ஞானசேகரன் சிறுகதைகள்
சிறுகதைகள்
Backஅணிந்துரை
பேராசிரியர் க. அருணாசலம்
(தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
1
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும் போது பல உண்மைகள் புலப்படும். அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு நோக்கலாம். காலத்தால் மிக முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெறுமனே இலக்கியங்களாக மட்டுமன்றி அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்களைத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கும் மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன என்னும் உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். ஒருசிலர் அவற்றை ஏற்கத் தயங்கினர். ஆயின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாண்டு காலத் தேடுதல் முயற்சிகள், ஆய்வு முயற்சிகள் முதலியவற்றின் மூலமாக ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “முந்து தமிழ்க்கல்வெட்டுக்கள்” என்னும் நூல் சங்ககால இலக்கியங்களை அலட்சியம் செய்தவர்களை வாய்மூடச் செய்துள்ளது.
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியைக் கொண்டுள்ள சங்ககாலத்தில் இலக்கியங்களைப் படைத்தளித்த இலக்கிய கர்த்தாக்களைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படும். வறுமையில் வாடிய புலமையாளர்களும் அறிவுடை மன்னர்களும் புலமை மிக்க பெண்களும் கணக்காயர்களும் வணிகர்களும் எனப் பல திறத்தினரும் இலக்கிய கர்த்தாக்களாக விளங்கியுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகின்றது. இதே நிலைமையை நாம் தொடர்ந்து இற்றைவரை காணலாம். சோதிட வல்லுனர்களும் வைத்தியர்களும் இலக்கியங்களைப் படைத்தளித் தமையை ஈழத்தின் இடைக்காலத் தமிழ் இலக்கிய உலகிற் காணலாம்.
ஈழத்திலே இருபதாம் நூற்றாண்டிலும் இன்றும் கூட வைத்தியத் துறையைச் சார்ந்த நந்தி, ஜின்னா ஷரிபுத்தீன், தி. ஞானசேகரன், எம். கே. முருகானந்தன், க. சதாசிவம், எஸ். முருகானந்தன் போன்றோர் வைத்தியத் துறையில் மட்டுமல்லாது நவீன இலக்கியத் துறையிலும் தமது தடங்களைப் பதித்துள்ளமை மனங்கொளத்தக்கது.
2
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்; ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
ஞானசேகரன் தமது “வாசனை” என்னும் சிறுகதையின் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது. “ ............. தாத்தா என்மீது அளவு கடந்த அன்பைச் சொரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரை அவரது அரவணைப்பிலும், நிழலிலும்தான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை வளர்ச்சியிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என்னை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது தோளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது அவரது உடம்பின் வாசனை படிப்படியாக என் ஜீவனுக்குள் புகுந்து ஒன்றிப் போய்விட்டது. அந்த வாசனை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல. அந்த வாசனையின் சிறு அதிர்வு கூட என்னைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும். .......தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கிப் பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது. இதனைப் பல முறை நான் எண்ணியதுண்டு.”
1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் மானுடத்தை இதய சுத்தியோடு நேசிக்கும் உயர் பண்பையும் சிறுமைகண்டு பொங்கியெழும் இயல்பையும் சமுதாயத்தில் நிலவிவரும் ஊழல்களையும் போலித்தனங்களையும் கண்டிக்கும் பாங்கினையும் மாறிவரும் கருத்தோட்டங்களை உள்வாங்கிப் புதியதொரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்னும் பேராவலையும் ஒருங்கே தரிசிக்க முடிகின்றது. அவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவராயினும் சாதி, மத பேதமற்ற சமுதாயத்தைக் காணவிழையும் முனைப்பினை அவரது சிறுகதைகள் பலவும் நாவல்கள் சிலவும் வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.
1977ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘புதிய சுவடுகள்’ என்னும் நாவல் இவ்வகையில் விதந்தோதத்தக்கது. அவரது ‘குருதிமலை’ என்னும் நாவலும் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட அவர், வயதான நிலையிலும் கூட இன்றும் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருத்தல் பாராட்டத்தக்க ஒன்றாகும். அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
தமது புனைக்கதைகள் மூலம் நீண்ட காலமாகவே ஈழத்து இலக்கிய உலகிலும் தமிழகத்து இலக்கிய உலகிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். புனைகதைகளைப் படைப்பதுடன் மட்டும் அமையாது கடந்த சில ஆண்டுகளாக ‘ஞானம்’ என்னும் தரமானதோர் இலக்கியச் சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வருகிறார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. படிப்படியாக இச் சஞ்சிகையின் தரம் உயர்ந்து செல்வதனையும் பயன்மிக்க நேர்காணல்களும் விவாதங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்கலாம்.
‘ஞானம்’ சஞ்சிகையின் தரத்தின் காரணமாகக் குறுகிய காலத்துள் இலங்கை, இந்தியா என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைக் கடந்து, உலகில் தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இது வலம்வந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இச்சஞ்சிகைமூலம் ஞானசேகரனின் சாதனைகளும் புகழும் உலகெங்கும் பரவிவருகின்றன. எழுத்தாளர் ஞானசேகரனிலும் பார்க்க ‘ஞானம்’ சஞ்சிகையின் ஆசிரியரது பெயரே இன்று இலக்கிய உலகில் அதிகம் பிரபலமடைந்து வருவதைக் காணமுடிகின்றது.
தமிழ் இலக்கிய உலகம் ஆரம்பத்தில் ஞாசேகரனைத் தரமானதொரு படைப்பாளியாகவே இனங்கண்டிருந்தது. ஆயின் ‘ஞானம்’ சஞ்சிகை வெளிவரத் தொடங்கியதிலிருந்து இதழ்கள்தோறும் அவர் முன்வைக்கும் கருத்துகள், நேர்காணலின்போது ஆய்வாளர் களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் பாங்கு, தொடுக்கும் வினாக்கள், மணிவிழா நாயகர்களையும், மறைந்த எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யும்போதும் நினைவு கூரும்போதும் வெளிப்படுத்தும் கருத்துகள், வாசகர்களின் கேள்விக்கான பதில்கள் முதலியவற்றின் மூலம் அவரது எழுத்தாற்றலை மட்டுமன்றி விசாலித்த அறிவையும் இலக்கியப் புலமையையும் எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும் இனங்காணும் ஆற்றலையும் கண்டு இலக்கிய உலகம் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டிருக்கிறது.
3
இச் சிறுகதைத் தொகுதியிலமைந்துள்ள கதைகள் யாவற் றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது ஒரு சில உண்மைகள் புலப்படும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி எனவும் அவ்வக்கால மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்கள் எனவும் சமுதாயத்தை விமர்சனம் செய்யும் சாதனம் எனவும் சமுதாயத்தை அது இருக்கின்ற நிலையிலும் பார்க்க உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முனையும் வலிமை வாய்ந்த ஆயுதம் எனவும் பலபடக் கூறுவர். மேற்கண்ட கருத்துகள் யாவும் ஞானசேகரனின் சிறுகதைகளுக்கும் பொருந்தக் கூடியனவே.
இன்றைய யாழ்ப்பாணத்து இளந்தலைமுறையினர் பலரும் அறிந்திராத செய்திகள் பலவற்றைப் பல சிறுகதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சமகாலப் போர்ச் சூழலைச் சில சிறுகதைகள் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சமுதாயச் சிக்கல்களைப் பல சிறுகதைகள் விமர்சனம் செய்கின்றன. மலையகத்தையும் கொழும்பு மாநகரையும் மையப்படுத்திப் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலங்கையையும், அவுஸ்திரேலியாவையும் தொடர்புபடுத்தும் அகலுலகத் தொடர்புகொண்ட சிறுகதையொன்றும் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றிப் பெற்றுக்கொண்ட அநுபவங்களும் சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. இச்சிறுகதைகளை ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்குப் பிறகு வரும் வாசகர்கள் படிக்கும்போது இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளத் தவறமாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.
இத் தொகுதியிலமைந்துள்ள சிறுகதைகளைத் தெளிவு கருதிப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம் :
(அ) யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.
(ஆ) மலையகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.
(இ) கொழும்பு மாநகரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.
(ஈ) போர்காலச் சூழலைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள்.
(உ) ஆசிரியர் தாம்பெற்ற வைத்திய அநுபவங்களைப் புலப் படுத்தும் சிறுகதைகள்.
(ஊ) அகலுலகத் தொடர்பு கொண்ட சிறுகதைகள்.
4
யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட பல சிறுகதைகளில் ஆசிரியர் தமது இளமைக் கால அநுபவங்களையும் யாழ்ப்பாணச் சமூகத்தின் இறுக்கமான சாதி ஆசாரங்களையும் அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் தொழில் முறைகள், உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், விழாக்கள் முதலியவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தைப் பிரதிபலிக்கும் கதைகளுள் அதிகமானவை 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் எழுதி வெளியிடப்பட்டவை; அன்றைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளையும் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் தத்ரூபமாகக் காட்டுபவை. இன்றைய இளந்தலைமுறையினர் பலர் அறிந்திராத செய்திகள் பலவற்றைக் கொண்டுள்ளவை.
ஆசிரியர் தமது சிறுபராயத்தில் பாடசாலையில் பெற்றுக்கொண்ட அநுபவங்களைக் ‘காலதரிசனம்’ என்னும் சிறுகதையில் புதுமையான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். மூன்று பாத்திரங்களின் பெயர்கள் கதையின் உபதலைப்புகளாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாத்திரமும் தம்மைப்பற்றித் தாமே கூறுகின்றன. அவற்றினூடாக அன்றைய சாதி ஆசாரங்கள், போலித்தனங்கள், ஆடை, அணிவகைகள், சடங்கு முறைகள் முதலியவற்றையும் கால ஓட்டத்தில் அவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தி யுள்ளார். அந்நாளில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் குடுமி வளர்ப்பதும் கடுக்கன் அணிவதும் சர்வசாதாரணம். ஆயின் இளைய தலைமுறை இவற்றைக் கைவிடத் தொடங்கியதை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளார். கதையின் இறுதியில் “ .......... அப்படியானால் இப்ப நாங்கள் பிழையென்று நினைக்கிற விஷயங்கள் காலம் மாறினால் பிழையற்றதாகி விடுமோ? காலம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது!” எனத் தொடுத்திருக்கும் வினா வாசகர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றது. சிறுகதையின் தலையாய பண்புகளுள் ஒன்று சிலவற்றைக் கூறிப் பலவற்றைச் சிந்திக்க வைப்பதாகும். அதே போன்று சிறுகதையின் முடிவும் வாசகர்களை பல மணிநேரம் சிந்திக்க வைப்பதாக அமைதல் வேண்டும். இவ்விரு சிறப்புக்களையும் ஒருங்கே இக்கதையிற் காணலாம்.
இதே போன்று “வாசனை” என்னும் சிறுகதையில் எண்ண அலை உத்தியைக் கையாண்டு தனது சிறுபராயத்து அநுபவங்களையும் அன்றைய மக்களிடம் நிலவிய பேய் பிசாசு பற்றிய நம்பிக்கை களையும் தாத்தா மீது ஆசிரியர் கொண்டிருந்த வாஞ்சையையும் வெளியிட்டுள்ளார்.
காலம்காலமாக இந்துக்கள் மத்தியில் தீபாவளிப் பண்டிகை முக்கிய இடம்பெற்று வருகிறது. இப் பண்டிகையை மையமாகக் கொண்டு இரு சிறுகதைகளை வெவ்வேறு நோக்கில் ஆசிரியர் படைத்துள்ளார். 1969ஆம் ஆண்டு ‘இதுதான் தீபாவளி’ என்னும் சிறுகதை வெளிவந்துள்ளது. இக்கதையில் இரண்டு முக்கிய விடயங்களை அவதானிக்கலாம். இலங்கையிலே நீண்ட காலமாக நிலவி வந்த இன ஒற்றுமை அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் 1950களிலிருந்து சிறிது சிறிதாக விரிசலடையலாயிற்று. 1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தைத் தொடர்ந்து இவ்விரிசல் விஷ்வரூபம் பெறலாயிற்று.
பிரித்தானியராட்சிக் காலத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மாணவர்கள் பலர் யாழ்ப்பாணத்திலமைந்துள்ள பிரபல கல்லூரிகளிற் பயின்றுள்ளார்கள்; ஆங்கில மொழியே போதனா மொழியாக விளங்கியதுவரை பல்கலைக்கழகத்தில் எல்லா இன மாணவர்களும் ஒன்றாகவே கற்றார்கள்; ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள்; இன ஒற்றுமையும் நிலவியது. ஆயின் இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதையடுத்து ‘குரங்கின் கைப்பூமாலை யாக’ பேரினவாத ஆட்சியாளர்களின் கைகளில் நாடு சிக்கித் தவிக்கிறது. இத்தகைய கெடுபிடிகள் அதிகரித்துக் கொண்டு வரும் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியிலும் இனங்களுக் கிடையிலான ஒற்றுமை முற்றாக அற்றுப் போய்விட வில்லை என்பதை நாம் நாளாந்தம் அவதானித்துக் கொண்டி ருக்கிறோம்.
பேரினவாத ஆட்சியாளர்கள், இனவெறியும் மதவெறியும் கொண்ட ‘விகாராதிபதிகள்’, அவர்களது ஏவலாளர்களும் கைக்கூலிகளுமான குண்டர்கள் முதலியோரின் செயற்பாடுகளே ‘இன முரண்பாடு’ முனைப்புப்பெற முதன்மைக் காரணமாயின. அதே சமயம் எமது நாட்டில் ‘இன முரண்பாடு’ தனது உச்சத்தின் கொடுமுடியை எட்டிக்கொண்டிருக்கின்ற நேரத்திலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த பாமரமக்கள் மத்தியிலும் பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் மக்கள் மத்தியிலும் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் மத்தியிலும் அதிசயிக்கத் தக்கவகையில் மிக நெருங்கிய ஒற்றுமை நிலவுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். ஒவ்வொரு இன மக்களிடையேயும் காணப்படும் நல்லிதயம் படைத்தவர்களை நாம் சந்திக்கும்போது “மானிடம் இன்னும் செத்துவிடவில்லை” என்னும் பேருண்மை குன்றின்மேல் விளக்காகத் தெரிகின்றது.
“இதுதான் தீபாவளி” என்னும் சிறுகதை 1969 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1958ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதல் மிகப் பெரிய இனக்கலவரம் நடந்தது. இக்கால இடைவெளிக்குள்தான் இனங்களுக்கிடையிலான விரிசல் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இக்கதையின் ஆசிரியரும் அவரது நெருங்கிய நண்பருமான பியசேனாவும் கொழும்பில் ஒரே அறையில் தங்கியிருந்து தமது தொழிலை மேற்கொண்டனர். பியசேனாவோ இன, சமய, மொழி, பிரதேச வேறுபாடுகளைக் கடந்த உயர்ந்த மனிதாபிமானி. இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை நேரில் பார்த்து மகிழவும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைப் பரிசீலிக்கவும் விரும்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந் நூலாசிரியருடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒன்றாகப் பயணிக்கின்றார். யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தபின் கதாசிரியரின் வீட்டில் இருவரும் ஒன்றாகத் தங்குகின்றனர். இரவு துயில்கின்றனர். காலையில் கதாசிரியர் எழுவதற்கு முன்பே எழுந்து கொண்ட அவரது அருமை நண்பரான பியசேனா யன்னல் திரைச் சீலையை நீக்கிவிட்டு மிகுந்த ஆவலோடு எதனையோ பார்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தாமதமாகி எழுந்திருந்த கதாசிரியர் இதன் உண்மை நிலையை உணர்ந்து, தமது நண்பனை நோக்கி, “இது கொழும்பில்லையடா யாழ்ப்பாணம். அதுவும் தமிழ்ப் பண்பாடு நிறைந்த ஒரு கிராமம். இங்குள்ள வாழ்க்கை முறைகளும் பண்பாடுகளும் வேறானவை. இங்கு ஒரு வயது வந்த பெண்ணை இப்படிப் பார்ப்பதும் வர்ணிப்பதும் குற்றமாகும் - என்று நண்பனிடம் சொல்ல எனக்குத் துணிவில்லை.
ஏனென்றால் பியசேனாவின் உயர்ந்த மனப்பக்குவத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவனும் நானும் கொழும்பு மாநகரில் ஒரே அறையில் ஆறு வருடங்களுக்கு மேலாகக் காலத்தைக் கடத்தி வருகிறோம்.” இக் கூற்று எமது ஆழமான சிந்தனைக்குரியது. இக் கூற்றினைச் சீர் தூக்கிப் பார்க்கும் கூர்மதி படைத்த வாசகர்கள் இதன் உண்மையை நன்கு புரிந்து கொள்வார்கள்.
தீபாவளிப் பண்டிகையானது மிகப் புனிதமானதொரு வழிபாடாகும். தீபாவளிப் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றிச் சமணர்களும் மிக நீண்ட காலமாகவே மிகப் புனிதமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இது வரலாற்று உண்மையாகும். ஆயின் கடந்த சில தசாப்தங்களுள் எல்லாமே மிக வேகமான மாற்றங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவ்வுண்மைகளையும் ஆசிரியர் இக்கதையில் மிக நாசூக்காக வெளிப்படுத்தியிருத்தல் விண்டுரைக்கத் தக்கதொன்றாகும்.
பியசேனாவும் கதாசிரியரும் தீபாவளிப் பண்டிகையைக் கண்டு களிக்க இந்துக் கோயில் ஒன்றுக்கு ஒன்றாகவே செல்கின்றனர். பக்தி சிரத்தையோடு அங்கு நடைபெற்ற வழிபாட்டு முறைகளையும் பக்திப் பாடல்களின் இனிமையையும் கண்டு பியசேனா மெய்சிலிர்க்கின்றார். அவற்றை வாயாரப் புகழ்கின்றார். அதனைக் கண்டு கதாசிரியர் பெருமிதமடைகின்றார்.
கோயிலிலிருந்து இருவரும் திரும்புகையில் தலைவேறு உடல்வேறாக வீதியெங்கும் இரத்தம் தோய்ந்த நிலையில் வாகனத்திற் கொண்டு செல்லப்படும் வெட்டப்பட்ட ஆடு, அதனைத் தொடர்ந்து கதாசிரியரின் வீட்டில் இடம்பெற்ற தந்தையாரின் வெறியாட்டம், குடும்பத்தில் இடம்பெற்ற அமர்க்களம், அதனைக் கண்ட பியசேனாவின் புரிந்துகொள்ளாமை, இவற்றையெல்லாம் அவதா னித்துக் கொண்டிருந்த கதாசிரியரின் மனமுறிவு முதலியன எமது உள்ளத்தை மிகுதியாக நெருடுகின்றன. அதே சமயம் எந்த ஒரு நாணயத்துக்கும் இரு பக்கங்களுள்ளன என்னும் மறுக்க முடியாத உண்மையையும் கதாசிரியர் மிகநுட்பமான முறையில் இக்கதையில் புலப்படுத்தியுள்ளார்.
அதே சமயம் தமது அருமை நண்பன் பியசேனாவுக்குச் சில உண்மைகளைத் துணீகர ஆண்மையுடன் புலப்படுத்தியிருந்தால் இக்கதை மேலும் சிறந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதாவது இந்துக்களின் பண்டிகைகளில் மட்டுமல்லாது பௌத்த மதத்தவர்களின் புனித பண்டிகைகள் பலவற்றிலும் இவ்விரு முரண்பட்ட தன்மைகளும் தாராளமாக இடம்பெற்று வருவதையும் இன்றைய மாறுதல்களையும் சுட்டிக் காட்டியிருத்தல் வேண்டும்.
அடுத்ததாக 1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தீபாவளிப் பரிசு’ என்னும் சிறுகதை வேறொரு வகையில் சில உண்மைகளைப் புலப்படுத்தி நிற்கிறது. தைப்பொங்கல், வருடப் பொங்கல், தீபாவளி முதலிய பண்டிகைகளைப் பெரியவர்களிலும் பார்க்கச் சிறியவர்களே மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து மகிழ்ச்சிகரமாகக் கொண்டாட முயல்கின்றனர். இப்பண்பு இந்துக்கள் மத்தியில் மட்டுமன்றிச் சகல மதத்தவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. சமூகத்தின் மேல் தட்டு வர்க்கத்தினரதும் மத்தியதர வர்க்கத்தினரதும் குழந்தைகளுக்கு இத்தகைய பண்டிகைகள் பேரானந்தத்தை அளிக்கின்றன. ஆயின் சகல மதங்களையும் சேர்ந்த அடிநிலை மக்களது குழந்தைகளுக்கு இவையே பெரும் ஏக்கத்தையும் தாழ்வுச் சிக்கல்களையும், மன உளைச்சல்களையும் ஏற்படுத்துகின்றன என்னும் பேருண்மையை முரண்பட்ட இரு வர்க்கங்களின் செயல்களினூடாக அற்புதமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் தியாகத்துக்கும் பேர்போன வளும் வறுமையில் வாடுபவளுமான நாகம்மா, அவளது சிறுவயது மகள், செல்வந்தரும் பெரியவரும் நல்லவருமான பொன்னம்பலம் ஆகியோரைப் பிரதான பாத்திரங்களாகக் கொண்டு கதையினைப் படைத்துள்ள ஆசிரியர் அப் பாத்திரங்களினூடாகப் பல அரிய உண்மைகளையும் வெளியிட்டுள்ளமை விண்டுரைக்கத்தக்க தொன்றாகும். இம் மூன்று பாத்திரங்களும் வாசகர் மனதில் நீங்கா இடத்தினைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
நாகம்மாவின் மகள் சாந்திக்குப் புதுச்சட்டை வாங்குவதற்கு வேறு வழியற்ற நிலையில் பொன்னம்பலத்தின் குழந்தை ராணியின் சங்கிலியை நாகம்மா களவாட எண்ணுகிறாள். இதனை அவதானித்த சாந்தி அதனைத் தடுக்கிறாள். அக் கட்டத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையே இடம்பெறும் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகக் காணப்படுகிறது. மறைவில் நின்று இவற்றை அவதானித்த பொன்னம்பலம் மறுநாள் நாகம்மாவைத் தன்னிடம் வரும்படி ஆளனுப்புகின்றார்.
நாகம்மா தலை குனிந்தபடியே பொன்னம்பலத்தின் முன்னால் நின்றாள். பொன்னம்பலம் அவளை நோக்கி, “ ......... நாகம்மா நீ ஆண்டாண்டு காலமாகக் கட்டி வளர்த்த நேர்மையென்ற கோட்டையை உனது பிள்ளைப் பாசந்தான் தகர்த்தெறிந்தது.
ஆனால் உனது குழந்தை உனக்குக் கூடாத பெயரேற்படாது காப்பாற்றியிருக்கிறாள். அவளின் உயரிய உள்ளம் என்னை மிகவும் கவர்கிறது. நான் தரும் இந்தத் தீபாவளிப் பரிசை அவளிடம் கொடு. அவளைக் கடவுள் ஒரு குறையுமில்லாமல் என்றும் காப்பாற்றுவார்.” எனக் கூறுகிறார். பெரியவர் பொன்னம்பலம் இவ்விடத்தே உண்மையிற் பெரியவராகவே தோற்றம் தருகின்றார்.
பல்வேறு காரணங்களால் ஏறத்தாழக் கடந்த இருபது ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் இறுக்கமான சாதியமைப்பு முறை, சாதியாசாரங்கள், ஒடுக்குமுறை முதலியன அதிகம் தளர்ந்துள்ளன. 1960களிலும் 1970களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்கள் மிகவும் உக்கிரம் பெற்றன. எனினும் அக்காலப் பகுதியிலும் சாதி அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டி ருந்ததை அவதானிக்கலாம். மிகநீண்ட காலமாகவே யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வேளாளரே நிலவுடமையாளர்களாக விளங்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள் வேளாளரால் வழங்கப்படும் சிறு துண்டு நிலத்திலேயே குடியிருந்துகொண்டு வேளாளருக்கு அடிபணிந்து அவர்களுக்குக் கடூழியம் செய்துகொண்டிருந்தனர். அவர்களது நிலங்களிலுள்ள தென்னைமரங்களையும், பனைமரங்களையும் தமது சீவனோபாயத்துக்காகப் பயன்படுத்திச் சீவல் தொழிலை மேற் கொண்டனர். இதனால் வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எத்தகைய அநீதிகளை இழைத்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு அவர்கள் தயவில் வாழ வேண்டியேற்பட்டது. இவற்றை மையமாகக் கொண்டு ஞானசேகரன் சில கதைகளைப் படைத்துள்ளார்.
1970 ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட ‘பலி’ என்னும் கதையில் வரும் கந்தையாக் கமக்காரன் சாதித் திமிர் பிடித்த வேளாளரின் அசல் பிரதிநிதியாகவும் அவருக்கு அடங்கி ஒடுங்கி வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வேலனும் இக்கதையில் படைக்கப்பட்டுள்ளனர். வேலன் தனது சீவல் தொழிலை மேற்கொண்டு நாள்தோறும் கமக்காரனுக்கு இனாமாகக் கள்ளுக்கொடுக்க வேண்டும். அத்துடன் கமக்காரனின் பயிர்ச்செய்கைக்கும் உதவி செய்தல் வேண்டும். கமக்காரனது கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்.
பலத்த மழையின்போது கமக்காரனின் அழைப்பையேற்று வேலன் அவரது வீட்டிற்குச் செல்கின்றான். மழைக்கு ஒதுங்குவதற்காக வேலன் கமக்காரனின் வீட்டு வாசற்படியில் கதவோரமாக நிற்கின்றான். இதனை அவதானித்த கமக்காரன், “இறங்கடா பணிய கீழ்சாதி! வீட்டுக்குள்ளயும் வந்து விடுவாய் போலைகிடக்கு.” எனக் கண்டிக்கிறார். இளந்தம்பதிகளான வேலனும் வள்ளியும் கமக்காரனது நிலத்தின் ஒரு பகுதியிலேயே சிறு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இளமையும் அழகும் நிறைந்த வள்ளியைச் சுவைக்கக் கமக்காரன் திட்டமிடுகிறார். சுன்னாகத்தில் தனது பெற்றோருடன் தங்கியிருக்கும் தனது மனைவியிடம் கடிதம் ஒன்றைச் சேர்க்குமாறு வேலனை அனுப்பிவிட்டு வள்ளியிடம் தனது வீட்டிற்குக் கள்ளுக்கொண்டு வருமாறு கட்டளையிடுகிறார்.
அவரது கட்டளைப்படி வள்ளியும் கள்ளுடன் அவரது வீட்டிற்குச் செல்கிறாள். வீட்டு வாசற்படியில் மிதித்ததற்காக வேலனைத் திட்டிய கமக்காரன் வள்ளியை உள்ளே வரும்படி அழைக்கிறார். வள்ளி முதலில் உள்ளே செல்ல மறுக்கிறாள். கமக்காரனின் கண்டிப்பினைத் தொடர்ந்து உள்ளே சென்ற வள்ளியைப் பாலியல் வல்லுறவுக்குட் படுத்துகின்றார். அவரது இச்சைக்கு மறுத்த வள்ளி அவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். ஆத்திரம் கொண்ட கமக்காரன் அவளது கையைப் பிடித்துத் திருகி மயக்கமுறச் செய்த பின்னரே உறவு கொள்கிறார். மயக்கம் தெளிந்த பின்னர் எழுந்த வள்ளி “நீயும் ஒரு மனிசனே! பெரிய சாதிக்காறனே? சீ! தூ ....” எனக் காறியுமிழ்ந்துவிட்டுச் செல்கிறாள். அவளால் வேறென்ன செய்ய முடியும். இது ஆசிரியரது வெறுமனே கற்பனையல்ல, யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் நிலவுடமையாளர்களின் தயவில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வாழும் இளம் பெண்கள் நிலவுடைமையாளர்களின் காமப்பசிக்கு இரையாகி வந்தமை வரலாற்றுண்மையாகும்.
இக்கதையில் சூசகமாக இன்னோர் விடயத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். வேலனும் வள்ளியும் அன்புடன் வளர்த்து வந்த கறுப்பி என்னும் பெண் நாய் எப்பொழுதும் வள்ளிக்குக் காவலாகத் திரியும். கமக்காரன் வீட்டை நோக்கி நடந்த வள்ளியைப் பின் தொடர்ந்து கறுப்பியும் செல்கிறது. கறுப்பியை ஓர் ஆண் நாய் பின் தொடர்கிறது. அதனை விரும்பாத கறுப்பி ஆண் நாயை நோக்கி எச்சரிக்கை செய்கிறது. சற்று நேரம் பின் தொடர்ந்த ஆண் நாய், கறுப்பி இடம் கொடுக்காததால் தூரத்தே போய்க் கொண்டிருந்தது. கமக்காரனின் வீட்டுக்குள்ளே வள்ளிக்குத் தீங்கிழைக்கப்படுவதை உணர்ந்து கொண்ட கறுப்பி முதலில் உறுமிக் கொண்டிருந்தது. பின்னர் பலத்த குரலில் ஊளையிடத் தொடங்கியது என ஆசிரியர் காட்டுவது மிகவும் பொருத்தமானதே. மனிதர்களிலும் பார்க்க மிருகங்களுக்கு ‘உணர்திறன்’ அதிகம் என்பதை அண்மையில் நடந்த ‘சுனாமி’ அநர்த்தத்தின் போதும் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர்.
ஆசிரியர் இங்கு மேலுமோர் உண்மையைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆண் நாய்க்கிருக்கும் ரோச உணர்வு கூட அந்தக் கமக்காரனுக்கு இருக்கவில்லை. வள்ளியிடம் அடிவாங்கிய பின்னரும் கமக்காரன் வள்ளியைப் பலாத்காரமாகச் சுவைக்கின்றார்.
மேற்கண்ட சாதிப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் நோக்குவதாக “எங்கோ ஒரு பிசகு” என்னும் கதை அமைந்துள்ளது. ஆறுமுகத்தார், செல்லத்துரையர், முத்தன், சண்முகம் ஆகிய நான்கு பாத்திரங்களைக் கொண்டு அவற்றுக்கிடையிலான உரையாடல்கள், செயல்கள், எண்ணங்கள் முதலியவற்றினூடாக யாழ்ப்பாணத்துச் சாதிமான்களின் சாதித்திமிரையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதிய தலைமுறையினரின் அடங்கி ஒடுங்கி வாழும் போக்கினையும் இளந் தலைமுறையினர் பலர் தமது குலத்தொழிலைக் கைவிட்டுக் கல்வித்துறையில் முன்னேறுவதையும் ஆசிரியர் தத்ரூபமாகக் காட்டியுள்ளார்.
ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் இளமைப் பருவத்தி லிருந்தே நெருங்கிய நண்பர்கள். நீண்டகாலம் செல்லத்துரையர் கொழும்பில் வாழ்ந்த காரணத்தினாற்போலும் அவரிடம் சாதித்திமிர் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆயின் யாழ்ப்பாணத்தில் நிலவுடைமையாளராகவும் ஊர்ப் பெரியவராகவும் திகழ்ந்த ஆறுமுகத்தாரிடம் வயதான நிலையிலும் சாதித்திமிர் அவரை ஆட்டிப் படைப்பதை ஆசிரியர் துல்லியமாகக் காட்டியுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முத்தனிடம் தினமும் கள்ளு வாங்கிச் சுவைக்கும் ஆறுமுகத்தார் கொழும்பில் உயர்பதவி வகிக்கும் முத்துவின் மகனான சண்முகம் வீட்டில் தேநீர் அருந்த மறுப்பதுமல்லாமல் “என்னுடைய மகனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் உன்னுடைய வீட்டில ..... தேத்தண்ணி குடிக்க மாட்டேன்.” எனச் சண்முகத்திடம் நெற்றியிலடித்தாற் போலக் கூறுகின்றார். “முத்தனுடைய மகன் தன்னுடைய வீட்டில் கொடுத்த தேத்தண்ணியைக் குடிக்கக் கூடாதெண்டால் முத்தன் கொடுக்கும் கள்ளை மட்டும் குடிக்கலாமோ?” எனச் செல்லத்துரையர் ஆறுமுகத்தாரை நோக்கிக் கேட்டதும் ஆறுமுகத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. “பனை கொடியேறும் காலத்தில் .... எனத் தொடங்கும் கதையின் ஆரம்பம் சில தசாப்தங்களுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த சாதிமான்கள் கூட கொழும்பில் வாழத் தொடங்கியதும் சாதித்திமிர் படிப்படியாக அடங்கிப் போவதை மிகுந்த நகைச் சுவையுடன் ‘உள்ளும் புறமும்’ என்னும் கதையில் வெளிப்படுத்தியுள்ளார்.
‘இதிலென்ன தவறு?’ என்னும் கதையிலும் சாதிப் பிரச்சினையையும் காதலையும் இழையோட விட்டுள்ள ஆசிரியர் சாதிப் பிரச்சினை காதல் தோல்விக்குக் காரணமாக அமைவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
‘கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக்குட்டியும்’ என்னும் கதையிலும் சாதி ஆசாரமுறைகள் காட்டப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் வேளாளரின் வீடுகளில் ‘எடுபிடி’ வேலைகள் செய்தல், மிகவும் பணிவாக நடந்து கொள்ளுதல், சிரட்டையில் தேநீர் குடித்தல் முதலிய அன்றைய நிலைமைகளை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இக்கதையில் சாதிப் பிரச்சினை முனைப்புப் பெறவில்லை. ஆயின் தாய்மை, குழந்தைப்பாசம் முதலியன தொடர்பாகக் கிராமப்புறத்துப் பெண்களுக்கும் நவநாகரிக நங்கையருக்குமிடையிலான முரண்பாடுகளை உள்ளத்திற் பதியுமாறு அற்புதமான முறையிலே வெளிப்படுத்தியுள்ளார்.
இக்கதையிலே கிராமப்புறத்துப் பெண்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரமாகத் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த கதிரியையும் நவநாகரிகப் பெண்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரமாக வேளாளர் குலத்தைச் சேர்ந்த வசந்தியையும் படைத்துள்ளார். பிள்ளைகள் பலவற்றைப் பெற்று அவை ஒவ்வொன்றுக்கும் குறைந்தது இரண்டு வருடங்களுக்குத் தாய்ப்பாலூட்டி வளர்த்த கதிரியின் உடற்கட்டும் அழகும் குலையாதிருப்பதைக் கண்டு நவநாகரிக நங்கையான வசந்தி வியப்படைகிறாள். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தாலும் திருமணத்தின் பின் கொழும்பிலே வாழத் தொடங்கியதும் கொழும்பு நாகரிகம் அவளைப் பற்றிக் கொண்டது. நவநாகரிகப் பண்புகளுள் ஒன்று பெண்கள் தமது கட்டழகைப் பாதுகாப்பதாகும். குழந்தைகளை அதிகம் பெறக் கூடாது. பெறுகின்ற ஒன்றிரண்டு குழந்தைகளுக்குக் கூடப் போதிய அளவு தாய்ப் பால் கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் கட்டழகு குலைந்து விடும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் வசந்திக்கும் பல பிள்ளைகளைப் பெற்றுத் தாய்ப்பாலூட்டி வளர்த்த பின்பும் கட்டழகு குலையாதிருக்கும் கதிரிக்குமிடையே இடம் பெறும் உரையாடலானது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
தாய்ப்பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் நேரம் வந்தும் பால் கொடுக்க முடியவில்லையே என்னும் தாய்மையுணர்வு மீதூரப்பெற்ற நிலையில் கட்டினை அறுத்துக் கன்றுக்குப் பாலூட்டும் நிகழ்ச்சியும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த கதிரி தாய்மை மீதூரப்பெற்ற நிலையில் உயர்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவளான வசந்தியின் குழந்தை கதறித் துடிப்பதைக் கண்டு அதற்குப் பாலூட்டும் நிகழ்ச்சியும் தாய்மையின் மேன்மையினை வெளிப்படுத்துவனவாக அமைந் துள்ளன. கதிரிக்கும் பசுவுக்கும் முன்னால் வசந்தி ஒரு அற்பப் புழுவாகக் காட்சியளிக்கிறாள்.
‘ஒளியைத் தேடி’ என்னும் சிறுகதை யாழ்ப்பாணத்து மக்களிடம் காணப்படும் சீதனமுறை, மாற்றுக் கல்யாணம், அவற்றினடியாகத் தோன்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் முதலியவற்றைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது. தாய் தந்தையரை இழந்த நிலையில் முப்பது வயதாகியும் சீதனப் பிரச்சினை காரணமாகத் திருமணம் முடிக்காத தங்கையின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட அண்ணன் தனது தங்கையின் நல்வாழ்வுக்காக மாற்றுக் கல்யாணத்தின் மூலம் பிறவிக்குருடி ஒருத்தியைத் திருமணம் செய்ய முடி வெடுக்கிறான். அண்ணன் மீது அளவு கடந்த பாசம் கொண்ட தங்கையோ “அண்ணா! உனக்கு மட்டும் தான் தியாகம் செய்யத் தெரியுமென்று எண்ணாதே. நான் உன்தங்கை எனக்கும் செய்யத் தெரியும்.” என முடிவு செய்து கொண்டு தன்னை விரும்பிய வயதான தரகர் பொன்னம்பலத்தைத் திருமணம் செய்யும் பொருட்டு கலங்கும் கண்களால் மானசீகமாக அண்ணனிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சி உள்ளத்தை உலுக்குவதாகும்.
‘சங்கு சுட்டாலும் ......’, ‘ஒரு சின்னப்பையன் அப்பாவாகிறான்’ ‘ராக்கிங்’ முதலிய கதைகளும் ஆசிரியரது இளமைக்கால அநுபவங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. காதலின் கூத்தையெல்லாம் வெளிப்படுத்துவதாக ‘குமிழி’ என்னும் கதை அமைந்துள்ளது.
5
மலையகப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ‘சீட்டரிசி’, ‘திருப்புமுனைத் தரிப்புகள்’, ‘இப்படியும் ஓர் உறவு’, ‘பிறந்த மண்’ முதலியகதைகளைப் படைத்துள்ளார். மலையகப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆசிரியர் படைத்துள்ள ‘குருதி மலை’, ‘லயத்துச் சிறைகள்’, ‘கவ்வாத்து’ ஆகிய நாவல்கள் பலரதும் பாராட்டுதல்களைப் பெற்றமை மனங்கொளத்தக்கது.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மலையகத்தில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிவரும் இந்நூலாசிரியர், தாழ்வுற்று வறுமை மிஞ்சிச் சுதந்திரம் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் மலையகத் தொழிலாளர் சமூகத்தின் விமோசனத்திற்காக வைத்தியப் பணியினை மட்டுமன்றி எழுத்துப் பணியினையும் மேற்கொண்டு வருபவர்.
மலையகத் தொழிலாளர்களின் வரலாறே சோக மயமானது; இருள் சூழ்ந்தது. அவர்களுள்ளும் பெண்களின் நிலைமை சொல்லுந்தரமன்று. பெண் அடிமைத்தனத்தின் உச்சநிலையை மலையகத்திற் காணலாம். தோட்டங்களின் உயர் அதிகாரிகள்முதல் கீழ் அதிகாரிகள்வரை பெண்களைப் பல்வேறு கொடுமைகளுக்கும் உள்ளாக்குவதை அவதானிக்கலாம். அறியாமையும் வறுமையும் நிறைந்த தொழிலாளர்கள் மத்தியில் கல்வி வாசனை என்பது நீண்ட காலமாக அருகியே காணப்பட்டது. தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்குச் சாதகமான சூழ்நிலை மிக அண்மைக்காலம் வரை மிகவும் அருகியே காணப்பட்டது. தோட்டங்களின் உயர்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை அவர்கள் தொழிலாளர்களை மந்தைக் கூட்டமாகவே நீண்ட காலமாகக் கருதிவந்துள்ளனர். தங்களது பிள்ளைகளை மட்டும் பிரபல கல்லூரிகளில் சேர்த்து உயர் கல்வியை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க முயன்று வந்துள்ளனர்; அதற்கேற்ற வகையில் அவர்களது பொருளாதார நிலையும் சாதகமாக அமைந்தது.
ஆயின் தொழிலாளர்களது பிள்ளைகள் சாதாரண கல்வியைக் கூடப் பெறமுடியாத வகையில் தோட்டத்து அதிகாரிகள் நீண்ட காலமாக வியூகம் வகுத்துக் கொண்டிருந்தனர். தொழிலாளியை நோக்கி, “உன்னுடைய பிள்ளை படித்துத் தோட்டத்துரையாகவா வரப் போகிறான்? எவ்வளவு தான் படித்தாலும் கடைசியில் மண்வெட்டியும், கவ்வாத்துக் கத்தியும், சுரண்டியுமாகத் தோட்டங்களில் தான் வேலை செய்யப் போகிறான்” எனத் தொழிலாளர்களின் மனதில் தாழ்வு மனப் பான்மையையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துவதில் நீண்டகாலமாக முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் “பாடசாலைகள்” என்ற பெயரில் தொழிலாளர்களின் பிள்ளைகள் பெருந்தோட்டப் பயிர்களுக்குத் தீங்கேதும் விளைவிக்காத வகையில் பகல்நேரத்தில் அவர்களை அவற்றில் அடைத்து வைத்திருந்தார்கள். காலப்போக்கில் இத்தகைய நிலைமைகள் படிப்படியாக மாறத்தொடங்கின.
தொழிலாளர்களும் எமது பிள்ளைகள் படித்துப் பெரிய உத்தியோகமா பார்க்கப் போகிறார்கள். வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி அவர்களைப் படிப்பிக்க வைத்தாலும் பிரசாவுரிமை இல்லாததன் காரணமாக அரசாங்க உத்தியோகம் எதனையும் பெற முடியாது. அந்நிலையில் கல்விகற்ற தொழிலாளர்களாகவே அவர்கள் விளங்க முடியும் என்ற கருத்து நிலையும் அவர்களிடையே நீண்ட காலமாக நிலவிவந்துள்ளது.
இவற்றையெல்லாம் கதாசிரியர் இரத்தினச் சுருக்கமாகச் ‘சீட்டரிசி’, ‘திருப்புமுனைத் தரிப்புகள்’ முதலிய சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளமை விண்டுரைக்கத்தக்க தொன்றாகும். ‘திருப்புமுனைத் தரிப்புகள்’ என்னும் கதையில் இடம் பெறும் தொழிலாளியான பெருமாள் தனது மகனை எப்பாடுபட்டேனும் கல்வி கற்கவைத்து அரச உத்தியோகம் வகிக்கச் செய்யவேண்டும் எனக் கனவு காண்கின்றான்; அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயாராகின்றான். ஆயின் முடிவில், “ஏன்டா தங்கராசு நீயும் பேர் பதிஞ்சு வேலைக்கு வந்துட்டியா. ஒங்கப்பன் பெரிசா ஒன்னைப் படிக்க வைக்கிறேன்னு சம்புராயம் புடிச்சானே ..... முடிஞ்சுதா...? வாழையடி வாழையா நீங்கெல்லாம் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமா வாழ வேண்டியவங்கன்னு அன்னிக்கே சொன்னேனே...... ஒங்கப்பன் கேக்கலியே...... அடேய் நீயும் ஒங்கப்பன் கூட கவ்வாத்து வெட்டப்போடா...... அப்பதான் தோள்பட்டை கழண்டு வரும். ஒங்களுக்கெல்லாம் புத்தி வரும் ......” கண்டக்டரின் குரலில் ஏளனம். தான் ஜெயித்து விட்டதில் ஏற்பட்ட மமதை என்ற வரிகள் வாசகரின் மனதில் சுரீரெனத் தைக்கின்றன. தொழிலாளியின் மகன் தொழிலாளியாகத்தான் ஆகவேண்டுமா என்ற ஏக்கம் ஏற்படுகின்றது. முடிவில், பெருமாள் கண்ட கனவாக அது காட்டப்படும் விதம் ஆசிரியரின் கதையாக்கத் திறனுக்குச் சான்றாக அமைகிறது.
கதையின் இறுதி முடிவில் தங்கராசு வைராக்கியத்துடன் மீண்டும் படிக்கத் தொடங்குவதாகக் காட்டியதன் மூலம் தொழிலாள சமூகத்திற்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஆசிரியர் காட்டுகிறார். தொழிலாளர் மத்தியில் தன்னம்பிக்கை பிறந்து கல்வியில் நாட்டம் செலுத்தக்கூடிய வாய்ப்பை இக்கதை ஏற்படுத்துகிறது.
‘சீட்டரிசி’ என்னும் கதையில் வரும் பார்வதியும் கந்தையாவும் நெஞ்சில் நிலைக்கும் பாத்திரங்களாக விளங்குகின்றனர். வாசகர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடிவடைவதும் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
கதாசிரியர் மலையகத்தில் நீண்டகாலமாகக் கடமையாற்றிப் பெற்றுக் கொண்ட அநுபவங்களுட் சிலவும் அவரது கதைகளில் வெளிப்பட்டுள்ளன. மலையகத் தொழிலாளர் சமூகத்திலும் சாதி ஏற்றத் தாழ்வு நிலவுவதையும் அது காதலுக்குத் தடையாக அமைவதையும் நெஞ்சை உருக்கும் வகையில் ‘இப்படியும் ஓர் உறவு’ என்ற கதையில் வெளிப்படுத்தியுள்ளார்; கூடவே தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகளையும் பெண் அடிமைத்தனத்தையும் புலப் படுத்தியுள்ளார்.
இவ்வுலகில் எவரும் தான் பிறந்து வளர்ந்த மண்ணில் அலாதியான பற்றினைக் கொண்டிருப்பர்; பிறந்த மண் தெய்வம் மாதிரி என்பர். ‘பிறந்த மண்’ என்னும் கதையில் ஆசிரியர் இதனைத் தத்ரூபமாக வெளிப்படுத்துகின்றார். பிரித்தானியராட்சிக் காலத்தில் மாணிக்கத்தேவர் தமிழ் நாட்டிற் பிறந்து வளர்ந்தாலும் தொழில் நிமித்தம் மலையகத்திலே குடியேறி நீண்டகாலம் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்த பின் இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்குத் திரும்பவேண்டியேற்படுகின்றது. மாணிக்கத்தேவருக்கும் பிறந்த மண்ணில் இறுதிக்காலத்தைக் கழிக்கப் போவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி. அவருக்கு ஒரேயொரு மகன். மகன் பிறந்த மறுவருடமே தாய் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள். மாணிக்கத்தேவர் அரும்பாடுபட்டு மகனை வளர்த்துக் கல்வியிலும் முன்னேற்றம் காணச் செய்கின்றார். எனினும் பிரசா உரிமைப் பிரச்சினை காரணமாக மகனுக்கு அரசாங்கத் தொழில் எதுவுமே கிடைக்கவில்லை, அதனால் அவனும் தொழிலாளியாகவே வாழ்கின்றான். மாணிக்கத்தேவருக்குள்ள ஒரேயொரு சொத்து அவரது மகனே. மகனையும் தன்னுடன் இந்தியாவிற்கு வருமாறு அழைக்கின்றார். மகனோ தான் பிறந்து வளர்ந்த மலையகத்தைப் பிரியமறுக்கிறான். தந்தைக்குப் பிறந்த மண் தமிழ்நாடு. மகனுக்குப் பிறந்த மண் மலைநாடு. இருவருக்குமிடையிலான பாசப் பிணைப்பினையும் இருவரும் பிறந்த மண்மீது கொண்டிருந்த பற்றினையும் ஆசிரியர் வெளிப்படுத்தும் திறன் பாராட்டத்தக்கதாகும். அதே சமயம் மாணிக்கத் தேவரின் வாயிலாகத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையினையும் வேதனைகளையும் ஆசிரியர் வெளிப் படுத்தத் தவறவில்லை.
6
கொழும்பு மாநகரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆசிரியர் எழுதியுள்ள கதைகளுட் பலவும் போர்க்காலச் சூழ்நிலையையும் அவரது இளமைக்கால அநுபவங்களையும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. இவ்வகையில் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’, ‘கருவறை எழுதிய தீர்ப்பு’, ‘சோதனை’, ‘சுதந்திரத்தின் விலை’, ‘பிழைப்பு’, ‘கடமை’ முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவரான மார்க்சிம் கார்க்கி ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளதை முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே வாசித்தேன். அவரது கூற்றினை அப்படியே இங்கு என்னால் தரமுடியவில்லை. ஆயினும் ஞாபகத்திலுள்ள ஒருசில வாசகங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர் எழுத்தாளர்களை நோக்கி, “நீங்கள் எழுதுவதற்காகப் பேனாவையும் வெள்ளைத்தாளையும் தூக்குவதற்கு முன்னர் தயவு செய்து அல்லலுற்று ஆற்றாது அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஏழை மக்களது குடியிருப்புகளுக்குச் செல்லுங்கள்; அவர்களுடன் ஒரு சிறிது காலமாவது இணைந்து வாழ்ந்து அவர்களது நரகவேதனைகளையும் வாழ்க்கைக் கொடுமைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் ‘சுரண்டல்’ போன்ற ஈனத்தனமான செயல்களையும் கூர்ந்து கவனியுங்கள் ; அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய முயலுங்கள்; அவற்றிற்கான தீர்வு மார்க்கங்களையும் கண்டறிய முயலுங்கள் ; அதன் பின்னர் எழுதத் தொடங்குங்கள்” என அறிவு புகட்டினார்.
அதற்கேற்பவே அவரது “தாய்” முதலிய படைப்புகள் வெளியாகி உலகப் புகழ் பெற்றன. இவையெல்லாவற்றையும் நன்கு உள்வாங்கிய யுகப் பெருங் கவிஞனாகிய பாரதியார் இவை தொடர்பாக மிகச் சிறந்த பாடல்கள் பலவற்றை இயற்றியுள்ளார்; கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்; கதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
இவையெல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்த கதாசிரியர் தம்மால் வெளியிடப்பட்டுவரும் ஞானம் சஞ்சிகையின் ஒவ்வோர் இதழ்களிலும், “வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும், மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவிகொள்வார்” என்னும் பாரதியின் பாடலடிகளைத் தவறாது தாரக மந்திரமாகக் கருதி வெளியிட்டு வருகின்றார். மார்க்சிம் கார்க்கியின் வசனத்திலமைந்துள்ள கருத்துகளுக்கும் பாரதியின் இரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ள பாடலடிகளுக்குமிடையில் எத்துணைப் பொருத்தம் காணப்படுகின்றது என்பதை நாம் அவதானித்தல் மிகமிக அவசியமாகும்.
டாக்டர் ஞானசேகரனின் கதைகள் பலவற்றிலும் இத்தகைய பண்புகள் மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.
“வெங்கொடுமைச் சாக்காட்டில் வெய்துயிர்த்து வாடி வதங்கிக் கொண்டிருக்கும் மக்களை மறந்து வெறுமனே கற்பனாலோகத்தில் சஞ்சரிக்க மனித நேயம் பூண்ட எந்த இலக்கிய கர்த்தாவும் தயாராக மாட்டான்; தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்த்த வண்ண விளக்கிஃது; மடியத் திருவுளமோ? என யுகப் பெருங் கவிஞனான பாரதியார் வினாவினான்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளாற் பிறருக்கு அடிமைப்பட்ட நாடோ, இனமோ, சமூகப் பிரிவுகளோ சுதந்திரம் பெறுவதற்காகச் செய்துள்ள தியாகங்களும் உயிர், உடைமை இழப்புகளும் அளப்பில என்பதை உலக வரலாறு காட்டி நிற்கும்.”
இலங்கையில் 1915 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிங்கள, முஸ்லிம் கலவரங்களையடுத்து வளரத் தொடங்கிய இனங்களுக் கிடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் 1950 களிலும் 1970 களிலும் படிப்படியாக அதிகரித்து 1980 களிலிருந்து விஷ்வரூபம் எடுக்கலாயின.
இவற்றின் விளைவாக எமது நாட்டில் வாழும் அனைத்துச் சமூகங்களும் வெவ்வேறு அளவில் பாதிப்புகளுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிர், உடைமை இழப்புகள் கணக்கிலடங்கா. இலட்சோபலட்சம் தமிழ் மக்கள் சகலவற்றையும் இழந்து ஏதிலிகளாக இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் அகதிமுகாம்களில் அல்லலுறுகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சிறுகதைகளும், நாவல்களும், கவிதைகளும், நாடகங்களும் மேற்கண்ட அவலங்களைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணங் களாகத் திகழ்கின்றன.
சில விடயங்களை நேரடியாகக் கூறுவது பண்பற்றதாகவோ, ஆபத்தை ஏற்படுத்துவதாகவோ அமையலாம். இதன் காரணமாகவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இலக்கிய கர்த்தாக்கள் பலர் அவற்றை மறைமுகமாகப் புலப்படுத்த முயன்று வந்துள்ளனர். அகத்திணைச் செய்திகள் பலவற்றை இங்கிதமாகப் புலப்படுத்து வதற்குச் சங்ககாலப் புலவர்கள் மிகவும் நுட்பமான முறையில் உள்ளுறை உவமைகளையும் இறைச்சிப் பொருளையும் கையாண்டனர். இடைக்காலப் புலவர்கள் பலர் சிலேடை, குறியீடு, படிமம் முதலியவற்றைக் கையாண்டனர். யுகப் பெருங் கவிஞனான பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன். மஹாகவி, முருகையன் போன்றோரும் போற்றத்தக்கவகையில் குறியீடுகளையும் படிமங்களையும் தமது படைப்புகளில் கையாண்டுள்ளதை அவதானிக்கலாம். புதுக்கவிதைப் படைப்பாளர்கள் சிலர் குறியீடுகளையும் படிமங்களையும் மித மிஞ்சிக் கையாண்டு தம் படைப்புகளைப் பாழாக்கியுள்ளனர்.
இவ்வகையில் நோக்கும்போது டாக்டர். ஞானசேகரன் அவர்களும் தமது கதைகள் சிலவற்றில் வியக்கத்தக்க வகையில் கனகச்சிதமாகக் குறியீடுகளைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளதை அவதானிக்கலாம். அவ்வகையில் அவரது ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’, ‘காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும்’ முதலிய கதைகள் வெற்றிகரமான படைப்புகளாக விளங்குகின்றன.
அல்சேஷன் பேரினவாதிகளின் குறியீடாகவும் பூனைக்குட்டி பேரினவாதிகளின் கொடுமைகளை எதிர்க்கத் துணிந்துவிட்ட சிறுபான்மை மக்களின் குறியீடாகவும் விளங்குகின்றன. ஆசிரியர் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் வாயிலாகவும் அல்சேஷன், பூனைக்குட்டி ஆகியவற்றின் செயற்பாடுகளினூடாகவும் மிகவும் நாசூக்காக மனதில் ஆழமாகப் படியும் வண்ணம் அரிய பல உண்மைகளை இக் கதையிலே வெளிப்படுத்தியுள்ளார். கதையின் பிரதான களமாக மலையகம் விளங்கினாலும் பின்நோக்கு உத்தியை மிகப் பொருத்தமான முறையிற் கையாண்டு கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய இடங்களையும் களங்களாக்கியுள்ளார். சில தசாப்தங்களுக்கு முன்னர் இனங்களுக் கிடையே நிலவிய நல்லுறவையும் பெரும்பான்மையின மக்கள் பலர் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றமை, யாழ்ப்பாணத்தவர்கள் பலருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தமை முதலியவற்றை அற்புதமான முறையிற் புலப்படுத்தியுள்ளார். சுருங்கக் கூறின் இக்கதையானது ஏறத்தாழ ஐம்பதாண்டுகால இலங்கை வரலாற்றின் வெட்டுமுகத் தோற்றமாகவும் சமகால வரலாற்றுச் சிறுகதையாகவும் விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை.
கதையின் தலைப்பு, தொடக்கம், கதையோட்டம், கதையின் முடிவு, பாத்திர வார்ப்பு, உரையாடல், நடை, கருத்து வெளிப்பாடு முதலியன இக் கதையிற் சிறந்து விளங்குவதனை அவதானிக்கலாம். தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது.
“காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் ........!” என்னும் கதையும் குறியீட்டுப் பாங்கிலே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டமைந்துள்ள இக்கதை பெரும்பாலும் மாணவி ஒருத்தியின் கூற்றாக அமைந்துள்ளது. இடையிடையே மாணவியின் தாய், சின்னராசா, தோழிகள், இராணுவத்தினர் முதலியோரின் கூற்றுகளும் இடம்பெறுகின்றன.
இராணுவத்தினரின் கெடுபிடிகள், சோதனைச் சாவடிகளில் இடம்பெறும் தில்லுமுல்லுகள், சுற்றிவளைப்புகள், மாணவிகளுடன் இனிக்க இனிக்கப் பேசிச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களைச் சுவைக்க முயலுதல் முதலியவற்றை மிகவும் நாசூக்காக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மாணவி ஒருத்தி இராணுவத்தாற் கெடுக்கப்பட்டதைக் கதையில் ஆசிரியர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் கதையின் தொடக்கம், கதையோட்டம், கதையின் முடிவு ஆகியன இதனை வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.
காட்டுப் பூனைகள் இராணுவத்தினரின் குறியீடுகளாகவும் பச்சைக் கிளிகள் மாணவிகளின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன. கதையின் தலைப்புக்கும் கதையோட்டத்துக்கும் மிகப் பொருத்தமான வகையில் மாணவி ஒருத்தி ஆசையோடு வளர்த்த பச்சைக்கிளி எதிர்பாராத வகையில் அதன் கூடு திறந்திருந்த வேளையில் காட்டுப் பூனை ஒன்றினால் கடித்துக் குதறப்பட்டதைக் கதையின் இறுதியிற் காட்டியுள்ளார். ஆசிரியரது சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது. இக்கதையினை வாசித்து முடிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குரூரச் சம்பவங்களில் ஒன்றான கிருஷாந்தி கொலை உடன் ஞாபகத்திற்கு வந்து நெஞ்சினை வலிக்கச் செய்கிறது.
ஆசிரியரது தரமான கதைகளுள் ஒன்றாகத் திகழும் ‘கருவறை எழுதிய தீர்ப்பு’ 1958 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இன சங்காரத்திற்கு முன்னும் பின்னுமான காலப் பகுதியையும் அவலங்கள் நிறைந்த இன்றைய காலப்பகுதியையும் இணைத்து நிற்கிறது. கதையின் தொடக்கமும் கதைப் போக்கும் முடிவும் வாசகர்களுக்கு அதிர்ச்சியை ஊட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன.
பேரினவாத வெறியினாலும் இராணுவக் கெடுபிடிகளாலும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக இளந்தலை முறையினரே அதிக அளவிற்கு இன்னல்களுக்கும் துன்பங்களுக்குமுள்ளாகின்றனர். கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தொடக்கம் மணவறையில் வீற்றிருக்கும் மணமக்கள் வரை, அரச ஊழியர்கள் தொடக்கம் அப்பாவிகள் வரை எந்நேரமும் கைது செய்யப்படலாம்; கற்பழித்துக் கொல்லப்படலாம்; சித்திரவதைக்குள்ளாக்கப்படலாம்; விசாரணைகள் எதுவுமின்றி நீண்ட காலம் சிறையிலடைக்கப்படலாம்; இத்தகைய நிலைமைகளையெல்லாம் ‘சோதனை’, ‘சுதந்திரத்தின் விலை’ முதலிய கதைகளில் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார். ‘சோதனை’ என்னும் கதையில் வரும் சுதுமெனிக்கா, நான் ஆகிய பாத்திரங்கள் ஒரு புறம்; குமரேசன் என்னும் பாத்திரம் மறுபுறமும் எமது சிந்தனையைத் தூண்டுவனவாக விளங்குகின்றன.
இவ்வுலகில் எப்படியும் வாழலாம்; எப்படியும் பிழைப்பு நடத்தலாம் என வாழ்பவர்கள் ஒரு புறம்; இப்படித்தான் வாழவேண்டும், இப்படித்தான் பிழைக்கவேண்டும் என வாழ்பவர்கள் மறுபுறம். ஆசிரியரது ‘பிழைப்பு’ என்னும் கதையில் வரும் இளம் பெண்ணின் பிழைப்பும் முதலாவது ரகத்தைச் சேர்ந்தது. ‘கண்ணியமான ஏதாவது தொழிலைச் செய்து வாழக்கற்றுக் கொள்’ என அறிவுரை கூறி தொழிலுக்கு மூலதனமாக நூறு ரூபாவைக் கொடுக்கிறார். ஆயின் அவளோ தனது ‘கண்ணியமான’ விபச்சாரத் தொழிலையே மேற்கொள்கிறாள். நகரப்புறங்களில் இன்று விபச்சாரத் தொழில் மலிந்து வருவதை நாள்தோறும் பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம். அவ்வகையில் இக்கதையின் உண்மைத் தன்மையை நாம் அவதானிக்கலாம்.
‘கடமை’ என்ற கதையில், முன்னரே திருமணமான ஒருவன் அதனை மறைத்துக் கொண்டு மீனா என்னும் கன்னிப் பெண்ணைக் காதலித்துக் கருவுறச் செய்கிறான். கருவுற்ற பின்னரே தனது காதலன் முன்னரே திருமணமானவன் என்பதை அறிந்த மீனா கருவினைக் கலைப்பதற்காக டாக்டரிடம் சென்று உண்மையைக் கூறுகிறாள். சட்டப்படி கருக்கலைப்புச் செய்யக் கூடாது என்பது ஒரு புறம், வயிற்றிலே வளர்ந்து வரும் உயிரை அநியாயமாக அழிப்பதா என்ற மனச்சாட்சி மறுபுறம். இரண்டுக்குமிடையில் மனப்போராட்டம் நடத்திய டாக்டர் இறுதியில் வயிற்றில் வளர்ந்து வரும் உயிர் ஆரோக்கியமாக இருப்பதற்கேற்ற மருந்தின் பெயரை எழுதிக் கொடுக்கிறார். அதன் பயன்! ஐந்து மாதங்கள் கழிந்தபின் மீனா தற்கொலை செய்துகொண்டாள் எனவும் அதற்கான காரணம் மணமாகுமுன்பே கருவுற்றிருந்தாள் எனவும் வெளிவந்த பத்திரிகைச் செய்தியை டாக்டரின் மனைவி வாசித்த போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர், “அன்று ஒரு உயிரைக் காப்பாற்ற முனைந்தேன். கடமையைச் சரிவரச் செய்த நினைவில் மகிழ்ந்தேன். ஆனால் இன்று.....!
இரு உயிர்கள் சிதைந்து விட்டனவே மீனாவின் கோரிக் கையை நிறைவேற்றியிருந்தால் .....?
மனச் சுவர்கள் பொருக்குடைந்து சரிவதைப் போன்ற ஒரு பிரமை. மன உளைச்சலைத் தாங்க முடியாது கண்களை மூடிக் கொண்டு புரண்டேன்.” என ஆசிரியர் கதையை முடிக்கும் போது அவருக்கு மட்டுமன்றி வாசகருக்கும் தாங்கமுடியாத மன உளைச்சல் ஏற்படுகின்றது. ‘கடமையைச் செய் கருணை பெறுவாய்’ என்பதும் சர்ச்சைக்குரியதாகின்றது.
‘உயிர்த்துணை’ என்னும் கதை வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆசிரியர் தன்னைப் பார்வையிழந்த ஒருவனாகக் கற்பனை செய்து கொண்டு தனக்கு உற்ற துணையாக விளங்கிய பொன்னியின் ஒப்பற்ற தியாகத்தை விளக்கிச் செல்கிறார். கதையின் இறுதியிலேயே பொன்னி என்பது தியாகசிந்தையும் நன்றி உணர்வும் கொண்ட ஒரு பெண் நாய் என்பதையும் தன் எஜமானைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ததையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய நவநாகரிகத்தின் சின்னங்களுள் ஒன்றாக உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் ஓரினச் சேர்க்கை பெருகிவருகின்றது. ஆசிரியரது ‘மண்புழு’ என்னும் கதை இதனையே விளக்குகின்றது. உலக நாடுகள் சில ஓரினச்சேர்க்கைக்குச் சட்ட அங்கீகாரமும் வழங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டுள்ள இக்கதை பல உண்மைகளைப் புலப்படுத்துகின்றது. பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் வழித்தோன்றல்கள் கலாசாரச் சீரழிவிற்கு உட்படுவதையும் புலம்பெயர்ந்தவர்கள் யந்திரவாழ்க்கையை மேற் கொள்வதையும் தமது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்து மகிழ்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் பெற்றோர்கள் மன வேதனை அடைவதையும் ஆசிரியர் இக்கதையிலே விண்டு காட்டியுள்ளார். ஓரினச்சேர்க்கையிலீடுபடுவோரைச் சித்திரவேலர் பார்த்து அருவருப்படை வதையும் ‘மண்புழு’ வாகக் கருதுவதையும் பொருத்தமான முறையில் ஆசிரியர் காட்டியுள்ளார்.
இத் தொகுதியிலமைந்துள்ள பெரும்பாலான கதைகள் எதிர் காலத்தில் வரலாற்று ஆவணங்களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இது காலவரை வெளிவந்துள்ள படைப்புகளே ஈழத்துத் தமிழ்ப் புனைகதை வரலாற்றில் அவருக்கு நிரந்தரமானதோர் இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. மேலும் காத்திரமான படைப்புகளை ஆசிரியர் வெளிக்கொணர வேண்டும் எனத் தமிழ் கூறும் நல்லுலகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது.
பேராதனை.
06-06-2005.
++++++++++++++++++++++++++
மனந்திறந்து சிலவார்த்தைகள்...
எனது முதலாவது சிறுகதை ‘பிழைப்பு’ 1964ஆம் ஆண்டு ‘கலைச்செல்வி’ மாசி இதழில் வெளியானது. தொடர்ந்துவந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளில், முப்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
1995களில் இடம்பெற்ற இடப்பெயர்வின்போது, யாழ்ப் பாணத்தில் எனது இல்லத்தில் சேர்த்து வைத்திருந்த நூல்கள் யாவும் தொலைந்துவிட்டன. இதன் காரணமாகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் முடங்கிக்கிடந்த எனது சிறுகதைகள் பலவற்றை இழந்துவிட்டேன். தற்போது தேடிப்பெற்ற சிறுகதைகள் சிலவும், எனது முன்னைய தொகுப்புகளில் இடம்பெற்ற சிறுகதைகளும், சமீப காலத்தில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. தொலைந்துபோன எனது கதைகளைத் தேடிப்பெற்று இத்தொகுப்பின் இரண்டாவது தொகுதியினையும் வெளிக்கொணர எண்ணியுள்ளேன்.
இந்நூல் வெளிவருவதற்கான காரணம் சுவாரஸ்யமானது. மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ என்ற எனது முன்னைய சிறுகதைத்தொகுதி தற்போது இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டப்படிப்பிற்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் அப் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சிறுகதைத் தொகுதியின் பிரதிகளை எனது கண்டி இல்லத்திற்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக அச்சிறுகதைத்தொகுதியின் பிரதிகள் யாவும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்நிலையில் அச்சிறுகதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பினை வெளிக்கொணர எண்ணினேன். அது தொடர்பாக நண்பர் புலோலியூர் க.சதாசிவம் அவர்களுடன் கலந்தாலோசித்தபோது, “தற்போது நீங்கள் மணிவிழா வயதினைத் தாண்டியுள்ளீர்கள். இனிமேல் சிறிய தொகுதிகளை வெளிக் கொணருவதை விடுத்து நீங்கள் எழுதிய சிறுகதைகள் யாவற்றையும் தொகுத்து நூலாக்க முயற்சி எடுக்கவேண்டும். மூத்த எழுத்தாளர்கள் பலரும் அவ்வாறே இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்” என ஆலோசனை கூறினார்.
எனது மகன் பாலச்சந்திரனும் எனது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெறவேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி அடிக்கடி தூண்டிக்கொண்டிருந்தார். இந்நிலையில் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பினை வெளிக்கொணரும் எனது விருப்பத்தினையும் நண்பரின் ஆலோசனையும், மகனின் வேண்டுகோளையும் ஒன்று சேரச் செயற்படுத்தும் நோக்குடன் இத்தொகுதி ‘தி. ஞானசேகரன் சிறுகதைகள்’ என்ற மகுடத்தில் ‘ஞானம் பதிப்பக’ வெளியீடாக வெளிவருகிறது. இத்தொகுப்பிலுள்ள முதல் பதினொரு கதைகளும் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளாகும்.
நான் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்ட கடந்த நாற்பது வருடகாலத்தில் ஈழத்தின் இலக்கியச் செல்நெறியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களின் தாக்கங்கள் எனது எழுத்துக்களிலும் பிரதிபலிக்கின்றன. எனது நோக்கிலும் போக்கிலும் ஏற்பட்டுவந்த மாறுதல்களை இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் சுட்டி நிற்கும். அதுவே இத்தொகுப்பின் முக்கியமான அம்சமென நான் கருதுகிறேன்.
நான் எழுதத்தொடங்கிய காலகட்டம் மார்க்ஸிய முற்போக்குவாதம் முனைப்புப் பெற்றிருந்த காலமாகும். “இலக்கியம் கீழ்த்தட்டு மக்களின், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வை, அவர்களது ஏக்கப் பெருமூச்சுகளை, எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கவேண்டும். சாதிக்கொடுமை, சமுதாய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத் தனம், இன ஒடுக்குமுறை ஆகிய அனைத்துத் தீமைகளையும் எரித்து எரிசரமாக இலக்கியம் படைக்கவேண்டும். அது எமது நாட்டுக்கேயுரிய தேசிய இலக்கியமாகவும் மண்வாசனையைப் பிரதிபலிப்பதாகவும் இருத்தல் வேண்டும்” என்பது மார்க்ஸிய முற்போக்குவாதிகளின் கருத்தாக இருந்தது.
உண்மையில், இவ்வாறான ஒரு சட்டகத்துக்குள் நின்று இலக்கியம் படைக்கவேண்டும் என்ற விதியுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. இவ்வாறு எழுதுவதால் கலாபூர்வமான வெளிப்பாடு குன்றி படைப்புகள் பிரச்சாரமாக மலினப்படுத்தப்பட்டுவிடும். மென்மையான மனித உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு விடும். காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ற சிந்தனைகள் மறுக்கப்பட்டுவிடும். தமிழ்த்துவம் சார்ந்த எழுத்துக்களுக்கு இடமில்லாமல் போய்விடும். இந்தச் சட்டகத்துக்கு அப்பாலும் மனிதகுல மேன்மைக்கான தேடல்கள் இருக்கின்றன என்பதே எனது கருத்தாகும். இக்கருத்துக்கமையவே எனது கதைகளும் அமைந்தன. இதன் காரணமாக ஈழத்து இலக்கிய உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அக்கால மார்க்ஸிய விமர்சகர்கள் எனது எழுத்துக்களைக் கண்டுகொள்ளவில்லை.
மார்க்ஸியம் ஓர் உன்னதமான தத்துவம். அது ஒரு போதும் அழகியலைப் புறந்தள்ளவில்லை. மார்க்ஸியம் பற்றிய புரிதலை, கட்சி அரசியலுக்கும் தமது வசதி வாய்ப்புகளுக்கும் ஏற்றபடி அர்த்தம் கற்பித்தவர்களின் போக்குகளுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை.
ஆனாலும் இலக்கியம் பற்றிய எனது கருத்தியலுக்கமைய நம்பிக்கையுடன் எனது படைப்புகளை வெளிக்கொணர்ந்தேன்.
எனது கதைகளிலும் சமுதாய ஏற்றத்தாழ்வு, சாதிக்கொடுமை, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்களின் அவலம், பெருமூச்சுக்கள் ஆகியன கருப்பொருள்களாக அமைந்துள்ளன. ஆனாலும் எரிசரமாக அவை படைக்கப்பட வில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
‘எழுத்தாளன் எந்தக் கட்டத்திலும் தான் ஒரு பிரசாரகனாகத் தாழ்ந்துகொள்ளக்கூடாது. அதேசமயம் கதை சொல்பவனாகவும் இருக்கக்கூடாது. கதை நிகழ்ச்சிகளினுடாகச் செறிவுடனும் கூர்நோக்கு டனும் கதையை நகர்த்திச் சென்று வாசகனின் மனதில் ஒரு தனித்துவமான தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்’ என்பதே எனது சிறுகதைப் புனைவின் பண்பாக இருந்தது.
“மார்க்ஸிய விமர்சனம் முழுவதும் சமூகவியல் விமர்சனம் மாத்திரமே என்ற ஒரு கருத்துமயக்கம் பலரிடையே இருந்தது. மனித முழுமைக்குள்ளே கலையும் அடங்கும் என்ற எண்ணக்கரு புறந்தள்ளப்பட்டிருந்தது. சிலர் அந்த மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவேயில்லை” என்ற கருத்தினை பேராசிரியர் சிவத்தம்பி ‘உயிர்ப்புகள்’ (1986) என்ற சிறுகதைத்தொகுப்பின் விமர்சனக் குறிப்பில் கூறியிருந்தார். காலந்தாழ்த்திய கூற்று என்றே இதனைக் கருத வேண்டியுள்ளது.
உண்மை என்னவென்றால் இலக்கியம் என்பது இலக்கியக்காரர்களின் அல்லது விமர்சகர்களின் மதிப்பீடுகளுக்காகக் காத்திருப்பதில்லை. அது மக்களின் பாவனைக்காகக் காத்திருப்பது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது, காலத்தினால் தரநிர்ணயம் பெறுவது.
‘புதிய சுவடுகள்’ என்ற எனது நாவல் 1977ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அந்நாவல் சாதிப்பிரச்சனையைக் கருவாகக் கொண்டது. சமூக விமர்சன நோக்கில், நடைமுறைச் செயற்பாட்டின் அடிப்படையில் அமைந்த இந்நாவல் உயர்சாதியினரிடம் நிகழ்ந்து வரும் மனமாற்றங்களையும், இயல்பாகச் சமுதாயம் மாறிவரும் நிலையையும், சாதிக் கட்டுப்பாடுகள் தளர்ந்துவருவதையும் எடுத்தியம்புகிறது. காலப்போக்கில் சாதியம் ஒழிந்துவிடும் என எதிர்வு கூறுகிறது. இந்நாவல் அவ்வாண்டின் சாகித்திய விருதினை எனக்குப் பெற்றுத் தந்தது. அது தந்த உற்சாகத்தில் நான் நாவல் துறையிலும் ஈடுபடலானேன்.
எனது ‘குருதிமலை’ என்ற நாவல் 1979ஆம் ஆண்டில் வெளியாகியது. இந்நாவல் மலையகத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது, பேருருக் கொண்டெழுந்த பௌத்த சிங்களப் பேரினவாதம் என்ற ஆக்கிரமிப்பு எவ்வாறு மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பாதித்தது, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பேரெழுச்சி, அவர்களின் போராட்டம், உயிர்த்தியாகம் ஆகியவற்றை அந்நாவல் பேசுகிறது.
தப்பித் தவறிக்கூட குழுச்சார்பு விமர்சகர்களால் அந்நாவல்பற்றி ஒரு வார்த்தைதானும் பேசப்படவில்லை. ஆனால் மக்களால் பேசப்பட்டது, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை சாகித்தியப் பரிசு பெற்ற அந்நாவல் 1992 - 1993 காலப்பகுதியில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பட்டப்படிப்புக்குப் பாடநூலாக விளங்கியது. சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கையிலும் தமிழகத்திலும் மூன்று பதிப்புக்களைக் கண்டது. குழுச்சார்பு விமர்சகர்களால் ‘ஆகா, ஓகோ’ எனப் பேசப்பட்ட நாவல்கள் எதுவும் இத்தகைய தகுதியினைப் பெறவில்லை என்பதை எண்ணும்போது, இந்த விமர்சகர்களால் பேசப்படாததுதான் எனது எழுத்துக்களின் ‘பெரும் தகுதி’ என நான் கருதுகிறேன்.
ஒரு காலகட்டத்தில் ஈழத்து இலக்கியம் பல்வேறு தளங்களில் செழித்து வளரவிடாது, தமது குழுவைச் சாராத ஆக்க இலக்கியக்காரர்களை இவர்கள் மழுங்கடித்தார்கள் என்ற தார்மீகக் கோபம் எனக்கு எப்போதும் உண்டு.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பற்றி நான் கூறுவது பொருத்தமில்லை. அவற்றைப்பற்றி பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் மிகவும் விரிவாகவே கூறியுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் உரியது.
எனது எழுத்துக்கள் பல்கலைக்கழக மட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாடநூல்களாக வைக்கப்பட்டமை எனது எழுத்து முயற்சிகளுக்குக் கிடைத்த அப்பழுக்கற்ற அங்கீகாரமென நான் கருதுகிறேன்.
பல சந்தர்ப்பங்களில் எனது எழுத்துக்களின் முதல் வாசகனாக இருந்து, காரசாரமாக விவாதித்து, எனது எழுத்துக்களை நெறிப்படுத்திய எனது இலக்கிய நண்பன் கலாபூஷணம் அமரர் புலோலியூர் க. சதாசிவம் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறேன்.
எனது முதலாவது சிறுகதையை ‘கலைச்செல்வி’ சஞ்சிகையில் வெளியிட்டு என்னை எழுத்துலகுக்குக் கொண்டுவந்தவர் சிற்பி சி. சரவணபவன் அவர்கள். நான் எழுத்துலகில் அஞ்ஞாதவாசம் செய்த வேளைகளில் என்னை மீண்டும் மீண்டும் எழுதவேண்டும் எனத் தூண்டியவர்களில் முன்னாள் வீரகேசரி வாரமஞ்சரி ஆசிரியர் திரு. பொன் இராஜகோபால், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, பேராசிரியர் நா. சுப்பிரமணியன், சாரல்நாடன் முதலியோர் முக்கியமானவர்கள். அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் எனது எழுத்து முயற்சிகளின் ஆதார சுருதியாகி ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் எனது மனைவி ஞானத்துக்கும், எனது படைப்புகள் யாவும் தொகுக்கப்பட்டு அவற்றை நூல்களாக்கும் முயற்சியில் ஆர்வத்துடனும் முனைப்புடனும் செயற்பட்டுவரும் மகன் பாலச்சந்திரனுக்கும் எனது அன்பு என்றும் உரியது.
எனது கதைகளை வெளியிட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஏனைய தொகுப்புக்கள் ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும், வாசித்து ஊக்கமளித்துவரும் வாசகர்களுக்கும் எனது நன்றி என்றும் உரியது.
இந்நூலினைச் சிறப்பாகவும் அழகாகவும் அச்சிட்டு வெளிக்கொணரும் யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினரே எனது நூல்கள் பலவற்றையும் அச்சிட்டு உதவுபவர்கள். அந்நிறுவனத்தின் அதிபர் திரு. பொன். விமலேந்திரன் அவர்களுக்கும் அச்சகப் பல்நிலைசார் ஊழியர்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றியை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி. ஞானசேகரன்
3 - B, 46வது ஒழுங்கை,
கொழும்பு - 06.
06-06-2005.
++++++++++++++++++++++++++++
ஒளியைத் தேடி
நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.
கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை.
பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காருகிறார். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.
பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன்தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.
பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம்பலத்தின் இளமைத்தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் வியாபார விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார்; குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது.
அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப்போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.
எங்கள் தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல. அப்போது பொன்னம்பலந்தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர்தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.
அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்றார். பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக பொன்னம்பலம் என்னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.
தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற்படுகிறது.
பொன்னம்பலம் சிரிக்கிறார். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.
“பூமணி ! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிறாய்! ” பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.
பொன்னம்பலம் எழுந்து நிற்கிறார்.
“பூமணி! நான் .... .... உன்னை ஒண்டு கேட்கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?”
நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்றாகத் தெரிகிறது. அவரது முகம் மாறி விட்டது.
அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையைமட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.
அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது. பொன்னம்பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிறார். நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.
அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.
“பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்கு கலியாணஞ் செய்து வைக்காமல் இருக்கிறது சரியில்லைத் தம்பி.”
பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.
அண்ணன் மௌனமாக இருக்கிறார். அவரால் என்னதான் செய்யமுடியும்?.
ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏறாத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கிவிட்டார். பலன்தான் கிட்டவில்லையே.
எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ண னுடைய விருப்பம்
நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனாலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ!
நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென மாமா விரும்பினார். ஆனால் நான் அதனைத் துளிகூட விரும்பியதில்லை. என் தோழி சுகுணா ஓர் என்ஜினியரைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறாள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதா?
பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசியபோதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என்றார்கள் சிலர். எங்களுடைய அந்தஸ்து போதாதென்றார்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக்கழித்தனர் பலர். இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.
பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.
அன்று சுகுணா தனது கணவர் சந்திரனுடன் வந்திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிறான். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.
நானும் ஒரு நாள் சுகுணாவைப்போல ஒரு பெரிய உத்தி யோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஓரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன். அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.
நான் சுகுணாவின் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிறான். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.
குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.
நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்துகிறேன்.
பால் கொடுக்கலாமென்றால், பாற்காரன் காலந்தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!
சுகுணா வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்கு பெருமை யாக இருக்கிறது. சுகுணாவைப்போல் நானும் என்றுதான் பெருமைப் படப் போகிறேனோ?
சுகுணாவின் பேச்சு திசை திரும்புகிறது. “பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிறார்?”
“இப்ப என்ன அவசரம் ? ஆறுதலாய்ச் செய்யிறது. கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்....”
சுகுணா சிரிக்கிறாள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறுமுன்பு சொல்லிக்கொண்டிருந்தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டிருப்பாளா?
சுகுணாவும் அவளது கணவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.
அண்ணன் என்றும்மில்லாத மகிழ்வுடன் இருக்கிறார்.
“பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணாவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிறானாம், கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை; கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்திவிடவேண்டுமென்று சொல்கிறார்கள். ”
அண்ணா இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறார். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.
என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத்தரின் மனைவியாகி விடுவேன்.
அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னால் முடிய வில்லை. சமையல் அறைக்குள் ஒடிவிடவேண்டும் போல் இருக்கிறது. எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண்டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.
எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப்போது திருமணம் தானாகவே வந்து கைகூடப்போகிறது. ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.
“பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத்தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்.”
‘ஐயோ அண்ணா!’ என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒரே நொடியில் விளங்குகின்றன.
சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ்வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிறார். அண்ணா வுக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.
அண்ணன் சிரிக்கிறார். திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிறாரா? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.
இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை, என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.
அண்ணா! எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற்குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோகத்தில் அமர்ந்துகொண்டாய்.
உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவு செய்யாது என் திருமணத்திற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.
அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்கு திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.
இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்தவும் திட்டமிட்டு விட்டாயா?
நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட்டேன். எனக்குத் தெரியும், நீ என் பேச்சைக் கேட்கமாட்டாய்.
எத்தனையோ இரக்கமற்ற இரவுகள் என்னைச் சித்திரவதை செய்கின்றன.
புகையிலைத் தரகர் பொன்னம்பலம் வழக்கம்போல எங்களது வீட்டுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்.
அன்றொருநாள் தனிமையில் என்னிடம் கேட்கத்தயங்கியதை இன்று துணிவுடன் கேட்கிறார். நான் அதற்குச் சம்மதிக்கிறேன். என் மனதில் என்றுமில்லாத சாந்தி நிலவுகிறது.
விடிவதற்கு இன்னும் சிறிது நேரந்தான் இருக்கிறது. பொன்னம்பலம் எங்கள் வீட்டு வாசலில் காருடன் எனக்காகக் காத்திருக்கிறார். அவர் மிகவும் நல்லவர்; எனக்கு ஒரு குறையுமில்லாமற் காப்பாற்றுவார்
அண்ணன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார்.
“அண்ணா ! உனக்கு மட்டும் தான் தியாகம் செய்யத் தெரியுமென்று எண்ணாதே. நான் உன் தங்கை எனக்கும் செய்யத் தெரியும் .”
கலங்கும் கண்களால் மானசீகமாக அண்ணனிடம் விடை பெறுகிறேன்.
அண்ணன் நித்திரையில் புன்னகை பூக்கிறார்.
கீழ்வானம் சிவந்து ஒளிமயமாகத் தெரிகிறது. எங்கோ பறவைகள் இனிமையாகப் பாடுகின்றன.
விடிந்துவிட்டது.
(1970இல் இலங்கை சாகித்தியமண்டலம் நடாத்திய அகில இலங்கைச் சிறு கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)
+++++++++++++++++++++++=
சங்கு சுட்டாலும்...
பொன்னுத்துரை மாஸ்டர் தமிழ்ப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த பின்னர் எங்களது கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
நான் சிறுவனாக இருந்தபோது விளையாடித்திரிந்த செம்மண் புழுதி நிறைந்த பிள்ளையார் கோவில் வீதி, இப்போது அழகான தேரோடும் வீதியாக மாறி விட்டது. கோவிலின் வலதுபுறத்தில் இருந்த பனை வடலிகளை அழித்து, தூர்ந்துபோயிருந்த கேணியையும் நிரப்பிய பின்பு, அப்பகுதி இப்போது வெட்டை வெளியாக அழகாகத் தெரிகிறது.
கோவிலின் முன் புறத்தில் தெருவோரமாக அடர்த்தியாக வளர்ந்திருந்த சவுக்க மரங்களையும் மகிழ மரங்களையும் தழுவிவரும் இதமான காற்று, பெயர் பெற்ற யாழ்ப்பாண வெயிலின் தகிப்பைத் தாங்க முடியாது தவித்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களுக்கு, எவ்வளவோ இன்பத்தைக் கொடுக்கும், மின்சாரக் கம்பங்கள் நாட்டுவதற்காக, அந்த அருமையான மரங்களில் சிலவற்றை இப்போது வெட்டிச் சாய்த்து விட்டார்கள். ஆனாலும் அந்தச் சூழலில் தவழும் குளிர்மை இன்னும் குறையாமல் இருக்கிறது.
வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருந்த அந்த மடம், எப்போதோ வாசிகசாலையாக மாற்றப்பட்டிருந்த போதிலும், இப்போது இன்னும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.
நான்கைந்து வருடங்களுக்குள்ளாக இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிட்டன. கொழும்பில் வேலை பார்க்கும் நான், ஒவ்வொரு தடவையும் கிராமத்துக்கு வரும்போது இந்த மாற்றங்களைப் படிப்படியாக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.
பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் பொன்னுத்துரை மாஸ்டர் எங்கள் கிராமத்துத் தமிழ்ப் பாடசாலையில் எனக்குத் தமிழ்ப் பாடஞ் சொல்லித்தந்திருக்கிறார். அதன் பின்னர் அரசினரால் வெளி யிடங்கள் மாற்றஞ் செய்யப்பட்டு, அங்கெல்லாம் சேவை புரிந்து விட்டு, மீண்டும் எங்கள் கிராமத்துப் பாடசாலைக்கே மாற்றலாகி வந்து விட்டார். பொன்னுத்துரை மாஸ்டர் வெளியிடங்களுக்கு மாற்றலாகிப் போகாதிருந்திருந்தால் எங்களது கிராமம் இன்னும் எவ்வளவோ சிறப்பான மாற்றங்களை அடைந்திருக்கும்.
எங்களது கிராமத்தின் இளஞ் சந்ததியினர் எல்லோருக்குமே பொன்னுத்துரை மாஸ்டரிடம் தனி மரியாதையுண்டு. அதற்குக் காரணம், அநேக மாணவர்கள் அவரிடம் கல்வி கற்றோம். அவரது உயர்ந்த கருத்துக்களினால் கவரப்பட்டிருக்கிறோம். சமூக நலனுக்காக அவரது வாழ்வின் பெரும்பகுதி அர்ப்பணமாகி வருவதை உணர்ந்திருக்கிறோம்.
பொன்னுத்துரை மாஸ்டரின் எளிமையான தோற்றமே எல்லோரையும் இலகுவில் கவர்ந்துவிடும். பாடசாலைக்குப் போகும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அரையில் ஒரு நாலுமுழ வேட்டியுடனும் தோளில் ஒரு சால்வையுடனுந்தான் அவரைப் பார்க்கலாம். அவரது கரிய தோற்றத்தில் பளிச்சென்று தெரியும் திருநீற்றுப் பூச்சும், நெற்றியில் எப்போதும் துலங்கிக் கொண்டிருக்கும் சந்தனப் பொட்டும், எவரையும் வசீகரிக்கும் புன்னகையும், அவரை அறிந்து கொள்ளாதவர்களைக்கூட அவரிடம் பணிந்து நடக்க வைத்துவிடும்.
பொன்னுத்துரை மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். திருமணமாகவில்லை. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையிலும், ஆன்மீகத்துறையிலும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்ததனாலேதான் அவருக்குத் திருமணஞ் செய்வதில் நாட்டம் ஏற்படவில்லையோவென நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.
கிராமத்துக்கு வரும்போதெல்லாம் பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்திக்காமல் நான் கொழும்புக்குத் திரும்புவதில்லை. அவரைப் பார்த்துச் சிறிது நேரம் உரையாடாமல் இருந்துவிட்டால் என் மனதில் நிறைவு எற்படுவதில்லை.
பொன்னுத்துரை மாஸ்டரை மாலை வேளைகளில் அநேகமாக வாசிகசாலையில் அல்லது கோவிலின் சுற்றாடலில் பார்க்கலாம். இந்தத் தடவை நான் கிராமத்துக்கு வந்தபோது பொன்னுத்துரை மாஸ்டரைப் பல இடங்களில் தேடியும் சந்திக்க முடியவில்லை.
பிள்ளையார் கோவில் குருக்களிடம் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வெறுப்போடு கூறிய பதில் என்னைத் திடுக்கிட வைத்து விட்டது.
பொன்னுத்துரை மாஸ்டர் சம்சாரியாகிவிட்டாராம். அவருக்குப் பொது விஷயங்களில் ஈடுபடுவதற்கு இப்போது நேரம் இருப்ப தில்லையாம். குருக்கள் ஏனோ பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிய விபரங்களை தொடர்ந்து கூறுவதற்கு விரும்பவில்லை.
என் மனதில் அந்தரம் புகுந்துகொண்டுவிட்டது. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பொன்னுத்துரை மாஸ்டருக்கு என்ன நடந்துவிட்டது?
வாசிகசாலையிலிருந்து சீட்டு விளையாடிக்கொண்டு, வாசிப்பவர் களுக்குத் தங்களால் கஷ்டம் ஏற்படுமே என்பதையும் நினைத்துப் பாராமல் பெரிதாகச் சத்தம் செய்துகொண்டு வாசிகசாலையின் ஒழுங்குகளையும் மீறிப் பீடி புகைத்துக்கொண்டு, சதா ஊர்வம்பு பேசி மற்றவர்களைக் கேலியும் கிண்டலுஞ் செய்துகொண்டு காலங் கடத்திவரும் கூட்டமொன்று எங்கள் ஊரில் இருக்கிறது.
நான் வாசிகசாலையை அடைந்தபோது, நானும் பொன்னுத்துரை மாஸ்டரிடம் நன்மதிப்பு வைத்திருப்பவன் என்ற காரணத்தினாலோ ஏனோ அவர்கள் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள்.
“கிழட்டு வயசிலும் பொன்னுத்துரை வாத்தியாருக்கு கலியாணம்!”
“ இந்த காலத்திலை யாரைத்தான் நம்புகிறது!”
“பென்ஷன் எடுக்கிற வயசிலும் ஒரு கலியாணமோ?”
“இதுவும் அவருடைய சோஷல்சேர்வீஸ் தான்.....”
பொன்னுத்துரை மாஸ்டரைப்பற்றி அவர்கள் தொடர்ந்தும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
தீப்பந்தம் ஒன்றை எடுத்து எனது உடலில் மாறிமாறிச் சுடுவதைப்போன்று அவர்கள் சொற்களால் என்னை வதைத்தார்கள். என்னால் தொடர்ந்து அவர்களது பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. எனது உடலெல்லாம் எரிச்சல் எடுப்பதைப் போலிருந்தது. உடனே எழுந்து வந்துவிட்டேன்.
பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்தித்து இப்படியெல்லாம் மற்றவர்கள் கேவலம் பண்ணும்படி ஏன் நடந்துகொண்டீர்கள்?’ என அவரிடம் கேட்க வேண்டுமென்ற வேகம் என்னுள் துளிர்த்தெழுந்தது.
பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டை நான் அடைந்தபோது, வெளி விறாந்தையிலே கிடந்த, ‘ஈசிச்செயரில்’ அவர் சாய்ந்திருந்தார். என்னைக் கண்டதும் வழமையான புன்னகையோடு “வா தம்பி , இப்படி உட்கார் ” என வரவேற்றார்.
அவரை நான் கூர்ந்து கவனித்தேன். அவர் என்னைப் புன்னகையோடு வரவேற்றபோதும், அந்தப் புன்னகையில் நிறைவைக் காணமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்ததைவிட, அவர் இந்தத் தடவை மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அவரிடம் வழக்கமாக இருக்கும் கம்பீரமும் கலகலப்பும் எங்கோ மறைந்து விட்டன. நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் மனிதன் மறந்து விடும்போது எல்லாவற்றையுமே இழந்து விடுகிறானா?,
எப்படி பொன்னுத்துரை மாஸ்டரிடம் பேச்சைத் தொடங்குவது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவராகவே கதைக்கத் தொடங்கினார்.
“ நான் திருமணம் செய்துவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்ட பின்புதான், நீ இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். இது எனது சொந்த விஷயம். இதில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. மற்றவர்கள் எனது விஷயங்களில் தலையிடுவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். ”
தொடக்கத்திலேயே எனக்கு வாய்ப்பூட்டுப் போடுகின்றாரா?
“ சொந்த விஷயமாக இருந்தாலும், சமூகம் ஏற்றுக் கொள்ளாத ஒரு செயலை புரியும்போது, பலமுறை சிந்திக்கவேண்டுமென நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள்.”
அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை என்பதனை நாசூக்காக அவர் அறியும்படி செய்தேன்.
அப்போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு பெண் எனக்கும், மாஸ்டருக்கும் தேநீர் கொண்டுவந்தாள்.
யாரது, தேவகியக்காளா? நான் அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டேன். தேவகியக்காளையா பொன்னுத்துரை மாஸ்டர் திருமணஞ் செய்திருக்கிறார்.?
தேவகியக்காள் புன்னகையுடன் தேநீரைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
நான் சிறுவனாக இருக்கும்போது எனது மனதிலே பெருந் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியொன்று தேவகியக்காளைப் பார்த்ததும் எனது மனதில் உறுத்தத் தொடங்கியது.
எனக்கு அப்போது பத்து வயதுதான் இருக்கலாம். தேவகியக்காளின் வீடு எங்களது வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறது. நான் அடிக்கடி தேவகியக்காளிடம் செல்வதுண்டு. தேவகியக்காளும் அவளது தாயும் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். தேவகியக்காளின் தந்தை வெகு காலத்துக்கு முன்பே இறந்துவிட்டாராம். அவர்களுக்கு வேறு யாருமே துணையில்லை.
அப்போது தேவகியக்காளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தேவகியக்காளின் சொந்த மச்சான் தேவகியக்காளைத் திருமணஞ் செய்வதாக இருந்தார். திருமணத்திற்கு ஒருமாதம் இருக்கையிலே அவர்கள் அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். தேவகியக்காளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
ஆனால் சிறிது நாட்களில் நிலைமை மாறிவிட்டது. நான் தேவகியக்காளிடம் சென்றபோது அவள் அழுது கொண்டிருந்தாள். தேவகியக்காள் அழுவதைப் பார்த்தபோது நானும் கலங்கி விட்டேன்.
தேவகியக்காளைத் திருமணம் செய்வதாக இருந்த அவளது மச்சான், கடைசி நேரத்தில் மறுத்துவிட்டாராம். அவருக்கு வேறு இடத்தில் நல்ல சீதனம் கொடுக்க யாரோ முன்வந்ததினால், அத்திருமணம் தடைப்பட்டுவிட்டது. தேவகியக்காளுக்குச் சீதனம் கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை.
அதன் பின்னர் பல வருடங்களாக எத்தனையோ இடங்களில் தேவகியக்காளுக்குத் திருமணம் பேசினார்கள். அப்போதெல்லாம் சீதனம் ஒருபெரும் பிரச்சனையாக இருந்ததால், தேவகியக்காளுக்குத் திருமணம் நடக்காமல் போய்விட்டது.
தேவகியக்காளுக்கு வயது ஏறிக்கொண்டிருந்தது அவளது தாயும் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.
எனக்கு உத்தியோகம் கிடைத்த பின்னர், நான் வெளியிடங்களிலேயே காலத்தைக் கழித்ததினால் தேவகியக்காளைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. அவளைப்பற்றிய நினைவுகளும் படிப்படியாக எனது நினைவிலிருந்து அகன்றுவிட்டன.
இன்றுதான் திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டில், வெகுகாலத்துக்குப் பின் தேவகியக்காளை மீண்டும் பார்க்கிறேன்.
பொன்னுத்துரை மாஸ்டரின் செருமல் சத்தம் என் நினைவுகளைத் தடை செய்கிறது.
“தேவகிக்குத் துணையாக இருந்த அவளது தாயும் இறந்துவிட்டாள். அனாதையாகிவிட்ட ஒர் ஏழைக்கு இனிமேல் வாழ்வே கிடைக்கப்போவதில்லை என்றிருந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்வளித்திருக்கிறேன். இதை நீயும் தவறென்று சொல்லுகிறாயா?”
நான் ஒரு கணம் சிந்தித்தேன். எனது மனம் அவர் செய்ததைச் சரியென ஒப்புக்கொள்ள மறுத்தது.
“வயது சென்ற உங்களைத் திருமணம் செய்து கொள்வதால் ஒர் இளம் பெண் என்ன வாழ்க்கையை அனுபவித்து விடப்போகிறாள்?- ” என்னையும் மீறி நான் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்.
“என்னால் அவளுக்கு எவ்விதமான இன்ப வாழ்க்கையையும் கொடுக்கமுடியாது என்பது உண்மைதான். அவளை நான் பதிவுத் திருமணம் மட்டுந்தான் செய்திருக்கிறேன். சட்டத்தின்படி அவள் என் மனைவி சட்டத்தைத் தவிர்ந்த எவ்வகையிலும் அவள் எனக்கு மனைவியாகவில்லை எனக்கொரு துணையாகத்தான் இருக்கிறாள்.”
மென்மையான மலர்ச் செடியை நடுவில் வைத்து அதனைச் சுற்றிச் சட்டமென்ற தீப்பிழம்பினால் வட்டமாக வரம்பு கட்டியிருக்கிறாரா பொன்னத்துரை மாஸ்டர்? என்னால் எதுவும் பேசமுடியவில்லை.. தொடர்ந்தும் பொன்னுத்துரை மாஸ்டர்தான் பேசினார்.
“எனது வயிற்றில் வெகு காலமாக இருந்து வந்த நோயைச் சிறிது காலத்துக்கு முன்புதான் புற்றுநோய் எனக் கண்டிருக்கிறார்கள் வைத்தியர்கள். நோய் நன்றாக முற்றி உடலெங்கும் பரவி விட்டதாம். புற்று நோயைக் குணப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும் ஆனாலும்......”
ஐயோ, எவ்வளவு கொடூரத்தனமாக ஒரு பெண்ணின் வாழ்வோடு இவர் விளையாடியிருக்கிறார்? வாழ்வின் இறுதிக் காலத்தில் திருமணஞ் செய்து ஒரு பெண்ணின் வாழ்வையே கருகச் செய்ய வேண்டுமா?
நான் இருந்த இடத்தில் ஆயிரம் ஈட்டிகள் ஒரே சமயத்தில் திடீரென முளைத்துக் கழுவாய்களாக என்னைத் துளைப்பதுபோல் இருந்தன. என்னால் அங்கு இருக்க முடியவில்லை. எழுந்துவிட்டேன்.
எனது தவிப்பைக் கண்டதும் பொன்னுத்துரை மாஸ்டர் என்னை அமைதியாக இருக்கும்படி கைகளினால் சைகை காட்டிவிட்டு மேசையில் இருந்த தேநீரை எடுத்து மிகவும் சாவதானமாகப் பருகினார்.
எனக்கு வைக்கப்பட்டிருந்த தேநீர் ஆறிக்கிடந்தது.
“நன்றாகச் சிந்தித்த பின்தான் நான் தேவகியைத் திருமணஞ் செய்திருக்கிறேன். இன்று நான் செய்ததைத் தவறெனக் கருதுபவர்கள் யாருமே ஏழ்மை நிலையில் அனாதரவாகிவிட்ட அவளது வாழ்வை மலரச் செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. யாரும் எதையும் இலகுவாகக் கதைத்துவிடலாம். ஆனால் எதையும் சாதனையிற் காட்டுவதுதான் கடினமானது.
சட்டத்தின்படி தேவகி எனது மனைவி. நான் இறந்த பின்னர், அரசாங்கத்தினால் வழங்கப்படும் பென்ஷன் பணம் அவளுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும். எனது வாழ்க்கை முடிந்த பின்னரும் அவள் சீவிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்காகத்தான் தேவகியைச் சட்டத்தினால் எனது மனைவியாக்கிக் கொண்டேன். வாழ வழியற்ற ஒர் இளம் பெண்ணுக்கு இந்த ஏழை வாத்தியாரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே ” பொன்னுத்துரை மாஸ்டரின் கண்களில் நீர் பளபளத்தது.
நான் பதில் ஏதும் கூறமுடியாமற் கண்களை மூடிக்கொண்டேன். திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் உருவம் பெரிது பெரிதாகிக் கொண்டே வந்து, அந்த அறை முழுவதும் நிறைந்து, அதற்கப்பாலும் பெருகி எங்கும் வியாபித்தது போன்று என் மனக்கண்களுக்குத் தோன்றியது.
-கலசம் 1972.
+++++++++++++++++++++++
ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறான்
இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்துவிடும். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவேன். இன்றைக்கு நான் இன்னும் படுக்கைக்குப் போகவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மணி ஒன்பது அடித்தது. எனக்கு நித்திரை வரவில்லை. கொழும்பிலிருந்து யாழ்தேவி ‘றெயிலில்’ அக்கா வருவா. அவவுடன் அத்தானும் வருவார். அக்காவைப் பார்க்கிறதுக்கு எனக்கு ஆசையாக இருக்கிறது. போன வருஷந்தான் அத்தான் அக்காவைக் கலியாணஞ் செய்து கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போனவர். அத்தானுக்குக் கொழும்பிலை தான் வேலை. அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்கவாத்துவிடுவா. தலை சீவிவிடுவா. இரவில் பாடமுஞ் சொல்லித் தருவா.
அண்ணன்மார் இரண்டு பேரும் ‘போர்டிங்’கிலை இருந்து படிக்கினம். அவையளை எனக்குப் பிடிக்காது. அவையளுக்கு என்னுடைய தலையிலை நோகக் கூடியதாகக் குட்டத்தான் தெரியும் . வேறையொண்டுந் தெரியாது. அப்பாவுக்கும் கொழும்பிலைதான் வேலை. நான் வீட்டிலை கடைக்குட்டி. அதனால் எனக்குக் கொஞ்சம் செல்லம்.
அக்கா கொழும்புக்குப் போனபிறகு அவவின் எண்ணம் எனக்கு அடிக்கடி வரும். அக்காவை உடனே பார்க்கவேணும் போல இருக்கும். அக்கா கொழும்பிலிருந்து அடிக்கடி வீட்டுக்குக் கடுதாசி எழுதுவா. அதை நான் எழுத்துக் கூட்டி வாசிப்பேன். அதை வாசிக்கிற பொழுது எனக்குச் சந்தோஷமாக இருக்கும். அக்கா மிச்சம் நல்லவ நான் குழப்படி செய்தாலும் ஒருநாளும் அடிக்கிறது இல்லை. நான் கொஞ்சம் குழப்படிதான். ஆனால் அக்கா சொன்னால் கேட்டு நடப்பன். எந்தக் குழப்படியும் செய்யமாட்டேன்.
வீட்டுப் படலையடியில் கார் வந்து நிற்கிறது. “ அம்மா ... அம்மா... அக்கா வந்திட்டா ” என்று கூவிக்கொண்டு சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்துப் படலையடிக்கு ஓடுகிறேன். மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட்டைக் கண்டால் எனக்கு சரியான பயம்.
அம்மா அரிக்கன் லாந்தரை எடுத்துக்கொண்டு எனக்கு பின்னால் வருகிறா. அக்காவும் அத்தானும் காரில் இருந்து இறங்குகிறார்கள். எனக்கு அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு துள்ள வேண்டும்போல் இருக்கிறது. அக்கா கையில் ஏதோ பார்சல் வைத்திருக்கிறா. அதனால் அக்காவின் கையை நான் பிடிக்கவில்லை. பார்சலில் என்ன இருக்குமென்டு எனக்குத் தெரியும். சொக்கிலேட், பிஸ்கட், இனிப்பு எல்லாந்தான் இருக்கும். அக்கா எனக்கு ஏதும் விளையாட்டுச் சாமான்களும் கொண்டு வந்திருப்பா.
“இண்டைக்கு றெயிலிலை சரியான சனம். இருக்கிறதுக்கும் இடம் கிடைக்கேல்லை” அம்மாவிடந்தான் அக்கா சொல்லுகிறா. அத்தான் கார்க்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டுச் சூட்கேசையும் தூக்கிக் கொண்டு நடக்கிறார். நானும் அவர்களுக்குப் பின்னால் நடக்கிறேன்.
அக்கா என்னோடை ஏன் கதைக்கவில்லை? இருட்டில் நான் நிற்கிறதைக் கவனிக்கவில்லையோ? அக்காவுக்குத் தெரியும்படியாக முன்னுக்குப் போகிறேன். அக்கா இப்பவும் என்னோடை கதைக்கவில்லை. அக்கா பாவம் றெயிலில் வந்தபடியால் சரியான களைப்புப்போல இருக்கு. அக்காவைச் சுமக்கவிடக்கூடாது. கையில் இருக்கும் பார்சலை வாங்கிக்கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிறா.
வீட்டுக்கு வந்ததும் அத்தான் தன் சூட்கேசை மேசையில் வைக்கிறார். நானும் பார்சலை அதற்குப் பக்கத்தில் வைக்கிறேன். அக்கா அதையெல்லாம் எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிறா. அத்தானும் அக்காவுக்குப் பின்னால் போகிறார். இரண்டு பேரும் உடுப்பை மாற்றிக்கொண்டு முகம் கழுவுவதற்குக் கிணற்றடிக்குப் போகிறார்கள்.
அக்காவும் அத்தானும் முகம் கழுவிக்கொண்டு வந்த பிறகு சாப்பிட உட்காருகிறார்கள். நானும் அவர்களோடு உட்காருகிறேன். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு போடுகிறா.
அக்கா ஏதோ கொழும்புப் புதினங்களையெல்லாம் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடுகிறா. அத்தானும் எதோவெல்லாம் சொல்லுகிறார். அம்மா ஊர்ப் புதினங்களைச் சொல்லுகிறா.
முருங்கைக்காய்க் கறியென்றால் அத்தானுக்கு நல்ல விருப்பமாம். அத்தானுக்குக் கொஞ்சம் முருங்கைக்காய் கறி போடும்படி அக்கா சொல்லுகிறா. அம்மா அத்தானுக்கு நிறைய முருங்கைக்காய்க் கறி போடுகிறா.
அவர்கள் கதைப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் சாப்பிடுகிறேன். அக்காவின் முகத்தை அடிக்கடி ஆசையோடு நிமிர்ந்து பார்க்கிறேன் . அக்கா என்னைப் பார்க்கவில்லை. என்னுடன் ஒரு கதையும் பேசவில்லை அக்கா அத்தானைத்தான் கவனித்துக் கொள்ளுகிறா.
அத்தானும் அக்காவும் சாப்பிட்டு முடிந்ததும் கைகழுவப் போய்விட்டார்கள். நான் இன்னும் கோப்பையில் இருந்த அரைவாசிச் சோற்றைக்கூடச் சாப்பிடவில்லை. என்னால் சாப்பிட முடியவில்லை. அக்கா என்னுடன் ஏன் கதைக்கவில்லை? சாப்பாடு தொண்டைக்குக் கீழே இறங்குவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. கலியாணம் முடிச்சபிறகு அக்கா எவ்வளவோ மாறி விட்டா. அவவுக்கு அத்தான் தான் பெரிசாப் போச்சு. எனக்கு கண்கள் கலங்குகின்றன. அழுகை வந்துடும் போல் இருக்கிறது.
“ஏனடா மணி, மிளகாயைக் கடிச்சுப்போட்டியே? தண்ணியைக் குடி,” என்று சொல்லி அம்மா மூக்குப்பேணியுடன் தண்ணீரை எனக்கு முன்னால் வைக்கிறா. நான் ‘மடக் மடக்’ கென்று தண்ணியைக் குடிச்சிட்டுச் சோற்றைக் கையால் அளைந்தபடி இருக்கிறேன்.
அக்காவும் அத்தானும் பாயை எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிறார்கள்; அக்கா அறைக் கதவைச் சாத்திறா.
எனக்கு புரையேறுகிறது. முந்தியென்றால் அக்கா என்னுடன் தான் படுப்பா. இப்ப அத்தானைக் கலியாணஞ் செய்தபிறகு அறைக்குள் படுப்பதற்குப் போகிறா. இண்டைக்கென்றாலும் நான் அக்காவுடன் படுக்கலாமெண்டு ஆசையோடு இருந்தேன். அக்காவுக்கு இப்ப நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல இருக்கு.
எல்லாம் இந்த அத்தான் வந்த பிறகுதான் அக்கா இப்படி மாறிவிட்டா. அத்தானின் மேல் எனக்குக் கோபங் கோபமாக வருகிறது அவருக்குப் பெரிய நடப்பு. ஏன் இண்டைக்கெண்டாலும் அக்காவை என்னோடு படுக்கவிட்டால் என்ன?
எனக்கு கண்ணிலே நீர் முட்டிவிட்டது. கன்னத்திலே வழிந்து விடும்போல இருக்கிறது. அம்மாவுக்குத் தெரியாமல் கோப்பையுடன் சோற்றை வெளியே எடுத்துக்கொண்டு போகிறேன் . வெளியே இருட்டாகத்தான் இருக்கிறது எனக்கு பயம் வரவில்லை. ஏன் நான் பயப்படவேணும் ? அம்மாவுக்குத் தெரியாமல் சோற்றை எறிந்துவிட வேணும். அம்மா கண்டால் ஏச்சுத்தான் கிடைக்கும்.
எங்கோ வெளியில் படுத்திருந்த எங்களுடைய நாய் பப்பி இப்போது என்னுடன் விளையாட வருகிறது. தனது முன்னங் கால்களைத் தூக்கி என்மேல் வைத்துக் கொண்டு செல்லங் கொட்டுகிறது.
“சீ சனியன் ! இந்த நேரத்திலைதான் இவருக்கு என்னோடை விளையாட்டு”- நான் சினத்துடன் பப்பியைக் காலால் உதைக்கிறேன். அது ‘வாள் வாள் ’ என்று கத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறது.
“இந்த மூதேவி ஏன் இப்படிக் கத்துகிறது? நான் மெல்லவாய்த் தானே தட்டினனான். ஏதோ கால் முறிஞ்சுபோன மாதிரியெல்லே சத்தம் போடுது.” நான் அம்மாவுக்கு கேட்கக் கூடியதாக கூறுகிறேன்.
சோற்றை வெளியே வீசிவிட்டுக் கையைக் கழுவுகிறேன்.
எனக்கு நித்திரை வரவில்லை. பாயில் படுத்திருந்து ஒருவருக்குந் தெரியாமல் அழுகிறேன். நாளைக்கு அக்கா என்னோடை கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்சபிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னோடை கதைக்காட்டில் எனக்கென்ன? எனக்கொண்டும் குறையமாட்டுது.
எனக்கு எப்ப நித்திரை வந்ததோ தெரியாது. காலையில் எழுந்திருக்கிறதுக்கு நேரமாகிவிட்டது.
“மணி! மேசையிலை உனக்கு பிஸ்கட் வைச்சிருக்கிறன் எடுத்துத் தின்” அக்காதான் சொல்லுகிறா.
நான் கேட்காதவன் போல அந்த இடத்தைவிட்டு நழுவுகிறேன். அவ கொண்டுவந்த பிஸ்கட் எனக்குத் தேவையில்லை.
அடுத்த வீட்டு ராணி விளையாடுவதற்கு வந்திருக்கிறாள். ராணியுடன் அவளுடைய சின்ன தம்பியும் வந்திருக்கிறான். நானும் ராணியுந்தான் விளையாடுவோம். ராணியுடைய தம்பிக்கு விளையாடத் தெரியாது. நாங்கள் வீடுகட்டி விளையாடினால் அதை உடைக்கத்தான் தெரியும். நாங்கள் மண்ணில் சோறு கறி சமைச்சுக்கொடுத்தால் அதைச் சாப்பிடவுந் தெரியாது. சும்மா அழுதுகொண்டு எங்களை விளையாட விடாமல் குழப்பத்தான் தெரியும். விளையாட வருகிறபோது தம்பியைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாமென்று ராணியிடம் சொன்னால் அவள் கேட்கமாட்டாள். ஒவ்வொரு நாளும் கூட்டிக்கொண்டுதான் வருவாள்.
நானும் ராணியும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் அப்பா; ராணி தான் அம்மா. அவள் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மாதிரி வைக்கிறாள். அந்தக் கற்களின்மேல் ஒரு சிரட்டையை வைத்து அதற்குள் தண்ணீர் ஊற்றுகிறாள். அடுப்பில் பானையை வைத்துத் தண்ணீர் ஊற்றியாகி விட்டது. உலையிலே போடுவதற்கு நான் தான் அரிசி கொணர்ந்து கொடுக்க வேண்டும்.
நான் தெருப்பக்கம் போய்க் குறுணிக் கற்களைப்பொறுக்கி கொண்டு வருகிறேன்; அதுதான் அரிசி!
நான் அரிசியைக் கொண்டுவரும்போது அத்தானும் அக்காவும் முன் விறாந்தையில் கதைச்சுக்கொண்டு இருக்கினம். ராணியின் தம்பி ஒரு பிஸ்கட்டை வைத்துக் கடித்துக்கொண்டிருக்கிறான். அக்காதான் கொடுத்திருக்க வேண்டும். நான் ராணியைப் பார்க்கிறேன். அவளும் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் அக்காவும் அத்தானும் எங்களு டைய விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கினம். நான் அவர்களைப் பார்க்காதவன் போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டு வருகிறேன்.
“டேய் மணி, இங்கை வா”- அக்கா பிஸ்கட்டைக் கையில் வைத்துக்கொண்டு என்னை கூப்பிடுகிறா.
நான் பேசாமல் இருக்கிறேன் .
“என்னடா உனக்குக் காது கேக்கலையோ? பிஸ்கட் தரக் கூப்பிட்டால் கேட்காதவன் மாதிரிப்போறாய். ”
“ எனக்கு உம்முடைய பிஸ்கட் தேவையில்லை.”
“ ஏனடா உனக்கெண்டுதானே வாங்கியந்தனாங்கள்”
“ நான் உம்மோடை கோவம். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லை” நான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். அக்காவை நல்லாய்க் கெஞ்ச வைக்க வேணும். அதற்குப் பிறகு தான் பிஸ்கட்டை வாங்க வேணும்.
அப்போது எங்களுடைய நாய் பப்பி அங்கே வருகிறது. நான் பப்பியை உற்றுப்பார்க்கிறேன். அக்கா தான் இதற்கு பப்பி என்று பெயர் வைச்சவ. அவவுக்கு பெயர் வைக்க கூடத் தெரியாது. “பப்பன்” என்றல்லோ பெயர் வைச்சிருக்க வேணும்
பப்பி திடீரெனப் பாய்ந்து ராணியின் தம்பி வைச்சிருந்த பிஸ்கட்டை கௌவிக்கொண்டு ஓட்டம் எடுக்கிறது.
எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கையை தட்டிக் கொண்டு துள்ளிச் சிரிக்கிறேன்.
தம்பி ‘வீரெ’ன்று அழத் தொடங்கிவிட்டான். அவருக்கு நல்லாய் வேணும். எங்கடை அக்கா கொண்டு வந்த பிஸ்கட்டை நான் தின்னாமல் இருக்க, அவர் மட்டும் தின்னலாமோ?
தம்பி அழுவதைப் பார்க்க ராணிக்கும் அழுகை வந்துவிட்டது. அவள் வைச்சிருந்த பிஸ்கட்டைத் தம்பிக்குக் கொடுக்கிறாள். அப்போது தான் அவனுடைய அழுகை அடங்கியது. ராணி தன்னுடைய சட்டையால் தம்பியின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். ராணி அப்படிச் செய்வதை பார்க்க எனக்குக் கோபம் வருகிறது.
“ராணி உன்னோடை நான் விளையாடமாட்டன். உனக்கு விளையாடத் தெரியாது. நான் அப்பா, நீ அம்மா . அப்படி யெண்டால் நான் புருஷன்; நீ பெண்சாதி. கலியாணம் முடிச்ச பிறகு பெண்சாதி புருஷனிட்டைத்தான் அன்பாயிருப்பா; தம்பியிடம் அன்பாயிருக்க மாட்டா. தம்பி இருக்கிறதையே அவ மறந்துபோயிடுவா” நான் அப்படிச் சொல்லுகிறபோது எனக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது.
‘வெடுக்’கென்று தம்பியின் கையிலிருந்த பிஸ்கட்டைப் பறித்துப் பப்பியிடம் வீசி எறிகிறேன்.
“டேய் மணி இங்கை வாடா ”-அக்கா என்னை அதட்டிக் கூப்பிடுகிறா. நான் அக்காவைப் பார்க்கிறேன். ஏன் அக்காவின் கண்கள் கலங்கியிருக்கின்றன?
அக்கா வந்து என்னுடைய கையை பிடிச்சு இழுத்துக் கொண்டு போய் மீண்டும் அத்தானின் பக்கத்தில் உட்காருகிறா. நான் வேறெங்கோ பார்த்தபடி அக்காவின் அருகில் நிற்கிறேன்.
“ஏனடா உனக்கு என்னோடை கோவம்?”
என்னால் பேசமுடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டிக் கன்னத்தில் வழிகிறது.
அக்கா என்னைத் தன்னுடைய மார்போடு அணைக்கிறா. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தைப் புதைச்சுக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்.
“சீ வெட்கமில்லையேடா உனக்கு? ஏன் இப்படி அழுகிறாய்?” அக்கா எனது தலைமயிர்களை ஆதரவோடு கோதிவிட்டுக்கொண்டு என்னிடம் கேட்கிறா. அதன் பின்பு அக்கா எனக்கு நிறைய பிஸ்கட்டும் இனிப்பும் தருகிறா; நான் சாப்பிடுகிறேன்”
அத்தான் நாலைஞ்சு நாள் கழிச்சுக் கொழும்புக்குப் போகிறார். அக்கா போகவில்லை. அக்காவுக்குக் கொஞ்ச நாளில் குழந்தை பிறக்கப்போகிறதாம்; குழந்தை பிறந்த பிறகுதான் அக்கா கொழும்புக்குப் போவாவாம். அதை கேட்க எனக்கு நல்ல சந்தோஷமாக இருக்கு. அக்கா கொஞ்ச நாளைக்கு வீட்டிலை இருப்பா என்பதை நினைக்க எனக்கு மிகவும் சந்தோஷம்.
ராணி ஒவ்வொரு நாளும் எங்களுடைய வீட்டுக்கு வருவாள். எங்களுக்கு அக்கா புதிசு புதிசாக விளையாட்டுக்கள் சொல்லித் தருவா. அக்காவுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையோடும் நாங்கள் விளையாடலாம்.
கொஞ்ச நாளில் அக்காவுக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்தது. அக்கா கட்டிலில் படுத்திருந்தா. தம்பிப் பாப்பாவைத் தொட்டிலிலே கிடத்தியிருந்தார்கள் அந்த பாப்பாவைத் தொட்டுப் பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. தூக்கி விளையாட வேணும் போல இருந்தது. நான் சின்னப் பொடியன், குழந்தையைத் தூக்கக் கூடாதாம். பெரிசா வளர்ந்த பிறகுதான் தூக்கலாமாம்; அக்கா தான் சொன்னா. நான் பாப்பாவைத் தொட்டுப் பார்க்கிறேன். குட்டிக் குட்டி விரல்கள் எனக்கு ஆசையாக இருக்கு.
பாப்பா பிறந்தவுடன் அத்தானுக்கு தந்தி கொடுத்தார்கள். ஆனால் அவர் உடனே வரவில்லை. அவருக்கு வேலை செய்யிற இடத்திலை லீவு எடுக்க முடியவில்லையாம். அத்தான் உடனே வராதது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அத்தான் வந்தால், அக்கா அத்தானைத்தான் கவனிப்பா; அவரோடைதான் அன்பாயிருப்பா. அத்தானோடைதான் அடிக்கடி பேசுவா. என்னோட பேசுவதற்கு அக்காவுக்கு நேரம் இருக்காது.
திடீரென்று ஒருநாள் விடியும்போது அத்தான் காரில் வந்து இறங்கினார். நான்தான் முதலில் அத்தான் வருவதை கண்டேன். அக்காவிடம் ஓடிப்போய் “அத்தான் வந்திட்டார்” என்று சொன்னேன். உடனே அக்கா எழுந்து முன்வாசலுக்கு ஒடிவருவா என்றுதான் நினைத்தேன். அக்கா எழுந்திருக்கக் கூட இல்லை. தம்பிப் பாப்பாவோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தா. அத்தான் வரும்போது அக்கா எழுந்து அத்தானை வரவேற்க வாசலுக்குக்கூட வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அத்தான், அக்கா இருந்த அறைக்கு வந்தார். அக்கா தம்பி பாப்பாவை அத்தானுக்குக் காட்டிறா. அத்தானையே உரிச்சு வைச்சதுபோலத் தம்பிப் பாப்பா இருக்கிறானாம்; அக்காதான் அத்தானிடம் சொன்னா. அத்தானுக்குப் பெரிய புழுகம். அத்தான் தம்பிப்பாப்பாவை தூக்கி முத்தங் கொடுக்கிறார்.
“ஐயையோ, குழந்தைக்கு நோகப்போகிறது” என்று சொல்லி அக்கா உடனே தம்பிப் பாப்பாவை வாங்கிக் கொள்ளுகிறா.
அத்தான் இரவு றெயிலில் வந்தவர். அதனால் அவருக்கு களைப்புப் போலத் தெரியுது. அக்காவிடம் கோப்பி போட்டுத் தரும்படி சொல்லுகிறார்.
“குழந்தைக்குப் பசிக்கும், பால் கொடுத்துவிட்டு உங்களுக்குக் கோப்பி தருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அக்கா தம்பிப் பாப் பாவுக்குப் பால் கொடுக்கிறா.
முந்தியென்றால் அத்தான் படுக்கையில் இருக்கும்போதே அக்கா கோப்பி போட்டுக் கொண்டுவந்து அத்தானை எழுப்புவா, அத்தான் கோப்பி குடிச்சபிறகுதான் கட்டிலை விட்டு இறங்குவார். அத்தான் கேட்காமலே அக்கா அவருக்கு வேண்டியதையெல்லாம் செய்வா. இண்டைக்கு அத்தான் கோப்பி போட்டுத் தரும்படி கேட்டும் அவருக்குக் கோப்பி கிடைக்கவில்லை.
அக்கா பால் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அம்மா கோப்பி போட்டுக்கொண்டு வந்து அத்தானுக்கு கொடுக்கிறா. அவருக்கு சாப்பாடும் அம்மாதான் கொடுக்கிறா.
அக்கா தம்பி பாப்பாவைத்தான் நன்றாகக் கவனிக்கிறா. தம்பிப் பாப்பாவைக் குளிக்க வார்க்கிறா, பவுடர் போடுகிறா, பால் கொடுக்கிறா, தம்பிப் பாப்பாவோடுதான் அக்கா இரவில் படுக்கிறா.
இதையெல்லாம் பார்க்க எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அத்தானை நினைக்கும்போது பாவமாகவும் இருக்கிறது. அத்தான் நிறைய பிஸ்கட், சொக்கிலெட் எல்லாம் வாங்கி வந்தார். எனக்கு விளையாடுகிறதுக்கு ஒரு பொம்மையும் வாங்கி வந்தார். அது நல்ல வடிவான ரப்பர்ப் பொம்மை.
ராணி வந்ததும் நானும் அவளும் அந்தப் பொம்மையை வைச்சு விளையாடுகிறோம். இண்டைக்கும் எங்களுக்கு ‘அப்பா அம்மா’ விளையாட்டுத்தான். நான் அப்பா, ராணி அம்மா, பொம்மைதான் எங்களுடைய தம்பிப் பாப்பா.
ராணி அந்தப் பொம்மையை மடியில் வைச்சுக் கொண்டு ‘ஆராரோ’ என்று தாலாட்டுகிறாள். குழந்தையைத் தூங்க வைக்கிறாளாம்.
“குழந்தைக்குப் பசிக்கும் பால் கொடு” நான் ராணியிடம் சொல்லுகிறேன்.
அக்கா குழந்தைக்குப் பால் கொடுக்கிறதைப் போலவே ராணியும் அந்தப் பொம்மையை இரண்டுகைகளாலும் தூக்கித் தன்னுடைய நெஞ்சோடு அணைச்சுப் பால் கொடுக்கிறாள்.
முன் விறாந்தையில் இருந்த அக்காவும் அத்தானும் அதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
ராணிக்கு வெட்கம் வந்துவிட்டது.
“சீ ராணி உதென்ன விளையாட்டு? என்று அக்கா அதட்டுகிறா.”
இவ்வளவு நேரமும் தூரத்திலிருந்து எங்களுடைய விளையாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த பப்பி, மெதுவாக வந்து தீடீரென்று எனக்குப் பக்கத்திலே கிடந்த பிஸ்கட் பெட்டியைக் கௌவிக் கொண்டு ஓட்டம் எடுக்கிறது.
நான் அதைப் பறித்து எடுப்பதற்காகப் பப்பியைத் துரத்திக் கொண்டு பாய்ந்து ஓடுகிறேன். சனியன் பிடிச்ச கல்லொன்று என்னுடைய காலை இடறிவிட்டது. நான் நெஞ்சு அடிபட விழுந்துவிட்டேன். என்னால் எழும்ப முடியவில்லை. முழங்கால் நன்றாக நிலத்திலே உரஞ்சுப்பட்டு விட்டது. கொஞ்சம் ரத்தம் வருகிறது. துப்பலைத் தொட்டு காயத்தில் அப்புகிறேன்; அப்பவும் எரிச்சல் குறையவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது.
ராணி பொம்மையை வீசி எறிந்துவிட்டு என்னிடம் ஓடி வருகிறாள். என்னுடைய கையைப் பிடித்து மெதுவாகத் தூக்குகிறாள்.
நான் ராணியின் கையைக் கோபத்தோடு தட்டி விடுகிறேன். எனக்கு ராணியின் மேல் கோபங்கோபமாக வருகிறது. ராணிக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடவே தெரியாது. தம்பிப் பாப்பாவை வீசி எறிஞ்சுவிட்டு அவள் வருவதைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருக்கிறது.
நான் விழுந்துவிட்டதைப் பார்த்ததும் அக்காவும் அத்தானும் அருகே ஓடிவருகிறார்கள்.
“தம்பிப் பாப்பா கிடைச்ச பிறகு நீ அதிலைதான் அன்பாயிருக்க வேணும். தம்பிப் பாப்பாவைத்தான் நீ முதலில் கவனிக்கவேணும். அதைக் கவனிச்ச பிறகுதான் என்னைக் கவனிக்கவேணும். பெம்பிளையளென்றால் அப்பிடித்தான்; பாப்பா கிடைச்ச பிறகு புருஷனை விடப் பாப்பாவிடந்தான் கூட அன்பாயிருப்பினம். ” நான் ராணியிடம் சொல்லுகிறேன்.
நான் சொல்லிறது ஒண்டும் அவளுக்கு விளங்கவில்லை; முழிக்கிறாள்.
“கள்ளப்பயலே என்னடா சொன்னனி? உனக்கு இதிலையிருக்கிற மூளை படிப்பிலை இல்லை” என்று சொல்லிக் கொண்டு அக்கா என்னை மெதுவாகத் தூக்குகிறா. அக்காவும் அத்தானும் சிரிக்கிறார்கள்.
நான் ராணியை இழுத்துக்கொண்டு திரும்பவும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடப் போகிறேன்.
பப்பி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் விளையாடுகிறோம்.
பொம்மை தம்பிப் பாப்பாவாகிறது
ராணி அம்மாவாகிறாள்
நான் அப்பாவாகிறேன்.
-கதம்பம் 1971.
(1972ஆம் ஆண்டு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தமிழ் இலக்கிய மன்றம் நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கதை.)
++++++++++++++++++++++++++++
பலி
தூரத்தில் வள்ளி வருவது தெரிந்தபோது கொத்துவதை நிறுத்திவிட்டு மண்வெட்டியைத் தோளிற் சாய்த்தபடி மாட்டுக் கொட்டிலின் பக்கம் போகிறான் வேலன்.
கொத்தி முடிந்த நிலப்பரப்பைப் பார்க்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வழக்கத்தைவிட அவன் இன்று அதிகமாக வேலை செய்திருக்கிறான்.
காலையிலிருந்து மழை பிசுபிசுத்துக்கொண்டிருக்கிறது. பலமாகப் பெய்து நிலம் நன்றாக நனைந்தால் கொத்துவதற்குச் சுலபமாக இருக்கும். வரட்சிக்குப் பின் மழைத் துளிகள் விழுவதால் மண்வாசனை வீசத் தொடங்கியது.
மண்வெட்டியிற் படிந்திருந்த மண்ணை, இடுப்பிற் செருகியிருந்த சுரண்டியால் ஒருதடவை வழித்துவிட்டு மீண்டும் சுரண்டியை இடுப்பிற் செருகுகிறான்.
தலையிற் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தேகத்தில் வழிந்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே மண்வரம்பின்மேல் வள்ளி நடந்துவரும் அழகை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்து கட்டிவிட்டு தலையில் இருந்த சோற்றுப் பெட்டியை ஒருகையாற் தாங்கிக்கொண்டு ஒரு கையில் தேநீர்ப் போத்தலையும் தூக்கியபடி ஏதோ பாரத்தைச் சுமந்து வருபவள் போல வேலனைப் பார்த்துக் குறும்புத்தனமான அபிநயஞ் செய்து தோட்டத்து மண் வரம்பில் நடந்து வந்து கொண்டிருந்தாள் வள்ளி.
அவர்களுடைய பெட்டை நாய் கறுப்பியும் அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
வரம்பின் வலப் புறத்தில் கந்தையாக் கமக்காரனின் மதாளித்த புகையிலைக் கன்றுகள் நிமிர்ந்து நிற்கின்றன. மறுபுறம் பரந்து கிடக்கும் வெற்றுத் தரையை இப்போதுதான் வேலன் கொத்திக்கொண்டிருக்கிறான்.
தோட்டம் முழுவதுமே கந்தையாக் கமக்காரனுக்குத்தான் சொந்தம். ஆனாலும் ஒரு பகுதியைப் பயிர்செய்வதற்கு மாத்திரம் வேலனுக்கு கொடுத்து நடுவிலே வரம்பு வகுத்து எல்லை பொறித்திருக்கிறார் கமக்காரன். இந்த வரம்புதான் தோட்டத்துக்கு வழியாகவும் அமைந்திருக்கிறது.
வரம்பின் ஒரு கோடியில் கந்தையாக் கமக்காரன் பெரிய வீட்டில் வாழ்கிறார். மறு கோடியில் வேலனும் வள்ளியும் ஒரு குடிசையில் வசிக்கிறார்கள்.
கமக்காரனின் பாவனைக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதில் வேலன் கயிறு பிடித்துத் தண்ணீர் இறைக்கக்கூடாது. தோட்டத்தின் நடுவில் இருக்கும் கிணற்றில் இருந்துதான் வேலன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவான். கமக்காரன் தனது வசதிக்காக அதனை அனுமதித்திருக்கிறார்.
கந்தையாக் கமக்காரனுடைய பகுதியில் முக்கியமான தோட்ட வேலைகள் இருக்கும்போது, வேலன் அதைச் செய்து முடித்த பின்புதான் தனது தோட்டத்தைக் கவனிக்க முடியும். வசிப்பதற்கும் பயிர் செய்வதற்கும் நிலம் கொடுத்தபடியால் அவன் அதைச் செய்கிறான்.
தோட்டத்து மூலையில் இருக்கும் பனைகளில் இறக்கும் கள்ளில் ஒரு போத்தலைத் தினமும் கமக்காரனுக்குக் கொடுக்கவேண்டும். பனைகளில் கள்ளு வடிப்பதற்குக் கமக்காரன் அனுமதித்தபடியால் அவன் அதைச் செய்கிறான்.
இவற்றையெல்லாம் விடச் சுளையாக நூறு ரூபாய்களைக் கமக்காரன் குத்தகைக் காசு என்று கூறி அவனிடம் ஒவ்வொரு வருடமும் பெற்றுக்கொள்ளுகிறார்.
வேலனைப் போன்றுதான் அவனுடைய சொந்தக்காரர்களிற் பலர் பரம்பரை பரம்பரையாகக் கமக்காரர்களின் தயவில் வாழ்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு துண்டு நிலங்கூடக் கிடையாது. கமக்காரர்கள் அவர்களுக்கு மட்டும் காணியை விலைக்குக் கொடுக்கமாட்டார்கள்.
வள்ளி சோற்றுப் பெட்டியை இறக்கிவைத்தாள். “என்ன மச்சான், களைச்சப் போனியே? கறி வைக்கக் கொஞ்சம் சுணங்கிப் போச்சு”என்று தான் தாமதித்து வந்ததற்குக் காரணம் கூறிக்கொண்டே வள்ளி அவன் அருகில் அமர்ந்தாள்.
பழைய சோற்றில் கறியைச் சேர்த்துப் பிசைந்து திரட்டி ஒரு உருண்டையை வாழையிலையில் வைத்து வேலனிடம் கொடுத்தாள்.
“வள்ளி நீயும் கொஞ்சம் சாப்பிடன்” என்று கூறி, வேலன் இலைத்துண்டில் பாதியைக் கிழித்து அவளிடம் கொடுத்தான். அவர்க ளுடைய நாய் கறுப்பியும் வாலையாட்டிக்கொண்டு அவர்களிடம் பங்கு கேட்டது.
வள்ளி மகிழ்ச்சியோடு ஒரு கவளத்தைக் கறுப்பிக்கும் கொடுத்தாள். சதா வேலனையே சுற்றிக்கொண்டிருந்த கறுப்பி ஒரு கிழமைக்குள் வள்ளியுடன் எவ்வளவு ஐக்கியமாகிவிட்டது.
தனிக்கட்டையாக இருந்த வேலனை அவனுடைய தாய் மாமன் அழைத்து ஒரு நல்ல நாளில் வள்ளியின் கையால் சோறு குடுப்பித்தான்.
வள்ளி வீட்டுக்கு வந்த பின்புதான் வேலனுக்கு வயிறாரச் சாப்பாடு கிடைக்கிறது. வள்ளியின் கை வண்ணம் எவ்வளவு ருசிக்கிறது.
தூரத்தே கந்தையாக் கமக்காரன் வருகிறார்.
அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பானையி லிருந்த தண்ணீரில் கையைக் கழுவி விட்டு எழுந்திருந்தான் வேலன்; வள்ளியும் சோற்றுப் பெட்டியை மூடிவிட்டு, வேலனிடம் விடைபெற்றுக் கொண்டு குடிசையை நோக்கிப் புறப்பட்டாள்.
வள்ளி எழுந்து செல்வதைக் கவனித்தபடியே வேலனிடம் வந்தார் கந்தையாக் கமக்காரன்.
இவ்வளவு நேரமும் சிறு தூறல்களாக விழுந்து கொண்டிருந்த மழை, இப்போது பலக்க ஆரம்பித்து விட்டது.
“அதிலை போறதார் வள்ளியே? சின்னப்பொடிச்சியாய் திரிஞ்சவள் ‘கொழு கொழு’ வெண்டு நல்லாய்க் கொழுத்திட்டாள்”.
கந்தையாக் கமக்காரன் வரம்பிலிருந்து சறுக்கித் தடுமாறுகிறார்.
“வரம்பு நனைஞ்சு நுதம்பலாய் கிடக்குக் கமக்காறன்; கவனமாய் வாருங்கோ”
ஒரு கிழமையாக வள்ளியைக் கந்தையாக் கமக்காரன் தினமும் பார்க்கிறார். இன்றுமட்டும் திடீரென்று வள்ளியைப்பற்றி அவர் கேட்டபோது வேலனின் மனசுக்குச் சங்கடமாக இருந்தது.
“நீ ஒருக்கா வீட்டுக்கு வா, சுன்னாகத்துக்கு ஒரு நடை போட்டு வரவேணும்”.
நேற்றுத்தான் கந்தையாக் கமக்காரன் தனது மனைவியை, அயற் கிராமத்தில் உள்ள அவளது தந்தையின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அது விஷயமாகத்தான் தன்னையும் அங்கு அனுப்பப் போகிறார் என நினைத்தபடி வேலன் அவரைப் பின்தொடர்ந்தான்.
கந்தையாக் கமக்காரன் வீட்டு முற்றத்தில் வேலன் வெகு நேரமாகக் காத்துக்கொண்டிருந்தான். உள்ளே சென்ற கமக்காரன் இன்னும் வெளியே வரவில்லை
சிறிது நேரம் ஒய்ந்திருந்த மழை மீண்டும் பலக்கத் தொடங்கியது.
நனைந்துவிடாமல் இருப்பதற்காக, முற்றத்தில் நின்ற வேலன் இப்போது வீட்டின் வாசற்படியில் ஏறிக் கதவோரமாக நின்றான்.
கந்தையாக் கமக்காரன் கையில் ஒரு கடிதத்துடன் வெளியே வந்தபோது, வீட்டு வாசற்படியில் கதவு ஓரம்வரை வேலன் வந்துவிட்டதைக் கவனிக்கிறார். அவரது முகம் மாற்றம் அடைகிறது.
“இறங்கடா பணிய, கீழ்சாதி! வீட்டுக்குள்ளையும் வந்துவிடுவாய் போலை கிடக்கு.”
வேலன் வெலவெலத்துப்போய்க் கீழே இறங்கினான். வாசற்படியில் நின்றதற்கு இப்படி அவர் தன்னை ஏசுவார் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. கமக்காரனுக்கு மனசு சரியில்லைப் போலிருக்கிறது.
அதன் பின்பு கந்தையாக் கமக்காரன் ஒன்றும் பேசவில்லை. கடிதத்தை மட்டும் அவனிடம் நீட்டினார். வேலன் பணிவோடு அதனை வாங்கிக்கொண்டு குழம்பிய மனத்துடன் சுன்னாகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
நாய் குரைக்குஞ் சத்தம் கேட்டு குடிசைக்குள் சமைத்துக் கொண்டிருந்த வள்ளி வெளியே வந்து பார்த்தாள். கந்தையாக் கமக்காரன் நின்று கொண்டிருந்தார்.
“வேலன் சுன்னாகத்துக்கு போட்டான். நீ ஒரு போத்தல் கள்ளு எடுத்துக்கொண்டு வா”
வள்ளியின் பதிலை எதிர்பார்க்காமலே தனது வீட்டுப்பக்கம் திரும்பி நடந்தார் கமக்காரன்.
வழக்கமாகக் கமக்காரன் ஒரு போத்தல் கள்ளுத்தான் வாங்குவார். காலையிலேயே அதனை வேலன் அவருக்குக் கொடுத்துவிட்டுத்தான் தோட்டத்திற்குச் சென்றான் .இப்பொழுது மீண்டும் இன்னும் ஒரு போத்தல் கள்ளு அவருக்குத் தேவைப்பட்ட போது வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது.
தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வேலன் சுன்னாகத்துக்குப் போய்விட்டதை எண்ணியபோது அவளுக்குக் கோபமும் வந்தது.
முட்டியில் இருந்த கள்ளைப் போத்தலில் வார்த்து எடுத்துக் கொண்டு கந்தையாக் கமக்காரனின் வீட்டை நோக்கி நடந்தாள் வள்ளி.
அவளுடைய நாய் கறுப்பியும் வாலை ஆட்டிக்கொண்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றது.
எங்கோ திரியும் தெருநாய் ஒன்று கறுப்பியின் பின் புறத்தை நுகர்ந்தபடி நெருக்கமாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அது ஆண் நாயாகத்தான் இருக்கவேண்டும். கறுப்பி கோபத்துடன் அந்தத் தெருநாயைப் பார்த்து உறுமியது. ஆனாலும் அந்த நாய் கறுப்பியைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.
“சீ! சனியன் ”என்று கடிந்துகொண்டே ஒரு கல்லை எடுத்து அந்த ஆண் நாயின்மேல் விட்டெறிந்தாள் வள்ளி.
இப்போது அந்த நாய் தூரத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
கள்ளுப் போத்தலுடன் வள்ளி கந்தையாக் கமக்காரனின் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டாள். கமக்காரன் உள்ளேயிருக்கிறார் போலத் தெரிகிறது. தயங்கியபடியே வாசற்படிகளில் ஏறிக் கதவோரத்தில் சிறிது நேரம் நின்றாள்.
“ஏன் வள்ளி, வாசற்படியிலை நிற்கிறாய் உள்ளுக்கு வாவன்” கமக்காரன்தான் அப்படிச் சொன்னார்.
வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எந்தக் கமக்காரன் வீட்டுக்குள்ளும் ஒருநாளும் சென்றதில்லை.
“இல்லைக் கமக்காறன் நான் போகவேணும்” என்று சொல்லிக் கொண்டே அவள் கள்ளுப்போத்தலை வாசற்படியில் வைத்தாள்.
“வள்ளி! வாசற்படியிற் போத்தலை வைக்காதை உள்ளுக்கு கொண்டுவந்து மேசையிலை வை.”
கந்தையாக் கமக்காரனின் குரல் கொஞ்சங் கடுமையாக இருந்தது.
வள்ளி தயங்கினாள். கமக்காரன் கோபித்துக்கொள்வாரோ என அவளுக்குப் பயமாகவும் இருந்தது. கமக்காரனின் சொல்லுக்குப் பணியாவிட்டால், அவர் சிலவேளை தோட்டத்தை விட்டு துரத்திவிடவும் கூடும். பின்பு இருப்பதற்கும் இடமில்லாமல் பிழைப்பதற்கும் வழியின்றித் தவிக்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.
வள்ளி மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். அவளுடைய கால்கள் கூசின.
இவ்வளவு நேரமும் அவளுடன் துணையாக வந்து கொண்டிருந்த கறுப்பி இப்போது வெளியே நின்றுவிட்டது. தூரத்தில் வந்து கொண்டிருந்த அந்த ஆண் நாய் இப்போது கறுப்பியை நெருங்கிக் கொண்டிருந்தது.
“வள்ளி ! இப்ப இங்கை ஒருதரும் வரமாட்டினம், நீ ஆறுதலாய்ப் போகலாம்.”
வள்ளியின் மனதில் ஏதோ உறுத்தியது. அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிடவேண்டும்போல் தோன்றியது. அதற்குள் கந்தையாக் கமக்காரன் எழுந்து சென்று முன் கதவைப் பூட்டினார்.
வள்ளி நடுங்கினாள்; “ ஐயோ கமக்காரன் நான் போகவேணும்” எனத் துடித்தாள் .
கந்தையாக் கமக்காரன் மெதுவாகச் சிரித்தார்; “பயப்பிடாதை வள்ளி வேலனுக்கு ஒண்டுந் தெரியவராது. நீ கொஞ்ச நேரம் என்னோட இருந்திட்டுப் போகலாம்”.
வள்ளி கதவின் பக்கம் பாய்ந்தாள். ஆனால் சாவி கமக்காரனின் கையிலேதான் இருக்கிறது. அவர் எழுந்து சென்று வள்ளியின் வலது கையைப் பற்றினார் .
“ஐயோ! கமக்காறன் என்னை ஒண்டுஞ் செய்யாதையுங்கோ ”
வள்ளி கெஞ்சினாள், மன்றாடினாள், அழுதாள். “பயப்பிடாதை வள்ளி” என்று மட்டுந்தான் கந்தையாக் கமக்காரன் சொன்னார். ஆனால் வள்ளியின் கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை.
வள்ளியின் கெஞ்சலும் மன்றாட்டமும் ஆதரவற்றுத் தேய்ந்தன; அவள் ஆவேசத்துடன் திமிறினாள். ஆனாலும் கமக்காரனின் அசுரப் பிடியிலிருந்து அவளால் விடுபட முடியவில்லை. அவள் பத்திரகாளி யானாள். மறுகணம் பளீரென்று அந்தச் சாதிமானின் கன்னத்தில் பலமாக அறைந்தாள்.
தீண்டத்தகாத சாதிக்காரி ஒருத்தி தனது கன்னத்திலே தீண்டி விட்டதனால் கந்தையாக் கமக்காரனுக்குக் கோபாவேசம் பொங்கியது. அவரது கண்கள் சிவந்தன.
அறைந்துவிட்ட அவளது கையைப் பிடித்து பலமாக திருகினார். வள்ளிக்கு வலியெடுத்தது; தலைசுற்றியது; கண்கள் இருண்டன. அவள் போராட்டத்திலே தோற்றுப்போய் நிலத்தில் சாய்ந்தாள்.
வெளியே கறுப்பி பலமாக உறுமிக்கொண்டிருந்தது. பின்பு சிறிது சிறிதாக அதன் குரல் தேய்ந்து மெலிந்தது. இப்போது அந்த பிரதேசத் தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல அது சோகமாக ஊழையிடத் தொடங்கியது.
வள்ளி மயக்கந் தெளிந்து எழுந்திருந்தபோது அவளது உடலும் உள்ளமும் தழலாகத் தகித்தன.
“நீயும் ஒரு மனுசனே! பெரிய சாதிக்காறனே? சீ ! தூ.... ” அவள் காறியுமிழ்ந்தாள்.
கந்தையாக் கமக்காரன் எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டார்.
வள்ளி தள்ளாடியபடியே வெளியே வந்தாள்.
அவளது நாய், வாலைக் குழைத்துக்கொண்டு அவளைச் சுற்றி வந்தது.
கறுப்பி இடங்கொடுக்காததினால் ரோசமடைந்த அந்த ஆண் நாய், இப்போது தூரத்தில் போய்க்கொண்டிருந்தது.
-சிந்தாமணி 1970.
++++++++++++++++++++++++
சுமங்கலி
உள்ளத்தை வேதனைப்படுத்தும் அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளப் பொன்னம்மாவின் மென்மையான இதயத்திற்கு கஷ்டமாக இருந்தது.
வேகவைக்கும் ஈயக்குழம்பு காதிற்கூடாகத் தசைகளை அறுத்துச் சென்று இதயத்தில் தேங்கிக் குமிழி பரப்பிக்கொண்டிருப்பதைப் போன்ற வேதனை.
வாழ்நாளில் அனுபவித்திராத துன்பம் அவளை வாட்டச் சிறிது நேரம் எதையும் சிந்திக்கும் சக்தியை இழந்துவிட்டாள். விழிகளை மேவிப் பெருகிய கண்ணீர் குழிவிழுந்திருந்த அவளது கன்னத்தின் சுருக்கங்களை நிரப்பி வழிந்துகொண்டிருந்தது.
நெற்றியிலே பட்டையாகத் தீட்டியிருந்த திருநீற்றைக் கரைத்துக் கசிந்திருந்த வியர்வைத் துளிகளைத் தன் சேலைத் தலைப்பினால் ஒற்றியபொழுது குங்குமம் அழிந்துவிடக்கூடாதேயென்ற கவனமும் அவள் நினைவில் வந்தது.
“பொன்னம்மா! சாத்திரியாருக்கு ஒருத்தினை தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வா.”
அடுப்பிற்கு முன்னால் வெகுநேரம்வரை தன்னை மறந்திருந்த பொன்னம்மா, புருஷனின் குரல் கேட்டுத் திடுக்குற்று அவசர அவசரமாகப் பன்னாடையை அடுப்பிற்குள் செருகினாள்.
சாத்திரியார் கூறிய செய்தி அவளின் மனச்சுவர்களை அரித்துப் புண்படுத்திக்கொண்டிருந்தது.
‘அவளது கணவன் சாதாசிவம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுவாராம்’.
எவ்வளவு இரக்கமற்றதனமாக அந்தச் செய்தியைச் சாத்திரியார் கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் பொய்த்துவிட்டால் பொன்னம்மா சந்தோஷத்தால் பூரித்துப்போவாள்.
ஆனால், சாத்திரியார் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பொய்த்துவிடுவதில்லை என்பதைப் பொன்னம்மா நன்றாக அறிந்திருந்தாள்.
அவளுக்கும் சதாசிவத்திற்கும் கலியாணம் நடந்த புதிதில், அவர்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று சாத்திரியார் கூறியதை முதலில் பொன்னம்மா நம்பவில்லைத்தான். ஆனால் இன்றுவரை அது எவ்வளவு உண்மையாகிவிட்டது.
சாத்திரியாரிடத்தில் ஏதோ தெய்வம் நின்று பேசுகிறது என்று பலர் கூறுவதைப் பொன்னம்மா கேட்டிருக்கிறாள். உண்மையில் தெய்வந்தான் நிற்கிறதோ அல்லது சாத்திரத்தின் மகிமைதானோ அவர் கூறுவது மட்டும் உண்மையாகிவிடுவதைப் பொன்னம்மா பல முறை கண்டிருக்கிறாள்
செம்பிலிருந்த தேநீரை மூக்குப் பேணியில் ஊற்றிச் சாத்திரியாரிடம் கொடுத்துவிட்டு மிகுதியைக் கணவனின் பக்கத்தில் வைத்தாள் பொன்னம்மா.
ஏனோ சிறிது நேரம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. சதாசிவம் மனைவி கொணர்ந்துவைத்த தேநீரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். முகத்திலே தேங்கும் துன்பத்தைப் பொன்னம்மா பார்த்துவிடக்கூடாதேயென்ற பயம் அவருக்கு.
சாத்திரியாருடைய மனமும் வேதனையடைந்தது. அவர் கூறிய செய்தி அந்த இணைபிரியாத தம்பதிகளை எவ்வளவு தூரம் வாட்டி வருத்துகிறது. நீண்ட நாட்களாக அவர்களுடைய குடும்ப நண்பராக இருந்து அவர்களின் அன்புப் பிணைப்பை நன்கு அறிந்தபின்பும், தான் செய்த தவறுக்காக, மறைக்கவேண்டிய உண்மையைக் கூறியதற்காக, அவர் தன்னைத்தானே நொந்துகொண்டார்.
சாதகக் குறிப்புகள் அடங்கிய ஏட்டின் எழுத்துக்கள் சாத்திரியாரின் கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தன. வழக்கம்போல முருங்கையிலையின் தளிர்களைக் கசக்கி எழுத்துக்களின்மேல் அவர் தேய்த்தபொழுது, இலைச்சாறு எழுத்தின் வெட்டுக்களை நிரப்பி அவற்றைப் பச்சை வர்ணங்களிலே துலங்கச் செய்தன. ஆனாலும் அவரது கலங்கிய கண்களுக்கு இப்பொழுதும் எழுத்துக்கள் துலங்கவில்லை.
ஒரு கணம் இலைச்சாற்றின் நெடி அவ்விடத்திற் பரவியது.
அங்கு நிலவிய அமைதி சாத்திரியாருக்கு ஏதோ பயங்கரச் சூழ்நிலையாகி மனதிலே கொந்தளிப்பை ஏற்படுத்த, அந்த அமை தியைக் குலைக்கும் வகையில் அவரேதான் முதலில் பேசினார்.
“என்ன பொன்னம்மா சுகமில்லையோ? ஒரு மாதிரியிருக்கிறாய் கண்ணெல்லாம் சிவந்து போய்க்கிடக்கு.”
“இல்லைச் சாத்திரியார், தேத்தண்ணிக்கு அடுப்பு மூட்டேக்க, சாம்பல் கண்ணுக்குள்ளை பறந்திட்டுது.”
இதைச் சொல்லி முடிப்பதற்குள் அழுது புலம்பிவிடாமல் இருப்பதற்காகப் பொன்னம்மா எவ்வளவோ முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
2
சாத்திரியார் எழுந்து சென்று வெகுநேரமாகியும் சதாசிவம் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. தான் இறந்தபின் பொன்னம்மா இறக்கையொடிந்த பறவையாகத் துடித்துப்போவாளே என்பதை நினைத்த பொழுது, அவரது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது.
இளமைப் பருவத்தில் பொன்னம்மாவுடன் கழித்த இன்ப நாட்கள் அவரது மனக்கண்முன் நிழலாடின.
வெகு காலத்துக்குப்பின் அன்றொருநாள் தனது மாமன் வீட்டுக்குப் போயிருந்த சதாசிவம் ஒருகணம் பிரமித்துப்போனார்.
நெற்றியிலே தோன்றும் வியர்வைத் துளிகளைத் தனது அழுக்குப் படிந்த சட்டையால் துடைத்துவிட்டு, மூக்கால் வழியும் சளியை நாக்கினால் உறிஞ்சிக்கொண்டு, அவருடன் சிறுவயதிற் கெந்திவிளை யாடிய பொன்னம்மா இன்று எப்படி வளர்ந்துவிட்டாள்!
சித்தாடை கட்டிய சிங்காரப் பெண்ணாக அவரைத்தன் கருவண்டுக் கண்களால் மருளவிழித்ததும், தன்னையும் மறந்து ‘அத்தான் வந்திருக்கிறாரம்மா’என்று அகமகிழக் கூவியதும், வதன மெல்லாம் செம்மை படரப் புன்னகைத்ததும், நிலத்திலே கால்விரலால் ஏதேதோ கோலமிட்டதும்...... அப்பப்பா! சதாசிவம் என்ற கட்டிளங் காளை கிறங்கிப்போனான்.
அன்று பொன்னம்மா ஒடியற்கூழ் காய்ச்சியிருந்தாள். அவளின் கைவண்ணத்திற்குத்தான் எவ்வளவு சுவை! சதாசிவத்திற்கு ஒடியற்கூழ் என்றால் கொள்ளை ஆசையென்று எப்படித்தான் அவளுக்குத் தெரிந்ததோ?
பெண்களே இப்படித்தான்; தாங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிறார்களோ அவர்களின் மனவிருப்பத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையிற் செயற்படுவதில் பெருஞ் சாமர்த்தியசாலிகள்.
மடித்துக்கோலிய பலாவிலைக்குள் பொன்னம்மா கூழை வார்க்க, அதை உறிஞ்சிச் சுவைப்பதுபோல் சதாசிவம் வாஞ்சையுடன் ஓரக்கண்ணால் அவளை நோக்க, ஆசை வழியும் கண்களால் கள்ளத்தனமாக சதாசிவத்தையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்மா வுக்கு வெட்கமாகிவிட்டது.
சதாசிவம் வீட்டிற்குப் புறப்பட்டபொழுது பொன்னம்மா அவரிடம் “அத்தான் ... நான்.....’’ என்று ஏதோ கூற முயன்று, வெட்கித் தடுமாறி அதைக் கூறாமல் விட்டபோதிலும் தனது மனத்துடிப்பிலேதான் அவளும் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளச் சதாசிவத்திற்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.
“பொன்னம்மாவுக்கு ஏழிற் செவ்வாய் மணமுடித்தால் கணவனுக்குத்தான் கூடாதாம்”- ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் சதாசிவத்திற்கு புத்திமதி கூறினார்கள். ஆனால் அவற்றைக் காதில் வாங்கிக்கொள்ளக்கூடிய நிலையில் அப்போது சதாசிவம் இருக்க வில்லை. பொன்னம்மா இல்லாத வாழ்வு வரண்ட பாலைவனமாகிவிடும் போல் அவருக்குத் தோன்றியது.
அதன் பின் -
இந்நாள்வரை அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிமை நிறைந்ததாய், இன்பத்துள் இன்பமாய்க் கழிந்துவிட்டது.
ஆனால் இன்று சாத்திரியார் கூறிய வார்த்தைகள் - எதிர் காலத்தைத்தான் துன்பம் எதிர்நோக்கி நிற்கிறதா?
பொன்னம்மாவின் முன்னால் போடப்பட்டிருந்த வாழை இலையில் பிசைந்துவிடப்பட்டிருந்த சோறு அப்படியே கிடந்தது. அவள் தன்னை மறந்த நிலையில் எங்கோ பார்த்தபடியிருந்தாள். எவ்வளவு நேரந்தான் அப்படியிருந்தாளோ அவளுக்கே தெரியாது. உணவைக் கண்டால் அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தொண்டைக்குள் ஏதோ இருந்துகொண்டு உணவை உட்செல்லவிடாமல் தடை செய்வதைப் போன்ற ஒரு பிரமை. அவளுக்குப் பசியே எடுக்கவில்லை.
ஊரில் யாரோ இறந்திருக்க வேண்டும். எங்கோ பறைமேளம் கேட்டுக்கொண்டிருந்தது. பொன்னம்மா இடியேறு கேட்ட நாகம்போலத் தவிக்கிறாள். நெஞ்சு வேகமாகப் படபடக்கிறது. இன்னும் சில நாட்களில் அவளுடைய வீட்டிலும் இதயத்தைப் பிளக்கும் அந்த ஓசை கேட்கப் போகிறதா?
பொன்னம்மாவின் முகம் பயங்கரமாக மாற, மனதிற்குள் ஒரு செத்தவீடு நடந்து ஒய்கிறது.
எந்த நிமிடத்தில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்து விடுமோ வென்ற தவிப்பு மலைபோல வளர்ந்து, அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டு பெருஞ் சுமையாகக் கனத்தது.
பொன்னம்மா படுக்கையிற் புரண்டுகொண்டிருந்தாள். இரவில் படுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகப் படுத்தாளே தவிர, அவள் படுத்தாலும் படுக்கா விட்டாலும் ஒன்றுதான். பல நாட்களாக நித்திரை யில்லாததால் அவளது கண்கள் சிவப்பேறி மடல்கள் வீங்கியிருந்தன.
கலைந்திருந்த கூந்தலும், செம்மை படர்ந்த கண்களும், அழுக்குப் படிந்த உடையும், அவளின் பைத்தியக்காரத் தோற்றத்தை மிகைப் படுத்தின.
அவள் ஏக்கத்துடன் படலையை நோக்கியபடியே இருந்தாள்.
அருகில் இருந்த கைவிளக்கு காற்றில் அசைந்தாடுகிறது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எங்கோ சாமக்கோழி ஒலி எழுப்புகிறது.
அயலூருக்குச் சென்ற சதாசிவம் ஏன் இன்னும் திரும்ப வில்லை? மனைவி வீட்டில் தனியாக இருக்கப் பயப்படுவாளே என்று, பொழுது மங்கிவிட்டால் வீட்டைவிட்டு கிளம்பாத சதாசிவத்தை இன்று வெகு நேரமாகியும் காணவில்லை.
பக்கத்திலிருந்த பனை வடலிக்குள் பாம்பொன்று பயங்கரமாகக் கொறித்துக்கொண்டிருந்தது.
திடீரென்று பேரிரைச்சலுடன் வீசியகாற்று அருகிலிருந்த தீபத்தின் ஒளியைத் துடிக்கவைத்து அணைத்து இருளைக் கவித்தது.
பொன்னம்மாவின் நெஞ்சு ஒருகணம் விறைத்துப் போயிற்று.
“ஒரு வேளை அவருக்கு ஏதேனும்..........” இதயத்தைப் பிசைந்து எழுந்த எண்ணங்களைப் பொன்னம்மாவால் தாங்க முடியவில்லை.
“ஆயாக்கடவைப் பிள்ளையாரே, நீதான் அவரைக் காப்பாற்றவேணும்.” கண்களை மூடிக்கொண்டு பொன்னம்மா வேண்டுதல் செய்கிறாள்.
படலை கிறீச்சிடும் சத்தம். கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு அவள் பார்க்கிறாள். இருளில் மங்கலாகத் தெரியும் உருவம்....... சதாசிவம்தான்.
பொன்னம்மாவின் நெஞ்சிலிருந்து நிம்மதியான பெருமூச்சுக் கிளம்புகிறது.
பயம் என்பது ஒரு பிசாசு, அது மனதிற்குட் புகுந்து விட்டால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் தனக்குச் சாதகமாக்கி, விழுங்கி ஏப்பம்விட்டு விசுவரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கும்.
பொன்னம்மாவைக் கலங்கவைக்கும் வகையில் அடுத்த நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
சற்று முன்பு அவள் கேட்ட பயங்கர ஓசை..... ‘லொறி’யின் சக்கரங்கள் அவளது நெஞ்சைச் சிராய்ப்பதுபோலச் சடுதியாய்த் தெருவை உராசி நிறுத்தப்பட்டு.... ஐயோ! இப்பதானே அவரும் தெருவுக்குப் போனவர், ஒருவேளை சக்கரங்களுக்குள் சிதைந்து இரத்தக் களரியாகி... பொன்னம்மா தெருவை எட்டிப் பார்ப்பதற்கே அஞ்சினாள்.
ஒரு மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுச் செல்லக் குஞ்சாச்சி ‘காரில்’ அடிபட்டு அந்த இடத்திலேயே செத்துப்போனது அவளின் நினைவில் வந்தபொழுது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.
மறுகணம் பொன்னம்மா தெருவை நோக்கி ஓடுகிறாள்.
நிதானம் இழந்துவிட்ட அவளது கால்களைப் பாதையிலே கிடந்த கல்லொன்று பதம்பார்த்து விடுகிறது. அவள் நெஞ்சு அடிபட நிலத்திலே சாய்ந்தாள்.
“ஒரு மயிரிழை தப்பிவிட்டுது, இல்லாட்டில் சதாசிவத்தை உயிரோடை பாக்கேலாது.” யாரோ வழிப்போக்கன் கூறியது பொன்னம்மாவின் காதுகளிலும் விழுந்தது.
பொன்னம்மாவின் உணர்ச்சிகள் வெடித்துப் பெருமூச்சாகப் பிரதிபலிக்கின்றன. அவளது தலை சுற்றுகிறது. கண்கள் இருட்ட டைகின்றன. நெஞ்சுக்குள் பலமான வலியொன்று ஏற்படுகிறது. அவளால் எழுந்திருக்க முடியவில்லை.
நிலத்திலே விழுந்து கிடந்த பொன்னம்மாவைச் சதாசிவம்தான் தூக்கிச்சென்று கட்டிலிலே கிடத்துகிறார்.
நான்கைந்து நாட்கள் கழிகின்றன.
பொன்னம்மா புரண்டு படுக்கிறாள். அவளால் அந்தச் சோக நிகழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. சதாசிவத்தின் உடலை யாரோ துணியால் மூடிவிட்டார்கள். அயலவர்களின் ஒப்பாரி அந்தச் சுற்றுவட்டாரத்தையே துக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. சதாசிவத்தின் விசுவாசமான உழைப்பாளி ஒருவன் கலங்கிய கண்களுடன் பாடை கட்டுவதில் முனைந்திருந்தான்.
பொன்னம்மாவின் கண்களில் மட்டும் ஏன் கண்ணீர் துளிர்க்கவில்லை? அழுதழுது கண்ணீர் வற்றி விட்டதா? அவள் கணவனின் உடலையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தாள்.
நெற்றியிலே கசிந்த வியர்வையில் அவளணிந்திருந்த குங்குமம் கரைந்து வழிந்தது. அரக்கத்தனமாக அவளின் கூந்தலை யாரோ அவிழ்த்து விட்டார்கள். பொன்னம்மா இனிமேல் சபை சந்திக்கு உதவாதவள்; அறுதலி.
யாருமே இல்லாத வரண்டபாலைவனத்தில் தான் தன்னந்தனியனாக விடப்பட்டுக் கணவனையே நினைத்துக் கதறிக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது.
யாரோ அந்திமக் கிரியைகள் செய்கிறார்கள் . பாடை நகர்கிறது; பறைமேளம் நாராசமாய்க் காதில் விழுகிறது.
பொன்னம்மா கதற முயற்சிக்கிறாள்.
“ஐ.... .... ! ஐயோ.... ....”
கண்ணீர் கருமணிகளை அறுத்துக்கொண்டு பிரவகித்துப் பாய்கிறது. நெஞ்சுக்குள் ஏதோ கிழிந்து சிதறுவதைப்போல் இருந்தது. உலகமெல்லாம் இருண்டு வந்து சூனியப் பெருவெளியாகியது........
“பொன்னம்மா ! எணை பொன்னம்மா ! என்ன குளறுகிறாய்? கனாக்கண்டனியோ?”
சதாசிவம் அவளின் தோள்களை உலுப்புகிறார்.
பொன்னம்மா இனிமேல் விழித்துப் பார்க்க மாட்டாள். அவளது தவிப்பு அடங்கிவிட்டது.
அவள் மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தாள், என்றுமில்லாத புத்தொளி அவளது வதனத்தில் நிறைந்திருந்தது. எங்கிருந்தோ மங்கல கீதங்கள் அவளது காதுகளில் விழுந்தன. வானத்திலிருந்து சொரிந்த நறு மலர்கள் அவளுக்கு வரவேற்புக் கூறின.
“பொன்னம்மா.... ..... !” உலகத்துச் சோகமெல்லாம் இழையோடிய சதாசிவத்தின் அலறல் அனாதரவாய் ஒலித்துக்கொண்டிருந்தது.
- ஈழநாடு 1964.
+++++++++++++++++++
பிழைப்பு
நான் மருதானைச் சந்தி வழியாக வந்து பஞ்சிகாவத்தை ரோட்டில் திரும்பிக்கொண்டிருந்தேன். பகல் முழுவதும் ஓயாது ஓடும் ‘ட்ராலி’ பஸ்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. தெருவில் ‘கார்’களோ ‘பஸ்’ களோ ஒன்றையும் காணோம்.‘லாபாய் லாபாய்’ என்று கத்திக் கொண்டிருக்கும் வியாபார தந்திரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள். இரவு பகல் இருபத்துநான்கு மணிநேரமும் சேவை செய்யும் ஒரு தேநீர்க்கடை மட்டுந்திறந்திருந்தது. முன்பகுதியிலுள்ள மேசையருகே முதலாளி தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவரைத் தவிர வேறு ஒருவரையுமே கடையில் காணவில்லை. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் ‘குட்செட்’டில் இயந்திரங்களின் ஒலிகள் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தன. வெகு தூரத்தில் மங்கலாக இரு உருவங்கள்.... மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும். அவர்களைத் தவிர அத்தெருவில் மனிதசஞ்சாரமே அற்றுப்போயிருந்தது.
புகையிரத நிலையத்தின் மணிக்கூண்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். இரவு ஒன்று ஐம்பத்தைந்தாகிவிட்டது. எனது நடையில் வேகம் கூடியதை உணர்ந்தேன். சட்டைப் ‘பாக்கெட்’டில் இருந்த ரூபா நோட்டுக்கள் பெருஞ் சுமையாய்க் கனத்துக்கொண்டிருந்தன.
ஒன்றரை மாத காலமாகத் தியேட்டர் ஒன்றில் கடமை யாற்றியதில் இன்றுதான் சம்பளம் கிடைத்தது. தினமும் இரவு இரண்டாங் காட்சி முடிந்து வீடு திரும்புவதற்கு எப்படியும் நேரமாகிவிடும். முன்பெல்லாம் நான் இவ்வழியாக வரும்பொழுது அதிகம் பயப்படுவதில்லை. இன்று ஏனோ எனது மனதைப் பயம் கௌவிக் கொண்டுவிட்டது.
மருதானை வீதிகளில் இரவில் நடமாடுவது கவனமாக இருக்கவேண்டும். இங்கு வழிப்பறிகள் நடப்பதுண்டு. அத்தோடு வேறுவிதமான கொள்ளைகளும் நடக்கும். மருதானை நகருக்கு இரவெல்லாம் பகல் தான். வெறியர்களின் கூத்துகளும், கும்மாளங்களும், வேறு பல கேளிக்கைகளும் இங்கு நடைபெறும். வாழ் நாள் முழுவதும் உழைக்கும் பணத்தை நொடிப் பொழுதில் தீர்த்துக் கட்டக்கூடிய பணம்விழுங்கிகளின் சுவர்க்க பூமியிது. அவர்களின் வலைக்குள் அகப்பட்ட எத்தனையோ அப்பாவிகளின் கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறிது காலத்துக்கு முன் எனது ஏழை நண்பன் ஒருவன் என்னிடம் வந்தான். தனது சகோதரிக்கு ஏதோ பண இடைஞ்சலாம். சம்பளப் பணம் முழுவதையும் அவளிடம் கொடுத்துவிட்டானாம். கைச்செலவுக்குப் பணம் வேண்டுமென்று என்னிடம் கடன் கேட்டான். ஏதோ கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். நான்கைந்து நாட்களின் பின்தான் உண்மை வெளிப்பட்டது. அவன் சினிமாவுக்குச் சென்று திரும்புகையில் தனது சம்பளத்தைப் பறிகொடுத்து விட்டான் என்பதை வேறுசிலர் கூறத்தான் கேள்விப்பட்டேன். அவனிடம் உண்மையை விளக்கமாகக் கூறும்படி கேட்டால் வெட்கமும், வேதனையும் அடைவானேயென்று பேசாமல் இருந்துவிட்டேன். பாவம், அவன்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.
அருகிலிருக்கும் தியேட்டரில் இரவு இரண்டாங்காட்சியாக ஏதோ பயங்கரமான படம் காட்டுகிறார்கள் போலிருக்கிறது. இடையிடையே அலறும் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
மிகவும் சமீபத்திலிருந்து ஏதோ துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. விரல்களால் மூக்கை அழுத்திப்பிடித்துக்கொண்டே நடந்தேன். சில நாட்களுக்கு முன் தெருவோரத்தில் ஒரு காகம் செத்துப்போய்க் கிடந்தது. அதன் அழுகிய நாற்றமாகத்தான் இருக்குமோ....? அப்படியும் நினைத்துவிட முடியாது. ஏனெனில், வெகு காலமாகவே இத் துர்நாற்றம் இவ்விடத்தில் இருக்கின்றது. சிறிது தூரத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. அதன் நாற்றமாகத்தான் இருக்க வேண்டும்.
தெருவின் வளைவை அடைந்துவிட்டேன். வரிசையாகத் தொழிலாளர்களின் குடிசைகள் தென்படுகின்றன. அவற்றைத் தாண்டிவிட்டால் நான் குடியிருக்கும் வீட்டை அடைந்துவிடலாம்.
நான் கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தேன். அதோ ஒரு பெண்ணின் உருவம் தெரிகிறது. குடிசையொன்றின் முன்வாசலில் அவள் நிற்கின்றாள்.
வழக்கமாக, எதிர்ப் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் அமைந்திருக்கும் விளம்பரப் பலகையில் மின்சார ‘பல்ப்பு’கள் எரிவதும் அணைவதுமாகவிருக்கும். அதனால் அவ்விடத்தில் யார் நின்றாலும் துலக்கமாகத் தெரியும். ஆனால், இன்று அந்த இடம் இருள் கவிந்து இருக்கின்றது. மின்சார ‘பல்ப்பு’கள் பழுதடைந்திருக்க வேண்டும். தூரத்திலுள்ள மின்சாரக் கம்பத்தின் வெளிச்சம் அவ்விடத்தில் சிறிது மங்கலாகத் தெரிகிறது.
நான் அவ்விடத்தைச் சமீபித்துக்கொண்டிருந்தேன். இப்போது அவளின் உருவம் தெளிவாகத் தெரிகிறது. இளம் பெண்ணாக இருக்கின்றாளே .....! அவள் தெருவின் இரு பக்கங்களையும் பார்த்து விட்டுக் குடிசையின் வாசலை அடைகிறாள். அவளுடைய பார்வையில் ஏன் ஏக்கம் தெரிகிறது? அவள் யாருடைய வரவை எதிர்பார்த்து நிற்கின்றாள்?
அவள் தன்னை அலங்கரித்திருப்பது நன்றாகத் தெரிகிறது. இந்த அகால வேளையில் அப்படி என்ன அலங்காரம் வேண்டிக்கிடக்கிறது? தலைவாரிப் பூச்சூடி அழகாக உடையணிந்திருக்கிறாள். ஒருவேளை இவளும்....? அப்படித்தான் இருக்கவேண்டும். தனது காதலனை... இல்லைக் காதலர்களை எதிர்பார்த்து நிற்பவளாக இருக்க வேண்டும்.
நான் அவளைச் சமீபித்து விட்டேன். ‘க்கும்’- ஒரு செருமல் ஒலி அவளது அடித் தொண்டையிலிருந்து கிளம்புகின்றது.
எனது தலை நிமிரவேயில்லை. நான் நடந்துகொண்டிருந்தேன். ஆனாலும் நடையின் வேகம் குறைந்துவிட்டது. அவளின் செருமலுக்கு அவ்வளவு சக்தியா? கடைக்கண்ணால் அவளைப் பார்த்தேன்.
