கிறது என்று மனப்பால் குடித்தனர். ஆனால், யாரும் எதிர்பாராவகையாக அது நகருக்குப் புத்தம் புதியவனான இளவரசன் மீது வந்து தங்கிற்று.
ஒரு வெளிநாட்டான், மன்னனாவது மரபுக்கு ஊறு செய்வது என்று பெரும்பாலோர் நினைத்தனர். ஆகவே, முதல் முடிவை ஏற்காமல் அவர்கள் கிழவியையும் இளவரசனையும் பொதுவி லிருந்து வெளியேற்றிவிட்டு இரண்டாம் முறை தேர்வு தொடங்கினர்.
வெளியேறிய கிழவியும் இளவரசனும் நகர்ப் புறத்துள்ள கல்லறைக் கூடமொன்றில் தங்கியிருந்தனர். புறாபொதுவெங்கும் ஒருதடவை சுற்றிப் பார்த்துவிட்டு, இறங்காமல் மீண்டும் உயரப்பறந்து, பின் கல்லறைக்கூடந் தேடி இறங்கி இளவரசன் மீதே தங்கிற்று.
“இதையும் ஒத்துக்கொள்ள முடியாது, முக்காலும் மூன்று தடவை முயல்வது துருக்கியர் மரபு,” என்றனர் மரபு பயின்றோர். ஆனால், மூன்றாவது தடவையும் புறா இளவரசனையே தேர்ந்ததனால், அனைவரும் ஒருமனப்பட்டு அவனையே அரசனாக ஏற்றனர்.
புதிய மன்னன் ஆட்சியில் நேர்மையும் அன்பும் நிரம்பியிருந்தது. தொலை அறிவுடைய சட்டதிட்ட நிறுவனங்கள் மூலமாக நாடு வளங் கொழித்தது. புதியவன் என்பதற்காகத் தேர்வை எதிர்த்தவர்கள் எல்லாரும் அவனை வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினர். நாடு கடந்து அவன்புகழ் நானிலமெங்கும் பரந்தது. அவன் தான் போர் செய்யாததுடன், அயலாரிடையே போர் எழாமலும் காத்தான். அவன் யாரென்று தெரியாத நிலையிலும் அவன் புகழ் அவன் தந்தையின் காதுகளுக்கு எட்டியது. தந்தை இப்புதிய அரசனின் நட்பை விரும்பி அவனிடம் தன் அரசியல் தூதனை அனுப்பினான். புதிய அரசனும் தூதனுக்கு மட்டில்லா மதிப்பளித்து வரவேற்றான். அத்துடன், எதிர் தூதனுப்பினான் தன் விருந்தினராக வருமாறு தந்தைக்கு அழைப்பனுப்பினான்.
பழைய மன்னன் தன்மகனென்று தெரியாமலே மகனின் விருந்தாளியானான்.
நாடெங்கும் மகரதோரணங்கள் தொங்கவிடப்பட்டன. முரசுகள் முழங்கின. குதிரைப்படைகளும் காலாட்படைகளும் தேர்களும் எங்கும் நெருங்கின. பூமாலைகளும் சொல்மாலைகளும் பரிமாறப்பட்டன. பழைய மன்னனுக்கெனத் தனிமாடகூடங்கள், புடையர் குழுவினர்களுக்குத் தனித்தனி மாளிகைகள், விருந்துக் கூடங்கள், அவர்கள் போர்க்குதவும் வாட்படைகள் வைக்க மேடைகள், அவர்கள் பொழுது போக்குக்காகக் கலைஞர், இசைவாணர், நாடகக்குழுக்கள் யாவும் திட்டம் செய்யப்பட்டிருந்தன.
தமக்குக் காட்டப்பட்ட மதிப்பையும் வரவேற்பையும் கண்டு பழைய மன்னனும் அவன் அமைச்சர் புடையர்களும் எல்லையிலா மகிழ்ச்சியடைந்தனர். புதிய மன்னனை வாயார வாழ்த்தினர். ஆயினும், ஒரே ஒரு குறையை மட்டும் உள்ளூரப் புழுங்கினார். வகைவகையான உணவுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் அவை அனைத்துமே உப்புக் கலவாதவையாயிருந்தன.
இரண்டு நாள் விருந்துக்குப் பின் பழைய மன்னன் தன் மாளிகையில் தன்னுடன் இருந்த அமைச்சர் புடையர்களை நோக்கி, “விருந்து வரவேற்பு எப்படி இருந்தது?” என்று கேட்டான்.
அமைச்சர் முதலியோர்: எதிலுங் குறைவில்லை. நாங்கள் எதிர் பார்த்ததை விடப் பன்மடங்கான அன்பும் ஆதரவும் மதிப்பும் ஆர்வ ஆசாபாசமும் எமக்குக் காட்டப்படுகின்றன. ஆனால்….ஆனால்….
அரசன்: என்ன ஆனாலென்று நிறுத்துகிறீர்கள்? ஏதேனும் குறையுண்டா?
அமைச்சர் முதலியோர்: குறை என்று கூறவதற்கில்லை. ஆனால்…. என்ன காரணமென்று தெரியவில்லை…. உணவுகள் மற்றெல்லாவகையிலும் சிறப்புகள் நிறைந்திருந்தாலும் உப்பு இல்லாத ஒரு குறையினால் சுவை இழந்திருக்கின்றன. ஒரு வேளை இந்த நாட்டார் உப்பை வெறுப்பவர்களா யிருக்கலாமோ என்று நினைக்கிறோம்.
அரசன்: ஆம். உங்கள் உணவில் மட்டுமல்ல. என் உணவில் கூட அப்படித்தான். இதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். எதற்கும் இன்று நான் கேட்டு அறிந்து கொள்கிறேன்.
அன்று உணவுக்குப் பின் இரு மன்னர்களும் தனிமையில் இருந்து நாடு, உலகம், வாழ்க்கை ஆகிய பல பொதுச்செய்திகள் பற்றிப் பேசி அளவளாவியிருந்தனர்.
அச்சமயம் பழைய மன்னன் புது மன்னனிடம் உணவைப் பற்றிய பேச்சை எடுத்தான். “நண்பரே! உங்கள் நாட்டில் மக்கள் விரும்பும் எல்லா நலங்களும் நிரம்பி இருக்கின்றன. ஆனால், உப்பு மட்டும் இந்த நாட்டில் கிடையாதோ என்று ஐயுறுகிறேன்,” என்றான்.
புதிய அரசன்: ஏன் அரசே அப்படிக் கருதுகிறீர்? நாங்கள் எங்கள் நாட்டுக்கு வேண்டிய உப்பை விளைவிப்பதுடன் நில்லாமல், உலகில் கடற்கரை இல்லாத மற்ற எல்லா நாடு களுக்கும் கூட ஏராளமாக உப்பை எற்றுமதி செய்கிறோமே! தாங்கள் இப்படி நினைக்கக் காரணம் என்னவோ?
புதிய அரசன் முகத்தில் புன்முறுவல் நிலவிற்று. ஆனால், பழைய அரசன் பின்னும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
பழைய அரசன்: அப்படியானால் நீங்கள் உப்பில்லாமல் ஏன் சாப்பிடுகிறீர்கள்?
புதிய அரசன்: நாங்கள் உப்புடன்தான் சாப்பிடுகிறோம். ஆனால், உங்களுக்கு விருந்தளிக்கும் போது மட்டும் உப்பில்லாமலே உணவு சமைக்க உத்தரவிட்டேன்.
