தேவநேயம் - 6
கட்டுரைகள்
Back
தேவநேயம் - 6
இரா. இளங்குமரன்
1. தேவநேயம் - 6
2. சுல் (துளைத்தற் கருத்துவேர்)
3. சுல்லி
4. சுவணம்
5. சுவண்டை
6. சுவர் வகை
7. சுழிமுனை
8. சுள்
9. சுறுக்கு
10.சூடம்
11. சூடிகை
12. சூடை
13. சூதாட்டின் தன்மைகள்
14. சூது
15. சூர்
16. சூர்ப்பம்
17. சூரன்
18. சூலம்
19. சூலி
20. சூலை
21. சூ விளையாட்டு
22. சூள் வகைகள்
23. செங்குந்தர்
24. செங்கோல்
25. செட்டி
26. செடி
27. செந்தமிழ்நாடு
28. செந்தமிழும் கொடுந்தமிழும்
29. செம்பியன்
30. செம்புக்காலம் (Copper Age)
31. செய்வகை
32. செயப்பாட்டு வினை விகுதிகள்
33. செயற்கரியவை
34. செருப்பு வகை
35.செவ்வந்தி
36. செவ்வி
37.செவியுறு
38. சே
39. சேடா
40. சேது
41.சேம்பு
42. சேயும் சேய்மையும்
43. சேரநாட்டு அரசர்கள்
44. சேரலம்
45. சேரன் அருஞ்செயல்
46. சேலை
47. சொம்
48. சொல்வேர் காண்வழிகள்
49. சொலவம்
50.சொலி
51. சொற்குலமுங் குடும்பமும்
52. பேடி.
53. சொற்பொருள் வரிசை
54. சொற்பொருளாராய்ச்சி
55.சொன்னம்
56. சோகாத்தல்
57. சோடை
58. சோம்பல் வகை
59. சோம்பு
60. சோழர் வெற்றிச் செயல்கள்
61. சோறு கொண்டுபோகிற வழியிலே - விளையாட்டு
62. ஞாலமுந்திய நிலை
63. தக்கணம்
64. தக்கயாகப் பரணி
65. தக்கோலம்
66. தக
67. தட்டாங்கல் விளையாட்டு
68. தட்டு
69. தடம்
70. தண்டம்
71. தண்டிக்கும் முறை
72. தண்டு
73.தபு
74. தமர்
75. தமிழ் உயர்தனி இலக்கியச் செம்மொழி
76. தமிழ் எழுத்து மாற்றம்
77. தமிழ் என்னும் பெயர் வரலாறு
78. தமிழ்த் தோற்றம்
79. தமிழ் தனித்தியங்குமா ?
80.தமிழ் திரவிட வேறுபாடு
81. தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்
82. தமிழ் திரிநிலை
83. தமிழ் தோன்றிய இடம்
84. தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம்
85. தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை
86. தமிழ்நாட்டுப் பிராமணர்க்கு ஓர் அன்பெச்சரிக்கை
87. தமிழ்நாடு முன்னேறும் வழிகள்
88. தமிழ் நெடுங்கணக்கு
89. தமிழ் மன்னர் பெயர்
90. தமிழ் முகம்
91.வினா
92.தமிழ்மொழி வளர்ச்சி
93. தமிழ் வரலாற்றடிப்படை
தேவநேயம் - 6
இரா. இளங்குமரன்
நூற்குறிப்பு
நூற்பெயர் : தேவநேயம் - 6
தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2004
மறுபதிப்பு : 2015
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
பக்கம் : 8 + 296 = 304
படிகள் : 1000
விலை : உரு. 285/-
நூலாக்கம் : பாவாணர் கணினி
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன்
அச்சு : வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்
இராயப்பேட்டை, சென்னை - 14.
கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
மொழி மீட்பின் மீள் வரவு
தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர்.
கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர்.
ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர்.
மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர்.
அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர்.
அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும்.
நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார்.
தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது.
பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது.
மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர்.
வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன்.
வாழிய நலனே! இன்ப அன்புடன்
வாழிய நிலனே! இரா. இளங்குமரன்
பதிப்புரை
20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர்.
திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர்.
இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும்.
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத்தொகுப்புகளை வெளியிடு வதில் பெருமைப் படுகிறோம்.
அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர்.
பதிப்பாளர்
கோ. இளவழகன்
சுல் (துளைத்தற் கருத்துவேர்)
சுல் : சூல் - சூல். சூலுதல் = 1. தோண்டுதல்.
நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை (நாலடி. 44). 2. அறுத்தல் (யாழ்ப்.).
அறுத்தலும் ஒருவகைத் துளைத்தலே. கத்தியால் நீட்டுப் போக்காகப் பன்முறை முன்னும் பின்னும் இழுத்துத் துளைத்தல் அறுத்தலும், செங்குத்தாக ஒரே அறையில் துளைத்துத் துணித் தல் அல்லது சிறிது துளைத்தல் வெட்டுதலும், ஆகும்
.
சுல் - (சுன்) - சுனை = 1. உட்டுளையினின்று நீர் வருவது போன்ற நீரூற்று. 2. நீரூற்றுள்ள மலைக் குண்டு.
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே (புறம். 109)
3. நீரூற்றுள்ள பொய்கை (பிங்.).
சுனை - தெ. சொன, க. தொன. சுன் - சூன் = இரு வீட்டுச் சுவர்களின் இடைச்சந்து.
சுனை - (சொனை) - சோனை = 1. வானத்தினின்று நீரூற்றுச் சொரிவது போன்ற விடாப் பெரும் பெயல். மேகஞ் சோனை பட (கம்பரா. அயோத்தி. குகப். 20). 2. (சோனையாகப் பொழியும்) கார் முகில். சோனைவார் குழலினார் (கம்பரா. பால. நீர்விளை. 14). 3. மலையடிவார விடாமழைச் சாரல்.
தெ. சோன, க. சோனெ.
சோனைமாரி - சோனாமாரி - சோனாவாரி = விடாப் பெரு மழை. சோனாமாரியாய்ச் சொரிகிறதே என்பது உலகவழக்கு. சோனை மாரியிற் சொரிந்தனன் (கம்பரா. யுத்த. பிரமாத். 59).
சோனை - சோனம் = முகில். சோனந்தரு குழலார் (பதினொ. ஆளு. மும். 12). தெ. சோன, க. சோனெ.
சோனை மேகம் = பெருமழை முகில். சொரிந்தது சோனை மேகம் (பாரத. சம்பவ. 79).
சோனைமேகம் - சோனாமேகம். சோனாமேகம் பொழிவது போல் (பாரத. பதினேழாம். 135).
சுல் - (சுர்) - சுர. சுரத்தல் = 1. உட்டுளையினின்று ஊறுதல் போற் பால் சுரத்தல்.
2. பால் சுரத்தல் போல் மழை பொழிதல்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல்
மேனின்று தான்சுரத்த லான் (சிலப். 1:9)
3. மழை பொழிதல் போல் இறைவன் அருள்பொழிதல். ஆழியா னவனை நோக்கி யருள்சுரந்து (கம்பரா. யுத்த விபீடண. 142).
4. மிகக் கொடுத்தல். நெடுந்தேர் களிறொடு சுரக்கும் (அகம். 249). 5. (மிகக் கொடுத்தலால்) நிறைதல். விருப்பஞ் சுரந்த சிலந்தி முடிசூட்டும் பெருமான் (திருவானை. உலா 60). 6. உடம்பில் நோய் நீர் பெருகி வீங்குதல்.
சுர - ம. சுரத்து, க. ஓசர்.
சுர - சுரப்பு = 1. ஊறுகை. சுரப்புறு சிறைப் புனல் (அரிச். பு. விவாக. 107). 2. ஊற்று. 3. கறக்குமாறு ஆவின் மடியிற் பாலூறுகை, ஒரு சுரப்பு ஆகிவிட்டது (உ.வ.). 4. கெட்ட நீரால் ஏற்பட்ட வீக்கம். காலிற் சுரப்பு உண்டாயிருக்கிறது (உ.வ.).
சுரப்பு - சுரப்பி = நன்றாக அல்லது நிரம்பப் பால் சுரக்கும் ஆ(வு).
ஒ.நோ : கறவை = கறப்பு, கறக்கும் ஆவு. சுரை = சுரப்பு. சுரக்கும் ஆவு.
சுரப்பி - வ. சுரபி (Surabhi). வடமொழியில் சுரபி என்னுஞ் சொற்கு மூலமில்லை. சு - ரப் Su-rabh = Pleasantly affecting என்று மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகர முதலி உன்னிப்பாகக் கூறும்.
சுர - சுரம் = உட்டுளை.
சுர - சுரங்கு - சுரங்கம் = 1. நிலவறை. 2. கீழறுக்கும் அறை. 3. திருடர் கன்னமிடச் சுவரில் துளைக்கும் துளை. 4. பாறைகளை உடைக்க வெடிமருந்து வைக்கும் குழி.
சுரங்கம் - சுரங்கா. (வ.).
சுர் - சுரி. சுரித்தல் = துளையிடுதல்.
சுரி = 1. துளை. (திவா.). 2. ஏட்டுத்துளை. ம. சுரி. 3. ஏட்டில் துளையிடுங் கருவி.
சுரியூசி = ஏட்டில் துளையிடுங் கருவி.
இச்சொல் குத்தற் பொருட் கட்டுரையிலும் குறிக்கப்பட்டது. குத்தலும் துளைத்தலும், கலத்தை நீர்மேல் வைத்தலும் அதற்குள் முழுக்குதலும் போன்ற, நெருங்கிய அல்லது அடுத்து நிகழும் வினைகள் என்றறிதல் வேண்டும். அதனால், ஒரே சொல் இரண்டையுங் குறிக்கும். ஆயினும், கருவி வேறுபாட்டால்
வினை வேறுபடும். கையினால் அதில் அல்லது வேறுறுப்பிற் குத்துவது துளைத்தலின் பாற்பட்டது. ஆதலால், துளைக்குங் குத்தல் வினைச் சொற்களெல்லாம் இக்கட்டுரைக்கே யுரியவை யெனப் பிரித்துணர்க. குடைச்சற் கருத்தைக் கொண்ட சூலை நோய்ப் பெயரும், அணிவகைத் துளைத்தலைக் குறித்தலால் இக் கட்டுரைக்கே யுரியதாகும்.
சுர் - சுரு - சுருங்கு = சாய்கடை (Gutter) (பிங்.).
சுருங்கு - வ. சுருங்கா.
சுருங்கு - சுருங்கை = 1. நுழைவாயில். (பிங்.). 2. மாளிகையின் சாளரம். மாடமேற் சுருங்கையிலிருந்து ….. மாநகரணி பார்த்திடும் (சீகாளத் பு. நக்கீர. 30). 3. புதைசாலகம். பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணி. 12:79). 4. கோட்டையில் மறைவான கீழ்நில வழி. (சூடா). போக வமைத்த பொய்ந்நிலச் சுருங்கையுள் (பெருங். 2:17:94).
சுருங்கை - வ. சுருங்கா.
ஒ. நோ : Gk. Surigx, Surigg = குழாய். L., E. Sgrinx = நாணற்குழல். L. Siringa, E. Syringe = உறிஞ்சி (உறிஞ்சு குழாய்).
சுரு - சுருவம் = 1. அகப்பை வகை (அக. நி.). 2. நெய்த் துடுப்பு. சீரைச் சுருக்குச் சுருவமெலாம் (உத்தரரா. அனுமப். 41).
சுருவம் - வ. ருவ.
சுரு - சுருவை = நெய்த் துடுப்பு. அந்தணாளர்க்குச் சுருவையும் (தொல். பொ. 629, உரை).
ஒ.நோ : முள் - முழு - முழுகு. முழு - முழை = அகப்பை. முழுகுதலும் துளைத்தல் வகையே.
சுர - சுரை = 1. குழிந்த இடம். பாத்திரத் தகன் சுரைப் பெய்த வாருயிர் மருந்து (மணி. 11:117). 2. உட்டுளை. (பிங்.). 3. மூங்கிற் குழாய். அகன்சூ லஞ்சுரைப் பெய்த வல்சியர் (அகம். 113). 4. திரிக்குழாய். சொரிசுரை கவரு நெய் (பதிற்றுப் 47). 5. திருகாணியைச் செலுத்துஞ் சிறு குழாய். 6. மூட்டுவாய். சுரையம்பு மூழ்க. (கலித். 6). 7. பூண். செறிசுரை வெள்வேல் (அகம். 216). 8. தோண்டும் கூரான பாரைவகை. உளிவாய்ச் சுரையின் மிளிர மண்டி (பெரும்பாண். 92). 9. நெற்றானபின் உட்டுளையுள்ள காய்வகை சுரைவித்துப் போலுந்தம் பல் (நாலடி. 315). ம. சுர, க. சொரெ. 10. நுண்ணிய துளையினின்று சுரக்கை. கடுஞ்சுரை நல்லான் (குறுந். 132). க. சொரெ. 11. மான்மரை மறி ஆன் முதலியவற்றின் பான்மடி. வருடை மான்மறி சுரைபொழி தீம்பால் (குறுந். 187). 12. சுரக்கும் ஆ. (திவா.). சுரைமலி யமிர்தத் தீம்பால் (சூளா. தூது. 90).
சுள் - சுளி - (சுகி) - சுகிர். சுகிர்தல் = 1. கிழித்தல். பல்லினாற் சுகிர்ந்த நாரின் (சீவக. 438). 2. மயிர், நார் முதலியவற்றை வகிர்தல். சுகிர் = உட்டுளை. (சூடா.).
சுர் - (சூர்) - சூறு = எருவாய் (Anus). சூறு - சூற்று - சூத்து = 1. எருவாய் (மலவாயில்). 2. புட்டம். சூத்திலடித்தானாம், பல்லுப்
போச்சாம் (பழமொழி).
ம. சூத்து. வ. சுத்து (c), சூத்து (c), சுத்தீ (c). வடமொழியில் இதற்கு மூலமில்லை, தமிழில் மூலம் தெளிவாகவுள்ளது. சூறல் (சூலுதல்) = தோண்டுதல். சூறு = துளை, எருவாயில். இங்ஙனமிருந்தும்,
சூத்து என்னும் தென் சொற்குச் சுத்தீ என்னும் வடசொல்லை மூலமென்று தலைகீழாகச் சென்னைப் ப.க.க.த. அகரமுதலி (Lexicon) காட்டியிருப்பது எத்துணைக் குறும்புச் செய்தியாம்!
சூத்தழகி = குரங்குச் சூத்து மாம்பழம்.
சூத்தாங் கரடு = எருவாயின் தடிப்பு.
சூத்தாட்டி = வலியான் என்னும் ஒருவகைக் குருவி.
சூத்தாம்பட்டை = புட்டம்.
சூத்தெரிச்சல் = எருவாய் காந்துதல்.
இடக்கர் வினைச் சொற்களும் வழக்குக்களும் இங்கு விடப் பட்டுள்ளன. இவ்வழக்குக்களுள் ஒன்றேனும் வடமொழியில் இல்லை.
சுல் - சொல் - சொலி. சொலித்தல் = 1. தோண்டுதல். 2. பிளத்தல்.
3. உரித்தல். காம்பு சொலித் தன்ன அறுவை (சிறுபாண். 236).
4. பெயர்த்தல். திங்களுகிரிற் சொலிப்பது போல் (சீவக. 350).
சொல்லுதல் = தீர்த்தல். துணைவனுக் குற்ற துன்பஞ் சொல்லிய தொடங் கினாளே (சீவக. 1146).
சொலி = உரி, தொலி, பட்டை. கழைபடு சொலியினிழையணி வாரா (புறம். 383).
சொல் - சொள் - சொள்ளை = 1. துளை. ஒற்றைக் கடுக்கன் சொள்ளை(உ.வ.). 2. உள்ளீடற்ற சொத்தை. 3. பள்ளமான அம்மைத் தழும்பு. அம்மைச் சொள்ளை (உ.வ.). 4. குற்றம்.
சொள் - சொள்ளல் = குற்றம்.
சொள் - சொண்டு = சொத்தை மிளகாய்.
சொண்டு - சொட்டு = குற்றம். சொட்டு - சொட்டை = சொத்தை, குற்றம். சொட்டை - சொத்தை = 1. உள்ளீடற்றுக் கறுத்த பழம். 2. புழுத்தகாய். 3. பூச்சியரித்த பல்.
சொத்தை - சூத்தை (கொச்சை வழக்கு).
சொள் - சொளு. சொளு சொளுத்தல் = எளிதாய்த் துளைக்குமாறு கூழ்போற் குழைதல், சேறாதல். ஒ.நோ.
நொள் - நொளு. நொளு நொளுத்தல்.
சொளு சொளுவெனல் = நெய் தேன் முதலியன வடிதல், சொள் (சொள்ளு) = சாளைவாயினின்று வடியும் நீர்.
சொளுசொளு - சொலுசொலு. சொலு சொலெனல் = சோறு குழைதல்.
சொளுசொளு - சொதுசொது. சொதுசொது வெனல் = சேறுபோற் குழைந்திருத்தல்.
சொது - சுது - சுதை = சேறு போன்ற சுண்ணாம்பு அல்லது சிப்பிச் சாந்து. சுதை - வ. (Sudha).
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல் (குறள். 714)
என்று திருவள்ளுவரும்,
வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து
என்று சீத்தலைச் சாத்தனாரும் (மணி. 6:43), கூறுவதால், சுதை யென்பது தென்சொல்லே.
சுது - சது - சதுப்பு = சேற்றுநிலம்.
சொள் - (சோள்) - சோளி = இரப்போன் பெரும்பை. து. ஜோலி, இ(ந்தி). ஜோலீ.
சோளி - சோளிகை = இரப்போன் பெரும்பை. ஒருவன் மாளிகைக்காரனாக இருக்க வேண்டும்; ஒருவன் சோளிகைக் காரனாக இருக்க வேண்டும் (பழமொழி).
க. ஜோலிகெ, து. ஜோலிகெ, தெ. த்ஜோலிய.
ஒ. நோ : பொள் - பொய் - (பய்) - பை = துளை, துளையுள்ளது, துளைபோலத் தையல் கொண்டது.
சொள் - (சொர்) - சொருகு. சொருகுதல் = துளைக்குள் இடுதல், உள்ளிடுதல். சொருகு - செருகு.
சொள் - (சொர்) - சொரி. சொரிதல் = உள்ளிருந்து விழுதல், சிந்துதல்.
சொள் - சோள் - சோர். சோர்தல் = 1. குழைதல். 2. தளர்தல். கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை (கலித். 92:50). 3. மனந் தளர்தல். 4. மயக்க மடைதல். அரசன் சோர்ந்தான் (கம்பரா. அயோத். தைல. 59). 4. துயர்தல். 5. வாடுதல். எரியிதழ் சோர்ந்துக (கலித். 78). 6. மெலிதல். காம்பேர் தோளி கண்டு சோர்ந்தன்று (பு. வெ. 11, பெண்பாற். 1, கொளு). 7. தள்ளாடுதல். கோலூன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி. 13). 8. வடிதல். அயறு சோருமிருஞ் சென்னிய (புறம். 22:7). 9. கழிதல். மலஞ்சோரு மொன்பது வாயில் (திருவாச. 1:54). 10. கழலுதல். பைந்தொடி சோரும் (குறள். 1234) 11. நழுவுதல். துகிலிறையே சோர்ந்தவாறும் (திருவாச. 5:57).
12. விழுதல். 13. விட்டு நீங்குதல். சூதரைச் சோர்தலினிது (இனி. நாற் 24). 14. இறத்தல். பாலகன்றான் சோர (சிலப். 9:6).
ம. சோருக, க. சோர், தெ. சோலு.
சோர் - சோர்வு = சோரிகை. வான்சோர் வினிதே இனி. நாள். 16.
சோர் - சோரி = சிந்தும் அரத்தம். ஓசைச் சோரியை நோக்கினன் (கம்பரா. கிட்கிந். வாலிவதை. 69). ம. சோரி.
சோரியிளநீர் = செவ்விளநீர். (பதார்த்த. 69). சோரத் தேய்த்தல் = உடம்புள் எண்ணெய் இறங்கத் தேய்த்தல். சோரப் பெய்தல் = பெருமழையாகப் பொழிதல்.
சோரப் போடுதல் = ஆறவிடுதல், தணிய விடுதல். சோரா வொற்றி = மீளா (தளரா) வொற்றி. (நாஞ்சில் நாட்டு வழக்கு).
இவ் வழக்குக்கள், மேற்குறித்த பொருள்களின் நுண் வகைகளான கருத்துக்களைத் தழுவினவாகும்.
சுல்லி
சுல்லி - சுல்ல (c) = அடுப்பு.
சுல் = சுள். சுல் - சுல்லி = 1. அடுப்பு (திவா.). 2. மடைப் பள்ளி
(இலக். அக). (வ.வ.160).
சுவணம்
சுவணம் - ஸுபர்ண
உ - உவண் = மேலிடம் (சீவக. 2853). உவணை = தேவருலகம். ஆகநீத் துவணைமே லுறைந்தான் (சேதுபு. விதூம. 54). உவண் - உவணம் = 1. உயர்ச்சி (திவா.).
2. கலுழன் (கருடன்).
சிறையுவண மூர்ந்தாய் (திவ். இயற். 1:22).
3. கழுகு (திவா.).
கலுழனுங் கழுகும் உயரப் பறக்கும் பருந்தினத்தைச் சேர்ந்தன வாதலின், அப்பெயர் பெற்றன.
உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்னும் பழமொழியை நோக்குக.
உவணமுயர்த்தோன் = கலுழக் கொடியனாகிய திருமால்.
உவணர் = கலுழர். உவணரோ டியக்கர் (கந்தபு. அயனைச் சிறை நீ. 2).
உவணவூர்தி = கலுழனை ஊர்தியாகக் கொண்ட திருமால் (தணிகைப்பு. அகத். 370).
உவணன் = கலுழன் (திவா.). உவணம் - சுவணம் = கலுழன் (சங்.
அக.).
ஒ. நோ : உதை - சுதை, உருள் - சுருள், உழல் - சுழல்.
வடவர் சுவணம் என்பதை ஸுபர்ண என்று திரித்தும், ஸு + பர்ண என்று பிரித்தும், அழகிய இலை, அழகிய இலையுடையது இலைபோன்ற அழகிய சிறகுகளையுடையது. பெரும்பறவை.
கலுழன் என்று பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத் திறத்தின் பேரெல்லையைக் காட்டியுள்ளனர். ஸு = நல்ல. பர்ண = இலை. (வ.வ. 160-161).
சுவண்டை
சுவண்டை - வத் (இ.வே.)
சுவை - சுவடு = சுவை, இனிமை. அடிமையிற் சுவடறிந்த (ஈடு, 2:6:5).
சுவடு - சுவண்டு - சுவண்டை = சுவை, இன்சுவை.
சுவண்டையாய்த் தின்னத் திரிகிறான் என்னும் உலக வழக்கைக் காண்க.
மா. வி. அ. பொருந்தப் பொய்த்தல் முறையில் ஸு + அத் என்பது மூலமாயிருக்கலாம் என்னும் ஸு = நன்றாய். அத் = உண். (வ.வ. 161).
சுவர் வகை
கட்டை மண் சிறுமண் சுவர்; குட்டிச்சுவர் இடிந்து நிற்கும் சுவர்; சுவர் மண்ணால் அல்லது கல்லாற் கட்டப்படும் சிறுமதில்; மதில் அரண்மனை கோயில் நகர் இவற்றைச் சூழும் உயர்ந்தகன் றுறுதியான சுவர்; எயில் பகைவரை அம்பால் எய்யும் இடங்களையுடைய மதில்; இஞ்சி செம்பையுருக்கி வார்த்துக் கல்லாற் கட்டிய மதில். (சொல் 50).
சுழிமுனை
சுழிமுனை - ஸுஷும்னா
சுழிமுனை (திருப்பு. 732) = பதினாடியுள் இடைக்கும் பின் கலைக்கும் இடையிலுள்ளது. (வ.வ. 161).
சுள்
சுள் - க்ஷுல்ல = சிறு.
சுள் - சிறுமை (இலக். அக.). சுள்ளாணி = சிறிய ஆணி. (மலைபடு. 27, உரை).
சுள்ளல் = மென்மை, மெலிவு. சுள் - சுள்ளி = சிறுமை.
சுள்ளிவெள்ளிப் பற்கொண்டும் (கம்பரா. முதற்போ. 139).
சுள் - சுஷ் = உலர். (வ.வ. 161)
சுறுக்கு
சுறுக்கு - ராக்
சுறுக்கு = விரைவு. சுறுக்காய் = விரைவாய். (வ.வ. 161).
சூடம்
சூடம் - சூட (c)
சூடுதல் = 1. தலையிலணிதல்.
கோட்டுப்பூச் சூடினுங் காயும் (குறள். 1313)
2. முடியணிதல்.
முடிசூடு முடியொன்றே (கலிங். 525).
3. மேற்கவிதல்.
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்து (பெரும்பாண். 409).
சூடு - சூட்டு = 1. நெற்றிப்பட்டம்.
செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக. 2569)
2. பறவையின் உச்சிக்கொண்டை.
காட்டுக் கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருஞ். உஞ்சைக். 52:62)
3. மதில்மேல் ஏவறை.
இடுசூட் டிஞ்சியின் (பு.வெ. 6:18, கொளு).
சூடு - சூடம் = தலையின் உச்சி.
புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத அருச்சுனன். 7).
சூடு = 1. குடுமி. கானிறை குஞ்சிச் சூட்டில் (திருவிளை. யானையெய். 25). 2. உச்சிக் கொண்டை.
சூடு - சூடை = 1. தலை. சூடையின் மணி (கம்பரா. சூளா. 88).
2. குடுமி. சூடைவிளங்கு மாமணி (சேதுபு. சேதுவந்த 15).
சூடு - சூடிகை = 1. மணிமுடி (பிங்.).
2. கோபுரக் கும்பம். (வ.வ. 161-162).
சூடிகை
சூடிகை - சூடிகா (c)
சூடை
சூடை - சூடா (c)
சூடிகை - சுடிகை = 1. தலையுச்சி (திவா.). 2. மகுடம் (திவா). 3. நெற்றிச்சுட்டி (திவா.). 4. மயிர்முடி (திவா.). 5. சூட்டு.
பஃறலைச் சுடிகை மாசுணம் (கந்தபு. திருநாட்டுப். 19) (வ.வ. 162).
சூதாட்டின் தன்மைகள்
(சூதாட்டின் தன்மையுள்ளவை சீட்டாட்டும் பரிசுச் சீட்டும்)
வெற்றி உறுதியின்றிக் குருட்டு வாய்ப்பாயிருத்தல், சில வலக் காரங்கள் கையாளப் பெறுதல், தோற்றார் வைத்த பணம் திரும்பாமை, ஒருவன் உழைப்பின்றி விரைந்து பிறர் பணத்தால் செல்வனாதல், இழக்கும் தோறும் ஆசையுண்டாகி மேன்மேலும் வறுமை மிகுதல், வென்றார் மீது பொறாமை உண்டாதற் கிடமாதல், உழைப்பில் விருப்பம் கொள்ளாமை என்பவையாம். (தி.ம. 931).
சூது
சூது : இது ஒருவகைக் காயின் பெயர். சூது - சூத (வ.). (தி.ம. 742).
சூர்
சூர் - சூர்
சுள் - சுர் - சூர்.
சூர் = 1. மிளகு. 2. கடுப்பு. சூர்நறா வேந்தினாள் (பரிபா. 7:62).
3. கொடுமை. சூரர மகளி ராடுஞ் சோலை (திருமுரு. 41).
4. அச்சம். சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலார் (பெருங். உஞ்சைக். 44).
5. அஞ்சத்தக்க பேய்த்தெய்வம். உருமுஞ் சூரும் (குறிஞ்சிப். 355).
6. மறம் (வீரம்). 7. வயவன் (வீரன்). சூர்புக லரியது (கம்பரா. கவந்த. 21).
சூர்த்தல் = 1. அச்சுறுத்தல்.
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்கு (சிலப். 5:81).
2. கொடுமை செய்தல் (திருமுரு. 48, உரை). (வ.வ. 162-163).
சூர்ப்பம்
சூர்ப்பம் - சூர்ப்ப
சூர்த்தல் = சுழலுதல். சூர்த்த நோக்கு (அக. நி.).
சூர்ப்பு = 1. சுழற்சி (சங். அக.). 2. கைக்கடகம்.
பசும்பூட் சூர்ப்பமை முன்கை (புறம் 153:3).
சூர்ப்பு - சூர்ப்பம் = வளைந்த முறம் (பிங்.). (வ.வ. 162)
சூரன்
சூரன் - சூர (இ.வே.).
சூர் - சூரன் = வயவன். (பிங்.). துறப்பில ரறமெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30).
சுள் - சுர் - சுரம் - சுரன் - சூரன்.
சூரன் = 1. நெருப்பு (பிங்.). 2. கதிரவன் காதற் சூரனை யனைய (பாரத. பதினேழாம். 49). (வ.வ. 163).
சூலம்
சூலம் - சூல (இ.வே.)
உல் = தேங்கா யுரிக்கும் கூரிரும்பு.
உல் - சுல் - சுள். சுள்சுள்ளெனல் = முட்போற் குத்துதல்.
சுள் - சுர் - சுரி - சுரிகை = உடைவாள்.
சுல் - சூல் = சூலப்படை. குலிசங் கதைசூல் (சேதுபு. தேவி புர. 27).
சூல் - சூலம். ஊனக மாமழுச் சூலம்பாடி (திருவாச 9:17). (வ.வ.163).
சூலி
சூலி - சூலின்
சூல் (சூலம்) - சூலி = சூலமேந்தி, சிவன், காளி. (வ.வ. 163).
சூலை
சூலை - சூலா
சூலுதல் = 1. குத்தல். 2. தோண்டுதல் குடைதல்.
நுங்கு சூன்றிட் டன்ன (நாலடி. 44)
3. வளைதல்.
சூல் - சூலை = குத்தல் குடைச்சலெடுக்கும் அல்லது கைகாலை முடக்கும் நோய். (வ.வ. 163).
சூ விளையாட்டு
(1) பாண்டிய நாட்டு முறை
ஆட்டின் பெயர் : பாண்டி நாட்டில் இது இன்று அவுட்டு (out) என்னும் ஆங்கிலப்பெயரால் வழங்குகின்றது. ஓடித் தொடும் ஒருவன், உட்கார்ந்திருக்கும் ஒருவனை அவுட்டு என்று சொல்லி எழுப்பும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது. இது முதலாவது உசு விளையாட்டு என்று வழங்கியிருக்கலாம்.
ஆடுவார் தொகை : இதை ஆட ஐவர் வேண்டும்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இதை ஆடலாம்.
ஆடு முறை : மூவர் இவ்விருகச இடையிட்டு, ஒரே திசை நோக்கி வரிசையாக நிலத்தில் உட்கார்ந்து கொள்வர். ஒருவன் அவரைச் சுற்றியும் அவருக்கிடையிலும் ஒடுவான். இன்னொருவன் அவனைத் தொட வேண்டும். தொடுகிறவன் வரிசையைச் சுற்றி யன்றி இடையிற் செல்லக்கூடாது. ஆயின், இடையில் வரிசைக் கோட்டைத் தாண்டாது எட்டித் தொடலாம்.
ஓடுகிறவனுக்கு மிக வசதியிருத்தலில் அவனைத் தொடுவது
அரிது. தொட முயல்கிறவன் நீண்ட நேரம் ஆடியோடிப் பார்த்து விட்டு, பின்பு ஓடுகிறவனுக்கு அண்மையாகத் தனக்கு முன்னா லிருப்பவனை அவுட்டு என்று சொல்லி எழுப்பிவிட்டு அவ னிடத்தில் தான் உட்கார்ந்து கொள்வான். உட்கார்ந்திருப்பவர் ஒரே திசை நோக்கி உட்கார்ந்திருப்பதாலும், முன்னோக்கி யன்றிப் பின்னோக்கி ஓடித் தொடுதல் கூடாமையாலும், எழுப்புகிறவன் என்றும் எழுப்பப்படுகிறவனுக்குப் பின்னாக நின்றே எழுப்புவன். எழுப்பப் பட்டவன் உடனே ஓடிப் போய் ஓடுகிறவனைத் தொட்டுவிடின், தொட்டவன் ஓடுகிறவனாகவும் ஒடினவன் தொடுகிறவனாகவும் மாறல் வேண்டும். ஓடுகிறவன் தான் எப்போது விரும்பினும், உட்கார்ந்திருக்கும் ஒருவனை எழுப்பி விட்டு, தான் அவனிடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்.
ஓடுகிறவன் தான் கூடியமட்டும் தொடப்படாதவாறு தொடுகிறவ னுக்கும் உட்கார்ந்திருக்கிறவனுக்கும் நேர் முன்னும் அண்மை யிலும் நில்லாது மிகத் தள்ளியே நிற்பன்.
இங்ஙனம் வேண்டுமளவு தொடர்ந்தாடப்பெறும்.
ஆட்டுத் தோற்றம் : இது வேட்டை வினையினின்று தோன்றிய தாகத் தெரி கின்றது. தொடுகிறவன் வேட்டைக்காரனும், ஓடுகிறவன் வேட்டை விலங்கும், எழுப்பப்படுகிறவன் வேட்டை நாயும் போன்றவராவர்.
ஆட்டின் பயன் : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும், ஒருவனுக்குப் பிடிகொடாமல் ஓடித் தப்புவதுமாகிய வினைப்பயிற்சி, இவ் வட்டாற் பெறப்படும்.
(2) சோழநாட்டு முறை
ஆட்டின் பெயர் : சூ விளையாட்டு என்னும் தனித் தமிழ்ப்பெயர் வழங்குவது சோழ நாட்டில்தான். சூ என்று சொல்லி ஒருவன் இன்னொருவனை எழுப்பும் விளையாட்டு அச்சொல்லாற் பெயர் பெற்றது.
ஆடுவார் தொகை : அறுவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.
ஆடு முறை : ஆடுவார் சமத்தொகையவான இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக்கொருவனாக இருவர் நிற்க, ஏனைய ரெல்லாம் வரிசையாய் இடையிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொள்வர். உட்கார்ந்திருப்பவருள், ஒவ்வொரு கட்சியாரும் ஒருவன் விட்டொருவனாயிருப்பர். ஒரு கட்சியார் கிழக்கு நோக்கின் மற்றொரு கட்சியார் மேற்கு நோக்கியும், ஒரு கட்சியார் தெற்கு நோக்கின் மற்றொரு கட்சியார் வடக்கு நோக்கியும், இருப்பர்.
நிற்பவருள், ஒருவன் ஓட இன்னொருவன் தொடல் வேண்டும். தொடுகிறவன் தன்னால் தொடமுடியாதென்று கண்டால், தன் கட்சியாருள் ஒருவனைச் சூ என்று சொல்லி எழுப்புவான். பிற செய்திகளெல்லாம் பாண்டி நாட்டு முறையே.
இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு எதிரெதிர்த் திசையை நோக்கி யிருப்பதும், சூ என்று சொல்லுவதுமே சோழநாட்டு வேறுபாடாம்.
சூள் வகைகள்
சூள் தெய்வஞ் சான்றாகக் கூறும் உறுதிமொழி; ஆணை அரசாணையின் பேரால் கூறும் உறுதிமொழி; நெடுமொழி: போர் முனையில் பகைவர் முன் ஒருவன் தன்னை மிகுத்துக் கூறும் கூற்று; வஞ்சினம் நான் என் பகைவனுக்கு இன்னது செய்யே னாகில் இன்னநிலை யடையக் கடவேன் என்று கூறும் சபதம்; பூட்கை ஒரு காரியம் முடியும் வரை வேறொன்றை விலக்கி வைக்கும் உறுதிப்பாடு; மேற்கோள் ஓர் ஒழுக்கத்தை அல்லது நல்வினையை மேற்கொள்ளும் கடைப்பிடி; பொருத்தனை ஒருவன் தனக்குக் கடவுள் செய்யும் ஒரு குறிப்பிட்ட நன்மைக்குப் பதிலாகத் தான் ஒன்றைக் காணிக்கையாகக் கொடுப்பதாகச் செய்து கொள்ளும் வாய்ச் சொல் ஒப்பந்தம்; நேர்த்திக் கடன் கைமாறு கருதியும் கருதாமலும் கடவுளுக்கு அல்லது தெய்வத் திற்கு ஒரு பொருளை ஒதுக்கி வைத்தல். கங்கு அல்லது கங்கணம் ஒருவன் தன் பகைவனிடத்தில் பழிக்குப் பழிவாங்க வேண்டு மென்று அதற்கடையாளமாகக் கட்டிக் கொள்ளும் காப்பு; ஒட்டு ஒருவன் தான் விரும்பாததொன்றைத் தன் எதிரி செய்யின், அவன் அழிந்து விடுவான் என்று கூறும் ஆணை. (சொல். 59).
செங்குந்தர்
செங்குந்தர், பாணர் என்பவர் தமிழ்நாட்டுத் தமிழரே. ஆயினும், தொழில் மாறியிருக்கின்றார்.
செங்குந்தம் பிடித்துச் சோழருக்குப் படைமறவராயிருந்தவர் செங்குந்தர். பாண் அல்லது இசைத் தொழிலைக் கொண்டிருந் தவர் பாணர். இவ்விரு வகுப்பாரும் இன்று முறையே நெசவையும், தையலையும் மேற்கொண்டுள்ளனர்.
மலையாள நாட்டுப் பாணர் கூடையும் தாழங்குடையும் முடைவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். (சொல். 27,28).
செங்கோல்
நேர்மையான ஆட்சிமுறை நேரான கோல்போல் இருத்தலால் செங்கோல் எனப்பட்டது. குடிகள் ஆக்கள் போலவும், அரசன் ஆயன் போலவும் இருத்தலால் அரசன் கோன் எனப்பட்டான். கோ = ஆ (பசு) கோவன் = ஆயன். (தி.ம. 310).
செட்டி
செட்டி - ச்ரேஷ்டின்
எழுதல் = உயர்தல். எண்ணுதல் = மேன்மேல் அளவிடுதல்.
எட்டுதல் = உயர்தல், உயர்ந்து தொடுதல், தொடுமளவு நெருங்குதல்.
எட்டி நோக்குதல் = அண்ணாந்து பார்த்தல் (பெருங். நரவாண. 8:82).
எட்டம் = உயரம், தொலைவு.
எடுத்தல் = உயர்த்துதல், தூக்குதல்.
எட்டு - எட்டி = 1. உயர்ந்தவன், மேலோன். 2. பண்டை யரசர்
வணிக மேலோனுக்கு அளித்த பட்டம்.
எட்டி குமர னிருந்தோன் றன்னை (மணி. 4:58).
3. வணிகன் (திவா.).
எட்டிப்பூ = எட்டிப்பட்டம் பெற்றவனுக்கு அரசர் கொடுக்கும் பொற்பூ. எட்டிப் பூப் பெற்று (மணி. 22:113).
எட்டிப்புரவு = எட்டிப் பட்டம் பெற்றவனுக்கு அரசன் கொடுத்த. நிலம் (நன். 158, மயிலை. உரை).
எட்டி - செட்டி. ஒ. நோ : இளை - சிளை, உதை - சுதை, ஏண் - சேண். செட்டிமை = வணிகம், செட்டு.
செட்டி - செட்டு = செட்டித்தனம், சிக்கனம்.
செட்டி - சேட்டி - சேட்டு = வடநாட்டு வணிகன்.
வடமொழியார் காட்டும் மூவேறு மூலம் வருமாறு :
1. ச்ரீமத் (திருமான்) என்பதன் உச்சத்தரம் (sup. deg.).
2. ப்ரசய (புகழ்படத் தக்கவன்) என்பதன் உச்சத்தரம்.
3. ச்ரீ (திரு) என்பதன் உச்சத்தரம்.
தென்சொற்களை வடசொல்லாக்கும் வழிகளுள் ஒன்று முதலெழுத்தின் பின் ரகரம் இடைச்செருகல்.
எ-டு: தமிழம் - த்ரமிள, கமுகம் - க்ரமுக, திடம் - த்ருட.
நட்டம் - ந்ருத்த, படி - ப்ரதி, மெது - ம்ருது. விடை - வ்ருஷ.
இம்முறையில் செட்டி என்பதை (வடமொழியில் எகரம் இன்மையால்) ச்ரேட்டி எனத் திரித்து, அதற்கேற்பப் பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தி பற்றி வெவ்வேறு மூலங் காட்டு வாராயினர்.
செட்டி என்பது, தமிழில் வணிகனை மட்டுங் குறிக்கும் என்றும், ச்ரேஷ்டின் என்பது வடமொழியிற் சிறந்தோன் எவனையுங் குறிக்கும் என்றும், வேறுபாடறிக. (வ.வ. 164-165).
செடி
செடி - ஜடி (gh, t|) = செடி.
செள் - செழி - செடி. செடித்தல் = அடர்தல். செடி = அடர்த்தி.
செடிகொள் வான்பொழில் சூழ் (திருவாச. 29:5).
செடி = இலைகிளை யடர்ந்த சிறு நிலைத்திணை வகை.
ம. செடி, தெ. செட்டு, க. கிட (g). தெ. செட்டு - இ. ஜாட் (d|)= மரம். (வ.வ. 163).
செந்தமிழ்நாடு
செந்தமிழ் நிலத்தை வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம் என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தனர்.
செந்தமிழ் நாட்டின் சிறந்த பகுதி இன்றும் பாண்டி நாடேயா யிருத்தலின், இவ்வுரை பொருந்தாது.
செந்தமிழ் நாடாவது : வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூ ரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டு மாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:
வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி
என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித் தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளையொழித்து, வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென் றுரைப்ப என்றுரைத்தார் தெய்வச் சிலையார்.
இவ் வுரையே சிறந்ததாகும். செந்தமிழ் நிலம்,
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப
என்பது பிற்காலத்திற் கேற்றதாகும்.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். எச்ச. 4)
என்பதால், செந்தமிழ்நாட் டெல்லை தாண்டிய பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ்நாடு என்பதும், அவற்றுள் விதப்பாய் வழங்கிய சொற்கள் திசைச்சொற்கள் என்பதும் பெறப்படும்.
செந்தமிழ் வரம்பீடு
உலகம் முழுவதும் நோக்கின். மொழியமைப்பு. மொழி வளர்ப்பு. மொழிக்காப்பு ஆகிய மூவகை மொழிவினையிலும் தலைசிறந்த வர் குமரிநிலத் தமிழரே என்பது. தெளிவாகின்றது.
வாய்ச்சோம்பலாலோ, தட்ப வெப்பநிலை பற்றிய நில வேறு பாட்டாலோ, இரண்டினாலுமோ, மொழி பொதுமக்கள் வாயில் திரிவதையும். அத்திரிபிற்கு எல்லையில்லாமையையும். கண்ட தமிழறிஞர். இயனிலைத் தமிழுக்குச் செந்தமிழ் என்றும். திரிநிலைத் தமிழுக்குக் கொடுந்தமிழ் என்றும் பெயரிட்டு. செந்தமிழையே உலகுள்ள அளவும் நிலையான அளவை மொழியாக்கி விட்டனர்.
a. நடைமொழி (dialect) யுண்மை பண்டைத் தமிழருக்குத் தெரியா தென்றும், வண்ணனை மொழிநூல் (descriptive linguistics) தோன்றிய பின்பே நடைமொழியாராய்ச்சி உலகெங்கும் பரவிய தென்றும், மேலையரும் அவரைச் சார்ந்தவர்களும் கருதிக் கொண்டிருக்கின்றனர். தமிழர் தம் மொழியைப் பிறமொழி களுடன் மட்டுமன்றி, தம் சொந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிறமொழிகளுடன்கூட, ஒப்புநோக்க ஒருகாலும் முயன்ற
தில்லை. மொழிக் குடும்பம் என ஒன்று உண்டென்னும் கருத்தை, அவர்கள் என்றேனும் உட்கொண்டதில்லை, என்று கால்டு வெலாரும் எழுதிவிட்டார். ஆயின், அவர் காலத்தில் தொல் காப்பியப் பயிற்சியின்மையால், அவர் கூற்று மன்னிக்கத் தக்கதே.
b.
தமிழ் உலக முதன்மொழியாயிருத்தல் போன்று, மொழியாராய்ச் சியும் முதன்முதல் அம் மொழியிலேயே தோன்றிற் றென்பது கி.மு. 7-ஆம் நூற்றாண்டிலெழுந்த தொல்காப்பியம் என்னும் சார்பிற் சார்புநூலால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியம் வடசொல் லும் ஆரிய இலக்கியமும் ஆரியர் மரபும் தவிர மற்றெல்லா வற்றையும் குமரி நாட்டு நிலைமை தழுவியே கூறுவதால், அக் காலத்தில் (அஃதாவது ஆரியர் வருமுன்) செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் பாகுபாடு தவிர, இற்றைத் திரவிட மொழிகள் கூடியது போன்ற ஒரு மொழிக்குடும்பம் தோன்றவில்லை என்பதை யறிதல் வேண்டும்.
மேலும், ஆரியர் வந்தபின் தமிழ்மொழி வளர்ச்சியும் மொழி யாராய்ச்சியும் தடுக்கப்பட்டுவிட்டதனால், கால்டுவெலார் குறைகூறல் வலியற்றதாகின்றது.
செந்தமிழ் இயல்பு.
1. தூய்மை அல்லது பிறமொழிச் சொல்லின்மை.
2. திருத்தம் அல்லது எழுத்தும் சொல்லும் ஒலிப்பிலும்
எழுத்திலும் உரிய வடிவிலிருத்தல்.
3. இலக்கணம் அல்லது சொற்றொடரமைப்பில் வழுவின்மை.
இம் மூவியல்பும் இல்லது கொடுந்தமிழ்.
தெற்கே மூழ்கிப்போன பழம் பாண்டிநாட்டின் தென்கோடியில் இருந்த குமரிமலைத் தொடரின் தென் கொடுமுடி, பனிமலை யளவு தொலை விலிருந்ததனாலும், இறந்துபட்ட முதலிரு கழக நூல்கள் ஆயிரக்கணக்கின வாதலாலும், அக்காலத்துத் தென் சொல் வளம், குறைந்த பக்கம் இன்றுள்ளதுபோல் இருமடங்கின தாய் இருந்திருத்தல் வேண்டும். வணிக வாயிலாக வந்த வெளி நாட்டுப் பொருள்கட்கெல்லாம், உடனுடன் தமிழ்ப் பெயர்கள் புனையப் பட்டன.
செந்தமிழ் நிலம்
செந்தமிழ் வழங்கிய நிலம் பெரும்பாலும் பாண்டிநாடாகவே யிருந்தது. தமிழ் தோன்றி வளர்ந்த நிலமும் முக்கழகமும் இருந்த நாடும் பாண்டி நாடேயென்றும், அவற்றைப் புரந்தவர் பாண்டியரே யென்றும் அறிதல் வேண்டும்.
வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பது. பிற்காலத்துப் பொருளில் புனைந்துரையாம்.
செந்தமிழ்ச் சொல்வகை
செந்தமிழ்ச் சொற்கள் இயற்சொல் (Primitive). திரிசொல் (Derivative) என இரு வகைப்படுத்தப்பட்டன. எ-டு: வெள் என்பது இயற்சொல்: வெள்ளம், வெள்ளி, வெள்ளை, வெளி, வெளில், வெளிறு, வெளு என்பன திரிசொல்.
கொடுந்தமிழ் நிலமும் திசைச்சொல்லும்
கொடுந்தமிழ் நிலங்களில் தனிச்சிறப்பாக வழங்கும் சொற்கள் (இக்காலத்து மேனாரிக்கம் என்னும் தெலுங்கச் சொல்லும் சமாளி என்னும் கன்னடச் சொல்லும் போல்வன). ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பல திசையினின்றும் வந்தமைபற்றித் திசைச் சொல் (provincialism) எனப்பட்டன.
கொடுந்தமிழ் நிலங்கள் பன்னிரண்டாகக் கணக்கிடப்பட்டன.
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைத்சொற் கிளவி (தொல். எச். 4)
தொல்காப்பியர் காலத்துப் பன்னிரு கொடுந்தமிழ் நிலம் எவையென்பது திட்டமாகத் தெரியவில்லை.
தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன்வடக்கு - நன்றாய
சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்
சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புலி தாமிவையே.
என்னும் பிற்காலத்துப் பாடல்களும், அவற்றைத் தழுவிய
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப (நன். 273)
என்னும் நன்னூல் நூற்பாவும், கொள்ளத்தக்கன வல்ல. அவற்றால் அறியக் கிடப்பதெல்லாம், ஒரு காலத்தில் இலங்கையுட்பட இந்தியா முழுதும் தமிழே வழங்கிற்று என்பதே.
செந்தமிழ் வரம்பீட்டின் நன்மை
1. மொழிகெடாமை
குமரிநாட்டு மொழியாகிய தமிழ் ஒன்றே, இன்று பல்வேறு வகையில் திரிந்து பதினெண் மொழியாகப் பிரிந்துள்ளது.
எ-டு:
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு
யான், நான் ஞான் நேனு நானு யானு
ஒன்று ஒன்னு ஒண்டு, ஒகட்டி ஒந்து ஒஞ்சி
வா வா ரா பா பா
மருந்து மருன்னு மந்து மர்து மர்து
இங்ஙனம் சொற்களெல்லாம் திரியாதிருந்திருப்பின், திரவிட மொழி களெல்லாம் இன்றும் தமிழாகவே வழங்கும்.
தமிழிலுள்ள ஒருபொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு திரவிடமொழி தெரித்தாள்வதும், தமிழின் திரவிடத் தாய்மையைக் காட்டும்.
எ-டு:
மலையாளம் தெலுங்கு கன்னடம்
வீடு இல்லு(இல்) மனெ(மனை)
திரவிடமொழிகள் பேச்சு வழக்கில் திரிந்திருப்பினும். இலக்கிய வழக்கிலேனும் தமிழைப் பின்பற்றியிருந்திருப்பின் இன்றுள்ள வேறுபாடும் மாறுபாடும் நேர்ந்திரா. இற்றைத் தமிழ் நாட்டிற் பேச்சு வழக்கு இடத்திற் கேற்ப வெவ்வேறு வகையில் திரிந்திருப் பினும், இலக்கிய வழக்கிற் செந்தமிழைக் கடைப்பிடிப்பதால், நாடுமுழுதும் தமிழ்நாடென்றே வழங்குதல் காண்க.
2. நிலங்குன்றாமை
செந்தமிழ் கொடுந்தமிழாகத் திரிந்து பின்னர்ப் பல்வேறு மொழிகளாகப் பிரிந்து போனதனால், ஒரு காலத்திற் பனிமலை வரை பரவியிருந்த தமிழ்நிலம் படிப்படியாகச் சுருங்கி , இன்று சேரநாடுஞ் சேராது வடசோழமாகிய தொண்டைநாடும் முண்ட மாகியுள்ளது. கடைக்கழகக் காலத்தில் வேங்கடக் கோட்டம் வரை ஒருமொழி நாடாக இருந்த நிலம், இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, குடகம், துடவம், கோத்தம், படகம், மலையாளம், கொங்கணி என்னும் ஒருபான்மொழி நாடாகப் பிரிந்துள்ளது.
3. இனவொற்றுமை
மொழி யொற்றுமையாலேயே இனவொற்றுமை நிலைத்து நிற்கும். மொழி வேறுபாட்டால் இன வேறுபாடும் அதனால் ஒற்றுமையின்மையும், இன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் விளங்கித் தோன்றுகின்றது. திரவிடமொழியார் சமற்கிருதத்தைப் போற்றுவதும் தமிழைப் புறக்கணிப்பதும் மொழி வேறுபாட்டின் விளைவே.
4. வேர்ப்பொருள் மறையாமை
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, என்று சொல்லக் கூடிய மொழி, இவ்வுலகில் தமிழ் ஒன்றே. அது செந்தமிழ் வரம்பில் நிற்பதால், அது தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டு களாயினும், ஆயிரக்கணக்கான அடிச்சொற்களும் இணைப்புச் சொற்களும் இறந்துபட்டும், இன்னும் அதன் பெரும்பாற் சொற்கள் வேர்ப்பொருள் காட்டி நிற்கின்றன. பிறமொழிக ளெல்லாம் திரிமொழிகளாதலால், அவற்றின் சொற்கட்கு வேர்ப்பொருளும் மூலமும் தெரியாது. வடமொழி யாளர் வடசொற்களை இடுகுறி, கரணியக்குறி என இருவகை யாய்ப் பிரித்ததோடு, மேலையரும் எல்லா மொழிகளும் இடுகுறிச் சொற்றொகுதிகளே என்று முடிவுசெய்து. அவ்வடிப் படையில் வண்ணனை மொழிநூலையும் தோற்றி வளர்த்து வருகின்றனர்.
சொல் இயனிலையில் மூலப்பொருள் காட்டுவதையும் திரிநிலை யிற் காட்டாமையையும், கீழ்வரும் எடுத்துக்காட்டிற் காண்க.
இயனிலை திரிநிலை
இடைகழி டேகழி - டேழி - ரேழி (கொச்சை)
டேகழி - தேகலீ(வ)
5. வரலாற்றுத் தெளிவு
சொற்கள் வேர்ப்பொருள் காட்டினால்தான் மொழிவரலாற்றை அறியமுடியும். தமிழ் ஒன்றே இயன்மொழியாதலின். மொழி வரலாற்றுத் திறவுகோல் அதிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது.
8. அழகுடைமை
கல்விக்கழகு கசடற மொழிதல் ஓதிம (அன்ன) நடையினும் மாதர் நடையினும் உயர்ந்த அழகுள்ளது, மறைமலையடிகள் நடையாகிய செந்தமிழ் நடை.
மேலையர், இந்தைரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு மூலமான தமிழை அடிப்படையாகக் கொள்ளாது ஆரியத்தையே கொண்டாராய்ந்து. கோட்டைச் சுவரில் முட்டிய குருடர்போல் இடர்ப்பட்டு. தாய்மொழியும் கிளைமொழியும் என்னும் முறைமையின்றி. தனியாள் நடைமொழி (personal dialect), குழு நடைமொழி (group dialect), வகுப்பு நடைமொழி (communal or class dialect), தொழில் நடைமொழி (professional dialect), இட நடைமொழி (local dialect), வட்டார நடைமொழி (regional dialect) என ஒவ்வொரு பெருமொழியையும் பல நடைமொழி களாகப் பகுத்து, ஆராய்ந்து நூலாக வெளியிட்டு வருகின்றனர்.
சிலர் உலக வழக்கிற்கும் (colloquial dialect) கொச்சை வழக்கிற்கும் (slang usage) வேறுபாடு தெரியாது. பேச்சு மொழியையும் கவனித்தல் வேண்டுமென்று சொல்லி வருகின்றனர். தமிழில் உயர்ந்தோர் பேச்சு வழக்கே உலக வழக்காம்.
வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான (தொல். மரபியல். 93)
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. எல்லா வகையிலும். மேன்மக்கள் நடையையே கீழ்மக்கள் பின்பற்றல் வேண்டும். கீழ்மக்கள் பேச்சை ஒப்புக் கொள்ளவேண்டுமெனின். கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அங்ஙனங் கொள்ளின், ஆட்சியும் காவலும் வழக்குத் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதேயில்லை.
கருத்தறிவிப்புத் தானே மொழியின் பயன்! எந்நடையிற் பேசினா லென்ன? என்பர் சிலர். அது, பசியைப் போக்குவதுதானே உண வின் பயன்! எங்ஙனம் (பல்துலக்காதும் குளியாதும் அடுகலத்திற் குள் கையிட்டும்) உண்டாலென்ன? என்று வினைவுவது போன் றிருக்கின்றது. ஆறறிவு படைத்த நாகரிக மாந்தன் எவ்வினை செய்யினும், திருந்திய முறையிலேயே செய்தல் வேண்டும்.
மொழிக்குச் செம்மை வரம்பிடாது வாய்போன போக்கெல்லாம் பேச்சுத் திரியவிடின், அது சண்டிக் குதிரைபோல் ஓரிடத்து நில்லாது காடுமேடாய் இழுத்துச் செல்லும்; இறுதியிற் குழிக்குள்ளும் தள்ளும் புதுப்புது நடை தோன்றிப் பழநடை வழக்கு வீழும். பண்டை இலக்கியம் பயனற்றுப் போம். ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட ஆங்கில இலக்கியம், இன்று ஆராய்ச்சி யாளர்க்கே பயன்படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலக்கியமோ, இற்றை யிலக்கியம்போல் எல்லார்க்கும் பயன்படுகின்றது. ஆதலால், செந்தமிழ் மரபை எத்துணைப் பாடுபட்டும் பொருட் செலவிட்டும் போற்றிக் காத்தல் வேண்டும்.
நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் (தொல். மரபியல் 90)
மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும் (தொல். மரபியல் 92)
ஆரியரால் மூவாயிரம் ஆண்டும். அயலரசுகளால் முந்நூறாண்டும். வையாபுரிகளால் ஐம்பானாண்டும் சிதைக்கப்படினும், இன்றும் தமிழை அழியாது காத்தது அதன் செம்மை வரம்பே தமிழ் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற தனிமொழி. அதன் உயிர்நாடித் தன்மை தூய்மை. - தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை பவள விழா மலர் 1973.
செந்தமிழும் கொடுந்தமிழும்
செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் தொடர்களிலுள்ள செம்மை கொடுமை என்னும் அடைகள், முறையே நேர்மை, கோணல் என்னும் பொருள்களை உணர்த்தும், இலக்கண நேர்மையுள்ள தமிழ் செந்தமிழ்; அது கோணிய தமிழ் கொடுந்தமிழ்.
செம்மை, கொடுமை என்னும் பண்புகளை மட்டும் எடுத்துக் கொள்ளின், அவற்றுள் எது முந்தியது எது பிந்தியது எனச் சொல்லவியலாது. ஏனெனின், இயற்கையில் நேரான பொருள்கள் செயற்கையில் கோணலாக்கப்படுவனவும், இயற்கையில் கோணலான பொருள்கள் செயற்கையில் நேராக்கப்படுவனவும் எத்துணையோ கண்கூடாகக் காண்கின்றோம்.
ஆயின், செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் இரண்டனுள் எது இயல்பு எது திரிபெனின், செந்தமிழே இயல்பாம். கொடுத்தமிழே திரிபாம். இது மறுக்கொணாத வுண்மையாயினும், ஆராய்ச்சி யில்லாதார்க்கு மயங்கற் கிடனாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்பவற்றின் இயல்களை அல்லது இலக்கணங்களை அறிவா ராயின், எவரும் மயங்கார்.
செந்தமிழின் திரிபே கொடுந்தமிழ் என்னும் உண்மையை உணர்தற்கு. முதலாவது அவ்விரண்டும் வழங்கும் திசையை நோக்குதல் வேண்டும். தமிழ்நாட்டின் வடபாலுள்ள நாடுகளே பழந்தமிழ் இலக்கண விலக்கியங்களுள், மொழிபெயர் தேயம் என்றும் தமிழ்திரி நிலம் என்றும் சுட்டப்படுகின்றன. இன்றும், நாவலந் தேயத்தின் தென்கோடியிலேயே தமிழ் வழங்கவும், தமிழ்நாட்டின் வடக்கும் வடமேற்கும் கொடுந்தமிழ்த் திரிபான திரவிட மொழிகளே வழங்கவும், தமிழ்நாட்டின் கண்ணும் தெற்கு நோக்கியே தமிழ் திருத்திச் செல்லவும் காண்கின்றோம்.
கொடுந்தமிழின் பண்பாடே செந்தமிழாயின், செந்தமிழ் நிலம் முந்துநிலையில் கொடுந்தமிழ் நிலமாயிருந்திருத்தல் வேண்டும். இதற்கொரு சான்று மில்லாமையோடு, பண்டொருகால் செந் தமிழ் நிலமாயிருந்த பகுதிகள் இன்று கொடுந்தமிழ் நிலங்களாகத் திரிந்துள்ளமையுங் காண்கின்றோம். வழங்கும் போது செந்தமிழ் நாட்டில் வழங்காத புதுச் சொற்கள் கொடுந்தமிழ் நாட்டில் வழங்குவது வியப்பன்று. பையானி (மலையாளம்), அல்லுண்டு (தெலுங்கு), கொக்கு(துளு) என்பன இத்தகைய.
(பையானி = ஒருவகை நச்சுப் பாம்பு. அல்லுண்டு = மருமகன். கொக்கு = மாமரம்).
தமிழிலுள்ள ஒருபொருட் பல சொற்களில் சில, தமிழ்நாட்டில் வழக்கற்றுப் போயினும், கொடுந்தமிழ் நாடுகளில் வழக்கறா துள்ளன. அஃதாவது, தமிழ்நாட்டு இலக்கிய வழக்குச் சொற்கள் சில கொடுந்தமிழ் நாட்டு உலகவழக்கில் உள்ளன.
எ-டு: தமிழ் தெலுங்கு
வெதிர் வெதுரு
சால த்சாலா
பணி பனி
நெய்த்தோர் நெத்துரு
இங்ஙனம் ஒலித்திரிபு. சொற்றிரிபு. பொருட்டிரிபு. திசைச்சொல், இலக்கியச் சொல்வழக்கு ஆகிய ஐவகை இயல்பே செந்தமிழைக் கொடுந்தமிழாக்குகின்றன. இவற்றொடு வடமொழிக் கலப்பும் சேரின். கொடுந்தமிழ் திரவிடமாகத் திரிகின்றது. சேரநாட்டுச் செந்தமிழ் கொடுந் தமிழாகிப் பின்பு மலையாளமாய்த் திரிந்துள்ளமை காண்க.
இதுகாறும் கூறியது மொழித்திறமே. இலக்கண விலக்கியத்திறம் நோக்கின், தமிழுக்குள்ள தனிப்பட்ட தொன்முது இலக்கண விலக்கியம் கொடுந்தமிழுக்கில்லை. அவற்றுக்குள்ளன வெல்லாம் பிற்காலத்தனவும் ஆரியத்திற் குரியனவுமே. இதனால், மொழி நிலையால் மட்டுமன்றி இலக்கிய நிலையாலும் முற்பட்ட செந் தமிழ். அதற்குப் பிற்பட்டதும் அதன் திரிபானதுமான கொடுந் தமிழினின்று தோன்றியிருத்தல் முடியாதென்பது தேற்றம்.
செந்தமிழின் திரிபே கொடுந்தமிழ்; திரிபின்றேல் கொடுந் தமிழில்லை. ஆகவே தமிழ்த் திரிபே திரவிடம்; திரிபின்றித் திரவிடமில்லை. தெலுங்கு, கன்னடம் முதலிய திரவிட மொழிக ளெல்லாம் திருந்திய வடிவில் பேசவும் எழுதவும் படின், தமிழே யன்றி அவ்வத் திரவிட மொழிகளாகாமை காண்க.
சிலர், உண்டை (உருண்டை), கொடு (கொண்டு) எனத் தமிழில் இருவகை வழக்கிலும் அருகி வழங்கும் ஐந்தாறு சொற்களைக் கொண்டு. தமிழும் திரவிடம்போல் திரிபுடையதே என நாட்ட விரும்புகின்றனர். எவ்விதிக்கும் விலக்குண்டாதலின், விலக்கைக் கொண்டு விதியை மறுக்க முடியாது. ஒரு பொருளின் பெரும் பான்மை யியல்பையே அதன் உண்மையியல்பாகக் கொள்ளல் வேண்டும். தமிழ் பெரும்பாலும் இயல்புடையதென்றும், திரவிடம் பெரும்பாலும் திரிபுடையதென்றும் அறிதல் வேண்டும். இதனாலேயே செந்தமிழையும் கொடுந் தமிழையும் முறையே தமிழும் திரவிடமும் என இடைக்காலத்து இலக்கணிகள் சிலர் வழங்கி வந்தனர். இதனைப் பின்பற்றித் தமிழுக்கினமான மொழி களையெல்லாம் திரவிடமெனப் பிரித்துக் கூறுவதே சாலப் பொருத்த முடைத்தாம். திரவிடம் என்னும் தொகுதி தமிழை உளப்படுத்தாமையின், அவ்விரண்டையும் ஒருங்கே குறிக்கத் தமிழம் என்னும் சொல்லையே ஆளவேண்டும்.
நூன், நூம், நுங்கள்; யான், யாம், யாங்கள்; நான், நாம், நாங்கள்; நீன், நீம், நீங்கள்; தான், தாம், தாங்கள்; அவன், அவள், அவர், அது, அவை; என மொழிக் கடிப்படையான மூவிடப் பெயர் களும், தமிழில் இயல்பாகவும் ஒழுங்காகவும் இருக்கவும்; தெலுங்கில், நேனு, மேமு; மனமு, நீவு, மீரு; தானு, தாமு; வாடு, அதி(ஆ.மெ), வாரு, அதி, அவி எனத் திரிந்தும், ஒழுங்கற்றும் இனமிழந்தும் இருத்தல் காண்க. மொழிக்கடிப்படையானவும் பெரும்பாலும் திரியாதனவும் ஓரசைப்பட்டனவும் உலக மொழிகட்கெல்லாம் தொடர்பு காட்டுவனவும் அடிக்கடி சொல்லப்படுவனவும் நிலைத்து வழங்குவனவுமான மூவிடப் பெயர்களே இத்துணைத் திரிபடைந்திருப்பின், வேறு சொற் களைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. இம் மூவிடப் பெயர் களை ஒரு சோற்றுப் பதமாகவே கொள்க. இங்ஙனம் இயல்பை யும் திரிபையும் முறையே தம் சிறப்பியல்பாகக் கொண்ட தமிழை யும் திரவிடத்தையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்கவொண்ணும்?
தமிழ் இயல்பாகவே செம்மையுடைமையின், தமிழ் எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே. தமிழின் திரிபாகிய கொடுந் தமிழி னின்றும் பிரித்துக் கூறவே செந்தமிழ் எனப்பட்டது. இயல்பான பால் தண்ணீர்ப் பாலினின்றும் பிரித்துக் கூறத் தனிப்பால் எனப்பட்டாற்போல.
தமிழ் ஒன்றே மிகுந்த இலக்கண வரம்புடையது.
கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?
என்று பரஞ்சோதி முனிவர் தருக்கிக் கூறியதைத் தமிழரனைவரும். சிறப்பாகத் தமிழ்ச்சைவர், கவனித்துக் காண்பாராக!
எல்லா மொழிகட்கும் பொதுவான எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய நான்குமே, தமிழில் மிகுந்த வரம்பும் விரிவும் கொண் டுள்ளன. இனி, பிறமொழிகட் கில்லாத பொருளிலக்கணத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டுவதில்லை. பிறமொழிகளை மக்கள் எங்ஙனமெல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனரோ, அங்ஙன மெல்லாம் அவற்றின் இயல்பும் இலக்கணமும் அமை கின்றன. ஆனால், தமிழ் எங்ஙனம் பேசப்படினும், மேடையேறிப் பேசும் போதும் ஏடெடுத் தெழுதும் போதும் இலக்கண வரம்புடனேயே பேசவும் எழுதவும்பட வேண்டும். இதுவே தென்றமிழுக்கு இலக்கணிகள் இட்ட என்றுமுள வரம்பு. இவ் வரம்புடையதே தமிழ் அல்லது செந்தமிழ்.
ககர வொலியின் நுணுக்கமாகிய ஆய்தமொழிந்த (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய) முப்பான் ஒலிகளே. தமிழுக்கு அல்லது செந்தமிழுக்கு உரியவாம். கொடுந் தமிழ் மொழிகளாகிய திரவிட மொழிகளுள், தமிழுக்கு ஏலாதனவும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிப்பனவுமான செயற்கை வல்லொலிகளையும் காண்கின்றோம். இவை ஆரியக் கலப்புற்ற பிற்காலத்து வல்லொலிகளையும் காண்கின்றோம். இவை ஆரியக் கலப்புற்ற பிற்காலத்து விளைவல்ல; ஏனெனின், தூய திரவிடச் சொற்களிலும் இவ்வொலிகள் சொல்லுறுப்பாக அமைந்துள்ளன.
எ-டு:
தமிழ் தெலுங்கு
Fo-Gudi (குடிகை)
வேங்கடா வெங்க்கட்ட
எந்து (என்னது) எந்த்து
தமிழ் சொன்முதல் வராத எழுத்துக்கள், கொடுந்தமிழில் இலக்கணப் போலித் திரிபு காரணமாகச் சொன் முதல் வருகின்றன.
எ-டு:
தமிழ் தெலுங்கு
இலது லேது
பொழுது ப்ரொத்து
உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் ஆரிய அல்லது திரவிடவொலிகளெல்லாம். தமிழிலுள்ள (க ச ட த ப ற) என்னும் வல்லினத்தின் திரிபுகளே. அதனாலேயே, ஐவருக்க முதலில் தமிழெழுத்துகளே அல்லது தமிழொலி யெழுத்துகளே வரையப்படுகின்றன.
ஒரே தமிழ் வல்லின வெழுத்து, திரவிடத்தில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறொலியாய்த் திரிவதுண்டு.
எ-டு:
தமிழ் தெலுங்கு
செய் ச்சேயு
ஜேசு (தொலினே ஜேஸின)
சால த்ச்சாலா
ஆரியத்திலும் இங்ஙனமே.
எ-டு:
தமிழ் தெலுங்கு
பொறு A.S.berau, L.Fero, gero, Gk. Phero, Skt. bhri.
விதிர் Skt. vithura, Vidhura.
இனி, ஆரிய மொழிகளில் அயற்சொற்களன்றித் தன் சொற்கள் கூட ஒரேயெழுத்தொலியை எடுத்தும் எடுக்காதும் ஆள்வது முண்டு.
எ-டு:
உரப்பாவொலி எடுப்பொலி
purse bursar, disburse.
இவ்வெடுத்துக் காட்டுகளால், வல்லின வெழுத்தொலிகட் கெல்லாம் தமிழ் வல்லொலிகளே மூலம் என்பது பெறப்படும்.
ஐவருக்கத் திடையின் மூன்றும் அவ்வம் முதலும் என்று பவணந்தியார் கூறியதும் இங்கு நோக்கத்தக்கது.
எடுக்கா வொலியினின்று எடுப்பொலி தோன்றுமேயன்றி, எடுப்பொலியினின்று எடுக்கா வொலி தோன்றாது. குழந்தை வாயில் எடுக்கா வொலியே முந்தித் தோன்றும், முந்தியல் மாந்தன் குழந்தை போன்றவன். முன்னைத் தமிழன் முந்தியல் மாந்தன் பாற்பட்டவன். ஆகையால், எடுக்கா வொலியே இயற்கையாம். தென்கோடியில் வாழும் அநாகரிக மக்கள் மொழியில் எடுப் பொலிகள் இல்லை. முன்னாரியமாகிய மேலை மொழிகளில் அவை தோன்றிப் பின்னாரியமாகிய சமற்கிருதத்தில் முற்றுகின்றன.
தமிழ்ச் சொற்கள் திரிந்தே கொடுந்தமிழ் தோன்றும். அத்திரிவு : (1) சொற்றிரிபு (2) பொருட்டிரிபு என இரு வகைப்படும். அவற்றுள், சொற்றிரிபு பல்வேறு வகைய. அவற்றுள் சிலவே ஈண்டுக் காட்டப்படும்.
தமிர் தெலுங்கு திரிபுவகை
ஊர் ஊரு மிகை
கண் கன்னு திரிதலும் மிகையும்
நீர் மீரு போலியும் மிகையும்
அவன் வாடு இலக்கணப் போலியும் திரிதலும்
மாற்றம் மாட்ட திரிதலும் கெடுதலும்
எழுபது டெப்பதி இலக்கணப் போலியும் போலியும் திரிதலும்
சுருட்டு சுட்டு தொகுத்தல்
வெண்ணெய் வென்ன சிதைவு
பொருட்டிரிபு. (1) ஆட்சி வேறுபடல், (2) சிறப்பு நீங்கல் என இருவகைத்து.
அதே என்னும் சொல்லை ஆம் என்னும் பொருளிலும், மதி என்னும் சொல்லைப் போதும் என்னும் பொருளிலும், மலை யாளத்தில் வழங்கல் ஆட்சி வேறுபடல். விடைசொல்லுதலைக் குறிக்கும் செப்பு என்னும் சொல்லைச் சொல்லுதல் என்னும் பொருளிலும், விரல் மடக்கிய கையால் அல்லது குச்சால் அடித் தலைக் குறிக்கும் கொட்டு என்னம் சொல்லை அடித்தல் என்னும் பொருளிலும், தெலுங்கில் வழங்கல் சிறப்பு நீங்கலாம்.
தமிழ்நாட்டில் வழங்காது பிற திரவிட நாடுகளில் மட்டும் வழங்கும் சிறப்புச் சொற்கள் திசைச் சொற்களாகும். தமிழ்நாட்டிற் குள்ளேயே ஒரு பொருட்கு ஓரிடத்தில் ஒரு சொல்லும் மற்றோரி டத்தில் மற்றொரு சொல்லும் சொல்லும் தமிழ் இயல்பு தனிப் பட்டது. இதனாலேயே, தன்னே ரிலாத தமிழ் எனப்பெற்றது. ஆகையால் பிராகிருதத்தினின்று சமற்கிருதம் ஆக்கப் பெற்றாற் போல். கொடுந்தமிழாகிய திரவிடத்தினின்று செந்தமிழாகிய தமிழ் ஆக்கப்பெற்றது என்பது ஒரு சிறிதும் பொருந்தாது.
தமிழ் மிகத் திருந்தியதும் பண்பட்டதுமான மொழியாகும். இலக்கண வரம்பிலா மொழி என்று பரஞ்சோதி முனிவர் இழித்துக் கூறியவற்றுள் வடமொழியாகிய சமற்கிருதமும் ஒன்று என்பதை மறந்து விடல் கூடாது. தில்லைச்சிற் றம்பலத் தும்என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் டீந்தமிழ் என்ற மாணிக்கவாசகரே வியந்தும் நயந்தும் கூறுவராயின், தமிழ் எத்துணை விழுமிய மொழியாகும்.
எண்ணுக்கு மெட்டாத் தொன்மைதொட்டுத் தமிழ் வழங்கி வரினும், இன்றும் அதன் பெரும்பாற் சொற்கள் வேர்ப்பொருள் தோன்றும் இயல்பு நிலையிலுள்ளன; கொடுந்தமிழ்ச் சொற்களோ பெரும்பாலும் வேறுபட்டும் வேரற்றும் உள்ளன.
ஆக, ஆகாது, ஆயிற்றேல், ஆம்(ஆகும்) என்ற சொற்கள். தெலுங் கில் முறையே கா, காது, அயித்தே, ஔனு எனத் திரிந்துள்ளன. ராய் (அறை), லெய்(எழு), லோ(உள்), லு(கள்), ரோலு(உரல்), ரா(வார்) முதலிய தெலுங்குச் சொற்களில் எங்ஙனம் வேர்காண முடியும்? ஆக, உள் என்ற சொற்கள் திரிந்து, கா, லோ என்ற சொற்கள் தோன்றுமா? அல்லது, கா, லோ என்ற சொற்கள் திரிந்து ஆக, உள் என்ற சொற்கள் தோன்றுமா? இயல்பிலிருந்து திரிபு தோன்றியதா? திரிபிலிருந்து இயல்பு தோன்றியதா? இவற்றை யெல்லாம் ஆய்ந்து பாராது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங் களிலும் தலைமைத் தமிழ்ப் புலமை நடாத்தும் பெரும் புலவருங் கூடப் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதம் தோன்றியவாறே. கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் தோன்றியிருத்தல் வேண்டுமென்ற குருட்டுக் கொள்கை யுடையராயிருக்கின்றனர். இனிமேலாயினும், அவர் ஆய்ந்து உண்மை காண்பாராக!
திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், முந்தித் திரிந்ததும் தலைமையானதும் தருக்குற்றதும் தமிழைப் பழிப்பதுமான தெலுங்கே இங்குப் பெரும்பாலும் எடுத்துக்காட்டப்பட்ட தென்க. - செந்தமிழ்ச் செல்வி செப்பிடெம்பர் 1948
செம்பியன்
செம்பியன் - சைய்ய (b)
ஆரியர் வருமுன் ஒருகாலத்தில் இந்தியா முழுதும் பாண்டியர் ஆட்சியிலிருந்தது.
பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.
என்று இளங்கோவடிகள் (சிலப். 11:19-22) கூறுதல் காண்க.
அக்காலத்திற் பாண்டியக் குடியினர் சிலர் வடநாடு சென்று வாழ்ந் திருந்தனர். அவரே பாண்டவரின் முன்னோரான வடநாட்டுத் திங்கள் மரபினர். அதன்பின், சோழக் குடியினர் சிலரும் வடநாடு சென்று ஆண்டனர். அவரே இராமனின் முன்னோரான வடநாட்டுக் கதிரவன் மரபினர். இதனாலேயே, மனு, மாந்தாதா, முசுகுந்தன், செம்பி முதலியோர், சோழருக்கும் வடநாட்டுக் கதிரவக் குலத்தினருக்கும் பொது முன்னோராகச் சொல்லப் படுவாராயினர். செம்பி வழிவந்தவன் செம்பியன். செம்பி என்னும் பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது.
செம்பியன் = சோழன். செம்பியர் மருகன் (புறம். 228:9).
சோழன் செம்பியன் எனப்பெற்றமையாலும், செம்பியன் தமிழப் பேரரையன், செம்பியன் தமிழவேள் என்பன சோழராற் கொடுக்கப் பெற்று வந்த பட்டங்களாயிருந்தமையாலும், செம்பி என்னும் பெயர் தூய தமிழ்ச் சொல்லாகவே யிருத்தல் வேண்டும். மனு, மாந்தாதா முதலியோரின் தமிழ்ப் பெயர் மறையுண்டு போயின.
தலையெழு வள்ளல்களுள் ஒருவன் செம்பியன் எனப் பெற்றிருந்த மையால், சோழர்குடித் தொன்முது பழைமையும் செம்பியின் முது பழைமையும் உணரப்பெறும்.
ஆரியர் வருமுன் வடநாட்டில் தமிழர் குடியேறியிருந்தது போன்றே, தமிழ அரசரும் குடியேறியிருந்தனர் என அறிக.
அகத்தியர் துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள் ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின் கண் இருந்தார் என்ற நச்சினார்க்கினியர் கூறுவதையும் நோக்குக. (வ.வ. 165-166).
செம்புக்காலம் (COPPER AGE)
(தேரரா. கி.மு. 30,000 - 15,000)
பொன்கிடைப்பு வரவரக் குன்றியதாலும், அணிகலன்கட்கும் உண்கலங்கட்கும் குடிகலங்கட்குமே பொன்னைப் பெரிதும் பயன்படுத்தியதாலும், நாளடைவிற் பல கருவிகளையும் கலங்களையும் செய்தற்கேற்ற செம்பைக் கண்டு பிடித்தனர்.
குய்க்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
கேடின் றாக பாடுநர் கடும்பென
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் (புறம். 160)
என்னும் பிற்காலச் செய்யுள் முற்கால நிலைமையையும் உணர்த்தும்.
பொருநை யென்னும் நெல்லை மாவட்ட ஆற்றங் கரையிற் செம்பு கிடைத்ததால், அவ்வாறு தாம்பரச் செப்பு என்று பொருள்படும் தாமிர பரணி என்னும் இருபிறப்பிச் சொல்லால் (hybrid) பிற்காலத்திற் குறிக்கப்பட்டது. நெல்லை யருகிலுள்ள ஒரு நகர் செப்பறை (செம்பு + அறை) எனப் பெயர்பெற்றுள்ளது. சிவபெரு மானின் ஐவகை அம்பலங்களுள் ஒன்றான நெல்லையம் பலம், செப்போடு வேயப் பெற்றதால் செப்பம்பலம் (தாமிரசபை) எனப்பட்டது. பொதியமலை செம்பிற் பொருப்பு எனப்பட்டது.
தென்கால் விடுக்குஞ் செம்பிற் பொருப்பு (கல்லா. 51:11).
செம்பிற் பொருப்பு = செம்புத்தாது உள்ள மலை. இதைச் செப்பு வரையென்று குற்றாலத் தலபுராணங் கூறும்.
செந்நிறமாயிருந்ததனால், செம்பு என்றும் செம்பொன் என்றும் தாம்பரம் என்றும், புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட மாழை அல்லது பொன்னம் பெயர் பெற்றது.
செம் - செம்பு - செப்பு.
தும் - தும்பு - தும்பரம் = சிவப்பான அத்திப்பழம், அப்பழம் பழுக்கும் மரம்.
தும்பரம் - வ. உதும்பர.
தும்பு - துப்பு = 1. சிவப்பு. 2. பவழம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 3. அரக்கு. (பிங்.).
தும் - துமர் - துவர் = 1. சிவப்பு துவரிதழ்ச் செவ்வாய் (சிலப். 6:26). 2. பவழம். (திவா). 3. துவரம் பயறு அல்லது செடி. துவர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை) 4. காவி. துவருறுகின்ற வாடை யுடல்போர்த்து (தேவா 608:10). 5. துவர்ப்பு. துவர்மருவப் புளிப்பேற்றி (தைலவ. தைல). 6. நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்ற பத்துத் துவர்ப்பு மருந்துப் பொருள். விரையொடு துவருஞ் சேர்த்தி (சீவக. 623) 7. பாக்கு. வாச மணத்துவர் வாய்க்கொள் வோரும் (பரிபா. 12:22).
காசுக்கட்டியும் சாயப்பாக்கும் போன்ற செஞ்சரக்குத் துவர்ப்பா யிருப்பதால், துவர் என்னுஞ் சொல் துவர்ப்பு பொருள் கொண்டது.
துவர் (சிவப்பு) - தெ. தொகரு. 1. தொகர்.
துவர் (துவர்ப்பு) - வ. துவர.
துவர்த்தல் = 1. சிவத்தல். துவர்த்த செவ்வாய்
(கம்பரா. நீர்விளை. 13). 2. துவர்ப்பாதல்.
துவர்ப்பு = 1. அறுசுவைகளுள் ஒன்று. (பிங்.).
2. பத்து (துவர்ப்புப் பொருட் டொகை) (தைலவ. தைல)
துவராடை = காவியாடை. அந்துவ ராடைப் பொதுவனொடு (கலித். 102:35).
துவர்க்கட்டி = காசுக்கட்டி.
துவர்க்கண்டல் = செந்தாழை. (தைலவ. தைல. 135).
துவர்க்காய் = பாக்கு. துவர்க்காயொடு சுக்குத்தின்னும் (தேவா. 660:10).
துவர்ப்பூ = வாடிச் சிவந்த பூ. தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி (பதினொ. திருக்கண். மறம். நக். 61).
துவர்வலியுறுத்தி = துவர்ப்பு மருந்து (Astringent tonic).
துவர் - துவரம் = துவர்ப்பு. (பிங்.). துவரம் - வ. துவர.
துவர் - துவரி = 1. இலவம் பூ. துவரிக் கனிவாய் நிலமங்கை (திவ். பெரிய தி. 8:8:9).
2. காவிநிறம். துவரி யாடையர் மட்டையர் (திவ். பெரிய தி. 2:1:6).
துவரித்தல் = செந்நிறமூட்டுதல். துவரித்த வுடையவர்க்கும் (திவ். பெரிய தி. 5:6:8).
துவர் - துவரை = 1. துவரம் பயறு. 2. துவரஞ்செடி. 3. காட்டத்தி, 4. கருந்துவரை, 5. செம்புருக்கி வார்த்துக் கட்டிய செப்புக் கோட்டை மதில்.
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201).
6. கண்ணன் ஆண்ட துவாரகை. வ. த்வாரகா.
துவரஞ்சம்பா = ஒரு நெல்வகை.
துவரைக்கோமான் = இடைக்கழகப் புலவராகச் சொல்லப்படும் ஒருவர். (இறை. 1, உரை).
துவரைப்பதி - வ. த்வாரவதீ.
துவர் - துகர் - துகிர் = 1. பவழம். பொன்னுந் துகிரு முத்தும் (புறம். 218).
2. பவழக்கொடி. செந்துகிர் படருந் திரைக்கடல் (கல்லா. முருக. வண). துகிர் - தெ.க.து. தொகரு.
துகிர்த்தாளி = பவழமல்லிகை (மலை).
துகிர் - துகில் = 1. செந் நல்லாடை. பட்டுந் துகிலு முடுத்து (நாலடி. 264). 2. செந்துணிக்கொடி (பிங்.). துகில் - துகிலிகை = செந்துணிக் கொடி.
புரிசைமேற் புனைந்த வாணிலா நெடுந் துகிலிகை (கந்த பு. திருநகர. 20).
தும்பரம் - தம்பரம் - தாம்பரம் = செம்பு. (பதார்த்த. 1170). தாம்பரம் - வ. தாம்ர.
தம்பரம் - தம்பர் = வெற்றிலை தின்று சிவந்த எச்சில் (மாறனலங். 470, உதா.).
தம்பரம் = தம்பலம் = 1. வெற்றிலை தின்று சிவந்த எச்சில். தில்லை நல்லார் பொதுத் தம்பலங் கொணர்ந்தோ (திருக்கோ. 396). தெ. தம்ம. 2. வெற்றிலை பாக்கு. தையால் தம்பலந் தின்றியோ (கலித். 65). 3. தம்பலப் பூச்சி.
தம்பலம் - வ. தாம்பூல.
தம்பலப் பூச்சி = தம்பலம் போற் சிவந்த மூதாய்.
தம்பலம் - தம்பல் = வெற்றிலை தின்று சிவந்த எச்சில்.
வெள்ளிலைத் தம்பல் (கம்பரா. வரைக்கா. 49).
தம்பலம் - தம்பலை = சிவந்த இலந்தைப் பழம், அது பழுக்கும் முட்செடி.
துமர் - தமர் - தமரை - தாமரை - செம் முளரி.
தாமரை என்னுஞ் சொல் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து, பொதுப்பொருளில் வழங்குகின்றது. அதனால், செம்முளரியைக் குறிக்கச் செந்தாமரை என்று மிகைபடக் கூறலாகச் சொல்ல வேண்டியுள்ளது. இது, அரைஞாண் கொடி, குளிர்ந்த தண்ணீர் என்பன போன்ற வழு வழக்கே.
தாமரை - வ. தாமரஸ.
இதுகாறுங் கூறியவற்றால், வடசொல்லாகக் கருதப்படும் தாம்பரம், தாமரை என்னுஞ் சொற்களும் தென்சொல்லே யென்றும், இங்ஙனமே நூற்றுக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் இனம்மறைந்து வழங்குகின்றன வென்றும் தமிழ் உண்மையில் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகுமென்றும், அறிந்து கொள்க.
பொற்காலத்திற் பொன்னால் உண்கலம் குடிகலம் நீர்க்கலம் முதலிய பல்வகைக் கலங்கள் செய்யப்பட்டனவேனும், அவை பெருமக்களாலேயே பயன்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும். முதன்முதலாகப் பொதுமக்கள் புழங்கிய மாழைக் கலங்கள், செம்பினாற் செய்யப்பட்டவையே. அதனால், சில குறிப்பிட்ட வடிவையுடைய கலங்கள் எவ்வெக் கருவியாற் செய்யப்படினும், இன்றும் செம்பு, செப்பு, செப்புக்குடம் எனச் செம்புக் காலப் பெயர்களாலேயே வழங்கி வருகின்றன.
நிலையாக வைத்துப் போற்ற வேண்டிய ஆவணங்களும் முறிகளும், எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய வகையில், செப்பேடுகளிற் பொறிக்கப்பட்டுச் செப்புப் பட்டையம் எனப்பட்டன.
செம்பில் வார்க்கப்பட்ட தெய்வப் படிமைகள் செம்புக் குட்டி யென்றும், செப்புத் திருமேனி யென்றம் சொல்லப் பட்டன.
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேனுயர் பொன்னெனவே (பட்டினத்தார், பொது. 61).
முதன்முதல் மரத்திற் குடையப்பட்ட அல்லது செய்யப்பட்ட மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி, செம்பிலும் வார்க்கப் பட்டுச் செப்புக்கால் எனப் பெயர் பெற்றது. செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் என்பது, சோழர் காலத்தில் வழங்கிய நெல்லளக்குங் கருவி வகை.
உளி, கத்தி, அரம், வாள், கறண்டி, கலப்பைக் கொழு முதலிய பலவகைக் கருவிகளும், பொற்காலத்திற்குப் பின் செம்பிலேயே செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
வலிய பகைவராலும் எளிதாய்த் தகர்க்க முடியாவாறு, செம்பை யுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டிய இஞ்சி யென்னுங் கோட்டை மதில்வகை, எருமையூர் (மைசூர்) நாட்டுத் துவரை நகரிலிருந்தமை மேற் குறிக்கப்பட்டது. இராவணன் கோட்டை அத்தகைய மதிலுடைமையாற் செப்புக் கோட்டை யெனப்பட்டது.
செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி (கம்பரா. கும்ப. 160)
நெய்தல் நில மாந்தர், கட்டுமரம், திமில், படகு முதலிய கலங்களைச் செலுத்தி ஆழ்கடலில் மீன் பிடித்ததொடு, சலங்குகளிற் சென்று முத்துக் குளித்தும் பவழத் தீவுகளினின்று பவழங் கொணர்ந்தும் தம் வாழ்க்கையை வளம்படுத்தினர். கிளிஞ்சில் முத்துமாலைகளைச் செல்வரும், வலம்புரி இடம்புரி முத்துமாலை களை அரசரும், வாங்கியணிந்தனர். சங்கு வளையலும் பவழமாலையும் பெண்டிரால் விரும்பியணியப் பட்டன. சிப்பி நீற்றுச் சுண்ணம் சிறந்த வெண்சுதையாகப் பயன்படுத்தப்பட்டது.
ஒருவன் ஒருத்தியொடு மறைவாகக் கூடியபின் அவளொடு கூடவில்லையென்று மறுத்துரைத்தலும், அவளைக் கைவிடுதலும், ஒருவன் ஒருத்தியொடு வலிந்து கூடுதலும், ஆகிய பொய்யும் ஒழுக்கக் கேடும் பலரிடைத் தோன்றியபின், பெற்றோரின் இசைவு பெற்றே ஒரு பெண்ணைக் கொள்ளுமாறும், இருபாலரும் வெளிப்படையாகக் கற்புடன் ஒழுகுமாறும், விழாவொடு கூடிய கரணம் என்னும் திருமணச் சடங்கைப் பெரியோர் ஏற்படுத்தி வைத்தனர்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்ளர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொல். 1091).
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே (. 1088)
திருமணக் கரணம் பெரும்பாலும் பின்வருமாறு நடந்தது.
உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
5 கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
10 முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
15 நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
20 ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குல் (அகம். 86).
இதன் பொருள் :
1-4. உழுத்தம் பருப்பொடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ, வரிசையான கால்களையுடைய குளிர்ந்த பெரிய பந்தற்கீழ்க் கொண்டுவந்து கொட்டிய மணலைப் பரப்பி, வீட்டில் விளக்கேற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு,
5-10 தீய கோள்களின் தொடர்பு நீங்கிய வளைந்த வெண்ணி லாவைக் குற்றமற்ற சிறந்த புகழையுடைய சகடம் என்னும் நாள் அடைய, மிகுந்த இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற் காலையில், உச்சந்தலையிற் குடத்தையும் கையிற் புதிய அகன்ற மொந்தையையும் உடைய, மணஞ் செய்து வைக்கும் ஆரவார முள்ள முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறைப்படி எடுத்தெடுத்துக் கொடுக்க,
11-16. மகனைப் பெற்ற தேமலுள்ள அழகிய வயிற்றையும் தூய அணிகளையும் உடைய மகளிர் நால்வர் கூடிநின்று, கற்பினின்றும் தவறாது பலநற்பேறுகளைப் பெற்று, உன் கணவன் விரும்பிப் பேணும் விருப்பத்திற் கிடமாகுக என்று வாழ்த்தி, நீரொடு சேர்த்துப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், அடர்ந்த கரிய கூந்தலில் நெல்லொடு விளங்க,
17. நல்ல மணவிழா முடிந்த பின்பு,
18 - 20. சுற்றத்தார் ஆரவார ஓசையுடன் விரைந்து வந்து, பெரிய மனைக்கிழத்தி யாவாய் என்று சொல்லிச் சேர்த்து வைக்க, ஓர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில்.
மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
5 சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
10 மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மன்னுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
15 தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் (அகம். 136)
இதன் பொருள் :
1-9. நெஞ்சே, குற்றமறப் பருப்புடன் கலந்தாக்கிய நெய்மிகுந்த வெண்சோற்றை, நீக்காத ஈகைத் தன்மையுடன் உயர்ந்த சுற்றத்தார் முதலியோரை உண்பித்து, புட்குறி இனிதாகக்கூட, தெள்ளிய ஒளியையுடைய அழகிய இடமகன்ற பெரிய வானம் களங்கமற விளங்க, திங்களைச் சகடம் கூடிய குற்ற மற்ற நன்னாளில், மண மனையைச் சுவடித்துக் கடவுளை வழிபட்டு, மணமேளத்துடன் பெரிய முரசம் முழங்க, தலைவிக்கு மண நீராட்டிய மகளிர், தம் கூரிய கண்களால் இமையாது நோக்கி மறைய,
10-18. மெல்லிய பூவையுடைய வாகையின் அழகற்ற பின் புறத்தைக் கொண்ட கவர்த்த இலையை, முதிய கன்று, கறித்த பள்ளத்திற் படர்ந்த அறுகின், இடி முழங்கிய வானத்து முதன்மழைக்கு அரும்பிய கழுவிய நீலமணி போலும் கரிய இதழையுடைய பாவையொத்த கிழங்கிடத்துள்ள குளிர்ந்த மணமுள்ள அரும் புடன், சேர்த்துக் கட்டிய வெள்ளிய நூலைச் சூட்டி, தூய புத்தாடையாற் பொலியச் செய்து, விருப்பத்துடன் கூடி, மழை யோசை போன்ற மணவோசை மிகுந்த பந்தலில் அணிகளை மிகுதியாய் அணிந்திருந்ததனால் உண்டான வியர்வையை விசிறி யால் ஆற்றி, அவள் சுற்றத்தார் அவளை நமக்குத் தந்த முதல்நாள் இரவில்
இவை பிற்காலத்தனவாயினும், பிராமணனும் சமற்கிருத மந்திரமுங் கலவாத பண்டைத் தூய தமிழத் திருமண விழாவின் இயல்பைத் தெளிவாகக் காட்டுவனவாகும்.
மருதத்தை யடுத்து நாட்டிற் கணித்தாக வுள்ள முல்லை நிலவாணர், ஆடுமாடெருமை யென்னும் முந்நிரையையும், சிறப்பாக ஆநிரை யை, வளர்ப்பதை முதன்மைத் தொழிலாகவும், வானாவாரிப் பயிர் விளைவிப்பதைத் துணைத்தொழிலாகவுங் கொண்டு, பிறர்க்குத் தீங்கு செய்யாதும் ஏறுதழுவி மணக்கும் மறவியலை மேற்கொண் டும் வாழ்ந்துவர; குறிஞ்சியை யடுத்துக் காட்டுச் சார்பாகவும் நாட்டிற்குத் தொலைவிலும் உள்ள முல்லை நிலவாணரோ, தம் வாழ்நிலம் ஆண்டுதொறும் வேனிலில் வற்றிவறண்டு வெம் பாலையாக மாறியதால், ஆறலைத்தலையுஞ் சூறைகோடலை யுமே தம் குலத்தொழிலாகக் கொண்டு விட்டனர். கொடு வறட்சி கொள்ளைக்கே தூண்டும்.
இங்ஙனம், தமிழகம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்திணைப் பாகுபாடுற்றது. திணை ஐந்தாயினும், நிலை யான நிலம் நான்கேயாதலால், ஞாலம் நானிலம் என்னப்பட்டது. பாலைநிலத்தலைவர் விடலை, கோ, வேள், மீளி, காளை எனப் பல்பெயர் பெற்றனர்.
மருதநிலத்து ஊர்களிலேயே நெல் விளைந்ததனால், பாலை நிலந்தவிர மற்ற முந்நில மாந்தரும் தத்தம் நிலத்துச் சிறப்புப் பண்டங்களை அங்குக் கொணர்ந்து நெல்லிற்கு மாறினர்:
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில
என்னும் தனிப்பாடலால், மன்னனினும் பெரியவன்கோ என்பதை அறிக. கோ என்பது கோவன் என்பதன் மரூஉ. கோக்களை (ஆக்களை)க் காக்கும் ஆயன் போல மக்களைக் காப்பவன் அரசன் என்பது கருத்து. இவ்வொப்புமை பற்றியே, ஆயன் கோல் போல் அரசனும் ஒருகோலைக் கையிற் கொண்டான். ஆட்சி நேர்மையா யிருக்க வேண்டுமென்பதைக் காட்டவே, நேரான கோல் கொள்ளப்பட்டது. கோல் ஆட்சியைக் குறிக்குஞ் சின்ன மாதலால், முறையான ஆட்சி செங்கோல் என்றும், முறைதவறிய ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்பட்டன. கொடுமை வளைவு. செம்மை நேர்மை. கோன் என்னும் தென் சொல்லே துருக்கியிற் கான் என்று திரிந்ததாகக் கால்டுவெலார் கூறுவர்.
கோவன் - கோன் - கோ = அரசன்.
கோவன், கோன் என்னுஞ் சொற்கள் இன்றும் ஆயனையுங் குறித்தல் காண்க. கோன் என்னுஞ் சொல் ஆர் என்னும் உயர்வுப் பன்மை யீறு பெற்றுக் கோனார் எனவும் வழங்கும்.
பாலை நிலந்தவிர மற்ற நான்கு நிலங்களுள், ஒன்றும் பலவுங் கைக்கொண்டவர் கோக்களாவர். அமைச்சர், படைத்தலைவர், பூசகர், தூதர், ஒற்றர் என்னும் ஐம்பெருங்குழுவார் அவருக்கு ஆட்சித் துணையாயிருந்தனர்.
ஐந்திணைகளுந் தோன்றியபின், முதற்கண் குறிஞ்சியில் வேட்டை யாடுங் குறவரும், முல்லையில் முந்நிரை வளர்க்கும் இடையரும், மருதத்தில் உழுதொழிலைச் சிறப்பாகச் செய்யும் உழவரும், பாலையில் வழிப்பறித்துக் கொள்ளையடிக்கும் மறவரும், நெய்த லில் மீன்பிடிக்கும் படவரும், ஆகப் பெரும்பாலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருப்பர்.
