ஜனனி
சிறுகதைகள்
Back ஜனனி (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்: லா. ச. ராமாமிருதம்
ஜனனி (சிறுகதைத் தொகுதி)
"லா. ச. ராமாமிருதம்"
முதற்பதிப்பு ஜூன் 1992, இரண்டாம் பதிப்பு : அக்டோபர் 2005
உரிமை : ஆசிரியருக்கு
திருநாவுக்கரசு தயாரிப்பு
விலை : ரூ. 60.00
----
TITLE : JANANI
AUTHOR : La. Sa. Ramamirtham
LANGUAGE : TAMIL SUBJECT : Short Stories
EDITION : First Edition, June, 1992
Second Edition, October, 2005
PAGES : viii + 232 = 240
Published By : VANATHI PATHIPPAKAM
23, Deenadayalu Street, Thyagaraya Nagar, CHENNA - 600 017
Email : vanathipathippakam (ovsni.net)
Website: www.vanathipathippakam.com
Teị : 24342810, 24310769
PRICE : RS. 60
Laser Typeset at:
S.P.M. Graphics, CHENNAI-600 071
Printed at: Malar Printers O44-8224803
-----------
பதிப்புரை
பண்புகளுக்கு உருவமில்லை. அவை அருவங்கள். அவற்றின் சாயைகள் சூட்சுமமானவை. திரு லா. ச. ராவின் எழுத்தொளியில் பண்புகளின்உயிர்ப் பண்புகளின்-சூட்சுமச் சாயைகள் பிறக்கும் போது, அவை வாசகர்களின் உட்புலன்களின் மேல் படரும்போது ஏற்படும் கூச்சம் திரு லா.ச.ரா-வுக்கு முன் தமிழுக்குப் புதிது; இன்று தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் ஆதாரம்.
திரு லா. ச. ரா.வின் எழுத்து, அவருடைய பாஷையில், தன்னுடைய நாளைக் கண்டுவிட்டது. ஆகவே அது வாசகர்களின் நாளை அடையாளம் கண்டுகொண்டு, அதனுடன் ஒன்ற முடிகிறது. வாசகர்களுக்கு அவருடைய கதைகளில் ஏற்படும் பரவசத்திற்கு இதுதான் காரணம்.
இலக்கியச் சுரங்கங்கள் போன்ற பல பத்திரிகை களிலிருந்து கதைமணிகள் சேர்த்து ஜனனி என்ற ஆரம் செய்திருக்கிறார் ஆசிரியர். வாசகர்களின் இதயத்தில் இதன் ஒளி வீசும் என்பது நிச்சயம். தமிழ் வாசகர்களது உள்ளத் துடிப்பின் ஒரு அம்சத்தின் உருவம்தான் ஜனனி.
ஒரு அமானுஷ்யமான தெய்வீகச் சூழலை மையமாக வைத்து, காவியம் போன்று இச்சிறுகதைகளைச் சிருஷ்டித்திருக்கும் எழுத்துச் சித்தர் லா. ச. ரா.-வுக்கு வானதியின் வணக்கங்கள் உரித்தாகுக.
அன்புள்ள
ஏ. திருநாவுக்கரசு
வானதி பதிப்பகம்
--------------
தபஸ்
இது உனக்கும் எனக்கும் இடையில் ஒரு வார்த்தை உனக்கு இதைச் சொல்ல வேண்டுமென்று வெகுநாட்களாய்க் காத்துக்கொண்டிருந்தேன். இப்போது வகையாய் மாட்டிக்கொண்டோம்.
இப்புத்தகத்தில் வரும் பெயரோ பாத்திரங்களோ ஒருவரையும் குறிப்பிடுவனவல்ல என்ற சம்பிரதாயச் சொல் ஒரு பெரும் புளுகு என்று அறிந்துகொள். ஏனெனில், எவரும் எவரையும் குறிப்பிடாது இருக்க முடியாது. தெய்வமே ஒரு குறிப்பிட்ட பொருள்தான். அந்தக் குறிப்பைச் சுற்றிச் சுற்றி நாம் இயங்கி, அதனால் குறிக்கப்பட்ட பொருள்கள் ஆய்விட்டோம்.
வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் இருக்கும்வரை இந்தத் தன்மையை விட்டு நாம் தப்ப முடியாது. நாம் தெரிந்தோ தெரியாமலோ-- இஷ்டப்பட்டோ இஷ்டப்படாமலோ, அர்ப்பணமானவர்கள். இந்த அர்ப்பணிக்கப்பட்ட தன்மையை நாம் அங்கீகரித்துக் கொண்டு விட்டோமானால் அவரவரின் உண்மை யின் உள் சத்தை ஒரளவு இப்பவே புரிந்துகொள்ள முடியும். இதனால், நம்மையும் ஆட்டுவித்துக் கொண்டு நம்முடன் தானும் ஆடிக்கொண்டிருக்கும் தெய்வத்திற்கோ, அல்லது அந்தத் தெய்வத்திற்கும் காரணமாயுள்ள சக்தி எதுவோ அதற்கோ நாம் உதவி புரிந்தவர்கள் ஆவோம்.
கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின்மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிர்க்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்துகொண்டே பார்க்க முடியும். இவ்வநுபவம் ஒருவனுடையது மாத்திரமல்ல, ஒவ்வொருவனுடைய உரிமையே ஆகும். ஆகையால் இக்கதைகளில் ஏதோ ஒன்றில் ஏதோ ஒரு பக்கத்திலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ, சொற்றொடரிலோ, பதங்களிலோ அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்றுகொண்டு உன்னைத் தடுக்கும் அணுநேர மெளனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய். இறப்புக்கும் பிறப்புக்குமிடையில் நம் எல்லோரையும் ஒன்றாய் முடித்துப் போட்டு, நம் உள் சரடாய் ஒடிக்கொண்டிருக்கும் உண்மையின் தன்மை ஒன்றேதான். ஆகையால், இக்கதைகளில் நான் உன்னையும் என்னையும் பற்றித்தான் எழுதுகிறேன். வேறு எப்படியும் எழுத முடியாது. இக் கதைகளைப் படித்ததும் உன்னிடமிருந்து உன் பாராட்டையோ, உன் நன்றியையோ நான் எதிர் பார்க்கவில்லை. உன்னைச் சில இடங்களில் இவைகள் கோபப்படுத்தினால் அக்கோபத்திற்கும் நான் வருத்தப்படப் போவதில்லை. உடன்பிறந்தவர்களிடையில் இவ்விரண்டையும் பாராட்டுவதிலேயே அர்த்தம் இல்லை. ஆனால் இவைகளின் மூலம் உன்னை நீ அடையாளம் கண்டுகொண்டாயெனில் இவைகளின் நோக்கம் நிறைவேறிய மாதிரியே.
இக்கதைகள், தாம் வெளிப்படுவதற்கு என்னை ஒரு காரணமாக உபயோகப்படுத்திக் கொண்டிருக் கலாம்; ஆனால் இவைகள் வெளிப்பட்ட பிறகு இவைகளைப் பார்க்கையில் நானும் உன் மாதிரி தான். எப்படியும் இப்புத்தகத்திற்கு நான் காரணம் இல்லை. நீதான். அல்லது உன் மாதிரி நாலுபேர் மாசு, வை.சு, தாத்து, வேம்பு, செல்லம், ரங்கன் இவைகள் உனக்கு வெறும் பெயர்கள். எனக்கு இவர்கள் இப்பெயரின் அர்த்தங்கள்- உன் மாதிரி.
ஆகையால் இந்த உண்மையை- வெளிப்பூச்சின் அடியில் புதைந்து கிடக்கும் உண்மையின் ஒரே தன்மையைப் பற்றி உன்னிடம் சொல்லத்தான் வந்தேன். இது எனக்கு எப்பவும் அலுக்காது.
நான் இருக்கும் வரை, இதை நீ புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், செவி சாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். இனி இவைகள் உன்னுடையவை.
லா.ச. ராமாமிருதம்
--------------
உள்ளடக்கம்
- 1. ஜனனி
2. யோகம்
3. புற்று
4. எழுத்தின் பிறப்பு
5. அரவான்
6. பூர்வா
7. மஹாபலி
8. கணுக்கள்
9. கொட்டு மேளம்
10. ரயில்
1. ஜனனி
அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை
ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் ஒண்டிக் கொள்வோம் என்னும் ஒரே அவாவினால் இடம் தேடிக் கொண்டு காற்றில் மிதந்து செல்கையில், எந்தக் கோவிலிலிருந்து தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தேவி புறப்பட்டாளோ அந்தக் கோவிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தின் அருகில், ஒரு மரத்தின் பின்னிருந்து முக்கல்களும், அடக்க முயலும் கூச்சல்களும் வெளிப்படுவதைக் கேட்டாள். குளப்படிக்கட்டில் ஒர் ஆண்பிள்ளை குந்தியவண்ணம் இரு கைவிரல் நகங்களையும் கடித்துக் கொண்டு பரபரப்போடு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தான்,
ஒர் இளம் பெண் மரத்தடியில் மல்லாந்து படுத்தவண்ணம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு துடித்தாள்.
ஜன்மம் எடுக்க வேண்டுமெனவே பரமாணுவாய் வந்திருக்கும் தேவியானவள், உடனே அவ்விளந்தாயின் உள்மூச்சு வழியே அவளுள்ளே புகுந்து, கருப்பையில் பிரவேசித்தாள். ஆனால், ஏற்கெனவே அவள் வகுத்திருந்த விதிப்படி அவ்விடத்தில் ஒரு பிண்டம், வெளிப்படும் முயற்சியில் புரண்டு கொண்டிருந்தது.
அதனுடன் தேவி பேசலுற்றாள்:
"ஏ ஜீவனே, நீ இவ்விடத்தை விட்டுவிடு. நான் இந்தக் காயத்தில் உதிக்கப் போகிறேன்."
"தேவி, சத்திய ஸ்வரூபியாகிய உனக்குக் கேவலம் இந்த ஜன்மத்தில் இப்பொழுது ஆசை பிறப்பானேன்? இதன் உபாதைகளைக் கடந்து உன்னிடம் கலக்கத்தானே நாங்கள் எல்லோரும் இப்படித் தவிக்கிறோம்?"
"குழந்தாய், நான் குழந்தையாயிருக்க விரும்புகிறேன். அன்னையாய் இருந்து, என் குடும்பமாகிற இவ்வுலகங்களைப் பராமரித்துப் பராமரித்து நான் கிழவியாகிவிட்டேன். எனக்கு வயதில்லையாயினும், குழந்தையாக வேண்டும் என்னும் இச்சை ஏற்பட்டுவிட்டது-"
"தேவி, இப்பொழுது நீ நினைத்திருப்பது அவதாரமா?"
"இல்லை; பிறப்பு. நான் முன்னெடுத்த ஜன்மங்கள், பிறர் தவத்தைத் திருப்திப்படுத்துவதற்கும், துஷ்டர்களைச் சம்ஹரிப்பதற்கும் ஆகும். ஆனால் இப்போதோ, இது என் சுய இச்சை. அப்பொழுதெல்லாம், நான் குழந்தையுருவாக நெருப்பிலோ, பூவிலோ, சங்கிலோ உலகத்தில் இறங்கினேன். இப்போதோ, பாங்காக ஒர் உடலிலிருந்தே புறப்பட விரும்பினேன்."
"தேவி, உன் விளையாட்டை நாங்கள் அறியோம். ஆனால், ஜன்மமெடுக்கும் இந்த விளையாட்டில் நீ ஏமாந்து போவாய். உன்னைத்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். நீயும் எங்களுள் மூழ்கி, உன்னையும் இழந்துவிட்டால், பிறகு நாங்கள் செய்வது தான் என்ன?"
"இதையேதான் என் கணவரும், என் இச்சையை அவரிடம் நான் வெளியிட்டபோது சொன்னார்: ஜன்மாவில் முன்பைவிடக் குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரித்து விட்டன. புத்தி அதிகமாய் வளர்ந்து, அசல் சத்தியத்துக்குப் போட்டியாக மாயா சத்தியத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு, அதைப் பின்பற்றி, உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளைவிட, நிருபணைக்கு முக்கியம் அதிகமாய்விட்டது. பிறப்புக்கும் இறப்புக்கும் கொஞ்சமாவது ஒய்வுகொடுக்கவேதான் பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் அசத்தியத்திற்காகவே ஜீவன்கள் ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும் வேகம், பிரளயத்தின் அவசியத்தையே குறைத்துக்கொண்டிருக்கிறது." -
"நான் கேட்டேன். ‘சத்தியத்துக்கு இறப்பு ஏது, பிறப்பு ஏது?’ - -
"அவர் சொன்னார்: ‘வாஸ்தவந்தான். ஆனால் அதற்கு வளர்ப்பு மாத்திரம் உண்டே சத்தியம் வளர்ந்தால்தானே பயன் படும்? உன்னை ஜன்மங்கள் இதுவரை பாதிக்காமல் இருப்பதும், நீ வளர்ப்பு அன்னையாக இருப்பதும், உன் குழந்தைகள் வளர்ப்புக் குழந்தைகளாக இருப்பதும், நீ நித்திய கன்னியாக இருப்பதும் எதனுடைய அர்த்தம் என நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீயும் உன் குழந்தைகளும் வளர்ப்பதோ, அல்லது வளர்க்க முயல்வதோ என்ன? சத்தியம். ஆகையால், நீ ஜன்மத்தில் படும் சபலமே அசத்தியத்தின் சாயைதான்--‘ என்றார்.
"அப்படியும் நான் கிளம்பிவிட்டேன். ஆகையால், என் குழந்தாய், நான் குழந்தையாவதற்கு எனக்கு இடம் விடு. பார், மாடிமேல் உலக்கை இடிப்பதுபோல், என் குழந்தை பிரசவ வேதனையில் இடும் கத்தல் கேட்கிறது! அளவுக்கு மீறி அவளைத் தன்புறுததுவது தகாது.
"தேவி, ஜன்மத்தில் அகப்பட்டவன், பொறியுள் அகப்பட்டுக்கொண்ட எலி!"
"குழந்தை, அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் எலியாய்ப் பொறியுள் புகுந்தாலும், நான் எப்பொழுது நினைத்தேனோ அப்பொழுது வெளிப்படப் பொறிக் கதவு எனக்கு எப்போதும் திறந்திருக்கும்."
"தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு, கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூடப் பயப்படுகிறது."
"சத்தியம் எப்போதும் ஜெயிக்கும். ஆகையால் எனக்கு விரைவில் இடம் விடு; தவிர, உனக்கு இப்பொழுது விடுதலை அளிக்கிறேனே. அதனால் உனக்கு சந்தோஷம் இல்லையா?"
"ஆனால் இந்த ஜன்மத்தின்மூலம் எனக்கும் விதித்திருக்கும் வினை தீர்ந்தாக வேண்டுமே!"
"அதைத்தான் உனக்கு பதிலாக நான் அநுபவிக்கப் போகிறேனே! எந்தப் பரமானுவின் வழி நான் இந்தக் காயத்தினுள் வந்தேனோ, அதன் உருவில் நீ இத்தாயின் வெளி மூச்சில் வெளிப்படுவாயாக!-- ஆசீர்வாதம்."
"தேவி, நான் மகா பாக்கியசாலி! எல்லோருக்கும் பிறப்பு இறப்பு இரண்டையும் அநுபவித்த பிறகுதான் முக்தி என்றால், எனக்குப் பிறப்பின் முன்னரே விடுதலை கிட்டிவிட்டது! நான் செலவு பெற்றுக்கொள்கிறேன்!"
அந்தப் பரமானு வெளிப்படுகையில் அவள் வீரிட்டாள்.
"என்ன? என்ன?"- குளத்தண்டை காத்திருக்கும் ஆண்பிள்ளை, அலறிக்கொண்டே மரத்தண்டை ஒடி வந்தான்.
கொஞ்ச நாழிகை பேச்சு மூச்சில்லை. பிறகு திடீரென்று ஜலத்தில் கல்லை விட்டெறிந்தாற் போல், நள்ளிரவை ஒரு புதுக்குரல் கிழித்தது.
அவனுக்கு உடல் புல்லரித்தது. "நான் வரட்டுமா?"
"இல்லை; இல்லை-- சரி, இப்போது வா!"
அவன் இன்னமும் சற்று அருகில் வந்தான்; ஆனால் இருளில் ஒன்றும் தெரியவில்லை.
"என்னா பிறந்திச்சு?
இருளில் அவள் குழந்தையைத் தடவிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: "பொம்புள்ளையாட்டம் இருக்குது."
"அட கடவுளே!"
பராசக்தி சிரித்தாள். ஆனால் மறுகணம் அவளுக்கு மூச்சுத் திணறியது. அவள் முகத்தின் மேல் ஒர் அழுக்குத் துணி விழுந்தது. குரல்வளையை இரு கட்டைவிரல்கள் அழுத்தின. மூச்சு பயங்கரமாய்த் திணறியது. அந்த எமப்பிடியினின்று வீணே விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
"என்னம்மே கொழந்தே-அடிப்பாவி! என்னா பண்றே? "என்னெ சும்மா விடுன்னா!"
"அடி கொலைகாரி!"
"விடுன்னா விடு-"
குழந்தையை அவன் பிடுங்கிக் கொண்டான். "ராச்சஸி! உனக்குப்போய் மகமாயி கொளந்தையெக் குடுத்தாளே!"
"அவளா குடுத்தா! நீ குடுத்தே!"
"இருந்தா என்ன? பாருடி இந்தப் பாவத்தை என் மாரிலே பாலைத் தேடுது:"
"சரிதான். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால், இந்தா சாமி குடுத்துது கொஞ்சுன்னு குடுக்கச் சொல்றியா?"
"கொடும்பாவி, அதனாலே கொலை பண்ணனுமா?"
"சரி, என்னா பண்ணப் போறே?"
"ஓடிப் போயிடுவோம்."
"அதுவும் உன்னை நம்பித்தானே!"
"சரி, வேண்டாம். இந்தக் குளத்தங்கரையிலேயே விட்டுட்டுப் போயிடுவம். தானா உருண்டு தண்ணியிலே விழுந்தாலும் விழுந்துட்டுப் போவுது. பண்ணின பாவம் பத்தாதுன்னா நம்ம கையினாலே சாகவனும்? இந்த ஒரு தடவை கூட எடுத்துவிட மாட்டியா?"
"நீ புண்ணியம் தேடற அழகை நீதான் மெச்சிக்கணும்-"
"அடிப்பாவி! ஆடு மாடுங்ககூட உன்னைவிட ஒசத்திடீ!"
"அது சரி. நான் மனுச ஜன்மந்தானே? இந்த வெட்டிப் பேச்செல்லாம் பேசி நேரத்தை ஓட்டாதே. விட்டுட்டு வரதுன்னா வா. நான் கண்ணாலேகூடப் பாக்கமாட்டேன். பாத்தாக்கூட ஒட்டிக்கும்-"
"நீ இப்படிப்பட்டவன்னு எனக்கு அப்பொ தெரியாதுடீ. தெரிஞ்சா சாகுவாசங்கூட வெச்சுக்கமாட்டேன். உனக்கு எப்பவும் உன்னைப் பத்தின நெனப்புத்தானே?"
குரல்கள் எட்ட எட்டப் போய்த் துரத்தில் அமுங்கிப் போயின.
குழந்தை தன்மேல் போட்டிருந்த கந்தலை, முஷ்டித்த கைகளாலும் கால்களாலும் உதைத்துக்கொண்டு அழுதது. உடலின் பசியும் குளிரும் புரியவில்லையாயினும், பொறுக்க முடியவில்லை.
அத்துடன் இந்தத் தனிமை-- இதுவரை அவளுக்குப் பழக்கப்பட்டது. அரூபமாய், எவற்றிலும் நிறைந்த உள்ளத்தின் ஒப்பற்ற ஒரு தன்மையின் தனிமை. ஆனால் இதுவோ, ஒர் உருவுள் கட்டுப்பட்டுவிட்டதால் அதற்கே தனியாயுள்ள தன் தனிமை.
கோபுர ஸ்தூபியின் பின்னிருந்து வெள்ளி, தேவியை அஞ்சலி செய்துகொண்டே கிளம்பியது. காளியாய்க் கத்திக் கத்தி, குழந்தைக்குத் தொண்டை கம்மிவிட்டது. புறப்பட்டுக் கொண்டிருக்கும் சூரியனுடைய கிரணங்களில் கோபுரத்தின் பித்தளை ஸ்தூபி பொன்னாய் மின்னியது.
அப்போது வயதான ஒரு பிராமணர், குளிப்பதற்காகப் படிக்கட்டுகளில் வெகு ஜாக்கிரதையாய் இறங்கினார். ‘வீல் வீல்’ என்று இருமுறை அலறி, குழந்தை அவர் கவனத்தை இழுத்தது.
"ஐயோ பாவமே! யார் இப்படிப் பண்ணினது?
குழந்தையை அவர் வாரி எடுத்துக்கொண்டார். அதன் தாய் ஒருவேளை குளத்தில் மிதக்கிறாளா அல்லது வேறு எங்கேனும் போயிருக்கிறாளா என்று சுற்றுமுற்றும் தேடிப் பார்த்துவிட்டு, வேறு வழி இல்லாமல் வந்த காரியத்தையும் மறந்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்.
அவர் சம்சாரம் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண் டிருந்தாள். கோலத்தில் குனிந்த தலை நிமிர்ந்தபோது, அவள் முகம் அழகாக இருப்பதை ஐயர் கைக்குழவி கண்டது. வாலிபந் தான். ஐயர் கை மூட்டையைக் கண்டதும், அவள் புருவங்கள் அருவருப்பில் நெரிந்தன.
"இப்போ என்ன இது?"
"அடியே, இன்றைக்கு என் மனம் ஏதோ மாதிரி குதிக்கிறதடி உள்ளே வா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா நமக்கு ஒரு குழந்தை கிடைத்திருக்கிறது. நான் உன்னிடம் அப்பொழுதே சொன்னேனே, மூன்று நாட்களாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன் என்று. வா, வா." தொண்டை கம்மிவிட்டது.
அவர் கண்களில் ஜலம் தாரையாய்ப் பெருகி நின்றது. பூஜைக்கூடத்தின் நடுவில் செதுக்கிய தாமரைப்பூக் கோலத்தில் குழந்தையை வளர்த்திவிட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் படங்களுக்குக் கைகூப்பி நின்றார். அவர் தேகம் நடுங்கிற்று.
அவர் மனைவி சாவகாசமாய்ப் பின்னால் வந்தாள். ஐயரின் பரவசம் அவளுக்குப் புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. கோலக் குழாயை ஜன்னலில் லொட்டென்று வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு காத்துக்கொண்டு நின்றாள்.
"என் கனவைச் சொன்னேனோ?"
"எந்தக் கனா? நீங்கள் சொல்ல ஆரம்பித்தால் காதவழி போகுமே, உங்கள் கனா!"
"மூன்று இரவுகளாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன்-- எங்கிருந்தோ ஒரு குழந்தை என் பின்னால் வந்து, மேல் துணியைப் பிடித்து இழுத்து, அதன் கழுத்து நோக என்னை நிமிர்ந்து பார்த்து, ‘தாத்தா, உங்காத்துலே எனக்கு இடம் கொடேன்!’ என்று கேட்கிறது. நாலு ஐந்து வயசுக்கு மேல் இராது. அரையில் மாந்தளிர்ப் பட்டுப்பாவாடை மேலே சொக்காய் கிடையாது திறந்த மார்பில், கழுத்தில் காரடையா நோன்புச் சரடு மாதிரி ஒரு மாங்கல்யக் கயிறு. அவ்வளவுதான்.
"அது கேலியாக் கேட்டதோ, வேணுமென்றுதான் கேட்டதோ, தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம், என் எலும்பு ஒவ்வொன்றும் தனித்தனியாய் உருகிற்றுடி! நானே கரைந்து போய்விடுவேன் போலிருந்தது. என் கனவிற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு ஸ்நானம் பண்ணப்போன இடத்திலே, இது அநாதையா--"
"சரிதான்! ‘தாத்தா’ன்னு முறை வெச்சு உங்க கனாக் குழந்தை கூப்பிட்டத்துக்கோசரம் எனக்கு ஒரு பேத்தியைக் குளத்திலேருந்து பொறுக்கிப் பாத்து எடுத்துண்டு வந்தேளாக்கும்! எந்த வில்லிச்சி பெத்துப் போட்டுட்டுப் போனாளோ-- போலீஸுலே-"
குழந்தை கத்த ஆரம்பித்துவிட்டது.
"ஐயோ, பசிடீ-- அதன் பசியழுகையைப் பார்க்கையில், அந்த அம்மாளின் முகம் உள் போராட்டத்தில் முறுகிச் சவுங்கியது. அவளையும் மீறிக் கைகள் குழந்தையை வாங்கிக் கொண்டன. அன்னையின் வாயும் கைகளும் பாலிடத்தை ஆத்திரத்துடன் தேடித் தவித்தன. அந்த அவஸ்தையைக் கண்டு ஐயர் தலை குனிந்தது.
"நைவேத்தியப் பாலைப் புகட்டு; வேறே வாங்கி வருகிறேன்--" கீழ்நோக்கிய அவர் வார்த்தைகள் பூமியில் தெறித்து எழும்பின.
அம்மாள் ஆத்திரத்துடன் கீழே உட்கார்ந்து, குழந்தையை மடியில் படக்கென்று கிடத்திக் கொண்டாள். வார்த்தைகள் வாயினின்று வெடித்து உதிர்ந்தன.
"இப்போ திருப்தியாயிடுத்தோன்னோ? மூணுபேரை ஏற்கெனவே முழுங்கினேள். ஒருத்தியை வயசு வரத்துக்கு முன்னாலேயே மாரி தன்கிட்ட வரவழைச்சுண்டுட்டாள்; இன்னொருத்தி ஸ்நானம் பண்ணப்போன இடத்துலே குளத்தோடே போயிட்டா. உங்களுடைய ஏழா மடத்துச் செவ்வாய்கிட்டெ அப்பவாவது உங்களுக்குப் பயங் கண்டிருக் கணும். இல்லை. மூணாவது பண்ணிண்டேள்; மூணும் பெத்தேள் தக்கல்லே. ராமேசுவரம் போனேள். எல்லோரும் பீடையைத் தொலைக்கப் போவார்கள். நீங்கள் என்னடான்னா, கொண்டவளை வயிறும் பிள்ளையுமா அங்கேயே காலராவிலே தொலைச்சுப்பிட்டு, இன்னமும் பாவமூட்டை யைச் சம்பாதிச்சுண்டு வந்தேள்."
ஐயர் புழுவாய்த் துடித்தார். "என் பாவந்தான்; ஆனால், என் எண்ணம்--"
அவள் சீறினாள். அவளுக்கு ஆவேசம் வந்துவிட்டது. "உங்கள் எண்ணத்தைப்பத்தி என்னிடம் பேசாதேயுங்கள். குலைவாழையை வெட்டிச் சாய்ச்சாவது நாலாந்தரம் பண்ணிக்கணும்னு தோணித்தே, அதுதான் உங்கள் எண்ணம். ஏதோ உங்களிடம் நாலு காசு இருக்கு. என் வீட்டுலே சோத்துக்குக்கூட நாதியில்லே; அதனாலே என்னை விலைக்கு வாங்கிப்பிட்டோமுங்கற எண்ணந்தானே?”
"இந்தக் குடும்பம் விளங்க ஒரு குழந்தை--"
அம்மாள் ‘கடகட’வெனச் சிரித்தாள். "குழந்தையைக் கண்டுட்டேளா? கனாவிலேயும், குளத்தங்கரையிலும் தவிர!"
பதிலையும் தனக்குள்ளே அடக்கி அக்கேள்வி, பழுக்க நெருப்பில் காய்ச்சிய பிறகு, அடிவயிற்றுச் சதையில் மாட்டிக் குடலைக் கிழிக்கும் கொக்கி மாதிரி இருந்தது. நிறைந்த ஆச்சரியத்தில் கத்தி அழக்கூட மறந்துவிட்டாள் குழந்தை!
திடீரென்று அங்கே தேங்கிய சப்த ஒய்ச்சலைக் கண்டதும் அம்மாளுக்கே பயமாய்விட்டது. அவசர அவசரமாய்ப் பாலைக் கொஞ்சங் கொஞ்சமாய் ஊட்டுகையில் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்தது.
திடீரெனக் குழந்தையின் முகத்தின்மேல் இரண்டு நெருப்புத் துளிகள் விழுந்தன. அம்மாளின் கண்ணிர் கனலாய்க் கொதித்தது. அதன் வெம்மை அம்பாளின் உள் இறங்குகையில், ‘இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத்தினால், அல்ல; வெதும்பிப் போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள்’ என்று அவள் உள்ளத்துக்குச் சொல்வது போல் இருந்தது.
குழந்தைக்குப் பசி தீர்ந்துவிட்டது. அம்மாளின் தாலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அம்மாவுள் கல்லாய் உறைந்து போயிருந்த ஏதேதோ, இப்பொழுது நெய்ப் பாறை உடைவதுபோல் கிளர்ந்து உருகும் இன்பம் பயங்கரமாக இருந்தது. குழந்தையை இறுக அனைத்துக்கொண்டு தன் கணவரிடம் சென்றாள்.
"பார்த்தேளா குழந்தையை, எவ்வளவு கனம்! என்ன பண்றேள், பஞ்சாங்கத்தைப் புரட்டிண்டு?”
"நேற்று என்ன நக்ஷத்திரம், பார்க்கிறேன். ஜாதகம் கணிக்கலாமா என்று--"
"சரியாய்ப் போச்சு! இது என்னிக்குப் பிறந்தது, எந்த வேளை, என்ன ஜாதின்னு கண்டோம்? இதைப்பத்தி நமக்கென்ன தெரியும்?"
ஐயர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் மனைவியின் உள்வாக்கு அவளையும் அறியாமல், ஆதிபரையின் நிர்க்குண நிராமயத் தன்மையை வெளியிட்டது. வந்த குழந்தையை அங்கீகரிப்பதைத் தவிர அதன் ஆதியைச் சோதிக்க முயல்வதில் என்ன பலன்?
"சரி, இவளுக்கு என்ன பேரை வைப்போம்?"
அம்மாள் கொஞ்சலாய், "பிடாரி மாதிரி கத்தறது. ‘பிடாரி’ன்னு வையுங்களேன். நான் ஊர்ப் பிடாரி; இவள் ஒண்ட வந்த பிடாரி!"
ஐயர், பிள்ளையார் சுழியிட்டு "ஜனனி ஜன்ம செளக்கியானாம் என ஆரம்பித்துவிட்டிருந்த கைக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் முகம் சட்டென மலர்ந்தது.
குழந்தையைப் பார்த்து மெதுவாய்க் கூப்பிட்டார்:
"ஜனனி, ஜனனீ."
* * *
"பாருங்கோ- பாருங்கோன்னா! கொழந்தை விளக்கைப் பாக்கறா!"
பிறந்தபின் சக்தி முதல் முதலாய் இப்போதுதான் ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை விளக்குச் சுடரில் பார்க்கிறாள். தானும் அதுவாய் இதுவரை இழைந்திருந்துவிட்டு இப்பொழுது அதனின்று வெளிப்பட்ட தனிப் பொறியாய், அதனின்று விலகி, அதையே தனியாயும் பார்க்கையில், அதன் தன்மை ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. ஆனால் அவள் இப்பொழுது பொறியாயினும், அவன் தூணாய்த்தான் விளக்குச் சுடரில் நிற்கிறான்.
"ஜனனீ"
"இதைப் பாக்கமாட்டேங்கறேளே! குழந்தை சிரிக்கிறா!" அம்மாள் தன் ஆனந்தத்தில் குழந்தை மாதிரி கைகொட்டிச் சிரிக்கிறாள்.
"ஜனனீ! விளையாட்டு போதுமா? திரும்பி வருகிறாயா?"
`"இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லையே, அதற்குள்ளாகவா?"
"ஜனனி, இந்த விளையாட்டு போகப் போகப் புரியாது!"
"புரிந்துகொள்ள வேண்டுமென்றுதானே வந்திருக்கிறேன்?" -
"சரி, உன் இஷ்டம்! ஆனால் ஆரம்பிக்கை யிலேயே உன் விளையாட்டு உன் இஷ்டம் போல் ஆரம்பித்ததோ?"
"ஏன்?"
"நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத்ததோ? உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ எப்படியும் உன் சக்தியினால் அல்ல!"
"என்னைப் பார்; கண்ணாட்டி பாருடி! விளக்கையே பார்த்துண்டிருக்கையே-- ஜனனி பார்க்கிறாள்.
"ஜனனீ!, ஜனனீ! விளையாட்டில் இன்னமும் சிக்கிக்கொள்கிறாய். அந்தப் பார்வையை அவளிடம் ஏன் காட்டினாய்? பார்க்கச் சொன்னால் நேர்ப் பார்வையில்லாது கடைக்கண் நோக்கு ஏன்?--"
அம்மாளுக்கு திடீரென வயிற்றைக் குமட்டியது. "குடுகுடு"வென்று முற்றத்திற்கு ஓடினாள். தொண்டையைத் திரும்பத் திரும்ப மறுக்கிற்று. வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஐயர் அறையிலிருந்து வெளி வந்தார்.
"என்ன உடம்பு?"
அம்மாளின் சிவப்பு முகத்தில் ரத்தம் குழம்பியது. கண்களில் ஜலம் ததும்பியது. வாந்தி எடுத்த பிரயாசையா, அல்லது வெட்கமா? அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள்.
"ஓ!"- ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர் மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பயங்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார்.
"ஈசுவரி! எல்லாம் உன் கிருபா கடாக்ஷம்!"
விளக்கில் சுடர் மறுபடி பொறிவிட்டது.
"சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறாயாக்கும்! செய், செய்."
சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
# # #
ஐயர் வீடு ரமித்தது, அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன்? திரும்பி வராது எனக் கைவிட்ட பொருள்கள், பன்மடங்கு பெருகிக்கொண்டு வந்து சேர்ந்தன. எதிர்பாராத இடங்களிலிருந்து சொத்துக்கள் வந்து செறிந்தன. ஆரம்பத்தில் நஷ்டமென்று கண்டு நம்பிக்கை இழந்த காரியங்களெல்லாம், கடைசியில் பெருத்த லாபத்தைச் சேர்க்கும் வழிகளாய் மாறின.
"இந்தப் பொண்ணு எந்தப் பொண்னோ! ஆனால் நல்ல ராசி இருக்குடி! அது இருக்கிற இடத்தில் பட்ட மரங்கூடப் பச்சையாத் தழைச்சுப் பூத்துக் குலுங்கறதுடி!"
• * *
குழந்தை விளையாடுகிறாள்--
"ஜனனீ!"
ஐயர் மடி உடுத்துக்கொண்டு ஆசாரமாய்ப் பூஜையில் அமர்ந்திருக்கிறார். அவர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எண்ணும் தெய்வம் அவர் மடிமேலேயே தவழ்வது அவருக்குத் தெரியவில்லை.
"அடியே, குழந்தையை எடுடீ. இங்கே சாமானைக் கொட்டறாள்--"
"இப்போ எந்தக் குழந்தையை வச்சுக்கச் சொல்றேள்? உங்கள் குழந்தையையா? என் குழந்தையையா?"
அம்மாளுக்கும் ஜனனிக்கும் எப்படியும் ஒட்டவில்லை. அவளுக்குள் ஏதோ ஒன்று அக்குழந்தைக்கு அஞ்சியது. அவளுக்கே என்னவென்று தெரியவில்லை. கண்டெடுத்த குழந்தை என்பதனாலோ என்னவோ, நினைவுக்குக்கூடப் பிடிபடாத ஒரு அவநம்பிக்கை அதன்மேல் வளர்ந்துகொண்டே வந்தது. ஆனால் அவளுள் இன்னொரு குரல் இந்த அவநம்பிக்கைக்கு எதிராக ஒலமிட்டது. ஆனால் அந்த அவநம்பிக்கையே அந்தக் குரலை அமுக்கித் திணற அடித்தது. பிறகு அவளுக்கே ஒரு குழந்தை பிறந்தது. அப்போது உள்குரலை. அந்த அவநம்பிக்கை ஒரே மூச்சாய்க் கொன்று விட்டது.
ஆனால் அம்மாளின் மனப்போராட்டத்தை ஜனனி எப்படி அறிவாள்? அவள் தன் மகனுக்கு எடுத்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஜனனிக்கும் பால் பசி எடுக்கும். மடிமீது ஏறுவாள். அம்மாளுக்கு ஏனோ மனம் வரவில்லை. முதல் கொஞ்ச நாட்களுக்கு வேறு பராக்குக் காட்டியோ, அல்லது பசும்பாலையூட்டியோ ஏமாற்றி வந்தாள். ஆனால் ஜனனி, தன்னிடம் பால் குடிப்பதற்காகத் திரும்பத் திரும்ப மடிமீது ஏறும்விடாமுயற்சியையும் தீர்மானத்தையும் கண்டதும், உள்ளுற இன்னதென்று சொல்ல இயலாத ஒரு பயமும், அப்பயத்தின் மூலமாகவே ஏற்படும் கோபமும் எழுந்தன. போனால் போகிறது. ஒரு தரந்தான் இடங் கொடுப்போமே என்று ஏன் தோன்றவில்லை என அவளுக்கே தெரியாது. அவளை ஆட்டிய பயம் தலைதுாக்கி நிற்கையில், அவள் என்ன செய்ய முடியும்?
ஜனனி லேசில் அவளை விடுவதாக இல்லை. ஒருநாள் மாலை அம்மாள், மகனுக்கு எடுத்துவிட்டுக் கொண் டிருக்கையில், தைரியமாய் மடிமீது ஏறி, மார்புத் துணியைக் கலைத்தாள். அம்மாளுக்கு ஆத்திரம் மீறிவிட்டது. அவளை இழுத்து எதிரே உட்கார வைத்து, ‘தான்தோணிப் படையே’ என்று வைது, முதுகில் இரண்டு அறையும் வாங்கிவிட்டாள்.
குழந்தை ஓவென்று அலறினாள். ஐயர் அறையினின்று ஓடிவந்து அவளை வாரியணைத்துக் கொண்டார். அம்மாள் ஆங்காரத்துடன், மார்போடு ஒட்டிக்கொண்டிருந்த தன் மகனையும் பிடுங்கி அவனையும் அறைந்துவிட்டு, சமையலறையில் போய் எதையோ உடைத்தாள். அவள் காரியம் அவளைச் சுடும் வேதனை அவளுக்குத் தாங்க முடியவில்லை. ஐயர் வாய் அடைத்துப்போய்த் தவித்தார். கண்களில் ஜலம் ததும்பிற்று.
ஜனனி இப்பொழுது விளக்கெதிரில் படுத்துக்கொண்டிருக்கிறாள். அழுது, அழுத களைப்பில் தூங்கி, விழிப்பு வந்ததும் மறுபடியும் அழுது அழுது முகமே வீங்கிவிட்டது. இந்தப் புது அநுபவம் அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது.
விளக்குச் சுடர் பொறி விடுகிறது.
"ஜனனி, உனக்குச் சொல்ல வேண்டியதும் உண்டா? நீ எல்லோருக்கும் பாலைக் கொடுப்பவளே யன்றி, குடிப்பவள் அல்ல! உலகில், தான் ஈன்ற கன்றுக்குப் பாலைக் கொடாது தன் பாலைத் தானே குடிக்க முயலும் பசுவுக்குக் கழுத்தில் கடயம் போட்டு விடுவார்கள். உனக்கு இப்பொழுது நேர்ந்திருப்பதும் அதுவே தவிர, வேறல்ல. நீ அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அதனால் அவள் பாலைக் குடித்து விடலாம் என்று நினைத்தாய் அல்லவா? இதுதான் ஜன்மத்தின் முதல் பாடம். எண்ணியது எண்ணியபடி நடக்குமென்று எண்ணாதே!"
# # #
வளர்ப்புத் தாய்க்கும் ஜனனிக்கும் இடையிலுள்ள பகை பயங்கரமாய் வளர்ந்தது. பகை அம்மாளுடையதேயாகையால், அதன் முழு வேகத்தையும், பாரத்தையும் அவளே தாங்கும் படியாயிற்று. இடாத வேலைகளை இட்டு, சொல்லாத சொற்களைச் சொல்லி, படாதபாடு எல்லாம் படுத்தினாள்.
"வயசுபாட்டுக்கு ஆறது. வேளா வேளைக்கு வந்து வயிறு புடைக்கத் திங்கறதோடு சரி. மத்தப்படி கண்ணிலே படறதில்லே. எல்லைக் காளியா ஊரெல்லாம் சுத்தித் திரிஞ்சுப்பிட்டு அவர் வருகிற வேளைக்கு, இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு விளக்கெதிரே கண்ணை மூடிண்டு உட்கார்ந்திருக்கையேடி! எந்த ஊரைப் பொசுக்கலாம்னு யோசனை பண்ணிண்டிருக்கே?
"இல்லேம்மா."
"என்னை "அம்மாங்காதேடி! உன்னை ஆசையா அடித் துணியோடு, எந்தக் குளத்தங்கரைப் படிக்கட்டிலேருந்து கொண்டு வந்தாரோ, அங்கே போய் உன் அம்மாவைத் தேடு. அம்மாவாம், அம்மா! என்ன சொந்தண்டியம்மா!"
ஆகவே, ஜனனி, இன்னதென்று விளங்காத மனக்கனத்துடனும் வீறாப்புடனும் குளத்தண்டை போய், தன்னையும் அறியாமல், தன்னைத்தானே தேடுகிறாள். ஆனால் அங்கு என்ன இருக்கிறது? ஆழந்தான் இருக்கிறது.
சட்டையும் பாவாடையுமாய் ஜனனி, கையோடு கை கோத்துக்கொண்டு, குளத்தங்கரைப் படிக்கட்டில் திகைத்து நிற்கிறாள்.
திடீரென அவளுள் தாங்கமுடியாத ஆங்காரம் மூண்டது. வீட்டுக்கு விரைந்தாள். அம்மாள் சமையலறையில் வேலையாயிருந்தாளோ என்னவோ ஐயரைக் காணவில்லை. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, ஏதாவது ஒன்றைச் சுற்றுமுற்றும் தேடினாள். கூடத்தில், குழந்தை கைவிரித்தபடி குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனிடம் பல்லைக் கடித்துக்கொண்டு, கண்களில் பொறி பறக்க, இருகைகளையும் நீட்டிக்கொண்டு சபித்தாள்.
"உன்னை வைசூரி வாரிண்டு போக!"
கூட விளையாடும் குட்டிகள், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதைக் கண்டதில்லையா? குழந்தைக்குத் தூக்கத்தில் உடம்பு தூக்கிவாரிப் போட்டது. கையைக் காலை உதைத்துக் கொண்டு அலற ஆரம்பித்துவிட்டான்.
அடிவயிற்றிலிருந்து வந்த அந்த உள்ளக் கொதிப்பு வீண் போகுமா? பையனுக்கு மூன்று நாள் ஜூரம் மழுவாய்க் காய்ந்தது. பிறகு ஒன்று, இரண்டு, பத்து என்று உடம்பெல்லாம் பெரிய முத்துக்கள் வாரியிறைத்து விட்டன. ஊசி குத்த இடமில்லை. குழந்தை தன் நினைவற்று, போட்டது போட்டபடியே கிடக்கிறான். ஸன்னமாய் இழையும் அனல் மூச்சுத்தான் இன்னமும் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை உணர்த்துகிறது.
தாய் மூலையில் புரண்டு புரண்டு அழுகிறாள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, அவளைத் தேற்ற முயலும் உற்றார் உறவினர்களுக்கிடையில் அவளே தனிக்காட்சி ஆகிவிட்டாள். ஐயர் ரேழியில் முன்னும் பின்னுமாய் உலாவிக் கொண்டிருக்கிறார். முன்பைவிட உடல் மெலிந்து, கூன் விழுந்திருக்கிறது. ‘அம்பாள் கொடுத்தாள்; அம்பாள் எடுத்துக் கொள்கிறாள்’ என்று ஞானம் சமாதானம் சொன்னாலும், பாசம் பசி தீர்த்து விடுமா?
ஜனனி படுக்கையண்டை, சுட்டுவிரலை வாயில் சப்பிக் கொண்டு, அச்சத்துடன் நிற்கிறாள். அவள் கோபம் அப்போதே பறந்துவிட்டதால், அதன் விளைவாகிய சாபத்தை மாத்திரம் தனியாய்ப் பார்க்கையில், இப்போது பயமாக இருந்தது. அம்பிக்கு இப்படி நேரும் என்று அவள் என்ன கண்டாள்? அம்பிமேல் அவளுக்கு உயிர் இல்லையா? தாயோடு இல்லாத சமயத்தில் தன்னோடுதானே இருப்பான்? இப்படி அவன் கிடப்பதைச் சகிக்க முடிகிறதா? யாரிடம் போய்த் தன் மனக் கஷ்டத்தைச் சொல்லிக்கொள்ள முடியும்? சுவாமியிடந்தான். அப்படித்தானே தாத்தா அவளிடம் சொல்லியிருக்கிறார்--ராத்திரி துரங்குவதற்கு முன்னால், கதை கதையாய், பாட்டாய், தோத்திரமாய்--
பூஜையறைக்குப் போய், விளக்கை ஏற்றி வைத்து, துக்கம் அடைக்கும் தொண்டையுடன், ஆண்பிள்ளை போல் அவள் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிக்கிறாள்.
"சுவாமி!-"
"ஜனனீ! என்ன காரியம் செய்தாய்! குழந்தைக்குப் பிராப்தம் இல்லாதவளுக்குக் குழந்தையைக் கொடுத்தாய். பிறகு அதை விளங்கவொட்டாமல், நீயே பிடுங்கிக் கொள்கிறாய்! நீ சக்தி என்றால், உன் மனம் கூத்து என்ற எண்ணமா? இந்தக் குழந்தையை யார் பெற்றதென்று நினைக்கிறாய்? நீ பெற்ற குழந்தைதான். நீயே விழுங்கப் பார்த்தால் அது உள்ளும் போகாமல் வெளியும் வராமல் தொண்டையில் மாட்டிக் கொண்டதும் எடுத்துவிட என்னைக் கூப்பிடுகிறாயா?"
"அம்மா!"
விளக்கு சிரித்தது.
"ஜனனி, அம்மா என்று யாரைக் கூப்பிடுகிறாய்?
ஜனனி பூஜையறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்கள் ஒளி வீசின. தன்னுள் தான் மூழ்கி, தன்னை மறந்து கைகளையும் கால்களையும் வீசியாடிக்கொண்டு, மகமாயிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டாள்:
- "தாயி மகமாயி தாயி மகமாயி
நெற்றிதனில் உள்ள முத்தை நேத்திரத்தில் இறக்கம்மா
நேரு மகமாயி நேரு மகமாயி
நேத்திரத்தில் உள்ள முத்தைத் தாடைதனில் இறக்கம்மா
தாயி மகமாயி தாயி மகமாயி
தாடைதனில் உள்ள முத்தைக் கழுத்துதனில் இறக்கம்மா
காளி மகமாயி காளி மகமாயி
கழுத்துதனில் உள்ள முத்தை மார்புதனில் இறக்கம்மா
மாரி மகமாயி மாரி மகமாயி
மார்புதனில் உள்ள முத்தை வயிறுதனில் இறக்கம்மா
வாரி மகமாயி வாரி மகமாயி
வயிறுதனில் உள்ள முத்தைத் தொடைதனிலே இறக்கம்மா
தாயி மகமாயி தாயி மகமாயி
தொடைதனிலேயுள்ள முத்தை முட்டிதனில் இறக்கம்மா
மூது மகமாயி மூது மகமாயி
முட்டிதனில் உள்ள முத்தைக் காலதனில் இறக்கம்மா
காளி மகமாயி காளி மகமாயி
காலதனில் உள்ள முத்தைப் பாதந்தனில் இறக்கம்மா
பாரி மகமாயி பாரி மகமாயி
பாதந்தனில் உள்ள முத்தை நிலத்தினிலே இறக்கம்மா
நித்ய மகமாயி நித்ய மகமாயி"
ஏதோ பிடியினின்று விடுபட்டதுபோல், குழந்தைக்கு உடல் உதறியது. எல்லோரும் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு, ‘குய்யோ முறையோ’ என்று அடித்துக்கொண்டு ஓடிவந்து பார்த்தார்கள். அவன் துங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புது நிம்மதி. தேகம் வியர்த்து ஜூரம் விட்டிருந்தது.
ஐயர் அப்படியே அதிசயித்து நின்றார்.
ஒரு வாரம் கழித்துக் குழந்தைக்கு ஜலம் விட்டார்கள். குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஜனனி விக்கி விக்கி அழுதாள். ஏனென்று அவளுக்கே புரியவில்லை. தாய்க்கும் விஷம் கக்காமலிருக்க முடியவில்லை.
"இதென்னடியம்மா கூத்து கொழந்தை சாகல்லையேன்று அழறையா?" ஜனனிக்குப் பூஜையறையில் யாரோ சிரித்தாற் போலிருந்தது. ஒடிப்போய்ப் பார்த்தாள். ஆனால் அங்கே
யாரையும் காணவில்லை.
# # #
ஜனனி மதமதவென வளர்ந்தாள். சீக்கிரமே பக்குவம் அடைந்துவிட்டாள். கறுப்புத்தான். கட்டு உடல், கட்டு மயிர். உறுப்புக்களில் நல்ல முறுக்கு. அதே மாதிரி கோபமும் முறுக்குத்தான். ஒருவருக்கும் அடங்க மாட்டாள். சட்டுச் சட்டென்று கோபம் வரும்; வந்த சுருக்கில் தணிந்துவிடும்.
"அடியே இப்படி அடங்காப்பிடாரியாய் இருக்கையே! உன் புக்ககத்துக்குப் போனால், உன் மாமியார் நீ பண்ணற அட்டகாசத்துக்கு உன்னை இடிக்கறது போறாதுன்னு உன்னை யாருடி வளர்த்தான்னு என் பேரையும் சந்தியில் இழுப்பாடி!"
"உன்னை எந்த மாமியார் இப்போ இடிச்சுண்டிருக்கா அம்மா?"
"உன் நாக்கைச் சுட்டெரிக்க! என் மாதிரி நாலாவதாய் வாழ்க்கைப்பட்டால், மாமியார் மாத்திரமில்லே, புருஷன் கூட ரொம்ப நாள் தக்கமாட்டாண்டி!"
அம்மாள் சொன்னதற்குத் தகுந்தாற்போல், கிழவருக்கு உடம்பு வரவர ஒடுங்க ஆரம்பித்துவிட்டது. ஜனனியை எங்கேயாவது கையைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்னும் கவலை ஓங்க ஆரம்பித்துவிட்டது.
அம்மாளுக்கு ஜனனி வந்த ராசி எல்லாம் மறந்து விட்டது. "வாசல்லே போற சனியனை விலைக்கு வாங்கினாப்போலே என்கிற பெரியவாள் வாக்கு சரியாப் போச்சு. நன்னாக் கட்டிண்டு அநுபவிங்கோ"
"அடியே, இன்னும் நாலு நாள் கழித்துப் போகும் என் உயிர் உன்னால் இப்பவே போயிடும்போலே இருக்கிறதே!"
"நீங்க நன்னா இருங்களேன். என் ஆயுசிலேயும் பாதி கொடுக்கிறேன். நாலுபேர் நடுவுலே தாலிகட்டி, சாந்தி சீமந்தம் எல்லாம் பண்ணிப் பெத்து வளர்த்த குழந்தையைப் பண்ணிக்கிறத்துக்கே, ஆயிரம் ஜோஸ்யம் பார்த்து, அழகு பார்த்து, அந்தம் பார்த்து தெரிஞ்சு விசாரிச்சு, தெரியாமெ விசாரிச்சுப் பண்ணிண்டுட்டு, அப்புறங்கூட அது சரியாயில்லே, இது சரியாயில்லேன்னு குத்தம் படிக்கற நாளிலே, எங்கேயோ வழியிலே கண்டெடுத்த பொண்ணை எவன் தலையிலேயாவது லேசிலே கட்டிவிட முடியுமா, என்ன?"
அவள் வாக்கு அசரீரிதான். ஐயர் தம் வளர்ப்புப் பெண் கல்யாணத்திற்குச் செய்யும் முயற்சிகள் எல்லாம், உருவாவது போல் ஆகி, திரளும் சமயத்தில், பொட்டென உடைகையில், அவருக்கு உள்ளுறத் திகிலே உண்டாயிற்று. ஒரு பெண் பிறந்தால், அதற்கு ஒர் ஆண் படைத்துத்தான் இருக்கவேண்டும் என்னும் கடைசி நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற திடந்தான் அவரை உந்திக்கொண்டு போயிற்று. ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு எங்கெங்கோ வெளியூரெல்லாம் சுற்றி வந்தார்.
அப்புறம் ஒருநாள், "எல்லாம் வேளை வந்தால்தானே வரும்! நாம் மாத்திரம் அவசரப்பட்டால் முடியுமா? பார். குழந்தைக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்துவிட்டேன்!" என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே ஐயர் வீட்டுள் நுழைந்தார்.
பையன் எங்கோ துரதேசத்தில் ராணுவத்தில் வேலையிலிருந்தான்.
கல்யாணத்துக்கு முதல் நாள் மாலைதான் பையன் வீட்டார் வந்து இறங்கினார்கள். பிள்ளையைப் பார்த்தவர்கள் பிரமித்தே போய்விட்டார்கள். இன்னமும் சிலர் அசூயையால் வெடித்தே போனார்கள். "ஜனனி காத்திருந்தாலும் காத்திருந்தாள்; அதிருஷ்டச் சீட்டு அடித்துவிட்டாள். பையன் சிவப்பிலேயும் சிவப்பு, செந்தாழைச் சிவப்பா ராஜா மாதிரி இருக்காண்டி!"
"மணையிலே உட்கார்ந்தா, ரெண்டுபேருக்கும் ஜோடி கூட ஒட்டாதேடி!"
"என்னடி பைத்தியம் மாதிரி பேசறே? பணம் ஒட்ட வைக்காத பண்டங்கூட உண்டா? இரண்டாயிரத்துக்கு நாலாயிரமாத் தளர்த்தினால், வஜ்ரம் மாதிரி ஒட்டிக்கிறது!"
ஐயர் நாலுநாள் கல்யாணம் பண்ணி, பணத்தை வாரி இறைத்தார். சமையலுக்கோ சடங்குக்கோ உடையும் ஒவ்வொரு தேங்காயுடன் அம்மாளின் வசை வார்த்தைகளும் வெடித்தன. "இந்த பிராமணன் எந்தக்குடி பாழாப் போறதுன்னு நெனைச்சுண்டிருக்கான்? பிள்ளையில்லாச் சொத்தா இது?"
அவள் வார்த்தையைச் சட்டை செய்வார் யார்?
நான்கு நாள் கல்யாணத்திற்குப் பிறகு, ஐந்தாம் நாள் சாந்தி பண்ணி, பெண்ணைப் புக்ககத்துக்கு அனுப்புவதாக இருந்தது. ஆனால் மூன்றாம் நாள் இரவு மாப்பிள்ளைப் பையனுக்கு அவன் அதிகாரிகளிடமிருந்து, உடனே புறப்பட்டு வரும்படி ஒரு தந்தி வந்தது. பாலிகை கொட்டக்கூட நேரமில்லாமல், பையன் மறு வண்டிக்குப் புறப்பட்டுப் போய் விட்டான்.
அப்பொழுது தடைப்பட்ட சாந்தி, அப்படியும் இப்படியும் ஒத்திப் போய்க்கொண்டே வந்தது. மணமாகிப் போன பையன் மறுபடியும் வேறு எந்த விசேஷத்திற்குங்கூட வரமுடியவில்லை. அவனை ஒர் இடமும் ஸ்திரமென்றில்லாமல், அதிகாரிகள் மாற்றி மாற்றி அம்மானை ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம்.
ஜனனி இப்படித்தான் புக்ககம் போகாதபடி நேர்ந்த தடங்கலைப் பாராட்டினாளோ, இல்லையோ என அவள் வெளித்தோற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை. முன்னைவிடப் பன்மடங்கு துடிப்பு மிடுக்குடன்தான் பொலிந்தாள்.
அம்மாளோ, தன்னுடன் வம்படிக்க வருவோரிடம், தன் கன்னத்தைத் தானே இழைத்துக்கொண்டு முறையிட்டுக் கொண்டாள்.
"நல்ல நாளிலேயே சொல்ல வேண்டாம், அவர் செல்லம்! ஆனால் அப்பவாவது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கட்டியாண்டு வந்தேன். ஐயேடி! அந்தாத்துப் பொண்ணா, அங்கே நிக்கறதடி, இங்கே நிக்கறதடி, அவாளோடெ பேசித்து, இவாளோடெ பேசித்துன்னு, நாலுபேர் வாயிலே புகுந்து புறப்படாமெ, ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கண்டிச்சு வந்தேன். ஆனால் கல்யாணம் ஆணப்புறம் இவளுக்கு வந்திருக்கிற இறுமாப்புக்குக் கேக்கணுமா? "புருஷாளுக்கு அரைக் காசுன்னாலும் உத்தியோகம், பொம்மனாட்டிக்கு அம்பது வயசானாலும் புருஷன்"னு சும்மாவா சொன்னா? மஞ்சக் கயிறுன்னு ஒண்ணு கழுத்திலே ஏறிட்டாப் போறும். புருஷன் மேலே பழியைப் போட்டுட்டு என்ன அக்ரமம் வேணுமானாலும் அவாள் பண்ணலாமே. நீங்களும் நானும் வாழ்க்கைப்பட்ட நாளா இது, மாமி!"
அம்மாள் மற்றவரிடம் விதவிதமாய்ச் சிங்காரச் சொல் வைத்து முறையிடுவதைக் கேட்டுக்கொண்டு, ஐயர் ஒவ்வொரு நாள் வந்துவிடுவார். "ஏண்டி கரிக்கிறே குழந்தையை? உன் கண் சுட்டெரிப்புக்காவது அவள் அகமுடையான் அவளைக் கூட்டிக்கொண்டு போக மாட்டானா?"
அவ்வளவுதான். இடுப்புக் குடத்தைப் பொத்தென ஜலம் தளும்பித் தெளிக்கக் கீழே வைத்துவிட்டு, முன்றானையை வரிந்து கட்டிக்கொண்டு, காற்றைக் கையால் துழாவிக் கொண்டு, அம்மாள் சண்டைக்கு வந்துவிடுவாள்.
"நன்னாச் சொல்லுங்கோ ஜனனி கவலையை ஜனனி இதுவரை பட்டதில்லை. அவளைப் பெத்தவா கவலையை நீங்க வாங்கிண்டு, ஆத்துக்குக் கொண்டு வந்துட்டேள். வளத்த கவலையை நான் பட்டாச்சு. கல்யாணமானாக் கஷ்டம் விடியுமான்னா, அவள் புகுந்த கவலையையும் பட்டுண்டிருக்கோம் இன்னும்- போறுமோன்னோ- திருப்தியாச்சா?"
வார்த்தைகளால் குத்தி வாங்குவதில், அம்மாள் அலாதி வரப்பிரசாதி, ஐயர் அப்படியே தலை கவிழ்வார்.
# # #
ஜனனி ஒருநாள் பகலில் குளத்தில் குளித்துக்கொண் டிருந்தாள். கிணற்றடியில் குளிப்பதைவிட, குளத்தில் துளையத் தான் அவளுக்கு இஷ்டம். அம்மாளுக்கும் அவளுக்கும் இதைப் பற்றி வேண்டிய தகராறு உண்டு. அம்மாள்-- ஒன்று சொல்ல வேண்டும்--படி தாண்டாள் வம்பு எல்லாம் அவளைத் தேடிக் கொண்டு வருமேயொழிய, அவளாக வம்பைத் தேடிக் கொண்டு வெளிக் கிளம்பியதில்லை.
"மேட்டிமைக்காரி, ராங்கி" என்று பொறாதவர் குற்றம் சொன்னாலும், அம்மாளை நேரில் கண்டால் எல்லோருக்கும் பயந்தான். அத்தனைக்கத்தனை ஜனனியின் கலகலப்பு அவர்களுக்கு, (நல்ல எண்ணமோ கெட்ட எண்ணமோ) குதுகலமாய்த்தான் இருந்தது.
ஜனனி ஒருநாள் பகலில் குளித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று தன்னை யாரோ ஊன்றிக் கவனிப்பது போன்ற உணர்ச்சி எழுவதை உணர்ந்தாள். சுற்றுமுற்றும் நோக்கினாள். எதிர்க்கரையில் ஒருவன் தன்னையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் முகத்தைப் பார்க்கவில்லை. தன்னிடம் என்ன என்று பார்த்துக் கொண்டாள். வலது விலாப்புறத்தில், தோள் குழிவுக்கு அடியில், ரவிக்கை இரு பாதிகளும் ஒட்டிய இடத்தில், உடல் வளர்ச்சியையே தாங்கமுடியாமல், தையல் தாராளமாய் விட்டிருந்தது. வெயில் படாத அவ்விடத்துச் சதை தனி வெண்மையுடன் பிரகாசித்தது.
ஜனனி மனத்தில் தனி பயங்கரம் திடீரெனக் கண்டது. அப்படியே புடவையை வாரிச் சுருட்டிக்கொண்டு வீட்டுக்கு ஒட்டம் பிடித்தாள். அவள் உடலெல்லாம் வெடவெடத்தது.
அன்று முழுவதும் மனம் சரியாயில்லை. ஆயினும் தான் படுவது இன்னதெனத் தெரியவில்லை. அதனாலேயே வேதனை அதிகரித்தது. முதல் முதலாய் ஜனனி தனக்குத் தானே புரியாத சிந்தனையில் ஆழ்ந்தாள். இரவு படுத்தும் வெகுநேரம் தூக்கம் வரவில்லை.
-- நள்ளிரவில், ஜனனி திடுக்கென விழித்துக்கொண்டாள். உடலில் மறுபடியும் பயங்கரமான புல்லரிப்பு. அவளையும் மீறியதோர் சக்தி வசப்பட்டவளாய்க் கட்டிலினின்று எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள்.
முழு நிலவின்மேல் கருமேகங்கள் சரசரவெனப் போய்க் கொண்டிருந்தன.
தெருவில் வீட்டு வாசற்படியெதிரில் ஒர் உருவம் நின்றது. வெள்ளைத் துணி போர்த்து, நெட்டையாய், கைகளை மார்மேல் கட்டி நின்றுகொண்டிருந்தது. சத்தமும் நடமாட்டமும் நின்று நீண்டுபோன தெருவில், தனியாய், ஏதோ, எதனுடைய சின்னமோ மாதிரி. முகம் அவள் ஜன்னல் பக்கம் திரும்பி யிருந்தது. குளத்தில் கண்டவன்!
ஜன்னலிலிருந்து ஜனனி சட்டெனப் பின்வாங்கினாள். இடுப்புக்குக் கீழே கால்கள் விட்டு விழுந்து விடுவனபோல் ஆட்டங் கொடுத்தன. உடல் நடுங்கியது. பயந்தானா? முழுக்க முழுக்கப் பயந்தானா? புரியவில்லை. சமாளித்துக் கொண்டு, சுவரை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சுவருடன் ஒட்டிக்கொண்டாற்போல் மாடிப்படிகளில் மெதுவாய்க் கால் வைத்து இறங்கினாள். கண்ணெதிரில், இருள் திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக்கொண்டு நீந்தின. அவைகளில் உலகத்தின் ஆசாபங்கத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதே சமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் அடிப்படையான மிருகக் குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடுரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப்போல் தலை நீட்டுகையில் அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று.
இப்படி ஒன்றாய் இருந்துகொண்டே இரண்டாய் வெட்டப் பட்டுத் துடிக்கும் வலி பொறுக்கக் கூடியதாயில்லை.
சத்தம் போடாமல், பூஜையறையைத் திறந்தாள். தீப்பெட்டியைத் தட்டுத் தடுமாறித் தேடிப்பிடித்துக் குத்துவிளக்கை ஏற்றினாள். திரியினின்று குதித்தெழுந்த சுடரில், அவள் படும் சஞ்சலத்துக்கு ஆறுதலைத் தேடி நின்றாள்.