பழைய அரசன்: ஏன் அப்படி?
புதிய அரசன்: உங்களுக்கு உப்பென்றால் வெறுப்பு என்பதை நான் அறிவேன், உங்கள் நாட்டினருக்கும் அதே மாதிரிதான் இருக்கலாம் என்று நினைத்தேன்.
பழைய அரசன்: எனக்கு நீங்கள் கூறுவது புரியவில்லை அரசே! உப்பை யார் வெறுக்க முடியும்? உப்பில்லாமல் யார்தான், எப்படித்தான் வாழ முடியும்? நான் எப்போதும் உப்பை வெறுத்தது கிடையாது. உங்களுக்கு இதை யார் கூறினார்கள்?
புதிய அரசன்: வாய்விட்டுச் சிரித்தான். “அரசே! தங்கள் கடைசி மகன் உங்களை உப்பின் சுவையைப் போல் நேசிப்பதாகக் கூறியபோது, நீங்கள் அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டீர்களாமே!” என்றான்.
பேசியது தன் இளைய மகன்தான் என்று இப்போது பழைய அரசனுக்குத் தெரிந்து விட்டது. “உன் அருமையும் அறிவும் தெரியாமல் தவறாக நடந்து கொண்டு விட்டேன். மகனே! இப்போது எல்லாம் கண்டு கொண்டேன்,” என்று கூறி அவன் தன் மகனைக் கட்டிக்கொண்டு இன்பக் கண்ணீர் விட்டான்.
உப்பின் சுவையுடன் இரு திறத்தினரும் அன்று விருந்துண்டனர்.
ஃஇனேமோவா
நியூசிலாந்து நாட்டுக் கதை
மயோரி இனத்தவர் முன்னோர்களில் மாவீரர் எத்தனையோ பேர் உண்டு. ஆனால், மாவீரர் கதைகளை விட மயோரியர்களுக்கு எழுச்சியூட்டுவது அவர்கள் முன்னோர் களின் தாயும், குலமுதல்வியுமான ஃஇனேமோவாவின் வீரக் காதல் கதைதான்.
ஃஇனேமோவா மயோரியர் குலத்திலேயே ஒப்புயர்வற்ற அழகுடைய இளநங்கையாக விளங்கினாள். அவள் குடும்பமும் மயோரியர் குடிகளில் தலைசிறந்தது. அவள் தந்தை உமுக்கானா, மயோரியர் வீரக்காதைகளில் பொறிக்கப்பட்டுள்ள பெருஞ்செயல்களின் மூலம் புகழும் செல்வாக்கும் பெற்றவன்.
உமுக்கானாவின் குடும்பப் பெருமை, வீரமரபு ஆகியவற்றுடன் ஃஇனேமோவின் அழகும் சேர்ந்து அக்குடும்பத்தினர் செருக்கை மிகவும் வளர்த்தன. அதன் பயனாக மயோரியர் இனத்தின் எந்த இளைஞனுக்கும் எந்த இனத்தலைவருக்கும்கூட ஃஇனே மோவைக் கொடுக்க அவன் குடும்பத்தினர் விரும்பவில்லை. எந்த இளைஞனும் ஃஇனேமோவைப் பார்க்கக் கூட உமுக்கானா இடங்கொடுக்கவில்லை. இந்நிலையில் அவள் கன்னியாகவே காலங்கழித்து வந்தாள்.
ஆண்டுதோறும் மோகோயாத் தீவின் நடுவிடத்தில் கொண்டாடப்படும் மயோரியர் இனவிழாவிலும், அதை ஒட்டி விருந்துக் கேளிக்கைகளிலும் மட்டுமே அவளுக்கு மயோரிய இளைஞர்களைக் காணும் வாய்ப்பு இருந்தது. அத்தகைய பல தறுவாய்களில் ஒரே ஒரு இளைஞன் முகமும், குரலும், பாடலும் ஃஇனேமோவாவின் உள்ளத்தை இயக்கின. அவ்விளைஞனே தூத்தானகை. அவள், அடிக்கடி அவனறியாமல் அவன் கண்ணிலாடும் ஒளியையே பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால் அதே சமயம் அவளறியாமலே அவன் அவள் கண்ணின் நீலநிறத்தில் தன் உள்ளத்தை ஈடுபடுத்திய வண்ணம் இருப்பான். இருவர் உள்ளத்திலுமே இங்ஙனம் ஒருவரை ஒருவர் அறியாமல் பாசப்பயிர் வளர்ந்தது.
தூத்தானகை உள்ளூர ஃஇனேமோவாவை எவ்வளவு நேசித்தாலும், அதை அவளிடம் சென்று வெளியிடத் துணியவில்லை. மன்னர் இளங்கோக்கள் அவளுக்காக ஏங்கித் தவங்கிடந்தும், அவள் அவர்களை மதியாதிருப்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே, தன் காதலை அவள் ஒரு பொருட்டாக ஏற்பாள் என்று அவன் கருதவில்லை.
ஃஇனேமோவாவுக்கும் தூத்தானகை பெயர் கேட்ட போதெல்லாம் நெஞ்சம் துடிக்கும். அவனைக் காணும் போதும், அவன் குரல் கேட்கும் போதும், அவள் நாடி நரம்புகள் ஆடிப்பாடும். ஆனால், அவனிடம் தன் காதலைத் தெரிவித்துத் தூதனுப்ப அவளுக்கும் துணிவு வரவில்லை. வலிந்து தன் காதலைத் தெரிவிக்கும் பெண்ணை எந்த ஆடவனும் மதிக்க மாட்டான் என்று அவள் உள்ளம் அவளை அடிக்கடி அச்சுறுத்திற்று.
நாட்களும் வாரங்களும் இங்ஙனம் கழிந்தன. மயோரியர் இனவிழாக் காலமும் விரைந்தோடி முடிவை அணுகிற்று. தூத்தானகை இப்போது துணிந்து தன் காதலை ஃஇனேமோவா வுக்குத் தெரிவிக்கும்படி ஒரு தூதனை அனுப்பினான்
தூதன் வந்து செய்தி தெரிவித்தவுடன் ஃஇனேமோவா தன்னை அடக்க முடியாமல் துள்ளிக் குதித்தாள். அகோகோ-ஓகோகோ, என் காதல் ஒருதலைக் காதலல்ல. என் காதலரும் என்னைக் காதலிக்கிறார். நானும் அவரைக் காதலிக்கிறேன்," என்று அவள் பாடினாள்.
தூத்தானகைக்கு தன் காதல் ஒருதலைக் காதலல்ல என்பது இப்போது விளங்கிற்று. அவன், ஃஇனேமோவாவுக்கு அடிக்கடி காதல் தூது அனுப்பினான். அடிக்கடி கடிதங்கள் எழுதினான். பல தடவை அவர்கள் சந்தித்து அளவளாவினர்.
தூத்தானகையின் தந்தை வக்காவே கைப்பாப்பா என்பவன். உமுக்கானாவின் குடும்பத்தைவிட வக்காவேயின் குடும்பம் தாழ்ந்ததல்ல. ஆயினும் தூத்தானகையின் தாய் வக்காவேயின் இரண்டாவது மனைவி, அவள் ரோட்டாரு வாவுக்கு வந்து புதிதாகக் குடியேறிய ஒரு அயல்குடி மங்கை. அவளுக்குத் தூத்தானகை ஒரே பிள்ளை. வக்காவேயின் முதல் மனைவிக்கு ஒரு பிள்ளையும், மூன்றாவது மனைவிக்கு இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வக்காவே எல்லாப் பிள்ளை களையும் போலவே தூத்தானகையையும் நடத்தினாலும், அவன் உடன்பிறந்தார் மூவரும் அவன் மீது பொறாமைகொண்டு அவனை வெறுத்தார்கள். அவன் இழிந்த பிறப்பை அடிக்கடி மறைமுகமாகச் சுட்டிக் காட்டி அவனை அவமதிக்கவும் முயன்றார்கள்.