ஒவ்வொரு திணைநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மக்கட் குடியிருப்பிலும், அடக்கியாளவும் வழக்குத் தீர்க்கவும் ஒரு தலைவன் தோன்றியிருப்பன். அவன் இற்றை நாட்டாண்மைக் காரன்போல் பிறர் செய்யுந் தொழிலையே செய்திருப்பன். தெய்வ வணக்கம் அல்லது அச்சம் இயற்கைப் பண்பாதலால், தலை வனுக்குப் பின் ஒரு பூசகன் அல்லது தேவராளனுந் தோன்றி யிருப்பன். அவர்க்குமுன், மருதநிலப் பேரூர்களில் பண்டமாற்றியர் அல்லது வணிகர் தோன்றியிருப்பர். ஆண்டு தோறும் பல கூலங்களும் புதிதாகவும் ஏராளமாகவும் விளைந்ததால், முந்தின ஆண்டில் மீந்து போன கூலங்களை வாங்கவும், அவற்றிற் கீடாக உழவர்க்கு வேண்டிய பிறநிலத்துப் பொருள்களைக் கொண்டு வந்து தரவும், உழவரினின்றே ஒரு சிலர் வணிகராகப் பிரிந்திருத் தல் வேண்டும். யாண்டுகழி வெண்ணெல் என்று ஐங்குறு நூற்றுப்பாடல் கூறுவதை நோக்குக. ஒன்றிரண்டாம் வாணிகம் என்பதும் வணிக முயற்சியை ஊக்கியிருத்தல் வேண்டும். வணிகருக்குப் பின் பல்வேறு கைத்தொழிலாளர் படிப்படியாகத் தோன்ற லாயினர். நாகரிகமும் அரசியலும் வணிகமும் வளர வளர, நூற்றுக்கணக்கான பணிகளும் அலுவல்களும் புதிது புதிதாக ஏற்பட்டன. அறிவு வளர்ச்சி யடைந்ததனால், பூசகர் கல்வி கற்பிக்கும் ஆசிரியத் தொழிலும் மேற்கொண்டனர். உழவு, வணிகம், காவல், கல்வி என்னும் நாற்பெருந் தொழில் பற்றி, மருதநில மக்கள் உழவர், வணிகர், அரசர், பார்ப்பார் என நால் வகுப்பாராய் அமைந்தனர். பதினெண் கைத்தொழிலாளரும் உழவர்க்குப் பக்கத் துணைவராகக் கருதப்பட்டதனால், அவருள் அடக்கப்பட்டனர்.
பண்ணியம் = பண்ணப்பட்ட பொருள், விற்பனைப் பண்டம். (மதுரைக். 405).
பண்ணியம் - பண்ணியன் - பண்ணிகன் - பணிகன் - வணிகன் = பல பண்டங் களை விற்பவன். வணிகன் - வாணிகன்.
பார்ப்பான் = நூல்களைப் பார்ப்பவன். இது அன் சாரியை அல்லது அனன் இறு பெற்றுப் பார்ப்பனன் என்றும் நிற்கும். முக்கால வினைமுற்றும் இங்ஙனம் ஈறு கொள்ளும்.
எ-டு: பார்த்தனன் - இறந்த காலம்.
பார்க்கின்றனன் - நிகழ் காலம்
பார்ப்பனன் - எதிர் காலம்
படைப்பனர் (சிலப். 10:134), விரைவனன் (புறம். 150) என்னும் எதிர்கால வினை முற்றுக்களை நோக்குக. பார்ப்பனன் என்பது பிராமணன் என்னும் சொல்லின் திரிபன்று. கல்வித் தொழில் செய்யும் ஆசிரியரும் சமய குரவரும் போன்ற தமிழரையெல்லாம் பார்ப்பா ரென்றே சொல்ல வேண்டும். பிராமணரை இச்சொல்லாற் குறிக்க வேண்டின், ஆரியப் பார்ப்பார் (அல்லது பார்ப்பனர்) என்று அடை கொடுத்தே கூறவேண்டும்,
மொழிவளர்ச்சியில், எண்வேற்றுமைகளும் முக்காலமும் பல்வகை எச்ச முற்றுக்களும், முழுநிறைவான சொற்றொடரமைப்பும், செம்புக்காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். எழுத்து வகை யில் ஒலியெழுத்துத் (Phonetic characters) தோன்றியிருக்கும். ஆயின், எகர வொகரக் குறிலுயி ரொலிகளும் ளகர ழகர றகர னகர மெய்யொலிகளும் பெரும்பாலுந் தோன்றியிரா. இக் காலத்தில் தான், பிராகிருதம் என்னும் வடதிராவிட மொழி யாளரின் முன்னோர் வடநாவலம் (இந்தியா) சென்றிருப்பர். பாவகையில் ஆசிரியமும் கலியும் தோன்றி யிருக்கும். மக்களின் எண்ணுந்திறன் பதினாயிரம் வரை சென்றிருக்கும்.
மதத்துறையில், மறுமையுணர்வும் விண்ணுலகக் கொள்கையும் தோன்றி யிருக்கலாம்.
செய்யுள்
பண்டைப் புலவர் உரைநடை, செய்யுள் என்னும் இருவகை நடையுள்ளும் செய்யுள் சிறந்ததென்று கண்டே, உரைகளும் அகரமுதலி போன்ற உரிச்சொற்றொகுதிகளும் உட்பட, எல்லாப் பனுவல்களையும் செய்யுளில் இயற்றினர். இதையறியாது, பண்டைப் புலவர்க்கு உரைநடையில் எழுதத் தெரியாதென்றும், உரைநடை நூலில்லாதது பண்டையிலக்கியத்திற்கு ஒருபெருங் குறையே யென்றும், கூறுவார் பொரிமாவை மெச்சினானாம் பொக்கைவாயன். என்ற பழமொழிக்கே எடுத்துக் காட்டாவார்.
நால்வகைப் பாக்கட்குள், வெண்பாவும் கலிப்பாவும் போன்றவை வேறெம்மொழியினுங் காணமுடியாது. இறைவனை வழுத்து வதற்கும் காதற்செய்தியை வண்ணிப்பதற்கும், ஒத்தாழிசைக் கலிவகை போன்ற யாப்பு வேறொன்றுமில்லை.
அணி
பொருளை விளக்குவதற்கும் தெரியாத பொருளைத் தெரிவிப் பதற்கும் உவமை இன்றியமையாத தாகையாலும், பெரும்பாலும் எல்லா அணிகட்கும் உவமையே மூலமாதலாலும், செய்யுளியற்று வாரின் திறமைக்குத் தக்கவாறு இயல்பாகவே அணி அமையு மாதலாலும், காலஞ் செல்லச் செல்லப் புதிதுபுதிதாக அணிகள் தோன்றுமாதலாலும், முதனூலாசிரியர் அணிவகையில் விளக்கக் கருதியது உவமை யொன்றே.
உவமை எல்லாமொழிகளிலுங் கையாளப்படுமேனும், உள்ளுறை யென்னும் உவமை வகை தமிழுக்கே சிறப்பாக வுரியதாம். ஒரு தலைவனைத் தலைவி அல்லது தோழி விளிக்கும் போது, அவன் தன்மை புலப்படுமாறு அவன் நாட்டுக் கருப் பொருளின் செயலை எடுத்துக் கூறுவது உள்ளுறை யுவமமாம்.
பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை யையுற்று - மந்தி
தெளியா திருக்குந் திருநாடா வுன்னை
ஒளியாது காட்டுன் னுரு. (நள. கலிநீங். 70)
இது இருதுபன்னனின் தேரோட்டியாக வந்திருந்த நளனை நோக்கித் தமயந்தியின் தோழி கூறியது.
நளன் கார்க்கோடகன் என்னும் பாம்பினாற் கடியுண்டு நிறம் மாறியிருந்த தனால், தெளிவாக அடையாளந் தெரியாது மயங்கி நின்ற தோழி, உன் நாட்டுமந்தி, ஐம்பிரிவான கமுகம் பாளையைப் பார்த்து ஐந்தலை நாகமோ என்று ஐயுற்றுத் தெளியாதிருக்கின்றது என்றது, நானும் உன்னைப் பார்த்து நளனோ வேறொருவனோ என்று மயங்கித் தெளியாதிருக்கின்றேன். என்னும் பொருள்பட நிற்பதால், உள்ளுறை யுவமமாம்.
தலைக்கழகக் காலத்திலேயே, மிடற்றிசையும் (வாய்ப்பாட்டும்) தோல் துளை நரம்பு உறை (வ. கஞ்சம்) என்னும் நால்வகைக் கருவியிசையும், வளர்ச்சி யடைந்திருந்தன.
பண் (7 இசை), பண்ணியல் (6 இசை), திறம் (5 இசை), திறத்திறம் (4 இசை) எனப் பண்களை நால்வகையாக வகுத்திருந்தனர்.
நரப்புக்கருவிகள் முந்தியாழ் (ஆதியாழ், பெருங்கலம், ஆயிர நரம்பு), வில்யாழ் (பல நரம்பு) பேரியாழ் (21 நரம்பு), சுறவியாழ் (மகரயாழ் 19 நரம்பு), சகோட யாழ் (14 நரம்பு), முண்டக யாழ் (9 நரம்பு), செங்கோட்டியாழ் (7 நரம்பு), சீறியாழ் (4 நரம்பு), சுரையாழ் (1 நரம்பு), எனப் பலவகைய. ஆயிரம் என்றது பெருந் தொகையை. உறை யென்றது உறையினாலேயே செய்யப்பட்ட தாளக் கருவியை.
நரம்புக் கருவி இசை வளர்ச்சியின் உச்சநிலையைக் காட்டும். யாழ்த் தண்டின் கடையில் யாளித்தலையுருவம் பொருத்தப் பட்டதனால், நரப்புக்கருவி யாழ் எனப்பெயர் பெற்றது. மடங்கல் (சிங்க) உடம்பும் யானைத்துதிக்கை போன்ற நீண்ட மூக்குங் கொண்ட யாளி என்னும் விலங்கினம், குமரிநாட்டிற்கே யுரியதாகும்.
யாழிசையின்பத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட அசுணம் என்னும் விலங்கும் குமரிநாட்டிற் குரியதே. அது பறவையோ என்று சிலர் ஐயுறுகின்றனர். ஆயின், அதை அசுணமா என்று சிந்தாமணி கிளந்தே கூறுகின்றது.
இன்னளிக் குரல் கேட்ட வசுணமா (சீவக. 1602). நற்றிணை அசுணங் கொள்பவர் கைபோல் (304) என்று இனச்சிறப்புப் பெயரையே குறித்திருப்பினும், இசையறி விலங்காகிய அசுண மானை என்று, ஒரு மான்வகையாகவே நாராயணசாமி ஐயர் உரை வரைந்திருக்கின்றார். மானிறைச்சி எல்லாராலும் விரும்பப் படுவதாலும், மான்வேகமாய் ஓடும் விலங்கினமாதலாலும், அசுணம் ஒரு சிறந்த மான்வகையாகவே இருந்திருக்கலாம்.
யாளிக்கும், வலிமையும் தோற்றப் பொலிவும் மட்டுமன்றி, இசையுணர்ச்சியும் இருந்திருக்கலாம்.
ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப் பாலை என்னும் பண்திரிப்பு முறைகள், முறையே, முழுவிசையும் அரையிசையும் காலிசையும் அரைக்காலிசையும் பற்றியவாயின், தமிழிசைக்கு உலகில் இன்றும் இணையில்லையென்றே சொல்லலாம்.
நாடகம்
இயற்றமிழ்க்குரிய புலனெறி வழக்கத்தில் நாடக வழக்கமும் கலந்திருப்பதனாலும், தலைக்கழகத்து இலக்கணம் மாபிண்ட மென்னும் முத்தமிழிலக்கணமாகவே வழங்கியதாலும், நாடகமும் அக்காலத்து வளர்ச்சியடைந்திருந்தமை அறியப்படும்.
கணக்கு
குமரிநாட்டு மக்கள் பழங்கற் காலத்திற் பத்து வரையும், புதுக்கற் காலத்தில் நூறு வரையும், பொற்காலத்தில் ஆயிரம் வரையும், செம்புக்காலத்திற் பத்தாயிரம் வரையும், உறைக்காலத்தில் நூறாயிரம் வரையும், இரும்புக் காலத் தொடக்கத்திற் பத்து நூறாயிரம் என்னும் கோடி வரையும், எண்ணத் தெரிந்திருத்தல் வேண்டும். அதன்பின், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம், பரதம் முதலிய அடுக்கிய கோடிகளைக் குறிக்கும் பேரெண்கள் எழுந்தன. பரதம் என்பது, 1 - இன்பின் 24 சுன்னங் கொண்டது.
தொடக்கத்தில் இரு கை விரல்களையும் எண்ணிப் பத்தென்னும் எண்ணைப் பெருந்தொகையாகக் கொண்டதனாலேயே, மேற் பட்ட பிற்காலத்துப் பெருந்தொகைகளை யெல்லாம் முறையே பப்பத்து மடங்கு உயர்ந்தனவாகக் கொண்டிருக்கின்றனர்.
மேல்வாயிலக்கம் போன்றே கீழ்வாயிலக்கமும் (fractions) நெட்டளவு கண்டனர். முந்திரி 1/320. கீழ் முந்திரி 1/320 - இல் 1/320 இருவாயிலக்கங்கட்கும் சதுர வாய்பாடுகளும் (Square tables) இருந்தன. கீழ் வாய்க்குச் சிறுகுழி; மேல் வாய்க்குப் பெருங்குழி.
கோலாரிய மாந்தர் கைவிரல்களோடு கால் விரல்களையுஞ் சேர்த்து எண்ணியதனால், பேரெண்களை யெல்லாம் பப்பத்து மடங்காகக் கொள்ளாது இவ்விருபது மடங்காகக் கொண்டிருக்கின்றனர்.
ஆயின், மேலைநாடுட்பட நாகரிக நாடுகளெல்லாம் தமிழ் முறையையே பின்பற்றி வருவது கவனிக்கத் தக்கது.
கணியம்
குமரிநாட்டுக் கணிதநூல் வல்லார் கூர்ங்கண்ணராயிருந்த மையின், 27 நாட்களையும் கதிரவனுந் திங்களுமல்லாத ஐங்கோள்களையும் பன்னீ ரோரைகளையும் கண்டுபிடித்தனர்.
பகலிரவால் நாளையும், வளர்பிறை தேய்பிறையால் மாதத்தை யும், இருதிசை இயனத்தால் (அயனத்தால்) ஆண்டையும், அறிந்தனர்.
எழுகோள்களால் கிழமை (வாரம்) என்னும் எழுநாட்கால அளவும், பன்னீ ரோரைகளாற் பன்னிரு மாதப்பெயரும், ஏற்பட்டன.
மாதம் என்பது தென்சொல்லே. மதி = திங்கள், மதி - மாதம் - வ. மாஸ. திங்களைக் குறிக்கும் மதி என்னுஞ் சொல் வடமொழியில் இல்லை. x.neh.: moon-month.
எழுநாட் கிழமை உலகமெங்கும் தொன்று தொட்டு வழங்கி வருவது, தமிழ் நாகரிகப் பரவலின் விளைவாகும். விவிலியத்தின் முதற் பொத்தக முதலதிகாரத்திற் கூறப்பட்டுள்ள படைப்பு வரலாற்றில், இறைவனார் அறுநாள் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்றது, தமிழர் வகுத்த கிழமை முறையைத் தழுவியே.
ஆரிய மொழிகளில் வழங்கிவரும் பன்னீ ரோரைப் பெயர்களும், தமிழ்ப்பெயர்களின் மொழிபெயர்ப்பே.
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்னும் பெரும்பொழுது (ஆண்டின் பகுதிகள்) ஆறற்கும் எதிராக; காலை, நண்பகல், ஏற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை என்னும் சிறுபொழுது (நாளின் பகுதிகள்) ஆறும், இயற்கையாக அமைந்தன.
மதம்
தலைக்கழகக் காலத்தில், சிவ மதத்திற்கும் திருமால் மதத்திற்கும் பொதுவானதும், ஊர் பேர் குணங்குறியற்று எங்கும் நிறைந் திருக்கும் ஒரு பரம் பொருளை எங்கும் என்றும் உள்ளத்தில் தொழுவதும், ஆன கடவுள் நெறி (சித்த மதம்) என்னும் உயர்நிலை மதம், தமிழத் துறவியரால் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் விளத்தமும் (விவரமும்), சமயம் மதம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே என்பது அறிக.
முதற் கடல்கோள்
அக்காலத்திற் புயலாலும் பாறையாலும் கலச்சேதம் அடிக்கடி நிகழ்ந்ததால், பெருங்கடலைக் கடப்பதும் கடந்தால் மீள்வதும் அரிதாக விருந்தன. நெடியோன் என்னும் பாண்டியன் ஒருவன், கடல் கடந்து கீழ்த்திசை நாடுகட்குச் சென்று ஏமமாக மீண்டான். கடல் தனக்கு உதவியாக இருந்த தென்று கருதி, தன் நன்றி யறிவைக் காட்டும் முகமாகக் கடல் தெய்வத்திற்கு ஒரு விழாக் கொண்டாடினான். அவனையே முந்நீர் விழவின் நெடியோன் (புறம். 9) என்று நெட்டிமையார் குறித்தார்.
இன்னொரு பாண்டியன், கலப்படை யமைத்துக் கீழ்த்திசைத் தீவொன்றிற்குச் சென்று, தான் கடலைக் கடந்து விட்டமையால் அதை வென்று தனக்கு அடிப்படுத்தியதாகக் கருதி, அதற்கு அடையாளமாக, கடற்கரையிலுள்ள பாறை யொன்றில் தன் அடிச் சுவடுகளைப் பொறித்து, அவற்றைக் கடல் தன் அலையால் என்றும் அலசிக் கழுவுமாறு செய்தான். அதனால், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.
கடலுக்கு அஞ்சின நெடியோன் வேறு; அதற்கு மிஞ்சின வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வேறு.
இன்னுமொரு பாண்டியன் கடன்மேற் செல்லும்போது, கடல் கொந்தளித்தது. அதைக் கடல் தலைவனின் வினையாகக் கருதி, அதையடக்க ஒரு வேலை விட்டெறிந்தான். கொந்தளிப்பு இயற்கை யாக அடங்கிற்று. ஆயின், அது வேலெறிந்ததன் விளைவென்றே அப்பாண்டியனும் அவன் உழையரும் கருதினர். பொதுமக்கள் அதனால் என்ன நேருமோ என்று அஞ்சியிருத்தல் வேண்டும். சிறிது காலத்தின்பின், அவ்வச்சத்திற் கேற்பவே, பாண்டி நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டது. அது கி.மு. 5000 போல் நிகழ்ந்ததாகும். அதனையே,
அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
என்று (சிலப். 11:17-20) இளங்கோவடிகள் கூறுகின்றார்.
முன்னொரு காலத்துத் தனது பெருமையின தளவை அரசர்க்குக் காலான் மிதித் துணர்த்தி, வேலா னெறிந்த அந்தப் பழம்பகை யினைக் கடல் பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளி யாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக் கோட்டையும் கொண்டதனால், வடதிசைக் கண்ணதாகிய கங்கை யாற்றினையும் இமயமலையினையும் கைக் கொண்டு ஆண்டு, மீண்டும் தென்றிசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக.
….. கடல் எறிந்து கொண்ட எல்லையளவும் வடபால் தனதாக்கி, மீண்டும் தென்றிசையை யாண்டவென ஒப்பாக்கலு மொன்று. அடியாலுணர்த்தி எறிந்த பகை பொறாது கொள்ளத் தானுங் கொண்டு ஆண்ட தென்னவ னென்க.
என்று அடியார்க்கு நல்லார் இப்பகுதிக்கு வரைந்துள்ள உரையை நோக்குக.
அடியில் தன்னள வரசர்க் குணர்த்தியது வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தி. ஈரரசரும் ஒரு குடியினர் என்னுங் கருத்தால், இருவர் செயலும் ஒருவர் செயலாகக் கொள்ளப்பட்டன.
தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதற்கடல்கோள் இதுவே. ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும் குமரிநாட்டினின்று அறவே பிரிந்து நெடுந்தொலைவு நீங்கி விட்டன. ஆப்பிரிக்கா பிரிந்தத னால் அரபிக்கடல் தோன்றிற்று. அது வங்கக் கடலினும் முந்தித் தோன்றியதனாலேயே. வாரணன் மேற்றிசைத் தலைவனாகக் கொள்ளப்பட்டான்.
பழம்பாண்டி நாட்டின் தென் பெரும் பகுதி மூழ்கவே, தலைக் கழகமும் ஒழிந்தது.
கடல்கோள் நிகழ்ந்தவுடன், ஒரு பெருங்கூட்டத்தார் வடதிசை நோக்கிச் சென்றிருத்தல் வேண்டும். சிறுசிறு கூட்டத்தாரும் தனிப்பட்டவரும் வடமேற்கும் வடகிழக்கும் பல்வேறு நாடுகட்குச் சென்று, கடல்கோட் செய்தியைப் பரப்பியிருக்கின்றனர். பிற் காலத்தில், அந்நாடுகள் ஒவ்வொன்றிலும் கடல்கோள் அல்லது பெருமழை வெள்ளம் நிகழ்ந்ததாகக் கதை எழுந்திருக்கின்றது.
அலோரசு (Alorus) என்னும் பாபிலோனிய அரசன் காலத்தில், பிலித்தியரின் (Philistines) தாகோன் (Dagon) தெய்வத்தைப் போல் அரை மாந்தனும் அரை மீனுமான (அதாவது, அரைக்கு (இடுப்பிற்கு) மேல் மாந்தன் வடிவமும் அதற்குக்கீழ் மீன் வடிவமுங் கொண்ட), ஒயன்னெசு (Oannes) என்னும் ஓர் உயிரி பாரசீகக் குடாக்கடல் (Persian Gulf) வழியாக வந்து, பாபிலோனியருக்குக் கல்வி முழுவதையும் நாகரிகக் கலைகள் யாவற்றையும் கற்பித்ததாகப் பாபிலோனிய வரலாறு கூறுகின்றது.
அவ்வோயன்னெசு, மேற்கூறிய முதற் கடல்கோட்குப்பின், பாண்டி நாட்டினின்று சென்ற ஒரு தமிழறிஞனாகவே யிருத்தல் வேண்டும். அவனுக்கு அரைமீன் வடிவங் கட்டிக் கூறியதற்கு அவன் கடல் வழியாகச் சென்றதும், பாண்டியனுக்கு மீனக் கொடியும் மீன முத்திரையும் பற்றி மீனவன் என்னும் பெயரிருந் தமையுமே, கரணியமாகும்.
தமிழக் கலவணிகர் மேல்கடற்கரை யோரமாகவே கராச்சி வழியாகச் சென்று, பாரசீகக் குடாக்கடலுள்ளும் செங்கடலுள்ளும் புகுந்து, மேலையாசி யாவொடும் எகிப்து நாட்டொடும் வாணிகஞ் செய்து வந்ததாகத் தெரிகின்றது. இராமச்சந்திர தீட்சிதரின் தமிழர் தோற்றமும் பரவலும் என்னும் ஆங்கில நூலைப் பார்க்க.
செய்வகை
முதை பழங் கொல்லை; இதை புதுக்கொல்லை; புன்செய் சிறிது பண்பட்ட நிலம்; நன்செய் நன்றாய்ப் பண்படுத்தப் பட்ட நிலம்; புறவு முல்லை நிலம்; கொல்லை முல்லை நிலத்துப் புன்செய்; புனம் குறிஞ்சி நிலத்துப் புன்செய்; வானாவாரி (மானாமாரி) மழை பெய்து விளையும் நிலம். (சொல். 72).
செயப்பாட்டு வினை விகுதிகள்
படு என்பது வினையால் துன்புறுதலையும்; உண் என்பது வினைப் பயனுகர்ச்சியையும், பெறு என்பது வினையாற் பெறும் பேற்றையும், சிறப்பாக வுணர்த்தும். (சொல். 58).
செயற்கரியவை
மனமடக்கலும் அவாவறுத்தலுமே செயற்கரியவை. (தி.ம. 51).
செருப்பு வகை
மிதியடி - ஒரேயடியுள்ளது.
தொடுதோல் - இடையன் செருப்புப்போலக் குதிங்காற்கும் புறங்காற்கும் வார்பூட்டியது.
சப்பாத்து - அகன்ற அடியுள்ளது.
சோடு - திரண்ட அடியுள்ளது.
செருப்பு - அளவான அகலமும் திரட்சியுமுடைய அடியுள்ளது.
குறடு - கட்டையாற் செய்தது. (சொல். 44)
செவ்வந்தி
செவ்வந்தி - சேவதீ.
செவ்வந்தி = செவ்வந்தி நேரத்திற் பூக்கும் பூ. செவ்வந்தி -செவந்தி. (வ.வ. 166).
செவ்வி
செவ்வியாவது ஒருவரைக் கண்டு உரையாடுதற்கு ஏற்ற இனிய மனநிலை. செவ்வையான நிலை செவ்வி. (தி.ம.101).
செவியுறு
செவியுறு - ச்ரு. (இ.வே.) = கேள், செவிக்கொள்.
ச்ரு என்னும் சிதைசொல்லினின்றே ச்ருதி (கேள்வி, மறை), ச்ரோத்ரிய, ச்ரவண, ச்ராவண முதலிய சொற்கள் பிறக்கும். (வ.வ. 166).
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சிறந்த நோக்கங்கள்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி அதைத் தொகுத்தவரின் தவற்றினால் மிகச் சீர் கெட்டிருப்பினும், அதன் நோக்கங்கள் மேனாட்டறிஞரால் வகுக்கப்பட்டதினால், மிக மேம்பட்டவை யாயுள்ளன. அவையாவன :
1. இவ் வகராதி, சமயம், மருத்துவம், கணியம் முதலிய பல்துறை யிலக்கியங்களில் வரும் கலையியற் சொற்கட்கும் அருகிய வழக்குச் சொற்கட்கும் கவனமாகப் பொருள் விளக்கியும், நெருடான சொற்களை விரிவாக ஆராய்ந்தும், மரபு நெறிப்பட்ட தமிழ்ப் புலவரின் கருத்திற்கு ஒத்ததாயிருத்தல் வேண்டும்.
2. இது, தமிழுக்கும் பிற மொழிகட்கும் இடைப்பட்ட மொழியிய லுறவை எடுத்துக் காட்டி,மேலையறிஞரின் சிறந்த கருத்தை நிறைவேற்று வதாயிருத்தல் வேண்டும்.
3. இது உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் வழங்கும் சொற்களை ஆங்கிலச் சொற்களையும் மரபையுங் கொண்டு தெளிவாக விளக்கி, தமிழ் மக்களுட் பெரும்பாலார்க்கும் ஆங்கிலமறிந்தோர்க்கும் பயன்படுமாறு, துல்லிபமும் நிறைவும் இக்காலத்திற் கேற்றதுமான அகராதியா யிருத்தல் வேண்டும்
இந் நோக்கங்கள் தம்மளவில் தலைசிறந்தனவாயினும், இவற்றை நிறைவேற்றும் நிலைமை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்ததில்லை. அதனாலேயே பின்வரும் குற்றங்குறைகள் நேர்ந்துள்ளன.
**I. சொல்வழுக்கள்
1. சொல்லின்மை
சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் முப்பெருங்குறைகளுள், முதலது பல்வகைச் சொல்லின்மையாகும்.
எடுத்துக்காட்டு.
(1) தனிச்சொல்
அமுக்கலான், பெ. ஒரு மருந்துச்செடி.
அரணை, பெ. எகிர்.
இள-த்தல், வி. மென்மையாதல்.
உரம்பு, பெ. ஒரு பூண்டு.
ஊதி, பெ. இசைக்குழல்.
கருத்தை, பெ. கரிய பெண் அல்லது காளை.
காம்பு - தல், வி. அரிசி, பயறு, முதலிய உணவுப்பொருள்கள் நீண்ட நாட்குப்பின் சுவையற்றுப்போதல்.
குமுறி, பெ. ஒருவகைப் புறா.
குன்னு-தல், வி. ஒடுங்கியிருத்தல்.
கூந்தை, பெ. நுங்கெடுத்த பனங்காய்.
சிலுப்பி, பெ. சிறு மத்து.
சிவத்தை, பெ. சிவப்பாயிருக்கும் பெண் அல்லது காளை.
சின்னான், பெ. சிறுவன், சில்லாளி.
தக்கட்டி, பெ. ஒருவகைச் சிறுகனி, கணபட்டையில் வரும் சிறு கட்டி (Sty).
தகைப்பு, பெ. யாழின் ஓர் உறுப்பு.
தொளுமான், பெ. ஒருவகை மீன்.
நாங்கள், த. ப. பெ.
நெக்கினி, பெ. ஒருவகை மரம்.
நோங்கு - தல், வி. ஓரிடத்துக்குப் போகுமாறு உள்ளத்தால் அதை நோக்குதல்.
பரக்கை பெ. அநாகரிகமாய்த் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் பெண்.
புக்கா, பெ. ஒருவகைப் புறா.
புடங்கு. பெ. நீண்ட மண்டையின் பின்புறம்.
பொண்டான் பெ. எலியின் மறைவான பக்கவளை.
போஞ்சான், பெ. போலி (வேலை).
போந்தான், பெ. பெருங்கோழி.
மீ-தல், வி. மீந்திருத்தல்.
மீ-த்தல், வி. மீத்து வைத்தல்.
மோள்(ளு)தல், வி. சிறுநீர் பெய்தல்.
யாங்கள், த.ப.பெ.
வழமை, பெ. வழக்கம்.
(2) கூட்டுச்சொல்.
அசையாக்கட்டை, பெ. ஒருவகைச் செடி.
அஞ்சறைப்பெட்டி முறுக்கு, பெ. கெண்டி முறுக்கு.
அடங்காமரம், பெ. ஒருவகை மரம்.
உப்புத் தீயல், பெ. ஒருவகைக் கருவாட்டுச்சாறு.
உலையாப்பம், பெ. ஒரு வகை ஆப்பம்.
ஒட்டியடைந்த நேரம், பெ. கன்று காலிகளைத் தொழுவி லடைக்கும் மயங்கு பொழுது.
கவைமகன், பெ. உடலொட்டிய இரட்டைப்பிள்ளை. (Siamese twins)
கருங்களமர், பெ. உழுதுண்ணும் வேளாளர், பண்ணையாள்கள்.
காரொக்கல், பெ. வறிய சுற்றம்.
குச்சுக்கிழங்கு, பெ. மரவள்ளிக்கிழங்கு (tapioca).
கொறு கலப்பை, பெ. ஒரு விண்மீன் கூட்டம் (Orion).
கோட்டான்காய், பெ. கூகைக்காய்.
சட்டாலொட்டா, பெ. ஒருவகைக் கடல்மீன்.
செஞ்செவ்வாப்பு. பெ. புதிதாய்ப் பிறந்த குழந்தையுடம்பில் செம்படைகள் தோன்றும் நோய் நிலை. கருஞ்செவ்வாப்பினும் வேறானது.
தலைவெட்டிக் கருவாடு, பெ. தலையில்லாது விற்கும் ஒருவகைக் கருவாடு.
நாய்ச்சுறா, பெ. ஒருவகைச் சுறாமீன்.
பத்தநடை (பற்றுநடை), பெ. கமலையேற்றத்தில் காளைகள் கூனையை இழுத்துச் செல்லும் இறக்கம்.
பேய் வெள்ளரி, பெ. தீய வெள்ளரி.
போரவை, பெ. பண்டைப் போர்ப்பயிற்சிக் கூடம்.
மயிர்க்கிழங்கு, பெ. வேர்க்கிழங்கு (சிறுவள்ளிக் கிழங்கு).
முரண்களரி, பெ. போரவை.
மூவடிமுக்கால், பெ. வெண்பாலிவிற் கொருபெயர்.
வண்ணான் தாழி, பெ. ஒருவகை விளையாட்டு.
வறட்பனி, பெ. ஈரமில்லாப் பனி.
வெள்ளப்பம், பெ. ஒருவகை அப்பம்.
வேப்பிலைக் கெண்டை, பெ. கெண்டைமீனின் ஒருவகை.
வைத்தூற்றி, பெ. எண்ணெயூற்றும் கருவி (funnel) (நா.)
சென்னைப் ப.க.க.த. அகராதியில் விடப்பட்டுள்ள கூட்டுச்சொற் களின் மாபெருந் தொகையை, பின்வரும் இரு சொல்வரிசைகளை நோக்கிக் காண்க.
அகவினா அரைக்காற்சட்டை
அஞ்சுமணிப்பூ அரைக்கைச்சட்டை
அடக்கவிலை அரைச்சாப்பாடு
அடித்துப்பிடுங்குகிற சுத்தியல்அரைச்சாப்பு
அணைகல் அரைச்சீட்டு
அந்தரக்கோல் அரைச்சீர்
அமிஞை அரைத்தவளை
அரங்கொழி செய்யுள் அரைப்பட்டம்
அரசப்பள்ளி அரைப்பள்ளி
அரசிலை வாளி அரைப்புள்ளி
அரிசிக்களா அரைப்பேச்சு
அரிசித்தழுப்பு அரையெழுத்து
அரிப்பு வரை அரைவகுப்பு
அல்லித்தேங்காய் அரைவயிறு
அவக்காச்சி அரைவெட்டு
அறுவாள் அரைவேக்காடு
(3) மரபுவினைச்சொல்
அடித்துப்பேசுதல்
அடித்தொண்டையிற் பேசுதல்
அடிமடியில் நெருப்பைக் கட்டுதல்
அடிமேலடியடித்தல்
அடியெடுத்துக் கொடுத்தல்
அடுத்துக்கெடுத்தல்
ஒடித்துக் கேட்டல்
கவ்விப் பேசுதல்
கொடித்தட்டல்
சும்மாவிருத்தல்
தாக்குப்பிடித்தல்
நட்டுக்கொண்டு நிற்றல்
பழைய பல்லவி பாடுதல்
மொல்லையிற் போடுதல்
வாய்க்குங் கைக்குமாயிருத்தல்
சிலர், இத்தகைய தொடர்ச்சொற்கள் அகராதியில் இடம் பெறலாமா வென்று கருதலாம். வீடும் விளக்குமாய் வைத்தல், வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசுதல் முதலிய தொடர்ச் சொற்கள் சென்னை யகராதியில் இடம் பெற்றிருப்பதைக் காணின், அவர் அங்ஙனங் கருதார்.
(4) இணைமொழி
அச்சலத்தி புச்சலத்தி அழன்று குழன்று
அஞ்சிலே பிஞ்சிலே அழிந்து ஒழிந்து
அடக்கவொடுக்கம் அழுகையுங் கண்ணீரும்
அடிப்பும் அணைப்பும் அழுங்கிப்புழுங்கி
அடுப்புந்துடுப்பும் அழுத்தந்திருத்தம்
அண்டபிண்டம் அழுதுதொழுது
அண்டை வீடு அடுத்த வீடு அறிந்துதெரிந்து
அயர்த்தது மறந்தது அறிவு ஆற்றல்
அருமை பெருமை அறுக்கப் பொறுக்க
அரைவயிறுங் குறைவயிறும் அன்று மறுநாள்
அலுக்கிக் குலுக்கி அன்னந் தண்ணீர்
அலுத்துப் புலுத்து அன்னலுந் துன்னலும்
அலைத்துக் குலைத்து
நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்புறத்து மூதாட்டியர் பேச்சில், இணைமொழிகள், அணியணியாய் அமைந்து கிடக்கின்றன.
எ-டு: அரிசி தவசி பம்பை பறட்டை
கன்று கயந்தலை பயறு பச்சை
காணங் கப்பி புல் புளிச்சி
கேப்பை கொட்டி மயக்கமுந் தியக்கமும்
சோளஞ் சொங்கு மரம் மட்டை
தூசி துப்பட்டை விறகு வெங்கழி
நன்னியுங் குன்னியும் விருந்து வேற்று
இத்தகைய இணைமொழிகள் அகராதியிலில்லாதன ஐந்நூற்றிற்கு மேலுள்ளன.
சென்னையகராதி சில பழக்கவழக்கங்களைக் குறிக்கும்போது, அவற்றிற் குரிய பெயரையன்றி வினையைக் குறித்திலது.
எ-டு:
குறிக்கப்பட்ட பெயர் விடப்பட்ட வினை.
கொடும்பாவி கட்டியிழுத்தல்.
2. சொல்லின் மறுவடிவின்மை
சில சொற்களின் மறுவடிவம் சென்னை யகராதியிற் குறிக்கப்பட வில்லை.
எ-டு:
குறிக்கப்பட்ட வடிவம் விடப்பட்ட வடிவம்
அடுப்பங்கரை அடுப்பங்கடை
அடைக்கலாங்குருவி அடைக்கலத்தான்
எத்தாப்பு ஏத்தாப்பு
கணியான் கணியன்
கரட்டான் கரட்டை
குறவை குறத்தை
கொட்டன் கொட்டலான்
துடுமை துடும்பு
தொலி தொலும்பு
நீ நீன்
பத்து மாற்றுத் தங்கம் பத்தரை மாற்றுத் தங்கம்
வே வேரு
வேகவை வேவி
3. சொல்லின் இலக்கண வடிவின்மை
(1) செயப்படுபொருள் குன்றிய வினை
குறிக்கப்பட்ட செயப்படு பொருள் விடப்பட்ட செயப்படுபொருள்
குன்றாவினை வடிவம் குன்றிய வினைவடிவம்
உணத்து உண
உணத்தல் காய்தல் உணத்துதல் காயவைத்தல்
உசும்பு, உசுப்பு என்னும் இரண்டும், முறையே, ஒரு பொருள் பற்றிய தன் வினையும் பிறவினையுமாகும். உசுப்பு என்பதற்கு எழுப்புதல் என்னும் பொருள் குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆயின், உசும்பு என்னுஞ் சொற்கு துயிலுணர்தல் அல்லது துயிலுணரத் தொடங்குதல் என்னும் பொருள் குறிக்கப்படவில்லை.
(2) நிகழ்கால வினையெச்சம்
சில வினைகளின் நிகழ்கால வினையெச்சவடிவம் மரபு வினை யெச்சமாக வழங்கி வருகின்றது. அது தனியாக எடுத்துக் கூறப் படவில்லை.
எ-டு:
அண்ணாக்க, மேலாக.
அண்ணாக்கக் குடித்தான், மேலாக எடுத்தான் என்னும் வழக்கு களை நோக்குக.
4. கூட்டுச்சொல்லின் உறுப்பைத் தனியாகக் கூறாமை
அண்டிதள்ளுகை, அண்டிமாங்கொட்டை, எகிர்க் கொழுப்பு, தொண்ணைத்தடி என்னும் கூட்டுச்சொற்கள் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. ஆயின், அண்டி (anus), அண்டிமா (முந்திரி), எகிர் (அரணை), தொண்ணை (பருமன்) என்னும் தனிச்சொற்கள் குறிக்கப்படவில்லை.
5. மிகைபடு சொற்கள் (REDUNDANT WORDS)
சிலசொற்கள் மிகைபடு சொற்களாயினும், உலக வழக்கில் வழங்கத்தான் செய்கின்றன. அவற்றையும் அகராதியில் குறித்தல் தக்கதே. ஆயின், அவற்றுட் பல குறிக்கப்படவில்லை.
எ-டு:
அரைஞாண் கயிறு
அரை ஞாண் கொடி
ஆண்பிள்ளைப் பிள்ளை
பெண்பிள்ளைப் பிள்ளை
இவை, முறையே, அரணாக்கயிறு (அண்ணாக்கயிறு), அரணாக் கொடி, ஆம்பிளப்பிள்ளை, பொம்பிளப்பிள்ளை எனக் கொச்சை வடிவில் வழங்குகின்றன.
இவ் வடிவைக் குறித்தல் கூடாது. இவற்றின் திருந்திய வடிவைக் குறிக்கலாம். சாவல் (சேவல்), வேங்கு (வாங்கு) முதலிய கொச்சை வடிவுகளை வேண்டாது குறித்திருக்கும் போது, மிகைபடு சொற்களின் திருந்திய வடிவை ஏன் குறித்தல் கூடாது?
6. விளக்க மேற்கோளின் வருஞ்சொல்லைக் குறியாமை
சில சொற்கள் விளக்கமேற்கோளில் வந்திருக்கின்றன. ஆயினும், அவற்றைக் கண்டுபிடித்து அகராதிச் சொல்வரிசையில் சேர்த்திலர்.
எ-டு:உடும்போடி - உடும்பு ஓடினதினால் ஆகாதென்று தள்ளிய நிலம்.
குறித்துவருகிளவி - புணர்மொழியில் வருமொழி.
சிறிய திருவடி - அனுமான்.
ஆமைதவழி என்னுஞ் சொல்லை விளக்கும் மேற்கோள் உடும் போடி ஆமைதவழி புற்றும் என்பது. நிறுத்த சொல் என்பதை விளக்க வந்த மேற்கோள் நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று என்பது. பெரிய திருவடி என்பதை, சிறிய திருவடியினின்று வேறுபடுத்தப்பட்ட தென்று ஆங்கிலத்திற் குறித்துள்ளனர். இங்ஙனம், மேற்குறித்த முச்சொல்லும் விளக்கமேற்கோளில் வந்திருப்பினும், அவற்றை அவற்றோடொத்த அல்லது அவற்றிற் கெதிரான சொற்களைப் போல், சொல்வரிசையிற் சேர்க்கவில்லை.
**7. சொல்லின் கொச்சை வடிவைச் சொல்வரிசையிற் சேர்த்தல்
1. கொச்சை வடிவுமட்டும்
சில சொற்களின் கொச்சை வடிவையே சொல் வரிசையிற் சேர்த்து. அவற்றின் திருந்திய வடிவை மூலக் குறிப்பில் மட்டும் பெரும் பாலும் அரைகுறையாய்க் காட்டிவிட்டிருக்கின்றனர்.
எ-டு:
குறித்த சொல் காட்டிய மூலம்
அண்ணாக் கயிறு அரைநாண் +
அப்பப்போ அவ்வப்போது
அருணாக்கயிறு அரைநாண் +
ஆமக்கன் ஆண்மகன்
இப்பவும் இப்போதும்
கடிச்சவாய்தடிச்சான் கடி +
சோத்தான் சோறு +
பிடிச்சராவி பிடி + அராவு
பொட்டச்சி பெட்டை
இனி, அர்ணாள் என்னும் கொச்சை வடிவைக் குறித்து அரைநாண் என்று மூலங்காட்டி, அர்ணாட்கொடி, அர்ணாட் கயிறு, என எடுத்துக்காட்டுத் தந்திருப்பது அகராதிக்கு மிகமிக இழுக்குத்தருவதாகும். (Vol. I. g. 113).
2. கொச்சைவடிவும் திருத்திய வடிவும்
திருந்திய வடிவு கொச்சை வடிவு
அகப்பை ஆப்பை
அஞ்சறைப்பெட்டி அஞ்சலப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி
அடைய வளைந்தான் அடைய வளைஞ்சான்
அப்பத்தாள் அப்தான்
அப்பளம் அப்பளாம்
அப்போது அப்பம், அப்போ
அரைநாண் அருணான்
இடைகழி இரேழி, ரேழி
இரண்டு ரெண்டு
இரா ரா
கடைத்தேறு கடத்தேறு
சாப்பிடு சாப்படு
சேவல் சாவல்
நிரம்ப ரெம்ப, ரொம்ப
பட்டறை பட்டரை
பெட்டை பொட்டை
வாங்கு வேங்கு
இங்ஙனம், திருந்திய வடிவைப் போன்றே கொச்சை வடிவையும் அகராதியிற் சேர்த்துப் பொருள் கூறியிருப்பின், மாணவர் எங்ஙனம் திருந்தமுடியும்? திருத்தமா யெழுதும் மாணவரையும் கொச்சையாய் எழுதும்படியன்றோ இவ் வடிவுகள் தூண்டுகின்றன!
இனி, வரச்சூலை, வரட்சி, வரட்சுண்டி, வரட்குலை, வரட்சொரி, வரட்டைப்பான் வரட்டி வாட்டுதல், வரட்டு, வரட்டுச் சோகை, வரட்டுப்பசு, வரள், வரள்வாயு என றகரம் வரவேண்டிய சொற்களையெல்லாம் ஒழுங்காய் ரகரம் வைத்து குறித்திருப்பது, எத்துணைக் குறும்புத்தனமும் தமிழைக் கெடுக்கும் சூழ்ச்சியும் ஆகும்!
3. திருந்திய வடிவும் கொச்சை வடிவும் வேற்றுமொழி வடிவும்
திருந்திய வடிவு கொச்சை வடிவு வேற்றுமொழி வடிவு
உயர்த்தி உசத்தி ஒதி
சட்டுப்புட்டு ஜட்பட்
சல்லி ஜல்லி
சடைக்குச்சு ஜடகொச்சு
8. சொல்லின் வழுவடிவைக் குறித்தல்
குறிக்கப்பட்ட வழுவடிவம் குறிக்கப்படாத திருந்திய வடிவம்
அரிவாள்மணைப்பூண்டு அரிவாள்முனைப்பூண்டு
ஆமவடை ஆமைவடை
ஆள்வள்ளி ஆழ்வள்ளி
கிழியஞ்சட்டி கிழியஞ்சிட்டி
நாசமற்றுப்போவான் நாசமுற்றுப்போவான்
பாளையரிவாள் பாளையறுவாள்
பொட்டைக்காடு பொட்டற்காடு
பொது நிறம் புது நிறம்
வீச்சரிவாள் வீச்சறுவாள்
வெட்டரிவாள் வெட்டறுவாள்
அரிவாள் முனைப்பூண்டென்பது, மணையரிவாளின் முனையி லுள்ள தேங்காய் திருகிபோல், ஓரத்திற் பல்வடிவான முனை யுள்ள வட்ட இலையுடைய பூண்டு. அரிவாள்மணை யென்பது அரிவாளைப் பதித்திருக்குங் கட்டை. அதைப் போன்ற பூண் டென்பது பொருளற்றது.
ஆமைவடையென்பது, உழுந்துவடை போல் தட்டையாயிராது ஆமை யோட்டைப்போல் வெளிவளைவாக வுள்ளது. ஆமைத் தாலி, ஆமைப்பூட்டு, ஆமைமடி, ஆமையாழ் முதலிய சொற் களையும் அவை குறிக்கும் பொருள்களின் வடிவையும் நோக்குக.
சட்டி என்பது பெரியது, சிட்டி சிறியது. அகலுக்குச் சிட்டியென்னும் பெயரே பொருந்தும். நெல்லை மாவட்டத்திலும் கிழியஞ்சிட்டி யென்றே சொல்வர்.
அரிவாள் என்பது காய்கறிகளைச் சிறிதாய் அரியும் கத்தி அல்லது மணையலகு. அறுவாள் என்பது பெரிதாய் அறுக்கும் அல்லது வெட்டும் கத்தி வகை. பன்னறுவாள், பானையறுவாள், வீச்சறுவாள், வெட்டறுவாள் முதலியவற்றை அறுவாள் என்று சொல்வதே வழக்கம். அரிவாள் என்று சொல்வார் ஒருவருமில்லை. கதிரறுப்பெல்லாம் அறுப்பு அறுவடையென்றே சொல்லப்படும். அரிதாள் என்னும் கூட்டுச்சொல்லில் மட்டும், அரி என்னும் சொல் வந்துளது. அது நெல், புல், தினை, வரகு, சாமை போன்ற சிறு பயிர்களின் தாளையே குறிப்பது. நாக்கரியுந் தயமுகனார் என்று கம்பர் கூறியது செய்யுள் வழக்கு. அறுவாள் என்னும் சொல் தனித்தேனும் பிற சொல்லொடு சேர்ந்தேனும் அகராதியில் ஓரிடத்திலும் வராதிருப்பது, மிக வியப்பாயிருக்கின்றது.
கம்பர் செய்யுளொன்றில், யாழ், வாழ், பாழ் என்னுஞ் சொற்களுக் கேற்ப, நாள் என்பது நாழ் என்று திரிந்துள்ளது. அது உலகவழக் கிற் கேற்காது. செய்யுளிலும் நாள் என்றிருப்பின் குற்றமன்று. நாழ் என்பது ஏட்டுப்பிழையாகவு மிருக்கலாம். ஆதலால், அவ் வடிவத்தை அகராதியிற் குறித்திருப்பது வழுவாம்.
9. குறிக்கவேண்டாத சொல்லைக் குறித்தல்
கீழ்வருஞ் சொற்களையும் அவை போன்றவற்றையும் அகராதியிற் குறிக்கத் தேவையில்லை.
அணியிழை - பெண்.
அழாஅல் - அழுகை.
அத்தத்தாவெனல் - தந்தையை அப்பப்பா என்றழைத்தல்.
முக்குழிச்சட்டி - மூன்று குழியுள்ள பணியாரச்சட்டி.
அணியிழை என்பது ஓர் அன்மொழித்தொகை. இங்ஙனம் நூற்றுக் கணக்கானவை உள.
அழல் அல்லது அழால் என்பதன் அளபெடை வடிவே அழாஅல் என்பது.
ஒற்றைக்குழிச்சட்டி, நாற்குழிச்சட்டி, ஐங்குழிச்சட்டி, அறுகுழிச் சட்டி, ஏழ்குழிச்சட்டி எனப் பன்னிருகுழிச்சட்டிவரை யிருப்பதால், முக்குழிச்சட்டியை விதந்து குறிக்க வேண்டியதில்லை.
10. தமிழுக்கு வேண்டாத வேற்றுச்சொல்லைக் குறித்தல்
1. தன்னெழுத்துச் சொல்
சமற்கிருதம் சேமியம் ஆங்கிலம்
அச்சரவாகன் இசுமூ அண்டிமாண்டு
அசப்பியம் இத்தத்து அவிடவெட்டு
அசம்பிரேட்சிய
காரித்துவம் இத்தா ஆக்கர்
அசமஞ்சசம் இத்திகாத்து ஆபீசு
அசமதாகம் இத்திகாபு இஞ்சின்
அசமந்திபம் இத்திபார் ஏட்டு
அசமருதம் இத்திராசு கேசு
அசமோதகம் இத்திலா கோர்ட்டு
அசனபன்னி இதிபாரா சீக்கு
அசிதாம்புருகம் இந்துவி துருப்பு
அசிபத்திரகம் இப்பா நம்பர், நபர்
அசுமாரோபணம் இபாதத்து பத்தாந்து
அசுவத்தம் இபாரத்து புலீன்
அசுவதட்டிரம் இபுதார் பேப்பர்
அசுவாரசியம் இபுனு போலீசு
சேமியம் (Semitic) என்பது அரபி, எபிரேயம், உருது முதலிய இசுலாமிய மொழித்தொகுதி.
2. வேற்றெழுத்துச் சொல்
சமற்கிருதம் சேமியம் ஆங்கிலம்
ஜ்ரும்பா இஜ்ஜத்து ஒட்ராப்பு
ஜகத்ஜ்யோதி இஜாபா டக்கு
ஜகதீச்வரன் இஜார்நாமா டயன்
ஜங்கமலிங்கம் இஜாரா டீ
ஜங்காரம் இஜாஸத்து டெலிபோன்
ஜம்ஜாமாருதம் இஷா டைகிளாட்டு
ஜபாகுஸுமம் இஷாரா டை
ஜம்புத்லீபம் இஷுக்கு பலஞ்ஜீப்மத்தான்காயீ
ஜயகோஷம் இஷுராக்கு பற்றக்சார்
ஜவிஜயீபவ இகால் நோட்டேபாண்ட்
ஜர்ஜஜரம் இதவா ரப்பு
ஜலத்வேஷரோகம் இதிக்பார் ரயில்பாக்
ஜலதம்போதரம் இதிமிரார் ராங்கி
ஜன்மபாவம் இதியார் ரீப்பா
ஜன்மோத்ஸவம் இதிலாக்கு ரூலர்
ஜனரஞ்ஜகம் இஸஸா ஜட்ஜி
ஜஹதஜஹல்லக்ஷணை இஸுராப ஜோக்கு
பெரியோர் வாயிலும் நுழையாத ரக்திஷ்டீலி, சந்நிபாதசுரம், பரியது யோச்சியோ பேக்ஷணம், ஜஹத ஜஹல்ல க்ஷனை, படிசஜபாகுஸும நியாயம் என்னுஞ் சொற்களை, எந்த வகையில் அகராதியிற் சேர்த்தார்களோ தெரியவில்லை. இவற்றை யெல்லாம் சமற்கிருத அகராதியி லன்றித் தமிழகராதியிற் குறித்தல் கூடாது.
3. ஈரெழுத்திலும் வேற்றுச்சொல் (சமற்கிருதம்)
தன்னெழுத்துச்சொல் வேற்றெழுத்துச்சொல்
அசகசாந்தரம் அஜகஜாந்தரம்
அசாக்கிரதை அஜாக்கிரதை
அசாகளத்தனம் அஜாகளதனம்
அட்டகம் அஷ்டகம்
அட்டதிக்கயம் அஷ்டதிக்கஜம்
அட்டதிக்குப்பாலகர் அஷ்டதிக்குப்பாலகர்
அட்டபந்தனம் அஷ்டபந்தனம்
அட்டமச்சனி அஷ்டமச்சனியன்
4. பல்வடிவு வேற்றுச்சொல்
இராக்கதன், இராட்சசன், ராட்சதன், ராக்ஷஸன்.
இருடி, ரிஷி, ருஷி.
இலக்குமி, இலட்சுமி, லட்சுமி, லக்ஷ்மி.
சட்டி, சஷ்டி, ஷஷ்டி.
சபாசு, சவ்வாசு, சவாசு, சபாஷ், ஷபாஷ், ஸபாஷ்.
சிருவை, ஜிஹ்வா, ஜிஹ்வை.
பாசை, பாடை, பாஷை.
ராக்கடி, ராக்கிடி, ராக்குடி, ராக்கொடி, ராக்கோடி.
ருப்பு, ருப்பு, ரூப்ரூ, ரூப்ரூப்.
ஜிராய்த்து, ஜிராயதி, ஜிராயித்.
இங்ஙனம், பல வேற்றுச் சொற்கள் பலவடிவிற் குறிக்கப் பட்டுள்ளன.
தமிழ் மிகுந்த சொல்வளமுள்ள மொழியாதலால், அதற்கு மேற்காட்டிய சொற்கள் தேவையேயில்லை. தேவையில்லாது பிறமொழிச் சொற்களைக் கடன் கொள்வதால், தமிழ் தன் தூய்மையும் சிறப்போசையும் இழந்து கலவை மொழியா வதுடன், நாளடைவில் திராவிட மொழிகள் போல் ஆரிய வண்ணமாய் மாறிவிடும். வேற்றுச்சொற்கள் வழங்கும் போது, தன் சொற்கள் வழக்கற்றுப் பொருளிழப்பதுடன், நாளடைவில் மறைந்து போய் மீளாநிலை யடைகின்றன.
கீழ்வரும் வேற்றுச்சொற்கள் போன்றவை தமிழுக்கு முற்றும் வேண்டாதவை.
சமற்கிருதம் தென்சொல் சேமியம் தென்சொல்
இருதயம் நெஞ்சாங்குலை, கிராக்கி அருந்தல்
நெஞ்சம்
சனி(க்கிழமை) காரி சவால் அறைகூவல்
சிகிச்சை பண்டுவம் சிபார்சு தகவுரை, பரிந்துரை
தந்தம் மருப்பு பர்வா(யில்லை) தாவில்லை,தாவிலை
தருமம் அறம் பாக்கி நிலுவை
திருப்தி பொந்திகை ராசி ஒப்புரவு
பிராணி உயிர்மெய் லாகா திணைக்களம்
சுத்தம் துப்புரவு வசூல் தண்டல்
மேகம் முகில் வார்சு பிறங்கடை
மைத்துனன் அளியன் ஸாமான் பண்டம், உருப்படி
நித்தியம் நித்தல் ஷோக்கு பகட்டு, தளுக்கு
தமிழுக்கு இன்றியமையாத வேற்றுச்சொல்லாயின், தமிழில் மொழி பெயர்த்தே வழங்குதல் வேண்டும். இம் முறையைக் கடைப்பிடித்தே, கரும்பு, மிளகாய், உருளை(க்கிழங்கு), புகையிலை, வான்கோழி, மிதிவண்டி, வைத்தூற்றி முதலிய சொற்களைப் பொதுமக்கள் புனைந்திருக்கின்றனர்.
மொழிபெயர்க்க முடியாத சிறப்புப்பெயராயின், தமிழில் எழுத்துப் பெயர்த்தே வழங்குதல் வேண்டும்.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தெடு புணர்ந்த சொல்லா கும்மே. (884)
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (885)
என்று தொல்காப்பியர் அக்காலத்திற்கேற்பச் சுருக்கிக் கூறினார்.
நன்னூலாசிரியரான பவணந்தியாரோ, எவ்வெவ் வடவெழுத்தை எவ்வெவ்விடத்தில் எவ்வெத் தமிழெழுத்தாய்த் திரித்தல் வேண்டு மென்பதைப் பற்றி,
ஏழாமுயிர் இய்யும் இருவும்ஐ வருக்கத்
திடையின் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேலொன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே அகவும் ஐந்திரு கவ்வும்
ஆவீ றையும் ஈயீ றிகரமும் (147)
ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யும் மொழிமுத லாகிமுன் வருமே. (148)
இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமும் நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி உவ்வு மாம்பிற. (149)
என்று விளக்கமாகக் கூறியுள்ளார். இந்நூற்பாக்கள் (சூத்திரங்கள்) வடவெழுத்துகளை மாற்றும் முறையைச் சொன்னவையேயன்றி, வடசொற்களைக் கடன் கொள்ளுமாறு தூண்டியவையல்ல.
தமிழில் எல்லாவெழுத்துகளும், பிற மொழிகளிற்போல், சொல்லில் மூவிடத்தும் வருவனவல்ல. முதனிலை யெழுத்துகளும் இடைநிலை யெழுத்துகளும் இறுதிநிலை யெழுத்துகளும், இன்னின்னவென்று இலக்கணத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வரம்புமீறி நூற்றுக்கணக்கான அயற்சொற்கள் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. ரகர உயிர்மெய்களுள் ரை தவிர மற்றப் பதினொன்றும், லகர உயிர்மெய்களுள் லை தவிர மற்றப் பதி னொன்றும், டகர வுயிர்மெய்களுள் டு தவிர மற்றப் பதினொன் றும், மொழிமுதலெழுத்துகளாகக் காட்டப்பட்டுள்ளன. இது தமிழிலக்கணத்தை, அடியோடு ஒழித்தலன்றி வெறெதனை நோக்கமாகக் கொண்டிருத்தல் கூடும்?
எ-டு: முதனிலை இடைநிலை இறுதிநிலை
டம்ளர் காப்தாரி சநி
த்ரப்ஸம் பால்யன் ரப்
ரஹ்மத் ரக்தம் ரயத்
வோரகம் ரத்னம் ஷட்
தலம் ஜிஹ்வா ஷபாஷ்
முகமதிய மன்னராட்சியில் உருதுச் சொற்கள் தமிழ்நாட்டில் வழங்கின வெனின், அவற்றைத் தனியாகத் தொகுத்து வெளியிட வேண்டுமே யன்றி, தமிழ்ச் சொற்களொடு கலத்தல் கூடாது. சென்னை யகராதியில் அவற்றையெல்லாஞ் சேர்த்தது. வேண்டு மென்று தமிழின் தூய்மையைக் குலைத்தற்கேயன்றி வேறன்று. ஆகவே, அதற்குத் தென்னிந்திய அகராதி (South Indian Lexicon) என்னும் பெயரே பொருத்தமாம்.
11. இனச்சொல் இன்மை
பல தமிழ்ச்சொற்கட்குத் திரவிட மொழியினச் சொற்கள் அகராதியிற் குறிக்கப்படவில்லை.
எ-டு:
தமிழ்ச்சொல் குறிக்கப்படாத்தெலுங்கினச்சொல்
அது அதி
அவன் வாடு, வாண்டு
உள் லோ
எழு லெய்
எழுபது டெப்பது
ஏன் ஏலா
ஒன்பது தொம்மிதி
நம்பு நம்மு
மீது மீத
வடை வட
12. திசைச்சொல் இன்மை
எ-டு:
சொல் பொருள் இடம்
ஒடக்கான் ஒணான் கோவை
பெருக்கான் பெருச்சாளி கோவை
கூடப்போதல் தொலைந்துபோதல் கோவை (கோபி)
எங்கைக்கு எவ்விடத்திற்கு வடார்க்காடு
எந்தண்டை எப்பக்கம் வடார்க்காடு
தூர்தல் புகுதல் வடார்க்காடு
13. எழுத்துக்கூட்டல் வழு
சில சொற்கள் தவறாக எழுத்துக் கூட்டப்பட்டுள்ளன.
எ-டு: குழிசீலை, மாறாப்பு.
இவை; முறையே குளிசீலை, மாராப்பு என்றிருத்தல் வேண்டும்.
Tumbler (குடிநீர்க்குவளை) என்னும் ஆங்கிலச்சொல், டம்பளர், தமிளர், தமிழர் என்னும் மூவடிவிற் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர் (தமிழ்மக்கள்) என்னும் இனப்பெயரான தமிழ்ச்சொல்லையே பொதுவாகத் தமிளர் என்று மக்கள் தவறாய்ப் பலுக்கும் போது, தமிளர் (குவளை) என்னும் கலப் பெயரான ஆங்கிலச் சொல்லையா தமிழர் என்று சிறப்புழகரங் கொடுத்துத் தவறின்றிப் பலுக்குவர்! இது எத்துனைக் குறும்புத்தனமான குறிப்பு!
14. ஆங்கிலத்தில் எழுத்துப்பெயர்ப்பு முறைத்தவறு
தமிழ் வல்லினமெய்கள், தமிழிலுள்ள பிற மெய்களை நோக்க, வல்லினமேயன்றி, வடமொழி வல்லினம் போல அத்துணை வல்லோசை யுடையனவல்ல. தமிழில் இரு ககரம் சேர்ந்தால் தான் வடமொழியில் அல்லது ஆங்கிலத்தில் ஒரு ககரத்திற்குச் சமமாகும்.
எ-டு: தேக்கு - teak.
தமிழ் வல்லினம் மெல்லினத்திற்கு முன்வரின், எடுப்பொலி பெறும். இதை நோக்காது, வடமொழி வல்லினவொலிவகை நான்கனுள் முதல்வகையென்றே கருதிக்கொண்டு, தமிழ் வல்லின மெய்களை ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்த்திருப்பது, தமிழுக்கு மாறானதும் அயல்நாட்டார்க்குத் தவறான வழி காட்டுவது மாகும்.
எ-டு:
தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் எழுத்துப் இருக்கவேண்டிய
பெயர்க்கப்பட்டுள்ள முறை முறை
அங்கு anku angu
அஞ்சு anchu anju
அண்டு antu andu
அந்து anthu andu
அம்பு ampu ambu
ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப, என்னும் வன்கூட்டொலிகள் தெலுங்கி லன்றித் தமிழிலில்லை.
II. பொருள் வழுக்கள்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் இரண்டாம் பெருங்குறை, சொல்லிற்குத் தரப்பட்டிற்கும் பொருளின் வழுவாம்.
1. இயல்விளக்கம் அல்லது சொற்பொருள் தமிழிற் கூறப்பெறாமை.
அகச்சுட்டு என்னும் சொல்லிற்கு, ஆங்கில விளக்கத்திலுள்ள எடுத்துக் காட்டுகளைத்தவிர, தமிழில் விளக்கமாவது பொருளாவது கூறப்படவில்லை. ஆகவே, ஆங்கிலம் அறியாதார்க்கு இத்தகைய விளக்கம் பயனற்றதாம். அசாக்கிரதை யென்னும் சொற்கு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பொருள் கூறப்பட்டுள்ளது. அஞ்சுருவாணி யென்னும் சொற்கு ஆங்கிலத்தில் விளக்கம் கூறி, தமிழில் அச்சாணி என்ற சொல் மட்டுங் குறிக்கப்பட்டுளது.
2. குன்றக்கூறல்
எ-டு:
சொல் குன்றக்கூறல் நிறைவான பொருள்
எத்தாப்பு வதிரம் மேலாடை மார்பின் குறுக்காக அணியும்
எருகுதல் மாடுகழிதல் இருதிணையுயிரிகளும்
திண்ணிய குழம்பாகக் கழிதல்.
கரிக்கோடிடுதல் மோவாயில் மீசை முளைக்கத் தொடங்குதல்
மயிர் அரும்புதல்
காக்காய்ப்பிசின் கருவேலம்பிசின் கருவேல மரத்தினின்று வடியும்
மக்குப்போன்ற கரிய
போலிப்பிசின்
குக்கல் நாய் குள்ளநாய்
குண்டுக்கழுதை ஆண்கழுதை இள ஆண்கழுதை
குத்துப்பழி பெருஞ்சண்டை கத்திக்குத்து நேருஞ்சண்டை
குளுகுளுத்தல் அழுகிப்போதல் மிகக் கனிந்து குழைதல்
கொழுப்புக்குடல் ஆட்டின் சிறுகுடல் ஆட்டின் சிலுப்பிக் குடல்
துரிஞ்சில் வாவல் சிறுவௌவால்
பன்றிவார் பன்றியின் மாமிசம் பன்றியின் தோல்
மண்ணுக்குப் கடுஞ்சிறையிலிடுதல் அந்தமான் தீவிற்கனுப்புதல்
போடுதல்
வடை உழுந்தாற் செய்யப்படும் உழுந்து, கடலைப்பருப்பு
ஒருவகைப் முதலியவற்றாற் செய்யும் ஒரு
பண்ணிகாரம் வகைப் பலகாரம்
3. மிகைபடக் கூறல்
கரித்தல் என்னும் சொல்லிற்கு, “to be saltish to the taste; உப்புச் சுவை மிகுதல், இந்தக் கறி உப்புக்கரிக்கிறது என்று பொருளும் எடுத்துக் காட்டும் தரப்பட்டுள்ளது.
கரித்தல் என்னும் வினைச்சொல்லிற்கு, மிகுதல் என்பது தான் பொருளே யன்றி உப்புக்கரித்தல் என்பதன்று. உப்புக்கரித்தல் என்பதே பொருளாயின், எடுத்துக்காட்டு, இந்தக் கறி கரிக்கின்றது என்றன்றோ இருத்தல் வேண்டும். அங்ஙன மிருப்பின் பொருள் வேறுபட்டுவிடும். உப்பு என்னும் சொல்லொடு கூடினாலன்றி, கரித்தல் என்னும் சொல்லிற்கு உப்புச்சுவைப் பொருள்தரும் ஆற்றலில்லை. உப்புக்கரித்தல் என்னும் மரபுவினை, தனியாகவும் அகராதியில் அதற்குரிய இடத்திற் குறிக்கப்பட்டு, உவர்ப்பு மிகுதல் என்னும் பொருள் கூறுப்பட்டிருத்தல் காண்க.
4. வழுப்படக் கூறல்
அளைமறிபாப்பு என்னும் சொற்கு.
“A mode of construing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse, or with one in the beginning of another verse, one of eight porulkol; பாட்டின் ஈற்றினின்ற சொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப் படும் முறை.
என்று விளக்கங் கூறப்பட்டுள்ளது. இது தாப்பிசைப் பொருள் கோளுக்கு அல்லது விளக்கணிக்கு ஒருவாறு பொருந்துமேயன்றி, அளைமறியாப்புப் பொருள்கோளுக்குப் பொருந்தவே பொருந் தாது.
அளைமறியாப்புப் பொருள் கோளாவது, தலை முன்னும் வால் பின்னுமாக வளைக்குட் புகுந்த பாம்பு, அங்ஙனமே திரும்பாது திரும்பவும் தலை முன்னாக வளைந்து மாறிக் கொள்வது போல், ஒரு செய்யுள் தலைகீழாய் அடியடியாக வெடுத்துப் பொருள் கொள்ளப்படுவது.
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமும்
மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார்தாமும்
தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே.
இச்செய்யுளில், 4ஆம் அடி முதலடியாகவும், 3 ஆம் அடி 2 ஆம் அடியாகவும், 2ஆம் அடி 3ஆம் அடியாகவும், முதலடி 4 ஆம் அடியாகவும், மாறியமைந்து பொருள் படுதல் காண்க.
ஈர்ங்கை என்னும் சொல்லிற்கு,
“Wet hand, fig. hand that has been washed after taking one’s meal; உண்டு பூசியகை. ஈர்ங்கை விதிரார் கயவர் (குறள். 1077)
என்று விளக்கங் கூறப்பட்டுள்ளது. ஈர்ங்கை யென்பது எச்சிற்கையே யன்றி உண்டு பூசிய கையன்று. எச்சிற்கையிற் காக்கை விரட்டாதவன் என்னும் வழக்கையும் நோக்குக.
கசகர்ணம் என்னும் சொற்கு.
1. Lit. elephants’ ear, term used to denote the art of moving or waving one’s ears in imitation of the elephants; காதாட்டும் வித்தை. 2 A task involving stupendous effort; பெருமுயற்சியால் ஆக வேண்டிய காரியம். என்றும், அதனை அடுத்துள்ள கசகர்ணம் போடுதல் என்னும் மரபு வினைக்கு.
“> id. +. To put forth unusual or extraordinary effort to realize an object; பெருமுயற்சி செய்தல். அவன் அந்த வேலையைப் பெறச் கசகர்ணம் போட்டான் என்றும் விளக்கங் கூறப்பட்டுள்ளது.
இதில், கர்ணம் என்பது கரணம் (somersault); காதன்று. கசகர்ணம் போடுதலாவது, யானை கரணம் போட்டாற்போல் அரும் பெருமுயற்சி செய்தல். போடுதல் என்னும் வினை கரணத்திற் கன்றிக் காதிற்குப் பொருந்தாமை, நோக்குக. யானை காதாட்டுவது போல் ஒருவன் காதாட்டி என்ன கருமத்தை நிறைவேற்ற முடியும்? இது எத்துணை நகைப்பிற்கிடமான செய்தி!
பொருள் வழுக்கள் அகராதி முழுவதும் ஆங்காங்கு பலவுள.
எ-டு:
சொல் வழுப்பொருள் சரியான பொருள்
கண்ட சித்தி ஆககவி சொல்லும் புறக்கண்ணாற் காணாததை
வல்லமை அசுக்கண்ணாற்கண்டு
(clairvoyance) கடுத்துப் பாடுதல்
கற்பயறு A kind of greengram பாசிப்பயற்றினின்றும்
வேறான தனிப்பயற்று வகை.
குறவை வரால் வராலினும் வேறான மீன்.
கெத்துதல் கோழி முதலியன முட்டையிட்ட கோழி
கொக்கரித்தல் அடைக்காக்கக் கத்துதல்.
கேருதல் கோழி முட்டையிடக் கத்துதல்.
கொம்மை பதர் சிறு கூலங்களின் உமி
சுவரொட்டி Liver மண்ணீரல் (Spleen).
செந்துரிப்போதல் மட்பாண்டத்தின் மண்பாண்டத்தின் அடியில்
ஒட்டையை அரக்கால் சிறு ஓட்டை விழுதல்.
அடைத்தல்
பொத்தி வரால் குறவை.
மடற்பனை
(நன். 33) ஆண்பனை பெண்பனை.
மாங்காய் மூத்திராசயம் நெஞ்சாங்குலை.
வள்ளி (புறம். 63) வளையல் கொடி, தண்டு.
வள்ளி என்பது கொடி; வளைந்தது என்னும் பொருளது. ஒப்பு நோக்க கொடு-கொடி. கொடுமை = வளைவு. ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் என்னும் புறப்பாட்டிற்கு, ஆம்பற்றண் டாற் செய்த வளையணிந்த கையினையுடைய மகளிர் என்று பழையவுரையாசிரியர் உரைத்திருத்தல் காண்க. தொடி என்பதே வளையல். இதைக் கவனியாத சென்னை யகராதித் தொகுப் பாளர், வள்ளியென்னுஞ் சொற்கு வளையல் என்று பொருள் குறித்துள்ளனர்.
வரால் என்னும் சொற்கு, கெண்டை யென்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. வரால்மீன் வேறு; கெண்டைமீன் வேறு.
இனி, வரால் 3 அடியும் 4 அடியும் வளரும் என்று கூறியிருப்பது வியப்பையும் நகைப்பையும் விளைக்கின்றது.
தானே தரக்கொளி னன்றித் தன்பால்
மேலிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை (நன். 33)
என்று, மாணவர் விரும்பும்போது ஒன்றைச் சொல்லாமல் தாமாக விரும்பும் போது அதைச் சொல்லும் ஆசிரியர்க்கு, தானாகக் காற்றடித்து விழுந்தாலன்றி ஒருவன் விரும்பும்போது ஏறிப் பழம் பறித்துக் கொள்ள முடியாத கருக்கு மட்டையறுக் காத பெண் பனையைத் தெளிவாக உவமை கூறியிருக்கவும், அதை ஆண்பனை யென்று நூற்பாவையும் காட்டிக் குறிப்பது எத்துணைப் பொறுப் பற்ற செயலாகும்.
5. சில பொருள் கூறப்படாமை
பல சொற்கட்கு உரிய பொருள்களுள் ஒன்றும் பலவும் கூறப்பட வில்லை. இக் குற்றத்தை அகராதி நெடுகலும் பார்க்கலாம்.
சொல் குறிக்கப்படாத பொருள்
அச்சி அக்கை
அடைதல் களிமண் சாணம் முதலியவற்றை மொத்தமாகச்
(செ. குன்றா. வி.) சேர்த்துவைத்தல்.
இந்த மரம்
கலப்பைக்காகும். ஆதல் பயன்படுதல்.
உடக்கு (1) தோலுடன் கூடிய எலும்புக்கூடு.
(2) செயற்கையுடல்.
குதிரையுடக்கு (பொய்க்குதிரை).
எங்கே (1) போல
இவன் இவனுடைய அப்பனெங்கே
யென்றிருக்கிறான்.
(2) இருவரிடை மிகுந்த வேறுபாடுண்மையை
உணர்த்தும் குறிப்பு
அவன் எங்கே? இவன் எங்கே?
(3) பிறர் பொருளைக் கவரும் இடம் தேடுதற்
குறிப்பு. எங்கே யென்று அலைகிறான்.
ஒடியல் வறுத்து அவிக்கும் முறை.
ஏற்றியிறக்குதல் (1) உயர்த்தித் தாழ்த்துதல்.
(2) புகழ்ந்து பழித்தல்.
கட்டியடித்தல் உழுத நிலத்தில் மண்கட்டிகளை உடைத்தல்
கண்டகம் ஒரு முகத்தலளவை.
கண்வலிப்பூ காந்தட்பூ
கல்லுப்பொறுக்கி கண்ணில் விழுந்துள்ள கல் மண்ணை
விளக்கெண்ணெய் தடவியெடுக்கும் பெண்.
கவணை மிருதங்கத்தின் இடக்கண்
சக்களத்தி பயிர் பச்சையுடன் கூட விளையும் சிறப்பு களை.
சாணை போரடிக்குங் களத்தில் அரிக்கட்டுக்களை அல்லது
கதிர்களைச் சேர்த்து வைக்கும் சூடு.
சுவரொட்டி (1) சுவரில் ஒட்டும் விளம்பரத்தாள்.
(2) எறிந்தால் சுவரில் ஒட்டிக் கொள்ளக் கூடிய
ஒருவகைப் புறா.
செள்(ளு) பேன்குஞ்சி
சை செல்வம்
தலையாரி ஒருவகைப் பம்பர விளையாட்டு
தொண்டலம் கமலையேற்றச்சாலின் தோல்வால்.
பனுக்குதல் விரல்களை மடக்கி மிருதங்கத்தின் இடப் பக்கத்தில்
நுண்திறமாய் இயக்குதல்.
பெட்டிபோடுதல் சலவை செய்த துணிகளை இரும்பு அல்லது
வெண்கலப் பெட்டியால் தேய்த்தல்.
மலம்பிஞ்சி ஒரு மருந்துச் செடி
வணர் யாழ்க்கோட்டின் (வீணைத் தண்டியின்) வளைந்த
கடை.
6. பொருள் வரிசையின்மை
சொற்களின் பொருள் வரிசை, (1) சொற்பிறப்பியல் முறை (Etymo-logical order), (2) வரலாற்று முறை அல்லது காலமுறை, (Historical or Chronological order) (3) ஏரண முறை (Logical order) என மூவகைப்படும். பண்டை யிலக்கியம் அழியாத (சமற்கிருதம் போன்ற) மொழிகட்கும், (இந்தி போன்ற) புதிய மொழிகட்கும் தான், சொற்பிறப்பியல் முறையையும் வரலாற்று முறையையும் கையாளமுடியும் தொன்முது பழங்காலத்தில் தோன்றியதும் பண்டை யிலக்கியம் முற்றும் அழிந்து போனதுமான தமிழுக்கோ, ஏராண முறையைத்தான் கையாள முடியும்.
களித்தல் என்னும் சொல்லிற்குரிய நாற்பொருள்கள் சென்னை யகர முதலிற் கீழ்வரும் வரிசையிற் குறிக்கப்பட்டுள்ளன.
1. மகிழ்வடைதல்
2. கள்ளைப் பருகி வெறி கொள்ளுதல்
3. மதமுடையதாதல்.
4. செருக்குறுதல்.
களி என்னும் வினை. கள் என்னும் பெயரினின்று தோன்றிக் கட்குடித் தலையே உணர்த்துவதால் மேற்காட்டப் பட்டுள்ள நாற்பொருளும் பின் வருமாறு மாறியமைதல் வேண்டும்.
1. கள்ளைப் பருதி வெறி கொள்ளுதல்
2. மதமுடையதாதல்.
3. மகிழ்வடைதல்.
4. செருக்குறுதல்.
ஆக்கசுபோர்டுச் சிற்றகராதியிலும் (The Concise Oxford Dictionary) Intoxicate என்னும் சொல்லுக்கு இம் முறையிலேயே பொருள் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
7. வடமொழியிற் பொருள் கூறல்
எ-டு: ஆமென் … Verily, sol be it, used by Christians usu. at the close of prayer or hymn; ததாது.
இதில், தமிழ்ச்சொல்லே யில்லை. ததாது என்னும் வடசொற்குப் பதிலாக, அஃதாக, அங்ஙனமே, அவ்வாறாகுக, அப்படியே ஆகக்கடவது என்பவற்றுள் ஒன்று இருக்கலாமே! சென்னை யகராதி தமிழருக்கேற்பட்டதா? வடமொழியாளர்க் கேற்பட்டதா? பொதுமக்கள் இதைக் கவனிக்க.
8. ஒருபொருட் பலசொற்களின் வேறுபாடு காட்டாமை
ஒவ்வொரு செம்மொழியிலும் ஒருபொருட் பலசொற்கள் நிரம்பவுள. அவை பருப்பொருளில் ஒன்றுபட்டிருப்பினும் நுண் பொருளில் வேறுபட்டவை. சொல்வளத்திற் சிறந்த தமிழ் ஒருபொருட் பலசொற்களிலும் சிறந்துள்ளது. ஆயின், அவற்றின் நுண்பொருள் வேறுபாட்டைச் சென்னை யகராதி பொதுவாய் எடுத்துக்காட்டுவதில்லை. சொல்லுதலைப்பற்றிப் பல சொற்கள் தமிழில் உள. அவற்றுட் பலவற்றின் சிறப்புப்பொருளை அகராதி எடுத்துக்கூறவில்லை.
எ-டு:
சொல் நுண்பொருள்
அறைதல் ஓங்கிப்பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்.
இயம்புதல் இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி வியக்கிச்
சொல்லுதல்.
இசைத்தல் கோவையாகச் சொல்லுதல்.
உரைத்தல் நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச் சொல்லுதல்.
கூறுதல் பாகுபடுத்திச் சொல்லுதல்.
சாற்றுதல் பலரறிய நல்லுரை கூறுதல்.
நவிலுதல் நாவினால் ஒலித்துப் பயிலுதல்.
நுதலுதல் சொல்லித் தொடங்குதல்.
நுவலுதல் நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.
பகர்தல் பண்டங்களின் விலை கூறுதல்.
பறைதல் உரத்துச் சொல்லுதல்.
பன்னுதல் பணிக்காய் (விவரமாய்)ச் சொல்லுதல்.
புகலுதல் விரும்பிச் சொல்லுதல்.
புலம்புதல் தனிமையிற் சொல்லுதல்.
பேசுதல் ஒரு மொழியிற் சொல்லுதல்.
மாறுதல் திருப்பிச் சொல்லுதல், மறுமொழி கூறுதல்.
மொழிதல் சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.
ஆய், யாய், ஞாய், தாய் என்னும் நான்கும் அன்னையைக் குறிக்கும் சொற்கள். இவை இடம்பற்றி வேறுபட்டவையாயினும், அகராதி சிறிதும் வேறுபடுத்திக் காட்டவில்லை.
ஆய் - (பொது)
யாய் - (எம் + ஆய்) எம் அன்னை (தன்மைத்தொடர்பு)
ஞாய் - (நும் + ஆய்) நும் அன்னை (முன்னிலைத் தொடர்பு)
தாய் - (தம் + ஆய்) தம் அன்னை (படர்க்கைத் தொடர்பு)
யாயும் ஞாயும் யாரா கியரோ என்னும் குறுந்தொகைச் (40) செய்யுட்கு பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையர் உரைத்துள்ள உரையைக் காண்க.
9. எதிர்ச்சொற்களின் வேறுபாடு காட்டாமை
எ-டு:
ஆணிடி (தாக்குவது) x பெண்ணிடி (தாக்காதது)
இடுமுள்வேலி (பட்டுப்போனது) x முள்வாழ்வேலி (வளர்வது)
ஒட்டிப்பாடுதல் (சொல்லொற்றிப் x வெட்டிப்பாடுதல்
பாடுதல், சார்ந்து பாடுதல்) (சொல்லொற்றாது
பாடுதல், மாறாய்ப்பாடுதல்)
ஒட்டிப்பேசுதல் (சார்பாய்ப் x வெட்டிப்பேசுதல் (மாறாய்ப்
பேசுதல்) பேசுதல்)
கருங்களமர் (உழுதுண்பார்) x வெண்களமர் (உழுவித்துண்பார்)
காரொக்கல் (வறிய சுற்றம்) x வெள்ளொக்கல் (செல்வச் சுற்றம்)
கொட்டுக்கலியாணம் x கட்டுத்தாலி (மேளமில்லாதது)
(மேளத்துடன் கூடியது)
தென்னை மரத்தடியில் ஒருவரே இளநீர் குடிப்பின் சொத்தை யாவது ஒல்லித் தேங்காய் என்றும், கோட்டான் உட்கார்ந்து சொத்தையாவது அல்லித் தேங்காய் என்றும், தஞ்சை மாவட்டத்திற் கூறுகின்றனர்.
அல்லித்தேங்காய், ஆணிடி, பெண்ணிடி, இடுமுள்வேலி, முள் வாழ் வேலி ஒட்டிப்பாடு, ஒட்டிப்பேசு, கருங்களமர், காரொக்கல், கொட்டுக்கலியாணம் என்னும் சொற்கள் அகராதியில் இல்லை.
10. எடுத்துக்காட்டின்மை
வந்து என்னுஞ் சொல் அசைச்சொல் என்பதற்கு எடுத்துக்காட் டொன்றும் குறிக்கப்படவில்லை.
நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்னும் நால்வகை அசைகளுள், நிரையசை ஒன்றிற்கே, அதுவும் ஆங்கிலத்தில் மட்டும், எடுத்துக்காட்டுத் தரப்பட்டுளது.
11. கூறியது கூறல்
(1) களைக்கொத்து என்னும் சொல் ககரத்திற்குரிய 2 ஆம் மடலத்தில் 817 ஆம் பக்கத்திலும், பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) 207 ஆம் பக்கத்திலும், பொருள்காட்டவும் குறிக்கவும் பட்டுக் கூறியது கூறலாகவுள்ளது.
2. அச்சதந்தெளித்தல் … To sprinkle a mixture of rice and cynodon grass, as on a newly married couple; அறுகும் அரிசியும் இடல் … (Vol. l. p. 24).
அச்சுதந் தெளித்தல் … To sprinkle a mixture of rice and cyrodon grass, as on a newly couple; அறுகும் அரிசியும் இடுதல் … (Vol.l.p.25).
இவற்றுள், அச்சுதந் தெளித்தல் என்னம் சொல்லுக்கு ‘see அச்சதந் தெளித்தல் என மாட்டெறிந்தாற் போதும். மீண்டும் முன்போல் விளக்கங் கூறவேண்டு வதில்லை.
அசாகளத்தனம், அஜாகளதனம் என்னும் சொற்கட்கும், இங்ஙனமே தனித்தனி முழு விளக்கங் கூறப்பட்டுளது.
III. வேர் வழுக்கள்
சென்னைப் ப.க.க.த. அகராதியின் முப்பெருங்குறைகளுள், மூன் றாவதும் தமிழைக் கெடுப்பதில் முதற்றரமானதும், மூலவழுவாம்.
1. தென்சொல்லை வடசொல்லெனல்
பொதுவாக, வடமொழியைப்பற்றி இறப்புவுயர்ந்த எண்ணமும், தமிழைப் பற்றி இறப்பத்தாழ்ந்த எண்ணமும் இருப்பதால், ஒரு சொல்லை வடசொல்லா தென்சொல்லா என்று ஆராயுமுன், வடமொழியின் வரலாற்றையும் இயல்பையும் அறிந்துகொள்ளல் வேண்டும்.
வேத ஆரியர் நாவலந் தேயத்திற்குள் கால் வைத்த காலம் கி.மு. 2500. பண்டைக் குமரிக்கண்டத் தமிழர் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே. மொழி வளர்ச்சி முற்றிப் பல்துறை யிலக்கியம் படைத்து, நாகரிகப் பண்பாட்டில் நாயகம் பெற்றிருந்தனர். வேத ஆரியர் வேத காலத்திலேயே தமிழரோடு தொடர்பு கொண்டு, தம் மொழியைத் தமிழால் வளம்படுத்தி மெல்ல மெல்லத் தமிழர் கலை நூல்களையும் அதில் மொழிபெயர்த்துக் கொண்டனர். அங்ஙனம் மொழி பெயர்த்ததற்குப் போதிய சொல்வளம் வழக்கற்றுப் போன வேத ஆரிய மொழிக்கின்மையால், அதனொடு அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைச் சேர்த்து, அமைத்துக்கொண்ட அரைச்செயற்கையான இலக்கிய மொழியே சமற்கிருதமாம். அக்காலத்துப் பிராகிருத மொழி களுள் தலைமை யானது தமிழ். ஆகவே, சமய்கிருதத்தில் 2/5 பங்கு தமிழ்ச்சொற்களும் தமிழ் வேர்ச்சொற்களினின்று திரிந்த சொற்களுமா யிருக்கின்றன. வேதத்திலேயே, அகவு, தா, சாயம் (சாயுங்காலம்), முத்தம் முதலிய நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் உள்ளன. சமற்கிருதம் தேவமொழியென்னும் தவறான கருத்துப் பண்டைத் தமிழர் உள்ளத்திற் பதிந்துவிட்டதனால், ஆங்கிலேய ஆட்சி வாயிலாய் ஆங்கிலக் கல்வி ஏற்படும் வரை, பல தென்சொற்களையும் வடசொற்களென்று தமிழர் மயங்கி யிருந்தனர். இன்று அம் மயக்கந் தெளிந்து வருகின்றது. ஆயினும், நீண்ட காலமாக அடிமைத்தனத்திற் கிடந்து ஊறிப் போனதி னால், இன்றும் சில தமிழரும் தமிழ்ப் பேராசிரியரும் தன்னலங் கருதித் தமிழ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிடுகின்றனர். எனினும் உண்மை அண்மையில் வெளியாம்.
சென்னை அகராதியில் அச்சன், அச்சு, அப்பம், ஆப்பம், அம் (ஆம், அம்பு, அம்பலம், அரக்கு, அரங்கு (அரங்கம்), அரசு, அரத்தம், ஆசிரியன், (ஆசிரியம்) ஆணி, ஆமைவடை, ஆயிரம், உவணம் (கவணம்), உவமை, உரு (உருவு, உருவம், உருவு), உலகம், ஐயன், கட்டை, கடகம், கணக்கு, கணி, கம்பு (கம்பம்), கலகம், கலுழன், கலை, காகம், காமம், காலம், குடில் (குடிசை), குடும்பு (குடும்பம்), குண்டம், குமரன் (குமரி), குலம், சமம், சமயம், சாமை, சாயுங்காலம் (சாயந்தரம்), சாயை, சாலை, சிப்பி (இப்பி), சிவன், சீர்த்தி, சுக்கு, சும, சுரம், திறம், தூண், தூணி, தூது, தூள், தெய்வம், தோணி, நகர் (நகரி, நகரம், நாகரிகம்), நாகம், நாடி, நாவாய், நாழி, நாழிகை, நானா, நிலையம், நேயம், பக்கம், பஞ்சி, பட்டம், பட்டயம், பட்டை, படி (படிமம், படிமை, படிவு, படிவம், வடிவு, வடிவம்), பதிகம், பள்ளி, பல்லி, பாண்டியன், பார்ப்பான், புடல் (புடலை), பிழா, பெட்டி, பெட்டகம், பேழை, புரி, மண்டகம் (மண்டபம்), மதுரை, மந்திரம், மனம், மாதம், மாயை, மாலை, மானம், மீன் (மீனம்), முகிழ் (முகை, மொக்குள்), முத்து (முத்தம்), முரசு, முனி (முனிவன், முனை, முனைவன்), மெது, வட்டம், வடவை, வடை, வண்ணம், வணிகம், வரி, வலம், விடி, வேட்டி முதலிய நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள், தமிழ் வட மொழியின் கிளையென்று அயலாரும் ஆராய்ச்சியில்லா தாரும் கருதும் வண்ணம் வடசொற்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள், ஆயிரம், ஐயன், காலம், குடும்பு, பெட்டி, முகம், வாய், முதலியவை தமிழுக்கு அடிப்படையானவை. ஆசிரியன், சமயம், சிவன், நகர், நாவாய், மந்திரம், வணிகம், முதலியவை தமிழ் நாகரிகச் சான்றாய் நிற்பவை. பாண்டியன், மதுரை, குமரன், குமரி முதலிய சொற்களை வடசொல்லெனக் கூறுவதால், தமிழர் தலைக்கழகக் காலத்திலேயே ஆரியத் தொடர்பு கொண்டு விட்டனரென்றும், ஆசிரியன், ஐயன், கலை, சிவன், பார்ப்பான், மந்திரம், முனிவன் முதலியவற்றை அங்ஙனங் கூறுவதால், தமிழர் ஆரியரால் நாகரிகப்படுத்தப் பட்டனரென்றும்; அம்பு, ஆசிரியம், உவமை, உருபு, தரங்கம், வண்ணம் முதலிய வற்றை அங்ஙனங் கூறுவதால் தொல்காப்பியம் அல்லது தமிழிலக்கணம் வடமொழி யிலக்கண வழியதென்றும்; சில ஆரியவழியினரும் கொண்டான் மாருங் காட்ட முயல்கின்றனர்.
இனி, ஒருசில பேராசிரியர் தமக்கென ஆராய்ச்சியின்றி மேலை மொழி நூலாசிரியர் எழுதியவற்றை மட்டும் படித்துக்கொண்டு, சில பழந்தமிழ்ச் செய்யுட்களையோ நூற்பாக்களையோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பட்டம் பெற்ற துணையானே, தாமும் மொழி நூலதிகாரிகளெனத் தருக்கி, வருவதற்கு அறியா மையும் அழுக்காறும் தன்னலமும் தமிழ்ப்பற்றின்மையுமே காரணம்.
ஆய்விலா தாரும் அறிவுடையார் ஆய்ந்தார்முன்
வாய்திறவா துள்ள விடத்து.
மேலை மொழிநூல் வல்லார் வேதத்திலும் தமிழ்ச்சொல் கண்டு வெளியிடும் போது, கீழைத்தமிழ்ப் பேராசிரியர் தூய தென் சொல்லையும் வடசொல்லைத் துணிவது எத்துணைக் கேடானது!
சென்னை யகராதிப் முன்னுரையில், அவ் வகராதி மற்றெல்லா வகராதிகளினுஞ் சிறந்ததெனக் காட்டுதற்கு எடுத்துக்கொண்ட இரு சொற்களுள் ஒன்றான வரி என்பதற்கு, அரசிறை யென்னும் பொருளில் பலி யென்னும் வடசொல்லை வலமாகக் குறித்துள்ளார். இவ் விருசொற்கும் சொல்லளவில் ஒரு தொடர் பில்லை. வரி என்பது வரித்தல் என்னுஞ் சொல்லினின்று பிறந்தது. வரித்தல் - சுற்றிக்கட்டுதல், உழவன் பொலிக்களத்தில் ஆறிலொரு பங்குத் தவசத்தை அரசிறையாகக் கோணிப்பையிற் கட்டுதல்.
இங்கு, ஆயிரம், உலகம் ஐயன், வடவை, என்னும் நாற்சொல்லும் விளக்கப்பெறும்.
அயிர் நுண்மணல். அயிர் - (அயிரம்) - ஆயிரம் மணல்போற் பெருந் தொகை (1000). ஒப்புநோக்க : நூறு = பொடி, மா, பத்துப்பத்து. அயிரம் - அசிரம் - ஹர. ஸ + ஹர - ஸஹர (வ.). அசிரம் - ஹசார் (hazar, H.) hazar (P.). வடமொழியில் ஸஹர என்னும் சொல்லிற்கு வேர்ப்பொரு ளில்லை.
சொல்லாக்கத்தில், உயிர்முதற் சொற்கள் மெய்ம்முன்னிட்டு உயிர் மெய்ம்முதற் சொற்களாவது இயல்பு.
எ-டு: அனல் - கனல்.
ஏண் - சேண்
இமை - நிமை
உம்பர் - ஊப்பர் (இ) - super (L.).
யகரம் சகரமாகத் திரிவது பெருவழக்கு
எ-டு: பயறு - பெசறு (க.)
உயிர் - உசிர் (க.)
வயிறு - பசிறு (க.)
யகர மெய் சிறுபான்மை வகரமெய்யாகவும் சொல்லிடைத் திரியும்.
எ-டு: நீயிர் - நீவிர்.
இம் மூவகைத் திரிபும் பெற்று, ஆயிரம் என்னுஞ் சொல் கன்னடத்தில் சாவிர சாசிர என வழங்குகின்றது. இதை யறியாது, பரோவும் எமனோவும் தொகுத்த திரவிடச் சொல்லியலக ராதியில், ஸகர என்னும் வடசொல்லே ஆயிரம் என்னும் தமிழெண்ணுப் பெயருக்கு மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. ஸகரம் என்பது ஸாவிர எனத் திரிவதைவிட, ஆயிரம் என்பது ஸாவிர எனத் திரிவதே இயல்பு. தென்னாட்டுத் திரவிடச் சொல் ஸகர என்னும் வட சொல்லைத் தழுவினதெனின், வடநாட்டு இந்திச் சொல் (hazar) ஏன் அதைத் தழுவவில்லை? மலையாளத் திலும் குடகிலும் ஆயிரம் என்னும் தமிழ் வடிவே உள்ளது. ஆதலால், சாவிர என்பது திரவிட வடிவே. சாஹிர என்னும் வடிவே ஸகர என்பதன் திரிபாய் இருக்க முடியும். அதற்கும் அடிப்படை ஆயிரமே. ஆம்பல் (ஏறத்தாழ 565 கோடி), தாமரை (ஏறத்தாழ 4522 கோடி), வெள்ளம் (ஏறத்தாழ 21 இலக்கங் கோடி) என்னும் பேரெண்கள் வழங்கிய தமிழனுக்கா ஆயிரத்தைக் குறிக்கச் சொல்லில்லை?
உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல்.
உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல்.
உலக்கை = உருண்டு நீண்ட (பூண்கட்டிய) பெருந்தடி.
உலண்டு = உருண்டு நீண்ட புழு.
உலம் - உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல்.
உலவை = சுற்றி வீசுங் காற்று.
உலா = சுற்றி வருதல், அரசன் வலமாகச் சுற்றி வருகை, அதைப் பாடிய பனுவல்.
உலாவுதல் = சுற்றித்திரிதல்.
உலாத்துதல் = சுற்றித்திரிதல்.
உலாஞ்சுதல் = தலை சுற்றுதல்.
உலம் - உலவு - உலகு. ஒ. நோ : புறம் - புறவு - புறகு.
உலகு = உருண்டையானது. உலகு - உலகம்.
அண்டம், கோளம், globe, sphere முதலிய பிற அல்லது பிற மொழிச் சொற்களும், உருட்சிபற்றி உலகத்தைக் குறித்தல் காண்க.
உலகம் என்பது உலகத்திலுள்ள மக்களை அல்லது உயர்ந் தோரைக் குறிப்பது இடவாகுபெயர் என்றறிக.
உலகம் என்பது வடமொழியில் லோக்க (loka) என்று திரியும். அதற்கு லோக் என்பதை வேராகக் கொண்டு, பார்த்தல் (look) என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது (M.S.D.). ஆகவே, லோக்க என்பதற்குப் பார்க்கப்பட்ட இடம் என்பது இரண்டாம் பொருளாம். இது பொருந்துமா வென்பதை அறிஞர் கண்டு கொள்க.
ஐயன் என்பது வியக்கத்தக்க பெரியோன் என்று பொருள்படும் தமிழ்ச் சொல். இது ஐ என்றும் நிற்கும். என்ஐமுன் நில்லன்மின் (குறள். 771).
ஐவியப் பாகும். என்பது தொல்காப்பியம் (868)
ஐ + அன் = ஐயன், கடவுள், அரசன், தந்தை, தாய், அண்ணன் என, ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்கட்கெல்லாம் ஐ என்னும் பெயர், அல்லது அதனின்று திரிந்த பெயர் பொதுவாம். தாயைக் குறிக்கும்போது ஐயை என்று திரியும். அண்ணனைக் குறிக்கும்போது தமையன் (தம் + ஐயன்) என்று அமையும்.
தமிழருட் பல வகுப்பார், அவருள்ளும் சிறப்பாய்த் தாழ்த்தப் பட்டவர் தந்தையை ஐயன் என்றே அழைக்கின்றனர். ஆசிரியனும் ஒருவகையில் தந்தையொப்பான் என்னும் கருத்துப்பற்றி ஐயன் என்று அழைக்கப்படுவதுண்டு. வடார்க்காட்டுப் பகுதியில் ஆசிரியர் எவ்வகுப்பினராயினும் ஐயர் என்றே அழைக்கப் பெறுகின்றனர்.
பெரியோரையெல்லாம் என்றும் ஐயா என்றே அழைப்பது தமிழர் வழக்கம். அது ஐயன் என்பதின் விளிவேற்றுமை வடிவமாகும். மக்களுட் பெரியோர் முனிவர் என்னும் கருத்துப் பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ்நூன் மரபு.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல். 1091)
என்று கூறுவது இம் மரபுபற்றியே. இங்ஙன மெல்லாயிருப்பினும், ஐயன் என்பது ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்று சென்னையகராதி கூறுவது எத்துணை இழிவான செயல்!