ஆனால் அவள் தேடிய தெளிவு மனத்தில் ஏற்படவில்லை. எல்லாம் தெரிந்த இறைவன் முன்போலிராது, ஒன்றுமே தெரியாதவன்போல்தான் இருந்தான். இதுவரை தன்னை மறந்துவிட்டு இப்பொழுதுதான் தேடி வந்தாள் என்ற கோபமா? இரவில் எல்லோருக்கும் உள்ள தூக்கம் தனக்கும் உண்டென. சுடரில் இல்லாமல் தூங்கப்போய் விட்டானா?
அழுத்தும் உணர்ச்சிகளின் புதுமையினாலும் வருத்தத்தினாலும் ஜனனி குழம்பி நின்றாள். அவளைத் தாக்கும் புதுமைக்குள்ளேயே உணர்ச்சிகளின் பழமை புகுந்துகொண்டு அவளைக் கேலி செய்தன.
"நீங்கள் யார்? என்னைவிட்டுப் போய் விடுங்களேன்!"
"நாங்கள் யார்? எங்கே போக வேண்டும்? எங்கிருந்தாவது வந்தோமா? எங்கேயாவது போக? உன்னுள்ளேயேதானே வளர்ந்தோம்? உன்னுள்ளேயேதானே கண்ணாமூச்சி விளை யாடுகிறோம்? கண்டுபிடியேன்! கண்டுபிடிக்கத்தானே வந்தாய்? உனக்கும் எங்களுக்கும் இன்றைப் போட்டியா, நேற்றையப் போட்டியா? கண்டுபிடியேன்! கண்டுபிடி! பிடி! பிடி ஹோ ஹோ ஹோ!" அவைகளின் சப்தமற்ற கொக்கரிப்பு தாங்கக் கூடியதா? ஜனனி தடாலென்று குப்புற விழுந்து விக்கி விக்கி அழுதாள். மார்பே வெடித்துவிடும் போலிருந்தது.
அன்று முதல் அவள் துடிப்பும் கலகலப்பும் வெளி நடமாட்டமும் அடங்கிப் போயின. அறையிலேயே மணிக் கணக்கில் சேர்ந்தாற்போல் மோவாய்க் கட்டையைக் கையில் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். பக்கத்தில் வந்து கூப்பிட்டாலும் காது கேட்பதில்லை. கேட்டு வாங்கி அடைத்துப் புடைத்துச் சாப்பிடும் ஜனனிக்கு இப்பொழுது கூப்பிட்டு உட்கார வைத்துக் கொட்டினாலுங்கூட இறங்க வில்லை.
திடீரென இளைக்க ஆரம்பித்தாள்.
"இதென்னடீம்மா கூத்து. திடீரென்று இவளுக்கு வந்திருக்கிற வினை ஊமை ஊரைக் கெடுத்ததாம்னு--!"
ஜனனியின் கண்கள் நிறைந்து கண்ணீர் கன்னம் புரண்டு ஒடும். ஆனால் துடைக்கக்கூட முயலுவதில்லை. உட்கார்ந்த நிலைகூட மாறுவதில்லை. அவளுள் ஏதோ தகர்ந்து விட்டது.
"அடிப்பாவி! குழந்தையை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்காதேடி ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள், புருஷனிடம் இன்னும் போகவில்லையே என்று இருக்காதா?"
# # #
ஜனனியின் புருஷனைப்பற்றி ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவிதமாய் வதந்தி உலவியது.
‘இருந்த இடத்தில்தான் இருக்கிறான்- சகவாச தோஷம்--கண்ட இடத்தில் கண்ட பேரோடு சுற்றுகிறான். குடி கூத்தி, புகை-- இல்லாத பழக்கங்கள் எல்லாம் வந்திருக்கின்றன.’ இருக்கிறது இல்லாதது எல்லாம் சேர்ந்து நாலுபேர் வாயில் மாறிமாறி வந்து காதில் விழுகையில் கிழவரின் கிலேசம் சொல்லத் தரமல்ல. ‘இதென்ன, தள்ளாத வயதில் உளையில் மாட்டிக்கொண்டோமே! எனத் தவிப்பார். இதே நிலையில் நான் காலமாய்விட்டால் ஜனனியின் கதி என்ன? நமக்கு வாய்த்தவளோ தாடகையா இருக்கிறாளே!’ என்று ஆண்டவ னிடம் முறையிட்டுக் கொள்ளலாமெனில் பூஜையறையில் அவருக்கு முன்னால் ஜனனி உட்கார்ந்திருப்பதைக் கண்டு, உள்ளே போகவும் அஞ்சி பின்னடைவார்.
மாலையில் சமையலறையிலிருந்து அம்மாள் இரைவாள். "வீட்டுக் காரியங்கள் போட்டது போட்டபடிக் கிடக்கு. பூஜையில் ஒக்காந்துண்டு சாமியை வேரோடு பிடுங்கினால் ஆயிடுத்தா? புருஷன் போட்டோவுக்குப் பூவைச் சூட்டி அந்தரங்க மனசோடு ரெண்டு நமஸ்காரம் பண்ணினாலாவது லாபமுண்டு!"
ஜனனிக்கு இது கேட்டதோ? உட்கார்ந்துகொண்டே இருந்தாள். கண்களில் ஜலம் பெருகியவண்ணம் இருந்தது.
எதிர் வீட்டுத் திண்ணையில் சில சமயங்கள் உபந்தியாசங்கள் நடக்கும்.
புராணிகர், "கல்லால மரத்தடியில் சடையில் சூடிய பிறைச் சந்திரனிலிருந்து அமிர்த தாரை விடாது வழிந்து கொண்டிருக்க, சிப்பிமுத்துப் போன்ற வெண்மையான உடலுடன், தன்னைத்தானே தியானம் பண்ணினவனாய், தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபத்தில் ஈசுவரனானவன்--" என்று சொல்வார்.
அல்லது --
"ஊசி முனையில் கட்டைவிரலை அழுத்தியவளாய், பர்வதராஜகுமாரி, பராசக்தி, அளகபாரம் ஜடாபாரமாக, ஆகாரத்தைத் தள்ளிவிட்டு, ஜலபானங்கூடப் பண்ணாது, காற்றையே புசிப்பவளாய், பிறகு அதையும் நிராகரித்தவளாய், சந்திரசூடனுடைய தியானத்தையே ஆகாரமாய்க் கொண்டவளாய், மஹா தபஸ்வியாய்."
# # #
திடீரென ஒருநாள் ஐயருக்குக் கடிதம் வந்தது. அதைப் பிரித்துவிட்டு ஐயர் ஆச்சரியத்தாலும், எதிர்பாராது நேரும் சந்தோஷத்தைத் தாங்காத உணர்ச்சியாலும், உடலும் குரலும் நடுங்க, கூடத்துக்கு ஓடிவந்தார்.
"அடியே, குழந்தை எங்கே? அம்பாள் கண்ணைத் திறந்துட்டாடி மாப்பிள்ளைப் பையன் அடுத்த வாரம் வராண்டி!--" அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. முகமாறுதலின்றி ஜனனி சமாசாரத்தை ஏற்றாள். அவள் மனத்தில் என்ன ஓடியது என யார் கண்டார்? அவளே கண்டாளோ?
அம்மாளுக்கு எரிச்சலாய் வந்தது. "இவள் சமாசாரம் என்னிக்குத்தான் புரிஞ்சுது? ஆம்படையான் வரான்னா, இடிச்ச புளி மாதிரியா இருக்கு இது மனுஷ ஜன்மந்தானா?"
ஐயர் சாந்தி முகூர்த்தத்தை முதல் முகூர்த்தம் மாதிரி தான் சப்பிரமமாய்க் கொண்டாடினார். அம்மாள்கூட இந்தத் தடவை அவ்வளவு எரிச்சலாய் இல்லை.
மாப்பிள்ளைப் பையன், மணப்பாயில் மணமகள் அருகில் உட்கார்ந்திருக்கையில் இன்னமும் அதிகமான சோபையோடு திகழ்ந்தான். முன் மண்டையில் மயிர் முன்பார்த்ததைவிட அதிகமாய்க் கொட்டியிருந்த போதிலும், லேசாய்ப் படர்ந்து வரும் அந்த வழுக்கையும் அழகு வழுக்கையாய்த்தான் இருந்தது. அளவு மீறிய இன்ப நுகர்ச்சியின் வடுக்கள் முகத்தில் விழுந்திருந்தன. ஆனாலும் இன்னமும் அந்த உடலும், அவ்வுடலை அதன் சறுக்குப் பாதையில் விரட்டி ஒட்டிக் கொண்டிருக்கும் நெஞ்சுத் திடமும் இதைவிட அவன் அதிகம் தாங்குவான் என்பதை உணர்த்தின.
அடர்ந்த புருவங்கள் சவுக்குப் புதர்கள்போல் சிலிர்த்துக் கொண்டு விசிறியெழுந்து சந்திக்கும் இடத்தில் இட்டிருந்த சந்தனப் பொட்டு, அதனுள் குங்குமத் திலகம், அசலாய் நெற்றிக் கண்ணையே திறந்து வைத்தாற்போல் முகத்துக்கு ஒர் உக்கிரமான அழகைக் கொடுத்தன. கடைக்கண் பார்வையில் சிந்திய வெற்றி, அங்கே குழுமியிருந்த பெண்களைக் கொள்ளை கொண்டது.
ஜனனி மணவறையில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
வெளியில் நிறைந்த இருளினின்று உருவாகி உருவங்கள் எழுந்தன. ஒன்று, இரண்டு, நூறு, ஆயிரம்-- இத்தனை நாட்கள் உள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டிருந்த ஆத்திரத்தின் நிழல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு தனியுருக்கொண்டு அவள் கண்முன் விரித்தாடியது.
"ஜனனி, அடையாளம் தெரிகிறதா? அன்றைக்கு! எங்களை நீ மறக்க விட்டுவிடுவோமா? இன்னமும் நாங்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லையே? சே என்ன இவ்வளவு அசடாக இருக்கிறாய்? தொட்ட பிசுக்கு விட்ட பிசுக்கு, எட்டப் பிசுக்கு கிட்டப் பிசுக்கு, ஜன்மப் பிசுக்கு இதெல்லாம் நீ கேள்விப்பட்டதில்லையா? எங்களுக்குத் தலை கிடையாது. உயிருண்டு; நாங்கள் கபந்தங்கள். ஆடுவோம், பாடுவோம், சிரிப்போம், அழுவோம், அழிவோம், அழிய மாட்டோம்--"
ஜனனிக்கு நெற்றிப் பொட்டில் வியர்வை அரும்பியது.
"பயமாயிருக்கிறதா? பயப்படாதேம்மா! பயப்படாதே கண்ணு! நாங்கள் இத்தனை பேர்கள் இருக்கிறோமே, எதுக்கு பயம்?"
"ஜனனி"
தோளில் கைபட்டு, ஜனனி திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் கணவன் புன்னகை புரிந்தவண்ணம் நின்றுகொண்டிருந்தான்.
"என்ன பயந்துவிட்டாய்? என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா?"
ஜனனிக்கு மண்டை எரிந்தது. அவனை அவள் மெளனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜன்னலின் வெளியில் அவள் கண்ட பேயுருவங்கள், உள்ளே பறந்து வந்து சிரித்துக்கொண்டே அவள் உள்ளே புகுவதை உணர்ந்தாள். ஜலத்தைக் குடித்து உப்பும் நெட்டிபோல், தனக்குத்தான் பெரிதாகிக்கொண்டு வருவது போன்ற ஒரு பயங்கர உணர்ச்சி.
அவள் உருவம் பெரிதாக ஆக, அவன் உருவம் அவளுக்குச் சுருங்கிக்கொண்டே வந்தது. போகப் போக அவன் புழுப் போலாகி, அவன் சிரிப்பும், அங்க அசைவுகளும் புழுவின் நெளிவைப்போல், அவளுள் பெரும் சீற்றத்தையும் அருவருப்பையும் எழுப்பின. அவளுள் அடைந்த பல்லாயிரம் பேய்களும் ஒரே பேயாய்த் திரள ஆரம்பித்தன.
"என்ன அப்படிப் பார்க்கிறாய்! கோபமா? நியாயந்தான். உனக்கு உன் நியாயம், எனக்கு என் நியாயம். இப்பொழுது சரியாய்ப் போய்விட்டதோன்னோ? சிந்திப்போனதைச் சிந்திக்காதே. இன்னமும் நான் எவ்வளவோ போயிருக்கிறேன், வந்திருக்கிறேன். வா, வா. பெண்களுக்குக் கோபம் அழகாய்த் தான் இருக்கிறது. ஆனால் அந்தக் கோபம், புருஷர்களுடைய பொறுமைக்கு அடங்கியிருக்கும் வரைதான் அழகு மீறினால் பேய்தான்!"
அவள் உள் திரண்டுகொண்டு இருக்கும் உருவிற்கு அவள் கணவனின் வார்த்தைகளே உயிர்ப்பொறி வைத்ததும், ஜனனி உடல் குலுங்கியது.
அவள்மேல் அவன் கைகள் விழுந்தன. அவளை ஒரே வீச்சில் வாரி மார்போடு மார்பாய் இறுக அணைத்தன. அவனுடைய முரட்டுத்தனத்தில் அவள் மார்பில், தாலிப்பல் அழுந்தியது.
ஜனனி திணறினாள். அவளுள் திரண்ட பூதம் அவனை ஒரு விசிறு விசிறியது. தள்ளிய வேகத்தில் கால் தடுக்கிப் பின்னுக்கே போய்க் கீழே விழுந்தான். இரும்புக் கட்டிற்கால் முடிச்சில் பின்மண்டை ‘மடே’ரென மோதியது.
அடிவேகத்தில் அவன் கத்தக்கூட இல்லை. "ஜனனி!" என மெதுவாய் முனகினான். அப்படியே தலை தொங்கி விட்டது. மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் குபுகுபுத்தது. ஜனனி திக்பிரமை பிடித்து நின்றாள்.
"ஜனனீ! ஜனனி! மாப்பிளே, மாப்பிளே!" கதவைப் படபடவெனத் தட்டுகிறார்கள். கதவைத் திறக்கக்கூடத் தோன்ற வில்லை. நின்றபடி இருந்தாள்.
கதவை உடைத்துக்கொண்டு உள்ளே தள்ளிக்கொண்டு புகுந்தார்கள். அவனையும் அவளையும் கண்டு பின்வாங்கினார்கள். கிட்டப் போகக்கூட அஞ்சியவர்களில் ஒருவன், தைரியம் கொண்டு, மாப்பிள்ளை மார்பில் கையையும், காதையும் வைத்துப் பார்த்தான். செத்துப் போனவர்களுக்குச் செத்தது தெரிந்திராது அவ்வளவு விரைவில் பிராணன் போயிருந்தது.
"ஜனனீ! என்னடி?"
ஜனனிக்குக் கண்களில் ஜலம் ஆறாய்ப் பெருகிற்று. ஆனால் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது.
"பலே! ஜனனீ!" என்று ஒரு வெறிக் குரல் அவளுள்ளே எழுந்தது.
"ஐயோ! ஜனனீ!" என இன்னொன்று விக்கி விக்கி அழுத்து.
# # #
"ஜனனீ! ஜனனீ!"
அவள் திடுக்கென விழித்துக்கொண்டாள். இந்த நள்ளிரவில் மையிருளில் யார் அழைப்பது? அவளுள் எழுந்த வினாவிற்கு அக்குரல் உடனே பதிலளித்தது. "ஆம், ஜனனீ! உன்னை மீட்கத்தான் வந்தேன். ஆயினும் நீ நினைக்கும் மீட்சியல்ல. உன்னை உனக்கு உணர்த்த வந்தேன். நீ உணர்ந்தால் நீ மீள்வாய்."
ஜனனி திடீரென உணர்ந்தாள். நள்ளிரவில், மையிருளில், குழலினிமையில் வரும் இக்குரல், வெளியினின்று வராது, தன்னுள் இருந்துதான் வருகிறதென்று உணர்ந்தாள். இக்குரல் மெளனமாயும், அன்பாயும், அதே சமயத்தில் ஒர் அழுத்தத்துடனும் ஒலித்தது. எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருந்தும் இந்தப் புதுக்குரல் அவளுக்கு பயமாக இருந்தது. அவளையுமறியாது அவள் நாக்கு "நீ யார்?" என்னும் வினாவை உருவாக்க முயன்றது.
"நான் யார்? என்றுமே, நீ பிறப்பதற்கு முன்னரே முதல், உன்னிடம் இருந்துகொண்டு உன்னிடமிருந்து என்றுமே நீங்காதிருக்கிறேன். என்னைப் புரியவில்லையா? நீ உன்னைப் புரிந்துகொண்டால், என்னைப் புரிந்துகொள்வாய். ஏனெனில் நீயேதான் நான். நீ என்னைக் கண்ணால் கண்டது மறந்தாலும், என் குரலைக் காதில் கேட்டது ஞாபகம் இல்லையா? என்னைக் கண்டதும் கேட்டதும் ஞாபகம் இல்லையானாலும், என்னைக் காணவும் கேட்கவும் முயன்றதுகூட ஞாபகம் இல்லையா? யோசி யோசி! நன்றாய் யோசித்துப் பார்."
திடீரென நினைவு வந்த அதிர்ச்சியில், ஜனனிக்கு இருளில் கண்கள் அகல விரிந்தன. "குத்துவிளக்கில். ப்ரபோ!" ஜனனி ஹோவெனக் கதறினாள்.
"ஆ! இப்பொழுது உனக்கு ஞாபகம் வருகிறது. நீ விளக்கைத் துண்டியபொழுது யாரைத் தூண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய். நாளடைவில், நீயாக எடுத்துக்கொண்ட பிறப்பின் மாசும், காலத்தின் துருவும் ஏற ஏற, உன்னுள் இருக்கும் நான் உன்னுள் எங்கேயோ படு ஆழத்தில் புதைந்து போனேன். உன்னுள் இப்பொழுது நேர்ந்த பூகம்பத்தினால் நீயே புரண்டதால், உன்னுள் புதைந்துபோன நான் இப்பொழுது வெளிவந்தேன்."
"என்னைக் கைவிட்டாயே என் கடவுளே!-"
"ஜனனீ, நீ என்னை விட்டு ஒடிப்போனாய். ஆனால் நீயே நானாய் இருப்பதால் உன்னை விட்டு நான் ஒட முடியாது. உன்னுடன் ஒட்டிக்கொண்டு வந்தேன். வந்த என்னையும் உன்னுள் புதைத்துவிட்டாய். புதைத்தும், எனக்குச் சாவு இல்லாததனால், நீ என்மேல் மண்ணைப் போட்டு மூடினாலும், நான் மூச்சுக்குத் தவித்துக்கொண்டாவது இருந்துகொண்டு தானிருக்கிறேன். என்னைப் புதைத்துவிட்டு என்னைக் கூப்பிட்டால் நான் வரமுடியுமா? ஆனால் இப்பொழுது நீயே உன்னுள் புரண்டதால், நான் வெளிவந்தேன். என் கைகள் ஒடிந்திருக்கின்றன. இருந்தும் உன்னை அணைக்கத்தான் நீட்டுகிறேன். நீ நானாக இருப்பினும், நான் நானாய்த்தான் இருக்க முடியும். நான் நான்தான். நான் நீயாக முடியாது. நீதான் நானாக முடியும் எனக்கு நானிலிருந்து மாறும் இயல்பு இல்லை.
"ஜன்னீ, நீ இதை அறி. இப்பொழுது நீ-- என்னிலிருந்து பிரிந்த நீ-- மறுபடியும் ‘நா’னாய்க் கொண்டிருக்கிறாய். அதனால்தான் நான் மறுபடியும் உன்னில் உருவாக முடிகிறது. எங்கும் பரவி நிலையற்று உருவற்றது. உருவற்ற நிலையிலிருந்தே உருவாய்ப் பிரிய முடியும். அவ்வுருவற்ற நிலையின் சாயையை, அவ்வுருக்கள் தாங்கியிருப்பினும், அவை அவ்வுருவற்ற நிலையின் பிளவுகள்தாம். ஏனெனில் முழுமையின் துண்டங்கள் அவை. அப்பொழுது, துண்டங்களின் துண்டங்கள் முழுமையின் எவ்வளவு பின்னம்! ஆகையால் ஜனனீ, ஜனனம் எவ்வளவு பின்னம்! ஆயினும் துண்டங்கள் இன்னமும் துண்டமாகி, பொடியாகி, அப்பொடி இன்னமும் பொடிந்து மறுபடியும் உருவற்ற நிலையில்தான் கலந்து விடுகின்றது. ஆகையால் ஜனனீ நீ என்னில் மூழ்கினால், நீயே நானாய்விடுவாய். இதுதான் ‘உன்’னின் மீட்சி. இதுதான் ‘உன்’னின் மீட்சி. மீட்சி" அந்தக் குரல் மறுபடியும் அவளுள் அடங்கியது, குழலின் நாதம்போல்.
ஜனனி பதினைந்து வருஷங்கள் சிட்சை விதிக்கப் பட்டாள். ஆனால் அவள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவளா, சிட்சைக்கு அனுப்பப்பட வேண்டியவளா என்று சரியாய்த் தீர்மானிக்க முடியாமலே போயிற்று. வாயடைத்துப் போய்விட்டதால், கடைசிவரை மணவறையில், அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையில் என்னதான் நடந்ததென அறிய முடியாமல் போயிற்று. வைத்தியர்கள் அவளைப் பரீட்சை பண்ணிப் பார்த்து, மூளையில் ஏதோ அவளை அழுத்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள்.
ஜனனி, ஆஸ்பத்திரியிலும், சிறையிலுமாகக் காலத்தை மாறிமாறிக் கழித்தாள். ஆனால் எங்கும் அவளால் ஒருவருக்கும் இம்சை இல்லை. சாப்பாட்டை எதிரே வைத்தால் சாப்பிடுவாள். அவளுக்குப் பசிக்கிறது என்று யாராவது சொன்னால்தான் அவளுக்கே தெரியும். நன்னடத்தை காரணமாக, மூன்று வருஷச் சிட்சை ரத்தாயிற்று. ஆயினும் அவளுக்குப் போக்கிடம் இல்லாததால்- (அவளை வளர்த்த குடும்பம் பூண்டுகூடத் தெரியாமல் போய்விட்டது). ஆஸ்பத்திரியில்தான் இருந்தாள்.
இன்னமும் வெகுநாள் கழித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாய், கொச்சை கொச்சையாய், பேச்சு வந்தது. முன் நினைவு சில சமயம் இருக்கும்; சில சமயம் இருக்காது. ஆகையால் பேச்சுக்களில் தொடர்பும் இருக்காது. "என்னில் இருக்கும் நான், உன்னில் இருக்கும் நான், நீ இல்லாத நான்! நீயே இல்லாத நீ--" என்று என்ன என்னவோ பிதற்றிக் கொண்டிருப்பாள்.
ஆனால் நெற்றிக் குங்குமத்தையும், தாலிச்சரட்டையும் ஒரு நாளும் அழிக்க மறுத்துவிட்டாள். "சரியாய்ப் போச்சு! பைத்தியங்களா, அவர் செத்துப் போனார் என்று யார் புரளி பண்றது? அவரில் இருந்த நீன்னா செத்தது! அவரில் இருக்கிற நான்தான் என்னிக்குமே இருக்கே! நான் அவரோடு தினம் பேசிக் கொம்மாளமடிச்சுண்டுதான் இருக்கேன். நான் நித்திய சுமங்கலி-- எனக்கு அமங்கலமே கிடையாது."
இப்படித் தனக்குத்தானே கையை நீட்டி நீட்டி மிகவும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பாள். எப்போதும் சந்தோஷமாய்ச் சிரித்தவண்ணமே இருப்பாள்.
கடைசியில் விடுதலையானாள். உடம்பு தேவலையாயிற்று என்றல்ல; அவளால் இனி ஆபத்தில்லை, இம்சை பண்ணாத பைத்தியமென்று.
அவளுக்குச் சாப்பாட்டுக்கும் குறைவில்லை. ஏனெனில் அவளுக்குப் பிக்ஷையிட்ட வீடுகள் அனைத்தும் திடீரெனச் செழித்தன. அவள் கைநீட்டி வேண்டுமென்று கேட்டோ, அல்லது தானாகவோ ஏதாவது சாமானைப் பெற்ற கடைகளுக்கு அன்றைய வியாபாரம் வெகு மும்முரமாய் நடக்கும். ஆகையால் அவளுக்கு அன்னமிடவும், கேட்டதையும் கேளாததையும் கொடுக்கவும் நான் நான் என்று ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டனர். அவள் கையால் ஒருமுறை உடலைத் தடவினால் போதும்; தீராத நோய்கள், அவ்வுடலி லிருந்து பொட்டென உதிர்ந்து போகும்.
இருந்தாலும் பைத்தியம்-!
இப்படியே ஜனனி வெகுகாலம் தொண்டு கிழமாக ஜீவித்திருந்தாள். உடல் சுருங்கி, பல்லுதிர்ந்து தலை மயிர் வெண்பட்டாய் மின்ன.
அப்புறம் ஒருநாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியான்ன வேளையில் படுத்துத் துங்கிக்கொண்டிருந்தாள். மத்தியான்னம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலையாயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாய்ப் புகுந்து புறப்பட்டுக்கொண்டிருந்தன.
ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.
------------------
2. யோகம்
மனிதனின் அடிச்சுவடு படாமலே கற்பாந்த காலம்.
ஆயினும் நாளடைவில், இயற்கைக்கும் மனிதனுக்கு மிடையே நடந்துகொண்டிருக்கும் யுத்தம் அங்கும் பரவியது.
என்றோ ஒருநாள், எவனோ ஒருவன் எவரெவரையோ கூட அழைத்துக்கொண்டு அங்கு வந்தான். பார்வையில் படும் வெயிலுக்கு அடைப்பாய் ஒரு கையின் விரல்களை, புருவங்களையொட்டினாற்போல் சேர்த்து வைத்துக்கொண்டு, மேட்டின்மேல் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டியவரையிலும், அதற்கு அப்பாலும் மரங்கள் ஓங்கி நின்றன. கூட வந்தவர்களுக்கு அதையும் இதையும் அங்கும் இங்குமாய், இன்னொரு கையால் சுட்டிக் காண்பித்தான்.
"சரி, காட்டைக் கழித்தெறியுங்கள்! ரோட்டைப் போடலாம்" என்றான்.
ஆகவே அன்றோ, அதற்கடுத்த நாளோ, மாதமோ, வருடமோ ஆட்களும் யந்திரங்களும் அவ்விடம் வந்து சேர்ந்தன. வானளாவியவற்றையெல்லாம் காலடியில் வெட்டி வீழ்த்தின. காலடியில் இருந்தவற்றைக் களைந்தெறிந்தன.
அன்று இரவு வந்தபொழுது, கூலிகள் அங்கே தங்குவதற்குப் போட்டிருந்த சிறுசிறு கூடாரங்களினின்றும் பொறி விளக்குகள், இருளைக் குத்துக் குத்தெனக் குத்தின.
வேலை நடந்துகொண்டிருக்கையிலேயே கூடாரங்கள் மறைந்து குடிசைகள் தோன்றின. நாளடைவில் குடிசைகளுக்குப் பக்கத்திலும் ஒதுக்கத்திலும் வீடுகள் முளைத்தன.
மேட்டு நிலத்தில் ஒரு ரோடும் வளைந்து வளைந்து ஓடியது.
மனிதன் தான் கட்டிய ரோட்டைத் தானே திறந்து வைத்தான். அவர்களுள் பெரிய மனிதன் ஒருவன், தான் ரோட்டைத் திறந்து வைத்ததற்கு அறிகுறியாய், தன் வண்டியை அந்த ரோட்டின்மேல் விட்டுக்கொண்டு சென்றான்.
அந்தப் பெரிய மனிதன், மற்ற மனிதர்களைவிட இரண்டோர் அங்குலம் குட்டையாய்த்தான் இருந்தான். வலியால் துடிக்கும் அவன் வயிற்றுள் உணவு எல்லோரையும் விட ஒரு பிடி குறைவாய்த்தான் இறங்கியது.
ரோட்டைத் திறந்து வைத்த பிறகு, வேளை வந்து அவன் செத்த பிறகு முன்னுக்கு வருவதற்காக முறுக்கான வயசில் அவன் இழைத்த பல காரியங்களின் பலனாய், போகிற காலத்தில் புழுத்துப்போன உடல் வேக, மற்றப் பிணங்களை விடக் கட்டையும் முட்டையும் இரண்டு அடுக்குகள் நிறைவாய்த் தான் பிடித்தன.
ஆனாலும், அதனால் ‘பெரிய’ மனிதனுக்கு அடையாளமாய் மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட நியமங்கள் மாறவில்லை.
காலம் கடந்தது.
பின்னால் வந்தவர் போனவர்களுக்கும், அந்த ரோடு பிடிக்கவில்லை. அதை அழித்தார்கள்.
இச்சமயம் அந்த மேட்டு நிலத்தில் இட்ட ரெயில் தண்டவாளம் கிடுகிடுக்க ஒரு புகைவண்டி ‘கர்’ரென்று சீறிக் கொண்டு வளைந்து வளைந்து வெகு வேகமாய் ஓடியது.
ஒருநாள்:
அளவுக்கு மிஞ்சிய வேகந்தானோ, அல்லது தண்டவாளத்தில் பாராதுபோன பழுதின் காரணமோ, அல்லது மனிதன் தனக்குள் தான் ஒற்றுமையின்றி இடும் பல சண்டைகளில், ஒரு தரத்தவர் தண்டவாளத்தில் பாதியைப் பிடுங்கி எறிந்ததனாலோ, ஒடிக்கொண்டிருந்த வண்டித்தொடர் திடீரென நிலை தவறி, இரையுண்ட மலைப்பாம்பைப் போல் அப்படியே புரண்டு சாய்ந்தது.
ஏகநாசம், உயிர்ச்சேதம்!
தந்தியிலும் தபாலிலும் ஒலியிலும் செய்தி பறந்தது. அப்புறம் அந்த ரெயில் பாதை உருப்படவில்லை. அதையும் அழித்தார்கள். இருக்கிற தண்டவாளத்தையும் பிடுங்கி எறிந்தார்கள். கிராவல் கற்களை நாலுபுறங்களிலும் வாரி இறைத்தார்கள்.
அழித்ததை இழைத்து, திரும்பவும் இழைத்ததை அழித்து --
அப்புறம் அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் குறைந்து போயிற்று.
அந்த மேட்டு நிலைத்தையே அகழ் மாதிரி வெட்டிப் போட்டுவிட்டதால், இதுவரை தாழ இருந்த நிலம் மேடாகி விட்டது. சரியான காலத்திலும் காலமல்லாத காலத்திலும் மழை பெய்து, அந்தக் குழிந்த நிலத்தில் ஒரு குட்டைகூடத் தேங்கியது. அதன் கரையில் மரங்களும் செடிகளும் தளிர்த்தன. ஆட்டையும் மாட்டையும் குட்டையில் குளிப்பாட்டினர். அவசரத்துக்குக் குளிக்கவும் குளித்தனர். குடிக்கவும் குடித்தனர். இன்னும் அசுசியான காரியங்களுக்கு அந்த ஜலத்தைப் பயன்படுத்தி, அதன் பலனையும் அநுபவித்தனர்.
பிறகு ஒரு கோடை வந்தது. அதன் கொடுமையில் அந்த வட்டாரத்திலேயே கருப்புக் கண்டது. ஒலைக் குடிசைகள் வெயிலின் வெப்பத்திலேயே பற்றி எரிந்து போயின. பயிர் பச்சைகள் பட்டுப்போயின. வைசூரியும் வாந்தி பேதியும் ஊரையும் உயிர்களையும் சூறையாடின.
குட்டையில் ஜலம் வறண்டது. அதன் கெட்டிப்பட்டுப் போன வயிற்றில் பாளம் பாளமாய் வெடித்திருந்தது. அதில் ஒரு கல்லின் கூழை மண்டை, வளையிலிருந்து ஒணான் எட்டிப்பார்ப்பதுபோல், எட்டிப் பார்த்தது. உள்ளங்கையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் பரவும் பரிமாணத்திற்கு, வழவழவென்று ஒர் அசட்டுச் சிவப்பு நிறம்.
பிறகு மழை பெய்தது. நேரம் தப்பி நேர்ந்து, கொஞ்ச நஞ்சம் தப்பிய பயிர்களில் தேங்கிக் கதிர்களை அழுக அடித்தது.
ஆனால் அந்தக் குட்டையில் மாத்திரம், இந்தத் தடவை என்னவோ ஜலம் தேங்கவில்லை. துரோகம் பண்ணப் பட்டவனின் அடிவயிறுபோல் பூமி கொதித்துக்கொண்டு, அத்தனை ஜலத்தையும் உறிஞ்சிக்கொண்டது.
பூமி அந்த இடத்தில், வயதுப்பெண் ஒருத்தியின் அடிவயிறு போல் தாழ்ந்து இறங்கி மறுபடியும் மேட்டில் ஏறியது.
சின்னதும் பெரிதுமாய்ச் சிதறிக் கிடக்கும் பல கற்களுக்கிடையில் அந்தக் கூழாங்கல்லின் வழுக்கை மண்டை அசிங்கமான ஒரு ரத்தக்கட்டிபோல் முடிச்சுக் கட்டிக் கொண்டிருந்தது. வெள்ளையும், கறுப்பும், சாம்பல் வர்ணமுமாய் இருக்கும் அத்தனை கற்களுக்கிடையில், அதன் சொட்டையும் சிவப்பும் சட்டெனத் தெரிந்தன. கொஞ்சம் வேடிக்கையாய்க்கூட இருந்தது.
பள்ளத்தின் விளிம்போரமாய் ஒரு பையன் கூழாங்கல் ஒன்றைக் காலால் பந்தாடிக்கொண்டே விளையாடிய வண்ணம் வந்தான். அவனுக்கு என்ன தோன்றிற்றோ, காலால் எற்றிக்கொண்டு வந்த கல்லைக் கையில் எடுத்து, தான் நின்ற இடத்திலிருந்து சிவப்புக்கல்லைக் குறிபார்த்து அடித்தான். -
"கல் குறிமேல் பட்டால், இந்தத் தடவை பரீக்ஷை தேறுவேன். படாமல் போனால்--"
எறிந்த கல் குறிமேல் லொட்டென்று அடித்தது. இரண்டு நெருப்புப் பொறிகளும் பறந்தன.
பையனுக்குச் சந்தோஷம் தாங்கவே முடியவில்லை. கொம்மாளம் போட்டுக்கொண்டு ஓடினான். அவன் கொக்களிப்பு எதிரொலிகளைக் கிளப்பிற்று.
பொழுது சாய்ந்தது.
மேல்தட்டு இல்லாத ஒரு கட்டைவண்டி வீட்டை நோக்கி ‘லொடக் லொடக்’கென்று கள் குடித்தவன் மாதிரி ஆடியபடியே புழுதியை எழுப்பிக்கொண்டு மேட்டின்மேல் சென்றது.
அதில் ஒரு ஜோடி. புருஷன் வண்டியை ஒட்டினான். பெண்சாதி, அங்கு ஒருவரும் இல்லாததால், காலை நீட்டிக் கொண்டு கொஞ்சம் அடக்கக் குறைவாகவே படுத்துக் கொண்டிருந்தாள். இருவருக்குமே சற்று மதுமயக்கம்.
"ஏ புள்ளே, மேலே பாரு, நகம் மாதிரி கீறி விட்டிருக்குது மூணாம்பிறை, பாத்தியா? சொருக்குப் பையிலே கையை வெச்சுக்கிட்டுப் பாரு, அதிலே இருக்கிற துட்டெ தொட்டுக் கிட்டுப் பாரு"
"இங்கே என்னா துட்டு இருக்குதாம்? இருந்த ரெண்டனா பில்லையிலே, சந்தையிலே ஒரனாவுக்கு முலாம்பழம் வாங்கி முழுசையும் வழிச்சு வாயிலே போட்டுக்கிட்டே இன்னிக்கு ஒனக்குச் சோத்தோடெ கொட்டறதுக்கு அரையனாவுக்கு முள்ளங்கி வாங்கியாச்சு இன்னும் அரையனாவுக்குப் புகையிலெ, அதுவும் உபயோகமத்த புகையிலெ--"
"உன்னெ கள்ளுக்கடைக்கி ஒட்டினாப்போல இருக்கிற கடையிலே வாங்கச் சொன்னா, காப்பி ஓட்டலுக்குப் பக்கத்துலேருக்கிற கடையிலே வாங்கினே. கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசைக் கரியாக்கறதுலே மணி--"
அவள் முழங்கையை ஊன்றிக்கொண்டு படுத்திருக்கும் நிலையிலிருந்து, சாய்ந்திருக்கும் நிலைக்கு நிமிர்ந்தாள்.
"யாரு கஸ்டப்பட்ட காசு? நீயா, நானா? காரமேயில்லாத புகையிலெ, தூ!"
"அட! இவ்வளவுதான் துப்புவியா? இன்னும் இதுக்கு மேலேயும் துப்புவியா? இதோ நான் துப்புறேன் பாரு; எச்சில் எவ்வளவு தூரம் பாயுது பாரு"
இருவரும் அந்தப் பள்ளத்துள், வழியெல்லாம் மாறிமாறித் துப்பிக்கொண்டே சென்றனர். வண்டிமேட்டிலிருந்து இறங்கி அந்தண்டை மறைந்த பிறகு அந்தக் கல்லின் மேல், ஒரு கொத்து எச்சில் வழிந்திருந்தது.
இரவும், அதில் அங்கும் இங்குமாய்ச் சுடர்விடும் நக்ஷத்திரங்களும் பொத்தல் கண்ட குடைபோல் பள்ளத்தாக்கின் மேல் கவிந்தன. நிசப்தம், பிறகு அருகிலிருக்கும் சுடலையினின்று ஒரு நரியின் ஊளை; மறுபடியும் மெளனம்.
பொழுது புலரும் வேளையில், மேட்டில் இருந்த மரங்களுள் ஒன்றிலிருந்து உதிர்ந்த ஒரு பூக்கிண்ணம் கிரீடம் போல் அந்தப் புதைந்த கல்லின் மண்டைமேல் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தது.
# # #
பருவங்கள் மாறின. காலத்தின் போக்கில் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அந்தப் பள்ளத்தின் பக்கவாட்டில் ஒர் ஊற்றுக் கண்டது. குளுகுளுவென்று பளிங்கு போன்ற ஜலம் மடுவின் அடிவயிற்றிலும் அதிலிருக்கும் கற்கள் மேலும் பாய்ந்தது. ஒடிய ஜலம் அந்தப் புதைந்த கல்லை நன்கு குளிப்பாட்டி, சுற்றி ஒட்டிக்கொண்டிருந்த சேற்றையும் மண்ணையும் பறித்துக்கொண்டு போயிற்று. கல்லின் மண்டை அகன்றது.
நாளடைவில், ஒடும் ஜலம் கொஞ்சம் ஒதுங்கி, அங்கு எங்கோ ஒரு புரையுள் மறைந்து, அரை மைலுக்கு அப்பால் ஒரு சிறு வாய்க்காலாய் வெளிப்பட்டது.
பலநாள் மலடி ஒருநாள் தன் வயிற்றில் வித்துத் தங்கியதை உணர்ந்ததுபோல், அந்தப் பள்ளம் திடீரென்று ஒரே புஷ்பச் செடி மயமாகப் புளகித்தது. திடீரென்று அதில் சொரிந்த அழகு, ‘இதென்ன’வென்று கண்ணைக் கசக்கிக் கொண்டு நோக்கும்படி இருந்ததேயொழிய கண்டவுடன் நம்பக் கூடியதாயில்லை.
வசந்தம் அங்கே தங்கி விளையாடியது.
# # #
பிற்பகலில் பாதி கழிந்திருக்கும். வெயில்கூட அங்கே தெரியவில்லை. இளந்தம்பதிகள் இருவர் அங்கு வந்தனர். அவன் வெள்ளைக் ‘குடுத்தா’ உடுத்திருந்தான். அவள் பட்டுப் புடவை கட்டியிருந்தாள். மண வாழ்வின் மணம் இன்னமும் இருவரிடமும் கமழ்ந்து கொண்டிருந்தது. அவளுடைய மை தீட்டிய விழிகளில் அவனை வெற்றி கொண்ட வெறி கூத்தாடியது. இருவரும் ஒருவரை ஒருவர் ரகசியமாய்ப் பார்த்துக்கொண்டு, ஒருவரில் ஒருவர் மகிழ்ந்து கொண் டிருந்தனர். நெஞ்சத் துடிப்பைப்போல் படபடத்துக் கொண்டு அருவி ஜலம் ஒடுவதைக் கொஞ்ச நாழிகை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அந்தச் சிவப்புக் கல்லின் மேல் ஒரு காலை வைத்துக்கொண்டு சின்னச் சின்னக் கற்களாகப் பொறுக்கி ஒவ்வொன்றாய் அந்த ஜலத்தில் போட்டாள்.
அவன் கீழே உட்கார்ந்து, அவள் கல்மேல் ஊன்றிய காலைப் பெயர்க்க முயன்றான். அவள் காலை இன்னும் அழுத்திச் சிரித்தாள். அம்மி மிதித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது போலும்!
அதற்குள், அங்கே ஜலத்துள் துள்ளிய ஒரு மீன் குட்டியின் மேல் அவன் கவனம் பாய்ந்தது. அவன் கவனம் தன்னைவிட்டு மாறுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. புன்னகை புரிந்த வண்ணம் அவன் மடியில் அவள் சாய்ந்தாள். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தை ஒத்தியது. அவனுடைய குனிந்த பார்வை கனிந்தது. உதடுகள் மெளனமாய் என்னவோ வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு அசைந்தன.
"உம்? என்ன திட்டறேள்?” மெதுவாய் ஒரு கை அவன் முதுகைத் தடவியது.
"இப்படியே, இப்பவே இறந்துவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று யோசிக்கிறேன்."
"இப்பத்தான் சாவைப்பத்தி நினைக்கிறதா? இது மாதிரி பேசாதேங்கோ."
"ஏன், ஒரு நல்ல கட்டத்தில் முடிவடைந்துவிடுவது நல்லதில்லையா?"
"அப்போகூட நீங்கள் ஏன் சாகணும்! நான் போனாலும் போறேன். நீங்க ரெண்டாவது ஒண்ணு கட்டிண்டு செளக்கியமா இருங்கோ. ஜாதகப்பிரகாரமே நான்தான் உங்களை முந்திப்பேனாம். எனக்கே ஆயுசு கட்டைதானாம்."
"ஆயுசைப்பற்றி என்ன! அதுவா பெரிசு? இருக்கும் வரை அன்போடு இருக்கவேணும். அதுதான் பெரிசு"
"ஆமாம், எத்தனைபேர் கட்டிண்டதே முதல் சண்டை போட்டுண்டு, ரெண்டுபேர்லே ஒத்தர் எப்போடா சாகப் போறான்னு காத்துண்டில்லை!"
அவன் புன்னகை புரிந்தான். "வாஸ்தவம். உனக்குத் தெரியாத விஷயமே இல்லை அல்லவா?"
அவளுக்குப் பெருமிதம் விம்மியது. இன்னும் செளகரியமாய் அவன் மடியில் புரண்டு படுத்துக்கொண்டாள். "எனக்கு எல்லாம் தெரியும். பின்னே என்ன, என்னை அசட்டுக் காமாrlன்னு நெனச்சுண்டேளா!"
திடீரென்று!
"ஆனால் நாம்ப அப்படி இல்லையே!"
"எப்படி?
"அறுபது நாழியும் சண்டை போட்டுண்டு!"
"சரியாப் போச்சு. ஓம் என்று ஒரு மந்திரம் சொல்லியாகல்லை--?"
"நாம் எல்லாம் அப்படி இருக்கமாட்டோம். நான் உங்களைப் பார்த்தப்புறம் உங்களையேதான் வரிப்பேன்னு அம்மாவோடு சண்டித்தனம் பண்ணிச் சாதிச்சுண்டிருக்கே னாக்கும்! உங்களுக்கும் என்மேல் அப்படித்தானே?"
"இப்போ என்ன அதைப்பத்தி?"
மடியில் படுத்துக்கொண்டே அவள் தலையை பலமாக ஆட்டினாள். அதுவும் ஒரு கவர்ச்சியாய்த்தான் இருந்தது. "ஒண்ணுமில்லே நான் சொல்றேன். நான் செத்துப் போனால், நீங்க ரெண்டாந் தடவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேளே? நான் தெய்வமாயிருந்து பார்த்துண்டு இருப்பேன்."
"ஏன், பிசாசாக இருக்கக் கூடாதோ?"
அவன் கிண்டலைக் கவனியாமலே அவள் பேசிக் கொண்டே போனாள். "நான் செத்துப் போன இடத்திலே ஒரு கோரி கட்டுவேளா?"
"மும்தாஜ் மஹாலாக்கும்!"
அவள் குரலில் ஏமாற்றம் தொனித்தது. "ஆமாம். நம்ம ஜாதி பொசுக்கற ஜாதி; புதைக்கிற ஜாதியில்லை. போனால் போறது. நான் போனப்புறம் என்னிக்காவது நெனைச்சுக்கக்கூட மாட்டேளா?"
"சரி சரி, கொஞ்சம் சமத்தாயிரு"
"சொல்லுங்கோன்னா--?"
"நீ செத்துப்போன பிறகு நான் இரண்டாந்தாரம் கட்டிக் கொண்டு எப்படி நடப்பேன் என்பதைப்பற்றி இப்பொழுது தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். நீ உயிரோ டிருக்கையில் நாம் இருவரும் பிரியாமல் இருப்பதைப்பற்றி யோசனை பண்ணுவோம். இன்னும் ஒரு வாரத்தில் வந்து உன் அம்மா உன்னைக் கூட்டிக்கொண்டு போவதாய்ச் சொல்லியிருக்காளே, அப்பொழுது போகாமல் இரேன்."
அவள் யோசனையாய் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்.
"இப்பொழுதுதானே ஒரு மாதத்துக்கு முன்னால் போய் விட்டு வந்தாய்? அடிக்கடி இப்படிப் பிரிந்துகொண்டிருந்தால் நாம் எப்பொழுது ஒட்டுவது? உனக்கும் உன் தாய்மேல் ஆசை இருக்கும்; அவளுக்கும் பெண்மேல் இருக்கும்; இல்லையென்று சொல்லவில்லை. இருந்தும் உன் புதுவாழ்வுக்கு நீ பழக வேண்டாமா? இன்னமும் இந்தப் பிறந்த வீட்டுச் சபலத்தை அடக்கிக்கொள்ளச் சக்தியில்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவானேன்?”
அவள் எழுந்து உட்கார்ந்துவிட்டாள். முகம் ஒரு தினுசான மருட்சியில் வெளுத்துவிட்டது. அவன் வார்த்தைகள் அவள் மூளையில் என்ன வேலை செய்தனவோ தெரியவில்லை; அடிக்கடி கை நகத்தால் அழுந்த வாரியிருக்கும் மயிரைக் கீறிக்கொண்டாள். அவள் முகத்தில் புகுந்துவிட்ட ஒரு சிறு கபடு, அதற்கு ஒரு குறுகுறுப்பையும் தனியழகையும் கொடுத்தது.
அவள் அவன்மேல் வைத்திருந்ததைவிட, அவன் அவள் மேல் வைத்திருக்கும் ஆசையின் மிகுதி அவன் தன்னையும் மறந்து அவளைக் கெஞ்சும் குரலிலேயே வெளிப்பட்டது.
"அன்றொரு நாள் சொன்னையே, ஞாபகம் இருக்கிறதா?"
"என்ன?" என்னும் வினாவில் அவள் புருவங்கள்பென்ஸிலால் கீறியதுபோல், சுத்தமாய் வளைந்த புருவங்கள் உயர்ந்தன.
"சீதைக்கு ராமர் இருக்கும் இடந்தான் அயோத்தி-"
அவள் முகத்தில் அசட்டுப் புன்னகை தோன்றிற்று.
"சொல்லுக்கு அலங்காரமாய்ச் சொல்லிவிட்டால் ஆகி விட்டதா? கொஞ்சமாவது காரியத்தில் நடத்திக் காண்பிக்க வேண்டாமா? அதற்கு உனக்கு வயசாகவில்லையா? நாம் இருவரும் சந்தோஷமாயிருக்கிறதே இன்னமும் நாலைந்து வருஷங்கள், பிறகு எனக்கும் வயசாகிவிடும். உனக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துவிடும். பிடுங்கல்களும் அதிகரித்துவிடும். பொறுக்காமல் நானே ஒருநாள், பிறந்த வீடு போய்த் தொலை" என்பேன்!"
அவனுடைய தமாஷ் அவளுக்கு ஏறவில்லை.
"என்ன சொல்லுகிறாய்?"
அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. பக்கத்துப் புதரில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பூவைப் பறித்து அதை இதழ் இதழாய்ப் பிய்க்க ஆரம்பித்தாள். அவளுடைய அழுத்தமான மெளனம் அவன் பொறுமையை வெகுவாய்ச் சோதித்தது. தவிர, அவள் பதில் சொல்லத் தேவையேயில்லை. அவன் ஆசையையே கசக்குவது போன்று அந்தப் பூவை இதழ் இதழாய்ப் பிய்த்துக்கொண்டிருக்கும் அந்த இரக்கமற்ற காரியமே போதுமான பதில். சகிக்க முடியாத வேதனையில் அவன், "நீ வேனுமானால் பிறந்தகம் போ அந்தப் பூவை மாத்திரம் பிய்க்காதே" என்று கத்தினான்.
திடுக்கிட்டு அவள் நிமிர்ந்தாள். சரசரவென்று கண்கள் நீரால் நிறைந்தன.
"இல்லே, நான் போகல்லே-"
"இல்லை, போய்க்கொள்-"
இனி அவள் போனாலும் போகாவிட்டாலும், அவன் அவளைப் பிரியத்தால் கட்டி இணைக்க முயலும் முயற்சியில் தோல்விதான். தன் உரிமையைச் செலுத்தி அவள் கீழ்ப் படிதலை வற்புறுத்த அவன் விரும்பவில்லை. மனமார்ந்த சம்மதத்துடன் கூடிய ஒத்துழைப்டையே அவன் விரும்பினான். அந்த மட்டுக்கும் அவன் பிரியத்திற்குத் தோல்விதான்.
"நேரமாய்விட்டது எழுந்திரு, போகலாம்" என்றான் சற்று நேரம் கழித்து.
"இதுவரையில் எவ்வளவு சந்தோஷமாயிருந்தோம்! அந்தச் சந்தோஷத்தை நீங்கதான் கெடுத்தேள்" என்றாள், சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு.
"சரி வா, போகலாம்" என்றான். எதை வேணுமானாலும் அவன் ஒப்புக்கொள்ளத் தயாராயிருந்தான். இப்பொழுது அவன் மனத்தில் அவ்வளவு அசதி.
அவன் மார்பின்மேல் சாய்ந்துகொண்டு அவள் விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். அவளைச் சமாதானப்படுத்தும் முறையில் அவள் முதுகை மெதுவாய்த் தட்டினான். லாயக்கற்ற பாத்திரத்தின்மேல் பாசம்வைத்துவிட்டால் தனக்கும் சுகமில்லை. அதற்கும் சுகமில்லை; சுற்றும் இருப்பவர்க்கும் சுகமில்லை. இப்படி ஒன்றுக்கொன்று ஒவ்வாத இரு சுபாவங்களுக்கு முடிச்சு ஏற்பட்டுவிடுகிறதே, அதுதான் கடவுள் சங்கல்பம்.
"வா, வா, போகலாம். நம்மைத் தேடப்போறா!"
# # #
ஒருநாள். தாடியும் மீசையும், காகிதமும் பென்ஸிலுமாய் ஒருவன் அங்கே வந்தான். பென்ஸில் நுனியை அந்தச் சிவப்புக் கல்லில் தீட்டிவிட்டுக் கொஞ்சம் எட்டப்போய், செளகரியமாய் உட்கார்ந்துகொண்டு எழுத ஆரம்பித்தான்.
"வாழ்க்கை ஓயாமல், தன்னைத்தானே திரும்பத் திரும்பத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. நடந்ததேதான் நடந்து கொண்டிருக்கிறது.
"இருந்தும் வாழ்க்கை இன்னதுதான் என்று ஒரு முடிவு கட்ட இயலவில்லை. ஒரு நிச்சயத்துக்கு வருவதற்குள் அதற்கு நேர் முரணாக இன்னமும் அதுவரையில் புலன்படாத பல அம்சங்கள் தலைகாட்டுகின்றன. வாழ்க்கை பிடிபட மறுக்கின்றது.
"ஒவ்வொரு சமயம், வருஷங்கள் விரைவது தெரிய வில்லை. இன்று தள்ளாமையாயிருந்தாலும் ரத்தத் திமிரில் துள்ளி விளையாடியதும் தூக்கியெறிந்து பேசியதும் நேற்று மாதிரி இருக்கின்றன.
"ஒவ்வொரு சமயம் ஒருநாள் நகர்ந்துபோவது நரக வேதனையாக இருக்கிறது.
"வாழ்க்கையின் பெரிய அதிசயம் யாதெனில், சகல ஜீவராசிகளும் அதன் அதன் பிறப்புக்கும் பிழைப்புக்கும் முடிவிற்கும் ஆதாரமாய் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதே அதன் அதன் வாழ்க்கையையும் தனித்தனியாய்ச் சோதித்தால் தம்முள் தாமே நிறைந்திருப்பினும், எல்லாமே உலகத்தின் வாழ்க்கையின் ஒரே கோவையில் அடங்கியவைதாம். சம்பவங்கள் தனித்தனியாயும், ஒன்றுக்கொன்று சம்பந்த மற்றவையாயும் அறுந்து தொங்கினாலும் எல்லாவற்றிலும் ஒரு காவியத் தொடர்பு ஊடே மறைந்திருக்கிறது.
‘ஆயினும் அவன் அவனுக்கு அவன் அவன் பெருமையும் துக்கமுந்தான் பெரியவை. எல்லாம் நான் போனாலன்றோ தெரியப்போகிறது!’:- ஒவ்வொருவனுக்கும் இதே எண்ணந்தான். உலகம் தன் இஷ்டப்படியோ, அல்லது தான் எதிர் பார்த்தபடியோ நடவாததால் அதை விட்டுப் போவதற்கும், அதே சமயத்தில், தான் போன பிறகு உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, அதில் இருப்பதற்கும் ஆசை.
"அவனவன் எதைக் கஷ்டமென்று பார்க்கிறானோ அதனின்று விடுதலை வேண்டாதவனே இல்லை. இந்தக் கடவுள்தன்மையை மனிதன் வேண்டுவது நியாயமே. ஆனாலும் அவனுக்குக் கடவுளுடன் கலக்க விருப்பமில்லை. போட்டிக் கடவுளாய் ஆகத்தான் விரும்புகிறான். வெறும் மாமிசபர்வதமாக வளர்ந்த ஒரு திமிரினாலேயே நல்லவர்களுக்கு நல்லவனாகவும் பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவனாகவும் தான் இருப்பதாகப் பாவித்துக்கொண்டே நல்லவர்களையும் பொல்லாதவர்களையும் கண்டுவிட்ட மேதாவியாய்த் தன்னைத்தானே நினைத்துக்கொண்டு, கடவுளே செய்யத் திணறும் காரியத்தைத் தான் செய்ய முன்வந்து, அவன் காரியமே அவன் கழுத்தை அறுப்பது அவனுக்குத் தெரிவதில்லை.
"உலகத்தில் காக்கப்படுவனவற்றைவிட, கடவுள்கள் அதிகமாகிவிட்டன. சூளைக்கற்கள் எல்லாம் தெய்வமாய் விட்டன; தெய்வம் கல்லாகிவிட்டது.
"மனிதனுக்கு மனிதன் இப்படித்தான் முழுவதன் ஒருபாகம் என்று தெரிந்தும், எல்லாமே தன்னால்தான், தானேதான் எல்லாம் என்று."
இந்தச் சமயத்தில் ஒரு காற்று அடித்து அவன் கைக் காகிதத்தைப் பிடுங்கி அடித்துக்கொண்டு போயிற்று. அவன் எட்டிப்பிடிக்க முயன்றான். -
ஆயினும் அவன் கைக்குத் தப்பி அது சிவப்புக்கல்லின் மேல், ஆணியால் அறைந்தாற்போல் ஒட்டிக்கொண்டு படபடவென்று இறக்கை மாதிரி அடித்துக்கொண்டது.
அதற்குள் அவனுக்கும் சோம்பல் வந்துவிட்டது. "நானும் என்ன, சொன்னதையேதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்!" என்று முணுமுணுத்துக்கொண்டு அதிருப்தியுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
இலைகள் பலபலவென உதிர்ந்தன. ஒன்றாயும், இரண்டாயும், கொத்துக் கொத்தாயும், திரையிட்டாற் போலேயும் உதிர்ந்தன. இலைகளும் சருகுகளும் நிலத்தையும் நிலத்தில் கிடந்தவற்றையும் ஜமக்காளம் போல் மூடின.
அந்தக் கிழவி அங்கு வந்து எவ்வளவு நேரமாய் உட்கார்ந் திருந்தாள் என்றே தெரியவில்லை. மூப்பேறிய உடலில் புடைவை உடுத்திய மாதிரியே இல்லை. உடலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் தொங்கின மாதிரியே இருந்தது. முழங்காலைக் கட்டிக்கொண்டு, குந்திட்ட மாதிரி எங்கேயோ முறைத்துப் பார்த்தபடியே அசைவற்று உட்கார்ந்திருந்தாள். தள்ளாமையால் தலை மாத்திரம் கழுத்தின்மேல் நிலையற்று லொடலொடவென்று ஆடிற்று.
இரவு இறங்கும் வேளைக்குக் கவலை தேங்கிய முகத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு அங்கு ஒருவன் வந்தான். அவளைக் கண்டதும் காணாததைக் கண்டது போல் அவளிடம் ஓடினான்.
"எங்கெங்கெல்லாம் உன்னைத் தேடுவதம்மா? வா."
"நான் வரல்லை."
"என்னம்மா, நீ இப்படிப் பண்ணினால்?"
"எனக்கு இனிமேல் உன்கிட்டே ஜோலி இல்லை."
"அம்மா "
"சீ என்னை இனிமேல் அம்மா அம்மான்னு கூப்பிடாதே!"
"ஐயையோ!"
"இந்த வேஷம் எதுக்குடா? பெத்த வயிறு கொதிக்கப் பார்த்தவனெல்லாம் இதுவரை உருப்பட்டதில்லே. ஊருக் கெல்லாம் மேருவாயிருந்தாலும் எனக்கு நீ பிள்ளைதானேடா? நான் இல்லாட்டா நீ இல்லை, இந்தக் காலத்திலேயே எல்லாம் கைமேலே பலன், ஞாபகம் வெச்சுக்கோ! நீ எனக்குச் சரியாயிருந்தால்தான் உன் பிள்ளை உனக்குச் சரியாயிருப்பான். ஆனால் எனக்கு இந்தக் கதி வரவேண்டாம்!"
"அம்மா"
"டேய், எல்லாரும் பிள்ளை பெத்தாலும் நான உண்னைப் பெத்ததற்கு ஈடாகாது. எத்தனை தவங்கிடந்திருப்பேன்! எத்தனை அரசமரம், கோயில் குளம் சுத்தியிருப்பேன்! எத்தனை கோபுரவாசற்படியை நெய்யால் மெழுகியிருப்பேன்! இடது கையால் சாப்பிட்டிருப்பேன்! உனக்காப் பிள்ளைப் பூச்சிகூட முழுங்கி இருக்கேண்டா. என் ரத்தத்தின் ரத்தம் நீ சதையின் சதை நீ. நீ எனக்கு ஒரே பிள்ளையாய் வாய்ச்சு, எனக்கு நீ துரோகம் பண்ணலாமா? அதுவும் இத்தனை நாள் நல்ல பிள்ளையாய் இருந்துட்டு இப்போ கல்லைத் தூக்கிப் போடலாமா? நல்ல பிள்ளைக்கு அடையாளம் கல்லைத் தூக்கிப் போடுவது, கல்லைத் தூக்கிப் போடுவது” வலிப்பு வந்தவள்போல் அவள் பாட ஆரம்பித்துவிட்டாள். ஆத்திரத்தின் வேகத்தில் இருந்த ஒன்றிரண்டு பற்களினின்று ரத்தம் கொட்டியது.
"ஆரம்பத்திலேயே நீ இப்ப இருக்கிற மாதிரி இருந்திருந்தேன்னா, சீ, தத்தாரி, நமக்குக் கொடுத்து வைச்சது இவ்வளவுதான் என்று துப்பியெறிந்திருப்பேன். மற்றத் தாய்மார்போல் இல்லை நான்! ‘உன் பிள்ளையா இப்படிப் பண்ணினான், உன் பிள்ளையா?’ என்று என்னை எல்லாரும் துக்கம் விசாரிக்கறப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?"
திடீரென்று கிழவி அழ ஆரம்பித்துவிட்டாள்.
"இத்தனை நாள் நான் என் புருஷனைப்பத்தி நினைக்கல்லே. உன்னைப் பார்த்து எல்லாத்தையும் மறந் திருந்தேன். ஆனால் இப்போ அவனை நினைக்கிறேன்; சபிக்கிறேன், இப்படி என்னை விட்டுட்டுப் போயிட்டானேன்னு; உழைக்கிறதெல்லாம் உழைச்சுப்பிட்டு, உன் சமாசாரத்தை எப்படியோ தெரிஞ்சுண்டு, உன் கையை எதிர்பாராமல், முன்னாலேயே செலவு பெத்துண்டுட்டாரே உங்கப்பா கெட்டிக்காரரா, நான் கெட்டிக்காரியா? நீயே சொல்லு:"
அவள் பிள்ளை கண்களில் கண்ணீர் தளும்பியது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்.
"அம்மா, இப்படியெல்லாம் சொல்லாதேம்மா-- கிழவி கண்ணைத் துடைத்துக்கொள்கிறாள்.
"வாஸ்தவந்தாண்டாப்பா. நான் ஏன் சொல்லனும்? இப்போ ஒரு காரணமும் இல்லாமலே நான் அநுபவிக்கறது போறாதுன்னு என் வாயால் உன்னை ஏன் சபிக்கணும்? கலி இப்பவே முத்திப் போச்சு, கலி முத்தித்துன்னா பகவான் அவதாரம் பண்ணுவார். அப்போ அவர் பார்த்துக்கறார். இப்பவே அவதாரம் பண்ணிண்டிருக்காரோ என்னவோ! உன்னைப் பார்த்தாலும் என் வயிறு ஒட்டிக்கிறது. இப்படி என் வாயாலே நீ கேக்கணுமான்னு, எரிச்சல் தாங்காத சமயத்தில் கத்தறேன், ஒயறேன். கத்தறேன், ஒயறேன். இப்படித் தான் நான் சாகற வரைக்கும் இருக்கப் போறதோ, என்னவோ--வா, வா உனக்காச்சு, எனக்காச்சு..."
# # #
திடீரென்று எப்படி முன் அறிகுறியில்லாமல் அந்த ஊற்றுக் கிளம்பியதோ அதே மாதிரி வறண்டு போயிற்று? மறுபடியும் பற்களிலும் மணலிலும் கொதிப்பு ஏறத் தலைப் பட்டது. கானலில் மடு திரைப்படம் போல் நடுங்கிற்று.
ஒருநாள் காலை, ஒரு பிணம் மேட்டில் ஒரு மரக்கிளையிலிருந்து தொங்கிற்று. அக்கிளையின் நிலையும், அதனின்று தொங்கிக் கழுத்தை முறித்த கயிற்றின் உரமும், காலடியில் உருண்டிருந்த சிறு முக்காலியும் இறந்தவனின் முன்னேற்பாட்டை விளக்கின.