ஃஇனேமோவாவை மணந்து கொள்ள வேண்டும் என்ற அவா பொதுவாக வக்காவேயின் புதல்வர் நால்வருக்குமே இருந்தது. அதில் அவர்களிடையே போட்டி மிகுதி. ஆயினும் மற்றவர்களும் ஒரு வகையில் ஒன்று பட்டிருந்தார்கள். யார் ஃஇனேமோவாவின் காதலைப் பெற்றாலும், இழிப்பிறப்பினனான தூத்தானகையை அவள் எந்த வகையிலும் ஏற்க மாட்டாள் என்று அவர்கள் நம்பினார்கள். ஏற்காமல் தடுக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார்கள்.
வக்காவே எல்லாப் பிள்ளைகளையும் வேறு பாடில்லாமல் நேசித்தவர். ஆகவே, “நீங்கள் ஏன் உங்களுக்கிடையே போராட வேண்டும். நீங்கள் ஃஇனேமோவாவின் கையைப் பிடிக்க நேரும். சமயங்களில் அவளாக யாரிடம் கையை அழுத்துவதன் மூலமோ, புன்சிரிப்பு மூலமோ தன் காதலைத் தெரிவிக்கிறாளோ அவனே அவள் காதலை ஏற்று அவளை மணந்து கொள்ளலாம் என்று முடிவு செய்கிறேன்,” என்று கூறினான்.
இனவிழாவின் போது உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் ஃஇனேமோவாவுடன் ஊடாடி அவள் அன்பைப் பெற அரும்பாடுபட்டனர். அவள் குடும்பத்தாரோ தூத்தானகையை விட்டு வேறு யாரையாவது ஒருவரைத்தான் அவள் தேர்வாள் என்று நினைத்தனர். ஆகவே, அவர்கள் அவனைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அவள் பிறரைவிட்டுத் தூத்தானகையைத் தெரிந்தெடுக்கக் கூடுமென்று எவரும் எள்ளளவும் கனவு கூடக் காணவில்லை.
உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் “ஃஇனேமோவா என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்; அவள் என் கையை அழுத்தினாள்; என்னை மெல்லச் சுண்டினாள்?” என்று ஒருவருக்கொருவர் கூறி வீம்படித்துக் கொண்டனர். தூத்தானகை “நான் சிரித்த சமயம், அவளும் சிரித்தாள். நான் தூதனுப்பினேன். அவளும் தூதனுப்பினாள். நானும் அவளும் தனியாகச் சந்தித்திருக்கின்றnhம். அது மட்டுமல்ல, நான் அவளைக் காதலிப்பதுபோலவே அவளும் காதலிக்கிறாள். நான் குழலூதினால் அவள் என்னோடு உடன் போக்கு நிகழ்த்துவ தாகக் கூட உறுதி கூறி இருக்கிறாள்,” என்றான்.
உடன்பிறந்தார் இதை நம்பவுமில்லை; நம்ப விரும்பவு மில்லை. “நீ ஏன் வெற்று வீம்பளக்கிறாய். நீயாவது ஃஇனேமோவாவின் காதலைப் பெறுவதாவது? உன்னைப் போன்ற இழிமகனை அவள் ஏன் எட்டிப் பார்க்கிறாள்?” என்று அவர்கள் ஏளனமாகப் பேசினார்கள்.
உடன்பிறந்தார் பேசியபடியே மற்ற மயோரியரும் பேசினர். ஃஇனேமோவாவின் குடும்பத்தினர் ஒத்துணர்வுகூடக் குடிப்பிறந்தார் பக்கமே இருந்தது. தூத்தானகை பக்கமாக ஓரளவு ஒத்துணர்வு காட்டியது அவன் தந்தை மட்டுமே. “அத்தனை பேரும் உனக்கு எதிராயிருந்தாலும், நீ ஏன் கவலைப்பட வேண்டும்? நி கூறுகிறபடி ஃஇனேமோவா உன்னைக் காதலிப்பது உண்மை யானால், இத்தனை பேர் ஆதரவைக் காட்டிலும் அது விலையேறிய தாயிற்றே! ஆகவே, அதை மெய்ப்பிப்பதில் நீ கருத்துச் செலுத்து,” என்றார்.
மயோரியரிடையே தூத்தானகைக்கு இணைபிரியா நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் திகி. தூத்தானகையின் குழலிசைக்கு மயோரியர் இனத்திலேயே ஈடில்லாதிருந்தது. அது போல திகியின் கொம்பிசைக்கும் எங்கும் ஈடில்லை. நண்பர் இருவரும் மாறி மாறியும் இணையாகவும் கொம்பையும் குழலையும் ஊதினால், மோகோயாத்தீவு மட்டுமின்றி அதைச் சூழ்ந்துள்ள ரோட்டாருவா ஏரியும் அதன் ஓரத்துள்ள வெந்நீருற்றுகளும் கடந்து ரோட்டாருவா மாநிலமெங்கும் அவற்றின் மெல்லிசை எழுந்து தவழும். உறக்கத்திலும்கூட இவற்றின் மெல் அலைகளில் ஈடுபட்டுக் கலந்து எல்லா உயிரினங்களும் இன்பக்கனவுகளில் அயரும்.
விழாக்கழிந்து தூத்தானகையும் அவன் உடன் பிறந்தாரும் உறவினரும் ரோட்டாருவாவிலிருந்து புறப்பட்டு மொகோயாத் தீவை அடைந்தனர். அது முதல் அவன் அடிக்கடி இரவில் திகியுடன் இருந்து பாடுவான். பாட்டும் இசையும் ஏரி கடந்து, தென்றலில் மிதந்து ரோட்டாருவாவிலுள்ள ஃஇனேமோவாவின் துயிலைச் சென்று கலைக்கும்; சில சமயம் பாடலின் ஓசை அவளை அணுகிவரும்;அச்சமயம் அவள் மாளிகையிலிருந்து ஏரிக்கரைக்கு வருவாள்; இருவரும் நிலவில் ஏரிக்கரை மணலில் பேசியிருப்பர்; அல்லது படகில் ஏரிக்கரையோரம் சிறிது உலாவருவர். ஃஇனேமோவா யாரிடமும் பாசங் கொண்டிருப்ப தாக எவரும் நினையாத வரை, இத்ததகைய போக்குவரவுகளும் நடமாட்டங்களும் எவருக்கும் தெரியாமலே இருந்தது.
இங்ஙனம் உலாவும் வேளைகளில்தான் ஒரு சமயம் தூத்தானகை ஃஇனேமோவாவிடம் தன் காதல் நிறைவாகிய திருமணம் பற்றிப் பேச்செடுத்தான்.
“கண்ணே! ஃஇனேமோவா! இம்மாதிரி நான் உன்னை வந்து காண்பதும், நாம் உலவுவதும் இன்பக் கனவுகளாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் கனவுகளில் எத்தனை காலம் நாம் கழிக்க முடியும். நீ என்னை மணந்து கொண்டால் நானும் உரிமையுடன் உன்னுடன் வாழமுடியும். நீயும் உரிமையுடன் என்னுடன் பழக முடியும். இதுவகையில் உன் மனமறிந்து நான் உன் தாய் தந்தையரை அணுகிக் கேட்கலாமென்றிருக்கிறேன்,” என்றான் அவன்.
