காதலினால் அல்ல!
காதல் கதைகள்
Backகாதலினால் அல்ல! (நாவல்)
ரெ.கார்த்திகேசு
-
Source
-
காதலினால் அல்ல! (நாவல்)
ரெ.கார்த்திகேசு
வெளியீட்டாளர் : முகில் என்டர்பிரைசஸ், மலேசியா மற்றும்
மித்ரா பப்ளிகேஷன்ஸ், இந்தியா
வெளியீடு: 1999; பக்கங்கள் - 308
ISBN: 1 876626 364
Publisher’s note:
The novel entitled “Kaathalinaal Alla” by R.Karthigesu is published in India by Mithra Publications (1999)
and in Malaysia by Muhil Enterprises (1999)
Copyright by Author.
Date of Publication 25 December 1999.;
ISBN1 876626 364; Total number of pages 308.
--------
காதலினால் அல்ல!
ரெ.கார்த்திகேசு
முன்னுரை
காதல் என்பது உன்னதமான பொருள்.
காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எல்லாத் தலைமுறைகளிலும் காதல் கதைகளை ஆர்வமாகப் படிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படத் தொடங்கியபோது, ஒரு பெண் காதலிப்பது -- அதாவது தானே தனக்குத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது -- ஒரு தவறு என்று கருதப்பட்டது. அவள் பெற்றோர்கள் சொற்படி அவர்கள் தேர்ந்தெடுத்த ஆடவனை மணப்பது என்பதுதான் அவளுக்குள்ள கடமை எனக் கருதப்பட்டது. ஆரியர்கள் பெண்ணுரிமையை அடக்கி வைத்த காலத்திலிருந்தே இது ஆரம்பித்திருக்கலாம்.
இன்று நாம் அறிவொளி பெற்ற சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்களுக்குக் கல்வி பெருகிவிட்டது. பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களை விட (அறிவிலும் அனுபவத்தாலும் இல்லாவிட்டாலும்) கல்வியில் உயர்ந்தவர்களாக இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர் சமுதாயத்தில் இது உண்மை.
ஆனாலும் இந்தக் காதல் விஷயத்தில் சமுதாயம் ஒரு பிளவுபட்ட (schizophrenic) மனநிலையில்தான் இருக்கிறது. உண்மை வாழ்க்கைக்கும் கதைகளில் சொல்லப்படும் வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. கல்வியில் உயர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட, தன் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தன் உரிமை என்று தெரிந்திருந்தும், காதலிப்பதில் ஒரு பயமும் வெட்கமும் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகக் காதலிக்க விடுவதில் சமுதாய பயமும் நாணமும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் தங்களுக்கே மிகப் பெரிய முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இன்னமும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது.
ஆனால் உடற்கூறு ரீதியாக இந்த இளம் வயதில் ஏற்படுகிற காதல் இதையெல்லாம் எதிர்த்துக் கொண்டு எழத்தான் செய்கிறது. அரும்புகிற கட்டத்தில் சமுதாயக் கட்டுப்பாடுகளை அது மீறத்தான் துடிக்கிறது. அறிவு இடையிடையே வந்து உறுத்தினாலும் இயற்கை உணர்ச்சி கொப்பளிக்கத்தான் செய்கிறது. இப்படி அறிவுக்கும் இயற்கை உணர்ச்சிக்கும் நடக்கின்ற மனப் போராட்டங்கள் காதலர்களுக்கு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் ஒரு சாகச இன்பத்தையும் ஏற்படுத்தி அவர்களை அலைக்கழிக்கின்றன.
இந்த உணர்வுகளை வடித்துப் பார்க்கத்தான் இந்தக் கதைப் பின்னணியை நான் அமைத்துக் கொண்டேன். இந்தக் காதல் விஷயத்தில் இந்த நாவலில் உணர்ச்சி அறிவு ஆகியவற்றின் பரிமாணங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
இந்த நாவலை எழுதியதன் இன்னொரு காரணம் 24 ஆண்டுகளாக நான் கண்டு , நடந்து, பழகி, பருகிய மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் இயற்கை அழகின் ஒரு பகுதியையாவது ஒரு நாவலில் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆசையும்தான். நாவல் பூர்த்தியடைந்து அதை மீண்டும் படித்த போது இந்த வளாகத்தின் இயற்கை எழில் என் எழுத்துத் திறத்தை விட மிகப் பெரியது என்று தெரிந்து கொண்டு வியந்து குனிந்திருக்கிறேன்.
இயற்கை என்பது மேலும் உன்னதமான பொருள்.
அன்புடன்,
(ரெ.கார்த்திகேசு)
kgesu@pd.jaring.my
---------------
1
அந்த வெளிர் நீலக் கடல் பரப்பை அகிலா ஆசையுடன் பார்த்தாள். காலை எட்டு மணி இளவெயிலில் அதன் மேனியில் பளபளப்பு ஏறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் கண்களைத் தாழ்த்தினால் பாலச் சுவரில் விட்டு விட்டுக் கட்டியுள்ள சிமிந்திக் கம்பங்களூடே அது துண்டு துண்டாய் உடைந்து படபடத்தது. அந்த பனிரெண்டு கிலோமீட்டர் பினாங்கு பாலத்தில் விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து பார்க்கும் போது ஒரு சினிமாவில் வருகிற மாதிரி அந்தத் தூண்கள் "விஷ் விஷ்" என்று செங்குத்துக் கோடுகளாய் ஓடி மறைந்தன. ஆனால் பாலத்தின் பக்கச் சுவர்களின் விளிம்பின் மேலாகக் கண்களை ஓடவிட்டால் கடல் எல்லையில்லாமல் நீண்டிருந்தது.
வலது பக்கத்தில் ஜியார்ஜ் டவுனின் கட்டடங்கள் வான் வெளியில் செங்குத்துக் கற்களாய் நினறிருந்தன. கொம்தார் கட்டடம் எல்லாக் கட்டடங்களுக்கும் மேலே உயர்ந்து கொடிக்கம்பமாய் நின்றிருந்தது. பினாங்குத் தீவுக்கும் அக்கரையிலுள்ள பட்டர்வொர்த் துறைமுகத்திற்குமிடையே உள்ள வடநீரிணையில் பல கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. பிரயாணிகள் •பெர்ரிகள் ஏராளமான ஜன்னல்கள் அமைத்த பெட்டிகளாய் மிதந்து கொண்டிருந்தன. இவற்றுக்கு ஒரு கழுத்தும் தலையும் அமைத்தால் பிரம்மாண்டமான அன்னங்கள் போல இருக்கும் என அகிலா வேடிக்கையாகக் கற்பனை பண்ணிக் கொண்டாள்.
இடது பக்கத்தில் காட்சிகள் இன்னும் பசுமையாக இருந்தன. கடலுக்குக் கோணல்மாணலாய்க் கரை போட்ட மாதிரி ஜெர்ஜாக் தீவின் குன்றுகள் தெரிந்தன. ஒரு குறுகிய வெண்மணல் திட்டு அந்த குன்றுகளுக்கு அடிக்கோடிட்டிருந்தது. அந்த விரிந்த கடலில் அந்த நேரத்தில் ஒரே ஒரு சிறிய இயந்திரப் படகு மட்டும் "டுப் டுப்" என்று சத்தமெழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. எதிரில் பாயான் லெப்பாசின் புதிய மின்னியல் தொழிற்சாலைகளும் தூரத்தில் விமான நிலையத்தின் ஓடும் பாட்டையும் தெரிந்தன.
கொஞ்சம் தலை நிமிர்ந்த போது கடலுக்கும் வானுக்குமிடையே உள்ள வெளியில் விமானம் ஒன்று கோழிக் குஞ்சுக்குக் குறி வைத்து இறங்கும் பருந்து போல நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தது. விமானத்தின் வால் பகுதியில் பொறித்திருந்த மாஸ் நிறுவனத்தின் கிளந்தான் பட்டம் அகிலாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அதன் நீண்ட முன்னிறக்கைகள் வலது பக்கம் கொஞ்சம் இறங்கி நிமிர்ந்து நேராகின. பருந்தின் விரித்த கால் நகங்கள் போல் அந்த விமானத்தின் சக்கரங்கள் வெளியாகி நீண்டிருந்தன. அதன் பூதாகார உடல் தரையைத் தொட விரைந்து கொண்டிருந்தது.
தன் லட்சியங்களும் தரை தொடுகின்ற நேரம் இதுதான் என அகிலா எண்ணிய போது அவள் மனம் கிளுகிளுத்தது. இரண்டு வாரங்களுக்கு முன் பினாங்கு அஞ்சல் முத்திரையிட்ட கனமான நீண்ட உரையில் "உங்களுக்கு மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் இயலில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் பத்திரங்களுடன் .... தேதி இப்பல்கலைக் கழகத்தின் "தேசா கெமிலாங்" மாணவர் விடுதியில் வந்து பதிந்து கொண்டு.." என்ற கடிதம் வந்த அன்றே அவள் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது.
எவ்வளவு துன்பங்களுக்குப் பின்! எத்தனை தூங்கா இரவின் படிப்புகள்! ஒவ்வோர் ஆண்டும் அவள் முந்தைய வகுப்பு மாணவிகள் பரிட்சைப் படிகள் ஏற ஏற, பல்கலைக் கழகங்களில் இடம் பெற்று விடை பெற்றுப் போகப் போக "நம்மால் முடியுமா? முடியுமா?" என்று எத்தனை பதைபதைப்புகள்!
எஸ்டிபிஎம் முடிவு வருவதற்கு முந்திய இரவில் என்ன பாடு பட்டது மனம்! அன்றிரவு தூங்காமல் ஜன்னலை வெறித்துப் பார்த்திருந்து, பெயிலாகப் போகிறோம் என்று பயந்து, தோழிகள் சிரிப்பதாகக் கனவு கண்டு, பத்து முறை எழுந்து விளக்குப் போட்டுத் தண்ணீர் குடித்து, "தூங்கம்மா!" எனத் தாயைக் கெஞ்ச வைத்து, மறுநாள் ஒரு "ஏ" இரண்டு "பி", இரண்டு "சி" என்று அறிந்து வாய் பிளந்து சிரித்து குதித்து தோழிகளைக் கட்டிக்கொண்டு, அந்த படபடப்பில் காரில் காத்திருந்த அப்பாவை மறந்து விட்டு, அப்புறம் ஓடிவந்து அவரிடம் காட்டி அவர் தன் கன்னத்தில் முத்தமிட்டு...
படபடப்புகள் முடியவில்லை. எந்தப் பல்கலைக் கழகம், என்ன பாடம், எப்படி வரிசைப்படுத்துவது என்று பலரிடம் ஆலோசனை கேட்டு அலைந்து, "நீ அறிவியல் மாணவி. பௌதிகத்தில் "ஏ", கணக்கில் "பி", ரசாயனத்தில் "பி", வாங்கியிருக்கிறாய். •பார்மசி முதலில் போடு, கம்ப்யூட்டர் இரண்டாவது போடு" என்ற ஒரு பட்டதாரி ஆசிரியர் ஆலோசனையை ஏற்று, மனுச் செய்து நாட்களை எண்ணிக் காத்திருந்து...
"அதோ அந்தப்பொண்ணுக்கு இடம் கெடச்சி லெட்டர் வந்திருச்சின்னு சொல்றாங்களே! உனக்கு ஏன் இன்னும் வரல...?" என்று அப்பா பீதியை எழுப்பி, "கெடைக்கலன்னா லட்டர் அனுப்ப மாட்டாங்களாம்! ரெண்டு வாரம்வரைக்கும் வரலன்னா இல்லன்னுதான் அர்த்தம்" என்ற ஒரு தகவல் கேட்டு அன்றிரவு அழுது...
மறுநாள் காலையில் "இடம் கெடைக்காதவங்க மஇகா கல்விக் குழுத் தலைவரப் போய்ப் பாக்கச் சொல்றாங்கள, கோலாலம்பூர் போய் பாத்திட்டு வந்திருவமா..." என்று பேசிக் கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த அஞ்சல்காரர் வீசிப்போன தடிப்பான உரையில் செய்தி கிடைத்து,..
கடித்தைப் பார்த்ததும் வாய்திறந்து சிரித்த அப்பா அப்புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களில் ஊறிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். "என்ன அப்பா?" என்று கேட்டவளை அணைத்துக் கொண்டார்.
"இல்லம்மா! இது ரொம்ப சந்தோஷமா... எனக்குப் பேசவே முடியில. எங்கப்பா, உன் தாத்தா, தோட்டத்தில தொழிலாளியா இருந்தவரு. அவருக்கு மகனாப் பொறந்து தமிழ்ப் பள்ளிக்கூடத்தில படிச்சி ஒரு தமிழ் வாத்தியாராவும் தலைமை ஆசிரியராவும் நான் வந்தேன். அதுதான் என்னால ஏற முடிஞ்ச உயரம். நீ பாரு, பட்டதாரியாகப் போற, அதுவும் கம்ப்யூட்டர் துறையில! நம்ம குடும்பத்தில பல்கலைக் கழகத்தில அடியெடுத்து வைக்கிற முதல் ஆள் நீதான். என் பரம்பரைய உயர்த்தப் போற, அந்த சந்தோஷம் தாங்க முடியில...!" அவளும் ஆனந்தத்தில் அழுதாள், அம்மா வந்து உச்சி மோந்து உட்கார வைக்கும் வரை.
அதன் பிறகு எல்லாம் அத்தனை வேகத்தில் நடந்தன. முதலில் சாமான்கள் வாங்கும் படலம்: பள்ளிக்கூடச் சீருடைகளை மூட்டை கட்டிவிட்டு வகுப்புக்களுக்கு சுதந்திரமாகப் போட்டுச் செல்ல சில ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள், பிளவுஸ், புதிய உள்ளாடைகள், பஞ்சாபி ஆடைகள், அம்மா வற்புறுத்திக் கொடுத்த இரண்டு புடவைகள், எல்லாவற்றையும் திணிக்க புதிதாக ஒரு பேக்.
பினாங்கு விடுதியில் தங்குவதற்கான தட்டுமுட்டுச் சாமான்கள், "வேண்டாம். வேண்டாம்" என்று மறுத்தும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்கள், அதன் பின் மருத்துவ சோதனை, கட்ட வேண்டிய கட்டணங்களுக்கு பேங்க் டிரா•ப்ட், செலவுக்குப் பணம், தோழிகளிடம் விடைபெறுதல், ஆசிரியர்களிடம் ஆசி வாங்குதல், உடன் வந்தே தீருவேன் என்று அடம்பிடித்த தம்பிக்கு அவன் பள்ளிக்கூடத்திலிருந்து அனுமதி பெறுதல், இன்று காலை ஆறு மணியிலிருந்து பிரயாண ஏற்பாடுகள்... எல்லாம் ஒரு குடைராட்டினத்தில் சுற்றும்போது கண்ட காட்சிகளாக "விர் விர்"ரென்று ஓடிவிட்டன.
இதோ இது அந்த ஏற்பாடுகளின் கடைசிக்கட்டம். அப்பா காரோட்டிப் போகிறார். தம்பி முன்னிருக்கையில். தான் பின்னாலிருந்து கடலையும் பினாங்குப் பாலத்தையும் வேடிக்கை பார்த்தவாறு.... இது வெறும் பாலமல்ல; தன் முந்திய வாழ்வையும் வளமான எதிர்காலத்தையும் இணைக்கின்ற உறவுப் பாலம். இனி நான்காண்டுகளுக்குத் தன் இல்லமாக இருக்கப்போகும் பல்கலைக்கழகத்திற்கான பாதை.
"அதோ தெரியுது பாரம்மா, அதுதான் சான்ஸலரி, துணைவேந்தர் அலுவலகம் அப்புறம் பதிவாளர் அலுவலகம் எல்லாம் அங்கதான்!" என்று அப்பா சுட்டிக்காட்டினார். காரின் முன் கண்ணாடிகள் ஊடே மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு குன்றில் கம்பீரமாக நின்றிருந்தது அந்தக் கட்டடம்.
*** *** ***
அகிலாவுக்கு அந்தப் பல்கலைக் கழக வளாகம் புதிய உலகமாய் இருந்தது. ஒலிகள், அசைவுகள், வாசனைகள் அனைத்தும் புதியவையாக இருந்தன. இந்த 150 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்த நிலப் பரப்பு, ஒழுங்கான நேரான சாலைகள், சாலைகளை நிழலில் அரவணைக்கும் பிரமாண்டமான வரிசை மரங்கள். கைகளில் கோப்புகளை ஏந்தியவாறு துருதுருவென்று அலைகிற மாணவர் கூட்டம்.
வந்து சேர்ந்த அந்த முதல் நாள் மாணவியாய்ப் பதிவு செய்து கொள்ளும்போது அப்பா முழுக்கவும் உடனிருந்து உதவினார். பதிவுக்கு பேட்ஜ் அணிந்திருந்த சில மூத்த மாணவிகள் உடனிருந்து வழிகாட்டினார்கள். தம்பி பெட்டிகளையும் சாமான்களையும் முக்கி முக்கித் தூக்கினான். "தேசா" என்று அழைக்கப்படும் மாணவர் விடுதிகளில் "கெமிலாங்"கில் ("பிரகாசம்") இரண்டாம் மாடியில் அகிலாவுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சிறிய அறை. அவளுடைய அறைத் தோழி இன்னும் வரவில்லை. சிறிய படுக்கையும் எழுது மேசையும் இருந்தன. சின்னஞ்சிறு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால் மரங்கள் தெரிந்தன.
அவளை அறையில் விட்டு விட்டு "இன்னும் எதாச்சும் வேணுமா? காசு போதுமா? அடிக்கடி போன் பண்ணு" என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு அப்பா தம்பியுடன் திரும்பிப் போய்விட்டார். அவர்கள் போனவுடன் இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்ந்திராத புதிய அனுபவம் பயமாக வந்து கவிந்தது. ஆனால் இங்கு வந்திருக்கிற ஆயிரம் புதிய மாணவர்களுக்கும் இந்த அனுபவம் புதிதுதான் என்ற எண்ணம் ஆறுதலாக இருந்தது. மேலும் அந்தத் தனிமையை எண்ணவே முடியாதபடி அவள் செய்ய வேண்டிய பல காரியங்கள் காத்துக் கிடந்தன.
பகல் முழுக்க அவள் பல இடங்களுக்கு அலைந்தாள். பல்கலைக் கழகத்தை அவளுக்குப் பழக்கப் படுத்த பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விரிவுரை அறைகளைத் தேடிப்போக வரைபடமும் வழிகாட்டிப் புத்தகமும் கொடுத்தார்கள். விடுதிப் பதிவு, வகுப்புப் பதிவு, நூல்நிலையப் பதிவு, மாணவர் சங்கப் பதிவு, துணைப்பாடப் பதிவு, மொழிப் பதிவு என்று ஏராளமான பதிவுகளுக்கு விளக்க நாள் குறித்து அட்டவணை தந்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் விடுதி முன் கூட்டமாகக் கூடி வரிசை பிடித்துக்கொண்டு மூத்த மாணவிகள் வழிகாட்ட நடநட என்று நடக்கவேண்டியதாயிற்று.
ஆனால் நடப்பது என்பது இங்கு இன்பமான அனுபவமாக இருந்தது. கால் பரவி நடப்பதற்கு ஆனந்தமான சோலையாக இருந்தது. எங்கும் நிழல் தரும் பிரம்மாண்டமான மரங்கள். மழை மரங்கள், வேப்ப மரங்கள், காட்டுத் தீக்கொழுந்து மரங்கள் இன்னும் அவளுக்குப் பெயர் தெரியாத வெப்ப மண்டல பலவகை மரங்கள். நேரான ஒழுங்கான சாலைகள். புல் வெளிகளினூடே நடைபாதைகள். ஆங்காங்கே உட்கார்ந்து பேச நீண்ட மேசைகள், நாற்காலிகள்.
அந்த ஜூலை மாதத்து வெயிலில் பூ மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்சானா மரங்களில் பொடிப்பொடி மஞ்சள் பூக்கள் அடர்ந்து பூத்து மரத்தையே மஞ்சள் குளிக்க வைத்திருந்தன. தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் அந்தப் பூக்கள் தரையில் மஞ்சள் கம்பளமாக விரிந்திருந்தன. ஆங்காங்கே காட்டுத் தீக்கொழுந்து மரங்களில் இரத்தச் சிவப்பில் பூக்கள் கிளைகளை மூடியிருந்தன. செர்ரி மரங்கள் போன்ற சில குட்டை மரங்களில் இலைகள் முற்றாக உதிர்ந்து ஊதா நிறப் பூக்கள் மட்டுமே கிளைகளைப் போர்த்திருந்தன. இவற்றினிடையே புதர் போன்ற போகன்வில்லா செடிகளில் வண்ணம் வண்மாய், பொங்குகிற பால் நுரையாய் பல நிறங்களில் பூக்கள் குலுங்கின. மகரந்தத் குடைகளை கவிழ்த்துப் பிடித்ததகு போன்ற செம்பரத்தைப் பூக்களும் பல நிறங்களில் இருந்தன.
பல்கலைக் கழகப் பொருளாளர் அலுவலகத்தில் முதல் பருவக் கட்டணம் கட்டச் சென்ற போது வழியில் கடலும் பினாங்குப் பாலமும் தெரிந்தன. புல் வெளிகளினூடே நடைபாதைகள். ஆங்காங்கே உட்கார்ந்து பேச நீண்ட மேசைகள், நாற்காலிகள்.
அந்த ஜூலை மாதத்து வெயிலில் பூ மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்சானா மரங்களில் பொடிப்பொடி மஞ்சள் பூக்கள் அடர்ந்து பூத்து மரத்தையே மஞ்சள் குளிக்க வைத்திருந்தன. தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும் அந்தப் பூக்கள் தரையில் மஞ்சள் கம்பளமாக விரிந்திருந்தன. ஆங்காங்கே காட்டுத் தீக்கொழுந்து மரங்களில் இரத்தச் சிவப்பில் பூக்கள் கிளைகளை மூடியிருந்தன. செர்ரி மரங்கள் போன்ற சில குட்டை மரங்களில் இலைகள் முற்றாக உதிர்ந்து ஊதா நிறப் பூக்கள் மட்டுமே கிளைகளைப் போர்த்திருந்தன. இவற்றினிடையே புதர் போன்ற போகன்வில்லா செடிகளில் வண்ணம் வண்மாய், பொங்குகிற பால் நுரையாய் பல நிறங்களில் பூக்கள் குலுங்கின. மகரந்தத் குடைகளை கவிழ்த்துப் பிடித்ததகு போன்ற செம்பரத்தைப் பூக்களும் பல நிறங்களில் இருந்தன.
பல்கலைக் கழகப் பொருளாளர் அலுவலகத்தில் முதல் பருவக் கட்டணம் கட்டச் சென்ற போது வழியில் கடலும் பினாங்குப் பாலமும் தெரிந்தன.
அந்தக் குன்றிலிருந்து பார்த்தால் நீண்ட கிளைகள் நீட்டித் தவழ்ந்திருந்த மழைமரங்களூடே கடலும் பாலமும் சட்டமடித்து மாட்டப்பட்ட அழகிய ஓவியங்களாய்த் தெரிந்தன. சூரிய ஒளி பட்டுப் பட்டு கடல் தகதகத்தது.
மனதில் மகிழ்ச்சி இருந்தது. எஸ்டிபிஎம் பரிட்சையை வெற்றி கொண்ட பெருமை இருந்தது. பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிவிடவில்லை என்ற நிம்மதி இருந்தது. பல்கலைக் கழகத்தில் இடம் பிடித்துவிட்ட களிப்பு இருந்தது. ஒரு கவின் சோலையாக உள்ள இந்தக் கல்விச் சாலையில் இருக்கிறோம் என்ற பெருமிதம் வந்தது. "புதிய வானம், புதிய பூமி" பாட்டு அவள் உதட்டுக்கு வந்தது. தன்னையே வரவேற்க இவையெல்லாம் அமைந்தது போல.
ஆனால் ஒன்று மட்டும் பல்கலைக் கழகத்திற்கு வருவதற்கு முன்னிருந்தே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. இந்த ஒரு வாரம் முதலாண்டு மாணவர்கள் மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் அடுத்த வாரத்தில் மூத்த மாணவர்களும் மாணவியர்களும் தங்கள் புதிய ஆண்டுப் பதிவுக்கு வந்து சேருவார்கள்; அப்போதுதான் அவர்களின் ரேகிங் ஆரம்பமாகும். முன்பு கேட்டிருந்த "நடனமாடு, கொச்சைக் கதை சொல், சட்டையை அவிழு" போன்ற கதைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து மனசு கலவரப்பட்டது. அந்த பயங்கர எதிர்பார்ப்பில் மனதில் இன்னும் அதிகமாக மருட்சி மண்டியது.
*** *** ***
அகிலா தன்னுடைய துணை (மைனர்) பாடமாக கணிதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். தனக்குத் தெரிந்த, பழகிய பாடங்களிலேயே நிற்பது நல்லது என அவளுக்குத் தோன்றியது. அறிமுக உரையில் அவளுடைய கணினி இயல் டீன் பேசும்போதும் அதைத்தான் சொன்னார். "இந்தப் பல்கலைக் கழகத்தில் துணைப் பாடமாக நீங்கள் எந்தத் துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அறிவியல் மாணவராக இருந்தாலும் மனித இயலில் கூட துணைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இலக்கியம் கூட எடுக்கலாம். ஆகவே எது உங்களுக்கு விருப்பமாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழக்கமில்லாத புதிய துறைகளைத் தேர்ந்தெடுத்து அவதிப்படவேண்டாம்" என்றார்.
அகிலாவுக்கு இலக்கியத்தைத் துணைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது. அவள் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் கற்றபோதே தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறாள். இடைநிலைப் பள்ளிக்கூடத்தில் மலாய் மொழியில் அதன் தற்கால இலக்கியங்கள் பலவற்றை அறிமுகம் செய்து கொண்டாள். அவளுடைய ஆங்கிலமும் சரளமாக இருந்ததனால் தானாகவே ஆங்கிலத்தில் பொழுது போக்கு இலக்கியங்கள் பலவற்றைப் படித்திருக்கிறாள். எல்லா இலக்கியங்களும் அவளைக் கவர்ந்துள்ளன.
இந்தப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை வலுவானது என அவள் அறிந்திருந்தாள். தேசிய இலக்கியவாதி ஷனோன் அஹமாட் இங்குதான் பேராசிரியராக இருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். இங்கு மலாய் இலக்கியம் மட்டுமல்லாது ஆங்கில இலக்கியமும், ஆசிய ஆப்பிரிக்க ஒப்பீட்டு இலக்கியமும் சொல்லித் தரப்படுகிறது என்பதையும் வழிகாட்டிப் புத்தகங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இலக்கியம் எடு எடு என ஆசை தூண்டிக் கொண்டே இருந்தது.
ஆனால் அந்த ஆசையைக் கட்டிப் போட்டுவிட்டாள். இலக்கியம் படிக்க இன்னும் ஆயுசு இருக்கிறது. ஆனால் அதிக பரிச்சயமில்லாத பாடத்தை எடுத்து பட்டத்தைக் கோட்டை விட்டுவிடக் கூடாது. கணக்கு அவளுக்கு எளிதாக வரும். அதை எடுப்பது நல்லது. கணினித் துறைக்கும் அது துணையாக இருக்கும். ஆகவே கணிதத்தையே பதிந்து கொண்டாள்.
புதன் கிழமை இரவு எல்லா சமயங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சமயச் சொற்பொழிவுகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. இந்து சமய மாணவர்கள் விரிவுரை மண்டபம் "வி"யில் கூடவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அந்த மண்டபத்தில்தான் முதன் முதலாக இந்திய மாணவர்களை அவள் ஒருமொத்தமாகப் பார்த்தாள். கெமிலாங் விடுதியில் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்ட மாலதியுடன் அவள் உட்கார்ந்தாள். மாலதி மனிதவியல் மற்றும் கல்வியியலில் இருந்தாள். ஆசிரியை ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்திருந்தாள். ஏறக்குறைய 80 மாணவர்கள் வந்திருந்தார்கள். இந்திய மாணவர்கள் சுமுகமாகத் தமிழில் பேசி அறிமுகம் செய்து கொண்டார்கள். மலேசியாவின் பல பகுதிகளிலும் இருந்து அவர்கள் வந்திருந்தார்கள்.
விரிவுரை அரங்கத்தின் உட்காரும் இடம் படிகள் படிகளாக உயரமாகவும் பேச்சாளர் மேடை தாழ்வாகவும் அமைக்கப்பட்டிருந்து. தான் உயரமான இடத்திலிருந்து பேச்சாளர்களைக் குனிந்து பார்ப்பதை இனிப் பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அறையில் குளிர்சாதனம் இதமாக இருந்தது.
பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு இந்தியப் பேராசிரியர்களும் இராமகிருஷ்ணா ஆசிரமத்தின் சமயப் பேச்சாளர் ஒருவரும் பேசினார்கள். கல்வித்துறைப் பேராசிரியர் கமலநாதன் இந்து சமயத்தைப் பற்றியும் குறிப்பாக சைவ சமயத்தின் பழமையைப் பற்றியும் பேசினார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முருகேசு தொடர்ந்து இந்து மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தன்னம்பிக்கையைப் பற்றியே அதிகம் பேசினார். புதிய மாணவர் அறிமுகம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் கடுமையான "ரேகிங்" செய்வதையும், இப்படிச் செய்பவர்களை அதிகாரிகளிடம் புகார் செய்ய புதிய மாணவர்கள் தயங்கக் கூடாது என்று அவர் சொன்ன போது ரேகிங் இருப்பது உறுதியாகி மனதில் திகில் பரவியது.
இப்படி நடந்தால் அதிகாரிகளிடம் சொல்ல பயப்படுபவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னால், புகார் கொடுத்தவர் பெயர் வெளிப்படாமல் தாம் அதிகாரிகளுடன் நடவடிக்கை எடுக்க அவர் உறுதி கூறியது அவர்களுக்குத் தெம்பாக இருந்தது. இராமகிருஷ்ணா ஆசிரமப் பேச்சாளர் ரமணீதரன் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். மூவருமே சரளமான எளிய தமிழில் பேசியது அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு பேராசிரியர்களுமே தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் படித்து இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.
திரும்ப விடுதிக்கு அவளும் மாலதியும் பேசிக்கொண்டே வந்தார்கள். மாலதி ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவள். "நீங்க மலேசியாவில் தெற்கு, நான் வடக்கு. இங்க வந்து சேந்திருக்கிறோம். ஆனா நீங்கதான் ரொம்ப தூரம் வந்திருக்கிறீங்க!" என்று அகிலா சொன்னாள்.
"நான் இந்தப் பல்கலைக் கழகத்தைத்தான் முதல் தேர்வாப் போட்டிருந்தேன். ஏன்னா இங்கதான் நாலு ஆண்டுகளுக்குள்ள பட்டதாரி ஆசிரியரா ஆக முடியுது. மத்த பல்கலைக் கழகங்கள்ள மொதல்ல ஒரு பட்டம் வாங்கிட்டு அப்புறம் இன்னொரு வருஷம் ஆசிரியர் பயிற்சிக்கு தனியா டிப்ளோமா செய்யணும்" என்றாள் மாலதி.
இரவு பத்து மணிக்குப் பல்கலைக் கழகம் அமைதி பூண்டிருந்தது. இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் கேட்டுக் கொண்டிருந்து. சாலை விளக்குகள் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன. மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மரத்தடியில் நடந்த போது அங்சானா மரத்தின் மஞ்சள் பூக்கள் காலடியில் நசுங்கின.
"ரொம்ப அழகா இருக்குங்க மாலதி இந்தக் கேம்பஸ்" என்றாள் அகிலா.
"ஆமா அகிலா! நான் வந்ததும் இந்தக் காட்சிகளைப் பாத்து அசந்து போயிட்டேன். ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் கடல்! ரொம்ப அழகா இருக்கு! ஒரு உல்லாசத் தளம் போல இருக்கு" என்று ஒத்துக் கொண்டாள் மாலதி.
"குடும்பத்த விட்டு நாலு வருஷம் பிரிஞ்சிருக்கிறதுக்கு இந்த அழகான இடத்தில இருக்கிறது ஒரு ஆறுதல்தான்!"
"ரொம்ப மகிழ்ந்து போயிடாதம்மா! பாடங்கள் ஆரம்பிச்ச பிறகு இந்த அழகையெல்லாம் நின்னு பாக்கிறதுக்குக் கூட நேரமிருக்காதின்னு சொல்றாங்க. அதோட மாணவர்கள் இயக்கத்தில சேர்ந்து தொடர்ந்து நடவடிக்கைகள்ள ஈடுபடணும். அதுக்கெல்லாம் மார்க் உண்டு. அந்த மார்க் வச்சித்தான் அடுத்த வருஷம் விடுதியில இடம் கெடைக்கிறதும் கெடைக்காததும் இருக்கு!"
அகிலா புறப் பாடத்திட்டத்தில் கலாச்சார நடனக் குழுவில் பதிந்து கொண்டிருந்தாள். மேலும் பேச்சுப்போட்டி சங்கத்திலும் சேரவேண்டுமென்று உறுதி செய்து கொண்டாள். பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளிலும் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறாள். ஆனால் பாடங்களும் பாடங்களுக்கான ப்ராஜக்ட் செய்முறைகளும் நிறைய இருக்கும் போது இத்தனையையும் சமாளிக்க முடியுமா என்ற பயம் வேறு வந்தது.
"ஆனா இதுக்கெல்லாம் மொதல்ல அடுத்த வாரத்துப் பிரச்சினைய மொதல்ல சமாளிச்சாகணுமே!" என்று பெருமூச்சு விட்டாள் மாலதி.
"என்ன அடுத்த வாரப் பிரச்ன?"
"அதான் நம்ம சீனியர் கொரங்குங்க வரப் போகுத! இப்ப நம்ம பேராசிரியர் சொன்னார ரேகிங்!"
"சீ! அதெல்லாம் ரொம்ப இருக்காதுங்க மாலதி! அதிகாரிகள் ரொம்ப கண்டிப்பாத்தான இருக்காங்க!"
"அப்படி நெனைக்காதம்மா! அதிகாரிகள் கண்ணில மண்ணத் தூவிட்டு எல்லாம் பண்ணிடுவாங்க. எனக்கு இங்குள்ள ஒரு சீனியர் மாணவியத் தெரியும். அவ அனுபவத்தைக் கேட்டீன்னா ஒடம்பெல்லாம் சிலுத்துப் போயிடும்! அவங்களத் தற்கொல பண்ணிக்க யோசிக்கிற அளவுக்கு கொடுமைப் படுத்தியிருக்காங்க தெரியுமா? அத்தனையும் ஒரு அதிகாரிக்கும் தெரியாது!"
அகிலாவுக்குக் "குப்"பென்று ஒரு பயம் வந்து பற்றியது. அறைக்குள் வந்து நுழைந்த போதும் அந்த பயம் போகவில்லை. உடல் வியர்த்திருந்தது.
*** *** ***
எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த நாள் முதலாண்டு மாணவர்களைக் கொஞ்சம் ஏளனமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள். கண்ணடித்தார்கள்.
அகிலாவின் அறைத் தோழியாக தொடர்புத் துறையில் (மாஸ் கம்யூனிகேஷன்) மூன்றாம் ஆண்டு மாணவியான ஜெசிக்கா என்ற சீன மாணவி பெட்டி படுக்கையுடன் வந்து சேர்ந்தாள். ஹாய் என்று சத்தமாய்ப் பேசினாள். எப்போதும் சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருந்தாள். அகிலா பயந்தது போல் இல்லாமல் ஒரு தமக்கையைப் போல சரளமாகப் பழகினாள்.
இந்திய மாணவர்கள் கூட்டங் கூட்டமாகப் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். கேன்டீனிலிருந்து "என்ன நம்மளப் பாக்காது மாரிப் போறீங்க?" என்று கேட்டார்கள். அகிலா அவர்களைப் பார்த்து அசடாகச் சிரித்துவிட்டு பயந்து ஒதுங்கி ஒடுங்கி நடந்தாள்.
"CAS 101 - கணினி அமைப்பு" முதல் விரிவுரைக்கு அவள் சென்றபோது 200க்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். ஒரு அழகான இளம் மலாய்ப் பெண் விரிவுரையாளர் அந்த விரிவுரையை வழங்கினார். "என் பெயர் சித்தி ஆய்ஷா ஹம்டான். உங்கள் பெயரையெல்லாம் தெரிந்து கொள்ள விருப்பம்தான். ஆனால் இந்தக் கூட்டத்தில் அது முடியாது. டியூட்டோரியலில் பின்னர் உங்களை நான் மெதுவாகத் தெரிந்து கொள்கிறேன்" என்று புன்னகையுடன் கனிவாகப் பேசினார்.
"கம்ப்யூட்டர் கணிதம் மிகவும் சிரமமானதென்று நினைக்க வேண்டாம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டே எண்கள்தான். ஒன்று பூஜ்யம் மற்றொன்று ஒன்று. இதைத் தெரியாதவர்கள் யாராவது இங்கிருக்கிறீர்களா?" என்று கேட்ட போது வகுப்பு "ஓ"வென்று சிரித்தது.
"மிக எளிது அல்லவா? அதுதான் சிரிக்கிறீர்கள். ஆனால் கொஞ்சநாள் பொறுத்து ப்ரோக்ராம் எழுத ஆரம்பிக்கும் போது இதன் முக்கியத்துவம் தெரியும். ஒரு பூஜ்யத்தை விட்டு விட்டால் அழப் போகிறீர்கள்!"
ஓவர்ஹெட் புரொஜக்டரில் கணினியின் தோற்றம் வரலாறு பற்றி விளக்கினார். எல்லா மாணவர்களும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள மலாய்ப் பெண் குனிந்து அகிலாவின் காதில் கிசுகிசுத்தாள்: "இந்த விரிவுரையாளர் யாரென்று தெரியுமா?"
அகிலா புரியாமல் அவளைப் பார்த்துத் தலையாட்டி விழித்தாள். "இவர் துன் ஹம்டானின் மகள். பினாங்கின் கவர்னர். யுஎஸ்எம்மின் முன்னாள் துணைவேந்தரின் மகள்"
அகிலா "ஆ"வென்று வாய் பிளந்தாள். துன் ஹம்டானின் பெயர் அவளுக்குப் பரிச்சயமானதுதான். முன்னாள் கல்வித் துறை இயக்குனர். அவருடைய பெயர் பாடப் புத்தகங்களில் கூட இருக்கிறது. இந்தக் குடும்பத்தில் கல்வி அவர்கள் நரம்பில் ரத்தமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இந்தப் பல்கலைக் கழகத்தில் இன்னும் பல அறிவு ஜீவிகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்து கிளுகிளுப்பூட்டியது. அவர்கள் இருக்குமிடத்தில் தானும் இருப்பது பெருமையாக இருந்தது.
ஷனோன் அஹமாட் என்னும் நாடறிந்த இலக்கியவாதியை எப்படியாவது ஒருநாள் சந்திக்க வேண்டும். அவருடைய "வழியெல்லாம் ஆணிகள்" என்ற நாவலைத் தான் படித்து அனுபவித்திருப்பதைச் சொல்ல வேண்டும். அரசியல் ஆய்வில் புகழ்பெற்றவரும் அறிவார்ந்த அரசியல் விமர்சகருமான டாக்டர் சந்திரா முசாபார் இங்குதான் இருக்கிறாராம். அவரும் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என அவர் பெயரை பத்திரிகைகளில் பார்க்கும் போதெல்லாம் அப்பா சொல்லுவார், போலியோ நோயில் கால் விளங்காமல் போனாலும் மூளையின் பலத்தால் உலகப் புகழ் பெற்றவர். எப்படியாவது ஒருமுறை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும்.
ஆனால் விரிவுரை விட்டு வெளியே வரும் போது இவர்களுக்கெல்லாம் முற்றாக வேறுபட்ட ஒருத்தனை அவள் சந்திக்க வேண்டி நேர்ந்தது.
*** *** ***
"ஹலோ" என்று சிரித்துக் கொண்டே வந்தான். "நீங்க என்ன கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?" என்று கேட்டான். ஆமாம் என்று தலையாட்டினாள். அதே விரிவுரையிலிருந்து அவனும் வெளிவந்ததால் அவனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். இந்த வகுப்பில் ஒரு சக இந்திய மாணவனைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான் என எண்ணிக் கொண்டாள்.
"என் பெயர் ராஜன்!" என்று கை நீட்டினான். மென்மையாகப் பிடித்தாள். அவன் அழுத்தினான்.
"உங்க பேரென்ன?" என்று கேட்டான்.
"அகிலா"
"எங்கிருந்து வந்திருக்கிறிங்க?"
"அலோர் ஸ்டார், கெடா"
"நான் கோலாலம்பூர்"
"நீங்களும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மேஜரா?"
"இல்ல. நான் பிசிக்ஸ், மூணாம் வருஷம்"
அவளுக்குத் திக்கென்றது. சீனியர் மாணவன் இந்த வகுப்பிற்கு ஏன் வந்தான்?
"என்ன சீனியர்னவொண்ண பயந்திட்டிங்களா? பயப்படாதிங்க! இங்க சில பயலுங்க உங்கள "ரேக்" பண்ண அலஞ்சிக்கிட்டு இருக்கானுங்க! நீங்க என் கூடவே நடந்து வாங்க! பசங்க வந்தா நான் பாத்துக்கிறேன்"
தலை முடியை மொட்டையாக வெட்டியிருந்தான். ஒரு காதில் கடுக்கன் போட்டிருந்தான். ஆனால் வாயில் அகன்ற சிரிப்பு இருந்தது. ஆதரவாகப் பேசினான். சீனியர் மாணவர்களிடமிருந்து தப்பிக்க இப்படி ஒரு துணை இருந்தால் நல்லதுதான் என அகிலா எண்ணிக் கொண்டாள்.
"வாங்க இப்படியே நடந்து பக்தி விடுதிக் கேன்டீனுக்குப் போகலாம். அங்க ஒரு இந்திய அம்மா வடையெல்லாம் சுட்டு விக்கிறாங்க! நான் காட்டுறேன் வாங்க!"
பேசிக்கொண்டே பக்கம் பக்கமாக நடந்தார்கள்.
"நீங்க மூன்றாம் ஆண்டு மாணவர், ஏன் முதல் ஆண்டு வகுப்புக்கு வந்திங்க?" என்று அகிலா கேட்டாள்.
"போனவருஷம் இந்தப் பாடம் எடுத்தேன். ஆனா பெயிலாயிட்டேன்லா. ஆகவே "பேசிக்" பாடத்தில "யூனிட்" போதில. அதுதான் இந்த வருஷம் "ரிப்பீட்" பண்றேன்"
"அவ்வளவு கஷ்டமான பாடமா?"
"கஷ்டமில்ல. போன வருஷம் கொஞ்சம் வெளையாடிட்டேன்லா! அதான்!"
பேசிக்கொண்டே கண்டீனுக்கு வந்தார்கள். கண்டீனுக்கு வெளியே புல் வெளியில் ஒரு இந்தியப் பையன்கள் கூட்டம் உட்கார்ந்திருந்தது. ராஜாவைக் கண்டு "டே மச்சான்" என்று கூப்பிட்டது. ராஜா உற்சாகமாகக் கையசைத்தான்.
"வாங்க! இவங்கல்லாம் என் கேங். உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்!" என்று அகிலாவைக் கூப்பிட்டான்.
அகிலாவுக்கு மனதில் திகில் பரவியது. "வேணாம். வேணாம்! நான் வரல. பயமாயிருக்கு!" என்றாள்.
"சீ! பயப்படாதிங்க அகிலா. எல்லாம் நல்ல பசங்க. நம்ப கேங். இவங்களையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கனும். அப்புறம் ரொம்ப உதவியா இருப்பாங்க. கொஞ்சம் வேடிக்கையா பேசுவாங்க அவ்வளவுதான்!" என்றான். அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான். கொஞ்சம் இழுத்தவாறு நடந்தான்.
அந்தக் கூட்டத்தில் ஒரு பத்துப் பேர் இருந்தார்கள். அத்தனை பேரும் இந்திய மாணவர்கள். எல்லோரும் ராஜனைப் போலவே தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தார்கள். சிலர் ஒரு காதில் மட்டும் வளையம் அணிந்திருந்தார்கள். பிருஷ்டங்களைப் பிதுக்கும் ஜீன்சும் டீ சட்டையும் போட்டிருந்தார்கள். சிகிரெட்டுகள் பிடித்தவாறிருந்தார்கள்.
அவளுக்குப் புரிந்து விட்டது. ரேகிங் செய்யக் காத்திருக்கும் ஓநாய்கள்தான் இவை. அந்தக் கூட்டத்தின் நடுவே ஏற்கனவே ஒரு பையன் பயங்கலந்த முகத்தில் கோணலான சிரிப்போடு உட்கார்ந்திருந்தான். இவர்களால் பிடிக்கப்பட்ட அவனும் முதலாண்டாக இருக்க வேண்டுமென அகிலா ஊகித்துக் கொண்டாள்.
"டே, நம்ம ராஜன் •பிரஷி குட்டி பிடிச்சிட்டு வந்துட்டான் பாத்தியா!" என்றான் ஒருவன். கூட்டம் "ஹே" என்று கை தட்டியது.
தனக்கு இரை போட்டு இழுத்து வந்து விட்டான். உனக்குத் தழை போடுகிறேன் என்று பறித்துக் காட்டி ஆட்டுக் குட்டியை மெதுவாக இழுத்து வந்து கண்ணியில் மாட்ட வைத்துவிட்டான். உள்ளே நடுங்கினாள்.
கூட்டத்தின் நடுவில் உட்காரச் சொன்னார்கள். தயங்கித் தயங்கி உட்கார்ந்தாள். மனதை பய இருள் கப்பென்று பிடித்துக் கொண்டது. யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்று பார்த்தாள். தனது சக தோழிகள் யாராவது... பல்கலைக்கழக அதிகாரிகள்... விரிவுரையாளர்கள்...? கூப்பிடு தூரத்தில் கேன்டீனில் மாணவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சிலர் அவர்கள் பக்கம் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் யாரும் இந்தக் கூட்டத்தின் பக்கம் வரவில்லை.
"என்ன மயிலு அப்படியும் இப்படியும் பாக்குது! இதோ பாரு அண்ணனுக்கெல்லாம் வணக்கம் சொல்லும்மா!" என்றான் ஒருவன்.
கைகூப்பி வணக்கம் சொன்னாள்.
"மயிலு பேரென்னா?"
"அகிலா!" என்றாள். குரல் நடுங்கியது.
"என்ன மயிலு பயப்பிடுது! நாங்கல்லாம் உங்க அண்ணன்மாருங்கதான, என்னா பண்ணிடுவோம் ஒன்ன...?" கூட்டம் கெக்கலித்தது.
"டேய் நீ வேணுன்னா அண்ணனா இரு. நா இதுக்கு அத்தான்!" என்றான் ஒருவன். அருகில் வந்தான். "என் கண்ணே!" என்று அவள் தலை மயிரைத் தடவினான்.
அவனைத் தீண்டலில் அருவருப்புப் பட்டுத் தலையை மேலும் குனிந்து கொண்டாள்.
"டேய் தொடாதடா! இதுக்கு வேற திட்டம் இருக்கு!" என்று ஒருவன் முன் வந்தான்.
"அகிலா மயிலு! இவரப் பாத்தியா! இவரும் ஒன்னப்போல •பிரஷிதான். இவரு பேரு... சொல்லுடா! அறிமுகப் படுத்திக்க!" அந்த முதலாண்டு மாணவனிடம் கத்தினான்.
முகத்தில் மாறாத கோணங்கிச் சிரிப்பைக் கொண்டிருந்த அந்த மாணவன் "ஹலோ, ஐ ஏம் பரசுராமன், சோஷியல் சயன்ஸ்!" என்று அவளிடம் கை நீட்டினான்.
"அடி செருப்பால! இங்கிலீஷ்ல பேசிறான் பாருடா! இங்க இருக்கிறவங்கல்லாம் செந்தமிழர் இல்ல? தமிழ்ள்ள பேசுடா!" என்று ஒருவன் அவன் தலையைத் தட்டினான்.
"ஹலோ என் பேரு பரசுராமன். நான் சோஷியல் சயன்ஸ்!" மீண்டும் கைகுலுக்க வந்தான்.
"டேய்! தமிழ் முறைப்படி விளுந்து கும்பிட்றா!"
தடாலென்று விழுந்து கும்பிட்டான். சொன்னதையெல்லாம் செய்யத் தயாரான கோமாளியாக இருந்தான்.
"பாத்தியா நல்ல பிள்ள. உருப்பிட்ருவான். மயிலு, அதே மாதிரி அறிமுகம் படுத்திக்கிட்டு உளுந்து கும்பிடும்மா!"
அகிலாவுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. மீண்டும் தன்னைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று பார்த்தாள்.
"தோ பாரு! அப்படியெல்லாம் பாக்காத! எவனும் வரமாட்டான். அதுக்கெல்லாம் காவல் வச்சிருக்கோம். நாங்க சொல்றத மாத்திரம் செஞ்சிரு. சீனியருக்கு மரியாத குடுத்திரு! அப்புறம் பாரு ஒனக்காக உயிரையே கொடுப்போம்!"
அந்த இளித்தவாய்ப் பரசுராமனைப் பார்த்தாள். "வணக்கம், என் பேர் அகிலா! கம்ப்யூட்டர் சயன்ஸ்!" என்றாள்.
கூட்டம் கைதட்டியது. "உளுந்து கும்பிடு!" என்றது.
விழுந்து கும்பிடும் கோமாளித் தனத்தைச் செய்ய வேண்டியதில்லை என்று அவளுக்குப் பட்டது. "அதான் வணக்கம் சொல்லிட்டேனே, அது போதும்!" என்றாள்
"நோ, நோ! நாங்க உளுந்து கும்பிடச் சொன்னா உளுந்துதான் கும்பிடணும்!"
பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
"பாத்தியா, மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இதுக்கு வேற வேல பண்ணனும்!"
கூடிக் குசுகுசுத்துக் கொண்டார்கள்.
"சரி, டே பரசுராமா! இப்ப இந்த மயிலு உன் காதலி! காதலிய எப்படிக் கொஞ்சுவ காட்டு பாக்கலாம்!"
காத்திருந்தவன் போல பரசுராமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவள் தாடைக்கு அருகில் கையைக் கொண்டு வந்து "என் கண்ணே!" என்றான்.
அவனைத் தொடவிடாமல் அவள் தலையைச் சடக்கென்று திருப்பினாள். கூட்டம் "ஹே" என்று கை தட்டியது.
உற்சாகம் வந்தவனைப் போல பரசுராமன் "என் அன்பே! ஏன் கோபம்?" என்று மேலும் வசனம் பேசினான்.
கூட்டம் மீண்டும் "ஹே" என்று கை தட்டியது. "நீ கை வைக்கிலியேன்னுதான் கோபம்!" என்றான் ஒருவன்.
"அப்ப கை வச்சர்ரா!"
பரசுராமன் தயங்கினான்.
"டேய் •பிரஷி! நீ கை வைக்கில, நாங்க ஒம்மேல வச்சிருவோம். இன்னக்கி ராத்திரி ஒன்ன "ரேப்" பண்ணாம விட்றதில்ல! பாத்துக்க!" கூட்டம் சிரிப்பும் கும்மாளமுமாய் கத்தியது.
குனிந்தவாறிருந்தாள். இந்தக் கூட்டத்திற்குத் தான் காட்சிப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும் ஆகிவிட்ட அவமானம் தாங்கவில்லை. கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு வந்தது. உள்ளத்தில் அவமானமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. "ஏன் வந்தோம் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு" என்ற வெறுப்பு திடீர் எனப் பரவியது. இந்த வளாகத்தைவிட்டே ஓடிவிட வேண்டும் என்ற நினைப்பு வந்தது. உடனே அலோர் ஸ்டாரில் தன் வீட்டின் பாதுகாப்புக்குள் சென்று புகுந்துவிட வேண்டும் என்று தோன்றியது. அம்மாவைப் போய்க் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
பரசுராமனைக் கூட்டம் உற்சாகப் படுத்தியது. அந்த உற்சாகத்தில் அவன் அவள் முதுகில் கைவைத்தான். மெதுவாகத்தான். ஆனால் ஆயிரம் புழுக்கள் ஊர்வதைப் போல இருந்தது.
"டேய், முன்ன பின்ன காதல் பண்ணியிருக்கியா! இதோ பாரு இப்படி!" இன்னொருவன் மின்னால் ஓடிவந்து அவள் தோள்களை அழுத்தித் தேய்த்துவிட்டு ஓடினான். தொட்ட இடம் பற்றி எரிந்தது.
கையில் கத்தி இருந்தால் ஒன்று அகிலா அவனைக் குத்தியிருப்பாள். அல்லது தன்னையே குத்திக் கொண்டிருப்பாள். குனிந்த தலையை அவள் நிமிர்த்தவில்லை. தரையையே பார்த்திருந்தாள். இந்த அசிங்கங்களைப் பார்க்க விரும்பவில்லை. தன் முகத்தை அவர்களுக்குக் காட்டி அவர்களைக் கௌரவப் படுத்த அவள் விரும்பவில்லை.
முன்னுதாரணம் பெற்ற உற்சாகத்தில் பரசுராமன் கையை இன்னும் அழுத்தமாக வைத்தான். தேய்த்தான். "என் அன்பே! என் மேல் கோபமா?" என்று வசனம் பேசினான்.
அகிலா முகத்தை மேலும் தரையை நோக்கித் தாழ்த்தினாள். உடல் எரிந்தது. மனம் கொதித்தது. கண்களில் கொதிநீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
"ஒரு முத்தம் குட்றா!" என்று ஒருவன் கத்தினான். அந்தச் சொற்கள் அகிலாவை ஈட்டியாய்க் குத்தின. இரண்டு கைகளையும் தூக்கி முகத்தைப் பொத்திக் கொண்டாள். பரசுராமனின் முகம் ஒரு தீய நச்சு மேகமாக அவள் முகத்தின் அருகில் வருவது நிழலாகத் தெரிந்தது. அவனுடைய மூச்சு அவள் கன்னத்தில் அனலாய்ப் பட்டது.
"டேய் முத்தம்னா என்னன்னு தெரியுமா, இடியட்? கன்னத்தில குடுத்தா தங்கச்சின்னு அர்த்தம். வாய்ல குடுத்தாத்தான் காதலி. தெரியுதா?" என்று ஒருவன் கத்தினான்.
பரசுராமன் முகம் குனிந்து தன் முகத்தை மூடியிருந்த கைகளுக்குக் கீழ் வந்தது தெரிந்தது. முகத்தைத் திருப்ப முயன்றாள். யாரோ தலையைப் பின்னால் அழுத்தமாகப் பிடித்திருந்தார்கள்.
"பளார்" என்ற சத்தம் கேட்டது. "ஐயோ" என்று பரசுராமன் கத்தியது கேட்டது. அவள் தலை நிமிர்ந்த போது பரசுராமன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்தான். ஓர் உறுதியான கை அகிலாவின் இடது கையைப் பற்றி இழுத்துத் தூக்கியது. "எழுந்திரு, போகலாம்!" என்ற குரல் கேட்டது.
அகிலா அதிர்ந்து எழுந்தாள். இடது கையில் புத்தகங்களை ஏந்திக் கொண்டு வலது கையால் அவளை இறுகப் பற்றித் தூக்கினான் அந்த அந்நிய ஆண்பிள்ளை.
கூட்டம் "ஏ" என்று ஏமாற்றம் தெரிவித்துக் கொண்டது.
"ஏய். நீ ஏண்டா இதில தலையிட்ற இதில?" என்று கேட்டான் ஒருவன்.
"ஏண்டா! நம்ம பொண்ணுங்களயே போட்டு இப்படி அனியாயம் பண்றிங்க! போய் யாராவது சீனப் பொண்ணு மலாய்க்காரப் பொண்ணுங்ககிட்ட ஒங்க வீரத்தக் காட்டிப் பாருங்களேன். எப்படி ஒத வாங்கிச் சாவப் போறிங்கன்னு தெரியும்!" அந்தப் புதியவன் உறுதியாகச் சொன்னான்.
"என்னப்பா ரொம்பதான் கோவிச்சிக்கிற! எல்லாம் ஒரு வேடிக்கைக்குத்தான! நம்ப •பிரஷியா வரும்போது நம்பள என்னல்லாம் பண்ணுனாங்க!"
"அப்ப ஒன்னோடு மனசு என்ன பாடு பட்டிச்சின்னு நினச்சிப் பாத்தியா? மலாய்க்கார சீன மாணவர்கள்ளாம் இந்த ரேகிங்க நிறுத்திட்டு அவங்கவங்க இன மாணவர்களுக்கு பாடக் குறிப்புகள் தயாரிச்சிக் குடுக்கிறாங்க. வழிகாட்டுறாங்க! உங்களுக்குத்தான் உங்க படிப்பிலும் அக்கற இல்ல, மத்தவங்க படிப்பையும் கெடுக்கிறிங்க!"
"ஆமா இவரு பெரிய அறிவாளி! போடா!" என்றான் ஒருவன்.
"போறேண்டா! உங்களோட எனக்கென்ன பேச்சு. நாளைக்கு இந்த விஷயம் கெசலாமாத்தானுக்கு (பாதுகாப்புத் துறை) போச்சின்னா அப்ப சாட்சி சொல்ல நான் வருவேன். அப்ப "போடா"ன்னு என் மொகத்தப் பாத்து சொல்லு பார்க்கலாம்"
கூட்டம் ஆத்திரத்தில் பொருமிக்கொண்டு அடங்கியிருந்தது.
அந்தப் புதியவன் பரசுராமனைப் பார்த்தான். "ஏய்! நீ எந்திருச்சி ஓடு" என்றான். பரசுராமன் தன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோமென ஓடினான்.
பற்றிய கையைத் தளரவிடாமல் அவளை இழுத்துக் கொண்டு கேன்டீனை நோக்கி நடந்தான் அவன். ஆபத்து நீங்கி விட்டது போலத் தோன்றினாலும் அவள் நெஞ்சு ஒரு புறாவின் நெஞ்சைப் போல படபடத்துக்கொண்டிருந்தது.
"நீங்க எந்த தேசா?" என்று கேட்டான். "தேசா கெமிலாங்" என்று பெயர் சொன்னாள்.
"வாங்க போலாம்!" என்று அவள் கையை விட்டு விட்டு ஆதரவாகப் பக்கத்தில் நடந்தான்.
இவன் எப்படி என்று தெரியவில்லை. கொதிக்கும் எண்ணெயிலிருந்து கொள்ளிக்கட்டையில் விழுந்து விட்டேனோ என்று சந்தேகத்தோடு நடந்தாள். எப்படியும் இந்தத் தருணத்துக்கு அவன் நல்லவனாக இருந்தான். உறுதியாக நடந்தான். உயரமாக இருந்தான். முகத்தைச் சரியாக ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. பயமும் நடுக்கமும் அடங்கவில்லை.
"எப்படி இவங்ககிட்ட மாட்டினிங்க?" அவன் கேட்டான்.
"ராஜன்னு ஒரு பையன். கம்ப்யூட்டர் கிளாசில பாத்தேன். அவரு பேசிக்கிட்டே இங்க கொண்டு போயிட்டாரு!"
"ஓ ராஜனா? ரொம்ப கெட்டவன். "காராட்" கேங்னு ஒரு கேங் வச்சிருக்கானுங்க. நம்ப தமிழ்ப் பையன்களுக்கே அவமானம். ஒரு வாரத்துக்கு எங்க போனாலும் உங்க •பிரஷி தோழிகளோட போங்க. சீனியர்ஸ் கூட அதிகம் சேர வேணாம். இப்படித்தான் நடிச்சி ஏமாத்துவானுங்க!" என்றான்.
"அவரு சீனியர்னு தெரியாது! எங்கிட்ட மொதல்ல சொல்லல "
கெமிலாங் அருகில் வந்ததும் "ஓக்கே! நீங்க போகலாம்!" என்று திரும்பி நடந்தான்.
ஓட்டமும் நடையுமாக தன் அறையை அடைந்தாள் அகிலா. படுக்கையில் விழுந்தாள். பொருமிப் பொருமி அழுதாள்.
அறைத் தோழி ஜெசிக்கா இருந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவள் வந்து தோளைத் தடவி "என்ன நடந்தது அகிலா?" என்று கேட்டாள்.
***
அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம் ஆண்டு அவன் முன் பூதாகாரமாக இருந்தது. புதிய பாடங்கள் தொடங்கவிருக்கின்றன.
அவன் சிறப்புத் துறையாக எடுத்துக் கொண்ட வர்த்தக நிர்வாகத் துறையில் கால அட்டவணை தாமதமாகத்தான் வந்தது. அப்படி வந்தும் பாடங்களின் நேரத்தை விரிவுரையாளர்கள் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பதிவுக்காக அவன் மேலும் கீழும் அலைய வேண்டியதாயிற்று. அலைந்தும் அவன் விரும்பிய முக்கியமான இரண்டு பாடங்களில் பெயர் பதிந்து கொள்ள முடியவில்லை. இணைப் பேராசிரியர் டாக்டர் சீத்தாராமன் நடத்தும் கணக்கியல் வகுப்பின் விரிவுரை நேரங்கள் மற்றொரு பாடத்தோடு மோதின. அவருடைய வகுப்பு அவனுக்குப் பிடிக்கும். இந்தியாவிலிருந்து வந்த அனுபவமிக்க விரிவுரையாளர். சுவையாகப் பேசுவார். மனமில்லாமல் அந்தப் பாடத்தை அடுத்த பருவத்துக்குத் தள்ளிப் போட்டுவிட்டான். மேலும் ஒரு பாடமும் துணை (மைனர்) பாடமான பொருளாதாரத்தோடு ஒத்துவரவில்லை. பொருளாதாரப் பாடமான அனைத்துலகப் பொருளாதாரம் பாடத்தை இந்த பருவத்தில் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மைனர் யூனிட்டுகளை நிறைவு செய்ய முடியாது.
புறப்பாடங்கள், கட்டாய பாடமான பஹாசா மலேசியா இவற்றுக்கும் பதிவு குழப்பமானதாக இருந்தது. அந்த ஆண்டில்தான் முதன் முறையாக விரிவுரையாளர்கள் நேரடியாகக் கணினியில் பதிவு செய்யும் முறையை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்த வேலை மிக மெதுவாக நடந்தது. பாதி விரிவுரையாளர்களுக்கு கணினியை சரியாக இயக்கத் தெரியவில்லை. தவறான விசைகளைத் தட்டி இருந்த "டேட்டா"வையெல்லாம் அழித்துவிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். மத்திய கணினியும் சோம்பேறித்தனமாக இயங்கியது. நேரம் நீண்டது. பதிவுக்காகக் காத்திருந்த மாணவர்கள் வரிசையும் ஆங்காங்கே நீண்டு நீண்டு நின்றது.
இந்த ஆண்டு ப்ரொஜக்ட், பரொஜக்ட் என்று நிறைய வேலை கொடுத்துக் கொல்லப் போகிறார்கள். இந்த ஆண்டில் செயல்முறைப் பயிற்சியும் இருக்கிறது. எந்த நிறுவனத்துக்கு அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையே அவன் பொறுப்பிலிருக்கும் மாணவர் சங்கங்கள் இந்த ஆண்டில் இரண்டு மூன்று தேசிய அளவிலான திட்டங்களை ஏற்பாடு செய்ய அவனை ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தன. பருவத்தின் தொடக்கத்தில் "கெர்த்தாஸ் கெர்ஜா" (திட்டத் தாள்) விரிவாக எழுதி மாணவர் விவகாரங்களின் உதவித் துணை வேந்தருக்கு சமர்ப்பித்து அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் அந்தத் திட்டங்கள் தொடங்கப்படும். அந்தத் தாள்களை தயார் செய்யும் வேலை தன் தலையில் ஒரு பகுதியாவது விழும் என அவனுக்குத் தோன்றியது. சென்ற ஆண்டு இறுதியில் பரிட்சை முடிந்து விடுமுறைக்குப் புறப்பட்ட போதே இரண்டு மாணவர் சங்கங்களின் தலைவர்கள் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள்.
ஆனால் அவன் இந்த வாரம் புதிய பருவத்திற்கு யுஎஸ்எம் வளாகத்திற்குள் வந்ததும் அவனுக்குப் புதிய கவலைகள் காத்திருந்தன. மாணவர் விவகாரப் பிரிவில் உதவிப் பதிவாளராகவும் இந்திய மாணவர்கள் நலனுக்குப் பொறுப்பாகவும் இருந்த முத்துராமன் முதல் நாளே அவன் "பர்ஸரி"யில் அந்தப் பருவக் கட்டணம் செலுத்த வந்திருந்த போது அவனைப் பார்த்தார். அவனைத் தனியே அழைத்தார்.
"கணேசன், இந்த வருஷமும் நம்ப பையங்க ரேகிங் ஆரம்பிப்பாங்க போல இருக்கு. துணைவேந்தர் எவ்வளவோ எச்சரிக்கை குடுத்திருந்தும் நம்ப பசங்க அதுக்குச் சவால் விட்ற மாதிரி நடந்துக்கிறாங்க. புதிய இந்திய மாணவர்கள் ரொம்ப பயந்திருக்காங்க. பல பெற்றோர்கள் வேற எங்கிட்ட வந்து பிள்ளைங்க பத்திரமா இருப்பாங்களான்னு திரும்பத் திரும்ப கேக்கிறாங்க. உன்னைப் போல சீனியர் மாணவர்கள்தான் இதைத் தடுக்க முடியும். ஒரு கண்ணு வச்சிரு. ஏதாச்சும் நடந்தா எங்கிட்ட வந்து சொல்லு" என்று சொல்லிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க அவசரமாக நகர்ந்து விட்டார்.
முதல் நாளிலிருந்து ஒரு சிறிய மாணவர் குழு ரேகிங்கிற்குத் தயாராகி வருகிறது என்பதை கணேசன் கேள்விப் பட்டிருந்தான். எத்தனை கடுமையான காவல்கள் போட்டிருந்தாலும் எண்ணாயிரம் மாணவர்கள் அலையும் இந்த வளாகத்தை எத்தனை அதிகாரிகள் இருந்தாலும் கண்காணிக்க முடியாது. புதிய பழைய மாணவர்களைப் பிரித்து வைக்கவும் முடியாது. அவர்கள் கலந்து பழக அனுமதிக்க வேண்டும். அது முக்கியம். அப்போதுதான் சகோதரத்துவம் வளரும். ஆனால் அதைப் பயன் படுத்திக் கொண்டு சொந்தச் சகோதரர்களை எல்லை மீறி எள்ளுவதும் அசிங்கமாக நடத்துவதும் சில சீனியர் மாணவர்களுக்கு விகாரமான விளையாட்டாக இருந்தது.
அந்தச் சூழ்நிலையில்தான் அந்த இரண்டாம் நாள் சில ஓநாய்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் ஆட்டுக் குட்டிகளாக அகப்பட்டுக் கொண்டு அவதிப்பட்டதை அவன் பார்த்தான்.
இந்த மாணவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை. அந்தப் பெண்ணை இந்த முரடர்களிடமிருந்து காப்பாற்றி அவளை விடுதியில் கொண்டு விட்டு வந்தது முதல் அவன் சிந்தனை இந்த மாணவர்களையும் அவர்களின் அட்டகாசத்தில் பயந்து மருண்டு கலங்கிப் போயிருந்த பெண்ணைப் பற்றியுமே மாறி மாறிச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயரைக் கூட அவன் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவள் இருந்த பயத்தில் தன்னைப் பார்த்தாலும் அவளை மானபங்கம் செய்ய வந்திருக்கும் முரடன் போலத்தான் தெரிந்திருக்கும். ஆகவேதான் அவளிடம் அவன் அதிகம் பேசவில்லை. அவளைப் பாதுகாப்பாக அவளுடைய தேசாவில் சென்று விட்டு விடுவதே முக்கியமாகப் பட்டது.
ஏன் இந்த மாணவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? அவர்கள் வளர்ப்பில் உள்ள குற்றமா? அவர்கள் படிப்பில் உள்ள குறைபாடுகளா? அவர்கள் சமுதாயப் பின்னணி அப்படிப் பட்டதா? ஏன் சமுதாய, பல்கலைக் கழகப் பண்பாடுகளுக்கு அந்நியமாக இருக்கிறார்கள்?
இந்த மாணவர்கள் எல்லாம் அவனுக்கு அறிமுகமானவர்கள்தாம். எல்லாரும் இடை நிலைப்பள்ளிக் கூடங்களில் நல்ல தேர்வெண்கள் வாங்கியவர்கள். எஸ்டிபிஎம் என்னும் இடைநிலைப் பள்ளிக்குப் பிந்திய தேர்விலும் தேர்வு பெற்று பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றவர்கள். சிலர் வேண்டுமானால் அரசாங்கம் விதிக்கும் கோட்டா முறையினால் குறைந்த மதிப்பெண்கள் இருந்தாலும் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றிருக்கலாம். அறிவியல் துறையில் இந்த மாதிரிக் குறைந்த மதிப்பெண்களுடன் வந்து இடம் பெற்றுள்ள சில மாணவர்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் மற்றவர்கள் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்று போட்டியில் வென்று வந்த புத்திசாலி மாணவர்கள்தான். ஆண்டுக்கு ஆண்டு பள்ளிக்கூடங்களிலிருந்து உதிர்ந்து விடும் மற்ற சோதா இந்திய மாணவர்களைப் போன்றவர்கள் அல்ல.
ஆனால் அவர்கள் படிப்பில் உள்ள அந்தப் புத்திசாலித் தனத்தை அவர்கள் பேச்சிலோ நடத்தையிலோ காண முடியவில்லை. உண்மையில் இடைநிலைப் பள்ளிக் கூடங்களில் இருந்த அவர்களுடைய படிப்பு அக்கறை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தவுடன் அடியோடு குறைந்து விட்டது போலிருந்தது. புதிதாகத் தங்கள் குடும்பங்களிலிருந்து கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் முற்றாக வீணடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
அவர்களின் குடும்ப வளர்ப்பு, குடும்பக் கலாச்சாரம் எப்படி இருக்கும் என்பதையும் கணேசனால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டேயிருக்க ஆசைப் படுகிறார்கள். கேன்டீனில் மரத்தடியில் புல்வெளிகளில் என்னேரமும் கூடியிருப்பார்கள். சத்தமாகப் பேசுவார்கள். சத்தமாகச் சிரிப்பார்கள். மற்ற இன மாணவர்கள் வேடிக்கை பார்த்து சுட்டிக் காட்டிச் சிரிக்குமளவுக்குப் பேசுவார்கள். மாலையில் இரவில் நள்ளிரவிலும் இவர்கள் கூடிப் பேசுவதைக் காணலாம்.
கணேசன் ஆரம்ப காலத்தில் இவர்களோடு இருந்திருக்கிறான். பல்கலைக் கழகத்தில் சேர்ந்த புதிதில் கலாச்சாரத் தாகத்தோடு தமிழ் மாணவர்கள் என்ற சகோதர பாசத்தோடு அவர்களிடம் சேர்ந்திருக்கிறான். ஆனால் போகப்போக அவர்களுடைய கலாச்சாரம் அவனுக்கு அந்நியமானதாகத் தெரிந்தது. அதிலுள்ள கொச்சைத் தனத்தை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தமிழ்ப் பேச்சு என்றாலும் முற்றாகக் கொச்சையாக இருக்கும். நிறைய மலாய் வார்த்தைகள் இருக்கும்."ஆமாலா, இல்லைலா" என்று ஏராளமாக "லா" போட்டுப் பேசுவார்கள். பேசும் விஷயம் எல்லாம் "குட்டிகள்", சினிமாவில் வரும் காமாந்தகாரங்கள், மற்றவர்களைப் பற்றிய வம்பளப்பு. இதற்கிடையே "தமிளன்" "தமிளன்" என்ற பெருமித உணர்வும் சகோதர பாசமும் குறையாமல் வழியும். ஆனால் இதே கூட்டம் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தங்கள் தமிழ்ச் சகோதரிகளை வம்புக்கிழுக்கவும் கேலி கிண்டல் செய்யவும் தயங்குவதில்லை. இந்த சகோதர பாசம் கூட்டமாக சிகிரெட் பிடிப்பது, பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியில் உள்ள காப்பிக் கடையில் உட்கார்ந்து பீர் குடிப்பது என்று பொங்கி வழிந்தது.
கணேசன் மெதுமெதுவாக அவர்களிடமிருந்து விலகிவிட்டான். இதே பல்கலைக் கழகத்தில் முறையான இன, மொழி உணர்வோடு ஒரு சிறிய குழு இருந்தது. அவர்கள் இந்திய பண்பாட்டுச் கழகத்தில் இணைந்து கலை விழாக்களும் சமய விழாக்களும் நடத்தினார்கள். மாணவர்களுக்குக் கடனுதவி வழங்க நிதி திரட்டினார்கள். ஆண்டுக்கு ஒரு முறை தோட்டப்புறங்களுக்குச் சென்று தங்கி சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களில் தமிழ் நன்றாகத் தெரிந்த ஒரு குழு பேச்சுப் போட்டிகள், தமிழ் வகுப்பு என நடத்தியது. கணேசன் அவர்களோடு ஒன்றாக இருந்தான். சென்ற ஆண்டிலிருந்து அந்தச் சங்கத்துக்கு துணைத் தலைவராகவும் இருக்கிறான்.
அவனுடைய நிர்வாகத்துறை சிறப்புப் பாடம் மிகக் கடுமையாக இருந்தாலும் மாணவர் சங்க நடவடிக்கைகளை அவன் புறக்கணிப்பதில்லை. "ஐசெக்" என்ற பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் அக்கறையுள்ள அனைத்துலக மாணவர் சங்கத்தின் பல்கலைக் கழக கிளையில் பொருளாளராக இருந்தான். இதனால் அனைத்துலக மாணவர் சங்கங்களில் உள்ள மாணவர்களை அறிமுகப் படுத்திக்கொள்ள முடிந்தது.
அவனுக்கு நீச்சல் சிறுவயதிலிருந்தே தெரியும். ஆகவே நீச்சல் குளத்து உயிர் காப்புச் சங்கத்திலும் இடம் பெற்று அந்த சங்கத்தின் செயலாளராகவும் இருந்தான். இந்த நடவடிக்கைகளினால் புள்ளிகள் அதிகம் பெற்று இந்த மூன்று ஆண்டுகளிலும் விடுதியில் தங்க அவனுக்குத் தொடர்ந்து இடம் கிடைத்தது.
இந்த தறுதலை மாணவர்கள் இந்திய பண்பாட்டுக் கழகத்திடம் சேருவதில்லை. ஆனால் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து கூச்சலிட்டுக் கலாட்டா செய்வார்கள். கேலி செய்வார்கள். கெட்ட வார்த்தைகளைக் கூவிவிட்டு ஒளிந்து கொள்வார்கள். இதனால் இந்த இரு குழுக்களிடையே அடிநாதமாக ஒரு பகைமை உணர்வு பரவிக்கொண்டே வந்தது.
இந்தப் பகைமையின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தங்களுக்குள் ஒரு ரகசியச் சங்கம் அமைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் கிளம்பியது. தங்களை "காராட் கேங்" என்று அழைத்துக் கொண்டார்கள். அவர்கள் அடையாளமாக ஒரு காதில் கடுக்கண் அணிந்து கொண்டார்கள். தலையை மொட்டையாக வெட்டிக் கொண்டார்கள்.
பல்கலைக் கழகம் இவர்களைக் கவனித்துக் கொண்டு வந்தது. ஆனால் எல்லாவற்றையும் ரகசியமாகச் செய்வதில் இவர்கள் திறமை சாலிகளாக இருந்தார்கள். இவர்களை நேரடியாகக் கேட்டால் இப்படி ஒரு கூட்டம் இருப்பதை இவர்கள் உறுதியாக மறுத்து விடுவார்கள்.
இப்படி ஒரு ரகசியச் சங்கம் இருப்பது பற்றித் தான் கேள்விப் பட்டிருப்பதை மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் சில சமயம் இந்தியப் பண்பாட்டுக் கழக மாணவ அலுவலர்களிடம் பேசி எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் ஆலோசனை எதையும் இந்த மாணவர்கள் கேட்கும் நிலையில் இல்லை என்பதை அதன் நடப்பாண்டுத் தலைவர் உதவித் துணை வேந்தரிடம் விளக்கி விட்டார்.
காராட் கேங்கின் அட்டகாசம் கடந்த ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கையின் போது உச்ச கட்டத்தை எட்டியது. பல்கலைக் கழகம் இந்த நடவடிக்கையை முற்றாகத் தடை செய்திருந்தாலும் மாணவர்களை ஆங்காங்கே ரேகிங் செய்கிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணமிருந்தன. குறிப்பாக இந்திய மாணவர்கள் மட்டுமே தீவிரமான ரேகிங்கில் ஈடுபடுவதாகவும் அதற்குப் பலியாகுபவர்களும் இந்திய மாணவர்களே என்றும் தெரிந்தது. இந்த ரேகிங்கினால் வதை பட்ட மாணவர்கள் பயத்தினால் வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். அதைத் தெரிந்திருந்த சீனியர் மாணவர்களும் இந்திய இனப் பற்றின் காரணமாக குற்றம் செய்தவர்களை மூடி மறைத்தார்கள். காராட் கேங் என்பது இந்திய மாணவர்களின் மனதில் திகிலை எழுப்பும் விஷயமாக வளர்ந்து விட்டிருந்தது.
போன ஆண்டில் இந்திய மாணவர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் முருகேசு இந்திய மாணவர்கள் இப்படிச் செய்வதை ஆத்திரத்துடன் கண்டித்துப் பேசினார்.
"இந்த காராட் கேங் மாணவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் திருந்துபவர்கள் அல்ல. வெளிப்படையாக சமுதாயத்தைப் பகைத்துக் கொள்ளுவது அவர்களுக்குப் பெருமையான செயலாக இருக்கிறது. ஆகவே இப்படியெல்லாம் செய்வார்கள் என்பது எதிர் பார்க்கப் பட்டதுதான். ஆனால் இவர்களை இந்தியர் என்ற இனப்பற்றுடன் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களே, நீங்கள்தான் கண்டிக்கத் தக்கவர்கள். இவர்கள் நம் இனமாக இருக்கலாம். ஆனால் நம் இனத்தின் விஷ வித்துக்கள். கோடரிக் காம்புகள். இவர்களை களையெடுக்காவிட்டால் நம் இனம் தழைக்காது. ஆகவே ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
"புதிய மாணவர்கள் இவர்களுக்கு பயந்து பயந்து சாக வேண்டாம். தமிழர்களின் வீரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால் உண்மை வாழ்க்கையில் படு கோழைகளாக இருக்கிறோம்.
- "பாதகம் செய்பவரைக் கண்டால், - நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!"
ஆனால் காராட் கேங்கின் அக்கிரமங்கள் இந்த ஆண்டிலும் நீடித்துள்ளன. அதிகாரிகள் பலவிதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அவர்கள் செயல்கள் குறைந்த மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு அந்த அப்பாவிப் பெண்ணும் பையனும் மாட்டிக் கொண்டார்கள். அந்தப் பெண்ணின் அழகிய பயந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்தப் பையன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய காட்சியும் நினைவுக்கு வந்தது. சிரித்துக் கொண்டான்.
உறக்கம் வருவதுபோல இருந்தது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விளக்கை அணைக்க அவன் எழுந்த போது அவன் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்தான். கதவின் முன்னால் ராஜன் நின்றிருந்தான். இவன் ஏன் இந்த நேரத்தில்... அறையைத் தேடி..?
என்ன என்பது போல் அவனைப் பார்த்தான் கணேசன்.
"கீழ வா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் ராஜன்.
"என்ன பேசவேண்டியிருக்கு இந்த நடு ராத்திரியில?" என்று கேட்டான் கணேசன்.
"கீழ வா தெரியும்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று இறங்கிப் போனான் ராஜன்.
இது நல்லதற்கா கெட்டதற்கா என்று தெரியவில்லை. ஆனால் இறங்கி என்னதான் என்று பார்த்து விடுவோமே என்று சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனான்.
வரவேற்பறை விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் இருந்தது. பெரும்பாலும் காலியாகவே இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்தவாறு இரண்டு மூன்று மாணவர்கள் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிச்சம் மட்டுமே அந்த அறையை மங்கலாக ஒளிப்படுத்திக் கொண்டிருந்தது. தூரமூலையில் நான்கு இந்தியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களாகத்தான் இருக்க வேண்டுமென கணேசன் அவர்களை நோக்கிப் போனான்.
ராஜன் அங்கிருந்தான். காராட் கேங்கைச் சேர்ந்த இன்னொரு மாணவன் இருந்தான். கணேசன் அவனைப் பார்த்திருக்கிறான். அவன் பெயர் தெரியவில்லை. மற்ற இரண்டு பேர்கள் புதியவர்கள். முகத்திலும் உடையிலுமிருந்து வெளியாட்கள் போலத் தெரிந்தது. அவர்கள் முறைப்பிலிருந்து இவர்கள் நட்போடு வரவில்லை எனத் தெரிந்தது.
ராஜன் எழுந்து நின்றான். அடுத்தவர்களுக்குக் கேட்காத தணிந்த குரலில் "கணேசன். இன்னைக்கு என்னை "மாலு" (அவமானம்) பண்ணிட்ட இல்ல! அதுக்காக ஒன்ன எச்சரிச்சிட்டுப் போகத்தான் வந்தோம்!" என்றான்.
கணேசனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. குற்றத்தையும் செய்து விட்டு இத்தனை தைரியமாகப் பேசுகிறானே! "நீ செஞ்ச அநியாயத்துக்கு எச்சரிக்கை எனக்கா ராஜன்? இவங்க யாரு?" என்று புதியவர்களைக் காட்டிக் கேட்டான்.
புதியவர்களில் ஒருத்தன் எழுந்து வந்து கணேசனின் தோளில் கைவைத்தான். "இதோ பாரு பிரதர்! நாங்க யாரு தெரியுமா? ஆறு சீட்டு கேங் கேள்விப் பட்டிருக்கியா! நாங்கதான்."
கணேசன் கேள்விப்பட்டிருக்கிறான். பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே உள்ள சுங்கை டுவா பகுதியில் இயங்கிவரும் ஒரு ரகசியக் கும்பல். வெட்டுக்கும் குத்துக்கும் அஞ்சாத கும்பல். இவர்கள் எப்படி பல்கலைக் கழகத்தின் வளாகத்துக்குள் வந்தார்கள்?
"தோ பாரு! இந்த ராஜன் என்னோட தம்பி மாதிரி. அவங்ககிட்ட ராங்கி பண்ணாத. நம்பள்ளாம் தமிளங்க இல்ல? ஒத்துமையா இருக்கணும். அவன பத்தி நீ ஏதாவது மேல போய் சொன்ன, உனக்கு அது நல்லதில்ல!"
தொலைக்காட்சிப் பெட்டியின் இருண்டும் பிரகாசித்தும் வரும் ஒளியில் அந்த ஆளின் முகம் ஒரு அசல் தமிழ்ப்பட வில்லன் முகம் போல் இருந்தது. கணேசனுக்கு ஆத்திரம் புரண்டு கொண்டு வந்தது. கத்தி உதவிக்கு ஆட்களைக் கூப்பிடலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில். அவர்கள் போவதற்கு எழுந்து விட்டார்கள்.
அந்த முரடன் வந்து கணேசனின் நெஞ்சில் கைவைத்தான். லேசாக அழுத்தினான்
"ஒத்துமையா போயிடு பிரதர். தமிளனுக்குத் தமிளன் சண்ட வேணாம். ஒரு தடவதான் வார்னிங். அடுத்த தடவ பாராங்கோ, ஆசிட்டோ சொல்ல முடியாது. வௌங்குதா?"
எழுந்தார்கள். மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உதைத்து ஸ்டார்ட் பண்ணி சத்தமாக வெளியேறினார்கள். இருளில் வந்து இருளிலேயே உட்கார்ந்து கட்டைக் குரலில் பேசிவிட்டு இருளோடு கலந்து மறைந்தார்கள்.
கணேசன் கொஞ்ச நேரம் அங்கிருந்த சோபாவில் அதிர்ந்து உட்கார்ந்து விட்டான்.
முதலில் ஆத்திரம்தான் பொங்கிப் பொங்கி வந்தது. வெளியிலுள்ள குண்டர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்? அப்படித் திருட்டுத் தனமாக வந்தவர்கள் துளியும் பயமில்லாமல் ஒரு மாணவனை மிரட்டுவதா? அதற்குப் பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்களே துணையா? இந்த ராஜன் தன் நெஞ்சில் இத்தனை தைரியம் கொண்டிருக்கிறானா?
அப்புறம் பயம் வந்தது. இவ்வளவு தூரம் வந்தவர்கள் இனி தீமை செய்யத் தயங்குவார்களா? சொன்னது போல இருட்டில் தன்னை அரிவாளால் வெட்டவோ, முகத்தில் அமிலம் ஊத்துவதற்கோ தயங்குவார்களா? போலிசுக்கே பயப்படாதவர்கள் இந்தப் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கா பயப்படுவார்கள்?
இதுவரை இந்த பல்கலைக் கழக மாணவர்களின் ரகசியக் கும்பல் நடவடிக்கைகள் கேலியும் கிண்டலும் பேச்சும் குடியும் என்ற அளவில் எரிச்சலூட்டுவதாக மட்டிலும்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் அது வெறும் எரிச்சலாக இல்லாமல் வன்செயலின் எல்லையைத் தொட்டுவிட்டது.
தனக்கு இந்தச் சண்டையெல்லாம் தேவைதானா? படிக்க வந்தவன் மற்றவர்கள் யார் எப்படிப் போனால் என்ன என்று தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போனால் நல்லதில்லையா?
இல்லை என்று சொல்லிக் கொண்டான். பேராசிரியர் முருகேசு சொன்னது சரிதான். இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர்களிடையே நச்சுக் கன்றுகள் துளிர்த்துள்ளன. இவற்றை இப்போதே களையா விட்டால் இவை வளர்ந்து வேர் பிடித்து விடும். ஏற்கனவே தமிழ்ச் சமுதாயத்தின் அடிப் பகுதிகளில் இவ்வாறான அவலங்கள் தோன்றியிருப்பதற்கு மொத்தமாகச் சமுதாயத்தின் அக்கறையின்மைதான் காரணம். அது போல இந்தப் பல்கலைக் கழகத்துக்கு உள்ளும் நடக்க அனுமதிக்கக் கூடாது.
மற்ற இன மாணவர்கள் அறிவுத் தெளிவு பெற்று ரேகிங் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு தங்கள் இனப் புதிய மாணவர்களுக்கு கல்வி, புறப்பாட நடவடிக்கைகளுக்கு ஆக்கரமான வழிகாட்டிகளாக மாறிவிட்ட பிறகு இந்திய மாணவர்கள் மட்டும் இப்படி வெறி பிடித்துத் திரிவது ஏற்கனவே பல்கலைக் கழக மாணவர்களிடையே அவமானப் பேச்சாகி விட்டது. இந்த நிலையில் ரகசியச் சங்க நடவடிக்கைகள் வெளியார் கும்பல்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் இந்த இனத்திற்கு ஏற்படும் அவமானத்தை இரத்தம் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டி வரும். இதை அனுமதிக்கக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிக் கவலையில்லை. மாணவர்களின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.
உண்மையில் இன்று காலை நடந்த சம்பவத்தைப் பற்றி பல்கலைக் கழக அதிகாரிகளிடம் அவன் முறையீடு செய்ய மனமில்லாமல் இருந்தான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோ பையனோ முறையீடு செய்தால் அவர்களுக்காகச் சாட்சி சொல்லத் தயாராக இருந்தான். ஆனால் தானாகச் சென்று முறையீடு செய்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போடவேண்டாமென்று இருந்தான். ஆனால் இப்போது ராஜன் எல்லை மீறிவிட்டான். தன்னை நேரடியாக மிரட்டி என்னையே பாதிக்கப் பட்டவனாக ஆக்கிவிட்டான்
"மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்று பேராசிரியர் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன. உமிழத்தான் வேண்டும். அந்த ஒரு மொழி மட்டுமே அவர்களுக்குப் புரியும் என்று தோன்றியது. நான் எச்சில் உமிழாவிட்டால் அவர்கள் என் முகத்தில் அமிலம் உமிழ்வார்கள்.
மணியைப் பார்த்தான். இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நேரத்தில் போய் விடுதியின் பெங்காவாவையோ பாதுகாப்பு அதிகாரிகளையோ தொந்திரவு செய்ய வேண்டாமென நினைத்தான். நாளைக் காலையில் முதல் வேலையாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த தள்ளிப் போடும் முடிவு பெரிய இக்கட்டில் கொண்டு விடப் போகிறது என அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
***
காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி
அண்ணாந்து பார்த்தால் இந்தக் கட்டடம் தெரியும். ஒரு பிரம்மாண்டமான மழை மரத்தின் கிளைகள் கூரையை வருடியிருக்கும் மேட்டில் அது இருந்தது.
அவன் இந்தக் கட்டடத்திற்குள் பலமுறை வந்திருக்கிறான். பாதுகாப்பு அலுவலகத் தலைவர் ரித்வான் அஹ்மாட்டை அவனுக்குத் தெரியும். மாணவர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போதெல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அவனும் அவன் சக நண்பர்களும் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.
தனது மோட்டார் சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு உள்ளே போனான். காலையில் நடந்த அந்த ரேகிங் விவகாரத்தையும் இரவில் ராஜனும் அவன் கும்பலும் வந்து மிரட்டியதையும் அவரிடம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சில குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தான்.
வரவேற்புக் கௌன்டரைக் கடந்து சென்று ரித்வான் அஹ்மட் என்று பெயர் எழுதப் பட்டிருந்த கதவைத் தட்டினான். "மாசோக்" (உள்ளே வா) என்ற குரல் கேட்டு கதவைத் திறந்து நுழைந்தான்.
ரித்வான் தன் மேசையில் ஒரு கோப்புடன் தயாராக உட்கார்ந்திருந்தார்.
"சிலாமட் பகி (காலை வணக்கம்) சே ரித்வான்" என்றான்
ஒன்றும் சொல்லாமல் இருக்கையைக் காட்டினார். உட்கார்ந்தான். அவர் கோப்பைப் பார்த்துக் கொண்டே பேசினார்.
"கணேசன், இந்த ஆண்டில் இந்திய மாணவர்களின் ரேகிங் நடவடிக்கையை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறோம். இதைக் கண்டிப்பாக ஒழித்து விட வேண்டும் என்பது எங்கள் நோக்கம். துணை வேந்தரும் இதைப் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்."
"மிக நல்லது சே ரித்வான். அப்படித்தான் செய்ய வேண்டும்."
கோப்பிலிருந்து தலை தூக்கி அவனைப் பார்த்தார். "ஆனால் நீயே இப்படிப் பண்ணுவாய் என நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!"
கொஞ்சம் திகைத்தான். தான் உடனடியாக வராமல் காலந் தாழ்த்தி வந்ததால் கோபமுற்றிருக்கிறாரோ என நினைத்தான். "நான் நேற்றே வந்து முறையீடு செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டான்.
"நீ என்ன முறையீடு செய்வது? இங்கே உன்னைப் பற்றித்தான் முறையீடு வந்திருக்கிறது. நீதான் பதில் சொல்ல வேண்டும்!" என்றார்.
அதிர்ச்சியடைந்தான். "என்னைப் பற்றி முறையீடா? விளங்கவில்லையே!"
"நீ நேற்று காலையில் ஒரு முதலாண்டு மாணவனை ரேக் பண்ணியதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் இங்கே முறையீடு வந்திருக்கிறது!" என்று கோப்பைக் காட்டிச் சொன்னார்.
விஷயம் விளங்குவதற்கு அவனுக்கு ஒரு நிமிடம் பிடித்தது. அந்தப் பெண்ணைத் தற்காப்பதற்காக அந்த மாணவனை அறைந்து தள்ளப் போய் அது தன் மேல் குற்றமாக உருவெடுத்திருக்கிறது. தீமை செய்தவர்கள் முந்திக்கொண்டதால் தானே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியதாகிவிட்டது.
வாயடைத்துப் போயிருந்தவனைப் பார்த்து ரித்வான் கேட்டார். "நீ இதற்கு என்ன சொல்கிறாய் கணேசன்? உன் வாதத்தையும் கேட்டுவிட்டுத்தான் இதை நான் மாணவர் விவகாரப் பிரிவு உதவித் துணை வேந்தருக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.
"சே ரித்வான்! நான் குற்றவாளியல்ல. ஒரு முதலாண்டுப் பெண்ணையும் ஒரு முதலாண்டுப் பையனையும் ஒரு சீனியர் மாணவர் கும்பல் பிடித்து ரேக் செய்து கொண்டிருந்தது. அந்தப் பையனை அந்தப் பெண்ணிடம் அசிங்கமான முறையில் நடந்து கொள்ள வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றத்தான் அந்தப் பையனை அறைந்து தள்ளிவிட்டு பெண்ணைக் கொண்டு போய் அவள் விடுதியில் விட்டு வந்தேன்! நீங்கள் அந்த புதிய மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்துப் பார்க்கலாம்! இதை யாரோ திரித்துக் கூறியிருக்கிறார்கள்" என்றான்.
"யாரோ அல்ல! பரசுராமன் என்ற அந்தப் புதிய மாணவனே முறையீடு செய்திருக்கிறான். அதற்கு சீனியர் மாணவர்கள் இருவர் சாட்சியும் உண்டு!"
மீண்டும் திகைப்பாக இருந்தது. ஒரு சுண்டெலியைப் போல எழுந்து ஓடிய அந்த மாணவனா முன்வந்து முறையீடு செய்திருக்கிறான்? பரசுராமனை எப்படியோ வற்புறுத்தி இப்படிச் செய்ய வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. "சே ரித்வான். இது பொய்க் குற்றச்சாட்டு!" என்றான்.
"நீ சொல்வது உண்மையானால் இந்த ரேகிங் பற்றி நீ ஏன் முதலில் வந்து எங்களிடம் முறையீடு செய்யவில்லை?" என்று கேட்டார்.
ஏன் செய்யவில்லை? தன்னையே கேட்டுக் கொண்டான். நல்லெண்ணத்தினால் செய்யவில்லை. சக இந்திய மாணவனுக்குத் தொந்திரவு விளையுமே என்றுதான் சொல்லவில்லை. ராஜனும் அவன் நண்பர்களும் என்னதான் முரடர்களாக இருந்தாலும் ஏழை இந்தியக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் படிப்பில் மண் போட வேண்டாம், அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம் என்றுதான் செய்யவில்லை. ஆனால் இப்போது நடப்பதென்ன? ஒரு குற்றமும் செய்யாத என் எதிர்காலத்தில் இவர்கள் மண் அள்ளி வீசத் தயாராகிவிட்டார்களே!
ஒருநிமிடம் தலைகுனிந்திருந்து சொன்னான். "அவர்களைத் தற்காக்க வேண்டும் என்று எண்ணி முறையீடு செய்யாமல் இருந்தது என் குற்றம்தான். ஆனால் நான் சொல்வதுதான் உண்மை. அந்தப் பெண்ணைக் கேட்டால் விளங்கிவிடும்!" என்றான்.
"பெண்ணைப் பற்றி ஒரு பேச்சும் இல்லை! எந்தப் பெண்ணும் தான் ரேக் செய்யப் பட்டதாக முறையீடும் கொடுக்கவில்லை. யார் நீ சொல்லும் அந்தப் பெண்?"
யார் அந்தப் பெண்? அந்தக் கேள்விதான் அவன் மனதிலும் நின்றது. அந்தக் கணத்தில் ஒரு ஆதரவற்ற அபலைப் பெண்ணாக அவளைப் பார்த்தது தவிர அவளை முன்பின் தெரியாது.
"எனக்குப் பெயர் தெரியாது. ஆனால் கண்டுபிடித்துவிடலாம்!" என்றான்.
"அந்தப் பெண் சாட்சி சொல்ல வராவிட்டால்...!"
ஆமாம். அந்த சாத்தியம் இருக்கிறது. தன் பெயர் பொதுவில் இழுக்கப்படும் என்று பயந்து பல மாணவர்கள் முறையீடு செய்வதில்லை. ஆனால் இந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்க வேண்டும். தான் அவளைக் காப்பாற்றியதற்கு நன்றியாக அவள்தான் தன்னைக் காப்பாற்றியாக வேண்டும்.
"சே ரித்வான்! நான் அந்தப் பெண்ணைத் தேடி அழைத்து வருகிறேன். அதுவரை இந்தக் கோப்பை மாணவர் விவகாரப் பிரிவுக்கு அனுப்பாதீர்கள்!" என்றான்.
கொஞ்ச நேரம் யோசித்தார். அப்புறம் கேட்டார். "நீ இந்தப் பரசுராமன் என்ற பையனை அடித்தது உண்மையா?"
"உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் இருக்கின்றன!"
"உண்மை என நீயே ஒத்துக் கொள்ளும் போது இந்த விவகாரத்தை நான் மேலே கொண்டு போகாமல் இருக்க முடியாது. காரணங்கள் இருந்தால் விசாரணையில் நீயே விளக்கலாம்!" என்றார்.
இந்த விவகாரம் தன் கைமீறிப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. "சே ரித்வான். இந்த குற்றச்சாட்டுத் திரிக்கப் பட்டிருப்பது மட்டுமல்ல. இதைச் செய்த மாணவர்கள் வெளியில் உள்ள குண்டர் கும்பல்காரர்களை அழைத்துவந்து என்னை என் தேசாவிலேயே வந்து மிரட்டினார்கள். என் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று கூறினார்கள்!" என்றான். குரலில் கோபம் இருந்தது.
ரித்வான் திகைத்தவர் போல் காணப் பட்டார். "வெளியில் உள்ள குண்டர்களா? அவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள்?" சந்தேகத்துடன் கேட்டார்.
"தெரியாது. ஆனால் அழைத்து வந்த மாணவர்கள் யார் என எனக்குத் தெரியும்!"
"எப்போது நடந்தது?"
"நேற்றிரவு!"
"எங்கே?"
"என் தேசாவில், •பாஜார் பக்தியில்!"
"பெங்காவாவிடம் சொன்னாயா?"
"இன்னும் இல்லை!"
"ஏன்?"
"இரவு லேட்டாகி விட்டது. காலையில் சொல்லலாம் என இருந்தேன்! நீங்கள் கூப்பிட்டனுப்பியதால் உங்களிடமே சொல்லிக் கொள்ளலாம் என வந்துவிட்டேன்!"
நம்பிக்கை இல்லாமல் அவனைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் கணேசனுக்குப் புரிந்தது. குற்றம் சுமத்தப் பட்டுவிட்டதால் தற்காப்புக்காக இட்டுக்கட்டிச் சொல்லுகிறான் என நினைக்கிறார் போலும்.
"உன்னை அவர்கள் மிரட்டியதற்கும் வெளியாட்கள் வளாகத்துக்குள் வந்ததற்கும் சாட்சியங்கள் உண்டா?"
சாட்சியங்களா? அந்த இருட்டில் அந்த விடுதியின் வரவேற்பறையில் யார் இருந்தார்கள் என்பதை அவன் கவனிக்கவில்லை. யாரோ டெலிவிஷனில் குத்துச் சண்டை பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்தது. ஆனால் இவர்கள் நின்று பேசியதை யாரும் கவனித்திருப்பார்களா தெரியவில்லை.
"யாரும் பார்த்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. வரவேற்பறை பெரும்பாலும் காலியாக இருந்தது. யாரோ டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். எங்களைக் கவனித்தார்களா என்று தெரியாது!"
"சரி! உன் பங்கிற்கு நீ ஒரு முறையீடு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! நான் விசாரிக்கிறேன்!" என்றார். அவர் முகத்தில் கோபமும் எரிச்சலும் இருந்தன.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தான். கௌன்டரில் முறையீட்டு பாரம் ஒன்று வாங்கி நேற்று நடந்த இரு சம்பவங்களையும் விரிவாக எழுதினான். அதைப் பெற்றுக் கொண்ட பாதுகாவல் அதிகாரி சில மேல் விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.
பாதுகாப்பு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது அந்தப் பெண்ணை எப்படியாவது தேடிப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அவள் பெயர் தெரியவில்லை. எந்த கல்விப் பிரிவு என்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன் என்றும் அங்குதான் ராஜனைச் சந்தித்தேன் என்றும் சொன்னாள் என்று ஞாபகம் வந்தது.
அந்தக் கூட்டத்தில் அன்று அவளைத் துன்புறுத்தக் கூடியிருந்த யாரையும் அணுகிக் கேட்க முடியாது. எல்லாரும் அவனை எதிரியாகப் பாவிப்பார்கள்.
அவள் இருக்கும் விடுதி தெரியும். விடுதிக்கு முன்னால் போய் காத்திருந்து கண்ணில் படுகிறாளா என்று பார்க்கலாமா? ஆனால் அப்படிக் காத்திருப்பதை யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்கள். அங்குள்ள தெரிந்த இந்தியப் பெண்கள் யாரையாவது பார்த்துப் பேசி அடையாளம் சொல்லிக் கேட்கலாம்.
சிகப்பாக இருந்தாள். கருப்புப் பொட்டு வைத்திருந்தாள். ஒல்லியாக அநேகமாய் ஐந்தடி இரண்டங்குலம் மூன்றங்குலம் இருக்கலாம். ஜீன்ஸ¤ம் இளஞ்சிவப்பு வண்ணத்தில் டீ சட்டையும் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணைப் பற்றி இத்தனை விஷயங்கள் தனக்கு நினைவில் தங்கியிருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மனித இயல் கட்டடத்தைக் கடந்து பல்கலைக் கழக கிளினிக் வழியாக நான்கு மாடிக் கட்டடமான தேசா கெமிலாங் விடுதிக்குப் போனான். அநேகமாக எல்லாரும் விரிவுரைகளுக்குப் போய்விட்ட இந்த நேரத்தில் விடுதி ஓவென்றிருந்தது. மோட்டார் சைக்கிளை விடுதி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு நின்றவாறு யோசித்தான். தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஒன்றிரண்டு மலாய்க்கார மாணவர்கள் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து விரிவுரைகளுக்குப் பறந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் கட்டட நுழைவாயிலுக்கு வெளியில் இருந்த ஒரு மர பெஞ்சில் சோர்ந்து உட்கார்ந்தான்.