இரவின் மிருகங்கள், வாய்க்கு எட்டிய வரையில் கால் விரல்களைக் கடித்துப் பாதங்களைக் கூழையடித்திருந்தன. சுவரில் விளம்பரம் ஒட்டியது போன்று, பிரித்த கடிதம் ஒன்று அவன் மார்புப்புறத்தில், சட்டையோடு குண்டுசியால் குத்தி விட்டிருந்தது. அதில் அவன் தற்கொலைக்கு காரணத்தை விளக்கியிருந்தான்:
"என் பிணத்தைப் பார்ப்பவர் முக்கியமாய் இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்."
"எனக்கு உலகத்தில் வேண்டாத பேர் வேண்டிய பேர் உண்டு. ஆனால் அவர்கள்மேல் சந்தேகம் வேண்டாம். இது என் காரியமே."
"ஒன்பது வருஷங்களாக எனக்கு வயிற்றுவலி. நான் பண்ணிக்கொள்ளாத வைத்தியம் இல்லை. ஆயினும் குணம் இல்லை. ஒவ்வொரு சமயமும் தொப்புளைச் சுற்றி வலி. திருகுகையில் நான் ஒன்பது சாவுகள் சாகிறேன். அதுவும் ஒரு நாளா, இரண்டு நாளா? ஒன்பது வருஷங்கள்!"
"என் போன்ற ‘கேஸ்கள்’ சாவைத் தேடினால் அது விடுதலையை வேண்டியே ஒழிய, பயங்கொள்ளித்தனத்தால் அல்ல. ஆகையால் நான் இறந்தபிறகு என் ஆவியைத் தேவதூதர்கள் கொண்டு போய் ரக்ஷகரின் சந்நிதானத்தில் நிறுத்தும் சமயத்தில் கன்னிமாதாவும், தேவகுமாரனும் எனக்காக லோக பிதாவிடம் மன்றாட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஆமேன்."
அப்புறம் அதிக நாள் அந்தப் பக்கம் அண்டுவார்கூட இல்லை. எட்ட இருந்து பார்க்கையில் அந்த இடமே, அதன் புதுத் தனிமையாலோ, அல்லது பயங்கரத்தால் சிலிர்த்துக் கொண்டதாலோ, முன்னிலும் பெரியதாய்த் தோன்றிற்று. செவி நுட்பத்தில் கற்பனை படைத்த சிலர், உச்சிவேளையிலும் இரவிலும், அப்பா, அம்மா, வலி பொறுக்க முடியவில்லையே! என்றெல்லாம் குரல்கள், அந்த மடுவிலிருந்து வெளிவருவதாகச் சத்தியம் செய்தனர்.
ஆயினும் காலம் மாற்றாத காரியம் ஏது? நாளடைவில் மடுவிலிருந்து வருவதாகக் கூறப்படும் ஒசைகள், தாமே கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிக் கடைசியில் அற்றுப் போயின. மறுபடியும் ஆள் நடமாட்டம் அங்கே தொடங்கிய பொழுது அந்தப் பள்ளத்தில், முழங்கால் உயரத்துக்கு இலைகளும் சருகுகளும், காற்று அடித்துச் சேர்ந்திருந்த குப்பையும் நிறைந்திருந்தன. அந்தச் சிவப்புக்கல் கூடத் தலை தெரியாமல், அந்தக் குப்பையுள் முழுகிப் போயிற்று.
# # #
"என்னடி இவ்வளவு அவசரமாய் என்னை இங்கே கூட்டிண்டு வந்தே? காரியமெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. இன்னும் கொஞ்ச நேரமாச்சுன்னா, ஆபீசிலிருந்து அவர் வந்துடுவார். நீ கூப்பிட்ட அவசரத்தைப் பார்த்துட்டுக் கையை அப்படியே முன்றானையிலேயே துடைச்சுண்டு வந்துட்டேன். என்ன விசேஷம்? என்னடி, மூஞ்சியெல்லாம் வெளுத்திருக்கு? ஏண்டி அழறே? என்ன, என்ன?"
மற்றவள் விக்கினாள். "எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல்லே. நான் ரெண்டு மாசமா ஸ்நானம் பண்ணல்லே."
"என்ன!"- நெருப்பைத் தொட்டுவிட்டவள்போல் இருந்தது அவள் குரல்.
"என்னைக் கோவிச்சுக்காதே. நான் சொல்றத்தை முழுக்க வாங்கிக்கோ, ஐயோ! நான் என்னடி பண்ணுவேன்! இந்தச் சமயத்தில் நீதான் என் அடைக்கலம். மாபாரமாய் வந்திருக் கறதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும். இன்னிக்கு நேத்திக்கு இல்லை நம்ம சிநேகிதம், ஐயோ! மூஞ்சியைத் திருப்பிக்காதேயேன்."
"அட அசடே, நான் ஒண்ணும் மூஞ்சியைத் திருப்பிக் கல்லே. என்னதான் இருந்தாலும் எனக்குத் தூக்கிவாரிப் போடாதோ? எனக்குக் கைகால் பறக்கறது. மார் படபடக்கறது. சரி, சொல்லு. இது என்ன? எப்படி? யாரு? உன் குடும்பம் ரொம்ப ஒசத்தியாச்சே அம்மா? எப்படி இது நேர்ந்தது உனக்கு?"
"எங்கே ஆரம்பிக்கறதுன்னு தெரியல்லே. ரெண்டு மாசத் துக்கு முன்னாலே பள்ளிக்கூடத்திலேருந்து திரும்பி வந்துண்டு இருந்தேன். கொஞ்சம் முன்னேரத்திலே பள்ளிக்கூடம் விட்டுட்டா. நான் இந்த வழியாகத்தான் போற வழக்கம். ரெயில்வே ஸ்டேஷனுக்கும் ஆத்துக்கும் இது கொஞ்சம் குறுக்கு வழி.
"அன்னிக்குக் கொஞ்சம் வெயில் ஜாஸ்தி. இங்கே வந்ததும் இதோ இதே மரத்தடியில்தான் நிழலுக்கு ஒதுங்கினேன். காற்று சுகமா அடிச்சுது.
"ஒவ்வொருத்தர் கிட்டேயும், வயசு எத்தனையானாலும் ஒரு குழந்தை சேஷ்டை எப்பவுமே ஒளிஞ்சுண்டிருக்கும்னு நினைக்கிறேன். இங்கே இத்தனை சருகுகள் உதிர்ந்திருக்கே, இதைப் பார்த்ததும் என்ன தோணித்தோ தெரியல்லே, அதிலே போய்ப் படுத்துப் புரண்டேன். அதுக்குத் தகுந்தாப்போல என் பளுவடியிலே, அதுவும் மெத்தை மாதிரிதான் மெதுவாய் அமுங்கிற்று.
"ஒரு காஞ்ச இலையைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நரம்புகள் கொடி கொடியாய் ஒடியிருந்தது, கைரேகை மாதிரி. உடனே என் கையைப் பார்த்துண்டேன். புருஷர்களுக்கு வலக்கை, பொம்மனாட்டிகளுக்கு இடக்கையைப் பார்த்துச் சொல்றதாமே?
"இந்தக் கைரேகையைப் பார்த்து, நடந்தது நடக்கப் போகிறது எல்லாம் சொல்லலாமாமே? உடனே என் வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் நெனைச்சுண்டேன். இந்த மனசு போற போக்குத்தான் என்ன!
"நான் இதுவரை என் ஆம்படையானைப்பத்தி அதிகமா நெனச்சதில்லே. அவர் போறப்போ எனக்கென்ன பிரமாத வயசா? அக்ரமம்! அக்ரமம்! ஆனால் வயசாக ஆகத்தானே ஒவ்வொண்ணாத் தோணறது. போனதுதான் போனாரே, ஒரு குழந்தையையாவது அடையாளமா வெச்சிட்டுப் போனாரா? அதுக்குப் பாலூட்டுகையில், அதன்மூலம் அதன் பசியை ஆத்தி, அத்தோடு எனக்கு இருக்கும் எத்தனையோ பசிகளும் ஆறியிருக்கும்.
"இப்போகூடத்தான் கேக்கறேன். என்னைப்போல இருக்கிறவா கதிதான் என்னிக்குமே விடியாக் கதி. இந்த லோகத்தில் இப்பவும் வாழாவெட்டிகள் எத்தனைபேர், உயிரோடிருக்கிற ஆம்படையானை விட்டுப் பிரிஞ்சிருக்கா? பிரிஞ்சிருக்க முடியறது, கலியாணத்துலே நாலுபேருக்கு நடுவிலே பண்ணிக்கொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்துட்டு? அத்தோடு கொண்டவனையும் தூத்திண்டு ஊரிலேயும் எப்படி வளைய வர முடியறது?
"என் மாதிரிப் பேர் மனசைத் திருப்ப, எவ்வளவுதான் படிச்சாலும், பாஸ் பண்ணினாலும், என்னதான் அறிவை வளர்த்தாலும், இந்த உடலும்கூட வளர்றதேடி! இந்த உடல் என்கிறது அவ்வளவு லேசாயிருக்கா? அதுவே நம் கட்டுப்பாட்டுக்கு வந்தபாடில்லே. அதுக்குள்ளே எங்கேயிருக்குன்னு கூடத் தெரியாத இந்த மனசைப்பத்தி நாம் என்ன அறியப் போறோம்!
"திடீர்னு என்னவோ தெரியல்லே; எனக்கு ஒரே அழுகையா வந்துடுத்து. அதுக்குக் காரணங்கூடத் தெரியல்லே. முகத்தைக் கையில் புதைச்சுண்டு விக்கி விக்கி அழுதேன். என்னை திடீர்னு ரெண்டு கை வாரி அணைச்சுது. யார் இன்னு கண்டதும் பஞ்சிலே நெருப்பு வெச்ச மாதிரிதான் ஆயிடுத்து.
"ஐயோ என்னைத் தொடாதேங்கோன்னு ஒரு கத்தல் கூடத் தொண்டையிலேருந்து எழும்பல்லெ. என் துக்கமும் ஒரே வெறியாயிடுத்து. அவ்வளவுதான், தப்பு யார்மேலேன்னு சொல்லுவேன்! யார்மேலேன்னு சொல்வேன்!"
"யார் அந்தப் பாவி, ஆள் ஏமாந்த சமயம் பார்த்துப் பயன் பண்ணிண்ட பாவி-- ஏன் பயப்படறே? அந்த ஆசாமி யார்? உனக்குத் தெரிஞ்சவனாய்த்தான் இருக்கணும். உன் மனசுக்கு ஒப்பியவனாயுந்தான் இருக்கணும். இல்லாட்டா, அவன் உன்னைத் தொட்டவுடனே அப்படி அறிவிழந்திருக்க மாட்டே எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் அநுபோகம் உண்டு. எனக்கு நாலு பெத்திருக்கு, செத்திருக்கு பார் யாரு, சொல்!"
ஆனால் அவள் சிநேகிதி பதில் பேசவில்லை. திக்பிரமை பிடித்தவள்போல் இருந்தாள்.
"சொல்லேண்டி இது விளையாடற சமயமில்லே. வெறுமனே என் தாலிச் சரட்டைத் தொட்டு நெருக்கிண்டிருந்தால் என்ன அர்த்தம்?"
ஆயினும் பதில் வரவேயில்லை. பீரிடும் அழுகையை அடக்கிக் கொண்டு அந்தப் பெண் மற்றவளின் மாங்கல்யத்தைப் பிடித்து, அவள் கண்ணெதிரில் ஆட்டிவிட்டு அவள் மடியில் அப்படியே சாய்ந்தாள்.
"ஆ என்ன!"
அவள் செய்கையின் அர்த்தம், அவள் மனத்தில் விடியும் பயங்கரம். ஏதோ இதுவரை கவனித்துக்கொண்டிருந்த புகைப் படத்திலிருந்து திடீரென்று ஒரு பூதம் திரண்டு உருவாகித் தன்னை விழுங்க வருவது போன்றிருந்தது.
மேட்டுக்கு அந்தண்டை இருவர் பேசிக்கொண்டு போகின்றனர். அவர்கள் பேச்சுவாக்கில் சில வார்த்தைகள் காற்றில் மிதந்து வருகின்றன:
"நல்லது பொல்லாது ரெண்டுக்கும் சாகூவியாய், அந்தக் கடவுள் ஒருத்தன் இருந்துக்கிட்டுத்தானே வாரான்?"
வானத்தில் ஒவ்வொரு சமயம், நீலத்தில் பொன் விளைந்தது: ஒரு சமயம் கறுப்பில் வெள்ளி விளிம்பு கட்டியது. மாலைகளில் சிவப்பில் செம்பு அடித்திருந்தது.
ஒரு நாள் மாலை அங்கு ஒர் ‘அப்பா’ ‘அம்மா’ ‘பாப்பா’ மூவர் உலாவ வந்தனர். அப்பா ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, கையோடு கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவருக்கு இந்த லோக சிந்தனையே இல்லை; புத்தகத்தில் அவ்வளவு சுவாரஸ்யம்.
அத்தனைக்கு அத்தனை ‘அம்மா’வுக்குக் குடும்பத்தைப் பற்றித்தான் சிந்தனை. கைக்கு எட்டிய வரைக்கும் அங்கு ஒரு மரத்தின் இலைகளைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டிருந்தாள். ஏதோ இரண்டு வேளை சாப்பாட்டுக்காவது தைத்துப் போடலாம் அல்லவா?
பாப்பா கொஞ்சம் துடி. குடுகுடுவென்று பள்ளத்தில் ஓடி, அந்தச் சருகு மெத்தையில் தொப்புத் தொப்பென்று குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.
"அம்மா அம்மா! இதைப் பாரேன், இங்கே ஒண்ணு!"
"கம்மா இருடா-"
"இங்கே வாயேன், வான்னா வா-"
அம்மா சலித்துக்கொண்டே போனாள்.
"அட இதென்ன! இங்கே வந்து பாருங்கோன்னா!"
அவள் குரலின் ஆச்சரியம், அப்பாவைத் தட்டி எழுப்பியது. அப்பா சாவகாசமாய்ப் போனார். அந்தச் சருகுக் கூளங்களிலிருந்து ஒரு சிவப்புக் கல்லின் வழுக்கை மண்டை எட்டிப் பார்த்தது. அவருக்கும் விந்தையாய் இருந்தது. அதைச் சுற்றியிருந்த சருகுகளையும் குப்பையையும் கையால் பறித்துத் தள்ளினார். அப்பாவுக்கு ஒத்தாசையாய், குழந்தை காலால் முன்னும் பின்னுமாய்க் குப்பையை உதைத்துத் தள்ள ஆரம்பித்தான்.
"சும்மாயிருடா பயலே, விஷமம் பண்ணாமே!"
பையனா சும்மா இருப்பான்? திடீரென்று வீல் என்று கத்திக்கொண்டு காலைக் கையால் பிடித்துக்கொண்டு துடித்துக் கீழே விழுந்தான். "ஐயோ ராஜா" என்று அம்மா அலறிப் புடைத்துக்கொண்டு குழந்தையை அப்படியே இரு கைகளிலும் வாரினாள். ஆனால் அதற்குள் குழந்தைக்கு மயக்கம் போட்டு விட்டது? -
இலைகளில் சலசலவென ஒரு சப்தம்.
அப்பா திக்பிரமை பிடித்து நின்றார். உதறும் கரங்கள் அவரையும் அறியாமல் கூப்பின.
அவர் குப்பையைப் பறித்து வழி பண்ணின இடத்தில் ஒரு முழ உயரத்திற்கு ஒரு சுயம்புலிங்கம் எழும்பியிருந்தது.
----------------
3. புற்று
ஆனால் சமயபுத்தி ஓடிவிடவில்லை. அவசர அவசரமாய்ச் சட்டைப் பையில் தேடினான். விஷம் "கிர்ரென்று ஏறிக் கொண்டு வந்தது. எப்பொழுதும் கையுடன் இருக்கும் பேனாக் கத்தி இன்று ரயில்வே ஸ்டேஷனில் விட்டிருக்கும் கைப்பெட்டியில் மாட்டிக்கொண்டு விட்டது. உள்ளே நம்பிக்கைச் சுவரில் நாலு கற்கள் இடிந்தன. இருந்தும் கடுமையான சந்தர்ப்பங்களிலே உழன்று பழகியதால், அவ்வளவு சீக்கிரம் தன்னைத் தான் கைவிடத் தோன்றவில்லை. மறுபடியும் பைகளில் தீப்பெட்டியைத் தேடினான். கடித்த விடத்தைச் சுட்டு எரித்து விடலாம் என்று ஒரு எண்ணம். சிகரெட் பெட்டியிலிருந்து சிகரெட்டுகள் அந்தியிருட்டில் வெண்மையாய்ச் சிதறின; தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சிதான் இருந்தது. சபித்துக் கொண்டு இருமுறைகள் கிழித்தான் இரண்டு பொறிகள்தாம் தெறித்தன. சுடர் உடனே குதிக்கவில்லை. மருந்து கிழிப்பதிலேயே உதிர்ந்துவிட்டது. உள்சுவர் தரைமட்டமாய் இடிந்தது. ஒடிப்போய் ஊரையும் பிடிக்க முடியாது; ரயிலடிக்கும் திரும்ப முடியாது. சமதூரத்தில், இரண்டுக்கும் வெகுதூரத்தில் மாட்டிக் கொண்டோம் எனக் கண்டுகொண்டான். விஷம் ஏறிக் கொண்டே வருகிறது.
“எங்கேயிருக்கிறோம்?"- சுற்றுமுற்றும் நோக்கினான்.
"எங்கேயிருக்கிறோம்?"
"எங்கிருந்து வந்தோம்?"
"எதற்காக வந்தோம்?"
"எங்கே போகிறோம்?"
"இனி வரப்போவது என்ன?"
சில சமயங்களில் மனத்தில் ஒரு எண்ணம் எழுந்ததும், சமயமும் சம்பந்தமுமற்று, அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி, தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன.
"எங்கிருந்து வந்தாய்"- திடீரென்று அவனுள்ளிருந்து ஏதோ பிரிந்து, எதிரில் நின்றுகொண்டு, அவன் கேள்வியை அவனையே திருப்பிக் கேட்பதை உணர்ந்தான். உடனே அவனுக்கிஷ்டத்துடனோ, இஷ்டமில்லாமலோ, அக்கேள்விக்குப் பதிலை அவனிடமிருந்து, அது பன்னிப் பன்னிக் கேட்கும் முறையிலேயே கட்டாயப்படுத்திற்று.
"எங்கிருந்து வந்தாய்?"
"புற்று! புற்று! புற்று!"-- ஒரே வார்த்தை அவன் கண்ணெதிரில் மாறிமாறிச் சுற்றி வந்தது. அதன் சப்தம் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது.
"புற்று! புற்று! புற்று! நீ புற்று! நான் புற்று! எல்லாம் புற்று! உலகமே புற்று புற்று, புற்று!" --
"அடே உன்னைப் புத்துக்குப் பால் வாத்துப் பெத்தேண்டா"-- இங்கு அவன் தாயின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டான். -
"அடே என் வயிறு திறந்த வேளை என்ன வேளையடா?"
சின்னப் பையனாயிருக்கையில், துஷ்டப் பையனா யிருக்கையில், கெட்ட சகவாசம் பண்ணிப்பண்ணி ஊர்ச் சண்டையை எல்லாம் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகையில், அவன் தாய் கஷ்டம் தாங்காமல் இப்படிச் சலித்துக் கொள்வாள். இதைக் கேட்டுக் கேட்டு அலுத்து ஒருநாள், "எந்தப் புத்துக்குப் பால் வார்த்தாய், அம்மா?” என்று இடம் கேட்டுத் தெரிந்துகொண்டு-- என்ன ஆச்சரியம்தன்னையே சின்னப் பையனாய், இதே இடத்தில், அதோ மரத்தடியில் ஓங்கி வளர்ந்திருக்கும் புற்றை, அதற்குச் சற்றுத் தொலைவில் மேட்டு நிலத்தில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு சுவாரஸ்யமாய்க் கவனிப்பதைக் கண்ணெதிரில் கண்டான்! கிழிந்த அழுக்குச் சட்டையுடனும், அரை நிஜாருடனும், இடுப்பில் செருகிய கவணுடனும், முழங்கையை நிலத்தில் ஊன்றி, மோவாயைக் கையில் ஊன்றி, புற்றில் என்ன நேரப் போகிறதெனச் சுவாரஸ்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆனால் அவன் என்ன நினைத்தானோ, எதுவும் நேரவில்லை! ஒரே நிசப்தம்தான் நிலவியது. சுற்றுமுற்றும் வயல்களும், ஏரிக்கரை மேட்டில் இருபுறமும் பனை வரிசை களுக்கிடையில் ஒற்றையடிப் பாதையும், களத்துமேட்டில் வைக்கோற் போரும்......
கொஞ்ச நாழிகை காத்திருந்தான்; பிறகு கையும் காலும் சும்மாயிருக்கவில்லை. அதுவும் கையில் கவண் இருக்கையில்: உருண்டைக் கல்லாய் ஒன்று பார்த்துப் பொறுக்கி, குறிபார்த்து லேசாய் அடித்தான். மண் கொஞ்சம் உதிர்ந்தது. உள்ளிருந்து படத்தை விரித்துக்கொண்டு ஒரு தலை எட்டிப் பார்த்தது. கண்களில் சிந்தும் பச்சைக் குரூரத்தையும், அதன் பட்டை தீட்டிய அழகையும், பிளந்த நாக்கையும் கண்டு அதிசயித்து நின்றான். கொஞ்ச நேரம் அவனைச் சிந்தித்துவிட்டுத் தலையை உள்ளுக்கிழுத்துக்கொண்டது. ஆனால் அவன் இயற்கை சேஷ்டை போகவில்லை. இன்னொரு கல்லை விட்டெறிந்தான். சீறிக்கொண்டு அது எழுந்ததுதான் அவனுக்குத் தெரியும்; அங்கு பிடித்த ஓட்டம், வீட்டுக்கு வந்து, கதவைத் தடாலென்று சாத்தித் தாளிட்ட பிறகுதான் நின்றது. உடல் நாய்போல் இரைத்தது. அன்றைக்கு அவனுக்குச் சாதம்கூட வேண்டி யில்லை. துக்கத்தில்கூட உளறினான்.
பிறகு அடிக்கடி அல்லது அப்போதைக்கப்போது, அது அவன் கனவில் வந்துகொண்டிருந்தது. ஒரு சமயம் தவளையைப் பிடித்துக்கொண்டிருக்கும்; அல்லது ஆடிக்கொண்டிருக்கும் அல்லது உடம்பை முறுக்குப் போல் சுற்றிக் கொண்டு, ஒரு முழ உயரத்திற்குத் தலையை மாத்திரம் தூக்கி அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும். ஒவ்வொரு சமயம் அவனுடனேயே படுக்கையில் குளிருக்கடக்கமாய், ஒட்டிக்கொண்டு படுத்திருக்கும். அவன் கண்களிலோ, வாயிலோ முத்தமிட்டு, முகத்தை நக்குவது போலுமிருக்கும். திணறித் திணறி அதனின்று விடுபட முயன்று விழிக்கையில், உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்கும்.
ஆனால் காலை வெயில் உடலில் படவேண்டியதுதான்; மறுபடியும் மனத்தில் தைரியம் பிறந்து, பல்லைக்கூட விளக்காமல் விளையாட ஒடிப்போய்விடுவான். அவனுக்கு வீடு பிடிக்கவில்லை. சுற்றுமுற்றும் இருப்பவரையும் பிடிக்க வில்லை. முக்கியமாய் ஸ்திரீகளைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஒன்று அவனை ஒரே குழந்தையாகவே நடத்தினார்கள்; அல்லது எதற்குமே மதிக்கவில்லை. இப்பொழுது திடீரென ஒரு பழைய சம்பவம் அவன் கண்முன் நின்றது. செத்துக் கொண்டிருக்கையில்கூட, அதை மறுபடியும் மனத்திரையில் பார்க்கையில் சிரிப்பு வந்தது.
தன் வீட்டுக்கு நாலு வீடு தாண்டி ஒரு வீட்டில், அந்த வீட்டுப் பையனுடன் அவன் விளையாடிக்கொண்டிருந்தான். சவுக்காரக்கட்டியைத் தண்ணிரில் கரைத்து, துடைப்பக் குச்சியை அதில் தோய்த்து, மறு துணியில் ஊதி, கொப்புளங்கள் உண்டாக்கிக் களித்துக்கொண்டிருந்தான். அடிக்கடி கிணற் றுக்குப் போய், இன்னும் கொஞ்சம் சோப்பைக் கரைத்துக் கொண்டு திண்ணைக்கு வருவான். அந்தாத்து மாமா திண்ணையில் இன்னும் நான்கு நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்தாத்து மாமி, வாயிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தாள். "ஐயோ என் வைரத்தோட்டைக் காணுமே!"-- மாமி உளறியடித்தாள். "ஐயோ பாவி என்ன பண்ணே?” உடனே கூட்டம் கூடி விட்டது.
"ஸ்னானம் பண்ணறதுக்காகக் கழட்டிக் கிணத்தடியிலே வச்சேன். தலையைத் துவட்டிண்டதும் மாட்டிக்கலாம்னு சமயலறைக்குப் போய்ப் புடவையை மாத்திண்டு வரத்துக் குள்ளேயே மாயமாய்ப் போயிடுத்தே, இதென்னடியம்மா அக்கிரமம்!"
"வாசக்கூட்டி எங்கே?"
"அவ அப்பவே போயிட்டாளே!"-- திடீரென்று அவள் பார்வை அவன்மேல் விழுந்தது. ஒரே பாய்ச்சலாய் அவன் மேல் பாய்ந்தாள். "இந்தக் குருக்களாத்துப் பையன்தான் கிணத்தடிக்குச் சும்மா வந்திண்டிருந்தான்--"
மாமா கண்களில் பொறி பறக்க அவன் பக்கம் திரும்பினார். "அட பயலே! நிஜத்தைச் சொல்லு!"
பையன் திகைத்தே போனான். "எனக்கொண்ணும் தெரியாதே--"
"அவன் இடுப்பு முண்டை அவிழுங்கள்- எங்கேயாவது மறைச்சு வச்சிருப்பான்-" -
"பேசாமெ ரெண்டு புளிய மலாறு கொண்டு வாருங்கள். முற்றத்தில் உலத்தியிருக்கே-- வீறுவீறுன்னு வீறினா, பையன் பேசாமெ தோட்டைக் கக்கறான்-- பாம்பு மாணிக்கத்தைக் கக்கறமாதிரி-" -
இதற்குள் ஒருவர் பிரியமாய், அவனை மடியில் வைத்துக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாய், "சொல்லுடா கண்ணா, எங்கிட்ட மாத்திரம் சொல்- பெப்பர்மிண்டு வாங்கித் தரேன். எங்கே ஒளிச்சு வச்சிருக்கே? உனக்கு என்னத்துக்கு அது? உனக்கு வேறே சாமான் எல்லாம் வாங்கித் தரேன்--"
"எனக்கு ஒண்னுந் தெரியாது- எனக்கு ஒண்ணுந் தெரியாதே-!" முள்ளிலை மாட்டிக்கொண்ட ஆட்டுக் குட்டியின் அபலைக் குரல் மாதிரியிருந்தது அவன் கத்தல். கண்கள் பயத்தால் சுழன்றன.
நகையைக் கெட்டுப் போக்கின மாமி, உடம்பெல்லாம் ஆட்டிக்கொண்டு ஆத்திரத்துடன் அவனிடம் வந்தாள். "ஒண்ணுமே தெரியாதாடா உனக்கு-- குழந்தைக்கு ஒண்ணு தெரியுமோ! வாயில் விரலை வச்சால் கடிக்கத் தெரியுமோ?" என்று சொல்லிக்கொண்டே, அவன் வாயில் விரலை வைத்தாள். அவ்வளவுதான் பையன் ஆத்திரத்துடன் விரலைக் கடித்துவிட்டான். அவனுள் உறங்கியிருந்த ஏதோ ஒரு உணர்ச்சியை அவள் அனாவசியமாய்த் தட்டியெழுப்பிவிடவே, அது உடனே அவனையும் மீறித் தன்னைத் திருப்தி செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டது.
அவன் முதுகில் அறைமேல் அறை விழுகிறது. முகத்தைக் கைகள் பிராண்டுகின்றன. கண் இமைகளில்கூட ஒரு நகம் பதிந்து எரிகின்றது. தலைமயிரை யாரோ பிடித்து உலுக்கு கின்றார்கள். இருந்தும் கடியை விடமாட்டேன் என்றான். வில் வீல் என்று கத்திக்கொண்டு, அவன் வாயில் கொடுத்த விரல் மேல் அவள் அங்கங்கள் முழுவதும் நெளிவதைக் காணக் காண, அவன் உடலில் ஒரு பயங்கர இன்பம் பரவியது.
கடைசியில் மிருக பலத்தில் அவனை அவளிடமிருந்து பிய்த்தெறிந்தார்கள்.
இந்தச் சமயத்தில் அந்த வீட்டு மாமா, தொப்பை குலுங்க, கையில் ஒரு கிண்ணத்துடன் உள்ளிருந்து ஓடி வந்தார். "ஏண்டி சமையலறையில் நெய்க்கிண்ணத்திலே போட்டுட்டு, கிணத்தடியிலே தேடினா அகப்படுமா? உன் சத்தம் தெரிஞ்சு ஒரு தடவை நான் போய்த் தேடினேன். தோட்டை வாங்கினவனுக்குன்னா அதன் கவலை! போட்டுக்கிறவளுக்கு என்ன?"
எல்லோரும் திருதிருவெனத் திருட்டுக்களை சொட்ட ஒருவரையொருவரும், அவனையும் பார்த்து விழித்தனர். குருக்கள் வீட்டுப் பையனாகையால், ஏழைப் பையனாகையால், அவனை இத்தனை அடி அடித்துவிட்டு, இத்தனை சொல் சொல்லிவிட்டு, இப்பொழுது என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்குத் தாங்க முடியவில்லை. திடீரென்று மாமா முகத்தில் கொத்து எச்சிலைக் காறி உமிழ்ந்துவிட்டு, பீறிட்டு வரும் அழுகையுடன் வீட்டுக்கு ஒடியே வந்துவிட்டான். ஆனால் அங்கு மாத்திரம் எந்தக் கை அணைக்கிறது? மானம் போன ஆத்திரத்தில் அம்மா அவனை முதுகில் இரண்டு அறை வைத்து, அறையுள் தள்ளிக் கதவைச் சாத்தினாள்.
சாப்பாடுமில்லாமல், தூக்கமுமில்லாது, செய்யாத குற்றத்திற்குப் பட்ட அவமானத்தில் இரவு முழுவதும் பொருமிப் பொருமி, அவனுள் என்ன நேர்ந்ததோ, அன்று மறுநாள் முதல் மெய்யாகவே திருடத் தலைப்பட்டான்.
ஆத்திரத்துக்காகத் திருட்டு; முதலில் சின்னச் சின்னத் திருட்டு, சிங்காரத் திருட்டு, சாமான்களுக்காகத் திருட்டு, பிறகு திருட்டுக்காகத் திருட்டு, அந்தச் சமயத்து நெஞ்சுப் படபடப்பும், இரத்தம் உடலில் குதித்துப் பாயும் ஆனந்தத்திற்காகவும் திருட்டு!
போகப் போக வெறும் திருட்டுடன் அவன் பழக்கங்கள் நிற்கவில்லை. புதுப்புதுப் பழக்கங்கள்; புதுப்புது இன்பங்கள். இன்பத்தின் புதுமை, புதுமையின் இன்பம். அதுவும் பிறருக்கு இழைக்கும் துன்பத்தின் இன்பம். அவன் செய்கைகளால் பிறர் படும் சங்கடத்தைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அவர்கள் மேல் இருந்த கரிப்பு அதிகரித்துக் கொண்டுதான் போயிற்று. நாளடைவில் அவன் மார்புள் ஏதோ கனமாய் இறங்கி, பிறகு அங்கே கெட்டிப்படுவது போல்கூட அவனுக்குத் தோன்றியது. துளித்துளியாய், படிப்படியாகத்தான்--ஆனால் நிச்சயம்.
அவனை ஒருவராலும் அடக்க முடியவில்லை.
"ஐயோ, நீ எனக்கு ஒரே பிள்ளையடா! உங்கப்பாகூட இப்போ இல்லேடா என் பேரைக் கெடுக்காதேடா நான் கண் மூடுகிற வரையிலுமாவது சரியாய் இரேண்டா-- என்று கண்ணிர் வழிந்தோட, அம்மா மன்றாடுவாள். இருந்து இருந்து, தவங்கிடந்து ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றாலும், பையன் பிறந்த ராசி, குடும்பம் திடீரென க்ஷீண தசையடைந்துவிட்டது. கணவன், திடீரென ஜூரம் அடித்து, நடுத்தர வயதிலேயே காலமானார். இருக்கும்போதே வருவாய் வெகு சொற்பம். இருந்தும், பையனுக்கு வயது வந்ததும் மலையைப் பெயர்த்து விடப் போகிறான் எனும் அபார நம்பிக்கை. அதன் ஒரே தூண்டுதலில் படாத கஷ்டங்கள் எல்லாம் பட்டு, மானத்தையும் அவனையும் காப்பாற்றி வந்தாள். ஆனால் பையன் வழியோ தனி வழியாய்ப் போய்விட்டது. சுவாமி பாடே வேளா வேளைக்கு நைவேத்தியமில்லாமல், தகராறாய்ப் போய் விட்டது. பையன் சோற்று மூட்டையை மரக்கிளையில் எங்கேயாவது தொங்க விட்டுவிட்டு, சஹாக்களுடன் கூத்தடிக்கப் போய்விடுவான். வீட்டில் சாப்பாட்டுக்கு அந்த மூட்டை வந்தாக வேண்டும். தெய்வம் எப்பொழுது கண் திறக்குமோ என்றுகூட இல்லை-- பையனுக்கு வீட்டுப் பக்கம் எப்பொழுது மனந்திரும்புமோ என்று அம்மா, கண்ணில் உயிரை வைத்துக் கொண்டு, காத்துக் கிடப்பாள்.
அப்படியே அவன் இஷ்டப்பட்ட சமயத்தில் வீட்டுக்கு வந்தவனையும், கனிவாகவோ கண்டனமாகவோ ஒரு வார்த்தை கேட்டுவிட முடியுமா? அவன் சீறி விழுகையிலேயே நாடி ஒடுங்கிவிடும். "சுவாமி, நீதான் கண்ணைத் திறக்க வேண்டும்குழந்தையைக் கொடுத்தே- கூட அவனுக்குக் குணத்தைக் கொடு--"
மிடிவாயும், பிள்ளைக் கவலையும் பட்டுப் பட்டு, அவளுக்கு வயதுக்கு மீறிய கிழம் விழுந்துவிட்டது. இதைத் தவிர ஆசாரம், சீலம் எல்லாம் அதிகம். தானாய் நேரும் பட்டினிகள் தவிர, நாள் கிழமையென்று உபவாசம் இருப்பாள்-- எல்லாம் பிள்ளைக்காக பிள்ளைக்கு நல்ல புத்தி வரணும். பிள்ளைக்குக் கல்யாணம் ஆகணும். பிள்ளை குலம் வளரணும்:- ஆனால் அவள் சாமியை வேரோடு பிடுங்கப் பிடுங்க, அது அவள் விஷயத்தில் கடுமையாய்த்தானிருந்தது. தரித்திரம்தான் பிடுங்கியெடுத்தது. அப்பளமிட்டு, இலை தைத்து விற்கும் நிலையிலிருந்து மாறவே முடியவில்லை.
ஆனால் அவள் பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? எதை நம்பிக் கொடுப்பது? குணத்தையா, குடும்ப சம்ரக்ஷணையிலும் கெளரவத்திலும் இருக்கும் பொறுப்பிற்கா, படிப்புக்கா?
பையன் என்னவோ ராஜா மாதிரிதான் இருந்தான். ஒற்றை நாடித் தேகம் நெருப்புச் சிவப்பு நடை, நடையா யிருக்காது; ஏதோ காற்றில் மிதப்பது போலத்தான் இருக்கும். அதன் அழகு அவ்வளவு லாகவம். உடை பாவனைகள் எல்லாம் அப்படித்தான். கோவில் குருக்களாய் இருப்பதால், ‘கிராப்பு’ வைத்துக்கொள்ள முடியவில்லை. மயிரை நீளமாய் வளர்த்து மேல் நோக்கி வாரிவிட்டிருந்தான். கஞ்சிக்கு ‘லாட்டரி’யாயிருந்தாலும் நல்ல உடைதான் உடுத்துவான். கண்களின் ஒளி ஊடுருவும். அவனுடைய கத்திப் பார்வைக்குப் பயந்தே அண்டை வீட்டார் எல்லோரும் தங்கள் பெண்டிரை அடைகாத்து வந்தனர்.
அவன் தெருவழியே போகையில், பெண்கள், வீட்டு ஜன்னல் வழியே ஆசையுடன் திருட்டுப் பார்வை பார்ப்பார்கள். அதுவும் அவனுக்குத் தெரியும் தெரியாததுபோல், ஒரு அலட்சியப் புன்முறுவலுடன், மிதந்துகொண்டே போவான். இத்தனைக்கும் அவன் அவர்களை நாடிச் சுற்றியதில்லை. ஆனால் ஊரில் மற்றக் காலிகளைவிட அவனிடம்தான் பயந்தார்கள். அவனுக்கும் அவன் சஹாக்களுக்குமே வித்தியாச மிருந்தது. அவர்களுக்கே அவனிடம் ஒரு எல்லைக்கு மேல் நடுக்கந்தான். அவனிடம் ஒரு நெருங்க முடியாத தன்மையும், அடிப்படையான குரூரமும் இருந்தன. ஏதோ கத்தியோடு பழகுவது போல்தான்! அதை எவ்வளவு அன்போடு அனைத்தாலும் அதற்கு வெட்டத்தான் முடியும் அதன் இயல்பே அதுதான். அவனுக்கு அவனைப்பற்றியே அநாவசியமாய் இருந்தது. அவன் எதற்கும் தயாராய் இருந்தான். அதனால் அவன் மற்றக் காலிகளைவிட அபாயகரமானவனாய் இருந்தான். கருணை என்பதே அவனிடமில்லை.
அவன் தாயின் வேதனையோ, மற்றவர்கள் வேதனையோ, அவனை பாதித்த மாதிரி தெரியவில்லை. அவளுடைய முறையீடும், மற்றவரின் முறையீடும், ஏதோ பாறையின் மீது மோதும் அலைகளின் வியர்த்தமாய் இருக்கும். அசைந்து கூடக் கொடுக்காத அப்பாறையே போல, அவனுடைய மெளனமும் அச்சத்தை விளைவித்தது. தவறிழைத்தவனின் மெளனமாயிலாது, அது அலட்சியத்தின் மெளனமாயிருந்தது. மார்மேல் கையைக் கட்டிக்கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பான். ஜலத்துள் அமுங்கிய குடம் போல், அவன் தன்னுள் மூழ்கிக் கிடப்பான்.
"என்னடா உன்கிட்டத்தானே சொல்றேன். இப்படிப் பண்ணலாமாடா?" என்று அவன் தாய் எரிந்து விழுந்தால், "ஊம்?- என்னம்மா சொல்றே?" என்று விழித்தெழுவான். அதுவரை என்ன யோசனை பண்ணிக்கொண்டிருந்தான் என்று கேட்டால், அவனுக்கே தெரியாது. முகத்தில் சுளிப்பு என்று இல்லாவிட்டாலும், அதில் சிரிப்பு என்றும் இல்லை.
ஆனால் எந்தப் புற்றுக்குப் பால் வார்த்து அவனைப் பெற்றெடுத்தாளோ, அப்புற்றின் வழி அவன் போகையில், அதைப் பார்க்கையில், எரிமலையின் சுண்டிய கற்குழம்பு தனக்குள் தளைப்பதுபோல் அவனுள் ஏதோ அசைந்து கொடுக்கும். கொஞ்ச நாழியாவது அங்கு நின்று அதைச் சிந்தியாமல் போக முடியவில்லை.
அப்புற்று முன்பைவிட இப்பொழுது மிகவும் வளர்ந்து விட்டது. உயரமும் அதிகம். சிறுசிறு மண் குன்றுத் தொடர்கள் ஓங்கி நின்றன. அவைகள் தாமே வளருந்தன்மைதான் என்ன? அவைகளின் உள் பக்கம் எப்படியிருக்கும்? எதுவரைதான் போகும்? அதன் உள் இருள் எவ்வளவு ஆச்சரியமானதாய் இருக்கும்? அந்த உள் இருளுடன் ஐக்கியமாய்விடின்--!
மண்டையை வெடித்துக்கொண்டு கிளம்ப முயன்றாலும், அதற்குமேல் இடமில்லாததால் யோசனை எட்ட மறுத்துவிடும். பெருமூச்செறிந்து திரும்புவான்.
போகப் போகக் குருக்கள் பையன் சமாசாரம் தாங்கக் கூடியதாயில்லை. திடீரென்று ஒரு நாள் ஒரு கூட்டம் திரண்டு அவன் வீட்டு வாயிலையடைந்தது. ஏக இரைச்சலுடன். அப்பொழுது அவன் வீட்டில் இல்லை. தாய்தான் இருந்தாள். அரவங்கேட்டு, அடுப்பங்கரையிலிருந்து கைச் சாமானோடு ஓடிவந்தாள். குழம்புக்குப் புளியைக் கரைத்துக்கொண்டிருந்தாள். கும்பலைப் பார்த்ததும் வயிற்றில் புளியைக் கரைத்தது. கூட்டத்தின் திரண்ட கோபாவேசத்தில், அவ்விடத்தில் ஆடிய காற்றே விறுவிறுத்தது.
ஆரவாரத்திலிருந்து ஒரு குரல் பிரிந்து வந்தது. அதன் சப்தம் அவள்மேல் மோதியது.
"பெரியம்மா- இனிமேல் உங்கள் பையன் கோவில் படி தாண்டினால், நாங்கள் காலை ஒடித்துப் போட்டு விடுவோம்உங்கள் பையனை நீங்கள் இனி பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு எங்களைக் குறை சொல்ல வேண்டாம்--"
"ஐயோ இப்போ என்ன நடந்துடுத்து?"
கையில் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வாசற் குறட்டில், ஒண்டியாய் அவர்கள் எதிரில் நிற்கையில், அவளைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது.
"உங்கள் பையனும் இன்னும் நாலு சோம்பேறிகளுமாய்ச் சேர்ந்து, நேற்று ராத்திரி, எருவுக்காகக் கழனியில் மடக்கி விட்டிருந்த ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, ஏதோ வெங்காயம், வேர்க்கடலை, பலாக்கொட்டை சுடுவதுபோல், நடுவயலில் குழியை வெட்டி நெருப்பை மூட்டிச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்களாம். இந்த அக்கிரமம் எங்கே அடுக்கும்? பிராமணப் பிள்ளையாய்ப் பிறந்துவிட்டு இந்த மாதிரி பண்ணிப்பிட்டு, கோவிலில் மணியாட்ட வந்துவிட்டால், ஊர் உருப்பட்டுவிடுமா?”
அவளுக்கு உடல் பரபரத்தது. "இன்னிக்கு எனக்காச்சு, அவனுக்காச்சு. நான் கவனிச்சுக்கறேன். நானே உங்களுக்குச் சொல்கிறேன். அவனைக் கோவிலில் சேர்க்காதீர்கள். இன்றையிலிருந்து பூஜைக்கு வேறு ஏற்பாடு பண்ணிக்கொள்ளுங்கள்."
அவன் வீட்டுக்கு வருகையில் அவள் பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கட்டுக்கட்டாய் விபூதியணிந்து, துல்லியமான வெண்மையுடுத்தி, சிவப்பழமாய் மனையில் உட்கார்ந் திருந்தாள். எதிரே, கோலத்தின் மேல் பூஜை சம்புடம் இருந்தது.
"அடே! இங்கே வா-"
அவள் குரல் அவளுக்கே கணீரென்றது. அவன் மெளனமாய் வந்து நின்றான். புருவங்கள் வினாவில் நெரிந்தன. இடமே இருவரின் அந்தர பலத்தின் வேகத்தில் சிலிர்த்தது. இரு குஸ்திக்காரர்கள், தாக்குவதற்குமுன் ஒருவர் பலத்தையொருவர் வெறும் கண்ணோட்டத்திலேயே ஆராய்வதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.
"இப்போ நான் பூஜையில் உட்கார்ந்திண்டிருக்கேன். அதனாலே என் வாயால் சொல்லக்கூட அஞ்சறேன். ஆனால் இன்னிக்கு உன்னைப்பத்தி நான் கேள்விப்பட்டது வாஸ்தவமா?"
அவன் முகம் சஞ்சலிக்கவில்லை; சிந்தனையில் ஆழ்ந்தது. அவனுடைய மெளனத்தால்தான் குழப்பம் உண்டாகியது. தன் மகனாயிருப்பினும் அவனை அறிய முடியாதது அவளுக்குப் பெருந்தோல்வியாயும் ஆத்திரமாயுமிருந்தது.
"நான் எதைக் குறிச்சுக் கேக்கறேன்னு புரியறதா?"
புன்னகை புரிந்தான். "புரியாமல் என்ன?"
"என்ன சொல்றே?"
"உனக்கு என்ன தோன்றுகிறது? இப்பொழுது அவன் தான் பூனை, அவள்தான் எலியாக அவன் திடீரென்று மாற்றியதும், அவள் தன்னை அடக்கிக்கொள்ள செய்யும் முயற்சிகள் எல்லாம் பறந்தன.
"அடே, இந்தச் சங்குப்பாலைக் கையிலே வெச்சுண்டு சொல்றேன்- நீ அழிஞ்சு போயிடுவே- என் வயிறு எரியக் காணாதே--"
அவன் குரலும் பதிலும் அமைதியாய்த்தானிருந்தன—“மற்றவர்கள் என்னை அழிக்கறதைவிட நானா அழிஞ்சு போறது மேல் இல்லையா? அதுவே ஒரு வைராக்கியந்தான், அம்மா-- அதற்கு ஒரு சத்தியமுண்டு-"
அம்மாவுக்கு உச்சி மண்டை இரத்தத்தில் முத்துக் கொதிகள் வந்தன. தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினாள்:
"அழிஞ்சேதான் போயிடுவே. நான்தான் சொல்றேனே."
"இப்போ என்னம்மா வந்துடுத்து? அழிஞ்சால்தான் இப்போ என்ன முழுகிப்போயிடுத்து? ஏன் இப்படி பிரமாதப்--"
"ஹா, பாவி! எண்ண பற்றே?-" அவள் கண்கள் பயங்கரத்தில் அகல விரிந்துவிட்டன. அவள் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அவள் கண்கள் அவன் கையைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்பொழுதுதான் அவனுக்கு என்ன செய்தோம் எனத் தெரிந்தது. பேசிக் கொண்டே பூஜை விளக்கில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.
அவள் தன் வசமிழந்துவிட்டாள். அவள் எதிரில் திடீரென்று திரை கிழிந்து, அவளுக்கு மாத்திரம் தரிசனம் ஆவதுபோல், முகம் மாறியது. கன்னத்தில் ‘பளீர் பளீர்’ என்று அறைந்துகொண்டாள். கண்கள் அமானுஷ்யமான ஒளியுடன் ஜொலித்தன.
"ஹே சுப்பிரமணியா! என்னை மன்னிச்சுடு-- நான் இவனைப் பெத்தேயிருக்கப்படாது! என்னத்தைப் பெத்தேன்னு இப்பொழுதுதான் கண்டேன்! நான் பெரும் பாவத்தைப் பண்ணிட்டேன்-- என்னை மன்னிச்சுக்கோ. மன்னிச்சுக்கோ-"
‘தடா’லென்று அவள் கீழே விழுந்துவிட்டாள்.
அவன் சிரித்துக்கொண்டே புகையை ஊதிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
வீடு திரும்பும் வேளைக்கு அஸ்தமித்துவிட்டது. அவன் வீடே ஊருக்குக் கொஞ்சம் ஒதுக்கு மேட்டு நிலத்தில் இருந்தது. அதில் சாயந்தரம் திண்ணைப் புரையில் ஏற்றி வைக்கும் அகல் விளக்குச் சுடர் தொலைவிலேயே தெரியும். ஆனால் இன்று விளக்கு எரியவில்லை. அதுவே ஒரு ஆச்சரியமாய்த்தானிருந்தது. கிட்ட நெருங்க நெருங்க வீட்டின் தேக்க மெளனம் வாய்விட்டு அலறியது.
வெறுமெனச் சாத்தியிருந்த வாசற்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றதும் இருட்டில் ஏதோ கனமாய் அவன் மேல் உராய்ந்து ஆடியது. காலின் கீழ் ஏதோ தடுக்கியது. பிடரி குறுகுறுத்தது. சட்டென நெருப்புக்குச்சியைக் கிழித்தான்அம்மா ரேழி விட்டத்திலிருந்து கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தாள். காலடியில் ஒரு பித்தளை அடுக்கு உருண்டோடி யிருந்தது.
அப்பொழுதாவது கலங்கியதோ மனம் என அவனையுமறியாமல் தன்னை ஆராய்கையில், அதில் ஏதோ ஒர் எண்ணம் லேசாய் மின்வெட்டுப்போல் பாய்ந்து மறைந்தது.
"சே, இன்னுங் கொஞ்ச நாளிருந்தால் தானாகவே செத்துப்போயிருக்கலாமே!"
அன்றிரவே, அவ்வூர் மண்ணை உள்ளங்காலினின்றும் உதறிக்கொண்டு நடந்தான்.
* * *
"பிறகு எங்கே போனாய்?"
அவனின்றும் பிரிந்த அவனுக்கிடும் தீர்மானமான கேள்விக்குப் பணிவுடன் பதில் சொல்லிக்கொண்டு போனான்.
"போனேன், போய்க்கொண்டேயிருந்தேன். கையிலிருந்த ஒன்று அரைக் காசும் செலவழிந்து போயிற்று. திருடித் தின்னவாவது தோன்றிற்றே தவிர, பிச்சை கேட்க மனம் மானம் பார்த்தது. -
"மூன்று நாள் பட்டினி. கடைசியில் எங்கோ போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, பணங் கொடுக்காமல் நழுவப் பார்க்கையில், கல்லாப் பெட்டியிலிருந்து முதலாளி மலை போன்ற சரீரத்தைத் துக்கிக்கொண்டு எழுந்து வந்து கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டான். பிடி, இரும்புப் பிடியாய் இருந்தது. மரியாதையாய்ப் பணத்தை வெச்சிட்டுப்போ. இல்லாட்டா தின்னத்துக்குக் கூலியாக வேலை செஞ்சிட்டுப் போ. இரண்டு ஈடு உளுந்து இருக்கு, அரைச்சுக் கொடுத்துட்டுப் போ.. என்றான்.
"என்ன செய்வது? அரைத்துக் கொடுத்தேன். பிறகு அப்போதைக்கு வயிற்றுப் பாடு பெரும்பாடாயிருந்ததாலும், அவனுக்கும் ஒரு ஆள் வேண்டியிருந்ததாலும் அங்கேயே அது சாக்கில் வேலைக்கும் தங்கிவிட்டேன்.
"ஆனால் அவனிடம் நான் வகையாய் மாட்டிக் கொண்டேன். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருப்பான். ஆட்களைப் பம்பரமாய்ச் சுழற்றி வேலை வாங்குவான். கடைக்கு மாத்திரம் முதலாளியில்லை அவன்; தொழிலிலேயே அவன் முதல்தான்! அவன் சமையலுக்கும் பட்சணங்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி. இங்கே கலியாணம் அங்கே பிறந்தநாள் இங்கே டீ பார்ட்டி, அங்கே விருந்து என்று எப்பொழுதுமே கிராக்கி, அப்போதெல்லாம், அவனோடு அவன் பரிவாரம்-- அதில் நானும்-- கரண்டி களையும், அண்டாக்களையும் தூக்கிக்கொண்டு போவோம்.
"கோட்டையடுப்பருகில் மணை போட்டு உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணுவான். வேலையெல்லாம் ஆனபிறகு அடுப்பிலிருந்து இறக்கும் சமயத்தில் ஒரோரு பதார்த்தத்திலும் ஒரு கரண்டி எடுத்து மூக்கண்டை கொண்டு போய்-- முகர்ந்துகூட அல்ல-- வெறுமென மூக்கண்டை கொண்டுபோய், பதஞ் சொல்லிச் சரிப்படுத்துவான். மெய்யாகவே அவன் கையில் ஜாலமிருந்தது. அவன் ஒரு சாமானைப் பக்குவம் பண்ணினபிறகு, அதைச் சமைத்தவனே பிரமிக்கும்படி, அதன் மதுரம் அதிகரித்திருக்கும்.
"ஆனால் கோபம் வந்தால் பேய்க்கு வருவது போல் தான்!"
"ஒரு சமயம் ஒரு உத்தியோகதஸ்தன் வீட்டுக்கு வேலைக்குப் போயிருந்தோம். ஏதோ அவனுக்குச் சம்பளமும் வேலையும் உயர்ந்ததற்காக, நண்பர்களுக்கு விருந்தாம்.
"அடுப்பு மிகவும் புகைந்தது என்று அதில் சட்டென ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றியதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நேரே வந்து, சுழற்றி என்னைக் கன்னத்தில் விட்ட அறையின் வேகத்தில் தொலை துரத்தில் தொப்பென்று விழுந்தேன். அறையின் கனம் என்மேல் ஒரு வண்டி செங்கல் சரிந்தாற்போலிருந்தது.
"யார் வீட்டு சொத்துப் போச்சுன்னு பண்ணறே? அடுப்பு எரிய விடறானாம், விடறான்-- மடையன்!"
"பின்னாலிருந்து ‘களுக்’கென்று சிரிப்பு ஒலித்தது. திரும்பிப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரரின் பெண் நின்று கொண்டிருந்தாள். இரட்டைப்பின்னல், உள்பாவாடை தெரியச் சல்லாப் புடைவை, தனி மேலாக்கு, ஸ்னோ, பவுடர், நாகரிகத்தின் மற்றச் சின்னங்களுடன்.
"மனிதன் அழிவதற்குக்கூட அவ்வளவு பயப்படவில்லை. அவமானப்படத்தான் அஞ்சுகிறான். அதுவும் பெண்ணெதிரில், அவமானத்திலும் அடி மயக்கத்திலும் கண்கள் இருண்டன. என் கண் எதிரில், என் ஊரில், வயற்புறத்தில், மரத்தடியில் புற்று எழுந்தது-- என்னுள் ஏதோ சீறி எழுந்தது.
"என்னடா முழிச்சுப் பாக்கறே. சுட்டெரிச்சுடறாப்போல! நல்ல பாம்புப் பார்வை! நீ பாம்பாயிருந்தால், உனக்கு ராஜா மூங்கில் தடி இருக்குன்னு தெரியுமா?"
"வஞ்சம் தீர்த்துக்கொள்ளவேண்டுமென்று அப்பொழுதே தோன்றிவிட்டது. சமையல் வேலை முடிந்துவிட்டது. சாப்பாட்டிற்குக் கொஞ்ச நேரமிருந்தது. காற்று வாங்கவும், குளிக்கவும், உடை மாற்றவும் பரிசாரகர்கள் வெளியே போனார்கள். ஆனால் நான் மாத்திரம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவமானம் தாங்காமல் மனம் புழுங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கேலிச் சிரிப்பு இன்னமும் காதில் ஒலித்தது.
"என்ன பண்ணறே, இருட்டிலே உட்கார்ந்துண்டு? உடுத்திக்கப் போகல்லே?"
"என் முதலாளிதான் கருவேப்பிலைக் கொத்தை அண்டா ரசத்தில் உருவி உதிர்த்துக்கொண்டு, ஏதோ சொன்னான். அவன் குரலில் இப்பொழுது கோபமில்லை.
"எந்தத் தொழிலிலும் ஒண்ணு தெரிஞ்சிக்கனும் தெரியா விட்டால் அதைக் கத்துக்கற வழியைப் பார்க்கணுமே தவிர, ஏமாத்தற வித்தை கூடாது. இன்னொண்ணு என்னன்னா, பண்ணின தவறுக்கு தண்டனையடைஞ்சப்புறம் அத்தோடு அது போச்சு. அப்புறம் மேல் காரியத்தை ஒட்டணும். நீ மாத்திரம் இந்தத் திருட்டு புத்தியையெல்லாம் விட்டுட்டுத் திருந்தறதாயிருந்தால், உன்னை நான் ‘கல்லாப்’ பெட்டியில் உட்கார்த்தி வைப்பேன்- என் பெண்ணைக்கூடக் கொடுப்பேன்- போ, போ- சொக்காயையும் வேஷ்டியையும் மாத்திண்டு கோகர்ணத்தை எடு--"
"அவன் எப்பொழுதும் இப்படிப் பேசியதேயில்லை. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவசர அவசரமாய் அங்கு விட்டுப் போனேன்.
"எனக்கு சமைக்க சரியாய்த் தெரியாவிட்டாலும், பரிமாற என் எஜமான் என்னை நன்றாய்ப் பழக்கியிருந்தான். ஏனெனில், நான் உருவாயிருப்பதாலும், சரியாய் உடுத்துவதாலும், பந்திக்கு எடுப்பாய் இருப்பேன். ஆகையால் அவன் பேருக்கும் எடுப்பாயிருந்தது. முக்கியமான சாமான்களைத் தூக்குவதற்கு நான்தான் முதலில் போயாக வேண்டும். மற்றவர்கள் இதைப்பற்றி அவனிடத்தில் அலுத்துக்கொண்டால், ‘அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது வியாபார சூட்சுமம். சரக்கு பாதி ஆள் பாதி- இது ரெண்டும் சேர்ந்தால்தான் முக்கியமாய் இந்தச் சமையல் தொழிலுக்கு ரஞ்சகம். இல்லாவிட்டால் இவன் சமையல் லட்சணத்துக்கும் கை வாசனைக்குமா இவனைக் கட்டிண்டு அழறேன்?’ என்பான்.
"ஆகவே நான் சாம்பார் எடுத்தேன், கூட்டெடுத்தேன், கறி எடுத்தேன், ரஸம் எடுத்தேன்."
"பந்தியில் அவளும் உட்கார்ந்திருந்தாள். அவள் இலைக்கு நான் வரும்போதெல்லாம் என்னைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டே சிரித்துக்கொண்டிருப்பாள். எனக்கு எரிச்சலா யிருந்தது. ‘இரு இரு மகளே’-- என்று கருவிக்கொண்டே பாதாம்கீரை எடுத்தேன்.
"ஒவ்வொருவருக்கும் ஊற்றிக்கொண்டு வருகையில் அவர்கள் கையில் வைத்ததும் அவரவர் முகங்கள் விதவிதமாய் ஆச்சரியமும், அசடும் வழிய தூக்கிவாரிப் போட்டாற் போல் சவுங்கி, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சவுங்குவதைக் காண்கையில் உள்ளுற ஆனந்தம் பொங்கியது.
"ஒ Damm! இதென்ன பாயசம் உப்புக் கரிக்கிறது--‘ என்று வீட்டு எஜமான் கத்தினார். நேரே என் பார்வை, பின்னால் கை கட்டிக்கொண்டு பந்தி நடுவில் நின்றுகொண்டு மேற் பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் என் முதலாளிமேல் பாய்ந்தது. நான் அவனைப் பார்த்ததை அவள் பார்த்து விட்டாள். ‘பக்’கென்று அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்து விட்டாள். என் முதலாளி திகைத்து நின்றான்.
"சிரிப்பு என்ன வேண்டியிருக்கு-- பார்ட்டி குட்டிச் சுவராப் போச்சே-- சமையல்காரன் யார்?" என்று அவள் தகப்பனார் கர்ஜித்தார்.
"இதில் ஒரு நீதியிருக்கு, PaPa! ஒரு கரண்டி எண்ணெய் ஒரு படி உப்பில் கொண்டுபோய் விட்டுவிடும்-"
"இது என்ன புதிர்?"
அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "இல்லை; இது எனக்கும் இங்கே இன்னும் ரெண்டுபேருக்கும் தான் புரியும்-- அது ஒரு பெரிய தமாஷ்!" என்றாள்.
அவள் வார்த்தைகளின் அர்த்தம் என் எஜமான் மண்டையில் ஊறுகையில் அவன் முகம் மாவாய்ப் பிசைந்தது. ஒசைப்படாமல் நழுவினேன். எங்கள் விடுதிக்கு ஒடினேன். மறு சொக்காயையும் வேஷ்டியையும் அவசர அவசரமாய்க் கைப்பையில் திணித்தேன். அவன் கண்ணில் படுமுன் கிளம்பியாக வேண்டும்! பையைத் துக்கிக்கொண்டு திரும்புகையில் வாசற்படியில் நிழல் தட்டியது. அவள் நின்றுகொண்டிருந்தாள்!
"ஓ!"
-- நான் பின்னடைந்தேன். என்னை நோக்கி இரண்டடி வைத்தாள்:"
"எங்கே அவ்வளவு அவசரம்?"- அவள் வாயின் வார்ப்பே சிரிப்பா?
"வேடிக்கையை மெளனமாய் அநுபவிக்க முடியாமல், நீதான் புத்திசாலி மாதிரி, அர்த்தத்தையும் விளக்கிவிட்டதால் நான் மறுபடியும் என் எஜமானிடம் வேலை பார்க்க முடியாதபடிப் பண்ணிவிட்டாய். உன்னாலான உபகாரம்-"
"இதானே? என் வீட்டுக்கு ஒரு ஆள் தேவையாயிருக்கிறது. அப்பாகிட்டே சொல்லி உன்னை வைக்கச் சொல்லுகிறேன். ஒடிப்போய் விடாதே. இருந்தாலும் நீ பண்ணின வேலையை நினைக்க நினைக்கச் சிரிப்பு தாங்க முடியவில்லைஅடேயப்பா என்ன நெஞ்சுக் கனம் உனக்கு!--"
என் பையைப் பிடுங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே போனாள்.
நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். ஆனால் நான் அங்கு இல்லை. வயற்புறத்தில், மரத்தடியில், புற்றெதிரில் நின்று கொண்டிருந்தேன். புற்று நாகம் சட்டையுரித்துக் கொண்டிருந்தது. மினுமினுக்கும் புத்துடம்புடன் பழஞ்சட்டையினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
# # #
அங்கு நான் கொஞ்சநாள் வேலை பார்த்தேன். வேலை யொன்றும் கிடையாது. செலவுக்கு மீறிய காசு கையில் இருந்ததும், செல்லப் பெண்ணும்தான் என்னை வேலையில் வைத்துக்கொண்ட காரணமேயன்றி, வேலைக்காக என்றல்ல. சுகமாய்க் காலத்தைக் கழித்தேன். நிறைய அவகாசமிருந்தது. என் இஷ்டப்படி வெளியில் சுற்றினேன்.
ஒரு தடவை தெருவில் போய்க்கொண்டிருக்கையில் என் மேலேயே ஏறிவிடுவதுபோல் என் பின்னால் ஒரு கார் வந்து "சடக் கென்று நின்றது. அவள் மாத்திரம் உட்கார்ந்து கொண் டிருந்தாள், சிரித்தவண்ணம். அவள்தான் ஒட்டிக்கொண் டிருந்தாள். அவள் மேலிருந்து வீசும் வாசனையில் எனக்கு மயக்கம்கூட உண்டாயிற்று. பென்ஸிலால் வெகு ஜாக்கிரதை யாகத் தீட்டியிருந்த புருவங்கள் வெகு ஒழுங்காய் வளைந் திருந்தன. உதடுகள் முகத்தில் முளைத்த இரத்தப் பூவாய்த்தானிருந்தன.
"ஏறி உட்கார்- பின்னால் இல்லை; இங்கே--கிட்ட!"
முழு வேகத்தில் பறந்தோம். கடைகளும், வீடுகளும் தூரத்தில் பங்களாக்களும், பிறகு வெறும் மரங்களும் வரிசை வரிசையாய் எங்கள் இருமருங்கிலும் பறந்தன. அந்தி சூரியன் வானத்தை இரத்த விளாறாக்கிக்கொண்டிருந்தான். அதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சுற்று முற்றும் நோக்குகையில் நாங்கள் கடற்கரையில் ஒரு ஒதுக்கிடத்துக்கு வந்திருந்தோம்.