வடவை அல்லது வடந்தை என்பது, வடம் (வடக்கு) என்னும் திசைப் பெயரினின்று திரிந்து, வடதிசையில் தோன்றும் நெருப்பு என்று பொருள்படும் தூய தென்சொல். இதற்கு நேரான (Aurora borealis என்னும் இலத்தீன் சொல்லும், வடக்கத்து நெருப்பு என்றே பொருள்படுவதாகும். தாயுமானவர் வடவனல் என்றே தெளிவாகச் சொல்லுகின்றார். அங்ஙனமிருந்தும், வடவை என்பதை வடவா - வடவாமுகம் - படபாமுகம் எனத் திரிந்து, பெட்டைக் குதிரை முகத்தில் தோன்றும் நெருப்பு எனப் பொருள் கூறுவது, உத்திக்கும் உண்மைக்கும் பொருந்துமா என்று பகுத்தறிவுடையார் கண்டுகொள்க.
இருமொழிகள் சிறிது காலம் அடுத்தடுத்து வழங்கினும், ஒன்றினின்றொன்று கடன் கொள்வது இயல்பு. ஐயாயிரம் ஆண்டுகளாக, நாகரிகம் நிரம்பாது வந்த ஆரியர் மொழியும் நாகரிகம் நிரம்பியிருந்த தமிழர் மொழியும் ஒரேயிடத்தில் வழங்கி வந்திருப்பின், முன்னது பின்னதினின்று எத்துனை ஆயிரக் கணக்கான சொற்களைக் கடன்கொண்டிருத்தல் வேண்டும்! தமிழரும் பெரும்பாலார் தம் தாழ்வுணர்ச்சியால் இதையுணரும் மதுகை யில்லாதிருப்பினும், வடமொழியில் தேவ மொழியாத லால் பிறமொழியினின்று கடன் கொள்ளா தென்னும் ஏமாற் றுரை, ஆராய்ச்சியாளரிடம் எங்ஙனம் செல்லும்? வடமொழியில் ஆயிரக் கணக்கான தென்சொற்களி லிருந்தும், வடமொழி யகராதிகளுள் ஒன்றுகூட ஒரு சொல்லை யும் தென்சொலென ஒப்புக் கொள்வதில்லை. இஃதொன்றே, வடமொழியாருக்குத் தென்மொழி மீதுள்ள வெறுப்பைக் காட்டப் போதுமே!
சென்னை யகராதியில், அகரம் முதல் ஊகாரம் வரை, 506 பக்கம் ஏராளமான தென்சொற்களை, சிறப்பாக, கூட்டுச் சொற்களை யும் தொடர்ச் சொற்களையும், வரை துறையின்றி விருப்பம் போல் உடுக்குறியிட்டு வடசொல்லாகக் காட்டியிருக்கின்றனர். கூட்டுச் சொற்களிலும் தொடர்ச் சொற்களிலும் ஒரு சிறு சொல்லை வடசொல்லாகக் கருதினும், அல்லது காட்ட விருப்
பினும், உடனே உடுக்குறி யிட்டுவிடுவது வழக்கமாயிருந்திருக் கின்றது.
எ-டு: அகப்பாட்டுவண்ணம், அட்டிற்சாலை, அடுகளம், அரங் கேற்றம், அரசரறுதொழில், அவையல்கிளவி, ஆழிவலி யான் மணி, இராப்பள்ளிக்கூடம், ஈரற்பித்து, இருப்பாணி, ஈமத்தாழி, உண்ணாழிகை வாரியம், உதவாக்கட்டை, உம்பருலகு. உரை காரர், உவகைமுத்து, உவமையாகுபெயர், ஊசற்பயற்றுக் காரி, ஊர்க்கணக்கன்.
இனி, உம்பரார், உயர்ந்தவன் என்னும் இம்மியும் ஐயுறவிற் கிடமில்லாத தென்சொற்கட்கும் உடுக்குறியிட்டிருப்பதும், பிழை திருத்தப்பட்டியில் அவற்றைக் குறியாதிருப்பதும், தொகுப்பாளர் கண்மூடிக்கொண்டு வேலை செய்த கவலையற்ற தன்மையையே காட்டுகின்றது.
2. சொல்வேர் காட்டாமை
பேசுங்குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் ஏதேனு மொன்றைக் கண்டு அஞ்சினும், வியக்கினும், இரங்கினும், தம் பெற்றோரை விளிப்பது வழக்கம். இதை அடிப்படையாகக் கொண்டு, பெற்றோரைக் குறிக்கும் பல பெயர்கள் அச்சம், வியப்பு, இரக்கம் முதலியனபற்றிய குறிப்புச் சொற்களாகத் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன. இவையெல்லாம் ஒரேயொழுங்காகவும் தெளிவாகவும் இருப்பினும், இவற்றை அகராதித் தொகுப்பாளர் பெற்றோர் பெயரடிப் பிறந்தனவாக ஓரிடத்திலும் எடுத்துக் காட்டியிலர்.
எ-டு: பெற்றோர்பெயர் குறிப்புச் சொல்
அக்கை அக்கே, அக்கோ, அகோ
அச்சன் அச்சோ
அத்தன் அத்தோ, அந்தோ
அப்பன் அப்பா
அம்மை அம்ம, அம்மவோ, அம்மகோ,
அம்மா, அம்மனையோ, அம்மே,
அம்மோ
அன்னை அன்னே, அன்னோ
ஐயன் ஐய, ஐயவோ, ஐயகோ, ஐயா, ஐயே, ஐயோ
வழுவேர் காட்டல்
கோவணம் என்னும் வடசொற்கு நேர் தென்சொல் குளிசீலை, தாய்ச்சீலை, நீர்ச்சீலை என்பன. குளிசீலை என்பது குளிக்கும் போது கட்டிக்கொள்ளும் துணி என்று பொருள்படுவது. இதைக் குழிசீலை என்ற வடிவிலும் காட்டி, குழி என்பதை, குழியாக்குதல் அல்லது செதுக்குதல் என்ற பொருள்படுஞ் சொல்லாகக் குறித்திருக்கின்றது சென்னையகராதி.
தக்காளி என்பது, மணித்தக்காளி, எருமைத்தக்காளி, சீமைத்தக் காளி எனப் பலதிறப்படும். இவற்றுள் மிகச் சிறியது மணித்தக்காளி, மணி என்பது சிறுமைப்பொருள் உணர்த்தும் முன்னொட்டு. மணிக்கயிறு, மணிக்காக்கை, மணிக்காடை, மணிக்குடல், மணிப்பயறு, மணிப்புறா என்னும் சொற்களை நோக்குக. சென்னையகராதி, மணித்தக்காளி என்பதை மணத்தக்காளி எனத் தவறான வடிவிலுங் குறித்த தோடமையாது. அதையே மூலமாகவும் கொண்டு மணமுள்ள தக்காளி எனப் பொருள் கூறியிருக்கின்றது.
தேங்காய் திருகியைத் தேங்காய் துருவி எனக் குறித்துத் தேங்காய் துருவுங் கருவி எனப் பொருட்காரணங் காட்டுகின்றது சென்னை யகராதி. திருகு - சுறண்டியெடுத்தல். துருவுதல் - ஊடுருவுதல்.
ஆமைவடை யென்பதை வடசொல்லாகக் காட்டவேண்டி ஆமையை ஆம என மாற்றி, நன்றாய் வேகாதது எனப் பொருள் கூறியுள்ளனர் அகராதியாளர். நன்றாய் வேகாத வடையை நாள்தோறும் சுடுவாரும் விற்பாரும் தின்பாரும் எத்துணைப் பேதையராய் இருத்தல் வேண்டும்.
4. ஐயுற்றுக் கூறல்
பகுதி அல்லது பிரிவு என்று பொருள்படும் பால் என்னும் சொல் லிற்கு பகு என்பதும், மருமகனை அல்லது வழிவந்தோனைக் குறிக்கும் மருகன் என்னும் சொல்லிற்கு மரு (மருவு) என்பதும், தெளிவான மூலமாய் அல்லது பகுதியாயிருந்தும், ஒருகால் (perhaps) என்றும், மெய்வாய்ப்புள்ளதா (Probably) என்றும், அடைகொடுத்து உண்மையின் திண்மையைக் குறைத்திருக் கின்றனர்.
வேந்தன் என்னும் தூய தென்சொல்லைத் தேவேந்தர் என்பதோடும், மருந்து என்னும் தனித்தமிழ்ச் சொல்லை அம்ருத என்பதோடும், ஒப்பு நோக்குமாறு குறும்புத்தனமாய்க் குறித்திருக் கின்றது சென்னையகராதி.
வேய்ந்தோன் (முடியணிந்தோன்) - வேந்தன், தேவ + இந்திரன் + தேவேந்திரன்.
மருந்து - சிறப்பான மணமுள்ள தழை அல்லது சரக்கு.
அம்ருத - மரணத்தைத் தவிப்ப்பது என்று சொல்லப்படுவது.
5. தலைமாற்றிக் கூறல்
குமரிக்கண்டத் தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்தது. வடகோடித் திரவிடம் நாளடைவில் பிராகிருதமாய் மாறியது. வேத காலத்தில் விந்திய மலைக்கு வடக்கில் பைசாசம், சூரசேனம், மாகதம் என மூன்று பிராகிருதங்களும், அதற்குத் தெற்கில், தமிழ், ஆந்திரம் (தெலுங்கு), கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்துதிரவிடர்களும் (பஞ்சதிராவிடம்) வழங்கி வந்தன. பிற்காலத்தில், ஐந்திரவிடங்களுள், மகாராட்டிரம் ஒரு பிராகிருதமாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றும் சேர்ந்து (திராவிடீ என்னும்) ஒரு பிராகிருதமாகவும் கொள்ளப்பட்டன. மாகதத்தின் பிற்காலத் திரிவு பாலி பிராகிருதம் என்னுஞ் சொல் தமிழில் பாகதம் எனத் திரியும்.
வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின், அதனொடு ஐம்பிரா கிருதங்களையும் கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய மொழியை அமைத்தனர். பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது. சமற்கிருதம் - நன்றாய்ச் செய்யப்பட்டது. ஆகவே, சமற்கிருதத் திற்கு முந்தியது பிராகிரும், பிராகிருதத்திற்கு முந்தியது திரவிடம். திரவிடத்திற்கு முந்தியது தமிழ். இவ் வுண்மையை மறைத்துப் பின் வருமாறு பல தமிழ்ச்சொற்கட்குத் தலைகீழாய் மூலங்காட்டப் பட்டு வருகின்றது; சென்னையகராதியிலுங் காட்டப்பட்டுள்ளது.
எ-டு: சமற்கிருதம் பிராகிருதம் தமிழ்
வ்ருத்த > வட்ட > வட்டம்
நேக > நேயம் > நேயம்
அய்ய > ஐயன்
கட்ட > கட்டை
கம்ப > கம்பம்
இப் பட்டியைக் கீழ்வருமாறு தலைமாற்றுக
எ-டு: தமிழ் பிராகிருதம் சமற்கிருதம்
வட்டம் > வட்ட > வ்ருத்த
கம்பம் கம்ப
அய்ய, கட்ட, கம்ப என்னும் பிராகிருதச் சொற்கட்கு, ஆர்ய, காஷ்ட்ட, தம்ப என்னும் சமற்கிருதச் சொற்களை, முறையே, மூலமாகக் காட்டுவர். அது முழுவழு.
இனி, சில தமிழ்ச்சொற்களைத் திரவிட உருதுச் சொற்களின் திரிபாகவுங் காட்டுவர்.
எ-டு: கும்பு < T. கும்பு (கூட்டம்), வாங்கா - வங்கா < U. பாங்கா.
6. கூட்டுச்சொல்லை வழுப்படப் பிரித்தல்
ஒருவர் மெலிந்து தோலும் எலும்புமாய்ப் போவதை, உடக் கெடுத்துப்போதல் என்பது மரபு. உடக்கு - தோலும் எலும்புமான நிலை. உடக்கு எடுத்தல் உடக்கெடுத்தல். இதை உடல் கெடுத்தல் என்று பிரிக்கின்றது அகராதி.
மாலை நேரத்தில் கதிரவன் இறங்குவதைப் பொழுது சாய்தல் என்பது மரபு. பொழுது சாய வந்தான் என்பது இன்றும் வழக்கமா யிருக்கின்றது. பொழுது சாயும் மாலை சாயுங்காலம் எனப்படும். இதைச் சாயுந்தரம் என்றும் சொல்வர். சாயுங்காலம் என்பது சாயங்காலம், சாய்ங்காலம் என்றும், சாயுந்தரம் என்பது சாயந்தரம், சாய்ந்தரம் என்றும் மருவும், வடமொழியாளர் சாயங்காலம் என்பதைச் சாயம் காலம் எனப் பிரித்து, சாயம் என்னும் சொல்லை மாலை என்னும் பொருளில் ஆண்டு கொண்டனர். அதன்பின், சாயம் (ஸாயம்) என்னும் வடசொல்லி னின்றே சாயங்காலம் என்னும் தமிழ்சொல் வந்ததென்று சொல்லவுந் துணிந்துவிட்டனர். இக் கொள்கையை சென்னை யகராதியுங் கொண்டுள்ளது. அதனால், சாயுங்காலம், சாயுந்தரம் என்னும் வடிவுகளை அது காட்டவில்லை. அதோடு, சாயந்தரம் என்பதை சாயம் + அந்தர(ம்) என்றும் பிரித்துள்ளது.
7. ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல்
இறுத்தல் என்னும் சொல்லுக்குரிய, முடித்தல் (தீர்த்தல்), வரிகொடுத்தல் என்னும் இருபொருளும் நெருங்கிய தொடர் புடையவை. ஒரு காவலன் தன் குடிகளைக் காக்கின்றான். அக் காப்புப்பற்றிக் குடிகள் அவனுக்குக் கடன்பட்டுள்ளனர். அக் கடனைத் தீர்ப்பதே இறை அல்லது வரி. இறுப்பது இறை. இறுத்தல் - தீர்த்தல், கடன் தீர்த்தல். தீர்த்தல் (முடித்தல்), வரி கொடுத்தல் ஆகிய இருபொருளையும் வேறாகக் கொண்டு, இறுத்தல் என்னும் ஒரே சொல்லை இருசொல்லாகக் காட்டி யுள்ளது சென்னை யகராதி.
இங்ஙனமே, தீர்த்தல், தீர்வை என்னும் இரண்டும் தீர் என்னும் ஒரே சொல்லாகும். இதனையும் இருசொல்லாகக் காட்டியுள்ளது அவ் வகராதி.
8. பல சொல்லை ஒரு சொல்லாகக் காட்டல்
கரைதல் என்னும் சொல்லிற்கு
1. கரைந்து போதல், 2. உருகுதல்,
3. இளைத்தல், 4. கெடுதல்,
5. வருந்துதல், 6. தாமதித்தல்,
7. ஒலித்தல், 8. அழுதல்,
9. பதனழிதல், 10. அழைத்தல்,
11. சொல்லுதல்.
எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள. இவற்றுள், முதலாறும் பத்தாவதும் மறைதற் பொருள்தரும் கர என்னும் வேரினின்று பிறந்த கரை என்னும் சொல்லிற்குரியவாம்; ஏனையவெல்லாம் ஒலித்தற் பொருள் கொண்ட கர என்னும் வேரினின்று தோன்றிய வேறொரு கரை என்னும் சொல்லிற்குரியவாம். இங்ஙனம், இரு வேறு சொற்கள் வடிவொப்புமைபற்றி ஒரு சொல்லாகக் காட்டப்பட்டுள.
கள் என்னும் வேரினின்று பிறந்த கட்டை (திரண்ட மரத்துண்டு) யென்னும் சொல்லும், குள் என்னும் வேரினின்று பிறந்த குட்டை யென்னுஞ் சொல்லின் திரிபான கட்டை யென்னும் சொல்லும், வெவ்வேறாம்.
9. தொழிற்பெயரின் திரிபே முதனிலையெனல்
பொதுவாக, முதனிலையினின்றே தொழிற்பெயர் திரிக்கப்படும் ஆயின், சென்னை யகராதி தொழிற்பெயரினின்று முதனிலையைத் திரிக்கின்றது.
எ-டு: நடம் > நடி.
இதற்குக் காரணம், நடி என்னும் சொல்லை வடசொல்லாகக் காட்டவேண்டும் என்பதே.
நள்-நளி, நள்ளுதல் = பொருந்துதல். நளிய ஓர் உவம வுருபு.
நளிதல் = ஒத்தல். நளி - நடி. ஒ. நோ: களிறு - கடிறு.
நடித்தல் = ஒத்துச் செய்தல்.
நடி + அம் = நடம். ஒ.நோ. குறி + அம் = குறம்.
நடம் - நட்டம் - நட்ட (பி.) - ந்ருத்த (வ.).
ஒ.நோ: படம் - பட்டம் = துணி.
ஒ.நோ: வள் - வட்டு - வட்டம் - வட்ட (பி.) - வ்ருத்த (வ.).
நட்டம் - நட்டணம், நட்டணை, ஒ.நோ: வட்டம் - வட்டணம், வட்டணை.
நட்டம் - நட்டவம் - நட்டுவம் - நட்டுவன்.
நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு … பங்கு (S.I.I.ii, 274).
ஒ.நோ: குட்டம் - குட்டுவன், குட்ட நாட்டான், சேரன்.
நடு என்னுஞ் சொல்லொடு கூடி, நட்டுவம் என்பது நட்டு எனக் குறுகிற்று.
முட்டு = நட்டுவ இசைக்கருவிகள். நட்டுமுட்டுவர் = நட்டுவ மேளகாரர்.
நடி + அனம் = நடனம், ஒ.நோ: படி + அனம் = படனம்.
நடனம் - நடலம் (கொச்சை).
நடி + அகம் = நாடகம். ஒ.நோ: படி + அகம் = பாடகம்.
தலைக்கழகக் காலத்திலிருந்து, தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வழங்கி வந்திருக்கின்றத. இயல், இசை என்பன போன்றே, நாடகம் என்பதும் தமிழ்ச்சொல். கூத்து என்னும் வேறொரு சொல்லிருப்பதால் மொழியாராய்ச்சி யில்லாதாரும் தென் சொல்வளத்தை யறியாதாரும், நாடகம் என்பதை வடசொல்லெனக் கருதுகின்றனர். கால்டுவெல் கண்காணியார் தமிழின் சொல் வளத்தை விளக்க வந்த விடத்து, தமிழ் தனக்கே யுரிய வீடு என்னுஞ் சொல்லோடு, தெலுங்கில் வழங்கும் இல் என்னுஞ் சொல்லையும், கன்னடத்திற் சிறப்பாய் வழங்கும் மனை என்னுஞ் சொல்லையும், சமற்கிருதத்திலும் பின்னிய (Finnish) மொழிகள் எல்லாவற்றிலும் வழங்கும் குடி என்னுஞ் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளது என்று கூறியிருத்தலை நோக்குக.
நட்ட என்னும் பிராகிருத வடிவினின்று நாட்டிய(ம்) (நாட்ய) என்னும் வட சொல்லை வடவர் அமைத்துக் கொண்டு, ந்ருத்த என்னும் வடிவின் முதலசையாகிய ந்ருத் என்பதையே, நடி என்னும் பகுதியினின்று தோன்றியுள்ள எல்லாச் சொற்கட்கும் மூலமாகக் காட்டுகின்றனர். ந்ருத் என்பதற்கு வேர்ப் பொருளே இல்லை. ஆயினும், முன்பு காட்டியது போல், ந்ருத் = ந்ருத்த (வ.) > நட்ட (பி.) > நடி (த.) எனத் தலைகீழாய்க் காட்டுகின்றனர். நடனம் என்பதை நட்டன (வ.) என்பதன் திரிபாகவும், நட்டணம், நட்டண என்பவற்றை நர்த்தன என்பதன் திரிபாகவும், காட்டு கின்றனர்.
ந்ருத் - ந்ர்த்த - நர்த்தந (வ.) > நட்டணம் (த.) என்பது வடமொழியாளர் கொள்கை.
அடி, கடி, பிடி என்னுஞ் சொற்கள் போன்றே, நடி என்பதும், தமிழில் ஆட்டம் என்னும் பொருளில் முதனிலைத் தொழிற் பெயராய் வழங்கும்.
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர் (தேவா. 216,5)
நடம் என்னும் தொழிற்பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற் பெயரும் நடி (பிங்.). என்னும் பெண்பாற் பெயரும் தோன்றும்.
வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி (பரிபா. 22:42)
நடனம் என்னும் தொழிற் பெயரினின்று, நடனன் என்னும் ஆண்பாற் பெயரும் நடனி என்னும் பெண்பாற் பெயரும் தோன்றியுள்ளன.
நடனன் பாங்குற நடிப்பது (இரகு: குடனயோத்தி: 98)
நடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று. 20)
நடிகன், நடிகை என்னும் இருபாற் பெயரும், முறையே, natika, natika என்னும் வடசொற்களின் திரிபென்றும், இக்காலத்தன வென்றும், சென்னை யகராதியிற் குறிக்கப்பட்டுள்ளது.
nata, nataka என்பவை நடிகனைக் குறிக்கும் பெயர்கள் என்று மானி உல்லியம் அகராதியிலும், நடன், நடி என்னும் இரு தென் சொல்லும் nata, nati என்னும் வடசொல்லின் திரிபென்று சென்னை யகராதியிலும் குறிக்கப்பட்டுள்ளன.
ஒருவன் தன்னிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் காட்டிப் பாசாங்கு செய்யும்போது, கூத்தாடுகிறான் என்று சொல்லாமல் நடிக்கிறான் என்று சொல்வதையும், இவ் வழக்கு நாட்டுப்புற மக்கள் பேச்சிலும் தொன்றுதொட்டு இருந்துவருவதையும், ஊன்றி நோக்குக.
IV. இலக்கண வழுக்கள்
1. இலக்கணக் குறிப்பு வழு
அக்கடாலெனல் ஓர் ஒலிக்குறிப்பு வெளிப்பாடு (Onomatopoetic Expression) என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. அது ஓர் அசாவிடுதற் குறிப்பே (Exclamation of repose).
அகச்சுட்டு என்பது, சுட்டு முன்னொட்டு (Demonstrative prefix) அன்று; சுட்டடியே (Demonstrative base).
அஞ்சலப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி என்பவை அஞ்சறைப் பெட்டி என்பதன் கிளை வழக்கு வேறுபாடு (Dialectic variation) அல்ல; கொச்சைத் திரிபே.
செய்யட்டும் என்னும் ஏவல் வினையில் அட்டும் என்பது வியங்கோள் விகுதியன்று; ஒரு துணைவினையே.
2. ஏவல் வினையின் எண் குறியாமை
செய்யட்டு என்னும் ஏவல்வினை ஒருமையும், செய்யட்டும் என்னும் ஏவல் வினை பன்மையும் ஆகும்; செய்யவிடு, செய்ய விடும் என்பவை போல், இவ்வெண்வேறுபாடு அகராதியிற் குறிக்கப்படவில்லை.
V. மரபு வழுக்கள்
1. சொல் வழு
அம்மை வார்த்தலை அம்மை போடுதல் என்பது மரபு. அதை அம்மை கட்டுதல் என்று குறித்து, அவ் வழுவை அழுத்திக் காட்டி னாற்போல் வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டியிருக்கிறது என்று எடுத்துக்காட்டும் தரப்பட்டிருக்கின்றது.
போட்டு என்பது புகட்டு என்பதன் மரூஉ. பால் போன்ற நீர்ப் பொருள்தான் போட்டப்படும்.
2. உருபு வழு
கரைத்துக் குடித்தல் என்னும் கூட்டுவினைச் சொற்கு, உணவு முதலியவற்றைத் திரவ பதார்த்தத்தால் கலக்கி உட்கொள்ளுதல் எனப் பொருள் கூறப்பட்டிருக்கின்றது. இதில் திரவ பதார்த்தத் தால் என்பது திரவ பதார்த்தத்தில் என்றிருத்தல் வேண்டும்.
VI. அகராதியமைப்பு வழுக்கள்
1. ஓரேயளவான எழுத்தால் எல்லாச் சொற்களையுங் குறித்தல்
வின்சிலோ (Winslow) அகராதியில், அடிப்படைச் சொற்கள் பெரிய எழுத்திலும், அவற்றினின்று திரிந்துள்ள தனிச்சொற் களும் கூட்டுச் சொற்களும் சிறிய எழுத்திலும், அச்சிடப்பட்டிருக் கின்றன. அதுவே சரியான முறையாம். சென்னை யகராதியில் அஃதன்றி, எல்லாச் சொற்களும் சிறிதும் வேறுபாடின்றி ஒரேயளவான எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இதனால், ஆராய்ச்சியில்லாதார் அல்லது புலவரல்லாதார் சொற்றிரிவு முறையை அறியவும், இயற்சொல்லையும் திரிசொல்லையும் பிரித்துணரவும் இயலாதிருக்கின்றது.
2. பிறந்தையின் கீழ் இனங்களையும் இனத்தின் கீழ் வகைகளையும் காட்டாமை
வின்சிலோ அகராதியில், பருத்தி என்னும் சொல்லின் கீழ், காட்டுப் பருத்தி, செம்பருத்தி, தாளிப்பருத்தி, பட்டுப்பருத்தி, பூப்பருத்தி, பேய்ப்பருத்தி, மலைப்பருத்தி வெண்பருத்தி, வேலிப் பருத்தி முதலிய பலவகைகள் காட்டப் பட்டுள்ளன. இங்ஙனமே பிற பொருள் வகைகளும் அவ்வவ்விடத்திற் காட்டப்பட் டுள்ளன. இம் முறையினால், ஒரு பொருளின் வகைகளை யெல்லாம் ஒரேயிடத்தில் ஒருங்கே காணமுடிகின்றது. விடுபட்டுப் போன வகைகளையும் உடனே கண்டுகொள்ளலாம்.
சென்னையகராதியில், எல்லாப் பொருள்களையும் அவற்றைக் குறிக்கும் சொற்களின் அகர வரிசைப்படி குறித்திருப்பதால், ஒரு பொருளின் வகைகளைக் காண்பதற்கு எல்லா மடலங்களையும் புரட்ட வேண்டியிருக்கின்றது. இது இயலாத செயல். அதோடு, விடுபட்டுப்போன வகைகளையும் எளிதாய் அறிந்து கொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, அவரை வகைகளைச் சொல்ல லாம். ஆரால்மீன் அவரை, ஆனைக்காதவரை, கொழுப்ப வரை முதலிய வகைகள் சென்னை யகராதியிற் குறிக்கப்படவில்லை.
இங்ஙனமே, உருண்டையரம், கத்தியரம், சீட்டியரம், பூவரம், பொந்தவரம், துகரம், முள்ளரம் முதலிய அரவகைகள் விடப் பட்டுள்ளன. (செ.ப.க.அ.சீ.)
சே
சே-க்ஷி2 (இ.வே.) = தங்கு, வதி.
சேத்தல் = தங்குதல். பைத லொருதலை சேக்கு நாடன் (குறுந்.13).
கான மஞ்ஞை கணனொடு சேப்ப (புறம். 127).
க்ஷி என்னும் சொல்லினின்றே க்ஷேத்ர என்னும் சொல் திரியும்.
க்ஷேத்ர = தங்குமிடம், மனை, நகர், இடம், திருவிடம்.
சேக்கை = 1. கூடு. சேக்கை மரனொழியச் சேணீங்ரு புள் (நாலடி.30).
2. கட்டில்.
சேத்தல் = தங்கியுறங்குதல். கயலார் நாரை போர்விற் சேக்கும் (புறம். 24: 20).
சேடா
சேடா என்னும் சலங்கைப் பூரான் கடித்தால் அதன் விளைவைத் தடுக்க, அப்பூரானையே கொன்று உலர்த்தித் தூளாக்கி வெற்றிலையில் மடித்து உண்ணக் கொடுப்பர். இங்ஙனம் சில நோய்கட்கு நோயுண்டாக்கிய பொருள்களையே மருந்தாகக் கொடுப்பது வழக்கம். (தி.ம. 1102).
சேது
சேது - கேது
செல் - செள் - செய் - சேய் - சே - சேது = சிவப்பு.
சேதா = சிவந்த ஆ. சேதாம்பல் = செவ்வாம்பல்.
சேது - கேது = செம்பாம்பு வடிவினதாகச் சொல்லப்படும் ஒன்பதாங் கோள். (வ.வ. 130).
சேம்பு
சேம்பு - கேமுக
சேம்பு = ஒருவகைக் கிழங்கு.
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை (குறுந். 76). (வ.வ. 166).
சேயும் சேய்மையும்
சேய், சேய்மை என்னும் இரு சொல்லும் வெவ்வேறு வடிவின வேனும், ஒரே வடிவிலும் இருத்தல்கூடும். சேய்மை = குழவித் தன்மை, தொலைவு.
1. சேய்
முன்வரற் கருத்தில் தோன்றற் கருத்தும், தோன்றற் கருத்தில் இளமைக் கருத்தும், இளமைக் கருத்திற் சிறுமைக் கருத்தும் தோன்றும், உகரச் சுட்டின் விரிவாகிய உல் என்னும் முதலடியி னின்றும் மொழி முதலெழுத்துகளை முதலிற் கொண்ட குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் ஆறு வழியடிகள் திரியும்.
எ-டு:
உல் - உன். உன்னுதல் = முன் தள்ளுதல் (முன்வரல்)
உல் - உரு. உருத்தல் = தோன்றுதல் (தோன்றல்)
உல் - உல்லரி = தளிர். உல் - உலவை = பசுந்தழை (இளமை)
உல் - உள் - இள் - இளம் - இளமை (இளமை)
உல் - உல்லி = ஒல்லி. உல்லி - ஒல்லி (சிறுமை)
இங்ஙனமே சுல் என்னும் வழியடியும் இளமைக் கருத்தையும் சிறுமைக் கருத்தையும் கொண்ட சொற்களைத் தோற்றுவிக்கும்.
சுல் - சில் - சில்லான் = குட்டியோணான்.
சுல் - சுள் - செள் = பேன் குஞ்சு.
செள் - செள்ளை = தங்கை. செள்ளை - செல்லெ (தெ)
செள் - (சேள்) - சேய் - குழவி.
இவை இளமைபற்றியன.
சுல் - சில் = சிறு துண்டு.
சில் - சின் - சின்னம். சின்னான் = சிறியவன். சின்னி = சிறியவள்.
சில் - சிறு - சிற்று = சிற்றாள்.
சிற்று - சிட்டு = சிறு குருவி.
சிட்டு - சீட்டு = ஓலை நறுக்கு.
சிட்டு - சிட்டி = சிறுகலம்.
சிறு - சிறுவன். சிறு - சிறுக்கன் - செறுக்கன்(ம) - சக்கன்(ம.).
சிறு - சிறாய் = சிறு விறகுத் துணுக்கு.
சிறு - சிறாம்பு - சினாம்பு. சிறு - செறு - செறும்பு = பனஞ்சிறாம்பு.
சுல் - சுள் = சிறுமை. சுள் - சுள்ளல் = மென்மை.
சுள்ளலன் = மெலிந்தவன். சுள்ளலி = மெலிந்தவள்.
சுள்ளாணி = சிறிய ஆணி (மலைபடு. 27, உரை).
சுள் - சுள்ளி = சிறுமை.
சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும் (கம்பரா. முதற்பே. 139)
சுள் - சுண்டு = சிறியது. சிற்றளவு. சிறுகலம்.
சுண்டுவிரல். சுண்டெலி முதலிய கூட்டுச் சொற்களில் சுண்டு சிறுமை குறித்தல் காண்க.
சுண்டு - சிண்டு = சிற்றளவு, சிறுகலம், சிறுகுடுமி.
சிண்டு - சிண்டா = சிறுகுடுமி.
சுண்டு - சுண்டை = சிறு காய்வகை.
சுள் - செள் = கோழிமேல் ஒட்டும் சிறுபூச்சி.
இவை சிறுமை பற்றியன.
2. சேய்மை
உகரச்சுட்டு உயர்ச்சி குறித்தலை, உக்கம் (தலை) உகள் (குதி), உச்சி-உச்சம், உத்தரம் (மேல் விட்டம், உயரமான வடக்கு), உத்தி (தலையணி), உப்பு (பொங்கியெழு), உம்பு-உம்பர்-உம்பரம். உயர், உவண்-உவணம்-உவணை (மேலிடம், மேலுலகம்), உவர் (உப்பு), உறி, உன்னு (குதித்தெழு) முதலிய சொற்களால் அறியலாம்.
உகரம் இகரமாகத் திரியும்
எ-டு: உவர் - இவர். இவர்தல் = உயர்தல், ஏறுதல்.
இவர்பரித் தேரினர் (சிலப். 5:160)
உகரம் எகரமாகவும் ஊகாரம் ஏகாரமாகவும் திரியும்.
எ-டு: உகள் - எகிர்.
ஊர் - ஏர். ஊர்தல் = ஏறுதல், ஏறிச்செல்லுதல்.
ஊர் - ஊர்தி = ஏறிச்செல்லும் விலங்கு அல்லது அணிகம் (vehicle).
ஊர் - ஊர்த்தம் = மேனோக்கல், உயர்தல், ஊர்த்தம் - வ. ஊர்த்துவம் (urdhva).
ஏர்தல் = எழுதல்.
உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுருகு 1)
இதனால் எகர ஏகாரங்களும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்தும்.
எஃகு, எக்கு, எகிர், எட்டு - எட்டம். எடு, எண், எத்து, எம்பு, எவ்வு, எழு - எழுப்பு. எற்று முதலிய சொற்களில் எகரமும்: ஏங்கு. ஏண் - ஏணி, ஏணை, ஏத்து. ஏத்தாப்பு, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு - ஏற்றை முதலிய சொற்களில் ஏகாரமும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்துதல் காண்க.
ஏகாரவுயிர் தன்னளவில் ஓரெழுத்துச் சொல்லாய் நின்றும் உயர்ச்சிக் கருத்தை யுணர்த்தும்.
ஏ = 1. மேனோக்குகை.
கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87)
2. கழுத்தை நிமிர்த்துதல். தலையெடுப்பு.
ஏக்கழுத்தம் என்பது உலக வழக்கு.
காதிரண்டு மில்லாதான் ஏக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5)
3. இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7:55).
4. அடுக்கு. ஏபெற் றாகும் (தொல். 304). ஏகல் லடுக்கம் (நற். 16).
5. உயர்வு, பெருக்கம், மிகுதி.
உயிர்முதற் சொற்கள் ஏதேனுமொரு மெய்யை முன்மிகையாகப் பெறுவது இயல்பு.
எ-டு: இளை-சிளை, சிளைத்தல் = சோர்தல், இளைத்தல்.
அவனைப்போலே பிரிவுக்குச் சிளையாதபடி (ஈடு. 9:5:3)
உதை - சுதை(பிங்.) = உதைகாற் பசு.
வருகன் றூட்டாப் புன்சுதை (குற்றா. தல. தக்கன் வேள்வி. 117)
இங்ஙனமே ஏண், ஏணி என்னும் பெயர்களும் முறையே சேண், சேணி எனச் சகரமுதலாகும்.
ஏண் = 1. உயர்ச்சி
ஏணிலி ருந்தேன் (திவ். பெரியதி. 1:6:1)
2. எல்லை (திவ். திருவாய். 2:8:8. பன்னீ.)
3. இறுமாப்பு. ஏணாப்பு = இறுமாப்பு.
4. செருக்குப் பேச்சு.
ஏண்பல பகர்ந்தனை (கந்தபு. அவைபுகு. 153)
சேண் = 1. உயரம் (திவா.)
சேண வந்தர நோக்கலும் (கம்பரா. இராவணன் வதை. 39)
2. மலைமுகடு (பிங்).
3. வானம். சேணெல்லாம் புல்லொளி செலுத்தி (கம்பரா. சூர்ப்பநகை. 20).
4. விண்ணுலகம். சேண்மக பதிக்கு நல்கி (கந்தபு. திருநகர. 105).
5. சேய்மை. சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு (புறம். 174 : 2).
6. நீளம் (திவா). சேணுற நீண்டு மீண்டு (கம்பரா. சூர்ப்பநகை. 46).
7. நெடுங்காலம் சுற்றமொடு முழுது சேண்விளங்கி (புறம். 2:19).
ஏணி = 1. ஏறுகருவி.
2. அடுக்கு. அண்டத் தேணியின் பரப்பும் (கந்தபு. சூரன்வதை. 485).
3. எண். ஏணி போகிய கீழ்நிலைப் படலமும் (ஞானா. 54:1).
4. எல்லை. நளியிரு முந்நீ ரேணி யாக (புறம். 35:1).
சேணி = 1. ஏணி (திவா).
2. சேடிய ருலகு. விஞ்சையர் சேணி செலவிட்டு (சூளா. சுயம். 192).
சேண் என்னும் சொல் சேய்மையை யுணர்த்துதலால், அது சேய் என்னும் சொல்லோடு தொடர்புள்ளதாகவே யிருத்தல் வேண்டும். உயரமும் சேய்மையும் தொலைவளவில் ஒன்றாதலால். உயர்ச்சிப் பொருட்சொல் சேய்மைப் பொருளு முணர்த்துதல் உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்ததே. உயர்ச்சி மேற்றிசையும் சேய்மை பக்கத்திசையுமா யிருத்தலே அவ்விரண்டிற்கும் வேற்றுமை.
பல ணகரமெய்ச் சொற்கள் ளகரமெய்ச் சொற்களின் திரிபாயுள்ளன.
எ-டு: ஆள் - ஆண், எள் - எண். கோள் - கோண். பெள் - பெண். வேள் - வேண். களவாளி - களவாணி. வளரி - வணரி. சுருளை - சுருணை. திரளை - திரணை.
ளகரமெய்யீறு பல சொற்களில் யகரமெய்யீறாகத் திரிகின்றது.
எ-டு: அள் - (அய்) - அயல், இள் - எள் - எய், கள் - (கய்) - கை(கய-கச), கொள் - கொய், கோள் - கோய், சாள் - சாய், தொள் - தொய், நெள் - நெய், நொள் - நொய், பொள் - பொய், மாள் - மாய், வள் - (வய்) - வை, (கூர்மை), வெள் - வெய்.
இங்ஙனம், சேய்மையுணர்த்தும் சேய் என்னும் சொல்லும் சேள் என்னும் இறந்துபட்ட சொல்லின் திரிபாயிருத்தல் வேண்டும்.
ஏ - ஏள் - ஏண், ஏள் - சேள் - சேய்.
சேண் சேய் என்னும் இரண் டையும் இணைத்துக் கொண்டிருந்த சேள் என்னும் இடை நிலைச் சொல் இறந்துபட்டதென உய்த் துணர்ந்து கொள்க. (செந்தமிழ்ச் செல்வி மே 1967.)
சேரநாட்டு அரசர்கள்
கடைக் கழகக் காலத்திலேயே, மேலைச் சேரநாடாகிய குட மலை நாடு, தென்வடலாக, வேணாடு குட்டநாடு பொறைநாடு குடநாடு கொண்கானநாடு எனப் பல பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவற்றுள், கொண்கான நாட்டை நன்னனும், ஏனையவற்றை உதியன் மரபினரும் பொறையன் மரபினருமான இருவேறு சேரர்குடிக் கிளையினரும், ஆண்டு வந்தனர்.
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றம் தந்த வாய்வாட்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடுதந் தன்ன (அகம். 199)
என்பதனால், கொண்கானநாடு மீண்டும் சேரர்கை சேர்ந்தமை அறியப்படும்.
கீழைச் சேரநாடாகிய கொங்குநாட்டின் தென்பகுதியான தகடூர் நாட்டை, அதிகமான் மரபினரான சேரர் குடிக் கிளையினர் ஆண்டு வந்தனர். வடபகுதியின் மேற்பாகத்துக் குடகு நாட்டைக் கோசரும், எஞ்சிய பாகத்தை எருமையூரன் இருங்கோவேள் கங்கர் கட்டியர் ஆகியோரும் ஆண்டு வந்தனர்.
கொங்கிளங் கோசர் (சிலப். உரை பெறுகட்டுரை)
குடகக் கொங்கரும் ( 30: 159)
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் மேலைச் சேரர்குடிக் கிளைகள் நேர்வழித் தொடர்ச்சி யற்றன. அதன் பின், பெருமாள் மரபினர் சிலர் ஆண்டு வந்தனர். அவருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்.
முதலாம் சேரமான் பெருமாள் (667-712)
இவர் பெருமாக் கோதை என்னும் இயற்பெயரையும் கழறிற்றறிவார் என்னும் சிறப்புப் பெயரையும் உடைய சிவனடியார்.
நாலாம் குலசேகரப் பெருமாள் (754-798).
இவர் குலசேகராழ்வார் என்னும் திருமாலடியார்.
இரண்டாம் சேரமான் பெருமாள் (798-834)
இவர் ஓர் இசலாம் அடியார். நாட்டைப் பன்னிருவர்க்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு மெக்கா சென்று விட்டார். (துடிசை கிழார் சேரர் வரலாறு).
அப்பன்னிரு நாடுகளாவன :-
(1) கோழிக்கோடு (2) வள்ளுவநாடு
(3) கொச்சி (4) திருவிதாங்கூர் (திருவதங்கோடு)
(5) குறும்பரநாடு (6) கோட்டயம்
(7) சிரக்கல் (8) கடத்தநாடு
(9) பாலக்காடு (10) பெய்ப்பூர்
(11) பரப்பநாடு (ஒரு பகுதி) (12) பரப்பநாடு (மற்றொரு பகுதி)
சேரநாட்டுத் தமிழ், 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கொடுந் தமிழாகத் திரிந்து, 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரவிடமாக மாறிவிட்டது. சேர (சேரல) நாடும் மொழியும் கேரளம் எனப்பட்டன. சேரல் - சேரலம் - கேரளம்.
சேரலம்
சேரலம் - கேரல
சேரல் = சேரன். சேரல் - சேரலம் - வ. கேரல - கேரள. (வ.வ. 166).
சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே
தமிழ்ப் பொழில் 36 ஆம் துணர் 4 ஆம் மலரில் மயிலை சீனி. வேங்கடசாமியார் பெயரில் வந்துள்ள சேரலாதன் அளித்த பெருஞ்சோறு என்னும் கட்டுரையைக் கண்டு திடுக்கிட்டேன்.
கடந்த ஐயாயிரம் ஆண்டாக மெலிவுற்றும் நலிவுற்றும் வந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழ், அயன்மொழியாரால் மட்டுமன்றித் தமிழராலும் புறக்கணிக்கப் பட்டுள்ள நிலையில், மயிலை சீனி, வேங்கடசாமியார் ஒருவரே தமிழ்ப் பகைவரின் கூற்றுகளை ஆற்றலொடு மறுத்து வருகின்றார் என்று பற்றுள்ள தமிழ்ப் புலவர் உற்றுவரும் மகிழ்ச்சிக்கு மாறாக எழுந்துள்ளதுக் கட்டுரை.
தமிழின் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டு ஆரிய வருகைக்கு முற்பட்ட பழந்தமிழிலக்கியமனைத்தும் இறந்துபட்டபின், தமிழின் முதுபழந் தொன்மையைக் காட்டி நிற்கும் சான்றுகள், பஃறுளியாற்றுச் செய்தியும், சேரலாதன் பெருஞ்சோற்றுச் செய்தியும் ஆகிய இரண்டே. இவற்றுள் பஃறுளியாறு மலையாள நாட்டின் தென்கோடியில் ஓடும் பறளியாறேயென்று ஒரு பிராமணத் தமிழ்ப் புலவரால் ஏற்கனவே கூறப்பட்டுளது. இன்று, சேரலாதன் பெருஞ்சோறும் கடைக் கழகக் காலத்ததேயென்று ஒரு தமிழகத் தமிழ்ப் புலவரால் கூறப்பட்டு விட்டது.
எவ்வினத்தரேனும், காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையாய் ஒரு பொருளை ஆய்ந்து அதன் உண்மை கண்டுரைப்பின் ஒப்புக் கொள்ளத்தக்கதே ஆயின், சேரலாதன் அளித்த பெருஞ்சோறு என்னுங் கட்டுரை அங்ஙனம் ஆய்ந்தெழுதியதா என்பதை இங்கு ஆய்ந்து காண்போம்.
மண்டிணிந்த நிலனும் என்று தொடங்கும் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளில்.
வான வரம்பனை நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
என்னும் பகுதிக்குப் பழைய உரையாசிரியர் உரைத்த உரை.
வான வரம்ப, பெரும, நீ. அசைந்த தலையாட்டமணிந்த குதிரையை யுடைய பாண்டவரைவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ் சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்! என்பது.
ஐவர் என்னும் தொகையடிப்பெயர். பாரதக் காலத்திற்குப் பின் தமிழிலக்கியத்திலும் வழக்கிலும் பாண்டவரையே குறித்து வந்துள்ளமை, ஐவரென் றுலகேத்தும் அரசர்கள் என்னும் கலித்தொகைத் தொடராலும் (25), ஐவருக்குந் தேவி அழியாத பத்தினி என்னும் பழமொழியாலும், அறியப்படும்) நூற்றுவர் என்னும் பெயரும், தனித்துவருமிட மெல்லாம். நூற்றுவர்பால் … தூது நடந்தானை (சிலப். ஆய்ச்சியர் குரவை) என்பதிற் போல் துரியோதனன் முதலி யோரையே குறிக்கும். இதனால் தொகைக் குறிப்பு என்னும் நன்னூல் இலக்கணத்திற்கு (நூற்பா 269). ஐவர் நூற்றுவர் என்னும் பெயர்களையே இலக்கியமாக எடுத்துக் காட்டுவர் உரையாசிரியர்.
ஐவர் என்பதற்கு நேரான பஞ்சவர் என்னும் வடசொல்லும், பஞ்சவர்க்குத் தூது நடந்தானை என்னும் ஆய்ச்சியர் குரவைத் தொடரில் (சிலப். 17) பாண்டவரையே குறித்தது.
பண்டைத் தமிழகப் பாண்டியர் ஐவராக இருந்து ஆண்டு பஞ்சவர் எனப் பெயர்பெற்றமை. இலக்கியத்தாலும், கல்வெட்டு களாலும் நிகண்டு என்னும் உரிச்சொற்றொகுதி களாலும் அறியப்பட்டதே. பதினாறாம் நூற்றாண்டில் விசுவநாத நாயக்க ரோடு பஞ்ச பாண்டியர் பொருதார் என்னும் செய்தியும் இதை வலியுறுத்தும். ஆயின், அப் பாண்டியர் ஐவருள்ளும் ஒருவனே தலைமையாக மதுரையிலிருந்து ஆண்டான் என்பதும், அவனுக்குள் ஏனைய நால்வரும் அடக்கம் என்பதும், பஞ்சவன் என்னும் ஒருமைப் பெயரே உணர்த்தும். பாண்டிவர் ஐவருள் ஒவ்வொரு வரையும் பஞ்சவன் என்னும் வழக்கமில்லை, பாண்டிவர் என்பதே மரபு.
புறநானூற் றிரண்டாஞ் செய்யுளில் வரும் ஐவர் என்னும் சொல். வழக்கும் இடமும் பற்றிமட்டுமன்றி ஈரைம் பதின்மரும் என்னும் தொடர்புடைய தொகையடிப் பெயராலும். நிலந்தலைக் கொண்ட எனத் துரியோதனன் முதலியோர்க்கு வந்துள்ள அடைமொழியாலும். பொருது களத் தொழிய என்னும் வினை முடிபாலும், பாண்டவரையே குறித்தல் வெளிப்படை இனி. பாண்டவருள் ஒருவனான நகுலன் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவனாதலின். அலங்குளைப் புரவி என்னும் அடைமொழி பாண்டவருக்குக் கொடுக்கப் பட்டுளதெனக் கொள்ளினும் பொருந்தும் பாரதப்போர் நாடுபற்றி நிகழ்ந்ததென்பது யாவரும் அறிந்தது. நூற்றுவர் யாவரும் அப் போரில் மாண்டனர் என்பதும் ஐயமறுப் பற்றதே.
மேலும், பஞ்சவர் என்னும் பன்மைப் பெயர், பாண்டியரைக் குறிக்கும்போது, முன் பின் ஆண்ட ஐந்து தலைமைப் பாண்டி யரைக் குறிக்குமேயன்றி, சமகாலத் துணைப்பாண்டியரை உளப்படுத்தாது. துணைப்பாண்டியரை உளப்படுத்துமிட மெல்லாம் பஞ்ச பாண்டியர் என விரித்துக் கூறுவதே வழக்கம். பாண் டவரைக் குறிப்பதாயின் பஞ்ச பாண்டவர் என இருசொல் வேண்டுவதில்லை; பஞ்சவர் எனினே அமையும்.
ஐவர், அல்லது பஞ்சவர் என்னும் சொல், பாண்டியர் பாண்டவர் ஆகிய இருசாரார்க்கும் பொதுவேனும், ஈரைம் பதின்மர் என்பது பாண்டியர் ஐவரின் நூறு படைத்தலைவர் என்று கொள்வது நூலிற்கு முற்றும் மாறானதாம். ஒரு பாண்டியனுக்கு இருபதின்மர் விழுக்காடு ஐவர் பாண்டியர்க்கும் நூற்றுவர் படைத்தலைவர் இருந்தனர் என்பது. வரம்பிறந்த உயர்வு நவிற்சியாம். ஐவர்க்கும் வெவ்வேறு படைத்தலைவர் என்று கொள்ளினும், ஐவர்க்குமேல் படைத்தலைவர் இருந்திருக்க முடியாது. ஓர் அரசனுக்கு எத் துணைப் பெரும்படையிருப்பினும். பெருந்தலைவன் ஒருவனாகவே யிருப்பான். பல, துணைப்படைகள் ஒருங்கு சேரினும், ஒருவனே அவற்றுக்கெல்லாம் பொதுத் தலைவனா யிருப்பான். அல்லாக் கால், படைகள் வெற்றிபெற ஒற்றுமையாகப் பொரமுடியாது. வெற்றி பெற்றெழினும் பொருது களத்தொழியினும் புறங் காட்டியோடினும், போர் விளைவெல்லாம். அரசர் அல்லது பெரும்படைத்தலைவர் மேலேயே வைத்துக் கூறப்படும். பாண்டியர் ஐவரின் படைத்தலைவர் நூற்றுவர் எனின், அவருட் பலர் செய்யுளில் விதந்து குறிப்பிடத் தகாத சிறு படைத் தலைவரே யாவர். இனி, நூற்றுவர் படைத் தலைவர், என்பது நூலுத்தி வழக்குக்குப் பொருந்தாதென்று ஈரைம் பதின்மர் என்பது ஈரொன் பதின்மர் (பதினெண்மர்) என்பதின் பாடவேறு பாடாயிருக்கலா மென்று புதுவதாகக் கருதுகின்றார். பாட வேறுபாடு கொண்டு தம் கொள்கையை நாட்டக் கருதியவர். ஈரும்பதின்மரும் என்னும் பாடம் கொண்டு, படைத்தலைவர் தொகையைப் பத்தாகக் குறைத்திருக்கலாமே!
இனி, உதியஞ்சேரலாதன் பதினெட்டு நாளும் பாரதப் படை கட்கு வழங்கிய பெருஞ்சோற்று மிகுபதத்தை, பிற்காலத்துச் சேரனொருவன் தன் படைமறவர்க் களித்த பிண்ட மேய பெருஞ் சோற்று நிலையாகக் காட்டுகின்றார் கட்டுரைகாரர். தொல் காப்பியத்தில் வஞ்சித்திணைத் துறையாகக் குறிக்கப்பட்டுள்ள பிண்ட மேய பெருங்சோற்று நிலை வழிவழி வந்த மூவேந்தர்க்கும் பொதுவேயன்றி அவருள் ஒருவனுக்கு மட்டும் சிறப்பாகவுரிய தன்று. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த் தில், அவனுக்குச் சிறப்பாகவுரிய இயல் களையும் செயல்களையும் குறிப்பிடுவதன்றி. எல்லார்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று. மேலும், ஒரு வேந்தன் போருக்குச் செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து. வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யுங் கடமையேயன்றி. வள்ளன்மை முறையில் வழங்கும் கொடையாகாது. போர்க் களத்தில் தன் வேந்தன் பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கு ஓர் உருண்டை சோறு கொடுத்தல்தானா பெரிது! இதனாலேயே பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை பாடாண் பாட்டுகளில் இடம் பெறுவதில்லை. உதியஞ் சேரலாதனது பெருஞ் சோற்று மிகுபதம் பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை யேயாயின் போர் நிகழ்த்திய எல்லா வேந்தரும் பெருஞ் சோற்று என்னும் பெயரடை (மொழி) பெற்றிருக்கலாமே!
உதியஞ்சேரலாதனது பெருஞ்சோற்று மிகுபதத்துக்குப் பல சிறப்பியல் களுண்டு. அவையாவன.
1. கைம்மாறின்மை 2. படைப்பெருமை
2. நடுநிலை 4. வரையாமை
3. சேய்மை
இச் சிறப்புப் பற்றியே உதியஞ்சேரலாதன் ஒப்புயர்வற்ற அடைமொழி பெற்றான். முடிநாகராயர் பாட்டில் பெருஞ் சோறு என்று மட்டும் குறியாது பெருஞ்சோற்று மிகுபதம் என மிகுத்துக் கூறியதும். வரையாது என்னுங் குறிப்பும். பிண்டம் என்னுஞ் சொல்லின்மையும், கவனிக்கத்தக்கன.
ராயர் என்னும் பெயர் கடைச்சங்க காலத்தில் வழங்கப் பெற வில்லை என்பது கட்டுரைகாரர் கருத்து. அது கடைச்சங்கத்திற் கும் முந்தி வழங்கிய தென்பதற்குத் தொல்காப்பியமே சான்றாம். தொல் காப்பியர் காலம் கி.மு.7 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தாகாது. ஓர் ஆள்வினைத் துறைத் தலைவன் அரசனாற் பெறுஞ் சிறப்பு மாராயம் எனப்பட்டது.
மாராயம் பெற்ற நெடுமொழி யானும் (பொருள் 63)
என்பது தொல்காப்பியம்.
மாராயமாவது மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை. பஞ்சவ மாராயன் … கொங்காள்வான் என்று கல்வெட்டில் வருதல் காண்க. அரசனாற் சிறப்பெய்திய வெற்றி மறவரின் பெற்றிமை கூறும் புறத்துறையை மாராய வஞ்சி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் (3:1).
அரசன் - அரைசன் - அரையன் - ராயன். மாவரையன் - மாராயன்.
நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகவணக்கம் மிகுந்திருந்த கீழ்நாட்டார். அவர் முடிநாகர், ஒளிநாகர், நீலநாகர் எனப் பல வகையர். முடிநாகர் நாகமுடியணிந்திருந்தவர். அவர் சூட்டு நாகர் எனப்படுவர். முடிநாகவரையர் - முடிநாகராயர். இரு சொற் றொடர்களில் அரையன் என்பது வருஞ்சொல்லாக நின்று ராயன் என்று திரிவதை மரூஉவாக அல்லது சிதைவாகக் கொள்ளல் வேண்டும். அரையன் என்னும் பெயர் தலைவன் என்னும் பொருளதாகவோ. இடுகுறிப் பெயராகவோ, இருந்திருக்கலாம். வேத காலத்திலேயே ஆரியர்க்குத் தமிழ்நாட்டொடு தொடர் பிருந்ததென ஆராய்ச்சியாளர் கூறுவதால், தென்சொற் சிதைவான ஆரியச் சொற்கள் வேதத்தில் இடம்பெற்றமை வியப்பன்று.
வானவரம்பன் என்பது வானளாவும் மலையரசன் என்றும், இமயவரம்பன் என்பது பனிமலையை (இமயத்தை) எல்லையாக வுடைய நாட்டரசன் என்றும் பொருள்படுவதாகும். இவை சேரர் பெயர்கள். இவற்றுள் முன்னது எல்லார்க்கும் பொது; பின்னது வடநாட்டை அடிப்படுத்திய ஒரு சிலர்க்கே சிறப்பு.
நூறடி உயரமுள்ள மாடங்களும் இருநூறடி யுயரமுள்ள கோபுரங்களும், வான்றோய்வனவாகவும் வானத்தைத் துளைத்து மீச்சென்றனவாகவும் உயர்வு நவிற்சியாகக் கூறப்படும்போது, பத்தாயிரம் அடி உயர்ந்த குடமலை ஏன் வான வரம்பென்று மீக்கூறப்பட முடியாது?
தமிழகத்தின் வடவெல்லை வரலாற்றிற்கெட்டிய காலமெல்லாம் வேங்கட மலையாகவே இருந்திருப்பினும், மூவேந்தருள்ளும் வலிமை மிக்கவர் அவ்வப்போது பனிமலைவரை படை யெடுத்துச் சென்று நாவலந்தேய முழுவதையும் தம் ஆட்சிக்குட் படுத்தியமை தமிழிலக்கியமும் தமிழ்நாட்டு வரலாறும் கற்றார் அனைவரும் அறிந்ததே. கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலிருந்த இராசேந்திரச் சோழன் கங்கைவரை சென்று அதைக் கைக் கொண்டான். 3 ஆம் நூற்றாண்டிலிருந்த செங்குட்டுவன் வடவரசரையெல்லாம் வணக்கிப் பனிமலையிலிருந்து கண்ணகி சிலைக்குக் கற் கொணர்ந்தான். அவன் தந்தையாகிய சேரலாதன், குமரியொடு வடவிமயத்தொரு மொழிவைத் துலகாண்ட பெருவேந்தன். 2 ஆம் நூற்றாண்டிலிருந்த கரிகால்வளவன். பனிமலை வரை வென்று, அதற்குமப்பால் படையெடுக்க முயன்றவன்.
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (பொருள். 391)
என்று தொல்காப்பியர் கூறுவதாலும் தமிழகத்தில் முதற் காலத்தில் மூவேந்தர்க்கே முடியணியும் உரிமை இருந்ததினாலும் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டுவரும் சேரசோழ பாண்டியர் குடி எனப் பரிமேலழகர் பாராட்டுவதாலும், கடைக் கழகக் காலத்திற்கு முன்பே முத்தமிழ் வேந்தரும் முழுவலி பெற்றிருந்தனர் என்பதும், அவருட் சிலரேனும் பனிமலைவரை செங்கோல் செலுத்தியிருக்க வேண்டுமென்பதும், அவ் வரலாற்றுச் சான்றுகளெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என்பதும், உய்த் துணரப்படும். இனி சோழர் காலத்திலும் கங்கைக்கரையில் தெலுங்கச் சோழர் ஆண்டனர் என்னும் செய்தியும், வடநாட்டுக் கதிரவன்குல அரசர்க்கும் திங்கள் குல அரசர்க்கும் முறையே சோழ பாண்டியரோ டிருந்தவுறவும் குமரிநாட்டுத் தோன்றிய தமிழின் தொன்மையும், இன்னும் வடநாட்டில் திரவிட மொழிகளுண் மையும், ஆரிய வருகைக்கு முன் நாவலந் தண்பொழில் முழுதும் மூவராட்சிக்குட் பட்டிருந்த தோ என ஐயுறத் தூண்டும்.
உதியன் என்பது சேரர்குடிப் பெயர். ஆதன் என்பது பண்டைக் காலத்தியற் பெயர்களுள் ஒன்று. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் வேறு; செங்குட்டுவன் தந்தையாகிய சேரலாதன் வேறு; தமிழின் தொன்மையைக் குறைக்க விரும்பும் தமிழ்ப் பகைவரே. இவ்விருவரையும் ஒருவராக மயக்குவர்.
இமயமலையை எல்லையாகக் கொண்டு சேரமன்னர் எந்தக் காலத்திலும் அரசாண்டதாகத் தெரியவில்லை என்று கட்டுரை காரர் கூறுவது. கிறித்துவுக்கு முற்பட்ட சேரவேந்தர் வரலாற்றை யெல்லாம் கண்ட பின் கூறுவதுபோல், வேடிக்கையாகத் தோன்றுகின்றது. செங்குட்டுவனிலும் சேரலாதனிலும் பெரிய சேரவேந்தர் எத்தனையோபேர். வரலாற்றுக் காலத்துக்கு முன் குமரிமுதல் பனிமலைவரை ஆண்டிருக்கலாமே!
தென்குமரி வடபெருங்கற்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோறிருத்திப்
படுவதுண்டு பகலாற்றி
யினிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல! (புறம் 17)
என்று யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையை, இமயமலையை எல்லையாகக் கொண்டு ஆண்ட சேரவேந்தரின் வழிவந்தோனாக, குறுங்கோழியூர் கிழார் பாடியிருப்பது எத்துணைத் தெள்ளிதுந் தேற்றமுமாகவுள்ளது!
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:19:22)
என்று இளங்கோவடிகள் பொதுப்படக் கூறினும், அது ஒரு தனிப்பட்ட பண்டைப் பாண்டியன் செய்தியையன்றோ எடுத் துரைக்கின்றது! அப்பாண்டியன் போல் சில, சேரவேந்தரும் பனி மலைவரை ஆண்டிருக்கலாமே! ஒரு தமிழ் வேந்தன் பனிமலையை எல்லையாகக் கொண்டு ஆள்வதென்பது, முத்தமிழ் நாடுகளுள் ஒன்றை ஆள்வதுபோல் நேரடியாக இருந்திருக்க முடியாது. தமிழகத்துக் கப்பாற்பட்ட வடவரசரிட மெல்லாம் திறை கொண்டு தன் அதிகாரத்தைச் செலுத்தியதாகவே இருந்திருக்க முடியும். அதுவும் ஆட்சியின்பாற்பட்டதே. ஆதலால். இமய மலையை எல்லையாக வுடையவன் என்னும் பொருட்கு இழுக்கில்லை யென்க.
இனி, முடிநாகராயர் பாட்டில், ஐவர் என்பது பஞ்ச பாண்டி யரையும், ஈரைம் பதின்மர் என்பது அப் பஞ்ச பாண்டியரின் படைத் தலைவர் நூற்றுவரையும், குறிக்குமென்று புத்துரை வரையும் கட்டுரைகாரர், தம் உரைக்குச் சான்றாக,
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் (புறம். 2)
என்னும் பகுதியைக் காட்டுகின்றார். குமரிக்கண்டம் கடலுள் முழுகிய பின், தமிழகத்தின் தென்கோடி குவிந்து முனையாக முடிந்ததினாலும், அம் முனைவரை சேரனுக்கு ஆள்நில மிருந்ததி னாலும், அவனாட்சிக் குட்பட்ட கடலிலேயே கதிரவன் தோன்றி மறைவதாயிற்று. இவ் வியற்கையான நிலைமையினின்று. உதியஞ் சேரலாதன் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டா னென்றும், அதனால் பாண்டியர் ஐவரும் அஞ்சிப் படையெடுத்தனர் என் றும், உய்த்துணர இடமில்லை. பாண்டியநாட்டுக் கப்பாலுள்ளதும் அதினும் பெரியதுமான சோழநாட்டைக் கைப்பற்ற வல்லவன் முதலிற் பாண்டிய நாட்டையே கைப்பற்றியிருப்பான். ஆதலால், பாண்டிய நாட்டைத் தாண்டிச் சென்று சோணாட்டைப் பிடித்தான் என்னும் செய்தி, கொக்குப் பிடிக்கும் கலை (வித்தை) போன்றதே.
இனி, பண்டைச் சேரர் கலப்படையும் வைத்திருந்ததினால், சோணாட்டையோ பாண்டிநாட்டையோ கருதாது நேரே ஈழஞ்சென்று, அதன் வடபகுதியைக் கைப்பற்றிச் சில்கால் ஆண்டிருக்கலாம். வெயிலத்துச் சென்றான், மழையத்துப் போனான் என்பன போன்ற அத்துச் சாரியை வழக்குகள், சோழ பாண்டிய நாடுகளில் வழங்காமல், சேரநாட்டிலும் யாழ்ப்பாணத் திலும் இன்றும் வழங்குவது இதற்குச் சான்றாயிருக்கலாம். சேரர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் சின்னாள் இருந்திருப்பினும், கதிரவன் சேரர் கடலிலேயே தோன்றி மறைந்த செய்தி அக்கால நிலைமைக்கு முற்றும் ஏற்பதே. முடிநாகராயரின் முரஞ்சியூர் ஈழத்தைச் சேர்ந்ததென்னும் அறிஞர் கருத்தும். அப் புலவரின் பெயருக்கும் ஞாயிற்றைப்பற்றிய அவர் கூற்றிற்கும் மிகப் பொருந்துவதாகும்.
இனி, நால்வேதம் முடிநாகராயரின் பாட்டிற் குறிக்கப் பெற்றிருப் பதால், அதுபற்றியும் அவர் தொன்மையைப் பற்றிச் சிலர் ஐயுறுவர். பாரத காலத்திலேயே ஆரிய வேதம் வியாசரால் நான்காகப் பகுப்பட்டுவிட்ட தென்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும், புராணங் கூறும். முடிநாகராயர் பாட்டு பாரதப் போருக்குப் பிற்பட்டதென்பது வெளிப்படை. ஆதலால், நால்வேதத்தை அவர் குறிப்பிட்டது அவர் தொன்மையை மறுக்காது. வேதத்தை மறை என்னுஞ் சொல்லாற் குறிக்க வில்லையே யென்றும் சிலர் மயங்குவர். பாட்டிற் குறிக்கப்பட்டது ஆரியமறை. அதற்குரிய பெயர் வேதம் என்பதே. ஆதலால், ஆரிய மறையை ஆரியச் சொல்லாலேயே குறித்தது முறையானதே. கிறித்தவ மறையைப் பைபிள் அல்லது விவிலியம் என்றும், இசலாமிய மறையைக் குரான் என்றும், குறிக்காது வேறு எச் சொல்லாற் குறிக்கமுடியும்? தமிழிலுள்ள தமிழ்மறையே மறை என்னும் சொல்லால் யாண்டும் குறிக்கப்படற்குரியதாம்.
உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான
என்னும் தொல்காப்பிய நூற்பா (அகத். 31) இறந்துபட்ட தமிழ்மறையை உணர்த்தும்.
தமிழுக்கு வேறெம்மொழிக்கும் இல்லா வகையில், அயலாராலும் தமராலும் வலிய எதிர்ப்புண்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ் இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டு விட்டமை யாலும், வரலாறும் மொழிநூலும் துணைகொண்டல்லது பெருந்தமிழ்ப் புலவரும் தமிழைச் செவ்வையாய் அறிய முடியாது. அவ்விரு நூலையும் துணை கொண்டறிந்த விடத்தும், தன்மான மும் நெஞ்சுரமும் இல்லாக்கால் உண்மையுணர முடியாது. பிறப்பொடு தொடர்புபடுத்தப்பட்ட ஆரியக் குலப்பிரிவினை யுளையில் நெடுங்காலம் முழுகிக் கிடந்தமையால், அடிமைத் தனம் ஊறிப் போன குடியிற் பிறந்த சிலர், ஆங்கில ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் கண்ட பின்னரும், தம் அடிமைத்தனத்தை விட்டு உய்வதில்லை. சில்லாண்டு கட்குமுன், ஒரு தமிழ்ப் புலவர், வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயர்கள், முறையே, வானவர் அன்பன், இமையவர் அன்பன் என்பவற்றின் சிதைவென்றும் அவ்விரு பெயரும் பிராமணர் அடிமை என்று பொருள்படுமென்றும் எழுதியிருந்தார்.
இனி, வறுமையினாலும் சிலர் அடிமைத்தனத்தை ஏற்பதுண்டு இதற்குத் தமிழைக் காக்கும் தமிழரசின்மையும் புலவரைப் போற்றும் வள்ளல்களின் மையுமே காரணம்.
எது எங்ஙனமிருப்பினும்,
பால்புளிப்பினும் பகல்இருளினும்
கோல்சாயினும் குறள்தவறினும்
நடுக்கின்றி நிற்கும் என் மதிப்புக்குரிய நண்பர் மயிலை - சீனி. வேங்கட சாமியார், தாம் வரைந்ததை மீண்டும் ஆய்ந்து பார்ப்பாராக.
தமிழ்ப்பொழில் 36 ஆம் துணர் 7 ஆம் மலரில் யான் எழுதியிருந்த கட்டுரையைக் கண்டு. வரலாற்றாராய்ச்சியாளரும் என் நண்பரு மாகிய புலவர் மயிலை சீனி. வேங்கடசாமியார் அவர்கள் அமைவார்கள் என்று கருதியிருந்தேன். ஆயின், அதற்கு மாறாக அதை மறுத்ததுடன் வேறுஞ் சில வழூஉக் கருத்துகளையும் தோற்றியுள்ளார்கள். அவர்களது எதிர்மறுப்பு பொதுவகையான செய்திபற்றியதாயின், யான் அமைந்திருப்பேன். ஆயின்,தமிழுக்குப் பேரிழுக்கம் விளைப்பதாதலின், இவ் விறுப்பை விடுக்கத் துணிந்தேன். இதற்கும் மறுப்பு வரின், அதற்கும் இறுக்க அணியமாய் (தயாராய்) இருக்கின்றேன்.
1. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்தில் - பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று என்னும் என் கூற்றில், சிறப்பித்து என்னும் சொற்பொருளை நண்பர் செவ்வையாய் உணர வில்லையென்று தெரிகின்றது.
சிறப்பு என்பது, பொதுச்சிறப்பு, தனிச்சிறப்பு என இருவகைப் படும் இவற்றுள், முன்னது பலர்க்குப் பொதுவானது; பின்னது ஒருவரிருவர்க்கே சிறப்பானது. இரவலர் ஒரு பெரும்பொருள் வேண்டின், அதனை இல்லையென்னாது ஈவது பொதுச்சிறப்பு. பெருந்தலைச் சாத்தனார்க்குக் குமணன் தன் தலையைக் கொடுக்கத் துணிந்தது தனிச்சிறப்பு.
பெருஞ்சமந் ததைந்த ….. தழங்குகுரன் முரசே என்னும் பதிற்றுப் பத்துப் பகுதியுள். பெருஞ்சோறு உகுத்தற் கெறியும் என்பது தனிச்சிறப்பு மன்று. பொதுச்சிறப்புமன்று. முரசுமுழங்கு தானை மூவருள்ளும் என்று வெள்ளைக்குடி நாகனார் பாடுவதால் (புறம். 35). பல்யானைச் செல்கெழு குட்டுவன் உகுத்த பெருஞ் சோறும், சேரன் செங்குட்டுவன் நிகழ்த்திய பெருஞ்சோற்று வஞ்சியும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை என்னும் வஞ்சித்துறைக்கு எடுத்துக்காட்டான பொதுச் செய்திகளே.
பெருஞ்சோறு கொடுப்பது மூவேந்தருக்கும் பொதுவான தென்றாலும், அதுவும் ஓர் அரசனுக்குரிய சிறப்பாகப் புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன, என்று நண்பர் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாதல் காண்க.
ஒருவரைப் பாடும் பாட்டில் பொதுச்செய்தியும் கூறப்படும்; சிறப்புச் செய்தியும் கூறப்படும். சிறப்புச் செய்தியே சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்திற்குரியதாம். ஔவையார் முல்லானைப் பாடிய பாட்டு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாம்.
பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை என்னும் பொதுவான வஞ்சித் துறை பற்றியே உதியஞ் சேரலாதன், பெருஞ்சோற்று என்னும் அடை மொழி பெற்றானாயின். அதனை நிகழ்த்திய பிறவேந்தருள், நண்பரால் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெறும் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சேரன் செங்குட்டுவனும் உதியஞ்சேரலும், ஏன் அவ் வடைமொழி பெறவில்லை? எல்லா ருக்கும் பல்லிருக்க, ஒருவனைமட்டும் ஏன் பல்லன் என்றழைக்க வேண்டும்? அதனால் அவன் பெரும்பல்லன் என்பது பெறப்பட வில்லையா? அதுபோல், எல்லா வேந்தரும் போர்க்கு முன் பெருஞ்சோறு வழங்கியிருக்கவும், அவருள் ஒருவன்மட்டும் பெருஞ்சோற்று என்னும் அடை ஏன் பெற்றிருக்க வேண்டும்? அவனைப் பாடிய புலவரெல்லாரும் நடுநிலை திறம்பியவரா? இதனாலேயே உதியஞ் சேரலாதன் வழங்கிய பெருஞ்சோறு, பிறவேந்தர் வழங்கிய பெருஞ்சோற்றினும் வேறானதென்று தெரிகின்றதே!
2. பெருஞ்சோறு என்பது அரசன் உடனிருந்துண்ணுவதால் பெருமை பெற்ற சோறு என்று நண்பர் கருதுகின்றார். அது உண்பாரின் தொகைப் பெருமையால் ஆன அளவுப் பெருமையே யன்றி வேறன்று.
சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே (புறம். 235)
என்னும் ஔவையார் புறப்பாட்டடிகளையும் அவற்றின் உரையையும் நோக்குக.
இன்றும் நாட்டுப்புறத்துக் காளியம்மை விழாப் படைப்புகளில், ஊராரெல்லாம் உடனுண்ணும் பெருஞ்சோற்றமலையைக் காணலாம். ஒரு வேந்தனின் நாற்பெரும் படைமறவரும் உடனுண்ணத்தக்க சோற்றுத் திரளை, எத்துணைப் பெரிதா யிருந்ததிருத்தல் வேண்டும்!
பிண்டம் என்பது பிண்டிக்கப்பட்ட உருண்டை, அது ஒரு சிறு கவளமன்று; ஓர் ஆடவனுக்குப் போதிய பேருருண்டை சுவை மிக்கதும் சத்துள்ளதும் மணங்கமழ்வதும் மறவுணர்ச்சிக்குப் பொருந்திய சரக்குகள் கலந்ததுமான சிறந்த புலவுவுருண்டையே. அப் பிண்டமென்றறிதல் வேண்டும். ஆயினும், போரில்லாவிடின் புலந்து கொள்ளும் தறுகண் மறவர், மறமிகுதியும் நன்றியறிவும் பற்றிப் பொருதனரேயன்றி, அரசனுடன் அமர்ந்துண்ணும் உண்டியினால் மட்டும் பொரவில்லை. அரசன் அமைதிக் காலத்தில் உயர்ந்தவனாயினும், போர்க்காலத் தில் தன் படைமறவரொடு கூடித் தானும் பொருததினாலும், போரால் ஏற்படக் கூடிய யாக்கை நிலையாமை தனக்குமுண்மை யறிந்திருப்பனாதலாலும், பிண்டமேய பெருஞ்சோற்று நிலையில் அவனுக்கு இரக்க வுணர்ச்சியினும் சமநிலைப் பட்ட மறவுணர்ச்சியே விஞ்சியிருந் திருக்கும்.
3. ராயர், வானவரம்பன், இமயவரம்பன் என்பன பற்றியும் தேவநேயர் தமது கருத்தைக் கூறியுள்ளார். அவையும் ஏற்கத் தகுந்தனவல்ல. இதுபற்றித் தனியே வேறு கட்டுரை எழுதியிருக் கிறேன், என்றார் நண்பர். அக் கட்டுரை வரின் அதையும் மறுப்பேன்.
4. முரஞ்சியூர் முடிநாகராயர் செய்யுளில் ஐவர் ஈரைம் பதின்மர் என்றும், சிலப்பதிகார வாழ்த்துக் காதை ஊசல் வரி யில். ஓரைவர், ஈரைம் பதின்மர் என்றும் வருபவை பாண்டவர் கௌரவர் என்னும் சொல்லின்மையால் பாண்ட வரையும் கௌரவரையும் குறியாவென்றும், அத் தொகைப்பட்ட வேறிரு சாராரையே குறிக்குமென்றும், நண்பர் கூறுகின்றார்.
காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையில் நின்று ஆராயும் பழக்க முடைய நண்பர்.
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே (தொல். 536)
என்னும் நூற்பாவையும்,
உய்த்துக்கொண் டுணர்தல் (தொல். 1210)
என்னும் உத்தியையும் சரியாய் உணர்ந்திருப்பாராயின், இத்தனைத் தடுமாறி இடர்ப்படார்.
காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்ட முடிநாகராயரும் இளங்கோ வடிகளும். பாரதப் போர்ச் செய்தியையே முறையே. புறப்பாட்டிலும் (2) சிலப்பதிகார வூசல்வரியிலும் பாடியுள்ளனர் என்பது, சொல்லையும் பொருளையும் நடுநிலையாய் நோக்குவார் எவர்க்கும் புலனாகாமற் போகாது.
5. முடிநாகராயர் 2 ஆம் புறப்பாட்டில் பாடிய உதியஞ் சேரலாத னும், மாமூலனார் 233 ஆம் அகப்பாட்டிற் குறித்த உதியஞ் சேரலும், ஒருவனென மயங்குகிறார் நண்பர்.
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறம். 2)
என்பது புறப்பாட்டுப் பகுதி.
மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல
கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு (அகம். 233)
என்பது அகப்பாட்டுப் பகுதி.
இவ்விரண்டையும் ஒப்புநோக்கின், கீழ்வரும் வேற்றுமை புலனாம்.
புறப்பாட்டு அகப்பாட்டு
1. பெருஞ்சோறு வழங்கியது பெருஞ்சோறு வழங்கியது
பிண்ட மேய பெருஞ்சோற்று தென்புலத்தார் கடன்
நிலை போன்ற விருந்து போன்ற சடங்கு
2. பாண்டவரையும் கௌரவரையும் பாண்டவரையும் கௌரவரையுங்
குறிக்கும் ஐவர், ஈரைம்பதின்மர் குறிக்கும் ஒரு சொல்லுமில்லை.
என்னும் சொற்கள் உள.
3. பாடப்பட்டவன் பெயர் பாடப்பட்டவன் பெயர் உதியஞ் சேரல்
உதியஞ்சேரலாதன்
4. பாடியவர் தலைக்கழகத்தார் பாடியவர் கடைக்கழகத்தார்.
இங்கிலாந் தரசருள். என்றி என்ற பெயர் கொண்டு. எண்மரும், வில்லியம் என்று பெயர் கொண்டு நால்வரும், எட்வர்டு என்று பெயர் கொண்ட எண்மரும், சியார்சு என்று பெயர் கொண்ட அறுவரும் இருந்திருக்கின்றனர். இதை நோக்கின், உதியஞ் சேரலாதன், உதியஞ்சேரல் என்னும் பெயர்களின் ஒருபுடை யொப்புமை ஒருவனைக் குறிக்குஞ் சான்றன்மை புலனாம்.
6. கடைக்கழகக் காலத்துப் பராசரன் என்னும் சோணாட்டுப் பிராமணன் சேரனிடம் பரிசுபெறச் சென்றதை.
பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
………………………………………………………
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக்
காடு நாடு மூரும் போகி
நீடுநிலை மலையம் பிற்படச் சென்று (சிலப். கட்டுரை. 55-66)
என இளங்கோவடிகள் பாடுகின்றார்.
இதில் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனின் சோற்றுக் கொடை குறிக்கப்படுகின்றது. அருஞ்சொல் உரையாசிரியரும், பெருஞ் சோறு பயந்த என்றது சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் பாரத யுத்தத்தில் எல்லோர்க்கும் உணவளித்த செய்தியை என மரபு வழாது வரைந்திருக்கின்றார். ஓர் அரசனை ஒரு புலவன் புகழும் பாட்டில், அவன் முன்னோர் செயலையும் அவன்மீது ஏற்றிக் கூறுவது செந்தமிழ்ப் பாடன் மரபு. இதை யுணராத நண்பர், பாரதப் போரில் சோறு கொடுத்த சேரனிடம் பரிசு பெற்ற பராசரன், பாரத காலத்திற்குப் பிறகு (1500 ஆண்டுக்குப் பின்னர்) இருந்த சேர அரசர்களை எப்படி வாழ்த்த முடியும்? எனக் கால மலைவு கண்டவர்போல் கேட்கின்றார்?
கோவலனுக்குக் காட்டு வழியில் எதிர்ப்பட்ட மறையோன், அக் காலத்துப் பாண்டியனை,
வாழ்க வெங்கோ மன்னவர் பெருந்தகை
யூழிதொ றூழிதொ றுலகங் காக்க
வடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்
றிடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி (சிலப். 11:15-30)
வந்திருந்ததாக இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
இதில் முன்னோர் மூவர் செயலை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மீது ஏற்றிக் கூறியிருத்தல் காண்க.
திருவாவடுதுறை மடவளாகம் திருக்கயிலை வழிமரபு என்னுங் கொள்கைபற்றி, அவ்வளாகத் தம்பிரான் ஒருவர்மீது சிவபிரான் செயலை யேற்றிப் பாடிய புலவரும் உளர். இதனோடு ஒப்புநோக்கின், பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் செயலைக் கடைக்கழகக் காலத்துச் சேரன் மீதேற்றிக் கூறியது வியப்பாகாது.
7. இரண்டு அரசர் போர் செய்தால், ஒருவர் பக்கத்திற் சேர்ந்து போர் செய்யவேண்டுவது முறை. அதனை விட்டு இரண்டு தரத்தாருக்கும் சோறு இட்டான் என்பது உலகத்திலே எங்கும் எப்பொழுதும் நிகழாத ஒன்று என எங்கு முண்மை, என்று முண்மை. எல்லாமறிதல் முதலிய இறைவன் தன்மைகளைத் தம்மீது ஏற்றிக் கொள்கிறார் நண்பர்.
என்றி தியூனன்று ஆத்திரியப் போர்க்களத்திற் செய்த அரும்பெரு நடுநிலைத் தொண்டையும், அவன் அமைத்த செஞ்சிலுவைக் கழகம் ஆற்றிவரும் அரும்பணியையும், நண்பர் எண்ணிக் காண்க.
முதல் உலகப் போரில் அமெரிக்கர் வணிகம் பற்றியேனும் இருகட்சி யாருக்கும் நெடுங்காலம் பொருளுதவியே வந்தனர். இன்றும், நல்லுறவின்றிக் கரந்த பகைகொண்ட இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் அவர் பல்வகையில் உதவி வருகின்றனர்.
நடுநிலையுதவியை இன்றுங் காணவேண்டின், நாட்டுப்புறத்தூர் ஒன்றில் அயலார் இருவரைச் சண்டையிட்டுக் காயம் பட்டு வீழச்செய்து நண்பர் காண்க.
8. போர் செய்யும் இரு கட்சியாரும் நெருங்கிய உறவாயின் ஒரு பக்கத்திலும் சேர முடியாதென்பதும், உறவுமுறை யிருந்தால்தான் ஒருவன் பிறர்க்கு உணவளிக்க முடியும் என்பதும், நண்பர் கருத்து.
பாரதப் போரில் கலந்தவருட் பெரும்பாலார் நெருங்கிய உறவினரே. போர் செய்யும் இரு படைகட்கும் உணவளிக்க வேண்டிய நிலைமைகள், பெருஞ்செல்வம், வண்மை, அன்பு, நடுநிலைமை என்பவையே. பண்டைத் தமிழ் வேளாளரின் விருந்தோம்புந் திறனையும், விருந்து என்னுஞ் சொல்லின் பொருளையும் நண்பர் ஆய்ந்து பார்க்க.
9. தமிழின் சிறப்பையோ தமிழன் சிறப்பையோ வடநூல்கள் கூறுவதில்லை. இதை நண்பர் நன்றாய் அறிந்திருந்தும் அறியாத வர் போல், மகாபாரத நூல் உதியஞ் சேரலாதன் வழங்கிய பெருஞ் சோற்றை ஏன் கூறவில்லை யென்று கேட்கின்றார்.
10. தங்கள் சேனைக்குச் சோறு கொடுக்கக்கூட இயலாத அவ்வளவு வறியவர்களா பாண்டவரும் கௌரவர்களும்? என்பது நண்பர் ஐய வினாக்களுள் ஒன்று.
பாண்டவர் வறுமையை,
முத்தூர் வெம்பணிக் கொடியோன் மூதூரி
னடந்துழவர் முன்றி றோறு
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு
நாடொன்று நல்கா னாகி
லைந்தூர்வேண் டவையிலெனி லைந்தி லம்வேண்
டவைமறுத்தா லடுபோர் வேண்டு
சிந்தூரத் திலகநுதற் சிந்து ரத்தின்
மருப்பொசித்த செங்கண் மாலே
என்னும் பாரதப் பாட்டாலறிக.
கௌரவர் செல்வரேனும் கடும் பெரும்போர் மூண்ட நிலையில் தம் உணவு வசதியைப் பிறர்போற் கவனித்திருக்க முடியாது. இதை இழவு விழுந்த பெருஞ் செல்வர் வீட்டிலும் ஏனை யுறவினர் உணவளித்துதவுவதைக் கண்டு தெளிக.
11. இருதரத்தார் போர் செய்யும்போது, இரண்டு படைக்கும் சோறு அளித்த செய்தி உலகத்தில் யாண்டும் கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை என்கிறார் நண்பர். கண்டதில்லை யெனினும் முடிநாகராயரும் இளங்கோவடிகளும் வழிவழி வந்த உரையாசிரியர் பலரும் கூறக் கேட்டிருக்கின்றாரே!
பண்டாரகர் (Dr.) உ.வே.சா. அவர்கள், தங்கள் புறநானூற்றுப் பதிப்பில், பாடப்பட்டோர் வரலாற்றில் சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதன். இவன், பாரதப்போரில் பாண்டவர் துரியோத னாதியரென்னும் இரு வகையார் சேனைக்கும் உணவளித்தான். இவ் வரலாற்றை,
ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்
கார்செய் குழலாட வாடாமோ வூசல்
கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல் (சிலப். வாழ்த்து. 25)
என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதைச் செய்யுளும் நன்கு புலப்படுத்தும். இதனாலேயே இவன் இப் பெயர் பெற்றான். இவனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், என வரைந்திருப்பதையேனும் நண்பர் கண்டு தெளிக.
குமணன் தலைகொடுக்கத் துணிந்ததும், கண்ணப்பன் கண்ணிடந் தப்பியதும். இயற்பகை நாயனார் மனைவியை அளித்ததும், சிறுத் தொண்டர் மகவரிந் தூட்டியதும், வேறெங் கேனும் கண்டதுங் கேட்டதும் உண்டோ? ஆயினும், அவை உண்மையன்றோ!
12. நண்பரது 6 ஆம் ஐயவினா 4 ஆம் ஐயவினாவின் மறுகூற்றே. இது நண்பரின் மனக்கலக்கத்தையே மறுசாய லிடுகின்றது.
13. முடிநாகராயர் புறச் செய்யுள் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதன் பாரதப் படைகட்குச் சோறு வழங்கியதைப் பற்றியதாயின், அதற்கும் கடைக்கழகக் காலத்திற்கும் இடைப்பட்ட செய்யுள் களெல்லாம் எங்கேயென்று. விளவுகின்றார் நண்பர்.
ஏரண முருவம் யோகம் இசைகணக்கிரதஞ் சாலம்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள
என்னும் பழஞ் செய்யுளே இதற்குத் தக்க விடை பல நூல்களுஞ் செய்யுள்களும், தமிழ்ப் பகைவரால் அழிக்கப்பட்டும் விட்டன.
அழிந்துபோன தமிழ்நூல்களைப்பற்றிச் செந்தமிழ்ச் செல்வியில் தொடர்ந்து அழகாக எழுதிவந்த நண்பர், தாமே தம் கூற்றை மறுப்பது மிகமிக வருந்தத்தக்கது. இதற்கொரு காரணமு மிருக்கலாம்.
இக் காலத்தில், உண்மையான தமிழ்ப் புலவர்க்கு வழங்கும் வள்ளல் ஒருவருமில்லை, காட்டிக் கொடுக்கும் கொண்டான் கட்கு வாரிக்கொடுக்கும் கொடைமடமே மிகுந்துள்ளது. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நலிந்தும் மெலிந்தும் வந்து குற்று யிராய்க் கிடக்கும் தமிழைக் கொன்றுவிடக் கூலி வாங்கும் கோடரிக் காம்புகட்குப் போன போன விடமெல்லாம் பொன்னாடை; கண்ட கண்ட விடமெல்லாம் காசு மூட்டை; இறுதிவரை பதவியுறுதி. (தமிழ்ப் பொழில் துலை 1960, கும்பம் 1961.)
சேரன் அருஞ்செயல்
கரும்பு முதலில் நியூகினியாவில் இயற்கையாக விளைந்த தென்றும், பின்னர்ச் சீனத்திற்கும் அதன்பின் பிறநாடுகட்கும் கொண்டுபோகப்பட்ட தென்றும், பிரித்தானியக் கலைக் களஞ்சியம் கூறுகின்றது. சாலி (சாவகம்) நியூகினியாப் பக்கத்தி லிருப்பதால், சீனத்திற்குமுன் சாலிக்குக் கரும்பு சென்றிருக்கும் என்பதை உய்த்துணரலாம்.
விண்ணுலகத்திற்கு மாகம் என்பது ஒரு பெயர்.
மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா. 34:15). மாகம் என்பது நாகம் எனத் திரியும்.
நாகநீள் நகரொடு நாகநாடதனொடு (சிலப். 1:21)
என்பதில், நாகநீள்நகர் என்பது தேவருலகைக் குறித்தல் காண்க. ஆகவே, நாகநாடென்பது மேலை யுலகத்திற்கும் கீழை நாடுகட்கும் பொதுப் பெயராம்.
சாலி நாட்டரசர்க்கு இந்திரன் என்னும் பட்டம் இருந்தது. வெள்ளையானை கீழைநாடுகளுள் ஒன்றாகிய கடாரத்தில் (பர்மாவில்) வாழ்ந்தது. இந்திரன் யானை வெள்ளையானை யென்றும், அதன் பெயர் ஐராவதம் என்றும் தொல்கதை கூறும், கடாரத்தில் வெள்ளையானை இருந்ததால், அங்கு ஓடும் ஆறு ஐராவதி எனப்பட்டது.
விண்ணுலகப் பெயரும் தேவர் கோன் பெயரும் வெள்ளை யானையும் கீழைநாட்டிற்கு இசைந்ததால், எண்டிசைத் தலைவருள் ஒருவனாகிய தேவர் கோனுக்குக் கீழைத்திசை குறிக்கப்பட்டது.
சேரருள் ஒருவன், இந்திரன் என்னும் பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்று, தமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கினான். அதனால், அவன் மரபில் வந்த அதிகமான் நெடுமான் அஞ்சியை,
அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பிவட் டந்து
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
………………………………………..
வழுவின் றெய்தியும் அமையாய் (புறம். 99)
என்றும், அவன் மகன் பொகுட்டெழினியை,
அந்தரத் தரும்பெற லமிழ்தம் அன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே ( 392)
என்றும், பாடினார் ஔவையார்.
இங்ஙனம், நிலவணிகரும் நீர்வணிகரும் மூவேந்தரும், ஞாலத்தின் பலவிடங்கட்கும் சென்று, ஆங்காங்குள்ள அரும் பொருள்களை யெல்லாம் கொணர்ந்து, தமிழகத்தையும் தமிழர் வாழ்க்கையை யும் வளம்படுத்தினர்.
சீனத்தினின்று கற்பூரம் கற்கண்டு சீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்பு கராம்பூ திப்பிலி (பண்டகி), முதலியனவும், மொலுக்காவினின்று அட்டிகமும் (சாதிக்காயும்), இந்தோனே சியாவென்னும் கீழிந்தியத் தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும் சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும் அடைக் காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும், ஆபு கானித் தானம் என்னும் காந்தாரத்தினின்று பெருங்காயமும், அரபியாவி னின்று அடப்பம் (வாதுமை), கொடி முந்திரி, சுராலை (சாம்பி ராணி) முதலியனவும், மேலையாசியாவினின்று கசகசா அத்திரி (கோவேறு கழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்று கொத்துமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், கொங்காரப் பூ (குங்குமப்பூ) முதலியனவும், மெகசிக்கோவினின்று மிளகாயும், அமெரிக்கா வினின்று வள்ளியென்றும் சருக்கரைவள்ளியென் றும் சொல்லப் படும் சீனிக்கிழங்கும், பிறவிடங்களி னின்றும் பிறவும், வந்து சேர்ந்தன.
கி.மு. 1500 போல் ஆரியர் இந்தியாவிற்கு வரும்வரை, தமிழ் மொழியும் தமிழிலக்கியமும் தமிழ நாகரிகமும் தமிழர் வாழ்க்கை யும், இம்மியும் ஆரியங் கலவாது முழுத்தூய நிலையில் இருந்து வந்தன.
சேலை
சேலை - சேல (c)
சீரை - சீலை - சேலை (பிங்.).
வடவர் சில் (c) என்றொரு செயற்கை மூலத்தை அமைத்துக் கொண்டு, ஆடையணிதல் என்று பொருள் கூறுவர். வ.வ.166.
சைவம்பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள்
ஆனைந்து (பஞ்ச கவ்யம்)
ஆனைந்தை (துடிசைகிழார் அ. சிதம்பரனார் கூறுகிறபடி) பால் தயிர் வெண்ணெய் மோர் நெய் என்று கொள்ளுவதே பொருத்த மாயிருக்கிறது. ஆனைந்தைப் பஞ்ச கவ்யம் என்று மொழி பெயர்த்துக் கூறினதுடன், பால், தயிர், நெய், கோமூத்திரம் சாணம் என்று பிறழக் கூறிவிட்டனர் ஆரியர்.
திருநீறு
சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி. பூதியென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ.நோ: போழ்து (பொழுது) - போது. பூதி = பொடி, தூள். பூதியை வி என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்.
உருத்திராக்கம்
உருத்திர + அக்கம் = உருத்திராக்கம்.
உருத்திரன் என்று சிவபெருமானுக் கொரு பெயர் தமிழிலேயே யிருந்தது. உருத்தல் = சினத்தல், தோன்றுதல், உரும் = நெருப்பு, சினம், இடி. உருமி = புழுங்கு. உருமம் = உச்சி வேளை. உருப்ப = அழல (புறம். 35). உரு என்ற சொல் முதலாவது. நெருப்பையும் பின்பு சினத்தையுங் குறித்தது. ஒ.நோ: அழல் - அழலுதல் = சினத்தல், கனல் - கனலுதல் = சினத்தல். சினம் நெருப்பின் தன்மையுடையது. சினம் … சுடும் (குறள். 306). நெருப்பின் தன்மை ஒளியாதலாலும், ஒளியால் பொருள்களின் வடிவந் தோன்று தலாலும், உரு என்னும் சொல் வடிவங் குறித்தது. சுவையொளி என்னுங் குறளில், காட்சியை அல்லது வடிவத்தை ஒளியென்றது காண்க.
உரு + உ = உருவு. உருவு + அம் = உருவம்.
உருவு - உருபு (வேற்றுமை வடிவம்).
உரு, உருப்படி என்னுஞ் சொற்கள், எத்துணையோ பொருள்களில் உலக வழக்கில் வழங்குகின்றன.
உருவம் என்னுந் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் ரூப என்று திரியும்.
சிவன் நெருப்பின் தன்மையும் அழிப்புத் தொழிலும் உடைய வராதலின், உருத்திரன் எனப்பட்டார். உரு + திரம் = உருத்திரம் (ருத்ரம்-வ.) = சினம். திரம் ஒரு தொழிற்பெயர் ஈறு. உருத்திரத்தை யுடையவன் உருத்திரன். உருத்திரன் என்னும் தமிழ்ப் பெயரையே, ருத்ர என்னும் ஆரிய வடிவில் சினக்குறிப்புத் தோன்றுங் கடுங்காற்றிற்குப் பெயராயிட்டனர் ஆரியர் என்க.
அக்கம் = கூலம் (தானியம்), மணி, அக்கம் - அக்கு.
அஃகஞ் கருக்கேல் என்றார் ஔவையார். கூலம் மணியென்றும் பொருள்படுவதை, நென்மணி யென்னும் வழக்காலறிக.
கொக்கிற கக்கம் (திருப்பு. 416)
உருத்திரன்பற்றி யணியப்படும் அக்கம் உருத்திராக்கம். நீட்டற் புணர்ச்சி (தீர்க்க சந்தி) யும், மரூஉ முறையில் தமிழுக்குச் சிறுபான்மை யுண்டென்பதை, மராடி, குளாம்பல், எனாது, குணாது என்னும் வழக்குகளால் உணர்க.
உருத்திராக்கத்தின் சிறப்புப் பண்பை, பூதநூலும் (Physics) நிலைத்திணை நூலும் (Botany) அறிந்தவர் ஆராய்ந்து கூற வேண்டும்.
உருத்திராக்கத்தை ருத்திராக்ஷம் என்று திரித்து, ருத்திரனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஒரு கதை கட்டினர் ஆரியப் பழைமையர். இங்ஙனம் கூறுவதற்குக் காரணம். ரா (Ra) என்னும் (சூரியத்) தெய்வத்தின் கண்ணீரே மழையென்றும், அதிலிருந்து பயிர்பச்சைகள் தோன்றுகின்றனவென்றும், பண்டை யெகிபதில் வழங்கிய ஒரு பழைமைக் கொள்கையை, மேலையாசியாவி லிருந்த போது ஆரியர் கேட்டறிந்ததே யென்று தோன்றுகின்றது.
பிற்காலத்தில், ருத்திராக்ஷம் வடநூற் பொருளையொட்டிக் கண்மணியென மொழிபெயர்க்கப்பட்டது.
ஓ(ம்), குரு, தீக்கை (தீக்ஷா) என்பனவும் தமிழ்ச்சொற்களாகவே தோன்று கின்றன. ஓங்காரத்திற்கு இன்றும் தமிழ் வரிவடிவமே எழுதப்படுவதையும், உரு என்னும் சொல் போன்றே குரு என்னும் சொல்லும், வெப்பம் தோற்றம் சிவப்பு என்று பொருள் படுவதையும், தீக்கை என்பது குரு பருவான்மாவின் மலத்தைக் காண்டல் தீண்டல் முதலியவற்றால் தீத்து (எரித்து) விடுதலைக் குறித்தலையும் நோக்குக.
ஓ - ஓங்காரம் ஒ.நோ: ரீ - ரீங்காரம்.
ஓ = அ + உ என்று வடமொழிப் புணர்ச்சிப்படி பிரித்தது பிற்காலம். ஆசிரியன் என்பதன் பொருளைத் தழுவி. குரு என்பதில், கு = குற்சிதம், ரு = ருத்திரன் என்று கூறுவது. News என்பது North East West South என்னும் நாற்றிசைச் செய்தி குறிப்பது என்று அப் பெயர்க்குக் காரணம் கூறுவது போன்றதே.
ஓம் என்னுஞ் சொல் எல்லாவற்றையும் படைக்கும் மூல ஆற்றலைக் குறிப்பதென்று கொள்ளினும், பாதுகாப்புப் பொருளதென்று கொள்ளினும், தமிழ்ச்சொல்லே யென்பதற்கு எள்ளளவும் தடையில்லை.