கணேசனுக்கும் பத்து மணிக்கு விரிவுரை இருந்தது. முதல் நாள் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டும். இன்று "இன்டர்மீடியட் நிதிக் கணக்கியல் 1" தொடங்குகிறது. இந்தப் பருவம் முழுவதுக்குமான பாடத்திட்டம் விநியோகிக்கப்பட்டு விளக்கப்படும். போகாவிட்டால் மற்ற மாணவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பாடத்திட்டப் பிரதியை கடன் வாங்கி பட நகல் எடுக்க வேண்டி வரும். விரிவுரையாளரும் கோபித்துக் கொள்வார்.
ஆனால் தனக்கு முன் நிற்கின்ற இந்த இக்கட்டு பெரிதாக இருந்தது. தான் நல்லது செய்யப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டாயிற்று. ராஜாவும் அவன் நண்பர்களும் தன்னை நன்றாக மாட்டி வைத்து விட்டார்கள். இந்த பாதிக்கப்பட்ட முதலாண்டுப் பெண் முன் வந்து உதவி செய்தால்தான் உண்டு. அவளை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் போய்க் கேட்பதென்றாலும் பெயர் தெரியாது. அறை எண் தெரியாது. அரச நடன நிகழ்ச்சிக்கு வந்த சின்டெரெல்லா பனிரெண்டு மணிக்கு மறைந்தது போல புகை மண்டலத்தில் மறைந்து போனாள்.
இன்னொரு வழி அந்தப் புகார் செய்த பரசுராமன் என்ற மாணவனைச் சந்தித்துப் பேசுவது. அவன் பெயர் தெரிகிறது. ஆனால் அவனைப் பார்த்துப் பேசுவதில் பலன் இருக்குமா அல்லது நேர்மாறான விளைவுகள் இருக்குமா எனத் தெரியவில்லை. ராஜனும் அவன் கும்பலும் பரசுராமனை மிரட்டித்தான் முறையீடு செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. இப்போது அவன் அவர்களுடைய முற்றான பாதுகாப்பில் இருப்பான். அவனிடம் கணேசன் நெருங்க விடமாட்டார்கள். அப்படியே நெருங்கிப் பேசிவிட்டாலும் முறையீடு செய்த காரணத்தால் மீண்டும் என்னை மிரட்டினான் என்று மறு முறையீடு கொடுக்கச் செய்து காரியத்தை இன்னும் சிக்கலாக்குவார்கள்.
கணேசன் மனதில் பயம் வந்து தங்கியது. இந்த ஆண்டு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள். ரித்வான் தனக்கு நண்பராக இருந்தும் கடுமையாகப் பேசியதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததையும் எண்ணிப் பார்த்தான். இந்த முறை வெளியில் உள்ளவர்களும் பல்கலைக் கழகம் இந்த இந்திய மாணவர்கள் ரேகிங் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறது என உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறார்கள். ஆகவே நாங்களும் செயல்படுகிறோம் எனக் காட்டிக்கொள்ள பல்கலைக் கழகத்திற்குக் கேஸ்கள் வேண்டும். வேறு கேஸ் கிடைக்காவிட்டால் என்னையே பலிகடா ஆக்கிவிடுவார்களோ?
தள்ளிவைத்தல், நீக்கம் என்று வந்து விட்டால் அந்த அவமானத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. இது வரை இந்தப் பல்கலைக் கழகத்தில் கௌரவமாக இருந்து விட்டான். மாணவர்கள் திட்டங்களுக்கு முதன்மை வகித்து தலைமைத்துவ பதவிகள் பல வகித்துவிட்டான். இந்த விஷயம் வெளியானால் அவனுடைய ஆசிரியர்கள் "நீயா அப்படிச் செய்தாய்?" என்று கேட்பார்கள். மாணவர்கள் உதவிப் பதிவாளர் முத்துராமன் "உன்னை நம்பியிருந்தேன். இப்படிப் பண்ணிவிட்டாயே!" என்பார். பேராசிரியர் முருகேசு முகத்தில் எப்படி விழிப்பது? அவரே தன் முகத்தில் உமிழும் நிலை வந்து விடுமா?
பெற்றோர்கள் தனக்கு உதவ முடியாத நிலையில் தன்னை மகனாகப் பாவித்து தனக்குப் பண உதவி தந்து படிக்க வைக்கும் அத்தையின் நினைவு வந்தது. எவ்வளவு ஏமாந்து போவாள் அத்தை! இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வேன்?
ஒரு ஆற்றாமை உணர்வும் திகிலும் மனதுக்குள் வந்தன. கண்களில் நீர் மல்கியது. இரண்டு உள்ளங்கைகளாலும் கசக்கிவிட்டுக் கொண்டபோது "ஹாய் கணேசன்! என்ன இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் ஜெசிக்கா.
***
"பஹாசா மலேசியாவும் குடிமக்கள் கடப்பாடுகளும்" என்ற பாடம் எல்லா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டிருந்தது. அதில் தேர்வடையாவிட்டால் பட்டம் கிடைக்காது என்பதால் எல்லா மாணவர்களும் அதில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். "பூசாட் பஹாசா" என்னும் மொழிகள் மையம் அந்தப் பாடத்தை நடத்தியது.
முதல் வாரத்தில் முதலாண்டு மாணவர்களுக்கான அந்தப் பாடத்தின் டுயுடோரியல் வகுப்புக்களுக்கான நாள் நேரப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் தங்களுக்கு வசதியான நாள் நேரத்தை அதில் குறிக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார்கள். ஒரு டியூட்டோரியல் வகுப்பில் பதினைந்து பேர்தான் பெயர் எழுத முடியும். எல்லா நல்ல வசதியான நேரங்களிலும் பெயர்கள் நிறைந்து கொண்டே வந்தன.
சில பட்டியல்கள் முழுமை ஆகிவிட்டன.
பெயர் குறிக்கும் அறிக்கைப் பலகைக்கு முன் மாணவர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அகிலாவால் பலகைக்கு முன் செல்லத் தள்ளி முன்னேற முடியவில்லை. மாணவர் முதுகுக்குப் பின் நின்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்துக்கு முன் இந்தக் கூட்டத்தில் அவள் பரசுராமனைப் பார்த்தாள். அவளைப் போலவே பட்டியலில் பெயர் எழுத அவனும் முயன்று கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஒரு கோமாளித் தனமாகச் சிரித்தான். அகிலா சட்டென்று முகம் திருப்பிக் கொண்டாள். நேற்று அவன் முகம் ஒரு விஷக்காற்று போல தன் கன்னத்தைத் தீண்ட வந்த அவமானமான நினைவு இன்னும் அவளுக்கு அகலவில்லை.
முதுகை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்த போது அறைத் தோழி ஜெசிக்கா நின்றிருந்தாள். "என்ன ஜெசிக்கா?" என்று கேட்டாள் அகிலா.
"உன்னுடன் பேச வேண்டும். முக்கியம், அவசரம்!" என்றாள் ஜெசிக்கா.
அகிலா திரும்பி கூட்டத்தைப் பார்த்தாள். அப்புறம் ஜெசிக்காவைப் பார்த்தாள். "டியுட்டோரியலுக்கு இப்போது பெயர் குறிக்காவிட்டால் எனக்கு வேண்டிய நேரம் கிடைக்காதே!" என்றாள் இரக்கமாக.
ஜெசிக்கா அறிக்கைப் பலகையையும் கூடியிருந்த கூட்டத்தையும் கொஞ்சம் கண்ணோட்டம் விட்டாள். "உனக்கு எந்த நாள், நேரம் வேண்டும்?" என்று கேட்டாள் ஜெசிக்கா.
"புதன்கிழமை காலையில் எந்த நேரமும். வெள்ளிக்கிழமை பிற்பகல். இதுதான் எனக்கு ஓய்வாக உள்ள நேரங்கள் மற்ற நாட்களிலும் நேரங்களிலும் விரிவுரைகள் வேறு டியூட்டோரியல்கள் இருக்கின்றன!"
"என்னுடன் வா!" என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தாள் ஜெசிக்கா. "எக்ஸ்யூஸ் மீ, எக்ஸ்யூஸ் மீ!" என்று அவள் போட்ட அதிகாரமான சத்தத்தில் யாரோ விரிவுரையாளர் வந்திருக்கிறார் போலும் என்று சில மாணவர்கள் வழி விட்டார்கள்.
பலகை அருகில் சென்றதும் புதன்கிழமை பட்டியலைக் கண்டுபிடித்து காலை 9 - 10 மணிப் பட்டியலில் அகிலாவின் பெயரை எழுதினாள். வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டியல் எல்லாம் நிறைந்திருந்தன. 3 - 4 மணிப்பட்டியலில் 15 பேர்கள் நிறைந்திருக்க 16வது பெயராக அகிலாவின் பெயரை எழுதினாள். அப்புறம் இருவரும் வெளிவந்தார்கள்.
ஜெசிக்காவின் செயல் அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்து. துணிச்சலான பெண். அவள் துணிச்சல் எனக்கு வராமல் போவது ஏன்? ஆனால் ஜெசிக்கா செய்ததை நினைத்துக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
"அதெப்படி ஜெசிக்கா! ஒரு டுயூட்டோரியலுக்கு 15 பேர்தானே இருக்க முடியும். 16வதாத என் பெயரை எழுதியிருக்கிறாயே!" என்று பயத்துடன் கேட்டாள் அகிலா.
"அதெல்லாம் விரிவுரையாளரிடம் பின்னால் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். மன்னித்து சேர்த்துக் கொள்வார்கள். அல்லது இந்தப் பட்டியலிலிருந்து ஒன்றிரண்டு பேர் மாறி வேறு நேரத்துக்குப் போகக் கூடும். அப்போதும் இடம் காலியாகும். பிரச்சினை இருக்காது!" என்றாள் ஜெசிக்கா.
"இதையெல்லாம் விரிவுரையாளர்கள் சொல்லவில்லையே!" என்றாள் அகிலா.
"இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள வேண்டும்! காரியத்தை சாதித்துக் கொள்ள கொஞ்சம் குறுக்கு வழிகளை நாடுவதில் தப்பில்லை"
பூசாட் பஹாசா கட்டடத்திற்கு வெளியில் வந்தார்கள்.
"எதற்கு என்னை அவசரமாகப் பார்க்க வந்தாய் ஜெசிக்கா?" என்று கேட்டாள் அகிலா.
"உன்னை ரேகிங்கிற்கு ஆளாக்கியவர்கள் பற்றி உடனே போய் முறையீடு செய் என்று நேற்றே உனக்குச் சொன்னேன். நீ மறுத்துவிட்டாய். இன்றைக்கு அது கொஞ்சம் விபரீதமாகப் போய்விட்டது"
ஜெசிக்கா வலியுறுத்தியும் அகிலா முறையீடு செய்யாமல் விட்டது உண்மைதான். அன்று பிற்பகல் முழுதும் அழுதும் ஆத்திரமடைந்தும் இருந்து, இந்த காராட் கேங்கை கத்தியெடுத்துக் குத்திக் கிழிக்க வேண்டுமென நினைத்து மாலையில் கொஞ்சம் ஆறுதல் வந்தவுடன் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவதுதான் நல்லது என அவளுக்குத் தோன்றியது.
முதலில் இந்த விவகாரம் பெரிதாகி துணை வேந்தர் அலுவலகத்தில் வழக்காகி பல்கலைக் கழக வளாகத்தில் தான் விளம்பரமாகிப் போவதில் அவளுக்கு ஆசையில்லை. இரண்டாவதாக இதில் சம்பந்தப் பட்ட மாணவர்கள் இந்தியர்களாக இருப்பதால் அவர்கள் பெயரைக் கெடுக்கவும் விரும்பவில்லை.
அன்று இரவு வீட்டுக்குப் போன் செய்து அப்பாவுடன் பேசிய போது தான் ரேகிங் செய்யப்பட்ட விஷயத்தை அதன் கடுமையைக் கொஞ்சம் குறைத்துத்தான் சொன்னாள். கேலி செய்யப்பட்டதாகச் சொன்னாள். அந்த முத்த விவகாரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியிருந்தும் அப்பா படபடத்தார். "பத்திரமா பாத்துக்கம்மா! நான் வேணுமானா பேராசிரியர் முருகேசுகிட்ட பேசட்டா? எனக்குத் தெரிஞ்சவர்தான்!" என்றார். அகிலா மறுத்துவிட்டாள். சமாளித்துக் கொள்ளுகிறேன் என்று தள்ளிவிட்டாள்.
இது எப்படி இப்போது விபரீதமாகப் போனது?
"என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?"
"நீ ரிப்போர்ட் செய்யவில்லை. ஆனால் அந்த ரௌடிக் கும்பல் அந்த பரசுராமனை வற்புறுத்தி கணேசன் மேல் ரிப்போர்ட் கொடுக்க வைத்துவிட்டது!"
பரசுராமனை அந்தக் கூட்டத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒரு கோமாளியைப் போல எப்போதும் இளித்த வாயுடன் இருக்கும் அவனா போய் முறையீடு செய்தான்? ஆனால் யார் இந்த கணேசன்?
"கணேசன் என்பது யார்?" என்று கேட்டாள்.
"உன்னைக் காப்பாற்றினான் என்று சொன்னாயே, அவர்தான். அந்த சீனியர் மாணவன். மேனேஜ்மென்ட் மேஜர். என்னுடைய நண்பன்!" என்றாள்.
அந்த ஆணழகன் ஒரு அழகான ராஜகுமாரன் போல அகிலாவின் நினைவுக்கு வந்தான். ஆம்! அன்று வெள்ளைக் குதிரையில் ஏறி வந்து இந்த வில்லன்களிடமிருந்து தன்னைக் கவர்ந்து சென்றிராவிட்டில் தான் இன்னும் என்ன துன்பமெல்லாம் பட்டு அவமானப்பட்டுப் போயிருப்பேனென்று சொல்ல முடியாது.
"அவர் மேல் எப்படி ரிப்போர்ட் கொடுக்க முடியும்? அவர் ஒன்றும் செய்யவில்லையே!"
"அந்தப் பரசுராமன் என்ற பையனை கணேசன் ரேகிங் பண்ண முயன்றதாகவும் அவனை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பொய்யாக ரிப்போர்ட் செய்து விட்டார்கள்!"
"ஐயோ! அப்புறம்?"
"கணேசன் பாதுகாப்புத் துறையில் விளக்கிச் சொல்ல முயன்றும் விளக்கம் எடுபடவில்லையாம். உன்னைக் காப்பாற்றத்தான் அந்த மாணவனை அடிக்க வேண்டியதாயிற்று என்று சொன்ன போது, எந்தப் பெண்ணும் ரேகிங் செய்யப்பட்டதாக ரிப்போர்ட் இல்லையாதலால் அதை நம்பத் தயங்குகிறார்களாம்!"
"உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ஜெசிக்கா?"
"கணேசன் உன்னைத் தேடி தேசா கெமிலாங்கிற்கு வந்திருந்தார். உன் பெயரும் தெரியாமல் விவரம் தெரியாமல் சோர்ந்து வெளியே உட்கார்ந்திருந்தார். நான் தற்செயலாகப் பார்த்தேன். நண்பன் என்பதால் விசாரித்தேன். விவரம் வெளிவந்தது."
"ஆகவே...?"
"இப்போது நீ சென்று ரிப்போர்ட் செய்து விஷயத்தை விளக்கப் படுத்தினால்தான் கணேசனின் பெயர் தெளிவாகும். இல்லையானால் அவர் மேல் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்கள்!"
அகிலாவுக்கு இதயத்தில் திகில் பிடித்தது. கணேசனைக் காப்பாற்றத்தான் வேண்டும். மனசுக்குள் நிறைய நன்றி உணர்ச்சி இருந்தது. ஆனால் இதற்கு விசாரணையென்றும் வழக்கென்றும் அலைய வேண்டும். தான் தவிர்க்க நினைத்த விளம்பரம் இன்னும் இரு மடங்காகிவிடும். தயங்கினாள்.
"என்ன யோசிக்கிறாய்?"
"இல்லை ஜெசிக்கா. இந்த விஷயம் பெரிதாகி கேம்பஸ் முழுக்கவும் பேசத் தொடங்கிவிடும். அவமானமாகிவிடும்!"
"அகிலா! நீ ஒரு கோழை மட்டுமல்ல. நன்றியில்லாதவள். உனக்கு நன்மை செய்ய வந்து கணேசன் இப்படி மாட்டிக் கொள்ளுவதா? கணேசன் என் நண்பன். ஐசெக் சங்கத்தில் நானும் அவரும் ஒன்றாகப் பல மாணவர் செயல் திட்டங்களில் உழைத்திருக்கிறோம். அருமையான குணமுள்ளவர். நீ அவருக்கு உதவ முன் வராவிடில் நானே போய் பாதுகாப்புத் துறையில் உண்மையைச் சொல்லிவிடுவேன். நேற்று அறைக்கு வந்த நீ அழுது என்னிடம் சொன்னதைச் சொல்லி விடுவேன். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் பெயர் இழு படும். என்ன சொல்கிறாய்?"
ஜெசிக்காவின் துணிச்சலும் கோபமும் அகிலா தன்னையே எண்ணி வெட்க வைத்தன. ஒரு சீனப் பெண்ணுக்கு அவளுடைய இந்திய நண்பன் மேல் உள்ள அன்பும் அக்கறையும் தனக்கு இல்லாமல் போனதே!
சட்டென்று ஜெசிக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள். "மன்னித்துவிடு ஜெசிக்கா! நீ சொல்வது சரி! நீயும் வா, போய் முறையீடு செய்து விடுவோம்!" என்றாள்.
ஜெசிக்கா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள். "சரி. ஆனால் கணேசன் விரிவுரைக்குப் போயிருக்கிறார். நாம் தேசாவுக்குப் போய் அவருக்காகக் காத்திருப்போம். 12 மணிக்கு வருவார். மூவருமாகச் சேர்ந்து போய் முறையீடு கொடுத்து வருவோம்!" என்றாள்.
ஜெசிக்கா தன் மோட்டார் பைக்கிலேயே அகிலாவைப் பின்னால் ஏற்றிக் கொண்டாள். விடுதிக்குத் திரும்பி கணேசனுக்குக் காத்திருந்தார்கள்.
*** *** ***
கணக்கியல் பாடத்தின் முதல் விரிவுரை விரிவுரை மண்டபம் க்யூ(Q)வில் நடந்தது. மாணவர்கள் கூட்டமாக இருந்தார்கள். உட்காரப் போதிய இடம் இல்லை. தாமதமாக வந்ததால் கணேசனுக்கு இருக்கை கிடைக்காமல் படியில் உட்கார வேண்டியதாயிற்று.
விரிவுரையாளர் பாடத் திட்டத்தை விநியோகம் செய்து இந்தப் பருவத்தில் அவர்களுக்குக் காத்திருக்கும் வேலைகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் விரிவுரையில் கணேசனுக்குக் கவனம் செல்லவில்லை. ஜெசிக்கா அந்தப் பெண்ணைப் பார்த்திருப்பாளா பேசியிருப்பாளா, அந்தப் பெண் முறையாக முறையீடு எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டிருப்பாளா என்ற கேள்விகளே சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தன.
ஜெசிக்காவை இரண்டாம் ஆண்டிலிருந்தே அவனுக்குப் பழக்கம். தொடர்புத் துறையில் ஒலிபரப்புத் துறையை மேஜராக எடுத்துக் கொண்ட மாணவி. நிர்வாகத் துறையைத் துணைப் பாடமாக எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நிர்வாகத் துறைப் பாடங்களில் கணேசன் - ஜெசிக்கா இருவரும் இருந்தார்கள். ஐசெக் சங்கத்தில் செயலவையில் அவள் இடம் பெற்றிருந்தாள். அடிக்கடி சந்தித்ததன் மூலம் அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள். ஜெசிக்கா அவனுடன் பாசமாகப் பழகுவாள். "கணேசான், கணேசான்" என கொஞ்சம் நீட்டி வாய் நிறையக் கூப்பிடுவாள்.
சீனப் பெண்களுக்கே உரித்தான சுறுசுறுப்பு, துணிச்சல், கடுமையான உழைப்பு அனைத்தையும் கொண்டவள். பாடங்களிலும் புறப்பாடங்களிலும் ரொம்பவும் கவனமாக இருப்பாள். கடும் உழைப்பாளி. வகுப்பில் விரிவுரையாளர்களைத் துருவித் துருவி கேள்வி கேட்டு விளக்கம் பெறுவாள். அவளால் மற்றவர்களும் பலன் பெறுவார்கள்.
இது சீன மாணவர்களுக்கே உரித்தான குணம் என்பதை கணேசன் கவனித்திருக்கிறான். அறிவை ஒரு மூர்க்கத்தனமான வேகத்தோடு சென்று அடைவது அவர்களுக்கே கை வந்த கலையாக இருக்கிறது. மார்க் வாங்குவதில் குறியாக இருப்பார்கள். கொடுத்த வேலையை விரிவுரையாளர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக் கொண்டு கட்டுரைகளைக் கம்ப்யூட்டரில் அழகிய எழுத்துக்களில் அமைத்து, கட்டங்கள் போட்டு, வரைபடங்களும் கிரா•ப்களும் போட்டு பணம் செலவு செய்து கச்சிதமாக பைன்டு பண்ணி ஒப்படைப்பார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையானால் விரிவுரையாளர்களிடம் தைரியமாகக் காரணம் கேட்பார்கள். அவர்கள் தவறாக இருந்தால் ஏற்று மறுமுறை கட்டுரை எழுதும்போது அந்தத் தவறுகளைக் களைந்து கொடுப்பார்கள். குழுவாக இருந்து விவாதித்துப் பாடங்களைப் படிப்பார்கள்.
சீன மாணவர்களிடமிருந்து மலாய்க்கார இந்திய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்பதை கணேசன் அறிந்திருந்தான். குறிப்பாக சீன மாணவர்கள் எதிலும் ஒற்றுமையாக இருந்து முன்னேற்றத்துக்கு உழைப்பதை இந்திய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய மாணவர்களிடையே பிளவுகள் பல இருந்தன. ஒற்றுமையாக அவர்கள் செயல்படுவது இந்த காராட் கேங் போன்ற குண்டல் கும்பல் ஒன்றில்தான்.
இந்த காராட் கேங் இந்த முறை தன்னைத் தண்டிப்பதில் வெற்றி பெற விட்டால் அவர்கள் அட்டகாசம் இன்னும் ஓங்கிவிடும். அவர்களின் இந்தப் பொய் வெற்றி பெற பல்கலைக் கழகம் அனுமதிக்காது என அவன் உள் உணர்வு சொல்லியது. ஆனால் பல்கலைக் கழகம் கண்மூடித் தனமாக விதிகளை வலியுறுத்துவதன் மூலமும் நல்ல இந்திய மாணவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவும் அந்தப் பொய்யும் வெற்றி பெற முடியும் என நினைத்தான். உள்ளத்துக்குள் அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம் வந்தது.
ஜெசிக்காவைத் தற்செயலாக தேசா கெமிலாங்கில் சந்தித்தது நல்லதாகப் போயிற்று. அவளிடம் தன் நிலைமையைச் சொன்ன போது, "ஓ! அந்த அகிலா என்ற இந்தியப் பெண் என் அறைத் தோழிதான்" என அவள் கூறியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் முறையீடு செய்ய மறுத்துவிட்டாள் என்று தெரிந்த போது மனம் இன்னும் கலவரம் அடைந்தது. ஆனால் ஜெசிக்கா அவனுக்கு உறுதி கூறி அனுப்பி வைத்தாள்.
"கவலைப் படாதே கணேசன். அவள் இன்று காலை பஹாசா மலேசியா வகுப்பில் டுயுடோரியலுக்குப் பெயர் பதியப் போயிருக்கிறாள். தேடிப் பிடித்து அவளை முறையீடு செய்ய சம்மதிக்க வைக்கிறேன். நீ வகுப்புக்குப் போ. வகுப்பு முடிந்து 12 மணிக்கு இங்கே வா. நானும் அகிலாவும் இங்கு உனக்காகக் காத்திருக்கிறோம்"
ஜெசிக்கா அகிலாவைத் தேடிப் பிடித்திருப்பாளா? அந்த பயந்தாங்கொளிப் பெண் முறையீடு செய்ய ஒத்துக் கொண்டிருப்பாளா? என் எதிர்காலத்தைக் காப்பாற்றுவாளா?
"சரி! உங்களுக்கு புத்தகப் பட்டியல் கொடுத்திருக்கிறேன். போய் எடுத்துப் படியுங்கள். டுயூடோரியல் அடுத்த வாரம் ஆரம்பிக்கும். சில நிறுவனங்களின் உண்மைக் கணக்குகளை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு கணக்குத் தயாரிக்கும் சட்டங்களை ஆராயவிருக்கிறோம்!" என்று கூறி வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் விரிவுரையாளர்.
வகுப்பு 11.50க்கெல்லாம் முடிந்தது. அடுத்த விரிவுரைக்காக மாணவர்கள் விரிவுரை மண்டபத்தைத் தேடி நடந்து செல்ல கால அவகாசம் அளிப்பதற்காக எல்லா விரிவுரைகளும் பத்து நிமிடம் முன்னதாக முடிவடைய வேண்டும் என்பது பல்லகலைக் கழக விதிகளில் ஒன்று. அதை விரிவுரையைளர்கள் கடைப்பிடிப்பதும் உண்டு, புறக்கணிப்பதும் உண்டு. இந்த விரிவுரையார் சரியாகக் கடைபிடித்தது நல்லதாகப் போயிற்று.
அவனுடைய மோட்டார் சைக்கிள் நூல் நிலையத்தின் பின் புறம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்து. நூல்நிலையத் தாழ்வாரம் வழியாகச் சென்று படிகளில் கீழே இறங்கி பேஸ்மன்ட் வழியாக வந்தால் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை சீக்கிரம் அடையலாம் என்று விரைந்தான்.
நூல் நிலையத்துக்கு வெளியில் போடப்பட்ட பெஞ்சுகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். பருவத்தின் முதல் வாரத்தில் இப்படித்தான் மாணவர் கூட்டம் அலைமோதும். விரிவுரையாளர் புத்தகப் பட்டியலைக் கொடுத்தவுடன் புத்தகம் எடுக்க முந்திக் கொள்வார்கள். போகப் போக இந்தக் கூட்டம் குறையும்.
அந்தக் கூட்டத்தினுள் நுழைந்த போதுதான் நுழைவாயில் படியருகில் காராட் கேங் கூடியிருப்பது தெரிந்தது. ஒரு நிமிடம் நின்று திரும்பி வேறு வழியாகப் போகலாமா என நினைத்தான். ஆனால் இவர்களுக்கு ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொடர்ந்து நடந்தான்.
ராஜன், கருணாகரன், டேவிட், தினகரன் இவர்களை அடையாளம் தெரிந்தது. ராஜன் அவனைப் பார்த்துவிட்டான்.
"டேய் ஹீரோ வர்ராரு பாத்தியா?" சத்தமாக கணேசன் காதில் விழச் சொன்னான்.
கூட்டத்தின் கவனம் கணேசன் பக்கம் திரும்பியது.
"ஹாய் ஹீரோ! உன்ன ஜீரோவாக்கப் போறோம் தெரியுமா?" இன்னொருத்தன் கத்தினான்.
அவர்களிடமிருந்து ஓட அவனுக்குப் பிடிக்கவில்லை. அவர்களை நோக்கிப் போனான். அவர்கள் எதிரில் நின்றான்.
"உனக்கு என்ன வேணும் ராஜன்?" என்று கேட்டான்.
"கணேசன்! ஒன்ன நாங்க சரியா •பிக்ஸ் பண்ணாம விடமாட்டோம். ஒண்ணு நீ நம்ப யுஎஸ்எம் உள்ளயே மாட்டிக்குவ! அப்படி இல்ல வெளியில வச்சி •பிக்ஸ் பண்ணிடுவோம். தமிளனுக்குத் தமிளன் நீ அவமானப் படுத்திட்டில்ல பாத்துக்குவோம்'லா!" என்றான் ராஜன்.
"நீ என்ன •பிக்ஸ் பண்றத பின்னால பாப்போம் ராஜன்! ஆனா தமிளனுக்குத் தமிளன்னு சொல்றவன் நம்ப பிள்ளைங்களேயே பிடிச்சி கொடுமைப் படுத்திறதுதான் பெரிய விசுவாசமா?"
"அது என்ன ஒரு சின்ன வெளையாட்டு. நீ தலையிட்டதினாலதான் அது இப்ப கேசா போச்சி!"
"ஒரு பையனப் பிடிச்சி ஒரு பெண்ண முத்தம் குடுக்க வைக்கிறதுதான் வெளையாட்டா?"
"முத்தம்தான குடுக்க வச்சோம், என்னமோ ரேப் பண்ணிட்ட மாறி கோவிச்சிக்கிறிய!"
"இந்த கேம்பசுக்கு பயந்து பயந்து வர்ர இளம் பெண்களுக்கு இப்படி வலுக்கட்டாயமா முத்தம் குடுக்க வைக்கிறது ரேப் பண்றதுக்கு சமானம்தான்"
ராஜன் முறைத்தான். "போடா ஒன்னப் பாக்க வேண்டிய எடத்தில பாத்திக்கிறோம்!" என்றான்.
கணேசன் அங்கிருந்து நடந்தான். அவர்களுக்குப் பயப்படாமல் அவர்களுக்கு முன்நின்று பதில் சொல்லியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களின் மருட்டல் அவனுக்கு மருட்சியை அதிகப் படுத்தியது.
இவர்கள் பாதகத்திற்கு அஞ்சாதவர்கள். இவர்களை வளர விடக் கூடாது. ஆனால் இவர்களை நான் வெல்வதும் தோற்பதும் அகிலா என்ற முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் கையில் இப்போது இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.
***
அவனை முதன் முதலாக அப்போதுதான் முழுமையாகப் பார்த்தாள். உயரமாக இருந்தான். ஆறடியை எட்டாவிட்டாலும் ஐந்தடி ஏழு எட்டு அங்குலமாகவாவது இருப்பான். பரந்த தோள்களுடன் வலுவான உடலமைப்பு. மாநிறம். ஒரு சிறிய மீசை தரித்த அழகிய மேலுதடு. திடமான தாடை கொண்ட கச்சிதமான முகம். கண்களில் ஒரு தைரியமும் கருணையும் இருந்தன. அவன் தன்னைக் காப்பாற்றிய செய்கையின் நன்றி உணர்ச்சியோடு இந்த உருவம் அவள் மனதில் கலந்த போது அவளுக்கு அவன் மேல் அன்பு சுரந்தது.
மோட்டார் சைக்கிளைப் பார்க் பண்ணிவிட்டு தேசா கெமிலாங்கின் வரவேற்பறைக்குள் நுழைந்தவனை ஜெசிக்கா போய் கைகோர்த்து அழைத்து வந்தாள். அவள் முகம் நிறைய சிரிப்பு இருந்தது.
"அகிலா. இவர்தான் கணேசன், உனது சேவியர்!" என்றாள்.
அவன் கைநீட்டினான். அகிலா ஒரு புன்னகையுடன் கொஞ்சம் தயக்கத்தோடு மிருதுவாகப் பிடித்துக் குலுக்கினாள். கை கொஞ்சம் கூசியது. என்னதான் கல்வியில் முன்னேறிப் பல்கலைக் கழகம் வரை வந்து விட்டாலும் அந்நிய ஆண்களுடன் பழகுவதில் தூரமும் அடக்கமும் வேண்டும் என்னும் அவள் தாய் கற்றுக் கொடுத்துள்ள தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள தயக்கம்தான் முன் வந்து நின்றது. ஜெசிக்கா அவனை அத்தனை உரிமையுடன் கைகோர்த்து வரவேற்பதைப் பார்க்கும்போது தான்தான் தன்னை இந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது.
நேற்று தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற இவன் தன்னை உறுதியாகக் கைப்பற்றித்தான் இழுத்து வந்தான். அப்போது கை கூசவில்லை. "என்னைத் தொடாதே" என இழுத்துக் கொள்ளவில்லை. ஆபத்பாந்தவன் என்று எண்ணித் தன்னை முற்றாக ஒப்படைத்துக் கொள்ளும் நிம்மதிதான் இருந்தது.
கணேசன் உட்கார்ந்தான். "மன்னிக்கணும். அன்னைக்கு உங்களோட நான் சரியா பேசில. உங்க பேரக் கூட கேக்காம போயிட்டேன். நல்ல வேளை ஜெசிக்காவுக்கு நீங்க அறைத் தோழியா இருக்கிறதினால உங்கள மறுபடி கண்டு பிடிக்க முடிஞ்சது"
அகிலா ஒரு வெட்கங்கலந்த சிரிப்பை உதிர்த்தாள். "நீங்கதான் மன்னிக்கணும். என்னக் காப்பாத்தின உங்களுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாம ஓடிட்டேன் நேத்து! என்ன நன்றியில்லாதவள்னு நெனச்சிருப்பிங்க!"
"இல்ல, இல்ல அகிலா. நீங்க எவ்வளவு பயந்திருந்திங்கன்னு எனக்குத் தெரியும். ஆகவே நீங்க நன்றி சொல்லாமப் போனத நான் கொஞ்சமும் பெரிசா எடுத்துக்கில! அப்புறம் என்ன நடந்திச்சின்னு ஜெசிக்கா சொன்னாங்களா?"
தமிழ் உரையாடலுக்கிடையில் தன் பேர் கூறப்படுவதைப் புரிந்து கொண்டு ஜெசிக்கா குறுக்கிட்டுப் பேசினாள். "நான் அகிலாவுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன். பாதுகாப்புத் தலைவரிடம் முறையீடு செய்ய அவள் ஒப்புக் கொண்டு விட்டாள். மூவருமாகப் போவோம். அகிலா அலறிக் கொண்டு வந்து அறைக்குள் அழுததற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்!" என்றாள்.
"ரொம்ப நன்றி ஜெசிக்கா! ஆனால் அகிலா, நாம் இதில் கவனமாக இருக்க வேண்டும். ராஜாவும் நண்பர்களும் இப்படி முந்திக் கொண்டுவிட்டதால் நான் இப்பொழுது ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். வாதியாக இருக்க வேண்டியவன் பிரதிவாதியாகிவிட்டேன். ஆகவே நாம் என்ன மாதிரி முறையீடு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நான் ஏற்கனவே எழுதிக் கொடுத்த முறையீட்டுக்கும் இப்போது அகிலா செய்கின்ற முறையீட்டுக்கும் விவரங்களில் முரண்பாடு இருந்தால் அதைப் பிடித்துக் கொள்வார்கள். நாம் கூறுவது பொய் போலத் தோன்றும். ஆகவே என்ன எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதைப் பேசி முடிவு செய்து கொள்ளுவோம்!" என்றான் கணேசன்.
அவனுடைய நிதானம், திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற போக்கு அகிலாவைக் கவர்ந்தது. அவன் அவளுக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தான்.
"அகிலா! நேற்று அந்த ரேகிங் போது என்ன நடந்தது, எப்படி அவர்களிடம் சிக்கினீர்கள், யார் அழைத்துப் போனது, அழைத்துப் போனதும் படிப்படியாக என்ன நடந்தது என்பதை முதலில் என்னிடம் சொல்லுங்கள். ஒரு காகிதத்தில் குறிப்பை எழுதிக் கொள்ளுங்கள். அதையே முறையீட்டு பாரத்தில் எழுதுங்கள். பின்னால் விசாரணையில் இதையே சொல்ல வேண்டும்!"
அகிலா கொஞ்ச நேரம் தலை குனிந்து நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்திப் பார்த்தாள். அந்த நினைவு அவளுக்குப் பயமாக இருந்தது. கூச்சமாக இருந்தது. அவமானமாக இருந்தது. இவையனைத்தும் அவள் கண்களிலும் முகத்திலும் தெரிந்திருக்க வேண்டும்.
"நடந்த உண்மைகளை அப்படியே சொல் அகிலா. எதையும் மிகைப்படுத்த வேண்டாம். உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்" என்றாள் ஜெசிக்கா.
அகிலா அவளை நம்பிக்கையுடன் நிமிர்ந்து பார்த்தாள். இந்த இரண்டு நல்ல நண்பர்கள் துணையிருக்கும் போது தான் பயப்படத் தேவையில்லை என்று பட்டது.
நேற்று நடந்தவற்றை படிப்படியாக நினைவு படுத்தி கணேசனிடம் ஒப்புவித்தாள். அங்கிருந்தவர்களில் ராஜன், பரசுராமன் தவிர வேறு மாணவர்களின் பெயர்கள் தெரியாது என்று அவள் சொன்ன போது மற்றவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தும் கணேசன் அவற்றை அவளுக்குச் சொல்லவில்லை. தெரியாத பேர்கள் தெரியாமலேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான்.
அவர்கள் தங்கள் தகவல்களைச் சரிபார்த்து எழுந்து பாதுகாப்பு அலவலகத்திற்குப் புறப்பட்டபோது மணி ஒன்றாகிவிட்டிருந்தது.
*** *** ***
பல்கலைக் கழகக் கல்வி என்பது தான் இதுவரை கண்டிராத புதிய உலகம் என்பதை அகிலா கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டு வந்தாள். ஒரு வாரத்தில் தொடக்க விரிவுரைகளுக்குப் போய் வந்தவுடனேயே அது விளங்கிவிட்டது. "விரிவுரையாளர்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள் என்றும், வாயில் வந்து ஊட்டுவார்கள் என்றும் எதிர் பார்க்க வேண்டாம். புத்தகங்கள் இருக்கின்றன, நூலகம் இருக்கிறது. உங்களுக்கு வேண்டிய விளக்கம் எல்லாம் அங்கிருந்தே கிடைக்கும். எங்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்" என்றே எல்லா விரிவுரையாளர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
விரிவுரையாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டுமானால் அப்பய்ன்ட்மன்ட் வைத்துத்தான் போக வேண்டியிருந்தது. மற்ற நேரங்களில் போனால் விரட்டி விடுவார்கள். அவளுடைய விரிவுரையாளர்கள் எல்லாம் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்.
கணினிக்குத் திட்டம் (புரோக்ராம்) எழுதும் வழிமுறைகள் என்ற பாடத்தின் விரிவுரையாளரை மட்டும் அவள் போய்ப் பார்க்க நேர்ந்தது. அவர் முதல் விரிவுரையில் கொடுத்த புத்தகப் பட்டியலில் எட்டு புத்ததகங்களில் நான்கு புத்ததகங்களை நூல்நிலையக் கணினியில் கண்டுபிடிக்க முடியவில்லை. நூல்நிலையப் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் கிரிசாலிஸ் என்ற அட்டவணையின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் பெயர் அல்லது புத்தகத்தின் பெயர் தெரிந்தால் கிரிசாலிசில் அதைத் தேடி அதன் புத்தக அடுக்கு எண்ணைக் கண்டுபிடித்து மாணவர்கள் தாமாக இடந்தேடி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் டாக்டர் அஹமட் தாஜுடின் கொடுத்த பட்டியலில் இருந்த நான்கு தலைப்புக்களும் ஆசிரியர் பெயரும் கிரிசாலிசில் இல்லை. தேடி அலுத்த முதலாண்டு மாணவர்கள் அவரை இந்த வாரத்திலேயே நேரில் கண்டு இது பற்றிச் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தார்கள். யார் போவது என்று பயந்து விழித்த போது அகிலா "நான் போய்க் கேட்கிறேன்" என்றாள். ஜெசிக்காவைப் பார்த்துப் பழகியதிலிருந்து அகிலாவுக்கும் ஒரு புது தைரியம் வந்திருந்தது.
யுஎஸ்எம்மின் மருத்துவக் கல்லூரி கிளந்தான் மாநிலத்திற்குச் சென்று தனி வளாகம் அமைத்துக் கொண்ட பிறகு அது முன்பு இருந்த கட்டடத்தை பல கல்விப் பிரிவுகள் பகிர்ந்து கொண்டன. மருந்து தயாரிப்பு இயல் (•பார்மசி), போதைப்பொருள் ஆய்வு நிலையம் (டிரக் ரிசர்ச்), மேற்பட்டப் படிப்புத் துறை ( இன்ஸ்டிடியுட் ஆ•ப் கிராஜுவேட் ஸ்டடிஸ்)) இவற்றுடன் கணினி அறிவியல் துறையும் அங்கு போயிருந்தது. பெரிய பரந்த கட்டடம். குகைகள் போல் அதன் காரிடோர்கள் விரிந்திருந்தன. எந்தக் காரிடோர் போனாலும் பழைய மருந்து வாசனை அடித்தது.
மங்கிய விளக்கொளியில் உள்ள காரிடோரில் நடந்து போய் வெறும் தாஜுடின் அஹ்மட் என்று பெயர் போட்டிருந்த பெயரைக் கண்டு பிடித்தாள் அகிலா. இந்த விரிவுரையாளர்களின் கத்வுகளில் உள்ள பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களும் பதவிகளும் போட்டுக் கொள்வதில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கதவை மிருதுவாகத் தட்டினாள். "யா மாசோக்" என்ற குரல் கேட்டது.
கதவு திறந்து உள்ளே போனாள்.
ஒரு விரிவுரையாளர் அறைக்குள் அவள் போவது இதுதான் முதன் முறை. அவர் தன் மேசையை விட்டு இன்னொரு பக்கத்து மேசையில் ஒரு கணினித் திரை முன் உட்கார்ந்திருந்தார். கீ போர்டில் கடகடவென தட்டிக் கொண்டிருந்தவர் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தார்.
"சிலாமாட் பகி டாக்டர். உங்கள் புத்தகப் பட்டியலில் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்" என்றாள். குரலில் பயம் இருந்தாலும் தெளிவாகச் சொன்னாள்.
"நீ யார்?"
"அகிலா. உங்கள் CAP 101 மாணவி"
"உட்கார், இதை முடித்துவிட்டு வருகிறேன்!"
உட்கார்ந்தாள். தாஜூடின் தொடர்ந்து திரைக்குத் திரும்பி கீ போர்டில் தட்டினார். அவர் திறந்திருந்தது ஈமெய்ல் என்று தெரிந்தது. ஏதோ ஒரு கடிதத்திற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்தது. சிந்தனை ஓட்டம் தடைபடுவதற்கு முன் முடித்து விட மும்முரமாக இருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டாள்.
அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். புத்தகங்கள் சுற்றிலும் இறைந்து கிடந்தன. சில விரித்தவாறு இருந்தன. சிறிய மஞ்சள் தாள்களில் புத்தகங்களில் அடையாளங்கள் வைத்திருந்தார். கணினி பிரின்ட் அவுட் தாள்கள் மடிப்பு மடிப்பாகக் குவிந்து கிடந்தன. நோட்டீஸ் போர்டில் கால அட்டவணை, அவருடைய அலுவலக மெமோக்கள், சில தேங்க்யூ கார்டுகள், சில வெளிநாட்டு கருத்தரங்க நோட்டீசுகள், மாணவர் பட்டியல், மீட்டிங் பட்டியல் அனைத்தையும் தாறுமாறாகக் குத்தி வைத்திருந்தார். மொத்தத்தில் தன் அம்மாவை உள்ளே அனுமதிக்காத பதின்ம வயது மாணவனின் அறை போல இருந்தது.
விரிவுரையாளர்கள் அனைவரும் பாதிப் பைத்தியங்கள் என மாணவர்கள் கிசுகிசுத்துக் கொள்வது உண்மைதான் போலும் என நினைத்துக் கொண்டாள். தனக்கு இரண்டு மணி நேரம் கொடுத்தால் இந்த அறையை ஒழுங்கு படுத்தி பளிச்சென்று ஆக்க முடியும் என நினைத்துக் கொண்டாள்.
டாக்டர் தாஜூடின் தான் எழுதியதைப் படித்தார். சில திருத்தங்கள் செய்தார். கம்ப்யூட்ர் மௌசை உருட்டி அம்புக் கர்சரை "சென்ட்" (அனுப்பு) என்ற கட்டளைக்குக் கொண்டு வந்து கிளிக் செய்தார். திரையில் நீலப் பட்டை ஒன்று தோன்றி "அனுப்ப வேண்டிய செய்தி ஒன்று" என்று காட்டியது. அதன் கீழ் வெள்ளைப் பட்டை ஒன்று தோன்றி அதில் நீல நிறம் ஓடி நிறைந்தவுடன் அந்தப் பட்டைகள் முழுதாக மறைந்தன. மின்னஞ்சல் அது போக வேண்டிய அமெரிக்காவுக்கோ ஆஸ்த்திரேலியாவுக்கோ பயணப்பட்டது. சொல்ல முடியாது. பக்கத்து அறையில் உள்ள அவருடைய சக விரிவுரையாளருக்காகவும் இருக்கலாம். கணினிக்கு எல்லாத் தூரமும் ஒன்றுதான்.
தாஜுடின் தனது ஓடும் சுழல் நாற்காலியையே வாகனமாக்கிக் கொண்டு கணினி மேஜைக்கு முன்னிருந்து தன் எழுத்து மேசைக்கு வந்தார். "எஸ் அகிலா! நான் என்ன செய்யலாம் உனக்கு?" என்று கேட்டார்.
"தொந்திரவு கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் டாக்டர். இந்தப் புத்தகப் பட்டியலில் உள்ள நான்கு புத்தகங்களை நூல் நிலைய கேட்டலாக்கில் கண்டு பிடிக்க முடியவில்லை!" என்றாள்.
"ஏன் முடியவில்லை? கிரிசாலிஸ் பயன் படுத்தத் தெரியுமா உனக்கு?"
"தெரியும். நானும் மற்ற பல மாணவர்களும் தேடியும் கிடைக்கவில்லை!"
பட்டியலை வாங்கிப் பார்த்தார். கிடைக்காத புத்தகங்களை அவள் கோடிட்டு வைத்திருந்தாள்.
"ஓல்ரைட், ஓல்ரைட்! இந்த நான்கும் புதிய புத்ததகங்கள். இந்த மாதம்தான் வந்து சேர்ந்தன. லைப்ரரி இன்னும் அதை கேட்டலோக் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். நல்ல வேளை எனக்குத் தெரியப் படுத்தினீர்கள். இந்தப் புத்தகங்களை "சிறப்புச் சேமிப்பு" பகுதியில் வைக்க ஏற்பாடு பண்ணுகிறேன். நீங்கள் உடனடியாக கடன் வாங்க முடியாவிட்டாலும் நூல் நிலையத்துக்கு உள்ளேயை வைத்துப் படிக்கலாம். லைப்பரரிக்கு நான் மெமோ அனுப்புகிறேன்" என்றார்.
"நன்றி டாக்டர்!" என்றாள் அகிலா.
"ஓக்கே. விரிவுரையெல்லாம் விளங்குகிறதா?" என்று கேட்டார்.
"விளங்குகிறது. கம்ப்யூட்டர் கலைச் சொற்கள் பஹாசாவில் நீங்கள் சொல்லுவது கொஞ்சம் குழப்பமாக உள்ளது. புத்தகங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார்கள்!"
"அடுத்தவாரம் ஆங்கிலம் - பஹாசா மொழிபெயர்ப்பு அட்டவணை கொடுக்கிறேன். அப்புறம் குழப்பம் இருக்காது!" என்றார்.
அவருடைய டெலிபோன் அடித்தது. அதன் மேல் கை வைத்தவாறு "வேறு என்ன அகிலா?" என்றார். "எனக்கு வேலை இருக்கிறது. கிளம்பு!" என்று அதற்கு அர்த்தம் என அகிலா தெரிந்து கொண்டாள்.
"ஒன்றும் இல்லை டாக்டர். நன்றி!" என்று எழுந்தாள். அவள் வெளியே வந்த போது அவர் டெலிபோனுக்குள் "ஹலோ" சொல்லிக் கொண்டிருந்தார்,
ஒரு விரிவுரையாளரை அவருடைய அறைக்குள் சென்று பார்த்த அனுபவம் அவ்வளவு மோசமாக இல்லை என மகிழ்ந்தவாறு விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
கணினித் துறை வளாகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. அந்தப்பகுதியில்தான் தேசா இன்டா விடுதியும் தேசா கெம்பாரா விடுதியும் அமைந்திருந்தன. இந்த விடுதிகள் அனைத்துமே விரிவுரை மண்டபங்களிலிருந்து மிக தூரத்தில் இருந்தன. வாகனங்கள் இல்லாமல் நடையை மட்டும் நம்பியிருப்பவர்களுக்கு மிகச் சிரமம்தான்.
பல்கலைக் கழகத்தின் மேற்கு வாயில் நோக்கிப் போகும் ஜாலான் யுனிவர்சிட்டியில் ஓரத்தில் வாகனப் போக்குவரத்தின் மிரட்டல்கள் இல்லாமல் நடக்க கற்களால் நடைபாதை போட்டிருந்தார்கள். அதில் ஏறி நடந்தாள் அகிலா. மத்தியான வெயில் சாலையைச் சூடாக்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு புதன் கிழமை. இந்த இரண்டாம் வாரத்தில் புதன்கிழமை அகிலாவுக்கு விரிவுரைகள் ஒன்றும் இல்லை. அடுத்த வாரம் டியோடிரியல் ஆரம்பிக்கும். ஆனால் இந்த முதல் வாரம் ஒருநாள் ஓய்வுதான்.
அவளுடைய தேசா கெமிலாங் அத்தனை தூரமில்லை. வேப்ப மர நிழல்களுக்கிடையில் நடந்தாள். முனை வளைந்ததும் இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட பழைய ஆயுத சேமிப்புக் கிடங்கைத் தாண்ட வேண்டியிருந்து. இரண்டு சுரங்கங்கள் தோண்டி சிமெண்டினால் பலப்படுத்தப்பட்ட அமைப்புகள். சில ஆண்டுகளுக்கு முன் கூட இங்கிருந்து போர்க்கால குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன என்பதை அகிலா பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். அவற்றைக் கடக்கும் போது கொஞ்சம் அச்சமாக இருந்தது.
இந்த வளாகம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தினரின் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் அவர்கள் கட்டிய பழைய கட்டடங்கள் இன்னும் இருந்தன. அவற்றின் உட்புறத்தை புதுமைப் படுத்தியிருந்தாலும் அவற்றின் முகப்புக்களை அப்படியே விட்டிருந்தார்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் காலாற நடக்கும் இந்த வளாகத்தில் ஒரு காலத்தில் ராணுவத்தினரின் பூட்ஸ் ஒலியும் "லெ•ப்ட் ரைட், லெ•ப்ட் ரைட், அபவுட் டெர்ன்" என்ற கட்டளைகளும் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டிருக்கும் என்று அகிலா நினைத்துப் பார்த்தாள். மலேசியா சுதந்திரம் பெற்ற சிலகாலத்தில் ஒரு ரிங்கிட் அடையாள விலையில் இந்த போர்த்தளம் கல்வித்தளமாக மாறிவிட்டது.
அந்தப் பல்கலைக் கழக வளாகத்தின் பரப்பு எவ்வளவு பெரியது என்பதை இந்த இரண்டாவது வாரத்தில் அவள் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். கணினி விரிவுரை முடிந்து கணக்கு விரிவுரைக்கு வேறு மண்டபத்துக்கு நடப்பதற்குள் நேரமாகிவிடுகிறது. நேரமாகிவிட்டால் உட்கார இடம் கிடைப்பது கஷ்டம். அடுத்தடுத்த வாரத்தில் வீட்டிற்குப் போகும்போது அப்பாவிடம் பேசி ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று பார்க்க வேண்டும். இது ஒரு வசதி. அகிலாவின் வீடு பக்கத்தில் அலோர் ஸ்டாரில் இருந்ததனால் நினைத்த நேரம் அவள் பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடலாம். இரண்டு இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம். இந்த ரேகிங் விவகாரம் விசாரிக்கப்பட்டு முடித்த பின் கண்டிப்பாக வீட்டுக்குப் போக முடிவு செய்திருந்தாள்.
வந்து இரண்டு வாரங்களே ஆனாலும் வீட்டின் நினைவு பிய்த்துத் தின்றது. அவளுடைய, அவளுக்கே சொந்தமான அந்தக் குட்டி அறை. அதன் படுக்கை, தலையணையின் வாசம், அம்மாவின் சமையல், தம்பியின் சேஷ்டைகள் அனைத்தும் நினைத்து ஏங்க வைத்தன. விடுதியிலுள்ள பொதுத் தொலைபேசியில் இதுவரை மூன்று நான்கு முறை வீட்டுக்குப் பேசிவிட்டாள்.
வளாகத்தில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார்கள். சிலர் கார்களும் வைத்திருந்தார்கள். மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அப்பா முடியாது என்று சொல்ல மாட்டார். ஆனால் பணத்துக்குத்தான் சிரமப்படுவார். அப்பா வீடு வாங்கிப் போட்டிருந்தார். அதற்குத் தவணை ப்பணம் கட்டி வந்தார். தம்முடைய பதினான்கு வருடத்திய டாட்சன் காரை விற்று அண்மையில்தான் 30 ஆயிரம் கொடுத்து ஒரு இரண்டாண்டுகள் பயன்படுத்திய புரோட்டோன் சாகா வாங்கினார். அதற்கும் பணம் கட்டி வந்தார். தம்பியைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய தங்கை - அகிலாவின் அத்தை - பிள்ளைகள் இருவருக்கு படிக்க உதவிகள் செய்து வந்தார். அகிலாவுக்குப் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்ததும் அவளுக்கு வேண்டிய எல்லா கட்டணங்களையும் கொடுத்தார். கைச்செலவுக்கும் பணம் கொடுத்தார். போதுமா இன்னும் வேண்டுமா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.
அகிலாவுக்கு எல்லாம் தெரியும். அப்பாவின் நல்ல மனமும் இரக்க சுபாவமும் குடும்பத்தின் மீது உள்ள அன்பும் நன்கு தெரியும். ஆகவே மோட்டார் சைக்கிள் பேச்சை எடுத்தால் சரி என்றுதான் சொல்லுவார். அப்புறம் பணம் திரட்டக் கஷ்டப்படுவார். தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்.
அகிலா அந்த வாரம் பல்கலைக் கழக உபகாரச் சம்பளங்கள், கடன் உதவி ஆகியவற்றுக்கான மனு பாரங்களை வாங்கி வைத்திருந்தாள். கெடா மாநில உபகாரச் சம்பள பாரமும் கொடுத்திருந்தார்கள். அப்பாவும் கெடா மாநில மஇகா பிரமுகர்களிடம் பேசி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இவற்றில் ஏதாவது ஒரு உபகாரச் சம்பளம் அல்லது கடன் கிடைத்தால் அப்பாவின் சுமையைக் குறைக்கலாம்.
முதல் வாரத்தில் ரேகிங்கினால் பட்ட மனத்துன்பங்கள் ஆறியிருந்தன. ஆனால் இந்த வெள்ளிக் கிழமை மாணவர் விவகாரப் பிரிவில் விசாரணை இருக்கிறது. அவளுக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் வந்திருந்தது. கணேசன், ஜெசிக்காவுக்கும் கடிதம் வந்திருந்தது. அவள் பாதிக்கப்பட்டவள் என்றாலும் விசாரணைக்குப் போவதற்கு ஒரு குற்றவாளியைப் போல் பயந்தாள். இந்த விசாரணை எப்படித் திரும்பும் என்று சொல்வதற்கில்லை என்று கணேசன் கூறியிருந்தான்.
எப்படியிருந்தாலும் விசாரணை யாராவது ஒருவருக்குப் பாதகமாகத்தான் முடியப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்தது. ராஜன் தண்டிக்கப் படுவான். அவன் நண்பர்கள் தண்டிக்கப் படுவார்கள். ஆனால் ராஜனின்
பொய்யும் பரசுராமனின் நடிப்பும் நிலைபெற்றால் கணேசன் தண்டிக்கப் படலாம். அங்கே நியாயம் தோற்கும். ஏமாற்று வெல்லும். எப்படியிருந்தாலும் யுஎஸ்எம் இந்திய மாணவர்களுக்கு அது பெரிய அவமானம் என்றுதான் தோன்றியது.
அவள் தேசா கெமிலாங்கை அடைந்து உள்ளே நுழைந்த போது இந்த எண்ணம்தான் அவளுடைய மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
***
எட்டே முக்கால் மணிக்கு ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டத்தின் முன்னால் அகிலா வந்து இறங்கியபோது கணேசன் ஏற்கனவே அங்கு காத்திருந்தான். அவர்களைக் கண்டதும் புன்னகைத்தவாறே அவர்களிடம் சென்றான்.
விசாரணை ஒன்பது மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. ராஜன், மனோகரன், வின்சன்ட் ஆகியோர் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு இன்னொரு இடத்தில் நின்றார்கள். கணேசனைப் பார்த்து கேலிச் சிரிப்புகளும் கெக்களிப்புக்களும் எழுந்தன. இந்த இரண்டு மூன்று வாரங்களில் அந்தக் கூட்டம் பரசுராமனை விட்டு அகலவில்லை. பரசுராமன் தனது உரிமைப் பதிவான கோணல் சிரிப்புடன் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அலைந்து கொண்டிருந்தான்.
அகிலா மனப்படபடப்புடன் கணேசனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஜெசிக்கா வழக்கம் போல் "ஹை கணேஷ்" என்று பிரகாசமான குரலில் கூவினாள்.
"ரெடியா இருக்கிங்களா அகிலா?" என்று கேட்டான் கணேஷ்.
"ரெடிதான். ஆனால் பயமா இருக்கு!"
"இவள் ரொம்பவும் பயப்படுகிறாள் கணேஷ். உண்மையைச் சொல்ல ஏன் பயப்படவேண்டும்?" என்றாள் ஜெசிக்கா.
"உண்மையைச் சொல்ல பயப்படவில்லை. விசாரணை என்றாலே ஏதோ கோர்ட்டுக்குப் போவது போல நடுக்கம் வருகிறது"
"அந்த பயமே வேண்டாம். இந்த அதிகாரிகளை நிமிர்ந்து பார். உரக்கப் பேசு!" என்று தைரியமூட்டினாள் ஜெசிக்கா.
"ஆமாம் அகிலா. நாம் மறைப்பதற்கும் பயப்படுவதற்கும் என்ன இருக்கிறது. தைரியமாகப் பேசுங்கள்!" என்றான் கணேசன். அகிலா பலவீனமாகத் தலையாட்டினாள்.
ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருக்கையில் மாணவர் பிரிவு உதவிப் பதிவதிகாரி முத்துராமன் வந்து எல்லாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவர்கள் அருகில் வந்தார். பொதுவாகப் பேசினார்.
"முதலில் முறையீடு செய்த பரசுராமனையும் அவரது சாட்சிகளையும் உள்ளே கூப்பிட்டு விசாரிப்போம். அது முடிந்ததும் கணேசனையும் அவருடைய சாட்சிகளையும் கூப்பிடுவேன். தயாராக இருங்கள்" என்று சொல்லி உள்ளே சென்றார்.
கொஞ்ச நேரத்தில் பாதுகாப்புத் துறைத் தலைவர் ரிட்வான் வந்தார். "பல்கலைக் கழகத்தின் பேரைப் பாழ்படுத்துகிறீர்களே!" என்பதைப் போல் எல்லாரையும் ஒரு கடுமையான குற்றவாளிப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் பேராசிரியர் முருகேசு காரில் வந்து காரை நிறுத்திவிட்டு ஒரு கோப்புடன் இறங்கினார். விசாரணைக் குழுவில் அவர் இருக்கிறார் என்று தெரிந்த போது கணேசனுக்குத் தைரியமாக இருந்தது. ஆனால் அவர் முன்பு பேசியிருப்பது அவன் நினைவுக்கு வந்து அவனைப் பயமுறுத்தியது. "ரேகிங் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிருபிக்கப்படும் இந்திய மாணவன் யாரையாவது பல்கலைக் கழகம் நீக்க முன் வந்தால் அதை ஆதரிக்கின்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்"
அகிலா அறிமுக வாரத்தில் இந்து மாணவர்களுக்கான சமய விளக்கக் கூட்டத்தில் அவர் பேசக் கேட்டிருக்கிறாள். அவர் தன் அப்பாவுக்கு அறிமுகமானவர் என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் அவரைப் பார்த்து புன்னகைத்தனர். ஜெசிக்கா "ஹலோ புரொ•பெசர்!" என்று தனது இயற்கையான உச்சக் குரலில் கத்தினாள். சரித்திர இயலில் அவருடைய பாடம் ஒன்றை ஜெசிக்கா எடுத்திருக்கிறாள். ஆகவே அவரைத் தெரியும்.
"ஜெசிக்கா! உனக்கென்ன வேலை இங்கே?" என்று கேட்டார் முருகேசு.
"நான் கணேசன் சார்பில் முக்கிய சாட்சி!" என்றாள் ஜெசிக்கா.
"அப்படியா! சரி. குட் லக்!" என்று ராஜன் பக்கமாகவும் திரும்பி ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு உள்ளே நடந்தார்.
ஒன்பது மணிக்கு சரியாக முத்துராமன் கூப்பிட பரசுராமன், ராஜன் குழு கூட்டமாக உள்ளே சென்றது. கதவு அடைக்கப் பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கணேசன், அகிலா, ஜெசிக்கா தணலில் இருப்பது போல் இருந்தார்கள்.
"அன்றைக்கு அந்தக் கூட்டத்தில நடந்த உண்மைகளை நமக்காகப் பேச சாட்சிகள் இல்லை அகிலா. இருந்தவங்க அத்தனை பேரும் அவங்க ஆளுங்க. ஆகவே நீங்களும் நானுந்தான் உறுதியாகப் பேசணும்!" என்றான் கணேசன்.
"ஜெசிக்கா இருக்காங்களே!"
"ஜெசிக்கா நேரடியான சாட்சி இல்ல. நடந்தத உங்க வாயால கேட்ட வெளி சாட்சிதான். ஆகவே அவ்வளவு பலமா இருக்காது.!"
அகிலாவுக்கு மேலும் கிலி பிடித்துக் கொண்டது.
9.20க்கு முத்துராமன் கதவைத் திறந்து வெளியே வந்து "வாங்க!" என்றார்.
உள்ளே நுழைந்தார்கள். முட்டை வடிவ மேசையில் விசாரணை அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவே மாணவர்கள் விவகாரப் பிரிவின் உதவித் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ சலீம் தலைவராக இருந்தார். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் மென்மையாகப் பேசி இனிமையாகப் பழகும் மனிதர். கணேசனை அவருக்குத் தெரியும் அவருக்கு இடது பக்கத்தில் ரித்வான். வலது பக்கத்தில் பேராசிரியர் முருகேசு. கொஞ்சம் தள்ளி உதவிப் பதிவதிகாரி முத்துராமன்.
பரசுராமன், ராஜன் குழுவினர் எதிர்ப்பக்கத்தில் கூட்டாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடனான விசாரணை முடிந்து விட்டதற்கான ஆறுதல் அவர்கள் முகங்களில் தெரிந்தது.
டத்தோ சலீம் மிருதுவான மலாயில் பேசினார். "கணேசன். இது விசாரணைக் குழு. இந்தக் குழுவில் இந்திய மாணவர் பண்பாட்டுச் சங்கத்தின் ஆலோசகர் என்ற முறையில் பேராசிரியர் முருகேசுவையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது தெரியும் அல்லவா? பரசுராமன் என்ற இந்தப் புதிய மாணவனை நீங்கள் ரேக் பண்ணியதாகவும், கன்னத்தில் அறைந்து தள்ளியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அந்தச் சம்பவம் நடந்தபோது உடனிருந்ததாக ராஜன், மனோகரன், வின்சன்ட் சாட்சியம் கூறியிருக்கிறார்கள். ரேகிங்கைப் பல்கலைக் கழகம் தடைசெய்திருப்பதுடன் ரேகிங் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரித்திருக்கிறோம். அப்படியிருந்தும் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
கணேசன் முதலில் பரசுராமனைப் பார்த்தான். அவன் கோணல் சிரிப்பு மறைந்து அவன் முகத்தில் கொஞ்சம் பயம் படர்ந்திருந்தது.
"டத்தோ. நடந்த சம்பவத்தை இவர்கள் திரித்துச் சொல்லியிருக்கிறார்கள். நடந்த உண்மைகளை அகிலா என்ற இந்த முதலாண்டு மாணவியின் விளக்கத்திலும் நான் எழுதிக் கொடுத்துள்ள முறையீட்டிலுமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ரேகிங் செய்தது ராஜன், மனோகரன், வின்சன்ட் குழுவும் அவர்கள் நண்பர்களும்தான். ரேகிங்கிற்கு உட்படுத்தப் பட்டவர்கள் பரசுராமனும் அகிலாவும். நான் தற்செயலாக அங்கு போக நேர்ந்தது. இந்தப் பரசுராமன் அகிலாவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பெண் பயந்து ஒடுங்கியிருந்தார். இவரைக் காப்பாற்றவே நான் பரசுராமனை அறைந்து தள்ளி இவரை விடுவித்து வந்தேன்! ரேகிங்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!" அதோடு நிறுத்தினான். இப்போது அதிகம் பேசவேண்டாம் என முடிவு செய்து கொண்டான்.
டத்தோ அகிலாவைப் பார்த்தார். "அகிலா! நீ என்ன சொல்கிறாய்?"
அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தொண்டை வரண்டு போனது. "அவர் சொல்வதுதான் உண்மை டத்தோ, அப்படித்தான் நடந்தது!" என்று அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.
"இது உண்மையாக இருந்தால் இந்தச் சம்பவம் பற்றி நீ ஏன் முதலில் பாதுகாப்புத் துறைத் தலைவருக்கு முறையீடு செய்யவில்லை. இதுபற்றி அறிமுக வாரத்தில் படித்துப்படித்துச் சொல்லியிருக்கிறோமே!"
ஆமாம். படித்துப்படித்துச் சொன்னார்கள். பயம். கூச்சம். தப்பித்ததே போதும், இந்த சனியன்களிடம் இன்னமும் விகாரம் வேண்டாம் என்று பயந்து ஓடும் புத்தி. விசாரணை வழக்குகள் என்ற தொல்லைகளைத் தவிர்த்தல். "சும்மா வேடிக்கையா விளையாண்ட நம்ம இந்தியப் பசங்களப் போய் காட்டிக் குடுத்திட்டியே!" என்று மற்ற இந்திய மாணவர்கள் சொல்வார்கள் என்ற அச்சம். இதில் எந்தக் காரணத்தைச் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள்?
"எனக்கு பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது டத்தோ!"
"அப்புறம் மறுநாள் காலந் தாழ்த்தி சொல்வதற்கு எப்படி தைரியம் வந்தது?"
"கணேசன் மேல் பழி வந்தது என்று கேள்விப் பட்டவுடன் உண்மையைச் சொல்ல முன் வந்தேன்!"
"அப்படியானால் கணேசனைக் காப்பாற்றத்தான் இப்படிச் செய்தாயா?"
திகைத்தாள். இந்தக் கேள்விக்கு ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அது தவறாகப் போய்விடக் கூடும் என அவளுக்குப் பட்டது. ஆனால் உண்மையைச் சொல்லுவதைத் தவிர வேறு யுத்திகளைப் பற்ற யோசிக்க வேண்டாம் என முடிவு செய்து கொண்டாள். "உண்மைதான் சக்தி வாய்ந்த ஆயுதம். உண்மைதான் உன் பயங்களிலிருந்து உனக்கு விடுதலை கொடுக்கும்" என்று ஜெசிக்கா அன்று சொன்னதை நினைத்துக் கொண்டாள்.
"ஆம் டத்தோ! உண்மையைச் சொன்னால் அவர் மீதுள்ள குற்றம் நீங்கும் என்றுதான் அப்படிச் செய்தேன்!"
"அப்படிச் சொல்ல உன்னை யாராவது வலியுறுத்தினார்களா?"
கேள்வியின் தொனி நன்றாக இல்லை. ஜெசிக்காவைத் திரும்பிப் பார்த்தாள். ஜெசிக்காவின் சிரித்த முகத்தில் கூடக் கொஞ்சம் கலவரம் இருந்தது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். என்ன நடந்தாலும் நடக்கட்டும்.
"ஜெசிக்கா என் ரூம் மேட். அவர் மூலமாகத்தான் கணேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டேன். அவர் கூறிய ஆலோசனைதான். ஆனால் அவர் வலியுறுத்தியிராவிட்டாலும் செய்தி தெரிந்தவுடன் நானாக முன் வந்திருப்பேன்! ஏனென்றால் ரேகிங்கிலிருந்து அவர் என்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றி உணர்ச்சி இருக்கிறது" குரலில் தைரியம் ஏறிக் கொண்டிருந்தது. நான் ஏன் குற்றவாளி போலப் பயந்து பேச வேண்டும் என்ற கோபம் வந்தது.
டத்தோ சலீம் ஜெசிக்காவைப் பார்த்தார். "ஜெசிக்கா. உனக்கு கணேசனைத் தெரியுமா?"
"நன்கு தெரியும். நண்பர். சில பாடங்கள் ஒன்றாக எடுக்கிறோம்!" ஜெசிக்கா தெளிவாகச் சொன்னாள்.
"கணேசன் உன் நண்பர் என்பதால் அவர் மீதுள்ள குற்றத்தைத் தவிர்ப்பதற்காக நீங்கள் மூவரும் சேர்ந்து இந்தப் பொய்யை ஜோடித்திருப்பதாக ராஜன் என்ற இந்த மாணவர் கூறியிருக்கிறார். அதைப்பற்றி நீ என்ன சொல்கிறாய் ஜெசிக்கா?"
ஜெசிக்கா அதிர்ச்சியடைந்திருந்தாள். கணேசனும் விதிர்த்திருந்தான். அகிலாவின் முகம் இரத்தக் களையிழந்தது.
"இல்லை இது பொய் டத்தோ. நாங்கள் மூவரும் நடந்ததைத்தான் பேசுகிறோம்!"
"ஆனால் ரேகிங் போது நடந்தது என்ன என உனக்குத் தெரிய வாய்ப்பில்லையே?"
"ரேகிங் நடந்து அதிலிருந்து மீண்டு அகிலா அறைக்குத் திரும்பியதும் படுக்கையில் படுத்து விம்மி அழுதார். நான் கேட்டவுடன் நடந்ததைச் சொன்னார். அந்தச் சூழ்நிலையில் அவர் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே அதை நான் நம்பினேன். அதைத்தான் உங்களிடம் சொல்லுகிறேன்!"
பேராசிரியர் முருகேசு தொண்டையைக் கனைத்தார். "டத்தோ! நான் இந்த பரசுராமனை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்!" என்றார்.
"கேளுங்கள்" என்றார் டத்தோ சலீம்.
அவர் பரசுராமனைப் பார்த்துக் கேட்டார். "ரேகிங் ஒன்றும் நடக்கவில்லை. சும்மா பேசிக்கொண்டுதான் இருந்தோம் என்று முறையீட்டில் எழுதியிருக்கிறாய். கணேசன் வந்துதான் ரேகிங் ஆரம்பித்தார் என்றும் நீ அவர் சொல்லியதைச் செய்ய மறுத்ததால் அறைந்து தள்ளியதாகவும் சொல்லியிருக்கிறாய். அந்த இடத்தில் அகிலா என்ற பெண் இருந்தாரா? அதைப்பற்றி உன் முறையீட்டில் ஒன்றும் இல்லையே?"
பரசுராமன் கொஞ்சம் பரக்கப் பரக்க விழித்தான். "அங்கே பலபேர் கூட்டமாக இருந்தார்கள். யார் யார் என எனக்குத் தெரியாது. எல்லார் பெயரையும் நான் ரிப்போர்ட்டில் எழுதவில்லை. இந்தப் பெண் இருந்தாரா என்றும் தெரியாது. இருந்திருந்தாலும் நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்"
"அப்படியானால் இந்தப் பெண் சொன்ன எதுவும் அங்கு நடக்கவில்லை. இவரை நீ முத்தமிட முயன்றதாக அவர் சொல்லியிருப்பது கணேசன் சொல்லியிருப்பது பொய். அப்படித்தானே?"
பரசுராமன் மேலும் கீழும் பார்த்தான். "அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பது எனக்கு முற்றாக நினைவில்லை. கணேசன் வந்து என்னை அடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதைத்தான் எழுதினேன்!"
"அப்படியானால் இந்தப் பெண்ணை முத்தமிடு என்று யாரும் உனக்குச் சொல்லவுமில்லை, நீ அப்படிச் செய்யவுமில்லை!"
ஒரு நிமிடம் தயங்கி ராஜாவைப் பார்த்துவிட்டு பலவீனமான குரலில் சொன்னான்: "அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!"
"அப்படியானால் இந்தப் பெண் உன்மீது பொய்க்குற்றச் சாட்டு சுமத்துகிறாரா?"
பரசுராமன் மேலும் மிரண்டான். "அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை!" என்றான்.
ராஜன் முந்திக் கொண்டு சொன்னான்: "டத்தோ! அங்கு நடந்ததைக் கண்ணால் பார்த்தவர்கள் நாங்கள். ஏன் நாங்கள் சொல்வதை நீங்கள் சந்தேகிக்க வேண்டும்?"
டத்தோ சலீம் சொன்னார்: "இங்கே நடப்பது விசாரணைதான். உண்மையை வெளிக் கொணர்வதே எங்கள் வேலை. சந்தேகம் எல்லார் மீதும் உண்டு. ஆகவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி உதவி செய்யுங்கள்!" என்றார்.
இன்னும் சில கேள்விகள் கேட்டார்கள். ஆனால் புதிய விவரங்கள் ஏதும் வரவில்லை.
இறுதியாக டத்தோ சொன்னார். "சரி எல்லோரும் வெளியில் சென்று காத்திருங்கள்! நாங்கள் கலந்து பேசி எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்!"
கணேசனும் மற்றவர்களும் எழுந்து வெளியே வந்தார்கள். கட்டடத்தை விட்டு வெளியேறி மர நிழலுக்கு வந்தார்கள். கணேசன் அங்குள்ள பானம் வழங்கும் இயந்திரத்தில் காசு போட்டு அவர்கள் மூவருக்கும் டின் பானங்கள் வாங்கி வந்தான். வறண்ட தொண்டைகளை நனைத்துக் கொண்டார்கள்.
ஒரு மிணறு கொக்கோ கோலா பருகிவிட்டு ஜெசிக்கா சொன்னாள்: "நாம் சொல்லியதை அவர்கள் நம்பவில்லை என்றுதான் தெரிகிறது கணேசன்!"
கணேசன் பேசாமல் இருந்தான். அகிலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. "சேச்சே! அழாதிங்க அகிலா!" என்றான்.
"இல்லை கணேஷ். இது என்னுடைய குற்றம்தான். நான் உடனே ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும். அவர்கள் முந்திக் கொண்டதால் நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்து குற்றவாளி ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு ஏதாவது தண்டனை என்றால் எனக்குப் பொறுக்காது" என்றாள்.
"சேச்சே! அப்படியெல்லாம் நடக்காது!" என்றான் கணேசன். ஆனால் அப்படியும் நடக்கலாம் என உள்மனம் சொல்லிற்று. அவனுடைய எதிர்காலத்தில் திக்கென இருள் கவிந்து நின்றது.
ஓர் இருபது நிமிடம் அவர்கள் நிம்மதி கொள்ளாமல் தங்கள் பயங்களையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். வெறும் பேச்சுக்கள் பேசினார்கள். அதே போல இன்னொரு மூலையில் ராஜனும் அவன் தோழர்களும் பரசுராமனைச் சூழ்ந்து கொண்டு நின்றும் நடந்தும் அலைந்தார்கள்.
முத்துராமன் கதவு திறந்து வந்து அழைத்தார். அனைவரும் உள்ளே போனார்கள். மனப் படபடப்புடன் உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்கள்.
டத்தோ அவர்களைத் தீர்க்கமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார். "இந்த இடத்தில் எல்லாரும் உண்மை பேசவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் உங்கள் முறையீடுகளில் உள்ள முற்றிலும் முரண்பாடான தகவல்களைப் பார்க்கும் போது யாரோ ஒரு தரப்பினர் பொய் பேசுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது."
சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார். அனைவரையும் இன்னொரு சுற்றுப் பார்த்தார். அந்த மௌனம் கனத்தது.
"இப்போது ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன். பொய் சொல்லியவர் உண்மையை ஒப்புக்கொள்ள விருப்பமா?"
"நான் பொய் சொல்வில்லை!" என உரக்கக் கூவவேண்டும் என கணேசனுக்குத் தோன்றியது. ஆனால் அதனால் பயன் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்தது. பரசுராமன் தலை கவிழ்ந்திருந்தான். ராஜன் முகத்தை மரம் போல வைத்துக் கொண்டிருந்தான்.
"சரி. நீங்கள் யாரும் சொல்லத் தயாராக இல்லை. இந்த விசாரணையில் நிருபிக்கப்படும் ஒரே உண்மை கணேசன் பரசுராமனை அடித்தார், தள்ளினார் என்பது. அதை கணேசன் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்காக அவர் கூறும் காரணங்கள் வேறாக இருக்கின்றன. இது ரேகிங் என்று எடுத்துக் கொண்டால் தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கும். ஆகவே ரேகிங் குற்றச்சாட்டை நிராகரிப்பது என குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் பரசுராமனைத் தாக்கியதற்காக கணேசன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு 100 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறோம்!"
அகிலா விம்மும் சப்தம் கேட்டது. பரசுராமன் உம்மென்று இருந்தான். ராஜனும் வின்செண்டும் சிரித்துக் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
கணேசனின் மனது இருண்டு போனது. நீதி தேவதைக்குக் கண்ணில்லை என்பது உண்மைதானோ? எப்படி நான் இந்த நிலைக்கு ஆளானேன்? என்ன தவறு செய்தேன்? இந்தக் கழிவிரக்கக் கேள்விகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.
"என்ன சொல்கிறாய் கணேசன்?" டத்தோ கேட்டார்.
என்ன சொல்வது? மேலும் மறுத்து மேலும் தண்டனைக்கும் சிக்கலுக்கும் உள்ளாவதா? அது விவேகமாகாது எனப்பட்டது. ஆனால்... ஆனால் இந்த விஷயம் இதனோடு முடிந்து விட்டதா?
"டத்தோ. உங்கள் தீர்ப்பை நான் மறுப்பதாக எண்ண வேண்டாம். ஆனால் இந்த விஷயம் இதனோடு முடியவில்லையே. இந்தச் சம்பவம் நடந்த பிறகு ராஜனும் அவன் நண்பர்களும் வெளியிலிருந்து குண்டர் கும்பல்காரர்களை அழைத்து வந்து என் விடுதிக்கே வந்து என்னை மிரட்டினார்கள். அது பற்றி நான் முறையீடு செய்திருக்கிறேன். அதை விசாரித்தால்தானே இந்த விவகாரம் முடியும்?" என்றான்.
டத்தோ சலீம் கொஞ்சம் திகைத்து ரித்வானைப் பார்த்தார். பேராசிரியர் முருகேசுவும் ரித்வானைப் பார்த்தார். "இது உண்மையா ரித்வான். நீங்கள் இதை என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லையே!" என்றார்.
ரித்வான் நிமிர்ந்து உட்கார்ந்தார். "டத்தோ. இப்படி ஒரு முறையீடு கணேசன் செய்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து இந்தப் பரசுராமனின் முறையீட்டுக்குப் பிறகுதான் செய்யப் பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து விட்டோம்!"
"ஏன்?"
"இரண்டு காரணங்கள் டத்தோ. ஒன்று இதற்கும் சாட்சிகள் யாரும் இல்லை. கணேசனின் வார்த்தை ஒன்றுதான். ராஜனை விசாரித்த போது இது உண்மையில்லை என மறுத்துவிட்டார். கணேசன் தன் முதல் குற்றத்தை மறைப்பதற்காக ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களை அடுக்குவது போலத்தான் தெரிகிறது. இரண்டாவது இந்தக் குற்றச் சாட்டு மிகக் கடுமையானது. ரேகிங் குற்றச்சாட்டுப் போல இதுவும் பொய்யாய்ப் போனால் கணேசனுக்கு அது நல்லதல்ல. கணேசனை எனக்குத் தெரியும் நல்ல மாணவர். அவரைக் காப்பாற்றத்தான் நான் இதை விசாரணைக்குக் கொண்டு வரவில்லை!"
கணேசனுக்குத் தலை சுற்றியது. நாற்காலியின் பிடிகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பொய்களா? நானா? எப்படி நான் செய்வது சொல்லுவதெல்லாம் இப்படித் தலை கீழாகப் போகின்றது?
"ம்... எப்படி கணேசன்?" டத்தோ கேட்டார்.
சேற்றில் முழுகிக் கொண்டிருக்கிறேன். பரவாயில்லை. ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் நிர்வாணமாகி அவமானப்பட்டு முழுக மாட்டேன். என் எதிரிகள் தற்காலிக பலம் பெற்றிருக்கிறார்கள். காற்று அவர்கள் பக்கம் வீசுகிறது. ஆனால் நான் நேர்மையானவன். வளைய வேண்டிய அவசியம் இல்லை என உறுதிப் படுத்திக் கொண்டதும் பலம் வந்தது.
"டத்தோ. நான் மேலும் மேலும் பொய்ப்பட்டம் கட்டிக் கொள்ள விரும்பவில்லை. இது நடந்தது உண்மை. ஆகவே அதை நீங்கள் விசாரிக்கத்தான் வேண்டும். உங்கள் இறுதித் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்!"
"முழுகி விடுவாய்! மூச்சுத் திணறி விடுவாய்! இந்த மரணச் சேறு உன்னை விழுங்கிவிடும்" என உள் மனம் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. பரவாயில்லை. உண்மை என்னைக் கொல்லுமானால் அப்படியே ஆகட்டும் என்று உறுதியாக இருந்தான்.
பேராசிரியர் பேசினார்: "சே ரித்வான். இந்த கணேசனின் முறையீடு மீது ஏதாவது விசாரணை நடத்தினீர்களா?"
"குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜனை அழைத்து விசாரித்தேன். இல்லை என்று சொன்னார். அதோடு கோப்பை மூடிவிட்டேன்!"
"விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததா என்று கண்டறிய முயன்றீர்களா?"
"பார்த்தவர்கள் யாரும் இல்லை. யாரை விசாரிப்பது?"
கணேசன் சொன்னான்: "சே ரித்வான். அன்றிரவில் விடுதியின் வரவேற்பறையில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் ஓடிக் கொண்டிருந்தது. யாராவது பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்பதை ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்!"
ரித்வான் கோபப் பட்டவர் போல இருந்தார். "ஆள் இருந்ததா இல்லையா என்பதே தெரியாது என்கிறாய். டெலிவிஷன் யாரும் இல்லாமலே கூட ஓடிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? யாராவது அடைக்க மறந்து போயிருக்கலாமல்லவா?"
டத்தோ சலீம் குறுக்கிட்டார். "ரித்வான். இது கடுமையான குற்றச் சாட்டாக இருக்கிறது. கணேசன் இதில் உறுதியாக இருக்கிறார். நீங்கள் தயவு செய்து விசாரித்து எனக்கு ஒரு அறிக்கை தயார் படுத்துங்கள்"
டத்தோ கணேசனைப் பார்த்தார். "கணேசன். நீ விரும்பியபடி செய்துவிட்டேன். இரண்டாவது குற்றச் சாட்டு நிருபணமாகும் வரையில் இந்த முதல் குற்றச்சாட்டுக்கான தண்டனையை நான் தள்ளி வைக்கிறேன். ஆனால் இந்த இரண்டாம் குற்றச்சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் உன் தண்டனை இன்னும் கடுமையாகக் கூடும். சம்மதமா?" என்றார்.
மரணச் சேறு மேலும் என்னை அழுத்துகிறது. இதில் மூச்சு முட்டச் சாக வேண்டும் என்று விதியிருந்தால் அப்படியே நடக்கட்டும்.
"சம்மதம் டத்தோ!" என்றான்.
"சரி. அடுத்த விசாரணைக்கு விரைவில் நாள் குறிக்கிறேன். அனைவருக்கும் நன்றி!" எழுந்து தன் சகாக்களுடன் கைகுலுக்கிவிட்டு அவர் தன் அலுவலகத்துக்குப் புறப்பட்டார். அனைவரும் எழுந்தார்கள்.
அகிலா தன் வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
***
அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற எண்ணம் பொங்கிப் பொங்கி அவளை அழ வைத்தது. அவனுடைய இரண்டாவது குற்றச் சாட்டும் நிருபிக்கப் படாமல் போனால் அவன் தண்டனை இன்னும் கடுமையாகும் என்று உதவித் துணை வேந்தர் எச்சரித்திருந்தது அவளுக்கு பயங்கரமான கற்பனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
இன்னும் கடுமையான தண்டனை என்றால் என்ன? ஒரு பருவம் தள்ளி வைப்பார்களா? ஓராண்டு தள்ளி வைப்பார்களா? அல்லது மிகக் கடுமையாகப் பல்கலைக் கழகத்தை விட்டே வெளியேற்றி விடுவார்களா? என் மானம் காக்க முன் வந்த அந்த நல்ல மனிதனுக்கு இப்படி நேர்ந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தான் சும்மா இருக்க முடியுமா? அவன் பல்கலைக் கழகத்தை விட்டுத் தள்ளப்பட்டால் தானும் விலகி விடுவது ஒன்றுதான் தான் அவனுக்குச் செய்யும் கைமாறாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் மேலும் மேலும் வலுப் பெற்றுக் கொண்டிருந்தது.
இந்த எண்ணத்தை ஜெசிக்காவிடம் சொன்ன போது அவள் தலைகுனிந்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பின் "உன்னிஷ்டம்" என்று அலட்சியமாகச் சொன்னாள். ஆனால் இதையே அவளுக்கு நெருங்கிய தோழியாக மாறிவிட்ட மாலதியிடம் சொன்ன போது அவள் சீறினாள்: "முட்டாளே! அவசரப்பட்டு உன் எதிர்காலத்தப் பாழாக்கிக்காத! பல்கலைக் கழகத்தில கெடச்ச இடத்தக் காரணமில்லாம உதறிட்டா பின்னால சேத்துக்கவே மாட்டாங்க! நீ காலம் பூரா பட்டம் வாங்கிறத மறந்திட வேண்டியதுதான்! உங்க அப்பா அம்மாவ நெனச்சுப் பார்!" என்றாள்.
"விளங்குது மாலதி. ஆனா அவருக்கும் அப்படித்தான ஆகும்? அவர் எதிர்காலம் பாழாப் போகும்போது நான் மட்டும் நிம்மதியா படிச்சி பட்டம் வாங்கி சந்தோஷமா இருக்க முடியுமா?"
"சந்தோஷமா பட்டம் வாங்கலன்னா, கவலையோட வாங்கிக்க! கணேசனுக்கு ஏதாவது சீரியசான தண்டனை கொடுத்தாங்கன்னா அதை எதிர்த்து ஏதாகிலும் பண்ணப் பார்ப்போம். அப்படியில்லன்னா அது அவருடைய விதி! இந்த சமுகத்திலுள்ள அநீதிக்கு அவர் ஒரு பலி! நம்மால என்ன செய்ய முடியும்? நீ எதுக்கு இதில அர்த்தமில்லாத தியாகியா மாறணும்? இதில யாருக்கு லாபம் சொல்லு? அநியாயம் பண்ற அந்த ராஜனோட கேங்குக்குத்தான் லாபம்!"
மாலதி முதல் ஆண்டுதான் என்றாலும் அகிலாவுக்கு இரண்டு வயது மூத்தவள். எஸ்பிஎம் முடித்து நான்காண்டுகள் தற்காலிக ஆசிரியையாக இருந்து அனுபவம் பெற்று சொந்த முயற்சியில் எஸ்டிபிஎம் எடுத்து இரவிரவாகப் படித்து இரண்டு முறை பரிட்சை எழுதித் தேரி வந்தவள். அகிலாவை ஒரு தமக்கைக்கு உள்ள உரிமையோடு அதட்டிப் பேச அவளுக்கு முடிந்தது.
அவள் பேசுகிற நியாயம் புரிந்தது என்றாலும் கூட அகிலாவின் மனம் ஒரு பக்கம் "கணேசனின் துயரத்தில் நீ சந்தோஷம் காணலாமா?" என்று இடித்துக் கொண்டே இருந்தது.
இரவு நேரங்களில் இதைப்பற்றியே நினைவாக இருக்கும் போது கணேசனைத் தனிமையில் பார்த்து அவன் கைபிடித்து நன்றி சொல்லி அழ வேண்டும் என்று அவளுக்குப் பலமுறை தோன்றியது. ஆனால் அவனைத் தனிமையில் காண முடியவில்லை. கணேசனின் விவகாரத்தைத் தன் சொந்த விவகாரமாக எடுத்துக் கொண்டு ஜெசிக்கா வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனோடு ஒட்டிக் கொண்டேயிருந்தாள். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ பேரவையிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல அவள் பல மாணவர்களைப் பார்த்துப் பேசி கையெழுத்தும் வாங்கிக் கொண்டிருந்தாள். அறைக்கு வந்த போதும் கணேசனின் வழக்கு பற்றியே பேசித் தானும் கலங்கி அகிலாவையும் கலங்க அடித்துக் கொண்டிருந்தாள்.
முதல் விசாரணை நடந்தபோது அகிலா கணேசனோடு ஒன்றாக இருந்து எல்லாவற்றையும் சேர்ந்து அனுபவித்ததில் அவளுக்கு ஏதோ ஒருவித இன்பம் இருந்தது. அவனுடைய துயரத்தில் அவளும் அவளுடைய துயரத்தில் அவனும் பங்கு கொண்டதில் ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது. அவனுக்காக அழுத கண்ணீர் துயரமாக இருந்தாலும் பெருமையாக இருந்தது.
ஆனால் இனி நடத்தப்படவிருக்கும் இரண்டாவது விசாரணையில் அகிலாவுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய விவகாரம் முடிந்து விட்டது. அவள் சொன்ன உண்மைகள் தள்ளப்பட்டு விட்டன. இனியுள்ளது கணேசன் இரவில் அவன் விடுதியில் மிரட்டப்பட்ட விவகாரம். அதில் அவளுக்குச் சம்பந்தமில்லை. இனி தான் கணேசனுக்குப் பரிந்து முறையீடு கொடுக்க முடியாது. அவனுக்குப் பரிந்து சாட்சி சொல்ல யாரும் அவளை அழைக்க மாட்டார்கள். விசாரணை அறைக்கு வெளியே அவளும் அவனும் பயங்களையும் தைரியங்களையுப் பரிமாறிக் கொள்ள முடியாது.
ஜெசிக்காவைப் போல அவனுடைய வழக்கைப் பெரிதாகப் பேசி அவனுடைய வக்கீல் போல அலைந்து திரிய அவளுக்கு முடியாது. உனக்கு நான் பிரியாத துணை என அவனோடு எந்த நேரமும் ஒட்டிக் கொண்டிருக்க அவளால் முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி வந்தது. ஜெசிக்காவை விடவும் இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவளும் ஈடுபட்டவளும் நான்தானே என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்கியது.
ஆனால் முடியவில்லை. வெட்கம் தடுத்தது. என்ன இருந்தாலும் அந்நியன். ஆண். ஆகவே அடக்கமில்லாமல் பழக முடியாது. அவள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் அவள் காலையும் கையையும் கட்டி தான் நினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய்க்குக் கூடப் பூட்டுப் போட்டிருந்தது.
அவனுக்காக அவள் கண்ணீர் விட்டாலும் அது அவள் அறைக்குள் அவள் தலையணையில்தான். கணேசன் பார்க்க முடியாது. அழாதே என்று பாசத்தோடு ஆறுதல் கூற முடியாது. அந்த எண்ணத்தில் அவள் ஏக்கம் இன்னும் மிகையானது.
*** *** ***
ஏக்கம் துயரங்களுக்கிடையே பாடங்களில் வேலைகள் குவிந்து கொண்டிருந்தன. ஒரு எளிய கணினி செயலிக்கு புரோக்ராம் எழுதச் சொல்லி டாக்டர் தாஜுடின் இரண்டு வார அவகாசம் கொடுத்திருந்தார். டாக்டர் அயிஷா இரண்டு புத்தகங்களில் அத்தியாயங்கள் நிர்ணயித்துப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தார். டியோட்டோரியலில் அந்த இரண்டு அத்தியாயங்கள் பற்றியும் அவள் பேச வேண்டும். அதற்கான புத்ததகங்கள் நூல்நிலைய அடுக்கிலிருந்து மாயமாக மறைந்திருந்தன. அதை அவள் ரிசர்வ் செய்துவிட்டு கொண்டு போனவர்கள் திருப்பித் தரக் காத்திருந்தாள்.
புறப்பாடத்தில் அவள் கலாச்சார நடனங்களுக்குப் பதிந்து கொண்டிருந்தாள். புதன்கிழமைகளில் ஐந்து முதல் ஏழு வரை பயிற்சி. புதிய மாணவர் மையக்கட்டிடத்தில் பண்பாட்டு அரங்கத்தின் மேல் மாடியில் பயிற்சி நடந்தது. இரண்டாவது வாரத்தில் மிக எளிதான ஜோகெட் நடனம் சொல்லிக் கொடுத்தார்கள். நுண்கலைப் பிரிவில் டியூட்டராக உள்ள லத்தீ•பா என்ற ஒரு இளம் மலாய்ப் பெண் பயிற்சியாளராக இருந்தார்.
அன்று அகிலா நடனத்துக்கு உரிய தொடைகளைக் கவ்வும் டைட்சும் தொளதொளவென்ற டீ ஷர்ட்டும் போட்டுக் கொண்டு வந்திருந்தாள். அகிலாவுக்கு பரதநாட்டியம் தெரியும். பள்ளியில் கொஞ்சம் மலாய் நடனமும் பழகியிருக்கிறாள். ஆகவே ஜோகெட்டின் அசைவுகள் எளிதாகவும் நளினமாகவும் வந்தன.
ஒரு தாடி வைத்த மலாய்க்காரர் ஓரத்தில் உட்கார்ந்து அவர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அகிலாவின் மீதே இருந்தன. திடீரென தானும் எழுந்து அகிலாவின் பக்கத்தில் புகுந்து ஆட ஆரம்பித்தார். எல்லாரும் பெண்களாக ஆடிக் கொண்டிருக்கும் இடத்தில் யார் இந்தக் கரடி என்று எரிச்சலுற்றாள் அகிலா. ஆனால் பயிற்சி ஆசிரியை ஒன்றும் சொல்லாததால் அவளாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ஆள் அனுபவித்து ஆடினார். அவருடைய உடம்பு நடனத்துக்கு நன்றாக வளைந்து வந்தது. ஒரு ஜோகெட் பைத்தியமாக இருக்க வேண்டும் என நினைத்தாள்.
பயிற்சியில் அவள் உடல் தொப்பையாக நனைந்திருந்தது. முதுகிலும் அக்குளிலும் வியர்த்து டீ ஷர்ட் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முகப் பௌடரை வியர்வை நாற்றம் தூக்கி அடித்துக் கொண்டிருந்தது.
ஆட்டம் முடிந்து அறையின் மூலைக்குப் போய் துண்டு எடுத்து அவள் கால்களைத் தூக்கி வைத்துத் தொடையில் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தத் தாடிக்காரர் பின்னால் வந்தார். "நன்றாக ஆடுகிறாய். உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
சட்டென்று காலை இறக்கி டீ ஷர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். தோற்றம் கலைந்த நிலையில் ஒரு அந்நிய ஆடவன் அவள் அருகில் நிற்பது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த ஆள் இப்படி இங்கிதமில்லாமல் வந்து பேசுவது எரிச்சலாகவும் இருந்தது. "நீங்கள் யார்?" என்று கேட்டாள்.
"நான் ஒரு ரசிகன்தான். நல்ல நடனத்தை ரசிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா?" என்றார்.
அகிலா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அழகிய பெண்களைக் கண்டால் ஈயென இளிப்பவர்கள் பல்கலைக் கழகத்துக்குள்ளும் இருப்பார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டாள். அவளுக்கு இந்த அனுபவம் தன்னுடைய பள்ளிக்கூட காலத்தில் சக மாணவர்களிடம் உண்டு. அதிலும் பெண்கள் இப்படித் தலை கலைந்து வியர்த்து சட்டை முதுகை ஒட்டியிருக்கும் காட்சியில் இவர்களுக்குப் பித்தம் தலைக்கேறிவிடும் என அவளுடைய நடனத் தோழிகள் கிளுகிளுத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆண்கள் அங்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்திருந்தாள். இந்த ஆளை அலட்சியப் படுத்துவதுதான் சரி என்று பட்டது. பதில் சொல்லாமல் இருந்தாள்.
"என்னோடு நடனமாட வருகிறாயா?" என்று அந்தத் தாடிக்காரர் தொடர்ந்து சீண்டினார்.
"உங்களோடு நான் ஏன் ஆடவேண்டும்?" சீறினாள்.
"உனக்கு நல்லது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்!" என்றார் அவர். அந்த ஆளின் நமட்டுச் சிரிப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஊட்டியது.
நேராக லத்தீ•பாவிடம் சென்றாள். "சே லத்தீ•பா!" என்று அழைத்து அவரிடம் இந்த ஆளைச் சுட்டிக் காட்டினாள்.
"என்ன அகிலா?" என்று கேட்டார் லத்தீ•பா.
"இந்த ஆள் என்னை அவருடன் ஆடவருகிறாயா என்று கேட்கிறார்" என்றாள்.
லத்தீ•பா சிரித்தார். "இந்த ஆள் அப்படிக் கேட்பது உனக்குப் பெரிய பெருமை அகிலா. இவரை நான் அறிமுகப் படுத்தவில்லை அல்லவா? இவர்தான் பேராசிரியர் முகமட் கௌஸ். நுண்கலைத் துறையின் தலைவர்!"
அகிலா அதிர்ந்து போனாள். பேராசிரியர் கௌஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள். மலாய் பாரம்பரிய நடனங்களைக் கரைத்துக் குடித்தவர். பரத நாட்டியமும் முறைப்படி கற்றவர். டெலிவிஷன் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நவீன நடனங்களை உருவாக்கி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தியவர்.
"ஐயோ! எனக்குத் தெரியாமல் போய்விட்டது. மன்னித்து விடுங்கள் பேராசிரியர் அவர்களே! நீங்கள் இந்த இடத்தில் இவ்வளவு சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை!" என்றாள்.
"நீ என்னுடன் ஆடுகிறேன் என்று சொன்னால் மன்னித்து விடுகிறேன்!" என்றார்.
"இப்போதேவா?" என்று புரியாமல் கேட்டாள்.
"இப்போதல்ல. இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஆகஸ்டில் நடைபெறுகிற இரவு விருந்தில் வேந்தருக்கு முன்னால் ஆட ஒரு புதிய நடனத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் வேண்டும். ஒரு ஆண் நான். இன்னும் இரண்டு ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுத்துவிட்டேன். இன்னும் ஒரு பெண் வேண்டும்!"
அகிலாவுக்குப் பயம் பற்றிக் கொண்டது. இன்னும் வேர்த்துப் போனாள். "நானா? வேந்தரின் விருந்திலா? நான் இப்போதுதான் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். எப்படி..."
"நீதான். வேந்தரின் விருந்தில்தான்! புதிதாக ஆரம்பிப்பவர்கள்தான் எனக்கு வேண்டும்!"
"ஐயோ என்னால் முடியாது!" என்றாள்.
லத்தீ•பா பின்னால் முதுகில் இடித்தார். "சரி என்று சொல் முட்டாள் பெண்ணே!"
"சரி!" என்றாள்.
"அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் இரவு 8 முதல் 10 வரை இங்கே பயிற்சி!" பேராசிரியர் கௌஸ் வெளியேறினார். அகிலா கொஞ்ச நேரம் அங்கேயே பிரமை பிடித்து நின்றாள்.
"என்னைக் கூப்பிடவில்லையே என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது!" என்றார் லத்தீ•பா.
*** *** ***
அந்த வார இறுதியில் சனிக்கிழமை பின்காலை வேளையில் அலோர் ஸ்டார் பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்று அதில் இருந்து இறங்கிய போது அகிலாவுக்கு அந்த ஊர் புதிதாகத் தெரிந்தது. பிறந்ததிலிருந்து அவள் இந்த ஊரைவிட்டுப் பிரிந்ததில்லை. அலோர் ஸ்டார் அரசினர் தமிழ்ப்பள்ளியில் தமிழைத் தொடங்கியதிலிருந்து தேசியப் பள்ளிகளுக்கு மாறி ஆறாம் பாரம் வரை இந்த ஊருக்குள்ளேயே சுழன்று சுழன்று படித்தாகிவிட்டது. இப்போது பினாங்கிற்குப் போய் மூன்று வாரம் இருந்து திரும்பும்போது இந்த ஊர் வேறு மாதிரி இருந்தது. அந்த பஸ் ஸ்டேஷன், கடை வரிசைகள், ஆறு, பழைய பாலம், மார்க்கெட், பார்க்கும் எல்லா இடங்களிலும் ஒரு மந்திர மயமான ஈர்ப்பு இருந்தது.
அப்பா பஸ் ஸ்டேஷனில் தம்பியுடன் காத்திருந்தார். அவளைக் கண்டதும் தம்பி ஓடிவந்து அவளுடைய தோள்பையை வாங்கிக் கொண்டான். "எப்படிம்மா, பஸ் சௌரியமா இருந்திச்சா?" என்று அப்பா கேட்டார். முதல் முறை பினாங்கிலிருந்து விரைவு பஸ் பிடித்து வருகிறாள். ஒன்றரை மணி நேரப் பயணம்தான். "பஸ் நல்லா இருக்குப்பா. ஒரு கஷ்டமும் இல்ல!" என்றாள். "அம்மா எப்படிப்பா?" என்றாள்.
"இருக்காங்க, என்னா கொறச்சல்? நீ போய்ட்டியேங்கிற ஏக்கந்தான். இன்னைக்கு காலையில இருந்து மாஞ்சி மாஞ்சி சமைச்சிக்கிட்டிருக்கு வீட்டில!"
அம்மாவின் சமையலுக்கு நாக்கு ஏங்கியது. தன் வீட்டில் தனக்கே உரிய பீங்கான் தட்டில் பழகிய பாத்திரங்களிலிருந்து பழகிய கரண்டிகளில் சோற்றையும் அம்மாவின் கைவாகுவில் மணக்கும் கறிகளையும் அள்ளி இஷ்டம் போல் பிசைந்து வாயில் திணித்துப் புரையேறி "மெதுவா சாப்பிடும்மா" என்று அம்மா முதுகில் தட்டித் தண்ணீரெடுத்துக் கொடுக்கும் மனக் காட்சியில் அவள் கரைந்தாள்.