‘சட்’டெனக் காரை நிறுத்தினாள். அப்படியே சற்று நேரம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள் புன்சிரிப்புடன்.
"உம்-- நீ நன்றாய்த்தானிருக்கிறாய்- இந்தச் சந்தனக் கலர் ஜிப்பா உனக்கு ஒத்துத்தானிருக்கிறது--"
எவ்வளவு உண்மையாயிருந்தாலும்கூட நேர்ப் புகழ்ச்சி, லஜ்ஜையைத்தான் உண்டாக்குகிறது. அதுவும் இம்மாதிரிப் புகழ்ச்சியால் அருவருப்புத்தான் தட்டுகிறது. நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே-“நேரமாய்விட்டாப்போலிருக்கிறதே,
திரும்பலாமா?--“ என்று கேட்டேன்.
சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே, ‘இப்பத்தானே வந்தோம் என்ன அவசரம்? இந்த இடம் ஜோராயில்லே?’ என்று கேட்டுக்கொண்டே என்மேல் சாய்ந்தாள். அவள் குரல் வெறும் மூச்சாகவே ஒடுங்கிப் போயிற்று. உடுக்கு அடித்து ஆவேசத்தை வரவழைத்துக் கொள்பவன்போல இமைகள் அரைக்கண் மூடி விழிகளின் ஒளிமங்கிப் படலம் படர்ந்தது.
"ஒஹோ!"
நெட்டிபோல் கனமில்லாமல்தானிருந்தாள். கழுத்தில் இரட்டைவடச் சங்கிலிகள் இரண்டும், ஒரு வைரச் சங்கிலியும் மின்னின. ஒவ்வொரு கையிலும் இரண்டு ஜோடி தங்க வளையல்கள். அவைகளைத் தொட்டுக்கொண்டே நான் ‘ஏது, கையின் அளவைவிடப் பெரிதாயிருக்கிறதே!’ என்றேன்.
சிரித்துக்கொண்டே ‘அதுதான் இப்பொழுது பாஷன்’ என்றாள் அவள். நான் அவள் பார்வையைச் சந்திக்காமலே, ‘உனக்கும் எனக்கும் அந்தஸ்தில் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியுமோ?--‘ என்றேன்.
"இருந்தால் என்ன?"
"அப்படியானால் உன் தகப்பனார் இப்படி உன்னையும் என்னையும் பார்க்கச் சம்மதிப்பாரா?"
"அதைப்பற்றி இப்போ என்ன?"
"அவ்வளவு லேசாய் ஒதுக்கிவிடற விஷயமா?"
"வங்கி வங்கியாய்க் கத்தரித்திருக்கும் நெற்றி மயிரை லேசாய் ஒதுக்கிக்கொண்டு, எங்கேயோ பார்த்துக்கொண்டு ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு. நாளைய கவலை நாளை’ என்றாள்.
"இல்லை. விளையாடும் சமயத்தில் விளையாட்டு: வினையாயிருக்கும் சமயத்தில் வினை--"
"என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?
"என்னுடன் வந்துவிடு-"
தன் மூக்கில் விரலை வைத்தாள், கேலி ஆச்சரியத்துடன், ‘ஏது, உன் நெஞ்சுத் துணிச்சல் என்னைக்கூடத் திக்குமுக்காடச் செய்கிறது—‘ என்றாள்.
"ஏன் நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உன்னை வெறுமெனச் சோதித்துப் பார்த்தேன். உன் அந்தஸ்துக்கு ஒருநாளும் நான் குறைந்தவனல்ல. நீ நினைத்துக்கொண் டிருக்கிற மாதிரி நான் ஒன்றும் அன்னக் காவடி இல்லை. என் அண்ணன் ஜமீன்தார். நான் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். கோபம் தணிந்ததும் என் இடத்துக்கு நான் போக வேண்டியதுதானே!-"
"ஓஹோ’! அதற்குமேல் பேச அவளுக்கு நா எழவில்லை.
"எங்கள் மேல் இருள் இறங்க ஆரம்பித்தது."
# # #
"அன்றிரவு நாங்கள் இருவரும், ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் போய்க் கொண்டிருந்தோம். தொலைதூரத்துக்கு டிக்கட் வாங்கிவிட்டேன்.
நான் வெகு நாழிகை எழுதிக்கொண்டிருந்தேன். தூக்கக் கலக்கத்துடன் கைகளை முறித்துக்கொண்டு என்னிடம் அவள் வந்தாள்.
‘என்ன எழுதுகிறாய்?’ என்றாள்.
‘உன் தகப்பனாருக்குக் கடிதம்-‘ என்றேன்.
அவள் திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்கிவிட்டாள். படுக்கையில் உறுத்துமென்றும், பொது ஜாக்கிரதைக்காகவும் நகைகளைக் கழற்றிப் பெட்டியில் வைத்துவிட்டாள். பெட்டிச் சாவி என்னிடமிருந்தது.
"கடிதத்தை முடித்ததும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். எனக்கு ஒரு பிரதி வைத்துக்கொள்ளாமல் போனேனே என்று கூடத் தோன்றியது. அவ்வளவு நன்றாய் அமைந்திருந்தது--"
-- "என்ன எழுதியிருந்தாய்?” என்று அவனின்றும் பிரிந்த அது கேட்டது.
"அது எப்பவோ நடந்தது; இப்பொழுது கேட்டால் எப்படித் தெரியும்?" என விசித்தான்.
"இல்லை. இப்பொழுதுதான் உனக்குத் தெரியாத தெல்லாம் தெரியும்-- புரியாததெல்லாம் புரியும். சொல்; உனக்கு வரும் வரும் பார்--
அது சொல்லியதுபோலவே அவன் படிக்கப் படிக்க, நெருப்பில் எழுதியதுபோல் எழுத்துக்கள் படர்ந்துகொண்டே போயின!
"அநேக ஆசீர்வாதம்; அல்லது நமஸ்காரம்-- அல்லது கடிதத்தை ஆரம்பிக்க எதுவோ, அது.
"நீ எவ்வளவு சாமர்த்தியசாலியாயிருப்பினும், எப்படியும் நீ என்னைவிட மூத்தவள்தான் என்று தோன்றுகிறது. உன் வயதை மறைக்க நீ படும் பாடும், நிரந்தர இளமையாக நீயே உனக்குத் தோன்றுவதற்காக, உன்னையே நீ ஏமாற்றிக் கொள்வதற்காக தனியாக நடையுடை பாவனைகளையும், திரிசங்கு சுவர்க்கத்தையும் நீ சிருஷ்டித்துக் கொள்வதிலிருந்து நீ உனக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உனக்கே தெரியும். அதில் உன்னுடைய செளகரியத்திற்காக எனக்குக் கொடுத் திருக்கும் அல்லது கொடுக்கப் பார்க்கும் வேஷமும் எனக்குத் தெரிகிறது.
மிருகங்கள் பசி வேளைக்கும், தற்காப்புக்கும்தான் ஒன்றை யொன்று அழித்துக் கொள்கின்றன. மற்றப் பொழுதில் ஒன்றை யொன்று, வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் குணம் அவைகளுக்குக் கிடையாது. இந்தக் கெட்ட குணம் மனித ஜன்மத்துக்குத்தான் இருக்கிறது. மன்னிக்க முடியாத குணம்.
"அன்றைக்குச் சமையலறையில் அடிபட்டு விழுந்திருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்த பொழுதே நீ என்னை ஒரு புது பொம்மையாகக் கருதினாய் என்று கண்டுகொண்டேன். உடனே அந்த பொம்மை வேண்டுமென்று ஆசைப்பட்டாய், வாங்கவும் வாங்கினாய். உடனே அதையுடைத்து அதில் என்ன வேலைப்பாடுகள் இருக்கின்றன என்று ஆராய வேண்டும் என்றுகூட உனக்குத் தோன்றிவிட்டது. எல்லாமே உனக்கு விளையாட்டுத்தான்! இந்த பொம்மை உடைந்துபோனால் இன்னொரு பொம்மை .....
"விளையாட்டு பொம்மையாக எந்த ஆணும் மனமாறச் சம்மதியான். இதைவிடப் பெருந்தீங்கு பெண்கள் ஆண்களுக்கு இழைக்க முடியாது. கடைசியில் அது தங்களுக்கே இழைத்துக் கொள்ளும் தீங்காய்த்தான் முடிகிறது. நீ என்னுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் என்னைக் கருவியாய் உபயோகப்படுத்த நான் சம்மதியேன். என்னுள் ஏதோ ஒன்று அம்மாதிரி உடன்பட மறுக்கிறது. என் இயல்பிலேயே அது இல்லை. நானாக அழிந்தாலும் அழிவேனே தவிர, என்னைப் பிறர் அழிக்கவிடேன். எனக்கும் நீங்களெல்லாம் இல்லாத வேளையிலும் இருக்கும் வேளையிலும் கூப்பிடும் தெய்வத்துக்கும் கூட இதுதான் தகராறு: நாம் எல்லாம் தெய்வத்தின் கருவிகள் என்கிறார்கள். அதுதான் எனக்கு ஒப்பமாட்டேன் என்கிறது. தெய்வமேயானாலும் சரி, நல்லதற்கேயானாலும் சரி, அதுகூட என்னைக் கருவியாக்க என் மனம் இடங்கொடுக்க மாட்டேன் என்கிறது. நான் அதன் வழிக்குப் போகவில்லை; அதுவும் என் வழிக்கு வரவேண்டாம் என்பதுதான் என் சித்தாந்தம்."
"வாழ்க்கையே விளையாட்டு’ என்று எந்தச் சினிமா சம்பாஷணையையோ என்னிடம் உபயோகித்தாய் அல்லவா? சரி, இந்த விளையாட்டை இப்பொழுது கேள்.
"உன் நகைகள் எல்லாம் என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. டிக்கட்டுகளும் என்னிடமிருக்கின்றன! உன்னிடம் உன் அரைப்புடைவையைத் தவிர வேறு எதுவும் நான் வைக்கப்போவதில்லை. நீ திரும்பி விடுதான் போய்ச் சேருவாயோ, எங்கேதான் போவாயோ, எப்படித்தான் போவாயோ, அதில்தான் விளையாட்டு இருக்கிறது! இந்த விளையாட்டு உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் நீ இதிலிருந்து ஒன்றுதானே தெரிந்துகொள்வாய்! எந்த பொம்மையையும் அநாவசியமாய் உடைத்துப் பார்க்காதே. தவிட்டு பொம்மை என்று நீ நினைத்துக்கொண்டிருந்தாலும், நீயறியாத எஃகுச் சுருள்கள் அதனுள் இருந்து, நீ வகை தெரியாமல் சுழற்றுகையில் குதித்து உன் முகத்தில் அடித்து விடும்--"
கடிதத்தை மடித்து அவள் கண்ணும் கையும் உடனே படும் இடத்தில் வைத்தேன். நகைகளையும் பணப் பையையும் எடுத்துக்கொண்டு, பாக்கி சாமான்களை ஜன்னல் வழி வீசி எறிந்தேன். கை வளையல்கள் கழற்றச் சுலபமாய் வந்தன. வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. எட்டிப் பார்த்தேன். ஏதோ ஒரு சின்ன ஸ்டேஷனின் விளக்கு இரவில் மினுக்கியது. ஒருமுறை அவளிடம் சென்று முகத்தைக் குனிந்து பார்த்தேன்.
ஆழ்ந்த துக்கத்திலிருந்தாள். வாயோரத்தில் கொஞ்சம் எச்சில்கூட வழிந்திருந்தது. மேல் உதட்டோரத்தில் ஒரு மரு இருந்தது. மேல்பூச்சுக்களால் தெரியாமல் அவள் மறைத்திருந்த சாமர்த்தியத்தை அந்தச் சமயத்தில்கூட வியக்காமல் இருக்க முடியவில்லை. வண்டியிலிருந்து குதித்துவிட்டேன்.
"பிறகு அவள் எப்படியானாள் என்று எனக்குத் தெரியாது. அத்துடன் அவளை மறந்துபோனேன்."
# # #
"பிறகு என்ன நடந்தது?" என்று அவனின்று பிரிந்த அது கேட்டது. மார்பைப் ‘பக் பக்’கென்று அடைக்க ஆரம்பித்து விட்டது. இடுப்பு வரை உடல் செத்துவிட்டது அவனுக்கே தெரிந்தது. .
"பிறகு எங்கே போனாய்? சுருக்கச் சொல். உனக்கு நேரமில்லை- சுருக்கச் சொல்--" .
"எங்கெங்கோ போனேன். என்னென்னவோ செய்தேன்; கடலையும் தாண்டினேன். எத்தனையோ பேர் எத்தனையோ விதமாய் என்னை ஏமாற்றினார்கள். அவர்களை பதிலுக்குப் பதில் அதைவிடக் கடுமையாக ஏமாற்றினேன்.
"ஒரு சமயம் ஒருவனுடன் கூட்டு வியாபாரம் செய்ய நேர்ந்தது. எனக்கு அரை ரூபாய்க்குக் கணக்கு ஏமாற்றினான். ஆத்திரத்தில் கடையையே இரவில் பற்றவைத்துவிட்டுப் போய் விட்டேன். காரிய நஷ்டத்தைவிட எண்ணத்தின் துரோகம்தான் தாங்கமாட்டேன் என்கிறது.
"ஆனால் எங்கு சென்றால் என்ன! தனிமை என்பது தனியாய்த்தானிருக்கிறது. நாளடைவில் கருமேகம் திரளுவது போல் திரண்டு பின்னாலேயே வந்து குரல்வளையைப் பிடித்துவிடுகிறது. மனிதன் தனது காரியங்களைச் செய்யும்படி அவனை இயக்கும் சக்திக்கு அலுப்பு இல்லாவிட்டாலும் காரியங்கள் அலுத்துவிடுகின்றன. அந்தச் சமயத்தில்தான் உலகம் எவ்வளவு பெரிதாயிருந்தபோதிலும், தனிமையின் சுவர்கள் நான்கு புறங்களிலும் முளைத்துத் திமிர்த்து நின்று, ஆள் திரும்பக்கூட இடம் இல்லாதபடி நெருக்குகின்றன. வாழ்க்கையை விட்டு எட்டி நின்றாலும் குமட்டுகின்றது. அத்துடன் இழைந்தாலும் குமட்டுகின்றது. அதில்தான் அதன் எதிர்பாராத தன்மையிருக்கிறது.
"பரமபத படத்தில் ஏணிகளிலெல்லாம் ஏறிவிட்டு, பெரிய பாம்பில் மாட்டிக்கொண்டு திடீரென்று அடிக்கட்டத்திற்கு வந்துவிட்டாற்போல் ஆகிவிட்டது. பழைய பாடங்களைத் திருப்புவதுபோல் சென்றுபோன நாட்களும், சம்பவங்களும் நான் சிந்திக்க நேராத சமயங்களில்கூடத் திரும்பத் திரும்ப நினைவில் முளைக்க ஆரம்பிக்கின்றன. நான் என்னுள் கலகலக்க ஆரம்பித்துவிட்டேன்.
‘திடீர் திடீர்’ என்று என் தாய் விட்டத்திலிருந்து தொங்கும் காட்சி என் கனவில் தோன்றித் தோன்றி மறைந்தது. என் சின்ன வயது விளையாட்டுகள், அடக்குவாரின்றித் திரிந்த அநுபவங்கள். பிறகு அப்புற்று--"
"ஆ!"
"இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. பாம்பு எல்லா வற்றையும் விழுங்கிவிட்டு, பிறகு தன் வாலைத் தானே கவ்விக் கொண்டு, தன்னையே விழுங்கப் பார்த்ததுபோல் நான் என்னையே விழுங்க ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்."
"சொல், சொல், உன் கேள்விகளுக்கு நீயே பதில் கண்டுபிடி"
"ஒன்றுமே செய்யாமலிருத்தலின் பிரதிக்கிரியையும், எல்லாம் செய்தாலும் அக்காரியத்தின் பிரதிக்கிரியையின் பிரதிக்கிரியையும் கடைசியில் அதில்தான் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. பரமபத படத்தின் பெரிய பாம்பு. ஆகவே நான் ஊர் திரும்பினேன்."
"எதற்கு?" என்று அது கேட்டது.
புற்றைப் பார்க்க--"
"பிறகு.?-- தயங்காதே; நீ என்னிடம் மறைக்க முடியாது. உன்னை அறியாமல் உன்னுள்ளே நான் இருக்கிறேன். உன் காரியங்கள் அனைத்தையும் நான் கவனிக்கிறேன். உன் தூக்கத்தில் உன் நினைவு அற்று, நீ அசையும் ஒரு சிறு அசைவு முதல் என்னை ஊடுருவித்தான் செல்கிறது. ஆகையால் நீ இன்னும் எதற்காக வந்தாய் என்று சொல். நான் அடியெடுத்துக் கொடுக்கக் காத்திருக்க வேண்டாம்."
"ஊரில் ஒருத்தியி-ரு-ந்-தா-ள்- என்று மனமில்லாமல் மனம் முனகியது.
"ஆ! அப்படி வா வழிக்கு--"
விஷம் தொண்டை வரையில் ஏறிவிட்டதால், வார்த்தைகளும் மூச்சும் தங்கித் தங்கி வந்தன. ஆனால் அசுரத் தன்மையான திடத்துடன் நினைவை யிருத்திக்கொண்டான்.
"என் வீட்டுக்கெதிர் வீடுதான். என்னுடனே விளையாடி, என்னுடனே வளர்ந்தவள். கறுப்புத்தான். ஆனால் களை, வயதுக்கு மீறிய வளர்ச்சி ரொம்பத் துடி- ஆனால் வயது ஆக ஆக, எங்களிருவரிடையேயிருக்கும் பழக்கமும் குறைந்து, கடைசியில் அற்றும் போயிற்று. நானும் ஊருக்குப் பொல்லாதவனாய் விடவே- ஊர்ப் பெண்கள் அத்தனை பேரும் என்னைப் பொறுத்தவரையில், முகமூடிகள் ஆகி விட்டார்கள்.
"ஆனால் சில சமயங்களில் அவள் ஜன்னலிலிருந்து என்னைப் பார்ப்பாள். கண்களின் பேச்சை எப்படி விஸ்தரிப்பது!
"ஒருநாள், நான் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். குளக்கரையில் ஒரு அரசமரம். அதன் அடியில் ஒரு நாகப் பிரதிஷ்டை அவள் அதைச் சுற்றிக்கொண்டிருந்தாள். அங்கு ஒருவருமில்லை. அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.
"எனக்கு என்ன தோன்றிற்றோ, தெரியவில்லை. அப் பொழுது வெறும் வேடிக்கை எண்ணம்தான் என்று நினைக்கிறேன். இரண்டு தாவில் கரையேறி, அவள் எதிரில் போய் வழியை மறித்துக்கொண்டு நின்றேன். இடுப்பில் ஈரமுண்டு; புடைத்த மாரிலும் புஜங்களிலும் ஜலம் துளித்து நின்றது.
"தூக்கி வாரிப்போட்டாலும், யார் என்று கண்டதும் முகம் மலர்ந்தது. ஆனால் உடனே அடக்கிக்கொண்டு விட்டாள்."
"செளக்கியமா?" என்றேன்.
"செளக்கியந்தான். வழியை விடறையா?" என்றாள்.
"இத்தனை நாள் கழிச்சு இப்பத்தான் பார்க்கிறோம். அதற்குள் ஒடனுமா?"
"எனக்கு நேரமாச்சு: ஆத்தில் தேடுவாள்-"
"நான் சிரித்துக்கொண்டே அவள் கையை உரமாய்ப் பிடித்தேன். அவள் உடல் ‘வெடவெட’ வென உதறிற்று--ஆனால் பயத்தாலா? பிடித்த கையின் விரல்கள், பாதாளக் கொலுசின் கொக்கிகள்போல் வளைந்தன-- ஆனால் பயத்தாலா? பிரதிஷ்டையிலிருந்து நாகம் என் கையையும் என் பிடியில் அவள் கையையும் பார்த்துக்கொண்டிருந்தது."
"உஷ்- என்னை விட்டுடுடா- விட்டுடுடா-"
"நான் சிரித்தேன். உன்னை என்ன, கடிச்சு முழுங்கிடுவேனா? ஆமாம், முழுங்கிவிடப் போகிறேன்!" என்றேன்.
"ஐயோ! என் பேரைக் கெடுக்காதேடா! என் குடியை அழிக்காதேடா-‘ என்று உளறிக்கொண்டே, திமிறிக்கொண்டு ஒடினாள். கொஞ்சதுரம் போய்த் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் பயந்தான்; வெறுப்பு இல்லை. என் சிரிப்பு எதிரொலித்தது. மறுபடியும் ஓடினாள். அவள் ஒடுவது வெகு அழகாயிருந்தது. அதற்கப்புறம் அவள் வழிக்கு நான் போக வில்லை. ஆனால் அவள் தீர்மானமாய் என்னை ஒதுக்கினாள். அவள் மனத்தில் இடம் கொடுத்துவிட்டாள் என்றாலும், அதற்குமேல் அவளுக்கு பயம்!
"பக்கத்தூரில் ஒரு பையனுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்து, அவள் புக்ககம் போய்விட்டாள். பிறந்த வீடு கிட்ட இருப்பதால் அடிக்கடி வந்து போவாள். நான் ஊரைவிட்டுப் போவதற்குமுன் ஒரு குழந்தையைக் கூடப் பெற்றெடுத்து விட்டாள். அவள் மணவாழ்க்கை மிகச் சந்தோஷமாயிருந்தது என்று அவள் உடற் பொலிவிலும், முக மலர்ச்சியிலும் தெரிந்தது.
"இப்பொழுது திடீரென்று அவள் நினைவு வந்தது. எல்லாவற்றையும் விழுங்கியபிறகு அவள் ஒரு எட்டாப்பழமாய் எனக்குத் தோன்றினாள். உடனே அதைப் பறித்து ஆக வேண்டும் எனக்கு. அதனால் இங்கு வந்தேன்."
"எப்படிப் பறிப்பதாய் உன் எண்ணம்?"
"அதை இப்பொழுது எப்படிச் சொல்ல முடியும்? தனியாய்ச் சந்திக்க முயன்றிருப்பேன். அவள் சம்மதிக்கா விட்டால், அவள் கணவனுக்கெதிரில் ‘உன்னை அன்று, குளக்கரையில் நாகப் பிரதிஷ்டைக்கெதிரில் கையைப் பிடித்தேனே. எப்படி?—‘ என்று கேட்டு, அவள் புருஷனுக்குச் சந்தேகத்தை உண்டாக்கியிருப்பேன். சமயத்துக்குத் தக்கவாறு நடந்துகொண்டிருப்பேன். இப்பொழுது எப்படிச் சொல்வது?”
"மொத்தத்தில் அவள் வாழ்க்கையைக் குலைத்திருப்பாய் அல்லவா?"
"ஆம்--" என்றான் வசியங் கண்டவன்போல். நினைவு மங்க ஆரம்பித்துவிட்டது.
"உன் செளகரியத்திற்காக, அவளைக் கெடுக்கவும் துணிந்தாய் அல்லவா?"
"ஆம்"
"அவளை உன் கருவியாய் உபயோகித்துக்கொள்ள எண்ணிவிட்டாய் அல்லவா?"
"ஆம்-"
"ஆகையால்தான், நீ அவளைக் கெடுக்குமுன், அதாவது நீ கெட்டுப் போகுமுன், உன்னை நான் என்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டேன்--"
அவனின்றும் பிரிந்த அது திடீரென்று பெரிதாக ஆரம்பித்தது.
"மகனே-- என்னிடம் நீ உண்மையை ஒப்புக்கொண்டாய். எங்கெங்கோ ஒடியாடிக் களைத்து வந்தாய். இனி நீ என்னிடம் இளைப்பாற வேண்டும்—“ அவன் மேல் இருள அது ஆரம்பித்தது.
"நீ யார்? யார் நீ?"
தப்பிப்போகும் நினைவின் முழுப்பலமும், அவன் உடலின் பலமும் அக்கடைசிக் கேள்வியில் பிரதிபலித்தன.
அது இதற்குள் அவனுக்கும் அதற்கும்கூட வித்தியாசம் தெரியாதய்டி வியாபித்துவிட்டது.
"நீ எங்கிருந்து வந்தாயோ, அங்கே திரும்பிப் போகும் இடம் என்று வைத்துக்கொள்ளேன். நீ பாம்பானால், உன்னை விழுங்கும் பெரிய பாம்பு என்றுதான் வைத்துக் கொள்ளேன். அல்லது கருடன் என்று வைத்துக்கொள்ளேன். எந்தப் புற்றின் இருளுடன் இழைந்துவிட வேண்டுமென்று நீ ஒரு சமயம் விரும்பினாயோ, அந்த இருள் என்று வைத்துக் கொள்ளேன். அல்லது, தன் குஞ்சுகளை அன்புடன் சிறகடியில் அணைக்கும் தாய்ப்பட்சி என்று வைத்துக்கொள்ளேன். அல்லது, நீ சொல்லியபடி, நீ உன்னை விழுங்கிய பிறகு, மிச்சம் இருக்கும் மீதி என்று வைத்துக்கொள்ளேன்!"
ஆலிங்கனத்தில் அவன்மேல் அது கவிழ்ந்தது.
-------------
4. எழுத்தின் பிறப்பு
எங்கும் பிரம்ம மயம்.
பிறகு
வானம், வானத்தின் முழு நீலம், பூமி, புனல், புல், பூண்டு, செடி கொடி -
பரம், பல்வேறு விதமாய்ப் பரிணமிக்கும் பல்வேறு உருவங்கள் உண்டாயின.
பின்னர்--
உயிர்:
ஒன்று இரண்டாயிற்று. ஏகமாய்த் துலங்கிய பிரம்மம், சக்தியும் சிவனுமாய்ப் பிரிந்தது; அவள், அவன்.
பிரம்ம ஐக்கியத்தினின்று சக்தி வெளிப்பட்டதும், அவள் வீசிய ஒளியையும் ஒயிலையும் கண்டு, சிவன் திகைத்தான். கேவலம், நரனின் நாறும் வாயால் எடுத்துரைக்கும் அழகல்ல அது. தரையளவு புரளும் மயிரும், அக்கருணையொழுகும் விழியும், தீட்டிய மூக்கும், புன்னகையிலேயே படிந்த வாயின் வார்ப்பும், இளமையின் மனங்கமழும் உடலும், துடி நடையும், ஒடி இடையும். பக்குவநிலையின் பரிபூரணத்தை ஒருவாறு அதுமானிக்க முடியுமேயன்றி வார்த்தையால் வரையறுக்க முடியாது.
கனவொழுகும் கண்களுடன் இடையிடையே சிவத்தைத் திரும்பி நோக்கியபடி, தன்னைச் சுற்றி விளங்கும் சிருஷ்டியை வியந்த வண்ணம் சக்தி நடந்தாள். அவளை வியந்தவண்ணம் சிவன் அவளைத் தொடர்ந்தான். சக்தியின் சாயல் பட்ட இடமெல்லாம் உணர்வும் உயிரும் பெற்று மலர்ந்தது. செடி கொடிகள்மேல் அவள் பார்வை சென்றதும், இலைகள் ஆடின. பூக்கள் கட்டின. அவள் கண்கள் வியப்புடன் வானோக்கியதும், வர்ணங்கள் பிறந்து வானவில் அமைந்தது. தென்றல் அவள் கன்னத்தை வருடியது. அவள் கனத்தைத் தரை தாங்கியதும், அதன் கடினம் குழைந்து அடிகள் புதைந்தவிடத்தில் ரேகை படிந்த சுவடுகள் எழும்பின.
இம்மாதிரி நடை பழகிய பின்னர், சக்தி ஒரு தென்னை மரத்தடியில், அதன் கீழே அதன் மட்டைகள் தொட்டுக் கொண்டு தண்ணிர், அடிமணல் பளபளக்க, ஒடும் ஒர் ஒடையருகில் களைப்புற்றவள்போல் சாய்ந்தாள். அவள் அருகில் சிவன், காணாததைக் காணும் பரவச பயத்துடன் பதுங்கினான். அவள் அழகைப் பருகப் பருக, அவனுள் அடைபட்டுத் திணறும் அன்பு வெள்ளம் புரண்டு, பொங்கி, மடையுடைந்து, உள்ள எழுச்சி வேகம் மீறி, வாய்வழி வெளிப்பட்டது. உலகத்தின் முதலொலி பிறந்தது. உணர்ச்சியின் உருவே ஒலியாகும். அன்பே சிவம்.
இவ்வன்பு வெள்ளத்தின் உடைப்பில் சிவன் வாயினின்று உதிர்ந்த நாத விசித்திரங்களை என்னென்று சொல்வது? இச்சமயம் பிரணவம், வேதம், கீதம் இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் உதித்தனவோ? தன்னைப் புகழ்ந்தவாறு சிவன் இழைக்கும் இன்பத்தில் சக்தி இழைந்தாள். தன்னருகில் தோளை உராய்ந்து தொங்கிய ஒரு மட்டையில் ஒர் ஒலையை நகத்தால் கீறியவண்ணம் அவள் தன்னை இழந்தாள். உவகையில் அவள் அழகு பன்மடங்கு பூரித்தது.
உலகமே தன்னை மறந்த இந்தத் தனிநிலையின் வேளை எந்நேரம் நிலைத்ததோ?-- ஒரு வண்டு அதைக் கலைத்தது. ஆனந்தத் தேனைக் குடித்துவிட்டு ரீங்காரித்துக்கொண்டே வந்து, சக்தியின் கன்னத்தில் மோதியது. அக்குறுகுறுப்பில் அவள் தோள் அசைந்து, மயிர் சரிந்தது; ஓடை நீரில் தோய்ந்து அமிழ்ந்து கனத்தது. அக்கணம் அவள் தலையை இழுக்கவே, அவள் திரும்பி தன் நிழலை, தன் அதி அற்புதமான அழகின் நிழலைக் கண்டுவிட்டாள். தான் என்னும் செருக்குப் பிறந்து, அக்கணமே அவளுள் புகுந்தது. தன்னால் தானே எல்லாம்? சிவன் தொழுவதும் தன்னைத்தானே? தானில்லாவிடில் எல்லாம் சூன்யம்தானே!--துள்ளியெழுந்து கையைக் கொட்டிக் ‘கலகல’வென நகைத்துக்கொண்டே சக்தி ஓடி மறைந்தாள். அவ்வினிய சிரிப்பில் கக்கிய விஷம், சிவத்தின் உடலையும் உள்ளத்தையும் ஒர் உலுக்கு உலுக்கியது. தன் லயிப்பில், என்ன நடந்ததென்றும் அறியாது, திகைப்புடன் அவளைக் கூவிக் கொண்டே சிவன் தொடர்ந்தான்.
# # #
அன்று ஆரம்பமாகிய அவ்வேட்டையில் அவள் அடைந்த ஆனந்தம் அவளுக்குத்தான் அற்புதம். எட்டியும் எட்டாது நின்று இல்லாத சங்கடமெல்லாம் இழைத்தாள் அவள். அவள் வெறி-- நகை அவன் முகத்தில் புகைந்து விஷம் கக்கியது. அவன் துரத்தத் துரத்த அவள் கொடுரம் கொந்தளித்தது. அவன் உயிர் துடிதுடித்தது.
இப்பொழுது அவன் வாயினின்றும் செயலினின்றும் எழுந்த ஒசைகள் சரியாயில்லை. ஆசையின் தோல்வியால் இதயத்தினின்று எழுந்த அனல் மூச்சில் புயல் கிளம்பி மண்ணும் விண்ணும் சுழன்றன. குலைந்த ஆண்மையின் கோபத்தில் தொண்டையிலிருந்து வீரிட்ட அலறலில் வானம் மின்னல் வெட்டியது: பூமி அதிர்ந்து அங்கங்கே வெடித்தது: துயரந்தாளாது கண்ணில் துளித்த அழல் நீரில், மழை தாரை தாரையாய்ச் சொரிந்தது. உலகம் இருண்டது. மரங்களை அலைத்துக் காற்று குலுங்கி அழுதது. இத்தனைக்கு மிடையில் இக்குழப்பத்தைக் கிழித்துக்கொண்டு அவள் ஏளனச் சிரிப்பு ஒலித்தது.
வேடனை நோக்கி விலங்கு நகைக்கும் இவ்வேட்டை எவ்வளவு காலம் நடந்ததோ? சிவனுக்கு உடலும் உள்ளமும் தளர்ந்துவிட்டன. அயர்வு ஆளை அழுத்தியது. பார்வை மங்கியது. தள்ளாடித் தள்ளாடி வந்து ஒரு தென்னை மரத்தடியில் அதன் மட்டைகள் தொட்டுக்கொண்டு, அடி மணல் பளபளக்க ஒடும் ஒர் ஒடையருகில், உருண்டு மல்லாந்து விழுந்தான். வானத்தில் முழு நீலம், எங்கும் மாலையசதியின் அமைதி மனத்துயரை அழுது தீர்க்கவும் உடலில் சக்தியில்லை. நிலைகுலைந்த பார்வை, முகத்தைக் குறுகுறுத்துக் கொண்டு தொங்கும் தென்னை மட்டைமேல் ஓடி, அதில் ஒன்றிரண்டு பழுப்பு ஒலைகளின் மேலிருந்த கீறல்களில் பதிந்தது.
பெண்மையின் சிறு குறும்பில் சக்தி கீறிய கீறல்கள் அவை! அவள் குணம் கோளாறு படுமுன், அவளும் தானும் திளைத்திருந்த ஆனந்த நிலையின் அடையாளம்.
ஐயோ! அந்த ஆனந்தத்தை அநுபவிப்பானேன்! அதற்கடுத்து இரண்டாய்ப் பிரியாது நின்ற நிலையில் நின்றிருந்தால்- ஆம், துன்பமும் இன்பமும் அற்ற நிராமயம் தான் சரி- கலைந்து குலைந்ததெலாம் ஒருங்கல் வேண்டும்.
மனமும் உடலும் மறுபடியும் திடங்கொண்டன. தீர்மானச் சித்தத்துடன் சிவன் எழுந்து தவத்தில் அமர்ந்தான். மனப் புயலை அடக்கியதும், எண்ண அலைகள் குலைய ஆரம்பித்தன. நினைவை ஒரே வழியில் நிறுத்தி, தன்னைத்தான் சிந்தித்து, தன்னில்தான் ஆழ்ந்தான். நினைவு செத்ததும் நிம்மதி தெளிந்தது. இம்மோன நிலையில் களிப்பின் வெறியுமில்லை, துன்பத்தின் துடிப்புமில்லை. புண்ணில் தைலமிட்டது போன்றிருந்தது இவ்வமைதி.
தன்னைத் தேடி வரும் சிவனைக் காணாது, தன்னழகை இன்னும் பதின்மடங்கு அதிகரித்துக்கொண்டு வந்தாள் சக்தி, வந்து, நீரோடையருகில் யோகத்தில் வீற்றிருக்கும் மூர்த்தியைக் கண்டாள். இனிய வார்த்தைகளையும், மனதைச் சோரங் கொள்ளும் செய்கைகளையும் காட்டி அவரை எழுப்ப முயன்றாள். அவள் பிரயத்தனங்களெல்லாம் பாறையில் மோதும் அலைகளின் வியர்த்தமாயின. நச்சுக் கக்கும் அவள் நகையின் கவர்ச்சி குலைந்தது. அவள் மோகவலையின் பின்னல்கள் பீத்தலாயின. அவரைச் சுற்றிச் சுற்றி நடமாடி வந்தாள். குறுமுலையழுந்த அவர் தோள்களைத் தழுவினாள். அவர் கண்கள் மெல்ல மலர்ந்து அவளை நோக்கின.
தன்னுள் தானே நிறைந்து, தானே எல்லாமாய்த் தெளிந்த ஆண்மையின் அசாத்திய சக்தியை அந்தக் கண்களுள் அவள் கண்டாள். அதில் தன் வலிமையின் எல்லையையும் முதன் முதலாய்க் கண்டாள். அவள் ஆணவம் ஒடுங்கி அடங்கியது. அறிவு தெளிந்தது. கடைசியில் சக்தியும் சிவத்தின் வயத்தளானாள்.
பிறகு பகவானானவர் தன் தோல்வியின் அடையாளமாகவோ என்னவோ, ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்களுக்கென்று வாழ்க்கையையும் பிறப்பித்தார். பிறகு தான் பெருக்கிய ஒலியின் உருவாய், சக்தி ஒலையில் கீறிய கீறல்களை ஆதாரமாய்க் கொண்டு எழுத்தை எழுதினார்.
எழுத்து பிறந்த கதை இதுதான்.
----------------
5. அரவான்
அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை சின்ன மாவு பொம்மை போல்தானிருந்தது. இழுத்துப் பழக்க மில்லாததால் தாம்புக் கயிறு உள்ளங்கைகளை வீறுவீறாய் அறுத்திருந்தது.
அணைத்துக் குலுக்கி அதன் அழுகையை அடக்க முயன்றான். ஆசைப் பெருக்கில் அர்த்தமற்ற சப்தங்கள் அவன் வாயினின்று பிறந்தன. ஆயினும் குழந்தையைத் தேற்ற அவை வகையற்றுப் போயின. அதன் கத்தல் இன்னமும் அதிகரித்தது.
"என்ன! தாயில்லாக் குளந்தையா?"
அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏற்கெனவே உள்ளுற வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறான். ‘காலையில் வேலை பார்க்கப் போன பெண்பிள்ளை- சூரியன் உச்சிக்குப் போயிட்டுது-- இன்னமும் திரும்பினபாடில்லே. இந்தப் பட்டணத்திலே ஊருக்குப் புதுசு. ஆண் புள்ளைக்கே இத்தனை மோட்டார் வண்டிக்கும் டிராம் வண்டிக்கும் சடுக்கா வண்டிக்கும் ரிக்ஷா வண்டிக்கும் நடுவுலே ஆளைப் பம்பரம் சுத்திவிட்டாப் போலே இருக்குது. அவளை எது வாரி வாயிலே போட்டுக்குதோ? யார் இந்த ஆள் அவசகுனி மாதிரி?—’
அந்த ஆள் எதிர்த் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு ஒரு துண்டு பீடியைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்து வயதையோ அந்தஸ்தையோ நிர்ணயிப் பதற்கில்லை. கால்மேல் காலை மடித்துப் போட்டு உட்கார்ந்து கொண்டு வெகு ஆத்திரத்துடன் பீடியைக் குடித்துக்கொண்டிருந்தான்.
"இல்லே; காலைலே போனா-- இன்னும் வரல்லே--குளந்தை வவுத்திலே ஒண்னுமில்லே."
"யார் வவுத்திலேதானய்யா இப்போ என்ன இருக்குது? எரிச்சல்தானிருக்குது. ஊருக்குப் புதிசா? ஏதேனும் வேண்டுதலையா?"
"இல்லே பட்டணத்துக்குப் புளைக்க வந்தோம்."
அந்த ஆள் ஆத்திரத்துடன் பீடியை விசிறி எறிந்தான்.
"ஆமாய்யா, வெளியூரிலே இருக்கிறவன் புளைக்கறத்துக்குப் பட்டணத்துக்கு வந்துடுங்க. பட்டணத்திலேயே இருக்கிறவன் பட்டினி கிடக்கட்டும்! ஊரிலே இருக்கிறவனுக்கு இடமில்லை; வந்துடராங்க வரிஞ்சு கட்டிக்கினு புளைக்கறத்துக்கு"
"மனுசனுக்கு மனுசன் ஏன் இப்படி இருக்குதுன்னு புரியல்லே. யார் யாருக்குத் தீங்கு இளைச்சுட்டது என்ன? அவன் யாரோ நான் யாரோ, இவனுக்கு என்மேலே என்னத்துக்குக் கோவம்? இந்த மாதிரி இடத்துலே தன்னந் தனியா மாட்டிக்கிட்டு எப்படிப் புளைக்கறது? ஊரிலே ஒரு மாதிரி கஷ்டமின்னா, ஒண்டவந்த இடம் இப்படி இருக்குது. துணையுமில்லே, துப்புமில்லே. ஒண்ணும் புரியவும் மாட்டேன்னுதே.’
அவன் படும் வேதனையும் குழந்தையின் ஓயாத அழுகையும் ஆத்திரத்தைத்தான் விளைவித்தன. இதுவும் களுத்தை முறிச்சுப் போட்டுடவா? ஒருவளியா ஒளிஞ்சுது ஒரு தொந்தரவு -- .
" போனா போனா, காலைலே போனா-- புடிக்கப் போன வேலையை வேரோடு புடிங்கிக்கிட்டு வந்துடற மாதிரி--என்னடாது ஆண்புள்ளெகிட்டே குளந்தையை விட்டுட்டுப் போனமே, வேளா வேளைக்கு அவன் என்ன பண்ணுவானின்னு நெஞ்சிலே பயமிருக்கணும். ஊரைச் சுத்தணும்னா போதும் இந்தப் பொம்புளெங்களுக்கே...’
அவன் பொருமிக்கொண்டிருக்கையிலே நிழல் வாசற் படியில் தட்டியது.
"வந்துட்டியா?"
"வராமே? சாக்கடைத் தண்ணிக்குப் போக்கெடம் ஏது? என்னா கொளந்தையெ அளவிட்டுட்டியே. இதான் சாமார்த்தியமா? கொடு இப்படி--"
கோபம் அவன் வாயை அடைத்துவிட்டது. ‘ஆளைத் தூக்கி எறிஞ்சு பேசறத்துவே அவுங்களுக்கு நிகர் அவுங்க தான். ஒண்னு முதுகிலே வெச்சா சரியாப் போயிடும். என்ன தைரியமா கேக்கறா பாரு! இருக்கட்டும். இப்பொ கொளந்தைக்கிப் பசி அடங்கட்டும். அதான் இப்பொ முக்கியம் அவளுக்குத்தான் அந்த எண்ணமில்லேன்னா நமக்குக்கூடவா இல்லே! நான் பெத்த மகன்.’
அந்த ‘ஆள்’ அப்பொழுதே போய்விட்டான். அவள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு குழந்தையை எடுத்து விட்டுக்கொண்டே கேட்டாள்:
"நீ எங்கயாவது புளைப்புத் தேடினயா? என்னவாச்சு?"
அவள் கேள்விக்குப் பதில், அவன் முகவாட்டத்திலேயே கிடைத்துவிட்டது.
"இண்ணக்கி கடைத்தெருவைச் சுத்தினேன். சித்தாள் வேணுமான்னு கடைகடையா ஏறிக் கேட்டேன். ஒவ்வொருத்தன் என்னென்ன சொல்றான்கறே?-- ஏதோ வேலையில்லேன்னு சொல்லிக் களிச்சால் போச்சு, எடக்காப் பேசறான்க!
"சித்தாள் வேலையா? இங்கே இருக்கிறவனே ஈ ஒட்டறான்! யுத்தம் வந்தாலும் வந்தது. என்ன சாமான் இங்கே இருக்குது வியாபாரம் பண்ண?-- என்கிறான் ஒருத்தன்.
"ஒரு கடைக்காரன் வேலையில்லேன்னு சொல்லிட்டு நான் படியிறங்கினப்புறம் என்னை மெனக்கெட்டு மறுபடியும் கூப்பிட்டு, ‘நான்தான் கடைக்காரன்- நான் இங்கே என்னாத்துக்குக் குந்திக்கிட்டு இருக்கேன் தெரியுமா?’ன்னு கேட்டான்.
"
“தெரியாதே" இன்னேன். எனக்கெப்படித் தெரியும்?
"சாமான் வாங்க வரவங்களுக்கெல்லாம் அது இல்லே, இது இல்லேன்னு சொல்லியனுப்பத்தான் குந்திக்கிட்டு இருக்கேன். இல்லை இல்லை இன்னு கத்திக் கத்தித் தொண்டை வத்திப்போச்சு இல்லைப்பாட்டுப் பாடத்தான் இனிமேல் ஒரு ஆள் போட்டுக்கணும்போல் தோணுது. போப்பா, புளைக்க மாட்டாதவனே! பொட்டலங் கட்டக் கூட காயிதமில்லாத காலமிது- அதுகூட யுத்தத்துக்கு வேணுமாம்-- நீ கூடப் போறதுதானே! இன்னு சொல்றான்.
"இந்தப் பட்டணத்துப் பேச்சு நமக்குப் புரியமாட் டேன்னுது எல்லாத்துக்கும் எடக்காப் பேசறாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் ஒரு ஆள் என்னை ஒரு காரணமு மில்லாமலே விரட்டிட்டுப் போனான். அத்தோடே கொளந்தையெத் தனியா விட்டுட்டு எவ்வளவு நேரம் வெளிலே சுத்த முடியுது? உன் மாதிரியா? காலைலே போன பொம்புள்ளே, திரும்பி வர இத்தனை நேரமாச்சுதுன்னா என்னாத்தை சொல்றது!"
"என்னாத்தை சொல்லப்போறே? யாராவது இஸ்துக்கிட்டு ஒடிட்டாங்கன்னு பாத்தியா?"
அவன் மனம் ‘சுருக்’கென்றது. ‘வயித்துக்குக் கஷ்டம் வந்துட்டுதுன்னா, கொண்டவளுக்குக்கூட இவ்வளவு எளக்காரமாப் போயிடுமா?’
குழந்தை மறுபடியும் கத்த ஆரம்பித்துவிட்டது. அவன் கண்கள் ஜ்வலிக்க ஆரம்பித்தன. ‘இண்ணைக்கு அவன் மனம் நோவடிக்கறத்திலேயே அவளுக்குச் சந்தோசமா?’
"ஏன் அதுக்குள்ளேயும் விலக்கிட்டே?"
"சரிதான்! என் புளைப்பும் உன் புளைப்பும் அதிலேதானிருக்குது."
"என்ன அம்மே, வந்ததே மொதக்கொண்டு ஒரு மாதிரியா யிருக்கே. புதிர் போட்டுப் பேசுறே-- என்ன? உடம்புக்கு பூசைக்காப்பு போடணுமா?"
அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக் குலுக்கிய வண்ணம் திண்ணையில் உலவியபடி, சமாதானப்படுத்த முயன்றுகொண்டே சொன்னாள்.
"கொஞ்சம் அவசரப்படாமெ நான் சொல்றதைக் கேளு--இன்னிக் காலையிலே இப்படி போனேனா-- இந்த ரோட் டோடே போனேன்-- அப்புறம் ஒரு சந்துலே நுளைஞ்சேன். ஆனால் அது சந்தில்லே. ஆள்நடமாட்டம் அதிகமாயில்லே. ரெண்டு பக்கமும் தனித்தனியா பங்களாவுங்க இருந்திச்சு. அப்புறம் அப்படித் திரும்பினேன். இப்படித் திரும்பினேன். எனக்கு வளி மறந்து போச்சு, சுத்துமுத்தும் பாத்தா ஒருத்தரு மில்லே. எனக்கு ஒரே அளுகையா வந்திட்டுது. நான் ரோட்டோரமா நின்னிட்டு அளுதுகிட்டு இருந்தேன்.
"அப்போ ஒரு ஆள் அந்தப் பக்கமா வந்தான். என்னைத் தாண்டிப் போனான். அப்புறம் திரும்பிப் பார்த்தான். நின்னான். மேலே இன்னும் கொஞ்சம் நடந்து போனான். மறுபடியும் என்னை முளிச்சுப் பார்த்தான். அவன் பார்வை ஒரு மாதிரியாயிருந்திச்சு. என் முகத்தைப் பாக்கல்லே. களுத்துக்குக் கீளே. இடுப்பு வரைக்கும்தான் கண்ணோட்டம் நின்னுது. அப்புறம் எண்ணத்தை என்னவோ திடம் பண்ணிக்கிட்டுத் திரும்பி நேரே வந்தான்.
"ஏன் அழுவரே? எந்த ஊர்?"
"ஐயா, ஊருக்குப் புதிசு-- நாட்டுப்புறம். வளி தப்பிப் போச்சு இன்னேன் விக்கிக்கிட்டே
"ஏன் வந்தே இந்த ஊருக்கு?"
"புளைக்க வந்தேனுங்க. எங்கேயாச்சும் பத்துப் பாத்திரம் துலக்கிப்போட்டு வாசக்கூட்டி வேலையவப்பட்டா போதுங்க"
"அந்த ஆள் என் களுத்தைப் பார்த்துக்கிட்டே கலியாணம் ஆயிட்டுதான்னு கேட்டான்.
"கையிலே ஒரு குளந்தையிருக்குதுங்க- என் எசமானர் கிட்டே விட்டுட்டு வந்திருக்கேனுங்க"
"எத்தனை வயசு?
"இரண்டு மாசங்க--"
"சரி வா. உன்னதிர்ஷ்டம் இந்தப்பக்கமா நான் வந்தேன். உனக்கு வேலை வாங்கித் தரேன். என்னோடு வா" இன்னுட்டு நடந்தான். எனக்குக் கொஞ்சம் பயமாய்த்தானிருந்திச்சு. இருந்தாலும் ஆள் நடமாட்டமிருக்கிற இடமா வந்து சேர்ந்துட்டா சமாளிச்சுக்கலாம்னு மனசைத் தைரியம் பண்ணிக் கிட்டுப் பின்னாலே போனேன்.
"நீ முளிக்காதே! அவன் ஒண்ணும் தப்பா நடந்துக்கல்லே. ஒரு பங்களாக்குள்ளார துளைஞ்சோம். பெரிய தோட்டம். பூவும் செடியும் பாத்தியும் பச்சையும் எங்கே பார்த்தாலும் ஒரே குளுமையாயிருந்திச்சு கன்னுக்குட்டியாட்டமா ஒரு பெரிய நாய் என்னைப் பாத்து ஓடி வந்துது. அந்த ஆள் அதை விரட்டிட்டு என்னை வாசத் தாவாரத்திலே நிறுத்தி வச்சுட்டு உள்ளே போனான்.
"கொஞ்ச நேரம் பொறுத்து மூணு பொம்புள்ளைங்க உள்ளேருந்து வந்தாங்க. பாப்பாரு! பணக்காரு நகையும் நட்டும் நல்ல புடவையும் கட்டிக்கிட்டு இருந்தாங்க அவுங்களுக்குள்ளே என்னவோ வெள்ளைக்காரன் பாஷைலே பேசிக்கிட்டாங்க. அவுங்களுக்குள்ளே ஒரு பெரிய அம்மா இருந்தாங்க. அந்த ஆள் என்னை மொதமொதல்லே விசாரிச்ச மாதிரியே, அவுங்களும் விசாரிச்சாங்க. இன்னும் ஒண்ணு ரெண்டு பொம்புள்ளே விஷயங்கூட விசாரிச்சாங்க. அப்புறம் அங்கேயே குந்தவெச்சு ஆளு வந்து சோறு போட்டான். குளுகுளுன்னு பழஞ்சோறு, என் வயிறு குளுந்துது. ஒன்னே நெனச்சுக்கிட்டேன்.
"கை களுவி, தண்ணியேந்திக் குடிச்சுட்டு, முந்தானையிலே கையைத் தொடச்சிக்கிட்டேன். உடனே இங்கிலீஸுலே என்னவோ பேசினாங்க பொம்புள்ளேங்க ஆம்புள்ளே மாதிரி இங்கிலீஸு பேசி இண்ணக்கித்தான் நான் பாத்தேன். உடனே ஒரு அம்மா உள்ளே போய் ஒரு குளந்தையை ஏந்தி வந்து என் மடியிலே வெச்சு, ‘பாலைக் கொடு’ இன்னாங்க.
"எப்படி மாட்டேன்றது? சோறு போட்டிருக்காங்களே! உப்புந்தண்ணியும் உலர்ந்த வயத்திலே ஊத்தியிருக்காங்களே!--"
"குளந்தையா அது? நம்ம ஊரிலே முருங்கமரத்துலே இடையன் கொம்பு ஊறல்லே? அது மாதிரி ஒரே குச்சியா, உயிர் தொண்டையிலே நூலாட்டமா ஒடிக்கிட்டிருக்குது. தொடவே அச்சமாயிருந்திச்சு.
"தாய்ப்பாலில்லே. குழந்தைக்கி வேறே குத்தம் இல்லே. உனக்கு ரெண்டு வேளை சோறு, ரெண்டு வேளை தீனி, மாசம் எட்டு ரூபாய் கொடுக்கறேன். இங்கே இருந்து இந்தக் குழந்தையை நீ காப்பாத்தனும் வீட்டுக்கு ஒரே பிள்ளை இது. இருந்திருந்து பெத்த மகன். நீ இருந்து காப்பாத்தனும் இன்னாங்க அந்தப் பெரியம்மா.
"அம்மா! என் குளந்தை?-- நானறியாமலே அந்தக் கேள்வி என் வாயிலேருந்து வந்திட்டுது.
"உன் குழந்தைக்கு மாவு கரைச்சுக் கொடு-- மாவு நான் கொடுக்கறேன். இந்தக் குழந்தைக்கு வயிற்றிலே கட்டி விழறது. உன் குழந்தை இது மாதிரி மோசமாயிருக்காது. என்ன சொல்றே? சட்டு புட்டுனு உன் புருஷன்கிட்டே சொல்லிட்டு வந்துடு. காலையிலே ஒரு வேளை சாயந்தரம் ஒருவேளை ஒன் குழந்தையையும் பார்த்துட்டு வா-- நான் ஒண்னும் அப்படியாப்பட்ட பாவி இல்லே-- என்ன சொல்றே?
"நான் என்ன சொல்றது? எத்தனையோ விசயம் கவனிக்க வேண்டியிருக்குது. நம்ப புளைக்க வந்துட்டோம் உனக்கு சரியா புளைப்புக் கிட்டற வரைக்கும் வவுத்தெ ரெண்டுபேரும் கட்டிப்போட்டுக்கிட்டிருக்க முடியுமா? என் வவுத்தே அவுங்க வீட்டிலே களுவிட்டாலும் என் சம்பளம் உனக்கு மிச்சம்தானே. நான் ஒப்புக்கிட்டேன்."
மெளனம் இருவரிடையிலும் தேங்கியது. சத்திரத்தில் மூட்டையும் முடிச்சுமாய் இறங்குபவரும் வெளியே போவாரு மாய்ச் சண்டை போடுபவரும், கொட்டமடிப்பவருமாய் இரைச்சல் காதைப் பொளிந்தது. ஆயினும் இவ்விருவருக்கு மாத்திரம் அது தூரத்துச் சத்தமாய்த்தானிருந்தது.
"நீ ஒப்புக்கிட்டது தப்பு" என்றான் அவன்.
"அப்படியானால் நாம்ப இங்கே வந்ததே தப்பு:"
"நாம்ப புளைக்க வந்ததே தப்பானால், நம்ப ஊரிலே மொத மொதல்லே ஒருத்தரையொருத்தர் சந்திச்சோமே, அதுவே தப்பு-"
"இப்படி ஒருத்தரையொருத்தவர் கசந்துக்கிட்டுப் பேசினால் என்ன பிரயோசனம். புளைக்க வந்துட்டோம். புளைச்சு ஆகணும். இந்தா, மூணு ரூபா முன் பணம் வாங்கி வந்திருக்கேன். செலவுக்கு வெச்சுக்க--"
"இதென்ன, நீ எனக்கு சோறு போடணும்னா நான் ஆண் புள்ளையா பிறந்துட்டு இருக்கேன்!-- என்னான்னு நினைச்சுட்டே உன் மனசிலே என்னை?"
அவள் தொண்டை கம்மியது.
"நீ வேறே நான் வேறேன்னு துட்டு வாங்கறப்போ என் நெனைப்புலே படல்லே!"
"ஆமா-- அப்போ நம்ம ரெண்டுபேரும் கூடிப் பொறந்த கொளந்தெதான் வேறாப் போயிட்டுது-- இல்லியா?"
கரையினின்று திரும்பும் அலைகள்போல் நினைவுகள் பின்னோக்கிச் சுருண்டன.
- ‘நல்லபடியா நாலுபேர் பேசி முடிச்சுத் தாலி கட்டின கலியாணமாயிருந்தால் இத்தனை கஷ்டம் ஏன் படணும்? ஒரு இமைப் பொளுது வெறியிலே ஏமாந்து போன தோசத்துக்காக ஊரைவிட்டு ஓடிவந்து இங்கே இருக்க இடமும் புளைக்க வளியுமில்லாமே அல்லாடறோம்.’
வாய்வழி புறப்படாத விதவிதமான கேள்விகள் அவரவர் மனசை இடித்தன.
-- நம்ம ஊரே நல்ல ஊர்."
"நான் பாட்டுக்கு நிம்மதியா ஊருக்கு முதலாளி வெச்சிருக்கும் மளிகைக் கடையிலே வேலை செஞ்சுக்கிட்டு வேளாவேளைக்கு அவர் வீட்டிலேயே சாப்பிட்டு வேட்டி யுடுத்திக்கிட்டு கைச்செலவுக்கு நெதம் கால் ரூவா கல்லாப் பெட்டியிலேருந்து எடுத்துக்கிட்டு ராசா மாதிரியிருந்தேன்."
-- "எனக்கு மாத்திரம் என்னா கொறவு? வீட்டு வேலையை செஞ்சிக்கிட்டு அவுங்க கொளந்தையெ கொஞ்சி கிட்டு குசாலாய்த்தானேயிருந்தேன்! அப்பன் ஆயி இல்லேன்னு ஒரு நாளாவது நெனச்சிருப்பேனா அந்த ஊட்டு அம்மாதான் எனக்கு எல்லாமா இருந்தாங்களே--!
-- ‘இருந்து என்னா பிரயோசனம்? உன்னை எங்கேயாவது கட்டிக் கொடுத்து ஒழிச்சிருக்கணும்!’
-- ‘ஐயோ பண்ணையிலே ஒரு ஆளுக்குத்தான் என்னை முடிச்சுப் போட்டு வெச்சிருந்தாங்களே-- அதுக்குள்ளார நீதானே என் மேலே கண்ணெப் போட்டே!’
- ‘நீ மாத்திரம் சும்மாயிருந்தியா? அடிக்கடி கடைக்கு வந்து கடிச்சுக்க ஒரு துண்டு கட்டைப் புகையிலே கொடுன்னு என் கையை இடிச்சு வாங்கிப் போனையே. மறந்து போச்சா?’ -- ஒருத்தரையொருத்தர் ஏன் குத்தம் சொல்லனும்? ஏமாந்து போனோம். அவ்வளவுதான்."
- ‘எல்லாந்தான் போச்சு, அண்ணக்கி என்னவோ சீக்கிரமாக் கடையைக் கட்டிக்கிட்டு அண்ணக்கின்னு ரயில் டேஷனுக்குப் போற வழியிலே நான் ஏன் வரணும்? நீ கடலைக் காய் கொல்லையிலே காவல் காத்துட்டு, நான் வந்தவளியே நீ ஏன் வரணும்?’
- ‘களத்துமேட்டிலே வக்கிறத்துக்கு முத்திரையைக் கொடுத்திட்டு வந்தேன்.’
- ‘வந்ததுதான் வந்தியே, சும்மாப் போனியா? மடிலே ருந்து பிடி கடலைக்காயை எடுத்து இந்தான்னே, சிரிச்சுக் கிட்டே நான் நினைவு மங்கிப்போய் உன் கையைப் பிடிச் சேனே! கையை உதறி என் கன்னத்திலே ஏன் ஒண்ணு விடலே? அப்படியே என் தோள் மேலே சாஞ்சுட்டே அண்ணக்கின்னு நெலவு ஏன் அப்படி காயனும்! ஆத்தோரத்துக்கப்பால் சினிமாக் கொட்டகைலேருந்து அம்பிகாபதிப் பாட்டு காதண்டை மோதி ஆளை ஏன் அப்படிச் சொக்கடிக்கனும்!’
- ‘நான் என்னாத்தெக் கண்டேன்? பிள்ளைப்பூச்சி உடனே கடிச்சுடும்னா கண்டேன்! இந்தப் புள்ளையப்பத்தி அப்பொ நெனச்சமா? வவுத்தெ எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்?’
- ‘உடலும் மனசும் ஒண்ணாக் கொழஞ்சு நாம் ஆசையாப் பெத்த குளந்தையை உலகத்துலே எல்லாரும் பெத்து வளக்கற மாதிரி வளக்க முடியல்லே. களுத்துலே மஞ்சக்கவுறு ஏர்றதுக்கு முன்னாலே வவுத்துலேருந்து இறங்கற குளந்தையெ யார் மதிக்கிறாங்க? திருட்டுப் புள்ளைன்னு ஊரெல்லாம் சிரிக்க மானம் போய் உசிர் போகாமெ ஊரைவிட்டு ஒடியாந்துட்டோம். வந்து இங்கே மாட்டிக்கிட்டோம்.’
- ‘விதி-விதி.’
மனத்தின் பேச்சுக்கு முடிவே கிடையாது.
------------------
2
அந்தக் குழந்தையின் பசியை ஆண்பிள்ளை தானாக எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும்? அவள் மாலையில் வந்து ஒருவேளை ஊட்டுவாள்; காலையில் மாவையும் தண்ணிரையும் கரைத்துப் புட்டியில் போட்டுவிட்டுப் போவாள். புட்டியை எந்தப் பக்கம் குழந்தையின் வாயில் வைப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது.
‘காலைலே வேலைக்கு அலையணும். கொளந்தையைத் தனியா விட்டுட்டு எத்தனை நேரம் வெளியிலே சுத்த முடியும்? மாலை வறது எப்போ? அவள் வறது எப்போ? அந்தக் கொளந் தையை அவள் மார்மேலே அணைப்பது எப்போ? தொண்டையைக் கிளிச்சுக்கிட்டு ஓயாமெ அலறும் அதன் அலறல் ஒயறது எப்போ? ஒரே வேளையானாலும் பெரிய வேளை!’
இன்று அவள் குழந்தை தலைமீது மேலாக்கைப் போட்டு மூடியும் அதன் கத்தல் ஓயவில்லை. அவனுக்கு வயிறு கொதித்தது.
"ஏன் ஏமாத்தறே? நீ வந்து ஊட்டறது ஒரு வேளை. அதிலே ஏன் வஞ்சனை பண்ணறே? பங்களா வீட்டுப் பையன் மாதிரியில்லையா நீ பெத்த மவன்?"
`"ஏன் இப்படியெல்லாம் பேசறே? நான் என்ன பண்ணு வேன்? அந்தப் பையன் என்னை அட்டை மாதிரி உறிஞ்சிப் போடுதே. ஊறக்கூட நேரம் விடமாட்டேன்னுதே. மூக்காலே பாலு வந்தாலும் வச்ச வாய்க்கடி விடமாட்டேன்னுதே!"
"இங்கேயும் இருக்குதேன்னு கொஞ்சம் வெச்சுக்கிட்டு வர்றது."
"அவங்கதான் என் எதிரேயே உக்காந்து கவுனிக்கிறாங்களே! மடியிலே புள்ளையை விட்டுட்டு அந்தப் பெரியம்மா என் எதிரே சட்டமா குந்திக்கறாங்க. கொடுடீ, கொடுடீ குழந்தைக்குக் கொடுடீ. இந்தப் பக்கம் வத்திப் போனா அந்தப் பக்கம் மாத்திப் போட்டுக்கோன்னு ஈவு இரக்கமில்லாமெ பேசறாங்க"
"சோத்திலே நெய்யைக் கைநிறையா அள்ளித்தானே விடறேன்! ஆப்பிள் பழமும் ஆரஞ்சிப்பழமுமா வாங்கி வாங்கிக் கொடுக்கல்லே! என் எதிரிலேயே உரிச்சித் தின்னுட ணும். என் குழந்தைக்கு ஊறும் பாலை என் குழந்தைதான் குடிக்கணும். என் வீட்டுக்கே
ஒரு குழந்தைடீ-"
"அவுங்க விதவிதமாத் தீனி வாங்கிப் போடறாங்க; சொகம் சேக்கராங்க ஆசை உனக்கு அங்கேதான் பொங்கு தாக்கும்!"
"ஏன் இப்படி சொல்றே? அங்கே துண்றது விஷமாயிருக்குது போதாதுன்னு நீ வேறே இங்கே வந்தா விஷத்தைக் கக்கணுமா? என் வவுத்திலே சுமந்த என் குளந்தையை நான் மறந்துட்டேன்னு நீ எனக்கு போதிக்க வேணாம்-"
"அடிப்போடீ பாவி..."