அவள் அது பற்றிப் பேச நாணினாள். ஆயினும், பொறுப்பான காரியத்தில் வாய்திறக்காமலிருக்க வழியில்லை. “என் தாய்தந்தையரிடத்தில் கேட்பதில் பயன் இராது என்பது எனக்குத் தெரியும். அவர்கள்…” என்று முடிக்காமல் நிறுத்தினான்.
அவள் என்ன சொல்லப் போகிறாளென்பது அவனுக்குத் தெரியும். அவன் இடைமறித்து, “அது எனக்கும் தெரியாம லில்லை. ஆனால், வேறு என்ன செய்வது? கேட்டுத்தான் பார்க்கலாமா என்று எண்ணினேன்,” என்றான். அவள் மீட்டும் வாளா இருந்தாள்.
“நேரில் கேட்பதில் பயனில்லை என்றால் மயோரியர் வழக்கப்படி நமக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது,” என்று மீண்டும் கூறினான்.
அவள் தயங்கவில்லை. "ஆம்! என்று கூறி அவனுக்கு அன்பு விடை தந்தாள்.
தூத்தானகை அண்ணன்மாரிடமும் தந்தையிடமும் தன் காதலைப் பற்றிக் கூறத் துணிந்தது இவ்வுறுதியின் பின்னரே யாகும்.
தூத்தானகை அண்ணன்மார், அவன் காதற் கதையை நம்ப மறுத்தார்கள். ஆனால், அதேசமயம் அவர்கள் அதைப் பற்றி ஃஇனேமோவாவின் உறவினருக்குப் பறை சாற்றவும் மறக்க வில்லை. அவன் கூறியதில் உண்மை இருந்தாலும் அதை ஒழித்துக் கட்டவும் அதன் பாதையில் முட்டுக்கட்டையிடவுமே அவர்கள் இதைச் செய்தார்கள்.
அவர்கள் முயற்சி பயனளித்தது. ஃஇனேமோவாவின் கன்னி விடுதலை யுரிமைமீது வலைகள் வீசப்பட்டன. அவள் போக்குவரவுகள் தடுக்கப்பட்டன. அவள் செயல்கள் மீது பல கடைக்கண்கள் வேவு பார்த்தன. அவளறியாமல் அவளைச் சுற்றிலும் மென் தடைக்கோட்டைகள் வளர்ந்தன. இவற்றை அவள் ஓரளவு கவனித்தாள். ஆனால், தடைகளின் அளவை அவளும் முற்றிலும் அறியவில்லை.
தூத்தானகை ஃஇனேமோவாவை உடன்போக்குக்கு அழைக்க வாய்ப்பான நாளுக்காகக் காத்திருந்தான். நிலாக்கால மாகப் பார்த்து நள்ளிரவில் பாடினான். நிலவொளியில் இசை அலைகள் பறந்தன. அவற்றை யாவரும் கேட்டனர். ஃஇனேமோவாவும் நள்ளிரவில் விழித்திருந்து கேட்டாள். ஆனால், முன்னெச்சரிக்கைகளின் பயனாக, அவள் உறவினரும் அதைக் கேட்டனர். அதன் பொருளை உணர்ந்தனர். அவர்கள் கட்டுக் காவல்கள் இறுகின. அவள் வெளியேற முடியவில்லை.
அன்று முதல் நாள்தோறும் நள்ளிரவில் தூத்தானகையின் குழலும் திகியின் கொம்பும் ஊதின. நாள்தோறும் நள்ளிரவில் ஃஇனேமோவா படுக்கையில் புரள்வாள். எழுந்து வாயிலைத் திறக்கவோ பலகணி வழியாக வெளியேற வழிபார்க்கவோ முயல்வாள்; ஆனால், தோழியர் ஏவலர்களின் கட்டுக்காவற் கோட்டை அவள்முன் தன் இடையீடில்லா வரிசைகளைக் காட்டி நிற்கும்.
நாட்களாயின; வாரங்களாயின; ஃஇனேமோவாவின் உள்ளம் தத்தளித்தது; தூத்தானகையின் நம்பிக்கை வரவரத் தளர்ந்தது; உடன் பிறந்தார்களின் கேலிகள் எல்லை கடந்து நீண்டன.
ஆனால், நாட்செல்லச்செல்லக் கட்டுக்காவல் தளர்ந்து விட்டதாகத் தோன்றிற்று. ஒருநாள் தோழியர் அயர்ந்து துயின்றனர். ஏவலாளர் கோட்டை ஒரு பக்கத்தில் தளர்வுற் றிருந்தது. தளர்ந்தாலும் அயராத உள்ளங்கொண்ட நங்கை ஃஇனேமோவா உடனே எழுந்தாள். காவலும் தோட்டமும் கடந்து ஏரிக்கரை சென்றாள்.
ஆயின், அந்தோ! தடைக்கோட்டையின் ஒரு கூறு அங்கே அவளைத் தடுத்தது. ஏரியிலுள்ள படகுகள் யாவும் அப்புறப் படுத்தப்பட்டிருந்தன. அவள் ரோட்டாருவாவில் திரியலாம். ஏரி கடந்து மோகோயத் தீவுக்குச் செல்ல முடியாது.
தூத்தானகையின் குழலிசை, திகியின் கொம்பிசை மாறி மாறி அலைகளில் மிதந்து வந்து கொண்டுதான் இருந்தது. காதலன் அழைக்கிறான். காத்திருக்கிறான். ஆனால் படகில்லாமல் ஏரியை எங்ஙனம் கடப்பது? அவள் சிந்தித்தாள். திடீரென அவள் உள்ளத்தில் ஓர் ஒளி தோன்றிற்று!
தண்ணீர் மொள்ளுதற்குரிய ஆறு பெரிய குடங்களை அவள் எடுத்துக் கொண்டாள். மும்மூன்றாக இருகழிகளில் அவற்றைக் கட்டினாள். அவற்றை மிதக்கும் புணையாகக் கொண்டு ஏரியை நீந்திக் கடக்கத் துணிந்தாள்.!
ஏரியின் ஒரு புறத்தில் ஆழ்தடம்வரை நீண்டு கிடந்தது, இனின்கப்புவா என்ற பாறை! அவள் அதன் வழியாகத் தன் நீர்க்குடப் புணையுடன் சென்றாள். நீரருகே வந்ததும் அவள் தன் உள்ளாடை தவிர மீந்த ஆடைகளை அகற்றிக் கரையில் வைத்தாள். உள்ளாடையுடன் நீரில் இறங்கி இருகையாலும் நீரில் புணையை அமிழ்த்துக்கொண்டு, காலால் பாறைக்கு ஓர் உதை கொடுத்தாள். அந்த உதையின் வேகத்திலேயே சிறிது தொலை மிதந்தாள். பின் தன் கால்களில் வலு இருக்கு மட்டும் நீந்தினாள். காலயர்ந்தபின் தன் பளுவைப் புணைகள் மீது சாரவிட்டுச் சிறிது நேரம் நீரில் மிதந்து களையாறினாள். அதன்பின் மீண்டும் நீந்தத் தொடங்கினாள்.
ஏரி நடுவில் ஆங்காங்கே ஆழம் குறைந்த திடல்களில் மரங்கள் நின்றன. ஃஇனோவாத்தா அத்தகைய ஒரு படல் புன்னைமரம். அதில் அவள் புணையைத் தொங்கவிட்டுத் தங்கிச் சிறிது இளைப்பாறினாள்.