போகும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த பழைய இடங்களைப் புதிதாகப் பார்த்தாள். அவை தோற்றத்தில் முன்பு போல் இருந்தாலும் உணர்வில் மாறி இருந்தன. ஆனால் கொஞ்ச தூரம் போவதற்குள் மாறியிருப்பது ஊரல்ல, தான்தான் என்ற உணர்வு வந்தது.
நான் பழைய அகிலா இல்லை. பள்ளி மாணவி அல்ல. பட்டப்படிப்பு மாணவி. வாழ்க்கையில் விவரம்தெரிந்த நாள் முதலாய் தனக்கு முன்னுதாரணமாகக் கொண்ட அப்பாவையும் கல்வியில் மிஞ்சியாகிவிட்டது. இன்னும் நான்காண்டுகளில் தான் பட்டதாரி. தன் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி.
பட்டதாரிக்குரிய வேலை வரும். கைநிறையச் சம்பளமும் தனி அலுவலகமும் டெலிபோனும் வரும். இன்சூரன்சும் சேமிப்பும் வரும். வரும் கணவனும் பட்டதாரியாக இருப்பான். இருக்க வேண்டும். அது யாராயிருக்கும்? கணேசனா?
அவன் நினைப்பு வந்து. அவன் தன்னைக் கைப்பிடித்து அழைத்துப் போனது, ஜெசிக்காவுடன் உட்கார்ந்து சீரியசாகப் பேசியது, விசாரணை அறைக்கு முன் காத்து நின்றது, குளிர்பானம் வாங்கிக் கொடுத்தது....
அவனுடைய நினைப்பு ஏன் வரவேண்டும்? என் பிறந்த ஊரையும் எனக்கே உரிய வாசனைகளுடன் கூடிய என் அறையையும் பாசமிக்க குடும்பத்தையும் பழகிய தோழிகளையும் நினைத்து அனுபவிக்க வேண்டிய இந்த நேரத்தில் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு ஏன் அவன் நினைவு வரவேண்டும்?
நான் அவனைக் காதலிக்கிறேனா? சீச்சீ! காதல் பண்ணும் அளவுக்கு எனக்கும் அவனுக்கும் என்ன நெருக்கம்? முன்பின் தெரியாத ஆள். பார்த்து மூன்று வாரம் ஆகவில்லை. நிர்ப்பந்தத்தால் பழகியது இரண்டு மூன்று நாட்கள். அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
அவனுக்காக நான் அழுதேன். என்னை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற வந்த இளவரசனாக அவனை நினைத்தேன். எனக்காக அவன் தண்டனை அனுபவிக்கிறான் என வருந்தினேன். அவனுக்கு நான் உதவ நினைத்து முயன்றதெல்லாம் வீணாகிவிட்டதே என ஏங்கினேன். அவன் ஆறுதல் சொல்ல நான் தேறினேன். ஜெசிக்கா அவனோடு ஒட்டியிருப்பதைப் பார்த்து பொறாமைப் பட்டேன். நான் ஒட்டியிருக்க முடியவில்லையே என மனதுக்குள் பிழியப் பட்டேன். எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுதான் காதலா?
"சீச்சீ" என மீண்டும் உதறினாள். சந்தர்ப்பங்களினால் நாங்கள் சந்தித்தோம். பஸ்ஸிலும் டெக்சியிலும் ஆட்களை சந்திப்பதில்லையா? அப்படி! பஸ்ஸில் தடுக்கித் தடுமாறுபவர்களைக் கைத்தாங்கலாகப் பிடிப்பதல்லையா? அப்படித்தான். எல்லாம் தருணங்களின் நிர்ப்பந்தங்கள். இந்த நிர்ப்பந்தங்கள் விலகியவுடன் ஒரு சிறிய புன்முறுவலுடன் உறவு நின்றுவிடும்.
"சௌக்கியமா அகிலா!"
"சௌக்கியம் கணேசன்! நீங்க எப்படி இருக்கிங்க?"
"ஓக்கே! எக்கோனமிக்ஸ் லெக்சர் இருக்கு, பை பை!"
முடிந்து விடும். அவ்வளவுதானா? அவ்வளவுதான் என்றால் வந்த இடத்தில் ஒரு வழிப் பயணி பற்றி ஏன் இத்தனை நினைவுகள்? இந்த ஊரின் காற்றை ஆழ்ந்து சுவாசித்து தோழிகளை நினைத்து நினைத்துத் தேடாமல் ஏன் கணேசனைப் பற்றியே சிந்தனை?
தம்பி பிடித்து உலுக்கினான். "பினேங்குக்குப் போயி அக்கா செவிடாப் போச்சிப்பா!" என்றான்.
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். "என்ன அருண்?"
"அப்பா என்னமோ கேக்கிறாங்க, நீ என்னமோ யோசனையில இருக்கியே!"
"என்ன கேட்டிங்க அப்பா?"
"இல்ல, அந்த ரேகிங் கேஸ் பத்தி சொன்னிய, அது என்ன ஆச்சின்னு கேட்டம்பா!"
"ஓ அதுவா?" அகிலா பெருமூச்சு விட்டாள். "அந்தப் பையனுங்க ஒருமாதிரி சூழ்ச்சி பண்ணி எங்களையே குத்தவாளி ஆக்கப் பாக்கிறாங்கப்பா. அடுத்த வாரம் இன்னும் விசாரண இருக்கு!"
அகிலா மீண்டும் கணேசனை எண்ணிக் கவலைப் பட்டாள்.
***
கொல்லன் இரும்பு உலையின் துருத்தியிலிருந்து வரும் அனல் காற்றுப் போல நெஞ்சுக் கூட்டிலிருந்து புஸ் புஸ்ஸென்று மூச்சு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. வியர்வை ஆறாய் வழிந்து கொண்டிருந்தது. கால்களின் கீழ் சப்பாத்துகளின் "தம் தம்" ஒலி காதுப் பறையில் இடித்துக் கொண்டிருந்தது.
பல்கலைக் கழகத்தின் புதிய ஓட்டப்பந்தய ஸ்டேடியத்தில் சிகப்பு வண்ண ஓட்டப் பாட்டையில் கணேசன் அப்போது பத்தாவது சுற்று ஜோகிங் வந்து கொண்டிருந்தான். அவனோடு ஓடிய ரவியும் ராகவனும் அசந்து உட்கார்ந்து விட்டார்கள். இன்னும் இருபது சுற்றாவது ஓடாமல் விடுவதில்லை என கணேசன் ஓடிக் கொண்டிருந்தான்.
புதிய பருவத்திற்குப் பல்கலைக் கழகம் புகுந்ததிலிருந்து ஜோகிங் செய்ய நேரம் கிடைக்கவில்லை. முந்தைய பருவங்களில் வாரத்திற்கு மூன்று நாள் ஓடுவான். இன்று அவன் நண்பன் ரவியும் அவர்களுக்கு அண்ணன் போல் பழகிவிட்ட மூத்த மாணவர் ராகவனும் வந்து கூப்பிட்டவுடன் ஒத்துக் கொண்டான். புதிய ஸ்டேடியத்தில் ஓடலாம் என முடிவு செய்தார்கள். அவர்களுக்கு வசதியாக அன்று ஞாயிற்றுக் கிழமை. ஸ்டேடியம் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தது. ஐந்தாறு சீன மாணவர்கள் மட்டும் மத்தியிலுள்ள புல் திடலில் தாய்ச் சீ பழகிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஸ்டேடியத்தை அண்மையில்தான் கட்டி முடிந்திருந்தார்கள். அதற்கு நேர் எதிரில் ஹாக்கிக்காக செயற்கைத் திடலும் அமைத்திருந்தார்கள். புதிய ஸ்குவாஷ் கோர்ட்டுக்களும் பக்கத்தில் இருந்தன.
உண்மையில் பல்கலைக் கழக வளாகத்தில் ஜோகிங் செய்ய ஸ்டேடியம் வேண்டும் என்பதில்லை. அதன் சாலைகளிலும் சோலைகளிலும் எந்த இடத்திலும் ஜோகிங் செய்யலாம். ஆனால் ஸ்டேடியத்தில் சுற்றுக் கணக்கு வைத்து ஜோகிங் செய்யலாம். பாட்டை சமமாக இருக்கும். ஓடுவதற்கு அமைக்கப்பட்ட சிறப்புப் பாட்டையாதனால் பாதத்தை எம்பிக் கொடுக்கும்.
ஓட ஓட கணேசனுக்கு ஆனந்தமாக இருந்தது. எண்ணம் எங்கு அலைந்தாலும் உடலின் முயற்சி அநேகமாகத் தானியங்கியாக நடந்தது. கால்கள் தாளம் தவறாமல் எம்பின. அந்த எம்புதலுக்கேற்ப கைகள் வீசின. உடல் இயக்கத்தின் வெப்பத்தில் அவன் தசை நீர் ஆவியாகி அந்தக் காலை வேளையிலும் உடல் பூராகப் பொங்கி வழிந்தது. அவன் புதிதாக வாங்கி நைக்கி ஒடும் சப்பாத்துக்கள் மெத்து மெத்தென்றிருந்தன. போன விடுமுறையின் போதுதான் அத்தை இந்த விலையுயர்ந்த சப்பாத்துகளை வாங்கிக் கொடுத்திருந்தாள்.
அத்தையை நினைத்த போது கணேசன் நெஞ்சில் நன்றி பெருக்கெடுத்தது. அத்தை எப்போதும் அப்படித்தான். கணேசனுக்கு ஏதாகிலும் வேண்டும் என்று ஒரு குறிப்பு தெரிந்துவிட்டால் போதும். உடனே போய் எங்கிருந்தாவது வாங்கிக் கொடுத்து விடுவாள்.
விடுமுறையில் கிள்ளானில் அத்தை வீட்டில் இருந்தபோது ஒரு நாள் கால் நகங்கள் வெட்டிக் கொண்டிருந்தான். “ஏன் கணேசு, உன் நகம் இப்படி வளைஞ்சி கெடக்குது?" என்று அத்தை கேட்டாள்.
“அடிக்கடி ஜோகிங் போறென்ல, அத்தை! சப்பாத்து சரியில்ல! அது நெகத்தை கெடுத்திருது" என்றான்.
"ஏன் சப்பாத்து சரியில்ல? "
”என் சப்பாத்து சாதாரண விளையாட்டு சப்பாத்து. அதப் போட்டு ஓடுனா இப்படித்தான். ஜோகிங்கிக்கு தனி சப்பாத்து இருக்கு! ஆனா ரொம்ப விலை!"
அத்தை விடவில்லை. அடுத்த நாள் அவனைக் கூட்டிக் கொண்டு போய் கிள்ளான் கடைத் தெருவில் அலைந்து அவன் தடுத்தும் விடாமல் 200 வெள்ளி செலவழித்து உயர்தர பிரான்டான நைக்கி சப்பாத்தை வாங்கிக் கொடுத்தாள். அந்தச் சப்பாத்தை வாங்கியதில் அவன் மகிழ்ந்ததை விட அத்தையும் அவள் மகள் மல்லிகாவும் மகிழ்ந்ததுதான் அதிகம்.
அத்தைக்கு இப்போது இங்கு நடக்கின்ற குழப்பங்கள் தெரியவந்தால் எவ்வளவு கவலையும் கலவரமும் அடைவாள் என நினைத்துப் பார்த்தபோது உள்ளம் சோர்ந்தது. அவளுக்கு அவனுடைய படிப்பும் எதிர்காலமும் ஒரு பொருட்டே அல்ல. அவன் அவனாக இருப்பதுதான் பெரிது.
"ஏன் கணேசு அங்கல்லாம் போய் இப்படி லோல் பட்ற. யுனிவர்சிட்டி கினிவர்சிட்டியெல்லாம் உனக்கு எதுக்கு? பேசாம விட்டுட்டு வந்து மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு!" என்பாள்.
15வது சுற்று. மூச்சு வாங்கினாலும் உடல் இன்னும் களைக்கவில்லை. ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தான். வளாகத்துக்கு வெளியே தெற்கு கேட்டுக்கு அப்பால் யாப் சோர் ஈ சாலையில் கார்கள் விரைவாக ஓடிக் கொண்டிருந்தன. அதற்கப்பால் காம்பியர் குன்றுகள் பசுமையாகத் தெரிந்தன.
அத்தை நினைவுகவனுடைய இடைவிடாத ஓட்டத்துக்கு இடையிலும் சிதறல் சிகறலாக வந்தது. அத்தைதான் அவனுக்குக் குடும்பம். தன் தந்தைக்குத் தங்கையான இந்த அத்தை இளம் வயதில் அவர்கள் வீட்டில்தான் வளர்ந்தாள். கிள்ளானை அடுத்துள்ள ஒரு தோட்டத்தில் பால்மரம் வெட்டிப் பிழைக்கும் குடும்பம் அது. அப்பா அப்போதும் குடி, இப்போதும் குடிதான்.
பகலில் உழைப்பு, பிற்பகலில் தூக்கம். மாலையில் அம்மாவுடன் காசுக்குச் சண்டை. அப்புறம் கள்ளுக்கடையில் குடி. இரவில் பெண்டாட்டியை அடித்துவிட்டு மயக்கம் கலந்த தூக்கம். விடிகாலையில் இயந்திரம்போல் எழுந்து வேலை. இதுதான் அப்பா.
பின்னால் சமுதாய சீர்திருத்த நோக்கம் கொண்ட இளைஞர்கள் செய்த புரட்சியில் அந்தத் தோட்டத்தின் கள்ளுக்கடையை மூடிவிட்டார்கள். ஆனால் அதே வேகத்தில் அந்தத் தோட்டத்தில் கள்ளச் சாராயம் புகுந்தது. முன்பு கள் குடித்துத் தள்ளாடினாலும் இயற்கை பானத்தில் தெம்பாக இருந்த அப்பா சாராயம் குடித்து உள்ளுறுப்புக்களை எரித்துக் கொள்ள ஆரம்பித்தார்.
அம்மாவுக்கு அந்தக் குடும்பத்தில் ஒரு பங்கு இருந்ததாகவே தெரியவில்லை. வாயிருந்தும் அவள் ஊமை. அப்பாதான் அவள் உலகம். வேறு உலகம் தெரியாது. பிள்ளைகளை வளர்க்கக்கூட அவளுக்குத் தெரியாது. அப்பா சாராயம் வாங்கி வா என்றாள் இன்றும் நங்குநங்கென்று ஓடுவாள்.
பிள்ளைகள் - கணேசன், அவனுக்கு முந்திய ஒரு அக்காள், ஒரு அண்ணன் - மூவரும் தாங்களாகத்தான் வளர்ந்தார்கள். இதற்கிடையில் வேறு ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்த கணேசனின் தாத்தா இறந்து விட இந்த மங்களம் அத்தை அவர்கள் குடும்பத்தில் அடைக்கலம் தேடி வந்து அவளும் பால்வெட்டப் போய் குடும்பத்துக்கு வேலைக்காரியாகவும் இருந்து அப்பாவிடம் உதையும் வாங்கிக் கொண்டு கிடந்தாள்.
ஆனால் இந்த அத்தையிடம் சிவந்த மேனியும் வடிவான முகமும் ஒரு மயக்கச் சிரிப்பும் இருந்தன. கணேசனுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவளும் "கணேசு, கணேசு" என ஒரு மகனைப் போல அவனை அணைத்துக் கொஞ்சினாள்.
அவர்கள் தோட்டத்திற்குத் துணி விற்கும் இளைஞரான வியாபாரி ஒருவர் மாதந்தோறும் வருவார். தவணைக்குச் சேலைகளும் பிற துணிகளும் விற்பார். அவர்கள் வீட்டுக்கு மாதந்தோறும் வரப்போக இருந்தவர் அத்தையைப் பார்க்க விசேஷமாகவும் வரத் தொடங்கினார். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேதோ பலகாரங்கள் வாங்கிக் கொடுத்து நண்பராகி அத்தையிடம் சிரித்துச் சிரித்துப் பேசினார்.
இதைப் பார்த்துப் பொருக்காத அவன் அப்பா ஒருநாள் அத்தையைப் போட்டு அடிக்க அதைக் கேள்விப்பட்ட துணி வியாபாரி மறுநாள் வந்து அப்பாவையும் அம்மாவையும் நேராகக் கேட்டார்: "நான் மங்களத்த கட்டிக்க விரும்புறேன்! என்ன சொல்றீங்க?"
இதைக் கேட்டு முதலில் வீட்டில் கலவரம்தான் நிகழ்ந்தது. அவர் ஏதோ பேசக் கூடாதததைப் பேசிவிட்டதைப் போலவும் இதனால் குடும்ப மானம் போய்விட்டது போலவும் அப்பா குதித்தார். அப்புறம் பேச்சு வார்த்தைகள் நடந்தன. பணம் கைமாறியது.
அவனுக்கு ஆறு வயது இருக்கும் போது தோட்டக் கோயிலில் அத்தையின் திருமணம் நடந்தது கணேசனுக்கு ஒரு பழைய மங்கிக் கிழிந்து போன புகைப்படம் மாதிரி துண்டு துண்டாக ஞாபகத்தில் இருந்தது. அத்தை புதிதாகப் புடவை கட்டிக்கொண்டு மாலை போட்டுக் கொண்டிருந்த காட்சி, அண்டாக்களில் வெந்து கொண்டிருந்த ஆட்டிறைச்சிக் குழம்பின் வாசனையோடும் வீட்டில் குவியல் குவியலாகச் சுட்டுப் போடப்பட்டிருந்த அதிரசங்களின் எண்ணெய் பிசுபிசுப்போடும் நினைவுக் குகைகளின் ஓரங்களில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
கல்யாணத்திற்குப் பின் வீட்டுக்குள் என்ன காரணத்தினாலோ பெரிய சண்டை நடந்தது. அத்தை மல்லிகைப் பூ மணமும் சந்தன மணமும் மாறாமல் கணேசனை அணைத்துக் கொண்டு ஒரு மூலையில் சுருண்டிருந்தாள். சண்டையின் உச்சத்தில் அந்த மாமா அறைக்குள் வந்து அத்தையைக் கையைப்பிடித்து எழ வைத்தார். "மங்களம், இந்த ஈன ஜனங்களோட மூஞ்சில இனி எந்த நாளும் முளிக்கவே கூடாது. வா. கடைசியா எல்லார் கிட்டயும் போயிட்டு வரேன்னு சொல்லிக்க! கார் கொண்டாந்திருக்கேன், ஏறு!" என்றார்.
அத்தை அவனைத்தான் அதிகமாகக் கட்டிப் பிடித்து அழுதாள். அப்புறம் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டுக் கார் ஏறிப் போய்விட்டாள்.
அன்றிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகள் அத்தை அந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. ஆனால் அவள் வாழ்க்கை முற்றாக மாற்றம் அடைந்து விட்டதை அவ்வப்போது செவிவழிச் செய்திகளாக கணேசனின் குடும்பம் கேட்டு வாய் பிளந்து கொண்டிருந்தது.
அத்தையின் கணவர் வியாபாரத்தில் வளர்ந்து விட்டாராம். கார் வைத்து வியாபாரம் செய்கிறாராம். வியாபாரம் ஓஹோ என்று நடக்கிறதாம். ஒரு பெண் குழந்தையாம். எல்லாம் இந்த மனைவி கொண்டு வந்த அதிர்ஷ்டம் என்று மனைவியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாராம். பங்களா வாங்கி விட்டார்களாம். "உன் மூதேவி அண்ணன் முகத்தில முளிக்காத மங்களம். வந்த சீதேவி ஓடியே போயிடுவா!" என்ற அவருடைய மருட்டலில் மங்களம் இவர்கள் குடும்ப நினைப்பையே விட்டுவிட்டாளாம்.
"ஓ அப்படியா! அவ வரவேணாம்! வந்தா செருப்பாலியே அடிப்பேன்!" என்று இருமி இருமி பதில் சவால் விட்டார் அவன் அப்பா.
ஆனால் அத்தை ஒரு நாள் அவர்கள் வீடு தேடி வரத்தான் செய்தாள். ஓர் ஐந்து வயதுப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு டிரைவர் வைத்து ஓட்டிய சொந்தக் காரில் வந்திறங்கி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். "ஐயோ என்ன உட்டுட்டுப் போயிட்டாங்க அண்ணி! நெஞ்சு வலிக்குதுன்னு படுத்தாங்க! பட்டுன்னு போயிட்டாங்க! எனக்கு இனி குடும்பம்னு சால்லிக்க வேற யாரு இருக்காங்க உங்கள விட்டா....?"
--------------------
"இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்" என்றார் பேராசிரியர் முருகேசு.
கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை மறுநாள் பார்க்க வேண்டும் என ராகவன் தொலை பேசியில் நேற்று கேட்ட போது முதலில் மறுத்து விட்டார்.
"நாளைக்கு முழுக்க எனக்கு வேலைகள் இருக்கு ராகவன். எட்டரை மணிக்கு டீன் என்னைச் சந்திக்கணும்னு சொல்லியிருக்காரு. ஒன்பது மணிக்கு நானும் டீனும் ஒரு மீட்டிங் போக வேண்டியிருக்கு. பதினொரு மணிக்கு விரிவுரை. மத்தியானம் டியுட்டோரியல். நாலு மணிக்கு என்னுடைய எம்.ஏ. மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வர்ராரு. ஆகவே நேரம் இருக்காது. அவசரம் இல்லைன்னா இன்னொரு நாளைக்கு வாங்களேன்!" என்றார்.
ராகவன் நிலைமையின் அவசரத்தை எடுத்துச் சொன்னார். கணேசனைப் பற்றிச் சொன்னார்.
"சரி. அப்ப ஒரே வழிதான் இருக்கு. நாளைக்கு காலையில ஏழரை மணிக்கெல்லாம் வந்திருங்க. எட்டரைக்குள்ள பேசி முடிக்கலாம்!" என்றார்.
"நீங்கள் எங்களுக்காக அத்தனை வெள்ளன வரவேண்டியிருக்கே!" என்று வருத்தப் பட்டார் ராகவன்.
"பரவாயில்ல! எப்படியும் வழக்கமா நான் எட்டு மணிக்கு என்னுடைய அலுவலகத்துக்கு வந்திருவேன். அப்பதான் மாணவர்கள் தொந்தரவு இல்லாம கடிதங்களையும் ஈமெயிலையும் பார்த்து பதில் எழுத முடியும். இந்த கணேசன் கேஸ் பத்தி நானும் கணேசன் கிட்ட பேசத்தான் வேண்டியிருக்கு. அதினால ஏழரைக்கு வந்திடுங்க. பேசுவோம்!" என்றார்.
ஏழரை மணிக்கு அவர்கள் மனிதவியல் கட்டடத்தை வந்தடைந்த போது கட்டடக் கதவு திறந்திருந்தாலும் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை. அலுவலக ஊழியர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. கார் நிறுத்துமிடங்கள் வெறுமையாகக் கிடந்தாலும் பேராசிரியருடைய கார் அங்கு ஒற்றையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் தங்களுக்காக அவர் வெள்ளென வந்து காத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
முதல் மாடிக்கு ஏறிச் சென்று அவருடைய அறைக் கதவை அவர்கள் தட்டிய போது "வாங்க, வாங்க!" என்று தமிழிலேயே பதில் சொன்னார்.
அவருடைய அறையை முழுவதுமாக புத்தக அலமாரிகள் அடைத்துக் கொண்டிருந்தன. ஆசிய வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராக இருந்ததால் இந்திய, சீன, தென்கிழக்காசிய வரலாற்று நூல்கள் ஏராளமாக இருந்தன. அவரே எழுதிய "தென்னிந்தியாவில் திராவிடர் கழகத்தின் தாக்கம்" என்ற ஆங்கில நூலின் பல பிரதிகள் இருந்தன. அதே போல "தென்கிழக்காசியாவில் இந்தியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள்" என்ற அவர் எழுதி தேவான் பஹாசாவால் பதிப்பிக்கப்பட்ட மலாய் நூலும் அந்த அலமாரி ஒன்றில் இருந்தது.
தமிழ் நூல்களும் ஏராளமாக வைத்திருந்தார். தமிழ் பக்தி இலக்கியத்திலும் சைவ சித்தாந்தத்திலும் ஆராய்ச்சி ஈடுபாடு உள்ளவராதலால் அந்த நூல்கள் ஏராளமாக இருந்தன. பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆதி சங்கரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றிய நூல்கள் இருந்தன.
நவீன இலக்கியத்திலும் ஈடுபாடு உள்ளவராதலால் பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு என பலவித நூல்கள் இருந்தன. சீலிங் உயரத்துக்கு அடிக்கப்பட்டிருந்த அலமாரிகளில் இன்னும் தடிப்புத் தடிப்பான தமிழ் ஆங்கில புத்தகங்கள் இருந்தன. அவற்றை எடுக்க ஏறுவதற்காக ஒரு ஆளுயுர ஏணியும் அவர் அறையில் இருந்தது.
கம்ப்யூட்டர் திரையில் ஏதோ ஈமெயிலைப் படித்துக் கொண்டிருந்தவர் அதை மூடிவிட்டு அவர்களைப் பார்த்தார்.
அவருடைய நாற்காலிக்கு மேலாக ஒரு பெரிய புத்தர் படம் தொங்கிக் கொண்டிருந்தது. தாமரையில் அமர்ந்து மடிமேல் திறந்த இடது உள்ளங்கை மேல் வலது புறங்கை அமர்த்தி கண்களை மூடி தியான நிலையில் அமைதி தவழும் முகத்தோடு தங்க வண்ணத்தில் அந்த புத்தர் இருந்தார். கணேசன் முன்பு ஓரிரு முறை அவரைப் பார்க்க அந்த அறைக்கு வந்திருந்த போது அந்தப் படத்தைப் பார்த்து தன் உள்ளத்திலும் பக்தியும் பரவசமும் பரவுவதை அனுபவித்திருக்கிறான்.
வணக்கம் சொல்லி அமர்ந்தபின் ராகவன் சொன்னார்: "உங்க அறையில இவ்வளவு தமிழ் புத்தகங்கள் வச்சிருக்கிறிங்களே சார். பார்க்க சந்தோஷமா இருக்கு!"
"அப்படியா ராகவன்! ஆனா அடிக்கடி குறிப்பு பாக்கிறதுக்காக உள்ள புத்தகங்கள மட்டும்தான் இங்க வச்சிருக்கேன். மற்ற தமிழ் புத்தகங்கள்ளாம் வீட்டில. அது அலமாரி அலமாரியாக குப்பை குப்பையா கிடக்கு!" என்றார் சிரித்துக் கொண்டே.
"சரி வந்த விஷயம் சொல்லுங்க! எப்படி நல்ல மாணவரான கணேசன் இந்த மாதிரி ஒரு இக்கட்டில மாட்டிக்கிட்டார்?" அவர் வெற்றுரையாடலில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை; நேராக விஷயத்துக்கு வர விரும்புகிறார் என்பதை கணேசன் புரிந்து கொண்டான்.
கணேசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான். "உண்மையில நான் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல பேராசிரியர் அவர்களே! அன்றைக்கு நான் விசாரணையில சொன்னது அத்தனையும் உண்மை. அதே போல அந்தப் பையன் பரசுராமன் சொல்றதும் அவனுடைய கூட்டாளிகள் சொல்ற சாட்சியமும் பொய். ராஜனும் அவனுடைய காராட் கேங் நண்பர்களும் பரசுராமன மிரட்டி வச்சிருக்காங்க. அந்த பயத்திலதான் அப்படிச் சொல்றார். நான் நிரபராதி. ஒரு முதலாண்டுப் பெண்ணுக்கு நல்ல மனசோட உதவி செய்யப் போய் சந்தர்ப்ப வசத்தால என்னுடைய உண்மைய நிருபிக்க முடியாம இருக்கிறேன்!"
சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின. இந்தப் பேராசிரியரை நட்புச் சூழ்நிலையில் சந்தித்துச் சுமுகமாகப் பேசிக்கொண்டிருந்த காலங்கள் போய், இப்போது முறையீடு செய்து கெஞ்ச வேண்டிய நிலைமை அவனை உள்ளுக்குள் துன்புறுத்தியது. தலை குனிந்து துடைத்துக் கொண்டான். அப்போதுதான் பேராசிரியர் முருகேசு சொன்னார்: "இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்"
அவர் அந்தப் பல்கலைக் கழகத்தில் தொடக்கத்திலிருந்தே வேலை பார்த்து வந்திருக்கிறார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் அடிப்படை பட்டப் படிப்பை முடித்தபின் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயிற்சி விரிவுரையாளராகச் சேர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்புக்கும் முனைவர் பட்டப் படிப்புக்கும் உபகாரச் சம்பளங்கள் பெற்று வெளிநாடுகள் சென்று படித்து முடித்தவர். அதே பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், பின்னர் முழுப் பேராசிரியராகவும் பதவிகள் பெற்றவர். இப்போது வரலாற்றுத் துறைக்குத் தலைவராகவும் உள்ளவர்.
தொடக்க காலம் முதலே இந்திய மாணவர்களோடு தொடர்பு உள்ளவர். தான் மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த சில ஆண்டுகளைத் தவிர்த்து பிற எல்லா ஆண்டுகளிலும் இந்திய பண்பாட்டுச் சங்கத்திற்குத் தொடர்ந்து ஆலோசகராக இருந்து வந்திருக்கிறார்.
"தொடக்க காலத்தில இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ர மாணவர்கள் தமிழ் அவ்வளவாத் தெரியாதவங்களா இருந்தாங்க. இருந்தாலும் தமிழ் பண்பாட்டின் மேல ஆர்வம் உள்ளவங்கதான். பெரும்பாலும் நடுத்தர வகுப்புப் பிள்ளைகள். ஆனா அண்மையில தமிழ் பள்ளிக் கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கி தேசியப் பள்ளிகளுக்குப் போய் முன்னேறின தொழிலாளர் வகுப்புப் பிள்ளைகள் பலர் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வரத் தொடங்கியிருக்காங்க. இது பாக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
"தமிழ்ப் பள்ளிக்கூடத்தில தங்கள் கல்வியத் தொடங்கிய முதல் தொகுதி பல்கலைக் கழக மாணவர்கள் ரொம்ப பணிவுள்ளவர்களாகவும் மரியாதையுள்ளவர்களாகவும் மொழி கலாச்சாரத்தில ரொம்ப பிடிப்பு உள்ளவங்களாகவும் இருந்தாங்க. ஆனா போகப் போக இந்த நிலமை மாறி வர்ரத நான் பார்க்கிறேன்.
"இப்ப வர்ர தமிழ் மாணவர்களுடைய பழக்கவழக்கங்கள் ரொம்ப கொச்சைத் தனமா இருக்கு. இதை நான் இடை நிலைப் பள்ளிகளிலியும் பார்க்கிறேன். இடைநிலைப் பள்ளிகள்ள இவங்க நடத்திர கலைநிகழ்ச்சிகள், வேற நடவடிக்கைகள் எல்லாத்திலியும் ஒரு கொச்சைத் தனம் இருக்கு. ரொம்ப கீழ்த்தரமான பேச்சுகள், சினிமா மேல பைத்தியம், சினிமாவ தங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்கள்ள காப்பியடிக்கிறது, சிகரெட் குடி போன்ற பழக்கங்கள் எல்லாம் அதிகரிச்சி வருது. அந்தப் பழக்க வழக்கங்களையே பல்கலைக் கழகத்துக்கும் கொண்டு வர்ராங்க"
நிறுத்தி ஒரு பெருமூச்சு விட்டார். பொதுவாகச் சொல்லுகிறாரா அல்லது தன்னைத்தான் குற்றவாளியாக்கிக் கூறுகிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கணேசன் இருக்கையில் நெளிந்தான்.
"அது மட்டும் அல்ல. பிறர் அவங்களுக்குப் புத்திமதி சொல்றதையும் அவங்க வெறுக்கிறாங்க. விரிவுரையாளர்கள் உட்பட யார் மேலயும் அவர்களுக்கு மரியாதை இல்லாம போச்சி. ஆகவே போன சில ஆண்டுகளாக என்னுடைய ஆலோசனய கூட அவங்க செவி மடுக்கிறது கிடையாது. யாரும் நம்ம ஒண்ணும் செய்ய முடியாது என்கிற ஒரு திமிரான போக்கு இருக்கு! இதுவே எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கு"
கணேசனை நேராகப் பார்த்தார். பேசினார்: "இந்த நிலைமையிலதான் கணேசனப் போல அமைதியான புத்திசாலித்தனமான மரியாதையுள்ள மாணவர்களப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு."
திரும்பி ராகவனைப் பார்த்தார். "உங்களையுந்தான் ராகவன். பல ஆண்டுகளாக வேல செய்து வருமானம் தேடி குடும்பத்த அமைச்சிக்கிட்ட நிலைமையிலும் படிப்புக்காக வேலய விட்டுட்டு குடும்பத்த விட்டுட்டு வந்திருக்கிற உங்களயும், நீங்க படிப்பில காட்டிற அக்கறையையும் நான் ரொம்ப மதிக்கிறேன்!"
மீண்டும் கணேசன் பக்கம் திரும்பினார்: "இந்த எண்ணத்தோட இருக்கும் போதுதான் கணேசன் ரேகிங்கில பிடிபட்டார்னு செய்தி வந்தது. எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்திச்சி. உண்மையா பொய்யான்னு முடிவு செய்ய முடியில. அப்படி உண்மையிலேயே நடந்திருந்து இப்ப பொய் சொல்லித் தப்பிக்க நினைச்சிங்கன்னா இனி இந்திய மாணவர்கள் மேல உள்ள எல்லா நம்பிக்கையையும் நான் இழந்திருவேன்!"
சொல்லி நிறுத்தினார். ராகவனும் கணேசனும் வாயடைத்துப் போயிருந்தனர். அவர் உள்ளம் இந்த நிகழ்ச்சியால் எவ்வளவு புண்பட்டுப் போயிருக்கிறது என்பது கணேசனுக்குப் புரிந்தது.
குரல் தளும்பச் சொன்னான்: "சார்! என்னப் பத்திய உங்களுடைய நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி. அந்த நல்லெண்ணத்துக்குப் பாதகமான காரியம் எதையும் நான் செய்யில. இது சத்தியம்"
ராகவன் பேசினார்: "சார்! இந்த காராட் கேங் பையன்களுக்கு கணேசன் அல்லது என் போன்றவர்கள் மேல எப்போதுமே கோபம், பொறாமை. ஏன்னா அவங்களுடைய அட்டூழியங்களுக்கு நாங்க தடையா இருக்கிறோம்கிறதுக்காக. இந்த முறை கணேசன் அவங்ககிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு. அவங்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகிட்டாரு. இந்த விஷயம் துணைவேந்தர் வரைக்கும் போயிட்டதினால அவருடைய நண்பர்களான நாங்கள் வருத்தத்தோட அனுதாபப் பட்றதத் தவிர வேற எதுவும் செய்ய முடியல. அதினாலதான் உங்க உதவிய நாடி வந்திருக்கோம்" என்றார்.
பேராசிரியர் சற்று நேரம் யோசித்தவாறு இருந்தார். கணேசனைப் பார்த்தார். "கணேசன். நீங்க சொல்றத உண்மைன்னே வச்சிக்குவோம். ஆனா உங்கள் பக்கம் சாட்சிகள் இல்ல. ராஜன் வெளி ஆட்களக் கொண்டு வந்து உங்கள மிரட்டினதாக நீங்க சொன்னதுக்கும் சாட்சிகள் யாரும் இதுவரையில இருக்கிறதா தெரியில. இந்த நிலையில எத வச்சி உங்கள காப்பாத்திறதுன்னு எனக்கும் தெரியில"
நிறுத்தி யோசித்தார். பின் தொடர்ந்தார்: "என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் கணேசன், டத்தோ சலீமிடம் பேசிப் பார்க்கிறதுதான். நீங்கள் சந்தர்ப்ப வசத்தால இதில மாட்டிக்கிட்டிங்கன்னு சொல்றேன். உங்களுடைய நல்ல குணத்தப்பத்தி சொல்றேன். நீங்கள் இந்தத் தவறை செஞ்சிருக்க மாட்டிங்க அப்படிங்கிற என்னுடைய நம்பிக்கையையும் சொல்றேன். அதற்கு மேல அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!" என்றார்.
கணேசன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். "மறு விசாரணை இந்த வெள்ளிக்கிழமை வச்சிருக்காங்க சார்!" என்றான்.
"தெரியும். எனக்கும் சொல்லிட்டாங்க. நான் இன்றைக்கே டத்தோ சலீம்கிட்ட பேசிறேன். நீங்க நாளக்குக் காலையில எட்டு மணிக்கு மீண்டும் வந்து என்னப் பாருங்களேன். என்ன பதில்னு சொல்லிட்றேன்!" என்றார்.
சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.
அவருடைய டெலிபோன் அடித்தது. எடுத்துப் பேசிவிட்டு வைத்தார். "டீன் வந்திட்டாரு. அவரப் பார்க்கிற நேரமாச்சி!" என்றார்.
ராகவனும் கணேசனும் எழுந்து புறப்படத் தயாரானார்கள். அவர்கள் கதவைத் திறக்கும்போது பேராசிரியர் கூறினார்: "மனத்த தளரவிடாதிங்க கணேசன். உண்மை வெல்லுங்கிறதில நம்பிக்கையோட இருங்க!"
"நன்றி சார்!" என்று வெளியே வந்து கதவைச் சாத்தினான் கணேசன். அவனுடைய உள்ளத்தில் புதிய நம்பிக்கைகள் தளிர் விட்டிருந்தன.
*** *** ***
அன்று இரவு ஐசெக் சங்கத்தின் செயலவைக் கூட்டம் இருந்தது. அந்த சங்கத்தின் பொருளாளர் என்ற முறையில் அவன் கட்டாயமாக அதில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டில் தென்கிழக்காசிய பல்கலைக் கழகத்தில் உள்ள பொருளாதார மாணவர்களின் கருத்தரங்கம் ஒன்று அறிவியல் பல்கலைக் கழகத்தில் நடத்த ஏற்கனவே திட்டங்கள் முடிவடைந்திருந்தன. ஆகவே அதைப்பற்றி அன்று முக்கியமாகப் பேசவேண்டியிருந்தது. ஐசெக்கின் செயலாளரான ஜெசிக்கா போன வாரம் அவனுக்கு நினைவூட்டியிருந்தாள்.
மாணவர் சங்கக் கட்டடத்தின் ஐசெக் அறைக்கு அவன் எட்டு மணியளவில் வந்த போது ஜெசிக்கா ஏற்கனவே வந்து காத்திருந்தாள். கணேசனைப் பார்த்தவுடன் "கணேசன், இங்கே வா, இங்கே வா! உனக்கு ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன்!" என்று கத்தினாள்.
அவளருகில் சென்று உட்கார்ந்தான். "என்ன செய்தி ஜெசிக்கா?" என்று கேட்டான்.
"கணேசன்! நேற்று நடந்த மாணவர் பேராளர் மன்றக் கூட்டத்தில் உன்னுடைய ரேகிங் கேஸ் பற்றி நான் பேசினேன். நீ அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டிருப்பது பற்றி துணைவேந்தருக்கு கண்டனக் கடிதம் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். மாணவர் பேராளர் மன்றத்தில் உள்ள 22 பேரில் மூன்றில் இரண்டு பங்கு - அதாவது 15 பேர் - கையெழுத்துப் போட்டால் அப்படி ஒரு கடிதம் எழுதலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்றே ஆறு பேரிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஒன்பது பேர் கையெழுத்து வாங்கிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்!" என்றாள் உற்சாகமாக.
கணேசனுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. இப்படி மாணவர்கள் ஆதரவை வலிந்து பெற்று வளாகம் முழுவதும் தம்பட்டம் அறைந்து தன் வழக்கு வெல்லுவதை அவன் விரும்பவில்லை. "ஏன் இந்த வீண் வேலை ஜெசிக்கா? இப்படியெல்லாம் செய்தால் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எரிச்சல்தான் ஏற்படும்!" என்றான்.
"ஏற்படட்டுமே! இதை இப்படியே விடக் கூடாது. உன்னை இந்தத் தீய சக்திகள் வீழ்த்தி விட நான் அனுமதிக்க மாட்டேன். இதில் உனக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்தால் மாணவர்களைத் திரட்டி ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தப் போகிறேன்!" என்று கத்தினாள். ஐசெக் கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற மாணவர்கள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். கணேசனுக்குத் தன் விஷயம் இப்படி உரத்த குரலில் பேசப்படுவது கூச்சமாக இருந்தது.
ஐசெக் தலைவர் லீ யென் லாவ் மேசையைத் தட்டினார். "ஓக்கே, ஓக்கே! நாம் இன்று பேசி முடிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளன. வீண் பேச்சில் நேரத்தை விரயமாக்க வேண்டாம். கூட்டத்தை ஆரம்பிப்போம். சிலாமாட் டத்தாங் உந்தோக் செமுவா!" என்று நல்வரவு கூறிக் கூட்டத்தைத் தொடங்கினார்.
தன்னுடைய விசாரணை பற்றிய விஷயம் ஜெசிக்காவைத் தவிர மற்றவர்களுக்கு "வீண் பேச்சாக" இருப்பது கணேசனுக்குப் புரிந்தது.
பத்து மணிக்கு அவர்கள் கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஜெசிக்கா அவனுடன் சேர்ந்தே வெளியே வந்தாள். மாணவர் சங்கம் மற்றும் கலாச்சார மண்டபம் கொண்ட அந்த இணைக் கட்டடம் இரவில் வெறுமையாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த மாணவர் கேன்டீன், கம்ப்யூட்டர் விற்பனை மையம், பல்கலைக் கழகக் கூட்டுறவு மினிமார்க்கெட், கூட்டுறவு புத்ததகக் கடை, பேங்க் சிம்பானான் நேஷனல் ஆகிய எல்லாமும் அடைபட்டுக் கிடந்தன. மாணவர் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த ஏராளமான அறைகளில் ஓரிரண்டு அறைகளில் மட்டுமே விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஓரறையிலிருந்து ஜோகெட் இசை வந்து கொண்டிருந்தது.
கட்டடத் தொகுதியின் மையத்தில் புல் வெளியும் பூச்செடிகளும் நட்டு அழகு படுத்தியிருந்தார்கள். ஈசல்கள் சூழ்ந்து அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
கட்டடத்தின் முன்னிருந்த சாலையை வாகனங்கள் போகமுடியா வண்ணம் அடைத்து வண்ணச் செங்கற்கள் பதித்து நடக்க மட்டுமே அனுமதிக்கப்படும் பாட்டையாக ஆக்கியிருந்தார்கள். அந்தச் சாலையின் ஓரத்தில் பழைய மழை மரங்கள் பிரம்மாண்டக் குடைகள் விரித்திருந்தன. அவற்றின் கீழ் இருந்த சக்தி மிகுந்த மின் விளக்குகள் மரத்தின் மீது ஒளி வீசி இலைகளை ஒளி-நிழல் காட்சிகளாக மாற்றியிருந்தன.
தன் மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்குத் திரும்ப விரைந்த கணேசனை கைபிடித்து நிறுத்தினாள் ஜெசிக்கா. "என்ன ஜெசிக்கா?" என்று கேட்டான்.
"இப்படிக் கொஞ்ச நேரம் உட்காரலாம் கணேசன். நாளைக்கு யார் யாரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது பற்றிப் பேசவேண்டும்!" என்று அவனை இழுத்துக் கொண்டு கலாச்சார மண்டபத்திற்குச் செல்லும் படிகளில் முதல் படியில் அவனை உட்கார வைத்து அவளும் அவனுக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
"ஜெசிக்கா! நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு நான் பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க வேண்டும். இன்றிரவு அறைக்குப் போய் நண்பனிடமிருந்து கடன் வாங்கி வைத்துள்ள பாடப் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் பார்த்துக் குறிப்பெழுத வேண்டும். அப்புறம் மூன்று நான்கு மணி நேரமாவது தூங்க வேண்டாமா?" என்றான்.
ஜெசிக்கா அவனை முறைத்தாள். "அதெல்லாம் சின்ன விஷயம். நான் உன் வாழ்க்கையைக் காப்பாற்றப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். நீ புத்தகம் படிப்பது பற்றியும் தூங்குவது பற்றியும் பேசுகிறாயே!" என்றாள்.
மேலும் சொன்னாள். "உன் நலனுக்காக நான் எவ்வளவு முயற்சிகள் எடுத்திருக்கிறேன் என்பது நாளைக்குக் காலையில் மேலும் உனக்கு விளக்கமாகத் தெரியப் போகிறது" என்றாள்.
"ஏன்! நாளைக்குக் காலையில் அப்படி என்ன அதிசயம் நிகழப் போகிறது?" என்று புரியாமல் கேட்டான்.
"பொறுத்து பார். தானாகத் தெரியும்" என்றாள்
கணேசனுக்கு அவளின் முயற்சிகள் ஒன்றும் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை அதற்குரிய கண்ணியத்தோடு தீர்க்காமல் போருக்குத் தயாராவது போல அவள் பேசுவது அதிகமாகப் பட்டது. இருந்தாலும் தன் மேல் உள்ள அன்பினால் அவள் செய்வதை உணர்ந்து அடங்கிக் கேட்டான்.
தன்னுடைய கோரிக்கைக்குச் சார்பாக யார் யாரெல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் என்பதை அவனுக்குச் சொன்னாள். இன்னும் சிலர் பேரைச் சொல்லி நாளைக்கு அவர்களை எப்படியாவது பார்த்துப் பேசி கையெழுத்து வாங்க வேண்டும் என்றாள். "இதோ பார், இந்த சுதாகரன். இவரும் நிர்வாகத் துறை மாணவர்தானே? இந்திய மாணவராக இருப்பதால் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நீ அவரைப் பார்த்து நாளைக்குப் பேசேன்!" என்றாள்.
சுதாகரனை அவனுக்குத் தெரியும். ஆனால் அவர் மற்ற இந்திய மாணவர்களோடு சுமுகமாகப் பழகும் மாணவர் அல்ல. எப்போதும் ஒதுங்கியே இருப்பார். கொஞ்சம் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கிய முற்றாகத் தமிழ் பேசத் தெரியாத கொஞ்சம் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அவரைப் பார்ப்பதும் அவரைத் தனக்கு உதவும்படி கேட்பதும் அவனுக்குப் பிடித்த விஷயங்களாக இல்லை.
"ஜெசிக்கா! சுதாகரனோடு எனக்கு சுமுகமான பழக்கமில்லை. அவர் என்னை மதித்து இதில் கையெழுத்துப் போடுவார் என்று தோன்றவில்லை" என்றான்.
ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். "ஏன் நீங்கள் இந்திய மாணவர்கள் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்களோ தெரியவில்லை. எங்கள் சீன மாணவர் ஒருவருக்கு இப்படிப் பிரச்சினை வந்தது என்றால் நாங்கள் ஒருவருக்கொருவர் தெரியாதவர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் கூட எல்லாவற்றையும் மறந்து ஒன்றாகி விடுவோம், தெரியுமா?" என்றாள்.
தெரியும். தெரிந்த விஷயம்தான். இப்படிச் சீனர் மலாய்க்காரரின் ஒற்றுமை நிதர்சனமாகக் கண்முன் இருந்தும் இந்தியர்கள் மட்டும் எந்த விஷயத்திலும் ஒரு குரலாக இணைய முடியாததன் ரகசியம் அவனுக்கும்தான் விளங்கவில்லை. அது விளங்கியிருந்தால் அவனுக்கு இப்போது நிகழ்ந்திருக்கும் இக்கட்டுக்கே இடம் இருந்திருக்காது. ஒரு இந்திய மாணவியை ஒரு இந்தியத் தறுதலைக் கூட்டம் மானபங்கப் படுத்துவதும் அவளைக் காப்பாற்றப்போன இன்னொரு இந்தியனை இப்படி எதிர்காலத்தை இருளடையச் செய்யும் ஆபத்தில் மாட்டிவிட்டுக் கைகொட்டிச் சிரிப்பதும் இந்தியர்களிடையேதான் நடக்கும் என நினைத்துப் பார்த்தபோது அவமானமாக இருந்தது.
ஜெசிக்கா தன் பட்டியலைப் பார்த்துத் தொடர்ந்து யாரைப் பார்க்க வேண்டும் எப்படிப் பேசவேண்டும் என்பதற்கு வீயூகங்களை வகுத்துக் கொண்டிருந்தாள். மாடியில் உள்ள அறையில் ஜோகெட் இசை நின்று விளக்குகள் அணைந்தன. ஒரு பத்துப் பதினைந்து மாணவர்கள் கலகலவென பேசிக்கொண்டு இறங்கி வந்து அவர்களுக்கு முன்னால் நடந்தார்கள். அந்தக் கூட்டத்தில் வியர்வையைத் துடைத்தபடி அகிலாவும் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர்களைப் பார்க்காதது போல நேராக நடந்தாள்.
முழங்கால் வரையிலான தொடைகளை இறுக்கிய வெள்ளை டைட்சில் தொளதொளவென்ற வெள்ளை டீ சட்டையில் வியர்வை ஊற தலை கலைந்து நடந்தாள். அவளை இரண்டாம் முறையாக இந்தக் கோலத்தில் பார்த்தபோது அருவியில் குளித்து முழுகி ஈரத்தோடு நடக்கும் ஒரு தேவதை போல இருந்தாள்.
"இதோ போகிறாள் பார் பிசாசு! இவளால்தான் உனக்கு இத்தனை தொல்லைகள்!" என்றாள் ஜெசிக்கா. அவள் குரலில் வெறுப்பு இருந்தது. கணேசனுக்கு மனசில் துணுக்கென்றது.
"பாவம் ஜெசிக்கா! அவள் என்ன செய்வாள்? எல்லாம் சந்தர்ப்ப வசத்தால் வந்தது!" என்றான் கணேசன்.
"சரியான பேய்! இவளுடன் ஒரே அறையில் இருப்பதே வெறுப்பாக இருக்கிறது. விரைவில் அறையை விட்டு அவளைத் துரத்தப் போகிறேன் பார்!" என்றாள்.
ஏன் ஜெசிக்காவுக்கு அகிலாவின் மேல் இத்தனை வெறுப்பு வருகிறது என்பது கணேசனுக்குப் புரியவில்லை. விளக்குகளைத் தாண்டித் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று தன் விடுதி அறையை நோக்கிய திசையில் இருளில் மறைந்து கொண்டிருக்கும் அந்த அப்பாவி தேவதைமேல் அவனுக்குப் பரிதாபம்தான் மிகுந்தது.
***
பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன. சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தது. மரங்கள் ஈரந் தோய்ந்திருந்தன. புதராக மண்டியிருந்த செம்பருத்திச் செடிகளின் பூக்களில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய மோட்டார் சைக்கிள் நனைந்திருந்தது. இருக்கைகளில் ஈர இலைகளும் பொடிப்பொடியான பூக்களும் கொட்டிக் கிடந்தன.
துணி எடுத்து ஈரத்தையெல்லாம் துடைத்து விட்டு, ராகவனையும் அழைத்துக்கொள்ள அவர் தங்கியிருந்த தேசா கெம்பாரா விடுதிக்குக் கிளம்பிய போது மணி ஏழேமுக்கால் ஆகிவிட்டது. கெம்பாரா விடுதியை நெருங்கியபோது வளாகத்தின் தென்பகுதியில் இருந்த காம்பியர் குன்றுகளைப் பார்த்தான். அந்தக் குன்றின் சாரல்களிலிருந்து நீராவி மூட்டம் வானை நோக்கி புஸ்ஸென்று பொங்கிக் கொண்டிருந்தது. காற்றில் பறக்கும் ஒரு வெண் துகிலை அந்தப் பச்சைக் குன்றுகள் போர்த்திக் கொண்டிருந்தது போல இருந்தது. நேற்று அகிலாவை வெள்ளை உடையில் பார்த்த நினைவு மனசை இலேசாக உராய்ந்து மறைந்தது.
கெம்பாரா விடுதியின் கீழ் ராகவனுக்காகக் காத்திருந்தான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். எட்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. விடுதியிலிருந்து மாணவர்கள் காலை உணவை முடித்துவிட்டு சாரைசாரையாக விரிவுரை அறைகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
பேராசிரியரைப் பார்க்கத் தாமதமாகிவிடுமோ என்ற கவலை வந்தது. அவர் நேரங் காப்பதில் மிகவும் கண்டிப்பானவர் என்பது அவருடைய மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். விரிவுரை மண்டபத்தில் விரிவுரை தொடங்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னால் தயாராக இருப்பார். சரியான நேரத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தாலும் கூடத் தொடங்கி விடுவார்.
ராகவன் ஒரு புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். "குட் மோர்னிங், கணேசன். லேட்டாயிடுச்சா? இல்ல, சரியா எட்டு மணிக்குப் போயிடலாம்" என்று கூறியவாறு அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்தார். கணேசனின் மோட்டார் சைக்கிள் மனிதவியல் கட்டடத்தை நோக்கிச் சீறி விரைந்த போது வளாகத்தின் குளிர் காற்று அவர்கள் முகங்களில் வீசிச் சட்டைக்குள் ஊடுருவி மார்பில் சிலிர்த்தது.
கணேசனின் மனம் பேராசிரியர் தரப் போகும் தகவலை எண்ணிப் படபடத்தது.
*** *** ***
பேராசிரியர் அவர்களுக்காகத் தயாராகக் காத்திருந்தார். அவர்களை வரவேற்று உட்கார வைத்ததுடன் "இதைப் பார்த்திங்களா ரெண்டு பேரும்...?" என்று ஒரு பத்திரிகையைத் தூக்கி அவர்கள் முன் போட்டார். அது அந்த வாரத்திய "பெரித்தா கேம்பஸ்" என்ற மாணவர் வார இதழ். அன்று காலையில்தான் விநியோகிக்கப் பட்டிருந்தது. கணேசனோ அல்லது ராகவனோ பார்க்கும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. "மூணாம் பக்கம் பாருங்க" என்று சொன்னார்.
கணேசன் பத்திரிகையை அவசரமாகப் பிரித்து மூன்றாம் பக்கம் பார்த்தான். "மாணவர்களிடையே ரேகிங்: பல்கலைக் கழகம் நேர்மையாக நடக்கிறதா?" என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியை எழுதிய நிருபர் ஜெசிக்கா ஓங் என்று பெயர் போட்டிருந்தது.
ஜெசிக்கா வளாகத்தில் ரேகிங் நடப்பதைக் கண்டித்து எழுதியிருந்தாள். அதைத் தடுக்க முடியாத பல்கலைக் கழகப் பாதுகாப்புத் துறையின் கையாலாகாத் தனத்தைச் சாடி எழுதியிருந்தாள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் கையில் அகப்பட்ட அப்பாவிகளை பல்கலைக் கழகம் தண்டிக்க முயலுவதாக ஜெசிக்கா தனக்கு வேண்டிய மாணவர்களிடம் பேட்டி கண்டு படத்துடன் போட்டிருந்தாள். பல்கலைக் கழக வளாகத்துக்குள் வெளியிலுள்ள குண்டர் கும்பல்களின் உறுப்பினர்கள் நுழைந்திருப்பதாகவும் அதைப் பாதுகாப்புத் துறை மூடி மறைக்க முயலுவதாகவும் எழுதியிருந்தாள். செய்தியில் "ஒரு மாணவர் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" எனப் பெயர் குறிப்பிடாமல் போட்டிருந்தது. அகிலாவின் ரேகிங் நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டிருந்தாலும் அகிலாவின் பெயர் குறிப்பிடப் படவில்லை. "காராட் கேங்" என ஒரு ரகசியக் கும்பல் இந்திய மாணவர்களிடையே இயங்கி வருவதும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் யார் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இந்த ரேகிங் பிரச்சினை பற்றி மாணவர் விவகார உதவித் துணை வேந்தர் டத்தோ சலீமிடம் "பெரித்தா கேம்பஸ்" கருத்துப் பெற இயலவில்லை என்று போட்டிருந்தது.
ஜெசிக்கா நாளைக்கு நடக்கும் என்று சொன்ன அதிசயம் இதுதான் என கணேசன் புரிந்து கொண்டான். இதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என அவனுக்குப் புரியவில்லை. படித்து முடித்ததும் பேராசிரியரைப் பரிதாபமாகத் தலை நிமிர்ந்து பார்த்தான்.
"இந்த செய்தி வரப் போறது உனக்கு முதலிலேயே தெரியுமா கணேசன்?" என்று கேட்டார். அவர் குரலில் கொஞ்சம் கோபமும் கவலையும் இருந்தது.
"சத்தியமாகத் தெரியாது சார். நேற்று இரவு கூட ஜெசிக்காவோடு பேசிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு அதிசயம் நடக்கப் போகுதுன்னு மர்மமாகச் சொன்னாங்க. ஆனால் இதுதான் அது என்று சொல்லவே இல்லை!" என்றான்.
"நான் டத்தோ சலீமோட நேற்று நீண்ட நேரம் பேசினேன் கணேசன்!" என்று சொல்லி நிறுத்தினார். இருவரும் ஒன்றும் சொல்லாமல் அவர் வாய் பார்த்துக் காத்திருந்தார்கள். "அவர் என்னுடைய கருத்தை முழுசாக் கேட்டுக் கொண்டாலும் வழக்கு விசாரணைன்னு வந்திட்டதினால இதைக் கடைசி வரை பல்கலைக் கழக நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தித்தான் ஆகணும்னு சொல்லிட்டார். யாருடைய வாதத்துக்கு சரியான சாட்சியங்கள் இருக்கு அப்படிங்கிறதையும் பாக்கணும்னு சொல்லிட்டாரு. உன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு வர்ர வெள்ளிக்கிழமை விசாரணையில நீ என்ன நிருபணங்களைக் கொண்டு வர்ரங்கிறதப் பொறுத்துத்தான் தீர்ப்பு இருக்கும்னு உறுதியா சொல்லிட்டாரு!"
கணேசனுக்கு மனதில் கல் விழுந்தது போல இருந்தது. மேக மூட்டமான அந்தக் காலையில் பேராசிரியரின் அறை இன்னும் கொஞ்சம் இருண்டு விட்டது போல இருந்தது. குனிந்தவாறு ராகவனைப் பார்த்தான். அவர் முகமும் இறுகித்தான் இருந்தது.
"ஆனால் டத்தோ சலீம் ஒன்று சொன்னார். நீ குற்றம் செய்தியோ இல்லியோ, விஷயத்தை முத்த விடாம குற்றத்தை ஒப்புக் கொண்டு பல்கலைக் கழகம் உட்பட எல்லாத் தரப்புக் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கொண்டால், நீ கடந்த காலத்தில குற்றங்கள் இல்லாத நல்ல மாணவனா இருந்திருப்பதை கருத்தில் வச்சி, குறைந்த பட்சத் தண்டனை தரலாம்கிறார். என்ன சொல்ற?"
கணேசன் அதிர்ச்சியடைந்தான். என்ன சொல்கிறார்? குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடு என்கிறாரா? நான் செய்யாத குற்றத்தை "நான்தான் செய்தேன்" என ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரச் சொல்கிறாரா? அவனுடைய இதயத்தின் ரத்தத்துளிகள் எல்லாம் அந்த எண்ணத்தை மறுத்தன!
"சார். நான் குற்றமற்றவன். இந்த அநியாயமான குற்றச் சாட்டால இந்தப் பல்கலைக் கழகம் என்னை வெளியேத்தினாலும் சரிதான். நான் செய்யாத குற்றத்தை செய்தேன்னு சொல்லி ஒருநாளும் என்னை நானே அவமானப்படுத்திக் கொள்ள மாட்டேன்!" என்றான்.
"அவசரப்படாம அமைதியா யோசிச்சுப் பாருப்பா கணேசன். நீ உன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சி பண்ணி அது முடியாமப் போனா உன் எதிர்காலமே பாழாப் போயிடும். அதிக பட்ச தண்டனைங்கிறது பல்கலைக் கழகத்த விட்டே நீக்கிறதாக இருக்கலாம். அப்புறம் எந்த உள்நாட்டுப் பல்கலைக் கழகத்திலும் உன்னைச் சேத்துக்க மாட்டாங்க! குறைந்த பட்சத் தண்டனை ஒரு பருவம் அல்லது ஒரு வருஷம் தள்ளி வைக்கிறதா இருக்கலாம். அதுவும் கடுமையானதுதான். அதினால விட்டுக் கொடுத்து எதிர்காலத்தக் காப்பாத்திக்கிறது விவேகமில்லையா?"
ஒரு நிமிடம் யோசித்தான். பின் தலை தூக்கிச் சொன்னான். "இல்லைங்க சார்! அது விவேகமாக எனக்குத் தெரியில. என்னை வேணுன்னா நான் காப்பாத்திக்கலாம்! ஆனா இந்த காராட் கேங் பையன்களுடைய கேலியிலும் அவமதிப்பிலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்னால காலந்தள்ள முடியாது. அதே போல என்னோட சேர்ந்த மற்ற நண்பர்களும் அவர்களுடைய கீழ்த்தரமான கேலிக்கு இலக்காகிறத நான் பாத்திக்கிட்டு இருக்க முடியாது. என்னுடைய தன்மானத்த விட்டுக் கொடுக்காம உண்மையக் கடைசி வர சொல்லி அந்த உண்மை எடுபடாமப் போனா இந்தப் பல்கலைக் கழகத்தவிட்டு நான் வெளியேர்ரதுதான் சரியான வழி!"
அவன் கைககள் வெடவெடவென்று ஆடின. கண்களில் நீர் தளும்பித் தளும்பி மறைந்தது.
கொஞ்ச நேரம் அறையில் அமைதி நிலவியது. பின் பேராசிரியர் பேசினார். "இந்தப் பத்திரிகைச் செய்தி நிலைமையை இன்னும் மோசமாக்கிட்ட மாதிரிதான் தெரியுது. விடியற் காலையில பாதுகாப்புத் துறைத் தலைவர் எனக்கு வீட்டுக்கு போன் செய்தாரு. இந்தப் பத்திரிகைச் செய்தியை நீயும் ஜெசிக்காவும் சேர்ந்துதான் ஏற்பாடு செய்திருக்கனும்னு சொன்னாரு. தன்னுடைய பொறுப்புக்களை நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும் அவமதிச்சிட்டதா கருதுறாரு. ஆகவே விசாரணையில உனக்கு அதிக பட்சத் தண்டனை தரணும்னுதான் அவர் பரிந்துரைப்பார்னு நெனைக்கிறேன். டத்தோ சலீமின் பேரும் இதில இழுக்கப் பட்டிருக்கிறதினால அவருக்கு உன் பேரில் இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் இப்ப இருக்கா இல்லையான்னு சொல்ல முடியாது. ஆகவே நீ இன்னமும் கொஞ்சம் ஆழமாக யோசி! எனக்கு நீ இப்ப பதில் சொல்ல வேண்டாம். விசாரணையின் போது உனக்கு எது சரின்னு படுதோ அப்படி பதில் சொல்லலாம்!" என்றார்.
பேராசிரியரின் பேச்சில் ஒரு நம்பிக்கை இன்மையும் சோர்வும் இருப்பது தெரிந்தது. அவரும் இதில் தோற்றுவிட்டவர் போல்தான் பேசினார்.
ராகவனும் கணேசனும் எழுந்து வணக்கம் சொல்லி கதவு நோக்கி வந்தார்கள். திடீரென்று பேராசிரியர் பேசினார்: "கணேசன், நான் இப்படி சொல்றதினால உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லன்னு அர்த்தமில்லை. நீ சொல்றதுதான் உண்மைன்னு எனக்கு நிச்சயமா தெரியுது. ஆகவே நீ நிரபராதின்னு நான் உளப்பூர்வமா நம்புறத டத்தோ சலீமிடம் உறுதியா சொல்லத் தயங்க மாட்டேன். ஆனா சந்தர்ப்பங்கள் நமக்கு சாதகமா இல்லைங்கிறத நாம் மறந்தடக் கூடாது!" என்றார்.
"சரிங்க சார்! எனக்குப் புரியிது. உங்கள் நல்லெண்ணத்துக்கு ரொம்ப நன்றி!" என்று சொல்லி கதவைச் சாத்தி ராகவன் பின் தொடர வெளியே வந்தான் கணேசன்.
மனிதவியல் கட்டடத்திற்கு வெளியே வந்து மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்த போது வானம் தொடர்ந்து மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. எப்போதும் பளிச்சென்றிருக்கும் பல்கலைக் கழக வளாகம் கொஞ்சம் இருண்டே இருந்தது. உண்மையிலேயே அப்படி இருக்கிறதா, தன் மனம்தான் தன்னை வெளியில் பிரதிபலித்துக் காட்டுகிறதா என கணேசன் யோசித்தான்.
"என்ன இன்னைக்கு இந்த மழை மறுபடியும் வரும் போல இருக்கே! வானம் இருட்டிக்கிட்டே இருக்கு கணேசன்!" என நிலைமையை உறுதிப்படுத்தினார் ராகவன்.
தொடர்ந்து சொன்னார்: "சரி கணேசன். இப்ப மணி ஒன்பதாகுது. எனக்கு பத்து மணிக்குத்தான் அடுத்த லெக்சர்! உனக்கு எப்படி?" என்று கேட்டார்.
"பதினொரு மணிக்குத்தான்! டுயுட்டோரியல்"
"அப்ப மாணவர் இல்லக் கேன்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போவோமே! காலையில நீ கூட பசியாறியிருக்க மாட்டியே!" என்றார்.
"ஆமாம் ராகவண்ண. நானும் இன்னும் பசியாறலதான்! வாங்க போவோம்!"
மோட்டார் சைக்கிளை உதைத்து உயிர்ப்பித்து மாணவர் இல்லத்தின் கேன்டீனை நோக்கிப் போனார்கள்.
*** *** ***
கணேசனின் கண்கள் ஒரு காரணமுமின்றி அலைந்தன. அவர்களைச் சுற்றி ஏராளமான மலாய், சீன, இந்திய மாணவர்கள் கலகலவென்ற பேச்சுடன் விரிவுரைக்குப் போகும் அவசரத்துடன் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வண்ண வண்ணமாக துடோங் அணிந்த மலாய் மாணவிகள் கூட்டங் கூட்டமாக உட்கார்ந்து மலாய் உணவுகளைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். சீன மாணவ மாணவிகள் பெரும்பாலும் ஜீன்சில் இருந்தார்கள். சில பஞ்சாபி ஆடைகளும் மேற்கத்திய ஸ்கர்ட்டுகளும் தெரிந்தன. எங்கும் புத்தகங்களும் கோப்புகளும் பைகளுமாக சாப்பாட்டு மேசைகள் நிரம்பி வழிந்தன. மொத்தமாக மாணவர்களை விட இரண்டு மடங்கு அதிகமான மாணவிகள் அங்கு இருந்தார்கள். பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் இப்போது மாணவர்களை விட மாணவிகள் தொகையே அதிகமாக இருந்தது.
இரண்டு நாசி லெமாக் பொட்டலங்கள், இரண்டு தேநீருடன் அவர்களுடைய பசியாறல் மிக மெதுவாக மிக அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் கலகலப்பான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் அந்த உற்சாகங்களுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் போல சோகத் தீவாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவன் ஏதோ சொல்ல நினைப்பவர் போல கணேசனின் முகத்தைப் பார்த்துப் பார்த்துத் தயங்கினார். தன்னுடைய விழிகளில் இருந்த வெறுமையும் விரக்தியும் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும் என கணேசன் எண்ணிக் கொண்டான். கணேசனுக்கு எதைப் பற்றியும் பேசுகின்ற உற்சாகம் இல்லாமல் இருந்தது.
ராகவன் கொஞ்ச நேரம் காத்திருந்து அப்புறம் கொஞ்சம் கனைத்துச் சொன்னார்: "கணேசன், பேராசிரியர் சொன்னதை நான் திரும்பத் திரும்ப நெனைச்சிப் பாக்கிறேன். மறக்க முடியில!" என்றார்.
"எதைச் சொல்றிங்க ராகவன் அண்ண?" என்று கேட்டான் கணேசன்.
"அதான், அந்த மன்னிப்புக் கேக்கிறதப் பத்தி....!"
கணேசன் அமைதியாக இருந்தான். அவர் தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டுப் பேசினார்: "உனக்கு ரொம்ப மூத்தவன் அப்படிங்கிற முறையில உனக்குப் புத்தி சொல்ல உரிமை உண்டுன்னு நெனச்சித்தான் சொல்றேன் கணேசன். நீ குற்றம் செய்யிலங்கிறது உண்மை. ஆனா ஒரு பொறியில அகப்பட்ட எலி மாதிரி இப்ப நீ மாட்டிக்கிட்டு இருக்கிற. அந்தப் பொறியிலிருந்து விடுபட பேராசிரியர் ஒரு வழி காட்டியிருக்காரு."
கணேசன் அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். "செய்யாத குத்தத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்றிங்களாண்ண?"
"ஆமாம் கணேசன்! வேற வழி?"
"எல்லார் முன்னிலையிலும் அவமானப்படச் சொல்றிங்களா?"
"இந்த மன்னிப்பு விஷயத்த விசாரணைக் கமிட்டி வெளிய தெரியாம ஆர்ப்பாட்டம் பண்ணாம முடிச்சிரும்னுதான் நெனைக்கிறேன்!"
"விசாரணைக் கமிட்டி அமைதியா முடிச்சிடலாம். ராஜாவும் காராட் கேங்கும் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சி கைகொட்டிச் சிரிக்க மாட்டாங்களா? என்ன மட்டுமா பாத்துச் சிரிப்பாங்க? நீங்க உட்பட என் நண்பர்கள், காராட் கேங்குக்கு எதிரா உள்ள அத்தனை பேரையும் பார்த்துச் சிரிப்பாங்களே!" சொல்லும்போது அவன் கண்களில் கொஞ்சம் நீர் ததும்பியது.
"கணேசன், எங்களப் பத்தி நீ கவலப்படாத. நிலைமைய எப்படி சமாளிச்சிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்தச் சில்லறைச் சிரிப்புகளைக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பொறுத்துப் போயிட்டா எல்லாம் சரியாப் போயிடும். உன்னப்பத்தி சிந்திச்சிப் பாரு! படிப்பையும் எதிர்காலத்தையும் வீணாக்காத! கொஞ்சம் மனசக் கல்லாக்கிக்கிட்டு மன்னிப்புக் கேட்டுக்க! கொஞ்ச நாள் தலை குனிஞ்சி நடந்தா என்ன? எல்லாம் காலத்தால ஆறக்கூடிய புண்கள்தான்! யோசிச்சுப் பாரு!" என்றார்.
கணேசன் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து தரையைப் பார்த்திருந்தான். மீண்டும் அவனுடைய ஒவ்வொரு ரத்தத் துளியும் இந்தத் தீர்வை ஏற்காதே என்று அவனுக்குள்ளிருந்து கொதித்தது.
பின்னாலிருந்து தயக்கம் பயம் சோகம் கலந்த பெண்குரல் ஒன்று "கணேசன்" என அழைத்தது. இரண்டு நண்பர்களும் தலை தூக்கிப் பார்த்தார்கள். அகிலா புத்தகப் பையை நெஞ்சோடு அணைத்தவாறு அவர்கள் மேஜைக்குப் பின்னே நின்றிருந்தாள்.
இரண்டு பேருக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் ராகவன்தான் சமாளித்துக் கொண்டு சொன்னார். "அகிலா! வாங்க!" என்றார்.
அகிலா கணேசனைப் பார்த்தாள். "கணேசன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றாள்.
"உட்காரு அகிலா!" என்றான் கணேசன். அகிலா ராகவனுக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
அவர்கள் தனியாகப் பேச விரும்புவதைப் புரிந்து கொண்ட ராகவன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு "எனக்கு லெக்சருக்கு நேரமாச்சி!" என்று கிளம்ப எத்தனித்தார். அகிலா உரிமையோடு அவருடைய கையைப் பிடித்தாள். "ராகவன் அண்ண! உங்கள எல்லாரும் அண்ணன்னுதான் கூப்பிட்றாங்க! நானும் அப்படிக் கூப்பிடலாமா?" என்று கேட்டாள்.
"தாராளமா கூப்பிடலாம் அகிலா!" என்றார்.
"கொஞ்ச நேரம் இருந்து போங்க அண்ண! நான் கணேசனோட பேசிறதுக்கு நீங்கள் சாட்சியா இருக்க வேணும்" என்றாள்.
ராகவன் உட்கார்ந்தார். கணேசன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். அகிலா அவன் முகத்தையும் மேஜை முகப்பையும் மாறா மாறிப் பார்த்துப் பேசினாள்: "இந்த ரேகிங் கேஸ்ல என்னக் காப்பாத்த வந்து இப்ப ரொம்ப பெரிய பிரச்சினையில நீங்க மாட்டிக்கிட்டு இருக்கிறத இந்தப் பல்கலைக் கழகக் கேம்பஸ்ல எல்லாரும் கவலையோட பேசிக்கிறாங்க. உங்க நிலைமைக்கு நானே ஒரு காரணமாயிட்டத என்னால பொறுக்க முடியில. கேம்பஸ் மாணவர்கள் என்னப் பார்க்கும் போதெல்லாம் ஒரு குற்றவாளியப் பார்க்கிற மாதிரிதான் பார்க்கிறாங்க!"
"அது உங்க குற்றம் இல்ல அகிலா! அப்படி நெனைச்சிக் கவலப் படாதிங்க" என்றான் கணேசன்.
தலை குனிந்து பேசினாள்: "என் குற்றமோ இல்லியோ! வர்ர வெள்ளிக் கிழமை நடக்கிற விசாரணையில உங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தா அதுக்கு நானே ஒரு முக்கிய காரணமா இருப்பேன். நான் மட்டும் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு வராம இருந்தா உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதில்லையா?"
ராகவன் குறுக்கிட்டுப் பேசினார். "இதெல்லாம் தற்செயலா நடந்தது அகிலா! நீங்க எதுக்காக ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகணும்? உண்மையில இதில நீங்களும் அறியாம மாட்டிக்கிட்ட ஒரு பலி கெடாதான்!" என்றார்.
"அது எப்படியோ இருக்கட்டும்! நீங்களெல்லாம் எனக்கு ஒரு சமாதானம்தான் சொல்றிங்க. ஆனா நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். கணேசன்! உங்களுக்கு எந்தத் தண்டனையை இந்தப் பல்கலைக் கழகம் விதிக்குதோ அதே தண்டனைய நான் சுயமாகவே எனக்கு விதிச்சிக்குவேன். உங்களை ஒரு வருஷம் தள்ளி வச்சா நான் ஒரு வருஷம் விடுமுறை எடுத்துக்குவேன். உங்களப் பல்கலைக் கழகத்த விட்டே தள்ளிட்டாங்கன்னா நானும் விலகிடுவேன்!"
கணேசன் திடுக்கிட்டான். அவனை அறியாமலேயே எட்டி மேசைமேல் இருந்த அவள் கைகளைப் பற்றினான். "என்ன சொல்றிங்க அகிலா? இது என்ன பைத்தியக்காரத்தனம்? எதுக்காக நீங்க உங்கள இப்படி தண்டிச்சிக்கணும்?"
கைகளை விலக்கிக் கொள்ள அவள் முயலவில்லை. "நீங்க எதுக்காகத் தண்டிக்கப் பட்றிங்க? நீங்க ஏன் நல்லவரா இருந்து செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கணும்? அதுதான் இந்த பல்கலைக் கழகத்தில நீதின்னா, அந்த நீதி எனக்கும் பொருந்தட்டுமே!"
"வேண்டாம் அகிலா!"
"என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!"
"எனக்காகவா?"
"உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!"
அவனுடைய கைகளில் தன் கைகள் பிடிபட்டுள்ள இதமான சூழ்நிலையில் அகிலா விசும்பி அழ ஆரம்பித்தாள். ராகவன் கொஞ்சம் வெட்கத்துடன் தங்களை யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் அகிலாவுக்கும் கணேசனுக்கும் தங்களைச் சுற்றி மாணவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதது போல் இருந்தது.
***
வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.
மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன் பிடித்ததும் அதற்கு மறுக்காமல் இடங் கொடுத்து அந்தத் தொடுதலில் கனிந்து அவள் அழுததும் அவள் அப்போது சொன்ன முடிவுகளும் அவனை வெகுவாக நெகிழ வைத்திருந்தன.
ஏன் அப்படிச் சொன்னாள் என்ற கேள்வி அவன் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. தான் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பதை எண்ணி அவள் மனம் வருந்துவதே அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனால் அதற்கு மேலாக "உங்களுக்கு விதிக்கப் படும் எந்தத் தண்டனையையும் நானும் எனக்கு விதித்துக் கொள்வேன்" என இத்தனை இலேசாகச் சொல்லிவிட்டாளே!
"வேண்டாம் அகிலா!"
"என் முடிவ யாரும் மாத்த முடியாது கணேசன். எங்க குடும்பத்துக்குக் கூட நான் இத அறிவிச்சிட்டேன்!"
"எனக்காகவா?"
"உங்களுக்காக! ஆனா என் மனசாட்சிக்காகவும் கூட!"
எத்தனை உன்னதமான பெண்! தனக்காக தன் ஒருவனுக்காக அவளுடைய வாழ்க்கையை எதிர்காலக் கனவுகளை இத்தனை எளிதாக அழித்துக் கொள்ளத் தயாராகி விட்டாளே! அவளுடைய அந்தத் தியாகத்தில் அவன் முற்றாக அதிர்ந்திருந்தான். அவளுடைய இந்தச் செயலுக்குத் தான் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுவிட்டதைப் போல உணர்ந்தான்.
அவன் பல பெண்களுடன் பழகியிருக்கிறான். சில பெண்களிடம் ஈர்ப்பு அடைந்து காதல் போல ஒன்று இடையிடையே மொட்டு விட்டு மொட்டு விட்டுக் கருகியிருக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் விளையாட்டுப் போல கண்ட கண்ட பெண்களை மனசால் காதலித்து வெளியில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி அந்த உணர்வுகளெல்லாம் காலத்தால் கரைந்து போனதுண்டு.
பெண்களில் அத்தை மகள் மல்லிகா ஒருத்தியுடன்தான் அவன் நெருங்கிப் பழகியிருக்கிறான். ஆனால் சிணுங்கிச் சிணுங்கிப் பேசும் மல்லிகா அவனுக்கு ஒரு பாசமுள்ள தங்கையாகவும் விளையாட்டுத் தோழியாகவும்தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு எந்த விஷயத்தையும் சீரியசாகப் பேசத் தெரியாது. எதைக் கேட்டாலும் "போ மாமா! எனக்குத் தெரியாது!" என்று சிணுங்குவாள். அவளுக்கு நடக்கத் தெரியாது. ஓடத்தான் தெரியும். மென்மையாகப் பேசத் தெரியாது. சத்தம் போட்டுத்தான் பேசத் தெரியும். அவள் சிரித்தால் வீடு அதிரும்.
"சனியனே! வயசு 17 ஆச்சு, இப்படி என்ன ஒரு சத்தமும் குதிப்பும் உனக்கு!" என்று அத்தை அவள் தலையில் குட்டுவாள். "ஓ" என்று அழுது கொண்டு "பாரு மாமா இந்த அம்மா இப்படி தலையில குட்டுது" என அவனிடம் வருவாள். அவள் அவள் தலையைத் தடவி ஆறுதல் சொல்லுவான்.
"கணேசு, இவள என்னால அடக்க முடியாது. நீதான் சீக்கிரமா இவளக் கட்டிக்கிட்டு இவளை அடக்கி ஒடுக்கிப் பொம்பிளையாக்கணும்!" என அத்தை சொல்லுவாள். "போம்மா!" என்று மீண்டும் சிணுங்குவாள் மல்லிகா.
அவர்களெல்லாம் வேறு மாதிரியான பெண்கள். இந்தப் பெண் - அகிலா - வேறு மாதிரியாக இருந்தாள். முகத்தில் ஒரு பெண்மைக்குரிய பொலிவு, பார்வையில் மனசை ஊடுருவுகின்ற கூர்மை, உடுத்தும் உடையில் எளிமையிலும் ஒரு கவர்ச்சி, பேச்சில் ஒரு உறுதியும் தெளிவும், நடையில் எப்போதுமே ஒரு நளினம். மனசுக்குள் அறிவு வெளிச்சமும் சிந்தனையும் உள்ளவளாக இருந்தாள்.
அந்தச் சில கணங்கள் நடந்த நிகழ்ச்சியினால் அவனுடைய இதயத்தின் ஆழத்தைத் தொட்டு, அவளுடைய நினைவுகள் உள்ளத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்ட இப்போதைய நிலையை அவன் இதுவரை அனுபவித்ததில்லை. இது அனுதாபமா? காதலா? தன் எதிர்காலத்தை நினைத்து பயந்ததில் எழுந்த பக்க விளைவா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் எதிர்கால இருளில் அவள் ஒரு ஒளி மிக்க விளக்காக இருந்தாள். அந்த இருளில் அவள்தான் ஒரு ஆறுதல் எனத் தெரிந்தாள். உள்ளம் "அகிலா, அகிலா" என ஸ்மரணை செய்து கொண்டிருந்தது.
இன்று காலையில் அவள் மாணவர் விவகாரப் பிரிவுக்கு வருவாள். அன்று அவன் பிடியிலிருந்து கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு போகுமுன் சொன்னாள்: "வெள்ளிக் கிழமை காலையில நான் விசாரணை அறைக்கு முன்னால வந்து உங்களுடைய தீர்ப்பு என்னன்னு தெரிஞ்சிக்கக் காத்திருப்பேன். அது தெரிஞ்சவுடனே டத்தோ சலீமைப் பார்த்து என்னுடைய முடிவை அறிவிப்பேன். வர்ரேன் கணேசன், வர்ரேன் ராகவன் அண்ண!"
தீர்மானமாகப் பேசி எழுந்து திரும்பிப் பார்க்காமல் போனாள். கணேசனைப் போலவே ராகவனும் அவளுடைய செயலில் வியந்திருந்தார். "என்ன அருமையான பண்புள்ள பெண்ணப்பா இது!" என்று கணேசனிடம் வியந்து சொன்னார்.
அதற்கப்புறம் அடுத்த இரண்டு நாட்கள் அவனால் அகிலாவை எங்கும் சந்திக்க முடியவில்லை. விரிவுரைக்குப் போகும் போதும் வரும் போதும் அவளைத் தற்செயலாகச் சந்திக்க மாட்டோமா என ஏங்கினான். மாணவர் இல்ல நடனப் பயிற்சி அறைகளில் இரவில் பயிற்சிக்கு வந்திருப்பாளே என்று மோட்டார் சைக்கிளில் அந்தப் பக்கம் சுற்றினான். காணவில்லை.
விரிவுரைகளில் மனம் செல்லவில்லை. புத்ததகங்களைத் திறந்தால் அவள் முகமும் கண்ணீருமே வந்து நின்றன. இரவு நேர மாணவர் சங்கக் கூட்டங்களுக்குச் சென்ற போதும் மனம் அவற்றில் ஒன்றவில்லை.
அகிலாவின் அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு எண்ணம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உறுதிப்பட்டு வந்தது. இந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் விஷயத்தில் என்னதான் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் தன்னையே பலி கொடுத்துக் கொள்ளும் முடிவில் அவன் உறுதியாக இருந்தாலும், இப்போது அவனுடைய முடிவு அகிலாவையும் பாதிக்கும் என உறுதியாகத் தெரிந்த பொழுது அவனுடைய மனவுறுதி கொஞ்சம் ஆடிப் போயிருந்தது.
வீறாப்பாக மன்னிப்புக் கேட்காமல் இருப்பதால் தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக்கப்பட்டால் அது தன் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் அகிலாவின் எதிர்காலத்தையும் பாதிக்கப் போகிறது என உறுதியாகத் தெரிந்தது. ஆகவே அவளைக் காப்பாற்றுவதற்காகவாவது தான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு குறைந்த பட்சத் தண்டனையை ஏற்றுக் கொண்டு தன் எதிர்காலத்தையும் அவளுடைய எதிர்காலத்தையும் காப்பாற்றிக் கொள்வது முக்கியம் என நினைத்தான்.
"ஒரு பெண்ணுக்காகவா உன் கொள்கையை விட்டுக் கொடுத்து உன் எதிரிகளின் சிரிப்புக்கு ஆளாகப் போகிறாய்?" என அவன் மனம் அவனுக்குச் சவால் விடாமல் இல்லை. ஆனால் அகிலா தனக்காகச் செய்யத் தயாராகிவிட்ட தியாகத்தை விட இது ஒன்றும் பெரிய தியாகம் அல்ல என்று பட்டது. மேலும் மனதில் முன்னிருந்த ஆத்திரமும் முரட்டுத் தனமும் இப்போது இல்லை. அது இப்போது கனிந்திருந்தது. அவன் வீரமும் பிடிவாதமும் தணிந்திருந்தன.
விடியற்காலையில் எழுந்து விசாரணைக்குத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது இந்த எண்ணங்கள் மேலும் மேலும் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தன. தலை குனியலாம். மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். தண்டனை ஏற்றுக் கொள்ளலாம். அகிலாவின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம். இன்னும் ஈராண்டுகள் அகிலாவுடன் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து படிக்கலாம். எல்லாம் அகிலாவிற்காக!
அவள் இந்த வெள்ளிக் கிழமை காலையில் தனக்காக வருவாள்; அவளைப் பார்த்துப் பேச முடியும் என்ற ஆசையுடன் எழுந்து குளிக்கப் போனான்.
*** *** ***
ஒன்பது மணிக்குத்தான் விசாரணை. கணேசன் எட்டரை மணிக்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்து விட்டான். மாணவர்கள் யாரையும் காணவில்லை. குறிப்பாக அகிலாவைக் காணவில்லை. ராஜாவையும் அவன் நண்பர்கள் யாரையும் காணவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.
ஆனால் அந்த அதிகாலை வேளையிலேயே பேராசிரியர் முருகேசுவின் காரும் பாதுகாவல் துறை அதிகாரி ரித்வானின் காரும் அங்கு நின்றிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மாணவர் பிரிவின் துணைப் பதிவாளர் முத்துராமன் அவர்களின் காரும் நின்றிருந்தது. அவனுடைய மாணவர் விடுதியின் பெங்காவா (தலைவர்) காரும் இருந்தது. இவர் ஏன் இங்கு வந்தார் என்று வியந்தான். அவர்களுடைய கூட்ட அறையை உற்றுப் பார்த்த போது கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளே விளக்குகள் எரிந்து கூட்டம் நடைபெறும் அறிகுறிகள் தெரிந்தன.
என்ன செய்கிறார்கள் இவ்வளவு அதிகாலையில்? ஒன்பது மணிக்குத்தானே கூட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னரே இத்தனை காலையில் இவர்கள் கூடிப் பேசும் காரணம் என்ன? அவன் கொஞ்சம் குழப்பமடைந்து சுற்று முற்றும் பார்த்தான். இந்த விஷயம் ரொம்ப கடுமையானதாகத்தான் தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.
எட்டே முக்கால் மணியளவில் ராஜனும் அவனுடைய சகாக்களும் ஆரவாரமாக வந்து இறங்கி ஒரு மர நிழலில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கணேசனின் பக்கம் எள்ளலான பார்வைகளும் சிரிப்புக்களும் வந்தன. ஆனால் அந்தக் கூட்டத்தில் பரசுராமனைக் காணோம்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெசிக்கா வந்தாள். கணேசனை நோக்கி வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "கணேசன். உனக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் நாம் சும்மா இருக்கக் கூடாது. நேராக கல்வி அமைச்சரிடம் மேல் முறையீடு செய்வோம். இந்த காராட் கேங் பற்றி நான் தகவல்கள் சேகரித்துக் கொண்டு வருகிறேன். உள்ளூர் பத்திரிகைகளில் எழுதப் போகிறேன்!" என்றாள்.
"ஜெசிக்கா! இந்த முயற்சிகளெல்லாம் வீண் என்றுதான் தெரிகிறது. நான் விசாரணைக் குழுவிடம் மன்னிப்புப் கேட்டுக் கொள்வதாக முடிவு செய்து விட்டேன். இந்த நேரத்தில் அதுதான் எல்லாருக்கும் நல்லதாகத் தெரிகிறது!"
ஜெசிக்கா பெருமூச்சு விட்டாள். "சரி! உன் விருப்பம். ஆனால் இந்தப் பல்கலைக் கழகத்தையும் இந்த காராட் கேங்கையும் நான் சும்மா விடப் போவதில்லை! நான் உன் பக்கம் இருக்கிறேன் கணேசன். உனக்கு நீதி கிடைக்கும் வரையில் நான் ஓயப் போவதில்லை" என்றாள். அவன் கைகளைப் பிடித்து அழுத்தினாள்.
கணேசன் தயங்கித் தயங்கிக் கேட்டான்: "அகிலா இன்று காலை வருவதாகக் கூறியிருந்தாளே! காணோமே! உனக்குத் தெரியுமா ஜெசிக்கா?"
ஜெசிக்கா முகத்தைச் சுளித்தாள். "அந்தப் பிசாசு பற்றி ஏன் இப்போது பேசுகிறாய்? நேற்றே அவளைச் சண்டை போட்டு என் அறையிலிருந்து துரத்தி விட்டேன். வேறு அறைக்குப் போய்விட்டாள். இன்றைக்கு அதிகாலையிலேயே உடுத்திக் கொண்டு வெளியே போனதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். எங்கே போனாளோ தெரியாது. அவள் ஏன் இங்கே வரவேண்டும் என எதிர் பார்க்கிறாய்? அவள் உனக்குச் செய்திருக்கும் கெடுதல் போதாதா?"
அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அகிலாவை அறையை விட்டு விரட்டுமளவுக்கு இந்த ஜெசிக்காவுக்கு அவள் என்ன கெடுதல் செய்தாள்? அந்தத் தீவிரமான வெறுப்பு அவனைப் புண் படுத்தியது. அகிலாவும் தானும் சந்தித்ததை பேசியதை அவளிடம் சொல்வது வீண் என்று தோன்றியது. இவளுடைய மனதில் அகிலாவைப் பொல்லாத எதிரியாக ஆக்கிக் கொண்டாள். அகிலாவுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை இவளிடம் சொன்னால் அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படும் என்று நினைத்து சும்மா இருந்தான்.
ஒரு வேளை ஜெசிக்காவே அகிலாவை இங்கு வரவிடாமல் தடுத்திருப்பாளோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. சீச்சீ அப்படி இருக்காது என்று சமாதானம் செய்து கொண்டான். ஜெசிக்கா அவளைத் தடுக்கக் காரணமில்லை. தடுத்திருந்தாலும் அகிலா பயந்து நின்று விடுபவள் அல்ல. ஏன் வரவில்லை? வருவாள், எப்படியும் கடைசி நிமிடத்தில் வந்து விடுவாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
ராகவன், ரவி ஆகியோரும் இந்திய மாணவர் பண்பாட்டுக் குழுவின் தலைவர், செயலவை உறுப்பினர்களும் வந்திறங்கினார்கள். கணேசனுக்கு ஆதரவாக அவன் பக்கம் வந்து நின்று பேசினார்கள். அங்கு ஒரு சிறிய கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. காராட் கேங் உறுப்பினர்கள் சிலரும் வந்து ராஜனின் அணியைப் பலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பரசுராமனைக் காணவில்லை. பாதுகாப்புத் துறையிலிருந்து சீருடை அணிந்த இரு காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்கள் சாலையை அடைத்துக் கொண்டு நிற்காமல் ஓரமாக நிற்கும்படி ஆலோசனை கூறினார்கள்.
அகிலாவைக் காணவில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு? அதிகாலையில் எங்கே போயிருப்பாள்? ஜெசிக்காவின் தொந்தரவு பொறுக்க முடியாமல் இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் வேண்டாம் என முடிவு செய்து விட்டாளோ? இத்தனை ஆதரவாகப் பேசிவிட்டுக் கடைசி நேரத்தின் மனதை மாற்றிக் கொண்டாளா? இந்த ஒரு முன் பின் தெரியாத யாரோவுக்காகத் தன் எதிர்காலத்தை ஏன் பாழாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாளா? ஒரு உணர்ச்சி மயமான வேளையில் பேசிய பேச்சுக்கள் உண்மை வாழ்வைப் பாதிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற அறிவு வந்துவிட்டதோ? இந்தப் பிரச்சினைகள் தாமாக முடிந்து காற்றில் பறந்து மறையும் வரை இதிலெல்லாம் பட்டுக் கொள்ளாமல் கொஞ்சம் ஒதுங்கியும் ஒளிந்தும் இருந்து விடலாம் என எண்ணி விட்டாளோ? தான்தான் அவள் சொன்னவற்றை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்கள் காதல் போன்ற அர்த்தமில்லாத அவஸ்தைகளை அனுபவித்தேனோ? மீண்டும் ஒரு முறை தான் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து இளிச்சவாயனாக ஆகியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான்.
ஒன்பது மணி கடந்து மேலும் பத்து நிமிடங்கள் ஆகின. கதவு இன்னும் திறக்கப் படவில்லை. உள்ளே கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பொறுமை இழந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்பதே காலுக்குக் கதவு திறந்தது. துணைப் பதிவாளர் முத்துராமன் வெளியே வந்தார். தான் கையில் வைத்திருந்த பட்டியலிலிருந்து பெயர்களைப் படித்தார். "கணேசன், ராஜன், வின்சன்ட். மூவரும் உள்ளே வாருங்கள்!" என்றார்.
கணேசனின் நண்பர்கள் அவனுடன் கைகுலுக்கி "கூட் லக்" என்று வாழ்த்தி அனுப்பினார்கள். கடைசி முறையாக மீண்டும் ஒரு முறை அகிலா வந்து விட்டாளா என்று தலை தூக்கி சாலையின் இறுதி வரை பார்த்தான். அவள் வந்ததற்கான அல்லது வருவதற்கான அடையாளம் எதையும் காணோம். ஜெசிக்காதான் அவனை ஏக்கத்துடன் பார்த்து வழியனுப்பி வைத்தாள்.
ஏமாற்றத்தால் அவன் மனமும் தலையும் கனத்தன. அவன் எதிர் காலத்தை அர்த்தமற்ற இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. தன் வாழ்நாளில் மிக மோசமான நாள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே கணேசன் மனம் படபடக்க அறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து ராஜனும் வின்சன்டும் நுழைந்தார்கள். முத்துராமன் அவர்கள் உட்கார வேண்டிய நாற்காலிகளைக் காட்டினார்.
***
நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும் பரசுராமனும் இருந்தது அவன் முற்றிலும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருந்தது. பரசுராமன் தலை குனிந்து இருந்தான். அகிலாவின் மீது அவன் பார்வை பட்ட போது அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். எப்படி இங்கே வந்தாள்? ஏன்?
இன்னொரு நாற்காலியில் ஓரமாக அவனுடைய விடுதியில் தங்கியிருக்கும் சீன மாணவரான லீ எம் பூன் இருந்தார். இவருக்கும் இங்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அதே போல பரசுராமன் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவரான டாக்டர் கான் என்பவரும் அங்கிருந்தார். நிலைமை மிகவும் குழப்பமாக இருந்தது. படபடப்பு மேலும் அதிகமாக உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைப் பார்த்தவாறு இருந்தான்.
டத்தோ சலீம் பேசினார். "இந்த விசாரணை இரண்டாவது கட்டமாக இன்று நடக்கிறது. இரண்டு விஷயங்களை இதில் விசாரிக்கப் போகிறோம். முதலில் பல்கலைக் கழக வளாகத்தில் ரேகிங் நடந்தது உண்மையா அல்லவா? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது. இரண்டாவதாக ராஜனும் அவர் நண்பர் வின்சன்டும் வெளியில் உள்ள ரகசியக் கும்பல் ஆட்களை உள்ளே கொண்டு வந்து கணேசனை மிரட்டியதாக கணேசன் கொடுத்துள்ள முறையீடு.
"இந்த விசாரணையில் புதிய தகவல்கள் வெளிப்பட்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு முன் காலை எட்டு மணிக்கெல்லாம் இன்னொரு முன் விசாரணையும் நடத்தப்பட்டது என்பதைப் புதிதாக வந்திருப்பவர்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். அந்த முன் விசாரணையில் பரசுராமன் என்ற முதலாண்டு மாணவர், அகிலா என்ற முதலாண்டு மாணவி, லீ எம் பூன் என்ற இறுதியாண்டு மாணவர் ஆகியோர் இதுவரை விசாரிக்கப் பட்டார்கள். அந்த விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களை இப்போது புகார்தாரர்களுக்கு, அதாவது கணேசன், ராஜன், வின்சன்ட் ஆகியவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன். அந்தத் தகவல்கள் உண்மையா அல்லவா என்பதைப் பற்றி அவர்கள் கருத்துரைக்கலாம்"
கணேசனுக்கு எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு முன்விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? எப்படி?
ராஜனும் வின்சன்டும் கூட முகங்களை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இங்கு நடப்பது அதிர்ச்சியாக இருப்பது போலத்தான் தெரிந்தது.
டத்தோ சலீம் தொடர்ந்தார்: "முதலில் பரசுராமனின் சாட்சியம். முதலில் அவர் தன்னுடைய முதல் முறையீட்டில் தான் கணேசன் பற்றிக் கொடுத்துள்ள ரேகிங் முறையீடு பொய் என இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ராஜன், வின்சன்ட் இவர்களின் வற்புறுத்தலினால்தான் தான் அந்த முறையீட்டைச் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். மேலும் கணேசன், அகிலா ஆகியோர் அந்த ரேகிங் நிகழ்ச்சி பற்றிக் கொடுத்துள்ள விளக்கங்கள்தான் சரி என ஒத்துக் கொண்டுள்ளார். அகிலாவிடமும் இது பற்றி விளக்கம் பெற்றிருக்கிறோம். பரசுராமன், அகிலா இருவரும் ரேகிங் எப்படி யாரால் நடத்தப்பட்டது என்பது பற்றியும் அதில் கணேசனின் பங்கு என்ன என்பது பற்றியும் ஒரே வகையான விவரங்களைத் தந்துள்ளார்கள்.
"இந்த விவரங்களின் படி ராஜன் அகிலாவை ஏமாற்றி ரேகிங் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரசுராமன் ஏற்கனவே அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கிறார். பரசுராமனை வற்புறுத்தி அகிலாவை முத்தமிடச் செய்தது ராஜனும் நண்பர்களும். கணேசன் அங்கு வந்து பரசுராமனை அடித்து வீழ்த்தி அகிலாவை மீட்டுச் சென்றுள்ளார்"
டத்தோ சலீம் நிறுத்தினார். கணேசனின் உள்ளத்தில் புதிய மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. எப்படி இவையெல்லாம் நிகழ்ந்தன? எந்தத் தெய்வம் தோன்றி என் தலைக்கு மேல் திரண்டிருந்த கருமேகங்களைப் போக்கியது? அகிலாவை நன்றியுடன் நோக்கினான்.
"பரசுராமனின் முதல் பொய் முறையீட்டுக்கு ராஜனும் வின்சன்டும் காரணமாக இருந்திருப்பதோடு பொய்யான சாட்சியங்களையும் வழங்கியிருக்கிறீர்கள் இன்று இதன் மூலம் தெரிகிறது. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
ராஜன் நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னான்: "டத்தோ, இந்தப் பரசுராமனை யாரோ மிரட்டி இப்படிப் பொய் பேச வைத்திருக்கிறார்கள். அவர் இப்போது சொல்வதுதான் பொய். பரசுராமனை கணேசன் ரேகிங் செய்தார் என்பதற்கு நான் பல சாட்சிகளைக் கொண்டு வர முடியும்!"
டத்தோ சலீம் பரசுராமனைப் பார்த்தார். "பரசுராமன். நீ உன்னுடைய முதல் முறையீட்டை இப்படி மாற்றிக் கொண்டதற்கு என்ன காரணம் என்று சொல்!" என்றார்.
பரசுராமன் தணிந்த குரலில் பேசினான்: "டத்தோ! நான் புதிய மாணவன். என் சீனியர்களுக்கு பயந்து நடுங்கியிருந்தேன். ராஜனின் குழு என்னைப் பிடித்து ரேகிங் செய்த போது அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் சொன்ன படியெல்லாம் செய்தேன். அப்புறம் இந்த ராஜன் அகிலாவைக் கொண்டு வந்து கேலி செய்து என்னைக் கூப்பிட்டு முத்தமிடச் செய்தார். அது எனக்கு அருவருப்பாக இருந்தாலும் அவர்களுக்குப் பயந்து செய்தேன். இதனால் அகிலா வருத்தப்பட்டு அழுதபோது நானும் வருந்தினேன். கணேசன் தலையிட்டு என்னை அடித்து அகிலாவைக் காப்பாற்றியது எனக்கு உண்மையில் பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த ராஜனும் நண்பர்களும் என்னை விடவில்லை. கையோடு அழைத்துப் போய் கணேசன் மீது முறையீடு கொடுக்கச் சொன்னார்கள். என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சக்தியில் நான் முற்றாகக் கட்டுப் பட்டிருந்தேன். என் மனசாட்சிக்கு மாறாகத்தான் அனைத்தையும் செய்தேன்" நிறுத்திக் கண்களைத் துடைத்தான்.
"இப்போது நீ மனம் மாறியது எப்படி?" டத்தோ சலீம் கேட்டார்.
"எனக்கு கணேசன் யாரென்று முன்னால் தெரியாது. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த பிறகு பலர் அவர் எவ்வளவு உதாரணமான மாணவர் என்றும் இவ்வளவு நல்ல மாணவர் தண்டிக்கப்படுவது எவ்வளவு பெரிய அநீதி என்றும் பேசிக் கொண்டதைக் கேட்ட போதுதான் நான் செய்த தவற்றால் ஒரு நல்ல உதாரணமான, குற்றமற்ற மாணவர் தண்டிக்கப்படப் போகிறார் என்று உணர்ந்தேன்"
"அதுதான் நீ உன் முறையீட்டை மாற்றிக் கொண்டதன் காரணமா?"
"இல்லை. ராஜனும் அவர் நண்பர்களும் எப்போதும் என்னைச் சூழ்ந்து கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். கணேசனுடனோ அவருக்கு அனுதாபமாக உள்ள மற்ற மாணவர்களுடனோ என்னைப் பழக விடவில்லை. ஆகவே நானும் பயந்து இருந்தேன்!" மௌனமானான்.
"அப்புறம்?"