-------
3.
அவன் தெருவில் மனம் போனபடி போய்க்கொண்டிருந்தான்.
அந்த ஒரு வாரத்துக்குள் அவனுக்கும் அவளுக்கும் பேச்சு பட்டென அறுந்து போயிற்று. அவன் கண்ணெதிரே படிப் படியாய் அவன் குழந்தை தேய்ந்து போகும் கோரம் காணக்கான அவனுக்குச் சகிக்க முடியவில்லை. அவள்மேல் குற்றமில்லை என்று அவன் மனம் புரியாமலே அறிந்தது. இருந்தும் அவள் தனக்காகச் செய்யும் தியாகம் அருவருப்பை யும் பயங்கரத்தையும்தான் விளைவித்தது. அவ்விருவருக்காக அக்குழந்தை தியாகம்--
ஒரொரு சமயம் அவள் அவ்வீட்டில் எஞ்சிய ஆகாரங் களை அவன் சாப்பிடுவதற்காகக் கொண்டு வருவாள்.அதைச் சீந்தக்கூட அவன் மனம் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டது.
‘சீ! இதுவும் ஒரு புளைப்பா! இப்படி இந்த உசிரையும் உடலையும் ஒண்ணாத்தான் வெச்சு வாளாமே இருந்தாதான் என்ன?’
- ‘டேய், நாட்டுப்புறம்! எங்கே பார்த்துக்கிட்டுப் போறே? வண்டியிலே மாட்டிக்கிட்டு சாவறத்துக்கா? சாவணும்னா சண்டையிலே போய்ச் சாவறதுதானே!’
டாணாக்காரன் போட்ட அதட்டல் அவன் மனசில் அசரீரி மாதிரி பாய்ந்தது. ‘இந்த யோசனை எனக்கு ஏன் அப்பவே தோணலே! சம்பளத்தை அவ பேருக்கு எளுதி வெச்சோம்னா அவ அந்த வீட்டிலே போய் சாகவேணாம். சம்பளத்தை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு அவ நிம்மதியாயிருப்பா. நம்ப மவனாவது புளைப்பான். திரும்பி வந்தா பார்ப்போமில்லியா?’
--‘திரும்பி வராமெ போனா?’
- ‘திரும்பி வராமெ போனாலும் நம்ப மவன் இருப்பான், இல்லியா?’
அவன் மனசிலேயே ஒரு பெரும் கனம் குறைந்தது. சந்தோஷம் கூடப் பிறந்தது. அந்தப் போலீஸ்காரனை அணுகினான்.
"சண்டையிலே சேக்கற ஆபீஸுக்கு வளி எந்தப் பக்கம்?"
-----------
4.
அவன் திரும்பிவரும் வேளைக்குள் அஸ்தமித்துவிட்டது. குழந்தையை நினைத்துக்கொண்டே அவன் ஒடோடி வந்தான். இன்றைக்கென்று அவள் அவனுக்கு முன்னாலேயே வந்திருந்தாள்; அவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு முகம் மலர்ந்தது. ஆனால் அவள் முகம் மாறித் திகில் பிடித்துப் போயிருந்தது. "ஐயோ, கொளந்தையைப் பாரேன்!" என்றாள் கையைப் பிசைந்துகொண்டே அவனுக்கு அடிவயிற்றில் ‘சுரீலெ’ன்று ஜில்லிட்டது. உள்ளே ஓடினான். அதன் காதில் ஒரு நூல் ரத்தம் வழிந்திருந்தது. வயிறு உப்பி.
அதன் அருகே உட்கார்ந்தான். அவளும் குழந்தையின் அந்தண்டைப் பக்கம் உட்கார்ந்துகொண்டாள். ஆனால் அதை அவன் உணர்ந்தானேயொழிய, காணவில்லை. அவன் பார்வை குழந்தையின்மேல் நிலைகுத்திப் போயிருந்தது.
"என்ன சுருக்கனா வந்துட்டே?"
"எனக்கு இன்னிக்கு மனம் தாளலே. சண்டை போட்டுக் கிட்டு வந்துட்டேன்."
அவளும் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அவனும் சண்டையிலே போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் பிரயோசனம் என்ன? ஒன்றுமில்லை. குழந்தையைப் பார்த்தவுடனேயே அவனுக்குத் தெரிந்துபோய் விட்டது. அதற்கு மூச்சு சத்தம் போட ஆரம்பித்துவிட்டது, கொர் கொர் என்று. அவள் வயிற்றிலேயும் வாயிலேயும் அடித்துக்கொண்டு அழுகிறாள். ஆயினும் அவன் மனம் பளிங்கெனத் தெளிந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.
‘எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான். ஊரிலே தருமராஜா கோவுல்லே காப்புக்கட்டி பாரதம் உபன்யாசம் வெச்சாங்களேஎல்லாரும் தோத்தாங்க. எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப்பட்டான்; ஜெயிச்சவனும் சொகப் படல்லே. என்னவோ காரியம் சாதிக்கிறாப்போல, சண்டை போட்டதிலே கொறைச்சலில்லே, நாள் பாத்ததிலே கொறைச்ச லில்லே- பலி போட்டதிலே கொறைச்சலில்லே- அரவான் பலி’
"கொர்- கொர்-ர்.”
‘மொதல்லே புளைக்கிற வளியைக் கண்டுட்ட மாதிரி குளந்தையைப் பலி வெச்சோம். அப்புறம் அதுக்குமேலே, ஒசத்திக் காரியம் பண்றாப்போல சண்டையிலே போய் சேர்ந்தாச்சு. இனிமேல் தப்ப முடியாது. கைநாட்டுக் கொடுத்தாச்சு. நாளை மத்தியான வண்டிக்குப் புறப்படணும். அப்புறம் அந்த வண்டியிலே எங்கே போய் தள்ளறானோ. போவாமே இருந்தோம்னா நாளைக்கு கைக்கு விலங்கோட வந்துடுவான். பூட்டுமேல் பூட்டு. புளைக்கற வளி என்ன? சாவுற வளிதான்.’
‘சண்டைக்குப் போய் சேந்த சமாசாரத்தை இவகிட்டெ சொல்லலே. அது வேறே பாக்கியிருக்குது. குளந்தையைப் புதைச்சுட்டு வந்தப்புறம் இருக்குது அந்த ரகளை.’
‘ஆனால் சண்டையிலே போய்ச் சாவறதுக்குன்னு ஒரு சாவு பாக்கியில்லே இப்போ நான் செத்துப் போயாச்சு. உசிரோடு இருக்கிறது உசிரில்லே, உடல்தான். இதுவும் மடியறது இண்ணக்கில்லாட்டி நாளைக்கு நாளைக்கில்லாட்டி நாளண்ணக்கி, அண்ணக்கிமில்லாட்டி அதுக்கு மறுநாள்.’
விடியிருட்டில்தான் குழந்தையின் ‘கொர் கொர்’ சத்தம் அடங்கியது. அவள் முகத்தை அவன் பார்க்க முடியவில்லை. அவள் கன்னத்தை ஒரு தடவை வருடினான். அவன் மனம் நெகிழ்ந்தது. குழந்தையை அதன் கந்தையில் சுற்றிக்கொண்டு கிளம்பினான்.
வெளியிலும் இருட்டு. ஒரு பீடிப்பொறி மாத்திரம் தெரிந்தது.
"யாரய்யா?"
"நான்தான் பட்டணம்."- குரலிலிருந்து தன்மேல் சீறி விழுந்த ஆள் என அறிந்தான்.
‘சுடுகாட்டுக்குப் போற வளி எது ஐயா?’
அந்த நெருப்புப் பொறி எழுந்தது. "நான் காண்பிக்கிறேன், வா –“
‘பட்டணம்’ காண்பித்த வழியூடே அவன் பின்பற்றிச் சென்றான்.
--------------
6. பூர்வா
‘பூர்வா!’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டுத்தான். கண்ணைத் தேய்த்துக் கொண்டேன். கண்கள் கண்ணிரில் நனைந்திருந்தன. தூக்கத்திலும் என்னையும் அறியாமல் நான் அழுதிருக்கிறேன்.
‘டாங்’-- எங்கேயோ மணி ஒன்று அடித்தது.
இனி விடியும் வரையில் தூக்கம் எனக்கு வரப் போவதில்லை. திரும்பத் திரும்ப நினைத்த நினைவுகளே மனத்திரையில் ஆட ஆரம்பித்துவிட்டன. முன்னும் பின்னும், பின்னும் முன்னும்.
- ஆடி மூட்டத்தின் அதிகாலையில் சமுத்திரக் கரையோரத்தில் பூர்வாவின் கதை ஆரம்பமாகிறது.
நான் அலைகளைச் சுட்டிக் காண்பித்துக்கொண்டு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தேன். "மனிதன் எவ்வளவோ கண்டு பிடிக்கிறான். புதுப்புதுக் கண்டங்களைக் கண்டிருக்கிறான். அநேகமாய் இப்பூமியில் கண்டறிய வேண்டியவைகளை யெல்லாம் கண்டுவிட்டான் என்றே சொல்லலாம். ஆனால், இன்னமும் அவன் இவ்வானையும் நீரையும் சரியாய் அளந்த பாடில்லை என்றே என் அபிப்பிராயம். இன்னமும் இச் சமுத்திரத்தில் அவன் மனத்திற்கும் பார்வைக்கும் எட்டாத ஜந்துக்கள் வேண்டியன புதைந்து கிடக்கின்றன. எனக்கு என்ன தெரியுமா ஆசை? என்றேனும் இக்கரையினின்றும் இப்படியே நடந்து ஜலத்துள் போய் உயிருடனும் நினைவுடனும் இருக்க வழி யாதேனும் இருந்தால், அவ்வுலகத்தைக் காணவேண்டு மென்கிற ஆசைதான்.
"நான் பட்டணம் வந்து பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் சமுத்திரம் பார்த்த ஆச்சரியம் எனக்குத் தணிந்தபாடில்லை. எத்தனை பேர் கிறிஸ்துமஸ் லீவு என்றும் பொங்கல் விடுமுறையென்றும் பட்டனத்துப் புதுமைகளைப் பார்க்க வேண்டுமென்று வருகிறார்கள். பட்டணத்திலும் நாளுக்கு நாள் ஒரு புதுமை இருக்கிறது. ஆனால் அப்புதுமைகளெல்லாம் புளித்துவிட்டன. இச்சமுத்திரத்தின் புதுமை எனக்குத் தணிந்தபாடில்லை."
பூர்வா மெளனப் புன்னகை புரிந்தாள். நான் மேலும் பிதற்றிக்கொண்டே போனேன்.
"நான் முதல் முதல் பட்டணம் வந்ததை உன்னிடம் சொன்னேனோ? நான் கிராமத்திலிருந்து ஓடிவந்து விட்டேன். ஒருநாள் என் பாட்டி எல்லாக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு ராஜகுமாரன் கதை சொன்னாள். அவன் யாரோ ஒரு ஜலகன்னியை மணந்துகொண்டானாம். அவளை முதன் முதலில் எப்படிப் பார்த்தானென்றால், உச்சி வெய்யில் வேளையில் சமுத்திரத்தில் இருந்து அவள் வெளிப்பட்டுக் கரைக்கு வந்து, வெய்யிலில் காய்ந்துகொண்டிருந்தாளாம்.
அப்பொழுது அந்த வழியில் வேட்டையாடிக் களைத்து, தொண்டை வறண்டு ஒரு ராஜகுமாரன் வந்தானாம். எங்கே பார்த்தாலும் ஜலமாய் இருந்தாலும் உப்புத் தண்ணிர்; தாகத்தினால் தவிக்கிறான். அப்பொழுது இந்தச் சமுத்திர தேவதையைக் கண்டானாம். அவன் அவளைக் கண்டு ஆசைப்பட்டானாம்.
"இப்படி ஏதோ கதை போகிறது. எனக்கு இப்பொழுது முழுதும் ஞாபகமில்லை.
"பாட்டி எப்படி அந்த ஜலதேவதை கரைக்கு வந்தாள்?" என்றேன்.
"சமுத்திரத்திலிருந்து."
"சமுத்திரம் எங்கே இருக்கிறது?"
"பட்டணத்தில்."
"அவள் எப்படி வரமுடியும்?"
"அலையே படகாய், அவள் கையே துடுப்பாய்."
"படகு என்றால்? அலையென்றால்? துடுப்பு என்றால்?"
"சனியனே! தூங்கறத்துக்குக் கதை சொன்னேனா? நீ குறுக்குக் கேள்வி கேக்கறத்துக்குக் கதை சொன்னேனா? திரும்பிப் படுடா கழுதை --"
"என்ன எனக்குத் தோன்றிற்றோ தெரியவில்லை; அடுத்த நாள் காலை நான் அலமாரியிலிருந்து இரண்டு கை நிறையச் சில்லறையை அள்ளி மடியில் கட்டிக்கொண்டு ஒருத்தருக்கும் தெரியாமல் பட்டணம் கிளம்பிவிட்டேன். எங்களுர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை எங்கள் வீட்டுக்குத் தெரியும். அதனால் அடுத்த ஸ்டேஷனுக்கு நடந்து போய் வண்டி ஏறினேன். எந்த இடத்திற்கு டிக்கட் என்று கேட்டான். சமுத்திரத்திற்கு" என்றேன். இப்பொழுது சிரிப்பாய் வருகிறது."
பூர்வா அவளுடைய புரியாப் புன்னகை புரிந்தாள்.
"பட்டப் பகலில் ஒரு படகடியில் படுத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தேன். அலைகள் மலைகள் போல் எழும்பி, சிகரத்தில் நுரையைக் கக்கின. நுரைமேல்."
"பூர்வா! பூர்வா!"
பூர்வாவின் செவியில் என் வார்த்தைகள் ஏறவில்லை. அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு செம்படவனின் செய்கைகளில் அவள் கவனம் நழுவிவிட்டது.
கடற்கரையில் எங்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வெகு நிதானமாய் அவன் ஒரு நண்டைத் தூண்டிலில் ஏற்றி ஜலத்தின் மேல் வீசி எறிந்துவிட்டு, யோகத்தில் ஆழ்ந்த மூர்த்திபோல் அசைவற்று மெளனமாய் மீனின் வருகைக்குக் காத்துக்கொண்டு நின்றான். அவ்வளவு தூரத்தில் இருக்கும் முள்ளில் மீன் மாட்டிக்கொண்டது அவனுக்கு எப்படித் தெரிந்ததோ! ‘கரகர’ வென்று இழுக்கும் கயிற்றின் நுனியில் ஒரு சாண் நீளத்துக்கு ஒரு மீன் துடித்துக்கொண்டு ......
அதைக் கழற்றி, இடையில் கட்டியிருக்கும் ஒலைக் கூடையில் போட்டுக்கொண்டான். கூடைக்குள் படபடவெனச் சப்தம் திடீரென்று பூர்வா அவனை அணுகிக் கூடையைத் திறந்து காண்பிக்கச் சொன்னாள். அவன் ஏதோ முணுமுணுத் தான். "பார்த்தால் பார்ப்பாரு மாதிரி இருக்குதே!" என்று சொன்னான் போலிருந்தது.
கூடைக்குள் இரண்டு மீன்கள் கூடை வாயை எட்டி எட்டி உயிர்மூச்சுக்குத் தாவித் துடித்துக்கொண்டிருந்தன. போய்க்கொண்டிருக்கும் உயிரில் மலர்ந்துபோன அழகிய விழிகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு, ‘ஆவ், ஆவ்’ என்று வாயைத் திறந்தவாறு மூச்சுக்குத் தவித்துக் கொண்டு....
திடீரெனப் பூர்வாவின் தலை கிறுகிறுத்துக் கண்களில் ஒளி மங்கியது. நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் அப்படியே கீழே விழுந்திருப்பாள். அவள் உதடுகள் என் செவியில் உராய்ந்தன. காற்றின் அசைவைப் போல் அவள் வார்த்தைகள் சப்தமற்றுப் போயின.
"நான் இரண்டு மாதங்களாய் ஸ்நானம் பண்ண வில்லை." -
நினைவு மங்கிய அவள் உடலை நான் தாங்கிக்கொண்டு நின்றேன். அவ்வலைஞன் என்னைப் பார்த்து மிரள மிரள விழித்துக்கொண்டு நின்றான். அவன் கையில் ஏந்திய துண்டிலில் ஒரு நண்டு கழுவில் ஏற்றப் பெற்று, கால்களை உதைத்துக்கொண்டிருந்தது. எங்கள் மெளனத்தில் சமுத்திரம் பேரிரைச்சலாய் இருந்தது. அலைகள் எங்கள் கால்களைக்
கழுவின.
* * *
நான் வீடு திரும்பும் வேளையில் கையெழுத்து மறைந்து விட்டது. பூர்வா வாசற்புறத்துத் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்தாள். நெற்றி மயிரில் இரண்டு பிரியும் மேலாக்கும் மாலைக் காற்றில் மெதுவாய் அசைந்தன. அவள் கண்கள் மூடியிருந்தன. சந்தடி செய்யாமல் அவள் பக்கத்தில் போய் பூர்வா என்று கூப்பிட்டேன். அவள் துங்குகிறாளா, அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாளா என்று தெரியவில்லை. எங்களைச் சுற்றி ஒரே அமைதி. செடிகளிலும் மரங்களிலும் இலைகள் சலசலத்தன.
நான் தாழ்வாரத்தின் சுவரின் மேல் அமர்ந்தேன். பூர்வா எனக்குப் புரிந்தபாடில்லை. இம்மாதிரி படுத்துக்கொண்டிருப்பதில் அவளுக்கு ரொம்பவும் விருப்பம்.
சோம்பேறியா?
ஆயின் அப்படியும் தோன்றவில்லை; ஏனெனில், ஒரு சமயம் நான் டைபாய்டு ஜுரத்தில் படுத்தேன். இருபத்தொரு நாட்கள் கண்கூடத் திறவாத கடுஞ்சுரம் என் நினைவு எனக்கு வந்ததும் என் ஞாபகத்தில் முதலில் உறைத்தது அவள் உருவமே. கவலையின் மிகுதியால் முடியக்கூட மறந்து அவிழ்ந்த கூந்தல் பிரிந்து கழுத்தின் இரு பக்கங்களிலும் சரிந்து என் மார்மேலே விழுந்திருந்தது. இரவும் பகலுமாய் தூக்கத்தில் மூடாத விழிகள். அன்ன ஆகாரம் மறந்ததால் சுண்டிப்போன முகத்தில் கண்கள் அளவினும் பெரியதாய் என்னை வெறித்தன. டாக்டர் என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார், அவளைச் சற்று அச்சத்துடனேயே பார்த்த வண்ணம்.
"ஸார், இந்தப் பூட்டுக்குப் பிழைத்துவிட்டீர்கள். ஆனால் இந்த அம்மா இல்லாவிட்டால் உங்களுக்கு என்ன நேர்ந் திருக்குமோ எனக்குத் தெரியாது. நீங்கள் தப்பர்த்தம் பண்ணக் கூடாது. உங்களைப் பெண்டாட்டியாய்க் கவனிக்கவில்லை; பிசாசாய்த்தான் கவனித்தார்கள். உங்களுக்கு மருந்து கொடுக்கு முன்னால் இந்த அம்மாளுக்கு உடல் தேற மருந்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
"பூர்வா, பூர்வா, பூர்வா!"
நான் பாட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் ஒரொரு சமயம் அவளுக்குக் காதே கேட்காது.
செவிடா?
அதுவும் சொல்வதற்கில்லை. ஏனெனில் ஒரு இரவு என்னை அவள் அவசர அவசரமாகத் தட்டி எழுப்பினாள்.
"என்ன?" என்றேன், தூக்கத்தில் கையைக் காலை முறித்துக்கொண்டு. என் கையை அவசரமாய் மடக்கினாள். "உங்கள் தலைமாட்டில் தேள்:"
"சும்மா கனவு காணாதே-- இந்த இருட்டில் நான் எங்கிருக் றேன் என்று என்னாலேயே கண்டுபிடிக்க முடியாதே! உன்னால் முடியுமா, நீ தேளைக் கண்டுபிடிப்பதற்கு? இந்தா, சொல் பார்க்கலாம்- என் கையில் எத்தனை விரலை மடக்கிக் கொண்டிருக்கிறேன்?" என்று வேடிக்கை பண்ணினேன்.
"விளையாடாதீர்கள். விளக்கைப் போடுங்கள்."
விளக்கைப் போட்டேன். வாஸ்தவமாய் ஒரு சருகுத் தேள் கொடுக்கைப் பாய்ச்சிக்கொண்டு கொட்டத் தயாராய் நின்றது. அதன்மேல் ஒரு அடியைப் போட்டேன். "எனக்குத் தெரியவில்லையே" என்றேன், அவளை வியந்தவண்ணம். "அது விழுந்த சப்தம் கேட்டுத்தான் நான் எழுந்தேன்" என்று முனகிக் கொண்டு பூர்வா திரும்பிப் படுத்தாள். அவள் பேசிக்கொண் டிருக்கையிலேயே நித்திரை அவளை மருவ ஆரம்பித்துவிட்டது.
"பூர்வா, அறுபது நாழிகையும் என்ன யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாய்? எந்தக் கவலையைப் பட்டுக்கொண்டிருக்கிறாய்?" .
ஆம். இவள் இவ்வளவு கவலைப்பட்டாற்போலிருப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். எங்கும் அமைதியைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. அடையாறில் ஒரு மூலையில் எங்கள் வீடு. நாற்புறங்களும் மதிற் சுவர்கள். தோட்டத்தின் நடுவில் வீடு. வாசற்புறத்து அறைப்பக்கமாய் ஒரு மாதுளை மரம். முத்தமிட்டுச் சிவந்த உதடுகள் போலப் பழங்கள் செவசெவ என்று அடுக்கடுக்காய்த் தொங்குகின்றன. மரத்தடியில் ஒரு கல்மேடை எங்கள் தோட்டத்தில் எவ்வளவோ பூச்செடிகள் வைத்தும் மாலை வேளைகளிலோ, சில சமயம் காலை வேளைகளிலோ எதிர் பாராத சமயத்தில் மனத்தைத் திகைக்க அடிக்கும் ஒரு மனம் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும். தோட்டக்காரனைக் கேட்டால் சற்று நேரம் யோசித்துவிட்டுப் பக்கத்துக் காம்பவுண் டில் இருந்து வருகிறது என்பான். ஆனால் பக்கத்துக் காம்பவுண்டில் விசாரித்ததில், அம்மாதிரியான செடியோ, மரமோ அங்கே ஒன்றும் கிடையாது.
வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதியாய் ஒடுகிறது. நிலவில் அது பளிங்காய் மாறிவிடும். துரத்தில் சமுத்திரத்தின் ஒசை, இரைச்சலற்று, இதமான பேச்சைப்போல் இழைகிறது.
வீட்டுள் என் அறையில் அலமாரிகளில், மனத்திற்கும், சமயத்திற்கும் ஏற்ற புத்தகங்கள் நிறைந்து சுவர்களை மறைக்கின்றன. சோபாவும், மெத்தை நாற்காலிகளும் மலிந்து கிடக்கின்றன. தரையை ஜமக்காளமும், புலித்தோலும், மான்தோலும் போர்த்துகின்றன. இவ்விடத்தில் விசனத்திற்கும் குருட்டு யோசனைகளுக்கும் எங்கே இடம்? .
"பூர்வா, பூர்வா!"
கேட்ட கேள்விக்கு பதில் வராது. என் கூப்பாட்டுக்கு அவளது அர்த்தமற்ற, அல்லது அர்த்தம் நிறைந்த, அல்லது அர்த்தம் புரியாத, ஆனால் கவர்ச்சி மிகுந்த புன்னகைதான் பதில்.
நான் இன்னமும் யோசிக்கிறேன்; நான் அவளை மணந்தேனா, அவள் புன்னகையை மணந்தேனா? முதன் முதலில் நான் அவளைச் சிந்திக்கையில்---
என் விவகாரங்களையொட்டி அவள் பெற்றோர்கள் வசித்து வந்த கிராமத்திற்கு நான் போகும்படியிருந்தது. முன்பின் எங்கே என்ன என்று அநுபவமோ, பார்த்தோ இருந் திருந்தால்தானே? கிணற்றடியில் குடத்தை மடியில் வைத்துக் கொண்டு முழங்கையை மடியில் ஊன்றிக்கொண்டு மோவாய்க் கட்டையைக் கையில் தாங்கிய வண்ணம் தரையில் தட்டுத் தடுமாறி ஊறிச் செல்லும் வண்ணாத்திப்பூச்சியைப் பார்த்துக் கொண்டு பொருள் புரியாப் புன்னகையுடன் உட்கார்ந் திருந்தாள். எனக்கு நல்ல தாகம். நான் வாய் திறந்து கேட்கு முன்னர் வீட்டுள்ளிருந்து, "பூர்வா! பூர்வா! என்ன பண்ணிண்டிருக்கே?" என்று ஒரு அசதியான குரல் வந்தது. குடத்தில் ஜலத்தை மொள்ளாமலே அந்தப் பெண் வீட்டினுள் சென்றாள்.
அந்த கிராமத்தில் நான் ஒரு வாரம் தங்கும்படி நேர்ந்தது. அவ்வூரிலேயே அவர்கள் வீடு ஒன்றுதான் பிராமணர் வீடு. ஆகையால், எனக்குத் தங்குவதற்கும் அங்குதான் ஏற்பாடாயிற்று.
அவர் தகப்பனார் பெரிய சம்சாரி, ஏழெட்டுக் குழந் தைகள். பெரிதும் சின்னதும்- அதில் ஐந்து பெண்கள். ஏழை, என்னதான் பண்ணுவார்! பாவம். ஊருக்கு மணியம் அவருடையது என்றாலும், வருவாய் மிகவும் சொல்பமே. க்ஷாமம் பிடித்த ஊர். சதா வீட்டில் இரைச்சல் குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டே யிருக்கும்; சின்னவர் பெரியவர் என்னும் தராதரம் இருக்காது. வீட்டுக்கு வேற்று மனிதன் வந்திருக்கிறானே என்கிற லஜ்ஜையைக்கூடப் பொருட்படுத்தாமல் ஒன்றுடன் ஒன்று அடித்துப் புடைத்துக் கொள்ளும் "அப்பா இதைப் பாரேன். அம்மா இதைப் பாரேன்!" அவர் ஒரொரு சமயம் தலையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்துவிடுவார். "இந்தச் சனியன்களை யெல்லாம் எங்கேயாவது தொலைத்துவிட்டு அக்கடா என்று ஒரு நாளைக்கு இருக்க மாட்டேனா?" என்று வாய்விட்டே கத்துவார். இந்தப் புயலின் இடையில் பூர்வா கொஞ்சமும் பதட்டமற்று அவளுடைய அதிசயப் புன்னகையுடன் வளைய வருவது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
எதிரே உடன்பிறந்தவர்கள் ஒருத்தரை ஒருத்தர் கொலை பண்ணிக் கொண்டிருப்பார்கள். அவள் விலக்கவும் மாட்டாள், சேரவும் மாட்டாள். அவள் மனசைப் பொறுத்தமட்டில் அங்கேயே இருக்கவும் மாட்டாள் என்று நினைக்கிறேன். எதிரே ஆழ்ந்த யோசனையுடன், அமைதியாய் மோவாய்க் கட்டையைக் கைகளில் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பாள். அவள் என்ன கனவு காண்கிறாள்?
அவள் கனவு காண்பதும், காணும் நிலையும், அவள் புன்னகையும் அவளுக்கு மிகவும் பொருத்தமாய் இருந்தன. அப்பொருத்தம் என் மனத்தைக் கவர்ந்தது; நான் அச்சமயம் தன்னந்தனி; தனிக்காட்டு ராஜா. மெதுவாய் ஒரு பொது ஆள் மூலமாய் வார்த்தையை விட்டேன். அவர் பாவம், பிரமித்துப் போனார்! "அந்தப் பையனுக்குத் தெரியுமா, அந்தஸ்தில் நம்மிருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கிற வித்தியாசம்? நான் அன்னக் காவடி, கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமானாலும் சகலமும் அவனேதான் ஏற்பாடு பண்ணிக்கொள்ள வேண்டும். என்னிடத்தில் ஒரு சல்லிக்காசுகூடக் கிடையாதே" என்றார்.
"எல்லாம் தெரியும் சுவாமி! உமக்கு ஏன் அந்தக் கவலை! உம்மைத் தேடிக்கொண்டு அதிருஷ்டம் வந்தாலும் கண்ணை ஏன் இப்படிக் கெட்டியாய் மூடிக்கொள்கிறீர்கள்?" அவரும் அவர் மனைவியும் நன்றி தாங்காமலே கண்ணீர் உகுத்தனர் என்று கேள்வி. ஐந்தில் ஒரு பெண் என்றாலும், ஒரு கனம் குறைந்தது என்றுதான் அவர்கள் நிலையில் அவர்கள் சந்தோஷப்பட முடியும்.
மாதமும் தை. அந்த வாரத்திலேயே ஒரு முகூர்த்தமும் நேர்ந்தது. மணம் நிறைவேறிய சுருக்கு எனக்கே இப்பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. இரண்டாம் நாளிரவு வண்டி யேறினோம். முதல் வகுப்பு வண்டியில் நானும் அவளும்தான். வண்டி இருளைக் கிழித்துக்கொண்டு வெகு வேகமாய்ச் சென்றது.
‘பூர்வா’ என்று கையைப் பிடித்தேன். ஜன்னலிலிருந்து அவள் முகம் என் பக்கம் திரும்பிற்று. என்ன ஜாஜ்வல்யமான புன்னகை மோவாய் குழிந்தது. இத்தனிமையில், இந்த நெருக்கத்தில், இம்மங்கிய வெளிச்சத்தில், அவள் முகத்தின் கவர்ச்சி பன்மடங்கு அதிகமாய் எனக்குப் பட்டது.
‘மணம் புரிந்துகொண்டபின் மனிதன் நிலை என்ன வாகிறது?’ என்று இன்னும் என்னைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எப்படியிருந்தாலும், அதற்கு முன்னால் இருந்தாற் போல் அவன் இருப்பதில்லை. கால்கட்டு, பொறுப்பு என்பதைப் பற்றி நான் இப்பொழுது பேசவில்லை; அவன் மனநிலை. எப்படியோ அவன் முழுமை அவனிடமிருந்து கழன்றுவிடுகிறது. அவன் இரு கூறாய்விடுகிறான். ஒரு பாதியை மனைவி பெற்று விடுகிறாள். அவனிடமிருந்து போனது, போனதுதான். அதை அவன் திரும்பிப் பெறும் முயற்சியில் தவிக்கும் தவிப்புத்தான் தாம்பத்திய வாழ்க்கையோ? ஆயினும் அதே மாதிரி தன் பாதியை மனைவி அவனிடம் கொடுக்கிறாளோ? அவனிடமிருந்து அடைந்த பாதியே அவளுடைய கோட்டை ஆண்களைவிட ஏமாந்த பிராணி இவ்வுலகில் எதுவுமே இல்லை!
அவள் அமைதி முதல் கொஞ்ச நாட்களுக்கு அதன் புதுமையால் ஒரு கவர்ச்சியாயிருந்தது. வெய்யிற் காயும் பூனைக் குட்டிபோல் அவள் சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டு புன்னகை புரிந்துகொண்டிருப்பாள். மடியில் ஒரு புத்தகம் கவிழ்த்துப் போட்டிருக்கும். அவள் அதைப் படித்துக் கொண் டிருந்தாளோ? அல்லது பகற் கனவு கண்டு கொண்டிருந் தாளோ? என்னதான் கனவு கண்டு கொண்டிருப்பாளோ?
அவளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? மொத்தத்தில் அவள் வீட்டைப்பற்றிப் பேசுவதில் அவளுக்கு விருப்பமில்லை என்று அறிந்தேன். இளமையிலேயே வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்க்கையைப் பற்றிப் பிரியமாய் என்ன பேச முடியும்? ஒரு தடவை, ஆகாரமில்லாத பலவீனத்தில் கிணற்றடி யில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாளாம். மண்டையில் நல்ல அடி தரித்திரத்தின் கொடுமையால் ஏற்படும் மனக்கசப்புடன் பொறுமையும் பிரியமும் அற்ற அக்கஷ்டத்தைப் பற்றி விஸ்தரிக்க அவளுக்கு இஷ்டமில்லை.
"ஆயினும் எல்லாம் நிறைந்திருக்கும் இவ்விடத்தில் நீ ஏன் சந்தோஷமாய் இருக்கக் கூடாது?”
அவள் உதடு நகை அரும்பு கட்டியது.
"நான் சந்தோஷமாய் இல்லை என்று நீங்கள் என்ன கண்டீர்கள்? சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?"
அவளுடைய அமைதி, அமைதியல்லாது இயற்கையிலேயே அவளுக்குடைய பத்திர சுபாவம் என்று இப்பொழுது காண்கிறேன். -
அவள் பத்திரம் என் மனத்தின் நிம்மதியைக் குலைத்து எனக்கு விஸ்தரிக்கவொண்ணாத ஒரு மனச் சங்கடத்தை இயக்குகின்றது. எங்கள் சுபாவத்தின் மாறுபாட்டால், நாங்கள் அறியாமலே எங்களிருவரிடை எழும்பியிருக்கும் சுவரை நான் தகர்க்க முயன்றதில்லை. நான் அதில் முட்டிக் கொண்டதுதான் மிச்சம். நான் கலகல"வென்று ஒரு தோழியை வேண்டினேன்; கல்லை வேண்டவில்லை. ஆயினும் நான் அவள்மேல் வைத்து விட்ட பிரியத்திற்கு எல்லையில்லை. அப்பிரியத்தில் என் முழுமையை நான் இழந்துவிட்டேன். அவ்வெதும்பலிலேயே என் அகம் எரிந்தது. ஈடாக அவளுடைய அம்சத்தை நான் பெறாது என்னை நான் இழந்துகொண்டிருக்கும் சங்கடம் எனக்குத் தாங்க முடியவில்லை. இயற்கையாகவே என் உடலிலும் மனசிலும் என்னையும் மீறித் துடிக்கும் உத்வேகம் செலாவணியாவதற்கு இவள் என் வாழ்க்கையில் புகுமுன்னர் எத்தனையோ வழிகள் இருந்தன.
இப்பொழுதோ?
"ஹே, பூர்வா! உன் உடலில் ஒடுவது ரத்தமா அல்லது பானையிலிட்டுக் குளிர வைத்த பச்சை ஜலமா?"
திகைப்பில் அவள் விழிகள் மிரளுகையில் அவளுக்கு எப்படி அவ்வளவு அழகு கொடுக்கிறது?
"நீங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லையே"
"வாஸ்தவம், நான் என்ன உளறுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை."
பாலையில் கானலைக் கண்டு தவிப்பவன்போல் இருக்கிறது என் மனநிலை.
ஒரு தடவை சமையலறையில் மாடப் புரையில் எதையோ தேடுகையில் அவளைத் தேள் கொட்டிவிட்டது. வலியினால் வாய்விட்டுக் கத்தமாட்டாளா! கொட்டிய இடத்தைக் கெட்டியாய் அழுத்திப் பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நெறி தோளைக் குடைகிறது. நெற்றியில் வியர்வை முத்து முத்தாய் அரும்புகிறது. துடிக்கும் வலியில் புருவங்கள் நெரிகின்றன. ஆயினும் வாயினின்று, "அம்மாடி பொறுக்க முடியவில்லையே!" என்ற ஒரு அரற்றல்கூடக் கிளம்ப மாட்டே-னென்கிறது. அவளை நான் என் தோளில் சாய்த்துக்கொள்கிறேனென்றாலும் என் ஆறுதலுக்குச் சாய்த்துக்கொள்கிறாளேயொழிய, அவள் வேதனைக்குத் தணிப்பாய் இருப்பதாகத் தெரியவில்லை. அவளுக்காக நான் தவிப்பது என் தவிப்பே அவள் தவிப்பில் ஒரு பங்கு அல்ல. அவள்தான் எனக்குத் தன்னில் பங்கு தரமாட்டேனென்கிறாளே! இவள் மனித ஜன்மந்தானா, அல்லது மிருகமா!" என்றுகூட நான் வியப்புறுகிறேன். வேதனையை அவ்வளவு மெளனமாய் அவைகள்தாம் சகித்துக் கொள்ளும்.
* * *
ஆயினும் அவள் இப்பொழுது நெற்றியில் கூந்தலின் இரு பிரியும், மார்பின் மேல் மேலாக்கும் மாலைக் காற்றில் மெதுவாய் அசைய, மூடிய கண்களுடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருக்கும் நிலையை நான் கவனிக்கையில், என்னையும் மீறி என் மனம் பரிதவிக்கிறது.
பாவம், தன்னுடன் போகாது என் வித்தையும் தாங்கு கிறாள். ஏற்கெனவே சற்று நலிந்த உடல் இன்னும் நாளாக ஆக என்னவோ! என் மனத்தை அலசிப் பார்த்துக் கொள்கிறேன். நான் இன்னமும் சில நாட்களுக்குள் தந்தை யாவதைப் பற்றி எனது மனத்தில் சந்தோஷமா? பெருமிதமா? ஒரு தினுசில் சிறு அசடு தட்டுகிறது- ஏதோ ஏமாந்துபோன மாதிரி; ஆனால் மனத்தில் ஒரு நிம்மதியும் படுகிறது. அக்குழந்தையின் மூலம் அவளிடம் நான் எனது அம்சத்தில் ஒரு பங்காவது பெற்றுவிடுவேன் என்றே நினைக்கிறேன். பிறப்பது பெண்ணாய்ப் பிறந்தால் தேவலை, தன் தாயைவிட என்னிடம் இன்னும் கொஞ்சம் பட்சம் காட்டாதா?
திடீரென்று அவள் குரல் என் சிந்தனையைக் கலைத்தது. "அந்த வலையன் கூடைக்குள் மீன் ரெண்டு இருந்ததா, மூணு இருந்ததா?"
"இரண்டுதான் என்று நினைக்கிறேன். இப்பொழுதென்ன அதைப்பற்றி?"
"அந்தக் குடலைக்குள் அந்த ஜோடி எப்படித் தவித்தது பார்த்தேளா? எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை."
"அதெல்லாம் பற்றி நினைத்துச் சங்கடப்பட்டுக்கொண் டிருக்காதே. மனசில் அதெல்லாம்-"
"-அதோ பாருங்கள்" என்று மறுபடியும் அவள் குரல் குறுக்கே வெட்டிற்று. திகிலின் அதிர்ச்சி கண்ட குரல். எனக்கே புதிதாய் இருந்தது. ஆகாயத்தைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தாள். ஆகாயத்திலிருந்து இரண்டு நட்சத்திரங்கள் விழுந்துகொண்டிருந்தன. நிலையினின்று கழன்று சத்தமற்று சீறிக்கொண்டே இறங்குகையில் அந்தரத்தில் ஒன்று கலந்து ஒரே நட்சத்திரமாய் உதிர்ந்தன. வீட்டுக்குப் பின்புறம் அடையாற்றில் விழுந்திருக்கும்.
அவள் கையை மெதுவாய்ப் பிடித்தேன். அதில் ஒரு சிறு நடுக்கம் இருந்ததோ! பச்சை மரத்தைப் பார்த்தாயோ?" என்றேன் காதண்டை, மெதுவாய், கேலியாய், மனசுக்குத் தைரியமூட்டும் பாவனையாய். அவள் பெருமூச்செறிந்தாள். என்ன விசனமோ அறியேன்.
* * *
ஆவணி—புரட்டாசி--ஐப்பசி…
வெளியில் நல்ல மழை பெய்கிறது. அடையாறு என் வீட்டுக்குப் பின்சுவர் வரையில்கூட எட்டிவிட்டது என்று நினைக்கிறேன். வானத்தினின்று குடம் குடமாய் ஊற்றுகிறது. பகலிலேயே விளக்கைப் போட்டுக் கொள்ளும்படியான இருள் கவிந்தது.
பூர்வா.
என் எதிரில் சோபாவில் சாய்ந்துகொண்டிருக்கிறாள். அவள் அவயவங்கள் உருண்டு திரள ஆரம்பித்துவிட்டன. உடலிலும் முகத்திலும் ஒரு தனி அழகு பொலிகிறது. மேனியில் ஒரு பளபளப்பு. அவளுடைய புரியாப் புன்னகையில் முன்னிலும் பன்மடங்கு மயக்கு. பேச்சில்- எங்கே அவள் முந்தியளவுகூட இப்பொழுது பேசுவதில்லை! தன்னுள் தானே மூழ்கிக் கிடக்கிறாள்.
"பூர்வா கலகலவென்று இரேன். குருட்டு யோசனை பண்ணிக்கொண்டிருக்காதே. பொம்மனாட்டிகள் கர்ப்ப காலத்தில் சந்துஷ்டியாய் இருந்தால் சந்ததியும் நன்றாய் இருக்கும். சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும்."- நான் சொல்வதெல்லாம் அவள் காதில் விழுந்தால்தானே!
"பூர்வா, பூர்வஜன்மத்தில் நீ என்னவாய் இருந்திருப்பாய் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாயா? அவள் கண்களில் முதன்முதலாய் ஒரு குறுகுறுப்பும் விந்தையும் தட்டின.
"ஏன் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது?"
என்னை உறுத்திய எரிச்சல் திடீரென்று தணிந்தது. அதற்குப் பதில் மனசில் ஒரு சிறு விசனம் புகுந்தது. "ஆம், மிருகங்களுக்குப் பூர்வ ஜன்ம வாசனையிருக்குமாம். அதனால் தான் அவைகள் ஆகாரம் தின்னாத வேளையில் தம்முள்தாமே ஆழ்ந்திருக்கின்றன. ‘ஐயோ, அந்த ஜன்மத்தில் அப்படியிருந் தோமே, இப்பொழுது இப்படியிருக்கிறோமே’ என்பது அவைகளின் சிந்தனை போலும்! நீ அநேகமாய் அப்படித்தான் இருக்கிறாய்."
"உம்?" என்று சிரித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்குப் பேசப் பிடித்தமான விஷயம் ஏதோ கண்டுபிடித்து விட்டேனென்று தோன்றிற்று. அதில் ஒரு சந்தோஷம். அவளை சுவாரஸ்யப்படுத்தும் விஷயம் ஏதோ ஒன்றேனும் என்னிடம் இருப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம். மனிதனின் சபலத்தை என்னென்று சொல்வது?
ஜன்னல் கண்ணாடியில் மழைத்தாரை வழிந்தது. அதற்கப்பால் மாரியிருளின் மங்கலில் தோட்டத்தின் மாதுளை மரம், அந்தண்டை மதிற்கவர், அதற்குமப்பால் சற்று மேட்டு நிலத்தின் மேல் ஏறும் வண்டிப் பாதை அதற்குமப்பால் சவுக்கு மரங்கள், அவைகளின்மேல் மழை மேகங்கள் கவிழ்ந்த வானம், அதற்குமப்பால் தூக்கங் கலைந்து பசி கண்ட சிங்கத்தின் கர்ஜனைபோல் இடியின் குமுறல். இப்போதைக்கு வெக்கை யளிக்கும் தினுசாய்த் தோன்றவில்லை.
நான் ஏதோ என் மனத்தில் தோன்றியதைச் சொல்லிக் கொண்டே போனேன். "அவனவன் பூர்வ ஜன்ம வினைக்கேற்ற ஜன்மமெடுக்கிறான்; மறைகிறான். அநேகமாய் ஒருவனுடைய இந்த ஜன்ம குணாதிசயங்களைக் கொண்டே, அவன் பூர்வ ஜன்மத்தில் என்னவாய் இருந்திருப்பான் என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்."
"அப்படியானால் நான் என்னவாய் இருந்திருப்பேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?"
"நீ ஒரு கல்லாய் இருந்திருப்பாய் என்றுதான் எனக்குப் படுகிறது. யாராவது ஒரு மகான் இளைப்பாற உன் கல் ஜன்மத்தில் எப்பொழுதேனும் உட்கார்ந்திருக்கலாம்; அந்த ஸ்பரிச புண்ணியத்தினால் உனக்கு மானிட ஜன்மம் கிட்டி யிருக்கும். தெரியுமோயில்லையோ, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!"
எனது தர்க்க நுணுக்கத்தைக் கண்டு அவள் சிரித்தாள்.
" நீங்கள்? "
"நானா? என் அப்பா."
அவள் மிரள விழித்தாள்.
"புரியவில்லையா? நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கையிலே என் தகப்பனார் காலமாய்விட்டார். அது ஒரு அற்பாயுசு நிலை! ஆகையால் நான் பிறந்ததும் என் தந்தைதான் மறுபடியும் என் ரூபத்தில் ஜனித்திருப்பதாக என் தாயாருக்கு எல்லோரும் தேறுதல் சொன்னார்களாம். நானும் நடையுடை பாவனை எல்லாவற்றிலும் என் அப்பா மாதிரியே."
நான் என் பேச்சை முடிக்கவில்லை; வயிற்றைக் கலக்கும் தினுசில் ஒரு பெரும் இடி வீட்டின் மேலேயே விழுந்ததுபோல் மளமளவென நொறுங்கியது. "பூர்வா!" ஒரு தாவுத் தாவி அவளை அனைத்தேன். அவள் பயந்துகொள்ளாமல் இருக்க வேண்டுமே! கர்ப்பிணி. அதையொட்டினாற் போலேயே, அதனினும் பெரிய இன்னொரு இடி. பளிரென்று சாட்டை போல் ஒரு மின்னல் யுகத்தையொத்த ஒரு கணநேரம், நாங்கள் இருந்த அறை அதன் வெளிச்சத்தில் ஜ்வலித்து மறுபடியும் முன்னிலும் இருண்டது. அவள் உடல் வெடவெட வென்று உதறிற்று. அவளை நான் தட்டிக் கொடுத்தபோதிலும் என் தைரியம் அப்பொழுது சூன்யம்தான்.
"இடித்தது ஒண்ணா? ரெண்டா?" என்றாள்.
"எப்படியிருந்தால் என்ன?"
"சும்மா கேட்டேன்."
# # #
கார்த்திகை
"பூர்வா, நாளாகிறது. உன் வீட்டு மனுஷாள் யாரையாவது வரவழைக்கட்டுமா? அல்லது உனக்கு உன் பிறந்தகம் போக வேண்டுமென்றிருக்கிறதா?"
"வேண்டவே வேண்டாம்!" அவள் மறுப்பில் ஒலித்த தீர்மானமும், கோபமும், பயமும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தன. ஆகையால் அத்துடன் அப்பேச்சையும் விடும்படி யாய்விட்டது. ஆயினும் அவளிடம் ஒரு சிறு மாறுதலை நான் இப்பொழுது கண்டேன். அவள் மெளனம் வெறும் மெளனமாய் இப்பொழுது இல்லை. அர்த்தமும் காரியமும் நிறைந்த மெளனம். இரண்டுபேர் ஒர் அறையில் ரகசியம் பேசிக்கொண்டிருந்தால், அதைச் சுவரில் காதை வைத்துக் கொண்டு வெளிப்புறமாக ஒட்டுக் கேட்பவனின் மெளனம்; நாடி பிடித்துப் பார்க்கும் வைத்தியனின் மெளனம். அவள் எதை அப்படி ஒட்டுக் கேட்கிறாள்? பூமாதேவிக்கு நாடி பிடித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாளா? இவள் கவலைகளைப் பட்டுப் பட்டு எனக்கு மண்டைகூட நரைத்துவிடும் போல் இருக்கிறது.
ஒருநாள் நான்பாட்டுக்கு மெளனமாய் எதையோ படித்துக் கொண்டிருந்தேன். அவள் வழக்கம்போல் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், பெரிதாய்க்கொண்டே வரும் வயிற்றின் மேல் கையை வைத்துக்கொண்டு.
"கொஞ்சம் சும்மாயிருங்கள்-"
நான் விழித்தேன். "நான் சும்மாதானே இருக்கிறேன்."
"உங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லையா?"
எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். "எலியா, பெருச்சாளியா? ஒன்றும் தெரியவில்லையே."
"என் வயிற்றுக்குள் குசுகுசு வென்று யாரோ பேசும் குரல் எனக்குக் கேட்கிறது."
"சீ அசடே"
"அசடுமில்லை; சமர்த்துமில்லை. நிஜமாய்த்தான்."
"என்ன பேசுகிறது? "அம்மா பலூன் வாங்கிக் கொடேன்" என்று குழந்தை இப்பவே கேட்கிறதா?"
"உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தானா?"
முதன்முதலில் என் மனத்தில் சிறு அச்சம் கண்டது. அவள் அருகில் சென்று தோள்மேல் கையைப் போட்டுக்கொண்டேன். "பூர்வா, இன்றைக்குச் சினிமாவுக்குப் போவோம். சார்லி சாப்ளின் படம். அவனைப் புரிந்துகொள்ள பாஷை தெரிய வேண்டியதில்லை."
"பேச்சை மாத்தாதீர்கள்ன்னா...."
எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
இந்தப் பாழும் மழை ஒயாதா! இன்னமும் இம்சையாய் ‘பிசுபிசு’வென்று துறிக்கொண்டுதாணிருக்கிறது. இதனாலேயே அர்த்தமற்ற கிலேசம் ஒன்று வண்டல்போல் மனத்தில் இறங்கி உறுத்துகிறது.
அன்றிரவு படுக்கையில் முனகினாள்.
"என்ன பண்ணுகிறது பூர்வா?"
"வயிற்றைக் குமட்டுகிறது. சங்கடமாய் இருக்கிறது. வாந்தி வரும் போலிருக்கிறது. இதோ வருகிறேன்."
அவளுக்கு மறுக்கும் சப்தம் வெந்நீருள்ளிருந்து கேட்கிறது.
என் பிரிவுத்தனத்தால் அவளுக்கு என்ன பிரயோஜனம்? நானும் தவிக்கிறேன். அவளும் தவிக்கிறாள். இந்நிலையில் நானும் தனியன், அவளும் தனியள்தான்; அவள் படும் கஷ்டத்தை நான் வாங்கிக்கொள்ள முடிகிறதா? அவளால் தான் கொடுக்க முடிகிறதா? இப்படியேதான் சந்ததி உண்டாகிறது; மடிகிறது. பார்க்கப் போனால் யாரால் யாருக்கு என்ன பயன்?
# # #
மார்கழி
இரவு, தூக்கம் அவளுக்கும் கெட்டுவிட்டது; எனக்கும் கெட்டுவிட்டது. ஒரு பெரும் அசதிதான் கண்ட மிச்சம். டாக்டரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் ஒன்றும் கோளாறாய்த் தெரியவில்லை. அவளுக்கு வயிற்றில் இம்சை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஏழு மாதங்களிலேயே வயிறு நிறைந்து இறங்கிவிட்டது. அடிக்கடி ஒரு பெருமூச்சு. ஒரு இறைப்பு. ஒரு உயிர் இன்னொரு உயிரைத் தாங்கிக் கொண்டிருப்பதென்றால் இலேசாய் இருக்கிறதா?
"என் வயிற்றில் நான் எப்பொழுதும் ஒரு குரலக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரே குரலாய் இல்லை. வெவ்வேறு குரலாய் இருக்கிறது. சுவாமி எந்த ஜன்மாவை என் வயிற்றுக்குள் வைக்கலாம் என்று இன்னும் ஒவ்வொன்றாய் வைத்து வைத்துப் பார்த்து எடுக்கிறாரா? எந்தக் கணக்கில் வைப்பார்? என் வயிறு எவ்வளவு கொள்ளுமோ அந்தக் கணக்கில்லையா?"
"அடி பைத்தியமே! அன்னிக்கு என்னவோ சொன்னேன்; அதை வைத்துக்கொண்டு யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறாயா?"
"ஏன் பண்ணக்கூடாது? என் அவஸ்தையிலும் எனக்கு அப்படித்தானே படுகிறது! என் வயிற்றுக்குள்ளேயே ஏதோ சச்சரவும், மனஸ்தாபமும் நடந்துகொண்டிருக்கிறது. யாருக்கும் யாருக்கும் என்று தெரியவில்லை. சுவாமிக்கும், ஜன்மத் துக்குமா?-"
இவள் பேசுவது வேதாந்தமா? விபரீதமா? பூர்வா, இதெல்லாம் மனப்பிராந்தி. இதற்கெல்லாம் இடம் கொடாதே. நாளைக்கு போகிப் பண்டிகை. பழையன கழியும்; பொங்கலோடு புதியன பிறக்கும். இனி, தை மாதம், நாட்களெல்லாம் குஷியாய் இருக்கும். பொங்கல் கழியட்டும்; நாம் இருவரும் குற்றாலம் போவோம். நீர்வீழ்ச்சியை நீ பார்த்ததில்லையே? எண்ணெய் தேய்த்துக்கொண்டு அதனடியில் நின்றுவிட்டால் போதும், சீயக்காய் தேய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வளவு ஜோராய், ‘கொட கொட’வென்று கொட்டும். மாலையும் காலையும் அங்கு ரொம்பவும் அழகாய் இருக்கும்..."
நான் இதையெல்லாம் யாருக்குச் சொல்லிக் கொண்டிருக் கிறேன்? எனக்கா?
# # #
தை
திடீரென்று அவள் படுத்திருந்த கட்டிலிலிருந்து அவள் குரல் கிளம்பிற்று. நான் துள்ளியெழுந்தேன்.
"வேளை வந்துவிட்டதென்று நினைக்கிறேன். இடுப்பை அப்படி வலிக்கிறது."
அவள் குரல் கூடியவரையில் அமைதியாய் இருந்த போதிலும் எவ்வளவு தூரம் அவள் அடக்கிக்கொண்டிருக்கிறாள் என்று அதன் அமைதியிலும் ஒருவாறு புரிந்தது. புரிந்த அளவுகூட மனம் சகிக்க முடியவில்லை. காரை ஷெட்டிலிருந்து எடுப்பதற்கு, இதுவரையில் எனக்கு ஆகும் நேரத்தில் பாதி நேரம்தான் ஆகியிருக்கலாம். ஆயினும் இவ்வளவு நேரமாய் எனக்கு எப்பொழுதும் பட்டதில்லை.
வண்டியை முழுவேகத்தில்தான் ஒட்டுகிறேன். ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மூன்று மைல்தான். ஆயினும், இந்த மூன்று மைல் தூரத்திற்கு முழுவேகத்தில் இப்பொழுதாகும் நேரத்தைவிட, இன்னமும் சுருக்கில், இதைவிடக் குறைந்த வேகத்தில், முந்நூறு மைல் துரத்தை நான் கடந்திருக்கிறேன்.
அவள் என் பக்கத்தில்தான் உட்கார்ந்திருக்கிறாள். என்மேல் சாய்ந்துகொண்டிருக்கிறாள். சத்தம் வெளிப்படாத வண்ணம் கீழுதட்டை அவள் பற்கள் இறுகக் கடித்து அழுத்திக்கொண்டிருக்கின்றன. அவள் சரீரம் எவ்வளவு மிருதுவாய் இருக்கிறது. என் வண்டி பறக்கிறது. வண்டியின் பின் அதன் தோகை போலும் ஒரு புழுதி மேகம் அதைத் துரத்துகிறது. இந்நள்ளிரவில் நடுநிலவில் அடையாறு ஒரே வெள்ளித் தகடாய்ப் பிரகாசிக்கிறது. இந்தக் கஷ்டத்திலும் மனத்தில் இவ்வழகு பதியாமலில்லை.
நாளைக்குக் குற்றாலம் போவதாய் இருந்தோம். இப்பொழுது குற்றாலம் எவ்வளவோ தூரம் எட்டப் போய் விட்டது. குத்தாலமும் வேண்டாம்; எத்தாலமும் வேண்டாம்; வயிற்றை விட்டுக் கனம் கழிந்தால் சரி.
"என் வயிற்றில் ஏதோ பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக் கிறது. என் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுகிற மாதிரி."
வலியின் ஜன்னியில் இப்படிப் பிதற்றுகிறாளா?
அப்பாடா! இதோ ஆஸ்பத்திரி வந்துவிட்டது.
அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் நர்ஸ் ஒருத்தி அவள் புடைவையைச் சுருட்டிக்கொண்டு வந்து காரின் பின்வnட்டில் எறிந்தாள்.
டாக்டர் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். "இப்பொழுதுதான் முதல் தடவையோ?" . .
பரபரக்க வாசலில் உலாவினேன். இவர்களுக்கெல்லாம் கேலியாகத்தானிருக்கும். இப்பொழுது என் தவிப்பு அதிகமா? அவள் தவிப்பு அதிகமா? -
திடீரென்று அவளுடைய வீறல் நிசப்தத்தை வெட்டியது. என் வயிற்றைச் சுருட்டியது. வலி கடைசியில் அவளை வெற்றி கொண்டுவிட்டது. இன்னொரு வீறல். இன்னும் ஒன்று. ஒவ்வொரு வீறலுக்கும் என் இதயம் பாளம் பாளமாக வெடிப்பதை நானே உணர்கிறேன். ஆயினும் வலி அவளைக் கடைசியில் வெற்றி கொண்டதைப் பற்றி எனக்கு உள்ளுறக் கவலை கழிந்தாற்போலவே தோன்றுகிறது. பூர்வாவும் என்மாதிரி, சாதாரணப் பிறவிதான். அவளுக்கும் வலி, உணர்ச்சி எல்லாம் உண்டு. இனி என்மாதிரி அவளும் ஆகி விடுவாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்ததும் எங்களிருவருக்கும் சந்தோஷம்தான்.
நர்ஸ் வெளியே ஓடிவந்தாள். "டாக்டர்-டாக்டர் டாக்டர் பரக்கப் பரக்க உள்ளே ஒடுகிறார். என்னையுமறியாமல் என் உடல் அவரைப் பின்தொடர முயல்கிறது.
"ஸில்லி!" என்று என்னைப் பிடித்து அவர் வெளியே தள்ளுகிறார். முகத்தைக் கையில் பிடித்துக்கொண்டு வாசற்படியில் உட்காருகிறேன். காது கேட்கவொண்ணாத பேச்சுக்களும் கலவரமும் உள்ளே நடக்கின்றன. ஒரு வார்த்தை மாத்திரம் சம்மட்டி அடித்தாற்போல் உள்ளிருந்து வெளியே கேட்கிறது.
"ஹெமர்ரேஜ்!
அப்புறம் என்ன என்று எனக்கு நினைவில்லை. எனக்கு நினைவு வந்த சமயத்தில் டாக்டர் என்னைத் தோளைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டிருந்தார்.
"தைரியமாயிருங்கோ, ஸார்- நாங்கள் ஒன்றும் செய்வதற் கில்லை. ஹோப்லஸ் கேஸ், இரட்டைக் குழந்தை-- ஆணும் பெண்ணுமாய் வயிற்றிலேயே செத்துப்போய் விட்டன. ஆயுதம் போட்டுப் பிரயோஜனமில்லை- -ஹோப்லஸ் கேஸ்-"
நான் ஒன்றும் பேசவில்லை. பேச என்ன இருக்கிறது? எனக்கு அழுகைகூட வரவில்லை. என் கண்கள் காரில் சுருட்டிப் போட்டிருக்கும் அவள் புடைவையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. வெங்காயக் கலர்ப் புடைவை; ஒரத்தில் சிவப்பு பார்டர்; அவள் கலியாணத்திற்கு வாங்கின புடைவை.
கீழ்த்திசை வெளுக்க ஆரம்பித்துவிட்டது.
பூர்வாவின் கதையும் முடிந்தது.
----------------
7. மஹாபலி
சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் முடிவு முறியடித்த கோரக் களை முகத்தில் கூத்தாடியது.
போகப் போக, ஒரு காகம் பறந்து வந்து நெற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கொத்த முயன்றது. பின்னாலேயே ஈக்கூட்டங்களும் எறும்புச் சாரிகளும் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மூக்கிலும் வாயிலும் காதிலும் மொய்க்கத் தலைப் பட்டன. அவன் மார்பில் நிழல் தட்டியது. காகம் மேல் நோக்கி, "கா" என்று கத்திக்கொண்டு பறந்தது. மேலே ஒரு பருந்து, இரவு போன்ற இறகுகளை அடிக்காது விரித்து, ஆகாயத்தில் செங்குத்தாய் நீந்திக்கொண்டிருந்தது.
அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்துக்குத் தயாராயிருந்தன. அவை களுக்கு அவன் வாழ்வில் நம்பிக்கையில்லை. அவைகள் நாசமும் நசிப்பும் தவிர, வேறு எதுவும் அறியமாட்டா. ஆகையால், அவைகள் அவனை அழிக்க ஆரம்பித்துவிட்டன.
ஆனால், அதற்குள் சாலையில் நடமாட்டம் ஏற்பட்டது. முதலில் ஒருவன் வந்து பார்த்துவிட்டு உளறியடித்துக் கொண்டு ஓடி ஒன்பது பேரைக் கூட்டி வந்தான். எல்லாரும் அவனைச் சுற்றி நின்று அவன் இறந்த மர்மத்தை அறிய முயன்றார்கள். ஆயினும் அங்கேயுள்ள புல்லும் பூண்டும், புள்ளினங்களும் தவிர வேறு யார் அதை விளக்க முடியும்?
பிறகு, அந்தப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். இடம் மறுபடியும் வெறிச்சென்று போயிற்று.
கேலியில் நகைப்பதுபோல், பட்சிகள் க்றீச்சிட்டன. இலைகள் ஒசையிட்டன. ஆனாலும், இளங்காற்று அந்த மாமரத்தை ஊடுருவுகையில், அதனின்று ஒரு பெருமூச்சு கிளம்பியது. மற்ற ஓசை எல்லாம் அச்சங்கண்டு அடங்கியது.
ஏனென்றால், அந்த மனிதன் இறந்த உண்மையான காரணத்தை அந்த மரம்தான் அறியும்.
பிறப்பு
அந்த மாமரத்தில்தான் எத்தனை கிளைகள், எத்தனை இலைகள், எத்தனை காய்கள்! அம் "மா" பெரிய அம்மா"தான். பெருங்கிளைகள் அதன் குழந்தைகள். சிறு கிளைகளும் கிளையின் கிளைகளும் இலைகளும், பெரிய பேரன், சின்னப் பேரன், கொள்ளுப் பேரன்மார்களாகும். காய்களும், கனிகளும், பெண்களும், பெரிய பேத்திகளும், சின்னப் பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளுமாகும்.
அது வாழ்க்கையில் மிகவும் அடிபட்டிருக்கிறது. இது வரையில் எத்தனைபேர் எத்தனை கிளைகளை வெட்டிக் கொண்டு போயிருப்பார்கள்! உடலையே சீவுவதுபோல், அதன் பட்டையை உரித்துக்கொண்டு போயிருப்பார்கள்! எத்தனை பேர் அதன் பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு, சப்பிய கொட்டைகளை அடிமரத்தின் மேலேயே லொட்டு லொட்டென அடித்துவிட்டுப் போயிருப்பார்கள்!
ஒருவேளை அந்தக் குளமே, அந்த மரம் இரவில் வருஷக் கணக்காய் உதிர்த்த கண்ணிரின் தேக்கந்தானோ என்னவோ! சகல சுக துக்கங்களையும் அநுபவித்துத் தேர்ந்து, வாழ்க்கையை ஒரு தினுசாய் முடிவுகட்டி, கட்டுச் சரிந்து பழுத்த சுமங்கலி போல் இருந்தது அம்மா. அதற்கு நன்றாய்த் தெரியும், பிறக்கப் பிறக்க அழிவு. அதேமாதிரி, அழிய அழியப் பிறப்பு உண்டு என்று. ஆகையால், அதன் இலைகளும் காய்களும் கல்லின் அடிபட்டோ, காலத்தின் மூப்பேறியோ உதிர உதிர, அது இன்னமும் புஷ்பித்துக் கொண்டுதானிருந்தது. வாழ்க்கையில் அது கண்டது இதுதான். அது உளுத்தோ, புரையோடியோ, வெட்டி விறகாயடுக்கும் வரையில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கும்.