ஓ என்பது உயரச் சுட்டு. அது உயரமாய் வளர்தலையும் வளர்த்தலையுங் குறிக்கும். வளர்த்தல் காத்தல். ஒ.நோ: ஏ - எ - எடு. எடுத்தல் = வளர்த்தல். Rear, v.t. (orig.) to raise, to bring up to maturity. [A.S. roeran, to raise].
ஓ - ஓம் - ஓம்பு. ஒ.நோ; ஏ - ஏம் - ஏம்பு. ஆ - அ - அம் - அம்பு - அம்பர். கும் - கும்பு. திரும் - திரும்பு.
ஓம் = காப்பு. ஓம் + படு = ஓம்படு. ஓம்படு + ஐ = ஓம்படை = பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல். ஓம்படுத்துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயு முள்ளது. ஓம்படுதல் தன்வினை. ஓம்படுத்தல் பிறவினை. வழிப்படுத்துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக.
**மதம்பற்றிய சில பொதுச்சொற்கள்
மாயை
மாய் + ஐ = மாயை. ஒ.நோ: சாய் + ஐ = சாயை = நிழல். மாய் + அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு. மயக்கம் என்னும் பொருளன. மாயமாய்க் காணோம், மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச் சொற்களை மாயா சாயா என்று ஆகார வீறாக்கின வளவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற் கிடமானதே.
மதந்தழுவிய சில கருத்துகள்
வீடு
ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப்போல, வெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற்குரியதுமானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர்.
விடு - வீ = (பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை, துறக்கம், உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம்.
ஏழுலகம்
பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங்களாயிருந்த மையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்ப தாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி, எழுகோள்களினின்றும் ஏழுலக வுணர்ச்சி யுண்டான தாகவுங் கொள்ளலாம்.
ஏழுலகத்தைக் குறிப்பதற்கே எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க.
எழு தீவுகளையுஞ் சுற்றியுள்ள கடல்களை எழுகடல் என்றனர் முன்னோர். ஒ.நோ: Indian Ocean, Atlantic Ocean (from Mount Atlas, in the northwest of Africa). எழுகடல்களை நன்னீர், உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவற்றால் நிறைந்ததாகப் பிறழக் கூறினர் ஆரியப் பழைமையர்.
எழுபிறப்பு
ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயி ரீறாக ஆறும், தேவர் பிறப் பொன்று மாக, உயிரடைவது ஏழ் பிறப்பென்று தமிழர் கொண்டனர். இவற்றைத் தேவர் மாந்தர் விலங்கு பறவை நீர்வாழ்வன ஊர்வன நிலைத்திணை என வேறொரு வகையாயெண்ணியதுடன், மாந்தர்க்குள்ளேயே சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் என முறையே உயர்ந்த நால்வகைப் பிறப்புள்ளதாகவும். பிராமணப் பிறப்பு ஒரு விரிவளர்ச்சி (Evolution) யெனவும் கூறினர் ஆரியப் பார்ப்பனர்.
பிறப்பா லுயர்வுதாழ்வு வகுப்பது (இந்திய) ஆரியக் கொள்கை: தமிழர் கொள்கையன்று. பிரமாவே மக்களை நாற்குலமாகப் படைத்தாரென்றால், ஏனை நாடுகளில் ஏன் அங்ஙனம் படைக்க வில்லை? இந்தியாவில் மட்டும் ஏன் படைக்க வேண்டும்? அதிலும் தமிழரை ஏன் படைக்கவில்லை? இந்துக்கள் கிறித்த வரும் இலாமியருமானவுடன் ஏன் பிரமாவின் படைப்பு அவர்களைத் தாக்குவதில்லை? இதனால், பிறப்பாற் சிறப்புக் கொள்கை ஆரியராற் புகுத்தப்பட்ட தந்நலக் கருத்தேயன்றி வேறன்றென்க. இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுப்பது இதைப்போன்ற வேறொன்றுமில்லை. அயல்நாடு சென்றால் கண்திறக்குமென்ற கருத்துப்பற்றியே, இடைக்காலத்தில் இந்தியர் அயல்நாடு செல்வது ஆரியத்தால் தடுக்கப்பட்டிருந்த தென்க.
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972)
என்றார் திருவள்ளுவர்.
மக்கள் வரவரப் பெருகி வருதலையும், அதனாற் குலமும் பெருகி வருதலையும், ஒருகாலத்தில் குலமேயில்லா திருந்ததையும் நோக்குக. கபிலரகவலையுங் காண்க.
முப்படிவம் (திரிமூர்த்தம்)
மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம்பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும். அதன்பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத்தொழிலும் கூறப்பட்டன. பின்பு படைப் புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப் பட்டது. ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.
இதே,
தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா
மந்த மாதி யென்மனார் புலவர்
என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.
பிராமணர் தென்னாட்டிற்கு வந்தபின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குலமுதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளா மையால் அவருக்குக் கோயில்வழிபா டேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.
பிராமணரின் குலமுதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரமதாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்கு ளாலும், வீரமகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாவைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தி யாலும் உணரப்படும்.
திருமால் முகில்வடிவின ராதலின், மேகத்தைச் சமுத்திர மென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர், திருமால் வணக்கம் வரவரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப்பட்டார் போலும். ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலைமகள் (சரவதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ் மாது என மொழிப்பெயராற் கூறினரேயன்றிக் கலைப்பெயராற் கூற வில்லை. ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கின மையின்.
பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான். அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபவனாதலின், உலகக் கருமான் (விசுவகர்மா) எனப்பட்டான். உலக விடைகழி என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், கருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே.
உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்றும் பெயருண்டு. ஒ.நோ: Gk. architekton - archi, chief, and tekton, a builder, E. architeet.
ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் கருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம் பிரிவிருப்பதாலும், உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்று தொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.
பிராமணர் தம் குலமுதல்வராகிய பிரமனைப் படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர் மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தது பிற்காலமாதலின், பிரமாவை நான்முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவுபற்றியே யிருத்தல் வேண்டும்.
அறுமுறை வாழ்த்து
பாடாண்பொருள் புகழ்ச்சி, வாழ்த்து, வழுத்து என மூவகைப்படும். புகழ்ச்சியாவது ஒருவரைச் சிறப்பித்துக் கூறல்; வாழ்த்தாவது ஒருவரை நீடு வாழ்கவென்றல்: வழுத்தாவது ஒரு தெய்வத்தைப் பராவுதல்.
அமரர்கண் முடியும் அறுவகை யானும் (புறத். 21) என்பதால், வாழ்த்தப்படுபொருள் ஆறென்றார் தொல்காப்பியர். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம் என்று கூறினர் நச்சினார்க்கினியர். இவற்றுள், பார்ப்பார் முற்காலத்துக் கேற்காமையின், அவர்க்குப் பதிலாய்க் கூறத்தக்கது அறமேயாகும்.
கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத். 27)
என்பது தொல்காப்பிய நூற்பா.
இதில் கொடி நிலை கந்தழி வள்ளி என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கூறினர். அவற்றுள் மு. இராகவையங்கார் அவர்கள் கூறியதே உண்மையான பொருளாகும். அது அவை முறையே வான் நீத்தார் அறன் என்பன என்பது.
முதலன மூன்றும் என்றதனால் முன்னாற் கூறப்பட்ட முதன் மூன்று பொருளும் என்றும், வடுநீங்கு சிறப்பின் என்றதனால், அவை மிகுந்த சிறப்புடையவை என்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பதனால், அவை கடவுள் வாழ்த்தொடு சேர்ந்துவருமென்றும் பொருள்படுவதாலும், முதலன மூன்றும் என்ற சுட்டு, அமரர்கண் முடியும் அறுவகையைத் தவிர வேறொன் றையும் தழுவ முடியாமையானும், கொடி நிலை கந்தழி வள்ளி என்ற மூன்றற்கும் ஐயங்கார் அவர்கள் கூறிய பொருள் அமரர் கண் முடியும் அறுவகையில் மூன்றாயமை தலானும், இதற்குச் சிறந்த பழந்தமிழ் நூலாகிய திருக்குறட் பாயிரம் காட்டா யிருத்தலானும், வேறோருரைக்கு இடமில்லை யென்க.
கடவுள் வாழ்த்து என்னும் பெயரும், அதன்பின் கொடி நிலை கந்தழி வள்ளி என்ற முறையும், திருக்குறட் பாயிரத்தில் அமைந் திருப்பதை நோக்குக.
சொம்
சொம்1 - வ (இ.வே.)
சும்மை = தொகுதி, கூட்டம்.
சும் - சொம் - (சொந்து) - சொந்தம் = தன்னொடு கூடியது.
சொம்2 - வ, வாம். (இ.வே).
சும் -சும்மை = தொகுதி, செல்வத் தொகுதி.
சும் - சொம் = சொத்து. முதுசொம் = முன்னோர் தேட்டு.
சொம் - சொத்து. ஒ.நோ: தொகை = தொகுதி, செல்வம்.
வாம் = சொத்து. தேவவாம் = தெய்வச் சொத்து, கோயிற் சொத்து.
வாம் - வாமி - வாமின் = சொத்துக்காரன், ஆண்டை, ஆண்டவன், தெய்வம்.
வடவர் வாமின் என்னுஞ் சொல்லை வ + மின் என்று பகுத்து, சொந்தக்காரன், உடையவன், உரிமையாளன், தலைவன், கணவன், அரசன், குரு, தெய்வப் படிமை என்று பொருள் தொடுப்பர்.
சொல்வேர் காண்வழிகள்
சொற்பிறப்பியல் என்பது சொற்களின் உண்மையான வரலாற்றைக் கூறுவதே யன்றி ஒலிமுறை தழுவியும் உன்னிப்பாகவும் குறிக்கோள் கொண்டும் கூறுவதன்று. இதை ‘Etymology’ என்னும் பெயரே உணர்த்தும். Gk. etumos = true; etumon = original form of a word; etumologia - E. etymology = account of facts relating to formation and meaning of word.
சொற்பிறப்பியல் என்பது ஒரு தனி அறிவியற் றுறையாதலின். அதற்குரிய நெறிமுறைகளையெல்லாம் அறிந்த பின்னரே சொற்கட்கு வேர்காணும் ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும். அல்லாக்கால், பின்வருமாறு எழுவகை வழுமுடிபாகவே முடியும்.
1. ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology)
எ-டு: பாராளுமன்று - Parliament (F. Parleiament). பார். ஆளும். மன்று என முப்பெயர்ச் சொல் கொண்டது தமிழ்ச் சொற்றொடர். Parler (to speak) என்னும் பிரெஞ்சு வினைமுதனிலையும் ment என்னும் ஈறும் கொண்டது ஆங்கிலச்சொல். ஆதலால் இரண்டும் வெவ்வேறாம்.
2. உன்னிப்புச் சொல்லியல் (Guessing Etymology)
எ-டு: வடு - வடை (நடுவில் துளையாகிய குற்றமுள்ளது). இது சரியன்று. உழுத்தமா பிசுபிசுப்புத் தன்மையுடைமையால், எளிதில் எண்ணெய் ஊடுருவி வேகுமாறு உழுந்து வடையின் நடுவில் துளையிடப் பெறும். இது வடுவன்று.
வள் - வட்டை - வடை - வ. வடா. வட்டமானது வடை. இதுவே உண்மையான பொருள்.
3. குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology)
எ-டு: வெறு - வெறுக்கை (வெறுக்கப்படத்தக்கது) = செல்வம். வ. முக்தா (சிப்பியினின்று விடுதலை பெற்றது) - த. முத்தம் - முத்து. இக் கூற்றுகள் சரியல்ல. இவற்றுள் முன்னது துறவியர் கூற்று; பின்னது வடவர் கூற்று. வெறுத்தல் = செறிதல், நிறைதல், வெறுக்கை = திரண்ட செல்வம்.
விறப்பும் உறப்பும் வெறிப்புஞ் செறிவே (தொல். சொல். 830)
முத்து = உருண்டையானது. முத்து - முத்தம் - வ.முக்தா. இவையே உண்மை யான பொருள்.
4. அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology)
எ-டு: உண்மை = உள்ளத்தொடு (கருத்தொடு) பொருந்தியது. வாய்மை = வாயொடு (சொல்லொடு) பொருந்தியது. மெய்ம்மை = உடம்பொடு (செயலொடு) பொருந்தியது. இம் முறைப் பொருட்கூற்றுச் சரியன்று. உண்மை = உள்ளது. வாய்மை = தேற்றமாய் வாய்ப்பது (நிறைவேறுவது). மெய்ம்மை = உடம்பு போற் கண்கூடானது (substantiality). இங்ஙனம் கொள்வதே பொருத்தமானது.
5. நகையாட்டுச் சொல்லியல் (Playful Etymology)
எ-டு: தோசை = சுடும்போது இருமுறை சை யென்ற ஓசை கேட்பது. இஃது ஒரு வேடிக்கைக் கூற்று. தோய்தல் = மாப்புளித்தல். தோய் - தோயை - தோசை என்பதே பொருத்தம். தோசையைத் தோயப்பம் என்னும் வழக்கை நோக்குக.
6. பொருந்தப் புகல்வுச் சொல்லியல் (Plausible Etymology)
எ-டு: பெருச்சாளி = பெரிய பணப்பை போன்றது. இது காளமேகர் கூற்று. பெருத்த எலி = பெருச்சாளி என்பதே உண்மையோடு பொருந்தியது.
7. அறிவாரவாரச் சொல்லியல் (Pedantic Etymology)
கீழ் = ஞாலம் உருளும்போது கிழக்குத் திசையிற் கீழ்நோக்கிச் செல்வது; மேல் = அது அங்ஙனம் உருளும்போது மேற்குத் திசையில் மேனோக்கி எழுவது. இது கணியர் திறம்படக் கூறுவது. கீழ் = தமிழ் நிலப்பரப்புக் கீழ்க்கோடியில் கடலாற் பள்ளமா யிருப்பது. மேல் = அது மேற்கோடியில் மலைத் தொடரால் மேடாயிருப்பது. இது கால்டுவெலார் கூற்று. இதுவே உண்மை யானது.
இனி, உண்மைச் சொல்லியல் நெறிமுறைகளும் சொல்வேர் காணும் வழிவகைகளும் வருமாறு :
1. இலக்கண அறிவுடைமை
ஒவ்வொரு பகுசொற்கும், முதனிலை, ஈறு, இடைநிலை, சாரியை, புணர்ச்சி, திரிபு ஆகிய அறுவகை யுறுப்புகள் அமைந்துள்ள வரை பகுத்தறியத் தெரிதல் வேண்டும்.
2. மொழிநூலறிவும் மொழியாராய்ச்சியும்
வரலாற்று மொழிநூல் (Philology) அறிவும் சொந்த மொழி யாராய்ச்சியும் அடுத்து வேண்டப்பெறும் இன்றியமையாத் தகுதியாகும்.
3. சொல்லிய லறிவுப்பேறு
கீற்று (Skeat) எழுதியுள்ள ஆங்கிலச் சொல்லியல் நெறிமுறை களையும் (Principles of English Etymology - 2 Vols) சேம்பரரும் (Chambers) தொகுத்த ஆங்கிலச் சொல்லியல் (Etymological) அகர முதலிகளையும், கற்றுத் தெளிதல் வேண்டும்.
4. அயன்மொழி யறிவு
மலையாளம் தெலுங்கு போன்ற அகப்புற மொழிகளையும், மராட்டி இந்தி போன்ற புறமொழிகளையும், ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம் போன்ற புறப்புறமொழிகளையும் ஓரளவு கற்றலும் வேண்டும்.
தன்சொற்போல் தமிழில் வந்து வழங்கும் வேற்றுச் சொல்லையும், வேற்றுச் சொற்போல் பிறமொழிச் சென்று வழங்கும் தன் சொல்லையும் பிரித்தறிதற்கு அயன்மொழியறிவு இன்றியமையாத தாம்.
5. பெரும்பால் தமிழ்ச்சொற் பொருளறிவு
இருவகை வழக்கிலுமுள்ள தமிழ்ச் சொற்களும் பெரும்பாலான வற்றின் பொருளை அறிந்திருத்தல் வேண்டும்.
6. தமிழ் ஒலியியல்பறிதல்
தமிழ் முதன்முதல் குமரிநாட்டில் தோன்றிய மெல்லொலி மொழியாதலின், வல்லொலி மிக்க திராவிட மொழிகளையும் ஆரிய மொழிகளையும் அடிப்படையாக வைத்தாராயின், உண்மை காண முடியாது. தமிழின் உண்மையான ஒலியியல்பையும் சொற் றூய்மையையும் அறிய விரும்புவார். இற்றைத் தென்பாண்டி நாடாகிய நெல்லை வட்டார நாட்டுப்புற உலக வாழக்கை அறிதல் இன்றியமையாததாம். தமிழின் மெல்லொலிகளே திராவிடத் திலும் ஆரியத்திலும் வல்லொலிகளாய்த் திரிந்துள்ளன.
v-L: brŒ - ceyu (bj.), கம்பு - gumpu(bj.) கல் - khal (பிரா). பாகம் bhaga (வ).
7. எழுத்துகளின் திரிபுகளை யறிதல்
சொல்லாக்க முறையில், ஒவ்வொரெழுத்தும் சில்வேறெழுத்தும் பல்வேறெழுத்துமாகத் திரிகின்றது. அத் திரிபுகளையெல்லாம் அறியாக்கால் பல சொல்வேர்களைக் காண்டல் அரிதாம்.
எ-டு: ள - ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு.
ள - க : உளி - உகிர். தளை - தகை.
ள - ச : உளி - உசி - ஊசி - வ. சூசி.
ள - ட : நளி - நடி. மகள் - மகடூஉ.
ள - ண : பெள் - பெண், வள் - வளர் - வணர்.
ள - ய : தொள் - தொய், மாள் - மாய்.
ள - ர : நீள் - நீர், வள் - வார்.
ள - ல : கொள் - கொல்.
ள - ழ : காள் - காழ், துளசி - துழாய்.
ள - ற : தெள் - தெறு - தெற்று, வெள் - வெறு.
ள - ன : முளை - முனை, வளை - வனை.
8. சொற்றிரிபறிதல்
எ-டு: அரம் (சிவப்பு) - அரத்தம் (சிவப்பு) - அரத்தி - அத்தி = சிவந்த பழம். அப் பழமரம். அகல் - ஆல் = அகன்று படரும் மரம். கோநாய் - ஓநாய். தமப்பன் - தகப்பன். தகு + அப்பன் என்று பிரிப்பது தவறாம்.
9. சொற்களின் திருந்திய வடிவறிதல்
இடைகழி - டேழி (கொச்சை) - ரேழி (கொச்சை), மணித்தக்காளி – மணத் தக்காளி (கொச்சை). டேழி, ரேழி, மணத்தக்காளி என்னும் கொச்சை வடிகளினின்று, வேரையும் வேர்ப்பொருளை யும் அறியமுடியாது.
10. பலபொரு ளொருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல்
சில சொற்கள் வெவ்வேறு பொருள்கொண்ட வெவ்வேறு வேரினின்று பிறந்து ஒரு வடிவு கொண்டு நிற்கும். அவற்றை வேறு படுத்தியறிதல் வேண்டும்.
எ-டு:
மணி = கரியது.
மல் - மால் = கருமை, முகில், கரிய திருமால்.
மால் - மாரி = முகில், மழை, கரிய காளி.
மால் - மா = கருமை, மா - மாயோன் = கரிய திருமால்.
மாயோள் = கரிய காளி.
மல் - மள் - மறு = களங்கம், கரும்புள்ளி.
மள் - (மய்) - மை = கருமை, முகில், காராடு.
மள் - மழை = முகில், முகில் நீர்.
மள் - மண் - மணி = நீலக்கல், கரும்பாசி.
மணிமிடற்றோன் = கரிய கழுத்துள்ள சிவன். மணிவண்ணன் = கரிய திருமால்.
மணி2 = வட்டமானது.
முள் - முரு - முருகு = வளைந்த காதணி.
முரு - முரி - மூரி = வளைவு.
முரி - முறி - மறி. முரு - முறு - முற்று.
முறு - முறை - மிறை = வளைவு.
முள் - (முண்) - (முணம்) - முடம். (முணம்) - முணங்கு - முடங்கு - மடங்கு.
முள் - (மள்) - மண்டு - மண்டலம் = வட்டம்.
மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை வளைத்தல்.
முள் - முட்டு - முட்டை = உருண்டையானது.
முள் - முண்டு = உருண்ட கட்டை
முள் - முடி - முடிச்சு.
முள் - (முண்) - (மண்) - மணி = ஓசைமிக்க வட்டமான வெண் கலத்தட்டு. அதைப்போல் ஒலிக்கும் நாழிமணி. வட்டமான கடிகையாரம் (கடிகாரம்).
மணி3 = சிறியது.
முல் - முன் - முனி = யானைக்குட்டி.
முன் - முன்னி, முன்னை = சிறுபயறு.
முல் - முள் - முளை - முளையன் = சிறுவன்.
முள் - முட்டு - மொட்டு - மொட்டை.
முட்டுக் குரும்பை = இளங் குரும்பை.
மொட்டைப் பையன் = சிறுவன், இளைஞன்.
முள் - மள் - மழ - மழவு = இளமை.
மள் - மண் - மணி = சிறியது, மணிக்காடை, மணிக்காக்கை, மணிக்குடல், மணிப்பயறு, மணிப்புறா முதலிய வழக்குகளை நோக்குக.
மணி - மாணி = சிறுவன், பள்ளிச் சிறுவன், மணமாகா இளைஞன்.
மணி4 = ஒளியுள்ளது.
மண்ணுதல் = கழுவுதல், மினுக்குதல்.
மண்ணுறு மணியின் (புறம். 147)
மண் - மண்ணி - மணி = ஒளிக்கல்.
11. சொற்களைச் செவ்வையாய்ப் பிரித்தல்
உடக்கெடுத்துப் போதல் = உடக்கு + எடுத்துப் போதல் (கூடாதல், தோலும் எலும்புமாதல், மிக மெலிதல்). இதை உடல் கெடுத்துப் போதல் என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பிரித்திருப்பது தவறாம்.
உடங்கு - உடக்கு = உடம்புக்கூடு.
12. பொருள்களின் சிறப்பியல்பறிதல்
ஒவ்வொரு பொருளின் (பார்த்தமட்டிற் கண்ணைக் கவரும்) சிறப்பியல்பை யும் உற்றுநோக்கியே, அததற்குரிய பெயரை இட்டிருக்கின்றனர் முன்னைத் தமிழர்.
எ-டு: காகா(காக்கா) என்று கரைவது காகம்(காக்கை). மூன்று அணிகளை (வரிகளை) முதுகில் உடையது அணில். இருமை (கருமை) யான மாட்டினம் எருமை. வழுவழுவென்றிருக்கும் மரம் வாழை.
முடிவேய்ந்த பேரரசன் வேந்தன். வேய்தல் = முடியணிதல். வேய்ந்தோன் - வேந்தன். கொன்றை வேய்ந்தானை (சிவனைக்) கொன்றை வேந்தன் என்று கூறுதல் காண்க. சேர சோழ பாண்டிய முக்குடியரசர்க்கே முடியணியும் உரிமை முதற்காலத்திலிருந்தது.
13. பொருள் வரிசையறிதல்
எ-டு: அருகுதல் = சிறுத்தல், ஒடுங்குதல், அரு - அரை= சிறுத்த அல்லது ஒடுங்கிய இடை. உடம்பின் நடு. பாதி, கோல் - கால் = கம்பம். தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு. உடம்பின் காற்பகுதி, காற்பகுதி (நாலிலொன்று).
உடம்பின் பாதியளவாயிருப்பது அரையென்றும், நாலிலொரு பகுதியா யிருப்பது காலென்றும், தலைகீழாய்ப் பொருட்கரணியங் காட்டுவது உண்மைக்கு நேர்மாறாம்.
14. ஒப்புமையமைப்பு (Analogy) அறிதல்
எ-டு: குழல் - குடல். புழல் - புடல் - புடலை - க. படல. தெ. பொட்ல. வ. பட்டோலிக்கா, கடை - கடலை, விடை - விடலை - L. vitula.
மை - மயிர், தை - தயிர், தைத்தல் குத்துதல், முட்குத்தினால் முள் தைத்தது என்பர். பாலிற் பிரைமோர் ஊற்றுதலைப் பிரைகுத்துதல் என்பது உலக வழக்கு. பிரை தைத்தது தயிர் - வ. ததி (dadhi), இ. தஹீ.
15. வரலாற்றறிவையும் ஞாலநூலறிவையும் துணைக்கோடல்
எ-டு: பாண்டவர் தோன்று முன்னரே பாண்டியர் தென்னாட்டை ஆண்டு வந்தனர். பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் திரு நீராடத் தென்னாடு வந்து. சித்திராங்கதன் என்று பாரதங் கூறும் ஒரு பாண்டியன் மகளை மணந்தான். ஆரியர் இந்தியாவிற்குள் அடி வைக்கு முன்னரே, பாண்டியர் வரலாற்றிற் கெட்டாத தொன்மையிலிருந்து கணக்கில் காலம் தென்றமிழ் நாட்டை ஆண்டு வந்திருக்கின்றனர். திருக்குறளுக்கு ஆரிய அடிப்படையில் உரை வரைந்த பரிமேலழகரும். பழங்குடிக்குப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டுவரும் சேர சோழ பாண்டியர் குடிகள் என்று மூவேந்தர் குடிகளை எடுத்துக் காட்டினர். இங்ஙன மிருந்தும், பாண்டியன் என்னும் பெயர் பாண்ட்ய (Pandya) என்னும் வடசொல்லினின்று திரிந்ததாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி நெஞ்சாரப் பொய்க்கின்றது. இதை ஊழியிறுதிச் சூறாவளிபோற் சுழற்றி யெறிவது குமரிக்கண்டத் தமிழக வரலாறே. பாண்டி = காளை, மறவன், பாண்டி - பாண்டியன்.
சாமை படைப்புக்காலந் தொட்டுத் தென்னாட்டில் விளைந்து வரும் தொண் (ஒன்பான்) கூலங்களுள் ஒன்றாகும். இன்றும் அது நாட்டுப்புற உழவர்க்கு உரிய ஒழுங்கான உணவு வகைகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது. ஆயினும், அதன் பெயர் ச்யாமா என்னும் வடசொல்லின் திரிபாக, மேற்குறித்த பொய்க்களஞ்சியம் துணிந்து கூறுகின்றது. இதனை வெட்டி வீழ்ப்பது ஞால நூலறிவே.
சாமைப் பயிர்போல் ஒரு புல்லும் உண்டு. அது சாமைப்புல் எனப்படும். சாமை என்னும் தென்சொல்லையே வடமொழியாளர் ச்யாமா என்று திரித்துத் தமிழரை ஏமாற்றி வருகின்றனர்.
16. இடுகுறி தமிழில் இல்லையென் றுணர்தல்
தமிழ்தானே தோன்றிய இயன்மொழி யாதலின், அதிலுள்ள எல்லாச் சொற்களும் கரணியக் குறிகளே. சிலவற்றின் வேர்ப் பொருள் பார்த்தமட்டில் தெரியும்.
எ-டு: சுடலை < சுடல் < சுடு < சுள்.
சிலவற்றின் வேர்ப்பொருள் ஆழ்ந்து ஆய்ந்தாலன்றித் தோன்றா.
எ-டு: வினை < விளை. இவ் வுண்மைகளையே.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். 640)
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். 877)
என்று தொல்காப்பியர் குறித்தார்.
நன்னூலுரையாசிரியர் இடுகுறியாகக் காட்டியுள்ள தமிழ்ச் சொற்களெல்லாம் கரணியக் குறிகளே. பலா = பருத்த பழத்தை யுடையது. பனை = கூரிய பல்போன்ற கருக்குமட்டை யுள்ளது. பொன் = பொற்பு அல்லது பொலிவுள்ளது. மரம் = மரத்தது அல்லது உணர்ச்சியற்றது போன்றிருப்பது. மா = கொட்டைக்குள் வண்டுள்ளது.
ஆரிய மொழிகள் திரிபுடை மொழிகளாதலின், அவற்றிற் பல சொற்கள் வேர்ப்பொருள் தோன்றாவாறு திரிந்திருப்பதுடன், பல இடுகுறிச் சொற்களும், சிறப்பாகச் சமற்கிருதத்தில் அமைந் துள்ளன. அதனால் சமற்கிருதத்தை அடிப்படையாக வைத் தாய்ந்த மேலை மொழிநூலாசிரியர், எல்லா மொழிகளும் இடு குறித் தொகுதிகளே என்பதை அடிப்படை நெறிமுறையாகக் கொண்ட வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) என்னும் வழுப்பட்ட மொழியியல் வகையை உலகமுழுதும் பரப்பி வருகின்றனர். உண்மையான வரலாற்று மொழியாராய்ச் சியால் சமற்கிருத இழிவும் ஆரிய ஏமாற்றமும் உலகிற்கு வெளிப் பட்டுவிடுமே யென்று அஞ்சும் வடமொழியாளர், புதிதாய்த் தோன்றியுள்ள வண்ணனை மொழிநூல் தமக்கொரு கேடகமா யிருப்பது கண்டு, அதனை நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தி வளர்த்து வருகின்றனர். அவரடியாரான கொண்டான்மாரும் தமிழைக் காட்டிக் கொடுப்பதற்கு இது தலைசிறந்த வழியா யிருப்பதறிந்து, இதனைத் தலைமேல் தாங்கி நிற்கின்றனர்.
ஒரு பொருளை எங்கெங்குந் தேடியும் காணமுடியாதென்று முழு நம்பிக்கை கொண்டவனுக்கு, எங்ஙன் தேடன் முயற்சி பிறக்கும்? எல்லாச் சொல்லும் இடுகுறிகளே யென்றும், எல்லா மொழி களும் ஆயிரம் ஆண்டிற்கொருமுறை அடியோடு மாறிவிடுகின்றன என்றும் நம்புகின்றவனுக்கு எங்ஙன் மொழியாராய்ச்சி வேட்கை எழும்? ஆதலால், வண்ணனை மொழிநூல் அறிவு வளர்ச்சிக்கு மாபெரு முட்டுக்கட்டையென்று அறவே புறக்கணிக்க.
17. பகுத்தறிவைப் பயன்படுத்தல்
எ-டு: வடவை = வடமுனையில் தோன்றும் ஒருவகை நெருப்பு அல்லது ஒளி. வடம் - வடவை (பிங்) = வடவனல். வடவைக் கனலை வைத்தூதி (அந்தகக் கவி வீரராகவர் தனிப்பாடல்).
வடம் - வடந்தை = வடகாற்று. வடவைத் தீ.
சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு. இருபத். 384)
அக்கடலின்மீது வடவனல் நிற்க விலையோ (தாயுமானவர்)
ஒ.நோ: Aurora Borealis = Northern Light.
இங்ஙனம் வடவை என்பது தென்சொல்லென்றும் வடமுனை நெருப்பின் பெயரென்றும் தெளிவாயிருக்கவும், அதை வடவா என்று திரித்துப் பெண்குதிரை என்று பொருளுரைப்பர் வடவர், இத்தகைய சொல்லியல்களிற் பகுத்தறிவைப் பயன்படுத்துவது இன்றியமையாதது.
18. அஞ்சாமை
ஆயிரக்கணக்கான தென்சொற்களை வடவர் கடன்கொண்டிருப் பதால், அவற்றையெல்லாம் தென்சொல்லென்று ஒப்புக்கொள்ளின், சமற்கிருதத்திற்குத் தமிழே மூலம் என்பது வெட்டவெளியாம். அதனால், அதை மறைத்தற்குப் பல சொற்கட்குப் பொருந்தப் புகலலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறியும், சிலவற்றை இடுகுறியென்று முத்திரையிட்டும் வருகின்றனர். இவற்றை மறுத்து உண்மை கூறுபவர்க்குப் பதவி அல்லது அலுவல் போய்விடும் என்னும் அச்சம் தமிழர் உள்ளத்திற் குடிகொண்டிருப்பதால், வடமொழியில் வழங்கும் தமிழ்ச்சொற் கட்கு வேர்காணத் தனிமறம் வேண்டுவது ஒருதலை.
19. நடுநிலை
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும் (அறநெறி. 22)
கவி என்பது வடசொல். பா, செய்யுள் என்பனவே தென்சொல். ஆதலாற் கவிஞனைப் பாவலன் என்றும், கவியரங்கைச் செய்யு ளரங்கு அல்லது பாவரங்கு என்றுமே சொல்லுதல் வேண்டும்.
கவிந்துகொள்வது கவி என்றும், தருவது தருமம் என்றும், நாயை வைத்திருப்பவன் நாயன் என்றும், உள்தணமாயிருப்பது உட்டணம் என்றும், இரவுகசிதல் இரகசியம் என்றும், பெரிய வித்து என்று பொருள்படும் வான்வித்து என்பது வித்துவான் என்று தலைமாறிய தென்றும், இவை போன்று பிறவும் கூறுவ தெல்லாம் அறிவு முறைப்பட்டன வல்லவென்று கூறி விடுக்க.
20. பொறுமை
சில சொற்கட்கு வேர்காட்டும் உறவுச் சொற்கள் இறந்துபட்டி ருப்பதால், அவற்றின் வேர் காண்டற்கு நாட்பலவன்றி ஆண்டு பலவும் ஆகலாம். ஆதலால், சொல்லாராய்ச்சிக்கு மிகுந்த பொறுமையும் வேண்டும்.
ஆண்டு பலவாகியும் வேர்காண வியலாது போகவும் நேரும். அதனால் உள்ளந் தளர்தல் கூடாது.
நெறியறிந்து ஆர அமர ஆராயின், இற்றைத் தமிழ்ச்சொற்களுள் நூற்றிற் கெழுபத்தைந்திற்கு வேர்காண வியலும். எனினும் இறைவன் ஏற்பாட்டின்படியே ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு துறையில் ஆற்றலமையும் என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
(ஔவையார்) (செந்தமிழ்ச் செல்வி மார்ச்சு 1967)
சொலவம்
சொலவம் - ச்லோக
சொல் - சொலவு = மரபுக் கூற்று, பழமொழி, பழமொழி போன்ற செய்யுள் தொடர்.
சொலவு - சொலவம். சொலவு - சொலவடை.
வடமொழியில் முதல் வனப்பு (ஆதிகாவியம்) வான்மீகி இராமாயணம் என்பர். வான்மீகி முனிவர் காட்டில் ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு வருந்தியபோது தம் முதற் செய்யுளைப் பாடியதால், வருத்தத்தைக் குறிக்கும் சோக(ம்) என்னும் சொல்லினின்று தனிச் செய்யுட்குச் ச்லோக என்று பெயருண்டாயிற்றென்று வடவர் கூறுவது மரபு. மா. வி. அ. இதை மறுத்துச் ச்ரு (கேள்) என்னும் சொல்லொடு தொடர்பு கொண்டதாயிருக்கலாமென்று கருது கின்றது. (வ.வ. 167).
சொலி
சொலி - ஜ்வல் (வே.)
சுல் - சுல்லி = அடுப்பு. சுள்ளெனல் = வெயில் சுடுதல். சுள் - சுள்ளை = மட்கலஞ் சுடுமிடம், காளவாய். சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், ஒளிர்தல். சொல் - சொன் - சொன்னம் = தங்கம். சொல் = பொன்னிறமான நெல். சடைச்செந்நெல் பொன் விளைக்கும் (நள. சுயம்வர. 68). ஒ.நோ: நில் - நிலா, நிலவு. நிற்றல் = விளங்குதல். நில் - நெல் = விளங்கும் பொன்போன்ற கூலம். (வ.வ. 167:168).
சொற்குலமுங் குடும்பமும்
மக்களைப்போன்றே சொற்களும் குடும்பங் குடும்பமாகவும் குலங்குலமாக வும் தொடர்புற்று இயங்குகின்றன. ஒவ்வொரு மொழியும் ஒரு நாடும். ஒவ்வொரு வேர்வழிச் சொற்றொகுதியும் ஒரு குலமும், ஒவ்வோர் அடிவழிச் சொற்றொகுதி யும் ஒரு குடும்பமும் போல்வன.
ஒரு நாட்டான் அயல்நாடு சென்று பல்லாண்டு தங்கிக் குடியுரிமை பெற்றுவிடினும். அவன் அயன்மையை மறைக்க முடியாது. யாரேனும் மறைக்க முயலின், வரலாற்றாராய்ச்சி அதை வெளிப்படுத்திவிடும். அங்ஙனமே, ஒருமொழிச் சொல்லும் பிறமொழிச் சென்று வழக்கூன்றினும் அதன் அயன்மையை மறைக்க முடியாது; யாரேனும் மறைக்க முயலின், வரலாற்றா ராய்ச்சி அதனை வெளிப்படுத்திவிடும்.
இவ் வீருண்மைகளையும் விளக்குமாறு ஒரு சொற்குலத்தையும் மூன்று சொற்குடும்பங்களையும் ஈண்டுக் காட்டுவோம்.
சொற்குலம்
கல் - கல் என்பது கருமையைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல்.
கல் - கன் - கன்னல் = கரிய கரும்பு.
ஒ.நோ: Gk. kanna, L. canna, Fr. canna, E. canne, cane - a reed. Sugar cane. கரும்பு; கன்னங்கரேர் என்னும் வழக்கை நோக்குக.
கல் - கால் = கருமை. கால் - காலா (இந்தி) = கருமை.
கல் - கன் - கன்று. கன்றுதல் = வெயிலாற் கருகுதல். வேலையிற் பயின்று கை கருத்தல் முகங்கருத்துச் சினத்தல், சினந்து பகைத்தல்.
கன்று - அன்று.
கல் - கள் - கள்ளம் = கருமை. கரிய இருள் போன்ற மறைப்பு. மறைப்பாகிய திருட்டு. வஞ்சனை.
கள் - கள்ளன் = திருடன். கள் - களவு = மறைப்பு. திருட்டு.
கள் - கள்வு - கள்வன் - களவன் = கருநண்டு.
புள்ளிக் கள்வன் (ஐங். 21). புள்ளிக் களவன் (கலித். 88).
களவன் - கடப்பான் (உலக வழக்கு).
ஒ.நோ: A.S. crabba, Ger. crabba, E. crab.
ட-ர. போலி. எ-டு: முகடி - முகரி. படவர் - பரவர்.
கள் - கள்வு - கள்வன் = கரியவன் (பிங்.). கரிய யானை (பிங்.).
திருடன், வஞ்சகன்.
கள்வன் kalabha (வ.) = யானை.
கள் - களவு = மறைப்பு, திருட்டு L. clepo, to steal, Gk. chlapeis.
கள் - களம் = கருமை. களம் - களர் = கருப்பு. களம் - களங்கு - களங்கம் = கருப்பு. கறை, குற்றம்.
களங்கம் - களக்கம் = குற்றம். களக்கம் - களக்கர் = இருளர் போன்ற வேடர்.
கள் - கள - களர் - களவு - களவம் = கரிய களாம்பழம்.
கள் - களி (களிமண்) = கரிய மண். களிமண்போற் கெட்டியான உண்டி அல்லது மருந்து களி.
A.S. cloeg, E. clay; cog. with Dan. kloeg, Dut, klai, Ger. klei.
களி - களிம்பு = களிப்பக்குவமுள்ள மருந்து.
கள் - புலனை மறைக்கும் மது. கள் - களி = கட்குடியன், யானை மதம்.
களித்தல் = கட்குடித்தல், வெறித்தல், வெறுத்து மகிழ்தல், மகிழ்தல்.
களி - A.S. gal, merry; E. gala-gala-day.
களி - களிறு = மதவெறிகொண்ட ஆண்யானை, ஆண்யானை.
களி(ம.) = களித்து விளையாடு. களி - கேளி - கேல். (இ.) கள்ளாட்டு. களியாட்டு என்னும் வழக்குகளை நோக்குக.
கள் - கள்ளுதல் அல்லது கட்டல் = மறைத்தல். நீக்குதல். களை யெடுத்தல்.
கள் - களை. களைதல் = நீக்குதல். களை = நீக்க வேண்டிய பயிர் அல்லது கூறு.
கள் - கடு. கடுதல் = களை பிடுங்குதல்.
கடைசியர்கள் கடுங்களையின் (பெரியபு. மானக்கஞ். 2)
கள் - களம் - கயம் - கசம் = கருமை, கரிக்குருவி, கரிய ஆழம், ஆழமான குளம், பள்ளம், கீழ்மை, கரிய நீர், நீர்போன்ற மென்மை.
இருட்டுக்கசம் என்னும் உலக வழக்கை நோக்குக.
கயம் - கயவன் = கீழ்மகன். கயமை = கீழ்மை.
வடமொழி யானைப் பெயராகிய கஜம், ‘Gaj (to sound, roar; to be drunk, to be confused or inebriated) என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாக மானியர் உவில்லியம் தம் சமற்கிருத ஆங்கில அகராதியிற் கூறுவர். கஜம் என்னும் சொல் கயம் - கசம் - கஜம் எனத் திரிந்து கருமைக் கருத்தைக் கொண்டதல்லதாயின், களி என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாகக் கொள்ளப்படுதற்கு ஏற்றதே. ழகரத்தைப் போன்றே ளகரமும், கொடுந்தமிழ்களிலும் பிற மொழிகளிலும் சகரவகையாகத் திரிதல் இயல்பே.
இனிக் கலி. களி, கத்து முதலிய சொற்களும் ஒன்றன் அடியாகக் கொள்ளின். ‘to roar’ என்ற மொழிப்பொருட் காரணமும் பொருந்தும்.
கயம் - கயவு = கரிக்குருவி, கீழ்மை, மென்மை, பெருமை.
கயம் - காயம் = கரிய வானம்.
விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் (தொல். எழுத்து. 305)
கயம் - காசம் - ஆகாச (வ.). ஆ ஒரு முன்னொட்டு (உபசர்க்கம்).
பல்வேறு முன்னொட்டுகளை முற்சேர்த்தல், வடவர் தென்சொற் களை வடசொற்களாக்கும் வகைகளில் ஒன்றாம்.
காயம் - காயா = கரிய மலர்கொண்ட ஒருவகை மரம்,
காயாம்பூ. வண்ணன் = கரிய திருமால்.
காயம் - காயல் = கரிய உப்பங்கழி.
காயல்பட்டினம் என்னும் துறைநகர்ப் பெயரை நோக்குக.
கள் - காள் - காளம் = கருமை, காளமேகம் = கருமேகம்.
காள் - காளி = கரிய மாரியம்மை.
ஒ.நோ: மா - மாயோள் (காளி) = கரியாள்.
மாமை = கருமை.
காளம் - காளான் = கரிய ஆம்பி.
காள + அம்பி = காளாம்பி (கருங்காளான்).
காள் - காளை = கரிய எருது, எருது.
காள் - காழ். காழ்த்தல் = கருத்தல். கருத்து வயிரங் கொள்ளுதல். வேலை செய்து கை வயிரங் கொள்ளுதல். முதிர்தல். கடுத்தல், உறைத்தல். காழ்ப்பேறுதல் என்னும் வழக்கை நோக்குக.
காழ்ப்பு = வயிரம், கைவயிரங் கொள்வதால் ஏற்படும் தழும்பு. உறைப்பு.
காழ் = கருமை, குற்றம், மரவயிரம், கரியவிதை, விதை, விதை போன்ற மணி அல்லது முத்து, முத்தின் ஒளி.
காழ் - காழகம் = கருமை.
காழ் - காய், காய்தல் = வெப்பத்தால் கருகுதல், வெப்பங் கொள்ளுதல்.
உலர்தல், வெப்பத்தால் எரிதல், எரிதல் போற் சினத்தல்.
காய் - காய்ச்சு = வெப்பத்தாற் சமை. காய் - காய்ச்சல். காய்த்தல் = வேலை செய்து கையில் தழும்பேறல் (கருங்கை, கையிற் காய்ப்புக் காய்த்தல் முதலிய வழக்குகளை நோக்குக).
வயிரங் கொள்ளுதல், முதிர்தல், மரம் முதிர்ந்து பலன் தருதல்.
காய்ப்பது காய்.
காழ் - காசு = கருப்பு, குற்றம், விதைபோன்ற மணி, மணியொத்த பொன், பொன்னால் செய்யப்பட்ட நாணயம்.
காசு - ஆசு = குற்றம்.
Cash என்னும் ஆங்கிலச் சொல்லை முதலாவது பணப்பெட்டி யையும் பின்பு பணத்தையும் குறித்ததாகக் கொண்டு, இத்தாலியத் தில் பெட்டியைக் குறிக்கும் cassa (L. capsa) என்னும் சொல்லடிய தாகக் கொள்வதைவிட, காசு என்னும் தமிழ்ச் சொல்லடியதாகக் கொள்வதே பொருத்தமாம்.
காசு E. cash, O.F. casse, Sp., and Pg. caxa.
காய் - காயம் = தழும்பு. தழும்பு விழுப்புண், தழும்பு போன்ற நிலைப்பு.
நிலையாத உடல் (மங்கல வழக்கு), எரிகுணம் அல்லது உறைப்புள்ள பொருள் (எ-டு:): வெங்காயம், பெருங்காயம்).
கள் - (கள்கு) - (கட்கு) - கட்கம் = மறைவான அக்குள்.
ஒ.நோ: வெள் - வெள்கு - வெட்கு - வெட்கம்.
கட்கம் - கக்கம் - கக்ஷ(வ.).
கள் - கடு. கடுத்தல் = எரிதல், கோபித்தல், எரிதல்போல் நோதல். முதிர்தல், மிகுதல், விரைவு மிகுதல்.
கடு = கடிய சுவை. கடிய நஞ்சு, (குருதியைக் கருப்பாக்கும் நஞ்சு எனினுமாம்).
கள் - கம் = மறைவு. மறைவு போன்ற அடக்கம். கம் என்றிரு, கம் என்றிருக்கிறது என்னும் வழக்குகளை நோக்குக.
ஒ.நோ: வள் - வம் - வம்பு. கொள் - கொம் - கொம்பு.
கம் - கமு. கமுக்கூடு = மறைவான அக்குள்.
கமு - கமுக்கம் = மறைவு. அடக்கம்.
கல் - கர் - கரு = கருமை. கரு - கருப்பு = கருமை, கரிய பேய், கரிய இருள் போன்ற பஞ்சம்.
கரு - கருத்தை, கரு - கருவல்.
கரு - கருப்பை = கரிய எலி, எலி.
கரு - கரும்பு = கரிய தண்டையுடைய பயிர்.
கரு - கருப்பு - கருப்பம் - garbha (வ.) = கரிய மேகத்தின் சூல்.
சூல், சூல் போன்ற உட்பொருள்.
கரு - கருகு. கருகுதல் = காய்ந்து அல்லது வறுக்கப்பட்டுக் கருத்தல்.
கருகு - கருக்கு = கருகச்செய் (வி.). கருகச் செய்து இறக்கிய கஷாயம், பனைமட்டையின் கரிய ஓரம். அதுபோன்ற கூர்மை.
கருக்கு - கருக்கல் = இருண்ட விடியல்.
கருகு - கருகல் = இருளில் பொருள் தெரியாமைபோல் ஏதேனும் ஒரு செய்தி விளங்காமை.
கருகு - கருக்கம் = கார்மேகம்.
கரு - கருள் = இருள்.
கரு - கருமு - கருமி = கொடாது மறைக்கும் உலோபி.
கரு - கருனை = கருக வறுத்த பொரிக்கறி, பொரியல்.
கரு - கருமை = முதிர்வு. மிகுதி, பெருமை.
கரு - கர - கரப்பு = மறைப்பு. கர - கரவு = மறைப்பு. வஞ்சனை.
கரவு - கரவடம் = களவு, வஞ்சனை.
கரப்பு - கரப்பான் = கரிய சிரங்கு, கரந்து அல்லது இருளில் வழங்கும் பூச்சி.
கர - கரம்பு = கரியநிலம், திருந்தா நிலம்.
ஒ.நோ: கருந்தரை = பாழ்நிலம்.
கரம்பு - கரம்பை = காய்ந்த களிமண்.
கர - கரா - கராம் = கரிய முதலை.
கர - கரவாகம் = கரிய காக்கை.
கர - கரந்தை = கரிய அல்லது நீல மலரையுடைய செடி. அதன் மலரைச் சூடி நிரை மீட்டல்.
கரு - கரி = கரிய அவிந்த தழல். கரிய யானை, கரிய குருவி.
கரிதல் = கருகுதல். கரி - கரியல் = குற்றம்.
கரியன் = கரிய திருமால். கரியான். கரிச்சான் = கரிக்குருவி.
கரி - கரிசு = கருப்பு. குற்றம்.
கரிசு - கரிசல் = கரிய நிலம்.
கரியல் = வளராது கருத்தமரம்.
கரியான் = கருங்குதிரை வகை.
கர - கரை. கரைதல் = மறைதல், சிறுத்து மறைதல், சிறுத்தல், அல்லது குறைதல்.
கரை = மண் கரையும் நீர்நிலை யோரம், நீர்நிலை யெல்லை, எல்லை மேடு, எல்லை, அளவு, எல்லை குறிக்கப்படும் பங்குநிலம், பங்கு.
கரு - கார் = கருமை, கரிய மேகம், மேகம் மிகுந்து பெய்யுங் காலம். மழைநீரால் தோன்றும் அழகு.
கார் - காரி = கரிய எருது. கரிய சனி.
கார் - காரிகை = அழகு. அழகிய பெண். பெண்.
கரு - கறு - கறுப்பு = கருப்பு. சினத்தால் முகங் கருத்தல், சினம்.
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் (தொல். உரி. 74)
கறு - கறுவு = நீங்காச் சினம்.
கறு - கறை = கருப்பு. களங்கம், குற்றம், குருதிக்கறை, குருதி.
கறு - கறள் = கறை.
கறு - கறுக்கன் = கருத்த மட்ட வெள்ளி.
கறு - காறு. காறுதல் = கருத்தல், கருத்து வயிரங்கொள்ளுதல். வயிரங் கொள்ளுதல்.
கள் - கண், ஒ.நோ: பெள் - பெண், கோள் - கோண்.
கண் - கண்ணன் = கரியன். கரிய திருமால்.
ஒ.நோ : மால் = கரியன், மாயோன் = கரியன்.
கிருஷ்ணன் என்னும் வடசொல் கண்ணன் என்று திரிந்ததென்று கொள்வதைவிட கள் என்னும் தென்சொல்லே ணகர வீறாய்த் திரிந்து ஈறு பெற்றதென்று கொள்வது சாலச் சிறந்தது. கிருஷ் என்னும் வடசொற் பகுதியும் கரு என்னும் தென்சொற் பகுதியின் திரிபே.
கண் = கரிய விழி, விழி. கண் - கண்ணவன் - கணவன்.
கண் - கண்ணு - gan (வ.) கண்ணுதல் = அகக்கண்ணாற் காணுதலாகிய கருதுதல், அளவிடுதல்.
கண் + இயம் = கண்ணியம் ganya (வ.).
கண்ணியம் = சிறப்பாகக் கருதுதல், மதித்தல், மதிப்பு.
கண் + அக்கு = கணக்கு. அக்கு ஓர் ஈறு.
கணக்கு - ganaka (வ.) = அளவீடு. எண்ணிக்கை, தொகை, கணிதநூல், நூல், எழுத்து.
கணக்கு - கணக்கன் = கணக்கெழுதுவோன். கணக்கெழுதுவதைக் குலத் தொழிலாகக் கொண்டவன், நூலாசிரியன், ஆசிரியன்.
கணக்காயர், சமயக்கணக்கர், மேற்கணக்கு, கீழ்க்கணக்கு, நெடுங்கணக்கு முதலிய பண்டை வழக்குகளை நோக்குக.
கண் - கணி - gani (வ.) = மதி. அளவிடு. கணக்கிடு:
(பெ.) கணிப்பவன், சோதிடன்.
கணிகன், கணியான், கணிவன் = சோதிடன்.
கணி - கணியன் = சோதிடன், காலங்கணித்து ஆடுபவன்.
கணி - கணிகை - ganika (வ.). = காலங்கணித்து ஆடுபவள்.
கணி - கணிதம் - ganita (வ.) = மதிப்பு கணக்கு.
கணிதம் - கணிசம் = மதிப்பு, நிதானம்.
கணிசம் - கணிசி. கணிசித்தல் = மதித்தல், உய்த்துணர்தல், சிந்தித்தல்.
கணி - குணி. குணித்தல் = மதித்தல், அளவிடுதல்.
கண் = கண் போன்ற வரையுள்ள மூங்கில் முதலியவற்றின் கணு.
மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (பெருந்தொ. 634)
கண் - கணு. கணு - கணை = கணுப்போன்ற திரட்சி.
கணைக்கால் = கணுக்கால். கணை - கணையம் = திரண்டமரம்.
கண் = இடம், பக்கம். கண் + சி - கட்சி - சக்ஷ்யா (வ.).
கண் - கண்டு = கணுப்போன்ற துண்டு. துண்டாகிய கட்டி, நூலுருண்டை.
கண்டு - கண்டம் - khanda (வ.) = துண்டு, நிலப்பகுதி, பகுதி.
உப்புக் கண்டம், கண்டங் கண்டமாய் நறுக்குதல் முதலிய வழக்குகளை நோக்குக.
ஒ.நோ: துண்டு - துண்டம்.
கண்டம் - காண்டம் - kanda (வ.) = நூற்பகுதி.
கண்டம் - கண்டிகை - நிலப்பகுதி.
கண்டிகை - காண்டிகை = (வ.) = khandika துண்டுபோற் சுருங்கியவுரை.
கண்டு - கண்டி - khand (வ.) ஒ.நோ: துண்டு - துண்டி.
கண்டித்தல் = துண்டித்தல், துண்டித்தல் போலக் கடிதல், வரையறுத்தல், கண்டிப்பு = வரையறவு. கடுமையான ஒழுங்கு.
கண்டி - கடி. ஒ.நோ: தண்டி - தடி(வி.).
கடிதல் = கண்டித்தல், விலக்குதல்.
கண்டி + அனம் = கண்டனம் kandana (வ.)
கண்டி - கண்டிதம் - khandita (வ.) = கண்டிப்பு, வரையறவு.
கண்டிதம் - கண்டிசம்.
கண் - கண்ணி = கண்கண்ணாகக் கட்டிய மாலை, கண்போன்ற துவாரமுள்ள வலை, துவார முள்ளது.
(எ-டு: : பலகண்ணி - பலகணி = சன்னல்).
கண் - காண் - கண்ணன் பார்(வி).
காண் - காணம் = மேற்பார்வை. கண்காணம் என்பது வழக்கு.
கண்காணி = மேற்பார்ப்பவன்.
கண்காணியார் = அத்தியட்சர் (Bishop), சபையை மேற்பார்ப்பவர்.
காண் - காட்சி = பார்வை, அறிவு, ஞானம்.
காண் - காணி, காணித்தல் = மேற்பார்த்தல், காத்தல்.
காணிக்கை = கடவுள் காத்தற்கு இடும் படைப்பு அல்லது செலுத்தும் பணம்.
கண் = அறிவு, ஞானம்.
கள்ளொற்றிக் கண்சாய் பவர் (குறள். 927)
காண் - A.S. cunnan, to know; E. cunning, knowing; M.E. con, to study carefully, Goth. kunnan, to know, O.H.G. chann.
காண் என்னும் தென்சொல் க்ணா - க்னா என்று சில ஆரிய மொழிகளில் மாறியும். ‘gna’ என்று சில ஆரிய மொழிகளில் மாறித் திரிந்தும். ஜ்ஞா என்று வேத ஆரியத்தில் மேலும் திரிந்தும் வழங்கும்.
A.S. cnawan; Ice. kna; E. know; L. gna, Gk. gno; Skt. jna; Russ. jna.
பிற்காலத்து ஆங்கிலச் சொற்களில் ‘gna’ அடியும் (எ-டு: cognisance, prognosticate, ignorance) முற்காலத்து ஆங்கிலச் சொற்களில் ‘con’ அல்லது ‘kon’ அடியும் இருப்பதையும், ஜ்ஞானம் என்னும் சமற்கிருதச் சொல் உட்பட ‘know’ என்னும் ஆங்கிலச் சொற்கின மான எல்லாவற்றுக்கும் ‘kon’ என்பதையே மூலமாக மேலை மொழிநூலார் குறித்திருப்பதையும், காண் என்னும் தென் சொல்லின் இயல்பையும், அதன் வழிப்பட்ட ஆரியச் சொற்களின் திரிபையும், அவற்றுள் சமற்கிருதச் சொல்லும் ஆரியச் சொல்லும் அடைந்துள்ள திரிபின் கோடியையும் உற்று நோக்குக.
தமிழ்க் கண்ணிலிருந்து சமற்கிருதம் ஞானம் பெற்றது என்பது, சொல்லள விலும் பொருளளவிலும் உண்மையாயிருத்தல் நோக்கத்தக்கது.
சொற்குடும்பங்கள்
1. தில் என்பது, பருமனால் ஆகிய திண்மையையும், அதனால் ஏற்படும் வலிமையையும், அது கொண்டு செய்யப்படும் முரண்டையும் குறிக்கும்.
ஒ.நோ: முரண் = பெருமை, வலிமை, மாறுபாடு, முரண் - முரடு = பருமன், கரடு, வன்குணம். முரண் - முரண்டு = மாறுபாடு. பிடிவாதம், ஏறுமாறு. முரடு - முருடு.
தில்லுமுல்லு (ஏறுமாறு, முரண்டு) என்னும் வழக்கை நோக்குக.
தில் - திர் - திர - திரம் = திண்ணம், உரம், வலிமை, உறுதி, நிலைவரம்.
மலை, நிலையான வீடு (முத்தி).
திரம் - திர (வ.). திரம் + ஆணி = திராணி.
திர - திரங்கு - திரக்கு. திரங்குதல் = திரண்டு சுருங்குதல், சுருங்குதல்.
திரக்கு = திரட்சி, கூட்டம், நெருக்கடி.
திருவிழாத் திரக்கு என்னும் தென்னாட்டு வழக்கை நோக்குக.
திரம் - திரல் - திரள் - திரளை = திரட்சி, உருண்டை.
திரளை - திரணை = திரண்ட மேடை, திண்ணை.
திரள் - திரட்டு. திரள் - திரடு = மேடு.
திரம் - திறம் - திறன் - திறல். திறம் - திறமை.
ரகர றகரம் இரண்டுள், முன்னது முந்தியும் பின்னது பிந்தியும் தோன்றிற்றென்றும், றகரம் பிந்தித் தோன்றியதினாலேயே நெடுங்கணக்கின் இறுதியடுத்து வைக்கப்பெற்ற தென்றும், அறிதல்வேண்டும். மாந்தர் வாயில் மெல்லொலி முந்தியும் வல்லொலி பிந்தியும் எழுதலே இயற்கையாம், ரகரம் உரத்து றகரம் ஆயிற்றென்க.
ஒ.நோ: ஒளி - ஒளிர் - ஒளிறு, கரு - கறு.
திறம் = திண்ணம், உறுதி, வலிமை, வலிய தன்மை, தன்மை, தன்மை போன்ற கூறுபாடு, நூற்பகுதி.
ஒரு பொருளின் வலிமை அதன் தன்மையா யிருப்பதாலும், அதன் ஒவ்வொரு தன்மையும் அதன் கூறாயிருப்பதாலும், வலிமையைக் குறிக்கும் சொல், தன்மையையுங் கூறுபாட்டையுங் குறித்ததென்க.
இயல் என்னும் சொல் தன்மையையும் நூற்பகுதியையுங் குறித்தல் போன்றே. திறம் என்னும் சொல்லும் தன்மையையும் நூற்பகுதி யையுங் குறிக்கும்.
திர் - திரு - ஸ்ரீ (Sri) = திரண்ட அல்லது திரட்டப்பட்ட செல்வம்.
ஸ்ரீ - சீ. ஒ.நோ: கோழிக்கோடு - (Calicut) கள்ளிக்கோட்டை.
திர - திரை. திரைதல் = திரளுதல். இடையிடை திரளுதல்.
திரை = திரண்ட நீரலை. நீரலைபோல இடையிடை தோல் திரங்கிய நிலை, திரட்டப்படும் அல்லது கருட்டப்படும் மறைப்புத் துணி.
அணிந்திருக்கும் ஆடையை மேல்நோக்கித் திரட்டுதலைத் திரைத்தல் என்று சொல்லும் வழக்கை நோக்குக.
திறம் என்னும் சொல் தன்மையைக் குறித்தல்போல, அதற்கு இனமான திரம், திரை என்னும் சொற்களும் தன்மையைக் குறித்துத் தொழிற்பெயர் விகுதியாகும்.
எ-டு: : மா + திரம் = மாத்திரம், (அளவு). மா + திரை = மாத்திரை (அளவு) உரு + திரம் = உருத்திரம் (சினம்).
மாத்தல் = அளத்தல், உருத்தல் = சினத்தல்.
மா என்னம் வினை வழக்கு வீழ்ந்தது. ஆயினும் மா (1/20 வேலி) என்னம் நிலவளவுப் பெயரும், அரைமா ஒருமா இருமா என்னும் எண்ணளவைப் பெயர்களும், மானம் (அளவு, படி, மதிப்பு) என்னும் தொழிற் பெயர் அல்லது தொழிலாகு பெயரும், இன்றும் வழக்கிலுள்ளன.
தில் - திள் - திண் - திண்மை.
ஒ.நோ: L. densus, E. dense, F. dense.
திண்படுதல் = வலிபெறுதல். திண்பொறுத்தல் = பாரந் தாங்குதல்.
திண் - திண்ணெனவு - திண்ணனவு = தேற்றம், நெஞ்சுரம்.
திண் - திண்ணம் = தடிப்பம், வலிமை, தேற்றம் (நிச்சயம்).
திண்மைக் கருத்தினின்று தேற்றக் கருத்துத் தோன்றிற்று.
ஒ.நோ: உறுதி = திண்மை, தேற்றம்.
திண்ணம் - திண்ணக்கம் = நெஞ்சுரம்.
திண் - திண்ணிமை = மனவுறுதி. திண்ணியன் = வலியவன். மனவுறுதி யுள்ளவன்.
திண் - திண்ணை = திரண்ட மேடை.
திண் - திணை = திரட்சி, கூட்டம், குலம், பகுப்பு, குலவொழுக்கம்.
ஒழுக்கம்.
திண் - திணம் = திண்மை.
திணமணி மாடத் திருவிடைக் கழியில் (திருவிசை. சேந். திருவிடை 5)
திணம் - திணர் = செறிவு.
திணரார் மேகமெனக் களிறு சேரும் (திருவாய். 6:10:5)
திணர்த்தல் = கடினமாகப் படிந்திருத்தல், நெருக்கமாதல்.
திணர்த்த வண்டல்கள்மேல் (திருவாய். 6:1:5)
வண்டு திணர்த்த வயல் (திவ். திருப்பள்ளி. தனியன்)
திண் - திணி. திணிதல் = செறிதல், இறுகுதல்.
திணித்தல் = செறிய உட்புகுத்தல்.
திணிமூங்கில் = கெட்டி மூங்கில்.
திணி - திணிகம் = இருபடையும் செறிந்து செய்யும் போர்.
திணியன் = பருத்த ஆள் அல்லது விலங்கு.
திணிவு = வன்மை. நெருக்கம், திணி - திணிம்பு - திணிப்பு.
திணிம்பு = செறிவு. திணிப்பு = வலிமை.
திண் - திணுங்கு - திணுக்கம்.
திணுங்குதல் = செறிதல், உறைதல், திணுக்கம் = செறிவு, கட்டி.
திண் - திண்டு = பருமன், திரண்ட மேடை, திரண்ட பஞ்சணை.
மாறுபாடு.
திண்டுக்கட்டை = பருத்த கட்டை, பயனற்ற தடியன்.
திண்டு தலையணை, திண்டுமுண்டு என்னும் வழக்குகளை நோக்குக. திண்டுமுண்டு என்பதனுடன் தில்லுமுல்லு என்பதை ஒப்பு நோக்குக.
திண்டு - திண்டன் = தடியன்.
திண்டு - திண்டி = பருமன், தடிச்சி, யானை.
திண்டி வயிற்றுச் சிறுகட்பூதம் (தேவா. 1225:7)
திண் - திட்பு - திட்பம் = செறிவு. உறதி, வலிமை, தேற்றம்.
திட்பு - திட்பை - திப்பை = பருத்தது, மேடு.
திண்டு - திட்டு - திட்டை = திண்ணை, மேடு, திட்டு = மேடு.
மேடான ஆற்றிடைக்குறை அல்லது நீரிடைக்குறை.
திட்டு - திட்டம் = தேற்றம், நிலைவரம், உறுதியான ஏற்பாடு.
உறுதியான வரையறவு.
திட்டவட்டம் என்னும் வழக்கை நோக்குக.
திட்டு - திட்டி = சிறுமேடு.
திட்டு - திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை.
சத்திரச் சாலையும் ஒத்ததிட் டாணியும் (இராமநா. சந். 4)
திட்டம் - திடம் = உறுதி, மனவுறதி, தேற்றம், நிலைவரம்.
திடம் - திடல் - திடர் - திடறு = மேடு.
திடல் = மேடு, குப்பைமேடு, மேடான சிறு தீவு.
மஞ்சள் திடல் என்பது மேடான ஓர் ஊர்ப் பெயர்.
திடம் - drdha (வ.)
திடம் - திடாரி - திடாரிக்கம்.
திடாரி = தைரியசாலி. திடாரிக்கம் = மனத்திடம், தைரியம்.
திண் - திடு - திடுமல் - திடுமலி.
திடுமல் = அடங்காத்தன்மை (J.). திடுமலி = அடங்காதவள் (J.).
திள் - திம் - திம்மை = பருமன். திம் - திம்மன் = தடியன், பருத்த ஆண்குரங்கு.
திம் - திம்மல் - திம்மலி = உடல் பருத்தவள் (J.).
திம் - திம்மாக்கு - dimag (உ) = பெருமை, வீண் பெருமை.
திம் - திமி = பெருமீன் (திவா.). திமி timi (வ.).
திமி - திமிதம் = உறுதி.
திம் - திமி - திமிசு = இளகிய தரையை இறுகச் செய்யும் கருவி.
திமி - திமில் - திமிள் = எருதின் பருத்த முரிப்பு.
திமில் - திமிலி = உடல் பருத்தவள்.
திமில் - திமிலம் - திமில(வ.) = பெருமீன் வகை.
திமில் - திமிர். திமிர்த்தல் = மரம்போல் கெட்டியாதல், கை கால் மரத்தல், கொழுத்துத் தடித்தல்.
திமிர் = கை கால் மரப்பு. மரப்புப்போன்ற நோய் (திமிர்வாதம்), மனத்தடிப்பு.
ஒ.நோ: L. temere - temeritas, E. temerity.
2. வகு வகுதல் = பிளத்தல், பிரிதல், வகுத்தல் = பிரித்தல், பிரித்தமைத்தல், அமைத்தல், படைத்தல்.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது (குறள். 377)
என்னை வகுத்திலையேல் இடும்பைக்கிடம்
யாது சொல்லே (தேவா. 643:2)
ஒ.நோ: L. Facio, to make, do, E. manufacture.
வகு - வக்கு = வகுத்த வழி, வழி, இடம்.
வக்கில்லை, வழிவகுத்தல் என்னும் வழக்குகளை நோக்குக.
வகு - வகம் = வழி. வகு - வகுந்து = வழி.
வகுந்துசெல் வருத்தத்து (சிலப். 11:167)
வக்கு - வாக்கு = வழி, திசை, பக்கம்.
காற்று வாக்கு என்னும் வழக்கை நோக்குக.
வகு - வகுப்பு. வகு - வகுதி = வகுப்பு.
வகுதியின் வசத்தன (கம்பரா. இரணியன். 69)
வகு - வகிர் = பிளவு, பிளந்த துண்டு. வகுத்த தலைமயி ரிடைவெளி.
வகிர் - வகிடு = வகுத்த தலைமயி ரிடைவெளி.
வகு - வகை. வகைதல் = பிளவுபடுதல், பிரிதல்.
வகு - வங்கு - வங்கை = பகை.
வகு - வாகு = வகுப்பு, வகுத்த ஒழுங்கு, ஒழுங்கின் அழகு.
வாகு - bagu (தெ.)
வகு - பகு.
வகரம் சிறுபான்மை தமிழில் பகரமாகத் திரியும்.
எ-டு: வள் - வண்டி - பண்டி - பாண்டி - பாண்டில். உருவு - உருபு. அளவு - அளபு.
பகுதல் = பிளத்தல், பிரிதல், பகுத்தல் = பிரித்தல்.
பகுவாய் = அகன்ற வாய், அகன்ற வாயையுடைய தாழி அல்லது பிழா.
பகு - பகுப்பு. பகு - பகுதி - பாதி. பகுதி = பாகம். இரண்டிலொரு பாகம். ஆறிலொரு பாகமாகிய நிலவரி.
பகுதிக்கிளவி = தகுதியும் வழக்குமாகிய பகுதிபற்றிய சொற்கள்.
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. (தொல். சொல். 17)
பகு - பக்கு = பிளவு.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும் (குறள். 1068)
பகு - பக்கம் = பகுதி, மாதத்தின் பகுதி(பாதி), அதில் 1/5 பகுதி, இடப்பகுதி, இடம், புறம், திசை, தாளின் ஒரு புறம், நூற்பகுதி, நூல், அருகான இடம், அருகான அல்லது நெருங்கிய இனம், இனத்தார்போற் செய்யும் அன்பு, இருபுறத்துமுள்ள விலா, இருபுறத்துமுள்ள சிறகு, அம்பின் இறகு.
பக்கம் PAKSHA (வ.)
பகுதிக்கிளவி பக்கச்சொல் எனப்படுதலானும்; பக்கம் என்னும் சொல், பொருள் இடம் காலம் என்னும் மூன்றனுள் ஒன்றன் பகுதியைக் குறித்துச் செய்யுளிலும், புறம் அருகு இடம் என்னும் பொருள்பற்றி உலக வழக்கிலும் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கி வருதலானும்; பக்கம் என்னும் சொற்குரிய பொருளெல்லாம் பகுதி என்னுங் கருத்தையே அடிப்படையாய்க் கொண்டிருத் தலானும்; வடமொழியில் பக்ஷம் என்னும் சொல்லுக்குக் கூறப்படும் பொருளெல்லாம் தென்மொழியில் பக்கம் என்னும் சொல்லுக்கும் ஏற்றலாலும், பக்கம் என்னும் சொல் பகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தமிழ்ச்சொல்லே யெனத் தெளிக.
பக்கம் - L. pagina, F. page, E. page.
பக்கம் - பக்கர் = இனத்தார். பக்கம் = பக்கல்.
பக்கம் - பக்கணம் = இடப்பகதி, இடம், ஊர்(சூடா). ஊர்ப் பகதியான வீதி வேடர் வீதி (திவா).
பக்கம் - பாக்கம் = இடப்பகுதி, ஊர்ப்பகுதி, ஊர், நெய்தற் பகுதியிலுள்ள ஊர், அருகு.
பாக்கத்து விரிச்சி = பக்கத்திற் கேட்கப்படும் நற்சொல்.
பக்கு - பாக்கு = பகுதி, கூறுபாடு, இடம்.
இடப்பெயர்கள் அல்லது இடத்தைக் குறிக்கும் சொற்கள், தொழிற் பெயர் விகுதியாகவும் வினையெச்ச விகுதியாகவும் அமைவது இயல்பு.
எ-டு:
விடு + தலை = விடுதலை.
எழு + இல் = எழில். தொழிற்பெயர்
விக்கு + உள் = விக்குள்
கடை - மாணாக்கடை வினையெச்சப்பால
உழி - உற்றுழி
இடப்பொருள் கொண்ட பாக்கு என்னும் சொல், தொழிற்பெயர் விகுதியாகவும் வினையெச்ச விகுதியாகவும் வரும்.
எ-டு: கரப்பாக்கு = கரத்தல். வேபாக்கு = வேதல்.
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து (குறள். 1127)
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள். 1128)
உண்பாக்கு வந்தேன் = உண்ண (உண்ணும் பகுதியாய்) வந்தேன். பாக்கு + இயம் - பாக்கியம் bhagya (வ.) = பகுதி, பேறு, செல்வம்.
சிலப்பதிகார அடைக்கலக்காதையில் வரும் பால்வாய்க் குழவி என்னும் தொடருக்கு மேற்பெறக் கடவ நல்ல பகுதியைத் தன்னிடத்தே யுடைய குழவி என்று அடியார்க்கு நல்லார் உரை வரைந்திருத்தலைக் காண்க.
அலரெழ வாருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால் (குறள். 1141)
என்றார் திருவள்ளுவர்.
வடசொல்லாகிய bhagya என்பதையும், bhaga (பாகம்) என்னும் சொல்லின் திரிவாகக்கொண்டு. நற்பகுதியாகிய பேறு என்றே பொருட் காரணங் காட்டுவர் வடமொழி யாங்கில வகராதி யாசிரியர் மானியர் வில்லியம்சு பேராசிரியர்.
பாக்கியம் என்னும் சொல். மேனோக்கில் ஆரியம் போலத் தோன்றினும், ஆராய்ந்து பார்க்கின், அது தென்சொல்லே யென்பது தெளிவாகும். வடமொழி தேவமொழி யென்றும், எடுப்பிசையாய் ஒலிக்கும் வடசொல் எல்லாம் ஆரியச் சொல்லே யென்னும், தவறான கருத்துகள் 18 நூற்றாண்டாகத் தமிழர் மனத்தில் வேரூன்றி விட்டதனால், வழக்கற்றும் வேர்ப் பொருள் மறைந்தும்போன பழந்தமிழ்ச் சொற்கள் அயற்சொற் போலத் தோன்றுகின்றன என்க.
பகு - பகம் = பகுப்பு, பகிர்வு.
பகம் - பகவன் = பொருள்களைப் பகிர்ந்தளித்துக் காப்பவன். வள்ளல், தலைவன், கடவுள், கடவுள் தன்மையுள்ள முனிவன். பகவன் - பகவான்.
ஒ.நோ: Skt. Bhaga, apportioner of food, a liberal master, gracious lord.
Zend. bhaga; O. Pers. baga, a lord; Slav. bog, a lord; Lith. Mabagas = a poor man, bagatas = rich; Goth. gabigs, Skt. Bhagavan = the gracious one, a god, God.
பகு - பகவு = பிளவு, பிரிவு, துண்டு.
பகு - பகல் = பகலவன், பகலோன்.
பகல் - பால் = பிரிவு, பகுதி, பக்கம், குலம், புறம், பாதி, இடம், திசை.
பானாள் (கலித். 90) பானாள் = அரைநாள்.
கூதிர்ப் பானாள் (நெடுநல். 12) = நள்ளிரவு.
பகல் = பாதி, நடு, உச்சிப்பொழுது. ஒளியுள்ள அரைநாள்.
பகல் - பகர் - பகரம் = ஒளிவேளை, ஒளி, அழகு.
பகர்தல் = ஒளிவிடுதல்.
பகரம் - பகாரம் = அழகு. பகர் - பகரிப்பு = ஒளி, அழகு.
பகல் - பகர் - பகரு = பிளவு, பிரிவு, பகை.
பகு - பகிர் - பகர். பகர்தல் = பொருள்களைப் பகர்தல், பகிர்ந்து விற்றல், விலை கூறி விற்றல், விலை கூறுதல், கூறுதல். இனி, விடையங்களைப் பகுத்துக்கூறுதல் பகர்தல் எனினுமாம்.
பகு - பகை - பகைவன். பகு - பகம் = வகுத்த வழி.
ஆறு (வழி) மதநெறி, மதநெறியின் தொகை (6). ஆறு என்னும் சொல், வழியையும் 6 என்னும் எண்ணையும் குறித்தல் காண்க.
பகு - பாகு = பகுதி, பக்கம், இருபக்கத்திலுமுள்ள கை, பக்கத்திலிருந்து பேணும் பாகன்.
பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம் (சிலப். 15:46)
பாகுபடுதல் = பிரிதல். பாகிடுதல் = பிரித்தல்.
பாகு - பாகம் - baha (வ.) = இருபாகத்திலு முள்ள கையை நீட்டிய அளவு.
பாகு bahu (வ.) = கை.
பாகு - வாகு. வாகு வளையம் - bahu valaya (வ.) = தோள்கடகம்.
பாகு - பாகி. பாகித்தல் = பங்கிடுதல்.
பாகு - பாகம் - bhaga (வ.) = பகதி, பங்கு.
பாகு - பாகை = பிரிவு. வரை.
பக்கு - பங்கு = பாகம். பங்கு - பங்கம் - bhanga (வ.) = பகுதி, பிரிவு. பங்கு துண்டு, சிறுதுகில், குறைவு, விகாரம், குற்றம், மானக்குறைவு, வெட்கம், தோல்வி, கேடு, இடர்.
பங்கு + அறை = பங்கறை. பங்கறை = பகுதி பகுதியாய் அறுக்கப் பட்டிருத்தல், அழகின்மை.
ஒழுங்கில்லாமற் கொத்தியிருப்பதைப் பங்கறைக் கொத்து என்பது உலக வழக்கு.
பாக்கு - பாங்கு. ஒ.நோ: போக்கு - போங்கு.
பாங்கு = பக்கம், பகுப்பு, ஒழுங்கு. அமைப்பொழுங்கைப் பாங்கு பரிசனை என்பது வழக்கு.
பாங்கு - பாங்கர் = பக்கம்.
பாங்கு - பாங்கன் = பக்கமாயிருந்து பேணும் துணைவன்.
ஒ.நோ: It. paggis, F. page, E. page.
பகு - பா. பாத்தல் = பகுத்தல். பா - பாத்தி = பகுப்பு. புன்செய்ப் பகுப்பு, பங்கு.
மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே (தொல். எழுத்து. 172)
பா - பாது = பகிர்வு. பாதிடுதல் = பகிர்தல்.
தந்துநிறை பாதீடு உண்டாட் டுக்கொடை (தொல். பொருள். 1004)
பாது + கா - பாதுகா. பாதுகாத்தல் = உணவுப்பொருள்களைப் பகிர்ந்தளித்துக் காத்தல்.
வகு என்னும் அடியின்கீழ்க் காட்டப்பட்ட சொற்களெல்லாம். கொட்பாட்டன் - பாட்டன் - மகன் - பேரன் - கொட்பேரன் என்ற தொடர்பு போலத் தொடர்புபட்டி ருப்பதையும். வகு என்பதன் திரிபான பகு என்னும் அடியே வடமொழியில் வழங்கு வதையும் அதுவும் bhaj என்ற திரிவடிவிற் காட்டப்படுவதையும். பகு என்பதன் அடிப்பிறந்த வடமொழிச் சொற்கள் தென் மொழிச் சொற்கள் போலப் பல்கியும் தொடர்புபட்டும் இராமை யையும். பகு என்னும் ஒரே யடியினின்று திரிந்துள்ள பக்கம், பாகு, பாகம் என்னும் சொற்கள், வடமொழியில் முறையே paksha, bahu, bhaga என வெவ்வேறு முதலெழுத்துடன் வழங்கு வதையும், செவ்வன் ஆய்ந்து காண்க.
3. வீழ். வீழ்தல் = ஒருவர்மேற் காதல்கொண்டு விழுதல், அங்ஙன் விழுமாறு காதலித்தல், காதலித்தல், விரும்புதல். ‘To fall in love with’ என்னும் ஆங்கில வழக்கை நோக்குக.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (குறள். 1103)
என்றார் திருவள்ளுவர்.
வீழ் - விழு. விழுதல் = விரும்புதல். விழுத்தல் = பிறர் விரும்பும்படி சிறத்தல்.
ஒருவர்க்கு வேண்டியவரைச் சிறந்தார் என்று சொல்வதையும், விரும்பப் படுகின்றவர் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையும், நம்பு நய என்னும் பகுதிகளிலிருந்து தலைமை குறிக்கும் நம்பன். நாயகன் என்னும் பெயர்கள் தோன்றியிருத்தலையும் நோக்குக.
வடுக வரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் என்பது பழைய வழக்கு.
விழுக்கழஞ்சு, விழுப்புண், விழுப்பேறு முதலிய தொடர்களில். விழுச்சொல் சிறப்புக் குறித்தல் காண்க.
விழு - விழுமு. விழுமுதல் = சிறத்தல். விழுமிய = சிறந்த.
ஒ.நோ: குழு - குழுமு - குழுமிய.
விழுமு - விழுமம் = சிறப்பு.
விழு - விழுப்பு - விழுப்பம் = சிறப்பு. விழுப்பு + அரையன் = விழுப்பரையன்.
விழு - விழா - விழவு = விரும்பிச்செய்யும் கொண்டாட்டம். விழா - வ்ரா (வ.).
அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடாகிய தமிழ் வரலாறு என்னும் போலியாராய்ச்சி நூலில். வ்ரா என்னும் வடசொல்லி னின்று விழா என்னும் தென்சொல் பிறந்துள்ளதாகக் கூறியுள்ள கூற்றின் புன்மையையும் புரைமையையும் நோக்கித் தெளிக.
விழு - விழை. Gk. philos, desire.
Philanthropy, Philology முதலிய ஆங்கிலச் சொற்களின் முதனிலை விழைவுச் சொல்லே.
விழை - விழைச்சி = இன்பநுகர்ச்சி, புணர்ச்சி.
விழை - விழைச்சு = புணர்ச்சி.
விழை - விழாய் - விடாய் = நீர்வேட்கை, விருப்பம்.
விழு - விள் - விரு - விருந்து = விரும்பியிடும் சிறந்த வூண், அவ்வூணுக்குரிய புத்தாள், புதுமை.
விரு - விரும் - விரும்பு.
விள் - வெள் - வெம். வெம்மை = விருப்பம்.
வெம்மை வேண்டல் (தொல். 817)
வெம்மை - வெய்யோன் = விரும்புகின்றவன். விரும்பப்படத் தக்கவன்.
ஒ.நோ: செம்மை - செய்யோன் - சேயோன்.
வெள் - வேள் = விரும்பு (வி.) விரும்பத்தக்க தலைவன். தலைவன். சிற்றரசன், காதலை யுண்டுபண்ணும் காமன். குறிஞ்சித் தலைவனாகிய முருகன்.
வேள் + ஆளன் - வேளாளன் = பிறரை விரும்பி விருந்தோம்பும் உழவன்.
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் (திரிகடு. 12)
வேள் + ஆண்மை (ஆள் + மை) = வேளாண்மை = வேளாளன் தன்மையாகிய விருந்தோம்பல். அவள் செய்யும் பயிர்த்தொழில்.
வேள் - வேளான் = முருகன் கோயிற் பூசாரியாகிய குயவன்.
வேள் + கோ = வேட்கோ = குயவர் தலைவன். குயவன்.
வேள் - வேண் = விருப்பம். வேண் + அவா = வேணவா.
வேள் - வேண்டு. ஒ.நோ: E. want.
வேண்டு - வேண்டும் (தன்மைப் பன்மை உடன்பாடு).
வேண்டு - வேண்டாம் - வேண்டா (தன்மைப்பன்மை எதிர்மறை).
வேள் - வேட்கை = விருப்பம். நீர் விருப்பம் (தாகம்).
வேள் -வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம், விருந்தோம்பல், திருமணம் விழா.
வேள் - வேள்வு = யாகம், திருமணம் வரிசை.
வேள் - வேட்டம் = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.
வேள் - வேட்டை = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.
வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு - வேடன் = வேட்டைத் தொழிலோன்.
விள் - பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல் = விரும்பப்படும் பெண், பெண்விலங்கு.
பிண் - பிணை = பெண் விலங்கு. பிண் - (பிணி) - பிடி.
வெள் - பெள் - பெட்பு = விருப்பம், காதல்.
பெள் - பெண் - ஆடவனால் விரும்பப்படுபவள்.
பெள் - (பெட்டு) - E. Pet.
பெண் - பெண்டு. பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி.
பெண் - பெண்ணை = காய்க்கும் பெண்மரம். பெண்பனை, பனை.
பெண்ணை - பெண்ணையன் = பெண்டன்மையன்.
பெண் - பேண், பேணுதல் = விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல்.
பெள் - பெட்டு - பெட்டை - பெடை - பேடை - பேடு - பேடன்.
பேடி.
இதுகாறும், மூன்று சொற்குடும்பங்கள் காட்டப்பட்டன.
கல் என்னும் வேரடிச் சொற்றொகுதிகள் காழ் கண் என்னும் அடிகளினின்றும் பிறந்து கருமை என்னும் வேர்க்கருத்து மறைந்து, விளையாடு, எரி, பார், கா முதலிய வினைப் பொருள் களைப் பெற்ற, களி காய் கண் காணி முதலிய சொற்களைக் கொண்ட தொகுதியாதலின், சொற்குலமென்றும், ஈண்டுக் காட்டப்பட்ட தில் வகு வீழ் என்னும் மூவடிச் சொற்றொகுதிகள், திண்மை, பகுப்பு, விருப்பம் ஆகிய மூலக் கருத்துகளுள் ஒவ்வொன்றையே தழுவிய சொற் கூட்டங்களாதலின், சொற் குடும்பமென்றும் கூறப்பட்டன.
ஒரு குடும்பம் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும். அப் பல குடும்பமுங் சேர்ந்து ஒரு குலமாதலும் போல, ஒரு சொற்குடும் பமும் பல குடும்பங்களைத் தோற்றவித்தலும், அப் பல குடும்பமுஞ் சேர்ந்து ஒரு குலமாதலும் உண்டு. எடுத்துக்காட்டாக, தின், திரி, திருகு, திரும்பு, திறம்பு, திமிறு முதலிய சொற்களோடு சேர்க்கப் படின், தில் குடும்பமும் ஒரு குலமாகி விடும்.
குடும்பு, குடும்பம், குடி, குலம், பால், இனம், வரணம் என மேன்மேல் விரியும் மக்கட் கூட்டப் பகுப்பு, சொற்களுக்கும் ஏற்கும், இப் பகுப்புகளுள் ஒவ்வொன்றும் சிறியது பெரியது என இருதிறப்படும்.
சொற்பெருங் குலம்
மக்கட்டொகுதி, குடும்பம் முதல் வரணம்வரை பல்வகைத் தொகுதியாகப் பகுக்கப்பெறும்.
கணவனும் மனைவியும் மணமாகாத மக்களுமாகக் கூடிவாழுங் கூட்டம் குடும்பாகும். பெற்றோரும் மணமாகிப் பிள்ளைபெற்ற மக்களுமாகக் கூடிவாழுங் கூட்டம் குடும்பமாகும். அம்மீறு பெருமைப் பொருள் விகுதியாதலின், குடும்பிற் பெரியது குடும்பமென்றும், இவ்விரு பெயர்களும் உலகவழக்கில் தடுமாறி வழங்குகின்றன வென்றும் அறிதல் வேண்டும். அம்மீறு பெருமைப்பொருள் விகுதியாதலை, கண்டு - கண்டம். கம்பு - கம்பம் என்னும் பெயரிணைகளிற் காண்க.
பல தலைமுறையாகத் தொடர்ந்துவரும் குடும்பம் குடியாகும். குடியைக் கோத்திர மென்பர் வடமொழியாளர். தொடர்புள்ள பல குடிகள் சேர்ந்தது குலமாகும். செட்டியார் முதலியார் என்பன குலங்கள். குறவர். மறவர், இடையர், குடியானவர் (உழவர்), செம்படவர் என்பன முதற்காலத்தில் ஐந்திணைக் குடிகளாக விருந்து, பின்பு ஐங்குலங்களாக மாறிவிட்டன.
தனித்தவரும் தொகுதியானவருமாகத் தொழிலொத்த பல குலங்கள் அல்லது குலத்தார் சேர்ந்தது பாலாகும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன தமிழகத்து நாற்பால்கள். அந்தணர் என்பார், அருள் முதிர்ந்த முனிவர், குடியானவர், கவுண்டர், அகம்படியர் முதலிய உழுதுண்ணுங் குலங்களும் முதலியார். வெள்ளாளர் முதலிய உழுவித் துண்ணுங் குலங்களும் சேர்ந்தது வேளாண் பாலாகும், இங்ஙனமே பிறவும்.
பல பால்கள் சேர்ந்தது இனம், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் முதலியன இனங்கள், இனத்திற்கு மேற்பட்டது வரணம், ஆரியர், திராவிடர், மங்கோலியர் முதலியர் வரணங்கள், வரணம் என்னும் சொல்லின் இயற்பொருள் நிறம் என்பதே. ஆதலால், நிற வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டதே வரணப் பகுப்பாகும். ஆரியர் வெண்ணிறத்தர்; மங்கோலியர் பொன்னிறத்தர்; திராவிடர் புகர் நிறத்தர்.
மக்கட் கலப்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் வரணத்தாரின் நிறம் மாறுவதுண்டு.
குடும்பு முதல் வரணம் வரை ஒவ்வொரு தொகுதியும் அளவும் தொடர்பும் பற்றிச் சிறியதும் பெரியதும் என இருதிறப்படும்.
மக்கள்போன்றே சொற்களும் குடும்பு முதல் வரணம் வரை பலவகைத் தொகுதிகளாகப் பகுத்தற் கேற்றன.
தமிழிலுள்ள சொற்களெல்லாம், தமிழரைப்போல் குடும்பு முதல் பால் வரை ஐவகைத் தொகுதிகளாகப் பகுக்கப் பெறும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிக ளெல்லாம் இனமொழிகளாதலின், அவற்றிலுள்ள பொதுச்சொற் களெல்லாம் இனச் சொற்களாகும்.
திராவிடச் சொல்லோடு தொடர்புள்ள ஆரியச் சொற்களும், சித்தியச் சொற்களும். அவை போன்ற பிறவும், வரணம் என்னும் தொகுதிப்பட்டன. ஆதிதிராவிட மக்கள் தட்பவெப்பநிலை வேறுபாட்டால் எங்ஙனம் ஆரிய ரானாரோ, அங்ஙனமே அவர் சொற்களும் ஆரியமாய் மாறிவிட்டன என்க.
இக் கட்டுரையின் தொடக்கத்தில் காட்டப்பெற்ற சொற்குலத்தில், முதலிலிருந்து கன்று - அன்று என்பது வரையும் ஒரு சொற் குடும்பமாகும்.
அதனொடு கள் - களம் என்பது வரையுள்ள பகுதியைச் சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குடும்பமாகும்.
அதனொடு கறு - காறு என்பதுவரை சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குடி யாகும்; அதனொடு இறுதிவரை சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குலமாகும்.
கல் என்னும் வேர், குல் என்னும் வேரின் திரிபாகும். சொல்லாக்கத் திரிவில் சிறுபான்மை உகரம் அகரமாகத் திரிதல் உண்டு.
எ-டு: முடங்கு - மடங்கு குரும் - கரம் (இந்தி) குடும்பு - கடும்பு குடம் - கடம் (வடமொழி).
Butt (முட்டு) cuckoo (குக்கூ) முதலிய ஆங்கிலச் சொற்களில் உகரம் அகரமாக ஒலிப்பது இக் காரணம் பற்றியே.
குல் என்னும் வேர்ச்சொற் பொருள் பொருந்தல் அல்லது கலத்தல்.
குல் - குலவு = பொருந்து, கூடு. குலவு - குலாவு.
குல் - குலம் = கூட்டம், வகுப்பு.
குல் - குலை = கூட்டம், கொத்து.
குள் - குழு = கூட்டம், திரட்சி, குழு - குழூஉ.
குழு - குழாம், குழு - குழை = திரண்ட காதணி.
குழு - குழுமு - குழுமம். ஒ.நோ: L. glomus, E. glomerate, globe, etc.
குழு - குழவி = உருண்ட அறைகல்.
குள் - குண்டு = திரண்டது, உருண்டையானது.
பல பொருள்கள் அல்லது பகுதிகள் ஒன்று சேரும் போது திரட்சியும் அதனால் உருட்சியும் உண்டாகும்.
ஒன்றோடொன்று ஒட்டாப் பொருளாயின் திரட்சிமட்டும் உண்டாகுமென்றும், ஒட்டும் பொருளாயின் திரட்சியோடு உருட்சியும் உண்டாகுமென்றும் பகுத்தறிதல் வேண்டும். மக்கட்டிரளையும் மட்டிரளையும் நினைத்துக் காண்க.
குண்டு - குண்டை = உருண்டு திரண்ட எருது.
குண்டு - குண்டன் = திரண்டவன், உடல் வலிமையால் பிறரை வருத்துபவன்.
குண்டு - குண்டான் = திரண்ட தடி.
குண்டு - குண்டா = திரண்ட வடிவான கலம்.
குண்டு - குண்டலம் = திரண்ட காதணி.
குல் - கல் - கல = பொருந்து, கூடு.
கல் - கல்வி, கலவை, கலப்பு.
கல - கலம்பு - கலம்பம் - கதம்பம்.
கலம்பு - கலம்பகம்.
கல - கலகம் = பலர் கலந்து செய்யும் சண்டை.
கைகலத்தல் என்னும் வழக்கை நோக்குக.
கல - கலாம், ஒ.நோ: பொரு - போர்.
பொருதல் = பொருந்துதல், கலத்தல்.
கல - கலங்கு - கலக்கு - கலக்கம்.
கலங்கல் = பல பொருள்கள் கூடுதல். அதனால் உண்டாகும் மயக்கம்.
மண் தூசி முதலிய பிற பொருள்களுடன் கலந்த நீர் கலங்கல் நீராகும். பல பொருள்கள் கலந்திருக்கும் போது. அவற்றுள் வேண்டியதைப் பிரித்தறிய முடியாத கலக்கம் ஏற்படுதலின், கலத்தற் கருத்தினின்று கலக்கக் கருத்துத் தோன்றிற்று.
அதுவோ, இதுவோ, அன்றி வேறெதுவோ என்றிப்படி ஒன்றைத் துணிய முடியாதவாறு பல கருத்துகள் மனத்திற் கலத்தல் மனக்கலக்கம் என்றறிக.
கவர்வழிகளைக் காணும்போது வழிப் போக்கனுக்கும், ஒருநிலைப்பட்டவர் பலர் கூடியிருக்கும் போது அவருள் ஒருவரைக் காண விரும்பும் புதியோனுக்கும் மனக்கலக்கம் ஏற்படுதல் காண்க.
நளன் வடிவில் நால்வரைக் கண்ட தமயந்தி கலக்கத்தையும் நினைத்துக் காண்க.
கலக்கம் என்பதன் ஒருபொருட் சொற்களான மயக்கம், மருள் என்னும் சொற்களும் இதே மொழிப்பொருட் காரணத்தைக் கொண்டவையே.
மயங்கு - மயக்கம், மயங்குதல் = கலத்தல், கலங்குதல்.
திணைகளும், வேற்றுமைகளும் தம்முள் ஒன்றோடொன்று கலத்தல் திணைமயக்கம் என்றும் வேற்றுமை மயக்கம் என்றும் கூறப்படும். பகலும் இரவும் கலக்கும் மாலையை மயங்குபொழுது என்பர். இது நூல்வழக்கில் மருண்மாலை எனப்படும்.
இனி, ஒளியின்மையாலோ, காதலர்ப் பிரிந்தமையாலோ மக்கள் மனங்கலங்கும் மாலை மருண்மாலை எனினுமாம்.
மருட்சி = மயக்கம். மரு - மருள். மருவுதல் = பொருந்துதல், கலத்தல்.
மரு - மருமம் - மருமர் - மம்மர் = மயக்கம்.
Confusion என்னும் ஆங்கிலச் சொல்லும் கலத்தல் என்னுங் கருத்தடியாகவே மயக்கப் பொருளைக் கொண்டதாகும். (con = together, fuse = mix).
கல - கலுழ் - கலுரி. கலுழ்தல் = கலத்தல், கலங்குதல். கலுழி = கலங்கல் நீர், மையொடு கலந்த அல்லது மனங்கலங்கி யழும் கண்ணீர்.
கலக்கக் கருத்தினின்று இருட்கருத்தும். இருட்கருத்தினின்று கருமைக் கருத்தும் தோன்றும். அறிவு அகவொளி யாதலின், அறியாமை அல்லது மயக்கம் அகவிருள் எனப்படும். ஒன்றன் உண்மை யறியாது கலங்கும் கலக்கம் பொருள் தெரியாத இருள்போன்ற நிலையே. ‘To be left in the dark’ என்பர் ஆங்கிலரும், இருள் கருநிறம் ஆகையால், கலக்கப் பொருட்சொல் கருமைப் பொருளைத் தழுவிற்று.
கல் - கால் = கருப்பு. கல் - கன்று = வெயிலாற் கருகு.
ஒரு சொற்கு ஒரு பொருண்மை. உத்திக்குப் பொருந்துவதோடு ஒப்புமையால் உறுதிப்பட வேண்டும். கலத்தற்பொருள் தரும் கல் என்னும் சொல் கருமைப்பொருள் குறித்தல் போன்றே. அதன் ஒருபொருட் சொல்லான மய என்னும் சொல்லும் கருமைப் பொருள் குறிக்கும். மயங்கு என்னும் சொல்லின் வேர் மய என்பதே. கலங்கு என்னும் சொல்லின் வேர் கல என்றிருத்தல் காண்க.
மய - மயங்கு - மசங்கு.
மய = மயல் - மால். மயல் - மையல் = காதல் மயக்கம்.
மால் = மயக்கம், கருமை, கரிய மேகம், கரிய விண்டு (விஷ்ணு).
மால் - மழை, மால் - மாரி = கரியாள், காளி, மழை.
மால் - மாலம் = மயக்கம், ஏமாற்றம்.
மால் - மாலை = மயக்கம், பலபொருள் கலந்த வரிசை, மயங்கும் வேளை. மாலை - மாலா (வ.).
மால் - மா - மை. மாமை = கருமை. மாயோன் = கரியன். விண்டு.
ஒ.நோ: E. malbino = கரியன்.
மை = கருப்பு, மேகம். வெள்ளாடு (காராடு), கரிய பசை அல்லது குழம்பு, பசைப்பெருள்.
மை - மசி - மசகு = வண்டி மை.
காட்சிப்பொருட் கருத்து, கருத்துப்பொருட் கருத்து என்னும் இருவகைக் கருத்துள், முன்னதினின்று பின்னது தோன்றுவதே இயல்பாயினும், இன்னதினின்றே இன்னது தோன்றவேண்டு மென்னும் யாப்புறவில்லை. இவ்விரண்டுள் எதனின்றும் எதுவும் தோன்றலாம். அல்லாக்கால் சொல்லாக்கம் பெரிதும் முட்டுப்படும்.
இக் கட்டுரையின் முதற் பகுதியில் வரையப்பெற்ற கல் என்னும் சொற்குலத்தோடு, அதன் முற்படையாக இங்குக் காட்டப்பெற்ற பகுதியைச் சேர்த்துக்கொள்ளின், ஒருசொற் பெருங்குல மாகும். எல்லாத் தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் ஐந்நெடில்களினின்றே பிறந்திருப்பதால் அவ்வைந்தும் சொற்பாலடிகளாகும்.