"முந்தா நாள் நான் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவர் டாக்டர் கான் இரவில் என்னை அவருடைய அலுவலகத்திற்குக் கூப்பிட்டனுப்பினார். அங்கே நான் போனபோது பேராசிரியர் முருகேசுவும் அவருடன் இருந்தார். இந்த ரேகிங் கேஸ் பற்றி என்னிடம் பேச விரும்புவதாகப் பேராசிரியர் கூறினார். நான் ஏற்கனவே முறையீட்டில் தெரிவித்ததைத் தவிர வேறு புதிய தகவல்கள் இருந்தால் அதைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகவும் அதற்கு டாக்டர் கான் சாட்சியாக இருப்பார் என்றும் கூறினார். ராஜனின் அடக்குமுறைக்கு உட்படாமல் உண்மையைக் கூற இதுதான் சந்தர்ப்பம் என்று அவரிடம் எல்லா உண்மைகளையும் கூறினேன். பின்னர் அவர்கள் இருவரின் ஆலோசனையின் பேரில் இன்றைக்கு விசாரணையில் எல்லோர் முன்னிலையிலும் மீண்டும் உண்மைகளைக் கூற ஒப்புக் கொண்டேன்!" மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
"இப்போது ராஜனும் வின்சன்டும் என்ன சொல்கிறீர்கள்?"
ராஜன்தான் மீண்டும் பேசினான்: "டத்தோ! கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லோரும் செயல் படுகிறீர்கள். பேராசிரியர் தலையிட்டு பரசுராமனின் மனசைக் கலைத்திருக்கிறார்"
பேராசிரியர் பேசினார்: "டத்தோ! இந்தக் குற்றச்சாட்டு என் மேல் வரும் என்று முன்னறிந்துதான் நான் இந்தப் பரசுராமன் என்ற மாணவரிடம் தனியாகப் பேசாமல் அவருடைய விடுதித் தலைவரின் அனுமதியுடன் அவர் முன்னிலையில் பேசினேன். ஆகவே எந்த விதத்திலும் அவர் மனதைக் கலைக்கவில்லை!"
டாக்டர் கான் குறுக்கிட்டுச் சொன்னார்: "உண்மைதான் டத்தோ! பரசுராமன் எந்த வகையிலும் வற்புறுத்தப் படவில்லை. இந்த சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகத்தான் இருந்தார். எல்லா உண்மைகளையும் தாமாகத்தான் சொன்னார்"
ராஜனின் முகத்தில் கோபமும் குரோதமும் கொப்பளித்தன. அவனைச் சுற்றி ஒரு வலை இறுக்கப் படுகிறது என உணர்ந்து கொண்டான். ஆனால் இன்னும் அவன் விட்டுக் கொடுத்துவிடத் தயாராக இல்லை. "டத்தோ! ரேகிங் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களில் என் நண்பர்கள் இன்னும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் விசாரித்துப் பார்த்தால் நான் சொல்வதை உறுதிப் படுத்துவார்கள்! அவர்களையெல்லாம் நம்பாமல் அகிலாவும் கணேசனும் இப்போது இந்தப் பரசுராமனும் சொல்லும் பொய்யை ஏன் நீங்கள் நம்பவேண்டும்?"
"பரசுராமன்தான் இதில் முறையீடு செய்தவர். அவருடைய பேச்சுக்குத்தான் நாம் முதல் மதிப்பு அளிக்க வேண்டும். முதலில் பொய்யான குற்றச் சாட்டு ஏன் சுமத்தினார் என்பதற்கும், பின்னால் அதை மாற்றிக் கொண்டதற்குமான சூழ்நிலைகளை அவர் விளக்கியிருப்பதால் அவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் முக்கியம். இனி இதற்கு அதிகமான பேர்களை சாட்சிக்கு அழைக்கத் தேவையில்லை"
கோப்புகளைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து மீண்டும் பேசினார்: "நான் இப்போது கணேசன் செய்த முறையீடு பற்றி விசாரிக்க விரும்புகிறேன். கணேசனின் விடுதியில் ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களைக் கொண்டு வந்து மிரட்டியதாக கணேசன் கூறியுள்ளார். அது முற்றிலும் பொய் என ராஜன் மறுத்துள்ளார். ஆனால் கணேசன் சொன்ன அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் எனச் சொல்ல இப்போது ஒரு சாட்சி கிடைத்திருக்கிறார்"
கணேசன் நிமிர்ந்து உட்கார்ந்தான். யார் சாட்சி? இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்தது இந்த சாட்சி?
"லீ எம் பூன்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"
லீ எம் பூன் நிமிர்ந்து உட்கார்ந்தார். "டத்தோ! எங்கள் விடுதியில் அந்த நாள் நான் இரவில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போய்விட்டதனால் வரவேற்பறையில் உள்ள செட்டியில் படுத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் எனக்குப் பின்னால் சிலர் பேசுகின்ற சத்தம் கேட்டது. தமிழிலும் மலாயிலும் மாறி மாறிப் பேசினார்கள். யார் என்று தலை உயர்த்திப் பார்த்தேன். கணேசனை அடையாளம் கண்டு கொண்டேன். ராஜனையும் எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு பேர் எனக்குத் தெரியாதவர்கள். அவர்கள் மாணவர்களா வெளி ஆட்களா என்று தெரியாது. ஆனால் கணேசன் சொன்னது போல அவர்கள் விடுதியின் வரவேற்பறையில் கொஞ்சம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தது உண்மைதான். எதைப்பற்றிப் பேசினார்கள் என எனக்குத் தெரியாது!"
கணேசன் மனதில் மீண்டும் மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. லீ எம் பூன் தன்னைக் காக்க வந்த தெய்வம் போலத் தெரிந்தான்.
"மிஸ்டர் லீ! இந்தச் சம்பவம் பற்றித் தெரிந்தவர்கள் விடுதித் தலைவருக்கு அறிவிக்க வேண்டும் என பல நாள் நோட்டீஸ் எழுதிப் போட்டிருந்ததாக அறிகிறேன். நீங்கள் இது வரை சொல்லாமல் இருந்தது ஏன்?"
"டத்தோ, நான் வீடமைப்பு, கட்டடவியல், திட்டமிடுதல் பிரிவில் நான்காம் ஆண்டு மாணவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் விடுமுறையின் போது கோல லும்பூரில் என்னுடைய ஆண்டிறுதி புரொஜெக்ட் செய்ய ஆரம்பித்தேன். அதை முடிக்க முடியவில்லை. இந்தப் பருவ ஆரம்பத்தில் புதிய பாடங்களைப் பதிவு செய்வதற்காகத் திரும்பினேன். பதிவு முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு என் டீனிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் கோல லும்பூர் போய் புரொஜக்டை முடித்து இரண்டு நாள் முன்புதான் வந்தேன். நேற்றுதான் நோட்டீஸ் பார்த்தேன். உடனே பெங்காவாவைச் சென்று பார்த்தேன். அவர் உங்களிடம் பேசி இன்று காலை விசாரணை இருப்பதைக் கூறி என்னை அழைத்து வந்தார்"
"சரி! நீங்கள் அந்த அறையில் இருந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?"
"நான் படுத்திருந்தேன். சத்தம் கேட்டவுடன் தலையைத் தூக்கி குஷன்களின் இடுக்கில் பார்த்து விட்டு இந்த இந்திய மாணவர்கள் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வார்கள், நமக்கு என்ன என்று மீண்டும் குத்துச் சண்டையில் ஆழ்ந்து விட்டேன்! அந்த நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கச் சந்தர்ப்பம் இருந்திருக்காது"
டத்தோ சலீம் ராஜனைப் பார்த்தார். "ராஜன், அன்றைக்கு நீங்கள் கணேசனின் விடுதிக்குப் போகவே இல்லை என்று சொன்னீர்களே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உங்களுடன் விடுதிக்கு வந்திருந்த அந்த மற்ற இருவர் யார்? வெளி ஆட்கள் என்பது உண்மையா?"
ராஜனின் முகம் கடுமையாக இருந்தது. ஆனால் வின்சன்ட் பயந்து ஒடுங்கி இருந்தான். ராஜன் சத்தமாகப் பேசினான்: "டத்தோ! எனக்கு எதிராக இங்கே பெரிய சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னைக் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். இது அத்தனையும் பொய். இந்த லீ கணேசனின் நண்பர். அவருக்குப் பொய் சொல்லிக் கொடுத்து தயார் படுத்தியிருக்கிறார்கள்!"
கணேசனின் விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் பேசினார். "டத்தோ! லீ எம் பூனும் கணேசனும் நண்பர்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் லீ எம் பூன் புரொஜக்ட் வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பிய பிறகு கணேசனைப் பார்க்கவே இல்லை. கணேசன் மீது இப்படி ஒரு விசாரணை இருக்கும் செய்தியே அவருக்குத் தெரியாது. நோட்டீஸ் போர்டில் நோட்டீஸ் பார்த்ததும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வரவேற்பறையில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் என்னைப் பார்க்க வந்தார். இதையெல்லாம் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் உங்களுக்குப் போன் செய்தேன்!"
ராஜன் மீண்டும் உரத்த குரலில் பேசினான். "டத்தோ! இதில் முக்கியமாக கணேசன் ரேகிங்கில் ஈடுபட்டாரா இல்லையா என்பதுதானே முக்கியம்? ரேகிங் நடந்த அன்று என்னோடு இருந்தவர்கள் யார் யாரென்று நான் உங்களுக்குச் சொல்லத் தயாராக இருக்கிறேன். இன்னும் நான்கு முதல் ஐந்து பேர் ரேகிங்போது நடந்தது உண்மை என்று சாட்சி சொல்லுவார்கள். நீங்கள் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்! அப்போதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் கணேசனின் சகாக்களும் நண்பர்களும் இட்டுக்கட்டியுள்ள கற்பனைக் கதைகள்தான்!" என்றான்.
டத்தோ சலீம் சுற்றிலும் பார்த்தார். "அப்படியானால் இந்த இரண்டு விடுதித் தலைவர்கள், பேராசிரியர் முருகேசு எல்லோருமே கூடிப் பேசி இப்படி ஒரு பொய்க்கதையை உக்களுக்கு எதிராக ஜோடித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்!"
"அப்படித்தான் தெரிகிறது!"
"உங்கள் நண்பர்கள் இன்னும் நாலைந்து பேரை அழைத்துக் கேட்டால் அவர்கள் உங்கள் சார்பாக உண்மை பேசுவார்கள்!"
"என் சார்பாக அல்ல! நடந்த உண்மையைச் சொல்லுவார்கள்!"
பரசுராமன் கை உயர்த்தித் தான் பேச விரும்புவதைத் தெரிவித்தான். டத்தோ அவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். "டத்தோ! அன்று ரேகிங் நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ராஜாவின் தலைமையில் உள்ள காராட் கேங் உறுப்பினர்கள். ஆகவே தங்கள் ரகசியக் கும்பல் விசுவாசத்தால் ராஜனின் கூற்றை ஆதரிப்பார்கள். அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். காராட் கேங்கிற்கு வெளியே உள்ளவர்களாக அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் நான், அகிலா மற்றும் கணேசன் மூவரும்தான்!" என்றான்.
டத்தோ சலீம் நிமிர்ந்து உட்கார்ந்தார். "பரசுராமன் சொல்லியதிலிருந்து நாம் விசாரிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த காராட் கேங் என்ற பெயரில் இந்திய மாணவர்கள் ரகசியக் கும்பல் ஒன்று இந்தப் பல்கலைக் கழகத்தில் இருக்கிறதா? ரித்வான்! உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"இப்படி ஒரு கேங் இருப்பதாக வதந்திகள் கேள்விப் பட்டிருக்கிறேன் டத்தோ! ஆனால் இதுவரை அது நிருபிக்கப் படவில்லை. அப்படி இருந்தால் அந்தக் கும்பல் மிக ரகசியமாகச் செயல் படுகிறது என்றுதான் அர்த்தம்!" என்றார் பாதுகாப்புத் துறைத் தலைவர்.
"ராஜன்! இப்படி ஒரு கும்பலை நீங்கள் நடத்தி வருவது உண்மையா?" டத்தோ அவனை நோக்கி நேரடியாகக் கேட்டார்.
ராஜனின் முகம் இருண்டிருந்தது. "சுத்தப் பொய் டத்தோ. அப்படி ஏதும் கும்பல் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!"
"பரசுராமன், அப்படி ஒரு கும்பல் இருப்பதாக எப்படிச் சொல்லுகிறீர்கள்?"
பரசுராமன் நிதானமாகப் பேசினான்: "டத்தோ, இந்த காராட் கேங் என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது. அதற்கு ராஜன்தான் தலைவர். என்னையும் காராட் கேங்கில் வற்புறுத்திச் சேர்த்து விட்டார்கள். இதோ இருக்கிறது சான்று!" பரசுராமன் தன் பைக்குள் வைத்திருந்த ஒரு வெள்ளை டீ சட்டையை எடுத்துக் காட்டினான். அதில் "காராட் கேங்" என எழுத்துக்கள் அச்சிடப் பட்டிருந்தன. "இதை எனக்குக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னது ராஜன்தான்!" என்றான்.
டத்தோ ராஜனைப் பார்த்தார். "பொய் டத்தோ! எனக்கும் இந்த டீ சட்டைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை! இந்த மாதிரு டீ சட்டையை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம்"
பரசுராமன் மீண்டும் கை உயர்த்தினான். “ட்த்தோ, காரட் கேங் உறுப்பினர்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் இந்த டீ சட்டையை மேல் சட்டைக்குள் அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதிப்படி ராஜனும் வின்சண்டும் இந்தச் சட்டையை இப்போதும் அணிந்திருக்கிறார்கள்.
”பொய்” என்று கத்தினான் ராஜன்.
“அது பொய் என்றால் உன் மேல் சட்டையை இப்போது அவிழ்த்து உள்ளா டீ சட்டையைக் காட்ட முடியுமா?" என்று கேட்டார் டத்தோ சலீம்.
ராஜன் மீண்டும் கத்தினான். "டத்தோ! இது எங்களுக்குப் பெரிய அவமானம். ஒரு பெண் உட்பட இத்தனை பேர் நிறைந்துள்ள இந்த அவையில் எங்களை சட்டையை அவிழ்த்துக் காட்டச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் அப்படிச் செய்ய மறுக்கிறோம்"
பொறியில் அகப்பட்டுக் கொண்ட எலி முட்டி மோதித் திரிகிறது என கணேசன் நினைத்துக் கொண்டான்.
டத்தோ சலீம் அமைதியாகக் கூறினார்: "சரி! அப்படியானால் பாதுகாப்புத் தலைவர் ரித்வான் அவர்களோடு நீங்கள் ஒரு தனி அறைக்குப் போய் அவருக்கு மட்டும் சட்டையை அவிழ்த்துக் காட்ட முடியுமா?"
"முடியாது! அப்படி எங்களை வற்புறுத்த உங்களுக்கு உரிமையில்லை! நீங்கள் உங்களுக்கு முன் உள்ள வழக்கை வாய் மூலமாகத்தான் விசாரிக்க வேண்டும். இந்த வகையான அவமானத்துக்கு நாங்கள் உட்பட மாட்டோம்" என்று கத்தினான்.
டத்தோ சலீம் ரித்வானோடு குனிந்து காதில் பேசினார். இருவரும் தலையசைத்துக் கொண்டார்கள். பிறகு டத்தோ சலீம் ராஜனைப் பார்த்துச் சொன்னார். "என்னுடைய கோரிக்கைக்கு நீங்கள் கட்டுப்பட மறுப்பதால் மூன்று பாதுகாவலர்களை இங்கு அழைத்து வந்து உங்களை இந்த அறையிலேயே தடுத்து வைக்கப் போகிறேன். தொடர்ந்து போலீசுக்குப் போன் பண்ணி அவர்களை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்புவிக்கப் போகிறேன். அது தவிர இதைச் சுமுகமாகத் தீர்க்கும் வழி எனக்குத் தெரியவில்லை!" என்றார்.
வின்சன்ட் திடீரென எழுந்து நின்றான். "டத்தோ அப்படிச் செய்யத் தேவையில்லை!" என்றான். அவர்கள் அனைவரின் முன்னும் சட்டைப் பொத்தான்களைக் கழற்றினான். உள்ளே இருந்த வெள்ளை டீ சட்டையில் "காராட் கேங்" எனக் கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது.
------------------
அகிலா தன் புதிய அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
பிற்பகலில் அந்த கெமிலாங் விடுதி ஓ என்று கிடந்தது. முதல் பருவத்தின் மத்தியில் முதல் சோதனை விரைவில் வருவதால் மாணவர்கள் அனைவரும் விரிவுரையிலோ அல்லது நூல் நிலையத்திலோ இருந்தார்கள். அகிலாவுக்கும் அன்று பிற்பகலில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது. ஆனால் அவள் போகவில்லை. போக மனசு வரவில்லை.
விசாரணையும் அது முடிந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் அவளால் விடுபட முடியவில்லை. விடுதிக்குத் திரும்பும் வழியில் பொதுத் தொலைபேசியில் வீட்டுக்குப் போன் செய்து அப்பாவிடம் சுருக்கமாக முடிவைச் சொன்னாள். அவருக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. முடிவு எதிர்மறையாக இருந்தால் பல்கலைக் கழகத்திலிருந்து தான் விலகப் போவதாக அவள் முன்னமே எச்சரித்து குடும்பத்தில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தாள். "அப்படிச் செய்யதேம்மா, என் கனவையெல்லாம் பாழாக்காத!" என்று அப்பா கெஞ்சியதைப் பொறுக்க முடியாமல் "முடிவு எப்படின்னு பாப்போம் அப்பா!" என்று அவருடைய ஆறுதலுக்காகச் சொல்லி வைத்திருந்தாள்.
இப்போது முடிவு சரியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்க மனம்தான் சரியில்லை.
விடுதிக்கு வந்து கொஞ்ச நேரம் தலையணையில் முகம் புதைத்து அழுதாகிவிட்டது. அப்புறம் "இது என்ன பைத்தியக்காரத்தனம்? யாருக்கு விடுதலை கிடைத்தால் என்ன? யார் யார் அந்த விடுதலையை எப்படிக் கொண்டாடினால் நமக்கென்ன? படிக்க வந்த வேலையைப் பார்ப்போம்" என்ற எண்ணம் வந்தது.
முகம் கழுவிக் கொண்டு மேசைக்கு முன் உட்கார்ந்து சில புத்தகங்களிலிருந்து குறிப்பெடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் புத்தகங்களில் மனம் பதியவில்லை. புத்தகப் பக்கங்களின் விஷயத்தை மறந்து கண்கள் வெறித்துப் போய் மனம் பின்னோக்கி அன்று காலை நடந்தவற்றை நினைத்த பொழுது அவள் கண்கள் அவளை மீறி அழுதன.
அன்று காலையில் சாப்பிடவில்லை. மத்தியானமும் சாப்பிடப் போக மனம் வரவில்லை. எதுவும் ருசிக்கவில்லை. பசி இருந்தாலும் மரத்துப் போன உடலில் அது அதிகமாகத் தெரியவில்லை. மனம் ஜெசிக்காவையும் கணேசனையும் மாறி மாறி நினைத்தது. சின்னஞ்சிறு பள்ளிக்கூடப் பெண்ணாகத் தன் வயதுத் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குள் எப்படி இவர்கள் நுழைந்து புயல்களை எழுப்பினார்கள் என்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.
ஜெசிக்காவின் பனிப்போரையும் சிடுசிடுப்பையும் தாங்க முடியாமல் நேற்றுத்தான் இன்னொரு சீனத் தோழியுடன் பேசி உடன்பாடு செய்து கொண்டு விடுதித் தலைவருக்கு அறிவித்து விட்டு அறையை மாற்றிக் கொண்டிருந்தாள். புதிய அறைத் தோழியும் சீனப் பெண்தான். ஆனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாள்.
புதிய அறை பழைய அறையைப் போல வசதியாக இல்லை. இரவிலும் பகலிலும் ஒரே புழுக்கமாக இருந்தது. அறையிலிருந்த சீலிங் விசிறி சுழல்கையில் கரகரவென ஒரு பழைய டிராக்டரைப் போல சத்தம் போட்டது. சாலைக்குப் பக்கமாகவும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை ஒட்டியும் இருந்ததால் மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப்பட்டு சீறிப் பாயும் சத்தம் சகிக்கவில்லை. இந்த அறையிலிருந்த ஒரே நிம்மதி ஜெசிக்காவின் நச்சுப் பார்வை எந்நேரமும் தன் மேல் மேயவில்லை என்பதுதான்.
கணேசனின் விசாரணையில் ஏற்பட்ட எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அவள் உள்ளத்தை மகிழ்ச்சியின் முகடுக்குக் கொண்டு வந்திருந்தன. ஆனால் அதற்குப் பின் நடந்தவை அந்த முகடிலிருந்து அவளை ஏமாற்றப் பாதாளத்துக்குத் தள்ளிவிட்டிருந்தன.
தன் மேல் ஜெசிக்காவுக்கு ஏற்பட்டிருந்த இந்தக் காரணமற்ற வெறுப்பை அகிலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணைக்கு முன்னாலிருந்தே அகிலாவை விடாமல் குடைந்து கொண்டிருந்தாள். விசாரணை நெருங்க நெருங்கத் தன்னை ஒரு எதிரியாகவே பாவிக்கத் தொடங்கி விட்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன் வெளிப்படையாகவே சண்டையைத்
தாடங்கினாள். "கணேசனின் இந்த நிலைக்கு யார் காரணம் சொல்? நீதானே? நீதானே? அப்படியிருக்க அவரைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்? ஒரு அணுவாவது செய்கிறாயா? என்னைப் பார்! அவருக்கு ஆதரவு திரட்ட மாணவர் சங்கத்துக்கு தீர்மானம் போட்டிருக்கிறேன். கையெழுத்து வாங்கிச் சேகரித்து வருகிறேன். பெரித்தா கேம்பஸில் செய்தி எழுதியிருக்கிறேன். நீ என்ன செய்திருக்கிறாய், சொல்! நீ அவருடைய எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கியிருக்கிறாய்! அவ்வளவுதான்!"
கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்று அகிலாவின் தசைகளும் ரத்தமும் துடித்துக் கொண்டிருப்பதை அவளால் ஜெசிக்காவுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை. கணேசன் தண்டிக்கப் பட்டால் அந்தத் தண்டனையைத் தானே தனக்கு விதித்துக் கொள்வது என்ற அவளின் முடிவையும் அவள் ஜெசிக்காவுக்குச் சொல்லவில்லை. அதைச் சொன்னால் ஜெசிக்கா அலட்சியப் பபடுத்துவாள். "ஆமாம்! நீ ஒருத்தி தொலைந்து போவதால் அதில் கணேசனுக்கு என்ன நன்மை?" என்று கேட்பாள்.
"ஜெசிக்கா! நீ இந்தப் பல்கலைக் கழகத்தில் மூன்று வருடங்கள் இருந்து எல்லாரையும் தெரிந்து வைத்திருக்கிறாய். நான் இப்போதுதான் வந்திருக்கும் முதலாண்டு மாணவி! உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்? அவருக்காக வருத்தப் படுவது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும்!" என்று அமைதியாக பதில் சொன்னாள்.
"ஆமாம்! உன் வருத்தத்தால் என்ன ஆகப் போகிறது? கணேசனின் எதிர்காலம் தொலைந்தது! தொலைந்தது! எல்லாம் உன்னால்!" என்றாள்.
ஒரு ஆற்றாமை உணர்வும் தான் காரணமில்லாமல் ஜெசிக்காவினால் சித்திரவதை செய்யப்படும் உணர்வும் கூடி அகிலாவின் மனதில் கோபத்தை எழுப்பின. ஒரு நாயால் மூர்க்கமாக விரட்டப் படும் பூனைக்குட்டி ஒரு மூலையில் அகப்பட்டுக் கொள்ளும் போது எதிர்த்துச் சீறுவது போல அகிலா சீறினாள். "என்னை என்ன செய்யச் சொல்கிறாய் ஜெசிக்கா? யார் என்னைக் காப்பாற்றும்படி இந்த கணேசனைக் கேட்டார்கள்? எத்தனையோ மாணவர்கள் வேடிக்கை பார்த்து விட்டுப் போனது போல அவரும் போயிருக்கலாமே! அப்படிப் போயிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதல்லவா? நானா கூப்பிட்டேன்? அவராக வந்து இதில் மாட்டிக் கொண்டதற்கு நான் என்ன செய்யட்டும்?"
ஜெசிக்காவின் கண்களில் நெருப்புத் தணல்கள் எரிந்தன. "நன்றி கெட்ட மிருகமே! போ! என் அறையை விட்டுப் போ! என் கண் முன்னே நிற்காதே!" என்றாள்.
"இது உன் அறை இல்லை. எனக்குப் பல்கலைக் கழகம் முறைப்படி ஒதுக்கிய அறை. என்னைப் போகச் சொல்ல நீ யார்?" என்று திருப்பிக் கத்தினாள்.
ஜெசிக்கா கதவை ஓங்கி அறைந்து விட்டு எங்கோ போனாள். இந்த வெறி பிடித்த பெண்ணுடன் மேலும் காலம் கழிக்க முடியாது என்பது அகிலாவுக்குத் தெளிவாகிவிட்டது. அதன் பிறகுதான் ஜெசிக்காவுக்குத் தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் பேசி அறை மாற்றத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டாள்.
வியாழனன்று அறை மாற்றி வந்த போதும் இந்த அறையும் தனக்கு நீண்ட நாள் நீடிக்கப் போவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. நாளைக் காலை கணேசனுக்கு வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்து தானும் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. ஆகவே இங்கிருந்தும் விரைவில் மூட்டை கட்டும் நிலை வரலாம்.
ஜெசிக்காவுடன் தான் போட்ட சண்டைக்குப் பின் தனக்கும் கணேசன் மேல் அனுதாப உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதை அவளுக்குக் காட்டுவதற்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம் என நினைத்த போது அந்த முடிவு மேலும் இறுகியது.
கணேசன் மேல் அனுதாபமா? அனுதாபத்திற்காகவா இதைச் செய்கிறேன் என்று தன்னையே கேட்டுப் பார்த்தாள். மாணவர் கேன்டீனில் அன்று கணேசனும் ராகவனும் தனித்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட போது அவர்களுடன் போய்ப் பேச வேண்டும் என்று உந்தியதும் அனுதாபம்தானா?
மாலதியுடன் கேன்டீனில் பசியாறிக் கொண்டிருந்த போது கணேசனும் ராகவனும் வந்து உட்காருவதை அவள் கவனித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் அகிலாவைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் முகங்கள் செழிப்பில்லாமல் இருந்ததையும் அவர்கள் உரையாடலில் சிரிப்பில்லாமல் இருந்ததையும் அவள் கவனித்தாள்.
மாலதிக்கு விரிவுரை இருந்ததால் அவசரமாகப் பசியாறிவிட்டு அவள் புறப்பட்டுப் போய்விட்டாள். தனிமையில் உட்கார்ந்து தன் காப்பியை அருந்திக் கொண்டிருந்த அகிலா கொஞ்ச நேரம் அவர்களைக் கவனித்தவாறு இருந்தாள். கணேசனை அந்த சோகமான தருணத்தில் பார்த்த போது ஒரு பாசமும் நன்றி உணர்ச்சியும் சுரந்தன. "போ, போய்ப் பேசு" என்று அவளுடைய இளமை மனது சொல்லிற்று. "சீ! அந்நிய ஆண்களிடம் என்ன பேச்சு?" என்று அவளுடைய அம்மாவின் உருவத்தில் மரபு வழியான ஒரு மனது எச்சரிக்கையை விடுத்தது.
இவர் அந்நியரல்ல! எனக்குத் தெரிந்தவர். எனக்காக இந்த நிலைமைக்கு வந்தவர். அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதில் தவறில்லை. அது கடமையும் கூட. அவருக்காக நான் எடுத்துள்ள முடிவை நான் அவருக்கு அறிவிக்க வேண்டும். அது நன்றிக் கடன்!
எண்ணம் உறுதிப்பட்டதும் காப்பிக் கோப்பையை வைத்து விட்டு எழுந்து நடந்தாள்.
அவர்கள் இருவர் முன்னாலும் அமர்ந்து இத்தனை தைரியமாக, இத்தனை கோர்வையாகத் தன் முடிவைச் சொல்ல முடிந்தது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் பெற்றோர்களும் பள்ளிக்கூடமும் அமைத்துக் கொடுத்த கூட்டுக்குள்ளிருந்து ஒரு புழுவாக வாழ்ந்துவிட்டு இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தவுடன் தான் வெளிப்பட்டு ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகடித்துப் பறக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டாள். நெருக்கடியான நிலைமைகள் புதிய பயங்களைக் கொடுப்பதைப் போலவே புதிய தைரியங்களைக் கொடுக்கின்றன. புதிய பழகு முறைகளையும் கொடுக்கின்றன. தான் முற்றி வருவதாக அகிலா நினைத்துக் கொண்டாள்.
ஆனால் கணேசனின் அந்த அன்புப் பிடி...! அதை அவள் எதிர் பார்க்கவில்லை. அவர்களிடம் ஒரு நாலு வாக்கியங்களில் தன் முடிவைச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்விட வேண்டும் என்று எண்ணி வந்திருந்தவள் அவனுடைய பிடியில் சிக்கிக் கொண்டாள்.
அவன் அவள் கைகளைப் பிடிப்பது இது முதன் முறையல்ல. அன்றைக்கு ரேகிங் கும்பலிடமிருந்த காப்பாற்றிய போதும் கை பிடித்துத்தான் இழுத்து வந்தான். ஆனால் இன்றைய பிடியில் மின்சாரம் பாய்ந்தது. அன்பும் பாசமும் நன்றி உணர்ச்சியும் பாய்ந்தன. அதுதான் தான் இருப்பது மாணவர்கள் நிறைந்த கேன்டீன் என்பதையும் மறந்து அவள் கண்களில் கண்ணீரைப் பெருக வைத்தது.
அங்கிருந்து புறப்பட்டு தன்னறைக்குத் திரும்பிய போது அவளுடைய மனம் பிசைந்து போட்டது போல மசிந்து கிடந்தது. திரும்பத் திரும்ப கணேசனின் அன்பான பிடியை நினைத்தது. வேண்டாம் என்று தடுத்தும் கேட்கவில்லை. தன் கட்டுப்பாட்டையும் மீறி அந்தப் பிடிக்கு ஆயிரம் அர்த்தங்களை மனம் கற்பித்துக் கொண்டே இருந்தது. அன்பு, பாசம் என்ற உணர்வுகளையும் மீறி இது காதல் என்றும் மனம் கற்பித்துக் கொண்டது.
அகிலாவின் அறிவு இந்த மன உணர்வுகளை வலிந்து மறுத்தது. ஒரு கண நேரம் தான் சொல்லிய முடிவில் வியந்து போய் கணேசன் தன் கைகளைப் பற்றிக் கொண்டதற்கு இத்தனை தீவிரமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்ளாதே என அது எச்சரித்தது. அது ஒரு தானியங்கியான நடவடிக்கை. அது தசைகளின் இயக்கம். அதன் பின் உள்ள உணர்வு வியப்பாக இருக்கலாம்; நன்றியாக இருக்கலாம். அது காதலாக இருக்க வேண்டியதென்பது அவசியம் இல்லை. இதைப் பெரிது படுத்தாதே, இதை விரிவு படுத்தாதே என்ற எச்சரிக்கைகள் அவள் தலைக்குள் கிசுகிசுத்தன.
அதனால் அடுத்த சில நாட்களில் கணேசனைச் சந்திப்பதை அவள் தவிர்த்து வந்தாள். ஓரிரு சந்தர்ப்பங்களில் அவனை நூல் நிலையத்திலும் கேண்டீனிலும் தூரத்தில் பார்த்த போது அங்கிருந்து அவன் கண்ணில் படாமல் அகன்றாள். சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு தன் மனதில் அரும்புகின்ற உணர்வுகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர்த்தாள்.
அவனை அடுத்து சந்திக்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக விசாரணை நடைபெறும் நாளான வரும் வெள்ளிக் கிழமைதான். வெள்ளிக் கிழமை வெள்ளென மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டிடத்திற்குப் போக வேண்டும். ஆனால் ஜெசிக்கா கண்டிப்பாக அங்கிருப்பாள். அவள் நச்சுப் பார்வையைச் சந்திக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை. அந்தப் பிசாசின் அறையிலிருந்து விடுதலை பெற்றாகிவிட்டது. இனி அவளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவள் பார்வைக்கு அஞ்சத் தேவையில்லை.
கணேசனைப் பார்த்து விசாரணையில் என்ன நடந்தாலும் அஞ்ச வேண்டாம் என்று உறுதி கூற வேண்டும். தன் முடிவை மறு உறுதிப் படுத்தி அவனுக்கு ஊக்கமூட்ட வேண்டும். விழவேண்டி நேர்ந்தால் இருவருமே தோழமையுடன் வீழ்வோம் என ஆதரவூட்ட வேண்டும். அவன் கைகளை ஒரு நண்பனின் கைகளாகக் குலுக்கி விசாரணையில் வெற்றி பெற வாழ்த்துக் கூற வேண்டும். விசாரணை முடியும் வரையில் அங்கேயே காத்திருக்க வேண்டும். விசாரணை முடிவை அவன் வாயாலேயே கேட்டுத் தெரிந்து கொண்டபின் தன்னுடைய அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
ஆனால் வியாழனன்று அறையை மாற்றிக் கொண்டிருந்த இக்கட்டான வேளையில் அவளுடைய விடுதியின் அலுவலர் ஒருவர் அவளைத் தேடி வந்து அவசரக் கடிதம் ஒன்றைக் கொடுத்து அதை சமர்ப்பித்துவிட்டதற்கான கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு சென்றார். அந்தக் கடிதம் மாணவர் விவகாரப் பிரிவிலிருந்து வந்திருந்தது. மறுநாள் காலையில் 8 மணிக்கு நடைபெறவிருக்கும் சிறப்பு விசாரணைக் கூட்டத்தில் அகிலா கலந்து கொள்ள வேண்டுமென்று உதவிப் பதிவதிகாரி முத்துராமன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம்.
அவளுக்குப் புரியவில்லை. ஒன்பது மணிக்கு நடைபெறவிருந்த விசாரணையை எட்டு மணிக்கெல்லாம் நடத்துகிறார்களா? அப்படியிருந்தாலும் தான் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லையே! இப்போது ஏன் தன்னை அவசரமாகக் கடைசி நேரத்தில் அழைத்திருக்கிறார்கள்?
எப்படியிருந்தாலும் எந்த விதத்திலாவது கணேசனுக்கு உதவ முடிந்தால் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டாள். ஒரு வேளை கணேசனுக்குத் தரப்படும் தண்டனையைத் தானும் தனக்கு விதித்துக் கொள்ளும் முடிவை விசாரணைக் குழுவில் முறையாக அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள். கணேசனைத் தேடிப் போய் இது பற்றிப் பேசலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். வேண்டாம் என்று தடையும் விதித்துக் கொண்டாள். கணேசனோடு இனி சந்திப்புக்கள் வேண்டாம். நாளை நடப்பது போல நடக்கட்டும் என உறுதி செய்து கொண்டாள்.
மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அவள் மாணவர் விகாரப் பிரிவின் முன் நின்ற போது அவள் எதிர் பார்த்தது போல கணேசனை அங்கே காணோம். எதிர்வாதிகளான ராஜன், வின்சன்ட் ஆகியோர்களைக் கூடக் காணோம். ஆனால் பரசுராமன் அங்கிருந்தான். அகிலாவைப் பார்த்ததும் புன்னகை புரிய முயன்றான். அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
கூட்டம் எட்டு மணிக்குச் சரியாகத் தொடங்கியது. டத்தோ சலீம் அனைவருக்கும் நன்றி கூறி இந்தச் சிறப்பு அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததன் நோக்கங்களை விளக்கினார். விசாரணைக் குழுவின் கவனத்துக்கு வந்துள்ள புதிய தகவல்களைத் தான் உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் அவர்களை வரவழைத்திருப்பதை விவரித்து அந்தப் புதிய தகவல்கள் என்ன என்று சொல்லிய போது அவள் இதயத்தில் பால் பொழிந்தது. தன்னுடைய முறை வந்த போது மீண்டும் ஒருமுறை அன்று நடந்தவற்றை நினைவு படுத்தித் தெளிவாகக் கூறினாள். பரசுராமனின் முறை வந்த போது அவள் சொன்ன அனைத்தையும் அவனும் உறுதிப் படுத்தினான்.
அவளுடைய பயங்கள் ஒவ்வொன்றாக அகன்றன. நீதியை நிலை நாட்டுவதற்காக நடவடிக்கைகளை முயன்று எடுத்துள்ள பேராசிரியர் முருகேசுவை அவள் நன்றியுடன் நோக்கினாள். கடைசி நேரத்தில் உண்மையைச் சொல்லி அனைவரையும் காப்பாற்றியுள்ள - இதுவரை தான் வெறுத்து வந்துள்ள - பரசுராமன் மீது கூட அன்பு சுரந்தது. சாட்சி சொல்ல வந்துள்ள சீன மாணவர், உடன் சாட்சிக்கு வந்துள்ள விடுதித் தலைவர்கள் அனைவர் மீதும் நன்றியுணர்ச்சி பெருகியது. இந்த நல்லவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மோசமான அநீதி இழைக்கப் படுவதைத் தடுத்துள்ளார்கள். இது நல்ல இடம். இது நல்ல பல்கலைக் கழகம். இதில் வந்து படிக்க நான் கொடுத்து வைத்தவள் என நினைத்துக் கொண்டாள்.
இவையனைத்தும் கணேசனுக்குத் தெரியுமா? விசாரணையின் போக்கைப் பார்த்தால் அவனுக்கு இதுபற்றி இன்னும் சொல்லப்படவில்லை என்றுதான் தெரிந்தது. இனி ஒன்பது மணிக்கு அவன் அழைக்கப்பட்டு இந்த உண்மைகள் அவனுக்குச் சொல்லப்பட்டு அவனுடைய நேர்மை நிலைநாட்டப் படும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.
அது நிகழ்ந்தது. உண்மைகள் வெளிப்படும் வேளையில் கணேசனுடைய கண்கள் பலமுறை அகிலாவின் கண்களைச் சந்தித்தன. "நம் துன்பங்கள் களையப்பட்டு விட்டன அகிலா! நம் தளைகள் அறுபட்டுவிட்டன!" என அவன் கண்களால் அனுப்பிய செய்திக்கு அவள் நன்றிச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
"கணேசன் எல்லாக் குற்றங்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுகிறார். ராஜன், வின்சன்ட், பரசுராமன் ஆகியோரின் குற்றம் நிருபிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நான் கல்வி அமைச்சிடம் கலந்து பேச வேண்டும். அதன் பின் விசாரணைக் குழு நாளைக்குக் கூடி தண்டனையை நிர்ணயிக்கும். இந்தக் கூட்டம் இதனுடன் முடிகிறது. நீங்கள் அனைவரும் போகலாம்" என டத்தோ சலீம் கூறியவுடன் அனைவரும் எழுந்தனர். ராஜனும் வின்சன்டும் மற்றவர்களிடம் பேச விருப்பமில்லாமல் அவசரமாக வெளியே போனார்கள். மற்றவர்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் டத்தோ சலீம் கணேசனுடன் கைகுலுக்கினார். "உனக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். உண்மை வெளிப்பட்டதில் மிக மகிழ்கிறேன்!" என்றார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கணேசன் பேராசிரியர் முருகேசுவிடம் விரைந்து வந்தான். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். "என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை!" என்றான்.
அவர் அவன் தோள்களைப் பற்றினார். "உண்மை தோற்காது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அதுதான் வெல்லும்! வாழ்த்துக்கள்" என்றார். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. "போ கணேசன்! விரிவுரைகளை ஒரு நாளைக்கு மறந்து விட்டுப் போய் உன் வெற்றியைக் கொண்டாடு!" என்றார்.
அகிலா காத்திருந்தாள். பேராசிரியரின் பிடியிலிருந்து விடுபட்டு நேராக அவளை நோக்கி வந்தான். அவள் இரண்டு கைகளையும் மீண்டும் பிடித்துக் கொண்டான். "அகிலா! வாங்க நம்ம ரெண்டு பேரும் தனியா போய் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்!"
அவளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவள் முகம் சிரித்துச் சிவந்திருந்தது. அவனுடன் போகத் தயாராகத் தலையாட்டினாள்.
இதற்குள் செய்தி வெளியில் பரவிவிட்டிருந்தது. விசாரணை அறைக் கதவைத் திறந்து கொண்டு ஜெசிக்காவின் தலைமையில் கணேசனின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் நுழைந்தார்கள். ஜெசிக்கா புயல்போல் ஓடிவந்து கணேசனை அப்படியே அணைத்துக் கொண்டாள். "கணேசன்! ஹிபிப் ஹ¤ரே!" என்று யாரோ கத்தினார்கள். தொடர்ந்து அனைவரும் முழங்கினார்கள். இரண்டு பேர் கணேசனைத் தூக்கினார்கள். "ஹிபிப் ஹ¤ரே" முழங்கியவாறு அவனை வெளியே தூக்கிச் சென்றார்கள். அந்த ஆரவாரத்தில் அகிலா பின் தள்ளப் பட்டாள்.
மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப் பட்டன. ஏறக்குறைய பத்து மோட்டார் சைக்கிள்களில் முடிந்தவர்கள் எல்லாம் ஏறிக் கொண்டார்கள். "ஹிபிப் ஹ¤ரே" சத்தத்தில் இன்னும் பலரும் கலந்து கொண்டார்கள். ஓரத்தில் முகம் தொங்கி நின்று கொண்டிருந்த ராஜாவையும் அவனுடைய கேங்கையும் கண்டபோது சத்தம் இன்னும் உச்ச கட்டத்தை அடைந்தது.
பாதுகாவலர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைவர் ரித்வானும் நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் கொண்டாட்டத்திற்கான காரணத்தை அவர் அங்கீகரிப்பவர் போலத் தோன்றினார்.
பரசுராமனும் ஒரு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாவின் கூட்டம் அவனைக் கைகழுவி விட்டது. கணேசனின் வெற்றி ஊர்வலத்துக்கு அவனை யாரும் கூப்பிடவில்லை.
மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ஆரம்பமாகியிருந்தது. ஹாரன்கள் அலறின. ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிள்தான் முதன்மை வகித்துச் சென்றது. அவள் பின்னிருக்கையில் உட்கார்ந்து கணேசன் அனைவருக்கும் கையசைத்துக் கொண்டிருந்தான். "ஹிபிப் ஹ¤ரே!" என்ற எழுச்சி மந்திரத்துடன் பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிவர ஊர்வலம் விரைந்தது.
அகிலா கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்தாள். ஊர்வலம் கண்களை விட்டு மறைந்ததும் மாணவர் விவகாரப் பிரிவு கட்டிட முன் வாசலில் நின்றவாறு மரங்களினூடே தெரியும் கடலை வெறித்துப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பியது.
துடைத்துக் கொண்டு தன் விடுதியில் தன் புதிய அறையை நோக்கி நடந்தாள். அறையை அடைந்ததும் அந்தப் புழுங்கும் மத்தியான வேளையில் படுக்கையில் தலையணையில் முகம் புதைத்து தன் விருப்பம் போல் அழுதாள்.
***
அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான வேளையில் தனியே கிடந்து அழுதேன்? இதற்காகத்தானா பல்கலைக் கழகம் வந்தது? இப்படித்தானா பெற்றோர்களின் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது? மனச்சான்று பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.
இரவு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி இருக்கிறது. பேராசிரியர் கௌஸ் நடனம் இன்னும் சரியாக அமையவில்லை என அவர்களை விரட்டிக் கொண்டே இருக்கிறார். "இது என்ன பாசார் மாலாமில் ஆடுகின்ற நடனம் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? பல்கலைக் கழக வேந்தரான பெர்லிஸ் மன்னர் அங்கிருப்பார். பினாங்கு முதலமைச்சர் அங்கிருப்பார். இந்தப் பல்கலைக் கழகத்தின் அத்தனை பேராசிரியர்களும் அங்கிருப்பார்கள். இவர்கள் முன் உடம்பை வளைக்காமல் ஆடினால் என் பெயரல்லவா கெட்டுப் போகும்? கமான், கமான், இடுப்பை வளைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் ஒருவன் இந்த வயதில் ஆடும் போது சிறுபிள்ளைகள் உங்களுக்கென்ன?" சத்தம் போடுவார்.
எட்டரை மணி பயிற்சியைத் தவறவிடக்கூடாது என உறுதி செய்து கொண்டாள். ஆனால் அதற்குள் கொஞ்சமாவது ஏதாவது சாப்பிட வேண்டும். காலையிலும் மத்தியானத்திலும் சாப்பிடாமல் வயிறு வெறுமனே கிடந்தது. சீக்கிரம் எழுந்து குளித்தால் மாலதியைக் கூட்டிக் கொண்டு குளுகோர் நகரில் சாலையோரக் கடைகளுக்குப் போகலாம்.
வளாகத்தின் தெற்கு வாசலைத் தாண்டி மின்டன் ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதிகளினூடே கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தாலும், இந்திய உணவு வேண்டும் மாணவர்களுக்கு அந்த குளுகோர் ஒட்டுக் கடைகள்தான் தஞ்சம். அங்கு தோசை, இட்டிலி, இடியப்பம், பிட்டு என்று ஏதாவது கிடைக்கும். மீ கோரேங், ரொட்டிச் சானாயும் கிடைக்கும். அறிவியல் பல்கலைக் கழக மாணவர்களை நம்பியே அந்தப் பகுதி செழிப்பாக வளர்ந்திருந்தது.
குளித்து உடைமாற்றி மாலதியின் அறைக்குப் போய் அவளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று முடிவு செய்து எழுந்தாள். அங்கு எங்காவது கணேசனைப் பார்க்க முடியுமா என்று ஒரு நப்பாசை திடீர் என மனசுக்கு வந்தது. சீ என்று அதை அழித்தாள். அது ஜெசிக்கா எனும் கிளி கொத்திக் கொண்டு போன பழம். எச்சில் பழம். அது எனக்குத் தேவையில்லை. அதை நினைக்கவே வேண்டாம் என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் குளித்து ஜீன்சும் டீ சட்டையும் மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் நின்று ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாலதியே அவள் அறைக்கு வந்து விட்டாள். "என்ன ஆள எங்கியுமே பாக்க முடியில அகிலா? அறையை வேற சொல்லாம கொள்ளாம மாத்திட்டியே! என்ன விஷயம்?"
"வாங்க மாலதி! உங்களப் பாக்கதான் வர இருந்தேன். ஜெசிக்காவோட ஒத்து வரல. அதுதான் அறைய மாத்திக்கிட்டேன்!" என்றாள்.
"அப்படியா? அது இருக்கட்டும்! இன்னக்கிக் காலையில உங்க ஆளுக்குப் பெரிய வெற்றியாமே! கேம்பஸ் முழுக்க மோட்டார் சைக்கிள் வெற்றி ஊர்வலம் நடந்ததாமே! கேம்பஸ் முழுக்க இன்னைக்கு அதுதான் பேச்சு! அதப்பத்திக் கேக்கலாம்னு பாத்தா உன்ன எங்கியுமே பார்க்க முடியிலியே!" என்றாள் மாலதி.
"வெற்றி ஊர்வலத்துக்கும் எனக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல. வெற்றி யாருக்குக் கிடைச்சதோ அவங்க கொண்டாடுவாங்க! எனக்கென்ன?" என்றாள்.
"என்ன ரொம்ப சலிப்பா பேசிற மாதிரி இருக்குது? உங்க ஆளு வெற்றியில உனக்குப் பங்கு இல்லாம போயிடுமா?"
"அது என்ன உங்க ஆளு? அவர் ஒண்ணும் என் ஆளு இல்ல"
மாலதி சிரித்தாள். "ஏன் அகிலா! எங்கிட்டயே மறைக்கப் பாக்கிறியா? அன்னைக்கு கேண்டீன்ல நான் புறப்பட்டுப் போன பிறகு ரெண்டு பேரும் கை கோத்துக் குலாவினிங்கன்னு கேள்விப் பட்டேனே!"
அகிலா அதிர்ச்சி அடைந்தாள். "சீ! குலாவினிங்க அப்படியிப்படின்னு பேசாதிங்க! ஒரு ஆறுதலுக்குக் கையப் பிடிச்சா குலவுறாங்கன்னு அர்த்தமா?"
"அது என்னமோ எனக்குத் தெரியாது! கேம்பஸ் முழுக்க அந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. நீதான் கணேசனுக்குப் புது கேர்ள் •பிரண்டுன்னு முத்திரை குத்தியாச்சி. என்னாடா, நம்மளோட இவ்வளவு •பிரண்டா இருந்தும் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியே இந்த அகிலான்னு நாங்கூட மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன்!"
அந்தச் செய்தி அதிர்ச்சியாகவும் இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. கணேசனோடு தான் இணைத்துப் பேசப் படுவதில் அவள் உள் மனதிற்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்தது. ஜெசிக்கா தன் மீது இப்படி சீறி விழுவதற்கும் இந்தப் பேச்சுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
ஆனால் உண்மையில் நான் கணேசனோடா இருக்கிறேன்? "வா அகிலா, இந்த வெற்றியைக் கொண்டாடலாம்" என்று சொன்ன சொற்களின் சூடு ஆறுவதற்குள் அதை மறந்து இன்னொருத்தியுடன் போய்விட்டான் அல்லவா? மகிழ்ச்சியில் தன்னை மலை முகட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றப் படுகுழியில் தள்ளி விட்டானல்லவா? எப்படி வந்து எல்லார் முன்னிலையிலும் கட்டிப் பிடித்துக் கொண்டாள்! எவ்வளவு உல்லாசமாக ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றார்கள்! அந்த ஜெசிக்காவுக்கு நான் போட்டியா?
ஆனால் கணேசன் அன்பாகத்தானே பேசினான்! அந்த அன்பில் உண்மை கொஞ்சமாவது இருக்காதா? அந்தப் பார்வையில், அந்தப் பிடியில் நட்பைத் தவிர வேறு பொருள் இருக்காதா? அதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்ற ஆதங்கம் வந்தது. அப்படிப் பேசினால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றியது.
"உட்காருங்க மாலதி!" என்றாள். கணேசனிடம் தான் கேன்டீனில் பேசியதைச் சொன்னாள். கணேசனிடம் தன் முடிவைச் சொன்னதைச் சொன்னாள். கணேசன் கைபிடித்ததையும் தான் அழுததையும் சொன்னாள். விசாரணையில் ஏற்பட்ட திருப்பங்களையும் அதன் முடிவில் கணேசன் தன்னிடம் வந்து பேசியதையும், அவனை ஜெசிக்கா பறித்துச் சென்றதையும் சொன்னாள். அந்த இறுதிக் கட்டத்தில் அவள் கண்களில் கண்ணீர் அரும்பியது.
"சரி, சரி! எல்லாம் நல்லவிதத்தில முடிஞ்சது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. கணேசன் மேல வந்த வீண் பழி மறைஞ்சதே, அது பெரிய விஷயம்! ஆனா நீ மனசப் போட்டு வீணா அலட்டிக்காத அகிலா! கணேசனுக்கும் ஜெசிக்காவுக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்குன்னுதான் கேள்விப்பட்டேன். ஆனா அவங்க வெறும் நண்பர்களா அல்லது அதற்கு மேலயான்னு யாருக்கும் தெரியாது. எதுக்கும் ஜாக்கிரதையா இரு அகிலா! அவங்க பழைய நண்பர்கள். நீதான் புதுசா வந்தவ. ஆகவே குறுக்கிடாம கொஞ்சம் ஒதுங்கியே இரு!" என்றாள் மாலதி.
அகிலாவுக்கும் அப்படித்தான் பட்டது. தான் ஒதுங்கிவிட வேண்டும். இந்தச் சிறிய புயல் அடித்துக் கொண்டிருந்தபோது படபடப்பாக இருந்தது. இப்போது இது ஓய்ந்து விட்டது. இனி இதை உதறிவிட்டுப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். இனி தனக்கு உதவிக் கரம் நீட்டிய அந்த நல்லவனின் எதிர் காலம் என்னாகும், என்னாகும் என எண்ணி எண்ணி வருந்த வேண்டியதில்லை. என்னால் வீணானான் என்ற பழிக்கு அஞ்ச வேண்டியதில்லை.
"சரி மாலதி. நீங்க சொல்றது சரிதான். நான் ஒதுங்கிட்றேன்! அவங்க காரியத்தில நான் ஏன் தலையிடணும்? சரி. அது கிடக்கட்டும்! காலையிலயும் மத்தியானமும் நான் சாப்பிடல! பசிக்குது. வாங்க குளுகோர் போய் ஏதாவது சாப்பிட்டு வருவோம். எனக்கு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி வேற இருக்கு! அதுக்குள்ள திரும்பிடனும்" என்றாள்.
"வா, வா! நானும் அதுக்குத்தான் வந்தேன். சாப்பாடு வாங்கப் போகனும்னு ராணியும் ராஜேஸ்வரியும் வேற காத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் அழச்சிக்கிட்டுப் போகலாம்!" மாலதி எழுந்தாள்.
இருவரும் அவசரமாக வெளியேறி ராணி, ராஜேஸ்வரி என்ற அவர்களின் இரு தோழிகளையும் கூட்டிக் கொண்டு இறங்கி வந்தார்கள். விடுதியின் வரவேற்பறையை விட்டு படிக்கட்டுகளில் கால் வைத்து நடந்த போது மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து கணேசன் அவர்களை நோக்கி வந்தான்.
முதலில் மாலதிதான் பார்த்தாள். அகிலாவை தோளில் இடித்துக் காட்டினாள். அகிலா அவனை கொஞ்சம் வியப்போடும் வெட்கத்தோடும் பார்த்தாள். பார்க்காதது மாதிரிப் போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் அவன் விரைவாக நெருங்கி அவர்கள் முன் வந்து நின்றான்.
எல்லாரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க மாலதிதான் மௌனத்தைக் கலைத்தாள். "கணேசன், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ரேகிங் விசாரணையில உண்மை வெளியாகி உங்களை விடுதலை செய்திட்டதா கேள்விப் பட்டோம். ரொம்ப மகிழ்ச்சி!" என்றாள்.
"ஆமாம் கணேசன், கன்கிராட்சுலேஷன்!" என்று ராணியும் ராஜேஸ்வரியும் அவன் கை பிடித்துக் குலுக்கினார்கள். அகிலா பேசாமல் இருந்தாள்.
"ரொம்ப நன்றி உங்க எல்லாருக்கும். அதுக்கு அகிலா ரொம்ப உதவி பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு சரியான முறையில நன்றி சொல்ல முடியாம போச்சி! அதுக்குத்தான் அவங்களத் தேடி வந்தேன்!" என்றான்.
தன்னைத் தேடி வந்தான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் தன்னை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்ற நினைத்த போது கோபம் வந்தது. ஜெசிக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி மனசுக்கு வந்தது. பேசாமல் இருந்தாள்.
இரங்கிய குரலில் பேசினான்: "அகிலா! உங்களோட எப்ப ஓய்வா பேச முடியும்?"
மூன்று தோழிகளை நிற்க வைத்துக் கொண்டு அவனோடு பேசுவது கூச்சமாக இருந்தது. அதிலும் அவன் சந்திப்பிற்கு நேரம் கேட்பது இன்னும் வெட்கமாக இருந்தது. பின்னால் இந்தத் தோழிகளின் வெறும் வாய்க்கு இது அவலாகப் போகும் என நினைத்தாள். ஆனால் நேராக முகம் பார்த்து அவன் கேட்கும் போது பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பேசினாள்: "நன்றி சொல்லத்தானே கேக்கிறிங்க? அதுக்குத் தேவையில்லை. நான் ஒண்ணும் செய்யலியே. உண்மை தானா வெளிப்பட்டது, அதுக்கு எதுக்கு நன்றி? உண்மையில உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும் என்ன ரேகிங்ல இருந்து காப்பாத்தினதுக்கு!" என்றாள்.
"எப்படியும் உங்களைச் சந்திச்சி...."
இடை வெட்டினாள். "மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை! வாங்க மாலதி போலாம்!" என மாலதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைவாக நடந்தாள்.
வழியில் மாலதி திட்டினாள். "என்ன அகிலா! இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டியே!" என்றாள்.
"பின்ன எப்படி? அவர் வழியில குறுக்கிடாதேன்னு கொஞ்சம் முன்னால நீங்கதானே யோசன சொன்னிங்க?"
"அது சரி! அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?"
"அப்படி என்ன பேசிட்டேன்? உண்மையில நமக்கு அவசரம்தான? நின்னு கதை பேச நேரமில்லையே, அத சொன்னது குத்தமா?"
"குத்தமில்ல! ஆனா நாளைக்கு வாங்க ஓய்வா பேசலாம்னு ஏதாவது சொல்லியிருக்கலாமே!"
பல்கலைக் கழகத்தின் பழம்பொருள் காட்சியகம் மற்றும் ஓவியக் கூடம் வைக்கப் பட்டிருந்த கட்டிடத்தைத் தாண்டி துணைவேந்தர் இல்லத்தின் வழியாக பரந்த விளையாட்டுத் திடலை ஒட்டி அந்தத் தெற்கு வாசலுக்கான வழி நீண்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் கடலும் பினாங்குப் பாலமும் தெரியும். அகிலா பேச்சை மாற்ற வேறு வெற்றுப் பேச்சுக்களோடு நால்வரும் விரைந்து நடந்தார்கள்.
"நாளைக்குப் பேசலாம்" என்று சொல்லியிருக்கலாம்தான் என்று அகிலா நினைத்தாள். ஆனால் தேவையில்லை. நாளை வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இன்று ராத்திரி பத்து மணிக்கு மாணவர் இல்லத்திற்கு வெளியே காத்திருந்தால் போதும். ஜெசிக்காவுடன் ராத்திரி ராத்திரியாக உட்கார்ந்து பேசத் தெரிகிறதல்லவா? மூளை இருந்தால் நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் அகிலா.
*** *** ***
மலாய் ஜோகேட் இசை, இந்திய மேளமும் மேற்கத்திய டிரம்மும் தனி ஆவர்தனம், சீன வயலின் சோலோ எனக் கலவையாக ஒரு இசையை உருவாக்கி அதற்கு "இணைதல்" என்ற ஒரு தலைப்பையும் கொடுத்து உருவாக்கியிருந்தார் பேராசிரியர் கௌஸ். இசை மிகத் துரிதமாக இருந்தது. நடனத்திலும் ஏராளமான அசைவுகள். பத்து நிமிட நேரம்தான் நீடிக்கிறது என்றாலும் சரியாகச் செய்ய கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.
நாலாவது முறையாக ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பாதியில் நிறுத்தி "நோ, நோ, நோ" என்று கத்தினார் கௌஸ். "இப்படி வெட்டி வெட்டி அசைய வேண்டாம். இது என்ன கராத்தே என்று நினைத்துக் கொண்டீர்களா? இது நடனம். இது தற்காப்பு விளையாட்டல்ல. கலை. அசைவில் எவ்வளவு வேகம் இருந்தாலும் அது நளினமாக இயல்பாக இருக்க வேண்டும். ஒரு கிளை அசைவதைப் போல, ஒரு அலை வீசுவது போல, ஒரு கவிதையின் வரிகள் போல... ஓக்கே! இன்னொரு முறை! ரெடி... ரோல் மியூசிக்!"
ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த இசை கொஞ்சம் பின்னோக்கித் தள்ளப்பட்டு திடீரென்று ஆரம்பித்தது. சரியான இடத்தைப் பிடிக்க சில விநாடிகள் தயாரித்துக் கொண்டு அந்த ஆறு பேரும் தக்க இடத்தில் இசையோடு சேர்ந்து கொண்டு ஆடினார்கள்.
அகிலா இசையின் கட்டளைக்கு ஆடினாள். கேட்டுக் கேட்டு அந்த இசை மனப்பாடம் ஆகிவிட்டது. ஆகவே ஒவ்வொரு இசைக் குறிப்பையும் அவளால் முன்னறிந்து சரியான லயத்துடன் அதில் இணைய முடிந்தது. ஆனால் அதிகம் யோசிப்பதற்கு இடம் கொடுக்காத வேகமான இசை. கிட்டத்தட்ட உடல் உறுப்புக்கள் தானியங்கியாக ஆட வேண்டும். அந்த அளவுக்குப் பலமுறை பயிற்சி செய்ய வேண்டும்.
இசை தொடங்கப்பட்டு நடனம் நடந்து கொண்டிருக்கும் போது அகிலாவின் எல்லாச் சிந்தனைகளும் இயக்கங்களும் அதனோடு ஒன்றியிருந்தன. வேறு நினைப்புக்கு இடம் இல்லை. ஆனால் பயிற்சியில் ஏற்படும் சிறு சிறு இடைவெளிகளில் உறுப்புக்கள் களைத்து மனம் தளர்ந்து இருக்கும்போது கணேசனின் நினைவு குப்பென்று பற்றிக் கொண்டது.
தன் குறிப்பைப் புரிந்து கொண்டு வந்திருப்பானா? தனக்காகக் காத்திருப்பானா? பயிற்சி அறையிலிருந்து வெளியேறும்போது எதிர்ப்படுவானா? என்ற கேள்விகள் தோன்றின. அப்படி காத்திருந்தால் என்ன பேசுவது? ஆள் அங்கு இல்லாமல் போனால் எப்படி? அது தனக்குப் பெரிய ஏமாற்றமாகுமா? ஏன் ஏமாற்றமாக வேண்டும்? இந்த கணேசன் என்ற மாணவருடன் தான் பேச வேண்டிய விஷயம் ஒன்றுமில்லையே! அவன்தான் ஏதோ பேச வேண்டும் என்றான். வந்தால் பேசலாம். வராவிட்டால் தான் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்?
ஆனால் அடுக்கடுக்கான அந்த சிந்தனைப் படலங்களில் ஒன்று அவன் வர வேண்டும், அவனைச் சந்திக்க வேண்டும், அவனுடன் பேசவேண்டும் என்று விரும்பிக்கொண்டே இருந்தது. அவன் வராவிட்டால் தனக்குப் பெரிய ஏமாற்றம்தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆக இந்த சிந்தனைதான் முன்னணியில் நின்றது. பத்து மணிக்குப் பின் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.
"அகிலா - ரோஸ்மான் ஜோடி மற்றும் லத்தீப் - சபாரியா ஜோடி என்னைக் கவனியுங்கள். நானும் கேத்தரினும் முன்னால் வழிகாட்டுவோம். நீங்கள் சரியாக நான்கடி பின்னால் வலது பக்கமும் இடது பக்கமும் இருக்க வேண்டும். இரண்டு ஜோடிகளும் சமமான தூரத்தில் இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை அமைப்பு. மேடை முழுவதும் நாம் சுழன்று சுழன்று வந்தாலும் நடனத்தின் ஒரு பாகம் முடிந்து அடுத்த பாகம் ஆரம்பிக்கும் போது இந்த அமைப்புக்குத் திரும்பி விட வேண்டும்"
இன்னும் இரண்டு முறை ஆடி அமைப்பு சரியாக வருகிறதா என்று சோதித்தார்கள். அவளுடைய ஜோடியான ரோஸ்மான் அருமையான நடனக்காரன். பெண்களை விட அவனுடைய உடம்பு இன்னும் அருமையாக வளைந்தது. அவனுடைய முகத்தில் எப்போதும் ஒரு இளம் புன்னகை இருக்கும். ஆனால் அதிகம் பேசமாட்டான். அவனுடைய கவனம் முழுவதும் நடனத்தில்தான் இருக்கும். ரோஸ்மானோடு ஈடு கொடுத்து ஆடுவது அகிலாவுக்கு ஒரு சவாலாக இருந்தது.
அக்குளிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. ஆடும் வசதிக்காகப் போட்டிருந்த முழங்கால் வரையிலான லியோடார்ட்ஸ் வியர்வையை உறிஞ்சினாலும் இடையிலும் தொடையிலும் அந்தக் கசகசப்பு இருக்கத்தான் செய்தது. முகம், தோள் கைகள் எங்கணும் வியர்வை வழிந்தது. எப்போது போய் துண்டை எடுத்துத் துவட்டலாம் எனக் காத்திருந்தாள்.
பத்து மணி ஆகியும் பேராசிரியர் கௌஸ¤க்கு திருப்தி ஏற்படவில்லை. "சரி, •போர்மேஷன் ஒரு மாதிரியாக வந்துவிட்டது. ஆனால் அசைவுகளுக்கு இன்னும் மெருகூட்ட வேண்டும். ரோஸ்மான், நீ அருமையாக ஆடுகிறாய். ஆனால் பெண்கள் மாதிரி ஆடாதே. நீ ஆண். ஆடுவதில் ஆண்மை இருக்க வேண்டும். ஆகவே அசைவுகளை அளவாக வைத்துக் கொள்!"
அவனைத் தனியாகக் கூப்பிட்டு குனிந்து வளையச் சொல்லி அசைவுகளை அளவு படுத்தினார். அவன் டக்கென்று பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அகிலாவின் இறுகக் கட்டிய தலை முடிக்குள் ஈரம் கசகசத்தது. ரப்பர் ரிப்பனை அவிழ்த்து தலையை உதறி ஈரத்தை வழித்து விட்டாள்.
நேரம் பத்தே காலாயிற்று. அவளுக்கு உள்ளத்தில் கவலை படர்ந்தது. வந்திருப்பானா? வந்து பார்த்து காணவில்லையே என்று திரும்பிப் போயிருப்பானா?
ஏன் இந்தப் பேராசிரியர் இன்றைக்கு இப்படி நேரத்தைக் கடத்துகிறார் என்று எரிச்சல் பட்டாள். அப்புறம் அவன் வந்திருந்தால் என்ன? வந்து திரும்பியிருந்தால்தான் என்ன? வராமலே இருந்தால்தான் என்ன? ஏன் இப்படி மனம் அலைக்கழிக்கிறது? என்று தன் மீதே கோபப் பட்டாள்.
பத்து இருபதுக்குத்தான் கௌஸ் கடிகாரத்தைப் பார்த்தார். "ஓக்கே! நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. ஆகவே பயிற்சியைத் தவற விடாதீர்கள். அடுத்த வாரம் காஸ்டியூம் •பிட்டிங் இருக்கிறது. வந்து போட்டுப் பாருங்கள். சரி இன்றைக்குப் போதும்!" புறப்பட்டார்.
அவசரமாக தலைமுடியைச் சேர்த்து இறுக்கிக் கொண்டை போட்டாள். தொடர்ந்து ஊறிக் கோண்டிருந்த வியர்வையை மீண்டும் ஒரு முறை துண்டால் துடைத்தாள். கறுப்பு லியோடார்ட் சட்டைக்கு மேல் தனது வெள்ளை தொள தொள டீ சட்டையை அணிந்து கொண்டாள். "குட் நைட் ப்ரொ•பெசர்" என்று சொல்லி விட்டு விரைந்து இறங்கினாள்.
***
பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து மெத்தென்று இருக்கும். யுஎஸ்எம்மின் நுண்கலை இயல் மாணவர்களின் நாடகங்கள், நடனங்கள், கவிதைகள் போன்ற படைப்புகள் அங்கேதான் அதிகமாக அரங்கேறும்.
பல்கலைக் கழகத்திற்கு ஏற்கனவே ஒரு பிரம்மாண்டமான மண்டபம் இருக்கிறது. 2,200 பேர் வரை அமரக்கூடிய தேவான் சையட் புத்ரா என்ற பட்டமளிப்பு விழா மண்டபம். பட்டமளிப்பு விழா தவிர பெரிய அளவிலான கலைநிகழ்ச்சிகளும் அங்குதான் நடக்கும். ஆனால் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு வசதியான மண்டபம் இல்லாத குறையை மாணவர் இல்லத்தின் பக்கத்தில் கட்டப்பட்ட இந்தப் புதிய கலாச்சார மண்டபம் போக்கியிருந்தது.
மாணவர் இல்லம், கலாச்சார மண்டபம் ஆகியவை அமைந்திருந்த இந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடைத்து மாணவர்கள் நடப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஓரங்களை வளைத்து வளைத்து வெட்டிய கற்கள் பதித்த அகன்ற நடைபாதை அமைத்திருந்தார்கள். அந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் பிரம்மாண்டமான மழை மரங்கள் அமைந்திருந்ததால் எந்நேரமும் நிழலாக இருக்கும்.
கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட கையோடு அந்த இடத்தை அழகு படுத்துவதற்காக அந்த நடைபாதையின் இருமருங்கிலும் புதிய சாலை விளக்குகளை அமைத்தார்கள். பளிங்கு நிறத்தில் பெரிய குடம் போன்ற விளக்குக் கூடுகளுக்குள் வெள்ளை நியான் விளக்குகள் கண்ணைக் குத்தாத மிருதுவான ஒளியை உமிழ்ந்தவாறு இருக்கும். இரவில் அந்தக் கம்பங்களின் அடியில் ஒளித் தீவுகள் தோன்றி நடைபாதையின் சிவப்புக் கற்களில் வண்ணக் கோலங்கள் போட்டிருக்கும்.
அதைவிடவும் இன்னொரு கலா பூர்வமான ஒளிப்பிரவாகமும் அங்கு உண்டு. கலாச்சார மண்டபத்தின் முன்னால் இருந்த பிரம்மாண்டமான மழை மரம் ஒன்றின் கீழ் சக்தி மிக்க விளக்குகள் பொருத்தி, அந்த ஒளியை மரத்தின் தண்டு மீதும் இலைகளின் மீதும் பாய்ச்சியிருந்தார்கள். அந்த ஒளி இரவில் மரத்தண்டின் பழுப்பு நிறத்தையும் இலைகளின் கரும் பச்சையையும் ஒரு இருள் கலந்த வண்ணத்தில் அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒளி வீச்சில் மரத்தினுள் விதம் விதமான நிழல் வீச்சுக்களும் தெரிந்தன.
இந்த அழகிய மரத்தின் அழகு பகலில் மட்டும் தெரிந்தால் போதாது, இரவிலும் தெரிய வேண்டும் என்று நினைத்து செலவைப் பாராமல் அதற்கு விளக்கு வசதிகள் செய்து கொடுத்த பல்கலைக் கழகத்தின் கலைமனத்தை எண்ணி வியந்தவாறு கணேசன் கலாச்சார மண்டபத்தின் படிக்கட்டுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
எட்டு மணிக்கு நடனப் பயிற்சி ஆரம்பித்தால் பத்து மணிக்கு முடியும் என உத்தேசித்தான். ஆனால் ஒரு வேளை சீக்கிரம் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான். அன்று வெற்றி விழாக் களிப்பில் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த நண்பர்களை மெதுவாகக் கழற்றிவிட்டு, "ரொம்ப வேல இருக்குப்பா. லைப்ரரிக்குப் போகணும் ஆள விடுங்க!" என்று புறப்பட்டு வந்தான். தனியாகக் காத்திருந்தான்.
மாணவர் விடுதிக்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முதல் மாடியில் நடனப் பயிற்சி நடக்கும் அறை எது எனக் கண்களை மேயவிட்டுப் பார்த்தான். பல அறைகளில் விளக்கு எரிவது மூடிய திரைகளூடே தெரிந்தது. அந்த அறைகளில் ஒன்றிலிருந்து ஜோகேட் இசை ஒலிப்பதும் நிற்பதுமாக லேசாகக் கேட்டது. அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒலி நாடாவை நிறுத்தி இசைத்து பின்னோக்கிச் சுற்றி மீண்டும் இசைத்துத் தீவிரமாகப் பயிற்சி செய்கிறார்கள் என்று தெரிந்தது.
நடனமணிகள் ஜன்னல் திரைக்கு ஓரமாக வரும் சில வேளைகளில் மட்டும் அவர்கள் கருநிழல் நெளிந்து நெளிந்து தெரிந்தது. இதில் எந்த நிழல் அகிலாவின் நிழல்? சொல்ல முடியவில்லை. ஆண்களின் நிழலுக்கும் பெண்களின் நிழலுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துச் சோர்ந்து போனான்.
எந்த ஆண் அகிலாவோடு ஆடுகின்ற பாக்கியம் பெற்றிருக்கிறானோ என நினைத்த போது பொறாமையாகக்கூட இருந்தது. அவன் யார், மலாய்க்காரனா? சீனனா? இந்தியனா? தொட்டு ஆடுகிறார்களா, தொடாமல் ஆடுகிறார்களா?
ஜோகெட் நடனத்தில் நெருக்கமாக ஆடினாலும் தொட்டு ஆடுவதில்லை. ஆனால் பேராசிரியர் கௌஸின் நடன அமைப்பைப் பற்றிச் சொல்ல முடியாது. புதுமைகள் செய்கிறேன் என்று கட்டிப் பிடித்து ஆடவைத்தாலும் வைப்பார்.
அகிலாவை யாராவது தொட்டு ஆடுகிறார்களா என்பது பற்றி அவன் மனம் கவலைப் படுவது அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. தானும் கலாச்சாரக் குழுவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அப்படியானால் இரவில் அகிலாவோடு சேர்ந்து பயிற்சி செய்யலாம். தானும் தொட்டு ஆடலாம். அவள் அருகிலேயே இருக்கலாம்.
"பைத்தியம், பைத்தியம்" என்று மனசு கூவியது. இருக்கின்ற சங்கப் பொறுப்புக்களே முதுகை ஒடிக்கின்றன. இதற்கு மேல் கலாச்சாரக் குழுவிலும் சேர்ந்து முழங்காலையும் உடைத்துக் கொள்ளப் போகிறாயா என்று கேட்டது. உண்மைதான் என அயர்ந்தான். ஆனால் அகிலாவின் பக்கத்தில், அவள் மூச்சு விடும் தூரத்தில் தான் எந்நாளும் இருக்க வேண்டும் என்று ஆசை கொடுக்குப் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தது.
"மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அவள் போன போது முதலில் அவன் முகமும் மனதும் தொங்கிப் போயின. தான் நிராகரிக்கப் பட்டுவிட்டோம் என்னும் அவமான உணர்ச்சிதான் மேலோங்கி நின்றது. அதுவரை இருந்த வெற்றிக் களிப்புகள் தொலைந்திருந்தன.
அவர்கள் போகும் திசையைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது மனம் அவளுடைய வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென அவனுக்குப் புரிந்தது. "வேண்டாம், உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ" என்ற சொல்ல வந்தவளாக இருந்தால் ஏன் தொடங்கும் நேரம் முடியும் நேரம் இடம் எல்லாம் இப்படி விரிவாகச் சொல்ல வேண்டும்? "பத்து மணிக்கு வந்து விடு அங்கே பேசிக்கொள்ளலாம்" என்ற செய்தி அவளுடைய பேச்சில் இருந்தது அப்போதுதான் புரிந்தது.
அதன் பிறகு உள்ளம் நிலை கொள்ளவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு வந்து அலைய ஆரம்பித்துவிட்டான். பத்து மணிக்கு எட்டி எட்டிப் பார்த்தான். பயிற்சி முடிகிற அறிகுறிகள் தெரியவில்லை. படிக்கட்டில் சோர்ந்து உட்கார்ந்து விட்டான்.
அப்படிக் காத்திருப்பது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. நண்பர்கள் பார்த்துக் கேட்டால் என்ன சொல்வது? ஏன் இப்படிக் காத்திருக்க வேண்டும்? எப்படி இந்த அளவுக்குத் தன் மனதைக் கவ்வினாள்?
அவனுக்கு விடைகள் தெரியவில்லை. ஆனால் அவன் கை பிடிக்க அவள் கண்ணீர் விட்ட காட்சி மீண்டும் மீண்டும் வந்து நின்றது. அன்று விசாரணையில் தான் விடுதலை பெற்றதைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்த காட்சி நினைவுக்கு வந்தது. இப்படிச் சின்ன சின்ன அர்த்தமுள்ள பார்வைகளும் சிரிப்புகளும் கண்ணீரும்தான் தன் மனதில் காதல் கனலை மூட்டி விட்டன என்பது புரிந்தது.
முதல் மாடியில் இசை நின்றது. ஆட்கள் கலையும் அடையாளம் தெரிந்தது. எழுந்து படிக் கட்டுக்களுக்குள் நிழலில் உள்வாங்கி மறைவாகக் காத்திருந்தான். ஏன் மறைந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் கண்ணில் படாமல் அவளைப் பார்ப்பதுதான் சரி என்று பட்டது.
பேங்க் சிம்பானான் நேஷனல் பக்கத்தில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென சிலர் இறங்கினார்கள். கடைசியாக அகிலா இறங்கினாள். கையிலிருந்த துண்டால் கழுத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தவாறு நிமிர்ந்து பார்த்தாள். முகம் களைத்து இறுக்கமாக இருந்தது. கண்கள் கொஞ்சம் அலைந்து தேடின. என்னைத்தானா?
நிழலிலிருந்து வெளியே வந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவனைப் பார்த்தாள். முக இறுக்கம் கலைந்து மெலிதாகப் புன்னகைத்தாள். அவளை நோக்கி முன்னேறினான்.
"உங்களுக்காகத்தான் காத்திருக்கேன் அகிலா?" என்றான்.
"எனக்காகவா? ஏன்?" ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள்.
"சாயந்தரம் பேசணும்னு வந்தேன். நேரமில்லன்னு சொல்லிட்டிங்க! அதினாலதான் இப்ப வந்தேன்!"
"இந்த ராத்திரியிலியா?"
"ஓய்வாப் பேசிறதுக்கு ராத்திரிதான நல்ல நேரம்?"
தயங்கி நின்றாள். ஆசை மனதில் இருந்தாலும் இரவு சந்திப்பு ஒரு பெரிய குற்றம் போலத் தோன்றியது. உடனிருந்த அனைவரும்போய்விட்டார்கள்.
"என்ன பேசணும்?"
"இப்படி கொஞ்ச நேரம் உக்காந்து பேசுவமா அகிலா?" படிக்கட்டுகளைக் காட்டினான்.
உட்கார்ந்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். வியர்வை மணத்தோடு அவனோடு நெருங்கியிருப்பது கூச்சமாக இருந்தது. அடிக்கடி துடைத்துக் கொண்டாள். தலையைக் கைகளால் கோதிக் கொண்டாள். தலை முடி ரொம்ப கலைந்து அசிங்கமாக இருக்குமோ? முகமெல்லாம் வியர்வை வழிந்து கருப்புப் பொட்டுகள் தெரியுமோ? என்ற கவலைகள் அவளுக்குள் வந்தன.
ஆனால் அந்த கலைந்த தலைமுடியும் வியர்வையும் கருப்புப் பொட்டுக்களும்தான் அவனைக் கிறங்க அடித்தன. மிருதுவான சாலை விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அலங்காரமில்லாத ஆடம்பரமில்லாத சுய உருவத்தில் எத்தனை அழகாக இருக்கிறாள்! ஒரு புன்னகையையும் மருண்ட கண்களையும் மட்டுமே நகைகளாக அணிந்திருக்கிறாள். கழுத்தில் மட்டும் ஒரு தங்கச் சங்கிலி வியர்வையில் நனைந்து ஒட்டிக் கிடக்கிறது. அதன் பதக்கம் ஒன்று டீ ஷர்ட்டினுள் நிழலாடியது.
"என்னமோ சொல்லணும்னு சொன்னிங்க! பேசாம இருக்கிங்களே!" என்றாள்.
"எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல!"
"சரி! அப்ப யோசிச்சு வைங்க! பின்னால பேசிக்குவோம்!" எழுந்தாள். எழுவதாக நடித்தாள்.
பட்டென்று கையைப் பிடித்து உட்கார வைத்தான். இணங்கி உட்கார்ந்தாள். அந்தப் பிடி பிடித்திருந்தது.
"இன்னைக்குக் காலையில இருந்து நடந்ததை நினைக்கும் போது என் தலையே சுத்துது அகிலா! என்னோட மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்ல. ஆனா அந்த மகிழ்ச்சிய உங்ககிட்ட பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பமே கிடைக்காமப் போச்சு! அதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன்!" தயங்கித் தயங்கிப் பேசினான்.
"உங்க மகிழ்ச்சிய என்னோட ஏன் கொண்டாடணும்? அதுக்குத்தான் இந்த கேம்பஸ்ல உங்களுக்கு அளவில்லாத நண்பர்கள், நண்பிகள் இருக்காங்களே!" என்றாள். ஏளனம் இருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது.
"இருக்காங்க. ஆனா இப்படியெல்லாம் நடந்ததுக்கும் நீங்கதான் காரணம். அதில இருந்து நான் விடுதலை பெற்றதுக்கும் நீங்க ஒரு காரணம். அதுக்கெல்லாம் மேல எனக்காக இந்த பல்கலைக் கழக இடத்தையே தியாகம் செய்ய முன் வந்திங்களே, எனக்காக அழுதிங்களே, இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேணாமா? ஆகவே இந்த நல்ல முடிவ உங்களோடக் கொண்டாட்றதுதான் நல்லதுன்னு தோணிச்சி. ஆனா நான் நெனச்ச மாதிரி நடக்கல!"
அவன் தன்னைப் பற்றி இவ்வளவு சிந்தித்து வைத்திருப்பது அகிலாவுக்கு இனிப்பாக இருந்தது. ஆனால் மறந்து விட்டு உதறி விட்டுத்தானே போனான்? கோபமாகவும் இருந்தது.
"அதினால என்னங்க கணேசன்? கடைசியா உங்களுக்கு வேண்டிய உற்ற தோழியோடதான போய் கொண்டாடினிங்க! எனக்கு வருத்தம் ஒண்ணுமில்ல, சந்தோஷம்தான்!" என்றாள்.
"ஜெசிக்காவத்தான சொல்றிங்க! நான் ஜெசிக்காவோட மட்டும் போகல! இன்னும் பல நண்பர்களோட கூட்டமாத்தான் போனோம். உண்மையில நானாப் போகல! என்ன இழுத்துக்கிட்டுப் போனாங்க. நீங்கதான் பாத்திங்களே!"
பேசாமல் இருந்தாள். மௌனத்துக்குப் பின் அவன் பேசினான்: "ஜெசிக்கா என் •பிரண்டுதான். ஆனா விசேஷமான •பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண •பிரண்ட்!" என்றான். ஜெசிக்காவை மனதில் வைத்துக் கொண்டு அகிலா தன்னிடமிருந்து விலகிப் போய்விடக் கூடாது என்ற பயம் வந்தது.
"சாதாரண •பிரண்டா விசேஷ •பிரண்டான்னு எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு நான் ஏதோ பெரிய தீங்கு செய்திட்டதாக ஜெசிக்கா என்னோட போட்ட சண்டை, என்னை தன் அறைய விட்டு விரட்டினது எல்லாத்தையும் பார்த்தா அவ சாதாரணக் கூட்டாளியா தெரியல. உங்களுக்கு மட்டும் விசாரணையில விடுதல கெடைக்காம தண்டனை கெடைச்சிருந்தா ஜெசிக்கா என்னக் கொண்ணே போட்டிருப்பா!"
"இல்ல அகிலா! ஜெசிக்கா எல்லாத்திலியும் உணர்ச்சி வசப் பட்றவ! அவ நெனச்ச காரியம் நடக்கிலேன்னா அப்படித்தான் எல்லாரையும் கலக்கி எடுத்திருவா. அதத் தவிர எங்களுக்குள்ள வேற எதுவும் இல்ல!"
அவனை ஏறிட்டுப் பார்த்தாள். "அத ஏன் ஏங்கிட்ட சொல்றிங்க கணேசன்? உங்களுக்கிடையில எப்படிப்பட்ட நட்பு இருந்தாலும் எனக்கென்ன?" கேட்டுக் குனிந்து கொண்டாள். 'இல்லையென்று சொல், மறு உறுதிப் படுத்து' என்று அவள் மனது அவனைக் கேட்டது.
"இத உங்ககிட்ட சொல்றது முக்கியம்னு நெனச்சேன். ஜெசிக்கா உங்ககிட்ட நடந்துகிட்ட விதத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அவ அப்படி நடந்தது தெரிஞ்ச உடனே நான் ரொம்ப கலங்கிப் போயிட்டேன். உங்க மனம் புண்படக் கூடாதுன்னு என் மனம் அடிச்சிக்கிச்சி!"
விளக்குக் கம்பங்களில் ஏதோ பூச்சிகள் வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தன. அந்த உரையாடல் அவளுக்குச் சுகமாக இருந்தது. ஆனால் அந்த இரவு நேரத்தில் அப்படி ஒரு ஆணிடம் உட்கார்ந்து பேசுவது குற்றம் என்றும் பட்டது. ஏன் அது குற்றம் என்றும் தெரியவில்லை. திடீரென அம்மாவை நினைத்துக் கொண்டாள். "ஆம்பிளப் பிள்ளங்களோட தனியா என்ன பேச்சு உனக்கு?" என்று சிறு வயது முதல் கண்டித்துக் கண்டித்து அவள் சொல்லிக் கொடுத்த ஒழுக்கத்திலிருந்து தவறுகிறோமோ என்ற எண்ணம் வந்தது.
"சரி கணேசன். நான் புரிஞ்சிக்கிட்டேன். இத இத்தனை தூரம் வந்து இந்த ராத்திரியில காத்திருந்து நீங்க சொன்னதுக்கு நன்றி. நான் வரட்டுமா?" என்று எழுந்தாள்.
"ஏன் இத்தனை அவசரப் பட்றிங்க?" என்று கெஞ்சுவது போல் கேட்டான்.
"இதோ பாருங்க, வேர்த்துக் கொட்டுது. நான் போய் குளிக்கணும்" என்றாள்.
"இதோ பைக்கில ஏறுங்க! ஒரு நிமிஷத்தில கொண்டு விட்டிர்ரேன்" என்றான்.
"ஐயோ, இந்த வேர்வையோடயா? உங்க பைக்கே அழுக்காப் போகும்!" என்று சிரித்தாள்.
"அழுக்கான பரவாயில்ல! அது அழுக்குன்னு நான் நெனைக்க மாட்டேன். உங்களுக்கு இந்தச் சின்ன உதவி கூட செய்லேன்னா எப்படி?"
தயங்கி நின்றாள். அவன் தோள் தழுவி பைக்கில் பின்னால் உட்காரும் எண்ணம் கிளுகிளுப்பாக இருந்தது. ஆனால் 'வேண்டாம் இது அதிகம்' என ஒன்று வந்து மறுத்தது. ஆண்களிடம் ஜாக்கிரதை என்று எச்சரித்தது. யார் உள்ளிருந்து எச்சரிக்கிறார்கள். அம்மாவா?
"வேணாம் வேணாம். இதோ இங்க இருக்கிற தேசாவுக்கு எதுக்கு பைக்? நான் வரேன் கணேசன்." எழுந்து நடந்தாள்.
"நில்லுங்க அகிலா!" என்றான். நின்றாள்.
"என்னைக்காவது ஒரு நாள் நாம் ரெண்டு பேரும் போய் இந்த வெற்றியைக் கொண்டாடத்தான் வேணும். கொறைஞ்சது என்னோட வந்து ஒரு நாள் சாப்பிடுங்க!" என்றான்.
தயங்கி நின்று யோசித்தாள். "சரி! என்னோட தோழிகளக் கேட்டுச் சொல்றேன். அவங்களுக்கு எப்ப ஓய்வா இருக்கோ அப்ப போகலாம்!" என்றாள்.
"தோழிகளா? அவங்க எதுக்கு?" என்று கேட்டான்.
"நாம் ரெண்டு பேர் மட்டும் தனியாப் போறது நல்லா இருக்காது!" என்றாள்.
"ஏன்? உங்களுக்கு விருப்பமில்லையா?"
தயங்கினாள். விருப்பமில்லையா? விருப்பமாகத்தான் இருக்கிறது. 'ஆம்' என்றால் வற்புறுத்துவான். 'இல்லை' என்றால் முறித்தது போலாகிவிடும். "அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?" மாலையில் மாலதி கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது.
"இன்னொரு நாளைக்கு சொல்றேன் கணேசன்! வரட்டுமா? பை பை!" தொங்கிப் போயிருந்த அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு அப்புறம் திரும்பிப் பார்க்காமல் விரைவாக நடந்தாள்.
அவள் போகும் திக்கைப் பார்த்திருந்தான். அவள் ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்று ஒரு ஆசையுடன் காத்திருந்தான். அவள் திரும்பவில்லை. சாலையைக் கடந்து தேவான் சையட் புத்ரா ஓரமாகப் போன பாதையில் விறுவிறு வென்று நடந்தாள். ஒளிக்கம்பங்களின் கீழ் அவள் உருவம் தெரிவதும் இருளில் மறைவதுமாக இருந்தது.
கணேசன் அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். மனம் சோர்ந்திருந்தது. எத்தனை அழுத்தமாக நிராகரித்து விட்டாள். இது முதன் முறையல்ல. மாலையில் அவளுடைய தோழிகள் முன்னிலையில் கேட்ட போதும் நிராகரித்தாள். இரவில் இந்த அமைதியான சூழ்நிலையில் தனிமையில் கேட்ட போதும் நிராகரித்து விட்டாள். 'ஜெசிக்காவைப் பற்றி ஏன் என்னிடம் பேசுகிறாய்?' என்று கேட்டதன் மூலம் தனக்கு யார் காதலி யார் காதலி இல்லை என்பதில் அவளுக்கு அக்கறை இல்லை எனத் தெரிந்தது. 'அவசரப் படாதே கொஞ்ச நேரம் பேசலாம்' என்றால் மறுத்து விட்டாள். 'பைக்கில் ஏறு கொண்டு விடுகிறேன்' என்றால் மறுத்து விட்டாள். 'இன்னொரு நாள் சாப்பிடப் போகலாமா?' என்றால் மறுத்து விட்டாள். கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை. முற்றாக நிராகரித்து விட்டாள்.
தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. தான் அவளுக்குச் சிறிதும் பொருட்டல்ல என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய அழுகையையும் சிரிப்பையும் எவ்வளவு தப்பாக அர்த்தப் படுத்திக் கொண்டேன்! அவள் அழுதது இயல்பாக தங்கள் இருவருக்கும் நேர்ந்து விட்ட துன்பம் பற்றி! தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டி வருகிறதே என்ற பயம் பற்றி! அவள் சிரித்தது இந்தத் துன்பம் முடிந்ததே என்பதனால்.
இதிலே எனக்கென்று ஒன்றும் இல்லை. அழுகை எனக்காக அல்ல. சிரிப்பு எனக்காக அல்ல. எனக்கு என்று நானாக அர்த்தப் படுத்திக் கொண்டேன். நான் முட்டாள். வாழ்க்கையை, மனிதர்களை இன்னும் தெரிந்து கொள்ளாத மடையன்.
இதையெல்லாம் காதல் என்று எண்ணிக்கொண்டு ஒன்பது மணிக்கு இங்கு வந்து ஒரு மணிநேரம் இருட்டில் காத்திருந்து வீணாக்கிய இளிச்சவாயன். அவள் தன்னைச் சிறிதும் எண்ணியிருக்காத நிலையில் என்னை அவள் மீது திணிக்க முயன்றேன். அவள் என்னைத் தீண்டத் தகாதவன் போல இரக்கமில்லாமல் பிடித்துத் தள்ளிவிட்டாள். கீழே விழுந்து புழுதியைப் பூசிக் கொண்டேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் எத்தனை அவமானம்!
சீ! இனி எந்த நாளிலும் அவள் பக்கத்தில் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது. இந்த அவமானத்தை இனியொரு முறை சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த முறை பேசப் போனால் கன்னத்தில் அறைந்தாலும் அறைவாள்.
இந்தத் தமிழ்ப் பெண்களே இப்படித்தான். சகஜமாகப் பழகத் தெரியாது. இங்கிதமாகப் பேசத் தெரியாது.
இன்றைக்குக் காலையில் கிடைத்த வெற்றிகள் எல்லாம் அர்த்தமில்லாதவையாகத் தோன்றின. அவளுடைய நிராகரிப்பு என்னும் வெள்ளத்தில் அந்த வெற்றிகளெல்லாம் அடித்துக் கொண்டு போனது போல இருந்தது. மனசு ஏமாற்றத்தில் கனத்துக் கிடந்தது.
சோர்வுடன் எழுந்து தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.
***
புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு வியர்வையெல்லாம் அதில் வழிந்து போய் தோலில் நறுமணம் ஏறிய போது அகிலாவுக்கு ஆனந்தமாக இருந்தது.
அன்றாட வாழ்வில் குளிக்கும் நேரம் போன்ற ஆனந்தமான நேரம் வேறு ஏதும் இல்லை. கதவை அடைத்துக் கொண்டு விட்டால் பிறர் கண் படாமல் தனக்கே தனக்கு என்று சொந்த உலகத்தைப் படைத்துக் கொள்ளலாம். சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு மனதுக்குள் வேண்டிய காட்சிகளைப் படைத்துக் கொள்ளலாம். குளிக்கும் நேரத்தில் எல்லா சாதாரண மனிதர்களும் கலைஞர்கள்தான்.
அகிலா தன் கழுத்துச் சங்கிலியின் சிறிய பதக்கத்தை வருடியவாறு சுவரில் கொஞ்சம் சாய்ந்து கொண்டு தண்ணீரை வழிய விட்டுக் கொண்டிருந்தாள். அது தலையில் கொட்டி கூந்தலில் இறங்கி தோள் வழியாக உடம்பு எங்கணும் பாய்ந்தது. தண்ணீரும் ஒரு மருந்துதான் என அகிலா எண்ணினாள். இப்படிப் பிறந்த மேனியான தோலில் பட்டு வழிந்தவுடன் எப்படி சுகப் படுத்துகிறது! இன்றைய மத்தியான வெயிலின் புண்களும் திறந்த வெளியின் தூசுகளும் அகன்று தோல் புதுப் பிறவி எடுத்துக் கொண்டிருந்தது.
இந்த விடுதியில் நிம்மதியாகக் குளிப்பதற்கு இரவு நல்ல நேரம். காலையிலும் பகலிலும் யாராவது காத்திருந்து அவசரப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இரவில் அந்த அவசரம் இல்லை. நீண்ட நேரம் குளிக்கலாம். அப்போது நீர் அழுத்தமும் அதிகமாக இருக்கும். ஷவரை அருவியாகக் கருதிக் கொண்டு பாடலாம். நீரை வழிய விட்டவாறு கேசத்தைக் கோதிக் கொண்டு ஜலக்ரீடைக் கனவுகள் காணலாம்.
ஆனால் அகிலாவின் அந்த இனிய கனவுகளூடே நினைவுகளும் இடைப்பட்டு அவளை வருத்திக் கொண்டிருந்தன. ஏன் இப்படி நடந்து கொண்டேன்? ஏன் இப்படி விட்டுக் கொடுக்காமல் முரட்டுத் தனமாகப் பேசினேன்? ஏன் நயந்து வந்தவனை அப்படி முரட்டுத் தனமாகத் தள்ளினேன்? என்று பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
கணேசனை அவளுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. மனம் அவனுக்காக ஆசைப் பட்டது. அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் அன்புப் பிடிக்கும் ஏங்கிக் கூட நின்றது. ஆனால் அப்படியெல்லாம் ஆசைப் படுவது குற்றம் என்றும் அதே மனம் சொல்லியது. அந்த எச்சரிக்கைதான் இன்று வென்றது.
வென்ற பின் இப்போது வேகிறது. எத்தனை ஆசையாக என்னிடம் பேசவந்தான்! ஏன், வரச் சொல்லி சூசகமாகச் சொன்னதே நான்தானே! அப்படிச் சொன்னபிறகு நடனப் பயிற்சி நடந்த நேரத்திலெல்லாம் அவன் வந்திருப்பானா, வந்திருப்பானா என்று இந்த மனம் கிடந்து ஏங்கவில்லையா? அப்படியெல்லாம் ஏங்கி எதிர்பார்த்து அவன் நேரில் வந்து நின்ற போது ஏன் சுமுகமாகப் பேச முடியவில்லை? 'வந்ததற்கு நன்றி, எனக்காகக் காத்திருந்ததற்கு நன்றி, என்னோடு உட்கார்ந்து பேசுவதற்கு நன்றி' என்று மகிழ்ந்து சொல்ல வேண்டியதற்கு பதிலாக 'ஏன் இங்கு வந்தாய்? என்னோடு உனக்கென்ன பேச்சு? நீ யார் நான் யார்?' என்ற தொனியில் வெடுக்கென்று பேசி விரட்டத்தான் முடிந்தது.
பருவப் பெண்ணுக்கு இந்தத் தற்காப்பு உணர்வு தேவைதான் என அகிலாவுக்குப் புரிந்தது. அம்மா இதை மறை முகமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் எந்த நாளும் அவள் நேராகத் தன்னிடம் பேசியது கிடையாது. ஆனால் மறைமுகமாக நிறையப் பேசியிருக்கிறாள்.
எட்டு ஒன்பது வயதிலேயே பக்கத்து வீட்டு எதிர்த்த வீட்டுப் பையன்களோடு அவள் பட்டம் விடுவதற்கு ஓடிய போது அம்மா "ஆம்பிள பிள்ளங்களோட உனக்கு என்ன விளையாட்டு?" என்று கோபத்துடன் ஏசியிருக்கிறாள். அது ஏன் என்பது ஒரு காலும் புரிந்ததில்லை. பையன்களும் பெண்களும் எல்லாரும் கூட்டாளிகளாகத்தான் தெரிந்தார்கள். ஆரம்பத்தில் பட்டம் விடும் ஆசை அதிகமாகி அம்மாவின் எச்சரிக்கையை சட்டை பண்ணாமல் அவள் ஓடிய போது அம்மா இழுத்து அடித்திருக்கிறாள். ஆகவே ஆண் பையன்களுடன் போய்ச் சுற்றுவது என்பது அம்மாவைக் கோபப்பட வைக்கின்ற விஷயம், தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது எட்டு வயதில் புரிந்து போயிற்று.
அவள் பருவமடைந்த போது அந்தத் திடீர் உதிர வெளிப்பாட்டில் தன் உடலுக்குள் ஏதோ தீராத நோய் வந்து விட்டதைப் போல அகிலா பயந்து கிடக்கையில் ஏதோ ஒரு வகையில் தான் சாக்கடையில் விழுந்து விட்டது போலக் கருதி அம்மா தீட்டுக் கழிப்புச் சடங்குளெல்லாம் செய்து அவளை ஒரு ஈனப் பிறவியாக்கினாள். பெண்கள் மாதாமாதம் அசிங்கப்பட்டு அந்த அசிங்கத்தை ஒளித்தும் மறைத்தும் வைத்துக் கூச வேண்டிய சாபம் பெற்றவர்கள் என்பதை அம்மா வேலைகள் செய்தவாறு யாருக்கோ சொல்லுவது போல தனக்குச் சொல்லி வைத்திருந்தாள்.
"இனிமே இந்த ஆம்பளப் பையன்களோட இளிச்சி இளிச்சி பேசாத, ஆமா!" என்று மீண்டும் எச்சரித்தாள். இந்த ஆண்களிடம் தன்னை அபாயத்துக்கு உள்ளாக்குகிற ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது என அகிலா எண்ணினாள். அந்த மந்திரம் ஏதும் பெண்களிடம் இல்லை. ஆகவே ஆண்கள் அதிசயித்துப் பார்க்கத் தக்கவர்கள். பயப்படத் தக்கவர்கள். ஒரு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள் என்று அகிலா கற்றுக் கொண்டாள்.
ஆனால் தன் வயதை ஒத்த இந்தப் பையன்கள் ஆடுகிற விளையாட்டுகள், பேசுகிற பேச்சுக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் தன்னை விட இவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகக் குறைவு என்று தெரிந்தது. வகுப்பில் கூடப் பெண்களை விட குறைவான மார்க்கே அவர்கள் வாங்கினார்கள். வாத்தியார் சொல்லுகின்ற பாடம் பெண் பிள்ளைகளுக்குப் புரிவது போல இந்தப் பையன்களுக்குப் பட்டென்று புரிவதில்லை. விளையாட்டிலேயே குறியாக உள்ள மண்டுகளாகத்தான் இருந்தார்கள்.
வீட்டில் கூட அப்பாவை விட அம்மாதான் புத்திசாலியாக இருந்தாள். வீட்டு நிர்வாகம், பண நிர்வாகம் சேமிப்பு, முதலீடு எல்லாம் அம்மாதான் முடிவு செய்தாள். அப்பா அவளிடம் கேட்டுக் கேட்டு நடந்து கொள்வார். "உங்களுக்கு என்னதான் தெரவசு இருக்கு?" என்று அம்மா அவரைத் திட்டக் கூடச் செய்வாள். ஆகவே இவர்களிடம் ஏன் பெண்கள் பயந்து நடக்க வேண்டும் என அகிலாவுக்குப் புரியவில்லை.
ஆனால் மூன்றாவது மனிதர் வீட்டுக்கு வந்து விட்டால் அம்மா உடனடியாக ஒடுங்கிப் போய்விடுவாள். அப்பாதான் எல்லாம் முன்னின்று பேச வேண்டும். முடிவுகள் எல்லாம் அப்பாதான் செய்ய வேண்டும். அறைக்குள் அம்மா தீர்மானமாகச் செய்கிற முடிவுகளையெல்லாம் அப்பா தானாகச் செய்தது போல வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வேடங்களில் இருவருமே நன்றாக நடித்தார்கள். இந்த நடிப்பினால்தான் குடும்பத்தில் இணக்கம் தோன்றியது. நல்ல தம்பதிகள், நல்ல குடும்பம் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். கல்யாணம், பிறந்த நாள், குழந்தைப் பேறு, குழந்தை பேர்வைப்பு என்று எந்தக் குடும்ப வைபவமானாலும் அப்பாவையும் அம்மாவையும் முன்னால் கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
வேறு குடும்பங்களைப் பற்றிப் பேசும் போதும் பெண்ணின் அடக்கம் என்பது ஒரு முக்கியமான விஷயமாகத்தான் பேசப்பட்டது. பல பெண்களை "அடக்கமில்லாத பெண்" என அம்மா நிராகரிக்க அகிலா கேட்டிருக்கிறாள். கல்யாண ஏற்பாடுகள் வரும்போது "பொண்ணு அடக்கமானவளான்னு பாத்துக்குங்க!" என்ற பேச்சு முக்கியமாக வரும். "அந்தப் பொம்பிளயா? பெரிய வாயாடியாச்சே!" என்ற கருத்து வரும்.
பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் முன் சுற்றக் கூடாது. அதிகம் பேசக் கூடாது. இவையெல்லாம் அம்மாவிடமிருந்தும் குடும்ப உதாரணங்களிலிருந்தும் சமூகப் பேச்சுக்களிலிருந்தும் அகிலா கற்றுக் கொண்டாள். வீட்டில் கூட விசேஷ காலங்களில் விருந்தினர் வரும் போது ஆண்கள் முன்னால் வரவேற்பறையிலும் பெண்கள் சாப்பாட்டு அறையிலும் சமையலறையிலும் உட்கார்ந்து பேசுவதே வழக்கமாக இருந்தது.