ஆகையால், கனதுாரத்திலிருந்து கேட்கும் தந்திநாதம் போல், காற்றில் மிதந்துவரும் மகரந்தப் பொடிகளை அதன் பூக்கள் ஏற்க மறுக்கவில்லை. மகவே பெறாதிருந்தால் இளமை மாறாதென்று தங்களைத் தாங்களே ஏய்த்துக் கொள்ளும் மாந்தரைப்போல் இல்லை அவை.
ஆகவே அதன் பல பூக்களில் ஒரு பூ வயிற்றில் ஒரு வித்தை வாங்கிக்கொண்டு, கருத்தரித்துக் காயாயிற்று. நான்கு இலைகள், தங்களுடைய அருமைத் தங்கையைப் பையன்களின் கண்ணும் பறவைகளின் பார்வையும் படாமல் மூடிக் காத்தன. அவள் வெகு அழகாயிருந்தாள். நாளடைவில், மணவறையில் மணமகளின் கன்னங்கள் போல், அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது.
ராஜாளி தன் சிறகுகளை விரித்துக்கொண்டு பாறையி னின்று எழுவதுபோல், காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக்கொண்டு கிளம்புகையில், அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்து விளையாட்டாய் ஒரு கிரணத்தை அவள் மேல் பாய்ச்சுவான். அந்தச் சமயத்தில் அவள் ஒரே தங்கமயமாய்விடுவாள்.
வேளை முதிர முதிர, தன் பச்சையையும், தன் அண்ணன்மார் பச்சையையும் தோற்கடிக்கும் வானத்தின் முழு நீலத்தைக் கண்டு அவள் அதிசயிப்பாள்.
மாலை வேளையில், மேகங்கள் வானில் விதம் விதமாய்க் கூடுவதைக் கண்டு அவள் வியப்பாள்.
இரவின் பனியில் அவள் குளிப்பாள். நடுநிசியில் இலைகளைச் சலசலத்துக்கொண்டு மரங்கள் ஒன்றுடன் ஒன்று அளவளாவுவதை அவள் கவனிப்பாள். மின்மினிகள் செடிக்குச் செடி சென்று வம்படிப்பதையும் அவள் கண்டு களிப்பாள். காலாகாலத்தில் அவள் பக்குவமடைந்தாள்.
வேட்கை
"என்ன? ஏது? எதனால்?- என்ற கேள்விகளெல்லாம் உதிக்க ஆரம்பித்துவிட்டன.
ஒரு பையன் அவளுக்கு இரண்டு மூன்று கிளைகளுக் கப்பாலுள்ள ஒரு காயைக் கல்லாலடித்து வீழ்த்தினான்.
ஏன்?
இரண்டு காகங்கள் ஒரு கிளையின்மேல் "கா கா என்று கத்திக்கொண்டு சிறகுகள் உதிரச் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
எதனால்?
ஒரு நாள் மரத்தடியில் இறக்கை யொடிந்து கீழே விழுந்த ஒரு காகத்தை, அதன் சிதைவு காணச் சகிக்காமல், பத்து காகங்கள் ஒன்று சேர்ந்து கொத்திக் கத்திக் கொண்டிருந்தன.
எதனால்?
பின்னும் ஒரு நாள், மரத்தடியில் உச்சி வேளையில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று யோகியின் யோக தண்டம் போல் பின்னிக்கொண்டு, தலையை மாத்திரம் எதிரெதிரே நிமிர்த்திக்கொண்டு, கண்களில் பச்சைக் குரூரம் கொதிக்க ஒன்றையொன்று ஒறுத்து நோக்கின.
ஏனோ?
திடீரென்று இன்னதென்று புரியாமல் எள்ளளவும் சகிக்க இயலாத ஒரு வேதனை அவளைத் தாக்கியது. அதன் வேகத்தில் அவள் உடலே குலுங்கியது. உயிரே போய்விடும் போலிருந்தது ஆனால் போகவில்லை. உள் உறுத்தல் மாத்திரம் தாங்க முடியவில்லை. இதுவரை பத்திரமாயிருந்துவிட்டு, இப்போது ஏதோ காலைவாரி விட்டாற்போலிருந்தது. இருந்த இடத்திலிருந்து, மரத்தின் ஆணிவேராகிய தன் பாட்டிக்குத் தந்தியனுப்பி னாள்- பேசுவது வேறு பாஷையானாலும், மனிதனிலிருந்து மரம் வரை மனத்தின் பாஷை ஒன்றுதானே!
"மகளே! உனக்கு வேளை நெருங்கிவிட்டது. நான் என்ன செய்வேன்! உன் நாளை எண்ண வேண்டியதுதான். உன் பலிக்கு உகந்த பாத்திரம் வருவது உன் அதிருஷ்டம்" என்ற நம்பிக்கையற்ற சேதியைப் பாட்டி பதிலாயனுப்பினாள்.
ஆகையால், தான் பலியாகும் நாளில் தன் வேதனை தீர்ந்துவிடும் என்று அந்தக் கனி நம்பிச் சகித்துக்கொண்டு காத்திருந்தாள்.
பலி
சிறு மேகங்கள் பருதியை விழுங்கின. பெரு மேகங்கள் சிறு மேகங்களை விழுங்கின. வானம் ஒரு சமயம் எல்லா மேகங்களையும் சிதற அடித்துவிட்டு, நடுவெயிலில் தன் முழு நீலத்தை மின்னிக்கொண்டிருந்தது.
அந்த முழுநீலத்தினின்று ஒரு சிவப்புப் புள்ளி புறப்பட்டதை அம் மாங்கனி கவனித்தது. கவனிக்கையிலேயே, அதன் குடல் சிலிர்த்தது. மஞ்சள் ஏறிய சிவப்பு அதன்மேல் படர்ந்தது. ஆனாலும், அது அருண ஜாலமாயுமிருக்கலாம்.
கவனிலிருந்து எறிந்த கல்போல், அந்தச் செம்புள்ளி வான முகட்டிலிருந்து கீழிறங்கி வருகையிலேயே பச்சை, மஞ்சள், வெள்ளை, ஊதா என்ற வர்ணங்கள் அதை ஊடுருவி, கடைசியில் ஐந்து வர்ணங்களும் தோய்ந்த பஞ்சவர்ணக் கிளியாய் மரத்தின்மேல் வந்து அமர்ந்தது.
கிளியின் கத்திபோன்ற நீண்ட வால் கீழிலைகளில் இடித்தது. கொடுக்கரிவாளையொத்த தன் மூக்கை இருமுறை தான் அமர்ந்த கிளையில் தீட்டி, தன்னைச் சுற்றி ஒரு முறை நோக்கியது.
காலம் வந்துவிட்டது. அது நுழையும் வேகத்தில் காற்று அடித்து, மாங்கனியை மூடிய இலைகள் ஆடின. அதன் மறைவு குலைந்தது. நடுநிசியில், நிக்ஹா"வின் முடிவில், வதுக்களி னிடையில் பிடித்த திரை விலகி, மணமகனின் பார்வைக்கு மணமகள் வெளிப்படுவதுபோல் மாங்கனியாள், தன் மன மகனின் திருஷ்டியில் பட்டுவிட்டாள். உள்ளத்தின் கிளர்ச்சியில், இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
கிளி ‘கிறிச்’சென்று ஒருமுறை சத்தமிட்டு, இறக்கைகளை விரித்து ஒரு தாவு தாவி, மாங்கனியைத் தாங்கியிருந்த கிளைக்குப் பாய்ந்து அதன் கால்களினிடையிலும் இடுக்கியது. பஞ்சுபோன்ற அதன் மார்பு, பழத்தை அழுத்தியது. தன் சகோதரர்களின் பரிவான கவனத்தைத் தவிர வேறேதும் உணராத அந்தப் பழத்துக்கு இந்தப் பிடியின் பயங்கர இன்பத்தைச் சகிக்க முடியவில்லை. கிளியின் மூக்கு அதை ஒருமுறை இடந்தேடுவதுபோல் வருடியது. அச்சமயம் அதைச் சூழ்ந்த மகத்தான விபத்தில் மூழ்கி அதற்கு மூர்ச்சையே போட்டுவிடும் போலிருந்தது.
இதுதான் அநீதியென்று அது அறிந்தது என்றாலும், இந்த அநீதியேதான், அது பிறந்து வாழ்ந்து காத்திருந்த பலன் என்றும் கண்டது. இந்தப் பலனேதான் அதன் பயன் இந்தப் பயனேதான் அதன் பதவியும்.
மாங்கனியின் மார்ப் பக்கத்தில், கிளியின் மூக்கு அரிவாள் போல் விழுந்து கிழித்தது. சாறும் சதையும், ரத்தமும் ஊன்நீரும் போல் அதன் உடலெல்லாம் வழிந்தது. அதன் இதயத்தையே தேடித் தோண்டுவதுபோல, அந்தக் கனியைக் கிளி குடைந் தெடுத்தது. மரணாவஸ்தையில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கையிலேயே, அதன் சத்தை அதன் காலன் உறிஞ்சிக்கொண் டிருக்கையிலேயே, அதன் உள்ளமாகிய கொட்டையின் முகடு வெளிவருவதை அந்தக் கனி கண்டது. அந்தக் கொட்டையினின்று ஒரு வண்டு மிரண்டு ஓடியது. அதன் உள்ளத்தைக் குடைந்தெடுத்த பூச்சி அதுதான்.
அந்தக் கணத்திலேயே கனியின் ஆவி பிரிந்து போயிற்று. அதன் சவம் கிளையினின்று நழுவித் தரையில் விழுந்தது.
தனக்குப் பலியாகி விடுவதற்கென்றே காத்திருந்த பழத்தை அநுபவித்த பிறகு, கிளி மரத்தினின்றும் பறந்து சென்று வானில் புள்ளியாய் மறைந்து போயிற்று.
# # #
சாலையோரத்தில் மாமரத்தடியில் நடந்து வந்த மனிதன் குளக்கரையில் தோல் சறுக்கி விழுந்து மாரடைப்பில் இறந்தான். அவன் இறந்த மர்மம் இதுதான்.
-------------
8. கணுக்கள்
நாங்கள் பந்தலுக்கடியில் விளையாடிக் கொண்டிருந் தோம். நான், அம்பி, பாப்பா
எங்கள் தலைக்குமேல் காய் கொத்துக் கொத்தாய்த் தொங்கிற்று. அதுவும் இந்தத் தடவை சரியான காய்ப்பு: தினம் மாற்றி மாற்றி அவரைக்காய் கறி, அவரைக்கா புளிக்கூட்டு, அவரைக்காய் பொரித்த கூட்டு, அவரைக்காய் பருப்பு உசலி
அப்பா உள்ளேயிருந்து வந்தார், வழக்கப்படி வலது கையால் இடது விலாவைத் தடவிக்கொண்டும், தன்னுடம்பைத் தானே பார்த்துக்கொண்டும்.
“ஏண்டி - "
அம்மா அப்பொழுதுதான் ஒரு காலை ஏணியின் முதல் படியில் வைத்திருந்தாள்.
"என்ன?"
"ரொம்ப இளைச்சுட்டேனாடி ?
அம்மா முகத்தில் புன்னகையரும்பிற்று.
"நல்ல நாளும் கிழமையுமா இன்னிக்காவது உடம்பைப் பத்திப் பேசாமல் இருங்களேன். சந்தோஷமாயிருப்போம்."
அப்பாவுக்குத் தன்னுடம்பைப் பற்றி நினைப்பதிலும் பேசுவதிலும்தான் சந்தோஷம். ஏதாவது மருந்து சாப்பிட்ட வண்ணமிருப்பார். கண்ணாடியண்டை போய் கண்ணை இழுத்து இழுத்துப் பார்த்துக் கொள்வார். பக்கத்தில் நாங்கள் யாராவது இருந்தால், எங்கள் கண்ணையும் இழுத்துப் பார்த்துவிட்டுக் கசப்புடன் உதட்டைப் பிதுக்கிக்கொள்வார்.
"ஊ-ஹ-ம்: பிரயோசனமில்லை! வியாதியஸ்தனுக்குப் பிறந்தது வஸ்தாதாய்ப் பிறந்துவிடுமா?" என்று தன்னையே கேட்டுக்கொள்வார்.
வியாதியைக் கொண்டாடுவதிலேயே அவருக்கு ஒரு சந்தோஷம். அத்தனைக்கத்தனை அம்மா அவருக்கு எதிரிடை எதையுமே கொஞ்சமாய்ப் பண்ணவும் தெரியாது; கொஞ்சமாய்க் கொடுக்கவும் தெரியாது; சும்மாயிருக்கவும் தெரியாது. தோட்டத்தில் ஏதாவது கொத்திக் கிளறி, நட்டு, வளர்த்துப் பறித்துக்கொண்டிருப்பாள்.
இத்தனை நாளாயும் இப்பொழுது நினைக்கையிலும் என் அம்மாவின் தோட்டம் என் கண்முன் எழுகிறது. ஒரு மூலையில் ரோஜா- அப்பொழுதுதான் பதியம் போட்டது. அதை யொட்டினாற்போல் மல்லிகைச் செடி கொஞ்சம் எட்டி, தோட்டத்துச் சுவரை யொட்டினாற்போல் மாட்டுக் கொட்டில். அதில் "கல்யாணியென்று நாங்கள் ஆசையாய்ப் பேர் வைத்து அழைக்கும் எங்கள் பசு. சுத்த வெள்ளை. வலது தொடையில் மாத்திரம் உள்ளங்கை அகலத்துக்கு அழகாய் ஒரு கறுப்புத் திட்டு. அதற்கு எட்டியும் எட்டாத தூரத்தில் முளையில் புத்தம் புதிதாய்க் காளைக் கன்றுக்குட்டி அதற்கு என்ன பேர் வைப்ப தென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரே துடி! துள்ளல்!
பந்தலின்மேல் படர்ந்த அவரையும் புடலும், நல்ல வெயிலில் தரைமேல் அழகான நிழற்கோலங்கள் வரைந்தன.
நாங்கள் எப்பொழுதும் அங்கேதான் விளையாடுவோம். வளர்ந்துகொண்டே வரும் இலைகளைத் தொட்டுப் பார்ப் போம். தொடாதேங்கோ பீடைகளா! இதோ வந்துட்டேன்.-" என்று அம்மா இரைவாள். நாங்கள் சிரிப்போம்.
ஒரு நாள் அம்மா அவரை இலை பஜ்ஜி பண்ணினாள். ருசியாயிருந்ததோ இல்லையோ, தமாஷாயிருந்தது. பஜ்ஜியைத் திறந்தால் நடுவில் இலை மாத்திரம் ஒட்டாமல் தளுக்காய், மினுக்காய், பச்சைப் பசேலென்று.
இந்தப் பந்தல், இந்தக் கொட்டில்- எல்லாமே அம்மா, தன் கையால், ஒருவர் ஒத்தாசையுமில்லாமல், தானே அமைத்தாள். அவளுக்கே அதெல்லாம் பிடிக்கும்.
இப்பொழுதுகூட அம்மாவின் சிரித்த முகத்தையும் அவளே ஒரு பசுப்போல், கொழகொழத்த சரீரத்துடன் தோட்டத்தின் நடுவில் பறித்த அவரைக்காய்கள் பிதுங்கும் மடியுடன் நிற்பதையும் நினைக்கையில் தொண்டையை என்னவோ பண்ணுகிறது. சாப்பிடும் சமயமாயிருந்தால் கையிலெடுத்த கவளம் வாய்க்குச் செல்லாது அந்தரத்தில் நிற்கிறது.
அம்மா பெயர் அன்னபூரணி.
"சொல்லேண்டி!" என்றார் அப்பா, தன் விலாவை அன்புடன் தடவிக்கொண்டே
"உங்களுக்கு உடம்பு ஒண்ணுமில்லே. போகி சொக்கப் பனையோடெ உங்கள் நோயும் போச்சுன்னு நிம்மதியா யிருங்கோ"
"அம்மா, அம்மா! பொள்ளா_ பொள்ளா-"
"சரிதாண்டா, போ!"- அம்பியின் அவசரமான அழைப்பைக்கூடச் சட்டை செய்யாமல், அம்மா அப்பாவுக்குத் தைரியம் கூறுவதில் முனைந்திருந்தாள்.
"நல்ல நாளும் கிழமையுமாப் பழசெல்லாம் வேண்டாம். ஒங்க மருந்து சீசாக்களுக்கும் பவுடர் பொட்டலங்களுக்கும் ஒரே முழுக்குப் போட்டுடுங்கோ. உடம்புக்கு ஒண்ணுமே யில்லேன்னு நெனச்சுண்டு வளைய வாங்கோ. ஒண்ணுமே யிருக்-"
"அம்மா, இதெப் பாரேண்டி- பொள்ளங்கா!"
"புடலங்காயாவது! காலமில்லாக் காலத்திலே-" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே அம்மா திரும்பினாள்.
அம்பி சிரித்துக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அவன் கைக்கு ஒரு சாண் எட்ட, நீளமாய்ச் சுண்டுவிரல் பரும்னுக்கு ஒரு புடலங்காய் தொங்கிற்று. பச்சைப் பசேலென்று அம்பி பக்கமாய் வளைந்து, நிமிர்ந்து முறுக்கிக் கொண்டு நெளிந்தது.
அம்மாவிடமிருந்து ஏதோ ஒரு வினோதமான சப்தம் கிளம்பி, அவள் மூச்சு கேவிக்கொண்டே போயிற்று. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அம்மா மூஞ்சியும் அதிலே சுழலும் கண்ணும் பயமாயிருந்தன.
இன்னமும் அந்தத் தோற்றத்தை என்னால் மறக்க முடியவில்லை. நான் மனம் சஞ்சலித்திருக்கையிலோ, குடும்பத்தில் ஏதேனும் அசம்பவம் நேரவிருக்கையிலோ, முன் அறிகுறியாக அம்மா என் கனவில், நாங்கள் அன்று அவளைக் கண்ட கோலத்தில் தோன்றிவிடுகிறாள். இருகைகளும் அடைத்த வாயும், வெளுத்த முகத்தில் பயங்கரத்தில் சுழலும் விழிகளும், மடிபிதுங்க அவரைக்காயுமாய் நிற்கிறாள்.
"என்னம்மா, என்னம்மா?" என்று நானும் பாப்பாவும் ஒன்றும் புரியாமல், கூடச்சேர்ந்து கத்துகிறோம். அப்பா, உஷ்" என்று எங்களைக் கையமர்த்தினார். பீதியால் நாங்கள் எல்லோரும் ஒண்ணாகி அந்தப் புடலங்காயையே பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன ஆச்சரியம்! அது தானே கழன்று, தரையில் விழுந்து, உயிரோடு சரசரவென ஊர்ந்துபோய் எட்டியிருக்கும் வாழைக்கன்றுகளிடையே மறைந்தது.
அம்மா ஒரு தாவுத் தாவி அம்பியை அப்படியே வாரிக்கொண்டாள். எங்கள் கல்யாணி கன்னுக்குட்டியை உடம்பெல்லாம் நக்கிக்கொடுத்து முகர்ந்து பார்ப்பதுபோல், அவள் மூர்க்கமாய் எதையோ தேடுவதுபோல் அம்பியை உடம்பெல்லாம் தடவிப் பார்த்தாள். அம்பிக்கு ஒரே வெட்கமாய்ப் போயிற்று. .
"எங்கேயாவது பட்டுதாடா கண்னே? சுப்ரமண்யா, என் வயத்துலே பாலை வார்த்தயா? அதற்குள்ளே சமாச்சாரம் பக்கத்திலே பரவிவிட்டது. என்னென்னவோ நினைத்துக் கொண்டு, ஒவ்வொருவராக வர ஆரம்பித்துவிட்டார்கள். அம்மாவை உபசாரம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
"என்னடீ அன்னபூரணி?"
"என்னடா அம்பி?"
அப்பா இதற்குள் சமாளித்துக்கொண்டுவிட்டார். "ஏண்டா, அம்பிவால்! சங்கராந்தியின் சக்கரைப் பொங்கலையும் வடையையும் கெடுக்க இருந்தையே எவ்வளவு சாமான் உன்னால் வீணாப் போயிருக்கும்! ஏண்டி, இவன் வாயைப் பிளந்திருந்தால், இவனுக்கு இப்போ புதைக்கிற வயசா, எரிக்கிற வயசா?"
- அம்மா சீறினாள். "போறுமே உங்கள் விகடம்!"
இந்தச் சந்தடியில் கன்றுக்குட்டி தும்பையறுத்துக் கொண்டு விட்டது. நான் ஒடிப்போய் அதன் வாலைப் பிடித்துக்கொண்டு கல்யாணியிடம் போகவொட்டாது தடுக்க முயன்றேன். ஆனால் அதன் பலம் என்ன! அப்பொழுது நான் குழந்தையில்லையா?
"விட்டுட்றா விட்டுட்றா!" என்று அம்மா கத்தினாள். ஆனால் அவள் அநுமதி கொடுக்கு முன்னரே அது என்னை மீறிவிட்டது. தாவிக் குதித்துக்கொண்டு தாயின் மடியில் மோதின வேகத்தில் கல்யாணிக்கு உடம்பெல்லாம் அதிர்ந்தது. மடிகூடச் சுளுக்கிக் கொண்டிருக்கும்.
கல்யாணி தன் கன்றுக்குட்டியை நக்கிக் கொடுத்தது. அம்மா அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஜலம் தளும்பிக் கன்னத்தில் வழிந்தோடியது. என்ன தோன்றிற்றோ, எதிரில் நின்றுகொண்டிருந்த என்னைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டாள். நான் திமிறப் பார்த்தேன். முடியவில்லை.
எண்ணங்கள் போகிறபடி எழுதிக்கொண்டே போனால் எல்லையே இல்லை.
2
அம்மா என்னைக் கரும்பு வாங்கிவர அனுப்பினாள்.
சந்தைக்கும் வீட்டுக்கும் மூன்று மைலாவது இருக்கும்.
சாலை வழியெல்லாம் கரும்பைப் பற்றி யோசனை பண்ணிக்கொண்டே போனேன். இப்பொழுதெல்லாமே எனக்கு யோசனைகளெல்லாம் புதிது புதிதாய் வந்தன. அப்போதைவிட இப்போது எனக்கு வயது அதிகமில்லையா?
கரும்புக்கு இத்தனை கணுக்கள் இருக்கின்றனவே, எல்லாமா தித்திக்கப் போகின்றன? நுனியையும் அடியையும் விட்டு இடைக் கணுக்களில்தான் சொல்லுகிறேன். இந்த இடைக் கணுக்களுள்கூட ஏதோ ஒரு கணுவுள், எங்கோ ஒர் இடத்தில், முழுக் கரும்பின் இறக்கிய இனிப்பெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கிறது, உடலில் உயிருக்கே காரணமாய் இதயம் இருப்பது போல்."
‘ஆனால் அந்தக் கணுவை, அதிலும் அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? அது யாருக்குக் கிட்டும்? கரும்பின் இதயம், இதயத்தின் கரும்பு!
‘சில சமயங்களில் வார்த்தையோடு வார்த்தை சேர்ந்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள் எப்படி எப்படிப் பிறக்கின்றன! அப்படியும் தம்முள் இன்னமும் ஏதோ ரகஸ்யத்தை அடக்கிக்கொண்டு. உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்- அப்படியானால் வார்த்தைகளுக்கே உயிர் உண்போன்னோ?’
- இப்படியெல்லாம் எண்ண எனக்குப் பிடிக்கின்றது.
இப்படியெல்லாம் ஏன் எனக்கு எண்ணங்கள் ஒடுகின்றன? பொங்கல் என்றா? பொங்கலின் வெயிலுக்கே மனோகரமானதொரு மங்கல்- ஜாதி நாயனத்துடன் ஒட்டி ஒழுகும் ஒத்துப்போல. அதன் மருட்சியில் வழியில் துள்ளி ஒடும் ஆட்டுக்குட்டி மான்குட்டியாய்த் தோன்றுகிறது. எவனோ ஒருவன் எச்சில் துப்பிக்கொண்டு போகிறான்; முத்தைத் துப்பினாற்போல்தானிருக்கிறது! ஒரே குடும்பத்தின் பல ஆட்கள் மாதிரி, இன்று மாத்திரம் எல்லோரும் ஏதோ ஒரே காரியமாய்ப் போகிறார்கள், வருகிறார்கள்.
சாலையில் ஒரு மரத்தின் பின்னால் ஒருத்தி இடுப்புப் புடைவையைச் சரிப்படுத்திக்கொண்டிருந்தாள். என் பார்வை அவள்மேல் விழுந்த சமயம், அவள் மேலாக்கை மார்மேல் விசிறிப் போட்டுக்கொள்ளும் சமயம். ஆனால் இந்தக் காலைக் காற்று அதற்கு விடுகிறதா? எங்கிருந்தோ ஒரு ஊதல் கிளம்பி, அவள் கையிலிருந்து புடைவைத் தலைப்பைப் பிடுங்கிற்று. புடைவை பாய்மரத் துணிபோல் உப்பிப் படபட"வென அடித்துக்கொண்டது.
அவள் என்னைப் பார்த்தாள். வெட்கம் பிடுங்கி, முகம் கவிழ்ந்தது. ஆண் பார்வையின் பனி பொறுக்காது, உடலொடுங்கி, இருகைகளாலும் மார்பைப் போர்த்திக் கொண்டாள்.
கறுப்பானாலும், குறுகுறுப்பான முகத்தில், ரத்தமும் வெட்கக் சிரிப்பும் குழம்பின.
அந்நிலையில் அவள் விண்ணின்று சிறகின் மேலிறங்கி வந்த கந்தாவைப் போலிருந்தாள்! என் எண்ணங்கள் சுரக்கும் தேனில் நான் மிதந்துகொண்டு சென்றேன்.
சாலையோரமாய் மரத்தடியில் ஒருத்தி பனங்கிழங்கு, வேர்க்கடலை, கார்மாங்காய் கூறுகட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கலில் அவள் புருஷன் உட்கார்ந்திருந்தான். மரத்தின் மேல் ஒரு கரும்புக் கட்டைச் சார்த்திவிட்டு, அதனின்று அவன் மேல் தழைந்த தழைக்கடியில், தாடியை ஒரு கையால் கோதிக் கொண்டு அவன் வீற்றிருந்தது ஈசவரன் மாதிரியிருந்ததுகவரப்பட்டு நான் நின்றேன்.
‘கருகரு’வென்று பட்டுப்போல் பளபளத்துக்கொண்டு, தாடி மார்புக்கும் தழைந்திருந்தது. தலைமயிரையும் வெட்ட வில்லை. கூந்தல் மேனோக்கிச் சீவப்பெற்று, பிடரியில் அழகாய்க் குஞ்சம் குஞ்சமாய்ச் சுருண்டு தொங்கிற்று. யோக வேஷ்டியாய்ப் போர்த்தியிருந்த மேல்துணி இடது புஜத்தையும் கையையும் மறைத்தது. கரும்புத் தழைக்கடியில் யோக புருஷன் மாதிரி--
நான் அவன் தாடியை கவனிக்கிறேன் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. இடது கண்ணின் இமைகளை முறுக்கியடித்துப் புன்னகை புரிந்தான்.
"என்ன தம்பி, கரும்பு வாங்கலியா?"
கரும்பை நோட்டம் பார்ப்பதில் பெரும் புலிபோல் நான் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு, "என்ன விலை?" என்றேன். -
"சரிதான், அப்புறம் வாங்கலாம். இப்படிக் குந்தேன். அவசரமா? எப்படி நம்ம தாடி? பலே ஜோரில்லே?"
என்னையறியாமல் என் கன்னங்களை ஒருமுறை தடவிக்கொண்டேன். இப்போ இல்லாவிட்டாலும் போகிறது. வளருகிற சமயமாவது இவன்மாதிரி எனக்கு வளருமோ?
அதற்குள் அவள் இடைமறித்து, "தாடி அவருதில்லே, ஆண்டவருது" என்றாள்.
"ஆரம்பிச்சுட்டியா? சம்மனில்லாமே ஆசராயிட்டியா?"
அவள் கோபத்துடன் விரலையாட்டிக்கொண்டு, "இதோ பாரு, சொல்றேன். ரெண்டு வருசமா ஏமாத்திட்டு வரே. இந்தக் கிருத்திகிக்கி முடி குடுக்கலே பாத்துக்கோ! நான் அப்பறம் நொம்பக் கெட்டவளாயிருப்பேன். ஆமா, இப்பவே சொல்லிட்டேன்!" என்றாள்.
"ஒஹ்ஹொஹ்ஹோ" என்று ஏளனமாகக் கொக்கரித்துக் கொண்டே, கூறு கட்டியிருந்த மாங்காய்களில் ஒன்றை யெடுத்துத் தொடையில் துடைத்துவிட்டுக் கடிக்க ஆரம்பித்தான்.
"வாய்ஸ்தவம்தான்! மயிரென்னமோ ஆண்டவனுக்குத் தான் வளத்தேன். வளந்தப்பறம் மனசு வல்லியே!"
"சாமிக்கு வெள்ளிப்பாடம் வேண்டிக்கிட்டேனே, அதுக்குத் துட்டு உன்னைக் கேட்டேனா? கேட்டாத்தான் வரப் போவுதா? முடிதானே குடுங்கறேன். இதுக்கு மேலே பாக்கறே. கீழே பாக்கறே, இல்லாத கதையெல்லாம் அளக்கறே!"
"ஏதுக்கிந்த வேண்டுதல் எல்லாம்?" என்று கேட்டேன்.
"சொல்லேன்; தம்பி கேக்குதே!"
அவன் வாயிலிருந்து பேச்சு வரவில்லை. கரடி போன்ற புருவங்கள்தாம் உள்வலியில் நெரிந்தன.
திடீரென அவன் மேல்துணியை அவள் பிடித்து இழுத்து விட்டாள். எனக்குத் திக்கெனத் தூக்கி வாரிப்போட்டது. அவன் இடது கையில் முழங்கை வரை காணோம். நொண்டிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறோம். ஆனால் அவளுடைய திடீர்ச் செய்கையாலும், நான் அதற்குச் சற்றேனும் தயாராயில்லாததாலும் அவன் முடமையில் ஒரு பயங்கரம் ஏற்பட்டது. என் மனத்தின் துணுக்கு உடலையும் தாக்கிற்று.
அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவளுக்கு என்னவோபோல் ஆயிற்று. நான் அங்கு இல்லாவிடில் அவளை அவன் கை மிஞ்சியிருப்பான். எல்லாம் சில விநாடிகள்தாம். சமாளித்துக்கொண்டுவிட்டான். சிரித்தான். குஸ்திக்காரன் செளரியம் பழகுவதுபோல் நொண்டித் தோளை நல்ல் கையால் தட்டிக்கொண்டான்.
"என்னா தம்பி, இந்தக் கையெப்பத்தி ஒனக்கென்ன தெரியும்? இது செஞ்சிருக்கற வேலையும் ஒடைச்சிருக்கற மூஞ்சியும் எண்ண முடியும்னா நெனக்கிறே? என்நாளுலே தம்பி, என்னுாரிலே நான் கில்லேடி! அப்பத்தி நெஞ்சுக் கனத்தை இப்பொ நெனச்சுப் பாத்தா பயங்காணுது. கோயில் உச்சவத்துலே எட்டு மூலைக் கோலமாப் பந்தங்கட்டி, எட்டு மூலையுங் கொளுத்தி, மானத்துலே ஒரு பனைமர உசரம் தூக்கி எறிஞ்சு கீளே வரப்போ நடுவுலே புடிச்சா பாத்தவங்களுக்கு ஒரு மூச்சு தப்பி வருந் தம்பீ!"
குடிவெறி கண்டவன்போல் பேசினான். பேச்சு கொழ கொழத்தது.
எனக்கு அதிசயமாயிருந்தது. "கை எப்பொழுதாவது பற்றிக்கொண்டதா?" என்று கேட்டேன். அவன் முகம் விழுந்தது.
"அப்படியிருந்தாத்தான் சமாதானமாயிருக்குமே!"
வார்த்தைகளுக்குக் காத்துக்கொண்டிருந்தேன். அவன் மாங்கொட்டையை எறிந்துவிட்டு அருகில் கிடந்த ஒரு சுள்ளியை எடுத்துத் தரையில் கோடு வரைய ஆரம்பித்தான்.
"படுபாவி இவளாலெதான் கை போச்சு!"
"தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரிட்டியும் திட்டித் திட்டி இன்னும் ஆத்திரம் தீரல்லியா? இன்னும் எத்தினி நாளைக்கி இப்படி?"
அவள் குரலில் அலுப்புத் தட்டிற்று. ஒரு சிறு அழுகை நடுங்கிற்று.
"எப்படித் தீரும், பட்டி மவளே! என் கை போனது பெரிசில்லே, அப்புறம் உன் வீட்டுலே என்னை மேலும் பண்ணப் பாத்தாங்களே, அது ஆறுமா?”
வரவர வாக்குவாதம் அந்தரங்கமாகிக் கொண்டிருந்ததால் நழுவப் பார்த்தேன். ஆனால் அவள் என்னைச் சாட்சிக்கு அழைத்துவிட்டாள்.
"இதைக் கேளு தம்பி! என்கூடப் பொறந்தாட்டியா சொல்றேன்-"
"என்ன மச்சான்! சவிக்கமா? எப்ப வந்தே? உன் அக்கா சொல்லுதக் கேளு!" என்று அவன் கேலி பண்ணினான்.
"அது கெடக்கு இதெக் கேளு தம்பி; எண்ணக்கிமே அது எடக்குத்தான்."
"அது மாதிரியெல்லாம் பேசாதே, பொம்புள்ளே! நான் சொல்றதெ அது கேக்கட்டும். இவுளுக்கும் எனக்கும் ரொம்ப நாளத்திய முடி என்னா, தெரிஞ்சுதா? ஆனா இவ வீட்டிலே நெனச்சமாதிரி நான் உருவாவலே. இந்த நாட்டுப்புறம் நெனைச்சுது, நாள் முளுக்கக் கலப்பை புடிச்சு, வேளா வேளைக்குக் கூழைக் குடிச்சுட்டு மாடத்துப் புள்ளையாருக்குப் பூசை பண்ணிக்கிட்டுப் படிஞ்ச மாடா காலத்தைத் தள்ளுவேனின்னு. ஆனா நான் ஒத்தருக்கு அடங்கறவன் ல்லே. சின்ன வயசுலேயே வீட்டுலே ஏதோ கோவம் பண்ணிக்கிட்டு ஊரைவிட்டு ஓடிப்பூட்டேன். நான் நொம்ப இடம் சுத்தியிருக்கிறேன் தம்பி, நொம்ப இடம்: ஒரு ஊரிலே ஒரு குளம் பார்த்தேன் பாரு-"
"சரிதான், கதை பண்ணாமே கதைக்கு வா-"
"நாலு வருசம் களிச்சுத் திரும்பி வந்தேன். நானும் மாறிப்போயிட்டேன்னு வச்சுக்க நொம்ப விசயம் கத்துக் கிட்டிருந்தேன். ஆனா இவுளும் நொம்ப வளந்துட்டா! பேச்சு வார்த்தையில்லையே தம்பி, அசப்புலே ஒத்தர் வளிலே ஒத்தர் குறுக்கே போனா, அப்போ நான் துளிர்மீசை மேலே கையைப் போட்டுக்கிட்டு நின்னா இவ அப்படியே கையைத் தொங்கப் போட்டுக்கிட்டு நிப்பா- உண்டாயில்லையா, நீயே கேளு-!"
"நீ சுத்த வெக்கங்கெட்டவனாப் போயிட்டே"
"அம்பலமானப்பறம் வெக்கமென்ன, வெக்கம்? நானும் ஊர் வந்தப்பறம் இவளைக் கட்டறவரைக்கும் கட்டாய்த் தானிருக்கணும்னு ஒரு இடத்திலே அமர்ந்து வேலை பாத்துக் கிட்டிருந்தேன். வேலையிலே சோடையில்லே தம்பி நான்நம்மகிட்ட எல்லாரும் பிச்சை வாங்கணும்!"
"சரிதான்! உன்மேலே பூப்போட்டு நீ இன்னும் ஒயலியா?"
அவள் இடைமறித்தலை கவனிக்காமல் மேலே சொல்லிக்கொண்டு போனான்:
"பொங்கல் நாள் வந்துரிச்சு, கரும்பு நாள் வந்துரிச்சு ஊர்க் கில்லேடிங்கள்ளாம் பையிலே கையை விட்டுப் பணத்தை ஜலஜலத்துக்கிட்டு உலாத்தறானுங்க. மூலைக்கி மூலை பந்தயம் வெச்சுக் கரும்பு வெட்டியாவுது.
"நானும் ஒருநாள் மூலையிலே வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னேன். அப்போ இவ கை இடுப்பிலே கூடையை வச்சுக் கிட்டு வேடிக்கை பாக்க நின்னா. இவளைப் பாத்ததும் நானும் பந்தயத்துலே கலந்துக்கிட்டேன். கையை நீட்டி மணிக்கட்டு மேலே கருப்பங்கணுவை வெச்சுக் கத்தியெக்கூட ஓங்கிட்டேன். அப்போ என் போறாக்காலம் இவளை லேசா ஒரக்கண்ணாலே பாத்தேன். இவ எண்ணத்துலே இப்போ நான் எவ்வளவு பெரிசாயிருக்கேனின்னு பாக்கணும்னுதான் வச்சுக்கயேன். எல்லாருக்கும் இருக்கற எண்ணம்தானே! அப்போ இந்த சூனியக்காரி பல்லுலே விரலை வெச்சுக் கடிச்சுக்கிட்டு சிரிச்சா! கைமேலே கத்தியிறங்கிட்டுது!"
நான் கண்ணை இறுக மூடிக்கொண்டு காதைப் பொத்திக் கொண்டேன். என் உடல் குலுங்கிற்று. அவன் சிரித்தான்.
"எனக்கு எப்படியிருக்கும்னு கண்டுக்கோ தம்பி! மூணு மாசம் ஆஸ்பத்திரியிலே கிடந்தேன். கத்தி துருப்பிடிச்ச கத்தி, கையிலே வினை வெச்சுட்டுது. புரை முழங்கை வரைக்கும் கடகடன்னு ஓடிப்போச்சு. முழங்கைக்குக் கீழே வெட்டி யெடுத்துட்டாங்க. கை போயிரிச்சு கையோடு கண்ணாலத் துக்குச் சேத்து வெச்ச பணமும் போயிரிச்சு! இன்னும் புண்ணு கூட ஆறல்லே. ஆஸ்பத்திரியிலேருந்து நான்தான் மிச்சமாத் திரும்பி வந்தேன்.
"இதுக்குள்ளே, இவ விட்டுலே என்னென்னவோ வேலைத் தனமெல்லாம் நடந்துகிட்டிருந்துது எனக்குத் தெரியாமே போச்சு. இவ அப்பன்காரக் கிளவன் ரெண்டு தடவை ஆஸ்பத்திரியிலே என்னைப் பாக்க வந்திருந்தான். வண்டயம் மாதிரி திருட்டு முளி முளிச்சுட்டு, வாயைத் துறக்காமெ போயிட்டான். நான் என்னாத்தைக் கண்டேன்? திரும்பி வந்தாத்தானே தெரியுது. இவுங்க ஏற்பாட்டின் துருசெல்லாம்!
"நான் ஆனா சும்மா விடல்லே! நியாயமாத்தான் நடந்து கிட்டேன். இவ வீட்டுக்குப் போனேன். கிளவன் திண்ணையிலே குந்திக்கிட்டிருந்தான், பொக்கை வாயைக் குதப்பிக்கிட்டு என்னைப் பார்த்தான். மூஞ்சி வெளுத்துப் போயிரிச்சு. நான் அதைக் கண்டுக்காமெ சொன்னேன். "மாமா உன் மவ எனக்குன்றது நொம்ப நாளைய விசயம். நீ சொல்லு தவறாமெ கட்டிக் கொடுத்துடு; பசியெடுக்குது, ஒருவேளைக் கஞ்சி ஊத்துன்னு உன் படியேறி வந்தாக் கேளு. மானம் போவாமே உன் மவளைக் காப்பாத்தறது என் பொறுப்பு. ஒரு கை போச்சுன்னு பாக்காதே மன்னனுக்கு இன்னும் ஒரு கை இருக்குது"
"அவன் பதிலே பேசாமெ என் கைக் கட்டையே பாத்துக்கிட்டிருந்தான். நாளைக்குப் பஞ்சாயத்திலே பேசலா மின்னான்.
"பஞ்சாயித்தாவது!" எனக்குக் கெட்ட ரோஷம் வந்துட்டுது. யாருக்கு யாரு பஞ்சாயித்து? நம்ப மாட்டின் களுத்திலே தும்பில்லேன்னா, நடுவுலே எவனோ வந்து ஒட்டிக்கிட்டுப் போறது நியாயம்னு சொல்றதுதானே பஞ்சாயித்து! அப்போ நான் ஒண்ணும் பேசிக்கிடலே பேசாமே திரும்பிட்டேன்.
மறுநாள் பஞ்சாயித்து இவுங்க வீட்டுத் திண்ணையிலே தான் கூடிச்சு. எல்லாரும், என் கை நல்லாயிருந்த நாளிலே, நான் முளிச்சுப் பாத்தேன்னா, கனாவுலேகூடப் பேத்தற பசங்க! என்மேலே பஞ்சாயித்துக் கூடியிருக்காங்க, ஹூ.
"நேரா வந்தேன். மாமா, உள்ளிருந்து உன் மவளைக் கூப்பிடு"ன்னேன். –
"இது என்னடா இல்லாத வளக்கம் பொல்லாத வளக்கம்-!"ன்னான்.
"டா வெல்லாம் ஒனக்கு இனிமே பொறக்கப்போற பேரப் பையனுக்கு வெச்சுக்க. ஒன் அவசரத்துலே சொன்ன பேச்சைத்தான் விட்டே மரியாதையையும் விட்டுடாதே நீ பஞ்சாயித்து வெச்சே- வெச்சபடி நடக்கட்டும். உன் மவளைக் கூப்பிடு! அவ வாய்ப்படத் தெரிஞ்சுகிட்டுப் போயிடுறேன்:இப்படிச் சொல்லிக்கிட்டே கிர்ரென்று உள்ளே போனேன். இவ தண்ணிமுடாவைத் தேச்சுக்கிட்டிருந்தா, ஈரக் கையோடெ ‘கரகர’ன்னு இஸ்துகிட்டு வெளிலே வந்தேன். அவ அப்பன் மேலே தள்ளினேன்.
“ஐயோ, பாவி’ன்னு கிளவன் லபலபன்னு அடிச்சு கிட்டான். ‘ஏ கிளவா! நாலுபேர் நடுவுலே உன் பொண்ணைத் தொட்டுட்டேன். இனிமே இவளை எவன் கட்றான்னு பாத்திடறேன்’னு சவால் அடிச்சிட்டுக் கிளம்பினேன்.
"ஊரெல்லாம் பத்திக்கிச்சு, கன்னிப்பொண்ணைக் கையைப் புடிச்சு இஸ்துட்டான்னு. என்னை ஆளை வெச்சு அடிக்கிறதுக்குக்கூடக் கிளவன் ஏற்பாடு பண்ணிட்டான். எனக்குத் தெரிஞ்சுபோச்சு. நேரா போனேன். ‘இதா பாரு நான் செத்தாலும் சாவறேன்! ஆனா குண்ணாத்தம்மன் கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலே, உன் பேரையும் உன் பொண்ணு பேரையும் சந்திலே இளுத்து, சாக்கடையிலே பெரட்டீட்டுப் பூடுவேன். நான் கதை கட்டிவிட்டேன்னா, இந்த விசயத்துலே ஊர் என்னை நம்புமா, உன்னை நம்புமா, ரோசனை பண்ணு! நான் உசிரோடு இருந்தாலாவது உன் மவ களுத்துலே நூலாடும். இல்லா, நான் கட்டிட்டுப் போற கெட்ட பேர்தான் நிக்கும். உன் பொண்ணு கையைப் புடிச்சு இஸ்துட்டேன்; கியாபகம் வச்சுக்க’ன்னேன்.
"கிளவன் இடிஞ்சுட்டான், புத்து மண்ணாட்டம்! ‘என் பொண்ணைக் கட்டு கட்டு’ன்னு காலுலே விளாத கொறையாக் கெஞ்சினான். அண்ணயப் பத்தாநாள் இவளை நான் கட்டினேன்."
அங்கு ஒரு அணிலைத் துரத்திக்கொண்டு ஒரு பூனை ஒடி வந்தது. அணில் மரத்தின்மீது ஏறிக்கொண்டு பூனையைப் பார்த்துச் சிரித்தது.
"எதுக்கு சொல்ல வந்தேன்னா, நான் தேசம் சுத்தினப்போ இவளைவிட ரம்பையெல்லாம் பாத்திருந்தேன். நம்மை ஏமாத்தனும்னு எண்ணம் வெக்கறப்போதான் எண்ணம் அப்படியே திரிஞ்சுயூடுது- மூடியைத் திருகுவதுபோல் கையைத் திருகிக்கொண்டு, திரிஞ்சு பூடுது என்றான்.
"அதுக்காவ என் அப்பன் மேலே வெச்ச கோவத்தை என்மேலே இன்னமும் ஆண்டுக்கிட்டிருக்கையாக்கும்! நீயே சொல்லு தம்பி, கட்டிக்கொடுக்கற வரைக்கும் பெத்தவங்களுக்கு அடங்கி நடக்கணும். அப்புறம் கட்டிக்கொடுத்த இடத்துக்கு விசுவாச காதகம் பண்ணாமெ இருக்கணும். என்னா நான் சொல்றது?”
"என்னாத்தைச் சொல்றது! நீ இண்ணக்கித் தோலைச் செருப்பாத்தான் தச்சுப் போடேன். அதுனாலே நேத்திக்குச் செஞ்சது மறந்து பூடுமா?”
"மறந்துதான் ஆவணும். மறந்தாத்தான் இருக்க முடியும்."
அவன் தனக்கே முணுமுணுக்க ஆரம்பித்தான். "காரியம் மாத்திரம் கடப்பாறையாச் செய்துடுவாங்க. அப்புறம் நம்மை மறந்துடும்னு சாஸ்த்ரம் படிப்பாங்க." –
நான் நழுவப் பார்த்தேன். இடம் இம்சையாயிருந்தது.
"என்ன தம்பி, கரும்பு வாங்கலியா? கதை கேட்டியே!"
இரண்டு கரும்புகள் வாங்கிக்கொண்டு போனேன். ஒரே அடியா உப்புக் கரிக்கிறது? காசைக் கரியாக்கினியா?" என்று அம்மா இரைந்தாள்.
பிறர் இழைக்கும் பெருந் தவறுகளில் அம்மா காண்பிக்கும் பெருந்தன்மை பிரமிக்கத் தக்கதாயிருக்கிறது! சில சமயங்களில் சின்ன விஷயங்களில்கூட அவள் பொறுமை இழப்பது அதைவிட ஆச்சரியமாயிருக்கிறது.
ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர்பாடே உப்புக் கரும்புதானோ?"
3.
தோட்டத்துக் கோடியிலிருக்கும் வாழை மரத்தை வெட்டிச் சாய்ப்பதற்கு லக்ஷம் முத்தனிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். நான் வாசலறையில் அப்போதுதான் வந்திருந்த தபால் கட்டைப் பிரித்துக் கொண்டிருந்தேன்.
தோட்டத்து மேலண்டைக் கோடியில் பழைய நாட்களின் அடையாளமாய் அவ்வொரு வாழைதான் தனியாய் நின்று கொண்டிருந்தது. லக்ஷம் அதன் மேலேயும் கண் வைத்து விட்டாள். அவளுக்கு எல்லாம் துடைத்துப் பெருக்கியிருக்க வேண்டும். அம்மாவுக்கும் இவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
மறுபடியும் அம்பி, பாப்பா, நான் எல்லோரும் சேர்ந்து விளையாடின தோட்டமேதான். அம்மா, காயும் பூவும் மரமுமாய் வைத்துப் பெருக்கிய தோட்டந்தான். மறுபடியும் சங்கராந்திதான்!
ஆனால் இப்போது அம்மாயில்லை, அப்பாயில்லை, தம்பியில்லை; பாப்பா இல்லை.
அம்பிக்குப் படிக்க வரவில்லை. அவன் வியாபாரத்தி லிறங்கிக் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதித்தான். எங்கேயோ சொந்த வீடு கட்டிக்கொண்டு, மோட்டார்
ரிக் ஷா எல்லாம் வைத்துக்கொண்டு வியாபாரமே நோக்கமாய், செல்வமே கொள்கையாய் வாழ்ந்து வந்தான்.
என்றோ ஒரு கடிதம் அவனிடமிருந்து வரும், நான் இருக்கிறேன். நீ இன்னுமா இருந்துகொண்டிருக்கிறாய்? என்ற தோரணையில்.
எந்த அம்பிமேல் அவ்வளவு உயிர் வைத்திருந்தாளோ, அவனிடந்தான் அம்மா போய்ப் படாத பாடெல்லாம் பட்டுச் சகித்துக்கொண்டு, அவனிடமே உயிரையும் விட்டு விட்டாள். நான் போனது முக முழிப்புக் காணவும், எங்களைப் பெற்ற வயிற்றில் நெருப்பைக் கொட்டவுந்தான்.
அம்பி அவளை அடித்ததாய்க்கூடக் கேள்வி. அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவள் இலையில் துப்பினதாய்க் கேள்வி. போகிறான், பாவி! அவனிடமிருப்பதால் எனக்கு என்னமோ மிச்சம் பிடிப்பதாய் அவள் எண்ணம். "எனக்கென்னடா குழந்தை? எங்கிருந்தாலும் ஒரு கவளமும் ஒரு சுத்துத் துணியுந்தானேடா? நீ சம்சாரி ஆயிட்டே நான் அசலிடமா போறேன்? அங்கேயும் என் பிள்ளைதான். கொஞ்சம் முன்கோபி. அவ்வளவுதானே?" என்பாள்.
அம்மாவால் எப்படியும் வேறெப்படியாயுமிருக்க முடியாது.
அம்மாவுக்கு முன்னால், நாங்கள் தலையெடுக்கு முன்னாலேயே அப்பா போய்விட்டார்.
பாப்பா இப்பொழுது ‘பீப்பா’வாகி, கலியாணமானதும் மாமனார் வீட்டுடன் ஐக்கியமாகி வடகோடியில் எங்கோ போலீஸில் வேலை பார்த்து வந்தான். அங்கிருந்து வந்தவர் ஒருவர் சென்னார், பயல் கருடாழ்வான் மாதிரி கைநீட்டி வாங்கும் லஞ்சத்திற்கு அவனுக்கு இரு கைகளுமே போதவில்லையென்று.
அவனிடமிருந்து கடிதமே கிடையாது.
அப்புறம் நான்தானிருக்கிறேன். எல்லோரையும்விட நிறையப் படித்தேன். குடும்பத்திலேயே நான்தான் சூடிகை யென்று சுற்றியிருந்தவர்கள் சொன்னார்கள்.
நானும் எங்கெங்கோ சுற்றினேன். ஆனால் கடைசியில் இப்பொழுது கிராமத்தில் வாத்தியார் என்கிற பட்டத்துடன், அவரவர் வீட்டுக் குழந்தைகளை ஒரு கொட்டகையில் மடக்கி மேய்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் வேலைக்குக் கூலியாய் வாசல் தூணில் ஒர் உண்டி கட்டியிருக்கும். அமாவாசைக்கு அமாவாசை திறந்து அதிலிருப்பதைத் துழாவியெடுத்துக் கொள்ளலாம். இப்படித் தான் என் காலந் தள்ளிக்கொண்டிருக்கிறது. எனக்கும் இரண்டு குழந்தைகளிருக்கின்றன. வெளியில் விளையாடப் போயிருக் கிறார்கள்.
போதும் போதாததற்குச் சென்ற இரண்டு வருடங்களாக நான் கிராமத்துப் போஸ்டு மாஸ்டர். ஆனால் என் மாதச் சம்பளம் ஆறு ரூபாயை நான் முழுசாய்க் கண்டதில்லை என்பதை நினைக்கச் சிரிப்பாயிருக்கிறது. ஸ்டாம்புப் பணத்திலிருந்து அவ்வப்போது கறிகாய்க்கும் கைச்செலவுக்கும் கையாண்ட பணத்தை இட்டு நிரப்புவதற்கே சரியா யிருக்கும்.
அப்படியும் எங்கெங்கோ சுற்றியும், அத்தனை நாட்கள் கடந்தும், எந்தையும் என் தாயும் எங்களைப் பெற்று வளர்த்துப் புழங்கிய இதே வீட்டில் நான் மறுபடியும் இப்படி உட்கார்ந்து கொண்டு இன்னமும் இதையெல்லாம் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில், அதில் ஒரு ஆச்சரிய இன்பம் என்னைப் பரவசப்படுத்துகிறது. மனம் புரியாததொரு தெளிவையடைந்திருக்கிறது.
நான் காலத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறேனா, அல்லது இத்தனை நாட்களாய்க் காலம்தான் என்னைச் சுற்றுகிறதா எனும் கேள்வி தானாகவே என்னுள் எழுகிறது. அதற்கு பதில் கண்டுபிடிக்கும் முயற்சியில் அக்கேள்வியைச் சுற்றிச் சுற்றிவர, தெருவில் போய்க்கொண்டிருக்கையில் நான் முன்பின் அறியாத ரூபவதியான ஒரு அன்னிய ஸ்திரீ என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே போனால் எனக்கு எப்படியிருக்குமோ, அதே இன்ப வேதனையும் வியப்பும் அடைகிறேன். அக்கேள்வியை ஆராய ஆராய, அதன் மயக்கமும் மர்மமும் என்னை அழுத்துகின்றனவே தவிர முடிவு கிட்டியபாடில்லை.
வாசலில் நிழல் தட்டிற்று.
"வா வா, சீமதி ரெண்டு நாளா இந்தப் பக்கமே காணுமே!" என்று லக்ஷம் உள்ளிருந்தபடியே கூப்பிட்டாள்.
கையில் தன் பையனைப் பிடித்தவண்ணம் ஸ்ரீமதி உள்ளே நுழைந்தாள்.
"தங்கம் மாமியாத்துலே அப்பளாம் இடக் கூப்பிட்டா. போயிருந்தேன். முந்தாநேத்து ருக்கு மாமியாத்துலே அவா மாமனாருக்குத் தெவசம் அதுக்கு சமைக்கப் போனேன்."
ஸ்ரீமதியின் பிழைப்பே இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.
"இப்பொத்தான் உன்னை நெனைச்சேன்! நீ என்ன வேணுமானா நெனைச்சுக்கோ, சீமதி. நீ இல்லாட்டா ஒரு கை ஒடிஞ்சமாதிரிதான் இருக்கு காப்பிக்கொட்டையை வறுத்து வெச்சுட்டேன் அசடாட்டமா. நமுத்துடறத்துக்கு முன்னாலே பொடிபண்ணியாகணுமேன்னு அப்புறம்தானே யோசனை தோணறது! ரெண்டுவாய்தான் காணும். நானும் வரேன். நீ இடி, நான் சலிச்சுப்பிடறேன். அப்புறம் சுடச் சுட கமகமன்னு போட்டுச் சாப்பிடலாம்-"
மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சிலும், ‘யானை சுமந்துவரப் பின்னால் நரி முக்கிக்கொண்டே வந்ததாம்’ என்கிற தினுசில் வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும், லக்ஷத்திற்கு லக்ஷம் கொடுக்கலாம்.
சற்று நேரத்துக்கெல்லாம் உலக்கையிடி துவங்கிற்று. பக்கத்தில் அம்மிமேல் வைத்திருக்கும் பாத்திரங்கள் அதிரும் சப்தம் இனிப்பாய் ஒலித்தது. காப்பிப் பொடியின் மணம் ‘கம்’மெனக் கிளம்பிற்று.
தெருவில் ஒருவன் வெற்றிலை விற்றுக்கொண்டு சென்றான். மாதிரிக்குக் கையில் ஒரு கவுளி-ஒடிந்த இறக்கை மாதிரி. அந்த உவமை மனத்தில் பட்டதும் மறுபடியும் ஸ்ரீமதியின் மேல்தான் நினைவு தொடர்ந்தது. ஏனெனில், சென்ற இரண்டு வருடங்களாகவே அவள் ஒடிந்த இறக்கையுடன்தான் வளைய வந்துகொண்டிருந்தாள்.
இப்பொழுது அவளுடன் கூடவந்த அவள் மகன் கருவா யிருக்கையிலேயே, அவள் புருஷன் இங்கெல்லாம் வேலை தேடி மனஞ்சலித்து, ஒருவருக்கும் சொல்லாமல் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டான். புக்ககத்தில் அவளைக் கவனிக்கக்கூடிய நெருங்கின பந்துக்கள் யாருமில்லை. பிறந்த வீட்டுச் சாய்கால் தான் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? பெற்றவர்களின் ஏச்சும் இடிசொல்லும் பொறுக்கக்கூடியதாயில்லை. குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, தனிப் பிழைப்பாகவே வந்துவிட்டாள். இலை தைத்து விற்பதும், சமய சந்தர்ப்பங் களுக்குச் சமைத்துப் போடுவதும், சிறு பகrணங்களின் வியாபாரத்திலும் அவள் ஜீவனம் நடந்துகொண்டிருந்தது.
கோவிலுக்குப் பக்கத்தில் ஒரே அறையுடன் கட்டிய ஒரு இடிந்த வீடுதான் அவள் குடில். சந்தர்ப்பங்களின் சதியால், தன் ஆணின்றி, துணையின்றி வாழ நேர்ந்து, அதுவும் சற்றுக் களை முகமும் கட்டுடலும் படைத்துவிட்ட ஒரு வயதுப் பெண்ணை, வழக்கப் பிரகாரம் ஏதேனும் பேச ஊர் நாக்கு துடித்தாலும், அவளைக் கண்டு ஏனோ எதற்கோ அஞ்சி முடங்கியது.
மத்தியான்னம் கட்டுவேளைக்கு, தன் குழந்தையே தனக்கு ஆண் துணையாய், அவன் கையைப் பிடித்துக்கொண்டு வந்து தபால் அறை வாசலண்டை வந்து நிற்பாள். குனிந்து அவனைப் பார்த்து, "டேய் மாமாவைக் கேளுடா- அப்பா கிட்டேயிருந்து ஏதாவது கடிதாசு வந்திருக்கான்னு" என்பாள்.
அவனுக்கென்ன, நாலு வயதுதானிருக்கும். அவன் அம்மா எப்படியோ சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்து, ஆசையாய்த் தைத்து மாட்டியிருக்கும் அரை நிஜாரையும் அரைக்கைச் சொக்காவையும் மாட்டிக்கொண்டு, எவ்வளவோ சுத்தமாய் அலம்பியும் நூலொழுகும் மூக்குடன் வாயில் கட்டைவிரலை மாட்டிக்கொண்டு, என்னைத் தன் ஸெலுலாயிட்டுப் பொம்மைக் கண்களுடன் ஆழ்ந்து பார்க்கையில், என்னை ஏதோ சங்கடம் பண்ணும். கடிதம் இருந்தால் அவனண்டை வந்து குனிந்து கொடுப்பேன்.
"எங்கேடா உங்கப்பா?"
வாயில் போட்ட கட்டைவிரலை யெடுக்காமலே, "அப்பா ஓ போயிட்டா- நேக்குப் பப்புட்டு வாங்கிண்டு வவ்வா" என்பான்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாய் ஸ்ரீமதியின் புருஷனிடமிருந்து ஒழுங்காய்ப் பணமும் வரவில்லை; கடிதமும் வரவில்லை. சேர்ந்தாற்போல் இப்போது ஆறு மாத காலமாய் அவனிடமிருந்து ஒரு வரியுமில்லை.
பையன் வாசற்படியண்டை வந்து நிற்பான். "மாமா! அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா, காசு நாளைக்கித் தவாளாம்"- அவனுக்கு இன்னும் ‘ர’கரம் படியவில்லை.
கொடுப்பேன். இன்னொரு நாள் வருவான்.
"மாமா அம்மா ஒவு கவவ் வாங்கிண்டு வரச் சொன்னா. மின்னயே ஒவு கவவ் பாக்கியாம். அத்தோடு இதையும் சேத்துத் தவாளாம்."
கொடுப்பேன்.
"மாமா, அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா."
"மாமா, அம்மா கவவ் வாங்கிண்டு வவச் சொன்னா"
அப்புறம் வந்து வாய்பேசாது வெறுமென நிற்பான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட திகைப்பும் சோகமும் இப்பவே தேங்கிய அம்முகத்தைப் பார்த்து வயிறு ஒட்டிக் கொள்ளும் கட்டுக் கட்டாய்க் கார்டும் கவரும் அவனெதிரில் வைத்துக்கொண்டு, ஏதோ குற்றம் செய்கையில் கையும் பிடியுமாய் அகப்பட்டுக் கொண்டாற்போல் உள்ளம் குலுங்கும்.
"அம்மா கவர் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாளா? இந்தா, எடுத்துக்கோ."
கவரைக் கையில் பிடித்துக்கொண்டு குதித்து ஒடுவான்.
ஆனால் ஸ்ரீமதி பதறிப்பதறி எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை.
# # #
கிராமத்தை வளைத்து ஒரு வாய்க்கால் ஓடியது. அதன் மூலஊற்று வீட்டிலிருந்து ஒன்றரை மைல்.
ஒருநாள் மாலை அந்தப் பக்கம் உலாவச் சென்றிருந்தேன். தோய்ப்பதற்குக் கொண்டு வந்திருந்த துணிகள் பந்தாய்ச் சுருட்டிப் பக்கத்திலிருக்க, ஜல ஒரத்தில் அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அருகே அவள் பையன் கிளிஞ்சலோ, கூழாங்கற்களோ பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான்.
அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. என்னை மணல் திட்டு மறைத்தது. ஆனால் நான் அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் நான் கண்டதைக் கண்டதும், மறு அடி எடுக்கத் தூக்கிய கால் கீழிறங்க மறந்து அந்தரத்தில் நின்றது.
ஸ்ரீமதியின் எதிரில் ஜலமுகம் அகன்று விரிந்தது. அவள் நாட்டம் ஜலத்தின் நடுவில் ஏதோ ஒரு மீன் துள்ளிச் சுழித்த சுழியிலும், அச்சுழியில் ஜலத்தின் விதிர் விதிர்ப்பிலும்
பதிந்திருந்தது. நெற்றிப்பொட்டு மயிர் சற்றுப் பரட்டையாய் மாலைக் காற்றில் அசைந்தது. முகத்தில் முந்நூறு மூவாயிரம் வருடங்கள். காலத்தின் வரையே கடந்து வயதேயிலாத வயோதிகம் கவிந்திருந்தது. இமைகள் கொட்டவில்லை. முகமே ஒழித்துப் பெருக்கி வைத்தாற்போல், ஒரு தனி வெறிச்சிட்டு, அதில் ஒரு எண்ணம், ஒரே எண்ணம், கொஞ்சம் கொஞ்ச மாய்ப் பயங்கரமாய் முறுக்கேறிக் கொண்டிருந்தது. எனக்கு நடுமுதுகு சில்லிட்டது.
"அம்மா- அம்மா-" –
அமிர்தாஞ்சன் பொம்மை மாதிரி அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. தண்ணிரை உற்சாகத்துடன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந் தான். கன்னக் கதுப்புக்களில் மாம்பழச் சிவப்பு மிளிர்ந்தது. தலையின் சுருட்டை மயிர் வெயிலின் ஜாலத்தில் தங்க மோதிரக் குவியலாய் மாறிற்று.
"வவிக்கை!-"
அவள் தோய்க்கக் கொண்டு வந்த ரவிக்கை மிதந்து சுழலில் இழுக்கப்பட்டு, அவள் எட்டும் தூரத்தையும் மீறி ஜலத்தின் நடுவுக்குப் போய்க்கொண்டிருந்தது.
அமுக்கிய எஃகுச் சுருள் திடீரென்று திரும்பிக்கொண் டாற்போல், அவள் முகம் சட்டெனக் கலைந்தது; பூமியே புரண்டதுபோல் ஒரு பெரும் கேவல் அவளை அதிர்த்துக் கொண்டு அவளின்று கிளம்பியது. சுட்டிய முழங்கால்களின் மேல் விழுந்தது.