இதுகாறும் கூறியவற்றால், மக்கள் போன்றே சொற்களும், குடும்பு முதல் வரணம் ஈறாகப் பல்வகைத் தொகுதிகளாக விரிந்து இயங்குகின்றன வென்றம், மக்கட்குள்ள தொடர்பு போன்றே அவர் சொற்கட்கும் மொழி கட்கும் தொடர்புண்டென்றும் நடுநிலையாகவும் நெறிப்படவும் நுட்பமாகவும் ஆய்ந்து நோக்கு வார்க்குச் சொற்றொடர்பும் மொழித்தொடர்பும் புலனாவது திண்ணமென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க.
அடிச்சொல் காண்வழி
பல மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டி ருப்பின், பார்த்தமட்டில் அவற்றின் அடிகளைக் காண்பது அரிதாகும். அவற்றின் நுனிக்கொழுந்திலிருந்து இணுக்கும். வளாரும், குச்சும், போத்தும், சினையும், கொம்பும், கிளையும் கவையுமாக ஒவ்வொன்றாய்க் கீழ்நோக்கிப் பிரித்துக்கொண்டே வரின், இறுதியில், நிலத்தின்மேல் முதற் கீழ்ப்பகுதியாகவுள்ள அடியைக் காணலாம். அதன்பின் அவற்றின் வேரைக் காண்பது தேற்றமாயினம், நிலத்தைத் தோண்டினா லன்றிக் காண முடியாது, இப் பன்மரப் பிணையல் போன்றே. பல அடிகளினின்று கவைத்துக் கிளைத்துப் பல்கிப் பெருகியுள்ள சொற்றொகுதி களும், பார்த்த மட்டில் பிரித்துணரப்படாவாறு, தம்முள் மயங்கிக் கிடக்கின்றன. அவற்றின் அடியைக் காண்பதற்கும் மேலிருந்து கீழ்நோக்கி வரல் வேண்டும். அடியைக் கண்டபின், ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி வேரைக் காண முடியாது. இதைக் குறித்தற்கே.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். பெயர். 1)
என்று கூறிய தொல்காப்பியர்.
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். உரி. 96)
என்று வரையிட்டார்.
சொல்லடி காண்வழியைக் காட்டுமுகமாக, கோடு என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு. அதன் அடியை ஈண்டு ஆய்கின்றேன்.
கோடு என்னும் சொல், கோணுதல் அல்லது வளைதல் என்னும் பொருளைக் கொண்டு, பெயராகவும் வினையாகவும் வழங்கும் சொல். இதன் வழியாகச் சில சொற்கள் பிறந்துள்ளன.
வளைதற் கருத்தினின்று வட்டக் கருத்தும், வட்டக் கருத்தினின்று சூழ்தற் கருத்தும் தோன்றும். ஒரே பொருள் வட்டமாக, மேன்மேல் வளைந்து செல்வது திருகல்முறுகலான புரிதலாதலின், வளைவுக் கருத்தினின்று புரிதற் கருத்தும் தோன்றும்.
எ-டு: வளை - வளையம் (வட்டம்)
வளை - வளைசல் (சூழ்வு)
வளை - வளை (சங்கின் வல இடப் புரிவு)
கோடுதல் = வளைதல், கோட்டம் = வளைவு, மதிலால் வளையப்பட்ட கோவில் அல்லது சிறைச்சாலை, வேலியால் வளையப்பட்ட மாட்டுக் கொட்டில்.
கோட்டை = வளைந்த மதில், வட்டமான நெற்கூடு, மதியைச் சூழ்ந்துள்ள ஊர்கோள்.
கோட்டகம் = வளைந்த குளக்கரை, கரை.
கோடு = வளைவு, வளைந்த வரி, வரி.
கோடு = வளைந்த மரக்கிளை, கிளை.
கோடு = வளைந்த கொம்பு, கொம்பு.
கோடு = வளைந்த கரை, கரை.
கோடு = வளைந்த சங்கு, சங்கு.
மலையைக் குறிக்கும் கோடு என்னும் சொல் குவடு என்னும் சொல்லின் திரிபாதலின் வேறாம்.
கோட்டம் என்னும் தென்சொல்லே, வடமொழியில் கோஷ்ட என்றும் இலத்தீனில் castrum என்றும் அதன் வழியாய் ஆங்கிலத்தில் ‘caster’, ‘chester’ என்றும் திரியும். ஆங்கிலத் திரிவுகள் ஊர்ப்பெயரீறாகவும் வழங்கும்.
எ-டு: doncaster, colchester, exeter (excester).
இப் பெயர்களை, அறுப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை முதலிய தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களுடன் ஒப்புநோக்குக.
கோடு என்பதன் நேர்மூலம் கோண்.
ஒ.நோ: பாண் - பாடு, பேண் - பேடு.
கோண் என்னும் பகுதியினின்று, கோணு, கோணல், கோணம், கோணை முதலிய சொற்கள் பிறக்கும்.
கோணம் என்னும் தென்சொல்லே, கிரேக்கத்தில் ‘gonia’ (angle) என்றும், அதன் வழியாய் ஆங்கிலத் தொடர்ச்சொற்களில் gon என்றும் திரியும்.
எ-டு: Trigonometry (திரிகோண மாத்திரை)
polygon (பலகோணம்)
கோண் என்பதன் நேர்மூலம் கோள்.
ஒ.நோ: பெள் - பெண். வேள் - வேண்.
கோள் = வளைவு, வட்டம், உருண்டை, உருண்டையான கிரகம்.
ஊர்கோள் = மதியைச் சுற்றி ஊர்ந்துள்ள வட்டம்.
கோள் என்னும் பகுதியினின்று, கோளம், கோளா, கோளகை முதலிய சொற்கள் பிறக்கும்.
வட்டக் கருத்தினின்று உருட்சிக் கருத்தும், உருட்சிக் கருத்தினின்று திரட்சிக் கருத்தும் தோன்றும். வளைவு முற்றியதே வட்டம். கன வடிவான வட்டமே உருண்டை.
கோள் + அம் = கோளம். கோளம் = உருண்டை. பூகோளம்.
குடகோளம், குணகோளம், அண்டகோளம் முதலிய தொடர்களில் கோளம் என்னும் சொல்லின் பொருளை நோக்குக.
கோள் + ஆ = கோளா. ஆ ஒரு தொழிற்பெயர் விகுதி.
எ-டு: உண் + ஆ = உணா. இரு + ஆ = இரா. இருத்தல் = கருத்தல்.
கோளா = உருண்டையான ஒருவகைச் சிற்றுண்டி.
கோள் + அகை = கோளகை. கோளகை = உருண்டை அகை ஓர் ஈறு: வாடகை கொட்டகை என்பவற்றிற் போல.
கோளம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கு அருகியமையாலும், வடமொழியில் வழக்குப் பெருகியமையாலும். வடசொற்கள் போலத் தோன்றுகின்றன. இங்ஙனமே வடமொழிச் சென்ற பிற தென்சொற்களிற் பலவும் என்க.
ல, ள, ழ ஆகிய மூன்றும், முறையே பிஞ்சும், காயும், கனியும் போல, மெலிந்தும் திரண்டும் முதிர்ந்தும் உள்ள ஒரே ஒலியின் வேறுபாடுகளாதலின், சொற்களில் ஒன்றுக்கொன்று போலியாக வருவதுண்டு.
எ-டு: வேலை - வேளை, பவளம் - பவழம்.
இம் முறையில், கோள் என்னும் சொல், கோல் என்னும் வடிவும் கொள்ளும். உண்மையில், கோல் என்பதே முந்தியதாகும்.
கோல் = வளைவு. உருட்சி, திரட்சி, திரண்ட தடி, தடி, தண்டு, அடி.
காம்பு கோல்தொடி = திரண்ட வளையல்.
கோல் + இ = கோலி. கோலி = உருண்டை. கல் மண் கண்ணாடி முதலியவற்றாலாய சிற்றுருண்டை.
கோள் என்பதன் நேர்மூலம் கொள்.
கொள் = (வி) வளை, சுற்று, சுழல்.
கொள் = (பெ.) வளைவு, வளைந்த காணக்காய், காணம்.
காயும் கோணக்காய் சொல்லடா மைத்துனா
கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா
என்பது ஒரு விடுகதை உரையாட்டு
கொள் - கோள் (முதனிலை திரிந்த தொழிற்பெயர்) = கதிரவனைச் சுற்றிவரும் கிரகம் எனினுமாம்.
கொள் + பு = கொட்பு. கொட்பு = சுற்றுகை.
கொள் என்னும் பகுதியினின்று. கொக்கி. கொண்டி முதலிய சொற்களும். கொட்டு. கொடு முதலிய வழியடிகளும் பிறக்கும்.
கொள் - கொட்கி - கொக்கி = வளைந்த கொளுவி.
ஒ.நோ: A.S. hoc, hooc; D. hook; Ice. haki; Ger. haken; O.H.G. hako; L.G. hake; E. hook.
கொள் - கொட்கு - கொக்கு = கொக்கிபோல் வளைந்த கழுத்தை யுடைய பறவை.
கொள் - கொண்டி. ஒ.நோ: வள் - வண்டி.
கொண்டி = கொக்கி அல்லது வளையமுள்ள நாதாங்கி.
கொள் - கொம் - கொம்பு = வளைந்த கிளை, கிளை, வளைந்த மருப்பு அல்லது கோடு.
கொம்பு என்னும் சொல். தெலுங்கில் இன்றும் கொம்மு என்றே வழங்கும்.
ஒ.நோ: வள் - வம் - வம்பு.
கொம்பு - கொப்பு. கொம்பு - கம்பு.
கொள் - கொட்டு - கொட்டம். ஒ.நோ: வள் - வட்டு - வட்டம்.
கொட்டம் = வளைவு, வட்டமான மாட்டுத் தொழுவம் அல்லது பட்டி. நேர்மையில்லாத. அஃதாவது, நீதி நெறியினின்று கோணிய கொடிய ஆரவாரம்.
முதற் காலத்தில் ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் வட்ட வடிவமாகவே அமைக்கப்பட்டன; பிற்காலத்தில் மழைக் காப்பிற்குக் கூரை யமைந்தபோது கூடமாகக் கட்டப்பட்டன.
கொட்டு + இல் = கொட்டில் = மாட்டுத் தொழுவம், தொழுவம் போன்ற கூடம், பட்டறை, ஆயுதசாலை.
கொட்டு + அகை = கொட்டகை. கொட்டகை = தொழுவம், கூடம்.
இன்றும் வடார்க்காட்டார் மாட்டுத் தொழுவத்தைக் கொட்டகை என்பர்.
கொட்டு + ஆரம் - கொட்டாரம். ஆரம் என்பது ஓர் ஈறு; கூடாரம். வட்டாரம், பணியாரம் என்பவற்றிற் போல.
கொட்டாரம் = வட்டமான களஞ்சியம், களஞ்சியமுள்ள புறக்கடை, புறக்கடை.
இன்றும் நெற்கூடுகள் வட்டமாகவே கட்டப்படுகின்றன.
கொள் - கொடு - கொடுமை = வளைவு, நீதிநெறியினின்று கோணிச் செய்யும் தீங்கு. கொடுமையுடையார், கொடியார்.
கொடுங்கோல் = வளைந்த கோல், வளைந்த கோற்போல நீதிநெறியினின்று கோணிய ஆட்சி.
கொடுந்தமிழ் = இலக்கணநெறியினின்று கோணிய தமிழ்.
கொடுக்காய் = வளைந்த காய், கொடுக்காய்ப் புளி, கோணப் புளியங்காய் என்னும் சொற்களை நோக்குக.
கொடு - கொடுக்கு = வளைந்த முள்ளுறுப்பு.
கொடுக்கு - E. crook; W. croog; F. croc.
ட - ர. போலி. எ-டு: படவர் - பரவர். முகடி - முகரி.
கொடு - கொடி = வளைந்த தண்டுள்ள செடி.
கொடு - கொடி = வளைவு கருங்கொடிப் புருவத்து (மணிமே. 3:119).
கொடு - கொடி = கதிரவன் எழுந்து வளையும் கிழக்கு.
கொள் என்பதன் நேர்மூலம் குள்.
குள் - குண் - குணம் = வளைவு. கதிரவன் எழுந்து வளையும் கிழக்கு.
குணம் - குணகு - குணக்கு = வளைவு. கிழக்கு.
குணகுதல் = வளைதல். நாய்வாலைக் குணக்கொடுக்கலாமா? என்பது பழமொழி.
குணக்கு - குணுக்கு = காதுவளையம்.
குணம் - குடம் = வளைவு. கதிரவன் வளைந்துவிழும் மேற்கு. உருண்ட கலம்.
குடம் - கடம்(வ.).
குடம் - குடந்தம் = வளைவு. வணக்கம் (உடல் வளைவு). வழிபாடு.
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுருகு. 229)
குடம் - குடா = வளைந்த கடல். குடாவடி = வளைந்த பாதம்.
குடம் - குடி = வட்டமான அல்லது வளைந்த குடியிருப்பு. வீடு. வீட்டுத் தொகுதியாகிய சேரி அல்லது ஊர். வீட்டிலுள்ள மனைவி, மனைவியோடு தொடங்கும் குடும்பம். குடும்பத்தின் பெருக்கமான குலம். வீட்டுவாசம். வீட்டுவாசி. வளைந்த புருவம்(பிங்.).
குறிஞ்சி நிலத்தூர் சிறுகுடி எனப்படும். காரைக்குடி மன்னார்குடி எனப் பலவூர்ப்பெயர்கள் குடி என்னுஞ் சொல்லை ஈறாகக் கொண்டுள்ளன.
ஏழை மக்கள் சிலர் மூங்கில் தட்டியை வளைத்த கூண்டுகளையே குடியிருப்பாக வைத்துக்கொண்டு வாழ்வதை இன்றுங் காணலாம்.
ஒ.நோ: இல் = மனை, மனைவி, குடும்பம், குடி, குலம்.
குடி - குடிகை = சிறு வீடு, சிறு கோயில், கை ஒரு குறுமைப் பெயரீறு.
குடிகை - குடிசை = சிறு வீடு. cottage.
குடு - குடில் = சிறு வீடு. இல் ஒரு குறுமைப் பெயரீறு.
எ-டு: தொட்டி - தொட்டில்.
குடில் - குடிலம் = வளைவு, சிறு வீடு.
குடிலம் - குடீரம் (வ.).
குடி A.S. cote; E. cot; Ger. kot, koth, kote; Ice. and D. kot = hut or small house.
குடி - (குடிம்பு) - குடும்பு - குடும்பம் - kutumba (வ.)
குடும்பு - கடும்பு = குடும்பம். சுற்றம்.
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது (புறம். 68:2)
உ-அ. போலி. எ-டு: முடங்கு - மடங்கு. முறி-மறி. குடம்-கடம் (வ.).
குடம் - குடுவை-குடுக்கை = உருண்டைக் கலம், கரைக்கலம்.
குள் என்பதன் நேர் மூலம் குல்.
குல் - குலம் = வட்டமான குடியிருப்பு, வீடு. வீட்டிலுள்ள குடும்பம். குடும்பத்தின் பெருக்கமான மக்கள் வகுப்பு, கூட்டம், தொகுதி.
தேவகுலம் = கோயில்.
குலம் - குலன். E. clan; Gael. clann; It. clann, cland.
முதற்காலத்தில் குடிசைகளும் வீடுகளும் வட்ட வடிவாய்க் கட்டப்பட்டன; அல்லது வளைந்த கூரையுடையனவா யிருந்தன. வட்ட வடிவான சிறு வீடுகளை இன்றும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணலாம்.
குல் - குலவு. குலாவுதல் = வளைதல்.
குலவு - L, curvus, E. curve.
குலவு - குலாவு. குலாவுதல் = வளைதல்.
குல் - குர் - குரம் = வட்டமான குதிரைக் குளம்பு.
குரம் - குரங்கு = வளைவு. கொக்கி. குரங்குதல் = வளைதல்.
குரம் - குரம்பை = வளைந்த குடில், குடில்.
குரம் - குரவை = மகளிர் வட்டமாக நின்று ஆடுங் கூத்து.
குரவை - Gk. choros = originally a dance in a ring.
L. chorus, coracle.
குல் - குன். குன்னுதல் = வளைதல், வளைந்து குறுகுதல்.
குள் - குனி, குனிதல் = வளைதல்.
குன் - குனுகு. குனுகுதல் = உடல் வளைதல்.
குன் - கூன் = முதுகு வளைவு.
குல் என்பதன் நேர் மூலம் உல்.
உல் - உலம் = உருட்சி, திரட்சி, திரண்ட கல்.
உலம்வா - உலமா, உலமருதல் = சுழலுதல், உழலுதல்.
உலம் - உலகு - உலகம் - லோக(வ.) = உருண்டையான மாநிலம் அல்லது சுழலும் கோள்.
உல் - உல - உலவு. உலவுதல் = சுற்றுதல்.
உல - உலா = நகரத்தைச் சுற்றி வருதல். அரசனது வெற்றியுலாவை வருணிக்கும் நூல்.
உலா - உலாவு = (வி.) நகரத்தைச் சுற்றிவா, சுற்றி வா.
உல் - உர் - உருள். உருளுதல் = வட்டமாகச் சுழன்று செல்லுதல்.
உருள் - E. whirl, L. roll.
உருள் - உருளை - உருடை - ரோதை - L. rota = a wheel..
இதுகாறும் காட்டப்பட்ட சொற்கள் கண்ட வளவில் தொடர் பறியப் படாது பன்மரப் பிணையல் போலப் பிற சொற்களுடன் பின்னிக் கிடப்பினும். ஒரு முறை பிரித்துக் காட்டப்பட்டபின் எவர்க்கும் தொடர்பு விளங்காதிரா. கோடு என்னும் உச்சிக் கொழுந்திலிருந்து உல் என்னும் அடி வரை பிரித்துக் காட்டப் பட்டது. உல் என்பதற்கு மூலமாகிய வேரோ ஆழ்ந்த ஆராய்ச்சி யினாலன்றி அறியவும் அறிவிக்கவும் முடியாது.
இச் சொல்லாராய்ச்சிக் கட்டுரையால் விளக்கப்பெறும் சொன்னூல் மொழிநூல் உண்மைகளும் நெறிமுறைகளுமாவன:
1. உலகத்திற் பல மொழிகள், சிறப்பாகத் திருந்திய மொழிகள், ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன.
2. தமிழிலுள்ள பன்மொழிப் பொதுச் சொற்கட்குத் தமிழில்தான் வேருண்டு.
3. ஒரே பெருங் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மூலத்தினின்று மேலும் மேலும் பல அடிகளும் வழியடி களும் தோன்றிப் பற்பல சொற்களைப் பிறப்பிக்கின்றன.
4. ஒரு கருத்தினின்று மற்றொரு கிளைக்கருத்துத் தோன்றும்.
5. பொருள் திரியும் போது சொல்லும் திரிய வேண்டும்.
6. சொற்கள் திரியும் போது பல்வகை வேறுபாடுகளையும் ஏற்கும்.
7. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. ஆனால், மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.
8. தமிழ் ஓர் இயன்மொழி; அஃதாவது தானே இயற்கை நெறியில் தோன்றிய தாய்மொழி.
9. மொழி, ஒரு சில மூலவொலிகளினின்று தோன்றி வளர்ந்த வளர்ச்சியே.
10. மொழி மாந்தன் அமைப்பே; கடவுள் படைப்பன்று. - செந்தமிழ்ச் செல்வி செப்பிடெம்பர் 1947.
சொற்பொருள் வரிசை
சொற்கள், பொருட்டொகை பற்றி 1. ஒருபொருட் சொல் 2. பலபொருட் சொல் என இரு வகைப்படும். ஆயினும், ஒரு சொல்லின் முதற் பொருள் வழியாகப் பல்வேறு பொருள்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றுதற் கிடமிருத்தலால், ஒரு காலத்து ஒருபொருட் சொல்லாயிருந்தனவும், பிற்காலத்துப் பல பொருட் சொற்களாகிவிடுகின்றன. ஒரு காலத்து ஒரு சொற்கு ஒரு பொருளே தோன்றுவது இயல்பாதலால். பலபொருட் சொற்க ளெல்லாம் முதற்கண் ஒரு பொருட் சொற்களாய் இருந்தனவே.
சொற்களின் பொருள்வரிசை, அதாவது பொருள்கள் முன்னும் பின்னும் தோன்றிய முறை 1. வரலாற்று முறை (Historical Sequence). 2. ஏரண முறை (Logical Sequence) என இருவகைப்படும். ஒரு சொல்லின் பொருள்களை. முதல் வழி சார்பு நூல்களில் அல்லது முன்னிடை பின்னூல்களில் அவை ஆளப்பட்டு வந்த வரன் முறைப்படியே ஒழுங்குபடுத்துவது வரலாற்று முறையாம்; அஃதன்றி உத்திக்குப் பொருத்தமாக அவற்றை ஒழுங்குபடுத்து வது ஏரணமுறையாம். இந்தி போன்ற புதுமொழிகளிலும் ஆரியம் போன்ற முதுமொழிகளிலும் முன்னை அல்லது பண்டை இலக்கியம் அழியாதிருத்தலால் அதன்வாயிலாகச் சொற்பொருள்களின் வரலாற்று முறையை அறிதல் கூடும். ஆயின் பண்டை யிலக்கியம் முற்றும் இறந்துபட்ட தமிழ்போலுந் தொன்முதுமொழியில் அதனை அறியுமாறில்லை. ஆதலால், அத்தகைய மொழிச் சொற்பொருள்கட்கு ஏரண முறைதான் இயலும். ஒரு மொழியின் வளர்ச்சிக் காலத்துச் சொற்கட்கு ஒவ்வொன்றாய்த் தோன்றிய பொருள்கள். அவை தோன்றிய முறையே பிற்காலத்து உணர்த்தப்பெறா: அவ்வவ் இடத்திற் கேற்பவே உணர்த்தப்பெறும். ஒரு வழங்குமொழி என்றும் வளர்ந்து கொண்டேயிருப்பினும். அதன் பெருவாரிச் சொற்கள் ஒரு குறித்த காலத்திற்குள் அமைந்துவிடுகின்றன. அதன்பின், தோன்றும் சொற்களும் பெரும்பாலும் புதுச்சொற்களா யிராமல் பழஞ்சொற்களினின்று அமையும் திரிசொற்களும் கூட்டுச் சொற் களுமாகவே யிருக்கின்றன. ஆதலால், முது பண்டையிலக்கியம் முற்றும் இறந்துபட்டதும். கருத்திற்கு மெட்டாக் காலந்தொட்டு வழங்கி வருவதுமான தமிழில், சொற்பொருள் வரிசை ஏரண முறைப்படிதான் அமைதல் இயலும். வரலாற்று முறை இயற்கை யாகவும் ஏரண முறை செயற்கையாகவும் தோன்றினும் முன்னது உளநூன் முறைப்படி நிகழ்தலின் அவ் உளநூலைத் தழுவிய ஏரண முறையும் பெரும்பாலும் இயற்கை யொட்டியே இருக்கு மென அறிக. இவ்வுண்மைகளை அறியாதார் தமிழிலும் சொற் பொருள் வரிசையை ஆங்கிலத்திற்போல் வரலாற்று முறையில் அமைக்க முயல்வர். இதன் புரைமையை ஓர் எடுத்துக்காட்டாற் காட்டுதும்.
பள்ளி என்னும் சொற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள பொருள்வரிசை வருமாறு:
1. இடம்
2. சிற்றூர்
3. இடைச்சேரி
4. நகரம்
5. முனிவ ராச்சிரமம்
6. சைன பௌத்தக் கோயில்
7. அரண்மனை
8. (தச்சன்) வேலைக்களம்
9. மக்கட் படுக்கை
10. தூக்கம்
11. விலங்கு துயிலிடம்
12. பள்ளிக்கூடம்
13. அறை
14. அறச்சாலை
15. சாலை
16. வன்னியன்
17. பள்ளத்தி
18. குறும்பர் (சிற்றரசர்)
பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) குறிக்கப்பட்டுள்ள இன்னொரு பொருள் (19) கிறித்தவக் கோயில் என்பது, இவற்றுள் முதலும் இறுதியும் (1,19) வரலாற்று முறை தழுவியவை; ஏனைய ஒருமுறையுந் தழுவியவல்ல. இம்முறைகேடு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் சிறப்பியல்பாகும்.
இதுபோலுள்ள தமிழ்நூல்களுள் பழைமையான தொல் காப்பியத்தில், பள்ளி என்னும் சொல் இடம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.
சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத்து. 100)
என்பது காண்க. இதனால், இடம் என்னும் பொருள் முதலிலும், கிறித்துவம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பெற்றபின் தோன்றிய கிறித்தவக் கோயில் என்னும் பொருள் இறுதியிலும், வைக்கப் பட்டன.
மேற்குறிக்கப்ட்ட பத்தொன்பான் பொருள்களொடு, பள்ளம், வீடு, கோயில், கல்லறை (சமாதி) என்பவற்றையுஞ் சேர்க்கலாம். கோயில் என்றது ஈண்டு எல்லா மதங்கட்கும் பொதுவான இறையகத்தை.
கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழா அத்துப் பேதை புகல் (840)
என்னும் குறட்கு.
சான்றோ ரவையின்கட் பேதையாயினான் புகுதல், தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். என உரைத்தார் பரிமேலழகர்.
கழுவாக் காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ் வமளியும் இழிக்கப் படுமாறுபோல இவனால் அவ் வவையும் இழிக்கப்படு மென்பதாம். என்பது அவர் சிறப்புக்குறிப்பு.
இவ் வுரையில் பள்ளியென்பது படுக்கை அல்லது படுக்கைக் கட்டில் என்று கொள்ளப்பட்டது. சான்றோரைத் தேவருக் கொப்பாகக் கூறுவது இலக்கிய மரபாதலால், இங்குப் பள்ளி யென்பது தெய்வத்தன்மையுள்ள இடத்தைக் குறிப்பதென்று கொள்வதல்லது இன்பந் தரும் இடத்தைக் குறிப்பதென்று கொள்வது பொருந்தாது. ஆகவே, பள்ளி என்பதற்குக் கோயில் என்பதே பொருளாம். சான்றோர் கூட்டத்துள் ஓர் அறிவிலி புகுதல் ஒருவன் கழுவாத காலொடு கோயிற்குள் புகுவதொக்கும் என்பதே வள்ளுவர் கருத்தாதல் வேண்டும். குளித்து விட்டு அல்லது கை கால் கழுவிவிட்டுக் கோயிற்குள் புகுதல். இன்றும் பல்வேறு மதத்தார்க்கும் வழக்கமாயிருத்தல் காண்க. தேவரைப் புலவரென்று திருவள்ளுவர் குறிப்பிடுவதையும்.
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் (நாலடி. 151)
என்று நாலடியார் கூறுவதையும் நோக்குக.
ஆகவே, ஏற்கெனவே கோயிலைப் பொதுப்படக் குறித்த பள்ளியென்னும் பெயரே. பிற்காலத்துத் தமிழகத்துப் புதுவதாக ஏற்பட்ட சமண பவுத்த கிறித்தவ முகமதியக் கோயில்களையும் குறிக்க ஆளப்பட்டிருத்தல் வேண்டும். எதுபோலெனின், ஆரிய மறையையே முதன்முதற் குறித்த வேதம் என்னும் சொல். பிற்காலத்துக் கிறித்தவ மறையையே சிறப்பாகக் குறித்தது போலென்க.
வித்துகள் சேற்றிற் பதிந்து கிடத்தலைப் பள்ளிக்கிருத்தல் என்று நாஞ்சில் நாட்டார் சொல்வதால். பள்ளம் என்னும் பொருளும்; அரசியல் தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறு கம்பு நட்டு அவன் அதைச் செலுத்தும் வரை மறியல் செய்தலைப் பள்ளிகம்பு வைத்தல் என அந் நாட்டாரே வழங்குவதால் வீடு என்னும் பொருளும்; இறந்த அரசன் உடலை எரித்த அல்லது புதைத்த விடத்துக் கோயிற் கட்டுவதைப் பள்ளிப்படை என்று இலக்கியமுங் கல்வெட்டும் கூறுவதால், கல்லறை என்னும் பொருளும்; பள்ளி என்னுஞ் சொற்குக் கொள்ளப்பெற்றன.
பள்ளி என்னும் சொல்லின் வேர் பள் என்பதும், வேர்ப்பொருள் பள்ளம் என்பதும் ஆகும். பள்ளம் அல்லது தாழ்வான இடம் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளமான இடத்தில் வேலை செய்யுங் குலத்தான். (கீழே) படுக்கை, (படுத்தத் தங்கும்) மனை, (தேவமனையாகிய) கோயில், (முதற்காலத்துக் கோவிலில் நடத்த பெற்ற கல்விச்சாலை, (பலமனைகள் சேர்ந்த) ஊர், (மனையும் ஊருமாகிய) இடம் என்னும் எழு பருப் பொருள்களும் இவற்றுட் பலவற்றை நிலைக்களமாகக் கொண்ட இருபத்திரு நுண்பொருள்களும், பள்ளி என்னுஞ் சொற்குத் தோன்றியுள்ளன. இந் நுண்பொருட் பாகுபாட்டுப் பட்டி வருமாறு :
1. பள்ளம் அல்லது தாழ்வு : தாழ்வான வீடுகள் அமைந்த சிற்றூர் அல்லது முல்லைநிலத்தூர். முல்லை நிலத்தூர் போன்ற இடைச்சேரி, ஆழிடம்.
2. பள்ளமான வயலில் வேலை செய்யுங் குலத்தார் : பள்ளத்தி, வன்னியன், வன்னியகுலச் சிற்றரசரான குறும்பர்.
3. படுக்கை : மக்கட் படுக்கை, விலங்கு துயிலிடம், தூக்கம்.
4. மனை (வீடு) : வீடு, அறை, அரண்மனை, வேலைக்களம், அறச்சாலை, முனிவர் தவநிலையம், சாலை.
5. கோயில் : கோயில் (பொது), சைன பவுத்தக் கோயில், கிறித்தவக் கோயில், முகமதியர் கோயில் (பள்ளிவாசல்), கல்லறை, கோயில் என்பது அரசன் மனை போன்ற தேவமனை என்றுமாம்.
6. கல்விச் சாலை
7. ஊர் : நகரம், பள்ளி என்பது ஒரு கோயில் அல்லது அரண் மனையிருப்பது பற்றியும் ஒரு நகரைக் குறிக்கும்.
8. இடம் :
இச்சொற்பொருள் வரிசை ஏரணமுறை தழுவியதாகும், இதில் இறுதியில் வந்துள்ளபொருள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் முதலிடம் பெற்றிருத்தல் காண்க. இங்ஙனம் தலைகீழாக மாறியது. மொழி வளர்ச்சிக் காலத்து இலக்கியம் முற்றும், மறைந்தபின் இடைக்காலத்து இலக்கியத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு, வரலாற்றுமுறை தழுவமுயன்றதன் பயனே.
இனி, இப் பள்ளி யென்னுஞ் சொற்பொருள் வரிசையை வழுப்பட அமைத்த தோடமையாது. இச்சொல்லை வடசொல்லென்றுங் கூறத் துணிந்துளது சென்னைப் பல்கலைக்கழகச் சொற் களஞ்சியம். இச்சொல் தென்சொல் என்பதை, பள்ளம் அல்லது தாழ்வு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, இதனொடு தொடர்புற்ற ஏனைச் சொற்களைக் கண்டு தெளிக. அவையாவன:
பள் - பள்ளம் - பள்ளன் = பள்ளமான வயலில் வேலை செய்பவன்.
பள் - பள்கு - பள்குதல் = பதுங்குதல்.
பள் - பள்ளை = குள்ளமான ஆட்டுவகை
பள்ளையன் = குள்ளன்.
பள்ளை - பள்ளையம் = உண்கலம்.
பள்ளையம் போடுதல் = தெய்வத்திற்குப் படைத்தல்.
பள்கு - பளகு = குற்றம் (தாழ்வு).
பள் - பண் = நீர்நிலை.
பண் - பண்ணை = குழி, நெற்குத்துமாறு நிலத்திற் பதித்த நடுப்பள்ளக் கல், நீர் நிலை, மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்தி, மரக்கலம், விலங்கு துயிலிடம்.
பண் - பணி, பணிதல் = கீழ்ப்படிதல், பணி = தொண்டு, வேலை, தொழில்.
பணி - பாணி, பாணித்தல் = காலந்தாழ்த்தல்.
பண் - படு = 1. (பெ.) குளம், மடு. 2. (பெ.எ.) இழிவான.
படு - படுகர் = பள்ளம், வயல், மருதநிலம், நீர்நிலை.
படு - பாடு - பாடி = தாழ்வான வீடுகள் சேர்ந்த முல்லை நிலத்தூர் அல்லது இடைச்சேரி.
பாடு - பாடை = கால்கழி கட்டில்.
படு - படை - படைத்தல் = உண்ணுமாறு கீழிடுதல்.
படுத்தல் = தாழக்கிடந்து தூங்குதல்.
படு - படை = படுக்கை, தூக்கம்.
படுதல் = விழுதல், சாதல், படுத்தல் = கொல்லுதல்.
படு - படை = கொல்லும் ஆயுதம் அல்லது சேனை.
படு - படி படிதல் = அடியில் தங்குதல், தங்குதல், கீழ்ப்படிதல், விழுந்து வணங்குதல், அமுங்குதல், தணிதல், குளித்தல், தூங்குதல்.
இதுகாறுங் கூறியவற்றால், தமிழில் சொற்பொருள் வரிசை ஏரணமுறைப் படிதான் இயலும் என்பதையும், பள்ளி என்பது பள்ளம் அல்லது தாழ்வு என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தூய தென்சொல் என்பதையும், தெற்றெனத் தெரிந்து கொள்க.
வடமொழியில் (சமற்கிருதத்தில்), ளகர மின்மையால், பள்ளி என்னுஞ் சொல் பல்லி என்றும் பல்லீ என்றும் வழங்கும். இவற்றுள் முன்னதற்குச் சிற்றூர். காடுவாழ் மரபினர் குடியிருப்பு, குடிசை, வீடு என்னும் பொருள்களும்; பின்னதற்குச் சிற்றூர், குடிசை, வீடு, நகரம், ஒரு கூல முகத்தலளவு, சிறு வீட்டுப்பல்லி என்னும் பொருள்களும்; மானியர் உவில்லியம் சமற்கிருத - ஆங்கில அகரமுதலியில் தரப்பட்டுள்ளன. இவ் இரு சொல் வடிவுகட்கும் வேராகக் காட்டப்பட்டுள்ள சொல் pall (பல்ல்) என்பது, இவ் வேர்ப்பொருளாகக் குறிக்கப்பட்டவை போதல் (to go) இயங்குதல் (to move) என்பன. இவ் வேரைக் குறிக்குமிடத்து. ஒருகால் பின்வரும் சொற்கட்கு மூலங்காட்டும் பொருட்டுப் பல் என்னும் வேரையொட்டிப் படைக்கப் பட்டது (Invented after ‘pal’, prob, to explain the following words) என்று மானியர் உவில்லியம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பின்வருஞ் சொற்கள் என்று குறிக்கப்பெற்றவை பல்ல, பல்லக்க, பல்லி, பல்லிக்கா, பல்லீ என்பன, பல் (pal) என்னும் வேர்க்குக் குறிக்கப்பட்ட பொருளும், போதல் (to go) என்பதே.
பல்ல = பெருங்களஞ்சியம், நெற்கூடு.
பல்லக்க = தக்காணத்தில் ஒரு மாவட்டப் பெயரின் பிற்பகுதி.
பல்லிக்கா = சிற்றூர், சிறு வீட்டுப்பல்லி.
பள்ளி என்னும் சொல், பள் என்னும் வேரினின்று திரிந்து பல பொருள்களைக் கொண்டிருப்பினும், சிறப்பாகப் படுக்கையை யுணர்த்து மென்பது, பள்ளி கொள்ளுதல், பள்ளிகொண்டான், பள்ளிகொண்ட பெருமாள், பள்ளியெழுச்சி, பள்ளிமாடம், பள்ளிமண்டபம், பள்ளியந்துலா, பள்ளியம்பலம் முதலிய சொற்களால் அறியப்படும், படுக்கை என்னும் கருத்தை அடிப் படையாகக் கொண்டே பள்ளி என்னுஞ் சொல் முறையே வீடு, கோயில், பள்ளிக்கூடம் முதலிய பொருள்களை உணர்த்தும். இங்ஙனமிருப்பவும், இச் சொல்லை வடமொழியில் அதன் எழுத்துமுறைக் கேற்பப் பல்லி என்றும் பல்லீ என்றுத் திரித்துக் கொண்டு போதல் அல்லது இயங்குதல் என்னும் பொருந்தாப் பொருளை அதன் வேர்ப்பொருளாக பொருத்திக் காட்டுவது மட்டுமன்றி, பல்லி என்னும் ஊருயிரிப் பெயரையும் பள்ளி என்னுஞ் சொல்லொடு மயக்கி, அதனையும் வடசொல் லென ஏமாற்றுவது. அறிவாராய்ச்சி மிக்க இவ் இருபதாம் நூற்றாண் டிற்கு எட்டுணையும் ஏற்குமோ? கண்டு தெளிக கடுகளவேனுங் கருத்துடையார். (திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம், மணிவிழா மலர். 1958.)
சொற்பொருளாராய்ச்சி
எந்நாட்டிலும் எம்மொழியிலும் பொதுமக்கள் வாயிலாய்த் தோன்றிய இயற்கைச் சொற்கள் எல்லாம் ஒவ்வோர் பொருளைக் கொண்டவையே.
இதனாலேயே.
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். சொல். 640)
என்றார் தொல்காப்பியர்.
தனிச்சொல்லெல்லாம் பொருள் குறித்தனவே யெனின், அத் தனிச் சொற்களாலான தொடர்ச்சொற்களும் பொருள் குறித்தனவே யென்பது சொல்லாமலே பெறப்படும். மேனாட்டாரியரும் கீழ்நாட்டாரியரும் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தத்தம் மொழிச்சொற்கட்கு மூலம் கண்டு வைத்திருக்க. இவ் விருபதாம் நூற்றாண்டிலும், தக்க துணையிருந்தும். கால்டுவெல் போன்ற அயல்நாட்டறிஞர் வழிகாட்டியும் தமிழ்ச்சொற்களின் வேர் களையும் மூலத்தையும் தமிழர் காணாதும் கவனியாதுமிருப்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். திரிபினாலுருவான ஆரிய மொழிகளிலும் சொல்லாராய்ச்சி பயன்படுவதாயின். இளங் குழந்தை வாயிற் றோன்றினாற் போல் இயல்பாயெழுந்த தமிழ்மொழியில் மிகமிகப் பயன்படுமென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை.
தனிச்சொல் தொடர்ச்சொல் ஆகிய இருவகைச் சொற்களில், முன்னதற்கு வேர் காண்பது அரிதாயினும் பின்னதற்கு மூலங் காண்பது எளிதென்றே கூறத்தகும். அதை மெய்ப்பிக்கும் அள வாகச் சில தொடர்ச்சொற்களின் வரலாற்றைக் காட்டுகின்றேன்.
சீர்தூக்கல் : சீர் = துலைத்தட்டு. தூக்கல் = தூக்கி நிறுத்தல். சீர் தூக்கல் = சரக்கெடையை நிறுத்தறிந்தாற் போலப் பொருள் களின் இயல்பை எண்ணியறிதல்.
அரவணைத்தல் : அரவு = பாம்பு. அணைத்தல் = தழுவல். அரவணைத்தல் = பாம்பு பின்னித் தழுவினாற்போல நெருங்கக் கட்டியணைத்தல், அங்ஙனம் அணைத்தாற்போலப் பாதுகாத்தல்.
கட்டாயம் : கட்டு = செலுத்து. ஆயம் = வரி. கட்டாயம் = வரி செலுத்துதல் போற் கண்டிப்பு.
ஏராளம் : ஏர் = கலப்பை. ஆள் + அம் = ஆளம் = ஆளின் தன்மை. ஏராளம் = உழவன் வருவாய்போல் மிகுதியாயிருத்தல். உழவன் நேரடியாயும் மிகுதியாயும் உணவுப்பொருளை விளைவித்தலின் பொருள் மிகுதி ஏராளமெனப்பட்டது. அம் மிகுதியினாலேயே உழவன் வேளாண்மை செய்து வேளாளனாயினன். வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான் (திரிகடு. 12).
தாராளம் : தார் = சேனை. ஆளம் = தன்மை. தாராளம் = படைமறவர் போல். விருப்பம் போலப் பிறர் பொருளைக் கையாடுதல் அல்லது வழங்கல். இன்றும் படைமறவர் பிறர் பொருளை மனம்போற் பயன்படுத்தலும் கொள்ளை யடித்தலும் காண்க.
சிங்கியடித்தல் : சிங்கி = தாளம். அடித்தல் = தட்டுதல். சிங்கி யடித்தல் = இரப்போன். தாளம் தட்டி இரப்பதுபோல் திண்டாடுதல்.
தாளக்கருவியை உருவக(ரூபக) தாளத்தில் தட்டினால் சிங்சீயான் என்ற ஒலியெழும். இதனால், தாளக்கருவிக்குச் சிங்கியென்றும் சீயான் என்றும் இருபெயருண்டு.
தாயமாடல் : தாய் + அம் = தாயம் = தாயினின்று பெறும் உரிமை. ஆடல் = விளையாடல். தாயமாடல் = சீட்டுப் போடுவதுபோல் முத்தும் பலகறையும் போட்டு உடன்பிறந்தார் பாகம் பிரித்தல்; முத்தினாலும் பலகறையாலும் விளையாடிப் பிறர் உரிமையைப் பெறுதல் அல்லது பறித்தல்; தாயமாடிக் காலத்தை வீண் போக்குவதுபோல் வேலை செய்யாமற் காலங் கழித்தல் அல்லது தாழ்த்தல்; வேலை தாயமாடுகிறது என்னும் வழக்கை நோக்குக.
மினுக்கிடுதல்: > மினக்கிடுதல் > மெனக்கிடுதல், மினுக்கிடுதல் = அலங்கரித்தல். அலங்காரத்திலேயே கருத்தாயிருந்து வேலையைக் கை நெகிழ விடல். வேலை மினக்கிடுதல் என்னும் வழக்கையும் தேவடியாள் சிங்காரிக்குமுன் தேர் நிலைக்கு வந்துவிட்டது என்னும் பழமொழியையும் நோக்குக. - செந்தமிழ்ச் செல்வி சுறவம் 1943.
சொன்னம்
சொன்னம் - சுவர்ண
சொல் - சொன் - சொன்னம் = பொன் (திவா.). சொன்ன காரன் = தட்டான் (பிங்.).
சொன்னதானப் பயனெனச் சொல்லுவர் (கம்பரா. சிறப்பு.)
வடவர் சு + வர்ண என்று பகுத்து நன்னிற முள்ளது என்று பொருட் காரணங் காட்டுவர்.
இரட்டித்த னகரத்தை ர்ண என்று திரிப்பது வடவர் மரபு. எ-டு: கன்னம் - கர்ண = காது. (வ.வ.168).
சோகாத்தல்
சோகாத்தல் சிறையில் காத்திருத்தல். அது கனகவிசயர் என்னும் ஆரிய மன்னர் தமிழ் வேந்தரைப் பழித்ததால், சேரன் செங்குட்டு வனின் சீற்றத்திற் காளாகிச் சிறைப்பட்டது போல்வது.
சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண்.
அஃது இராவணனின் இலங்காபுரியிலும் வாணனின் சோணித புரத்திலும் இருந்தது. (தி.ம. 99).
சோடை
சோடை - சோஷ
சுடு - சூடு - சோடு - சோடி. சோடித்தல் = காய்தல், வற்றுதல் (சங். அக.).
சோடு - சோடை = வறட்சி.
வடவர் சுஷ் என்பதை மூலமாகக் காட்டுவர். அது சுள் என்பதன் திரிபு. (வ.வ. 168).
சோம்பல் வகை
நெடுநீர் ஒரு வினையை நீட்டித்துச் செய்தல்; மறவி ஒரு வினையை மறந்து விடுதல்; மடி ஒரு வினையுஞ் செய்யாது இருத்தல் : துயில் ஒரு வினையுஞ் செய்யாது தூங்குதல். (சொல். 60)
சோம்பு
சோம்பு - வப் (இ.வே.)
சும் = அமைதி, ஒன்றுஞ்செய்யாமை, சோம்பல்.
சும்மாயிருத்தல் = அமைதியாயிருத்தல், வினைசெய்யாதிருத்தல்.
சிந்தையை யடக்கியே சும்மாயிருக்கின்ற திறமரிது (தாயு. தேசோ.)
சும் - சும்பு - சூம்பு = சோம்பல். சூம்பு - சோம்பு.
சோம்புதல் = வினைசெய்யாதிருத்தல், சுறுசுறுப்பின்மை, கால நீட்டித்தல், தூங்க விரும்புதல்.
ஒ.நோ: தூங்குதல் = உறங்குதல், காலந்தாழ்த்து வினைசெய்தல் மந்தமாதல்.
வப் = தூங்கு, கனவுகாண்.
L. somnus. Slav supati, Lith sapnus, AS swef, Gk hupnos = sleep. (வ.வ. 168)
சோழர் வெற்றிச் செயல்கள்
நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக (புறம். 66)
என்று, சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியி ருப்பதால், அவன் முன்னோருள் ஒருவன் ஆழ் கடல் கடந்து மீண்டமை அறியப்படும். வளிதொழிலாள்வ தென்பது, பருவக்காற்றறிந்து அதன் வாக்கிற் கலஞ்செலுத்துதல்.
ஒரு பருந்தினால் துரத்தப்பட்ட புறா, செம்பியன் என்னும் சோழன் காலடியில் வீழ்ந்தது. அவன் அதைக் காத்தற்கும் பருந்தின் பசியைத் தீர்த்தற்கும், தன் உடம்பினின்று அப் புறாவளவு தசையறுத்துப் பருந்திற் கிட்டான். இச்செய்தி பின்னர்த் தொல்கதை முறையில் விரிவாக்கப்பட்டது.
நிலமிசை வாழ்ந ரலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொழீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக. (புறம். 43)
என்று செம்பியன் வழிவந்த சோழன் நலங்கிள்ளி தம்பி மா வளத்தான் விளிக்கப்பட்டமை காண்க. செம்பியன் பெயர். அவனுக்குப் பிற்பட்ட சோழர்க்கு ஒரு குடிப்பெயராயிற்று.
அக்காலத்தில் இலங்கையில் அரக்கர் என்றும் இயக்கர் என்றும் இருவகுப்பார் இருந்திருக்கின்றனர். அவர் மாயக்கலையில் வல்லவராயிருந்ததனால், பிற்காலத்தில், ஆரியத் தொல்கதைஞர், அவரை வானியங்கும் அல்லது மக்களினத்திற்கு அப்பாற்பட்ட பதினெண் கணத்தாருள் இரு கணத்தாராகக் கொண்டனர் போலும்! அரக்கர் அரசன் இராவண்ணன். அவன் தலைநகர் இலங்கை. இயக்கர் அரசன் பிங்கலன் (குபேரன்). அவன் தலை நகர் அளகை. அவன் மாபெருஞ் செல்வன். சங்கம் தாமரை என்னும் பேரெண்களின் அளவுகொண்ட இரு பொக்கசம் (நிதி) ஈட்டி வைத்திருந்ததாகச் சொல்லப்படுகின்றான். இரு என்னும் சொல்லிற்குப் பெரு என்றும் இரண்டு என்றும் பொருளுண்டு. அச்சொல் நிதி என்னும் வட சொல்லைத் தழுவும்போது, இடையில் மகரமெய் தோன்றாதாதலால், இரு பொருட்கும் பொதுவாக நிற்கும். அதனால், இரு வேறு பொக்கசம் என்று தொல்கதைஞர் கொண்டிருக்கலாம். உண்மையில் இருவேறு பொக்கசமாயின், ஒன்று மூலபண்டாரமாகவும் இன்னொன்று வழங்கும் பண்டாரமாகவும் இருந்திருத்தல் வேண்டும்.
அரக்கருக்கும் இயக்கருக்கும் நெடுநாட் பகையிருந்து வந்தது. இறுதியில் மூண்ட கடுபோரில், இயக்கர் குலம் வேரறுக்கப் பட்டது. பிங்கலன் தப்பிப் பனிமலைக்கு ஓடிப்போய் விட்டான். பிற்காலத்தில் ஓர் இயக்கி (இயக்கப் பெண்) தமிழகத்தில் நாட்டுப் புறத் தெய்வமும் ஆனாள்.
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி யென்போள் (சிலப். 116-118)
என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க.
இலங்கை, தொன்று தொட்டு, மருமம் மிக்க அருங்கட்டட வினைகட்குச் சிறந்ததா யிருந்து வந்திருக்கின்றது.
மாந்தை (மாதோட்டம்) என்னு மிடத்தில், இரும்பினாற் செய்த காந்தமலை என்னும் காந்தக் கோட்டை யிருந்ததாகவும், அக்கோட்டை யிலுள்ளார் அண்மை யிற் செல்லும் கப்பல்களை யெல்லாம் காந்தத்தா லிழுத்துக் கொள்ளை யடித்ததாகவும், மாந்தைப்பள்ளு, விசுவபுராணம், விசுவகர்ம நாடகம் என்னும் பனுவல்களிற் சொல்லப்பட்டுள்ளது.
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த (சிலப். ஆய்ச். படர்க். 1)
என்பதனால், ஆரெயில் முழுமுத லரணம் ஒன்று அங்கிருந்த தாகத் தெரிகின்றது.
அசுரர் என்று தொல்கதைஞர் கூறும் இலங்கை அரக்கர், அந்தரத்தில் தொங்குமாறு மூன்று அரணான கோட்டைகளை அமைத்து இருந்திருக்கின்றனர். அவற்றை ஒரு சோழன் அழித்து, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் விருதுப் பெயர் பெற்றான்.
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் (புறம். 39)
என்பது செம்பியன் செயலை அவன் பின்னோர்மேல் ஏற்றிக் கூறுகின்றது.
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை (சிலப். 29:19 வீங்குநீர்) என்பதும் அதுவே.
ஒன்னார், ஓங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும் தூங்கெயி லெறிந்த தொடி விளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன் என்பது சிறுபாணாற்றுப்படை (79-82).
சோறு கொண்டுபோகிற வழியிலே - விளையாட்டு
முதியார் ஒருவர் ஒரு குழந்தையின் கையை அகங்கை மேனோக்கப் பிடித்துக்கொண்டு, அதன் ஐந்துவிரல்களையும் ஒவ்வொன்றாக முறையே தொட்டு இது ஐயாவிற்கு, இது அம்மாவிற்கு, இது அண்ணனுக்கு, இது அக்காவிற்கு, இது உனக்கு, என்று கூறி, அவ் வகங்கையிற் பருப்புக் கடைவதுபோல் தம் கையால் தேய்த்து, அப்பருப்பைப் பலர்க்கும் பகிர்வதுபோற் கையால் நடித்துக்காட்டி, பின்பு மீண்டும் பருப்புக் கடைந்து, சோறு கொண்டுபோகிற வழியிலே என்று சொல்லிக் கொண்டு தம் கையை அக் குழந்தையின் அக்குள்ளவரை மெல்ல இழுத்துச் சென்று, கிச்சுக் கிச்சு என்று சொல்லிக் கிச்சங் காட்டுவர். இது குழந்தைக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் உண்டுபண்ணும்.
பருப்புக் கடைவதுபோற் செய்யும்போது, பருப்புக் கடைந்து பருப்புக் கடைந்து என்றும், பருப்பைப் பகிர்வதுபோற் செய்யும் போது, இந்தா உனக்கு, இந்தா உனக்கு என்றும் சொல்லப்படும்.
வழக்கமாய்க் கூழுங் கஞ்சியும் உண்பவர், சோறு கொண்டு போகிற வழியிலே என்பதிற்குப் பதிலாக, கஞ்சி கொண்டு போகிற வழியிலே என்பர். அதனால் அவர் அத்தொடராலேயே இவ்விளையாட்டைக் குறிப்பர்.
தொலைவான இடத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குப் பருப்பும் சோறும் கொண்டுபோகும் தங்கையை, ஒருவர் கிச்சுக் காட்டிய வினையை இவ் விளையாட்டுக் குறிக்கும்போலும்! (த.நா.வி.)
ஞாலமுந்திய நிலை
ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம்மாநிலம், பூமி என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று. தென் சொல் லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும்.
ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக் கான தீவுகளாகவும் தொன்று தொட்டு இருந்த தில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுந்திருந்தது. காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆதிரேலியா வையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதி யையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும், தம்முட் கொண் டிருந்தன. அரபிக் கடலும் வங்காளக் குடாக் கடலும் அன் றில்லை. இந்துமாவாரியின் பெரும்பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதிமா வாரியொடு சேர்ந்திருந்தது. அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது (V.R. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியாவின் (Pre-Historic South India) முகப்புப் படத்தைப் பார்க்க)
வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் த்வீப என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.
ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால் (தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.
நாவலந்தீவு, இறலித்தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.
நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்.
என்பது திவாகரம். கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன, முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழி பெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழி பெயர்த்தனர் வடவர். அன்றில் என்பது ஒரு பறவை வகை.
தெங்கத்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கல மென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந் தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் சாகத்வீப என வடமொழியில் தவறாக மொழிபெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ்வழியை மேற்கொண்டது போலும்! ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்ட வராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத் தினின்றே கொண்டி ருத்தல் வேண்டும்.
தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்துபோன நிலையைக் காட்டும்.
தக்கணம்
தக்கணம் - தக்ஷிண (இ.வே.)
தக்கு = தாழ்வு. தக்குத் தொண்டை = தாழ்ந்த குரல்.
தக்கிலே பாடுகிறார் என்னும் வழக்கை நோக்குக.
எச்சு (உயர்வு) x தக்கு.
வடதிசை பனிமலையால் உயர்ந்திருத்தலால் உத்தரம் எனப் பெற்றது.
“Uttara, … northern (because the northern part of India is high)” என்று மா. வி.அ. கூறுதல். காண்க.
தக்கு - தக்கணம் = வடதிசையை நோக்கத் தாழ்ந்திருக்கும் தென்றிசை.
கிழக்கு நோக்கும்போது தென்றிசை வலமும் வடதிசை இடமு மிருப்பதால், தக்கணம் என்னும் சொற்கு வலதிசைப் பொருளும் உத்தரம் என்னும் சொற்கு இடதிசைப் பொருளும் தோன்றின.
வலமாகச் சுற்றிவருதல் பிரதக்ஷிணம் என்று சொல்லப்படுதல் காண்க. (வ.வ. 169-170).
தக்கயாகப் பரணி
தக்கயாகப் பரணியில்
வடசொல்லாட்சி வகைகள்
1. இணைந்தியல் மெய்கள் : எ.டு. சக்ரபாணி, வச்ரமாலை, பத்ரகாளி, மந்த்ரம்.
2. மெய்ம்முதற் சொற்கள் : எ.டு. த்ரிசூலம், ந்ருபதீபன், ப்ரந்தம்.
3. தொடர்ச் சொற்கள் : எ.டு. நூபுராதாரசாரணி, வர்க்கத் வாதசாதிபர். (த.இ.வ. 42).
தக்கோலம்
தக்கோலம் - கக்கோல
தக்கோலம் = ஒரு நறுமணச்சரக்கு க. தக்கோல.
தக்கோலம் பஞ்சவாசம் என்றும் ஐம்மணங்களுள் ஒன்றாகவும் முப்பத் திருவகை ஓமாலிகைகளுள் ஒன்றாகவும் கூறப்பெறும்.
தக்கோலந் தீம்பூத் தகைசா லிலவங்கங்
கப்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 6:77, உரை). (வ.வ. 168-169.)
தக
தக-தஹ் - (d) இ.வே
தளதளத்தல் = விளங்குதல்.
பசு நரம்பு தளதளப்ப (குற்றா. தல. தருமசாமி. 34).
தள - தழ - தழல். தழலுதல் = 1. அழலுதல்.
தழன்றெரி குண்டம் (திருவிளை. நாக. 6) 2. விளங்குதல்.
தழலுந் தாமரையானொடு (தேவா. 1215:27).
தழ - தக. ஒ.நோ: மழ - மக. தகதகவெனச் சொலிக்கிறது என்பது உலக வழக்கு.
தக - தகம் = எரிவு, சூடு. தகம் - தங்கம் = விளங்கும் பொன்.
தக - திகழ் - திங்கள் - நிலா. ஒ. நோ: தமிழர் - திகுளர் (க.).
தக - தகு - தகை = தாகம். தகம் - தாகம் - நீர்வேட்கை. (வ.வ. 169).
தட்டாங்கல் விளையாட்டு
பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை பலருமான மகளிர் சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல். இது பண்டைக் காலத்தில் கழங்கு கொண்டு ஆடப்பட்டதினால், கழங்கு என வழங்கியதாகத் தெரிகின்றது. கழங்காவது கழற்காய் அல்லது கழற்சிக் காய். கழற்சிக் காய் என்பது இன்று கெச்சக்காய் என மருவி வழங்குகின்றது.
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் (புறம். 36)
மகளிர் … முத்தவார்மணற்
பொற்கழங் காடும் (பெரும்பாண். 327-35)
தட்டாங்கல் கீழ்வருமாறு பலவகைப்படும். அவையனைத்தும் வீட்டுள்ளும் வீட்டுமுற்றத்திலும் விளையாடப் பெறும்.
I.மூன்றாங்கல்
ஆட்டின் பெயர் : மூன்று கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டு மூன்றாங்கல்.
ஆடு முறை : மூன்று கற்களுள் ஒன்றைக் கீழ்வைத்து ஏனையிரண் டையும் கையில் வைத்துக் கொண்டு, அவற்றுள் ஒன்றை மேலெறிந்து இன்னொன்றைக் கீழ்வைத்து முந்திக் கீழ்வைத்ததை எடுத்துக்கொண்டு, மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். பின்பு மீண்டும் ஒன்றை மேலெறிந்து, கையிலுள்ளதைக் கீழ்வைத்துக் கீழிருந்ததை எடுத்துக் கொண்டு மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். இவ்வாறே பன்னிருமுறை தொடர்ந்து தவறாது ஆடிவிடின், பழமாம். பன்னிருமுறைக்கும் கீழ்வருமாறு பாட்டுப் பாடப்படும்.
1. ஒன்றாவது ஒன்றாங்காய்.
2. இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்).
3. மூன்றாவது முத்துச்சரம்.
4. நாலாவது நாற்காலி.
5. அஞ்சாவது பஞ்சவர்ணம்.
6. ஆறாவது பாலாறு.
7. ஏழாவது எழுத்தாணி.
8. எட்டாவது கொட்டாரம்.
9. ஒன்பதாவது ஓலைப்பூ.
10. பத்தாவது பனங்கொட்டை.
11. பதினொன்றாவது தென்னம் பிள்ளை.
12. தென்னைமரத் தடியிலே தேரோடும் பிள்ளையார்.
ஒருத்தி ஆடும்போது தவறிவிடின், அடுத்தவள் ஆடல் வேண்டும். ஆடினவள் மறுமுறையாடும்போது, மீண்டும் முதலிலிருந்தே ஆடல் வேண்டும்.
II. ஐந்தாங்கல் (ஒரு வகை)
ஆட்டின் பெயர் : ஐந்து கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டு ஐந்தாங்கல்.
ஆடு முறை : முந்தியாடுபவள், இந்த ஆட்டிற்குரிய ஐந்து கற்களையும் ஒருங்கே சிதறி, அவற்றுள் ஒன்றை எடுத்து மேலேபோட்டுக், கீழிருப்பவற்றுள் ஒன்றையெடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். பின்பு, கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப்போட்டு, ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றை யெடுத்துக் கொண்டு பிடித்தல் வேண்டும்.
பின்பு மீண்டுஞ் சிதறி ஒரு கல்லையெடுத்து மேலெறிந்து, கீழிருப்பவற்றுள் இரண்டை எடுத்துப் பிடித்தல் வேண்டும். அதன்பின், கையிலிருப்பவற்றுள் ஒன்றை மேலெறிந்து, கீழிருக்கும் ஏனையிரண்டையும் எடுத்துக் கொண்டு பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஐந்துமுறை சிதறிப் பிடிக்கும் போது, மூன்றாம் முறை ஒன்றும் மூன்றுமாகவும், நாலாம் முறை நாலையும் ஒருங்கேயும், ஐந்தாம் முறை மூன்றும் ஒன்றுமாகவும், கீழிருக்குங் காய்களை எடுத்தல் வேண்டும். இம்முறைகள் முறையே, ஒன்றாங் கொட்டை, இரண்டாங்கொட்டை, மூன்றாங்கொட்டை, நாலாங்கொட்டை, ஐந்தாங்கொட்டை என அவ்வவ்விறுதியிற் கூறப்படும்.
அதன்பின் நாலு கற்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு, ஒரு கல்லை இரு தடவை மேலே போட்டுப் பிடித்தல் வேண்டும். முதல்தடவை ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துக் (இத் தொடர் சேலத்தில் கோழிப்பீயாம் என்று வழங்குகின்றது.) கோழி கொக்காம் என்றும், இரண்டாம் தடவை குத்துக்கையால் நிலத்திற் குத்திக் குத்துவிளக்காம் என்றும், மேலெறிந்த கல்லைப் பிடிக்கு முன் சொல்ல வேண்டும். பின்பும், அவ்வாறொரு கல்லை இரு தடவை மேலெறிந்து பிடித்தல் வேண்டும். முதல்தடவை பிடிக்குமுன் ஏனை நாலுகற்களையும் கீழே வைத்து வைத்து எடுப்போம் என்றும், மறுதடவை பிடிக்குமுன் அந்நான்கையும் வாரிக்கொண்டு வாரிக்கொண்டோம் என்றும், சொல்ல வேண்டும்.
பின்பு, இரு கைகளையும் சேர்த்துக் கூட்டுக்கையாக வைத்துக் கொண்டு, ஐங்கல்லும் கீழே விழாதவாறு, தப்பு தாளம் தலைவலி மோளம் என்று நாற்சீர்படச் சொல்லிக் கொண்டு, வலக்கையைப் புறங்கையும் அகங்கையும் புறங்கையும் அகங்கையுமாக இரு தடவை புரட்டி வைத்தல் வேண்டும்.
அதன்பின், ஐங்கல்லையும் மேலெறிந்து பிடித்து அவற்றுள் ஒன்றைச் சொக்கல் வேண்டும். சொக்குதலாவது சிலுப்புதல்.
பின்பு ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும். காட்டியபின் அதைத் தனியாய் எடுத்து வைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து மூன்றைக் கீழே வைத்துவிட்டுப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்; அல்லது, வலக் குடங்கையிலுள்ள நாற்கல்களையும் இவ்விரண்டாக இரு தடவை சற்றே மேலெறிந்து, அவற்றைப் புறம்மேனோக்கிய இடக்குடங்கையால் உடனுடன் பிடித்துக் கொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யின் பழமாம்.
ஒருத்தி ஆடும்போது, மேலெறிந்து பிடிக்குங் கல் தவறினாலும், கீழிருக்குங் கல்லை யெடுக்கும்போது பிறகல்லைத் தொட்டு விட்டாலும், அவள் நின்றுவிட வேண்டும். அதன்பின் அடுத்தவள் ஆடுவாள். ஒருத்தி ஒரே ஆட்டையில் மறுமுறை அல்லது வழிமுறை ஆடும்போது, முன்பு விட்டதிலிருந்து ஆடுவாள். இவை எல்லாவகைக்கும் பொதுவாம்.
ஆட்டை முடிந்தபின், வென்றவள் தோற்றவளின் கைகட்கிடையில் ஒரு கல்லை வைத்து, மேற்கைமேல் மூன்றுதடவை குத்துவது வழக்கம். இது எல்லா வகைக்கும் பொது.
ஆட்டின் பயன் : கையும் கைநரம்பும் இந்த ஆட்டால் உரம் பெறும். இதுவும் பொதுவாம்.
ஐந்தாங்கல் (மற்றொரு வகை)
நாலாங் கொட்டைக்குப்பின், ஐங்கல்லையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்னதிற்போல் நான்குதடவை மேலே போட்டுப் போட்டு அதை ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கல்லை ஒவ்வொன்றாய் இடப்பக்கமாகச் சற்றுத் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.
பின்பு, மறுபடியும் எல்லாவற்றையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போற் பலதடவை மேலெறிந்து, அதை முற்பட்ட ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கற்களுள் நீங்கியிருப்பவற்றை ஒவ்வொன் றாக நெருங்க வைத்துப் பிடித்து, இறுதியில் கீழிருப்பவற்றை யெல்லாம் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும்.
அதன்பின் இரு பாதங்களையும் கூட்டிவைத்து, அவற்றின்மேல் மூலைக் கொன்றாக நான்மூலைக்கும் நாலு கல் வைத்து, ஏனையொன்றை நான்குதடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும் பாதங்களின் மேலுள்ள கல்லை ஒவ்வொன்றாய் இருபாத இடைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.
பிறகு மீண்டும், ஐங்கல்லையுங் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போல் நான்குதடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும், கீழிருக்குங் கற்களை ஒவ்வொன்றாய் இடப்புறம் நிலத்திற் பொத்திச் சற்றே திறந்து வைக்கப்பட்டிருக்கும் இடக்குடங்கைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.
பின்பு, ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி சுட்டியதைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டி, அதைத் தனியே எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து, மூன்றைக் கீழே வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும். அதோடு பழம்.
III. ஏழாங்கல் (ஒருவகை)
ஏழாங்கல்லில் இவ்வகை ஏறத்தாழ ஐந்தாங்கல்லின் முதல்வகை போன்றதே.
ஏழு கல்லையும் உருட்டி அவற்றுள் ஒன்றையெடுத்து மேலெறிந்து ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரையாடல் வேண்டும். ஒன்றாங் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண் டாங் கொட்டையில் இவ்விரண்டாக வும், மூன்றாங்கொட்டையில் மும்மூன்றாகவும், நாலாங்கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங் கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங் கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப் பெறும்.
பின்பு, முறையே, இழுத்தல் குத்தல் வைத்தல் வாரல் நான்கும் தப்பு - தாளம் - தலைவலி - மோளம் நான்கும் நிகழும்.
அதன்பின், எல்லாக் கற்களையும் மேலெறிந்து புறங்கையால் தாங்க வேண்டும். மூன்று கல்மட்டும் புறங்கை மேல் நிற்பின், அவை காட்டான் கருங்கல் எனக் கீழே போடப்படும். அதற்கு மேலுங் கீழும் நிற்பின் சொக்க வேண்டும்.
மீண்டும் எல்லாவற்றையும் முன்போற் புறங்கையில் தாங்கி, எதிரி சுட்டியதைப் பிடித்துக்காட்டித் தனியாக வைத்துவிட்டு, எஞ்சிய வற்றுள் ஒன்றை மேலெறிந்து ஐந்தைக் கீழ்வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும்; பிடித்து விடின் பழம்.
ஏழாங்கல் (மற்றொரு வகை)
ஒரு கல்லை வைத்துக்கொண்டு எஞ்சிய ஆறு கல்லையும் உருட்டி ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை ஆடல் வேண்டும். ஒன்றாங் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங் கொட்டையில் இவ்விரண்டாக வும், மூன்றாங்கொட்டையில் மும்மூன்றாகவும், நாலாங்கொட்டையில் நாலும் இரண்டு மாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங் கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங்கொட்டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்படும்.
கீழிருந்தெடுக்குங் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதார், இருகையை யும் பயன்படுத்திக் கொள்வது முண்டு. ஆயின், இது அத்துணைச் சிறப்பினதன்று; அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டதுமன்று;
கீழிருக்குங் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக்கல்லைப் பக்கத்தில் வைத்து விட்டுத் தொலைவிலுள்ள கல்லை எடுத்துக் கொள்ளலாம்.
ஏழுகொட்டைக்கும் பின்வருமாறு பாட்டுப் பாடப்படும்.
1. பொறுக்கி சிறுக்கி போ(கி)றாளாம் தண்ணீர்க்குத் தண்ணீர்க் குடமெடுத்து.
2. (அல்லது, வேறு ஏதேனுமொன்று). இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு.
3. மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு.
4. நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்.
5. ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்
6. ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெருவாழை.
7. ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்டிலே, மஞ்சள் சாரட்டிலே.
இன்னொரு பாட்டு பின்வருமாறு :
1. தூப்பொறுக்கி தூதுளங்காய்
மாப்பொறுக்கி மாதுளங்காய்
கல் பொறுக்கி கடாரங்காய்.
2. ஈர் ஈர்த்திக்கொள்
பூப் பறித்துக்கொள்
பெட்டியில் வைத்துக்கொள்.
3. முக்கோண வாசலிலே
முத்துத்தட்டுப் பந்தலிலே.
4. நான்கு டோங்கு டம்மாரம்
நாங்களாடும் பம்பரம்.
(அல்லது)
நான்கு டோங்கு
நாலுவெற்றிலை வாங்கு
5. ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்.
6. கூறு கூறு சித்தப்பா
குறுக்கே வந்த பெரியப்பா.
7. ஏழை எண்ணிக் கொள்
எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
பெண்ணை அழைத்துக் கொள்.
(இப்பாட்டிலுள்ள சில சொற்களின் கொச்சை வடிவம் திருத்தப் பெற்றுளது). ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக் கொண்டு, நாற் கல்லுள் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையுங் கீழ் வைத்து மேலெறிந்த கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இரு மூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்.
இது சிறுபுதை எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு புதை புதைக்கிற பம்பரம், செட்டி சிதம்பரம் என்பதாகும்.
இதன்பின், இருகையிலும் மும்மூன்று கல்லை வைத்துக் கொண்டு, ஏனையொன்றை மேலெறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல் வேண்டும்.
பின்பு, ஒரு கல்லை மேலெறிந்து ஆறுகல்லைக் கீழ் வைத்துப் பிடித்த பின், மீண்டும் ஒன்றை மேலெறிந்து ஏனை ஆறையும் ஒருங் கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது பெரும்புதை எனப்படும்.
இதையடுத்துத் தப்பு - தாளம் - தலைவலி - மேளம் நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிரி எடுத்துக் கொடுத்தல் வேண்டும். இது பழத்தின் ஒப்பக்குறியாம்.
IV. பல நாலொரு கல்
ஒன்பதும் பதின்மூன்றும் பதினேழும் இருபத்தொன்றும் போல் பல நாலொடு ஒன்று சேர்ந்த கற்களை மேலெறிந்து, புறங்கையில் தாங்கிப் பிடிக்குமளவு வைத்துக் கொண்டு மிகுதியைக் கீழிட்டு விட்டு, புறங்கையிலுள்ளவற்றை மேலேபோட்டு அகங்கையிற் பிடித்து, அவற்றினின்று நந்நான்காய் இடக்கையாற் பிடித்துக் கிழே நந்நான்காய் வைத்தல் வேண்டும். இவ்வகையிற் பெரும் பாலும் ஒரு நான்கைத்தான் பிடித்தல் கூடும்.
பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலெறிந்து அதைக் கீழே யுள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக்கொண்டு பிடித்தல் வேண்டும். இங்ஙனம் கீழே கல்லுள்ளவரை (அல்லது தவறும் வரை) திரும்பத் திரும்ப ஆடவேண்டும். கையிற் பலகற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் பிடித்து நந் நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியுள்ள ஒற்றைக்கல்லை மேலேபோட்டுப் புறங்கையில் தாங்கி, அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, அது கீழேவிழுமுன் அதைக் கையாலழுத்தி நேரே வீழ்த்தி மூடிவிடல் வேண்டும். இது அமுக்குதல் அல்லது மூடுதல் எனப்படும். இதோடு ஒரு பழமாம்.
முதலாவது புறங்கையால் தாங்கும்போது எல்லாக் கற்களையும் கீழே விட்டு விட்டாலும், பிடிக்கும்போது கல் தவறினாலும், நான்காய் அல்லது நந்நான்காய்ப் பிடிக்கும் போது கூடக் குறையப் பிடிபட்டாலும், கீழுள்ள கல்லை எடுக்கும்போது மற்றக்கல் அலுங்கினாலும், ஆட்டம் நின்றுவிடும். பின்பு அடுத்தவள் ஆட வேண்டும்.
ஒரே ஆட்டையில், அடுத்தவள் ஆடினாலும், ஆடினவளே மறுமுறை ஆடினாலும் நந்நான்காய்ப் பிடித்து வைக்கப்பட்ட கற்களை விட்டுவிட்டு மற்றக் கற்களைக் கொண்டுதான் ஆடவேண்டும். ஒருத்தி கடைசிக் கல்லை அமுக்கும்போது தவறிப்போய் அடுத்தவள் அதைச் சரியாய் அமுக்கிவிட்டால், அவளுக்குத்தான் பழம்.
V. பன்னிருகல்
பன்னிரு கற்களை மேலெறிந்து அவற்றைப் புறங்கையில் தாங்கி, அவற்றுள் ஒன்றைமட்டும் இருவிரற் கிடையில் இடுக்கிக் கொண்டு ஏனையவற்றைக் கீழே விட்டு விட்டு, அவற்றை ஒவ்வொன்றாகவோ இவ்விரண்டாகவோ மும் மூன்றாகவோ, ஒன்றும் பலவுமாகவோ, வேறிரு விரலால் இடுக்கிப் பிடித்துக் கீழே வைத்து எல்லாவற்றையும் பிடித்தபின் புறங்கையிலுள்ளதை அமுக்கி, அதையும் மற்றவற்றொடு சேர்த்து மும்மூன்றாக நாற்கூறிட்டு, ஒவ்வொன்றினின்றும் ஒவ்வொரு கல்லை எடுத்துவிட வேண்டும். இக்கூறுகட்கு உட்டைகள் என்று பெயர் நாலுட்டையினின்றும் ஒவ்வொரு கல்லை நீக்கியபின், எட்டுக் கல் எஞ்சி நிற்கும். அவ்வெட்டையும் முன்போன்றே ஆடி, மீண்டும் மும்மூன்றாக உட்டை வைத்து ஒவ்வொரு கல்லை நீக்கியபின், ஆறு கல் எஞ்சிநிற்கும். இவ்வாறே தொடர்ந்து ஆடின், இறுதியில் இருகல் எஞ்சும். அவற்றுள் ஒன்றை மேலே யெறிந்து இன் னொன்றைக் கீழே வைத்துப்பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலேயெறிந்து கீழேவைத்ததை எடுத்துப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் மும்முறை செய்தபின், மேலெறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், மூன்று தடவை மேலெறிந்து நிலந்தொட்டுப் பிடித்தும், பின்னும் மூன்று தடவை மேலெறிந்து நிலமும் மார்புந் தொட்டும் பிடித்தும், முடிப்பின் பழமாம்.
சிலுப்புதலாவது, அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப்பிடித்தல்.
ஆடும்போது தவறும் வகையும், அதன்பின் நிகழுஞ் செய்தியும், முற்கூறியவையே.
VI. பலகல்
ஒன்பது முதல் இருபத்தைந்துவரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால் தாங்கி ஒருகல் தவிர மற்றவற்றை யெல்லாங் கீழே போட்டுவிட்டு, அவ்வொரு கல்லை மேலேயெறிந்து உள்ளங்கையாற் பிடித்து, அதை மீண்டும் மேலேயெறிந்து, கீழே கிடக்குங் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்தக்கொண்டு, மேலேயெறிந்த கல்லையும் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஒவ்வோர் எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நிகழும்.
இருகல் எடுப்பின் காய்; நான்கு ஆறு எட்டு ஆயின் பழம். பழக்கற் களெல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக் கொண்டு, காய்க்கற்களிற் பாதியை விளையாட்டிற் போட்டு விடல்வேண்டும். ஆட்டை முடிந்தபின், கூடுதலான கற்களைப் பிடித்திருப்பவள் கெலித்தவளாவள்.
பிற இயல்புகளும் செய்திகளும் முற்கூறியவையே.
VII. பதினாறாங்கல்
பதினாறு கற்களைக் கொண்டு ஆடுவது பதினாறாங்கல். இது பலவகையாய் ஆடப்பெறும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதை ஆடுவர்.
தட்டு
தட்டு-தட்(d)தட்டுதல்=அடித்தல்,புடைத்தல்,தாக்குதல். (வ.வ. 170).
தடம்
தடம் - தட (t|)
தடம் = வளைவு, வளைந்தகரை, கரைசூழ்ந்த நீர்நிலை.
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும் (தொல். 804)
தடம் - தடாகம். தடம் - தட்டம். தட்டத்து நீரிலே தாமரை (திருமந். 2904) (வ.வ.170).
தண்டம்
தண்டம் - தண்ட (இ.வே.)
தள் - தளம் = கனம். தெ. தளமு. 2. கூட்டம். 3. படை. தளம் - தடம் = பெருமை, அகலம். தடம் - தட - தடா - தடவு.
தள் - தாள் = 1. திரண்ட அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802).
2. அடித்தண்டு போல் தாங்குங் கால்.
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (குறள். 9)
3. மலையடி. தாள்வரைப் புறத்து (திருவாலவா 44:36)
விரிதாள கயிலாய மலையே (தேவா. 11 : 56)
தள்-தண்டு = 1. திரண்ட அடி. எ.டு. கீரைத்தண்டு, வாழைத்தண்டு, விளக்குத் தண்டு.
2. திரண்ட ஊன்றுகோல்.
தலை நடுந்காத் தண்டூன்றா (நாலடி. 14).
3. திரண்ட உலக்கைப்படை. (வ.வ. தி.ம. 742).
தண்டு முதற் சக்கரமு னேந்தும் (திவ். பெரியதி. 3 : (9:10)
4. திரண்ட தடிபோன்ற பொருள்.
எ.டு. முதுகந்தண்டு, வீணைத்தண்டு.
5. திரண்ட படை (சேனை). தண்டெடுத்தல் = படையெடுத்தல்.
6. கொடித்தண்டு போன்ற உறுப்பு. எ.டு. காதுத்
தண்டம் - தண்டன்.
7. சேனை. எ.டு. தண்ட நாயகன் = சேனைத்தலைவன்.
தண்டு - தண்டி = தண்டால் தூக்கப்பெறும் பல்லக்கு. தண்டி - தண்டிகை.
வால்நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடஞ்சென்றால்
கால்நடையாய்ச் சென்றவரும் கனகதண்டி யேறுவரே
பழமொழி :
தண்டு - தண்டியம் = தண்டியப்படைக்கல் அல்லது கட்டை.
தண்டு - தண்டை = தாமரைக்கொடித் தண்டு போன்ற காலணி.
தண்டு - தண்டி. தண்டித்தல் = பருத்தல். தண்டி - தடி. தடித்தம் = பருத்தல். தடி = பருத்தகோல். தடிமன் = பருமை. தடியன் = பூசணி.
தண்டு - தண்டி. தண்டித்தல் = தடியாலடித்தல், தண்டனை செய்தல். தண்டி - தண்டம், தண்டனம், தண்டனை.
தண்டம் - தண்டா = மூவகைத் தண்டனைகளுள் ஒன்று.
தண்டம் = 1. தண்டனை.
தண்டமுந் தணிதி பண்டையிற் பெரிதே (புறம். 10 : 6)
2. வீண். எ.டு. தண்டச்சோறு. (வ.வ. 170-171).
தண்டிக்கும் முறை
மன்றுபாடு - பணத்தண்டல்
தண்டா - துன்பத் தண்டனை, உறுப்பறைத் தண்டனையும் கொலைத் தண்டனையும்
குற்றம் - கோயில் விளக்கெரித்தல் போன்ற திருக்கடமைத் தண்டனை. (தி.ம.315). (சொல்: 60).
தண்டு
தண்டுதல் = பொருள் திரட்டுதல். தடியெடுத்தவ னெல்லாம் தண்டற்காரனா? (பழமொழி).
தண்டு - தண்டம் = 1. பெருந்தடிப் படைக்கலம்.
தண்டமுடைத் தருமன் (தேவா. 1055 : 6)
2. தடிபோற் கீழே விழுந்து வணங்குதல் (தண்டனிடுதல்). (வ.வ).
தண்ணீர் சேந்துகிறது விளையாட்டு
நான்கு பிள்ளைகள், சதுரமாக நெருங்கி ஒற்றைக் காலால் நின்று மற்றைக் காலைக் கால்மேற்போட்டு, நடுவிற் கிணறுபோன்ற பள்ளம் தோற்றி,
தண்ணீர் சேந்தித் தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்று,
பூப்பறித்துப் பூப்பறித்துக் கூடையிலே போடு,
விற்றுவிற்றுப் பணத்தையெடுத்துப் பெட்டியிலே போடு,
என்று பாடிக்கொண்டு, தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்றுவது போன்றும், பூப்பறித்துக் கூடையிலே போடுவது போன்றும், பூ விற்ற பணத்தைப் பெட்டியிலே போடுவது போன்றும், அவ்வவ் வடிக்கேற்ப அவிநயஞ் செய்வர்.
ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சியை இவ்விளையாட்டாற் பெறலாம். (த.நா.வி.)
தபு
தபு - தப் (dabh) - இ.வே.
தபுதல் = கெடுதல். அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து (தொல். சிறப்புப்)
காதலி யிழந்த தபுதார நிலையம் (தொல். 1025)
தபுத்தல் = கெடுத்தல்.
உள்ள மழியவூக்குநர் மிடல்தபுத்து (பதிற்றுப் 13 : 18)
வடமொழியிற் கெடுத்தல் என்னும் பிறவினை வழக்கே யுள்ளது. (வ.வ.171).
தமர்
தமர் என்பார் தம் குடும்பத்தாரும், தம் உறவினரும், தம் வகுப்பாரும், தம்
கூட்டத்தாரும், தம் ஊராரும், தம் நாட்டாரும், தம் மொழியாரும் எனப் பல
திறத்தார். (தி.ம. 881).
தமிழ் உயர்தனி இலக்கியச் செம்மொழி
சான்றுகள்
1. பழந்தமிழ் திரவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் இருத்தல்.
2. தமிழுக்கும் பிறமொழிகட்கும் பொதுவான தென்சொற்கள் தமிழிலேயே திருந்திய அல்லது தூய வடிவிலிருத்தல்.
3. தமிழின் சொல்வளம்.
4. தமிழிலக்கணம், பொருள்களை அவற்றின் பகுத்தறிவுண் மையும் இன்மையும் பற்றி, உயர்திணை அஃறிணை என இரு வகுப்பாக வகுத்தல்.
5. பண்டைத் தமிழிலக்கியமெல்லாம், உரையும் அகரமுதலியும் உட்பட, செய்யுள் வடிவிலிருந்தமை.
6. வெண்பா, கலிப்பா என்னும் செய்யுள்வகைகட்கொத்த யாப்பு வேறெம் மொழியிலுமின்மை.
7. இலக்கணப் புலவனின் மதிநுட்ப முதிர்ச்சியைக் காட்டும் பொருளிலக் கணம் என்றும் தமிழுக்கே தனிச்சிறப்பாயிருத்தல்.
8. முதன் முதலாகத் தனியொலியன்களை (Phonemes)யெல்லாம் வகுத்ததும், உயிரையும் மெய்யையும் பிரித்ததும், உயிர் மெய்க்குத் தனி வரிவடிவ மைத்ததும், உயிர்களைக் குறில் நெடிலாகவும் மெய்களை வலிமெலி யிடையாகவும் முறைப் படுத்தியதுமான தமிழ் நெடுங்கணக்கு, குமரிநாட்டி லேயே கி.மு.10ஆம் நூற்றாண்டிற்குமுன் தோன்றியமையும், தமிழெழுத்துக் கட்கெல்லாம் அறிவியல் முறைப்படி பிறப்பியல் கூறப்பட்டமையும்.
9. தமிழிலக்கணப் பாகுபாடுகளும் குறியீடுகளும் சிறந்த ஏரண முறை யிலும் மெய்ப்பொருளியற் போங்கிலும் அமைந்திருத்தல்.
10.தமிழ் இலக்கிய வகையீடும் நூற்பிரிவுகளின் முறை வைப்பும் வண்ணனையியல்பும் பெரும்பாலும் இயற்கையையும் உண்மையையும் ஒட்டியிருத்தல்.
11. தமிழ் அறநூல்களெல்லாம் வகுப்பு வேற்றுமையின்றி நடு நிலைமையாகவும் அன்பாகவும் அறவொழுக்கங்களையும் தண்டனைகளையும் வகுத்திருத்தல்.
12. தமிழொடு இசை நாடகக் கலைகளையுஞ் சேர்த்து இயல் இசை நாடகம் எனத் தமிழை முத்தமிழாக வழங்கியமை.
13. மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அறம் பொருளின்பம் வீடென நான்காக வகுத்து, இம்மையிலும் மறுமையிலும் வீடுபேறடைதற்கேற்ற முழுமுதற் கடவுளின் உருவமில்லா வழிபாட்டை முதன்முதற் கற்பித்தமை.
14. தமிழைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என்றும், செந்தமிழ்ச் சொற்களை இயற்சொல் திரிசொல்லென்றும், பகுத்து மொழி நூற் கூற்றையும் சொல்லிலக்கணத்தொடு சேர்த்தமை.
15. தமிழ் என்றுங் கெடாதிருக்குமாறு செந்தமிழையே நிலையான அளவையாக வரம்பிட்டமை.
16. செந்தமிழைக் காக்குமாறும் புது நூல்களிற் செந்தமிழையே கடைப்பிடிக்குமாறும் பாண்டியரால் முக்கழகங்கள் நிறுவப் பெற்றமை.
எபிரேயம் (HEBREW) உலக முதன்மொழி யன்மை.
சான்றுகள்
17. எபிரேய மொழித்தோற்றம் கி.மு. 17 ஆம் நூற்றாண்டது. எபிரேயம் என்பது இசரவேலர் அல்லது யூதர் எனப்படும் இனத்தார் மொழி. இசரவேல் என்னும் யாக்கோபின் காலம் கி.மு. 1837-1689. அவன் மக்களுள் ஒருவன் யூதா. இசரவேல் வழியினர் இசரவேலர். யூதா வழியினர் யூதர்.
இசரவேலும் அவன் மக்களும் எகிபதிற்குச் சென்ற ஆண்டு கி.மு. 1706. அவர்கள் அங்குக் குடியமர்ந்த பின்னரே எபிரேயம் உருப்பெற்றிருத்தல் வேண்டும்.
18. எபிரேயம் ஒரு வல்லொலிமொழி.
19. எபிரேயம் தமிழ்போல் ஒரு தாய்மொழியன்று.
20. எபிரேயச் சொற்கள் பிறமொழிகளில் தமிழ்போற் கலக்க வில்லை.
21. நோவா காலத்திற்குமுன் மேலையாசியா முழுதும் சேமிய மூல மொழியே வழங்கிற்று.
நோவா காலம் கி.மு. 25 ஆம் நூற்றாண்டு.
உலக முழுதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமாயிருந்தது
(திருமறை (Bible), முதற் பொத்தகம். 11:1)
22. எபிரேயம் வழங்கிய நாடு குமரிக்கண்டம் போல் முதுபழந் தொன்னாடன்று.
23. இசரவேலர் நீண்டகாலமாக நாடோடிகளாகவே யிருந்தனர்.
24. இசரவேலர் இறுதியாக வந்து குடியூன்றிய கானான் நாடும் குமரிநாடு போல் பெருவளமுற்றதன்று.
25. கானான் நாட்டு நிலப்பரப்பு முதற்காலத்தில் கடலாயிருந்ததாகத் தெரிகின்றது.
26. இசரவேலரின் முன்னோனான ஆபிரகாம் காலத்திற்கு முன்பே பல நாடுகளும் பல இனங்களும் பல மொழிகளும் தோன்றி விட்டன. அவன் பெயரின் முதற் சொல்லான ஆப் என்பது அப்பன் என்னும் தென்சொற் சிதைவே.
ஆபிரகாமின் காலம் கி.மு.20 ஆம் நூற்றாண்டு. அவன் காலத்து நாடுகள், பாபிலோனியம், அசீரியம், கானான், பிலித்தியம், பாரசீகம், எகிபது முதலியன.
ஆரியம் உலக முதன்மொழி யன்மை
சான்றுகள்
1. ஆரியம் தமிழின் அல்லது திரவிடத்தின் திரிபேயன்றி ஒரு தனிமொழி யன்று.
ஆரியம் என்னும் இனப்பெயர் மொழித்திரிபினாலன்றி இன வேறுபாட்டால் ஏற்பட்டதன்று.
2. ஆரியத்தின் அடிப்படை தமிழே.
ஆரியச் சொற்களின்றித் தமிழை வழங்கமுடியும். ஆயின், தமிழ்ச் சொற்களின்றி ஆரியத்தை வழங்கமுடியாது.
3. ஆரியர்க்கென்று ஒரு தனியிடமில்லை.
இந்தியச் சிந்துவெளியினின்று ஐரோப்பியக் காண்டினேவியம் வரை வெவ்வேறிடங்கள் ஆரியரின் பிறந்தகமாக அல்லது முதலிருப்பாகக் காட்டப்பெறுகின்றன. அவற்றுள் ஒன்றேனும் உண்மையானதன்று; அல்லது எல்லாம் சரியே.
திரவிடம் ஆரியமாக முதன்முதல் திரிந்த இடம் வடமேலை ஐரோப்பா. அங்கிருந்து தென்கிழக்காகப் படிமுறையாய்த் திரிந்து வந்து இந்தியாவிற்குட் புகுந்துள்ளது.
சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழி உருவானது இந்தியாவிலேயே. அதில் ஐந்திலிரு பகுதி தமிழே.
ஆரியம் என்னும் பெயரும் முதன்முதல் இந்தியாவிலேயே தோன்றிற்று. அது பின்னர் மாக்கசு முல்லரால் மேலையின மொழிகட்கும் விரிவுறுத்தப் பெற்றது.
4. ஆரியம் மெல்லொலி மொழியன்று.
உலக மொழிகட்குள் வல்லொலி முதிர்ச்சிபெற்றது ஆரியமே. அதன் வல்லொலித்தன்மை தியூத்தானியத்தில் தொடங்கி இந்திய ஆரியத்தில் முதிர்கின்றது.
5. ஆரிய மொழியிலக்கண வமைதி செயற்கை வளர்ச்சி பெற்றது.
இருமையெண், இலக்கணப்பால், ஈறுபிரியாமை எழுவாயுருபு முதலியன இதற்கு எடுத்துக்காட்டாம்.
இருமையெண் தியூத்தானியத்திலும் இலத்தீனிலும் இல்லை.
6. ஆரியத்தின் முந்துவடிவமென்று தவறாகக் கருதப்படும் சமற்கிருதத் தின் நெடுங்கணக்கும் புணர்ச்சியும் எண் வேற்றுமையும் தமிழைப் பின்பற்றியனவே.
7. ஆரியமொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் திருந்திய வடிவும் வேர்ப்பொருளும் தமிழிலேயே உள்ளன.
8. தொல்காப்பியம் ஆரிய வேதங்கட்குக் காலத்தாற் பிற்பட்ட தேனும் பொருளால் முற்பட்டதே.
தலைக்கழக நூல்களிற் சொல்லப்பட்ட இலக்கணத்தையே சார்பிற் சார்பான தொல்காப்பியம் எடுத்துக் கூறுகின்றது.
ஆயிரக்கணக்கான முதலிரு கழக நூல்களும் ஆரியரால் அழிக்கப்பட்டு விட்டமையால், இன்று பண்டைத் தமிழிலக் கியம் சமற்கிருத இலக்கியத்திற்குப் பிற்பட்டதாகத் தோன்று கின்றது.
9. நான்காம் மண்டலக் காலத்தில் (கி.மு. 25,000 - 475,000) ஐரோப்பாவிற் பனிக்கட்டிப் படலப் படர்ச்சி யிருந்தமையால், கி.மு. 50,000 ஆண்டுகட்கு முன் குமரிநாட்டில் தோன்றிய தமிழே உலக முதன்மொழியா யிருத்தல் வேண்டும்.
ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்
என்பதே அறிவுடைத் தமிழர் கொள்கை.
10. ஆரியமொழி தமிழ்போல் மொழிவளர்ச்சியின் முந்து நிலைகளைக் காட்டவில்லை.
11. ஆரிய மொழிவரலாறு தமிழ்போற் குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய முந்தியல் மாந்தர் நாகரிக வளர்ச்சி நிலையங்களை காட்டவில்லை.
12. ஆரியர் வெள்ளையர்; தமிழரும் திரவிடரும், கரியரும் செய்யரும் பொன்னருமாவர்.
முந்தியல் மாந்தர்வெள்ளையரல்லர். ஆதலால் வெள்ளையர் மொழி உலக முதன்மொழியா யிருத்தல் முடியாது.
தமிழ் எழுத்து மாற்றம்
தமிழெழுத்தின் சீர்மையும் பிறமொழி யெழுத்துகளின் குறைபாடும்
இதுபோது வழக்கிலுள்ள தமிழ் அரிவரியைப் பிறமொழியரிவரி களோடு ஒப்புநோக்கினால்தான், முன்னதின் சீர்மை விளங்கும்.
வடமொழி யரிவரியில், gh, bh; ங, ட: bh, m ஆகிய இவ் வீரெழுத்துகள் சிறிதே தம்முள் வேற்றுமையுடையன. kh என்னும் எழுத்தும் வ என்னும் கூட்டெழுத்தும். ரவ போலும் தோன்றும். முன்னும் பின்னும் கீழும் சேர்த்தெழுதும் கூட்டெழுத்து கள் (சம்யுக்தாக்ஷரம்) 160-க்கு மேலுண்டு. இதனால் மிக நுணுக்கியும் வரிநெருக்கியும் எழுதமுடியாது. கூட்டெழுத்துகள் பலவற்றிற்குத் தனி அச் சுருக்கள் (types) வேண்டும். உயிர்மெய் வரிகள் (33 x 12) 462.
வடமொழி யரிவரியையே கொண்ட இந்தி யெழுத்துகளில் இக்குறை பாட்டோடு இடை கடை வரும் அகர வூமையெழுத்து களும் (Silent Letters) உண்டு. உயிர்மெய் வரிகள் (33 x 12) 396.
தெலுங்கரிவரியில், ஓ. bh; ப, வ; ந. ஸ ஆகிய இவ்வீரெழுத்துகள் தம்முள் மிகச்சிறிதே வேறுபட்டு மயக்கத்திற்கிடமாவன. முன்னும் பின்னுங் கீழும் சேர்த்தெழுதுங் கூட்டெழுத்துகள் இடத்தை அடைப்பன, மொ, மோ, யி, யீ, யொ, யோ, ஹொ, ஹோ ஆகிய உயிர்மெய்யெழுத்துகள் ஏனையவற்றினும் வேறு பட்ட உயிர்க்குறியுடையன. உயிர்மெய் வரிகள் (35 x 35) 455. இவை யல்லாது. நகாரப் பொல்லு என்னும் ஒரு தனி னகரமெய் வரியும். பண்டிர அல்லது சகட்டிரேப்ப என்னும் றகரமெய்யும். ஒரு மெய்க்கு அல்லது உயிர்மெய்க்குப்பின் எழுதி முன் பலுக்கப் பெறும் வெலப்பல கிலக என்னும் ரகரவரியும் உள்ளன.
கன்னட அரிவரி தெலுங்கரிவரியைப் பின்பற்றியதாதலின், அதிலும் இத்தகைய குறைபாடுண்டு. கன்னட உயிர்மெய் வரிகள் (34 x 14) 476.
மலையாள அரிவரியில், (குற்றியலுகர) லு, ஞ என்னும் ஈரெழுத் தும் kh, ch, p, v ஆகிய நாலெழுத்தும், மயக்கத்திற்கிட மாவன, கு, கூ என்னும் ஈரெழுத்தும் நுணுக்கெழுத்தில் கூர்ங்கண்ணருக் கன்றி வேறுபாடு தெரியா. உகர ஊகாரமேற்ற உயிர்மெய்கள் (uniform) ஓரியல் வடிவு கொண்டன வல்ல. முன்னும் பின்னும் கீழும் மேலும் சேர்த்தெழுதும் கூட்டெழுத்துகள் 300 க்கு மேற் பட்டன. இவற்றுட் சிலவற்றுக்கேனும் தனி அச்சுருக்கள் வேண் டும். ch, b, y, v ஆகிய நாலெழுத்தும் இரட்டிக்கும் கூட்டெழுத் துகளில் கீழெழுத்து ஒன்றாகவே இருக்கும். உயிர்மெய் வரிகள் (36 x 16) 576..
தமிழிலோ ஒவ்வோர் எழுத்தும் எளிதாய் வேறுபடுத்தறியக்கூடிய தனி வடிவுள்ளது. மெய்கள் பதினெட்டே. இதனாலும், கூட்டெ ழுத்தின்மையாலும் எத்துணையோ குறைகின்றது. உயிர்மெய் வரிகள் (18 x 12) 216. ஆய்தம் ஒன்று. ஆக, தமிழெழுத்துகள் மொத்தம் 247 தாம்.
சில உயிர்மெய் வரிகள் தமிழில் ஓரியல் வடிவு கொண்டனவல்ல வெனின், இக் குறைபாடு தெலுங்கு கன்னட மலையாளத்திலும் உள்ளதே! அதற்கென் செய்வது?
உருதுவிற்குரிய பாரசீக - அரபி யரிவரியில் உயிர்மெய் வரிகள் இல்லா விடினும், பலவெழுத்துகள் ஒரே வடிவுகொண்டு மேற்கீழ்ப் புள்ளித்தொகை வேறுபாட்டாலேயே வேறுபடுத்தப் படுகின்றன. பெரும்பாலும், ஒவ்வோ ரெழுத்திற்கும் சொல்லின் முதலிடை கடைக்குரிய மூவேறு வடிவுண்டு. யகரவரி இகரத்தையும், வகரவரி உகரத்தையும் குறிக்கின்றன.
நுணுக்கியும் நெருக்கியும் அழகாகவும் தெளிவாகவும் மணிபோல் எழுதப்பெறும் எழுத்துகளுள் தலைமையானது ரோம (Roman) எழுத்து. அதற்கடுத்தது தமிழே. தமிழ் எழுத்து வடிவை மாற்றி னால், பல இன்னலும் அழகிழப்பும் நேரும்.
பிறமொழி யெழுத்துகளில் எத்துணையோ குறைபாடிருக்கும் போது. அவற்றையெல்லாம் கவனிக்காமல் தமிழெழுத்தை மட்டும் மாற்றுவது எற்றுக்கு? மேலும், ஒரு அல்லது சில செய்தித் தாளில் எழுத்தை மாற்ற விரும்பின், அதுபற்றிப் பாடப்புத்தகங் களிலும் இலக்கியத்திலும் ஏன் மாற்ற வேண்டும்? ஏற்கெனவே தமிழெழுத்துப் பலமுறை தகுந்த முறையில் சீர்திருத்தப் பெற்றே இற்றை வடிவெய்தியுள்ளதென்பதை. தமிழ் எழுத்து மாற்றக் கோட்பாட்டினர் அறிவாரா? அவர் விரும்புவது சீர்திருத்தமா? அல்லது (சீர்கேடான) மாற்றமா?