இதனால் எல்லாம் ஆண்களிடம் இயற்கையாக ஒரு பயம் அகிலாவுக்கு ஏற்பட்டு விட்டது. அவள் படித்தது கலப்புப் பள்ளியாக இருந்தாலும் அங்கும் ஆணுலகமும் பெண்ணுலகமும் தனித்தனியாகவே இயங்கின. ஆண்கள் முரட்டுப் பேச்சு முரட்டு விளையாட்டுகள் என்றும் பெண்கள் மென்மை விளையாட்டுகள், குசுகுசுப் பேச்சுகள், வெகுளிச் சிரிப்புகள் என்றும் தனித்தனி உலகில் இருந்தார்கள்.
ஒவ்வொருகால் ஆணும் பெண்ணும் கலந்து காதல் அது இது என்று வந்து விட்டால் அது குற்றமாகக் கருதித் தண்டிக்கப் பட்டது. ஆகவே ஆண்களுடன் பழக்கம், காதல் என்பதெல்லாம் குற்றச் செயல்கள் என்ற கருத்தே அவளுக்குள் வளர்ந்து வந்தது. மனம் அந்த ஆசையைத் தூண்டத் தூண்ட இது குற்றம், இது குற்றம் என அடக்கி அடக்கியே பழகிப் போய்விட்டது. குறிப்பாக எந்த ஆண் பிள்ளையுடனும் தனியாக நின்று பேசுவது ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்ற கருத்துத் தெளிவாக மனதில் வந்து வேர் பிடித்திருந்தது.
அந்த உணர்வுதான் இன்று கணேசனை அப்படி மறுக்க வைத்தது என அவளுக்குத் தோன்றியது. இந்த எச்சரிக்கை உணர்வுகளின் ஏகப் பிரதிநிதியாக அம்மாதான் மனசுக்குள் இருந்தாள். 'அம்மாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்?' என்ற நினைவே பயமாக இருந்தது. அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமானால் அவளுக்குத் தெரியாமல் இந்த மாதிரித் திருட்டுத் தனங்களில் ஈடுபடக் கூடாது என்ற பெரும் எச்சரிக்கை உணர்வு அப்போது மிகுந்திருந்தது.
இருந்தும் இது ஒரு திருட்டா என்பது அவளுக்குப் புரியவில்லை. இதில் என்ன திருட்டு உள்ளது? இதில் என்ன ஒளிவு மறைவு உள்ளது?
முதலில் கணேசனை இப்படித் தனியாக இரவில் சந்தித்துப் பேசுவது என்பது முறையல்ல என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. அதைத் தான் விரும்பி எதிர்பார்த்தது என்பது மேலும் ஒரு குற்றமாக இருந்தது. அவனுடைய பல்கலைக் கழக விசாரணையைப் பற்றி அவன் பேசியது தவறாகத் தெரியவில்லை. ஆனால் "வா இந்த வெற்றியைக் கொண்டாடலாம்!" என அவன் கூப்பிட்டது தவறாகத் தெரிந்தது. அப்படி அவன் கூப்பிட்டதைத் தான் விரும்பியது இன்னொரு குற்றமாக இருந்தது. "தனியாகப் போய்ச் சாப்பிடலாம்" என்ற அழைப்பு ஏதோ ஒரு குற்றச் செயலுக்குத் தன்னை அவன் அழைப்பது போலத் தோன்றியது. ஆகவே அதைச் சரிப்படுத்த "என் தோழிகளோடு வருகிறேன்!" என்று சொல்ல வேண்டியதாயிற்று.
"நான் என் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போய் விடுதியில் விடுகிறேன்!" என்று அவன் சொன்னதும் ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு அழைப்பு விடுப்பது போலத்தான் இருந்தது. அதைக் கேட்டதும் அவன் தோள் தழுவி ஏறிப் போகலாம் என்ற கிளுகிளுப்பு தனக்கு உண்டானது மேலும் ஒரு பெரிய குற்றமாகத் தெரிந்தது. "வேண்டாம்! அம்மாவுக்குத் தெரிந்தால் ஏசுவாள்!" என்று ஒரு உள்ளுணர்வு சொல்லிற்று.
ஆயிற்று. எல்லாவற்றையும் மறுத்து எல்லாப் பாவங்களையும் முறியடித்து வந்தாயிற்று. அவன் கோரிக்கை விடுத்த எந்தக் குற்றச் செயலுக்கும் இணங்கவில்லை. தன் மனம் இழுத்து மயக்க முயன்ற எந்தத் தீச் செயலுக்கும் மயங்கவில்லை. ஆகவே இதன் முடிவில் வெற்றி எனக்குத்தான். நான் அப்பழுக்கு இல்லாதவளாக வந்திருக்கிறேன்.
ஷவரிலிருந்து தண்ணீரைத் தன் திறந்த மேனித் தோலின் மீது வழிய விட்டுக் கொண்டிருந்த அகிலாவுக்கு மனசு மட்டும் அந்த வெற்றிக் களிப்பில் எக்களிக்க மறுத்தது. இந்த வெற்றியில் ஏதோ போலித் தனம் இருப்பதாகத் தோன்றியது. இதில் ஏதோ இழப்பு இருப்பதாகத் தோன்றியது. வெறுமை உணர்வுதான் மனசில் வந்து தங்கியது.
தன் பெண்மை கெட்டுப் போகாமல் இருக்கத் தான் வேலிகள் போட்டுக் கொள்ள வேண்டியது சரிதான். ஆனால் தான் வேலிகளுக்கு மேல் செங்கல் வைத்து சிமிந்தி பூசி சுவரே கட்டிக் கொண்டது போல் இருந்தது. எந்த ஆணிடமிருந்தும் சுவாசக் காற்று கூடத் தன் மேனியில் படக்கூடாது என்று தடுப்புப் போட்டுக் கொண்டதாக எண்ணினாள்.
அப்படியெல்லாம் போட்டுக் கொண்டும் இந்த மனம் மட்டும் ஏன் அலைகிறது? இதை அலைப்பது எது? ஆணின் - குறிப்பாக அந்த கணேசனின் - அணுக்கம், பரிவு, தொடல் என்பது வேண்டும் என ஏங்குவது ஏன்? ஏங்கச் செய்வது எது? ஏங்குவது குற்றமா? ஏன் குற்றம்? குற்றம் எனத் தெரிந்தும் என் மனம் அடங்காமல் ஏன் ஏங்குகிறது?
குழப்பமாக இருந்தது. ஷவரை அடைத்துவிட்டு துண்டை எடுத்து தோளில் போர்த்தி உடம்பை மெதுவாகத் துவட்டினாள். "இன்னொரு நாளைக்குச் சொல்லுகிறேன்! பை பை!" என்று வெடுக்கென்று தான் சொல்லி விட்டுத் திரும்பிய போது அவன் முகம் தொங்கிப் போயிருந்த காட்சி நினைவுக்கு வந்தது. மிகவும் வருத்தி விட்டேன் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் படித்திருந்த எந்தப் புத்தகத்திலும் ஆணும் பெண்ணும் தனியாக ஜோடியாக வெளியே போகக் கூடாது என்றோ உணவு அருந்தக் கூடாது என்றோ சொல்லவில்லை. உண்மையில் புத்தகங்கள் ஆண்-பெண் சமத்துவத்தைத்தான் அதிகம் பேசின. காதல் கதைகள் கூட பாடப் புத்தகங்களில் உண்டு. ஏராளமான "ரோமேன்ஸ்" நாவல்கள் படித்திருக்கிறாள்.
தன் சமூகத்தின் மூளைச் சலவைக்குத் தான் அதிகம் ஆளாகிவிட்டதாக நினைத்தாள் அகிலா. மனதின் இயற்கையான போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக மூக்கணாங்கயிறு போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாள்.
இப்போது நான் பல்கலைக் கழகத்தில் இருக்கிறேன். பெரிய பெண். பட்டப் படிப்பில் உள்ளவள். உண்மையில் என் அம்மாவை விட அதிகம் அறிவுள்ளவள். இப்போது சுதந்திரத்தைப் பேணலாம். அம்மாவின் அறிவுரைகள் அம்மாவின் காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் சரி. எனக்கும் அது ஒத்து வருமா? என் வானம் அம்மாவை விடப் பெரிது. என் சிறகுகள் இன்னும் நீளமானவை. நான் அம்மா போல கூண்டுக்குள்ளிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்து வாழத் தேவையில்லை.
எவ்வளவு ஆசைகளோடு காத்திருந்திருப்பான். அத்தனையையும் உடைத்து விட்டேன். கொஞ்சம் இதமாகப் பேசியிருக்க வேண்டும். அவனோடு போய் ஒரு நாள் உணவு அருந்தி வரச் சம்மதித்திருக்கலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. இதிலிருந்து வரும் எந்தத் தீய விளைவிலிருந்தும் என்னைக் காத்துக் கொள்ள எனக்குத் தெரியும். என்னால் முடியும். ஆனால் என் முரட்டுத் தனமான தற்காப்புப் பயிற்சி அதை நிராகரித்து விடு என்று சொல்லியதைக் கேட்டு நிராகரித்து விட்டேன். ஆனால் அடுத்தமுறை கேட்டால்...!
அடுத்த முறை கேட்டால் சரியென்று சம்மதிக்க வேண்டும். வெள்ளன போய் வெள்ளன திரும்பி விடுவோம் என நிபந்தனை விதிக்கலாம். முதல் சந்திப்பிலேயே அதிகம் பேசக் கூடாது. காதல் கீதல் என்ற பேச்சு எழுந்தால் நேரமாகிறது போகலாம் எனப் புறப்பட்டு விட வேண்டும்.
மீண்டும் மனம் தற்காப்புப் பயிற்சியில் ஈடுபடுவதை அறிந்து சிரித்துக் கொண்டாள். "கொஞ்சம் விட்டுக் கொடு மனமே!' என்று சொல்லிக் கொண்டாள். கொஞ்சம் இணக்கமாக இருக்கக் கற்றுக் கொள். கொஞ்சம் சிரித்துப் பேசு. அன்பு அரும்புவதற்கு வெளி கொடு. அந்த அன்பு காதலாக ஆனால்தான் என்ன? அது அரும்புவதும் மலர்வதும் காலத்தையும் சந்தர்ப்பத்தையும் இன்னும் எத்தனையோ ஆயிரம் விஷயங்களையும் பொருத்திருக்கிறது.
அந்த ஆண் நல்ல குணம் உள்ளவனா? தன்னோடு ஒத்த சிந்தனைகள் உள்ளவனா? ஒத்த விருப்பங்கள் உள்ளவனா? ஒத்த உணர்வுகள் உள்ளவனா? ஏற்ற வயது? உயரம்? சமூக அந்தஸ்து? எல்லாவற்றையும் பொறுத்துத்தானே இணைவது அமையும்! ஆனால் முதலில் அணுக விட்டால்தானே இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?
தன்னைச் சுற்றியுள்ள சுவரை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அடுத்த முறை அவன் தன்னை நாடி வரும் போது... நாடி வருவானா என்பது தெரியவில்லை. இன்று மனதை முற்றாக முறித்து விட்டேனோ என்று கவலைப் பட்டாள்.
உடம்பை முற்றாகத் துடைத்துக் கொண்டு துவாலையைக் கொண்டையில் ஈரம் உறிஞ்ச முடிந்து கொண்டு அறைக்கு வந்தாள். நைட்டியை மாட்டிக் கொண்டு தலை முடியை மீண்டும் ஈரம் போகக் கசக்கிக் கசக்கித் துவட்டிக் கொண்டிருந்த போது கணேசன் நிச்சயம் மீண்டும் தன்னைத் தேடி வருவான் என்றுதான் பட்டது. ஆண்கள் சபலம் உள்ளவர்கள். மீண்டும் மீண்டும் ஆசைப் படுவார்கள். பெண்களின் நிராகரிப்பு அவர்கள் முரட்டுத் தோலில் அவ்வளவாக உறைப்பதில்லை. ஆகவே வருவான்.
*** *** ***
அவன் வரவில்லை. அந்த வாரம் இரவு நடனப் பயிற்சிக்குப் போய்த் திரும்பும் போது அவன் போன வாரம் போலக் காத்திருப்பானா என்று நப்பாசையுடன் பார்த்தாள். இல்லை. இரவில் மர நிழலில் உள்வாங்கி நிற்கிறானா எனப் போகிற போக்கில் மீண்டும் ஒரு முறை பார்த்தாள். இல்லை.
அடுத்த இரண்டு வாரங்களில் அவன் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் போவதை தூரத்தில் இருந்து பார்த்தாள். அவ்வளவுதான். அவன் பார்த்ததாகத் தெரியவில்லை. பார்த்திருந்தாலும் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு முறை ஜெசிக்கா அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து தோளைத் தழுவிப் போனதையும் பார்த்தாள்.
"ஜெசிக்கா என் •பிரண்டுதான். ஆனா விசேஷமான •பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண •பிரண்ட்!" என்று அவன் சொன்னது நினைவு வந்தது. அப்படியும் இருக்கலாம். ஐசெக் சங்கத்தின் வேலையாக எங்காவது போவார்கள். தோளைப் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து போக முடியாது. ஆகவே இதையெல்லாம் பெரிதாக எண்ண ஒன்றுமில்லை.
ஆனால் இறுக்கமாகத்தான் பிடித்திருந்தாள். அது விழாமல் இருக்கப் பிடித்த பிடியல்ல. ஒரு கேர்ல் •பிரன்டின் அன்புப் பிடி போலத்தான் இருந்தது. அப்படியும் இருக்கலாம். நான் வேண்டாம் என்று விரட்டி விட்ட பிறகு "சாதாரண •பிரண்ட்", "விசேஷமான •பிரண்ட்" ஆக மாறியிருக்கலாம். அதைக் கேட்கவோ கவனிக்கவோ வருத்தப் படவோ நான் யார் என்று கேட்டுக் கொண்டாள். ஆனால் கணேசனைத் தூரத்தில் பார்க்கும் போது கூட தன் இருதய இயக்கம் சில துடிப்புக்கள் கூடி விடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
நடனப் பயிற்சி மிக மும்முரமாக இருந்தது. எவ்வளவு நன்றாக ஆடினாலும் பேராசிரியர் கௌஸ் விரட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் நடக்கின்ற தவறுகளுக்கு அவரே பெரும்பாலும் காரணமாக இருந்தார். தான் சொன்ன அடிகளைத் தானே மறந்து விட்டு ஆடி மற்றவர்களையும் திரும்பத் திரும்ப ஆட வைத்துக் கொண்டிருந்தார். வயதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர் ஆடாமல் மற்றவர்களை ஆடவிட்டால் என்ன என்று அகிலா மனதுக்குள் அவர் மீது கோபப் பட்டாள். ஆனால் நடனம் நன்றாக விறுவிறுப்பாக உருவெடுத்துக் கொண்டு வந்தது.
கணேசனின் விசாரணைக்கு அடுத்த வாரத்தில் ராஜனும் அவன் நண்பர்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை விட்டு ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப் பட்டிருப்பதான செய்தி வளாகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. தங்கள் சமூக மாணவர்கள் சிலர் இப்படி தண்டிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்களுக்கிடையே வருத்தத்தை எழுப்பினாலும் ராஜனுக்காகவும் அவன் நண்பர்களுக்காகவும் தனிப்பட யாரும் வருந்தியதாகத் தெரியவில்லை. பரசுராமனுக்கும் பொய்ப் புகார் கொடுத்ததற்காக 100 ரிங்கிட் அபராதம் மட்டும் விதித்திருந்தார்கள். அவன் இறுதியில் உண்மையைச் சொல்லி இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்ததற்காக அவனுக்குக் கருணை காட்டப் பட்டிருந்தது. பல்கலைக் கழகத்தின் நடவடிக்கையைப் பாராட்டி "பெரித்தா கேம்பஸ்" இதழில் ஜெசிக்கா தலையங்கம் எழுதியிருந்தாள்.
பட்டமளிப்பு விழாவுக்காகப் பல்கலைக் கழகம் களை கட்டிக் கொண்டிருந்தது. சையட் புத்ரா பட்டமளிப்பு மண்டபத்தை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தார்கள். பட்டமளிப்பு விழாவுக்காக வரும் ஆயிரக் கணக்கான பெற்றோர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சுற்று வட்டாரத்தில் மாணவர்கள் கடைகள் அமைக்கத் தொடங்கியிருந்தார்கள்.
ஒரு நாள் இரவில் அகிலா நடனப் பயிற்சி முடிந்து போகிற வழியில் அந்த மண்டபத்துக்குள் எட்டிப் பார்த்தாள். மண்பானைகளில் நடப்பட்ட நூற்றுக் கணக்கான சாமந்திப் பூச்செடிகள் அரங்கத்தைச் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன. அரங்கத்தில் வேந்தர், துணை வேந்தர் மற்ற பேராசிரியர்கள் உட்கார நாற்காலிகள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். 2,200 பேர் உட்காரக் கூடிய அந்த மண்டபம் அப்போது ஆளில்லாமல் "ஓ"வென்றிருந்தது.
ஆனால் பட்டமளிப்பு நாளன்று இந்த இடம் "ஓஹோ"வென்றிருக்கும். பட்டதாரிகளின் வெல்வெட் கவுன்கள் ஆயிரக் கணக்கில் படபடக்கும். அவர்கள் தோளிலும் மார்பிலும் தங்கள் பட்டத்திற்கேற்ப வெவ்வேறு வண்ணங்களில் பட்டைகள் அணிந்திருப்பார்கள். அவர்களின் பலகைத் தொப்பிகள் குஞ்சம் அலைய தலையை மறைத்திருக்கும். பேராசிரியர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட அவர்கள் வரிசையாக கலை, அறிவியல், சமூகவியல், கட்டவியல், பொறியியல், மருத்துவம் என்று தங்கள் உழைப்புகளின் அறுவடையை வேந்தரின் கைகளிலிருந்தோ இணைவேந்தரின் கைகளிலிருந்தோ பெற்றுக் கொள்வார்கள்.
பல்கலைக் கழகத்தின் உச்ச கட்டமான இந்த மாபெரும் வைபவத்தில் முதலாண்டிலேயே தானும் ஓரளவு பங்கு பெற வாய்ப்புக் கிடைத்திருப்பது அகிலாவுக்குப் பெருமையாக இருந்தது. பட்டமளிப்பு விழாவுக்கு முதல் நாள் இரவில் வேந்தருக்கு அளிக்கப்படும் ஆடம்பர விருந்தில் நடனமாடுவது தான் பல்கலைக் கழகத்திற்கு அர்ப்பணிக்கும் சேவை என்று நினைத்தாள். மேலும் பட்டமளிப்பு விழா அன்று ரோஜா மலர்கள் விற்பதற்கு இந்திய மாணவர்கள் அமைத்திருந்த ஒரு குழுவில் அவளும் சேர்ந்திருந்தாள். ஆகவே இந்த ஆண்டுப் பட்டதாரிகளிடையேயும் அவர்கள் பெற்றோர்களிடையே கலந்து பழகலாம். அந்தப் பரபரப்பில் பங்கு கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக இன்னும் நான்கு ஆண்டுகளில் இதே அரங்கத்தில் தானும் பட்டம் வாங்கலாம். பட்டமளிப்பு கவுனின் வெல்வெட் துணியின் ஸ்பரிசத்தை அனுபவிக்கலாம். இரண்டாயிரம் பேர் பார்த்திருக்க, தன் பெற்றோர்கள் அவர்களிடையே பெருமையுடன் அமர்ந்திருக்க, இந்தப் பல்கலைக் கழகத்தின் உயர் பேராசிரியர்கள் முன்னிலையில் வேந்தர் முன் கம்பீரமாக நின்று கணினித்துறை இளங்கலைப் பட்டதாரி என்ற தகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
மனம் பெருமிதப் பட்டது. ஆனால் அதைக் காண கணேசன் அங்கிருக்க மாட்டான் என்ற நினைவு வந்தது. இன்னும் இரண்டாண்டுகளில் அவன் பட்டம் வாங்கி வெளியேறிவிடுவான். பின் அவன் யாரோ நான் யாரோ!
இப்போது மட்டுமென்ன! அவன் யாரோ நான் யாரோதான்!
கணேசன், உங்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லையா? ஒரு முறை தோற்றால் மறு முறை முயலலாம் என்பது தெரியாதா? ஏன் என்னைப் பார்க்க வரவில்லை கணேசன்?
***
மோட்டார் சைக்கிளைக் கீழ்த் தளத்தில் நிறுத்தி விட்டு "ஷங்ரிலா" ஹோட்டலின் பிரம்மாண்டமான வரவேற்பறைக்குள் நுழைந்த போது அதன் அகண்ட பரப்பும் உயரமும் ஆடம்பரமும் கணேசனை வியப்பில் ஆழ்த்தின. பினாங்கின் மையப் பகுதியான கொம்தாரின் பக்கத்தில் அந்தக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது அந்த ஆடம்பர ஹோட்டல். அதன் வரவேற்பு மண்டபம் விசாலமாக இருந்தது. இரு கைகளால் அணைக்க முடியாத தடித்த தூண்களில் மலாய் பாரம்பரியத்தில் இழைத்த பலகை வேலைப் பாடுகள் இருந்தன. எங்கும் தடித்த குஷன் வைத்த சோ•பாக்கள் போடப் பட்டிருந்தன. உயர்ந்த சீலிங்கிலிருந்து கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான மலர்க்கொத்து ஒன்று அதற்கென அமைக்கப் பட்ட மேசையில் மண்டபத்தின் நடுநாயகமாக வைக்கப் பட்டிருந்தது. கோட்டும் கழுத்தில் போ டையும் அணிந்த இளம் வெயிட்டர்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் அரசர்கள் மட்டுமே தங்கள் கோட்டைகளுக்குள் அனுபவித்த ஆடம்பரங்களை நவீன பொருளாதார சமூக வாழ்க்கை பணம் படைத்த சாதாரண மக்களுக்கும் கொண்டு வந்து விட்டதை எண்ணிக் கொண்டே வேந்தர் விருந்து நடக்கவிருக்கும் மூன்றாம் மாடியின் கிரேன்ட் பால் ரூமை நோக்கிய எஸ்கலேட்டரில் ஏறினான் கணேசன்.
*** *** ***
ஒவ்வோராண்டும் பட்டமளிப்பு விழாவுக்கு முதல் இரவில் வேந்தரையும் இணைவேந்தர்களையும் கௌரவப் பட்டம் பெறவிருக்கும் அறிஞர்களையும் விழாவில் பங்கு கொள்ள அழைக்கப் பட்டுள்ள பிற பல்கலைக்கழகத் துணை வேந்தர்களையும் உபசரிக்கும் இந்த விருந்து நடத்தப்படும். பல்கலைக் கழக நிர்வாக மன்ற உறுப்பினர்களும் செனட் சபை உறுப்பினர்களும் மூத்த பேராசிரியர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள்.
விருந்தை உபசரிப்பாளராக இருந்து நடத்தும் பொறுப்பு ஒவ்வோர் ஆண்டும் ஒரு கல்விப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும். இந்த ஆண்டு அந்தப் பொறுப்பு நிர்வாகக் கல்விப் பிரிவிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அந்தப் பிரிவின் விரிவுரையாளர்களும் அலுவலர்களும் விருந்தை நன்முறையில் நடத்த மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
சில நாட்களுக்கு முன் நிர்வாகப் பிரிவுக் கட்டிடத்தில் கணேசன் நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பிரிவின் டீன் பேராசிரியர் முகமட் சுலைமான் அவனைத் தற்செயலாகப் பார்த்தார். தனக்கே உரிய இனிமையான முகத்துடன் "கணேசன், எப்படியிருக்கிறாய்?" என்று கேட்டார்.
"நன்றாக இருக்கிறேன் பேராசிரியர் அவர்களே" என்று அடக்கமாகச் சொன்னான் கணேசன். இரண்டாம் ஆண்டில் நல்ல மார்க்குகள் வாங்கியதற்காக கணேசன் டீன்ஸ் லிஸ்டில் இடம் பெற்று அவருடன் விருந்து உண்டு பாராட்டும் பெற்றிருப்பதால் அவருக்கு அவனை நன்கு தெரியும்.
"இந்த ஆண்டு டீன்ஸ் லிஸ்டில் இடம் பெறுவாயா?" என்று கேட்டார்.
"முயற்சி செய்கிறேன்! என்னை விடச் சிறந்த அறிவுள்ள மாணவர்களுடன் போட்டி போட வேண்டுமே!" என்றான்.
"உனக்கு முயற்சி இருக்கிறது. உன்னால் முடியும். ஊக்கத்தைக் கைவிட்டு விடாதே! ரேகிங் கேஸ் பற்றிக் கேள்விப் பட்டேன். உனக்கு நேர்ந்த இந்த துரதிருஷ்டமான விஷயம் உன் மனதைப் பாதிக்க இடங் கொடுத்து விடாதே!" என்றார்.
"அதெல்லாம் முடிந்து விட்டது. ஊக்கத்தைக் கைவிட மாட்டேன்!" என்றான்.
போகத் திரும்பியவர் திடீரென்று திரும்பினார்: "கணேசன், இந்த வேந்தர் விருந்தை நடத்துவதற்கு விருந்து அன்றைக்கு ஓடியாடி உதவி செய்ய எனக்கு இரண்டு மூன்று மாணவர்கள் தேவைப் படுகிறார்கள். நீ வரமுடியுமா?" என்று கேட்டார்.
வேலைகள் தலைக்கு மேல் கிடந்தாலும் அவரே கேட்கும் போது முடியாது என்று சொல்ல முடியாது. "சரி பேராசிரியர் அவர்களே!" என்றான்.
"நன்றி. விருந்து எட்டு மணிக்கு. நீ ஐந்து மணிக்கெல்லாம் வந்து விடு. உன்னிடமுள்ள முழுக்கை பத்தேக் சட்டைகளில் நல்லதாகப் பார்த்துப் போட்டுக் கொண்டு வா! கண்டிப்பாக பூட்ஸ் அணிந்த வரவேண்டும்!" என்று சொல்லிவிட்டுப் போனார்.
அவரிடம் பேசிவிட்டுத் திரும்பி நடந்த போது இந்த விருந்தில்தான் அகிலா ஆடப் போகிறாள் என்ற நினைவு வந்தது. முன்பு போல் இருந்திருந்தால் அந்த நினைவில் அவன் உள்ளம் துள்ளிக் குதித்திருக்கும். இப்போது அது பழைய நினைவாகிப் போய்விட்டது. யாரைக் கட்டிப் பிடித்து ஆடப் போகிறாள் என்று வேடிக்கை பார்க்கும் ஆர்வம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அகிலாவின் நினைவு நெஞ்சுத் தொட்டிக்குள் ஒரு மீன் குஞ்சைப் போல சிலிர்த்து தண்ணீரை அலைக்கழித்து நுரையெழுப்பி ஒரு கிளுகிளுப்பை ஊட்டிவிட்டு ஏமாற்ற ஏக்கத்தை விட்டுச் செல்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
*** *** ***
எஸ்கலேட்டரின் உச்சத்தில் பாதம் அழுந்தும் கம்பளம் பதித்த தரையில் நடந்து அவன் கிரேன்ட் பால் ரூமை அடைந்த போது அதன் கதவுக்கு வெளியே நிர்வாகப் பிரிவின் இரண்டு மூன்று அலுவலர்கள் மட்டுமே இருந்தார்கள். உள்ளே பரிமாறுநர்கள் வட்ட வட்ட மேசைகளைத் தயார் படுத்துவதிலும் விரிப்புப் போடுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
கிரேன்ட் பால் ரூம் மண்டபம் பிரம்மாண்டமானதாக இருந்தது. ஏறக்குறைய நூறு வட்ட மேசைகள் போடப் பட்டிருந்தன. ஆயிரம் பேர் வசதியாக உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு கோடியில் வேந்தர் உட்கார்ந்து உணவருந்த சிறப்பு மேசைகள் போட்டு அரச வண்ணமான மஞ்சள் விரிப்புப் போட்டிருந்தார்கள். அவர்களுக்கான விசேஷ பீங்கான் பாத்திரங்கள் பளபளத்துக் கொண்டிருந்தன. வேந்தர் உரையாற்ற சிறு மேடையும் மைக்கும் ஒரு ஓரத்தில் வைத்திருந்தார்கள்.
இங்கும் சீலிங்கிலிருந்து பிரம்மாண்டமான சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. கண்ணாடிக் குண்டுகளால் கோர்க்கப்பட்ட நூற்றுக் கணக்கான சங்கிலிகள் சூழ்ந்திருக்க அது ஒரு அத்திப்பழ வடிவில் இருந்தது. அதனுள்ளே நாற்பது ஐம்பது மஞ்சள் பல்புகள் இருந்தன. இந்த ஒரு விளக்கை ஓர் இரவு எரிப்பதற்கு ஆகும் மின்சாரச் செலவைக் கொண்டு ஒரு குடும்பம் ஒரு மாதம் விளக்கெரிக்கலாம் என நினைத்துக் கொண்டான். அதைப்போல கிட்டத்தட்ட 15 சரவிளக்குகள் தொங்கின.
எதிர்ப் புறத்தில் நடன மேடை இருந்தது. இதில்தான் இசை நடன நிகழ்ச்சிகள் நடக்கும் என யூகித்துக் கொண்டான். இசைக் குழுவினருக்கான நாற்காலிகள் பின்புறம் போடப் பட்டிருந்தன. மைக்குகள் தயாராக இருந்தன. "யுஎஸ்எம் 1995-ஆம் ஆண்டு பட்டமளிப்பை முன்னிட்டு வேந்தர் விருந்து" என்ற மலாய் வாசகம் பொன் எழுத்துக்களில் மேடையின் உயரத்தில் அமைத்த பெரிய பலகையில் ஒட்டப் பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.
இந்த மேடையில்தான் அகிலா வந்து ஆடப் போகிறாள். தான் கதவோரத்திலிருந்து பார்க்கலாம். அவளால் தன்னைப் பார்க்க முடியுமா? ஆயிரம் விருந்தினர்கள் உட்கார்ந்திருக்கும் அரங்கத்தில் ஓரமாக நிற்கப் போகும் தன்னை அவள் பார்ப்பதென்பது இயலும் காரியம் அல்லவென்று தோன்றிற்று. ஆனால் அவள் தன்னைப் பார்ப்பதிலும் பார்க்காமல் இருப்பதிலும் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு அயர்ந்தான்.
வளாகத்தில் பல முறை அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவற்றை வலிய அவன் தவிர்த்து விட்டான். மோட்டார் சைக்கிளில் போகும் போதும் அவள் நடந்து வருகிறாள் என்று தெரிந்தால் பார்க்காதது போலப் போகத்தான் தோன்றியது. பார்த்தால் சிரிக்க வேண்டி வரும். சிரித்தால் மீண்டும் ஒரு முறை காதலிக்க வருகிறானோ எனத் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடும். அந்த வம்பைத் தவிர்ப்பதுதான் நல்லது என நினைத்தான். இன்றைக்கும் அப்படித்தான். பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தால் வேறு பக்கம் திரும்பிக் கொள்வதே உத்தமம் என நினைத்துக் கொண்டான்.
ஆனால் அவள் நடனமாடுவதைப் பார்க்கலாம். அது பொது நிகழ்ச்சி. எல்லார் கண்களும் மேயும் போது தன் கண்கள் அவள் மீது மேய்வதை அவள் தவறாக எண்ணிக் கொள்ள முடியாது. என்ன உடை போட்டிருப்பாள், என்ன மேக்கப் போட்டிருப்பாள் என்ற கற்பனையில் ஆழ்ந்து கொண்டிருந்த போது "கணேசன்! இங்கு என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்? வா வேலை இருக்கிறது!" என ஒரு அலுவலர் இழுத்துப் போனார்.
"முதலில் இதை வைத்துக் கொள்!" என்று ஒரு டிக்கட்டைக் கொடுத்தார்.
"இது என்ன?" என்று கேட்டான்.
"இதுதான் உனக்கு சோற்று டிக்கட். நீ என்ன வேந்தரோடு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பார்த்தாயா? விருந்து முடிந்தவுடன் நாம் கீழே அலுவலர் கேன்டீனில் சென்று சாப்பிட வேண்டும். அதற்குத்தான் டிக்கெட்!"
சரியென்று வைத்துக் கொண்டான்.
அதன் பின் விடாமல் வேலை இருந்தது. விருந்தினர் லிஸ்டைக் கொடுத்து ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனி அட்டைகள் எழுதச் சொன்னார்கள். விருந்தினர் பட்டியலை ஒட்டி வைப்பதற்கு ஒரு போர்ட் வேண்டு மென்றார்கள். தேடிப்பிடித்து ஒரு போர்டை கணேசனும் இன்னுமிரு மாணவர்களும் தூக்கி வந்தார்கள். அந்த போர்டில் விருந்தினர் பட்டியலை மேஜை எண் வாரியாக ஒட்டச் சொன்னார்கள். இப்படியாக எடு பிடி வேலை பார்ப்பதிலேயே காலம் போயிற்று.
ஏழு மணி அளவில் பேராசிரியர் முகமட் சுலைமான் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு திருப்தியானவுடன் துணைவேந்தரை முன்நின்று வரவேற்க ஹோட்டலின் வாசலுக்கு இறங்கிச் சென்றார். எட்டு மணி முதல் விருந்தினர்கள் வரத் தொடங்கினார்கள். பெரும்பாலானோர் வண்ண வண்ண பத்தேக் சட்டையில் வந்தனர். சிலர் மட்டுமே கோட்டும் டையும் அணிந்து வந்தார்கள். நிர்வாகத் துறை விரிவுரையாளர்கள் விருந்து மண்டப வாசலில் நின்று கைகுலுக்கி அவர்களை வரவேற்றார்கள். பேராசிரியர் முருகேசு வந்ததை கணேசன் கவனித்தான். ஆனால் ஒதுங்கி நின்ற அவனை அவர் பார்க்கவில்லை.
பல்கலைக் கழக வேந்தரான பெர்லிஸ் மன்னரின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து உட்காருமிடம் இளைப்பாறும் அறை ஆகியவற்றைப் பரிசோதித்துச் சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் வேந்தர், அவர் துணைவியார் இருவரும் இணை வேந்தர்கள், துணை வேந்தர், பினாங்கு முதலமைச்சர் ஆகியோரும் அவர்கள் மனைவியரும் புடை சூழ உள்ளே வர விருந்து தொடங்கியது. மேடையில் வாத்தியக் குழு மெல்லிசை வழங்கத் தொடங்கியிருந்தது. விருந்து மண்டபத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளின் வழியாக அந்த இசை பரவி சாப்பாட்டுத் தட்டுகளில் கரண்டிகளும் முட்கரண்டிகளும் மோதும் சத்தத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
அதன் பின் கணேசனுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வேலையில்லை. வயிறு பசித்தது. இருந்தாலும் விருந்து முடியும் வரையில் சாப்பிட முடியாதாகையால் மற்றவர்கள் சூப்பும் இறைச்சியும் சோறும் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் துணைவேந்தர் எழுந்து பேசினார். யுஎஸ்எம்மின் அந்த ஆண்டு சாதனைகளைப் பட்டியலிட்டார். அவரைத் தொடர்ந்து வேந்தர் சுருக்கமாகப் பேசி வெள்ளி விழா கண்டிருக்கும் பல்கலைக் கழகத்திற்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
எல்லாம் உற்சாகமாக நடந்தாலும் எதிலும் பங்கெடுக்காமல் ஓரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதில் அவனுக்கு போரடித்தது. இதில் மாட்டிக் கொள்ளாமல் விடுதியிலேயே இருந்திருந்தால் இன்றிரவு ஒரு கட்டுரையை எழுதி முடித்திருக்கலாம் என நினைத்தான்.
ஆனால் அகிலாவுக்கு இது உபயோகமான இரவு. அவள் திறமையைப் பலர் முன் காட்டுகின்ற வாய்ப்பு. அகிலா இப்போது அங்கே உள்ளே ஆடுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். உடை மாற்றும் அறையில் மேக்கப் எல்லாம் போட்டுத் தயாராக இருப்பாள். கடைசி நேரத்தில் நின்ற இடத்திலேயே கைகளை அசைத்து அபிநயங்களை அப்பியாசித்துக் கொண்டிருப்பாள்.
ஏன் சுற்றிச் சுற்றித் தான் அகிலாவையே நினைக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரியவில்லை. இது எட்டாத பழம், கிட்டாத கனி என்று எத்தனை முறை சொல்லிக் கொண்டாலும் மனம் கேட்கவில்லை. தூங்க இருப்பவனின் காதை ஙொய்ஙொய் என்று சுற்றுகின்ற விடாப்பிடியான கொசுவைப் போல அந்த நினைவு ரீங்காரித்துக் கொண்டே இருந்தது.
இவள் என்ன அப்படி உசத்தி? இவளை விட்டால் வேறு பெண்களே இல்லையா? அத்தை மகள் மல்லிகா ஒருத்தி என்றும் தயாராக இருக்கிறாள். நசநசவென்று சளைக்காமல் சின்ன சின்ன அர்த்தமில்லாத விஷயங்களைப் பேசி போரடித்தாலும் அன்பிலும் செல்லத்திலும் அவனைக் குளிப்பாட்டுகிறவள். அகிலாவைப் போல அழகில்லை. ஆனால் என்ன? தன்னையே தலைவனாக எண்ணிக் கொண்டிருக்கிறவள். தனக்கு அடிமையாக, மனைவியாக இருக்கத் தயாராக இருக்கிறவள்.
அழகு என்று பார்த்தாலும் ஜெசிக்காவின் அழகுக்கு இந்த அகிலா எந்த மூலை? ஜெசிக்கா வெள்ளையும் மஞ்சளும் கலந்த கலரில் இருக்கிறாள். எந்நாளும் வாடாத பிரகாசமான சிரிப்பு. எப்போதும் இறுக்கிப் பிடித்த ஜீன்ஸ், குட்டைப் பாவாடை என்று போட்டுக் கொண்டு கிறங்க அடிக்கிறாள். கிட்ட போய்விட்டால் அட்டை போல ஒட்டிக் கொள்ளுகிறாள். மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கொண்டாளானால் காற்றுப் போக இடம் விடுவதில்லை. இவர்களை விட்டு விட்டு ஏன் இந்த முசட்டுக் குணமுள்ள தொட்டால் சிணுங்கிப் பெண்ணைத் திருப்பித் திருப்பி நினைக்க வேண்டும் என்று தன்னையே கேட்டுக் கொண்டு நின்ற வேளையில்...
"அடுத்ததாக யுஎஸ்எம் ஜோகெட். பேராசிரியர் முகமட் கௌஸ் குழுவினர்" என்று அறிவிப்பாளர் சொல்ல இசைக் குழு உற்சாகமான ஜோகெட் இசையை ஆரம்பித்தது.
நடன மேடையின் இரு பக்க மறைவுகளிலிருந்து நடன மணிகள் தூக்கிப் பிடித்த ஸ்லேன்டாங் (துப்பட்டா) துணியுடன் ஒரு சுழல்காற்றுப் போலப் புகுந்தார்கள். மலாய் பாரம்பரிய பாஜூ குரோங் பாணியில் பெண்கள் பச்சை மேற்சட்டையும் பழுப்பு நிற சாரோங்கும் அணிந்திருந்தார்கள். உடைகளில் வெள்ளிச் சரிகை வேலைப்பாடுகள் மின்னின. ஆண்கள் தொளதொளவென்ற மலாய் சட்டை அணிந்து காற்சட்டை அணிந்து அதன் மேல் பாதியாய் மடித்த சாரோங் கட்டியிருந்தார்கள். தலையில் அழகிய சொங்கோக் அணிந்திருந்தார்கள்.
அகிலா மிக அழகாக இருந்தாள். முகத்தில் அளவான ஒப்பனை இருந்தது. கன்னங்களில் இளஞ்சிவப்பு ரூஜ் பூசி அரிதாரம் பூசியிருந்தாள். அரங்கத்தின் சக்தி மிக்க ஒளி விளக்குகளில் அவை மினுமினுத்தன. தலைமுடியைத் தூக்கிக் கட்டி செயற்கை மலர்கள் அணிந்திருந்தாள். அலங்காரத்தில் முற்றாக மலாய்ப் பெண்ணாக இருந்தாலும் முகவெட்டில் அவள் தமிழ்ப் பெண் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இசை மிக விருவிருப்பாக இருந்தது. மலாய் அடிப்படையில் இந்திய சீன வாசனையுடன் கூடிய கதம்பம். தபேலாவும் வயலினும் அரங்கத்தை அதிரச் செய்தன. தாடி வைத்த பேராசிரியர் கௌசைத் தவிர மற்ற ஐந்து பேரும் இளைஞர்கள். வேகமாகச் சோர்வில்லாமல் ஆடினார்கள். அவரும் வேகமாக ஆடி மற்றவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார். கைகள், இடுப்பு, கால்கள் அனைத்தும் நிற்காமல் வளைந்து கொண்டிருந்தன. மேடையின் பரப்பை முற்றாகப் பயன்படுத்தி ஆடினார்கள். சிரித்துக் கொண்டே ஆடினார்கள். ஆடுவதில் தங்களுக்குள்ள மகிழ்ச்சி அவர்கள் சிரிப்பில் தெரிந்தது. யாரும் யாரையும் தொட்டு ஆடவில்லை என்பது கணேசனுக்கு ஆறுதலாக இருந்தது.
கணேசனின் கண்கள் அகிலாவின் மீதே இருந்தன. அவளை அத்தனை நேரம் உற்றுப் பார்க்க அவனுக்கு இதற்கு முன் வாய்ப்புக் கிடைத்ததில்லை. சாதாரண சமூக வாழ்வில் ஒரு பெண்ணை ஒரு ஆண் இப்படி உற்றுப் பார்க்க முடியாது. பேசும் போதும் முகத்தையும் கண்ணையும் தவிர வேறு அங்கங்களைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் காமுகன் என்பார்கள்.
ஆனால் இது பொது அரங்கம். இங்கே மேடை போட்டு விளக்குகள் அமைத்து "எங்களைப் பாருங்கள்" என்று அழைப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே அவனால் கண்ணிமைக்காமல் பார்க்க முடிந்தது.
இவளை ஏன் தன் மனம் இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறது என அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. அவள் அசைவில் ஒரு நளினம் இருக்கிறது. முகத்தில் தமிழ்ப் பெண்களுக்கே உரிய நாணம் கலந்த மலர்ச்சி இருக்கிறது. வாய் திறக்காத ஆனால் உதடுகள் மட்டுமே இலேசாக விரிந்த அந்தப் புன்னகையில் ஆண்களை மயக்கும் வசியம் இருக்கிறது. அந்த அகன்ற கண்களில் ஆடும் கருவிழிகளில் ரகசியம் இருக்கிறது. அதை அருகில் போய்த் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த மனம் இப்படிப் பாடுபடுகிறது. அவன் பெரு மூச்சு விட்டான்.
நடனம் முடிந்தும் நீண்ட நேரம் அகிலா கணேசனின் மனதுக்குள் ஆடிக் கொண்டிருந்தாள்.
*** *** ****
விருந்து முடிந்து பெரும்பாலான விருந்தினர்கள் வெளியாகிவிட்ட பொழுது உதவியாளர்கள் கேன்டீனில் போய்ச் சாப்பிடலாம் என்று சொன்னார்கள். கணேசன் தன் நண்பன் ஒருவனுடன் கேன்டீனின் வாசலுக்குள் நுழைந்த போது ஏற்கனவே பலர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உணவு மேசைக்கு முன் நீண்ட கியூ நின்றது. கியூவில் சேர்ந்து கொள்ள அவன் அடியெடுத்து வைத்த போது "கணேஷ்" என்ற அழைப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அகிலா! அகிலாவா? அகிலாதானா?
பெரிய சிரிப்புடன் "அகிலா" என்றான். ஒப்பனை பாதி கலைந்த நிலையில் இருந்தாள். அரிதாரத்தின் எச்சங்கள் இருந்தன. கன்னத்தில் இன்னும் ரூஜ் ஒட்டிக் கொண்டிருந்தது. கீழே டிரேக் சூட் அணிந்து மேலே டீ ஷர்ட் போட்டிருந்தாள். தலை அலங்காரத்தைக் கலைத்து உதறிவிட்டு பின்னால் குதிரை வாலாய்க் கட்டியிருந்தாள். கட்டுப் படாத சில மயிரிழைகள் கன்னத்தின் ஓரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் இப்போது கருப்பு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டித் தமிழ்ப் பெண்ணாக இருந்தாள்.
"உங்கள அப்போது கூட்டத்தில பார்த்தேன். நீங்க இன்னைக்கு வரப் போறது எனக்குத் தெரியாது!" என்றாள். தன்னைப் பார்த்தாளா? ஆயிரம் பேர் இருக்கின்ற அரங்கில் கதவின் ஓரம் மறைந்து நின்ற என்னை, பரபரப்பான நடனத்தை ஆடிக் கொண்டே எப்படிப் பார்த்தாள்?
"உங்க ஜோகெட் ரொம்ப நல்லா இருந்திச்சி அகிலா!"
"நன்றி! சாப்பிடப் போறிங்களா?" என்று கேட்டாள்.
"ஆமாம். நீங்க?"
"சாப்பிடத்தான் வந்தேன். ஆனா இங்குள்ள சாப்பாடு ஒண்ணும் பிடிக்கில!"
"அப்புறம்?"
"நீங்க மோட்டார் சைக்கிள்ளதான வந்திங்க? என்னை எங்காவது வேற இடத்துக்குச் சாப்பிட அழைச்சிட்டுப் போங்களேன்!" என்றாள்.
அவன் இறக்கைகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தான்.
***
அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். ஒட்டுக் கடை வியாபாரம் ஜேஜேவென்று நடந்து கொண்டிருந்து. ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கருத்தில் படவில்லை. அகிலா ஒருத்தியே அவன் நினைவிலும் கண்களிலும் இருந்தாள். தான் கதாநாயகனாகவும் அவள் கதாநாயகியாகவும் நிற்கும் இந்தப் படத்தில் இந்தக் கூட்டமெல்லாம் அவ்வளவு முக்கியமில்லாத உப நடிகர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.
அவர்கள் முன்னால் கடல் விரிந்து கிடந்தது. இருட்டில் அதன் தண்ணீரின் நிறம் தெரியவில்லை. கரையிலுள்ள மங்கிய விளக்குக் கம்பங்களின் இலேசான பிரதிபலிப்பு மட்டும் அலை முகடுகளில் பட்டு மின்னியது. மென்மையான அலைகள் வந்து அங்கு கட்டப் பட்டிருந்த சுவர்த் தடுப்பை மோதும் போது தாளத்திற்கு இணங்காத சலசலவென்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்து. ஆழமில்லாத சேற்றுக் கரையைக் கொண்ட இந்தப் பகுதியிலிருந்து சேற்றின் மணம் வந்து கொண்டிருந்தது.
பினாங்கின் இந்தக் கரையிலிருந்து ஏறிட்டுப் பார்த்தால் தூரத்தில் அக்கரையில் பட்டர்வொர்த் கடற்கரையும் செபராங் பிறை கடற்கரையும் அரை நிலா வட்டத்தில் தெரிந்தன. கடற்கரையோரமாக உள்ள விளக்குக் கம்பங்கள் ஒளிக் கோடுகள் போட்டிருந்தன. அக்கரையின் சில உயர்ந்த கட்டடங்களில் விளக்குகள் தெரிந்தன. கப்பளா பத்தாஸ் ராணுவ விமான தளத்தை நோக்கி ஒரு ராணுவ விமானம் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது புள்ளி விளக்காகத் தெரிந்தது. அதன் ஓசை சற்று தாமதமாக அவர்கள் காதுகளுக்கு வந்தது.
கர்னி டிரைவ் அருகில் உள்ள படகு கிளப்பில் (Yacht Club) சில இயந்திரப் படகுகள் துறையில் கட்டி வைக்கப் பட்டு லேசான அலைகளில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு படகில் மட்டும் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த விளக்குகளின் பிரதிபலிப்புகள் கடலுக்குள் ஒளித் தூண்களாக இறங்கியிருந்தன. கடலின் நெளிவில் அந்த ஒளித் தூண்களும்நெளிந்து கொண்டிருந்தன.
கரையோரச் சுவரின் மேல் அவனுக்கு அணுக்கமாக உட்கார்ந்திருந்தாள் அகிலா. ஒட்டுக் கடையில் மீ கோரேங் மற்றும் ஐஸ் கச்சாங் சாப்பிட்டுவிட்டு பழக் கலவையான பினேங் ரோஜாக்கை பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு இங்கு வந்து காற்றாட உட்கார்ந்தார்கள். ரோஜாக் இனிப்பும் புளிப்பும் உறைப்பும் கலந்திருந்தது. இன்றைக்குத் தன் அனுபவங்கள் இப்படித்தான் கலவையாக இருக்கின்றன என்று எண்ணினான் கணேசன். ஆனால் இப்போதைய கணம் முழுவதும் இனிப்புதான்.
அகிலாவின் முடி கொஞ்சம் கலைந்தாற்போல் இருந்தது. உடம்பிலிருந்து ஒப்பனையைக் கலைக்கப் பூசிய களிம்பின் மணம் இன்னும் வந்து கொண்டிருந்தது. கணேசன் அதை ரசித்துக் கொண்டிருந்தான். இது பெண்ணின் வாசனை. இது காதலியின் வாசனை.
அவள் காதலியாகிவிட்டாளா? அது சரியாகத் தெரியவில்லை. சாப்பாட்டுக்கு அழைத்து வந்ததற்காக இதுவரை பலமுறை நன்றி சொல்லி விட்டாள். ஷங்ரிலாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி இங்கு வந்து சேரும் வரை தோளைத் தொட்டும் தொடாமலும் பிடித்து வந்தாள். சாப்பாட்டு நேரத்தில் தங்கள் பல்கலைக் கழகப் பாடம் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆரம்பப் பள்ளி இடை நிலைப் பள்ளிப் படிப்பனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். தங்கள் ஊர்களைப் பற்றிப் பேசினார்கள். நாளை நடை பெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கு என்னென்ன வேலைகள் உள்ளன என்பது பற்றிப் பேசினார்கள். அதற்கு மேல் அந்தப் பேச்சில் அந்தரங்கங்கள் ஏதும் பேசப்படவில்லை.
ஆனால் கடை மேசையில் கும்பலோடு உட்கார்ந்து சாப்பிட்டு முடிந்தவுடன் காசு கொடுத்து எழுந்து கடலலைகள் வருடும் இந்தச் சுவர் அருகில் கொஞ்சம் இருட்டான இடத்துக்கு வந்தவுடன் ஏற்பட்ட ஏகாந்தத்தில் ஒரு மோக உணர்ச்சி அவனுக்கு வந்தது. அதிலும் அவள் ஆடிக் களைத்திருந்து இப்போது சாப்பாட்டுக்குப் பின் பெற்றிருந்த மலர்ச்சியும் அவள் அணுக்கத்தினால் வந்து கொண்டிருந்த அந்த வாசனைகளும் அவனைக் கிறங்க அடித்துக் கொண்டிருந்தன.
இந்தத் தனிமையில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. அணுக்கமாகிவிட்டாளே என அந்தரங்கமாக ஏதாவது பேச ஆரம்பித்தால் அவள் கோபித்துக் கொள்ளக் கூடும். "உன்னை நண்பன் என்று நம்பி வந்தேன். இப்படிச் செய்து விட்டாயே!" என ஆரம்பித்துவிட்டால்? ஆனால் இத்தனை தனிமையில், அணுக்கத்தில் இருவரும் வந்து இங்கு அரையிருளில் கடலலைகள் பின்னணியில் உட்கார்ந்திருப்பது எதற்காக? பாடங்களையும் குடும்பக் கதைகளையும் பேசவா? இந்தச் சூழ்நிலையிலேயே சிருங்காரம் இருக்கிறதல்லவா? காற்றில் ஒரு காதல் ரசம் இருக்கிறதல்லவா?
ஆனால் அவளும் அப்படி நினைக்கிறாளா? இல்லாவிட்டால் உண்மையிலேயே ஹோட்டல் சாப்பாடு பிடிக்காமல் இங்கு வந்து சாப்பிட்டு திரும்ப விடுதிக்குப் போக தன்னைச் சோற்று டிக்கட்டாகவும் போக்குவரத்து வசதியாகவும் மட்டும் பாவித்துக் கொண்டாளா? ஐயோ, இந்தப் பெண்களையே புரிய மாட்டேனென்கிறது!
"அந்த பட்டர்வொர்த் கடற்கரை இங்கிருந்து ராத்திரியில பார்க்க ரொம்ப அழகா இருக்கில்ல கணேஷ்?" என்று மௌனத்தை அவளே உடைத்தாள்.
அவளுக்கு அவன் நேரடியாக பதில் சொல்லவில்லை. "ரொம்ப நன்றி அகிலா!" என்றான்.
திகைத்தவள் போல் பார்த்தாள். "எதுக்கு திடீர்னு நன்றி சொல்றிங்க! இங்க கொண்டு வந்து எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததுக்கு நானில்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்!" என்றாள். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்திருந்தாள். பாதி இருளில் எஞ்சியிருந்த அரிதாரத் துளிகள் மின்னின.
"சாப்பாடு பெரிசில்ல அகிலா! அந்த சாப்பாட்டை இவ்வளவு சுவையுள்ளதா ஆக்கினிங்களே! அதுக்காக!"
"அது மீ கோரேங் பெரட்டிக் கொடுத்த அந்த மாமாவின் கை வண்ணமா இருக்கும். நான் என்ன பண்ணினேன்?"
"எவ்வளவோ பண்ணியிருக்கிங்க! இந்த இரவு நேரத்த இவ்வளவு அழகாக்கினது நீங்கதான். இந்த கர்னி டிரைவுக்கு நண்பர்களோடு வந்து எத்தனையோ முறை சாப்பிட்டுப் போயிருக்கிறேன். ஆனா இந்த இடம் இத்தனை அழகா இருந்ததில்ல!"
"அது ஏன் இன்னைக்கு மட்டும் அப்படி?"
"நீங்க என் பக்கத்தில இருக்கிறதுதான் காரணம். கேம்பஸ் கூட இப்ப எனக்குப் புதுசாத்தான் தெரியுது. ரொம்ப அழகான இடமா மாறிட்டதாத் தெரியுது!"
"ரொம்பத்தான் புகழ்றிங்க! எனக்குக் கூச்சமா இருக்கு போங்க!" என்றாள்.
கூச்சமாக இருந்தால் சரி. இல்லாவிட்டால் இவ்வளவு பேசியதற்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.
"உண்மையில என்ன இன்னைக்கி ரொம்ப சந்தோஷப் படுத்திட்டிங்க. என்னை அந்த ரேகிங் விசாரணையில இருந்து மீட்டதுக்கும் எனக்காக வருத்தப் பட்டு அழுததுக்கும் உங்களுக்கு நல்ல முறையில நன்றி சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். அது எதிர் பாராம இன்னைக்குக் கிடைச்சிது!" என்றான்.
அவனைச் சில விநாடிகள் கூர்ந்து பார்த்தாள். "அதே போல கணேஷ், ரேகிங்ல இருந்து என்னை நீங்க காப்பாத்தினதுக்கு உங்களுக்கு மனந் திறந்து நன்றி சொல்ல நானுந்தான் ஒரு சந்தர்ப்பத்த எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். இன்னைக்கு அது வாய்ச்சது, எதிர் பாராம!" என்றாள்.
அவள் கையை குலுக்குவதற்காக நீட்டினாள். அவன் வலது கையால் அழுத்திப் பிடித்து அதன் மேல் இடது கையையும் வைத்து மூடினான். அவள் கொஞ்சம் தயங்கித் தன் இடது கையை அதன் மேல் வைத்து மூடினாள். கொஞ்ச நேரம் கைகளை உருவிக் கொள்ளாமல் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்திருந்தார்கள்.
கடலை மூடியிருந்த இருட்டு வானத்தில் ஒரு மின்னல் நெளிந்து மறைந்தது. தொடர்ந்து இடி ஒன்று இடித்து உருண்டது. சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. சட்டென்று கையை உருவிக் கொண்டாள். "ஐயோ மழை வந்திருச்சே! வாங்க ரொம்ப வர்ரதுக்குள்ளே போயிடுவோம் கணேசன்!" என்று எழுந்தாள்.
அவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கையை விடாமல் பிடித்திருந்து அவள் விழிக்குள் இன்னும் ஒரு மணி நேரம் பார்த்திருக்கத் தயாராக இருந்தான். அவனுடைய காதல் துடிப்புக்களையெல்லாம் அவளிடம் மணிக் கணக்கில் சொல்லத் தயாராகியிருந்தான். ஆனால் இந்தப் பாழும் மழை...!
இருவருமாக அவன் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினார்கள். அவன் மழைக் கோட்டு ஒன்றுதான் வைத்திருந்தான். அவளிடம் கொடுத்தான். "நீங்க போட்டுக்கங்க!" அகிலா என்றான்.
அவள் மழைக் கோட்டைப் போர்த்திக் கொண்டு பின்னால் உட்கார்ந்தாள். அவன் மோட்டார் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்ததும் அதை இழுத்து அவன் தலைக்கு மேல் கொண்டு வந்தாள். அதை அப்படியே அவன் தோளோடு போர்த்தி அவள் இரு கைகளையும் அவன் கைகளுக்குள் நுழைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
மழைக் கோட்டைச் சற்றும் சட்டை செய்யாமல் மழை அவர்களை தாரை தாரையாக நனைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மழைக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
பாதி வழியில் மழை நின்று விட்டது. ஆகவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி மழைக் கோட்டை மடித்து வைத்தான். அதன் பின்னர் பயணம் தொடர்ந்த போதும் அவள் கைகள் முன்னைப் போலவே அவனைப் பின்னியிருந்தன.
பல்கலைக் கழகத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்த போது மணி பனிரெண்டாகி விட்டது. மறுநாள் காலை தொடங்கும் பட்டமளிப்பு விழாவிற்கான கடைகள் அமைப்பதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் நடமாட்டம் அந்த இரவிலும் இருந்தது. தேசா கெமிலாங்குக்கு வந்து வாசலில் கொண்டு நிறுத்தினான். அவள் இறங்கினாள். "ரொம்ப நன்றி. அறைக்குப் போனதும் குளிச்சிடுங்க! இல்லன்னா சளிக்காய்ச்சல் பிடிக்கும்!" என்றாள் சிரித்துக் கொண்டே!
"இன்றைக்குப் பிடித்திருப்பது சளிக் காய்ச்சலல்ல, காதல் காய்ச்சல்" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு "நீயும் போய் குளிச்சிரு அகிலா!" என்றான். சொன்னவுடன் உதட்டைக் கடித்துக் கொண்டான். அவளை "நீ" என்று சொல்ல இப்படி உரிமை எடுத்துக் கொள்ளலாமா என அவனுக்கே தெரியவில்லை.
மறுக்கவில்லை. "சரி" என்றாள் சிரித்துக் கொண்டே.
அவன் புறப்படும் வரை வாசலில் காத்திருந்தாள். அவளுக்குக் கையசைத்துவிட்டு அவன் மோட்டார் சைக்கிளைக் கிளப்பித் திரும்பிய போது ஜெசிக்கா வரவேற்பறையின் கதவின் ஓரத்தில் நின்றவாறு தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. அவள் கண்களில் ரௌத்திரம் இருந்ததை அந்த ஒரு கணத்தில் உணர முடிந்தது.
*** *** ***
பட்டமளிப்பு விழாவின் பல்வேறு துணை நிகழ்ச்சிகளில் அகிலாவை கணேசன் தேடித் தேடிச் சென்று சந்தித்தான். ரோஜா மலர்கள் விற்க அவளுக்குத் துணை செய்தான். அவள் தோழிகளோடு சேர்ந்து கொட்டமடித்தான். பலமுறை அகிலா போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போனான். அந்தச் சில நாட்களில் வளாகத்தில் அவர்கள் மற்ற மாணவர்களின் கண்களுக்கு வழக்கமான ஜோடியாகிப் போனார்கள்.
அதற்கு அடுத்த வாரம் வழக்கம் போல் புதன் கிழமை இரவில் ஐசெக் மீட்டிங் நடந்த போது ஜெசிக்கா உம்மென்றிருந்தாள். எப்போதும் கணேசனைத் தேடிப் பிடித்து அவனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி வருபவள் அந்த வாரம் தானாகத் தன் மோட்டார் சைக்கிளிலேயே வந்திருந்தாள். கணேசனும் அவளைத் தேட முயற்சி செய்யவில்லை. ஜெசிக்காவுக்கும் தனக்குமுள்ள தூரத்தை கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்வதே இப்போதைக்கு நல்லது என அவனுக்குப் பட்டது. ஆனால் ஜெசிக்கா போன்ற ஒரு நல்ல தோழியை அவன் இழக்கவும் விரும்பவில்லை. நீண்ட கால நட்பு முறிந்து விடக் கூடாதே என்ற கவலை அவனுக்கு இருந்தது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜெசிக்காவைப் பார்த்து அவன் சிரிக்க முயன்ற போது அவள் முகம் திருப்பிக் கொண்டாள். கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப் பட்டன. அந்த ஆண்டு நடக்கவிருக்கும் அனைத்துலக ஐசேக் பேராளர் மாநாடு பற்றிய எல்லா விஷயங்கள் பற்றியும் சங்கத்தின் செயலாளரான அவள் உற்சாகமில்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
கணேசனுக்கு அவளுடைய மன இறக்கத்தின் காரணம் புரிந்தது. அது அவனுக்குச் சங்கடமாகவும் இருந்தது. ஜெசிக்கா அவனுக்கு நல்ல தோழி. அவளோடு பல முறை சாப்பிடப் போயிருக்கிறான். ஐசெக் சங்க வேலைகளுக்காகப் பல முறை அவளோடு சுற்றித் திரிந்திருக்கிறான். நூலகத்தில் ஒரே மேசையில் உட்கார்ந்து அந்த இடத்தின் மௌனச் சூழ்நிலையில் கால்கள் உரசப் படித்ததும் உண்டு. அவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசவும் அவன் நலனில் அக்கறைப் படவும் அவளைப் போல் ஒரு துணை கிடைத்திருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
சில வேளைகளில் தோழி என்ற நெருக்கத்தைக் காதலி என்ற அளவுக்குக் கொண்டு போகலாம் என்ற ஆசையும் இருந்தது. தன்னை விட ஜெசிக்காவுக்கு அது இன்னும் அதிகமாக இருந்தது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஜெசிக்கா அவன் மீது முற்றாக ஆதிக்கம் செலுத்த முயன்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்ன விருப்பம் என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் தான் விரும்பியதையெல்லாம் அவன் மீது திணிக்கின்ற அவளுடைய ஆர்ப்பாட்டம் அவனைத் தயங்கச் செய்தது.
கூட்டம் முடிந்த போது அவள் விசுக்கென்று எழுந்து விட்டாள். ஆனால் அவளை அந்தக் கோபத்தோடு அப்படியே விட்டு விட கணேசன் விரும்பவில்லை. அவள் அறையை விட்டு வெளியேறுவதற்குள் விரைந்து போய் அவள் கையைப் பிடித்தான். "என்ன" என்பது போல் திரும்பி அவனை முறைத்தாள்.
"ஏன் என்னிடம் பேசாமல் போகிறாய், ஜெசிக்கா?" என்று கேட்டான்.
"உன்னிடம் பேச என்ன இருக்கிறது? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்!" என்றாள். முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது.
"கொஞ்ச நேரம் உட்கார்ந்து என்னிடம் பேசு ஜெசிக்கா!" என்றான்.
கொஞ்சம் இணங்கி வந்து கலாச்சார மண்டபத்தின் படிகளில் அவனோடு உட்கார்ந்தாள்.
"என் மேல் உனக்கு என்ன கோபம்?" என்று அவளைக் கேட்டான்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து அப்புறம் தரை பார்த்துப் பேசினாள். "அது உனக்கே தெரிய வேண்டுமே?"
"தெரியவில்லை. உனக்குக் கோபம் வருமாறு நான் என்ன செய்தேன்?"
"புதிதாக ஆள் பிடித்து விட்டாய். ஆகவே பழையவர்கள் துணை உனக்குத் தேவைப்படாமல் போய்விட்டது!"
"யார் புதிய ஆள்? யார் பழைய ஆள்?"
"உனக்கே தெரிய வேண்டும்!"
"அகிலாவைச் சொல்கிறாயா?" என்று நேராக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
"அந்தப் பிசாசை நீ மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நட்ட நடுநிசியில் மழையில் நனைந்த ஈரத்துடன் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து இறங்கினீர்களே! எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா?" என்றாள்.
அவளிடம் தெளிவாகப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். "ஆமாம் ஜெசிக்கா! அன்றைக்கு வேந்தர் விருந்து முடிந்து அகிலாவுடன் சென்று சாப்பிட்டு விட்டு அவளைக் கொண்டு வந்து விடுதியில் விட்டேன். வரும் போது மழை வந்து விட்டது. நனைந்துதான் வந்தோம். இதில் உன்னிடம் என்ன மறைக்க வேண்டியிருக்கிறது?"
அவனை கோபத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். "அவள் கூப்பிட்டாளா, நீ கூப்பிட்டாயா?"
"யார் கூப்பிட்டால் என்ன ஜெசிக்கா?"
தரையைப் பார்த்தாள். "நீ அவளைக் காதலிக்கிறாயா கணேசன்?" அவள் தொனி இறங்கியிருந்தது. குரலில் தளு தளுப்பு இருந்தது.
அவன் மென்மையாகப் பேசினான். "ஜெசிக்கா, நீ இப்படி மொட்டையாகக் கேட்பதால் நானும் சொல்கிறேன். ஆமாம். அவளைக் காதலிக்கிறேன். ஆனால் அவள் என்னைக் காதலிக்கிறாளா என்பது இன்னும் தெரியவில்லை!"
அவனை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தாள். "அப்படியானால் இதுதான் நம் உறவின் முடிவா?" என்று கேட்டாள்.
"ஏன் உறவு முடிய வேண்டும் ஜெசிக்கா? நீ எந்நாளும் எனக்குத் தோழிதான். அது ஏன் மாற வேண்டும்?"
"இதற்குக் காரணம் நான் சீனப் பெண் என்பதாலா? சீனப் பெண் தோழியாக இருக்கத் தகுந்தவள், ஆனால் காதலியாக இருக்கத் தகுந்தவள் இல்லை என முடிவு செய்து விட்டாயா?"
"இல்லை ஜெசிக்கா. உன் மேல் உண்மையான காதல் எனக்கு வளர்ந்திருந்தால் இந்த இன வேறுபாடு எனக்குத் தடையாக இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த பிரச்சினை அளவுக்கு நம் உறவு போகவில்லையே! எனக்கு உன்மேல் அன்பு உண்டு. ஆனால் அது எந்தக் காலத்திலும் காதலாக வளர்ந்ததில்லை"
ஜெசிக்கா நீண்ட நேரம் யோசித்திருந்து பெரு மூச்சு விட்டுப் பேசினாள். "நான் உன்னைப் பற்றி வேறுவிதமான ஆசைகளை வளர்த்துக் கொண்டேன். என் தவறுதான் போல இருக்கிறது. உன் நெருக்கம் என்னை ஏமாற்றி விட்டது. உன் கம்பீரமும் புத்திசாலித் தனமும் என்னை வசீகரித்து என் புத்தியை மழுங்கடித்து விட்டன. இன வேறுபாட்டைக் கடந்து நம் புத்தியின் சம பலத்தால் நாம் காதலித்துக் கல்யாணமும் செய்து கொள்ள முடியும் என நம்பினேன். ஆனால் அது எல்லாம் தவறு என இப்போது தெரிந்து விட்ட போது என் மீதே எரிச்சல் வருகிறது. அந்த எரிச்சலை உன் மீது காட்டியதற்கு மன்னித்துக் கொள்!" என்றாள்.
"மன்னிப்பெல்லாம் தேவையில்லை! நாம் இன்னும் நண்பர்கள்தான். அது ஏன் மாற வேண்டும்?" என்றான்.
"அது மாற வேண்டியதில்லை. ஆனால் மட்டுப் படுத்தப் படவேண்டும். முன்பு போல் நாம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மோட்டார் பைக்கில் சுற்ற முடியாது. அந்த உரிமை உன் புதுக் காதலிக்குத்தான் உண்டு!" என்றாள்.
"ஜெசிக்கா! திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாதே! அவள் என் காதலியா என்று இன்னும் தெரியவில்லை. அவள் மனதை இன்னும் எனக்குத் திறந்து காட்டவில்லை. ஆகவே இது ஒரு தலைக் காதலாகவும் இருக்கலாம்!" என்றான்.
"நான் வேண்டுமானால் போய் அந்தப் பிசாசிடம் பேசி ஒரு பதில் வாங்கிக் கொண்டு வரட்டுமா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"ஐயோ வேண்டாம்! அதன் பின் உண்மையான பேயாக மாறி என்னைக் குடலைப் பிடுங்கிக் கொன்றாலும் கொன்று விடுவாள்!" என்றான் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே.
அவள் எழுந்தாள். "சரி கணேசன்! உனக்கென ஒரு நல்ல இந்தியப் பெண்ணைப் பிடித்துக் கொண்டாய்! இன ஒருமைப் பாட்டுக்காக நான் வகுத்திருந்த திட்டத்தை முறியடித்து விட்டாய். இனி நான் எனக்கேற்ற ஒரு சீன மாப்பிள்ளையைத் தேட வேண்டும். ஆனால் ஒரு இந்திய மாணவனோடு சுற்றியலைந்த சீனத்தியை எந்த சீன மாணவன் 'செக்கன்ட் ஹென்டாக' ஏற்றுக் கொள்வானோ தெரியவில்லை!" என்று சொல்லிவிட்டு தன் மோட்டார் பைக்கை நோக்கி நடந்தாள் ஜெசிக்கா.
கணேசன் அவள் மோட்டார் சைக்கிள் ஏறிப் போவதைப் பார்த்தவாறு இருந்தான். எத்தனை எளிதாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிச் சரிப் படுத்திக் கொண்டாள்! "என்னை ஏமாற்றி விட்டாய்! என் வாழ்வையே குலைத்து விட்டாய்!" என்று ஒப்பாரி வைக்காமல் சட்டென்று வழித்துப் போட்டு விட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி விட்டாள்.
அவள் போவதை ஒருவித வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணேசனுக்கு திடீரென்று அவனுடைய அத்தை மகள் மல்லிகாவின் நினைவு வந்தது.
***
பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத் தேர்வுக்கான பட்டியல் வெளியாகிவிட்டது. நூலகத்தில் எந்த நேரமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் நேரங்களில் வெள்ளென போனால் ஒழிய உட்கார இடம் கிடைக்கவில்லை.
அகிலா செய்திருந்த எசைன்மென்டில் நான்கை விரிவுரையாளர்கள் திருத்திக் கொடுத்திருந்தார்கள். கணினி எசைன்மென்டுகளில் இரண்டு B-யும் ஒரு C-யும் வாங்கியிருந்தாள். கணிதத்தில் மட்டும் A கிடைத்திருந்தது. ஒரு முதலாண்டு மாணவருக்கு இது மிகவும் நல்ல கிரேடுகள் என்று கணேசன் அவளைப் பாராட்டினான். முதலாண்டு மாணவர்கள் பல்கலைக் கழகப் படிப்பு முறை தெரியாமல் தடுமாறுகிற ஆண்டு. ஆகவே எசைன்மென்டில் C வாங்கினாலே பெரிய விஷயம்தான்.
கணேசன் அகிலாவுக்கு எல்லா விஷயங்களிலும் துணையாகவும் வழிகாட்டியாகவும் மாறிவிட்டான். நூலகத்தில் அவளுக்கு இடம் பிடித்து வைத்தான். அகிலாவுக்கு போக்குவரத்துப் பிரச்சினையும் தீர்ந்திருந்தது. தனக்கு வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் கணேசன் அவள் போக வேண்டிய இடங்களுக்கு அவளைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகத் தயாராக இருந்தான். அவள் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் அவன் கேட்பதில்லை.
இதற்கிடையே இந்திய கலாச்சாரக் கழகம் மாணவர் உபகாரச் சம்பள நிதிக்காக ஆண்டு தோறும் நடத்தும் கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அந்த விழாவில் அகிலாவின் பரதநாட்டியம் ஒன்று இடம் பெற வேண்டும் என கணேசன் அவளை வற்புறுத்தி இணங்க வைத்துப் பெயர் கொடுத்திருந்தான்.
இத்தனை படிப்பு வேலைகளுக்கிடையில் மேலும் ஒரு நடனத்துக்குப் புதிதாகப் பயிற்சி செய்து அரங்கேற்றுவதில் நேரம் அதிகம் செலவாகும் என்றுதான் முதலில் தயங்கினாள். இரண்டாயிரம் பேர் வந்து பார்க்கின்ற அந்த பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியில் ஆட அவளுக்கு நடுக்கமாகவும் இருந்தது. இருந்தாலும் வேந்தர் விருந்தில் ஆடிய அனுபவம் கொஞ்சம் கை கொடுத்தது. அதோடு இந்திய மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மேலும் பல்கலைக் கழகங்களில் நடை பெறுகின்ற எல்லா இனக் கலை நிகழ்ச்சிகளிலும் அதிகமான கூட்டம் வருவது இந்திய கலாச்சாரக் கழகம் நடத்துகின்ற இந்தக் கலை நிகழ்ச்சிக்குத்தான். அதில் ஆட வாய்ப்புக் கிடைத்திருப்பது ஒரு பெருமைதான் என எண்ணினாள். அடுத்த முறை வீட்டுக்குப் போகும்போது தனது பரத நாட்டிய பயிற்சிக் கேசட்டுகளில் தேடி ஒரு சிறிய பாடலை எடுத்துப் பயிற்சி பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.
பரத நாட்டிய ஆடைகள் எல்லாம் அம்மாதான் அடுக்கி வைத்திருக்கிறாள். அம்மாவுக்கு முன்னதாகப் போன் பண்ணி நல்ல ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து பெட்டி போட்டு வைக்கச் சொல்ல வேண்டும்.
அம்மாவை எண்ணிய போது மனசுக்குள் ஒரு சிறிய நடுக்கம் வந்தது. இப்போது இங்கே நடப்பதை அம்மா தெரிந்து கொண்டால் என்ன சொல்லுவாள்? நிச்சயம் கோபப் படுவாள். "ஏண்டி! நீ பினாங்குக்குப் படிக்கப் போனியா, இல்ல ஆம்பளப் பசங்களோட சுத்திறதுக்குப் போனியா? போயி இன்னும் மூணு மாசம் முழுசா முடியில. அதுக்குள்ள ஒனக்கு போய் •பிரன்ட் தேவைப் படுதா?" என்று சீறுவாள்.
அப்பா அமைதியாக இருப்பார். கோபப் பட்டாலும் சத்தமில்லாமல் பொறுமையாக என்ன விஷயம் என்று கேட்பார். ஆனால் அம்மாவுக்கு அந்தப் பொறுமை இருக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் கண்டிப்பாகப் பிடிக்காது.
தனக்கே கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தானும் கணேசனும் ஏதோ ஒரு வகையில் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஜோடியாகிவிட்டது தெரிந்தது. தான் அவனை எந்நேரமும் நினைத்திருப்பது தெரிந்தது. அவனுக்காக ஏங்குவது புரிந்தது. அவன் இல்லாத நேரங்கள் வெறுமையாக இருப்பது தெரிந்தது. அவனை நினைத்த போதெல்லாம் மனதில் ஒரு தண்மையான வெப்பம் பரவுவது சுகமாக இருந்தது.
இதுதான் காதல் என்பதா? நான் அவனுக்குக் காதலியா? நான் அவனுக்குக் காதலி என்பதன் அர்த்தம் என்ன? அவனுக்கு நான் என்னைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டேனா? 'என்னை அனுபவித்துக் கொள்' என்ற லைசன்ஸ் கொடுக்கப் பட்டது போலவா?
அவன் எனக்குக் காதலன் என்பதன் அர்த்தம் என்ன? இனி என்னைத் தவிர வேறு பெண்கள் அவனை அணுகக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்காகவா? அவன் மகிழ்ச்சியிலும் அவன் துயரத்திலும் தனக்கும் பங்கு என்பதாக இனி ஆகி விடுமா? இந்தப் பெண்ணுக்காகப் பெயர் குறிப்படப்பட்ட ஆணாக அவனும் அந்த ஆணுக்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுவிட்டப் பெண்ணாகத் தானும்... இனி வாழ்நாள் முழுவதும்....
நினைக்க இன்பமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய முடிவை நானாகச் செய்ய முடியுமா? அப்பாவுக்குச் சொல்லி அனுமதி கேட்க வேண்டாமா? அம்மாவுக்கு விளக்கி அனுமதி கேட்க வேண்டாமா?
ஒரு வேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால்? "எந்த மாதிரிக் குடும்பமோ, என்ன எளவோ தெரியில! முன்ன பின்ன தெரியாத அவனோட இனிமே சுத்தாத!" என்று அம்மா தடுத்து விட்டால்...?
"ஏம்மா! உனக்கு இவ்வளவு செஞ்சு வச்ச நாங்க, வளத்து, ஆளாக்கி, படிக்க வைச்ச நாங்க, உனக்கொரு நல்ல மாப்பிள்ளயத் தேடி ஒரு நல்ல வாழ்க்கய அமைச்சிக் கொடுக்க மாட்டோமா? ஏன் அவசரப் பட்ற இப்ப?" என்று அப்பா தனக்கே உரிய அமைதியோடும் உறுதியோடும் வழியை அடைத்து விட்டால்...?
"சரி அப்பா! அப்படியே ஆகட்டும்!" என்று அப்பாவிடம் சொல்லி விட்டு "மன்னிச்சிக்குங்க கணேசன்! எங்க பெற்றோர்கள் இதை வேண்டாங்கிறாங்க. ஆகவே இதை இப்படியே விட்டிடுவோம்!" என்று சொல்லி விடுதலை பெற்றுக்கொள்ள முடியுமா?
இல்லையென்றால் "அது முடியாது அப்பா! நான் அவரையே காதலராகவும் கணவராகவும் ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்! உங்களுக்கு விருப்பமில்லன்னா நான் வீட்ட விட்டு வெளியேறிப் போயிட்றேன்!" என்று, கட்டிய துணிகளோடு.... அந்தக் காட்சி வெறுப்பாக இருந்தது.
ஏராளமான காதல் நாவல்களில் காதலனுக்காகப் பெண் சகலத்தையும் துறக்கும் முடிவுகளை அகிலா படித்துப் படுக்கையில் இரவு நேரங்களில் கண்ணீரும் விட்டிருக்கிறாள். ஆனால் தன் இரத்தமும் சதையுமான அப்பாவையும் அம்மாவையும் முன்னால் வைத்துக் கொண்டு தன்னால் அப்படிச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.
அப்படி முறித்துக் கொண்டு வர வேண்டிய அவசியம்தான் என்ன? கணேசன் யார்? தன் வாழ்க்கையில் நேற்று முளைத்தவன் அல்லவா? நல்லவனா கெட்டவனா என்பது கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தன் மேல் உண்மையான காதல் வைத்திருக்கிறானா அல்லது ஜெசிக்காவை கூட்டிக் கொண்டு அலைந்தது போல, அவள் சலித்து விட்டதால் புதிய பெண் துணையாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. அவன் கண்களில் உண்மை இருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையா அல்லது காதல் மயக்கத்தில் கிறங்கிப் போனதால் அப்படித் தெரிகிறதா என்றும் அவளால் நிச்சயித்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் காதலில் நிச்சயங்களைத் தேடி அலைவதில் பொருளில்லை என்றும் அவளுக்குப் பட்டது. காதலில் உத்தரவாதம் கேட்க முடியுமா? சாயம் போகாத காதலாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று கன்டிஷன் போட்டுக் காதலிக்க முடியுமா?
கவர்ச்சியாக, அன்பாக இருக்கிறான். ஆனால் வாழ்நாள் முழுக்கத் தனக்கு உறவாகிப் போன அம்மாவையும் அப்பாவையும் விடவா? அவன் காட்டுகிற அன்பு அம்மாவும் அப்பாவும் காட்டுகிற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. தனக்கும் அவன் மேல் ஏற்படுகின்ற அன்பு தன் அம்மா அப்பா மீது ஏற்படுகின்ற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. என்னதான் பாசமான அம்மா அப்பாவாக இருந்தாலும் அவர்களை இருபத்து நாலு மணி நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் நினைவு மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஒரு சிறிய கிராமத்து மூலைக் கோயில் போல ஆரவாரமில்லாமல் இருக்கிறது. ஆனால் கணேசனின் நினைவு இருபத்து நாலு மணி நேரமும் மனசின் முன்னாலேயே இருக்கிறது. ஒரு இனிய தென்றல் போல வீசிக் கொண்டிருக்கிறது. சாப்பிடும் போதும் குளிக்கும் போதும் தூங்கும் போதும் விரிவுரைகளின் போதும்....
இது ஏன் என்று விளங்கவில்லை. எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை. தென்றலை அடக்கி வைக்க முடியுமா? வீசத் தொடங்கிய பின்னர் "போ போ" என்றால் போய் விடுமா? இது இயற்கையின் நியதியல்லவா? பள்ளம் நோக்கிப் பாய்கின்ற தண்ணீரை நிறுத்த முடியுமா?
முடியாதென்றால், இதுதான் இயற்கை நியதி என்றால், அப்புறம் ஏன் இந்தக் குற்ற உணர்வு? அம்மாவிடமும் அப்பாவிடமும் இதனை விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்களா?
"அம்மா நான் பல்கலைக் கழகத்தில ஒருத்தர விரும்புறேன். நீ சரின்னு சொன்னா அவரைக் காதலிக்கிலான்னு பாக்கிறேன்! எனக்கு அனுமதி கொடு!" முடியுமா? வாய் வருமா? இது அசிங்கமான பேச்சு என்று பொருள் வரும்படியாக இல்லாமல் இதைச் சொல்ல முடியுமா?
எந்தக் கதையில், எந்தக் காவியத்தில் அம்மா அப்பாவின் அனுமதியுடன் காதல் நடந்திருக்கிறது? கல்யாணத்திற்கு அனுமதி கேட்டு சண்டை போட்ட கதைகள் பல இருக்கின்றன. ஆனால் எந்த நாயகி, எந்த நாயகன் காதலிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள்? அனுமதி பெற்றுக் கொண்டு காதலிப்பது காதலாகுமா? காதல் என்பதே ரகசியம்தானே! ரகசியத்தில்தானே காதலின் மகரந்தங்கள் இருக்கின்றன! இல்லாவிடில் இந்த விஷயத்தில் இத்தனை இனிப்பு எப்படி வரும்? மூடப்பட்ட சூடப் பெட்டியாக இருப்பதால்தானே இதில் இத்தனை வாசம் இருக்கிறது? திறந்த, அனுமதிக்கப் பட்ட காதலாக இருந்தால் அது நீர்த்துப் போய்விடாதா?
கொஞ்ச நாள் அம்மா அப்பாவிடமிருந்து இதை மறைத்து வைப்பதுதான் நல்லது என அகிலாவுக்குத் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் அவர்களைக் கோபப்படுத்தாமல், வருத்தப் படுத்தாமல், இதை அவர்கள் முன் பேச முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. பேசுவதற்கு போதிய தைரியம் வரும் என்றும் தோன்றவில்லை. காதல் உறுதிப் பட்டபின், முகையாக மட்டுமே இப்போது இருக்கின்ற உறவு காயாகிக் கனியும் வரை வளர்ந்தால், அப்போது அம்மா அப்பாவிடம் சொல்லலாம். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்களின் அனுமதியை வேண்டி நிற்கின்ற நிலையில் அது இருக்காது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்கள் மறுத்தால் "நான் என் காதலனுடன் போகிறேன்!" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
ஆனால் அந்த அளவுக்கு இது வளருமா என்றும் தெரியவில்லை. இப்போது அது விளையாட்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பேச்சும் கொண்டாட்டமும் நண்பர்களின் கேலியும் சிரிப்பும் என அது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆழம் இல்லாமல் இருக்கிறது.
அடுத்த முறை கணேசனோடு தனியாக இருக்கும் வேளை வந்தால் இந்தக் காதலைப் பற்றி ஆழமாகப் பேசவேண்டும் என்று அகிலா முடிவு செய்து கொண்டாள். அந்த சந்தர்ப்பம் வந்தது.
இந்தியக் கலைநிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் கூட்டத்திற்கு அகிலா அன்று போயிருந்தாள். என்னென்ன அங்கங்கள் என்பது பற்றியும் டிக்கட்டுகள் விநியோகம் பற்றியும் பேசினார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த போது கணேசன் சொன்னான்: "நாளைக்கு நீ என்னோட கண்டிப்பா சாப்பிட வரணும்!"
"ஏன் அப்படி கண்டிப்பா வரணும்?"
"ஏன்னா என்னோட பிறந்த நாள்!"
"அப்படியா? வாழ்த்துக்கள். யாராரெல்லாம் வாராங்க நம்ம கூட?" என்று கேட்டாள்.
"இனிமே கூட்டத்த சேர்த்துக்கிட்டுச் சாப்பிடப் போறதில எனக்கு அவ்வளவு ஆசையில்ல அகிலா! இந்தப் பிறந்த நாள உன்னோட மட்டும் தனியாக் கொண்டாடணும்!" என்றான்.
அவன் கண்களை கூர்ந்து பார்த்துவிட்டு புன்னகையோடு "சரி!" என்றாள்.
*** *** ***
அவ்வளவு பகட்டான இடத்துக்கு அவன் அவளை அழைத்து வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. புக்கிட் ஜம்போல் கோல்•ப் திடலை அடுத்துள்ள ஆடம்பர ஹோட்டலான இக்குவிடோரியல் ஹோட்டலின் கோ•பி ஹவுஸில் நுழைந்த போது அவள் அசந்து போனாள்.
அலங்காரத்துக்காக வைக்கப் பட்டிருந்த மங்கிய விளக்கு எரியும் மேஜைகளில், மற்றவர்கள் தொந்திரவு இல்லாத ஒரு மூலையில் அவர்கள் சென்று உட்கார்ந்த பிறகு அகிலா கேட்டாள்: "ஏன் இத்தனை விலையுயர்ந்த இடத்துக்கு கூப்பிட்டு வந்திங்க கணேஷ்? இது பணக்காரங்க காசைக் கரியாக்கிற இடமில்லையா?"
அன்று அவள் அழகான பஞ்சாபி உடை ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு இது பிடிக்குமா, இது பிடிக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டு தேடித் தேடி எடுத்த உடை. ஏனோ அவனை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. தனது நீல நிற பஞ்சாபி ஆடைக்கேற்ப ஒரு மெல்லிய நீலத்தில் துப்பட்டாவும் அணிந்து கொண்டிருந்தாள். நெற்றியில் அதே நீல வண்ணத்தில் ஸ்டிக்கர் பொட்டு இட்டிருந்தாள். தலை முடியை அழுந்த வாரிக் கட்டியிருந்தாள். அவனுக்காக, அவனுக்காகவென்றே கண்ணில் இலேசாக மை தீட்டியிருந்தாள்.
அவன் பார்த்த அந்த ஆசைப் பார்வையில் அந்த உடையலங்காரத்தை அவன் அங்கீகரித்தான் என்றே தோன்றியது. அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் "இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க அகிலா!" என்றான்.
அவளுக்கு அது சங்கீதமாக இருந்தது. அவனும் அன்று எடுப்பாகத்தான் உடுத்திக் கொண்டு வந்திருந்தான். என்றும் போல் ஜீன்ஸ் டீ சட்டை என்றில்லாமல் ஒரு உயர்ந்த பிரேன்ட் சின்னம் பாக்கெட்டில் பதித்திருந்த சில்க் போன்ற துணியில் முழுக்கை சட்டை அணிந்திருந்தான்.
"ரொம்ப நன்றி. உங்களுடைய பிறந்த நாளாச்சே, உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டுமேன்னுதான் இப்படி உடுத்தி வந்தேன். சந்தோஷம்தானே?"
"நான் வானத்தில பறக்கிறேன்னு என்னைப் பார்த்தா தெரியல?"
"தெரியுது! கொஞ்சம் இறங்கி வந்து பதில் சொல்லுங்க. ஒரு பல்கலைக் கழக மாணவர் இப்படி வந்து ஹோட்டல்ல காச வீணாக்கலாமா? அவ்வளவு பணக்கார வீட்டுப் பிள்ளையா நீங்க?"
சர்வர் வந்து நின்றார். மெனுவை வாங்கிப் பார்த்தார்கள். விலைகளைப் பார்த்ததும் அகிலாவுக்கு திக்கென்றது. அவள் இம்மாதிரியான இடத்திற்கு வந்து சாப்பிட்டதே இல்லை. இந்த மாதிரி விலைகளை இதற்கு முன் கண்டதும் இல்லை. எந்த உணவையும் வேண்டும் என்று சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது. கணேசன்தான் வற்புறுத்தி அதைச் சாப்பிடு இதைச் சாப்பிடு என்று ஆர்டர் கொடுத்தான்.
சர்வர் போனபின் கணேசன் சொன்னான்: "இன்னைக்கு இந்தப் பிறந்த நாள முதல் முதல்ல உன்னோடு சேர்ந்து கொண்டாட்றேன் இல்லியா அகிலா! அதினால அது ஸ்பெஷலா இருக்கணும்னு நெனச்சேன். நீயும் நானும் என்னைக்கும் நெனைச்சுப் பார்த்து மகிழக் கூடியதா இருக்கணும்னு நெனச்சேன். அதினாலதான் இந்த இடம்."
"நீங்க அன்றைக்கு வாங்கிக் கொடுத்த மீ கோரேங், ரோஜாக் கூட நான் நெனப்பில வச்சிருக்கேன். அதுக்காக இவ்வளவு காசு செலவு பண்ணனுமா? உங்க பெற்றோர்கள் ரொம்ப பணக்காரங்க இருப்பாங்க போல இருக்கே!" என்றாள்.
"என் பெற்றோர்கள் ரொம்ப ஏழைகள் அகிலா! தோட்டத்து வாழ்க்கையிலேயே இன்னைக்கும் கிடந்து குடியும் கூழுமா அவதிப் பட்றாங்க. ஆனா எனக்கு ஒரு அத்தை இருக்காங்க, அட்சய பாத்திரம் மாதிரி..."
அன்று இரவில் ஏராளமாக அவர்களுடைய வாழ்க்கைக் கதைகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. தன் வாழ்க்கையும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக தன் பெற்றோர்களைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அனைத்தையும் கூறினாள் அகிலா. சுவையான உணவுகளூடே அந்தரங்க வாழ்க்கைகள் பரிமாறப் பரிமாற அவர்களிடையே அந்நியோன்யம் வளர்ந்து கொண்டிருந்தது.
அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எது எது விருப்பம், என்ன பாட்டு பிடிக்கும், என்ன உடை பிடிக்கும், எந்தத் தோழி உயிர்த்தோழி என்றெல்லாம் அவன் அக்கறையோடு கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொன்றுக்கும் பதிலாக தனக்கு என்ன பிடிக்கும் என்ற தகவலை அவன் பரிமாறிக் கொண்ட போது பல அவளுடைய விருப்பங்களுக்கு ஒத்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் முடியும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பாடு முடிந்ததும் கிட்டத்தட்ட அறுபது வெள்ளியைக் கொடுத்து விட்டு அவர்கள் வெளியே வந்தார்கள். அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து அணுக்கமாக அணைத்துக் கொண்டாள். கேம்பசுக்குத் திரும்பினார்கள். யாராவது பார்த்து விடுவார்களே என்ற அச்சம் பல நாட்களுக்கு முன்பே அவளுக்கு நீங்கி விட்டிருந்தது.
"கொஞ்ச நேரம் வி.சி. ரோக் பக்கம் போய்உக்காந்திருப்போமா, அகிலா?" என்று கேட்டான்.
"சரி!" என்றாள். அந்த இரவு குளுகுளு வென்றிருந்தது. இந்தக் காதலனின் அணைப்பு வெது வெதுப்பாக இருந்தது.
வி.சி. பாறை மாணவர் விவகாரப் பிரிவுக்கு முன்னால் இருந்தது. துணை வேந்தரின் பழைய அலுவலகம் அங்கு அமைந்திருந்ததால் அந்த இடத்தை துணை வேந்தர் பாறை என்று மாணவர்கள் அழைக்க அதுவே நிலைத்து விட்டது. மாணவ காதல் ஜோடிகள் இரவில் உட்கார்ந்து பேச வசதியான இடம்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தார்கள். அகிலா தலை முடியை இறுகப் பிடித்திருந்த ரிப்பனை அவிழ்த்து விட்டு முடியை கழுத்திலும் தோளிலும் படரவிட்டாள். அவர்களிடையே எல்லா இறுக்கங்களும் தளர்ந்திருந்தன.
வி.சி. பாறையிலிருந்து பார்த்தால் கடல் பரப்பும் பினாங்குப் பாலமும் தெரியும். பினாங்குத் தீவின் கரையில் ஒரு தென்னந் தோப்பும் தெரியும். அன்று அந்தத் தென்னந்தோப்பின் மேலாக ஒரு பிரகாசமான நிலா வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. பினாங்குப் பாலம் முழுவதும் விளக்குகள் எரிந்து ஒளிமிக்கக் கற்கள் பதித்த தங்கச் சங்கிலி போல இருந்தது. உறுதியான அந்தப் பாலத்தின் மென்மையான அசையும் பிம்பம் கடலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
தூரத்தில் அக்கரையில் பட்டர் வொர்த் கப்பல் துறையில் உயர்ந்த கிரேன்கள் தெரிந்தன. துறையை ஒட்டியும் அருகில் கடலிலும் பல பெரிய சரக்குக் கப்பல்கள் கம்பீரமாக நின்றிருந்தன. இரும்பும் எ•குமாக செய்யப்பட்ட அந்தக் கப்பல்களின் மீதெல்லாம் சந்திர ஒளி உருகி வழிந்து அவற்றின் முரட்டுத் தனங்களை மென்மைப் படுத்திக் கொண்டிருந்தது.
அந்த இரவுப் பொழுதும் வானமும் கடலும் சந்திரனும் தங்கள் இருவருக்காகவும்தான் படைக்கப் பட்டிருக்கின்றன என அகிலா நினைத்துக் கொண்டாள். இந்த அனுபவம் மிக மிகப் புதியதாக இருந்தது. இதை அவள் புத்தகங்களில் படித்திருக்கிறாள். அப்போது இந்த அனுபவங்களுக்காக அவள் ஏங்கியதுண்டு. இப்போது அது இங்கே நிகழும் போது ஒரு இனிய கனவு கண்டு விழித்த போது அது கனவல்ல உண்மை என்று தெரிந்து கொண்டது போல் இதயம் மகிழ்ச்சியில் தளும்பிக் கொண்டிருந்தது.
அவன் அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு வழி நடத்தினான். அவள் விருப்பத்தோடு அவனை ஒட்டிக் கொண்டு நடந்தாள். இவன் தனக்குத் தலைமையேற்று வழி நடத்தத் தக்க நல்ல ஆண்மகன்தான் என்ற கருத்து அவள் உள்ளத்தில் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் வசதியான ஒரு புல் மேட்டில் உட்கார்ந்தார்கள். அவன் அவள் தோள்களைத் தழுவியிருந்தான். அவள் துப்பட்டாவினய் ஓரங்கள் அவன் அணைப்பில் கொஞ்சம் நசுக்கின. முகம் திருப்பி முத்தம் கொடுக்க வந்தான். கொஞ்சமாக இதழைக் கொடுத்துப் பின் வாங்கிக் கொண்டாள். இது வேண்டும் என்றும் இது குற்றம் என்றும் மனது மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது.
அந்த வேளையில் அன்று இரவு முழுவதும் குறுகுறுத்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி முட்டி மோதிக் கொண்டு வெளிப்பட்டது: "உங்க குடும்பத்தில எல்லாரையும் பத்திச் சொன்னிங்க! ஆனா ஒருத்தர் பத்தி மட்டும் சொல்லலியே!"
"யாரப் பத்தி சொல்லலே?"
"அதான், உங்க அத்த மக, மல்லிகா!"
"ஓ மல்லிகாவா?" கொஞ்சம் யோசித்துச் சொன்னான். "அவ சின்னப் பிள்ளை. வயசு ஆயிடுச்சே தவிர ஒண்ணும் தெரியாத வெகுளி! அவ எனக்குத் தங்கச்சி மாதிரி!"
***
வளாகத்தில் முதல் பருவப் பரிட்சைக் காய்ச்சல் தணிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் காய்ச்சல் அனைவரையும் பிடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாண்டு மாணவர்கள் வீடு திரும்பத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு, குடும்பம், பழைய பள்ளி மாணவர்கள், அம்மாவின் சமையல் என்ற எண்ணங்கள் இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டிருப்பது அவர்களிடையேதான். இரண்டாமாண்டில் இந்தத் தீவிரம் கொஞ்சம் தணியும். மூன்றாம் ஆண்டில் வீட்டுப் பாசம் ரொம்பத் தணிந்துவிடும். விடுமுறையில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும், புரோஜெக்ட் செய்ய வேண்டும் என்று பல மாணவர்கள் வளாகத்திலேயே தங்கி விடுவதும் உண்டு.
இந்த முதல் பருவத்தின் கடைசி வாரங்கள் எக்கச்சக்கமான நெருக்குதல் மிக்க வாரங்களாக இருந்தன. முதலில் இந்தியக் கலாச்சார சங்கத்தின் மாணவர்கள் கலை விழா அவளை இடுப்பை முறித்தது. பரத நாட்டியம் ஆடுவது என்பது பெரிதாக இருக்கவில்லை. ஆனால் கலை விழாவிற்கு டிக்கெட்டுகளை அலைந்து விற்க வேண்டியிருந்தது. அவர்கள் தயாரித்த நினைவு மலருக்கு விளம்பரங்கள் தேடி அலைய வேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கணேசனின் துணையோடு செய்தது ஆறுதலாக இருந்தது.
கலை விழாவுக்கு அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருந்தது. மாண்பு மிகு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு வந்து தலைமை உரையாற்றினார். மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் டத்தோ சலீம் வந்திருந்து வாழ்த்துரையாற்றினார். மாணவர் உபகாரச் சம்பள நிதிக்கு பத்தாயிரம் வெள்ளி திரண்டது. அமைச்சர் மேலும் பத்தாயிரம் வெள்ளி தருவதாக அறிவித்தார். நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாக்கி வந்திருந்த குளுகோர் வட்டாரத்து இளைஞர்கள் ஆரவாரமாகக் கைதட்டிச் சீட்டியடித்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஏற்பாட்டுக் குழுவின் மாணவர்கள் சீருடை போல பெரிய பூப்போட்ட பாத்தேக் முழுக்கை சட்டை அணிந்திருந்தார்கள். மாணவிகள் அனைவரும் தழையத் தழைய சேலை கட்டியிருந்தார்கள். அரங்கின் முன்னால் பெரிய குத்து விளக்கு ஏற்றி வைத்து வண்ண அரிசி மாவில் கோலமும் போட்டிருந்தார்கள். அந்த சையட் புத்ரா அரங்கு அன்று தோரணமும் மாவிலையும் கட்டப்பட்டு முழுக்க முழுக்க ஒரு உற்சாகமான இந்தியச் சூழ்நிலையில் இருந்தது.
கலை நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வெளியே வந்த போது பேராசிரியர் முருகேசுவை தற்செயலாகச் சந்தித்தாள் அகிலா.
"ரொம்ப அருமையா இருந்ததம்மா உன் நாட்டியம். இந்த மாணவர்கள் டப்பாங்குத்து ஆட்ற வேகத்தில நம்ப கலைகளையே மறந்து போயிடுவாங்ளோன்னு பயந்திருந்தேன். உன்னைப் போல பரத நாட்டியத்தை முறையா தெரிஞ்சிக்கிட்டு ஆட்றவங்களப் பாக்கும் போதுதான் ஆறுதலா இருக்கு" என்றார். அவருக்கு வெட்கத்துடன் நன்றி சொன்னாள். "அப்பாவ விசாரிச்சேன்னு சொல்லு!" என்று சொல்லி அவர் போய்விட்டார்.
கலை நிகழ்ச்சியால் தேங்கிப் போய்க்கிடந்த எசைன்மென்ட் வேலைகளை முடிக்க இரவும் பகலுமாத உழைக்க வேண்டியிருந்தது. அப்புறம் பரிட்சைகளுக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. நாட்கள் குடைராட்டினம் போல சுழன்றன. கடைசித் தாள் முடிந்த போது ஏற்பட்ட விடுதலை உணர்வுக்கு இணையே இல்லை.
அகிலா வீட்டுக்குத் திரும்புவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் கணேசனை விட்டு இன்னும் ஒரு ஐந்தாறு வாரங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருத்தமாக இருந்தது. கணேசனும் வீடு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தான். "ஒரு ரெண்டு வாரம் இருந்திட்டுத் திரும்பிடுவேன் அகிலா! எனக்குப் புரோஜெக்ட் வேலைகள் இருக்கு. அதோடு ஐசெக் வேலைகளும் இருக்கு. ஆகவே கேம்பஸ்ல இருந்தாதான் அதெல்லாம் நடக்கும்!" என்றான்.
தானும் இரண்டு வாரம் தங்கித் திரும்பி விடலாமா என நினைத்தாள். ஆனால் பெற்றோர்கள் பெரும் வேதனை அடைவார்கள் என்று எண்ணினாள். அவளுக்காக நல்ல உணவாக சமைத்துப் போட அம்மா காத்திருக்கிறாள் என்பதை தொலைபேசியில் வீட்டுக்குப் பேசும் போதெல்லாம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். "அங்கெல்லாம் என்ன குப்பை மலாய்க்கார சாப்பாட்டையும் சீனன் சாப்பாட்டையும் சாப்பிட்றியோ தெரியில. வந்து வீட்டில உக்காந்து ஒளுங்கா சாப்பிடு."
வீட்டின் ஈர்ப்பு தீவிரமாக இருந்தது. வீட்டின் சுகம் தனி. தன் அறையின், தன் கட்டிலின், தன் தலையணையின் சுகம் தனி. அந்த வாசனைகள் இன்னும் மறக்கவில்லை. தம்பியுடன் அடித்துப் பிடித்து விளையாடும் சுகம் தனி. பள்ளித் தோழிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் சுகம் தனி. அவை இல்லாமல் போன இந்தப் பல்கலைக் கழக நாட்களில் அவற்றை எண்ண எண்ண ஏக்கம் பெருகியது.