நடு ஏரிக்கு வரும்போது நீரின் குளிரால் அவள் நாடி நரம்புகள் விறைத்துப்போய்ச் செயலற்ற நிலை அடைந்தன. அத்துடன் கருக்கிருட்டுக் காலமானதால் திக்குத்திசை தெரிய வில்லை. ஆனால், தூத்தானகையின் குழலிசை, அவளுக்கு அவள் செல்லவேண்டும் திசையையும் அறிவித்தது. குளிரால் உறைந்து போன குருதிப் போக்கையும் மீண்டும் ஓரளவு கனிவித்து ஓடச் செய்தது. அவள் அவ்விசையின் திசையிலே நீந்தியும் மிதந்தும், மிதந்தும் நீந்தியும், அங்குலம் அங்குலமாக முன்னேறினாள்.
சில இடங்களில் காற்று அவள் விரும்பிய திசையிலடித்து அவளுக்கு உதவிற்று; ஏரியின் நீரோட்டங்கள் சில சமயம் அத்திசையில் அவளை மிதந்து செல்லவிட்டு உதவின; ஆனால், அவ்வப்போது அவற்றின் திசை அவள் விருப்பத்துக்கு மாறாக இருந்ததனால், அவள் நரம்பு நாடிகளின் ஊக்கம் இன்னும் இருமடங்காக வேண்டி வந்தது.
குளிர்நீரில் குளித்தறியாத நங்கை, நெடுநேரம் நீரிலேயே கிடந்தும், நீந்தியும், முற்றிலும் உணர்ச்சியிழந்தாள். கைகால்கள் முற்றிலும் மரத்துப் போய் அசைய மறுத்தன. அச்சமயம் ஒரு கைப்புற நீர் சற்று வெதுவெதுப்பாகவும், மறுபுறம் குளிர் மிகுதியாயும் இருப்பதை அவள் கவனித்தாள். ஏரியின் மறுகரை வந்துவிட்டது என்பதை இது அவளுக்குக் காட்டிற்று. மொகோயாத் தீவின் பெயர்போன வெந்நீரூற்றுகளில் சில ஏரிக் கரையிலேயே இருந்தன. ஏரிக்கும் அதற்கும் இடையே ஒரு மெல்லிய மண்கரையே வெதுவெதுப்பு மிகுந்தும் இருந்ததன் காரணம் இதுவே. ஃஇனேமோவா இவ்வுண்மையை அறிந்த வளாதலால் கரையோரமாக மெல்ல நகர்ந்து வந்து அதன் வெது வெதுப்பில் உடம்பின் குளிர் போக நின்றாள்.
காதலனை வந்தடையும் ஆர்வத்தில் அவள் நீந்தி வந்துவிட்டாள். ஆனால், புறப்படும்போது விரைவில் நீந்துவதை மட்டும் எண்ணி, உள்ளாடை தவிர மற்ற ஆடைகளைக் களைந் தெறிந்துவிட்டாள். இப்போது கரையேறும் சமயம்தான் அச்செயலால் ஏற்பட்ட இக்கட்டான நிலை அவள் நினைவுக்கு வந்தது. அருகே வந்து சேர்ந்தும் ஆடையில்லாமல் ஒரு பெண் எப்படிக் கரை மீதேறுவது? ஆடையில்லாத இந்த நிலைமை ஒருபுறம், குளிர் ஒரு புறம் வெதுவெதுப்பான நீரிலும் அவள் கரையை ஒட்டி நின்று விடும்படி செய்தன. இங்ஙனம் நின்று கொண்டு `தூத்தானகையைக் காண இனி யாது செய்வது?’ என்ற ஆழ்ந்தாராய்வில் அவள் முனைந்தாள்.
சமயமும் சூழலும் அவளுக்கு உதவின. அருகேயுள்ள வெந்நீரூற்றில் யாரோ நீர் மொள்ளும் அரவம் கேட்டது. அவள் தன் குரலை ஆண் குரலாக மாற்றிக் கொண்டு, நீரில் கழுத்தளவு ஆழத்திலிருந்துகொண்டே, ‘யாரது?’ என்றாள்.
“நான்தான், தூத்தானகை ஆண்டையின் பணியாள்; அவருக்காக வெந்நீர் கொண்டு போகப்போகிறேன்,” என்றான் ஒருவன்.
“அப்படியா? அவர் என் நண்பர்தான். முதலில் ஒரு கலத்தை என்னிடம் கொடு. சிறிது வெந்நீர் அருந்திவிட்டுத் தருகிறேன்,” என்றாள் அவள்.
பணியாள் மூன்று கலங்கள் கொணர்ந்திருந்தான். ஒன்றை நீட்டினான். அவள் வாங்கித் தவறவிடுபவள் போலக் கீழே போட்டு உடைத்தாள். ஆனால் பணியாள் அதற்காகச் சினம் கொள்வதன் முன் அடா என் நண்பருக்கு நட்டம் விளைவித்து விட்டேனே! சரி, நாளை விலை கொடுத்து விடுகிறேன். மற்றொரு கலம் கொடு. வெந்நீர் குடித்துவிட்டுத் தருகிறேன் என்றாள். பணியாள் சற்றுத் தயங்கினான். ஆனால், தயங்கியபடியே இரண்டாம் கலம் தந்தான். இத்தடவை அவன் கையிலிருந்தே அதைத் தட்டிவிட்டு, என்ன அடம், என் கையில் தராமலே உடைத்து விட்டாயா? பார் உன் ஆண்டையிடம் வந்து… என்று கனல் தெறிக்கப் பேசினாள்.
பணியாள் உள்ளபடியே அஞ்சி விட்டான். மூன்றாவது கலத்தை நீட்டினான். ஃஇனேமோவா அதை வாங்கி அவன் காலடியிலேயே போட்டு உடைத்தாள்.
பணியாளுக்கு வந்த சீற்றத்திலே அவன் உடனே தூத்தானகையிடம் சென்று முறையிட்டான்.
தன் பணியாள் என்று தெரிந்தும், நண்பன் என்று கூறிக்கொண்டு இக்கேடு செய்தவனைச் சந்து சந்தாகக் கிழிக்க வேண்டும் என்ற வேகத்துடன், தூத்தானகை ஏரிக்கரைக்கு விரைந்தான். அவன் கையில் நீண்ட கழி ஒன்று இருந்தது.
என் கலங்களை உடைத்த மடையன் யார்? என் கண்முன் வரட்டும். அவன் மண்டையை உடைக்கிறேன், என்று கரையருகில் வந்து அவன் கத்தினான்.
அவன் குரலை அவள் அறிந்தாள். கையில் கழியுடன் அவன் போர் வேடத்தில் போர்க்குரலுடன் தன்னை நாடிவந்தது கண்ட அவளுக்கு அந்நிலையிலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த அடங்கிய சிரிப்பு அவன் சீற்றத்தை இன்னும் கிளறிற்று. அத்துடன் ஆள் நின்ற திசையையும் அது காட்டிற்று.
அவன் நீரில் இறங்கி அத்திசையில் விரைந்தான்.