"என்னம்மா! ஏம்மா அழவே? ஏம்மா-?"
முன்னொரு நாள் நடுத்தெருவில் ஒரு ஆடு படுத்திருந்தது. அவசரமாய்ப் பந்தய வேகத்தில் வந்த ஒரு சைக்கிள்காரன் அதன்மேல் வண்டியை ஏற்றிவிட்டு, இறங்கிக்கூடப் பாராது விட்டடித்துக்கொண்டு போயே போய்விட்டான் ஆட்டுக்கு நடுமுதுகு ஒடிந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் எழுந்திருக்க முயலுந்தோறும் ஒரு அலறல்தான் அதனின்று கிளம்பி, அதைக் கீழே தள்ளுகிறதேயொழிய, அதனால் நிற்க முடியவில்லை. அதன் குட்டிக்கு என்ன தெரியும்? அது பால் குடிப்பதற்காக அதைச் சுற்றிச் சுற்றி, முனகி முனகி, முகர்கிறது.
இதைப் பார்க்கையில் அந்த ஞாபகம் சொல்லாமலே என்முன் எழுந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன். நெற்றி கசகசத்திருந்தது.
# # #
"ஏன் மாமி? என் குழந்தையைத் தூக்கிண்டு என்னிடத் துக்கு நான் போறதுக்கு எனக்கென்ன வெட்கமா, பயமா? ஆனால் கால் நடையாய்ப் போயிடறத்துக்கு மூணு மைல் தூரமா? ரயில் பிரயாணமாய்ப் போறதுக்கு முந்நூறு மைல் தூரமா? உள் நாடுகூட இல்லையே. மாமி! நான் எங்கே போவேன், எப்படித் தேடுவேன்?"
அழுகைக்கிடையில் சிந்தும் வார்த்தைகள் என் நெஞ்சைப் பிழிகின்றன. மேல் காரியம் ஒடமாட்டேன் என்கிறது.
எல்லாத் துக்கமும் இவள் துக்கமும் ஒன்றாகிவிடுமா?
"மாமா, அம்மா ஒவு கவவ் கேக்கவா-"
இப்பொழுதுகூட, வந்த தபாலைப் பார்த்துக்கொண்டிருக்கையில், அவள் பேசுவது ரேழியிலிருந்து கேட்டது:
"எனக்கு இனிமேல் ஒண்ணும் வேண்டாம், மாமி! சிங்கப்பூரிலிருந்து சம்பாதிச்சு, தூக்கமுடியாமல் தூக்கிண்டு ஒண்ணும் வரவேண்டாம். தன் புள்ளைக்கு தகப்பன்னு தான் மாத்திரம் தனியா வந்து சேர்ந்தாப் போறும். ஒண்ணுமே வேண்டாம். ஆத்துலே வந்து உட்கார்ந்தாப் போறும். இட்டிலிக்கு அரைச்சு இப்போ வயத்தே வளக்கிறாப்பிலே அப்போ மாத்தரம் முடியாதா, என்ன?"
"ஆமாமா- பொடி நறநறங்கறதே, இன்னும் ரெண்டு இடி தாங்குமில்லே? சித்தே மசியேன்!-"
"ராஜி முந்தி மாதிரியில்லே மாமி! நேத்து ராத்திரி யெல்லாம் ஒரு கடிதாசுத்துண்டுமேலே கவிஞ்சு படுத்துண்டு, அவனுக்குத் தெரிஞ்ச ஆனா ஆவன்னா, ஒண்னுரெண்டு மூணு எல்லாம் எழுதினான். அப்பாவுக்கு எழுதற கடுதாசுலே அதையும் சேர்த்து அனுப்பணுமாம். பாதி விளையாட்டுலே நெனைப்பெடுத்துண்டு ஒடி வந்துடறான். அப்பா எப்போ வருவான்னு கேக்கறான். ஒரே படுசுட்டியாயிருக்கு இப்பொல்லாம்."
"ஸ்ரீமதி—ஸ்ரீமதி--
கண்ணைக் கடிதங்களின்மேல் வைத்துக்கொண்டு, ரேழிப் பேச்சில் கவனத்தைச் செலுத்தியவண்ணம் கட்டைப் புரட்டுகையில், அவள் பெயர் திரும்பத் திரும்ப நினைவைத் தடுக்கிறது.
"ஸ்ரீமதி அம்மாள் அவர்களுக்கு – "
எனும் விலாசம் திடீரென்று கடிதங்களிடையினின்று தாவிக் குதித்து, நினைப்பைச் சட்டென இழுத்து, பார்வையுடன் சேர்த்துப் பிணைத்து இருத்தியபோது என் உடல் பரபரத்தது.
அவள் பிள்ளையைக் கூப்பிட எழுந்த நாக்கை இழுத்துக் கொண்டேன். தைப்பிறப்பும் அதுவுமாய் ஸ்ரீமதிக்குக் கடிதம் வந்திருக்கும் சந்தோஷத்தை- ஸ்ரீமதிக்காக நான் படும் சந்தோஷத்தை நானே தனியாகக் கொஞ்ச நேரம் அநுபவித்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றிற்று.
கடிதத்தையெடுத்து, முன்னும் பின்னுமாய்த் திருப்பிப் பார்த்தேன். தபால் தலைமேல் சிங்கப்பூர் முத்திரை விழுந்திருந்தது. ஆனால் கையெழுத்து வேறாயிருந்தது. விலாசத்தின் கையெழுத்து எனக்குப் பழக்கத்தானே! எனக்கு ஏதோ சந்தேகந்தட்டிற்று. நான் என்ன செய்தேன் என்பதை உணருமுன்னரே கடிதத்தைப் பிரித்துவிட்டேன். அதிலிருந்தவை நாலைந்து வரிகள்தாம். அவைகளைப் படித்து, அவைகளின் அர்த்தம் மூளையில் தோய்கையில் -
கொக்கிபோல் வளைந்து கூரிய நகங்களை விரித்துக் கொண்டு புலிப்பாதம் என் முகத்தில் அறைந்தது. கண்கள் இருண்டன. அறையும், ஜன்னலும், அதற்குப் புறத்தில் புலப்படும் தெருவும், எதிர்ச்சாரி வீடுகளும் அதிர்ச்சியில் ஆடி மிதந்தன. எதிர் வீட்டுத் திண்ணையில் சார்த்தியிருந்த ஒரு வண்டிச் சக்கரம் கிறுகிறுவென்று சுழன்றது. என் உடலிற்குள் சதைக்கடியில், பின் மண்டையிலிருந்து பீறி இரத்தம் வழிந்து ஒழுகுவதை உணர்ந்தேன். இரு கைகளாலும் மண்டையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டேன். ரேழியிலிருந்து திடும் திடும் என்று கேட்கும் உலக்கை என்மேல்தான் இறங்கிக் கொண்டிருந்தது.
லக்ஷம் ஸ்ரீமதியிடம் கொல்லைப்புறத்திலிருக்கும் ஒற்றை வாழை மரத்தை வெட்டச் செய்த ஏற்பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"அதுதான் குலை தள்ளிப்பிடுத்து, சீமதி இனிமேல் அதை நீ எத்தனை நாள்தான் வெச்சுக்கோயேன்- இருந்தும் ஒண்ணுதான்! அனாவசியமாய் இடத்தை அடைச்சிண்டு."
லக்ஷம் ஏன் இப்படி ஸ்ரீமதியின் பேரில் பயங்கரமான தீர்ப்பைக் கூறுகிறாள்? ஆனால் லக்ஷம் உண்மையைத்தானே கூறுகிறாள்! அப்படியானால் லக்ஷத்துக்கு மேஜைமேல் என்னெதிரில் கிடக்கும் கடிதத்தின் பொருள் ஏதாவது ஆச்சரியமான செப்பிடு வித்தையால், மனோதந்தி வாக்காய்த் தெரிந்துவிட்டதா? ஐயையோ அது ஸ்ரீமதிக்குத் தெரிய எத்தனை நாழியாகும்? அதுவும் சங்கராந்தியில், நம்பிக்கையின் நன்னாளாய் எல்லோருக்கும் விளங்கும் இன்னாள் இவளுக்கு மாத்திரம் பொய்த்துப் போக வேண்டுமா? இந்தக் கடிதத்தில் செருகியிருக்கும் கத்தியால் ஸ்ரீமதியை வெட்டிச் சாய்த்துத்தான் ஆகவேண்டுமா?
இம்மாதிரி சமயங்களில்தான் மனிதன் கடவுளின் தன்மையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முத்தொழிலும் செய்யும் பரத்தின் பொறுப்புக்குத் தனி லாயக்கு, கிராமப் போஸ்ட் மாஸ்டருக்குத்தான் இருக்கிறது.
மறுகணம் என்னெதிரில் அக்கடிதம் நாலு சுக்கல்களாய்க் கிடந்தது.
ஜன்னல் வெளியே நோக்கினேன். தெருவும் வீடுகளும் மறுபடியும் தம் நிலையில் நின்றுகொண்டிருந்தன. பொங்கலின் மனோகர வெயில், எதிர் வீட்டுத் திண்ணையில் வண்டிச் சக்கரம் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது.
வாசலில் சாணியுருண்டையில் நேற்றுச் செருகி வைத்திருந்த ஒரு பறங்கிப்பூ கசங்கி வதங்கிக்கொண்டிருந்தது.
நான் முன்பின் பார்த்திராத ஒரு அன்னிய ஸ்திரீ தெரு வழியே, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே குலுங்கி நடந்து சென்றாள்.
------------
9. கொட்டு மேளம்
"என்னம்மா பண்ணப்போறே?"
"கீழே வரப்போறேன்; மங்களத்தையும் கூப்பிடு. பக்கத் திலே ரெண்டுபேரும் வந்து என்னைத் தாங்கிக்கோங்கோ."
திறந்த வாய்மேல் சின்னம்மா இருகைகளையும் பொத்திக் கொண்டாள்.
"என்னம்மா சொல்றே? ஐயா எங்களை உசிரோடெ வெப்பாரா?"
"அவன் கிடக்காண்டி இருந்திருந்து இன்னிக்கும் மாடியிலே இருப்பேனா? என்னை இதிலே வெச்சு மெதுவாக் கீழே இறக்கி அவாள்ளாம் வரத்துக்கு முன்னாலே கூடத்து உள்ளே கொண்டு போயிடுங்கோ. இரு இரு சின்னம்மா, மயிரைக் கொஞ்சம் கோதி முடிஞ்சுடு, பீரோவைத் திற. அந்தக் கிளிப்பச்சையை எடு. அதுதான்-"
"பட்டுப் புடைவையாம்மா?
"ஏண்டி? என்னைப் பாத்தா உடுத்திக்கிறமாதிரி இல்லையா? இந்தக் கல்யாணத்துக்-கில்லாமெ எப்போ உடுத்திக்கிறதாம்? சரி சரி, நான் ரெடி மேளம் நெருங்கறாப் போலயிருக்கே. ஐயர் உங்களைத் திட்டாமெ பாத்துக்கறேன். என்னைக் கீழே சேத்துடுங்கோ."
உள்ளங்கையில் ஏந்தினாற் போல்தான் அவர்கள் அவளைக் கீழே கொண்டுபோனாலும், அந்தப் பிரயாசை கூட அவளுக்குத் தாங்கவில்லை. நரம்புகள் மார்பில் சுருட்டி அடைத்தன. மூச்சு திணறிற்று. நல்ல வேளையாய்ப் பெண்கள் கூட்டமெல்லாம் வாசலில் நெரிந்திருந்தது. கூடத்து அறையில் சேர்ந்துவிட்டோம் என்று நிச்சயப்பட்டதும் ஜானாவுக்கு திடீரெனக் கண்கள் இருட்டின.
"சின்னா, ஒரு முழுங்கு தீர்த்தம் கொண்டு வாயேன்!-"
மேளச் சப்தம் நெருங்கிக்கொண்டே வந்தது. மேளநாதம் துாரத்திலிருந்து நெருங்கிக்கொண்டே வந்து அவளுள் பொழிந்து ஒரு பரபரப்பைப் பரப்பியது. அவள் விழுங்கியது ஜலமா, அல்லது அந்த நாதத்தின் விறுவிறுப்பா என்று நிச்சயமாய்த் தெரியவில்லை. உடல் பரபரத்தது. அந்த இன்ப வேதனை தாங்க முடியாது நாற்காலியை விட்டு எழுந்து அங்குமிங்குமாய் எங்கேனும் ஒடலாமா என்று தோன்றிற்று. ஆனால் அவளை, அவள் உடல் நாற்காலியோடுதான் அறைந்து வைத்தது. மண்டையில் போய் அந்த வேகம் அழுத்துகையில் அவளுக்குப் பட்டது. இதைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதாரித்து சுவாதீனத்துக்குக் கொண்டுவர வேண்டுமே யொழிய, அதன்படி விட்டால் அதோ கதிதான்.
இந்தப் போராட்டத்தில் வாசலில் பச்சை சுற்றலும் ஊஞ்சலும் எப்பொழுது முடிந்தன என்று தெரியவில்லை. கல்யாணப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு அவளுடைய ராமதுரை கம்பீரமாய்க் கூடத்துள் நுழைவதைக் கண்டாள். உற்சவருக்கு அலங்காரம் செய்ததுபோல், பஞ்சக் கச்சத்தில் பட்டை ஜரிகை அருவிபோல் நெளிந்து மறைந்தது. மார்பில் யோக வேஷ்டி
மார்பில் கைகளை ஜான அழுத்திக்கொண்டாள். "இரு இரு உசிரே கொஞ்சம் பொறு அதுக்குள் அவசரப் பட்டுடாதே-"
இத்தனை கூட்டத்திலும், அதுவும் ஒருக்களித்த கதவின் பின்னாலிருக்கும் ஜானாவை ராமதுரை எப்படியோ பார்த்து விட்டான். மை தீட்டிய விழிகளிலிருந்து அவன் முறுவலின் ஒளியும் கலந்த அடையாளத்தின் சுடர் அவள் மேல் ஆடுகை யில், அவள் கண்கள் நிறைந்து நீந்த ஆரம்பித்துவிட்டன.
"ஜானா, எப்படிக் கீழே வந்தாய்?"
அப்போதுதான் தன்னருகில் நிற்கும் சந்துருவைக் கண்டாள். அவள் கன்னங்களில் கண்ணிர் அடக்க முடியாமல் கரகரவென வழிந்தது. சிரித்துக்கொண்டே ரேழிப் புறம் ஒரு கையைச் சுட்டிக்காட்டினாள். சுண்ணாம்பாய் வெளுத்திருந்த முகத்தில், கன்னங்களில் மாத்திரம் செந்திட்டுக்களிரண்டு இரு சக்கரங்களாய்ச் சுழன்றன. அவள் சுட்டிய வழியே சந்துரு நோக்கினான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"மேளத்தைக் கவனி!-" என்றாள்.
நாயனத்தின் வாசிப்பைவிட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து, கலியாணக்கூடம் முழுவதும் சிதறி ஓடி உருண்டு, பந்துகள் போல் எகிறி எழும்பியது. மாவு கட்டிய விரல்கள் தோல்மேல் துடித்துத் துழாவி மறுபடியும் துடித்து அக்குண்டு குண்டுமணி களை எழுப்பின. மேளத்துள் சலங்கை குலுங்கி அதிர்ந்தது.
இந்தச் சப்தத்திற்குத்தான் சந்துரு இருபத்திரண்டு வருடங்களாய்க் காத்திருந்தானோ என்னவோ, ஜானா அறியாள், ஆனால் அவள் நிச்சயமாய்க் காத்திருந்தாள். புருஷாளுக்கு இதில் எல்லாம் ஆசை ஒடுமோ ஓடாதோ? ஆனால் சந்துருவுக்குக் கலியாணம் ஆன பிறகு கொட்டு மேளத்தின் சப்தம் இன்றுதான் வீட்டில் கேட்கிறது. இதற்கு முன்னால் ராமதுரையின் பூணுால்கூட ஏதோ பிரார்த்தனை யென்று எங்கோ, சுவாமி கூட இருக்க முடியாத அவ்வளவு மூலை க்ஷேத்திரத்தில் நடந்தது. அங்கு அவள் போக முடியவில்லை.
எப்படிப்பட்ட கிழமாயிருந்தாலும் அதற்குக்கூட இத்தகைய சமயங்களில் தனக்கும் இம்மாதிரி நடந்ததெல்லாம் நினைவு வருமோல்லியோ!
# # #
ராமதுரையின் பக்கத்தில் நிற்கும் மணப்பெண்ணின் இடத்தில் தானும் இப்படியே தலை குனிந்து நின்றதை ஜானா நிறுத்திப் பார்த்துக்கொண்டாள். அவள் பக்கத்தில் அவள் கணவன் நின்றுகொண்டிருந்தான்.
ஜானாவின் அழகுக்கு அவள் கணவன் உறை போடக் காணான் என்று அப்போதே எல்லாரும் சொல்லிக் கொண்டார்கள்.
ஜானாவின் தாயாரிடம் வந்தவர் போனவர் எல்லாம் ஜாடையாகவும் வெளிப்படையாகவும் கலியாணத்துக்கு முன்னாலும் பின்னாலும் முறையிட்டுக்கொண்டார்கள்.
"ஏண்டி இத்தனை நாள் காத்திருந்தேளே. இருந்திருந்து இந்த இடந்தான் உங்களுக்கு அகப்பட்டதா?"
"எங்களுக்கு உன் பொண்ணை முன்னே பின்னே பார்க்காட்டாலும் பரவாயில்லை; தெரியாட்டாலும் பரவாயில்லை. எங்கள் கண்ணெதிரே பாவாடை கட்டி, சித்தாடை கட்டி, புடவை கட்டற வரைக்கும் வளந்துட்டு இப்போ எங்கள் கண்ணிலே மண்ணைப் போட்டுட முடியுமா?"
"இன்னும் எத்தனை நாள் மாமி காத்திண்டிருக்கிறது? இப்போ இப்படிச் சொல்றவா நீங்களே, இன்னுங் கொஞ்ச நாள் பொண்ணை வீட்டிலே வெச்சிண்டிருந்தோமானால், வேறே தினுசாப் பேசுவேள். நாங்கள் இப்போ இருக்கிற நிலையிலே இதுக்கு மேலே வீங்கறத்துக்கில்லை. இப்போ படற கடனையே சந்துரு தலையெடுத்துத்தான் அடைக்கணும். இத்தோடே போகல்லையே- அவனுக்கு இன்னும் ரெண்டு தங்கை இருக்காளே-"
"இருந்தாலும்-"
"அதெல்லாம் என்னத்துக்கு மாமி? ஆண் பிள்ளைக்கு அழகென்ன வேண்டியிருக்கு? எங்கேயாவது மானமாய் வயத்தெ அலம்பிண்டு தீர்க்காயுசா இருந்தாப் போறும்-"
"தீர்க்காசுயாய்" என்ற பதத்தொடர் பட்டவுடனே ஜானாவின் மனக்கண்ணெதிர் காட்சி மாறியது
--அப்பொழுதுதான் சேவல் கூவி ஒய்ந்தது. வாசற் கதவை யாரோ படபடவெனத் தட்டுகிறார்கள். ஏற்கெனவே ஏதோ வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கண் விழித்திருக்கும் அவள் ஒடிப்போய்த் திறக்கிறாள். வாசலில் சைக்கிளில் ஒருவன் கையில் ஒரு சீட்டைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான்.
"இது 23ஆம் நெம்பரா? ஆஸ்பத்திரியிலேருந்து வரேன். மெட்டர்னிடி வார்டுலே, 13ஆம் நெம்பர் பெட் பேஷண்டு தவறிட்டுது, அம்மா--"
"ஐயோ "
கல்யாணம் நடந்து மூன்று வருஷங்கள் முழுக்க ஆகவில்லை. வெள்ளிக்கிழமையாய்ப் பார்த்து, காலன் அவள் கழுத்துக் கயிற்றைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டான்.
நல்லவேளையாக, சந்துருவும் அம்மாவும் அந்தச் சமயத்தில் அவள் பக்கத்திலிருந்தார்கள். இப்பொழுது கூட நினைவு வருகிறது; தனக்கு வந்திருக்கும் கஷ்டத்தின் முழு மகத்துவமும் புரியாமலே அலறுகையில், அவள் தலையைச் சந்துரு தன் மடியில் வைத்துக்கொண்டு "ஜானா, நீ இனி எனக்குத் தம்பி. எனக்குத் தம்பியில்லை. எனக்கு நீ-- உனக்கு நான்-"
ஜானா தன் அண்ணனைக் கடைக் கண்ணால் கவனித்தாள். அவனும் யோசனையில் ஆழ்ந்துதான் நின்று கொண்டிருந்தான். ஒற்றை நாடி தேகம்; அம்புபோல் நிமிர்ந்த உடலில் வெள்ளை ஜிப்பா நீண்டு தொங்கிற்று: முகத்தின் செந்தாழைச் சிவப்பு இன்னும் இம்மிகூடக் குறைய வில்லை. கரடி மயிரால் வளைத்த புருவங்கள் உள் வலியில் நெரிந்திருந்தன. ஆனால் அவன் தலைமயிரைப் பார்க்கையில் தான் ஜானாவுக்கு மனம் பெருந் தாங்கலாயிருந்தது. மயிர் தும்பையாய் நரைத்திருந்தது. அப்படி நரைக்க அவனுக்கு இன்னும் வயதாகவில்லை.
சந்துரு முகத்தில் இன்னும் அதன் இயற்கை அழகு குன்றவில்லை. ஆனால் அதில் முந்நூறு வருடங்களின் மூப்பு தேங்கியிருந்தது. இந்த நரை புது நரையில்லை. இருபது வருடங்களுக்கு முன்னாலேயே கண்டுவிட்டது. சாயம் அடிப்பதுபோல் நெற்றிப் பொட்டில் கரைபோல் ஆரம்பித்துத் திடீரென்று தலை முழுவதும் படர்ந்துவிட்டது. சீவிவிட்டிருந்த மயிர் வெண்பட்டாய்ப் பளபளத்தது. என்னதான் அவளுக்கு அவன் மேலிருந்த பாசம் கண்ணை மறைத்தாலும், அவனுக்கு இப்படி நரைக்க இன்னும் வயதாகவில்லை.
சந்துருவுக்கு மயிர் நரைத்ததிலிருந்து ஜானா மற்றெல்லார் மயிரையும் கவனிப்பாள். அதுவே ஒரு கெட்ட பழக்கமாய்விடும் போலிருந்தது. ராமதுரைக்கு ஒரே சுருட்டை சீவினால் வங்கி வங்கியாய் அடுக்கும். ஆனால் பாதிப் பொழுது வாரவும் மாட்டான். முழுக் கறுப்பு இல்லை; சிறு செம்பட்டை பூத்த மோதிரக் குவியல்.
ஜானாவுக்கு மயிர் வெகு முரடு அடர்த்தி. அதுவும் தனக்கு இந்தக் கதி நேர்ந்தபின் பின்னுவதையே விட்டு விட்டாள். மயிரின் முடிச்சு ஒரு சிறு இளநீர் பருமனுக்குக் கழுத்தில் கனத்துக்கொண்டிருக்கும். ஆனால் நரைமயிர்கூடக் கிடையாது.
"-உங்களை சாஸ்திரிகள் கூப்பிடறார்."
அவளுடைய மன்னி நாதாங்கியைப் பிடித்துக்கொண்டு வாசற்படிக்கு வெளியே நின்றாள். சிந்தனையின் அரைப் போதையில் ஜானா கெளரியைப் பார்த்தாள். அவளுக்குக் கூந்தல் குட்டை. ஆனால் நடு வகிட்டிலிருந்து சீவப்பெற்று, ஒரு மயிர்கூடப் பிரியாது பின்னுக்குப் போகையில் அதன் ஒழுங்கும், பளபளப்பும், முன்னடர்த்தியும் பறவையின் ஒடுங்கிய சிறகுகளை நினைவு மூட்டின.
"நாழியாயிடுத்தாம்-"
சந்துரு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான். கூட்டத்தில் அவன் கலக்கையில் அவன் முதுகைப் பார்த்துக்கொண்டே கெளரி நின்றாள்.
"கெளரி, எங்கேடி போயிட்டே? பருப்புத் தேங்காயை எங்கே வெச்சுட்டே?" என்று ஒரு குரல் கத்திற்று. கெளரி அவ்விடம் விட்டகன்றாள். அவள் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. அவள் முகமே ஒரு முகமூடி.
இப்பொழுது தன் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்கையில் கெளரிக்கும் தன் மணத்தின் நினைவு வருமோல்லியோ? எப்படியோ தன் கல்யாணத்தை யாருமே எப்பொழுதுமே மறக்காதபடி அவள் பண்ணிக்கொண்டு விட்டாள்.
சந்துருவுக்குக் கல்யாணம் நடந்தபோது அது குடும்பத் திற்கே ஒரு முக்கியமான சம்பவம். மற்றத் தங்கைகளையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டு, அந்தக் கடனையும் அடைத்துவிட்டுத் தலை நிமிர்கையில் சந்துருவுக்கு முப்பது வயதாகிவிட்டது. அதற்குமுன் எந்தக் கட்டிலும் பட மறுத்து விட்டான். ஆனால் அப்புறமும் தன் மணத்தைத் தள்ளிப் போட நியாயமில்லை. தகப்பனார் காலமாகிவிட்டார்; தாய்க்குத் தள்ளாமை, ஜானா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண் டிருந்தாள். ஆகையால் கிழவியைக் குந்த வைத்துச் சாதம் போடவும், வீட்டுக்கு வந்தவர்களுக்குக் குங்குமச் சிமிழ் நீட்டவும் மருமகள் வர நாளாகிவிட்டது. வேளையும் வந்துவிட்டது.
மன்னி கழுத்தில் மூன்றாம் முடிச்சைப் போடா விட்டாலும், மன்னி வந்தாள் என்ற சந்தோஷத்திலேயே ஜானா குழந்தையாகிவிட்டாள். அருமைச் சந்துருவுக்கு ஒரு அகமுடையாள்.
ராமதுரை இப்போது ஆயிரம் செல்லமாயிருந்தாலும் எப்படியும் சந்துருவின் அருமை ஆகமாட்டான். இதை ஜானா தனக்கே ஒப்புக்கொள்ளுகையில் அவளுக்குச் சந்துருவின் தனி முக்கியத்தில் அதுயைகூட உண்டாயிற்று. ஏனெனில் சந்துரு திலோமம் செய்து, குலதெய்வத்தின் கோவில் வாசற்படியை நெய்யால் மெழுகி, ராமேசுவரம் போய்க் கடுந்தவங் கிடந்து, ஒரே பிள்ளையாய், முதல் இதயபூர்வத்தில் ஜனித்தவன். இந்த முக்கியம், அவன் அவர்கள் கண்ணெதிரில் வளருகையில் அவன் இயக்கும் ஒவ்வொரு செயலிலும், அவனில் இயங்கும் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தன்னைத் தெரிவித்துக்கொண்டேயிருந்தது. ஒருவேளை நாளாக ஆக, அவனே அதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அது போகப் போகப் பெருகிக் கொண்டேதானிருந்தது.
சந்துருவுக்கு நேர்ந்த மாதிரி குடும்பப் பொறுப்புகளும் பாரங்களும் ஒருவேளை இன்னும் கொடியவையாய்க் கூட வெகுபேர் சிறுவயதிலேயே வகித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாயகத்தன்மை- விஸ்தரிக்க இயலாத இந்த ஒளிஎல்லோருக்குமே கிட்டுவதில்லை. அதாவது, சூரியனைச் சுற்றி மற்றக் கிரகங்கள் சுற்றுகிற மாதிரி- கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி. அது பிறர் சூட்டுவதா, அல்லது பிறவி யுடனேயே பிறந்ததா? சில சாயல்களில் சந்துருவைப் பார்க்கையிலோ, கேட்கையிலோ, பிறர் அவனைப் பற்றிச் சொல்வதைச் சிந்திக்கையிலோ அவளுக்கு அடிக்கடி கோயிற் சிலையைத்தான் அவன் நினைவு மூட்டினான். அதன் லக்ஷணங்கள் எவ்வளவு நுணுக்கமாய்ச் செதுக்கியிருப்பினும், அதன் புன்னகை எவ்வளவுதான் இன்பமாயிருந்தாலும், அது உருவாகி ஆதிக்கல்லின் உரத்தையும் உக்கிரத்தையும் தாங்கிக் கொண்டுதான் நிற்கும்.
ஆம். சந்துரு ஒரு உக்கிரப் பொருள். அவன் உணர்ச்சிகள் இரண்டுங் கெட்டான் உணர்ச்சிகளல்ல. நல்லவையோ கெட்டவையோ, கண்டிப்பாய் அவை சாதாரணமானவை. யில்லை. விழுதுகள் இறங்கியதும் எப்படி பூமியில் வேரூன்றி விடுகின்றனவோ, அம்மாதிரி அவனாலேயும் கலைக்க முடியா கனமான உணர்ச்சிகள்.
சந்துருவுக்கும் தனக்குமிடையில் உள்ள நெருக்கத்தை ஜானா எண்ணமிட முயல்கையில், அதற்கு முடிவேயில்லாத் அகன்ற வான் வீதிகளும், ஆழமான நதிகளும் அதில் பாய்ந்து ஓடின. உடன்பிறப்பெல்லாம் ஒரே தொப்புள் கொடி என்பது இதுதானோ? ஆனால் மற்றத் தங்கைகளும் உடன்பிறப்புத் தானே! அவர்களுக்கு ஏன் இப்படி ஒட்டுதல் ஏற்படவில்லை? ஜானாவின் நிலை கண்டு வெறும் அநுதாபத்திலேயே பிறந்ததல்ல அவர்களிடையில் உள்ள பாசம்.
குழந்தைப் பருவத்துச் சம்பவம் ஒன்று அவள் நினைவில் மின்னியது. சிறுவயதில் சந்துரு மகா துஷ்டன். திடீரென்று ஏதோ வெறி வந்து ஜானாவைக் கீழே தள்ளிவிட்டான். ஜானா அழுதுகொண்டே போய் அப்பாவிடம் சொன்னாள். அப்பாவுக்கு ஆபீஸிலிருந்து வந்த சிரமம் சாரத்தில் செருகி யிருந்த கயிற்றை உருவி, சந்துருவை வீறுவீறென வீறிவிட்டார். கண்ணெதிரில் சந்துரு துள்ளித் துடிப்பதைக் கண்டதும் ஜானாவுக்கு உடம்பு வெலவெலத்துவிட்டது. சந்துருவைத் தேடிக்கொண்டு போனாள். கட்டில்மேல் சுருட்டி வைத் திருக்கும் படுக்கைகளுக்கிடையில் சந்துரு குப்புறப் படுத்துக் கொண்டிருந்தான். முதுகில் கிண்டு கிண்டாய் எழும்பியிருந்தது. அங்கங்கே சிராய்ப்பு.
"அண்ணா!-"
"போடி!- உன்னாலேதாண்டி!" –
சந்துரு சீறி விழுந்தான். அவன் கன்னங்களில் கண்ணிர் காய்ந்து போயிருந்தது.
அவள் கண்கள் தளும்பின.
"இல்லேண்ணா!-"
"ஏண்டி வந்தே? போ- போ-?"
"தேங்காயெண்ணெய் தடவறேன், குப்புறப் படுத்துக்கோ, அசக்காதே-" –
வெறும் பார்வையிலிருந்தே ஒன்றன் நிலையை ஒன்று அறிந்துகொள்ளும் மிருகத்தன்மை அவர்கள் உறவில் மிளிர்ந்தது. இத்தனைக்கும் அவர்களிடையில் தனி ரகசியங்கள் கிடையாது. வான் என்றும், எப்பொழுதும், எல்லோருக்கும் திறந்துதானே இருக்கிறது. ஆயினும் அதில் இன்னும் புதைந்து கிடக்கும் ரகஸ்யங்கள் எத்தனை அநேகமாய் அவர்களிடையில் தர்க்கங்களும் மனஸ்தாபங்களும்தான் இருக்கும். வானத்தில் மேகங்கள் மோதி மின்னல்கள் பிறக்கவில்லையா? கடுமழை உடைப்பெடுத்துக் கொள்ளவில்லையா? சமுத்திரத்தில் அலைகள் கக்கவில்லையா? அவர்கள் உறவின் மூல மூர்க்கம் புரியவுமில்லை, புரியாமலுமில்லை. அதன் இரட்டைத் தன்மையின் சூட்சுமமே அதுதான்.
கல்யாணமான புதிதில் சந்துரு பார்த்தவர் அதிசயிக்கும் படி தகதகத்தான். அடர்ந்த புருவங்களின் அடியில் பூனைக் கண்கள் விட்டுவிட்டுப் பிரகாசித்தன. அப்பொழுது அவன் மயிர் மைக் கறுப்பாய்த்தான் இருந்தது.
நெற்றியில் சில சமயங்களில் குங்குமம் இட்டுக் கொள்வான். பக்தியினால் அல்ல; அழகுக்காக.
ஒரிரவு மணி இரண்டு இருக்கும். ஜானாவுக்குத் திடுக்கென விழிப்பு வந்தது. திடீரென்று போட்ட விளக்கில் அறை ஒரே வெளிச்சமாயிருந்தது. சந்துரு கட்டிலருகில் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் விரிந்து அவள்மேல் தாழ்ந்திருந்தன. ஆனால் பார்வை அவள் மேல் இல்லை. ஏதோ பரவசத்துடன் ஆழ்ந்திருந்தன. அவன் உதடுகளில் ஒரு புன்னகை ஆரம்பித்தது, ஆரம்பித்த நிலையிலேயே தோய்ந் திருந்தது.
ஜானா எழுந்து உட்கார்ந்தாள். "என்னடா அண்ணா?
சந்துரு கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தாள்.
"ஜானா, நான் ஒரு கனாக்கண்டேன். இப்பொத்தான் கண்டேன். கண்டதிலிருந்து என் நிலையில் இல்லை. என்னை என்னவோ பண்ணுகிறது. உன்னிடம் உடனே சொல்ல வந்தேன்."
எழுந்துபோய் ஜன்னலண்டை நின்றான். அவனுக்கு இன்னும் இருப்புக் கொள்ளவில்லை. வெளியே நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்துகொண்டிருந்தன.
"-இது மாதிரிதான் வானம் இருந்தது. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலைமலையாகக் குவித்திருந்தது. என் கண்ணுக்கு எட்டிய வரையில் இந்த மேகங்களில் கற்கண்டு கட்டிகள் போல் நrத்திரங்கள் வாரியிறைத்திருந்தன.
"அப்பொழுது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். "கஜல் என்பார்களே, அது. இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து இழைந்து பத்து சாரங்கிகள் அழுகின்றன. திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன் ஆரம்ப அடியில் பாட்டு முடியும் போதெல்லாம், இன்பம் அடிவயிற்றைச் சுருட்டிக் கொண்டு பகீர் பகீர்" என்று எழும்புகிறது. அந்த மாதிரி குரலை நான் கேட்டதேயில்லை. என் எலும்பெல்லாம் உருகி விடும் போலிருக்கிறது. நான் அதைத் தேடிக்கொண்டே போகிறேன்.
"நான் போகிற வழியெல்லாம் யார் யாரோ மேடுகளிலும், பள்ளங்களிலும் மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும் கூட்டங் கூட்டமாயும், கொத்துக் கொத்தாயும், தனித் தனியாயும் அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள். நான் போகப் போக, பாட்டின் நெருக்கமும் இனிமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை.
"பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. என் எதிரே கட்டிடமுமில்லை. ஒரே பரந்த வெளிதான். ஆனால் குரலின் கணகணப்பும் நெருக்கமும் இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி, என்மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்பு இன்னமும் தணிந்தபாடில்லை. திகைப் பூண்டாமே, அதை மிதித்த மாதிரி கடைசியில் நான் என்னையே சுற்றிச் சுற்றி வருகிறேன். என் மார்பே வெடித்துவிடும் போலிருக்கையில் நல்ல வேளையாய் விழித்துக்கொண்டேன். ஜானா, இதற்கு அர்த்தம் உண்டா?"
- சொல்லிக்கொண்டே வருகையில், சந்துருவுக்கு முகம் சிவந்துவிட்டது. நடு நெற்றியில், நீல நரம்பு கிளைவிட்டுப் புடைத்தெழுந்தது. அந்நிலையில் அவனைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ வேதனை பண்ணிற்று.
-
"மன்னிகிட்டே சொன்னையா? அவள் என்ன சொல்கிறாள்:"
அவன் சிரித்தான். "அவள் என்ன சொல்லுவாள்? நான் சொன்னதையே அவள் வாங்கிக்கொண்டாளோ இல்லையோ? அவளுக்கு ஒரே தூக்கக் கலக்கம். ஏதோ சினிமாவுக்கு என்னை விட்டுட்டுப் போயிருப்பேள். அதன் பின்னணி சங்கீதம் மனசில் பதிஞ்சிருக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டு விட்டாள்."
அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவனுடைய கனவு அவள் நெஞ்சிலும் ஏதோ இம்சை பண்ணிற்று.
"நாங்கள் யாராவது அந்தக் கனவில் வந்தோமா? நான், அம்மா, மன்னி
"இல்லை, நீங்கள் ஒருவருமே இல்லை. பெருமூச்செறிந்து சந்துரு திரும்பினான்.
ஒருவேளை கெளரி சொல்வதும் சரிதானோ, என்னவோ? ஒண்ணும் இல்லாததைப் பிரமாதம் பண்ணிக் கொள்கிறேனோ என்னவோ?-"
"அட! அதுக்குள்ளே மன்னி உன்னைத் தேடிண்டு வந்துட்டாளே!"
கெளரி வாசற்படியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகமே ஒரு முகமூடி.
"இல்லை, குழாயில் ரப்பரைக் கட்டிவிட்டேன்" என்றாள் அவள்
"சரி சரி, ஜானா, தூங்கு அநாவசியமாய் எழுப்பி விட்டேன். எப்படியும் கனாத்தானே! எல்லாமே கனாத்தானே! கனாக்குள் கனா-"
ஆனால் அவளுக்கு வெகுநேரம் வரையில் தூக்கம் வரவில்லை. அந்தக் கனவைப்பற்றி வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதைக் கனாவென்று சட்டென உதறித் தள்ள முடியவில்லை! கண்டதற்கெல்லாம் சந்துரு அவளை யோசனை கேட்பதில்லை. இது எதனுடைய அடையாளமோ மாதிரி இருந்தது.
ஜானாவுக்கு மனப்பிராந்திதானோ என்னவோ, அன்றிலிருந்து தன்னை மன்னி ஏதோ தினுசாய்ப் பார்ப்பது போலும் கவனிப்பதுபோலும் தோன்றிற்று, கேஸ்-க்கு அலையும் போலீஸ்காரன் கவனிப்பதுபோல்.
மன்னி அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் சுய ரூபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தாற்போலவும் இருந்தது. திடீரென்று மணிக்கணக்கில் சுவரில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருப்பாள்.
"என்னடி கெளரி, இப்படி உட்கார்ந்திண்டு இருக்கே? எழுந்து காரியத்தைப் பாரேண்டி!"
ஊஹூம் கெளரிக்குக் காது திடீரென்று செவிடாகிவிடும். வாயும் கிட்டிவிடும். ஒர் ஆணியையோ கல்லையோ எடுத்துக் கொண்டு சுவரில் கெளரி மனோஹரி என்று செதுக்கிக் கொண்டிருப்பாள். ஏனோ திடீரென்று முரண் செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஏதோ தனக்குள் ஒர் எண்ணத்தை ஸ்தாபிதம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். என்ன வென்றுதான் புரியவில்லை. காரியங்களில் அசிரத்தைக்குக் கண்டித்தாலோ, கோபித்தாலோ வாய் திறவாள். வாசலில் ஜன்னலுக்குப் போய் அடிக்கடி நின்று தெரு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குழாயடிக்குப் போய் முகம் கழுவிக்கொள்வாள். எஞ்சிய பொழுதுக்குத் தன் பெட்டியிலிருக்கும் சாமான்களைக் கலைத்துப் புதுப்புது விதமாய் அடுக்கிக் கொண்டிருப்பாள். அதிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டிருப்பாள்.
சந்துருவின் அம்மாவுக்கு இதெல்லாம் புதிதாயிருந்தது. பிடிக்கவும் இல்லை. அவள் அப்படி ஒன்றும் பழங்காலத்து மனுஷியல்ல; ஆசாரக் குடுக்கையுமல்ல. ஆனால் என்னதான் புது சம்பந்தமாயிருந்தாலும், நாட்டுப்பெண்ணின் சில பழக்க வழக்கங்களை அவளால் ஜெரித்துக்கொள்ள முடியவில்லை.
"என்னடி கெளரி, அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை அலங்காரம்? நெத்திக் குங்குமத்தை நீ அடிக்கடி கலைச்சுக்கிறது எனக்குப் பிடிக்கல்லே. பூர்வ கர்ம வினையாலே தாயும் பெண்ணுமா நாங்கள்தான் அதை இழந்துட்டு நிக்கறோம். "பளிச்"சுன்னு முகத்துலே பத்தும்படி மஞ்சள் பூசிக்க மாட்டையா? நீ இனிமே வெள்ளைப்புடவை கட்டாதே-"
"எங்காத்துலே-" "உங்காத்துக்கு இதைக் கொடுத்தனுப்பிச்சுடு"
"எங்காத்துலே-"
"இதோ பார் கெளரி, உங்காத்துலே அப்படியிருப்பேன், இப்படியிருப்பேன் இதைப்பத்தி என்னிடம் இனிமே சொல்லாதே. இனிமே நீ இந்தாத்து மனுவி. அதனாலே இந்தாத்துப் பழக்க வழக்கங்களைச் சுருக்கப் படிச்சுக்கோ. தெரியாட்டா எத்தனை தரம் வேனுமானாலும் சொல்லித்தரோம். ஆனால் புடிச்சுக்கோ இஷ்டத்தோடு புடிச்சுக்கோ. உன் டோலக்கைக் கழற்றி வை. பெட்டியிலே என் தோடு இருக்கு தரேன், போட்டுக்கோ. உன் பரந்த முகத்துக்கு அது தான் நன்னாயிருக்கும். தொட்டதுக்கெல்லாம் உங்காத்தைப் பத்தி ஆரம்பிச்சுக்கிறையே, கொசுவம் வெச்சுப் புடவை கட்டிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தாளா? அதுதான் பாக்கப் பதிய வீட்டுக்கு லக்ஷ்மிகளையாயிருக்கும்."
ஆனால் மருமகள் திருந்துவதாயில்லை. மாமியாருக்கு உள்ளுறக் கவலை பிடுங்கித் தின்ன ஆரம்பித்துவிட்டது. தனக்காகவும் தெரியவில்லை; சொன்னாலும் தெரிய வில்லையே! அல்லது தெரிந்துகொள்ளவே இஷ்டமில்லையா? நயம் பயம் எதற்குமே மசியாத பெண். இது பெண்ணா, அல்லது கொட்டு மேளம் கொட்டி வீட்டுக்கு வரவழைத்துக் கொண்ட விபத்தா? சந்துருவோ ஆபீஸுக்குப் போகிறான். அவன் இல்லாத சமயங்களில் இவள் அடிக்கும் லூட்டிகளில் எதெதை என்னென்று சொல்வது? நம்மைப்பற்றி அவன் ஏதாவது தப்பிதமாய் எண்ணிக்கொண்டுவிட்டால்? ஆனால் இவள் ஏதோ மாபாரதத்துக்குத் தயாராய்க்கொண்டு வருகிறாள் என்கிற திகில் அவளைப் பிடித்துக் கொண்டு விட்டது. தின்னும் சோறு உடம்பில் ஒட்டவில்லை. பக்கென்று உடல் இளைத்துவிட்டது.
சந்துருவுக்கு என்னென்று புரியாவிட்டாலும் வீட்டில் ஏதோ சரியாயில்லை என்கிற வரைக்கும் புரிந்தது. ஆனால் யாரை என்னென்று கேட்க முடியும்?
"ஏம்மா, ஒரு மாதிரியா எப்பவும் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா? வைத்தியனை வரவழைக்கட்டுமா?"
"ஒண்ணுமில்லேடா: வயசாயிடுத்தோன்னோ, தள்ளல்லே-"
"அப்படி என்னம்மா வயசு ஆய்விட்டது, திடீரென்று?
கெளரியை ரகசியமாய்க் கூப்பிட்டான்.
" ஏன் அம்மா ஒருமாதிரியாயிருக்கிறாள்:"
"என்ன மாதிரி இருக்கிறார்? எனக்கென்ன தெரியும்? "
"ஜானா, அம்மா ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாள்?"
"எனக்கென்ன தெரியும்? கவனிக்க எனக்கெங்கே போதிருக்கு? எனக்குப் பரீட்சை நெருங்கிடுத்து. அண்ணா, இந்தப் பாடம் வாத்தியாருக்கே புரியல்லே. எனக்குச் சொல்லித் தாயேன்!-"
அன்று இரவு எத்தனை நாழிகை ஆயிற்று என்றே தெரிய வில்லை. சந்துரு பேசினால் விஷயத்துள் அப்படியே முழுகி விடுவான். கேட்பவர்களும் அவனுடன் ஒன்றிவிடுவார்கள். அவனிடம் விசேஷ சக்திகள் இருந்தன. சாமர்த்தியங்கள் அல்ல; சக்திகள். கூடவே பிறந்து, அவன் கூப்பிடும் வேளைகளில் அவனிலிருந்து எழுந்து, அவனையும் அவனைச் சுற்றி யிருப்பவரையும் ஆட்கொண்டுவிடும் சக்திகள். பாடத்தை யொட்டி, அவன் வாயிலிருந்து அவனுடையனவே இல்லாதவை போன்று உதிர்ந்த வார்த்தைகளையும் தர்க்கங்களையும் ஸ்தம்பித்துப் போய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்குப் பிடரி குறுகுறுத்தது. தன்னை யாரோ கவனிப்பது போன்ற ஒர் உணர்ச்சி; திரும்பிப் பார்த்தாள்.
சந்துருவுக்கு அதற்கெல்லாம் சட்டெனக் கோபம் வந்து விடும்.
"நான் முக்கியமா ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்ன பராக்கு?"
"மன்னி அண்ணா!"
மன்னி ஜானாவையே அவள்மேல் வைத்த விழி மாறாது
கவனித்துக்கொண்டிருந்தாள். சந்துருவுக்குக்கூட அந்தப் பார்வை பிடிக்கவில்லை.
"கெளரி, ஏன் அப்படிப் பார்க்கிறாய்? புசுக்கெனச்சத்தம் போடாமெ ஏன் அப்படி வந்து நிற்கிறாய்?"
கெளரிக்கு விழி மாறவில்லை. அவள் தன் கணவனைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. சந்தருவுக்குப் கோபம் வந்து விட்டது.
"கெளரி, உன்னைத்தான் சொல்கிறேன். கெளரி கெளி" "என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள்."
"என்ன?"
திடீரென உயர்ந்த தொனி கேட்டு, சுவரோரம் கண் ணயர்ந்த அம்மாவுக்கு விழிப்பு தூக்கிப் போட்டுக்கொண்டு வந்தது.
"ஏண்டா அவளைக் கோவிச்சுக்கறே?"
கெளரி முகத்திலோ குரலிலோ எவ்விதமான உணர்ச்சியும் இல்லை; குரூரமான ஒரு வெறிச்சுத்தான் இருந்தது.
"என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடுங்கோ"
அம்மா கெளரியிடம் ஓடிவந்தாள். "என்னடி கெளரி பேத்தறே?"
கெளரி சந்துருவைப் பார்த்துக்கொண்டு பாடம் சொல்வதுபோல், "என்னை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுடுங்கோ. இந்த வீட்டில் உங்க தங்கைக்கும் எனக்கும் சேர்ந்து இடமில்லை."
அம்மாவுக்கு உடல் வெடவெடவென உதறிற்று. "ஐயோ சந்துரு இதுமாதிரிதாண்டா ஏதோ என் வயத்தைக் கலக்கிண் டிருந்தது."
சந்துரு அம்மாவைப் பிடித்துக்கொண்டான். இல்லா விட்டால் அவள் கீழே விழுந்திருப்பாள்.
ஜானா சந்துருவின் வலது கையையே வசியமானவளாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது மூடிமுடித் திறந்தது, எதையோ தேடுவதுபோல்.
"என்னை என் வீட்டிலே கொண்டுபோய் விட்டுடுங்கோ நீங்கள் விடாட்டா நானா வெளியேறிப் போய்விடுவேன்."
கொஞ்ச நாழிகை அம்மாவின் விசிவிசிப்பான அழுகை யைத் தவிர, கூடத்தில் எதுவும் கேட்கவில்லை. மன்னி எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் அப்போது அழகாயிருந்தாள். சந்துருவிடமிருந்து வார்த்தைகள் கிளம்பிய போது அவை அமைதியாகவும் சாதாரணமாயுந்தான் இருந்தன.
"கெளரி, நாளைக் காலை உன் அப்பாவுக்குச் சொல்லியனுப்புகிறேன். நீ போய்விடு!"
"டேய், அவள் தெரியாமல் சொல்றாடா!"
"பூட்டுச் சாவி எங்கே வைத்திருக்கிறாய்? கெளரி பயப் படாதே, நீ சொன்ன வார்த்தைகளுக்கு உன்னை அடித்து விடுவேனோ என்று. உன்னை மடிக்கொம்பால்கூடத் தொடப் போவதில்லை- அம்மா, பூட்டு சாவி எங்கே வைத்திருக்கிறாய்? இரவு வரை இவளை இவளிடமிருந்து காப்பாற்றி இவளைப் பெற்றவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இவளுக்கில்லா விட்டாலும் நம் மானத்தை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்."
சந்துரு பூட்டையும் சாவியையும் எடுத்துக்கொண்டு வாசற் பக்கம் சென்றான். தாழ்ப்பாளை இழுத்துப்போட்டு, சங்கிலி புரளுகையில் ஜானாவுக்குத் தன் மார் மேலேயே கல் இறங்குவது போல் இருந்தது.
துர்ச்சொப்பனம் போன்ற அந்த இரவை என்றும் மறக்க முடியாது. சொக்கட்டானில் காயை நகர்த்தினாற்போல் அவரவர் தம்தம் இடத்தில் நின்றபடி கழிந்த அந்த இரவை மறக்க முடியாது. இப்பொழுதுகூட அது ஏதோ திகிலை உண்டாக்குகிறது.
அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்தவர்களும் அவளுக்குப் புத்தி சொல்லவில்லை. ஏன், என்ன என்று கேட்கும் மரியாதைகூட இல்லை. அவளுக்கு மூன்று தலைமுறைக்குச் சாதம் போட எங்கள் வீட்டில் இருக்கிறது என்று சவால் கூறிவிட்டு அவள் தகப்பன் அவளைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டான்.
வீட்டுக்கு வந்து குடித்தனம் பண்ணி இன்னும் பத்து மாதங்கள் முழுக்க ஆகவில்லை. கெளரி போய்விட்டாள்.
அப்படி அவள் போகும்போது மூன்று மாதங்களாய் ஸ்நானம் பண்ணவில்லை.
அவள் வீட்டை விட்டு வெளியேறின பத்து நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்புறம் ஈசல் கூட்டம் மாதிரி வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. அவைகளையும் ஒரளவு எதிர் பார்க்க வேண்டியதுதான். இதுவரை எந்த நாத்தனாரோ, மாமி யாரோ நல்ல பேர் வாங்கியிருக்கிறார்கள்? ஆனால் மன்னிக்கு என்மேல் இவ்வளவு க்ஷாத்திரம் விழும்படி நான் என்ன செய்தேன் என்று ஜானா யோசிக்கையில் அவளுக்குச் சிரிப்புக் கூட வந்தது. ஏனெனில் அவள் அதிகம் வீட்டு விவகாரங் களைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. அவள் பாடங் களுக்கும், பள்ளிக்கூட அலுவல்களுக்குமே பொழுது சரியா யிருந்தது. நாளாக ஆகத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் தன்னைக் கண்டதும் ஏதோ தம்முள் ரகசியம் பேசிக்கொள் வதும், தோளை இடித்துக்கொள்வதும், தான் அவர்களைப் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டபோதெல்லாம் தன்னைச் சுட்டிக் காண்பிப்பதும் ஜானாவுக்குப் புரியவில்லை, பிடிக்கவில்லை. அப்புறம் ஒருநாள் அவளை பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயினி கூப்பிட்டு அனுப்பினாள்.
"என்ன ஜானா? இப்படி உட்கார். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். உன் வீட்டு விவகாரத்தில் புகுகிறேன் என்று நினைக்காதே. ஆனால்- உன் மன்னி வீட்டில் இல்லையா?"
ஜானாவுக்கு ஆச்சரியம் கோபம் எல்லாம் ஒருங்கே வந்துவிட்டன.
"இது வீட்டு விவகாரம். இதற்கும் பள்ளிக்கூடத்துக்கும் என்ன சம்பந்தமென்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.
பிரின்ஸிபால் கீழ்நோக்கிய வண்ணம், மேஜை மேல் பென்ஸிலை நிறுத்தி வைக்க முயன்றுகொண்டே, "கோபிக்காதே ஜானு, நீ இம்மாதிரி சொல்வாயென்று எனக்குத் தெரியும். இன்று காலை உன் மன்னியின் தாயார் இங்கு வந்திருந்தாள். உன்னைப் பற்றி என்ன என்னவோ கன்னாபின்னா என்று பேசினாள்" என்றாள்.
"என்னைப் பற்றியா? என்ன சொன்னாள்?" ஜானா வுக்குக் கண் நரம்புகள் குறுகுறுக்க ஆரம்பித்தன. வாத்தியாரம்மா பென்ஸிலை நிறுத்தி வைப்பதிலேயே முனைந்தாள்.
"என்ன சொன்னாள் என்று நான் வாய்விட்டுச் சொல்ல வேண்டுமா? அவள் கத்தின. கத்தலும் ஆடின சதிரும் எனக்குப் பிடிக்கவில்லை. வெளியே போய்விடு என்றுகூடச் சொல்லி விட்டேன்."
"ஒ" என்றாள் ஜானா, சற்று ஏளனமாய்.
"ஆம்; அவள் வாயிலிருந்து கிளம்பிய ஆபாசத்தைக் கேட்டதும் உண்மையில் நம் வர்க்கத்தைப் பற்றியே நினைக்கக் கூட வெட்கமாய்ப் போய்விட்டது. ஆண்களை நாம் ஆயிரம் அவதூறு சொல்கிறோம்; சம உரிமை வேணுமென்கிறோம். ஆனால் ஆண்களுக்கு இருக்கும் பெருந்தன்மை நமக்கில்லை. ஆண்கள் தவறுகள் செய்யலாம்; ஆனால் அவர்களுக்கு மனத்தில் அழுக்குக் கிடையாது. ஆபாசம் கிடையாது. ஆனால் நமக்கு அதுதான் இருக்கிறது. நமக்குப் பெருந்தன்மை கிடையாது. நம்மைப்பற்றியே நாம் தூற்றிக்கொள்ளும் ஆபாசங்களே அதற்குச் சாக்ஷி"
"இந்தச் சக்கர வட்டமெல்லாம் எதற்கு? உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றிருந்தால் என் அண்ணனிடம் சொல்லுங்கள். உண்மையில் இதற்கும் எனக்கும் சம்பந்த மில்லை."
"வாஸ்தவந்தான். நல்லவேளையாய் உன் அண்ணனை நேரிடையாகத் தெரியாவிட்டாலும் அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உன் அண்ணனிடம் சொல்லக் கூடியதுமில்லை."- திடீரென்று அலுப்புடன் பென்ஸிலை மளுக்கென்று இரண்டு துண்டுகளாய் முறித்து எறிந்துவிட்டு, எழுந்துபோய் முதுகை அவள் பக்கம் திருப்பிக் கொண்டு நின்றாள்.
"மொத்தத்தில் எனக்கு ஒன்று படுகிறது. நான் நமக்காக நடத்தும் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே வரவர எனக்கு நம்பிக்கை குறைகிறது. ஏனெனில் இளவயதிலேயே நம் கதிக்கானவர்கள் மரியாதையாய் அந்தக் காலத்திய வழக்கப் பிரகாரம் உடன்கட்டை ஏறிவிடுவதே நலம். உயிர் போனாலும் மானமாவது பிழைக்கும். நான் சொல்லுகிறது புரிகிறதா? அல்லது இதைவிடப் புரியப் பண்ண வேண்டுமா?"
"ஸிஸ்டர்- சந்துரு என் அண்ணா!" என்று ஜானா அலறினாள்.
ஸிஸ்டர் அவளிடம் வந்து அவள் தோள்மேல் கை வைத்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.
"எனக்கு அது தெரியும் ஜானா! உன்னை ஜாக்கிரதைப் படுத்தவே உன்னைக் கூப்பிட்டேன். இது பொல்லாத உலகம் சுத்த அல்பம். மானங்கெட்ட உலகம். உட்கார்ந்து கொள். வேனுமானால் இங்கேயே கொஞ்சநாழிகை படுத்துக்கொள்:
ஜானாவுக்கு மார்பு பக்பக்கென அடைத்தது. இல்லை ஸிஸ்டர் நான் வீட்டுக்கே போறேன்-"
"ஜானா, இதெல்லாம் நீ சமாளித்துக்கொள்ள வேண்டும். நீ இவ்வளவு கோழையாயிருப்பாய் என்று தெரிந்தால் நான் உன்னைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன்."
ஜானா போகும் வழியெல்லாம் குழந்தை மாதிரி விக்கி விக்கி அழுதுகொண்டே போனாள். தான் பண்ணின குற்றந் தான் என்ன? சந்துருவுடன் கூடப் பிறந்ததும், தான் கைம்பெண்ணாய் வீடு வந்து சேர்ந்துவிட்டதுந்தானே? அதன் அபாண்ட விளைவை எண்ணவே முடியவில்லை.
அம்மாவுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை.
"ஏண்டி ஜானா?"
ஜானாவுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.
"சந்துரு, ஜானா ஏனோ அழறாடா!"
சந்துரு அறையிலிருந்து வெளிவந்தான்.
"ஏன் அழுகிறாய்?"
ஜானா பதில் பேசாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு சந்துரு வெளியே சென்றான். அவன் திரும்பி எப்போது வந்தான் என அவளுக்குத் தெரியாது. குப்புறப் படுத்துக் கைகளிடை முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள்.
"ஜானா, நீ எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்!"அவன் குரல் நடுங்கிற்று. "நான் உன் பள்ளிக்கூடத்துக்குப் போய் வாத்தியாரம்மாளைக் கண்டு வருகிறேன். நான் எல்லாம்
தெரிந்துகொண்டு விட்டேன். எனக்கு வாய்த்தவள் பதர். அதுவும் அது முளைத்த மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் பயிராயிருக்கிறது. இது நமக்கு நேர்ந்திருக்கவேண்டாம். ஆனால் நேர்ந்தது நேர்ந்துவிட்டபின், நேர்ந்ததை அநுபவித்துத்தான் தீரவேண்டும். இது எங்கு கொண்டுபோய் விடுமோ நான் அறியேன். எங்கு வேண்டுமானாலும் கொண்டு விடட்டும். ஒன்று மாத்திரம் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். நம் வீட்டு மாப்பிள்ளை இறந்த பொழுது, உன் தலையை என் மடியில் வைத்துக்கொண்டு, "ஜானா நீ இனி என் தம்பி. எனக்கு நீ உனக்கு நான் என்று சொன்னேனே..! உனக்கு நினைவு இருக்கிறதா? எனக்கு இப்பவும் எப்பவும் அப்படித்தான்."
ஜானாவுக்கு அழுகை புதிதாக மடை திறந்துகொண்டு வந்தது.
# # #
ஜானாவுக்கு ஏதோ தனக்குள் லொட்டென்று ஒட்டை விழுந்துவிட்ட மாதிரி ஓர் உணர்ச்சி- இடி விழுந்து பள்ளம் ஆகிற மாதிரி. தன் வாழ்க்கைதான் வீணாயிற்று என்றால், அண்ணா வாழ்க்கையும் இப்படிப் போக வேண்டுமா? அம்மாவுக்கு இந்த வயசில் அநுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவு பாக்கி? குடும்ப மானம் ஏன் திடீரென்று அவிழ்ந்த பொட்டலம் மாதிரி ஆகிவிட்டது?
"ஏண்டி ஜானா, உன் மன்னியை நீதான் வாழவிடவில்லை யாமே! கிழவிகடட நல்லவளாம். நீதான் தடங்கலா நிக்கறையாம்!"
"என் காதுலே எதுவும் போடாதேங்கோ, மாமி!"
"உன் மன்னியை இன்னிக்கு நான் சினிமாவிலே பாத்தேன். அடையாளமே தெரியல்லே. எங்கிருந்தடி திடீர்னு கோண வகிடு வந்தது? அவள் ரிப்பன் என்ன, உள்பாவாடை தெரிய ஜார்ஜெட் ஸாரி, மாரிலே ப்ரூச்சு கையிலே கடிகாரம்:- இப்போ என்ன அவளுக்கு மாசமா? கூட அவள் அம்மாவும் வந்திருந்தா. ஏதேதோ பேசினோம். புகுந்த இடத்திலேதான் என் பொண்ணுக்குச் சுகமில்லே. வயறும் பிள்ளையுமாயிருக்கா. இருக்காளோ, போயிடறாளோ- அவள் ஆசைப்பட்டபடி இருக்கட்டும்னு இருக்கேன் என்கிறாள்."
"என்னடி கெளரி செளக்கியமா? எப்போ புக்காம் போப் போறே? வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் இருக்கேன்னு ஜாடையாக் கேட்டேன். அது ஸ்டைலா, பின்னல் ரிப்பனைச் சீண்டிண்டு, அசட்டுச் சிரிப்பு சிரிச்சுண்டு, கம்முனு. இருக்கு எனக்கு அப்பவே தெரியும், நம்ம மாதிரி குடும்பத் துக்கும் அவா ஸ்டைலுக்கும் சரிப்படாதுன்னு. என்னை ஒரு வார்த்தை கலந்திருந்தால் இந்தச் சம்பந்தத்தை அப்பவே தடுத்திருப்பேன்."
போங்கோ மாமி தயவுசெய்து போங்கோ"
ஜானா இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள்.
"என்னவோ அம்மா, விஷக்கடி வேளை, உங்களையும் எனக்குத் தெரியும்; அவாளும் கெட்டவாளில்லை. இந்தக் காலத்துலே வீட்டுக்கு வரதே குதிரைகளாய்த்தான் வரதுகள். அதுகளை விட்டுத்தான் பிடிக்கணும்."
"சரி, போறும் மாமி."
ஆனால் இந்த மாமி சொல்ல வந்ததை முடித்துக் கொண்டுதான் விடுவாள்.
"இப்பவும் ஒண்னும் குடி முழுகிப் போயிடல்லே. நீ எங்கேயாவது ஹாஸ்டல்லே போய்ச் சேர்ந்துடேன்! உனக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு:"
"யார் இவள்?"
பின்னால் குரல் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு உயரமாய் சந்துரு நின்றுகொண்டிருந்தான்.
"என்னடாப்பா, நான்தான்-"
"நீங்கள் யாராயிருந்தாலும் சரி, வாசற்படி விட்டுக் கீழிறங்குங்கள்."
"ஆ-ங்-ங்-ங்?
"நான் இழுத்துக்கொண்டு போய் உங்களை வெளியில் விடவா மரியாதையாய் நீங்களே போய்விடுகிறீர்களா? இனி இந்த வாசற்படியில் உங்களை நான் காணக்கூடாது!"
கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு சந்துரு கூடத்துக்கு வந்தான்.
"உங்கள் ரெண்டுபேருக்கும் ஒன்று சொல்கிறேன், ஊர் வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தால் இன்னும் இந்த வீடு உருப்படாமல் போய்விடும்."
"நாங்களாகப் போய் அழைக்கிறோமா? நம்மைத் தேடிண்டுன்னாடா வரது!" .
"இது நம் கஷ்டத்தைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. இதனால் நம் பலத்தைக் குறைக்கத்தான் முடியும். ஆகையால் அது தெருவோடு போனாலும் சரி, வாசற்படி ஏறி வந்தாலும் சரி, அதை சட்டை செய்யாமல் நம் காரியத்தை கவனிக்க வேண்டியதுதான்."