தமிழெழுத்தில் செய்ய வேண்டிய திருத்தம்
தமிழெழுத்தில் இப்போது செய்ய வேண்டிய திருத்தம் இரண்டே. ஒன்று ஈ யை நீக்கி (மேற்சுழியிட்ட) இ யை வைத்துக்கொள் வது; இன்னொன்று ஔகார உயிரிலும் அதனையேற்ற உயிர்மெய் களிலும் ள வரியைச் சற்றுச் சிறிதாக்குவது. (மேற்சுழியிட்ட) இ வரிதான் முதலாவது இருந்து. பின்பு இடைக்காலத்தில் அது விலக்கப்பட்டுக் கிரந்த வரியாகிய ஈ புகுத்தப்பட்டது. ஔகார வரியிலுள்ள ள வரியும் ஊ வரியிற்போல் முதலாவது சிறிதாக வேயிருந்து பிற்காலத்தில் தவறாகப் பெரிதாக எழுதப்பட்டது.
தமிழ்ப்புலவர் செய்த தவறு
இந் நூற்றாண்டில் எழுத்துப்பற்றித் தமிழுக்கு இருவகையில் ஊறு நேர்ந்த போது தமிழ்ப்புலவர் தடுத்திலர். ஒரு மொழியில் பல கருத்துகட்கும் சொல்லிருக்கும் போது, அவற்றுக்குப் பதிலாகப் பிறமொழிச் சொற்களையும், எழுத்துகளையும் வேண்டாது புகுத்துவது, ஒரு மொழியைக் கெடுக்கும் வழியாகும்.
தமிழில் ஒரே யுயிர்கொண்ட உயிர்மெய் வரிகளெல்லாம் ஓரியல் வடிவுகொண்டிருத்தல் வேண்டுமென்பது திருந்திய கருத்தன்று. எடுத்துக்காட்டாக ஐகார உயிர்மெய்களை எடுத்தக்கொள்ளின், அவை ஓரியல் வடிவுகொண்டி ராமைக்கத் தகுந்த காரணமுண்டு. ன என்பதற்குப் பதிலாக னை என்று எழுதின், கூட்டெழுத்தா யெழுதுங் கையெழுத்தில் அது இரு னகரம்போல் தோன்றும். இம் மயக்கத்தை நீக்குதற்கே. ஐகார வுயிர்க்குறி, பல சுழிகளும் வளைவுகளுங் கொண்ட எழுத்துகட்கெல்லாம் மேலிடப் பெற்றுள்ளது. இங்ஙனமே ஆய்ந்து நோக்கின். ஓரியல் வடிவு பெறாத பிற உயிர்மெய் வரிகட்கும் காரணம் தோன்றும். அச்சுவடிவு ஒன்றையே கவனித்துக் கையெழுத்து வடிவை நோக்காதவர்க்கே, தமிழ் உயிர் மெய் வரிகள் ஒழுங்கில்லாதன வாகத் தோன்றலாம். கையெழுத்தும் முக்கியம்; ஆங்கிலத்தில் அதனையும் அச்சு வடிவில் அமைத்திருக்கின்றனர்.
என்னும் பழைய ஐகார வுயிர்மெய்க் குறியை என்று இணைத்தும். கு ஙு சு ஞு டு ணு முதலிய உயிர்மெய் வரிகளை ஒரே முறையில் வரையும் ஒற்றைக் குறியாகவும் எழுதுவதெல்லாம் எளிமையும் தெளிவும் மட்டுமன்று, காலச் சிக்கனமும் பற்றியதாகும். ஆதலால், எவ்வகையிலும் (மேற்காட்டிய இரு வரிகளை யன்றி) மாற்றம் செய்யத் தேவையில்லை. புதிய எழுத்துமாற்றம் செய்தித்தாள்கட்கு இன்றியமையாததாயின். அவைமட்டும் அதை ஆளட்டும். ஏனையர்க்கு வேண்டா.
இன்று செய்ய வேண்டியது
புதிய எழுத்து மாற்றம் புகுத்தப்படின், பல்கலைக்கழகப் பாடப் புத்தகக் குழுவையும், தனிப்பட்டவர்க்கும் பொதுமக்கட்குமுரிய எல்லா நூல்நிலையங் களையும், தமிழ்நூல் வெளியீட்டாள ரையும், தமிழ்ச் சங்கங்களையும், பலவகை ஆவணங்களையும், மாணவரையும், தாக்கிப் பல இடர்ப்பாட்டை விளைவிக்கும். ஆதலால், இதைப் புகுத்தாதவாறு அரசியலாரை வேண்டிக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத் தமிழர் புதிய எழுத்துமாற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லை யென்றும், பழைய எழுத்தையே கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது. தமிழ்ச்சொற் களைப் போன்றே தமிழ் எழுத்தையும் தூய்மையாகப் பேணத் துணிந்த யாழ்ப்பாணம் தழைத்தோங்க! (செந்தமிழ்ச் செல்வி நவம்பர் 1951)
தமிழ் என்னும் பெயர் வரலாறு
தமிழ் குமரிக்கண்டத்தில் தானே தோன்றிய மொழியாதலானும், ஆரியர் வரும் வரை வேற்றுமொழியொன்றும் தென்னாட்டில் எவ்வகையிலேனும் வழங்காமையானும், தமிழவணிகர் மொழி பெயர் நாடு செல்லும் வரை அல்லது அயலாரொடு அரசியல் அல்லது வணிகத்தொடர்பு கொள்ளும் மொழி அல்லது பேச்சு என்னும் பொதுப்பெயர்தவிர யாதொரு சிறப்புப்பெயரும் தமிழுக்கு வழங்கியிருக்க முடியாது.
தமிழ்மொழியின் சிறப்புப் பெயர், தமிழ் (தமிழம், திரவிடம் என்னும் இருவடிவில் காணப்படுகின்றது. இவ்விரண்டும் வெவ்வேறு சொற்போல் தோன்றினும் உண்மையில் ஒரே சொல்லின் இருவேறு வடிவங்களாகும். இவற்றுள் முன்னையது தமிழ் என்பதே. இதற்குச் சான்றுகளாவன :
1. திராவிடம் என்னும் சொல் முதலாவது தமிழ் என்னும் பொருளிலேயே வழங்கியமை.
வட நூலார் தமிழை ஒரு பிராகிருதமாகக் கொண்ட போது, அதைத் த்ராவிடி என அழைத்தனர்.
பாகவத புராணத்தில், சத்தியவிரதன் என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன், திராவிடபதி எனப்படுகின்றான்.
கி.பி. 470 ஆம் ஆண்டில் வச்சிரநந்தி என்னும் சமணர் மதுரையில் நிறுவிய தமிழ்க் கழகம் திராவிட சங்கம் எனப்பட்டது.
பிள்ளை லோகாசார்யசீயர் (500 ஆண்டுகட்குமுன்) பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரவுரையில், தமிழிலக்கணத்தைத் திராவிட சாதிரம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
நாலாயிரத் தெய்வப்பனுவல் திராவிடவேதம் என்றும், சிவஞான முனிவரின் மெய்கண்டான் நூல் அகலவுரை திராவிடமாபாடியம் என்றும், சபாபதிநாவலரின் தமிழிலக்கிய வரலாறு திராவிடப் பிரகாசிகை என்றும் பெயர் பெற்றுள்ளன.
தாயுமானவர் : (18 - ஆம் நூற்) கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாட்டில், தமிழைத் திராவிடம் எனக் குறிப்பிடுகின்றார்.
கிறித்துவிற்கு முன் தமிழிலன்றித் திரவிடமொழியெதிலும் இலக்கிய மின்மையால், திராவிடம் என்னும் பெயரால் தமிழையே தலையாகக் குறித்து வந்தனர், வடவர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தான், குமரிலபட்டர் ஆந்திர - திராவிடபாஷா என்னுந் தொடரால் தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறினர்.
திராவிடம் என்னும் திரிந்த வடிவைச் செம்மையான வடிவாகக் கொண்டு, ஆரியத்தால் தெற்கே துரத்தப்பட்டது என்று தமிழ்ப்பகைவரும், தீவினையைத் துரத்துவது என்று சிவஞான முனிவரும், திருவிடம் (திரு+இடம்) என்று பேரா, பூரண லிங்கம் பிள்ளையும், துருவிதரோடு தொடர்புபடுத்தி ஞானப்பிரகாசக் குரவரும், வெவ்வேறு பொருட்கரணியங் காட்டுவாராயினர்.
2. தமிழ் என்னும் சொல்லையொத்த பெயர்களே வெளி நாடுகளில் வழங்கியமை.
கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுந்த பெரிப்புளுசு (Periplus) என்னும் கிரேக்க நூல் தமிராய் (Tamirai) என்று குறித்துள்ளது. பியூத்திங்கர் அட்டவணை (Peutinger Tables) என்னும் உரோம ஞாலப்படங்களில் (Atlas) தமிழகம் தமிரிக்கே (Damirice) எனக்குறிக்கப்பட்டுள்ளது. தாலமி (Ptolemy) என்னும் எகிப்திய ஞால நூலார் (கி.பி. 139-161). பியூத்திங்கர் அட்டவணையிடப் பெயர்களைப் பெயர்த்தெழுதும் போது, கிரேக்கரகரத்தை லகரமாகக் கொண்டு, திமிரிக்கே (Dymirice) என்னும் பெயரைத் தவறுதலாக லுமிரிக்கீ (Lumiriki) என்று எழுதிவிட்டார். ஆயினும் அவருக்குப் பின்னர் வந்த ரேவண்ணா (Ravenna) ஞாலநூலார் தமிரிக்க (Damirica) எனத்திருத்திக் கொண்டார்.
தமிழ் என்னுஞ்சொல், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த யுவான்சாங் (Hwen Thsang) என்னும் சீன வழிப்போக்கர் குறிப்பில், சிமெலொ (Tehi-molo) என்னும் வடிவில் உள்ளது.
இதைத் திமல (Dimala) அல்லது திமர (Dimara) என்றும் படிக்க லாம் என்பர் கால்டுவெலார். பாலிமொழியில் உள்ள மகாவமிசம் (Mahavamso) என்னும் இலங்கை வரலாற்றில், தமிலோ (Damilo) என்னும் வடிவமே உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் தமுல் (Tamul) என்றனர். அவருள் தேனியவிடை யூழியர் (Danish Missionaries) மட்டும் தமுலிக்க மொழி (Lingua Damulica) என இலத்தீன் வடிவில் குறித்தனர். ஆங்கிலத்தில் தமில் (Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. மாக்கசு முல்லர் தென்மொழிக் குடும்பத்திற்குத் தமுலிக்கு (Tamulic) எனப் பெயரிட்டார்.
3. திராவிடம் என்னும் சொல், தமிழ் என்னுஞ் சொல்லிற்கு நெருங்கிய திரமிலம் (அல்லது திரமிளம்) என்னும் வடிவில் வழங்கியமை.
கி.பி. 6ஆம் நூற்றாண்டில், வராகமிகிரர் நூலின் பழங்கையெழுத்துப் படிகளில் த்ரமிட எனனும் வடிவும் மங்கலேச அரசனின் பட்ட யங்களில் த்ரமில என்னும் வடிவும், காணப்பட்டனவென்றும், தாரநாதர் திபேத்தில் எழுதிய இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு (கி.பி. 1573) என்னும் நூலில், திராவிடர் திரமிலர் (Dramilas) எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், புராணங் களின் பழைய மொழி பெயர்ப்புக்களிலெல்லாம் இவ்வடிவே பெருவழக்காயிருப்பதாகக் குண்டெர்ட்டுப் பண்டாரகர் கூறுகிறாரென்றும், திராவிடம் என்பதன் மிகப் பழைய வடிவம் த்ரமிட (Dramida) என்பது என்றும்; கால்டுவெல் கண்காணி யார் வரைந்துள்ளார். (â.x.ï., பக்.9.)
நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பண்டைக் காலத்திற் பெரும்பாலும் அம் ஈறுபெற்றுத் தமிழில் வழங்கியதை நோக்கும் போது, தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மை தமிழம் என்று வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம், த்ரமில(ம்) த்ரமிள(ம்), த்ரமிட(ம்), த்ரவிட(ம்) என்னும் வடிவுகளை முறையே நோக்கின், தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம். ஆயினும், கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய் நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்து விட்டார். ஆயின், கிரையர்சன் இத்தவற்றைத் திருத்தி விட்டனர்.
த்ரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலும் அது. என்று பிரயோக விவேக நூலார் (பக்.4) கூறியது, அவரது தமிழ் வெறுப்பைக் காட்டும் சான்றேயென அறிக.
4. திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலகவழக்கில் அருகியும் வழங்காமை.
5. த்ரமிடம், த்ரவிடம் என்னும் ரகர மேற்றிய வடிவுகளேயன்றி, தபிள தவிட என்னும் மிக நெருங்கிய வடிவுகளும் வடமொழி நாடகங்களிலும் சமண நூல்களிலும் வழங்கியிருத்தல்.
இனி, தமிழ் என்னுஞ் சொல், கிரேக்க நாட்டில் வழங்கிய தெர்மிலே அல்லது தெர்மிலர் அல்லது திரமிலர் (Dravids திரவிடர்) என்னும் இனப்பெயரினின்று திரிந்ததென்று ஞானப் பிரகாசக் குரவரும், வங்க நாட்டுத் தம்ரலித்தி என்னும் நகர்ப்பெயரினின்று தோன்றிய தென்று கனகசபைப் பிள்ளையும்; தாமம் (ஞாயிறு), எல்லாம் (இலங்கை) என்னும் இரு சொல், முறையே தாம் ஈழம் என மருவிப் புணர்ந்தவடிவென்று கந்தையா பிள்ளையும்; தமி என்னும் முதனிலையடியாய்ப்
பிறந்து ஒப்பற்றதெனப் பொருள்படுவதென்று தாமோதரம் பிள்ளையும், தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி என்னும் பொருள் தருவதென்று ஒரு சாராரும், வலிமெலி யிடையாகிய மூவின மெய்களைக் கொண்ட நிலைமையைக் குறிப்பதென்று மற்றொரு சாராரும், அதற்குப் பொருட் கரணியங்காட்டுவர்.
இனிமையானது என்று பொருட்கரணியங் காட்டுவாருள், (S) சீநிவாசையங் கார் ஒருவரே தம் + இழ் என்று பகுத்து, இழ் என்னும் ஈறு இனிமைப் பொருள்படும் இழும் என்னும் சொல்லின் சிதைவேயெனக் காட்டுவர். பிறரெல்லாம், இனிமையும் நீர்மையுந் தமிழெனலாகும். என்னும் பிங்கலந்தை நூற்பாவைத் தழுவி, தமிழ் என்னும் சொற்கே இனிமைப் பொருளுண்டெனக் கொள்வர்.
கிரேக்க நாட்டில், என்றேனும் தமிழ் வழங்கியதென்பதற்கோ தமிழர் வாழ்ந்திருந்தார் என்பதற்கோ ஒரு சான்று மின்மை யானும்; தமிழ்ச் சொற்களும் தமிழர் பழக்க வழக்கங்களும், கிரேக்க நாட்டில் மட்டுமன்றி உலகத்திற் பல இனத்தாரிடையும் காணப்படுவதாலும், கிரேக்க நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு திரவிட மொழியும் வழங்காமையானும்; தெர்மில என்னும் சொல்லைத் திர - இல் - அர் என்று பிரித்து, கடற்கரையில் குடிகொண்டவர் என்று பொருள் கூறுவது, கேசவக் கிருட்டி ணனே ஏசுக்கிறித்து என்று சொல்வதொக்கு மாதலானும்; ஒரே சொல்லின் ஒருபுடை யொப்புமை பற்றி ஒரு நாட்டாரை ஐயாயிரம் கல் தொலை விற்கப்பாற்பட்ட வேறொரு நாட்டி னின்று வந்தவராகக் கொள்வது, மொழி நூன் முறைக்கு முற்றும் முரணானதாகலானும்; தோற்றம் முதல் இதுவரைப்பட்ட வளர்ச்சி நிலையெல்லாம் தொடர்பாகக் காட்டிக் கொண்டு தொன்று தொட்டுத் தென்னாட்டிலேயே தமிழ் வழங்கி வந்திருத்த லானும்; கிரேக்க நாட்டு மூலக்கொள்கை மிகத்தவறான தென்று கூறிவிடுக்க.
வங்க நாட்டில் திரவிடரேயன்றித் தமிழர் ஒருகாலும் வாழ்ந் திராமையானும், இற்றை வங்கமொழி ஆரிய வண்ணமாய் மாறி யிருத்தலானும், தமிழ் என்னுஞ் சொற்குத் தம்ரலித்தி என்னுஞ் சொல்லோடுள்ள தொடர்பு. காசி என்னும் பெயர்க்குக் காஞ்சி யென்னும் பெயரோடுள்ள தொடர்பே யாதலானும்; தம்ரலித்தி (அல்லது தமிலப்தி அல்லது தமிலூக்) என்னுஞ் சொல்லினின்று தமிழ் என்னும் பெயர் வந்ததென்பது சிறிதும் பொருந்தாது.
தமிழர் நாகரிகமடைந்த காலந் தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியராட்சிக்குட்பட்ட முத்தமிழ்நாடா இருந்துவந்தமை யானும், கி.மு. 7 ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியரும்,
வண்டமிழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை யகம் (தொல். 1336)
என்று கூறுதலானும், வரலாற்றுக் காலம் நெடுகலும் இலங்கை அயலாராட்சிக்குட்பட்ட ஒரு குடியேற்ற நாடாகவே கருதப்பட்டு வருதலானும்; தமிழ் என்னும் பெயர் குமரிக்கண்டத்திலேயே தோன்றிவிட்டமையானும்; தாமமெல்லாம் அல்லது தாமீழம் என்பது இலங்கையை நோக்கிப் புதுவதாகப் படைத்த பொருந்தாப் புணர்ப்பாதலாலும்; அப்புணர்ப்புச் சொல்லினின்று தமிழென்னும் பெயர் தோன்றிற்றென்பது, இலங்கையை நோக்கிப் புதுவதாகப் படைத்த பொருந்தாப் புணர்ப்பாதலாலும்; அப்புணர்ப்புச் சொல்லினின்று தமிழென்னும் பெயர் தோன்றிற்றென்பது, நாட்டுப்பற்றினாலெழுந்த விருப்பக் கருத்தேயன்றி வேறன்று.
தமிழ் ஒப்புயர்வற்றதென்னுங் கருத்து ஏனைய மொழிக ளெல்லாந் தோன்றியபின், அவற்றோடு தமிழை ஒப்பு நோக்கி அதன் உயர்வு கண்டு அதற்குத் தமிழ் எனப் பெயரிட்டனரென்று, அப்பெயரீட்டை மிகப்பிந்திய நிகழ்ச்சியாகக் காட்டுவதால், அதுவும் கொள்ளத் தக்கதன்று.
மூவினமெய் எல்லா மொழிகட்கும் பொதுவாதலின், தமிழ் என்னும் பெயர் அது குறித்துத் தோன்றிற்றென்பதும் தவறானதே.
எல்லா மொழியாளரும் தத்தம் மொழியே இனியதென்று கொள்வது இயல்பாதலானும்; மாடு என்னும் சொற்குச் செல்வம் என்னும் பொருள் தோன்றியதுபோல், தமிழ் என்னும் சொற்கு இனிமை என்பது மதிப்பும் பற்றும் பற்றித் தோன்றிய வழிப் பொருளே யாதலானும்; தம் + இழ் (இழும்) என்னும் சொற்பகுப் பில், தம் என்னும் முன்னொட்டு தொடர்பற்றும், இழும் என்னும் தலைமைச்சொல் ஈறாகக் குன்றியும், இருக்க வேண்டும் நிலைமை யேற்படுதலானும்; இனிமைப் பொருட் கரணியமும் ஏற்றதன்றாம்.
இழும் = இனிமை. இழுமெனல் = இனிதாயிருத்தல்.
இழுது = தேன், தித்திப்பு.
தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னுங் கருத்துப் பொருத்த முள்ளதாகத் தோன்றினும் அதுவும் ஏனை மொழிகளுடன் ஒப்புநோக்குதலை வேண்டுதலின் ஏற்கத் தக்கதன்று. கி.மு.10,000 ஆண்டுகட்கு முன்னரே குமரிக் கண்டத்தில் தமிழ் என்னும் பெயர் ஏற்பட்டுவிட்டது.
தமிழ் என்னும் சொல்லில் ழ இயல்பீறன்று. அமிழ், இமிழ், உமிழ், குமிழ், சிமிழ் என்பவற்றிற்போல், தமிழ் என்பதிலும் இழ் என்பதே ஈறாம், அது இல் என்பதன் திரிபு. தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னும் பொருளில், தமிழ் என்பது தமி+ழ் என்று பிரிதல் வேண்டும். தமி=தனிமை ழகரம் இனிதா யொலிப்பதால், தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னுங் கூற்றும், இனிமைக் கருத்தைத் தழுவியதே.
இனி, இனிமையென்பது தமிழுக்கு ழகரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று. எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யுளினிமை, பொருளினிமை அணியினிமை, இலக்கிய வினிமை, இசையினிமை, கூத்தினிமை, எனப் பிறவினிமைகளு முண்டு.
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்த வொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென் கொலாம்புகுந் தெய்தியதே.
என்னும் திருக்கோவைச் செய்யுளில், ஒண்டீந்தமிழின் துறை என்று பிறமொழிகட்கில்லாத பொருளிலக்கணமும், ஏழிசைச் சூழல் என்று இசைத் தமிழும், இன்பத் துறைகளாக மாணிக்க வாசகராற் குறிக்கப்பட்டிருத்தலையும், நோக்கித் தெளிக.
அண்மையில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர். (வே.வே. இராமசாமி பாராட்டு மலர், பக். 93-95). தமிர் என்னுஞ் சொல்லைத் த+மிழ் என்று பிரித்தும். தம்+மிழற்று என்று விரித்தும், நமது இனிய மொழி என்று பொருள் குறித்தும், ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்.
முறையே, ஏம் (யாம்), நாம், நூம், தாம் என்னும் மூவிடப் பெயர்களின் வேற்றுமையடிகளான எம், நம், நும், தம் என்னும் சொற்களும், எம், நம் என்னும் தன்மைச் சொற்களே அருமைப் பாட்டை யுணர்த்தும். இது ஆர்வக் கோளி (Dative of Interest) என்னும் ஆங்கில விலக்கண அமைதியை ஒருபுடை யொத்தது.
எ.டு. எம்பிள்ளை, எம்ஆள், எம்பெருமான்,
நம்பிள்ளை, நம் ஆள், நம்பெருமான், நம்பெருமாள், நம்மாழ்வார்.
தம் என்பது தமது என்று படர்க்கையை யுணர்த்துமேயன்றி, நமது என்று உளப்பாட்டுத் தன்மையை உணர்த்தாது. ஒருவர் தமக்கு அருமையானவரைத் தம்மொடுபடுத்திக் கூறுவதன்றிப் பிறரொடு படுத்திக் கூறுவது, இயல்பன்றென்பதும் அறிக.
மழவுங் குழவும் இளமைப் பொருள
என்பது தொல்காப்பியம் (உரியியல், 14)
இளமை மென்மையையும் உணர்த்தும்.
மழ - மழல் - மழலை, மழல் - மழறு - மழற்று - மிழற்று.
மிழற்றுதல் = குழந்தை போல் மென்மையாய் அல்லது இனிமை யாய்ப் பேசுதல்.
மிழற்று என்னும் சொல் தமிழ் எனக் குறுகி ஈறாயிற்றென்பது பொருந்தாது.
ஆயினும், நம் பேராசிரியரின் நன்னோக்கம் மகிழ்ந்து பாராட்டற் பாலதே.
இனி, வேறு எவ்வகையில் தமிழ் என்னும் பெயர் தோன்றியிருக் கலாமெனின், கூறுவேன்.
மொழிகட்குப் பெயர் முதலாவது நாடு பற்றியும், பின்பு மக்கள் பற்றியும், அதன்பின் மொழியின் தன்மை பற்றியும் தோன்றி யுள்ளன. கருநடம் (கன்டம்). குடகு முதலியவை நாடு பற்றியும்; மலையாளம், ஆங்கிலம் முதலியவை மக்கள் பற்றியும் பிராகிருதம், சமற்கிருதம் முதலியவை தன்மை பற்றியும் பெயர் பெற்றுள்ளன. வடமொழி, தென்மொழி எனத் திசை பற்றியும்; உருது (பாளையம்) என இடம் பற்றியும் பெயர்பெறுவது நாட்டினாற் பெயர் பெறுவது போன்றதே. வழக்கற்ற மொழியாயின், வேதமொழி என்பதுபோல் நூலாலும் பெயர் பெறும். தேவமொழி என்பது ஏமாற்றுப் பற்றியதாம்.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
என்று தொல்காப்பியம் கூறுவதினின்று, கி.மு.7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது தெரிகின்றது. கடைக்கழகத் காலத்திலும் இந்நிலைமையே யிருந்தமை. கழகச் செய்யுட்களாலும் கழகமருவிய வனப்புக்களாலும் அறியப்படும். திராவிடம் (தமிழ்), ஆந்திரம், கன்னடம், மகாராட்டி, கூர்ச்சரம் என்னும் ஐந்தையும் பஞ்ச திராவிடம் என்று பண்டைக்காலத்தில் வடவர் வழங்கியதால், ஆரியர் வந்த பின்பும் விந்திய மலைவரையும் தமிழும் அதன் திரிபான திரவிடமுமே வழங்கியமை பெறப்படும். அவர் வருகைக் காலத்திலோ, வட இந்தியாவிலும் திரவிடம் வழங்கியதை, பிராகுவீயும், இராசமகாலும் இன்றும் காட்டும்.
ஒரு நாட்டில் ஒரே மொழி வழங்குமாயின், அதற்குச் சிறப்புப் பெயர் தோன்றாது. பேச்சு அல்லது மொழி என்னும் பொதுப் பெயரே அதற்கு வழங்கும். ஓர் ஊரில் ஒரே ஓர் ஆறிருப்பின். அதை ஆறென்று பொதுப் பெயராலேயே குறிப்பார். இங்ஙனமே மலை, குளம், மரம் முதலிய பிறவும் ஒன்றேயொன்றாயிருப்பின் பொதுப் பெயராலேயே குறிக்கப்பெறும். ஒரு மொழி ஆயிரங் கல்தொலைவிற்கு அப்பாற்படரின், பல்வேறு கரணியம் பற்றித் திரிதல் இயல்பு. அத்திரிபு திடுதிப்பென்று தோன்றாது மெல்ல மெல்லப் படிப்படியாகத் தோன்றும். அது மொழி பெயர்தல் எனப்படும். தொன்றுதொட்டுத் தமிழையடுத்து வடபால் வழங்கும் திரவிடமொழி தெலுங்கே. அதனால், அதைத் தமிழர் வடகு என்றனர். அது பின்பு உயிரிசைவு மாற்றத்தால் (Harmonic Sequence of Vowels) வடுகு எனத் திரிந்தது. நீலமலையில் வாழும் ஒரு சார் கன்னடத் திரவிடரைக் குறிக்கும் படகர் என்னும் பெயர், வடகர் என்பதன் திரிபே. தெலுங்கையடுத்துத் திரிந்த பெருந் திரவிடமொழி கன்னடமே.
தமிழ வணிகர் வடக்கிலுள்ள மொழி பெயர் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டார் அவ்வணிகர் பேச்சைத் தம்மில் (தம்+இல்) மொழி என்று குறித்திருக்கலாம். இல் என்பது வீட்டையுங் குடியையும் ஊரையும் உணர்த்தும். இற்பிறந்தார் (குறள். 915) = குடிப்பிறந்தார்.
அன்பில், கிடங்கில், பொருந்தில் என்பன ஊர்ப் பெயர்கள். ஊர், நாடு என்பன ஒன்றையொன்றுணர்த்தலுமுண்டு.நாட்டாண் மைக்காரன் என்பவன் ஊராண்மைக் காரன். ஆள்மறை நாடு, உரத்தநாடு, பைங்கா நாடு என்பன ஊர்ப்பெயர்கள்.
தம் இல் மொழியாவது தம் வீட்டில் அல்லது நாட்டில் பேசும் மொழி. தம்மில் என்பது தமில் எனத் தொக்குத் தமிழ் எனத் திரிந்திருக்கலாம். வெய்யில் என்பது வெயில் எனத் தொக்கு வழங்குதலை நோக்குக. தமிழ் என்னும் வடிவு ஒருசொற் றன்மைப்பட்டு, தமிழ் என்னும் திரிபில் மொழிப்பெயர்த்தன்மை முற்றிவிட்டது.
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட்டும்பர்
மொழி பெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே (குறுந்தொகை, 11: 5-8)
மொழிபெயர் பன்மலை யிறப்பினும்
ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே. (ஐங்குறு நூறு. 321: 4,5)
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே (அகம். 31: 14,15)
பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர் (அகம். 211: 7-8)
என்னும் கடைக்கழகச் செய்யுட் பகுதிகள். தமிழவணிகரின் வடதிசை மொழிபெயர் தேயச் செலவைக் கூறுதல் காண்க.
தெலுங்கென்னும் வடுகு முதற்காலத்தில் தமிழினின்றும் மிக வேறுபட்டிருக்க முடியாது. வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம் என்றது வடுக நாட்டையே என்பது தெளிவுறு தேற்றம். தாம் என்பது தாமு என்றும், தம் என்பது தம என்றும், தம்பின் என்பது தம்முடு என்றும், இல் என்பது இல்லு என்றும், இன்றும் தெலுங்கில் வழங்குவதால், தம்மில் அல்லது தமில் என்னும் கூட்டுச் சொல் அக்கால வடுகிற்கு முற்றும் இயல்பானதே.
அலர்மேல்மங்கை என்னும் தொடர்ச்சொல் பின்னர் அலர்மேல் என்று குறுகி வழங்குவதுபோல், தமில் மொழி என்பது நாளடைவில் தமில் என்று குறுகி வழங்குதல் இயல்பே. லகரத்தினின்றே ளகரமும் ளகரத்தினின்றே ழகரமும் தோன்றியிருத்தலால், லகரம் நேரடியாகவோ ளகர வாயிலாகவோ ழகரமாய்த் திரிதலுண்டு.
எ.டு. மால் - மழை, ஏலா-ஏழா (பழங்குடி மக்கள் மனைவியை விளிக்கும் சொல்), கல்-கள்-காள்-காழ் (கருப்பு).
நாலிகை (மூங்கில் - நாளம் (உட்டுளை) - நாழி (உட்டுளைப் படி).
ழகரம் லகரத்தின் மிகப் பிந்தியதாதலின், தமில் என்னும் லகர வீற்று வடிவம் அப்பெயரின் தொன்மையையும் உணர்த்தும்.
இனி, தன்மானம் தமர் என்னும் சொற்களில், தமில் என்னும் லகர வீற்று வடிவம் அப்பெயரின் தொன்மையையும் உணர்த்தும்.
இனி, தன்மானம் தமர் என்னும் சொற்களில், தன் தம் என்பன படர்க்கை சுட்டாது சொந்த என்று பொருள்படுதல் போல், தமிழ் என்னும் சொல்லிலும் தம் என்பது சொந்த என்று பொருள் படுமாறு, தமிழரே அப்பெயரைத் தம் மொழிக்கு இட்டுக் கொண்டனர் எனக் கொள்ளலும் ஒன்று. சாயுங்காலம் என்பது சாயங்காலம் என்று திரிந்தபின். சாயம் என்னும் பெயரெச்சமே வடமொழியில் சாயுங்காலத்தைக் குறித்தல்போல்; தமில் என்னும் பெயரடை பெயர்த்தன்மைப் பட்டு மொழியைக் குறித்ததென்க. t.ஸha« - ï.ஸh«.
இதுகாறுங் கூறியவற்றால் தமிழ் என்னும் பெயருக்குக் கூறப்பட்ட பொருட் கரணியங்கள் எல்லாவற்றுள்ளும், தனியாக ழகரத்தையுடையது, தந்நாட்டு மொழி, என்னும் இரண்டே பொருத்தமானவை யென்றும், இவற்றினும், சிறந்தது தோன்றும் வரை இவையே கொள்ளத்தக்கன வென்றும் எண்ணிக் கொள்க.
வடுகு கொடுந்தமிழ் நிலை கடந்து மொழிநிலை யடைந்தபின், வடுகர் (தெலுங்கர்) தமிழுக்கிட்ட பெயர் அருவம் என்பது. அது அரவம் எனத் திரிந்தது. செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த கொடுந் தமிழ் நாடுகள் பன்னிரண்டெனத் தொல்காப்பியர் காலத்திலேயே கணக்கிடப்பட்டிருந்தன. பிற்காலத்தில் செந்தமிழ் நிலப்பரப்பு மிகச் சுருங்கி விட்டதனால், அதற்கேற்பக் கொடுந்தமிழ் நிலங் களும் பண்டைச் செந்தமிழ் நிலத்திற்குள்ளேயே அடங்கிவிட் டன. அந்நிலைமையையே,
தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய
சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்.
என்னுமிடைக்கால வெண்பா காட்டும்.
அருவா அதன் வடக்கு என்றது, அருவா நாட்டையும் அருவா வடதலை நாட்டையும். இவை தமிழகத்தின் வட கோடியில் தெலுங்க நாட்டை அடுத்திருந்தன. அதனால் நாடுபற்றித் தமிழரை அருவர் என அழைத்தனர் தெலுங்கர். எல்லைப்புறப் பகுதிப் பெயரை நாடு முழுவதற்கும் இடுவது அயலார் இயல்பு. சிந்து வெளி பற்றி நாவலந் தேயத்தைப் பாரசீகர் ஹிந்து என்றும் கிரேக்கர் இந்தோ என்றும் குறித்ததையும்; முகலாய அரசர் கன்னட நாட்டோடு தமிழ் நாட்டையுஞ் சேர்த்துக் கருநாடகம் என அழைத்ததையும், நோக்குக.
அருவர் அருவர் எனாவி றைஞ்சினர்
அபயம் அபயம் எனாந டுங்கியே
என்பது கலிங்கத்துப்பரணி.
ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவர் அருவர் என அஞ்சி - வெரு வந்து
தீத்தீத்தீ என்றயர்வர் சென்னி படைவீர
போர்க்கலிங்க மீதெழுந்த போது.
என்பது பழைய வெண்பா.
அருவர் மொழி அருவம்.
கருநடர் (கன்னடர்) தமிழர் என்னுஞ் சொல்லைத் திகுளர் எனத் திரித்து வழங்குவர். வடமொழி தென்னாடு வந்தபின், தமிழை அதனொடு ஒப்புநோக்கித் தென்மொழி என்றனர்.
திரவிடம், என்பது தமிழம் என்பதன் திரிபென்று முன்னரே விளக்கப் பெற்றது. திரவிடம் தென்மொழி என்னும் பெயர்கள், திரவிட மொழிகளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்த தமிழின் பண்டைத் தலைமையை உணர்த்தும்.
தமிழ்த் தோற்றம்
(தோரா. கி.மு. 50,000)
முதற்காலம், ஆ = பொருள், இடம். ஈ-ஊ
மூவகைச் சுட்டொலிகளினின்றுஞ் சொற்கள் தோன்றியதே தமிழ்த் தோற்றமாம். இது செயற்கை மொழி (Artificial Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) எனப்படும்.
ஏது ஏங்கு ஏண்டு ஏன்.
முந்தியல் மாந்தர்மொழி யெல்லாம் இசைப்பாட்டாகவே தோன்றின என்பது எசுப்பெர்சன் கருத்து. அது தவறாம். உணர்ச்சி விஞ்சிய காதல், இன்பம், வெற்றி மகிழ்ச்சி, துன்பம் முதலிய மன நிலைகளிலேயே முந்தியல் மாந்தர் - அவருள்ளும் இசை வுணர்ச்சியும், மொழியாற்றலும் மிக்கவரே - இசை மொழி வாயிலாய்த் தம் கருத்தை வெளியிட்டனர். இக் காலத்தும், இன்ப துன்ப வுணர்ச்சி விஞ்சியபோது, தத்தம் அறிவுநிலைக்கேற்ப இசைப்பாட்டாகவும் செய்யுளாகவும் தம் கருத்தைச் சிலர் வெளியிடுதல் காண்க. மேலும் பொருளும் ஒழுங்குமற்ற ஒருசில இசையொலித் தொகுதிகளினின்று வெவ்வேறு பொருளும் இலக்கண வொழுங்குமுள்ள பெயர் வினையிடைச் சொற்களும், மூவிடப் பெயர்களும் அவற்றின் திரிபான இருதிணை ஐம்பால் மூவிட ஈறுகளும், வேற்றுமை உருபுகளும் காலவிடை நிலைகளும், பிறவும், அமைந்தன வென்றல், உத்திக்குப் பொருந்தாத கூற்றாம்.
உரை, செய்யுள் (அல்லது பாட்டு) என்னும் இருவகை மொழி நடையுள், முதலில் தோன்றியது முன்னதே. அதுவும் தனித்தனிச் சொல்லாகவே தோன்றிற்று. ஆகவே, சொல்லே மொழியலகாம் (Unit of Speech). உள்ளத்தில் தோன்றும் கருத்து, அதைத் தெரிவிக்கும் சொற்றொடர்க்கு முற்றும் ஒத்ததன்று. அமைய வேறு பாட்டிற் கேற்ப, ஒரு சொல்லே பல சொற்றொடர்க்குரிய பல கருத்தைத் தெரிவிக்கலாம். ஒரு குழந்தை அல்லது நோயாளி தண்ணீர் என்றால், அது
1. எனக்குத் தண்ணீர் வேண்டும்;
2. அதோ பார்! தண்ணீர்;
3. வெள்ளம் வீட்டிற்குள் வந்துவிட்டது;
4. தண்ணீர் கொண்டுவா;
5. இந்தப்பால் தண்ணீர் கலந்தது;
6. இச்சொல் தண்ணீர்;
7. இதன் பொருள் தண்ணீர்;
8. இவ்விடுகதை விடை தண்ணீர்;
9. இப்படத்திலுள்ளது தண்ணீர்;
10. (Cold) Water என்னும் ஆங்கிலச்சொற்கு நேர் தென் சொல் தண்ணீர்.
என்று பல கருத்தைத் தெரிவிப்பதுடன், ‘நீ குடிப்பது என்ன? என்பது போன்ற வினாவிற்கு விடையாகவுமிருத்தல் காண்க. நன்றாய்ப் பேசத் தெரியாத குழந்தையும், பேச்சு வலிமையற்ற நோயாளியும், தாய்மொழியொன்றே தெரிந்த அயல் நாட்டா னும், பெரும்பாலும் தனிச்சொற்களாலேயே தம் கருத்தைத்
தெரிவித்தல் காண்க. இந்நிலையிலேயே மொழி வளர்ச்சியுறாத முந்தியல் மாந்தனும் இருந்தான்.
மொழி எளிய நிலையில் தோன்றிய படிப்படியாக வளர்ந்த மாந்தன் அமைப்பேயன்றி, இறைவனாற் படைக்கப் பெற்று இயற்கையாக அறியப்பட்டதன்று, மொழி இயற்கையானதாயின் எல்லா மக்களும் கல்லாமலே ஒரேமொழி பேசுதல் வேண்டும். அங்ஙனமில்லை. மக்கட் கூட்டங்களின் நாகரிக நிலைக்குத் தக்க வாறு, மொழிகள் வெவ்வேறு வகைப்பட்டும் நிலைப்பட்டும் அமைப்புக்கொண்டும் உள்ளன. சில அநாகரிக மாந்தர்மொழிகள் பறவை விலங்கொலிகளினும் சற்றே உயர்ந்தவையாகும். எத்துணை உயர்தனிச் செம்மொழியாயினும். தலைசிறந்த அறிவியல் வளர்ச்சி பெற்ற மக்களாயினும். ஒவ்வொரு சொல்லாய் மெல்ல மெல்லக் கற்றாலன்றி ஒருவரும் தம் தாய்மொழியைப் பேசவியலாது.
மொழித்துணையின்றியும் மாந்தர்க்குக் கருத்து நிகழும். ஊமையர் நிலை இதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாம். அஃறிணையுயிரி களின் வாழ்க்கையும் இதற்கு ஒருவகைச் சான்றாகும். மொழி யின்றிக் கருத்து நிகழாதென்பது. ஆராய்ச்சி யில்லார் கூற்றே. சிலர் மொழியைக் கருத்திற்குத் துணைக்கொள்வது, சிலர் மதுவை வினைக்குத் துணைக் கொள்வது போன்றதே. உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, சூழ்வு, தீர்மானம், இன்பம் (உவகை), துன்பம் (அழுகை) முதலிய எண் அல்லது தொண் (ஒன்பான்) சுவைநிலை, ஐயம் (சந்தேகம், தெளிவு ஆகியவையே மனத்தொழில்கள். இவற்றிற்கு மொழித்துணை தேவையில்லை. காட்சிப்பொருள் களெல்லாம் மனத்திலும் தோன்றுமாதலால், நினைப்பும் சூழ்வும் உருவலிப் பாகவே (Imagination) நிகழும்.
மொழி வளர்ச்சியடைந்த பிற்காலத்திலும், சொற்றொடர்களி லுள்ள எல்லா இலக்கணக்கூறுகட்கும் ஒத்த பகுதிகள் உள்ளக் கருத்திலில்லை. பாற்குடம் என்பதைப் பாலையுடைய குடம் என விரிப்பர் இலக்கணியர். அவ்விரிப்பிலுள்ள ஐகாரவேற்றுமை யுருபும் உடையவென்னும் குறிப்புப்பெயர் எச்சமும், உள்ளக் கருத்திலில்லை. அதிலுள்ளவையெல்லாம் பாலும் அதைக் கொண்ட குடமுமே. இங்ஙனமே, வினை முற்றிலுள்ள அறுவகை யுறுப்புக்களுள், முதனிலை யிடைநிலை இறதி நிலைக்குரிய கருத்துக்களே உள்ளத்திலுண்டு. அவையும் மொழியில் ஒருங்கே தோன்றவில்லை. முதலில் முதனிலையே இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் உரிய எல்லா வினைவடிவிற்கும் பொதுவா யிருந்தது; பின்பு, பாலீறும் காலவிடை நிலையும் எச்சமுற்று வேறுபாடும் முறையே தோன்றின. இவ்வுண்மையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழி வாயிலாகவே அறியமுடியும்; சமற்கிருதம் போன்ற திரிமொழியையும் செயற்கைமொழியையும் அடிப்படை யாய் வைத்தாராயின், ஐரோப்பியராயினும் அமெரிக்கராயினும் காரிருளிற் காட்டுவழிச் செல்வார்போல் ஒன்றுங் கண்டறியார்.
சுட்டடிச்சொல்லாக்கம்
முச்சுட்டுக்களுள், சேய்மைச் சுட்டினின்று சேய்மைக் கருத்துத் தவிர வேறொன்றும் பிறத்தற்கிடமில்லை; அண்மைச் சுட்டினின்று, அண்மை, பின்மை, இழிகை முதலிய ஒரு சில கருத்துக்களே பிறக்கின்றன; ஆயின், முன்மைச்சுட்டின் நின்றோ, தோன்றல் (முன் வருதல்) முன்மை, முற்செல்லல், நெருங்கல், பொருந்தல், வனைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துக் களும், இவற்றிற்கு இடைப்பட்டனவும் இவற்றிற் கிளைத்தனவு மான எத்துணையோ நுண் கருத்துக்களும் பிறக்கின்றன.
தோன்றல் என்பது, தாயினின்று குழவியும் மரத்தினின்று துளிரும் தோன்றுவது போன்ற இயற்கைத் தோன்றலும்; வீட்டினின்று மாந்தனும் வளையினின்று எலியும் தோன்றுவது போன்ற செயற்கைத்தோன்றலும், ஆக இருவகைப்படும். தோன்றுதல் முன்வருதலாதலின், தோன்றற்கருத்திலேயே தற்கிழமை பிறிதின் கிழமை ஆகிய இருவகை முன்மைக் கருத்தும் அடங்கியுள்ளன. முன்கிளையும் முன்கையும் போன்றவை தற்கிழமை முன்மை; முன்பொறையும் (முன் பாரமும்) முன்தூதனும் போன்றவை பிறிதின் கிழமை முன்மை.
தோன்றியபின், உடனேயோ காலஞ்சென்றோ, ஓர் இடம் நோக்கிச் செலவு அல்லது பல திசையும் படர்ச்சி ஏற்படுகின்றது. இயற்கையான செலவெல்லாம் முன்னோக்கியதேயாதலின், தோன்றலும் செலவும், முறையே, முன்வருகையும் முற்செலவுமே யாகும். இவ்விருபொருட்கும் அடிப்படையான முன்மைக்கருத்தை ஊகாரச்சுட்டே உணர்த்துகின்றது. ஊகாரத்தை அல்லது உகரத்தை ஒலிக்கும்போது, இதழ் குவிந்து முன்னிடத்தைச் சுட்டுவதை அல்லது நோக்குவதைக் காண்க. சேம்பரார் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில் (Chamber]s Etymological Dictionary) என்னும் சொற்கு மொழிப்பொருட்கரணியம் இதழ் முன்னோக்கிக் குவிந்தொலித்தல் என்று குறித்திருத்தலைக் கூர்ந்து நோக்குக.
முற்செல்லச்செல்ல, சேரவேண்டிய இடத்திற்கு நெருக்கம் ஏற்படுகின்றது. சேர்ந்தபின் பொருந்தல் நேர்கின்றது. இடை வழியிற் சுவரும் கல்லும் மலையும்போலத் தடை ஏற்படின், வளை அல்லது பக்கமாகத் திரும்ப நேர்கின்றது. தடுத்த பொருளையும் இடத்தையும் துளைக்க முடியுமாயின், எலி சுவரையும் மாந்தன் மலையையும் துளைத்தல் நேர்கின்றது. துளைத்து மறுபுறங் காணின் அதுவே துருவல். அதன்பின் தோன்றல் முதலிய பழைய நிலைமைகளே மீண்டும் நிகழும். மண்ணில் வேர் இறங்குதலும், மரத்தில் ஆணி பதிதலும் பொத்தகத்திற் புழுவரித்தலும் போன்ற செயல்களாயின், வளைதலின்றியே துளைத்தலும் துருவலும் நிகழும்.
இருதிணையுயிரிகளின் வாழ்க்கையையும் நோக்கினால், அவற்றின் செயல்களெல்லாம் இவ்வெண்வகைக் கருத்து வட்டத்திற் குள்ளேயே அமைகின்றன. இவற்றைக் கூர்ந்து கவனித்த பண்டைத் தமிழர், தம் நுண்மாண் நுழைபுலத்தினால், இதுபோதுள்ள தமிழ்ச் சொற்றொகுதியுள் ஏறத்தாழ முக்காற் பங்கை ஊகாரச் சுட்டடியாகவே தோற்றுவித்திருக் கின்றனர்.
உகரச்சுட்டு
ஊ,உ
உங்கு, (பேசுகிறவனுக்கு) முன்னிடத்தில்
உதோள், உதோளி = (பேசுகிறவனுக்கு) முன்னிடத்தில்
உவ
உவ்விடம் = பேசுகிறவனுக்கு முன்னிடம்
உந்த = பேசுகிறவனுக்கு முன்னிடத்திலுள்ள
உவன் = பேசுகிறவனுக்கு முன்நிற்பவன்
உது = பேசுகிறவனுக்கு முன்நிற்பது
உகரச்சுட்டுச் சொற்களெல்லாம் படர்க்கைபோற் பயன் படுந்தப்படினும் பேசுவானுக்கு முன்னிடத்தையும் அதிலுள்ள பொருள்களையுமே சுட்டும். ஆதலால் உகரச்சுட்டு என்றும் முன்மைச் சுட்டேயன்றி, சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப் பட்ட இடைமைச்சுட்டன்று, இது நீண்ட காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வழக்கற்றுப் போயிற்று. ஆயின், யாழ்ப்பாணத்தில் ஓரளவு வழக்கிலுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
உகரச்சுட்டடிச் சொற்கள்
உகரச்சுட்டு வேர் தனித்தும், க, ச, த, ந, ப, ம என்னும் அறுமொழி முதலெழுத்துக்களோடு கூடியும் வரும். ஞவய மெய்கள் உகரத் தோடு கூடி மொழிமுதல் வரும் சொற்களிற் பெரும்பாலான, உகரச்சுட்டடிச் சொற்களின் திரிபாகவேயிருக்கும். உயிருகரம் முதலாக வருவது முதலடி; உயிர் மெய்யுகரம் முதலாக வருவது வழியடி. சொல்லாக்கத்தில், பொருள் மயக்கத்தை நீக்குதற்கு, உயிரும் மெய்யும் பல்வேறெழுத்தாய்த் திரிகின்றன. இங்கு, உயிர்த்திரிபில் உ-அ, உ-இ, உ-ஒ, என்பவற்றையும், மெய்த்திரிபில் ல்-ர், ல்-ள், ள்-ழ், ழ-க என்பவற்றையும், உள்ளத்தில் இருத்துதல் வேண்டும்.
1. தோன்றுதல் (முன்வருதல்)
உ-உல்-உர்-உரு
உரு : உருத்தல் = தோன்றுதல், உரு - (அரு) - அரும்பு.
அரும்புதல் = தோன்றுதல். அருப்பம் = தோன்றும் மீசை.
உரு = கரு. உரு = தோற்றம். வடிவம், நிறம். உரு - உருவு - உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவம்.
குரு : குருத்தல் = தோன்றுதல், குரு - குருத்து = தோன்றும் இளவோலை.
குருத்து - குருந்து = வெண்குருத்து, குழந்தை. குருந்து - கருந்து = மரக்கன்று (கோடை). குரு - குரும்பை = தென்னை பனையின் இளங்காய். குரு - குருகு = குருத்து, குட்டி.
குரு - கரு = 1. சூல். கருச்சிதைத்தோர்க்கும் (புறம். 34).
2. குழந்தை. சேரர்தங்கருவை (பாரத. நிரை. 116).
3. குட்டி, காசறைக்கருவும் (சிலப். 25:52).
4. பிறப்பு. கருவைத் துடைப்ப (புரபு. கொக்கி. 15).
5. முட்டைக்கரு. புறவுக்கருவன்ன (புறம். 34).
6. நிலத்தில் தோன்றும் பொருள். கருவென மொழிப (தொல். 964).
துரு : துரு - துருத்து என்பது இன்று முன்தள்ளுதலைக் குறிக்கும்.
நுரு : நுரு = பிஞ்சு. நுரு-நொரு = இளங்கதிர், பிஞ்சு.
புரு : புரு = குழந்தை. புரு - (பிரு) - பிருகு = முற்றாப் பனங்கிழங்கு. பிருகு-பிருக்கு.
சிறு பிஞ்சுகளைப் பிஞ்சும் பிருக்கும் என்பது உலக வழக்கு.
முரு : முரு-முருகு = இளமை, இளமையான முருகன். முருகு - முருகன். முரு-முருந்து = குருத்து, தளிர்.
முரு-முறி = தளிர். முறிதல் = துளிர்த்தல். முறிந்த கோலமுகிழ் (சீவக. 2358).
முரு - மரு - மருவு. மருவுதல் = தோன்றுதல்.
உரு : என்னும் அடிக்கு முந்தியது உல் என்பதாகும். லகரம் ளகரமாகத் திரிவது போன்றே ளகரம் ழகரமாகத் திரியும்.
உல் - உல்லரி = தளிர். உலவை = தழை. ஈயுலவையினோப்பி (இரகு, தேனு, 35). இலிர்த்தல் = தளிர்த்தல்.
குல் - குள் - குளகு = தளிர், தழை. குள் - குட்டி. குள் - குழ - குழை = தளிர். குழ - கொழுந்து. குழ - குழவு - குழகு - குழகன். குழ - குழந்தை. குழவு - குழவி.
சுல் - சூல் = கரு, முட்டை. சிலிர்த்தல் = தளிர்த்தல் சுல் - சில் - சின் - சினை. சினைத்தல் = தோன்றுதல், அரும்புதல், கருக்கொள்ளுதல், தழைத்தல். சினை = மொட்டு, மரக்கிளை, சூல், முட்டை.
கள்ளுக்காய் = இளங்காய்.
துல் - துள் - துளிர் - தளிர். துள்-தள்-தழு-தழுக்கு. தழுக்குதல் = தழைத்தல். தழு-தழை=குழை.
நுல்-(நுள்)-நுழு-நுழுவல் = இளம்பாக்கு. நுழு-நுழாய் = இளம்பாக்கு, நுல்-(நுன்)-நுனை-நனை=அரும்பு; நனைதல் = அரும்புதல், தோன்றுதல்.
புல் - (பல்) பல்லவம் = (வ.) = தளிர், புல்-(புள்)-பிள்-பிள்ளை, பிள்=பிள்ளைமையழகு, பிள்-பீள்=இனங்கதிர். இளமை, கரு புள்-பூள்-பூட்டை = இளங்கதிர். பூட்டை-பீட்டை.
முல்-முள்-முளை. முளைத்தல் = தோன்றுதல். முளையன் = சிறுவன் - முள் - முட்டு - மொட்டு. முள்-மள்-மள்ளன் = இளைஞன். மள்-மழ-மழவு-மழவன்=இளைஞன். மழவும்-குழவும் இளமைப் பொருள (தொல். உரி. 14). மழ-மட-மடம் = இளமை. மழ-மழலை-மதலை=இளமை. பிள்ளை.
ழகரம் சிலவிடத்துக் ககரமாகத் திரியும்.
எ.டு. தொழுதி - தொகுதி, முழை - முகை.
இவ்வகையில் உழு என்னும் அடி உகு என்றாகும்.
உகு-(உகை) - அகை. அகைதல் = தளிர்த்தல். கொய் குழை அகைகாஞ்சி (கலித். 74).
குகு -
சுகு -
துகு -
நுகு - நுகும்பு = பனங்குருத்து. நுகு - நுங்கு = பனஞ்சுளை. இளம்பனங்கொட்டை.
புகு - பொகில் = அரும்பு. பொகில் - போகில் = அரும்பு. போகு - போக்கு = மரக்கன்று. (பிங்.).
புகு - போ - போத்து = இளங்கிளை. போ போந்து (பிங்.) = இளம்பனை. போந்து - போந்தை = (திவா.) இளம்பனை.
புகு - பூ-பூத்தல் = தோன்றுதல்.
முகு - முகிழ் - அரும்பு. முகிழ்தல் = அரும்புதல். முகிழ்த்தல் = தோன்றுதல், அரும்புதல், ஈனுதல். முகு-முகை = அரும்பு. முகு - மொக்கு - மொக்குள் = அரும்பு.
மூவகையுலகும் முகிழ்த்தன முறையே.
முகிழ்-முகிழம் = பேரரும்பு. முகிழ்-முகிழி. முகிழித்தல் = அரும்புபோற் குவிதல்.
முகிழம் என்னும் சொல், அரும்பு என்னும் பொருளில், mukula mukura, makula, makura என்று வடமொழியில் திரியும்.
குமரிக்கண்ட முழுக்கினாலும், முதலிரு கழக விலக்கிய முழுதும் கடைக்கழக விலக்கியப் பெரும்பகுதியும் அழிந்து போனமை யாலும் நீண்டகாலமாகத் தமிழர் தமிழைப் பேணாமையாலும், ஆயிரக்கணக்கான தென்சொற்கள் இறந்துபட்டன. அதனாலேயே, பல முதலடிச்சொற்கட்கும் வழியடிச்சொற்கட்கும் எடுத்துக்காட்ட இயலவில்லை யென்றறிக. இறந்துபட்ட சொற்களெல்லாம் பிறைக் கோட்டுள் இடப்பட்டுள. ஒரு பொறியறிஞன் ஒரு பொறியில் இல்லாத உறுப்பைக் கண்டுகொள்வதுபோன்றே, ஒரு மொழி அறிஞனும் அம்மொழியில் இறந்துபட்ட சொற்களிற் சிலவற்றை அவற்றொடு தொடர்புள்ள பிறசொற்களின் துணை கொண்டு அறியவியலும் என்க.
2. முன்மை
ஊங்கு = முன்பு.
உம்மை = முற்பிறப்பு. உம்மைவினை .. ஒழியாது (மணி. 26: 32).
முனை = கூரிய முன்பக்கம் அல்லது மேற்பக்கம். நுனிமுனை. நுனி - நுதி = முன். நடந்தாள்நுதி (சீவக. 1933 உரை). நுதி - துதி = முன், நுனி. துதிக்கை = யானையின் முன்னுள்ள அல்லது கூரிய நுனியுள்ள கை.
முன்-முனி. முன்-முனை=முன்பக்கம். முகு-முகம் = முன் பக்கம். முகம் - முகர் - முகரை. முகம் - முகன் - முகனை - மோனை.
முகம் என்னும் சொல் முன்மைக்கருத்தையும் தோன்றற் கருத்தையும் இணைக்காட்டுதல் காண்க. இச்சொல் வடமொழியில் mukha என்று திரியும்.
(முகஞ்செய்தல் 1. முன்னாதல். தோற்றினான் முகஞ்செய் கோலம் (சீவக. 675). 2. தோன்றுதல், முகஞ்செய்காரிகை (பெருங். உஞ்சைக். 35: 49).
3. முன்செல்லுதல் (செல்லுதல்)
உகைதல் = செல்லுதல், உகைத்தல் = செலுத்துதல்.
உகை - அகை. அகைத்தல் = செலுத்துதல். உதைத்தல் = செலுத்துதல்.
இச்சிலை யுதைத்த கோற்கிலக்கம் (கம்பரா, கார்முக. 9)
உந்துதல் = செலுத்துதல்.
உய்தல் = செல்லுதல், தப்பிச் செல்லுதல் உய்த்தல் = செலுத்துதல்.
உய் - ஒய். ஒய்தல் = செலுத்துதல்,
உய் - இய் - இயல். இயலுதல் = செல்லுதல். நடத்தல்.
இய் - இய. இயத்தல் = செல்லுதல், கடத்தல்.
இய - இயவு = செலவு.
இய - இயங்கு. இயங்குதல் = அசைதல், செல்லுதல்.
இய - ஏ - ஏகு. ஒ.நோ: வியர் - வேர்.
(சுல்) - சல் - செல்.
ச.செ. ஒ.நோ: சத்தான் - செத்தான்.
குமரிக்கண்டத் தமிழில், சல் என்னும் அடியும் செல்லுதல் வினையைக் குறித்திருத்தல் வேண்டும். இன்று அது அப்பொருளில், வடதிரவிட வழிப்பட்ட இந்தியில் வழங்குகின்றது.
துரத்தல் = செலுத்துதல், துரத்துதல் = விரைவாகச் செலுத்துதல்.
முன்மைக்கும் முற்செலவிற்கும் இடைப்பட்ட கருத்து முன் தள்ளுதல்.
முன் தள்ளுதல்.
உத்துதல் = முன் தள்ளுதல், கழித்தல்.
உந்துதல் = முன் தள்ளுதல். உந்தல் - உஞ்சல் - ஊஞ்சல் - ஊசல்.
உன்னுதல் = முன் தள்ளுதல்.
(துள்) - தள். ஒ.நோ: துளிர் - தளிர்.
துந்து - துந்தி = முன் தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி.
துருத்துதல் = தொந்தி வயிறு போல் முன் தள்ளுதல்.
துருத்தி = காற்றை முன் தள்ளும் கொல்லுலைத் தோற் கருவி அல்லது இசைக் கருவி. துருத்தி - துத்தி - தித்தி = இசைக் கருவி.
தூண்டுதல் = விளக்குத் திரியை முன் தள்ளுதல். தூண்டு = தீண்டு.
நுந்துதல் = தூண்டுதல். நுந்தா விளக்கு = தூண்டா விளக்கு. நுந்து - நொந்து.
நூக்குதல் = முன் தள்ளுதல், தள்ளுதல்.
உள்ளத்தை முன் தள்ளுதல் (ஊக்குதல்)
உய் - உயல் - உயற்று - உஞற்று.
உஞற்றுதல் = முயற்சிக்குத் தூண்டுதல், வருந்தி நுழைத்தல்.
உள்ளுதல் = உள்ளத்தை ஊக்குதல். உள்ளம் = ஊக்கம்.
ஊக்குதல் = உள்ளத்தை முற்செலுத்துதல். ஊங்கு - ஊக்கு.
தூண்டுதல் = ஊக்குதல், ஏவுதல்.
நூக்குதல் = ஊக்குதல், ஏவுதல்.
நூக்குதல் = தூண்டுதல்.
முயலுதல் = தன் உள்ளத்தை ஊக்குதல்.
Push, shoot, usher, urge, duct, duke, thrust முதலிய ஆங்கிலச் சொற்களின் வேர்ப் பொருளையும் உகர வடிவையும், இவற்றுடன் ஒப்பு நோக்குக.
4. நெருங்குதல், செறிதல், கூடுதல்.
பல பொருள் நெருங்குதல் செறிதலாம்.
(உள்) - அள். அள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள் - அண். அண்ணுதல் = நெருங்குதல்.
(குள்) - (குட்டு) - கிட்டு. கிட்டுதல் = நெருங்குதல்.
(சுள்) (செள்) - செறு. செறுத்தல் = செறிதல்.
செறு - செறி.
துல் - துன். துன்னுதல் = நெருங்குதல். துன் - துன்று. துன்றுதல் = நெருங்குதல்.
(நுள்) - நள் - நண். நள்ளுதல் = நெருங்குதல். கூடுதல். நண்ணுதல் = நெருங்குதல்.
(நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு.
முல் - முள் - முரு - மரு - மருவு. மருவுதல் = கிட்டுதல்.
முல் - மல் - மலி - மலிதல் = நெருங்குதல். நிறைதல். மிகுதல்.
(முள்) - (மள்) - மண்டு. மண்டுதல் = நெருங்குதல், கூடுதல்.
மண்டு - மண்டகம் = மக்கள் கூடும் கல் அல்லது காரைக் கூடம். மண்டகம் - மண்டபம் - (வ.) மண்டப.
முதற்காலத்தில் கல், பிற்காலத்தில் செங்கல் கூரைக் கட்டிடம் கூடம்.
ஒ-நோ: வாணிகம் - வாணிபம்.
5. பொருந்துதல், கூடுதல், ஒத்தல்.
உல் - உ
உத்தல் = பொருந்துதல். உத்தி = விளையாட்டில் இருவர் சேர்ந்து வரும் சேர்க்கை, அறிவிற்குப்பொருத்தமான இலக்கண நெறி முறை.
உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல். ஒல் - ஒன்.
ஒன்னுதல் = பொருந்துதல். ஒன் - ஒன்று.
ஒன்றுதல் = பொருந்துதல் ஒல் - (ஒள்) - ஒண்.
ஒண்ணுதல் = பொருந்துதல். ஒள் - ஒட்டு.
ஒல் - ஒ, ஒத்தல் = பொருந்துதல்.
குல் - குலவு, குலவுதல் = கூடுதல்.
குல் - (குள்) - கள் கள்ளுதல் = ஒத்தல், கூடுதல்.
கள்ள = போல. கள் - களம் = கூட்டம் கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம், அவைக்களம் என்பவற்றை நோக்குக.
(குள்) - குழு - குழுவு. குழு - குழுமல் = கூட்டம்.
குழு - குழும்பு = திரள். குழு - குழாம் = கும்பல்.
(குள்) - (கூள்) - கூண்டு - கூடு - கூட்டம்.
(சுள்) - செள் - செரு - சேர்.
துல் - துல்லியம் = ஒப்பு. துல் - துலை = ஒப்பு.
துல் - துன். துன்னுதல் = பொருந்துதல்.
துல் - துன்று. துன்றுதல் = பொருந்துதல்.
துள் - தொள் - தொழு - தொழுதி. தொகு - தொகுதி - தொகுதி, தொகை. தொகுப்பு - தோய்வு.
தொழு - தொறு.
தொழு - தொடு - தோடு - தோட்டம்.
தொழு - தோழம் - தோழன்.
(நுள்) - நள் - நண் - நண்பு. நள் - நட்பு.
புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல், தழுவுதல், கூடுதல்.
புல் - பொல் - பொரு - பொருந்து - பொத்து - பொட்டு.
பொல் - போல். போலுதல் = ஒத்தல்.
பொரு - பொருவு - ஒப்பு.
புல் - புள் - (புண்) - புணர். (புண்) - பூண் - பூட்டு.
புல் - (புர்) - புரை. புரைதல் = ஒத்தல்.
முல் - முள் - முள்கு. முள்குதல் = தழுவுதல்.
முள் - முழு - முழுவு. முழுவுதல் = முத்துதல், தழுவுதல்.
முல் - மல் - மன். மன்னுதல் = பொருந்துதல்.
மன் - மன்று - மன்றம். மன் - மனை. மன்று - மந்து - மந்தை.
6. வளைதல்
உல் - உலா - உலவு - உலாவு. உலவுதல் = சுற்றிவருதல்.
குல் - குலா - குலவு. குலவுதல் = வளைதல் - குலவு - குலாவு.
குல் - குள் - கொள் - கோள் - கோண் - கோடு - கோட்டம்.
சுல் - சுலா - சுலவு. சுலவுதல் = வளைதல். சுலவு - சுலாவு.
துல் - (தில்) - திர் - திரும். திருமுதல் = வளைதல், சாய்தல் - மீளுதல்.
திரும் - திரும்பு.
(நுள்) - நெள் - நெளி - நெறி.
நெளிதல் = உடல் வளைதல், நெறிதல் = மயிர் சுருள்தல்.
புல் - புரு - புரி. புரு - புருவம் = கண்மேல்மயிர் வளைவு.
புரிதல் = வளைதல். வலம்புரி இடம்புரி என்னும் சங்குகளை நோக்குக.
(முல்) - முரு - முருகு - வளைந்த காதணி. முரு - முறு - முற்று.
முற்றுதல் = வளைதல், சூழ்தல், முற்றுகையிடுதல்.
முரு -முரி. முரிதல் = வளைதல்.
உல் (உர்) - உருள், to roll. உருள் என்னும் அடியினின்று குருள் (to curl), சுருள் (to coil) முதலிய சொற்கள் பிறந்திருத்தலையும், அவ்வடியை whirl, swirl, twirl, என்ற ஆங்கிலச் சொற்கள் ஒருவாறொத்திருத்தலையும் நோக்குக. புருள் என்பதினின்று புருடை (பிருடை, Turning Key of a lute string) என்னும் சொல்லும், திரிந்துள்ளன. உழல் (to revolve) என்னும் அடியினின்று குழல் (to curl), சுழல் (to rotate) என்னும் சொற்கள் தோன்றியிருத்தலும் நோக்கத்தக்கதாகும்.
7. துளைத்தல்
உள்-உளு = துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல்.
உளு - உழு. உழுதல் = நிலத்தைக் கீறுதல்.
குள் - குழி - குழை - குடை. குடைதல் = துளைத்தல்.
குழி - கொழு - கொழுது - கோது. கோதுதல் = குடைதல்.
கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி.
கொழு - கோழி = கிளைக்கும் பறவை.
குள் - குளி. குளித்தல் = உட்புகுதல், முழுகுதல், நீராடல்.
சுள் - சுர - சுரை = உட்டுளை. சுர - சுரங்கம்.
சுரைக்காய் = காய்ந்தபின் உட்டுளையமையுங் காய்.
துல் - துன் = எலிவளை. துன்னல் = உழுதல்.
துல் - துள் - துளை. துள் - தொள் - தொள்ளை - தொளை.
தொள் - தோள் - தோண்டு. தொள் - தொடு. தொடுதல் = தோண்டுதல்.
நுள் - நொள் - நொள்ளை = குழிவு, கட்குழிவு.
நொள் - நொள்ளல் - ஞெள்ளல் = பள்ளம்.
நுள் - நுழை - நூழை = துளை, வாயில்.
புல் = உட்டுளை. உட்டுளையுள்ள பயிர்வகை அல்லது மூங்கில். புல்லாங் குழல் = மூங்கிற்குழல்.
புறக்கா ழனவே புல்லென மொழிப (தொல். 1585)
புல் - புள் - புழு = துளைக்கும் சிற்றுயிர். புழுத்தல் = புழுத்துளைத்தல்.
புள் - பொள் - பொளி - பொறி.
பொள்ளல் = துளை, துளைத்தல். பொளித்தல் = துளைத்தல், வெட்டுதல், கிழித்தல்.
பொறித்தல் = குழித்தெழுதுதல்.
முள் - (முழு) = முழுகு - மூழ்கு. முழுகுதல் = உட்புகுதல். நீரிற்குளித்தல்.
(முழு) - முழை = குகை. முழைத்தல் = துளைத்தல்.
முழை - மூழை = அகப்பை.
முழுகு - முழுங்கு - முங்கு. முழுங்கு - விழுங்கு.
விழுங்குதல் = வாய்க்குள் முழுங்குதல்.
முள் - மொள் - மொண்டை மொந்தை.
மொண்டை - மண்டை. மொள்ளுதல் = நீர்ப் பொருளுக்குள் முழுக்கி யெடுத்தல்.
8. துருவுதல்
உள் - உரு - உருவு. உருவுதல் = கைக்குள் ஒன்று துருவுமாறு இழுத்தல்.
குள் - (குரு) கோர் - கோ. கோர்வை - கோவை.
கோர்த்தல் = நூல் ஊசிக் காதிலும் பாசித் துளையிலும் துருவச் செய்தல்.
செரு - செருகு சுள்-சுரு சுருங்கை = நிலத்தின்கீழ்த் துருவிச் செல்லும் வழி.
சுரு - சுருவு - சுருவம் = உணவுக் கலத்துள் துருவும் அகப்பை.
துள் - துரு - துருவு, துரு - தூர் - தூர்தல் = ஊடு செல்லுதல், வாசலுட் புகுதல் வீட்டிற்குள் புகுதலைத் தூர்தல் என்பது வடார்க்காட்டு வழக்கு.
தூர் - தூரி = நீர்துருவிச் செல்லும் மீன்பொறி.
தூர் - தோர் - தோரணம் = தெருவூடு கட்டும் அழகுத் தொங்கல்.
தோர் - தோரணை = கோர்வை.
புள் - புழு - புகு - புகுது - புதுரு - பூர். பூர்தல் = உட்புகுதல். பூர் - பூரான் = மண்ணிற்குள் புகும் நச்சுப்பூச்சி. பூர் - பூறு. பூறுதல் = உருவத் துளைத்தல். மூக்குப்பூறி - மூக்குப்பீறி. பூறு - பீறு.
முல் - மூலம் - வாயில் (means).
தமிழ் தனித்தியங்குமா ?
குமரிக் கண்ட முழுக்கினாலும் பண்டைத் தமிழிலக்கிய அழிவினாலும் எத்துணையோ உலக வழக்குச் சொற்களும் செய்யுள் வழக்குச் சொற்களும் இறந்துபட்டிருந்தும், இன்னும் தமிழைத் தனி மொழியாய் வளர்க்கக் கூடிய பல்லாயிரச் சொற்களும் பற்பல சொற்கருவிகளும் தமிழில் இருந்தே வருகின்றன. வழக்கற்ற தமிழ்ச் சொற்களை வழக்காற்றுப் படுத்து வதும் இக் காலத்திற்கு வேண்டிய புதுச் சொற்களைப் புனைந்து கொள்வதுமாகிய இரு வழிகளைக் கையாளின், தமிழ் தனித்தியங்க எள்ளளவுந் தடையில்லை.
1. வழக்கற்ற தென் சொற்கள்
ஆயிரக் கணக்கான வட சொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப் பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென் சொற்கள் சிறிதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப்பட் டுள்ளன.
எ.கா.
வடசொல் தென்சொல்
அன்னம் எகின், ஓதிமம்
ஆன்மா ஆதன், உறவி, புலம்பன்
ஆனந்தம், குதூகலம்,
சந்தோசம் உலகை, களிப்பு, மகிழ்ச்சி
சகுனம் புள்
சத்தியம், நிசம், வாதவம் உண்மை, வாய்மை, மெய்(ம்மை)
சீரணம் செரிமானம்
சுத்தம் துப்புரவு
தந்திரம் வலக்காரம்
திருப்தி பொந்திகை
பிதிரார்ச்சிதம் முதுசொம்
மேகம் முகில், கார், கொண்டல்
லாபம் ஊதியம்
நட்டம் இழப்பு
மைத்துனன் அளியன்
வருசம் ஆண்டு
திரீ, புருஷர் ஆடவர், பெண்டிர்
இங்குக் குறிக்கப்பட்ட வட சொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டப்பட்டுள்ளன.
நகைச்சுவையை ஹாய ரசம் என்பதும், அவையைச் சத என்பதும். பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த் தனித் தமிழ்ப் பெயர்களை, முறையே, கும்பகோணம். கபிதலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வடசொற்களாய் ஏற்கெனவே, மாற்றியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழி யாளரின் வரையிறந்த வடமொழி வெறியை யன்றி வேறெதைக் காட்டும்?
இன்று தமிழில் வழங்கும் வட சொற்கள் தமிழிற்கு வேண்டியவு மல்ல; தமிழர் விரும்பியவு மல்ல. உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப் புழுக்களையும் இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே. வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும். இதனைத் தடுப்பவர் புறப்பகைவரும் உட்பகைவருமாயேயிருத்தல் வேண்டும்.
வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும்.
2. புதுச் சொற்புனைவு
பல பொருள்கள் பல் வகையில் வேறுபட்டிருப்பினும், அவற்றிற் கெல்லாம் பொதுவாக ஒரு தன்மை காணக்கிடக்கின்றது. உயிரிகள் ஒன்று இன்னொன்றை அல்லது பலவற்றைப் பிறப்பிப்பது போன்றே கருத்துகளும் ஒன்று இன்னொன்றை அல்லது பலவற்றைத் தோற்றுவிக்கின்றன. இவ் வீருண்மைகளையும் கண்ட குமரிக் கண்டத் தமிழர். ஓரடியினின்றே ஈற்று வேறு பாட்டாற் பல்வேறு சொற்களைத் திரித்து. அவற்றாற் பற்பல பொருள்களையுங் குறிப்பித்திருக் கின்றனர்.
எ.கா.
வெள்
வெள்ளென வெள்கு வெளி வெளு வெளேல்
வெள்ளை வெட்கு வெளிப்பு வெளுப்பு வெளேர்
வெள்ளம் வெளிவு வெளுவை
வெள்ளி வெளிச்சம்
வெள்ளில் வெளிச்சி
வெள்ளந்தி வெளிச்சை
வெள்ளென்காட்டி வெளில்
(வெள்ளெனக்காட்டி) வெளிறு
வெள் - விள் - விள (வெள்ளைத் தோட்டுக் கனி) விளம், விளா, விளவு, விளாத்தி விளர்.
விளர்ப்பு (வெளுப்பு)
விள் - வில் - வில்வு. வில்வம். வில்லம் (கூவிளம்)
விள் - விள - விளங்கு, விளக்கு, விளக்கம்.
வெள் - வெண் - வெண்பு (வெண்ணிலம் plain)
வெள் - வெறு. வெறு - வெறி - வெறிப்பு (முகில் நீங்கி வானம் வெறியாதல்)
வெற்று
(வெள்ளிலை - வெற்றிலை) வெறிச்சு
(வெண்மை = வெறுமை)
வெறு - வறு வறு - வறிது
வறுமை
வெள் - வெட்டு (மின்) வெட்டு - வெட்டி (கூலியில்லா வெறுமை வேலை)
வெட்டம் (வெளிச்சம்)
வெட்ட (தெளிவான)
வெட்டை (வெளி, வெறுமை, பயனின்மை).
இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்களெல்லாம், வெண்ணிறத்தைக் குறிக்கும் வெண் என்னும் ஒரே யடியினின்று பிறந்து. வெண்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு காட்சிப் பொருள்களையுங் கருத்துப் பொருள்களையுங் குறிப்பனவாகும். இவ் வடியினின்று பிறந்த வேறு சில சொற்களுமுள. அவை விரிவஞ்சி இங்கு விடப்பட்டுள.
சில பொருள்கட்குப் பிறவற்றிற் கில்லாத சிறப்பியல்புண்டு. அதனையும் நம் முன்னோர் கண்டு. அதற்கேற்பப் பெயர்களை அமைத்திருக்கின்றனர்.
எ.கா. வாழை (அடி வழவழவென்றிருப்பது).
இங்ஙனமே பிற மொழியாளரும் தத்தம் மொழியிற் சொற்களை ஆக்கியிருக்கின்றனர். ஆகவே, ஆங்கிலக் குறியீடுகளின் வேர்ப் பொருளையோ அவற்றாற் குறிக்கப்படும் பொருள்களின் சிறப்பியல்பையோ அறிந்துகொள்ளின். அறிவியலும் கம்மியமும் பற்றிய எல்லாச் சொற்களையும் எளிதாய்த் தமிழில் அமைத்துக் கொள்ளலாம். சொற்றிரிபிற் கேற்ற ஈறுகள் தமிழில் ஏராளமாக வுள்ளன. தொழிற் பெயரீறுகள் மட்டும் தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், பாடு, காடு, அரவு, ஆனை, மை, து, இல், ஆல், அனை, அனம், இனம், அணம், இணம், அடம், இடம், அரம், இதம், முதலியனவாக முப்பதிற்கும் மேலுள்ளன. இவற்றொடு. வினை முதலீறுகள் செயப்படு பொருளீறுகள் முதலிய ஈற்றுவகைகளையும், குறுமைப் பொருள். பெருமைப் பொருள் முதலியனபற்றிய முன் பின் ஓட்டு வகைகளையும், சேர்ப்பின் எத்துணையோ பலவாகும். இலத்தீன் கிரேக்கம் முதலிய பல மொழிகளினின்று ஆங்கிலம் கடன் கொண்டுள்ள ஈறுகளையும் ஒட்டுகளையும் ஒத்த சொல்லுறுப்பு வளம், தமிழ் ஒன்றிலேயே இயல்பாக அமைந்து கிடக்கின்றது.
electricity என்னும் ஆங்கிலச் சொல், அம்பர் என்னும் நறுமணப் பொருளைக் குறிக்கும் electron என்ற கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது. அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை எனவும் பெறும். 12 ஆம் நூற்றாண்டினதான அடியார்க்கு நல்லாருரையில் அம்பர் என்னுஞ் சொல் வந்திருத்தலால். அதையும் தென் சொல்லெனக் கொள்ள இடமுண்டு. மின்னாற்றலைக் குறித்தற்கு அம்பர் என்னுஞ் சொல்லினின்று ஆம்பரியம் என்றொரு சொல்லைத் திரித்துள்ளனர் புதுச் சேரிவாணர். சென்னை நாட்டுத் தமிழில் மின்சாரம் என்னுஞ் சொல் ஏற்கெனவே புனையப் பெற்றுள்ளது. அதை மின்(னம்) என்றும் மாற்றிக்கொள்ளலாம்.
Radio என்னும் ஆங்கிலச் சொல். Radius என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிந்தது. இலத்தீன் பொருள். தண்டு, ஆரை, கதிர் என்பன. கதிர் என்னும் சொல்லினின்று கதிரம் அல்லது கதிரியம் என்றொரு சொல்லை நாம் திரித்துக்கொள்ளலாம்.
சில பொருள்களின் அல்லது கலை முறைகளின் பெயர், அவற்றைக் கண்டுபிடித்த ஆட்பெயரால் அல்லது இடப்பெயரால் அமைந் துள்ளன. அவற்றை அப்படியே வரிபெயர்த்து வைத்துக் கொள்ளலாம்.
எ.கா.
galvanism என்னும் மின்னாக்க முறை கால்வனி (Galvani) என்பவராற் கண்டுபிடிக்கப்பட்டது.
galvanization = கால்வனித்தல். galvanism கால்வனியம். bauxite என்னும் மண் வகை பிரான்சு நாட்டில் பாக்கசு (Baux) என்னும் இடத்திற் கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பாக்கசி என்று வரிபெயர்த்துக் கொள்ளலாம்.
chemistry என்னும் ஆங்கிலச் சொல். alckemy என்பதனின்று திரிந்தது. இது al-kimia என்னும் அரபிச் சொல்லின் திரிபு. al = the (அந்த என்று பொருள்படும் முன்னொட்டு); kimia என்பது khemia என்பதன் திரிபு. இது எகிப்து (Egypt) நாட்டுப் பெயரின் கிரேக்க வடிவம். ஆகவே chemistry என்பதைக் கெமியம் என்று சொல்லலாம்.
chemist = கெமியன், கெமியர்
chemical = கெமிய.
சில பொருட் பெயர்கள் அளவுபற்றி அமைந்துள்ளன. duoderum என்பது பன்னிரண்டு என்னும் இலத்தீன் எண்ணுப் பெயர். அது ஆங்கிலத்தில் பன்னிரு விரல் (அங்குலம்) அளவுள்ள சிறு குடற் பகுதியைக் குறிக்கின்றது. இதைப் பன்னீரம் என்று மொழி பெயர்க்கலாம்.
Furlong என்னும் ஆங்கிலச் சொல் படைச்சால் நீளம் என்னும் பொருளது. fur = furrow (படைச்சால்). படைச்சால் என்பது அணைப்பு என்றும் சொல்லப்படும். ஆகவே, furlong என்பதைப் படைச்சால் என்றோ, அணைப்பு என்றோ, சானீளம் என்றோ மொழிபெயர்க்கலாம்.
சில பெயர்கள் உவமையாகு பெயராயுள்ளன. bacterium என்னும் ஆங்கிலச் சொல் சிறு குச்சுப்போல் தோன்றும் ஒரு வகை நுண் புழுவின் பெயர். இது குச்சு என்று பொருள்படும் baktron என்னும் கிரேக்கச் சொல்லின் குறுமைப் பொருள் வடிவான baktron என்பதன் திரிபு. இல் என்பது தமிழில் ஒரு குறுமைப் பொருட் பின்னொட்டு (diminutive suffix).
எ.டு. தொட்டி - தொட்டில் = சிறு தொட்டி
புட்டி - புட்டில் = சிறு புட்டி
குச்சு என்பதனொடு இப் பின்னொட்டைச் சேர்ப்பின், bacterium என்பதற்கு நேரான குச்சில் என்னும் தமிழ்ச்சொல் ஆம். சிறு வீட்டைக் குறிக்கும் குச்சில் என்பது குற்றில் என்பதன் கொச்சைத் திரிபு. சில பெயர்கள் பன்மடி யாகுபெயர்களாயுள்ளன.
Mail என்னும் ஆங்கிலச் சொல் பை என்னும் அடிப்படைப் பொருளது. அது பின்பு, முறையே. பைக்குள் இடும் கடிதங்களையும் அவற்றைக் கொண்டு செல்லும் புகை வண்டியையும் குறித்தது. ஆகவே, Mail என்பதை அஞ்சல் அல்லது அஞ்சலை என்று குறிக்கலாம்.
எல்லாச் சொற்களையும் வேர்ப்பொருள் பற்றியே மொழிபெயர்க்க வேண்டியதில்லை. பொருள்களின் சிறப்பியல்பு நோக்கி அதற்கேற்ப ஒரு பெயரிடலாம். இம் முறையிலேயே, train என்பதைப் புகைவிடும் சிறப்பியல்பு பற்றிப் புகைவண்டி எனக் குறித்தனர் தமிழ்ப் பொதுமக்கள். Train என்னும் ஆங்கிலச் சொல் இழு (draw) என்று பொருள்படும் trab என்னும் இலத்தீன் முதனிலையினின்று திரிந்தது. cycle ஐ மிதிவண்டி என்பர் நெல்லை நாட்டார். அதை ஈருருளி என்னத் தேவையில்லை.
பண்டை நாட்களில் அயல் நாடுகளினின்று வந்த எல்லாப் பொருள்கட்கும். அவற்றின் சிறப்பியல்பு பற்றித் தூய தென் சொற் பெயர்களை இட்டிருக்கின்றனர் பண்பட்ட பழந் தமிழ்ப் பொது மக்கள். கரும்பு சாலித் தீவினின்றும், புகையிலையும் உருளைக் கிழங்கும் அமெரிக்க நாட்டினின்றும், வான்கோழி துருக்கி நாட்டினின்றும் வந்தவை. அமெரிக்கத் தன்னாட்டுச் சொற்களின் திரிபான (E. tobacco), patata (E. potato) என்னும் இசுப்பானியச் (spanish) சொற்களைத் தமிழ் ஏற்றுக் கொள்ளவில்லை. இம் மொழியுணர்ச்சி பிற்காலத்தில் ஆரியத்தாற் கெட்டது.
சில சொற்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அடிப்பொருளும் வழிப் பொருளும் ஒத்துள்ளன. pen என்னும் ஆங்கிலச் சொல், தூவு (feather) என்று பொருள்படும் penna என்னும் இலத்தீன் சொற்றிரிபு. தூவல் என்னும் தமிழ்ச் சொல்லும் அத்தகையதே.
ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்கும்போது வண்ணனை (descriptive) முறையைக் கையாளக்கூடாது. collector என்பதைத் தண்டலாளர் என்றே மொழிபெயர்த்தல் வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் என்று குறிப்பின், collector என்பதையும் district administrative head அல்லது district chief administrator என்று மாற்றல் வேண்டும். அது பொருந்தாமை காண்க. காட்சியும் கருத்துமாகிய இருவகைப் பொருள் கட்கும், சொற்கள் ஒருமருங்கு காரணக் குறியாய் இருந்தாற் போதும்.
இத்தகைய முறைகளைக் கையாளின், எல்லா ஆங்கிலக் குறியீடு களையும் தமிழில் மொழிபெயர்த்து விடலாம். ஆங்கிலக் குறியீடு களெல்லாம் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. தமிழர்க்கு வேண்டுவது தமிழ்ப்பற்று ஒன்றே. (தென்மொழி)
தமிழ் திரவிட வேறுபாடு
ஒருகாலத்தில் ஒரு நாட்டில் ஒரே மொழியைப் பேசிக் கொண்டிருந்த மக்கட்கூட்டம், பின்னர்ப் பல்வேறிடத்திற் பரவிப் பல்வேறின மொழிகளைப் பேசும் பல்வேறு நாட்டினங்களாய்ப் (nations) பிரிந்து போகலாம். மாந்தன் வரலாற்று முதற்காலத்திற் குமரி நாட்டில் தமிழொன்றே பேசிவந்த மக்களினம், இன்று இந்தியா முழுதும் பரவி, தமிழும் தெலுங்கு கன்னடம் முதலிய இருபதிற்குக் குறையாத இனமொழிகளும் பேசும் மக்களினங்களாகப் பெருகியும் பிரிந்தும் உள்ளது.
தமிழ் திரிந்தது போன்றே, தமிழம் என்னும் சொல்லும் திரவிடம் எனத்திரிந்துள்ளது. அத்திரிசொல் முதற்கண் தமிழின் மறுபெயராக வழங்கிப் பின்பு தமிழையும் அதன் திரிமொழிகளையும் ஒரே இனமாக அடக்குங் குடும்பப் பெயராக வழங்கி வருகின்றது; இது பிறநாட்டு மொழிநூலறிஞரால் ஒப்புக்கொள்ளப்படினும், இயற்கை வேறுபாட்டாலும் ஆரியக்கலப்பாலும் நேர்ந்துள்ள சில இடர்ப்பாடு களால், தமிழைத் திரிமொழிகளினின்று பிரித்து, அத்திரி மொழிகளை மட்டும் திரவிடமென்று குறிக்கவும், அவ்விரண்டையும் பொதுப்படக்குறிக்கத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவும், வேண்டியுள்ளது. இம்முடிபிற்குத் தூண்டும் தமிழ் திரவிடவேறுபாடுகளும் மாறுபாடுகளும் வருமாறு :
தமிழ் திரவிடம்
1. மூச்சொலியும் தனியெடுப் மூச்சொலியும் தளியெடுப் பொலியும்
பொலியு மின்றிப் பெரும்பாலும் வலிப்பொலியும் மிக்கு ஆரியத்
மெல்லொலி மொழியாயிருத்தல் தன்மையடைந்திருத்தல்.
2. சொல்வளமும் சொல்லாக்க சொல்வளமும் சொல்லாக்க ஆற்றலு
ஆற்றலும் மிக்குப் பிறமொழிச் மின்மையால் தூய்மை வேண்டாது
சொற்கலப் பில்லாத் எம்மொழிச் சொற்கலப்பையும்
தூய்மையை வேண்டல். ஏற்றல்.
3. சமற்கிருதத்தைப் பகையாகக் சமற்கிருதத்தை நட்பாகக் கோடல்
கோடல்
4. வடமொழி தமிழ்த் திரிபென்னுங் வடமொழி திரவிடத்திற்கு மூலமான
கொள்கையுண்மையும் திருக் தேவமொழி யென்னுங் கொள்கையும்,
கோவில் வடமொழி வழி வடமொழி வழிபாட்டையே
பாட்டை விலக்கலும். போற்றுதலும்.
5. சொற்கள் பெரும்பாலும் திருந் சொற்கள் பெரும்பாலும் திரிந்தும்
திய வடிவில் வேர்ச்சொல் சிதைந்தும் வேர்ச்சொல்லின்றி
காட்டி நிற்றல். நிற்றல்.
6. ஆரியச் சார்பற்ற தூய தனி பெரும்பாலும் ஆரியச் சார்பான
யிலக்கியமுண்மை இலக்கியமே கொண்டுள்ளமை.
7. தமிழன் பிறந்தகத்தை அறிதற் தொன்னிலை யறிதற் கியலாத 9 ஆம்
கான தொல் வரலாற்றுச் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட
சான்றுண்மை இலக்கியமே யுண்மை.
8. பொருளிலக்கணமுங் கூறும் பொருளிலக்கணமின்மை.
முழுநிறைவான இலக்கண
முண்மை
9. வடமொழித் தொன்மங்களை வடமொழிப் புராணங்களை
(புராணங்களை) ஒப்புக் முற்றும் ஒப்புக்கொள்கை
கொள்ளாமை.
10. கட்டாய இந்தியை எதிர்க்கும் கட்டாய இந்தியை எதிர்க்கும்
உணர்ச்சி தமிழர்க்கு விஞ்சி உணர்ச்சி திரவிடர்க்கின்மை
யிருத்தல்.
11. பெரும்பாலும் குமரிநிலத் பெரும்பாலும் தமிழின் திரிமொழி,
தமிழுக்கு நெருங்கிய
இயன்மொழி
12. வடசொல் தீரத்தீரச் சிறப்பது. வடசொல் சேரச்சேரச் சிறப்பது
இவற்றால், தமிழ் திரவிடத்தினின்று மிக வேறுபட்டதென்பது தெளிவாகும்.
தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்
1. தமிழின் தொன்மை : தமிழரசரின் பழைமை.
கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பாரதப் போரில், உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன், இரு படைகட்கும் சோறு வழங்கினதாகப் புறப்பாடல் கூறுகின்றது (புறம். 2).
சேர சோழ பாண்டிய நாடுகள் பாரதத்திலும், கிறித்துவுக்கு 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திலும் கூறப் பட்டுள்ளன.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று (குறள். 955)
என்னுங் குறளுரையில், பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார் … தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று கூறினார் பரிமேலழகர்.
சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், காந்தமன் முதலிய சோழமன்னரெல்லாம் சரித்திர காலத்திற்கு மிக முற்பட்டவர். சோழருக்கு முற்பட்டவர் பாண்டியர். முதற்காலத்தில், பாண்டியன் ஒருவனே தமிழுலகம் முழுவதையும் ஆண்டானென்றும், பின்பு ஒரு பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தமையனோடு பகைமை பூண்டு, வடக்கே பிரிந்து வந்து சோழசேர அரசியங்களை நிறுவினரென் றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்குகின்றது.
தமிழ் திரிநிலை
(கி.மு. 20,000 இன்றுவரை)
குமரிக்கண்ட மாந்தர், தமிழின் ஐவகைச் சொன்னிலைக் காலத்திலும், மக்கட்பெருக்கம், இயற்கை விளைவுக்குறைவு, பஞ்சம், கொள்ளை, போர், பகை, வேற்றிடவிருப்பு, துணி செயல் வேட்கை, வணிகம், கடல்கோள் முதலிய பல்வேறு கரணியங்க ளால், கிழக்கும் வடகிழக்கும் வடக்கும் வடமேற்கும் மேற்கு மாகக் கூட்டங் கூட்டமாய்ப் பிரிந்துபேயினர். வடகிழக்குச் சென்ற துரேனியர் (சித்தியர்) அசைநிலைக் காலத்திலும் புணர் நிலைக் காலத்திலும். வடமேற்கிற் சென்ற ஆரியர் பகுசொன் னிலைக் காலத்திலும், பிரிந்துபோனதாகத் தெரிகின்றது. நேர் வடக்குச் சென்றவர் தமிழின் முன்னிலைக் காலத்திலும் பின் னிலைக் காலத்திலும் பிரிந்தவராதலின். அவர் சென்றவிடமெல் லாம், பலவூர்ப் பெயர்கள் இன்றும் தமிழ்ச் சொல்லாயும் அவற்றின் திரிபாயுமிருப்பதுடன், அவர் மொழிகளும் தமிழொடு சிறிதும் பெரிதும் தொடர்புடையனவாயிருக்கின்றன.
1. ஊர்ப்பெயர்கள்
தெலுங்கநாடு : சிற்றூர் (சித்தூர்), நெல்லூர், குண்டூர், ஒருகல் அல்லது ஓராங்கல் (Warangal).
ஒட்டரம் (ஒரிசா) : கடகம் (Cuttack) = வளைந்த மதில், மதில் சூழ்ந்த நகரம்.
பம்பாய் : வேளூர், வேளூரகம் (Ellora), வேளாபுரம் (Velapur), வேளகம், வேள் (கிராமம்) - (Belgaum), வேள்பட்டி (Belhutti). வேளா என்பது பலவூர்களின் பொதுப் பெயராயுள்ளது. சளுக்கியர் ஆண்ட பம்பாய் மண்டலப்பகுதி வேள்புலம் எனப்பட்டது.
குச்சரம் : துவாரகை (Dwaraka). இது எருமையூர் (மைசூர்) நாட்டி லுள்ள துவரையின் (துவாரசமுத்திரம்) பெயரால் அமைந்த நகர். துவர் = சிவப்பு, செம்பு. துவர் - துவரை = செப்புக்கோட்டையுள்ள நகர்.
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201)
அகத்தியர் துவராயதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி பண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும். பதினெண் வேளிருள்ளிட் டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து என்னும் நச்சினார்க்கினியர் கூற்று, துவாரகை, வேள்புலம், அருவாநாடு ஆகியவற்றின் அண்மையை நோக்கும்போது நன்றாய் விளங்கும்.
உத்தரமண்டலம் : மதுரை (Muttra), இது தலைக்கழக மதுரையின் பெயர் கொண்டது. இவ்வடமதுரையிற் பிறந்த கண்ணன் (கிருட்டிணன்) என்னும் அரசன் இடையர் குலத்திற் பிறந்த தமிழ இடையர்போல் ஏறுதழுவி மணந்த ஒரு திரவிட மன்னனே. கிருஷ்ண (கருப்பன், கரியன்) என்னும் பெயரின் க்ருஷ் என்னும் முதனிலையும், கருள் என்னும் தென்சொல் திரிபே. கள்-கரு-கருள். கருளுதல் கருத்தல்.
மதுபுர என்பது மதுரா எனத் திரிந்ததென்பது பொருந்தாது.
பீகார் : பாடலிபுரம் (Patra). இது பாதிரிப்புலியூர் என்னும் தமிழ்ப்பெயரின் வடமொழிப் பெயர்ப்பு. இது பாடலிபுத்திரம் என்றும் வழங்கும். முதலில் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பா திரிப்புலியூர் பாடலிபுத்திரம் எனப்பட்டது. அதன் பின் அது வடநாட்டு நகரப்பெயராய் அமைந்தது. பாதிரி என்னும் பூப்பெயர் வடமொழியிற் பாடலி எனத் திரியும்.
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் (நாலடி. 139)
வங்காளம் காளிக்கோட்டம் (Culcutta). இது காளிகோயிலாற் பெற்ற பெயர்.
காளி முதலிற் பாலைநிலத் தெய்வமாயிருந்து, பின்னர்ப் போரில் வெற்றி தருபவள் (கொற்றவை) என்றும், அம்மை நோயை உண்டாக்குபவளும் நீக்குபவளும் என்றும், நம்பப் பட்டதினால் ஏனை நிலங்களின் தெய்வமாயும், தமிழ்நாட்டில் முதன்முதலாக வணங்கப்பட்டவள். கோயிலைக் கோட்டம் என்பது பழந்தமிழ் மரபு, வேதக்கால ஆரியத் தெய்வங்களுள் காளி இல்லை. வங்கஞ்சென்ற பின்னரே ஆரியர் காளி வணக்கத்தை மேற் கொண்டனர். காளி என்னும் பெயர் கருப்பி என்று பொருள்படும் தூய தென்சொல்; கள்-காள்-காளம்-காளி. முழுமுதற் கடவுட் கொள்கையும் உருவ வணக்கமும் கோயில் வழிபாடும் வேத ஆரியர்க்கில்லை.
தம்லுக். இது தமிழகம் என்பதன் திரிபாயிருக்கலாம். வங்கஞ் சென்று குடியேறிய பண்டைத் தமிழ வணிகர் இப்பெயரை இட்டனர் போலும்!
ஊர், புரம், புரி முதலிய தமிழிடப்பெயரீறுகள், திரிந்தும் திரியாதும் இன்றும் வடநாட்டிற் பல இடங்களில் வழங்குகின்றன. முதலில், புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரி என்பது மதில் சூழ்ந்த நகரையும் குறித்தன.
2. குலப்பெயர்கள்
பம்பாய் மண்டலத்தின் தென்பகுதியில் வாழ்ந்தவர் வேளிர் என்னும் தமிழ வகுப்பார்.
வாணியன் (வாணிகன்) என்னும் குடிப்பெயர் பனியா என்றும், செட்டி என்னும் குடிப்பெயர் சேட்(டு) என்றும், வடநாட்டில் வழங்குகின்றன. எட்டு - எட்டி - செட்டி. எட்டுதல் = உயர்தல். எட்டம் = உயரம். எட்டி - உயர்ந்தோன். சிரேஷ்ட என்பது சிரேய என்பதன் உச்சத்தரம் (Superlative Degree).
பாண்டவ கவுரவரின் முன்னோர் கதிரவன் மரபினராதலின் சோழன் வழியினருமாவர், முச்சுடரையும் முதலாகக் கொண்ட மூவரச மரபுகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே இருந்துவந்தமையும் முன்பு பாண்டியரும் பின்பு சேர சோழரும் வடநாட்டுக் கதிரவ மரபிற்கும் தென்னாட்டுக் கதிரவ மரபிற்கும் பொது முன்னோனாகக் கூறப்படுதலும், அதனால் சோழன் செம்பியன் என்று பெயர் பெற்றமையும், நோக்குக.
3. செந்தமிழும் கொடுந்தமிழும்
தமிழர் வடக்கே செல்லச்செல்ல. தட்பவெப்ப நிலைமாற்றம், சோம்பல், புலவரின்மை, தமிழ்ப்புரவலரின்மை, புதிய சுற்றுச்சார்பு, தாய்நாட்டொடு தொடர்பின்மை முதலிய கரணியங்களால், தமிழ் திரிந்து கொடுந்தமிழ் எனப்பட்டது. திரியாத தென்னிலத்தமிழ் செந்தமிழ் எனப்பெற்றது. சிலர் கொடுந்தமிழ் திருந்திச் செந்தமிழாயீற்றென்பர். அவர் அறியார். தமிழ் வளர்ச்சியில் முற்பட்ட திருந்தாத நிலைகளெல்லாம் குமரிக்கண்டத்தின் தென்பாகத்திலேயே தீர்ந்துவிட்டன.
கொடுந் தமிழ்ச்சொற்கள் பொதுவாய், பொருள் திரிந்த சொல், வடிவுதிரிந்த சொல், ஒலிதிரிந்த சொல், செந்தமிழில் வழக்கற்ற சொல், புதுச்சொல் என ஐவகைப்படும்.
எ.கா.
தமிழ் தெலுங்கு
செப்பு = விடை சொல் செப்பு (=சொல்) -பொருள்
திரிந்தசொல்.
போயினான் போயினாடு - வடிவு திரிந்த
சொல்.
செய். கும்பு cey. gumpu - ஒலி திரிந்த சொல்.
வெதிர் வெதுரு - செந்தமிழில்
வழக்கற்ற சொல்.
சதுவு, வெள்ளு - புதுச்சொல்.
புதுச்சொல்லை, வேர்மறையாச்சொல், வேர்மறைந்த சொல் என இருவகைப் படுத்தலாம்.
எ.டு.
அள் (காது) … அடுகு - வேர்மறையாச் சொல்
அம்மு (to sell) - வேர்மறைந்த சொல்
இனி, இற்றைத்தமிழில் வழக்கற்றுத் தெலுங்கிற் புதுச் சொற்போல் தோன்றுவனவற்றிற்கெல்லாம் வேர்ச்சொல் குமரி நாட்டில் வழங்கின, என்று கொள்ளவும் இடமுண்டு.
தலைக்கழக அழிவும் இடையீடும்
தோரா. கி.மு. 4500 போல், பாண்டியன் கடுங்கோன் காலத்தில், அரபிக் கடலுள்ள விடத்து நிலப்பகுதியும், நாவலந்தீவின் தென்பகுதியான குமரிக் கண்டமும், கடலுள் மூழ்கின. வங்காளக் குடாக்கடலினும் அரபிக்கடல், முந்தியதாகும். அதனாலேயே, கடல் தெய்வமாகிய வாரணனை மேற்றிசைத் தலைவன் என்றும், வங்காளக் குடாக்கடலைத் தொடுகடல் என்றும், கூறினர்.
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறம். 6).
தலைக்கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத் தொன்பதின்மர் என்றும், அக்கழகத்தின் இறுதிக்காலப் புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்பதின்மர் என்றும், இறையனார் அகப்பொருளுரை கூறும்.
பெரு (முது) நாரை, பெருங் (முது) குருகு, களரியாவிரை முதலிய நூல்கள் தலைக்கழகத்தால் இயற்றப்பெற்றனவாகச் சொல்லப் பெறும்.
4. இடைக்கழகம் (தோரா. கி.மு. 4000-1500)
தலைக்கழகம் அழிந்து ஏறத்தாழ 500 ஆண்டுகட்குப்பின், குமரியாறு கடலொடு கலந்த இடத்தில், அலைவாய் என்றோ கயவாய் என்றோ, கதவம் என்றோ புதவம் என்றோ பெயர் பெற்றிருந்த துறை நகரில், வெண்டேர்ச் செழியன் என்னும் பாண்டியன் இடைக்கழகத்தை நிறுவினான். அன்றும் ஆரியருமில்லை; ஆரியக்கலப்புள்ள நூலுமில்லை.
இடைக்கழக இருக்கையைக் கபாடபுரம் என்று வடமொழி யிலக்கியம் கூறும். மதுரையை மதுராபுரி என்று விரித்தல்போல், கபாடத்தையும் கபாடபுரம் என்று விரித்திருக்கலாம். கதவம் என்பது பெயராயின், கபாட என்பது இலக்கணப்போலித் திரிபாம்; அலைவாய் அல்லது கயவாய் என்பது பெயராயின், கபாட என்பது அரைப்பெயர் மொழி பெயர்ப்பாம்; புதவம் என்பது பெயராயின், அது முழுப்பெயர் மொழிபெயர்ப்பாம். காவிரிப்பூம்பட்டினம் புகார் (ஆறு கடலிற் புகுமிடம்) என்று பெயர்பெற்றிருந்தமையும், கெடிலம் கடலொடு கூடுமிடம் கூடலூர் என்று பெயர் பெற்றுள்ளமையும் நோக்குக.
5. கொடுந்தமிழும் திரவிடமும்
ஒருகாலத்தில் கொடுந்தமிழ் என்றிருந்த திசைமொழிகள் (Regional Dialects), பிற்காலத்தில் திரவிடம் என்னும் கிளைமொழிகளாய்த் திரிந்துவிட்டன. தமிழர் அறிய, முதலாவது திரிந்த கிளைமொழி தெலுங்கே. அது திரிந்த காலம் ஏறத்தாழக் கி.மு. 1500. தெலுங்கு நாட்டிற்குத் தெற்கே நீண்டகாலமாய்த் தமிழொன்றே வழங்கி வந்தது.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
என்று தொல்காப்பியர் காலப் பனம்பாரனார் கூறியது போன்றே,
நெடியோன் குன்றமுத் தொடியோள் பௌவமுந்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு (சிலப். 8 : 1, 2)
என்று இளங்கோவடிகளும், கடைக்கழகக் காலம்வரை வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ்தவிர வேறெம்மொழியும் வழங்காதிருந்தமையைக் குறித்தல் காண்க.
இனி, திரவிடமும், (1) வடதிரவிடம், (2) நடுத்திரவிடம், (3) தென் திரவிடம் என முத்திறப்படும். இவற்றை முன்திரவிடம், இடைத் திரவிடம், பின்திரவிடம் என்றும் அழைக்கலாம்.
முதற்காலத்தில் நெடில்களே தமிழில் வழங்கின. பின்பு அவற்றின் குறில்கள் தோன்றின. ஏகார ஓகாரங்கள் பிந்தித் தோன்றிய நெடில் களாதலின், அவற்றின் குறில்களும் பிந்தியே தோன்றியுள்ளன. எகர ஒகரக் குறில்வரிகட்கு மிகைக்குறி யிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும். இவ்விரு குறில்களும் தோன்று முன்னரே. ஒருசார்த் தமிழர் விந்தியமலையடுத்தும் அதற்கப்பாலும் குடியேறியிருந்திருக்கின்றனர். அவர் மொழியே பின்பு சூரசேனி, மாகதி, மகாராட்டிரம் முதலிரு பிராகிருதங்களாகப் பிரிந்து போயிருக்கின்றது. அப் பிராகிருதங்களின் திரிபே இந்தி, வங்கம், மராத்தி, குசராத்தி முதலிய இற்றைமொழிகள். இவற்றில் எகர ஒகரக் குறில்கள் இல்லை. ஆயின், இவற்றின் அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதுடன், தொடரமைப்பிலும் இவை தமிழையே முற்றிலும் ஒத்திருக்கின்றன. இவற்றிலுள்ள எண்களும் ஒருமை பன்மை யென்னும் இரண்டே. இந்தியில் ஆண் பெண் என்னும் இருபாலே உள. இம்மொழிகளில் வழங்கும் மரபுத் தொடர்களையும் பழமொழிகளையும் நோக்கின், இவற்றைப் பேசும் மக்களின் முன்னோர் திரவிடராயிருந்திருத்தல் வேண்டும் என்னும் முடிபிற்கே வரமுடியும்.
மராத்தியும் குசராத்தியும் ஒருகாலத்தில் திரவிடமொழிகளாய்க் கொள்ளப்பெற்று, பஞ்சதிராவிடத்தின் இரு கூறுகளாய்க் குறிக்கப்பட்டன. மராத்தியை அடுத்துத் தெற்கே வழங்குவது தெலுங்கு.
விந்தியமலைக்கு வடக்கிலுள்ள இந்தி, வங்கம் முதலிய மொழி களை வடதிரவிடம் அல்லது முன்திரவிடம் என்றும், அம்மலை யையடுத்த மராத்தி, குசராத்தி முதலிய மொழிகளை நடுத்திரவிடம் அல்லது இடைத்திரவிடம் என்றும், அவற்றிற்குத் தெற்கிலுள்ள தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளைத் தென்திரவிடம் அல்லது பின்திரவிடம் என்றும், கொள்ளினும் பொருந்தும்.
இற்றை நிலையில் இந்தி வங்க முதலியவற்றை வட நாவலம் என்றும், மராத்தி குசராத்தியை நடுநாவலம் என்றும், கொள்வதும் பொருத்தமாம்.
தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்ததென்பதற்குச் சான்றாக, முதற்கண், தென்திரவிடத்தில் தென்கோடி மொழிகளுள் ஒன்றான தெலுங்கினின்றும் வடகோடி மொழிகளுள் ஒன்றான பிராகுவீ யினின்றும், சிலசொற்கள் ஈண்டு எடுத்துக்காட்டப்பெறும்.
6. தெலுங்குத் திரிவு
மூவிடப்பெயர்கள்
தமிழ் தெலுங்கு
தன்மை - ஒருமை நான் நேனு
பன்மை நாம் மேமு
முன்னிலை - ஒருமை நீ(ன்) நீவு
பன்மை நீர் மீரு
படர்க்கை - ஆ.பா அவன் வாடு
பெ. gh mtŸ Mbk(?), அதி
ப. பா அவர் வாரு
ஒ. பா. அது அதி
பல. பா. அவை அவி
குறிப்பு (1) ஏன், ஏம் என்பனவே தன்மைப்பெயரின் முல வடிவங் களாதலால், யேன், யேம் என்னும் வடிவங்களே நேனு, மேமு என்று திரிந்திருக்குமென்று சிலர் கருதலாம். அவ்வாறாயின், மேமு என்பது நேம் என்பதன் திரிபாயிருத்தல் வேண்டும்.
2. தெலுங்கில் அதி என்பது பெண்பாலையும் ஒன்றன் பாலையும் உணர்த்தலால், ஆமெ என்பது ஆ அம்ம என்பதன் தொகுத்த தாகவுமிருக்கலாம்.
3. வடதிரவிடத்திலும் ஆரியத்திலும், தன்மைப் பெயரடி மகர மாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே.
ஆகு என்னும் வினை
சொல்வகை தமிழ் தெலுங்கு
முதனிலை ஆ, ஆகு அவு
ஏவல் ஒருமை ஆ, ஆகு கா
ஏவல் பன்மை ஆகும், ஆகுங்கள் கம்மு, கண்டி
இ.கா.ஆ.பா. வினைமுற்று ஆயினான் அயினாடு
இ.கா. பெயரெச்சம் ஆன அயின, ஐன
இ.கா.வினையெச்சம் ஆய்,ஆகி அயி,ஐ
எ.கா. வினையெச்சம் ஆக கா, அவ
நிலைப்பாட்டு வினையெச்சம் ஆயிற்றால் அயித்தே
எ.கா. வினைமுற்று ஆகும், ஆம் அவுனு
மறுப்பிணைப்புச்சொல் ஆனால் கானி, அயினனு
ஒத்துக்கொள்விடைச் சொல் ஆம் அவுனு
எதிர்மறை வினைமுற்று ஆகாது காது
தொழிற்பெயர் ஆதல், ஆகுதல் அவுட்ட, காவடமு
(முதலியன) (முதலியன)
கூட்டுவினை ஆகவேண்டும் காவலெனு
மாற்றமாடு என்னும் வினை
மாற்றம் = சொல். ஆடு என்பது ஒரு துணைவினை
மாற்றமாடு = சொல்லாடு, உரையாடு, பேசு.
மாற்றம் - மாட்ட (தெ.). மாற்றமாடு - மாட்டாடு (த.) - மாத்தாடு (க.)
கள் என்னும் பன்மையீறு தெலுங்கில் கலு - லு என்று திரியும்.
மாட்டலு (மாற்றங்கள்) + ஆடு = மாட்டலாடு – மாட்லாடு
சில தெலுங்குச்சொற்கள் அடிப்படை யெழுத்துக்களுள் ஒன்று தொக்கு வழங்குகின்றன.
எ.டு.
அழுத்து - அத்து, இலுப்பை - இப்ப, உருக்கு - உக்கு, கொழுப்பு - கொவ்வு, செருப்பு - செப்பு, திருத்து - தித்து, சுருட்டு - சுட்ட, நெருப்பு - நிப்பு, பருப்பு - பப்பு, பெருத்த - பெத்த, மருந்து - மந்து, விருந்து - விந்து.
உருண்டை, ஒருத்தன் என்னுஞ் சொற்கள் உண்டை, ஒத்தன் என்று தமிழிலும் திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய வடிவுக
ளும் வழக்கில் உள, தெலுங்கில் அங்ஙனமன்று.
சில தெலுங்குச்சொற்களின் முதலிலுள்ள உயிர்மெய்யிடை
ரகரஞ் செருகப்படும்.
எ.டு.
bghGJ - ¥buh¤J (bj.), மண்டு - ம்ரண்டு (தெ.). மண்டுதல் எரிதல்.
ï›tH¡nf, jÄœ - ¤uÄs (t.), go-¥uâ (t.), பதிகம் - ப்ரதீக (வ.). kj§f«-«Uj§f (t.), மெது-ம்ருது (வ.) என வடசொற்றிரிவு கட்கு வழிவகுத்தது.
பல மென்றொடர்ச் சொற்கள் தெலுங்கில் வல்லோசை பெறும்.
எ.டு.
F«ò - F«¥ò (bj.), என்றார் - அண்ட்டாரு (தெ.).
கும்ப்பு, அண்ட்டாரு என்று எழுதுவது தமிழ் மரபன்று.
வடக்கே செல்லச்செல்ல, மொழியொலிகள் இங்ஙனம் வலுத்துக் கொண்டே போகும். இதற்குத் தொடக்கம் தெலுங்கும் முடிவு சமற்கிருதமும் ஆகும். தெலுங்கு வட மொழிபோல் வல்லோசை பெற்றிருப்பதுடன், வடதிசையாற் பெயர் பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழொலிகள் முதற்கண் வடமொழியிற் போல் கடுவொலிகளும் (Surds) பொலிவொலிகளுமாய் (Scnants) போட்டியிருந்து பின்னர்க் கடுமையும் பொலிவும் நீங்கினவென்பது, வன்காய் மீண்டும் மென்பிஞ்சாயிற்றென்று கூறுவதுபோன்றதே.
ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப, என்னும் வன்கூட்டொலிகள் தெலுங்கிற் பெருவழக்காய் வரும்; தமிழில் மருந்திற்குங் காணக் கிடையா. முதன் முதல் வடதிசையால் வடகு என்று பெயர் பெற்ற தும், உண்மையில் வடமொழிக்கு அடிப்படையும், தெலுங்கே.
7. பிராகுவீத் திரிவு
தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்த துடன், திரவிடமொழிகளும் வடக்கே செல்லச்செல்ல மேன் மேலும் திரிந்தும், சிறுத்தும் சிதைந்தும், சிதறியும், இலக்கிய மற்றும், ஆரியமாக மாறியும், போயின.
வடமேற்கோடித் திரவிட மொழியான பிராகுவீச் சொற்கள் வருமாறு :
மூவிடப்பெயர்கள்
தமிழ் பிராகுவீ
தன்மையொருமை ஏன்(யான்) ஈ
தன்மைப்பன்மை நாம் நன்
முன்னிலையொருமை நீ நீ
முன்னிலைப்பன்மை நூம் நும்
படர்க்கை ஒன்றன்பால் அது ஓ, ஓது
படர்க்கைத்தற்சுட்டொருமை தான் தேன்
எண்ணுப்பெயர்கள்
ஒன்று-அசித், இரண்டு-இரத், மூன்று-முசித்;
ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் இந்தியிலுள்ளனவே.
பிறசொற்கள்
தமிழ் பிராகுவீ தமிழ் பிராகுவீ
அப்பா பாவா அரம் அர
அம்மா அம்மா, லும்மா ஆய் ஆயி
இரு அர் பூசை(பூனை) பிஷீ
உம் (and) ஓ மகன் மார்
உறை(வீடு) உரா முகன் மொன்
எந்து(என்னது) அந்த் முன்னே மொனீ
சா கா, கஹ் மூளை மிலீ
தின் ஹின், குன் யார் தேர்
நீர் தீர்
சில பிராகுவீச்சொற்களில் வகரம் பகரமாகத் திரிகின்றது.
எ.டு. வர் (வரு) - பர், வாய் - பா, வில்-பில்.
சில பிராகுவீச்சொற்களின் இறுதியில் தகரமெய் மிகுகின்றது.
எ.டு. பால்-பால்த், தேள்-தெல்த்.
சில பிராகுவீச்சொற்களில் சகரம் ககரமாகத் திரிகின்றது.
எ.டு. செய்-கெ. செவி-கல்.
பல பிராகுவீச் சொன் முதலில் மூச்சொலி சேர்கின்றது.
எ.டு. அறு-ஹரெ, ஆடு-ஹேட், ஆம்-ஹோ.
கண் khan, கல் khal, செவி khaf, பால் phalt. நகைகள் என்னும் பன்மையீறு பிராகுவீயில் க் எனச் சிதைந்து குறைகின்றது.
எ.டு. அவர்கள்-ஒவ்க், வாய்கள்-பாக்.
வேற்றுமைப்பாடு (Declenision)
தமிழ் பிராகுவீ தமிழ் பிராகுவீ
முதல் வேற்றுமை அது ஓ,ஓது கல் கல்
2-ஆம் வேற்றுமை அதை ஓதெ கல்லை கல்-எ
3-ஆம் வேற்றுமை அதிட்டு ஓது-அட் கல்லிட்டு கல்-அட்
4-ஆம் வேற்றுமை அதற்கு ஓதெ கல்லிற்கு கல்-எ
5-ஆம் வேற்றுமை அதின் ஓது-அன் கல்லின் கல்-ஆன்
6-ஆம் வேற்றுமை அதன் ஓனா கல்லின் கல்-னா
7-ஆம் வேற்றுமை அத ஓ கல்லிடை கல்-ட்டீ
னிடை (தெ)ட்டீ
இட்டு என்பது ஒரு 3-ஆம் வேற்றுமைச் சொல்லுருபு. எதிட்டு = எதைக்கொண்டு, எதினால்.
சில பிராகுவீத் தொடரியங்கள்
ஈ அரேட் = நான் இருக்கிறேன்.
நீ காச = நீ போகிறாய்.
நாபின் தேர் ஏ? = உன் பெயர் என்ன?
கனா பாவ ஹமே சுன் உராட்டீ தூலிக் = என் அப்பனார் அந்தச் சின்ன உறையில் (வீட்டில்) குடியிருக்கிறார்.
kh, gh முதலிய சில மூச்சொலி யெழுத்துக்களும், சார் (char) தந்தம் முதலிய இந்தி வடமொழிச்சொற்களும், பிராகுவீயிற் கலந்து வழங்குகின்றன.
பெரும்பால் மேலை மொழிநூலறிஞர், அநாகரிக நிலை நாகரிக நிலைக்கு முந்திய தென்னும் நெறிமுறையைக் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றி, திரவிடம் திருந்தித் தமிழான தென்றும், பிராகுவீ முந்துநிலை மொழியென்றும், தமிழர் வடமேற்கினின்று பெலுச்சித்தான வழியாய்த் தெற்கு வந்தாரென்றும், வந்தவழியில் பெலுச்சித்தானம் இருப்பதால் அங்கத்து மொழி அநாகரிக நிலையில் உள்ளதென்றும், தெற்குவந்தபின் தம்மொழியை வளர்த்துக் கொண்டாரென்றும், உண்மைக்கு முற்றும் மாறாகக் கூறியுள்ளனர்.
ஒரு மொழியின் சொற்கள், முந்துநிலை, சிதைநிலை ஆகிய இரு நிலையிலும் குறுவடிவு கொண்டு நிற்கும். பிராகுவீச்சொற்கள் குறுவடிவு கொண்டிருப்பது, சிதைநிலையேயன்றி முந்துநிலையன்று. வாய்கள் என்னும் ஒரு சொல்லின் சிதைவை நோக்கினும் இவ் வுண்மை விளங்கிவிடும்.
வழி - (வயி) - வாய் = உணவு புகும் வழி. கள்ளுதல் கலத்தல் அல்லது கூடுதல். பன்மை ஒரு பொருளின் கூட்டமாதலால், கள் என்னும் சொல் பன்மையீறாயிற்று.
வாய் - பா (பி.) கள்-க் (பி.). வாய்கள் - பாக் (பி.) இங்ஙனமே பிறவும்.
8. திசைமொழித் தெரிப்பு (Regional Dialectic Selection)
தமிழில் மிகுந்த சொல்வள முண்டு. ஒரு செல்வத்தாய் வீட்டினின்று, ஒருவகைப்பட்ட பல பொருள்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு புதல்வியும் எடுத்துச்செல்வது போல், தமிழிலுள்ள ஒரு பொருட் பல சொற்களும் ஒவ்வொன்றை ஒவ்வொரு திசைமொழியும் கையாண்டுள்ளது.
எ.டு. ïš(bj.), மனை(க), வீடு(ம.).
9. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation)
ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களைக் கொண்ட குமரிக் கண்டம் முழுகிப்போனமையாலும், பல்லாயிரக் கணக்கான குறியீடுகளையும் செய்யுட் சொற்களையும் கொண்ட முதலிரு கழகவிலக்கியம் முற்றும் அழிக்கப்பட்டு விட்டமையாலும், இன்று ஒரு சில பழஞ்சொற்களின் முந்து வடிவைச் சில திசைமொழிகளே தாங்கி நிற்கின்றன.
எ.டு.
செய் - கை. chey (தெ) = கை.
அல் - அன்று அல்லி (க.) = அங்கு
அரிது - ஆது (எதிர்மறையிடை, நிலையும் ஈறும்). அருது (ம.)
நீங்கள் - நிங்கள் - நிங்ஙள் (ம).
நீன்-நின், நீம்-நிம், நீங்கள்-நீங்கள் (வேற்றுமையடி).
10. நடுத்திரவிடம்
மராத்திச் சொற்கள்
தமிழ் மராத்தி தமிழ் மராத்தி
அக்கை அக்கா செடி ஜாடு
அச்சன் ஆஜா செவ்வை சாவ்
அம்மை அம்மா சோடு ஜோடா
அரக்கு லாக் தகை, தாகம் தாஹன்
அரத்தம் ரக்த தட்டு தாட்
ஆய் ஆயீ தண் தண்ட்
இக்கடை இக்கடே தயிர் தஹீன்
இராத்திரம் ராத்ரீ தா தே
உண்ணம் உஷ்ண தாடி தாடீ
உதடு ஓட் தாதை தாதா
ஊற்று ஒத்து திரு சிரீ
கட்டில் காட் தீவம் தீவா (விளக்கு)
கட்டு கட்டா நாடி நாடீ
கடிகையாரம் நாரத்தங்காய் நாரிங்க
கடிகாரம் கடியால் பழம் பள்
கண்டம் காண்ட்டா பண்ணு பனவ்
(முள்) பிண்டி பீட் (மாவு)
கம் (எனல்) கப் பித்தளை பீத்தல்
கவுதாரி கவடா புகல் போல்
காயம் காய பெட்டி பேட்டீ
கால் காலீ (கருமை) போதும் புரே
கிடுமுடி கடமட மணிக்கட்டு மண்கட்
கிண்ணம் கிண்ண மயில் மோர்
குடும்பு குடும்ப் மயிலை பைல் (காளை)
குண்டா குணடா மனம் மன்
குப்பம் (காடு) கும்ப்ப மாத மாசிக்
குயில் கோயீல மீசை மிசா
கொட்டாரம் கோட்டார் முகர் மோகர்
கோ காய் (ஆவு) முட்டி மூட்
கோரம் கோடா-குதிரை முள்ளங்கி முளா, முளி
கோலி கோலீ முளை (குழந்தை) மூல்
சற்று ஜரா மூக்கு நாக்
சாட்டி ஜாட்டீ மோடு (வயிறு) போட்
சாலும் சாலேல் மோடு-மோட்டு மோட்டா
சாலை சாலா வட்டி வாட்டி
சுணை சுணசுண (கிண்ணம்)
வரம்(மேல்) வர் நிறைப்பெயர்
வழுதுணங்காய் வாங்கே பலம் பலால்
வளை (திரும்பு) வளா சேர் கேர்
வரசி வாச் வீசை வீசா
வேளை வேள் மணங்கு மண்
கண்டி கண்டில்
மூவிடப் பெயர்கள்
தமிழ் மராத்தி
தன்மையொருமை நான் மீ
தன்மைப் பன்மை நாம் ஆமஹீ
முன்னிலையொருமை நூன்(நீ) தூன்
முன்னிலைப்பன்மை நூம்(நீர்) தும்ஹீ
படர்க்கை ஆ.பா.அதனு(தெ.) தோ
படர்க்கைப்பெ.பாஅதி(தெ.) தீ
படர்க்கைப் ப.பா ? தே, த்யா தீன்
படர்க்கைப் ஒ.பா அது தேன்
சில தமிழ் வினைச்சொற்கள் மராத்தியில் உருத்தெரியாமல் திரிந்துள்ளன.
எ.டு.
தமிழ் மராத்தி தமிழ் மராத்தி
ஏ(கு) (யா)= ஜஇடுnடவ்படி (கீழிரு) ப இரு ரஹ்
யகரம் ஆரியமொழிகளிலும் ஆரியத்தன்மை யடைந்த மொழி களிலும் ஜகரமாகத்திரியும். இது தெலுங்கிலேயே தொடங்குவது கவனிக்கதக்கது.
எ.டு.
யமன் (வ.) ஜமுடு (தெ.)
யுவன்(வ.) ஜவான் (இ.)
யௌவனம்(வ.) Juvenilis (L.)
மராத்திச் சொற்றொடரமைதி
சொற்றொடர்ச்சொன்முwதமிழிற்போன்wமராத்தியிலு«அமைந்துள்ளன.
எ.டு.
மீ த்யாலா ஏக் ருப்பயா திலா ஆஹே.
நான் அவனுக்கு ஓர் உருபா கொடுத்து இருக்கிறேன்.
ஹேங் பத்ர மாஜ்யா டேப்லாலர் டேவ்.
இந்த முடங்கலை என் நிலைமேடைமேல் வை.
நிலைமேடை = மேசை.
ஆகு என்னும் வினைச்சொல், புணர்ப்புச் சொல்லாகத் (Copula) தமிழிற் கருவுற்று, மலையாளத்தில் உருப்பெற்று, மராத்தியில் திரிவுற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இதனொடு, பெயர்ப்பயனிலை புணர்ப்புச்சொற்கொண்டே முடியும் ஆரியச் சொற்றொடரமைதி தோன்றியிருப்பதும் கவனிக்கத்தக்கதாம்.
எ.டு.
அது மரம் (தமிழ்).
அது மரம் ஆகுன்னு (மலையாளம்) = அது மரமாயிருக்கிறது.
தேன் ஜாட் ஆஹே (மராத்தி)
It is a tree (Eng).
பெயர்ப்பயனிலை புணர்ப்புச்சொல்லின்றி முடியும் தமிழ்ச்சொற் றொடரமைதி, தமிழின் இயல்பையும் முன்மையையும் தெளிவாய்க் காட்டும்.
ii. வடதிரவிடம்
ஆரியர் வருமுன் நாவலம்பொழில் (இந்தியா) முழுதும், பஃறுளி முதல் வேங்கடம்வரை தமிழும் வேங்கடம் முதல் பனிமலை வரை திரவிடமுமாக, தென்மொழியே பரவியிருந்த தென்பதற்குச் சான்றாக, வடநாட்டு மொழிகளுள் ஒன்றான இந்தியினின்று பல அடிப்படைச் சொற்களும் இலக்கண அமைதிகளும் இங்குக் காட்டப்பெறும்.
இந்திச்சொற்களும் இலக்கண அமைதிகளும்
தமிழ் இந்தி தமிழ் இந்தி
அடே அரே உதோள் உதர்
அரங்கம் ரங்க் உம்பர் உப்பர்
அலை(வி.)ஹிšஉலFலோ¡
அலை(பெ.) ஹிலோல் உழுந்து உடத்
ஆகு ஹோ எதோள்ஜித®
ஆம் ஹாம் ஏ(கு) யா-ஜா
இத்தனை இத்னா ஐயோ ஹாய்
இதோள் இதர் ஓரம் ஓர்
இட்டிகை ஈண்ட்டா கட்டில் காட்
(உத்தனை) உத்னா கட்டை காட்
உதடு ஓண்ட் கடி காட்
கடு கடா சும்மா சுப்
(கடுமையாய்) சூலம் சூல்
கடு கடுவா (சல்)-செல் சல்
(கசப்பாய்)செப்புலு(தெ.)சப்பல்
கடு கட்டா (புளித்த) செவ்வை சாவ்
கலை கலா சோடி ஜோடி
கழுதை கதா சோடி(வி.) ஜோட்
களம் கலா சோம்பு சோ (தூங்கு)
(தொண்டை) சோளி, ஜோல்னா
கன்னல் கன்னா (கரும்பு) சோளிகை,
காகம் கௌலா தடி சடீ
கால், காலம் கால் தண்தண்டா
காள் காலா (கருப்பு) தண்டம் தண்ட
கிழான் கிஸான் தண்டனை தண்டன
குதி கூத் தத்தை தோத்தா
குயில் கோயல் தயிர் தஹீ
கூவி(யாள்) கூலீ தா தேவ்
கொச்சு குச் தாதை தாதா
கொட்டறை கொட்ரீ தாள், தாழ் தாலீ
கோ காய் (ஆவு) (திறவு கோல்)
கோட்டை கோட்துவை(வி.) தோ
கோரம் கோடா தேவு, தேவன் தேவ்
கோலி கோலீ நாடகம் நாட்டக்
சப்பட்டை சப்ட்டா நாடி நாடீ
சமையம் சமய நாரங்கம் நாரங்கீ
சவை(வி.) சபா நாவாய் நாவ்சற்Wசரh (z)நீல்,நீல«நீš
சாயுங்காலம் சாயம் நேரம் தேர்
சாலை சாலா நோக்கு தேக்
சிட்டு சிடா பக்கம் பகம்
(ஆண்குருவி) பக்கல் பகல்
சிட்டு(சிற்று) சோட்டா பட்டி பட்டீ
சில்(ஈரம்) சீல் பட்டினம் பட்டன
சிறுத்தை சீத்தா, சீட்டா பட்டை பட்டா
சீட்டு சீட்டு படி(கீழிரு) பைட்
சீரகம் ஜீரா படி பட்(வாசி)
சுக்கு சூக் படு(தல்) பட்
சுண்டி சோண்ட் படு படா(பெரிய)
(சுக்கு)பண்(வி.)பன்
பதம் பாத்(சோறு)முடவு(வி.)மோடு (வளை)
பழம் பல் முண்டனம் முண்டன
பறை பர் (செட்டை) முண்டா மோண்டா
பித்தளை பீத்தல் (தோள்)
பிள்ளை பில்லா (குட்டி) முண்டு K©l-Stump
பற்று பீட்(முதுகு) முண்டேறி மூண்டேரோ
பீர் பீலா(மஞ்சள்) முத்து மோத்தீ
புகர் புரா முரசு முரஜ
புகல் nghš(b) முரப்பு முரபா
புருவம் பௌம் முள்(கு) மில்(வி)
பூ பூல் முள்ளங்கி மூலீ
பூதம் பூத் மூக்கு நாக்
பெட்டி பேட்டக தோள் தோ
மடி மரி-மர் மெல் முலாயம்
மந்தி(பெண் பந்தர் மோடு,மோட்டு மோட்டா
குரங்கு) (குரங்கு) மோடு போட்-பேட்
மந்திரம் மந்திர் (வயிறு)
(கோயில்) மோய் மாய்(தாய்)
மயில் மோர் (உம்+ஆய்)
மயிலை பைல் வலம் பல
மனம் மன் வா ஆ
மாதம் மா வாங்கு(வளை) பாங்க்
மாலை மாலா வாலுகம் பாலுக்
மாறு(அடி மார் விட்டி டிட்டீ
மிளகு மிர்ச் விடை-விடாய் படாய்
மீசை முஞ்ச் விதை பீஜ்
முகம் மூ வெண்டை பிண்டீ
முகரை முக்ரா வேம்பு நீம்பு
முட்டி முட்டீ
இவற்றுட் பல சொற்கள் மராத்தி வடிவிலேயே இருத்தலை நோக்குக.
முறைப்பெயர்கள்
தமிழ் திரவிடம் இந்தி
அத்தன் (தந்தை)அச்சன்(ம.) ஆஜா (பாட்டன்)
ஆஞா (தந்தை) அஞ்ஜெ(து.)
அம்மை, mம்மா mம்மா,kம்,km¥g‹, அப்பா அப்பா, பாப்
அன்னை அன்னா, அன்னீ (செவிலி)
தாத்தா, தாதை தாத
பிள்ளைபிட்ட(தெ.) பேட்டா (மகன்)
பேட்டீ (மகள்)
மாமன், மாமா மாமா
மாமி மாமீ
சில தென்சொற்கள் திராவிடத்தினின்று இந்தியிற் புகுந்துள்ளன.
எ.டு.
தமிழ் திராவிடம் இந்தி
ஆகு(உண்டாகு) ஆகு(ஆயிரு) ஹோ
களி(மகிழ்) fளி(விளையாடு)nகல்bfL செடு ஸடு
கூராக்கு (கறிவகை) குராக் (உணவு)
செடி செட்டு (மரம்) ஜாடு
செருப்புக்கள் செப்புலு சப்பல்
(பிள்ளை) பில்லி (பூனை) பில்லீ
மூவிடப்பெயர்கள்
தமிழ் இந்தி
தன்மையொருமை நான் மைன்
தன்மைப்பன்மை நாம் ஹம்
முன்னிலையொருமை நூன் தூ
முன்னிலைப்பன்மை நூம் (நும்) தும்
நூன் (நீ), நூம் (நீர்) என்பன நீன், நீம் என்பனவற்றின் மூலமா யிருந்து வழக்கற்றுப்போன தமிழ் முன்னிலைப் பெயர்கள். நுன், நும் என்பன அவற்றின் வேற்றுமையடிகள் (Oblique Bases). இவையே மராத்தி, இந்தி முதலிய மொழிகளில் து, தும் எனத் திரிந்து, எழுவாய் வேற்றுமைப்பெயர்களாக வழங்கிவருகின்றன. தொல்காப்பியர் இருவகை வழக்கிற்கும் மாறாக, நெடுமுதல் குறுகிய நும் என்னும் திரி வேற்றுமையடியை எழுவாய் வேற்றுமைப் பெயராகக் கூறியிருத்தலால் (தொல். 325, 326, 623). அவர் காலத்தில் (கி.மு. 7 ஆம் நூற்றாண்டு) மராத்தி திரவிட மொழியாகக் கருதப்பட்டிருக்கலாமென்றும். அதில் நும் என்னும் வடிவம் முன்னிலைப் பன்மை முதல்வேற்றுமைப் பெயராக வழங்கியிருக்கலாமென்றும், கருத இடமுண்டு. நகரம் தகரமாகத் திரிவது இயல்பே.
எ.டு.
நீர்-தீர் (பி.) நேரம் - தேரம் (கொச்சைத்தமிழ்).
நேரம் - தேர் (இ.). நோக்கு - தேக் (இ.). திருமான் ஸ்ரீமத் (வ.).
படர்க்கைப்பெயர்கள்
ஒருமை பன்மை
அண்மை: யஹ் (இவன், இவள், இது) யே (இவர்கள், இவை)
சேய்மை : வஹ் (அவன், அவள், அது) வே (அவர்கள், அவை)
வோ என்பது சேய்மை ஈரெண்ணிற்கும் பொது. யஹ் என்பது ஏ என்றும், வஹ் என்பது ஒ என்றும் உலக வழக்கில் வழங்குகின்றன.
திரிவேற்றுமை யடிகள்
யஹ் - இ யே - இன்
வஹ் - உ வே - உன்
இவ்வமைதியினாலும், ஹிதர் உதர் என்னும் சுட்டுப்பெயர் களாலும், இந்தியில் அண்மைச்சுட்டுச் சொற்கள் இசுரவடி யினின்றும் சேய்மைச்சுட்டுச் சொற்கள் உகரவடியினின்றும், பிறந்திருப்பதைக் காணலாம். முன்மை குறுஞ்சேய்மை யாதலின், உகரச்சுட்டு வடநாவலம் என்னும் முதுவட திரவிடத்தினின்று திரிந்த மொழிகளில், சேய்மைச்சுட்டாக வழங்குகின்றது.
குறிப்புச்சொற்கள்
தமிழ் இந்தி குறிப்புப்பொருள்
ஆ ஆ வியப்பு
ஏ ஏ வியப்பு
ஆகா ஆஹா வியப்பு
ஓ கோ (கழிவறிவு) ஓ ஹோ இரக்கம்
ஏ ஹே விளி
ஓ ஹோ விளி
ஐயோ ஹாய் இரக்கம், அச்சம் முதலியன
ஐயையோ ஹாய் ஹாய் இரக்கம், கலக்கம் முதலியன
சீச்சீ சீச்சீ வெறுப்பு
வழக்கற்ற வினைச்சொற்கள்
சில வினைச்சொற்கள் தென்னாட்டில் வழக்கற்று வடநாட்டில் வழங்கி வருகின்றன.
எ.டு.
தமிழ் இந்தி
(கத்து-தல்) காட்-னா (வெட்டுதல்)
(பட்டு-தல்) பீட்-னா (அடித்தல்)
கத்து - கத்தி = வெட்டுங்கருவி. பட்டறை (பட்டு அறை) = கொல்லர் தட்டும் அறை அல்லது கூடம்.
சில இந்திச்சொற்கள் தமிழ்ச்சொற்களின் கொச்சை வடிவா யிருக்கும்.
எ.டு.
இப்ப-அப் (இப்போது)
அப்ப-தப் (அப்போது)
எப்ப-ஜப், கப் (எப்போது)
வேற்றுமை யுருபுகள்
4 - ஆம் வேற்றுமை யுருபு
கு (த.) - கோ (இ.)
எ.டு. ராம்கோ = இராமனுக்கு.
7 - ஆம் வேற்றுமை யுருபுகள்
புரம் (த.) = மேல், புரம் - பரம் - பர் (இ.)
எ.டு. மேபர் = நிலைமேடையின் மேல்.
உம்பர் (த.) - ஊப்பர் (இ.). உம்பர் = மேல்.
எ.டு. மந்திர்கே ஊப்பர் = கோயிலுக்குமேல்.
ஓரம் (த.) - ஓர் (இ.)
எ.டு. கர்கே ஓர் = வீட்டோரம்.
பால் - பா (இ.). கம்லாகே பா = கமலாவினிடத்தில்.
பிற்றே - பீச்சே (இ.) பீச்சே தேக்கோ = பின்னால் பார்.
பாலீறுகள்
பெண்பாலீறுகள்
இ = சு எ.டு. பேட்டீ
அன்னி-அனி=அனீ எ.டு. தேவரானீ
அனீ - னீ எ.டு. மோர்னீ
அனி - இனி = இனீ எ.டு. வாமினீ
முதற்காலத்தில் நெடில்களே வழங்கிவந்தமையை, வடநாவல பெண்பாலீறு ஒருவாறு உணர்த்தும்.
பலர்பாலீறு
உலகு - உலகம் = மாநிலம், மக்கட்டொகுதி, மக்கள்.
உலகம் - லோர் (இ.).
உலகம் என்னும் சொல் மக்கள் என்னும் - பொருளிற் பலர் பாலீறாய் வரும்போது, இந்தியில் log என்று எடுப்பொலி கொள்ளும்.
எ.டு. ஹம்லோக் = நாங்கள், தும்லோக் = நீங்கள்.
இலக்கண அமைதிகள்
இறந்தகால வினைமுற்றும் எச்சமும்
தமிழிற் செய்யா என்னும் வாய்பாட்டு ஆவீற்று வினைச் சொல், இறந்தகால வினையெச்சமாகும். இந்தியில் இவ்வாய்பாட்டுச் சொல் இறந்தகால முற்றும் எச்சமுமாகும்.
எ.டு.
முதனிலை இ.கா. முற்றும் எச்சமும்
ஆ = வா ஆயா = வந்தான், வந்து.
போல் = சொல் போலா = சொன்னான், சொல்லி.
செய்து என்னும் வாய்பாட்டுச்சொல், தமிழில் ஒரு காலத்தில் முற்றாகவும் இருந்ததுபோன்றே, செய்யா என்னும் வாய்பாடும் இருந்திருக்கலாம்.
ஜாத்தா ஹை, போல்த்தா ஹை முதலிய நிகழ்கால இந்திவினை முற்றுக்கள். போத்தாடு, செப்புத்தாடு முதலிய தெலுங்கு நிகழ்கால வினை முற்றுக்களை ஒரு மருங்கு ஒத்தமைந்திருத்தல் காண்க.
முன்னிலை வினை
இய என்னும் தமிழ் வியங்கோளீறு, இந்தியில் இயே என்னும் மதிப்புற வேவலீறாகத் திரிந்துள்ளது.
எ.டு. போலியே = சொல்லுங்கள், சொல்லுக.
கூடாது என்று பொருள்படும் ஒல்லாது என்னும் தமிழ் எதிர்மறை வினைச்சொல், தெலுங்கில் ஒத்து - வந்து எனத் திரியும். அது பின் இந்தியில் மத் எனத் திரிந்துள்ளது.
எ.டு. போகவத்து = போகவேண்டாம் (தெலுங்கு)
ஜாமத் = போகவேண்டாம் (இந்தி)
தொழிற்பெயரும் நிகழ்கால வினையெச்சமும்
தமிழில் அல் ஈற்றுத் தொழிற்பெயர் வியங்கோள் என்னும் ஏவல் வகையாகவும் பயன்படுவதுபோல், இந்தியில் னா ஈற்றுத் தொழிற்பெயர் ஏவலாகவும் ஆளப் பெறுகின்றது.
எ.டு. கர்னா = 1. செயல் (செய்கை) - தொழிற்பெயர்.
2. செய், செய்யுங்கள் - ஏவல்.
இனி, கர்னா அல்லது அதன் திரிபான கர்னே வாய்பாடு எதிர்கால வினையெச்சமாகவும் இந்தியில் வழங்குவது, செய்ய வேண்டும் என்னும் பொருளில் செய்யல் வேண்டும் அல்லது செயல் வேண்டும் என்பது, தமிழில் வழங்குவதை ஒருபுடை ஒத்ததே.
செயப்படுபொருள் குன்றாவினை முதனிலைகள்
இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினை முதன் நிலைகள், ஆவ் (வா) ஜாவ் (போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறந்தகால வினையெச்சப் பொருள்படும். இதில் கர் என்னும் இறந்தகால நிறைவு வினையெச்ச வீறு தொக்கதாகக் கொள்ளப் பெறும்.
எ.டு. ஸூன் = கேள். ஸூன்ஜாவ் = கேட்டுவிட்டுப் போ.
தேக் = பார். தேக் ஆவோ = பார்த்துவிட்டு வாரும்.
தமிழில் எல்லா வினை முதனிலைகளும் வா. போ என்னும் ஏவலொருமையுடன் கூடி நிகழ்கால வினையெச்சப் பொருள் படும்.
எ.டு. செய்வா = செய்யவா, பார்போ = பார்க்கப்போ - இருவா = இருக்கவா, விழுபோ = விழப்போ.
மாறு என்னும் இடைச்சொல்
மாறு என்னும் இடைச்சொல், ஏகார ஈறேற்றுக் கழகச் செய்யுட்களில் ஏதுப்பொருளில் வழங்குகின்றது (புறம். 4, 20, 22, 92, 271, 380, நற். 261).
அனையை யாகன் மாறே (புறம். 4)
இதற்குப் பழைய வுரையாசிரியர் அத்தன்மையை யாதலால் என்று பொருளுரைத்து, மாறென்பது ஏதுப் பொருள்படுவதோர் இடைச்சொல் என்று இலக்கணக் குறிப்பும் வரைந்துள்ளார். சேனாவரையர் மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண் வரும் மாறு என்றும், நச்சினார்க்கினியர் மாறென்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்திநிற்றலின் என்றும், இலக்கண விளக்க வுரையாசிரியர் மூன்றாவதன் பொருளவாய் வரும் மாறு என்றும், உரைத்துள்ளனர்.
இந்தியில் கே என்னும் உருபொடு சேர்ந்து வரும் மாரே என்னுஞ்சொல், ஏதுப்பொருளிடைச் சொல்லாகவே வழங்கு கின்றது.
எ.டு. உ ஆத்மீகே மாரே = அந்த மாந்தனாலே.
இ பத்பூகேமாரே = இத் தீ நாற்றத்தினால்.
சொற்றொடர் அமைதிகள்
அடுக்குக்குத்தொடர்.
கர்கர் = வீடுவீடாய்.
ஜப்ஜப் … தப்தப் = எப்போதெப்போது … அப் போதப்போது.
காத்தே காத்தே = சாப்பிட்டுச் சாப்பிட்டு.
சொன்முறை
எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை என்னும் முறையிலேயே இந்திச் சொற்றொடர்களும் அமைந்துள.
எ.டு. ராம் பாத் காத்தாஹை.
இராமன் சோறு உண்கிறான்.
செயப்பாட்டுவினை இந்தியில் அரசி வழங்குகிறது.
மரபுத் தொடர்
தாந்த் கட்டேகர்தோ = பல்லைப் பிடுங்கிவிடு, செருக்கடக்கு.
ஜான்லேக்கர் பாக் = உயிரைக் கையிலேந்திக் கொண்டு ஓடு.
பழமொழிகள்
தமிழ் இந்தி
ஆடமாட்டாத தேவடியாள் நாச்சை ந ஆவே அங்கணவே டேட்
கூடங்கோணல் என்றாளாம்
ஆண்டிகள் கூடி மடங்கட்டி பகுத்ஸேஜோகி மட் உஜாட்
னாற் போல்.
ஒருகை தட்டினால் ஓசை ஏக் ஹாத்ஸே தாலீ நஹீன் பஜ்தீ.
கேட்குமா?
ஓர் உறையில் இருகத்தியா? ஏக் மியான்மே தோ தல்வார் நஹீன்.
கழுதை குதிரை யாகுமா? நஹீன் கதாபீ கோடா பன் சக்தாஹை
காரியம் முடியும் மட்டும் கழுதை ஸரூரத்கே வக்த் கதேகோபீ
கழுதை கையும் காலை பாப் பனானா பட்தா ஹை
பிடிக்க வேண்டும்.
குத்து விளக்கிற்கும் சிராக் தலே அந்தேரா.
குண்டிக்கும்கீழ் இருட்டு.
சேதாவை (பசுவை) க்கொன்று காய் மார்க்கர் ஜூத்தா தான்.
செருப்பைத் தானம் செய்ததுபோல்.
அறத்திற்கு (புண்ணியத்திற்கு)க் தான்கீ பச்சியா கா தாந்த்
கொடுத்த மாட்டைப் பல்லைப் நகீன்தேக்கா ஜாத்தா
பிடித்து (பதம்) பார்க்கிறதா?
விளக்கைப்பிடித்துக் கொண்டு ஜான்பூஜ்கர் குவேம்மே கிர்னா.
கிணற்றில் விழலாமா?
இதுகாறும் காட்டியவற்றால், இந்தியின் மூலமொழி வடதிரவிட மாகவே யிருந்திருத்தல் வேண்டு மென்றும், சேய்மையினாலும் காலக்கடப்பினாலும் அது நாளடைவில் ஆரிய வண்ணமாய் மாறிவிட்டதென்றும், உய்த்துணர்ந்து கொள்க.
12. வடதிரவிட மொழிகள் ஆரியமாய் மாறியமை
1906 - ஆம் ஆண்டு இந்திய மொழியாய்வுக்கணக்கு (Linguistic Survey of India) எடுத்த கிரையர்சன் துரைமகனார், அரைத்திரவிட நடைமொழிகள் (Semi-Dravidian Dialects) என்னும் தலைப்பின் கீழ்ப்பின்வருமாறு வரைந்திருப்பது. திரவிடருக்கும் தமிழருக்கும் ஓர் எச்சரிக்கையாயுள்ளது.
வட இந்தியாவிலுள்ள பல திரவிட மரபினர் தத்தம் இன மொழியை விட்டுவிட்டு ஏதேனுமோர் ஆரிய நடை மொழியைப் பேசிவருகின்றனர். ஹலபீ எனப்படும் மொழி இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. அது இவ்வாய்வுக் கணக்கில் மராத்தியொடு சேர்த்துக் கூறப்படும். அது மராத்தியினாலும் சத்தீசகடியினாலும் மிகுதியும் தழுவப்பட்ட கலவைமொழி.
இங்கு, அதுபோன்ற நடைமொழிகளுள் இரண்டைத் திரவிடக் குடும்பத்திற்குப் பிற்சேர்க்கையாகக் குறிப்போம். இதனால் அத்தகைய மொழிகளில் ஆரியத்தின் தாக்குறவு எத்துணை நிறைவாகவுள்ளதென்பதை, மாணவன் அறிந்துகொள்ள முடியும். அவ்விரு நடைமொழிகளும் அமரவோத்தியைச் சேர்ந்த லதாடி அல்லது ரத்தாடி எனப்படுவதும், நரசிங்புரத்திலும் சிந்து வாரத்திலும் பேசப்படும் பரியா எனப்படுவதும், ஆகும். இவ் வாய்வுக்கணக்கிற்காகத் தொகுக்கப்பெற்ற குறிப்பின்படி, அவற்றைப் பேசுவோர் தொகை வருமாறு :
லதாடி (Ladhadi) 2,122
பரியா (Bharia) 330
மொத்தம் 2,452
இவ்விரு நடைமொழிகளும் முன்பு கோண்டியோடு (Gondi) சேர்க்கப் பட்டிருந்தன. எனினும், இன்று அவை முற்றும் ஆரிய வண்ணமாய்விட்டன.
வடதிரவிடத்தின் ஆரியக் கருநிலை இந்திச்சொற்களும் சொற்றொடரமைதி களும்
வட திரவிட மூலமொழி இன்றின்மையால், அதன் நெடுஞ் சேய்மைக் கான் முளைகளுள் ஒன்றான இந்தி இங்குக் காட்டப் பெறுகின்றதென அறிக.
1. சில சொற்கள்
மூவிடப் பெயர்கள்
தமிழ் இந்தி மேலையாரியம்
தன்மை நான் மைன் OS mi, me, E me, my, Skt mam,
யொருமை முஜ், மே mama.
(வே,அடி)
முன்னிலை நான் தூ OS, OE, ON, hethra, L tu, Et
யொருமை hou, Skt tvam.
சுட்டுச்சொல்
அண்மை இதோள் ஹிதர் OE hider, ON hethra, Goth
இதோளி hidre, E hether, L citra, Skt atra
சேய்மை அதோள் உதர் OE thider theaeder, E thither,
அதோளி Skt tatra
வினாச்சொல்
எதோள் எதோளி கிதர் OE hwider, E whither, Skt
ஜிதர் katra
பொதுச்சொல்
உம்பர் உப்பர் E upper, over, OE ofer, OS
obar, OHG ubar, ON yfir Goth
ufar, L super, Gk huper,
Skt upari
ஏ-ஏகு யா-ஜா OS, OE, gan OHG gan, gen,
Skt gam, gac
களம் கலா L gula, OF gole, E
(தொண்டை, கழுத்து) Skt kantha.
குத்து-கத்து காட் ME cuthe, kitte, kette,
(-கத்தி) Sw kata, kutta, E cut.
சுக்கு சூக் L. siccare (to dry)
தாதா-தாதை தாதா E dada daddy, dad. da. Skt tata.
euªj«-ehuªj«- Ar., naranj. OF., ME.,
நாரத்தை நாரங்கீ E. ornge.
புகர் புரா OS, OHG, OE brun, ON
brunn, E brown.
மடி மரி-மர் L. mori (to die), OE
morthor, E murdor (n.),
Goth maurthr.
கத்து என்பது சுத்து என்பதுபோல் ஒரு வழக்கிறந்த வினை.
சுத்து - சுத்தி - சுத்தியல்.
(2) புணர்ப்பு வினை (Copula)
இரு (be) என்னும் வினை எழுவாயையும் பயனிலையையும் இணைக்கும் புணர்ப்பு வினையாம்.
இது என்றே குதிர யாணு (ம.). ஆகுன்னு - ஆணு.
ஆ மாஜா கோடா ஆஹே. (மரா.)
யஹ் மேரா கோடா ஹை. (இ.).
This is my horse. (E.)
தமிழிற் புணர்ப்பு வினை வராது. எ.டு. இது என் குதிரை.
3. பெயரெச்சம் பாலீறு பெறல்
எ.டு. m¢rh (M.gh.), அச்சி (பெ. gh.), அச்சே (ப. பா.) இம் மூவடிவும் நல்ல என்று பொருள்படும் குறிப்புப் பெயரெச்சம்.
4. பெயர்ச்சொற்கள் ஈறுபற்றிப் பாலுணர்த்தல்
எ.டு. கர் (வீடு), பானீ (நீர்) - ஆண்பால் காடி (வண்டி), புதக் (பொத்தகம்) - பெண்பால்.
5. வினாச்சொற்கள் ககர முதல வாதல்
எவ்-வெ-கெ கித்னா = எத்துணை (எவ்வளவு), கஹான் = எங்கே.
L. quid (what), quot (how many), Skt. kim (what), kat (which).
இக் ககர முதல் மராத்தியிலேயே தொடங்கிவிடுகின்றது.
6. எதிர்மறைத் துணைவினை தலைமைவினைக்கு முன்வரல்
எ.டு. கபீ மத் ஜானா.
வஹ் நஹீன் ஆத்தா ஹை.
7. நேரல் கூற்றிணைப்புச் சொல் கூற்றிற்கு முன்வரல்
எ.டு. உனே கஹாகி மைன் கல் ஆவூம்.
மேலையாரியம்
வட திரவிடத்தைப் பேசிய வடநாவல மக்கள். வடமேற்காகச் சென்று மேலையாசியாவிற் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பியும் நண்ணிலக் கடற்கரை நாடுகளில் வாழ்ந்த ஆரிய நாகரிகத்திற்கு அடிகோலியும், பல்வேறு நாட்டினங்களாய்ப் பிரிந்து போயினர் என்பது, மொகெஞ்சோதரோ - அரப்பா நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்குமுள்ள ஒற்றுமையாலும், நண்ணிலக் கடற்கரை நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கட்கும் தமிழர் பழக்க வழக்கங் கட்குமுள்ள ஒப்புமையாலும், மேலையாசிய மொழிகளிலும் வட ஆப்பிரிக்க மொழி களிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வழங்கும் தமிழ்ச்சொற்களாலும், அறியப்படும்.
வடமேலை யாப்பிரிக்காவைச் சேர்ந்த கானாமொழியிலும், வா, போ, தூக்கு முதலிய தமிழ்ச்சொற்கள் அடிப்படைச் சொற்களாய் அமைந்திருப்பது, மிகக் கவனிக்கத் தக்கதாம்.
மொகெஞ்சோதரோ முத்திரையெழுத்துக்கள் தமிழெழுத்துக் களின் மூல வடிவைக் காட்டுகின்றனவெனின், அது அவை தமிழெழுத்துக்கள் வளர்ச்சியடையாத நிலையில் வடக்கே சென்ற தமிழர் கையாண்ட எழுத்துமுறை என்பதை யல்லது, தமிழர் வடக்கினின்று தெற்கே வந்தார் என்று உணர்த்தாது. மேனாடுகளிற் செய்யப்பெறும் புதுப்புனைவுகளின் (Inventions) பழைய அமைப்புக்கள் இந்தியாவில் வழங்கிவருவதும், அது இந்தியரே அவற்றைக் கண்டுபிடித்தார் என்று காட்டாமையும், காண்க.
ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பிய மொழிகளுள், வடமேற்கோடியில் வழங்கிவரும் தியூத்தானிய (Teutonic) மொழிகள், சிறப்பாக ஆங்கில சாகசனியம் (Anglo-Saxon), தமிழுக்கு மிக நெருங்கியிருக்கின்றன. அந்நெருக்கத்தைக் காட்டும் சான்றுகள் வருமாறு :
1. விழுத்தம் பெரும்பாலும் முதலசையில் விழுதல்.
2. தனிக்குறிலையடுத்தமெய் உயிரொடு புணரின் இரட்டல்.
3. இருமையெண் இன்மை.
4. வினைகள் துவ்வீறொத்த ஈற்றால் இறந்தகாலங் காட்டல், எ.டு. walked, told, burnt.
5. திய்யொத்த முன்னிலை யொருமையீறு பண்டை யாங்கில வழக்கி லிருந்தமை.
எ.டு. நீ யிருத்தி - Thou art.
6. சில அடிப்படைச் சொற்கள் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் பொதுவாயிருத்தல்.
7. ஆரியத்திலுள்ள தமிழ்ச்சொற்களைப் பொதுவாக ஆங்கிலமே தமிழுக்கு நெருங்கிய வடிவிற்காட்டல்.
தியூத்தானியத் தமிழ்ச்சொற்கள்
எ.டு. கூ, கூவு - Coo, fiu-cry, CŸ-Cis-howl, fid-neigh, பிளிறு **lare, cuW-roar.
எல்ல-எல்லா - hallo
இதோ - to, அதோள் - thider, இதோள் - hider, எதோள் - whider, ஆன் (அங்கு) - yon, ஆண்டு - yond, yonder.
சப்பு - sup, sip, தின் - dine, விக்கு - hiccup, துப்பு - spit, இரு - are, is, ஈன் - ean, yean, பிறந்தை - birth, துருத்து - thrust நாடு - OE neod, E need.
m«kh - ma, mamma, m¥gh - pa, papa, jh - da, jh jh - jhij - dada, daddy, dad, kf‹ - magus (Gael.), mac (E), குரு-கரு (குழவி - gor (LG), குருளை - gurle (ME), girl (E), குட்டி - kid, kiddy, குழந்தை - cild (OE) child (E), சிறுக்கன் சிக்கன் - cicen (OE) , chicken (E), பையன் - ME boi, E boy.
yhyh - yhyh£L - jhyh£L - lull - lullaby (E), lulla (Sw.), lullan (Du.).
உதள் - F wether, OS withar, OHG widar, ON vethr, Goth, withrus, புல்லம் - bull, பூசை - puss, pussy, கொத்தி (க.) - cat, VHf« - elk, elke, fst‹ (fl¥gh‹) - OE crabba, E crab, Mdu., MLG krabbe, ON krabbi, சுறவு - shark, நாகம் - E snake, OE snaca, MLG snake, ON snakr, snokr.
எல்லாம் - OE eall, all, E all, ஏர் - AS ear (to plough), தாங்கல் (ஏரி) - tank, பார் (கம்பி) - bar, மெது - OE smoth, E smooth, புகை - OE smoca, E smoke, மைந்து - OE miht, OS, OHG maht, Goth mahts.
படி (உடம்பு) - OE bodig, E body, குரல் - ME crawe, E craw, MDu, craghe, MLG krage (neck, throat), புதல் (அரும்பு) - ME budde, boddle E bud. அல்-அன் (எதிர்மறை முன்னொட்டும் இடைநிலையும்) - un, இல் (மனை, 7 ஆம் வே. உ.) inn, in, இல் (எதிர்மறை முன் னொட்டும் இடைநிலையும்) - in, அண் மேல், on, உம்பர் - up, upper, over, துருவ - through.
அஃகு - ock (dim. saf.) இட்டு - et, ete, ette (dim. suf.) ஏர் - er (comp. suf.) எட்டு - est (su. suf).
15. சொன்மாற்றத் தொலைவுக்கணிப்பு (Glotto-telemetry)
ஆரியத்திற்கும் தமிழுக்கும் (திரவிடத்திற்கும்) சில சொற்கள் தாம் பொதுவாயிருக்கின்றனவென்றும், அவ்விரு குடும்பமொழி கட்கும் வேறு யாதொரு தொடர்புமில்லை யென்றும், பலர் கருதுகின்றனர். பல திரவிடச் சொற்கள் ஆரியத்தாற் கடன்மட்டும் கொள்ளப்பட்டனவேயன்றி, திரவிடக்கூறுகள் ஆரிய மொழியமைப்பிற்குட் புகவில்லையென்று, பேரா. பரோ தம் சமற்கிருத மொழி (The Sanskrit Language) என்னும் நூலிற் கூறியுள்ளார். இது தென்மொழி வடமொழித் தொடர்பைத் தலைகீழாக வைத்து ஆய்ந்ததன் விளைவாகும்.
ஒரு பெருந்தாய்மொழி இயற்கையாகப் பரவும்போது, ஆயிரங்கல் தொலைவிற்கொருமுறை அதன் பழஞ்சொற்றொகுதியில் ஏறத்தாழ மூன்றி லொரு பங்கை இழக்கின்றது. அதோடு புதுச்சொற்களும் புதிய சொல்லமைதி யிலக்கண வமைதிகளும் புகுகின்றன. இவ்வுண்மையை அடிப்படையாக வைத்து ஒரு மொழி தன் மூலமொழியினின்று எவ்வளவு தொலைவு விலகியுள்ள தென்றோ, எத்துணைத் திரிந்துள்ள தென்றோ, கணிக்கவியலும், இதுவே சொன்மாற்றத் தொலைவுக் கணிப்பாம்.
ஐரோப்பிய ஆரியமொழிகள் தமிழினின்று பேரளவு திரிந் துள்ளதற்கு, அவை விலகிச் சென்றுள்ள சேய்மை அளவே கரணி யமாம். ஆயினும், இன்றும் அவற்றின் முன்னொட்டுக்களும் பின்னொட்டுக்களும் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களாகவே யுள்ளன.
எ.டு. கும் - கும்மல் L. cumulus. கும் - L. cum.
இக் கும் என்னும் சொல்லே, com, con, col, co என்று ஆங்கிலத்திலும், sym, syn, syl என்று கிரேக்கத்திலும், ஸம் என்று வடமொழியிலும், திரிந்து ஆயிரக்கணக்கான சொற்களைத் தோற்றுவித்துள்ளது. தமிழ்க்கூறு ஆரியச்சொல்லமைப்பிற் கலுந்துள்ளதென்பதற்கு, இஃதொன்றே போதிய சான்றாம்.
தமிழைத் தலைகீழாய் வைத்தாய்ந்த கால்டுவெலாரும், ஆரியத்திற்கும் திரவிடத்திற்குமுள்ள தொடர்பை அல்லது ஒப்புமையைப் பின்வருமாறு குறித்துள்ளார்.
1. கிரேக்க மொழியிலும் திரவிடத்திலும் னகரம் உடம்படு மெய்யாக வருகின்றது.
2. ஈரின மொழிகளிலும் படர்க்கைப் பகாப் பெயர்களும் வினைகளும் பாலீறேற்கின்றன.
3. படர்க்கை யொருமைச் சுட்டுப்பெயர் அல்லது ஒன்றன் பாற்பெயர், ஈரினத்திலும் தகரவீறு (d or t) கொண்டுள்ளது.
4. இலத்தீனிற் போன்று தமிழிற் பலவின்பா லீறு அகரமாகும்.
5. ஈரினத்திலும் அகரம் சேய்மையையும் இகரம் அண்மையையும் சுட்டும்.
6. பாரசீகத்திலும் திரவிடத்திலும் தகர இடைநிலை இறந்த காலங் காட்டும்.
7. முதனிலைமெய் இரட்டித்து இறந்தகாலங் காட்டுவது ஈரினத்திலு முண்டு.
8. ஈரினத்திலும் பலவினைகள் முதனிலை நீண்டு தொழிற் பெயராகின்றன.
இற்றைத் திரவிட மொழிகள்
தமிழினின்று திரிந்துள்ள திரவிடமொழிகள், பின்வருமாறு பன்னிரண்டெனச் சென்ற நூற்றாண்டிற் குறித்தார் கால்டுவெல்.
திருந்திய மொழிகள்
1. மலையாளம் 4. துளு (துளுவம்)
2. தெலுங்கு 5. குடகு (குடகம்)
3. கன்னடம்
திருந்தாத மொழிகள்
1. துடவம் 2. கோத்தம்
3. கோண்டி 4. கொண்டா அல்லது கூ
5. ஒராஒன் 6. இராசமகால் அல்லது மாலெர்
7. பிராகுவீ
இந்நூற்றாண்டில், பேரா, பரோவும், பேரா, எமனோவும் இற்றைத் திராவிட மொழிகள் மலையாளம், கோத்தம், துடவம், குடகம், துளுவம், கன்னடம், தெலுங்கு, கோலாமி, நாய்க்கீ, பரிசி (பர்ஜி), கடபம், கோண்டீ, கொண்டா, கூய், குவீ, குருக்கு, மாலத்தோ, பிராகுவீ எனப் பதினெட்டாகக் கணக்கிட்டுள்ளனர்.
திரவிடமொழிகள், பொதுவாக, வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் சிதைந்தும் குன்றியும் இலக்கியமின்றியும் தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியங்கொண்டும், இருக்கும்.
மலையாளம் தென்னாட்டு மொழியும் பழஞ்சேர நாட்டுத் தமிழின் திரிபுமாயினும், துஞ்சத்து எழுத்தச்சனின் அடிமைத் தனத்தால், பிற திரவிடமொழிகளினும் மிகுதியாகவும் அளவிறந்தும் ஆரிய வண்ண மாக்கப்பட்டது.
தமிழ் தோன்றிய இடம்
தமிழின் பிறந்தகம் முழுகிப்போன குமரிக்கண்டம் என்பது, முக்கழக (முச்சங்க) வரலாற்றாலும், சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையாலும், (P.T.) சீநிவாசையங்கார், சேசையங்கார், இராமச்சந்திர தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று, நூல்களாலும், என் முதற்றாய் மொழி முன்னுரையாலும், தெள்ளத் தெளியத் தெரிந்தது.
தமிழ் தோன்றிய இடம் குமரிக் கண்டமே என்பதற்குச் சான்றுகளாவன :
1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந்தேயத்திற்குள்ளேயே, வழங்குதலும்; தென்மொழி வடக்கே செல்லச் செல்ல ஆரியப்பாங்கில் வலுத்தும் உருத் தெரியாது திரிந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கே வர வர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கியமுற்றும் செறிந்தும்; இருத்தல்.
2. நாவலத் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென் சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தல்.
3. தென்மொழிக் குடும்பத்தைச் சேர்த்த தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய நாள்பெருமொழியுள் முழுத் தூய்மை யுள்ள தமிழ் தென்னாட்டில் தென்கோடியில் வழங்குதல்.
4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச் செல்லத் தமிழ் திருந்தியும் சிறந்தும் இருத்தலும் நெல்லை வட்டாரத்தில் சொல்வளம் மிகுதலும் சொற்கள் தூய எளிய முறையிலும் வழங்குதல்.
(திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்கும் இதை உணர்த்தும்).
தமிழ்நாடு, தமிழ்நாடர் என்று பாண்டியநாடும் பாண்டி யருமே பெயர் பெற்றனர்.
5. தமிழ், வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திராவிட மொழிகளிலுமுள்ள, வல்லொலிகளின்றி, முப்பான் பெரும் பாலும் எளிய பொலிவொலிகளைக் கொண்டிருத்தலும் எட்டும் பத்து, பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த தீவுகளிலும் வழங்குதல்.
6. தமிழ் முழு வளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட தலைக்கழகம் 49 நாடுகளைக் கொண்டு ஈராயிரங்கல் தொலைவு நீண்டிருந்த தென்கோடிப் பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும், குமரிக் கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அது வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமை.
7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிறதென் கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்கு நாடிருந்தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தல்.
8. பண்டைத் தமிழ்ச் செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள நீர் நாயும், உரையாசிரி யராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாகமேனியத் தீவில் (Tasmania) இன்றுமிருத்தல்.
9. வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்குகளும் நிலைத்திணை (தாவர) வகைகளுத் தவிர, மற்றெல்லாக் கருப் பொருள்களும், கால வகைகளும் நிலவகைளுமாகிய முதற்பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல். குளிர் நாட்டிற்குரிய கோதுமை வாற்கோதுமை முதலியனவும், பனிக்கட்டி உறைபனி முதலியனவும் தென்னாட்டில் விளையாமை; பண்டையிலக்கியத்துச் சொல்லப்படாமை.
10. மக்களின் நாகரிகத் தொடக்கத்தையுணர்த்தும் ஐந்திணை மக்கட் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாட்டாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுட்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், ஐந்தினை நிலப்பாகுபாடு தமிழ் நாட்டிற்போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைத்திராமை.
11. தமிழ் மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மை.
12. தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒரு சான்று மின்மை.
13. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்றமிழ், தென்னவன் (பாண்டியன்) தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளமை.
14. பண்டைத் தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றழைத் தமையும்; இறந்த முன்னோர் இடம் தென்புலம் தென்னுலகு என்றும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் என்றும், பெயர் பெற்றிருத்தல்.
15. இலக்கணம் இலக்கியம் சொல்வளம் சொற்றூய்மை முதலிய எல்லா வகையிலும் தமிழ் திரவிட மொழிகளினுஞ் சிறந்திருத் தலும், தென்மொழி வளர்ச்சியின் முந்து நிலைகளையெல்லாம் தமிழே காட்டி நிற்றலும். தாய்மொழி வரலாற்றையும் இன வரலாற்றையும் வரைதற்கேற்ற சான்றுகளைத் தமிழே தாங்கி நிற்றலும்.
16. தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன். தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குக்களில், தென்றிசை முற்குறிக்கப் பெறுதல்.
17. எண்டிசைத் தலைவருள் வடபால் மூவர் தவிர ஏனைய தலைவர் குமரி நாட்டிற்கே பொருத்தமாயிருத்தல்.
(18)பெரும்பாலும் சொற்கள் கொத்துக் கொத்தாகவும் குலங் குலமாகவும் தொடர் தொடராகவும் அமைந்து தமிழிலேயே வழங்கி வருதல்.
(19)ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் ஈன் மருத்துவ வழக்கம் போல், தந்தை படுக்கை, குறவரிடை வழங்கியதாகச் சொல்லப் பெறுதல். குறத்தி பிள்ளைபெறக் குறவன் மருந்து குடித்தான்.
இவற்றை இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார் Stone Age in India, Pre-Aryan Tamil culture, History of the Tamils, Dravidian India, Pre-Historic South India, Origin and Spread of the Tamils, Tamil India முதலிய ஆங்கில நூல்களைப் பார்க்க
தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம்
குமரிநாட்டுச் சிவன் (சேயோன்) கோவில்களிற் குருக்கள் அல்லது பண்டாரம் என்னும் வகுப்பாரும், திருமால் கோவில்களில் நம்பிமார் என்னும் வகுப்பாரும், காளி கோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பாரும், பூசையும் பொது வழிபாடும் தனித் தமிழில் நடத்தி வந்தனர்.
திருக்கோவிற் பணிகளைக் கவனித்தற்கு, ஊர்தொறும் ஊரவைப் பிரிவான கோயில் வாரியம் என்னும் குழு விருந்தது. தலை நகர்களிலும் கோநகர்களிலும் உள்ள பெருங் கோவில்களில், அரசரின் நேரடி யாட்சிக்கு குட்பட்ட முது கேள்வி (Supervising officer), இளங்கேள்வி (Subordinate supervising officer) என்னும் ஈரதிகாரிகள் இருந்து வந்தனர்.
நீண்ட காலமாகப் புன்சிறு தெய்வங்களையே போற்றி வந்தவரும் கடவுளியல்பை யறியாதவருமான ஆரியர், கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் பின்னரே, மூவேந்தரையும் பல்வேறு வகையில் வயப்படுத்தி, ஆகமம், சங்கிதை, தந்திரம் என்னும் மூவகைத் தொழு மறைகளை இயற்றி, பிராமணரே திருக்கோவில்களில் வழிபாடு செய்து வருமாறு திட்டஞ் செய்து விட்டனர். தமிழர் கோவில்களில் ஆரியராட்சி புகுந்தது, கறையான் புற்றிற் பாம்பு குடி கொண்டது போன்றதே.
ஆதலால், எதற்கும் அஞ்சாதும் எவ்வெதிர்ப்பையும் பொருட் படுத்தாதும், பின் வருமாறு சீர்திருத்தங்களை உடனடியாகச் செய்வது தமிழ் நாட்டரசின் தலைமேல் விழுந்த தலையாய கடமையாம்.
1. கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல்.
2. அவ் வம் மத நம்பிக்கையும் தெய்வப் பத்தியும் கல்வித் தகுதியும் பணிப் பயிற்சியும் தூயவொழுக்கம் உள்ள, பல வகுப்பாரும் பூசகராக அமர்த்தப் பெறல்.
3. பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர்மரபு (Hereditariness) நீக்கப்படல்.
4. அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர் பதவியாரும் பொதுமக்களும் அரசரும், திருவுண்ணாழிகை யல்லாத கோவிலகத்துட் புகவுச் சீட்டுப் பெற்றுப் புகவிடல்.
5. பெருங் கோவில்களின் வருமானத்திலொரு பகுதியைப் பொது நலப் பணிக்குச் செலவிடல்.
6. அறநிலையப் பாதுகாப்புத் துறை யமைச்சர் கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருத்தல்.
7. உருவிலா வழிபாட்டைப் படிப் படியாகப் பொதுமக்களிடைப் புகுத்தல்.
கடவுள் எல்லார்க்கும் பொதுவான அன்பார்ந்த தந்தையாத
லாலும், கணக்கற்ற உலகங்களை யுடைமையாலும், அவருக்கு ஒரு தேவை யுமின்மை யாலும், அருமை மக்கள் போன்ற அனைத்துயிரும் இன்பமாக வாழ்வதே அவர் விருப்பாதலாலும், வாழ்க்கையி னின்று மதத்தை வேறாகப் பிரிப்பதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கடவுள் இருக்கையான கோவிலுக்குட் புகுவதைத் தடுப்பதும், கோவிற் சொத்து கோவிற் பணிக்கே செலவிடப்பட வேண்டு மென்பதும், கடவு ளியல்பை அறியாதவரும் அவருக்கு மாறானவருமான தன்னல வகுப்பாரின் செயலாதலின் அதைப் பொருட் படுத்தாது பொது நலப் பணியில் ஈடுபடல் வேண்டும்.
2. மதச் சமநோக்கு
சிவனியம், மாலியம், உலகியம் (லோகாயதம் அல்லது சார்வாகம்) என்னும் மூன்றே தொன்று தொட்டு வழங்கும் தமிழ மதங்க ளாயினும், இன்று வெளிநாட்டு மதங்களும் தமிழரிடைப் புகுந் திருப்பதாலும், அம் மதத்தாரைத் தமிழ ரல்லர் என விலக்கல் கூடாமையாலும், இற்றை முறைப்படி, சமணம், புத்தம், கிறித்தவம், இசலாம் என்னும் மதங்களையும் தமிழ் நாட்டு மதங்க ளாகவே கூறல் வேண்டும்.
உலகியம் ஒன்று மட்டும் உலகம் முழுமைக்கும் தொன்று தொட்டுப் பொதுவாகும்.
மதங்களெல்லாம், தேவியம் (Theism) அல்லது உள்ளியம் (ஆதிகம்), தேவிலியம் (Atheism) அல்லது இல்லியம் (நாதிகம்) என இரு வகைப்பட்டிருப்பதால், மதவியல் வாயிலாக மக்களை ஒன்று படுத்தல் இயலாது. அதனாலேயே, இந்திய ஒன்றியமும் (Indian Union) மதவியலைத் தழுவாது உலகியலையே (Secularism) தழுவியுள்ளது.
ஆகவே, தாய்மொழியொன்றே ஓரினப் பல மதத்தாரையும் ஒன்றாயிணைக்க வல்லதாம். ஆதலால், தமிழர் எம் மதத்தாரா யினும் தமிழைத் தாய்போற் பேணிக் காத்தல் வேண்டும். தமிழ் என்பது தனித் தமிழே. அயல் நாட்டு மதம் என்னுங் கரணியத் தால், அயன்மொழிச் சொற்களை ஆளுதல் கூடாது. தமிழ்மொழி பற்றியே தமிழர் என்னும் இனம் அமைந்திருப்பதால், தமிழ்ச் சொல்லை வழங்காதார் தமிழராகார். அயல் நாட்டு மதம் பற்றிய அயன் மொழிச் சொற்களை யெல்லாம் தமிழில்மொழி பெயர்த் தாள வேண்டும். நேர்த் தென்சொல் ஏற்கெனவே யில்லாவிடின், புதுச்சொல் புனைந்து கொள்ள வேண்டும்.
மதம் என்பது, காணப்படாத மறுமை நோக்கிய தாதலால், எல்லா மதங்களையும் சமமாக நோக்குதல் வேண்டும். ஒவ்வொரு மதத்தார்க்கும் தம் மதத்தைப் பிறர்க்கெடுத் துரைக்கவுரிமை யிருப்பினும், அது பற்றிப் பிற மதத்தாரை வெறுப்பதும் பகைப்பதும், மத நோக்கத்திற்கும் மாந்தன் தன்மைக்கும் முற்றும் மாறான தாகும்.
கடவு ளிருப்பது உண்மையாயின், அவரை நம்புவாரையும் நம்பாதாரையும் அவரே மறுமையிற் கவனித்துக் கொள்வார். இம்மையைப் பொறுத்த மட்டில், எல்லாரும் உடன் பிறப்பாக ஒன்றி வாழல் வேண்டும். அதுவே உயர்திணை யென்னும் மக்கட் டன்மை.
மாந்த ரியற்கை வேறுபாட்டு விளக்கம்
மாந்த ரெல்லாரும் ஒரே திணை யாயினும், நாகரிக வாழ்க்கையில் உணவு மட்டுமன்றி, உடை, உறையுள், கருவி, தட்டு முட்டு, ஊர்தி, மருந்து, இன்புறுத்தி, அறிவுநூல் முதலிய பல்வேறு பொருள்கள் தேவையாயிருப்பதால், அவற்றை யெல்லாம் உருவாக்குவதற்கு, அவர் அகக் கரணங்களும் புறக் கரணங்களும் இயற்கையிலேயே வெவ்வேறு வகைப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பொருளும் உழைப்பினாலேயே உருவாக்கப்படும். உடலுழைப் பும் மதியுழைப்பும் என உழைப்பு இருவகை. இருவகை யுழைப்பும் இன்றி யமையாதனவே. உடலுழைப்பாளிகள் உடல் வலிமையராகவும் மதியுழைப் பாளிகள் மதிவலிமையராகவும் பிறக்கின்றனர். இது இறைவன் ஏற்பாடு. இதையே ஊழ் (விதி) என்பர்.
எல்லாரும் மதி வலியராயின் உடலுழைப்பு நடைபெறாது. இதை, எல்லாரும் பல்லக் கேறினால் எவர் தூக்குவது? என்னும் பழமொழி உணர்த்தும். ஆயின், உடலுழைப்பாளியரைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்க்கு வேண்டிய வாழ்க்கைத் தேவை களைத் தர மறுப்பதும், கொடுமையும் அஃறிணைத் தன்மையும் ஆகும். உடலுழைப்பாளியரையும் உடன்பிறப்புப் போற் கருதி மதிக்க வேண்டு மென்பதையே,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
……………………………
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்தல் அதனினு மிலமே. (புறநா. 192)
என்று பாடி அறிவுறுத்தினார் கணியன் பூங்குன்றனார்.
உடலுழைப் பாளியர் தம் உரிமையைப் பெறும் பொருட்டே, காரல் மார்க்கசுவும் பிரெடிரிக்கு எஞ்சல்சுவும் சென்ற நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பட்டனர்.
தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை
1. பாங்கன் (Companion)
காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (கற்பு. 36)
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி …
களவிற் கிளவிக் குரியர் என்ப. (செய். 181)
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா …
தொன்னேறி மரபிற் கற்பிற் குரியர். (செய். 182)
இத் தொல்காப்பிய நூற்பா (சூத்திரம்)க்களால், முதன் முதலாகத் தமிழ்நாட்டிற் பார்ப்பனர் ஏற்ற அலுவல், பாங்கன் தொழிலே என்று தெள்ளத்தெளியக் கிடக்கின்றது. பாங்கனாவான் அரசர்க்கும், சிற்றரசர்க்கும் பாங்கிலிருந்து ஏவல் செய்து; மனைவியும் பரத்தையுமான இருவகை மகளிரொடுங் கூட்டுபவன். பார்ப்பனர் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று புறத்திணையியல் (19) நூற்பாவில் கூறியுள்ள படி ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்கள் செய்து வந்தாரேனும், அவை எல்லார்க்கும் எக்காலத்தும் ஏற்காமையின், பலர் அரசருக்குப் பாங்கராயமர நேர்ந்தது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில், இப் பொழுதையினும் வெண்ணிறமாயிருந்ததினால் அரசர்க்கு அவர்மீது விருப்ப முண்டாயிற்று.
களவிற் கூற்றிற்குரியாரைப் பற்றிய நூற்பாவில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்தது, முன்னவன் ஆரியனும். பின்னவன் தமிழனுமாவர் என்பதைக் குறித்தற்காகும். இவ் விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவர். சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன். முதன்முதல் பாணனுக்கேயுரிய தாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது.
இனி, பார்ப்பான் என்பவன் வேதமோதும் பார்ப்பானென்றும், பாங்கன் என்பவன் வேதமோதாப் பார்ப்பானென்றும் கொள்ளினும் பொருந்தும். வேதமோதி வேள்வி செய்யாத பார்ப்பான் வேளாப் பார்ப்பான் (அகம். 34) என்று கூறப்படுவன்.
பார்ப்பனர் ஆரிய வேதத்தைத் தமிழர்க்கு மறைத்து வைத்ததினாலும், அவ் வேதத்தை ஓதி, ஓதுவிப்பார்க்குப் போதிய ஊதியம் தரத்தக்க அளவு பெருந்தொகையினராய் அக்காலத்துப் பார்ப்பனர் இன்மையாலும், ஆரிய வேள்வி தமிழர் மதத்திற்கு மாறானதினாலும், முதன் முதலாய் வந்த பார்ப்பனர் பாங்கத் தொழிலே மேற்கொண்டனர் என்பது தெளிவு.
இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைக் காலத்தினரான தொல்காப்பியர் காலத்திலன்றிக் கடைக்கழகக் காலத்திலும் பார்ப்பனர் பாங்கத்தொழில் செய்தமை, கீழ் வருங் குறுந்தொகைச் செய்யுளால் அறியப்படும்.
குறிஞ்சி, 156
(பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது)
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
யெழுதாக் கற்பி னின்செய லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே (குறுந். 150)
(இது, கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது).
பிராமணனுக்கு வில்வம், பலாசம் (முருக்கு) இவ்விரண்டும், க்ஷத்திரியனுக்கு ஆல், கருங்காலி இவ் விரண்டும், வைசியனுக்கு இரளி, அத்தி இவ் விரண்டும் தண்டமாக (ஊன்றுகோலாக) விதிக்கப்பட்டிருக்கின்றன என்று மனுதருமசாத்திரத்திற் (3:45) கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
(2) ஆசிரியன்
அகத்தியர், தொல்காப்பியர் முதலிய பார்ப்பனர் தமிழைக் கற்றபின் தமிழாசிரியராயினர். இதை, போப் பெர்சிவல் (Percival) முதலிய மேனாட்டாரின் தமிழாசிரியத் தொழிலுடன் ஒப்பிடுக.
(3) பூசாரியன் (புரோகிதன்)
பார்ப்பனர் தமிழரின் மொழி, நூல், மதம் பழக்கவழக்கம் முதலியவற்றை யறிந்தபின், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்) முதலிய பழந்தனித்தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டிப் பழமைகள் (புராணங்கள்) வட மொழியில் வரைந்து கொண்டு மதத்திற்கதிகாரிகளாய்ப் பூசாரித் தொழில் மேற்கொண்டனர். இதுவே அவர்கள் குலத்திற்குத் தமிழ் நாட்டிற் பெருந்தலைமையும் நல்வாழ்வும் தந்ததாகும்.
(பழமை என்னுஞ் சொல் பழங்கதை என்னும் பொருளில், இன்றும் தென்னாட்டில் வழங்கிவருகின்றது. பழைய நிலையைக் குறிக்கப் பழைமை என்னும் வடிவமும், தொன்மை, முதுமை என்னும் பிற சொற்களும் உள.)
(4) அமைச்சன்
தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஒரோவோர் இடத்து, அருகிய வழக்காய் அமைச்சுப் பூண்டமை, மனுநீதிச்சோழன் கதையாலும் மாணிக்கவாசகர் சரித்திரத்தாலும் அறியப்படும். ஆனாலும், அது கல்வித்தகுதிபற்றி நேர்ந்ததேயன்றி, இராமச்சந்திர தீட்சிதர் தம் இந்திய ஆள்வினை அமைப்புகள் (Hindu Administrative Institutions) என்னும் நூலிற் கூறியுள்ளபடி பார்ப்பனரே அமைச்சராக வேண்டும் என்னும் ஆரிய நெறி மொழி (விதி) பற்றி நேர்ந்ததன்று.
மிகப் பிந்திய விசயநகர ஆட்சியிற்கூட, அரியநாத முதலியார் போன்ற தமிழரே அமைச்சராயிருந்தனர். அமைச்சருக்குப் போர்த்தொழிலும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், ஆரியர் நடுவுநிலை திறம்பியவர் என்றும், தமிழரசர் கருதியிருந்ததால் பார்ப்பனரை அமைச்சராக அமர்த்தவில்லை.
செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்து என்றும், குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப் பண்ணி என்றும் பதிற்றுப்பத்தில் வந்திருத்தலும், மனுநீதிச்சோழன் தன் அமைச்சர் கூறிய மனுநீதியை ஒப்புக் கொள்ளாததும் நோக்கியுணர்க.
(5) ஆள்வோன்
இதுகாலை பார்ப்பனர் ஆள்வோர் நிலையும் அடைந்திருக் கின்றனர்.
இவ் வைவகை நிலையும் வரவர ஒவ்வொன்றாய்க் கூடினவையே யன்றி ஒரே நிலையின் திரிபல்ல.
இங்ஙனம் பார்ப்பனர் ஐவகைநிலை யடைந்தாலும், இவை அவருள் தலைமையானவரும் சிலரும் அடைந்தவையேயன்றி, எல்லாரும் அடைந்தவையல்ல. இங்ஙனம் அடையாதவரெல்லாம் தொன்றுதொட்டு 18ஆம் நூற்
றாண்டு வரை இரந்துண்டே காலங்கழித்திருக்கின்றனர்.
இதை, முட்டி புகும் பார்ப்பார் என்ற கம்பர் கூற்றும்,
பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன் …
இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கிற்
பரந்துபடு மனைதொறுந் திரிவோன் (மணிமே. 5:33-46)
என்னும் அடிகளும், கூரத்தாழ்வான், இராமப் பிரமம் (தியாகராஜ ஐயரின் தந்தை) முதலியவர் உஞ்சவிருத்தி என்னும் அரிசியிரப் பெடுத்தமையும், சில குறிப்புகளும் தெரிவிக்கும்.
பிழைப்பும் குடியிருக்க இடமுமின்றிப் பல பார்ப்பனர் காட்டு வழியா யலைந்து திரிந்தமை, உடன்போக்கில் வேதியரை வினவல் என்னுந் துறையும் ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர்வழியே போனான் பார்ப்பான், என்னும் பழமொழியும் உணர்த்தும்.
தமிழ்நாட்டுச் சிவ மடங்கள்
இன்று எல்லாத் துறையிலும் ஆரியத்தைப் போற்றி வருவன, தமிழ்நாட்டுச் சிவ மடங்களே.
மடத் தலைவரான தம்பிரான்மாரும் அவர் மாணவராகிய குட்டித் தம்பிரான்மாரும், துறவியர் எனச் சொல்லப் படுகின்றனர். ஆயின், தமிழத் துறவு முறைக்கேற்ற நிலைமைகள் அவர் மடங்களில் இல்லை. நால் வகை வெள்ளாளரே தம்பிரான்மாராதற் குரியவர் என்பதும், உண்டி வகையிற் பிராமணர்க்குத் தனிச் சிறப்பும், மொழித் துறையிற் சமற்கிருதத்திற்கே முதலிடங் கொடுத்தலும், கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமணரையே பயிற்றுவதும், திருக்கோவில் வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதுவிப்பதும், முற்றும் ஆரியச் சார்பான பழக்க வழக்கங்களாம்.
அணிகளை யணிவதும் உருவ வணக்கஞ் செய்வதும், உயரிய துறவுநிலைக் குரியவை யல்ல.
மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்
ஆகுல நீர பிற. (குறள். 34)
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பு மிகை. (மேற்படி 345)
சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலும் மாசற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்ப ரிடத்திலும் ஈச னிருக்குமிடம்
கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பான் எங்கள் கண்ணுதலே (பட்டினத்தார் பாடல்)
வேதச் சுருதி என்றது, நீண்ட கால ஆரிய விளம்பரத்தினால் அடிப்பட்ட வழக்குப் பற்றியது.
இல்லறத்தாரான அடியார் நிலைமை வேறு; துறவு பூண்ட அறிவர் நிலைமை வேறு.
திருவாவடுதுறை மடம்
ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழி யாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ என்று பாடிய மாதவச் சிவஞான முனிவர் தொடர் பாலும்; சோறு என்னும் தூய தமிழ்ச் சொல்லைச் சொன்னதற்காக ஒரு புலவரை யடித்த குட்டித் தம்பிரானை, பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சியாலும், திருவாவடுதுறை மடம் சிறப்புற்றதே. ஆயினும், தமிழைப் போதிய அளவு போற்றாதது வருந்தத் தக்கதே.
தருமபுர மடம்
கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமண மாணவரையே இலவச ஊணுடையுறையுள் அளித்து ஆரிய மந்திரங்களிற் பயிற்றுவதும், வினைதீர்த்தான் (வைத்தீசுவரன்) கோவிற் கும்ப முழுக்கு விழாவிற்கு, ஒரு மாதக் காலமாக நூற்றுக் கணக்கான வேதியரைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதுவித்ததும், ஆரியத்தை நிலைநாட்டும் வருணாரம சந்திரிகை, சித்தாந்த சைவ வினா விடை, சித்தாந்தத் தெளிவியல் முதலிய பல பொத்தகங்களை வெளியிட்டு வருவதும், தமிழ மாணவரைத் தாழ்வாக நடத்தியதும், பிறவும், ஆரியம் தருமை மடத்தில் அடைக்கலம் புகுந்தது மட்டுமன்றித் தலை விரித்தும் ஆடுகின்றது என்னுமா றுள்ளன. முந்திய தம்பிரான் ஒருவர் சமற்கிருதத்திற் கையெழுத்திடுவதே வழக்கம் என்றும் சொல்லப்படுகின்றது.
குண்டாசுர னென்னும் ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக் கொரித்து, தேவர்களை வருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகை யணிந் தருளினார். (பக். 94) என்னும் கொக்கிற கணி விளக்கம் ஒன்றே, சித்தாந்த சைவ வினா விடை யின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாம்.
வைதிக முறைப்படி உபநயனமும் சிவாகம முறைப்படி சமயம், விசேடம், நிர்வாணம் என்னும் தீட்சைகளும் பெற்று, ஆச்சாரி யாபிடேகம் செய்து கொண்டு சைவக் குருமார்களாய் விளங்கு பவர்கள், ஆதி சைவர் எனப்படும் சிவமறையோர். சிவாசாரியார் என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெருமானைச் சிவாகமங்களின் வழித் தம் இல்லங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவாலயங்களில் பரார்த்த மாகவும் பூசை செய்பவர்கள். சிவாலயங்களில் நித்திய நைமித்திகங்களாகிய பூசைகளையும் விழாக்களையும் நடத்து பவர்கள் (பக். 11).
வேதம்பசு அதன்பால் மெய்யாக மம்நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறுநெய் - போதமிகும்
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்ததமிழ் நூலின் திறம். (பக். 33)
உலகம் சொல் வடிவும் பொருள் வடிவும் என இருவகையாய் உள்ளது. சொல் உலகம் சத்தப் பிரபஞ்சம் எனவும், பொருள் உலகம் அர்த்தப் பிரபஞ்சம் எனவும் சொல்லப்படும்.
அவற்றுள் சொல் உலகம், எழுத்துக்களை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்றொடர்களுமாம். எழுத்துக்கள் வன்னம் (வர்ணம்) என்றும், சொற்கள் பதம் என்றும், வட மொழியிற் சொல்லப்படும். சொற்றொடர்களில் சிறப்புடையன மந்திரங்கள். அதனால், மந்திரம், பதம், வன்னம் எனச் சத்தப் பிரபஞ்சம் மூவகையாகச் சொல்லப்படும். வடமொழி மரபும் சைவ மரபும் பற்றி, வன்னம் ஐம்பத் தொன்று, பதம் எண்பத் தொன்று, மந்திரம் பதினொன்று எனச் சிவாகமங்கள் வரையறை செய்கின்றன. இங்குக் கூறப்பட்ட எழுத்து சொல் சொற்றொடர் களில், எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துக்களும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை.
சத்தப் பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின், அது சுத்த மாயையின் காரியமே யாகும். ஆகவே, சுத்த மாயையின் காரியமே, சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இரு வகை யாகின்றது. அசுத்த மாயையின் காரியங்களும், பிரகிருதி மாயையின் காரியமும், பொருட் பிரபஞ்சம் ஒன்றேயாதல் அறிந்து கொள்க. (பக். 180) என்னும் பகுதிகள், சித்தாந்தத் தெளிவியல் எத்துணைக் கொண் முடிபு மயக்கியல் என்பதைத் தெரிவிக்கும்.
பூணூ லணிவு, தமிழ வாழ்க்கை முறைக்கும் சிவ நெறியொழுக் கத்திற்கும் புறம்பான, பொருளற்ற ஆரிய வழக்கம். ஆதி சைவர் அல்லது முந்து சிவனியர் என்று சொல்லப்படத் தக்கவர், ஓதுவார், பண்டாரம், புலவர், குருக்கள் என்னும் வகுப்புக்களைச் சேர்ந்த தமிழப் பூசகரே.
வேதத்திற்கும் சிவ நெறிக்கும் யாதொரு தொடர்பு மில்லை.
மொழித் துறை பற்றிய ஆரியக் கொள்கை அறியாமையின் விளைவாகும். சிவநெறி தோன்றிய மொழி தமிழாதலால், எழுத் தெனப் படுவன முப்பதே. பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே, ஆரியக் கொள்கைகள் சிவனியக் கொண் முடிபிற் கலந்து விட்டதனால், ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகட்குப் பின் தோன்றிய திருமூலர், அவற்றை அங்ஙனமே மேற்கொண்டு விட்டார்.
திருப்பனந்தாள் மடம்
திருப்பனந்தாள் மட மூலவரான குமரகுருபரர்,
பல்லுயிர்த் தொகுதியும் பயன்கொண் டுய்கெனக்
குடிலை என்னும் தடவயல் நாப்பண்
அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை
என்று பண்டார மும்மணிக் கோவை யிற் பாடியிருப்பதே, வேதம் பற்றி வழிவழித் தமிழரிடை வழங்கி வந்த குருட்டு நம்பிக் கையைக் காட்டும்.
திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத் தவத்திருச் சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில், ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியொடு திரும்பினேன்.
ஆயினும், நான் கருதியது கைகூடுமா வென்று ஓர் ஐயம் எனக்கிருந்தது. ஏனெனின், அங்கு இராயசம் என்றிருந்த பிராமண எழுத்தாளர், நான் பண்டாரத் திருமுன்பு செல்லு முன்பே என்னை அழைத்து, தம் அகவைக்கும் அறிவிற்கும் பதவிக்கும் தகாத பல வினாக்கள் வினவினார். நான் தங்கியிருந்த மடத்து விடுதி மேலாளரும், என்னைப் பண்டாரத் திரு முன்பு அழைத்துச் சென்ற பணியாளரும், மடத்துக் காசுக் கணக்கரும் பிராமணரே. அதோடு, பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் அங்கு வந்து தங்கும் தனி மனையையுங் கண்டேன். அவர் தம்பிரானுக்கு ஆசிரியரா யிருந்தவர் என்றும் கேள்விப் பட்டேன்.
ஆதலால், வாய்த்தால் தமிழுக்கு; வாய்க்கா விட்டால் வடமொழிக்கே. என்று கருதிக் கொண்டு, குருபூசை நாளன்று சென்றேன். பெரும் பேராசிரியரும் வந்திருந்தார். அவரும் தம்பிரான் அவர்களும் ஒருங்கே நின்ற விடத்துச் சென்று கண்டேன். ஐயர் அவர்களைப் பற்றித் தெரியுமா? என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள். தெரியும். என்றேன். ஐயரோ, ஒருமுறை நான் அவர் இல்லஞ் சென்று கண்டிருந்தும், தமக்கு நினைவில்லை யென்றார். அவ்வளவுதான். தம்பிரான் அவர்கள் அப்பாற் சென்று விட்டார்கள். நானும் விடுதிக்குத் திரும்பினேன்.
எத்தனையோ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளியிட்ட பின்பும், தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அரசும், வெவ்வேறு நிலைமையிலுள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும், என் ஆராய்ச்சியைப் போற்றாத போது, நிலத்தேவர் காவலிலுள்ள ஒரு நிறுவனம் எங்ஙனம் போற்றும்! அதை எதிர்பார்ப்பது எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடுவதே.
என்னொடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண் பகலுணவு எங்கட்குப் பிற்பகல் 3 மணிக்குத் தான் வந்தது. கரணியம் வினவிய போது, அன்றுதான் பிராமணப் பந்தி முடிந்த தென்று தெரிவிக்கப் பட்டது.
எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியது பற்றி எள்ளளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாய நிலைத் தாழ்வே என்னை மிக மிகப் புண் படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம். அங்ஙன மிருந்தும், தமிழன் நாய்போல் நடத்தப்படுவது இவ்விருபதாம் நூற்றாண் டிலும் தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவ னல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.
பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வேறிடத்தில் உண்டி படைக்கப் படினும், ஒரே நேரத்திற் படைக்கப் பட்டி ருப்பின் ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப் பொது வுண்டிச் சாலைகளில், பிராமணரின் எச்சிலைகளிலிருந்து கறிவகைகளை யெடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமா யிருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமை யாயின், இலவசமா யுண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!
மடம் துறவியர் பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப் படுவன கொண் முடிபும் மெய்ப் பொருளியலும். முப்பத்தா றென்று கொள்ளப் படும் மெய்ப் பொருள்களுள், குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின், ஏனை நாடுகளில் ஏன் அஃதில்லை? ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலரே சொல்ல வில்லையா?
வேதம் ஓதித் திருக்கோவில் வழிபாடு நடத்தும் பிராமணப் பூசகனை ஒருவாறு உயர்வாகக் கருதினாலும், வேத மறியாது உழவு, கைத்தொழில், வணிகம், சமையல், கோழிப் பண்ணை, ஏவல், கணக்கம், ஆசிரியம், ஊர்காவல், ஆள்வினை முதலிய பல தொழில்களைச் செய்யும் பிராமணரையும் ஏன் உயர்வாகக் கருத வேண்டும்? பிராமணர் போலுடுத்துப் பிராமணர் போற் பேசிப் பிராமணராக வாழும் தமிழரும் உண்டே! நயன்மைக் கட்சி (Justice Party) ஆட்சிக் காலத்தில், அலுவற் பேற்றின் பொருட்டுப் பூணூல் களைந்து தம்மைத் தமிழராகக் காட்டிக் கொண்ட பிராமணரும் உண்டே!
தமிழருள்ளும் ஒருவரைக் குலப்பட்டத்தினால் மட்டும், ஒரு குலத்தா ரென்று எங்ஙனங் கொள்ள வியலும்? முதலியார் குலத்தை எடுத்துக் கொள்ளின், வேளாண் முதலி, செங்குந்த முதலி, அகம் படிய முதலி, கோலிய முதலி, முதலிப் பெண்ணை மணந்ததனால் ஆன முதலி, தானே பட்டஞ் சூட்டிக் கொண்ட முதலி, பண்டை அரசியல் அதிகாரிகள் வழிவந்த முதலி எனப் பலவகை யுண்டே.
மேலும், முதலியார் என்பது படை முதலியார் (சேனை முதலியார்) என்னும் படைத் தலைவர் பதவிப் பெயரின் குறுக்க மாதலால், அதை அரிய நாயக முதலியார் என்னும் விசயநகரப் படைத் தலைவர் போன்றாரின் வழியினரே மதிப்புறவுப் பட்டமாகப் (Courtesy title) பூணுவது, மேலை முறைப்படி பொருந்தாதிருக்க, பொது வகையான படைஞரின் வழியினரெல்லாம் அப் பட்டத்தை வழிவழி பூணுவது எங்ஙன் பொருந்தும்?
இன்றும், திருப்பனந்தாள் மடத்தில், பிராமணப் பையன்களையே சமற்கிருத வகுப்பிற்குச் சேர்ப்பதும், பிராமண மாணவர்க்கும் தமிழ மாணவர்க்கும் வெவ் வேறிடத்தில் உண்டி படைப்பதும், முகம், மீனம் முதலிய தூய தென் சொற்களை வடசொல்லென்று கற்பிப்பதும், வழக்கமா யிருப்பதாகத் தெரிகின்றது.
மும் மடங்களும் ஆரியச் சார்பாயிருந்து குல வேற்றுமை காட்டு வதற்கு, பின் வருபவை கரணியமாயிருக்கலாம்.
1. வெள்ளாண் குலத்தினரே மடத் தலைவராக இருத்தல் வேண்டு மென்னுங் கொள்கை.
2. சமற்கிருதம் தேவ மொழியும், வேதம் சிவமத மூலமும், ஆகுமென்னுங் குருட்டு நம்பிக்கை.
3. ஆரியத்தைப் போற்றாவிடின், பிராமண வழக்கறிஞர் சிவ மடங்களை அறநிலையப் பாதுகாப்பு மன்ற ஆட்சிக்குட்ப டுத்தி விடுவர் என்னும் அச்சம்.
4. சூத்திரனுக்குத் துறவில்லை யென்னும் ஆரியக் கொள்கை பற்றிய தாழ்வுணர்ச்சி.
5. சிவத் தொன்மங்களும் (புராணங்களும்) திருமந்திரமும் சிவ ஞான போதமும் முதலிய கொண் முடிபு நூல்களும், சிறப்பாக, ஓங்காரப் பகுப்பும் சிவாயநம என்னும் திருவைந் தெழுத்தும் மெய்ப் பொருள் முப்பத் தாறென்னும் முடிபும் ஆகியவை, ஆரியச் சார்பா யிருத்தல்.
இவற்றை நீக்குவதற்கு, ஒவ்வொரு மடத்திலும், தனித் தமிழ் ஆசிரியர் ஒருவரையும் உண்மை வரலாற்றாசிரியர் ஒருவரையும் அமர்த்தி, உருவிலா வழிபாட்டை மேற்கொள்ளல் வேண்டும். உருவ வழிபாடு துறவுநிலைக் கேற்பதன்று.
சிவநெறிச் செலவு, புலான் மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகியவையே, சிவமடத் துறவியர் ஆசிரியர் இலக்கணமாய் அமைத்தல் வேண்டும்.
பிராமணியத்தினின்று தப்ப முடியாதவர் பிறவி யினின்று ஒரு காலும் தப்ப முடியாது. கூரை யேறிக் கோழி பிடிக்கத் தெரியா தவனா கோபுர மேறிக் குடக் கூத்தாடுவான்?
சிவ மடங்கள் திருந்தாவிடின், எதிர் காலத்தில் தமிழாட்சி வந்து திருத்தும்; அல்லது பொதுவுடைமை யாட்சி வந்து, மூன்றாங் குலோத்துங்கச் சோழன் காலத்துக் குகை யிடி கலகம் போன்ற கிளர்ச்சி யெழும்.
சைவ சித்தாந்த மகா சமாசச் சிவத் தொண்டு
மெய் கண்டார் இயற்றிய சிவஞான போதம் வடமொழி ரௌரவ ஆகமத்தின் மொழி பெயர்ப் பென்று, நீண்ட காலமாகப் பிதற்றி வந்தனர்.
திரு. ம. பால சுப்பிரமணிய முதலியார், மறுக்க முடியாத 120 கரணியங் காட்டி, சிவஞான போதம் தமிழ் முதனூலே, மொழி பெயர்ப் பன்று என்று நாட்டிய அரிய ஆராய்ச்சிச் சுவடியை, சைவ சித்தாந்த மகா சமாசம், 1965 ஆம் ஆண்டு தன் வைர விழா வெளியீடாக வெளியிட்டது, சிவனியரும் தமிழரும் மிகப் பாராட்டி மகிழத் தக்க தொன்றாம்.
காஞ்சிக் காமக் கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரை கடந்த தமிழ்
வெறுப்பு
சில ஆண்டுகட்கு முன், காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் செய்யா தன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் என்னும் அடியிலுள்ள தீக்குறளை சென்றோ தோம் என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடையிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.
உணவுப் பங்கீட்டலுவலராக ஆட்சிமொழிக் காவலர் (கீ. இராம லிங்கனார்) காஞ்சியில் பணியாற்றியகால் காஞ்சி மடத்துணவு குறித்துப் பேசச் சென்ற காலையில் நிகழ்ந்தது என்பர். ஆட்சி மொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரியார் மடத் திற்குச் சென்று இது பற்றி வினவிய போது, ஆச்சாரியார் நேரடி யாகத் தமிழில் விடை யிறுக்காது, தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே! என்று ஆட்சிமொழிக் காவலர் சொன்னதற்கு, சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை. என்று அணுக்கத் தொண்டர் மறுமொழி கூறினாராம்.
அகோபிலம் சீயர் ஆணவம்
தருமை வளாகத் தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்தவரும், காஞ்சி ஞானப் பிரகாசர் மடத் தலைவராக இருந்தவரும் ஆன தமிழத் துறவியார், வடார்க்காடு மாவட்ட முக்கூர் என்னும் சிற்றூரில், தம் இல்லத்தையே மடமாக்கிக் கொண்டு அகோ பிலம் சீயர் என இறுமாந்திருந்த பிராமணரைப் பார்க்கச் சென்றிருந்த போது, அப் பிராமணர் நீ ஒரு சூத்திரன். உனக்குக் காவி கட்ட அதிகாரம் உண்டா? வேதம் படிக்க அதிகாரம் உண்டா? என்றும் பிறவாறும் திமிரொடு வினவி யிருக்கின்றார்.
தமிழ்நாட்டுப் பிராமணர்க்கு ஓர் அன்பெச்சரிக்கை
அன்பர்காள்,
நும் முன்னோர், வேறெந்நாட்டிலும் அயலார் கையாளாத வலக்காரங்களைக் கையாண்டு, கள்ளங் கரவற்ற பண்டைத் தமிழ் மூவேந்தரையும் ஏமாற்றி வயப்படுத்தி, அவர் வாயிலாகத் தமிழரிடை நும் தன்னலச் சிறு தெய்வ வேள்வி மதத்தைப் புகுத்தி, அதனால் தமிழ் கெடவும் தமிழிலக்கியம் இறந்துபடவும், தமிழர் இழிந்து சிதறி விடவும் செய்துவிட்டனர். அத்தீத் தொழிலை, அறிவாராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் மிக்க இக் காலத்தும் நீவிர் தொடர்தல் இயலாத தொன்றாம்.
ஊருடன் கூடிவாழ் (“When you are at Rome do as Rome does.”) என்ற முறைப்படி, தமிழருடன் உடன்பிறப்புப் போற் கூடி வாழ்ந்து, உண்மையாகவும் நன்றியறிவுடனும் தமிழைத் தாய் மொழியாகப் பேணின், நீவிரும் நும் வழியினரும் முழுவுரிமை யுடன் தமிழ்நாட்டில் வழிவழி வாழவும் ஆளவும் இடமுண்டாம்.
தமிழைப் போற்றாது வெறுப்பவர் தமிழ்ப் பகைவராகவே நடத்தப் படுவர். ஒருசிலர் நுமக்குத் துணையாயிருப்பது உண்மையே. ஆயின், அக்கூட்டம் நாளடைவில் தேய்ந்து மாய்ந்து போம்.
எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும். (Oil and truth get upper most atlast.”)
தமிழ்நாடு முன்னேறும் வழிகள்
1. ஆங்கிலக் கல்வி
தமிழுக்கு நெருக்கமாயும் அறிவியல் இலக்கியப் பெட்டகமாயும் அமைப்பி லும் வழக்கிலும் உலகப் பொதுமொழியாயும் உள்ள ஆங்கிலம், தமிழர் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டும் கல்வி வாயிலா யிருத்தல் வேண்டும். தமிழ் வாயிற் கல்வியால் தமிழ்ப் பற்று வந்துவிடாது; ஆங்கில வாயிற் கல்வியால் தமிழ்ப் பற்றுப் போய்விடாது. தமிழ் வாயிற் கல்வியே தமிழ்ப் பற்றைக் காட்டுமென்பது, ஆங்கிலர் மீது வெறுப்பும் ஆங்கில வறியாமையுங் கொண்ட அரசியற் கட்சித் தலைவராற் பரப்பப்பட்ட, குருட்டுமடக் கூற்றாகும். இரசியரும் சப்பானியரும் போல் தமிழர் புதுப்புனைவாளராகும் வரை, ஆங்கில வாயிற் கல்வி இருந்தே தீரல் வேண்டும். குளத்தொடு புலந்து குளியாமலும் கூவலொடு புலந்து குடியாமலும் போனவனுக்கு, கேடேயன்றி ஆக்கமில்லை.
2. தனித்தமிழ்
தமிழ் என்பது தனித்தமிழே. தனித்தமிழா லன்றிக் கலவைத் தமிழால் தமிழன் உயர்வடைய முடியாது. தமிழென்று பெயரிட்டுக் கலவைத் தமிழ் வழங்குபவன், அவலை நினைத்துக் கொண்டு உரலை யிடிப்பவனே யாவன்.
3. ஆராய்ச்சியாளரைப் போற்றலும் புதுப் புனைவாளரை (inventors) ஊக்கலும்
செயற்கை மழை பொழிவிப்பு, கடல் நீரை நன்னீராக்கல், மண்ணி னின்று நேரடியாக உணவுருவாக்கல், பாலையை மருதமாக்கல், கரடுகளையும் பாறை களையும் தகர்த்து மனை நிலமாக்கல், கதிரவன் வெம்மையைச் சமையற்குப் பயன்படுத்தல், நச்சுக் காய் கனிகளை நல்லனவாக்கல், கனி தரா மரஞ்செடி கொடிகளைக் கனி தரச் செய்தல், வெப்பமான காலத்திலும் இடத்திலும் குளிர் காற்று வீசுவித்தல், தீங்கு செய்யும் பூச்சிகளையும் ஊரிகளையும் அறவே தீர்த்தல், மருந்திலா நோய்கட்கு மருந்து காண்டல், உள்ளக் கருத்தை அறிதல், இறந்தவனை எழுப்பல், பேரொலியைச் சிற் றொலியாக்கல், மூளையைத் திருத்தி மடையனை மதிஞனாக்கல், கூனுங் குருடும் ஊமுஞ் செவிடும் முதலிய எச்சப் பிறவிகளைச் சீர்ப்படுத்தல் முதலிய பல்வேறு அருஞ் செயல்களை, அறிவியற் பெரு மதிஞரைக் கொண்டும் சூழ்ச்சியத் திறவோரைக் கொண்டும் ஆற்றுவித்தல்.
4. பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிப் பதவிகளில் இருக்கும் தமிழ்ப் பகைவரை அகற்றல்.
பேரா. (P.T.) சீநிவாச ஐயங்காரும் பேரா (V.R.) இராமச்சந்திர தீட்சிதரும் போல், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்று கொள்பவரையே, பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவராக அமர்த்துதல் வேண்டும்.
அறுவகை ஆராய்ச்சித் தகுதி:
பரந்த கல்வி, மதிநுட்பம், நடுவுநிலை, அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா.
5. இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி
துவக்கக் கல்வியால் தான், தாழ்த்தப்பட்ட வகுப்புப் பொது மக்கட்கு நாகரிகமும் தன்மான வுணர்ச்சியும் துப்புரவும் உண்டாகும். அதனால் தீண்டாமை நீங்கித் தமிழின ஒற்றுமை ஏற்படும். ஒருசிலர் கல்வி கற்பதால் மட்டும் முன் னேற்றம் வந்து விடாது. பிற வகுப்பாரொடு குடியிருக்கவும் கடைத்தெருவிலிருந்து வணிகஞ் செய்யவும், கல்வியறிவும் துப்புரவும் ஒழுக்கமும் இன்றியமையாதன.
பொதுத் தேர்தலில் தகுந்த தலைவரைத் தேர்ந்தெடுக்கவும், தமிழ்ப் பொத்தக வெளியீடுகள் பல்கவும், சிறந்த அறிஞரும் புதுப்புனைவாளரும் தோன்றவும், புலவர் போற்றப்படவும், கட்டாயத் துவக்கக் கல்வி பெரிதுந் துணை செய்யும். ஆயிரக் கணக்கான ஆசிரியர்க்கு வேலையுங் கிடைக்கும்.
6. பிறப்புப் பற்றாது தொழில் பற்றிய குடிமதிப்பு (Census).
7. கல்வித்துறையிற் குலப்பட்டத்தை நீக்கல்
8. மக்கள் தொகைக் குறைப்பு
இந்தியா 30 கோடி மக்களைத்தான் தாங்க முடியும். இன்று 56 கோடியாக மக்கள் தொகை பெருகியுள்ளது. இங்ஙனமே தமிழ்நாடும் இருமடங்கு பெருகியுள்ளது. இதனால், காடழிவும் மழையின்மையும் உணவுத் தட்டும் விறகுத் தட்டும், வேட்டை விலங்கு பறவையின மறைவும், கால்நடை மேய்ச்சல் நில மின்மையும், புன்செய் நிலக் குறைவும், குடியிருப்பு நில வீடின்மையும், ஏற்பட்டுள்ளன. இக்குறைகள் மேன்மேலும் வளரத்தான் செய்யும். மக்கள் பெருக்கத் தடுப்பைவிட (ஏற்கெனவேயுள்ள) தொகைக் குறைப்பே நன்று. இதற்கென்று தனித் திணைக்களம் ஏற்படுத்தி, உள்ள தொகையிற் பாதி குறையும்வரை, ஐந்தாண்டிற் கொருமுறையே திருமணங்கள் நடைபெறுமாறு சட்டம் பிறப்பித்தல் வேண்டும். இன்றேல், அடுத்த நூற்றாண்டு பஞ்ச நிலை ஏற்பட்டு, அரசினர் அடக்க முடியாவாறு களவுங் கொள்ளையுங் கொலையும் மிகும்.
9. முன்னோக்கும் சேணோக்கும்
நாடாளும் அரசன், தன்காலத்திற்குப் பின்பும் நாட்டிற்கு நன்மை பயக்குந் திட்டங்களைக் கையாள வேண்டும்.
கடைக்கழகப் பாண்டியரும், கரிகால் வளவன், இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழரும், இலங்கையில் தமிழரைக் குடியேற்றி எளிதாக அதைத் தமிழ்நிலமாக்கி யிருக்கலாம். அதை அவர் செய்திலர்; தம் கால வுயர்வை மட்டும் கருதினர்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கடலாட்சி பெற்ற ஆங்கிலர், ஆறாயிரங் கல் தொலைவிலிருந்து வந்து, அதன் மேலும் தமிழகத்திற்குத் தென்கிழக்கில் நாலாயிரம் கல் தொலைவிலுள்ள தென்கண்டம் (ஆத்திரேலியா) முழுவதையும் கைப்பற்றி விட்டனர். தமிழரோ, கி.மு 50 ஆம் நூற்றாண்டிலேயே கடலாட்சி பெற்றுச் சாலித் தீவைக் (Java) கைப்பற்றி யிருந்தும், கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலும் கடாரத்தை (பர்மாவை) வென்றிருந்தும், ஐம்பது கல்தொலைவிலேயே அணித்தாக வுள்ள இலங்கையையு மிழந்து, ஒண்டி யிருக்கவும் அங்கு இடமின்றித் திண்டாடுகின்றனர்.
10. தமிழனை முன்வைத்த இரட்டைப் பகுப்பு
நயன்மைக் கட்சியார், தமிழ் நாட்டு மக்களைத் தவறாகப் பிராமணர் பிராமணரல்லார் என்று பிரித்தனர். அது வந்தேறி கட்குச் சிறப்புக் கொடுத்து நாட்டு மக்களைக் குறைவுபடுத்துவ தாகும். தமிழர் தமிழரல்லார் என்றே பிரித்தல் வேண்டும்.
தமிழர் யார்?
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழர் கொள்கை. தமிழைப் போற்றுவாராயின், தமிழருக்கு மிக நெருக்கமான திரவிடர் மட்டுமன்றி, மராட்டியர் மார்வாடியர் முதலிய வடநாட்டாரும், ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல் நாட்டாரும், தமிழரே.
பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து
பிறருக்கொன் றீயாத புல்ல ரேனும்
எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார்
இரப்பெடுப்பார் தீயதொழு நோய ரேனும்
கருமைமிகும் ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர்
காடுறையும் விலங்காண்டி மாந்த ரேனும்
அருமையுறுந் தனித்தமிழை விரும்பு வாரேல்
அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்.
தமிழைப் போற்றுதலாவது, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை ஒப்புக் கொள்வதே.
11. பரிசுச் சீட்டு நிறுத்தம்
ஆசை காட்டல், போட்ட பணம் மீளாமை, உழைப்பின்றிப் பிறர் பணத்தால் விரைந்து செல்வராதல், இழப்பால் வருத்தமும் வென்றவன் பாற்பொறாமையும் உண்டு பண்ணல், எத்தனைமுறை யாடினும் எல்லாரும் வெல்ல முடியாமை ஆகிய சூதாட்டியல்பு களுடன், அயல் மாநிலத்திற்குப் பணம் போதலாகிய தீதும் கூடிய பரிசுச் சீட்டுத் திட்டம், தமிழ் நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் பெயருக்கு இழுக்கு நேராவண்ணம், உடனே நிறுத்தப் பெறுவதே நன்றாம்.
பொதுநலத் திட்டங்கட்கு வேண்டும் பணத்தை, செல்வரிடத் தன்றி ஏழை மக்களிடமிருந்து பெறுவது எவ்வகையிலும் பொருத்த மின்றாம்.
12. பொறுப்பாட்சி (Responsible Government)
மக்கள் தொகை மிகாத இடைக் காலத்தில், அரசன் அல்லது முதலமைச்சன் நாடாளு மன்றத்திற்கே (Legislature) கணக்கொப்பு விப்பவனா யிருந்தான். இன்றோ, முன்போல் எல்லார்க்கும் பிழைப் பின்மையால், ஆட்சித் தலைவன் குடிகள் என்னும் பொதுமக்கட்கே நேரடிப் பொறுப்பாளன் ஆகின்றான். ஆதலால், நாட்டிற் பிறந்த அனைவர்க்கும் பிழைப்பு வழி வகுத்தல் வேண்டும். அஃதியலாக் கால், நேர்மையான முறையில் மக்கள் தொகையைக் குறைத்தல் வேண்டும்.
வீடு கட்ட நிலப் பரப்பைப் பயன்படுத்தாது வான்வெளியையே பயன்படுத்தி, வானளாவிகள் (skycrapers) எழுப்ப வேண்டும். நிலப் பரப்பைப் பயன்படுத்தின், பழனங்களையும் ஏரிகளையும் விட்டுவிட்டுப் பாறை நிலத்திலும் கல்லாங்குத் திலும் முரம்பு மேட்டிலுமே கட்ட வேண்டும். விளை நிலங்கள் என்றும் விளை நிலங்களாகவே யிருத்தல் வேண்டும்.
13. மாணவர் அரசியற் கட்சியிற் சேராமை
மாணவர், கல்வியிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய பயிற்சி யாளராயும், தத்தம் திறமைக்கும் மனப்பான்மைக்கும் ஏற்பப் பிழைப்பு வழி தேடும் முயற்சி யாளராயும், பட்டறிவும் அகக்கரண வளர்ச்சி நிறைவும் பெறாத இளம் பருவத்தாராயும், இருப்பதால், அவர் அரசியற் கட்சிகளிற் சேர்தலோ சேர்க்கப் படுதலோ, கல்விநெறிக்கு மாறும் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையும் ஆன கேடாகும். இதைக் கல்வியமைச்சன்மார் கண்டித்துத் தடுக்க வேண்டியிருக்க, அதற்கு மாறாக அதை ஊக்குவது, வேலியே பயிரை மேய்தல் போன்றாம். அரசியற் கட்சியைச் சார்ந்த மாணவரின் அகக்கரண வியல்பு, பெரும்பாலும் இயற்கை வளர்ச்சியடையாது கட்சியச்சில் வார்க்கப்பட்டு விடுகின்றது. அதனால், அவர் தனிப்பட்ட தன்மையும் திறமும் அவர்க்கும் நாட்டிற்கும் பயன்படாது போகின்றன.
மாணவரைக் கல்லூரிகளில், சிறப்பாக மருத்துவக் கல்லூரி களில், சேர்ப்ப தற்கும்; வேலை வேண்டுவோரை வேலையில் அமர்த்தற்கும், கையூட்டு வாங்காமை.
தமிழ் நெடுங்கணக்கு
தொல்காப்பியம், பன்மாண் சார்பிற் சார்பான தொகுப்பு நூலாதலின், அதனையே முதனூலாகக் கொண்டு அது தோன்றிய காலமே தமிழிலக்கியப் பொற்காலமென்று கூறுவது. ஒரு பெருங்கோவிலின் திருவுண்ணாழிகையையும் இடை மண்ட பத்தையும் முகமண்டபத்தையும் பாராது. கொடிக்கம் பத்தடியிலுள்ள சிற்றுருவத்தையே கோயிற்படிமையாகக் கருதித் தொழுவது போன்றதே.
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
என்று பனம்பாரனார் கூறியதும்.
எழுத்தெனப் படுப … முப்பஃதென்ப
என்று எழுத்ததிகாரத் தொடக்கத்திலும்.
உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
என்று சொல்லதிகாரத் தொடக்கத்திலும்,
கைக்கிளை முதலா ….. எழுதிணை யென்ப
அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர்
……………………………..
திறப்படக் கிளப்பின்
நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.
மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்
என்று முறையே பொருளதிகார அகத்திணையியல் புறத்திணை யியல் செய்யுளியல் மரபியல் தொடக்கத்திலும், கூறியதோடு, நூல் நெடுகலும் என்மனார் புலவர், என மொழிப, வரையார், என்ப உணருமோரே, என்ப சிறந்திசி னோரே, என்மனார் புலமை யோரே, எனமொழிப உணர்ந்திசி னோரே, கிளப்ப, என்றிசி னோரே என்றும் பிறவாறும் அடிக்கடி இடையிடை தொல்காப்பியர் கூறிச் செல்வதும், தொல்காப்பியம் தொகுப்பு நூலேயன்றிப் புதிய வகுப்பு நூலன்று என்பதைத் தெளிவாகக் காட்டும்.
மேலும், தொல்காப்பியம் நன்னூலும் அஷ்டாத்யாயீ என்னும் பானினீயமும் போல எழுத்துஞ் சொல்லும் மட்டுங் கூறாது. தமிழுக்கே சிறப்பாகவுள்ள யாப்பணி யுட்கொண்ட தொல்வரவுப் பொருளிலக்கணமுங் கூறுதலின், அதனாலும் அது தொல்காப்பியர் புதுப்படைப்பன்றென்பது வெள்ளிடை மலையாம். வடசொற் கலப்பும் சில ஆரியக் கொள்கைகளும் பற்றிய கூற்றுகளே தொல்காப்பியர் தாமே தமிழ் எழுத்திலக்கணத்தைத் திறம்பட வகுத்துக் கூறியதாக அவரைப் போற்றி யுரைத்துத் தம் ஆராய்ச்சி யின்மையைப் புலப்படுத்துவர்.
பொருளிலக்கண மரபு குமரிநிலைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கைச் செய்திகளைப் போற்றிக் காத்துவருவதால், அவ் வகையிலேயே தொல்காப்பியம் பழந்தமிழ் வரலாற்றாராய்ச் சிக்குப் பயன்படுவதாகின்றது. இங்ஙனமே, புறநானூறு, கலித் தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை முதலிய சில பாத்தொகைகளிலும் வனப்புகளிலும் இலக்கண நூல்களிலும் உள்ள குறிப்புகளும் பயன்படுகின்றன.
ஆராய்ச்சி யென்பது எல்லாருஞ் செய்யக்கூடிய எளிசெயலன்று. மதிநுட்பம், பரந்தகல்வி, நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறியவா என்னும் ஆறும் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமை யாத பண்புகளாகும்.
பிறமொழி யெழுத்துகள்
எகிபதிய சுமேரிய நாகரிகத் தோற்றம் கி.மு 3000 ஆண்டுகட்கு முற்பட்டது. எகிபதிய எழுத்து முதற்கண் படவெழுத்து (Pictograph); பின்னர்க் கருத்தெழுத்து (Ideograph or logograph).
சுமேரிய நாகரிக வழிப்பட்ட சேமிய வெழுத்து முதற்கண் அசை யெழுத்து (Syllabary கி.மு. 2000); பின்னர் ஒலியெழுத்து (Alphabet கி.மு. 1500).
கிரேக்கர் சேமிய ஒலியெழுத்தைப் பினீசிய Phoenician) வணிகர் வாயிலாகக் கற்றுத் தமக்கேற்றவாறு திருத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. கிரேக்க எழுத்தினின்று இலத்தீன் எழுத்தும், இலத்தீன் எழுத்தினின்று ஆங்கிலம் முதலிய பிற ஐரோப்பிய மொழி யெழுத்துகளும் அமைந்துள்ளன.
கிரேக்க எழுத்துகள் அல்பா (Alpha), பேற்றா (Beta) என்று தொடங்குவதால், அவ் வண்ணமாலை அல்பாபேற்று (Alphabet) எனப் பெயர் பெற்றது. இது தமிழில் உலக வழக்கில் அஅன்ன ஆவன்னா (அ ஆ, அவ்வா) என்று வழங்குவது போன்றது.
கிரேக்க வண்ணமாலை முதற்கண்
A (short and long) B, G, D, E (short), W, Z, E (long), TH. I (short and long), K,L,M,N,X,O (short), P,R,S, T,U (short and long), PH, KH, PS, O (long) என்னும் 25 எழுத்துகளைக் கொண்டிருந்தது. பின்னர்த் திகம்மா (Digamma) என்னும் W நீக்கப்பட்டுவிட்டது.
இலத்தீன் வண்ணமாலை, முதற்கண்.
a, b, c, d, e, f, g, h, i, k, l, m, n, o, p, q, r, s, t, u, x என்னும் 21 எழுத்துகளையே கொண்டிருந்தது. பின்னர் j, v, y, z என்னும் 4 எழுத்துகள் சேர்க்கப்பட்டன.
கிரேக்க எழுத்துகளுட் பலவற்றின் வடிவம் வேறு. அவற்றை இங்குக் காட்ட லாகாமையால் ஆங்கில வடிவிற் குறிக்கப்பட்டுள்ளன.
சீன எழுத்து கி.மு. 1000 ஆண்டுகட்கு முற்பட்டது. அது 4000 கருத்தெழுத்து களைக் கொண்டது.
சப்பானியர் கி.பி. 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளில் சீனக் கருத் தெழுத்துகளைக் கடன் கொண்டனர். அவை ஐயாயிரமாகப் பெருகி ஈராயிரமாகக் குறைக்கப் பட்டுள்ளன. சொற்களின் முதனிலை களைக் குறிக்கக் கருத்தெழுத்துகளும், ஈறுகளைக் குறிக்க இரகன (Hiragana) கற்றகன (Katakana) என்னும் இருவகை அசை யெழுத்துகளும் கையாளப்படுகின்றன வென்றும். இதனால் சப்பானிய மாணவன் 1500 சீனக் கருத்தெழுத்துகளையும் (ஏறத்தாழ 100) இருவகை அசையெழுத்து களையும் கற்க வேண்டியுள்ள தென்றும், பாடுமேர் (Bodmer) கூறுகின்றார் (The Loom of Language, p. 438).
அரபி யிலக்கியம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று. அதன் எழுத்தும் அக் காலத்தே. அது 28 எழுத்துகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று அ (Fatha), இ (Kasra), உ (Damma) என்னும் முக் குறிக்கும் பொதுவான குறி. வகர வெழுத்து உகரத்தையும் யகர வெழுத்து இகரத்தையும் இடத்திற்கேற்ப உணர்த்தும். இருவேறு குறிகள் சேர்ந்து ஆ, ஈ, ஊ என்னும் நெடில்களைக் குறிக்கும். சில இணைப்பெழுத்துகளும் (Ligatures) உண்டு.
அரபிக்கு இனமான எபிரேய இலக்கியம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அது 22 எழுத்துகளைக் கொண்டது. உயிரொலிகளை யுணர்த்தும் முறையில் அது அரபியொத்ததே. அவ்விரு மொழிகளின் வண்ணமாலைகளும் வெவ்வேறு வடிவுகொண்டனவேனும், கிரேக்கத்தைப் போன்று கானானிய மூலப் பினீசிய வண்ணமாலையினின்று திரிந்தவையே.
தமிழ் மன்னர் பெயர்
பண்டைத் தமிழ் மன்னர்க்குப் பல பெயர்கள் வழங்கினும் அவற்றுட் பாண்டியன், சோழன், சேரன் என்பவை மிக முதுமையும், முதன்மையும் பற்றிய வாகும். பாண்டியன், சோழன், சேரன் என்பதே கால முறையாயினும். இசைவுபற்றிச் சேரன், சோழன், பாண்டியன் எனத் தலைமாற்றிக் கூறப்படும்.
தமிழரசர் கொடிவழிகள் ஆரிய வருகைக்கு முன்னமே தமிழ் நாட்டி லிருந்தும், அவற்றின் பெயர்கட்கு வடமொழி மூலங் காட்டினார் கால்டுவெல் கண்காணியார். மேனாட்டறிஞர் எத்துணையோ ஆராய்ச்சி வன்மையும், நடுவுநிலைமையும் உடையரேனும், இந்திய மொழிகளெல்லாம் வடமொழிவழி யென்னுமோர் தவற்றெண்ணம் அவர் மனத்திற் குடிகொண்ட மையின். அவராராய்ச்சி சிற்சிலவிடத்துப் பயன்பட்டிலது. சேர சோழ பாண்டியர் தமிழ் மன்னரா யிருப்பவும் அவர்க்குப் பெயர் வடமொழியினின்று வந்தன வென்பது எங்ஙனம் பொருந்தும்? ஆரிய மரபினராயிருந்திருப்பினன்றோ அவர்க்கு ஆரியப் பெயர் வழங்கி யிருக்கும்? சேர சோழ பாண்டியப் பெயர்கள் சேர சோழ பாண்டிய ரென்று அசோகக் கல்வெட்டி லிருக்கின்றனவென்பது ஆரிய வழிக்கு ஆதாரமாகுமா? ழகரம் தெலுங்கிலும், வடமொழி யிலும் டகரமாய்த் திரியும்.
எ-டு: தெலுங்கு வடமொழி
கோழி - கோடி நாழி - நாடி
கிழங்கு - கெட்டா பீழை – பீட
நாளம் = மூங்கில். நாளி - மூங்கிலாற் செய்யப்பட்ட படி. இக்காலத்தும் மூங்கிற் படிகளைச் சிற்றூர்களிலும், சிறு கடைகளி லும் காணலாம். நாளி - நாழி. சீகாளி - சீகாழி.
சோழன் என்பது சோடன் என்பதன் திரிபென்றும். நாழி என்பது நாடி என்பதன் திரிபென்றும், தமிழர் என்பது திரவிடர் என்பதன் திரிபென்றும், பாண்டியன் என்பது பாண்டுவினின்றும் திரிந்த தென்றும் கூறுவர் கால்டுவெல் கண்காணியார்.
மெய்யெழுத்துகள் ரகரத்தோடு சேர்ந்து மொழி முதல் நிற்பது வடமொழியிற் பெரும்பான்மை. அதன்படி த என்பது த்ர என்றாகும். மகரத்திற்கு வகரம் போலியாகும்.
எ-டு: குமி - குவி. மிஞ்சு - விஞ்சு.
ழ வடமொழியில் ட ஆகும். இங்ஙனம் தமிழ் என்னும் சொல் வடமொழியில் த்ரவிட என்றாகும். தமிழகம் என்னும் சொல் கிறித்துவுக்குப் பன்னூறாண்டிற்கு முன்னரே மேலை நாடுகளில் Damurica - Lemurica - Lemuria என்று பலவாறு திரிந்து வழங்கியிருப்பவும், அதற்குப் பின் இந்தியாவிற்கு வந்த ஆரிய வாய்ச் சொல்லின் திரிபென்பது சற்றும் பொருந்தாது.
தமிழ் மன்னர் பெயர் வடமொழிப் பழங் காவியங்களாகிய பாரத இராமாயணங்களிற் கூறப்பட்டுள. உதியன் என்னும்ஓர் சேரநாட் டரசன் பாரதப் படைகட்குச் சோறு வழங்கியமைபற்றிப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று பழந்தமிழ் நூல்களிற் பாராட்டப்படுகின்றான். வான்மீகி இராமாயணத்திற் றமிழ் மன்னரைப் பற்றிய குறிப்பு பிற்காலத் திடைச் செருகலென்று சிலர் புறக்கணிக் கலாம். இராமர் தெற்கே வந்து அகத்தியரைக் கண்டதை எவரும் மறுக்கார். அகத்திய ருண்மையானே பாண்டிய னுண்மையும் அறியப்படும். பாரதத்திற்கு முன்னமே பாண்டியனுண்மை இராமாயணத்தால் விளங்காவிடினும், கிறித்துவுக்கு முன்னைய மேனாட்டுப் பூமி சாத்திரிகள் குறித்துள்ள தமிழகப் படங்களானும், பிரித்தானியப் பொருட்காட்சிச் சாலைத் தலைவர், Dr. ஹால் என்பவர் பாபிலோனியக் குடை பொருள்கள் பற்றிக் கூறியுள்ள ஆராய்ச்சி யுரையானும் விளங்குவதாகும்.
பாண்டு, பாண்டியன் என்னும் பெயரொப்புமை பற்றியும், பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை வந்தபோது பாண்டியன் மகளை மணந்தான் என்னும் கதைபற்றியும், மகா வம்சம் என்னும் இலங்கைச் சரித்திர நூலில் பாண்டியன் என்னும் பெயர் பாண்டி. பாண்டு எனத் திரிந்திருப்பது பற்றியும் ஆரியர் வருகைக்கு முன்னமே வழங்கிய பழந் தமிழ்ப் பெயராகிய பாண்டியன் என்பதை, பாண்டு என்பதினின்றும் திரிந்த பாண்டவன் என்னும் தத்திதாந்தத் திரிபென்று கூறுவது மொட்டைத் தலைக்கும், முழங்காற்கும் முடிபோட்ட தொக்கு மன்றோ?
பாண்டியன், சோழன், சேரன் என்னும் பெயர்கள் வடமொழி யாயின், வடமொழியில் அவற்றிற்குப் பொருளிருத்தல் வேண்டும். பாண்டியப் பெயர்க்குக் கூறும் வடமொழிப் பொருள் சரித்திர வாயிலாய் மறுக்கப்பட்டது. சோழசேரப் பெயர்கட்குப் பொருந்தப் புளுகும் பொருளும் வடமொழியிலில்லை. இனி, இத் தமிழ் மன்னர் பெயர்கள் தமிழ்ச் சொற்களாயின் அவற்றிற்குப் பொருள் என்னை யெனிற் கூறுதும்.
1. பாண்டியன் - பாண்டியன் = பாண்டி + அன்.
பாண்டி என்பது வட்டமென்னும் பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. பாண்டி, ஒரு விளையாட்டு. ஓட்டை, வட்டமாக நறுக்கி நிலத்தில் அரங்கு கீறி எறிந்து விளையாடுவது. வட்டமாக நறுக்கப்பட்ட ஓடு வட்டு எனப்படும். வட்டு என்பது கருவியாகு பெயராய் அதைக் கொண்டு ஆடும் விளையாட்டையும் உணர்த்தும்.
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் (நற். 3)
வட்டு என்பதன் பரியாயப் பெயராகவே பாண்டி யென்பது தென்னாட்டில் வழங்குகின்றது.
தொட்டி, புட்டி, விட்டி என்பன தொட்டில், புட்டில், விட்டில் என்று நின்றாற்போல, பாண்டி என்பதும் பாண்டில் என நிற்கும்.
பாண்டில் = வட்டம். பாண்டில் என்பது வட்டம் என்னும் மூலப் பொருள் பற்றியே பல பொருள்களை யுணர்த்தும்.
பாண்டில் = 1. அகல், வட்டமாயிருப்பது.
2. காளை, வட்டமாய் அல்லது உருண்டிருப்பது.
3. கைத்தாளம், வட்டமா யிருப்பது.
4. நாடு.
ஒரு நாட்டை அல்லது நாட்டுப் பகுதியை வட்டம், வட்டகை, வட்டாரம் என்று சொல்வது வழக்கு. மண்டலம் என்பதும் வட்டத்தின் பரியாயப் பெயரே. இங்கிலீஷிலும் ‘circle’ என்று நாட்டுப் பகுதியைக் கூறுவர்.
5. சக்கரம், வட்டமாயிருப்பது.
6. பண்டி (வண்டி).
பண்டி யென்பது வண்டியென்பதன் திரிபு. ப-வ. போலி. வண்டி - வள் பகுதி. தி விகுதி. வள் + தி = வண்டி. வளைந்திருப்பது. வண்டி யென்பது முதலில் சக்கரத்தையும் பின்பு உறுப்பாகுபெயராய்ச் சகடத்தையும் குறிக்கும்.
(கொல்லாப் பண்டி எனச் சிலப்பதிகார உரையில் வழங்குவது காண்க.)
பண்டி என்பதே பாண்டி, பாண்டில் எனத் திரியும்.
பாண்டில் எடுத்தபஃ றாமரை கீழும் பழனங்களே எனும் திருக் கோவை யடியில் பாண்டில் என்பது கிண்ணம் என்னும் பொரு ளில் தாமரைக் குவமையாய் வந்துள்ளது. கிண்ணம் வட்டமா யிருப்பது.
வட்டம் என்னும் சொல் உருட்சியையும், திரட்சியையும் குறிக்கும். ஓர் உருண்டையின் பரப்புத் தூரத்தில் வட்டமாகவே தோன்றும்.
பாண்டியன் குதிரைக்குக் கனவட்டம் என்று பெயர். ஓர் இளை ஞனை இளவட்டம் என்பர் தென்னாட்டார். வட்டம் என்பதைப் போலவே அதன் பரியாயப் பெயராகிய பாண்டில் என்பதும் உருட்சியும், திரட்சியுமாகிய பொருள்களை யுணர்த்தும்.
பாண்டில், உருட்சியான ஒரு காளையை யுணர்த்துவது போல உருட்சியான ஒரு வீரனையும் உணர்த்தும். காளை என்னும் பெயர் உவமையாகுபெயராய் வீரனைக் குறிப்பது செய்யுளிற் பெருவழக்கு. தென்னாட்டார் காளை என்னும் பெயரைத் தம் சிறார்க்கிடுவது இன்றும் வழக்கம். இப்போதுள்ள சிவகிரி ஜமீன்தார் அவர்களின் பெயர் செந்தட்டிக் காளைப் பாண்டியன் என்பது. ஆகவே பாண்டி யென்பதற்கு வீரன் என்பதே பொரு ளாம். அஃது அன் விகுதி பெற்றுப் பாண்டியன் என நிற்கும். பாண்டியன் வீரத்தைச் சங்க நூல்களானும், பாண்டிய னார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே என்னும் புகழேந்தி யார் கூற்றானு முணர்க.
இனி, பாண்டியனுக்குரிய மறுபெயர்களாவன :
செழியன் = செழிய நாட்டை யுடையவன்.
தென்னவன் = தென்னாட்டரசன்.
வழுதி = புலவரால் வழுத்தப்படுகின்றவன்.
மாறன் - பகைவரொடு மாறுகொண்டவன்.
மீனவன் = மீனக்கொடி யுடையவன்.
கைதவன் = தன் கையை வெட்டினவன் (பொற்கைப் பாண்டியன். அவனுக்குப் பின்னால் ஏற்பட்ட பெயர்).
பஞ்சவன் = ஐந்து சிற்றரசரை ஆண்டவன் (கல்வெட்டுகளையும், சரித்திரத்தையுங் காண்க) முல்லை, குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலங்களை யுடையவன் என்று பொருள் கூறல் பொருந்தாது.
கௌரியன் = கௌரியின் வழித்தோன்றல்.
கௌரி தடாதகைப் பிராட்டியாரான பார்வதி.
சின்னமும், அங்கமும்பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப்பட்டில.
2. சோழன் : சோளம் - சோழம் - சோழம்+ அன் = சோழன்.
சோளம் என்பது மக்காச்சோளம்; கள்ளர் வெட்டிச் சோளம் என்றும் கூறப்படும்.
மக்காச்சோளம் சோழநாட்டிலேயே சிறப்பாய் விளைகின்றது. பாண்டிநாட்டிற் பயிரிடப்படுவதேயில்லை. கொங்குநாட்டிலும், பிற சேர நாட்டுப் பகுதிகளிலும் விளைந்தாலும், சிற்றுண்டியாய்த் தின்னத்தக்க அவ்வளவு சிற்றளவாகவே விளைகின்றது. சோழ நாட்டிற் கள்ளருக்குச் சிறந்த வுணவாகின்றது. கள்ளர் அதை மிகுதியாகப் பயிரிடுகின்றனர். அதனாலேயே கள்ளர்வெட்டிச் சோளம் எனப் பெயர் பெற்றது. கள்ளர் என்னும் வகுப்பார் சோழநாட்டிலன்றிப் பிற நாட்டிலில்லை. இதனாலும் சோளம் சோழநாட்டிற்கே சிறப்பென்பது பெறப்படும்.
தாவரப் பொருள்களால் இடங்கள் பெயர் பெறுவது சாதாரணம்.
எ-டு: பொழில் = (சோலை) உலகம். உலகமுழுதும் முன்காலத்தில் ஒரே சோலைபோல் தோன்றிற்று.
நாவலந் தீவு = நாவன் மரம் மிகுந்த பரதகண்டம்.
நெல்வேலி, திருநெல்வேலி, நென்மேனி, நெல்லூர் முதலியன நெல் விளையும் இடங்கள்.
புளியம்பட்டி, புளியங்குடி, அத்திகுளம், வேப்பங்குளம், பனையூர், பனையடிப்பட்டி முதலியன மரங்களாற் பெற்ற பெயர்கள்.
எருக்கலங்குடி செடியாற் பெற்ற பெயர். இங்ஙனமே பிறவும்.
சோளம் விளையும் நாடு தானியாகுபெயராகச் சோளம் எனப்பட்டது. சோளம் சோழம் எனத் திரியும்.
ள-ழ. cf. தோள் + அள் = தோளன் = தோழன். தோள்போல் உதவுபவன் அல்லது தோளிற் கைபோடுபவன்.
சீகாளி - சீகாழி. யாளி - யாழ். நாளி - நாழி, தேளி - தேழி, தேள்போற் கொட்டுவது.
சோழநாட்டை யுடையவன் சோழன்.
இனி, சோழனுக்குரிய மறுபெயர்களாவன :
சென்னி = தலைவன், சென்னி =தலை.
கிள்ளி = பகைவர் தலையைக் கிள்ளுபவன்.
அபயன் = பயத்தை நீக்குபவன், அடைக்கலந் தருபவன்.
வளவன் = வளநாட்டை யுடையவன்.
செம்பியன் = சிபியின் வழித்தோன்றல்.
சின்னமும், அங்கமும்பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப் பட்டில.
3. சேரன் : சாரல் - சேரல் - சேரன்
தமிழ் வேந்தர் மூவருள்ளும் சேரனே மலைநாட்டை யுடையவன். சாரல் என்பது மலையின் அடிவாரத்தையும், மலைநாட்டையுங் குறிக்கும். பின்பு இடவாகுபெயராய் அம் மலைநாட்டை ஆள்பவனைக் குறித்தது.
சாரல் என்பது சேரல் என்று திரியும். உக. சார் - சேர்.
சேரல் என்பது சேரன் என்று திரியும்.
ல-ன போலி cf. மறன் - மறல், மறலி - எமன், திறன் - திறல்.
சேரல் என்பதே சேரன் பழம்பெயராகும்.
எ-டு: குடக்கோச் சேரல், மாந்தரஞ் சேரல்.
சேரல் + அன் = சேரலன் - கேரளன்.
ச-க. போலி cf. சீர்த்தி - கீர்த்தி, சுலவு - குலவு.
ல-ள. போலி cf. இறலி - இறளி. கசலி - கசளி.
சேரன், கேரளன் என்பவை பிந்திய வடிவங்களாகும். அவற்றுள்ளும் மிகப் பிந்தியது கேரளன் என்பது. பண்டைத் தமிழ்நூல்களிலெல்லாம் சேரல் என்பதே பெருவழக்காய் வரும். பிற்காலத்துப் புராணங்களிலெல்லாம் கேரளன் என்பது பெருவழக்காய் வரும்.
சேரன் என்னும் பெயரொடு மான் என்னும் பெயர் சேர்த்துச் சேரமான் என்று வழங்குவதுமுண்டு. மான் என்பது மகன் என்பதன் திரிபு. பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான்.
இனிச் சேரனுக்குரிய பிற பெயர்களாவன :
வில்லவன் - வில்லையுடையவன்.
கொங்கன் - கொங்குநாட்டை யுடையவன்.
குடக்கோ - குடநாட்டரசன். குடம் - மேற்கு.
குட்டுவன் - குடநாட்டரசன். குடம் - குட்டம்.
குடகன் - குடநாட்டரசன்.
கோதை - (வில்லுக்காக) முன்கைத் தோற்கட்டுடையவன்.
உதியன் - உயர்ந்தவன், உயர்ந்த மலைநாடன்.
வானவன் - வானத்தை யளாவும் மலைநாடன்.
வானவரம்பன் - வானத்தை யளாவும் மலைநாடன்.
மலையமான் - மலைநாட்டரசன்.
சேய் - மலைத் தெய்வமாகிய முருகன் போன்றவன்.
சின்னமும், அங்கமும் பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் கூறாது விடப் பட்டன.
இதுகாறுங் கூறியவற்றால் தமிழரும், தமிழரசரும் ஆரிய வருகைக்கு முன்பே, தமிழ்நாட்டி லிருந்தவர்களென்றும், அவர்கள் தமிழ் நாட்டின் பழங் குடிகளே யென்றும். அவர்கள் பெயர்களெல் லாம் செந்தமிழ்ச் சொற்களே யென்றும். அவை வடமொழியிற் பலவாறு திரியுமென்றும். தமிழரசருள் பாண்டியன் காலத்தால் முற்பட்டவன் என்றும், சோழன் இடைப்பட்டவன் என்றும், சேரன் கடைப் பட்டவன் என்றும் தெரிந்து கொள்க.
பாண்டியன் முற்பட்டவன் என்பது தமிழ்நாடன் என்னும் பெயரினாலும், சங்க வரலாற்றாலும், சரித்திரத்தினாலும்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11,19-22)
என்னும் சிலப்பதிகார வடிகளாலும், முழுகின தமிழகமுண்மை யிலும், மேனாட்டுக் குறிப்புகளாலும்அறியப்படும். முழுகின தமிழகம் பாண்டி நாட்டுப் பகுதியாகும். அதுவே மக்கள் முதன்முதற் றோன்றியவிடம்.
மக்கள் பெருகி வடக்கே வரவே சோழநாடு தோன்றிற்று. தென் றிசை யினின்றே மக்கள் ஆதியில் வடக்கே சென்று உலகமுழுதும் பரவினதாகச் சரித்திரம் கூறும். பல்வகைக் கலைகளும் இதற்குச் சான்று பகரும்.
சோழநாட்டின் பின் சேரநாடு தோன்றிற்று. சேரநாடு முதலாவது குட மலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாட் டளவாயிருந்து பின்பு மேல்கரையும் சென்று தாவிற்று.
தமிழ்மொழி பாண்டிநாட்டின் செந்தமிழாயிருந்ததும், வடக்கே சோழ நாட்டிற் சற்றுத் திரிந்ததும். அதை அடுத்து அதன் மேற்கே மிகத் திரிந்து கொடுந் தமிழானதும்.
கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் பாண்டியன் தமிழ்நாட்டில் தலைமை வகித்ததும். பின்பு சோழன் தலைமை வகித்ததும். பின்பு சேரன் செங்குட்டுவன் தலைமை வகித்ததும், பாண்டிய சோழ சேர முன்மை இடைமை பின்மைகளை யுணர்த்துவனவாகும்.
சங்ககாலத்தோடு தனித் தமிழரசு தலைதாழ்த்ததனால் அதற்குப் பிற்பட்ட சிற்றிடைச் சிறுபோதைத் தமிழரசக் கிளர்ச்சிகள் இங்குக் கொள்ளப் பட்டில.
மேனாட்டுப் பழஞ் சரித்திர நூல்களில் தமிழரசரைப்பற்றிய குறிப்பு களிலெல்லாம் பாண்டியன் பெயரே குறிப்பிடப்பட் டுள்ளது.
சோழநாடு வடக்கே வரவர விரிந்திருத்தலால் மக்கள் மேற்கே சென்று குடியேறினர் என்க.
சேரநாட்டுத் தமிழ் தன் பெருந் திரிபினாலேயே வடமொழித் துணைகொண்டு மலையாளம் எனத் தனிமொழியாய்ப் பிரிந்தது.
ஆதலால் பாண்டியன் பெயர் மிகப் பழைமையான தென்க. - செந்தமிழ்ச் செல்வி கன்னி. 1934.
தமிழ் முகம்
முகம் என்பது தென்சொல்லேயெனக் கோடற்கு மறுக்கொணாச் சான்றுகள் வருமாறு :
(1) தமிழில் மூலமும் பொருளும் முற்றும் பொருந்துதல்
(2)
முகம் (முகு + அம்) = முன்பு, முன்னுறுப்பு, முன்பக்கம்.
முனை, நுனி, தோற்றம்.
முகப்பு, முகனை, முகச்சரக்கு, முகதலை, முகமண்டபம், முகமனை, முகவாசல், முகவுரை, உரைமுகம், துறைமுகம், நூன்முகம். போர்முகம் முதலிய வழக்குகளை நோக்கின் முன்மைக் கருத்தே முகம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் என்பது விளங்கும்.
உயிரிகளின் (பிராணிகளின்) முன்பக்கத்திற் சிறந்த உறுப்பு தலையின் முன்புறமாதலின், அது முகம் எனப்பட்டது.
உயிரிகளின் இயல்பான இயக்கம் அல்லது தோற்றம் முன்னோக் கியே நிகழ்தலின் முன்மைக் கருத்தில் தோற்றக் கருத்துத் தோன்றிற்று.
எ-டு:
முகம் = தோற்றம்
முகஞ்செய்தல் = தோன்றுதல்
முகம்பெறுதல் = தோன்றுதல்
முகு + உள் = முகுள் - முகிள் = அரும்பு
முகிள் + அம் = முகிளம் = அரும்பு
அரும்புதல் = தோன்றுதல்
முகுள் - (முகுர்) - முகுரம் = தளிர்
முகிள் - முகிழ் = அரும்பு முகிளம் - முகிழம் = மலரும் பருவத் தரும்பு
முகிழ்த்தல் = தோன்றுதல்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து).
முகு + ஐ = முகை = அரும்பு. முகைதல் = அரும்புதல்.
முகைத்தல் = அரும்புதல்.
முகு - முக்கு - மொக்கு = அரும்பு. மொக்கு - மொக்குள் = அரும்பு.
முகம் என்னும் சொல்லில் முகு என்னும் பகுதியும், முகு என்னும் பகுதியில் மு என்னும் எழுத்தும், மு என்னும் உயிர்மெய்யில் உ என்னும் உயிரும், உயிர்நாடியான உறுப்புகளாம்.
முன், முந்து முதலிய சொற்களில் முகரமும், ஊங்கு, உங்கு, உங்ஙன், உது, உவன் முதலிய சொற்களில் ஊகார உகரங்களும், அடிப்படையாயிருந்து முன்மைக் கருத்தை யுணர்த்துதல் காண்க.
முகம் - முகர் - முகரை - மோரை.
முகர் - முகரி = முன்புறம், தொடக்கம்
முகம் - முகன் - முகனை - மோனை.
முக - முக - முகப்பு.
2. வட மொழியிற் கூறும் மூலமும் பொருளும் ஒரு சிறிதும் பொருந்தாமை
வடமொழியில் முகம் என்பது முக்ஹ (mukha) என்றே வழங்கினும், அதனை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, னகர (நகர) மெய்யை ஈற்றிற் சேர்த்து முக்ஹன் (mukhan) என்னும் வடிவைப் படைத்து; அதில் மு என்னும் முதன்மையான பகுதியைப் பொருளற்ற முன்னொட்டாக (Prefix)¤ தள்ளி, எஞ்சிய க்ஹன் (khan) என்னும் கூற்றைத் தோண்டுதற் பொருள் தரும் வினைப்பகுதியாக்கி, தோண்டுதல், தோண்டப்பட்ட கிடங்கு, கிடங்கு போன்ற வாய், வாயுள்ள இடம் (முகம்) என, முறையே முகம் என்னும் சொற்குப் பொருளுரைப்பர் வடநூலார்.
இது பகுத்தறிவிற்குச் சற்றும் பொருந்தாமையொடு.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும் (குறள். 380)
என்னும் தெய்வத் திருமறைக்கேற்ப, மீண்டும் முகம் என்பது தென்சொல்லே யென்பதை வலியுறுத்தல் காண்க.
முகம் - முகன் (கடைப்போலி).
இனி, கன் என்னும் சொல்லும் தென்சொல்லே.
கல் - கன், கல்லுதல் = தோண்டுதல். கன் - கன்னம் = தோண்டுதல். சுவரைத் துளைத்துத் திருடுதல்.
லகரம் னகரமாகத் திரிதல் இயல்பு.
x.neh.: ஆல் - ஆன் (3 ஆம் வேற்றுமையுருபு)
மேல - மேன.
3. வடமொழியிலும் முக்ஹ என்பது முகம் என்னும் பொருளில் வழங்கல்
எ-டு: முக்ஹ + கமல = முகத் தாமரை (தாமரை முகம்)
முக்ஹ என்னும் சொற்கு வடமொழியில் வாய் என்பதே முதன் மைப் பொருளாகக் கொள்ளினும், முகம் என்னும் பொருட்கும் வட்டஞ்சுற்றி வழியே வருதல் காண்க.
4. தொடர்புடைய தென் சொற்கள்
தலையில் முகம் முன்புறமாயிருத்தல் போல் முகத்தில் மூக்கு முன்னுறுப்பா யிருத்தலால், முன்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட முகம் என்னும் சொல் தமிழில் மூக்கையும் உணர்த்தும்.
முகம் - முக, முகத்தல் = மூக்கால் மணம் நுகர்தல்
முக - மோ - மோப்பு - மோப்பம்
முகம் - முகர், முகர்தல் = மோத்தல். முகர் - மோர்.
முகு - முக்கு - மூக்கு.
மூக்கு = மூக்குப் போன்ற மூலை
முக்கு - முக்கை = ஆறு திரும்பும் மூலை.
5. எதுகை வடிவான இனப்பொருட் சொற்கள்
முகு என்னும் அடிக்கு எதுகையான நுகு. புகு முதலிய அடி களும், முன்மைக் கருத்தின் வழிப்பட்ட தோன்றற் கருத்தை யுணர்த்துவனவாகும்.
நுகு - நுகும்பு = பனையின் இளமடல்
நுகு - நுங்கு = இளம் பனங்காய்ச் சுளை அல்லது கொட்டை
நுகு - (நகு) - நாகு = இளமை.
புகு - பூ. பூத்தல் = தோன்றுதல்.
பூத்தலிற் பூவாமை நன்று
பூ - போ - போத்து = இளங்கிளை.
போத்து - போந்து = பனங்குருத்து
போந்து - போந்தை = பனங்குருத்து.
புகு - (பொகு) - பொகில் = அரும்பு.
பொகில் - போகில் = அரும்பு
ழகரம் சில சொற்களில் ககரமாகத் திரியும்
எ-டு: தொழுதி - தொகுதி. முழை - முகை.
இங்ஙனமே. நுழு. புழு. முழு முதலிய ழகர உயிர்மெய்யீற்றுச் சொற்களும் ககர வுயிர் மெய்யீற்றினவாய்த் திரிந்திருத்தல் வேண்டும்.
முள் - முழு - முகு. நுள் - நுழு - நுகு.
முள் - முளை. முளைத்தல் = தோன்றுதல்.
நுழுந்து = இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு.
ஆயிரக்கணக்கான பழந் தென்சொற்கள் அழிந்து போயினமையால், பல கருத்துகளை இணைக்கும் அண்டுகளை எல்லா மொழி முதல் அடிகட்கும் காட்ட முடிந்திலது.
6. வடமொழியிற் பிற சொல்லிருத்தல்
முகத்தைக் குறித்தற்கு ஆனனம், வதனம், முதலிய பிறசொற்கள் வடமொழியிலுள.
7. தென்மொழியிற் பிற சொல்லின்மை
தென்மொழியில் முகத்தைக் குறித்தற்குத் தொன்று தொட்டு வழங்குவது முகம் என்னும் சொல் ஒன்றே.
8. தென்சொல் வளம்
இலை, தாள், தோகை, ஓலை என ஒரே நிலைத்திணைச் சினையை நால் வகைப்படுத்தவும், வடு (மா), மூசு (பலா), கச்சல் (வாழை) என முக்கனிகட்கும் பிஞ்சு நிலையில் சிறப்புச் சொல் வழங்கவும் தெரிந்த மதிமாண் பண்டைத் தமிழர்க்கு முகத்தைக் குறித்துச் சொல்லில்லையென்பது, பகுத்தறிவுடையார்க்குக் கூறும் கூற்றன்று.
9. வடமொழியில் தென்சொலுண்மை
ஆயிரக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் வெளிப் படையாய் வழங்கிவருவதால் வடமொழி தென்சொல்லைக் கடன் கொள்ளாதென்னும் பித்தர் கூற்றை எள்ளி யிகழ்க.
10. மேலையாரியத்தில் முகம் என்னும் சொல்லின்மை
மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலேனும் முகம் என்னும் சொல் லின்மையால் முகம் என்பது தென்பாலி முகத்துத் தோன்றிய தென்சொல்லேயென ஓங்கி அறைக. - தமிழ்ப்பொழில், ஆவணி 1958.
#தமிழ்மொழித் தோற்றம்
1. கத்தொலிகள் / (Cries)
காட்டு : ஒ. கோ. கூ.
இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் விளிப்பொலிகள்.
ஒ-ஒசை, ஒதை; ஒல் - ஓலம்,
ஓதை - ஒது. ஒல் - ஒல் - ஒலி.
கூ - கூவு. கூ (க்குரல்). கூப்பு (தொழிற்பெயர்) + இடு = கூப்பிடு.
2. ஒப்பொலிகள் (Imitatives)
காட்டு : கூ - (கூயில்) - குயில். ஒ. நோ: (கூக்கூ) - குக்கூ (cuckoo), கக்கூ என்பது பிற்காலத் துச்சரிப்பு.
மா - மாடு; காகா - காக்கா - காக்கை - காகம், குர் - குரங்கு.
ஒலிக்குறிப்புகள் (Onomatopoeia)
காட்டு : பட்(டு) - படு(விழு). தூ - துப்பு.
உரறு (roar),
அரற்று (rattle), பிளிறு (blare), கரை (cry, crow) முதலிய சொற் களெல்லாம் ஒலிக்குறிப்பே.
உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள் (Interjections)
ஒளி-பளபள, தகதக, பலார், பளிச்சு (flash)
நிறம் - பச்சு, வெள், கரு.
ஊறு - பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து.
நாற்றம் - கம், கமகம.
விரைவு - சடு (சட்), E. sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு.
அச்சம் - துண், திடுக்கு, பே.
இரக்கம் - ஆ, ஆஆ - ஆவா - ஆகா.
அருவருப்பு - சீ, சே, சை.
வியப்பு - ஓ, ஆ, ஏ, ஐ, ஆஆ - (ஆவா) ஆகா.
தெளிவு - ஒ, ஒஒ - ஒவோ - ஒகோ.
சுருக்கம் - சிவ், சிவுக்கு.
விரிவு - பா, பளா.
பருமை - பொந்து, பொது, பொதுக்கு.
செறிவு - கொசகொச, மொசுமொசு.
கனம் - திண்.
கேடு - நொசநொச.
பொலிவு - சம், (ஜம்).
மூட்சி - குப்.
ஏவல் - உசு (உ).
விளி - தோ, சூ. பே.
அமைத்தல் - உசு (உஷ்), E. hush.
நுணுகி நோக்கினால், எல்லாக் குறிப்புகளும் ஒலிக் குறிப்பினின்றே தோன்றினமை புலனாகும் ஆ, ஈ, ஊ என்பவை சுட்டடிகள்.
குறுகுறு என்பது காதில் அங்ஙனம் ஒலிப்பது. பிசுபிசு என்பது பசையுள்ள பொருளைத் தொடும்போது தோன்றும் ஒலி. திடும் என்பது ஒரு பொருள் திடீர் என்று விழும் ஒலி. ஆ என்பது நோவு தோன்றும் போது அரற்றும் ஒலி. இங்ஙனமே பிறவும்.
பிசு என்னுங் குறிப்பினின்று, பிய், பிசின், பிசிர், பிசினி, பிசினாறி முதலிய சொற்கள் பிறக்கும். இங்ஙனமே பிறவற்றி .
குறிப்புச்சொற்கள் இணைக்குறிலாயிருப்பின், இரட்டைக் கிளவியா யிருப்பது பெரும்பான்மை. ஆனால், சில அடுக்குத் தொடர்களும் இரட்டைக்கிளவிபோல் தோன்றுவதுண்டு; அவற்றைப் பிரித்தறிய வேண்டும்.
கா : இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர்
குறுகுறு மினுமினு (மின்னு மின்னு)
மடமட சுடுசுடு
இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும்; தனித்து வந்து பொருள் தராது; அடுக்குச்சொல் தனித்துவந்து பொருள் தரும்.
செக்கச்செவேர், சின்னஞ்சிறு என்பவற்றை இரட்டுக் கிளவி யெனலாம்.
3. வாய்ச் சைகையொலி (Oral Gesture)
முதலாவது அழைப்புவிடுப்புகளும் அண்மை சேய்மைப் பொருள்களும் கத்தொலியோடு கூடிய கைச்சைகையினாலேயே குறிக்கப்பட்டன. பின்பு வாய்ச்சைகையோடு கூடிய ஒலிகளாற் கூறப்பட்டன.
அழைப்பு : வா. (பா என்றும் உலக வழக்கில் வழங்கும்)
வா என்னும் ஒலியை ஒலிக்கும் போது, கீழுதடு மேல் வாய்ப் பல்லைத் தொட்டிறங்குவது, ஒருவன் சேய்மையிலுள்ளவனைத் தன்னிடம் வரச்சொல்லு வதைக் குறிக்கும். இதைக் கைச்சைகையில் கையானது மேலுயர்ந்து கீழிறங்கும் செய்கையுடன்
ஒப்புநோக்குக.
விடுப்பு : போ.
போ என்னும் ஒலியை ஒலிக்கும்போது, பகரமாகிய வெடிப் பொலியும் (Explodent) ஒகாரமாகிய கீழ்மேலங்காப்பொலியும், முறையே போக்கையும் சேய்மையையும் குறிப்பன வாகும்.
4. சொற்கள் தோன்றிய பிறவகைகள்
சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு.
ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை.
எழுத்துத்திரிபு : புழலை - புடலை, பெள் - பெண்.
திரிசொல் : கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை.
மரூஉ : பெயர் - பேர், கிழவர் - கிழார்.
முதன்மெய்நீக்கம் : சமர் - அமர், தழல் - அழல்.
முதன்மெய்ப்பேறு : ஏண் - சேண்.
சிதைவு : எம்மாய் - யாய், நும்மாய் - ஞாய், தம்மாய் - தாய்.
போலி : நாலம் - ஞாலம், நெயவு - நெசவு. குதில் - குதிர்.
இலக்கணப்போலி - சிவிறி (எழுத்து மாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று).
முக்குறை
முதற்குறை : தாமரை - மரை, ஆட்டுக்குட்டி - குட்டி.
இடைக்குறை : வட்டை - வடை, உருண்டை - உண்டை.
கடைக்குறை : தம்பின் - தம்பி, கோன் - கோ.
அறுதிரிபு (உலக வழக்கு)
வலித்தல் : கொம்பு - கொப்பு, ஒளிர் - ஒளிர் - ஒளிறு, பதர் - பதடி.
மெலித்ல் : போக்கு - போங்கு.
நீட்டல் : நடத்து - நடாத்து, கழை - கழாய்.
குறுக்கல் : ஆங்கு - அங்கு.
விரித்தல் : முதல்விரி : காயம் - ஆகாயம்.
இடைவிரி : காதம் - காவதம்
கடைவிரி : திரும் - திரும்பு.
தொகுத்தல் : செய்யுமவன் - செய்வோன்.
குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முகமுசுக்கை).
எதுகை : (இயற்கை) x செயற்கை (செயல் + கை).
காரணச்சொல் : உள்ளி, நாளி - நாழி (நாளம் = மூங்கில்).
தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை.
பண்புப்பெயர் : வெளுமை - வெண்மை.
வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான்.
ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி).
திரிபாகுபெயர் : பித்தம் - பைத்தியம்.
குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி - தொட்டில்.
பருமைப்பெயர் : குன்று - குன்றம், நெருஞ்சில் - ஆனை நெருஞ்சில்.
உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன்.
இல்லோன் பெயர் : அறிவிலி.
தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி.
அறுதொகை
வேற்றுமை : ஊற்றுக்கண், பிழைபொறுத்தான்.
வினை : நிறைகுடம், சுடுசோறு.
பண்பு : வெந்நீர், செம்மறி.
உவமை : கண்ணாடி யிலை.
உம்மை : பயிர்பச்சை, தாய்பிள்ளை.
அன்மொழி : நால்வாய்.
இடைச்சொற்றொடர் : இன்னொன்னு.
புணர்மொழித்திரிபு : புகவிடு - புகட்டு, வரவிடு - வரட்டு, போக விடு - போகடு - போடு. L. pono; Gael. put. W. pwitio; A.S. potian; E. put, pose.
மரூஉப்புணர்ச்சி : தெங்கு + காய் = தேங்காய்.
துணைவினைப்பேறு - எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு.
முன்னொட்டுச்சேர்பு : முற்படு, உட்கொள்.
பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம்.
அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற்றான்.
சினைமுதல் : வாற்குருவி, கொண்டைக்கடலை.
அடைசினை முதல் (வண்ணச்சினைச்சொல்) செங்கால் நாரை.
ஒட்டுப்பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்.
ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துகள் கிளைக்கத்தக்க மூலக் கருத்தை யுடையதாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும்.
கா : வள்
+ இ = வள்ளி - வளி.
+ ஐ = வள்ளை - வளை + அம் = வளையம் - வலயம் (வ.)
+ அல் = வளையல்
+ வி = வளைவி
+ அகம் = வளாகம்
+ அம் = வள்ளம் - வளம் - வளமை - வளப்பம். வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும்.
- அர் = வளர்
- அல் = வள்ளல்
- ஆர் = வளார்
வள்
- தி = வட்டி, + இல் = வட்டில்.
- அணை = வட்டணை
= வண்டி வண்டி- பண்டி - பாண்டி
- இல் = பாண்டில்
- அன் = பாண்டியன்
- து = வட்டு + அகம் = வட்டகம் - (வட்டுகம்) - வட்டுவம்
= வண்டு
- தம் = வட்டம் (வ்ருத்த, வ.) + அகை = வட்டகை.
- ஆரம் = வட்டாரம்.
- தை = வட்டை - வடை.
வட்டம் என்பதை நிலைமொழியாகக் கொண்டு வட்டக் கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வரு மொழியாகக் கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர்மொழிகளும்
தோன்றும்.
வள் - வாளம் - வாளி.
வாளம் - வாணம் - பாண (வ.)
வாளம் = வளைந்தது, வளைந்த, மதில். ஒ.நோ: சக்கரவாளம்.
L. vallum, rampart. Ger. wall. A.S. weall. E. wall.
வாளம் - பாளம் (மதில்போன்ற கனத்த தகடு).
வாளம் - வாள் (வளைந்த கத்தி).
வள் - வணர் - வணங்கு.
tŸ - uri (Skt.), verto (L.).
வள் - வரி - வரை. வரி + சை = வரிசை. வரி + அம் = வரம்.
வரி + அணம் = வரணம் - வண்ணம்.
வரணம் - வரணி - வண்ணி.
வண்ணம் + ஆன் = வண்ணான்.
இவற்றுள் பல சொற்கள் தனித்தனி பற்பல பொருள்களைக் குறிப்பன.
வாயை விரிவா யங்காத்தலால் சேய்மையையும், பக்கவாரியாய் நீட்டிக் கீழ்மேல் ஒடுக்கி யங்காத்தலால் அண்மையையும் இடை நிகர்த்தாய்க் குவித்தங்காத்தலால் இடைமையையும், பக்கவாரியா யொடுக்கிக் கீழ்மேல் நீட்டி யங்காத்தலால் உயரத்தையும் முதற்றமிழர் குறித்தொலித்ததால், முறையே, ஆ ஈ ஊ ஒ என்னும் ஒலிகள் பிறந்திருக்கின்றன.
ஒ உயரத்தை யுணர்த்துவதை ஓங்கு, ஒச்சு முதலிய சொற்களாலறிக.
ஒ-ஒ கா : ஒய்யாரம்.
ஒ - ஊ - ஒ - உ. ஒகரத்தை உகரமாகவும் உகரத்தை ஒகரமாகவும் ஒலிப்பது உலக வழக்கு. உயரங்குறித்து முதலாவது தோன்றிய வொலி ஒகாரமே.
ஊங்கு, உம் உம்மை, உம்பர், உம்பல், உத்தரம், உச்சி, உயர், உன்னதம் முதலிய சொற்களில், ஊகார வுகரங்கள் உயர்ச்சி குறித்தல் காண்க.
மேல் என்னும் உயரங்குறித்த சொல், மேற்சொன்ன என்று இறந்த காலத்தையும், இனிமேல் என்று எதிர்காலத்தையும் உணர்த்தல் போல, ஊகார வுகரச் சுட்டடிப் பெயர்களும் அவ்விரு காலத்தையும் உணர்த்தும்.
கா : காணாவூங்கு இறந்தகாலம்
உம்மை எரிவாய் நிரயத்தும் எதிர்காலம்
எதிர்காலம் பிற்காலம் என்று சொல்லப்படுவதாலும், பின் என்னும் பெயர் காலத்தைப்போன்றே இடத்தையும் குறித்தலாலும், பின்பக்கம் உப்பக்கம் எனப்பட்டது.
ஆகவே, உகரச்சுட்டு உன்னதம் உச்சி முதலிய சொற்களில் உயரத்தையும்; ஊங்கு, உம்பர் முதலிய சொற்களில் உயரத்துடன் இறந்தகாலத்தையும்; உம், உம்மை என்னுஞ் சொற்களில் உயரத்துடன் எதிர்காலத்தையும், உத்தரம் என்னுஞ் சொல்லில் உயரத்துடன் (நூலின்) பிற்பாகத்தையும் பிற்கூறும் மறுமொழி யையும்; உப்பக்கம் என்பதில் பின்பக்கதையும் முதுகையும் உணர்த்துமென்க.
இடைமைச்சுட்டான உகரமும் உயரச்சுட்டான உகரமும் வெவ்வேறு; முன்னது இயற்கையினாயது. பின்னது ஒகாரத்தின் திரிபு.
உதடுகள் உகரத்தை ஒலிக்கும்போது முன்னும் இகரத்தை ஒலிக்கும்போது பின்னும் செல்வதால், உகர இகரங்கள் முறையே முன்பின் என்னும் பொருள்களையும் அவற்றை அடிப்படை யாகக் கொண்ட பிற கருத்துகளையும் தரும் சொற்களைப் பிறப்பிக்கும்.
கா : ஊங்கு = உயரக் கருத்தை அடிப்படையாக் கொண்டு எதிர்காலத்தை யுணர்த்தும், உகரம், முன்மைக் கருத்தை அடிப் படியாகக் கொண்டு அக்காலத்தை உணர்த்துவதாகவுங் கொள்ளலாம். ஊங்கு - ஊக்கு. cif L., Gk. ago, to drive. Act,
agent, agency, agenda முதலிய சொற்கள் ago என்னும் மூலத்தினின்றும் பிறந்தவை. உந்து = முற்செலுத்து.
துர E. drive. A.S. drifan, Ger. treiben, to push.
முன் - முந்து. மூ - மூக்கு - முகம் - முகப்பு. முகம் - நுகம்.
மூக்கு - முகடு. மூக்கு - முகை - முகிழ். மூக்கு - முக்கு.
முகம் என்பது முதலாவது முன்னால் நீண்டிருக்கின்ற மூக்கைக் குறித்து, பின்பு தலையின் முன்புறமான முகத்தைக் குறித்தது. வடமொழியில் அதை வாய்ப்பெயராகக் கொண்டது பிற்காலம்.
மூக்கு - E. mucus. மூக்கு E. beak. Fr. bec, Celt. beic. - மூக்கு E-Celt. peak. முக்கு E. nook, Scot. neuk, Gael. - Ir. niuc.
pike (E. and Celt.) pic (Gael.), pig (W.) - a point; spica (L.), spkike (E.), spoke (E.) முதலிய சொற்கள் மூக்கு என்பதன் வேறுபாடுகளே.
முன் - முனி - நுனி - நுணி - நுண், முனி - முனை - நுனை.
நுண் - L.min. இதனின்று minor, minority, minish, minim, minimum, minister, minstrel, minute, minus முதலிய பல சொற்கள் பிறக்கும்.
முனையைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு - E. cone, a solid pointed figure. cone, L. conus, Gk. konos.
hone (E.), han (A.S.), hein (Ice.) cana (Sans.) முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே.
முட்டு - E. butt. buttress. meet. moot என்னுஞ் சொற்கள் முட்டு என்பதினின்றும் திரிந்தவையே. A.S. metan, to meet; mot, an assembly, முட்டு - முட்டி - கையால் பொருத்துகள்.
ஈங்கு - இங்கு, ஈ - இ. இறங்கு, இழி, இளி, ஈனம். இவை இறங்கலும் இழிவும் குறிக்கும். மேட்டடியில் நிற்கும்போது அண்மை இறக்கமாகும்.
ஈர், இழு - இசு - இசி, இழு - இழுகு - இழுது - எழுது.
இவை பின்னுக்கு அல்லது அண்மைக்கு இழித்தலையும், பின்னுக்கு இழுத்து வரைதலையுங் குறிக்கும். இட, இணுங்கு என்பவை இழுத்தொடித்தலைக் குறிக்கும். இடறு என்பது பின் வாங்கி விழுதலையும், இடை என்பது பின்வாங்கி ஓடுதலையும் குறிக்கும்.
பின் - பிந்து. பின் - பின்று - E. hind, adj; behind, adv.; hinder.; v.t. hinderance, n.: A.S. hinder, adj. hindrian, Ger. hindern. v.t.
பின் - பிற - பிறகு - பிறக்கு - E. back. A.S. boec, Sw. bak, Dan. bag.
திரை = எழினி, அலை, தோற்சுருக்கு, தயிர்த்தோயல். திரைத்தல் = இழுத்தல். வேட்டியை மேலே இழுத்துக் கட்டுதலைத் திரைத்துக் கட்டுதல் என்பர் இன்றும் தென்னாட்டார். திரை (எழினி) இழுப்பது. அலை தோற்சுருக்கு முதலியவை ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போலிருத்தல் காண்க.
திரை என்னும் சொல்லே ஆங்கிலத்தில் draw என்று திரியும். Drawer என்பது இழுக்கின்ற மரத்தட்டையும், இழுத்துக் கட்டினாற் போன்ற குறுகிய காற்சட்டையையும் குறித்தல் காண்க. திரை என்பதினின்று பல மேலையாரியச் சொற்கள் பிறக்கும்.
L. traho, Dut. trekken, E. draw. A.S. dragan, Ger. tragen, Ice. drug. draft, drafts, drag, draggle, dragnet; drain, drainage, drainer; draught, draght house, draughts, draughtOARD, DRAUGHTSMAN; DRAWBACK DRAWSBRIDGE, DRAWEE, DRAWING, DRAWING-ROOM, DRAWL, DRAW-WELL; WITHDRAW, DRAY; DREDG; DREDGER; DREGS, DREGGY; TRACE, TRACERY; TRACK, TRACKROAD; TRACT, TRACTABILITY, TRACTILE, TRACTARIAN, TRACTION, TRACTOR, TRACTIVE, ABSTRACT, ATTRACT, EXTRACT;
TRAIL; TRAIN, TRAINER, TRAINING, TRAINBAND, TRAINearer; trait; trawl; treachery; treat, treatise, treatment, treaty; tret; trick; trigger; troll; த்ராவக (வ.) முதலிய சொற்களெல்லாம் திரை என்னும் சொல்லை மூலமாக அல்லது நிலைமொழியாகக் கொண்டவையே. திரைத்தல் = இழுத்தல், இறக்குதல்.
வினா
1. ஈற்றுவினா - ஓ
ஓகாரம் வினாப் பொருளில் உயரச்சுட்டுகளே பயன்படுத்தப் பட்டன. ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, கீழே கிடக்கும் பல பொருள்களில் ஒன்றை மேலேயெடுத்துக் காட்டிக் கேட்டல் போன்ற வுணர்ச்சி குறிப்பாய்த் தோன்றுதலை நுண்ணிதினோக்கி யுணர்க. சொற்கள் தோன்றுமுன், எது வேண்டுமென்னும் கருத்தில், ஒரு பொருள் எடுத்து அல்லது குறித்துக் காட்டியே கேட்கப்பட்டது.
ஓகாரம் அவனோ, வந்தானோ என்னுஞ் சொற்களிற் போல ஈற்றுவினாவாகவே யிருக்கும்.
2. இருதலைவினா - ஏ
சேய்மை யண்மை யிடைமைச் சுட்டுகளினின்று முறையே அவன் இவன் உவன் முதலிய சுட்டுப்பெயர்களும், அண்மைச் சுட்டினின்றே முன்னிலைப் பெயரும் பிறந்தபோது, தன்னைக் குறிக்க ஓர் ஒலி வேண்டியதாயிற்று. அதற்கு உள்ளிருந்தெழுப்பப்படும் ஓர் ஒலியே பொருத்தமாகும். அவ்வொலி ஏகாரமே. உண்டபின் வயிற்றிலிருந்து எழும் ஒலி ஏப்பம் (Eructation) என்றும், துன்பத்தில் விடும் (அடிவயிற்றினின்றெழும்) நெட்டுயிர்ப்பு ஏங்கு என்னும் சொல்லாலும் குறிக்கப்படுதல் காண்க.
ஏ என்னும் ஒலி அடிவயிற்றினின்று மேனோக்கி யெழுப்பப்படு வதால், அது எழற்பொருளையும் உயரத்தையும் உணர்த்து வதாகும். ஏ - எ.
கா : எ - எக்கு, எழு, எடு, எம்பு, எவ்வு.
ஏ - ஏ, ஏகு, ஏத்து, ஏந்து, ஏண், ஏர், ஏறு.
தென்னு, நெடு, நெம்பு, சேண், மே, மேடு என்பவை, மெய்யொடு கூடிய எகர ஏகார வடிவாய்ப் பிறந்தவை.
எழால், எழில், எழிலி, எழினி என்பவை எழு என்பதினடியாய்ப் பிறந்தவை.
ஏபெற் றாகும் (உரி. 8)
என்றார் தொல்காப்பியர்.
ஏண் என்பதினின்றே ஏணி, ஏணை, சேண், சேணோன் முதலிய சொற்கள் பிறக்கும்.
சேய்மையிற் செல்லுதல் அல்லது தொடர்ந்தொன்றைச் செய்தல் மேற்செல்லு தலாகக் கூறப்படும். ஒ.நோ: go on, go on reading.
மேற்செல்லுதல் என்னும் கருத்தையே ஏ (அம்பு), ஏவு, ஏகு என்னும் சொற்கள் தழுவியன. செய்துகொண்டேயிரு என்பதில் ஏகாரம் தொடர்ச்சியையும், ஒன்றேகால் என்பதிற் கூடுதலையுங் குறிக்கும்.
Educate, elate, erect, eructate, heave, heaven முதலிய சொற்க ளெல்லாம், எகர ஏகார அடியாய்ப் பிறந்து, எழல் அல்லது எடுப்புப்பொருளை உணர்த்துபவையே.
ஒ.நோ : சுவரெடு, to erect a wall.
எகரம் அல்லது எடுத்தல் என்னுஞ் சொல், எடுப்பாக (உயரமாக) வளர்த்தல், வெளியே எடுத்தல், வெளியே எடுத்து நடத்தல், வெளியே என்னுங் கருத்துகளை முறையே தழுவும்.
ஒ.நோ: L. educo. E. educate, to bring up, to draw out the mental powers of, as a child.
L. educo, E. educe, to draw out.
L. educo, duco (Aphesis), to lead.
L. e, ex. Gk. ec, ex. E. ex, out, out of.
பண்டைத்தமிழில் வினைச்சொற்கள் எடுக்க, நடக்க என்று நிகழ்கால வினையெச்ச வடிவிலே கூறப்பட்டிருக்கின்றன. அவையும் கல்லார்வாயில் எடுக்கோ, நடக்கோ என்று ஓகார வீறாகவே வழங்கினதாகத் தெரிகின்றது. இதை இன்றும் மலை யாளத்திற் காணலாம். எடுக்கோ, educo (L.) என்னும் சொற்கள் ஒத்திருத்தலைக் காண்க.
எடு என்னும் சொல் தமிழில் வெளியே எடு என்னும் பொருளில் வழங்குவதை, வாயாலெடு, காலில் முள்ளெடு என்னும் வழக்குகளாலுணர்க. v-e; v¡F-ec, ex. எகரவொலியே பண்டு e என்னும் ஆங்கில வெழுத்திற்கு மிருந்தது.
ஏ என்னும் ஒலி, ஒருவனுக்குள்ளிருந்து வருவதால், அவன் தன்னைக் குறிக்கும் தன்மைப் பெயரடி யாயிற்று. ஏன் - யான் - நான்.
ஏகாரம் எழலைக் குறித்தலால் ஒகாரம்போல வினாப் பொருட்கும் ஏற்றது.
கா : ஏது, ஏவன் (முதல்) அவனே, வந்தானே (ஈறு)
ஏ - எ.கா. எது, எவன், என்.
ஏ - யா. கா : யாது, யாவன், யார்.
ஏகாரத்தின் திரிபே யா என்பது. இதனாலேயே தொல்காப்பியர் யாவை வினாவெழுத்தாகக் கூறவில்லை.
ஒ.நோ: ஏன் - யான், (ஏனை) - யானை. ஏனம் = கருப்பு, பன்றி. ஏழ் - யாழ்.
ஈற்றில் வரும் ஆ வினா சேய்மைபற்றியதாகும். சேய்மையும் உயரத்திற் கினமான பண்பாதலையும், ஆன் ஓன் என்னும் இருவடிவிலும் ஆண்பாலீறு வழங்குவதையும். ஈரெழுத்தும் ஏறத்தாழ ஒரே முயற்சியால் பிறப்பதையும் நோக்கியுணர்க.
ஆ வினா முதலில் வராது. ஆர் என்பது யார் என்பதன் மரூஉ.
தமிழிலுள்ள ஆ, ஈ, ஊ, ஓ, ஏ என்ற ஐந்தெழுத்துகளே, சுட்டும் வினாவும் உயரமும்பற்றிய ஆரியச்சொற்களும் பெரும்பாலான வற்றிற்கு வேர்.
சுட்டு வினாவடிகள் ஆரிய மொழிகளிற் சொற்களாயும், அவற்றுள்ளும் சில எழுத்து மாறியு மிருக்கின்றன. தமிழிலோ அவை எழுத்துகளாயும், ஓரிடத்திலும் பிறழாமலும் இருக்கின்றன.
கா: வடமொழியில்.
பிறழ்ந்தவை பிறழாதவை
அத்ய = இன்றைக்கு இ(த்)தி = இப்படி
அத்ர = இங்கே இத்தம் = இவ்வாறு, E.item
இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப்படியே யிருத்தல் காண்க.
தமிழ்மொழி வளர்ச்சி
தமிழ்மக்கள் குறிஞ்சியி லிருந்தபோது சில சொற்களே தோன்றின. பின்பு முல்லை முதலிய ஏனைத்திணைகளுக்குச் சென்றபோது. ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச்சொற்கள் தோன்றின. அவற்றுள் மருதத்தின் தோன்றினவை பலவாகும். மருதத்திலும் நகரந் தோன்றியபின்னரே பல சொற்கள் தோன்றின.
பல தொழிலும் பல சுலையும் பல நூலும் தோன்றிய போது ஒவ்வொன்றிலும் பற்பல சொற்கள் தோன்றின.
ஒவ்வொரு திணையிலும் பொருளும் தொழிலும் கருத்தும் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன. ஒவ்வொரு தொழிலிலும் கலையிலும் நூலிலும் கருத்துகள் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன.
மருதநிலத்தரசன் ஏனை நாற்றிணைகளையும் அடிப்படுத்திய போது, ஐந்திணை வழக்கும் ஒரு மொழியாயின; பின்பு அடுத்த நாடுகளைக் கைப்பற்றிய போது, சொல்வளம் விரிந்தது.
விலங்கு பறவை முதலிய ஒவ்வோர் உயிரினத்தினின்றும் சில சொற்களும் வழக்குகளும் கருத்துகளும் தோன்றின. அவற்றுள் நிலைத்திணையினின்றும் தோன்றியவை மிகப்பல. அவையாவன:
முதல்
அறுகுபோல் வேரூன்றி அரசுபோலோங்கி அத்திபோல் துளிர்த்து ஆலபோற் படர்ந்து … என்று ஒருவரை வாழ்த்துவது வழக்கம்.
அரசாணிக்கால் நட்டல், அறுகிடல் என்பவை திருமண வழக்கு.
கொடி = குலத்தொடர்ச்சி. கா : கொடிவழி, கொடி கோத்திரம்.
புல் = சிறுமை. கா. புன்மை, புல்லியர், புன்செய், புன்செயல், புன்னகை.
பனை = பெருமை, ஓரளவு.
மரம் - மரபு. அடியுங் கவையுங் கிளையும் உடைய மரம்போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின், குலவழி மரபெனப்பட்டது.
மன்று என்னும் சொல்லும் மரம் என்பதினின்றே வந்திருக் கின்றது. கா = சோலை. காத்தல் பழச்சோலையைப் போற் காத்தல்.
வாழை - வாழ்.
வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடினபின் பிள்ளைகள் தலையெடுப்பது போலத் தாய்வாழை முதிர்ந்தபின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்ஙனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக.
வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம் என்றார் இராமலிங்க அடிகள்.
வாழை முதிர்ந்தபின் சாயும்.
சாய் - சா = இற. ஒ. நோ: Ice. deyja; Dan. do; Scot. dee. E. die.
சகர டகரங்கட்கு ஓர் இயைபிருப்பதனாலேயே. ஒடி - ஒசி, vide - vise என்று திரிகின்றன.
சா + வி = சாவி (சப். வ.). சாவி + அம் = சாவம் (சாப. வ.) - சாபம்.
சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு.
வாழ்வி x சாவி. வாழ்த்து - வழுத்து. வாழ்த்தல் சொல்வளவே.
சினை
வேர் : வேரூன்று, வேர்கொள், வேரறு.
முளை : கான்முளை; முளை = தோன்று (வி.), இளமை,
துவக்கம் (பெ.).
தண்டு : தண்டு = தடி. gil (bg.): தண்டல் = வரி திரட்டல்.
தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக்
கட்டணம், வீண்.
தண்டி = பெரு, ஒறு (வி.)
தடி = கம்பு, திரட்சி, ஊன் (பெ.). பெரு, வெட்டு (வி.)
தடியாலடித்ததே முதல் தண்டனை.
கவை : கவை = பிரி (வி.).. கவடு = காலிடை. கவை - கவான் -
கமா (உருது).
கிளை : கிளை = பிரி(வி.), இனம், பிரிவு (பெ.). கிளைவழி.
கொம்பு : கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள் கொம்பு
- கொழுகொம்பு. விலங்குக்கொம்பு, எழுத்துக்
கொம்பு, ஆடுகொப்பு, கொடு, வாங்கு (கிளை பயிர்
வளைவதால் தோன்றியவை).
கோடு : கோடு (stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு
இலை : மூவிலைச்சூலம், இலைத்தொழில்.
இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம்.
இலக்கியத்தல் எழுதல்.
தோன்றுதல். பூப்பு பூசுண, பூத்தல், உவகை பூத்தல்.
இலக்கு - இலக்கியம், இலக்கணம்.
பூ : பூத்தல்.
அரும்பு : அரும்பல் தோன்றல். முகிழ் = தோன்று, ஒடுங்கு.
மொக்கு = கோலம். அம்பல் = சிறிது வெளிப்பட்ட பழி.
கூம்பு = ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை.) கூம்பு -
கூப்பு.
மலர் : முகமலர்ச்சி. மலர்த்தல் - மல்லாத்தல். அலர் = பழி.
காய் : கை காய்த்தல், காய் விழுதல் (abortion). மாங்காய் =
குலைக்காய் (heart).
பழம் : பழுத்தல் = முதிர்தல். கா : பழுத்த கிழம். சளி, சிலந்தி
முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும்.
= நிறைதல். கா : நைவளம் பழுநிய, பழுத்த சைவன்.
= தண்டனை நேர்தல். கா :10 உருபா,பழுத்து விட்டது.
பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி.
இலைப்பழுப்பு.பழுப்பு-பசுப்பு(தெ.).பசப்பு- பசலை.
பழம் - பழமை - பழைமை - பழகு - பழங்கு - வழங்கு.
பழவினை, பழையன், பழங்கண்.
பழம் - பயம், பழன் - பயன். ஒ.நோ: .fruit = effect
பழம் - பல (வ.) fruit: பலி (வ.). to frutify.
பண்டு = பழம் (தெ.), பழைமை.
கனி : கன்னுதல் = பழுத்தல், கொப்புளம் தோன்றல்.
கன்னி (பழுத்தது) - கனி.
கன்னி = பருவமான பெண். ஒ.நோ. matured girl.
கன்னி - கன்னிகை. கன்யா (வ.).
குலை : ஈரற்குலை.
விதை : வித்து = முதற்காரணம், இம்மி, எள், தினை = சிற்றளவு.
எள்(ளு) = இகழ் (வி.).
எண்மை - எளிமை. எள்கு (எஃகு) - இளகு - இளமை
- இளை. இளகு - இலகு - இலேசு. இளை - எய்.
குன்றி ஓரளவு. காணம் (கொள்) = ஓரளவு பொன்,
பொற்காசு, பொக்கு = பொய், பொக்கணம் = பை.
தழை : தழைத்தல்.
குழை : நகை.
தோடு : கம்மல், திரட்சி, ஓலை = எழுத்து, திருமுகம்,ஆவணம்,
திருமண முன்னறிவிப்பு (இக்காலத்து).
கொழுந்து : குலக்கொழுந்து, கங்கைக்கொழுந்து.
குருத்து : காதின் குருத்து.
தமிழ் வரலாற்றடிப்படை
மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம் பிள்ளை அவர்கள் 1908 - இலேயே,
வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப்புதிரை (Problem) மிகக் கேடானதும் மிகச்சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்து வருகின்றது. இங்குள்ள மக்களுட் பெரும்பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர். இங்குக்கூட, வரலாற்றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றி பெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகின் றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும்.
அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிகநீடப் பெருவழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சமவெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும்.
என்று எழுதினார். இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி,
குமுகாய வேற்பாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்விமிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புக்கள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார். அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற் கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின் பற்றுகின்றேன். என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத்தலை வராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951), சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.
குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892 இலேயே வெளிவந்ததாயினும், 1920 - இற்குப் பின்னரே தமிழாராய்ச்சி யாளரிடைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று. குமரிநாடே, தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணாததுமான உண்மையாகி விட்டது. ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மையினாலும், தமிழரின் சொலமாட்டா மையாலும், வையாபுரித்தமிழர் தொகை வளர்ச்சியினாலும், மேலையர் இன்னும் இவ்வுண்மையை ஒப்புக் கொண்டிலர். அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசியாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப்படையிலேயே, மேனாட்டு மொழியாராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இற்றை யறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடையுண் மையாலும், ஆராய்ச்சியில்லாரும், கற்றபேதையரும், வேலை வாய்ப்புப்பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொரு ளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப் பற்றிலிகளும்,மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர்.
மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரி நாட்டுத் தமிழி லக்கண நூலாரேயென்றும், மொழியமைப்பில் தமிழுக்கொப் பானது வேறெம்மொழியும் இவ்வுலகில் இல்லையென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்கவேண்டியவ ரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகுமென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவையாதலின் விலக்கும். வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக்கருவியும் பயன்படாதென்றும், அறிதல் வேண்டும்.
சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப்பிள்ளை, தவறான அடிப்படைகொண் டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபுகொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8 ஆம் நூற்றாண்டினதாகக் காட்டிவிட்டார்.
ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டு செல்லும். இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங்காலத்திற்குப் பின் அதன் வழி வந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது.
வாழை தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், வாழைப்பூ என்பது போல் தாழைப்பூ என்று வராது. Patrimony என்பதற் கொத்த பொருள் matrimony என்னுஞ் சொற்கில்லை. இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது.
பேரா. சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற் காலக்கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலும் தான் பயன்படுமேயொழிய, மாந்தனுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக்கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும், பயன்படாவென அறிக.
ஆகவே, கருவி கொண்டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (Guess work) என்றும் கூறுவது; அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும். விரல் என்னும் பெயர் விரி என்னும் வினையினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும், திரிந்துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல்லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சி யாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்து விடுகின்றது. அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சி யடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண்மணி களுள் (நவரத்தினங்களுள்) எதைக்காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனை யோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலையென்று தள்ளிவிட முடியாது. இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கையிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோ ரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளை யெல்லாங் கண்டு, வரலாறு, மாந்தனூல் (Anthropology), ஞாலநூல் (Geography), நிலநூல் (Geology), உளநூல் (Psychology) முதலிய அறிவியல் களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல்வரலாறு களும் அவருக்கு விளங்கித் தோன்றும், கீற்றும் (Skeat), வீக்கிலியும் (Weekley) சேம்பர்சு (Chambers) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித்துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல.
ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவ்வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே, தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக்கொள்ளா தார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்ற வரேனும் எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார். அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்தவராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும்.
தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத்திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட்டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமற்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக் கொண்டதாகு மாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட்டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத்தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப் பட்டதென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (S.K.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக்கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (V.) இராகவனாரும், 1952 - இல் வெளிவந்த நந்தமோரியர் காலம் (Age of the Nandas and Mauryas) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (Language and Literature) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (Crete) தீவில் தெர்மிலை (Termilai) என்றும், சின்ன ஆசியாவின் (Asia Minor) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (Lycia) த்ர்ம்மிலி (Trmmili) என்றும், இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் த்ரமிட அல்லது த்ரமிள என்றும், பின்னர்த் த்ரவிட என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப்பெயர் அவர் வாயில் தமிழ் என மாறிற்றென்றும், அவர் மொழியிலிருந்த g j d d b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (Voiced Stops) k e t t p என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (voiceless stors) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர். ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்காவொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம்.
இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு, கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான kanna, surigx (surigg), mastix (mastigos) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச் சொற்களின் மூலமென்று, தலைகீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும்.
தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, (P.T.) சீநிவாசையங்கார் எழுதிய Stone Age in India, History of the Tamils என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Origin and Spread of the Tamils, Pre-Historic South India என்னும் நூல்களையும், படித்துணர்க.
கருத்துகள்
கருத்துரையிடுக