அவள் சிறிது சத்தமாகச் சிரிக்கின்றாள். ஜலதரங்கத்தின் நாதமல்லவா கேட்கிறது. என்னையும் மீறிக்கொண்டு எனது தலை நிமிர்கின்றது. அவள் புன்னகை புரிந்தவண்ணம் தன்னிடம் வரும்படி கையால் அழைத்தாள்.
ஏன் எனது நடை தடைப்பட்டுவிட்டது? கால்கள் இயங்க மறுக்கின்றன. நான் நகராமல் நின்றுவிட்டேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எனது இதயம் வேகமாக அடித்துக்கொள்ளு கின்றது. இந்தத் தருணத்தில் பயத்தைக் களைந்தெறிந்து விட்டுப் புத்திசாலித்தனமாகவல்லவா நடந்துகொள்ள வேண்டும். ஏன் என் புத்தி மழுங்கிவிட்டதா?
இதோ அவள் என்னைநோக்கி வந்துகொண்டிருக்கிறாள். ‘நெருங்காதே’ என்று கத்தவேண்டும்போலத் தோன்றுகிறது. எனது தொண்டை ஏன் அடைத்துக்கொண்டுவிட்டது? உமிழ்நீரைக்கூட விழுங்க முடியவில்லையே! இந்த இடத்தைவிட்டே ஓடிவிடுவோமா? ஆம், அதுதான் சரியான யோசனை. ஆனால் எனது கால்களை நகர்த்தக்கூட முடியவில்லையே! கால்களுக்கு இவ்வளவு கனம் திடீரென்று எப்படி வந்தது.
அவள் என்னருகில் நிற்கின்றாள். இதழ்களிலே புன்னகை அரும்பி நிற்கின்றது. அப்பப்பா அவளது வதனத்திலே எவ்வளவு கவர்ச்சி! நாகபாம்பின் உடலிலே ஒருவகை வழவழப்பான அழகு தோன்றுமே அதேபோலத்தான்.
ஐயோ, அவள் என் கைகளைப் பற்றுகின்றாளே! ஏன் என் தேகமெல்லாம் வியர்த்துக் கொட்டுகின்றது? எனது உரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன. நான் மரக்கட்டை போலாகிவிட்டேன். எனது கைகளை விடுவித்துக் கொள்ளக்கூடிய சக்தி எங்கே ஓடி மறைந்து விட்டது. இந்நிலையில் யாராவது பார்த்துவிட்டால்...? நான்கு பக்கங்களையும் கவனிக்கிறேன். நல்லவேளை ஒருவருமே இல்லை.
“உள்ளே வாருங்கள்” என்று கூறிக்கொண்டே எனது பதிலையும் எதிர்பாராது அவள் குடிசைக்குள் என்னை அழைத்துச் சென்றாள்.
நாம் செய்யக்கூடாதென்று திடசங்கற்பம் செய்திருக்கும் செயல்களைச் சிலவேளைகளில் சந்தர்ப்ப வசத்தால் நம்மையும் மறந்து செய்து விடுகின்றோமே.... .... இதே நிலையில்தான் நானும் இருந்தேன்.
அவளது குடிசை சிறியதுதான். பலகைத்துண்டுகளினாலும், தகரத்தினாலும் அமைக்கப்பட்டிருந்தது. குடிசைக்குள் நுழைவதற்கு நன்றாகக் குனிய வேண்டியிருந்தது. முன் பகுதியில் அதிக வெளிச்சம் இல்லை. எதிலோ என் கால்கள் இடறி நிலை தளருகின்றது. அவள் என்னைத் தாங்கிக்கொண்டாள். குடிசையின் மூலையில் ஒரு சிறு கயிற்றுக்கட்டில் போடப்பட்டிருந்தது. அதிலே என்னை அமரும்படி கூறிவிட்டுக் குடிசையின் முன் கதவைச் சாத்தினாள்.
அப்பப்பா, சிறிது நேரத்திற்குள் எனது உடைகளெல்லாம் வியர்வையால் நனைந்துவிட்டதே!. சே! ஏன் எனது உடம்பெல்லாம் இப்படி நடுங்குகின்றது? நான் மிகவும் தென்புடன் அல்லவா இருக்க வேண்டும். எனது பயந்தாங்கொள்ளித்தனத்தை இவள் அறிந்து கொண்டால் மிகவும் சாதுரியமான முறையில் எனது பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுவாளே!
எனது சிறுதொகைப் பணத்தைச் செலவு செய்வதற்கு நான் போட்டுவைத்திருந்த திட்டங்கள் மனக்கண்முன் வந்தன. எனக்கு வேலை கிடைத்தவுடன் முதற் சம்பளத்தில், ஊர்ப்பிள்ளையாருக்கு ஒரு தீபம் வாங்கிக் கொடுப்பதாக எனது அன்னை நேர்த்திக்கடன் செய்திருந்தாள்; முக்கியமாக அதனை நிறைவேற்றவேண்டும். எனது ஏழைத் தங்கைக்கு ஒரு சேலை வாங்கியனுப்ப வேண்டும். பாடசாலைக்கு வசதிச்சம்பளம் கட்டுவதற்குப் பணம் வேண்டுமென்று தம்பி கடிதத்துக்குமேல் கடிதமாக எழுதியிருந்தான். இவற்றை யெல்லாம்விட வேறும் பல சில்லறைச் செலவுகள்.
நான் மிகவும் சாதாரணமாக இருப்பவனைப்போல நடித்துக் கொண்டு நான்கு பக்கமும் நோட்டம் விட்டேன். எதிர் மூலையில் பாத்திரங்கள் உருண்டு கிடந்தன. அறையின் நடுவே ஒரு பிரம்புத்தட்டி தொங்கிக்கொண்டிருந்தது. மறுபக்கத்திலேதான் சமையலறை போலிருக்கிறது. உள் வளைமரங்களில் புகை ஒட்டறைகள் படிந்திருந்தன. எதிரேயிருந்த கதிரையொன்றில் இரும்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. எதிர்ப்பக்கத்தில் சேலைகளும் வேறு உடைகளும் இருந்தன. இவைகளைப் பார்த்தால் அக்குடிசையில் அவளைத்தவிர வேறு ஒருவரும் வசிப்பதில்லைப் போல் தெரிகின்றது. இவள் தனியாகவா இங்கு இருக்கின்றாள்.
மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மேற் கூரையில் ஏதோ மின்னியவாறு தெரிந்தது. உற்றுக்கவனித்தேன்.
ஒரு சிலந்தி, வலை பின்னியிருந்தது; அது வட்டம் வட்டமாக எவ்வளவு அழகாக இருக்கின்றது. அதன் நடுவே சிலந்தி! அந்த வலையில் பூச்சியொன்று விழுந்து துடித்துக்கொண்டிருந்தது.
அவள் திரும்பி வந்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவளின் தோற்றத்தை நன்கு கவனித்தேன். எவ்வளவு அழகாக இருக்கின்றாள்! அவளது தோற்றத்தில் நாரீமணிகளின் அதிமித அலங்காரம் இருக்கவில்லை. குடும்பப் பெண்ணுக்குரிய அலங்காரத் தோற்றந்தான் இருந்தது. அவளைப் பார்க்கும்போது அவளின்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.
இவள் தனது வாழ்வைச் சரியான பாதையிலே செலுத்தி யிருந்தால் நிச்சயம் ஒரு சிறந்த குடும்பப் பெண்ணாகியிருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.
ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வழியில் இறங்கியிருக்கிறாள்? ஒருவேளை வறுமையாக இருக்குமோ? நிச்சயம் அப்படியிருக்க முடியாது. வறுமையைப் போக்கிக்கொள்ள எவ்வளவோ கண்ணியமான தொழில்கள் இருக்கின்றனவே. படுகுழியில் விழவேண்டியதில்லையே! பின் இந்நிலைக்கு இவள் வருவதற்குக் காரணந்தான் என்ன?
அவர்கள் வாழும் கீழ்த்தரமான டாம்பீக வாழ்க்கை முறையாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கும், கும்மாளத்திற்கும் கண்ணியமாகப் புரியும் தொழில்களின் வருமானங்கள் போதுவதில்லை. அதனாலேதான் குறுக்கு வழியை நாடுகின்றார்கள் போலும். ஆனாலும் இந்த முடிவை என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளுடன் கதைத்து ஏதாவது கிரகித்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது.
இதோ அவள் எதையோ நீட்டுகிறாள். கிண்ணத்துடன் பாலை வாங்கிச் சுவைத்தேன். அவள் என்முன் அடக்கமாக நின்று கொண்டிருந்தாள். நான் இங்கு வந்தபோது அவளிடம் காணப்பட்ட கலகலப்பு எங்கே ஓடிமறைந்து விட்டது?. கிண்ணத்தைக் கட்டிலின் ஓரத்திலே வைத்தேன்.
விம்மும் ஒலி கேட்கின்றதே!
அவளை உற்றுக் கவனித்தேன். கண்ணீர்! ... இது என்ன தொந்தரவாக இருக்கின்றது. எதற்காக இவள் அழுகின்றாள்? அழவேண்டுமானால் தனிமையிலிருந்து அழுது தொலைக்கலாமே. என்னை இங்கு அழைத்துக் கொண்டுவந்து வைத்து ஏன் அழவேண்டும்? வரவர அழுகை அதிகரிக்கின்றதே. எனக்கு அவளைப் பார்ப்பதற்கு அனுதாபமாகவும், சங்கடமாகவும் இருந்தது.
“ஏன் அழுகின்றாய்?”
அவள் அதிகமாக விம்மினாள். எனக்குப் பொறுமை குறைந்துகொண்டு வந்தது. கேட்பதற்குப் பதில் கூறாமல் இப்படி அழுதுகொண்டிருந்தால்........? ஆத்திரந்தான் பொங்கியது. ஆனாலும் அடக்கிக்கொண்டு அவளின் அழுகைக்குக் காரணத்தைக் கண்டிப்புடன் கேட்டேன்.
இப்போது அவள் ஒருவாறு தனது அழுகையைக் குறைத்துக்கொண்டாள்.
“நான் ஒரு அனாதை. சிறு வயதிலே தாய்தந்தையரை இழந்த எனக்கு அண்ணா ஒருவர் துணையாக இருந்தார். ஆனால் அவரும் சிறிது நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். நான் தனியனாகி விட்டேன். எனது துன்பத்தை நினைக்கும்போது அழுகை வந்துவிட்டது.” என்று கூறிக்கொண்டே அவள் நிலத்தில் அமர்ந்தாள்.
என் மனம் சிறிது வேதனைப்பட்டது. பாவம், இந்த இளம் வயதில் அவளுக்கு இவ்வளவு கொடுமையா? விதி யாரைத்தான் விட்டு வைத்தது!
ஆனாலும் அவள் புரியும் இழிவான தொழிலை நினைக்கும் போது மனதிலே கசப்புத்தான் ஏற்பட்டது. ஒருவேளை தனியாக விடப்பட்ட அவள் வயிற்றை நிரப்புவதற்குத்தான் இத்தொழிலைப் புரிகின்றாளா?
“ஏன் ஏதாவது கண்ணியமான தொழிலைச் செய்து சம்பாதிக்கலாமே” என்று மெதுவாகக் கேட்டு வைத்தேன்.
“நேற்றுவரை என்னிடமிருந்த நகைகளை விற்றுக் கண்ணியமான முறையில் சீவனத்தை நடத்திவிட்டேன். என்னிடமிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. தனிமையில் விடப்பட்ட ஒர் இளம்பெண் எந்தக் கண்ணியமான தொழிலைச் செய்யலாம்? அவளைச் சுற்றியிருக்கும் சிலர் எப்படியும் அவளை இழிநிலைக்குக் கொணர்ந்து விடுவார்கள். அப்படியொரு நிலை பிறரால் ஏற்படுமுன் நானே இந்நிலைக்கு வந்துவிடுவதெனத் தீர்மானித்தேன். நீங்கள் தான் முதன் முதல் என்னிடம் வந்திருக்கிறீர்கள். ”
நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். புதுமலரின் வருணிக்க முடியாத ஒருவித வனப்பு அவளிடம் மறைந்திருப்பதை என் உள்மனம் உணர்ந்துகொண்டது. நுகரப்படாத மலரா அவள்? நமது சமுதாயத்தில் தேவையற்ற முறையில் எவ்வளவு மலர்கள் அநியாயமாகக் கசங்கி விடுகின்றன.
அவள் தொடர்ந்தாள் “.... ஆனால் உங்களைக் கண்டவுடன் நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். என் சகோதரனை உங்கள் உருவத்தில் பார்க்கின்றேன். என் அண்ணாவின் அதே கனிந்த பார்வை, தோற்றம் யாவும் உங்களிடம் அமைந்திருக்கின்றன..... அண்....ணா !” விம்மியபடியே அவள் என்னை அழைத்தாள். உணர்ச்சி இழையோடிய அவளது அன்புக்குரலின் சக்தி என் உள்ளத்தை இளகச் செய்தது.
எனது கண்கள் குளமாகின. அவளின் நிலைகண்ட எந்த மனித இதயமும் கலங்காமல் இருக்கமாட்டாது.
அவள் தனது உள்ளத்தைத் திறந்து எல்லாவற்றையுமே கூறிவிட்டாள். இந்த உத்தமப் பெண்ணுடன் உடன் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று எனது மனம் அழுதது. ஆனாலும் நான் அவளுக்கு என்ன உதவியைச் செய்யப் போகின்றேன்? எனது குடும்பத்தில் எனக்கு இருக்கும் பொறுப்பே சுமக்க முடியாமல் கனக்கின்றதே.
எனது சட்டைப் ‘பாக்கெட்’ டில் கிடந்த பணத்தில் நூறு ரூபாவை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் தயங்கினாள்.
“ஓர் இளம்பெண் தனியாக வாழமுடியாதென்று நினைத்துக் கொள்ளாதே. மனத்திடமும், துணிவுங்கொண்ட எந்தப் பெண்ணும் துன்பமில்லாது வாழலாம். கண்ணியமான ஏதாவது தொழிலைச் செய்து வாழக் கற்றுக்கொள். அதற்கு இந்தப்பணம் மூலதனமாகவாவது உதவட்டும்” என்று கூறி அவளது கையில் பணத்தைத் திணித்தேன்.
நான் அவளுக்குக் கூறிய வார்த்தைகளும், செய்த சிறு உதவியும் எனது மனதிற்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் என் நிலைமையில் அதைத்தான் என்னால் செய்ய முடிந்தது.
நன்றிப் பெருக்கால் அவளது கண்கள் கலங்கின. நான் புறப்படும் பொழுது. “போய்வாருங்கள் அண்ணா” என்று கூறி அன்புடன் விடை தந்தாள்.
வாழ்விலே நல்ல காரியம் ஒன்றைச் சாதித்த மனநிறைவுடன் எனது அறையை அடைந்தேன்.
வழக்கம்போல் அடுத்தநாள் இரவு அவ்வழியாக வந்து கொண்டிருந்தபொழுது என்னையறியாமலே எனது பார்வை அவளது குடிசையின் பக்கம் திரும்பியது. அங்கே நான் கண்ட காட்சி! - ஓர் இளம் வாலிபனை அணைத்தபடியே அவள் குடிசைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
- கலைச்செல்வி 1964.
+++++++++++++++++++++++++
இதுதான் தீபாவளி
தீபாவளி நாளிலும் இப்படி வெகுநேரம் தூங்கி விட்டேனே என்ற ஆதங்கத்துடன் எழுந்திருந்தேன்.
நேற்று மாலை ‘யாழ்தேவி’யில் ஊருக்கு வந்த நான், பிரயாணக் களைப்பினால் சற்று அதிகமாகவே நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். சனக்கூட்டங் காரணமாகப் புகையிரதத்தில் இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. பண்டிகை நாட்களில் அரசாங்கத்தாரால் ஒழுங்கு செய்யப்படும் விசேஷ றெயிலில் பயணஞ் செய்தால் நெருக்கடியாக இருக்குமே என்று தான் ‘யாழ்தேவி’யில் பயணஞ் செய்தேன். விசேஷ றெயிலைவிட ‘யாழ்தேவி’யிலேதான் கூட்டம் அதிகமோ என எண்ணும்படியாகி விட்டது.
எனக்கு இருப்பதற்கு இடம் கிடைக்காததினால் நான் கவலை கொள்ளவில்லை. தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கண்டுகளிப் பதற்காக என்னுடன் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள நண்பன் பியசேனாவுக்கு இருக்க இடம் கிடைத்திருந்தால் எனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.
என்னைப் போன்றுதான் நண்பனும் வெகுநேரம் தூங்கியி ருப்பானோ என நினைத்துக்கொண்டே பியசேனாவின் கட்டில் இருந்த பக்கம் திரும்பினேன். அவன் எனக்கு முன்னதாகவே விழித்துக் கொண்டுவிட்டான். கட்டிலில் இருந்தவண்ணம் யன்னலின் திரையை நீக்கி ஆர்வத்தோடு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனது பார்வையை எனது பக்கம் திருப்பும் வகையில் “குட்மோனிங்” என வந்தனம் தெரிவித்தபடியே எழுந்து அவனது அருகில் சென்றேன்.
எனது குரல் கேட்டுத் திடுக்குற்றவன்போல அவன் எனது பக்கம் திரும்பிப் புன்னகையோடு பதிலுக்கு வந்தனம் கூறினான்.
யன்னலின் அருகிற் சென்று திரையை நன்றாக நீக்கிவிட்டு வெளியே நோக்கினேன்.
அங்கே எனது தங்கை ராணி முற்றத்தை அலங்கரித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். தன்னை மறந்து கோலமிடுவதிலே கந்பனைகளை விரியவிட்ட அவளது வதனத்தில் எத்தனை எத்தனையோ பாவங்கள் தெரிந்தன.
“யுவர் ஸிஸ்டர் லுக்ஸ் வெரி சார்மிங்” நண்பன் பியசேனா ராணியின் அழகை வர்ணித்தபோது மனதில் ஒருவித குறுகுறுப்பு எனக்கு ஏற்பட்ட போதிலும் அசடு வழியச் சிரித்து வைத்தேன்.
‘இது கொழும்பில்லையடா யாழ்ப்பாணம், அதுவும் தமிழ்ப் பண்பாடு நிறைந்த ஒரு கிராமம். இங்குள்ள வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் வேறுபாடானவை. இங்கு ஒரு வயது வந்த பெண்ணை இப்படிப் பார்ப்பதும், வர்ணிப்பதும் குற்றமாகும்’- என்று நண்பனிடம் சொல்ல எனக்குத் துணிவில்லை.
ஏனென்றால், பியசேனாவின் உயர்ந்த மனப்பக்குவத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவனும் நானும் கொழும்பு மாநகரில் ஒரே அறையில் ஆறு வருடங்களுக்கு மேலாகக் காலத்தைக் கடத்தி வருகிறோம்.
பியசேனா சிங்களப் பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரை களும் எழுதிவரும் பிரபல இளம் எழுத்தாளன். சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், கலாசாரங்களையும், பண்பாடுகளையும் அலசி ஆராய்வது அவனது இனிய பொழுதுபோக்கு. அந்த ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றும் பல பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமிடையில் சர்ச்சைகளையும், வாதங்களையும் ஏற்படுத்தி எங்களது நட்பை இறுக்கிக் கொள்ளும்.
தீபாவளியைக் கொண்டாடுவதற்காகக் கொழும்பிலிருந்து நான் புறப்பட்டபோது, பியசேனாவும் என்னுடன் வருவதற்கு ஆசைப்படு வதாகக் கூறினான். தீபாவளிக்காகக் கிடைத்த விடுமுறையை வீணாக்காமல் என்னுடன் வந்து யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளை அவன் அறிந்துகொள்ள விரும்பினான். நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.
நாங்கள் இருவரும் புறப்பட்டு யாழ்ப்பாணத்தில் எனது கிராமமாகிய புன்னாலைக்கட்டுவனுக்கு வந்து சேர்ந்ததும், எனது தாய் தந்தையரை நண்பன் பார்த்தபோது இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம்’ எனக் கூறி எங்கள் எல்லோரையும் கவர்ந்தான்.
பியசேனாவுக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல இரண்டொரு வார்த்தைகளை ‘விளாசு’வதில் கெட்டிக்காரன்.
இவ்வளவு நேரமும் கோலத்தின் அழகினை இரசித்துக் கொண்டிருந்த பியசேனா என் பக்கம் திரும்பி “வை டூ யூ செலிபறேற் டீபாவலி?” எனத் தீபாவளி கொண்டாடுவதற்குரிய காரணத்தைக் கேட்டான்.
வழக்கம்போல எங்களது சம்பாஷணை ஆங்கிலத்தில் தொடர்ந்தது.
“முன்பொரு காலத்தில் நரகாசுரனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் விஷ்ணு பெருமானிடம் வேண்டுதல் செய்ய, அவர் அந்த அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தருளினார். நரகாசுரன் இறக்கும் தருணத்தில், தான் இறந்தொழிந்த நாளை உலகத்தோர் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டுமென விரும்பினான். அதனால் நாங்கள் அவன் இறந்துபட்ட இத்தீபாவளி நாளில் எமது இல்லங்களைச் சுத்தஞ்செய்து, அலங்கரித்து, நீராடிப் புத்தாடை புனைந்து, தெய்வ வழிபாடு செய்து மகிழ்வடைகிறோம்” என நண்பனுக்கு விளக்கினேன்.
“அப்படியானால் தீபாவளி எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச் சிகரமான நாள்தான். நானும் உங்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி எல்லோரது மகிழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்காக எதையும் மிகைப்படுத்தவோ குறைத்துக்கொள்ளவோ வேண்டாம். வழமை போலக் கொண்டாடுங்கள் அப்போதுதான் நான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.” என்றான்
அதன்படி நானும் பியசேனாவும் குளித்து முடித்த பின் முதலில் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டோம்.
நான் தீபாவளிக்காக வேண்டிய புதிய வேட்டியை அணிந்து கொண்டபோது, தனக்கும் ஒரு வேட்டி தரும்படி வேண்டினான் பியசேனா. அவனுடைய ஆசையைக் கெடுப்பானேன் என நினைத்து அவனது விருப்பத்தைப் பூர்த்தி செய்தேன்.
அவன் வேட்டியை அரையில் சுற்றியபோது அது நழுவிக் கீழே விழ, மீண்டும் அதனை எடுத்து அவன் அணிந்துகொண்டபோது அதன் தலைப்பு நிலத்தில் இழுபட, திருப்திப்படாதவனாய் அதனைத் திரும்பத்திரும்ப அணிய முயற்சித்தபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது.
அந்த நேரத்தில் அயல் வீடுகளிலுள்ள சிறுவர் கூட்டமொன்று அங்கே வந்தது. அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். போகுமிட மெல்லாம் அவர்களுக்கு இன்று பணியாரங்களும் பட்சணங்களும் கிடைக்கும். தாங்கள் அணிந்திருக்கும் புது வண்ண உடைகளை மற்றவர்கள் பார்த்து இரசிக்கும்போது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் உவகை பொங்கி வழியும்.
பியசேனா வேட்டியணிந்து கொள்ளத் தெரியாமல் திண்டாடுவதைப் பார்த்த துடுக்குத்தனமான சிறுமி ஒருத்தி கைகொட்டிச் சிரித்தாள். அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் சத்தமிட்டுக் கேலிசெய்து கைகொட்டிச் சிரித்தனர்.
பியசேனா கொஞ்சங்கூட வெட்கப்படாதவனாய் அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து தானும் சிரித்து மகிழ்ந்தான்.
நண்பனின் அரையில் வேட்டியை நன்றாக வரிந்து கட்டி அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக ஒரு ‘பெல்ற்’ரையும் அணிவித்தேன்.
சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டு அதன் காரணத்தை அறிந்துகொள்வதற்காக மறைவிலிருந்து கவனித்த எனது தங்கை ராணி, தன்னுள் பொங்கிவந்த சிரிப்பை அடக்க முயன்று திணறிப்போய்க் ‘களுக்’ கென்று சிரிப்புதிர்த்தாள்.
பியசேனாவுக்கு இப்போது ஏனோ நாணம் பற்றிக் கொண்டது. அவனது புன்னகை அசடாக வழிந்தது.
நாங்கள் இருவரும் கோவிலைச் சென்றடைவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது. கோவிலில் நிறைந்திருந்த பக்திச் சூழல் பியசேனாவைப் பெரிதும் கவர்ந்தது.
பக்தர்களில் சிலர் தேவார திருவாசகங்களைப் பாடியும், சிலர் கண்ணீர் வடித்து இறைவனிடம் ஏதேதோ இறைஞ்சி நின்றபோதும், அந்த ஒலிகள் அவனுள் ஏற்படுத்திய புளகாங்கிதத்தில் தன்னை மறந்து அவன் கைகூப்பி வழிபட்டு நின்றபோது, எனது உரோமக்கால்கள் குத்திட்டு நின்றன.
அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை அவன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டபோதும், கண்களை மூடிக்கொண்டே திருநீற்றைத் தனது நெற்றியில் அணிந்துகொண்டபோதும், அந்த வெண்ணீற்றின் மையமாய்ச் சந்தனப் பொட்டிட்ட போதும் அவன் எவ்வளவு தெய்வீக பக்தனாய்க் காட்சியளித்தான்!
நீறுபூத்த நெருப்பாய் மிளிரும் அவனது கலையுள்ளத்தில் எம்மதமும் சம்மதந்தானா?
வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்தபோது அவன் அறிய விரும்பியவற்றிற்கு நான் விளக்கம் கொடுத்தவண்ணம் இருந்தேன்.
ஸ்தூபியில் நிறைந்திருத்த சிற்பவேலைகளும் ஆங்காங்கே சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்களும் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தன.
“புத்த கோவில்களில் நாங்கள் வணங்கும் முறைகளும் இந்துக் கோவில்களில் நீங்கள் வழிபடும் முறைகளும் சில வழிகளில் ஒத்திருக்கின்றன. புத்தர் பெருமானை வழிபடும் நாங்களும் உங்களைப்போல விநாயகக் கடவுளையும் முருகனையும் வழிபடு கிறோம். அப்படியாயின் இந்த இரு மதங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன அல்லவா?”
பியசேனா கூறிய வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மைக் கருத்துகளில் சிந்தனையைத் தேக்கியபடி நடந்துகொண்டிருந்தேன்.
“ஆனாலும் உங்களது ஆலயங்களில் நான் காணும் சிற்பங்களையும் ஓவியங்களையும் அவற்றில் தேங்கி நிற்கும் கொள்ளை அழகுகளையும், அவைகள் உணர்த்தும் உங்கள் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பார்த்து நான் தலைவணங்கும்போது நீங்களும் உயர்ந்து நிற்கிறீர்கள் என்பதை மறுக்க முடியாது.”
அவன் அப்படிக் கூறும்போது எனக்குப் பெருமையாக இருந்தது.
கோவிலில் இருந்து நாங்கள் புறப்பட்டு வீட்டுக்கு வரும் வழியில் எனது பெருமையெல்லாம் சிதறிப் போகும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
தெருவின் திருப்பத்தில் இரட்டைக் காளைகள் பூட்டிய அந்த வண்டியில் நான்குபேர் சவாரி செய்து கொண்டிருந்தார்கள். நெடுந்துhரம் பிரயாணஞ் செய்தவைபோன்று அந்தக் காளைகள் களைப்படைந்து வாயினால் நுரை கக்கியவண்ணம் இருந்தன. வண்டியை ஓட்டுபவன் அரக்கத் தனமாகக் காளைகளின் முதுகில் கழிகொண்டு அடிக்கும் போது, அவை வேதனை தாங்காது விரைந்தோட, கழுத்தின் சலங்கைகள் கலகலத்தன. அந்த வேகத்தில் திருப்திப்படாதவன்போல வண்டி ஓட்டுபவன் காளைகளின் வால்களை வாயினால் கடித்துத் துன்புறுத்தினான்.
அந்த வண்டியின் பின் பக்கத்தில் கழுத்து வெட்டப்பட்டு முண்டமான ஓர் ஆட்டை அதன் கால்களில் கட்டித் தொங்கவிட்டி ருந்தார்கள். ஆட்டின் தலையைத் தனியே எடுத்து வண்டியிலிருந்த ஒருவன் வைத்திருந்தான். வண்டி ஓடும் வேகத்தில் அந்த ஆட்டின் உடல் இடையிடையே தெருவில் உராய்ந்து இரத்தத்தால் வழியைக் கறைப்படுத்திக்கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த பியசேனா ஒருகணம் திடுக்குற்று நின்றான். அவனது முகத்தில் ஒருவித அருவருப்பும் வேதனையும் கலந்தன. அவனால் உடனே எதுவும் பேச முடியவில்லை. விபரமறிய விரும்பி என்பக்கம் திரும்பினான்.
“இங்குள்ள சிலர் தீபாவளியை மகிழ்ச்சிகரமாகக் கொண்டா டுவதாக நினைத்து மாமிசமும் புசிக்கிறார்கள்”என்றேன். இதைக் கூறுவதற்குள் நான் ஏன் குறுகிப்போனேன்.
பியசேனா எவ்வித பதிலும் பேசவில்லை. கோவிலில் இருந்த போது ஏற்பட்ட உற்சாகம் திடீரென்று அவனிடமிருந்து மறைந்து போயிற்று. அவன் சிந்தனை செய்தபடியே வழியில் பதிந்திருந்த அந்தச் செங்குருதியைப் பார்த்த வண்ணம் மௌனமாக நடந்து கொண்டிருந்தான்.
அவனது மௌனம் என்னைச் சித்திரவதை செய்தது. ஆனால் அந்த மௌனத்தைக் கலைக்கக்கூடிய சக்தி எனக்கில்லை. நான் கதைக்கத் தொடங்கினால் அவன் வேறும் ஏதாவது கேட்டு விடுவானோ எனப் பயந்தேன்.
பியசேனா எதைப்பற்றி இப்போது சிந்தனை செய்கிறான்?
யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறைகளையும் பண்பாடு களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவன் என்னுடன் அளவளாவும் போதெல்லாம் எங்களைப்பற்றி எவ்வளவு உயர்த்திக் கூறியிருந்தேன். நான் கூறுவதை அவன் ஆர்வத்தோடு கேட்பதைப் பார்த்து எவ்வளவு பெருமையடைந்தேன். எங்களது பெருமை களெல்லாம் வாய்ச்சொல்லில் மட்டுந்தான் என யோசிக்கிறானா?,
நாங்கள் வீடுவந்து சேர்ந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். அப்பொழுது எங்கோ வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய எனது தந்தை, மது வெறியில் பலத்த சத்தமிட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டே வந்துகொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக மது வருந்தும் குண்டுமணியனின் கள்ளுக் கொட்டிலில் தீப்பற்றிக் கொண்டது என்பதை அவர் எழுப்பிய ஒப்பாரியிலிருந்து புரிந்துகொண்டேன். அவருக்கு அந்நிகழ்ச்சி பெருங் கவலையை உண்டாக்கவே, வசைபாடத் தொடங்கினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பன் பியசேனா “வை யுவர் பாதர் இஸ் ஸிங்கிங்?” - ஏன் உனது தந்தை பாடுகிறார் என என்னிடங் கேட்டான்.
எனது தந்தை பாடவில்லை, கள்ளுக் கொட்டில் எரிந்து விட்ட தென ஒப்பாரி வைக்கிறார் என்று எப்படி நான் சொல்வேன்? நான் மௌனமானேன்.
கோவிலில் பக்தர் ஒருவர் தேவாரம் பாடிய போதும் பியசேனா இதே கேள்வியைத்தான் என்னிடம் கேட்டான்.
அப்போது தேவார திருவாசகங்களின் மகிமைகளைப் பற்றியும் அவற்றைப் பாடிய நாயன்மார்களைப் பற்றியும் அவர்கள் செய்த சைவப் பணிகளையும் விளக்கி ஆர்வத்தோடு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன்.
எனது மௌனத்தைக் கலைக்கும் வகையில் பியசேனா என்னிடம் கேட்டான், “இஸ் யுவர் பாதர் ஸிங்கிங் டேவாரம்?”.- உனது தந்தை தேவாரம் பாடுகிறாரா?
நாக்கைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை மாய்த்து விடலாம் போலிருந்தது. முன்பொருபோதும் அடைந்திராத பெரும் அவமான மடைந்தேன். ஐயகோ! தந்தை மகற்காற்றும் உதவி இதுதானா?
எனது தந்தை மது அருந்தியிருக்கிறார் என்று கூறுவதற்கு என் நாக் கூசியபோது, எனது முகத்திலே தெரிந்த அவமானத்தைக் கண்டுகொண்ட இங்கிதம் தெரிந்த நண்பன் நல்லவேளையாக வேறு எதுவும் என்னைக் கேட்கவில்லை.
நிலைமையைச் சமாளிப்பதற்காக எனது அன்னையும் தங்கை ராணியும் அருமைத் தந்தையைக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்றார்கள்.
கிணற்றடியில் தந்தைக்குத் தீபாவளி ஸ்நானம் நடந்தது.
எனது அன்னை அவருக்கு தலையில் அரப்பு வைத்துத் தேய்த்துவிட, தங்கை கிணற்றிலிருந்து நீரிறைத்துக் குளிப்பாட்டினாள்.
மதுமயக்கத்தில் இருந்தவர் அவர்களது பிடியிலிருந்து திமிறி எழுந்தோட, எனது அன்னையும் தங்கையும் துரத்திப் பிடித்து மல்லுக்கட்டிக் கிணற்றடிக்கு இழுத்துவந்து மீண்டும் குளிப்பாட்ட முயற்சித்தனர்.
தீபாவளி நாட்களில் இவையெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். ஆனால் பியசேனாவுக்கு வாழ்க்கையிலே கண்டிராத கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. அவன் விஷமச் சிரிப்போடு இந்த நிகழ்ச்சிகளை இரசித்தவண்ணம் இருந்தான்.
பியசேனா ஒரு நல்ல இரசிகன். அத்தோடு எழுத்தாளனும் அல்லவா. கதையோ கட்டுரையோ எழுதுவதற்கு ஏற்ற சம்பவங்கள் அவனுக்கு நிறையக் கிடைத்திருக்குமே.
எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவதைப்போல் இருந்தது. பியசேனாவை நிமிர்ந்து பார்ப்பதற்குக்கூட அருகதையற்றவனாய், ஒரு சமுதாயமே தலைகுனிந்து நிற்பதைப் போன்று நான் வெட்கித்து நின்றேன்.
ஒருவாறாக எனது தந்தை குளித்து முடித்தபின் எல்லோருமாகச் சேர்ந்து உணவருந்திவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.
அன்று மாலை பியசேனா கொழும்புக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நான் தீபாவளியோடு சேர்ந்து ஒரு கிழமை லீவு எடுத்திருந்தமையால் அவனை மட்டும் வழியனுப்பிவிட்டுக் கனத்த மனத்தோடு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்.
கறை படிந்த வழியில் நடக்கும்போது உடலெல்லாம் கூசுகிறது.
காலையில் ஆட்டிலிருந்து வழியெங்கும் வடிந்த அந்தச் செங்குருதி இப்போது காய்ந்து கருமையாகித் தெரிகிறது.
- வீரகேசரி 1969
+++++++++++++++++++++
கட்டறுத்த பசுவும்
ஒரு கன்றுக் குட்டியும்
கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ.
கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள்.
வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை.
வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.
‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான்.
‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள்.
அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள்.
இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது.
கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.
பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன.
வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.
“பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி.
“காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?”
“இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.”
அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்.
“இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி.
“உவனுக்கு எத்தனை வயசு?”
“ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.”
“இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.”
“என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?”
கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!.
வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது.
“பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?”
“இல்லை ஆறு மாசந்தான்”
“எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?”
வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.
“ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள்.
“இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள்.
குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது.
“அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.”
அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது.
கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள்.
“பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள்.
“அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.”
அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது.
“ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.”
கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள்.
கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான்.
கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும்.
கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள்.
வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான்.
வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள்.
அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள்.
கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள்.
வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது.
கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி.
“இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”.
அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை.
அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது.
அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது.
இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது.
“கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள்.
“குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ”
முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா.
குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது.
கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை.
துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது.
ஐயோ! குழந்தை விழப்போகிறதே !
கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள்.
“அம்..... மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது.
குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி.
குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.
“அ..... ம்மா, அம்... மா ”
கதிரி தன்னை மறக்கிறாள்.
கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது.
“ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”.
மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள்.
அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை.
கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள்.
- வீரகேசரி 1973
++++++++++++++++++++++++++
இப்படியும் ஓர் உறவு
எனது வைத்தியக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மலைநாட்டிலுள்ள நாகஸ்தனைத் தேயிலைத் தோட்டத்தில் வைத்தியனாகப் பதவியேற்று ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இந்தக் கால ஓட்டத்தில் எனக்கு எவ்வளவோ விசித்திரமான அனுபவங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.
கல்லூரியிலே கற்ற தொழில் முறைகளெல்லாம் இங்கு வேலை பார்க்கும்போது சில வேளைகளில் என்னைக் கைவிட்டு விடுகின்றன. தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்குப் புதுவிதமான திறமை வேண்டுமென்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
எனக்குக் கொடுக்கப்பட்ட பங்களா, வைத்திய சாலைக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது. சிகிச்சைக்காகப் பலர் வைத்தியசாலையில் கூடிவிட்டார்கள் என்பதனை அவர்கள் எழுப்பிய பலமான பேச்சுக் குரலில் இருந்து புரிந்துகொண்டேன்.
எனது பங்களாவிலிருந்து புறப்பட்டு வைத்தியசாலையை நான் அடைந்தபோது, பலர் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள்.
“சலாங்க”
“சலாம்” நான் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்குள் நுழைகிறேன்.
‘மருந்துக்காரன்’ அதாவது வைத்தியசாலையில் வேலை செய்யும் தொழிலாளி அறையைச் சுத்தமாகக் கூட்டித் துடைத்துக் கிருமிநாசினி தெளித்திருந்தான். அதன் வாசனை அறையெங்கும் நிறைந்திருந்தது. தினந் தினம் நுகர்ந்து பழகிப்போன அந்த வாசனை என் மனதுக்கு இதமாக இருந்தது; வெளியே சிலர் மூக்கைச் சுழித்தார்கள். நோயாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து தங்களது நோய்களைக் கூறிச் சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.
அடுத்துக் கறுப்பையாக் கங்காணி வருகிறார். மலையில் பெண்கள் கொழுந்தெடுக்கும்போது இவர்தான் மேற்பார்வை செய்பவர். அவர் அணிந்திருக்கும் ‘கோட்’டும் காவிபடிந்த பற்களால் உதிர்க்கும் சிரிப்பும், குழைந்து பேசும் நயமும் கங்காணிமார்களுக்கே உரித்தான தனிச் சிறப்புக்கள்.
“சலாமுங்க”
“சலாம்” கங்காணி, என்ன வேணும்?
“கொழந்தை பொறந்திருக்குங்க; பேர் பதியணும்”
நான் கங்காணியை உற்றுப் பார்க்கிறேன். அவரது தலையில் நரைத்திருந்த கேசங்கள் எனக்குப் பல கதைகள் சொல்லுகின்றன.
எனது சிந்தனைப் பொறிகளில் ஒருகணம் தாக்கம் ஏற்படுகின்றது; நான் மௌனமாகின்றேன்.
கங்காணியின் மனைவி கறுப்பாயி நேற்றுத்தான் காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அவளது தோற்றத்தை எனது மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்க்கிறேன். கறுப்பாயி கர்ப்பிணியாக இருக்கவில்லையே!
“யாருக்குக் கங்காணி குழந்தை பிறந்திருக்கு? கறுப்பாயிக்கா?”
“இல்லீங்க சாமி, செகப்பாயிக்கு”
“யார் அந்த சிகப்பாயி?” நான் கங்காணியிடம் கேட்கிறேன்.
“என்னோட கொழுந்தியா தானுங்க. சம்சாரத்தோட தங்கச்சிங்க, நான் ரெண்டாந் தாரமா எடுத்துக்கிட்டேனுங்க”
எனது பொறிகள் கலங்குகின்றன. சிகப்பாயியை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் தினமும் காலையில் வைத்தியசாலையின் வழியாகத்தான் மலைக்குக் கொழுந்தெடுக்கச் செல்வாள். அப்பொழு தெல்லாம் சிகப்பாயியின் அழகை நான் பலமுறை இரசித்திருக்கிறேன்.
பெயருக்கேற்ற நிறம், அழகான வதனம், கருவண்டுக் கண்கள், கொஞ்சிப் பேசும் குரல், கொழுந்துக் கூடையைப் பின் புறத்தில் மாட்டிக்கொண்டு நாகஸ்தனைத் தோட்டத்திற்கே ராணிபோல அவள் நடந்து செல்லும் அழகே அலாதியானது. தோட்டத்து வாலிபர்களின் உள்ளங்களையெல்லாம் கிறங்க வைத்த அந்தச் சிகப்பாயியா இந்தக் கிழவனை மணந்து கொண்டிருக்கிறாள்!
என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.
“சிகப்பாயியை எப்போது கலியாணஞ் செய்தாய்?” நான் ஆவலோடு கறுப்பையாக் கங்காணியை வினவுகின்றேன்.
“கலியாணஞ் செய்யல்லீங்க, எடுத்துக்கிட்டேனுங்க” இதைக் கூறும்போது வெட்கத்தோடு தலையைச் சொறிந்துகொண்டே குழைந்தார் கங்காணி.
முறைப்படி விவாகம் செய்யாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யும் போது, தாய் தந்தையரின் கையொப்பத்தையும் பதிவுப்புத்தகத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதனைக் கங்காணியிடம் விளக்கமாகக் கூறி, இருவருடைய கை யொப்பத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நேரில் அவர்கள் வசிக்கும் லயத்திற்கு வருவதாகவும் சொல்லிக் கங்காணியை அனுப்பி வைத்தேன்.
அதற்குப்பின் எனது வேலை என் கருத்தில் அமையவில்லை. வைத்தியத்திற்கு வந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, மருந்துக்காரனையும் கூட்டிக் கொண்டு சிகப்பாயி வசிக்கும் லயத்திற்குப் போகிறேன்.
லயத்தில் சிகப்பாயி இருக்கும் ‘காம்பரா’வுக்குள் நுழையும் போது கங்காணி என்னை வாசலிலே நின்று வரவேற்கிறார். சிகப்பாயியின் தாயும் தந்தையும் எனக்குச் சலாம் வைக்கிறார்கள்.
எனக்கு அவர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. அழகான கிளிபோன்ற பெண்ணை வளர்த்து, இந்தக்கிழட்டுப் பூனையிடம் கொடுத்துவிட்டார்களேயென என் மனம் ஏங்குகிறது.
நான் சிகப்பாயியைப் பார்க்கிறேன். சிகப்பாயிக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவளது உடலெல்லாம் மெலிந்து பெலவீன மடைந்திருக்கிறாள். அவளது முகத்திலே ஏன் இவ்வளவு சோகம்? ஏன் அவளது கண்கள் கலங்குகின்றன? தோட்டத்து வாலிபர்களை ஏங்க வைத்த சிகப்பாயியா இவள்!
சிகப்பாயியையும் அவளது குழந்தையையும் பரிசோதனை செய்தபின்னர், குழந்தையின் பிறப்பைப் பதிவுசெய்யவேண்டிய எல்லா விபரங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.
ஏன் சிகப்பாயி மௌனமாக இருக்கிறாள்? கங்காணியும் சிகப்பாயியின் தாய் தந்தையரும் எனக்கு வேண்டிய விபரங்களைக் கூறுகிறார்கள். அவற்றைக் குறித்துக்கொண்ட பின்னர், கங்காணி பிறப்புப் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடுகிறார்.
சிகப்பாயியின் பெருவிரலை மையில் தோய்த்துப் புத்தகத்தில் ஒப்பமாக அழுத்துகிறேன். அவளது விரல்கள் நடுங்குகின்றன. அவளையும் மீறிக்கொண்டு ஒரு விம்மல் சோகமாக என் காதுகளைத் துளைக்கிறது. மறுகணம் அவள் மயக்கமடைந்துவிட்டாள்.
அவளது நாடித்துடிப்பை நான் அவசர அவசரமாகச் சோதனை செய்கிறேன். பயப்படும்படியாக ஒன்றுமில்லை. அவளுக்கு ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு இப்போது பூரண ஓய்வு தேவை. அவள் மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக நித்திரை செய்யும் வண்ணம் வேண்டிய மருந்தை ஊசிமூலம் அவளது உடலிலே பாய்ச்சிவிட்டு வைத்தியசாலைக்குத் திரும்புகிறேன்.
எனது மனம் குமைச்சல் எடுக்கிறது. சிகப்பாயி ஏன் திடீரென்று மயக்கமடைந்தாள்? அவளுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணமென்ன? அவள் ஏன் மௌனம் சாதிக்கிறாள்?
ஏழெட்டு நாட்களாகச் சிகப்பாயியின் சோக உருவம் இடையிடையே என் மனதிலே தோன்றி என்னை அலைக்கழித்த வண்ணம் இருந்தது.
ஒருநாள் இரவு நடுநிசி நேரத்தில் எனது பங்களாவின் கதவு அவசர அவசரமாகத் தட்டப்படும் ஓசை கேட்கிறது. யாருக்கோ கடுமையான சுகவீனமாக இருக்கவேண்டும். நான் கதவைத் திறக்கிறேன்.
முனியாண்டி வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவன் தோட்டத்திலுள்ள படித்த வாலிபர்களில் ஒருவன். அவனிடம் எப்பொழுதும் எனக்கு ஓர் அபிமானம் உண்டு. அவன் எதைப் பேசும் போதும் நிதானத்துடனும் முன்யோசனையுடனுந்தான் பேசுவான். அவனது பேச்சில் ஒருவித தனிக்கவர்ச்சி இருக்கும். முனியாண்டி மிகவும் களைத்துப் போயிருந்தான். எங்கிருந்தோ அவசரமாக ஓடிவந்ததால் அவனுக்கு மூச்சு வாங்குகிறது.
“ஐயா, செகப்பாயிக்கு ரெம்ப வருத்தமுங்க. வெரசா வந்து பாருங்க”. அவனது குரலில் பதற்றம் தொனிக்கிறது.
நான் உடையை மாற்றிக்கொண்டு மருந்துப்பெட்டியுடன் அவனைப் பின்தொடர்கிறேன்.
சிகப்பாயி இருக்கும் காம்பராவுக்குள் நுழைந்த போது, அங்கு பலர் கூடியிருந்தார்கள். எனது வரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லைப் போலத் தெரிகிறது. என்னைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். சிலர் சமாளித்துக்கொண்டு ‘சலாம்’ வைக்கிறார்கள்.
என்னுடன் வந்த முனியாண்டியை உள்ளே நுழையவிடாமல் அங்கு நின்ற சிலர் தடுத்துவிட்டார்கள். அவர்கள் கோபத்தோடு முனியாண்டியைப் பார்த்த பார்வை பயங்கரமாக இருந்தது. நான் நிதானத்துடன் அங்கிருந்த சூழ்நிலையை அவதானித்தேன்.
அந்த அறையின் ஒரு பகுதியிலே தோட்டத்துப் பூசாரி ஒருவன் கையில் உடுக்கு ஒன்றை வைத்து அடித்தபடியே தாளத்துக்கேற்ப ஏதோ மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அவனது கண்கள் சிகப்பாயியை வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தன. சிகப்பாயியைச் சுவரோடு சாய்த்து இருத்தி, சாய்ந்து விடாமல் இருப்பதற்காக இருவர் அவளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவளது கேசங்கள் கலைந்திருந்தன. பூசாரியின் மந்திர உச்சாடனம் உச்சஸ்தாயியை அடையும் போதெல்லாம் அவன் பக்கத்திலே கிடந்த செம்பிலிருந்து தண்ணீரை எடுத்துச் சிகப்பாயியின் முகத்தில் அடித்தான்.
எனது வரவை யாரோ பூசாரிக்குச் சொல்லியிருக்க வேண்டும். அவன் சமாளித்துக்கொண்டு எழுந்திருந்தான். அசடு வழியக் குழைந்துகொண்டே “செகப்பாயிக்குப் பேய்க் கோளாறுங்க, அதுதான் சாமி பார்க்கிறமுங்க” என்றான்.
எனக்குப் பொங்கிவந்த கோபத்தில் எதையுமே என்னால் பேச முடியவில்லை. நான் அங்கு இருந்தவர்களின்மேல் வீசிய பார்வையின் பயங்கரத்தில் எல்லோரும் ஒடுங்கிப்போய் நின்றார்கள்.
சிகப்பாயியைத் தூக்கிப் பக்கத்திலே கிடந்த சாக்கில் படுக்க வைக்கும்படி கங்காணியிடம் கூறினேன்.
கங்காணியும் வேறு சிலரும் அவளைத் தூக்க முயன்றபோது ஈனசுரத்தில் அவள் கூறினாள்:
“அடே, கறுப்பையா கங்காணி, என்னைத் தொடாதேடா.”
கங்காணி இதை எதிர்பார்க்கவேயில்லை. செய்வதறியாது திகைத்து நின்றார். அங்கு நின்ற பெண்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கங்காணியின் பெயரைச் சிகப்பாயி சொல்லியது அவர்களுக்கு வெறுப்பைக் கொடுத்தது. தோட்டத்துப் பெண்கள் வாழ்நாளில் தவறுதலாகக்கூடத் தங்கள் கணவன்மார்களின் பெயரைச் சொல்லமாட்டார்கள்.
நான் சிகப்பாயியைப் பரிசோதனை செய்தேன். எனது இதயம் ஒரு துடிப்பை இழந்து மீண்டுந் துடித்தது.
சிகப்பாயியின் நாடித் துடிப்புக் குறைந்து விட்டது. அவளது இதயம் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்தது. இனிச் சிகப்பாயி பிழைக்கமாட்டாள்.
அவளது இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் துரிதப்படுத்த எண்ணி ‘கொறாமின்’ ஊசிமருந்தை அவளது உடலிலே பாய்ச்சுகிறேன். காலங்கடந்த இந்த முயற்சி ஏற்ற பலனைத் தராது என்று எனக்குத் தெரிந்துங்கூட என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
எல்லாமே எனக்கு ஒரு நொடிப்பொழுதில் விளங்குகின்றன. சிகப்பாயிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவளுக்குச் சித்தப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. பேய் பிடித்து ஆட்டுகிறதென்ற மூட நம்பிக்கையில் அவளுக்கு ஏற்ற வைத்தியம் செய்விக்காமல், அவளுக்குத் தேவையான ஓய்வு உறக்கத்தைக் கொடுக்காமல் இரவு பகலாக அவள் பூசாரியின் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறாள். இந்த மூடநம்பிக்கைதான் அவளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
சிகப்பாயி மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தாள்; நான் ஆவலோடு அவளை நோக்கியவண்ணம் இருந்தேன். ஏக்கம் நிறைந்த அவளது பார்வை யாரையோ தேடியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் மேலும் வரிசையாக அவளது பார்வை திரும்பியது. திடீரென்று கண்களில் மலர்ச்சி தோன்றுவதை என்னால் அவதானிக்க முடிந்தது.
சிகப்பாயி மிகவும் கஷ்டத்தோடு முனகினாள்.
“என் ராசா வந்திட்டாரு.”
“யார் சிகப்பாயி, யார் வந்தது? யார்.......?” நான் ஆவலோடு அவளிடம் கேட்கிறேன்.
அவள் பதில் பேசவில்லை. வாழ்வு அணைந்துபோகும் அந்த நேரத்திலும் அவளது வதனத்தில் இலேசாக நாணம் பரவுவதைக் கண்டேன். அவள் தனது ராசாவின் பெயரைச் சொல்லமாட்டாள்,
சிகப்பாயியின் கண்கள் முனியாண்டியை நோக்கிய வண்ணம் இருந்தன.
முனியாண்டி மற்றவர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு உள்ளே ஓடிவந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முயன்றவர்களை எனது அதிகாரத் தொனியில் அடக்கி வைத்தேன். அப்போது அங்கிருந்த சூழ்நிலையில் எல்லோரும் எனது பேச்சுக்குக் கீழ்ப்படிய வேண்டித்தான் இருந்தது.
அங்கு கூடியிருந்தவர்கள் கதைத்த கதைகளிலிருந்து எனக்குச் சில விஷயங்கள் தெரியவந்தன.
முனியாண்டியும் சிகப்பாயியும் காதலர்கள். முனியாண்டி குறைந்த சாதிக்காரனாக இருந்தபடியால், தங்களது காதலுக்கு மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என எண்ணிய அவன், தோட்டத்து மாரியம்மன் கோவிலின் தனிமையான சுற்றுப் புறங்களில் சிகப்பாயியை அடிக்கடி சந்தித்திருக்கிறான்.
அப்பொழுதெல்லாம் தங்களது குலதெய்வமான மாரியம்மன் தான் இந்த உறவுக்குத் துணைநிற்கவேண்டுமென அவன் அடிக்கடி வேண்டிக்கொள்வான்.
சிகப்பாயி கர்ப்பவதியாகிச் சில மாதங்களின் பின்பு தான் அவளது தாய்தந்தையருக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. அவர்கள் அவளை வெளியே செல்லவிடாமல் வீட்டினுள்ளேயே வைத்துக் கண் காணித்திருக்கிறார்கள். முனியாண்டியால் எந்தவழியிலும் சிகப் பாயியைச் சந்திக்க முடியவில்லை.
சிகப்பாயிக்குக் குழந்தை பிறந்ததும் அவளைப் பயமுறுத்தி, முனியாண்டியிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட அவளது தாய்தந்தையர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். கறுப்பையாக் கங்காணியும் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.
உள்ளே வந்த முனியாண்டி சிகப்பாயியின் அருகில் அமர்ந்து அவளது தலையைத் தூக்கித் தனது மடியில் வைத்தான்.
அவள் அவனிடம் ஏதோ கூறுவதற்கு முயன்றாள்.
அவன் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன.
“ராசா........ ராசா.......” அவள் முனகினாள் . அதற்கு மேல் பேசுவதற்கு அவளிடம் சக்தியிருக்கவில்லை. மறுகணம் அவளது தலை சாய்ந்துவிட்டது.
நான் கண்களை மூடிக்கொண்டேன்.
அங்கு நின்றவர்கள் யாருமே எதையும் பேசவில்லை. எங்கும் ஒரே நிசப்தம்.
எல்லாமே முடிந்துவிட்டன.
சிகப்பாயி பெற்றெடுத்த அந்தப் பச்சிளங் குழந்தை திடீரென்று வீரிட்டு அழத்தொடங்கியது. அந்த ஒலி அப்பிரதேசத்தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் சோகமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
- வீரகேசரி 1970
++++++++++++++++++++++++
பிறந்த மண்
“ அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்” வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன.
இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை.
மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான்.
தனது விலைமதிப்பற்ற செல்வத்தை இழந்து வெறுங்கையோடு தன் தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டிய நிலைமை வந்துவிட்டதை நினைத்தபோது மாணிக்கத்தேவரின் குழிவிழுந்த கண்களுக்குள் நீர் திரையிடுகிறது.
‘வழுக்கற்பாறை லயத்தின்’ வலது பக்கத்திலுள்ள கடைசிக் காம்பராவிலேதான் மாணிக்கத்தேவர் வசிக்கிறார். காம்பராவின் முன்பகுதியிலுள்ள ‘இஸ்தோப்பில்’ அடுப்புக்கு முன்னால் இதுவரை நேரமும் குளிர்காய்ந்து கொண்டிருந்த மாணிக்கத்தேவரின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. பக்கத்திற் கிடந்த கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டு மெதுவாக எழுந்து வாசலுக்கு வருகிறார்.
பனி மூட்டம் இன்னும் அகலவில்லை. குளிர் காற்று மாணிக்கத் தேவரின் முகத்தில் சுரீரெனப் பாய்கிறது. அவரது உடல் சிறிதாக நடுங்குகிறது.
தூரத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த தேயிலைச் செடிகள் பச்சைநிறப் பட்டுப் படுதா விரித்திருப்பது போல் அழகாகக் காட்சி தருகின்றன. அதன்மேல் காலைக் கதிரவன் தன் பொற்கதிர்க் கரங்களால் தங்கக் கலவையை அள்ளித் தெளித்து அழகு தேவதையின் சித்திரம் வரைந்துகொண்டிருக்கிறான்.
தூரத்தில் மேட்டு லயமும் அதன் கீழேயுள்ள பணிய லயங்களும் பனிமூட்டத்தில் அமுங்கிக் கிடக்கின்றன. வேலைக்குப் புறப்பட்ட பெண்கள் கொழுந்துக் கூடைகளை முதுகுப்புறத்தில் தொங்க விட்டுக்கொண்டு கரத்தை றோட்டுவழியாக மலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்தபோது மாணிக்கத்தேவருக்கு அவரது மனைவி மீனாச்சியின் நினைவு வருகிறது.
‘அவள் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், இருளப் பனைப் பிரிந்து இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் அவளது தாயுள்ளம் எவ்வளவு வேதனையடைந்திருக்கும். இப்படியான ஒரு பிரிவை அவளால் தாங்கிக்கொள்ளமுடியாது என்ற காரணத்தினாலேதான் இறைவன் அவளை இந்த உலகத்தை விட்டே பிரித்து விட்டானா’ என அவர் எண்ணினார்.
மாணிக்கத்தேவருக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமையில்லை. அவர் இந்தியப் பிரஜையோவென்றால் அதுவும் இல்லை. இந்தியாவில் பிறந்தவர், இந்த நாட்டில் வாழ்பவர்; எந்த நாட்டிலும் அவருக்கு உரிமையில்லை. மாணிக்கத்தேவர் இலங்கைக்கு வந்தகாலத்தில் இருந்த சட்டங்களும், சலுகைகளும் அற்றுப்போய்விட்டன. இப்போதுள்ள நிலைமையில் ஏதாவதொரு நாட்டின் பிரஜாவுரிமை உள்ளவர்கள்தான் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு போய்வர முடியும்.
மாணிக்கத்தேவர் தனது பிறந்த நாட்டை ஒரு தடவையாவது பார்க்கவேண்டுமென விரும்பியபோதெல்லாம் தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வார்.
யாராவது இந்தியாவுக்குச் சென்று திரும்பியவர்களை மாணிக்கத்தேவர் சந்தித்தால் இலேசில் விட்டுவிட மாட்டார். இந்திய நாட்டின் அரிசி விலையிலிருந்து அரசியல் நிலைவரை எல்லாவற்றையுமே துருவித் துருவிக் கேட்டுத் தனது பிறந்த நாட்டை மானசீகமாகத் தரிசிப்பதில் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலேதான் அவரது மகன் இருளப்பன் பிறந்தான். அப்போது மாணிக்கத்தேவர் தனது மனைவி யிடம் கூறி மகிழ்ந்த வார்த்தைகள் அவரது நினைவில் வருகின்றன.
“மீனாச்சி, நான் இங்கே வர்ரப்போ நம்ப நாட்டிலே சுதந்திரப் போராட்டம் நடத்திக்கிட்டிருந்தாங்க. அந்தப் போராட்டத்திலே ரெம்பப் பேரு சிறைக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. அவங்க பட்ட கஷ்டத்தாலே நம்ப நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருச்சு. இப்போ நான் அந்த மண்ணிலே இருந்தா ‘வந்தே மாதரம்’ என்னு சொல்லிக்கிட்டு அந்தச் சுதந்திர பூமியிலே விழுந்து புரண்டிருப்பேன்; ஆசையோடு அந்த மண்ணுக்கு முத்தம் கொடுத்திருப்பேன். தெருவெல்லாம் ஓடி சந்திச்சவங்க கிட்டேயெல்லாம் நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருக்குன்னு சொல்லிச் சந்தோஷப்பட்டிருப்பேன்.
“எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கல்லே. ஏன்னா பிறந்த நாட்டுக்காகப் போராட வேண்டிய நேரத்தில பொழைப்பைத் தேடி இங்கே வந்திட்டேன். அதனாலதான் சாபக்கேடு மாதிரி சுதந்திரமில்லாம இங்கயிருந்து கஷ்டப்படுறேன்.
சாகிறத்துக்கு முன்னாலே அந்தப் புண்ணிய பூமிக்கு நான் போகணும். நான் போறப்போ கூட்டிக்கிட்டுப் போறதுக்கு நீயிருக்கே. அதோட என் சொந்தமுன்னு சொல்லிக்க இன்னிக்கு ஒரு மகனையும் பெத்துத்தந்திருக்கே. நாடு அடிமையா இருக்கிறப்போ நான் தனியாத்தான் புறப்பட்டு வந்தேன். ஆனா திரும்பிப் போறப்போ குடும்பத்தோட அந்தச் சுதந்திர பூமிக்கு போவேன் எங்கிறத நெனைக்க எனக்கு ரெம்பப் பெருமையாயிருக்கு.”
வெகு நாட்களாகத் தன் பிறந்த நாட்டைக் காணத் துடித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தேவருக்கு, அவரது ஆசை நிறைவேறக் கூடிய காலம் இப்பொழுதுதான் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை இந்திய அரசுகள் செய்த ஒப்பந்தத்தின் பேரில், காடாகக் கிடந்த இந்த நாட்டைத் தங்களின் கடுமையான உழைப்பால் செல்வங் கொழிக்கும் பூமியாக மாற்றிய இந்தியத் தமிழர்களில் லட்சக் கணக்கானோர் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுகிறார்கள்.
தான் பிறந்த மண்ணில் வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை யென்றாலும், தன் வாழ்நாளின் இறுதிக் காலத்திலாவது அந்த மண்ணிலேயிருந்து கண்ணை மூட வேண்டுமென விரும்பிய மாணிக் கத்தேவரும் அவர்களுள் ஒருவராகிவிட்டார்.
தனது மனைவியையும் மகனையும் தன்னோடு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த மாணிக்கத்தேவரது ஆசையை நிராசையாக்கிவிட்டு இருளப்பன் பிறந்த மறுவருடமே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள் மீனாச்சி. அவள் இறக்கும்போது இருளப்பனை வளர்க்கும் பொறுப்பை மாணிக்கத்தேவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றாள்.
இருளப்பனை வளர்த்து ஆளாக்கி விடுவதற்குள் மாணிக்கத் தேவர் அடைந்த கஷ்ட நஷ்டங்கள் கணக்கிலடங்கா.
லயத்தில் ஆடு மாடுகளைக் கட்டிவைத்திருக்கும் தொழுவங்கள் போன்ற காம்பராக்களில் பலகுடும்பங்கள் சுகாதார வசதியற்ற வாழ்க்கை நடத்தவேண்டிய நிர்ப்பந்தமும், காலையிலிருந்து மாலைவரை மழையிலும் வெயிலிலும் வேலை செய்தால் கிடைக்கும் குறைந்த ஊதியமும், தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் போதிய கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மழுங்க வைத்துத் தங்கள் நிர்வாகத்துக்குச் சாதகமான தொழிலாளர் பரம்பரையை உருவாக்கும் முறையும், சிறிய உத்தியோகத்தர்களுக்குக் கூடப் பயந்து ‘சலாம்’ போடவேண்டிய நிலைமையும் மாணிக்கத்தேவருக்குத் தோட்டத்து வாழ்க்கையை வெறுப்படையச் செய்தன.
இருளப்பனும் தன்னைப்போன்று ஒரு தோட்டத் தொழிலாளி யாவதை மாணிக்கத்தேவர் விரும்பவில்லை. அவன் மேற்படிப்புப் படித்து உயர்ந்த உத்தியோகம் பார்க்கவேண்டுமென அவர் விரும்பியதால் அவனை ‘டவுனில்’ உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.
தந்தையின் விருப்பத்தையும் அவர் படும் கஷ்டங்களையும் உணர்ந்த இருளப்பன் மிகவும் கவனமாகப் படித்தான். அவனது முயற்சி வீண்போகவில்லை. சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரிட்சையில் விசேஷ சித்திகளுடன் அந்த வட்டாரத்திலேயே முதன்மையாகத் தேறினான்.
மாணிக்கத்தேவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. “என் மகன் சோதனையிலே பாஸ் பண்ணிட்டான், இனிமே அவனுக்கு உத்தியோகம் கிடைச்சிடும். அப்புறம் நான் ‘செவனே’ன்னு பென்சன் வாங்கிக்க வேண்டியதுதான்”. தோட்டம் முழுவதும் தனது மகன் சோதனையில் சித்தியடைந்த செய்தியைக் கூறிச் சந்தோஷப்பட்டார் மாணிக்கத்தேவர்.
இருளப்பன் அரசாங்க உத்தியோகங்களுக்கு மனு அனுப்பிய போதும், நேர்முகப்பரீட்சைகளுக்குச் சென்று வந்தபோதுந்தான் அந்த அதிர்ச்சி தரும் விஷயம் மாணிக்கத்தேவருக்குத் தெரிய வந்தது.
இருளப்பனுக்குப் பிரஜாவுரிமை இல்லை. அதனால் அரசாங்க உத்தியோகங்களுக்கு அவன் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேயிலைத் தோட்டங்களில் வெற்றிடமாகும் உத்தியோ கங்களுக்கு இருளப்பனது மனுக்கள் கவனிக்கப் படவேயில்லை. ஏனெனில் அந்த உத்தியோகங்களுக்குப் பெரிய மனிதர்களின் சிபார்சு வேண்டியிருந்தது.
பெரிய மனிதர்களின் படிக்காத பிள்ளைகளுக்குக் கூட எவ்வளவு இலகுவில் தேயிலைத் தோட்டங்களில் உத்தியோகங்கள் கிடைத்துவிடுகின்றன!
இருளப்பன் உத்தியோகத்திற்காக முயற்சித்துக் களைப்படைந்து விட்டான், அவனுக்கு மறு வருடமே தோட்டத்தில் பெயர் பதியப்பட்டது. இப்போது இருளப்பனும் ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளி.
“நாமெல்லாம் பொறந்த பொன்னாட்டை மறந்தவங்க, அந்த மண்ணிலே பாடுபட்டு ஒழைச்சிருந்தா சொந்த மண்ணிலே பாடு பட்டோம் என்ற பெருமையாவது இருந்திருக்கும். இங்கே வந்து இதுவும் நம்ப நாடுதான் என்கிற நெனைப்போடதான் பாடுபட்டோம். நாம இந்த மண்ணுக்கு வஞ்சகம் செய்யலே. நாமதான் வஞ்சிக்கப்பட்டோம். நாம பாடுபட்ட மண்ணிலே நாமதான் நல்லா வாழல்லேன்னாலும் நம்ப புள்ளையிங்களாவது நல்லா வாழ வழியில்ல.”
மாணிக்கத்தேவர் தன்னைச் சந்தித்தவர்களிடம் மேற்கண்ட வாறு கூறிப் புலம்பினார். அவரால் வேறு என்னதான் செய்யமுடியும்?
மாணிக்கத்தேவரின் நினைவுகள் கலைகின்றன. காலையில் இருளப்பன் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் கதைப்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்காததினால், அவன் இந்தியாவுக்குத் தன்னுடன் வர மறுக்கும் காரணத்தை மாணிக்கத் தேவரால் கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை.
இருளப்பன் வேலை முடிந்து திரும்பியபோது மாணிக்கத்தேவர் சாவகாசமாக அவனிடம் கேட்டார். “நான் தான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுட்டேன். நீயும் இங்கேயிருந்து கஷ்டப்படப்போறியா?”
“கஷ்டப்படுறவங்க யாருமே எந்த நாளும் கஷ்டப் படுறதில்லப்பா. இந்தியாவுக்குப் போனவங்க போக மீதிப்பேரு இந்த நாட்டிலதான் வாழப்போறாங்க. அவங்களிலே ஒருத்தனா நானும் இருந்திட்டுப் போறேன்.
நீங்க இந்தியாவுக்குப் போனா ரெம்பக் கஷ்டப்படுவீங்க. வயசான காலத்தில அங்க போய் உங்களாலே என்ன செய்யமுடியும்? ஒழைச்சுத் திங்கத்தான் முடியுமா? அல்லது சொந்தமுன்னு சொல்லிக்க யாருமே இல்லாத இடத்தில ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்படப் போறீங்களா? நீங்க அங்க போயிட்டா, எங்க இருக்கிறீங்களோ எப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்களோன்னு என் மனசு வேதனைப் பட்டுக்கிட்டே இருக்குமப்பா. நான் உங்களுக்கு ஒரே பிள்ளை. வயசான காலத்தில உங்களுக்கு உதவியா இருக்க ஆசைப்படுறேன். நீங்க உங்க முடிவை மாத்திக்கிட்டு இங்கதான் இருக்கணும். உங்களைப் பிரிஞ்சு என்னாலே வாழமுடியாதப்பா.”
இருளப்பன் இப்படிக் கூறியபோது துக்கத்தினால் அவனது தொண்டை அடைத்தது; கண்கள் கலங்கின.
“தம்பி...ராசா, உனக்கு இந்த நாட்டிலே பிரஜாவுரிமையே இல்லையே, அப்புறம் எந்த உரிமையோட நீ இங்கே வாழப்போறே? நீதான் உன் முடிவை மாத்திக்கணும். என்னோட இந்தியாவுக்கு நீ வரத்தான் வேணும்.”
“பிரஜாவுரிமை கிடைக்கிறதுன்னா எத்தனையோ சட்ட திட்டங்கள் இருக்கப்பா. அந்த உரிமை எனக்குக் கிடையாமலே போகலாம். ஆனா நான் இந்த நாட்டில பொறந்தவன் என்கிற நெனைப்பை, அந்த நெனைப்பில கிடைக்கிற சொகத்தை என் மனசில இருந்து அழிக்க முடியாதுப்பா. நீங்க ஒங்க பொறந்த மண்ணை நெனைச்சு ஏங்குறீங்க. அதேமாதிரித்தானப்பா என் பொறந்த மண்ணை என்னாலே மறக்க முடியாதப்பா. நான் உங்ககூட இந்தியாவுக்கு வந்தாலும் இந்த மண்ணோட நெனைப்பு என்னை வதைச்சுக் கிட்டேயிருக்கும். பொறந்த மண் தெய்வம் மாதிரி. அதை மறந்தவங்க யாரும் நல்லா வாழ முடியாதப்பா.”
இருளப்பன் கூறிய வார்த்தைகள் மாணிக்கத்தேவரது நெஞ்சின் அடித்தளத்தையே தொட்டன; அவரது கண்கள் கலங்கின.
இப்போது அவரது கண்கள் கலங்குவது தனது மகனை இன்னும் சிறிது காலத்தில் பிரிந்து செல்ல வேண்டுமே என்பதற்காகவல்ல !
- தினகரன் 1972
+++++++++++++++++++++++++
உயிர்த் துணை
பொன்னி !
இப்போது நினைத்தாலும் என் உடலெல்லாம் சிலிர்க்குதடி! உனக்கு எவ்வளவு தியாக சிந்தை! மனிதப் பிறவியெடுத்த எவருமே செய்யத் துணியாத தியாகமல்லவா நீ செய்தது.
அதனை நினைக்கும்போது என் கண்கள் குளமாகுதடி. கண்களென்றா சொன்னேன்? எனக்கேது கண்கள்?
கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரு குழிகள் அல்லவா இருக்கின்றன.
நீ தானே எனக்குக் கண்களாக இருந்தாய்! ஏன் எனது உற்றார் உறவினர், சொந்த பந்தம் எல்லாமாக இருந்தவளும் நீதானே.
நான் ஒரு பிச்சைக்காரன். இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனோடு நீயும் சேர்ந்துகொண்டாய். இதனால் உனக்கு கிடைத்த பலன்?
நான் பட்டினி கிடக்கும்போது நீயும் பட்டினி கிடந்தாய். நான் அரைவயிற்றுக்கு உண்ணும்போது நீயும் அரைவயிற்றுக்கு உண்டாய். நான் கவலைப்படும்போது நீயும் கவலைப்பட்டாய். இந்தக் கபோதியோடு சேர்ந்துகொண்டதால் ஒரு நாளாவது நீ மகிழ்ச்சியடைந்திருப்பாய் என நான் நினைக்கவில்லை.
பொன்னி!
உன்னை நான் முதன் முதலில் சந்தித்த நிகழ்ச்சி இப்போது கூட என் நினைவில் இருக்கிறது. அந்தப் பசுமையான நினைவை எப்படி என்னால் மறந்துவிட முடியும்?
ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மடந்தான் எனது இருப்பிடம். அந்த மடத்தில் வழக்கம்போல் அன்றும் நான் தனியாக கத்தான் படுத்திருந்தேன். வெகுநேரமாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. என்னால் எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. எத்தனையோ நாட்கள் பட்டினியாகக் கிடந்து என் வயிற்றைப் பழக்கியிருக்கிறேன். அன்றும் நான் பட்டினியாகத்தான் இருந்தேன். பசி மயக்கத்தில் கிறங்கிப்போய்க் கிடந்தேன்.
பறவைகளின் கீதங்கள், மனிதர்களின் குரல்கள், இயந்தி ரங்களின் இரைச்சல்கள் நிறைந்திருக்கும் நேரந்தான் பகற் பொழுதாக இருந்தால், அன்று நான் உன்னைச் சந்தித்தது இரவு நேரமாகத்தான் இருக்க வேண்டும்.
அப்போது எனக்கு உடமையாக இருந்தபொருட்கள் ஒரு போர்வையும் கைத்தடியுந்தான். போர்வையை நிலத்திலே விரித்து, கைத்தடியையும் பக்கத்திலே வைத்துக்கொண்டு படுத்திருந்தேன்.
திடீரென ஏதோ அரவம் கேட்டது. எனக்குப் பக்கத்தில் யாரோ படுத்திருப்பதைப் போன்ற ஒரு பிரமை.
மெதுவாகக் கையினால் தடவிப் பார்த்தேன்.
எனது உடலிலே ஒரு சிலிர்ப்பு! அச்சத்தோடு கையை இழுத்துக்கொண்டேன்.
வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. நீயும் என்னைப் போன்ற ஓர் அனாதையாகத்தான் இருக்க வேண்டும். புகலிடந் தேடித்தான் நீ அங்கு வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்துகொண்டேன்.
எங்கோ இடியிடிக்கும் ஓசை. அதற்கு முன்னர் மின்னலும் இருந்திருக்க வேண்டும்.
எனது உள்ளத்திலே நடுக்கம். இடிமின்னல் என்றால் எனக்கு ஒரே பயம். நான் பதினாறு வயதுக் கட்டிளங் காளையாகக் கல்லூரிக்குச் சென்றுவந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பயங்கரமான மின்னலின் தாக்குதலினாலேதான் என் பார்வையை இழந்தேன்.
மீண்டும் இடியிடிக்கும் ஓசை.
பயத்தினால் நான் உன்னைக் கட்டிப் பிடித்தேன். நீ மௌனமாகப் படுத்திருந்தாய். உனக்கும் அப்போது பசி மயக்கமாக இருந்திருக்குமோ என்னவோ.
எனது பயம் சிறிது குறைந்தபோது நான் உன் உடலை ஆதரவோடு தலையிலிருந்து கால்வரை தடவிக்கொடுத்தேன். எங்கே நீ என்மேல் கோபித்துக்கொள்வாயோ என அப்போது எனக்கு அச்சமா கவும் இருந்தது.
நீ எனது ஸ்பர்சத்தை உணர்ந்து கொள்ளாதவள் போலப் படுத்திருந்தாய்.
உனக்குத் தருவதற்கு என்னிடம் உணவு ஏதும் இல்லையே என நான் கவலையடைந்தேன். எனது பசிகூட அப்போது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் என்னை அறியாமலே நான் நித்திரையாகி விட்டேன்.
எங்கோ பறவைகள் பாடின.
நான் நித்திரை கலைந்து எழுந்திருந்தபோது. நீயும் பக்கத்திலே படுத்திருக்கிறாயா என ஆவலுடன் தடவிப் பார்த்தேன்.
நீ எனக்கு முன்னரே எங்கோ எழுந்து சென்று விட்டாய்
மறுநாள் இரவும் நீ வந்தாய். உரிமையுள்ளவள் போல் என் பக்கத்திலே வந்து படுத்தாய்.
எனக்கு அழவில்லாத மகிழ்ச்சி. யாருமற்ற அனாதையாக இருந்த எனக்கு உனது உறவு கிடைத்ததில் ஒரு வித மனநிறைவு.
அன்றும் உனது உடலை ஆசையோடு நான் தடவினேன். உனது அழகைப்பார்த்து மகிழ்வதற்கு எனக்குக் கண்கள் இல்லை என்பதை தெரிந்துதானோ என்னவோ, உனது உடலை நான் தடவிப் பார்ப்பதற்கு நீ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாய்.
அன்று எனக்காக வைத்திருந்த உணவில் உனக்கும் பகிர்ந்து கொடுத்தேன். நீ அருந்தினாய்.
அன்று இரவு முழுவதும் எனக்கும் நித்திரை வரவில்லை. ஏதேதோ கற்பனைகளில் திளைத்திருந்தேன்.
அதன்பின்னர் அல்லும் பகலும் நீ என்னைவிட்டுப் பிரியாமல் இருக்கத் தொடங்கிவிட்டாய்.
பொன்னி!
ஆதரவற்றுத் தனிமனிதனாகத் திரிந்த எனக்கு நீ வந்த பின்புதான் வாழ்க்கையில் ஒருபிடிப்பு ஏற்படத் தொடங்கியது. எத்தனையோ நாட்கள் சோம்பற்தனமாகப் பட்டினியாகவே நான் காலத்தைக் கடத்தியிருக்கிறேன். ஆனால் நீ வந்த பின்னர் உனக்கு உணவு தரவேண்டுமே என்ற உணர்வில், என்னுள் புதிய தென்பு பிறந்தது. நான் ஒரு மனிதனாகினேன்.
பிச்சையெடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு சங்கிலி வாங்கி உன் கழுத்தில் அணிந்து உனது அழகை என் அகக்கண்களால் பார்த்து மகிழ்ந்தேன்.
பொன்னி!
நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது ஒரு குருடனைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குத் துணையாக ஒரு சிறுவன் இருந்தான். அந்தக் குருடனது கைத்தடியைப் பற்றிக்கொண்டு சிறுவன் முன்னே நடந்து செல்வான். குருடன் அவனைப் பின்தொடர்வான். அந்தக் குருடன் போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் சிறுவன் அவனை அழைத்துச் செல்வான். அல்லும் பகலும் அந்தச் சிறுவன் குருடனுக்குத் துணையாக இருந்தான்.
அந்தக் குருடனுக்குச் சிறுவன் -
மகன்.
ஆனால் எனக்கு நீ -
.............?
பொன்னி!
நான் பெரிய சுயநலக்காரன். நீ எங்கே என்னை விட்டுப் பிரிந்து விடுவாயோ என்ற பயத்தில், நான் உன் சுதந்திரத்திலே கூடக் குறுக்கிட்டிருக்கிறேன். அதனை நினைக்கும்போது எனக்கு இப்பொழுதும் வெட்கமும் வேதனையாகவும் இருக்குதடி.
உன் அரையிலே ஒரு கயிற்றைச் சுற்றி, அந்தக் கயிற்றின் தலைப்பை நான் பிடித்துக்கொள்வேன். நீ முன்னே நடந்துசெல்வாய். என் வழிகாட்டியாக, ஒளி விளக்காக....., என் கண்களாக...., என்னைக் காப்பாற்றும் உறுதுணையாக நீ முன்னே செல்வாய். நான் உன்னைப் பின்தொடர்வேன்.
எத்தனையோ மனிதர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள்; கேலி செய்திருப்பார்கள்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பதும் கேலி செய்வதும் மனித இனத்துக்கே சொந்தமான பலவீனங்கள்தானே.
அப்போது உனக்கு வெட்கமாக இருந்திருக்குமோ என்னவோ. உனது விருப்பத்துக்கு மாறாக நான் எத்தனையோ தடவை நடந்திருக்கிறேன்.
ஆனால் ஒருபொழுதாகிலும் என் செய்கைகளுக்கு நீ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. நீ சாதிப்பதெல்லாம் மௌனந்தான்.
ஏன் பொன்னி! இந்தக் குருடனின் மனதைப் புண்படுத்தக் கூடாதென்றா அப்படி மௌனம் சாதித்தாய்?
காலையில் என்னை மனிதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்வாய். நீ அநேகமாக என்னை அழைத்துச் செல்லுமிடம் ஒரு நாற்சந்தி என்பதையும், அங்கு ஒரு மூலையில் மின்சாரக் கம்பமும், அதையடுத்து பஸ் தரிப்பு நிலையமும் இருக்கின்றன என்பதையும், என் உணர்வுகளால் அறிந்திருக்கிறேன்.
பகல் முழுவதும் அந்தத் தெருவால் போகிறவர்களிடத்திலும், பஸ்தரிப்பு நிலையத்தில் நிற்பவர்களிடத்திலும் நான் யாசித்துக் கொண்டிருப்பேன். என் முன்னே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருக்கும்.
இரக்க மனம் படைத்த புண்ணியவான்கள் சிலர் என் துண்டிலே சில்லறையை வீசுவார்கள்.
ஒரு நாள்.......
அன்றுதானடி உன் கோபத்தைக் கண்டேன். சன நடமாட்டம் குறைந்த நேரம். பஸ்தரிப்பில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவன் என் துண்டிலே சில்லறையைப் போடுவதுபோல் நடித்து, துண்டிலே இருந்த சில்லறையில் சிலவற்றைத் திருடிவிட்டான்.
அந்தக் கயவனின் செய்கையைக் கண்டபோது அப்பப்பா நீ அடைந்த சீற்றம்.
அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், துண்டிலிருந்த பணம் சரியாக இருக்கிறதா எனத் தடவிப் பார்த்தபோதுதான் நான் இதனை உணர்ந்துகொண்டேன்.
சிறுமை கண்டு பொங்குவாய் நீ, என்பதை அன்றுதான் நான் அறிந்தேன். பொன்னி! உனக்கு அவ்வளவு கோபம் கூடாதடி!
மனிதர்களிற் சிலர் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நடத்துவது உனக்குத் தெரிந்திருக்க முடியாதுதான்.
பிழைவிடுவது மனித இயற்கையென்றால் மன்னிப்பது தெய்வ குணமடி. நான் அப்போது உன்னைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், நீ அவனை என்ன செய்திருப்பாயோ எனக்கே தெரியாது. உனது சீற்றத்தைக் கண்ட அந்தக் கயவன் தான் எடுத்த பணத்தைப் போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
பொன்னி!
நான் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் அடைந்த கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அப்போது எனது கைத்தடிதான் என் வழிகாட்டி. நான் செல்லும் பாதையைக் கைத்தடியினால் தட்டித் தட்டி ஆராய்ந்தபடி நடப்பேன். எத்தனையோ நாட்கள் எனது கால்களைக் கற்களும் முட்களும் பதம் பார்த்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள் பள்ளங்களிலும் மேடுகளிலும் நான் விழுந்து எழுந்திருக்கிறேன். எத்தனையோ நாட்கள் கார்களிலும், பஸ்களிலும் மோதி என் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டன. ஒரு நாளாவது எனது உடலில் காயமே இல்லாத நாள் இருந்ததில்லையடி.
நீ வந்த பின்புதான் என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கின. என் வாழ்வின் ஒளிமயமான காலம் பிறந்தது. நான் உன் கண்களால் உலகத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.
பொன்னி!
இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் பதறுதடி. என் உடலெல்லாம் நடுங்குதடி. அந்தச் சோக நிகழ்ச்சி என் இரத்தத்தையே உறையச் செய்யுதடி.
அன்று கடும் மழை, இடி, பேய்க்காற்று, எங்கோ மரங்கள் முறிந்து விழும் ஓசை.
இயற்கையின் சீற்றம் - இது என் வாழ்க்கையில் எவ்விதமெல்லாம் விளையாடி விட்டதடி.
மழை சிறிது ஓய்ந்தபோது நான் உன்னையும் அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டேன்
உனது நடையிலே ஏனோ தளர்ச்சி! என்னை வெளியே அழைத்துப் போவதற்கு நீ அப்போது விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஆனாலும் என்ன செய்வது? நான் பிச்சையெடுக்காவிட்டால், நான் மட்டுமா பட்டினி கிடப்பேன்? என்னுடன் சேர்ந்து நீயுமல்லவா பட்டினி கிடக்க நேரிடும்.
வழக்கமாக நீ என்னை அழைத்துச் செல்லும் நாற்சந்திக்குத்தான் அன்றும் அழைத்துச் சென்றாய். பஸ் தரிப்பு நிலையத்தைத் தாண்டி கம்பத்தின் அருகிற் சென்றதும் வழக்கம்போலத் துண்டை விரித்து நான் உட்கார்ந்தேன்.
திடீரென என் காலின் ஊடாக ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து வெட்டிப்பாய்வதைப் போலிருந்தது.
“ ஐயோ ! அந்தக் குருடனின் கால் மின்சாரக் கம்பிக்குள் சிக்கிவிட்டது” பஸ்தரிப்பில் நின்ற யாரோ கத்தினார்கள்.
கடும் மழையாலும் புயலாலும் சேதமடைந்த மின்சாரக் கம்பத்திலிருந்து தொங்கி, நிலத்திலே படர்ந்திருந்த கம்பியில் எனது கால் சிக்கியிருக்க வேண்டும்.
நான் துடித்துப் புரண்டேன். எனது கைகளும் கால்களும் மாறி மாறி நிலத்தில் அடித்தன. எனது உடல் வலித்து வலித்து இழுத்தது.
உயிர்த் துடிப்பு!
கணப்பொழுதில் அங்கு சனக்கூட்டம் நிறைந்து விட்டது. பலரது இரக்கம் நிறைந்த ஓலங்கள், கூச்சல்கள், கூக்குரல்கள் - எங்கும் ஒரே பரிதாபக் குரல்கள்.
ஆனால் இந்தக் குருடனைக் காப்பாற்ற ஒருவராவது முன் வரவில்லை. ஒரு குருடனுக்காகத் தங்களது உயிருக்கே ஆபத்துத்தேட யாருமே விரும்பவில்லை.
பொன்னி! பொன்னி!
நான் பலங்கொண்ட மட்டும் கத்தினேன். எனது குரல் தொண்டை யிலிருந்து வெளிவர மறுத்து எனக்குள்ளேயே எதிரொலிப்பதைப் போலிருந்தது.
பொன்னி!
உனக்கு எப்படித்தான் அந்த வேகம் வந்ததடி! திடீரெனப் பாய்ந்து வெறிகொண்டவள்போல, நீ எனது காலிலே சிக்கியிருந்த கம்பியை உனது வாயினாற் கடித்து இழுத்துக் குதறுவதை நான் உணர்ந்தேன்.
ஐயோ........ !
அந்தக் கணத்திலே உனது மரணத் துடிப்பை அங்கு நின்றவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். உனது மரண ஓலம் எனது இதயத்தைப் பிளந்து ஒலித்தது.