மாதம் ஒரு முறை பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடும் தனக்கே இப்படி என்றால் தூர தூரப் பகுதிகளிலிருந்து வந்து, அடிக்கடி வீடு திரும்ப முடியாத மாணவர்களின் ஏக்கம் எப்படியிருக்கும் என்பதை அகிலாவால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக மலாய் மாணவர்களுக்குக் கம்பத்தின் பிடிப்பு மிக அதிகம். கூடும் போதெல்லாம் தங்கள் கம்பங்களைப் பற்றிய கதைகளையே ஏக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள்.
இந்த மூன்று மாதங்களில் அவளுக்கு நெருங்கிய தோழியாகிவிட்ட மாலதியும் ஜோகூரில் உள்ள தன் ஊருக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். இருவரும் வீட்டுத் தொலை பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னரே பரிட்சை முடிந்து பயணமான மாலதியை வழியனுப்பி வைக்க அகிலாவோடு கணேசனும் வந்திருந்தான். மாலதி பஸ் புறப்படும் நேரத்தில் அகிலாவிடம் கண்ணடித்து கணேசனைக் காட்டி "எல்லாம் எனக்குத் தெரியும்! ஆள விட்டுடாத. பத்திரமா முடிச்சி போட்டு வச்சிக்க!" என்று சொல்லிப் போனாள். அது அகிலாவுக்கு வெட்கங் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அகிலா வீட்டுக்குப் புறப்பட்ட அன்று கணேசன் அவளை பஸ் ஏற்றிவிட வந்திருந்தான். தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு அவனுடைய மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்துதான் குளுகோரில் பஸ் நிற்குமிடத்திற்கு வந்தாள். பஸ்ஸில் அவளுடைய பேக்கைத் தூக்கி வைத்து இருக்கை எண் தேடி அவளை உட்கார வைத்தான்.
"இனி இந்த அஞ்சாறு வாரம் எப்படிப் போகும்னு எனக்குக் கவலையா இருக்கு அகிலா!" என்றான்.
"ஏன், உங்களுக்குத்தான் நிறைய வேலை இருக்குன்னு சொன்னிங்கள! அதோட ஐசெக் வேலைகளுக்காக ஜெசிக்கா உங்க கூடவே இருக்கப் போறா! உங்களுக்குப் பொழுது நல்லாப் போயிடும்!" என்றாள் ஒரு குறும்பான சிரிப்புடன்.
"பாத்தியா! இது பெண்களுக்கே உள்ள சந்தேகம் போல இருக்கு! நான் எவ்வளவு சொன்னாலும் இனிமே என் மேல உனக்கு நம்பிக்கை ஏற்படாது! ஆனா உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றேன் அகிலா! ஜெசிக்காவுக்கு ஒரு புதிய போய் •பிரன்ட் கிடைச்சிட்ட மாதிரிதான் இருக்கு!" என்றான்.
"யாரது?"
"சுதாகரன்! என்னோட மேனேஜ்மென்டில இருக்கார். அவங்க ரெண்டு பேரும் மாணவர் பேரவையிலும் இருக்காங்க. முன்பே பழக்கம். இப்ப நெருக்கம்!"
நல்லதுதான் என அகிலா நினைத்தாள். பஸ் புறப்பட்ட சமயத்தில் "அடிக்கடி •போன் பண்ணுங்க!" என்று வலியுறுத்திச் சொல்லி விட்டு கை காட்டிப் போனாள். பஸ் பினாங்கு பாலத்தைக் கடக்கையிலேயே கணேசனைப் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற ஏக்கம் அவளைப் பற்றிக் கொண்டது.
*** *** ***
வீட்டுக்குப் போனதிலிருந்தே அவனுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் •போன் மணி அடித்த போது அவனாக இருக்கக் கூடாதா என்று எதிர் பார்த்தாள். அவள் வீடு சேர்ந்த இரண்டாம் நாள் அவன் கூப்பிட்டான். தம்பிதான் அவளை முந்திக் கொண்டு போய் எடுத்து யார் எவர் என்று முழுமையாக விசாரித்து விட்டு "யாரோ ஒன்னோட யுனிவர்சிட்டி •பிரண்டாம்!" என்று அவளிடம் தந்தான்.
"எனக்கு கோல் வந்தா நீ ஏன் பேரையெல்லாம் விசாரிக்கிற?" என்று அவனிடம் சண்டை பிடித்து விட்டு தணிந்த குரலில் பேசினாள். தம்பி கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அவள் டெலி•போனுக்குள் கொஞ்சுகின்ற அழகை வேறு வேலை இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.
மாலதி ஒரு முறை ஜோகூரிலிருந்து கூப்பிட்டுப் பேசினாள். பல்கலைக் கழகத்தில் இருந்த போதெல்லாம் வீட்டு நினைப்பாக இருந்தது போல வீட்டுக்கு வந்த பின் பல்கலைக் கழக நினைவாக இருக்கிறதென்றாள். தனக்கும் அப்படித்தான் இருக்கிறதென்றாள் அகிலா. "பல்கலைக் கழக நெனைப்பா அல்லது கணேசன் நினைப்பா?" என்று மாலதி கேட்டது கிளர்ச்சியூட்டுதாக இருந்தது.
கணேசன் அந்த வாரம் அவளை மூன்று முறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டான். இரண்டு முறை பினாங்கிலிருந்து! மூன்றாம் முறை தான் கிள்ளானில் அத்தை வீட்டிலிருந்து பேசுவதாகக் கூறினான்.
"எப்படி இருக்காங்க உங்க அத்த மக?" என்று கேட்டாள் அகிலா.
"அதுக்கென்ன. நல்லா சாப்பிட்டுட்டு குண்டாதான் இருக்குது!" என்றான். அப்புறம் அர்த்தமில்லாத சில்லறைக் கதைகள் நெடு நேரம் பேசினார்கள். பொழுது போகமாட்டேனென்கிறது, போரடிக்கிறது என்று பரிமாறிக் கொண்டார்கள். விஷயமில்லாத இனிப்புப் பேச்சில் இருபது நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை அவர்களால் பேச முடிந்தது.
அகிலா நீண்ட நேரம் •போனில் பேசுவதை அம்மா கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். மகள் சாப்பாடு உட்பட எந்த விஷயத்திலும் உற்சாகமில்லாமல் டெலி•போனையே எதிர் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு சந்தேகத்தை விளைவித்தது.
மகனைக் கூப்பிட்டு "அக்கா யாரோட பேசுது?" என்று கேட்டாள்.
"தெரிலம்மா! யாரோ அவங்க யுனிவர்சிட்டி •பிரண்டாம்!"
"ஆம்பிளயா பொம்பளயா?"
"ஆம்பிள!"
"பேரென்ன?"
"தெரியில! எனக்குக் கோல் வந்தா நீ ஏன் அதையெல்லாம் கேக்கிறன்னு அக்கா என்னப் பிடிச்சி ஏசுது!" என்றான்.
சாப்பிடும் போது அம்மா அந்தப் பேச்சை எடுத்தாள். "யாரோடம்மா அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்க?"
அகிலா தயங்கிச் சொன்னாள்: "என் கூட படிக்கிற •பிரண்டம்மா!"
"பொம்பிள பிள்ளயா?"
"இல்ல. பையன்தான். ஏன் பேசக் கூடாதா?"
"பேசலாம். என்னா எப்படி சௌரியமான்னு கேட்டா போதாதா? என்ன அவ்வளவு நீளமா பேச வேண்டியிருக்குது?"
அப்பா குறுக்கிட்டார். "அது என்ன வனஜா நீ இத்தனை குறுக்கு விசாரணை பண்ற? ஒண்ணாப் படிக்கிறவங்க, பாடத்த பத்தி எவ்வளவோ பேசுவாங்க!"
அம்மா முகத்தைக் கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொண்டு அமைதியாகச் சாப்பிட்டாள். அகிலா மௌனமாக இருந்தாள். தான் எதிர்பார்த்ததை விட வேகமாக இந்த விஷயம் சபைக்கு வரப் போகிறது என அவளுக்குத் தோன்றியது.
*** *** ***
அன்று இரவு அவள் அறைக்குள் படுத்துப் படித்துக் கொண்டிருந்த போது அப்பாவின் அறையிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஏதோ விவாதம் செய்வது இலேசாகக் கேட்டது. என்னவென்று புரியவில்லை. புத்தகத்திலும் மனம் ஒட்டாமல் கணேசன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணத்துடன் கண்களை மட்டும் மேயவிட்டுக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் அம்மா தன் அறைக் கதவைத் தட்டித் திறந்தாள். "அகிலா இப்படி வா கொஞ்ச நேரம்!" என்று கூப்பிட்டாள். அகிலா வெளியே வந்தாள்.
அப்பா வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். அகிலா அவருக்கு எதிரே போய் உட்கார்ந்தாள். அப்பா சிரித்தவாறே பேசினார்.
"இல்லம்மா, ஏதோ ஒரு பையனோட டெலி•போன்ல ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கன்னு உங்க அம்மா சொல்லுது. அது என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம அதுக்குத் தூக்கம் வர மாட்டேங்குது. அது கேட்டா நீ சரியா பதில் சொல்ல மாட்டேங்கிறியாம். அதுக்காகத்தான் என்னையும் இதில இழுத்து விட்றிச்சி உங்கம்மா!"
அகிலா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து சொன்னாள். "யுஎஸ்எம்-ல மூன்றாம் ஆண்டு நிர்வாகப் படிப்பு படிக்கிற மாணவர் அப்பா. ரேகிங் சமயத்தில என்னக் காப்பாத்தி அதுக்கப்புறம் விசாரணையில மாட்டி விடுதலையானாருன்னு முன்னமே உங்ககிட்ட சொல்லியிருக்கேனே, அவருதான். கணேசன்னு பேரு!" என்றாள்.
"அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் •போன் பண்ணனும்?" அம்மா கோபமாகக் கேட்டாள்.
"அதுக்கப்புறம் நாங்க நல்ல கூட்டாளிகளாயிட்டோம். அந்த நட்பிலதான் •போன் பண்றாரு!"
"கூட்டாளின்னா என்ன அர்த்தம்? ஏன் அந்த யுனிவர்சிட்டியில ஒனக்குப் பொம்பிள கூட்டாளிகள் கெடைக்கலியா?"
"இருக்காங்கம்மா. அவங்களும்தான் கூப்பிட்டுப் பேசிறாங்க! இதுல என்ன குத்தம்னு நீ இப்படிக் கேள்வியெல்லாம் கேக்கிற?"
"நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?" அம்மா பொரிந்தாள். இந்தக் கேள்வி வரும் என்பது ஏற்கனவே அகிலா ஊகித்து வைத்திருந்ததுதான். ஆனால் இப்படி சீறிக் கொண்டு வந்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
தான் கணேசனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி சுற்றியது அம்மாவுக்குத் தெரிய வழியில்லைதான். ஆனால் தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக வைத்தே பல்கலைக் கழகத்தில் என்னவெல்லாம் நடக்குமென்று சரியாகத்தான் ஊகித்திருக்கிறாள். அவளை மறுத்துப் பேச அகிலாவால் முடியவில்லை.
"இதுக்கு ஏன் இப்படி கோவமாப் பேசிற வனஜா? அமைதியா கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியதுதானே! அவ இன்னும் என்ன சின்னப் பிள்ளயா? நல்லது கெட்டது தெரிஞ்ச பிள்ளதானே!" என்றார் அப்பா. அகிலா அப்பாவை நன்றியோடு பார்த்தாள்.
"ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியில. ஏன் தடுக்கணும்னும் தெரியில! அங்க எல்லாரும் சின்னப் பிள்ளைகளா தடுத்து வைக்கிறதுக்கு?" என்றாள் அகிலா.
அம்மா சுருதி இறங்கிப் பேசினாள். "நீ சின்னப் பிள்ள இல்லம்மா! அது எனக்குத் தெரியுது. ஆனா என்ன இருந்தாலும் பெண் பிள்ள இல்லியா? அதிகமா ஆம்பிளைகள் இருக்கிற எடத்தில ரொம்ப ஜாக்கிரதையா ஒரு கட்டுப்பாட்டோடதான் இருக்கணும். ஒரு ஆம்பிளயோட நீ சுத்தித் திரியிறது நாளைக்கு எல்லாருக்கும் தெரிய வந்திச்சின்னா அப்புறம் பேர் கெட்டுப் போகும். அப்புறம் என்ன படிச்சி என்ன உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல இடத்தில கல்யாணம் அமையுமா? எத்தனை கல்யாணத்தில இந்தப் பிரச்சினைகள் வந்திருக்கிறத நான் பாத்திருக்கிறேன்!"
அம்மாவுக்குத் தன் படிப்பையும் உத்தியோகத்தையும் விட தனது கல்யாணம்தான் பெரிதாக இருந்தது. அவள் உலகத்தில் கல்யாணம் குடும்பம் என்பதே தலையாய விஷயங்கள். அம்மா எந்தக் காலத்திலும் வெளியே போய் வேலை செய்ததில்லை. அவளுக்குத் தெரிந்த அவள் பாராட்டுகிற உலகம் இந்தக் குடும்பம்தான்.
"கல்யாணத்தப் பத்தி எல்லாம் இப்ப ஏம்மா பேசணும்! படிப்பே இப்பதான ஆரம்பிச்சிருக்கு?"
"கல்யாணம் அவசரம்னு நான் சொல்லல! ஆனா அது நடக்க வேண்டிய காலம் வரும் போது இதெல்லாம் ஒரு முட்டுக் கட்டையா வரதுக்கு இடங் கொடுக்கக் கூடாதேன்னுதான் அப்படிச் சொல்றேன் அகிலா!"
அப்பா பேசினார்: "அகிலா! அம்மா கொஞ்சம் பழைய காலத்து ஆளு. ஆனாலும் அது சொல்றதில நெறய உண்மை இருக்கம்மா. பல்கலைக் கழகத்துக்குப் போயிட்டோம்கிறதினால சாதாரணமா நாம் கடைப் பிடிச்சி வந்த கட்டுப்பாடுகள விட்ற கூடாது. அதினால அம்மா பயப்பட்றது சரிதான். ஆனா உனக்கு நல்ல புத்தி இருக்கு. நீ எதுவும் தப்பா செஞ்சிட மாட்டேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ ஆண்களோட பழகக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் உத்திரவு போடல. அப்படி உத்தரவு போட்டா எங்க பொண்ணு மேலயே எங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம். ஆகவே நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா - நான் சொல்றது விளக்குதுதானம்மா? - ஒண்ணு பண்ணு. அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு. நாங்க ஒரு முறை பாத்துப் பேசிப் பழகிட்டா பையன் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா எங்களுக்கும் பயமில்லாம இருக்கும்!" என்றார்.
அப்பாவின் பேச்சு ஆறுதலாக இருந்தது. "சரிப்பா!" என்றாள் அகிலா. சந்திப்பு முடிந்து அப்பா எழுந்தார். அகிலா படுக்கைக்கு வந்தாள். வரும் வழியில் தம்பி தன் அறைக் கதவை ஒருக்களித்துத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். இவ்வளவு நேரம் ஒட்டுக் கேட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த அவனை முறைத்து விட்டு அவன் அறைக் கதவை இறுகச் சாத்திவிட்டு வந்தாள்.
புத்தகத்தில் அப்புறம் மனம் செல்லவில்லை. புத்தகப் பக்கத்தின் காதை மடித்து வைத்து விட்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். தூக்கம் எளிதில் வரவில்லை.
அப்பா முப்பது ஆண்டுகளாகப் பள்ளி ஆசிரியர். அந்த அனுபவத்தில்தான் இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு எளிதாக, தெளிவாக ஒரு தீர்வைச் சொல்லிவிட்டார். அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு இந்த அறிவுரை பிடிக்கவில்லை என்பது அவள் முகத்தில் இன்னும் இறுக்கம் விலகாததிலிருந்து தெரிந்தது.
அம்மா அப்படியொன்றும் உலகம் தெரியாதவளல்ல. உலகமும் ஆண்-பெண் உறவுகளும் மாறி வருவது தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் அதற்கு மேல் எதிர்ப் பேச்சு பேசாமல் விட்டுக் கொடுத்து விட்டாள். அம்மா வளர்ந்த சூழ்நிலையில் கல்யாணத்திற்கு முன் இந்த ஆண்-பெண் பழக்கம், சிரிப்புப் பேச்சு என்பதெல்லாம் கடுமையான தவறுகள் என்று சொல்லிக் கொடுக்கப் பட்டது அவள் மண்டைக்குள் இன்னமும் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால் அவள் தன்னைச் சுற்றிப் பார்க்கும் போது கல்வி முன்னேற்றத்தினால், நாகரிக முன்னேற்றத்தினால் இந்த பழக்கங்கள் தளர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். அந்தத் தளர்ந்து விட்ட சூழ்நிலையில் தன் பிள்ளையை மட்டும் பொத்திப் பொத்தி வளர்க்க முடியாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. பிடியைத் தளர்த்தத்தான் வேண்டும் என்று முடிவு செய்ததனால்தான் வீட்டை விட்டு வெளியேறிப் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லாமல் அனுப்பி வைத்தாள்.
ஆனால் பெற்றோர்களின் பிடி அதிகமாகத் தளர்ந்ததினால் எத்தனையோ பிள்ளைகள் தறிகெட்டுப் போய் விடுகிறார்கள் என்பதையும் அம்மா பார்த்திருக்கிறாள். தன் கன்றும் அப்படிப் போய் விடக்கூடாது என்ற பயமும் அவளுக்கு வருகிறது. ஆகவேதான் தளர்த்திய பிடியை சில சமயம் இறுக்குகிறாள். அகிலாவுக்குப் புரிந்தது.
தான் அம்மாவின் கட்டுப்பாடுகளையெல்லாம் நிராகரித்துவிட்டுப் போய்விடுகிற அளவுக்கு அறிவாளியாகிவிட்டோம் என்று அகிலா எண்ணவில்லை. படிப்பு வேறு, அம்மா பன்னிப் பன்னி சொல்லுகின்ற வாழ்க்கை நெறிகள் வேறு என்பது அவளுக்குப் புரிந்தது.
கணேசனோடு தான் பழகுவதில் தான் எந்தத் தப்பும் பண்ணிவிடவில்லை என தன்னைத் திருப்திப் படுத்திக் கொண்டாள். அவன் அளவோடு தொடவும் தழுவவும் முத்தம் தரவும் இடம் கொடுத்தது தவறில்லை. அவையில்லாமல் காதல் வளர முடியாது. அவற்றைத் தவிர்த்து விட்டு மன உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது. ஆனால் அம்மா இவற்றை எந்த நாளும் ஏற்க மாட்டாள். தான் அந்த அளவுக்குத் தன்னை பூட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இவற்றுக்கெல்லாம் எல்லைகள் இருக்கின்றன. அவற்றைத் தான் வரையறுத்துக் கொள்ள வேண்டும் என அகிலா தீர்மானம் செய்து கொண்டாள்.
ஆனால் இந்த எல்லைகள் தன்னை ஒத்த வயதினரிடையே விரைவாக மாறி வருகின்றன என்பது அவளுக்குப் புரிந்தது. பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு உள்ள சுதந்திரம் இந்த எல்லைகளை எல்லாம் உடைக்க அவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதையும் பலர் அப்படி உடைப்பதிலேயே பெருமைப் படுவதையும் அவள் பார்த்து விட்டாள். அவற்றைப் பார்த்து அதைப் போல் பின் பற்ற தான் மட்டும் ஏன் சுதந்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது, தான் மட்டும் ஏன் அனுபவிக்கக் கூடாது என்று மனது இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்று போடப்பட்டுள்ளது போலக் குடும்பக் கடிவாளங்கள் தேவையாக இருக்கின்றன.
தம்பி ஒட்டுக் கேட்டது நல்லதுதான் என அகிலா நினைத்தாள். இந்தக் குடும்பத்தின் அடிப்படை நெறிகள் என்ன என்பதை அவனும் மறைமுகமாகக் கற்றுக் கொண்டிருப்பான். கற்றல் இப்படித்தான் நிகழ்கிறது. நேரடி உபதேசத்தை விடப் பார்த்துக் கேட்டுக் கற்றுக் கொள்வதே நிலைக்கும்.
விரைவில் கணேசனை அழைத்துக் கொண்டு வந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற இனிமையான நினைப்பில் அகிலா தூங்கிப் போனாள்.
***
"சாப்பிடு கணேசு! பாரு எப்படி எளச்சிப் போய் கெடக்க! உங்க யுனிவர்சிட்டியில என்னதான் சாப்பாடு போட்றாங்களோ தெரியில! இப்படி எலும்புந் தோலுமா வந்து நிக்கிற" என்று அத்தை சத்தமாக உபசரித்தாள்.
யுனிவர்சிட்டியில் யாரும் சாப்பாடு போடுவதில்லை; வேண்டுவதைத் தானாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்று அத்தைக்குச் சொல்லி விளங்க வைக்க முடியாது. அதோடு தான் அப்படி ஒன்றும் இளைத்துப் போகவில்லை என்பதை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.
சாப்பாட்டு மேசையில் பத்து பேர் சாப்பிடக் கூடிய உணவு இருந்தது. ஆடு பிரட்டி வைத்து கோழிக் குழம்பு வைத்திருந்தாள். கோழி ஈரலைத் தனியாகப் பிரட்டியிருந்தாள். நெய் மணக்க பிரியாணி செய்திருந்தாள். ஊடான் கலந்த முட்டைக் கோஸ் பிரட்டல். தயிர் விட்ட வெள்ளரிக்காய். நல்ல சர்க்கரை விட்டு இனிக்க இனிக்க மாங்காய் சட்டினி செய்திருந்தாள். ஒரு ஜக்கில் சிவப்புக் கலரில் சிரப் கலக்கி வைத்திருந்தாள்.
"சிரப் நான்தான் கலக்கினேன். வெள்ளரிக்காயும் நான்தான் வெட்டினேன்!" என்று தன் பங்கைத் தம்பட்டமடித்தாள் மல்லிகா.
"இப்பல்லாம் கிள்ளான்ல நல்ல நாட்டாட்டுக் கறியே கெடைக்கிறதில்ல. அதினால காப்பாருக்கு ஆள் அனுப்பி வாங்கியாரச் சொன்னேன். கோழியும் நாட்டாட்டுக் கோழிதான். அந்த சமையக்கரம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் முந்தரிப் பருப்பு அரைச்சி போடச் சொன்னேன். நல்ல ருசியா இருக்கும். ஏலக்கா போட்டிருக்கலாம். மணமா இருக்கும். இருந்திச்சி, முடிஞ்சி போச்சி கணேசு. சாப்பிடு, சாப்பிடு" என்றாள்.
"முட்டக் கோஸ் நல்லா இருக்கம்மா. ஊடான் போட்டிருக்கில்ல, அதுதான்!" என்று மல்லிகாவும் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"ரெண்டு முட்டையும் ஒடச்சிப் போட்டிருக்கலாம். எங்க, இந்த சமையக்காரம்மா சுத்த சோம்பேறி. நாம்ப ஒண்ண சொன்னா அது ஒண்ணச் செய்யும். பாரு பிரியாணில நெய்யே காணும்!"
மேசையில் மட்டும் சாப்பாடு நிரம்பி வழியவில்லை. அத்தையின் பேச்சிலும் மல்லிகாவின் பேச்சிலும் சாப்பாட்டைத் தவிர வேறு விஷயங்களே இருக்கவில்லை. கறிக்குத் தேங்காயைப் பிழிந்து போடுவதற்கும் அரைத்துப் போடுவதற்கும் என்ன வித்தியாசம் என்பது முதல் கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது வரை அத்தை அவனுக்கு விளக்கிக் கொண்டே இருந்தாள். மல்லிகாவும் அத்தையும் இப்படிப் பெருத்துக் கொழு கொழுவென்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டான்.
அத்தையின் சாப்பாடு மிக ருசியாகத்தான் இருந்தது. கணேசன் தன் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டான். ஆனால் ஓரளவுக்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை. பல்கலைக் கழகத்திற்குப் போனதிலிருந்து மேகி மீயும் ரொட்டிச் சானாயும் சப்பாத்தியும் தோசையுமாகக் கொறித்துக் கொறித்துச் சாப்பிட்டு பழக்கமாக்கிக் கொண்ட பின்னர் இப்படி தட்டு முழுக்கக் கொட்டிச் சாப்பிடுவது முன்பு போல் முடியவில்லை.
"இந்த மாமா மிந்தியெல்லாம் வந்தா நல்லா கலகலன்னு பேசும். இப்ப ஏன் இப்படி உம்மணா மூஞ்சாக் கிடக்குது?" என்று மல்லிகா சீண்டினாள்.
உண்மையில் அவர்களின் இடைவிடாத பேச்சுக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லைதான். சாப்பாட்டைப் பற்றி அவர்களைப் போல் இடைவிடாமல் வருணிக்க அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
"எனக்கு சாப்பிட்றதுக்கே நேரமில்ல. இதில பேச எங்க நேரம்? மல்லிகா! பேசிக்கிட்டே சாப்பிட்டா செரிக்காதுன்னு சொல்றாங்க. அதினால பேசாம சாப்பிடு!" என்றான்.
"ஆமா! என்னைக்குமா இப்படிப் பேசிக்கிட்டே சாப்பிட்றோம்! மாமா வீட்டுக்கு வந்திருக்கேன்னுதான் இத்தன பேச்சி!"
"ஆமாப்பா! இந்த மல்லிகா சாப்பாட்டத் தட்டில போட்டுகிட்டு போய் ஏதாவது வீடியோ பாக்க உக்காந்திரும். அப்புறம் பேச்சாவது, மூச்சாவது! தட்டில என்ன இருக்கின்னு கூட தெரியாது! இன்னைக்கு மாமாவ பாத்ததில இத்தன கொண்டாட்டம்" என்று அத்தையும் தாளம் போட்டாள்.
அந்த வீட்டின் நடைமுறைகள் ஏனோ அவனுக்கு வேடிக்கையாக இருந்தன. அந்த வீடு அவன் பழகிய வீடுதான். அங்குதான் அவன் வளர்ந்தான். இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கும் பழகியவைதான். ஆனால் பல்கலைக் கழகத்திற்குப் போன இந்த மூன்றாண்டுகளில் அந்தப் பழக்கங்களெல்லாம் அவனுக்கு மெது மெதுவாக அன்னியமாகிக் கொண்டு வந்தன.
முதலில் அந்த வீட்டின் பெருந்தீனி அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏராளமாகச் சமைத்து ஏராளமாகக் கொட்டுகிறார்கள். சமையலுக்கு ஆளிருந்தது. அந்த அம்மா ஏராளமாக ஆக்கிப் போடுவது தனது கடமை என ஆக்கிக் கொண்டிருந்தாள். அத்தையோ மல்லிகாவோ அதைக் கண்டு கொள்வதில்லை.
காலையில் ஒன்பது வரை தூங்கினார்கள். 10 மணிக்குக் கறியுடன் இட்டிலி தோசை பண்ணிப் பசியாறி பிற்பகலில் தூங்கி எழுந்து மூன்று மணிக்குச் சாப்பிட்டார்கள். பிற்பகலிலும் இரவில் ஒரு மணி வரையிலும் தமிழ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சினிமா இதழ்கள் இரைந்து கிடந்தன. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே தமிழ்ப்பத்திரிகை வாங்கி முக்கியமாகச் சினிமாச் செய்தியைத்தான் படித்தார்கள். மல்லிகாவுக்கு எல்லா நடிகர் நடிகையர் பேரும் தெரிந்திருந்தது. அவர்கள் அந்தரங்க வாழ்கைகளை அறிந்து வைத்திருந்தாள். அதைப் பற்றியே சளசளவென்று பேசினாள்.
அத்தைக்குப் படிப்பில்லை. அத்தை கணவர் சுமாராகப் படித்து வியாபார மூளையை வளர்த்துக் கொண்டவர். அத்தைக்குப் பெரும் பணத்தைத் தேடி வைத்து விட்டு இளம் வயதில் செத்துப் போனார். அத்தை மல்லிகாவைப் படிக்க வைக்க முயன்று தோற்றுப் போனாள். அந்த வீட்டில் எங்கும் அறிவின் அறிகுறிகள் இல்லை. பணம் நிறைய இருந்தது. கொச்சையான ஆடம்பரம் இருந்தது.
அத்தை எந்த நேரமும் மொத்தமாக ஒரு அட்டிகை போட்டுக் கொண்டிருந்தாள். அதை ஆண்டுக்கொரு முறை அழித்து புதிதாகச் செய்வாள். மூக்கில் வைரமும் விரலில் நவரத்தினங்களாகவும் போட்டுக் கொண்டிருந்தாள். அவளும் மல்லிகாவும் அடிக்கடி நகைப் பெட்டியை வெளியே எடுத்து நகைகளை எடுத்து வரிசைப் படுத்தி அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள். "இது உனக்கு, இது எனக்கு!" என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மாமா வாங்கிப் போட்டிருந்த வீடுகளிலிருந்து வாடகை வந்து கொண்டிருந்தது. அவருடைய சேமிப்புப் பணத்தை எடுத்து இரண்டு மூன்று நம்பிக்கையான ஆட்கள் மூலமாக அத்தை வட்டிக்கு விட்டிருந்தாள். அந்த வட்டித் தரகர்கள் வீட்டுக்கு வந்து அத்தையுடன் உட்கார்ந்து பேசும் போது பதினைந்து வட்டி இருபது வட்டி என்று பேரம் நடப்பதை கணேசன் கேட்டிருக்கிறான். ஆனால் அதில் எதிலும் மல்லிகாவையோ அல்லது கணேசனையோ அத்தை ஈடுபடுத்துவதில்லை. அந்த விஷயங்களையெல்லாம் அந்தரங்கமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த வட்டித் தரகர்கள் அத்தையையும் அத்தை மகளையும் ஏகமாகக் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வரும் போதெல்லாம் பழம், இனிப்பு என்று வாங்கி வருவார்கள். சில சமயங்களில் உடும்பு இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி என்றும் கொண்டு வருவார்கள். ஊருக்குப் போய்விட்டு வரும் நேரங்களில் அத்தைக்குப் பட்டுப் புடவை நகை என்று வாங்கி வந்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்து விட்டு இன்னும் நான்கைந்தை அகோர விலைக்கு விற்றுச் செல்வார்கள்.
அத்தைக்கு அவர்கள் தன் மேல் காட்டும் கரிசனம் - அது தன் பணத்துக்காகத்தான் என்று தெரிந்திருந்தாலும் - வேண்டியிருந்தது. அவளுக்கு வேறு உறவினர்கள் இல்லை. இருக்கின்ற சிலரையும் தன் பணத்தைக் கொள்ளையிட வந்தவர்கள் என்று பேசி விரட்டிப் பகைத்துக் கொண்டாள். தன் அண்ணனை - கணேசனின் அப்பாவை - மட்டும் பணத்தையும் பொருளையும் கொஞ்சம் கொஞ்சம் காட்டிக் கையில் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவர்களையும் அவள் வீட்டுக்குள் அண்ட விடுவதில்லை. அவளே போய் அவர்களைப் பார்த்து ஏதாகிலும் பொருள்கள் வாங்கிக் கொடுத்துக் கொஞ்சம் காசையும் கையில் கொடுத்து விட்டு தன் வீட்டுப் பக்கம் வரத் தேவையில்லாமல் ஆக்கி விடுவாள்.
கணேசன் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன் வீட்டுக்குத்தான் முதலில் வர வேண்டும் என்று கட்டளை போட்டிருந்தாள். அப்படி அவன் வந்தவுடன் ஓரிரு நாட்கள் அவனை வீட்டில் வைத்திருந்து தானே தனது டிரைவர் வைத்த காரில் அவனை ஏற்றிச் சென்று அவர்களுக்குக் காட்டிவிட்டு கையோடு திரும்பக் கொண்டு வந்து விடுவாள். போகும் போதே ஒரு டஜன் பீர் போத்தல்களையும் காரில் வாங்கிப் போட்டுக் கொள்வாள். அதற்காகவே அப்பா அவளை அமோகமாக வரவேற்பார். அதற்குப் பிறகு அந்த பீரைத் திறப்பதிலும் குடிப்பதிலும் உள்ள அக்கறை வேறு எதிலும் அவருக்கு இருக்காது.
அதே வேகத்தில் பக்கத்து எஸ்டேட்டில் கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு வாழும் அவனுடைய அக்காளையும் கொண்டு கொஞ்ச நேரம் காட்டிவிட்டு வந்து விடுவாள். அக்காளின் கணவருக்கும் சில பீர் போத்தல்கள் சென்று சேரும். அங்கும் கொண்டாட்டங்கள்தான் இருக்குமே தவிர எந்த முக்கியமான விஷயத்தையும் பேச முடியாது.
கணேசனின் அண்ணன் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போய் அங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது தீபாவளிக்கு வந்து ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக் கொண்டு போவதோடு சரி!
இந்த முறையும் நாளைக்குக் காலையில் இப்படி ஒரு மின்னல் வேகப் பயணத்தை அத்தை ஏற்பாடு செய்திருந்தாள்.
சாப்பாடு முடிந்து இரண்டு பேரும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கணேசன் சொன்னான்: "அத்தை! நாளைக்கி அப்பா வீட்டுக்குப் போனா நான் அங்கயே ரெண்டு நாள் தங்கிட்டு வரலான்னு பாக்கிறேன்!" என்றான்.
"ஏன் கணேசு?" அத்தை அதிர்ந்து போய்க் கேட்டாள். "இங்க என்னா கொற உனக்கு?"
"இங்க ஒரு கொறயும் இல்ல அத்த! அம்மாவோட ஒக்காந்து கொஞ்சம் பேசணும். எப்பவுமே அவசரமா திரும்பிட்றோம்... அதினாலதான்!"
"ஐயோ, என்னா பேசப் போற அவங்களோட? அந்த அசிங்கத்தில போயி எப்படித்தான் இருக்கப் போறியோ! சரி, ரெண்டு நாள் வேணாம்! ஒருநாள் இருந்திட்டு வந்திடு!" என்றாள்.
"ஆமாம் மாமா! ஒரு நாள் போதும். வந்திடு எனக்குப் பொளுதே போவாது!" என்றாள் மல்லிகா.
*** *** ***
அத்தை வந்ததிலிருந்து வீடு கோலாகலமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் தான் வந்திருப்பதை விட அத்தை வந்திருப்பதையே பெரிதும் விரும்பியிருப்பது போலத் தெரிந்தது. வழக்கமான பீர் போத்தல்களும், ஆட்டு இறைச்சி இரண்டு கட்டியும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அத்தை.
அத்தைக்கு கணேசனை அங்கு விட்டுச் செல்ல விருப்பமே இல்லை. போகும் போது "நாளைக்கு மத்தியானம் டிரைவரை அனுப்பி வைக்கிறேன். வந்திடு கணேசு!" என்று சொல்லிச் சென்றாள்.
"மாமா! மறக்காம வந்திடு! இல்லன்னா ஒங்கிட்ட பேசமாட்டேன்!" என்று சிணுங்கிப் போனாள் மல்லிகா.
அத்தை திரும்பிப் போவதற்கு முன்னமே அப்பா போதையில் சாய்ந்து விட்டார். அத்தையின் பீர் போத்தல்களில் மூன்றைக் காலி செய்திருந்தார்.
அப்பா தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் கணேசன்: "ஏம்மா! அப்பாவ ஏன் இப்படி குடிக்க விட்ற? உடம்பு என்னத்துக்கு ஆகும். இப்பவே பாரு, அவருக்குக் கையெல்லாம் ஆடுது. எதுவுமே ஞாபகத்தில இருக்கிறதில்ல. இப்படியே இருந்தா எப்படி?"
அம்மா சட்டென்று பதில் சொன்னாள்: "இல்ல கணேசு. அப்பாவுக்கு வேல கஷ்டமான வேல பாரு! செம்பன கொலய அறுக்கணும். தூக்கணும். லோரில போடணும். உடம்பு வலி போறதுக்கு இப்படிக் கொஞ்சம் குடிப்பாங்க, அப்புறம் தூங்கிடுவாங்க. ஒரு வம்பு தும்புக்கு போவ மாட்டாங்க!"
"உடம்பு வலிக்கு புஷ்டியான ஆகாரம் சாப்பிடணும். நல்ல வைட்டமின்கள் சாப்பிடணும். குடியா அதுக்கு மருந்து?"
"நான் நல்ல சாப்பாடுதான போட்றேன். அவங்கதான் சாப்பிட மாட்றாங்க. குடிக்கலேன்னா தூங்க மாட்டாங்க. வெளிக்குப் போக மாட்டாங்க! ரொம்ப கஷ்டப் படுவாங்க! என்னதான் போட்டு திட்டுவாங்க, அடிப்பாங்க!"
இந்த அம்மாவே இப்படி குடி என்பது முக்கியம்தான் என்பது போலப் பேசினால் இந்த அப்பாவை யார்தான் திருத்த முடியும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அம்மாவின் இந்த அறியாமையாவது சுட்டிக் காட்ட வேண்டும் என்று எண்ணினான்.
"ஏம்மா! நீயுந்தான வேல செய்ற! ஒனக்கு ஒடம்பு வலியில்லியா? நீ ஏன் குடிக்கிறதில்ல? குடிக்காம எப்படி ஒன்னால தூங்க முடியுது?" என்று கேட்டான்.
"எனக்கு எதுக்கு குடி? சீ, நான் வாய்லியே வச்சதில்ல! நான் ரெண்டு இஞ்சியத் தட்டி ஒரு கசாயத்த வச்சிக் குடிச்சன்னா எல்லாம் சரியாப் போயிடும். மரக்கட்ட மாதிரி தூங்கிடுவேன்." பெருமையுடன் சொன்னாள்.
"அப்ப அந்தக் கஷாயத்த அப்பாவுக்கு வச்சிக் குடுத்தா என்னா?"
"அதுக்கா? கசாயமா? நல்லா இருக்கு நீ பேசிறது! அதுக்கு தண்ணிதான் கசாயம். அத விட்டு கசாயத்தக் கொண்டி குடுத்தா என் மூஞ்சிலியே ஊத்தி, என் மயரப் புடிச்சி இளுத்து அடிக்கும்."
"அடிச்சா நீ வாங்கிக்குவியா!"
"வாங்கிக்காம என்ன பண்றது? புருஷனாப் போயிடுச்ச! பொம்பிளயா வந்தவ வாங்கிக்கத்தான் வேணும்!"
இருபதாம் நூற்றாண்டும் பெண் விடுதலை இயக்கமும் அவனது பெற்றோர்களை எப்படித் திரும்பிப் பார்க்காமலேயே தாண்டிப் போயின என்று அவனுக்கு விளங்கவில்லை. அவனுடைய பெற்றோர்கள் பழைமையில் மரத்துப் போனார்கள். அவர்கள் மூளையின் உயரணுக்கள் செத்து விட்டன. அவனால் அவற்றுக்கு உயிரூட்ட முடியுமா?
அன்று பின்னிரவில் அப்பா கொஞ்சம் போதை தெளிந்து எழுந்திருந்தார். அம்மாவை எழுப்பி சாப்பிட உட்கார்ந்தார். மத்தியானம் செய்த ஆட்டுக் கறியை சூடாக்கிப் பரிமாறினாள் அம்மா. கணேசன் எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.
"கணேசு, சாப்பிட்டியா?" என்று கேட்டார்.
"அத்தையோட உக்காந்து அப்பதே சாப்பிட்டனே, நீங்க பாத்திட்டுத்தான இருந்திங்க அப்பா! அது கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?"
"ஆமா, ஆமா! எங்க அது, தங்கச்சி போயிடுச்சா?"
"போயிட்டாங்க!"
"எங்கிட்ட சொல்லிக்கிலிய!"
"நீங்க படுத்துத் தூங்கிட்டிங்க!"
"ஓஹோ! கொஞ்சம் தண்ணி சாப்பிட்டன்ல! ஒடம்பு அசதி வேற. அதான் தூங்கிட்டேன்."
தன் மனைவியைப் பார்த்தார். "தண்ணி இன்னும் மிச்சமிருக்கா புள்ள!"
ஒரு போத்தல் மீதமிருந்தது. எடுத்து வர விருட்டென்று எழுந்தவளை கணேசன் கைப்பிடித்து உட்கார வைத்தான்.
"அப்பா! இப்படி நீங்க தண்ணி சாப்பிட்றது ஒடம்புக்கு நல்லதில்லப்பா. கொஞ்சம் கொஞ்சமா கொறச்சி, அப்படியே விட்டிருங்கப்பா!" என்றான்.
"அட, நான் ரொம்ப சாப்பிட்றதில்ல கணேசு. இன்னைக்கு தங்கச்சி வாங்கிட்டு வந்து ஊத்திச்சா ரெண்டு போத்த சாப்பிட்டேன். இல்லன்னா ஒரு நாளக்கு அரை போத்ததான். அவ்வளவுதான்!"
"இல்லப்பா! நான் கேள்விப் பட்டேன். தினமும் ரெண்டு மூணு போத்தல் குடிக்கிறிங்களாம். இன்னைக்கு நீங்க மூணு போத்தல் குடிச்சத நானே பாத்தேனே! இப்படிக் குடிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?"
"இல்லவே இல்லயே! இன்னைக்கு உங்க அத்தை வந்திச்சி, நீ வந்திருக்க, அந்த சந்தோஷத்தில குடிச்சேன். இல்லன்னா ரொம்ப வச்சிக்க மாட்டேனே!"
அவன் அவரை இரக்கமாகப் பார்த்தான். இவர் முழுகப் போகும் மனிதர். நான் கரையேற்றத் துடிக்கிறேன். இல்லை நான் முழுகத்தான் போகிறேன், என்னை விடு என்று இன்னும் ஆழப் போகிறார்.
"ஆளு இப்படி மெலிஞ்சிப் போயிருக்கிங்க! கையெல்லாம் ஆடுது. மூச்சு வாங்குது. இதுக்கெல்லாம் குடிதான் காரணம்னு தெரியிலியா உங்களுக்கு?"
"வேல ரொம்ப கஷ்டம் கணேசு. நான் என்னா ஆபிசில ஒக்காந்து கிராணி உத்தியோகமா பாக்கிறேன்? செம்பன கொல தள்ளணும். ஒரு கொல என்னா கனம் தெரியுமா? ஒன்னால ஒரு கொல தள்ள முடியுமா? ஏன் கை ஆடாது? ஆனா கொல தள்ளும் போது வந்து பாரு! கையும் காலும் ஸடெடியா இருக்கும்!"
பல தடவை விழுந்திருக்கிறார். ஒரு முறை கால் முறிந்து ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருந்தார். எல்லாம் அவருக்கே மறந்து விட்டது.
கணேசன் பெருமூச்சு விட்டான். "அப்பா. இன்னும் ரெண்டு வருஷத்தில எனக்குப் படிப்பு முடிஞ்சிரும். நான் வேலைக்குப் போன பிறகு நீங்களும் அம்மாவும் வேலய விட்டிருங்க. என்னோட வந்து இருங்க. சௌக்கியமா இருங்க. ஆனா அதுக்குள்ள இந்தக் குடிப் பளக்கத்த விட்டிரணும். இது அசிங்கமான பளக்கம். அநாகரிகமான பளக்கம்!"
அப்பா அம்மாவை முறைத்துப் பார்த்தார்." ம்... கேட்டுக்கிட்டியா? புள்ள ரொம்ப படிச்சிருச்சி பாத்தியா? அதுதான் அப்பனுக்கே புத்தி சொல்லுது."
"அப்பா! நான் நல்லதுக்குத்தான் சொல்றேன். இந்தக் குடியினால பின்னால பெரிய பிரச்னைகள்ளாம் வரும். உடம்புக்கு ஆகாது. உடனே விட்ருங்கன்னு சொல்லுல! கொஞ்சங் கொஞ்சமா விடுங்க."
"நீயா எனக்குத் தண்ணி வாங்கித் தர்ர? உன் கிட்ட நான் கேட்டனா? உன் காசிலியா குடிக்கிறேன்? நான் சம்பாதிக்கிறேன், நான் குடிக்கிறேன்!" கத்தினார்.
"நீங்க சம்பாதிச்சி நீங்க குடிக்கல. உங்க சம்பாத்தியம் சாப்பாட்டுக்கே பத்தாது. அத்தை கொண்ணாந்து குடுக்கிற காசில குடிக்கிறிங்க. அது ஒரு பெருமையா உங்களுக்கு?"
"என் தங்கச்சி எனக்குக் குடுக்கிறா! நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?" அவர் கையாட்டிய வேகத்தில் சோறு எங்கணும் தெறித்தது.
பேச்சு வேறு முரட்டுத் தனமான திக்கில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்கு போதை தெளிந்திருக்கலாம். ஆனால் அறியாமை தெளியவில்லை. எப்போது தெளியும்? தெளியுமா? தெரியவில்லை.
கணேசன் காசை அவ்வப்போது மிச்சம் பிடித்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறான். அதை அப்பாவிடம் இப்போது சொல்ல முடியாது. சொல்லுகின்ற தைரியம் அம்மாவுக்கும் இல்லை.
இந்த அப்பாவின் இயலாமையால்தான் அவன் அத்தை வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அத்தை அன்பாகத்தான் சோறு போடுகிறாள். மகன் போல வைத்துக் கொள்ளுகிறாள். ஆனால் அப்பா அம்மா இருக்கும் போதே அத்தை வீட்டுச் செலவில் படிப்பதும் சாப்பிடுவதும் வெட்கம்தான். ஆனால் யாருக்கு வெட்கம்? தனக்கா தன்னைப் பெற்றவர்களுக்கா?
கணேசன் எழுந்து சென்றுப் படுத்து விட்டான். அப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து போத்தலைக் கையில் தூக்கிக் கொண்டு வெளியில் போய் உட்கார்ந்து கொண்டார். அம்மா ஒரு பேச்சும் பேசாமல் போய்ப் படுத்து விட்டாள். அப்பாவின் குரல் அவனுக்கு மட்டுமல்லாமல் அடுத்துள்ள ஐந்து வீடுகளுக்கும் அந்த பின்னிரவில் ஒரு நாயின் ஊளையைப் போல வழிந்து கொண்டே இருந்தது.
"புத்தி சொல்ல வந்திட்டானுங்க புத்தி! இவனுங்களா வந்து கொலை தள்ளுறானுங்க? கொலையத் தூக்கி லோரில போட்டுப் பாத்திருக்கியா? பாம்பு கடிச்சா வந்து பாப்பியா? அப்பனுக்கு ஒடம்பு வலிக்கு ஒரு தண்ணி வாங்கிக் குடிக்க அஞ்சு வெள்ளி தரதுக்கு நாதியில்லாத நாய்க்கெல்லாம் பேச்சில கொறச்ச இல்ல! எங்கிருந்து வந்த? அப்பன் இல்லாம வந்தியா? பெத்ததுக்கு ஒரு நன்னியுண்டா...? படிக்கிறானுங்களாம் படிப்பு...!"
பெற்றதுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்று கணேசன் தன்னையே கேட்டுக் கொண்டான். பன்றிகளும்தான் பெற்றுப் போடுகின்றன. "என்னைப் பன்றியாகப் பெற்றாயே!" என்று நன்றி சொல்ல வேண்டுமா? பெற்றது ஒரு பெருமையா? பெறாமல் இருந்திருக்கலாமே! இந்தத் துன்பங்களுக்கெல்லாம் இடம் இல்லாமல் போயிருக்குமே!
கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மா தூக்கிக் கொடுத்த அழுக்குப் பிடித்த தலையணையின் நாற்றமும் வெளியிலிருந்து வரும் இடைவிடாத பேச்சின் நாற்றமும் புழுக்கள் போல அவன் மனசிலும் உடம்பிலும் ஊர்ந்து கொண்டே இருந்தன.
அத்தையின் காரும் டிரைவரும் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று ஏங்க ஆரம்பித்தான்.
இன்னொரு கவலையும் அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. அகிலா என்னும் அந்த அழகிய மலரை இந்தச் சாக்கடைக்குள் எப்படிக் கொண்டு வந்து வைப்பேன் என்றும் கவலைப் பட ஆரம்பித்தான்.
***
அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில் ஒளி பாய்ச்சும் சக்தி இருக்கும் என எதிர்பார்த்தான். ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக அகிலா தயங்கித் தயங்கிப் பேசினாள்.
"ஏன் அகிலா தயக்கமா பேசிற?" என்று கேட்டான்.
"இல்ல கணேஷ், நேத்து வீட்டில ஒரு பேச்சுவார்த்தை நடந்திச்சி. யாருக்கு •போன் பண்ணி இப்படி ரகசியமாப் பேசிறன்னு என்னப் பிடிச்சிக்கிட்டாங்க!"
"இனிமே •போன் பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா?"
"சீச்சீ! என் அப்பா அம்மா அப்படிப் பட்டவங்க இல்ல. அப்படியெல்லாம் கட்டுப்பாடு போடல. ஆனா ஒரு சாதாரண நண்பராக இல்லாம, அதற்கு மேல யாரோட பழகினாலும் எங்ககிட்ட வந்து முதல்ல அறிமுகப் படுத்திட்டு பழகுன்னு அப்பா சொல்லிட்டாரு!"
"என் பேர சொல்லிட்டியா?"
"சொல்லிட்டேன். ஆனா முழுக்கவும் சொல்லல. அப்பாவோட அந்த அறிவுரைக்குப் பிறகு உங்கள முறையா வீட்டுக்குக் கொண்டாந்து அறிமுகப் படுத்தாம உங்களோட ரொம்ப நேரம் பேசிறது சரியில்லன்னு படுது."
கணேசன் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தான்.
"என்ன பேசாம இருக்கிங்க கணேஷ்?"
"என்ன சொல்றதுன்னு தெரியில. உங்கூட •போன்ல பேசாம எப்படி இருக்கிறதுன்னு நெனச்சா கவலையா இருக்கு!"
"கொஞ்சம் அவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக்குவோம் கணேஷ்! அடுத்த பருவம் தொடங்கினவுடன ஒரு நாள் எங்க வீட்டுக்கு நாம ரெண்டு பேரும் சேந்து வருவோம். எங்க பெற்றோர்களுக்கு உங்கள அறிமுகப் படுத்தி வச்சிர்ரேன்!"
"உங்க வீட்டுக்கு வர்ரதுக்கு பயமா இருக்கு அகிலா!"
"பயப்படாதீங்க! அப்பா ரொம்ப நல்லவர். பண்பானவர். தன்னுடைய எதிரியக் கூட சத்தமா பேசமாட்டார்!"
"என்ன ஏத்துக்குவாங்களா உக்க பெற்றோர்!"
"நிச்சயமா! உங்கள அவங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்! இப்பவே அந்த ரேகிங் சம்பவத்தில நீங்க எனக்கு உதவி பண்ணினதக் கேட்டு அப்பாவுக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் உங்க மேல!"
"சரி அகிலா!"
"வச்சிரட்டுமா?"
"சரி அகிலா!"
வைக்கவில்லை. தொடர்ந்து டெலி•போனை காதில் வைத்துக் கேட்டவாறிருந்தான்.
"அப்புறம் ஏன் வைக்காம இருக்கிங்க?"
"நீதானே வச்சிர்ரேன்னு சொன்ன, வச்சிர வேண்டியதுதானே!"
"ஊஹ¥ம், நீங்க மொதல்ல!"
"முடியாது நீதான்!"
கொஞ்ச நேரம் கொஞ்சல் சிணுங்கல்களைக் கேட்டு விட்டு •போனைக் கீழே வைத்தான்.
*** *** ***
அன்றிரவு சாப்பாட்டின் போது மல்லிகா பெரிதாக முறையீடு செய்தாள்: "பாரும்மா இந்த அத்தான் இப்பல்லாம் எங்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குது. சிரிக்கிறது கூட இல்ல! ஒரு புஸ்தகத்த எடுத்து படிச்சிக்கிட்டே இருக்கு. இல்லன்னா டெலி•போன்ல யார் கிட்டயோ ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கு!"
"ஏய் மண்டு! நான் யுனிவர்சிட்டியில படிக்கிறேன்னு தெரியுந்தான உனக்கு? படிக்கிறவன் புஸ்தகத்த எடுத்துப் படிக்கிறதில என்ன ஆச்சர்யம் ஒனக்கு?" என்று திட்டினான்.
"அதான் உங்க யுனிவர்சிட்டி லீவு விட்டுட்டாங்கள! அப்புறம் ஏன் லீவிலியும் படிக்கிற?"
"யுனிவர்சிட்டி லீவு உன் பள்ளிக்கூட லீவு மாதிரியில்ல. லீவிலியும் எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. படிக்கிறதுக்கும் நெறயப் பாடம் இருக்கு!"
"•போன்ல மாத்திரம் எப்படி ரொம்ப நேரம் பேசிற?"
"அது எல்லாம் பாட சம்பந்தமாத்தான். என் •பிரன்ட்சுங்க சந்தேகம் கேக்கிறாங்க. நான் சொல்றேன்!" பச்சையாகப் பொய் சொன்னான்.
"சரி. பரவால்ல! இன்னைக்கு ஒரு நாளைக்கு என்ன படம் பாக்க கூட்டிக்கிட்டுப்போ. கிள்ளான்ல "எஜமான்" படம் விளையாடுது. ரஜினி படம்!"
கணேசனுக்குச் சலிப்பாக இருந்தது. "படமா? தோ பாரு மல்லிகா! நான் படமெல்லாம் பாக்கிற மூட்ல இல்ல! நீ எப்போதும் போற மாதிரி உங்க அம்மாவோட போயிட்டு வா! என்ன விட்டுடு!" என்றான்.
"எல்லாருமா போயிட்டு வருவோமேப்பா. புள்ள ஆசயா கேக்கிதில்ல!" என்று அத்தையும் சிபாரிசுக்கு வந்தாள்.
"இல்ல அத்த! நீங்க போயிட்டு வாங்க!" என்றான்.
அத்தை அவனைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். "என்னமோ உங்கப்பா ஊட்ல இருந்து திரும்பினதில இருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கே! என்ன நடந்திச்சி அங்க?"
அத்தையைப் பார்த்தான். இவளிடம் எந்த அளவுக்கு மனம் விட்டுச் சொல்ல முடியும் என்பது அவனுக்கு நிச்சயமில்லாமல் இருந்தது. ஆனால் சொல்லத்தான் வேண்டும். என் நலனில் அக்கறை உள்ளவள். இந்த விஷயத்தில் சம்பந்தம் உள்ளவள். ஆகவே தயங்கித் தயங்கிச் சொன்னான்.
"இல்ல அத்த! அப்பா ரொம்ப குடிக்கிறாரு. அம்மா ஒண்ணும் தெரியாதவங்களா இருக்காங்க. அப்பாவுக்குச் சொல்லி மாத்திறதுக்கு அவங்களுக்கு முடியில. நான் அதச் சொல்லி கொஞ்சம் திருத்தலான்னு பாத்தா கொஞ்சங்கூட நான் சொல்றது அவங்களுக்கு விளங்க மாட்டேங்குது. நேத்து கொஞ்சம் பேசினதும் அப்பா கோவிச்சிக்கிட்டாரு. ராத்திரி முழுக்க தனியா உக்காந்து என்னையே திட்டிக்கிட்டு இருக்காரு!"
"இவ்வளவுதானா?" என்று 'பூ' என்று அந்த விஷயத்தை ஊதித் தள்ளினாள் அத்தை. "இது தெரிஞ்ச விசயந்தான கணேசு! அண்ணங் குடிச்சிக் குடிச்சி சீரளிஞ்சாச்சி! மூளையே செத்துப் போச்சி! அதுகிட்ட போய் சொன்னா இதெல்லாம் எடுபடுமா? உங்கம்மா இருக்கே, அதுக்கு ஒரு எளவும் வௌங்காது. நான் ஒருத்தி இருந்து ஆதரிச்சி வர்ரதினால ரெண்டு கௌங்களும் ஒருமாதிரியா இருக்கு. இல்லன்னா அவங்க கதி என்னாவும்? உங்கப்பா சம்பாதிக்கிறது அதோட பாதி குடிக்குக் கூடக் காணாது"
கணேசன் மீண்டும் தயங்கினான். அத்தையிடம் சொல்ல வேண்டிய விஷயம் இருந்தது. ஆனால் அவள் மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது என்று தயங்கினான். அத்தை கேட்பாளா? அல்லது அப்பாவைப் போலவே கோவித்துக் கொண்டு விவாதத்தைத் திசை திருப்புவாளா என்று தெரியவில்லை. இருந்தும் மெதுவாகச் சொன்னான்:
"அத்த! நீங்களாவது அப்பாவுக்கு இப்படி ஏராளமா தண்ணி வாங்கிக் குடுக்கிறத நிப்பாட்டலாமில்ல! நீங்க குடுக்கிறத நிறுத்தினா அவருக்கு இவ்வளவு குடிக்க வழியில்லியே!"
"ஆமாம்மா! நீதான் இப்படி தண்ணி வாங்கி வாங்கிக் குடுத்து அவங்களக் கெடுக்கிற!" என்று மல்லிகாவும் குறுக்கிட்டுப் பேசினாள்.
"சீ, நீ சும்மா கெட!" என்று அதட்டினாள் அத்தை. "சாப்பிட்டல்ல, போய் கைய களுவு!" மல்லிகா பயந்து போய் சாப்பாட்டுத் தட்டை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.
"என்னா பேசிற கணேசு? என்னா பேசிற?" அத்தையின் சுருதி ஏறிவிட்டது. "நான் குடிக்க வாங்கிக் குடுக்கலன்னா என்னா ஆவும் தெரியுமா? ஒங்கம்மாதான் ஒத பட்டு சாவும். அது சம்மதமா ஒனக்கு? இப்பவே ரெண்டு நாளக்கி ஒரு தடவ அடி ஒததான். உங்கம்மா யாருகிட்டயாவது சொல்லியனுப்பும். உடனே கொஞ்சம் காசு அனுப்பி வச்சி சமாதானப் படுத்துவேன். இல்லன்னா உங்கம்மா என்னைக்கோ செத்துப் போயிருக்கும்!"
கணேசன் சாப்பாடு இரங்காமல் தட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தை சொல்வதில் உள்ள கசப்பான உண்மை புரிந்தது. இந்தக் குடும்பத்தைக் கையில் போட்டுக் கொள்ள ஒரு உபாயமாகத்தான் அத்தை அவர்களோடு இத்தனை கரிசனமாக இருக்கிறாள். அப்பாவை மதுப் பித்தராக்கிவிட்டாள். இப்போது அவரால் அதில் இருந்து மீள முடியாது. அத்தை தண்ணி வாங்கி ஊற்றுவதை நிறுத்தி விட்டால் நிலைமை சீரடையப் போவதில்லை. இன்னும் மோசமாகத்தான் போகும்.
அத்தை சுருதி இறங்கி அன்பாகப் பேசினாள்: "கணேசு! இங்க பாரு! உங்க அப்பா அம்மா பத்தின கவல ஒனக்கு எதுக்கு? நான் இவ்வளவு காலம் அவங்களப் பராமரிக்கில? அந்த மாதிரி அதுங்க ரெண்டையும் நான் பாத்துக்கிறேன்! நீ கவலய உடு!"
"அதுக்கில்ல அத்த! எத்தனை நாள் அவங்கள உங்க பொறுப்பில விட்டிருக்க முடியும்? அடுத்த வருஷம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும். அந்த சமயத்தில அம்மாவும் அப்பாவும் ரிட்டையராயிடுவாங்க. ஒரு வேலையில அமர்ந்தப்புறம் நான்தான அவங்கள வச்சி பாக்கணும். அப்ப இந்த மாதிரியே இருந்தாங்கன்னா நல்லா இருக்குமா?" என்றான்.
"கணேசு! இதெல்லாம் எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா? இதப் பாரு! இந்த ரெண்டு கௌத்தோடயும் நீ இருந்து குப்பை கொட்ட முடியாது. இது ரெண்டையும் நீ மடியில தூக்கி வச்சிக்கிறதுக்கவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறேன்? ஒனக்கு அந்தக் கவலயே வேணாம். நீ பாட்டுக்கு படிச்சி உத்தியோகம் பாக்கிறதப் பாரு. இந்த கௌங்கள நான் கவனிச்சிக்கிறேன்!"
"என்ன சொல்றிங்க அத்தை? உங்க வீட்டிலியே கொண்டி வச்சிப் பாத்துக்கப் போறிங்களா?"
"சீச்சீ! நம்ப வீட்ல வச்சிக்கிறதா? நாறடிச்சிருவாங்க! என்ன சொல்றன்னா, இவங்க தோட்டத்த உட்டு வெளியேர்னவொண்ண இவங்களக் குடி வைக்கிறதுக்குன்னு இந்தக் கிள்ளான்லியே ஒரு கம்பத்து வீட்ட வாங்கிப் போட்டிருக்கேன். ஒரு சின்ன தோட்டங்கூடப் போட்டுக்கலாம். வசதியான வீடுதான். அங்க இருந்திட்டுப் போவட்டும். நாம அடிக்கடி போய் பாத்துக்குவோம்!" என்றாள்.
இதை நல்லெண்ணத்தோடு செய்கிறாளா, அல்லது அவர்களை நிரந்தரமாகத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்காக இப்படி சூழ்ச்சி பண்ணுகிறாளா என்பது அவனுக்கு விளங்கவில்லை.
"அத்தை! நீங்க சொல்றது எனக்கு விளங்குது. ஆனா பையன் படிச்சி முன்னேறிட்டவொடனே அப்பா அம்மாவ கவனிக்காம உட்டுட்டான்னு ஊர்ல பேச மாட்டாங்களா?"
"கணேசு! ஊர்ப் பேச்சா பெரிசு? ஊர்ல உள்ளவங்களா ஒனக்கு ஒதவி பண்ணுனாங்க? இல்ல உங்க அப்பா அம்மாதான் ஒன்னப் படிக்க வச்சிப் பெரிய ஆளா ஆக்கினாங்களா? யார் பேச்சயும் நீ சட்ட பண்ண வேணாம். நான் ஊர்ப் பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு ஒக்காந்திருந்தேன்னா இப்ப உங்க மாமா விட்டுட்டுப் போன இத்தன சொத்தையும் வச்சி ஆக்கியம் பண்ண முடியுமா? எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டிருக்கியா? இந்த ஊர்ல ஆளு மதிப்போட இருந்தா முன்னுக்குப் பாக்கிற போது ஈ ஈன்னு இளிப்பாங்க. முதுகு திரும்பினவொண்ண "இதப் பாரு இந்தப் படிப்பில்லாத முண்டத்துக்கு எத்தன ராங்கி!"ம்பாங்க. இதையெல்லாம் சட்டை பண்ண முடியுமா? நீ ஏன் அதையெல்லாம் நெனைக்கிற? நீ பாட்டுக்கு படிப்ப முடிச்சி உத்தியோகம் பாத்துக்கிட்டு கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு. உங்க அப்பா அம்மா எம் பொறுப்பு. என் அண்ணனுக்கு அண்ணிக்கு சாகிற வரையில நான் கஞ்சி ஊத்திறேன். அவங்க ஒன்னத் தொந்திரவு பண்ணாம நான் பாத்துக்கிறேன். சரியா? கவலப் படாத! எங்க சிரி பாக்கலாம்?" என்றாள்.
கை கழுவி வாய் துடைத்துக் கொண்டு அந்தப் பக்கம் வந்த மல்லிகா அவன் தாடையைப் பிடித்து "ஆமா அத்தான், கொஞ்சம் சிரி!" என்று கொஞ்சினாள்.
ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தான். அதில் உயிர் இல்லாமல் இருந்தது. மல்லிகாவின் கையை லேசாகத் தள்ளிவிட்டான். அத்தை சொல்லும் முடிவு சுமுகமாக இருந்தது. ஆனால் அதில் ஏதோ ஒரு குறை இருப்பது போலும் இருந்தது. முன்பு அவனுடைய பெற்றோர்களின் பொறுப்புக்களையெல்லாம் அத்தை அபகரித்துக் கொண்டாள். இப்போது மகன் என்ற அவனுடைய பொறுப்புக்களையும் அபகரித்துக் கொள்ளப் பார்க்கிறாள்.
தனது பெற்றோர்களின் பொறுப்புக்களை அவள் ஏற்றுத் தன்னை வளர்த்து ஆளாக்கியதில் சம்மதம் இருந்தது. ஆனால் தனக்கு வயது வந்து வசதிகளும் வரும் காலத்தில் தனக்குரிய பொறுப்புக்களையும் அவள் ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்பது வேண்டாததாகத் தோன்றியது. அப்படியானால் தான் என்ன அத்தையின் விளையாட்டுக்களுக்கு ஏற்ப தலையாட்டுகின்ற ஒரு பொம்மையா? அதில் தனக்குப் பெருமை இல்லை எனத் தோன்றியது.
அவன் அப்பா நேற்றிரவு வாயிலிருந்து சோறு தெறிக்கப் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது: "நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?"
அத்தையிடம் மீண்டும் பேசினான்: "அதுக்கு இல்ல அத்த! நீங்க அவங்க மேல அன்பு காட்றது சரி! ஆனா நாளைக்கு மல்லிகாவுக்குக் கல்யாணம் காட்சின்னு ஒண்ணு நடந்த பிறகு அதும் அது புருஷனும் எதுக்கு இந்தக் கௌங்கள கட்டிக்கிட்டு மாரடிக்கிறிங்கன்னு கேட்டா என்ன செய்விங்க?"
அத்தை அதிர்ச்சியடைந்து அவனைப் பார்த்தாள். மல்லிகாவும் ஒன்றும் புரியாமல் குழம்பி அவனைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அங்கு குழப்பமான மௌனம் நிலவியது. அப்புறம் அத்தை திடீரென்று வெடித்துச் சிரித்தாள். எதற்குச் சிரிக்கிறாள் என கணேசனுக்குப் புரியவில்லை.
"என்ன அத்த! இது சிரிக்கிற விஷயமா?" என்று கேட்டான்.
"ஆமா! சிரிக்காம பின்ன என்ன பண்றது? கணேசு, ஒன் மனசில இருக்கிறது இப்பதான் எனக்குப் புரியிது! ஏன் புள்ள இப்படி பயந்து பயந்து தயங்கித் தயங்கிப் பேசுதுன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே இருந்தேன். இப்பதான் புரியிது!"
"என்ன புரியிது அத்த?"
"அதாவது, எங்கடா இந்த மல்லிகாவ எனக்குக் குடுக்காம வேற ஆளுங்களுக்கு அத்த கட்டி வச்சிறப் போறாளோங்கிற பயம் ஒனக்கு வந்திருக்கில்ல கணேசு? அப்படி ஆயிட்டா இந்த கௌட்டு அப்பாவையும் அம்மாவையும் யார் வச்சி பாக்கப் போறாங்க அப்படிங்கிற கவல வந்திருக்கில்ல கணேசு? அப்படித்தான? சொல்லு!"
குழம்பியிருந்தான். அத்தை வேறு மாதிரி அர்த்தம் பண்ணிக் கொண்டாள். இதற்கு ஆமாம் என்று சொல்வதா இல்லையென்று சொல்வதா என்று யோசித்துச் சொன்னான்: "அத்த! மல்லிகாவுக்கு என்ன விட ஒசந்ததா எத்தனையோ மாப்பிள்ளங்க கெடைப்பாங்கதான். நீங்க விருப்பம் போல கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான!"
"கணேசு! ஒனக்கு அந்த பயமே வேணாம். உங்கிட்ட சொத்து இல்ல, சொகம் இல்லன்னு எனக்குத் தெரியும். உன் அப்பா அம்மா முன்ன நின்னு ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற நெலமையில இல்லன்னும் எனக்குத் தெரியும். அவங்க எனக்கு சமமான அந்தஸ்து உள்ள ஜனங்க இல்லன்னும் தெரியும். ஆனா ரத்த சொந்தம் விட்டுப் போகுமா? நான் விட்ருவேனா? எத்தன ஒசந்த மாப்பிள்ளங்க இருந்தா என்னா? அதெல்லாம் எனக்குக் கால் தூசு. மல்லிகா ஒனக்குத்தான்னு அவ பொறந்தப்பவே போட்டு வச்ச கணக்கு. அத யாரு மாத்திறது?"
கணேசன் அயர்ந்து போயிருந்தான். மல்லிகா தனக்கு ஒத்த பெண் அல்ல என்று சொல்ல வாய் வரவில்லை. படிப்பிலும் அறிவிலும் முதிர்ச்சியிலும் அவள் இணையானவள் அல்ல. அழகில் கூட இணையானவள் இல்லை. உட்கார்ந்தே சாப்பிட்டு ஊளைச் சதை வைத்துப் போயிருக்கிறாள். அளவாகச் சாப்பாட்டு பயிற்சி பண்ணி உடம்பை இரும்பாக வைத்திருக்கும் அவனுக்குப் பக்கத்தில் அவள் புளி மூட்டை போல இருந்தாள். உணர்வில் அனுதாபமும் பாசமும் காட்டப்பட வேண்டிய ஒரு வெகுளித் தங்கையாக மண்டுத் தங்கையாக மனதில் நின்றாள். அண்மையில் அகிலா வந்து எல்லாவற்றுக்கும் அவனுக்கு இணையாக மனதுக்குள் உட்கார்ந்தவுடன் தனக்கு வாழ்க்கைத் துணையாக இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
ஆனால் அத்தை மல்லிகாவை எங்கோ தூக்கி வைத்திருக்கிறாள். மல்லிகாவின் தகுதிக்குத் தன் தகுதி குறைவாக இருப்பதாக நினைக்கிறாள். அப்படித் தகுதி குறைந்திருந்தும் உன்னை ரத்த சொந்தத்தால் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சலுகை காட்டிப் பேசுகிறாள். அத்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
இதை வேறு வகையில் அத்தைக்கு விளக்க வேண்டும் என எண்ணினான். தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படியாவது அவளுக்கு உணர்த்தி அவள் மனதை மாற்றி விட வேண்டும். இதை உரிய நேரத்தில் செய்யாவிட்டால் இது முற்றிப் போகும். காலம் கடந்து விடும்.
"அத்தை! பொறக்கும் போது கணக்குப் போட்டு வைக்கிறதுங்கிறதெல்லாம் அந்தக் காலத்தில. இந்தக் காலத்தில பிள்ளைங்களோட மனசப் பொறுத்துத்தான ஜோடி அமையும்? ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறது, மனசு ஒத்துப் போறது முக்கியம் இல்லியா? அதக் கேட்டுத் தெரிஞ்சிக்க வேணாமா? பெரியவங்க மட்டும் முடிவு பண்ணிட்டா போதுமா?" என்றான்.
அத்தை அவனை குழப்பமாக வெறித்துப் பார்த்தாள். அப்புறம் மீண்டும் வெடித்துச் சிரித்தாள்.
"என்ன அத்த, நான் சீரியசாப் பேசிக்கிட்டிருக்கேன் நீங்க சிரிக்கிறிங்கள!"
"சிரிப்புத்தான் வருது கணேசு ஒம் பேச்சக் கேட்டா! அதாவது, எங்கடா இந்த மல்லிகா வேற யாரையாவது மனசில வச்சிக்கிட்டு இருக்காளோன்னுதான கேக்கிற? ரெண்டு வருஷம் இப்பிடிப் பிரிஞ்சி போயி பினாங்கில இருந்திட்டமே, இவ வேற ஆளத் தேடிக்கிட்டாளான்னு ஒனக்கு கவலை வந்திரிச்சி, அப்பிடித்தான? ஏன் கணேசு? எம்பிள்ளய எனக்குத் தெரியாது? நான் அப்படியா பிள்ளய வளத்திருப்பேன்?"
மீண்டும் அத்தை தப்பாகப் புரிந்து கொண்டாள் என்று தெரிந்தது. மீண்டும் விஷயத்தைத் தலைகீழ் ஆக்கிவிட்டாள். அவளுக்கு விளக்கியாக வேண்டும். “அது இல்ல அத்த...” என்று ஆரம்பித்தவனை வெட்டி நிறுத்தின்னாள் அத்தை. "மல்லிகா! இங்க வாம்மா! நீயே மனசு தொறந்து உங்க அத்தான்கிட்ட சொல்லிடு! உங்க அத்தான் ஒரு வேள உனக்கு வேற ஆள் மேல விருப்பமான்னு கேக்குது! உங்க அத்தான கல்யாணம் பண்ணிக்க ஒனக்கு மனப்பூர்வமா சம்மதமா இல்லையான்னு சொல்லிடு!"
மல்லிகா ஏதோ சொல்ல வாய் திறந்தாள். அத்தை திடீர் என தடுத்தாள். "இரு, இரு! நான் உள்ள போயிட்றேன்! நான் இங்க இருந்தா எனக்குப் பயந்துகிட்டுதான் நீ சொல்றேன்னு உங்க அத்தான் நெனைக்கும்!"
அத்தை விருட்டென்று எழுந்து கை கழுவி விட்டு அறையை நோக்கிப் போனாள். "இப்ப பேசுங்க ரெண்டு பேரும்" என்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
கணேசன் மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் முகத்தில் குபீரென்று வெட்கம் ஏறியிருந்தது. "மல்லிகா! உங்கம்மா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! நான் சொல்ல வந்து என்னன்னா..."
திடீரென்று வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள். தன் நெஞ்சின் மேல் அதை வைத்து அழுத்திக் கொண்டாள். அவளுடைய மெல்லிய வழவழப்பான மேல்சட்டையின் ஊடே அவள் இள மார்புகளுக்கிடையே அவள் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருந்து அவன் விரல்கள் மூலம் ஊடுருவியது.
கண்களில் நீர் பனிக்க மல்லிகா பேசினாள்: "மாமா! உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்திச்சி? சந்தேகம் வர்ர மாதிரி நான் நடந்திக்கிட்டேனா? இப்ப சொல்றேன்! சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!"
***
"காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை" என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.
"காதல் என்பது மிகவும் சுலபமானது என நினைத்துக் கொண்டாயா? இந்த ஹேம்பர்கர் போல நினைத்தவுடன் வாங்கி சிரமமில்லாமல் சாப்பிட்டு நிம்மதியாக ஏப்பம் விடலாம் என நினைத்தாயா? சலித்துவிட்டது என்று தோன்றும்போது தூக்கி அதோ இருக்கிற குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடலாம் என நினைத்தாயா?" என்று அவனைக் கேட்டாள்.
வளாகத்துக்குத் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு முதுகை முறிக்கின்ற வேலைகள் இருந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசெக் ஆசியப் பிரதேச மாநாட்டிற்கான வேலைகள் குவிந்து கிடந்தன. ஐசெக் சங்கத் தலைவரும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும் விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு இந்த வேலைகளைக் கவனிக்க வெள்ளனத் திரும்பியிருந்தார்கள். ஜெசிக்காவும் திரும்பியிருந்தாள்.
திறப்பு விழாவுக்குக் கல்வி அமைச்சரை அழைப்பதிலிருந்து பேராளர்களுக்கு இருப்பிடம், உணவு முதலிய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்புக்களை எல்லாரும் சேர்ந்தே செய்தார்கள். ஏராளமான கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் செய்ய வேண்டியிருந்தது. பல்கலைக் கழக மாணவர் விவகாரப் பிரிவு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. ஏராளமான அரசாங்க அலுவலகங்களிலிருந்து ஏராளமான அனுமதிகள் பெற அலைய வேண்டியிருந்தது.
ஜெசிக்காவும் கணேசனும் அணுக்கமாக இருந்து பணியாற்ற வேண்டியிருந்தது. ஜெசிக்கா முற்றாக மாறிப் போயிருந்தாள். கணேசன் மீது அவளுக்கு இன்னும் அன்பு இருந்தது. ஆனால் முன்பு இருந்த பிரேமை இல்லை. ஒரு சக நண்பன் என்பதைத் தவிர்த்த எந்த உணர்ச்சியையும் அவள் காட்டவில்லை.
அவளுடைய புதிய காதலன் சுதாகரன் ஒரு சிறிய கார் வைத்திருந்தான். அவனுக்கு ஐசெக்கில் எந்த வேலையும் இல்லை என்றாலும் ஜெசிக்காவின் அருகில் இருப்பதற்காக அவனும் வளாகத்திற்கு விடுமுறை முடிவதற்கு முன்னரே திரும்பியிருந்தான். அவனிடம் நிறையப் பணமிருந்தது. ஒவ்வொரு இரவிலும் புதிது புதிதாக உடுத்திக் கொண்டு ஜெசிக்கா அவனோடு இரவு விடுதிகளுக்குப் போய் மறுநாள் காலையில் தூக்கம் மிகுந்த கண்களுடன் வந்து கொட்டாவி விட்டபடியே இருந்தாள்.
மத்தியான வேளைகளில் கணேசனும் அவளும் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு அடிக்கடி சாப்பிடப் போனார்கள். தன் காதல் வாழ்க்கையைப் பற்றி அவள் கூச்சமில்லாமல் பேசினாள். அவள் பேசக் கேட்டுக் கேட்டு கணேசனுக்கும் கூச்சம் விட்டுப் போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் அந்தரங்கங்களை அவன் சொல்ல ஆரம்பித்திருந்தான். அன்று மத்தியான வேளையில் 'மெக்டோனால்ட்ஸ் போய் ஹேம்பர்கர் சாப்பிட்டு வரலாம் வா' என்று அவள் அவனை இழுத்துக் கொண்டு போயிருந்த வேளையில் மல்லிகாவைப் பற்றி அவளிடம் சொல்ல வேண்டியதாயிற்று. "நீயில்லாவிட்டால் நான் செத்து விடுவேன்" என்று அவள் சொன்னதை ஜெசிக்காவிடம் சொன்னான். அவளை எப்படி சமாதானப் படுத்தி மாற்றுவது தனக்குத் தெரியவில்லை என்றான்.
அப்போதுதான் ஜெசிக்கா வாயிலிருந்து தக்காளி சாஸ் ஒழுகச் சிரித்தாள். "நானும் அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம், இல்லையா கணேசன்?" என்று கேட்டாள்.
"அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் போனதே!" என்று சிரித்தவாறு வேடிக்கையாகச் சொன்னான்.
"ஆனால் அதிர்ஷ்டம் எனக்குத்தான். எனக்கு ஒரு அருமையான காதலன் கிடைத்திருக்கிறான் பார். உன்னை விடப் பணக்காரன், புத்திசாலி. இவனை விட்டு உன்னை எப்படிச் சுற்றிக் கொண்டிருந்தேனோ தெரியவில்லை!" என்றாள்.
கணேசனுக்கு அவள் உண்மையாகச் சொல்லுகிறாளா விளையாடுகிறாளா என்பது தெரியவில்லை. "அவனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் அவனை விட மென்மையானவன் என்பதாய்த்தான் இருக்க வேண்டும். நான் அவனை விட நல்ல உணர்ச்சி மிக்க காதலனாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்புத்தான் விட்டுப் போய்விட்டது!" என்றான்.
ஜெசிக்கா அலட்சியமாகச் சிரித்தாள். "சுதா போல தீவிரமான காதலன்தான் எனக்குப் பொருத்தம். யாருக்கு வேண்டும் மென்மை? இப்போது பார், உனது மென்மையால் எந்தக் காதலியை ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறாய்! உறுதியான முடிவுகள் எதையும் உன்னால் செய்ய முடியவில்லை!" என்று அவனைப் பழித்தாள்.
"அப்படி இல்லை ஜெசிக்கா! என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை! அகிலாதான் என் காதலி. மல்லிகாவை ஒரு விளையாட்டுத் தோழியாகத்தான் இதுவரை கருதி வந்தேன். அவள் இத்தனை ஆசைகளைத் தானே உருவாக்கி வைத்திருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை. அவள் இத்தனை உறுதியாக இருப்பாள் என்றும் நினைக்கவில்லை!"
"அப்படியானால் 'எனக்கு வேறு காதலி இருக்கிறாள். என்னை விட்டுத் தொலை' என்று நேராகச் சொல்வதற்கென்ன? என்னிடம் நீ அப்படிச் சொல்லவில்லையா?"
"உன்னிடமும் அத்தனை கொடூரமாகச் சொல்லவில்லையே ஜெசிக்கா. நான் மென்மையானவன் என்று அப்போதே சொன்னேன் இல்லையா? உன்னிடம் மெதுவாகத்தானே எடுத்துச் சொன்னேன்!"
"அப்படியே அவளிடமும் சொல். தற்கொலை செய்து கொள்வேன் என்பதெல்லாம் ஒரு பயமுறுத்தல். ஒரு உத்தி. அவ்வளவுதான். எந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதில் உயிரை விட்டுவிட மாட்டாள்!"
ஜெசிக்காவின் பேச்சு அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும். கல்யாணத்துக்காகச் சத்தியம் பண்ணுவதையும் தற்கொலைசெய்து கொள்வதையும் இந்த மல்லிகா ஏராளமான மூன்றாந்தரத் தமிழ்ப் படங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆகவேதான் இந்த வசனங்கள் பேசுகிறாள். உண்மை வாழ்க்கை என்று வரும்போது புரிந்து கொள்வாள். அவளிடம் முறையாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
யோசித்தவாறு ஹேம்பர்கரைக் கடித்துக் கொண்டிருந்த போது அகிலா அடுத்த வாரம் திரும்பி விடுவாள் என்ற நினைப்பு வந்தது.
*** *** ***
வளாகம் கணேசனுக்கு வெறிச்சென்றிருந்தது. ஆனால் விடுமுறையாக இருந்தாலும் வளாகத்தில் மாணவர்கள் நடமாட்டம் இல்லாமல் இல்லை. வளாகத்துக்கு வெளியே இருந்து தொலைக்கல்வி மூலம் படிக்கும் ஓ•ப் கேம்பஸ் மாணவர்கள் நிறைய இருந்தார்கள். விடுமுறையில் மட்டுமே இவர்கள் சில வாரங்கள் வளாகத்துக்கு வந்து விரிவுரையாளர்கள் மூலமாக சில விரிவுரைகள் கேட்டு சந்தேகங்களும் கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.
அனைவரும் வேலை செய்கின்ற முதிர்ந்த மாணவர்கள். குடும்பம் உள்ளவர்கள். பள்ளிக்கூட நாட்களில் வறுமையாலும் வேறு காரணங்களாலும் உயர்கல்வி பெறும் வாய்ப்புக்களைத் தவற விட்டவர்கள். இப்போது அவர்கள் முகங்களில் உயர்கல்வி பெறுகின்ற தாகம் இருந்தது. நூலகங்களிலும் புத்தகக் கடைகளிலும் அவர்கள் கூட்டமே அதிகமாக இருந்தது.
குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு முழு நேர வேலையும் பார்த்துக் கொண்டு இவர்கள் படிப்பதற்குப் படும் கஷ்டம் கணேசனுக்குப் பரிதாபமாக இருந்தது. விரைவாக முன்னேறி வரும் மலேசியாவில் ஒரு பட்டம் இல்லாவிட்டால் தங்கள் முன்னேற்றம் முடங்கி விடும் என்பதை அவர்கள் கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் முன்னேறுவதைக் காணக் காண தாங்களும் அந்தப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்னும் மனநெருக்குதல் அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. ஆகவேதான் தற்காலிகமாகத் தங்கள் சுகங்களைத் துறந்து பட்டக் கல்வி பெற வந்திருக்கிறார்கள். சிலருக்கு ஏழு எட்டு வருடங்கள் நீடிக்கும் நீண்ட பயணமாக அது அமைந்து விடுகிறது.
அந்த வகையில் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எண்ண கணேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. படிப்பை கிரகித்துக் கொள்ள மூளையில் போதுமான அறிவு இருந்தது. முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மனதில் இருந்தது. பல்கலைக் கழகத்தில் எளிதாக இடம் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனக்குக் காவல் தேவதையாக ஒரு அத்தை வந்து சேர்ந்தாள்.
கிள்ளானை விட்டுப் புறப்பட்ட போது அத்தை அவனை மிக விசேஷமாகக் கவனித்துக் கொண்டாள். அவனுக்கு மருமகன் ஸ்தானம் உறுதிப் படுத்தப் பட்டுவிட்டதைப் போலவே நடந்து கொண்டாள். ஒவ்வொரு பருவ விடுமுறை முடியும் போதும் அவன் கையில் அவனுடைய கல்விக் கட்டணம் சாப்பாடு அனைத்துக்குமாக இரண்டாயிரம் வெள்ளி கொடுத்ததனுப்புவது வழக்கம். இந்த முறை 500 வெள்ளி அதிகமாகக் கொடுத்தனுப்பினாள்.
"நல்ல பொருளா வாங்கிச் சாப்பிடு, கணேசு! உடம்ப நல்லா பாத்துக்க! எதப் பத்தியும் கவலப் படாத! அத்தை இருக்கேன்ல! எல்லாத்தையும் கவனிச்சுக்குவேன்!" என்று சொல்லி பஸ் நிலையம் வரை வந்து வழியனுப்பினாள்.
"போய் மறக்காம •போன் பண்ணு மாமா!" என்று கொஞ்சி விடை கொடுத்தாள் மல்லிகா. ஏனோ அவளோடு அவனால் முன்பு போல சரளமாகப் பேச முடியவில்லை. "மாமா! தீவாளி வருது. மறந்திராம வந்திரு!" என்று நினைவூட்டினாள்.
"ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!" என்று அத்தையும் உற்சாகமாகச் சொன்னாள்.
"சரி அத்தை!" என்று பஸ் ஏறினான்.
எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு வளாகம் வெறுமையானதாகத்தான் இருந்தது. அகிலா அங்கே இல்லை என்பதே முக்கிய காரணம். அகிலா அவன் வாழ்க்கைக்குள் வந்ததிலிருந்து அவன் மனசுக்குள் புதிய புதிய உணர்ச்சிகள் வந்திருந்தன. அழகுணர்ச்சி அதிகமாக இருந்தது. அவள் பக்கத்தில் இருந்த வரை வளாகத்தின் அழகிய மரங்களிலும் செடிகளிலும், வளாகத்தின் எல்லையிலிருந்த குன்றுகளிலும் எதிர்ப்புறத்திலிருந்த கடலிலும் காதல் பூச்சுப் பூசியிருந்தது. தொட்ட இடத்திலிருந்தெல்லாம் காதல் வாசனை வந்தது. அவள் இல்லாத இந்த வேளைகளில் இந்த அழகெல்லாம் வீணாகப் போவது போலத் தோன்றியது. இத்தனை பரபரப்பான வேலைகளுக்கிடையிலும் அவன் மனதைத் தனிமை பிழிந்து கொண்டிருந்தது.
அவன் மனதைப் பிழிய உண்மையில் பல விஷயங்கள் இருந்தன. கிள்ளான் போய் பெற்றோர்களைப் பார்த்து அத்தையையும் பார்த்து வந்ததிலிருந்து அவன் மனதில் ஒருவித புகை கவ்வியிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் புதிய குழப்பமான திருப்பங்கள் உருவாகியிருக்கின்றன என்று தோன்றியது. எதிர்காலத் திசை தெளிவாகத் தெரியவில்லை.
மல்லிகா எப்போது இந்தத் திருமண விஷயத்தை இவ்வளவு நிச்சயமாக மனதில் கொண்டாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் மூக்கில் சளி ஒழுக உருளைச் சக்கரம் வைத்து ஓட்டிக் கொண்டிருந்த நாள் முதல் அவளை அவனுக்குத் தெரியும். அவன் அவளோடு ஆயிரம் தடவை சண்டை போட்டிருக்கிறான். நூற்றுக் கணக்கான தடவை தலையில் கொட்டி அழ வைத்திருக்கிறான். அவளும் கையில் கிடைத்ததைத் தூக்கி அடித்து அவனை விரட்டியிருக்கிறாள்.
அத்தை உத்தரவிடும் நேரத்திலெல்லாம் அவளுக்குப் பாவாடை கட்டி சட்டை போட்டு விட்டிருக்கிறான். முகத்திற்குப் பௌடர் பூசி விட்டிருக்கிறான். அவளுக்காகப் பரிந்து மற்ற பிள்ளைகளிடம் சண்டை போட்டிருக்கிறான். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதைச் சரியாகச் செய்யாத போதெல்லாம் அவளுக்குத் தண்டனை கொடுத்து வாத்தியாராக இருந்திருக்கிறான்.
அவள் மேல் பாசம் உண்டு. அன்பு உண்டு. ஆனால் காதல்? அது எந்த நாளும் வந்ததில்லை. அவள் புஷ்பித்து அவள் அங்கங்களில் செழிப்பு பூசி அவள் முகத்தில் புதிய வெட்கம் வந்த போது கூட அவையெல்லாம் தனக்கு என அவன் நினைத்ததில்லை. அவள் அணுக்கம் அவனுக்கு எந்த நாளும் மோகம் ஊட்டியதில்லை.
வீட்டில் அத்தையும் மற்றவர்களும் அவர்களுக்கு முறை வைத்துப் பேசும் போதும் "கட்டிக்கிறியா? கட்டிக்கிறியா?" என்று கேட்ட போதும் அதை ஒரு பெரும் விளையாட்டு என்றுதான் நினைத்திருக்கிறான்.
மல்லிகாவுக்கும் அவனைப் பற்றி அதே நினைப்புத்தான் இருக்கும் என்பதைத் தவிர வேறு மாதிரி அவனால் நினைக்க முடியவில்லை. அத்தை பேசும் இந்தத் திருமண விளையாட்டுப் பேச்சுக்களை மல்லிகாவும் விளையாட்டு என்று புறக்கணித்திருப்பாள் என்றுதான் நம்பினான். ஆனால் அது சரியில்லை என்று இப்போது விளங்கிவிட்டது.
மல்லிகாவும் தானும் கணவன் மனைவியாகவா? முடியவே முடியாது என அவன் மனம் சொல்லியது. அத்தை இதற்காகத் திட்டம் போட்டிருக்கலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது. பல வருடங்களுக்கு முன்பிருந்தே இப்படி ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களை வளைத்துத் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் மேல் அத்தைக்கு இத்தனை அக்கறை பொங்கி வழிவதற்கு இதுதான் காரணம் என விளங்கியது.
ஆனால் தன்னோடு தோழியாகவும் தங்கையாகவும் பழகிய மல்லிகாவுக்கும் இந்த கல்யாண நோக்கம் இருக்கும் என்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அத்தை இதை ஆழமாக விதைத்திருக்கிறாள். மல்லிகாவுக்கு வேறு வெளி உலகத்தைக் காட்டவில்லை. வேறு ஆண்களோடு சரளமாகப் பழகி தனக்கு வேண்டியவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கவில்லை.
அத்தையின் உலகமும் மிகக் குறுகியதுதான். தானாகக் குறுக்கிக் கொண்டாள். அவளுக்கு ஆடம்பரமாக வாழத் தக்கப் பணம் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வாழுகின்ற மற்றவர்களுடன் சமமாகப் பழகப் போதிய அனுபவமோ வளர்ப்போ குடும்பப் பின்னணியோ இல்லை. தன் செல்வத்தைப் பயன் படுத்தித் தனக்குத் தாளம் போடுபவர்களும் தலையாட்டுபவர்களுமாக இரண்டு மூன்று கொடுக்கல் - வாங்கல் ஆட்களை மட்டும் வெளி உலகத் தொடர்புக்கு வைத்துக் கொண்டாள்.
குடும்பம், உறவு என்று சொல்வதற்குத் தன் பெற்றோர்களை வைத்துக் கொண்டாள். அவர்கள் அவள் கையில் வாங்கிச் சாப்பிட்டு அவளால் வாழுகிறார்கள். அவள் சொன்னதற்கு மறுப்பிருக்காது. அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆனந்தம் அத்தைக்கு இருந்தது.
அதோடு கணேசன் என்ற அவளுக்கு வேண்டிய முக்கியமான பொருளும் அங்கிருந்தது. கணேசனை மருமகனாக வளைத்துப் போட்டு விட்டால் அத்தையின் எதிர்காலம் பற்றிய பிரச்சினையும் வாரிசுப் பிரச்சினையும் தீரும். அந்நியர்களோடு போய் அவள் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களோடு சமமாகப் பழக வேண்டிய நாகரிகம் தனக்கு இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலத் தேவையில்லை. கணேசனையும் கணேசனின் பெற்றோர்களையும் அவள் முழுதாக ஆதிக்கம் செலுத்த முடியும். சாகும் வரை இந்தக் குடும்பத்தின் தலைவியாகவும் அதிகாரியாகவும் இருந்து சாக முடியும்.
அத்தை போட்டிருக்கிற இந்த "மாஸ்டர் பிளேனுக்கு" தான் ஒரு வெறும் கருவிதான் என கணேசனுக்குப் புரிந்தது. அது புரிந்ததும் அத்தையின் மேல் அவனுக்கு இத்தனை நாள் இல்லாத பெரும் வெறுப்பும் வந்தது.
இந்த அத்தை தன்னை இத்தனை நாள் இப்படிப் பயன்படுத்திக் கொண்டது போகட்டும். இனியும் அதற்குத் தான் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது என எண்ணினான். அத்தையின் இந்த ஆதிக்கத்திலிருந்து விலக வேண்டும். படிப்புச் செலவுக்கு இப்போதைக்கு அவளைத்தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கிறது. படிப்புக்குக் கடன் வாங்கலாம். பகுதி நேர வேலை பார்த்துச் சம்பாதிக்கலாம். எத்தனையோ மாணவர்கள் அப்படித்தான் படிக்கிறார்கள்.
தன் பெற்றோர்களையும் அவளுடைய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதில் பல சிரமங்கள் இருக்கின்றன. அப்பாவிடமும் அம்மாவிடமும் கடுமையாகப் பேசி அப்பாவுடைய குடிப் பழக்கத்தை மாற்ற வேண்டும். படிப்பு முடிந்ததும் அவர்களை அடிமை வாழ்க்கையில் கட்டிப் போட்டிருக்கின்ற அந்தத் தோட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிப் பட்டணப் புறத்தில் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் மல்லிகா? அவளை அவன் புண் படுத்த விரும்பவில்லை. பச்சைப் பிள்ளை. ஒருவேளை நன்றாக எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வாள். உலகம் பெரியது. அவளுக்கேற்ற எத்தனையோ மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள். "நானே உனக்கு என்ன விட அழகான, அன்பான, எடுத்ததுக்கெல்லாம் ஒன் தலையில கொட்டாத மாப்பிள்ளையா பாத்து கட்டி வைக்கிறேன் மல்லிகா" என்று சொல்லி அவள் மனதை மாற்ற வேண்டும். அவள் வெகுளி. கண் முன் கண்டதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் காணாதவை, அவள் தாய் அவளுக்குக் காணாமல் ஒளித்தவை, ஆயிரம் இருக்கின்றன என அவளுக்குக் காட்ட வேண்டும். இந்த வருடம் தீபாவளிக்கு கிள்ளான் திரும்பும் போது கொண்டாட்டப் பரபரப்புக்கள் ஓய்ந்த பின் அத்தையிடம் உட்கார்ந்து விரிவாகப் பேசவேண்டும். முடிந்த வரை அவள் கோபித்துக் கொள்ளாமல் இதமாக... இயலாவிட்டால் உறுதியாக, தேவையானால் முரட்டுத் தனமாக.
"அவ்வளவு திமிர் வந்திருச்சா ஒனக்கு! இனிமே ஒரு சல்லிக் காசு ஒனக்கோ ஒங்குடும்பத்துக்கொ குடுக்க மேட்டேன்!" என்பாள்.
"உங்க பணத்த நீங்களே வச்சிக்கிங்க! நான் கடன் வாங்கி படிச்சிக்கிறேன். வேல செய்ய ஆரம்பிச்சதும் உங்க கடன தூக்கி எறிஞ்சிட்றேன்!" என்று சொல்ல வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அகிலாவின் துணை வேண்டும். தன் பெற்றறோர்களைத் திருத்த, அவர்களைப் பராமரிக்க, அத்தையோடு பேசி வெல்ல, மல்லிகாவுக்கு வெளி உலகத்தைக் காட்ட, எல்லாவற்றிற்கும் தனக்கு பக்க பலமாக நிற்க அகிலா அவனுக்கு வேண்டும்.
இன்னும் இரண்டொரு நாட்களில் அகிலா திரும்பி விடுவாள். அவளோடு உட்கார்ந்து ஆழமாகப் பேச வேண்டும். தன் மனத்தையும் வாழ்க்கைப் பின்னணியையும் திறந்து காட்ட வேண்டும். "என் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு என் பக்கத்தில் எந்நாளும் நில் அகிலா!" என்று சொல்ல வேண்டும்.
ஆனால் காதல் அரும்பி வருகின்ற இந்த நேரத்தில் குடும்பத் துயரங்களை இப்படி விரிவாகச் சொல்ல வேண்டுமா? காதல் என்ற இந்தத் தளிர் ஒரு மகிழ்ச்சியான காற்றை சுவாசித்து, ஆசை, மோகம் என்ற நீர் பருகி உறுதியான செடியாக வளர காலம் தர வேண்டாமா? அதற்குள் "என் பெற்றோர் இப்படி!" "என் அத்தை மகள் இப்படி!" என்று சொல்லி அந்த இன்ப நேரங்களைக் கெடுத்துக் கொள்வதா?
அகிலா அவற்றைத் தாங்குகிற பெண்ணா? அல்லது இந்தத் தொல்லைகளெல்லாம் வேண்டாம் என்று ஓடுகிற பெண்ணா? தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கொஞ்சம் காலம் கழித்துச் சொல்லலாம். அவசரமில்லை. சிக்கல்களை அவிழ்க்க இன்னும் ஒரு வருடம், ஒன்றரை வருடம் இருக்கிறது.
முதலில் அகிலாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவள் அணுக்கத்தை அனுபவிக்க வேண்டும். அவள் ஸ்பரிசத்தில் மயக்கம் காண வேண்டும். மல்லிகாவைப் போல அல்லாமல், ஜெசிக்காவைப் போல அல்லாமல் பார்த்த அளவில் போதை தரும் ஓவியமாக இருக்கிறாள். பக்கத்தில் போனால் மோகம் தரும் மோகினியாக இருக்கிறாள்.
அகிலாவுக்காகத் தவிப்புடன் காத்திருந்தான்.
***
"என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டாள் அகிலா.
கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து 'ஆ'வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட நீரிணைக் கடலைப் பாலாக்கி அந்த நீண்ட பினாங்குப் பாலத்துக்குப் பொன் முலாம் பூசி "இந்தக் காட்சிகளெல்லாம் உனக்காகத்தான், உனக்காகவேதான்" என்று இயற்கை அள்ளி வழங்கியிருந்த ஆனந்தம் அவளை இந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது. அவர்கள் வி.சி. பாறையை ஒட்டிய புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். கணேசனின் கையை தன் கையில் இறுகக் கோத்துக் கொண்டு தன் மடியில் உரிமையோடு வைத்துக் கொண்டிருந்தாள் அகிலா. இந்த இடத்தில் முன்பும் பல முறை அவள் கணேசனோடு உட்கார்ந்து பேசியிருக்கிறாள். ஆனால் இந்தப் பூரண நிலவின் முழு மந்திரமும் இன்றுதான் அவளுக்குப் புலனானது. இது இளம் உள்ளங்களுக்கான போதை மருந்து. காதலுக்கான சொக்குப்பொடி. காவியங்களுக்கான முதலடி. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வியைத்தான் கேட்க அவளுக்குத் தோன்றியது.
"என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?"
அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதென்பது தெரிந்துதான் இருந்தது. ஆனால் அதை அவன் வாயால் கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்த இரவு வேளைக்கான இன்ப சங்கீதமாக அந்தப் பதில் இருக்கும் என்று நினைத்தாள்.
"சொல்லுங்க! என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?"
அவன் அவள் தோள்களோடு அழுத்தி உரசிச் சிரித்தான். "உன்னைப் பிடிக்காமலா இப்படி இந்த இருட்டுல உன்னோட உக்காந்திருக்கேன் அகிலா?"
"கேள்விக்கு பதில் கேள்வியா சொல்லாம நேரா பதில் சொல்லுங்க?"
"எப்படி?"
"நான் சொல்ல மாட்டேன். நீங்களே சொல்லுங்க?"
"இன்னும் என் மேல நம்பிக்கை இல்லியா?"
"பாத்திங்களா? மறுபடி கேள்விதான வருது? வேண்டாம் முழு வாக்கியமா பதில் சொல்லுங்க!"
சிரித்துச் சொன்னான்: "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அகிலா!"
"என்னைக் காதலிக்கிறிங்களா?"
"இதென்ன கேள்வி?"
"பதில் சொல்லுங்க!"
"ஏன் இத்தன கேள்வி?"
"உங்களுக்கு ஏன் இத்தன மறு கேள்விங்க? பதில மட்டும் சொல்லுங்க!"
மீண்டும் சிரித்துச் சொன்னான்: "உன்னை என் உயிருக்குயிரா காதலிக்கிறேன் அகிலா!"
அவன் மார்பில் நிம்மதியாக முகம் புதைத்தாள். "உயிருக்கு உயிராக" என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை. ஆனால் அந்த மாதிரி அர்த்தத்துக்கு அப்பாற்பட்ட உறுதிகள் அந்த நேரத்துக்குப் பொருந்தியிருந்தன.
"நானும் அப்படித்தான் கணேஷ். உங்கள உயிருக்குயிரா காதலிக்கிறேன்!" அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் கட்டியது. முழு நிலவு அதில் கொஞ்சம் கலங்கித் தெரிந்தது.
அதற்கு மேல் அந்த நேரத்தில் அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் தன் கையை அவள் கைகளில் இருந்து பிரித்துக் கொண்டு அவள் தோள்களை இறுக அணைத்துக் கொண்டான். அதில் இனந் தெரியாத சுகம் இருந்தது.
"தாயார் அணைத்திருந்த அணைப்பு முண்டு - நான்
தந்தை மடி கிடந்த பழக்கமுண்டு
நீயாரோ நான் யாரோ தெரியவில்லை - இங்கு
நேர்ந்தது என்ன வென்று புரியவில்லை"
என்றோ கேட்ட பாடல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
இரவுக் காற்றின் குளிர் உடைகளுக்குள் எல்லாம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் உடல் வெப்பமாக இருந்தது. அவளுடைய கன்னம் அவன் மார்பில் ஒட்டிக் கிடந்தது. அவளுடைய மூச்சு அவன் மார்பில் பட்டு எதிர்த்த போதெல்லாம் அந்தச் சூடு அவள் மேலும் தெறித்தது. அவனுடைய முத்தங்கள் அவள் உதடுகளில் இனித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சட்டைப் பொத்தானை நெருடியவாறிருந்தாள். இமையை நெறித்து கண்களை உயர்த்திப் பார்த்தால் புன்னகைக் கீற்று விழுந்திருந்த அவன் உதடுகள் தெரிந்தன. மீண்டும் தலை தாழ்த்தியிருந்தாள்.