அவள் பெண்மையின் குறும்பு அவனை இன்னும் விளையாட்டுப் பண்ணுவிக்க விரும்பிற்று. தன்னை அவள் எளிதில் கண்டுபிடிக்க அவள் விரும்பவில்லை. நாணமும் தானாக அவனிடம் அறிமுகம் செய்து கொள்வதைத் தடுத்தது. ஆகவே, அவள் அடிக்கடி நீரில் முழுகியும், கரை யோரமுள்ள பாறைகளில் பதுங்கி வளைந்தோடியும், ஓடியாடி விளையாட்டுக் காட்டினாள்.
தன் கலத்தை உடைத்ததுடன், தன்னுடன் இத்தகைய கேலி விளையாட்டு விளையாடும் குறும்பனைப் பிடித்து நல்ல பாடம் தர அவன் பின்னும் வேகமாக விரைந்தான்.
“அடே! நீ ஆண்பிள்ளைதானா? இப்படி ஒளிந் தோடுகிறாய்?” என்றான்.
அவள் ஒளிவது மாதிரி பாசாங்கு செய்தாள். அவள் கைகளில் ஒன்றைப் பற்றி அவன் இழுத்தான்.
“நீ ஆண் பிள்ளைதானா? ஒரு பெண் பிள்ளையை இப்படித் தண்ணீருக்குள் இறங்கி வேட்டையாட!” என்றாள் அவள்.
அந்தக் குரல் பெண்குரல் என்பதை அவன் அப்போதுதான் கவனித்தான்.
“ஆ பெண்ணா! நீ யார்? ஏன் இங்கே வந்தாய்?” என்றான்.
“பெண் எதற்காக இப்படி வருவாள்?” என்ற அவள் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டான்.
“ஆ! அது யார்? ஃஇனேமோவா?” என்றான்.
“ஆம். நான்தான்,” என்று கூறி அவள் நாணிக் கோணினாள்.
நடந்தது இன்னதென்று தெரியாமல் அவன் விழித்தான். பின்னர், “ஃஇனேமோவா! நீ இப்படி ஒளிப்பானேன்? என் வீட்டுக்கு வரலாமே!” என்றான்.
“நான் நீந்திவந்தேன். அதனால் உடையை…..” அவன், தன் மேலாடையை அவள் பக்கம் வீசினான்.
அதை உடுத்துக்கொண்டு அவள் தண்ணீரை விட்டு வெளியே வந்தாள். காதலி காதலன் விருந்தாளியானாள்.
தந்தையின் ஆதரவில், மயோரியர் அனைவரின் ஆர்வமிக்க ஆடல் பாடல்களிடையே ஃஇனேமோவாவுக்கும் தூத்தா னகைக்கும் திருமணம் நடைபெற்றது.
மகீமன்ஃசார்
பாரசீக நாட்டுக் கதை
உரூம் நகரின் பேரரசனுக்கு மகீமன்ஃசார் என்ற அழகிற்சிறந்த புதல்வி ஒருத்தி இருந்தாள். அழகிற் சிறந்திருந்ததுபோலவே, குணத்திலும் அறிவிலும் அவள் ஒப்புயர்வற்றவளாயிருந்தாள். எனவே அவளைப் போற்றிப் புகழாதவர் அந்த நாட்டில் இல்லை.
அதே நகரில் கொலை, களவு, பொய், சூது, குடி ஆகிய ஐம்பெரும் பழிகளும் செய்து எல்லோரின் வெறுப்புக்கும் ஆளாயிருந்த அக்தார் என்ற ஓர் இளைஞனும் வாழ்ந்தான். அவன் கடை அரண்மனைக்கு அருகாமையிலேயே இருந்தது.
ஒருநாள் மாலைப்பொழுதில் மகீமன்ஃசார் அரண்மனை மாடியில்வந்து இளந்தென்றலில் உலவிக் கொண்டிருந்தாள். அதேசமயம் தன் கடையின் மேல் மாடியில் அக்தாரும் தற்செயலாக நின்றிருந்தான். மாசற்ற முழு நிறைமதியம் போன்ற இளவரசியின் அழகு, இழிமகனான அக்தாரின் கண்ணை உறுத்தி உள்ளத்தை வடுப்படுத்திற்று. எல்லோரும் அவள் அழகைவிடக் குணத்தையும் அறிவையும் புகழ்ந்தது அவன் மனப்புழுக்கத்தை இன்னும் மிகுதிப்படுத்திற்று. எட்டாக்கனியாகிய அவ்விளரவசியை எப்படியாவது கைப்பற்றி அடக்கியாள வேண்டுமென்ற தகா எண்ணம் அவன் நஞ்சார்ந்த நெஞ்சில் எழுந்தது.
மகீமன்ஃசாரின் புகழைத் தம் வாழ்வுடன் பிணைக்க ஆர்வங்கொண்ட மன்னரும் மன்னிளங்கோக்களும் எண்ணற்றவர். ஆனால், அவர்களில் அவள் உள்ளத்தையும் தாய் தந்தையர் இணக்கத்தையும் பெறும்பேறு, தஃப்ரீஃக இளவரசன் மீர் அசாருக்கே கிட்டிற்று. அவன் உரூம் நகர்வந்து அவளை மணம்புரிந்து இட்டுச்செல்ல இருந்தான்.
இச்செய்தி அக்தாருக்கு எட்டிற்று.
தகுதியுடையவன் உரிமையுடன் கொண்டு போகுமுன், தன் தகா எண்ணத்தை நிறைவேற்ற அக்தார் துடித்தான்.
ஒவ்வொரு நாளும் இரவில் அவன் அரண்மனைப் பக்கம் சென்றான். காவலர்கள் விழிப்பாகக் காவல் காத்து வந்ததுகண்டு, அவன் மனமுடைந்து திரும்ப வேண்டியதாயிற்று.
மீர் அசார் புடையர்குழுச்சூழ அரண்மனை வந்து சேர்ந்தான். அரண்மனையில் விருந்துகளும் கேளிக்கைகளும் நிரம்பின. நகரமக்கள் யாவரும் விழாக் கொண்டாடினர். இளவரசனுக்கும் இளவரசிக்கும் மண உறுதி செய்யப்பட்டது.
விருந்தயர்வால் அன்றிரவு காவலர் முன்னிரவிலேயே தூங்கி விழலாயினர். காவற்பெண்டிரும் அயர்வுற்றிருந்தனர். இதுதான் சமயமென்று அக்தார் வரிக்கயிறுகளுடன் அரண்மனை நோக்கிச் சென்றான். குரட்டை விட்டுக் கொண்டிருந்த காவலரைத் தாண்டிக் கயிற்றை சுண்டியிட்டு மாடிமீது வீசினான். அது மாடியிலிருந்த கைபிடிச்சுவரின் குமிழ்களில் மாட்டிக் கொண்டது. அவன் அதைப்பற்றி ஏறினான்.
காற்றுக்காக இளவரசியின் அறையின் பலகணிகள் மட்டுமல்லாமல் வாயில் கதவும் திறந்துவைக்கப்பட்டிருந்தது. வழியில் உறங்கிய காவற் பெண்டிரை அவன் தாண்டிச் சென்றான்.
இளவரசி அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அக்தார் தான் கொண்டுவந்த மயக்க மருந்தை அவள் மூக்கிற்கெதிராகப் பிடித்தான். அவள் முற்றிலும் உணர்விழந்தாள். மருந்தின் ஆற்றல் தளரப் பல மணிநேரம் பிடிக்குமென்பது அவனுக்குத் தெரியுமாதலால், அவன் அவளை மெல்லத் தூக்கிக்கொண்டு கயிற்றின் உதவியால் கீழே இறக்கினான். பின் தானும் இறங்கி அவளைத் தோளில் சுமந்தவண்ணம் நகரைவிட்டு ஓடினான்.