"நம் காரியந்தான் என்ன?"
அவன் முழுப்பார்வையும் அவர்கள் இருவரையும் அனைத்தது.
"இப்போதைக்குக் காத்திருப்பதுதான்."
"எதுக்கு?
"அது புரியும் வரையில்."
அம்மாவுக்கு அலுப்பு வந்துவிட்டது.
"இந்தப் புதிரெல்லாம் யாருக்குப் புரியறது? இந்த மாதிரி இன்னும் எத்தனை நாள்? நம்ம சொத்து அது. போய்க் கரகரன்னு இழுத்துண்டு வந்து இந்தக் கன்னத்திலே நாலு, அந்தக் கன்னத்திலே நாலு கொடுத்தால் நல்ல மருந்தாகிவிடும்.
சந்துரு சிரிக்க முயன்றான். "அது நடக்காத காரியம் அம்மா. மானமுள்ளவளாயிருந்தால் இதுவரைக்குமே வைத்துக் கொள்ள மாட்டாளே! நான் என்னவோ என்று நினைத்தேன். நம்பினேன். மோசம் போனேன்." . .
"இல்லை, காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி எறிஞ்சுடு, நமக்குச் செளகரியமா இன்னொண்ணு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்."
"அதுவும் என் காரியம் அல்ல."
"பின் என்னதான் உன் காரியம்? இந்தக் குடும்பம், நேத்திக்கு வீட்டுக்கு வந்தவள் கூத்தில் குட்டிச்சுவராய்ப் போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் உன் காரியமா?
சந்துரு பதில் பேசவில்லை. அவன் விழித்த விழியிலேயே அம்மாவுக்கு அழுகை அடங்கிப் போயிற்று. சந்துரு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
காத்திருப்பதென்றால் என்ன? சந்துரு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்த தலையுடன், ஜன்னலண்டை மணிக் கணக்கில் அசைவற்று நின்றிருப்பான்.
மலைத்தொடர்கள் அசையாமல் நின்றுகொண்டிருக் கின்றன. அவை காத்துக் கொண்டிருக்கின்றனவா? காத்துக் கொண்டிருக்கின்றன என்றால் எதற்காகக் காத்துக்கொண் டிருக்கின்றன? ஐயனார் கோவிலிலோ கிராம தேவதைக் கோவில்களிலோ, மதில்மேல் பிரம்மாண்டமான சிலைகள் கையொடிந்தும் காலொடிந்தும், தலையில் பட்சிகள் எச்ச மிட்டும் தம் தீனிகளைக் கிழித்துச் சதையும் ரத்தமும் சிந்த அவைகள் மேல்வைத்துத் தின்றும், வெயிலோ மழையோ, எதுவும் தெரிந்தோ தெரியாமலோ பொருட்படுத்தாமல், வெண்டயம் போன்ற விழிகளை எந்நேரமும் விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றன; அவை காத்துக் கொண்டிருக்கின்றனவா? அவை காத்துக் கொண்டிருந்தால் எதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றன?
அம்மாதிரி மெளன அரணில் சந்துரு வீற்றிருக்கையில் அவனருகே போகக்கூட அச்சமாயிருக்கும்.
ஆனால் அதையும் பிளக்கும் ஏதோ ஒன்று அவனைச் சில சமயங்களில் சூழ்கையில் காதைப் பொத்திக்கொண்டு தலையை உதறிக்கொள்வான். அது என்ன, அவன் தன் கனவில் கேட்ட கானமா? தனக்குள்தானே பற்றிக்கொண்டு எரிவதன் துடிப்பா?
ஜானா நாளுக்கு நாள் இளைத்துத் தேய்ந்தாள். நல்ல எண்ணத்துடனோ வேடிக்கைக்கோ நாலுபேர் பேசும் பேச்சும் சொல்லும் புத்திகளும் பொறுக்கக் கூடியனவாயில்லை.
"காயும் பூவுமாய்க் காய்ச்சுத் தழைக்கிற நாளிலே, உன் அண்ணனும், மன்னியும் ஏண்டி இப்படி இருக்கணும்?"
"எனக்கென்ன மாமி தெரியும்? அவளேதானே போனாள்:"
"அவள் போனதுக்கு உன்னைக் காரணமா ஏன் சொல்லிண்டு திரியனும்? இந்தக் காலத்திலே அண்ணனாவது தங்கையாவது! அவாவா வழியை விட்டு அவாவா ஒதுங்கி விடறதுதான் நல்லது."
ஜானாவுக்கு எதிலும் புத்தி செல்லவில்லை. பரீட்சைக்குப் பணம் கட்டினதுதான் மிச்சம்; பரீட்சைக்கு உட்கார முடியவில்லை. அவள் வளைய வருவதற்கும் அவளுக்குமே சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன; சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகிவிட்டது.
வைத்தியனிடம் காண்பித்தால், "ஒன்றும் புரிய வில்லையே! உறுப்புக்கள் கோளாறில்லாமல் ஒழுங்காய்த் தானே வேலை செய்கின்றன: ஒன்றும் புரியவில்லையே!" என்று திகைக்கிறான். ஆனால் இளைத்து வந்தாள்.
"ஜானா இன்னிக்கு உன் மன்னியோட அம்மாவைப் பாத்தேன். ஈரத்துணியோடெ அனுமார் கோவிலைச் சுத்திண்டிருந்தாள். நான் ஏதேதோ கேள்விப்படறேனே! ரகசியமாப் பூஜைகள் எல்லாம் நடக்கிறதாம். என்னமோ சஞ்சீவிமலை கொண்டுவர அனுமார் படத்திலே வாலிலே நாளுக்கு ஒரு பொட்டா ஒரு மண்டலம் வெச்சு முடிச்சு யார் வேண்டாதவாளோ அவா மேலே விடறதாமே! எனக் கென்னமோ பயமாயிருக்குடியம்மா. உன் அண்ணாவும் மன்னியும் எக்கேடு கெட்டுப்போறான்னு நீ ஒதுங்கிடறதுதான் நல்லது." -
"நான் என்ன மாமி பண்ணினேன்! நான் அவளைப் போ என்றேனா? வருபவளை வேண்டாமென்கிறேனா?"
"அதென்னவோ அம்மா, நான் சொல்றத்தைச் சொல்லிப் பிட்டேன்."
திக்திக்திக்திக்திக்திக்திக்திக் –
ஒருநாளிரவு வீலென்று அலறிப் புடைத்துக்கொண்டெழுந்தாள்.
"என்னடி என்னடி ஜானா?"
கூந்தல் கசகசக்க அவள் தேகம் முழுவதும் வியர்வை கொப்புளித்திருந்தது. ஓடிவந்தாற்போல் மூச்சு இரைத்தது.
"இருட்டிலேருந்து கறுப்பா ஒர் உருவம் உருவாகிப் பிரிஞ்சு வந்து என்னைத் தீண்டினாற் போலிருந்தது, அம்மா!"
"பயப்படாதேம்மா. நம் சாஸ்தாவை நெனச்சுக்கோ, விபூதி யிடறேன். ஐயனாரே! என் குழந்தை எவ்வளவோ கஷ்டப் பட்டுட்டா; நீதான் அவளைக் காப்பாத்தணும்."
திடீரென்று எப்படித்தான் அது நேர்ந்ததென்று ஒருவருக்குமே தெரியவில்லை. உடம்பில் நீர் வைத்துவிட்டது. அவளை ஒருநாள் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்க்கும் நிலைமை வந்துவிட்டது.
ஆஸ்பத்திரியில் வெள்ளைப் பீங்கான் கற்கள் பதித்த துரிய வெண்ணிறச் சுவர்களும், வார்டுகளில் வரிசை வரிசையாய் நிற்கும் கட்டில்களில் படுக்கைமேல் போர்த்த வெண் துப்பட்டி களும், கால்மாட்டில் சுத்தமாய் மடித்து இடுக்கிய சிவப்புக் கம்பளிகளும், சதா வேலையாய் அங்குமிங்கும் வெள்ளை உடுப்பில் டாக்டர்களும் நர்ஸுகளும் அலைவதும் மனத்துக்குச் சற்று ஆறுதலாக இருந்தன. .
"ஜானா! உன் அண்ணாவுக்குப் பிள்ளை பிறந் திருக்காமே! எங்களுக்கு சக்கரை கிடையாதா?"
ஜானாவுக்கு மார்பை இரண்டு தடவை அடைத்தது.
"நல்ல இடமாப் பாத்துக் கேட்க வந்தேளே, மாமி!"
சாயந்தரம் சந்துரு ஆஸ்பத்திரிக்கு வந்தான்.
"அண்ணா அண்ணா, எனக்கு மருமான் பிறந்திருக் கானாண்டா."
சந்துரு சூக் கொட்டிவிட்டு, இன்னிக்கு டாக்டர் என்ன சொன்னார்?" என்றான்.
டாக்டர்களுக்கு அவள் நிலைமையைப் பற்றி ஒன்றுமே நிச்சயப்பட முடியவில்லை.
பிறகு –
வழக்கம்போல் ஒரு மாலை சந்துரு ஆஸ்பத்திரிக்கு வந்தான். அன்று கிறிஸ்துமஸ் தினம். வார்டைக் கடிதாகப் பூக்களாலும், நிஜப் புஷ்பங்களாலும், வர்ண விளக்குகளாலும் அலங்கரித்திருந்தார்கள். ஜானா மாத்திரம் கட்டிலில் கழுத்து வரை சிவப்புக் கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். அவள் கண்களில் அசாதாரண ஒளி வீசிற்று. ஒட இடமிலாது. கடைசியில் ஆள்மேல் திரும்பிவிடும் மிருகத்தின் கண்களில் காணும் வெறி ஒளி, பீதியிலிருந்தே புறப்படும் விரக்தியின் தைரியம். அவன் கண்களில் எழுந்த வினாவைக் கண்டு அவள் சிரித்தாள்.
"ஒண்ணுமில்லே அண்ணா, இன்னிக்குப் பல் தேய்க் கறப்போ ஏதோ புரையேறினால் போலே இருந்தது. வயத்திலே ஐஸ் வெச்சாப்பிலே சில்லின்னுது. கிளுக்குன்னு ரத்தம் கக்கித்து. ஒரு கையகலம் இருக்கும்-"
"ஆ! என்னது?"
அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
"உஷ், ஒண்ணுமில்லே. எனக்கு அதனாலே ஒண்ணு மில்லே. தலைவலிதான் மண்டையைப் பிளக்கிறது. இதை உன்னோடு வெச்சுக்கோ. அம்மாகிட்டே சொல்லாதே. வீணா இடிஞ்சு போயிடுவா. இத்தோடு போச்சு. மறுபடியும் வரணும்னு ரூலா என்ன?"
ஆனால் அது மறுநாளும் வந்தது. அதற்கடுத்த நாளும் வந்தது. அடுத்த நாள், அடுத்த நாள்- விடாது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தவறாமல் ஐந்து மாதங்கள். இத்தனை ரத்தம் கக்கியும் அந்த உடலில் உயிர் இருந்ததுதான் அதிசயம். இன்னும் கக்குவதற்கு ரத்தம் இருந்தது அதைவிட அதிசயம்.
சந்துரு ஆபீஸைத் துறந்துவிட்டான். ஸ்திரீகள் வார்டு ஆதலால் மாலை வேளைதான் உள்ளே வரமுடியும். மற்ற வேளைகளில் வார்டு வாசலில் காவல் கிடந்தான். இரவழிந்தது. பகலழிந்தது. சிவப்புக் கம்பளியைக் கழுத்து வரை போர்த்து, கட்டிலில் கிடக்கும் ஜானா, வாசல்படியில் அவன் நின்று கொண்டு, நர்ஸ்களுடைய கோபத்தையும், டாக்டர்களின் சீறலையும் உணராது, அழுக்கேறிய தன் ஆடையை உணராது, குளி மறந்து, உணவு மறந்து, அவளைத் தவிர எல்லாமே மறந்து அவளையே கவனித்துக்கொண்டு நிற்கையில் யார் கஷ்டம் அதிகம் என்று அவளுக்கே சொல்லத் தெரியவில்லை.
"யாரு அம்மா? உன் அண்ணாத்தையா? ஐயோ பாவம்! உனக்கோசரம் உயிரையே விட்டுடுவாருபோல இருக்குதே! எங்களுக்கும்தான் கூடப் பொறந்தவங்க இருக்காங்களே!"
அன்று முதல் நாள் ரத்தம் வந்ததெனக் க்ேட்டவுடன் துடித்தது தவிர, சந்துரு ஒன்றும் வாய்விட்டு அப்புறம் வேதனைப்பட்டதில்லை. அவளுடன் அதிகம் பேசினதுகூட இல்லை. மாலை வந்ததும் கட்டிலண்டை மெளனமாய், மணியடிக்கும் வரை உட்கார்ந்திருப்பான். அவளும் மார்பில் கோத்த கைகளின்மேல் தாழ்ந்த கண்களுடன் யோசனை பண்ணிக்கொண்டிருப்பாள்.
ஒரே ஒருநாள் அவன் அவளைக் கேட்டான். ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்பதற்கோ என்னவோ?
"என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?"
"இந்த ஜன்மம் இத்தோடு போனப்புறம் அடுத்த ஜன்மத்தில் அல்லது வேறெந்த ஜன்மத்திலும் உன்னோடு கூடப் பிறக்கக்கூடாதுன்னு. உன்னோடு பிறந்து இப்போ படற அவஸ்தை போறும்!"
அவன் கண்களில் முதன்முதலாய்த் தண்ணீர் தளும்பிற்று. அதைக் கண்டதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது.
"அண்ணா, அண்ணா, என்னை மன்னிச்சுடு. நான் ஏன் இப்படி விஷத்தைக் கக்கறேன்னு எனக்கே தெரியல்லே."
"பரவாயில்லை; என்னை என்ன வேணும்னாலும் திட்டிக்கொள். ஆனால் உடம்பை மாத்திரம் எப்படியாவது சரிபண்ணிக் கொண்டுவிடு"
"இல்லே அண்ணா: எனக்கு ரொம்ப அலுப்பாயிருக்கு நான் பிழைப்பேன்னு எனக்குத் தோணல்லே. எனக்குச் சாகப் போறேனேன்னு பயமாயில்லை. ஆனால் அம்மாவுக்கு இந்த வயசுலே இந்தக் கஷ்டத்தையும் வெச்சுட்டுக் போறேனே இந்த துக்கத்தைத் தவிர எனக்குச் சாகப்போறோம் என்கிற பயமில்லே."
"உயிருடன் இருப்பது எவ்வளவு முக்கியமில்லையோ, அதேமாதிரி சில சமயங்களில் சாவது ஒன்றும் முக்கிய மில்லை."- கரடி மயிரால் வளைத்த புருவங்களினடியில், கனிந்த தணலாய், அனல் கக்கும் கண்கள் அவளைத் துருவின. அவனுடைய தாழ்ந்த குரலின் தீர்க்கம் அவளை மெதுவாய் அழுத்தியது.
"சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம். எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகிவிடும்பொழுது அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை. ஆகையால் நீ இப்பொழுது செத்தால் உன் சாவுக்கு நான் அழப்போவத ல்லை. ஆனால் அது உன் தோல்வி என்றுதான் என்னுடைய பெரும் அழுகையாயிருக்கப் போகிறது. இன்று நீ செத்தால் ஊருக்காகச் சாகப் போகிறாய். உனக்காகவே நீ சாகவில்லை. ஊர்ச்சொல் தாங்காமல் நீ சாகப் போகிறாய். இந்த ஊருக்கு என்ன தெரியும்? உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியுமா? எச்சில்பட்ட நாக்கு ஒன்றுதான் அதற்கு உண்டு. நீ உயிருடனிருந்தாலும் அதற்கு ஒரு வேடிக்கைதான்; நீ இறந்தாலும் அதற்கு இன்னொரு வேடிக்கை. ஆகையால் அவர்களுடைய வேடிக்கைக்காக நீ சாகப்போகிறாயா என்பதைத் தீர்மானம் பண்ணிக்கொள். நாளடைவில் உபயோகத்தால் நைந்து நேரும் உடல் அழிவைத் தான் தடுக்க முடியாது. ஆனால் இப்பொழுது உனக்கு வந்திருக்கும் சாவை நீ சாவதோ தவிர்ப்பதோ உன் இஷ்டத்தில் தான் இருக்கிறது. ஏனெனில் இந்தச் சாவை நீ செத்தால் அது சாவில்லை. நீ உயிருக்கு இழைக்கும் துரோகம் தவிர வேறில்லை."
ஆஸ்பத்திரியில் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் வெளியே போவதற்காக மணியடித்தது. சந்துரு உயரமாய் எழுந்து நின்றான். நெற்றிப் பொட்டில் அடையடையாய் நரை யோடிய மயிருக்கும், அடர்ந்த புருவத்துக்கும், கூடிவரம் செய்ய மறந்து வளர்ந்த தாடிக்கும் அவன் ரிஷி போன்றிருந்தான். கனிவுடன் அவள்மேல் குனிந்தான்.
"ஜானா "
" அண்ணா!"- அவள் உடல் பரபரத்தது.
"நீ என் தம்பி-"
அன்றிரவு அவள் ஒரு கனவு கண்டாள். அவளை ஒரு மாடு துரத்துகிறது. தட்டி நீட்டி நிமிர்த்திய கொடிக்கம்பி போல் வாலை உயர்த்திக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில், பீப்பாய் போன்ற உடல் குலுங்க அவளைத் துரத்துகிறது. அவள் ஒட அது ஒட, அவளை வெகு சீக்கிரம் நெருங்கிவிட்டது. அதன் மூச்சு அவள் முதுகை எரித்தது.
"அம்மா! அம்மா-"
கத்திக்கொண்டே ஓடுகிறாள். கல் ஒன்று தடுக்கிக் கீழே குப்புற விழுந்துவிட்டாள். மாடு அவள்மேலேயே வந்து கொண் டிருந்தது- வந்துவிட்டது. இனி எந்தக் கணம் கொம்புகள் முதுகில் ஏறிவிடப் போகின்றனவோ! கண்ணை இறுக மூடிக் கொண்டு விட்டாள்.
"தடக்-தடக்-தடக்" எங்கிருந்தோ குளம்பின் சப்தம் அவளை நோக்கி வருகிறது. மாடு அலறிக்கொண்டு ஓடிற்று
"தடக்-தடக்-தடக்"
அதைத் துரத்திக்கொண்டு ஒடும் அந்தக் குளம்பின் சப்தம் தூரத்தில் ஒய்ந்துகொண்டே போவது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
"தடக் தடக் தடக் தடக் தடக் - "
இப்பொழுது சத்தம் நெருங்கி வருகிறது. ஆனால் மாட்டின் மிரண்ட ஒட்டத்தின் சப்தம் இப்பொழுது இல்லை. குதிரைக் குளம்புச் சப்தம் மாத்திரந்தான். கண்களைத் திறந்தாள். அவளுக்குச் சற்று துரத்தில் அது நின்றுகொண் டிருந்தது. செவ்வரி படர்ந்த அதன் கண்கள் அவளை ஊடுருவின. பிறகு அது சாவதானமாய்த் திரும்பி வாலைச் சுழற்றிக்கொண்டு, பிடரிமயிர் சிலிர்க்க தலையை உதறிக் கொண்டு எதிரே புதர்களிடையே சென்று மறைந்தது.
ஜானா கண் விழித்துக்கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே ஆஸ்பத்திரியின் முற்றங்களிலும், தாழ்வாரங்களிலும் ஜோவென மழை கொட்டிக்கொண்டிருந்தது. அது அவள் உள்ளேயே பிரவாகமாய் இறங்கி உடல் நரம்புகள் ஒவ்வொன்றிலும் குளிர்ந்து பாய்வது போலிருந்தது.
மறுநாள் அவள் ரத்த வாந்தியெடுக்கவில்லை. அடுத்த நாளும் இல்லை. அதற்கடுத்த நாள், அடுத்த நாள். அன்றி லிருந்தே இல்லை. எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாது தானாகவே போய்விட்டது.
ஒருநாள் ஜானா விடும் திரும்பிவிட்டாள். அவள் குணமாகி வந்து சேர்ந்ததுதான் தாமதம். சந்துரு திடீரென்று ஒரு இளைப்பு இளைத்து ஒரு நரை நரைத்தான். சாய்வு நாற்காலியில் உடம்பு பஞ்சாய், கைகால் போட்டது போட்டபடி இரண்டு நாள் கிடந்தான். விபூதிப் பட்டைபோல் நெற்றியை உழுதுகொண்டு மூன்று வரிகள் விழுந்திருந்தன.
"ஜானா, வந்தயா? அம்மாடி, உன் அம்மா வயத்துலே பாலை வார்த்தயா? நீங்கள் எல்லாம் இனிமேலாவது நல்ல படியா இருக்கணும், அம்மா! நீ பிழைச்சது புதுப் பிறப்புத்தான். உங்க வீடு ராஜ குடும்பமாயிருக்க வேண்டியது. நல்ல மரத்துலே புல்லுருவி பாஞ்சாப்போலே உங்களுக்குன்னு கஷ்டம் வாய்ச்சிருக்கு!"
நாம் உலகத்தை விட்டு ஒதுங்க முயன்றாலும் உலகம் நம்மை விட்டு விடுவதில்லை.
"உன் மன்னிச் சிறுக்கி சொல்றாளாம். இருக்கறத்துக் குள்ளே சமத்தாய் ஆஸ்பத்திரிக்குப் போய்த் தொலைஞ்சாளே என் நாத்தனார், அப்படியே செத்துத் தொலையப்படாதோ? மறுபடியும் வந்து சேர்ந்துட்டாளா? இதுகளுக்கெல்லாம் ஏன் பகவான் உசிரை இரும்பாலே அடிச்சுப் போட்டிருக்கானோ தெரியல்லே" என்றாளாம்."
"ஓ"
"அவளுடைய மன்னி வீட்டுத் தூற்றல் முன்போல அவ்வளவு உறுத்தவில்லை. அவளுக்கே ஏதோ சில எல்லை களைக் கடந்துவிட்டாற்போல் ஒர் உணர்ச்சி. உள்ளுற ஏதோ ஒரு வெற்றி வெறி. -
"உன் மருமான் அப்படியே உன் அம்மாவை உரிச்சு வச்சிருக்கானாம். கறுப்புத்தானாம். உன் அண்ணா இன்னும் போய்ப் பார்க்கலையா? எங்கே போறார், பிள்ளைப் பாசம் இழுத்தால் தானா ஒருநாள் வரார். நானா இனி போக மாட்டேன்" என்று சொல்லிண்டு திரியறாளாம்! இவ்வளவு அசடைக் கட்டிண்டு அழறதும் கஷ்டந்தான்."
அந்த ஐந்து வருஷங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எப்படிக் கழிந்தது என்பதற்கு அவளால் கணக்குச் சொல்ல முடியும்.
"அவ கிடக்காடி, அதைவிட்டுத் தள்ளு! சொல்லறவா என்னத்தைச் சொன்னாலும் தனக்காத் தெரியணும். ஏன் இப்படித் தன் தலைலே தானே மண்ணைப் போட்டுக்கறது? என்னதான் மலைலே விளையட்டுமே, உரலிலே மசிஞ்சுதானே ஆகணும்? அப்படி என்னடி இவ ஜமீந்தார் வீட்டுப் பொண்ணு தட்டுக் கெட்டுப் போறது! இவள் அப்பனை எனக்குத் தெரியாதா என்ன? விரலுக்கு மிஞ்சி வீங்கிப்பிட்டு எத்தனை பேருக்கு எவ்வளவு எவ்வளவு தொகைக்குப் பத்தரம் எழுதிக் கொடுத்திருக்கான், தெரியுமா? மானத்தை விட்டவாள்ளாம் பெரிய மனுஷான்னா, அவன் ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன் போ! அதுக்குச் சந்தேகமேயில்லை. மக்களுக்குச் சத்துரு மாதாபிதா"
மறுபடியும் நாட்கள் பழைய நாட்கள்தாம். வேலைகளும் பழைய வேலைகள்தாம். ஆட்டம் முடிந்து கூட்டம் கலைந்து, வெறும் நாற்காலிகளும் மேடைகளும் மாத்திரம் நிற்கும் கொட்டகை போன்ற வெறிச்சிட்ட நாட்கள். கலகலப்பாயிருக்க முயன்றாலும், பேச்சில் அதற்குச் சம்பந்தமற்ற எண்ணங்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கும் நாட்கள். வாய்தான் பேசிச் சிரித்துச் சீறித் தணிந்து மறுபடியும் சிரித்தது. மெளனமும் ஆழமும் நிறைந்த கண்களுடன் சந்துரு மெதுவாய் மாடிப் படியேறுகையிலோ இறங்குகையிலோ, வளையவருகையிலோ, வீட்டில் வாழும் பாம்பு நடமாடுவது போலிருந்தது. சத்தியத் துக்குக் கட்டுப்பட்டு அதுவும் யாரையும் கடிக்காது. அதன் வழிக்கும் யாரும் போக முடியாது. எந்தப் புதையலை அப்படிக் காத்தானோ?
சில சமயங்களில் கூடத்தில் மாட்டியிருக்கும் சுவாமி படங்களைப் பார்த்துக்கொண்டு நிற்பான். அவைகளில் கிருஷ்ணன் படம் ஒன்று. பாலகிருஷ்ணன், குஞ்சம் கட்டிய புல்லாங்குழலை அக்குளில் இடுக்கிக்கொண்டு படபடவெனச் சிறகுகளை அடித்துக்கொண்டு தன்னிடமிருந்து தப்ப முயலும் ஒரு பச்சைக்கிளியை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக்கொண்டு சந்துருவைப் பார்த்துச் சிரிக்கிறான். சந்துரு செவிகளைப் பொத்திக் கொள்வான்.
"ஏண்டி, மருமான் முழிமுழியாய்ப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா ஒரு தங்கை பிறந்திருக்காம். அதுலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம். என்னமோ உன் மன்னி அவ அம்மாவைக் கேட்டாளாம், "எனக்குத்தான் புத்தியில்லேன்னா என்னைக் கூட்டிண்டு வந்துட்டேளே"ன்னு, எங்கேடி போறான், பிள்ளைப்பாசம் இழுத்தால், தானா வரான்"னு என்னை அடக்கி அடக்கி வெச்சு அவரும் வரல்லே, என் வாழ்க்கையும் பாழ் பண்ணிட்டேள்" இன்னாளாம். நாங்கள் கூப்பிட்டோம்னா நீ ஏண்டி வந்தே? என்று அவ ஏசினாளாம். அப்படி இப்படி வார்த்தை முத்தி அவள் அம்மா பெண்ணை ஒரு அடிகூட அடிச்சுட்டாளாம். கேட்டையோ விபரீதத்தை! அம்மாவாயிருந்தா என்ன, பெண்ணாயிருந்தா என்ன? அவாளவாளுக்குக் குழந்தைன்னு ஏற்பட்டுட்டா, அப்புறம் காட்டிலே வாழற புலி சிங்கங் கரடி தான். இந்தப் புத்தி அன்னிக்கே வந்திருந்தா இதெல்லாம் வேண்டாமோன்னோ? முதலையாவே பொறந்துட்டாக்கூட, ஆட்டை முழுங்கலாம், மாட்டை முழுங்கலாம். மனுஷனை முழுங்கலாம். அதுக்கோசரம் ஆனையை முழுங்க முடியுமா? வாயைக் கிழிச்சிண்டு நிக்க வேண்டியதுதான்!-"
அப்புறம் ஒருநாள், கோகுலாஷ்டமி தினம், குனிந்து கொண்டே, ஜானா வாசற்படியிலிருந்து இழை கோலத்தில் சிற்றடிகளைப் போட்டுக்கொண்டே நடை தாண்டிக் கூடத்துள் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று, வெறும் பால் சதையில் அப்பம்போல் இரு குழந்தைப் பாதங்கள் அவள் வரையும் சிற்றடிகளுடன் ஒன்றினாற்போல் இருந்தன. கதவோரத்தில் பதுங்கிக் காத்திருந்த மிருகம்போல் தாய்மை உணர்ச்சி அவள் மேல் பாய்ந்து நெஞ்சை நெருக்குகையில் ஜானா அப்படியே ரேழிக் கதவில் சாய்ந்துவிட்டாள். கண்ணிர் மாலை மாலை யாய்க் கன்னங்களில் வழிந்து குளிர்ந்தது. கைக் கந்தையிலிருந்து இழை கோலமாவு சொட்டுச் சொட்டெனச் சொட்டிற்று. பாதச் சங்கிலியின் சதங்கை சலசலத்தது. வெள்ளி அரைஞாண் பட்டை தீட்டிக்கொண்டு வளைந்து வளைந்து ஒடிற்று.
ஜானாவுக்கு இப்பொழுது எதுவுமே தாங்க முடிவதில்லை. சாவு தப்பினாலும் உடல் ஒட்டைச் சட்டிதான். எப்படியும் வீம்புக்கு வாழும் உயிர்தானே! அவள் தன் மருமானைப் பற்றி நினைப்பதுண்டென்றாலும் இம்மாதிரி இதுவரை நேர்ந்ததில்லை. ஆனால் அவள் கொட்டகை மேடை அன்றிலிருந்து வெறிச்சென்றில்லை. இன்னும் அவள் கண்ணால் கண்டிராத ராமதுரை அவள் மன அரங்கில் ஆட ஆரம்பித்துவிட்டான். காலி நாற்காலி சோபாக்களிடை ஜானா ஒண்டியாய், சிரித்துக் களிக்க ஆரம்பித்து விட்டாள். எப்படியும் இது இப்படியே இருக்க முடியாது. என்றேனும் ஒருநாள் வருவான் அல்லவா? தனக்காகக் காத்திருக்கச் சொல்லாமல் சொல்லுகிறாள், அவ்வளவுதானே!
"அத்தே நான் வரேன் இரு அத்தே நான் ஜூட்- ஒளிஞ் சிண்டிருக்கேன். என்னைக் கண்டுபிடி! அத்தையாலே கண்டு பிடிக்க முடியல்லியே! முடியல்லியே! நானே வந்துத்தேனே! மடிலே வந்து வீந்துத்தேனே!-"
அப்படி அவன் வந்த நாளும் வந்தது.
அன்று ஏதோ விடுமுறை. ரேழியில் சந்துரு பக்கத்து வீட்டுக் குழந்தையை மடியில் வைத்து அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
வாசலில் ஒரு ரிக் ஷா வந்து நின்றது. "அண்ணா, மன்னிடா!"
அம்மா ஈரக்கையைத் தலைப்பில் துடைத்துக்கொண்டு உள்ளிருந்து ஓடி வந்தாள். கஷ்டங்களைப் பட்டுப்பட்டு உடல் தளர்ந்து பெருத்துவிட்ட தாய்மலைபோல் இருந்தாள்.
கெளரி இடுப்புக் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டுக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள்.
"என்னை மன்னிச்சுடுங்கோ!"
சந்துரு முகம் சுவர்ப்பக்கம் திரும்பியிருந்தது. இன்னும் அவன் தன் மனைவியைப் பார்க்கவில்லை. அவன் குரல் கனிரென்றது.
"ஜானா, இவளை முன்னால் பச்சை ஜலத்தில் தலைக்கு ஊற்றி ஸ்நானம் பண்ணி வைத்து வேறு புடவை உடுத்து இங்கு அழைத்துவா."
ஜானாவுக்குத் திக்கென்றது.
"இவள் பிறந்த வீட்டார். இவளுக்கு ஸ்நான பூர்வமாக இறந்துவிட வேண்டும், நான் இவளுடன் பேசுமுன்பு"
"அண்ணா, வீட்டுக்கு வந்த பெண்ணை அப்படி யெல்லாம் பண்ணக்கூடாது.டா!"
"நான் சொன்னதைக் கேள்."
"சந்துரு!"
"எனக்கு எதிர் பேசாதேயுங்கள்!"
சந்துரு அடிபட்ட மிருகம்போல் கத்தினான். அவன் கண்கள் கொதித்தன. "இந்த நிமிஷத்திற்காக நான் இத்தனை நாட்கள், மாதங்கள், வருஷங்கள், காத்திருந்தேன். இந்த நிமிஷத்தை என்னிடமிருந்து பிடுங்குபவரோ, இதை மாற்றப் பார்ப்பவர்களோ யாராயிருந்தாலும் சரி, அவர்களை நான் என்னுடைய சத்ருக்களாகவே பாவிக்கிறேன்!"
வறண்டு போன உதடுகளை அவன் நாக்கால் நக்கி ஈரப் படுத்திக்கொள்கையில் அவன் அசல் பாம்பு போலவே இருந்தான்.
ஸ்நானம் பண்ணிவிட்டு வேறு புடைவையுடன் கெளரி மறுபடியும் ரேழியில் வந்து நின்றாள். காலை வேளையின் சிறு குளிரில் உடல் கொஞ்சம் நடுங்கிற்று. அவள் முகத்தில் ஒன்றுமே தெரியவில்லை. அவள் முகமே ஒரு முகமூடி ஜானாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஐந்து வருஷங்களுக்கு முன் அன்றிரவு கண்டபடிதான் இன்னும் இருந்தாள்.
"என்னை மன்னிச்சுடுங்கோ."
அவள் வார்த்தைகளைச் சந்துரு வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.
"பையன் சட்டை நிஜார் எல்லாவற்றையும் கழற்று."
கழற்றினாள்.
"ஜானா, என் சொக்காய் ஜோபியில் கத்தியிருக்கிறது. கொண்டு வா."
"அண்ணா! அண்ணா!" என்று ஜானா அலறினாள். சந்துரு இன்னதுதான் செய்வான் என்று என்ன சொல்ல முடியும்? அவன் எதிர்பாராத தன்மைகளுடையவன். சந்துரு உள்ளே போய், பேனாக்கத்தியை எடுத்து வந்து, குழந்தை இடுப்புக் கயிற்றை அறுத்துக் கீழே எறிந்தான்.
"உன் வீட்டுத் துணிகளையும் கயிற்றையும் சுருட்டித் தெருவில் கொண்டுபோய் எறி."
கெளரி எறிந்துவிட்டு வந்தாள். அவள் கண்கள் பெருகின. "என்னை மன்னிச்சுடுங்கோ. சந்துரு கத்தியை மடக்கிக் கொண்டான்.
"நீ இந்த ஐந்து வருஷங்களாய் எப்படி இருந்தாய், என்ன பண்ணிக்கொண்டிருந்தாய் என்றெல்லாம் உன்னைக் கேட்கப் போவதில்லை. இந்த வீட்டிலும் உன்னை யாரும் கேட்கமாட் டார்கள். இது என் கட்டளை. ஆனால் இனி நீ இங்கு இருப்ப தற்கு ஒரே காரணந்தான் உண்டு. உன் வயிற்றில் பிறந்த இந்தக் குழந்தைக்கு நான் தகப்பனாயிருக்கிறேன். என்னுடைய குழந்தையைப் பெற்றவளாய் நீ வாய்த்துவிட்டாய். அவ்வளவு தான்."
"என்னை மன்னிச்சுடுங்கோ!"
"உன்னை மன்னிப்பது- அதோ கூடத்தில் அடுக்கடுக்காய் மாட்டியிருக்கும் அந்தப் படங்களைக் கேட்டுக்கொள். அது என் வேலையுமில்லை. அதற்கு எனக்குச் சக்தியுமில்லை. ஏனெனில் நான் மனிதன்- சந்துரு காதைப் பொத்திக் கொண்டு மாடிக்குப் போய்விட்டான்.
"என்னை மன்னிச்சுடுங்கோ"
ஜானா குழந்தையை வாரி மார்புடன் அனைத்துக் கொண்டாள்.
"அம்மா இந்தாம்மா- உன் பேரன்"- இப்பொழுதுந்தான் அழுகை வருகிறது.
"அம்மா என்னை மன்னிச்சுடுங்கோ"
"எல்லாரும் உன்னை மன்னிப்பார்கள், அம்மா! கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும். எப்படியோ, இப்பவாவது வந்தையே!"
"அக்கா என்னை மன்னிச்சுடுங்கோ"
ஜானாவுக்குக் காது கேட்டதோ இல்லையோ, குழந்தை யைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவனை மார்போடு தழுவிக் கன்னங்களை மாறிமாறி முத்தமிடுகையில் பையன் மூச்சுத்திணறி விசித்துக்கொண்டு திமிறப் பார்க்கிறான். ஜானா வுக்கு அந்த ஒரு நிமிஷத்தில் எல்லாம் மறந்துபோய்விட்டது.
"என்னை மன்னிச்சுடுங்கோ".
சந்துரு உள்ளுறக் கருகிப் போய்விட்டான். எவ்வளவு முயன்றும் அவனால் மறுபடியும் புஷ்பிக்க முடியவில்லை. ராமதுரையைப் பார்க்கையில், அவன் தனக்குள் ஏதோ மறந்து போனதை ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நிற்பான்.
"டேய் கண்ணா! உங்கப்பாடா- உங்கப்பாகிட்டப் போடா! அதான் உங்கப்பா சந்துரு வேணுமென்றே முதுகை அவன் பக்கம் திருப்பிக்கொள்வான். "என் குழந்தைக்கு அதன் தகப்பனையே பரிச்சயம் செய்துவைக்கும் கட்டம்கூட வந்து விட்டது பார்த்தையா!" என்று குமுங்கிக் குமுங்கிக் கருகிப் போனான்.
"கொட்டு மேளம், கொட்டு மேளம்"- பயல் கழுத்தில் ஒரு தகரத்தை மாட்டி அடித்துக் கொண்டு குஞ்சுநடை போட்டுக்கொண்டு வருவான். சந்துரு அவனைக் கவனிக்கை யில் மழைக்காலத்தில் மேகங்களைச் சூரியகிரணம் பிளந்து எட்டிப் பார்ப்பதுபோல் முகம் சற்று இளகி அதன் வரிகளும் சுருக்கங்களுங்கூடச் சில மறைந்து இளமையடைந்தாற்போல் தோன்றும். ஆனால் மறுபடியும் மூட்டமடைந்துவிடும். குழந்தை திகைத்து நிற்பான். அந்தக் கண்ணராவியைக் கண்கூடாய் ஜானா பார்த்துவிட்டு அவளுக்குப் பொறுக்கவில்லை. குழந்தையை அப்படியே வாரிக்கொண்டாள்.
"அடே! குழந்தை உன்னை என்னடா பண்ணித்து? அதை ஏண்டா வெறுக்கறே? அவன் உன் குழந்தைதாண்டா!" சந்துரு அசதியுடன் தலையை அசைத்தான்.
"இல்லை; அவனை என் குழந்தை என்று நான் நினைத்துக் கொள்ளும்படி அவள் வைக்கவில்லை. அது பிறக்கு முன்னரே அவள் அதைத் தன் குழந்தையாக்கிக் கொண்டுவிட்டாள். எங்கள் இருவர் குழந்தை, அதனால் அது நம் குழந்தை என்று எண்ணுவதற்கே இடம் வைக்கவில்லை. எங்கள் குழந்தையா யிருந்தால்தானே அது என் குழந்தையாகும்? இனி அதற்கே வழி தோன்றுமா? நான் நினைக்கவில்லை. ஒருவேளை நானும் அவனும் தோழர்களாவோம்; ஆனால் அப்பனும் பிள்ளையும் ஆவோமோ? இல்லை. என்னுள் அம்மாதிரி உணர்ச்சிக்கு ஆதாரமான ஏதோ எரிந்துவிட்டது. இனி நான் என்ன செய்வேன்!"
வாழ்க்கை வதங்கிப் போவது ஆச்சரியமல்ல. ஆனால் வதங்கிப்போன நினைவு மாத்திரம் வாடாமல் வாசமும் இலாது இருக்கும் நிலைதான் பயங்கரம்.
"எனக்கென்று இப்பொழுது ஒன்றுமில்லை. இதுவரை என் வீம்பு இருந்தது. இப்பொழுது நான் அதனுடையதாய் விட்டேன்."
வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதானிருக்கிறது. எங்கேயோ எப்படியோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேண்டியதுதான்; விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது. இத்தனைக்கும் தெரிந்த கணக்கு புரிந்த கணக்கு முன்னால் போட்ட கணக்குத்தான்.
"என்னை மன்னிச்சுடுங்கோ !"
இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடந்தேடி யலையும் வெளவால் போன்று, மன்னிச்சுடுங்கோ, மன்னிச்சுடுங்கோ என்ற வார்த்தையின் ஒலியும் உணர்வும் சதா நீந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ராமதுரை, குழந்தை, என்ன செய்வான்? ஜானா இல்லாவிடில் அவனும் பாழா யிருப்பான். இந்த வீட்டில் ஏதோ நேரக்கூடாதது நேர்ந்து விட்டதென மூங்கையாய்ப் புரிகிறது. நாளாக ஆக அரை குறையாகக் கொஞ்சங் கொஞ்சமாய் விவரங்கள் புரிந்து கொண்ட பிறகு, அவன் அத்தையுடனேயே ஒட்டிவிட்டான். சில சமயங்களில் அவளையே அம்மாவென்று கூப்பிட்டுப் பார்த்துக்கொள்வான்.
சந்துருவும் கெளரியும் ராமதுரையைப் பெற்று அவளிடம் கொடுத்தாற்போல்தான் ஆகிவிட்டது. தான் வளர்த்த பிள்ளை யின்மூலம் ஜானா தன் நினைவு பெற்றாள்.
ராமதுரையும் சமாளித்துக்கொண்டு விட்டான். நல்ல வேளையாக அவன் காவிய புருஷன் அல்ல. காவிய புருஷர் களாலும் தெய்வங்களாலும் பிறர்க்குப் பெரும் பயன் இருக்கலாம். ஆனால் தமக்கும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் பெருந்துன்பந்தான்.
இதோ வருஷங்களும் ஒடிவிட்டன. ராமதுரைக்குக் கல்யாணம் நடக்கிறது. ஜானாவின் இஷ்டம் அப்படித்தான். மருமான் கல்யாணத்தைச் சுருக்கப் பார்த்துவிட வேண்டு மென்னும் அவா. எப்படியும் ஒட்டைச் சட்டியாகிவிட்டதால், ராமதுரை வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு உடல் நலிய ஆரம்பித்து விட்டது. ஆனால் அந்தப் பழைய பயங்கரத்துடன் அல்ல. கொஞ்சங் கொஞ்சமாய் நைந்து ஒடுங்க ஆரம்பித்தது. கொழுக்கட்டை அதில் வெந்தாய் விட்டது. இனி சட்டிக்கு உபயோகமில்லை.
கொட்டுமேளம் கொட்டுகிறது. இது எதற்கு? ராமதுரைக்கு மாத்திரமா? சந்துருக்குந்தான். தனக்குந்தான். ஏதோ இன்னும் தனக்குப் புரியாத முறையில் தன் மன்னிக்குந்தான். எல்லோ ருக்கும் இன்று ஒரு புதுக்கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. வீம்பின் நித்திய கல்யாணம்.
"கொட்டு கொட்டு, நன்றாய்க் கொட்டு."
"கெட்டிமேளம், கெட்டிமேளம்: மாங்கல்ய தாரணம் நடக்கிறது; கெட்டிமேளம்!"
தம்பதி சகிதமாய் ராமதுரை அத்தையை நமஸ்கரிக்க அறைக்குள் நுழைந்தபோது ஜானாவின் கண்கள் விழித்தது விழித்தபடிதான் இருந்தன. அவள் முகத்தில் அன்பும் இன்பமும் அமைதியும் நிறைந்த புன்னகை உறைந்து போயிருந்தது. தீராத் தாகம் தீர்ந்த முகத்தில்தான் அந்த பாவத்தைக் காணமுடியும்.
பின்னாலேயே சந்துரு வந்து நின்றான். அவன் பின்னால் கௌரி.
"அக்கா, என்னை மன்னிச்சுடுங்கோ!".
ஜானாவுக்கு அது கேட்டதோ இல்லையோ, ஜானா தன் சுனை போய்ச் சேர்ந்துவிட்டாள்.
-------------
10. ரயில்
இத்தனைக்குமிடையில், அத்தனையினதும் நடு நாடி போல், அலுப்பற்று ஒரே நிதானமான வேகத்தில், ஒரு ரயில் வண்டித் தொடர், மரவட்டை போல் நெளிந்து நெளிந்து, விரைந்து செல்கிறது.
"ஜன்னலைத் திற:
"இல்லேடா கண்ணா- அங்கே உட்காரப்படாதுடா-"
"மாட்டேன்- அங்கேதான் உக்காரணும்- நான் ஜன்னல் வழியாப் பாக்கணும்- ஐயோ- அம்மா இதோ பாரேண்டிஅக்கா திறக்க மாட்டேங்கிறாடி!"
"சனி தொலையட்டும் திறந்துவிட்டுடேண்டி எப்படி யாவது அழாமலிருந்தால் போறும்-"
"இந்தா தொலைச்சுக்கோ."
வண்டிக்குள்தான் எத்தனை பேர், எத்தனை விதமாய் உட்கார்ந்து படுத்து, நின்று, குமைந்து வருகின்றனர்! எத்தனை விதமான பேர்கள்- எங்கெங்கிருந்தோ எங்கெங்கேயோ போகிறவர் -
எஞ்சினின் ஊதல் ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு போகிறது. அதுவே ஒவ்வொருவருக்கு அவரவர் மனத்திற் கேற்ப, ஒவ்வொரு விதமாய்ப் படுகிறது. ஒருத்தருக்கு இருப்புக் குதிரையின் உற்சாகமான கனைப்பாயிருக்கிறது: ஒருத்தருக்குப் பின்வரும் விபத்தின் முன்னோலக் குறியாய் மனத்தில் "சுறுக்கென்று தைக்கிறது.
மூணு நாலு பேர் சேர்ந்தாற்போல் ஒரே பெஞ்சில் நெரிகின்றனர்
"என்னப்பா உன்னை நம்பி-"
"என்னத்தே என்னை நம்பி? நான்தான் அப்பவே சொன்னேனே- குதிரை என்னவோ நல்ல குதிரைதான், ஆனால் அந்த ஜாக்கி ஏறினால் கோவிந்தாதான் என்று! போனால் போறது போ- வர சனிக்கிழமை நைஜாம் பிளேட் இருக்கு போ-"
"அடப்பாவி- என்னடா இருக்கு இருக்கு என்கறே? இன்னிக்குப் போனால் வீட்டில் அவள் மூக்கைச் சிந்திச் சிந்திப் போடுவாளேடா! எப்படியடா போய் முழிப்பேன்? அவளுக்கு அப்பப்போ குடும்பச் செலவுக்குக் கொடுக்கிற பணத்தில், அவள் மிச்சம் பிடித்து, கடுகு டப்பாவிலும் மிளகு டப்பாவிலு மாய்ப் போட்டு வைத்திருந்ததையெல்லாம் பீராய்ந்து எடுத்துக் கொண்டு முப்பதை முன்னுறாய்க் கொண்டு வரேன்னு சொல்லி வந்தேன்!"
"என்னடா மூக்காலே அழறே? இங்கே மாத்திரம் வாழறதோ? ஸ்வஸ்திக் வளையல் ஒரு ஜோடி அடித்துப் போன மாலம்தான் அவள் பிறந்த வீட்டில் போட்டார்கள். இன்னிக்குக் கழட்டிக்கொண்டு வந்து இங்கே கப்பங் கட்டி யாச்சு- எல்லாம் இப்படித்தான்-"
"ஒருநாள் வரதுதான், ஒருநாள் போறதுதான்இதெல்லாம் பார்த்து முடியாதப்பா." –
"என்னப்பா பண்ணுவே- இன்னிக்கு உனக்கு இந்த வேதாந்தமிருப்பது ஒண்ணும் வினோதமில்லை- உன் ஜேபியிலே, லட்சணமாய் நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு பதுக்கியிருக்கையோன்னோ!" -
"எனக்கு எல்லாம் ஒண்ணுதான்- இருந்தாலும் ஒரே பேச்சுதான்; இல்லாவிட்டாலும் அதே பேச்சுதான்; என்னவோ- என்னய்யா- என்னய்யா அவ்வளவு அவசரம்? மேலே இடிச்சுண்டு ஒடறே! எதிரே நிக்கறேனே கல்லாட்டமா, தெரியல்லே?" -
"இல்லை, மன்னிக்கவும்- இந்த ஸ்டேஷனில்தான் இறங்கணும்- அடிபட்டுடுத்தா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னா! பரவாயில்லே, போங்கோ- வண்டி பாஸ்ாயிடுத்தே-"
"டிக்கட், டிக்கட்-"
"இதோ உள் ஜோயியிலே- ஐயையோ!"
"என்ன என்ன?"- வண்டி முழுவதும் ஒரே கலவரம், ஆரவாரம்.
"பைக்குள்ளே தேளா, கொட்டிடுத்தா?" "ஐயையோ! என் காசைக் காணோமே- கடியாரத்தைக் காணோமே- பர்ஸ்- டிக்கட்-"
"அதனால் என்னப்பா, நீதான் சொன்னையே- இருந் தாலும் ஒண்ணுதான், இல்லாவிட்டாலும் ஒண்ணுதான் என்று- எல்லாம் நீ சொல்லிக்கொடுத்த வேதாந்தம்தானே-"
"திருட்டா? யார்? யார்?"
"யார், யார் என்றால் உங்ககிட்டே சொல்லிக்கொண்டு போவானா? எல்லாம் அவரே வழிகூட்டியனுப்பிச்சாரே அந்த ஆசாமிதான் கைவெச்சிருக்கனும் இல்லாட்டா அவனுக் கென்னையா அவ்வளவு அவசரம், வண்டி புறப்படற சமயத்தில் இடிச்சுப் புடிச்சுண்டு இறங்கும்படியா?-"
"இதே மாதிரிதான் ஸார், நான் பத்து வருஷங்களுக்கு முன்னால் விருத்தாசல மார்க்கத்தில் போய்க்கொண்டிருக் கையில்-"
"- டாமிட் டிக்கட் டிக்கட்-"
"ஒருத்தரையும் குற்றம் சொல்வதற்கில்லை. இந்த முழி பிதுங்கும் கூட்டத்தில் அவாளவாள் ஜேபியைப் பற்றியே சந்தேகம் வந்துவிடுகிறது- தன் பையென்று நினைத்து இன்னொரு சட்டையில் கைவிட்டுவிட்டான்! அவ்வளவுதான்."
வண்டியின் ஊதல் எல்லாரையும் பரிஹசிக்கிறது. விதியின் விலக்க முடியாத கதி போன்றிருக்கிறது, வண்டி ஒரே திக்கில் செல்லும் தீர்மானம்.
"டேய், சொன்னத்தைக் கேளு- நீ ரொம்ப எட்டிப் பாக்கறே- காலை வாரி விட்டுடப் போறது-"
"நீ என் காலைப் புடிச்சுக்கோ- அதைவிட உனக்கு என்னடி வேலை?"
அந்தப் பக்கம் முழுதும் இதைக் கேட்டதும் ஒரே சிரிப்பு.
"பேஷ்- பிழைக்கிற பிள்ளைதான்! என்ன இருந்தாலும் ஆண்பிள்ளைகள் ஆளப்பிறந்தவர்கள்தான்."
பிள்ளையைப் பெற்றவர்களுக்கு உள்ளுற ஆனந்தம் பொங்குகிறது.
"என்னடா, உனக்கா உனக்கு இன்னமும் சிசுருவுை பண்ணிண்டு இருக்கணுமா! அவளுக்குக் கலியாணம் ஆன அப்புறங்கூட? போனாலும் போறதுன்னு ஒரு வார்த்தை சொன்னையே அதுவும் மாப்பிள்ளையை எதிரே வெச்சிண்டு!-"
சர்க்கரையென்று நினைத்து உப்பை வாயில் வைத்துக் கொண்ட முகம்போல், மாப்பிள்ளை மூஞ்சியில் அசடு வழிகிறது. அவனுக்குக் கலியான வெறி இன்னமும் தணிந்த பாடில்லை- மாமனார் வீட்டில் rேத்ராடனம் போகப் போகிறார்களென்று வீட்டில்கூடச் சொல்லிக்கொள்ளாமல் "டிமிக்கி கொடுத்துவிட்டு வந்திருக்கிறான். அவன் மாமியார் ஏதோ பெரும் வெற்றியைக் கண்டுவிட்டது போல், பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒன்றாய் உட்கார வைத்துவிட்டு மனமகிழ்கிறாள்.
அவனுக்குள் அவனையும் அவளையும் சுற்றித்தான் உலகமே சுழல்வதாய்த் தியானம். மணலில் தலையைச் செருகிக்கொண்ட நெருப்புக்கோழிபோல், ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லையென்று அவன் நினைத்துக்கொண்ட போதெல்லாம், அவள் தோள் பக்கமாய்க் கையைப் போடுகிறான். இந்த விரசத்தில் தட்டும் வெறுப்பில் அவளுக்கு முகம் சுளிக்கிறது. அதே சமயத்தில் ஒரு திருட்டுச் சந்தோஷமும் அந்த வெறுப்பில் கலந்திருப்பதால், சலிப்புக் கரைந்து முறுவலாய் மாறுகிறது. இப்படியே அவள் பக்கத்தில், அவள் புதுப்புடவை சலசலத்துக் கொண்டு, உடல் பட்டதும் படாததுமாய் இருவரும் உராய்ந்து கொண்டு, இப்படியேஇந்த ரயில் எப்பொழுதுமே எங்கும் நிற்காமல் போய்க் கொண்டே இருக்காதா?
"இந்த ரயில் எப்போதான் நிற்குமோ தெரியவில்லை!-" "ஏன் இப்படிக் கரிச்செடுக்கறேள்?. எப்பவோ ஒரு தடவை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்தாப் போலே லீவு வரதே! வேளா வேளை எந்தெந்த ஊரிலே யிருந்தோ பெருமாளைச் சேவிக்கணும்னு வராள்- நாம் இப்படிப் பக்கத்து ஊரிலேயிருந்துண்டே ஒரு தடவையாவது பார்க்காமலிருக்கிற-தான்னு கூப்பிட்டால்-"
"இதோ பார்- எனக்கு எங்கேயாவது போய்த் தலையை சாய்ச்சால் போறுமென்னிருக்கு. இத்தனை குழந்தையும் குட்டியும், மூட்டையும் முடிச்சுமாய்ப் போய், இந்தப் புண்ணியத் தைச் சம்பாதிச்சுண்டு வரணும்னு எனக்கு ஆசையே இல்லை."
"உங்கள் கூட்டமே நாஸ்திகக் கூட்டம்தானே- உங்களுக் கெல்லாம் ஒரே ஆசைதான்- புகையிலையைப் போட்டுண்டு கண்ட இடத்தில் துப்பவும் சீட்டாடிண்டு இருக்கவுமேயொழிய"
"அம்மா, தாயே-"
"நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லலாம். நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தாய்தான்- நானும் கலம் பெத்தாயிடுத்து!"
"ஐயோ. நம்ம வமிசாவளியெல்லாம் இங்கே வந்து கூடவா படிக்க வேண்டும்!"
"ஏன் இப்படி-" இல்லை, மற்றதொன்றும் கேட்கவில்லை. வண்டியின் ஊதல் எல்லாச் சத்தத்தையும் அடக்கிவிடுகிறது.
தடக்-தடக்-தடக்
வண்டி விழுங்க விழுங்க, தண்டவாளம் திரெளபதியின் துகில்போல் நீண்டுகொண்டே போகிறது. அது வளைந்து சுழன்று மறுபடியும் வெறித்துச் செல்லும் ரீதியைப் பார்க்கையில் அதுவும் காலத்தைப்போல் எல்லையே அற்றது போலிருக்கிறது. எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் போகிறது! ஒர் இடத்தில் தாபத்தால் உடைந்த இதயம் போல், பூமி பளார் பளார் என்று அங்கங்கே, தண்ணீரே காணாமல் வெடித்திருக்கிறது. இன்னோர் இடத்தில், துக்கம் நிறைந்த உள்ளத்தினின்று பிழியும் கண்ணிர்போல் சதுப்பு நிலத்தில் ஜலம் கசிகிறது. இன்னொரு சமயம், பாலத்தினடியில் இரு மருங்கிலும் கண்ணாடித் தகடு வார்த்தாற்போல் ஏரியில் தண்ணீர் விளிம்பு கட்டி அசைவற்று நிற்கிறது.
ஒரு சமயம், கோபத்தில் வெதும்பும் மனம்போல், வானத்தில் மேகங்கள், கறுத்தும் வெளுத்தும் புழுங்குகின்றன. இன்னொரு சமயம் ஆகாயம் பிரேதம்போல் ஒரே நீலமாய்ப்
பூரித்திருக்கிறது.
ஒரு சமயம், மாலை வேளையில் மலரும் மலர்களின் மணம், மனத்தை மயக்குகிறது. மறுசமயம் ஜதையில் வேகும் பிணத்தின் நிணம் மூக்கைப் பொசுக்குகிறது. வண்டி ஒரு மூலையில் திரும்பியதும் அதோ சவுக்குத் தோப்புக்கப்பால், சுடுகாட்டினின்று எழும் ஜ்வாலைகளே தெரிகின்றன.
வேளை முதிர முதிரக் கவியும் இருளில், ஒரு விளக்கு ஒளி மினுக்கென்று தோன்றுகிறது. கண்மூடி வழிகாட்டும் லட்சணம் போல், எட்டியும் கிட்டியும் நிலையற்று எரிகிறது.
ரயிலில் பெஞ்சோரத்தில் ஒருத்தி இத்தனை பேரிடை யிலும் தன்னந்தனியாய்ப் பதுங்கிக் கிடக்கிறாள். பாம்பின் கண்பட்ட இரைபோல் பார்வை நிலை தவறி, ஒரே குத்தலில் விறைத்திருக்கிறது. மார்த்துணி சரிந்திருப்பது கூட அவளுக்குத் தெரியவில்லை. வண்டி அலறும் போதெல்லாம். அவள் கைகள் அவளை அறியாமலே, அடி வயிறைப் பிட்டாய்ப் பிசைகின்றன.
அவள் போய்ச் சேரும் இடத்தில் என்ன காத்திருக்கிறதோ அவளுக்கு! வண்டி இவ்வளவு சீக்கிரம் பிரயாண முடிவை நெருங்குகிறதே எனும் பயங்கரம் ஒரு பக்கம், ஐயோ! இந்தச் சங்கடத்தைச் சகிக்க முடியவில்லையே! ஒரே வழியாய்ச் சுருக்கப் போய்ச் சேர்ந்துவிட மாட்டோமா!" எனும் உள்ளம் பதைப்பில், உயிரே ஊசலாடுகிறது.
"ஐயோ நான் படும்பாடு சிவனே- உலகோர், நவிலும் பஞ்சுதான் படுமோ- சொல்லத்தான் படுமோ!-"
"இதென்ன கஷ்டம்! நாம் இடமில்லாமல் படும் கஷ்டம் போதாதென்று பிச்சைக்காரர்களின் உயத்திரவம் வேறேயா? இந்தக் கும்பேனிக்காரன் எல்லாத்துக்கும் ஒரு வரி போட றானே இவாள் மேலே ஒண்னு போடப்படாதோ?"
"ஏன் ஸ்வாமின்னு. உங்களுக்கு அவ்வளவு தயாளம்: அவன் வயிற்றுக் கொடுமை; ஏதோ கத்திவிட்டுப் போறான்."
"ஏதேது அவனுக்குக்கூட வராத கோபம் பெரியவாளுக்கு வராப்போலே யிருக்கு பெரியவா ஏதேனும் வாரிசோ?"
"வாரிசு என்ன சுவாமி? பார்க்கப் போனால் உலகத்திலே எல்லாருமே பிச்சைக்காராள்தானே! நான் ஒரு பிச்சைக்காரன், நீரும் ஒரு பிச்சைக்காரன்."
"என்னடா சொன்னாய் என்னை! நீ வேணுமானால் பிச்சைக்காரனாயிரு- என்னை- பல்லை
"சீச்சீ"
"து-சூ-- இது ஒரு சமாதானக்காரர்.
வண்டி முழுதும் ஏகக் கூச்சல் களேபரம்.
"தடக்-தடக்-தடக்- இது வண்டி
"என்ன சிரிக்கிறேள்?"
"என்னத்துக்கு அழவேண்டும் என்றுதான் சிரிக்கிறேன்-"
"என்ன புதிர் போட ஆரம்பிச்சுட்டேளே?"
"புதிரேயில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சம்தான்.
எல்லாம் கண்ணெதிரே நடக்கிறதுதான். ஒரு சிமிழுக்குள்ளேயே உலகம் அடங்கியிருக்கிறது. உனக்கு ஒரு பெரிய விந்தையா யில்லையா?-"
"இந்த மாதிரி எல்லாம் பேசினால் எனக்குப் புரிஞ்சுடுமோ?-"
"சொல்கிறேன், கேள்; அக்காவை விரட்டிக்கொண்டு ஜன்னலின் வெளியே வேடிக்கைப் பார்க்கும் சின்னப் பையனாய் நான் இருந்திருக்கிறேன். இன்னமும் மாப்பிள்ளைக் கருக்கழியாமல், வண்டியே தனக்காகத்தான் ஒடுகிறதென்று நினைத்துக்கொண்டிருக்கும் வயசுப் பிள்ளையாகவும் இருந் திருக்கிறேன். ஏண்டாப்பா இத்தனை பெரிய குடும்பத்தைப் படைத்தோம் என்று ஏங்கும் அந்தச் சம்சாரியாகவும் இருந்திருக்கிறேன்-"
"உங்கள் எண்ணத்தின் கடுப்புத்தானோ என்னவோ அஞ்சும் பெத்து, வளத்து வயசு வந்த பிறகு ஒண்ணொண் ணாய்ப் பறிகொடுத்தோம்!" -
"அதுவும் சரிதான்- நீயும் ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டாய் இல்லையென்றா சொன்னேன்? ஏதோ நீ பட்டதில் பாதியாவது நான் பட்டிருக்க மாட்டேனா? உனக்கு இருந்தது எனக்கும் இருந்திருக்காதா?-"
"இப்பொ என்னத்துக்கு அதெல்லாம்?-"
"அதைத்தானே சொல்ல வந்தேன்!- உப்புமில்லை, புளியுமில்லாததற்கெல்லாம், உறுமிக்கொண்டும், கருவிக் கொண்டும், குலாவிக்கொண்டும், கொக்கரித்துக்கொண்டும் இருந்திருக்கிறோம்- இருக்கிறோம்- ஆனால் இப்போ..."
"என்ன, டக்குனு நிறுத்திட்டேள்?-"
"இப்போது நமக்கும் வயசாகிவிட்டது. நீ முந்திக் கொள்கிறாயோ, நான் முந்திக்கொள்கிறேனோ- எல்லாம் பட்டாய்விட்டது. சந்தோஷப்படவும் அலுப்பா இருக்கிறது. துக்கப்படவும் தெம்பில்லை. என்னவோ போகிறோம். வருகிறோம். எங்கே போகிறோம், எதற்காக என்னும் அக்கறையும் அதிகமில்லை. இந்த மாதிரி சமயங்களில்உலகத்தைவிட்டு நாம் ஒதுங்கி நின்று, அதன் வேடிக்கையைக் கவனிக்கும்போது மனத்திற்கே ஒரு நிம்மதி பிறக்கிறது. ஏதோ சந்தேகம் தெளிந்தாற்போல் ஒரு கனம் குறைகிறது- இதைச் சரியாய் வெளியில் சொல்லக்கூட முடிகிறதில்லை. மனதுக்கு மனதுதான்.
"அதே சமயத்தில் உலகத்தில் இருக்கும் சுகதுக்கங்களுக்கும் குறைவில்லை. உலகம் மாத்திரம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. காலமும் கடந்துகொண்டிருக்கிறது, இத்தனை யையும் ஏந்திக்கொண்டு இந்த வண்டி போகிறமாதிரி. பார், இதுவும் உலகத்தின் நடுநாடி போல், அடித்துக்கொள்கிறது ஒரே நிதானமாய் -தடக்-தடக்-"
தடக்-தடக்-தடக்-தடக்
-------------------
கருத்துகள்
கருத்துரையிடுக