ஆறறிவு படைத்த மனித ஜென்மங்கள் என் உயிரைக் காப்பாற்றத் தயங்கியபோது, வாய்பேசாத நாற்கால் பிராணியாகிய நீ, உனது உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பாற்றினாய்.
உயிர்த்துணையான உன்னைப் பிரிந்த பின்பும் நான் உயிரோடு இந்த உலகத்தில் இருக்கிறேன்; நானும் ஒரு மனித ஜென்மந்தானே!
ஆனால் நீ..............
நன்றியுள்ள ஒரு நாய்.
- கலைமகள் 1973
++++++++++++++++++++++++++++++++
கால தரிசனம்
மூர்த்தி ஐயர்:-
என்னுடைய பெயர் மூர்த்தி ஐயர். எல்லோரும் என்னை மூர்த்தி என்றுதான் கூப்பிடுவார்கள். பள்ளிக் கூடத்திலை மாத்திரம் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடுவினம். எங்களுடைய வகுப்பில் பரமகுருதான் அடிக்கடி சோதனையில் முதலாம் பிள்ளையாய் வருவான்; ஏனென்று எனக்குத் தெரியும். பரமகுருவினுடைய அப்பாதான் எங்களுடைய வகுப்பு வாத்தியார். அவர் தன்னுடைய மகனுக்கு நிறைய ‘மாக்ஸ்’ போடுகிறவர்.
பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை இருக்கிற பிள்ளையார் கோயிலில் என்னுடைய அப்பா குருக்களாக இருக்கிறார். வாத்தியார் அடிக்கடி கோயில் கும்பிட வாறவர். பூசை முடிஞ்ச பிறகு அப்பாவும் வாத்தியாரும் கதைச்சுக் கொண்டிருப்பினம். சில நேரத்திலை வாத்தியார் என்னைப்பற்றி அப்பாவிடம் கோள் மூட்டிக் கொடுப்பார். ‘படிப்பிலை கவனமில்லை, விளையாட்டுப் புத்தி’ எண்டு சொல்லுவார். பள்ளிக் கூடத்திலை ஏதும் குழப்படி செய்தால் அதையும் அப்பாவிடம் சொல்லிப்போடுவார். அப்பா வாத்தியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை ஏசுவார். அப்பாவும், வாத்தியாரும் கதைக்கிறதைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்.
எங்களுடைய வகுப்பிலை கடைசி வாங்கிலைதான் வழக்கமாக முத்து இருப்பான். அவனைக் கடைசி வாங்கிலை இருக்கச் சொல்லி வாத்தியார்தான் சொன்னார். முத்துவும் படிப்பில் வலு கெட்டிக்காரன், ஒவ்வொரு தவணையும் சோதனையில் என்னை முந்திவிடுவான்.
கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லோரும் கட்டாயம் கூட்டுப்பிரார்த்தனைக்கு வரவேண்டுமென வாத்தியார் சொல்லுவார். அதனால் நாங்கள் எல்லோரும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கோயிலுக்குப் போவோம்.
முத்து கோயிலுக்குள்ளே வருவதில்லை. வெளியே நிண்டுதான் கூட்டுப்பிரார்த்தனை செய்வான். தான் சொல்லுவது எங்களுக்கும் வாத்தியாருக்கும் கேட்க வேண்டு மென்பதற்காக அவன் பலமாகக் கத்தி, கூட்டுப்பிரார்த்தனை செய்யிறதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.
என்னுடைய அண்ணன் கொழும்பில் வேலை செய்கிறார். அண்ணனும் முந்தி நான் படிக்கிற தமிழ்ப்பள்ளிக்கூடத்திலைதான் படிச்சவர். பிறகு யாழ்ப்பாணத்திலை பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்ந்து படிச்சார். அண்ணன் பள்ளிக்கூடம் போகிற காலத்திலை குடுமி வைச் சிருந்தவர். அண்ணனுக்கு குடுமி முடியத்தெரியாது, அம்மாதான் அவருக்குத் தலைவாரி, குடுமி முடிஞ்சு விடுகிறவ. அண்ணன் அப்போது காதில் கடுக்கனும் போட்டிருந்தார். பள்ளிக்கூடம் போகும் போது சந்தனப் பொட்டுப் போட்டுக்கொண்டுதான் போவார்.
தன்னைப்போன்று அண்ணனையும் பெரிய குருக்களாக்கி விட வேண்டுமென்றுதான் அப்பா விரும்பினார். அதனாலேதான் அண்ணன் பள்ளிக்கூடத்திலை படிக்கிற காலத்திலேயே வீட்டில் சமஸ்கிருதமும் படிச்சார். கோயில் வேலைகளும் பழகினார். ஆனால் அப்பாவுடைய விருப்பம் நிறைவேறவில்லை. அண்ணனுக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்தது. அண்ணன் குடுமியை வெட்டிவிட்டுச் சிலுப்பாத் தலையோடு வேலைக்குப் போய்விட்டார்.
அண்ணன் வேலைக்குப் போனது அப்பாவுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை. ஆனால் அம்மாவுக்கு அண்ணன் வேலை பார்க் கிறதைப்பற்றி நல்ல சந்தோஷம்.
அண்ணன் குடுமியோடை இருந்தபோது இருந்த வடிவும் முகவெட்டும் இப்ப இல்லையெண்டு அம்மா சில வேளை சொல்லுவா. அதைக்கேட்க எனக்கு வேடிக்கையாக இருக்கும்.
அண்ணன் படிக்கிற காலத்திலை குடுமி வைச்சிருந்ததைப் போல் நான் குடுமி வைச்சிருக்கவில்லை. கடுக்கனும் போடுறதில்லை. பள்ளிக்கூடம் போறபோது சந்தனப் பொட்டு மாத்திரம் போடுவன். ஏனென்றால் பொட்டுப் போடாவிட்டால் அப்பா ஏசுவார்.
போன வெள்ளிக்கிழமை எங்களுடைய கோயிலில் பிரசங்கியார் வந்து கண்ணப்பநாயனாரைப்பற்றி பிரசங்கம் செய்தார். எல்லோரும் பிரசங்கத்தைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
“......... அறிவு, அருள், அடக்கம், தவம், சிவபக்தி எல்லாம் நிறைந்தொரு வடிவம் எடுத்தாற்போன்ற சிவகோசரியார் என்ற பிராமணர், சைவாகம விதிப்படி அருச்சித்த சிவலிங்கப் பெருமானுக்கு வேடுவத் தலைவனாகிய திண்ணன், தான் சுவைத்து உருசிபார்த்த இறைச்சிகளை நெய்வேத்தியமாகப் படைத்தான்.......”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மனசிலே அருவருப்பு ஏற்பட்டது. நான் ஒரு வேடனுடைய தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன். கறுத்த உருவமும் பரட்டைத் தலையும் தாடி மீசையும் பெரிய பற்களுமாகக் கோவணத்துடன்.... சீ எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது.
அன்றிரவு படுக்கையில் படுத்திருந்தபொழுது அப்பாவுடைய தோற்றமும் ஒரு வேடனுடைய தோற்றமும் என் நினைவிலே மாறி மாறி வந்துகொண்டேயிருந்தன. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். பூசை செய்வதற்குப் பக்திதான் மிகவும் முக்கியம்; வேறு எதுவும் முக்கியமில்லை என்பது இப்ப எனக்கு நன்றாக விளங்குகிறது.
‘கோயிலுக்குப் பூசை செய்வதில் இருக்கிற மதிப்பு எந்தத் தொழிலிலுமில்லை’ என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.
அப்பா காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம் செய்து, சிவபூசை பண்ணியபிறகுதான் சாப்பிடுவார். அவருடைய எண்ணம் முழுவதும் கோயிலைப்பற்றியும், கடவுளைப்பற்றியுந்தான் இருக்கும். அப்படி இருக்கிறவருக்கு அவருடைய தொழில் பெரிதாகத்தான் இருக்கும்.
“முந்தின காலத்திலை எங்களுடைய ஆக்கள் எல்லோரும் அப்பாவைப் போலத்தான் இருந்தார்கள். இந்தக்காலத்துச் சூழ்நிலையில் ஆசாரத்தோடும் கட்டுப்பாட்டோடும் இருக்கிறது மிகவும் கஷ்டம். காலம் மாறிப்போச்சுது.”என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. அம்மா சொல்லுறது சரிபோலத்தான் எனக்குத் தெரிகிறது.
முத்து:-
அப்பு காலமையும் பின்னேரத்திலையும் கள்ளு இறக்கப் போறவர். வாத்தியார் வீட்டுப் பனையளிலைதான் அப்பு கள்ளு இறக்கிறவர். எங்களுக்கும் குடியிருக்கிறதுக்கு வாத்தியார்தான் காணி தந்திருக்கிறார். வாத்தியார் வீட்டுக்குப் பின்னாலை இருக்கிற பெரிய காணியிலைதான் நாங்கள் குடியிருக்கிறம். வாத்தியாருக்கு நிறையக் காணியள் இருக்கு
வாத்தியாரை அப்பு ‘கமக்காறன்’ என்று மரியாதையோடு கூப்பிடுவார். நான் எப்பவும் வாத்தியார் என்று தான் கூப்பிடுறனான்
வாத்தியாரைக் கண்டால் அப்புவுக்குச் சரியான பயம். தலையில் கட்டியிருக்கும் துண்டை அவிழ்த்து கக்கத்துக்குள் வைத்து குழைந்துகொண்டுதான் வாத்தியாருடன் அவர் கதைப்பார். வாத்தியார் எதைச் சொன்னாலும் அப்பு அதைத் தட்டாமல் உடனே செய்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.
வாத்தியாருடைய வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் வாத்தியார் கமஞ்செய்கிறார். நிலத்தைக் கொத்திறது, வரம்பு கட்டுறது, கன்று நடுகிறது, இறைக்கிறது எல்லாம் அப்புதான் செய்யிறவர். வாத்தியார் மேற் பார்வை மட்டும் பார்ப்பார்.
வாத்தியாருடைய தோட்டத்திலை வேலை செய்து முடிஞ் சதுந்தான் அப்பு எங்கடை தோட்டத்திலை வேலை செய்வார்.
அப்பு வியர்வை வழிய வழிய வாத்தியாற்றை தோட்டத்திலை நின்று வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் பின்னேரத்திலை வாத்தியாருக்கென்று அப்பு இரண்டு போத்தல் கள்ளு எடுத்துக் கொண்டுபோய் அவருடைய வீட்டிலை கொடுத்துவிட்டு வருவார். வெள்ளிக்கிழமையிலை மாத்திரம் வாத்தியார் கள்ளுக் குடிக்கமாட்டார். கோயிலுக்குப் போவார். வாத்தியாருக்கு அப்பு கலப்பில்லாத கள்ளுத்தான் கொடுப்பார்.
சில நாட்களில், அப்புவுக்கு நேரமில்லாவிட்டால் நான் தான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துக் கொண்டு போறனான்.
மதுபானம் அருந்தக்கூடாதென்று பாடப்புத்தகத்திலை எழுதியிருக்கு. ஒருநாள் வாத்தியார் அந்தப் பாடத்தை எங்களுக்குச் சொல்லித் தந்தார்.
அதுக்குப்பிறகு ஒருநாளும் நான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துக்கொண்டு போறதில்லை. மதுபானம் அருந்தக்கூடாதென்று படிப்பித்த வாத்தியாருக்கு நானே எப்படி மதுபானம் கொண்டுபோய்க் கொடுக்கிறது? எனக்குப் பயமாக இருக்கும்.
போன கிழமை கோயிலில் நடந்த பிரசங்கத்தை நானும் கவனமாகக் கேட்டன். கண்ணப்பநாயனாரின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய உடம்பில் ஏதோ ஒரு புது வேகம் உண்டாகிறதைப் போல இருந்தது.
“........ சிவலிங்கப் பெருமானின் வலக்கண்ணிலே இரத்தம் வடிந்தபோது பதைபதைத்து ஆவிசோர்ந்து தனது கண்ணைத் தோண்டி சுவாமியின் கண்ணிலே அப்பினான் வேடுவர் தலைவனாகிய திண்ணன். அப்போது சுவாமியின் இடக்கண்ணிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.
சிவலிங்கப் பெருமானை மோந்து, முத்தமிட்டு, வாயிலே கொண்டுவந்த திருமஞ்சன நீரைத் தனது மனசிலுள்ள அன்பை உமிழ்வதுபோலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தனது தலையிலிருந்த பூக்களைச் சாத்தி வழிபட்ட திண்ணனார், இப்போது சுவாமியினுடைய கண்ணிலே அடையாளமாகச் செருப்பை வைத்துக்கொண்டு தனது மறுகண்ணையும் தோண்டுவதற்காக அம்பை வைத்தார்.
தயாநிதியாகிய எம்பிரான் ‘நில்லு கண்ணப்பா, நில்லு கண் ணப்பா,’எனத் திருவாய்மலர்ந்து கண்ணைத் தோண்டும் கையைத் தனது திருக்கரத்தினாலே தடுத்தார்.”
எனக்கு உடம்பு புல்லரித்தது. கண்ணப்பநாயனாரைப் போல நானும் கடவுளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுத் தழுவிக் கும்பிட வேண்டும் போல ஒரு வெறி எனக்கு ஏற்பட்டது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு ஏனோ அழுகை வந்தது. விம்மி விம்மி அழுதுகொண்டு கடவுளைக் கும்பிட்டேன்.
எங்களுடைய வகுப்பிலை படிக்கிற மூர்த்தி ஐயர் நான் அழுகிறதைப் பார்த்துவிட்டு, என்னை அழவேண்டாமென்று சொன்னார். அவருக்கு என்னிடத்திலை நல்ல விருப்பம். ஒருத்த ருக்கும் தெரியாமல் மடப்பள்ளியிலிருந்து நிறையக் கடலையும் வாழைப்பழமும் எடுத்துக் கொண்டுவந்து எனக்குத் தந்தார்.
போன தவணைச் சோதனையில் நான் பரமகுருவை முந்தி விட்டன். நான்தான் வகுப்பிலை முதலாம் பிள்ளை.
பரமகுருவுக்குப் தமிழ்ப்பாடத்திலை ‘மாக்ஸ்’ குறைஞ்சு போச்சுது. ‘சாதி யிரண்டொழிய வேறில்லை’ என்ற பாட்டு எழுதச்சொல்லிக் கேள்வி வந்தது. அந்தப் பாட்டு பரமகுருவுக்குப் பாடமில்லை. எனக்கு நல்ல கரைஞ்ச பாடம்.
நான் வகுப்பிலை முதலாம்பிள்ளையாய் வந்தபோது அப்பு நல்ல சந்தோஷப்பட்டார். அப்பு படிக்கிறகாலத்திலை எங்கடை ஆட்கள் ஒருத்தரும் பெரிய உத்தியோகங்களுக்குப் படிக்கிற தில்லையாம். இப்ப காலம் மாறிப் போச்சுது.
எங்களுடைய ஆட்கள் பலபேர் படிச்சு உத்தியோகம் பார்க்கினம். அப்பு என்னை எப்படியும் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறனெண்டு சொல்லியிருக்கிறார். நானும் கவனமாகப் படிச்சு உத்தியோகம் பார்க்கத்தான் போறன். பிறகு எங்களுக்கு ஒரு கஷ்டமும் இருக்காது நாங்களும் மற்றவையளைப்போல நல்லா இருக்கலாம்.
பரமகுரு:-
நானும் முத்துவும் எங்களுடைய வளவிலிருக்கும் தோட்டத்தில் சேர்ந்து விளையாடுவோம். நான் முத்துவோடு விளையாடுவதை அப்பா கண்டால் எனக்கு நல்ல அடிதான் கிடைக்கும். அதனால் அப்பா எங்காவது வெளியிலை போன நேரத்திலைதான் நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து விளையாடுவோம்.
முத்து இந்தத் தவணைச் சோதனையில் என்னை முந்தி விட்டான். அதைப்பற்றி எனக்குப் பொறாமையில்லை. அவன் படிச்சு பெரியவனாகியதும் கொழும்புக்குப்போய் மூர்த்தி ஐயரின் தமையனைப்போலத் தானும் உத்தியோகம் பார்ப்பானாம்.
முத்துவினுடைய தகப்பன் எங்களுடைய தோட்டத்திலை கஷ்டப்பட்டு வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும். அவையளுக்குக் காணியில்லாத படியாலைதான் எங்களுடைய நிலத்திலை கஷ்டப்படுகினம். இப்ப அவையளுக்குக் காணியில்லாவிட்டால் என்ன? நான் வளர்ந்து பெரியவனாகியதும் எங்களுக்கு இருக்கிற காணிகளில் ஒன்றை முத்துவுக்குச் சொந்தமாகக் கொடுத்துவிடுவன்.
எனக்கு ஒரேயொரு அண்ணன் மட்டுந்தான் இருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திலைதான் வேலைசெய்கிறார். அவர்மேலை எனக்கு நல்ல விருப்பம். அண்ணன் எங்களுடைய வீட்டுக்கு வருவதில்லை. அப்பாதான் அவரை வரவேண்டாமென்று சொன்னவர். அண்ணனுக்கு நிறையச் சீதனம் வாங்கி கலியாணம் செய்துவைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார். அண்ணர் தனக்கு விருப்பமான ஒரு பெம்பிளையைக் கலியாணம் செய்யவேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார். அந்தப் பெம்பிளைபகுதி வேதக்காறராம். அவவும் அண்ண ரோடைதான் வேலை செய்கிறவவாம். கடைசியில் அண்ணர் தன்னுடைய விருப்பப்படிதான் கலியாணஞ் செய்தார்.
கலியாணம் முடிஞ்சவுடனை அண்ணர் பெம்பிளையையும் கூட்டிக்கொண்டு வந்தார். அப்பா, ‘இனிமேல் வீட்டுவாசல் மிதிக்கக் கூடாதெ’ன்று அண்ணரை ஏசிக் கலைச்சுப்போட்டார். இது நடந்து ஒரு வருஷத்துக்குப் பிறகு அண்ணருக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்தது. அதைக் கேள்விப்பட்டவுடனை, அம்மா தான் போய்ப் பார்க்கவேணுமென்று அப்பாவிடம் பயந்து பயந்து கேட்டா. அப்பா தடுக்கவில்லை. அம்மாமட்டும் போய் அண்ணரையும், மச்சாளையும், பிள்ளையையும் பார்த்து விட்டு வந்து புதினங்களைச் சொன்னா. அப்பா ஆசையோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பாவுக்கும் அந்தப் பிள்ளையைப் போய்ப் பார்க்க ஆசைதான். ஆனால் அவர் அதை வெளிக்காட்டுகிறாரில்லை. அவருடைய பெருமை அவரை விடுகுதில்லை.
போன வெள்ளிக்கிழமை நான் அப்பாவோடை கோயிலுக்குப் போயிருந்தன். மூர்த்தி ஐயருடைய தகப்பன்தான் வழக்கமாகக் கோயிலில் பூசை செய்யிறவர். அன்றைக்கு அவர் கோயிலுக்கு வரவில்லை. அவருக்கு ஏதோ சுகமில்லையாம். கொழும்பிலை உத்தியோகம் பார்க்கிற குருக்களுடைய மூத்த மகன்தான் அன்றைக்குப் பூசை செய்தவர். தகப்பனுக்குச் சுகமில்லாதபடியால் அவர் லீவு எடுத்து வந்தவராம். பெரிய குருக்களைப்போல இவர் குடுமி வைச்சிருக்க வில்லை. பெரிய குருக்களைப்போல இவர் கோயிலுக்கு நடந்து வரவில்லை; சைக்கிளிலைதான் வந்தவர். பூசை முடிஞ்சதும் எல்லோருடனும் சேர்ந்து நானும் அன்று நடந்த பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன்.
“.......புலால் உண்பவர்கள் புலையர்கள். சிவலிங்கப் பெருமானுடைய சந்நிதியில் வெந்த இறைச்சியும், எலும்பும் கிடக்கக்கண்ட சிவகோசரியார் வேட்டுவப் புலையர்கள்தான் இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், இதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ? என மனம் வெதும்பினார்.
........ வேட்டுவப் புலையரெனத் தான் திட்டிய திண்ணனாரைச் சிவலிங்கப் பெருமான் ‘கண்ணப்பா’ என்று அழைத்ததோடு, தன் வலப்பக்கத்தில் நிற்கும்படி திருவாய் மலர்ந்தபோது சிவகோசரியார் மெய்தானரும்பி விதிர்விதிர்த்துச் சிவலிங்கப் பெருமானை வணங்கி நின்றார்.”
மறுநாள் எங்கடையூர் வயிரவர் கோயிலில் வேள்வி நடந்தது. எங்களுடைய வீட்டிலும் இறைச்சி வாங்கினார்கள். அப்பாவுக்கு ஆட்டிறைச்சி என்றால் நல்ல விருப்பம். எனக்கும் விருப்பந்தான். சாப்பிடும்போது அம்மா எங்கள் இருவருக்கும் நிறைய இறைச்சி போட்டா.
முதன் நாள் கோயிலில் கேட்ட பிரசங்கம் என் நினைவுக்கு வந்தது.
“நாங்கள் இறைச்சி தின்னிறம், அப்படியானால் நாங்களும் புலையர்களோ?” என்று அப்பாவிடம் கேட்டன்.
அதைக் கேட்டதும் அம்மா சிரித்தா. அப்பா கொஞ்சநேரம் பேசவில்லை; ஏதோ யோசித்தார். அவருக்கு நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.
“முந்தின காலத்தில் புலையர்கள்தான் இறைச்சி சாப்பிடு வார்கள்; வேளாளர் சாப்பிடுவதில்லை. அதனாலைதான் வேளாளரைச் சைவ வேளாளர் என்று சொல்லுவார்கள். இப்ப காலம் மாறிப்போச்சு. இந்தக் காலத்திலை பலபேர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். அதனால் மாமிசம் புசிப்பது பிழையென்று யாரும் நினைப்பதில்லை” என்று அப்பா சொன்னார்.
நான் யோசித்துப் பார்த்தன்.
அப்படியானால் இப்ப நாங்கள் பிழையென்று நினைக்கிற விஷயங்கள் காலம் மாறினால் பிழையற்றதாகி விடுமோ?
காலம் மாறிக்கொண்டுதானே இருக்கிறது!.
- வீரகேசரி 1973
+++++++++
அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்
மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து “ஸேர் யாரோ ஒருவர் வந்திருக்கிறார், உங்களைப் பார்க்கவேண்டுமாம். உங்களது நண்பர் என்று கூறுகிறார்” என்றாள் தயக்கத்துடன்.
‘வார்ட் ரவுண்ட்’ செய்யும்போது என்னை யாரும் குழப்புவதை நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். சினத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.
“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ? ” வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டியபடி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.
“ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிறைஸ்!” என்றேன். என்னால் நம்பவே முடியவில்லை. லண்டனில் இருப்பவன் இப்படித் திடுதிப்பென என் முன்னால் வந்து நின்றால் ... ஆச்சரியத்தில் ஒரு கணம் தடுமாறினேன்.
“யூ பகர், யூ நெவர் றைற் ரு மீ” - நீ எனக்குக் கடிதம் எழுதுவதில்லை எனச் செல்லமாகக் கோபித்து என் தோள்களில் இடித்தான்.
பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே தோற்றம், அதே கலகலப்பு. அநாயாசமான பேச்சு, நெஞ்சைத்தொடும் இறுக்கம்... அவன் கொஞ்சங்கூட மாறவில்லை.
“எப்போது லண்டனில் இருந்து வந்தாய்?”
“சென்ற கிழமைதான்... இப்போது என் குடும்பத்துடன் நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ இங்கு ‘டீ.எம்.ஓ.’வாக இருப்பதாய் கொழும்பு நண்பர்கள் சொன்னார்கள். டெலிபோன் செய்தேன்... முடியவில்லை. எப்போதும் உனது லைன் அவுட் ஒஃப் ஓடர்தான்” என்று சொல்லிச் சிரித்தான்.
அந்த வார்ட்டில் உள்ள நோயாளிகள் எங்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருப்பது எனக்குச் சங்கடமாக இருந்தது.
“கொஞ்சம் இருந்துகொள், இன்னும் மூன்றேமூன்று பேஷன்ட்ஸ்தான். பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். குவார்ட்டர்ஸில் போய்ப் பேசலாம்” என்றேன்.
அவனுக்கு எனது நிலைமை புரிந்தது.
“ஓ.கே., கம் சூன்... நான் காரில் வெயிட் பண்ணுகிறேன்.”
கொழும்பு மருத்துவக் கல்லூரியில் நானும் அவனும் ஒன்றாகச் சேர்ந்து படித்தபோதுதான் நண்பர்களானோம். படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் கடமையாற்றிவிட்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்றவன் அங்கேயே ‘செற்றில்’ ஆகிவிட்டான். நான் இலங்கையின் பல பகுதிகளிலும் கடமையாற்றி விட்டு இப்போது மலைநாட்டில் உள்ள ஆஸ்பத்திரி யொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். லண்டனில் இருந்து அவன் ஆரம்பத்தில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் எழுதினேன். எண்பத்துமூன்றில் நடந்த இனக்கலவரத்தில் நான் பாதிக்கப்பட்டபின் அவனுக்குக் கடிதம் எழுதவில்லை. அவன் எழுதிய கடிதங்களுக்கும் பதிலெழுதாமல் இருந்து விட்டேன்.
வார்ட் ரவுண்ட் முடிந்து நான் சென்றபோது ஆஸ்பத்திரியின் வெளிநோயாளர் பகுதிக்கு முன்னால் சில்வா காரில் அமர்ந்திருந்தான். என்னைக் கண்டதும் காரிலிருந்து இறங்கினான். அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும் இறங்கினாள்.
“எனது மனைவியை நீ பார்த்ததில்லை.... இவளது பெற்றோர் வெகு காலத்திற்கு முன்பே லண்டனில் குடியேறி விட்டனர். இவள் படித்ததெல்லாம் லண்டனிலேதான். சிறு வயதில் ஒருமுறை இலங்கைக்கு வந்தாளாம். இப்போது மீண்டும் வந்திருக்கிறாள்; பெயர் மாலினி ” என்றான் .
நான் அவளது கையைப்பற்றிக் குலுக்கினேன். அவள் லண்டன்வாசியாக இருந்தாலும் முழுக்க முழுக்க சிங்களப் பெண்ணாகவே காட்சியளித்தாள்.
“சில்வா உங்களைப்பற்றி என்னிடம் அடிக்கடி கதைப்பார்” எனக்கூறிப் புன்னகைத்தாள்.
காரின் பின்சீட்டில் அவர்களது மகள் அமர்ந்திருந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயதுவரை மதிக்கலாம். அவளருகே ஒரு பெரிய அல்சேஷன் நாய் அமர்ந்திருந்தது. அவள் நாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அதனிடம் ஏதேதோ பேசி செல்லங் கொட்டிக் கொண்டிருந்தாள்.
“வாருங்கள், வீட்டுக்குப் போவோம். எனது மனைவி அங்கிருக்கிறாள் . இன்று எங்கள் வீட்டிலேதான் உங்களுக்குப் பகல் சாப்பாடு ” என்றேன்.
“என்ன, இன்று உன்வீட்டில் சைவர் சாப்பாடுதானே ........ வெள்ளிக் கிழமையல்லவா? எனக்கூறிப் புன்னகைத்தான். சைவச் சாப்பாட்டை அவன் ‘சைவர்’ சாப்பாடு என்றுதான் கூறுவான்.
மாணவப் பருவத்தில் நானும் அவனும் ஒட்டியுறவாடிய நாட்கள் இனிமையானவை. மருதானையில் உள்ள சைவஹோட்டல் ஒன்றில் நாங்கள் சேர்ந்து உணவு அருந்துவோம். தோசை, வடை என்றால் அவனுக்கு உயிர். வெள்ளிக் கிழமைகளில் அவன் பகல் உணவையும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவான்; சாம்பார், ரசம், பாயசம் இவற்றை யெல்லாம் ரசித்துச் சாப்பிடுவான்.
“நோ... நோ..., அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது அந்த வழக்கத்தை விட்டுவிட்டேன்” என்றேன்.
“என்ன, வீட்டில் பெற்றிக்கோற் கவர்மென்றா? உன் மனைவி உன்னை மாற்றிவிட்டாள் போலிருக்கிறது.”
நான் புன்னகைத்தபடி வீட்டின் முன்புறக் கதவு மணியை அழுத்தியபோது, மனைவி வந்து கதவைத் திறந்தாள்.
“இவன்தான் சில்வா, எனது மருத்துவக் கல்லூரி நண்பன்; குடும்பத்தோடு நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இன்று இவர்களுக்கு எங்களது வீட்டிலேதான் லஞ்ச்” என்றேன்.
அவன் என் மனைவிக்கு வணக்கம் சொல்லிக் கைகூப்பினான்.
எல்லோரும் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து கொண்டோம். பின்னால் வந்த அல்சேஷன் வீட்டின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சுற்றத்தொடங்கியது.
என் மனைவிக்கு நாய் வீட்டுக்குள் நுழைவது பிடிக்காது. என் முகத்தைப் பார்த்தாள். நான் அதனை கவனிக்காதவன் போல நண்பனின் பக்கம் திரும்பி, “என்ன சில்வா, இது உயர்சாதி நாய்போல் இருக்கிறதே....... இதனையும் லண்டனில் இருந்து கொண்டு வந்தாயா?” என வினவினேன்.
“இல்லையில்லை, இது கொழும்பில் எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறது. நாங்கள் இங்கு வந்த நாள்முதல் எனது மகளோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. எனது மகளுக்கும் இதனை விட்டுப் பிரிய மனமில்லை” என்றான்.
சிறிது நேரத்தில் என் மனைவி எல்லோருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினாள். அவளது முகத்தில் இருந்த பரபரப்பைக் கவனித்த சில்வா, “¨மிஸிஸ் சந்திரன், பதட்டப்படாதீர்கள், சமைப்பதில் எனது மனைவியும் கெட்டிக்காரி. அவள் உங்களுக்கு உதவி செய்வாள்.... எங்களுக்காக எதுவுமே பிரமாதப்படுத்த வேண்டாம்; நாங்கள் ஹோம்லியாகவே இருப்போம்” என்றான்.
என் மனைவி வெட்கத்துடன் புன்னகைத்தாள். எங்கோ இருந்த எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி இப்போது என் மனைவியின் கால்களைச் சுற்றிவந்து ‘மியாவ் மியாவ்’ எனத் தனக்கும் தேநீர் கேட்டது.
லீசா - அதுதான் அவர்களது மகளின் பெயர், ஓடிச் சென்று அந்தச் சிறிய பூனைக்குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்து அதனைத் தடவிக்கொடுத்தாள். “வெரி நைஸ் கற்” என்றாள்.
அல்சேஷன் உறுமியது. லீசா பூனையிடம் கொஞ்சுவது அதற்குப் பிடிக்கவில்லை. முன்னங்கால்களை நீட்டியபடி நிலத்திலே படுத்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டது. இடையிடையே தலையை நிமிர்த்தி உறுமியது.
“றூத் ஸ்ரொப் இற்” எனச் சில்வா அதட்டியதும் அல்சேஷன் மௌனமாகிவிட்டது.
சிறிது நேரத்தில் எனது மனைவியும் மாலினியும் ஐக்கியமாகி விட்டார்கள் என்பதை சமையல் அறையில் இருந்து வந்த சிரிப்பொலியும் கலகலப்பும் புரிய வைத்தன. சிங்கள ஊர்கள் பலவற்றில் நான் வேலை செய்ததால் எனது மனைவி ஓரளவு சிங்களம் பேசக் கற்றிருந்தாள். மாலினியும் அவளும் சிங்களத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
சில்வா தனது பையைத் திறந்து உள்ளேயிருந்த உயர்ரக மதுப்போத்தல் ஒன்றை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, “இது எனது சிறிய அன்பளிப்பு” என்றான்.
“வீ போத் வில் ஹாவ் இற்” என்றேன்.
எனது மனைவி இரண்டு கிளாஸ்களைக் கழுவிவந்து மேசையில் வைத்தாள். மாலினி ஒரு தட்டில் முட்டைப் பொரியல் எடுத்து வந்தாள்; “அதிகமாகக் குடிக்க வேண்டாம். பின்னர் கார் ஓட்ட முடியாது” என அவனை எச்சரித்தாள்.
மீண்டும் அடுப்படியில் கலகலப்பு.
சிறிது நேரத்தில் போத்தலில் அரைவாசி காலியாகியது.
“சந்திரன், யூ ஆர் வெரி லக்கி; அழகான மனைவி உனக்கு வாய்த்திருக்கிறாள்.”
“ஏன் உனது மனைவியும் அழகாகத்தானே இருக்கிறாள்” என்றேன்.
“நோ..... நோ..... அவள் ஒரு சிடுமூஞ்சி. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னோடு சண்டை பிடிப்பாள். அரைவாசி நாள் சண்டையிலேயே கழிந்துவிடுகிறது.”
“பெண்களுடைய பலமே அதுதான்; கோபத்தைக் காட்டியே கணவன்மார்களை மடக்கி விடுவார்கள். மாலினியின் கோபம் உன் மனதைக் கஷ்டப்படுத்துகிறதென்றால் அவளின் மேல் நீ அளவில்லாத அன்பு வைத்திருக்கிறாய் என்றுதானே அர்த்தம்” என்றேன்.
அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “கவிதா இப்போது எங்கே இருக்கிறாள்?” எனக் கேட்டான்.
சில்வா இன்னும் கவிதாவை மறக்கவில்லை என்பது தெரிந்தது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது அவன் கவிதாவின்மேல் பித்தாக இருந்தான். அவளது அன்பைப் பெறத் துடித்தான். ஆனால் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காதற்கடிதம் எழுதிக் கொடுத்தான். அவள் பதிலெழுதாமல் இருந்தாள். ஆனாலும் சில்வா அவளை மறந்துவிடவில்லை. அவள் கண்டி வைத்தியசாலைக்கு வேலையேற்றுச் சென்றபோது தன்னைத் திருமணஞ் செய்யச் சம்மதமா என அவளிடம் கேட்டான். அவள் முடியாது என ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.
“கவிதா இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. எங்கோ யாழ்ப்பாணத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டேன்” என்றேன்.
“அவள் ஏன் என்னை விரும்பவில்லைத் தெரியுமா?”
“தெரியாது”
“எனக்குத் தெரியும். நான் ஒரு தமிழனாக இருந்திருந்தால் அவள் என்னை விரும்பி ஏற்றிருப்பாள்.”
“டோன்ற் பீ ஸில்லி.”
“சந்திரன், எதனையுமே மூடிமறைக்க எனக்குத் தெரியாது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலைமை இந்த நாட்டில் வளர்ந்துகொண்டே வருகிறது. இரு இனங்களுக்கும் இடையே இடைவெளி கூடிக்கொண்டே இருக்கிறது.”
லீசா அணைத்து வைத்திருந்த பூனைக்குட்டி அவளது கைகளிலிருந்து பாய்ந்து இறங்கி, சில்வாவின் அருகே சென்றது. அவனது கால்களைச் சுரண்டி ‘மியாவ் மியாவ்’ என்றது.
சில்வாவின் கண்கள் சிவந்திருந்தன. முட்டைப் பொரியலில் ஒரு துண்டை பூனையை நோக்கி வீசியெறிந்து விட்டு உரத்த குரலில் என்னிடம் கேட்டான். “இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அமைதியாக இருந்த இந்த நாட்டை அநியாயப்படுத்தியது யார் தெரியுமா?”
நானும் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதலாகக் குடித்து விட்டேன் போலத் தெரிகிறது ; தலை சுற்றியது.
“இதற்கெல்லாம் காரணம் பெரும்பான்மையின அரசியல் வாதிகள்தான். ஆட்சியைக் கைப்பற்ற பேரினவாதக் குரல் எழுப்பினார்கள். தமிழர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். மொழியுரிமை பறிக்கப்பட்டது, தொழில்வளம் பாதிக்கப்பட்டது, கல்வி பாதிக்கப்பட்டது, தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோயின. சாத்வீக வழியில் தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியபோது அவர்கள்மேல் வன்செயல்கள் கட்டவிழ்க்கப்பட்டன. 58இல் அடி, 72இல் அடி, 83இல் அடி, தமிழர்களும் அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருந்தார்கள்.” நான் இப்படிக் கூறிக் கொண்டிருந்தபோது சில்வா பூனைக்கு முட்டைப் பொரியலை சிறுசிறு துண்டுகளாக வீசிக்கொண்டிருந்தான்.
சில்வா பூனையிடம் அன்புகாட்டுவது அல்சேஷனுக்குப் பிடிக்கவில்லை. முதலில் உறுமியது. பின்னர் பாய்ந்துவந்து பூனையைக் கௌவ முயன்றது. பூனைக்கு மரணபயம்; ஓடத் தொடங்கியது. வீட்டினுள்ளே ஓடிய பூனை இப்போது முற்றத்தில் அங்குமிங்கும் ஓடியது. அல்சேஷனும் விடுவதாயில்லை. துரத்திக் கொண்டே இருந்தது. லீசா அலறியபடியே அல்சேஷனின் பின்னால் ஓடினாள். பூனை மீண்டும் ஓடிவந்து சமையல் அறைக்குள் நுழைந்து அடுப்புப் புகட்டில் ஏறிக்கொண்டது. அப்போதுதான் அல்சேஷன் பூனையைத் துரத்துவதை நிறுத்தியது.
லீசா அல்சேஷனின் கன்னத்தில் தட்டி, “யூ நோட்டி..... நோட்டி..... டோக் ; சும்மா இருக்கத் தெரியாதா?” எனச் செல்லமாகக் கடிந்தாள்.
சில்வா மௌனமாக இருந்தான். நான் கூறியவை அவன் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ நான் அறியேன்.
சமையல் முடிந்திருந்தது. எல்லோரும் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தோம். எனது மனைவி உணவு பரிமாறினாள்.
சாப்பாட்டு மேசை கலகலப்பாக இருந்தது. என் மனைவியின் சமையலை விதந்து பாராட்டினான் சில்வா. ரசமும் சாம்பாரும் பிரமாதமாக இருக்கிறது என்றான்.
“மாலினி, எனது அப்பாவுக்கு யாழ்ப்பாணத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் அங்குதான் கல்வி கற்றார். நான் ஒருமுறை சந்திரனுடன் யாழ்ப்பாணம் சென்றபோது, அப்பா தனது நண்பர்களையும் பார்த்துவரும்படி கூறினார். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் தந்து அனுப்பினார்” என மனைவியிடம் கூறினான்.
யாழ்ப்பாணத்தில் எனது வீட்டுக்கு சில்வா வந்தபோது பிரமாதமான உபசரிப்பு இருந்தது. எனது தாய் தந்தையர் அவனை அன்பு மழையில் நனைத்தனர். அவனுடன் பேசுவதற்கு அவர்களுக்கு மொழி தடையாக இருந்தபோதிலும் உபசரிப்பால் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். நானும் சில்வாவும் கூவில் கள்ளுக் குடித்து, கீரிமலையில் குளித்து, வீடு திரும்பியபோது அம்மா நண்டுக்கறி சமைத்து உணவு பரிமாற நானும் அவனும் பனையோலைப் பாயில் பக்கத்தில் அமர்ந்து பகிடிகள் பேசிப் பரவசமாய் உணவருந்தியதை சில்வா அடிக்கடி கூறுவான்.
தோசை, இடியப்பம், சொதி, ஒடியல்மாப்பிட்டு, இப்படி விதம் விதமான உணவுகளால் அவனை அம்மா மகிழ்வித்தாள். அப்பு அவனுக்கு நுங்கு வெட்டிக் கொடுத்தார். எங்கெல்லாமோ திரிந்து அவனுக்காக கறுத்தக் கொழும்பான் மாம்பழம், புழுக்கொடியல், பனாட்டு முதலியவற்றைத் தேடிக் கொண்டுவந்து கொடுத்தார்.
“மாலினி, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள மக்களுடன் பழகுவது எவ்வளவு இனிமையான அநுபவம் தெரியுமா? இப்போது அங்கு நிலைமை சரியில்லை. சரியாக இருந்தால் நான் உன்னை அங்கு அழைத்துச் சென்றிருப்பேன். சந்திரனது தாய் தந்தையரது அன்பும் அவர்களது எளிமையும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன” என்றான்.
“சில்வா, அப்படியொரு சந்தர்ப்பம் இனி ஒருபோதும் ஏற்படாது” என்றேன்.
“ஏன் அப்படிக் கூறுகிறாய்? இனிமேல் அங்கு இருப்பவர்கள் எங்களை ஏற்கமாட்டார்களா? இனி இந்த நாட்டில் இனங்களுக்கிடையே சௌஜன்யம் ஏற்படாதா?” எனக் கேட்டான் சில்வா.
அவனைத் தொடர்ந்து மாலினி கேட்டாள், “ஏன் ‘திரஸ்தவாதிகள்’எங்களைக் கொன்று விடுவார்களா?”
“இல்லை இல்லை, நீங்கள் இருவரும் சொல்வது தவறு. உங்கள் இருவரையும் வரவேற்க இப்போது எனது தாய் தந்தையர்கள் அங்கு இல்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள்கூட அங்கு இருப்பார்களோ சொல்ல முடியாது” என்றேன்.
“உனது தாய் தந்தையர் இப்போது எங்கே இருக்கிறார்கள் ?” என ஆவலோடு கேட்டான் சில்வா.
நான் எதனை அவனுக்குச் சொல்லக்கூடாதென நினைத்தேனோ அதனைச் சொல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. “அவர்கள் இறந்து விட்டார்கள்” என்றேன்,
சில்வாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. “ஏன் என்ன நடந்தது?” எனக் கேட்டான்.
“அவர்கள் நவாலித் தேவாலயத்தில் சமாதியாகி விட்டார்கள்..... ஷெல் தாக்குதலுக்குத் தப்ப எண்ணி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் விமானத்திலிருந்து போடப்பட்ட குண்டுக்குப் பலியாகிவிட்டார்கள்.”
சில்வாவின் கண்கள் கலங்கின. தொண்டை கரகரத்தது பேச முடியாமல் தடுமாறினான். “என்ன கொடுமை இது” என முனகினான்.
“போரின் கொடுமை தமிழர் பிரதேசத்தை, அதன் மக்களை, அவர்தம் பண்பாட்டினை, பாரம்பரியங்களை அணு அணுவாக அழித்துக் கொண்டிருக்கிறது” என்றேன்.
சில்வாவினால் பேசமுடியவில்லை ; மாலினிதான் பேசினாள். “இந்தப் போரைத் தொடங்கியவர்கள் யார்? 83இல் தமிழ் இளைஞர்கள்தானே முதன்முதலில் இதனைத் தொடக்கி வைத்தார்கள்” எனக் கூறிக்கொண்டே என் முகத்தைப் பார்த்தாள்.
பூனைக்குட்டி மெதுவாக வெளியே வந்து ‘மியாவ் மியாவ்’ எனச் சில்வாவைச் சுரண்டத் தொடங்கியது. அவன் ஒரு பிடி சோற்றை அதற்கு வைத்தான். பூனை சாப்பிடத் தொடங்கியது. அப்போது அல்சேஷன் உறுமிக்கொண்டே அதன் அருகில் பாய்ந்து வந்தது. பூனை ஓட்டம் பிடித்தது. அல்சேஷன் துரத்தத் தொடங்கியது. பூனை தனது இருப்பிடத்தை நோக்கிக் குசினிக்குள் ஓடியது. லீசாவும் பின்னால் ஓடினாள்.
“மிஸிஸ் சில்வா. முன்பெல்லாம் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அவர்கள் தமது சொந்த மண்ணை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஓடுவதற்கு இடமில்லாமல் போயிற்று, தம்மைக் காப்பாற்றத் திருப்பித் தாக்குவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை” என்றேன்,
பூனை அடுப்படி மூலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. துரத்திச் சென்ற அல்சேஷன் அதனைக் கௌவிக் குதறத் தாவியது. பூனைக்கு மரணபயம் ; ஓடுவதற்கு இடமிருக்கவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘சுர்’ரெனச் சீறி முன்னங்கால்களை உயர்த்திப் பாய்ந்து அல்சேஷனின் முகத்தில் விறாண்டியது.
நீண்டிருந்த அதன் கூரிய நகங்கள் நாயின் கண்களிலும் தாடையிலும் காயங்களை ஏற்படுத்தின. அல்சேஷன் பின் வாங்கியது. வலியால் முனகியது. பூனை மீண்டும் மீண்டும் சீறி நாயைத் தாக்கத் தொடங்கியது. இப்போது பூனையின் அருகே நெருங்குவதற்கு அல்சேஷன் தயங்கியது. சில்வாவின் காலடியில் முன்னங்கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டது.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாலினி, நான் கூறிய விளக்கத்தைப் புரிந்துகொண்டு ஆமோதிப்பது போலத் தலையாட்டினாள்.
லீசா அல்சேஷனுக்குக் காயம் பட்டிருப்பதைக் கவனித்து விட்டு அழத் தொடங்கினாள். எனது தாய்தந்தையரின் மரணச் செய்தியைக் கேட்டதிலிருந்து சோகமாக இருந்த சில்வாவின் கண்களில் குளமாகத் தேங்கியிருந்த கண்ணீர் இப்போது கன்னங்களில் வழிந்தோடியது.
- வீரகேசரி 1996
++++++++++++++++++++
‘ராக்கிங்’
பிரபல்யம் வாய்ந்த அந்த ஆண்கள் கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் திகழ்ந்தது. ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து பல மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள். தேசியரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களையும் அந்தக் கல்லூரி உருவாக்கியிருந்தது. மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பேணுவதிலும் அக்கல்லூரி பெயர் பெற்றிருந்தது. ஆனாலும் கடந்த இருவருடங்களில் நடந்த ‘ராக்கிங்’ சம்பவங்கள் அக்கல்லூரியின் பெயரைக் களங்கப்படுத்தியிருந்தன.
மகேந்திரன் ஜீ.சி.ஈ உயர்தர வகுப்பில் சேர்ந்து ஒரு வாரந்தான் ஆகிறது. இந்தச் சில நாட்களில் அவனும் ‘ராக்கிங்’ என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது.
“டேய், உனக்கு நீந்தத் தெரியுமா?”
ஹொஸ்ரலின் வலதுபுறமாகச் சற்றுத் தொலைவில் நீச்சற் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவன் மகேந்திரனிடம் கேட்டான்.
அன்று பாடசாலை முடிந்தநேரம் அவனது புத்தகங்களைப் பறித்தெடுத்த மாணவர் இருவர் அவற்றைக் ஹொஸ்ரலில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறியதனால் அவன் அங்கு செல்லும்படி நேரிட்டுவிட்டது.
மகேந்திரன் தயக்கத்துடன் தரித்து நின்றான். நீந்தத் தெரியாது என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினான். மனதைப் பயம் கௌவிக்கொண்டது.
“ஐயோ பாவம், இவனுக்கு நீந்தத் தெரியாதாம்....... வா மச்சான், நீந்தக் கற்றுக் கொடுப்போம்” என்றான் வேறொருவன்.
“நம்ம ஸ்கூல் டிஸிப்பிளின் மாஸ்டர் புண்ணியமூர்த்தியின் மகனுக்கு நீச்சல் தெரியாதென்னா இது நம்ம ஸ்கூலுக்கே அவமானம்.”
“அடடே, இவன் நம்ம புண்ணியமூர்த்தி ஸேரோட மகனா? எனக்குத் தெரியாதே.... அப்புடீன்னா கற்றுக்குடுக்கத்தான் வேணும். இல்லேன்னா ஸேர் கோவிச்சுக்குவாரு.”
அவர்கள் எழுந்து மகேந்திரனை நோக்கி வந்தார்கள். அந்த இடத்தைவிட்டு ஓடிவிடலாமா என ஒருகணம் அவன் யோசித்தான். ஆனாலும் உடனேயே தனது முடிவை மாற்றிக் கொண்டான். இப்போது ஓடினால் அவர்கள் அவனை இலேசில் விட்டுவிட மாட்டார்கள். பகிடி வதைக்கு இடங்கொடுக்கா விட்டால் வதைகளின் உக்கிரம் கூடிவிடும்.
ஒருவன் அருகேவந்து அவனது கைகளைப் பற்றினான். மகேந்திரனது கைகள் நடுங்கின. அவன் அவர்களை முன்னொரு போதும் பார்த்ததில்லை. அவர்கள் இறுதியாண்டு மாணவர்களாக இருக்கவேண்டும்.
“வா....... கொஞ்சநேரம் எங்களோட நீச்சல் அடிக்கலாம்” கைகளைப் பற்றியிருந்தவன் அவனை இழுத்தான்.
மகேந்திரனின் கண்களுக்குள் நீர் முட்டியது. கால்கள் தடுமாறின.
“என்ன பயமா இருக்கா? அப்புடீன்னா நீ நீச்சல் அடிக்கவேணாம். நாங்க நீந்திறத வெளியே நின்னு பார்த்துக்க; பயம் தெளிஞ்சிடும்.”
மகேந்திரன் மறுப்புக் கூறமுடியாமல் அவர்களுடன் சென்றான். நீச்சற் குளத்தின் படிக்கட்டுகளை அடைந்தபோது அவனை அவர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர்.
“ஐயோ, பிளீஸ் என்னை ஒண்டும் செய்யாதீங்க.......” மகேந்திரன் மன்றாடியபோது பின்புறத்தில் நின்ற ஒருவன் திடீரென அவனைக் குளத்தில் தள்ளிவிட்டான். சற்றும் எதிர்பாராதவகையில் அவன் ஒரு கணம் தடுமாறி, தடாரெனத் தண்ணீரில் விழுந்து தத்தளித்தான். வாயினுள்ளும் மூக்கினுள்ளும் தண்ணீர் புகுந்ததால் அவனுக்கு மூச்சுத் திணறியது. கைகளையும் கால்களையும் அடித்துத் தரையில் உதைத்து மேலே எழுந்தபோது படிக்கட்டில் நின்றிருந்த இருவர் தண்ணீரில் குதித்து அவனை மீண்டும் உள்ளே அமுக்கினர்.
மகேந்திரன் திணறித் திணறி மேலே எழும்பும் போதெல்லாம் அவர்கள் அவனை உள்ளே தள்ளி அமுக்கிக் கொண்டிருந்தனர். அவன் திணறுவதும் கைகளை மேலே உயர்த்தி ஆட்டுவதும் அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
“மச்சானை நல்லாக் குளிப்பாட்டுங்கடா” என வெளியே நின்ற இருவர் ஆரவாரஞ்செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.
மகேந்திரனின் துடிப்பு அடங்குவதை அவர்கள் கவனிக்க வேயில்லை. அவன் திணறி மேலே எழும்பாதபோதுதான் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அவனைத் தண்ணீரின் மேலே இழுத்தெடுத்தார்கள்.
விளையாட்டாகச் செய்த ராக்கிங் வினையாக முடிந்திருப்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக வேறும் சில மாணவர்களை அவர்கள் இவ்வாறு தண்ணீரில் அமுக்கி ராக்கிங் செய்தார்கள். அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது நடந்துவிட்டது.
மகேந்திரனின் தலை தொங்கியிருந்தது.
******
ஆசிரியர் புண்ணியமூர்த்தியின் பெயரைச் சொன்னாலே மாணவர்களுக்கு நடுக்கம் ஏற்படும். மாணவர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டுமென்பதில் அவர் கண்டிப்பானவர். பல இன மாணவர்கள் கல்விகற்கும் அந்தக் கல்லூரியில் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் அவரது கண்டிப்பு அவசியமானதுதான்.
பத்து வருடங்களாகத் தொடர்ந்து ‘டிஸிப்பிளின்’ மாஸ்டராகக் கடமையாற்றிவரும் புண்ணியமூர்த்திக்குச் சென்ற வருடத்தில் கல்லூரியில் நடந்த சம்பவமொன்று அவரது கடமைக்கு மட்டுமல்லாது சொந்த வாழ்க்கைக்குமே ஒரு சோதனையாக அமைந்துவிட்டது.
கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, பழைய மாணவர்கள் சிலர் ராக்கிங் செய்தனர். அவர்களது செயல்கள் அத்துமீறிப்போயிருந்தன. புதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி பாடசாலைக்கு வந்து தங்களது பிள்ளைகளுக்கு நடந்த கொடுமையான வதைகளை எடுத்துக் கூறினர்.
ஒருநாள் புதிய மாணவனொருவன் கடுமையான ராக்கிங்கிற்கு உள்ளாக நேரிட்டது. வெளியே சாக்கடையில் கிடந்த பழைய தகரப்பேணியில் தண்ணீர் அருந்தும்படி பழைய மாணவர்கள் சிலர் அவனை நிர்ப்பந்தித்தனர். அவன் மறுத்தபோது பலவந்தமாக அவனுக்குத் தண்ணீர் பருக்கினர். ஒருவன் பேணியை வாயில் வைத்து அமுக்க, வேறொருவன் அவனைப் பிடரியில் பிடித்துத் தள்ள, கடைவாயால் தண்ணீர் வழிவதைப் பார்த்த மற்றொருவன் பேணியின் அடிப்புறத்தைப் பலமாக இடித்தான்.
புதிய மாணவனின் உதடுகள் கிழிந்து கன்னம்வரை நீண்ட காயம் ஏற்பட்டதால் அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க நேரிட்டது.
கல்லூரியில் நடந்த அந்த ராக்கிங் அத்துமீறல் பற்றிய முறைப்பாடு கல்வித் திணைக்களம்வரை சென்றது.
புண்ணியமூர்த்திதான் அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சியான செய்தி தெரியவந்தது.
அவருடைய மூத்தமகன் சிவனேசனும் வேறு மூன்று மாணவர் களும் சேர்ந்தே அந்தப் புதிய மாணவனுக்குப் பலவந்தமாகச் சாக்கடைத் தண்ணீரைப் புகட்டி, தகரப்பேணியை வாயினுள் புகுத்திக் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள்.
மாணவர்களின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணு வதற்காக எத்தனை எத்தனையோ மாணவர்களுக்குத் தண்டனைகள் கொடுத்த புண்ணியமூர்த்தி, அன்று தன் மகனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டியேற்பட்டது.
மாணவர்கள் நால்வரையும் உடனே கல்லூரியைவிட்டு நீக்கிவிட வேண்டுமெனவும் வேறுபாடசாலையில் அவர்கள் சேரமுடியாதவாறு சிவப்பு மையினால் குறிப்பெழுதி ‘லீவிங் சேட்டிவிக்கற்’ கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பெழுதினார் புண்ணியமூர்த்தி.
மாணவர்களின் எதிர்காலமே வீணாகிவிட்டது. அவர்களுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கக்கூடாதென அதிபரும் ஆசிரியர்களும் புண்ணியமூர்த்திக்கு எடுத்துக்கூறினர். மாணவர்களின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணப்பட வேண்டுமானால் அத்தகைய தண்டனை அவர்களுக்குக் கொடுக்கப்படவே வேண்டுமென அவர் திடமாகக் கூறிவிட்டார். விசாரணையின் போது வெளிவந்த, வெளியே சொல்லமுடியாத வேறுதகவல்களும் அவரது திடமான முடிவுக்குக் காரணமாயிருந்தன.
தண்டனை பெற்ற மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் புண்ணியமூர்த்தியிடம் வந்து, தமது பிள்ளைகளின் தண்டனையைக் குறைத்து வேறுபாடசாலையிலாவது சேர்ந்து படிக்க வழி செய்யும்படி மன்றாடினர்.
அவர்களுக்கெல்லாம் புண்ணியமூர்த்தி கூறிய பதில், “என்னுடைய மகனுக்கே நான் இந்தத் தண்டனையை வழங்கியிருக்கிறேன். இதுதான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான தண்டனை; மனச்சாட்சிக்கு மாறாக நான் எதையுமே செய்யமுடியாது.”
ஆனாலும் மனச்சாட்சியின் மறுபக்கம் அவரை வாட்டிக் கொண்டே இருந்தது. அவரது மகன் சிவனேசன் படிப்பிலே சிறந்த மாணவன். அந்தவருடப் பல்கலைக்கழகத் தேர்வில் அவன் கட்டாயம் வைத்தியபீடத்திற்குத் தெரிவுசெய்யப்படுவானென அவனது ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவருக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அவர் வழங்கிய தண்டனை அவனது எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது.
அன்று வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி கூறிய வார்த்தைகள் அவரின் நெஞ்சைப் பிழந்தன. “பிள்ளையினுடைய வாழ்க்கையையே நாசமாக்கிப் போட்டீங்களே.... நீங்களும் ஒரு மனுசனா?”
அவர் மௌனம் சாதித்தார். அன்றிலிருந்து அவரது மனைவி அவருடன் கதைப்பதையே நிறுத்திவிட்டாள்.
அவரது இளையமகன் மகேந்திரன் கூறினான், “நீங்கள் ஒரு மனுநீதிகண்ட சோழனப்பா.”
அவன் எப்போதுமே இப்படித்தான், எதையாவது திடீரெனப் பெரிய வார்த்தைகளில் கூறுவான். அவன் ஒரு கவிதைப்பித்து ; எதிர்காலத்தில் தான் ஒரு பெருங்கவிஞனாக வரவேண்டுமென்ற எண்ணம். அதற்காகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டிருப்பான். அவற்றிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவான்.
மகேந்திரன் எந்த அர்த்தத்தில் அவ்வாறு கூறினான் என்பது அவருக்கு விளங்கவே இல்லை. மனுநீதிச்சோழன் தனது மகனின் தேர்ச்சில்லில் அகப்பட்டு இறந்த பசுக்கன்றுக்காக மகனையே தேர்ச்சில்லில் வைத்து நெரிக்கும்படி கட்டளையிட்டு நீதியை நிலைநாட்டியதைக் கூறுகின்றானா அல்லது ஆறறிவற்ற ஒரு மிருகம் தானாகவே தேர்ச்சில்லில் அகப்பட்டு இறந்ததற்காக பாசமற்ற தந்தையொருவன் தனது மகனைத் தேர்ச்சில்லிலே நெரித்துக் கொன்றதைப்போல நானும் எனது மகனின் எதிர்காலத்தைச் சாகடித்துவிட்டதாகக் கூறுகிறானா?
அவருக்கு எதுவுமே விளங்கவில்லை.
மகேந்திரனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். ராக்கிங் செய்வதாகக் கூறி அவனைத் தண்ணீரில் மூர்ச்சிக்கச் செய்தவர்கள் யார்? எவருமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை. மகேந்திரனுக்கு மூர்ச்சை தெளிந்தால் ஒருவேளை தெரியவரலாம். உயிராபத்தை விளை விக்கக்கூடிய இந்தச் செயலைச் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்
புண்ணியமூர்த்தி சோர்ந்துபோயிருந்தார். மாணவர்கள் ராக்கிங் செய்வதை மட்டும் நிறுத்தத் தயாராயில்லை. அவர் மாணவனாக இருந்த காலத்தில் ராக்கிங் என்பது பல்கலைக் கழகத்தில் சேரும் புதிய மாணவர்களைப் பல்கலைக்கழக வாழ்க்கைக்குத் தயாராக்கும் ஒரு சிறு விளையாட்டாகவே இருந்தது. ஆனால் இப்போது ராக்கிங் கொடூர வதையாக மாறிவருகிறது. ‘றூம் ராக்கிங்’, ‘கன்டில் ராக்கிங்’, ‘கம்பஸ் கள்ளு’ என்றெல்லாம் புதிய புதிய பெயர்கள்; புதுப்புது வதைகள் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ராக்கிங் பாடசாலைகளுக்கும் வந்து விட்டது. ராக்கிங் என்ற பெயரில் எவ்வளவு கேவலமான செயல்கள்..... உயிராபத்தான நடவடிக்கைகள்..... புதிய மாணவர்கள் யாவரும் ‘ஸஸ்பென்ரர்’ அணியாமல் பாடசாலைக்கு வரவேண்டுமாம். ராக்கிங் செய்பவர்களின் விசித்திரமான கட்டளை இது.
முதல்நாள் காலை அவர் வகுப்பறைகளைச் சுற்றிப் பார்த்தபோது நடந்த சம்பவமொன்று அவரது நினைவில் வந்தது.
கரும்பலகையில் ஓர் ‘ஐஸ்கிறீம் கோண்’ வரையப்பட்டிருந்தது. புதிய மாணவர்கள் இருவர் பின்புறமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு கரும்பலகையில் வரையப்பட்டிருந்த அந்தச் சித்திரத்தை நாக்கினால் நக்கிக்கொண்டிருந்தனர். புதிய மாணவர்களுக்கு ராக்கிங் செய்பவர்கள் ஐஸ்கிறீம் வழங்கி உபசரிக்கிறார்களாம். வகுப்பறை எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்... கைதட்டல்கள்...
வேறொரு புதிய மாணவன் வலதுகைப் பெருவிரலை நெற்றியிலும் இடதுகைப் பெருவிரலைக் கன்னத்திலும் வைத்துக் கொண்டு சுழன்றுகொண்டிருந்தான். நீண்டநேரமாக அவன் அவ்வாறு சுழன்றதால் தலைசுற்றித் தடுமாறினான். அவனைச் சுற்றிநின்ற ஒருகூட்டம் அவன் சுழல்வதை நிறுத்தும்போதெல்லாம் அவனைச் சுற்றிக்கொண்டிருந்தது. ‘கமோன்... கமோன்...’ சுழற்சியின் வேகத்தை அதிகரிக்கும்படி காட்டுக்கத்தல்.
புண்ணியமூர்த்தி வருவதைக் கண்டதும் அவர்கள் கப்சிப்பென அடங்கிப்போனார்கள்.
கவலை தோய்ந்த முகத்துடன் மகேந்திரனின் கட்டிலருகே புண்ணியமூர்த்தி அமர்ந்திருந்தார். அவரிடம் படித்த மாணவன் ஒருவன் இப்போது அந்த ஆஸ்பத்திரியில் தலைமை டொக்டராகக் கடமைபுரிகின்றான். கல்லூரி மாணவனாக இருந்தபோது அவன் செய்த சுட்டித்தனங்கள் கணக்கிலடங்காதவை. புதிய மாணவன் ஒருவனை ராக்கிங் செய்வதாகக்கூறி அவனது தலையில் அரைவாசிப் பகுதியை மொட்டையாக வழித்ததற்காக அவர் அவனை இரண்டு வாரங்கள் பாடசாலைக்கு வரவேண்டாமென ‘ஸஸ்பென்ட்’ செய்தது இப்போதும் புண்ணியமூர்த்திக்கு நினைவில் இருக்கிறது. அவன்தான் இப்போது மகேந்திரனுக்கு விசேஷ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறான்.
மகேந்திரனுக்கு நினைவு திரும்பியபோது மெதுவாகக் கண்விழித்தான். அருகே தந்தை கவலையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனது கண்கள் கலங்கின. புண்ணியமூர்த்தி அவனது நெற்றியை ஆதரவாகத் தடவிக்கொடுத்தார். பின்னர் மகனிடம் கேட்டார்.
“யார் உன்னை ராக்கிங் செய்தது ; தண்ணீரில் தள்ளியது யார்?”
மகேந்திரன் யோசித்துப் பார்த்தான். அவனால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் ! ஆம், ஒருவனை அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. உதடுகள் கிழிந்து கன்னம்வரை நீண்ட காயத்தழும்புகொண்ட ஒருவனை அவனால் அடையாளம் காட்டமுடியும்.
மகேந்திரன் முனகினான்.
“அப்பா...., ஒருவரும் என்னை ராக்கிங் செய்யேல்லை, நான்தான் படியிலிருந்து தவறுதலாக வழுக்கித் தண்ணீரில் விழுந்திட்டன்.”
- சுவடு 1996
++++++++++++++++++++++++++
சீட்டரிசி
கொழுந்துமடுவத்தின் முன்னால் பகல் கொழுந்து நிறுப்பதற்காகப் பெண்கள் வரிசையாக நின்றனர். கனத்துக் கொண்டிருந்த கொழுந்துக் கூடையை நிலத்தில் இறக்கி வைத்துவிட்டுத் தலையிலே கட்டியிருந்த கொங்காணியை அவிழ்த்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் பார்வதி. பதினைந்தாம் நம்பர் பணிய மலையிலிருந்து கொழுந்துக் கூடையுடன் மடுவத்தை நோக்கி ஏறிவந்ததால் மூச்சிரைத்தது. அவளைப்போலவே வரிசையில் நின்றிருந்த வேறுசில பெண்களும் நெற்றி வியர்வையைத் துடைத்தும் கொங்காணியால் விசிறியும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.
கொழுந்துமடுவத்தின் அருகேதான் தோட்டத்துப் பாடசாலை அமைந்திருக்கிறது. அங்குதான் பார்வதியின் மகன் கணேசு கல்வி கற்கிறான். பார்வதியைக் கண்டதும் ஓடிவந்து அவளது கைகளைப் பற்றிக்கொண்ட கணேசு, “ஆயா, சேரு ஒன்ன வரச் சொல்ராரு.....” எனப் பரபரத்தான்.
பார்வதி நிமிர்ந்து பார்த்தாள். தூரத்தில் பாடசாலை வாசலில் நின்றிருந்த ஆசிரியர் அறிமுகச் சிரிப்பை உதிர்த்தபடி தலையசைத்தார்.
வரிசையில் முன்னே நின்றிருந்தவளிடம் தனது கொழுந்துக் கூடையைக் கொடுத்து, “பூங்கோத, சேரு கூப்பிடுராரு..... என்னான்னு கேட்டிட்டு வந்துடுறேன்.... என் கொழுந்தையும் நிறுத்துப்புடு” எனக்கூறிய பார்வதி, கணேசுவையும் அழைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றாள்.
“வாங்கம்மா, ஒங்க புள்ளையப்பத்திக் கதைக்கத்தான் கூப்பிட்டேன் ....... கணேசு இந்தத்தடவை ஐஞ்சாம் ஆண்டு ஸ்கொலஷிப் சோதனை எடுக்கப்போறான் தெரியுமில்ல.”
“ஆமாங்க.”
சிலநாட்களாகப் பாடசாலைக்குப் புறப்படும்போது பயிற்சிப் புத்தகமும் கொப்பி பென்சிலும் வேண்டுமெனக் கணேசு கேட்டுக் கொண்டே இருந்தான். சென்ற தடவை சம்பளப்பணம் வீட்டுச் செலவுக்கே போதாமல் போய்விட்டதால் அவற்றை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்போது அதைப் பற்றிக் கதைப்பதற்காகத்தான் வாத்தியார் கூப்பிட்டிருக்கிறார் என்பதை அவள் ஊகித்துக் கொண்டாள்.
“நானும் எத்தனையோ தடவை சொல்லிப்பாத்திட்டேன். இவன் கொப்பி, பென்சில் இல்லாமல்தான் ஸ்கூலுக்கு வாறான். கணேசோட அப்பா கந்தையாகிட்டையும் கூப்பிட்டுச் சொன்னேன். தாய் தகப்பனுக்குப் பிள்ளமேல அக்கறை இல்லேன்னா நாங்க என்ன செய்யிறது?”
ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் பார்வதிக்குப் பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்தின. அவளது கணவன் இதுவரை இந்த விடயத்தைப்பற்றி அவளிடம் கூறாமல் விட்டதை நினைத்தபோது அவளுக்குக் கணவன் மேல் எரிச்சலாகவும் இருந்தது.
“ஆமாங்க, அவரும் சொன்னாருங்க...... ஆனா போனமாசம் சம்பளம் கொறைவுங்க. அவருக்கு அடிக்கடி வயித்துவலி வந்துறுது..... ஒழுங்கா வேலைக்குப் போறதில்லீங்க. எஞ்சம்பளத்திலதான் குடும்பமே ஓடுதுங்க.... அதுதான் கொஞ்சம் செரமமாய்ப் போச்சுங்க......”
“அது சரியம்மா, உங்க கஷ்டம் எனக்கு விளங்குது. நீங்க கஷ்டப்படுறமாதிரி உங்க பிள்ளையும் படக்கூடாதேன்னுதான் நான் சொல்றேன். அவனை எப்படியாவது படிக்கவைக்கிற வழியைப் பாருங்க. கணேசு ரொம்பக் கெட்டிக்காரன். நீங்க கொஞ்சம் அக்கறைப்பட்டா அவனை முன்னுக்குக் கொண்டு வந்திடலாம்.”
“சரிங்க, எப்புடியாவது எல்லாத்தையும் வாங்கித் தந்திடுறேன்..... அவனைப் படிக்கவைச்சு முன்னுக்குக் கொண்டாறது ஒங்க பொறுப்புங்க .......” எனக்கூறிக் கைகூப்பிவிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.
கணவனை நினைத்தபோது பார்வதிக்கு எரிச்சலாக இருந்தது. கொஞ்சங்கூட குடும்பத்தில் அக்கறையில்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குவரும் கணவன்மேல் அவளுக்குக் கோபமும் அதிகமாகியது.
இப்போது எங்கே பணத்திற்குப் போவது? டோபி லயத்துப் பெருமாயியிடம் கேட்டுப்பார்க்கலாமா எனப் பார்வதியின் சிந்தனை ஓடியது. அவசரத் தேவைகளுக்கெல்லாம் அவள்தான் பலதடவை உதவியிருக்கிறாள். ஆனாலும் முன்னர் அவளிடம் வாங்கிய கடன் அப்படியே இருக்கிறது. இப்போது மீண்டும் போய்க் கேட்பதற்குப் பார்வதியின் மனம் ஒப்பவில்லை.
பார்வதிக்கு இப்போது சீட்டரிசி ஞாபகந்தான் வந்தது. பணத்திற்கு ஒருவழி தேடுவதென்றால் எப்படியாவது இந்தமாதச் சீட்டரிசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பூங்கோதையிடம் கொழுந்துக் கூடையை வாங்கிக் கொண்டு நேராகப் பணிய லயத்தை நோக்கி நடந்தாள் பார்வதி. அங்குதான் சீட்டரிசிச் சிகப்பாயியின் வீடு இருக்கிறது. சிகப்பாயி பல வருடங்களாகச் சீட்டுப்பிடித்து வருகிறாள். தோட்டத்துப் பெண்களிடையே அவள் பிடிக்கும் சீட்டுகள் பிரபல்யம் வாய்ந்தவை. அரிசிச்சீட்டு, தூள்ச்சீட்டு, மாவுச்சீட்டு என வகை வகையாகச் சீட்டுகள் பிடித்தாலும் அவள் பிடிக்கும் அரிசிச் சீட்டுக்குதான் கிராக்கி அதிகம். அதனாலேதான் ‘சீட்டரிசிச் சிகப்பாயி’யென அடைமொழியும் அவளது பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.
பெண்களில் சிலர் தமது கணவன்மார்களுக்குத் தெரியாமல் சீட்டுப் பிடித்து சிறுதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் அரிசிச் சீட்டுத்தான் அனேகமான சந்தர்ப்பங்களில் கைகொடுத்து உதவுகிறது.
பார்வதி சிகப்பாயியின் வீட்டை அடைந்தபோது வேலை முடிந்து வந்த சிகப்பாயி ‘ஊத்துப்பீலி’ யில் கால்கை கழுவிக் கொண்டிருந்தாள்.
“என்ன பார்வதி, இந்த நேரத்தில வந்திருக்கே.... ஏதும் அவசரமா?”
“ஆமாங்கக்கா, ஒங்கிட்டத்தான் வந்திருக்கேன்....... முக்கியமான சங்கதி........ இந்தப்பயணம் சீட்டரிசியை எனக்குத் தந்து ஒதவணும்...... கணேசுவுக்கு அவசரமாகக் கொப்பி புஸ்தகம் வாங்கவேண்டிருக்கு... .”
“என்ன பார்வதி ஒனக்குத் தெரியாதா, இந்தப்பயணம் செல்லாயிக்குத்தான் சீட்டு. நேத்துக்கூட அவ கேட்டா. சீட்டரிசியை வித்துத்தான் புள்ளைக்கு மூக்குத்தி செய்யணுமுன்னு சொல்லிக் கிட்டிருந்தா.....”
சீட்டுப் போடுவதற்கு ஆட்கள் சேர்ந்ததும் துண்டெழுதிப் போட்டு குலுக்கல் முறையில் யார்யாருக்கு எத்தனையாவது சீட்டு என்பதைத் தெரிவுசெய்து முதலிலேயே சிகப்பாயி சொல்லிவிடுவாள். சீட்டுப் பிடிக்கும் சிகப்பாயிக்குத்தான் முதற்சீட்டு. சீட்டுப்போடுபவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு கொத்து அரிசியைச் சிகப்பாயியிடம் அளந்து கொடுத்துவிட வேண்டும். அப்படி அளந்து கொடுக்கும்போது மேலதிகமாக ஒருபிடி அரிசியையும் சேர்த்துத்தான் கொடுப்பது வழக்கம். மாதமுடிவில் சீட்டரிசியை உரியவருக்கு அளந்து கொடுத்துவிட்டு மேலதிக அரிசியைச் சிகப்பாயி எடுத்துக் கொள்வாள்.
“அக்கா நீ நெனைச்சா எதுசரி செய்யலாந்தானே..... இந்தப் பயணம் எப்புடிச்சரி சீட்டரிசியை எனக்குத் தந்திடு...... இந்த நேரத்தில சீட்டரிசி தேவைக்கு ஒதவாட்டிப்போனா அதுல என்ன பெரயோசனம்? அவசரத்துக்கு ஒதவும் என்னுதானே அந்த மனுசனுக்குத் தெரியாம சீட்டுப் போடுறேன்.” பார்வதி கெஞ்சும் குரலில் கூறினாள்.
பார்வதிக்கு இரண்டாவது சீட்டுத்தான் குலுக்கலில் தெரிவானது. அந்த மாசத்தில் பூங்கோதையின் மகள் பெரியவளாகியதால் சடங்குசுத்திச் சமைச்சுப் போடுவதற்கு அந்த மாதச் சீட்டரிசியைத் தனக்குத் தரும்படி பூங்கோதை மன்றாடியதால் பார்வதி அந்தச் சீட்டை அவளுக்கு விட்டுக்கொடுத்தாள். பூங்கோதைக்கு கிடைக்கவிருந்த கடைசிச் சீட்டுத்தான் இப்போது பார்வதிக்குக் கிடைக்கும்.
சிகப்பாயி யோசித்தாள். செல்லாயியிடம் பேசி எப்படியாவது இந்த மாதச் சீட்டைப் பார்வதிக்கு வாங்கிக் கொடுத்து விடவேண்டும். பார்வதி நீண்ட காலமாக அவளிடந்தான் சீட்டுப் போடுகிறாள். ஆனாலும் ஒருபோதாவது இப்படிச் சீட்டரிசியை முன்னுக்குத் தந்துதவும்படி வேண்டியதில்லை. அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மாதக்கடைசியில் அவள் புதிதாகத் ‘தூள் சீட்டு’த் தொடங்க இருக்கிறாள். பார்வதியை அதில் சேர்த்துக்கொண்டால் முதல் சீட்டை அவளுக்குக் கொடுத்து உதவலாம்.
“ஏம் பார்வதி, அடுத்த கெழம புதுசா தூள் சீட்டு தொடங்கிறேன், அதில சேந்துக்கிறியா?; எனக்குக் கெடைக்கிற மொத சீட்டை ஒனக்குத் தந்துடுறேன்..... ஒனக்குச் செலவுக்கும் கூடுதலாப் பணம் கெடைக்கும்.”
மாதத்தில் ஒருதடவை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அவர்களது பாவனைக்கென ஒரு பைக்கற் தேயிலை தோட்டத்தில் வழங்கப்படுவதால் அதற்கு ‘லேபர் டஸ்ற்’ என்று பெயர். இந்த லேபர் டஸ்ற் தேயிலையில் பிடிக்கப்படும் சீட்டுத்தான் தூள் சீட்டு.
“எம் புருசனைப்பத்தி ஒனக்குத் தெரியாதாக்கா... அந்த ஆளு, தூள் கெடைச்ச ஒடனேயே அதில ஒரு பக்கற் தூளை எடுத்துக்கிட்டுப்போய் லயத்துக் கடையில குடுத்து சாராயம் குடிப்பது... மாசக்கடைசியில சாயத்தண்ணி குடிக்கவே நாலு வீட்டில ஓசி கேட்டுப் பல்லு இளிக்கவேண்டியிருக்கு..... இந்த லச்சனத்தில நான் எங்க தூள் சீட்டுப் பிடிக்கிறது....” என்றாள் பார்வதி ஆதங்கத்துடன்.
முதல்நாள் நடுக்காம்பரா அருக்காணியிடம் கொஞ்சம் தேயிலைத் தூள் கேட்டபோது அவள் கூறிய வார்த்தைகள் பார்வதியின் நெஞ்சில் உறைத்தன. “தோட்டத்தில குடுக்கிற தூளை சாராயக்கடையில குடுத்து தண்ணியப் போட்டுக்கிட்டு ஓம்புருசன் லயத்தல பண்ணிற அட்டகாசம் தாங்க முடியல.... இதிலவேற ஓசித்தூள் கேட்டு எங்களுக்குக் கரச்சல்.” பார்வதிக்கு அவமானமாக இருந்தது ; திரும்பிவிட்டாள்.
“சரி பார்வதி, நீ யோசிக்காமப் போ..... புதிசா போடுற தூள் சீட்டைச் செல்லாயிக்குக் குடுத்துப் புட்டு ஒனக்கு இந்த மாசச் சீட்டரிசியைத் தந்திடுறேன்..... ஓம் புள்ளையைப் படிக்க வைக்க நீ கேக்கிறப்போ மறுக்கமுடியுமா......” என்றாள் சிகப்பாயி.
பார்வதிக்கு அவளது பேச்சு பால் வார்த்ததுபோல் இருந்தது. சிகப்பாயி ஒரு பேச்சுச் சொன்னால் ஒரு நாளும் மாறமாட்டாள்,
அரிசி சீட்டுப் போடுவதற்குப் பார்வதி வழக்கமாக ஒரு முறையைக் கையாண்டு வருகிறாள். ஒவ்வொரு நாளும் உலையில் அரிசி போடும்போது ஒருபிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு சட்டியில போட்டு வைப்பாள். கிழமை முடிவில் ஒரு கொத்து அரிசி தேறிவிடும். அதையே அவள் சீட்டரிசியாகச் சிகப்பாயியிடம் கொடுத்துவிடுவாள். அவள் மட்டுமல்ல தோட்டத்துப் பெண்களில் அனேகமானோர் இந்த முறையிலேதான் சீட்டரிசி போடுவது வழக்கம்.
சமையலுக்கு வேண்டிய சாமான்களைச் செலவுப் பெட்டியிலே தான் வைப்பார்கள். ஆனாலும் சீட்டரிசிக்காகச் சேர்த்து வைக்கும் பிடியரிசியைக் கணவனது கண்ணிலே பட்டுவிடக் கூடாதென்பதற்காகச் செலவுப் பெட்டியின் அடியிலே மறைத்து வைப்பாள் பார்வதி. கணவனுக்குப் பணம் தேவைப்படும்போது செலவுப் பெட்டியைத்தான் துழாவுவான் என்பது அவளுக்குத் தெரியும்.
பிடியரிசி எடுத்துவிடுவதால் பல நாட்கள் அரைவயிறும் பட்டினியுமாகப் பார்வதி காலங் கழித்திருக்கிறாள். கணவனும் அவளது மகனும் சாப்பிட்டதுபோக மீதியைத்தான் பார்வதி சாப்பிடுவாள். சோறு மீதப்படாத வேளைகளில் வெறும் சாயத்தண்ணீரைமட்டும் குடித்து விட்டுப் படுக்கையில் முடங்கிக் கொள்வாள். சில நாட்களில் வடித்த கஞ்சியில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டுப் படுப்பதுமுண்டு.
போன மாதத்தில் ஒருநாள் மட்டக்கொழுந்து மலையில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தபோது பார்வதிக்குத் தலை சுற்றியது. தேயிலைச் செடிகளை இருகைகளாலும் பற்றியபடி நின்றவள் சிறிதுநேரத்தில் மயங்கிச் சாய்ந்துவிட்டாள். மயக்கம் தெளிந்தபோது, கங்காணி அவளைத் தோட்டத்து ஆஸ்பத்திரிக்குக் கொழுந்து லொறியில் அனுப்பிவைத்தார். ஆனாலும் அவள் அங்கு செல்லாமல் லயத்துக்குத் திரும்பிவிட்டாள். அவளுக்கு மட்டுந்தான் தெரியும், அது பசிமயக்கம் என்று.
கணேசுவின் பள்ளிக்கூட உடுப்பு சேறும் சகதியுமாய் இருந்தது. பாடசாலையில் இனாமாகக் கொடுத்த சீருடைத் துணியில் தைத்த அந்த ஒருசோடி உடுப்பையே கணேசு தினமும் பாடசாலைக்கு உடுத்திச் செல்வான். அதைத் துவைத்து இஸ்தோப்பில் அடுப்புக்கு நேராக மேலேசெருகியிருந்த மட்டக் கம்பிலே கொழுவி உலரவிட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. இப்படிக் காயவிடும்போது புகைக்காவி படிந்து வெள்ளைநிற சேட் கருமையடைந்துவிடும்.
“சேட் ஒரே புகைபுடிச்சுக் கிடக்குன்னு பொடியங்கள் நக்கல் அடிக்கிறாங்க ஆயி” எனப் பலதடவை கணேசு அவளிடம் கூறியிருக்கிறான்.
சீட்டரிசி கிடைத்ததும் அதனை விற்றுக்கிடைக்கும் பணத்தில் பயிற்சிப் புத்தகமும் கொப்பி பென்சிலும் வாங்கியபின் மீதிப்பணத்தில் கணேசுவுக்கு ஒரு சோடி கால்சட்டை சேட் தைத்துவிடவேண்டும்.
பார்வதி இரவுச் சாப்பாட்டைச் சமைத்து முடித்த வேளையில் அவளது கணவன் கந்தையா தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான். அவன் வந்த கோலத்தைப் பார்த்தபோது பார்வதிக்கு ஆத்திரம் பொங்கியது.
“தெனமும் இப்புடி மூக்குமுட்டக் குடிச்சு அநியாயம் பண்ணுறியே ஒனக்கு அறிவிருக்கா ?”
“என்னடி வந்ததும் வராததுமா தொணதொணங்கிறே....” கந்தையா அவளைப் பார்த்து முறைத்தான்.
“நான் ஏதாவது சொல்ல வந்தேன்ன, தொணதொணக்கிறேன்னு என் வாய அடக்கிப்புடுவே...... இன்னிக்கு வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா...... நம்ம கணேசுவுக்குக் கொப்பி பொஸ்தகம் வாங்கிக் குடுக்கச் சொல்லி போனகெழமையே ஒன்னைக் கூப்பிட்டுச் சொன்னாராம் ; கவனிச்சியா? ”
“ஆமாடி, வாத்தியாரு நம்மளைக் கண்டா ஏதாவது சொல்லத்தான் செய்வாரு. அவர் சொன்னபடியெல்லாம் வாங்கிக் கொடுக்க எந்த நேரமும் நம்ம கையில மடியில காசிருக்கா? ”
“நாளு தவறாமக் குடிக்கிறதுக்கு மட்டும் காசிருக்காக்கும்.”
“என்னடி சொன்னே....?” என ஆத்திரத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்த கந்தையா, எட்டி அவளது வயிற்றில் உதைத்தான். “குட்டி போட்ட நாயி மாதிரி...... எந்த நாளும் ஒங்கிட்டக் கரச்சலா இருக்கு... சும்மா வளவளன்னு கத்திக்கிட்டு.....” அவனது கோபம் தணியவில்லை.
“ஐயோ” என அலறியபடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு நிலத்திலே குந்தினாள் பார்வதி.
இன்று சாராயக் கடையில் அவனுக்கு நேர்ந்த அவமானம் அவனை இப்போது நிதானமிழக்க வைத்துவிட்டது. அவன் எப்போதும் ஸ்டோர் லயத்து வெள்ளையன் கடையிலேதான் சாராயம் குடிப்பான். வெள்ளையனின் பலசரக்குக்கடை ஸ்டோர் லயத்தில் இருக்கிறது. பல சரக்குக் கடையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட இரகசியமாகச் செய்யும் சாராய வியாபாரத்திலேதான் அவனுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தினமும் மாலை வேளைகளில் பலர் அவனது கடையில் சாராயம் குடிப்பார்கள். தெரிந்தவர்களுக்குக் கடனுக்கும் சாராயம் கொடுத்துவிட்டுச் சம்பள நாட்களில் அந்தப் பணத்தை வசூலித்து விடுவான் வெள்ளையன். அன்று கந்தையா சாராயம் குடிக்கச் சென்ற போது, வெள்ளையன் சற்றுக் காரசாரமாகவே பேசினான்.
“கந்தையா கடன் கூடிப்போச்சுன்னு நேத்தே சொன்னேன். எந்த நாளும் கடன் குடுக்கேலாது..... நான் இன்னிக்குக் கெடைக்கிற சல்லிய வச்சுத்தான் நாளைக்குச் சாமான் வாங்கிக்கிட்டு வரணும். அதனால கோவிச்சுக்காம சல்லியைக் கொணந்து கட்டிட்டு அப்புறமா வா...”
“என்னங்கண்ணே, ஒங்க சல்லிய நான் எப்பவாவது கொடுக்காம வுட்டிருக்கேனா.... சம்பளத்துக்கு முந்தியே கொணந்து தந்திறேன். இன்னிக்கு மட்டும் ஒரு காப்போத்தல் தாங்க.... ”
“அதெல்லாம் முடியாதப்பா.... நேத்தே சொன்னேன்தானே இன்னிக்கு சல்லியில்லாம வரவேணாமுன்னு ; சும்மா கரச்சல் பண்ணாதப்பா.”
“என்ன முடியாதுங்கிறே, எப்பசரி நான் கடன் கொடுக்காம வுட்டிருக்கேனா... போனமாசங்கூட சல்லிகட்டேலாம வீட்டில இருந்த லெச்சுமி விளக்கைக் கொண்டாந்து குடுத்து என் கடனைத் தீர்க்கலியா... அநியாயமாத்தானே அந்த விளக்கைக் கொறஞ்ச வெலைக்கு வாங்கினே....”
“இந்தா தேவையில்லாத பேச்சுப்பேசாத... எனக்கு கோவம் வந்துச்சுன்னா நடக்கிறதே வேற” என்றான் வெள்ளையன் சினத்துடன்.
“என்ன செஞ்சுபுடுவே.... நீ கள்ளத்தனமா லயத்தில சாராயம் விக்கிறதப் பொலிசுக்குச் சொன்னேன்னா அப்புறம் நீ றிமாண்டிலதான் கெடக்கணும்.”