"என்ன பேச்சையே காணும் அகிலா?"
மீண்டும் பேசாமல் இருந்தாள். "ஏதாகிலும் பேசு என் கண்ணு!" என்றான். பேசாமலே இருந்தாள்.
"என் மேல கோபமா அகிலா?" என்றான்.
"ஏன் கோபப் படணும்?"
"கண்ணுன்னு கூப்பிடதினால!"
"இல்ல கணேஷ்! உங்களுக்கு நான் இவ்வளவு இடம் கொடுத்தாச்சி! இதுக்குப் பிறகா இந்த "கண்ணு"காகக் கோவிச்சிக்கப் போறேன். கோபம் இல்ல. இனிப்பாதான் இருக்கு! மறுபடி கூப்பிடுங்க!"
"என் கண்ணு!" அணைப்பை இறுக்கினான். மீண்டும் மௌனமானாள்.
இதுதான் காதல் என்பதா? இதைத்தானா சினிமாவில் பார்த்து, பாடல்களில் கேட்டு, நாவல்களில் படித்து, தோழிகளுடன் பேசி, இரவில் மெய்மறந்து கனாக் கண்டு, என்று இது விளையும் என்று ஏங்கியிருந்தேன்? என்ன இது? என்ன செய்கிறேன்? இது சரியா? இது ஒளித்து மறைத்துச் செய்யும் குற்றமா? இது என் மனம் இழுக்கும் இழுப்புக்கு நான் ஓடுகின்ற தவறான நடத்தையா? இதுதான் கெட்டுப் போவது என்பதா? நான் இப்போது கெட்டுப் போகிறேனே? கெட்டுப் போவது என்பது ஏன் இத்தனை இன்பமாக இருக்கிறது? இந்த இன்பத்தோடு இந்தக் குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது? ஏன் அம்மாவின் நினைவு வருகிறது?
*** *** ***
விடுமுறை எப்போது முடியும் எனக் காத்திருந்தாள். ஒருநாளைக்கு முன்னாலேயே பெட்டியை எல்லாம் அடுக்கித் திரும்பத் தயாராக இருந்தாள்.
"நாளைக்கு போனா எப்ப திரும்ப வருவ?" என்று அன்றிரவு அம்மா கேட்டாள். அந்தக் கேள்வியில் வழக்கமான அன்பு இருந்ததை விட ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது என அகிலாவுக்குத் தோன்றியது.
"பார்ப்போம்மா! நிறைய வேலைகள் இருக்கும். எப்பப்ப ஓய்வு கெடைக்குதோ அப்ப வாரேன்!" என்றாள்.
"தோ இங்க இருக்கிற பினாங்கில இருந்து வர்ரதுக்கு எதுக்கு ஓய்வு? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ பஸ் ஏறி வந்திர வேண்டியதுதான?" என்றாள் அம்மா.
"பஸ் ஏறி வர்ரது பெரிசில்ல அம்மா. ஆனா விரிவுரையாளர்கள் குடுக்கிற எசைன்மென்டெல்லாம் வாரக் கடைசியிலதான் செய்ய முடியும். லைப்ரரிக்கும் போய் உக்காந்து ஆறுதலா அப்பதான் படிக்கலாம்!"
"இங்க இருந்த போது நீ வீட்டில இருந்து படிக்கிலியா? அப்படி வீட்டுக்கு வந்து படிக்க வேண்டியதுதான? ஒன் படிப்ப நாங்க கெடுக்கிறமா?" என்று அம்மா மீண்டும் வாதிட்டாள்.
அம்மாவுக்குத் தன்மேல் கடுமையான சந்தேகம் விழுந்துவிட்டது என்று தோன்றியது. ஏன் இப்படிச் சந்தேகிக்கிறாள்? ஏன் இது பற்றி எரிச்சல் படுகிறாள். அன்று இரவு இது பற்றித் தெளிவாகப் பேசியிருந்தாலும் அவள் பயம் இன்னமும் தீரவில்லை என்று தோன்றியது. மகள் கெட்டுப் போவதற்குத் தயாராகிவிட்டாள் என்றே அவள் உள்ளம் கணக்குப் போட்டுவிட்டதாகத் தோன்றியது.
"சரிம்மா! எப்ப எல்லாம் ஓய்வு கிடைக்குதோ அப்ப எல்லாம் வந்திர்ரேன். நீ சொல்றது போல இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வேணுன்னாலும் கண்டிப்பா வந்திர்ரேன்! அவ்வளவுதான உனக்கு வேணும்? அப்படியே செய்திட்றேன்!" என்றாள்.
அம்மா முறைத்துப் பார்த்தாள். "என்ன கிண்டல் பண்றியா அகிலா?" என்றாள்.
அகிலா பெரு மூச்சு விட்டாள். "அடிக்கடி வரமுடியாதின்னாலும் கோவிச்சிக்கிற! சரி ரெண்டு வாரத்துக்கு ஒருமுற வந்திர்ரேன்னு ஒப்புக் கொண்டாலும் கோவிச்சிக்கிர! நான் என்னதான் பண்றது?"
அம்மா கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்தவாறு இருந்தாள். அப்புறம் முகம் சோர்ந்து வேறு புறமாகத் திருப்பிக்கொண்டாள். கண்களைத் துடைத்தாள்.
அகிலா அவள் தோளைப் பிடித்தாள். "ஏம்மா இப்படி சந்தேகப் பட்ற? நான் கெட்டுப் போகணும்னு நெனைச்சா நீ கொடுக்கிற ரெண்டு வார இடை வேளையில கெட்டுப் போக மாட்டேனா? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ இங்க வந்து உன்னுடைய விசாரணைகளுக்கு பதில் சொல்லிட்டு நான் திரும்பிப் போயிட்டா உனக்குத் திருப்தியாயிடுமா? உங்கிட்ட பொய் சொல்லி ஏமாத்த எனக்குத் தெரியாதா?"
அம்மாவின் முகத்தை வலுக்கட்டாயமாகத் திருப்பினாள். "இதோ பாரும்மா! ஒரு காலமும் இந்தக் குடும்பத்துப் பேருக்குக் களங்கம் வர்ர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். ஆனா அதுக்காக இல்லாத கட்டுப்பாடெல்லாம் போட்டு என்னக் கட்டிப் போட்டுடாதம்மா! மத்த பெண்களப் போல சகஜமா நடந்துக்க எனக்கு சுதந்திரம் கொடு!" என்றாள்.
அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு கண்ணு! கவனமா நடந்துக்க! அவ்வளவுதான்!" என்று சிரித்தாள் அம்மா.
*** *** ***
இவ்வளவும் பேசிய பின், இத்தனை உறுதி கொடுத்த பின் இப்படிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது குற்றமில்லையா என்று மனம் கேட்டவாறே இருந்தது.
விடுமுறை முடிந்து பல்கலைக் கழகத்துக்கு பஸ்ஸில் வந்து பெட்டியுடன் இறங்கியபோது கணேசன் பஸ் நிலையத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். தோளில் கைபோட்டு வரவேற்றான். பெட்டியுடன் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விடுதியில் கொண்டு வந்து விட்டான். அன்று மாலையில் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு இரவில் இந்தப் பௌர்ணமிச் சந்தரனின் ஈர்ப்பில் இங்கு வந்தார்கள். சில வாரங்கள் அவனைப் பிரிந்திருந்ததில் அவன் நினைவு இன்னும் அதிகமாகி ஒரு காட்டுக் கொடி போல தன் மனத்தில் படர்ந்து கிடந்ததை அவளால் உணர முடிந்தது.
தன் உள்ளம் விரும்பியவனை பார்ப்பதும் பேசுவதும் எப்படித் தவறாகும் என்று உள்ளம் எதிர்வாதம் செய்தது. இப்படி இவனோடு தனிமையில் இருப்பது தவறாகுமா? கையைப் பிணைத்துக் கொள்வதும் தோளையும் துடையையும் உரசிக் கொள்வதும் தவறாகி விடுமா? முத்தம் பரிமாறிக் கொள்வது தவறாகுமா? தவறு இல்லையென்றால் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கும்? அம்மா போட நினைக்கும் கட்டுப்பாடுகளின் எல்லை என்ன? தான் எடுத்துக் கொள்ளவிருக்கும் சுதந்திரத்தின் எல்லைதான் என்ன?
அந்த எல்லைகளைக் கணித்துக் கொண்டா இந்த சந்திப்பு நடக்கிறது? இது போதும்; இதற்கு மேல் வேண்டாம் என்று எந்தக் கட்டத்தில் நான் சொல்ல வேண்டும்? இந்த இரவின் போதைகள் தலைக்கு ஏறிவிட்டால் எல்லா எல்லைகளையும் தாண்டிப் போய்விடுவேனா? மனதில் பயம் வந்தது.
அவன் மார்பில் புதைந்திருந்த முகத்தைப் பிரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
"என்ன அகிலா?" இரவில் அவன் வார்த்தைகள் மிருதுவாக வந்தன. அவள் முடியைக் கோதினான்.
"ஏதோ தவறு செய்றமோன்னு அடிக்கடி ஒரு சந்தேகம் வருது கணேஷ்!" என்றாள்.
"காதலிக்கிறது தவறுன்னு சொல்றியா அகிலா? உலகத்தில எல்லாருந்தான காதலிக்கிறாங்க?"
"உலகத்தில எல்லாரும் காதலிக்கிறதில்ல! எவ்வளவு பேரு ஒழுங்கா முறையா அப்பா அம்மா பாத்துக் குடுக்கிற வாழ்க்கைத் துணைய கட்டிக்கிட்டு இருக்காங்க! அப்படி இல்லாம நமக்கு நாமே ஜோடியத் தேடிக்கிறது கொஞ்சம் தறுதலைத் தனந்தானே!"
"எல்லாரும் காதலிக்கிறாங்க அகிலா. தங்கள் உள்ளத்தில தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கத்தான் செய்றாங்க. ஆனா பலருக்கு அந்தக் காதல் உள்ளத்தை விட்டு வெளியேற முடியிறதில்ல. ஆனா அதினால என்ன? நாம் பெற்றோர்கள் சம்மதம் கேட்டுத்தான கல்யாணம் பண்ணிக்கப் போறோம்! ஆனா அதுக்குக் காலம் வரணுமில்லியா?"
கால் பக்கத்தில் பனி ஈரம் தோய்ந்திருந்த ஒரு புல்லைப் பிடுங்கியவாறு சொன்னாள்: "அம்மா இந்த முறை என்ன பல மாதிரி கேள்வி கேட்டாங்க?"
"எப்படி?"
"அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் •போன் பண்ணனும்னு கேட்டாங்க!"
"ஒரு நண்பர்னு சொல்ல வேண்டியதுதான?"
"சொன்னேன். அவங்களுக்கு திருப்தி ஏற்படல! 'நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?'ன்னு பொரிஞ்சி தள்ளுனாங்க!"
"நீ என்ன சொன்ன?"
"ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியிலன்னு சொன்னேன்"
கணேசன் கொஞ்சம் யோசித்துச் சொன்னான்: "அப்ப உனக்கும் மனந்திறந்து "அவர் என் காதலர்னு" சொல்ல முடியில, இல்லியா?"
அவனை நிமிர்ந்து பார்த்தாள். "முடியில கணேஷ்! அதுக்குக் காலம் வரல. அம்மாகிட்ட இப்படிச் சொன்னா ஒடைஞ்சி போவாங்க. அதோட எனக்கே என் மனசுக்கு நிச்சயமா தெரியில!" என்றாள்.
"என்ன தெரியல?"
"இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!"
"சரிதான் அகிலா! கால அவகாசம் கொடுக்கிறதில எனக்கு ஒண்ணும் ஆட்டசேபனை இல்ல! ஆனா உங்கம்மா இப்படி அவசரமா இந்தப் பேச்ச எடுக்காம இருந்திருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காதில்ல! அவங்க அவசரப்பட்டு உன்ன இப்படி நேருக்கு நேர் கேக்கப் போயித்தான இப்படி இக்கட்டான நிலம வந்திருக்கு!"
"அவங்களோட பயம் எனக்குப் புரியிது கணேஷ். நாலு பேரு நம்மப் பார்த்திட்டு பேசிட்டா அவங்க குடும்ப மானம் போயிடும்னு அவங்க பயப்பட்றாங்க!"
"உங்க அப்பா என்ன சொன்னார்?"
"அப்பா ரொம்ப பரந்த மனம் உள்ளவரு! 'நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு'ன்னு சொன்னாரு"
"அப்புறம் ஏன் இப்ப பயம் அகிலா?"
அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். "கண்டிப்பா நாம் கல்யாணம் பண்ணிக்குவோமா கணேஷ்?"
"எனக்கு எந்த சந்தேகமும் இல்ல! உனக்கு?"
தலை குனிந்தாள். "எனக்குக் குழப்பமா இருக்கு கணேஷ். உங்கள எனக்குப் பிடிக்குது. உங்களோட இப்படி ஒட்டியிருக்கப் பிடிக்குது. ஆனா கல்யாணங்கிறது நான் தீர்மானிக்க முடியாத விஷயம் போலவும், எனக்காக இதுவரைக்கும் எல்லாமும் செஞ்சிக் கொடுத்திருக்கிற பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் போலவும் இருக்கு!"
"அப்ப அவுங்கிட்ட கூடிய சீக்கிரம் பேசித் தீர்மானிச்சிக்குவோமே!"
"அப்படி செய்யலாம். அதினாலதான் கூடிய சீக்கிரம் உங்கள வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு இருக்கேன்!"
"எப்ப?"
"அடுத்த மாசத்தில தீபாவளி வருதுல்ல. அன்னைக்கு வாங்களேன். தீபாவளிக்கு விருந்துக்கு வந்த மாதிரியும் இருக்கும். எங்க பெற்றோர்கள சந்திச்ச மாதிரியும் இருக்கும்."
ஒரு திடீர்க் காற்றின் விசிறலில் இலைகள் சலசலத்தன. பௌர்ணமி நிலவு இன்னும் மேலே ஏறியிருந்தது. வானில் கொஞ்சம் கருமேகங்கள் கூடியிருந்தன. தூரத்தில் கடலில் இரவுப் படகு ஒன்று "டுப் டுப்" என்று சத்தம் எழுப்பிக்கொண்டு பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருந்தது.
"சரி அகிலா!" என்று அவன் சொன்னான். அந்தச் சொற்களில் கொஞ்சம் சோர்வும் தயக்கமும் இருந்தது போல அகிலாவுக்குத் தோன்றியது.
***
தீபாவளி அவன் நினைத்ததைவிட அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் அவன் முன் குவிந்து விட்ட வேலைகளும் இடையறாத அலைச்சலும்தான். அவனுடைய நிறுவன நிர்வாகப் பாடத்திற்காக இந்தப் பருவத்தில் கேஸ் ஸ்டடி (case-study) ஒன்று செய்ய ஒன்று செய்ய வேண்டியிருந்தது. அதற்காகப் பினாங்கின் பழம் பெரும் நிறுவனமான பர்காத் ஸ்டோர்ஸை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த நிறுவனத்தின் தமிழ் முஸ்லிம் உரிமையாளர்கள் அவனுக்கு எல்லா ஒத்துழைப்பையும் தந்தார்கள். அவர்கள் நிறுவனத்திற்கு பல நாட்கள் சென்று நிர்வாகிகளுடன் உட்கார்ந்து பேசி கோப்புக்களைப் பார்த்து குறிப்பெடுத்து எழுத வேண்டியிருந்தது.
ஐசேக் மாநாட்டுக்கான ஏராளமான மனுபாரங்கள் வரத் தொடங்கியிருந்தன. இரவில் ஜெசிக்காவுடன் உட்கார்ந்து அவற்றுக்கெல்லாம் பதில் எழுத வேண்டியிருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தனது தோட்டப்புற மாணவர் சேவைத் திட்டத்தை நிர்வகிப்பதில் அவனுடைய உதவியைக் கோரியிருந்தது. அகிலாவும் அந்தக் குழுவில் இருப்பதால் உற்சாகமாக ஒப்புக் கொண்டிருந்தான்.
இதற்கிடையே தீபாவளி நினைவுகள் வந்து கொண்டேயிருந்தன. அகிலாவின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோர்களைச் சந்திப்பதை அவன் ஒரு வித மனப் படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இது ஒரு நல்ல தொடக்கமாகத் தோன்றியது. ஆனால் நினைவு தெரிந்ததிலிருந்து அத்தை வீட்டில்தான் அவன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். பினாங்கு வந்ததிலிருந்து சென்ற இரண்டு வருடங்களிலும் அவன் தீபாவளிக்குத் தவறாமல் போய் வந்திருக்கிறான்.
"ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!" என்று அத்தை சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அகிலாவுக்கு வாக்குக் கொடுத்த போது அத்தை வீட்டுக்குப் போகவேண்டும் என்ற நினைவு இல்லாமல் இல்லை. ஆனால் அவள் இதனை இத்தனை முக்கியமாக எண்ணிக் கேட்கும் பொழுது எந்தக் காரணம் கொண்டும் அதை ஒத்திப் போடுவதென்பது அவளை வருந்தச் செய்யலாம் என்ற எண்ணம் வந்து தடுத்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னால் அல்லது பின்னால் அவள் வீட்டுக்குப் போவதும் கூட சரியானதாக இருக்காது. அது தீபாவளி விருந்தினராக வருவதைப் போல் இல்லாமல் விஷேச வருகையாகப் போய்விடும். ஆகவே தான் ஒப்புக் கொண்டது சரிதான் என்று தோன்றியது.
அதோடு அத்தையின் ஆதிக்கத்தை எதிர்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. அதற்கு இந்த தீபாவளிக்குப் போகாமல் இருப்பதே ஒரு நல்ல தொடக்கம் என்றும் சொல்லிக் கொண்டான். அத்தை இழுத்த இழுப்புக்கெல்லாம் இனிப் போகப் போவதில்லை. ஓரிரண்டு முறை "முடியாது" "வரமாட்டேன்" என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் அதை அத்தைக்கோ மல்லிகாவுக்கோ அறிவிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். அவசரமில்லை, நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்றும் இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே என்ன அவசரம் என்றும் நாட்கள் தள்ளிப் போயின. அத்தையிடம் இதைச் சொன்னால் கோபப் படுவாள். டெலிபோனிலேயே கத்துவாள். மல்லிகாவிடம் சொன்னாலும் உடனே அழுது அத்தையைத்தான் கூப்பிடுவாள். அப்படி இப்படியாக அழுது தன்னைக் கிள்ளானுக்கு வரச் செய்து விட்டால் அகிலாவுக்குத் தான் கொடுத்த வாக்கு தவறிப் போகும் என்ற பயமே அவனை இப்படித் தள்ளிக் கொண்டிருந்தது.
இதற்கிடையே அகிலா இரண்டு முறை அவனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.
தீபாவளிக்கு முதல் நாள் கிள்ளான் போய்விட்டு அன்று காலை கிள்ளானில் பஸ் ஏறி மாலையில் அலோர்ஸ்டார் போகலாமா என்றும் நினைத்தான். ஆனால் கிள்ளான் போய்ச் சேர்ந்து விட்டால் அத்தையிடமிருந்து தப்பித்து வரமுடியாது. பெற்றோர் வீட்டுக்கும் போய் வரவேண்டியிருக்கும். ஒரு காலையில் இதெல்லாம் முடிக்க முடியாது. ஆகவே தீபாவளி காலை அகிலாவின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் போய்த் திரும்பிவிட்டு பினாங்கிலிருந்து பஸ்பிடித்தால் இரவில் கிள்ளான் போய் விடலாம். அதன் பின் ஒரு நாள் இருந்து வரலாம். அதுதான் நல்லது என முடிவு செய்தான்.
ஆனால் இதன் காரணங்களை அத்தையிடம் சொல்ல முடியாது. ஏதாகிலும் பொய் சொல்லித்தான் சமாளிக்க வேண்டும்.
தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது ஒரு மாலை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அத்தை வீட்டுக்குப் போன் பண்ணினான். மல்லிகாதான் பேசினாள்: "மாமா, எப்ப வர்ரிங்க? உங்களுக்கு நீலக் கலர்ல ஒண்ணும் பச்சைக் கலர்ல ஒண்ணுமா ரெண்டு சட்டை எடுத்திருக்கோம். ரெண்டு ஜீன்ஸ் வாங்கியாச்சி. அன்டர்வேர் கூட வாங்கி வச்சிருக்காங்க அம்மா!" என்றாள்.
"சரி, அம்மாவக் கூப்பிடு மல்லிகா!" என்றான்.
"அத்தை போனுக்கு வந்தாள். "நல்லா இருக்கியா கணேசு? என்னா போனதில இருந்து கூப்பிடவே இல்லியே!" என்றாள்.
"ரொம்ப வேல அத்த! அதுனாலதான் கூப்பிடல!"
"அப்படியா? சரி அப்ப தீவாளிக்கு வந்திடுவதான?
"அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன் அத்த! தீபாவளி அன்னிக்கின்னு பார்த்து ஒரு முக்கியமான வேல வந்திடுச்சி! அதினால தீபாவளி காலையில வர முடியாது. அன்னைக்கு ராத்திரிதான் வரமுடியும்னு நினைக்கிறேன்!"
அத்தையின் அதிர்ச்சி நிறைந்த முகம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தாலும் அவன் மனதில் தோன்றி கலவரப்படுத்தியது.
"என்னா சொல்ற கணேசு? என்ன அப்படி தல போற வேல? அதுவும் தீபாவளி அன்னைக்கு!"
"இங்க எங்க இந்திய மாணவர் சங்கம் அனாதைப் பிள்ளைகளுக்கெல்லாம் தீபாவளி அன்னைக்குக் காலையில ஒரு விருந்து நடத்திறாங்க அத்த! அத நடத்திறத என் பொருப்பில விட்டிருக்காங்க! நாந்தான் இருந்து செய்ய வேண்டியிருக்கு. அத முடிச்சிட்டு மத்தியானம் பஸ் ஏறி ராத்திரிக்கு அங்க வந்து சேந்திர்ரேன்!"
"என்னா இப்படி பண்ணிட்ட கணேசு!" அத்தையின் பெரு மூச்சில் ஏமாற்றத்தோடு ஆத்திரமும் இருந்தது எனத் தெரிந்தது. "வேற அங்க இருக்கிற பிள்ளைங்கள பாத்துக்க சொல்லக் கூடாதா? நான் காலையில உங்க மாமாவுக்கு சாம்பிராணி போட்டாகணுமே!"
"நீங்க போடுங்க அத்த! கண்டிப்பா நான் ராத்திரி வந்து சேர்ந்துர்ரேன். வச்சிரட்டுமா அத்த?" பதில் வருமுன் போனை வைத்தான்.
குற்ற உணர்வு நகங்கொண்டு உள்ளத்தைப் பிராண்டியது. தன் செய்தியால் அத்தையின் வீட்டில் இருள் கொஞ்சம் சூழ்வதை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. மல்லிகா சிணுங்கிச் சிணுங்கி இன்று சாப்பிடாமல் இருக்கப் போகிறாள் என்று தெரிந்தது. இந்தச் செய்தி தன் பெற்றோர் வீட்டுக்கும் பரவி அங்கும் கருமேகங்கள் கூடுவதையும், அன்றிரவு அப்பா கள் குடித்த பிறகு தோட்டம் முழுவதும் தெரியுமாறு கூச்சல் போட்டுக் கத்தப் போவதையும் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதன் விளைவாக அம்மா அடி வாங்குவாரா, இன்றிரவு? மனம் கலவரப்பட்டது.
ஏன் செய்தேன் என்றும் தன்னையே கேட்டுக் கொண்டான். ஒரு குடும்பத்தில் இத்தனை கலவரங்கள் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருந்தும் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியது அவசியம்தானா என்று தன்னையே கேட்டான். அது தவிர்க்க முடியாதது என்று விடையையும் கூறிக் கொண்டான். அத்தையிடமோ மல்லிகாவிடமோ உண்மையைக் கூறி அனுமதி பெற்றிருக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.
காதலின் மூர்க்கமும் காதலியின் ஈர்ப்பும் தனது குற்றத்தை மனதுக்குள் சமன் செய்ய விடுதி நோக்கி நடந்தான்.
*** *** ***
தீபாவளி அன்று காலையில் விடுதியில் தனியனாக எழுந்திருக்கும் போது என்னவோ போல் இருந்தது. இன்று தீபாவளிக்கு விசேஷமாக என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது விரட்டி விரட்டியே எல்லாம் செய்து பழக்கமாகிவிட்டது. எண்ணெய் வைத்துக் குளிக்கலாமென்றால் அறையில் எண்ணெயோ சிகைக்காயோ இல்லை. ஷாம்பூ மட்டும் போட்டுக் குளித்து வந்தான்.
உடுத்திக் கொள்ள புதிது ஏதும் எடுத்து வைக்க வில்லை. பழையதில் நல்லதாகப் போட்டுக் கொண்டான்.
வணங்குவதற்கு அறையில் கடவுள் படம் ஏதும் இல்லை. அவனுடைய துணிப் பெட்டியைத் திறந்தால் மூடியின் உள் பக்கத்தில் கணேசர் படம் ஒன்று இருக்கும். அதை வணங்கி கொஞ்சம் திருநீறு இட்டுக் கொண்டான். அவனுடைய தீபாவளி வழிபாடு அதனோடு முடிந்தது.
வளாகத்தில் மருந்துக்குக் கூட ஒரு இந்திய மாணவர் இல்லை. அவனுடைய மலாய் அறைத் தோழன் கூட விடுமுறையைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான்.
விடுதிக் கண்டீனுக்குச் சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டான். அத்தையின் வீட்டில் இன்று இறைச்சிக்கறி மணக்கும் பசியாறல் இருக்கும். தோசை இருக்கும். வெள்ளையும் மஞ்சளுமாக இந்தியப் பலகாரங்களும் சிகப்பும் பச்சையுமாக மலாய்ப் பலகாரங்களும் செய்து வைத்திருப்பாள். "சாப்பிடு கணேசு, சாப்பிடு கணேசு!" என்று அத்தை ஊட்டாத குறையாக அவனை வலியுறுத்தியிருப்பாள்.
இன்று இப்படி இருப்பாள்? முகம் சூம்பிப் போயிருப்பாளா? மல்லிகா எப்படி இருப்பாள்? இன்று இரவு அவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை எண்ணி மனம் கொஞ்சம் மருண்டது.
ஏற்கனவே சொன்ன ஒரு பொய்யை நிறுவ இன்னும் எத்தனை கூடுதல் பொய்கள் சொல்ல வேண்டும்? அத்தையின் முகத்தை நேராகப் பார்த்துச் சொல்ல முடியுமா? சொல்லும் போது தன் முகம் நேராக இருக்குமா? தன் அகத்தின் அழுக்கு முகத்தில் தெரிந்து விடுமா?
ஆனால் அகிலாவின் வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற நினைப்பு விரைவாக வந்து கலவரங்களை மாற்றியது. அவளுடைய பெற்றோர்களை முதன் முதலில் சந்திக்கப் போவதை நினைத்து ஒரு வித படபடப்பு வந்தது. அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் மனதில் ஒரு நல்லெண்ணம் எழும்படி செய்வது எப்படி? காதல் வேகத்தில் வந்திருக்கிறேன் என்பது பச்சையாகத் தெரியாமல் அடக்கமாக நடந்து கொள்வது எப்படி? மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அலோர் ஸ்டார் இதற்கு முன் அவன் பார்த்திராத ஊர். அகிலா வீட்டுக்கு வழி சொல்லியிருந்தாள். "அப்படியே வழி தவற விட்டிட்டிங்கன்னா எந்த இந்தியர் வீட்டிலாவது வாத்தியார் மயில்சாமி வீடுன்னு கேளுங்க, சொல்லுவாங்க!" என்றாள். ஆசிரியர் வேலை பார்க்கத் துவங்கிய காலத்திலிருந்து அங்கேயே இருக்கிறார். அரசியல், சமுதாய இயக்கங்கள் அனைத்திலும் இருக்கிறார். அகிலாவின் தந்தை அந்த ஊரில் பிரபலமான மனிதராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கெடா மாநிலத்தின் நெற் களஞ்சியப் பகுதிகளில் மலாய்க் கம்பங்கள் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் நிறைய இருந்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் போகும் போது அகிலா அவன் மனதில் நிறைந்திருந்தாள். இந்த வருகை சாதாரண தீபாவளி வருகை இல்லை. அது அகிலாவின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்ற பிரக்ஞை அவனுக்கு இருந்தது.
" 'ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு'ன்னு சொன்னாரு" என அகிலா தன் தந்தையின் சொற்களைச் சொல்லிக் காட்டியது அவன் மனதில் பதிந்திருந்தது. ஆகவே இன்று அவன் "ஒரு நண்பன்கிற அளவுக்கு" மேற்பட்டவன் என்பதை குடும்பம் புரிந்து கொள்ளும். அவனைக் கூர்ந்து பார்க்கும். அவனை எடை போடும்.
*** *** ***
அலோர் ஸ்டாரின் புறநகர் பகுதியில் ஒற்றை மாடி வரிசை வீடுகளில் ஒன்றாக வீட்டு எண் தவிர தனித்து அடையாளம் சொல்ல முடியாத அந்த வீட்டுக்கு முன்னால் அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு சீப்பால் தலைசீவி முகத்தைத் துடைத்துக் கொண்டான். அந்தக் காலை பத்து மணிக்கு வீட்டில் கூட்டம் இல்லை. வரவேற்பறையில் ரேடியோ முழங்கிக் கொண்டிருந்தது. கதவு திறந்திருந்தது. நுழை வாசலில் "வருக, வணக்கம்" என்று தங்க நிறத் தாள் அலங்காரமாகக் கட்டப்பட்டிருந்தது.
கதவுக்குப் பக்கம் போனபோது கூட ஆட்களைக் காணோம். ஆனால் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. யாரை எப்படிக் கூப்பிடுவதென்று தெரியவில்லை. ரொம்ப வெள்ளன வந்து விட்டோமா, அழையாத விருந்தாளி போல என்று எண்ணினான். சப்பாத்தைக் கழற்றி சாக்சையும் கழற்றி ஒதுப்புறமாக வைத்துவிட்டு வாசலில் அடியெடுத்து வைத்த போது ஒல்லியாக வேட்டி கட்டிய பெரியவர் வந்தார். இவர்தான் அப்பாவா?
"வாங்க" என்று வாய் நிறையக் கூப்பிட்டார்.
"வணக்கம், தீபாவளி வாழ்த்துகள்" என்றான்.
"வணக்கம். தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும். நீங்க....?"
"நான் அகிலாவோட படிக்கிறேன். கணேசன்!"
அவர் முகம் மலர்ந்தது. "ஓ சரி சரி. நீங்கதானா அது? அகிலா சொன்னிச்சி நீங்க வருவிங்கன்னு. உக்காருங்க தம்பி!" என்றார்.
உட்கார்ந்தான். உள்ளே பார்த்து "அகிலா!" என்று கூப்பிட்டார். உள்ளிருந்து ஓடிவந்தாள்.
அப்போதுதான் கோவிலுக்குப் போய் வந்த களை தெரிந்தது. திருநீறும் சந்தனமும் கருப்புச் சாந்துப் பொட்டும் கூந்தலில் சூடிய மல்லிகைச் சரம் தோளின் இருபக்கமும் சரிய....
புதுச் சேலை அணிந்திருந்தாள். அவளை அதிகமாக அவன் சேலையில் பார்த்ததில்லை. உடலைக் கவ்வியிருந்த அந்த மெல்லிய பட்டில் வண்ணக் கண்ணாடித் தாளில் சுற்றப்பட்ட ஈரங்காயாத மஞ்சள் ஒற்றை ரோஜா போல நளினமாக இருந்தாள்.
சிரித்தாள். "வாங்க கணேஷ்!" என்றாள். அப்பாவைப் பார்த்து "அப்பா இவரு.." என்று ஆரம்பித்த போது "தெரியும்மா, தம்பி பேர் சொன்னிச்சி! தம்பிக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வந்து குடும்மா!" என்றார். டெலிபோன் அடித்தது. மயில்சாமி போய் எடுத்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
"என்ன அகிலா! வீட்டில யாரையுமே காணுமே! நான் ரொம்ப வெள்ளன வந்திட்டேனா?" என்று கேட்டான்.
"எல்லாம் பதினொருமணிக்கு மேலதான் வருவாங்க. காலையில கோயிலுக்குப் போய் இப்பதான் திரும்பி வந்தோம். அம்மா சமையல்ல இருக்காங்க. தம்பி எங்கயோ கூட்டாளி வீட்டுக்கு ஓடிட்டான். இப்ப வந்திருவான்" என்றாள்.
வீடு சுத்தமாக இருந்தது. ஆடம்பரம் ஒன்றும் தெரியவில்லை. சாதாரண அலமாரிகளும் மேசை நாற்காலிகளும் இருந்தன. நடுநாயகமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் வீடியோவும் இருந்தன. சாப்பாட்டு மேசைமேல் பலகாரங்கள் இருந்தன. ஒரு அழகிய மலர்க்கொத்து இருந்தது. அவள் அங்கு இருந்ததால் வீடு அதிகக் களையுடன் தோன்றியது.
"வீடு கண்டு பிடிக்கிறது சுலபமா இருந்ததா?" என்று கேட்டாள்.
மயில்சாமி இன்னும் டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தைரியத்தில் தணிந்த குரலில் "உன் வாசனையைப் பிடிச்சிக்கிட்டே வந்திட்டேன்!" என்றான். நாணிச் சிரித்து முகம் தாழ்த்தினாள். "உங்க ஊருக்கு இதுக்கு முன்னால நான் வந்ததே இல்ல அகிலா. ரொம்ப அழகா இருக்கு!" என்றான்.
"அரச நகரம் இல்லியா, அப்படித்தான் இருக்கும்!" என்றாள்.
மயில்சாமி டெலிபோனை வைத்து விட்டு வந்தார். "தம்பி என்ன படிக்கிறிங்க?" என்று கேட்டார்.
பாடம், வருடம் சொன்னான். அந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புக்கள் எப்படி என்று கேட்டார். நல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்று சொன்னான். சொந்த ஊர், ஆரம்பக்கல்வி பற்றிக் கேட்டார். சொன்னான். இது முகமனுக்காகவா அல்லது தன் பின்னணியை ஆராய்வதற்காகவா என்று அவனுக்குத் தெரியவில்லை.
"என்ன அகிலா நீயும் கதை கேட்டுக்கிட்டு உக்காந்திருக்க! போயி சாப்பிடப் பலகாரங் கொண்டாந்து குடு! அம்மாவை வரச்சொல்லு" என்றார். அகிலா எழுந்து ஒரு விசிறலாக முந்தானை பறக்க உள்ளே போனாள்.
"நீங்க அகிலாவுக்குச் செஞ்ச உதவி, அதனால ஏற்பட்ட சிரமம் எல்லாம் அது விவரமா சொன்னிச்சி தம்பி. ரொம்ப நன்றி!" என்றார்.
"நன்றியெல்லாம் எதுக்குங்க? தற்செயலா செஞ்ச உதவி!" என்றான்.
"இருந்தாலும் அதனால நீங்க எவ்வளவு சிரமம் அனுபவிக்க வேண்டியதாய்ப் போச்சி!"
"நம் பையனுங்க சில பேருதான் இப்படி என்ன இக்கட்டுல மாட்டி விட்டுட்டாங்க. ஆனா இப்ப எல்லாம் ஒரு வகையா சரியாப் போச்சு" என்றான்.
"பல்கலைக் கழகத்திலேயே குண்டர் சங்கமா? என்னால நம்ப முடியில தம்பி!" என்றார்.
"இப்பதான் சிலர் ஆரம்பிக்க முயற்சி பண்ணினாங்க. இதுவரையில இப்படி நடந்ததில்ல பாருங்க. இனிமேலும் நடக்காது. பல்கலைக் கழக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்காங்க. இனிமே அப்படி நடக்க வழியில்ல" என்றான். பல்கலைக் கழகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.
அகிலா பலகாரங்களும் இனிப்பு பானமும் கொண்டுவந்து வைத்தாள். ஆனால் அவன் எதிர் பார்த்தைப் போல அவளுடைய அம்மா வரவில்லை. அவர்களைப் பேசவிட்டு அப்பா உள்ளே போனார்.
"உங்க அப்பா ரொம்ப அன்பானவரா இருக்காரு அகிலா!" என்றாள்.
"பத்து நிமிஷங்கூட பேசில. அதுக்குள்ள எப்படித் தெரியும் உங்களுக்கு?" என்றாள்.
"பேசின வரைக்கும் தெரியுதில்ல! ஒரு தலைமை ஆசிரியருக்கு உள்ள கண்டிப்பு கூட இல்லியே" என்றான்.
"அதெல்லாம் பள்ளிக்கூடத்திலதான் தலைமை ஆசிரியர். வீட்டில அவரு அப்பாதான்!" என்றாள்.
வாசலில் நிழல் தெரிந்தது. ஒரு ஐந்து இளம் பையன்கள் நுழைந்தார்கள். அவர்களில் முன் நின்றவனை "இவன்தான் என் தம்பி!" என்று அறிமுகப் படுத்தி வைத்தாள். "ஹலோ அங்கிள்!" என்றான். அது கேட்கக் குளிர்ச்சியாக இருந்தது. அதோடு தன் நண்பர்களுடன் பலகாரம் சாப்பிட உள்ளே போய்விட்டான்.
உள்ளே போயிருந்த மயில்சாமி வெளியே வரவும் வாசலில் இன்னும் சில மலாய்க்கார நண்பர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லி உட்கார வைத்தார் அவர். கணேசனையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். வந்தவர்களில் ஒருவர் தேசியப் பள்ளியின் ஆசிரியர்; சொந்தத் தொழில் செய்யும் பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு; மயில்சாமியோடு படித்து பெரிய மனிதராக இருக்கும் டத்தோ ஒருவர். அவருடைய அழகிய டத்தின் மனைவியுடன்.
அனைவரும் கணேசனுடன் முகமனுக்காகப் பேசினார்கள். தம் பிள்ளைகள் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயில்வது பற்றிச் சொன்னார்கள். அப்புறம் மயில்சாமியோடு கட்டித் தழுவி ஊர்க்கதைகளும் அரசியலும் பழைய நினைவுகளுமாகக் கலந்து கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அகிலாவின் அம்மா சிறிது நேரம் வெளியில் வந்து வந்தவர்களை வரவேற்றுவிட்டு உள்ளே போய் சாப்பாடு எடுத்து வைப்பதில் முனைப்பாக இருந்தார். அவன் பக்கம் வரவில்லை. வாய்ப்பில்லையா, தெரியவில்லையா அல்லது வேண்டாமென்றிருக்கிறாரா என்று புரியவில்லை. அகிலாவும் அம்மாவுக்குத் துணையாக ஓடிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது கணேசனைக் கண்ணால் பார்த்துப் புன்னகைப்பதோடு சரி.
மேலும் சிலர் வந்தார்கள். வீட்டில் கூட்டம் நெருக்கியது. அவனுக்குத் தனிமை அதிகமாக இருந்தது. தன் இருக்கையை இன்னொரு பெண்மணிக்கு விட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தான். அகிலா ஓடிவந்து அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை அருகில் கொண்டு விட்டாள். காகிதத் தட்டைகளில் ஒன்றைக் கையில் கொடுத்து "சாப்பிடுங்க" என்றாள். அப்புறம் வேறு யாரையோ கவனிக்கப் போய்விட்டாள்.
கணேசன் தட்டில் இடியப்பமும், பூலுட்டும் நிரப்பிக் கொண்டு அவற்றில் கறி பெய்து ஒரு ஓரத்துக்கு எடுத்துக் கொண்டு வந்தான். சாப்பாடு சுவையாக இருந்தது. ஆனால் தனியாகச் சாப்பிடவேண்டியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அவனையொத்த வயதினர் யாரும் இல்லை. வந்தவர்கள் ஜோடி ஜோடியாக குடும்பக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டுக் கை கழுவினான். மயில்சாமி மட்டும் வந்து "என்ன தம்பி, முடிச்சிட்டிங்களா? இன்னுங் கொஞ்சம் சாப்பிடலாமே!" என்றார். போதும் என்றான். அகிலாவின் அம்மா சாப்பாடு கொண்டு வருவதும் சமயலறைக்குள் போவதுமாக இருந்தார். அவன் பக்கம் அவர் பார்வை திரும்பவில்லை.
இன்னும் சிலர் வர சிலர் விடைபெற்றுப் போனார்கள். அவனுக்கும் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்காமல் போவது நல்லது எனப் பட்டது. அகிலாவைப் பிடிக்க முடிந்தபோது சொன்னான்: "நான் புறப்படலாம்னு பாக்கிறேன் அகிலா!"
"என்ன அவசரம் கணேஷ்? கொஞ்சம் நேரம் இருங்க, போகலாம்!" என்றாள்.
"இல்ல அகிலா! நான் பினாங்கு திரும்பி, முடிஞ்ச சீக்கிரம் பஸ் பிடிச்சி கிள்ளானுக்குப் போயாகணும். இப்ப போகலன்னா ரொம்ப நேரம் ஆயிடும்!"
"அப்படியா!" அவனைப் பார்த்தவாறு விழிகள் படபடக்க ஏதோ யோசித்தவாறிருந்தாள். அப்புறம் அவன் கையை உறுதியாகப் பிடித்தாள். அவனை இழுத்துக் கொண்டு சமயலறைக்குச் சென்றாள். அங்கு அவள் அம்மாவும் அவருக்கு உதவியாக இன்னொரு பெண்ணும் இருந்தார்கள். "அம்மா, இவருதான் கணேஷ்! எங்கூடப் படிக்கிறவரு, வருவாருன்னு சொன்னேன்ல!"
ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்து "அப்படியா, வாங்க!" என்று மீண்டும் தலை குனிந்து வேலையில் ஈடுபட்டார். "இதோ இவங்க எங்க சின்னம்மா! இங்க பக்கத்திலதான் இருக்காங்க!" என்று அறிமுகப் படுத்தினாள்.
"வாங்க தம்பி! அகிலாவுக்கு ரொம்ப உதவி பண்ணினிங்களாமில்ல! ரொம்ப நன்றி!" என்றார் அந்தச் சின்னம்மா.
"பரவால்லிங்க! சின்ன விஷயம்!" என்றான்.
"இப்படிப் புது இடத்தில அண்ணன் மாதிரி இருந்து ஒருத்தர் ஒதவி செய்றது ஒரு பொம்பிள பிள்ளைக்கு தைரியந்தானே!" என்று தொடர்ந்தார் அந்தச் சின்னம்மா. கொஞ்சம் முட்டாள் தனமாகச் சிரித்தான்.
அகிலாவின் அம்மா ஏதோ ஒரு சாப்பாட்டைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்குப் போய்விட்டார். சமயலறையில் அதற்கு மேல் நிற்பதற்குக் காரணமில்லாமல் இருவரும் வெளியே வரும்போது அம்மா எதிரில் வந்தார். அகிலா அவரைத் தடுத்து "அம்மா, கணேஷ் போகணும்கிறாரு!" என்றாள்.
"சரிம்மா, போயிட்டு வரட்டும். பலகாரங் குடுத்தியா?" என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கக் காத்திராமல் நடந்தார்.
வரவேற்பறையில் மயில்சாமி எதிர்ப்பட்டார். "என்ன தம்பி கிளம்பிட்டிங்களா?" என்று கேட்டார். "ஆமாங்க, நான் இனி பினாங்கு போய், கிள்ளானுக்குப் போகணும்!" என்றான்.
"அப்படியா, சரி! முடிஞ்ச போது வந்து போங்க!" என்றார்.
அகிலா மோட்டார் சைக்கிள் வரைக்கும் வந்தாள். அவன் ஏறி உட்கார்ந்து தலைக் கவசத்தை அணிந்து கொண்டான். கொஞ்சம் வருத்தமான குரலில் சொன்னாள்: "அம்மாவுக்கு சரியான டென்ஷன் கணேஷ்! வீடு நெறய ஆட்கள் வந்துட்டாங்கள்ள! அதினாலதான் அவங்களால முகங் குடுத்து பேச முடியல!" என்றாள்.
"பரவாயில்ல அகிலா. அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!" என்றான்.
கையைப் பிடித்து அழுத்தி விடை கொடுத்தாள். "வாரேன் அகிலா! கேம்பஸ்ல பார்ப்போம்!" என்று சொல்லி அவன் மோட்டார் சைக்கிள் நகர்ந்த போது தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கையாட்டி நகர்ந்தான்.
நெடுஞ்சாலையில் முகத்தில் காற்று அறைய பினாங்கு நோக்கி விரைந்த போது மனதில் கொஞ்சம் வெறுமை இருந்தது. "இவ்வளவுதானா அறிமுகங்கள்? இதற்காகவா அத்தையிடம் இத்தனை பொய் சொல்லி வந்தேன்?" என்று கேட்டுக் கொண்டான். அந்த வீட்டில் தனக்குக் கொஞ்சம் நிராகரிப்பும் இருந்தது என்பதை அவனால் உணர முடிந்தது.
ஆனால் அகிலாவின் கனிவு, மயில்சாமியின் திறந்த மனதுடனான உபசரிப்பு ஆகியவை ஆறுதலாக இருந்தன. இன்றிரவு அத்தையைச் சந்தித்து தான் காலையில் வரமுடியாத காரணத்தை எப்படிச் சொல்லி விளக்குவது என்ற யோசனையில் மனது மீண்டும் கலவரமடைந்தது.
***
எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும் நிறைய விருந்தினர்களின் கார்கள் ஓரத்தையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன. அந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கலகலவென்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் அத்தை வீட்டில் அந்தக் கலகலப்பெல்லாம் ஒன்றும் காணோம். வரவேற்பறையில் ஒரு மங்கலான விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வெளிச்சம் தெறித்து விழுந்து கொண்டிருந்தது.
கேட்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். மல்லிகா எட்டிப் பார்த்தாள். அவள் முகம் பிரகாசமானது அந்த அரையிருட்டிலும் தெரிந்தது. "அம்மா, மாமா வந்திரிச்சி..." என்று சொல்லியவாறு வீட்டுக் கம்பிக் கதவைத் திறந்து வெளியே வந்து பூட்டியிருந்த கேட்டையும் திறந்தாள். "இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சதா மாமா?" என்ற கேள்வியில் கிண்டல் மட்டும் அல்லாது கோபமும் இருந்தது.
"சௌக்கியமா மல்லிகா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். டெலிவிஷனில் ஏதோ உள்ளூர் கலை நிகழ்ச்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது. யாரோ சினிமாவில் பாடிய பாட்டுக்கு வாயசைத்தவாறு பத்துப் பனிரெண்டு பெண்களும் ஆண்களும் அதே சினிமாவின் விரசமான நடனத்தை யந்திரத் தனமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அத்தையைக் காணோம்.
"எங்க அத்தை?" என்று கேட்டான்.
"இருக்காங்க! வருவாங்க, நல்லா வாங்கப் போறிங்க!" என்றாள்.
"ஏன் வாங்கப் போறேன்? அதான் வந்திட்டேனே!" என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.
"ஆமா, வந்திட்டிங்க! நேத்தே வந்திருந்து எங்களோட காலையில இருந்து தீவாளி கும்பிடாம, யாரோ வெளி ஆளு மாதிரி வந்திருக்கிங்கள... ஏன் வெள்ளனே வர்ல மாமா?" அவள் குரல் குழைந்து தளுதளுக்க ஆரம்பித்தது. அழ ஆயத்தம் செய்கிறாள் என்று தோன்றியது.
"அட அதான் வந்திட்டனே, அப்புறம் என்ன மல்லிகா! நீ போய் எனக்கு தீபாவளி சாப்பாடு எடுத்து வை. பசியோட வந்திருக்கேன்!" என்றான்.
அத்தை உள்ளிருந்து வந்தாள். "ஆமா, எடுத்து வைடி! விருந்தாளி வந்திருக்கார்ல! போய் உபசாரம் பண்ணு! கேக்கிறதில மாத்திரம் வெக்கம் இல்ல!" சீறினாள்.
"ஏன் அத்த இவ்வளவு சூடா இருக்கிங்க?" என்று கேட்டான்.
"ஆமா, ஆமா! ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேட்டுக்க! எவ்வளவு மானாக்கேடா போச்சி எனக்கு இன்னக்கி காலயில?" என்றாள்.
"என்ன மானக் கேடு அத்த?"
"சாம்பிராணி போட வீட்டில ஒரு ஆம்பிள இல்ல. காலையில வீட்டுக்கு வர்ரவங்கல்லாம், எங்க கணேசக் காணோம், வரலியா, வரலியான்னு கேக்கிறாங்க. பதில் சொல்லி மாளல எனக்கு! என்ன அநியாயம் பண்ணிட்ட இந்த வருஷம் நீ...?"
"இல்ல அத்த, முக்கியமா தவிர்க்க முடியாத வேல இருந்ததினாலதான நான் வர முடியாம போச்சி! நான்தான் போன்ல உங்களுக்குச் சொன்னன...!"
அத்தை அதைக் கேட்கத் தயாராக இல்லை. "அது என்னா தீவாளி அன்னைக்கி அப்படிப்பட்ட வேல உனக்கு? உங்க யுனிவர்சிட்டி வாத்தியாருங்களுக்கு இன்னக்கி தீவாளின்னு தெரியாதா? அவங்க ஊட்டில எல்லாம் தீவாளி கொண்டாட மாட்டாங்களா? யாருன்னு சொல்லு நான் வந்து கேக்கிறேன்!"
பொய்யைத் தொடர வேண்டியிருந்தது: "இதல்லாம் லெக்சரர்ஸ் குடுக்கிற வேலயில்ல அத்த. மாணவர்கள் தாங்களா செய்த ஏற்பாடு. அத என் தலையில போட்டுட்டாங்க!" என்றான்.
"அதெப்படி தீவாளி அன்னைக்குன்னு செய்வாங்க? ஒரு நாள் மின்ன பின்ன செய்ய மாட்டாங்களா? இங்கிருந்து போயி உன்னாட்டம் படிக்கிற எத்தன பேரு திரும்பி வந்திருக்காங்க! ஒனக்கு மாத்திரந்தான் ஸ்பெஷலா?"
அத்தை தன் பொய்களுக்கு உள்ளே ஊடுருவி விட்டாள் எனத் தெரிந்தது. தான் நினைத்தது போல அவள் இந்த விஷயங்களில் அத்தனை வெகுளியாக இல்லை. தன்னையொத்த மற்ற மாணவர்கள் திரும்பி வந்ததைப் பார்த்து பேசியும் இருப்பாள் எனத் தெரிந்தது. ஆனால் தான் வராததற்குக் காரணமாக அவள் எதைச் சந்தேகிக்கிறாள் எனத் தெரியவில்லை.
தொடர்ந்து இன்னுமொரு ஐந்து நிமிடக்கள் பொரிந்து கொண்டே இருந்தாள் அத்தை. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவளை எதிர்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்த விஷயம் இன்னும் பெரிதாகிவிடும் என்ற பயம் இருந்தது. மல்லிகா பயந்தவாறு ஒரு மூலையில் இருந்தாள்.
ஒரு இடைவெளி ஏற்பட்டபோது சொன்னான்: "ஏன் அத்த இந்த விஷயத்த இவ்வளவு பெரிசா எடுத்துக்கிறிங்க? முடிஞ்சா வந்திருக்க மாட்டேனா? முடியாமப் போச்சி, மன்னிச்சிக்குங்க!"
அத்தை முறைத்தபடி நின்றாள். "அதாவது, பிள்ளைய ரெண்டு மூணு வருஷம் தனியா விட்டதில கொஞ்சம் துளுத்துப் போச்சி! அதான் விஷயம். எல்லாம் நான் உங்க அப்பாகிட்ட சொல்லி வச்சிருக்கேன். அங்க போய் கேட்டுக்க! நாளக்கி அங்க போவதான? இல்ல அதுக்கும் நேரமில்லன்னு ஓடிடுவியா?"
"இல்ல அத்த நாளக்கி போய் அப்பாவயும் அம்மாவயும் பாத்துட்டுத்தான் போவேன்" என்றான்.
என்ன சொல்லி வைத்திருக்கிறாள் அத்தை? அவனுக்கு அவள் மீது எரிச்சலாக வந்தது. ஏன் இத்தனை அதிகாரம் செலுத்துகிறாள்? தன் மீது ஏன் இத்தனை குறைவான மரியாதை வைத்திருக்கிறாள்? பல்கலைக் கழகம் போய் படிக்கும் அளவுக்கு வளர்ந்தாயிற்று. அடுத்த வருடம் ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கப் போகும் பட்டதாரி. இன்னும் சின்னப் பொடியனைப் போலவே நடத்துகிறாள். நான்தான் ரொம்பவும் பணிந்து பணிந்து இடம் கொடுத்து விட்டேனோ எனக் கேட்டுக் கொண்டான். இனி கொஞ்சம் சிலிர்க்க வேண்டும். திரும்பப் பேசவேண்டும். "நான் விரும்பிய இடத்துக்குப் போவேன், அதைப்பற்றி உனக்கென்ன அத்தை?" என்று கேட்க வேண்டும். ஆனால் கொஞ்சம் காலம் போகட்டும் என இருந்தான்.
அத்தை உள்ளே போய்விட்டாள். மல்லிகா அங்கு வந்து பரிவோடு அவன் கையைப் பற்றினாள். அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்குப் போனாள்.
வழக்கமான ஆடம்பரமான தீபாவளிச் சாப்பாடு இருந்தது. "சாப்பிடு மாமா, சாப்பிடு! பசிக்குதின்னு சொன்னேல்ல! சாப்பிடு! இந்த அம்மாவுக்கு புத்தியே இல்ல. தீவாளியும் அதுவுமா எப்படிப் புடிச்சிப் பேசிடிச்சி பாரு! நீ சாப்பிடு! " என்று மல்லிகா கனிவோடு வற்புறுத்தியபடி இருந்தாள்.
அத்தை தனக்குக் கொடுத்த வரவேற்பினால் ஏற்பட்ட எரிச்சலில் வயிற்றில் சுரந்த அமிலங்களால் அவன் பசிதான் செத்துப் போயிருந்தது.
*** *** ***
மல்லிகா கொடுத்த புதுத் துணிகளை அணிந்து கொண்டு வீட்டில் காலையில் பசியாறிவிட்டு அவன் அப்பா வீட்டுக்குப் புறப்பட அத்தையிடம் சொல்லிக் கொள்ளச் சென்ற போது "இரு, ட்ரைவர் இப்ப வந்திடுவாரு! நானும் வர்ரேன்!" என்றாள். அத்தை தன் கூட வருவது அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. "ஏன் உங்களுக்குச் சிரமம் அத்தை? நான் பஸ் பிடிச்சிப் போயிட்றனே!" என்றான்.
"பரவால்ல இரு. நானும் அங்க போக வேண்டிய வேலை இருக்கு" என்றாள். தானும் வருகிறேன் என்று கிளம்பிய மல்லிகாவை அத்தையே தடுத்து விட்டாள்.
"சும்மா கெட, ஒனக்கு அங்க வேல இல்ல! அந்த சுப்பையா செட்டியார் வந்து கொஞ்சம் காசு குடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. வாங்கி வை!" என்று அதட்டி அவளை வரவிடவில்லை.
அப்பாவின் தோட்டப்புற வீடு எப்போதும் போல்தான் இருந்தது. நேற்று முடிந்த தீபாவளியின் எஞ்சிய களையாக. வீட்டில் ஒரு நிரந்தரமான பீர் மணம் இருந்தது. ஓரத்தில் பீர் போத்தல்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டிறைச்சி கோழியிறைச்சியின் தின்ற எச்சங்கள் சமயலறையிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. அத்தையின் உபயத்தில் நேற்று விருந்து மிகவும் உச்சமாக இருந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அத்தையோடு அவன் நண்பகலில் போய்ச் சேர்ந்த போது அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்.
அம்மா போய் அவரை உலுக்கி உலுக்கி எழுப்பினாள். அவர் புரண்டு உறுமி "ஏன் தொந்திரவு பண்ற?" என்று சீறி விழுந்து, "ஓ தங்கச்சி வந்திருக்கா? இதோ வந்தர்ரேன்!" என்று எழுந்து தூக்கக் கலக்கத்தில் கணேசனை கண்ணைக் குறுக்கிப் பார்த்து ஒரு வெறுப்பை உமிழ்ந்து விட்டு பின்னால் குளியலறைக்குப் போனார்.
"நேத்து அக்கா வந்திருந்திச்சிப்பா, பிள்ளைங்களோட. இருந்திட்டு ராத்திரிதான் போனாங்க!" என்று அம்மா பட்டும் படாமலும் சின்னச் சின்னக் குடும்பக் தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுக்குக் குடிக்கக் கோப்பி கலந்து கொடுத்து சில முறுக்கு வகையறாக்களும் எடுத்து வைத்தாள். அத்தை ஒன்றும் சாப்பிடாமல் பேசாமல் உர்ரென்று இருந்தாள்.
அப்பா வந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று. "அதென்ன அப்படி தீவாளிக்குக் கூட வர முடியாம ஒரு படிப்பு? இந்த உலகம் முளுக்க தீவாளிக்கு லீவு உட்றாங்க! ஒனக்கு மட்டும் லீவு உட்றதில்லியா? வருஷத்துக்கு ஒருநாளு மச்சான் படத்துக்கு சாம்பிராணி போடணும்னு தங்கச்சி எப்படி காத்துக்கிட்டு இருக்குது? ஒன்ன மகன் மாறி வச்சிப் பாக்கில? சோறு போட்ல? காசு குடுக்கில? இப்படித்தான் நன்னி செலுத்திறதா? அப்பாங்கிற மரியாத இல்ல, அம்மாங்கிற மரியாத இல்ல, தாயப்போல வளத்தாளே அத்தைங்கிற மரியாத இல்ல! புள்ளங்க ரொம்ப கெட்டுப் போச்சி!" என்று பினாத்திக் கொண்டே இருந்தார்.
நேற்றிரவு கொஞ்சம் பீர் உள்ளே இறங்கிய மயங்கிய நிலையில் அத்தை இந்த வார்த்தைகளை அவர் வாயில் திணித்திருக்க வேண்டும். அது இப்போது கக்கப்படுகிறது எனப் புரிந்து கொண்டான்.
"கெட்டுப் போனது மாத்திரமில்ல அண்ண! ரொம்ப துளுத்துப் போச்சி! மீசை வந்திடுச்சி, படிப்பு கொஞ்சம் ஏறிடுச்சி! திமிர் ஏறிப் போச்சி!" என்று அத்தை உடன் வாசித்தாள்.
கணேசனால் சும்மா இருக்க முடியவில்லை. "ஏன் அத்த அதயே திருப்பித் திருப்பிப் பேசிறிங்க! நான் வேணுமானா வராததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்! விடுங்க!" என்றான்.
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அப்புறம் அப்பா கேட்டார்: "என்னமோ படிப்பு படிப்புன்னு அலையிற. எதுக்கு படிப்பு? படிச்சி வேல பாத்து என்னா அப்படி சம்பாரிச்சி கிளிக்கப் போற! படிக்காதவன்லாம் அந்த பிஸ்னசு, இந்த பிஸ்னசுன்னு ஆயிரம் ஆயரமா சம்பாரிக்கிறான்! படிப்பாம் படிப்பு!"
என்ன சொல்லுகிறார் என்று புரியவில்லை. அவருக்கும் தனது படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருநாளும் படிப்பு பற்றிக் கேட்டதுமில்லை. ஒரு காசும் கொடுத்ததும் இல்லை. அப்படிச் சம்பந்தமில்லமல் ஒதுக்கி வைத்திருந்த விஷயத்தை இப்படி இழுத்துப் பேசுவதேன்? அவரை அண்ணாந்து பார்த்தான்.
"அத்த ஒரு நல்ல கட வச்சிக் குடுக்கிறேன்னு சொல்லுது, இங்கயே கிள்ளான்லியே! பெரிசா, மினிமார்க்கெட் மாதிரி! நாலு ஆளுங்கள வச்சி நடத்தலாம். உக்காந்து சம்பாரிக்கலாம். என்ன சொல்ற?"
அதிர்ச்சியோடு அத்தையைப் பார்த்தான். "என்ன அத்தை இது?" என்றான்.
"ஆமா. ஒரு மினிமார்க்கெட் வெலைக்கு வருது. நல்ல இடம்னு சொல்றாங்க. அருமையான வியாபாரம். ஒரு நாளக்கி ஆறாயிரம் ஏழாயிரம் வெள்ளிக்கு வியாபாரம் நடக்குதாம். நெறய சரக்கோட தர்ரன்னு சொல்றாங்க! வாங்கிப் போட்டா ஒன்னோட எதிர்காலத்துக்கு நல்லது!" என்றாள்.
அவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. "என்ன சொல்றிங்க அத்தை. என்னோட எதிர்காலத்தப் பத்தி இப்ப என்ன?" என்றான்.
"வேறென்னா, அப்பா சொல்ற மாதிரி நீ என்ன படிப்புப் படிச்சாலும் எவ்வளவு சம்பாரிக்க முடியும் சொல்லு. ரெண்டாயிரம் வெள்ளி சம்பாரிப்பியா? இப்பவே மாசத்துக்கு எல்லாச் செலவும் போக அந்த மினிமார்க்கெட்டில 20 ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலான்னு சொல்றாங்க. யாரு ஒனக்கு அந்த மாதிரி சம்பளம் குடுப்பாங்க சொல்லு! இப்ப இந்த மாதிரி ஒரு சான்ஸ் இனி நமக்கு வருமா? அதான் இப்பவே வாங்கிப் போட்டு வியாபாரத்தில பூந்திட்டின்னா ஓஹோன்னு இருக்கலாம். அதுக்குத்தான்...!"
தன்னை தன் இடுப்பில் கட்டி வைத்துக் கொள்ள அத்தை ஒரு இனிப்பு வலை வரிக்கிறாள் எனத் தெரிந்தது. இருபதாயிரம் முப்பதாயிரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் தன்னை அவள் கால் விரல்களுக்குக் கீழ் அழுத்திக் கொள்ளப் போடுகிற திட்டம் எனத் தெரிந்தது. தான் அத்தையிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எத்தனை தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறேனோ அதைவிடத் தீவிரமாக தன் அடிமைச் சாசனத்தை நீட்டிக்க அத்தை திட்டம் தீட்டுவதாகப் பட்டது. தான் தொடர்ந்து படிப்பது தன் சுதந்திரத்திற்கு வழி வகுத்துவிடும் என்று அத்தை தெரிந்து கொண்டாள். தனக்கு இறக்கைகள் முளைத்துத் தான் தன் சொந்த முயற்சியில் பறப்பது அத்தைக்குப் பிடிக்கவில்லை. ஆகவே தன் பணபலத்தைக் காட்டி அந்த இறக்கையை நறுக்க நினைக்கிறாள்.
"அத்தை! என் படிப்பு அடுத்த வருஷம் முடிஞ்சிடும். அது வரைக்கும் எனக்காக நீங்க எந்தத் திட்டமும் போட வேண்டாம். இப்ப அவசரப் பட்டா படிப்பு வீணாப் போயிடும். ஆகவே இந்த விஷயத்தில எனக்கு சம்மதம் இல்ல!" என்றான். அவனுடைய துணிச்சல் அவனுக்கே வியப்பாக இருந்தது.
அப்பா கத்தினார்: "நான் என்ன சொன்னேன் தங்கச்சி! இதெல்லாம் சொல் பேச்சு கேக்கிற பிள்ளையா? அதெல்லாம் நாம சொல்றபடி கேக்காது! நல்லதுக்குத்தான சொல்றாங்கன்னு தெரியாது. தலையில திமிர் பிடிச்சிப் போச்சி. எனக்குத் தெரியுமே!" என்றார்.
"அப்ப மத்ததயும் சொல்லிடுங்க அண்ண!" என்றாள் அத்தை. அடுக்கடுக்காகத் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதைப் பற்றி இந்த இரண்டு பேரும் தான் இல்லாத வேளையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.
"ஆமா, சொல்லிட வேண்டியதுதான்" என்று தொடங்கினார் அப்பா. "சரி, உனக்குத்தான் தொழிலுக்கு ஒரு நல்ல வழி காட்டுனா வேணாங்கிற. என்னமோ படிச்சி கிளிச்சிட்டுத்தான் மறு வேலங்கிற. எப்படியோ தொலஞ்சி போ. ஆனா இப்ப தங்கச்சியோட மவ எவ்வளவு நாளா காத்திட்டு இருக்கு. அதுக்கும் வயிசாயிக்கிட்டு போவதில்ல! அதுக்கு ஒரு வளி பண்ணிட்டுப் போய்ப் படிச்சிட்டு வா!"
என்ன வழி? மல்லிகாவுக்குத் தான் ஏன் வழி சொல்ல வேண்டும்? புரியவில்லை.
"என்ன சொல்றிங்க அப்பா? மல்லிகாவுக்கு இப்ப என்ன?" என்றான்.
"அதான் வயசுக்கு வந்த பொம்பிள பிள்ளய எவ்வளவு நாள் சும்மா ஊட்டுலயே வச்சிக்கிட்டு இருக்கிறதுன்னு தங்கச்சி கவலப் படுது!"
"அதுக்கு?"
"உடனே நாள் பாத்து ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டா அப்புறம் கவல இருக்காது"
"யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?"
அத்தை திடீரென்று சீறினாள்: "பாத்திங்களா அண்ண! என்னமோ ஒண்ணும் தெரியாது மாதிரி பேசிறத! அன்னைக்கும் இந்த மாதிரிதான், என்னமோ தனக்கு சம்பந்தமிலாத மாதிரி பேச்சி! நீங்க சொன்ன மாதிரி யுனிவர்சிட்டி போனதில இருந்து பேச்சு நடத்தயெல்லாம் கொஞ்சம் மாறித்தான் போச்சி!"
"என்ன சொல்ல வர்ரிங்க அத்த? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!"
"இன்னும் என்னா வௌக்கமா சொல்றது? சீக்கிரமா அடுத்தடுத்த மாசத்தில மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் போய் படிப்ப முடிச்சிட்டு வான்னுதான் சொல்றேன்!"
அதிர்ந்தான். எதற்காக இப்படி அவசரப் படுகிறார்கள்? ஏன் இப்படி அதிவிரைவாகத் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள்? புரியவில்லை. அப்பாவுக்கும் அத்தைக்குமிடையிலான இந்த ரகசியப் பேச்சுகள் தான் நினைத்ததை விட மிகவும் ஆழமாக இருக்கின்றன என்று மட்டும் தெரிந்தது.
"அத்தை! இது என்ன தீடீர்ன்னு இப்படி ஒரு குண்ட போட்றிங்க? கல்யாணத்த பத்தி இப்ப நான் நெனைக்கவே இல்ல. படிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆகவே அது முடிஞ்சி அடுத்த வருஷம் பரிட்சை எழுதி முடிச்சப்புறம்தான் கல்யாணத்தப் பத்தி யோசிக்கணும். எதுக்கு இப்படி திடீர்னு அவசரப் பட்டுச் செய்யணும்?"
அப்பா தனது வழக்கமான பாட்டைப் பாடினார்: "நான் சொல்லுல தங்கச்சி? நம்ப சொல்றது ஒண்ணயும் கேக்க மாட்டான். திமிருன்னா அப்படி ஒரு திமிரு!"
அத்தை கேட்டாள்: "ஏம் பண்ணிக்கக் கூடாது? உனக்கு என்ன கஷ்டம்? எல்லா வேலயும் நான் பாக்கிறேன். நாள் பாக்கிறதில இருந்து விருந்து ஏற்பாடு, தாலி எல்லாம் நான் செஞ்சுத் தரேன் உனக்கு. நீ ஒரு மூணு நாள் லீவு எடுத்திட்டு வந்து தாலிய மட்டும் கட்டிட்டுப் போ! போய் உன் படிப்பப் பாரு! யாரு வேணாங்கிறா?"
"ஏன் இப்படி ஒரு அவசரம் அத்தை? நான் என்ன ஓடியா போயிடப் போறேன்?"
"ஓடத்தான விருப்பப் பட்றாப்பில இருக்கு! நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவொடனே எங்க வீடெல்லாம் நாகரிகமில்லாமப் போச்சி! அதான் தீவாளிக்குக் கூட வர விருப்பமில்லாமப் போச்சி! அப்படி மாறிட்ட போது எங்க வீட்டுப் பொண்ண நாங்கதான பாதுகாக்கணும்! அதுக்காகத்தான் சொல்றேன்!"
தலைகுனிந்து யோசித்தான். அத்தைக்குத் தன் மீது பெரிய அழிக்க முடியாத சந்தேகம் விழுந்து விட்டது. அகிலாவையும் தன்னையும் இணைத்து யாராவது அவளிடம் சொல்லியிருப்பார்களா? இருக்கலாம்! இந்தப் பக்கமிருந்து தனக்குத் தெரிந்த மாணவர்கள் அங்கே பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள். அவர்கள் மூலமாகத் தகவல் வந்திருக்கலாம். அதனால்தான் அத்தை இப்படி கண்ணி வைத்துத் தன்னைப் பிடிக்கிறாள்.
என்ன சொல்வது என்று யோசித்தான். தற்காலிகச் சமாதானங்கள் சொல்லி இப்போதைக்கு விடுபடலாம். ஆனால் இதற்காக மேலும் பல பொய்கள் சொல்ல வேண்டி வரும். இப்போதே உண்மையச் சொல்லி விடுதலை வாங்கிக் கொள்ளலாம். இதனால் பூகம்பம் வெடிக்கும். பிரளயம் வரும். ஆனால் உண்மையாலும் உறுதியாலும்தான் இதனைச் சமாளிக்க வேண்டும். அத்தையின் முந்தானையில் தான் முடிந்து வைக்கப்படுவதிலிருந்து அவிழ்த்து வெளியேற இதுதான் நல்ல தருணம்.
அகிலா என்னும் அரிய காதலி தன் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்க அங்கே காத்திருக்கிறாள். அவளைக் கைப்பிடித்துத்தான் தன் கனவுக் குடும்பத்தை அமைக்க வேண்டும். அது பணமில்லாத, ஆடம்பரமில்லாத வாழ்வாக இருக்கலாம். ஆனால் காதல் தோய்ந்த மனம் ஒன்றித்த வாழ்வாக இருக்கும். இந்த அத்தையின் முரட்டு ஆதிக்கத்திலிருந்து வெளியேற அது ஒன்றுதான் வழி.
அத்தையை நேராகப் பார்த்தான். "அத்தை! இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க முடியாது!"
அத்தை அவனை கனல் கக்கும் விழிகளால் முறைத்துப் பார்த்தாள். "முடியாதா? ஏன் முடியாது? எனக்கு காரணம் சொல்லு!"
"ஏன்னா, நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!" என்றான்.
வீடு திகைத்திருக்க அப்பா மட்டும் உரத்த குரலில் கூவினார்: "நானு சொன்னனா இல்லியா? அத்தினியும் திமிரு, ஒடம்பு முளுக்கத் திமிரு!"
***
அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது உம்மென்று ஆகிவிட்டாள். வீட்டில் ஒருவருடனும் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்கு "உம்" "ஊகூம்" என்று முனகலில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தம்பி அருண் எதையோ கேட்கப் போக "போடா, போய் வேலயப் பாரு!" என்று விரட்டினாள்.
கணேசன் வந்து போனதற்கும் அம்மாவின் மனமாற்றத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதென்று அகிலாவுக்குத் தெரிந்தது. ஆனால் அது ஏன் எனப் புரியவில்லை. கணேசனோடு அம்மா பேச மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்ட போதே அவளுக்கு கணேசன் அங்கு வந்திருப்பதில் விருப்பமில்லை என்று புரிந்து கொண்டாள். அப்பா மிகவும் நாகரிகத்துடன் நடந்து கொண்டார். அன்பாக உபசரித்தார். முகமன்களைக் குறைவில்லாமல் செய்தார். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் பட்டுக் கொள்ளாமல் இருந்தார்.
கணேசனை இப்படித் தீபாவளிக்கு வரச் சொன்னது தவறோ என நினைத்தாள். ஆனால் அப்பாவின் உத்தரவின் பேரில்தானே வரவழைத்தாள்! அதுவும் தீபாவளிக்கு முன் கூட்டியே பெற்றோர்களுக்குத் தெரிவித்திருந்தாள். அப்படித் தெரிவித்த போதும் அப்பா "அப்படியாம்மா! அதுக்கென்ன, நல்லா வரட்டும்!" என்று சொன்ன போது அம்மா மட்டும் ஒன்றும் சொல்லாமல் மௌனம்தான் சாதித்தாள்.
அன்று இரவு வீடு களைத்திருந்தது. தீபாவளித் துணிகளைக் களைந்து விட்டு இரவு உடுப்புகளுடன் தொலைக்காட்சி முன்னால் அனைவரும் சோர்ந்து கிடந்த போது அம்மா திடீரென ஆரம்பித்தாள்: "அந்தப் பையன் ஏன் நம்ம வீடு தேடி வரணும்?"
அகிலா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததால் இந்தக் கேள்வியை அவளால் சரியாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
"என்ன கேட்ட அம்மா?"
"அந்தப் பையன், அதான் உன் •பிரண்டு, ஏன் இவ்வளவு தூரம் நம்ம வீடு தேடி வரணும்?" குரலில் கோபமும் எரிச்சலும் இருந்தன.
அகிலாவுக்கு ஏனோ அப்பாவைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. ஏறிட்டுப் பார்த்தாள். அவர் பதில் சொல்லவில்லை. அகிலாவே பதில் சொல்ல வேண்டும் என்பது போலத் திரும்பப் பார்த்தார்.
அகிலா சொன்னாள். "என்ன கேக்கிற அம்மா? இன்னைக்குத் தீபாவளி! அவர் என் •பிரன்டு! வீட்டுக்கு வந்ததில என்ன தப்பு? அவரப் போல எத்தனயோ •பிரண்டுங்க வந்து போனாங்க. அவர் மட்டும் ஏன் வரக்கூடாது?"
"மத்த •பிரண்டுங்க அக்கம் பக்கத்தில உள்ளவங்க. ஏற்கனவே நமக்குத் தெரிஞ்சவங்க! ஆனா கிள்ளான்ல வீடு இருக்கிற பையன், தீபாவளி அன்னைக்கு அவங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு இங்க முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஊருக்கு வரணும்னு என்ன இருக்கு?" தொடர்ந்து கேட்டாள்.
"நாந்தான் வரச் சொன்னேன்! வந்து எங்க வீட்டப் பாத்துப் போங்கன்னு சொன்னேன்! இதில என்ன தப்பு? அவர் வரப் போரார்னு ஏற்கனவே உங்கிட்டியும் அப்பா கிட்டியும் சொல்லியிருக்கேனே!"
அப்பா வேடிக்கை பார்த்தவாறிருந்தார். இந்த உரையாடலில் வெளியே இருந்து பார்ப்பதையே விரும்பியவர் போல இருந்தார்.
"எனக்கென்னமோ இதல்லாம் நல்லதா படல! முன்ன பின்ன தெரியாதவங்கள இப்படி பெரிசா ஊட்டுக்கு நடுவுல கொண்டு வந்து உக்கார வச்சிக்கிறது அழகா இருக்கா?"
"யார் முன்ன பின்ன தெரியாதவங்க? என்னுடைய நண்பர், எனக்குப் பல்கலைக் கழகத்தில உதவி செய்தவர்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்?" அகிலாவின் குரலிலும் சூடு ஏறியது.
"என்னடி நண்பர்? யுனிவர்சிட்டியில நண்பர்னா அங்கயே வச்சிக்கனும்? ஏன் வீட்டுக்குக் கொண்டு வர்ர? அவங்க குடும்பத்தப் பத்தி தெரியுமா? நல்லவங்களா கெட்டவங்களா என்ன மாதிரி பரதேசிங்கன்னு தெரியுமா? அந்தப் பையனப் பாத்தா சுத்த தோட்டக்காட்டான் மாதிரி தெரியுது. அதுங்களோடல்லாம் உனக்கு என்ன பளக்கம் வேண்டி கிடக்கு?"
அம்மாவின் சீற்றமும் இந்த உதாசீன மிக்க பேச்சும் அகிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கணேசன் வந்தது பற்றி அம்மா விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை வெறுப்பை அவள் உமிழ்வாள் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.
தன்னைத் தற்காக்க அப்பா கூட முன்வராமல் இருந்தது அவளுக்குத் தவிப்பாக இருந்தது. கணேசனைப் பற்றி அம்மா முரட்டுத் தனமாக வீசும் சொற்களுக்குத் தானும் அதே தீவிரத்தில் பதில் சொன்னால் நிலைமை சூடாகிவிடும் என்று தெரிந்தது. ஆனால் தன் உள்ளத்தில் ஒரு பாசமான இடத்தில் வைத்திருக்கும் கணேசன் என்ற தனது நண்பனை -- காதலனை -- இப்படி உதாசீனப் படுத்தும் அம்மாவின் போக்கை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன சூடான சொற்களால் பதில் சொல்லுவது என்று அவள் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்த போது அப்பா பேசினார்:
"என்ன வனஜா, எதுக்காக இப்படிப் பேசிற? ஒரு நல்ல நாளும் அதுவுமா தன்னோட படிக்கிற நண்பர வீட்டுக்கு வரச் சொல்றதில என்ன தப்பு? நீ பேசிறது எனக்கே சரியா புரியில! பிள்ளைக்கு எப்படிப் புரியும்?"
"ஆமா, இப்படி நீங்க எடங்குடுத்து எடங்குடுத்துத்தான் இவ இப்படிக் கெட்டுப் போயிட்டா! அன்னைக்கே அவ இந்தப் பையன வரச்சொல்றன்னு சொன்ன போது அதெல்லாம் வேண்டான்னு நீங்க தடுத்திருக்கனும். அப்படிச் செய்யாம நீங்களும் அவ கூடச் சேந்துக்கிட்டு கொஞ்சிறதினாலதான் அவளும் தலைக்கு மேல போறா!" அப்பாவிடமும் சீறினாள்.
"என்ன பேசிறன்னு எனக்குப் புரியலியே! தீவாளி அன்னைக்கு ஒரு •பிரண்டு வீட்டுக்கு வந்திட்டுப் போறதுக்கு நீ இப்படி கோவிச்சிக்கிறியே!"
"ஏங்க, இந்தப் பையன் வெறும் கூட்டாளி இல்ல, இவங்களுக்கு இடையில என்னமோ இருக்குன்னு உங்களுக்குத் தெரியிலியா? போற போது அந்தப் பையன் இவ கைய பிடிச்சி சொல்லிட்டுப் போற அளவுக்கு இது முத்திப் போயிருக்கு. உங்களுக்கு சம்மதமா இதில? இதெல்லாம் மொளையிலேயே வெட்டி எறிய வேணாமா?"
தம்பி தான் பார்த்ததை அம்மாவிடம் சொல்லியிருக்கிறான் எனத் தெரிந்தது. அகிலா அவனை முறைத்தாள். அவன் அப்பாவித் தனமாக தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் தம்பி இதை உடைத்துச் சொல்லியிருப்பதில் ஒரு நன்மை இருப்பதாகவும் தோன்றிற்று. ஒரு வகையில் கணேசனை வீட்டுக்கு வரச் செய்ததே தன் பெற்றோரின் உணர்வுகளை ஆழம் பார்ப்பதற்குத்தானே! ஆகவே அதுதான் இப்போது நடக்கிறது. கணேசனின் கையைத் தான் பிடித்ததும், அவன் கையைப் பிடித்து அழுத்த அனுமதித்ததும் கூட பெற்றோருக்கும் தெரியட்டும் என்ற மன தைரியத்தில் நடந்ததுதான். ஆகவே தன் மனதைத் திறந்து சொல்ல இது சந்தர்ப்பம்தான் என அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கொஞ்சம் மறைமுகமாகவும் மெதுவாகவும் சொல்வது அவசியம் என எண்ணினாள்.
"போய்ட்டு வாரேன்னு கை குலுக்கிப் போனாரு. அதுவும் தப்பா?" என்று கேட்டாள்.
"இந்த நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம். எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்காத. நீ அளவுக்கு மீறிப் போற. இதில எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்ல!"
அகிலா தலை குனிந்திருந்தாள். பேசவில்லை.
அப்பா பேசினார். "என்ன இந்த விஷயத்த இவ்வளவு பெரிசு படுத்திற வனஜா? என்ன தப்பு நடந்து போச்சு இப்போ?"
"நீங்க இப்படியே எடங் குடுத்தீங்கன்னா இனிமேதான் நடக்கப் போவுது பெரிய தப்பு. இந்தப் பையன எனக்கு ஒரு துளிக் கூடப் பிடிக்கில. இகவே இந்தப் பளக்கம் வேண்டான்னு சொல்லிருங்க! இல்லன்னா, தன் இஷ்டப்படிதான் செய்வேன்னா இனிமே அவ எங்கிட்ட பேசவே வேணாம். அம்மாங்கிறவ ஒருத்தி வேணான்னு அவ இஷ்டத்துக்குப் பண்ணிக்கிட்டும்!"
அம்மா சரேலென எழுந்து அறைக்குள் போய் விட்டாள்.
கொஞ்ச நேரம் அந்த இடம் பேச்சடைத்துக் கிடந்தது. அப்பா நாற்காலியில் சாய்ந்து யோசித்தவாறு இருந்தார். தம்பி படம் பார்ப்பதாக நடித்துக் கொண்டிருந்தான். அகிலா அடக்கி அடக்கிப் பார்த்து தவிர்க்க முடியாமல் மெல்ல விம்ம ஆரம்பித்தாள்.
"நீ ஏம்மா இப்ப அளுவுற? அம்மா ஏதோ கோபத்தில பேசுது. விட்டுத் தள்ளு!" என்றார் அப்பா ஆறுதலாக.
"இப்ப இவ்வளவு பேசிற மாதிரி நான் என்ன குத்தம் செஞ்சிட்டேன் அப்பா?"
"எனக்கும் சரியா தெரியில அம்மா! அம்மாவுக்குக் கோவம் தணியட்டும். நான் கேட்டுப் பாக்கிறேன்!" என்றார்.
அந்த இறுக்கத்தில் கொஞ்ச நேரம் மௌனமாகக் கழிந்தது. தொலைக் காட்சிப் படத்தின் எல்லா அர்த்தங்களும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தில் தொலைந்து போக முதலில் தம்பி அங்கிருந்து சத்தமில்லாமல் நழுவி அறைக்குப் போனான். அகிலா தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் மனதில் வேறு குழப்பமான படங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்பாவும் கண்களும் மனமும் குவியாமல் தொலைக் காட்சியை வெறித்தவாறிருந்தார்.
அங்கு மேலும் நடப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டு அகிலா எழுந்து படுக்கப் போனாள்.
*** *** ***
மறுநாள் அவள் பினாங்குக்கு பஸ் ஏற அவளை பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டார் அப்பா. கூட வரத் தயாரான தம்பி அருணை அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். "போய்ட்டு வாரேம்மா!" என்று அகிலா கூவிச் சொன்ன போதும் சமையலறையில் இருந்த அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அரை மணி நேரம் முன்னதாகவே அவளை அவசரப் படுத்தி அழைத்து வந்தார். ஒரு மரத்தடியில் காரைப் போட்டு விட்டு அகிலாவிடம் பேசினார்.
"ராத்திரி அம்மாகிட்ட பேசினேன் அம்மா! அது ரொம்ப பிடிவாதமா இருக்கிது!" என்றார்.
"என்ன பிடிவாதம் அப்பா?"
"அந்தப் பையனோட உனக்குப் பழக்கம் இருக்கக் கூடாதாம். இப்ப இருக்கிற பழக்கத்த முறிச்சிக்க சொல்லுது!"
"ஏனாம்?"
"தெரில அம்மா. அந்தப் பையனப் பாத்தவொடனே உங்கம்மாவுக்குப் பிடிக்காம போச்சி!"
"ஏன் அப்படி? அவர சரியா ஏறெடுத்தும் பாக்கில. ஒரு வார்த்த கூட பேசில. அப்புறம் ஏன் இப்படி சொல்றாங்க?"
"எனக்குத் தெரியிலம்மா! உண்மையிலேயே அதோட மனப் போக்கு விளங்கல! அந்தப் பையனப் பார்த்தா நல்ல குடும்பத்துப் பையனா தெரியில, சுத்தத் தோட்டக் காடு மாதிரி இருக்குது அப்படின்னு கன்னா பின்னான்னு பேசுது. நான் சொல்றது எதையும் காதில போட்டுக்க மாட்டேங்குது" பெரு மூச்சு விட்டவாறு காரின் ஜன்னலூடே தெரிகின்ற மரத்தின் கிளையைப் பார்த்தவாறிருந்தார்.
"ஏன் அப்பா, பல்கலைக் கழகத்தில எனக்கு நண்பர்கள்னு சிலர் இருக்கத்தான வேணும்! அவர்கள்ள எனக்கு வேண்டியவர்கள தேர்ந்தெடுக்க எனக்குத்தானே தெரியும்! அம்மா வந்து எனக்குத் தேர்ந்தெடுத்துக் குடுக்க முடியுமா?" அவள் குரலில் கொஞ்சம் கோபம் நுழைந்தது.
அப்பா கொஞ்ச நேரம் ஓய்ந்திருந்து கொஞ்சம் தணிந்த குரலில் பேசினார்: "இந்தப் பையன் சாதாரண நண்பர் இல்லன்னு அம்மா நெனைக்குது. உன்னுடைய காதலனா இருக்கும்னு நெனைக்குது. அதனாலதான் இத்தனை ஆவேசம் வருது!"
அகிலா மௌனமாக இருந்தாள். அப்பா தலை திருப்பி அவளை நேரடியாகப் பார்த்துக் கேட்டார்: "அது சந்தேகப் பட்றது உண்மையா அகிலா?"
உண்மையா? அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அகிலாவுக்குத் தெரியவில்லை. அவள் மனமே இன்னும் உறுதிப்படவில்லை போல இருந்தது. கணேசனை எனக்குத் தெரியுமா? அழகன், அறிவாளி, நல்லவன் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதல் முறை பார்த்த அம்மாவின் மனதில் அவன் இப்படியெல்லாம் தோன்றவில்லை. உதாசீனப் படுத்தத் தக்க தோட்டக் காட்டானாகத் தோன்றியிருக்கிறான். தான்தான் தவறு செய்து விட்டேனோ? எனது தற்காப்புகள் அனைத்தும் இழந்திருந்த ஆதரவற்ற ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில் அவனுடைய அறிமுகம் கிடைத்ததால் அறிவு பின்னின்று உணர்ச்சி முந்தி நிற்க கண்டவுடன் காதல் என்று கொண்டு விட்டேனோ?
"நீ இப்படி மௌனமா இருக்கிறதப் பார்த்தா அம்மா சந்தேகப் பட்றது சரின்னுதான் நெனைக்க வேண்டியிருக்கு!" என்றார் அப்பா.
நிமிர்ந்து பார்த்தாள். "பழக்கம் கொஞ்சம் நெருக்கமா இருக்கிறது உண்மைதான் அப்பா. ஆனா அதுக்காக கல்லாணம் வரைக்கும் நான் வந்திட்டேன்னு சொல்ல முடியாது. நல்லவரா இருக்கிறாரு. எனக்கு ஆதரவா இருக்கிறாரு. மனசுக்குப் பிடிச்சவரா இருக்கிறாரு! அவ்வளவுதான்!"
"அப்படின்னாம்மா, இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும். இல்லியா?"
அகிலாவுக்கு ஒன்று தெரிய வேண்டியிருந்தது: "அம்மா சொல்றது இருக்கட்டும் அப்பா. நீங்க என்ன சொல்றிங்க?"
அப்பா யோசிப்பதற்குக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அப்புறம் சொன்னார்: "முதல் பார்வையில ஒருத்தரப் பத்தி சொல்ல முடியாது. பையனப் பார்த்தா கொஞ்சம் சாதாரணமாத்தான் இருக்குது. நமக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பங்கள்ளியே இத விடவும் நல்ல நாகரிகமான படிச்ச அழகான பிள்ளைகள் எவ்வளவோ பேர் இருக்காங்களே. அதோடு கூடம்மா, இந்த விஷயங்கள்ள என்ன விட உங்கம்மாவுக்கு ஒரு உள்உணர்வு இருக்கு. அது முதல்ல சொல்றது தப்புங்கிற மாதிரி பட்டாலும் பின்னால அது சரியா இருந்திருக்கிறத நான் வாழ்க்கையில பல தடவ பாத்திருக்கிறேன். ஆகவே இந்த விஷயத்தில நான் உங்கம்மாவோட உணர்ச்சிக்குத்தான் மதிப்புக் கொடுக்க விரும்புறேம்மா! பரவால்ல நீ யோசிச்சிப் பாரு. நீயும் படிச்ச பிள்ள! உன் விருப்பத்தையும் நான் மதிக்கிறேன். உன் எதிர்காலத்த நீயே தீர்மானிக்கிறதும் முக்கியம்தான். ஆனா குடும்பத்தப் பகைச்சிக்காம அதச் செய்ய முடிஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும் இல்லியா?"
*** *** ***
நெடுஞ்சாலையில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. ஏர் கண்டிஷன் உள்ள பஸ்ஸில் இறுக்க மூடிய ஜன்னல்களிலிருந்து பார்க்கின்ற போது அவை சத்தம் எழுப்பாக ஊமைப் படங்களாகத் தெரிந்தன. அளவாக வெட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்த நெடுஞ்சாலை விளிம்புகளில் அழகிய குட்டையான மரங்கள் அணிவகுத்து இருந்தன.
அப்பா தன்னை மிகவும் குழப்பி விட்டிருக்கிறார் என அகிலாவுக்குத் தோன்றியது. அம்மா சொன்னது செய்தது எல்லாவற்றையும் விடவும் அப்பா சொன்னதுதான் அவளை மிகவும் பாதித்திருந்தது. அம்மா தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் தன் மதிப்பைக் காத்துக்கொள்வதையே ஒரு பெரிய விஷயமாக நினைக்கிறாள். அவளுடைய முதிராத மனதில் இந்த சமுதாயப் பேச்சுதான் வாழ்வு-சாவுப் பிரச்சினையாக முக்கியத்துவம் பெற்று அவள் மூளையில் பாசியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அப்பா தன் முதிர்ச்சியில் சோர்ந்திருக்கிறார். வீட்டின் தலைமைத்துவத்தை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவளுடைய புடவை முந்தானையில் தற்காப்புத் தேடிக் கொள்கிறார் என்று தோன்றியது. குடும்பத்தின் பெருமை என்பது அம்மாவின் சொற்படி மூட நம்பிக்கைகள் மிகுந்த வழியானாலும் பாதுகாப்பான பாதைகளில் நடப்பதுதான் என்று ஆக்கிக் கொண்டார்.
இந்த இரண்டு பிற்போக்குவாதிகளுக்குத் தானும் தலை குனிந்து போகவேண்டுமா என அகிலாவின் மனம் சீறியது. தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தடுக்கத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போலப் பேசுகிறார்களே! தான் படித்ததவள் என்பதையும் நவீனமான எதிர் காலத்தில் வாழப் போகிறவள் என்பதையும் மறந்து விடுகிறார்களே!
கணேசனுக்கு என்ன குறை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவன் அசாதாரண அழகனல்ல. ஆனால் எந்தப் பெண்ணின் நெஞ்சையும் கவரும் தோற்றமுடையவன்தான். அவனுக்கு நல்ல குணங்கள் இருக்கின்றன. அவன் குடித்தோ சிகரெட் புகைத்தோ அவள் பார்த்ததில்லை. தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வானோ என்னவோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் தெரியாமல் இருந்திருக்காது.
அவனைத் "தோட்டக்காட்டான்" என்று அம்மா சொன்னது அகிலாவை வெகுவாகப் புண் படுத்தியது. இது என்ன புதிய இழிஜாதியா? இன்னுமா அவன் தோட்ட வேலைக்காரன்? அவன் படிக்கவில்லையா? நாளை நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றால் ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரம் உள்ளவனாக இருக்கப் போகிறானே. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அவன் பூர்வீகம் தோட்டப்புறமாக இருப்பதால் இப்படி எடுத்தெறிந்து பேசுவதா? அவன் என்ன ஜாதி என்பது இந்த நவீன காலத்தில் முக்கியமா?
எல்லாம் தெரிந்த அப்பாவும் ஏதோ அவன் நாகரிகமில்லாதவன் என்பது போலத்தானே பேசுகிறார். தனக்குத் தெரிந்த குடும்பங்களில் நாகரிகமுள்ள எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் கணேசன் நாகரிகமில்லாதவன் என்றுதானே அர்த்தம்! அப்படி என்ன நாகரிகமில்லாதவனாக நடந்து கொண்டான் கணேசன்?
கணேசனுடன் தான் பழகியிருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை அகிலா நினைத்துப் பார்த்தாள். அவன் இதுவரை தன்னை ஒரு பூப்போலத்தான் நடத்தியிருக்கிறான். தன் எண்ணங்களை மதித்திருக்கிறான். தான் இடம்கொடுக்காமல் அவன் தன்னைத் தொட்டதில்லை. தான் வேண்டாம் என்ற எதையும் தன் மேல் அவன் திணித்ததில்லை.
கணேசனுடைய பெற்றோர்கள் ஒருவேளை தோட்டத்திலேயே வாழ்ந்த, பட்டண நாகரிகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் பழைய தலைமுறை. தன்னால் அவர்களை அனுசரித்துப் போக முடியும். கணேசன் - அகிலா வாழ்க்கை முறையை அவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. தன் வாழ்க்கையின் மேல் அவர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை. அதற்குக் கணேசனும் அனுமதிக்க மாட்டான். ஆகவே அவர்களோடு தாங்கள் சமாதான சகவாழ்வு நடத்த முடியும். அதே போலத்தான் தன் பெற்றோர்களும் தன் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை என அகிலா முடிவு செய்து கொண்டாள்.
கணேசனுக்கும் தனக்குமுள்ள காதலால், அன்பால் ஒரு புதிய குடும்பத்தைத் தாங்கள் அமைத்துக் கொள்ள முடியும். அவன் பார்வை கனிவானதாக இருக்கிறது. என் மேல் ஆதிக்கம் செலுத்த அவன் நினைக்கவில்லை. அவன் மேல் ஆதிக்கம் செலுத்த நானும் நினைக்கவில்லை. எங்கள் குடும்பம் அமைதியான இனிமையான இணக்கமான குடும்பமாக இருக்கும். அம்மா - அப்பாவின் பத்தாம் பசலித் தனங்கள் அதில் குறுக்கிடத் தான் அனுமதிக்கக் கூடாது.
கிட்டத்தட்ட "நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!" என்று கணேசன் தன் அத்தையிடம் சூளுரைத்த அதே நேரத்தில், கணேசன்தான் தன் வருங்காலக் கணவன் என்ற எண்ணம் அகிலாவின் மனதிலும் உறுதிப் படத் தொடங்கியிருந்தது.
***
அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு "உம்" என்று ஓட்டி வந்தார்.
பகல் முழுவதும் அப்பாவின் வீட்டில் அத்தையும் அப்பாவுமாகச் சேர்ந்து அவனைத் தார்தாராய்க் கிழித்துப் போட்டார்கள். அவனால் அந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்து விட்டதென்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்து மண்ணாய்ப் போகப் போகிறார்கள் என்னும் செய்திகளை வெவ்வேறு கடுமையான வார்த்தைகளால் இருவரும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கிறார்களே என்ற நாணம் ஏதும் இல்லாமல் பேசினார்கள்.
"யாரு அந்த வேசச் சிறுக்கி? எனக்குக் காட்டு! என்ன சொக்குப் பொடி போட்டு உன்ன மயக்கினான்னு நேரா நாலு வார்த்த கேக்கிறேன்!" என்று அத்தை சொன்ன போது அவனுக்கு கோபம் எரிமலையாகக் குமுறி எழுந்தது. நான் இதயத்தில் சூட்டிய பூவை இப்படிக் குதறுகிறாள். நான் புனிதமானதாக எண்ணிக் காப்பாற்றுகின்ற எண்ணங்களின் மீது எச்சில் உமிழுகிறாள். அவள் குரல்வளையைப் பற்ற வேண்டும் போல் கோபம் வந்தது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் கோபாவேசங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
இடையே ஓரிரண்டு முறை காதல் என்பதும் கல்யாணம் என்பதும் சம்பந்தப் பட்டவர்களின் சொந்த விஷயம் என்பதை கணேசன் அவர்களுக்கு உணர்த்த முயன்றான். அவர்கள் விவாதக் கூச்சலில் அது விகாரமான பதில்களைத்தான் பெற்றது. "ஓ, அப்ப இத்தன நாள் எங்கையில காசு வாங்கித் தின்னது ஒன் சொந்த விஷயமா? புஸ்தகத்துக்கு இத்தன வெள்ளி, சாப்பாட்டுக்கு இத்தன வெள்ளின்னு கணக்குப் பாத்து வாங்கிட்டுப் போனது சொந்த விஷயமா?" என்று அத்தை கத்தினாள்.
"நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்" என்று அப்பா தாளம் போட்டார்.
"அத்த, நீங்க கொடுத்த காச எல்லாம் நான் வேலக்கிப் போயி சம்பாரிச்சி திருப்பிக் குடுத்திட்றேன். நீங்க எனக்கு இன்னமே எந்தக் காசும் கொடுக்க வேணாம்!" என்றான்.
"அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தன நா அவ ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?" என்று அப்பா கேட்டார்.
அவனால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து சோர்ந்து போய் தன் பையை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றான்.
"நில்லு, எங்க போற?" என்று அத்தை அதட்டினாள்.
"நான் போறேன் அத்தை. இங்க இருந்தா இப்படியே பேசிக்கிட்டே இருப்பிங்க. என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சி. அதுல எந்த மாத்தமும் இல்ல. ஆகவே நான் இப்படியே போய் பஸ் பிடிச்சி பினாங்குக்குத் திரும்பிப் போறேன்!" என்றான்.
வீடு கொஞ்ச நேரம் அதிர்ந்து இருந்தது. அப்புறம் அத்தை சொன்னாள்: "இதோட முடிஞ்சி போச்சா கணேசு? இப்படி வெளியாயிட்ட எல்லாம் சரியாப் போயிடுமா? அப்ப சரி. ஆனா எம்பிள்ளைக்கு யாரு பதில் சொல்றது? நான் எப்படி அவ மொகத்த பார்த்து 'ஒன் மாமன் ஒன்ன ஏச்சிட்டு இன்னொருத்தியோட போயிட்டான்னு' சொல்றது? நீயே வா. இப்பவே எங்கூட வந்து நீயே அவ மொகத்த பாத்து சொல்லிட்டு எங்க வேணுமானா தொலஞ்சி போ!" என்றாள்.
கணேசனுக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விட வேண்டும் என்றிருந்தாலும் இந்த அத்தையின் முகத்தில் இனி எந்த நாளும் விழிக்க வேண்டாம் என்று இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த விஷயத்தை மல்லிகாவிடம் சொல்லாமல் போவது நல்லதல்ல என்றே பட்டது. அவள் எனக்கு எதிரியல்ல. அவளும் என் அன்புக்கு உகந்தவள்தான். அவள் இவர்களைப் போல வயதிலும் உணர்விலும் முற்றிப்போன கட்டையல்ல. இளம்பெண். இளைய புதிய தலைமுறை. காதல் என்பது என்ன என சொன்னால் அவளுக்குப் புரியும். அதிலும் அத்தையால் இந்த விஷயம் விகாரப் படுத்தப் பட்டும் கொச்சைப் படுத்தப்பட்டும் அவளுக்குச் சொல்லப் படுவதை விட தானே அவளுக்கு இதமாக எடுத்துச் சொல்லலாம். நிலைமையை உணர வைக்கலாம் அதுதான் சரி.
அத்தையுடன் மீண்டும் காரில் ஏறினான். ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. கிள்ளான் வந்து சேரும் வரை ஒரு பேச்சும் பேசவில்லை. அத்தை பிரயாணம் முழுவதிலும் விம்மி விம்மி அழுது கண்களைத் துடைத்துக் கொண்டே இருந்தாள்.
*** *** ***
காரிலிருந்து இறங்கியவுடன் "ஏம்மா இவ்வளவு லேட்டா வர்ரிங்க?" என்று மல்லிகா தனக்கே உரிய குழந்தைத் தனத்துடன் சிணுங்கினாள். அத்தை ஒரு பதிலும் சொல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே போனாள். மல்லிகா புதிர் நிறைந்த கண்களால் கணேசனைப் பார்த்தாள்.
கணேசன் வரவேற்பறையில் நாற்காலியில் உட்கார்ந்தான். மல்லிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். "ஏன் மாமா அம்மா ஒரு மாதிரியா இருக்காங்க? உங்க வீட்டில ஏதாச்சிம் சண்டையா?" என்று கேட்டாள்.
அவளைப் பார்க்கும் போது அவள் இன்னும் குழந்தையாகிவிட்டது போலத் தெரிந்தது. தான் சொல்லப் போகும் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாள். "அப்படியா, சரி அதினால என்ன!" என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு உதறி விடுவாளா? அல்லது அவள் அம்மா குமுறி எழுந்ததைப் போல எழுந்து ஏசுவாளா? "உன்னால் என் வாழ்வே சூன்யமாகிவிட்டதே" என்று சினிமா பாணியில் அழுவாளா? அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
ஜெசிக்காவுடன் இதைப் பற்றி அவன் ஒருமுறை பேசிய நினைவு வந்தது. கொஞ்சம் தைரியமும் வந்தது.
"என்ன மாமா பேசாம இருக்கிங்க?" என்றாள்.
அதற்குள் உள்ளே போயிருந்த அத்தை மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள். "சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!" என்றாள்.
அத்தையின் முன்னிலையில் இந்த விஷயத்தைப் பேச முடியாது என்று தெரிந்தது. "மல்லிகா இப்படி வா!" என்று அவளை இழுத்துக் கொண்டு தான் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் தன்னறைக்குள் அவளை இழுத்துப் போனான். அவனுடைய சாமான்கள் புத்தகங்கள் பல இன்னும் அந்த அறையில் இருந்தன. இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் நாள் வந்து விட்டது என்பதுதான் அவன் மனதில் விளைந்த முதல் நினைப்பாக இருந்தது.
மல்லிகா கலவரத்துடன் படுக்கையின் மேல் உட்கார்ந்தாள். அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்த படி இருந்தாள்.
"மல்லிகா, ஒங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். ஆர்ப்பாட்டம் பண்ணாம அமைதியா கேளு!" என்றான்.