இளவரசி மகீமன்ஃசாருக்கு மீண்டும் உணர்வு வரும்போது, அவள் காட்டுவழியின் அருகே நிலத்தில் கிடந்தாள். அக்தார் அவள் அருகே உட்கார்ந்திருந்தான்.
கண்விழித்தவுடன் அவள் வழக்கப்படி தன் தோழியர்களை அழைத்தாள். யாரும் வராததையும் தான் இருக்கும் இடம் காடாயிருப்பதையும் கண்டு ‘எங்கிருக்கிறேன் நான்’ என்று அவள் திகில் கொண்டாள். அப்போது அக்தார் அவள்முன் நின்று, “அஞ்சாதே இளவரசியே! உன்னை மனமாரக் காதலிக்கும் என்னிடமே நீ இருக்கிறாய்! ஆகவே அஞ்சவேண்டாம்,” என்றான்.
“பெண்ணரசி, அழகாரணங்கே! நான்தான் அக்தார். உன் அரண்மனையடுத்த மாடியிலிருந்து நான் உன்னை ஒருநாள் பார்த்தது உனக்கு நினைவிலிருக்கலாம். அன்று முதல் நீ என் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. ஆயினும் நான் எத்தனையோ தடவை முயன்றும், உன்னை அணுகமுடியவில்லை. இன்று தெய்வம் எனக்கு உதவிற்று. உன்னை நான் என் கண்ணாக வைத்துக் காப்பேன். நீ கவலைப்பட வேண்டாம்,” என்றான்.
இச்செய்தி கேட்டு இளவரசியின் உடலின் ஒவ்வோரணுவும் திடுக்குற்றது. எனினும் ஆரிடர்நேர்ந்த இடத்தில்தான் அஞ்சாமை வேண்டும் என்பதை அறிவார்ந்த அந்த அணங்குநல்லாள் அறிந்திருந்தாள். விழுந்த பொறியிலிருந்து மீள வகைகாணு மளவும் அவன் நம்பும்படி நடிப்பதே நன்றென அவள் தேர்ந்து கொண்டாள்.
“அழகுமிக்க இளைஞனே! நானும் உன்னை அன்று கண்டவுடனேயே காதலித்துவிட்டேன். ஆனால், உன்னை நான் இவ்வளவு எளிதில் அடைவேன் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தது. நீ அழகுடையவன் மட்டுமல்ல, திறமையும் உடையவன். ஆகவே நாம் இவ்வாறு காட்டில் அலைய வேண்டியதில்லை. ஏதேனும் ஒரு நகரத்தில் சென்று வீடு அமர்த்திக் கொண்டு வாழலாம் விரைந்து போவோம்,” என்றாள்.
அக்தார் இத்திட்டத்தை மனமுவந்து ஏற்றான்.
“நாட்டில் போய்ச் சேரும்வரை பெண் உருவில் நான் வருவது எப்படியும் இடையூறு தரும். என்னையும் ஆணாக உருமாற்றிவிட்டால் நல்லதல்லவா?” என்றாள் இளவரசி. மீண்டும்!
அவள் அறிவை அவன் மெச்சினான். அப்படியே அவள் அழகிய கூந்தலைச் சுருட்டி ஒரு தலைப்பாகைக்குள் மறைத்தான். உயர்தர ஆடவர் அணியும் அங்கி ஒன்றைப் போர்த்தினான். அவள் முற்றிலும் ஆடவனாகவே தோற்றமளித்தாள்.
இருவரும் விரைந்து நடந்தனர். அருகிலுள்ள அலெப்போ நகரை அணுகினர். இளவரசிக்கு உண்மையிலேயே பசி காதை அடைத்தது. அத்துடன் உடம்புக்கும் நலமில்லை என்று கூறி அவள் கீழே சாய்ந்துவிட்டாள்.
நகரின் உள்ளே மருந்தும் உணவும், தேடி வருவதாகக் கூறி இளவரசியை அங்கேயே விட்டுவிட்டு அக்தார் சென்றான்.
அன்று அலெப்போ நகரெங்கும் குழப்பமாயிருந்தது. அரசனுக்கு எதிரியாயிருந்த யாரோ இரவில் அவனைக் குத்திப் படுகாயப் படுத்தி விட்டனர். அரசன் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். காவலர் எங்கும் கொலையாளியைத் தேடித் திரிந்தனர்.
நகரின் உள்ளே சென்ற அக்தார், புது ஊராதலால் வழி தெரியாமல் திகைத்து நின்றான். இதனால் அவன் அயலான் என்பது எளிதில் புலப்பட்டது. காவலர் அவனைப் பிடித்து உசாவத் தொடங்கினர். அச்சமயம் உரூம் நகரிலிருந்து வந்திருந்த ஒருவன் “இவன் தான் அக்தார், பேர்போன திருடன், கொள்ளைக் காரன், கொலைக்காரன்” என்று அறிமுகப்படுத்தினான். அவனைக் காவலில் வைக்க இதுவே போதிய சான்றாயமைந்தது.
மன்னன் நிலை இதற்குள் மோசமாயிற்று. அவன் அமைச்சர் படைத் தலைவர்களை வருவித்து, “நான் இறந்தால், என் வேட்டை நாயை அவிழ்த்து விடுங்கள். அது யார் ஆடையைப் பற்றி இழுக்கிறதோ, அவனையே அரசனாக்குங்கள்” என்று கதறிக் கடைசி மூச்சு விட்டான்.
மன்னன் உயிர் நீத்தபின் மூன்று நாள் நகர் முழுதும் அருந்துயர் கொண்டாடப்பட்டது. அதன் முடிவில் மன்னனின் வேட்டை நாய் நகரில் அவிழ்த்து விடப்பட்டது.
அக்தார் திரும்பி வராதது கண்டு இளவரசி மகீமன்ஃசார் தன் ஆண் உடையிலேயே நகருக்குள் வந்து யாரிடம் அடைக்கலம் பெறுவது என்று அறியாமல் சுற்றித் திரிந்தாள்.
வேட்டை நாய் அவள் ஆடையைப் பற்றி இழுத்தது.
நடந்தது இன்னதென்று அறியுமுன் காவலர் படைத் தலைவர்கள் தலைமையில் முதலமைச்சன் வந்து அவளை எதிர் கொண்டு அழைத்துச் சென்றான். அவளை ஆண் என்றே யாவரும் நினைத்த படியால், அவளையே அரசனாகும்படி வேண்டினர்.
பெண்ணேயானாலும் மன்னனருகிலிருந்து ஆட்சி முறைகளை மகீமன்ஃசார் நன்கு கவனித்து உணர்ந்திருந்தாள். முதல் நாளிலேயே நல்லாட்சி செய்யும் திறன் தனக்கு உண்டு என்பதை அவள் காட்டினாள்.
தன் தேர்வின் அறிகுறியாகச் சிறைப்பட்டவர்களை அனைவரையும் விடுவிக்கும்படியும், ஓராண்டு குடிகள் அனைவரின் வரியையும் அகற்றும்படியும், ஏழை எளியவர்களுக்கு உணவளிக்கும் படியும் அவள் உத்தரவிட்டாள்.
இளவரசியின் புதிய உத்தரவினால் விடுதலை அடைந்தவர்களில் அக்தாரும் ஒருவன். தன் விடுதலைக்குப் புதிய அரசனின் முடிசூட்டு விழாவே காரணம் என்பதை மட்டுமே அவன் அறிந்தான்.