“இந்தா கந்தையா வீண் பேச்செல்லாம் வேணாம்.... இன்னிக்கு மட்டும் தாறேன். நாளைக்குச் சல்லியில்லாம வராத” எனக்கூறி கால்போத்தல் சாராயத்தை ஊற்றிவந்து கந்தையாவிடம் கொடுத்தான் வெள்ளையன்.
மூலையில் குடித்துக் கொண்டிருந்த கங்காணி ஒருவர் “என்ன கந்தையா நம்மவூட்டுக் கௌரவத்தைக் காப்பாத்தணுமில்லியா. இந்த மாதிரி சொல்லுக்கு இடம் வைக்கக்கூடாது..... நாளைக்கே கொண்டாந்து அந்தச் சல்லியை வீசிப்புடு.... அப்பதான் நமக்கும் கௌரவம்” எனத் தடுமாற்றத்துடன் கூறினார்.
“கங்காணியாரே, நான் வழுவட்டைத்தனமா நடந்துக்கவே மாட்டேன். கையில சல்லியிருந்தா ஒடனேயே வீசிப்புட மாட்டேனா?”
“யாவாரம் கெட்டுப்போகும் கந்தையா ; சும்மா சும்மா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காத, நேரத்தோட வீட்டுக்குப்போ.... வெளிச்சம் இருக்குத்தானே......”
வெள்ளையன் இப்படிக் கூறியபோது, அவன் தன்னை வெளியே விரட்டுவது போன்ற உணர்வுதான் கந்தையாவுக்கு ஏற்பட்டது. தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தான்.
வெள்ளையன் மேல் ஏற்பட்ட கோபத்தை இப்போது பார்வதியின் மேல்தான் தீர்க்க முடிந்தது கந்தையாவுக்கு.
அடிவயிற்றைப் பிடித்தபடி சிறிது நேரம் குந்தியிருந்த பார்வதி ஆவேசமாக எழுந்தாள்.
மூலையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த கணேசுவை உசுப்பி, “அடே கணேசு எந்திரடா..... வா இப்பவே ஒன் தாத்தா வீட்டுக்குப் போவோம்.... இந்தப்பாவி மனுசனோட வாழ ஏலாது... எந்த நாளும் குடிச்சுப்புட்டு வந்து அடியும் ஒதையுந்தான்....” பார்வதியின் குரலில் உறுதி தொனித்தது.
“என்னடி சொன்னே... என்னைவுட்டுப் போயிடுவியா நீ?”
“ஆமா, நான் இப்பவே போறேன். என் ஆயி அப்பன் குடுத்த நகைநட்டு சாமானத்தையெல்லாம் அழிச்சிட்டே.... வீடே மொட்டையாப் போச்சு.... இனி நான் மட்டுந்தான் கொறையாயிருக்கு.... ஒன்கூட இருந்தேன்னா என் புள்ளையோட படிப்பும் நாசமாப்போம்.”
பார்வதியின் குரலில் இருந்த உறுதி கந்தையாவைத் திகைக்க வைத்தது. அவள் இப்படி ஒருபோதும் அவனைப் பிரிந்துசெல்ல முடிவு செய்ததில்லை.
கந்தையா பார்வதியின் அருகே சென்று அவளது கைகளைப் பற்றினான்.
“பார்வதி, என்ன வுட்டுட்டுப் போயிடாதெடி” அவனது குரல் நடுங்கியது.
“வுடுய்யா கையை... நான் சொன்னாச் சொன்னதுதான்...” பார்வதி அவனது பிடியிலிருந்து கைகளை விடுவிக்கத் திமிறினாள்.
“பார்வதி ஒம்மேல சத்தியமாச் சொல்றேன். இனிமே நான் குடிக்கவேமாட்டேன். நீ மட்டும் என்னை வுட்டுப் போயிடாத” அவன் அவளது தலையில் கையைவைத்துச் சத்தியஞ் செய்தான். அவனது குரல் கரகரத்தது; கண்கள் கலங்கின.
“கையை வுடுங்கன்னா வுடுங்க... எத்தன தரம் இப்புடிச் சத்தியம் பண்ணியிருக்கீங்க.... ஒங்க சத்தியத்தை நான் நம்பவே மாட்டேன்.”
“பார்வதி, கடைசியாச் சொல்றேன்.. இனிமே நான் குடிச்சிட்டு வந்தேன்னா நீ என்னை வுட்டுப்போயிடு. இப்ப போவேணாம்.” அவன் கெஞ்சினான்.
படுக்கையில் இருந்து எழுந்த கணேசு கண்ணைக் கசக்கிக் கொண்டு திகைப்புடன் தாயையும் தந்தையையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தான்.
“சரி சரி கையை வுடுங்க, சாப்பாடு போடுறேன்... சாப்பிட்டுப் படுங்க.”
பார்வதி அவனுக்கும் கணேசுவுக்கும் சாப்பாட்டுக் கோப்பையில் சோற்றைப் போட்டுக் கொடுத்தாள்.
கந்தையாவினால் சாப்பிட முடியவில்லை. சிறிது உணவை அருந்திவிட்டுக் கையைக் கழுவினான். காதில் செருகியிருந்த பீடியை எடுத்து அடுப்பில் கிடந்த கொள்ளிக்கட்டையில் பற்றவைத்துக் கொண்டே சாக்கை விரித்து மூலையில் சாய்ந்து கொண்டான்.
பார்வதி எதுவுமே பேசவில்லை. அவளது மௌனம் அவனை வருத்தியது.
“என்ன பார்வதி மூஞ்சியை உம்முன்னு வைச்சுக்கிட்டு இருக்கே.. ஏதோ குடிமயக்கத்தில் காலை நீட்டிப்புட்டேன். அத மனசுல வச்சுக்காத.. இனிமே சத்தியமா ஒம்மேல கையை வைக்க மாட்டேன்.”
இதுவரை நேரமும் அடுப்பின் முன்னால் குந்தியிருந்த பார்வதி இப்போது விம்மிவிம்மி அழுதாள்.
அவன் எழுந்து சென்று ஆதரவாக அவளது தலையைத் தடவிவிட்டான்.
அவள் விம்மலிடையே கூறினாள். “ஏன் இந்தக் குடியை வுடமாட்டேங்கிறீங்க? இங்கபாருங்க, தொங்கல் காம்பராவில இருக்கிற கருப்பாயி கம்முனாட்டியா இருந்துக்கிட்டே புள்ளையைப் படிக்கவைச்சு இன்னிக்கு மாஸ்டர் ஆக்கலியா... நீங்க இந்தக் குடிய மட்டும் வுட்டுப்புட்டீங்கன்னா நமக்கு ஒரு கஸ்டமும் இருக்காது.... நமக்கு இருக்கிறதே ஒரு புள்ளதான். அவனையும் நல்லாப் படிக்க வைக்கலாம்.”
“சரி பார்வதி, நான்தான் குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டேனே... இன்னும் நம்பிக்கையில்லையா..... சரி சரி எந்திரு, சாப்பிட்டுப் படுத்துக்க....”
கந்தையா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். என்றுமில்லாதவாறு அவனது உள்ளம் பதகளித்துக் கொண்டிருந்தது. பார்வதியுடன் இதுவரை காலமும் வாழ்ந்த வாழ்க்கையை அவன் எண்ணிப்பார்த்தான். புதுமணப்பெண்ணாக அவள் அவனிடம் வந்தபோது எவ்வளவு சீரும் சிறப்புடனும் வந்தாள். நகை நட்டும் பொருள்பண்டமுமாக அவள் கொண்டுவந்த எல்லாவற்றையும் அவன் குடித்துக் குடித்து அழித்துவிட்டான். அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் வறுமையும் துன்பமும்தான். இதுவரை காலத்தில் அவள் தனக்காக எதையுமே அவனிடம் வேண்டியதில்லை. பிள்ளையின் முன்னேற்றத்துக்காக அவனைப் படிக்க வைப்பதற்காக இந்தப் பாழாய்ப்போன குடிப்பழக்கத்தைத்தான் விட்டுவிடும்படி தினந்தினம் வேண்டுகிறாள்.
அவன் எழுந்து சென்று மீண்டும் பீடி ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான். பார்வதியும் நித்திரையின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.
* * * * *
சீட்டரிசியை வந்து பெற்றுக்கொள்ளும்படி சிகப்பாயி சொல்லியனுப்பியிருந்தாள்.
கொழுந்துக் காலமாதலால் ஞாயிற்றுக்கிழமையும் தோட்டத்தில் வேலை கொடுத்தார்கள். பகல்கொழுந்து நிறுத்து முடிந்ததும் பார்வதி சிகப்பாயியிடம் சென்றபோது அவள் சீட்டரிசியை அளந்து கொடுத்தாள். நாற்பது கொத்து அரிசியைச் சாக்குடன் தூக்கி முதுகிலே வைத்தபோது கொழுந்து நிறைந்த கூடையைப்போல் அது பெருஞ்சுமையாய்க் கனத்தது.
“ பார்வதி, சீட்டரிசியை லயத்துக்கடையில வித்தியென்னா அநியாய விலைக்குத்தான் எடுப்பாங்க.... டவுனில கொண்டு போய்க்கொடுத்தா நூறுரூபா சரி கூடக்கிடைக்கும்” எனப் புத்திமதி கூறினாள் சிகப்பாயி.
சீட்டரிசியை வீட்டுக்குக் கொண்டுவந்ததும் அதனை இஸ்தோப்பில் கோழி அடைக்கும் மூலையில் வைத்து கோழிக் கூடையால் மூடிவைத்தாள் பார்வதி. புருஷனுக்குத் தெரியாமல் அதனை விற்பதானால் அந்திக்கு வேலைவிட்டு வந்ததும் லயத்துக் கடையிலேதான் விற்கவேண்டும். அரிசியோடு டவுனுக்குப் புறப்பட்டுச் சென்றால் அது புருஷனுக்குத் தெரியவந்துவிடும்.
பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டுவந்ததும் அவள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டபோதுதான் கந்தையா கவ்வாத்து முடிந்து வீட்டுக்குத் திரும்பினான். நான்கைந்து நாட்களாக அவன் வெள்ளையனின் சாராயக் கடைப்பக்கம் போகாமல் இருப்பது பார்வதிக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. ஆனாலும் மாலை வேளைகளில் அவன் எங்கோ வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குப் பிந்தி வருவதுதான் அவளுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது.
பார்வதிக்கு மலையில் வேலையோடவில்லை. அந்திக்கு அவள் புருஷன் வீட்டுக்குத் திரும்புமுன் சீட்டரிசியை எடுத்துச் சென்று விற்றுக் காசாக்கிவிடவேண்டும்.
அன்று பிந்தித்தான் அந்திக் கொழுந்து நிறுத்தார்கள். அவள் வீட்டுக்குத் திரும்பியபோது கணேசு லயத்தின் முன்னால் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
கொழுந்துக் கூடையை விறாந்தையில் இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு சீட்டரிசியை எடுப்பதற்காக உள்ளே சென்றாள் பார்வதி.
அங்கே அவள் கண்ட காட்சி.....
கோழிக் கூடை திறந்தபடி மூலையில் கிடந்தது. அவள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்த சீட்டரிசி மூடையோடு காணாமல் போய்விட்டது. பார்வதிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. தலை சுற்றியது. “ஐயோ” என அலறியபடி நிலத்திலே குந்தினாள்.
பார்வதியின் மனதில் வைராக்கியம் புகுந்துகொண்டது. அவள் தனது வாழ்க்கைப் பாதையைச் சீராக்க வேண்டிய காலம் வந்துவிட்டதெனத் திடமாக எண்ணினாள். அவளது உடைமையாக இருந்த இரண்டொரு துணிமணிகளையும் கணேசுவின் பாடசாலை உடுப்பையும் எடுத்துக் கொழுந்துக்கூடையில் போட்டுக் கொண்டாள்.
“வாடா கணேசு..... பொறப்படு....., இனி இந்த வீட்டில நாம இருக்கக்கூடாதடா..... ஒங்கப்பன் திருந்தவே மாட்டான். நீ இங்க இருந்தியென்னா ஒன் படிப்பும் நாசமாப்போம்.....” அவள் கணேசுவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
அப்போது அவசர அவசரமாக அங்கே வந்து சேர்ந்தான் கந்தையா.
“எங்க பொறப்பட்டுட்டே பார்வதி? குடிகாறன் திருந்தவே மாட்டான்னு நெனைச்சுத்தானே சீட்டரிசியைக் கோழிக் கூடையால மறைச்சுவச்சே.... என்மேல ஒனக்கு இன்னமும் நம்பிக்கை வரல்லியா? சீட்டரிசியை எடுத்து செலவுப் பெட்டிக் குள்ள வச்சிருக்கேன்.... நான் திருந்தியிட்டேன் பார்வதி..... போய்ப்பாரு.”
பார்வதியின் உள்ளம் சந்தோஷத்தால் விம்மியது. அவள் தனது செயலுக்காக இப்போது பெரிதும் வெட்கப்பட்டாள்.
“இல்லீங்க... இப்ப ஒங்கமேல எனக்கு நம்பிக்கை வந்துருச்சுங்க...” எனக்கூறிய பார்வதி “நீங்களே அந்தச் சீட்டரிசியைக் கொண்டுபோய் செலவுக் கடையில வித்து சல்லிய வாங்கிக்கிட்டு வாங்க... நாளைக்கு கணேசுவுக்கு வேண்டிய கொப்பி புஸ்தகம் வாங்கிக்குவோம்” என்றாள்.
“அதெல்லாம் வேணாம் பார்வதி; நான் அந்தி அந்திக்கு நாட்டில போயி கைக்காசுக்கு வேலசெஞ்சு நாலுநாள் சம்பளம் வாங்கியிருக்கேன்... அதில கணேசுவுக்கு புஸ்தகம் வாங்கலாம்....” என்றவன் மடியில் இருந்த பணநோட்டுகளை எடுத்து அவளது கைகளில் திணித்தான்.
பார்வதி மெய்மறந்தவளாய் “என்வூட்டு ராசால்ல....” எனக்கூறி அவனைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தாள்.
அவர்களது செலவுப் பெட்டியை சீட்டரிசி நிறைத்திருந்தது.
- வீரகேசரி 1997
உழைக்கப் பிறந்தவர்கள் - சிறுகதைத் தொகுதி
+++++++++++++++++++++++++
கருவறை எழுதிய தீர்ப்பு !
நடுச்சாம வேளை.
டெலிபோன் மணி அலறியது. தூக்கக்கலக்கத்துடன் ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ என்றேன்.
“கோல் ஃபுறம் ஸ்ரீலங்கா, புரபெஸர் சுந்தரலிங்கத்துடன் பேசவேண்டும்.”
“ஸ்பீக்கிங்.”
“மிஸ்டர் பெரேராவின் நண்பன் பேசுகிறேன். அவரது மகன் சுனில் இறந்துவிட்டான். பெரேரா இத்தகவலை உங்களுக்குத் தெரிவிக்கும்படி கூறினார்.”
“வட்.. வட் ஹப்பின்ட்?”
“விடுதலைப் போராளிகள் சுனில் ஓட்டிச்சென்ற போர் விமானத்தைச் சுட்டு விழுத்திவிட்டார்கள். சுனிலின் உடல் கருகிய நிலையிலேதான் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகக் கிடைத்தது. மரணச் சடங்குகள் நாளை மறுதினம் இராணுவ மரியாதையுடன் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.”
“ஓ மை காட்” எனக்குத் தலை சுற்றுவதைப்போல இருந்தது. ரிசீவரை வைத்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்தபோது மனைவி விபரம் கேட்டாள்; கூறினேன்.
“சுனில் இராணுவத்தில் பைலட்டாகச் சேர்வதை அநுமதிக்க வேண்டாமென்று ஆரம்பத்திலேயே நீங்கள் பலமுறை பெரேராவிடம் சொன்னீர்கள்; அவர்கள் கேட்கவில்லை. பெரேராவின் மனைவி ஸ்ரீமணிதான் பாவம், ஒரே மகனை இழந்ததில் பெரிதும் துடித்துப்போவாள்.”
எனது மனைவியின் குரலில் வேதனை தொனித்தது. கவலையுடன் இருந்தவள் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள்.
என்னால் தூங்க முடியவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு நான் கொழும்பு மருத்துவக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது எங்களது வீட்டிற்கு அயலிலேதான் பெரேராவின் வீடும் இருந்தது. அவர் அப்போது இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
அப்போதுதான் அந்தப் பயங்கரமான இனக்கலவரம் வெடித்தது. சிங்கள இனவெறியர்கள் தமிழர்களைத் தேடிக் கொன்று குவித்தார்கள். தமிழர்களது உடைமைகளைக் கொள்ளையடித்துத் தீவைத்துக் கொழுத்தினார்கள். என்னையும் என் மனைவியையும் தெருவுக்கு இழுத்துவந்து உடலிலே பெற்றோல் ஊற்றித் தீவைப்பதற்கு ஆயத்தமானபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.
‘டுமீல் டுமீல்’ என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் பறந்து வந்தன. ‘ஐயோ அம்மே’ என அலறியபடி சிலர் துடித்து விழுந்தனர். பலர் ஓடித் தப்பினர். பெரேரா துப்பாக்கியுடன் வந்து எங்களைக் காப்பாற்றித் தனது வீட்டில் அடைக்கலந் தந்தார்.
அதன்பின் நான் வெகுகாலம் இலங்கையில் இருக்கவில்லை. மனைவியுடன் புலம்பெயர்ந்து லண்டனுக்கு வந்து விட்டேன்.
மருத்துவக் கல்லூரி ஒன்றில் எனக்கு விரிவுரையாளராக வேலை கிடைத்தது. சில வருடங்களிலேயே மகப்பேற்றுத்துறைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன்.
சிலவருட இடைவெளிக்குப்பின் பெரேரா மூன்றுமாத லீவில் தனது மனைவியுடன் லண்டனுக்கு வந்தார். திருமணமாகி வெகுகாலமாகியும் குழந்தைகள் இல்லாததால் என்னிடம் வைத்திய உதவியை நாடினார்.
நான் அவரையும் மனைவியையும் பரிசோதித்தேன். பெரேராவின் ‘ஸ்பேர்ம் கவுன்ற்’ றிப்போர்ட்டைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெரேராவினால் ஒரு குழந்தைக்குத் தந்தையாக முடியாது. அவரது ஸ்கலிதத்தில் உயிருள்ள விந்துகள் இருக்கவில்லை. ஆனாலும் அவரது மனைவி ஸ்ரீமணியின் உடலமைப்பில் எவ்விதக் குறைபாடும் இல்லை.
அவளால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும்.
நான் இதனைக் கூறியபோது பெரேரா பெரிதும் மனக்குழப்பம் அடைந்தார். குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்கலாமா? என என்னிடம் அபிப்பிராயம் கேட்டார்.
நான் நவீன மருத்துவ முறைகளை அவருக்கு விளக்கினேன். வேறொரு ஆணின் விந்தினைப் பெற்று குழாய் மூலம் ஸ்ரீமணியின் கருப்பைக்குள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யலாம். இந்த முறையில் கருத்தரிக்கும் போது தாயினது ‘ஜீன்ஸ்’ குழந்தைக்கு வருவதால் பெற்றோரது ஐம்பது வீதப் பரம்பரை அலகுகள் குழந்தைக்கு வந்துவிடுகின்றன. தத்தெடுக்கப்படும் குழந்தையை வேறொருவரது குழந்தையாகவே சமூகம் கணிக்கிறது. ஆனால் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை பெற்றோரது குழந்தையாகவே சமூகத்தின் கணிப்பைப் பெறுகிறது” என்றேன்.
பெரேரா செயற்கைமுறைக் கருத்தரித்தலுக்கு விருப்பம் தெரிவித்தபோதும் ஸ்ரீமணி தயக்கம் காட்டினாள்.
“டொக்டர், அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறீர்கள்? உங்கள் மனைவியையும் நீங்கள் கூறிய செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்திருக்கலாமே” என என்னை மடக்கினாள்.
நான் வேதனையுடன் கூறினேன், “அதுதான் விதி.... எனது மனைவிக்கு ‘ஃபைபுறோயிட்’ எனப்படும் கருப்பைக் கட்டிகள் வளர்ந்து தொல்லை கொடுத்ததால், அவளது கருப்பையையே சத்திரசிகிச்சை மூலம் நீக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. அவள் கருத்தரிப்பதற்குச் சந்தர்ப்பமேயில்லை.”
அதன் பின்புதான் ஸ்ரீமணி ஒருவாறு செயற்கைமுறைக் கருத்தரித்தலுக்குச் சம்மதம் தெரிவித்தாள்.
மறுவாரத்தில் ஒருநாள் பெரேராவும் மனைவியும் ஒரு புதிய பிரச்சினையுடன் என்னைச் சந்தித்தார்கள். “ஸ்ரீமணி மனோரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். நேற்றிரவு என்னை நடுச்சாமத்தில் எழுப்பி, தனக்கு வெள்ளைத்தோலும் பூனைக் கண்ணும் செம்படைத் தலைமயிருமாக ஒரு குழந்தை பிறக்கக் கனவு கண்டதாகக் கூறினாள்” எனப் பெரேரா சொன்னார்.
அவரைத் தொடர்ந்து ஸ்ரீமணி, இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதேபோன்று நீக்குரோ இனக் குழந்தையொன்று தனக்குப் பிறக்கக் கண்டதாகக் கூறினாள்.
“உங்களது மருத்துவ முறைப்படி ஸ்ரீமணிக்கு பிறக்கும் குழந்தை ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடன் இருக்குமா?” எனக் கவலையுடன் கேட்டார் பெரேரா.
ஸ்ரீமணியின் மனக்குழப்பம் எனக்குப் புரிந்தது. என்னிடம் பயிற்சிபெறும் பலதேசத்து மாணவர்களை அவள் எனது
‘கிளினிக்’ கில் பார்த்திருக்கிறாள். அவர்கள் யாரிடமாவது விந்தினைப் பெற்று தனது கருக்கட்டலுக்குப் பாவித்து விடுவேனோ என அவளது உள்மனம் பயப்படுகிறது.
நான் சிரித்துவிட்டு, “பயப்படாதீர்கள் இங்கு ‘விந்து வங்கி’ ஒன்று இருக்கிறது. அதில் விந்து வழங்கத் தகுதியானவர்கள் பலரது விந்துகள் சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பற்றிய விபரங்களும் எம்மிடம் உள்ளன. பெரேராவின் உயரம், தோற்றம், நிறம் முதலியன பொருந்தக்கூடிய ஒருவரது விந்திணை உங்களது கருக்கட்டலுக்குப் பாவிப்பேன். பிறக்கும் குழந்தை ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடனேயே பிறக்கும்” என அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.
‘ஆர்ட்டிபிஷல் இன்ஸெமினேஷன்’ முறையில் ஸ்ரீமணியைக் கருத்தரிக்கவைத்தேன். மூன்றாம் மாதமே அவர்கள் ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.
ஸ்ரீமணிக்கு ஆண் குழந்தை பிறந்தபோது பெரேரா அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. எனக்கு உடனே டெலிபோன் செய்து ஆயிரம் நன்றிகள் கூறினார். குழந்தை அச்சொட்டாக ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடனேயே இருக்கிறது என்றார். ‘சுனில்’ என்ற தனது பாட்டனாரின் பெயரையே குழந்தைக்கு வைக்கப்போவதாகச் சொல்லிக் குதூகலித்தார். அதன்பின் சுனிலின் வளர்ச்சிக்கட்டம் ஒவ்வொன்றின் போதும் என்னிடம் டெலிபோன் செய்து உரையாடி மகிழ்வார். அபிப்பிராயங்களைப் பரிமாறுவார், ஆலோசனைகள் கேட்பார்.
சுனில் வளர்ந்து இளைஞனாகி இராணுவ விமானம் ஓட்டும் பைலட்டாகப் பயிற்சிக்குத் தெரிவானபோது அந்தத் தொழில் ஆபத்தானது, வேண்டாம் என நான் தடுத்தேன். ஆனால் சுனில் பைலட் ஆவதில் பிடிவாதமாக இருப்பதாகப் பெரேரா கூறினார்.
சுனிலின் வீரதீரச் செயல்களைப் பெரேரா அடிக்கடி என்னிடம் கூறுவார். போராளிகளின்மேல் குண்டுமழை பொழிந்து எவ்வாறு அவர்களைத் துவம்சம் பண்ணினான் என விபரிப்பார். அப்போ தெல்லாம் இனம்புரியாத வேதனை என்னை வாட்டும்.
‘ரிவிரஸ’ இராணுவ நடவடிக்கையின்போது குண்டுமழை பொழிந்து யாழ்ப்பாண மக்களை அநாதைகளாக்கி விரட்டியடிக்க உதவியவன் சுனில்தானா? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உயிருடன் சமாதி கட்டியவன் அவன்தானா? இரவில் படுக்கையில் சாயும் போதெல்லாம் இத்தகைய எண்ணங்களினால் என்மனம் தத்தளிக்கும், ஆனாலும் விடுதலைப் போராளிகளினால் அடிக்கடி விமானங்கள் சுட்டுவிழுத்தப் படும்போது என்மனம் துணுக்குறும். சுட்டுவிழுத்தப்பட்ட விமானம் சுனில் ஓட்டிச்சென்றதாக இருக்கக் கூடாதேயென மனசு பிரார்த்திக்கும் ; இருதலைக் கொள்ளி எறும்பாய்த் துடிக்கும்.
மறுநாள் நான் சுனிலின் மரணச்சடங்குகளில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டேன். அப்போது என்மனைவி என்னை ஆச்சரியத்துடன் நோக்கினாள். ஆனாலும் தடையேதும் கூறவில்லை. பெரேரா இனக்கலவரத்தின்போது எங்களைக் காப்பாற்றியது அவள் நினைவில் வந்திருக்கலாம்.
பெரேரா என்னைக் கண்டதும் விரைந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார். ஸ்ரீமணி என் காலடியில் விழுந்து மயக்கமடைந்தாள்.
சுனிலின் கருகிய உடலை நான் பார்த்ததும் என்னுள் அடக்கிவைத்திருந்த சோகம் அத்தனையும் திரண்டு பிரவாகித்தது. எனது உடல் குலுங்க விம்மிவிம்மி அழுதேன்.
சுனில் எனது விந்து! என் மகன்! என்ற உண்மையை நான் யாரிடந்தான் சொல்ல முடியும் ?
- தினக்குரல் 1997.
++++++++++++++++++++++++++++++++
திருப்புமுனைத் தரிப்புகள்
காலையிலிருந்து பெருமாள் பலவாறான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அந்தியானதும் பங்களாவுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி கண்டக்டர் பிரட்டுக்களத்தில் கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறினால் ஏதோ முக்கியமான சங்கதியாகத்தான் இருக்க வேண்டும்.
லயத்தின் முன்னால் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தங்கராசுவிடம் “ஆயா வந்தா நான் கண்டக்டரையா பங்களாவுக்குப் போயிருக்கேன்னு சொல்லுடா” எனக்கூறிவிட்டுக் குறுக்குப் பாதையில் ஏறிக் கண்டக்டரின் பங்களாவை வந்தடைந்தான் பெருமாள்.
முன்விறாந்தையில் செக்றோல் செய்து கொண்டிருந்த கண்டக்டர் பெருமாளைக் கண்டதும், “வா பெருமாளு ஒன்ன எதிர்பாத்துக்கிட்டுத் தான் இருக்கேன்” எனக் கூறியபடி செக்றோலை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தார்.
“என்னங்கையா ஏதும் அவசரங்களா?”
“கொழும்பில நம்ம மச்சினன் ஒருத்தர் கடை வச்சிருக்காரு... அங்க வேலை செய்ய நம்பிக்கையான பொடியன் ஒருத்தன் வேணுமாம். சாப்பாடு, படுக்கை வசதி, தங்கிறதுக்குத் தனியான றூம் எல்லாம் இருக்கு; நல்ல சம்பளமும் கொடுப்பாங்க... அதுதான் ஒன் மகனை அனுப்பிவைக்கிறியான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.” கண்டக்டர் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.
பெருமாள் ஒரு கணம் யோசித்தான். வீட்டில் கையுதவிக்குத் தங்கராசு மட்டுந்தான் இருக்கிறான். விறகுக்குச்சி பொறுக்குவதற்கும் கடைகண்ணிக்குப் போவதற்கும் சிறுசுகளைக் கவனித்துக் கொள்வதற்கும் அவனை விட்டால் வேறு ஆளில்லை. அவனைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டு என்ன செய்வது? அவனை விட்டுப்பிரிய தாயும் சம்மதிக்கமாட்டாள்.
“என்ன பெருமாளு, யோசனை பண்ணிக்கிட்டிருக்க....?”
“இல்லீங்க, அவன் எனக்கு ஒரே ஆம்பளப்புள்ள..... ஸ்கூலுக்கும் போய்க்கிட்டிருக்கான்.... ஆறாம் ஆண்டு படிக்கிறான்... அத எப்படிங்க கெடுக்கிறது?” கண்டக்டரின் மனங்கோணாமல் பொருத்தமான பதிலைக் கூறிவிட்ட திருப்தி பெருமாளுக்கு.
“இந்தாப்பா, தோட்டக்காட்டில பயலுக படிக்கிறேன்னு சொல்லி அப்பன் ஆயிக்கு செலவுதான் வைப்பானுக, அப்புறமா கொஞ்சம் வளந்தோடன கொழும்புக்கும் கண்டிக்கும் கோப்பை கழுவப் போயிறுவானுக.... ஒன் மகன் படிச்சது போதும்; நான் சொல்றமாதிரி நம்ம மச்சினன்கிட்ட அனுப்பிவை... தொழிலும் பழகுவான்... நல்ல பழக்க வழக்கமும் வரும்.”
கண்டக்டரது இளைய மகன் அப்போது அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். “டடி, நாளைக்கு ஸ்கூல்பீஸ் கட்டணும்.... அப்புறம் பொக்கற் மனியும் வேணும்....” எனச் செல்லமாகத் தந்தையின் கையைப் பற்றினான்.
“சரி கண்ணா, நீ இப்ப உள்ள போ.... கதைச்சுக்கிட்டிருக்கேன்... அப்புறமா வந்து தாறேன்” எனக்கூறிய கண்டக்டர் மகனை உள்ளே அனுப்பிவைத்தார்.
பெருமாள் கண்டக்டரின் மகனை உற்றுப் பார்த்தான். தங்கராசுவின் வயசுதான் அவனுக்கும் இருக்கும்.... தினமும் டவுனில் உள்ள பாடசாலைக்குப் போவதற்காகக் காலை வேளைகளில் அவன் பஸ்ஸிற்குக் காத்திருப்பதை பெருமாள் பலதடவை பிரட்டுக் களத்திற்குப் போகும் வழியில் பார்த்திருக்கிறான்.
“ஐயா, கோவிச்சுக்காதீங்க... ஒங்க மகனூட்டு வயசுதான் என் மகனுக்கும் இருக்கும்.... அவனும் கொஞ்சம் படிக்கட்டுங்கையா... அப்புறமாப் பாப்பங்க....”
பெருமாளின் வார்த்தைகள் கண்டக்டரின் நெஞ்சில் சுரீரெனத் தைத்தன. அவரது மகனோடு தனது மகனையும் ஒப்பிட்டுப் பேசிய பெருமாளின் ராங்கித்தனம் அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
“என்ன பெருமாளு பேச்சுப் பேசுறே... லயத்தில இருந்துக் கிட்டு ஒன் புள்ளயைப் படிக்கவைக்க ஏலுமா...? வாழையடி வாழையா ஒங்க அப்பன் பாட்டன் காலத்தில இருந்து அந்தப் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமாத்தானே வாழுறீங்க.... இப்ப மட்டும் ஒன்மகன் பெரிசா படிச்சுக்கிழிச்சுடப் போறானோ...?”
“அப்புடிச் சொல்லாதீங்க.... எங்கவூட்டு காலந்தான் போச்சு... இனிமேசரி புள்ளைங்க படிக்கட்டுமே...”
கண்டக்டர் ஏளனமாகச் சிரித்தார். “இப்படிச் சொன்னவங்க ரொம்பப்பேரு.... நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.... ஒம்புள்ள தங்கராசுவும் தோட்டத்தில பேரு பதிஞ்சு எங்கிட்ட ஒரு நாள் வேலைக்கு வரத்தான் போறான்... அப்ப பாத்துக்கிறேன்.”
பெருமாள் விருட்டென எழுந்தான். “தெருத்தெருவாப் பிச்சை எடுத்தாலும்சரி எம்புள்ளயப் படிக்க வைப்பேனே தவிர ஒங்க காலடிக்கு வரவுடமாட்டேன்.”
கண்டக்டரும் நாற்காலியைப் பின்புறமாகத் தள்ளியபடி வேகமாக எழுந்தார். ஆத்திரத்தில் அவரது உடல் நடுங்கியது. கதவின் பக்கம் கையைக் காட்டி “போ வெளியே” என உரத்த குரலில் கத்தினார்.
பெருமாள் விருட்டென வெளியே வந்தான். கண்டக்டர் படீரெனக் கதவை அடித்துச் சாத்தியது அவனுக்குப் பிடரியில் அறைவதைப் போலிருந்தது.
முற்றத்தில் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த தோட்டக்காரன் “என்னண்ணே, என்ன நடந்துச்சு...? ரொம்பக் கோபமாப் போறாப்புல இருக்கே...” எனக் கேட்டான்.
“இந்தக் கண்டக்டர் சொல்றான் .... இவரு வூட்டுப் புள்ளைங்க மட்டுந்தான் படிக்குமாம்.... படிக்கணுமாம்... நம்ம வூட்டுப்புள்ளைங்க படிக்காதாம்... படிக்கக் கூடாதாம்.”
தோட்டக்காரன், கண்டக்டர் கவனிக்கிறாரா எனப் பங்களாப் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தாழ்ந்த குரலில் “சரி சரி, போங்கண்ணே.... அப்புறமாப் பேசிக்குவோம்” என்றான்.
“ஒங்கமாதிரி தலையச் சொறிஞ்சிக்கிட்டுப் போறவனில்ல நானு; நெனச்சத செஞ்சுகாட்டுவேன். நீ இருந்துபாரு எம்புள்ளயப் படிக்க வைக்கிறேனா இல்லையான்னு...” பெருமாளின் குரலில் உறுதி தொனித்தது.
* * * * *
நடுக்காம்பராவில் சுவரோரமாகச் சாக்கை விரித்து அதனருகே பலகைக் கட்டைமீது குப்பி விளக்கை வைத்துப் படிப்பதற்கு ஆயத்தமானான் தங்கராசு. சாக்கின்மேல் சம்மணம் கொட்டியிருந்து முன்னால் கொப்பியை விரித்துவைத்துக் கொண்டு குனிந்து எழுதத்தொடங்கினான். தமிழ்ப்பாடத்தில் வாத்தியார் கொடுத்த வீட்டுவேலையைச் செய்துகொண்டு போகாவிட்டால் மறுநாள் பாடம்முடியும்வரை முழங்காலிலேதான் நிற்கவேண்டி வரும்.
இஸ்தோப்பின் பக்கமிருந்து கிளம்பிய புகை நடுக்காம்பராவை நோக்கி வரத்தொடங்கியது.
“என்ன ஆயா, எந்தநாளுந்தான் சொல்லிக்கிட்டிருக்கேன்.... நான் படிக்க ஒக்காந்தேன்னா நீயும் அடுப்பில பொகையப் போடுற... எனக்குக் கண்ணு எரியுது ; படிக்க முடியல்ல” என்றவாறு கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்தான் தங்கராசு.
“மெலாரு பச்சயா இருந்தா நான் என்ன செய்யட்டும்?; பொகைதான் வரும். காஞ்ச மெலாரு பாத்துப் பொறுக்கிட்டுவான்னு சொன்னா நீ எந்த நாளும் பச்சை மெலாருதான் கொண்டாறே...” எனக் கூறிக்கொண்டே அவனது தாய் அலமேலு ஊதாந்தட்டையை எடுத்து அடுப்பை ஊதத்தொடங்கினாள். அடுப்பிலிருந்து வரும் புகை குறைந்தது. ஆனாலும் இஸ்தோப்பின் சுவருக்கும் கூரைக்கும் இடையே உள்ள நீக்கல் வழியாக இப்போது பக்கத்து வீட்டுப்புகை வரத்தொடங்கியது.
தங்கராசுவிற்கு மூக்கு அரித்தது. பலமாக இரண்டு தடவை தும்மிவிட்டு மூக்கிலிருந்து வடிந்த நீரைப் புறங்கையால் துடைத்தபடி நிமிர்ந்தான். முன்புறமாகக் குனிந்திருந்து எழுதியதால் முதுகு வலிக்கத் தொடங்கியது. சம்மணங்கொட்டிய கால்களை விரித்து நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்தான்.
குப்பி விளக்கிலிருந்து கிளம்பிய புகையும் அடுப்புப் புகையுடன் சேர்ந்துகொண்டது. கண்களில் எரிச்சல் அதிகமாகியது. அவனுக்குத் தெரியும் கண்கள் எரியத் தொடங்கிவிட்டால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிடும்.
காம்பராவில் எதிர்மூலையில் அவனது தங்கை நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவன் தும்மிய சத்தத்தினாலோ என்னவோ தொட்டில் சீலைக்குள் இருந்த குழந்தை நெளிவது தெரிந்தது.
தங்கராசு எழுந்து வெளியேவந்து வாசலில் மூக்கைச் சிந்திவிட்டு மூலையிலிருந்த அலுமினியக் குடத்திலிருந்து கோப்பையில் தண்ணீரை ஊற்றிக் கண்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டான்.
வெளியே பந்தத்துடன் யாரோ சோலைமலை வீட்டுப் பக்கம் போவது தெரிந்தது. லயத்து நாய்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குரைக்கத் தொடங்கின. அந்திபட்டாலே இப்படித்தான், பந்தத்தோடு யாராவது அடிக்கடி சோலைமலை வீட்டுப்பக்கம் போவார்கள்; அப்போதெல்லாம் இந்த நாய்கள் பெருங்குரல் எழுப்பத் தொடங்கிவிடும் சோலைமலை மாட்டுத் தொழுவத்தில் வைத்து நாட்டுக்கள்ளு விற்பதாகப் பேசிக்கொண்டார்கள். அவனது தந்தை பெருமாளும் இப்போது அங்குதான் போயிருக்கிறாரென்பது தங்கராசுவிற்குத் தெரியும். இந்த லயத்து நாய்கள் பலமாகக் குரைக்கும் சத்தம் லயத்தில் உள்ளவர்களுக்குப் பழகிப்போய் விட்டது. யாருமே அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
தொட்டில் சீலைக்குள் நெளிந்து கொண்டிருந்த தங்கச்சிப் பாப்பாகூட இப்போது அமைதியாகத் தூங்குவது தெரிந்தது. ஆனால் தங்கராசுவிற்குமட்டும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால் அமைதியாகப் படிக்கமுடிவதில்லை. புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சத்தம் ஓயும்வரை சுவருடன் சாய்ந்து கொள்வான்.
தங்கராசு மீண்டும் படிக்கத் தொடங்கியபோது தங்கச்சிப் பாப்பா அழுகையோடு நெளியத் தொடங்கினாள்.
“அடே தங்கராசு, அம்மாபுள்ளய கொஞ்சம் ஆட்டிவிடு.... சோறு வடிச்சுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன ஆயா, கொஞ்சங்கூட படிக்க வுடமாட்டேங்கிற..... வேலை வச்சுக்கிட்டே இருக்கே....” எனச் சினத்துடன் கூறிக் கொண்டே எழுந்த தங்கராசு தொட்டிலை ஆட்டத் தொடங்கினான்.
குழந்தையின் அழுகை குறையவில்லை. ‘சுர்’ரென்ற சத்தத்துடன் நிலம் நனைவது தெரிந்தது. தொட்டிலை அங்கும் இங்கும் அசைத்து நிலத்திலே கோலம் வரைந்தான் தங்கராசு; அவனுக்கு எப்பவுமே இது ஒரு விளையாட்டு.
“ஏய் மாடு, காது கேக்கலியா.... புள்ள கத்திறது....?” எனக் கூறிக்கொண்டே வந்த அலமேலு அவனது காதைப்பிடித்துத் திருகிவிட்டு பிள்ளையைத் தூக்கினாள்.
தங்கராசு மீண்டும்போய் ஒருதடவை கண்களைக் கழுவிக் கொண்டான்.
“என்னடா தங்கராசு, என்ன பண்ணிக்கிட்டு இருக்கே... படிக்கலியா?” எனக் கேட்டுக்கொண்டே தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான் பெருமாள்.
“ஒரே பொகைப்பா.... அதுதான் கண்ணைக் கழுவிட்டு வந்தேன்...”
“ஏன்டி அலமேலு, அவன் படிக்கிற நேரத்திலதான் பொகையைப் போடணுமா..... அந்திக்கு வந்த ஒடனேயே ஆக்கியிருக்கலாந்தானே....”
அலமேலு பதிலேதும் பேசாமல் பிள்ளைக்குப் பாலூட்டத் தொடங்கினாள். அடுத்த வீட்டிலிருந்துதான் புகைவருகிறது என்று சொன்னால் கணவன் அங்கு சண்டைக்குப் போய்விடுவான் என்பது அவளுக்குத் தெரியும். சிறிது நாட்களாக கணவனிடத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அவள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறாள். தங்கராசுவின் படிப்புக் காரணமாக அவனுக்கும் லயத்தில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவதுண்டு.
போன வாரத்தில் ஒருநாள் லெச்சுமன் பூசாரி மூன்றாவது காம்பரா மூக்காயிக்குப் பிடித்திருந்த பேயை விரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். மூன்று மாதங்களுக்கு முன்னர் நஞ்சுகுடித்து இறந்துபோன முனியாண்டிதான் பேயாகி ‘மூணு ரோட்டு’ முச்சந்தியில் வைத்து அவளைத் தொடருகிறான் என லயத்தில் பேசிக்கொண்டார்கள். பூசாரியின் உடுக்குச் சத்தத்துடன் பேய்விரட்டும் ஓசையும் மூக்காயியின் அலறலும் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்தன.
சோலைமலை வீட்டுக்குப் போய்விட்டுத்திரும்பிய பெருமாளுக்கு உடுக்குச்சத்தம் ஆத்திரத்தைக் கிளப்பியது. “இதென்னடா மசிரு பூசாரி, எந்தநாளும் உடுக்கு அடிச்சு ஆளுங்கள ஏமாத்திக்கிட்டிருக்கான்... லயத்தில ஒரே சத்தம்; புள்ளைங்க படிக்கேலாது. இப்பவேபோயி செவிட்டில ரெண்டு குடுத்து உடுக்கைப் புடுங்கிக்கிட்டு வாரேன்” எனக் கூறிக் கிளம்பினான்.
“சும்மா இருங்க, ஏன் ஊர்வம்புக்குப் போறீங்க.... அப்புறம் பூசாரி ஒங்கமேல எதையாவது ஏவிவிடுவான்” என்றபடி அலமேலு இஸ்தோப்புக் கதவை மூடி உள்ளே கொண்டியைப் போட்டாள். அவளுக்குத் தெரியும் பேய் விரட்டும் இடத்துக்குச் சென்றால், அங்குள்ளவர்களும் மதுவெறியிலேதான் இருப்பார்கள்; கணவனை அடித்து நொருக்கிவிடுவார்கள் என்று.
பெருமாள் சிறிது அமைதியானான்.
அன்றொருநாள் தங்கராசு படிக்கும் தோட்டப் பாடசாலையில் நடந்த கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவன் சென்றிருந்தபோது நடந்த நிகழ்வுகள் அவன் நினைவில் வந்தன.... அப்போது அவனுக்கு எவ்வளவு உற்சாகம் ஏற்பட்டது. அவன் படித்த காலத்தில் சிறிது மடுவமாக இருந்த அந்தப் பாடசாலை மூன்று புதிய மாடிக் கட்டிடங்களுடன் கம்பீரமாகக் காட்சியளித்தது.
விழாவிலே பேசிய கல்விப் பணிப்பாளர் மலையகக் கல்வி முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள்பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முக்கியமாகக் கட்டிட வசதிகள், தளபாடங்கள், பாடசாலைச் சீருடைகள், இலவசப் புத்தகங்கள், விளையாட்டு மைதானம் முதலியன வழங்கப்படுவதோடு மலையகத்திலே பிறந்தவர்களை ஆசிரியர்களாகவும் உயர் அதிகாரிகளாவும் நியமித்து மலையகக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட வகைசெய்வதாகக் குறிப்பிட்டார். அத்தோடு அந்தப் பாடசாலையைத் தரம் உயர்த்தி உயர்வகுப்புவரை கல்விகற்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
பெருமாளுக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை; கைகளைத் தட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான். கண்டக்டரிடம் அவன் விடுத்த சவாலை அவனால் நிறைவேற்றிவிட முடியும். தங்கராசுவை அந்தப் பாடசாலையிலேயே உயர்வகுப்புவரை படிக்கவைக்க முடியும்.
“என்னங்க யோசனை.... சாப்புட வாங்க” என அலமேலு அழைத்தாள். அப்போதுதான் பெருமாளின் சிந்தனை கலைந்தது.
தங்கராசு மறுநாள் நடக்கவிருக்கும் தமிழ்த்தினப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழ்ப்பாடல் ஒன்றை மனனம் செய்துகொண்டிருந்தான்.
“தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப்
போவென்று சொன்னாள் உன் அன்னை.....
கடிகாரம் ஓடுமுன் ஓடு .... என் கண்ணல்ல......
மலைவாழை யல்லவோ கல்வி.....”
தங்கராசுவின் குரல் லயத்துச் சத்தங்களிலும் பூசாரியின் உடுக்கு ஒலியிலும் கலந்து நலிந்தும் தேய்ந்தும் ஒடுங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது.
அரிசிச்சாப்புலயத்து மோகனகுமார் பள்ளிக்கூடம் போகும் வழியில் தங்கராசுவைச் சந்தித்தான். இரண்டு நாட்களாக அவன் பாடசாலைக்கு வரலில்லை. கல்லுமலையில் கவ்வாத்துத் தொடங்கியதால் ‘வெறகு கழிக்கப்’ போவதாகக் கூறினான்.
“அடே தங்கராசு, நம்ம லயத்து மருதைக் கங்காணி வீட்டில டீ.வி. வாங்கியிருக்காங்க.... அந்திப்பட்டா நான் அங்கதான் போவேன்.... நேத்து ராவு கிரிக்கட் மெட்ச் போட்டாங்க, லயத்துப் பயலுக எல்லாம் அங்கதான்... ஒரே ‘சொலி’ தான்டா.”
“எங்கப்பா அதெல்லாம் பாக்க வுடாதடா...” தங்கராசு ஆதங்கத்துடன் கூறினான்.
மோகனகுமார் கவ்வாத்து மலைப்பக்கம் திரும்பியபோது மேட்டுலயத்துக் கணேசு எதிரே வந்தான்.
“ஏன்டா, ஸ்கூலுக்கு வரல்லியா?”
“இல்லடா தங்கராசு, நம்ம வீட்ல ஆயாவுக்கு ‘அம்மா’ போட்டிருக்கு... அப்பா வேலைக்குப் போயிறும்.... நான்தான் சமைக்கணும், மாட்டுக்குப் பில்லு அறுக்கணும், எல்லா வேலையும் செய்யணும்டா.”
தங்கராசுவின் வீட்டிலும் முன்பொருமுறை அம்மை வருத்தம் வந்திருந்தது. ஆயாவுக்கும் தங்கச்சிக்கும் ஒரே நேரத்தில் வருத்தம் வந்தபோது நடுக்காம்பரா மூலையில் வெள்ளை வேட்டி ஒன்றினால் மறைவுகட்டி, வாசலில் வேப்பிலை செருகி உள்ளே ஆயாவும் தங்கச்சியும் படுத்துக்கொண்டார்கள். அடுத்த வீட்டு அம்மாயி தினமும் வந்து மாரியம்மன் தாலாட்டுப் பாடித்தான் அந்த வருத்தத்தை மாற்றினாள்.
அந்த நாட்களில் இஸ்தோப்பின் ஒருமூலையில் இருந்துதான் தங்கராசு படிக்கவேண்டி ஏற்பட்டது. அம்மாயி கரகரத்த குரலில் நடுக்கத்தோடு பாடிய மாரியம்மன் தாலாட்டுத்தான் அவனுக்கு மனதில் பதிந்ததேதவிர பாடங்கள் மனதில் பதியவில்லை.
தங்கராசுவுக்கு நண்பர்கள் கூறும் கதைகளைக் கேட்கும் போது தானும் அவர்களைப்போன்று சந்தோஷமாக இருக்கமுடியவில்லையே என ஏக்கம் உண்டாகும்.
“போன கெழமை மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கொழும்புல இருந்து ராஜபாட்டு அண்ணன் வந்திருந்தாரு. அவரும் மயிலு மாமாவும் டோலாக்கு அடிச்சி பாட்டுப்பாடத் தொடங்கினாங்கன்னா லயத்துப் பயலுக எல்லாம் அந்த எடத்திலதான் இருப்பாங்க.... ‘பஜா’ முடிய ராவு பதினொரு மணியாகிடும். கைதட்டி பைலா போட்டுக்கிட்டே இருப்போம்... ஆயா சாப்பிடக் கூப்பிட்டாலும் அந்த எடத்தவுட்டு வரமாட்டோம்... ராஜபாட்டு அண்ணே கொழும்புக்குப் போறவரைக்கும் ஒரே பஜாதான்டா.”
பக்கத்து வாங்கிலிருக்கும் பரமதேவன் இதைக்கூறிய போது தன்னைக் கட்டுப்படுத்தி எந்நேரமும் படி படியென நச்சரித்துக் கொண்டிருக்கும் தனது தந்தைமேல் தங்கராசுவுக்கு வெறுப்புத்தான் ஏற்பட்டது,
தொங்கல் காம்பரா சுப்பன் கங்காணி வீட்டில் அவரது மகளுக்குச் சடங்கு நடந்துகொண்டிருந்தது. பெருமாள் தங்கராசுவையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருந்தான். கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் கங்காணியின் மூத்தமகன் சடங்கிற்காக வந்திருந்தான். வேலைக்குச் சென்ற ஆறுமாதத்தில் ஆளே உருமாறியிருந்தான். நன்றாகக் கொழுத்து சதைப்பிடிப்போடு நிறம்பெயர்ந்திருந்தான். ‘டிஸ்கோ’ பாணியில் தலையை மேவிவாரி டெனிம்சேட் காற்சட்டையுடன் வெகு ஸ்டைலாகக் காட்சியளித்த அவன், சிறிய ரேடியோவுடன் கூடிய ‘இயர்போன்’ கருவியைக் காதில் மாட்டி பொப்பிசைப் பாடலொன்றை ரசித்து, நிலத்திலே காலால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். அவனது நடையுடை பாவனை யாவும் தங்கராசுவைப் பெரிதும் கவர்ந்தன. கொழும்புக்குச் சென்றால் கங்காணியின் மகனைப் போன்று தானும் ஸ்டைலாக வரலாமென அவனது மனம் எண்ணியது.
கங்காணி வாயோயாமல் தனது மகனைப் பற்றியே புகழ்ந்துகொண்டிருந்தார். “இந்தா பெருமாளு, இந்தச் சடங்கே எம்புள்ள ஒழைச்ச காசிலதான் நடக்குது... அவன் வேலைசெய்யிற ஓட்டல் மொதலாளி ரொம்ப நல்லவரு.... ரொம்பப் பணம் குடுத்து ஒதவி செஞ்சிருக்காரு... ஓம் புள்ளயையும் கண்டக்டரையா கொழும்புக்கு அனுப்பச்சொல்லி கேட்டாருதானே..... அந்தநேரம் அனுப்பியிருந்தி யென்னா அவனும் இப்ப ஒரு நெலமைக்கு வந்திருப்பான்..... அநியாயமாக் கெடுத்திட்டே.....”
பெருமாளின் சிந்தனையில் ஒரு மின்னல்கீற்று.... தான் தவறு செய்துவிட்டேனா என்ற தடுமாற்றம்... மறுகணமே அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். தொடர்ந்தும் சடங்கு வீட்டில் தங்கியிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. தங்கராசுவையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.
மறுவாரத்தில் ஒரு நாள்....
பக்கத்துக் காம்பரா கந்தையா புதிதாக ரேடியோ வாங்கி யிருந்தான். அதில் இந்திச் சினிமாப் பாட்டுகள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன. படித்துக்கொண்டிருந்த தங்கராசு தனது இரு காதுகளுக்குள்ளும் சுட்டு விரல்களைச் செலுத்திக் காதுகளைப் பொத்திக்கொண்டு அன்றைய பாடத்தை உரத்துப் படிக்கத் தொடங்கினான்.
சில நாட்களில் கந்தையாவின் வயோதிபத் தந்தை இரவிரவாகப் பலமாக இருமிக்கொண்டிருப்பார். அவருக்கு நெஞ்சுச்சளி அடைத்து மூச்சுமுட்டி கதைக்க முடியாமல் திணறும்போது, தாத்தா சாகப் போகிறாரோ எனத் தங்கராசு எண்ணுவான் . அப்போதும் இப்படித்தான் அவன் காதுகளுக்குள் விரல்களைச் செலுத்திக்கொண்டு உரத்த சத்தமாகப் படிப்பான்.
“ஏய் கந்தையா, வீட்டில ரேடியோ வாங்கியிருக்கேன்னு எங்களுக்குப் போட்டுக் காட்டிறியா..... சத்தத்தைக் கொஞ்சம் கொறைச்சுவை.... என் வீட்டில புள்ள படிக்கிறான்....” பெருமாள் பலமாக் கத்தினான்.
“என்ன இவரு பெரிய ஆள் மாதிரி ‘ரூல்ஸ்’ பேசுறாரு... லயத்தில நம்ம வீட்டிலயுந்தான் புள்ள படிக்குது.... அதுக்காக பாட்டுக் கேக்காம இருக்க முடியுமா?” அடுத்த வீட்டில் இருந்து கந்தையா குரல் கொடுத்தான்.
“ஏய் பாட்டுக் கேக்கவேணாமுன்னு சொன்னேனா...? நல்லாக் கேளு... கொஞ்சம் ரேடியோவைக் கொறைச்சு வையேன்... தேத்தண்ணிக் கடைமாதிரி இருக்கு வீடு....”
கந்தையா ஆக்குரோசத்துடன் வெளியே வந்தான். “இந்தா பெருமாளு தேவையில்லாத பேச்சு பேசாத. போன கெழம சுப்பன் கங்காணிவீட்டில சடங்குக்கு நாலுநாளா ஸ்பீக்கர் போட்டாங்க... அப்பமட்டும் சத்தம் இல்லியா... அந்த நேரம் ஒம்புள்ள படிப்பு எங்க போச்சு...?”
லயத்தின் முன்னால் பலர் கூடிவிட்டனர்.
“அப்புடிக் கேளு கந்தையா, இந்த ஆளு எந்த நாளும் லயத்தில ஆளுங்கள சண்டைக்கு இழுத்துக்கிட்டே இருப்பது... இவரோட புள்ளதான் பெரிசாப்படிக்கிற மாதிரி...” என்றான் லெச்சுமன்.
அப்போது கந்தையாவின் மனைவி இஸ்தோப்பு வாசலில் நின்றபடி பலமாகக் கூறினாள். “அந்தாளோட ஒங்களுக்கு என்ன பேச்சு.... வாங்க உள்ளுக்கு, அந்த மனுசனுக்கு நாம ரேடியோ வாங்கினதுல பொறாமை.... அதுதான் அதுஇதுன்னு சொல்லிக் கிட்டிருக்காரு.”
அலமேலு பெருமாளை உள்ளே இழுத்து வந்தாள். பெருமாளுக்குச் சார்பாகப் பேச அங்கு எவருமே இருக்கவில்லை.
கந்தையாவின் தந்தை இப்போது வெளியே வந்து, “லயமுன்னு சொன்னா பத்துக்குடும்பம் இருக்கும்..... பத்துப்பேச்சு வரும்.... ஒம்புள்ள படிக்குதுன்னு மத்தவங்க வாயமூடிக்கிட்டு இருப்பாங்களா.... நீ வேணுமுன்னா ஒம்புள்ளயக் கூட்டிக்கிட்டு போயி எங்காவது தனியா வீடுகட்டி இரு.... அப்ப சத்தம் வராது, புள்ளயும் படிக்கும்” எனக் கரகரத்த குரலில் கூறினார்.
பெருமாள் இஸ்தோப்பின் சுவரோரமாகச் சாய்ந்து கொண்டான். அவனது மனக்கண்ணிலே தோட்டப்பாடசாலை தெரிந்தது.... உயர்ந்த கட்டிடங்கள், தளபாடங்கள், சீருடைகள், இலவசப் புத்தகங்கள், ஆசிரியர்கள், உயர் அதிகாரிகள்... இருந்துமென்ன?
கற்றலுக்கு வேண்டிய சூழல் இல்லையே.. ..
* * * * *
தங்கராசு இப்போது வளர்ந்துவிட்டான். பிரட்டுக் களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசுவும் ஒரு தொழிலாளியாகக் கடைசி வரிசையில் நிற்கிறான்.
கண்டக்டர் பிரட்டுக் கலைக்கிறார். தொழிலாளர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதற்காகக் கலைந்து செல்கின்றனர்.
“ஏன்டா தங்கராசு, நீயும் பேர் பதிஞ்சு வேலைக்கு வந்துட்டியா... ஒங்கப்பன் பெரிசா ஒன்னப் படிக்க வைக்கிறேன்னு சம்புராயம் புடிச்சானே... முடிஞ்சுதா...? வாழையடி வாழையா நீங்கெல்லாம் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமா வாழவேண்டியவங்கன்னு அன்னிக்கே சொன்னேனே..... ஒங்கப்பன் கேக்கலியே... அடேய், நீயும் ஒங்கப்பன்கூட கவ்வாத்து வெட்டப் போடா.... அப்பதான் தோள்பட்டை கழண்டு வரும், ஒங்களுக்கெல்லாம் புத்தி வரும்...” கண்டக்டரின் குரலில் ஏளனம்; தான் ஜெயித்துவிட்டதில் ஏற்பட்ட மமதை.
“அடே தங்கராசு”! எனப் பலமாகக் கத்தினான் பெருமாள். அவனது உடல் படபடத்தது; வியர்வையிலே தெப்பமாக நனைந்தான். மறுகணம் அவன் விம்மத் தொடங்கினான்.
தங்கராசு ஓடிவந்து தந்தையின் தோள்களைப் பிடித்து உசுப்பினான். “என்னப்பா என்ன..., எந்திருங்கப்பா...”
“ஏதோ கெட்ட கனவடா, கண்டாக்டர் சொன்ன மாதிரியே நீ தோட்டத்தில பேரு பதிஞ்சு கவ்வாத்து வெட்டப் போறதா கனவு கண்டேன்.... அதான்டா....”
தங்கராசுவுக்குத் தந்தையின் நிலைமையைப் பார்த்த போது அழுகை வந்தது. கண்களுக்குள் நீர் முட்டியது. அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கொழுந்துக் கூடைக்குள் கிடந்த தாயின் தலைவேட்டியை எடுத்து வியர்வையில் நனைந்திருந்த தந்தையின் முகத்தையும் உடலையும் துடைத்து விட்டான்.
அவனது மனதிலே வைராக்கியம் புகுந்து கொண்டது.
செலவுப் பெட்டியை மேசையாகப் பாவித்து அதன்மேல் புதிதாக வாங்கிய லாந்தரை ஏற்றிவைத்து, பலத்த குரலில் மீண்டும் அவன் படிக்கத் தொடங்கியபோது, சூழலில் இருந்த கவனச்சிதறல்கள் யாவும் அவனது வைராக்கியத்தில் கரைந்து போயின.
- வீரகேசரி ‘1998.
++++++++++++++++++++++++++
சோதனை
பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட இழுத்துச் சாத்தியபோது நான் கதவின் கம்பிகளைப் பிடித்தவாறு கெஞ்சினேன்.
“ நாளை எனக்குச் சோதனை.... என்னைச் சோதனை எழுத அநுமதியுங்கள்.... நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.”
இந்த இரண்டு வருடப் பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அரைகுறைச் சிங்களத்தில் கெஞ்சியது அந்தப் பொலிஸ்காரனுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை.
“காகன்ட எப்பா; நிக்கங் இன்ட” அவன் அலட்சியமாகக் கூறியபடி வெளியே பூட்டைப்போட்டுப் பூட்டினான்.
எனது கண்கள் கலங்கின. மயக்கம் வருவதுபோல இருந்தது. அடிவயிற்றைக் குமட்டியது. விழுந்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற உணர்வில் மெதுவாகத் தரையில் அமர்ந்தேன். அறையின் ஒரு மூலையிலிருந்து குப்பென்று சிறுநீரின் நெடி வீசியது.
எதிரே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறையிலிருந்து வந்த ‘மெர்க்குரி பல்ப்’பின் வெளிச்சம் நானிருந்த அறையின் கதவினூடாக உள்ளேயும் வந்து விழுந்தது. கதவின் இரும்புக் கம்பிகள் ஏற்படுத்திய கருநிழல்கள் ஆரம்பத்தில் ஒடுங்கியும் பின்னர் சற்று விரிந்தும் ஓர் அரக்கனின் கைவிரல்கள் போல என்மேல் படர்ந்தன.
நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை. அங்கிருந்த நான்கைந்து பொலிஸ்காரர்களும் அசட்டையாக ஏதேதோ தமக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் காதுகளில் ஒரு கருவியைப் பொருத்திக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும் ‘ரேடியோ மெசேஜ்’களைப் பெறுவதும் இடையிடையே ஏதோ குறிப்பெடுப்பதுமாக இருந்தார்.
நான் இருந்த அறையின் வலதுபுறத்தில் இதுபோன்ற வேறும்சில அறைகள் இருக்கவேண்டும். அங்கு பலர் பலமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒரு குடிகாரன் கத்துவதும் கேட்டுக் கொண்டிருந்தது.
கடந்த சிலநாட்களாக வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சந்திக்குச் சந்தி ‘செக் பொயின்ற்’ சோதனைகள், ஆள் அறிமுக அட்டைப் பரிசீலனைகள், சுற்றிவளைப்புத் தேடுதல்கள், பரவலான கைதுகள், விரோதப் பேச்சுகள்..... ஏச்சுகள்......
நான் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எனது அறைக்குவந்து படுப்பதற்கு ஆயத்தமானேன். நாளை நடக்கவிருக்கும் தவணைப் பரிட்சைக்கு வேண்டிய ஆயத்தங்களைத் திருப்தியாகச் செய்ததில் மனது லேசாக இருந்தது. அறை நண்பன் குமரேசன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குப் போவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லை.
அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டின் சொந்தக்காரி சுதுமெனிக்கா உள்ளே எட்டிப்பார்த்தாள். என்றுமில்லாதவாறு அவளது முகத்தில் பதட்டம் தெரிந்தது.
“புத்தே, ஹம்முதாவ அவில்ல இன்னவா.” இராணுவத்தினர் வந்திருக்கிறார்கள் என அவள் கூறியதைக் கேட்டதும் என்மனம் திக்திக்கென அடித்துக்கொண்டது. பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று தேடுதல் நடக்கலாமென மூன்று நாட்களுக்கு முன்னரே குமரேசன் கூறியது என் நினைவில் வந்தது.
வீட்டின் முன்விறாந்தையில் சுதுமெனிக்காவுடன் இராணு வத்தினர் உரையாடுவது கேட்டது.
“இங்கு எத்தனைபேர் இருக்கிறார்கள்?”
“இரண்டு பேர்”
“ஏன் இவர்களுக்கு அறையை வாடகைக்குக் கொடுத்தீர்கள்?”
கிழவி மௌனம் சாதித்தாள்.
“நாங்கள் அவர்களை விசாரிக்கவேண்டும்.”
சுதுமெனிக்காவும் இராணுவத்தினரும் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் இரண்டு பொலிசாரும் இருந்தனர்.
“கோ..... பென்னன்ட, ஐடென்ரிற்றி.”
எனது அறிமுக அட்டையை ஒருவன் வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ஏதோ தனக்குள் முணுமுணுத்தான். வேறு இருவர் அறையில் இருந்த உடுப்புகள், புத்தகங்கள், மூலையிலிருந்த கட்டிலின் கீழ்ப்புறம், குப்பைக் கூடை, எல்லாவற்றையுமே புரட்டி எடுத்தனர்.
மேசையிலிருந்த எனது ‘என்ஜினியரிங்’ நோட்ஸ் கொப்பியை ஒருவன் எடுத்து விரித்தபோது அதற்குள் இருந்த புகைப்படங்கள் சில வெளியே விழுந்தன.
“இதென்ன போட்டோக்கள்?”
“சென்ற மாதம் என்ஜினியரிங் மாணவர்கள் ‘ஸ்ரடி ரூர்’ போனோம்; அப்போது எடுத்த போட்டோக்கள்தான் இவை.”
“மின் உற்பத்தி நீர்நிலையத்தின் அமைப்பு வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். இந்தப் போட்டோக்களை யார் எடுத்தது?”
“எனது சகமாணவர்கள்... ரஞ்சித் சில்வா.... புஞ்சிஹேவா... இன்னும் பலர் புகைப்படங்கள் எடுத்தார்கள். அவற்றில் சில பிரதிகளை நான் பெற்றேன்.”
உண்மையில் எனது அறை நண்பன் குமரேசனும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் அமைப்பினைப் பல்வேறு கோணங்களில் படம் எடுத்திருந்தான். அவன் எடுத்த படங்களில் சிலவும் அவற்றுடன் இருந்தன. இப்போது குமரேசனின் பெயரைக் கூறினால் சிக்கலாகிவிடும்.
“கோ அனித்தெக்கனா?”
மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றவன் இன்னும் திரும்பவில்லை என்ற விபரத்தைக் கூறினேன்.
“சரி, காற்சட்டையை அணிந்துகொண்டு எங்களுடன் வா; புறப்படு.”
எனது மனதைப் பயங் கௌவிக்கொண்டது. நண்பர்கள் கூறிய சித்திரவதைச் செய்திகள், வாவியில் மிதந்த பிணங்கள், எனது எதிர்காலம் தமது வாழ்வின் விடிவெள்ளியாக அமையுமென்ற கற்பனைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது ஏழைத் தாய்தந்தையர், இயக்கம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொண்டு திடீரெனக் காணாமல் போய்விட்ட எனது ஒரே அன்புத் தங்கை.... இப்படிப் பலவாறான எண்ணங்கள் எனது மனதில் தத்தளித்தன.
“விசாரிக்க வேண்டியதை இங்கேயே விசாரியுங்கள்..... தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நாளைக்கு எனக்குச் சோதனை இருக்கிறது.” நான் மன்றாடினேன்.
அவர்கள் விடுவதாயில்லை. “பயப்பட வேண்டாம், விசாரணை முடிந்ததும் உடனே அனுப்பிவிடுவோம்” என்றனர்.
சுதுமெனிக்காவும் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினாள். இரண்டு வருடங்களாக இவர்கள் இந்த அறையிலே தான் இருக்கிறார்கள். எந்தவிதத் தொந்தரவுக்கும் போக மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னாள்.
“நாங்கள் எங்களது கடமையைச் செய்யவேண்டியிருக்கிறது; கூடியவரை விரைவாகத் திருப்பியனுப்புவோம்.”
என்னை அழைத்துவந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் அவர்கள் தங்களது தேடுதல் நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் அறைக்கு வந்தநேரத்தில் குமரேசன் அங்கு இல்லாதது நல்லதாய்ப் போய்விட்டது. நாளைக்குச் சோதனை இருப்பதால் எப்படியும் குமரேசன் இதுவரையில் அறைக்கு வந்துசேர்ந்திருப்பான். சுதுமெனிக்கா எல்லா விபரங்களையும் அவனிடம் கூறியிருப்பாள்.
குமரேசனுக்குக் கொழும்பில் பலரைத் தெரியும். தேடுதலின்போது கைதானவர்களை விடுவிப்பதற்கு வேண்டிய வழிவகைகள் தெரியும். முன்பொருமுறை அவனை வெள்ளவத்தையில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் அவனது அறிமுக அட்டையைப் பறித்துக் கிழித்து வீசிவிட்டார்கள். ஆனாலும் அவனுக்கு வேண்டியவர்கள் மேலிடத்துடன் தொடர்புகொண்டு ஒருசில மணித்தியாலங் களுக்குள்ளேயே அவனை விடுவித்துவிட்டார்கள். அதற்காகப் பெருந்தொகைப் பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாக அவன் கூறினான். சிலநாட்களுக்குள் யார்யாரையோ பிடித்துக் கொழும்பு விலாசத்துடன்கூடிய அறிமுக அட்டையையும் பெற்றுக்கொண்டான்.
குமரேசனுக்கு எதிலுமே ஓர் அலட்சியப்போக்கு; பணத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்ற நினைப்பு அதற்கேற்ப அவனது கையிலே நிறையப் பணம் புரண்டு கொண்டிருக்கும். உறவினர் யாரோ கனடாவிலிருந்து செலவுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னான்.
சிலவேளைகளில் அவனது போக்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விரிவுரைகளுக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கியிருந்து ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பான். ஏனென்று கேட்டால் சிரித்து மழுப்பிவிடுவான். சில நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென எங்கோ புறப்பட்டுச் செல்வான். இரண்டு மூன்று நாட்கள் கழித்தே அறைக்குத் திரும்புவான். அவனை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.
வேறொரு பொலிஸ்காரன் இப்போது அறையின் கதவைத் திறந்தான். இரண்டு நடுத்தரவயதான முரட்டு ஆசாமிகளை உள்ளே தள்ளிப் பூட்டினான்.
இருவரும் நன்றாகக் குடித்திருந்தனர். ஒருவன் அந்தப் பொலிஸ்காரனிடம் தனக்குப் பசிக்கிறதெனவும் சாப்பாடு தரும்படியும் அலட்சியமான தொனியில் கூறினான். பொலிஸ்காரன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
மற்ற ஆசாமி என்னை முறைத்துப் பார்த்தான். அவனை மாலைவேளைகளில் பல்கலைக் கழகத்திற்குச் சமீபமாகவுள்ள கடற்கரையோரத்தில் பார்த்திருக்கிறேன். அந்தப் பகுதியில் யாரோ போதைப் பொருட்கள் விற்பதாகவும் ‘குடு’ அடிப்பவர்கள் அங்கு கூடுவதாகவும் முன்பொருமுறை குமரேசன் சொன்னான்.
என்னைப் பயங் கௌவிக்கொண்டது. இரவு முழுவதும் இவர்களுடன்தான் இருக்கவேண்டுமா? இவர்கள் என்னை என்ன செய்வார்களோ?.
மனதிலே பலவாறான சிந்தனைகள். மெதுவாக எனது விரலிலிருந்த மோதிரத்தை அவர்களுக்குத் தெரியாமல் கழற்றி காற்சட்டை மடிப்புக்குள் செருகிக்கொண்டேன்.
தனக்குப் பசிக்கிறதெனக் கூறிய ஆசாமி சிறிது நேரம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான். பொலிஸ்காரன் தன்னைச் சரியாக உபசரிக்கவில்லை என்றான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படு பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாக இருப்பதில்லை எனவும், அதனால் அவர்களை எவ்வாறு கண்ணியமாக நடத்தவேண்டும் எனவும் மற்றவனிடம் கூறினான். இடையிடையே என்னிடமும் அவற்றைக் கூறி எனது அபிப்பிராயத்தை எதிர்பார்த்தான். அவன் கூறியவற்றை ஆமோதிப்பதுபோல நான் பரிதாபமாகத் தலையாட்டிக் கொண்டி ருந்தேன்.
சிறிது நேரத்தில் அவன் ஓய்ந்துபோய் குறட்டை விடத்தொடங்கினான்.
இப்போது மற்றவன் எழுந்து என்னருகே வந்தான். எனது கைகளை முரட்டுத்தனமாகப் பற்றினான். “மல்லி, சல்லி தியனுவத?”
என்னால் பேசமுடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. உமிழ்நீரை விழுங்கியபடி இல்லை என்னும் பாவனையில் தலையைமட்டும் ஆட்டினேன்.
“பொறு கியன்டெப்பா.....”
அவன் எனது சம்மதம் எதையும் எதிர்பார்க்காமல் எனது சேட் பொக்கற்றுக்குள் கையைவிட்டான். பின்னர் காற்சட்டைப் பொக்கற்றுகளை ஒவ்வொன்றாகத் துழாவினான். ஏமாற்றத்துடன் என்னைத் தகாத வார்த்தைகளில் ஏசினான்.
“ஒயா திறஸ்தவாதிநே..... ஒயாவ மறன்டோன .” எனது கழுத்தைப் பிடித்து நெரித்துப் பின்புறமாகத் தள்ளினான். எனது தலை பின்புறச் சுவரில் மோதிக் கண்கள் கலங்கின.
முதலில் ‘மல்லி’ என அழைத்தவன் இப்போது ‘திறஸ்தவாதி’ என்கிறான். எனது பொக்கற்றில் சிறிது பணம் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அவனது பலத்த சத்தத்தைக் கேட்டு வெளியே நின்ற பொலிஸ்காரன் கதவின் அருகேவந்து அவனை எச்சரித்தான். அதன்பின் அவன் அடங்கிப்போனான். ஆனாலும் என்னைப் பார்த்து இடையிடையே முறைப்பதை மட்டும் விட்டுவிடவில்லை.
என்னை விடுவிப்பதற்கு சுதுமெனிக்கா ஏதாவது முயற்சி எடுப்பாளா என எனது மனம் எண்ணியது. அது ஒரு முட்டாள்தனமான எண்ணம் ; ஏன் அவள் முயற்சிக்க வேண்டும் ? ஆனாலும் குமரேசன் அறைக்குத் திரும்பியிருந்தால் அவள் அவனிடம் எல்லா விபரங்களையும் கூறியிருப்பாள்.
குமரேசனுக்குச் சரளமாகச் சிங்களம் பேசத்தெரியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதியவுடனேயே அவன் எப்படியோ கொழும்புக்கு வந்துவிட்டான். என்னைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியே வருவதற்கு ‘பாஸ்’ எடுப்பதில் சிரமம் இருந்தது. பல்கலைக் கழக அநுமதி கிட்டும்வரை இரண்டு வருடகாலம் காத்திருந்துதான் நான் கொழும்புக்கு வரமுடிந்தது. இந்தக் காலகட்டத்தில் அவன் நன்றாகச் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டான். அதனால் அவன் சுதுமெனிக்காவுடன் சரளமாகக் கதைக்கமுடிகிறது.
யாழ்ப்பாணத்தில் நானும் குமரேசனும் அயலூரவர்கள். நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளிலேதான் கல்வி கற்றோம். பல்கலைக் கழகத்திற்கு வந்தபின்தான் அவனுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
ஒருநாள் குமரேசன் என்னைச் சந்தித்தபோது, “உம்முடைய தங்கச்சியைப்பற்றி ஒரு விஷயம் அறிஞ்சனான்; உண்மையே?” எனக்கேட்டான்.
நான் திடுக்குற்றுவிட்டேன். எந்த விஷயம் ஒருவருக்கும் தெரியவரக்கூடாதென நான் விரும்பினேனோ அதையே குமரேசன் என்னிடம் கேட்டான். இவனுக்கு இது எப்படித் தெரியவந்தது!
நான் பதில் சொல்லவில்லை. கண்களுக்குள் நீர் முட்டி நின்றது.
“சரி சரி பயப்பிடாதையும்.... நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்” என்றான். அன்றிலிருந்து அவன் என்னிடம் அன்பாக நடந்துகொண்டான். எங்களுடைய நட்பு இறுக்கம் பெற்று அறை நண்பர்களானோம்.
இப்போது நான் அடைக்கப்பட்டிருந்த அறையில் மற்ற இருவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். எனது கண்கள் கனத்தன. சோர்வு பெரிதும் வாட்டியது. ஆனாலும் நித்திரை மட்டும் வரவில்லை. மறுநாள் விடியும்வரை நான் விழித்திருந்தேன்.
காலையில் ஒருபொலிஸ்காரன் வந்து என்னை நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்றான்.
“இன்று எனக்குத் தவணைச் சோதனை ; நான் போகவேண்டும். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். வேண்டுமானால் சோதனை முடிந்ததும் இங்கு வருகிறேன்.”
இதனை நான் கூறியபோது அந்த அதிகாரி எனக்கு ஆறுதல் கூறினார்.
“உம்மைப் பற்றிய விபரங்களை எடுப்பதற்கு உடனே நான் ஒழுங்கு செய்கிறேன் ; இன்னும் சிறிது நேரத்தில் நீர் போகலாம்” எனக்கூறி மேசையில் இருந்த மணியை அழுத்தி வேறொரு பொலிஸ்காரனை வரவழைத்து, “இவரது விபரங்களை எடுத்துவிட்டு சந்தேகத்திற்கு இடமில்லையெனில் அனுப்பி விடுங்கள்” எனக்கூறினார்.
அந்தப் பொலிஸ்காரன் என்னைப் பக்கத்திலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு வேறும் பலர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களில் முதலாம் வருட மாணவர்கள் சிலரும் இறுதிவருட மாணவர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் எவருமே என்னைப் பார்த்து அறிமுகச் சிரிப்பைக்கூட உதிர்க்கவில்லை.
என்னை முதலில் விசாரணை செய்தார்கள்.
“நம மொக்கத?”
“பாலேந்திரன்.”
“சிங்கள தன்னுவத?”
“எச்சற தன்னனே..........”
இப்போது வேறொருவன் ஆங்கிலத்தில் விசாரணையைத் தொடர்ந்தான்.
“எவ்வளவு காலமாகக் கொழும்பில் வசிக்கிறீர்? இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா? சகோதரர்கள் யாராவது இயக்கத்தில் இருக்கிறார்களா? நண்பர்கள் யாருக்காவது இயக்கத் தொடர்பு இருக்கிறதா? என மாறிமாறிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான்.
எல்லாவற்றிற்குமே இல்லையெனப் பதிலளிப்பதைவிட நான் வேறென்ன சொல்லமுடியும்.
பின்பு வேறொருவன் எனது சேட்டைக் கழற்றச் சொல்லி உடம்பு முழுவதையும் சோதனை செய்தான். எனது நெற்றியில் இருந்த தழும்பு ஒன்றினைக் காட்டி இது எப்படி ஏற்பட்டது ? எனக் கேட்டான்.
சிறுவயதில் நான் கால்பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தின் தழும்பு விசாரணை செய்பவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அந்தத் தழும்பைக் காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.
பின்னர் என்னைப் பலவித கோணங்களில் புகைப் படமெடுத்தார்கள் ; வீடியோ படம் எடுத்தார்கள் ; கைரேகைகளைப் பதிவுசெய்தார்கள்.
என்னைக் கைதுசெய்து அழைத்துவந்த பொலிஸ்காரர் அப்போது அங்கு வந்தார். இரவு எனது அறையிலே கண்டெடுத்த புகைப்படங்களைக் காட்டி, “இது சம்பந்தமாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது” எனக் கூறினார்.
அந்தப் படங்களை ரஞ்சித் சில்வாவும் புஞ்சிஹேவாவும் எடுத்ததாகக் கூறியிருந்தேன். அவர்களிடம் விசாரித்தால் என்ன கூறுவார்களோ ? குமரேசன் எடுத்த படங்கள் சிலவும் அவற்றுடன் இருந்தன.
விசாரணை முடிந்ததும் அந்த அறிக்கையை என். ஐ. பி. க்கு அனுப்பி அங்கிருந்து பதில் வந்த பின்னர்தான் என்னை விடுதலை செய்யமுடியுமென இப்போது புதிதாகக் கூறினார்கள்.
எனக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் அற்றுப்போய் விட்டது. நான் சரியாக இரண்டு மணிக்குப் பரீட்சை மண்டபத்தில் இருக்க வேண்டும் அதற்குமுன் குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து பதில் வந்துசேருமா?
நான் சோர்ந்துபோய் வாங்கொன்றில் அமர்ந்தேன். சாப்பிடும்படி பாணும் பருப்பும் தந்தார்கள். வயிற்றுக்குள் ஒரே குமட்டல். அவர்கள் கொடுத்த வெறும் தேநீரைமட்டும் குடித்தேன்.
சிறிது நேரத்தில் நிலையப் பொறுப்பதிகாரி என்னை அழைத்து, “உம்மைப்பற்றிய விசாரணைகள் இன்னும் முடியவில்லை. ஆனாலும் சோதனை எழுதும் மாணவர்களுக்கு உதவும்படி பல்கலைக்கழக மேலிடத்திலிருந்து என்னைக் கேட்டிருக்கிறார்கள். அதனால் இப்போது உம்மை அனுப்பி வைக்கிறேன். சோதனை முடிந்ததும் மீண்டும் இங்கு வந்துவிட வேண்டும்” எனக்கூறினார்.
நான் வெளியே வந்தபோது என்னைக் கண்காணிப்பதற்காக ஒரு பொலிஸ்காரன் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
இந்நிலையில் என்னால் எப்படி நிம்மதியாகச் சோதனை எழுதமுடியும். ? ஆனாலும் வேறுவழி ஏதுமில்லை.
முதலில் நான் அறைக்குச் சென்றேன். சுதுமெனிக்காவைச் சந்தித்த போது, இரவு குமரேசன் வந்ததாகக் கூறினாள். அவனிடம் நடந்த விஷயங்கள் யாவற்றையும் தான் தெரிவித்ததாகவும் அவன் உடனேயே எங்கோ புறப்பட்டுச் சென்றதாகவும் சொன்னாள்.
சோதனைக்கு நேரமாகிவிட்டது.
குமரேசன் எப்படியும் பரிட்சை மண்டபத்திற்கு வந்து விடுவான். நான் பரிட்சை மண்டபத்தை அடைந்தபோது பரிட்சை ஆரம்பமாகியிருந்தது.
என் கண்கள் குமரேசனைத் தேடின. அவனை அங்கு காணவில்லை....... எங்கே போயிருப்பான்?
அவன் என்றுமே ஒரு புரியாத புதிர்தான் !
- 1996.
+++++++++++++++++++++
உள்ளும் புறமும்
முருகானந்த பவன் என்ற அந்தப் பிரபல ஹோட்டலின் பெயர்ப் பலகையைக் கவனித்ததும் டாக்சியை நிறுத்தும்படி சாரதியிடம் கூறி, மீற்றரைக் கவனித்துக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டுப் பின்சீட்டில் இருந்த பார்சலை வெளியே இழுத்தெடுத்தான் திருநாவுக்கரசு. பார்சலில் வரிந்து கட்டியிருந்த கயிற்றிலே பிடித்து, அதனைத் தூக்கிக் ஹோட்டலுக்குக் கொண்டு வருவதற்குள் கயிறு அவனது உள்ளங் கையை அழுத்திச் சிவக்க வைத்துவிட்டது. சினத்துடன் பார்சலை அந்த ஹோட்டலின் வாசலிலேயே பொத்தென்று போட்டுவிட்டான்.
ஊரிலிருந்து புறப்படும்போது செல்லாச்சிக் கிழவி தனது மூத்த மருமகனிடம் இந்தப் பார்சலைக் கொடுத்துவிடும்படி அவனை வேண்டியிருந்தாள்.
இரவு றயிலில் வந்ததால் நித்திரை கொள்ளமுடியவில்லை. கண்கள் எரிச்சல் எடுத்தன. றயில்வேறு தாமதமாகித்தான் கொழும்பை வந்தடைந்தது. ‘பாழாய்ப்போன இந்த யாழ்ப்பாண றயில் எப்பொழுது தான் நேரத்திற்கு வருகிறது’ என மனதில் அலுத்துக்கொண்டான். பசி வயிற்றைக் கிள்ளியது.
ஹோட்டலின் முன்புறத்தில் மேசையருகே நிற்பவர் திருநாவுக்கரசுவை கவனிக்கவில்லை. காலை நேரமானதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலே பிள்ளையார் படம், பக்கத்தில் முருகன் படம், அதையடுத்து லட்சுமி படம். அப்போதுதான் அந்தப் படங்களுக்கு புதிய மல்லிகைச் சரம் மாட்டியிருக்கிறார்கள். இடது பக்கத்து மூலையில் இருந்த அந்த அழகான புத்தர் படத்தில் மட்டும் மல்லிகைச் சரத்திற்குப் பதிலாகக் கடதாசி மாலையொன்று போடப்பட்டிருக்கிறது.
மல்லிகைச் சரத்தின் வாசனை இதமாக இருந்தது. பணம் வைக்கும் அந்தப் பெரிய இரும்புபெட்டியின் இடுக்கில் செருகியிருந்த ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.
வெளியே கண்ணாடிப் பெட்டியில் நிறைத்து வைத்திருந்த பேரீச்சம்பழங்களின்மேல் இரைச்சலோடு ஈக்கள் மொய்ப்பதுதான் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.
முன் மேசையருகே நிற்பவர் இப்பொழுதும் தனது வேலை யிலேதான் கவனமாக இருந்தார். உள்ளேயிருந்து வருபவர்கள் கொண்டுவரும் ‘பில்’களைப் பார்த்துப் பணத்தை வாங்குவதும் மீதிக்குச் சில்லறையை எண்ணிக் கொடுப்பதுமாக இருந்தார்.
இவர்தான் செல்லாச்சிக் கிழவியின் மருமகனாக இருக்குமோ?
செல்லாச்சிக் கிழவி தனது மகளை, உரும்பராயைச் சேர்ந்த சீவரத்தினம் என்பவருக்கு மணமுடித்துக்கொடுத்திருக்கிறாள் என்பதும், அந்தச் சீவரத்தினம்தான் முருகானந்தபவன் என்ற இந்தப் பிரபல ஹோட்டலின் உரிமையாளர் என்பதுந்தான் திருநாவுக்கரசுவிற்குத் தெரிந்த விஷயங்கள். திருநாவுக்கரசு கொழும்பில் ஐந்தாறு வருஷங்களாக வேலைபார்த்து வந்தபோதிலும், இந்த முருகானந்த பவனுக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அதனால் சீவரத்தினத்தை அவன் இதுவரை பார்த்ததுமில்லை.
மேசையருகில் வேலையில் மூழ்கியிருந்தவர் தற்செயலாகத் திரும்பியபோது திருநாவுக்கரசுவைக் கவனிக்கிறார். என்ன வேண்டும் என்பதுபோல அவரது பார்வை அவன்மேல் படருகிறது.
“அண்ணை நீங்கள்தான் சீவரத்தினமோ?”
“ஓம், என்ன விஷயம்?”
“செல்லாச்சி ஒரு பார்சல் தந்துவிட்டவ; அதைத் தரத்தான் வந்தனான்.”
“ஊரிலயிருந்து வாறியளே? நான் வேலைப் பிராக்கில உங்களைக் கவனிக்கேல்ல.... தம்பியும் மாவிட்டபுரத்திலையோ இருக்கிறது?”
ஆம் என்பதற்கு அடையாளமாகச் சிரித்துக்கொண்டே தலையை மட்டும் அசைக்கிறான் திருநாவுக்கரசு.
“நான் உங்களை முந்தி ஒருநாளும் பார்த்ததில்லை, எனக்கு மாவிட்டபுரத்து ஆட்களை அவ்வளவு தெரியாது. அங்கை வந்தாலும் மனுசி வீட்டிலை ரெண்டு மூண்டு நாள் நிண்டிட்டு வந்திடுவன். தம்பி கொழும்பிலை எங்கை இருக்கிறியள்?”
“வெள்ளவத்தையிலை.”
“டேய் பெடியா உந்தப் பார்சலை உள்ளுக்கு எடுத்து வை.”
சாப்பாட்டு மேசையைத் துடைத்துச் சுத்தஞ்செய்து கொண்டி ருந்தவனை அழைத்து உத்தரவிடுகிறார் சீவரத்தினம்.
பெடியன் பார்சலை சிரமத்துடன் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு உள்ளே போகிறான்.
யார் யாரோ பில்களைக் கொடுத்து அவற்றிற்குரிய பணத்தையும் கொடுக்கிறார்கள். சீவரத்தினம் வேலையைக் கவனித்தபடியே கதைகொடுக்கிறார்.
“அப்ப ஊரிலை என்ன விசேஷம் தம்பி; மழை கிழை பெய்யுதே?”
திருநாவுக்கரசு பதில்கூற எத்தனித்தபோது அருச்சனைத் தட்டுடன் எங்கிருந்தோ வந்த பையன் ஒருவன் அந்த தட்டைச் சீவரத்தினத்தின் முன்பாக வைத்துவிட்டு உள்ளே போகிறான்.
அவனும் இங்கு வேலை செய்பவனாகத்தான் இருக்க வேண்டும். அவனை முன்பு எங்கோ பார்த்தது போன்ற நினைவு திருநாவுக்கரசுவுக்கு எற்பட்டது. எங்கே பார்த்திருக்கக்கூடும்?
“இண்டைக்கு வெள்ளிக்கிழமை தம்பி, அதோட என்ரை மூத்தவன் முருகானந்தன்ரை பிறந்தநாள். ஒருக்கால் கோயிலுக்குப் போகலாமெண்டால் அங்காலை இங்காலை விலக நேரமில்லை. அதுதான் கடையிலை நிக்கிற பெடியனை அனுப்பி அருச்சனை செய்விச்சனான். பின்னேரந்தான் நான் கோயிலுக்கு போகவேணும்.”
சீவரத்தினம் அருச்சனைத் தட்டிலிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கிறார்.
திருநாவுக்கரசுவிற்கு வந்த வேலை முடிந்துவிட்டது. புறப்பட ஆயத்தமாகிறான்.
“அப்ப நான் போட்டுவாறனண்ணை.”
“பார் தம்பி, நான் வேலைப் பிராக்கிலை ஏதோ கதைச்சுக் கொண்டிருக்கிறன், தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.”
திருநாவுக்கரசுவின் பதிலை எதிர்பார்க்காமலே மேசையில் கிடந்த அழைப்பு மணியை அடிக்கிறார் சீவரத்தினம்.
கோவிலுக்குப் போய்வந்த அதே பெடியன்தான் வருகிறான்.
“ஐயாவை உள்ளுக்குக் கூட்டிக் கொண்டு போ.”
திருநாவுக்கரசுவுக்கு றயிலில் பயணம் செய்த களைப்பு, தேநீர் குடித்தால் தீரும்போல இருந்தது. பெடியன் திருநாவுக்கரசுவை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு “என்ன சாப்பிடுறியள்?” என விநயத்துடன் வினவுகிறான்.
“ஒரு டீ மட்டும் கொண்டு வா.”
உள்ளே தேநீருக்கு ஓடர் கொடுத்துவிட்டு ஒரு தட்டில் பலகாரங்களை எடுத்துவந்து திருநாவுக்கரசுவின் முன்பாக வைத்துவிட்டுச் சிரிக்கிறான் அவன்.
“தம்பி உன்னை எங்கையோ பார்த்திருக்கிறன். நினைவு வருகுதில்லை.” திருநாவுக்கரசு பெடியனிடம் கூறுகிறான்.
“ஐயா என்னைச் சின்ன வயசில பாத்தனீங்கள். இப்ப மறந்திட்டியள்போல இருக்கு ; நானும் உங்கடை ஊர்தான்.”
“எங்கை மாவிட்டபுரமே?”
“நாங்கள் இருக்கிற இடத்திற்கு வாசிகசாலையடி ஒழுங்கையால உள்ளுக்குப் போகவேணும்.
திருநாவுக்கரசுவின் மூளைக்குள் ஒரு பலமான தாக்கம் ; இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.
‘இவன் கள்ளிறக்கிற சின்னவன்ரை மோன்!’
திருநாவுக்கரசுவுக்கு வடை தொண்டைக்குள் விக்கல் எடுக்கிறது.
ஓடர் கொடுத்த தேநீரைப் பெடியன் கொண்டுவந்து திருநாவுக்கரசுவின் முன்னால் வைக்கிறான்.
“ஐயாவை நான் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ல அடிக்கடி பாத்திருக்கிறன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கோயிலுக்கு வாறனீங்களெல்லே.” பெடியன்தான் சொல்லுகிறான்.
திருநாவுக்கரசுவிற்கு இப்போது தேநீர் புரையேறுகிறது.
“நான் போட்டுவாறன்.”
முன்வாசலுக்குத் திருநாவுக்கரசு வந்தபோது, “என்ன தம்பி அவ்வளவு கெதியாய் வந்திட்டியள், ஏன் சாப்பிடேல்லையே?”எனச் சம்பிரதாயமாகக் கேட்கிறார் சீவரத்தினம்.
இந்தப் பெடியனின் விஷயம் சீவரத்தினத்திற்குத் தெரியாதா ? அல்லது தெரிந்திருந்தும் அவனை இங்கு வேலைக்கு வைத்திருக்கிறாரா?
“அண்ணை உந்தப் பெடியனை எங்க பிடிச்சனீங்கள்?”
“எந்தப் பெடியனைப் பற்றித் தம்பி கேட்கிறாய்?”
“கோயில்லை அருச்சனை செய்து கொண்டுவந்த பெடியனைப் பற்றித்தான் கேட்கிறன்.”
“அவன் தம்பி உங்கை பம்பலப்பிட்டியிலை ஒரு வீட்டிலை வேலைக்கு நிண்டவன். அங்கை சம்பளம் காணாதெண்டு அந்த வேலையை விட்டிட்டு இங்கைவந்து வேலை கேட்டான் ; நல்ல பெடியன் தம்பி.” பெடியனைப் பற்றிக் கூறியபோது இவர் ஏன் அவனைப் பற்றி விசாரிக்கிறார் என்ற எண்ணமும் சீவரத்தினத்தின் மனதில் எழுந்தது.
“அண்ணை நான் சொல்லுறனெண்டு குறை நினையா தையுங்கோ, உங்கட கடையில நிற்கிற பெடியன் ஆர் தெரியுமே? எங்கடையூர்ச் சின்னவன்ரை மோன் எல்லே.”
“அதார் தம்பி அந்தச் சின்னவன்? எனக்கு எங்கடையூர் ஆக்களை அவ்வளவுக்குத் தெரியாதெண்டெல்லே சொன்னனான்.” சீவரத்தினம் கூறுகிறார்.
“சின்னவனும் அங்கை கொஞ்சப் பேரும் தங்களையும் கோயிலுக்கை விடவேணுமெண்டு கலகப்படுத்தினவையெல்லே.”
சீவரத்தினம் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை யாராவது கேட்டுக் கொண்டிருக் கிறார்களா என்பதைக் கவனித்தார். நல்ல வேளையாக வேறு எவரும் அந்த இடத்தில் இல்லை.
சிறிது நேரத்தின் பின்னர்தான் சீவரத்தினத்தால் தன்னைச் சுதாகரித்துக் கொள்ள முடிந்தது. அவரது முகம் இப்போது சிறிது சிறிதாகத் தெளிவு பெறத்தொடங்கியது.
“தம்பி பிழைக்க வந்த இடத்திலை இதையெல்லாம் பார்க்கேலாது.... நானில்லாத நேரத்திலை அந்தப் பெடியன்தான் கடையைக் கவனிச்சுக்கொள்ளிறவன். அவனைப்போல ஒரு நம்பிக்கையான ஆள்கிடைக்காது.”
சீவரத்தினம் கூறிய வார்த்தைகள் திருநாவுக்கரசுவைச் சிந்திக்க வைத்தன. அவர் கூறியதை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தபடியே அவன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
- கதம்பம், நவம்பர் 1971.
++++++++++++++++++++
கோணல்கள்
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் நிறைந்துவிட்டார்கள். தெருவின் மறுபுறத்தில் இருந்த வாசிகசாலைக் கட்டிடத்தின் திண்ணைகளில் ஆண்கள் வசதியாக அமர்ந்திருந்தார்கள். மாணவர்களைத் தவிர அங்கு பத்திரிகை வாசிப்பதற்காகவும் சிலர் வந்திருந்தனர். பெண்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தின் ஒதுக்குப் புறத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.
இரவு முழுவதும் பெய்த மழை இப்பொழுது சற்று ஓய்ந்திருந்தாலும் எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்பதற்கு அறிகுறியாக வானம் மூடிக்கிடந்தது.
வாசிகசாலையில் இருந்தபடியே ஒருசிலர் மாணவிகளின் பக்கம் தங்களது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தனர். மாணவிகள் சிலரது பார்வைகளும் அந்த ஆண்களின் பக்கந்தான் சாய்ந்திருந்தது. பார்வைகள் சந்தித்தபோது சிலர் கவனத்துடன் வேறு எங்கோ பார்ப்பதுபோலப் பாவனை செய்தனர்; சிலர் புன்னகை பரிமாறிக் கொண்டனர்.
இந்த இளவட்டங்களின் திருவிளையாடல்களைப் பார்த்து ரசிக்க முடியாத சிலர் தங்களுக்குள் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டார்கள்.
பஸ்தரிப்பு நிலையம் இங்கு ஏற்பட்ட காலத்திலிருந்தே இந்த நிகழ்ச்சிகள் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாமலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
பெண்கள் இருந்த பகுதியில் அவர்களுடன் சேராது சற்று ஒதுக்குப் புறமாக நின்றிருந்த பார்வதியும் மூன்றுமாத காலத்துக்கு முன்னர் பாடசாலை மாணவியாக இருந்தபோது இதே பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று சுந்தரத்தை அடிக்கடி கவனித்திருக்கிறாள். அவள் பாடசாலைக்குப் போகும்நேரத்தில் அவளைப் பார்ப்பதற்கென்றே சுந்தரம் அங்கு வருவான். அவன் அவளைப் பார்த்துப் புன்னகை புரியும்போதெல்லாம் அவளும் புன்னகை புரிந்திருக்கிறாள். அவன் அங்கு வராத நேரங்களில், அவனை நினைத்து அவனது வரவுக்காக ஏங்கியிருக்கிறாள். ஒருநாள் சுந்தரம் அவளைக் கூட்டிச்செல்வதற்காகக் காருடன் வந்தபோது, தனது தாயையும் சகோதரிகளையும் உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்துதான் அவனுடன் ஓடிச்சென்று தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.
சுந்தரம் ஊரில் உள்ள ‘கறாச்’ ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்கிறான். தாய்தந்தையரைச் சிறுவயதிலே இழந்து தன் மாமனோடு வாழ்ந்துவந்த சுந்தரம் பார்வதியை மறந்து விடமுடியாத நிலையில், தன்னை வளர்த்து ஆளாக்கிய மாமனின் பேச்சையும் மீறித்தான் அவளைக் கைப்பிடித்தான்.
பார்வதியும் சிறுவயதிலே தந்தையை இழந்தவள்தான். அவளது தந்தை எப்போதோ அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்ததினால் அவர் இறந்த பின்பு அவளது தாய்க்குக் கிடைக்கும் பென்ஷன் பணத்தில் அவளும் அவளது தாயும் இரு சகோதரிகளும் வாழ்ந்து வந்தார்கள்.
சுந்தரமும் பார்வதியும் தங்களது சுற்றத்தவர்கள் எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டுத் தனியாக வாடகை வீடொன்றில் குடும்பம் நடத்தத் தொடங்கி இன்று மூன்று மாதங்களாகிவிட்டன.
நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சுகவீனமாகப் படுக்கையில் படுத்த சுந்தரம், திடீரென நிலைமை மோசமாகி நோயினால் அவதியுற்றபோது, பார்வதி செய்வதறியாது. திகைத்துப் போனாள். ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவனைக் காரில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்தாள்.
சுந்தரத்துடன் வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பின்னர் இன்றுதான் அவள் இந்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு வந்திருக்கிறாள். நோயுற்றிருக்கும் தனது கணவனுக்கு வேண்டிய பொருட்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்காக அவள் இப்போது பஸ்ஸிற்காகக் காத்திருக்கிறாள்.
கறுத்திருந்த மேகத்திலிருந்து மழைத்துளிகள் சிறிது சிறிதாக விழத் தொடங்கின.
பார்வதிக்கு அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நிமிடமம் யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. வாசிகசாலையிலிருந்த எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்று வாழ்க்கை நடத்தத் தொடங்கிய நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வும் அவளுக்குள் ஏற்பட்டது.
அவளுடன் படித்த சகமாணவிகள் இப்போதும் கல்லூரிக்குப் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவளுடைய சினேகிதிகள் சிலர் அவளைக் கண்டதும் தங்களுடைய பழைய சினேகிதத்தை உறுதிப் படுத்துவதுபோல அவளுடன் சகஜமாகக் கதைத்தார்கள். அப்போது பார்வதியின் மனதில், தான் சுந்தரத்துடன் கூடிவாழும் வாழ்க்கையைப்பற்றி அவர்கள் கேட்டுவிடக் கூடாதே என்ற தவிப்பு ஏற்பட்டது. அவளுடைய உயிர்த் தோழிகள் அவளது சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே கேட்காது பொதுவான விஷயங்களைப்பற்றியே பேசியபோது தனக்கும் அவர்களுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விட்டதை எண்ணி ஒருவிதத் தனிமை உணர்ச்சியில் அவள் வேதனைப்படவும் செய்தாள்.
ஒருசிலர், தன்னைக்கண்டதும் காணாததுபோல் பாவனை செய்தபோதும், தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்ற நிகழ்ச்சியைத் தவறென்று அவர்கள் கருதுவதைக் கவனித்தபோதும், தன்னுடன் கதைப்பதால் தங்களுக்கும் கெட்டபெயர் வந்துவிடுமோ என அவர்கள் பயந்து ஒதுங்கியதைப் பார்த்தபோதும் பார்வதியின் வேதனை மேலும் அதிகமாகியது.
அவளுடைய தங்கை பானுமதியும் சகமாணவிகளோடு சேர்ந்து கொண்டு தன்னைப் பார்த்தும் பார்க்காதவள்போலத் தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தபோது பார்வதிக்குக் கதறியழ வேண்டும்போலத் தோன்றியது.
பஸ் வருகிறதா எனக் கவனிப்பதுபோலத் தனது தங்கை பானுமதியை அடிக்கடி கவனித்தாள் பார்வதி. ஆனால் பானுமதி அவளின் பக்கம் திரும்பவேயில்லை.
கடந்த மூன்று மாதங்களிலும் அவள் எத்தனையோ தடவை தனது தாயைப் பற்றியும் சகோதரிகளைப் பற்றியும் நினைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவர்களைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றும். அவர்கள் தன்னை இனிமேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, பொங்கி வரும் தனது பாச உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தனிமையில் கண்ணீர் விட்டிருக்கிறாள்.
தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. அருகில் வந்ததும் பார்வதியும் மற்றவர்களுடன் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினாள். உள்ளே ஏறியதுந்தான் அது மாணவர்களுக்கான பாடசாலைச்சேவை என்பதைக் கவனித்ததும் அவள் பதற்றத்துடன் கீழே இறங்கினாள். பஸ்ஸில் ஏறிவிட்ட மாணவிகள் சிலர் அப்போது அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தார்கள். பார்வதிக்குப் பெரிதும் அவமானமாக இருந்தது.
பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னரே அது பாடசாலைச் சேவைக்காக ஓடும் பஸ் என்பதைக் கவனிக்காது உள்ளே ஏறிய தனது அவசர புத்திக்காக அவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள். நிதானமில்லாது அவசரமாகத் தான் புரிந்துவிடும் காரியங்களுக்காக அவள் எத்தனையோ தடவை தன்னைத்தானே கடிந்திருக்கிறாள். ஆனாலும் திடீரென அவளையும் மீறிவிடும் அந்த அவசர குணத்தை அவளால் மாற்றவே முடியவில்லை.
இவ்வளவு நேரமும் வாசிகசாலையில் யாருடனோ கதைத்துக்கொண்டு பார்வதியையே கவனித்துக் கொண்டிருந்த கனகரத்தினம் இப்போது அவள் அருகில் வந்தார்.
கனகரத்தினத்திற்கு முப்பது அல்லது முப்பத்தைந்து வயதுவரைதான் மதிக்கலாம். திருமணஞ் செய்த நான்கைந்து வருடங்களுக்குள்ளாகவே அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதால் அவர் இப்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஊரிலே பெரிய மனிதர் என்ற ஸ்தானத்தில் அவர் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் மரியாதை கொடுக்குமளவுக்கு சிறப்போடு வாழ்கிறார்.
பார்வதி தனது தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்த காலத்தில் கனகரத்தினம் அடிக்கடி அவர்களுடைய வீட்டுக்கு வருவார். கனகரத்தினத்தின் வீடு அவர்களுடைய வீட்டை அடுத்துத்தான் இருந்தது. வெகுகாலமாகவே அவர்களுடன் பழகி, குடும்ப நண்பராகிவிட்ட கனகரத்தினம் வேண்டிய நேரங்களில் அவர்களுக்கு உதவியும் செய்வார்.
பார்வதிக்குக் கனகரத்தினத்திடம் எப்பொழுதுமே மதிப்பு உண்டு. அவள் அவரைக் ‘கனகரம்மான்’ என்றுதான் மரியாதையாக அழைப்பாள்.
பள்ளிமாணவியாக இருந்த காலத்தில் பார்வதி சுந்தரத்தோடு தொடர்பு கொண்டிருந்தபோது, கனகரத்தினம் அவளை எத்தனையோ தடவைகள் தனிமையில் கண்டித்திருக்கிறார்; சுந்தரத்தை மறந்து விடும்படி கூறியிருக்கிறார்.
கனகரத்தினம் அருகே வந்தபோது பார்வதியின் மனம் பயத்தால் அடித்துக்கொண்டது. மூன்று மாதங்களின் பின்னர் அன்றுதான் பார்வதி அவரைச் சந்திக்கிறாள். தன் புத்திமதிகளையும் மீறிச் சுந்தரத்தோடு சேர்ந்து வாழ்வதால் கனகரத்தினம் இப்போது கோபத்தோடு ஏசுவாரோ எனப் பார்வதி பயந்தாள்.
“எங்கை பார்வதி போகிறாய்?” கனகரத்தினம் அவளிடம் கேட்டார்.
சுந்தரம் சுகவீனமுற்றிருப்பதையும், சுந்தரத்தைப் பார்க்கப் போவதற்காகத்தான் பஸ்ஸிற்காகக் காத்துநிற்பதையும் பார்வதி தயக்கத்தோடு அவரிடம் கூறினாள்.
மழை இப்போது பலக்கத் தொடங்கியது. குடையில்லாது நனைந்து கொண்டிருந்த பார்வதியிடம் தனது குடையைக் கொடுத்தார் கனகரத்தினம். தன்னை எப்படியெல்லாமோ ஏசுவார் என எதிர்பார்த்திருந்த பார்வதிக்கு அவர் குடையைக் கொடுத்துதவ முன்வந்தது பெரிதும் ஆறுதலாக இருந்தது. நன்றியறிதலுடன் அவள் குடையைப் பெற்றுக்கொண்டாள்.
“சுந்தரத்துக்கு வருத்தம் கடுமையே?”
“நெருப்புக்காய்ச்சல் என்று டொக்டர் சொன்னவர். இரண்டு மூண்டு கிழமைக்கு ஆஸ்பத்திரியிலை இருக்க வேணுமாம்.”
தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. பின்னேரம் தான் குடையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு கனகரத்தினம் விடைபெற்றுக் கொண்டார்.
பார்வதி ஆஸ்பத்திரியை அடைந்தபோது சுந்தரம் காய்ச்சலின் வேகத்தினால் நினைவற்றுப் படுத்திருந்தான். பார்வதி அங்கு வந்ததைகூட அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. சுந்தரத்தின் நிலைமையைப் பார்த்ததும் பார்வதி அழத்தொடங்கிவிட்டாள். யாருமே உதவியற்ற நிலையில் சுந்தரத்துக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதை நினைக்கும்போது பொங்கிவந்த வேதனையை அவளால் அடக்க முடியவில்லை.
டொக்டர் அவளுக்கு ஆறுதல் கூறினார். முக்கியமான சிலமருந்துகள் ஆஸ்பத்திரியில் இல்லாததினால் அவற்றை வெளியில் உள்ள மருந்துக்கடைகளில் வாங்கி மறுநாள் வரும்போது கொண்டுவரும்படி சிலமருந்துகளின் பெயர்களைக் குறித்துக் கொடுத்தார்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது பார்வதியின் கவலை முழுவதும் எப்படியாவது டொக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கவேண்டும் என்பதிலேதான் இருந்தது. அவளிடம் அப்போது அந்த மருந்துகளை வாங்குவதற்குப் போதிய பணம் இருக்கவில்லை. யாரிடந்தான் பணத்தைக் கேட்பது?
சுந்தரத்துடன் எப்படியும் வாழ்க்கை நடத்த முடியும் என்ற திடத்துடன் அவள் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோது ஊரவர்களும் உறவினர்களும் அதனைக் கேவலமாகப் பேசினார்கள். இன்று சுந்தரத்திற்காகவே யாரிடமாவது சென்று பணம் கடனாகக் கேட்டால் அவர்கள் தனது மனம் நோகும்படி குத்தலாக ஏதும் சொல்வார்களோ என அவள் பயந்தாள்.
பார்வதி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது நன்றாக இருட்டி விட்டது. அவளுக்கு வீட்டில் தனியாக இருப்பதற்குச் சிறிது அச்சமாக இருந்தது. அயலிலும் வீடுகள் இல்லை. முன்கதவை நன்றாகப் பூட்டித் தாழ்ப்பாழ் போட்டுவிட்டுத் தனது வீட்டு வேலைகளில் முனைந்திருந்தாள்.
வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. பார்வதி யன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். கனகரத்தினம் நின்று கொண்டிருந்தார். காலையில் அவரிடம் வாங்கிய குடை இன்னும் தன்னிடத்திலேயே இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. முன் கதவைத் திறந்து அவரை வரவேற்றாள்.
“நான் இங்கை வாறதை யாரும் கண்டால் வீண்கதை பேசுவினம். அதனாலைதான் இந்த நேரத்தில ஒருவருக்கும் தெரியாம வந்தனான்.” கனகரத்தினம் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தார்.
“அம்மா எப்பிடி இருக்கிறா? எப்ப எண்டாலும் என்னைப் பற்றியும் கதைக்கிறவவே?” பார்வதி ஆவலோடு தனது தாயைப் பற்றி விசாரித்தாள்.
“அம்மாவுக்குச் சரியான கோவம்; அவ உன்னிடம் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தவ. திடீரெண்டு ஓடிப்போனவுடனை அவவுக்குக் கோவம் வரத்தானே செய்யும். அவவின்ரை கோவம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். போகப்போக எல்லாம் சரியாகிவிடும்; நான் எப்பிடியும் உங்களை ஒற்றுமையாக்கி வைப்பன். நீ ஒண்டுக்கும் யோசிக்காதை.” கனகரத்தினத்தின் வார்த்தைகள் பார்வதிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அவர் நினைத்தால் எப்படியும் தன்னைத் தனது தாயுடனும் சகோதரிகளுடனும் ஒற்றுமையாக்கி வைப்பார் என்பது பார்வதிக்கு நிச்சயமாகத் தெரியும்.
“இருங்கோ கனகரம்மான், தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்.” சமையல் அறைப்பக்கம் போனாள் பார்வதி.
சிறிது நேரத்தின் பின்பு தன்னைத் தொடர்ந்து கனகரத்தினமும் சமையல் அறைக்குள் வந்துவிட்டதைக் கவனித்தபோது அவளது மனதில் ஏதோ குறுகுறுத்தது.
“எனக்கு இப்ப தேத்தண்ணி வேண்டாம், கொஞ்ச நேரத்துக்கு முன்னந்தான் வீட்டிலை குடிச்சிட்டு வந்தனான். உன்னுடைய புருஷனுக்கு இப்ப எப்படி இருக்கு? எப்பவாம் ஆஸ்பத்திரியாலை விடுவினம்?”
“வருத்தம் கொஞ்சம் கடுமைதான்; டொக்டர் எதோ மருந்துகளை எழுதித் தந்திருக்கிறார். நாளைக்குப் போகும்போது வாங்கிக்கொண்டு போகவேணும்.” பார்வதி அப்படிக் கூறியபோது கனகரத்தினத்திடம் தனது நிலைமையை விளக்கிக் கடனாகப் பணம் கேட்கலாமா எனவும் யோசித்தாள்.
“செலவுக்குக் கையிலை மடியிலை ஏதும் வச்சிருக்கிறியே? கனகரத்தினந்தான் கேட்டார்.
பார்வதி பதிலொன்றும் பேசாது நின்றுகொண்டிருந்தாள்.
“எனக்குத் தெரியும் பார்வதி, இந்த நேரத்தில உன்னட்டை செலவுக்குக் காசு இருக்காது. உனக்குத் தாறதுக்குத் தான் நான் கொஞ்சம் காசு கொண்டு வந்திருக்கிறன். நீ என்னட்டைப் பயப்பிடாமல் எதுவேணுமெண்டாலும் கேட்கலாம். இந்த நேரத்திலை உதவி செய்யாவிட்டால் பிறகு எப்ப உதவி செய்யிறது?”
பார்வதியின் பார்வை தற்செயலாக முன்பக்கம் சென்றது. முன்கதவு சாத்தப்பட்டிருந்தது. கனகரத்தினந்தான் சாத்தியிருக்க வேண்டும். அவளது நெஞ்சம் துணுக்குற்றது.
கனகரத்தினத்திற்குத் தேநீர் தயாரிப்பதற்காக மூட்டிய நெருப்பு அடுப்புக்குள் சுவாலைவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பார்வதி அந்தச் சுவாலைக்குள் தனது பார்வையைச் செலுத்திய வண்ணம் நின்றிருந்தாள்.
கனகரத்தினம் அவள் அருகில் வந்து அவளது கையைப் பற்றித் தான் கொண்டுவந்த பணநோட்டுகளை அவளது கைக்குள் திணித்தார்.
“எனக்குப் பயமாயிருக்கு, நீங்கள் போயிட்டு வாருங்கோ” பார்வதி பதட்டத்துடன் கூறினாள்.
“ஏன் பார்வதி என்னைக் கலைக்கிறாய்? நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை, இப்ப இங்கை ஒருத்தரும் வரமாட்டினம்.”
கனகரத்தினம் அவளது கையிலே திணித்த பணநோட்டுகள் நிலத்திலே விழுந்து சிதறின.
அடுப்பிலிருந்து சுவாலை பெரிதாக வீசியது. அந்த அனலின் வெப்பத்தைத் தாங்க முடியாது பார்வதி விலகிப்போக முயன்று கொண்டிருந்தாள்.
“ஐயோ, என்னை விட்டிடுங்கோ” அவள் கனகரத்தினத்திடம் கெஞ்சினாள்.
கனகரத்தினத்தின் பிடி அவளை இறுக்கியது. பார்வதி ஆவேசத்தோடு அவரது பிடியிலிருந்து திமிறினாள்.
கனகரத்தினத்திற்கு அவளது எதிர்ப்பு எரிச்சலைக் கொடுத்தது.
“என்னடி, நீ சுந்தரத்தோடை ஓடிவந்தவள்தானே... என்னைக் கண்டால்தான் உனக்குக் கசக்குதோ?”
அவர் அப்படிக் கூறியபோது பார்வதிக்குக் கோபம் பொங்கியது. அவள் பத்திரகாளியானாள். என்றுமில்லாத அசுரபலம் அவளுக்குள் புகுந்துகொண்டது. கனகரத்தினத்தை வெறியோடு தள்ளினாள். கனகரத்தினம் நிலைதடுமாறித் தள்ளாடினார். அதே வேகத்தோடு அவள் அவரைச் சமையலறையின் பின்கதவு வழியாக வெளியே தள்ளிக் கதவைப் படீரெனச் சாத்தி பூட்டிவிட்டாள்.
பார்வதிக்கு மூச்சுவாங்கியது. அவள் விம்மி விம்மி அழுதாள்.
அடுப்பிலிருந்த சுவாலை இப்போது தணிந்து அவிந்து சாம்பராகியது.
பார்வதி விம்மும் சத்தம் வெளியே நின்றுகொண்டிருந்த கனகரத்தினத்தின் காதுகளிலும் விழுந்தது. அவர் ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் துடித்தார். அவரது குடை பணம் யாவும் உள்ளேயிருந்தன. தனது விருப்பம் நிறைவேறாமலே அவற்றை இழந்துவிடக் கனகரத்தினம் விரும்பலில்லை. ஆனாலும் அப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறொருநாள் தனது பொருட்களைச் சாவதானமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நினைவில் அவர் மெதுவாக எழுந்து தனது வீட்டை நோக்கி நடந்தார்.
பார்வதி மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அவளிடத்தில் இப்போது அளவில்லாத வெறுப்புணர்ச்சி ஓங்கிநின்றது. கனகரத்தினம் இப்படி நடக்கக்கூடியவரென அவள் கனவிலும் கருதியதில்லை. அவர் முன்பு எவ்வளவோ நல்லவராக இருந்தார். திடீரென எப்படி அவருக்கு இந்த கோணற்புத்தி ஏற்பட்டது?
தன்னிச்சைப்படி ஒருவனோடு ஓடிச்சென்று வாழும் பெண்களை எல்லோருமே பலவீனமானவர்கள் என்றுதான் எண்ணுகிறார்கள். ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதான் கணிக்கிறார்கள். அதனாலேதான் கனகரத்தினமும் தன்னிடத்தில் அப்படி நடந்து கொண்டாரா? எனப் பார்வதி யோசித்தாள். தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்று தனியாக வாழ்க்கை நடத்துவதினாலேதான் அந்த நல்ல மனிதரின் மனதிலும் கெட்ட சிந்தனைகள் ஏற்பட்டதோவென எண்ணி அவள் மனம் குமைந்தாள்.
தனது தாயாருடனும் சகோதரிகளுடனும் தான் வாழ்ந்த காலத்தில், கனகரத்தினம் தன்னிடம் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டார் என்பதை இப்போது பார்வதி எண்ணிப் பார்த்தாள்.
பெற்றோரின் விருப்பப்படி திருமணஞ்செய்து குடும்பம் நடத்தும் தனது சினேகிதிகள் ஒவ்வொருவரையும் அவள் தனது நினைவில் நிறுத்தினாள். அவர்கள் இன்று எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் சிறிது கஷ்டம் ஏற்பட்டாலும் உதவி செய்வதற்கு தாய் தந்தையர்களும் சுற்றத்தவர்களும் முன்வருகிறார்கள். ஆனால் இன்று தனக்கு உதவி செய்ய யாருமே முன்வராதபடி தனது வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொண்டதற்காக அவள் மிகவும் வேதனைப்பட்டாள். பார்வதிக்குத் தனது தங்கை பானுமதியின் நினைவு ஏற்பட்டது. காலையில் அவள் எவ்வளவு பாராமுகமாக நடந்துகொண்டாள்! தனது குடும்ப கௌரவத்தையும் அழித்து, ஓடிப்போனவளின் தங்கைகள் என்ற பெயரையும் தனது சகோதரிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையையும் பிரச்சினைக்குள்ளாக்கிவிட்ட தனது மடைமையை எண்ணி அவள் கண்ணீர் விட்டாள்.
வாழ்க்கையைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளாத பருவத்தில், அவசரமான முடிவுக்கு வந்ததனால் தனது வாழ்க்கையே கோணலாகிவிட்டதோ என எண்ணி அவள் குழப்பமடைந்தாள்.
சிந்தித்துச் சிந்தித்து மூளையே வெடித்துவிடும்போல இருந்தது பார்வதிக்கு. இனி எதைப்பற்றியுமே சிந்திப்பதில் பயனில்லை என்று நினைத்து அவள் எதையுமே வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளத் தயாரானாள்.
கனகரத்தினம் அவளிடம் கொடுத்த பணநோட்டுகள் நிலத்திலே சிதறுண்டு கிடந்தன. அவற்றைப் பொறுக்கிச் சுக்கல்நூறாகக் கிழித்து அடுப்புக்குள் போட்டுவிடவேண்டும் என்ற வேகம் ஒருகணம் அவளுக்குள் துளிர்த்தெழுந்தது.
ஆனாலும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கணவனின் உயிரைக் காப்பாற்ற அவளுக்கு அந்தப் பணம் அதிமுக்கியமான தேவையாகிவிட்டது.
தன்னைத் தாயுடனும் சகோதரிகளுடனும் ஒற்றுமையாக்கி வைக்கக் கூடிய கனகரத்தினத்தைப் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக அவள் இப்போது பெரிதும் வருந்தினாள்.
மறுநாள் பார்வதி ஆஸ்பத்திரிக்குச் சென்று தனது கணவனுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்து விட்டு வந்ததில் பெரிதும் ஆறுதலடைந்தாள்.
அன்றிரவு பார்வதி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த போது வெளியே கதவு தட்டப்படும் ஓசைகேட்டது. கனகரத்தினந்தான் அப்படிப் பதட்டமின்றி நிதானமாகக் கதவைத் தட்டுவார் என்பது பார்வதிக்குத் தெரியும்.
கனகரத்தினம் வெளியே நின்றுகொண்டிருந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பார்வதி முறையிடுவதற்கு அவளுக்கு யாருமே இல்லை என்பது அவருக்குத் தெரியும். அதனாலேதான் அவர் துணிவுடன் அங்கு வந்திருந்தார்.
தான் அங்கு வந்ததைப் பார்வதி அறிந்ததும் கதவைக் கூடத் திறக்கமாட்டாள் என்றுதான் கனகரத்தினம் நினைத்தார்.
ஆனால் பார்வதியோ கோணலாகிவிட்ட தனது வாழ்க்கையை நினைத்து வருந்தி, அதனால் ஏற்பட்ட விரக்தியையும் வெளிக்காட்டாது கதவைத் திறந்தாள்.
- வீரகேசரி 1971..
+++++++++++++++++++++
எங்கோ ஒரு பிசகு
பனை கொடியேறும் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஒரு தனி மவுசு பிறந்துவிடும். வெளியிடங்களில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் பலர் இக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தடவையாவது விஜயம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். உள்ளூர்க் கோவில்களில் கொடியேறித் திருவிழாக்கள் நடக்கும் போதுகூட ஊர்ப்பக்கம் திரும்பியும் பார்க்காத பல பிரகிருதிகள் பனை கொடியேறிய காலத்தில் ஊருக்கு வந்து ‘திருவிழாக்கள்’ நடத்திவிட்டுத்தான் திரும்புவார்கள். சிலருக்கு இக்காலத்தில் ஞானம் பிறப்பதுமுண்டு.
இத்தகைய ‘திருவிழாக்கள்’ நடக்கும் தலங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் முத்தனுடைய கள்ளுக் கொட்டிலும்!
இந்தக் கொட்டில் தற்காலத்துக்கேற்ப எவ்வித புனருத்தாரண வேலைகளுக்கும் உட்படாமல் வெகுகாலமாகப் பழைய நிலையிலேயே இயங்கி வருகிறது.
அந்தி சாயும் நேரம்.
ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் முத்தனுடைய கள்ளுக் கொட்டிலின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார்கள்.
அவர்கள் வருவதைக் கண்ட முத்தன் தலையிலே கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு குழைந்தபடி “கமக்காரனவை வாருங்கோ” என அவர்களை வரவேற்று, முற்றத்திலே போடப்பட்டிருக்கும் வாங்கிலிருந்த தூசியைக் கைத்துண்டினால் துடைத்துவிடுகிறான்.
செல்லத்துரையர் முப்பது வருடங்களுக்கு மேலாக கொழும்பிலே வாழ்ந்துவருகிறார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் ஆறுமுகத்தாரையும் அழைத்துக்கொண்டு முத்தனின் கள்ளுக் கொட்டிலுக்கு வருவதற்குத் தவறுவதில்லை.
உள்ளே இருந்துவரும் கள்ளின் மணம் ஆறுமுகத்தாரின் வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. முற்றத்திலே வளர்ந்திருந்த பூவரச மரத்தின் கெவர்களில் நான்கைந்து பிழாக்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அவற்றை ஒருதடவை நோட்டம் விடுகிறார் ஆறுமுகத்தார்.
அவரைக் கவனித்த செல்லத்துரையர் சிரித்துவிட்டு, “முத்து, இரண்டு கொண்டுவாவன்” என ஓடர் கொடுக்கிறார்.
முத்தன் உள்ளே போகிறான்.
கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்த வாழ்க்கையின் பயனாகச் செல்லத்துரையர் சமூகத்திலே தனக்கென ஓர் அந்தஸ்தைத் தேடி வைத்திருக்கிறார். பெரிய வீடு, சொந்தத்திலே கார், பெரிய மனிதர்களின் சிநேகம் இவையெல்லாம் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கொழும்பிலே தனது சிநேகிதர்களுடன் சேர்ந்துகொள்ளும்போது அவர் உயர்ரக மதுவகைகளைத்தான் சுவைப்பார். ஆனாலும், அப்போது காணாத ஒரு சுவையை, மனநிறைவை, முத்தனுடைய கொட்டிலில் ஆறுமுகத்தாரோடு சேர்ந்து குடிக்கும் பனங்கள்ளிலே அவர் கண்டிருக்கிறார்.
ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் சிறுபராயத்திலிருந்தே நண்பர்களாக இருக்கின்றார்கள். ஆறுமுகத்தாருக்கு ஊரிலே நிறைய நிலபுலன்கள் இருக்கின்றன. அவர் தனக்குச் சொந்தமான ஏராளமான நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு தானும் ஏதோ வேலை செய்கிறேன் என்ற பெயருக்காக ஒரு சிறிய காணியிலே கமஞ்செய்து வருகிறார். ஆறுமுகத்தாருக்கும் ஊரிலே பெரிய மனிதர் என்ற மதிப்பு உண்டு.
முத்தன் உள்ளே போனதும், ஆறுமுகத்தார் செல்லத்துரையிடம் சொல்கிறார், “இந்த முத்தன் கிழவனிட்டை நாங்கள் விவரந்தெரிஞ்ச காலத்திலையிருந்து கள்ளுக்குடிக்கிறம். இவன் எவ்வளவு பணிவாயும் மரியாதையாயும் நடக்கிறான். தன்னுடைய மகன் கொழும்பில பெரிய உத்தியோகத்திலை இருக்கிறான் எண்ட செருக்குக்கூட இல்லை. மற்றவங்களெண்டால், மகன் கொழும்பிலை உத்தியோகம் பாத்தால் உடனை கள்ளுக் கொட்டிலை மூடிவிடுவாங்கள். இவன் தன்னுடைய குலத்தொழிலை விடக்கூடாது எண்டுதானே இப்பவும் கள்ளு வித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்குத் தெரியிற மரியாதை இவன்ரை பெடியனுக்குத் தெரியேல்லை. அந்தப் பொடியன் எங்களுக்குச் செய்த வேலை சரியே....? இப்ப நினைச்சாலும் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகுது..... கொழும்பிலை, தான் பெரிய மனிசனாகி விட்ட நினைப்பிலைதானே அவன் அந்த வேலை செய்தவன்.... எல்லாம் உம்மாலைதான் வந்தது..... நீர் கொழும்பிலை மானம் மரியாதை எல்லாத்தையும் விட்டிட்டு நடக்கிறீர் எண்டால் என்னையும் மானங்கெட வைக்கப் பாத்தனீரெல்லே.”
செல்லத்துரையர் மௌனமாக இருக்கிறார். இந்த நேரத்தில் ஏதாவது பேசினால் ஆறுமுகத்தாருக்குக் கோபம் வந்துவிடுமென்பது அவருக்குத் தெரியும்.
முத்தன் இரன்டு போத்தல் கள்ளுடன் வெளியே வருகிறான். பூவரச மரத்தில் இருந்த பிழாக்களிலே இரண்டை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, ஒன்றை ஆறுமுகத்தாரிடமும் மற்றதை செல்லத்துரையரிடமும் கொடுக்கிறான். அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டதும் கள்ளை அந்தப் பிழாக்களிலே ஊற்றுகிறான்.
செல்லத்துரையர் கள்ளின் நுரையில் செத்து மிதந்து கொண்டிருந்த ஏதோ பெயர் தெரியாத பூச்சி ஒன்றைத் தனது விரலினால் வழித்து வீசிவிட்டு பிழாவில் வாயை வைத்து உறிஞ்சுகிறார். “முகத்தார், சோக்கான சாமான் ” என அந்தக் கள்ளுக்குத் தனது மதிப்புரையையும் வழங்குகிறார்.
“இப்பதான் கமக்காரன் என்ரை சின்னவன் பனையிலையிருந்து இறக்கிக்கொண்டு வந்தவன்...... நல்ல புதுக்கள்ளு..... உங்களுக் கெண்டுதான் கலப்பில்லாததாய் எடுத்துக்கொண்டு வந்தனான்.” முத்தன் வழக்கமாகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கும் கூறுவதைதான் இப்பொழுதும் கூறுகிறான்.
ஆறுமுகத்தார் ஒரே இழுப்பில் பிழாவைக் காலிசெய்து விட்டு அதனைப் பக்கத்திலே வைக்கிறார். அவரது உடலில் ஒரு புதுத்தென்பு உண்டாகிறது.
“முத்து, இன்னும் இரண்டு கொண்டு வா” இப்போது ஆறுமுகத்தார் ஓடர் கொடுக்கிறார்.
முத்தன் பணிவோடு வெற்றுப் போத்தலை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறான்.
ஆறுமுகத்தாரின் வயிற்றுக்குள் போன கள்ளு கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்குகிறது. சிலநாட்களாக அவரது மனதை அரித்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியொன்று இப்போது விசுவரூபம் எடுக்கிறது.
ஆறுமுகத்தாரின் மகன் படிப்பை முடித்துக் கொண்டு நான்கு வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறான். எத்தனையோ வேலைகளுக்கு மனுப்போட்டிருந்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. செல்லத்துரையர் சென்றதடவை ஊருக்கு வந்திருந்தபோது, ஆறுமுகத்தார் இதைப்பற்றி அவரிடம் கூறினார். அதற்குச் செல்லத் துரையர், தான் எப்படியாவது பெரியமனிதர்களிடம் சிபார்சு செய்து அவரது மகனுக்கு வேலை தேடிக்கொடுப்பதாக உறுதியளித்துவிட்டுச் சென்றார்.
செல்லத்துரையர் கொழும்புக்குச் சென்ற சில நாட்களில் ஆறுமுகத்தாருக்கு கடிதம் வந்தது. மகனையும் அழைத்துக் கொண்டு உடனே புறப்பட்டு வரும்படி செல்லத்துரையர் கடிதம் எழுதியிருந்தார்.
ஆறுமுகத்தாரும் அவரது மகனும் கொழும்புக்கு வந்த தினமே, அவரைக் கொழும்பிலுள்ள பிரபல கம்பனி மனேஜரிடம் அழைத்துச் சென்றார் செல்லத்துரையர்.
ஊரிலே கள்ளு விற்கும் முத்தனின் மகன்தான் படித்துப் பட்டம்பெற்று சிறிது சிறிதாக முன்னேறி இன்று கம்பனியின் மனேஜராக உயர்ந்திருக்கிறான் என்ற இரகசியத்தை ஆறுமுகத்தாரிடம் சொல்லலாமா கூடாதா என்பது செல்லத்துரையருக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது.
இவ்வளவு காலமும் ஊரிலே வாழ்ந்து, அந்தச் சூழ்நிலையிலும் பழக்கவழக்கங்களிலும் ஊறிப்போன ஆறுமுகத்தார் முத்தனின் மகனிடந்தான் இப்போது வேலை கேட்கப் போகிறோம் என்றால் சம்மதிப்பாரா? செல்லத்துரையர் எந்த விபரத்தையும் ஆறுமுகத்தாரிடம் சொல்லவில்லை.
கார் ஓர் அழகிய வீட்டின் முன்னால் நிறுத்தப்படுகிறது. ஆறுமுகத்தார் மிகவும் அடக்கமாகவும் பயபக்தியுடனும் தனது மகனுக்கு உத்தியோகம் கொடுக்கப்போகும் பெரிய மனிதரின் வீட்டின் உள்ளே செல்லத்துரையருடன் நுழைகிறார். வாசலிலே மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ‘எம். சண்முகம்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயரை ஒருதடவை எழுத்துக் கூட்டி வாசிக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு ஆங்கிலமும் தெரியும்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் “வாருங்கோ, வாருங்கோ” எனப் பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறார் சண்முகம்.
ஆறுமுகத்தார் சண்முகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார். இந்தச் சண்முகத்தை அவர் எங்கோ பார்த்திருக்கிறார். ஆ....! ஞாபகம் வந்துவிட்டது!; முத்தன்ரை பெடியன் சண்முகத்தான்!
செல்லத்துரையரைத் திரும்பி ஒருதடவை பார்க்கிறார் ஆறுமுகத்தார். செல்லத்துரையர் ஒன்றுமே பேசவில்லை. அந்தச் சூழ்நிலை அவருக்கு இக்கட்டான நிலைமையை உருவாக்கி விட்டது.
“ஐயா, இந்தச் சோபாவிலை உட்காருங்கோ” சண்முகம் அவர்களை உபசரித்தார்.
ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் அமர்ந்துகொள்கிறார்கள்.
“ஐயா, என்ன குடிக்கிறியள்? தேத்தண்ணியோ அல்லது ஓவல் போட்டுக் கொண்டுவரச் சொல்லட்டுமோ?” சண்முகம் அப்படிக் கேட்டது ஆறுமுகத்தாருக்கு அதிர்ச்சியாக இருந்தது; ஆத்திரமாகவும் இருந்தது. ஊரிலே கள்ளுக்கொட்டில் வைத்திருக்கும் முத்தனுடைய மகனல்லவா அப்படிக் கேட்டுவிட்டான்.
“இப்பதான் நாங்கள் வீட்டில தேத்தண்ணி குடிச்சிட்டு வந்தனாங்கள்...... எங்களுக்கு இப்ப ஒண்டும் வேண்டாம்.” ஆறுமுகத்தார்தான் சொன்னார்.
“பரவாயில்லை...... கொஞ்சமாய்க் குடியுங்கோ...... வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேத்தண்ணிகூடக் கொடுக்காமல் அனுப்பிறது எனக்கு மரியாதையில்லை.” சண்முகம் இப்படிக் கூறிவிட்டுக் குசினிப்பக்கம் திரும்பி, “பியசேனா, தே தெக்கக் கெயின்ட” எனத் தனது வேலைக்காரனிடம் கூறினார்.
சிறிது நேரத்தில் பியசேனா என்னும் அந்தச் சிங்களப் பையன் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்தான். சண்முகம் அவனிடமிருந்து தட்டுடன் தேநீரை வாங்கி மிகவும் விநயத்துடன் ஆறுமுகத்தாரிடம் நீட்டினார்.
“நான் தேத்தண்ணி குடிக்கிறதில்லை.” ஆறுமுகத்தார் சிறிது கோபத்துடன் கூறினார்.
“பரவாயில்லை, கொஞ்சமாய்க் குடியுங்கோ.”
ஆறுமுகத்தாருக்குக் கோபம் அதிகமாகியது. அவமானம் அடைந்துவிட்டது போன்ற உணர்வு அவருள்ளே எழுந்தது; முகம் கடுமையாக மாறியது.
“என்னுடைய மகனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை....... நான் உன்னுடைய வீட்டிலை..... தேத்தண்ணி குடிக்க மாட்டேன்.”
ஆறுமுகத்தார் கோபத்துடன் எழுந்துசென்று காரில் ஏறி அமர்ந்துகொண்டார். அவர் காரின் கதவை அடித்துச் சாத்திய பலமான சத்தம், எவ்வளவு கோபத்துடன் அவர் இருக்கிறாரென்பதை எடுத்துக் காட்டியது.
செல்லத்துரையரின் நிலைமை தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவர் முன்பும் இப்படிச் சில பெரிய மனிதர்களை சண்முகத்திடம் அழைத்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது நடந்துவிட்டதே என எண்ணிக் கவலைப்பட்டார். சண்முகம் இதைத் தவறாக எண்ணவும் கூடும்.
இதனால் தனக்கும் சண்முகத்திற்கும் உள்ள நட்பு ஈடாட்டம் கண்டுவிடுமோ எனவும் அவருக்குக் கவலையாக இருந்தது. சண்முகத்திடம், ஏதேதோ தன்னால் முடிந்த சமாதானங்களைக் கூறிவிட்டுச் செல்லத்துரையரும் புறப்பட்டார்.
“நீர் என்னை அவமானப்படுத்தத்தான் இங்கை கூட்டிவந்தனீரோ?” செல்லத்துரையர் வந்து காரில் ஏறும்போது ஆத்திரத்துடன் கேட்டார் ஆறுமுகத்தார்.
“இல்லை..... முகத்தார், எப்படியாவது உமது மகனுக்கு வேலை தேடித்தரத்தான் நான் முயற்சி செய்தனான். உம்மை அவமானப்படுத்த நினைக்கேல்லை; நீர்தான் அவமானமாக நடந்துகொண்டீர்.”
“செல்லத்துரை, உமக்கு புத்தி மழுங்கிப் போச்சு..... அவனை நாங்கள் எங்கடை வீட்டுக்குள்ளையும் விடமாட்டம்; அப்படிப் பட்டவனுடைய வீட்டிலை நான் தேத்தண்ணி குடிப்பனே?”
ஆறுமுகத்தாருக்கு ஆத்திரம் கூடியதேதவிரக் குறையவில்லை. எப்படியெப்படியெல்லாமோ செல்லத்துரையரைத் திட்டித் தீர்த்துவிட்டு மறுநாளே மகனையும் கூட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார்.
“என்ன கமக்காரன், கடுமையான யோசனை? கள்ளைக் குடியுங்கோ.”
முத்தனின் பணிவான குரல் கேட்டுச் சுயநினைவுக்கு வருகிறார் ஆறுமுகத்தார்.
கள்ளுக் குடித்த மயக்கத்திலேதான் ஆறுமுகத்தார் கண்ணை மூடியவண்ணமிருக்கிறார் என நினைத்திருந்த செல்லத்துரையருக்கு அவர் இவ்வளவு நேரமும் ஏதோ யோசனையிலே தான் இருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது.
ஆறுமுகத்தார் முத்தனை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருக்கிறார். கள்ளு உள்ளே கடுமையாக வேலைசெய்கிறது.
“டேய் முத்தன், உன்ரை மோன் சண்முகத்தான் இப்ப பெரிய மனிசனாகிவிட்டானே?”
ஆறுமுகத்தார் திடீரென இப்படிக் கேட்டது முத்தனுக்குச் சங்கடமாக இருந்தது. ஏன் இப்படி அவர் கேட்கிறார் என்பது அவனுக்கு விளங்கவே இல்லை.
அவன் ஒன்றும் பேசாது நின்றுகொண்டிருந்தான்.
“உன்ரை மோன் செய்த வேலை தெரியுமே....? நான் கொழும்புக்குப் போயிருந்தபொழுது தன்னுடைய வீட்டிலை தேத்தண்ணி குடிக்கச் சொல்லியெல்லே கேட்டவன்”
இதைக் கேட்டதும் முத்தன் பதறிப் போனான்.
செல்லத்துரையருக்கு முத்தனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க எண்ணிய அவர், முத்தனை இன்னும் இரண்டு போத்தல் கள்ளுக் கொண்டுவரும்படி உள்ளே அனுப்பி வைத்தார்.
முட்டியிலே கள்ளு முடிந்திருந்தது. தனது பாவனைக்கென வேறாகச் சோற்றுப் பானையில் ஊற்றிவைத்திருந்த கள்ளில் இரண்டு போத்தலை எடுத்துவருகிறான் முத்தன்.
ஆறுமுகத்தாரின் கண்கள் சிவப்பேறி இருக்கின்றன. அவர் பிழாவை இரண்டு கைகளினாலும் ஏந்தியபடி இருக்கிறார். முத்தன் கள்ளை அதற்குள் ஊற்றுகிறான்.
ஆறுமுகத்தார் உறிஞ்சிக் குடிக்கிறார். வாய்க்குள் .... ஏதோ தட்டுப்படுகிறது. எறும்பு என நினைத்துத் துப்புகிறார். சோற்று அவிழ் ஒன்று வெளியே வந்து விழுகிறது. வெற்றுப் போத்தல்களை எடுத்துக்கொண்டு முத்தன் மெதுவாக உள்ளே நழுவுகிறான்.
செல்லத்துரையர் இந்தக் காட்சியை வெறித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறார். சக்கர வியூகத்தில் ஆயுதமின்றி அகப்பட்டுத் தவிக்கும் போர்வீரனுக்கு திடீரென ஆயுதமொன்று கையிலே கிடைத்துவிட்டால் ஏற்படும் ஆவேசம் அவருள் எழுகின்றது.
மறுகணம் ஆறுமுகத்தாரின் தோளைப்பிடித்து உலுக்கியபடியே அவர் கேட்கிறார், “முத்தனுடைய மகன் தன்னுடைய வீட்டில் கொடுத்த தேத்தண்ணியைக் குடிக்கக் கூடாதெண்டால், முத்தன் கொடுக்கும் கள்ளை மட்டும் குடிக்கலாமோ?”
ஆறுமுகத்தாரின் மூளைக்குள் பலமான ஒரு தாக்கம்.
முத்தனுடைய வீட்டில் கள்ளுக் குடிப்பது பிசகா...? அல்லது முத்தனின் மகன் தனது வீட்டிலே கொடுத்த தேநீரைக் குடிக்காமல்விட்டது பிசகா...?
ஆறுமுகத்தாரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் எங்கோ ஒரு பிசகு இருக்கிறதென்பது மட்டும் இப்போது அவருக்கு நன்றாகத் தெரிகிறது.
- மித்திரன் ‘73..
+++++++++++++++++++++++
குமிழி
“றைற்”
கண்டக்டர் கனகு குரல் கொடுத்துவிட்டு லாவகமாக பஸ்ஸில் தாவி ஏறிக்கொண்டான். மூச்சுக்கூட விடமுடியாமல் பிரயாணிகளை நெருக்கியடைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட பலாலி பஸ், நிறைமாதக் கர்ப்பிணியாய் அசையத் தொடங்கியபோது, உள்ளே வீசிய காற்று சனங்களுக்குச் சற்று இதமாகத்தான் இருந்தது.
உரும்பராய் வரைக்குந்தான் இந்த நெருக்கடி, பின்னர் குறைந்துவிடுமென்பது கனகுவிற்கு நன்றாகத் தெரியும்.
பஸ்ஸின் குலுக்கங்களையும், சரிவுகளையும் சமாளிக்க முடியாமல் கிழவி ஒருத்தி தள்ளாடிக் கொண்டிருந்தாள். கூனல் விழுந்து விட்ட அவளுக்கு மேலேயிருக்கும் கைப்பிடி எட்டாததினாலோ என்னவோ பக்கத்திலிருந்த சீற்றில் கெட்டியாகப் பற்றிக்கொண்டு விழுந்துவிடாமல் இருக்க முயற்சித்தாள்.
கனகுவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
அவள் நின்ற இடத்திற்குப் பக்கத்திலிருந்த சீற்றில் அமர்ந்திருந்த வாலிபன் கிழவியின் நிலைமையைக் கண்டு கொஞ்சங்கூடக் கவலைப்படாதவனாய் அநாயாசமாகச் சிகரட்டை ஊதித்தள்ளியபடி இருந்தான். அவ்வாலிபன் எழுந்து கிழவிக்கு இடங்கொடுக்க மாட்டானா எனக் கனகுவின் உள்ளம் ஏங்கியது. ஆனாலும் அவ்வாலிபனைக் கிழவிக்கு இடம் கொடுக்கும்படி கூறுவதற்குக் கனகுவிடம் துணிவில்லை; அதிகாரமும் கிடையாது.
‘நான் கொடுத்தது காசில்லையா?’ என்று அவ்வாலிபன் துள்ளியெழுந்தால் என்ன பதிலைத்தான் சொல்வது? பஸ் என்ன அவனது சொந்தமா, அதுதான் பொதுச் சொத்தாயிற்றே!
கிழவியின் அவஸ்தையைக் காணச் சகிக்காமல் கனகு தனது பார்வையை வெளியே திருப்பினான்.
பஸ் வின்ஸர் சந்தியில் திரும்பிய வேகத்தில் யாரோ பெண்மணி ஒரு வயோதிபர்மேல் மோதியிருக்கவேண்டும்.
“இந்தப் பெண்டுகளுக்கு இப்ப போக்கு வரத்து மெத்திப்போச்சு, நாகரிகம் மெத்தி உவளவை படுகிறபாடு... பஸுவிலுமெல்லே போகேலாமைக் கிடக்கு....”
வயோதிபர் கூறியதைப் பிரயாணிகள் சிலர் ஹாஸ்யமாக நினைத்துச் சிரித்தார்கள்.
ஆரியகுளம் நெருங்கியபோது ஆவலோடு கனகு வெளியே எட்டிப்பார்த்தான். அவன் எதிர்பார்த்தபடியே கமலா அவள் தான் அவனது சிந்தனையில் நர்த்தனமாடும் அந்தச் சிங்காரி நின்றாள். அவளோடு யாரோ சில பிரயாணிகள்......
பஸ் நின்றதும் அவளைக் கவனியாதவன் போலக் கனகு தனது வேலையில் முனைகிறான்.
“பெரியவர் எவ்விடம்?”
“பலாலி.”
“ஆச்சி எங்கையெணை?”
“புன்னாலைக்கட்டுவன் பிள்ளையார் கோயிலடி.”
“அடுத்தாள்?”
“................. ”
அவனுடைய கேள்வி அநாதரவாய் நின்றபொழுது அவன் நிமிர்ந்தான்.
கமலா அவனைப் பார்த்துக் கணீரென்று சிரித்தாள். தினமுந்தானே அதே பஸ்ஸில் அவள் பிரயாணம் செய்கிறாள். அவள் போகவேண்டிய இடமும் கனகுவிற்கு நன்றாகத் தெரியும். பின்பும் கேட்டால்..... கனகுவின் விஷமத்தனத்தைக் கண்டபோது கமலாவிற்குச் சிரிப்புத்தான் வந்தது.
அவளது உள்ளத்தை நிரப்பி ஒலித்த அந்தச் சிரிப்புக்குப் பதிலாய் அவனும் சிரித்துவிட்டு ‘டிக்கற்’றைக் கிழித்துக் கொடுத்தான்.
பஸ்ஸிற்குள் இருந்தபடியே கமலாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சில இளம் உள்ளங்கள் ஏமாற்றமடைந்தன. அந்த அழகி எங்கே போவதற்கு ‘டிக்கெற்’ பெறுகிறாள் என்றறியவல்லவா அவர்கள் காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
பஸ் புறப்பட்டது.
கையில் இருந்த பென்சிலைக் காதில் செருகிவிட்டு, கமலா கொடுத்த ஐந்து ரூபா நோட்டுக்கு மிகுதிப்பணத்தை எடுத்தான் கனகு. விரல்களிடையே அடுக்காக மடித்து வைத்திருந்த நோட்டுகளில் நான்கைக் கொடுத்தபின், சில்லறை எண்பது சதத்தை எடுப்பதற்காகத் தானணிந்திருந்த காக்கிச் சட்டைக்குள் கையைவிட்டு லாவகமாகக் சுழற்றியபொழுது கலீரென்ற ஓசை கிளம்பியது. வேறு யாராவது அப்படி நோட்டாகக் கொடுத்திருந்தால் அவர்கள்மேல் துள்ளி விழுந்திருப்பான் கனகு. நெருக்கடியான நேரத்தில் பணத்தைச் சில்லறையாக மாற்றிக் கொடுப்பதில் இருக்கும் கஷ்டம் அவனுக்கல்லவா தெரியும்.
இவ்வளவு நேரமும், தான் இருந்த இடத்தைக் கிழவிக்குக் கொடுக்காத வாலிபன் இப்போது எழுந்து கமலாவிற்கு இடத்தைக் கொடுத்துவிட்டு அவளைப் பார்த்து இளித்தான்.
கமலா அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் ‘ஜம்’மென்று அந்த இடத்தில் அமர்ந்துகொண்டாள். சை! ‘தாங்ஸ்’ என்று ஒரு வார்த்தையாவது கூறி அவனைப் பார்த்துப் பல்லைக் காட்ட வேண்டாமா?
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாரோ கிழவர் கனகுவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்; கனகுவும் சிரித்தான்.
வெளியே வீசிய காற்றில் கனகுவின் உடைகள் படபடவென்று அடித்தபோது அவன் சற்று உள்ளே நுழைந்து, தனது சலவை மடிப்புக் குலையாத காக்கிச் சட்டையை இழுத்துச் சரி செய்துகொண்டான்.
இப்போதெல்லாம் அவன் மடிப்புக் குலையாத சட்டைதான் போடுவான். ஒருநாள் போட்ட உடுப்பை மறுநாள் போடவே மாட்டான். சில்லறைகளின் பாரத்தில் தொய்ந்துபோன சட்டைப்பையைப் பார்க்கும்போது எவ்வளவு கேவலமாக இருக்குமென்பது அவனுக்கல்லவா தெரியும்.
சனி, ஞாயிறுகளில் மட்டும் அவன் உடைகளில் அதிகம் கவனஞ் செலுத்துவது கிடையாது. அப்படியென்றால் அந்த நாட்களில் கமலா பஸ்ஸில் பிரயாணஞ் செய்வதில்லையென்று அர்த்தம் !
சிறிது காலத்திற்குள் அவனுடைய தோற்றத்தில் எவ்வளவு மாற்றம்! அவனுடைய பகீரதப் பிரயத்தனத்திற்கும் அடங்காமல் பன்றிமுள்ளாய்க் குத்திட்டு நின்ற கேசங்களில்கூட அலையலையாகச் சில சுருள்கள்! குண்டூசித் தலையளவில் அவன் வைத்திருக்கும் சந்தனப்பொட்டு அவனுடைய வதனத்திற்கு எடுப்பாகத்தான் இருக்கிறது!
சில நாட்களாக டிரைவர் தம்புவும் கனகுவின் மாற்றத்தைக் கண்டு அடிக்கடி அவனைக் கேலிசெய்கிறான்.
பலாலி லைனில் ஒன்பது மணி பஸ் என்றால் எந்தக் கண்டக்டருக்கும் தலைவேதனைதான். அப்பப்பா ! அந்தக் ‘கிறவுட்டை’ ஏற்றி இறக்குவதென்றால் சாமானியமான காரியமா? அதே ‘ரேணில்’வேலை செய்யாமல் ‘டைம் கீப்பரி’டம் தப்பிக்கொள்வதில் கண்டக்டர்களிடையே போட்டி.
அதே ஒன்பது மணி‘ரேணை’த் தனக்குத் தரவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கும் கனகுவைப் பார்க்கும்போது,‘டைம்கீப்பரி’ன் கண்கள் எட்டாவது அதிசயத்தைக் காண்பது போல் விரிவதில் வியப்பில்லைத்தான்.
ஒன்பது மணி பஸ்ஸிலே தான் ஒய்யாரி கமலா வருவாள் என்பது மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!
கமலா அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் சொக்கிப்போவான். அச்சிரிப்பொலி அவனது மென்னுணர்வுகளைத் தட்டியெழுப்பி அவனைச் சிறிது சிறிதாக மேலே தூக்கிச்சென்று, அவன் என்றுமே கண்டிராத இன்ப புரிக்கல்லவா கொண்டு செல்லுகிறது.
முதலில் கமலா அவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனொன்றும் வித்தியாசமாக எண்ணவில்லைத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் சிரித்தபோது அச்சிரிப்பில் அவன் மயங்கத் தொடங்கினான். அவளின் சிரிப்பைக் காணாத நாட்களில் அவனிடத்திலும் சிரிப்பு மறைந்துபோகுமளவிற்கு வந்துவிட்ட பிறகு....... இதைத்தான் காதல் என்பார்களா!
கமலாவோடு கதைக்கவேண்டுமென்று அவன் துடித்தான். ஆனால் எப்படிக் கதைப்பது? அதுவும் மற்றப் பிரயாணிகளின் முன்னால்.....
பல வேளைகளில் அவனைக் கைவிட்டுவிடும் அவனது மூளை அன்றுமட்டும் அப்படியொன்றும் ‘மக்கர்’ பண்ணிவிடவில்லை.
அவள் கொடுத்த பணத்திற்கு மிகுதியைக் கொடுக்கும் போது வேண்டுமென்றே ஐம்பது சதத்தைக் குறைத்துக் கொடுத்தான் கனகு. அப்போது கமலா அதை அவனிடம் கேட்பாளல்லவா? இப்படித்தான் கதைப்பதற்குச் சந்தர்ப்பங்களை உண்டாக்க வேண்டும்.
கமலா பணத்தை எண்ணி பார்த்துவிட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். வாயைத் திறந்துதான் கேட்கட்டுமேயென்று மௌனமாக இருந்தான் கனகு.
ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஒன்றுமே நடக்கவில்லை. கமலா பணத்தைக் கேட்காமலே இறங்கவேண்டிய இடத்தில் இறங்கிப் போய்விட்டாள்.
கனகுவிற்குப் பெரிய ஏமாற்றமாயிருந்தது. கமலா ஏன் மிகுதிப் பணத்தைக் கேட்கவில்லை; ஒருவேளை குறைத்துக் கொடுத்ததைக் கவனிக்கவில்லையோ...... சீ! என்ன முட்டாள்தனமான எண்ணம். அவள் மிகுதிச் சில்லறையை எண்ணிய பொழுது அவன் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். ஒருவேளை அப்பணத்தைக் கேட்பதற்கு அவளுக்கு வெட்கமாக இருந்திருக்குமோ? அல்லது நான்தான் எடுத்துக் கொண்டேன் என்பதற்காகப் பேசாமல் இருந்திருப்பாளோ.... அப்படித்தான் இருக்கவேண்டும்.
ஒருவேளை அவள் தவறாக எண்ணிவிட்டால்..... நான் பணத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டேன் என்று நினைத்துவிட்டால்..... சே! அப்படியெல்லாம் இருக்காது. கமலா அப்படி எண்ணவே மாட்டாள். அப்படியானால் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பாளா? ஒருவேளை ஏளனச் சிரிப்பாக இருந்து விட்டால்.....
கனகு சிந்தனையைச் சிக்காக்கிக் கொண்டிருந்தான். அன்று முழுவதும் எந்தவேலையும் ஓடவில்லை. இரவு நித்திரையும் வரமறுத்தது.
அடுத்தநாள் எப்படியும் மிகுதிச் சில்லறையைக் கொடுக்கும் போது அவளது ஐம்பது சதத்தையும் சேர்த்துக் கொடுத்து விடவேண்டும். அவள் அதைப் பற்றிக் கேட்கும்போது தற்செயலாகத் தவறு நடந்துவிட்டது என்று கூற வேண்டும். எப்படியோ கதைப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் சரிதான்.
அடுத்தநாள் கமலா பஸ்ஸில் ஏறியபொழுது ‘டிக்கட்டு’க்கு வேண்டிய பணத்தைச் சில்லறையாகவே கொடுத்தாள்.
கனகுவின் உள்ளத்தில் ‘சுரீர்’ என்று தைத்தது. நோட்டாகக் கொடுத்தால் பணத்தை எடுத்துக்கொண்டு விடுவேன். என்பதற்காகச் சில்லறையாகவே கொடுக்கிறாளா? கனகு சமாளித்துக்கொண்டு அசடுவழியச் சிரித்தான். ‘டிக்கட்’டைக் கொடுக்கும்போது ஐம்பது சதத்தையும் சேர்த்துக் கொடுக்க அவன் தவறவில்லை.
பணத்தைப் பெற்றுக்கொண்டவள், ஏன் எதற்காக? என்று ஒரு வார்த்தையாவது கேட்கவேண்டாமா? பேசாமல் போய் இடத்தில் உட்கார்ந்துவிட்டாள்.
அவளின் விஷமத்தனத்தை நினைத்தபோது கனகுவிற்கு கோபந்தான் வந்தது. ஆனாலும் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லையே!
கமலா அழகி, படித்தவள், பணக்காரி அவளின் சிரிப்பிற்காக எத்தனையோ உள்ளங்கள் ஏங்கும். அப்படி இருக்கும்போது அவள்மட்டும் ஏன் என்னிடம் ...... இதுதான் காதலுக்குக் கண்ணில்லை யென்பார்களோ...... கனகுவின் உள்ளத்தில் இன்ப மயமான சிந்தனைகள்.
ஏன் கனகு மட்டும் குறைந்தவனா ? அழகாகத்தான் இருக்கிறான். ஏன் படித்தும் இருக்கிறான். எஸ். எஸ். சீ. பாஸ் பண்ணியவன், ஏதேதோ வேலைகளுக்கெல்லாம் அலைந்தும் கிடைக்காததால் கண்டக்டராக அமர்ந்துகொண்டால்..... இந்த வேலைதான் குறைந்ததா?
அப்படியென்று யாராவது எண்ணினாலும் அவனது உணர்ச்சிகளை அணைபோட்டு விடமுடியுமா? உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன், சாதிப் பிரச்சினைகள் இவையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? அதுதான் எல்லாவற்றையும் கடந்ததொன்றாயிற்றே!
கமலா பஸ்ஸிற்குள் ஏறிவிட்டால் கனகுவின் வாயில் ஆங்கிலம் விளையாடுவதுமுண்டு. அப்போதெல்லாம் கமலா கவனிக்கிறாளா என்பதையும் அவன் கடைக்கண்ணால் பார்த்துக் கொள்வான். அப்போது கமலாவின் கண்களில் தென்படும் ஆர்வத்தைக் காணும்போது கனகுவின் முகத்தில் தோன்றும் பெருமையைக் கணக்கிடமுடியாது.
தனக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதை கமலா அறிந்தபோது எப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பாள் எனக் கனகு கற்பனை செய்து பார்த்துக்கொள்வான்.
அன்று கமலா பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவனது காலடியில் புத்தகமொன்று ‘தொப்’பென்று விழுந்தது.
கமலாவின் கையிலிருந்து நழுவியதை அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவள் வைத்திருந்த புத்தகங்களில் வேறொன்றும் தவறாமல் ஒன்றுமட்டும் எப்படி அவனது காலடியில் விழும்!
கமலா திரும்பிக்கூடப் பார்க்காமல் போகிறாளே! ஒரு வேளை விழுந்ததை அவள் கவனிக்கவில்லையா ? அல்லது வேண்டுமென்றே நழுவ விட்டுச் செல்கிறாளா?
அவளைக் கூப்பிட்டுப் புத்தகத்தைக் கொடுக்கலாமா? அல்லது.... முடிவிற்கு வரமுன்பே பஸ் புறப்பட்டுவிட்டதே.
புத்தகத்தை அவன் கையில் எடுத்தான். ‘காதலிப்பது எப்படி?’ - புத்தகத்தின் பெயரை வாசித்தபோது புருவங்களை உயர்த்தி இதழ்களைக் கூட்டிச் சிரித்தான் கனகு.
ஒரே நொடியில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் உதயமாகின. கமலா வேண்டுமென்றே புத்தகத்தை நழுவவிட்டிருக்கிறாள் என்பது கனகுவிற்குச் சொல்லியா தெரிய வேண்டும்.
கமலா கெட்டிக்காரிதான்! எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்கிறாள்! என்னிடம் இருக்கும் தயக்கங்கூட அவளிடம் இல்லையே.
பெண்கள் எப்பொழுதுமே காதல் விஷயங்களில் சற்று முன்னோடிகள்தான். காதலிப்பதெப்படி என்றல்லவா எனக்குக் கற்றுத்தருகிறாள் கமலா.
அன்றிரவு ஒரே மூச்சில் புத்தகத்தை வாசித்துமுடித்தான் கனகு. முக்கியமான பகுதிகளில் கமலா அடையாளங்கள்கூடத் தீட்டியிருக்கிறாளே!
எவ்வளவோ விஷயங்கள் அவனுக்குப் புதிதாகப் புரிந்தன.
மறுநாள் கமலா பஸ்ஸில் ஏறியதும் அவளிடம் புத்தகத்தைக் கொடுத்தான் கனகு. “இதை நேற்றுத் தவறவிட்டு விட்டீர்கள்”
“ஓ” இதழ்களை அவள் குவித்துவிட்டு நாணமாய் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
கனகு ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தான். அப்பப்பா! அந்தச் சிரிப்பிலேதான் எவ்வளவு கவர்ச்சி!
இனிப் பொறுக்கவே முடியாது. கமலாவோடு எதையெல்லாமோ கதைக்கவேண்டுமென்று அவன் உள்ளம் துடித்தது. கமலாவின் ஒவ்வொரு புன்னகையும் அத்துடிப்பின் வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தன. இந்தப் பாழும் உள்ளத்திற்கு ஏன் இவ்வளவு துடிப்பு? ஏன் இவ்வளவு வேகம்? ஏன் இவ்வளவு உணர்ச்சி? எதையுமே கட்டுப்படுத்த முடியவில்லையே.....
கனகு பஸ் நிலையத்தில் நின்றான். அதிகாலையில் பெய்யத் தொடங்கிய மழை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. முன்பு புறப்பட வேண்டிய பஸ் அரைமணி நேரம் தாமதித்துப் புறப்பட்ட தாலோ அல்லது மழையின் காரணமாகவோ ஏனோ ஒன்பது மணி பஸ்ஸில் வழக்கம்போல் நெருக்கடியில்லை. ஆறோ ஏழு பிரயாணிகள் மட்டுந்தான்.
கமலா வழக்கம்போல் இந்த பஸ்ஸிலேதான் வருவாள். பிரயாணிகளும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இன்றுதான் கதைப்பதற்கு சரியான சந்தர்ப்பம்.
எப்படிக் கதையைத் தொடங்குவது? எப்படி உள்ளத்தின் உணர்ச்சிகளை அவளுக்கு எடுத்துக் கூறுவது? என்றெல்லாம் கனகுவின் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது.
பஸ் ஆரியகுளம் சந்தியில் திரும்பி நின்றது. அங்கே..... கமலா நின்றாள். அவளுடன் யாரோ ஒரு வாலிபன்! இருவரும் தம்மை மறந்தநிலையில் ஒருவருள் ஒருவராய்க் குடைக்குள் ஒதுங்கியிருந்தனர்.
‘பளீ’ரென்று வெட்டிய மின்னல் - இடி - ‘சோ’ என்ற பேய்க்காற்றின் இரைச்சல்.... மழை பலக்கிறது.
கனகு கஷ்டப்பட்டுத் தன்னைச் சமாளித்துக்கொள்ள முனைந்தான்.
“எவ்விடம்?”
“உரும்பராய்..... இரண்டு டிக்கட்” கமலாவின் குரல் கணீரென்று ஒலிக்கிறது.
அவள் கொடுத்த நோட்டுக்குச் சில்லறையைக் கொடுத்தபோது சரியாக எண்ணிக் கொடுத்தான் கனகு.
கமலா வழக்கம்போல் இன்றும் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள்.
கனகுவின் கன்னத்தில் ‘பொட்’டென்று இரண்டு சூடான துளிகள் விழுந்தன.
அவை மழைத்துளிகளல்ல என்பது அவனுக்கு மட்டுந்தான் தெரியும்.
வெள்ளத்தை வாரியிறைத்துக் கொண்டு பஸ் புறப்பட்ட போது நீரில் அழகாகத் தோன்றியிருந்த குமிழியொன்று ‘பட்’டென்று உடைந்து சிதைந்தது.
கனகு வேதனையோடு வேறுபக்கம் பார்வையைத் திருப்பினான்.
பிரயாணிகளில் யாரோ அடுத்த சந்தியில் இறங்குவதற்காக எழுந்தார்கள். கண்டக்டர் கனகு இயந்திரமாகத் தனது கடமையில் ஆழ்கிறான்.
“ஹோல்டோன்.”
- வீரகேசரி 1965.
+++++++++++++++++++++==
கடமை
“பதினைந்தாம் நம்பர்.”
எனக்கு உதவியாக இருக்கும் பணியாள் உரத்துக் கூவுகிறான்.
அந்த இலக்கத்தையுடைய நோயாளி உள்ளே நுழைவதற்குள் வேறுசிலரும் முண்டியடித்துக் கொண்டு நுழைய முனைகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்திப் பதினைந்தாம் இலக்க நோயாளியை மட்டும் உள்ளே அநுமதிக்கிறான் எனது பணியாள்.
என்னைத் தங்கள் குடும்ப வைத்தியனாகக் கொண்ட ஒருசிலர் எதிரே இருந்த யன்னல் ஊடாகப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்க்கின்றனர். அப்படிச் செய்வதால் எனது சலுகையுடன் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு. நான்தான் என்ன செய்யமுடியும் ? கட்டுப்பாட்டைக் குலைத்து விட்டால் பின்பு சரிப்படுத்த முடியாதே.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்; பதினொன்று இருபதாகி விட்டது. கடந்த மூன்று மணிநேரத்தில் பதினான்கு நோயாளிகளைத்தான் என்னால் கவனிக்க முடிந்தது. வெளியில் நிற்கும் நோயாளிகளின் தொகையைப் பார்த்தால் இன்னும் நான்கு மணிநேரத்தில்கூட எல்லோரையும் என்னால் சமாளித்துவிட முடியாதுபோல் தோன்றியது.
வேண்டுமானால் ஒருமணிநேரத்தில் எனது வேலையை முடித்துக் கொண்டுவிடலாம். ஆனால் அப்படி எப்பொழுதாவது நான் செய்திருந்தால் இன்று சிறந்த வைத்தியனாகி இருக்கமாட்டேன். எனக்குப் பேரும் புகழும் கிடைத்திருக்க முடியாது. எனது வைத்திய நிலையமும் பிரபல்யம் அடைந்திருக்காது.
பதினைந்தாம் நம்பர் நோயாளி என் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள். நான் கடமையில் முனைகிறேன்.
“பெயர்?”
“மீனா.”
“வயது?”
“பதினைந்து.”
“என்ன வருத்தம் ?”
“.............”
நான் அவளின் பக்கம் திரும்பி அதே கேள்வியை மீண்டும் கேட்டேன்.
“என்ன வருத்தம்?”
என்னுடைய கேள்வி இப்பொழுதும் அநாதையாக நிற்கிறது. நான் அவளைக் கூர்ந்து நோக்கினேன்.
ஏதோ சொல்ல வேண்டுமென்று அவளது இதழ்கள் துடிக்க, மனம் அதனைத் தடுத்திருக்கவேண்டும். அவளது கண்களில் மருட்சி நிறைந்திருந்தது.
“பயப்படாமல் சொல்லு மீனா, நான் ஒருடாக்டர். என்னிடம் எதையும் மறைத்தால் நோயைக் குணப்படுத்திவிட முடியாது.” அவளது தோற்றத்தைப் பார்த்ததும் என்னையறியாமலே அவளிடம் தோன்றிய அன்பினால் தெம்பூட்டினேன்.
“நான்.... நான்... கருவுற்றிருக்கிறேன் டாக்டர்”. அவள் தயங்கியபடியே கூறினாள்.
அவளைக் கூர்ந்து பார்த்தேன். இளமையின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவளது அழகிய தோற்றத்தில் தாய்மையும் இழையோடியிருக்கிறது. எனது மனம் ஏனோ குறுகுறுத்தது.
‘நீ எத்தனை வயதில் மணம்புரிந்து கொண்டாய்?’ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஆனாலும் நான் அப்படிக் கேட்கவில்லை. “உன் கணவன் எங்கே?” என்றுதான் கேட்கிறேன்.
மௌனம்.
நான் திரும்பவும் அதே கேள்வியைக் கண்டிப்புடன் கேட்டேன். தேவையற்ற கேள்விக்கு எனது தகுதியைக்கொண்டு பதிலறிய முனைவதை என்னால் உணர முடிந்தது.
“எனக்கு விவாகமாகவில்லை.”
அவளது அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய பதில் நலிந்து ஒலித்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பேசவிடாமல் தடுக்க நான் மௌனமாக அவளையே பார்த்தபடி இருக்கிறேன். அவள் தொடர்ந்தாள்.
“எனது கருவை அழித்துவிடுங்கள் டாக்டர்.”
இதை அவள் கூறும்போது எனது மனம் திடுக்குற்று மௌனத்தை நீடிக்கச் செய்தது. எனது பார்வை அவளது உடலைக் கூசச் செய்திருக்க வேண்டும். கூனிக்குறுகி என்னைக் கெஞ்சும் விழிகளால் பார்த்தாள். அவளது கண்கள் சிறிது பனித்திருந்தன. இதழ்கள் படபடத்தன. அவளைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
“உன்னை இந்நிலைக்குக் கொணர்ந்தவனோடு கூடி வாழ்வது தான் சரியென்று நினைக்கிறேன்.”
அவளது கண்களில் நீர்வழிந்தோடியது. விம்மலுக்கிடையே அவள் கூறினாள்.
“முன்பே மணமான ஒருவன் என்னை ஏமாற்றிவிட்டான். இந்நிலையில் நான் மானமிழந்து எப்படி வாழ்வது?”
எனது மனதில் பல எண்ணங்கள் ஒரே தடவையில் புகுந்து உழைச்சல் கொடுத்தன. கடமையை மீறி அவளுக்கு உதவி செய்யவும் முடியவில்லை. அவளது பரிதாபத்தைக் கண்டு உதவி செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.
சிந்தனை எனது சொந்த வாழ்க்கையைச் சுற்றி ஒருகணம் வட்டமிடத் தொடங்கியது.
காலையில் நான் வைத்தியசாலைக்குப் புறப்படும் பொழுது மனைவி என்னிடம் கேட்டாள். “வெள்ளவத்தையில் பிரபல டாக்டர் ஒருவர் இருக்கிறாராமே, அவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாமா?”
நான் பதிலொன்றும் கூறாமல் சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தேன். என்னால் வேறு என்னதான் செய்யமுடியும்?
எங்களிருவருக்கும் விவாகம் நடந்து பத்து வருஷங்களுக்கு மேலாகி விட்டது. குழந்தைச் செல்வத்திற்காக நாங்கள் அல்லும் பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனது முதிர்ந்த வைத்திய அறிவைக்கொண்டு உடலமைப்புகளைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். எங்களிடத்தில் ஒரு குறையுமில்லை. கடவுள் எம்மிடம் காட்டும் கருணையிலேதான் குறையிருக்கிறது.
எத்தனையோ லட்சம் மனிதர்கள் என்னிடம் சிகிச்சை பெறுவதற்காக ஓடிவருகிறார்கள். ஆனால் என் மனைவி எனது வைத்தியத்தில் நம்பிக்கை ஏற்படாதவள்போல வேறு வைத்தியர்களிடம் போகிறாள். அவள்தான் என்ன செய்வாள், உள்ளத்தில் ஊறியிருந்த தாபம் அப்படியெல்லாம் செய்யவைக்கிறது.
எனது சொல்லையும் கேளாது ஏதேதோ மருந்துகளை வாங்கியுண்பாள். அவள் நேராத கோவில்கள் இல்லை. யாத்திரை செய்யாத ஸ்தலங்கள் இல்லை. செவ்வாயும் வெள்ளியும் விரதம் பிடித்துப் பிடித்து அவளது உடம்பு இளைத்துப்போயிருந்தது.
எனது மனத்தாங்கலை அடக்கிக்கொள்ள நான் புரியும் தொழில் எவ்வளவோ உதவியாக இருக்கிறது. ஆனால் என் மனைவி அல்லும் பகலும் வீட்டிலிருந்தபடியே வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பாள். அவளுக்கு வாழ்க்கையில் வரவரப் பற்றுக் குறைந்துகொண்டே வந்தது. சிறு விஷயங்களுக்கும் பெரிதாகச் சினந்துகொள்வாள். எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த பிணைப்பில்கூட தொய்வு காணப்படுவது போலச் சிலவேளைகளில் எனக்குத் தோன்றும்.
என் சிந்தனை அறுகின்றது. குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி; கிடைத்த செல்வத்தை அழித்துவிடத் துடிக்கிறாள் வேறொருத்தி. உலகத்திலேதான் எத்தனை விந்தைகள்!
அங்குமிங்குமாக இழுபட்டுக்கொண்டிருந்த என் எண்ணங்கள் நிலைபெற்றபொழுது மனப்போராட்டத்திற்கு முடிவுகண்ட துடிப்பில் பிறிஸ்கிறிப்ஷனைக் கிறுக்குகிறேன்.
அதனைப் பெற்றுக் கொண்டு நன்றிகலந்த பார்வையுடன் என்னிடம் இருந்து விலகி மருந்தைப் பெறுவதற்காக ‘டிஸ் பென்சரி’ யை நோக்கி நடக்கின்றாள் மீனா. அவள் நடந்து போவதை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்னும் சிறிது காலத்தில் மீனாவின் அடிவயிற்றில் இருக்கும் கரு நெளிந்து கொடுக்கும். நல்லதொரு போஷாக்கைப்பெற்ற மகிழ்ச்சியில் பூரிப்படையும். தான் உயிருடன் நல்ல முறையில் வளர்ந்து வருவதையும் அவளுக்குத் தன் அசைவுகளால் உணர்த்தும்.
மீனா.......?
என்மேல் ஆத்திரமடைவாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சபிப்பாள். ஆனாலும் அவளுக்குள் உருவாகிவரும் கரு எனக்கு நன்றி சொல்லும் ; மனதாரப் போற்றும். என்றும் என்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும். வைத்தியனுடைய கடமையைச் சரிவரச் செய்த உணர்வில் எனது மனம் மகிழ்கிறது.
ஐந்தாறு மாதங்கள் கழிந்தன.
எனது மனைவி தினசரியை வாசிக்க நான் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன்.
வெகுகாலத்திற்குபின் இப்போதுதான் என்மனைவி சந்தோஷமாக இருக்கிறாள். என்றுமே இல்லாத புது அழகு அவளிடத்தில் மின்னியது. எனது மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
‘கடமையைச் செய் கருணை பெறுவாய்’ என்று பத்திரிகையின் பின்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் போடப்பட்டிருந்த வாசகம் என்கண்களைக் கவர்ந்தது. அந்த வாசகத்தில் லயித்துப்போய் மனம் அதனைச் சுற்றிவளைய, காலத்தின் சுழற்சியில் மலர்ந்து கொண்டிருந்த எனது வாழ்க்கையை மெஞ்ஞானக்கண்களால் அழகு பார்த்து மகிழ்ந்தேன்.
ஏதேதோ புதினங்களை வாசிக்கும் பொழுது கவரப்படாத என் கவனம் திடீரென்று திரும்புகின்றது.
‘இளம்பெண் தற்கொலை! பதினைந்து வயது நிரம்பிய மீனா என்றபெண் தற்கொலை புரிந்துகொண்டாள். இப்பெண் இறக்கும்போது கருவுற்றிருந்தாள்.......’ மனைவி தொடர்ந்து வாசித்தாள். என்னால் தொடர்ந்து கேட்கமுடியவில்லை.
அன்று ஒரு உயிரைக் காப்பாற்ற முனைந்தேன், கடமையைச் சரிவரச்செய்த நினைவில் மகிழ்ந்தேன். ஆனால் இன்று.....!
இரு உயிர்கள் சிதைந்துவிட்டனவே. மீனாவின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால்....?
மனச்சுவர்கள் பொருக்குடைந்து சரிவதைப்போன்ற ஒரு பிரமை. மன உளைச்சலைத் தாங்கமுடியாது கண்களை மூடிக்கொண்டு புரண்டேன்.
என் கடமையைத்தான் செய்தேன் என்ற நினைவு எனது வேதனையைக் கரைக்க முயன்றுகொண்டிருந்தது.
- கலைச்செல்வி 1965.
++++++++++++++++
விஷ வைத்தியம்
“ஐயா ........!”
‘...................’
‘ஐயா:........... ஐயா............!’ தொடர்ந்து யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.
வேலாயுதர் விழித்துக் கொண்டார். படுக்கையிற் கிடந்தபடியே கைகளை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டு வெறுப்போடு கதவின் பக்கம் நோக்குகிறார். மூலையில் சிறிதாக எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் கதவின் மேல் மங்கலாக விழுந்து சிதறுகின்றது.
எங்கோ சாமக் கோழி கூவும் ஓசை காற்றினில் தேய்ந்து ஒலித்தது.
‘இந்த நேரத்திலை யார் கதவைத் தட்டிறது?’ மனதில் எழுந்த கேள்வியில் சினங் குழைகின்றது.
அவர் மறுபக்கம் திரும்பிப் படுக்கிறார். பிய்ந்த பாயில் கிளம்பியிருந்த ஓலைமுனை அவரது சுருங்கிய முதுகில் கீறி நோவைக் கொடுத்தது. அதைத் தன் நீண்டு வளைந்த நகத்தினால் கிள்ளி எறிகிறார்.
முட்டியில் புடம்போட்டு வைத்திருந்த இலைச்சாற்றின் நெடி காற்றுடன் கலந்து இலேசாக அவ்விடத்தில் பரவுகின்றது. அதனை நன்றாக மூக்கினால் உறிஞ்சி நுகர்கிறார். அந்த நெடி அவருடைய சுவாசத்துடன் கலந்து இரத்த நாளங்களிற் செறிய, தேகத்தில் புதிய தெம்பு உண்டாகிறது. கடந்த ஐம்பது வருஷங்களுக்கு மேலாகத் தினமும் இந்த நறு மணத்தை அனுபவித்துங்கூட அதில் அவருக்கு அலுப்புத் தட்டிவிடவில்லை.
“ஐயா ! விஷகடி வேலாயுதர் வீடு இதுதானே ..... கதவைத் திறவுங்கோ” வெளியில் இருந்து கிளம்பிய குரலில் அவசரம் தொனிக்கிறது.
கைத்தடியை எடுப்பதற்காகப் பக்கத்தில் ஆராய்கிறார் விஷகடி வேலாயுதர். இது அவருடைய பெயரல்ல. வேலாயுதபிள்ளை என்பது தான் அவரது தாய் தந்தையர் சூட்டிய பெயர். அது ‘விஷகடி வைத்தியர் வேலாயுதபிள்ளை’யாகி, ஊரார் வாயில் சிதைந்து ‘விஷகடி வேலாயுதரா’ கியது.
புன்னாலைக்கட்டுவனில் உள்ள பெரிய மனிதர்களுள் வேலாயுதரும் ஒருவர். அவருடைய வைத்தியத் திறமைதான் அவருக்கு மதிப்பைக் கொடுத்துப் பெரிய மனிதராக்கியது. எந்தப் பெரிய விஷந்தீண்டினாலும் வேலாயுதரிடம் போனால் குணமாக்கி விடலாம். அவருடைய மந்திரங்களுக்கும் மருந்துகளுக்கும் அவ்வளவு சக்தி!
வைத்தியத்திற்காக மட்டும் சனங்கள் அவரிடம் வருவதில்லை. சிலர் தங்களுடைய கஷ்டங்களைக்கூறி ஆறுதல் பெற வருவார்கள். சிலர் ஆலோசனைகள் கேட்க வருவார்கள். சிலர் தமக்குள் நடந்த பிணக்குகளுக்குத் தீர்வு காண வருவார்கள்.
வேலாயுதர் வலதுபுறம் பார்வையைச் செலுத்துகின்றார். அவருடைய மகன் சுந்தரம் படுக்கும் இடம் காலியாகக் கிடந்தது. மூலிகைகள் வாங்குவதற்குப் பக்கத்து ஊராகிய சுன்னாகத்திற்குப் போனவன் இன்னும் திரும்பவில்லை.
‘நாளைக்குக் காலைமை தான் வருவான்போல கிடக்கு’ வேலாயுதர் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார்.
இந்தத் தள்ளாத வயதில் அவருக்குத் துணையாக அவருடைய மகன் சுந்தரம்தான் இருந்தான். அவனைத் தவிர, இனத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு வேறொருவரும் இருக்கவில்லை.
சுந்தரம் தந்தையின் தொழிலுக்குப் பெரிதும் உதவியாக இருந்தான். மூலிகைகள் சேகரிப்பது, குழைகளைத் துவைப்பது, இடிப்பது, சாறுகள் பிழிவது, எண்ணெய்கள் வடிப்பது, கழிம்புகள் தயாரிப்பது எல்லாமே அவன்தான்.
கதவு படபடவென்று வேகமாகத் தட்டப்படும் ஓசை கேட்கிறது.
“ஐயா ! ஆருக்கோ பாம்பு கடிச்சுப் போட்டுது. பிள்ளையார் கோயிலடியிலை விழுந்து கிடக்கிறான். வந்து பாருங்கோ.”
வேலாயுதரின் மனதின் ஒரு பகுதி கடமையுணர்ச்சியால் விரிவுகாண்கின்றது. தடியை ஊன்றி மெதுவாக எழுந்தார். தேகம் சிறிது தள்ளாடுகின்றது. மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கைத் தூண்டிவிடுகின்றார். வெளிச்சம் குடிசைக்குள் பரவுகின்றது.
கதவின் தாழ்ப்பாளை நீக்குவதற்காகக் கையை உயர்த்து கின்றார். நினைவுகள் மடைதிறந்துவிட்ட நீர் போலப் பெருகிவரச் சம்பவக் குமிழிகள் தோன்றி உடைந்து, மனதின் விரிவு கண்ட பகுதியை மூழ்கடித்து அழிக்கின்றன. அவரை அறியாமலே கைதாழ முகத்திலே வெறுப்புணர்ச்சி இழையோடுகின்றது, அவர் கதவைத் திறக்கவில்லை. திரும்பி வந்து பாயில் விழுகின்றார்.
“நுரை நுரையாய் வாயாலை கக்கிறான்; சாகப் போறானய்யா.....” குரலைத் தொடர்ந்து பலமாகக் கதவு தட்டப்படும் ஓசை.
வெறுப்புடன் கதவை நோக்கினார் வேலாயுதர் . எப்பொழுது தான் வெளியில் நிற்பவன் போகப்போகின்றானோ என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.
“நல்லாய்த் தட்டட்டும்; கையுளைஞ்சாத் திரும்புவினம்தானே”. வேலாயுதர் முணுமுணுக்கின்றார்.
வெளியில் நிற்பவன் கதவையுடைத்து விடுபவன் போலத் தட்டிக் கொண்டிருந்தான். வேலாயுதத்திற்கு ஆத்திரத்தால் தேகம் நடுங்கியது.
“யாரெண்டாலும் செத்துத் துலையட்டும் ; நான் வரமாட்டேன்” வெறி பிடித்தவர் போலக் கத்திய வேலாயுதருக்கு மூச்சு வாங்கியது. நெஞ்சுக்குள் இலேசாக நொந்தது. மெதுவாக நெஞ்சைத் தடவிவிட்டார்.
யார் வேலாயுதரா அப்படிச் சொன்னார்? அல்லும் பகலும் பிறருக்காக உழைப்பவரா அப்படிச் சொன்னார்? பொதுநலத்தில் மகிழ்ச்சி காண்பவரா அப்படிச் சொன்னார்? தன்னிடம் வருவோருக்கு ஆறுதல் மொழி கூறி அன்புடன் வைத்தியம் செய்பவரா அப்படிச் சொன்னார்? எத்தனையோ உயிர்களுக்கு வாழ்வளித்த வேலாயுதரா அப்படிச் சொன்னார்?....
அவருடைய மாற்றத்தைக் கண்டு அதிசயிப்பது போல இவ்வளவு நேரமும் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்த வாடைக் காற்று வேகமாக ஓடி இரைந்து கொண்டிருந்தது.
வெளியில் நிற்பவனின் கெஞ்சலும், மன்றாட்டமும், அழுகையும் பயனற்றுக் காற்றில் தோய்ந்து மறைந்தன. கதவைத் தட்டிய அவனது கைகள் ஓய்ந்திருக்க வேண்டும். நிசப்தம் நிலவியது.
வேலாயுதர் உன்மத்தம் கொண்டவர் போல் கதவையே நோக்கியவண்ணம் இருந்தார். அவரது நெஞ்சத்தில் பழைய நிகழ்ச்சியொன்று சுழன்றுகொண்டிருந்தது.
சிலநாட்களுக்கு முன்பும் நடுநிசியில் யாரோவந்து கதவைத் தட்டினார்கள். விழித்துக் கொண்ட வேலாயுதர் இன்றுபோலச் சினக்கவில்லை. அமைதியாகக் கதவைத் திறந்தார். வெளியில் ஒருவன் பதறிய வண்ணம் நின்றுகொண்டிருந்தான். வேலாயுதர் முன்பு அவனைப் பார்த்ததில்லை, யாரோ பிற ஊரவனாக இருக்கவேண்டும்.
“என்ரை மோனுக்கு ஏதோ காலிலை கடிச்சுப்போட்டுது; அவனாலை நடக்கேலாது; நீங்கள்தான் காப்பாத்த வேணும்.”
வேலாயுதர் ஒருகணம் கூடத் தாமதிக்கவில்லை. உடனே மருந்துப் பையை எடுத்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று கவனித்தார். இல்லாத மருந்துகளை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தார்.
“ஐயா ! சுறுக்காய் வாருங்கோ”.
வேலாயுதர் அமைதியாகச் சிரித்தார்.
“பயப்பிடாதையப்பா, உன்ரை மோனைக் காப்பாத்திறது என்னுடைய பொறுப்பு”.
வேலாயுதருடைய சொல்லில் நம்பிக்கை ஏற்படாதவன்போல அவன் பதறிக்கொண்டிருந்தான். அவனது தோற்றத்தில் பிரதிபலித்த புத்திரபாசத்தை வேலாயுதரால் நன்றாக உணர முடிந்தது. அவர் தன்னால் இயன்றவரை வேகமாக நடந்து கொண்டிருந்தார். அந்த அகால வேளையில் ஒரு மைலுக்கு மேல் நடக்கவேண்டியிருந்தது.
விஷந்தீண்டப்பட்டவனைக் கவனித்தார் வேலாயுதர். அவன் சிறுவனாக இருந்தான். தேகம் சிறிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. விழிகள் இமைக்குள் செருகிப்போயிருந்தன. நாக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.
காலில் சிறிதாக ஏதோ காயம். அதில்தான் விஷம் தீண்டப் பட்டிருக்க வேண்டும்.
அச்சிறுவன் இடையிடையே முனகிக்கொண்டிருந்தான்.
உடம்பில் இன்னும் விஷம் பரவிவிடவில்லை என்பதை வேலாயுதருடைய வைத்திய அறிவால் அறிந்துகொள்ள முடிந்தது. அதிர்ச்சியால் தான் சிறுவன் அவ்வாறு மயங்கியிருக்கவேண்டும். தாமதித்தால் விஷம் தேகத்தில் பரவி விடக்கூடும். வேலாயுதரின் முகத்தில் நம்பிக்கையொளி பரவியது. அவரால் சிறுவனைக் காப்பாற்றிவிட முடியும்.
தனது கைப்பையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுச் சிறுவனின் அருகில் அமர்ந்தார். மெதுவாக விஷந்தீண்டிய காலைத் தூக்கித் தனது மடியில் வைத்து விட்டுத் தன் இஷ்ட தெய்வத்தைச் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். பின்பு மெதுவாகக் காலைத் தடவிக் கொண்டே மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
அவரது மந்திர உச்சாடனம் உச்ச ஸ்தாயியை அடைந்த பொழுது சிறுவன் கண்விழித்துப் பார்த்தான். அவனது முகத்தில் தாங்க முடியாத வேதனையின் சாயல் படிந்திருந்தது.
வேலாயுதர் தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டி ருந்தார். சிறுவனுக்கு வேதனை குறைந்ததாகத் தெரியவில்லை. பச்சிலை மருந்துகளை அவனது காலில் ஊற்றி நன்றாகச் சூடுபிறக்கும் படி தேய்த்தார். விஷத்தையிழுக்கும் காந்தக் கல்லைக் கடிவாயில் வைத்தார். ஏதேதோ கழிம்புகளைப் பூசினார். தனக்குத் தெரிந்த வைத்திய முறைகள் எல்லாவற்றையுமே கையாண்டு பார்த்தார். சிறுவனுடைய வேதனையை மட்டும் அவரால் குறைக்க முடியவில்லை. அவன் உயிர் போகப் போகின்றவன் போலக் கத்திக் கொண்டிருந்தான்.
வேலாயுதருடைய முதிர்ந்த விஷவைத்திய அனுபவத்தில் அவர் ஒரு நாளும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. எந்தப் பெரிய விஷத்தையும் நொடிப் பொழுதில் நீக்கக் கூடியவர் இன்று தோல்வி கண்டு விட்டாரா? அவருடைய மனதில் இனம் புரியாத பதகளிப்பு மேலோங்கி நின்றது, வாய் வேகமாக மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
திடீரென்று சிறுவன் எழுந்து உட்கார்ந்தான். வேலாயுதருடைய மடியில் இருந்த காலை உதறி விட்டுச் சிரித்தான். வரவர அவனது சிரிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. கடைசியில் பேய் பிடித்தவன் போலச் சிரிக்கத் தொடங்கி விட்டான்.
வேலாயுதர் திகைத்துப் போனார். இவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? விஷம் அதிகமாகத் தேகமெல்லாம் பரவி மூளையையும் தாக்கி விட்டதா? அவருடைய வைத்தியத் துறையில் அன்றுதான் தோல்வியா?
சிறுவன் எழுந்து வேகமாக ஓடத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து அவனது தந்தையும் ஓடினான். ஸ்தம்பித்துப் போயிருந்த வேலாயுதர் தனது சுயநிலைக்கு வரச் சிறிது நேரம் பிடித்தது.
மெதுவாக எழுந்து வீட்டை நோக்கி நடந்தார். அவரது உள்ளத்தில் பலவித உணர்ச்சிகள் தேங்கி நின்றன. தனது குடிசையை அடைந்த பொழுது அங்கே அவர் கண்ட காட்சி.........
மருந்துப் புட்டிகள் உடைந்து கிடந்தன. ஏட்டுச்சுவடிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மூலையில் அவருடைய பார்வை திரும்பியது. ஆயுட்காலம் முழுவதும் உழைத்துச் சேகரித்த பணம் முழுவதும் திருட்டுப் போய் விட்டது. தலையில் கைவைத்தபடியே அவர் கல்லாய்ச் சமைந்துபோய் இருந்தார்.
தன்னுடைய மகன் ஊரில் இல்லாத நேரத்தில் தன்னைத் தந்திரமாக வெளியே அழைத்துச் சென்றுவிட்டு வீட்டில் களவாடிய திருட்டுக் கூட்டத்தில் மட்டும் வேலாயுதருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. மனித இனம் முழுவதையுமே அவர் வெறுத்தார்.
‘இந்தக் காலத்திலை ஒருதருக்கும் நன்மை செய்யப்படாது. நன்மை செய்தவனுக்கு நாசந்தான் செய்வினம். நன்றி கெட்ட மனிசர்’ மனதில் எழுந்த நினைவுகளால் அவர் பொருமினார்.
வேலாயுதர் புரண்டு படுக்கின்றார். மன உளைச்சலின் வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. “நான் ஒரு வைத்தியனுடைய கடமையிலிருந்து தவறி விட்டேனோ?” இதயத்தின் அடியிலிருந்து எழுந்த கேள்வி குமைந்து திரண்டு மனக்கதவை மோதிக் கொண்டிருந்தது.
அவர் அப்படி நடந்து கொண்டது சரியா? வாழ்வுக்காகத் தவிக்கும் உயிர் அவருக்கு என்ன தீங்கு இழைத்து விட்டது? தீமை செய்தவனுக்கும் நன்மை செய்யும் அவரது உள்ளம் எங்கு மறைந்து விட்டது? யாரோ அவருக்கு இழைத்த தீங்குக்காக யாதொரு குற்றமும் அறியாத இன்னொரு உயிருக்குத் தண்டனையா? ஏன் அவருடைய புத்தியே மழுங்கி விட்டதா?
வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் ஊசலாடிய உயிர் அவரது வரவுக்காக ஏங்கியேங்கி ஓய்ந்திருக்குமோ? அப்படி நடந்திருந்தால்..... இறக்கும் தருணத்தில்கூட அவரைத்தான் அந்த உயிர் நினைத் திருக்கும்.
அந்த உயிரை நம்பி யார் யார் வாழ்கின்றார்களோ? அதன் பிரிவால் யார் யார் கலங்கப் போகின்றார்களோ? எந்தக் குடும்பம் சீரழியப் போகின்றதோ? வேலாயுதருடைய இதயம் கசங்கிக் கொண்டிருந்தது.
வேலாயுதர் தெருவில் நடந்து கொண்டிருக்கின்றார். அவரைக் காண்பவர்கள் ஏன் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளு கின்றார்கள்? அவரைக் காணும் போது மரியாதையோடு வணக்கம் தெரிவிப்பவர்கள் ஏன் இன்று கொலைகாரனைப் பார்ப்பதுபோல் வெறுப்போடு பார்க்கின்றார்கள்? அவரைக் காணும்போது அன்புகனிய மனம் நிரம்பிச் சிரிப்பவர்கள் இன்று ஏன் காறி உமிழ்கின்றார்கள்? கம்பீரமாக அரச நடைபோட்டுச் செல்லும் வேலாயுதர் இன்று கூனிக்குறுகி நடக்கிறார். நினைவுப் புழுக்கள் அவரது மனதைக் கடித்து ஈய்க்கின்றன.
சிறிது சிறிதாக அவரது மனம் அமைதியடைகிறது. நிதானத்துடன் எழுந்து முன் கதவுத் தாழ்ப்பாளை நீக்கி வெளியே வருகிறார். கடமையுணர்ச்சியால் அவரது மனம் விரிவு காண்கிறது.
பிள்ளையார் கோயிலடியை நோக்கி அவரது கால்கள் நகர்கின்றன.
அங்கே - அவரது மகன் சுந்தரம் அரவு கடித்து இறந்து வெகு நேரமாகிவிட்டது.
-வீரகேசரி 1964
++++++++++++++++++++++++
தீபாவளிப் பரிசு
“சாந்தி! ஏன் உன் கன்னம் செவந்து கிடக்குது?”
“அம்மா அடிச்சுப் போட்டா.”
“ஏன் அடிச்சவ?”
“நான் தீபாவளிக்குப் பூச்சட்டை வேணுமெண்டு கேட்டன்... அதுதான் அடிச்சவ”.
“பூச்சட்டை கேட்டால் ஆரும் அடிப்பினமே?”
“அம்மாட்டைக் காசில்லையெண்டு தெரியாமல் நான் முரண்டு பிடிச்சன்.... அவவுக்குக் கோபம் வந்திட்டுது.”
சாந்தி கூறிய பதில் அவளது சினேகிதி ராணியின் பிஞ்சு உள்ளத்தில் வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். அவளது முகம் கூம்பியது.
“உங்கடை அம்மா கூடாதவ; அதுதான் உனக்கு அடிச்சவ”.
“இல்லை... அம்மா நல்லவ.... ரொம்ப நல்லம்மா. எனக்கு இண்டைக்கு நல்ல ருசியாய்க் கஞ்சி காய்ச்சித் தந்தவ, தான்கூடக் குடியாம எனக்குத்தான் முழுவதையும் தந்தவ.”
குழந்தைகளின் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த நாகம்மாவுக்கு, அவளது மகள் சாந்தியின் பதில் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்தது. விழிகளில் தேங்கி நிறைந்த கண்ணீரினூடாகத் தனது கைகளை வெறுப்போடு பார்த்தாள்.
அந்தப் பாழும் கைகள் தானே அவளது குழந்தையின் கன்னங்களைப் பதம் பார்த்தது! சாந்தியின் கன்னங்களைக் கன்றும்படி செய்தது!
குழந்தையின் மென்மையான உள்ளத்தில் எவ்வளவு ஆசைகள் பொதிந்திருக்கும்! அவள் எவ்வளவு ஆவலோடு தனக்குப் புதுச்சட்டை வேண்டுமென்று கேட்டிருப்பாள்! எப்படியெல்லாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென்று கற்பனை செய்திருப்பாள்! ஏழையின் வயிற்றில் பிறந்துவிட்டதற்காக அவளுக்கு ஆசைகளே தோன்றா மலிருக்குமா?
இதையெல்லாம் கொஞ்சங்கூட எண்ணிப் பார்க்காது, ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டதை நினைக்கும்போது நாகம்மாவின் பெற்ற மனம் துன்பத்தால் துடித்தது.
ஆவேசமடைந்தவள் போல சாந்தியை அடித்துவிட்ட தனது கைகளை சுவரில் மோதிக்கொண்டு குலுங்கிக் குலுங்கியழுதாள். ஆனால் அவளது துன்பம்மட்டும் குறையவில்லை.
“அம்மா! அழாதேம்மா.... நான் எனிமே புதுச்சட்டை கேட்கமாட்டேம்மா”
தாயின் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் தனது பிஞ்சுக் கரங்களால் துடைத்துக் கொண்டே கெஞ்சினாள் சாந்தி.
நாகம்மா சாந்தியை வாரியணைத்துக் கொண்டாள்.
“நான் எனிமே உனக்கு அடிக்கமாட்டன் சாந்தி! தீபாவளிக்கு வண்ண வண்ணப் பூச்சட்டையெல்லாம் நிறைய வாங்கித் தாறன்.”
“உன்னட்டை காசில்லை... எனக்கு வேண்டாமம்மா”.
“இல்லை சாந்தி! நான் பிள்ளைக்கு எப்படியாவது வாங்கித்தாறன்”
“நீ... நல்ல அம்மா.”
சாந்தியின் கன்னங்களை முத்தமிட்டு அவளை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டாள் நாகம்மா.
விடிந்தால் தீபாவளி. அதற்குள் எப்படித்தான் அவள் தன் குழந்தைக்குப் புதுச்சட்டை வாங்கப் போகிறாள்? குழந்தையின் அன்புப் பிடிக்குள் சிக்கியிருந்த நேரத்தில் வாங்கித் தருவதாகக் கூறிவிட்டாள். இப்போ என்ன செய்வது? அவளது கையில் ஒரு சதங்கூட இல்லையே!
நேரகாலத்தில் உண்பதற்குக் கூட வசதியில்லாமல் தவிக்கும் அவளிடம் எங்கே பணமிருக்கப்போகிறது? அவளது வினைப்பயன் இளம் வயதிலேயே தாலியை இழந்துவிட்டாள். இப்போது அவளுக்கு இருக்கும் சொத்து சாந்தி ஒருத்திதான். சாந்திக்காகத்தான் இன்றும் நாகம்மா உயிரோடு இருக்கிறாள். இல்லாவிட்டால் அவளின் உடலுக்கும் உயிருக்கும் இடையில் பெரிய வெளியொன்று எப்போதோ தோன்றியிருக்கும்.
நாகம்மா சில வீடுகளுக்கு வாடிக்கையாக அரிசியிடித்தல், மா அரைத்தல், சமைத்தல் போன்ற வேலைகள் செய்து கொடுப்பாள். ஊரில் எங்காவது கல்யாணம் என்றால் தவறாது நாகம்மாவை அங்கு காணலாம். அவள் இல்லாமல் கல்யாணமே நடக்க முடியாதென்பது பலரது அபிப்பிராயம். நான்கைந்து நாட்களுக்கு முன்பே போய் தனது சொந்தவீட்டு வேலைபோல் எல்லாவற்றையும் செய்வாள். நாகம்மா மிகவும் நல்லவள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதனால் எல்லோருடைய வீடுகளிலும் உள்வீட்டுக்காரியைப்போல் பழகுவதற்கு அவளுக்கு உரிமையுண்டு.
ஆனால் நாகம்மாவுக்குக் கிடைக்கும் வருமானம் மட்டும் மிகவும் சொற்பந்தான். அந்தச் சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை இழுத்துச் செல்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. எத்தனையோ நாட்கள் பட்டினி கூடக் கிடந்திருக்கிறாள் நாகம்மா.
இந்த நிலையில் அவளால் சாந்திக்குப் பட்டுச்சட்டை வாங்கமுடியுமா?
சிலர் தங்கள் குழந்தைகளின் பழைய சட்டைகள் இருந்தால் இரக்கத்தோடு அவளிடம் கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சாந்திக்கு அணிந்து அழகு பார்த்து மகிழ்ந்திருக்கிறாள் நாகம்மா.
அவள் தீபாவளியைக் கொண்டாடி எவ்வளவோ காலங்களாகி விட்டன. புருஷனை இழந்த அவளுக்குத் தீபாவளி அவசியமில்லைத் தான். ஆனால் குழந்தை சாந்தியும் அப்படியிருக்க முடியுமா?
தீபாவளி மலரப்போகிறது. எங்கும் மகிழ்ச்சி நிரம்பி வழியப்போகிறது.
எல்லோரும் புத்தாடை கட்டி புத்தொளியோடு விளங்கப் போகிறார்கள். குழந்தைகள் எல்லோரும் குதூகலிக்கப் போகிறார்கள்.
எல்லோருக்கும் மகிழ்வைக் கொடுக்கும் தீபாவளி, குழந்தை சாந்திக்கு மட்டும் துன்பத்தைக் கொடுக்கப் போகிறதா?அவளது ஆசைகள் நிராசையாகத்தான் போகிறதா? அவளது பிஞ்சு உள்ளம் வெதும்பத்தான் வேண்டுமா?
அப்படி நடக்கக் கூடாது. சாந்தியும் மகிழ்வோடு தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென விரும்பினாள் நாகம்மா. சாந்தி புதுச்சட்டை அணிந்துகொண்டு அதை ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள். தனது தாயிடம் அழகு காட்டி மகிழ்வாள். மற்றப் பிள்ளைகளோடு அவளும் சமமாக விளையாடுவாள். அப்போது நாகம்மாவின் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்பிப்போகும்.
ஆனால் நாகம்மாவின் ஆசை நிறைவேறுமா? அல்லது வரண்ட உள்ளத்தில் தோன்றும் வெறுங் கற்பனைகள் தானா?
ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் பிள்ளைகள் ஒருவருமே சாந்தியோடு விளையாடுவதில்லை. அதை அப்பெரிய மனிதர்கள் விரும்புவதுமில்லை. ஒர் ஏழைப் பெண்ணின் மகளோடு தங்கள் குழந்தை சேர்ந்து விளையாடுவதை அவர்கள் அவமானமாக நினைத்தார்கள்.
பக்கத்து வீட்டில் இருப்பவர் பொன்னம்பலம், நல்ல மனிதர், பெரிய செல்வந்தர். அவரது மகள் ராணி மட்டும் சாந்தியோடு சேர்ந்து விளையாடுவாள். பொன்னம்பலம் அதைக் குறைவாக எண்ணுவது மில்லை.
நாளை தீபாவளியைப் பொன்னம்பலம் வீட்டில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அதற்குப் பலகாரங்கள் சுடுவதற்கு உதவி செய்ய வரும்படி ஆளனுப்பியிருந்ததால் அங்கு சென்றிருந்தாள் நாகம்மா.
நன்றாக இருட்டிவிட்டது. வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்பக்கத்தில் உரையாடிக்கொண்டிருந்தார்கள். வீட்டின் எஜமானி மலரப் போகும் தீபாவளியை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு வீட்டை அலங்கரித்து மாக்கோலம் போடுவதில் முனைந்திருந்தாள். அவர்களது செல்லக் குழந்தை ராணி பக்கத்து அறையில் நிம்மதியாகத் தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.
நாகம்மா இயந்திரம் போல் பலகாரம் செய்வதில் முனைந்திருந்தாளே தவிர, அவளது உள்ளத்தின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப முகத்தில் வேதனை ரேகைகள் கோடிட்டபடி இருந்தன.
அவளோடு அங்கு வந்திருந்த சாந்தி, தனது தாயின் முக மாற்றங்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாதவளாய் கண்களை மூடியவண்ணம் மூலையில் படுத்திருந்தாள்.
நாகம்மா ராணியையும் சாந்தியையும் மாறிமாறிப் பார்த்தாள். இப்போது அந்தக் குழந்தைகள் இருவரது வதனங்களிலும் எவ்வளவு நிம்மதி! எவ்வளவு சாந்தி!
விடிந்துவிட்டால்?
ராணி மகிழ்வோடு தீபாவளியைக் கொண்டாடுவாள்! சாந்தி சோகப் பதுமையாய் உட்கார்ந்திருப்பாள்!
நாகம்மாவின் நெஞ்சுக்குள் புகைமண்டலமொன்று குமைந்து படர்ந்தது.
மறுகணம் நாகம்மா தனது கண்களை மூடிக் கொண்டாள். அவளது உள்ளத்தில் ஏன் அந்தத் தீய எண்ணம் உதயமாகிறது? அவள் ஆண்டாண்டு காலமாகத் தேடி வைத்திருந்த நல்லவள் என்ற பெயரை இழப்பதற்கா?
சாந்தியின் மகிழ்ச்சி அவளது தோழியின் துன்பத்தில்தானா உதயமாகவேண்டும்! குழந்தை ராணி எவ்வளவு சலனமற்றுத் தூங்குகிறாள்! தீபாவளியைக் கொண்டாடுவதற்கு எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பாள்! ராணியின் பிஞ்சு மனத்தில் வேதனையைப் பரப்பித்தானா சாந்தியின் மகிழ்ச்சியைக் காணவேண்டும்?
ஆனால் -
விடிந்ததும் புதுச்சட்டைக்காக அவளிடம் வரும் சாந்திக்கு என்ன பதில் சொல்வது? இன்றுபோலத் தீபாவளித் திருநாளிலும் சாந்தியின் கன்னத்தைப் பதம் பார்ப்பதா? அந்தப் பச்சிளங்குழந்தைக்குத் தீபாவளிப் பரிசாகக் கண்ணீரைத்தான் கொடுப்பதா?
அவள் செய்யத் துணிந்து விட்ட அந்தச் செயலை நினைக்கும் போது நாகம்மாவுக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் அவள் நினைப்பதுபோல் நடந்துவிட்டால் மட்டும், சாந்திக்கு எத்தனை வகையான புதுச்சட்டைகள்! எவ்வளவு மகிழ்ச்சி!
அப்போது ராணியின் நிலை?
நிச்சயம் அவள் துன்பப்படமாட்டாள். ராணி சந்தோஷமாக இருப்பதற்கு எவ்வளவு வசதிகள் இருக்கின்றன. ஒன்றில்லாவிட்டால் வேறொன்று! - நாகம்மாவின் உள்ளம் தனக்குச் சாதகமான சர்ச்சை களுக்குள் புதைந்து சிந்தனையைக் குறுக்கிக்கொண்டிருந்தது.
அடிமேல் அடிவைத்து ராணியின் பக்கத்தில் சென்றாள் நாகம்மா. அவளது நெஞ்சு வேகமாகப் படபடத்துக் கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டால்?
நாகம்மாவுக்கு எவ்வளவு இழிவான பெயர் கிடைக்கும். வெகுகாலமாக அவள் தேடி வைத்திருக்கும் நல்லவள் என்ற பெயர் அக்கணமே அழிந்து போகும். அவளை அன்போடு நடத்துபவர்கள் எல்லோருமே வெறுப்பார்கள். அவளைக் காணும்போது காறியுமிழ்வார்கள். யாரின் நலனுக்காக அவள் பாடுபடுகிறாளோ அச் சிறுகுழந்தைக்கும் அந்த அவமானத்தில் பங்கு கிடைக்கத்தானே செய்யும்!
ராணி அணிந்திருந்த சங்கிலியின் மேல் நாகம்மா கையை வைத்தாள்.
திடீரென்று யாரோ அவளது சேலையைப் பற்றியிழுத்தார்கள். திடுக்குற்றுத் திரும்பினாள் நாகம்மா. அவளது நெஞ்சு விறைத்துப் போயிற்று.
“அம்மா என்ன செய்யிறீங்க?”
“ஒண்டுமில்லை சாந்தி!” பதட்டத்துடன் கூறினாள் நாகம்மா.!
“நீ.... பொய் சொல்றே... ராணியின்ரை சங்கிலியைக் களவெடுக்கிறேம்மா.”
தான் பெற்றெடுத்த குழந்தையின் முன்பே குற்றவாளியாகக் கூனிக்குறுகி நின்றாள் நாகம்மா.
“ஏம்மா களவெடுக்கிறே?”
“.....”
“சொல்லும்மா”
“உனக்காகத்தான் சாந்தி...! நீ புதுச்சட்டை போட்டுக் கொண்டு சந்தோஷமாயிருக்கிறதைப் பார்க்கத் தான்...”
உணர்ச்சி வசப்பட்டுக்கூறிய போது நாகம்மாவின் வார்த்தைகள் தடுமாறின.
“எனக்குப் புதுச்சட்டை வேண்டாம் மா... ஆனா நீ களவெடுக்கக் கூடாதம்மா...களவெடுத்தா கடவுள் கண்ணைப் பிடுங்கிப் போடுவாரெண்டு நீதான் சொன்னியே... உனக்குக் கண்ணில்லாட்டி நான் அழுதழுது செத்துப் போவேம்மா.”
குறுகிய குவளைக் கண்களுக்குள் நீர் பளபளக்கக் கூறினாள் சாந்தி.
மறுகணம் சாந்தியைக் கட்டித் தூக்கித் தன்நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள் நாகம்மா. பகுத்தறிவு மழுங்கி அவள் செய்யப் புகுந்துவிட்ட தீயசெயலிலிருந்து அவளைக் காப்பாற்றி விட்டாள் சாந்தி. தான் பெற்ற குழந்தையைப் பார்க்கும்போது அவளுக்குப் பெருமையாக இருந்தது.
“நான் களவெடுக்க மாட்டன் சாந்தி.... ஒரு போதும் களவெடுக்க மாட்டன்” தனது குழந்தையை இறுக அணைத்த வண்ணம் கூறினாள் நாகம்மா.
“நீ... நல்ல அம்மா” குழந்தை சாந்தி தனது பூப்போன்ற கன்னங்கள் குழியச் சிரித்தபடியே கூறினாள்.
தன்னை மறந்திருந்த நாகம்மா சுயநிலைக்கு வந்தபோது ராணியின் தந்தை பொன்னம்பலம் அவளருகில் நின்று கொண்டிருந்தார்.
நாகம்மா திகைத்துப் போனாள். சங்கிலியைத் திருட முயற்சித்ததை அவர் பார்த்திருப்பாரா? அல்லது இப்போதுதான் இங்கு வந்தாரா? எதையுமே நாகம்மாவால் நிதானிக்க முடியவில்லை.
ஒருவேளை அவர் பார்த்திருந்தால்?-
நாகம்மாவின் இதயத்திற்குள் ஏதோ புகுந்து, இதயச் சுவர்களை ஈய்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற வேதனை.
குனிந்தபடியே வீட்டை நோக்கி நடந்தாள் நாகம்மா. அவளது கால்கள் தடுமாறின.
மறுநாள் தீபாவளி மலர்ந்தது! குதூகலம்! எல்லோர் முகத்திலும் மலர்ச்சி! மங்கல ஓசைகள் காதில் விழுந்துகொண்டிருந்தன! குழந்தைகள் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். எங்கோ பட்டாசுகள் அதிர்ந்தன.
நாகம்மாவை உடனடியாக வரும்படி பொன்னம்பலம் ஆளனுப்பியிருந்தார்.
நாகம்மாவின் நெஞ்சு துணுக்குற்றது. அவர் ஏன் அவளை அழைக்க வேண்டும்? அவள் செய்யமுனைந்த திருட்டைப்பற்றி விசாரிக்கப் போகிறாரா? எல்லோருக்கும் இன்பநாளாக இருக்கும் தீபாவளி அவளுக்கு மட்டும் துன்பநாளாகப் போகிறதா?
அவள் தலைகுனிந்தபடியே பொன்னம்பலத்தின் முன்னால் நின்றாள்.
“நாகம்மா! நீ ஆண்டாண்டு காலமாகக் கட்டிவளர்த்த நேர்மை யென்ற கோட்டையை உனது பிள்ளைப் பாசந்தான் தகர்த்தெறிந்தது.
ஆனால்.
உனது குழந்தை உனக்குக் கூடாத பெயரேற்படாது காப்பாற்றியிருக்கிறாள். அவளின் உயரிய உள்ளம் என்னை மிகவும் கவர்கிறது. நான் தரும் இந்தத் தீபாவளிப் பரிசை அவளிடம் கொடு, அவளைக் கடவுள் ஒரு குறையுமில்லாமல் என்றும் காப்பாற்றுவார்.”
பொன்னம்பலம் கொடுத்த பட்டுச்சட்டையை நடுங்கும் கைகளால் நாகம்மா பெற்றுக்கொண்டாள். அவளது இதழ்கள் துடித்தனவேயன்றி வார்த்தைகள் வெளிவரவில்லை. அவளது கைகள் அவரை நோக்கிக் குவிந்த போது, நன்றிப் பெருக்கால் கண்கள் கலங்கின.
எங்கிருந்தோ கோவில் மணியோசை காற்றில்கலந்து வந்து அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
- வீரகேசரி 1964
++++++++++++++++++++++++++
இதிலென்ன தவறு?
எனக்கு வயது முப்பதுக்கு மேலாகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் செய்து வைக்கவேண்டிய எனது தந்தை அதைப்பற்றிச் சிரத்தை எடுக்காமலே இருக்கிறார்.
தந்தையிடம், எப்பொழுதுதான் எனக்குத் திருமணம் செய்து வைக்கப்போகின்றீர்கள் என்று கேட்டுவிட என் உள்ளம் துடிக்கும். ஆனாலும் ஒரு நாளாவது நான் அவரிடம் அப்படிக் கேட்கவில்லை..
என்னுடன் படித்த சிநேகிதிகள் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சிலருக்கு நான்கைந்து குழந்தைகள் கூட இருக்கின்றன. அவர்களைப் போன்று நானும் கலியாணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் குடும்பம் நடத்த வேண்டுமென எனக்கு நிரம்பிய ஆசை.
ஆனால் எனக்குத் திருமணம் நடக்கக்கூடிய வழியைத்தான் காணோம்.
என்ஜினியரையோ, டொக்டரையோ அல்லது வேறு பெரிய உத்தியோகத்திலிருக்கும் ஒருவரையோ நான் கலியாணம் செய்ய வேண்டுமெனப் பெருமெண்ணம் கொண்டதில்லை. அப்படி எண்ணக்கூடிய அளவிற்கு எமது குடும்பச் சூழ்நிலையும் இல்லை. ஒரு சாதாரண கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.
இன்னும் ஐந்தாறு வருடங்கள் கழிந்து விட்டால், அதன்பின்பு யாரும் என்னைக் கலியாணஞ் செய்யச் சம்மதிக்க மாட்டார்கள். நான்தான் கல்யாணஞ் செய்யாமல் கன்னியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். பரவாயில்லை. எனக்குத் திருமணம் நடைபெறாததால் எனது தங்கைகளுமல்லவா திருமணஞ்செய்யாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
வீட்டிலே நான்தான் மூத்தவள். என்னையடுத்து இருவரும் பெண்கள்தான். அவர்களுக்குப் பிறகு மூன்று தம்பிமார்கள். தம்பிகள் மூவரும் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு எந்தநாளும் வருத்தம்.. எப்பொழுதும் ஒரு மூலையில் படுத்திருப்பா. வீட்டில் என்ன நடந்தாலும் அம்மாவுக்குத் தெரியாது. நான்தான் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். குடும்பப் பொறுப்பு முழுவதும் எனக்குத்தான்.
எங்கள் வளவுக்குள் ஒரு தோட்டக்காணி இருக்கிறது. சின்னக் காணிதான் அதிலேதான் தந்தை கமஞ்செய்கிறார். பெயருக்குத் தான் அவர் கமஞ் செய்கிறாரே தவிரத் தோட்டத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் எனக்குத்தான். நினைத்த நேரம் தந்தை தோட்டத்திற்குப் போவார். மற்ற நேரங்களில் எங்காவது ஊர் சுற்றிக் கொண்டு இருப்பார். நான்தான் தம்பிமார்களிடம் கெஞ்சி மன்றாடித் தோட்டத்தில் வேலை செய்விக்க வேண்டும். தம்பிமார்களுக்கு இன்னும் பொறுப்புணர்ச்சி வந்துவிடவில்லை. சில நேரங்களில் நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள். தந்தையின் கண்டிப்பு இல்லாதபோது அவர்கள் ஏன் எனக்குப் பயப்படப்போகிறார்கள்.!
தோட்டத்தை அடுத்து முருகனும் வள்ளியும் குடியிருக்கிறார்கள். அவர்கள் இருப்பதும் எங்களது காணியிலேதான். அவர்களுக்கெனச் சொந்தமாக நிலம் கிடையாது. எங்களது தந்தைதான் சிலவருடங்களுக்கு முன்பு அவர்களைக் கொண்டுவந்து குடியிருத்தினார்.
அதற்கு முன்பு அவர்கள் வேறு ஒரு கமக்காரனின் காணியிலே குடியிருந்தார்களாம். அந்தக் கமக்காரன் ஏதோ காரணமாக அவர்களைத் தனது காணியிலே குடியிருக்கவிடாமல் துரத்தி விட்டார்.
முருகன் கள்ளுக்கொட்டில் ஒன்று வைத்திருக்கிறான். கள்ளு விற்பதுதான் அவனது தொழில். அதில் அவனுக்கு நல்லவருமானம் கிடைக்கிறது. முருகனுக்கும் வள்ளிக்கும் பிள்ளைகள் இல்லை. முருகனுடைய தம்பி படித்து பட்டம் பெற்றுக் கொழும்பில் வேலையாக இருக்கிறான்.
வள்ளியைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. அவளுக்கு மரியாதையாகக் கதைக்கத் தெரியாது. அதற்குக் காரணம் எங்களது தந்தை அவளுக்கு கொடுத்த இடம்தான் என நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. மாலை நேரங்களில் தந்தை முருகனின் வீட்டிலேதான் இருப்பார். அப்போது முருகன் தனது கள்ளுக் கொட்டிலில் வியாபாரஞ் செய்து கொண்டிருப்பான். முருகனின் கள்ளுக்கொட்டிலுக்கு நாலு பேரும் வருவார்கள். அதனால் தந்தை அங்கு போவதில்லை. நாலுபேரறிய அவர் கள்ளுக் குடிக்க மாட்டாராம். முருகன் தனது வீட்டிலேயே அவருக்கு வேண்டிய கள்ளை எடுத்து வைத்துவிட்டுப் போவான்.
தந்தைக்கு இப்போதுதான் இளமை பெயர்ந்திருக்கிறது. இரவில் பத்துமணிக்கு மேலேதான் வீட்டுக்கு வருவார். சில நாட்களில் சாப்பிடாமலே படுக்கைக்குப் போய்விடுவார். வரும்போதே வயிறு நிரம்பியிருக்கும் போலிருக்கிறது.
அப்போதெல்லாம் அவரைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருக்கும். வீட்டில் மூன்று குமர்ப்பெண்கள் இருக்கிறார்கள். என்ற எண்ணமே அவருக்கு இல்லை. அவரை எப்படித்தான் கண்டிப்பது? நாங்கள் பெண் பிள்ளைகள் இதையெல்லாம் அவரிடம் எப்படிப் பேசுவது? தந்தையைத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் போய்விட்டது.
வள்ளி எங்களது வீட்டுக் கிணற்றிலே கயிறுபிடித்துத் தண்ணீர் இறைக்கக் கூடாது. அதனால் நான்தான் தண்ணீர் இறைத்து அவள் கொண்டுவரும் குடத்திலே ஊற்றுவேன். எனக்கு அடுப்படியிலே ஏதாவது வேலையிருந்து கொஞ்சநேரம் தாமதித்துவிட்டால் அவளுக்குக் கோபம் வந்து விடும்.
எனது தங்கைகள் இருவருடனும் வள்ளி கதைப்பதில்லை. முன்பு எப்போதோ நான் சுகவீனமாக இருந்த நேரத்தில், அவர்களிடம் தண்ணீர் அள்ளித்தரும்படி வள்ளி கேட்டிருக்கிறாள். அவள் கேட்ட தொனி தங்கைகளுக்குப் பிடிக்காததினால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் மூண்டு பெரும் வாய்ச் சண்டையிலே முடிந்துவிட்டது.
வள்ளிக்கு பெருங்கோபம் வந்துவிட்டது. நாங்கள் யாருமே எதிர்பாராதவகையில் அவள் கிணற்றடிக்குச் சென்று, எங்களது கிணற்றில் கயிறு பிடித்துத் தண்ணீர் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டாள். இது எனது தங்கைகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தந்தை வந்ததும் அவரிடம் வள்ளியின் செயலைப்பற்றி முறையிட்டார்கள். அப்போது தந்தைக்கும் கோபம் வரத்தான் செய்தது. ‘வள்ளி கேட்டவுடன் தண்ணீர் அள்ளிக் கொடுத்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது’ எனக்கூறி தங்கைகளுக்கு நல்ல ஏச்சுக்கொடுத்தார். அவர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்கள்.
ஒருநாள் வள்ளி கிணற்றடிக்கு வரும்போது அவளுடைய கழுத்தில் அம்மாவுடைய சங்கிலி இருப்பதை கண்டேன். அதைப் பார்த்தபோது எனது நெஞ்சு ‘பகீ’ரென்றது. அம்மா அதனை எனது கலியாணத்திற்காகத் ‘தயிலாப்பெட்டி’யில் வைத்திருந்தவ. எனக்குக் கல்யாணம் நடந்தால் எனது கழுத்திலே போடுவதற்கு நகையாக அந்தச் சங்கிலி ஒன்றுதான் இருந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் அந்தச் சங்கிலியை எடுத்துத் தந்தைதான் வள்ளிக்குக் கொடுத்திருக்க வேண்டும். வள்ளியிடம் அந்தச் சங்கிலி எப்படி அவளுக்கு கிடைத்ததெனக் கேட்பதற்கு எனது மனம் துடித்தது. கேட்பதற்குப் பயமாகவும் இருந்தது. பயப்படக் கூடிய நிலைமைதான் உருவாகி விட்டதே. ஆனாலும் கேட்காமல் இருக்கவும் முடியவில்லை.
அப்போது வள்ளி சொன்ன பதில்... எனது நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.
எனது தந்தை ஐந்நூறு வருடங்களாக அவர்களிடம் வாங்கிக்குடித்த கள்ளுக்கு ஒரு சதமேனும் இவ்வளவு காலமும் கொடுக்கவில்லையாம். அதற்குப் பதிலாகத்தான் சங்கிலியைக் கொடுத்திருக்கிறாராம்.
தந்தை குடித்துக்குடித்து எல்லாவற்றையும் அழித்து விடப்போகிறார்.
என்னைப் பொறுத்தவரையில் முருகன் மிகவும் நல்லவனாக இருக்கிறான். எங்களது தோட்டத்தில் ஏதாவது வேலையிருந்தால் நான் கேட்கும் போது அதனைச்செய்து கொடுப்பான். அதற்கு அவன் கூலி வாங்குவதும் இல்லை.
முருகனுக்குத் தனது தம்பி கொழும்பில் வேலை செய்வதைப் பற்றிப் பெருமை. எங்களது கிராமத்தில் முருகனுடைய இனத்தவர்கள் யாரும் அதிகம் படிப்பதில்லை. உத்தியோகம் பார்ப்பதும் இல்லை. முருகனுடைய தம்பி மட்டுந்தான் வேலையில் அமர்ந்திருக்கிறான். முருகன் எவ்வளவோ கஷ்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலே தனது தம்பியைப் படிப்பித்தானாம். அதனை அடிக்கடி என்னிடம் கூறிப் பெருமைப்படுவான்.
முருகனுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. அதனால் தனது தம்பியிடமிருந்து கடிதம் வந்தால் என்னிடந்தான் கொண்டு வருவான். நான்தான் அதனை வாசித்துக் காட்டுவேன். அந்தக் கடிதங்களுக்கு என்னைக் கொண்டுதான் முருகன் பதில் எழுதிப் போடுவான்.
முருகன் நேரிலே கதைப்பதைப்போன்று வழ வழவென்று தேவையற்றதையெல்லாம் சொல்லும்போது, நான் அவற்றைச் சுருக்கி தேவையற்றதை நீக்கி அழகான முறையிலே கடிதமாக எழுதிக் கொடுப்பேன்.
காலையில், முருகன் தனது தம்பியிடமிருந்து வந்த கடிதத்தை வாசித்து அறிந்து கொள்வதற்காக என்னிடம் கொண்டுவந்தான். கடிதத்திலே அவனது தம்பி வேலு கொழும்பிலிருந்து வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முருகனுக்கு ஒரே சந்தோஷம். அவன் மகிழ்ச்சியடைவதைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது.
முருகனின் தம்பி வேலுவிடம் எனக்கு எப்பொழுதுமே நல்ல அபிப்பிராயம் உண்டு. தான் கொழும்பில் வேலை பார்க்கிறேன் என்ற பெருமை கொஞ்சங்கூடக் கிடையாது. வேலுவிடம் நான் எந்தக்கூடாத பழக்க வழக்கங்களையும் காணவில்லை.
முதன் முதலில் கிணற்றடியிலேதான் நான் வேலுவைச் சந்தித்தேன். தண்ணீர் தேவைப்படும்போது வேலுவும் கிணற்றடிக்கு வருவதுண்டு. அப்போது அவசியம் ஏற்பட்டால் இரண்டொரு வார்த்தைகள் வேலுவிடம் கதைப்பேன்.
காலப்போக்கில் அடிக்கடி வேலு ஊருக்கு வரும்போதெல்லாம், நான் வேலுவுடன் கதைக்கத் தொடங்கிவிட்டேன். கிணற்றடியில் எவ்வளவோ கதைகளை நாங்கள் பேசியிருக்கிறோம். கொழும்பில் உள்ள புதினங்களை வேலு கூறும்போது, நான் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருப்பேன். நானும் ஊரில் உள்ள புதினங்களைச் சொல்லுவேன்.
வேலு என்னிடம் எதாவது கேட்கும்போது என்னை எப்படி அழைப்பது என்று தெரியாமல் பெயர் சொல்லி அழைக்கவும் முடியாமல் சங்கடப்படுவதைப் பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.
ஒருநாள் வேலு கொண்டு வந்திருந்த குடத்தில் தண்ணீரை நிரப்பியபடி நான் கூறினேன்.
“என்னுடைய பெயர் சிவகாமி”
வேலு எதுவும் பேசவில்லை. நான் அப்படிக் கூறியது தவறோ என்று கூட ஒரு கணம் யோசித்தேன். அதன் பின்பு கூட வேலு என்னிடம் கதைக்கும் போது ஒரு தடவையாவது என்னைச் ‘சிவகாமி’ எனப் பெயர் சொல்லி அழைக்கவில்லை.
வேலு என்னைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டுமென ஏனோ என் மனம் விரும்பியது.
ஒருநாள் வேலு கதைத்துக்கொண்டிருந்த வேளையில் என்னிடம் கேட்டார்.
“உங்களது நிலைமையைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. எப்படித்தான் உங்களால் கஷ்டங்களை வெளிக்காட்டாமல் இருக்க முடிகிறது?.” வேலுவின் குரலில் அனுதாபம் நிறைந்திருந்தது.
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.” புன்னகையை வரவழைத்துக் கொண்டு நான் கூறினேன்.
குடும்ப விஷயங்களை ஒருநாளாவது நான் வேலுவிடம் சொன்னதில்லை. ஆனாலும் வேலுவுக்கு எல்லாம் தெரியும் போலிருக்கிறது. முருகன்தான் கூறியிருக்க வேண்டும்.
என் தந்தைகூட என்னிடம் காட்டாத அன்பையும், அனுதாபத்தையும், வேலு என்னிடத்திலே காட்டியபோது, அது எனக்கு எவ்வளவோ ஆறுதலைக் கொடுத்தது. என் கஷ்டங்களைப் பார்த்து வேதனைப்படுவதற்கும் ஒருவர் இருக்கிறார் என்ற நினைவு என் மனதுக்கு இதமாக இருந்தது.
அதன்பின் வேலுவிடம் எதையுமே மறைப்பதற்கு என்னால் முடியவில்லை. எனது தந்தையைப் பற்றியும் குடும்ப நிலைமையைப் பற்றியும் தான் அறிந்திருந்தவற்றை வேலு என்னிடம் கேட்டபோது, நான் அவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலையிலேதான் இருந்தேன். எனக்கு வயதாகியும் திருமணம் நடக்காத காரணங்களை யெல்லாம் வேலு நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்.
நான் வேலுவிடம் கதைத்துக் கொண்டிருந்தபோது என்னை மறந்தநிலையில் எனது நிலைமையை எண்ணிக் கண்ணீர் வடித்தி ருக்கிறேன். அப்போது வேலுவின் கண்களிலும் நீர் நிறைந்திருக்கும்.
எனது மனவேதனைகளை வேலுவிடம் தான் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்த உலகத்தில் வேலுவின் இதயம் ஒன்று தான் எனக்காகக் கலங்கியிருக்கிறது.
அதன்பின்னர் வேலுவின் பேச்சிலே எனது துன்பங்களுக் கெல்லாம் தீர்வுகாண வேண்டுமென்ற வேகம் நிறைந்திருப்பதை நான் பல தடவைகளில் அவதானித்திருக்கிறேன்.
“சிவகாமி! என்னுடன் வந்து விடுகிறீர்களா! நாங்கள் ஒருவருக்குமே தெரியாமல் இந்த ஊரைவிட்டே ஓடிவிடுவோம். உங்களது கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு ஏற்பட்டுவிடும். நான் உங்களுக்கு வாழ்வு அளிக்கத் தயாராக இருக்கிறேன்.” வேலு ஒருநாள் என்னிடம் திடீரெனக் கேட்டார்.
எனது முகத்திலே தோன்றிய மாற்றத்தைக் கவனித்த வேலு தான் ஏதோ தவறு செய்து விட்டத்தைப் போன்று பதற்றம் அடைந்தார்.
“வேலு நீங்கள் கேட்டதில் எவ்வித தவறும் இல்லை. ஆனாலும் நான் இதைப் பற்றி நிறைய யோசித்த பின்புதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.”
வேலுவிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.
என நெஞ்சு ‘திக்திக்’கென்று அடித்துக் கொண்டிருந்தது, எந்த வேலையும் ஒடவில்லை.
இரவு படுக்கும்போது நித்திரை வர மறுத்தது. பாயில் புரண்டு புரண்டு படுத்தேன். என் எண்ணம் முழுவதும் வேலுவைப் பற்றியதாகத்தான் இருந்தது.
எனக்குத் திருமணம் செய்து வைக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. என் திருமணம் இனிமேல் எந்தவிதத்திலும் நடந்து விடாது, இந்நிலையில் எனது வாழ்வு மலர வேண்டுமானால், நான் வேலுவுடன் செல்வதுதான் ஒரே வழி. இல்லாவிடில் எனது வாழ்வு ஒருபோதும் மலரப்போவதில்லை.
எனக்கு வயதாகியும், தந்தை என் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்காமலே இருக்கிறார். இந்நிலையில் எனக்கு ஒருவர் வாழ்வு அளிக்க முன்வரும்போது அதை ஏற்றுக் கொள்வதில் எந்தத்தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
எனது தந்தை எப்படி எப்படியெல்லாமோ நடக்கும்போது, நான் மட்டும் வேலுவுடன் செல்வதில் என்ன தவறு இருக்கிறது?
ஒருவருக்குமே தெரியாமல் ஊரை விட்டு ஓடிப்போவதை நினைக்கும்போது எனது நெஞ்சம் துணுக்குறுகிறது. அதன் பிரதிபலிப்புக்கள் எப்படியெல்லாம் இருக்குமென்ற நினைவுகள் பூதாகரமாய் வந்து வந்து என்னைப் பயங்காட்டுகின்றன.
மறுநாள் காலையில் தயங்கியபடியே கிணற்றடிக்குப் போகிறேன். வேலு எனக்காக அங்கே காத்திருக்கிறார்.
என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை, மௌனமாகக் கிணற்றில் இருந்து நீரிறைத்துக் குடத்தில் ஊற்றுகிறேன். தண்ணீர் வெளியே சிந்துகிறது.
“சிவகாமி! நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே”. வேலு என்னிடம் கேட்கிறார்.
“என்னை மன்னித்து விடுங்கள் வேலு,” எனது குரல் சோகமாய் ஒலிக்கிறது. நான் வேலுவின் முகத்தை எதிர்கொண்டு பார்க்கும் சக்தியை இழந்து வேறெங்கோ பார்க்கிறேன். கண்களிலே நீர் முட்டிவிடுகின்றது.
வேலு எதுவுமே பேசவில்லை. அவர் மௌனம் சாதிக்கிறார். ஐயோ! அந்த மௌனம் என்னைச் சித்திரவதை செய்கின்றதே.!
நான்தான் தொடர்ந்தும் பேசவேண்டியிருக்கிறது.
“வேலு, நீங்கள் மிகவும் நல்லவர். ஊருலகமறிய நாலுபேர் மதிக்கக்கூடியதாக நான் உங்களுடன் இணைந்து வாழ்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுவேன். அளவில்லாத மகிழ்ச்சியடைவேன். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதை யாருமே அனுமதிக்க மாட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இங்குள்ள ஒருவருக்கும் இன்னும் வந்துவிடவில்லை.
நான் வாழவேண்டுமென்பதற்காக ஊரை விட்டே ஓடி வந்துவிட என்னால் முடியாது வேலு. உங்களுடன் ஓடி வருவதற்குத்தான் நான் தயங்குகின்றேன் எனத் தவறாக எண்ணி விடாதீர்கள். எங்கள் இனத்தவர் ஒருவர், ஏன் எனது நெருங்கிய உறவினர் ஒருவரே என்னை அழைத்தால் கூட நான் ஊரைவிட்டு ஓடிப்போவதற்குச் சம்மதிக்கமாட்டேன். அப்படிச் செய்வதனால் எங்களது குடும்பத்திற்கு அழியாத அவப் பெயரல்லவா ஏற்படும். அதனால் எங்களது குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படும் !
அதன்பின்பு குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் ஓடிப்போன கதையல்லவா முன்னுக்கு நிற்கும்.
எனது தங்கைகளை திருமணம் செய்து கொள்ள யாருமே முன்வரமாட்டார்கள். ஓடிப்போனவளின் தங்கைகள் என்ற பெயரல்லவா அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களை வாழ்நாள் முழுவதும் கண்ணீரோடு வாழவைத்து அவர்களது வாழ்வை அழித்து அதிலே எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்னால் முடியாது வேலு.
குடும்பத்தின் நன்மைக்காக தங்கைகளின் நல்வாழ்வுக்காக எனது வாழ்க்கையைத் தியாகஞ் செய்யத்தான் வேண்டும்.”
நான் உணர்ச்சிவசப்பட்டுக் கூறிக் கொண்டே போகிறேன்.
வேலு பதில் ஒன்றும் பேசாமல் வீட்டை நோக்கி நடக்கிறார். அவரது உருவம் எனது கலங்கிய கண்களுக்கு மங்கலாகத்தான் தெரிகிறது.
“வேலு... வேலு” நான் விம்முகிறேன். ஒலி தொண்டையிலேயே அமுங்கிவிடுகிறது.
- வீரகேசரி 1970
++++++++++++++++++++++++++++++++++
வாசனை
பஸ்ஸை விட்டிறங்கியதும் சுற்றிலும் கும்மென்றிருந்த இருளும் அதனுள் இருந்துவந்த இரவுப் பூச்சிகளின் இரைச்சலும் என்னைக் கலங்கடித்தன. இறங்கிய இடத்திலிருந்தே ஒரு தடவை பாதையைப் பார்வையிட்டேன். என்னை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்ஸின் பின்புறச் சிவப்பு சிக்னல் லைட்டின் ஒளி புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தது. அதன் படிப்படியான மறைவு என்னை ஒரு தனிமையான உணர்வுக்குட் படுத்தியது. பஸ்ஸிலிருந்து இறங்கும்வரை இருளைப்பற்றிய எவ்வித பயமுமின்றி யன்னலோரமாகத் தலையை வைத்துத் தூங்கியபடி வந்ததில் ஊருக்குள் தனியாகத்தான் நடந்து செல்லவேண்டுமென்ற நினைப்பு மறந்து போயிருந்தது.
தனிமையென்பது எனக்குப் புதிதானதொன்றல்ல. மலைநாட்டில் தொழில் புரியும் நான், அனேகமான நேரங்களைத் தனிமையிலேதான் செலவழிக்கவேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தனிமைக்கும் தற்போதைய தனிமைக்கும் பாரிய வித்தியாசம். எனக்குத் தரப்பட்ட பெரிய பங்களாவில் புத்தகங்களோ வானொலிப்பெட்டியோ ஏதோவொன்று தனிமைக்குத் துணையாய் இருந்திருக்கிறது. அந்தத் தனிமை மனதில் எவ்வித பயத்தையோ பாரத்தையோ அளித்ததில்லை. ஆனால் இருள் சூழவுள்ள தற்போதைய தனிமை மனதில் இனம் காணமுடியாத ஒரு பயத்தை உண்டுபண்ணியது. தெருவைப் பார்த்தபோது மனம் திக்திக்கென்று வேகமாய் அடித்துக் கொண்டது. அந்த இருட்டை ஊடுருவி ஒன்றரைக்கட்டை தூரமாவது நடந்து சென்றால்தான் ஊருக்குள் செல்லும் ஒழுங்கையை அடைய முடியும்.
கண்டியில் இருந்து புறப்பட்ட பஸ்ஸின் மந்த கதியிலான பயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தபோது இரவு எட்டு மணியாகி யிருந்தது. ஒரு மணிநேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்துதான் ஊரை நோக்கிப் பயணிக்கும் கடைசி பஸ்ஸில் பயணிக்கமுடிந்தது.
மூன்று நாட்களுக்கு முன்னர் தாத்தாவுக்கு சீரியஸ் என்று வந்த தந்திதான் இந்தப் பயணத்துக்கான காரணம். தந்திகிடைத்த அன்றோ அல்லது மறுநாளோ செய்ய வேண்டிய பயணம் வேலைப்பழு காரணமாக மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது.
எனது தாமதத்தைத் தொடர்ந்து மாமா போனில் கதைத்தார். “தாத்தா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது கடைசிக் கட்டம் நெருங்கிவிட்டது. இறுதியாக உன்னைப்பார்க்க விரும்புகிறார். அதற்காகவே அவரது உயிர் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்ற
செய்தியை மாமா கூறியபோது சுற்றியிருந்த வேலைகள் யாவும் மறந்து போயின. தாத்தாவை உயிருடன் பார்க்க முடியுமோ என்ற பயம் மனதுக்குள் புகுந்து கொண்டது.
தாத்தா என்மீது அளவு கடந்த அன்பைச் சொரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப்பருவம் வரை அவரது அரவணைப்பிலும் நிழலிலும்தான் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை வளர்ச்சியிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என்னை உருவாக்குவதில் கவனஞ் செலுத்தியிருக்கிறார். பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது தோளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது, அவரது உடம்பின் வாசனை படிப்படியாக என் ஜீவனுக்குள் புகுந்து ஒன்றிப்போய் விட்டது. அந்த வாசனை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல. அந்த வாசனையின் சிறு அதிர்வுகூட என்னைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும்.
எங்கள் குடும்பத்துடன் தாத்தா எவ்வாறு சம்பந்தப்பட்டவர் என்பதை அம்மா அவருக்குச் செய்யும் பணிவிடைகள் மூலம்தான் அறிந்து கொண்டேன். அவர் எங்கள் அம்மாவழிக் கொள்ளுத்தாத்தா.
தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கி பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது. இதனைப் பல முறை நான் எண்ணியதுண்டு.
தாத்தாவுக்கு சீரியஸ் என்று தந்தி வந்த அன்றே ஊருக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். வேலை வேலையென்று பயணத்தைப் பின் போட வேண்டியதாயிற்று. உண்மையில் யோசித்துப் பார்த்தால் அவ்வளவு வேலையொன்றும் இருக்கவில்லைப் போலத்தான் தெரிகிறது. அப்படியெனில் அது என் அலட்சியமா? ஆம், அலட்சியம் தான். முதுமையைக் கண்டுகொள்ளாத அலட்சியம். மனம் சொல்ல வியலாத வேதனைக்குள்ளாகியது. இளமையின் வளர்ச்சிக்காகவும் உருவாக்கத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் கற்பூரமாகக் கரைந்து போன முதுமையை இளமை அலட்சியப் படுத்தியிருக்கிறது.
தாத்தாவுக்கு இப்போது எண்பது வயது இருக்கலாம். எனக்கு விபரந்தெரிந்த காலத்திலிருந்து தாத்தாவின் தோற்றம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. நெடிய உடம்பு, சிவந்த மேனி, மூக்குக் கண்ணாடி யினூடாக ஊடுருவும் தீட்சண்யம் நிறைந்த கண்கள், உச்சிக் குடுமி, பஞ்சு போன்ற வெள்ளைத்தாடி, இடது தோளிலிருந்து மார்பிலே தவழும் தடித்த பூணூல். காலிலே மரத்தினால் செதுக்கிய குமிழி மிதியடி.... அவர் நடக்கும் போது எழும் மிதியடியோசை என் நெஞ்சைத் தட்டிக் கொண்டே இருக்கும்.
காலையில் எழுந்ததும் குளித்து சந்தியாவந்தனம் முடித்து சிவபூசை செய்த பின்னர்தான் தாத்தா எந்த வேலையையும் தொடங்குவார். நெற்றியிலும், மார்பிலும், கைகளிலும் திரிபுண்டரமாகத் தரித்த திருநீறு. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் குங்குமமும் துலங்கும். அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர்மேல் ஒருவகை மரியாதை தோன்றும்.
எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயதுதான் இருக்கலாம். அம்மணமாக ஓடித்திரிந்த வயது. தாத்தா ஒருநாள் என்னைப் பார்த்தபோது, தனது கண்களை இடுக்கி நாக்கைக் கடித்துக் கொண்டு, ஓடுகின்ற பல்லியையோ பூச்சியையோ குறிவைத்து அடிக்கும் பாவனையுடன் தனது வளைந்த கைப்பிடியுடன்கூடிய தடியைப் பலமாக என்மீது ஓங்கி, பின்னர் அதன் வீச்சினைக் குறைத்து, நுனித் தடியால் எனது அம்மணத்தில் மெதுவாகத் தட்டியபோது நான் கூச்சத்துடன் கைகளால் பொத்தியபடி அவரைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்ததை அவர் ரசித்துப் பலமாகச் சிரித்த காட்சி இன்னும் என்மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
தாத்தாவைப்பற்றிய கனத்த நினைவுகளோடு இருட்டைக் கிழித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இருளைக் கண்களுக்குப் பழக்கப்படுத்திக் கொள்வதற்காக சற்று நேரம் இருளுக்குள் பார்வையை அழுத்திக் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டியிருந்தது. கண்கள் இருளோடு சங்கமித்தபோது கால்களை மெதுவாக நகர்த்தினேன்.
ஊருக்குள் செல்பவர்கள் யாராவது வந்தால் துணைக்குப் பேசிக் கொண்டே போகலாம். இந்த நேரத்தில் யார்தான் வருவார்கள்? நடையைச் சற்று வேகமாக்கினேன். ஊருக்குள் திரும்பவேண்டிய ஒழுங்கை இன்னும் சற்றுத் தூரத்திலே இருக்கிறது. தெருவும் ஒழுங்கையும் சந்திக்கும் இடத்திலே இருக்கும் ஐயனார் கோயிலைத் தாண்டி போயிலைச் சுப்பரின் கடையை அடைந்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு பயமில்லை. ஐயனார் கோயிலின் பக்கத்திலே இருக்கும் ஆலமரம்தான் வயிற்றைக் கலக்குகிறது.
அந்த ஆலமரத்தைப் பற்றியும் அதன் பக்கத்திலே இருக்கும் ஐயனார் கோயிலைப்பற்றியும் தாத்தா எனக்குப் பல கதைகள் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து ஒரு மைல் தூரம் ஊரின் உள்ளே சென்று விட்டால் அங்கே இருக்கும் பிள்ளையார் கோயிலின் தெற்கு வீதியிலேதான் எங்களது வீடு இருக்கிறது. அந்த ஆலமரத்தின் உச்சியில் கொள்ளிவாய்ப் பேய்கள் குடியிருப்பதாகத் தாத்தா கூறியிருக்கிறார். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் இரவு தாத்தா என்னை வீதிக்கு அழைத்துவந்து தூரத்தே தெரியும் ஐயனார் கோயில் ஆலமரத்தின் பக்கம் காட்டினார். அங்கே கொள்ளிவாய்ப் பேய்கள் திரிவதைப் பார்க்கச் சொன்னார். ஆலமரத்தின் உச்சியிலிருந்து தீப்பொறிகளைக் கக்கியபடி வாண வேட்டுக்கள் போன்று கும்மிருட்டில் அங்கும் இங்கும் சில கொள்ளிவாய்ப் பேய்கள் ஓடித் திரிந்ததை என் கண்களால் கண்டு பயத்தில் உறைந்து போனேன். அந்த ஆலமரத்தில் யாரோ ஒரு குமர்ப் பெண் தூக்குப் போட்டுச் செத்ததாகவும் அந்தப் பெண்ணின் ஆவிதான் கொள்ளிவாய்ப் பேயாக நடமாடுவதாகவும் ஊரிலே பேசிக் கொண்டார்கள்.
மனம் பயத்தினால் திக்திக்கென அடித்துக் கொண்டது. தனிமையில் நடக்கும்போதுதான் மனதில் வேண்டாத நினைவுகள் எல்லாம் வந்து தொலைக்கின்றன! பின்னால் மிகச் சமீபமாக யாரோ வருவதைப் போன்ற பிரேமை; திரும்பிப் பார்த்தேன். யாரும் தென்படவில்லை இருட்டில் தனியாக வரும்போது பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாதென்று தாத்தா ஒரு முறை எனக்குக் கூறியிருக்கிறார். அந்த ஞாபகமும் எனது பயத்தை அதிகரிக்கச் செய்தது. அப்படித் திரும்பிப் பார்த்தால் எம்மைப் பின் தொடரும் ஆவிகள் முதுகிலே அறைந்து விடுமாம். இதனை அவர் சொன்ன வேளையில் நான் அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. கதைவிடுகிறார் என நினைத்தேன். ஆனால் அவர் கூறியது இப்போது என்னைப் பயங்கொள்ள வைத்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாதென எண்ணிக் கொண்டேன்.
தாத்தா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை சிறுவயது முதற்கொண்டே எனக்கிருந்தது. அதற்குக் காரணம் அவர் தனது அறிவாற்றலால் என்னை ஆகர்ஷித்திருந்தார். தாத்தாவுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலும் சமஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமையிருந்தது. அடிக்கடி பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பாடல்களைப் பாடி அவற்றின் சுவைகளை எடுத்துக் கூறுவார். அப்போதெல்லாம் தாத்தா எப்படி இவ்வளவு பாடல்களை மனத்தில் வைத்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வால்மீகி இராமாயணத்திலிருந்து சமஸ்கிருத சுலோகங்களைக் கூறி அதன் சுவைகளைத் தமிழிலே எடுத்துச் சொல்வார். மகாபாரதக் கதையைத் தொடராக தினம்தினம் அவரது மடியில் இருந்து கேட்ட நாட்கள் அற்புதமானவை. அந்தக்கதையில் வருகின்ற பீஷ்மர் போலவே தாத்தா தோன்றுவார். தாத்தாவும் பீஷ்மரைப் போன்று பிரமச்சாரிதான் என்பதை அம்மா எனக்குச் சொல்லியிருக்கிறார். தாத்தாவின் உடம்பு வாசனை பீஷ்மரிடமும் இருந்திருக்குமோ ?
மீண்டும் ஐயனார் கோயிலடி ஆலமரத்தின் ஞாபகம். நன்கு உயர்ந்து வளர்ந்த மரம் அடர்த்தியாகக் கிளை பரப்பி விழுதுகள் ஊன்றி அதன் சுற்று வட்டாரத்தையே ஆக்கிரமித்திருந்தது. பகல் நேரத்தில் கூட அதன் அடிப்பாகம் சற்று இருள்மண்டியே காணப்படும்.
அந்தக் காலத்தில் தாத்தா சொன்ன கதையொன்று என் ஞாபகத்தில் வந்தது. தாத்தாவின் வாலிபப் பருவம் அது. ஒரு நாள் நடுச்சாமம் ஐயனார் கோயில் வழியாக வரவேண்டிய சந்தர்ப்பம் அவருக்கு ஏற்பட்டதாம். ஐயனார் கோவிலின் முன்னால் ஒரே சனக்கூட்டமும் வெளிச்சமுமாக இருந்ததினால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும் நோக்கத்துடன் அவர் தரித்து நின்று பார்த்திருக்கிறார். கோயிலின் முன்னால் பலர் கூடியிருந்து பொங்கல்பானை வைத்துப் பொங்கிக் கொண்டிருந்தார்களாம். சிலர் பொங்கி முடித்து ஐயனாருக்குப் படைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்களாம். தாத்தா விடுப்புப் பார்க்கும் நோக்கத்துடன் அங்கு சென்றிருக்கிறார். அவர்கள் தாத்தாவை வரவேற்று, பொங்கல் பிரசாதம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்களாம். வெற்றிலை பாக்கு கொடுத்துத் தாம்பூலம் தரித்துக் கொள்ளும்படி வேண்டினார்களாம். அவர்களில் சிலரும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டார்களாம். அவர்களிடம் சுண்ணாம்பு இருக்கவில்லை. தாத்தாவிடம் சுண்ணாம்பு கேட்டு வாங்கி வெற்றிலையில் தடவி மடித்துத் தாத்தாவுக்கும் கொடுத்தார்களாம். தாத்தா தற்செயலாகக் கீழே பார்த்திருக்கிறார். அப்பொழுதுதான் அங்கே இருந்தவர்களது கால்கள் நிலத்திலே பதியாது அந்தரத்தில் இருந்ததைக் கவனித்திருக்கிறார். தாத்தாவுக்கு அப்போதுதான் பேய்களின் மத்தியில் தான் மாட்டிக் கொண்டிருப்பது புரிந்ததாம். மெதுவாக அவர்களுக்குப் போக்குக் காட்டி அந்த இடத்தைவிட்டு நழுவி வந்து விட்டாராம். இது, தாத்தா பேய்களிடம் வெற்றிலை வாங்கிப் போட்ட கதை. இப்படியான கதைகள் பலவற்றை தாத்தாவின் மடியில் உட்கார்ந்தவாறு மெய்மறந்து வாய்பிளந்து கேட்டிருக்கிறேன்.
‘சர்வே ஜனா ஸுஹினோ பவந்து’ எனத் தாத்தா அடிக்கடி கூறிக்கொள்வார். அதன் அர்த்தம் அந்தக் காலத்தில் எனக்குப் புரிந்ததில்லை. பிற்பட்ட காலத்தில் நான் பாரதியாரின் கவிதா விலாசத்தில் மூழ்கித் திளைத்து, ‘வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே’ என்ற வரிகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட போதுதான் தாத்தாவின் உள்ளத்தின் விசாலத்தை புரிந்து கொண்டேன்.
இப்போது எனது காலடிகள் ஐயனார் கோயிலடி ஆலமரத்தை நெருங்கியிருந்தன. பாதையின் இருமருங்கிலுமுள்ள தோட்டங்களி லிருந்து வரும் இரவுப் பூச்சிகளின் இரைச்சல் இருபக்கச் செவிகளையும் துளைத்தன. அது மேலும் எனது பயப் பிராந்தியை அதிகரிக்கச் செய்தது. எனது நடையின் வேகம் கூடியிருந்ததை உணர்ந்தேன்.
காலில் ஏதோவொன்று இடறியது. மனதைப் பிழந்து கொண்டு ஆப்பு ஒன்று இறங்கியதைப் போன்ற உணர்வு. மூளையின் நரம்புகள் அதிர்ந்து செவிப்பறைக்குள் ரீங்காரித்தன. அந்த அதிர்வின் பயம் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. சுற்றுச் சூழலுக்குள் புதைந்து கொண்ட எனது இதயத் துடிப்பின் ஓசை இருமடங்காய் என் காதுக்குள் சப்தித்தது. கல்லொன்றில் எனது கால் இடறிப் பெருவிரல் நகம் பிளந்திருக்கவேண்டும். விண்விண்ணென்று தெறித்தது. பெரு விரலுக்கும் அடுத்த விரலுக்கு மிடையில் பிசுபிசுப்பை உணர்ந்தேன். தரித்துநின்று காலைத் தடவிப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தது.
எனக்கு ஒரு பத்தடி தூரத்தில் ஆலமரம் இருட்டோடு இருட்டாய் விழுதுகள் ஊன்றி நின்று கொண்டிருந்தது. கம்பீரமான ஓர் இராட்சசனாய் நிமிர்ந்து நின்ற அந்த மரத்தின் உச்சியைப் பார்ப்பதற்கு எனக்குத் திராணி இருக்கவில்லை. கொள்ளிவாய்ப் பேய்கள் எனத் தாத்தா எனக்குக் காட்டியது காற்றிலே எரியக் கூடிய ஒரு வாயுதான் என்பதை நான் பிற்காலத்தில் உயர்வகுப்பில் விஞ்ஞான பாடத்தில் படித்தபோது அறிந்து கொண்டது உண்மை எனினும் ஏனோ அந்த உச்சியைப் பார்ப்பதற்கு எனக்குப் பயமாக இருந்தது.
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்காக எங்களது குல தெய்வமான பிள்ளையாரை நினைத்துக் கொண்டேன். சிறிது நேரந்தான் பிள்ளையார் மனதில் வீற்றிருந்தார். பின் எங்கிருந்தோ பேய்கள் ஐயனாருக்குப் பொங்கல் வைக்கும் காட்சி என் மனதுக்குள் புகுந்து கொண்டது. இப்போது என்ன செய்வது? இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ சிறுகதையில் வரும் செல்லையா, கொள்ளிவாய்ப் பேய்கள் ஏற்படுத்திய பயத்தை மறைக்க தேவகாந்தாரி இராகம் பாடிய ஞாபகம் வந்தது. எனக்குத் தேவகாந்தாரி தெரியாது. எனவே ஒருதேவாரத்தைப் பாடத் தொடங்கினேன். ‘வேயுறு தோழிபங்கன்’ என்ற கோளறு பதிகத்தை எனது வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது. இடையே பேய்கள் தாத்தாவிடம் சுண்ணாம்பு கேட்டதும் நினைவில் வந்தது. அந்தப் பதிகத்தின் கடைசி வரிகள் மறந்துபோனதால் ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதிசொன்னாளே’ என்ற சினிமாப் பாடலுடன் அதனை முடிச்சுப் போட்டேன். எதையாவது உரத்து முணு முணுத்தால்தான் எனது பயத்தைக் கட்டுப்படுத்தலாம் போலிருந்தது.
பயத்தை உண்டாக்கும் நினைவுகளை மறக்க நான் எத்தனம் செய்து கொண்டிருந்த வேளையிலேதான் அந்தச் சத்தம் என் செவிகளை வருடியது. ‘கிணிங் கிணிங்’ என்ற மணிச்சத்தம் போன்ற அந்த மெல்லிய ஒலி என் மூளையின் உச்சிவரை கேட்டது. அந்த ஒலி ஐயனார் கோயிலிலிருந்து வருகிறதா அல்லது ஆலமரத்தின் உச்சியிலிருந்து வருகிறதா? அல்லது மனப் பிரமையா ?
பின்னால் திரும்பிப் பார்க்கலாம் என நினைத்தேன்; பயமாக இருந்தது.
முதுகில் அறை விழும்.
பயம் நடையின் வேகத்தைக் கூட்டியது. ஆலமரத்தைத் தாண்டும்போது ஒரு வாசனையை என்னால் நுகர முடிந்தது. அது தாத்தாவின் உடம்பிலிருந்து வீசும் வாசனையை ஒத்திருந்தது. மரணப் படுக்கையில் எனது வரவுக்காகக் காத்திருக்கும் தாத்தாவின் வாசனை இந்த நேரத்தில் இந்த இடத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை. முதலில் மெல்லிய வாசனையாக ஆரம்பித்து படிப்படியாக அதன் செறிவு கூடிக் கொண்டிருந்தது. நுகர நுகர அந்த வாசனை என்னை மயக்க நிலைக்குத் தள்ளிவிடும் போலிருந்தது. அதுவும் ஒரு கணப்பொழுது தான். பின்னர் அந்த வாசனையின் செறிவு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது.
சிறிது நேரத்தில் அந்த வாசனையின் தாக்கம் என்னை நிலை தடுமாற வைத்துவிட்டது. தேகமெங்கும் குப்பென வியர்த்து விட்டது. எனது நடையின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்து நான் ஓடத் தொடங்கினேன். வீட்டின் திசையை மனத்திலிருத்தி ஓடத் தொடங்கினேன். கையில் கொண்டுவந்த கைப்பையை நெஞ்சோடு அணைத்தபடி ஓடினேன். போயிலைச் சுப்பரின் கடை வந்ததும்தான் இனிப் பயமில்லை என்ற நிலையில் எனது ஓட்டத்தை நிறுத்தினேன்.
கடையின் முன்பக்கம் மூடப்பட்டு இருளில் ஓய்வு கொண்டிருந்தது. உள்ளே சுப்பர் உறங்கிக் கொண்டிருப்பார். கடையின் முன்பக்கமாக இருந்த வாங்கில் அமர்ந்து சற்று ஓய்வாக மூச்சு விட்டேன். மெது மெதுவாக என்னை ஆட்கொண்டிருந்த அமானுஷ்யம் இப்போது விலகத் தொடங்கியது. கதவைத்தட்டி சுப்பர் மாமாவை எழுப்பலாம் என்ற நினைவை ஏதோவொரு தைரியத்தில் மாற்றிக் கொண்டேன்.
வீட்டிற்கு இன்னும் சிறிது தூரம்தான் இனிப் பயமில்லை. கிழக்கு வானிலிருந்து பனை வடலிகளுக்கூடாகச் சந்திரன் வெளியே எட்டிப் பார்த்தான். இப்போது பாதையைப் பார்த்து நடக்கக் கூடிய வெளிச்சம் துலங்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சத்தில் பயவுணர்வுகள் அவ்வளவாக வெளிப்படுவதில்லைத்தான். ஆனாலும் அந்த வாசனை மட்டும் என்னைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அது ஏற்படுத்திய திகிலோடு நான் வீட்டை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கினேன்.
பிள்ளையார் கோயிலின் தெற்குப் புறத்தில் உள்ள எங்கள் வீட்டு வாசலை நெருங்க நெருங்க அங்கிருந்து மெல்லியதான அழும் ஓசை வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். வீட்டுப் படலையடியில் வந்தபோது, வீட்டினுள்ளே இன்னும் விளக்குகள் எரிந்து கொண்டி ருப்பதைக் கவனிக்கக் கூடியதாக இருந்தது. மனதில் கேள்விக் குறியோடு படலையைத் திறந்தேன். வீட்டை நெருங்க நெருங்க அந்த அழுகை ஒலி தெளிவாகக் கேட்டது. அது அம்மாவின் அழுகை ஒலி. அம்மாவின் அழுகை அங்கு நடந்த விபரீதத்தை உணர்த்தியது. திக்திக்கென்ற இதயத் துடிப்போடு வீட்டு விறாந்தையை அடைந்தேன். அங்கே வீட்டில் உள்ளவர்களோடு ஊர்மக்கள் சிலரும் காணப்பட்டனர்.
மாமா என்னை நோக்கி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு ஓவென அழுதார். தாத்தா போய்விட்டார் என்பது எனக்குப் புரிந்தது. மாமாவின் தொண்டை கரகரத்தது. சற்று முன்னர்தான் தாத்தாவின் உயிர் பிரிந்ததாக மாமா கூறினார். இறுதியாக அவர், அருகே தூங்கிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பி குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டிருக்கிறார். அம்மா தண்ணீர் கொண்டுவருவதற்கு முன்னரே அவரது உயிர் பிரிந்து விட்டது.
முன்விறாந்தையில் எனது கைப்பையைப் போட்டுவிட்டு தாத்தாவின் அறைக்குள் நுழைந்தேன். அறையின் நடுவே தாத்தாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. தாத்தாவின் கால்மாட்டிலிருந்து அழுது கொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும் எழுந்து என்னைக் கட்டிக் கொண்டு பெரிதாக விம்மத் தொடங்கினார். அம்மாவைக் கட்டுப் படுத்துவது சிரமமாக இருந்தது.
தாத்தாவின் அருகே சென்றேன். அவரது உயிரற்ற உடல் அமைதியாகக் கிடந்தது. ‘உன்னைப் பார்க்கவேண்டும், உன்னோடு பேசவேண்டும் என ஏக்கத்துடன் காத்திருந்தேன். ஏமாற்றிவிட்டாயே’ எனத் தாத்தாவின் முகம் என்னைக் குற்றம் சாட்டியது. அம்புப் படுக்கையில் உயிர் போகமுடியாமல் தவித்த பீஷ்மரைப் போன்றுதான் தாத்தாவும் தவித்திருப்பாரோ....
கடைசியாக என்னைப் பார்க்கவேண்டுமென்ற அவரது ஆசை ஒரு சில நிமிடங்களால் நிராசையாய்ப் போனது என் நெஞ்சை அடைத்தது. அவர் என்னிடம் என்னசொல்ல இருந்தாரோ...? அடக்கமுடியாத சோகம் என்னுள் வெடித்தது. கண்களில் கண்ணீர் பிரவாகித்தது. அவரது இரக்கமும் அன்பும் தோய்ந்த முகத்தைப் பார்க்கமுடியாதவனாய் யன்னல் ஊடாக வெளியே தூர இருளுக்குள் நோக்கினேன். இப்போது இருட்டு என்னைப் பயமுறுத்தவில்லை. பதிலாக ஒருவகைச் சினத்தை உண்டு பண்ணியது.
அப்போது... அந்த வாசனை... தாத்தாவின் உடம்பிலிருந்து வீசும் அந்த வாசனை எனது மூக்கை வருடியது. எனது மனம் நடுங்கியது. மீண்டும் என் நெஞ்சுக்குள் இறுக்கமான ஏதோ உருள்வதைப் போலிருந்தது. நடுங்கிய இதயத்தோடு உற்று நோக்கினேன். வாசனையின் செறிவு இப்போது சிறிது சிறிதாகக் குறைந்து எனது உயிருள் ஒடுங்கிக் கொண்டிருந்தது.
-கலசம் 1972
++++++++++++++++++++++++
சுதந்திரத்தின் விலை
கொழும்பு நகரில் பிரபல்யமானது அந்த ‘லொட்ஜ்’ அங்கு இருந்தவர்களில் அநேகமானோர் என்னைப்போலவே வட பகுதியிலிருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர். வெளி நாட்டிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெறுவதற்காகச் சிலரும் வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதற்காக வேறு சிலரும் வெளிநாடுகளிலிருந்து வந்து தமது சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் தவிப்பவர்கள் ஒரு சிலருமாகப் பலர்.
லொட்ஜின் மனேஜர் மேசையருகே உட்கார்ந்தபடி எனது
‘டெலிபோன்’ உரையாடலைக் கேட்ட வண்ணம் இருந்தார். நான் ரிசீவரை வைத்ததும் என்னைப்பார்த்து புன்னகை செய்துவிட்டு “என்ன தம்பி விஷயம் சரியே, எந்த விலாசத்துக்கு எப்புடி அனுப்பிறதெண்டு விபரமாய்ச் சொன்னனீரே?” என வினவினார்.
மனேஜருக்கு அறுபது வயதுவரை மதிக்கலாம். நெற்றியிலே பளீரெனத் துலங்கும் விபூதிப் பூச்சும் சந்தனப் பொட்டும் வெள்ளை வேட்டியும் சேட்டுமாக காட்சிதரும் அவரது பேச்சில் எந்த நேரமும் ஒருவித குழைவு தொனிக்கும்.
“ஓம் ஐயா, எல்லாம் விபரமாய்ச் சொல்லிப் போட்டன். நாளைக்குக் காசு அனுப்புறனெண்டு மாமா சொன்னவர்” என்றேன்.
மனேஜர் அமர்ந்திருந்த மேசையின் பின்புறமாக மேலே சுவரில் மாட்டப்பட்டிருந்த சுவாமிப் படங்களிலிருந்து ஊதுபத்தியின் சுகந்தம் காற்றுடன் கலந்து வந்தது.
“தம்பி கண்ட கிண்ட ஏஜென்ட் மாரிட்டைக் காசைக் குடுத்து மாட்டிக் கொள்ளாதையும். அவங்கள் வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறதெண்டு சொல்லி காசை வாங்கிக்கொண்டு அந்தரத்திலை விட்டிடுவாங்கள். எங்கட சனம் வெளிநாட்டிற்குப் போற வழியில எவ்வளவு அல்லல் படுதுகள் தெரியுமே....”
என் மனதைப் பயம் கௌவிக் கொண்டது. சிறிது காலத்திற்கு முன் ஜேர்மனிக்குள் கள்ளத்தனமாகப் புகுவதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பொருட்களோடு பொருட்களாக இருந்து, லொறிகளில் பயணம் செய்த இலங்கைத் தமிழர்கள் விறைத்து மரணமானதும், இத்தாலிக்கு தஞ்சம் நாடிச் சென்றவர்கள் மத்திய தரைக் கடலில் கப்பலிலிருந்து படகுகளில் இறக்கப்பட்டு பயணஞ்செய்தபோது பெருந்தொகையானோர் மூழ்கி இறந்ததும் நினைவில் வந்தன.
நான் யோசனையோடு எனது அறையை நோக்கி நடந்தேன். பக்கத்து அறையிலும் எனது வயதையொத்த இளைஞன் ஒருவன் தங்கியிருந்தான். வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவனிடம் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு வெகு காலமாகவே எதுவுமே நடக்காமல் ஏஜென்டின் முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டிருக்கிறான்.
லொட்ஜ் மனேஜர் அங்கு தங்கியிருந்த எல்லோரது விபரங்களையும் அறிந்திருந்தார். தேவைப்பட்டபோது அவர்களுக்கு ஆலோசனை கூறவும் செய்தார். எந்த எந்த வேலையை யார்யாரைப் பிடித்து எவ்வாறு இலகுவாகச் செய்து முடிக்கலாம் என்ற நெளிவு சுளிவுகளும் அவருக்குத் தெரிந்திருந்தது.
நான் லொட்ஜுக்கு வந்த அன்று காலையிலேயே எனது அறிமுக அட்டை, வவுனியாவில் இராணுவத்தினர் கொடுத்த ‘பாஸ்’ யாவற்றையும் வாங்கிச்சென்று பொலிசில் பதிவு செய்து, நான் அங்கு தங்குவதற்கு வேண்டிய அனுமதியைப் பெற்றிருந்தார். ஆனாலும் அநாவசியமாக கொழும்பில் சுற்றித் திரிவதைத் தவிர்க்கும் படியும் வெளியே எங்காவது செல்வதானால் தன்னிடம் கூறிவிட்டுச் செல்லும்படியும் என்னிடம் கூறியிருந்தார்.
மனேஜர் மூலந்தான் ஏஜன்ட் நம்பிக்கையானவரா, பணம் கொடுக்கலாமா எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
இரவு படுக்கைக்குத் தயாரானபோது வெளியே அறைக்கதவை யாரோ தட்டினார்கள். திறந்தபோது இரண்டு பொலிசார். மனது திக்திக்கென்று அடித்துக் கொண்டது.
எனது அனுமதியைக் கூடப் பெறாமல் அவர்கள் உள்ளே நுழைந்து அறையைச் சோதனை செய்யத் தொடங்கினர்.
ஒருவன் எனது அறிமுக அட்டையை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ஏதோ சிங்களத்தில் முணுமுணுத்தான். மற்றவன் அருகே வந்து கொச்சைத் தமிழில் “வாங்க பொலிசுக்கு, விசாரிக்க வேணும்” என்றான்.
அப்போது லொட்ஜ் மனேஜர் அவசர அவசரமாக அங்கு வந்தார். “இவரைத்தான் முறைப்படி பொலிசில் பதிவு செய்திருக்கிறேனே.... பின்பு ஏன் அழைத்துச் செல்கிறீர்கள்?” எனச் சிங்களத்தில் வாதாடுவது எனக்குப் புரிந்தது.
அவர்கள் விடுவதாயில்லை.
“தம்பி பயப்பிடாதையும்..... உவங்கள் உப்பிடித்தான். காசு புடுங்கிறதுக்கு வெருட்டுவாங்கள். நீர் போம், நான் எல்லாம் கவனிச்சுக் கொள்ளுறன் ”என இரகசியமாக என் காதுக்குள் கிசுகிசுத்தார் மனேஜர்.
லொட்ஜின் வெளிவாசல்வரை பொலிசார் என்னை அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவன் திரும்பிச் சென்று மனேஜரிடம் சிறிது நேரம் ஏதோ கதைத்துவிட்டு வந்தான்.
நல்லவேளையாக பொலிஸ் ஸ்டேசனில் விசாரணை நான் எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையாக இருக்கவில்லை. எனக்குச் சிங்களம் தெரியாததால் தமிழ் தெரிந்த ஒரு பொலிஸ்காரரே விசாரணை செய்தார். வழக்கம்போல பெயர், விலாசம், குடும்பப்பின்னணி, போராளிகளோடு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்விகளே கேட்கப்பட்டன. அந்தப் பொலிஸ்காரர் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்.
“நீங்க பயங்கரவாதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். நீங்க வெளிநாட்டுக்குப் போகத்தான் கொழும்புக்கு வந்திருக்கிறீங்க. உங்களைப் போல பொடியங்களைப் பார்க்க எங்களுக்குப் பாவமாயிருக்கு. நீங்க அவங்கட கரச்சல் தாங்கமாட்டாமத்தான் வெளிநாட்டுக்குப் போறீங்க”
பொலிஸ்காரர் கூறுவதெல்லாவற்றிற்கும் நான் ஆமோதிப்பது போலத் தலையாட்டிக் கொண்டிருந்தேன். எப்படியாவது இவர்களிடமிருந்து விடுபட வேண்டும்.
“உங்களைப்போல அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் சும்மா விடமாட்டாங்க. ‘பங்கர்’ வெட்டச்சொல்லுவாங்க. பணம் கேட்பாங்க. அவங்க சொல்றதெல்லாம் நீங்க செய்யவேண்டியிருக்கும். என்ன நான் சொல்லிறது சரிதானே”
நான் மௌனம் சாதித்தேன்.
“என்ன பேசாமல் இருக்கிறீர் ? நீர் என்ன பயங்கரவாதிகளுக்கு சப்போட்டா? அந்த மாதிரித்தான் தெரியுது.”
பொலிஸ்காரனின் பேச்சு திசை திரும்பியது. அவரது அபிப் பிராயத்திற்கு மறுப்புத் தெரிவித்தால் பயங்கரவாதி எனப் பட்டம் சூட்டிவிடுவார் போலிருந்தது.
“என்ன நான் சொல்லிறது சரிதானே. அவங்க பங்கர் வெட்டச் சொன்னால் வெட்டத்தானே வேணும். பணம் கேட்டால் கொடுக்கத்தானே வேணும். உமக்கு அப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்கும்தானே. ஆனால் நீங்க பயங்கரவாதியில்லை”
“ஓமோம் நீங்கள் சொல்றது சரி” என்றேன் தடுமாற்றத்துடன்.
“உண்மையை ஒத்துக்கொள்ளுறதுக்கு ஏன் இப்படித் தடுமாறுகிறீர்? நாங்கள் எங்களுடைய கடமையைத்தானே செய்யிறோம். உம்மைப் போல இளைஞர்களைக் கஷ்டப்படுத்திறது எங்களுக்கு விருப்பமில்லை. விசாரணை செய்யவேண்டியது எங்களுடைய கடமை. நீங்க பயங்கரவாதி இல்லை என்று எங்களுக்கு நல்லா தெரியும்”
அந்தப் பொலிஸ்காரர் தனது அபிப்பிராயத்தைக் கூறிக்கொண்டே ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வந்ததும் என்னை விடுதலை செய்வதாகக் கூறி, தான் எடுத்த குறிப்பின் கீழ் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டார்.
அன்றிரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தேன். கடந்த ஒருவருடகாலத்தில் எவ்வளவோ சீரழிவுகளை எதிர்நோக்கவேண்டி எற்பட்டுவிட்டது.
இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற ‘ரிவிரஸ’ நடவடிக்கை மேற்கொண்டபோது ஷெல் தாக்குதல்களும் விமானத்திலிருந்து சரமாரியாகக் குண்டுகளும் வீழ்ந்தபோது, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சனங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியபோதுதான் நானும் எனது வயோதிபத் தாயாரும் எனது சகோதரியும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினோம். கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெய்யிலிலும் எங்கே போக்கிடம் என்று தெரியாமல் சனத்தோடு சனமாய் கால் போகிற போக்கில் நடந்து களைத்து, கடலிலும் தரையிலும் பயணஞ்செய்து கிளிநொச்சியை அடைந்து அகதிகளாய் காலங்கழித்தபோதுதான் அங்கும் இராணுவ நடவடிக்கை தொடங்கியது. மீண்டும் ஷெல் அடி, பொம்பர் தாக்குதல்கள்.... சனங்கள் மாங்குளத்துக்கு ஓட, நாங்களும் ஓடினோம்.
அகதிகளாய் எத்தனை நாளைக்குத்தான் காலங்கடத்துவது. அடுத்தவர் வீட்டுக் கோடிகளில் தஞ்சம் புகுவது. ஊர் மாறுவது. அம்மா அபுதாபியில் இருக்கும் தனது சகோதரனுக்கு எமது நிலைமையை விளக்கி உருக்கமாகக் கடிதம் எழுதினார். அவர் உடனே என்னை எப்படியாவது கொழும்புக்கு வந்து தொடர்பு கொள்ளும்படியும் வெளிநாடு செல்வதற்கு தான் உதவுவதாகவும் பதில் எழுதியிருந்தார்.
அம்மாவிடம் கடைசியாக இருந்த காதணிகளை விற்று நான் மட்டும் தனியனாய் கொழும்பு வந்து சேர்ந்தேன்.
நான் கொழும்புக்குப் புறப்பட்டபோது, அம்மா என்னைக் கட்டிப் பிடித்து அழுத அழுகை என் நெஞ்சைப் பிழிந்தெடுத்தது. “என்ரை ராசா நீ வெளியில போனாத்தான்ரா எங்களுக்கு ஒரு வழிபிறக்கும். இங்கை இருந்து கொண்டு ஒண்டும் செய்யேலாது. உன்ரை தங்கச்சியையும் நீதான் கரைசேர்க்க வேணும்” எனக்கூறி வழியனுப்பியபோது, எனது மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் புறப்பட்டேன்.
மாமா அனுப்பும் பணம் நாளை வந்துசேரும். முதலில் அனுப்பும் பணத்தை உடனே மாங்குளத்தில் இருக்கும் அம்மாவுக்கு அனுப்பி, அம்மாவினதும் தங்கையினதும் அகதிவாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என என் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அம்மா ஒவ்வொரு நிமிடமும் எனது கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.
கைதிக் கூண்டுக்குள் எனக்கு நித்திரை வரவில்லை. எப்போது விடியுமெனக் காத்திருந்தேன். நிலையப்பொறுப்பதிகாரி வந்தபின்பு தான் எனக்கு விடுதலை கிடைக்கும்.
ஆனால் நிலையப்பொறுப்பதிகாரி வந்து வெகுநேரமாகியும் என்னை விடுதலை செய்யவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் என்மேல் வழக்குத் தொடரப்போகிறார்களாம்.
எனக்குத் தலை சுற்றியது. நான் என்ன குற்றம் செய்தேன் என்பது தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பலர் வழக்குத் தொடரப்படாமல் வருடக்கணக்கில் சிறையில் வாடுவதுபோல நானும் வாடவேண்டியது தானா?
எனது எதிர்காலம், என்னை நம்பியிருக்கும் எனது தாய், சகோதரி, இவர்களின் எதிர்காலம் எல்லாம் சூனியமாகிவிட்டதுபோல் தோன்றியது.
நான் சற்றேனும் எதிர்பார்க்காதவகையில் சட்டத்தரணி ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் லொட்ஜ் மனேஜருடன் கதைத்துக் கொண்டிருந்தது ஞாபகத்தில் வந்தது. மனித உரிமைகள் பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து தான் வந்திருப்பதாகக் கூறினார்.
என்னைச் சந்திப்பதற்கு முன்னர் எனது விடுதலைக்காக நிலையப் பொறுப்பதிகாரியைத் தான் சந்தித்ததாகவும் எனக்கு எதிராக அவர்கள் தயாரித்திருக்கும் குற்றப் பத்திரிகையை வாசித்ததாகவும் கூறினார்.
“தம்பி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸார் குற்றப்பத்திரிகை தயாரித்திருக்கிறார்கள். இரண்டு குற்றங்கள் உம்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று பயங்கரவாதிகளுக்கு ‘பங்கர்’ வெட்டிக் கொடுத்திருக்கிறீர். இரண்டாவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை நீர் அறிந்திருந்தும் இதுவரை காலமும் அதனைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறீர்”
“ஐயா சத்தியமாய் நான் ‘பங்கர்’ வெட்டவுமில்லை, உடந்தையாய் இருக்கவுமில்லை” எனப் பதறினேன்.
“பதற்றப்படாதையும் தம்பி, நீர் ‘பங்கர்’ வெட்டினதாக வாக்குமூலம் கொடுத்து, கையொப்பம் போட்டிருக்கிறீர்” என்றார் சட்டத்தரணி தாழ்ந்த குரலில்.
“ஐயா நீங்கள்தான் இதற்கு ஏதாவது வழி செய்யவேணும்”
“கைது செய்யப்படுபவர்களை இருபத்திநாலு மணித்தி யாலத்திற்கு மேல் வைத்திருக்க சட்டம் இடங்கொடுக்காது. அதனால் உம்மை இன்று ‘கோட்’டில் நீதவான் முன்பாக ஆஜர்செய்து அவரது உத்தரவின் பேரில் ரிமான்டில் வைக்கப்போகிறார்கள்”
“நான் நிரபராதி என்பதை நீங்கள்தான் ஐயா நீதவானுக்குச் சொல்லவேணும்” என்றேன் கலக்கத்துடன்.
“நான் உமக்காக வாதாடலாம். ஆனாலும் எழுத்து மூலமான ஒப்புதல் வாக்குமூலம் பொலிசாரிடம் இருக்கும்போது நீதவான் உம்மை‘ரிமான்டில்’ வைப்பதற்குத்தான் உத்தரவிடுவார், பொலிசாரும் லேசில் விடமாட்டார்கள்”
“ஐயா நான் எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடவேணும். இதற்கு நீங்கள்தான் ஒருவழி செய்யவேணும்” எனது குரல் தழதழத்தது.
அவர் தயங்கினார். ஏதோ சொல்வதற்கு முயல்கிறார் என்பது புரிந்தது. ஆனாலும் எதுவுமே பேசவில்லை. சுற்றியிருந்தவர்களை நோட்டம் விட்டுவிட்டுப் புறப்பட்டார்.
“ம்..... நான் நாளை வருகிறேன்”.
அப்போது என்னுடன் தங்கியிருந்த சக கைதி கூறினான், “இவங்கள் எல்லாரும் கூட்டுக் கள்ளர். உம்மட்ட காசு இருந்தா எடுத்து விடும்; வெளியில போகலாம்”
எனக்குப் பகீரென்றது. உயிர்கள்..... உணர்வுகள்...... உடைமைகள்..... உறைவிடங்கள் இப்படி எத்தனை எத்தனை இழப்புகளுக்கு இன்று மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குள் ‘எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம்’ என இயங்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
அம்மாவினதும் தங்கையினதும் அகதிவாழ்க்கையை நீக்குவதற்கு மாமா அனுப்பும் பணம் இன்றோ நாளையோ வந்துவிடும்.
என் இரத்தம் கொதித்தது. நெஞ்சு பற்றி எரிந்தது, உரோமக் கால்கள் குத்திட்டன. கைதிக் கூண்டின் கம்பிகளைப் பற்றி உலுக்கியபடி விரக்தியில் அலறினேன், “இந்தச் சிறைக் கூண்டில் இருந்து மட்டுமல்ல.... இந்த நாட்டிலை இருந்தும் நான் வெளியிலை போகவேணும்..... அதுக்கு என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை”
அப்போது அந்தக் கைதி என்னை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தான்.
“என்னண்ணை சிரிக்கிறியள்? ” கோபத்துடன் கேட்டேன்
“நாட்டைவிட்டு வெளியிலை போறது இதற்குத் தீர்வாகாது தம்பி” என்றான் அவன்.
“ அப்ப என்ன செய்யச் சொல்லுறியள்?”
“உம்மேல என்ன குற்றம் சாட்டப்பட்டிருக்கு என்று யோசிச்சுப் பாரும்; முள்ளை முள்ளாலதான் எடுக்கவேணும்” அவனது கூற்றில் நிதானம் இருந்தது.
-தினக்குரல் 1997
++++++++++++++++++++++++++++++
மண்புழு
சித்திரவேலருக்கு அந்தக் காட்சி அருவருப்பாக இருந்தது. சனநடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் காதலர்கள் போன்று ஒருவரை ஒருவர் அணைத்தபடி சல்லாபம் புரிந்துகொண்டு, கொஞ்சங்கூடச் சங்கோசப்படாத நிலையில்.....
இரு ஆண்கள்!
- வெள்ளையர்கள்.
“என்ன ‘கன்றாவி’யடா இது”- அவர் தனக்குள் முணுமுணுத்தார்.
அவரின் பக்கத்திலே அவரது பேரன் முருகநேசன். அவனுக்கு இப்போதுதான் வாலிப முறுக்குத் திரளும் வயது. தான் கண்ட காட்சியைப் பேரனும் பார்த்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு அவருக்கு, அப்படிப் பார்த்துவிட்டாலும் தான் அந்தக் காட்சியைக் கண்டு கொண்டதாகப் பேரன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற கவலையும் அவருள் எழுந்தது.
சித்திரவேலரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமைதான் ஆகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த அவரது மகன் சிவராசாவுக்கு இப்போதுதான் ஸ்பொன்சர் செய்து தாயையும், தகப்பனையும் தன்னுடன் நிரந்தரமாக வைத்துக்கொள்ளச் சட்டரீதியான வசதி கிடைத்திருக்கிறது. ஒரு கிழமையாக வீட்டுக்கள் அடைந்துகிடந்த சித்திரவேலருக்கு வெளியே ஊர் சுற்றிப் பார்க்க ஆசை.
மகனுக்கும் மருமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் புதிதுபுதிதாய் சமைத்துப் போடுவதிலேயே நேரம் கழிந்துவிடும் அவரது மனைவிக்கு. ஆனால் அவருக்கோ நேரங்கழிவது மிகச்சிரமமாக இருந்தது. சிவராசனும் மருமகளும் மாறி மாறி வேலை வேலை என்று பறந்து கொண்டிருந்தார்கள். எப்படித்தான் அவர்களிடம் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி கேட்பது என்று யோசித்து மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவர்களுக்கு லீவு கிடைக்கும் நாட்களிலும் வேறேதாவது சொந்த வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
சனி, ஞாயிறு நாட்களிலாவது ஓய்வாக வீட்டிலிருப்பார்கள் என்று பார்த்தால், மூத்தவள் சித்திராவுக்கு டான்ஸ் கிளாஸ். பிறகு சங்கீத கிளாஸ், ரியூசன் வகுப்பு.... இளையவள் சசிக்கு தமிழ்க் கிளாஸ்... இப்படி எங்காவது பிள்ளைகளைத் தாயும் தகப்பனும் அழைத்துக் செல்வார்கள். பிள்ளைகளும் யந்திரமாகிக்கொண்டிருந்தார்கள்.
பேரன் முருகநேசன் வீட்டிலிருக்கும் நேரங்களில் எப்போதும் கொம்பியூட்டருடன் மல்லாடிக் கொண்டிருப்பான். அவனுடைய போக்கு தனிப்போக்கு. வீட்டில் யாருடனும் அதிகம் பேசமாட்டான். அறையிலேதான் அடைந்து கிடப்பான்.
இன்று அவன் தனது அறையிலே இருப்பதைச் சித்திரவேலர் கவனித்தார். அவனுடைய அறையைத் தட்டிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தார்.
“ஹாய் தாத்தா...., கம் இன்” என்றான்.
இவன் என்ன ‘ஹாய்’ என்கிறான்; காகம் கலைக்கிறானா? ‘வாருங்கோ தாத்தா’ என்று வாய் நிறையக் கூறினால் என்ன - மனம் ஏங்கியது. இவற்றையெல்லாம் வந்த புதிதில் காட்டிக் கொள்ளக் கூடாது. காலப் போக்கில் சொல்லிச் சரிப்படுத்திவிட வேண்டியதுதான்.
‘“தம்பி முருகு, வீட்டுக்குள்ள அடஞ்சு கிடக்க கஸ்டமாய் இருக்கடா, ஒருக்கா வெளியில எங்கையாவது கூட்டிக்கொண்டு போறியாடா மோனை?” அவர் தயக்கத்துடன் கேட்டார்.
“ஈவினிங் ஐ ஆம் பிறி.... நீங்களும் பாட்டியும் ரெடியாய் இருங்கோ வெளியில போவம்” என்றான்.
மாலையில் புறப்படும்போது சித்திரவேலர் மனைவியையும் வரும்படி அழைத்தார். “எனக்கு வேலை இருக்கு..... பிள்ளையள் வருகிற நேரம்.... சாப்பாடு செய்யவேணும். நீங்கள் மட்டும் போட்டுவாங்கோ” எனக் கூறி வேலையால் களைத்து வரப்போகும் மகன் சிவராசாவுக்கும் மருமகளுக்கும் இடியப்பம் அவித்து வெந்தயக் குழம்பு வைப்பதில் மூழ்கத் தொடங்கினாள் அவள்.
மனைவி வராதது நல்லதாய்ப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவளும் இந்த கண்ணராவிக் காட்சியைப் பார்த்துவிட்டு ‘எங்கடை பேரப்பிள்ளையள் இந்த அசிங்கங்களைப் பார்த்துக் கொண்டுதான் வளரப் போகுதுகள்’ என்று புலம்பத் தொடங்கியிருப்பாள்.
“தாத்தா, இது சிட்னி நகரத்தின் முக்கிய பகுதி. உல்லாசப் பயணிகள் இங்கேதான் முதலில் வருவார்கள்” என்று கூறித்தான் அவரை அந்த இடத்துக்கு அழைத்து வந்தான் முருகநேசன்.
சித்திரவேலர் இந்தக் காட்சியைப் பார்க்கும்வரை குதூகல மாகத்தான் இருந்தார். நகரின் அழகைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
ஆ! என்ன கொள்ளையழகு! நகரத்தின் மணி விளக்குகள் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என விதம் விதமாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. வானுயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய்க் காட்சியளித்தன. உலகப் புகழ்பெற்ற ‘ஒப்ரா ஹவுஸ்’ சந்திர ஒளியில் தகதகக்கிறது. உலகின் அதியுயரமான அலங்கார வளைவுப் பாலத்தில் வாகனங்கள் ஒளிபாய்ச்சியபடி அங்குமிங்கும் ஓடுகின்றன. தூரத்தே துறைமுகத்தில் வள்ளங்கள் ஒளியை உமிழ்ந்தபடி விரைகின்றன. நீலவானில் தெரியும் நட்சத்திரப் பூக்களையும் விஞ்சிக் கொண்டு பூலோக மின்விளக்குகள் வர்ணஜாலம் காட்டுகின்றன. நகரின் அழகுக் காட்சிகளில் வியந்து நின்றவருக்கு இந்தக் கண்ணராவிக்காட்சி மனதிலே அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.
சித்திரவேலர் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பக்கத்திலே அமைந்திருந்த ஒப்ராஹவுஸின் பாங்கரில், ஆங்காங்கே ஆண்பெண் காதல் ஜோடிகள்.
கால் நிர்வாணம்!
அரை நிர்வாணம்!
முக்கால் நிர்வாணம்!
முழு நிர்வாணம் ஆக யாரும் இருந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்புச் சித்திரவேலருக்கு.
“வாடா முருகு... திரும்பிப் போவம்... கால் உளையுதடா” முருகநேசன் மறுப்பு ஏதும் கூறாமல் “சரி தாத்தா”என்று சொல்லித் திரும்பினான்.
“ஹாய் முறுக்ஸ்” என்றபடி யாரோ அவர்கள் நின்ற இடம்நோக்கி வந்தார்கள்.
ஆ! அதே ‘அரை நிர்வாணப் பக்கிரி’ தான். ஆணுடன் ஆணாக சல்லாபித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன். சித்திர வேலருக்கு அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
“ஹாய்” என்று பதிலுக்குக் கூறியபடி முருகநேசன் அவனது கையைப் பற்றிக் கொண்டு உரையாடத் தொடங்கினான். அவர்களது ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை. பக்கத்தில் நின்று கொண்டிருந்தால், முருகநேசன் தன்னை அவனுக்கு அறிமுகஞ் செய்துவைத்துவிடவும் கூடும் என்ற பயம் அவருக்குப் பிடித்துக் கொண்டது. மெதுவாக நழுவிச் சென்று தூரத்தில் அமைந்திருந்த சீமெந்துப்படியில் அமர்ந்து கொண்டார்.
அவன் அட்டகாசமான குரலில் முருகநேசனுடன் பேசினான். இப்போது அவனுடன் இருந்த மற்றவனும் அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது.
“முறுக்ஸ்... முறுக்ஸ்....” என்று அவர்கள் முருகநேசனை வாயோயாமல் அழைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதென்ன முறுக்ஸ்? முருகநேசன் என்று அவர் வைத்த அழகான பெயரை இவர்கள் ‘முறுக்கு’ ஆக்கிறார்கள்.
முருகநேசன் பிறந்தபொழுது, “அப்பு உங்களுடைய பெயரைத்தான் நான் பிள்ளைக்கு வைக்கப்போகிறேன்” என்று சிவராசா கூறியது இப்போதும் மனதில் இருக்கிறது.
பேரர்களின் பெயரை வைத்தால் பரம்பரை விளங்கும், அவர்கள் செய்த புண்ணியங்கள், தான தருமங்கள் பரம்பரைக்கும் தொடரும் என்றுதான் எங்களுடைய ஆட்கள் பிறக்கும் பிள்ளைகளுக்கு பேரர்களின் பெயர்களை வைப்பார்கள். சிவராசனின் விருப்பம் சித்திரவேலருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனாலும் அவர் தனது தகப்பனின் பெயரையே பேரனுக்கு வைக்க வேண்டும் என்று கூறி முருகநேசன் என்ற பெயரை வைத்தார்.
அவர்களின் தோற்றம் சித்திர வேலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவர்களில் ஒருவன் தலையில் வகிடு எடுத்து ஒருபக்கத்தை மழித்திருந்தான். மறுபக்கத்துத் தலைமயிர் பன்றிமுள்ளாய்க் குத்தி நின்றது. மற்றவன் காதிலே கடுக்கன் அணிந்திருந்தான். ‘புருவம் குத்தி’ தோடு அணிந்திருந்தான். இரண்டு கையிலும் பித்தளை வளையங்கள்.
இதுதான் தற்போதைய ‘ஸ்டைல்’ ஆக இருக்க வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டார். இப்படியான தோற்றத்துடன் அங்கு வேறும் சிலர் தெருவீதிகளில் அலைவதை அவர் பார்த்திருக்கிறார்.
முருகநேசன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அவரை நோக்கி வந்தான்.
“பார்த்தது போதும்... போவமடா முருகு” என்று கூறிக்கொண்டே எழுந்தார் சித்திரவேலர்.
இருவரும் கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டார்கள். முருகநேசன் காரை ஓட்டத் தொடங்கினான்.
காருக்குள் நீண்டதொரு மௌனம்.
“வட் ஹப்பிண்ட் ரு யூ...? யூ ஆர் வொறிட் லைக்”- உங்களுக்கு என்ன நடந்தது. கவலையடைந்ததுபோல் இருக்கிறீர்கள் - முருகநேசன் தான் முதலில் மௌனத்தைக் கலைத்தான்.
“ஒண்டும் இல்லையடா முருகு, களைப்பாய்க் கிடக்கு. அதுதான்”.
மீண்டும் மௌனம் தொடர்ந்தது.
முருகநேசன்தான் மீண்டும் அதனைக் கலைக்க வேண்டி யிருந்தது.
“ஒப்ரா ஹவுஸ் பக்கத்தில் சந்தித்தவர்களைப் பற்றித்தானே நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்”
“..................”
“அவர்கள் ‘ழுயலள’ ”
தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை ழுகெய்ஸ் என்று சொல்வதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் பேரன் அதுபற்றி தன்னிடம் கதைப்பது அவருக்குச் சங்கடமாக இருந்தது. எங்களது நாட்டில் என்றால் இப்படியான விசயங்களை தாத்தாமார்களிடம் எந்தப் பேரர்களும் கதைக்க மாட்டார்கள்.
அவன் தொடர்ந்து கூறினான், “அவர்கள் இருவரும் ஆயசசல பண்ணியிருக்கிறார்கள்”
“என்ன இரண்டுபேரும் கலியாணம் செய்திருக்கினமோ, தம்பதிகளோ!?”
“யெஸ், இந்த நாட்டுச் சட்டப்படி அவர்கள் கலியாணம் செய்யலாம். ஒன்றாய் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். வேண்டும்போது விவாகரத்துச் செய்து கொள்ளலாம்.”
சித்திரவேலர் உறைந்துபோய் இருந்தார்.
“இங்கு அவர்கள் வாழும் பகுதி தனியாக இருக்கிறது. அவர்களுக்குத் தனியாக ‘கிளப்’இருக்கிறது. வருடத்தில் ஒருமுறை பெரிதாக ழுகெய்ஸ் பெஸ்ரிவல் (களியாட்ட விழா) நடத்துவார்கள்”.
சித்திரவேலர் முருகநேசனைத் திரும்பிப் பார்த்தார். சிறிதுநேரம் அவனையே பார்த்தபடி இருந்தார்.
“உனக்கு எப்பிடி இவங்களைத் தெரியும்?” திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார் சித்திரவேலர்.
“...................”
முருகநேசன் சிறிதுநேரம் பதில் பேசவில்லை. மௌனமாகக் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். அவனது முகத்தில் சஞ்சலம் தெரிந்தது.
அவனிடம் அப்படியானதொரு கேள்வியைக் கேட்டது அநாகரிகமானது என்பதைச் சித்திரவேலர் உணர்ந்து கொண்டார். இந்த நாட்டில் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படாது.
“தாத்தா, நான் பாங்க் ஒன்றில் பார்ட் ரைம் வேலை செய்யிறன். அவர்கள் இருவரும் வீடு வாங்குவதற்காக லோன் எடுப்பதற்கு பாங்கிற்கு அடிக்கடி வருவார்கள். அதனால் ஏற்பட்ட அறிமுகம்தான்.....”
அப்படியான ஓர் அறிமுகம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைமுறைபற்றி இவன் எப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறான்? கேட்க நினைத்தார்; கேட்கவில்லை.
அதன் பின்பு வீடு வந்து சேரும் வரை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
**************
அன்று விடுமுறைநாள்
வழக்கத்துக்கு மாறாக எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். முருகநேசன் சற்று முன்னர்தான் எங்கோ வெளியே சென்றிருந்தான்.
சித்திரவேலர் ஷவரில் குளித்து விட்டு ஈரவேட்டியுடன் சுவாமி அறைக்குச் சென்று, சுவாமி படத்தின் முன்னால் இருந்த விபூதித் தட்டில் விரல்களைப் புதைத்தெடுத்து ‘சிவ சிவ’ என்று சொல்லி நெற்றியிலே திருநீற்றைப் பூசிக்கொண்டார். அப்போது அவருக்கு ஊரில் தன்வீட்டு விறாந்தை ‘ இறப்பில்’ தொங்கும் திருநீற்றுக் குட்டானுக்குள் விரல் புதைத்து விபூதி பூசும் ஞாபகம் வந்தது.
புலம் பெயர்ந்து வந்துவிட்ட போதிலும் சிவராசா பரம்பரை பரம்பரையாகப் பேணி வந்த பண்பாட்டையும் கலாசாரத்தையும் கட்டிக்காத்து வருவதை அவர் இந்த ஒரு கிழமையில் நன்றாகவே அவதானித்தார். அது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேசிக்கொள்கிறார்கள். காலையிலெழுந்ததும் முகம் கைகால் கழுவி, சுவாமி கும்பிட்ட பின்புதான் அவர்கள் வெளியே செல்வதை அவர் கவனித்திருந்தார். பெரியவள் சித்திராவும், பத்துவயதுகூட நிரம்பாத சசியும் தேவாரம் பாடும் இனிமை அவரது காதுகளில் தேனாகப் பாயும்.
சித்திரவேலரும் மனைவியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின் அன்றுதான் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். முருகநேசன் வெளியே சென்றுவிட்டது சித்திர வேலருக்கு மனதில் சிறிது குறையாக இருந்தது. அவனும் இருந் திருந்தால் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிடும்போது சந்தோசமாக இருக்கும்.
“அப்பு, எங்கட சித்திராவின்ர பரத நாட்டிய அரங்கேற்றம் வாற மாசம் வைக்கிறம். அண்டைக்கு நீங்களும் அம்மாவும்தான் குத்துவிளக்கேத்தி அதை ஆரம்பித்து வைக்கப் போறியள். நீங்கள் ரெண்டுபேரும் வந்தபிறகுதான் அரங்கேற்றம் வைக்கிறதுக்கு நாள் குறிக்க வேணும் எண்டு இவ்வளவு நாளும் காத்திருந்தம்” மகன் சிவராசா இப்படிக் கூறியபோது சித்திரவேலருக்கு உணர்ச்சி மேலீட்டால் கண்ணில் நீர் ததும்பியது.
“இங்க பரதநாட்டியத்தை ஒழுங்காய்ச் சொல்லிக்குடுக்க ஆக்கள் இருக்கினமே?”
“ஓம் அப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலை படிச்சுப் பட்டம் பெற்றவை கனபேர் இருக்கினம். அவையள் டான்ஸ், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் எல்லாம் படிப்பிக்கினம். எங்கட ஊரைவிட இதுகள் பழகுறதுக்கு இங்கை வசதியள் கூட” சிவராசா இப்படிக் கூறியபோது சித்திரவேலருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“தாத்தா, நான் நல்லாய்ப் பாடுவன்.... சங்கீதம் படிக்கிறன். என்ர சங்கீத அரங்கேற்றத்துக்கும் நீங்களும் பாட்டியும் விளக்கேத்த வேணும்” என்று கூறி பின்னால் வந்து அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள் சசி.
“ஓம் குஞ்சு” சித்திரவேலர் அவளை முன்னால் இழுத்து உச்சி மோந்தார். அவரது உடல் குலுங்கியது. கண்களில் தேங்கிய கண்ணீர் கன்னத்தில் வழியத் தொடங்கியது. ஆனந்தக் கண்ணீர்.
**************
சிட்னி நகரக் கலைக்கூட மண்டபம்.
சித்திராவின் பரதநாட்டிய அரங்கேற்றம்.
வாசலில் நிறைகுடம், குத்துவிளக்கு, குங்குமம், சந்தனம் தலையை உரசும் மாவிலை தோரணங்கள்.
சி.டி. பிளேயரில் நாதஸ்வர இசை.
வாசலில் நிறைகுடத்தினருகில் சித்திரவேலரும் மனைவியும் நின்று அங்கு வருபவர்களுக்குச் சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
பதினைந்து வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையில் சிவராசாவும் மருமகளும் பல நண்பர்களைத் தேடி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
தமிழ்மணம் கமழ ஆண்கள், பெண்கள் மண்டபத்தில் நிறையத் தொடங்கினார்கள். பெண்களில் பலர் பட்டுச்சேலை, கொண்டைமாலை, குங்குமப் பொட்டுச் சகிதம் மங்கலமாய் நிறைந்திருந்தனர்.
சித்திராவின் வெள்ளைக்காரப் பாடசாலை நண்பிகளும் அங்கே வந்திருந்தனர். சிவராசாவுடனும் மருமகளுடனும் வேலை செய்யும் வெள்ளைக்கார உத்தியோகத்தர்கள் சிலரும் அங்கு காணப்பட்டனர்.
சித்திரவேலரின் தோளின் பின்புறமாக யாரோ கையை வைத்தார்கள்.
“என்ன சித்திரவேலர், அடையாளம் தெரியேல்லையோ?”.
சற்று நேரம் யோசித்தபடி நின்றார் சித்திரவேலர்.
“எங்கட அம்பலவாணர் அண்ணையெல்லோ!” - மனைவிதான் அவருக்கு அடையாளம் காட்டினாள்.
“ஓ, அம்பலவியே, நல்லாய் மாறிப் போனாய். தலை வழுக்கை விழுந்ததிலை மட்டுக்கட்ட முடியேல்லை” என்று கூறிய சித்திரவேலர், அம்பலவாணரைக் கட்டியணைத்துக்கொண்டார்.
சித்திரவேலரும் அம்பலவாணரும் ஊரில் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். பின்னர் கொழும்பில் வேலை செய்யும்போதும் தொடர்மாடியொன்றில் பக்கத்து வீடுகளில் வாழ்ந்தவர்கள். நெருக்கமாக உறவாடியவர்கள். அம்பலவாணருக்கு கண்டிக்கு மாற்றம் வந்த பின்புதான் அவர்களது தொடர்பு விட்டுப்போயிருந்தது.
இப்போது அந்நிய மண்ணில் எதிர்பாராத சந்திப்பு.
“பின்னை, சொல்லு அம்பலவி.... எப்பிடி உன்ர பாடெல்லாம்... எப்ப இங்க வந்தனி?”
“மனிசி கான்ஸரில போட்டுது சித்தா. நான் தனிச்சுப் போனன். இளையவன் கந்தசாமி இங்கைதான் இருக்கிறான். இப்ப அவனோடை தான் இருக்கிறன். ”
“என்னதான் செய்யிறது, காலநேரம் வந்தால் தடுக்க முடியுமே?..... நான் போனமாசம்தான் இங்கை வந்தனான். என்ர பேத்திக்குத்தான் இண்டைக்கு அரங்கேற்றம்...... ஏன் உன்ர மேன் கந்தசாமியையும் கூட்டியந்திருக்கலாம் தானே?”
“அது முடியாது சித்தா, அவன் இப்பெல்லாம் இதுகளுக்கு வரமாட்டான். நான் எல்லாம் பிறகு விபரமாய்ச் சொல்லுறன்” என்றார் அம்பலவாணர்.
“புலம்பெயர்ந்து வந்தாலும் எங்கட சனம் தங்களின்ர பண்பாடுகளை, கலாசாரங்களை விடேல்லை. ஊரிலை நடக்கிற விழாமாதிரியெல்லே இங்கையும் எல்லாம் நடக்குது. பார்க்கச் சந்தோசமாக் கிடக்கு”.
“சரி சித்தா, ஆட்கள் வருகினம், நீ அவையைக் கவனி, பிறகு ஆறுதலாய்க் கதைப்பம்”.
“மகனோடை இருக்கிறதெண்டு சொல்லுறாய், எங்க தூரவோ கிட்டவோ? நாங்கள் ஒருநாளைக்கு வீட்டுக்கு வந்து உன்னைப் பாக்கிறம்” என்றார் சித்திரவேலர்.
“வேண்டாம் சித்தா. நீ அங்கை வரவேண்டாம். நான் வந்து உங்களைப் பார்க்கிறன்”.
“உன்ர மேன் கந்தசாமி கொழும்பிலை இருக்கேக்க நல்ல தெய்வபக்தியோட இருந்தவனெல்லே. தேவார திருவாசகங்களை பண்ணோடு பாடி இசைத்தட்டுக்களா வெளியிட்டவனெல்லே.... இப்பவும் அவன்ர குரல் கணீரென்று என்ர காதுக்கை ஒலிக்குது”
“அதெல்லாம் ஒருகாலம் சித்தா, இப்ப அவன் இங்கை வந்து ஒரு வெள்ளைக்காரியைக் கலியாணங் கட்டி ரெண்டு பிள்ளையளும் இருக்கு. இஞ்ச வந்தபிறகுதான் எனக்குத் தெரியும். நல்லவேளை என்ர மனிசி இதையெல்லாம் பாக்காமல் கண்ணை மூடிட்டாள்” அம்பலவாணரின் கண்கள் கலங்கின.
சித்திரவேலருக்குச் சங்கடமாக இருந்தது.
“இதெல்லாம் இந்த மண் செய்யிறவேலை சித்தா.... மண்ணுக்கும் கலாசாரம், பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று மண்ணிலை எங்கட கலாசாரம் பண்பாடுகள் வேர் விடுகிறது கஸ்டம்.... சூழல் விடாது. எங்கட பிள்ளையள் வேற்று மண்ணிலை வேற்றுச் சூழல்லை வளருதுகள். இதிலையிருந்து இந்தத் தலைமுறை தப்பினாலும் அடுத்த தலைமுறை தப்புமோ தெரியாது.”
அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், முருகநேசன் யாரோ நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
அவனிலே பெரியதொரு மாற்றம்! தலையிலே வகிடெடுத்து, அரைவாசித் தலையை மழித்திருந்தான். மறுபக்கத்தில் தலைமயிர்கள் பன்றி முட்களாய்க் குத்தி நின்றன. புருவங்குத்தித் தோடணிந்திருந்தான்.
அவனைக் கவனித்த சித்திரவேலர் வெறுப்புடன் மறுபக்கம் திரும்பிக் கொண்டார். அவரது அடி நெஞ்சிலிருந்து பெருமூச்சொன்று பெரிதாய் வெளிப்பட்டது.
- ஞானம் 2004
++++++++++++++++++++++++++++++
காட்டுப் பூனைகளும்
பச்சைக் கிளிகளும்...!
அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான் நசுங்கிச் சாகப் போகிறேன்.
தலை சுற்றுகிறது. நெஞ்சு விம்மித் தணிகிறது. இதயம் படபடக்கிறது. தேகம் குப்பென்று வியர்க்கிறது. கைகளால் கண்களைப் பொத்திக்கொண்டு நான் வீரிட்டு அலறுகிறேன்.
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மணிக்கூட்டில் நேரம் காலை எட்டு மணி. அதன் ‘டிக்டிக்’ சத்தம் பெரிது பெரிதாகிக் கொண்டே வருகிறது. என்னை நெருங்கி நெருங்கி வருகிறது. ஏ.கே 47இன் சத்தம்போல் என் காதைப் பிளக்கிறது.
“சும்மா சத்தம் போடாதையடி பிள்ளை...” அம்மா அடுப்படியிலிருந்து பலமாகக் கத்துகிறா.
கண்களைப் பொத்தியிருந்த கைவிரல்களைச் சிறிது விரித்து, நீக்கலினூடாகப் பார்க்கிறேன். இப்போது சுவர்கள் பின்புறமாக நகரத்தொடங்குகின்றன. சிறிது நேரத்தில் மீண்டும் தமது இடத்தில் பொருந்திக் கொள்கின்றன.
நேரம் எட்டு ஐந்து.
ரியூசன் வகுப்புக்கு நேரமாகிறது. வசந்தி, கவிதா, பூரணி, நான் எல்லோரும் சேர்ந்துதான் சைக்கிளில் ரியூற்றறிக்குப் போவோம். இண்டைக்குக் ‘கெமிஸ்றி கிளாஸ்’. ஸேர் ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடுவார்.
“அம்மா, அம்மா..... கதவைத் திறவுங்கோ....... நேரமாச்சு. நான் ரியூசனுக்குப் போகவேணும்.”
“........”
நான் கதவைப் பட படவெனப் பலமாகத் தட்டுகிறேன்.
“இவளோடை பெரிய கரச்சல்.... ரியூசனுக்குப் போறநேரம் வந்திட்டால் அலட்டத் தொடங்கி விடுவள்” அம்மா முணுமுணுக்கிறா.
‘கிணிங்... கிணிங்....’
தெருவிலே நிண்டு வசந்தி பெல் அடிக்கிறாள். என்னைக் கூட்டிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறாள்.
“அம்மா கதவைத் திறவுங்கோ..... ஏன் பூட்டி வைச்சிருக்கிறியள்? வசந்தி என்னை விட்டிட்டுப் போகப் போறாள்.”
அவள் என்னை விட்டிட்டுப் போனா, நான் தனியாகத்தான் போகவேணும். இனிமேல் நான் அந்தப் பக்கம் தனியாகப் போகமாட்டன். எனக்குப் பயமா இருக்கு..... தனியாக அவங்கடை ‘சென்றி’யைத் தாண்டிப் போறதெண்டா.... வசந்தி கூட வந்தாப் பயமில்லை.
“அது வசந்தியில்லைப் பிள்ளை, வேறையாரோ தெருவிலை பெல் அடிச்சுக் கொண்டு போகினம். நீ சும்மா சத்தம் போடாமல் இரு.”
அம்மா பொய் சொல்லுறா. வசந்தியின் பெல் சத்தம் எனக்குத் தெரியும். போறது வசந்திதான். கதவைத் தட்டித் தட்டி அம்மாவைக் கெஞ்சிக் கெஞ்சி நான் சோர்ந்து போகிறேன். கதவைத் தட்டிய கைகள் வலிக்கின்றன.
வசந்தி போயிருப்பாள். ரியூசன் தொடங்கிற நேரமாச்சு. அவள் தனியாகத்தான் போனாளோ..... அல்லது கவிதா, பூரணி எல்லாரும் சேர்ந்து போயிருப்பினமோ...? எப்படிப் போனாலும் அவங்கள் சும்மா விடமாட்டாங்கள். சென்றியிலை சோதிச்சுத்தான் அனுப்புவாங்கள். ஐ.சியைத் திருப்பித் திருப்பிப் பார்த்து..... ஸ்கூல் பாய்க்குகளைக் கொட்டிக் கிளறி, கேள்வியள் கேட்டு.....
சின்னராசு கார் ஓட்டிவரும் சத்தம் கேட்கிறது. யன்னல் பக்கம் சென்று வெளியே பார்க்கிறேன். யன்னலின் ஒரு பக்கக் கதவு உடைஞ்சு தொங்குது, இழுத்துப் பூட்ட ஏலாது.
“அடே சின்னராசு, இங்கை வாடா....... அச்சாப் பிள்ளையெல்லே.... இந்த அறைக் கதவைத் திறந்து விடடா.”
அவனுக்கு நான் சொல்லிறது கேட்கேல்லை. விர்ரென்று வேகமாய் அவன் கார் ஓட்டும்போது வாயிலிருந்து எச்சில் பறக்கிறது.... தூவானமாய்த் தெறிக்கிறது. கால் இடறி விழப்போகும் நேரத்தில சமாளித்துக் கொண்டு கியரை மாற்றுகிறான்.
ரிவேர்ஸ் கியர் - பின்புறமாக வேகமாய் ஓட்டிவந்து விறாந்தையின் முன் நிற்பாட்டுகிறான்.
அவன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் விறாந்தையில் தொங்கும் கிளிக்கூண்டின் பக்கம் போவான்.‘ரிவிரஸ’ இராணுவ நடவடிக்கையின் போது நாங்கள் ஊரைவிட்டு ஓடி வன்னிக்குப் போயிருந்த காலத்திலை ஒரு கிளி பிடிச்சனாங்கள். திரும்பி வரேக்கை அதையும் கொண்டுவந்திட்டம். அது என்ரை செல்லக்கிளி.
சின்னராசு தினமும் கிளி சாப்பிடுகிறதுக்கு ஏதாவது கொண்டுவந்து கொடுப்பான். அது சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்பான். வெகு நேரமாய்க் கிளியுடன் பேசுவான். அவனைக் கண்டு விட்டால் கிளிக்கும் குதூகலம் பிறந்து விடும், ஏதேதோ பேசும்.
யன்னலினூடாக வீட்டின் முன்புறத்தைப் பார்க்க முடியாது. அதனாலை சின்னராசு என்ன செய்யிறான் எண்டு என்னால் பார்க்க முடியவில்லை.
சின்னராசு மீண்டும் காரை ஸ்ராட் செய்கிறான்.
“அடே என்ரை ராசாவெல்லே... கதவைத் திறந்துவிடடா....” நான் மீண்டும் அவனிடம் கெஞ்சுகிறேன்.
“முடியாதக்கா.... திறந்து விட்டால் மாமி என்னைப் பேசுவா” என்று சொல்லிக்கொண்டே கார் ஓட்டிய வண்ணம் அவன் விரைகிறான்.
எனக்கு மீண்டும் தலை சுத்துகிறது. திடீரெண்டு நாலு பக்கச் சுவர்களும் கைகோர்த்துக்கொண்டு என்னைச் சுற்றி வட்டமாய்ச் சுழல்கின்றன.... “ஐயோ.. ஐயோ....” நான் கண்களை மூடிக்கொண்டு வீரிட்டு அலறுகிறேன். நெஞ்சு படபடக்கிறது. தேகம் வியர்வையில் நனைகிறது. மயக்கம் வருகிறது. நான் நிலத்திலே சாய்கிறேன். எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தேனோ எனக்கே தெரியாது.
விழித்தெழுந்தபோது உடம்பெல்லாம் வலியெடுக்கிறது; சோர்வாக இருக்கிறது.
இப்ப ரியூசன் முடிஞ்சிருக்கும். முந்தி வடக்குச் சந்தியிலை “சென்றி” இருந்தபொழுது எங்களுக்கு எந்தக் கரச்சலும் இல்லை. பனை வடலியளுக்குப் பின்னாலிருந்து எழும்பி வருகிற சூரியனை ரசித்தபடி நாங்கள் ரியூசன் வகுப்புகளுக்கு போறனாங்கள். சென்றிப் பக்கம் போகாமலே ரியூற்றறிக்குப் போகலாம். இப்ப இடத்தை மாத்திப் போட்டாங்கள். எங்கடை வீட்டிலை இருந்து நாலு வளவு தள்ளி சென்றி போட்டிருக்கிறாங்கள்.
போன மாசத்திலை ஒரு நாள் மையல் பொழுது... “றக்” ஒண்டிலை வந்து அந்தப் பெரிய வீட்டுக்கு முன்னாலை இறங்கி னாங்கள். வீட்டையும் வளவையும் சுத்திச் சுத்திப் பாத்தாங்கள். அடுத்த நாள் மரங்கள் தறிச்சு விழுத்துகின்ற சத்தங்கள் கேட்டுது. பனையளைத்தான் தறிச்சவங்கள். பனை யாழ்ப்பாணத்தின் சின்னம்; கற்பகதரு எண்டு எங்கடை ஆக்கள் சொல்லிறவை. இவையளுக்குப் பனையளைத் தறிச்சாத்தான் பாதுகாப்பாம்!
தெருவிலை மண்மூடையள்.... மரக்குத்தியள்.... தகரங்கள்.... பெயின்ற் அடிச்ச தார்ப் பீப்பாக்கள்... துவக்கோடை நிக்கிற இளவட்டங்கள்... கொச்சைத் தமிழ் மிரட்டல்கள்.. வெறித்த பார்வைகள்.... கொஞ்சல்கள்... காவல் அரண் ஒன்று புதிதாய் முளைத்தது.
அங்கு ஒரு நெட்டையன். பெயர் சறத். எந்த நாளும் சொட்டைக் கதைதான் கதைப்பான். அவனுக்குத் தமிழ் எழுத வாசிக்கவும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
“சிங்களம் பேசத் தெரியுமா?” எண்டுதான் முதலில் கேட்பான். இல்லையென்று சொன்னால் கொச்சைத் தமிழிலே கதைப்பான்.
தமிழ்ப் பெட்டையள் நல்ல வடிவாம். இங்கை பெம்பிளைப் பிள்ளையள் எல்லாருக்கும் சைக்கிள் ஓடத் தெரியுமாம். உங்கடை அம்மாமாருக்கும் சைக்கிள் ஓடத் தெரியுமோ எண்டு ஒரு நாள் கேட்டான். எங்கடை ‘ஐ. சி.யை’ வாங்கி வச்சுக்கொண்டு கனநேரமாய்த் தராமல் கதைச்சுக்கொண்டே இருந்தான்.
வசந்திக்குக் கோபம் வந்திட்டுது. “ரியூசனுக்கு நேரமாச்சு, ஐ.சி. யைத் தாருங்கோ. தராட்டில் பெரியவனிட்டை றிப்போட் பண்ணுவம்” என்று படபடத்தாள்.
“நான் தான் இங்கை பெரியவன்” எண்டு சொல்லிச் சிரித்தான் அவன்.
அந்தச் சென்றியைக் கடந்து போறதெண்டா எல்லாருக்கும் சங்கடம்தான். வண்டில்களில், சைக்கிள்களில், தலைச்சுமைகளில் கஷ்டப்பட்டுக் கட்டியேத்திக் கொண்டுபோற சாமான்களை செக் பண்ணிறதெண்டு கொட்டிச் சிந்துவாங்கள். சைக்கிள் செயின் கவர்களைக் கழட்டிச் செக்பண்ணிப்போட்டு நிலத்திலை போடுவாங்கள்; நாங்கள்தான் அதைப் பூட்டவேணும்...... கொழுப்பு...
அண்டைக்கு எங்களைச் செக் பண்ணிற நேரத்திலை வேறையொருத்தரையும் செக்பண்ணாமல் போகவிட்டாங்கள். எல்லாரும் எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போச்சினம். சந்தேகக் கண்கள்.... எங்களுக்குக் கூச்சமாய் இருந்தது.
கொஞ்சநாளில் ரியூசன் வகுப்பிலை எங்களைப் பற்றிக் கிசுகிசுப்பு... நாங்கள்தான் வலிய வலியப் போய் சென்றியிலை நிண்டு சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்கிறமாம்.
பின் வாங்கிலை இருக்கிற சிவராசன் சொன்னான், “எங்கடை ஊர்ப் பெட்டையள், தெரிஞ்சதுகள் எண்டு ஆசையாய் நாங்கள் ஏதும் பகிடி கதைச்சால், எங்களை முறைச்சுப் பாக்கிறாளவை.... அவங்களோடை இளிச்சு இளிச்சு நளினம் பேசிறாளவை.”
“அதுமட்டுமில்லையடா, எங்களைப்பற்றி அவங்களிட்டை றிப்போட் பண்ணுறாளவை” என்றான் பக்கத்தில் இருந்த வேல் முருகு.
அப்போது வசந்தி என்னுடைய காதுக்குள்ளை சொன்னாள், “உவையளுக்கு எங்கடை நிலைமை எங்கை தெரியப்போகுது? அவங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமோ? அவங்களோடை சிரிச்சுக் கதைச்சா செக்கிங் குறையும், பிரச்சினை இருக்காது. நாங்கள் மனசுக்குள்ளை எரிஞ்சுகொண்டுதான் வெளியிலை சிரிக்கிறம் எண்டது உவையளுக்குத் தெரியாது.”
கொஞ்ச நாட்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. சென்றியில் எங்களுக்கு பெரிதாய் செக்கிங் ஏதும் இருப்பதில்லை. தனியாய்ப் போகும் போதும் பயமிருக்காது. அதனால் ரியூற்றறிக்குப் போகும்போது சேர்ந்து போக வேண்டுமென்ற நிலைமையும் இல்லை. இப்போது அங்கு ஐ.சி.யை எங்களிடம் கேட்க மாட்டார்கள். ஆனாலும் அந்த இடத்தில் சைக்கிளை ஓட்டிச் செல்வதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இறங்கி உருட்டிக்கொண்டுதான் போகவேணும்.
வசந்தி ஒருநாள் என்னிடம் கேட்டாள், “சென்றியிலை நிக்கிற சறத்தைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?”
“நல்ல ஆள்மாதிரித்தான் தெரியுது” என்றேன்.
“அவனோடை நீர் அடிக்கடி கதைக்கிறீராம். அவன் உமக்கு லெட்டர் குடுத்தவனாம்; போய்ஸ் கதைக்கினம்”
“என்ன வசந்தி நீரும் அதை நம்புறீரே?” லெட்டர் எனக்குக் குடுக்கேல்லை. போறவழியிலை போஸ்ற் ஒபீஸிலை போஸ்ற் பண்ணச் சொல்லித்தான் தந்தவர்...... சத்தியமாய் வேறையொண்டும் இல்லை.” நான் அழுதுவிட்டேன்.
சின்னராசு யன்னல் பக்கம் பரபரப்புடன் ஓடிவருகிறான். யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி தாழ்ந்த குரலில் கிசுகிசுக்கிறான். “அக்கா, அக்கா ஆமிக்காறங்கள் தெருவிலை நிக்கிறாங்கள். வீடுவீடாய் செக் பண்ணப்போறாங்களாம். எனக்குத் தெருப்பக்கம் போகப் பயமாய் இருக்கு; அதுதான் இங்கை ஓடிவந்தனான்.”
எனக்குத் தலைக்குள் ஏதோ செய்கிறது. சுவர் ஓரமாய் மறைந்து நின்று தெருப்பக்கம் பார்க்கிறேன். சறத்தின் தலை தட்டிப் படலைக்கு மேலால் தெரிகிறது. அவனருகே நிற்பவன் சுமதிபாலா. அவர்கள் என்னைத்தான் நோட்டம் விடுகிறார்கள். சறத் என்னைக் கண்டிட்டான். தலையில் அணிந்திருக்கும் தொப்பியை முன்புறமாகச் சரித்து தன்னுடைய முகத்தை மறைக்க முயற்சிக்கிறான். என்னைக் கூர்ந்து பார்க்கிறான். அவனது கையில் ரி. 56 இருக்கிறது. துவக்கின் விசையில் அவனது சுட்டுவிரல் பதிவது நன்றாகத் தெரிகிறது.
எங்கோ இருந்து வந்த காட்டுப் பூனையொன்று முன்விறாந்தைப் பக்கம் போகிறது.
“மியாவ், மியாவ்”
“எடே சின்னராசு, கிளிக்குச் சாப்பாடு போட்டனியே? கிளிக்கூடு திறந்தபடியே கிடக்கு... பூனை உலாவுதடா கவனம்.”
சின்னராசு என்னை விநோதமாய்ப் பார்க்கிறான். “என்னக்கா மறந்து போனியளே? இப்ப கிளி அங்கை இல்லை... போன கிழமை அது செத்துப்போச்சு...”
ஓ..... ஓமோம், எனக்கு நினைவுக்கு வருகிறது.... கொஞ்சம் கொஞ்சமாய் புகை மூட்டத்துக்குள் தெரிவது போல் நினைவு வருகிறது. நான் விம்மி விம்மி அழுகிறேன்.
அண்டைக்கு நான் தனியாத்தான் போனனான். சென்றியிலை சறத்தும் சுமதிபாலாவும்தான் நிண்டவங்கள். என்ரை சைக்கிளைப் பறிச்சு உள்ளுக்குக் கொண்டுபோய் வச்சிட்டாங்கள். சைக்கிளைத் தரச்சொல்லி நான் கெஞ்சி மன்றாடினன். உள்ளுக்குப் போய் எடுக்கச் சொன்னாங்கள்.
நான் தயங்கித் தயங்கி.... பயந்து பயந்து... ஐயோ எனக்கு மயக்கம் வருகுது, தேகம் நடுங்குது, வேர்க்குது, நெஞ்சு படபடக்குது. ஓர் அடியைக்கூட என்னால் எடுத்துவைக்க முடியவில்லை.
ஓ, அதுக்குப் பிறகு...அதுக்குப் பிறகு....... உச்சந் தலைக்குள் ஏதோ கிழிந்து சிதறி.... எழும்ப முடியாமல்.... எழும்பி, நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி, சைக்கிளை உருட்டிக் கொண்டுதான் வீட்டுக்கு வந்தனான்.
விறாந்தையிலை சைக்கிளைச் சாத்தினபோது அம்மா கவலையோடு சொன்னா, “உவன் சின்னராசு வந்து கிளிக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தவன். கூட்டுக் கதவைப் பூட்ட மறந்திட்டான். காட்டுப் பூனையொண்டு திரிஞ்சது.... கிளியைக் கடிச்சுக் குதறிப் போட்டுது பிள்ளை......”
எனக்கு நெஞ்சு விறைச்சுப் போச்சு.
அம்மா என்ன சொல்லிறா... ஒருவேளை.. ஒருவேளை?
என்னுடைய தேகம் நடுங்குது.
கிளி இரத்த வெள்ளத்தில் குற்றுயிராய்க் கிடக்கிறது. அதன் அடிவயிற்றின் கீழ் காட்டுப் பூனை பதித்த கோரச்சுவடுகள்....
மயங்கி நிலத்திலே சாய்கிறேன்.
என்னைச் சுற்றியிருக்கும் சுவர்கள் சுழல்கின்றன., என்னை நெரிப்பதற்கு மெது மெதுவாய் நெருங்கி வருகின்றன.
“ஐயோ..... ஐயோ”
கண்ணில் தெரியுது வானம் - 2001
- ஞானம் 2001
++++++++++++++++++++++++++++++
தி. ஞானசேகரன்
சிறுகதைகள் பற்றி...
காலதரிசனம் தொகுதியில் பல சிறந்த சிறுகதைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்நூலாசிரியருக்கு ஈழத்து இலக்கிய உலகில் நல்லதோர் எதிர்காலமுண்டு என்பதை நிச்சயமாகக் கூறலாம். ‘கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்’ என்ற சிறுகதை கலாபூர்வமான ஒரு சிறந்த சிறுகதை
இரசிகமணி கனக. செந்திநாதன்
(வீரகேசரி 19.04.1973)
* * * * *
இலக்கியத்தின் மூலம் சமூகப்பணி செய்யவேண்டும் என்ற உணர்வுடன் திரு. ஞானசேகரன் சிறுகதைகளைப் படைத்து வருகிறார். அவரது எளிய நடை வாசகனைக் கதையுடன் ஒன்றிவிடச் செய்கிறது. பாத்திரங்களைச் சித்தரிப்பதில் அவர் மிகவும் திறமையுடையவராக விளங்குகிறார். நயமும் நளினமும் கலந்த அவரது எழுத்து நடை கதைகளுக்குச் சிறப்பைக் கொடுக்கிறது.
சொக்கன்
‘காலதரிசனம்’ ஆய்வுரையில் (15.04.73)
* * * * *
“கலசம்” இதழில் தாங்கள் எழுதியுள்ள “சங்கு சுட்டாலும்” எனும் சிறுகதையைப் படித்த உடன் எழுந்த உணர்வில் இதை எழுதுகிறேன். மிக உயர்ந்த கருத்து. வெகு நுணுக்கத்தோடு கையாளப்பட்டுள்ளது. ஏதேதோ அபத்தம் எல்லாம் “கதைகள்” என்ற போர்வையில் நடமாடும் இக்காலத்தில், இவ்விதம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய ஆக்கபூர்வமான உணர்வோடு படைக்கப்படும் இலக்கியங்கள் எழுதல், பாராட்டப்படவேண்டிய பணியாகும். தங்கள் தெளிவான, நேரிய நடை எனக்கு வெகுவாகப் பிடித்துள்ளது. மேலும் மேலும் எழுதி, நற்புகழ் பெற வாழ்த்துகிறேன்.
திருமதி யோகா பாலச்சந்திரன்
21.04.1972
* * * * *
காலதரிசனம் எளிமையும் சுவையும் நிறைந்த படைப்பு; காணும் பிரச்சனையைச் சுவையாகக்கூறி சிந்தனையை வளர்ப்பதுடன் சமுதாயத்தின் உயர்வையும் இலட்சியமாகக் கொண்டுள்ளது. அலங்காரமின்மையே அலங்காரமாகக் கொண்ட ஆக்கம் காலதரிசனம்.
வித்தியாதிபதி கி. லக்ஷ்மண ஐயர்
வீரகேசரி 15.05.1973
* * * * *
சமுதாயத்தில் புரையோடி இருக்கும் அழுக்குகளை கலையம்சத்துடன் விளக்கி கதையாக வடித்துத் தனது பணியை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் ஞானசேகரன். மலைநாட்டை மையமாக வைத்து ஆக்கிய இருகதைகள் பிறந்த மண்ணையே நேசிக்கும் உணர்வை ஊட்டியுள்ளன. காலதரிசனம் கதை சொல்லும் உத்தி, உரு அமைப்பு முறையில் அதி சிறப்புடன் காணப்படுகிறது. கதாசிரியரின் சிந்தனைத் தெளிவு காலதரிசனம் மூலம் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.
இர. சிவலிங்கம்
காலதரிசனம் அறிமுகவிழாவில் (13.05.1973)
* * * * *
தங்களது ‘வாசனை’ என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு காலத்தில் பாட்டிமார்களும் தாத்தாமார்களும் தமது பேரப் பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்லி அவர்களை நெறிப்படுத்தும் மரபு இருந்தது. அது இப்போது அருகிவருகிறது. பேய் பிசாசுக் கதைகளை அவர்கள் சொல்வது கூட இரவில் அவர்கள் தனியாக எங்கும் செல்லக்கூடாது, நேரத்தோடு வீடுவந்து சேரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான். இக்கதையைக் கலைத்துவமாக எழுதியுள்ளீர்கள். வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபோது எனது இளமைக்காலத்தில் நான் பெற்ற அனுபவங்கள் மனத் திரையில் ஓடின. அதுதான் இக்கதையின் வெற்றி.
புலோலியூர் க. சதாசிவம்
24.12.1972
* * * * *
I have gone through your Short-Story ‘Karuvarai eluthiya theerpu’ in the weekend paper (27/12/97) Thinakkural and I appreciated very much.I consider it as one of the few best short-stories appeared in the year 1997. Of course your story is of a new variety, the plot is entirely of a new trend and the treatment and the end is excellent. My view is not at all an exaggeration. I drop this letter as an appreciation of good creative art.
Kalaipperarasu A.T. Ponnuthurai
(28/12/97)
* * * * *
தோட்டத்து உழைக்கும் மக்களின் ஆத்மக்குரலைச் சரிவரப் புரிந்து கொண்டுள்ள காரணத்தினால்தான் இவரால் ‘குருதிமலை’ போன்ற நாவலை எழுத முடிந்தது. தோட்டத்து மக்களின் தினசரி வாழ்வில் ஊறிநின்று சுதாரித்துக் கொண்டதன் காரணத்தினால்தான் ‘லயத்துச்சிறைகள்’, ‘கவ்வாத்து’ போன்ற நாவல்களைச் சிருஷ்டிக்க முடிந்தது. இவர் அந்த உழைக்கப் பிறந்த மக்களின் பிணிதீர்க்கும் மருத்துவராக மாத்திரம் கடமை புரியவில்லை அவர்களது ஆத்ம உணர்வுக்கும் மன அவசங்களுக்கும் இதய அபிலாஷைகளுக்கும் எழுத்துருக் கொடுத்து அம்மக்களின் அடிப்படைத் துயர் துடைப்பதில் தன் பேனாவைச் செம்மையாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
டொமினிக் ஜீவா
(அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் - சிறுகதைத் தொகுதியின் பதிப்புரையில்)
* * * * *
ஆரம்ப முதல் வாசகனை ஈர்த்து இறுதிவரை கவனம் கலையாது ஒன்றித்திருக்க வைக்கும் கலைத்துவமான சிறந்த படைப்பு ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இயல்பான பாத்திர வார்ப்புடன், ஊடாட்டம், உரையாடல் என்பன இயல்பாக நகர்ந்து நிகழ்வுடன் கலந்து நல்ல அனுபவமாக விரிகிறது. பாத்திரங்கள் இன முரண்பாடு பற்றிய தங்கள் பக்க மன ஆதங்கங்களை மெல்லப் பேச, இன ஒடுக்கு முறைக்கு எதிரான நியாயமான போராட்டம் பற்றி குறியீடு உரக்கப் பேசுகின்றது. மாறுபட்ட கலாசாரங்களை வெகு நுட்பமாகப் பதிவு செய்து இருவேறு பட்ட இனங்கள் என்பதனைச் சுட்டும் அதேசமயம், மேல் வர்க்கம் இனப்பாகுபாடு கடந்து தம்முள்ளே உறவு பூண்டு நிற்கும் என்னும் உண்மையானது பேசாப் பொருளாகத் துல்லியமாக உணர்த்தப்படுகின்றது. இவை யாவற்றுக்கும் அடி ஆதாரமாக விளங்குகிறது, ஆசிரியரின் சரளமான தெளிந்த மொழிநடை என்பதனை மறந்துவிட முடியாது.
தெணியான்
* * * * *
ஆணும் பெண்ணும் இணைந்ததான இச்சமுதாய வாழ்வில் பெண்கள் எத்தனை அசமத்துவமான நிலைகளுக்கு முகம் கொடுத்துப் போராடவேண்டியுள்ளது என்பதை மிகச் சாதாரணமான வாழ்க்கைப் போக்குடன் பிணைந்திருக்கும் மெல்லிய உணர்வுகளைத் துல்லியமாகத் தனது சுவையான எழுத்துக்கள் மூலம் சுட்டிக்காட்டும் திரு. ஞானசேகரனின் சித்தரிப்பு, பஸ் தரிப்பு நிலையத்தில் ஆண்கள் அருகேயுள்ள திண்ணைகளில் வசதியாக அமர்ந்திருப்பதும் பெண்கள் ஒதுக்குப் புறத்தில் நின்று கொண்டிருப்பதுமான காட்சிகளை முன்வைப்பதுமான விஷயங்கள் கைவந்தகலையென்றே குறிப்பிடலாம்.
பெண் தன் விருப்பப்படி தான் காதலிப்பவனோடு ஓடிப்போனதை - அவள் எல்லோரோடும் ‘இப்படியாக்கும்’ எனத்தவறாக கோணலாக எடைபோடும் கனகரத்தினம் அவளது கணவனின் கடுமையான சுகயீனத்தால் பணமின்றி அவள் தவிக்கும் சந்தர்ப்பத்தை உபயோகித்து அவளுக்கு உதவி செய்து அவளை அனுபவிக்க முயற்சிக்கும் கோணல் புத்தியை மிக எளிமையாக விபரித்துள்ளார். கோணல் புத்திக்காரன் அவளுடைய செயல்களைக் கோணலாகக் கொண்டு இரவுநேரம் அவள் தனியேயிருக்கும் போது கதவைத் தட்டுவதும் அவள் கதவைத் திறப்பதும் கோணல் எங்கே என்பதை வாசகர்களைச் சிந்திக்க வைக்கிறது.
பத்மா சோமகாந்தன்
30.06.2005
(ஆசிரியர் ‘பெண்ணின் குரல்’)
* * * * *
தி. ஞானசேகரன் தன்னுடைய மலையகப் படைப்புகள் மூலம் மலையக இலக்கியத்தில் ஓர் அழியா இடம் பெறுகிறார். இவருடைய குருதிமலை (1979), லயத்துச் சிறைகள் (1994), கவ்வாத்து ஆகிய நாவல்கள் இவருடைய சிந்தனா போக்கினையும் இந்த மக்களின் விடிவுக்காகத் தனது எழுத்தைப் பயன்படுத்தும் இவரது நோக்கத்தையும் மிகத் துல்லியமாகவே காட்டுகின்றன.
துரைவியின் ‘உழைக்கப் பிறந்தவர்களில்’ இடம் பெற்றிருக்கும் ‘சீட்டரிசி’ மலையகக் கல்வி நிலைபற்றி மிக அழகாகப் பேசுகிறது. மலையகச் சிறார்களின் கல்விக்கிருக்கும் எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு சவாலாக எழுந்து குடும்பக் கலாசாரமாக கல்வி உருவாக வேண்டும் என்பதைக் காட்டும் உயர்ந்த படைப்பு இது.
தெளிவத்தை ஜோசப்
தினகரன் வாரமஞ்சரி 31.10.1999
* * * * *
தி. ஞானசேகரன் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், ராக்கிங், சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள், கருவறை எழுதிய தீர்ப்பு, சோதனை ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரு சிறுகதைகளும் ஞானசேகரன் வாழ்கின்ற மலையகப் பெண்களின் உணர்வுகளின் சோகச் சித்திரங்களாம். சோதனை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், கருவறை எழுதிய தீர்ப்பு ஆகிய சிறுகதைகள் யுத்தச் சூழலினையும் இனவொடுக்கல் பிரச்சனைகளையும் சித்திரிக்கின்ற சிறுகதைகளாகவுள்ளன. ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ குறியீட்டுச் சிறுகதையாகும். கலாநுட்பமாகவும் கவித்துவமாகவும் படைக்கப்பட்டுள்ளது. வடபகுதி எழுத்தாளர்கள் எழுதுகின்ற யுத்தகாலச் சிறுகதைகளுக்கும் ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் யுத்தகாலச் சிறுகதைகளுக்குமிடையிலான பெரும்வேறுபாடு மானிடநேய நோக்கிலேயே உள்ளது. முன்னவர்கள் எதிரிகளாகச் சித்தரிக்கும் பாத்திரங்களைப் பின்னவர்கள் மானிடநேயத்துடன் சித்தரிப்பதன் மூலம் சமூகயதார்த்தம் அங்கு பேணப்படுகிறது. முன்னைய சிறுகதைகளிலும் பார்க்க இக்காலகட்டச் சிறுகதைகள் தி. ஞானசேகரனைத் தரமான ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் சேர்க்கின்றன.
செங்கை ஆழியான்
(ஈழத்துச் சிறுகதை வரலாறு)
* * * * *
சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பலதுறைகளில் தடம் பதித்த இலக்கியவாதியான தி. ஞானசேகரனுள் உறைந்து நிற்கும் மருத்துவனை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான் ‘கருவறை எழுதிய தீர்ப்பு!’ செயற்கை முறை கருத்தரித்தல் பற்றிய பல அரிய மருத்துவத் தரவுகளை இலாவகமாகவும், கதையோட்டத்திற்கு ஊறு செய்யாமலும், வாசகனை ஆர்வத்தோடு வாசிக்கும் வண்ணம் இக்கதையில் ஞானசேகரன் புகுத்தியுள்ளமை வியந்து பாராட்டத்தக்கது.
இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சிறந்த சிறுகதைகளில் முக்கியமானதாகக் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் இவரது ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இலங்கை இனப்பிரச்சனையின் ஆணிவேர்வரை ஊடுருவிப் பாயும் கனதியும் வீச்சும் கொண்டது. ஆசிரியர் தென்பகுதியில் வாழ்வதால் பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளையும் மனோநிலையையும் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் அடிவாங்கிய போதெல்லாம் தாயக மண்ணில் தஞ்சம் புகுந்த மக்கள் இறுதியில் தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக ஆக்ரோசமாகக் கிளர்ந்தெழுவதை, தெளிவான, சுருக்கமான, ஆனால் உள்ளர்த்தங்கள் செறிந்த எழுத்தில் வார்த்தெடுத்திருக்கிறார். வெறுமனே ‘நாய்’ என்று சொல்லாது அல்சேஷன் எனக் குறிப்பிட்டிருப்பது எமது சிந்தனைக்கு விருந்தாகும்.
டாக்டர் எம். கே. முருகானந்தன்
* * * * *
‘கருவறை எழுதிய தீர்ப்பு’ என்ற தலைப்பில் கதாசிரியர் தி. ஞானசேகரன் முற்றிலும் புதுமையானதொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத்துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக் கொண்டதாகவும் செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத்திருக்கிறார். கதைமுடிவும் எதிர்பாராததொன்று. அதே வேளையில் இனவேறுபாடுகளிடையே கூட முரண்படுநிலை இருப்பதையும் காட்டி யுள்ளார். இது ஓர் அருமையான கதை என்பது எனது மதிப்பீடு.
கே. எஸ். சிவகுமாரன்
(தினக்குரல் 23-05-1999)
* * * * *
இலங்கையின் பிறபாகங்களிற் பொதுவாகவும் கொழும்பிற் குறிப்பாகவும் இடம்பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான சோதனைக் கெடுபிடிகளைச் ‘சோதனை’என்ற கதை புலப்படுத்துகிறது. இச்சிறுகதையில் குமரேசன் என்ற பாத்திரத்தைக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாகவன்றிக் குறிப்பாக அப்பாத்திரத்தைச் சுட்டி வாசகரே அதன் இயல்பைப் புரிந்துகொள்ளுமாறு செய்தமை அக்கதைக்குக் கலைச் செழுமையைச் சேர்க்கிறது
கலாநிதி துரை. மனோகரன்
(வீரகேசரி வாரமஞ்சரி)
* * * * *
தேசியத் தன்மையை பொருண்மரபிலும், உருவ அமைதியிலும் கொண்டியங்கும் ‘சீட்டரிசி’ நல்லதொரு தமிழ்ச் (ஈழ) சிறுகதைக்கு எடுகோளாக திகழ்கிறது. பார்வதி, சிகப்பாயி, கந்தையா ஆகிய மூன்று பாத்திரங்களும் நடைச்சித்திரங்களாக மாறும் விபத்திலிருந்து நூலிழையில் தப்புவதும் சிறந்த குணாபாத்திரங்களாக மாறுவதும் இலக்கிய அநுபவத்தை ஏற்படுத்துகின்றன. சிறுகதையின் உருவ அமைதி காத்த இறுதி உச்சக்கட்டம் பல எதிர்மறைவான உச்சநிலைக்கும் மாறி மாறிப் பயணப்பட்டு ‘இல்லறத்தின் பண்பாட்டு வேரினை உயர்நிலைப் படுத்தும் வகை ’ கைதேர்ந்த கலைஞனின் கலை வேலை நுணுக்கத்தைக் காட்டி நிற்கிறது.
செம்பியன் செல்வன்
19.04.2005
* * * * *
உங்களின் ‘திருப்புமுனைத் தரிப்புக்கள்’ கதையை வாசித்தேன். “தங்கராசு இப்போது வளர்ந்து விட்டான். பிரட்டுக்களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசு ஒரு தொழிலாளியாக கடைசி வரிசையில் நிற்கிறான்...... என்ற பந்தியை வாசிக்கும் போது..... கதையை இவ்வளவு அழகாக ஆழமாக நகர்த்தி வந்து கடைசியில் “சாப்பிட்டு” விட்டாரே என்று மனம் வருந்தினேன். அந்தப் பந்திக்குப் பிறகு வெறுப்போடு மேலும் தொடர்ந்த போது ..... அது பெருமாளின் கனவாக கண்டபோது மனம் சிரித்தது!
தங்கராசின் வைராக்கியம் அருமையான முடிவு. உங்கள் கதாபாத்திரங்களில் பெருமாளும், தங்கராசும் காவிய நாயகர்கள் ! அவர்களைப் போன்றவர்களை உருவாக்கத் துடிக்கும் உங்கள் வளமான சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள். மலையகத்தில் படிக்கத் துடிக்கும் ஒரு லயத்து மாணவனின் சூழலைச் சித்தரித்திருக்கும் பாணி..... ஒரு ஆய்வு எனலாம்.
அருமையான கதை !
மு. சிவலிங்கம்
03.03.1998
* * * * *
போர்ச் சூழல் காரணமாக அந்நிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிக் கொள்வதில் அக்கறை யெடுக்கின்றனர். ஆனால் அவர்களின் புதிய தலைமுறை அந்நியச் சூழலுக்கு எளிதாக ஆட்பட்டு, தலையை மழித்து, காதொன்றைத் துளைத்து வளையத்தை மாட்டிக் கொண்டு ........? மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக 15 வருடங்களுக்குப் பின் இங்கிருந்து சென்ற சிவராசா, பேரன் முருகநேசனின் கோலத்தைக் கண்டு மனக்குமுறல் எய்துவதை வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கிறது ‘மண்புழு’. “ இதெல்லாம் இந்த மண் செய்யிற வேலை.... மண்ணுக்கும் கலாசாரம் பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று மண்ணில் எங்கட கலாசாரம் வேர் விடுகிறது கஸ்டம். சூழல் விடாது” என்னும் சிவராசாவின் கூற்றில் எத்தனை பெரிய உண்மையிருக்கிறது. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறந்த கலைப்படைப்பு.
நா. சோமகாந்தன்
* * * * *
தி. ஞானசேகரனது கதைகள் மலையக மக்களது ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றினை ஆவணப்படுத்தி நின்றதோடு, அறிவியல் சார்ந்த அம்சங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ‘கருவறை எழுதிய தீர்ப்பு’ எனும் தி. ஞானசேகரனின் கதையே அறிவியலை ஈழத்துச் சிறுகதையில் அறிமுகப்படுத்திய கதையாகும்.
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
(புதிய சகத்திரப் புலர்வின்முன் ஈழச்சிறுகதைகள் நூலில்)
* * * * *
Dear Dr. Gnanasekaran,
I had the privilege of reading your short story book titled ‘Alseshanum oru poonaikkuddium.’
I was highly impressed and delighted to read your all eleven short stories. The first and the main story is beyond comments. You had explained the existing ethnic disturbances in an undisputable way. The last story ‘Kadamai’ had touched me deeply. I too had not performed abortions and I totally agree the way you had dealt meena.
You are affluent and the flow is very readable.
You had exposed the current problems in a formidable and simple way.
My sincere wish and prayer that you should continue to write. The Tamil world will always remember you for your enormous contributions.
Dr. M. L. Najimudeen
MBBS(Cey) MS(Cey) MRCOG (Gt. Brit)
Consultant Obstetrician and Gynaecologist
July 27, 1998.
* * * * *
‘கண்ணில் தெரியுது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளூம் ..! என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல இனவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை இது.
பேராசிரியர் ‘நந்தி’
15.04.2002
* * * * *
“ஈழத்தின் சமகால இலக்கியச் செல்நெறிகளை அவதானிக்கும் போது, எழுத்தாளரது படைப்புகளில், பேரினவாத ஒடுக்குமுறைக் கொடுமைகள், போர்க்கால அவலங்கள் என்பன வெறும் பதிவுகளாகவே அமைந்திருப்பது கண்கூடு, எனினும், இதற்கு விதிவிலக்காகவுள்ள மிகச்சில படைப்புகளுள் தி. ஞானசேகரனின் ‘காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்’ விதந் துரைக்கப்பட வேண்டியதொன்று ; மாணவியொருத்திக்கு நிகழ்ந்துவிட்ட கொடூரம் தரும் அதிர்ச்சி, கதை சொல்லப்படும் முறையிலுள்ள பல்வேறு சிறப்புகளால் வாசகரது மனத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் ...
இக்கதை தமிழ்ச்சிறுகதை வரலாற்றிலே இடம் பெறவேண்டிய சிறுகதை.
கலாநிதி. செ. யோகராசா
* * * * *
கதை எழுதுவது என்பது இலகுவான செயலல்ல. மக்களுக்கு நலன் செய்யக்கூடிய ஒரு நல்ல கருத்து அதில் இருக்கவேண்டும். அந்தக் கருத்தை விளக்குவதற்கு வேண்டிய நிகழ்வுகளும் கதா பாத்திரங்களும் சிறப்பாக அமையவேண்டும். இவற்றுக்கு மேலாக வசனநடை வாசகரை ஈர்க்கவேண்டும். திரு. ஞானசேகரனின் கதைகளில் இந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக - மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நல்ல கதைகளை எழுதவிரும்பும் எழுத்தாளர்கள் ஞானசேகரனின் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்.
வரதர்
**********
கருத்துகள்
கருத்துரையிடுக