"ஏன் அம்மா இப்படிச் சத்தம் போட்றாங்க? அவங்க சொல்றது ஒண்ணும் வௌங்கிலிய! என்ன நடந்திச்சி?" என்று கேட்டாள்.
மனதைத் திடப் படுத்திக் கொண்டு சொன்னான்: "மல்லிகா, இன்னக்கி எங்க வீட்டில அத்தை உன் கல்யாணப் பேச்ச எடுத்தாங்க!"
"என்ன பேச்சு? என்ன சொன்னாங்க!"
"உடனே எனக்கும் ஒனக்கும் கல்யாணம் நடக்கணும்னாங்க!"
கொஞ்சம் வெட்கப்பட்டவள் போல் சிறு புன்னகையை இழைய விட்டாள். ஆனால் அது மின்னலாக மறைந்து மீண்டும் அவள் கண்களில் கலவரம்தான் நிறைந்தது.
"ஒடனேன்னா, எப்ப?"
"இப்பவே, இந்த வருஷமே!"
"ஏன் அம்மாவுக்கு இவ்வளவு அவசரம்? அடுத்த வருஷம் உங்க படிப்பு முடிஞ்சவொண்ணதான இதப்பத்திப் பேசிறதா இருந்தது!" என்றாள்.
"நான் கல்யாணத்துக்குத் தயாரா இல்ல மல்லிகா!"
மல்லிகா கொஞ்சம் அகலமாகவே சிரித்தாள். "எனக்கும் ஒண்ணும் அவசரமில்ல மாமா! இதுதானா பிரச்சின? நான் அம்மாகிட்ட சொல்லிட்றனே, அடுத்த வருஷம் வச்சிக்கலாம்னு!"
"அப்படி இல்ல மல்லிகா! அது இல்ல பிரச்னை!"
மீண்டும் அவனைக் கலவரத்துடன் பார்த்தாள். "அப்புறம் என்ன பிரச்னை?" என்று கேட்டாள்.
அவளுடைய கைகளைப் பிடித்தான். "மல்லிகா, நான் ஒண்ணக் கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னு அத்தை கிட்ட சொல்லிட்டேன்!" என்றான்.
அதிர்ந்து போனாள். அவளுடைய கண்களில் கண்ணீர் ஊற ஆரம்பித்தது. "முடியாதுன்னா? ஏன் அப்படி...?"
"எனக்கு இன்னொரு பெண் இருக்கா, எங்க பல்கலைக் கழகத்தில. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியப் பட்றோம். அவளத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்"
அதிர்ச்சியில் குழம்பிப் போயிருந்தாள். அவனைக் கண் விரித்துப் பார்ப்பதும் படுக்கையை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தாள். கண்களில் கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது.
"மல்லிகா, நான் சொல்றத அமைதியா கேளு! நாம் ரெண்டு பேரும் ஒண்ணா வளந்தவங்க. ஒன்மேல எனக்கு ரொம்பப் பிரியம் இருக்கு. ஆனா ஒன்ன ஒரு தங்கச்சி மாதிரிதான் என்னால நினைக்க முடியுது மல்லிகா!" என்றான்.
அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் அழுதவாறே இருந்தாள். அவள் பேசாத நிலையில் அவன்தான் பேச்சைத் தொடர வேண்டியிருந்தது.
"நீயே சொல்லு! என்னைக்காச்சும் உங்கிட்ட நான் தவறாப் பழகியிருக்கேனா? ஒன்ன காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கேனா? கல்யாணத்தப் பத்தி எப்பவாவது பேசியிருக்கேனா?"
மீண்டும் பேச்சில்லை. "ஒன்ன நான் ரொம்ப விரும்புறேன் மல்லிகா. எனக்கு என்னைக்குமே நீ ஒரு தங்கைதான். அதனாலதான் உங்கம்மோவோட விருப்பத்துக்கு என்னால சம்மதிக்க முடியில!"
நீர் குளங்கட்டியிருந்த கண்களால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "அப்ப என்ன உங்களுக்கு வேண்டாமா?" என்று தேம்பல்களுக்கிடையில் கேட்டாள்.
"நீ எனக்கு வேணும் மல்லிகா. ஒரு தங்கையா இரு!" என்றான்.
"என்ன உங்களுக்குப் பிடிக்கிலியா? ஏன் திடீர்னு பிடிக்காம போச்சி? நான் என்ன தப்பு செஞ்சேன்?"
"நீ ஒரு தப்பும் செய்யில! ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா....!"
"நான் அழகா இல்லியா மாமா? அவ, நீங்க விரும்பிற பொண்ணு இன்னும் ரொம்ப அழகா இருக்கிறாளா?"
"சீ! ஒன்னோட அழகுக்கு என்ன கொறச்சல்? அவ ஒண்ணும் பெரிய அழகியில்ல...!"
"ஆனா நல்லாப் படிச்சவ, இல்ல? நல்லா பேசத் தெரிஞ்சவ, கெட்டிக்காரி! என்னப் போல படிக்காத முட்டாள் இல்ல!"
"ஏன் இப்படிப் பேசிற மல்லிகா. அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல! இது மனசு சம்பந்தப் பட்ட விஷயம். எங்கள ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப பிடிச்சிப் போச்சி!"
"அப்ப என்னப் பிடிக்கில. இன்னொருத்தியப் பாத்த வொண்ண நான் அவலட்சணமாவும் முட்டாளாவும் போயிட்டனா?"
"ஏன் இப்படிப் பேசிற மல்லிகா? அதெல்லாம் இல்ல. உன்ன என் மனைவியா நான் நெனச்சதே இல்ல. இதெல்லாம் எங்க அப்பாவும் உன் அம்மாவும் தாங்களா நெனைச்சிக்கிட்டு பேசிப் பேசி உன் மனசில ஏத்தின நம்பிக்கை. அதை நீ நம்ப வேணாம்!"
"அப்பவெல்லாம் பேசாமதான இருந்திங்க! அப்பவே ஏன் அப்படிச் சொல்லல! இவ எனக்கு வேணாம் அவலட்சணம், முட்டாள்னு அப்பவே சொல்லியிருந்தா நான் அப்பவே உங்கள மறந்திருப்பேனே!"
கொஞ்ச நேரம் குற்ற உணர்ச்சியில் வாய் மூடி இருந்தான். பின் பேசினான்: "அப்ப எல்லாம் அத நான் வேடிக்கையாதான் நெனச்சேன். அப்புறம் அது சீரியஸ்னு தெரிஞ்சப்பவும் மறுத்து சொல்ல தைரியம் இல்லாமப் போச்சி. ஆனா இப்ப அதை வெளிப்படுத்திற நேரம் வந்திருச்சி. நான் என்ன செய்ய முடியும் மல்லிகா?"
"நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்" மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அழுதாள்.
"என்ன மல்லிகா இது! நீ அவலட்சணமும் இல்ல, முட்டாளும் இல்ல. அழகான புத்திசாலியான நல்ல பொண்ணு. உன்னக் கட்டிக்க எத்தனயோ பேர் தயாரா இருப்பாங்க! நானே ஒனக்கு மாப்பிள்ள பாத்துக் கட்டி வைக்கிறேன் பார் மல்லிகா!" என்றான்.
"வேணாம், ஒனக்கெதுக்கு அந்த சிரமம்? எனக்கெதுக்கு இனிமே மாப்பிள்ளையும் கல்யாணமும் கருமாதியும். எனக்கு ஒண்ணுமே தேவையில்ல! இனி வாழ்நாள் முழுக்க நான் அவலட்சணமாவும் முட்டாளுமாவே இருந்திட்டுப் போறேன்!" ஓங்கி அழுதாள். அறையிலிருந்து எழுந்து ஓடினாள். வரவேற்பறையில் காத்திருந்த அவளுடைய அம்மாவைக் கட்டிக் கண்டு குலுங்கி அழுதாள்.
"பாத்துக்கிட்டல்லம்மா! உங்க மாமன் எவ்வளவோ நாளா திட்டம் போட்டு வச்சிருந்திருக்கான். எப்படா படிப்பு முடியும், இவங்ககிட்ட இருந்து கறக்கிறதெல்லாம் கறந்துகிட்டு சமயம் வரும் போது எல்லாத்தையும் கைகழுவிட்டுப் போயிடுவோம்னு காத்துக்கிட்டே இருந்திருக்கான். இப்ப பிள்ளை தலை தூக்கியாச்சி, மீசை மொளச்சாச்சி. இந்த படிப்பிறிவில்லாத மூட ஜனங்களோட சகவாசம் வேணான்னு தூக்கிப் போட்டாச்சி! நம்பதான் ஏமாந்த முட்டாள்களா ஆயிட்டோம்!" அத்தை மல்லிகாவை அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டேயிருந்தாள்.
கணேசன் அறையிலிருந்து வெளியே வந்தான். "அத்தை நீங்க என்னக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம அசிங்கமா பேசிறிங்க. நீங்க என்ன ஆளாக்கிப் படிக்க வச்சதுக்கு என் தோலச் செருப்பா தச்சிப் போட நான் தயார். அந்த நன்றிய என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆனா என் தங்கையா நெனச்சிருக்கிற மல்லிகாவ..."
அவன் முடிப்பதற்குள் அத்தை சீறினாள். "என்ன தங்கச்சி தங்கச்சின்னு இன்னைக்குப் புதிசா ஆரம்பிச்சிருக்கிற? இத்தன நாள் மொறப் பொண்ணு, இன்னொருத்தி வந்தவுடனே தங்கச்சியா? ஒரு நாளாவது அவளத் தங்கச்சின்னு கூப்பிட்டிருப்பியா? என்ன அண்ணன்னு கூப்பிடுன்னு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கியா? திடீர்னு அண்ணன் வேஷம் போட்றியா?"
இந்த அத்தைக்குத் தன் உணர்வுகளை விளக்கிச் சொல்ல முடியாதென்று உறுதியாகிவிட்டது. விளக்கம் சொல்லச்சொல்ல அதை விகாராமாக்கிக் கொண்டிருக்கிறாள். இனி இதை வளர்த்த வேண்டாம் என்று தோன்றியது.
"அத்தை, இப்ப நான் என்ன சொன்னாலும் அது எடுபட மாட்டேங்குது. உங்க கோபம் கொஞ்சம் தணிஞ்சவொடனே இதப் பத்திப் பேசுவோம். நான் போயிட்டு வாரேன் அத்தை!" தன் துணிப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
வாசலில் நின்றான். "மல்லிகா! உன் அழுகையும் அதிர்ச்சியும் தீர்ந்தவொடன அமைதியா நெனச்சிப் பாரு. நான் சொல்றது உனக்குப் புரியும். உம்மேல எனக்கு எந்தக் கோவமும் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சி நான் போன் பண்றேன். போயிட்டு வாரேன்!" இறங்கி நடந்தான்.
*** *** ***
நெடுஞ்சாலையில் அந்த எக்ஸ்பிரஸ் பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. பினாங்குக்கான பஸ்ஸைப் பிடித்து அவன் ஏறி உட்கார்ந்த போதே மாலை ஆகிவிட்டது. மத்தியானம் அவனுக்கு யாரும் சாப்பாடு போடவில்லை. சாப்பாடு வாங்கிச் சாப்பிட வேண்டும் என்னும் எண்ணமும் மறந்து போயிருந்தது. வழியெல்லாம் உள்ளம் பெரும் குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்டுக் கொண்டேயிருந்தது.
என்ன செய்து விட்டேன்! அமைதியாகப் போய்க் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பங்களிலும் அவலப் புயலை எழுப்பியதற்கு நான்தானா காரணம் என்று மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்தை என்னதான் தந்திரக்காரியாக இருந்தாலும் அவள்தான் தனக்கு அம்மாவாக இருந்து அனைத்தும் செய்தவள். அவள் காண்பித்த உலகத்தில்தான் அவன் இத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருந்தான். "அத்தை, படம் பாக்கப் போறேன் காசு குடுங்க!" என்று பள்ளிக்கூட நாளிலிருந்து அவளிடம் உரிமையாகக் கேட்டு பழகியிருக்கிறான். இன்று எப்படி அந்த அத்தையை இந்த அளவுக்கு எதிரியாக எண்ண முடிந்தது? எப்படி அவளை எதிர்த்துப் பேசி விவாதிக்க முடிந்தது? எடுத்தெறிந்துவிட்டு வெளெயேற முடிந்தது?
மல்லிகாவின் அழுகையில் குளித்த முகம் நினைவுக்கு வந்தது. எத்தனை முறை இவளைச் சிரிக்க வைத்திருக்கிறேன்! தலையில் குட்டி அழ வைத்த நாட்களில் கூட கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைத்திருக்கிறேன். இன்று ஏன் அவளை அழ வைத்தேன்? ஏன் இப்படி எனக்கு அணுக்கமான, எனக்குச் சொந்தமான குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தினேன்? நான் செய்தது சரியா, பிழையா?
"நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்" என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
"அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தினி நா அவங்க ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?"
குரூரமான கேள்விகள். ஆனால் அவனால் பதில் சொல்ல முடியாத கேள்விகள். நன்றி கெட்டவன்தானா? ஏன் நன்றி கெட்டேன்? ஒரு புதிய காதலி முளைத்து விட்டதனாலா? அவளுடைய மோகம் என்னை மயக்கி விட்டதா? அதனால் என் அன்புக்குரிய அனைவரையும் பகைத்துக் கொள்ளத் துணிந்து விட்டேனா?
மனதின் ஆழத்தில் இன்னொரு குரல் இந்தக் குற்றங்களைச் சரிப்படுத்த முன் வந்தது. இல்லை. இதில் ஒன்றும் நன்றி கெட்ட தனம் இல்லை. நான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை என் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோர்களின் வாழ்க்கையிலும் அத்தையின் வாழ்க்கையிலும் நான் இரண்டறக் கலந்திருந்தாலும் என் வாழ்க்கை என தனியாக ஒன்று இனி உருவாக வேண்டும். அது என் விருப்பத்தில் உருவாக வேண்டும். அதில் என் மனைவியாக அகிலாதான் இருப்பாள். அவளை அந்த இடத்திலிருந்து மறுக்க வேறு யாருக்கும் - பெற்றோர்க்குக் கூட - உரிமை இல்லை.
ஆனால் இதையெல்லாம் இன்னும் அமைதியாகவும் அவசரமில்லாமலும் அசிங்கப் படுத்தாமலும் செய்திருக்கலாம். அசிங்கப் படுத்தியது நானல்ல. அத்தை இப்படி ஆவேசமாக திருமணப் பேச்சை எடுத்து தன்னை நெருக்காமல் இருந்தால் இதனை இதமாக உரிய காலத்தில் எடுத்துச் சொல்லிச் செய்திருக்கலாம். அத்தையின் முரட்டுப் புத்திதான் அத்தனையையும் இப்போது அசிங்கப் படுத்தியிருக்கிறது.
மல்லிகாவை நினைந்து உண்மையிலேயே பரிதாபப் பட்டான். அப்பாவியாக இருந்து தன் அம்மாவின் ஆசை காட்டல்களுக்கு ஆளாகி அந்த ஆசைகளின் ஏமாற்றத்திற்கு இப்போது பலியாகிப் போனாள். "சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பிலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!" என்று அத்தை அவனை விரட்டியிராவிட்டால் மல்லிகாவிடமும் மென்மையாக இதை எடுத்துச் சொல்லியிருக்க முடியும். அத்தை தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெறியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளையும் பிய்த்து எறிவது என்று முடிவு செய்து விட்டாள்.
"நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்" என்று மல்லிகா மீண்டும் மீண்டும் கூறித் தன்னைத் தண்டித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இது திடீர் என்று ஏற்பட்டதல்ல. மல்லிகாவின் உள்ளே நீண்ட நாட்களாகப் புதைந்து கிடந்த தாழ்வு மனப்பான்மை முற்றாக மேலே வந்து அவளை ஆக்கிரமித்துக் கொண்டது தெரிந்தது.
அவள் உண்மையில் அழகி. ஆனால் இந்தத் திடீர் நிராகரிப்பு அவளை தன்னைத்தானே பழித்துக் கொள்ளத் தூண்டியிருக்கிறது. அவள் பக்கத்தில் நீண்ட நேரம் இருந்து ஆறுதல் கூறியிருந்திருக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் ஏங்கியது. ஆனால் அதற்கு அத்தை கொஞ்சமும் இடம் வைக்கவில்லை. அதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவில்லை.
அகிலாவை நினைத்தான். அவள் நினைப்பு ஒரு துன்ப நிவாரணிக் களிம்பு போல, ஈரமான மழைத் தூறல் போல, மனதில் படர்ந்தது. அகிலாவை அடைவதற்கான உறுதியான காலடி எடுத்து வைத்தாயிற்று. இனித் திரும்ப முடியாத பயணம். அதிலே ஒரு பெருந் ததடைக்கல்லாக இருந்த அத்தையைத் தாண்டியாகிவிட்டது. சிறு நெருடலாக இருந்த மல்லிகாவையும் ஒதுக்கியாயிற்று. ஆனால் அகிலா...?
"இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!" என்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது.
நெடுஞ்சாலையில் இரவு கவிந்திருந்தது. ஏதோ ஓர் ஊருக்குப் பிரியும் சந்திப்பை பஸ் கடந்து கொண்டிருந்தது. அந்தக் கிளைப் பாதை ஏதோ ஓர் இருளடைந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த சந்திப்பில் மட்டும் சில நூறு மீட்டர்களுக்கு பிரகாசமான மஞ்சள் ஹேலோஜன் விளக்குகள் ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன. அதைக் கடந்ததும் மீண்டும் இருள் கவிந்தது. கொஞ்ச நேரமாவது தூங்க முடியுமா என்று பார்க்க கணேசன் இருக்கைக்குள் ஆழ்ந்தான்.
***
மாலையில் அறையில் உட்கார்ந்தவாறு நூலகத்தில் இருந்து கடன் பெற்று வந்த ஒரு கணினிப் பாடநூலிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் அகிலா. கொஞ்ச நேரம் நூலைப் பார்ப்பதும் அப்புறம் கொஞ்சம் வெறித்து ஜன்னல் கண்ணாடிகள் வழியாக வெளியில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக இருந்தாள். அந்த மலாய் மொழிபெயர்ப்பு நூல் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. எவ்வளவுதான் விரிவுரைகள் மலாயிலேயே நடந்தாலும் இறுதியில் ஆங்கில மூல நூலைப் பார்த்தால்தான் முழு விஷயமும் புரிகிறது. ஆங்கில மூலநூலைத் தேடிக் கிடைக்காததனால்தான் இந்த மலாய் நூலைத் தூக்கி வந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய விடைகள் அதில் கிடைக்காமல் அது அவளை அலைக்கழித்தது.
பாடத்தில் மனம் ஈடுபடாமல் இருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல என்பது அவளுக்குப் புரிந்தது. தீபாவளி முடிந்து அவள் பல்கலைக் கழகம் திரும்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் வந்த நாளிலிருந்து கணேசனைப் பார்க்க முடியவில்லை. அவள் அலோர் ஸ்டாரிலிருந்து திரும்பி பினாங்கில் பஸ் விட்டு இறங்கிய போதே கணேசன் தன்னை அழைத்துப் போக வந்திருப்பானா என்று ஒரு நப்பாசையுடன் எட்டி எட்டிப் பார்த்தாள். அவன் இல்லை. நேற்றுத்தான் தன் வீட்டில் தீபாவளி முடித்துக் கொண்டு கிள்ளானுக்குப் போயிருப்பவன் இத்தனை சீக்கிரம் வந்திருப்பான் என்று எதிர்பார்க்கும் தன் முட்டாள் தனத்தைக் கடிந்து கொண்டாள்.
நசநசவென தூறிக் கொண்டிருந்த மழையில் குளுகோரிலிருந்து துணிப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்து விடுதிக்குள் வருவதற்குள் அவள் முற்றாக நனைந்து போய்விட்டாள். நடந்து கொண்டிருக்கும் போதே அன்றைக்கு கணேசனுடன் தொப்பரையாக நனைந்து அவன் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து அவனைக் கட்டிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குத் திரும்பிய நினைவு வந்து கிளுகிளுக்கச் செய்தது.
அவளுடைய இந்தியத் தோழிகள் யாரும் பல்கலைக் கழகத்திற்குத் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரவர் ஊர்களிலும் வீடுகளிலும் இன்னும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள். தோழிகள் இல்லாத, குறிப்பாக கணேசன் இல்லாத வளாகம் அவளுக்கு வெறிச்சோடிக் கிடந்தது. வளாகம் திரும்பிய முதல் இரவிலேயே தனிமை உணர்ச்சி தீவிரமாக மேலோங்கி இருந்து. நாளைக்கு எல்லோரும் திரும்பி விடுவார்கள். வளாகம் முன்பு போல கலகலப்பாக இருக்கும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டாள்.
மாலதி மறுநாள் வந்துவிட்டாள். காலை விரிவுரை முடிந்தவுடன் சந்தித்து இருவரும் கேன்டீனில் சாப்பிடப் போனார்கள். அகிலா சுற்றுமுற்றும் பார்வையை அலைய விடுவது யாருக்காக என்று மாலதிக்குத் தெரிந்துதானிருந்தது.
"என்ன, உங்க ஆள இந்தப் பக்கத்திலியே காணோமே! இன்னும் திரும்பிலியா? திரும்பியிருந்தா பலகாரத்த ஈ மொய்க்கிற மாதிரி இந்நேரம் இங்க வந்திருப்பாரே!" என்று மாலதியே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.
"தெரியில மாலதி. ஒரே நாள்ள வந்திர்ரேன்னுதான் போனாரு! அத்தை வீட்டில விருந்து ரொம்ப பலம் போல!" என்றாள் அகிலா. மாலதியைப் பார்த்து அது ஒரு வேடிக்கை என்பது போலச் சிரித்தாள். உள்ளுக்குள் மாலதிக்கு மறைத்து உள்ளம் ஏங்கியது.
"தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்தாரா? அந்தக் கதை சொல்லவே இல்லியே!" மாலதி கேட்டாள்.
"வந்திருந்தார். என்ன சொல்ல வேண்டியிருக்கு? எல்லா விருந்தாளிகளும் மாதிரி வந்து போனாரு, அவ்வளவுதான்!"
"ஏய், மறைக்கிற பாத்தியா! இவர் எல்லா விருந்தாளிகளையும் போல இல்லியே! இவர் ரொம்ப சிறப்பான விருந்தாளின்னு உங்க அப்பா அம்பாவுக்குக் காட்டுறதுக்குத்தான நீ கூப்பிட்டிருந்த?"
மாலதியிடம் மறைக்க முடியாது. அதோடு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. காதல் செய்திகள் சாம்பிராணிப் புகை போல. மறைத்து வந்தாலும் பறந்து மூக்கில் நுழைந்து விடும்.
"அப்பா அவரப் பார்த்து நல்ல முறையில சிநேகமாத்தான் பேசினார் மாலதி. ஆனா அம்மா அவர்கிட்ட முகங்கொடுத்தே பேசில!"
"ஏன்?"
"என்னமோ தெரியில! ஒரு காரணமில்லாத வெறுப்பு. நான் அவர அறிமுகப் படுத்தப் பார்த்த போதும் வேணும்னே வெலகிப் போய்ட்டாங்க!"
"அப்படியா? அப்ப கணேசன் வருத்தப் படுலியா?"
"தெரியில. அப்புறம் அவரோட பேசிற சந்தர்ப்பம் கெடைக்கில. இனி வந்தாதான் கேக்கணும்!"
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு அகிலாவே சொன்னாள்: "அன்னைக்கு ராத்திரி அம்மா என்னப் பிடிச்சிக்கிட்டாங்க. ஏன் இங்கக் கூப்பிட்டேன்னு திட்டினாங்க. ஆளப் பாத்தா தோட்டக் காட்டான் மாதிரி இருக்கு, எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கிலன்னாங்க!"
மாலதியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. "அப்ப ரொம்ப சீரியசாத்தான் வெறுக்கிறாங்க போல இருக்கு! அப்பா என்ன சொன்னாரு?"
"அப்பா மொதல்ல ஆதரவா பேசினாரு. ஆனா கடைசியில 'இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும்' அப்படிங்கிறாரு"
"அப்ப ரெண்டு பேரும் வேண்டான்னு சொல்லிட்டாங்களா? அப்புறம் என்ன செய்யப் போற அகிலா?"
அகிலா சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தவாறிருந்தாள். அப்புறம் பேசினாள்: "வந்ததிலிருந்து ரொம்ப யோசிச்சுப் பார்த்திட்டேன் மாலதி. இந்த விஷயத்தில அப்பா அம்மாவோட பிற்போக்குத் தனத்த என்னால ஒத்துக்க முடியில. என்னோட வாழ்க்கைக்கு வேண்டியவர நான் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை இல்லியா? ஆகவே நான் கணேசன் மேல உள்ள என் பிரியத்த மாத்திக்கப் போறதில்ல!" என்றாள். அந்தத் தருணத்தில் அந்த உறுதி இன்னும் பலப் பட்டது.
"பிரியம்னா... காதல்னு தெளிவா சொல்லேன்!"
"ஆமா. காதல்தான். அது என்ன பெரிய குத்தமா?"
மாலதி கொஞ்சம் யோசித்துப் பேசினாள்: "எனக்குத் தெரியாதம்மா. இதுவரைக்கும் எனக்கு அப்படி நடந்ததில்ல. என்னப் பாத்து இளிச்ச எந்த ஆம்பிளயும் இதுவரைக்கும் காதல்னு எங்கிட்ட வந்ததில்ல. நானும் அப்படி யாரையும் தேடிப் போனதுமில்ல. எங்க அப்பா அம்மா பாத்து வைக்கிற யாரையும் கட்டிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!"
"அப்படின்னா நான் செய்றது தப்புங்கிறியா?"
"ஐயோ! அப்படி இல்ல. எனக்குத் தெரியாத விஷயம் பத்தி நான் யாருக்கும் ஆலோசனை சொல்லத் தயாரா இல்லன்னுதான் சொன்னேன்!"
கொஞ்ச நேரம் மௌனமாகச் சாப்பிட்டார்கள். திடீரென எதையோ நினைத்துக் கொண்டது போல மாலதி கேட்டாள்: "கணேசன் இன்னும் கேம்பசுக்குத் திரும்பி வரலன்னு ஒனக்கு நிச்சயமாத் தெரியுமா?"
அகிலா திடுக்கிட்டாள். "ஏன் அப்படி கேக்கிற மாலதி?"
"இல்ல, நீ சொல்றதப் பார்த்தா தனக்கு உங்க வீட்டில கிடைச்ச வரவேற்பில கோவமாகி ஒருவேள உன்னப் பாக்க வேண்டான்னு இருக்காரோ என்னமோ"
அகிலா கலவரமடைந்தாள். அப்படியும் இருக்குமா?
*** *** ***
அன்று இரவும் அதற்கடுத்த நாளான இன்றும் கூட கணேசனை வளாகத்தில் காணவில்லை. விரிவுரைக்குப் போய் வரும் போதெல்லாம் அவன் மோட்டார் சைக்கிள் எங்காவது தென்படுகிறதா என்று சுற்றிப் பார்த்தாள். காணவில்லை. அவனுடைய நண்பர்கள் சிலரைப் பார்த்தாள். ஆனால் கணேசனைப் பற்றிக் கேட்க வெட்கமாக இருந்தது.
இன்று முழுவதும் விரிவுரைகளில் மனம் செல்லில்லை. செய்ய வேண்டிய எசைன்மெண்டுகள் இரண்டு மூன்று இருந்தன. ஒன்றைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை. நூலகத்தில் உட்கார்ந்தால் ஒருவேளை கணேசன் வெளியில் இருப்பானோ என்று மனம் தேட வைத்தது. வெளியே இருக்கும் போது ஒருவேளை நூலகத்தின் உள்ளே இருப்பானை என்று தேடவைத்தது. இன்று முழுவதும் இந்தத் தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.
மாலதி ரொம்பவும்தான் கலவரப் படுத்தி விட்டாள். அப்படி இருக்குமா? கோபித்துக் கொண்டுதான் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறானா? அம்மா அன்றைக்கு நடந்து கொண்டது அவனுக்குப் பெரிய அவமானமாகப் பட்டிருக்குமா? அவன் விடைபெற்றுப் போவதற்கு முன் "அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!" என்று சொன்னதை நினைத்துப் பார்த்தாள். உண்மையில் கோபப்பட்டுப் பேசினானா? தான்தான் புரிந்து கொள்ளவில்லையோ?
அல்லது இன்னும் கிள்ளானிலிருந்து திரும்பவில்லையா?
அவள் ஜன்னலுக்கு அப்பால் விடுதிக்கு வரும் குறுகிய சாலை இருந்து. அதில் மோட்டார் சைக்கிள்கள் வந்த போதெல்லாம் அது அவனுடைய மோட்டாரா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லாத போது தூரத்தில் தெரிந்த குன்றுகளைப் பார்த்தாள். சூரியன் சூடு குறைந்து விழுந்து கொண்டிருந்தது. அடிவானம் சிகப்புச் சாயம் பூசிக் கொள்ளத் தொடங்கியிருந்தது. அது அவளுடைய தனிமையை இன்னும் அதிகப் படுத்தியது.
அறைக்குள் இருப்புக் கொள்ளவில்லை. ஆனால் எங்கு போவதென்றும் தெரியவில்லை. நூலகத்துக்குப் போகலாம். ஆனால் பிடிக்கவில்லை.
அவள் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். யார்? மாலதி வந்திருப்பாளோ? இருக்காதே! மாலதிக்கு இன்று மாலை டியுடோரியல் இருக்கறதென்று சொன்னாளே!
கணேசன்? முடியாது. ஆண்கள் பெண்கள் விடுதிக்குள் அறை ஏறி வர முடியாது. ஒருவேளை கீழே இருந்து ஆள் அனுப்பியிருப்பானோ! ஆசைகள், ஆசைகள். ஆயிரம் ஆசைகளோடு ஓடிக் கதவைத் திறந்தாள். ஜெசிக்கா!
ஜெசிக்காவா? எப்படி, ஏன் வந்தாள்? கடைசியாகச் சண்டையிட்டுப் போன பிறகு ஜெசிக்கா ஒரு நாளும் அவளோடு பேசியதில்லை. ஆனால் பின்னால் வேறு காதலனைப் பிடித்துக் கொண்டு கணேசன் மீதுள்ள ஆசைகள் தணிந்து விட்டிருந்த பொழுது அகிலாவைப் பார்த்து ஓரிரு முறை புன்னகைத்து நட்பைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு நாளும் நின்று பேசியதில்லை. இன்றைக்கு ஏன் அறை தேடி வந்தாள்?
"ஹாய்" என்றாள் ஜெசிக்கா. அவளுடைய முத்திரைச் சிரிப்பு அப்படியே இருந்தது.
"ஹாய் ஜெசிக்கா! என்ன ஆச்சரியம்! திடீரென்று தேடி வந்திருக்கிறாயே!" என்றாள் அகிலா.
"இப்படி வந்த உன்னைத் தொந்திரவு படுத்தியதற்கு மன்னித்துக் கொள் அகிலா. ஆனால் உனக்குச் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது" என்றாள். சிரிப்பு மறைந்திருந்தது.
"என்ன செய்தி?"
"கணேசனைப் பற்றிய செய்தி" என்றாள்.
அகிலாவுக்குத் திகீரென்றது. கணேசனுக்கு என்ன? ஏன் இப்படி இவள் செய்தி கொண்டு வர வேண்டும்? "ஏன், அவருக்கு என்ன? எங்கே அவர்?" என்று கேட்டாள்.
"பதட்டப் படாதே! கணேசனுக்கு ஒன்றுமில்லை. கிளாங்கில்தான் இருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு முன் என்னிடம் •போனில் பேசினார்!"
"என்ன பேசினார்?"
ஜெசிக்கா அறையைச் சுற்றிப் பார்த்தாள். பின் பேசினாள்: "நான் நினைக்கிறேன், நாம் கீழே போய் பேசுவது நல்லது. கேன்டீனுக்குப் போவோம். ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்!" என்றாள்.
"என்னை மிகவும் பயப்படுத்துகிறாய் ஜெசிக்கா. அவசரமான செய்தியாக இருந்தால் இப்போதே சொல்லிவிடு!" என்றாள் அகிலா.
"அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் மிக முக்கிய செய்திதான். வா, தனிமையில் உட்கார்ந்து ஆறுதலாகப் பேசுவோம்!"
ஜெசிக்காவை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அகிலா உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டாள். கேன்டீனை நோக்கி மௌனமாக நடந்தார்கள். என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாள்? ஏன் இந்த முஸ்தீபும் மர்மமும்? கணேசனுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தது. அவன் கிள்ளானிலிருந்து •போன் செய்திருக்கிறான் என்று தெரிந்தது. அகிலா தேடுவாள் என்று தெரிந்து தான் இன்னமும் வளாகத்துக்குத் திரும்பவில்லை என்ற செய்தியைச் சொல்லச் செய்திருக்கிறான் என்று தெரிந்தது.
ஆனால் அதற்கு மேல் என்ன செய்தி? "இதோடு இந்த உறவு முறிந்தது என்று சொல்லிவிடு" என்று தன் உயிர்த் தோழியை விட்டுச் சொல்லச் செய்திருக்கிறானா? "என்னால் அவள் முகத்தில் முழிக்க முடியாது!" என்று சொல்லியிருக்கிறானா? அம்மாவின் வெறுப்பு இத்தனை தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டதா? மனம் கற்பனைகளை இரட்டிப்பாக்கிக் கொண்டேயிருந்தது.
கேன்டீனில் கூட்டம் இன்னும் சேரவில்லை. ஆளுக்கொரு பானம் வாங்கிக் கொண்டு மிக ஒதுக்குப் புறமான இடத்துக்குப் போனார்கள்.
"உன்னிடம் பேச வேண்டும் என்று பல முறை நான் நினைத்ததுண்டு. ஆனால் உன்னோடு நான் சண்டையிட்ட சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து எனக்கே வெட்கமாகப் போகும். அதனால் உன்னைச் சந்திக்க எனக்கு தைரியம் வருவதில்லை!" என்றாள் ஜெசிக்கா.
அகிலா சிரித்தாள். "உனக்கா தைரியம் இல்லை. இந்தப் பல்கலைக் கழகத்திலேயே நீதான் பெரிய தைரியசாலி என்பதுதான் உண்மை!" என்றாள்.
"எல்லா தைரியங்களையும் விட மன்னிப்புக் கேட்பதற்குத்தான் அதிக தைரியம் வேண்டும். என்னை மன்னித்து விடு அகிலா!" என்றாள்.
"நான் அதையெல்லாம் மறந்து விட்டேன். நீயும் மறந்து விடு!" என்றாள் அகிலா.
"நன்றி. கணேசன் மிக நல்வன். அவனைக் காதலனாக அடைந்த நீ அதிர்ஷ்டசாலி"
அகிலாவுக்குப் பொறுமை குறைந்தது. இதற்காகவா கூப்பிட்டாள்? தன் பழைய காலக் காதல் வாழ்க்கையைச் சொல்லி ஆயாசப் படவா அறையைத் தேடி வந்தாள்? "என்ன ஜெசிக்கா! கணேசனைப் பற்றி முக்கியமான விஷயம் சொல்ல வேண்டு மென்று சொல்லி பழைய விஷயங்களைப் பேசுகிறாயே!"
ஜெசிக்கா சிரித்தாள். "அவசரப் படாதே! நிறைய விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது!"
திடீரென்று ஜெசிக்காவின் இந்த வருகைக்கு ஒரு உள் நோக்கம் இருக்கும் என அகிலாவுக்குத் தோன்றியது. தன் காதலைக் குலைக்கும் ஏதோ ஒரு விஷக் கதையை அவள் சொல்லப் போகிறாள் என்று நினைத்தாள். இவளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தோன்றியது.
"முதலில் கணேசன் நேராக எனக்குப் •போன் செய்த காரணம் ஐசேக் மாநாட்டுக்கான செயலகத்தில் எங்களுக்கு தனி நேரடி •போன் இருப்பதால்தான். விடுதியில் உனக்கு •போன் செய்து பிடிப்பது கடினம். இரண்டாவதாக நீண்ட நேரம் பேச முடியாது. ஆகவேதான் என்னை தூதாக அனுப்பியிருக்கிறார்."
உண்மைதான். விடுதியில் அவளுக்கு •போன் செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. ஆனால் என்ன தூது?
"மேலும் நான் இன்னும் அவருடைய சிநேகிதியாக இருக்கிறேன். காதலியாக இருக்க ஆசைப் பட்டேன். முடியவில்லை. ஆகவே சிநேகிதியாக இருக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லையல்லவா?" என்று சிரித்தாள்.
"இல்லை ஜெசிக்கா. உன்னைக் காதலியாக கணேசன் நினைத்திருந்தாலும் நான் குறுக்கே நிற்க மாட்டேன்" என்றாள் அகிலா. ஆனால் அது வேடிக்கைப் பேச்சு என அவளுக்கே தெரிந்தது.
"எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை!"
"சரி விஷயத்தைச் சொல்!" என்று அவசரப் படுத்தினாள் அகிலா.
"கணேசன் சொன்ன செய்தி இதுதான். கணேசன் தீபாவளிக்கு அடுத்த நாள் கிள்ளானிலிருந்து பஸ் ஏறி பினாங்குக்குத் திரும்பி விட்டாராம். இரவு பினாங்கை அடைந்து தன் அறையை அடைந்த போது அவருடைய அறைத் தோழன் பாதுகாவல் அலுவலகம் அவரை பலமுறை அறையில் வந்து தேடியதாகச் செய்தி சொல்ல பாதுகாவல் அலுவலகத்திற்கு அந்த இரவில் அவசரமாகச் சென்றிருக்கிறார். அங்கே கணேசன் உடனடியாக கிள்ளானுக்கு அத்தை வீட்டுக்குப் •போன் செய்ய வேண்டும் என்று செய்தி சொல்லியிருக்கிறார்கள்!"
"ஏன்?" திகிலோடு கேட்டாள் அகிலா.
ஜெசிக்கா தனது பானத்தைக் கொஞ்சமாக உறிஞ்சினாள்.
"தீபாவளி அன்று இரவு கணேசன் தனது வீட்டுக்குப் போன போது கொஞ்சம் கலவரம் நடந்திருக்கிறது!"
"என்ன கலவரம்?"
"அவன் தீபாவளி அன்றைக்கு வீட்டுக்கு வரவில்லை என்று சண்டை போட்டிருக்கிறார்கள்"
அகிலாவுக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்தது. தன் வேண்டு கோளினால்தானே அவன் அத்தை வீட்டுக்குப் போகாமல் தன் வீடு வர வேண்டியிருந்தது!
"ஆமாம். தீபாவளி அன்றைக்குக் காலையில் அலோர் ஸ்டாருக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்!"
"தெரியும்! எனக்கு எல்லா விவரமும் தெரியும். கணேசனின் அத்தைக்கு ஒரு மகள் இருக்கிறாள் தெரியுமா?"
"சொல்லியிருக்கிறார்!"
"அவர்கள் இருவருக்கும் அத்தை கல்யாணம் பேசி முடித்திருப்பது தெரியுமா?"
அகிலா திடுக்கிட்டாள். இந்த விஷயம் பற்றி கணேசன் சொன்னதே இல்லையே. அத்தை மகள் பற்றிப் பேச்செடுத்த போதும் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான்.
"எனக்குச் சொல்லவில்லை ஜெசிக்கா!"
அவள் குரலில் இருந்த ஏமாற்றத்தை ஜெசிக்கா புரிந்தது போலப் பேசினாள். "இதோ பார். இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே! அத்தைக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தாலும், மல்லிகாவுக்கும் அந்த ஆசை இருந்தாலும், கணேசனுக்கு அந்த எண்ணம் ஒரு நாளும் இல்லை. என்னிடம் பல முறை அதைச் சொல்லியிருக்கிறார்!"
"சரி, அதற்கென்ன இப்போது? என்ன •போன் கால் வந்தது என்று சொல்!"
"அவசரப் படாதே, சொல்கிறேன்! தீபாவளி அன்று அத்தை திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார். உடனடியாக மல்லிகாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். கணேசன் அதை உறுதியாக மறுத்திருக்கிறார். அவர் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்களிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்!"
அகிலாவுக்குக் கலவரமாக இருந்தது. கணேசன் குடும்பத்தில் ஒரு சண்டை உண்டாகத் தான் காரணமாக அமைந்து விட்டோமே என்ற வருத்தம் வந்தது. ஆனால் கணேசனின் உறுதி மகிழ்ச்சியைத் தந்தது. தான் அம்மாவின் பேச்சைக் கேட்டு அதற்கு எதிரிடையாக முடிவு எடுத்ததைப் போலத்தான் கணேசனும் செய்திருக்கிறான் என்பது நிம்மதியாக இருந்தது.
ஆனால் அந்தக் தையெல்லாம் ஏன் இந்த ஜெசிக்காவிடம், அதுவும் •போனில்...?
"அத்தையிடமும் மல்லிகாவிடமும் அந்த முடிவைச் சொல்லி விட்டுத்தான் பஸ் ஏறி இங்கு வந்திருக்கிறார். வந்து சேர்ந்தவுடன்தான் •போன் செய்தி வந்திருக்கிறது!"
"என்ன செய்தி!"
"கணேசன் முன்னரேயே இந்த விஷயத்தை என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறார். நான்தான் இதெல்லாம் வெறும் மிரட்டல் என்று தட்டிக் கழித்தேன்!" என்றாள் ஜெசிக்கா.
"என்ன மிரட்டல் ஜெசிக்கா? யார் மிரட்டினார்கள்? தெளிவாகச் சொல்!"
"அந்த அத்தை மகள் மல்லிகா முதலிலேயே ஒரு முறை கணேசன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் போனால் விஷத்தைக் குடித்து இறந்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறாள். ஆனால் கணேசன் அதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டார்"
திகில் புகுந்த மனதுடன் அகிலா கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அந்தப் பெண் அன்றிரவு சொன்னது போலச் செய்து விட்டாளாம். ஏதோ வீட்டிலிருந்த விஷத்தைக் குடித்து விட்டாளாம். இரவில் தூக்கிச் சென்று மருத்துவ மனையில் சேர்த்து விட்டுப் •போன் செய்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் கணேசன் இரவோடு இரவாக மோட்டார் சைக்கிளிலேயே கிள்ளானுக்குப் போய்விட்டார்!"
அகிலா உறைந்து போய் ஜெசிக்காவை வெறித்துப் பார்த்தவாறிருந்தாள்.
"கவலைப் படாதே! அவள் உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். கணேசன் நாளைக்கு அல்லது நாளன்றைக்குத் திரும்பி விடுகிறேன் என்று சொல்லச் சொன்னார்"
என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் வந்த திகில் கொஞ்சம் அகன்ற போது உள்ளத்தைப் பெரிய கருமேகம் போலத் துக்கம் வந்து கவ்வியது. ஏன் தான் புனிதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் நட்பு இவ்வளவு மூர்க்கமான எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கிறது? ஏன் உறவுகளையும் மனிதர்களையும் பலி கொள்ளுகிறது? என்ன செய்து விட்டோம் இருவரும்? பெரும் குற்றம் செய்து விட்டோமா?
அகிலா முகத்தைப் பொத்திக் கொண்டு ஜெசிக்காவின் முன் அழ ஆரம்பித்தாள்.
***
மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து மல்லிகாவின் முகத்தை ஏக்கத்தோடு பார்ப்பதும், வெளியே போய் கேன்டீனில் ஏதாவது கிடைத்ததை அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அவள் கண் விழித்து விட்டாளா என்று பார்ப்பதற்காக மீண்டும் லி•ப்டில் ஏறி ஓடி வருவதுமாக இருந்தான்.
மல்லிகா எந்த நேரமும் மீண்டும் கண் விழிக்கலாம் என அவளை மாறி மாறி வந்து பார்த்த இரண்டு டாக்டர்களும் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே இரு முறை விழி திறந்து ஓரிரு விநாடிகள் பார்த்து விட்டு மீண்டும் மயங்கிப் போனாள். குடலிலிருந்து விஷம் எல்லாம் வெளியாகிவிட்டது என டாக்டர்கள் கூறியிருந்தார்கள். நுரையீரலுக்கு காற்று சீராகப் போய் வந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் தொண்டையின் உள் ஓரங்கள் புண்ணாயிருக்கின்றன என்று டாக்டர் சொல்லியிருந்தார். அந்தப் புண் நாளாவட்டத்தில் ஆறிவிடும் என்று கூறியிருந்தார்கள். இப்போதைய முக்கிய சிகிச்சை அவள் இதய ஓட்டத்தைச் சீராக்குவதற்காகத்தான் என்று சொல்லிப் போனார்கள்.
கொஞ்ச நேரம் முன்புதான் அத்தை வீட்டுக்குத் திரும்பிப் போனாள். "எதுக்கும் வீட்டுக்குப் போயி கொஞ்சம் கோழி சூப் வச்சி எடுத்திட்டு வந்திர்ரேன் கணேசு. புள்ள கண்ண முழிச்சவொண்ண கொஞ்சம் சூப் வாயில ஊத்தலாம்" என்று சொல்லிவிட்டுப் போனாள். அப்பாவும் அம்மாவும் நேற்றிரவு முழுக்க மருத்துவ மனையில் இருந்து விட்டு இன்றைக்குத்தான் எஸ்டேட்டுக்குத் திரும்பியிருந்தார்கள்.
முந்தாநாள் இரவு பினாங்கு - கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நான்கு ஐந்து மணி நேர மோட்டார் சைக்கிள் பயணம் அவன் உள்ளத்தையும் உடலையும் உலுக்கிப் போட்டிருந்தது. இரண்டு ஓய்விடங்களில் பெட்ரோல் போட நிறுத்திய சந்தர்ப்பங்களில் அத்தை வீட்டுக்குப் •போன் செய்து பார்த்தான். ஒரு பதிலும் இல்லை. முன்னிரவில் பினாங்கிலிருந்து போன் செய்த போது அவன் •போனை எதிர்பார்த்து பதில் சொல்வதற்கென்று பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைதன் வீட்டில் காவல் வைத்துப் போயிருந்தாள் அத்தை. அவர்தான் மல்லிகா பற்றிய விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.
"துங்கு அம்புவான் ரஹிமா ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருக்காங்க. தம்பி •போன் பண்ணா நேரே அங்க வந்திரச் சொன்னாங்க!" என்று மட்டும் அவர் சொன்னார். பின்னர் கடமை முடிந்தது என்று அவரும் போய்விட்டார். அப்புறம் •போனை எடுத்துப் பேச வீட்டில் யாரும் இல்லை.
மல்லிகா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற தகவல் தெரியாத அந்த ஐந்து மணி நேரமும் அவன் மனம் புயலாக இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் அந்த நடு நிசியில் பேய்க்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருக்க அவன் மோட்டார் சைக்கிள் என்ஜின் போலவே அவன் மனமும் இடைவிடாது ஓங்கி ஓலமிட்டவாறு இருந்தது.
"என்ன செய்து விட்டாய்? என்ன செய்து விட்டாய்?" என்று மனம் குத்திக் குத்தி கேட்டவாறு இருந்தது. "என் அன்புக்கினிய ஒரு உயிரை நானே வதைத்து விட்டேனா?" என்ற கேள்வி எழுந்து அவனைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே எச்சரித்திருக்கிறாள். சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!" என்று தெளிவாகக் கூறியிருக்கிறாள். இருந்தும் என் காதல் மூர்க்கத்தில் அதை நான்தான் அலட்சியம் செய்து விட்டேன்.
ஹெல்மெட்டுக்குள் வழிகின்ற கண்ணீரை அவன் துடைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
"இல்லை இது என் குற்றம் இல்லை! அத்தை வளர்த்துவிட்ட இந்த ஆசைகளுக்கும் மல்லிகா வளர்த்துக் கொண்ட ஒரு தலைக் காதலுக்கும் நான் பொறுப்பில்லை" என்ற ஒரு தற்காப்பு வாதமும் எழுந்தது.
"இருந்தாலும் மல்லிகாவின் மென்மையான மனதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக அவளிடம் முடிவைச் சொல்லிக் கை கழுவி வந்தது உன் குற்றம்தான். அவள் செத்தால் நீதான் அதற்குக் காரணம்" என்று மனத்தின் இன்னொரு பகுதி எதிர் வாதம் செய்தது. கோபத்திலும் தாபத்திலும் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
விடியற்காலை நான்கு மணிக்கு அவன் கிள்ளானை அடைந்து ஆஸ்பத்திரியை அடைந்து இரவு நர்சிடம் விவரம் சொல்லி அறுவை சிகிச்சை வார்டை அடைந்த போது அத்தையுடன் அப்பா அம்மாவும் இருந்தார்கள். அத்தை அவனைக் கண்டதும் ஓவென்று அழத் தொடங்கினாள். அவளைத் தோளைப் பிடித்து ஆறுதல் சொல்லி என்ன நடக்கிறது என்று கேட்டான். "வயித்தக் களுவுறாங்களாம் அப்பா! ஒண்ணும் விவரமா சொல்ல மாட்டேங்கிறாங்க! வந்தவொடன உள்ளுக்குக் கொண்டு போயிட்டாங்க. இங்கதான் உக்காந்து காவல் காத்துக்கிட்டு இருக்கோம். பாவிப் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே! எனக்கு ஒரே பிள்ளையாச்சே!" என்று அத்தை அழுதாள்.
கொஞ்சங் கொஞ்சமாக அவளிடமிருந்து வந்த வார்த்தைகளில் தான் கிள்ளானில் இருந்து புறப்பட்டுப் போனவுடன் மல்லிகா தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதாகவும், நீண்ட நேரம் சத்தமில்லாமல் இருப்பதைக் கண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது தோட்டத்துக்குத் தெளிக்கும் பூச்சி விஷ போத்தலுடன் வாயில் நுரை தள்ள கைகால்கள் வலித்துக் கொண்டு அவள் கிடந்ததாகவும் உடனே அவளைக் காரில் ஏற்றி இங்கு கொண்டு வந்ததாகவும் தெரிந்தது.
அப்பா கனல் கக்கும் விழிகளுடன் உட்கார்ந்திருந்தார். அம்மா வழக்கம் போல் பயந்து போய் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தாள். இருவரும் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அத்தை கூட மல்லிகாவின் இப்போதைய நிலைமையைப் பற்றிப் பேசியதைத் தவிர்த்து இதற்கு முன் நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை.
ஒரு வகையில் அந்த மௌனம் ஆறுதலாக இருந்தாலும் அவர்கள் பேசாமல் உள்ளுக்குள் அடக்கிக் குமுறிக் கொண்டிருந்த அந்த எண்ணங்கள் அவனுக்குத் தெரிந்தன. அவன் அவர்கள் உள்ளத் திரையில் ஒரு கொலைகாரனாக உலவி வருவதை அவனால் ஊகிக்க முடிந்தது. உண்மையா? தான் கொலைகாரனா? இப்படி நடந்து விட்டதற்கெல்லாம் தேனே காரணமா? அவனுக்கே சரியாகத் தெரியவில்லை.
அன்றிரவும் மறுநாள் பகல் முழுவதும் மல்லிகா கோமாவில் இருந்தாள். அவளுக்குத் தொடர்ந்து செலைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் இரவு இரண்டு முறை முனகிக் கண் விழித்து மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். பக்கத்தில் இருப்பவர்கள் யாரையும் அவள் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. மண்ணிலிருந்து பிடுங்கிப் போட்ட செடி போல வாடிப் போய்க் கிடந்தாள்.
முதல் நாள் காலையில் ஒரு இந்தியப் போலிஸ்காரர் வந்து விசாரித்தார். பெயர் எல்லாம் கேட்டு எழுதிக்கொண்டு எப்படி நடந்தது என்று கேட்டார். "இல்லங்க, பொண்ணுக்கு இருமல் இருந்திச்சி. இருமல் மருந்துன்னு நெனச்சி இந்த பூச்சி மருந்த எடுத்துச் சாப்பிட்டிடிச்சி, வேற ஒண்ணும் இல்ல" என்று அத்தை அவசரம் அவசரமாக விளக்கம் கொடுத்தாள்.
"இது என்ன காதல் தோல்வியா?" என்று கேட்டுச் சிரித்தார் அவர்.
"அய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க!" என்றாள் அத்தை.
"பரவால்லம்மா, சொல்லுங்க! ஒரு மாசத்துக்கு எப்படியும் ஒரு கேசு ரெண்டு கேசு பாத்துக்கிட்டுத்தான இருக்கிறோம்! அதிலியும் நம்ப புள்ளைங்கதான் ஆ ஊன்னா விஷத்த தூக்கிக்கிறாங்க! இருமல் மருந்துக்கும் விஷத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறதுக்கு என்ன இது சின்னக் கொழந்தயா?" என்றார் அவர்.
அத்தை தயங்கிச் சொன்னாள்: "கேஸ் கீஸ்னு ஆவாம பாத்துக்கணுங்க!"
"அதெல்லாம் ஆகாது. எல்லா கேசயும் கோர்ட்டுக்குக் கொண்டு போறதின்னா எங்களுக்கு வேற வேலயே செய்ய முடியாது! உண்மையச் சொல்லுங்க. பதிஞ்சு வச்சிக்கிறோம். இதுக்கு மேல கேஸ் ஒண்ணும் இல்லாம பாத்துக்கிறோம்!" என்றார்.
"ஆமாங்க! ஒரு பையன விரும்பிச்சி. அது நடக்கலேன்னவொண்ண ஒரு கோவத்தில இப்படி செஞ்சிடிச்சி!"
"நீங்க முடியாதின்னிட்டிங்களா? அந்தப் பிள்ளய அடிச்சிங்களா?"
"அய்யோ அப்படியெல்லாம் இல்லிங்க. இது கொஞ்சம் குழப்பமான விஷயம்!" ஒரு முறை கணேசனைப் பார்த்து விட்டு அத்தை அமைதியானாள்.
என்ன மருந்து குடித்தாள், ஏன் வீட்டில் இருந்தது, என்றெல்லாம் கேட்டு எழுதிக் கொண்டு அவர் போய்விட்டார். போகும் போது கணேசனைப் பார்த்து "இந்தப் பையனா?" என்று கேட்டார். யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை. "இந்த இந்தியர்கள் எந்த நாளும் திருந்த மாட்டார்கள்" என்பது போலத் தலையாட்டிவிட்டு அவர் போய்விட்டார்.
*** *** ***
மருத்துவ மனையில் மல்லிகாவுடன் தனித்து இருந்த போது அவன் மனம் அலை மோதியது. அவள் துவண்டு போய்க் கிடந்தாள். பெண்மை அழகென்று ஒன்றும் இல்லாத சோர்ந்த தசைப் பிண்டமாய்க் கிடந்தாள். தலை முடி அலங்கோலமாக இருந்தது.
எப்படி இருந்தவள்! எப்படி ஆடி ஓடிக் குதித்துத் திரிந்தவள்! எத்தனை துடுக்கான வாய்ப்பேச்சு! எத்தனை ஆசைகளைத் தேக்கி வைத்திருந்த மனது! இப்போது அவை எதையும் பற்றிய பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாள். இவ்வளவு தீவிரமான ஆசைகளைத் தேக்கி வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று துடிக்கின்ற ஒரு பெண்ணுக்கு அந்த வாழ்க்கையை பட்டென்று முடித்துக்கொள்ள வேண்டும் என்ற துணிவு எங்கிருந்து வருகிறது? ஏன் இப்படிச் செய்தாய் மல்லிகா? என்ன நினைத்து இப்படிச் செய்தாய்?
நான் ஒருவன் உனக்குக் கணவனாய் வாய்க்காவிட்டால் என்ன? உனக்குக் கணவனாக வர எத்தனையோ பேர் காத்திருப்பார்களே! ஏன் என்னை மட்டும் உயிர்க்கொம்பாய்ப் பிடித்தாய்? ஏன் என்னையே பற்றிக் கொண்டாய்? நான் வேறு ஒரு கொடி என்மீது படர இடம் கொடுக்க விரும்புகிறேன். உனக்குப் பற்றிக் கொள்ள இன்னும் எத்தனையோ கொம்புகள் உண்டே! என்னிலிருந்து உன்னைப் பிய்த்துப் போட வைத்தாயே! உன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றவாளியாய் என்னையே ஆக்கி விட்டாயே!
அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.
திடீரென்று மல்லிகா அசைந்தாள். முனகினாள். கண்களை சிரமப்பட்டுத் திறந்தாள். அவள் கையைப் பற்றினான் கணேசன். கண்களை விழித்து வெறுமையாகப் பார்த்தாள். "யாரு?" என்று கேட்டாள்.
"நாந்தான் மல்லிகா" என்றான்.
"மாமா! கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதே!" என்றாள். சொல் குழறலாக இருந்தது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்ள சிரமப் படவேண்டியிருந்தது. இடது கையை மட்டும் தூக்கி அவன் கைகளைத் தடவினாள்.
"இப்பதான விழிச்சிருக்கே. ஓய்வெடுத்துக்க!" என்றான்.
"தண்ணி வேணும்!" என்று ஈனசுவரத்தில் சொன்னாள்.
அவன் எழுந்து தாதியைக் கூப்பிட்டான். ஒரு மலாய் தாதி வந்தாள். மல்லிகாவின் தலையை ஒரு கையால் தாங்கியவாறு அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள். மீண்டும் படுக்க வைத்தாள். "மறுபடி தண்ணீர் கேட்டால் தாராளமாகக் கொடுக்கலாம். தண்ணீர் குடிப்பது நல்லது" என்று சொல்லி மீதியிருந்த தண்ணீரை கண்ணாடிப் பாத்திரத்தோடு அங்கேயே வைத்துச் சென்றாள்.
மல்லிகா அவனைப் பார்த்து பலவீனமாகப் புன்னகைத்தாள். அவள் கைகளைப் பாசத்தோடு மீண்டும் இறுக்கினான். இடது கையால்தான். வலது கை படுக்கை மீதே கிடந்தது.
"எப்படியிருக்கு மல்லிகா?" என்றான்.
"அதான் நான் பொழச்சிக்கிட்டேனே! இனிமே நல்லாத்தான் இருப்பேன்! இப்பதான் உங்க முகம் லேசா தெரியுது. ஆனா கண்ண ஏதோ மறைச்சிருக்கிற மாதிரி இருக்கு" என்றாள். அவளையே பார்த்திருந்தான்.
"அம்மா எங்கே?" என்று கேட்டாள்.
"வீட்டுக்குப் போயிருக்காங்க. சூப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ரேன்னு சொன்னாங்க! இப்ப வந்திருவாங்க!"
விழிகளைச் சுழல விட்டு கொஞ்சம் மருண்டாள். "எந்த ஆஸ்பத்திரி?"
"துங்கு அம்புவான் ரஹிமா!"
"எப்ப வந்தேன்?"
"ரெண்டு நாளாச்சி!"
"ரெண்டு நாளாச்சா?" களைத்துக் கண் மூடினாள். எதையோ விழுங்குவது போல அவள் தொண்டைக் குழி அசைந்தது. அப்புறம் வலியால் முனகினாள். சற்றுப் பொறுத்துக் கண் திறந்தாள். "நீங்க பினாங்குக்குப் போகலியா?"
"போனேன். செய்தி வந்தது. உடனே வந்திட்டேன்!"
அவனைப் பாவமாகப் பார்த்தாள். "உங்க எல்லாருக்கும் பெரிய சிரமத்தக் கொடுத்திட்டேன்!"
"அதப்பத்தி இப்ப என்ன? நீ பேசாம ஓய்வெடுத்துக்க!" என்றான்.
"இந்த சோத்துக் கை பக்கம் அப்படியே மரத்துப் போன மாதிரி இருக்கே!" என்றாள்.
அந்தப் பக்கத்தை கைகளால் அழுத்தினான். ஆனால் அவளுக்கு அந்தத் தொடு உணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.
"மாமா! உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்!"
"இப்ப வேண்டாம் மல்லிகா! ஓய்வெடுத்துக்க!"
"இல்ல! இப்பவே சொல்லணும். கேளுங்க! உங்க காதலி பேரென்ன?" என்றாள்.
"அத இப்பப் பேச வேணாம் மல்லிகா!"
"இல்ல சொல்லுங்க!"
"அவ பேரு அகிலா!"
"மாமா. நீங்க அகிலாவையே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு முழு சம்மதம்!"
"இப்ப அந்தப் பேச்சு வேணாம் மல்லிகா...!
"இல்ல! விஷம் குடிச்சி மயக்கம் வர முன்னாலேயே எனக்கு இந்த நெனப்பு வந்திடுச்சி. பெரிய முட்டாள் தனம் செஞ்சிட்டமேன்னு அப்பவே நெனச்சேன்! நல்ல வேள! உங்களுக்கு இந்த செய்தியச் சொல்றதுக்கு ஆண்டவன் எனக்கு உயிர் பிச்சை கொடுத்திருக்கான். நெசமாத்தான் சொல்றேன். நீங்க அகிலாவயே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்குப் பூரண சம்மதம்!"
அவள் கைகளைத் தன் கண்களுக்குள் புதைத்துக் கொண்டான். இலேசான கண்ணீரில் அது நனைந்தது.
அவள் கண்கள் மூடி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
*** *** **
அத்தை திரும்பி வந்த போது அவள் கண்விழித்துப் பேசியதைப் பற்றிச் சொன்னான். ஆனால் என்ன பேசினாள் என்று சொல்லவில்லை. அத்தை அவளை மெதுவாகத் தொட்டு "மல்லிகா, கண்ணு!" என்று கூப்பிட்டாள். அவள் கண் விழித்துப் பார்த்தாள். "அம்மா" என்றாள்.
அத்தை அவளைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள். "இப்படிப் பண்ணிட்டியே கண்ணு! இந்த அம்மாவ உட்டுட்டுப் போவப் பாத்தியே! நீ போயிட்டா எனக்கு வேற யாரு இருக்கா இந்த ஒலகத்தில? நான் ஒண்டிக்கட்டயா இருப்பேனா? நீ போயிட்டா நான் இருப்பேனே? நானும் பின்னாலேயே வந்திருக்க மாட்டேன்?"
மல்லிகா அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். குழறிக் குழறி பேசினாள். "அழுவாதம்மா! இனிமே அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்! அழுவாத!" என்றாள்.
அத்தை கண்களைத் துடைத்துக் கொண்டு மல்லிகாவுக்கு அவசரம் அவசரமாக சூப்பை எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள். கணேசனை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு அவள் சூப்பை மெதுவாக உறிஞ்சிக் குடித்தாள். சூப் வாயின் ஓரத்தில் வழிந்தது.
ஒரு இந்திய டாக்டர் தாதியுடன் வந்தார். "ஓ நல்லது! கண் முழிச்சிருக்கே உங்க பொண்ணு!" என்று சந்தோஷப் பட்டார். அத்தையையும் கணேசனையும் ஒரு முறை பார்த்துப் புன்னகைத்துவிட்டு பதிவேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். மல்லிகாவின் இமைகளை இழுத்துக் கண்களைப் பரிசோதித்தார். விளக்கு அடித்துப் பார்த்தார். ஸ்டெதெஸ்கோப்பை வைத்து இருதயத் துடிப்பைப் பார்த்தார். "நன்றாக இருக்கிறது!" என்றார். தொண்டையின் பக்கங்களை அழுத்திய போது மல்லிகா வலியால் முனகினாள். பின்னர் அடிவயிற்றை அமுக்கினார். அப்போதும் அவள் வலியால் துடித்தாள்.
அவள் வலது கையையும் இடது கையையும் தூகிப் பார்த்தார். வலது கை துவண்டு கிடந்தது.
"எப்படி இருக்கு டாக்டர்?" என்று அத்தை படபடப்புடன் கேட்டாள்.
அத்தையைப் பார்த்து டாக்டர் சொன்னார்: "தொண்டை ரொம்பப் புண்ணா இருக்கம்மா. அது ஆற ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆகும். மருந்து குடிக்கணும். அதே போல கல்லீரலும் பாதிக்கப் பட்டிருக்கு. அதை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும். கண்கள்ள பாதிப்பு இருக்கு. ஒரு பக்கம் கை விளங்காம இருக்கு. அதையெல்லாம் சோதிச்சுப் பார்க்கணும். இன்னும் ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கட்டும். அப்பறந்தான் சொல்ல முடியும் "
"புள்ளைக்கு ஒண்ணும் ஆயிடாதே!" என்று அத்தை கேட்டாள்.
"உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல. பயப்படாதீங்க!" என்று சொல்லி விட்டு டாக்டர் நடந்தார். கணேசன் அவர் பின்னாலேயே போனான். அத்தையின் காதுக்கெட்டாத தூரம் வந்தவுடன் "டாக்டர்" என்று அவரைக் கூப்பிட்டான். அவர் நின்று "என்ன?" என்பது போல அவனைத் திரும்பிப் பார்த்தார்.
"ஏன் ஒரு பக்கம் கை விளங்கிலன்னு சொல்றிங்க?" என்று கேட்டான்.
"இப்ப தெளிவா சொல்ல முடியாது. தொடு உணர்ச்சி குறைவாத்தான் இருக்கு. பரிசோதிச்சி கவனிச்சாத்தான் சொல்ல முடியும். பாருங்க, விஷங் குடிச்சி கிட்டத்தட்ட மூணு மணி நேரம் போய்தான் கொண்டாந்திருக்காங்க. இதுக்கிடையில அந்தப் பெண்ணுக்கு வலிப்பு வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூளைக்கு பிராண வாயு போறது தடைப் பட்டிருக்கு. அதினால மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்படிருக்கு. இதினால 'பார்ஷியல் பேரலிசி]ஸ்' ஏற்பட்டிருக்கு. அதினாலதான் ஒரு பக்கம் விளங்கில. முகத் தசைகள் கூட சரியா அசையில. அதினாலதான் வாய் குழறுது" என்றார். கணேசன் அதிர்ந்து நின்றான்.
"பாத்திங்களா! ஒரு கோவத்தில ஒரு கணத்தில செய்றது வாழ்நாள் முழுக்க பாதிச்சிருது. இந்தப் பெண்ண யாராவது இனி கிட்டவே இருந்து கவனிச்சிக்கிட்டு இருக்கணும். சும்மா உடம்புக்காக மட்டுமில்ல! இந்த அதிர்ச்சியிலிருந்து அந்தப் பொண்ணு மீண்டு வரும் போது அதனுடைய மன நலத்தையும் யாராவது பக்கத்திலிருந்து கவனிச்சிக்கத்தான் வேணும். நீண்ட நாளைக்கு தெராப்பி தேவைப் படலாம். அவங்க அம்மாகிட்ட சொல்லுங்க!" டாக்டர் அடுத்த நோயாளியைக் கவனிக்க அகன்று விட்டார்.
கணேசன் நின்ற இடத்திலிருந்து மல்லிகாவின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அத்தை பாசமாக அவளுக்கு சூப் ஊட்டிக் கொண்டிருந்தாள். சூப் வாயில் ஒரு பக்கம் ஒழுக ஒழுக அதைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இருவரும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மல்லிகாவின் கட்டிலுக்குத் திரும்ப நினைத்த கணேசன் அப்படிச் செய்யாமல் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றான். பின்னர் திசை திரும்பி வார்டை விட்டு வெளியே வந்தான். லி•ப்டில் ஏறி கீழே வந்தான்.
மருத்துவ மனைக்கு வெளியே கார் பார்க்கை அடுத்திருந்த புல் வெளிக்கு வந்தான். வெயில் மங்கியிருந்த நேரம். மருத்துவ மனையில் நோயாளிகளைப் பார்க்கும் நேரமாதலால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கையில் பழங்களுடனும் உணவுப் பொட்டலங்களுடனும் மலர்களுடனும் உறவினர்கள் மருத்துவ மனை வாசலுக்குள் நுழைந்தவாறிருந்தார்கள்.
தனியிடத்தை நாடினான். ஒரு மரத்தின் நிழலிலிருந்த இரும்பு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான். முன்னால் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்தவாறிருந்தான். நெஞ்சில் விம்மல் வந்தது. அடக்கப் பார்த்தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கம் வந்தது. முகத்தைக் கைகளால் மூடினான். அழுகை வெடித்து வந்தது. விம்மி அழுதான்.
***
காலையில் இரண்டு மணி நேர விரிவுரையையும் அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கணினி பயிற்சி வகுப்பையும் முடித்துக் கொண்டு 12 மணிக்கு மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள் அகிலா. நண்பகல் வெயில் சுட்டெரித்தது. விரிவுரை மண்டபத்தின் இதமான குளிர் சாதனத்திலும் மிதமான விளக்கொளியிலும் நான்கு மணி நேரம் தொடர்ந்து இருந்துவிட்டு வந்தவளுக்கு பளீரென்ற வெயிலில் கண்கள் கூசின. இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததற்குப் பிறகு வளாகத்தில் இப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மழையும் வெயிலுமாக திடீரென்று மாறி மாறி வருகின்ற இந்த பினாங்குத் தீவின் பருவ நிலை அகிலாவுக்குக் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வெயில் நாட்களில் கொஞ்சமும் காற்றின் அசைவே இல்லாத வெப்பமாக இருக்கிறது. கடல் சூழ்ந்த தீவில் இருக்கிறோம் என்ற உணர்வே இருப்பதில்லை.
எங்கே போவது என்று யோசித்தவாறு அகிலா கொஞ்ச நேரம் யோசித்தவாறு நின்றிருந்தாள். வயிறு பசித்தது. காலையிலும் ஒன்றும் பசியாறவில்லை. சாப்பிடப் போக வேண்டும். ஆனால் தனியாகப் போகத் தயக்கமாக இருந்தது. மாலதிக்குக் காலையில் விரிவுரைகள் இல்லை. ஆகவே நூல் நிலையத்துக்குப் போவேன் என்று சொல்லியிருந்தாள். அங்கு போனால் அவளைப் பிடித்து இருவருமாக சாப்பிடப் போகலாம் என்று நினைத்து நூல் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சாலை நெடுகிலும் காட்டுத் தீ மரங்களில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. வெயிலில்தான் இவை இப்படிப் பூக்கின்றன. இந்த வளாகத்தில் இரண்டு வண்ணங்களில் அவை இருந்தன. ஒன்று இரத்தச் சிவப்பு. இன்னொன்று இளஞ்சிவப்பு. இரண்டுமே கிளைகளின் நுனிகளில் புஸ்ஸென்று பூத்து கிளையையே மூடிவிடும். கீழே உதிர்ந்திருக்கும் போது கம்பளமாக இருக்கும். அவற்றை மிதித்து நடக்க அகிலாவுக்குக் கால் கூசியது.
வளாகம் முழுதும் உள்ள அங்சானா மரங்களில் கூட சிறு சிறு பூக்கள் பூத்து இப்படித்தான் உதிர்ந்திருக்கின்றன. கார்கள் அவற்றின் மீது ஓடி அரைக்கும் வரை அழகான கம்பளமாக இருக்கும். அப்புறம் சிதறிப் பொடிப்பொடியாகி மழை வந்தால் சேறும் ஆகிவிடும். இந்தப் பூக்கள் கிளைகளில் இரண்டு மூன்று நாட்கள்தான் தங்குகின்றன. அப்புறம் கிளைகளில் இலைகள் மட்டும்தான் மிச்சமிருக்கும்.
துணை வேந்தர் இல்லத்தின் அருகிலும் நுண்கலைப் பிரிவுக் கட்டத்தின் எதிரிலும் உள்ள இரண்டு ஒற்றைக் கொன்றை மரங்களிலும் கூட இப்போது பூக்கள் குலை குலையாகப் பூத்திருக்கின்றன. கண்ணைப் பிரிக்கும் மஞ்சள் வண்ணத்தில் யாரோ பூக்கார அம்மாள் வியாபாரத்துக்காகக் கவனமாக அடுக்கிக் கட்டி தொங்கவிட்டிருப்பது போல... சீன லேன்டர்ன் விளக்குகள் போல... அன்றைக்கு ஷங்ரிலா ஹோட்டலில் பார்த்த சரவிளக்குகள் போல...
ஷங்ரிலாவை நினைத்தவுடன் கடற்கரைக்குச் சாப்பிடப் போய் மோட்டார் சைக்கிளில் கணேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்து திரும்பி வந்த சிருங்காரமான நினைவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து அவனைப் பார்த்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன என்ற எண்ணம் வந்தது. ஏன் இப்படி நினைவுகள் துருத்திக் கொண்டு வருகின்றன?
இந்த இரண்டு நாட்களாக அகிலாவின் மனதைக் கப்பியுள்ள இருள் இன்னும் கலையவில்லை. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு இளம் பெண் விஷமருந்தி மருத்துவ மனைக் கட்டிலில் அலங்கோலமாகப் படுத்திருக்கும் காட்சிதான் வந்தது. அந்தப் பெண்ணின் கோர முடிவிற்கு எப்படியோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் வந்து நெஞ்சைத் திடும் திடும் என்று உலுக்கியது.
என்ன ஆயிற்று கணேசனுக்கு? போய் நாட்கள் நான்கு ஆகிவிட்டன. ஜெசிக்கா வந்து செய்தி சொல்லியே இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனைக் காணவில்லை. கிள்ளானில் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதா? குடும்பத்தில் பூகம்பங்கள் வெடித்திருக்குமா? மல்லிகா நிலைமை எப்படி? பிழைத்திருப்பாளா? ஏன் இப்படி என்னை இருளில் விட்டுப் போனான்? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தாலும் எந்தக் கேள்விக்கும் பூரணமான விடை கிடைக்கவில்லை. நேற்று இதைப் பற்றி மாலதியிடம் பேசும் போதும் அகிலா மீண்டும் அழுதாள். மாலதிக்கு தோளைப் பிடித்து ஆறுதல் சொல்ல முடிந்ததே தவிர விடைகள் ஏதும் சொல்ல முடியவில்லை.
நூல் நிலையத்தை அடைந்து மாலதியைத் தேடிப் பிடித்த போது அவள் புத்தகத்தின் மீது கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை உலுக்கி "இப்படித்தான் படிக்கிறிங்கிளா மாலதி?" என்று கேட்டாள்.
"சீ! படு போரிங்கா இருக்கு இந்தப் பாடம். தூக்கமும் வருது, துக்கமும் வருது!" என்று சொன்னவாறு மாலதி புத்தகத்தை அடையாளம் வைத்து மூடிவிட்டு எழுந்து வந்தாள். நூல் நிலையத்தை விட்டு வெளியே வந்து கேன்டீனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது மாலதி கேட்டாள்: "அப்புறம், உங்க ஆளு சேதியெல்லாம் சொன்னாரா?"
அகிலா அதிர்ச்சியடைந்தாள். "எந்த ஆளு?"
"அதான், உங்க கணேசன்!"
"கணேசனா? இன்னும் வரவே இல்லியே!"
மாலதி அவளை அதிசயமாகப் பார்த்தாள். "நேத்து ராத்திரி அவர கேம்பஸ்ல பார்த்தேனே! மோட்டார் சைக்கிள்ல போனாரே! எப்படியும் நேத்தே உன்னை வந்து பாத்திருப்பாருன்னு நெனச்சனே!" என்றாள்.
அகிலாவுக்கு திகீரென்றது. நேற்று இரவே வந்து விட்டானா? அப்புறம் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? சென்ற நான்கு நாட்கள் அவனைப் பார்க்காதிருந்த ஏக்கம் அவனை உடனே பார்த்துவிட வேண்டுமென்று துடிக்க வைத்தது. எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் மாலதியைத் துளைத்தெடுத்தாள்.
"ராத்திரி பூமி புத்ரா பேங்க் ஏடிஎம் மெஷின்ல காசெடுக்கப் போயிருந்தேன். அப்ப அவர் மோட்டார் சைக்கிள்ள போனதப் பார்த்தேன். ஆனா அவர் என்னைப் பாக்கில!" என்றாள்.
"எப்படியிருந்தார்?"
"ராத்திரியில சரியா தெரியில அகிலா. ஆனா ரொம்ப சோர்வா இருக்கிற மாறிதான் தெரிஞ்சது! கொஞ்சம் தாடி வளந்த மாதிரியும் இருந்தது!"
அவனுடைய துயரமான கோலத்தை எண்ணி மனம் சோகப் பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்து அவன் தோள்களைத் தழுவி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கிள்ளானில் என்ன நடந்தது, மல்லிகாவின் நிலைமை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளைப் பிய்த்துத் தின்றது. ஆனால்... ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? நேற்றிரவு திரும்பியவன் இன்று காலை முழுவதும் தன் பக்கம் திரும்பாமல்... ஏன் இந்த அலட்சியம்? ஒரு வேளை...
கேன்டீனில் சாப்பிட அமர்ந்த போது கேட்டாள்: "அவர்தான்னு நிச்சயமா தெரியுமா மாலதி? வேற யாரையாவது பாத்திட்டு..."
"சீ! அவர்தான் அகிலா. கணேசன்தான். எனக்குத் தெரியாதா என்ன? தெளிவாப் பாத்தேன்!" என்று உறுதிப் படுத்தினாள்.
"நேற்று திரும்பிட்டவரு ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல?"
மாலதி கொஞ்சம் மௌனமாயிருந்து சொன்னாள். "எத்தனையோ வேலைகள் இருக்கலாம். எல்லாம் முடிஞ்சி வந்து பாப்பாரு பாரேன்!"
அகிலாவுக்கு அது அத்தனை சாதாரணமானதென்று தோன்றவில்லை. கணேசனை உள்ளுக்குள் ஏதோ ஒன்றிருந்து வருத்துகிறது. இந்த நான்கு நாட்களில் கிள்ளானில் நடந்தவை அவனை மாற்றியிருக்கின்றன. அது என்ன மாற்றம்? எப்படித் தெரிந்து கொள்வது? இதயம் திகில் கொண்டது.
கணேசனிடம் விரிவாகப் பேசவேண்டுமென்று எண்ணினாள். எப்படியென்று தெரியவில்லை. தானாக அவனைத் தேடிப் போக முடியாது. அதற்குத் தேவையில்லை. அது சரியில்லை. அவன் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் மனசு காத்திருக்கப் பொறுமையில்லாமல் அலைக்கழித்தது.
மாலதி மௌனத்தைக் கலைத்துப் பேசினாள்: "அந்தப் பொண்ணப் பத்தி உங்கிட்ட இதுக்கு மிந்தி சொல்லியிருக்காரா அகிலா!"
"எந்தப் பொண்ணு?"
"அதான், விஷங் குடிச்சிச்சே, அந்த பொண்ணு!"
"மல்லிகான்னு அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கான்னு சொல்லியிருக்காரு."
"ரெண்டு பேருக்கும் காதல்னு சொல்லியிருக்காரா?"
"இல்ல! அந்தப் பொண்ணு தனக்கு தங்கச்சி மாதிரின்னுதான் சொல்லியிருக்கார்"
மாலதி மௌனமாகச் சாப்பிட்டாள். அவள் மௌனத்தில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக அகிலாவுக்குத் தோன்றியது.
"என்ன நெனைக்கிறிங்க மாலதி?"
"இல்ல, அண்ணனோட காதல் சேதி கேட்டு விஷங்குடிக்கிற தங்கச்சி உண்டா இந்த ஒலகத்திலன்னு யோசிக்கிறேன்!"
அகிலாவும் பலமுறை யோசித்து விட்டாள். மல்லிகாவின் பேச்சு வரும்போதெல்லாம் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான். ஆனால் இப்போது வந்திருக்கும் செய்தி வேறாக இருக்கிறது. அப்படியானால் கணேசன் இத்தனை நாள் தன்னை ஏமாற்றினானா? தன்னிடம் பச்சை பச்சையாகப் பொய் சொன்னானா? கணேசனா? அந்தக் காதல் வழியும் கனிந்த கண்களுடைய என் கணேசனா? அவனாலும் ஏமாற்ற முடியுமா?
தனிமையில், இரவில், தான் கனிந்திருக்கும் வேளையில் "இவளுக்கு என்ன தெரியும், முட்டாள்?" என்று உள்ளுக்குள் நினைந்து கொண்டு "அவ என் தங்கச்சி மாதிரி!" என்று பொய் சொன்னானா? தன் உணர்வுகளோடு விளையாடினானா? இன்று அந்தப் பொய்கள் அவனுடைய அந்தப் பழைய காதலியின் தற்கொலை முயற்சியால் வெளிப்பட்டு விட தன்னைப் பார்க்க வெட்கி மறைந்திருக்கிறானா? நான் அவ்வளவு ஏமாளியாகவா ஆகிவிட்டேன்? என்னை ஒரு பொம்மைபோல ஆட்டி வைத்திருக்கிறானா? அவன் கையில் உள்ள சூத்திரக் கயிறுகள் என்னைப் பிணித்திருப்பதை அறியாமல்தான் இத்தனை நாள் ஆடியிருக்கிறேனா? இதற்காகத்தான் அன்பான அம்மாவையும் அப்பாவையும் பகைத்துக்கொள்ளத் துணிந்தேனா? மாலதிக்குத் தெரியாமல் மனம் உள்ளுக்குள் அழுதது.
"இன்னைக்குக் கோயிலுக்கு வாரியா?" என்று கேட்டாள் மாலதி.
தூக்கத்திலிருந்து விழித்தவள் போல "என்ன சொன்னிங்க மாலதி?" என்று கேட்டாள் அகிலா.
"இன்னைக்கு வெள்ளிக் கிழமையாச்சே, கோயிலுக்குப் போகலாமான்னு கேட்டேன்!"
வெள்ளிக் கிழமைகளில் குளுகோரில் உள்ள அம்மன் கோயிலுக்கு பெரும்பாலான இந்து மாணவர்கள் போவார்கள். போகவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒரு வேளை கணேசன் தன்னைத் தேடி வந்தால் என்ற எண்ணம் எழுந்தது. இல்லை. அவன் தேடி வருவான் என்று காத்திருக்க வேண்டாம். நேற்று இரவிலிருந்து என்னைத் தேடி வரவில்லை. ஒரு வேளை இனி என்றுமே தேடி வர மாட்டான். அவனுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.
இப்போது உள்ள குழப்பத்துக்குக் கோயிலுக்குப் போவது நல்லதுதான். கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்.
"சரி மாலதி. கோயிலுக்குப் போகலாம். நீங்க வந்து கூப்பிடுங்க!" என்றாள்.
*** *** ***
கணகணவென மணிச் சத்தத்துடன் தீபத்தெட்டு மேலெழுந்து அம்பாளின் முகத்தைப் பிரகாசப் படுத்தியது. அகிலா கை தூக்கிக் கும்பிட்டாள். மனதுக்கு இதமாக இருந்தது. மனப் படபடப்புகளை கொஞ்ச நேரமாவது மறந்திருக்க முடிந்தது.
கோயிலில் வெள்ளிக் கிழமை கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. பல்கலைக் கழக மாணவ மாணவியர் கூட்டமாக வந்திருந்தார்கள். மாணவர்கள் ஜிப்பாவில் வந்திருந்து திருநீறும் சந்தன குங்குமப் பொட்டுகளும் வைத்துக் கொண்டு இந்துக்களுக்கான அடையாளங்களோடு இருக்க இந்த ஒரு நாள்தான் அவர்களுக்குச் சந்தர்ப்பம். இதை பயன் படுத்திக் கொள்ள அவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவிகள் பெரும் பாலோர் பஞ்சாபி ஆடைகளிலும் சிலர் சேலையிலும் வந்திருந்தனர். அகிலா அடக்கமான சேலை அணிந்து வந்திருந்தாள்.
கணேசன் அங்கு எங்காவது இருக்கிறானா என அகிலா பலமுறை சுற்றிப் பார்த்து விட்டாள். அவனைக் காணவில்லை. பலமுறை அவளோடு அவன் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் வந்திருக்கிறான். அவள் சேலையில் தன் ஜிப்பா உரச அணுகி நின்றிருக்கிறான். அப்போதெல்லாம் இந்த வேளைகள் பூரணத்துவம் பெற்றது போல அவளுக்குத் தோன்றும்.
ஆனால் இன்று அவள் தனியாக இருந்தாள். தோழியர்கள் பலர் இருந்தும் சூழ்நிலை பூரணமாகவில்லை. கண்கள் தேடியதைவிட இதயம் அதிகமாகத் தேடியது. ஏன் காணவில்லை? ஏன் என்னைத் தேடி வரவில்லை? கிள்ளானிலிருந்து என்ன மர்மங்களைச் சுமந்து வந்திருக்கிறான்? ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை? ஏன் என்னிடமிருந்து ஒளிந்திருக்கிறான்?
விபூதி வாங்கிக் கொண்டு சந்தனம் குங்குமமும் வாங்கிக் கொண்டு கூட்டம் இறுக்கம் தளர்ந்து பிரிந்தது. "சுத்திக் கும்பிட்டு வந்திடலாம் அகிலா" என்று மாலதி முன்னால் நடந்தாள். அகிலா அவளைப் பின் தொடர்ந்தாள்.
விநாயகர் சிலை வைக்கப் பட்டிருக்கும் அரசமரத்துக்கு அடியில் விநாயகரை வணங்கிவிட்டு மரத்தை அவள் சுற்றி வந்த போது இருட்டிலிருந்து "அகிலா" என்ற குரல் கேட்டது. யார் குரல் என்று பளிச்சென்று தெரிந்துவிட்டது. இதற்காகவே இத்தனை நேரம் காத்திருந்தவளைப் போல "கணேஷ்!" என்றாள்.
ஐந்து நாள் தாடி அவன் தாடையில் அடர்த்தியாக இருந்தது. முகம் சோம்பியிருந்தது. தொளதொளப்பான ஜிப்பா அணிந்திருந்தான். முகத்தில் கொஞ்சமும் செழிப்பில்லை.
"எப்ப வந்திங்க கணேஷ்? ஏன் என்னப் பாக்க வரல?" அவள் குரல் தளுதளுத்தது. அழுது விடுவோம் போலத் தோன்றியது. தலை குனிந்து கொண்டாள். அவன் அவள் கைகளைப் பிடித்தான்.
"உங்கிட்ட நெறயப் பேச வேண்டியிருக்கு. இங்க முடியாது. என்னோட வா அகிலா!" என்றான்.
"சரி. இருங்க. மாலதி கிட்ட சொல்லிட்டு வந்திர்ரேன்!"
அவனை விட்டு முன்னே போய்விட்ட மாலதியைத் தேடி ஓடினாள். அவன் வந்திருப்பதைச் சொன்னாள். "ஆமா, நான் பார்த்தேன்!" என்றாள் மாலதி குறும்புச் சிரிப்புடன்.
"நீ போ மாலதி! நான் அவரோடயே திரும்பி வந்திர்ரேன்!"
மாலதி சரியென்று போனாள்.
*** *** ***
"வாழ்க்கையில நாம் விரும்பிறதப் போல பெரும்பாலான விஷயங்கள் நடக்கிறதில்ல! அதினால இனிமே எதுக்காகவும் ஆசைப்பட்டுத் திட்டம் போடக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன் அகிலா!" என்றான் கணேசன்.
எஸ்பிளனேடில் மிருதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் காய்ந்த வெயிலுக்கு அது ஒன்றுதான் ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அலைகள் மிக மெதுவாக வந்து அந்த கற்சுவரின் மீது உராய்ந்து கொண்டிருந்தன. கூட்டம் வழக்கம் போல இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் இருந்த மன நிலையில் கூட்டத்தை அவர்கள் கவனிக்கவில்லை.
கோயிலிலிருந்து அவளைத் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவன் அவளை நேராக இங்கு கொண்டு வந்தான். அவன் தோள்களை முன்பு போல கட்டிப் பிடிக்காவிட்டாலும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டுதான் வந்தாள் அகிலா. வரும் வழி முழிவதும் அவன் ஒன்றுமே பேசவில்லை.
எஸ்பிளனேடில் மோட்டார் சைக்கிளைப் பூட்டி வைத்து விட்டு இந்தத் தடுப்புச் சுவரின் மேல் வந்து உட்கார்ந்தும் மௌனமாகத்தான் இருந்தான். அவள்தான் அதைக் கலைத்தாள். "என்ன நடந்திச்சின்னு சொல்லுங்க கணேஷ். இப்படி மௌனமாகவே இருந்தா எப்படி? என்னை ரொம்பக் கலவரப் படுத்திறிங்க!" என்றாள்.
"மன்னிச்சுக்க அகிலா. எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ஜெசிக்காவப் பாத்த போது உங்கிட்ட சில விஷயங்கள சொல்லிட்டதா எங்கிட்ட சொன்னா!"
"எப்ப ஜெசிக்காவப் பாத்திங்க?"
"நேத்து ராத்திரி! நான் வந்து சேர்ந்த வொடனே!"
ஜெசிக்காவப் பார்க்க அவனுக்கு நேரமிருந்திருக்கிறது. தன்னைப் பார்க்க நேரமில்லாமல் போனதா?
"ஏன் என்ன வந்து பாக்கல கணேஷ்?"
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். "பார்க்க ரொம்ப தயக்கமா இருந்திச்சி அகிலா. தைரியம் வரல!" என்றான்.
"என்னப் பாக்க ஏன் தைரியம் வேணும் உங்களுக்கு?"
"பாக்கிறதுக்கு இல்ல. உங்கிட்ட சொல்ல இருக்கிற விஷயங்களுக்காக!"
அவளுக்குப் புரியவில்லை. அவன் தொடர்ந்து சொல்லுவான் என எதிர் பார்த்தாள். சொல்லவில்லை. இருட்டிக் கிடந்த கடலைப் பார்த்தவாறிருந்தான்.
"சரி. மல்லிகா எப்படி இருக்காங்க? அதையாவது சொல்லுங்க!"
"இன்னும் ஆஸ்பத்திரியிலதான் இருக்கு. இன்னும் சரியா சாப்பிட முடியில. தண்ணி அல்லது சூப்தான் சாப்பிட முடியிது. திரவ ஆகாரங்கள மட்டும்தான் சாப்பிட முடியுது. கெட்டி ஆகாரம் சாப்பிட முடியில. ரொம்ப இளைச்சிப் போயிட்டா!"
அவன் குரலில் இருந்த சோகம் அவளையும் கப்பிக் கொண்டது. எவ்வளவு மாற்றமாக இருக்கிறது அவன் பேச்சு! சில மாதங்களுக்கு முன் இதே இடத்திற்கு வந்திருந்த போது எவ்வளவு காதல் ஒழுகப் பேசினான்! அந்த இரவு எவ்வளவு பிரகாசமாக இருந்தது! இந்த விளக்குகள் எவ்வளவு சிருங்காரமாக இருந்தன! ஏன் அத்தனையும் இவ்வளவு சீக்கிரத்தில் மங்கிப் போய்விட்டன? என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறானா? இது பிரிவுக்கு முகமனா?
"விஷம் சாப்பிட்ற அளவுக்கு என்ன நடந்திச்சி கணேஷ்? உங்க அத்தை மகளுக்கு உங்க மேல இவ்வளவு ஆசை இருக்குன்னு நீங்க எங்கிட்ட சொல்லவே இல்லியே!"
"எனக்குத் தெரியில அகிலா! தெரிஞ்சிருந்தாலும் அத அலட்சியப் படுத்தப் பார்த்தேன். அவ எங்கிட்ட சொன்ன போதும் அத விளையாட்டா எடுத்துக்கிட்டேன். அவ கிட்ட சொல்லித் திருத்த முடியும்னு நெனச்சேன்"
"உங்களுக்கு..?"
"எனக்கு அவ மேல கொஞ்சமும் ஆசையில்ல அகிலா. நான் சொல்றத சத்தியமா நம்பு. அன்பு இருக்கு, ஆனா ஆசை இல்ல. என்னைக்குமே இருந்ததில்ல. இப்போதும் இல்ல. ஆனா அவ மனசில அந்த ஆசை இப்படி மரம் போல வளந்திருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சி!"
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள். பின் அவனே பேசினான்: "மல்லிகாவுக்கு இனிமே பல கஷ்டங்கள் இருக்கு. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற சில பாதிப்புகள் நிரந்தரமா இருக்கக் கூடும்னு டாக்டர்ங்க சொல்றாங்க. விஷத்தினால ஏற்பட்ட வலிப்பும் மூச்சுத் திணறலும் வந்திருக்கு. அதனால மூளைக்கு இரத்தம் போகாம அவள் உடம்பு ஒரு பக்கம் விளங்காமப் போச்சி. ஒரு கையைத் தூக்கவே முடியில. முகத்தில ஒரு பக்கம் இழுத்துக்கிச்சி. பேச்சுகூட குழறி குழறித்தான் வருது" தயங்கிச் சொன்னான்: "கண்கள்ள பார்வை கூட ரொம்ப மங்கலாகத்தான் இருக்கு!"
"ஐயோ!" என்றாள் அகிலா.
"சொல்லு அகிலா. இப்படி ஆயிட்ட பெண்ண யாரு கட்டிக்குவாங்க?"
ஏன் அந்தக் கேள்வியைக் கேட்கிறான் என அகிலாவுக்கு விளங்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசாமல் இருந்தாள்.
"அகிலா! நான் ரொம்ப ஆசப்பட்டுட்டேன். எனக்குன்னு விதிக்கப் பட்டிருந்த வரையறைகளை மீறி என்னுடைய விருப்பத்துக்கு என் வாழ்க்கைய அமைக்கணும்னு அளவுக்கு மீறி ஆசைப் பட்டுட்டேன். அந்த மீறல்களுக்கெல்லாம் எனக்குப் பெரிய தண்டனை கிடைச்சிப் போச்சி!"
"என்னத்த மீறிட்டிங்க கணேஷ்? ஏன் அப்படிச் சொல்றிங்க?"
"என்னுடைய சூழ்நிலைகள என்னுடைய குடும்பத்தார்கள் முன்னமே வரையறுத்து வச்சிருந்தாங்க. குறிப்பா என் அத்தை. அப்புறம் எங்கப்பா. ஆனா அதையெல்லாம் உடைச்சி மீறணும்னு நெனச்சேன். புதுசா என் மனசுக்கு ஏத்தாப்பில ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கணும்னு தீர்மானம் பண்ணினேன். உன்ன சந்திச்ச போது அதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைச்சதாத் தெரிஞ்சிச்சி. அதினாலதான் உன்ன அத்தன பலமா நான் பிடிச்சிக்கிட்டேன்!"
நானும் அப்படித்தான் என அகிலா நினைத்தாள். நானும்தான் எனக்கு விதிக்கப்பட்ட வரையறைகளை உடைக்க நினைத்தேன். அதற்காகத்தான் உன்னைப் பற்றினேன். ஆனால்..
"ஆனா, இந்த அப்பாவிப் பொண்ண அந்தக் கணக்கில சேர்க்க மறந்திட்டேன் அகிலா! அவள் நான் போட்ட கணக்கையெல்லாம் மாத்திட்டா!"
"அப்படின்னா?"
அவன் முகத்தையே பார்த்திருந்தாள். 'ஆகவே, என்ன செய்வது? சொல் கணேஷ். சொல். இன்னும் என்னை மர்மத்திலும் படபடப்பிலும் வைத்திருக்காதே!' என்று அவள் மனம் கூவிக் கொண்டிருந்தது.
"என்ன மன்னிச்சிடு அகிலா! ஏதாகிலும் ஒரு வகையில உன்னை நான் ஏமாற்றியிருந்தா என்ன மன்னிச்சிடு. இனி நான் மல்லிகாவுக்குத்தான் வாழ்வு கொடுக்கணும். என்னை விட்டா இனி அவளுக்கு வாழ்வு அமையாது. அதினால அத்தையும் உடைஞ்சு போவா. என் பெற்றோர் குடும்பமும் சிதைஞ்சி போவும்! என்ன மன்னிச்சிடு அகிலா! என்ன மறந்திடு! என்ன மறந்திடு!" அழுதான்.
அகிலாவின் கண்களிலும் நீர் ஊறியது. அவனுக்கு என்ன பதிலைச் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. இது இவ்வளவு எளிதானதா? "சரி, சரி, அதனாலென்ன? வேண்டான்னா மறந்திட்டா போச்சி!" என்று சொல்லிவிட முடியுமா? விரும்பினால் ஏற்றிக் கொள்ளவும் விரும்பாவிட்டால் அணைத்துவிடவும் இது என்ன வெறும் மெழுகு வர்த்தியா?
ஏன் இவன் என் வாழ்வின் குறுக்கே வந்தான் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். நான் அமைதியானவளாக, என்னுடைய கல்வியையே முதன்மையாக எண்ணித்தானே இந்தப் பினாங்குக்கு வந்தேன்! அநதப் பாதையில் ஏன் இந்தப் புயல்? விதி இவனை என் வாழ்வின் குறுக்கே கொண்டு வந்து போட்டதா? அவனே தேடி வந்தானா? அல்லது நான் தேடி அவனை அடைந்தேனா? இந்தக் கட்டத்தில் அது ஒன்றும் விளங்கவில்லை. எப்படியோ அது நடந்தது. ஒரு விதை, ஒரு முளை, ஒரு தளிர், ஒரு இலை, ஒரு செடியென்று படிப்படியாக வளர்ந்து விட்டது.
இப்போது அதைப் பிடுங்கிப் போட்டு விடு என்கிறான். இன்னொருத்தியின் விதி இங்கே குறுக்கே வந்து விட்டது. எப்படி வந்தது? நான் முகம் பார்க்காத, நான் அறிந்திராத, என் வாழ்க்கையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத இளம் பெண் என் வாழ்க்கையைப் பாதிக்கிறாள். எந்த நியதி இவளையும் என்னையும் பிணைத்தது? எந்த வலையால் ஒரு கோடியில் நானும் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு கோடியில் அவளுமாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?
"எனக்குத் தெரியும் அகிலா! நான் எவ்வளவு பெரிய துரோகின்னு நீ நெனைப்பேன்னு எனக்குத் தெரியும். நானே என்னை மன்னிக்க முடியில! உன் வாழ்க்கையில நான் குறுக்கே வந்திருக்கக் கூடாது. என்னை இப்படி உன்மீது திணிச்சிருக்கக் கூடாது. உன் மனத்தோட நான் விளையாடி இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடு!"
யார் யாரை மன்னிப்பது? எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்? இதில் யார் குற்றம் செய்தார்கள்? நாமெல்லாம் இந்த வாழ்க்கை மேடையில் ஆட்டுவிக்கப் படுகிறோம். இந்த நாடகத்தில் சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் தோற்கிறார்கள். ஜெயித்தவர்கள் கெக்கலித்துச் சிரிக்கிறார்கள். மற்றவர்கள் அழுகிறார்கள், உன்னையும் என்னையும் போலத்தான் கணேஷ்!
வானம் இருண்டு வந்தது. இன்றைக்கும் மழை வரப் போகிறதா? நான் இன்பமாக இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் மழைதான் வந்து கெடுக்கிறது.
"என்ன சொல்ற அகிலா?" கணேசன் கேட்டான்.
"மழை வர்ர மாதிரி இருக்குது! என்னத் திரும்ப கொண்டு போய் விட்டிடுங்க!"
"நான் சொன்னதுக்கு நீ ஒரு பதிலும் சொல்லியே!"
யோசித்தாள். ஏன் அவசரமாக பதில் சொல்ல வேண்டும்? அவசரத்தால் என்ன நன்மை விளையும்? ஏன் திடீர்த் தீர்வுகளைத் தேட வேண்டும்?
"நாம ரெண்டு பேருமே இப்ப ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கோம், கணேஷ். என்ன கொஞ்சம் யோசிக்க விடுங்க! அதுக்கப்புறம் இன்னொரு முறை சந்திச்சி இதப் பத்திப் பேசுவோமே!" என்றாள். அவள் முகத்தைக் கொஞ்ச நேரம் ஏறிட்டுப் பார்த்தான். அவள் என்ன சொல்கிறாள் என்பது தனக்குப் புரியவில்லை என்பது போலப் பார்த்தான்.
"அகிலா! உங்கிட்ட இருந்து மனப் பூர்வமான ஒரு பதிலை என் காதால கேட்காம என் மனசு சமாதானமடையாது. சொல்லு!" என்றான்.
"கணேஷ். நீங்க என்ன செய்ய வேணும்னு முடிவு பண்ணிட்டிங்க. சொல்ல வேண்டியத சொல்லிட்டிங்க. அதுக்கு என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு பதிலே தேவையில்லையே!" என்றாள்.
"இல்ல அகிலா! இந்த முடிவு சரிதானான்னு சொல்லு! இது உனக்கு சம்மதமான்னு சொல்லு! இல்லன்னா என்னுடைய மனப் போராட்டத்துக்கு ஒரு முடிவே இருக்காது!" என்றான்.
அகிலா கடலைப் பார்த்து யோசித்தவிறிருந்தாள். பின் பேசினாள். "சொல்றேன் கணேஷ். ஆனா ஏன் இப்படி அவசரப் பட்றீங்க? எல்லாரும்தான் இந்த உலகத்தில அவசரப் பட்றாங்க. உங்க அத்தை, உங்க அத்தை பொண்ணு, எங்க அம்மா, எல்லாருக்குமே விடைகள் அவசரமாத்தான் தேவைப் படுது. நீங்களும் அவசரப் படணுமா? என்னையும் அவசரப் படுத்தணுமா?"
"எனக்கு சமாதானமா இல்ல! என் மனசு அடங்க மாட்டேங்குது. உனக்குத் துரோகம் செஞ்சிட்டேன்னு என்னக் குத்துது" அவள் பதில் சொல்லவில்லை.
மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. நடந்து திரும்பினார்கள். அவள் பின்னால் உட்கார்ந்ததும் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி நகருமுன் அவன் கேட்டான்.
"என் மேல கோபமா அகிலா? அதையாவது சொல்லேன்!"
"கோபப்பட எனக்கு உரிமை இருக்கு! கோபமும் இருக்கு. ஆனா பயப்படாதீங்க, உங்க அத்த மகள் மாதிரி முட்டாள் தனமான காரியத்தில நான் ஈடுபட மாட்டேன்"
மோட்டார் சைக்கிள் நகர்ந்தது. அவன் தோள்களை உறுதியாகப் பிடித்து உட்கார்ந்திருந்தாள் அகிலா.
வரும் வழியில் மழை வலுத்தது. அதே மழை. அன்று போலத்தான். அவன் மழைக்கோட்டை எடுத்து முன் பக்கமாகக் கையை நுழைத்துப் போத்திக் கொண்டு அவளுக்கும் ஒரு பகுதியைக் கொடுத்தான். அவள் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தாள். மழை உடம்பையெல்லாம் நனைத்து, சேலையையும் ரவிக்கையையும் நனைத்து உடம்போடு ஒட்ட வைத்தது. குளிர் எடுக்க ஆரம்பித்தவுடன் அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அகிலா.
(முடிந்தது)
கருத்துகள்
கருத்துரையிடுக