புதிய அரசன் யார் என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. அது தன்னால் கடத்திக் கொண்டு வரப்பட்ட இளவரசியாயிருக்கக் கூடும் என்பதை அவன் கனவிலும் கருதியவன் அல்லன்.
இந்நிலையில் அவன் விடுதலையானதே மிகு விரைவாக நகர்ப் புறத்தில் தான் இளவரசியை விட்டுவந்த இடம் சென்று பார்த்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே அவள் அங்கே இல்லை. அவள் எங்கே சென்றாள் என்பது பற்றிய தகவலும் எதுவும் கிடைக்க வகையில்லாது போயிற்று.
கைக்கெட்டியதும் வாய்க்கெட்டாமல்போன அவப்பேற்றை நினைத்து அவன் வருந்தினான். எப்படியும் இளவரசி நகருக்குள்தான் சென்றிருக்க வேண்டும்.
ஆனால், நகர்க்காவலர் அவனை அறிந்திருந்தனர். உள்ளே சென்றால் மீட்டும் தொல்லைகள் எதிலாவது மாட்டிக் கொள்ள நேரும். ஆகவே உருமாறிச் சென்றால் தான் நல்லது என்று அவன் எண்ணினான். அலைந்து திரியும் ஆண்டியுருவில் அவன் நகரத்துக்குள் சென்று மகீமன்ஃசாரை தேடித் திரிந்தான்.
ஆனால், மகீமன்ஃசாரைத் தேடி அலெப்போ நகரில் திரிந்தது அவன் மட்டுமல்ல. வேறும் ஒருவர். அதே வேலையில் அவனை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததுண்டு. அது வேறுயாருமல்ல. இளவரசியை மணம் செய்யக் காத்தருந்த தஃபரீஃசு இளவரசன் மீர் அசாரே.
இளவரசி காணமற்போன இரவு கழிந்து விடியற் காலமானதே உரூம் நகர் முழுதும் அல்லோகல்லோலப் பட்டது. காவலரும் படைவீரரும் நாலா திசைகளிலும் சென்று இளவரசியைத் தேடினர். தாய்தந்தையர் மட்டுமன்றி நாட்டு மக்களும் ஆறாத்துயரில் ஆழ்ந்தனர்.
ஆனால், அனைவர் துயரினும் மிக்க அருந்துயர் உழந்தவன் மீர் அசாரே. முதல் அதிர்ச்சி கழிந்ததும் அவன் எழுந்தான். “மற்றவர்களைப் போல நானும் இருந்து வருந்துதல் தவறு. நானே நேரில் சென்று தேடி என் உரிமைக் காதலியை மீட்டுவருவேன்,” என்று கூறிப் புறப்பட்டான்.
பல்நாள் பாலைவனங்களும் சோலைவனங்களும், காடும் நாடும் தேடி, அவன் இறுதியில் அலெப்போ நகருக்கு வந்தான்.
வழியில் இளவரசன் காய்கனிகளையும் நீரையுமே உண்டு நடந்தான். அத்துடன் அவ்வப்போது காடுகளில் விலங்குகளை வேட்டையாடிச் சருகுத் தீயில் வேகவைத்தும் உண்டான். அலெப்போவை அடுத்த காட்டில் அவன் ஒரு பகுதியை உண்டு, மீந்ததைச் சிப்பமாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.
நகரின் அவன் ஓர் ஆண்டியைக் கண்டதும் அவனுடன் பழகி நட்பாடினான். இருவருமாக நகரின் ஒதுங்கிய பகுதியிலிருந்து சிப்பத்திலிருந்த இறைச்சியை உண்டு சிறிது இளைப்பாறினர்.
ஆண்டி உண்மையில் ஆண்டியல்ல. மகீமன்ஃசாரை ஆண்டியுருவில் தேடிக்கொண்டிருந்த திருடன் அக்தாரே.
தன்னுடன் நட்பாடியவன் மகீமன்ஃசாரை மணக்க வந்த இளவரசன் மீர் அசாரே என்பதையும், அவனும் அவளைத் தேடியே அலைகிறான் என்பதையும் அக்தார் அறிந்து கொண்டான்.
ஆனால், மீர் அசாருக்கு ஆண்டி யார் என்று தெரியாது. இந்நிலையில் எப்படியாவது மீர் அசாரை ஏமாற்றிவிட்டுச் செல்ல அவன் சமயம் பார்த்திருந்தான்.
இளவரசன் உண்ட களைப்பால் அயர்ந்து உறங்கும் சமயத்தில், அக்தார் அவனைத் திடுமெனத் தாக்கி அவன் வாயில் துணியடைத்துக் கையையும் காலையும் கட்டி உருட்டினான்.
அதன்பின் அவன் இளவரசன் கையிலிருந்த பணத்தையும் அவன் உடைகளையும் குதிரையையும் கைக்கொண்டு, இளவரசன் உருவிலேயே குதிரை மீது விரைந்து சென்றான். ஆனால் மீட்டும் ஒரு தடவை, அவனொன்று நினைக்கத் தெய்வமொன்று செய்து காட்டிற்று.
இளவரசனுடைய ஆட்கள் அவனைக் கண்டு இளவரசன் என்று நினைத்து அணுகினார். அவன் ஓட முயன்றான். அவன் இளவரசன் அல்ல என்பதும், இளவரசனுக்குத் தீங்கு செய்து விட்டு அவ்வுருவில் ஓடுபவனே என்பதும் உடனே தெரிந்து விட்டது.
இளவரசனை மீட்டுக் கொண்டு, யாவரும் முதலமைச்சரிடம் சென்று அக்தார் செயல்பற்றி முறையிட்டனர்.
முதலமைச்சர் மூலம் இச்செய்தி அறிந்ததே, இளவரசி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இளவரசன் தன்னை மணக்க இருந்த காதலனே என்பதையும், அவனைத் தாக்கித் திருடமுயன்றவன் தன்னை அலெப்போவுக்குக் கடத்திக் கொண்டு வந்தவனே என்பதையும் அவள் ஒரு நொடியில் உய்த்துணர்ந்தாள்.
முறைப்படி மீர் அசாரையும் அக்தாரையும் உசாவியதில், முக்காற்பங்கு உண்மையும் யாவருக்கும் வெளியாயிற்று.
அக்தாரை அச்சுறுத்தி அவனைப் பற்றிய விவரம் முழுவதும் வெளியாக்கிய பின், இளவரசி தன் ஆணுடை கலைத்து தானே மகீமன்ஃசார் என்று காட்டிக் கொண்டாள். இளவரசன் மீர்அசார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
அந்நாட்டு முறைப்படி, நம்பத்தகாத பெருந்திருடன் என்ற குறிப்புந் தோன்ற நெற்றியில் அடையாளச் சூடப்பட்டு அக்தார் நாடு கடத்தப்பட்டான்.
மகிமன்ஃசாரின் தாய் தந்தையர் உறவினர் உறவினர் யாவரும், மீர் அசாரின் உறவினர் யாவரும் வரவழைக்கப் பட்டனர். மகீமன்ஃசார் பேரரச விருந்துகளுடன் மீர் அசாரை மணந்து கொண்டாள். மீர் அசார் அலைப்போ, உரூம், தஃப்ரீஃசு ஆகிய எல்லா அரசுகளுக்கும் உரிய பேரரசனானான். மக்மன்ஃசார் அவன் உரிமைப் பேரரசியானாள்.
மகீமன்ஃசாரின் நல்லறிவுடன் தன் நல்லறிவை இணைத்து மீர் அசார் பேரரசாண்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக