ஜெக்கோஸ்லோவேகியா
வரலாறு
Back
ஜெக்கோஸ்லோவேகியா
வெ. சாமிநாத சர்மா
1. ஜெக்கோஸ்லோவேகியா
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. பதிப்புரை
4. நுழையுமுன்…
5. I நாடும் அதன் சரித்திரமும்
6. II குடியரசு ஆரம்பம்
7. III பொருள் நிலையும் அரசியலும்
8. IV மக்களின் வாழ்க்கை
9. V சிறுபான்மைச் சமூகத்தினர்
10. VI ஜெர்மானியர்களின் குறைகள்
11. VII அரசாங்கத்தின் முயற்சிகள்
12. VIII ஸுடேடென் ஜெர்மானியர்
13. IX ஸ்வரம் ஏறுகிறது
14. X சமாதானத்திற்குப் பலி
15. XI கைவிட்ட அந்நிய நாடுகள்
16. XII ஜெர்மனியின் நோக்கமென்ன?
17. XIII ஸோகோல் இயக்கம்
18. XIV அளித்த நன்கொடைகள்
19. XV தலைகுனிந்த வாழ்வு
20. அநுபந்தம் 1
21. அநுபந்தம் 2
22. கணியம் அறக்கட்டளை
ஜெக்கோஸ்லோவேகியா
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : ஜெக்கோஸ்லோவேகியா
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 14
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2006
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16+ 208= 224
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 145/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்றறிஞர்.
அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக்களைப் போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர் களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.
கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலை முறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடு கிறோம். 29 நூல்கள் 11 நூல் திரட்டுகளாக மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் கொடுத்துள்ளோம்.
நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசியப் பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
செக்கோசுலோவேகியா
கடந்த பலநூறு ஆண்டுகளாக அண்டையிலுள்ள பெரிய நாடுகளின் அல்லது இனங்களின் பேராளுமையால் தாக்குண்டு அல்லல்பட்ட சிறு நாடுகள் பல ஐரோப்பாவின் மையப் பகுதியில் உண்டு. அவற்றுள் ஒன்று செக்கோசுலோவேகியா (1993 லிருந்து செக் குடியரசு மற்றும் சுலோவக் குடியரசு) ஆகும். கி.பி. 5 அல்லது 6 நூற்றாண்டுகளில் செக் மொழி, சுலாவக் மொழி ஆகியவற்றைப் பேசும் இனத்தினர் செக்கோசுலோவேகி யாப் பகுதியில் குடியேறினர். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பெரும் பிரிவு உருசிய மொழி, போலிசு மொழி முதலிய மொழிகள் அடங்கிய சுலாவ் மொழிக் குடும்பம் ஆகும். செக், சுலாவக் ஆகிய இரண்டுமே சுலாவ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
இன்று செக் குடியரசு என்று அழைக்கப்படும் செக்கோசுலோவேகியாவின் மேற்குப் பகுதியை கி.பி. 850 முதல் பிரெமிசிலி (Premysl) பரம்பரை ஆண்டு வந்தது. பின்னர் அதனை பொகமிய அரசர்கள் 14 வது நூற்றாண்டில் ஆண்டனர். கி.பி. 1700 களிலிருந்து அது ஆத்திரிய காப்சுபெர்க் பேரரசின் கீழ் வந்தது.
இன்றைய சுலாவக் குடியரசுப் பகுதி 10 ஆம் நூற்றாண்டு முதல் மாக்யார் (Magyar) பரம்பரையினர் ஆளுகையின் கீழ் இருந்தது. 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின் அப்பகுதி ஆத்திரிய - அங்கேரியப் பேரரசின் பகுதியாக ஆகிவிட்டது.
1918 வரை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக செக் மக்களும் சுலாவக் மக்களும் அண்டையிலுள்ள பேரரசுகளுக்கு அடிமைப் பட்டு வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது ஆத்திரிய அரசு, அங்கேரி அரசு, போலந்து அரசு, செருமனி அரசு போன்றவை இம்மக்கள் வாழும் பகுதி களைக் கைப்பற்றி ஆண்டு, அவர்கள் உரிமைகளை மிதித்து வந்தனர். எனினும் அம் மக்களிடையே விடுதலை உணர்வு மறையவில்லை. குறிப்பாக கி.பி. 1800 க்குப் பின் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் ஆங்காங்கு தேசிய உணர்வுப் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கிய போது செக், சுலாவக் மக்களிடையேயும் அவ்வுணர்வு கொழுந்துவிட்டு எரிந்தது. எனினும் முதல் உலகப்போர் முடியும் காலம் வரை ஐரோப்பா முழுவதையும் தங்கள் பேரரசுகளின் கீழ் ஆண்டு வந்த செருமனி பேரரசும், ஆத்திரியப் பேரரசும் இருந்த வரை அம்மக்களுக்கு விடிவு காலம் இல்லை. 1914 - 1918 இல் நடந்த முதல் உலகப் போரில் அவ்விரு பேரரசுகளும் தோல்வி அடைந்தவுடன் 1919 - இல் இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா ஆகிய (வெற்றியடைந்த) நாடுகள் செயல்படுத்திய வெர்செல் (Versailles) உடன்படிக்கையின் படி செக் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த பகுதியையும் சுலாவக் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த பகுதியையும் ஒன்றாக இணைத்து செக்கோசுலோவேகியா என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. இதற்காக பல ஆண்டு பாடுபட்ட தாமசு மசாரிக் என்னும் தேசபக்தர் அந்நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ஆனார். 1919 - 35 ஆண்டுகளில் அவரே குடியரசுத் தலைவராக இருந்தார்.
இந்த புதிய நாட்டுக்கு 1938இல் கொடுங்கோலன் இட்லரால் பெருங்கேடு வந்தது. முதலில் செருமன் மொழி பேசுநர் சிறுபான்மை யினராக விருந்த சுடெடன்லாந்து பகுதியைப் பிடித்த இட்லர், பின்னர் செக்கோசுலோவேகியா முழுவதையும் விழுங்கிவிட்ட அவல வரலாற்றை இந்நூலில் சாமிநாத சர்மா அருமையாகக் கூறியுள்ளார்.
1945- இல் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இட்லரின் செருமனி தோற்றதும் செக்கோசுலோவேகியா மீண்டும் உயிர் பெற்றது. கிழக்கிலிருந்து வந்து செருமன் படைகளை வென்ற பொதுவுடைமை யாளர் (கம்யூனிசுடு) உருசியப் படையினர்தாம் செக்கோசுலோவேகி யாவுக்கு புத்துயிர் தந்தனர். எனவே, பொதுவுடைமையாளர்கள் ஐக்கிய முன்னணி அமைத்து 1948 இல் தங்கள் ஆட்சியை செக்கோசுலோவேகியாவில் நிறுவினர். விரைவில் பிற உதிரிக் கட்சிகள் நீக்கப்பட்டு கம்யூனிசுடுகளின் முழுமையான ஆட்சி வந்தது. அவ்வாட்சி 1989 வரை நீடித்தது. (இடையில் உருசியாவுக்கு எதிராக செக் மக்கள் 1968 இல் நடத்திய துப்செக் Dubcek புரட்சியை போர்ப்படை அனுப்பி உருசியா ஒடுக்கிவிட்டது.) உருசிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று சில ஆண்டுகள் கழித்து செக்கோசுலோவேகியா மக்கள் செக் குடியரசு என்றும் சுலாவக் குடியரசு என்றும் தனித்தனியாக இரண்டு தனிநாடுகளைத் தமக்குள் இசைந்து உருவாக்கிக் கொண்டனர். 1993 - சனவரி முதல் நாளிலிருந்து இவை இரண்டும் தனிநாடுகளாக செயல்கின்றன. இவ்விரு நாடுகளின் இன்றைய புள்ளி விவரங்கள் வருமாறு:-
செக் குடியரசு Czech Republic (செக் மொழி)
தலைநகரம் : பிராக் (Prague)
பரப்பளவு : 30441 சதுர மைல்
மக்கள் தொகை : 1 கோடி 3 லட்சம்
சமயம் : கத்தோலிக்கர்- 39% புராடசுடன்ட் - 2 %
சுலாவக் குடியரசு Slovak Republic (சுலாவக் மொழி)
தலைநகரம் : பிராதிசுலாவா (Bratislava)
பரப்பளவு : 18,927 சதுரக் கற்கள்
மக்கள் தொகை : 54 இலக்கம்
சமயம் : கத்தோலிக்கர்- 70% புராடசுடன்ட் - 6 %
செக் நாடு சிறியதாக இருந்தபொழுதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. இன்று உலகெங்கிலும் பரவியுள்ள பிராடசுடன்ட் கிறித்துவ சமய முன்னோடி சான் அசு ( Jan Huss ) (1372 - 1415) செக் நாட்டவரே. 1579 -93 இல் செக் மொழியில் விவிலியம் மொழி பெயர்க்கப்பட்ட பின் செக் இலக்கியம் வளர்ச்சியடைந்தது. கரெல்மாசா (Karel Macha) (1810 - 36) செக் மொழியில் தலைசிறந்த பாவலர். ரோபோ என்ற சொல்லைப் படைத்த கரெல் கபெக் (Karel Capek) என்பவரும் அந்நாட்டவரே. மேலை நாட்டுத் தமிழறிஞர்களுள் இன்று உள்ளவர்களில் சிறந்தவரான கமில். வி.சுவெலபில் செக் நாட்டவரேயாவர். ஜாரெசுலாவ் வாசெக் என்னும் மற்றொரு தமிழறிஞர் தமிழுக்கும், உரால் - அல்தாய்க் ( Ural - Altaic) மொழிகளுக்கும் இடையிலுள்ள நெருங்கிய உறவுகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வருகிறார்.
ஆக 1938 - 1992 ஆண்டுகளில் செக்கோசுலோவேகியா என்று அழைக்கப்பட்டதும், 1993 - முதல் செக் குடியரசு, சுலாவக் குடியரசு என்று இரண்டு தனிநாடுகளாக உள்ளதும், ஆகிய நாடுகளின் அண்மைக்கால வரலாற்றுச் செய்திகள் மேலே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இந்நூலை 1938 - இல் சாமிநாத சர்மா எழுதி உள்ளார். அக்காலகட்டத்தில் இருந்த நிலைமைகளே இந்நூலில் ஆங்காங்கு தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிப்பவர்கள் இதனை மனத்திற்கொண்டு படிக்க வேண்டும் என்று அன்புடன் கோரப்படுகின்றது.
பாலத்தீனம்
1. பல நூற்றாண்டுகளாக அராபியர்களே வசித்து வந்த பாலத்தீனத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேற 1917 இல் இங்கிலாந்து அரசு தன் வெளியுறவு அமைச்சர் ghšg®(Balfour) மூலமாக வெளியிட்ட பால்பர் அறிக்கையே துருக்கியின் ஆதிக்கத்திலிருந்து முதல் உலகப்போர் இறுதியில் விடுப்பட்ட பாலத்தீனத்தை இங்கிலாந்து அரசு தனது ஆதிக்கத்தின் கீழ் ஆளுமைப் பொறுப்புப் பகுதி Mandated territory ஆக வைத்துக் கொண்டது.
2. ஐரோப்பிய நாடுகளிலிருந்த யூதர்கள் 1900 லிருந்தே சிறு எண்ணிக்கையில் பாலத்தீனத்தில் சில ஆண்டுகளாகக் குடியேறி வந்தனர். இதன் காரணமாக 1931 அளவில் பாலத்தீன மக்கள் தொகையாகிய 10.5 இலக்கம் பேரில் பெரும்பான்மையினர் அராபிய இசுலாமியராக இருந்த போதிலும், கணிசமான சிறுபான்மையினராக யூதர்கள் இருந்தனர்.
3. 1931, 1933, 1936, 1938 ஆண்டுகளில் யூதர்களுக்கெதிராக அராபியர் இடைவிடாது பெரும் கிளர்ச்சிகள் செய்து வந்தனர். 1938ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசு அமைத்த வுட்ஹெட் ஆணைக் குழுவின் பரிந்துரை களைப் பற்றிய செய்தியுடன் திரு.சாமிநாத சர்மா 1938இல் இந்நூல் முடிவடைந்துள்ளது. அதற்குப் பின் நடந்தவற்றைச் சுருக்கமாகக் காணலாம்.
4. 1939 ஆம் ஆண்டு பிப்பிரவரி, மார்ச்சு திங்களில் இலண்டன் மாநாட்டில் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 1939 ஆம் ஆண்டு மே திங்களில் பிரிட்டன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.
5. இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் தங்களை மிகவும் பலப்படுத்திக் கொண்டார்கள். 1944 ஆம் ஆண்டில் புள்ளி விவரப்படி பிரிட்டானியர் படையில் எட்டாவது படையாக யூதர்கள் திகழ்ந்தனர். இப்படையில் 72,000 பேர் யூத மறவர்கள் இருந்தனர். 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா குடியரசுத் தலைவர் ஆரி ட்ரூமன் (Harry Truman). பிரிட்டனிடம் ஒரு இலக்கம் யூதர்களை பாலத்தீனத்திற்குள் குடியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
6. பாலத்தீனத்தை யூதர் பகுதி, முகமதிய அராபியர் பகுதி என இரு பகுதிகளாகப் பிரிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபை அசெம்பிளி 1947 நவம்பரில் முடிவு செய்ததை மதிக்காமல் 1948 மே மாதத்தில் இசுரேல் தன்னைத் தனி நாடாகப் பிரகடனம் செய்து கொண்டமையால் யூதர்களுக்கும் அராபிய முகமதியருக்கும் விட்டு விட்டு சில ஆண்டுகள் போர் நடந்தது. அராபியர் ஏழு இலக்கம் பேர் ஏதிலிகளாக ஆனார்கள்; அண்டையிலுள்ள சிரியா, ஜோர்தான் நாடுகளில் அவர்களுள் பலர் ஏதிலி முகாம்களில் தங்கினர்; தங்கி வருகின்றனர். 1964 ஆம் ஆண்டில் அராபியர் உயர்மட்ட மாநாடு பாலத்தீன விடுதலை இயக்கத்தை ( Palestine Liberation Organization ) தொடங்கியது. பாலத்தீன தேசிய குழுவும் ( Palestine National Councel ) ஏற்பட்டது. இவ்வியக்கத்தின் முதன்மை வாய்ந்த தலைவர் புரட்சி வீரர் யாசர் அராபத் ஆவார். 1967ஆம் ஆண்டு இசுரேலுக்கும் எகிப்து - சிரியா - ஜோர்தான் நாடுகளுக்கும் இடையில் நடந்த போரில் இசுரேல் வென்று காசா Gaza பகுதி வெடு பாங்க் ( West Banj ) கோலான்மலைப் பகுதி ( Golan heights ) எருசலேம் நகரின் கிழக்குப் பகுதி ஆகியவற்றை தன்வசம் வைத்துக் கொண்டது. கோலான் பகுதியையும் எருசலேமின் கிழக்குப் பகுதியையும் இசுரேல் தனது நாட்டின் ஓர் உறுப்பாக இணைத்து விட்டது. காசா பகுதியும் வெடுபாங்கு இசுரேல் உடன் இணைக்கப்படவில்லை. இசுரேல் இப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து 1991 - 1993 ஆண்டுகளில் இந்திபாடா Intifada என்னும் புரட்சியை அராபியர் நடத்தினர். 1993 இல் இசுரேலி பிரதமர் இத்சாக் ராபினும் யாசர் அராபத்தும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டனர். ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. இரு தரப்பிலும் வன்முறை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2000 செப்தெம்பர் - 2002 மார்ச் கால அளவில் மட்டும் பாலத்தீனியர் 1150 பேரும் இசுரேலியர் 400 பேரும் உயிரிழந்தனர். இவர்களுள் பெரும்பாலோர் சாதாரணப் பொதுமக்கள் பாலத்தீனியர்களுக்கு தமக்கென தனிநாடு அமைத்துக் கொள்ள உரிமை உண்டு என பல நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ள போதிலும் இசுரேல் அதற்கு இன்னும் இசைந்து வரவில்லை.
- பி.இராமநாதன்
செக்கோசுலோவேகியா
சில செய்திகள்……
தாய்மொழிப் பற்றுதான் தாய்நாட்டு பற்றுக்கு ஊற்றுக்கண் என்பதை உலகிற்கு உணர்த்திய மண்.தாய்மொழியை உயிரினும் மேலாகக் கருதிய சான்றோர்களும் மக்களும் வாழ்ந்த மண். மாந்தனைப் போல் செயல்களைப் செய்யும் மின்னாற்றல் கருவியாம் ரோபோட் என்ற சொல்லை உலகிற்கு அளித்த மண். உலகத்தில் நாணயச் சீர்திருத்தத்திற்கு மூலவராய் அமைந்த மண்.
ஒரு நாட்டின் விடுதலை வேள்வியில் மக்களின் துடிப்பும் துன்பமும் எப்படி அமைந்து காணப்படும் என்பதை படிக்கத் தூண்டும் நூல்.
விடுதலையை வென்றெடுக்கத் துடிக்கும் இளம் மறவர்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்த மண்ணின் பண்டைய வரலாறு.
மக்களே மக்களுக்கான ஆட்சி முறைகளை கட்டி அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு முன்னோட்டாக அமைந்த மண்ணின் வரலாறு.
மக்கள் குமுகாய வாழ்வில் உயிர்த்துடிப்பு உடையவர்களாக வாழவேண்டும் எனும் வரலாற்றை அரிய உதவும் நூல்.
கல்வி நிலையங்களில் படியேறிய செக் நாட்டு படிப்பாளிகள் ஐரோப்பிய நாடுகளின் விடுதலை முழக்கங்களையும் சமுதாய சீர்த்திருத்தங்களையும் நெஞ்சில் சுமந்து கொண்டு செக் இனத்தின் விடுதலையை முன்னெடுத்தவர்கள் என்ற பண்டைய வரலாறு. இன்று விடுதலையை முன்னெடுக்கும் போராளிகளுக்கு வலிவூட்டும் வரலாறு.
இரண்டு இனங்களின் உயிர்த்துடிப்பை தாங்கி செக்கோசுலோ வாகியா என்ற நூலை அறிஞர் சாமிநாத சர்மா 1938 இல் வெளியிட்டார்.
பாலதீனம்
ஐரோப்பா, ஆப்பிரிக்கா. ஆசியா ஆகிய முப்பெரும் கண்டங்களையும் இணைக்கும் பாலமாக அமைந்த நாடு.
இசுலாமிய , கிறித்தவ, யூத மதங்களின் புனித இடமாக அமைந்த நாடு.
கீழை- மேலை நாடுகளைச் சேர்த்து வைக்கும் சந்திப்பு நிலையமாக அமைந்த நாடு.
சூய கால்வாயின் பாதுகாப்பு அரணாக அமைந்த நாடு.
நாட்டு நலனையே குறிக்கோளாகக் கொண்டு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நாடு.
உழைப்பும் - செல்வமும் ஒரு குமுகாயத்திடம் ஒன்று சேருமானால் அந்த குமுகாயம் எந்த நாட்டிலும் எந்தவிதமான துன்பநிலையிலும் வெற்றிப் படிகளை நெருங்கிச் செல்லும் (பக்.165) என்பதைக் காட்டும் நாடு.
ஒரு நாடு விடுதலைப் பெற்ற நாடாக இருந்தால்தான் அந்த நாட்டில் வெளியாரின் ஆளுமை குறையும் என்பதற்கு வாழும் கால சாட்சியாக அமைந்துள்ள நாடு.
இந்நூல் தமிழ் இனத்திற்கு ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் கொள்ள வேண்டிய நூல்.
செக்கோசுலாவேகியா பற்றியும், பாலதீனம் பற்றியும் அண்மைக் காலச் செய்திகளை கண்ணுக்கு காட்சியாக, கருத்துக்குவிருந்தாக அறிஞர். திரு.பி. இராமநாதன் சுருக்கமாகக் கொடுத்துள்ளார். படியுங்கள் . பயன் பெறுங்கள்.
வந்தே மாதரம்
தமிழ்த் தாய்க்கு
ஜெக்கோ ஸ்லோவேகியா, உலக அரங்கத்தில் தோன்றி இருபது வருஷங்கள்தான் ஆகின்றன. தாமஸ் மஸாரிக், இதில் பிரதம நடிகனாகச் சுமார் பதினேழு ஆண்டுகள் நடித்துவிட்டு மறைந்தான். இவனுடைய இடத்திற்கு பெனேஷ் வந்தான். மூன்று வருஷங்கள் தானாகின்றன. இதற்குள், இதனைத் திரை போட்டு மூடிவிடத் தொடங்கியிருக்கிறான் ஹிட்லர். திரைக் கயிற்றைத் தளர்த்திக் கொடுக்கிறார்கள் சேம்பர்லேனும் டலாடீயரும். வெற்றி யெமதே என்று முரசு கொட்டுகிறான் முஸோலினி. மேனாட்டு நாகரிகத் திற்கு ரத்தக் கொதிப்பு ஏறியிருக்கிறது என்ற ஸர் ராதா கிருஷ்ணனு டைய வாசகம் எவ்வளவு உண்மையாயிருக்கிறது!
ரவுண்ட் டேபில் என்ற பிரபல ஆங்கில அரசியல் பத்திரி கையில் ஓர் அறிஞன் பின்வருமாறு கூறுகிறான்:
ஸ்பெயின் யுத்தத்தினின்று உலகம் கண்ட பாடம் என்னவென்றால், இனி நடைபெறப்போகிற யுத்தங்கள், 1914ஆம் வருஷத்து யுத்தத்தைப் போல் இரா. முன்னெச்சரிக் கைகள், படை திரட்டல், எல்லைப்புறத்தில் அத்துமீறிப் பிர வேசித்தல் முதலிய ஒன்றுமே நடைபெறா. அவற்றிற்குப் பதிலாக, ஒரு கலகம், அல்லது தேர்தல் போட்டி, அல்லது சிறுபான்மை யோருடைய புரட்சி ஆகிய ஏதோ ஒன்று, பிறரால் தூண்டப் பட்டோ, தாமாகவோ தோன்றும். இவற்றின் தாத் பர்யம் என்னவென்றால், அந்த நாட்டுப் பொது ஜனங்கள் அறிந்து கொள்ளுதற்கு முன்னரேயே, அந்நியத் துருப்புகளும் யுத்தக் கருவிகளும் ஆங்காங்குத் தலைதூக்கி நிற்கும். விளைவு என்ன? சதுரங்கப் போட்டி! உலக யுத்தம்! நாகரிகத்திற்குச் சாவுமணி அடிப்பதாவென்ற கேள்வி!
ஜெக்கோ ஸ்லோவேகியப் பிரச்னை, ஒருவாறு தீர்க்கப்பட்ட தாகக் கருதப்பட்டாலும், உலகம், இன்னும் மேற்படி கேள்வியைக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது! உலக யுத்தம் வராமல் தடுக்க வேண்டுமென்று மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள், எவ்வளவுக் கெவ்வளவு முனை கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு வேகமாகவும் உக்கிரமாகவும் அஃது - அந்த உலக யுத்தம் - வந்து கொண்டிருக் கிறது! இல்லாவிட்டால், ஏன் பிரிட்டன், ம்யூனிக் ஒப்பந்தத்திற்குப் பிறகு, தனது ஆகாயப்படையை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது? எப்பொழுது உலக யுத்தம் வருமென்று இடம், காலம் முதலிய வற்றை நிர்ணயித்துச் சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயமாக வரும் என்று யாருமே சொல்ல முடியும். ஆனால் நான், நிச்சயமாக உலக யுத்தம் வரவேண்டுமென்று கூறுவேன். கலக்கம் ஏற்பட்டால்தானே தெளிவு காணமுடியும்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பற்றியுள்ள இந்த நூல், ஒரு நாட்டின் தனிப்பட்ட சரித்திரமில்லை; ஒரு தனி நபருடைய ஜீவிய சரிதமு மில்லை. ஆகையால், ஒரு சரித்திரத்திற்குரிய லட்சணங்களை யாருமே இதில் எதிர்பார்க்க வேண்டாம். அவசரக் கோலம் அள்ளித் தெளிக்கிற மாதிரி விரைவாக வெளியிட வேண்டுமென்ற ஆவலி னால், இதில் விஷயங்களை அப்படியும் இப்படியுமாகத் தெளித் திருக்கிறேன். திரட்டிப் படிப்போர்க்கு எனது நன்றி; புரட்டிப் பார்ப் போர்க்கு எனது வணக்கம்.
இந்த நூலை எழுதுவதற்கு எனக்குத் தள்ளு கட்டை மாதிரி இருந்தவர் எனது நண்பர் ஆனைக்குளம் ஸ்ரீ ஞான குருபரன் அவர்கள். இவருக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்துவேன்? என் இருதய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறேன். அதைத்தானே என்னால் செய்ய முடியும்.
அகிலத்தை யெல்லாம் கட்டியாள வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. ஆனால் அகிலத்தை யெல்லாம், என் இனிய தமிழில் கொண்டுவந்து காட்டவேண்டுமென்ற ஆசை நிரம்ப இருக்கிறது. உலகத்தை நான் அண்ணாந்து பார்க்கிற போது, எனது தமிழ்த் தாய், எங்கேயோ ஆழமான பள்ளத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். இவளைக் கைதூக்கிவிட நான் என்ன செய்திருக் கிறேன் என்ற கேள்விதான், என் அகத்தில் அடிக்கடி எழுந்து நிற்கிறது. என் தேகத்திலுள்ள ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் ஒவ்வோர் உயிர் இருக்கு மாயின், அத்தனை உயிர்களையும் என் தேசத்திற்காகக் கொடுப்பேன் என்று கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டிலே வாழ்ந்த ஒரு ஸ்காத்லாந்து வீரன் கூறினான். அதைப் போல், என் வாழ்நாளில், நான் மூச்சுவிடும் ஒவ்வொரு கணத்திற்கும் ஒவ்வொரு நூல் வெளி யிட்டு வருவேனாயின், அப்பொழுதுதான் என் தாய்க்கு நான் செய்த தொண்டில் திருப்தி கொள்வேன். அந்தத் தொண்டை நான் செய் வதற்குத் தமிழ்ச் சகோதரர்கள் என்னை ஆசீர்வதிப்பார்களா?
வெகுதானிய வருசம்
ஐப்பசி மாதம் 12
வெ. சாமிநாதன்
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
இந்த நூலைப் படிப்பதற்கு முன்னர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
1. பொஹிமியா என்ற நாடுதான் ஐரோப்பிய மகா யுத்தத்திற்குப் பின்னர் ஜெக்கோ ஸ்லோவேகியாவாக மாறியது. எனவே பொஹிமியா என்றாலும் ஜெக்கோ ஸ்லோவேகியா என்றா லும் ஒன்றுதான்.
2. ஆஸ்திரிய ஏகாதிபத்திய மென்றாலும், ஆஸ்திரிய - ஹங் கேரிய ஏகாதிபத்திய மென்றாலும், ஹாப்ஸ்பர்க் ஏகாதிபத்திய மென்றாலும் எல்லாம் ஒன்று தான்.
3. ஸுடேடென் என்பது, ஜெக்கோ ஸ்லோவேகியாவின் வட பாகத்தில், ஜெர்மனிக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் எல்லையாக அமைந்த ஒரு மலைத்தொடரின் பெயர். ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் மேற்குப் பக்கத்தில் வசித்த ஜெர்மானியர்கள், தங்களை இந்த மலைத் தொடரின் பெய ரிட்டு அழைத்துக் கொண்டார்கள். இதனால் தான் இவர் களுக்கு ஸுடேடென் ஜெர்மானியர்கள் என்று பெயர்.
4. ஸுடேடென் ஜெர்மானியர் கட்சியென்றாலும், ஸுடே டென் கட்சி யென்றாலும், ஹென்லைன் கட்சியென்றாலும் ஒன்றுதான்.
5. ஜெக்கர் என்பதும் ஸ்லோவேகியர் என்பதும் ஜாதிப் பெயர்கள்.
6. ஜெக்கோ ஸ்லோவேகியாலுள்ள இரண்டு சட்டசபைகளும் பொதுப் படையாக பார்லிமெண்ட் என்று அழைக்கப்படும். சில இடங்களில் கீழ்ச்சபையாகிய ஜனப் பிரநிதி சபையும் பார்லி மெண்ட் என்ற பெயரால் அழைக்கப் பெறும்.
7. ஜெக்கோ ஸ்லோவேகியாவில் வழங்கும் நாணய வகைகள்: கிரவுன் என்ற நாணயந்தான் பெரும்பாலும் செலாவணியில் இருக்கிறது. இதன் மதிப்பு ஏறக்குறைய ஒன்றரை அணா. ஐந்து கிரவுன், பத்து கிரவுன் மதிப்புள்ள வெள்ளி நாணயங் களே உபயோகத்திலிருக் கின்றன.
8. தேசீயக் கொடி: இடதுபுறம் நீல வர்ணத்தில் முக்கோணம்; இதனைத் தொடர்ந்தாற்போல் மேல்பாகம் வெண்மை; கீழ்ப்பாகம் சிவப்பு.
உயிரினும் இனிய சுதந்திரம் பெறலாம்.
பெற்றதை வைத்து காப்பதே கடினம்
I நாடும் அதன் சரித்திரமும்
அடர்ந்த காடுகள்; உயர்ந்த மலைகள்; எப்படி, ஏன் தோன்றின என்பதை அறிந்து கொள்ள முடியாத குகைகள்; பசுங் கதிர்கள் நிறைந்த விளைபுலன்கள்; அவற்றின் பக்கத்திலேயே வெந்நீர் ஊற்றுக்கள்; புராதனப் பெருமை நிறைந்த நகரங்கள்; அவற்றில் நவீன முறையில் அமைக்கப் பட்ட தொழிற்சாலைகள். இவைதான் ஜெக்கோ ஸ்லோவேகியா.
1918-ஆம் வருஷத்திற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய பூகோள படத்தை நீங்கள் எடுத்துப்பார்ப்பீர்களானால், அதில் ஜெக்கோ ஸ்லோவேகியா என்ற பெயரைக் காணமாட்டீர்கள். ஐரோப்பிய யுத்த முடிவு காலத்தில்தான், இந்த ஜெக்கோ ஸ்லோ வேகியா ஒரு சுதந்திர நாடாக உருக்கொண்டது. இந்த நாட்டி லுள்ள ஜனங்களில் பெரும்பாலார் ஜெக்கர் என்ற ஜாதியாரும், ஸ்லோ வேகியர் என்ற ஜாதியாருமாவர். இந்த இரண்டு ஜாதி யாருடைய பெயரைக் கொண்டுதான் இந்த நாடு ஜெக்கோ ஸ்லோவேகியா என்று அழைக் கப்பட்டு வருகிறது. இந்தப் பெயர் சிலர் நினைக்கிறபடி அவ்வளவு புதியதல்ல. ஐரோப்பிய யுத்தத்திற்குப் பின்னரே, மற்ற நாடுகள் இந்தப் பெயர் கொண்டு இந்த நாட்டை அழைக்கின்றன வேயா னாலும் 1880-ஆம் வருஷத்திலிருந்து இந்தப் பெயர் வழக்கில் இருந்து வருகிறது.
பூகோள படத்தில் தற்போதைய ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பாருங்கள். உங்கள் மனதிலே என்னென்ன புதிய விஷயங்கள் தோன்று கின்றன?
1. இந்த நாடு ஐரோப்பாவின் இருதய தானத்திலே இருக்கிறது.
2. இந்த நாட்டுக்குக் கடற்கரையே கிடையாது. இதைப் போல், கடல் தொடர்பு இல்லாத நாடு ஐரோப்பா வில் இரண்டு நாடுகள்தான் உண்டு. ஒன்று விட்ஜர்லாந்து, மற் றொன்று ஹங்கேரி.
3. இந்த நாட்டை நான்கு பெரிய தேசங்கள் சூழ்ந்து கொண்டிருக் கின்றன. அவையே, ஆஸ்திரியாவோடு கூடிய ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, ருமேனியா. இந்த நான்கு நாட்டு எல்லைகளும், ஜெக்கோஸ்லோ வேகியாவின் நான்கு புறத்து எல்லையோடு சந்திப்பதைப் படத்தில் பார்க்கலாம்.
4. இந்த நாட்டின் தெற்குப் பாகத்தில் டான்யூப் நதிக் கரையில் ப்ராடிஸ்லாவா (Bratislava) என்றொரு நகரமிருக் கிறது. இந்த நகரத்திற்குச் சென்று, உயர்ந்த தொரு கட்டிடத் தின் மீது நின்று கொண்டு சுற்று முற்றும் பார்ப்பீர்களானால், ஜெர்மன் ஆதிபத்தியத் திற்குட்பட்டுவிட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெக்கோஸ்லோ வேகியா ஆகிய மூன்று நாட்டுப் பிரஜை களையோ, அல்லது அவர்கள் உழுகிற புலன் களையோ ஒரே சமயத்தில் பார்க்கலாம்.இந்த மாதிரியான காட்சியை நீங்கள் வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியுமா?
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் விஸ் தீரணம் சுமார் 54,000 சதுர மைல். அதாவது சென்னை ராஜதானியில் ஐந்தில் இரண்டு பங்கு அளவு. இதன் ஜனத்தொகை, 1938-ஆம் வருஷ ஆரம்பத்தில் எடுத்த ஜனக் கணிதப் படி 15,500,000. ஏறக்குறைய பர்மாவின் ஜனத் தொகைக்குக் கொஞ்சங்கூட. ஐரோப்பாவிலுள்ள இருபத்தேழு நாடுகளில் ஜெக்கோஸ்லோவேகியா, விஸ்தீரணத்தில் பதின் மூன்றாவது ஸ்தானத்தையும் ஜனத்தொகையில் எட்டாவது ஸ்தானத் தையும் வகிக்கிறது. கைத்தொழிற் பெருக்கத்தில் - மத்திய ஐரோப்பிய நாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டால், இத்தலிக்கு அப்புறம் ஜெக்கோ ஸ்லோவேகியாதான்.
உருவத்தில் ஜெக்கோ ஸ்லோவேகியா ஒரு மீன் மாதிரி இல்லையா? இதன் கிழக்குப் பாகம் குறுகியும், நடுப்பாகம் பருத்தும், மேற்குப் பாகம் சிறுத்தும் இருக்கிறது. இந்த நாட்டின் நீளம் சுமார் 625 மைல். குறுக் களவு விசாலமான பாகத்தில் 188 மைலுக்கு மேல் இல்லை. கிழக்குப் பாகத்தில், வடக்கும் தெற்குமாகவுள்ள அகலம் 30 மைல்தான்.
ஜெக்கோ ஸ்லோவேகியா, மலைகள் நிறைந்த ஒரு நாடு. கார்ப்பேத்தியன் மலைத்தொடர் இந்த நாட்டை ஓர் அரண் போல் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் இந்த நாட்டுக்கு முக்கியமான பலம். தெற்கில் ஓடுகிற டான்யூப் நதி, இந்த நாட்டுக்கு ஓர் அகழ் மாதிரி இருக்கிறது. இது தவிர இந்த நாட்டில் ஓடுகிற முக்கியமான நதிகள், மொராவா, ஓடர், எல்பே முதலியன.
ஜெக்கோ ஸ்லோவேகியாவை விட, ஜெர்மனி நான்கு மடங்கு விஸ்தீரணமுடையது; ஐந்து பங்கு ஜனத்தொகையுடையது. ஜெர்மனி, தன் அகன்ற வாயைத் திறந்து கொண்டிருப்பது போலவும், அதன் வாய்க்குள் ஜெக்கோ ஸ்லோவேகியா அகப்பட்டுக் கொண்டி ருக்கிறது போலவும் படத்தில் நீங்கள் பார்க்கலாம். இஃது உண்மை யாகவே நிறைவேறி விடுமோ!
ஜெக்கோ ஸ்லோவேகியா என்று எந்த நாட்டை இப்பொழுது நாம் அழைக்கிறோமோ, அது 1918ஆம் வருஷம் வரை பொஹிமியா என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு வித்தியாசம். ஆஸ்திரியாவுக்குட் பட்டிருந்த பொஹிமியா என்ற ஒரு நாட்டை மட்டும் ஜெக்கோஸ்லோ வேகியா என்று அழைக்கவில்லை. பொஹிமியாவையும் அதனோடு இணைந்திருந்த மொரேவியா, சிலீஷயா என்ற மாகாணங் களையும், ஹங்கேரி ராஜ்ஜியத்திற்குட் பட்டிருந்த ஸ்லோவேகியா, கார்ப்பேதியன் ருத்தேனியா என்ற மாகாணங்களையும், ஜெர்மனியிடமிருந்து பிரிக்கப் பெற்ற லூசின் (Hlucin) என்ற ஜில்லாவையும், ஆஸ்திரியாவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பெற்ற வால்டைஸ் (Valtice), விட்டோரா (Vitoraz) என்ற இரண்டு ஜில்லாக்களையும் சேர்த்து இப்பொழுது ஜெக்கோ ஸ்லோவேகியா என்ற அழைக்கின்றனர். பொஹிமியாவுக்குத் தலைநகரா யிருந்தது எதுவோ, அதே ப்ரேக் (Prague) நகரந்தான்1 இப்பொழுது ஜெக்கோ ஸ்லோவேகியாவின் தலைநகராகவு மிருக்கிறது. பொஹிமியாவில் எந்த ஜனங்கள் வசித்து வந்தார்களோ அதே ஜனங்கள்தான், தற்போதைய ஜெக்கோ ஸ்லோவேகியா நாட்டின் பெரும்பாலான பிரஜைகள். ஆகவே, பொஹிமியாவின் சரித்திரந்தான் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் சரித்திரம்.
ஐரோப்பாவில் வசிக்கும் பல ஜாதியினரையும், ட்யூடானி யர்கள் (Teutons), லத்தீனியர்கள் (Latins), ஸ்லாவியர்கள் (Slavs) என்ற மூன்று பெரும் பகுதியினராகப் பிரிக்கலாம். இந்த மூன்று பகுதியின ருக்கும் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஏறக் குறைய இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மத்திய ஐரோப்பா வில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ட்யூடானிய சமூகத்தினரும், ஸ்லாவிய சமூகத்தினரும் ஒருவர்க்கொருவர் சந்திக்கிற இடமாக இந்த பொஹிமியா இருந்திருக்கிறது. ஆகவே, இந்த இரண்டு பெரும் பகுதியினருக்கும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பே, பொஹிமியாவின் சரித்திரம்.
இப்பொழுது ஜெக்கோ ஸ்லோவேகியாவில் நடைபெறுகிற போராட்டங் கூட, இந்தச் சமூகச் சச்சரவின் ஒருவிதத் தோற்றமே. ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மேற்குப் பாகத்தில் வசிக்கிற ஜெர்மானியர் அனைவரும் ட்யூடானிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்றப் பாகங்களில் வசிக்கிற ஜெக்கர்கள், ஸ்லோவேகியர்கள், ருத்தேனியர்கள், போலிஷ்காரர் முதலியோர் ஸ்லாவியர்கள்.
ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியம், மேலே கூறப்பட்ட மூன்று பெருஞ் சமூகத்தினரும் சந்திக்கிற இடமாகவும், இந்தச் சமூகங்களைச் சேர்ந்த பல கிளை ஜாதியினர்களுடைய பொறாமை எண்ணங்களைத் தூண்டி வளர்த்து வந்த விளை நிலமாகவும், தேச பக்தி என்பது லவலேசமும் இல்லாமல், ராஜ பக்தி என்ற ஒரே கயிற்றி னால் மட்டும் கட்டுப்பட்டுக் கிடந்த பிரஜைகளுடைய ஏகாதிபத்திய மாகவும் சுமார் 600 வருஷங்களுக்கு அதிகமாக வாழ்ந்து வந்தது. இங்ஙனம் இதனை வாழ வைத்துக் கொண்டிருந்தவர் ஹாப்ஸ்பர்க் அரச வமிசத்தினர். கி.பி. 1526-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 23-ந் தேதியிலிருந்து பொஹிமியா, இந்த அரச வமிசத்தினருடைய ஆளுகைக்குட்பட்டிருந்தது. 1 ஆகவே, 1526-ஆம் வருஷத்திலிருந்து 1918-ஆம் வருஷம் வரை சுமார் 400 வருஷம் ஆஸ்திரிய ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தின் சரித்திரமும் பொஹிமியாவின் சரித்திரமும் சங்கிலி போல் பின்னிக் கொண்டிருக்கின்றன. இதனால், தற்போதைய ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பற்றி நாம் தெரிந்துகொள் வதற்கு முன்னர், அதற்குப் பூர்வாங்க மாயுள்ள பொஹிமியாவைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது பொஹிமியா என்று எந்தப் பிரதேசம் அழைக் கப்படுகிறதோ, அந்தப் பிரதேசத்தில் ஆதி காலத்தில் - ஏறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் - போயி (Boii) என்ற ஒரு வகை கெல்டிக் ஜாதியார்2 வசித்து வந்தார்கள். இதனாலேயே இந்த நாட்டுக்கு பொஹிமியா என்ற பெயர் வந்ததென்பது ஒரு சரித்திரக் காரனுடைய அபிப்பிராயம்.3 காஸ்மாஸ் என்ற மற்றோர் அறிஞன் பின்வருமாறு அபிப்பிராயப்படுகிறான்: பூர்வகாலத்தில் பேபல் சிகரம் 4 விழுந்துவிட்ட பிறகு, சில ஜனங்கள் ஜெர்மனி யெங்கணும் சுற்றித்திரிந்தார்கள். இவர் களில் ஒரு கூட்டத்தார் பொய்மஸ் (Boemus) என்பவனுடைய தலைமையின் கீழ், ரிப் (Rip) மலைக்கருகாமையில், எகர் (Eger) நதிக்கும் மோல்டவ் (Moldau) நதிக்கும் இடையில் விசால மானதும், செழிப்புள்ளதுமான ஒரு சம பூமியை யடைந்தார்கள். இதற்குத் தங்கள் தலைவனுடைய பெயரையே வைத்தார்கள். அது முதற்கொண்டு, இந்தப் பிரதேசம் பொஹிமியா என்று அழைக்கப் பட்டு வருகிறது. 1 ஹெபே ஸ்பவுல் என்ற சரித்திராசிரியை, ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பற்றி எழுதியுள்ள ஒரு நூலில் பின்வருமாறு கூறுகிறாள்: கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னர், ரோமர்கள் ஐரோப்பா வெங்கணும் வெற்றிக் கொடி நாட்டும் பொருட்டுப் படை யெடுத்துப் பல பாகங்களிலும் சென்ற பொழுது, போஜி (Boji) என்ற ஒரு வகை கெல்டிக் ஜாதியினரைச் சந்தித்தார்கள். இந்த போஜி ஜாதியினர் வசித்த நாட்டுக்கு போஜோஹெமியம் (Bojohenium) என்று பெயர். இவர்கள் நீண்டகாலம் மத்திய ஐரோப்பாவில் வசித்திருக்க வில்லை யென்றும், வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்களென்றும் தெரி கின்றன. ஆனால் இவர்கள் வசித்த நாட்டுக்கு அதே பெயர் வழங்கப் பட்டுவருகிறது. அதுவே பொஹிமியா. 2
போயி ஜாதியினர் காலத்தில், க்ரோகஸ் என்ற ஒருவன் இவர் களுக்குத் தலைவனாக இருந்ததாகவும், இவனுக்குப் பிற்காலத்தில் இவனுடைய மகளான லிபூஸா (Libusa) என்பாள் அரசியான தாகவும், இவள் ப்ரேமிஸ்ல் (Premysl) என்ற ஒரு விவசாயியை விகாகம் செய்து கொண்ட தாகவும், கி.பி.1306ஆம் வருஷம் வரை பொஹிமியாவை ஆண்டு வந்த அரச பரம்பரையினர் இவர்களுடைய சந்ததியாரே என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றைத் தற்கால சரித்திரக்காரர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.
ஆக, இந்த நாட்டிலே வசித்த ஜனங்களுடைய பெயரைக் கொண்டு தான் இந்த நாடு அழைக்கப்பட்டு வந்தது. இதனாலேயோ என்னவோ, இந்த பொஹிமியா நாட்டின் வழித்தோன்றலாகிய ஜெக்கோ ஸ்லோவேகியா நாடும், ஜனங்களுடைய பெயரைக் கொண்டே விளங்குகிறது.
போயி ஜாதியினருக்குப் பிறகு மார்க்கோமன்னி என்ற ஒரு வகை ஜாதியினர், பொஹிமியாவில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த ஜாதியார்கள் வாழ்ந்ததும் மறைந்ததுமான வரலாறுகளைப் பற்றிச் சரியான விவரங்கள் ஒன்றுந் தெரியவில்லை. இவை யெல்லாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்ப காலத்திலிருந்து, ஸ்லாவிய சமூகத்தைச் சேர்ந்த பல ஜாதியினர் இந்த நாட்டிலே வந்து குடியேறினார்கள். இவர்களில் ஜெக்கர்களும், ஸ்லோவே கியர்களும் முக்கியமானவர்கள். இவர்கள்தான் இந்த நாட்டின் புராதன ஜாதியினர். இவர்களில் ஜெக்கர்கள் முன் வந்தவர்களென்றும், ஸ்லோவேகியர்கள் பின் வந்தவர்களென்றும் சொல்வதுண்டு. எப்படியும் கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் ஜெக்கர்களின் ஆதிக்கம் பொஹிமியாவில் வலுத்திருந்த தாகத் தெரிகிறது.
கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டில் ஜெக்கர்களும் ஸ்லோவே கியர்களும் மிகவும் வலுவடைந்திருந்தார்கள். இவர்களில், மொரே வியா என்ற பிரதேசத்தில் வசித்திருந்தவர்களுக்கு அதிகமான செல் வாக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் இவர்கள், தங்களைச் சுற்றியுள்ள வர்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். இந்த ஆதிக்கமே, வெகு சீக்கிரத்தில் மொரேவிய ஏகாதிபத்தியமாகப் பரிணமித்தது. இந்த மொரேவிய ஏகாதிபத்தியத்தின் கீழ், தற்போதைய ஜெக்கோஸ் லோவேகியாவிலுள்ள எல்லாப் பிரதேசங்களும், ஹங்கேரி, போலந்து முதலிய நாடுகளும் அடங்கியிருந்தன. வடக்கே வெகுதூரம் வரை இந்த ஏகாதிபத்தியத்தின் செல்வாக்குப் பரவியிருந்தது.
இதே கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டில், பொஹிமியாவில் கிறிஸ்தவ மதம் நுழைந்தது. அது வரையில் இந்த நாட்டு ஜனங்கள் பலவிதமான தெய்விக வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். இந்த ஒன்பதாவது நூற்றாண்டில், மெத்தோடியஸ் (Methodius), செயிண்ட் ஸைரில் (St.Cyril) என்ற இரண்டு பாதிரிமார்கள் தெஸ்ஸா லோனிகா (Thessalonica) என்ற ஊரிலிருந்து வந்து, மொரேவியாவில் கிறிஸ்தவ மதப் பிரசாரஞ் செய்தார்கள். போரிவோஜ் என்ற பொஹி மிய மன்னன் கி.பி. 873-ஆம் வருஷத்தில் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந் தான். இவனைப் பின்பற்றி ஜனங்களும் கிறிஸ்தவர்களானார்கள். மேற்படி இரண்டு பாதிரிகளில் ஒருவனான செயிண்ட்ஸைரில் என் பவன்தான், ருஷ்ய பாஷையின் எழுத்துக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்தவன். இதனால் இப்பொழுது கூட ருஷ்ய எழுத்துக் களுக்கு ஸைரில்லிக் என்று பெயர்.
மொரேவிய ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏனென்றால், ஹங்கேரியர்கள் இதன் மீது படை யெடுத்து வந்து, தற்போது ஸ்லோவேகியா என்று அழைக்கப்படுகிற பிரதேசமனைத்தையும் தங்களுக்குச் சுவாதீனப்படுத்திக் கொண்டார்கள். இது முதற்கொண்டு சுமார் ஆயிரம் வருஷ காலம் வரை இந்த ஸ்லோவேகியப் பிரதேசம் ஹங்கேரிய ஆட்சிக்குட் பட்டிருந்தது.
பொஹிமியா, தனியொரு நாடாகப் பிரிந்தது. கி.பி. பத்தாவது, பதினோராவது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் நடைபெற்ற கிறிஸ்தவ மதப் பிரசாரத்திற்கு, இந்த பொஹிமியா ஒரு முக்கிய நிலைக்கள மாயிருந்தது. இதற்காக இந்த நாட்டு மன்னரில் பலரும், வீர மரண மெய்தியிருக்கிறார்கள்.
ஆனால் பொஹிமியாவின் இந்தச் சுதந்திர வாழ்க்கை நீடித்து நிலைக்க முடியவில்லை. கி.பி. பதினோராவது நூற்றாண்டின் மத்திய பாகத்தில், தெய்விக ரோம ஏகாதிபத்தியத்தோடு பொஹிமியா சேர்ந்து கொள்ளும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜெர்மன் சக்ர வர்த்திகள் தங்கள் ஆலோசனை கர்த்தர்களில் பொஹிமியா மன்னர் களுக்கு முக்கிய ஸ்தானம் கொடுத்து மதிப்புடன் நடத்தி வந்தார்கள். இதனால் ஜெர்மனியின் நிருவாக விஷயங்களில் பொஹிமியர்கள் செல்வாக்கை உபயோகப்படுத்தலானார்கள். இது தவிர, பொஹிமிய மன்னர்கள், ஆஸ்திரியாவின் பெரும் பாகத்தை ஆண்டு வந்தார்கள். பின்னர் இவர்கள் கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டின் கடைசி பாகத்தில் போலந்து நாட்டையும் ஜெயித்து, அதன் சிங்காதனத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.
பொஹிமிய மன்னர்களுக்கும் ஜெர்மன் ஏகாதிபத்தியத் திற்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்ததனால், பொஹிமியாவில் ஜெர்மானியர் பலர் வியாபாரிகளாகவும், பாதிரிமார்களாகவும் வந்து குடியேறினார்கள். கி.பி. பன்னிரண்டாவது நூற்றாண்டிலி ருந்தே இந்தக் குடியேற்றம் ஆரம்பமாகியது. ஜெர்மன் விவசாயிகள் பலர், பொஹிமியாவிலுள்ள மலைப்பிராந்தியங்களில் வந்து குடி யேறி னார்கள்; காடு திருத்தி நாடாக்கினார்கள். பல கிராமங்கள் தோன்றின. ஜெர்மன் வியாபாரிகள் பலர், பொஹிமியாவிலும் மொரேவியாவிலும் பரவி பல நகரங்கள் தோன்றுவதற்குக் காரணர் களாயிருந்தார்கள். இந்த விதமாக, தற்போதைய ஜெக்கோஸ்லோ வேகியாவின் மேலைப் பிரதேசங்களில் ஜெர்மானிய நாகரிகச் சாயல், படிப்படியாகப் படிய ஆரம்பித்தது. ப்ரேக் நகரத்தை ராஜ தானி யாகக் கொண்டு ஆண்ட பொஹிமிய மன்னர்கள், ஜெர்மானியப் பழக்க வழக்கங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். ஏன்? ஜெர்மானிய பாஷைக்கேற்றபடி பெயர்களை மாற்றி வைத்துக் கொள்வது கூட ஒரு கௌரவமென்று கருதப்பட்டது. அப்படியே பல பணக்காரக் குடும்பத்தினர் தங்கள் பெயர்களையும், குடும்பப் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள்.
கி.பி. பதினான்காவது நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஜெர்மன் ஏகாதிபத்தியத்தின் சக்ரவர்த்தியாக வீற்றிருந்த ஹென்ரி மன்னனு டைய ஒரே மகனான ஜான் என்பவன், பொஹிமிய சிங்காதனத்தில் கொலு வீற்றிருந்தான். இவன் லக்ஸம்பர்க் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்த லக்ஸம்பர்க் அரச குடும்பம், பிரெஞ்சு நாகரிகத் தில் பழக்கப்பெற்று வந்த குடும்பம். இந்தக் குடும்பத்தில் வளர்ந்த ஜான் மன்னன் அதிகாரத்திற்கு வந்த பிறகு, பொஹிமியா முதலிய நாடுகளில் பிரெஞ்சு நாகரிகம் பரவத் தொடங்கியது. இந்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இலக்கியம், சங்கீதம், கலைஞானம் முதலியன தோன்றலாயின. இந்தப் பதினான்காவது நூற்றாண்டின் மத்திய காலத்தில் - ஜான் மன்னனுடைய மகன் நான் காவது சார்லஸின் ஆட்சிக் காலத்தில் - பொஹிமியாவின் வாழ்வு உச்ச நிலையிலிருந்தது. ஜெர்மனியின் மேற்கிலும் வடக்கிலும் இதன் ஆதிக்கம் சென்றது. மத்திய ஐரோப்பாவில் முதன் முதலாகத் தோன்றிய சர்வ கலாசாலை யென்று புகழ்பெற்ற ப்ரேக் சர்வ கலா சாலை கி.பி. 1348-ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்டது. இதை ஸ்தா பித்தவன் இந்த சார்லஸ் மன்னன்தான்.
நான்காவது சார்லஸ் மன்னன் காலத்தில், கிறிஸ்தவப் பாதிரி மார்களின் செல்வாக்கு பொஹிமியாவில் அதிகமாகியது. இவர்கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டும், உரிமை களைக் கொண்டும், பொஹிமியாவின் விவசாய நிலங்களில் பாதி பாகத்தைத் தங்கள் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டார்கள். இதனால், ஏழை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயன் என்னவென்பதை நாம் சொல்ல வேண்டுமோ! ஸ்பெயின் முதலிய நாடுகளில் ஏற்பட்ட மாதிரி, புரோகிதக் கூட்டத்திற்கும் பாமர ஜனங்களுக்கும் இடை விடாத போராட்டம் இந்தக் காலத்திலிருந்து ஆரம்பித்து விட்டது. இங்கிலாந்திலும் இந்தப் போராட்டம் இருந்ததல்லவா? இங்கிலாந் தில் ஜான் வைகிளிப்1 என்பவன், மதாச்சாரியர்களின் அட்டூழியங் களைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினான். இது சம்பந்த மாகப் பல நூல்கள் எழுதினான். இவனுடைய நூல்கள் ஐரோப்பா வின் மற்றப் பாகங்களில் பரவியது போல் பொஹிமியாவிலும் பரவியது. பொஹிமியப் பாதிரிமார்கள், இந்த நூல்களை யாரும் படிக்கக் கூடாதென்று தடை செய்தார்கள். பொது ஜனங்களுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. பாதிரி மார்களிடத்தில் வைத்திருந்த துவேஷ உணர்ச்சி வளர்ந்தது. ப்ரேக் சர்வ கலாசாலையின் ஜெக்க ஆசிரியர்கள், வைகிளிப்பின் கொள்கையை ஆதரித்தும், பாதிரிமார் களின் செயலைக் கண்டித்தும் கிளர்ச்சி செய்தார்கள். இவர்களில் முக்கியமானவன் ஜான் ஹஸ் (John Huss) என்பவன். மத உரிமைக் காகப் போராடிய மகா வீரர்களில் இவன் ஒருவன். பைபிளை ஜெக்க பாஷையிலே மொழி பெயர்த்து அதன் மூலமாகவே அனைவருக்கும் உபதேசம் செய்ய வேண்டுமென்று இவன் போராடினான். இவன் சரித்திரம் மிக அற்புதமானது. மதத்தின் புனிதத் தன்மையைக் காப் பாற்றும் பொருட்டு இவன் அந்த இன்னல்களையெல்லாம் எவ்வளவு பொறுமையோடு சகித்து வந்தான்! கடைசியில் இவன் ரைன் நதிக் கரையில் சம்பிரதாயமான ஒரு விசாரணைக்குப் பிறகு கி.பி. 1415-ஆம் வருஷம் ஜூலை மாதம் 6-ந் தேதி உயிரோடு கொளுத்தப்பட்டான்.
ஜான் ஹஸ் இறந்துவிட்டான். ஆனால் ஜெக்கர்களுக்குப் புதிய வாழ்வைச் சிருஷ்டித்துக் கொடுத்தான். ஜெக்கர்களின் தேசீய உணர்ச்சி இவனுடைய மரணத்திலிருந்து கிளம்பியது. இவன் இருந்த காலத்தில், சாதாரண ஜனங்கள் இவன் கட்சியினராயிருந் தார்கள். இவன் இறந்த பிறகு பணக்காரர்களும் மற்ற ஏகபோக உரிமைக்காரர்களும் இவன் லட்சியத்தில் நம்பிக்கை வைத்து இவன் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
ஜான் ஹஸ்ஸின் மரணத்திற்குப் பிறகு பொஹிமியாவில் பெரிய மதப் புரட்சி உண்டாயிற்று. பதினைந்தாவது நூற்றாண்டில் ஐரோப்பாவெங்கணும் பரவியிருந்த மதப்புரட்சிக்கு பொஹிமியா தான் முதலில் அடிகோலியது. ஹஸ்ஸின் கொள்கையைப் பின்பற்று கிறவர்கள், ஒரு கட்சியினராகத் தங்களை வகுத்துக் கொண்டு தேசத்தில் ஜெக்க ஜாதியின் தனித்துவத்திற்கு விதையூன்றிக் கொண்டு வந் தார்கள். இது காரணமாக இவர்கள் சில இடங்களில் பலாத்காரத் தையும் கையாள வேண்டியிருந்தது. கி.பி. 1419-ஆம் வருஷம் ஜூலை மாதம் 30-ந் தேதி, ஹஸ் கட்சிக்காரர்கள் ப்ரேக் நகரத்தில் ஒன்று திரண்டு, நகர மண்டபத்தைச் சூறையாடி, நகரசபை அங்கத்தினர் களைப் பலகணிகளி லிருந்து கீழே தள்ளினார்கள். இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்கெல்லாம், பொஹிமிய சிங்காதனத்தில் வீற்றி ருந்த வென்கெஸ்லவுஸ் (Wenceslaus IV) இறந்துவிட்டான். இதைக் காரணமாக வைத்துக்கொண்டு ஹஸ்ஸுக்காரர்கள் சுமார் பதினேழு வருஷ காலம் பொஹிமிய அரசாங்கத்தாரோடு போர் நடத்தினார்கள். பொஹிமிய சிங்காதனத்திற்கு உரிமை பாராட்டி வந்த யாருக்குமே இவர்கள் இடங் கொடுக்கவில்லை. இந்தக் காலத்தில் ஹஸ்ஸுக்காரர் களுக்குத் தலைமை பூண்டு நடத்தியவன் ஜான் ஜிஸ்கா (Jan Zizka) என்ற ஒரு குருடன்! என்ன ஆச்சரியம்! இந்தப் பதினேழு வருஷ காலப் போராட்டத்தின் போதுதான், ஜெக்கர்களின் சமுதாய வாழ் வில் தனித்துவ உணர்ச்சி உருவகப்பட்டது. கலை, இலக்கியம் முதலிய துறைகளில் புகுந்துவிட்ட அந்நிய ஆதிக்கம் வேரோடு களைந் தெறியப்பட்டது. ஜெர்மானியர்களுக் கென்று காட்டப் பட்டு வந்த விசேஷ சலுகைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டன. பல ஜெர்மானியர்கள் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டார்கள். ப்ரேக் சர்வ கலாசாலை, ஜெக்க பாஷைக்கும், ஜெக்க நாகரிகத்திற்குமே முக்கியத்துவம் கொடுத்தது.
கி.பி.1436M« வருஷம் ஹஸ்ஸுக் கட்சியினருக்கும், கத் தோலிக்கப் பாதிரிமார்களுக்கும் ஒருவித சமரஸம் ஏற்பட்டது. பாதிரி மார்கள், விட்டுக்கொடுக்கத்தான் வேண்டியிருந்தது. கி.பி. பதினைந் தாவது நூற்றாண்டு முழுவதும், பொஹிமியாவில் ஒருவித குழப்பமு மின்றி ஜெக்கர்கள் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால், முன்னர் நடைபெற்ற யுத்தங்கள் காரணமாகவும், ஜெர்மானியர்கள் பலர் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டதன் காரணமாகவும், தேசத்தில் ஜனப் பெருக்கம் குறைந்திருந்தது. இதனை அறிந்தோ என்னவோ, ஜெக்கர்கள், ஜெர்மானியர்கள் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தது போல் அவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளா மல், கொஞ்சம் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையுடன் நடந்து வந்தார்கள். இதனால் நாளாவட்டத்தில் ஜெர்மானியர்கள் பொஹி மியாவின் மேற்கெல்லைப் புறங்களில் மீண்டும் வந்து குடி யேறினார்கள். இதிலிருந்து பொஹிமியாவில் மறுபடியும் ஜெர் மானியச் செல்வாக்கு வளர்ந்து வரத் தொடங்கியது.
பொஹிமிய அரச பரம்பரைக்கும், ஆஸ்திரிய அரச பரம்பரை யினரான ஹாப்ஸ்பர்க்குகளுக்கும் நீண்ட காலமாகவே விவாக சம்பந்தங்களும், குடும்ப ஒப்பந்தங்களும் ஏற்பட்டு வந்தன. பொஹி மியாவைத் தங்கள் ஆதீனத்திற்குட்படுத்திக்கொள்ள வேண்டு மென்ற நோக்கத்துடனேயே, ஹாப்ஸ்பர்க்குகள் இந்த மாதிரியான சம்பந்தங் களைச் செய்துகொண்டு வந்தார்கள். இவர்கள் விருப்பப் படியே, கி.பி. 1526-ஆம் வருஷம் பொஹிமியா நாடு, ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டுவிட்டது. முதலாவது பெர்டினாந்து என்ற அரசன், பொஹிமியாவின் சக்கரவர்த்தியாக வும், முடிசூட்டிக் கொண்டான். இது முதற் கொண்டு சுமார் நானூறு வருஷ காலம், பொஹிமியா, ஹாப்ஸ்பர்க் அரச பரம்பரையின் ஆதினத்திற்குட்பட்டிருந்தது.
ஹாப்ஸ்பர்க் மன்னர்களின் ஆளுகையின் கீழ், முதல் நூறு வருஷ காலம், பொஹிமியா சுகமாகவே வாழ்ந்தது. ஹாப்ஸ்பர்க் மன்னர்களும் இந்த நாட்டிடத்தில் ஒரு விசேஷ சலுகை காட்டி வந் தார்கள். ஏனென்றால், பொஹிமியாதான், அவர்கள் ஆதீனத் திற்குட் பட்டிருந்த பிரதேசங்களில் முக்கியமானதும் பெரியதுமாய் இருந்தது. தவிர, பொஹிமிய மன்னர்கள் என்ற பதவி இருந்ததன் காரணமாக, இவர்கள் தெய்விக ரோம சக்கரவர்த்திகளாக முடி சூட்டிக் கொள்ள வும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தங்களுக்குப் பெருமையளித்த ஒரு நாட்டின் மீது ஹாப்ஸ்பர்க் அரச பரம்பரையினர் விசேஷ பிரீதி காட்டியது சகஜந்தானே. கி.பி. 1583-ஆம் வருஷம், இரண்டாவது ருடால்ப் என்ற ஹாப்ஸ்பர்க் சக்ரவர்த்தி, தனது வாசஸ்தலத்தை ப்ரேக் நகரத்திற்கு மாற்றிக் கொண்டதோடு, அரசாங்கக் காரியால யங்களும் இங்கேயே இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டான். இத் தகைய காரணங்களால் பொஹிமியாவிலிருந்த ஜெக்கர்கள், ஒரு நூறு வருஷ காலம் சௌக்கியமாயிருந்தார்கள் என்பதில் என்ன ஆச்சரியம்!
ஆனால் ஹாப்ஸ்பர்க் அரச பரம்பரையினர், பொஹிமியா மீது செலுத்தி வந்த இந்த அன்பு நீடித்து நிற்கவில்லை. வர வர, அடக்கு முறையாக மாறியது. பொஹிமிய நிலச்சுவான்தார்கள், முன் அநுப வித்து வந்த உரிமைகளை இழந்துவிட்டார்கள். ஜெக்கர்கள் அநுப வித்து வந்த மத சுதந்திரம் பாதிக்கப்பட்டது. ஜனங்களுடைய தேசீய உணர்ச்சியை, ராஜத்துரோகம் என்று சொல்லி நசுக்கி வந்தனர் அரசாங்கத்தார்.
எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் ஜெக்கர் கள்? 1618-ஆம் வருஷம் மே மாதம் 23-ந் தேதி, ப்ரேக் நகரத்தில் பெரிய கலகம் கிளம்பியது. ஹாப்ஸ்பர்க் அரசப்பிரதி நிதிகளைக் கைது செய்தார்கள். தாங்களே புதியதோர் அரசாங் கத்தை ஸ்தாபித்துக் கொண்டார்கள். ஜெக்க ராணுவ மொன்றையும் தயார்ப்படுத்தினார்கள். ஹாப்ஸ்பர்க் அரசாங்கம் சும்மாயிருக்குமா? சுமார் இரண்டு வருஷ காலம் பல ராஜ தந்திரங்களையெல்லாம் கையாண்டு பார்த்தது. பலனில்லை. கடைசியில் பகிரங்கமாகவே ஜெக்கர்களின் மீது போர் தொடுக்கத் தீர்மானித்தது. 1620-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளை மலை1யில் நடைபெற்ற யுத்தத்தில் பொஹிமியா தோல்வியுற்றது.
பின்னர், தேசத்தில் அமைதியை உண்டாக்குவதாகிற காரணத்தை வைத்துக் கொண்டு ஹாப்ஸ்பர்க் அரசாங்கம் பல அக்கிரமமான காரியங்களைச் செய்யத் தொடங்கிவிட்டது. ஜெக்க நிலச்சுவான் தார்கள், பிரபுக்கள் முதலிய பலர், நிர்த்தாட்சண்யமாகத் தூக்கு மேடையிலேற்று விக்கப்பட்டார்கள். பொஹிமியா, சிலீஷியா, மொரேவியா முதலிய மாகாணங்களிலுள்ள முக்கால் வாசி நிலங்கள், அவைகளின் பழைய சொந்தக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, ஹாப்ஸ்பர்க் அரசாங்கத்தினருக்கு ஆதரவாயிருந் தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. புராடஸ் டெண்ட் கிறிஸ் தவர்கள், பலாத்காரமாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாக்கப் பட்டார்கள். பெரும்பாலோர் இந்த பலாத்காரத்திற் கிணங் கினார்கள். ஆனால் சுமார் முப்பதினாயிரம் குடும்பத்தினர், ஜெர் மனி, ஹாலந்து, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குப் போய் விட்டனர்.
எவ்வளவுக்கெவ்வளவு ஹாப்ஸ்பர்க் மன்னர்களுடைய அன்பிலே வாழ்ந்து வந்ததோ, அவ்வளவுக் கவ்வளவு அவர் களுடைய பேராசைக்கும் சுரண்டுகிற எண்ணத்திற்கும் இரையாகி விட்டது பொஹிமியா. தெய்விக ரோம ஏகாதிபத்தியத்தின் பிரதான ஸ்தலம், ப்ரேக் நகரத்திலிருந்து வியன்னாவுக்கு மாறி விட்டது. பொஹிமிய விவசாயிகள், பல வழிகளிலும் சுரண்டப் பட்டார்கள்; ஒரு கவள அன்னத்திற்குக் கூட வழியில்லாமல் அலைந்து திரியலானார்கள்.
கி.பி. பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் ஜெர்மானிய நாகரிக ரத்தம், பொஹிமிய நாட்டு தேசத்திற்குள் வேகமாகப் பரவிவந்தது. கிராம ஜனங்கள், புராதன ஜெக்க நாகரி கத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாதவர்களாக வாழ்ந்து வந்த போதிலும், நகரங்கள் யாவும் ஜெர்மானியக் கோலத்துடனேயே வாழத் தலைப்பட்டுவிட்டன. இது காரணமாக, ஜெக்க நாகரிகமும், ஜெக்க இலக்கியமும், எவ்வளவு கீழான ஸ்திதிக்கு வர முடியுமோ அவ்வளவு கீழான ஸ்திதிக்கு வந்துவிட்டது.
இந்த நிலைமையில் கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டு பிறந்தது. ஜெர்மன் ஏகாதிபத்தியம் வேறாகவும், ஆஸ்திரிய - ஹங் கேரிய ஏகாதிபத்தியம் வேறாவும் பிரிந்தது. ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையும், பொஹிமியா விஷயத்தில் எவ்வித கட்டுப்பாடுமின்றித் தீவிரமாகியது. கொஞ்ச நஞ்சம் இருந்த பொஹிமிய தனித்துவம் கூட சிதைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் இதே நூற்றாண்டில், பொஹிமியா, பொருளாதாரத் துறையில் பெரிதும் வளர்ச்சியடைந்தது. எல்லைப்புறத்திலுள்ள மலைப் பிராந்தியங்களில், பல கைத்தொழில்கள் தோன்றின. தொழிலபிவிருத்திக் குரிய சாதனங்களனைத்தும் இங்கு ஏராளமாக இருந்தன. மற்றும் நிலக்கரியும், உலோகப் பொருள்களும் இந்தப் பிரதேசங்களில் அதிகம். இந்தக் கைத் தொழில்களனைத்தும் ஜெர்மானியர் வசத்திலேயே இருந்தன. இதைப் பார்த்து ஜெக்கர் களும் உள்நாட்டில் தங்களுடைய நிருவாகத்தின் கீழ், பல கைத் தொழில்களை ஆரம்பித்தனர். ஆஸ்திரிய அரசாங்கம் அநுஷ்டித்த அடக்குமுறை காரணமாக, கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜெக்கர்களிடத்தில் தேசீய உணர்ச்சி வீறிட்டெ ழுந்தது. அடக்குமுறை வலுக்க வலுக்க, ஜனங்களின் தேசீய உணர்ச்சி யும் வலுவடைவது உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் அமைந்த பொது விதிதானே. இந்த உணர்ச்சியின் ஒரு விதத் தோற்றந் தான், ஜெக்கர்கள் தொடங்கின கைத்தொழில் முயற்சிகள். வியாபாரப் போட்டியும், ஜெர்மானியர்களுக்கும் ஜெக்கர்களுக்கும் இடையே யிருந்த ஜாதிப் போட்டியும் சேர்ந்து, ஜெக்கர்களின் தேசீய உணர்ச் சிக்கு வலுக் கொடுத்து வந்தன. ஜெக்க பாஷையில் பல நூல்கள் தோன்றின. அகராதிகள், விஞ்ஞான நூல்கள், கவிதைகள் முதலிய வற்றை ஜெக்க பாஷையிலேயே எழுதத் தொடங்கினார்கள் அறிஞர்கள்.
கி.பி. 1848-ஆம் வருஷம் ஐரோப்பா வெங்கணும் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டதல்லவா? அரச பரம்பரையினர் அனைவரும் ஒன்று கூடி, தங்கள் ஆதிக்கத்தை எப்படி நிலைநிறுத்திக் கொள்வது என்று ஆலோசித்த காலமல்லவா அது? இந்த நிலைமையை ஜெக்கர் கள், தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்கள். அப் பொழுது ஆஸ்திரியா, மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது. இதனை உணர்ந்து பொஹிமியாவுக்குச் சுய ஆட்சி கொடுக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார்கள் ஜெக்கர்கள். ஆஸ்திரிய அரசாங்கமும் இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக வாக்குக் கொடுத்தது. ஆனால் அதைச் செயலில் நிறைவேற்றி வைக்க அதற்கு மனம் வரவில்லை. கி.பி. 1870-ஆம் வருஷம் ஆஸ்திரிய - ஹங் கேரிய ஏகாதிபத்திய பார்லி மெண்டில் ஜெக்கர்களுக்குப் பிரதிநிதி ஸ்தானங்கள் அளிக்கப்பட்டன. கி.பி. 1882ஆம் வருஷம் ப்ரேக் சர்வ கலாசாலை திருத்தியமைக்கப்பட்டு, அதன் மூலமாக ஜெக் இளைஞர் களுக்கு ஜீவ சக்தியைத் தரக்கூடிய கல்வி முறையை நாடெங்கணும் பரப்ப முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தக் கிளர்ச்சியின் பயனாக பொஹிமி யாவுக்கென்று தனியாக ஒரு பார்லிமெண்டு அமைக்கப்பட்டது. இதற்காக கி.பி. 1889-ஆம் வருஷத்தில் ஒரு தேர்தல் நடந்தது. ஜெக்க இளைஞர்கள் பெரும்பான்மையோராக பார்லிமெண்டில் ஸ்தானம் பெற்றார்கள்.
கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஜெக்கர்கள் தங்களைப் பல வழிகளிலும், அரசியல் சுதந்திரத்திற்குத் தகுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்; பொருளாதாரத் துறையில் முன்னேற்றமடைந்து வந்தார்கள். இவர்களின் நலனுக்கென்று ஜெக்க பாஷையில் பல பத்திரிகைகள் வெளியாயின. தேகப் பயிற்சி சாலைகள் ஏற்பட்டன. ஜெக்க நாடக மேடைகளும் விஞ்ஞானக் கழகங்களும் தோன்றி ஜனங்களின் இதயத்தையும் அறிவையும் பண்படுத்தி வந்தன. கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி யில் ஜெக்க இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சி காணப்பட்டது. எங்கள் நாடு, எங்கள் மொழி என்ற உணர்ச்சி ஜனங்களின் மனத்திலே நன் றாகப் பதிந்துவிட்டது.
ஜன சமுதாயத்தின், இருதயத்திலே பொங்கியெழுந்த இந்த உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி அவற்றைச் செயல்முறையில் கொண்டு செலுத்தத் தலைவன் வேண்டும்; சந்தர்ப்பமும் வேண்டும். ஜெக்கர்கள் இந்த இரண்டையும் ஆவலோடு, எதிர்பார்த்திருந் தார்கள். ஐரோப்பிய யுத்த ஆரம்ப காலத்தில்தான், இவர்களுடைய ஆவல் பூர்த்தியடைந்தது.
II குடியரசு ஆரம்பம்
ஐரோப்பிய யுத்த ஆரம்பத்தின் பொழுது, ஜெக்கர்கள், ஹாப்ஸ்பர்க் ஏகாதிபத்தியத்தின் மீது கொண்டிருந்த வெறுப்பை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டார்கள். ஸெர்வியாவுக் கும் ருஷ்யாவுக்கும் விரோதமாகச் சண்டைபோட இவர்கள் மறுத்து விட்டார்கள். இந்த யுத்தத்தில் ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் வெற்றி யடையுமானால், ஜெக்கர்களின் சுதந்திர லட்சியமெல்லாம் பாழ டைந்து போகுமென்பதை ஜெக்கத் தலைவர்கள் நன்கு உணர்ந்தார்கள். இதனால் ஆஸ்திரிய - ஜெர்மானிய வெற்றியை இவர்கள் விரும்ப வில்லை. இந்த இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, தாங்கள் சுதந்திரம் பெறுவதற்குரிய சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டார்கள். ஜெக்கர்கள் மட்டுமல்ல, ஹாப்ஸ்பர்க் ஏகாதிபத்தியத்திற்குட் பட்டிருந்த ஸ்லோவே கியர்கள், ஸெர்வியர்கள், க்ரோஷியர்கள், ஸ்லோவேனியர்கள், போலிஷ்காரர்கள், ருத்தேனியர்கள், இத்தலி யர்கள் முதலியவர் களும் தங்கள் அரசாங்கத்திற்காக யுத்தஞ் செய்ய மறுத்து விட்டார்கள். ஹாப்ஸ்பர்க் ராணுவத்திலிருந்த மேற்கண்ட ஜாதிப் படையினர், தொகுதி தொகுதியாகச் சத்துருக்கள் பக்கம் போய்ச் சேர்ந்துவிட்டனர்; அல்லது சத்துருக்களிடம் தாங்களே வலியச் சென்று கைதியானார்கள்; அல்லது யுத்தகளத்தினின்று தப்பித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்கள். இங்ஙனம் ஓடிப்போனவர், கைதியானவர் முதலியோர் சுமார் முப்பது லட்சம் பேருக்குமேல் இருக்கு மென்று அப்பொழுது சொல்லப்பட்டது. இவர்களில், ஜெக்க ஜாதிப்படைகள் விலகிக் கொண்டதுதான் விஷேசம். ஏனென்றால் ஆஸ்திரிய - ஹங்கேரிய சேனா பலத்தில், ஜெக்கப் படைகளின் பலம், பாதி என்று சொல்லலாம். ஜெக்கர்கள் போர்முனையில் அஞ்சாத வீரர்கள். இவர்கள், தங்கள் பக்கத்திலிருந்து விலகிச் சத்துருக்கள் பக்கம் போய்ச் சேர்ந்து கொண்டார்களென்றால், அஃது, ஆஸ்திரிய ஹங்கேரிய ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு எவ் வளவு கோபமாயிருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. யுத்த காலத்தில், பொஹிமியாவில் ஆஸ்திரிய அரசாங்கத்தினர் பிர யோகித்த அடக்குமுறைகளுக்கெல்லாம் காரணம் இன்னதென்பதை நாம் இங்கு ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாமல்லவா? ஜெக்கர்கள், போர்முனையி லிருந்து ஓடிப்போனதுகூட அவ்வளவு விஷேச மில்லை. ஓடிப்போன வர்கள், நேசக் கட்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு, ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்திற்கு விரோத மாகப் போர்புரியவும் தொடங்கிவிட்டார்கள். இஃது, ஏற்கனவே, செல்லரித்துப் போயிருந்த ஹாப்ஸ்பர்க் சிங்காதனத்தை அதிகமாக ஆட்டிக் கொடுக்க ஆரம்பித்து விட்டது. ஜெக்கப்படைகளின் வீரத்தை, ஜெர்மன் ராணுவத்தின் மூல புருஷனாயிருந்த தளபதி லுடெண் டார்ப் கூடப் பெரிதும் வியந்து பேசியிருக்கிறான். ருஷ்யா, இத்தாலி, பிரான்ஸ் முதலிய வெளிநாடுகளி லிருந்த ஜெக்கர்கள் தங்களை ஒரு தனிப்படையினராக அமைத்துக் கொண்டு, அந்தந்த நாட்டுப் படைகளுடன் சேர்ந்து, தங்கள் பழைய எஜமானர்களுடன் போர் புரியத் தொடங்கிவிட்டார்கள். இங்ஙனமே அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்த ஜெக்கர்கள், தங்கள் நாட்டுப் படையினருக்கு அதிகமான உதவிகளைச் செய்துவந்தார்கள்.
ஐரோப்பிய யுத்த ஆரம்ப காலத்திலிருந்தே ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசியல் தலைவர்கள், தங்கள் நாடு சுதந்திரம் பெறவேண்டு மென்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிளர்ச்சி செய்து வந்தார்கள். இந்தக் காலத்தில்கூட இவர்கள், ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியச் சாயலினின்று பூரணமாக விலகிக் கொள்ள வேண்டு மென்று சொல்ல வில்லை. மேற்படி ஏகாதிபத்தியத்தை ஒரு சமஷ்டி அரசாங்கமாக மாற்றி யமைத்து, அதில் ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் எப்படி சுயேச்சை பெற்ற தனித்தனி நாடுகளாக இருக் குமோ அப்படியே, பொஹிமியா என்கிற ஜெக்க நாடும், ஸ்லோவே கியா நாடும் ஒன்று சேர்ந்த ஒரு தனி நாடாக, அதாவது ஜெக்கோ ஸ்லோவேகியா என்ற பெயருடைய தனி நாடாக - இருக்க வேண்டு மென்று கோரினார்கள். இதற்கு வியன்னா அரசாங்கம் என்ன பதிலளித்தது? இந்தக் கிளர்ச்சிக்குக் காரணமாக உள்நாட்டிலிருந்த தலைவர்கள் அனைவரையும் தூக்கு மேடையில் ஏற்றியது! ஜனங்கள் சும்மா இருப்பார்களா? அவர்களின் ஆத்திரம் அலைகடல் போல் பொங்கி ஹாப்ஸ்பர்க் சிங்காதனத்தின் மீது மோதியது. அந்தச் சிங்காதனத்தின் நிழல்கூடத் தங்கள் மீது படக்கூடாதென்று தீர்மானித்தார்கள் ஜெக்கோ ஸ்லோவேகியத் தலைவர்கள். இனி வாழ்வதாயிருந்தால், ஒரு தனி நாடாக - சுதந்திர நாடாக - வாழ்வது; இன்றேல் வீழ்ந்து மடிவது என்று உறுதிபூண்டார்கள்.
வெளி நாடுகளில் சில ஜெக்கத் தலைவர்கள் பிரசாரஞ் செய்து கொண்டு வந்தனர் என்று சொன்னோமல்லவா? அவர்களில் முக்கிய மானவர் மூவர். சரித்திர நிபுணனான தாமஸ் மஸாரிக், ப்ரேக் சர்வ கலாசாலை போதகாசிரியனாயிருந்த டாக்டர் எட்வர்ட் பெனேஷ், வானசாஸ்திர பண்டிதனான மிலான் ஸ்டெபானிக் என்ற இந்த மூன்று அறிஞர்களும் 1915-ஆம் வருஷத்திலேயே ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்குச் சுதந்திரம் வேண்டுமென்று வெளிநாடுகளில் சிறப்பாகப் பிரான்சிலும், இங்கிலாந்திலும் பிரசாரம் செய்து வந்தார்கள். இவர்கள் தனித்தனி நபர்களாகக் கிளர்ச்சி செய்ய வில்லை. பொஹிமிய சுதந்திர தேசீய சங்கம் என்ற ஒரு ஸ்தா பனத்தை 1916-ஆம் வருஷம் ஏற்படுத்திக் கொண்டார்கள். இதன் தலைமைக் காரியாலயம் பாரிஸ் நகரத்தில் இருந்தது.
மஸாரிக் பெரிய பேச்சாளி. தன் நாவன்மையைக் கொண்டே அந்நியர்களுடைய அநுதாபத்தைத் தன் நாட்டுக்குப் பெற்றுக் கொண்டான். லண்டனில் பல இடங்களிலும் பிரசங்கங்கள் செய்து அறிஞர்களுடைய ஆதரவைத் தேடினான். இவனுடைய பேச்சில் ஈடுபட்டு இவனுடைய காரிய சாதனைக்கு அனுகூலமா யிருந்தவர் களில் ஒருவன் ஸர் ஸாமியல் ஹோர். ஹோர், மஸாரிக்கை பிரிட்டிஷ் அரசாங்க மந்திரிகள் பலரிடம் அறிமுகப்படுத்தி வைத்தான். ஐரோப் பாவிலுள்ள சிறிய நாடுகள், சுய நிர்ணய உரிமையைப் பெற்று வாழ்வதன் மூலமாகவே ஐரோப்பிய சமாதானம் நிலைத்து நிற்கும் என்று மஸாரிக் பிரிட்டிஷ் மந்திரிகளிடம் வற்புறுத்திப் பேசினான். இப்படியே பாரிஸுக்குச் சென்று அப்பொழுது பிரதம மந்திரியா யிருந்த பிரையாந்தின் (M. Briand) ஆதரவையும் சம்பாதித்துக் கொண்டான். பிறகு 1917-ஆம் வருஷம் மே மாதம் ருஷ்யாவுக்குப் புறப் பட்டான். ருஷ்யாவுக்குச் செல்வதென்றால் கடினமான காரிய மல்லவா அப்பொழுது! எனவே மஸாரிக், தன் பெயரை தாமஸ் மார்ஸ்டன் என்று மாற்றிக் கொண்டு அந்தப் பெயரால் பிரயாண அனுமதிச் சீட்டுப் பெற்று ருஷ்யாவை அடைந்தான். அப்பொழுது ருஷ்யாவில் ஜார் ஆட்சி வீழ்ந்துவிட்டது. கெரென்ஸ்கி1யின் தலை மையில் ஒரு தற்காலிக அரசாங்கம், நிருவாக கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த அரசாங்கத்தைச் சேர்ந்திருந்த பலர் மஸாரிக்கின் நண்பர்கள். ஆகையால் நாட்டின் அந்தக் குழப்ப மான நிலையிலுங் கூட இவன் ஜெக்கோஸ்லோவேகியாவின் சுதந்தி ரத்திற்காகப் பல பொதுக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவதற்கு முடிந்தது. பத்திரிகைகளில் ஜெக்க நாட்டின் சுதந்திர லட்சியத்தை முன்னி லைப்படுத்திப் பல கட்டுரைகள் எழுதினான். தன் கட்சிக்கு, யாரா ரிடமிருந்து ஆதரவு பெற முடியுமோ அவர்களிடமிருந்தெல்லாம் ஆதரவு தேடிக் கொண்டான். இதே சமயத்தில் ஜெக்கர்களடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட வேண்டுமென்று பிரச்சாரம் செய்து அதிலும் வெற்றி பெற்றான். இந்த ஜெக்கப்படை சைபீரியாவில் காட்டிய வீரச் செயல்களை சரித்திரத்தில் நாம் சந்திக்கிற சில ஆபூர்வ சந்தர்ப்பங்களில் ஒன்று என லாயிட் ஜார்ஜ், வின்ஸ்டன் சர்ச்சில் முதலியோர் புகழ்ந்து பேசியிருக்கின்றனர். இந்த ஜெக்கப் படைகள், சைபீரியா வழியாக ஜெர்மனிக்கு எவ்வித உணவுப் பொருளும் போகாதபடி தடுத்து வந்தன. இவை காட்டிய வீரந்தான், நேசக் கட்சித் தலைவர்களின் மனதில் நன்றாகப் பதிந்து, ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு ஏன் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்ற பிரச்னையை யெழுப்பி அதற்கு ஆதரவும் பெறச் செய்தது.
மஸாரிக் தன் பிரசாரத்தை ருஷ்யாவோடு நிறுத்திக் கொள்ள வில்லை. ஸைபீரியாவிலிருந்து ரெயில் மார்க்கமாக ஜப்பான் தலை நகரான டோக்கியோவுக்கு வந்து சேர்ந்தான். அப்பொழுது இவனுக்கு வயது 68! இது நடந்தது 8-4-1918-இல். இங்குச் சிறிது காலம் இருந்து பிரசாரம் செய்துவிட்டு, கடல் மார்க்கமாக அமெரிக்கா போய்ச் சேர்ந்தான். சுழற்காற்று மாதிரி அமெரிக்கா முழுவதும் சுற்றினான். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் லட்சியம் இன்னதென்பதைக் குறிப்பிட்டு பிரசிடெண்ட் வில்ஸனுக்கு ஒரு யாதாஸ்து சமர்ப்பித்தான். வில்ஸன் அதை அப்படியே ஏற்றுக் கொண்டும் விட்டான். இதே சமயத்தில், டாக்டர் பெனேஷும் ஸ்டெபானிக்கும் நேசக்கட்சி ராஜ்ஜியங்களின் தலைநகரங்களில் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். இவர் களுடைய முயற்சிகளின் பயனாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார், 9.8.1918 - இல் பின் கண்ட அறிக்கையை வெளியிட்டனர்:
யுத்த ஆரம்ப காலத்திலிருந்து, ஜெக்கோ ஸ்லோவேகிய சமூக மானது, தன்னுடைய சக்திக்கு இயன்ற மட்டிலும், பொதுச் சத் துருவை எதிர்த்து வந்திருக்கிறது. ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் ஒரு பெரும்படை யினராகத் திரண்டுவிட்டார்கள். மூன்று போர் முனை களில் யுத்தஞ் செய்திருக்கிறார்கள். ருஷ்யாவிலும் சைபீரியாவிலும் ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நின்றார்கள். அவர்கள் சுதந்திரம் பெறுவதற்காகச் செய்யும் முயற்சிகளைப் பாராட்டு முகத்தான், ஜெக்கோ ஸ்லோவேகியர்களை நேசக் கட்சியைச் சேர்ந்த ஒரு நாட்டினராக கிரேட்பிரிட்டன் அங்கீகரிக்கிறது. மூன்று போர்முனைகளிலும் யுத்தஞ் செய்கிற ஜெக்கோ ஸ்லோ வேகியப் படைகளை, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், ஜெர்மனிக்கும் விரேதமாக யுத்தஞ் செய்யும் நேசக் கட்சிப்படையினராகவே பிரிட்டிஷ் அரசாங்கம் கருதுகிறது.
தவிர, ஜெக்கோ ஸ்லோவேகியாவின் சுதந்திர உரிமையைத் தாங்கள் அங்கீரிப்பதாகவும், அதன் எதிர்கால அரசாங்கத்திற்குப் பிரதிநிதியாக இருந்து பேச பொஹிமிய சுதந்திர தேசீய சங்கத்திற்கு அதிகாரமுண்டென்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தெரிவித்தனர். இதைப் பின்பற்றி பிரெஞ்சு, இத்தாலிய, அமெரிக்க, ஜப்பானிய அரசாங் கங்களும் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்து அறிக்கைகள் வெளியிட்டன. 14.10.1918-இல் மேற்படி தேசீய கவுன்சில் தற்காலிய ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கமாக மாறியது.
நேசக் கட்சி அரசாங்கங்களினுடைய இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக் கிறார்கள்? எத்தனை உயிர்களை இயம தர்மராஜனுக்குக் காணிக்கையாகச் செலுத்தியிருக்கிறார்கள்? இந்த வரலாற்றை மஸாரிக்கிடமிருந்தே கேட்போம்.
1914-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஆஸ்திரியா, ஸெர்வியா வுக்கு விரோதமாக யுத்தந் தொடுத்தது. இதன் விளைவே உலக யுத்தம். இப்படி யுத்தந் தொடுத்தது, அந்தச் சயமத்தில் ஆஸ்திரிய-ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தின் பிரஜைகளாயிருந்த ஜெக்கர் களுடையவும், ஸ்லோவேகியர்களுடையவும் அபிப்பிராயத்திற்கு விரோதமாகத்தான். இந்த அபிப்பிராயத்தை இவர்கள் பகிரங்க மாகத் தெரிவித்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஜெக்கர்கள் நேசக் கட்சியினருக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய முறையில் எங்கு நடந்து கொண்டு விடுகிறார்களோ என்பதற்காக அவர்கள் மத்தியில் ஜெர்மானியத்துருப்புகளும் ஆஸ்திரியத் துருப்புகளும் வைக்கப் பட்டிருந்தன. ஆஸ்திரியாவுக்கு விரோதமாகவோ, ஜெர்மனிக்கு விரோதமாகவோ ஏதேனும் அபிப்பிராயங்கள் கூறப்பட்டு விட்ட தாகத் தெரிந்தால், அந்தக் குற்றவாளிகளைக் கண்டித்து அவர்களை உடனே தண்டித்துவிடுவது சர்வசாதாரணமாயிருந்தது. பலர் சிறைக்குச் சென்றனர். இன்னும் பலர் மரண தண்டனை விதிக்கப் பட்டனர். ஜெக்கப் பத்திரிகைகளும், ஸ்லோவேகியப் பத்திரிகை களும் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன.
ஜெக்கர்கள், ஆஸ்திரியப் படைகளில் சேர்ந்து போர் புரியும் நிர்பந்தத்திற்குட்பட்டார்கள். ஆனால் வெகு சீக்கிரத்தில் இவர்கள் நேசக் கட்சியினர் பக்கம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். யுத்த ஆரம்ப காலத்தில் ஸெர்வியா வசம் 70,000 யுத்தக் கைதிகள் அகப்பட்டுக் கொண்டார்கள். இவர்களில் 35,000 பேர் ஜெக்கர்கள். இந்த 35,000 பேரில் ருஷ்யப் படை பின்வாங்கின போதோ, அல்லது ஜுரம் வாந்தி பேதி முதலிய நோய் களினாலோ இறந்து போய்விட்டார்கள். பாக்கி 3000 பேர், ஏற்கனவே பிரெஞ்சுப் போர் முனையில் யுத்தஞ் செய்து கொண்டிருந்த ஜெக்கப் படைகளுடன் சேர்ந்து கொள்வதற்காக, பிரான்ஸுக்குச் சென்று விட்டார்கள். மொத்தம் ஆஸ்திரியப் படையில் இருந்த ஜெக்கர்கள் 6 லட்சம் பேர். இவர்களில் ஏறக்குறைய பாதி பேர் நேசக் கட்சியார் பக்கம் போய்ச் சேர்ந்து விட்டார்கள். யுத்த ஆரம்பத்தின் பொழுதே, ருஷ்யாவில் ஒரு ஜெக்கப் படை தயாராகி விட்டது. இது 1918-ஆம் வருஷத்தில் ஒரு லட்சம் பேரைக் கொண்ட ஒரு பெரிய ராணுவமாக அமைந்துவிட்டது.
பிரெஞ்சு, இத்தாலிய, ருஷ்யப் போர் முனைகளில் ஜெக்கோ ஸ்லோவேகியப் படைகள் காட்டிய தன்னலமற்ற வீரம், வெளி நாடுகளில் குடியேறியிருந்த ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் செய்து வந்து பிரசாரம், பாரிஸில் தலைமைக் காரியாலத்தை வைத்துக் கொண்டி ருந்த ஜெக்கோ ஸ்லோவேகிய கவுன்சில் செய்த வேலை முதலிய அனைத்தும் சேர்ந்து, கடைசியில் கூறப்பட்ட இந்தக் கவுன்சிலேயே, ஜெக்கோ ஸ்லோவேகியாவின் தற்காலிக அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளுமாறு நேசக் கட்சியாரைத் தூண்டியது.
13-7-1918-இல் எல்லா அரசியல் கட்சியினரும் சேர்ந்த ஜெக்கோ ஸ்லோவேகிய தேசீய கவுன்சில் என்ற ஒரு ஸ்தாபனம், மேற்படி பாரிஸ் ஸ்தாபனத்திற்குத் துணையாக ப்ரேக் நகரத்தில் ஏற்படுத்தப் பெற்றது. இதுவே, புதிய நாடு ஒன்று அமைவதற்கு முதற்படியாக இருந்தது.
மேலே சொன்ன அரசாங்கம் அமைந்த மூன்று நாட்கள் கழித்து, அதாவது 1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 17-ந் தேதி, ஆஸ்திரிய சக்ரவர்த்தியாக சார்லஸ்1 ஓர் அறிக்கை வெளியிட்டு, அதில் ஆஸ்திரியாவை ஒரு சமஷ்டி அரசாங்கமாக மாற்றியமைத்து, அதில் வாழும் பல சமூகத்தார்களுக்கும் தனித்தனிப் பொறுப்பாட்சி கொடுப்ப தாகவும் குறிப்பிட்டிருந்தான். இந்த அறிக்கை காலங் கடந்து வந்ததென்று ஜெக்கர்கள் கருதினார்கள். ஆஸ்திரியாவின் கடைசி மணி அடித்துவிட்டது. ப்ரேக் நகரத்திலிருந்த அரசியல் தலைவர்கள், வியன்னா அதிகாரிகளுடன் சமரஸப் பேச்சுகள் நடத்தக்கூட மறுத்துவிட்டார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் விஷயம், சமாதான மகாநாட்டிலேதான் தீர்க்கப்பட வேண்டுமென்று கண்டிப்பாகக் கூறினார்கள்.
1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 18-ந் தேதி, மஸாரிக், பெனெஷ், ஸ்டெபானிக் ஆகிய மூவரும் சேர்ந்து, ஜெக்கோ ஸ்லோ வேகியா ஒரு சுதந்திர நாடென்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். இந்த அறிக்கை பாரிஸில் வெளியிடப்பெற்றது. அக்டோபர் மாதம் 27-ந் தேதி, ஆஸ்திரிய - ஹங்கேரிய அரசாங்கத்தார், ஜெக்கோ ஸ்லோ வேகியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்து, தாங்கள் சமாதானத்தை விரும்புவதாக பிரசிடெண்ட் வில்ஸனுக்கு ஒரு தந்தி கொடுத்தனர்.
மறுநாள் அக்டோபர் மாதம் 28-ந் தேதி, ஜெக்கோ ஸ்லோ வேகியா சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. முந்நூறு வருஷங் களுக்கு முன்னர் 8.11.1620-இல் வெள்ளை மலை யுத்தத்தின் போது இழந்த சுதந்திரத்தை ஜெக்கர்கள் மீண்டும் பெற்றார்கள். அன்று ப்ரேக் நகரத்திலிருந்த தேசீய கவுன்சில் சுதந்திர அறிக்கையொன்று வெளியிட்டு அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டது.
28.10.1918-இல் ப்ரேக் நகரத்தில் ஒரு பெரிய மாறுதல். ஒரு துளி ரத்தமும் சிந்தாத புரட்சி. ஆஸ்திரிய அரசாங்க அதிகாரிகள், நிரு வாக யந்திரத்தை, ஜெக்கோ ஸ்லோவேகியத் தலைவர்களிடத்தில் எவ்வித முணு முணுப்புமின்றி ஒப்புக் கொடுத்தார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியர் களும் அதனைச் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அது விஷேசமல்ல. முந்திய நிமிஷம் வரை தங்களுக்குப் பரம சத்ருக்களா யிருந்து, தங்களுடைய சுதந்திர ஆவலை, பல அடக்குமுறைகளைக் கொண்டு அடக்கி வந்த ஆஸ் திரிய அதிகாரிகளிடத்தில் மிகவும் கண்ணியமாக ஜெக்கர்களும் ஸ்லோவேகியர்களும் நடந்துகொண்டது தான் விசேஷம்.
16-11-1918-இல் ப்ரேக் நகரத்தில் ஜெக்கோ ஸ்லோவேகிய ஜனப் பிரதிநிதிகள் கூடினார்கள். இந்தச் சபைக்கு தேசீய சபை (National Assembly) என்று பெயர். யுத்தத்திற்கு முன்னால் அரசாங்கத் தேர்தல் ஒன்று நடைபெற்றது. அதில் பல அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட் டிருந்தார் களல்லவா? மேலே கூடிய தேசீய சபைக்கு அந்தக் கட்சி களிலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொத்தம் 236 பேர் ஆஜராயிருந்தனர். ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு எந்த வித மான அரசாங்கம் இருக்கவேண்டுமென்பதைப் பற்றிப் பிரதிநிதிகள் வாதஞ் செய்து, கடைசியில் ஜனநாயகக் குடியரசு முறையைத் தழுவியதாக இருக்க வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானித் தார்கள். மஸாரிக், குடியரசுத் தலைவனாகத் தெரிந் தெடுக்கப் பட்டான். யுத்தத்தின் போது ஆஸ்திரிய அரசாங்கத்தின ரால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மன்னிப்புப் பெற்ற டாக்டர் க்ராமார் (Dr. Kramar) பிரதம மந்திரியாகவும், டாக்டர் பெனேஷ் அந்நிய நாட்டு மந்திரியாகவும், ஸ்டெபானிக் மற்றோர் மந்திரி யாகவும் நியமனமானார்கள்.
இந்தச் சம்பவங்களெல்லாம் நடைபெறுகிற போது, மஸாரிக் அமெரிக்காவிலிருந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். 1918-ஆம் வருஷம் டிசம்பர் மாதக் கடைசி வரையில் அவன் ப்ரேக் நகருக்குத் திரும்பி வரவில்லை. டாக்டர் பெனேஷ், பாரிஸ் நகரத்தில் நடை பெற்ற சமாதான மகாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி அங்கேயே தங்கி விட்டான். இத்தலியிலே தங்கியிருந்த ஜெக்கப்படைகளைப் பார்வை யிடுவதற்கென்று சென்ற ஸ்டெபானிக், இத்தலியிலிருந்து தன் நாட்டிற்கு ஆகாயவிமானத்தில் திரும்பிவரும் பொழுது வழியில் அந்த விமானம் கீழே விழ அதில் இறந்து போனான். இவன் யுத்த சமயத்தில் ஆஸ்திரிய அரசாங்கத்தினரால், ஜெக்கோ ஸ்லோவேகி யாவிலிருந்து தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவன். இப்பொழுது தான் சுதந்திரம் பெற்ற தனது தாய் நாட்டைத் தரிசிக்கத் திரும்பி வந்துகொண்டிருந்தான். ஆனால் இடையில் இயமனைத் தரிசித்து விட்டான்.
பாரிஸ் சமாதான மகாநாட்டில் மற்ற அரசாங்கங்களோடு ஜெக்கோ ஸ்லோவேகியாவும் சரிசமமான அந்தஸ்துப் பெற்று, எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டது. ஜெக்கோ ஸ்லோ வேகியாவின் கட்சியை எல்லோரும் ஆதரித்தனர். ஆஸ்திரியாவின் ஆதிக்கத்துக்குட் பட்டிருந்த பொஹிமியா, ஹங்கேரியின் வசத்தி லிருந்த ஸ்லோவேகியா, ருத்தேனியா முதலிய பிரதேசங் கங்கள், ஆஸ்திரியாவின் தெற்குப் பாகத்தில் இருந்த இரண்டு ஜில்லாக்கள், ஜெர்மனியிலிருந்து ஒரு சிறு பிரதேசம் ஆகிய அனைத்தும் சேர்ந்து ஜெக்கோ ஸ்லோவேகியா என்ற தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது.
1918-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 21-ந் தேதி, ஜெக்கோ ஸ்லோ வேகியக் குடியரசு நாட்டின் முதல் தலைவன் என்ற முறையில் மஸாரிக் ப்ரேக் நகரத்தில் பிரவேசித்தான். ஜனங்கள் இவனை மிகுந்த உற்காசத் தோடும் மரியாதையோடும் வரவேற்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டுமோ?
இங்ஙனம் குடியரசு ஏற்பட்டு விட்டதேயாயினும், ஆரம்பத் திலேயே இது சில கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. இதுவரை, வேற்று நாடுகளின் பிரஜைகளாயிருந்தவர்கள், இப் பொழுது திடீரென்று ஒரு புதிய குடியரசின் பிரஜைகளானார்கள். ஜெர்மானியர்கள், ஹங்கேரியர்கள் முதலியோர், எந்த ஜெக்கர் களையும் ஸ்லோவேகியர்களையும் இது காறும் பழித்து வந்தார் களோ, அதே ஜெக்கோ ஸ்லோவேகியர்களைப் பெரும்பான்மை யோராகக் கொண்ட ஓர் அரசாங்கத்தின் கீழ், சிறுபான்மைச் சமூகத் தினராக இப்பொழுது வாழவேண்டியவர்களானார்கள். இஃது இவர்களுக்குப் பிடிக்குமா? எனவே, ஜெக்கோ ஸ்லோவேகியாவின் ஆரம்ப தசையிலிருந்தே இந்தச் சிறுபான்மையோர் பிரச்னை கிளம்பிவிட்டது.
குடியரசு ஏற்பட்ட சொற்ப காலத்திற்குள் பொஹிமியா, சிலீஷியா, மொரேவியா ஆகிய பிரதேசங்களிலிருந்த ஜெர்மானி யர்கள், ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசினின்று விடுதலை பெற்று, புதிய ஆஸ்திரியக் குடியரசின் கீழ் தனி நாட்டினருக்குள்ள உரிமைகள் பெற்று வாழ வேண்டுமென்று விரும்பினார்கள்; வேண்டிய முயற்சிகளும் செய்தார்கள். ஆனால், புதிய ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசு, இந்த முயற்சியை ஓங்கவிடாமல் தகைந்து விட்டது.
ஸ்லோவேகியா, ஏற்கனவே ஹங்கேரியின் ஆதிக்கத்துக்குட் பட்டிருந்ததல்லவா? ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசில் இந்தப் பிரதேசம் சேர்க்கப்பட்டதும், ஸ்லோவேகியத் தலைவர்கள் இந்தக் குடியரசுக்கே தாங்கள் ராஜவிசுவாசிகளாக இருப்பதாகத் தெரி வித்துக் கொண்டார்கள். ஆனால் ஹங்கேரியின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு, ஸ்லோவேகியா, ஹங் கேரியிடமிருந்து பிடுங்கப்பட்டது வருத்தமாகவே இருந்தது. எப் படியாவது ஸ்லோவேகியாவை மீண்டும் ஹங்கேரியுடன் சேர்த்து விட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். 1919-ஆம் வருஷம் இடைப் பாகத்தில், ஹங்கேரிய அரசாங்க நிருவாகம், பேலா குன் (Bela Kun) என்பவனைத் தலைவனாகக் கொண்ட போல்ஷ்வெக்கர் வசத்திலிருந்தது. இவர்களுக்கும், ஸ்லோவேகியாவின் எல்லைப் புறத்தில் வைக்கப் பட்டிருந்த ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கப் படை களுக்கும் அடிக்கடி சில்லரைச் சச்சரவுகள் நடைபெற்றுக் கடைசி யில் 1919-ஆம் வருஷம் ஜூன் மாதம் பெரிய யுத்தமாக மாறியது. முதலில் ஜெக்கோ ஸ்லோவேகியப் படைகள் பின் வாங்கின. ஆனால் பிறகு நேசக் கட்சியாருடைய தலையீட்டின் பேரில், ஹங் கேரியப் படைகள் பின்வாங்கி விட்டன. ஸ்லோவேகியாவின் மீது குடியரசுக்குப் பூரண ஆதிக்கம் ஏற்பட்டது.
இன்னும், போலந்துக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியர சுக்கும் தொடக்கத்தில் ஒரு தகராறு ஏற்பட்டது. இரண்டு நாடு களுக்கும் மத்தியிலுள்ள டெஷேன் என்ற ஒரு ஜில்லா சம்பந்த மாகவே இந்த மனஸ்தாபம். கடைசியில் இது ஒருவித சமரஸமாகத் தீர்ந்தது. இதைப்பற்றி, ஜெக்கோ ஸ்லோவே கியாவுக்கும் அந்நிய நாடுகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசுகிற போது விரி வாகக் காண்போம்.
இங்ஙனம் எதிர்பாராத இடங்களிலிருந்து, புதிய குடியரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும், ஆஸ்திரியாவுக்கும் ஜெக்கோ ஸ்லோ வேகியாவுக்கும் தொடக்கத்திலிருந்தே சுமுகமான ஒரு தொடர்பு ஏற்பட்டு வந்தது.1 இது பெரிதும் ஆச்சரியப்பட வேண்டிய விஷய மில்லையா? 1920ஆம் வருஷம் ஜனவரி மாதம், ஆஸ்திரியாவின் சான்ஸலராயிருந்த டாக்டர் ரென்னர் (Dr. Renner) என்பவன், ப்ரேக் நகரத்திற்கு விஜயஞ் செய்தான். இவனை, குடியரசுத் தலைவன் என்ற முறையில் மஸாரிக் மிகுந்த ஆடம்பரமாக வரவேற்று உபசரித்தான். இதற்குப் பின்னர் 1921-ஆம் வருஷம் இரண்டு நாடுகளுக்கும் வியாபார ஒப்பந்தமும் அரசியல் ஒப்பந்தமும் ஏற்பட்டன. 1922-ஆம் வருஷம் ஆஸ்திரியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் பெரிதும் துணைசெய்தது. இவற்றிற்கெல்லாம் காரணம், ஜெக்கோ ஸ்லோவேகியாவின் வியா பாரப் பொருள்கள், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரியாவுக் குத்தான் அதிகமாகச் செல்கின்றன என்று கூறலாமாயினும், ஆரம்பத்திலிருந்தே, ஜெக்கோ ஸ்லோவேகியத் தலைவர்கள், தங்களைச் சுற்றியுள்ள நாடுகளுடன் நல்ல மனப்பான்மையோடு நடந்து கொள்ள முயற்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாதல்லவா?
சிறுபான்மைச் சமூகத்தினராகவுள்ளவர்கள் விஷயத்தில், குடியரசின் ஆரம்ப காலத்திலிருந்தே மஸாரிக் மிகுந்த தாராள மனப் பான்மையோடு நடந்து வந்திருக்கிறான். சிறுபான்மையினரும் பெரும் பான்மையினரும் ஒன்றுசேர்ந்து ஒரு நாட்டுக்குட்பட்ட பிரஜைகளாக வாழ வேண்டுமென்பது மஸாரிக்கின் நோக்கம். இதற் காக அந்தச் சிறுபான்மையோர் தங்களுடைய மதம், நாகரிகம், கலை ஞானம் முதலியவற்றை விட்டுக் கொடுத்துவிட்டு, பெரும்பான்மைச் சமூகத்தினருடன் ஐக்கியமாகிவிட வேண்டுமென்று அவன் சொல்ல வில்லை. தங்களுடைய மதம், நாகரிகம் முதலியவற்றைப் பாது காத்துக் கொள்ளும் விஷயத்திலும், அவற்றைப் அபிவிருத்தி செய்து கொள்ளும் விஷயத்திலும், சிறுபான்மையோர் சகல உரிமைகளும் பெற்று, பெரும்பான்மைச் சமூகத்தினராயுள்ளவர்களுடைய நாட்டில் சம அந்தஸ்துப் பெற்று வாழவேண்டுமென்றே மஸாரிக் கோரினான். ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள எல்லாச் சமூகத் தினரும், முதலில் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பிரஜைகள்; பிறகு தான் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்து ஜனங்கள் நடக்க வேண்டுமென்று இவன் விரும்பினான். அரசாங்க நிருவாக விஷயத்தில், இந்தத் தத்துவத்தைச் செயலில் கொணர்ந்து காட்டினான். சிறுபான்மைச் சமூகத்தினராயுள்ள ஜெர்மானியர்களுக்கு மந்திரிச் சபையில் ஸ்தானங்கள் கொடுத்ததும் இந்த நோக்கத் தோடுதான். இதைப்பற்றிப் பின்னரும் பேசுவோம்.
அரசாங்க நிருவாகத்தை நடத்துகிற விஷயத்தில், ஜெக்கோ ஸ்லோவேகிய ஜனங்களுக்கு முன்பின் பழக்கமில்லை. இதனால் உண்மையும் திறமையும் கொண்ட நிருவாகிகளைப் பொறுக்கி யெடுப்பதே மஸாரிக்குக்குப் பெரிய கஷ்டமாயிருந்தது. இதுவரை யில் ஆஸ்திரியாவின் கீழ் ஒரு தனி மாகாணமாக இருந்த ஜெக்கோ ஸ்லோவேகியா, இப்பொழுது திடீரென்று பூரண சுதந்திரம் பெற்ற ஒரு தனிக் குடியரசு நாடாக உயர்த்தப்பட்டுவிட்டதால், அதற்குத் தகுந்தாற் போல் சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்வதோடு, நிருவாக யந்திரத்தையும் வேறு மாதிரியாக இயக்க வேண்டு மல்லவா? ஜெக்கர்கள், எப்பொழுதுமே ஆஸ்திரிய அரசாங்கத்தை எதிர்த்து வந்தார்களே தவிர, அதனோடு சேர்ந்து வேலை செய்ய வில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் இவர்களுக்குக் கொடுக்கப் படவில்லை. ஆதலால், அரசாங்கத்தை எப்பொழுதுமே எதிர்த்துக் கொண்டிருக்கக் கூடிய மனப்பான்மைதான் இவர்களிடம் ஏற் பட்டிருந்ததே தவிர, அதில் கலந்துழைக்க வேண்டு மென்ற மனப் பான்மை ஏற்படவில்லை. இதனால், குடியரசு ஆரம்ப காலத்தில், ஜனங்களுடைய எதிர்ப்பே அதிகமாயிருந்தது. இதனை மஸாரிக் மிகுந்த சாமர்த்தியமாகச் சமாளித்து வந்தான். தவிர அரசியல் விஷயங்களில் நிர்ணயமான கொள்கைகளை வைத்துக் கொண்டு, அதன்படி வகுக்கப் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்று, தேர்தலில் வெற்றி பெற, அஃது அரசாங்கத்தை ஏற்று நடத்தக் கூடிய மாதிரியாகவும் நாட்டின் நிலைமை இல்லை. அரசியல் கட்சிகள் பல இருந்த தென்னவோ உண்மை. ஆனால் ஒரு தனிக் கட்சி மட்டும் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தும் தன்மையிலில்லை. தவிர, குடியரசின் ஆரம்ப தசையில் எல்லாக் கட்சியினருக்கும் அரசாங்கத்தில் பொறுப்பு இருக்கவேண்டுமென்று மஸாரிக் விரும்பினான். இதனா லேயே ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசு ஆரம்ப காலத்திலிருந்து எல்லாக் கட்சியினரும் சேர்ந்தே நிருவாகத்தை நடத்தி வந்திருக் கிறார்கள்.
முதல் மந்திரிச் சபையில் க்ராமார் (Kramar) என்பவன் பிரதம மந்திரியாகவும், ஸ்வேலா (Svehla) உதவி மந்திரியாகவும், டாக்டர் பெனேஷ் அந்நிய நாட்டு மந்திரியாகவும் இருந்தார்கள். இந்த மந்திரிச் சபை 1919-ஆம் வருஷம் ஜூலை மாதம் வரையில் அதிகாரத்தி லிருந்தது. பின்னர் அபேதவாதக் கட்சியின் தலைவனான துஸார் (M.Tusar) என்பவனைப் பிரதம மந்திரியாகவும், டாக்டர் பெனேஷை அந்நியநாட்டு மந்திரியாகவும் கொண்ட மந்திரிச் சபை அமைந்தது. இந்த மந்திரிச் சபைதான் தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்ற திட்டத்தையும், நிலச் சீர்திருத்தச் சட்டம் முதலிய வற்றையும் நடைமுறையில் கொணர்ந்தது. ஆனால் இந்த மந்திரிச் சபைக்கும் பல எதிர்ப்புகள் இருந்தன. இதனால் பார்லிமெண்டில் அங்கம் பெறாத ஒரு சிலருடைய துணை கொண்டு, மந்திரிச் சபையை அமைக்கும் படியான தைரிய முயற்சியில் மஸாரிக் இறங்கினான். நிருவாகத் திறமை ஒன்றனையே இவன் முக்கியமாகக் கருதினானே தவிர, பார்லிமெண்டில் பெரும் பான்மைக் கட்சியைச் சேர்ந்தவரா, சிறுபான்மைக் கட்சியைச் சேர்ந்தவரா என்பவைகளைப் பற்றிக் கவனிக்கவில்லை. இந்த முறையில் 1920-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் டாக்டர் ஷெர்னி (Dr. Cerny) என்பவனைப் பிரதம மந்திரியாகக் கொண்ட-பெரும்பாலும் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய - ஒரு மந்திரிச் சபை அமைந்தது. இதிலும் பெனேஷ்தான் அந்நிய நாட்டு மந்திரியாயிருந்தான்.
1921-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் டாக்டர் பெனேஷைப் பிரதம மந்திரியாகவும், அந்நிய நாட்டு மந்திரியாகவும் கொண்ட ஒரு மந்திரிச் சபை அமைக்கப்பட்டது. இது ஹங்கேரியினால் ஏற்பட்ட தொந்திரவுகளை மிகச் சாமர்த்தியமாகச் சமாளித்தது. ஆனால் இதுவும் ஒரு வருஷந்தான் வாழ்ந்தது.
1922-ஆம் வருஷம் மத்தியில் மீண்டும் ஸ்வேலாவைப் பிரதம மந்திரியாகக் கொண்ட ஒரு மந்திரிச் சபை ஏற்பட்டது. இது ஜெக்கோ ஸ்லோவேகியாவின் நாணயத்திட்டத்தை ஒழுங்காக நிலைநிறுத் தியது. 1925-ஆம் வருஷம் வரையில் இந்த ஸ்வேலா மந்திரிச் சபை அதிகாரத்தி லிருந்து அநேக உபயோகமான திட்டங்களை அமு லுக்குக் கொண்டு வந்தது. அந்த வருஷத்தில் பொதுத் தேர்தல் நடை பெற்றது. ஸ்வேலா மறுபடியும் பிரதம மந்திரியானான். ஆனால் இவன் சில மாதங்களுக்குப் பின்னர், இந்த மந்திரிச் சபையைக் கலைத்து விட்டு, வேறொரு மந்திரிச் சபையை அமைக்க வேண்டியதாயிற்று. அதுமுதல் மந்திரிச் சபைகள் அடிக்கடி மாறாமல் ஒரு படித்தான நிர்வாக தோரணை இருந்து வருகிறதென்றுதான் சொல்ல வேண்டும்.
1928-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 28-ந் தேதி ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசு தோன்றிய பத்தாவது வருஷக் கொண் டாட்டம், ப்ரேக் நகரத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அப்பொழுது மஸாரிக் நிகழ்த்திய சொற்பொழிவில் பின் வரும் வாக்கியங்கள் கவனிக்கத்தக்கன:
நாம் வெறுங்கையுடன் ஆரம்பித்தோம். நமக்கு ராணுவமில்லை; அரசியல் பரம்பரையுமில்லை. நாணய மதிப்போ வரவரக் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. எங்கும் பொருளாதார நெருக்கடி. உலகமெங்கணும் ஒழுங்கீனம். இரண்டுபட்ட அபிப்பிராயங்கள். எல்லைப் புறத்தில் சொல்லொணாத்தொல்லை. இவையெல்லாம் போக, நம்மிட மிருந்த சக்திகளோ கொஞ்சம். முன்பின் நிருவாகத்தை நடத்திப் பழக்க மில்லை. ஜனங்களுக்கோ சட்டதிட்டதிற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற மனப்பான்மை கிடையாது. உலகத்தாருக்கு நம்மைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆயினும் இந்தப் பரீட்சைக்கு நாம் நின்றோம். இதில் கௌரவமாகத் தேறியிருக்கிறோம். நாட்டுக்கு ஓர் அரசியல் திட்டத்தை வகுத்தோம். அரசாங்க நிருவாகத்தையும் ராணுவத்தையும் ஒழுங்குபடுத்தினோம். பொருளாதார நெருக்கடி, தேசத்திற் குள் எழுந்த போராட்டம், சர்வதேசச் சச்சரவுகள், இவற்றை யெல்லாம் சமாளித்தோம். நாம் ஆரம்பத்தில் எதிர்பார்த்த தைவிட அதிகமான பொறுப்புகள் நமக்கேற் பட்டன. அப் படியிருந்தும் அந்நிய நாட்டாருடைய நம்பிக்கைக்கும், சிறப் பாக நமது ஜனங்களுடைய நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு ராஜ்ஜியத்தை ஊர்ஜிதமாக ஸ்தாபித்துவிட்டோம்.
புதிய குடியரசு வெகு சீக்கிரத்தில் தன் காலை நன்றாக ஊன்றிக் கொண்டுவிட்டது. யுத்தத்திலே கலந்ததன் பயனாகச் சோர்வுற்று, இன்னது செய்வதெனத் தெரியாமல் வல்லரசுப் பட்டம் தாங்கிய பல நாடுகள் திகைத்துக் கொண்டிருக்க, ஜனத்தொகையிலும் விஸ் தீரணத்திலும் சிறியதும், ஒரு சில ஆண்டுகள் கூட நிரம்பாததுமான இந்த இளங்குடியரசு, தன் ராஜ்ஜியத்தை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொண்டதைப் பார்த்து ராஜதந்திரிகள் பலர் ஆச்சரிய மடைந்தார்கள். மத்திய ஐரோப்பிய நாடுகளில் இந்த ஒரு நாடுதான் பொதுவுடமை, பாசிஸம் முதலிய கொள்கைப் போராட்டங்கள் ஒன்றுமின்றி அமைதியாக ஆரம்பத்திலிருந்து வாழ்ந்து வருகிறது. பல ஜாதி யினரும், பல பாஷையினரும் இந்நாட்டில் வசித்த போதிலும், எல் லோரையும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கப் பிரஜைகளாகவே வாழ்ந்து வரச் செய்த இந்த அரசாங்கத் தலைவர்களின் திறமையைக் கண்டு யார்தான் மூக்கின் மீது விரல் வைக்காமலிருக்க முடியும்? இந்த நாடு தனிப்பட்ட அரசாங்கமாக அமைந்தது முதற்கொண்டு ஒரு தொழிலாளர் சச்சரவுகூடக் கிடையாது. நாணயமாற்று விபரீதத் தினால் பல நாடுகள் இடர்ப்பட்டு நின்ற காலத்தில், இந்தச் சிறிய நாடு ஒன்றுதான் பொருளாதாரத் துறையிலாகட்டும், நாணயச் செலவாணி விஷயத்திலாகட்டும் ஒரே படித்தான முறையைப் பின்பற்றி நடந்து வந்திருக்கிறது. இந்த நாடு, குடியரசாக ஏற்பட்ட ஓரிரண்டு வருஷங்களுக் குள்ளேயே, அரசாங்கம், ராணுவம் முதலி யன யாவும் கொஞ்சங்கூடக் கரகரப்பின்றி ஒழுங்காக நடைபெற்று வரத் தொடங்கியது. இதற்கெல்லாம் காரணமாய மைந்தவன் ஒரே ஒரு மஹா புருஷன்தான். அவனே தாமஸ் மஸாரிக்!
III பொருள் நிலையும் அரசியலும்
ஜெக்கோ ஸ்லோவேகியாவை பொதுப்படையாக எடுத்துக் கொண்டு பார்த்தோமானால், விவசாயமும் கைத்தொழிலும் சரிச மானமாக விருத்தியடைந்திருப்பது நன்கு தெரியும். அதாவது இந்தியாவைப் போல விவசாய நாடென்றோ, இங்கிலாந்தைப் போல் ஒரு கைத்தொழில் நாடென்றோ இதனைச் சொல்ல முடியாது. ஜனத் தொகையில் நூற்றுக்கு நாற்பது பேர் விவசாயம், காட்டுப் பொருள் களை உற்பத்தி செய்தல் முதலியவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள்; நூற்றுக்கு முப்பத்துநான்கு பேர் கைத்தொழில், வியாபாரம் முதலிய வற்றில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் கீழ்ப்பாகத்தில் விவ சாயமும், மேற்குப் பாகத்தில் கைத்தொழிலும் முறையே முக்கியத்தும் பெற்றிருக்கின்றன.
பழைய ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்துக் கொண்டிருந்த அல்லது அதில் உற்பத்தியாகிக் கொண்டிருந்த பொருள்களில் பெரும்பாகம் - சுமார் நூற்றுக்கு அறுபது பாகம் - தற்போதைய ஜெக்கோ ஸ்லோவேகிய நாட்டில் தான் உண்டாயிற்று. உதாரணமாக மேற்படி ஏகாதிபத்தியத்தின் சர்க்கரை உற்பத்தியில் 100-க்கு 90-பாகமும், உலோக வகைகளில் 100-க்கு 60-ம், பீங்கான் சாமான்களில் ஏறக்குறைய 100-க்கு 100-ம் கண்ணாடி வகைகளில் 100-க்கு 92-ம், துணிமணி வகைகளில் 100-க்கு 75-ம், தோல் வகைகளில் 100-க்கு 70-ம், காகிதம் முதலியவற்றில் 100-க்கு 65-ம் இந்த நாட்டிலே தான் உற்பத்தியாயின.
நிலக்கரியும் லிக்னைட் என்கிற ஒருவித பழுப்பு நிறக்கரியும் இந்த நாட்டில் உண்டாகும் முக்கிமான பொருள்கள். தன்னுடைய தேவைக்கு அதிகமாகவே, இந்த இரண்டு பொருள்களையும் இந்த நாடு உற்பத்தி செய்கிறது. கைத்தொழிலுக்குப் போதுமான அளவு இரும்பும் இந்த நாட்டிலேதான் உண்டாகிறது. அதிகப்படியான தேவைகளுக்கு ஸ்வீடன், ஹங்கேரி, ஸ்பெயின் முதலிய நாடுகளி லிருந்து வரவழைத்துக் கொள்கிறது. இன்னும் மர வகைகள், பென்சில் தயாரிப்பதற்குத் தேவை யான ஒருவித ஈயவஸ்து, மாக்னே ஷியம் என்கிற ஒரு வெண்மைப் பொருள் ஆகிய பொருள்களும் இங்கு உண்டாகின்றன.
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் முக்கிய கைத்தொழில்கள்: நிலக்கரி எடுத்தல்; இரும்பு, எஃகுச் சாமான்கள் தயாரித்தல்; சர்க் கரைத் தொழில்; ஜவுளி உற்பத்தி, கண்ணாடிச் சாமான்கள், பீங்கான் ஸெல்லுலாயிட், காகிதம் முதலிய சாமான்களைத் தயாரித்தல்; தோல் பதனிடல்; பூட்ஸ்கள், மருந்து வகையராக்கள், ஆபரண வகைகள் முதலியவற்றை உண்டு பண்ணல் ஆகியவையாம்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் வியாபாரமெல்லாம் வெளி நாடுகளோடுதான். அநேக கைத்தொழிற் சாலைகள், வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே சாமான்களைத் தயாரிக் கின்றன. சில சாமான்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டு, அவற்றைப் பண்படுத்தியோ, பண்படுத்தாமலோ திரும்பவும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடியவையாயிருக்கின்றன. மேற்கு ஐரோப்பாவிலுள்ள சில கைத்தொழில் நாடுகளுக்கும், கீழைப் பிர தேசங்கள் சிலவற்றிற்கும் இடையே ஒரு தரகன் போலிருந்து வேலை செய்து, தன் செல்வத்தை அபிவிருத்தி செய்து கொள்கிறது இந்த ஜெக்கோ ஸ்லோவேகியா.
ஜெக்கோ ஸ்லோவேகியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் முக்கியமானவை, வரிசைக்கிரமமாகக் கீழே தரப் பட்டிருக்கின்றன: இரும்பு, எஃகு முதலியவற்றால் தயாரிக்கப் பெற்ற சாமான்கள்; பஞ்சு, நூல் வகையராக்கள்; கண்ணாடிச் சாமான்கள்; கம்பள வகைகள்; தோல் சாமான்கள்; நிலக்கரி, லிக்னைட் என்கிற பழுப்புக்கரி முதலியன; மர வகைகள்; பட்டுத்துணி வகைகள்; தானிய வகைகள்; உலோகப் பொருள்கள்; பழம், கறிகாய் முதலியன; இயந்திரச் சாமான்கள்; காகிதங்கள்; மேஜோடு, கைத்துண்டு முதலியன; மட்பாண்டங்கள்; சர்க்கரை; போக்குவரவுக்குரிய கருவிகள் முதலியனவாம்.
முக்கிய இறக்குமதிகள் அவற்றின் வரிசைப்படி வருமாறு: பருத்தி; கம்பளம்; பழம், கறிகாய் முதலியன; உலோகப் பொருள்கள்; இரும்பு முதலியன; பட்டு; இயந்திரச் சாமான்கள்; கால்நடைகள்; சணல்; எண்ணெய் வகைகள்; மருந்துகள் தயார் செய்வதற்குரிய மூலப் பொருள்கள்; வர்ண வகைகள்; நிலக்கரி; மின்சார இயந்திர வகைகள் முதலியன.
ஜெக்கோ ஸ்லோவேகியா, எந்தெந்த நாடுகளுக்குத் தன் பொருள் களை ஏற்றுமதி செய்கிறது? வரிசைக் கிரமமாக, ஜெர்மனி, அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, ருமேனியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், ஹாலந்து முதலியன.
எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது? வரிசைப் படி ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், ருமேனியா, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, ஸ்விட்ஜர்லாந்து, இந்தியா முதலியன.
1936-ஆம் வருஷத்திலிருந்து, ஜெக்கோ ஸ்லோவேகியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குட்பட்ட பல நாடுகளுடன் வியாபார ஒப்பந்தங்கள் செய்து அவற்றின் மூலம் தன்னுடைய ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை அதிகப்படுத்திக் கொண்டு வந்திருக் கிறது. கீழ்க்கண்ட புள்ளி விவரங்களிலிருந்து இது நன்கு விளங்கும்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் ஏற்றுமதி - 3,82,80,000 (1936), 6,48,30,000 (1937)
இறக்குமதி - 5,66,20,000 (1936), 9,82,90,000 (1937)
இவற்றில், இந்தியாவுக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு முள்ள வியாபாரத் தொடர்பு மிக அதிகம்.
இந்தியாவிலிருந்து ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு - 3,02,30,000 (1936), 4,70,60,000 (1937)
ஜெக்கோ ஸ்லோ வேகியாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மதிப்பு - 78,20,000 (1936), 1,61,20,000 (1937)
தான் உற்பத்தி செய்யும் பொருள்களை வெளிநாடுகளில் பரப்பவும், அவற்றை ஒழுங்காக விநியோகம் செய்யவும், ஜெக்கோ ஸ்லோ வேகியா திறமையான முறைகளைக் கையாண்டு வருகிறது. பிரதி வருஷமும், ப்ரேக் நகரத்தில் சர்வதேசப் பொருட்காட்சி ஒன்று நடை பெறுகிறது. அதில், ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பல பாகங் களிலும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வியாபாரிகள் கொண்டு வந்து வைக்கிறார்கள். சிறப்பாக, ஏற்றுமதிக்கு லாயக்கான பொருள் கள்தான் இங்குக் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. சுமார் மூவாயிரம் தொழிலுற்பத்தி ஸ்தாபனங்கள் இந்தப் பொருட்காட்சியில் பங் கெடுத்துக் கொள்கின்றன. வெளிநாட்டு வியாபாரிகள் பலர் இந்தப் பொருட்காட்சிக்கு வந்து, வியாபாரத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாந் தேதியிலிருந்து பதினோராந் தேதி வரை இந்தப் பொருட்காட்சி ப்ரேக் நகரில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னே நாம் கூறியபடி, ஜெக்கோ ஸ்லோவேகியா ஒரு குடியரசு நாடு. குடியரசுத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திட்டம் 1920-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 29-ந் தேதி, தேசீய மகா சபையினால் அங்கீகரிக்கப்பட்டு அமுலுக்கு வந்தது. ராஜாங்கத் திற்குக் கிடைக்கிற எல்லா அதிகாரங்களும் ஜனங் களிடமிருந்தே உண்டாகவேண்டு மென்பதுதான், இந்த நாட்டு அரசியல் திட்டத் தின் அடிப்படையான அம்சம். குடியரசின் தலைவன் பிரசிடெண்ட். இவனுடைய உத்தியோக காலம் ஏழு வருஷம். இவனுக்கு அதிகாரங் கள் நிறைய உண்டு. பெயரளவில் இவன் அரசாங்கத்தின் தலைவனா யிருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்கிற போது, பிரெஞ்சுக் குடி யரசுத் தலைவனுக்கு எவ்வளவு அதிகாரங்கள் உண்டோ அவற்றை விட அதிகமான அதிகாரங்கள் ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசுத் தலைவனுக்கு உண்டு. கீழே கூறப்பட்டுள்ள இரண்டு சட்ட சபை களும் சேர்ந்து பிரெசி டெண்டைத் தேர்ந்தெடுக் கின்றன. பிரசி டெண்டுக்கு அரசாங்க நிருவாகத்தில் துணைசெய்ய ஒரு மந்திரிச் சபை உண்டு. மந்திரிச் சபையில் மொத்தம் பதினைந்து மந்திரி மார்கள். இவர்கள் சட்டசபைகளுக்குப் பொறுப்பானவர்கள்.
சட்டசபைகள் இரண்டு. ஒன்று மேல் சபை, மற்றொன்று கீழ் சபை. மேல்சபைக்கு செனட் (Senate) என்று பெயர். இதில் 150 பேர் அங்கத்தினர். கீழ்சபைக்கு ஜனப் பிரதிநிதி சபை (Chamber of Deputies) என்று பெயர். இதில் 300 பேர் அங்கத்தினர். இந்த இரண்டு சபை களையும் சேர்த்துப் பொதுவாக தேசீய சபை (National Assembly) என்று அழைப்பர். வகுப்பு, பால் வித்தியாசமின்றி எல்லோருக்கும் வாக்குரிமை உண்டு. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள், கீழ்சபைக்கும், 26 வயதுக்கு மேற்பட்டவர்கள் மேல்சபைக்கும் ஓட் செய்யலாம்.
இந்த அரசியல் திட்டத்தின் கீழ், சென்ற பதினெட்டு வருஷ காலத்தில், நான்கு முறைதான் தேசீய சபைத் தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்! அரசியல் விவகாரங்களில் ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் காட்டும் உறுதியான மனப்பான்மைக்கு இது சிறந்ததோர் உதாரணமல்லவா?
ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்குக் குடியரசுத் திட்டம் வகுக்கப் பட்டபோது, நாட்டைப் பல மாகாணங்களாகப் பிரித்து, ஒவ் வொன்றுக்கும் மாகாணப் பொறுப்பாட்சி கொடுத்துவிட வேண்டு மென்று கூறப்பட்டது. அப்படியே, பொஹிமியா, மொரேவியா - சிலீஷியா, ஸ்லோவேகியா, ருத்தேனியா ஆகிய நான்கு மாகாணங் களுக்கும் பொறுப்பாட்சி கொடுக்கப்பெற்றது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சட்டசபைகளும் இருக்கின்றன. இந்த மாகாணச் சட்ட சபைகளுக்கு டையட் (Diet) என்று பெயர். ஆனால் அநுபவத்தில் பார்க்கப் போனால், இந்த அதிகாரங்களைப் பிரித்துக் கொடுக்கிற முறையானது, அவ்வளவு துரிதமாகக் கையாளப் படவில்லை. மத்திய அரசாங்கந்தான், எல்லாப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் ஏற்று நடத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இளங் குழந்தைக்குக் கவனிப்பான போஷணை தேவையாயிருப்பது போல், வளர்ந்து கொண்டு வருகிற இந்தச் சிறிய மாகாணங்களுக்கு உரிமைகளை வழங்குகிற விஷயத்திலும் அவற்றை உபயோகப்படுத்துவிக்கிற விஷயத்திலும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. இதனை ஜெக்கோ ஸ்லோவேகியத் தலைவர்கள் நன்கு உணர்ந் திருக்கிறார்கள். அரசாங்கம் ஸ்திரமாக அமையவேண்டுமானால், அதற்கு அஸ்திவாரம் வலுவாக இருக்க வேண்டுமல்லவா? தவிர, சமுதாய வாழ்விலேயே ஒரு ஜீவ சக்தியைப் புகுத்தி, மற்ற நாடு களோடு சமமான அந்தஸ்தில் தங்கள் நாட்டையும் வைக்க வேண்டு மென்ற கவலை, ஜெக்கோ ஸ்லோவேகியத் தலைவர்களுக்கு இருந்தது. இன்னும், ஜனத்தொகையில் சிறுபான்மையோராயுள்ள பல ஜாதி யினர் நாட்டில் வசித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுடைய உரிமைகளுக்குப் பழுதுவராமல் பாதுகாத்து, இவர்களைத் தேசத்தின் பொதுவாழ்வில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமாயிருந்தது. இவற்றிற்கெல்லாம் சட்ட திட்டங்கள் நிறைவேற்றி, உடனே கண்டிப் பாக அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமல்லவா? இந்த அதிகாரங் களைப் பிரித்துக் கொடுத்துக்கொண்டு போனால், ராஜாங்கத்தின் அஸ்திவாரம் ஆடத்தொடங்கிவிடாதா?
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் மற்றோர் விசேஷமான அமிசமும் உண்டு. இந்த நாட்டைச் சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் ஏறக்குறைய சர்வாதிகார நாடுகள். ஒன்றுக்கொன்று சில சமயங்களில் உறுமு வதும், சில சமயங்களில் கைகுலுக்குவது மாயிருக்கின்றன. ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகியா ஒன்றுதான் ஜனநாயகக் கடலில் அரசாங்கக் கப்பலை வெகு சாமர்த்தியமாக நடத்திக்கொண்டு வருகிறது. எந்த விதமான தீவிர அரசியல் முனைகளுக்கும் இது செல்லவில்லை. நடுத்தர மான ஒரு மார்க்கத்தைக் கடைப்பிடித்து அதன் வழியே ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கிறது.
IV மக்களின் வாழ்க்கை
எந்த ஏகாதிபத்தியத்துக்கு ஜெக்கர்கள் அநேக நூற்றாண்டு களாக ஆட்பட்டிருந்தார்களோ, அந்த ஏகாதிபத்தியத்தின் பெயரைத் தாங்கின ஹங்கேரியர்களுக்கு நேர்மாறான சுபாவமுடையவர்கள் ஜெக்கர்கள். ஓர் ஹங்கேரியனை நீங்கள் சந்தித்துப் பேசினால், அவர் குரூர சுபாவமுள்ளவனென்பதையும், உங்களை ஆடம்பரமாக, அல்லது தன் அந்தஸ்துக்கு மீறி உபசரிக்கிறவனென்பதையும், கற்பனை உலகத் தில் வாழ மிகவும் பிரியங் கொண்டவனென்பதையும் அறிவீர்கள். ஹங்கேரியனுக்கு ஒழுங்கான முன்னேற்றம் பிடிக்கவே பிடிக்காது. புதிய புதிய மாற்றங்களிலேயோ, அல்லது திடீரென்று நேரிடக்கூடிய சம்பவங்களிலேயோதான் அவன் இன்பங் காண்கிறான். தாராள மாகப் பணம் செலவழிக்காதவனைப் பார்த்தால் அவனுக்கு வெறுப்பு உண்டாகும். அவனை ஏன் கொன்று போடக் கூடாதென்ற ஆத்திரம்கூட வரும். ஹங்கேரிய ஆண்களைப் போலவே, ஹங் கேரியப் பெண்களும் ஆடம்பரமாக உடுத்துவதில் ஆசை கொண்ட வர்கள். கூட இவர்களுக்கு அழகும் சேர்ந்திருக்கிறது. இதனால் இவர்கள் யாரையும் வசீகரிக்குந் தன்மையுடையவர்கள்.
இவைகளுக்கெல்லாம் நேர்மாறான சுபாவமுடையவர்கள் ஜெக்கர்கள். இவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள். ஒழுங்கைக் கடைப் பிடிப்பவர்கள். வாழ்க்கையிலே சிக்கனம் பிடித்தாலும் சுத்தமாய் இருப்பார்கள். உழைப்பாளிகள். நிதானமாகவே எதிலும் நடந்து கொள்வார்கள். சுகத்திலும் துக்கத்திலும் வரம்பு மீறிச்சென்று விட மாட்டார்கள். எப்பொழுதும் சுறு சுறுப்பாயிருப்பார்கள். விடியற் காலை எழுந்து வேலைதொடங்கி விடுவார்கள். ஆடம்பரமில்லா மல் - ஆனால் வயிறு நிறையச் சாப்பிடுவார்கள். சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்பதில் கண்ணுங் கருத்துமாயிருப் பவர்கள். சங்கீதப் பிரியர்கள். ஆனால் அந்தச் சங்கீதத்திலேகூட ஓர் இனிமை, ஒரு நயம் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதை வெறுப்பார்கள். எதிலும் உழைத்துப் பலன் காண்கிறவர்கள். எந்த வேலையைச் செய்தாலும் அதில் மனம் வைத்து வேலை செய்வார்கள். அந்த வேலையை முடிப்பதற்குள் எத்தனை இடர்ப்பாடுகள் நேர்ந் தாலும் அவையனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொள்வார் கள். ஜெக்கோ ஸ்லோவே கியாவில் தயாரிக்கப்பட்டு வியா பாரத் துக்கு வருகிற சாமான்கள் உறுதிப் பாடுடையனவாக இருப்பதை நாம் சர்வசாதாரணமாகப் பார்க்கிறோ மில்லையா?
ஜெக்கர்கள் குடும்ப வாழ்க்கையில் பற்றுக் கொண்ட வர்கள். வீட்டை ஒழுங்காக வைத்துக் கொண்டிருப்பது; தனக்குக் கிடைத்த வேலையைச் சரிவரச் செய்வது; அதிலிருந்து ஏதேனும் பணம் மிகுத்த முடியுமானால் அதை மிகுத்தி, பாங்கிகளிலோ, இன்ஷ் யூரன்ஸ் பாலிசிகளிலோ போட்டு வைப்பது; இவையெல்லாந்தான், ஜெக்கர்களுடைய வாழ்க்கையின் பிரதான அமிசங்கள். அரசியல் வாழ்க்கையிலாகட்டும், குடும்ப வாழ்க்கை யிலாகட்டும், அதிதீவிரம் இவர்களுக்குப் பிடிக்காது. படிப்படியான முன்னேற்றத்தைத் தான், ஒரு தனிப்பட்ட மனிதனோ, ஒரு ஜனசமுதாயமோ எதிர்பார்க்க முடியும், அல்லது அப்படித்தான் எதிர்பார்க்க வேண்டுமென்பது இவர்களுடைய நம்பிக்கை. இதனால், ஒருவன் திடீரென்று பணக் காரனாக விரும்பினால் அதைக் கொஞ்சங்கூட விரும்ப மாட்டார்கள். பணத்தைக் குவிக்க வேண்டுமென்பது இவர்கள் லட்சிய மல்ல; அதற்காக நித்திய தரித்திரத்திலே உழன்று கொண்டிருப்பதையும் விரும்பார்கள்.
ஜெக்கர்கள் பொதுவாக கட்டுமஸ்தான சரீரமுடையவர்கள். கண்ணைக் கவரும் வனப்புடையவர்கள் என்று சொல்ல முடியா விட்டாலும், வாழ்க்கையிலே எப்படி நிதானஸ்தர்களாயிருக்கிறார்களோ, அப்படியேதான் இவர்களுடைய அழகும் நிதானமாக இருக்கிறது. எந்த ஜெக்கனைப் பார்த்தாலும், அவனிடம் கொஞ்ச நேரம் பேசலாம் என்ற எண்ணம் யாருக்குமே தோன்றும்.
ஜெக்க ஸ்தீரிகள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலே அதிக நேரம் செலவிட மாட்டார்கள். ஆனால் அந்த நேரத்தை, தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்வதிலே செலவிடுவார்கள். ஒரு ஜெக்க ஸ்தீரிக்கு, கற்பனை செய்ய அதிகம் தெரியாதாயினும், புத்திசாலித் தனமாக நடந்து கொள்வாள். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் தலை நகரான ப்ரேக் நகரத்திற்குச் சென்று பார்க்கிற யாருக்குமே இந்த உண்மை தெரியும்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் ஜனநாயகக் குடியரசு ஆட்சி முறை நடைபெறுகிறதல்லவா? ஜனநாயகம் என்பதற்கு, தான் றோன்றித்தனம் என்று சில நாடுகளில் சில ஜனங்கள் அர்த்தஞ் செய்து கொண்டு நடக்கிறார்களே அந்தமாதிரியெல்லாம் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் காண முடியாது. இங்கே நடப்பது ஒழுங்கான ஜனநாயகம். இதனால் இந்த நாட்டு அரசாங்கத்தை, சர்வாதிகார அமிசம் பொருந்திய ஜனநாயகம் என்று சொல்லலாம். ஜெக்கர்கள் அடிக்கடி வாய்ச்சண்டை போடுவார்கள்; ஆனால் கைகலந்து விட மாட்டார்கள். ஒரு ஜெக்கன் தன்னுடைய தனித்துவத்தை எப் பொழுதும் விட்டுக் கொடுக்கவேமாட்டான். ஆனால் சமுதாய, தேசீயப் பிரச்னைகள் வருகிறபோது, அவற்றில் தன்னை மறந்து ஈடுபட்டுவிடுவான். ஜெக்கர்களை ஒரு ஜன சமுதாயமாக எடுத்துப் பார்ப்போமானால், அவர்களை எதற்கும் கீழ்ப்படிந்து போகிற ஜாதியாரென்றோ, அல்லது எதனையும் எதிர்த்துப் போராடுகிறவர் களென்றோ சொல்ல முடியாது. பிறர் சொல்வதில் நியாயம் இருந் தால் அதை உடனே கேட்பார்கள். விட்டுக்கொடுக்கிற மனப்பான்மையுடைய வர்கள். பிறரைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணமும் இவர்களுக்குக் கிடையாது. தாங் கொண்ட கருத்துக்கு மாறுபட்ட வர்களிடத்தில் மரியாதையாக நடந்து கொள்வார்கள். பொதுக் காரியங்களில் அவர்களோடு ஒன்றுபட்டு உழைப்பார்கள். 1919-ஆம் வருஷத்திலிருந்து, இந்த நாட்டு அரசாங்க நிருவாகத்தைப் பல கட்சியினரும் சேர்ந்து நடத்துவதிலிருந்தே இது தெரியவில்லையா?
இந்த மாதிரியான பண்புகளெல்லாம் இவர்களிடம் அமைந்த தற்குக் காரணங்கள் இல்லாமல் போகவில்லை. ஆஸ்திரிய - ஹங்க கேரிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட காலத்திலிருந்து -அதாவது சுமார் நானூறு வருஷங்களாக - ஜெக்கர்கள், விவசாயிகளாகவும், சிறிய உத்தியோகஸ் தர்களாகவுமே வாழ்க்கை நடத்தி வந்திருக் கிறார்கள். பெரிய நிலச்சுவான் தார்களும், கைத்தொழில் முதலாளி களும் ஜெர்மானியார்களா யிருந்தார்கள். இதனால் ஜெக்கர்களுக்கு, சமூகத்தின் மேலந்தஸ்து என்பது தெரியாமலே இருந்தது. அந்த அந்தஸ்தின் சுகங்களை ருசிக்கவும் இவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இப்பொழுது, சென்ற இருபது வருஷ காலமாக, இவர் களுடைய வாழ்க்கை அந்தஸ்தில் என்ன விதமான வித்தியாசங்கள் இருந்தபோதிலும், தங்களுடைய மூதாதையர்கள் எவ்விதமான வித்தியாசமுமின்றி ஒரேபடித்தான வாழ்க்கையை நடத்தி வந்தார்கள் என்பதை இவர்கள் மறந்துவிடவில்லை. இந்த மாதிரியான பரம் பரை இருப்பதினாலேயே, இவர்களின் மனப்பான்மை, அபேத வாதக் கருத்தைத் தழுவியதாகவே இருக்கிறது.
ஜெக்கர்களுடைய மற்றொரு விசேஷ குணம் என்ன வென்றால், இவர்களுடைய மனம் எப்பொழுதும் அறிவுத் துறையிலேயே ஈடு பட்டிருப்பதாகும். ஜெக்க ஜாதியின் சரித்திரத்தை நாம் சிறிது துருவிப் பார்ப்போமானால் இந்த ஜாதிக்கு ஜீவதாதுவைக் கொடுத்துத் தலை நிமிரச்செய்த தலைவர்கள் அனைவரும் சிறந்த எழுத்தாளர் களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடைய பேனா முனைதான் ஜனங்களின் இதயத்தைத் திறந்து விடும் திறவுகோலாய் அமைந் திருக்கிறது. ஜெக்க ஜாதிக்கு முதன்முதல் தேசீய உணர்ச்சியை ஊட்டிய ஜான் ஹஸ் என்பவன் ஒரு சர்வ கலாசாலைப் போத காசிரியன். இவன் ஜெக்க பாஷையில் ஓர் அகராதியைக் கூட எழுதியிருக்கிறான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் விளங்கிய அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஆசிரியர்களாகவும், கவிஞர் களாவும் இருந்திருக்கிறார்கள். ஐரோப்பிய யுத்த காலத்தில் சுதந்திர ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு அடிகோலிய மூல புருஷர்களான மஸாரிக், பெனேஷ், ஸ்டெபானிக் ஆகிய மூவரும் பேராசிரி யர்கள்தானே.
ஜெக்க அறிஞர்கள் எப்பொழுதும் அறிவுத் துறையிலே மட்டும் மிதந்து சென்று கொண்டிருப்பதில் திருப்தி கொள்வ தில்லை. தேசத்தோடு தங்கள் வாழ்க்கையைப் பிணைத்தே வந்திருக் கிறார்கள். சுதந்திரத்திற் காகப் போராட வேண்டிய அவசியம் ஏற்படு கிறபோது, இவர்கள் தங்கள் எழுதுகோலை ஒரு புறமாக வைத்து விட்டு, வாளாயுதமோ, துப்பாக்கியோ கையிலெடுத்துக் கொண்டு, போர்க்கோலத்துடன் கிளம்பச் சிறிதுகூடப் பின் வாங்க மாட்டார்கள். 1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதக் கடைசி வாரத்தில், ஜெர்மனி யின் உறுமல் அதிகரித்துக் கொண்டு வர, அதன் விளைவாக உலக யுத்தம் எந்த நிமிஷத்தில் ஏற்படுமோவென்று ராஜதந்திரிகள் ஏங்கிக் கொண்டிருந்த தருணத்தில், ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள, கார்ல் காபெக் (Karl Capek) என்ற பேராசிரியன் உள்பட பல அறிஞர்கள் சேர்ந்து உலகத்தின் மனச்சாட்சி போல் அமைந்துள்ள எல்லா நன் மக்களுக்கும் விடுத்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்கள்:
நாங்கள், எங்களுடைய ஜெர்மானியச் சகோதரர் களுடன் பலன் தரத்தக்க விதமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம். அங்ஙனமே கலைஞான அபிவிருத்தியிலும் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்தோம். பிரான்ஸ், ருஷ்யா, செர்வியா, இத்தலி ஆகிய இந்த நாட்டுப் போர்க்களங்களில், இழந்து போன எங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற்ற பிறகு, நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற தாய் நாட்டை, புதிய, சிறந்த, சந்தோஷ கரமான ஐரோப்பா விலுள்ள உயிருள்ள ஸ்தாபனங்களில் ஒன்றாக ஆக்க வேண்டுமென்று நம்பினோம்; அதற்கான முயற்சிகளும் செய்தோம். மத்திய ஐரோப்பாவிலுள்ள ஜனநாயக நாடுகளின் கடைசி கோட்டையாகிய எங்கள் நாட்டின் மீது நாங்கள் நின்று கொண்டு, நிரந்தரமான சத்தியத்தின் விஷயத்தில் எங்களுக்குள்ள பொறுப்பை நன்றாக உணர்ந்து நாங்கள் பகிரங்கமாகக் கூறுவதென்னவென்றால், இப்பொழுது எங்கள் நாட்டின் முன்னர் தோன்றியிருக்கும் ஆபத்திற்கு எங் கள் தேசம் குற்றவாளியல்ல என்பதுதான். சமாதானத்தைக் காப்பதற்காக நாங்கள் எங்களாலான முயற்சியனைத்தையும் செய்வோம். அப்படியே, எங்கள் தாய் நாட்டின் சுதந்திரத் தைக் காப்பதற்காகவும் எல்லாம் செய்வோம்.
ஐரோப்பாவினுடைய, நாகரிக உலகத்தினுடைய புனிதமான உடைமைப் பொருளாக இருந்தன எவையோ, அந்தச் சத்தியத்தின் மீது கொண்ட பற்றுள்ளம், ஆத்மாவின் சுதந்திரம், மனச்சாட்சியின் தூய்மை ஆகிய இவை பழுது படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றனவா என்பதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய உங்களுக்கு விண்ணப் பித்துக் கொள்கிறோம். உண்மையான சமாதானத்தையும் நியாயத்தையும் எங்கே காண முடியும் என்பதையும், பலாத் காரத்தையும் அசத்தியத்தையும் எப்படியாவது உபயோகப் படுத்திக் கொள்கிற சுயேச்சாதிகார சக்தியை எங்கே காண முடியுமென்பதையும் நீங்களே கண்டு கொள்ள வேண்டும். மிகச்சிறியதும், சமாதானமாகவே வாழ்ந்து கொண்டு வர விரும்புவதுமான எங்கள் மீது பலாத்காரமாகப் போர் தொடுக்கப்படுமானால், அந்த யுத்தத்தை, எங்களுக்காக மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லாச் சமாதான வாதிகளின் சார்பாகவும் எதிர்த்து நிற்போம். எங்களுக்குப் பிறகு, இதே கதி எல்லாருக்கும் நேரிடும் என்பதை யாருமே மறக்க வேண்டாம்.
ஜெக்க ஜாதியின் ஜனத்தொகையை நோக்கும் போது இவர்கள் எழுதுகிற நூல்களும் படிக்கிற புத்தகங்களும் மிக அதிகம். ஏறக் குறைய உலகத்தின் முக்கியமான காவியங்கள் அனைத்தும் இந்த ஜெக்க பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தவிர ஜெக் கர்கள் மனிதனுடைய கீழான ஆசைகளைத் தூண்டுகிற நூல்களைப் படிக்கவே மாட்டார்கள். படித்த நூல்களிலிருந்து ஏதேனும் பயனடைய வேண்டுமென்று விரும்புவார்கள். சாதாரணமாக ஐரோப்பா கண்டத்திலே ஒரு பழமொழி வழங்குவ துண்டு. ஓய்வு கிடைக்குமானால் ஒரு ஜெக்கன் என்ன செய்து கொண்டிருப்பான்? ஒன்று, சாப்பிட்டுக் கொண்டிருப்பான்; அல்லது படித்துக் கொண்டி ருப்பான் என்பதுவே இந்தப் பழமொழி.
இனி ஸ்லோவேகியர்களைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள் வோம். இவர்கள் வசிக்கும் ஸ்லோவேகியப் பிரதேசம் சுமார் பத்து நூற்றாண்டுகளாக ஹங்கேரிய ஆதிக்கத்துக்கு உட்பட்டி ருந்தது. இதனால் ஜெக்கர்களைப்போல், லௌகிகத் துறைகளில் இவர்கள் அதிகமான முன்னேற்றத்தை அடையவில்லை. நிலத்தைப் பண் படுத்தி அதிலிருந்து காணும் பலனை நுகர்ந்து, காலத்தைக் கழித்து விடுவதோடு திருப்தி யடைகிறவர்கள் ஸ்லோவேகியர்கள். இவர்கள் ஸ்லாவிய ஜாதியின் ஒரு பகுதியினரானபடியால் அந்த ஜாதிக்கு இயற்கையா யமைந்துள்ள எல்லாம் கடவுள் செயல் என்ற மனப்பான்மை இவர்கள் ரத்தத்திலேயே கலந்து போயிருக்கிறது. இதனால் இவர்கள் சில சமயம் நனவு உலகத்திலும் சில சமயம் கனவு உலகத்திலும் வாழும் தன்மையர். மனம் வந்தால் ஆடம்பரமாகச் செலவு செய்வார்கள்; இல்லையேல் ஒரே அடியாக இறுக்கிப் பிடித்து விடுவார்கள். இத்தகைய காரணங்களால் ஸ்லோவேகியப் பிரதேசத்தில் மட்டும் கல்விச் சாலைகளோ தொழிற்சாலைகளோ அதிமாக ஏற்படவில்லை.
ஆனால் இந்த இரண்டு ஜாதியாரும் - ஜெக்கர்களும் ஸ்லோ வேகியரும் - மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் கண்டு யாருமே ஆச்சரியப்படாமலிருக்க முடியாது. ஒருவரிடத்திலே காணும் குறையை மற்றொருவர் நிறைவு செய்து, இருவரும் ஒன்றுபட்ட ஒரு சமூகத்தினராக அந்நியருக்குத் தோற்றுகிறார்கள். ஒரு ஜெக்கன் திறமைசாலியாக இருந்தால் ஒரு ஸ்லோவேகியன் அன்புள்ளவனாக இருக்கிறான். ஜெக்கனுக்கு இருக்கும் லௌகிக அறிவை ஸ்லோ வேகியனுடைய பாரமார்த்திக ஞானம் அழகு படுத்துகிறது.
ஜெக்கர்களில் ஏறக்குறைய எல்லாருக்குமே பொது அறிவு - உலக ஞானம் - நிரம்ப உண்டு. பத்து ஜெக்கர்கள் இருக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் ஒருவன் அதிமேதாவியாகவும், ஒன்பது பேர் ஞான சூனியர்களாவும் இருக்கமாட்டார்கள். எல்லாரும் ஒரே நிறையுள்ள சராசரி அறிவுடையவர்களாய் இருப்பார்கள். ஆனால் ஸ்லோவேகியர் களில் ஆங்காங்கு ஒன்றிரண்டு பேராகத்தான் சிறந்த மேதையர்கள் இருப்பார்கள். பெரும்பான்மையோர், அதிக படிப்பில்லாதவர் களாகவோ, உலக விவகாரங்களை அதிகமாகத் தெரிந்து கொள்ளா தவர்களாகவோ இருப்பார்கள். இதனால் ஜெக்கோ ஸ்லோவே கியர்களைப் பொதுப்பட்ட ஒரு சமூகத்தினராக நாம் எடுத்துப் பார்த்தோமானால் எல்லா அமிசங் களும் நிறைந்த ஒரு சமூகத் தினராகவே நமக்குக் காணப்படுகிறார்கள்.
ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்து ஹாப்ஸ்பர்க் மன்னர்கள் ரோமன் கத்தோலிக்கர்களாய் இருந்தபடியால், அவர் களுடைய ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த ஜெக்கோ ஸ்லோவே கியா நாட்டு மக்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர் களாயி ருந்தார்கள். இதனால் புராடெஸ்டெண்டுகளுக்கு அரசாங்கத்தின் மூலம் கிடைத்து வந்த சலுகைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, ஒரு கணக்கு எடுத்துப் பார்த்ததில் இந்த நாட்டு மக்களில் எண்பது பேர் ரோமன் கத்தோலிக்கர்களா யிருந்தார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியா, சுதந்திரம் பெற்ற பிறகு அரசாங்கத்தின் மதக்கொள்கை இன்னதுதான் என்று நிர்ணயிக்கப் படவில்லை. அவரவர்களுக்கு இஷ்டப்பட்ட மதக் கொள்கைகளை அநுஷ்டிக்கலாம் என்ற உரிமை ஜனங்களுக்கு, அளிக்கப்பட்டது. எனவே, ரோமன் கத்தோலிக்கர்களும், புராடெஸ்டெண்டு களும், எந்தக் கொள்கையுமே தேவையில்லையென்று சொல்கிறவர்களும் அரசாங்கத்திடமிருந்து ஒரே விதமான சலுகைகள்தான் பெற்று வரலானார்கள். இதனால் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் மத உரிமை பூரணமாக உண்டு. இந்த உரிமை கிடைத்திதன் காரணமாக, கத் தோலிக்கப் பாதிரிமார்கள், தங்கள் தேவாலயங்களில் அநேக விதமான சீர்திருத்தங் களைச் செய்யத் தொடங்கினார்கள். இவை ரோமாபுரியிலுள்ள போப்பரசரின் சம்மதத்தைப் பெறவில்லை. எனவே, ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள மதத் தலைவர்கள் தங் களுக்கென்றே தனியான ஒரு மத பீடத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியர்களில் பெரும்பாலோர் இந்த ஜெக்கோ ஸ்லோவேகிய மதபீடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக் கிறார்கள். இந்த மாதிரியான மாற்றங்கள் பல ஏற்பட்டதன் காரண மாக, ஜெக்கோ ஸ்லோவேகியர்கள், மத விஷயத்தில் குறுகிய திருஷ்டி யில்லாதவர்களானார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கை நிரம்ப உடையவர்கள். கடவுளின் கீழ் நாம் குடியிருக் கிறோம் என்ற வாசகம், இவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் பிரதி பலித்துக் கொண்டிருக்கும். இதனால் இவர்கள் தேக பலத்தை அதிகரித்துக் கொள்ளும் விஷயத்தில் எவ்வளவு கவனம் செலுத்து கிறார்களோ, அவ்வளவு கவனத்தை, ஆன்ம பலத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் விஷயத்திலும் செலுத்துகிறார்கள். பல நூற்றாண்டுகளாகவே, மதக் கொடுமைகளை இவர்கள் பொறுமை யுடன் சகித்துக் கொண்டு வந்த ஒரு பரம்பரை இவர்களுக்கு இருப்ப தனால், இவர்கள் பொறுமையும் நிதானமும் உடையவர்களாயிருக் கிறார்கள்.
ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் நிலப் பற்று நிரம்ப உடையவர் கள். உழுது பயிரிட்டு ஜீவனம் செய்வதிலே ஒரு பெருமை இருக் கிறதென்று நினைக்கிறவர்கள். இதனால்தான் ஜெக்கோ ஸ்லோ வேகியாவில் எந்த விதமான அரசியல் விவகாரம் பேசப்பட்ட போதிலும், அது நிலத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஒரு ஜெக் கனையோ, ஸ்லோவேகியனையோ நீங்கள் சந்தித்துப் பேசினால், அவன், தனக்கு இவ்வளவு விஸ்தீரணமுள்ள சாகுபடி நிலம் இருக்கிற தென்றும், இன்னின்ன தானியங்கள் அதில் விளைகின்றன என்றும் பெருமையாகப் பேசுவானே தவிர, இவ்வளவு மதிப்புள்ள ஆஸ்தி இருக்கிறதென்றோ, அதனால் தனக்கு விசேஷ பெருமை ஏற் பட்டிருப்பதாகவோ பேச மாட்டான். இந்த நிலப்பற்று இருப்ப தனால்தான், ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள பெரும்பாலான ஜனங்கள், கிராமங்களில் வசிக்கிறார்கள்; நகர வாசத்தை இவர்கள் மோகிப்பதில்லை.
ஜெக்கர்களாகட்டும், ஸ்லோவேகியர்களாகட்டும், கிராமங் களிலே சிறிய சிறிய வீடுகளாகக் கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்து வந்தபோதிலும், அந்த வீடுகளை அழகுபடுத்தியும் சுத்தமாகவும் வைத்துக் கொள்வார்கள். வீட்டுச் சுவர்களில் அழகான சித்திரங்களை ஸ்தீரிகளே வரைவார்கள். எளிய வாழ்க்கையை நடத்துகிற சாதாரண ஜனங்கள் கூட வருஷத்திற்கு ஒருமுறை தங்கள் வீட்டுக்கு வெள்ளை யடித்துச் சுத்தமாக வைப்பார்கள். இங்ஙனம் அகத் தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டவர்கள் இந்த ஜெக்கோ ஸ்லோவே கியர்கள்.
V சிறுபான்மைச் சமூகத்தினர்
சுமார் இருபது நூற்றாண்டுகளாக ஐரோப்பா கண்டத்தின் மத்திய பாகத்தில் பல ஜாதியார் வந்து குடியேறியிருக்கின்றனர். இங் கிருந்து பல ஜாதியார் வெளிக்கிளம்பியு மிருக்கின்றனர். இங்ஙனம் பல ஜாதிக் கலப்பு ஏற்பட்டதின் காரணமாக, மத்திய ஐரோப்பா வில் பாஷை வாரியான நாடுகள் தனித்தனிப் பிரிந்து வாழ்ந்தி ருந்ததை நாம் சரித்திரத்தில் காண முடியவில்லை. மத்திய ஐரோப்பா விலுள்ள எந்தச் சிறிய நாட்டை யெடுத்துப் பார்த்தாலும் அதில், பல ஜாதியார்களும் பிரஜைகளா யிருப்பதைக் காண்கிறோம். இதனா லேயே ஐரோப்பா கண்டத்தில் நிகழ்ந்த, நிகழ்கிற, நிகழப் போகிற மகாயுத்தங்களுக்கெல்லாம் காரணமாக இருந்ததும், இருப்பதும், இருக்கப்போவதும் இந்த மத்திய ஐரோப்பியப் பிரதேசங்களில் உண்டாகும் ஏதோ ஒரு குழப்பம்; அல்லது ஒரு நெருக்கடி; அல்லது சிறுபான்மையோரின் உரிமைகளுக்குப் பங்கமேற்படாமல் பாதுகாத்தல் என்ற பிரச்னை; இவற்றுள், ஏதோ ஒன்று இருந்தது; இருக்கிறது; அல்லது இருக்கும். ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகியா வைப் போல் பல ஜாதிகள் நிறைந்த நாடு ஐரோப்பா கண்டத்தில் வேறொன்று மில்லை என்று சொல்லலாம். அதை நினைத்துப் பார்க் கிற போதுதான் இத்தனை ஜாதியினரையும் ஒன்றுபடுத்தி ஓர் அர சாங்க ஆதிக்கத்திற் குட்படுத்திய மஸாரிக்கின் பெருமை நமக்குப் புலனாகின்றது!
இந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில், (15,500,000) 9,688,943 பேர் ஜெக்கர்களும் ஸ்லோவேகியர்களுமாவர். அதாவது, மொத்த ஜனத்தொகையில் 100-க்கு ஏறக்குறைய 67 பேர் இந்த ஜாதியினர். இவர்கள் தவிர 32,31,000 ஜெர்மானியர்களும், 6,92,000 ஹங்கேரியர்களும், 5,49,000 ருத்தேனியர்களும், 82,000 போலிஷ் காரர்களும், 1,86,000 யூதர்களும் இருக்கிறார்கள். இந்தச் சிறு பான்மை ஜாதியினர் அரசாங்க அமைப்பில் தங்களுக்கு இடம் வேண்டுமென்று உரிமையோடு கேட்பது ஒருபுற மிருக்கட்டும். ஜனத் தொகையில் பெரும்பான்மையோராயுள்ள ஜெக்கர் களும் ஸ்லோ வேகியர்களுமே தனித்தனியான ஜாதியினர் தானே? இவர்களை ஒன்று படுத்துவதும், இவர்களிடத்தில் தேசீய உணர்ச்சியைத் தட்டி யெழுப்புவதுமே ஒரு சிரமமான காரியம். இந்தச் சிரமமான காரியத்தை மஸாரிக் போன்ற தலைவர்கள் மேற்போட்டுக் கொண்டு சமாளித்தே வந்தார்கள். ஸ்லோவேகியர்களை விட ஜெக்கர்களுக்கு அதிகமான கல்வி அறிவும் அரசியல் அநுபவமும் இருந்தன. இதனால் இவர்களே பெரும் பான்மையோராக தேசீய இயக்கத்தில் ஈடுபட்டு அதனை நடத்தி வந்தார்கள். புதிய அரசாங்கம் அமைக்கும் தொண்டிலும் இவர்களே அதிகமாக ஈடுபட்டவர்கள். இதனால் ஸ்லோவேகியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்ட தாக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். இந்த முணுமுணுப்பு இன்னும் இருந்து கொண்டுதானிக்கிறது. 1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வரை பிரதம மந்திரியாயிருந்த டாக்டர் ஹோட்ஸா போன்ற ஒரு சிலர், ஸ்லோவேகிய ஜாதியைச் சேர்ந்தவர்களாயிருந்த போதிலும், பொதுவாக ஸ்லோவேகியர்கள் தங்களுடைய குறை களுக்கு இன்னும் பரிகாரம் தேடப்படவில்லை யென்றே கருது கிறார்கள். ஸ்லோவேகியர்கள் பிரிந்து, தனித்த ஒரு நாட்டினராக வாழ வேண்டுமென்ற ஓர் இயக்கம் இன்னுமிருக்கிறது. இதற்குத் தலைவன் லிங்கா (Hlinka) என்ற பாதிரி. இவன் 1938-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதத்தில்தான் இறந்து போனான். ஆனால் அதிருஷ்ட வசமாக இந்த இயக்கம் அவ்வளவு வலுப்பெறவில்லை. ஜெக்கர் களும் ஸ்லோவே கியர்களும் பிரிந்து வாழ முடியாது. ஸ்லோவே கியாவிலுள்ள ஒரு சிலர், இந்தப் பிரிவினைக்கு விதை விதைத்து வரு கிறார்களாயினும், தற்போதைய ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங் கத்தின் கட்டுப்பாடும், நிருவாக ஒழுங்கும் இந்த ஸ்லோவேகியர் களை அதனின்றும் பிரிந்து விடும்படி செய்யாது. ஆகையால் இதைப் பற்றி இப்பொழுது நாம் அதிகமான கவலை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினரில் பெரும்பான்மையோராக இருக்கின்றவர் ஜெர்மானியர்.1 இவர்கள் ஜெர்மனியின் தூண்டுதல் பேரில் அல்லது ஆதரவின் பேரில் கிளப்பிய சிறுபான்மையோர் உரிமைப் பிரச்னைதான், 1938-ஆம் வருஷம் செப்டம்பர் முதல் வாரத்தில், ஐரோப்பாவில் ஒரு பெரிய யுத்த மேகத்தைத் திரட்டிவிட்டது. ஆகவே, இந்த ஜெர்மானியர் பிரச் சினையைப்பற்றித் தனியாகவும் விரிவாகவும் அடுத்த அத்தியா யத்தில் பேசுவோம்.
ஜெர்மானியருக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் மாக்யார்கள் என்று சொல்லப்பட்ட ஹங்கேரியர்கள். இவர்கள் கிழக்கு ஸ்லோ வேகியாவில் ஹங்கேரிய எல்லைப்புறப் பிரதேசங்களிலும், கார்ப் பேத்திய ருத்தேனியாவின் தென் கிழக்குப் பிரதேசங்களிலும் குடி யேறி யிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள். ஹங்கேரிய ஆதிக்கத்திலிருந்து ஸ்லோவேகியா பிரிந்துவிட்ட பிறகு, இந்த ஹங்கேரிய ஜாதியைச் சேர்ந்த பல நிலச்சுவான்தார்கள், ஹங்கேரிக்கே திரும்பச்சென்று வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விவசாயிகளாயுள்ள மற்ற ஹங்கேரியர்களுக்கு ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கத் தினிடத்தில் எவ்வித விரோத உணர்ச்சியும் இருக்க வில்லை. ஏனென்றால், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், எப் பொழுதுமே சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எவ்வளவு சலுகை காட்ட வேண்டுமோ அவ்வளவு சலுகை காட்டி வந்திருக்கின்றனர். டாக்டர் பெனேஷ், குடியரசின் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டபோது இந்த ஹங்கேரியர்கள் இவனுக்கே வாக்கு கொடுத் தார்கள். ஆதலின் இவர்களிடமிருந்து அரசாங்கத்தார் எவ்வித எதிர்ப்பையும் எதிர்பார்க்க முடியாது.1
ருத்தேனியர்கள் பெரும்பாலும், கார்ப்பேத்தியன் ருத்தேனியா வில் வசிக்கிறார்கள். இவர்கள் முன்னர் ஹங்கேரிய ஆதிக்கத்துக்குட் பட்டிருந்தவர்கள். அந்த ஆதிக்கத்தின் கீழ் வசித்துவந்த சமூகத் தார்களில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் நிருவாகத்திற்குட்பட்ட பிறகு, கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை முதலியவற்றில் சிறிது முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இது மிகவும் சிரம சாத்தியமான காரியமாயினும், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் இதை முயற்சியுடன் செய்து வந்திருக்கின்றனர். ருத்தேனியர்கள் இந்த நன்றியை மறக்கவே முடி யாது. இதற்காகவேனும் இவர்கள் அரசாங்கத்தினிடம் விசுவாச முள்ளவர்களாயிருப்பார் களல்லவா?
போலிஷ்காரர்கள், டெஷேன் என்ற நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த ஜில்லாவிலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வசிக்கிறார்கள். போலந்துக்கும், ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் நேசப்பான்மை குறைவுபட் டிருப்பதால், இந்தப் போலிஷ்காரர் களுடைய சிறுகுறைகளும் அதிகப்படுத்தப் பெற்று வருகின்றன வென்பது உண்மை. ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங் கத்தார், இதனை ஒரு முக்கியமான உள்நாட்டுப் பிரச்னையாகக் கொள்ளவில்லை. உண்மையில் இஃது அவ்வளவு பெரிய பிரச்னையு மன்று. ஆனால் துரதிருஷ்ட வசமாக, ஜெர்மனியானது, பயமுறுத்தி ஸுடேடென் பிரதேசத்தை, ஜெக்கோ ஸ்லோவேகி யாவிடமிருந்து பறித்துக்கொண்டு விட்ட பிறகு, தானும் ஏன் இந்தச் சமயத்தில் தன் பங்கைக் கேட்கக்கூடாதென்பதுபோல் போலந்தும், தான் நீண்ட காலமாகக் கண்வைத்திருந்த டெஷேன் ஜில்லாவின் ஒரு பாகத்தைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது. இந்தக் கோரக் காட்சியை நாம் பின்னர்க் காணப்போகிறோமல்லவா?
VI ஜெர்மானியர்களின் குறைகள்
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமானது, இந்த ஜெர்மானியச் சிறுபான்மைப் பிரச்னைதான். ஐரோப்பாவிலுள்ள எந்த தேசத்துச் சிறுபான்மைச் சமூகத்தினரு டைய எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தாலும், ஜெக்கோ ஸ்லோ வேகியாவிலுள்ள ஜெர்மானியர்கள்தான் சிறுபான்மைச் சமூகத் தினரில் பெரும்பான்மையோராக இருக்கிறார்கள். அடுத்தாற் போலுள்ள போலந்தில் வசிக்கும் பல சிறுபான்மைச் சமூகத்தின ருள்ளும் உக்ரேனியர்கள் எப்படி பெரும்பான்மை யோராக இருக் கிறார்களோ, அப்படியே இந்த ஜெர்மானியர்களும் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் இருக்கிறார்கள். வார்சேல் சமாதான உடன் படிக்கையைத் தயாரித்தவர் களுக்கு இந்த விஷயம் தெரியாம லில்லை. ஜெர்மானியரில் ஒரு சிலரைப் பிரித்து, வேறொரு நாட்டிற்கு ஆட்படுத்தி வைப்பது இவர்களுடைய நோக்கமாயிருந்ததா, அல்லது ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு நிரந்தரமான ஒரு சிறுபான்மையோர் பிரச்னையை உண்டு பண்ணி வைக்க வேண்டுமென்பது இவர்கள் எண்ணமா என்கிற விஷயங்களில் இப்பொழுது நாம் பிரவேசிக்க விரும்பவில்லை. ஆனால் வார்சேல் சமாதான உடன்படிக்கை எத் தனையோ சங்கடங்களை உண்டுபண்ணியது போல் இந்தச் சிறு பான்மைச் சமூகப் பிரச்னையும் சிருஷ்டி செய்தது. இதனால் உலக வல்லரசுகளின் மனதில் ஒரு திகிலும் கவலையும் ஏற்படத் தொடங்கி விட்டன. ஜெர்மன் ஜாதியின் ஒற்றுமையை நிலைக்கச் செய்வதற் காகவும், அதன் புனிதத் தன்மையைக் காப்பாற்றுவதற்காகவும் தான் அவதாரமெடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஹிட்லர் - வார்சேல் சமாதான உடன் படிக்கையினால் ஏற்பட்ட அதிருப்தியி லிருந்து பிறந்த ஹிட்லர்-இந்தச் சிறுபான்மையோர் பிரச்னையை, தன்னுடைய ஏகாதிபத்திய விஸ்தரிப்புக்கான ஒரு கருவியாக உபயோகித்துக் கொண்டு வருகிறான். இதனை, வார்சேல் உடன் படிக்கையைத் தயாரித்தவர்கள் எதிர்பார்த்தே இருக்கமாட்டார்கள் அல்லவா?
ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள ஜெர்மானியர்கள், ஆஸ்திரி யாவின் வடக்கு எல்லையிலும் ஜெர்மனியின் கிழக்கு எல்லையிலும் உள்ள சுமார் எட்டு மாகாணங்களில் அல்லது எட்டு ஜில்லாக்களில் பெரும்பான்மையோராக வசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் மட்டுமே இந்தப் பிரதேசங்களில் வசிக்கிறார்களென்று சொல்ல முடியாது. இடையிடையே ஜெக்கர்களும் சிறுபான்மை யோராக வசிக்கிறார்கள். பெரும்பான்மையோராகவுள்ள இந்த ஜெர்மானியர் களுடைய பக்தியும் மனமும் ஜெர்மனியைச் சார்ந்திருப்பதுபோல, இவர்கள் வசிக்கிற பிரதேசங்களும் ஜெர்மானியைத் தழுவினாற் போல் இருப்பது ஒரு பெரிய விசேஷமில்லையா?
இங்ஙனம் மேற்கண்ட எட்டுப் பிரதேசங்களில் பெரும் பான்மையோராகவுள்ள ஜெர்மானியர்களிடையே சிறுபான்மை யோராக ஜெக்கர்கள் வசிப்பது, ஜெர்மானியர்களுக்குப் பிரதிகூல மாகவும், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்திற்கு அனுகூலமாக வும் இருக்கிறது. தவிர, ஜெக்கர்கள் பெரும்பான்மையோராக வசிக் கிற வேறு ஜில்லாக்களில் ஜெர்மானியர்கள் சிறுபான்மை யோராக வசிக்கின்றனர். ஆகவே, எந்த ஜாதியினரும், ஒரே இடத்தில் ஒரே ஜாதி யினராக வசிக்கவில்லை. சிறுபான்மையோர், பெரும்பான்மையோர் என்ற நிலையிலேதான் வசிக்கின்றனர். இதனால், ஜெக்கோ ஸ்லோ வேகியாவின் பிரதம மந்திரி ஒரு சமயம் கூறியவண்ணம், ஜாதி வாரியாக மாகாணத்தைப் பிரிப்பதா யிருந்தால் ஜெர்மானியர் பெரும்பான்மையோராக வசிக்கிற பிரதேசங் களில் 3,80,000 ஜெக்கர் கள் சிறுபான்மையோராகக் கஷ்டப்பட வேண்டி யிருக்கும். ஜெக்கர் கள் வசிக்கிற மற்றப் பிரதேசங்களில் 7,30,000 ஜெர்மானியர்கள் சிறு பான்மையோராகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இதனாலேயே, இந்த ஜெக்கோ ஸ்லோவேகியப் பிரச்னை ஒரு சிக்கலான பிரச்னை யாக இருக்கிறது.
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் வசிக்கிற ஜெர்மானியர்களுக்கு அநேக சாதகங்கள் இருக்கின்றன. இவற்றில் சில பரம்பரையானவை. பொதுவாக ஜெர்மானியர்கள் பொருளாதார விஷயத்திலும் கல்வி யிலும் அதிக முன்னேற்ற மடைந்திருக்கிறார்கள். ஜெர்மானியர்கள் வசிக்கிற பிரதேசங்களில்தான் பெரும் பான்மையானதும் முக்கிய மானதுமான கைத்தொழில்கள் இருக்கின்றன. ஜெக்கோ ஸ்லோவே கியாவின் மேற்குப் பாகத்தில் -அதாவது பொஹிமியாவில் -பெரும் பான்மையான ஒரு சமூகத்தினராக வசிப்பதால், ஒற்றுமையுடன் எல்லாக் காரியங்களையும் இவர்களால் செய்துகொள்ள முடிகிறது. மற்றும், அடுத்தாற்போலுள்ள ஜெர்மனி, நாளுக்கு நாள் தன் பலத்தைப் பெருக்கிக்கொண்டு வருவது இந்த பொஹிமிய ஜெர் மானியர்களுக்கு ஒரு பெருமையாகவும் பலமாகவும் இருக்கிறது. இவர்கள், ஜெக்கோ ஸ்லோவேகியா விஷயத்தில் அக்கரை காட்டு வதைவிட, ஜெர்மனியின் முன்னேற்ற விஷயத்தில் அதிக அக்கரை காட்டுவது ராஜதர்மத்திற்கு விரோதமாயிருக்கலாம்; ஆனால் ஜாதி உணர்ச்சியென்ப தொன்றிருக்கிறதல்லவா? மற்றும், பொஹிமியா, ஹாப்ஸ்பர்க் ஏகாதிபத்தியத்திற்குட்பட்டிருந்த சுமார் முந்நூறு வருஷ காலத்தில், ஜெர்மானியர்கள் அநேகவிதமான சலுகைகளைப் பெற்றுச் சுகமாக வாழ்ந்து வந்தார்கள். அரசாங்க உயர்தர உத்தி யோகங்களெல்லாம் இவர்களுக்கே கிடைத்து வந்தன. தவிர, ஜெர்மன் பாஷை அரசாங்க பாஷையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு ஒரு விசேஷ கௌரவமும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சரித்திர உண்மைகளை ஜெர்மானியர்களும், ஜெக்கர் களும் மறக்கவேயில்லை. சமீப காலம்வரை, ஒரு நாட்டிலே ஆதிக்கம் செலுத்தி விட்டு. அநேக விதமான உரிமைகளை அநுபவித்து விட்டு, இப்பொழுது அதே நாட்டில், மற்றப் பிரஜைகளைப் போல் சம உரிமை அநுபவிக்கிற போதோ, அல்லது சிறுபான்மையோர் என்று பிரிக்கப்பட்டு அது காரண மாகத் தயவினால் சில சலுகைகளைப் பெறுகிறபோதோ கொஞ்சம் மன வருத்தம் ஏற்படத்தானே செய்யும். ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் மீது ஜெர்மானியர்களுக்கு இருக்கிற குறைகளுக்கெல்லாம் இதுதான் மூலகாரணம். ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கமே இல்லாது போவதுதான், இவர்களு டைய குறைகளுக்கெல்லாம் ஒரு பரிகாரம். ஆனால் அது சாத்தியமா?
பூகோள அமைப்பு விஷயத்திலும் பொருளாதார விஷயத் திலும் தங்களுக்கிருக்கிற இந்த விசேஷமான சாதகங்களைக் கொண்டு ஸுடேடென் ஜெர்மானியர்கள், ஜெர்மனியோடு நெருங்கி தொடர்பு கொள்ளுகிற மாதிரியான முறையில் அரசியல் இயக்கங் களை ஆரம்பித்து நடத்திவரத் தொடங்கினார்கள். இதனால், ஹிட்லரின் ஜெர்மனியானது, தனது ராஜ்ஜியத்தைக் கீழ்த் திசைப் பக்கமாக விஸ்தரித்துக் கொண்டு போக வேண்டுமென்ற ஆசை யைப் பூர்த்திசெய்து கொள்ள வேண்டுமானால், ஜெக்கோ ஸ்லோ வேகியாவின் தலை மீது கை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமைக்குக் கொண்டு வந்தார்கள்.
இனி, இந்த ஸுடேடென் ஜெர்மானியர்களுடைய குறைகள் என்ன வென்று கவனிப்போம். இவர்களுடைய குறைகளில் ஒரு சில உண்மை யாயிருப்பினும், பெரும்பாலான குறைகள் மிகைப்படுத்திச் சொல்லப் படுவன என்பதை முதலிலேயே நாம் கூறிவிடுவது நல்லது. தவிர, சிறுபான்மைச் சமூகத்தினராயுள்ள ஜாதியாருக்கு எந்த நாட்டி லுமே ஏற்படக் கூடிய சில்லரைத் தொந்திரவுகள் இந்த ஸுடேடென் ஜெர்மானியர்களுக்கு அவ்வப்பொழுது ஏற்பட்டிருக்கலாம். இந்தத் தொந்திரவுகள், அரசாங்கத்தின் தூண்டுதலினாலோ, அல்லது சட்டங் களைப் பாரபட்சமாக உபயோகிப் பதனாலோ ஏற்பட்டன வென்பதை எந்த ஜெர்மானியனும் சொல்ல முடியாது. தங்களுடைய தாய் நாடான ஜெர்மனியில் யூதர்கள் எந்தவிதமாக நடத்தப்படு கிறார்கள் என்பதை இந்த ஸுடேடென் ஜெர்மானியர்கள் ஒரு கணம் நினைத்துப் பார்ப்பார்களானால், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங் கத்தார் தங்களை மிகவும் கண்ணியமாக நடத்தி வந்திருக் கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வார்கள். அரசாங்கத்தார் நல்ல எண்ணத் துடன் ஒரு சட்டம் இயற்றலாம்; அல்லது ஓர் உத்திரவு போடலாம். ஆனால் அதைக் கீழுத்தியோகஸ்தர்கள், சரிவரப் புரிந்து கொள்ளா மையினாலோ, அல்லது அதிகார மமதையினாலோ, அந்தச் சட்டத்தை அல்லது உத்திரவை துஷ்பிரயோகம் செய்வார் களயானால், அதற்காக அந்தந்த ஸ்தலத்திலேயே பரிகாரந்தேடிக் கொள்ள வேண்டுமே தவிர, எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவது முறையுமன்று; நியாயமுமாகாது. ஆனால் தற்போதைய ஸுடேடென் ஜெர்மானியர்களுடைய குறைகளெல்லாம் ஏறக் குறைய இத்தகைய சில்லரைக் குறைகளாயிருக்கின்றனவே தவிர, அரசாங்கத் தாரால் வேண்டுமென்றே சட்டபூர்வமாக இழைக்கப்பட்ட தீங்கு களாக இல்லையென்றுதான் நடுநிலைமை யிலிருந்து பார்ப்போர் அபிப்பிராயப்படுவார்கள்.
இந்தச் சில்லரைக் குறைகள்தான் என்ன?
1. ஜெர்மானியர் வசிக்கும் பிரதேசங்களில் ஜெர்மன் பாஷை உபயோகிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது.
2. அரசாங்க உத்தியோகங்கள், ஜெர்மானியர்களுக்கு, அவர்களுடைய ஜனத்தொகை விகிதாசாரப் படியோ, திறமைக் குத் தகுந்தபடியோ கொடுக்கப்படவில்லை.
3. ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் ஒரு குடியரசு அரசாங்கமாக அமைக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் சில அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன. இவை பெரும்பாலும், ஜெர்மன் நிலச்சுவான்தார்களுக்கு விரோதமாகவே கொண்டு வரப்பட்டன.
இந்தக் குறைகளை, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் தாருடைய திருஷ்டியிலிருந்து சிறிது கவனிக்கலாம்.
1. ஜெர்மன் பாஷையைத் தாய்ப் பாஷையாகக் கொண்டவர்கள் எந்தெந்தப் பிரதேசங்களில், மொத்த ஜனத் தொகையில் நூற்றுக்கு இருபது பேராயிருக்கி றார்களோ அங்கெல்லாம் நீதி ஸ்தலங்களிலும் மற்ற உத்தியோக சாலை களிலும், ஜெர்மன் பாஷையில் எழுதப்பட்டு வருகிற மனுக்கள், கடிதங்கள் முதலிய வற்றைக் கவனிக்க வேண்டுமென்று ஒரு சட்டம் இயற்றப் பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருகிற விஷயத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்; அல்லது சில்லரை உத்தியோகஸ்தர்கள், இந்தச் சட்டத்தை நிறைவேற்றி வைக்கும் விஷயத்தில் அசிரத்தை காட்டியிருக் கலாம். இஃது அரசாங்கத்தின் தவறாகுமா?
2. அரசாங்க உயர்தர உத்தியோகங்கள் அதிகமாக ஜெர்மானியர் களுக்குக் கொடுக்கப்படுவதில்லையென் பதில் ஓரளவு உண்மையிருக் கிறது. ஆனால், ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கம் ஏற்பட்ட காலத்தி லிருந்து அது விஷயத்தில் விரோத மனப்பான்மையையே காட்டி வந்திருக் கிறார்கள் ஜெர்மானியர்கள். தாங்கள் இந்த அரசாங்க சட்ட திட்டங் களுக்குக் கட்டுப்பட்டவர் களில்லை யென்கிற மாதிரியாக இவர்கள் பேசியும் கிளர்ச்சி செய்தும் வந்திருக்கிறார்கள். அப்படியிருக்கிற போது, இவர்களை நம்பி அரசாங்க உயர்தர உத்தியோகங்களை எப்படி இவர் களுக்குக் கொடுக்க முடி யும்? தாங்கள் நிறைவேற்றும் சட்டதிட்டங்கள் ஒழுங்கான முறையில் அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று நினைக்கிற எந்த அரசாங்கமும், தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான உத்தியோகஸ் தர்களை நியமித்துக் கொள்வது சகஜந்தானே.
3. விவசாய சீர்திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருகிற விஷயத்தில், ஜெக்கோ ஸ்லோவேகிய அர சாங்க உத்தியோகஸ்தர்கள், ஜெர்மன் நிலச்சுவான்தார்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டார்களென்பதை அர சாங்கத்தார் மறுக்க வில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அப்படித் தான் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால் ஜெர்மானியர் கள்தான், விஸ்தீரணமான சாகுபடி நிலங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். தவிர, பொதுஜனங் களுக்கு உபயோகப்படுகிற பொருள்கள் நிறைந்த ஏராளமான காட்டுப் பிரதேசங்கள் இந்த ஜெர்மானிய நிலச்சுவான் தார்கள் வசத்திலேயே இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்து பொது ஜனங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிற விஷயத்தில், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கண்டிப்பாகவே நடந்துகொள்ள வேண்டியிருந்தது.இனி நடுநிலைமையிலிருந்து சில விஷயங்களைக் கவனிப்போம்.
ஜெர்மானியர்கள் வசிக்கும் பிரதேசங்களில் உள்ள போலீஸ், ரெயில்வே, தபால் முதலிய இலாகாக்களின் சிப்பந்திகளில் பெரும் பான்மையோர் ஜெக்கர்கள். இவர்களுக்கு ஜெர்மன் பாஷை தெரி யாத காரணத்தினாலோ, அல்லது ஹாப்ஸ்பர்க் ஏகாதி பத்தியத்தின் கீழிருந்தபோது ஜெர்மானியர்கள் காட்டி வந்த மனோபாவத்திற்கு இப்பொழுது பழி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலோ, ஜெர்மானியர்களுக்குச் சில்லரைத் தொந்திரவுகள் கொடுத்திருக் கலாம். ஜெர்மன் பாஷை தெரியாத ஒரு ஜெக்க தபால்காரன், ஜெர்மன் பாஷையிலே விலாசம் எழுதப் பெற்ற ஒரு கடிதத்தைச் சரியான நேரத்திலோ, குறித்த நபருக்கோ பட்டுவாடா செய்யத் தவறி யிருக்கலாம். அல்லது ரெயில்வே ஸ்டேஷனில் டிக்கட் கொடுக்கும் ஜெக்க குமாஸ்தா, ஒரு ஜெர்மன் பிரயாணிக்கு, டிக்கட் கொடுக்கிற விஷயத்தில் தாமதப் படுத்தியிருக்கலாம். இவை யெல்லாம் பிரமாத மான விஷயங்களில்லை யானாலும், சில்லரை உத்தியோகஸ்தர்கள் செய்யும் சில்லரை விஷமங்கள், பெரிய மனத்தாங்கலை உண்டு பண்ணி விடுகின்றன வல்லவா? ஜெர்மானியர்களுடைய ஆதிக்கம் குலைந்து போன பிறகு, ஜெக்கர்களும், ஸ்லோவேகியர்களும், ஜெர்மன் பாஷையைப் பேசுவோரிடத்தில் பழி தீர்த்துக் கொள்கிற மனப் பான்மையைக் காட்ட வேண்டியதில்லை. அரசாங்கத்தார், விரிந்த நோக்கோடு எவ்வளவு சாதகமான சட்டங்களை ஏற்படுத்தியிருந்த போதிலும், அவை விஷயத்தில் ஜனங்கள் - அதிலும் அந்த அரசாங்கத் தின் நேரான பிரஜைகள் - காட்டும் மனப்பான்மை சரிவர இல்லாமற் போனால், அந்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமற் போவ தோடு, அரசாங்கத்தாரும் தவறாகக் கருதப்படுகின்றனர்.
அரசாங்கத்தார், ஜெர்மன் பாஷையும் ஜெர்மானிய நாகரிக மும், சீர்குலையாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டார்களென்று பார்ப்போம். ஜெர்மன் பாஷை எங்கெங்கு தாய் பாஷையாகப் பேசப்படுகிறதோ, அங்குள்ள ஜெர்மானியச் சிறுவர்களில் 100க்கு 97 பேர், ஆரம்பப் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று படிக்கிறார்கள். 100க்கு 93 பேர், ஜெர்மன் ஆசிரியர்களையே கொண்ட ஜெர்மானிய மத்தியதரப் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கல்வி பயிலுகிறார்கள். உயர்தரப் பள்ளிக் கூடங்கள் மொத்தம் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் 290 இருக்கின்றன. இவற்றில் 80 பள்ளிக் கூடங்கள் - அதாவது 100க்கு ஏறக்குறைய 27 1/2 சதவிகிதம் - முற்றிலும் ஜெர்மானியப் பள்ளிக் கூடங்களே. ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மொத்த ஜனத் தொகையில் ஜெர்மானியர் 100க்கு 22 1/2 பேரேயிருப்பினும், அவர்களுக்கென் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள், 5 சதம் அதிகமாகவே இருக்கின்றன. இவை தவிர ஜெர் மானியர்களுக்கென்று கீழ்க்கண்ட கல்வி ஸ்தாபனங்கள் இருக் கின்றன:
10 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கூடங்கள்.
52 விவசாயப் பள்ளிக்கூடங்கள்.
48 வியாபாரப் பயிற்சிப் பள்ளிக்கூடங்கள்.
98 கைத்தொழிற் பயிற்சிப் பள்ளிக்கூடங்கள்.
1 சர்வகலாசாலை.
2 கைத்தொழிற் சர்வ கலாசாலைகள்.
1 சங்கீதக் கழகம்.
1 சித்திர சாலை.
2 பாதிரிமார்களைப் பயிற்சி செய்வதற் கென்ற கழகங்கள்.
1938-ஆம் வருஷத்து அரசாங்க வரவு செலவு திட்டப்படி, சர்வ கலாசாலைகளுக்கென்று ஒதுக்கப்பட்ட தொகையில், 100க்கு 24 சத விகிதம், ப்ரேக் நகரத்திலுள்ள ஜெர்மன் சர்வகலா சாலைக்கும், கைத் தொழிற் பள்ளிக்கூடங்களுக்கென்று பிரிக்கப்பட்டிருக்கும் தொகை யில் 100க்கு 29 சதவிகிதம் இரண்டு ஜெர்மானிய கைத்தொழிற் சாலை களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தவிர, ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள மொத்தப் பள்ளிக் கூடங் களையும், ஜனத்தொகை விகிதத்தையும் கணக்கெடுத்துப் பார்ப்போம். 815 ஜெக்கர்களுக்கு ஒரு பள்ளிக்கூட விகிதம் அல்லது 127 ஜெக்கப் பிள்ளை களுக்கு ஒரு பள்ளிக்கூட விகிதம் இருக்கிறது. அப்படியே 815 ஜெர்மானியர் களுக்கு ஒரு பள்ளிக்கூட விகிதம் அல்லது 115 ஜெர்மானியப் பிள்ளை களுக்கு ஒரு பள்ளிக் கூட விகிதம் இருக்கிறது. இதனால் ஜெர்மானியப் பிள்ளைகள் குறைவாக இருந் தாலும் அவர்களுக்கு அதிகமான பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன வென்பது விகசிதமாக வில்லையா?
பிரஜா உரிமை விஷயத்திலும் ஜனப் பிரதிநித்துவ விஷயத் திலும் ஜெர்மானியர்களுக்கு எல்லாவித சௌகரியங்களும் அளிக்கப் பட்டிருக்கின்றன. ஜனத்தொகை விகிதப்படி இவர்களுக்கு எல்லா ஸ்தல ஸ்தாபனங்களிலும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானிய ஆசிரியர்கள் உள்ள பள்ளிக் கூடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்கவும் இவர் களுக்கு உரிமையுண்டு.
இவை மட்டுமல்ல, இவர்களுடைய ஜனத்தொகை விகிதப்படி இவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்கள் கொடுக்க வேண்டுமென்று 1937-ஆம் வருஷம் அரசாங்கம் ஓர் உத்திரவு பிறப்பித்தது. இந்த விகிதாச்சாரம் பூர்த்தி செய்யப்படவில்லை யென்பது உண்மை. ஜெர்மானிய ஜனத்தொகையில் 100க்கு 12 அல்லது 14 ஜெர்மானி யர்களே அரசாங்க உத்தியோகஸ்தர்களாயிருக்கிறார்கள். ஜெர்மானி யர்களை இன்னும் அதிகமாக நியமிக்கப்பட முடியாமைக்குக் காரணம், ஜெக்க பாஷையும், ஜெர்மன் பாஷையும் தெரிந்த ஜெர் மானியர்கள் அகப்படுவது அருமை யாயிருக்கிறதென்று அரசாங் கத்தார் கூறுகின்றனர்.
ஜெக்கோ ஸ்லோவேகிய பார்லிமெண்டிற்கு ஸுடேடென் ஜெர்மானியர்கள், பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்தனுப்புகிறார்கள். ஜெர்மானியர்களுடைய குறைகளை எடுத்துச் சொல்லி அவர் களுடைய உரிமையை வலியுறுத்தும் பொருட்டு ஜெர்மன் பாஷை யிலேயே ஜெர்மானியர்களால் நடத்தப்பெறும் பத்திரி கைகள் பல வெளியாகின்றன. இவை தாராளமாக அரசாங்கத்தைக் கண்டித்து வருகின்றன. பத்திரிகைச் சட்டமொன்றும் இவற்றை அடக்க வில்லை. ஜெர்மானியக் கட்சியினர், அரசாங்கத்தாருக்கு விரோதமான, தீவிரமான பிரசாரஞ் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக ஹெல்லைன் கட்சிக்கு ஆங்காங்கு கிளை ஸ்தாபனங் கள் உண்டு. இந்த ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் பிரசங்கங்கள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் தங்களுடைய உரிமைகளை ஸ்தாபித்துக் கொள்ளுகிற முகாந்திரத்தைக் கொண்டு அரசாங்கத்தைப் பலமாகத் தாக்கிப் பிரசாரஞ் செய்து வருகின்றனர். ஜெக்கோ ஸ்லோவேகியா, ஒரு ஜனநாயகக் குடியரசு நாடாக இருப்ப தனால் இவ்வளவு தூரம் ஜெர்மானியர்களுக்குச் சலுகை காட்டி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய ஐரோப்பாவி லேயுள்ள மற்றச் சிறிய நாடுகளில் வசிக்கும் சிறுபான்மைச் சமூகத்தினர் எந்த விதமாக நடத்தப்படுகின்றனர் என்பதை நாம் சிறிது பரிசீலனை செய்து பார்க்கிற போது, ஜெக்கோ ஸ்லோவே கியாவிலுள்ள ஜெர்மானி யர்கள் மிகவும் தாராள மனப்பான்மை யுடன் நடத்தப் படுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
பொஹிமியாவில் ஜெர்மானியர்கள் வசிக்கும் பிரதேசங்கள், ஹாப்ஸ்பர்க் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த காலத்தில் கைத்தொழிற் பெருக்கத்திலும் பொருளாதாரச் செழிப்பிலும் திளைத்திருந்தன. ஆனால் பின்னர் 1929-30-ஆம் வருஷத்து உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து மிகக் கேவலமான நிலைமைக்கு வந்துவிட்டன. தூங்கிக் கொண்டிருக்கிற இயந்திரங்கள் நிறைந்த தொழிற்சாலைகளும், ஓடாத தறிகளும், சூனியமான நிலக்கரிச் சுரங்கங்களுமே இங்குக் காட்சி தரலாயின. பொருளாதாரத் துறை யில் தாங்கள் ஓங்கி நின்ற காலத்தில், தங்களுடைய மற்றக் குறை களை மறந்து விட்டிருந்தார்கள் ஜெர்மானியர்கள். பொருளாதார மந்தம் ஏற்படவே, இல்லாத குறைகளெல்லாம் இவர்கள் உள்ளத் திலே விதை போடத் தொடங்கின.
இந்த நிலை இவர்களுக்கு ஏற்பட்டதன் காரணமென்ன? உலகப் பொருளாதார மந்தம் ஒன்று மட்டுமே இவர்களைப் பாதித்துவிட்டதா? அல்லது வேறு காரணங்களுமுண்டா?
முதலில் நாம் கூறியுள்ளபடி இந்த பொஹிமியா பிரதேசந்தான், கைத்தொழிற் பெருக்கத்துக்குத் தேவையான எல்லாச் சாதனங்களை யும் பெற்றிருந்தது. நிலக்கரி, இரும்பு முதலிய மூலாதாரப் பொருள் களெல்லாம் இங்கே ஏராளமாகக் கிடைக்கின்றன. தேவைக்கதிக மான பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய சாதனங்கள் இங்கு உண்டு. ஆதலின், இங்குள்ள தொழிற் ஸ்தாபனங்கள், வெளிநாட்டுத் தேவைகளை அநுசரித்தே பொருள்களை உற்பத்தி செய்து வந்தன. அதாவது, ஏற்றுமதி வியாபாரத்தைக் கொண்டுதான் இங்குள்ள கைத்தொழில் முதலாளிகள் வாழ்ந்து வந்தார்கள் என்று சொல்ல லாம். இந்த வெளிநாட்டு ஏற்றுமதி சுருங்கினால், இந்தத் தொழிற் சாலை இயந்திரங்களின் ஓட்டமும் கொஞ்சம் குறையத்தான் செய்யும். 1929-30-ஆம் வருஷத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம், இந்த ஏற்றுமதி வியாபாரத்தை ஓரளவுக்குப் பாதித்து விட்டது. அதனோடு, ஒவ்வொரு நாடும் பொருளாதாரத் துறையில் பிற நாடுகளின் தயவை எதிர்பார்க்கக் கூடாதென்றும், தமது தேவை களைத் தாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்றும் அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் எழுந்த தேசீய உணர்ச்சியானது, இந்த பொஹிமிய ஏற்றுமதி வியாபாரத்தை அதிகமாகப் பாதித்து விட்டது. சிறப்பாக, ஜெர்மனிக்குத்தான் அதிகமான சாமான்களை பொஹிமியா ஏற்றுமதி செய்து கொண்டு வந்தது. 1930-ஆம் வருஷம் ஜெர்மனியில் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதல்லவா?1 அது, பொஹிமியாவின் கைத் தொழிற்சாலைகளுக்குப் பெரிய வினையாக வந்து சேர்ந்தது. உதாரணமாக, 1929-ஆம் வருஷம், ஜெர்மனிக்கு அனுப்பப்பெற்ற பொஹிமிய சரக்குகளின் மதிப்பு சுமார் 40,000 கிரவுன்; ஆனால் 1930-ஆம் வருஷத்தில் - அதாவது ஒரு வருஷத்திலேயே - இந்த ஏற்றுமதி, 10,000 கிரவுனுக்குக் குறைந்து விட்டது. இதே மாதிரி, பொஹிமிய சாமான்கள் எங்கெங்குச் சென்று கொண்டிருந்தனவோ, அந்த நாடுகளிலெல்லாம், ஜெர்மனியும், ஜப்பானும் போட்டி போட்டிக் கொண்டு, தங்கள் சாமான்களைக் கொண்டு திணித்துவிட்டன. ஆகவே, உலகப் பொருளாதார மந்தம், வியாபாரப் போட்டி முதலிய யாவும், பொஹிமியாவிலுள்ள ஜெர் மானியர்களையே அதிகமாகத் தாக்கிவிட்டன. இதனால் கைத் தொழிலையே நம்பிக்கொண்டிருந்த ஜெர்மானியர் களிடையே, பஞ்சம், பிணி, வறுமை எல்லாம் குடிபுகத் தொடங்கின. 1933-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் எடுக்கப் பெற்ற ஒரு கணக்கின்படி ஜெக்கோ ஸ்லோவேகியாவில் 9,20,000 பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பாதிப்பேர் ஜெர் மானியர்கள்!
ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், இங்ஙனம் வேலை யில்லாமல் திண்டாடுவோருக்கு, கஷ்ட நிவாரணமாகச் சிறு தொகை யும் இலவச உணவும் கொடுத்து வந்தார்கள். இது மிகவும் குறைவு தான். ஆனால் இதற்காக அரசாங்கத்தாரையும் குறை கூற முடியாது. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய செல்வ நிலைக்குத் தகுந்த படியும், மற்ற வரவு செலவினங்களை உத்தேசித்துந்தானே கஷ்ட நிவாரணத்திற்கு உதவி செய்ய முடியும். ஆனால் பொதுஜனங்கள் இதை அறிவார்களா? தங்களுக்கேற்பட்ட குறைகளுக்கெல்லாம் பரிகாரந் தேடிக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை யென்றுதானே கருது கிறார்கள்.
ஜெர்மானியர்களுக்கு ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் அளித்த கஷ்ட நிவாரண உதவியானது, அவர்கள் பசியால் மரண மடைந்து போகாமலிருக்கும்படி தடுத்து நின்ற தென்றும், இந்த ஆகாரக் குறைவினால் அவர்கள் நோய்களுக்கு எளிதில் இரையாகி விடுவது சர்வ சாதாரணமாயிருந்ததென்றும், சிறப்பாகச் சிசுமரணம் அதிகமாகிக் கொண்டு வந்ததென்றும், ஜெர்மனிக்கு அநுதாபஞ் செலுத்துகிறவர்கள் கூறுகிறார்கள். இஃது ஓரளவு உண்மைதான். இதில் மிகவும் வருந்தத்தக்க விஷய மென்னவென்றால், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தினிடம் ஜெர்மானியர்கள் கொண்டுள்ள மனப்பான்மைதான். தங்களை இந்த நாட்டிலிருந்து அடியோடு ஒழித்துவிட வேண்டுமென்பதே ஜெக்கர்களின் நோக்கம் என்று ஜெர் மானியர்கள் நினைத்துவிட்டார்கள். இது தவறு என்பதில் என்ன சந்தேகம்!
ஆனால், 1935-ஆம் வருஷத்திற்குப் பிறகு பொஹிமியாவி லுள்ள ஜெர்மானியர்களின் பொருளாதர நிலைமையில் ஓரளவுக்கு அபிவிருத்தி ஏற்பட்டுவந்தது. 1929-ஆம் வருஷத்திற்கு முன்னிருந்த செழிப்பை இவர்கள் மீண்டும் எதிர்பார்க்க முடியவில்லை யாயினும், படிக்குப் பாதியென்கிற நிலைமைக்கு வந்தார்கள்.
இங்ஙனம் ஜெர்மானியத் தொழிலாளர் எதிர் பாராததும் தவிர்க்க முடியாததுமான சில காரணங்களால் பாதிக்கப்பட்ட தோடு கூட, அரசாங்கத்தார் எடுத்துக்கொண்ட சில நடவடிக்கை களினாலும் பாதிக்கப் பட்டனர். ராணுவத்திற்கு உபயோகமான பொருள்களைத் தயாரிக்கும் சில தொழில் ஸ்தாபனங்கள், இதற்கு முன்னர், தற்போதைய ஸுடேடென் பிரதேசத்தில் இருந்தன. இவற்றை அரசாங்கத்தார், சில அரசியல் காரணங்களுக்காக, தேசத் தின் உட்பிரதே சங்களுக்கு மாற்றிவிட்டார்கள். எனவே இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருந்த ஜெர்மானியத் தொழிலாளர்கள், தங்களுடைய வீடு வாசல்களை விட்டுவிட்டு தொழிற்சாலைகள் மாற்றப்பட்ட இடங்களுக்குப் போக முடியாமல் நின்றுவிட்டார்கள். இதனால் இவர்களிடையே வேலை யில்லாத் திண்டாட்டம் அதிகமாகப் பரவலாயிற்று. இவர்களுடைய மனக் கசப்பும் அதிகமாயிற்று.
இன்னும், சில சந்தர்ப்பங்களில், சில முதலாளிகள், தங்களின் தொழிற்சாலைகளை, குறைந்த கூலி விகிதத்தில் தொழிலாளர்கள் எங்கு அகப்படுகிறார்கள் என்பதை உத்தேசித்தும், தங்கள் தொழி லுக்குத் தேவையான மூலப் பொருள்கள் எங்கு கிடைக் கின்றன வென்பதைக் கருதியும், முன்னர் ஜெர்மானியப் பிரதேசங் களிலிருந்த தங்கள் தொழிற் சாலைகளை வேற்றிடங்களுக்கு மாற்றியிருக் கிறார்கள். இது காரணத்தினாலும், அநேக ஜெர்மானியத் தொழி லாளர்கள் சிரமப்பட வேண்டியதாயிற்று. உதாரணமாக எல்லைப் புறத்திலுள்ள ரொதாவ் (Rothau) என்ற ஊரில் ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலை இருந்தது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனை, முதலாளிகள், ஜெக்க ஜில்லா விலுள்ள ப்ரீடெக் (Friedek) என்ற ஊருக்கு மாற்றிவிட்டார்கள். ரொதாவில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளரில் சுமார் 800 ஜெர்மானியரை, புதிய இடத்திற்கு மாற்றிக் கொள்வதென்று முதலாளிகள் தீர்மானித் தார்கள். ஆனால் இது தெரிந்து கொண்ட ப்ரீடெக் தொழிலா ளர்கள் வேலை நிறுத்தஞ் செய்தார்கள். விளைவு என்ன? ஜெர்மானியத் தொழிலாளர்களில் 200 பேரையே புதிய இடத்தில் சேர்த்துக் கொள்வதாக முதலாளிகள் இணங்கினார்கள். இங்ஙனம் தொழிற்சாலையை இடம் விட்டு இடம் மாற்றின முத லாளிகள் யார்? ஜெர்மானியர்! இது நடந்தது எப்பொழுது? 1936-ஆம் வருஷத்தில்.
இன்னும் சில இடங்களில், ஜெர்மானியர்களுக்குக் கொடுக் கப்பட்ட கூலி விகிதத்தை விடக் குறைந்த கூலியை ஜெக்கர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் அந்த வேலையைச் சரிவரச் செய்துவிட்டுப் போனார்கள். இதனால், வேலைவாங்குகிறவர்கள், ஜெக்கர்களையே வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஆகவே ஜெர்மானியர் களுக்கு வேலை யில்லாமல் போய்விட்டது.
தவிர, ஜெக்கர்கள், தங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் சலுகையும் கிடைக்கிறதென்று தொழில் போட்டி போடத் தொடங் கினார்கள். இதனாலும் ஜெர்மானியர்கள் மனக் கொதிப்படைய லானார்கள். ஓரிரண்டு உதாரணங்களினால் இதனை விளக்குவோம்.
ஜெர்மானியர்கள் வசிக்கிற ஒரு நகரத்தில் ஏதேனும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டியிருக்கும். உள்ளூரில் வேலை யில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் ஜெர்மானியர்கள் தங்களுக்கு இதில் வேலை கிடைக்குமென்று திரளாக வந்து கூடுவார்கள். ஆனால், ஜெக்க ஜாதியைச் சேர்ந்த ஒரு கண்டிராக்டர், இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டு மென்று உத்திரவு பெற்றிருப்பான். அவன், உள்ளூரிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களை விட்டு விட்டு, வேறிடத்திலிருந்து ஜெக்கத் தொழிலாளர்களை மோட்டார் லாரிகளில் அழைத்து வந்து காரியத்தை முடித்து விடுவான்.
ஜெர்மானியர்கள் வசிக்கிற ஓர் ஊரில், 1936-ஆம் வருஷத்தில் ரெவினியு ஆபிஸுக்கென்று ஒரு கட்டிடம் கட்டவேண்டியிருந்தது. உள்ளூரிலுள்ள ஜெர்மன் கண்டிராக்டர்கள், இந்த வேலையை எங்கு ஜெக்க கண்டிராக்டருக்கு அதிகாரிகள் கொடுத்துவிடப் போகிறார் களோவென்று அஞ்சி, தங்களுக்கே இந்தக் கட்டிட வேலையைக் கொடுக்க வேண்டு மென்று, அரசாங்க மந்திரிச் சபைக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்கள். இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட உத்தியோகஸ்தன் ஒரு ஜெர்மானியன். ஜெர்மானியக் கண்டிராக்டர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்பது இவனுடைய ஆவல். ஆனால், ஜெக்க கண்டிராக்டர்கள் எவ்வளவு தொகையில் இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடித்துக் கொடுப்பதாக விண்ணப்பங் கள் கொடுத்தார்களோ, அந்தத் தொகையை விட, ஜெர்மானிய கண்டிராக்டர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்டுள்ள தொகையானது குறைந்த பட்சம் இரண்டு லட்சம் கிரவுன்களுக்கு அதிகமாகவே இருந்தது. ஜெர்மானிய உத்தியோகஸ்தன்தான் என்ன செய்வான்? ஜாதி அபிமானத்திற்காக, அரசாங்க பொக்கிஷத்திலிருந்து அதிகமான பணத்தைச் செலவழிக்குமாறு இவன் எப்படி மேலதிகாரி களுக்குச் சொல்ல முடியும்? ஜெக்க கண்டிராக்டர்கள் இங்ஙனம் குறைந்த கட்டணங்களில் வேலை முடித்துக் கொடுப்பதற்கு ஜெர்மானிய கண்டிராக்டர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்? ஒப்பந்தத்தில் குறிக்க பட்டுள்ளபடி, சாமான்களை இந்த ஜெக்க கண்டி ராக்டர் கள் உபயோகிப்ப தில்லை யென்றும், மலிவான சாமான்களையே உபயோகிக்கிறார் களென்றும், இதனை, மேலதிகாரிகளாயுள்ள ஜெக்கர்கள் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருந்துவிடு கிறார்களென்றும், ஆனால் அதேமாதிரி மலிவான சாமான்களை ஜெர்மானிய கண்டிராக்டர்கள் உபயோகித்தால், அதற்கு அநேக குறைகள் சொல்லப்படுகின்றன வென்றும் கூறுகிறார்கள்.
இஃதொரு சிக்கலான பிரச்னை. மேற்கூறப்பட்ட மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தமையால் பொதுவாக ஜெர் மானியர்கள் என்ன நினைக்கத் தொடங்கி விட்டார்கள்? தங்களைப் பூண்டற்றுப் போகச் செய்துவிட ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங் கத்தார் கங்கணம் கட்டியிருப்பதாகக் கருதிவிட்டார்கள்.
இவர்கள் இந்த மனப்பான்மை கொண்டதற்குக் காரணம், ஐரோப்பிய யுத்த முடிவு காலத்திலிருந்தே தொடங்குகிறது. அந்தக் காலத்தில், இந்த பொஹிமிய ஜெர்மானியர்கள், தாங்கள் ஆஸ்திரி யாவுடனாவது ஜெர்மனியுடனாவது சேர்ந்து கொள்ள வேண்டு மென்று கோரினார்கள். இப்படி இவர்கள் கோரியதற்குத் தக்க காரணங்களும் இல்லாமல் இல்லை. பாஷை, நாகரிகம், ஜாதி எல்லா வற்றிலும் இவர்கள் ஜெர்மானியர்களோடு ஒற்றுமைப்பட்டவர் களாயிருந்தார்கள்.
இந்தக் கோரிக்கையை ஜெக்கத் தலைவர்கள் பலமாக எதிர்த் தார்கள். பொஹிமிய ஜெர்மானியர்கள் எப்பொழுதுமே ஆஸ்திரியா வையோ, ஜெர்மனியையோ சேர்ந்திருக்கவில்லையென்றும், பொஹிமிய அரசுக்குட் பட்ட பிரஜைகளாகவே இருந்தார்களென்றும் வாதித் தார்கள். மற்றும், பொஹிமியாவுக்கு மேற்குப் புறமாயுள்ள மலைத் தொடர்கள்தான், புதிதாக அமையப் போகும் ஜெக்கோ ஸ்லோ வேகிய நாட்டுக்கும் எல்லையாக அமைய வேண்டுமென்றும், அந்த எல்லை இல்லாவிட்டால், ஜெக்கோ ஸ்லோவேகியா, எப்பொழுதுமே ஜெர்மனிக்குப் பயந்து கொண்டிருக்க வேண்டுமென்றும் ஜெக்கத் தலைவர்கள் வாதித்தார்கள். மத்திய ஐரோப்பாவில், ஜெர்மானிய ஆதிக்கம் இல்லாதபடி செய்துவிட வேண்டு மென்று முனைந்திருந்த நேசக் கட்சித் தலைவர்கள் இந்த வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டார்க ளென்பதில் என்ன ஆச்சரியம்?
ஆனால் இந்த வாதத்திலிருந்து ஒரு விஷயம் புலனாகிறது. ஜெக்கோ ஸ்லோவேகியா தனி நாடாக உருக்கொண்ட காலத்தி லிருந்தே, ஜெக்கத் தலைவர்கள் ஜெர்மனிக்குப் பயந்திருந்தார்கள்! ஆனால் இந்த ஸுடேடென் ஜெர்மானியர்கள், தங்களுடைய புதிய அந்தஸ்தை - அதாவது ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் பிரஜை களாக - அப்படியே திருப்தியாக அங்கீகரித்துக் கொண்டார் களென்று சொல்ல முடியாது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் முணு முணுத்துக் கொண்டு தானிருந்தார்கள். இந்த முணுமுணுப்புத்தான், பின்னர் ஏற்பட்ட தொந்திரவுகளுக்கெல்லாம் காரணம் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
VII அரசாங்கத்தின் முயற்சிகள்
ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள ஜெர்மானியர்களிடையே மூன்று விதமான அரசியல் கட்சிகள் இருந்தன. ஜெர்மானியக் குடி யானவர் கட்சி, கிறிஸ்தவ சோஷல் கட்சி, அபேதவாத ஜனநாயகக் கட்சி என்பவையே இவை. இந்த மூன்று கட்சியினரும் குடியரசு ஆரம்ப காலத்திலிருந்து பார்லிமெண்டில் ஸ்தானம் வகித்து வந்தார்கள். இவர்களுக்கு மந்திரிச்சபையிலும் மூன்று ஸ்தானங்கள் கிடைத்து வந்தன. ஜெர்மன் வாக்காளர்களில் 100-க்கு 65 பேர் இவர் களுக்கு ஆதரவாகவே 1933-ஆம் வருஷம் வரை ஓட்டுப்போட்டு வந்தார்கள். ஆனால் 1935-ஆம் வருஷம் மே மாதம் நடைபெற்ற தேர்தலில், இந்த மூன்று கட்சியினரும், 100-க்கு 40-விகிதமே ஓட் பெற்றார்கள். ஏனென்றால், இந்தக் காலத்தில் கோன்ராட் ஹென் லைனைத் தலைமையாகக் கொண்ட ஸுடேடென் ஜெர்மானியக் கட்சிக்குச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. இந்தக் கட்சியினரும் மேற்படி தேர்தலில் அபேட்சகர்களாக நின்றார்கள். இவர்களுக்கு 100-க்கு 60-விகிதம் ஓட்டுகள் கிடைத்தன. ஜனப்பிரதிநிதி சபையில், ஹென்லைன் கட்சியைச் சேர்ந்த 42 பேர் பிரதிநிதிகளாக அமர்ந் தார்கள். ஆனால் இந்தக் கட்சியினர் மேற்படி மூன்று கட்சியினரைப் போல அரசாங்க நிருவாகத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள்.
இதற்கிடையில் பிரதம மந்திரியான டாக்டர் ஹோட்ஸா, மந்திரிச் சபையிலிருந்த மூன்று ஜெர்மானிய அங்கத்தினர்களையும், ஜெர்மானியர் களுடைய குறைகள் என்னவென்பதையும், அவற்றிற்கு என்ன விதமான பரிகாரங்களை எதிர்பார்க்கிறார்களென்பதையும் குறிப்பிட்டு ஒரு யாதாஸ்து தயாரிக்கும்படி கூறினான். இந்த விஷயத் தில் ஹென்லைன் கட்சினரையும் ஒத்துழைக்குமாறு அழைத்தான். இங்கு ஒரு விஷயம் குறிப்பிடவேண்டுவது அவசியமாகும். டாக்டர் ஹோட்ஸா, சிறுபான்மையோரான ஜெர்மானி யரைத்தான் சமர ஸத்திற்கு அழைத் தானே தவிர, மற்றச் சிறுபான்மைச் சமூகத் தினரான ஹங்கேரியர்கள், போலிஷ்காரர் முதலியோரை அழைக்க வில்லை. அழுகிற குழந்தைக்குத்தான் பால் போட்டமுன்வருகிறாள் தாயார்!
மேலே குறிப்பிட்ட மூன்று ஜெர்மானிய மந்திரிகளும் சேர்ந்து தயாரித்துக் கொடுத்த யாதாஸ்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு அரசாங்கத்தார், சிறுபான்மைச் சமூகத்தினரின் உரிமைகள் சம்பந்தமாக அறிக்கையொன்றை 1937-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் வெளியிட்டனர். இந்த அறிக்கையில் ஆறு முக்கிய அம்சங்கள் அடங்கியிருந்தன. அவை வருமாறு:
1. அரசாங்க சம்பந்தமாக விடப்பெறும் கண்டி ராக்டுகள் விஷயத்தில், உள்ளூர் முயற்சிகளுக்கும், உள்ளூர் வேலைக்காரர்களுக்கும் சலுகை காட்டப்படும்.
2. ஜெர்மானியர்கள் எங்கெங்கு பெரும்பான்மை யோராக இருக் கின்றனரோ, அங்கெல்லாம், சமுதாய சேவை, சுகாதார வேலைகள், சிசு பரிபாலனம் முதலியன ஜெர்மானி யர்களாலேயே நடத்தப்பெறும்.
3. ஜெர்மானியர்களுக்கு இன்னும் அதிகமான அரசாங்க உத்தியோகங்கள் கொடுக்கப் பெறும். ஜெக்க பாஷையில் தேர்ச்சி பெற வேண்டியதன் சம்பந்தமான நிபந்தனைகள் தளர்த்தி விடப்படும். உத்தியோக அபேட்சகர்கள் எந்தெந்த உத்தி யோகங்களுக்கு மனுப் போடு கிறார்களோ அந்தந்த உத்தியோ கங்களுக்குத் தேவையான அளவுக்கு ஜெக்க பாஷையில் தேர்ச்சி பெற்றால் போதுமென்று நிர்ணயிக்கப்படும். ஆனால் அரசாங்க விசுவாசிகளாயிருக்கிறார்கள் என்ற நிபந்தனையின் பேரில்தான் உத்தியோகங்கள் கொடுக்கப்படும்.
4. ஜெர்மானியப் பிரதேசங்களிலுள்ள எல்லா அர சாங்க ஸ்தாபனங் களும், தாங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு, ஜெர்மன் பாஷையில் மொழி பெயர்த்த நகல்களை இணைத்து அனுப்ப வேண்டுமென்று உத்திரவு செய்யப்பட்டிருக்கிறது. கடிதங்களைப் பெறுவோர் வேண்டினாலும், வேண்டிக் கொள்ளாவிட்டாலும், இந்த ஜெர்மன் மொழிபெயர்ப்பு கூடவே அனுப்பப்பெற வேண்டும். இதற்கென்று விசேஷ கட்டணம் ஒன்றும் வசூலிக்கக் கூடாது.
5. சிறுபான்மைச் சமூகத்தினருடைய கல்வித் தேவைக் காக, அரசாங்கத்தார் தங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் ஒரு தொகையை ஒதுக்கி வைப்பார்கள்.
6. சிறுபான்மைச் சமூகத்தினருடைய உரிமைகளுக்குப் பாதகம் விளை விக்கக் கூடியமாதிரி ஸ்தல ஸ்தாபனங்களில் அநுஷ்டிக்கப்படுகிற குறைகளை விசாரித்து அவைகளுக்குப் பரிகாரந்தேடித் தரப்படுமென்று அரசாங்கத்தார் உறுதி கூறுகின்றனர்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள எல்லாச் சிறுபான்மை சமூகத்தினர் விஷயத்திலும் இந்தக் கொள்கைகள் அநுஷ்டிக்கப்படும்.
இந்த அறிக்கை வெளியான பிறகு, ஜெர்மானியர்களுடைய நிலைமை சிறிது விருத்தியடைந்த தென்பதை யாரும் ஒப்புக் கொள்ளவே வேண்டும். ஜெர்மானியர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. இதே மாதிரி ஜெக்க அதிகாரிகளின் சில்லரைத் தொந்தரவுகளும் நின்று விட்டன. இந்த விஷயங்களில் குடியரசின் பிரசிடெண்டாகிய டாக்டர் பெனேஷும், டாக்டர் ஹோட்ஸாவும் தாங்களே நேரில் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். அரசாங்கத்தார் சிறுபான்மைச் சமூகத்தினர் விஷயமாக விடுக்கும் உத்திரவுகள் சரிவர நிறைவேற்றப் படு கின்றனவா வென்பதை இவர்கள் விஷேமாகக் கவனித்து வந்தார்கள். டாக்டர் பெனேஷ் கூறுகிற மாதிரி, இந்த மாதிரியான விஷயங்களில் கொஞ்சம் ராஜ தந்திரத்துடன் நடந்து கொண்டுவிட்டோமானால், அநேக சிக்கல்களை அறுத்துக் கொண்டு போய்விடலாம்.
இது சம்பந்தமாக டாக்டர் பெனேஷையும், பிரதம மந்திரி ஹோட்ஸாவையும் நாம் அதிகமாகப் பாராட்டக் கடமைப்பட்டி ருக்கிறோம். இந்தச் சிறுபான்மைப் பிரச்னையை எவ்வளவு தூரம் விசால மனப்பான்மையுடனும் நல்லெண்ணத்துடனும் கவனித்து வர முடியுமோ அவ்வளவு தூரத்திற்குக் கவனித்து வந்திருக்கின்றனர். 1938-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஜெர்மானியக் கட்சியினர், மந்திரிச் சபையிலிருந்து விலகிக் கொண்டு விட்ட பிறகு கூட, ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியின் பிரதிநிதியான டாக்டர் நியுவர்த் (Dr.Neuwirth) என்பவனுக்கு ஹோட்ஸா பேட்டி கொடுத்து, ஸுடேடென் ஜெர் மானியர்களின் கோரிக்கைகளை ஒரு திட்ட மாகத் தயாரித்துக் கொடுக்கும்படி கோரினான். இதன் பிறகு, சிறுபான்மைச் சமூகத் தினரின் உரிமைகள் சம்பந்தமாகத் தற்போதுள்ள எல்லா சில்லரைச் சட்டங்களையும் ஒன்று தொகுத்து சிறுபான்மையோர் சட்டம் என்ற பெயரால் ஒரு புதிய சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரச் செய்தான்.
ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் இந்த மாதிரியான சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் விஷயத்தில் எவ்வளவு ராஜதந்திரமாக நடந்து கொண்டு வந்த போதிலும், ஹென்லைன் கட்சியினர், இன்னும் அதிகமான சிக்கல்களை உண்டுபண்ணிக் கொண்டுதான் வந்தார்கள். இதனால்தான், இந்தச் சிறுபான்மை யோர் பிரச்னையை அடிப்படையாகக் கொண்ட கிளர்ச்சி அயலா ருடைய தூண்டுதலா யிருக்குமோ என்ற சந்தேகம், ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கத்தினிடம் அநுதாபம் இல்லாதவர்களுக்குக் கூட ஏற்பட்டு விட்டது.
VIII ஸுடேடென் ஜெர்மானியர்
ஹிட்லர் தொடங்கியுள்ள ஏகாதிபத்திய சதுரங்க விளை யாட்டில், கிழக்கு ஐரோப்பாவைப் பொறுத்த மட்டில் ஸுடே டென் ஜெர்மானியப் பிரச்னையை ஒரு காயாக உபயோகித்துக் கொள்வானா என்று ஐரோப்பிய ராஜதந்திரிகள் 1936-ஆம் வருஷத் திலேயே சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்கள். இதற்காகச் சிலர், தங்களை பந்தோபஸ்து செய்து கொண் டார்கள். இன்னுஞ் சிலர், ஹிட்லருக்குத் தூப தீபாராதனைகள் காட்டி அவன் கவனத்தை வேறு வழிகளில் திருப்ப முயன்றார்கள். ஆனால், ஹிட்லர் தன்னு டைய ஆரியக் கண்ணை, காரியத்திலிருந்து அப்புறப் படுத்தவில்லை. 1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி, ஸுடேடென் பிரதேசத்தை, ஜெர்மானியுடன் சேர்த்துக் கொண்டுவிட்டான். இதற்கு ஜெக்கோ ஸ்லோவேகியாவிட மிருந்து ஸுடேடென் பிர தேசத்தைப் பிடுங்கிக் கொடுப்பதற்கு-பிரிட்டன், பிரான்ஸ், இத்தலி ஆகிய மூன்று வல்லரசுப் பிரமுகர்களும் துணை செய்தார்கள்!
ஆக இத்தனை பேருடைய கவனத்தையும் இழுத்து வந்திருக் கிற இந்த ஸுடேடென் ஜெர்மானியக் கட்சி என்பது என்ன? இதன் தலைவனான ஹெர்ஹென்லைன் என்பவன் யார்?
ஜெர்மனியிலுள்ள நாஜி கட்சிக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியா விலுள்ள ஸுடேடென் ஜெர்மானியக் கட்சிக்கும் ஓரளவு ஒற்றுமை யிருப்பதாகவும், நாஜி கட்சியைப் பின்பற்றியே இந்த ஸுடேடென் ஜெர்மானியக் கட்சி தோன்றியதென்றும் மேற்பார்வையாகப் பார்க்கிற போது தோன்றும். இங்ஙனம் எண்ணுவதற்கு ஆதாரங்களும் இல்லாமற் போகவில்லை. ஏனென்றால், இரண்டு கட்சியின் அடிப் படையான தத்துவம் ஜெர்மானிய ஒற்றுமைதானே தவிர, ஹிட்லரின் நகல் பிரதி மாதிரி, ஹென்லைன் சில சமயங்களில் நடந்து கொள் கிறான். இவனுடைய பேச்சு வார்த்தைகளும் அதே தோரணை யில்தான் இருக்கின்றன. ஆனால் உண்மையில், இந்த ஸுடேடென் ஜெர்மானியக் கட்சி பொஹிமியாவையே பிறப்பிடமாகக் கொண்டது. இதற்கென்று தனியான சில அரசியல் லட்சியங்களும் உண்டு.
ஐரோப்பிய யுத்தம் தொடங்குவதற்குச் சுமார் பத்து வருஷங் களுக்கு முன்னர் ஜெர்மனியிலும், ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதி பத்தியத்துக் குட்பட்ட ஜெர்மானியப் பிரதேசங்களிலும் இளைஞர் இயக்கம் ஒன்று தோன்றியது. இளைஞர்கள், தேகப் பயிற்சியின் மூலமாக உடலைப் பாதுகாத்து வரவேண்டுமென்பதும், ஜெர் மானியக் கலைஞானத்தையும் நாகரிகத்தையும் பரப்ப வேண்டு மென்பதும் இந்த இயக்கத்தின் ஒரு சில நோக்கங்களாயிருந்தன. இந்த இயக்கம், மெதுமெதுவாகத் தன் சிறகுகளைப் பரப்பிக் கொண்டு வருகிற சமயத்தில், ஐரோப்பிய யுத்தம் ஏற்பட்டது. இதனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யுத்த களத்திற்குச் சென்று விட்டார்கள். யுத்தமும் முடிந்தது. பொஹிமியா விலிருந்து சென்ற இளைஞர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியா என்ற ஒரு புதிய அந்நிய ராஜ்ஜியத்தின் கீழ், தாங்கள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினராகிவிட்டதைக் கண்டார்கள். ஆத் திரங் கொண்டார்கள். ஜெக்கர்களைப் பழித்தார்கள். தங்களுடைய ஜாதி, பாஷை, நாகரிகம் முதலியன யாவும் சிறந்ததெனக் கொண்டா டினார்கள். ஜெக்கோ ஸ்லோவேகிய எல்லைப்புறப் பிரதேசங்களில் அதாவது தற்போதைய ஸுடேடென் பிரதேசங்களில், உக்ரமான ஒரு தேசீய உணர்ச்சியை ஜனங்களுக்கு ஊட்டினார்கள். பொஹிமிய காட்டுப் பிரதேசங்களில், இந்த ஜெர்மானிய இளைஞர்கள், தேசீய உணர்ச்சியை உண்டாக்கும் படியான பாடல்களைப் பாடிக் கொண்டு திரிந்தார்கள். இதனால் ஜெர்மானியப் பாமர ஜனங்கள், தங்களுக்கென்று ஒரு தனி நாடு இருப்பதாகவும், தாங்கள் இப் பொழுது அந்நிய நாட்டிலே வசிப்பதாகவும் உணர்ந்தார்கள்.
இங்ஙனம் தேசீய உணர்ச்சியை உண்டு பண்ணிக் கொண்டு வந்த இளைஞர்கள், நாளாவட்டத்தில், ஒழுங்குபட்ட பல சங்கத் தினரானார்கள். இந்தச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தெரிந்தெடுத்துக் கொண்டு அவனுக்குக் கீழ்ப் படிந்து நடக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். இவர்களுக் குள்ளே சில சடங்குகளும் தோன்றலாயின. ஆனால். இந்தச் சங்கங் களிலே சேர்ந்த கொஞ்சம் வயதானவர்களுக்கு இந்த மாதிரியான சடங்குகள் முதலியன பிடிக்கவில்லை. இவையெல்லாம் வீண் ஆவேசச் செயல்கள் என்று கருதினார்கள். இவர்களில் ஒரு சிலர், ஹிட்லருடனும், நாஜி கட்சியுடனும் சம்பந்தம் வைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். நாஜி கட்சியின் கிளை ஸ்தாபன மொன்றைத் தனியாக பொஹிமியாவில் வகுத்துக் கொண்டார்கள்.
ஆனால் பெரும்பாலோருக்கு இது பிடிக்கவில்லை. இவர் களுடைய மனம் வியன்னாவை நாடிச் சென்றதே தவிர, பெர்லினை நாடிச் செல்லவில்லை. இவர்கள் பொஹிமியாவே, தங்களுடைய தாய் நாடு என்பதில் உறுதி பூண்டு நின்றார்கள். இவர்கள் அனை வரும் ரோமன் கத்தோலிக்கர்கள்; மதப் பற்றுடையவர்கள். ஆகை யால், கிறிஸ்தவ மதத்தின் மீது, நாஜி கட்சியினர் கொண்டிருந்த மனப் பான்மை இவர் களுக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கவில்லை. இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் எல்லாரும் தோழர் சங்கம் என் றொரு சங்கமாகச் சேர்ந்து கொண்டார்கள். இவர்களுக்குத் தலை வனாயமைந்தவன் ஹென்ரிக் ரூதா (Heinrich Rutha) என்பவன். இவன் நல்ல பேச்சுக்காரன். சாரீர சம்பத் துடையவன். இதன் மூலமாக இவனுக்கு அதிக செல்வாக்கு ஏற்பட்டது. சிறிது காலங்கழித்து, இவனுக்குத் துணைவனாக, வால்டர் ஹென்ரிக் (Walter Heinrich) என்பவன் வந்து சேர்ந்தான். இவன் வியன்னா சர்வகலா சாலையில் படித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன். இவன் வியன்னா சர்வ கலா சாலையில் சரித்திர போதகாசிரியனாயிருந்த ஆத்மார் ஸ்பான் (Othmar Spann) என்பவனிடத்தில் பரம விசுவாசம் பூண்டவன். இவன் வாயிலாக ஆத்மார் ஸ்பானுக்கு ஒரு விஷேச கௌரவமும் மரியாதை யும் ஏற்பட்டது. ஸ்பானுடைய உபதேசத்தை, பல ஸுடேடென் ஜெர்மானிய இளைஞர்கள் கேட்கலானார்கள்.
இந்த ஸ்பான் புதியதொரு தத்துவத்தை உபதேசிக்கலானான். ஜனநாயகக் கொள்கைகளும், மார்க்ஸ் தத்துவங்களும் மனித சமூகத் தின் சாபக்கேடுகள் என்றும், தொழில் வாரியாகச் சமூகத்தைப் பிரிக்க வேண்டு மென்றும், இந்தச் தொழிற் சமூகத்தின் தலைவர்கள், ஒரு தலைவனைத் தெரிந்தெடுத்து, அந்தத் தலைவன் கீழ் அரசாங்க நிருவாகத்தை நடத்த வேண்டுமென்றும் உபதேசித்து வந்தான். ஜெர் மானிய சமுதாயம் இந்த முறையிலேயே அமைக்கப்பட வேண்டு மென்பது இவன் கருத்து.
மேலே கூறப்பட்ட தோழர் சங்கத்தில் ஸ்பானுக்கு நல்ல செல் வாக்கு ஏற்பட்டது. இவனுடைய உபதேசங்களை, தோழர் சங்கத் தார் செயலில் கொணர ஆரம்பித்தார்கள். இவர்கள் மெதுமெது வாக, பொஹிமியாவிலுள்ள மற்ற ஜெர்மானியச் சங்கங்களிலும் புகுந்து முக்கியமான பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
ஸ்பான், இந்தத் தோழர் சங்கத்தாரின் உபதேச கர்த்தனாக மட்டும் இருந்தான். ரூதாவே தலைவன். இந்த ரூதா, தோழர் சங்கம் மூலம், பொஹிமியாவின் அரசியலிலும் ஆதிக்கம் பெற வேண்டுமென்று விரும்பினான். இந்த நோக்கத்தோடு, பொஹிமியா வெங் கணும், தேகப்பயிற்சிச் சங்கங்கள் அமைத்து, அவற்றில் ஜெர்மானிய இளைஞர் களுக்கு உடலுரமூட்ட விரும்பினான். இந்தத் தேகப் பயிற்சி இயக்கத்தை நடத்துவிப்பதற்கு, தேகப் பயிற்சி விஷயத்தில் அநுபவம் பெற்ற ஓர் ஆள் தேவையாக இருந்தது. அந்த ஆள்தான் கோன்ராட் ஹென்லைன். இதற்கு முன்னர் இந்த ஹென்லைனுக்கும் தோழர் சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இருந்ததில்லை.
ஹென்லைன், ஐரோப்பிய யுத்தத்தில் ஆஸ்திரியப் படைகளுடன் சேர்ந்து சேவை செய்தான். அப்பொழுது இவனுக்கு வயது பதினாறு. இவன் காயம் அடைந்து இத்தலியர்களால் சிறை செய்யப்பட்டான். கைதியாள யிருந்தபோது சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். சிறிது காலம் தலைமறைவாகவே இவனிருக்கும்படி நேரிட்டது. பின்னர், ரைஷென் பெர்க் என்ற ஊரில் ஒரு பாங்கியின் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தான். அதே சமயத்தில் அந்த ஊரிலிருந்த, ரூதாவினால் தொடங்கப் பெற்ற தேகப் பயிற்சிக் கழக மொன்றில் கௌரவ ஆசிரி யனாக இருந்தான். இவன் கீழ் பயிற்சி பெற்றவர்கள் இவனிடத்தில் மதிப்பு வைக்கத் தொடங்கினார்கள். இதனால் இவன் செல்வாக்கு வளர்ந்தது. எனவே ஆஷ் என்ற ஊரில் சம்பளம் பெற்ற ஒரு தேகப் பயிற்சி போதகாசிரியனாக ரூதா இவனை நியமித்தான். பின்னர் இந்தத் தேகப்பயிற்சி ஸ்தாபனங்களுக் கெல்லாம் தலைமையாயிருந்த தாபனத்தில் இவனுக்கு முக்கியமான தொரு பதவி கொடுக்கப் பட்டது. அப்பொழுது இந்தத் தலைமை ஸ்தாபனத்தில் ஒரு லட்சம் அங்கத்தினர்களிருந்தார்கள்.
இந்தத் தலைமை ஸ்தாபனத்தை ஒழுங்குக்கும் கட்டுப் பாட்டுக்கும் உட்படுத்தித் திறமையாக நடத்தி வந்தான் ஹென்லைன். நாளாவட்டத்தில் நாடெங்கணும் இவனது செல்வாக்குப் பரவியது. 1933-ஆம் வருஷத்தில், தோழர் சங்கத்தார் ஸுடேடென் ஜெர் மானியர்களுக்கு, ஹென்லைனே தலைவன் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இதே காலத்தில் ஜெர்மனியிலும் ஹிட்லரின் செல்வாக்கு, அவனை சர்வாதிகாரியாகக் கொண்டு புகுத்தும் நிலைக்கு வந்தது. இதனால் ஹிட்லரின் ஒரு நிழலாக ஹென்லைன் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினான் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாகாது.
1933-ஆம் வருஷம் அக்டோபர் மாதம், ஜெர்மானியக் கட்சிகள் பலவற்றின் மீதும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் தார் தடை உத்திரவு போட்டனர். ஹென்லைன் இதனைத் தனக்குச் சாதக மான ஒரு சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொண்டான். ஐக்கிய கட்சி என்ற ஒன்றை அமைத்தான். எல்லா ஸுடேடென் ஜெர்மானி யர்களும் இதில் வந்து சேர வேண்டுமென்று பிரசாரஞ் செய்தான். தடை யுத்திரவுக்கு அஞ்சிக் கலைந்துபோன ஸ்தாபனங்களின் அங்கத்தினர்கள் அனைவரும் இந்த ஐக்கியக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பலர் பயந்து ஜெர் மனிக்கு ஓடிப்போய் விட்டார்கள். ஹென்லைன் இதனையும் தனக்குச் சாதக மாக உபயோகப்படுத்திக் கொண்டான். ஐக்கியக் கட்சியின் சர்வாதிகாரியானான். இந்த ஐக்கியக் கட்சியில் ஹிட்ல ரிடத்தில் விசுவாசம் பூண்டிருந்த நாஜி கட்சியினரும் சேர்ந்திருந் தனரல்லவா? இவர்கள் எப்பொழுதுமே, ஹென்லைனைத் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டதில்லை. இதனால் இவர்களுக்கும், ஹென்லைனே தலைவன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த வர்களுக்கும் அடிக்கடி பிணக்குகள் நிகழ்ந்து வந்தன. ஹென்லைன் இவற்றையெல்லாம் நிரம்பச் சாமர்த்தியமாகச் சமாளித்து வந்தான். நாஜி கட்சியினருக்கு ஐக்கியக் கட்சியின் நிருவாக சபையில் சில ஸ்தானங்கள் கொடுத்து வாயடக்கினான்.
1934-35-இல் ஹிட்லருக்கும் ஹென்லைனுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட ஆரம்பித்தது. ஹிட்லரைப் போல் இவனும் ஜெர் மானிய ஜாதியினர் எந்த நாட்டினராயினும், எந்தக் கட்சியினரா யினும், எந்த மதத்தின ராயினுங் கூட சகோதரர்கள் தான்; ஒன்று பட்டவர்கள்தான் என்று பிரசாரம் செய்து வந்தான். இந்தப் பிர சாரத்தின் பலனாகத்தான் 1935-ஆம் வருஷம் மே மாதம் நடைபெற்ற ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்க பார்லிமெண்ட் தேர்தலில் இவ னுடைய கட்சிக்கு 100க்கு 60 வீதம் ஓட்டுகள் கிடைத்தன. 45 பிரதி நிதிகள் ஜனப்பிரதி நிதி சபையில் இடம் பெற்றார்கள்.
தேர்தலுக்குப் பிறகு இவன் தன்னுடைய கட்சியினரை ஜெக்கோ ஸ்லோவேகிய பார்லிமெண்டில் புகுத்தி அவர்கள் மூல மாக அரசாங்கத்தை ஆட்டி வந்தான். இவன் மட்டும் தேர்தலில் அபேட்சகனாக நிற்கவே யில்லை. கட்சித் தலைவனாக மட்டுமிருந்து காரியங்களை நடத்தி வந்தான். இவன் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் தேர்தலில் அபேட்சகர்களாக நிற்பதற்கு முன்னர் கட்சித் தலைவனுக் குக் கீழ்ப்படிவதாகவும், தலைவன் விரும்பினால் ஸ்தானத்தை ராஜீ நாமா செய்து விடுவதாகவும் உறுதி மொழிப்பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டான். இங்ஙனம் தன் கட்சியை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஜெர்மானிய ஜாதியினர் அனைவரும் தனிப்பட்டதோர் அரசாங் கத்தின் கீழ் உட்பட்டிருக்க வேண்டும் என்ற தனது அடுத்த திட்டத்தை நடை முறையில் கொணவர்வதற்குப் பிரசாரம் செய்யத் தொடங் கினான். இது விஷயத்தில் இவனுடைய கருத்து என்ன என்பதை இவன் 1937-ஆம் வருஷம் மார்ச் மாதம் முதல் தேதி அவ்ஸிக் என்ற ஊரில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஜெக்கோ ஸ்லோவேகியா ஒரு ஜாதியினராலேயே ஆளப்படும் தேசமல்ல. ஆதலின் இந்த நாட்டு ஜனங்கள் தங்களுக்கு மட்டும் அரசியல், பொருளாதார, சமுதாய உரிமைகளும் அதிகாரங்களும் இருக்க வேண்டுமென்று பாத்தியம் கொண்டாட முடியாது. இந்த ராஜ்ஜியம் தங் களுக்கு மட்டும் உரித்தானதல்ல; இதில் வசிக்கும் எல்லா ஜாதி யாருக்கும் உரித்தானது என்பதை ஜெக்கர்கள் உணர வேண்டும்.
ராஜ்ஜியம் ஒற்றுமைப்பட்ட ராஜ்ஜியமாக இருக்க வேண்டியது தான். ஆனால் அதன் கீழ் வசிக்கும் பல ஜன சமூகத்தாரும் அவரவர்களுடைய சமூக, அரசியல், பொருளா தார உரிமைகளை அநுபவிக்க விட வேண்டும். ஜெக்கோ ஸ்லோவேகியாவில் வசிக்கும் ஜெர்மானியர்கள், ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசின் கீழ் தங்களுக்கிருக்க வேண்டிய அந்தஸ்து, உரிமை முதலியன, ஜெக்கோ ஸ்லோவேகியா வுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்படுகிற ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நிர்த்தாரணம் செய்யப்பட வேண்டுமென்றும், அப்படி நிர்த் தாரணம் செய்யப்படுவது ஜெக்கோ ஸ்லோவேகிய பார்லி மெண்டில் நிறைவேற்றப்படுகிற ஒரு சட்டத்தின் மூலம் அங்கீ கரிக்கப்பட வேண்டுமென்றும் கோருகிறார்கள். சிறப்பாக ஜெர்மன் பாஷை பேசுவோர் வசிக்கும் பிரதேசங்களுக்கு ஓர் எல்லை வகுத்துவிட வேண்டுமென்றும், அதன் மீது ஜெக்கர்கள் ஆக்ரமணம் செய்யக்கூடாதென்றும் விரும்புகிறார்கள். ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்க ஆதிக்கத்திற்குப் பங்கம் ஏற்படாத முறையில் அதன் ஜெர்மானியப் பிரஜைகள் சட்டபூர்வமான உரிமைகளையும் அந்தஸ்தையும் பெற வேண்டும். இவை களுக்குப் பிரதிநிதியாயிருக்கிற மத்திய ஸ்தாபனத்தை அரசாங் கம் அங்கீகரிக்க வேண்டும். அந்த மத்திய ஸ்தாபனத்திற்கு, ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்குப் புறம்பாயுள்ள எல்லா ஜெர்மானியர்களுடனும் அரசியல் சம்பந்த மல்லாத விஷயங் களில் தொடர்பு கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். ஜெர் மானியர்கள் வசிக்கும் பிரதேசங்களில் ஜெர்மானியரே நிரு வாகத்தை நடத்த வேண்டும். அவர்கள் ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கத் தலைமை ஸ்தாபனத்தின் கொள்கையை நிர்த்தாரணம் செய்கிற விஷயத்திலும் பங்கு பெற வேண்டும்.
சுய மதிப்புள்ள எந்த நாடுமே, இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க முடியாதல்லவா? தன் நாட்டிலேயுள்ள ஒரு சிறு பான்மைச் சமூகத்தினரைத் தனி நாட்டினராகப் பிரித்து, அவர்களுக்கு விசேஷ உரிமைகளைக் கொடுக்க ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் சம்மதிக்கவில்லை யென்றால், அதற்காக ஹென்லைன், அவர்கள் மீது கோபிக்க முடியுமா? அங்ஙனம் சம்மதிப்பது, ஜெக்கோ ஸ்லோ வேகியாவையே, ஜெர்மனி வசம் ஒப்புவிப்பதாகுமல்லவா? ஸுடே டென் ஜெர்மானியர்களுக்கும், ஜெர்மனியிலுள்ள ஜெர்மானியர் களுக்கும் தாய்ப் பாஷை ஒன்றுதான். மற்றும் நாஜி கட்சியினரும் ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியினரும், பரஸ்பரம் அரசியல் ஸ்தானீகர்களை நியமித்துக் கொண்டு ஒற்றுமைப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை நடத்தி வந்தார்கள். ஸுடேடென் பிரதேசங்களி லிருந்து அநேக இளைஞர்கள் வருஷந்தோறும் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்கள் தொழிற் பயிற்சிக்காக அல்லது ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளும் பொருட்டு அனுப்பப் படுகிறார்களென்று சொன்ன போதிலும் உண்மையில் ராணுவப் பயிற்சிக்காகவே அனுப்பப்பட்டார்கள். இவையெல்லா வற்றையும் தெரிந்து கொண்டிருந்த ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியின் கோரிக்கைகளை அப்படியே எங்ஙனம் ஏற்றுக் கொண்டுவிட முடியும்?
ஹென்லைன், ஏன் இந்த ஜெர்மானியக் கட்சியைச் சிருஷ்டித் தான்? இவனுடையே நோக்கங்களென்ன? இவன் வாக்கிலிருந்தே இவற்றை நாம் தெரிந்து கொள்வது விசேஷமல்லவா? ஒரு பத்திரிகை நிருபருக்கும் இவனுக்கும் நடந்த சம்பாஷணை வருமாறு:
நிருபர் வினா: நீங்கள் ஏன் ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியைச் சிருஷ்டி செய்தீர்கள்? எந்தச் சந்தர்ப்பத்தில் அதைச் சிருஷ்டித்தீர்கள்?
ஹென்லைன் விடை: 1933-ஆம் வருஷ மத்தியில், எங்கள் நாடாகிய ஜெர்மனியில், ஹிட்லர் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டதைக் கண்டு ஜெக்க அரசாங்கம் மருண்டு விட்டது. இதனால் எங்களுடைய தேசீய கோரிக்கைகளுக்குப் பிரதிநிதிக் கட்சி களாயிருந்த தேசீய அபேதவாதக்கட்சியையும் ஜெர்மன் தேசீயக் கட்சியையும் கலைத்து விட்டது. இப்படிச் செய்து, தான் பெரிய வெற்றியை அடைந்துவிட்டதாகச் சந்தோஷமும் பட்டது. ஜெர்மனி யிலுள்ள தேசீய அபேதவாதக் கட்சி (நாஜி கட்சி) தோன்றுவதற்கு முன்னாலேயே எங்கள் கட்சி தோன்றிய தென்பதை யறிய நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னரிருந்தே, எங்களுடைய கட்சி, ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்தின் இருதய ஸ்தானத்திலிருந்து வேலை செய்து கொண்டு வந்தது. மேலே சொன்ன இரண்டு கட்சிகளையும் அடக்கினதுபோல, தொழிலாளர் கட்சி களையும், கூட்டுறவு ஸ்தாபனங்களையும் அரசாங்கத்தார் அடக்கி விட்டனர். தேசத்தில் புரட்சிகரமான நிலைமை ஏற்பட்டிருக்கிற தென்று, இந்த அடக்குமுறைக்கு அரசாங்கத்தார் சமாதானம் கூறினர். நாங்கள் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தபோது, அரசாங்கத்தார் இங்ஙனம் யதேச்சாதி காரமான அடக்குமுறைகளைக் கையாண்டது, ஜெர்மானியர் களிடையே பெரிய அதிருப்தியை உண்டுபண்ணி விட்டது. இதனாலேயே, ஸுடேடென் ஜெர்மானியர் அனைவருக்கும் பிரதி நிதியாயுள்ள எங்கள் கட்சி தோன்றியது. இது சம்பந்தமாக 1933-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி நான் ஜெர்மானியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நான் அப்பொழுது இந்தக் கட்சிக்கு ஸுடேடென் ஜெர்மானியர்களின் தேசீய முன்னணி என்றுதான் பெயர் கொடுத்திருந்தேன். 1935-ஆம் வருஷத்தில் அரசாங்கத்தார் தான், இந்தப் பெயரை ஸுடேடென் ஜெர்மானியக் கட்சி என்று மாற்றும்படி செய்தார்கள்.ள
இந்தப் புதிய கட்சிக்கு ஆரம்பத்திலிருந்தே எவ்வளவு செல் வாக்கு ஏற்பட்டது என்பதைச் சில புள்ளி விவரங்களினால் தெரிவிக்கிறேன். ஏற்கனவே 1933-ஆம் வருஷத்தில் அரசாங்கத் தினரால் கலைக்கப்பட்ட இரண்டு கட்சிகளுக்கு 15 பிரதிநிதிகள் தான் ஜெக்கோ ஸ்லோவேகிய ஜனப்பிரதிநிதி சபையில் இருந்தார் கள். ஆனால் 1935-ஆம் வருஷத்தில் நடைபெற்ற தேர்தலில் எங்களு டைய ஸுடேடென் ஜெர்மானியக் கட்சிக்கு 45 ஸ்தானங்கள் கிடைத்தன.
நிருபர் வினா: உங்களுடைய ஸுடேடென் கட்சி ஜெர்மன் நாஜி கட்சியின் ஒரு கிளையா?
ஹென்லைன் விடை: இல்லை. அது நாஜி கட்சியின் கிளை யில்லை. அதன் துணை இஃது எந்த விதத்திலும் எதிர்பார்த்திருக்க வில்லை. தவிர ஜெக்கோ ஸ்லோவேகியாவில் நாஜி கட்சிக்குக் கிளை ஸ்தாபனமும் இல்லை.
நிருபர் வினா: நாஜி கட்சிக்கும் உங்களுடைய கட்சிக்கும் ஏதேனும் சில வித்தியாசங்கள் இருந்தால் கூட, இந்த நாஜி கட்சியின் கிளை ஸ்தாபனமொன்றை ஜெக்கோ ஸ்லோவே கியாவில் தோற்று வித்திருக்கலாம். அப்படி ஒன்றும் வேற்றுமை யிருப்பதாகத் தெரிய வில்லையே. நாஜி கட்சியின் வேலைத் திட்டமும் உங்களுடைய வேலைத் திட்டமும் ஏறக்குறைய ஒன்றாகத் தானே இருக்கின்றன?
ஹென்லைன் விடை: ஜெர்மனியில் தோன்றியிருக்கும் தேசீய விழிப்பு, ஜெர்மனி கொண்டிருக்கும் புதிய மனப்பான்மை இவற்றைக் கொண்டு ஸுடேடென் ஜெர்மானியர்கள் மகிழ்ச்சி கொள்வது இயற்கை யல்லவா? அஃது ஒரு பெருமையுங் கூட. நாங்கள் இனி அடக்குமுறை களினால் ஆளப்படமாட்டோம் என்பதற்கு ஜாமீன் கொடுப்பது போல ஜெர்மனியின் தேசீய விழிப்பு எங்களுக்கிருக்கிறது.
நிருபர் வினா: ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள குறைகள்தான் என்ன?
ஹென்லைன் விடை: ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் தாரின் நடவடிக்கைகளுக்காக மட்டும் நாங்கள் அவர்களைக் கண்டிக்கிறோ மில்லை. எந்த அரசியல் தத்துவத்தின் மீது இந்த ஜெக்க அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதோ, அந்தத் தத்து வத்தையே நாங்கள் கண்டிக்கிறோம். பூகோள அமைப்பு, சரித்திர உண்மை இவைகளுக்குப் புறம்பாக, இந்த ஜெக்க அரசாங்கத்தை ஸ்தாபித்தவர்கள் சமாதான மகா நாட்டில் கொடுத்த வாக்குறுதி களுக்கு விரோதமாக, ஜெக்கர்கள், ஸ்லோவேகியர்கள் ஆகிய இவர்கள் மட்டும் அடங்கிய ஓர் அரசாங்கம் இங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. அதாவது, இந்த இரண்டு சமூகத் தினரால், இந்த இரண்டு சமூகத்தினர்களுக்காகவே அதிகாரம் செலுத்தப் பட்டு வருகிறது. ஆனால் இந்த நாட்டிலே சிறுபான்மையோராக உள்ள ஜெர்மானியரைப் புறக்கணித்து விட முடியாதல்லவா? இந்தக் குடியரசின் ஜனத்தொகையில் 100க்கு 22 ½ பேர் ஜெர்மானியர்கள். இவர்களோடு ஹங்கேரியர்கள், ருத்தேனியர்கள், போலிஷ்காரர் ஆகிய இவர்களையும் சேர்த்தால் மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராக இந்தச் சிறுபான்மையோர் இருக் கின்றனரே. ஜெக்க உத்தியோகஸ்தர்கள் செலுத்தும் அதிகாரங் களுக்கு உட்பட்ட இரண்டாந்தரத்துப் பிரஜைகள் என்று நாங்கள் இதனால் உணர்கிறோம்.
நிருபர் வினா: உங்கள் கோரிக்கைகள் என்ன?
ஹென்லைன் விடை: ஸுடேடென் ஜெர்மானியர்களுடைய தனித்துவத்தை ப்ரேக் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். இந்த ஜெர்மானியர்களுக்குக் குடியரசின் கீழ் உள்ள மற்ற ஜெக்க, ஸ்லோ வேகிய, ஹங்கேரிய சமூகத்தினர்களுக்குள்ள சம உரிமை கொடுக்கப் பெற வேண்டும். சென்ற இருபது வருஷத்து எங்கள் அநுபவத்தில் தனிப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் ஒரு சமூகத்தின் தனி வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமலிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஜெக்க ராஜ்ஜியத்தில் நாங்கள் ஜெர்மானியப் பிரஜைகளாக இருக்க விரும்பவில்லை. ஜெர் மானியர்களுக்குச் சமூக உரிமை உண்டு என்பதை ஜெக்க அரசாங் கம் அங்கீகரிக்க வேண்டும். பல சமூகத்தினரடங்கிய இந்த ஜெக்க அரசாங்கத்தில் பொறுப்பாட்சி பெற்ற ஒரு சமூகத்தினராகவே நாங்கள் வாழ விரும்புகிறோம். இந்த ஜெர்மானிய சமூகம் ஜெர் மானியர்களாலேயே ஆளப்பட வேண்டும்.
நிருபர் வினா: ஜெர்மனியோடு நீங்கள் ஐக்கியமாகிவிட வேண்டுமென்று எதிர்பார்க்க வில்லையே?
ஹென்லைன் விடை: ஸுடேடென் கட்சியார் பொது மேடைகளிலோ, ஜெக்கோ ஸ்லோவேகிய சட்டசபைகளிலோ இந்த ஜெக்கோ ஸ்லோவேகிய எல்லையைப் பற்றிய பிரச்னையை எப் பொழுதும் எழுப்பியது கிடையாது.
ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், ஜெர்மானியச் சிறுபான்மைப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் விஷயத்தில் ஒரே பிடிவாதமாக இருக்கவில்லை. இவர்கள் அப்படியிருக்கவில்லை யென்பதற்கு 1937-ஆம் வருஷம் மே மாதம் இவர்கள் வெளியிட்ட அறிக்கையே சாட்சி பகரும். இதனால் ஸுடேடென் கட்சியிலிருந்த சில நிதானஸ்தர்கள், இந்தக் கட்சியின் விபரீதப் போக்குகளிலிருந்து விலகிக் கொண்டுவிட்டனர். தவிர, ஹென்ரிக் ரூதா வென்பவன், துர்நடத்தையான காரியங்களைச் செய்தான் என்ற காரணத் திற்காகக் கைது செய்யப்பட்டு 1937-ஆம் வருஷ இறுதியில் சிறை யிலே வைக்கப்பட்டான். ஆனால் இவன் சிறையிலேயே தூக்கி லிட்டுக் கொண்டு இறந்து போனான். இதனால், ரூதாவையே முக்கியஸ்தனாகப் போற்றி வந்தவர்களுக்கும், ஹென்லைன் கோஷ்டி யினருக்கும் சில்லரை மனஸ்தாபங்கள் நிகழ்ந்து வந்தன. ஸுடே டென் ஜெர்மானியக் கட்சியின் காரியதரிசியாக இருந்த டாக்டர் கஸ்டவ் ஜோனக் என்பவனை, ஹென்லைன் விலக்கிவிட்டான். இதுபோல் இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால் ஸுடேடென் கட்சி, சிறிது காலம் ஒரே குரலுடன் பேசவில்லை. ஹென்லைனுடைய செல்வாக்குக் குலைந்து போய்விடுமென்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஸுடேடென் கட்சிக்குள் இங்ஙனம் பிணக்குகள் கிளம்பியிருப்பது தங்களுக்கு நல்ல சூசகமென்று ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் கருதினர்.
ஆனால் 1938-ஆம் வருஷம் மார்ச் மாதம் ஜெர்மனி, ஆஸ்திரி யாவை விழுங்கிவிட்ட பிறகு, ஸுடேடென் ஜெர்மா னியர்களுக்குப் புதிய ஆசைகள் பல கிளம்பின. ஜெர்மனிக்கு ஏற்பட்ட பலம் தங்களுக்கு ஏற்பட்ட பலமாகவே இவர்கள் கருதினார்கள். இதனால் இவர் களுக்கு ஒரு பெருமை கூட ஏற் பட்டது. ஹென்லைன் கோஷ்டியில் இதுகாரும் சேராமலிருந்த ஜெர்மானியர் பலர், பயத்தினாலோ, அல்லது பெருமையை எதிர்பார்த்தோ, இந்த ஸுடேடென் கட்சி யில் வந்து சேர்ந்தார்கள்.
தவிர ஜெக்கோ ஸ்லோவேகிய பார்லிமெண்டில், ஸுடே டென் ஜெர்மானியக் கட்சித் தலைவனாயிருந்த டாக்டர் பிராங்க் என்பவன், ஜெர்மானியர்கள் அனைவரும் ஒற்றுமையாயிருக்க வேண்டுமென்பதை வற்புறுத்தி, தன்னுடைய கட்சியில் சேராத ஜெர்மானியர்களுக்கு ஏற்படும் விளைவுகள் விபரீதமாயிருக்கும் என்று பயமுறுத்தினான். இந்தப் பயமுறுத்தல், கோரிய பலனை உடனே கொடுத்துவிட்டது. ஹென்லைன் கட்சியைச் சேர்த்து, ஜனப் பிரதிநிதி சபையில் ஸ்தானம் வகித்து வந்த ஜெர்மானியக் கட்சிகள் நான்கல்லவா? இவற்றில் மந்திரிச் சபையில் இடம் பெற்றிருந்த மூன்று கட்சியினரும் தங்கள் நெஞ்சைத் தடவிப் பார்த்துக் கொண்டார் கள். பயத்தினாலோ, அல்லது ஜாதி ஒற்றுமை யினாலோ, அரசாங்கத்திற்குத் தாங்கள் அளித்து வந்த ஒத்துழைப் பினின்று விலகிக் கொண்டார்கள். மந்திரிச் சபையில் ஸ்தானம் வகித்து வந்த ஜெர்மன் விவசாயக் கட்சியினனான ஸ்பைனா (Professor Spina) என்பவனும், ஜெர்மன் கிறிஸ்தவ அபேதவாதக் கட்சியினனான எர்வின் ஜாஜிஸெக் (Erwin Zajicek) என்பவனும், ஜெர்மன் அபேதவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லட்விக் ஜெக் (Ludwig Czeck) என்பவனும் ராஜீநாமா செய்துவிட்டார்கள். இந்த மூன்று கட்சி யினரில், அபேதவாத ஜனநாயகக் கட்சியினர் தவிர, மற்ற இரண்டு கட்சியினரும் ஹென்லைன் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்கள். அபேதவாத ஜனநாயகக் கட்சித் தலைவனான லட்விக், ஜெக் மந்திரிப் பதவியை ராஜீநாமா செய்துவிட்டாலும், நாஜி கொள்கைக்கும், ஹென்லைன் கையாண்டு வருகிற முறைகளுக்கும் பரம விரோதியா யிருந்தபடியால், எதிர்க் கட்சியில் சேராமல் அரசாங்கத்தை ஆதரித்து வரத் தொடங்கினான்.
அபோதவாத ஜனநாயகக் கட்சி, தன் பக்கத்தில் சேரா விட்டாலும் மற்ற இரண்டு கட்சியினரும் ஸுடேடென் கட்சியில் ஒன்றுபட்டுவிட்டது தனக்கு ஒரு பெரிய வெற்றியென்று ஹென் லைன் கருதினான். இதனால் இவன் தன்னுடைய ஸுடேடென் சுய நிர்ணய உரிமைப் பல்லவியை உச்சஸ்வரத்தில் வைத்துப் பாடத் தொடங்கினான். இந்தக் காலத்திலேயே இவனுக்கு ஜெர்மனியின் ஆதரவு தனக்குப் பூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இதைப் பற்றிப் பின்னரும் பேசப் போகிறோ மல்லவா?
மேற்கூறப்பட்ட கட்சி மாற்றங்களினால், ஜெக்கோ ஸ்லோ வேகிய ஜனப்பிரதிநிதி சபையின் அமைப்பு 1938-ஆம் வருஷம் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பின்வரும் விதமாக இருந்தது:
அரசாங்கத் தரப்பில்
குடியானவர் கட்சி 79
அபேதவாத கட்சி 38
தேசீய கட்சி 28
கத்தோலிக்க கட்சி 22 - 167
எதிர் தரப்பில்
ஹென்லைன் கட்சி 49
ஜெர்மன் கத்தோலிக்க கட்சி 6
ஸ்லோவேகியர் கட்சி 22
ஹங்கேரியர்கள் கட்சி 9
ஜெக்க பாஸிஸ்ட் கட்சி 6 - 92
எந்தத் தரப்பிலும் சேராதவர்கள்
பொதுவுடமை வாதிகள் 30
ஜெர்மானிய அபேதவாதிகள் 11 - 41 - 300
ஹிட்லரின் ஆஸ்திரிய ஆக்ரமிப்புக்குப் பிறகு, ஹென் லைனின் பேச்சு தோரணையே மாறிவிட்டது. என்ன உத்வேகம்! என்ன மிடுக்கு! ஒரு சிறிய உதாரணம்:
தற்போது ஜெக்கோ ஸ்லோவேகியாவில் நடைமுறை யில் இருக்கிற அரசியலைக் கவிழ்த்துவிடலாமா வென்பதை நாம் இப் பொழுது தீர்மானிக்க வேண்டும். இந்த ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசு கூடிய விரைவில் இடிந்துவிடும் என்று நான் எச்சரிக்கை செய்கிறேன்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பிரஜை என்ற முறையில் அதற்குப் பேச்சளவிலாவது ராஜவிசுவாசம் காட்ட வேண்டு மென் பதைக்கூட நிறுத்திக்கொண்டு விட்டான் ஹென்லைன்! அதற்கு மாறாக, தன் கோரிக்கைகளை, மகத்தான ஜெர்மானிய அரசாங்கம் ஆதரிக்கிறதென்று பெருமையோடு பேசிக் கொள்ளத் தொடங் கினான். தன்னுடைய கோரிக்கைகள், அல்லது குறைகள் என்று கூட இவன் சொல்லவில்லை. ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்துடன் சமாதான நிபந்தனைகளைப் பேசுவதாகவும், அந்த அரசாங்கத்தைப் போல் தனக்கும் சம அந்தஸ்து உண்டென்றும் சொல்லிக் கொண்டான்.
IX ஸ்வரம் ஏறுகிறது
1938-ஆம் வருஷம் மார்ச் மாதம் பதினோராந் தேதி, ஜெர்மா னியப் படைகள் ஆஸ்திரியாவின் எல்லைப்புறத்தில் காலடி எடுத்து வைத்தன. ஹாப்ஸ்பர்க் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியிருப்பார்கள். ஆனால் அது வெளியுலகத்திற்குக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, ஜெர்மனியிலிருந்து கிளம்பிய வாழ்க ஹிட்லர் என்ற முழக்கம், உலகத்தின் நானா பக்கங்களிலும் எதிரொலி கொடுத்தது. எதிர் பாராத இந்த முழக்கம், மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளுக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்ணியது. தங்களை இஃது எவ்வாறு பாதிக்கும் என்று இந்த வல்லரசுகளின் அந்நிய நாட்டுக் காரியாலயங்கள் யோசிக்கத் தொடங்கின. இந்தக் காலத்திலிருந்தே, இந்த வல்லரசுகள் தற்பாதுகாப்புக் கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளத் தொடங்கினவென்று சொல்ல வேண்டும்.
ஆஸ்திரியாவை ஜெர்மனி கபளீகரித்துக் கொண்டது, தனக்குப் பெரிய ஆபத்து என்பதை ஜெக்கோ ஸ்லோவேகியா நன்கு உணர ஆரம்பித்துவிட்டது. ஜெர்மனியின் ஏகாதிபத்தியத் திருஷ்டி எந்தப் பக்கத்திலே திரும்பியிருக்கிறதென்பதை, அந்நிய நாட்டு விவகாரங் களில் மகா நிபுணனான டாக்டர் பெனேஷ் நன்கு உணர்ந்திருந்தான். ஆஸ்திரிய ஆக்ரமிப்புக்குப் பிறகு, ஜெர்மனி, தன் கவனத்தை யெல்லாம் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மீது செலுத்தப்போகிறதென்பதை இவன் தெரிந்து கொள்ளாமலில்லை. இதைப் பற்றி ‘ஜெர்மனியின் நோக்கமென்ன? என்ற அத்தியாயத்தில் விரிவாகப் பேசுவோம்.
ஆஸ்திரியா என்று வீழ்ந்ததோ, அன்றே ஸுடேடென் ஜெர் மானியக் கட்சியின் ஸ்வரமும் ஏறத் தொடங்கியது. ஜெக்கோ ஸ்லோ வேகியாவிலுள்ள எல்லா ஜெர்மானியர்களுக்கும், தான் தலைவன் என்ற தோரணையில் ஹென்லைன் பேசத் தொடங்கினான். ஏனென்றால், ஜெக்கோ ஸ்லோவேகியா பார்லிமெண்டில் ஸ்தானம் பெற்றுவந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகளும், இந்த ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியில் ஐக்கியமாகி விட்டனவல்லவா? இதனால் ஹென்லைனுடைய கோரிக்கைகளும் வளர்ந்து கொண்டே போயின. அரசாங்கத்தார் காட்டி வந்த சமரஸ மனப்பான்மையை, அவர்களுடைய பலஹீனமாகவே இவன் கருதினான்.
1938-ஆம் வருஷம் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் - ஆஸ்திரியா வீழ்ந்துபட்ட அதே வாரத்தில் -ஜெர்மானியர்கள் வசிக்கும் பிரதேசங்களுக்குத் தனியாகச் சுய ஆட்சி கொடுக்க வேண்டுமென்றும், இதற்கான முறையில் தேர்தல்கள் நடத்த வேண்டுமென்றும் ஹென்லைன் கோரினான். இதே சமயத்தில் மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினரான ஸ்லோவேகியர், போலிஷ்காரர், ஹங்கேரியர் முதலியோர் தங்களுக்கும், சுய நிர்ணய உரிமை கொடுக்க வேண்டு மென்று கூச்சலிடத் தலைப்பட்டார்கள். அரசாங் கத்தார், இங்ஙனம் பல சமூகத்தினருக்கும் நாட்டைப் பகிர்ந்து கொடுத்துவிடச் சம்மதிப்பார்களா? சிறுபான்மைச் சமூகத்தினர் அத்தனை பேருடைய கோரிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிட முடியாதென்றும், ஆனால் எல்லாருக்கும் நியாய மான உரிமைகள் வழங்கத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தனர். இதை பிரதம மந்திரியான டாக்டர் ஹோட்ஸா 28.3.38-இல் ஓர் அறிக்கை மூலமாகப் பகிரங்கப்படுத்தினான். அரசாங்கத்தார், தங்கள் நல்லெண்ணத்திற் கறிகுறியாக, சிறைவைக்கப்பட்டிருந்த ஆயிரக் கணக்கான ஜெர்மானியர்களை விடுதலை செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினர்களுக்கு இன்னின்ன உரிமைகள் உண்டு என்பதை நிர்ணயித்து, ஒரு சட்டமியற்றி அதை அமுலுக்குக் கொண்டு வரப்போவ தாக 10.4.38-இல் டாக்டர் பெனேஷ், ஜெக்கோ ஸ்லோவேகிய பார்லி மெண்டில் கூறினான். இந்தச் சட்டத்தைப் பற்றி ஹென்லைன் கட்சியுடன் கலந்து பேசத் தாங்கள் சித்தமாயிருப்பதாக அரசாங்கத்தார் தெரிவித்தனர். ஆனால் ஹென்லைனுடைய கோரிக் கைகள் வரவர ஏறுமுகத்திலேயே சென்றன. அரசாங்கத்துடன் சமரஸம் செய்துகொள்ள வேண்டுமென்ற மனப்பான்மையை இவன் சிறிது கூடக்காட்டவில்லை. தவிர இதே சமயத்தில் ஜெர்மனி யில், ஹிட்லரும் கேரிங்கும், ஜெர்மனிக்குப் புறம்பா யுள்ள வெளி நாடுகளில் வசிக்கும் ஜெர்மானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜெர்மனி எப்பொழுதும் சித்தமாயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். தனக்கென்றே சொல்லப்பட்ட வாக்கியங்கள் இவையென்று ஹென்லைன் கருதிவிட்டான்.
1938-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி கார்ல்ஸ்பாட் என்ற ஊரில் ஸுடேடென் ஜெர்மானியக் கட்சி மகாநாடொன்று கூடியது. அதில் ஹென்லைன், கீழ்க்கண்ட எட்டு கோரிக்கைகளை வெளியிட்டான்:
1. ஜெக்கர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் சரி சமான அந்தஸ்து இருக்க வேண்டும்.
2. இந்த அந்தஸ்து சட்டத்தின் மூலமாக உறுதி செய்யப் பட வேண்டும்.
3. ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள ஜெர்மானி யர்கள் வசிக்கும் பிரதேசங்களை ஜெர்மானியப் பிரதேசங் களென்று சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
4. இந்த ஜெர்மானியப் பிரதேசங்களுக்குப் பூரண சுயாட்சி கொடுத்தல் வேண்டும்.
5. இந்த ஜெர்மானியப் பிரதேச எல்லைக்குப் புறம்பாக வசிக்கும் ஒவ்வொரு ஜெர்மானியனுக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிக்கப் பெற வேண்டும்.
6. 1918-ஆம் வருஷத்திலிருந்து ஜெர்மானியர்களுக்கு இழைக்கப் பட்டு வந்த அநியாயங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும்; இதற்காகப் பரிகாரமும் தேடிக் கொடுக்கப்பட வேண்டும்.
7. ஜெர்மானியப் பிரதேசங்களில், ஜெர்மானிய உத்தி யோகஸ் தர்களே நிருவாகத்தை நடத்தவேண்டும் என்ற கொள்கையை அங்கீகரித்து அதனை நடைமுறையில் கொணர வேண்டும்.
8. ஜெர்மானியர்கள், தங்கள் ஜெர்மானியப் பிரஜா உரிமையை அநுபவிக்கவும், தங்கள் அரசியல் தத்துவப்படி நடந்து கொள்ளவும் பூரண உரிமைபெற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை எந்தத் தன் மதிப்புள்ள அரசாங் கமும் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா? ஜெக்கோ ஸ்லோவேகி யாவை அப்படியே ஜெர்மானியர்கள் வசம் ஒப்புவித்து விடுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக இந்த எட்டு கோரிக்கைகளை ஹென்லைன் கிளத்தியிருக்கிறான் என்று ஜெக்கர்கள் கருதி னார்கள். ஆயினும் அரசாங்கத்தார் சமரஸமாகப் போக வேண்டு மென்ற ஒரே நோக்கத்தோடு இந்த எட்டு கோரிக்கைகளையும் பரி சீலனை செய்யத் தொடங்கினார்கள். 26.4.38-இல் கூடிய மந்திரிச் சபை, இந்தக் கோரிக்கைகளை நிராகரித்து, தாங்கள் புதிதாக அமுலுக்குக் கொண்டு வரப்போகும் சிறு பான்மையோர் சமூக உரிமைச் சட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்பது அம்சங்கள் இருக்கும் என்று பகிரங்கப்படுத்தினார்கள். அவை என்ன என்பதைக் கவனிப்போம்:
1. ஜாதி வாரியாகவும் ஜனத்தொகை விகிதப் படியும் உத்தியோகங்கள் கொடுத்தல். இஃது, ஏற்கனவே உத்தியோத் திலுள்ளவர்களையும் புதிதாக நியமிக்கப்படப் போகிறவர் களையும் பாதிக்கும்.
2. அந்தந்த ஜாதியினர் வசிக்கும் பிரதேசங்களில் அந்தந்த ஜாதி உத்தியோகஸ்தர்களையே நியமித்தல்.
3. எந்தெந்தப் பிரதேசங்களில் எந்தெந்த ஜாதியினர் வசிக்கின்றனரோ அந்தந்த ஜாதியினரான போலீஸ் உத்தி யோகஸ்தர்களையே அங்கு நியமித்தல்.
4. எல்லாப் பாஷைகளுக்கும் சம உரிமை கொடுக்கிற மாதிரி ஒரு பாஷா சட்டம் இயற்றுதல்.
5. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப் பட்ட ஜெர்மானியப் பிரதேசங்களில் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, சரளமான நிபந்தனைகளின் மீது 70 கோடி கிரவுன் - ஏறக்குறைய 670 லட்சம் ரூபாய் - அரசாங்கத் தார் கடன் கொடுத்தல்.
6. எந்தெந்த ஸ்தலங்களில் ஜெர்மானியர்கள் பெரும் பான்மையோராக இருக்கின்றனரோ, அந்த ஸ்தலங்களில் அவர்களுக்கு, அந்த ஸ்தல விவகாரங்களைக் கவனிக்கும்படி யான உரிமை கொடுத்தல். இந்தச் சுய ஆட்சித் திட்டப்படி, தேசீய ஒற்றுமையைத் தவிர்த்த மற்ற எல்லா விஷயங்களும், அந்தந்த ஸ்தல ஸ்தாபனங்களினாலேயே கவனிக்கப்படும். எல்லைப்புற விஷயமும், தேச ஒற்றுமை விஷயமும் தகுந்தபடி பாதுகாக்கப் பெறும்.
7. குடியரசு அரசாங்கத்தின் நேரான நிருவாகத்தின் கீழுள்ள எல்லாக் காரியாலங்களிலும் அந்தந்த ஜாதியினர் சம்பந்தமான விஷயங் களைக் கவனிக்க அந்தந்த ஜாதியினரே உத்தியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள்.
8. அந்தந்த ஜாதியினருடைய பிரஜா உரிமை இதற் கென்று அமுலுக்குக் கொண்டு வரப்பெறும் ஒரு விசேஷ சட்டத்தின் மூலம் பாதுகாக்கப் பெறும். அந்தந்த ஜாதி யினரின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனங்கள், தங்கள் ஜாதியார் பிரஜா உரிமையை அநுபவிக்கும் விஷயத்தில் தலை யிடப் பெறுவார்களானால், மேற்படி பிரதிநிதி ஸ்தாபனங் கள், விண்ணப்பங்கள் மூலமாக அரசாங்கத்திற்குத் தெரிவித்து அதற்குப் பரிகாரந் தேடிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஜாதி யாருக்கும் தனித்தனி ரிஜிஸ்தர்கள் வைக்கப் பெறும்.
9. சட்டத்தின் மூலம் பரிகாரந் தேடிக் கொள்ள வேண்டுவது அநாவசியம் என்று கருதப்படுகிற எல்லாக் குறைகளையும் சமரஸப் பேச்சுக்கள் மூலம் நிவர்த்தித்துக் கொள்ளலாம். அரசாங்கத்தார் சிறு பான்மைச் சமூகத்தினர் சம்பந்தமாகப் புதிய சட்டத்தைத் தயார் செய்கிற போது ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியைக் கலந்தே தயார் செய்வார்கள். இந்தச் சட்டம், பார்லிமெண்டில் ஆஜர்படுத்தி அங்கீகாரம்பெற்ற உடனே அமுலுக்குக் கொண்டு வரப்படும்.
இந்தப் புதிய சிறுபான்மைச் சமூகத்தினர் சம்பந் தமான சட்டம், ஜெர்மானியர்கள் விஷயத்தில் மட்டுமல்ல; எல்லாச் சமூகத்தினர் விஷயத்திலும் அமுலுக்கு வரும். ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசின் வருங்கால வளர்ச்சிக்கு, இந்தச் சட்டம் புதிய அஸ்திவாரமாக அமையும்.
இதைவிட வேறுவிதமாகவோ, அல்லது தாரள மனப்பான் மையுடனோ, இந்தப் பிரச்னையைக் கவனித்திருக்க முடியாது. இந்த விவரங்களை, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், பிரிட்டன், பிரான்ஸ் முதலிய மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளுக்குத் தெரிவித் தனர். பிரிட்டனும், பிரான்ஸும் 29.4.38ல் இது சம்பந்தமாகக் கலந்தாலோசிக்கக் கூடின. ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் தினாலேயே தீர்க்கப்பட வேண்டிய ஓர் உள்நாட்டுப் பிரச்னை யாகவோ, அல்லது ஜெர்மனியும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்க மும் கலந்து பேச வேண்டிய விஷயமென்றோ இந்தப் பிரச்னையைக் கருதாமல், இந்த இரண்டு வல்லரசுகளும், இந்தப் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு தங்களுடையதே என்று தாங்களே தீர்மானித்துக் கொண்டு ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்திற்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்து விட்டன. 7.5.38-இல் ப்ரேக் அரசாங்கத்திற்கு இந்த இரண்டு வல்லரசுகளும் சேர்ந்து அனுப்பிய அறிக்கையில், தேசப் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாமல் ஸுடே டென் ஜெர்மானியர்களுக்கு எவ்வளவு தூரம் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்குமாறு கூறின. ப்ரேக் அரசாங்கம் இந்த ஆலோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டது. ஜெர்மனிக்கு இந்த விஷயம் தெரிந்ததும், பிரான்ஸை யும் பிரிட்டனையும் பாராட்டியது! பிரிட்டனும் பிரான்ஸும் சேர்ந்து சொன்ன இந்த ஆலோசனை ஹென்லைனுக்கு எட்டியதோ என்னவோ தெரியாது. அல்லது ஜெர்மனியிடமிருந்து இன்னும் கொஞ்சம் அரசாங்கத்தை முடுக்கிப் பார்க்குமாறு உத்திரவு கிடைத்ததோ என்னவோ அதனையும் நாம் அறியோம். ஆனால், இந்தச் சிறுபான்மைச் சமூகத்தினர் சம்பந்தமான சட்டம், ஜெர் மானியர்களுக்குக் கீழானதோர் அந்த ஸ்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிற தென்றும், இதற்குத் தான் இணங்க முடியா தென்றும் மறுத்து விட்டான் ஹென்லைன்.
ஸுடேடென் ஜெர்மானியர்கள் இங்ஙனம் பலமாகக் கூச்சல் போடுவதனால்தான் அவர்களுக்கு அரசாங்கத்தார் விட்டுக் கொடுத்து வருகின்றனர் என்று ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள மற்றச் சிறுபான்மைச் சமூகத்தினரும் கருதிவிட்டார்கள். 8.5.38-ல் ஹங்கேரியர் களும், 11.5.38-ல் போலிஷ்காரர்களும், ஸுடேடென் ஜெர்மானியர்களுக்கு எந்தவிதமான சலுகைகள் காட்டப்பட்டிருக் கின்றனவோ அதேமாதிரி தங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டு மென்று அரசாங்கத்திற்குத் தாக்கீது விடுத்தனர். உண்மையில் இவர்கள் இங்ஙனம் தாக்கீது விடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் தயாரித்த சிறு பான்மைச் சமூகத்தினரின் சட்டம் எல்லாச் சமூகத்தினருக்குந்தான்; ஸுடேடென் ஜெர்மானியர்களுக்கு மட்டுமல்ல.
1938-ஆம் வருஷம் மே மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து ஜூன் மாதம் இரண்டாவது வாரம் வரை மூன்று முறையாக ஜெக்கோ ஸ்லோவேகியாவின் ஜெர்மானியப் பிரதேசங்களில் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்தத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முந்தி-அதாவது மே மாதம் 12-ந் தேதியிலிருந்து 14-ந் தேதி வரை-ஹென்லைன், லண்டனுக்குச் சென்று பிரிட்டிஷ் மந்திரிகளுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.
தேர்தல் சம்பந்தமாகப் பிரசாரங்கள் நடைபெறுவது எங்கும் இயற்கைதான். அப்பொழுது சில இடங்களில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படுவதும் சகஜமே. இந்த மாதிரியான சிறிய பொறிகள் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் இந்தத் தேர்தல் காலத்தில் ஆங்காங்குக் கிளம் பின என்பதை யாருமே மறுக்க முடியாது. ஆனால் ஸுடேடென் ஜெர்மானியர்கள் இவற்றைப் பிரமாதப்படுத்தி வரத் தொடங் கினார்கள். ஜெர்மானியப் பிரதேசங்களில் வசிக்கும் ஜெர்மானியர் களை, ஜெக்கர்கள் பலவிதமாகப் பயமுறுத்தி வருகிறார்களென்று ஸுடேடென் கட்சித் தலைவர்கள் குறை கூறினார்கள். அமைதியை நிலவச் செய்தாலொழிய, சிறுபான்மைச் சமூகச் சட்டம் இயற்றப் படுவதின் சம்பந்தமாக, அரசாங்கத்துடன் எவ்விதப் பேச்சுவார்த் தைகளும் நடத்த முடியாதென்று தெரிவித்துவிட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் லண்டனிலிருந்து திரும்பி வந்த ஹென்லைன் மீண்டும் நாட்டை விட்டு வெளியே சென்றான். எங்கு? ஜெர்மனிக்கு?
நாஜி அரசாங்கம் தன் படைகளைத் திரட்டி ஜெர்மனியின் கிழக் கெல்லையில் கொண்டு நிறுத்தப் போவதாக 11.5.38-ல் வதந்திகள் எழுந்தன. தன் மீது துவேஷங் கொண்ட ஒரு சிலரால் இது கிளப்பிவிடப்பட்டதென்று ஹிட்லர் பலமாக இதனை மறுத்திருக் கிறான்.1 ஏராளமான படைகளை எல்லைப் புறத்தில் கொண்டுவந்து நிறுத்தவில்லை யாயினும் ஒரு சில படைத் தொகுதிகள் அனுப்பப் பட்டன வென்பதை யாருமே மறுக்க முடியாது. ஜெக்கோ ஸ்லோ வேகிய எல்லைப்புறத்தில் ஜெர்மனி பலத்த படையை திரட்டியிருக் கிறது என்ற வதந்தியை வேறு யாரும் கிளப்பவில்லையென்றும், ஜெர்மனியே இதனை உண்டு பண்ணியிருக்க வேண்டுமென்றும், இந்த வதந்தியைக் கிளப்பி விட்டால் ஸுடேடென் ஜெர்மானியர்கள் அனைவரும் பயந்து ஹென்லைன் கட்சிக்கே ஓட்டு போடுவார் களென்று நம்பி ஜெர்மனி இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டு மென்றும் வெர்னான் பார்ட்லெட் என்ற அறிஞன் கருதுகிறான்.
ப்ரேக் அரசாங்கத்தாரர், ஜெர்மனியின் இந்தப் படைதிரட்டும் முயற்சியைப் பார்த்துத் தாங்களும் 21.5.38-ல் படை திரட்டலாயினர். சுமார் ஒரு லட்சம் பேர் யுத்த சந்நத்தரானார்கள். கேட்க வேண்டுமா எல்லைப்புறச் சம்பவங்களுக்கு? ஒருவரையொருவர் தாக்குவதாக இருதரப்பினரும் கூறத் தொடங்கினார்கள். இந்தச் சம்பவங்களில் இரண்டு ஸுடேடென் ஜெர்மானியர்கள் இறந்து போனார்கள். இது ஜெர்மனியில் பெரிய ஆத்திரத்தை மூட்டிவிட்டது. பிரிட்டனும் பிரான்ஸும் இந்த எல்லைப் புறச்சம்பவங்கள் நிகழாதபடி கூடிய வரை பாதுகாத்துக் கொள்ளு மாறு ப்ரேக் அரசாங்கத்துக்கு உபதேசம் செய்தன. டாக்டர் பெனேஷும், டாக்டர் ஹோட்ஸாவும் தாங்கள் இயற்றப்போகும் சிறுபான்மைச் சமூகச் சட்டத்தில் எவ்வளவு தூரம் ஸுடேடென் ஜெர்மானியர்களுக்குச் சலுகை காட்ட முடியுமோ அவ்வளவு தூரம் சலுகை காட்டத் தயாராயிருப்ப தாகவும், ஆனால் பலாத்காரத்தை பலாத்காரம் கொண்டே எதிர்க்கப்போவ தாகவும் பதில் தெரிவித்தார்கள்.
22.5.38-ல் முதல் தொகுதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜெர் மானியர்களில் 100-க்கு 92 பேர் ஹென்லைன் கட்சிக்குச் சாதகமாக ஓட் போட்டார்கள். இந்த வெற்றி, ஹென்லைனுடைய ஸ்வரத்தை இன்னும் கொஞ்சம் உச்சஸ்தாயியில் கொண்டு நிறுத்தியது. சிறு பான்மைச் சமூகத்தினரின் சட்ட சம்பந்தமாகத் தங்களுடைய ஆலோ சனைகளைக் கூறுமாறு ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியின் பிரதி நிதிகளை டாக்டர் ஹோட்ஸா அழைத்தான். ஆனால் திரட்டப்பட் டுள்ள படையைக் கலைத்து விட்டாலன்றித் தாங்கள் ஒத்துழைக்க முடியாதென்ற இவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கத்தாரும், எப்படியாவது நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்ற ஒரே நோக்கங் கொண்டு, திரட்டப்பட்ட படையில் பாதியை 30.5.38-இல் கலைத்து விட்டார்கள். இதனால் ஸுடேடென் பிரதேசம் சிறிது அமைதியாயிருப்ப தாகக் காட்சி தந்தது. அடிப் படையில் என்னவோ குமுறல் இருந்து கொண்டுதானிருந்தது.
3.6.38-இல் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் தங்கள் ராணுவத்தில் சேவை காலத்தை அதிகப்படுத்தத் திட்டம்போட்டுக் கொண்டிருந்தனர். ஜெர்மனியின் ஆக்ரமிப்பினின்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருந் தார்களே யானால் அதில் ஒன்றும் தவறில்லையே? ஆனால் ஜெர் மனியில் இது பெரிய கூக்குரலைக் கிளப்பியது. ருஷ்யாவின் தூண்டு தலின் பேரில், ஜெக்கோ ஸ்லோவேகியா இங்ஙனம் செய்துவருகிற தென்றும், போல்ஷ்வெஸத்தின் முன்னணிப் படைபோல் இஃதிருக் கிறதென்றும் ஹிட்லரின் சிஷ்யர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள். இதற்கிடையில் 22.5.38-ல் தொடங்கின ஸ்தலஸ்தாபனத் தேர்தல்கள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஏறக்குறைய எல்லாப் பிரதேசங் களிலும் நடைபெற்று முடிந்தன. ஸுடேடென் கட்சியினருக்கும் ஜெக்க ஐக்கிய கட்சியினருக்கும் அதிகமான வெற்றிகள் கிடைத்தன. ஜெர்மனியில் இது பெரிய மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. ஸுடே டென் ஜெர்மானியக் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை இன்னும் பலமாக வலியுறுத்தத் தொடங்கினார்கள். ஒருவருக்கொருவர் மனம் விட்டுக் கலந்து பேசினால் எல்லாவற்றையுமே சமரஸமாகத் தீர்த்துக் கொள்ளலா மென்று டாக்டர் ஹோட்ஸா பன்முறை வலியுறுத்திக் கூறியதன் பேரில் 14.6.38-ல் அரசாங்கப் பிரதிநிதிகளும் ஸுடேடென் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து பேசத் தொடங்கினார்கள். இதி லிருந்து தொடங்கிய சமரஸப் பேச்சுக்களில் ஹென்லைன் நேர்முக மாகக் கலந்து கொள்ளாமல் பின்னாலிருந்து ஆட்டிவைக்கும் சூத்திரதாரி போலவே நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சமரஸப் பேச்சுகள் சுமார் ஒருமாத காலமாக நடை பெற்று வந்தன. அரசாங்கத்தார் விட்டுக்கொடுக்க விட்டுக்கொடுக்க, ஸுடேடென் கட்சியினர் ஏறிக்கொண்டே வந்தனர். 21.6.38-ல் டாக்டர் கெப்பல்ஸ், ஜெர்மனியில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில், ஒரு ஜாதியை இரண்டு நாடுகளுக்குட்பட்ட பிரஜைகளாகப் பிரித்து வைத் திருப்பதை இனியும் ஜெர்மனி பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறினான். ஜெர்மானியப் பத்திரிகைகள் பெனேஷ் மீதும், ஹோட்ஸா மீதும் வசையம்புகளைச் சரமாரியாகப் பொழிந்தன. ஸுடேடென் ஜெர்மானியர்கள் ஏதோ ஒரு பெரிய நரகத்தில் வசித்துக் கொண்டிருப்ப தாகவே கற்பனை செய்து இவை எழுதிவந்தன. மற்றொரு நாட்டை ஆக்ரமிப்பதற்கு முன்னர், ஜனங்களின் மனதைப் பக்குவப் படுத்துவதற்கு இந்த மாதிரியான பிரசாரங்களைச் செய்வதில் ஜெர்மனி கைதேர்ந்திருக் கிறதென்பதை ஆஸ்திரியா விஷயத்தில் நாம் கண்டோமில்லையா?
ஆனால் நிதானஸ்தனும் பொறுமைசாலியுமான டாக்டர் பெனேஷ், இந்தக் கூக்குரல்களுக்கெல்லாம் பதறிப்போகாமல் 30.6.38-ல் விடுத்த ஓர் அறிக்கையில், சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அரசாங்கத்தினர் எவ்வளவு தூரம் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் விட்டுக்கொடுக்கத் தயாராயிருப்பதாகவும், இந்தப் பிரச்னையை இன்னும் சில வாரங்களில் நியாயமான முறையில் தீர்த்து வைக்க அரசாங்கத்தார் உறுதி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டான்.
இதே சமயத்தில் ஹங்கேரியப் பிரதிநிதிகளும், போலிஷ் பிரதி நிதிகளும் தங்களுடைய சமூகத்தினருக்கு எல்லாவித உரிமைகளை யும் நல்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு வந்தார்கள். எல்லாச் சிறுபான்மைச் சமூகத்தினரும் ஒரே சமயத்தில் கிளம்பி, தங்கள் உரிமைகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்து வந்த காலத்திலும், அரசாங்கத்தார் எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் தாராள மனப்பான்மை யுடனேயே நடந்து வந்தார்கள். ஆனால் இதுவே இவர்களுக்கு வினையாக வந்து முடிந்தது.
இந்தச் சிறுபான்மைப் பிரச்னை, சமரஸமாக முடியாதவரை ஐரோப்பாவில் எந்த நிமிஷத்திலும் யுத்த ஆபத்தை எதிர்பார்க்கலா மென்பதை ஏற்கனவே நன்றாகத் தெரிந்து கொண்டிருந்த பிரிட்டனும், பிரான்ஸும் என்றுமில்லாத சிரத்தையை இந்த விஷயத்தில் 1.7.38 லிருந்து காட்டத் தொடங்கின. இதைத் தெரிந்து கொண்ட ஹிட்லர், 12.9.38-ல் நியூரெம்பெர்க்கில் நாஜி காங்கிரஸ் நடைபெறு வதற்குள் இந்த ஸுடேடென் பிரச்னை ஒருவிதமாகத் தீரவேண்டு மென்று 6.7.38-ல் முடுக்கினான். பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஜெர்மனி யின் அதிருப்தியை எந்த விதத்திலும் சம்பாதித்துக் கொள்ளக் கூடாதென்ற நோக்கத்தோடு இந்த ஸுடேடென் பிரச்னை விஷயத் தில் தாங்களே வலியச் சென்று சமரஸம் செய்து வைக்கத் தீர்மானித்தனர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தார், பிரெஞ்சு அரசாங்கத்தின் சம் மதத்தைப் பெற்றுக் கொண்டு, லார்ட்ரன்ஸிமான் என்ற ஒரு பிரபுவை மத்திய ஸ்தத்திற்கு அனுப்பப் போவதாக, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் தாருக்கு 24.7.38-இல் தெரிவித்தனர். டாக்டர் ஹோட்ஸா வும் 26.7.38-இல் இதற்குச் சம்மதிப்பதாகத் தெரிவித்தான். ஸுடே டென் ஜெர்மானியர் களும், ரன்ஸிமானின் வருகைக்கு ஆட்சேபம் சொல்லவில்லை. 2.8.38-இல் லார்ட் ரன்ஸிமான், சில பரிவாரங் களுடன் லண்டனிலிருந்து ப்ரேக் நகரத்துக்குப் புறப்பட்டான். இந்த லார்ட் ரன்ஸிமான் இதற்கு முன்னர் எந்த விதமான தூதுசெல்லும் தொழிலிலும் அநுபவம் வாய்ந்தவனல்லன். இவன் ஒரு பெரிய பணக்காரன். வியாபார நிபுணன். ஆனால் அரசியல் சிக்கல்கள் பல நிறைந்த இந்த வேலையை சேம்பர்லேனின் வற்புறுத்தலின் பேரில் மேற்போட்டுக் கொண்டான்.
லார்ட் ரன்ஸிமான், ப்ரேக் நகரம் அடைந்ததும் ஸுடேடென் ஜெர்மானியக் கட்சித் தலைவர்களையும் அரசாங்கப் பிரதிநிதி களையும் கண்டு பேசினான். 21.8.38-ல் டாக்டர் பெனேஷ் வெளி யிட்ட ஓர் அறிக்கையில் ஸுடேடென் கட்சியினருடைய கோரிக் கைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தார் தயாராயிருப்பதாகத் தெரிவித்தான். இந்த நிலைமையை ஆதாரமாக வைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் தாங்கள் சமரஸம் பேசத் தயாராயிருப்பதாக ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியினரும் தெரிவித்தனர்.
இந்த சமரஸ மனப்பான்மையை, ஸுடேடென் ஜெர்மானியர் களில் சில மிதவாதிகள்தான் காட்டினார்களே தவிர, தீவிரவாதி களான பெரும்பான்மையோர், ஜெர்மானியப் பத்திரிகைகளின் ஆவேச வாசகங் களினால் தூண்டப்பட்டு வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து வந்தார்கள். உதாரணமாக 31.7.38-இல் ப்ரெஸ்லா என்ற ஊரில் நடைபெற்ற ஒரு தேகப் பயிற்சி சம்பந்தமான திருவிழாவில், ஆயிரக்கணக்கான ஸுடேடெனியர்கள், எங்கள் தலைவன் ஹிட்லர் என்று முழக்கம் செய்தார்கள். அதாவது ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் மீது தங்களுக்குள்ள பொறுப்பை இவர்கள் இங்ஙனம் மறைமுகமாகக் காட்டிக் கொண்டனர் என்றுதான் அனைவரும் கருதினர். நாளா வட்டத்தில் இதனைப் பகிரங்க மாகவும் காட்டத் தொடங்கிவிட்டனர்.
செப்டம்பர் மாதம் 1, 2-ந் தேதிகளில் ஸுடேடென் ஜெர் மானியர் களுக்கும் ஜெக்கர்களுக்கும் சில இடங்களில் கைகலந்த சிறிய சண்டைகள் நிகழ்ந்துவிட்டன. இரண்டு பக்கத்திலும் கொஞ்சம் சேதம் ஏற்பட்டது. இதற்கு என்ன பரிகாரம் தேடலாம் என்பதைப் பற்றி ஹிட்லருடன் கலந்து பேச ஹென்லைன் ஜெர் மனிக்குச் சென்றான். நிலைமை வர வர மோசமாக வருகிறதென்று கருதிய பிரிட்டிஷ் அரசாங்கத்தார், இந்தப் பிரச்னையை ஒருவித மாகத் தீர்த்து வைத்து விட வேண்டுமென்று ப்ரேக் அரசாங்கத்தை நெருக்கினர். லார்ட் ரன்ஸிமானும் ஸுடேடென் பிரதேசத்தை அப்படியே ஜெர்மனிக்கு ஒப்புவித்து விடுதல் நல்லதென்று ஜாடையாக ப்ரேக் அரசாங்கத் திற்குத் தெரிவித்தான். எப்படியாவது நாஜி காங்கிரஸ், நியூரெம் பெர்க்கில் நடைபெறுவதற்கு முன்னர் இந்த விஷயம் சமரஸமாக முடிய வேண்டுமென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆவல் கொண்டனர். உலக சமாதானத்தில் அவ்வளவு கவலை!
பிரிட்டனுடைய கட்டாயத்தின் பேரில் டாக்டர் பெனேஷ், சிறுபான்மைச் சமூகத்தினர் சம்பந்தமாகப் புதியதொரு திட்டத்தைத் தயாரித்து வெளியிட்டான். 6.9.38-இல் வெளியிடப் பெற்ற இந்தத் திட்டம், ஏறக்குறைய கார்ல்பாட் நகரத்தில் 24.4.38-இல் ஹென் லைன் கிளத்திய எட்டுக் கோரிக்கைகளையும் அப்படியே அங்கீ கரிப்பதாயிருந்தது. இதனை லார்ட் ரன்ஸிமானும் ஏற்றுக்கொண்டு, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் விசால மனப்பான்மை யைப் பாராட்டினான். ஸுடேடென் ஜெர்மானியர்களும் இந்தத் திட்டத்தைப் பரிசீலனை செய்து பார்ப்பதாகத் தெரிவித்தார்கள். நிலைமை திருப்திகரமாக வரும் போலிருந்தது. இப்படி நம்புவதற்கு வேறு ஓர் ஆதாரமுமிருந்தது. நியூரெம்பெர்க் நகரத்தில் ஒரு வாரம் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்ட நாஜி காங்கிரஸ் 5.9.38-ல் ஆரம்பமாயிற்றல்லவா? அன்று ஹிட்லர் செய்த பிரசங்கத்தில் ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்துடன் சமரஸ மாகப் போக வேண்டுமென்ற எண்ணம் ஜெர்மனிக்கு இருந்ததனால் தான் இதைப் பற்றி ஹிட்லர் ஒன்றும் பேசவில்லை யென்று உலக ராஜதந்திரிகள் நினைத்தார்கள். ஆனால் ஆஸ்திரியாவை ஜீரணித்துக் கொண்டு விட்ட ஹிட்லருக்கு, இந்த மாதிரியான விஷயங்களில் எதை எப்பொழுது எப்படிப் பேச வேண்டும் என்பது நன்கு தெரிந் திருக்கிறதல்லவா?
இந்த நிலைமையில் 9.9.38-இல் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று மேஹ்ரிஷ்ஷோஸ்ட்ரவ் (Maehrischostrau) என்ற ஊரில் ஜெக்கப் போர் வீரர்களால் கைது செய்யப்பட்ட ஒரு ஸுடேடென் ஜெர்மானியன் தப்பியோட முயன்றான். அப்பொழுது ஜெக்கர்கள் அவனைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த் தினார்கள். இது நாஜி காங்கிரஸில் கூடியிருந்த லட்சக்கணக்கான ஜெர்மானியர்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. இதனோடு ஜெக்க அரசாங்கத்தினரால் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுக் காப்பில் வைக்கப் பட்டிருந்த நூற்றுக்குக் குறை வான ஜெர்மானியர்கள், பல விதமான துன்பங்களுக்கும் உள்ளா கிறார்கள் என்ற செய்தியையும் ஜெர்மானியப் பத்திரிகைகள் கிளப்பிவிட்டன. இந்த இரண்டு சம்பவங்களும் மிகைப் படுத்திச் சொல்லப்பட்டன என்பதை பிரிட்டிஷ் அரசாங்கத்தாரே ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதனுடைய விளைவு என்னவாயிற் றென்றால் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்துடன் தாங்கள் எந்த விதமான சமரஸப் பேச்சும் பேசத் தயாராயில்லையென்று ஸுடேடென் கட்சியினர் கூறிவிட்டனர். இவர்களுடைய கட்சிக்கு ஆதாரந் தேடிக் கொடுப்பதுபோல் 11.9.38-இல் எகர் (Eger) என்ற ஊரில் சில சிறிய சச்சரவுகள் நடைபெற்றுவிட்டன. மறுநாள் 12.9.38-இல் நியூரெம்பெர்க் நாஜி காங்கிரஸில், ஹிட்லர், ஜெர்மனியின் அந்நிய நாட்டுக் கொள்கையைப் பற்றி விஸ்தரித்துப் பேசினான். அப்பொழுது ஜெக்கோ ஸ்லோவேகி யாவைப் பற்றியும் விரிவாகப் பேசினான். அதிலிருந்து மாதிரிக்காக சில வாக்கியங்களை இங்கு எடுத்துக் காட்டுவோம்.
பெனேஷ், தந்திரங்களினாலும், பேச்சுக்களினாலும் காலங் கடத்தப் பார்க்கிறான். சமரஸ ஏற்பாடுகள் செய்தும், ஜினீவா சர்வதேசச் சங்கக் கூட்டம் மாதிரி நடைமுறைகளில் சில சந்தேகங்கள் இருப்பதாகத் தெரிவித்தும், சிறிய சிறிய சலுகைகள் காட்டியும் காலத்தை நீடிக்கப் பார்க்கிறான். இப்படியே நீண்ட காலம் செய்து கொண்டு போக முடியாது. வெறும் பேச்சுப் பேசித் தீர்க்கிற விஷயமல்ல இது. ஜெர்மானியர் கள் கேட்பதெல்லாம் மற்றச் சமூகத்தினர் பெற்றுள்ள மாதிரி, சுய நிர்ணய உரிமைதான். ஸுடேடென் ஜெர்மானியர்களுக்கு பெனேஷ் எவ்வித நன்கொடைகளையும் கொடுக்க வேண்டிய தில்லை. மற்றவர்களைப் போல் நாங்களும் எங்களுக்குரிய வாழ்க்கையை நடத்தப் போகிறோம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமையுண்டு. ஜனநாயக வல்லரசுகள் இந்த விஷயத்தில் ஜெர் மானியர்களால் பாதிக்கப்படுகிறவர் களென்று சொல்லப்பட்ட சமூகத்தினரைக் காப்பாற்ற முற்படுமானால் இதனுடைய பலன்கள் விபரீதமாகிவிடும். இது விஷயத்தில் யாருக்கும் எவ்வித சந்தேகமு மில்லாதபடி சொல்லிவிடுவதுதான் சமாதானத்திற்குச் சிறந்த வழியாகும். 35 லட்சம் ஆங்கிலேயர்களையோ, பிரெஞ்சுக் காரர்களையோ துன்புறுத்தும் உரிமை தனக்கு வேண்டுமென்று ஜெர்மனி கேட்கவில்லை. ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகியா விலுள்ள 35 லட்சம் ஜெர்மானியர் களைத் துன்புறுத்துவது நின்றுவிடவேண்டும் என்றுதான் கேட்கிறது. அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை கொடுக்கப்பெற வேண்டுமென்றுதான் நான் கேட்கிறேன். இதற்காக ஜெர்மனிக்கும் மற்ற ஐரோப்பிய வல்லரசு களுக்கும் உள்ள தொடர்பு அற்றுப் போகுமானால் அது விசனிக்கத் தக்கதுதான். ஆனால் எங்கள் மீது குற்றம் சொல்ல வேண்டாம். ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், ஸுடேடென் ஜெர்மானியப் பிரதிநிதி களோடு உடனே சமரஸம் பேசி ஒரு முடிவு காணுதல் நல்லது. எங்களுடைய ஜெர்மானியச் சகோதரர்கள் தங்களது உரிமைகளைக் கேட்பது அநியாய மென்று சொல்லப்படுமானால் அதை நான் பார்த்துக் கொண் டிருக்க மாட்டேன். தவிர, மற்ற நாட்டு ராஜ தந்திரிகளின் செயலினால், ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தின் இருதய ஸ்தானத்தில் இரண்டாவது பாலஸ்தீனம் ஒன்றை சிருஷ்டி செய்ய நான் விரும்பவில்லை. அங்கே அராபியர்கள் பாதுகாப்பற்றவர் களாக இருக்கிறார்கள்; பிறரால் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள ஜெர்மானியர்களுக்குப் பாதுகாப்பு உண்டு; அவர்கள் கைவிடப் பட்டவர்களு மல்லர்.
X சமாதானத்திற்குப் பலி
9.9.38-ல் மேஹ்ரிஷ்ஷோஸ்ட்ரவ் என்ற ஊரில் நடைபெற்ற சம்பவத்தன்று, பிரிட்டிஷ் அரசாங்கத்தார், ஐரோப்பாவில் எந்த நிமிஷத்திலும் யுத்தப் பொறி, கனல்விட்டு மூளலாம் என்று கருதி அதற்காவன செய்யத் தொடங்கினார்கள். கப்பற் படைகள் தயாரா யிருக்கும்படி உத்திரவு செய்யப்பட்டன. 11.9.38-ல் சேம்பர்லேன் விடுத்த ஓர் அறிக்கையில், எந்த விதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டாலும் அது பிரான்ஸும் பிரிட்டனும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை யாகவே இருக்கும் என்று குறிப்பிட்டிருந் தான். ஜெக்கோ ஸ்லோவேகியா, எதிர்பார்க்கப்படாத விதமாக ஜெர் மனியினால் தாக்கப்பட்டால், பிரிட்டனும் பிரான்ஸும் அதற்கு அவசியம் துணைபோகும் என்றுதான், அரசியல் அகராதியைப் புரட்டிப் பாராதவர்கள்கூட நம்பிக்கொண்டிருந் தார்கள். சென்ற ஐரோப்பிய யுத்த காலத்தில் நேசக் கட்சியினர் வெற்றி பெறுவதற்கும், சிறப்பாகக் கிழக்குப் போர்முனையில் ஜெர்மானியர்களை விரட்டி யடிப்பதற்கும் துணை செய்தவர்கள் இந்த ஜெக்கர்கள் என்ற நன்றி யாவது பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்கும் இருக்கும் என்று மனச் சாட்சி படைத்த பலரும் கூறிவந்தார்கள். ஆனால் நடந்தது வேறு மாதிரி.
நியூரெம்பெர்க் நாஜி காங்கிரசில் (12.9.38) ஹிட்லர் நிகழ்த்திய சொற்பொழிவில் ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கத்தக்கது. இது வரையில் ஸுடேடென் பிரச்னை, ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் உள்நாட்டுப் பிரச்னையாகவே கருதப்பட்டு வந்தது. இரண்டு கட்சி யினரும் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்றுதான் அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டு வந்தது. ஸுடேடென் கட்சியினருக்கு ஜெர்மானிய அரசாங் கத்தின் தூண்டுதலோ ஆதரவோ இருந்திருந் தாலும் அது பகிரங்க மாகக் காட்டப்படவில்லை. ஜெர்மன் அரசாங்கத்தாரும் இதனை உத்தியோக தோரணையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ஹிட்லர் இந்த நியூரெம்பெர்க் பிரசங்கத்தில்தான், ஸுடேடென் ஜெர்மானியர்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஜெர்மனி ஆதரவு கொடுக்குமென்று பகிரங்கமாகக் கூறினான். இந்த ஒரு விஷயந்தான் பிரிட்டிஷ் அரசாங்கத் தினுடையவும் பிரெஞ்சு அரசாங்கத்தினுடை யவும் பிந்திய ஓட்டங்களுக்கும் ஆட்டங்களுக்கும் காரணமாயிருந்தது.
ஹிட்லரின் இந்தப் பேச்சு, ஸுடேடென் பிரதேசங்களிலுள்ள ஜெர்மானியர்களுக்கு என்றுமில்லாத ஒரு நம்பிக்கையையும் தைரியத்தையும் உண்டுபண்ணி விட்டது. ஜனங்கள் பலவிதமாக ஆர்ப்பாட்டங்கள் செய்யத் தொடங்கினார்கள். சில இடங்களில் கலகங்கள் உண்டாயின. ஜெக்கப் போலீஷ்காரர்களும் அரசாங்க உத்தியோகஸ்தர் களும் தாக்கப்பட்டார்கள். சில கட்டிடங்களும் எரிக்கப்பட்டன.
செப்டம்பர் மாதம் 12-ந் தேதியிலிருந்து 14-ந் தேதிக்குள் இரண்டு நாட்களில் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்க அறிக்கைப்படி 21 பேர் மரணமடைந்தனர்; 75 பேருக்குக் காயம். எந்த அரசாங்கம் இதைக் கண்டு சும்மா இருக்க முடியும்? உடனே ஸுடேடென் பிர தேசங்களில் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அரசாங்கத்தார் கொஞ்சம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டார்க ளென்பதில் சந்தேக மேயில்லை. பொறுப்புள்ள ஓர் அரசாங்கம் கைகட்டிக் கொண்டு சும்மா இருக்குமா? ஆனால் ஸுடே டென் கட்சித் தலைவர்கள் இதைக் கண்டு ஆத்திரமடைந்தார்கள். 13.9.38-ல் எகர் என்னும் நகரத்தில் இவர்கள் ஒரு கூட்டம் கூட்டி அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கை விடுத்தனர். ராணுவச் சட்டத்தை உடனே ரத்து செய்து விடவேண்டு மென்றும், அப்படி ரத்து செய்யா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப் பாளிகளாக முடியாதென்றும் அரசாங்கத்திற்குத் தெரிவித்தனர். சமரஸத்திற் காகவே ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு எழுந்தருளி யிருந்த லார்ட் ரன்ஸிமான், ஸுடேடென் கட்சியினரையும் அரசாங் கத்தினையும் ஒன்றுகூட்டி வைக்கப் பல முயற்சிகள் செய்தான். ஹென்லைன் கட்சியினர் ஒரே பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
14.9.38-இல் ஹென்லைன், ஓர் அறிக்கை விடுத்தான். தான் முன்னர் கார்ல்ஸ்பாட் மகாநாட்டில் கூறிய எட்டு திட்டங்களும் ஜெர் மானியர் களுக்கு இப்பொழுது திருப்தியளிக்காதென்றும், அதை அடிப்படையாகக் கொண்டு இனிச் சமரஸம் பேசுவது வீண் என்றும், இப்பொழுது ஜெர்மானியர்கள் வேண்டுவதெல்லாம் பூரண சுயநிர்ணய உரிமைதா னென்றும் குறிப்பிட்டிருந்தான். இந்த அறிக்கையை வெளியிட்டுவிட்டு இவன் ஜெர்மனிக்கு ஆகாய விமானத்தில் பறந்து சென்றான். அங்கு நாற்பதினாயிரம் பேர் கொண்ட ஸுடேடென் ஜெர்மானியப்படையொன்று தயாராயிருந்த தென்று சொல்லப்பட்டது. ஆக 12.9.38லேயே ஜெர்மனி, ஜெக்கோ ஸ்லோவேகியாவை விழுங்கி விடுவதற்குரிய எல்லா ஏற்பாடு களையும் செய்து வைத்திருந்தது. இதனை 29.9.38-ல் சேம்பர்லேன் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் பேசிய பேச்சிலும் குறிப்பிட்டிருக்கிறான். இந்த நிலையிலுங்கூட, அதாவது ஜெர்மனி படையெடுப்புக்கு வேண்டிய எல்லா ஆயத்தங்களையும் செய்திருக்கிறது என்பதை அறிந்த பிறகு கூட, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் படை திரட்டவில்லை; வேறுவித கடுமையான நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெர்மனியின் இந்தப் பயமுறுத்தலுக்கு ஏதேனும் ஒரு பரி காரம் தேடாவிட்டால், ஐரோப்பிய யுத்தம் உடனே மூளுவது நிச்சயம் என்று பிரிட்டனும் பிரான்ஸும் அஞ்சின. 15-9-38-இல் சேம்பர்லேன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினுடைய கௌரவத்தைக்கூட தியாகம் செய்து விட்டு ஹிட்லரைச் சந்திக்க ஆகாய விமானத்தில் சென்றான். பெர்ச்டெஸ் காடன் என்ற ஹிட்லரின் வாசஸ்தலத்தில் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். சர்வாதிகாரமும் ஜனநாயகமும் ஒன்றுகூடி உலகத்திற்கே காட்சி யளித்தன. இதனால் விளைந்தது அல்லது விளைவது நன்மையோ, தீமையோ அஃது ஒரு புறமிருக் கட்டும். ஹிட்லரிடத்தில் சேம்பர்லேன் வலியச் சென்றது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குக் கௌரவ பங்க மேற்பட்டுவிட்டதென்ற சாதாரண ஜனங்களின் கூற்றுக்குக் கூட நாம் அவ்வளவு முக் கியத்தும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், ஹிட்லரிடம் சேம்பர்லேன் பறந்தோடிச் சென்றது, ஜனநாயகப் போர்வையைப் போர்த்துக் கொண்டிருக்கிற ஏகாதிபத்தியம், பாசிஸம் அல்லது நாஜீயம் என்ற மாறு பெயர் களையுடைய சர்வாதிகாரத்தைத் தழுவிக்கொள்ளப் போகிற மாதிரி யாகவே இருந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு அடிக்க கூறுகிறபடி, ஏகாதிபத்தியமும், பாசிஸமும் அல்லது நாஜீயமும் ஒன்றுதான் என்ற உண்மையை இந்த இரண்டு பேருடைய சந்திப்பினால் நன்கு அறிந்து கொண்டுவிட்டது.
ஹிட்லர் - சேம்பர்லேன் முதற்சந்திப்பில் ஜெர்மனியின் கொள் கையும் அது செய்திருக்கிற ஏற்பாடுகளும் இன்னவை யென்பதை பிரிட்டன் நன்கு தெரிந்து கொண்டது. இந்த ஸுடேடென் பிரச்னைக்குப் பரிகாரந் தேடுமுகத்தான் உலக யுத்தத்திற்குக் கூடத் தான் தயார் என்று ஹிட்லர், சேம்பர்லேனிடம் கூறினான். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மீது உடனே படையெடுப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் தான் செய்திருப்பதாக ஹிட்லர் சூட்சும மாகத் தெரிவித்தான். ஸுடேடென் பிரதேசத்திற்குச் சுய நிர்ணய உரிமையை ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் அளிப்பதற்கு பிரிட்டன் ஜாமீனாக நிற்க முடியுமா என்று கேட்டான். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் வாக்குறுதிகளில் தனக்கு நம்பிக்கையில்லை யென்பதையும் தெரிவித்துவிட்டான். இந்த வாக்குறுதிகள் சம்பந்த மாக 23.9.38 தேதியிட்டு சேம்பர்லேனுக்கு அனுப்பிய கடிதத்தில் ஹிட்லர் கூறியிருக்கிற சில வாக்கியங்கள் ரசிக்கத்தக்கன.
ஸுடேடென், பிரதேசத்தை ஜெர்மானிய ஏகாதி பத்தியத்திற்குச் சேர்த்து விடுவதென்ற கொள்கையைத் தாங்கள் அங்கீகரிப்பதாகச் சொல்லுகிறீர்கள். சொல்லளவில் ஏற்கனவே இந்த உரிமை எங்களுக்குக் கிடைத்துத்தா னிருக்கிறது. 1918-ஆம் வருஷம் பிரசிடெண்ட் வில்ஸனுடைய கொள்கை களை அங்கீகரிப்பதாகிற அஸ்திவாரத்தின் மீதுதான் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அநுபவத்தில் இந்தக் கொள் கைகள் வெட்கப்படத்தக்க முறையில் நிராகரிக்கப்பட்டன. ஸுடேடென் பிரதேசம் ஜெர்மனிக்குச் சேரவேண்டும் என்ற கொள்கையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்பதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. இந்தக் கொள்கை உடனே நடைமுறையில் வர வேண்டும். அதன் மூலமாக ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கத்தினரால் துன்பம் அநுபவித்துக் கொண்டி ருக்கிற அநேக ஸுடேடென் ஜெர்மானியர்கள் விடுதலை பெற வேண்டும். அப்படி விடுதலை பெறுவது ஒரு வல்லரசின் கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
16-9-38-இல் சேம்பர்லேன் லண்டனுக்குத் திரும்பி வந்தான். தனக்கும் ஹிட்லருக்கும் நடந்த சம்பாஷணை விவரங்களை பிரிட்டிஷ் மந்திரிச்சபைக்குத் தெரிவித்தான். இந்த மந்திரிச்சபையில் லார்ட் ரன்ஸிமானும் ஆஜராகியிருந்தான். ப்ரேக் நகரத்தில் இவனுடைய தூது வேலைகள் முடிந்துவிட்டன! இந்த மந்திரிச் சபைக் கூட்டத்தில் லார்ட் ரன்ஸிமான் என்ன கூறினானென்றால், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் சமரஸ முயற்சிகள் முறிந்து போனதற்கு ஸுடேடென் ஜெர்மானியர்களே காரணம். ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் எந்தெந்தப் பிரதேசங்களில் ஜெர் மானியர்கள் பெரும்பான்மையோராக இருக்கின்றனரோ அந்தப் பிரதேசங்களுக்குச் சுயநிர்ணய உரிமை கொடுத்து அவற்றை ஜெர்மனியோடு சேர்த்துவிட வேண்டும். அந்தக் காரியத்தை இன்றே, இப்பொழுதே செய்துவிட வேண்டும் என்பதுதான்.
தவிர ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் உள்நாட்டு விவ காரங் களிலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் ஒழுங்குபடவும், சாமர்த்திய மாகவும் நடந்துகொள்ள வேண்டுமானால் தன்னைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுடனும் நட்பு முறையில்தான் வாழ வேண்டும் என்று அதற்கு உபதேசமும் செய்தான். அந்தோ! இந்த உபதேசம், ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு மரண சாஸனமாக வல்லவோ அமைந்து விட்டது!
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் ஒரு பாகத்தை அந்த அரசாங் கத்தின் சம்மதமின்றியே ஜெர்மனிக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்ற யோசனையை லார்ட் ரன்ஸிமான் ஒருவன் மட்டும் சொல்லவில்லை. 8.9.38-ல் வெளியான லண்டன் டைம்ஸ் பத்திரிகை தன் தலையங்கத்தில் ஸுடேடென் பிரதேசத்தை ஜெர்மனிக்குக் கொடுத்து விடுவதே நல்ல தென்று யோசனை கூறியது. பிரிட்டிஷ் அர சாங்கத்தின் கருத்தை எவ்வளவு முன்கூட்டியே இது பிரதிபலித்துத் தெரிவித்துவிட்டது!
லார்ட் ரன்ஸிமானுடைய யோசனையைப் பற்றி பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதி களும் 18-9-38-ல் லண்டனில் கூடிக் கலந்து பேசினார்கள். ஐரோப்பிய சமாதானத்தை முன்னிட்டு இந்த இரண்டு அரசாங்கங்களும் லார்ட் ரன்ஸிமானுடைய யோசனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டன! இதன்படி, எந்தெந்தப்பிரதேசங்களில் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 50 விகிதம் ஸுடேடென் ஜெர்மானியர்கள் இருக்கிறார் களோ அந்தப் பிரதேசங்களையெல்லாம் ஜெர்மனிக்கு உடனே கொடுத்துவிட வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்ட பிறகு எஞ்சி யுள்ள ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் எல்லைப்புறத்தை நிர்ணயிக்க, சர்வதேசப் பிரதிநிதிகளடங்கிய ஒரு கமிஷன் நியமிக்கப்படும். புதிதாக வரையறுக்கப் படும் எல்லைப் புறத்திற்குட்பட்ட ஜெக்கோ ஸ்லோவேகிய நாட்டின் சுதந்திரத்தை மற்ற ஐரோப்பிய வல்லரசு களுடன் சேர்ந்து பிரிட்டனும் பிரான்ஸும் காப்பாற்றும். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மீது யாராவது படையெடுத்து வந்தால், அப் பொழுது, மற்ற ஐரோப்பிய வல்லரசுகளுடன் சேர்ந்து பிரிட்டனும் பிரான்ஸும் அதற்கு உதவி புரியும். இதுதான் பிரிட்டிஷ் - பிரெஞ்சுத் திட்டம். என்ன கருணை!
இன்னொரு யோசனையையுங்கூட ஜெக்க அரசாங்கத் தாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது. ஸுடேடென் பிரதேசங் களை அப்படியே ஜெர்மனிக்குவிட்டுவிடுவது நல்லதென்றும், இதற்காக ஒரு பொதுஜன வாக்கு எடுத்துக்கொண்டு திண்டாட வேண்டியதில்லை யென்றும் தெரிவித்தது. ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி என்று தானம் செய்கிற தாராள மனப்பான்மையுடையவர்களை அபிசீனியாவோ, ஜெக்கோ ஸ்லோ வேகியாவோ என்றும் மறக்க முடியாதல்லவா?
ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் இத்தகைய சூழ்ச்சி களினால் சூழப்பட்டிருந்த போதிலும், எவ்வளவு கண்ணியமாகவும், பொறுமையுடனும், நிஷ்களங்கமாகவும் நடந்து வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கிறபோது கல்லா யிருக்கிற உள்ளமும் கொஞ்சம் நெகிழாமலிருக்க முடியாது. பிரதம மந்திரியான டாக்டர் ஹோட்ஸா, பிரிட்டிஷ் பிரெஞ்சுத் திட்டங்களைப் பெற்ற அதே தினத்தில் 18.9.38ல் தேசமக்களுக்கு ரேடியோ மூலம் ஒரு பிரசங்கம் செய்தான். அதில் சில வாக்கியங்கள் வருமாறு:
1914ஆம் வருஷத்து ஐரோப்பிய மஹா யுத்தத்தில் எந்த வல்லரசு களுடன் சேர்ந்து நாம் யுத்தஞ் செய்தோமோ, அந்த வல்லரசு களுடன் இன்று சேர்ந்து நின்று உலக சமாதானத் திற்காக நாம் பாடுபட்டு வருகிறோம். இப்பொழுது செய்யப் போகிற முடிவுகளில் நாம் மனோ உறுதியையும் ஆன்ம பலத்தையும் காட்டவேண்டும். நம் எதிரே நிற்பது ஒரு சமா தானப் பிரச்னை மட்டுமல்ல. நம்முடைய வருங்கால வாழ்வும் இந்தக் குடியரசின் ஒற்றுமையும் நம் எதிரே நிற்கின்றன. ஜெர்மானியர்களுக்கும் ஜெக்கர்களுக்கும் உள்ள சம்பந் தத்தைச் சமரஸமாகத் தீர்த்து வைக்க நாம் எவ்வளவோ முயன்றோம் என்பதை ஐரோப்பா நன்கு அறியும். ஆனால் இப் பொழுது திடீரென்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. நாம் இது சம்பந்தமாக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை அடக்கு முறையென்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். நிரந்தர மாயுள்ள ஓர் அரசாங்கத் தினிடத்தில் எந்த ஒரு பிரச்னையும் சமாதானமான முறையில் தீர்த்துக் கொள்ளக்கூடிய மார்க்கங் கள் பல இருக்க, அதற்கு விரோமாகக் கலகம் செய்கிறவர்கள் யாரையுமே எந்த ஓர் அரசாங்கமும் அடக்கியேதான் ஆக வேண்டும். இதற்காகவே அரசாங்கத்தார் ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தனர். தேவையுள்ள வரையில் இந்தச் சட்டம் அமுலில் இருக்கும் நம்முடைய சத்துருக்கள் நம்மைப் பலவிதமாகப் பிரிக்க முயன்றார்கள். ஆனால் அவர் களால் வெற்றி பெற முடியாது. இது காரணமாக நம்முடைய தியாக உணர்ச்சியும் மனோபலமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. சண்டை போடத் தயாரா யில்லாதவர்கள் சமாதானத்திலே வாழ முடியாது என்ற உண்மையை நமது தேச சரித்திரம் நமக்குப் புகட்டியிருக்கிறது. ஆதலின் இனி வரப்போகிற நாட்களை அசையாத உள்ளத் தோடு எதிர்பார்ப்போம். நாம் சத்தியவாதிகளானபடியால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நமக்குத் தெரியும். நாம் கேட்பதெல்லாம் சமாதானம்; சுதந்திரம். அல்லது சுதந்திரம்; சமாதானம். இதற்காக நாம் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கப் போவதில்லை. ஏனென்றால் நம்மிடத்தில் அசையாத உறுதி யுண்டு; சலியாத இருதய முண்டு. இந்த நெருக்கடியான நிலைமையிலுங்கூட அரசாங்கத்தார் சமா தான முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். ஹென்லைன் கட்சியினர் எங்களோடு சமாதானத்திற்கு வர மறுத்து விட்டாலும், அரசாங்கத்தார் எல்லாச் சிறுபான்மைச் சமூகத் தினருடனும் சமரஸமான முறைகளைக் கையாளவே தீர்மானித் திருக்கின்றனர். ஹென்லைன் போன்ற ஒரு சிலர் சமாதானத் திற்கு வர இணங்கா விட்டாலும் பெரும்பாலோரான ஸுடே டென் ஜெர்மானியர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.
பிரிட்டனும் பிரான்ஸும் சேர்ந்து செய்த திட்டங்களை ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தினருக்கு அனுப்பினார் களல்லவா? இதற்கு 20.9.38-இல் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங் கத்தினர் பதில் விடுத்தனர். இந்த ஸுடேடென் பிரச்னையை ஒரு மத்தியஸ்தத்தின் மூலமாகத் தீர்த்து வைத்தல் நல்லதென்று அதில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பிரிட்டனும் பிரான்ஸும் தங்களுடைய திட்டங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வலி யுறுத்தின. வேறு என்ன செய்யும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம்? 21.9.38-ல் எவ்வித நிபந்தனைகளுமின்றி பிரிட்டிஷ் - பிரெஞ்சு திட்டங்களை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டது.
ஆனால் ஜெக்கப் பொது ஜனங்களுக்கு இது பெரிய அதிருப் தியை உண்டாக்கியது. ப்ரேக் நகரத்துப் பெரிய சதுக்க மொன்றில் பொது ஜனங்கள் திரளாகக் கூடி, இந்த மாதிரியான சமரஸத்திற்கு அரசாங்கத்தார் உடன்படக்கூடாதென்றும், அரசாங்கம் போர் முனைக்குச் செல்லுமானால் ஜனசக்தி அதற்குப் பின்பலமாயிருக்கு மென்றும் ஆரவாரம் செய்தார்கள்.
ஒரு பக்கம் பொது ஜனங்களின் அதிருப்தி! மற்றொரு பக்கம் மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் நெருக்குகின்றன! என்ன செய்யும் அரசாங்கம்? டாக்டர் ஹோட்ஸாவைப் பிரதம மந்திரியாகக் கொண்ட மந்திரிச் சபை, 22.9.38-இல் ராஜீநாமா செய்துவிட்டது. இது தங்களுக்குப் பெரிய வெற்றி யென்றும், ஜெர்மனியின் ராணுவ பலத்திற்குப் பயந்து அரசாங்கம் ராஜீநாமா செய்திருக்கிற தென்றும் ஸுடேடென் ஜெர்மானியர்கள் நினைத்துவிட்டார்கள். ஸுடே டென் எல்லைப்புறப் பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெக்கப் பாதுகாவல் படைகள் பின்வாங்கிக் கொண்டுவிட்டன. ஸுடேடெனியர்கள், ஜெக்கர்களின் நிருவாகத்திற்குட் பட்டிருந்த சுங்கச் சாவடிகள், போலீஸ் கட்டிடங்கள் முதலியவற்றைச் சூறை யாடி, அங்கிருந்த ஜெக்க உத்தியோகஸ் தர்களைச் சிறைப்படுத்தி விட்டார்கள். சுருக்கமாகச் சொல்லு மிடத்து, இந்த ஸுடேடென் பிரதேசங்களில், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்க ஆதிக்கம் இல்லாமல் போய்விட்டது. மந்திரிச் சபை ராஜிநாமாவினால் விளைந்த விளைவுகள் இவை!
ஹோட்ஸா மந்திரிச் சபை ராஜீநாமா செய்த அன்றே 22.9.38-இல் பிரதம ராணுவ தளகர்த்தனாயிருந்த தளபதி சிரோவி (General Sirovy) என்பவனுடைய தலைமையில் புதிய மந்திரிச்சபை அமைந்தது. இதில் முன் மந்திரிச்சபையிலிருந்த டாக்டர் க்ரோப்டா வும் (Dr. Krofta) டாக்டர் கால்பஸும் (Dr. Kalfus) மந்திரிகளானார்கள். இந்தப் புதிய மந்திரிச்சபை, ஒரு ராணுவ அரசாங்கமாக அமைந்து, யுத்தத்திற்கு முனையும் என்று பலரும் எதிர் பார்த்தனர். இந்தத் தைரியத்துடன்தான், முதல் நாள் ஸுடேடென் பிரதேசங்களைக் காலி செய்துவிட்ட ஜெக்கப் படைகள், மீண்டும் அந்தப் பிரதேசங் களை ஆக்ரமித்துக் கொண்டன. ப்ரேக் நகரத்திலிருந்த எல்லா பிரிட்டிஷ் பிரஜைகளும், தங்கள் குடும்பத்தினரை, ஜெக்கோ ஸ்லோ வேகியாவுக்கு வெளியே அனுப்பி விடுதல் நல்லதென்று எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.
இந்த மாதிரி, நிலைமை மாறும் என்று பிரிட்டனும் பிரான்ஸும் எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது தங்களுடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தை நெருக்கின. வேறென்ன செய்யும் அந்த அரசாங்கம்? பணிந்து விட்டது. பிரிட்டிஷ் - பிரெஞ்சுத் திட்டங்களை ஏற்றுக் கொண்டது. 22.9.38-ல் டாக்டர் பெனேஷ், ரேடியோ மூலம் விடுத்த செய்தி எவ்வளவு உருக்கமாயிருக்கிறது?
மிகவும் நெருக்கப்பட்ட படியால் நாங்கள் இங்ஙனம் பணிய நேர்ந்தது. வீழ்ந்துபட்ட ஒரு ஜன சமூகத்தை இங்ஙனம் நெருக்கியது சரித்திரத்தில் இதற்கு முன் நடைபெறவில்லை. ஆனால் நாம் வீழ்ந்து பட்டவர்களல்ல. துன்பமும், ரத்தஞ் சிந்துதலும் வேண்டாமென்பதற்காக நாம் இங்ஙனம் பணிந்து கொடுத்தோம். மனித சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக எப்படி கிறிஸ்து நாதர் தம்மைத் தியாகம் செய்து கொண்டாரோ, அதுபோல், நாம் சமாதானத்தைக் காப்பாற்றுவதற்காக நம்மைத் தியாகம் செய்து கொள்கிறோம். இதற்கு யார் குற்ற வாளி என்பதை வருங்காலத்தின் தீர்ப்புக்கு விட்டுவிடுவோம். நாம் இப்பொழுது தனியாக நிற்கிறோம். ஆனால் ஜெக்கர் களாக ஒன்றுபட்டு நிற்கிறோம்.
கிறிஸ்து நாதரே! நீர் எங்கிருக்கிறீர்?
இங்ஙனம் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் பணிந்து கொடுத்ததைக் கண்ட போலந்தும் ஹங்கேரியும், தங்களுடைய சமூகத்தினருக்குச் சுயநிர்ணய உரிமை கொடுக்கப் படவேண்டு மென்று ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தை முன்னைவிட பலமாக வற்புறுத்தத் தொடங்கின. தங்களுக்கும் இதே சமயத்தில் சாதகம் செய்து கொடுக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் அரசாங்கத் தினிடம் விண்ணப்பித்துக் கொண்டன. போலந்து அரசாங்கம், டெஷேன் ஜில்லாவின் எல்லைப் புறத்தில் தன் துருப்புகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஹங்கேரிய அரசாங்கத்தின் ரீஜெண்டும் பிரதம மந்திரி முதலாயினோரும் 21, 22.9.38-ல் ஹிட்லரைக் கண்டு பேசினார்கள். ஹங்கேரியில் ராணுவம் திரட்டப்பட்டு விட்டது. இந்தப் பல நாட்டுச் சிக்கல்களுக்கிடையே, தங்களுடைய திட்டம் எங்கு மீண்டும் நிராகரிக்கப்பட்டு விடுகிறதோ என்று பிரிட்டிஷ் அரசாங்கத் திற்குக் கவலை யேற்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் ஹிட்லரின் அதிருப்திக்கு ஆளாக வேண்டுமல்லவா? யாருக்கோ தலைவலி? யாருக்கோ கவலை?
22.9.38-ல் இரண்டாவது முறை, கோடெஸ் பெர்க் என்ற ஊரில் சேம்பர்லேனும் ஹிட்லரும் சந்தித்தார்கள். பிரிட்டிஷ் - பிரெஞ்சுத் திட்டம் ஹிட்லருக்கு விளக்கிக் காட்டப்பட்டது. ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கத்தை இனி யாரும் தாக்கா வண்ணம் அதற்கு உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஹிட்லருக்கும் சேம்பர்லேனுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டுவிட்டது. கடைசி யில் பிரிட்டிஷ் - பிரெஞ்சுத் திட்டங்களை ஏற்றுக் கொள்ள ஹிட்லர் மறுத்து விட்டான். இதை சேம்பர்லேன் எதிர்பார்க்கவே இல்லை. ஹிட்லர் புதியதொரு திட்டத்தை சமர்ப்பித்தான். அதில் 1.10.38க்குள் இந்தத் திட்டம் அப்படியே அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கால வரையறையையும் குறிப்பிட்டு விட்டான். இந்தத் திட்டத்தை அப்படியே வாசகர்கள் தெரிந்து கொள்ளுதல் நல்லது.
ஸுடேடென் பிரதேசத்தில் நடைபெற்று வருகிற துர்ச் சம்பவங்கள் மணிக்கு மணி அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஸுடேடென் ஜெர்மானியர்கள் இதனை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இதனால் ஐரோப்பாவின் சமா தானத்துக்குப் பங்கம் ஏற்படும். ஆதலின் ஜெக்கோ ஸ்லோ வேகியா அங்கீகரித்துக் கொண்டபடி ஸுடேடென் பிர தேசத்தை உடனே எவ்விதத் தாமதமுமின்றி பிரித்துவிட வேண்டும். இந்த யாதாஸ்துடன் ஒரு பூகோள படமும் இணைக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்தப் பிரதேசங்கள் ஜெர்மனிக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்பது சிவப்பு வர்ணத்தினால் குறிக்கப்பட்டுள்ளது. இது தவிர எந்தெந்தப் பிரதேசங்களில் பொதுஜன வாக்கு எடுக்கப்படவேண்டு மென்பது பச்சை வர்ணத்தினால் குறிக்கப்பட்டுள்ளது.
எல்லைப்புறம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதை, அந்த எல்லைப்புறப் பிரதேசங்களில் வசிக்கும் ஜனங்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்தது. இந்த அபிப் பிராயத்தைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு பொது ஜன வாக்கு எடுக்கப்பெற வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சிறிது காலம் பிடிக்கும். அந்த இடைக்காலத்தில் எவ்விதக் குழப்பங்களும் நடைபெறாதபடி தடுக்கப் பெற வேண்டும். பொது ஜன வாக்கு எடுக்கப்படும் பிரதேசங்களில் எல்லா ஜனங்களும் சமஉரிமை பெற்றவராயிருத்தல் வேண்டும். இந்த யாதாஸ்தோடு இணைக்கப் பட்டிருக்கும் பூகோள படத்தில் எந்தெந்தப் பிரதேசங்கள் ஜெர்மானியப் பிரதேசங் களென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றனவோ, பொது ஜன வாக்கின் முடிவை எதிர்பாராமலே அந்தப் பிரதேசங்களை ஜெர்மானியத் துருப்புகள் ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்படியே ஜெக்கப் பிரதேசங்களை ஜெக்கத் துருப்புகள் ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.
ஸுடேடென் ஜெர்மானியப் பிரச்னையைக் கடைசி யாகத் தீர்த்துவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு ஜெர்மானிய அரசாங்கத்தார் கீழ்க்கண்ட திட்டங்களைச் சமர்ப்பிக் கின்றனர்:-
1. பூகோள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெர் மானியப் பிரதேசங்களை, அதிலுள்ள எல்லா ஜெக்கப்படை களும், போலீஸ் படைகளும், சுங்க உத்தி யோகஸ்தர்களும், எல்லைபுறப் பாதுகாவல் படைகளும் காலி செய்துவிட்டு ஜெர்மனிக்கு 1.10.38-ல் ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.
2. இங்ஙனம் காலி செய்யப்படுகிற பிரதேசம் இப் பொழுதுள்ள நிலைமையிலேயே ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். (அதாவது கோட்டைகள், கொத்தளங்கள், கட்டி டங்கள், முதலியன ஒன்றையும் பாழ்படுத்திவிடாமல் ஒப்புக் கொடுத்து விடவேண்டுமென்பது இதன் பொருள். தவிர உணவுப் பொருள்களையோ, மற்றச் சாமான் களையோ, கால் நடைகளையோ, மூலப் பொருள்களையோ அப்புறப் படுத்தக் கூடாது.) ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் பிரநிதியாக ஒருவரையும், ஜெக்க ராணுவத்தின் பிரதிநிதியாக ஒருவரையும், ஜெர்மன் ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் ஏற்றுக் கொண்டு இந்த ஒப்படைக்க ப்படுகிற பிரச்னையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்கள் கவனித்துக் கொள்வதற்கு ஜெர்மன் அரசாங்கத்தார் சம்மதிக்கின்றனர்.
3. ஜெக்க அரசாங்கத்தின் கீழ் ஸுடேடென் ஜெர்மானி யர்கள் எங்கு வேலை செய்து கொண்டிருந்த போதிலும், அவர்களை உடனே வேலையினின்று விலக்கிவிட ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் சம்மதிக்கின்றனர்.
4. ஜெர்மானிய ஜாதியைச் சேர்ந்த எல்லா அரசியல் கைதிகளையும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் உடனே விடுதலை செய்துவிட வேண்டும்.
5. 25.11.38க்குள் நிர்ணயிக்கப்படுகிற பிரதேசங்களில் பொதுஜன வாக்கு எடுக்கப்படுவதற்கு ஜெர்மனி அங்கீகரிக் கிறது. இந்தப் பொதுஜன வாக்கு எடுக்கப்பட்ட பிறகு ஏற்படு கிற எல்லைப்புற சம்பந்தமான மாறுதல்களை ஜெர்மன் - ஜெக்க கமிஷனோ அல்லது சர்வதேசக் கமிஷனோ நிர்ணயிக்கும்.
பொதுஜன வாக்கு சர்வதேசக் கமிஷனின் மேற்பார்வையில் எடுக்கப்படும்.
எந்தப் பிரதேசங்களில் பொதுஜன வாக்கு எடுக்கப் பெறுகிறதோ அந்தப் பிரதேசங்களில் 28.10.38-ல் வசிக்கிற எல்லாருக்கும் அல்லது இந்தத் தேதிக்கு முன்னால் பிறந்தவர் களுக்கும் ஓட்டுரிமை யுண்டு. ஓட்டுப் போடத் தகுதியுள்ள ஆண் பெண் எல்லோருடைய ஓட்டுகளும் சேர்ந்து எந்தப் பக்கம் பெரும்பான்மையான ஓட்டுகள் கிடைக்கின்றனவோ அந்தப் பக்கத்தில் - அதாவது ஜெர்மன் ராஜ்ஜியத்திலோ, ஜெக்கோ ஸ்லோவேகியாவிலோ - அந்த ஜனங்கள் சேர விரும்பு கிறார்கள் என்று கருதப்படும். பொதுஜனத் தேர்தல் நடை பெறுகிறபோது இரண்டு கட்சியினரும் தங்களுடைய ராணு வத்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திக் கொள்வார் கள். இது சம்பந்தமான கால விவரங்களை ஜெர்மன் அரசாங் கமும், ஜெக்க அரசாங்கமும் நிர்ணயித்துக் கொள்ளும்.
மற்ற விவரங்களைப் பற்றி நிர்ணயித்து ஒரு முடிவுக்கு வர ஜெர்மன் - ஜெக்க கமிஷன் ஒன்று நியமிக்கப்பெறும்.
இந்த நிபந்தனைகளைப் பெற்றுக் கொண்டு 24.9.38-ல் லண்டனுக்குத் திரும்பி வந்த சேம்பர்லேன், உடனே இது சம்பந்த மான விவரங்களை ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங் கத்துக்குத் தெரிவித்தான். இந்தத் திட்டத்தை அடியோடு நிராகரிப்பதாக ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தன் ஸ்தானீகன் மூலம் 25.9.38-இல் தெரிவித்தது. வேறு எவ்விதமாக அது நடந்து கொண்டிருக்க முடியும்?
நிலைமை மிகவும் நெருக்கடியாகிவிட்டது. உலக யுத்தமானது ஒரு மயிரிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. கடைசி பட்சமாக சேம்பர்லேன் ஒரு சமாதானப் பிரயத்தனத்தைச் செய்துவிடுவ தென்று தீர்மானித்துத் தன் சொந்த ஹோதாவில் ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதி ஸர் ஹொரேஸ் வில்சன் (Sir Horace Wilson) என்பவனிடம் 26.9.38-இல் கொடுத்தனுப்பினான். இந்த முயற்சியை பிரெஞ்சு அரசாங்கமும் அங்கீகரித்தது. ஹிட்லர் இதற்குப் பதிலாக, தான் உடனே ஜெக்கோ ஸ்லோவேகியா மீது படையெடுத்துவிடப் போவதில்லை யென்றும், ஏற்கனவே தான் அனுப்பிய யாதாஸ்தோடு இணைக்கப் பட்டிருந்த பூகோள படத்தில் சிவப்பு வர்ணத்தால் பொறிக்கப் பட்ட இடம் வரையில்தான், ஜெர்மானியத் துருப்புகள் நகர்த்தப் பெறும் என்றும் தெரிவித்தான். இதற்கு சேம்பர்லேன் பதிலளிக்கை யில், அவசரப்பட்டுவிடவேண்டாமென்றும், யுத்தம் நிகழாமலே சமரஸமான முடிவுகளை ஒரு வாரத்திற்குள் ஏற்படுத்திக் கொள்ளலா மென்றும் தெரிவித்தான். இதே சமயத்தில் சேம்பர்லேன், முஸோலி னிக்கும் ஒரு கடிதம் எழுதி ஹிட்லரிடம் அவனுக்குள்ள செல்வாக்கை இந்தச் சமாதான விஷயத்தில் பூரணமாக உபயோகிக்க வேண்டு மென்று தெரிவித்தான். இந்த விண்ணப்பங்கள்-ஆம்; இவற்றை விண்ணப்பங்கள் என்றுதானே சொல்லவேண்டும் - ஹிட்லரின் மனதைக் கொஞ்சம் மாற்றின. எனவே படை திரட்டுகிற தன்னுடைய உத்திரவை 24 மணி நேரம் தள்ளிவைப்பதாகத் தெரிவித்தான். இதே சமயத்தில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மூன்று நாட்டுப் பிரதிநிதி களையும் ம்யூனிக் நகரத்தில், தான் சந்திக்க விரும்புவதாக வும் கூறினான். எந்தப் பாடுபட்டாவது யுத்த மணி அடிக்காமல் நிறுத்தி விட வேண்டும் என்ற ஆவலோடு இருந்த பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் பிரதி நிதிகள் இந்த அழைப்பை மறுப்பார்களா? ஜெக்கோ ஸ்லோவேகியா அரசாங்கத்திற்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளெல்லாம் எங்கேயோ பறந்து போயின. முஸோலினியும் ஹிட்லரின் அழைப்பை ஏற்றுக் கொண்டான். ரோம் - பெர்லின் அச்சு இவ்வளவு சீக்கிரத்தில் முறிந்து போகாதல்லவா?…
29.9.38-இல் ம்யூனிக் நகரத்தில் இந்த நான்கு பிரமுகர்களும் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடி னார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியாவை இதற்கு யாரும் அழைக்க வில்லை. ருஷ்யாவும் இந்த மாநாட்டிலிருந்து புறக்கணிக்கப் பட்டது. கடைசியில் 30.9.38-ல் இந்த நான்கு பேரும் சேர்ந்து ஜெக்கோஸ் லோவேகியாவின் தலைவிதியைப் பின்வருமாறு நிர்ணயித்தார்கள்:
1. பெரும்பான்மையோரான ஜெர்மானியர்கள் வசிக்கும் இடங்களிலுள்ள ஜெக்கர்கள் காலி செய்ய வேண்டிய வேலை 1-10-38லிருந்து தொடங்கும்.
2. 10.10.38க்குள் இந்தக் காலி செய்யும் வேலை யானது முடிய வேண்டுமென்பதை பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் ஒத்துக் கொள்கின்றன. இங்ஙனம் காலி செய்யப்படும் இடங்களிலுள்ள எந்த ஸ்தாபனங்களும் அழிக்கப்படக் கூடாது. இந்த ஸ்தாபனங்களுக்கு எவ்வித பழுதும் ஏற்படாமல் இடங்களைக் காலி செய்வதற்கு, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் பொறுப்பாளி யாக்கப்படும்.
3. எந்தெந்த நிபந்தனைகளின் மீது காலி செய்யப்பட வேண்டுமென்ற விஷயத்தை நிர்ணயிக்க, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தலி, ஜெக்கோ ஸ்லோவேகியா ஆகிய இந்த ஐந்து அரசாங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சர்வதேசக் கமிஷன் ஒன்று நியமிக்கப்படும்.
4. அதிகமான ஜெர்மானியர்கள் வசிக்கிற பிரதேசங் களை 1.10.38லிருந்து ஜெர்மானியத் துருப்புகள் ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்கும். இந்த ஒப்பந்தத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ள நான்கு பிரதேசங் களையும், ஜெர்மானியத் துருப்புகள் பூரணமாக ஆக்ரமித்துக் கொள்ளும். இந்த நான்கு பிரதேசங்கள் தவிர, ஜெர்மானியர் களைப் பெரும்பான்மை யோராகக் கொண்ட மற்றப் பிர தேசங்கள் இன்னவை யென்று மேற்படி சர்வதேசக் கமிஷன் நிர்ணயிக்கும். அங்ஙனம் நிர்ணயிக்கப்பட்ட பிரதேசங்களை ஜெர்மானியத் துருப்புகள் 10.10.38க்குள் ஆக்ரமித்துக் கொள்ளும்.
5. இப்படி ஆக்ரமித்துக் கொள்ளப்பட்ட பிரதேசங் களைத் தவிர, மற்ற எந்தெந்த பிரதேசங்களில் பொதுஜன வாக்கு எடுக்க வேண்டு மென்பதை இந்தச் சர்வதேசக் கமிஷன் நிர்ணயிக்கும். அப்படி நிர்ணயித்த காலத்திற்கும், பொதுஜன வாக்கு எடுத்து அதன் முடிவு தெரிகிற வரைக்கும் இடையி லுள்ள காலத்தில், இந்தப் பிரதேசங்களைச் சர்வதேசப்படைகள் ஆக்ரமித்துக் கொள்ளும். எந்தெந்த நிபந்தனைகளின் மீது பொதுஜன வாக்கு நடைபெறுதல் வேண்டுமென்பதை மேற்படி சர்வதேசக் கமிஷன் நிர்ணயிக்கும். அங்ஙனம் நிபந்தனைகள் விதிக்கிற போது, ஜார் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுஜன வாக்கு முறையை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஏற்பாடு செய்யும். 1938ஆம் வருஷம் நவம்பர் மாதம் கடைசிக்குள் ஒரு தேதியில் பொதுஜன வாக்கு நடைபெறுமாறு இந்தச் சர்வதேசக் கமிஷன் நிர்ணயஞ் செய்யும்.
6. இறுதியான எல்லைப்புறம் எத்தைகைய தாயிருக்க வேண்டு மென்பதை ஒரு சர்வதேசக் கமிஷன் நிர்ணயிக்கும். ஒரே மாதிரி யான பழக்கவழக்கங்கள் உள்ள ஜாதியார் வசிக் கின்ற பிரதேசங் களை, எவ்விதப் பொதுஜன வாக்கு மில்லாமல் மாற்றிக் கொடுக்கிற விஷயத்தில் சிறிய மாற்றங்களைச் செய்ய லாமென்பதன் சம்பந்தமாக, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தலி ஆகிய நான்கு நாடுகளுக்கும் சிபாரிசு செய்ய மேற்படி சர்வதேசக் கமிஷனுக்கு உரிமையுண்டு.
7. மாற்றப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் ஜனங்கள், இந்த ஒப்பந்தம் தொடங்கிய ஆறு மாதத்திற்குள் தங்களு டைய வாசஸ்தலத்தை மாற்றிக் கொள்ளலாம். ஜெக்கோ ஸ்லோவேகிய கமிஷனார், இந்த மாற்றத்தைப் பற்றிய விவரங்களை நிர்ணயித்து, மாறிப்போகும் ஜனங்களுக்குச் சௌகரியம் செய்து கொடுப்பதோடு, இந்த மாற்றத் தினால் ஏற்படுகிற மற்றப் பிரச்னைகளைப் பற்றியும் நிர்ணயிப்பர்.
8. இந்த ஒப்பந்தம் நிறைவேறின நான்கு வாரத்திற்குள் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், தங்களிடத்தில் ராணுவத்திலும் அரசியல் இலாகாக்களிலும் வேலை செய்யும் உத்தியோகஸ்தர் களை, அவர்கள் விலகிக்கொள்ள வேண்டு மென்று விரும்பினால் விலக்கிவிட வேண்டும். அதே நான்கு வாரத்திற்குள் அரசியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுச் சிறைவாசம் அநுபவிக் கிறவர்களை ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.
இந்த ம்யூனிக் ஒப்பந்தத்தை ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் அப்படியே அங்கீகரித்து விடுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் உலகம் ஆச்சரியப்படும் வண்ணம், பெனேஷ் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. அஃது வேறென்ன செய்யும்? வல்லான் வகுத்ததே வாய்க்காலாகிவிட்டபோது, மிருக பலத்திற்கு ஜெக்கோ ஸ்லோவேகிவியா பணிந்துவிட்டது!
இந்த நெருக்கடியான நேரத்தில், ஜெக்க அரசாங்க மானது, தன் சொந்த ஜனங்களுடைய துக்கத்தைக் கூடப் பொருட் படுத்தாமல், நாகரிகத்தையும், உலக சமாதானத்தையும் முன்னி லைப்படுத்தி, பலவிதமான தியாகங்களைச் செய்ய இணங்குகிறது. மற்ற வல்லரசுகளின் ஒற்றுமைப்பட்ட முயற்சியினால், தோல்வி யடையாத ஓர் அரசாங்கம், இங்ஙனம் பலவிதமான தியாகங் களைச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவம் இதற்கு முன்னர் உலக சரித்திரத்தில் நிகழவேயில்லை. எனவே, எதிர்க்கட்சியினரும், ஐரோப்பிய சமாதானத்தையும் உலக சமாதானத்தையும் காப்பாற்றவேண்டு மென்று அது கேட்பதற்கு உரிமை பெற்றிருக்கிறது.
இந்த இறுதி வாக்கியங்களைச் சொல்லிக்கொண்டு ம்யூனிக் ஒப்பந்தத்தை ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
இந்த துக்ககரமான அத்தியாயத்தை - ஐரோப்பிய சரித்திரத்தி லேயே களங்கமும், ஜெக்கோ ஸ்லோவேகியர்களின் கண்ணீரும் நிறைந்த இந்த பாகத்தை - இன்னும் நாம் நீடித்துக் கொண்டு போக விரும்பவில்லை.
1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி! ஜெக்கோ ஸ்லோவேகியாவில் உள்ள ஜெர்மானியப் பிரதேசங்களை ஜெர் மானியப் படைகள் ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்கின. ஜெர்மானி யர்களுடைய ஹிட்லர் வாழ்க என்ற ஆரவாரம், ஜெக்கோஸ்லோ வேகியர்களுடைய அடிவயிற்றிலிருந்து எழும்பும் பெரு மூச்சுக்கு மேலே ஓங்கி நின்றது.
XI கைவிட்ட அந்நிய நாடுகள்
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பூகோள அமைப்பு, அஃது ஒரு முச்சந்தியிலே நிற்கிற மாதிரி இருக்கிறது. ஜெர்மானிய, ஸ்லாவிய, லத்தீனிய நாகரிகங்கள் மூன்றும் இந்த நாட்டிலே சந்திக்கின்றன. இந்த மூன்று நாகரிகங்களின் பிரதிநிதிகளென்று தங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிற ருஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய இந்த மூன்று வல்லரசுகளின் நம்பிக்கையிலும் அவநம்பிக்கையிலுமே இந்த நாடு வாழ்ந்து வந்திருக்கிறது. ஆகவே, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம், ஆரம்ப காலத்திலிருந்து தன் அந்நிய நாட்டுக் கொள் கையை, மேலே கூறப்பட்ட மூன்று நாடுகளிலே இயங்கிக் கொண்டு வந்த சக்திகளைக் கொண்டே நிர்த்தாரணஞ் செய்து வந்தது. அப்படி நிர்த்தாரணஞ் செய்கிற வகையில், இது மூன்று முக்கிய அம்சங்களை மட்டும் முக்கியமாகக் கவனித்து வந்தது. முதலாவது, தன்னைச் சூழ்ந்துள்ள எந்த நாட்டின் வெறுப்புக்கும் பாத்திரமாகாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்து வந்தது. இரண்டாவது, எந்த வல்லரசுகள், மத்திய ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்தைக் காப் பாற்ற வேண்டுமென்பதில் உண்மையான கருத்துக் கொண்டிருந் தனவோ அந்த நாடுகள் விஷயத்தில் விசேஷ அன்பு செலுத்திக் கொண்டு வந்தது. மூன்றாவது, மத்திய ஐரோப்பாவிலுள்ள சிறிய நாடுகள் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் ஒன்றுபட்டிருப்பது, ஒவ்வொரு நாட்டின் தனித்தனி சேக்ஷமத்திற்கு நல்லதென்ற உண்மையை, தன்னைப் போன்ற மற்றச் சிறிய நாடுகளுக்கும் புகட்டி வந்தது.
இந்த மாதிரியான காரணங்களினால்தான், ஜெக்கோ ஸ்லோ வேகியா எப்பொழுதும் சர்வதேச சங்கத்தை ஆதரித்து வந்திருக் கிறது. சர்வதேச சங்கத்தின் நடவடிக்கைகளில், வல்லரசுகளாயுள்ள ஜெர்மனி, இத்தலி, பிரான்ஸ், பிரிட்டன் முதலிய நாடுகள், எந்த மனப் போக்கில் கலந்து கொண்டனவோ அந்த மனப்போக்கில் ஜெக்கோ ஸ்லோவேகியா கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய சுதந்திரத்திற்குப் பங்கம் வராதபடி, சர்வதேச சங்கமோ, அதைத் தூக்கி வைத்துத் தாண்டவம் செய்யும் மற்ற வல்லரசுகளோ காப்பாற்றும் என்ற முழு நம்பிக்கையுடனும், களங்க மில்லாத மனத்துடனுந்தான் ஜெக்கோ ஸ்லோவேகியா இந்தச் சங்க நடவடிக்கைகளில் கலந்து கொண்டது. ஆனால் சர்வதேச சங்கம் தன்னை நம்பிய அபிசீனியா, ஸ்பெயின், சைனா முதலிய நாடுகளின் தலையில் என்ன எழுதியதோ அதையே ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் தலையிலும் எழுதி விட்டது. அப்படி எழுதுகிற தொந்திர வைக் கூட அதற்குக் கொடாமல், அந்த வேலையை ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுமே சேர்ந்து செய்து விட்டன. ஜெக்கோ ஸ்லோவேகியா என்ற ஒரு தனி நாடு, இன்னும் சிறிது காலத்திற்குள் இல்லாமற் போகுமானால் அதைக் குறித்து யாருமே ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
ஜெக்கோ ஸ்லோவேகியா, மேலே கூறப்பட்ட ஒவ்வொரு வல்லரசையும் எப்படி நம்பி வந்ததென்பதை வரிசைக் கிரமமாகத் தெரிந்து கொள்வோம். இங்ஙனம் நம்பிய வரலாறுதானே, ஜெக்கோ ஸ்லோவேகியாவின் அந்நிய நாட்டுக் கொள்கை!
ஜெர்மனியின் நோக்கமெல்லாம், தன் ராஜ்ஜியத்தைத் தென் கிழக்கில் விஸ்தரித்துக் கொண்டு போக வேண்டுமென்ப தல்லவா? இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அஃது ஆஸ்திரியாவை யும், ஜெக்கோ ஸ்லோவேகியாவையும் ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும். இரண்டும் ஏறக்குறைய நிறைவேறி விட்டன!
ஜெர்மனி தன்னுடைய தென்கிழக் கெல்லையை விஸ்தரிக்கு மானால், அந்த விஸ்தரிப்பு தன்னை வந்து முட்டா வண்ணம் தகைந்து நிற்பதற்கு, தனக்கும் ஜெர்மனிக்கும் நடுவில் ஒரு சுதந்திர நாடு இருப்பது நல்லதென்று ருஷ்யா கருதுகிறது. இடையிலே எவ்விதத் தடையும் இல்லாவிட்டால், ஜெர்மனி, கருங்கடல் வரையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்குமல்லவா? இந்த எண்ணம் ஜெர்மனிக்கு இருக்கிற தென்பதை ருஷ்யா ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்தது. 1933-ஆம் வருஷம், லண்டனில் உலகப் பொருளா தார மகாநாடு ஒன்று கூடிய காலத்தில், அந்த மகாநாட்டுக்கு ஆஜராயிருந்த ஜெர்மானியப் பிரதிநிதிகள், ஜெர்மனியில் பொருளா தார நெருக்கடி இல்லாதிருக்க வேண்டுமானால், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பாகத்திலும், தெற்கு ருஷ்யாவிலுமுள்ள கைத் தொழில் மூலப்பொருள்கள் ஜெர்மனிக்குச் சொந்தமாக வேண்டு மென்று கூறினார்கள். ருஷ்யாவுக்கு, ஜெர்மனி மீதிருந்த சந்தேகம் இதனால் வலுப்பட்டது. இந்த மகாநாடு நடைபெற்றுக் கொண்டி ருந்த பொழுதே, ருஷ்யாவின் பிரதிநிதியாக வந்திருந்த லிட்வினோவ் (M.Litvinov), ஜெக்கோ ஸ்லோவேகியா, ருமேனியா, யூகோஸ்லேவி கியா, துருக்கி முதலிய நாடுகளின் மீது, ருஷ்யா போர் தொடுப்ப தில்லையென்று மேற்படி நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டான்.
ருஷ்யா, இங்ஙனம் தன் சுய நலத்திற்காக ஜெக்கோ ஸ்லோ வேகியா தீர்க்காயுளுடன் வாழ வேண்டுமென்று பிரார்த்தித்து வந்ததாயினும், ஜெக்கோ ஸ்லோவேகியாவும், ஜெர்மனியின் பேராசை யினின்று தான் தப்பித்துக் கொள்ள வேண்டுமானால், ருஷ்யாவின் துணை தனக்குத் தேவையென்று கருதியது. எனவே, ருஷ்யாவோ ஜெக்கோ ஸ்லோவேகியாவோ பிற நாடுகளினால் படையெடுக்கப் பட்டால் அப்பொழுது ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு பரஸ்பரம் உதவி செய்ய வேண்டுமென்று 1935-ஆம் வருஷம் மே மாதம் இரண்டு நாடுகளும் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டன. இது முதல் ஜெர்மனியில், ஜெக்கோ ஸ்லோவேகி யாவுக்கு விரோமாகப் பலத்த பிரசாரங்கள் தொடங்கி விட்டன. ஜெக்கோ ஸ்லோவேகியா, சோவியத் ருஷ்யாவின் கருவியாகி விட்டதென்றும், உலகத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்துவதற்கு, ருஷ்யா, ஜெக்கோ ஸ்லோவேகி யாவை முன்னே தள்ளப்போகிற தென்றும் என்னென்னவோ சொல்லப்பட்டன. ஜெக்கோ ஸ்லோவேகிய ராணுவத்தை ருஷ்ய தளகர்த்தர்கள் பயிற்சி செய்து கொடுக்கிறார் களென்றும், எல்லைப் புறங்களில் பலமான முஸ்தீப்புக்களைச் செய்து கொடுக்கிறார் களென்றும், யுத்த ஆகாய விமானங்கள் தங்குவதற் கென்று ஆகாய விமான நிலையங்கள் இவர்களுடைய யோசனையின் பேரில் ரகசியமாகக் கட்டப்பட்டு வருகின்றனவென்றும் ஜெர்மன் மந்திரி மார்களிற் சிலரும் கூறத் தலைப்பட்டார்கள். எப்படியும், சோவியத் ருஷ்யாவின் சொல்வாக்கு, தன் எல்லைப்புறம் வரை வர விடக்கூடா தென்பதுதான் ஜெர்மனியின் கவலை. ஜெர்மனியின் இந்தத் தவறான பிரச்சாரங்களை, ஜெக்கோ ஸ்லோவேகியா அவ்வவ்பொழுது மறுத்து வந்திருக்கிறது. முன்பின் எச்சரிக்கை செய்யாமல், எங்கேனும் ருஷ்ய ஆகாய விமான நிலையம் இருக்கிறதாவென்று பரிசோதனை செய்து பார்க்குமாறு ஜெர்மன் அரசாங்கத்தை, ஜெக்கோ ஸ்லோ வேகிய அரசாங்கம் பல முறை அழைத்திருக்கிறது. ஆனால் அது வந்து பார்க்கவேயில்லை. ருஷ்ய ராணுவத் தலைவர்கள், ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு வந்து, இந்த நாட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன வென்பதைப் பார்த்துவிட்டுப் போனார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள், ஜெக்கோ ஸ்லோவேகி யாவுக்கு விஷயங்களைத் தெரிவித்து விட்டுப் போனார்களா, அல்லது தெரிந்து கொண்டு போனார்களாவென்பதை யாரும் சொல்ல முடியாது. தவிர, இந்த சோவியத் ராணுவத் தலைவர்கள், ரகசியமாக வந்துவிட்டுப் போகவு மில்லை.
ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் ருஷ்யாவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம், பிரான்ஸின் தயவினாலேயே ஏற்பட்டது. இதனால், ஜெர்மனி, ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மீது படையெடுத்து வரு மானால், பின்னைய நாட்டிற்கு ருஷ்யா உதவி செய்வது, பிரான்ஸ் செய்கிற உதவியைப் பொறுத்ததாகவே இருந்தது. இதனால்தான், 1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில், ஜெர்மனி, எந்த நிமிஷத்தில் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மீது படை யெடுக்குமோ என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தருணத்தில், பிரான்ஸும் பிரிட்டனும் ஜெக்கோ ஸ்லோவேகியா வுக்கு உதவி செய்வதாயி ருந்தால்தான், ருஷ்யாவும் உதவிசெய்ய முன்வரும் என்று லிட்வினோவ் கூறினார். ஜெக்கோ ஸ்லோவேகி யாவை, யார் கைவிட்டு விட்டாலும் ருஷ்யா கை விடாது என்று எதிர்பார்த்திருந்த பலருக்கு, லிட்வினோவின் இந்த அறிக்கை பெரிய ஏமாற்றத்தை உண்டுபண்ணிவிட்டது.
ஜெக்கோ ஸ்லோவேகியா, குடியரசாகத் தோன்றின காலத்தி லிருந்து, அதனுடன் பிரான்ஸ் நெருக்கமான உறவுபூண்டு வந்திருக் கிறது. இதற்கு இரண்டு காரணங்களுண்டு. முதலாவது ஜெர்மனி, ஜெக்கோ ஸ்லோவேகியாவை விழுங்கிவிடுமானால், அதற்குத் தென் கிழக்கு ஐரோப்பாவிலுள்ள கைத்தொழில் மூலப் பொருள்கள், எண்ணெய் முதலியன சுவாதீனமாகிவிடும். அவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அஃது இன்னும் அதிகமாகத் தன் ராணுவ பலத்தை விருத்தி செய்து கொள்ளுமல்லவா? இது பிரான்ஸின் கிழக்கு எல்லைக்கு ஆபத்துத் தானே. இதனால், ஜெர்மனியின் கிழக் கெல்லையில் ஒரு முட்டுக் கட்டையாக ஜெக்கோ ஸ்லோவேகி யாவைப் பாதுகாத்து வைப்பதிலே பிரான்ஸுக்கு ஒரு தனி சிரத்தை இருந்தது. இரண்டாவது, அரசியல் விவகாரங்களில், மத்திய ஐரோப் பாவிலுள்ள சிறிய தேசங்களின் மீது பிரான்ஸ் ஒருவித செல்வாக்கை உபயோகித்து வருவதனாலேயே, ஐரோப்பிய ராஜதந்திர மேடையில் இதற்கு ஒரு வல்லரசு ஸ்தானம் இருந்து வருகிறது. இந்தச் சிறிய நாடுகளை, ஜெர்மனி, தன் செல்வாக்குக்கு உட்படுத்திக் கொண்டு விடுமானால், இதன் செல்வாக்கு குறையுமல்லவா? ஆகையால் இந்தச் செல்வாக்கை ஜெக்கோ ஸ்லோவேகியா மூலம் நிலை நிறுத்திக் கொள்ள இது முயன்று வந்தது.
பிரான்ஸும், ஜெக்கோ ஸ்லோவேகியாவும் 1924-ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டன. பின்னர், 1925-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் மற்றோர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. தங்களில் யாராவது ஒருவரை ஜெர்மனி தாக்குமானால், மற்றவர் அதற்குத் துணை செய்ய வேண்டுமென்று இந்த அக்டோபர் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஜெக்கோ ஸ்லோவேகியா, ஜெர்மனியினால் தாக்கப்படுமானால், பிரான்ஸ், தன்னுடைய ராணுவ உதவியைக் கொண்டு அதனைக் காப்பாற்றக் கட்டுப்பட்டிருக்கிறது. 1937-ஆம் வருஷம் மே மாதம், ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு பிரான்ஸின் அப்பொழுதைய பிரதம மந்திரி யாயிருந்த ஸ்ரீ ப்ளும் விடுத்த ஒரு செய்தியில் பின் வருமாறு குறிப் பிட்டிருந்தான்:-
ஜெக்கோ ஸ்லோவேகியாவை ஓர் ராணுவம் தாக்குமானால், பிரான்ஸ், தான் தாக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படி நடந்து கொள்ளும்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பாதுகாப்பில்தான் பிரான்ஸின் பாதுகாப்பு இருக்கிறதென்று பிரெஞ்சு ராஜ தந்திரிகள் பலர் நினைத்தார்கள். அரசியல் காரணங்களுக்காக ஒரு நாட்டின் மீது காட்டுகிற அநுதாபமாக மட்டும், ஜெக்கோ ஸ்லோவேகியப் பிரச்னையை அவர்கள் கருதவில்லை. ஜெக்கோ ஸ்லோவேகியாவின் க்ஷேமம், தங்களுடைய தேசீயத் தேவை யென்றும் அவர்கள் கருதி வந்தார்கள். தவிர, இந்த அபிப்பிராயம், அவ்வப் பொழுது நிருவாகத் திற்கு வரும் ஒவ்வோர் அரசியல் கட்சியினரால் மட்டும் கொள்ளப் படவில்லை. அந்நிய நாட்டுக் கொள்கையை யுத்த நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நிர்த்தாரணம் செய்கிற முக்கிய பேர் வழிகளான ராணுவ தளகர்த்தர்களின் அபிப்பிராயம் இது. எப்படி, கிரேட் பிரிட்டனுக்கு உயிர் நாடியாக ஜிப்ரால்டர் கருதப்படுகிறதோ, அப்படியே, பிரான்ஸுக்கு ஜீவநாடி ஜெக்கோ ஸ்லோவேகியா என்று கருதப்பட்டது. இதனாலேயே, பிரெஞ்சு ராணுவக் காரி யாலயம் ஒன்று ப்ரேக் நகரத்தில் நிரந்தரமாக ஸ்தாபிக்கப்பட்டது. ஜெக்கோ ஸ்லோவேகிய குடியரசு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ராணுவ விஷயத்திலும், அரசியல் சம்பந்தமாகவும், பிரெஞ்சு அர சாங்கத்தின் ஆலோசனையை இது கேட்டு வந்திருக்கிறது. இவை யெல்லாம் போக, இரண்டு நாடுகளுக்கும் நாகரிகம், கலைஞானம் முதலியவற்றில் நெருங்கிய தொடர்பு உண்டு.
இத்தகைய தொடர்புகள் இருப்பதனால் ஜெக்கோ ஸ்லோ வேகியாவின் ஆபத்துக் காலத்தில் பிரான்ஸ் கை கொடுக்கும் என்று தான் எல்லாருமே எதிர் பார்த்தார்கள். 9-9-38-ல் கூட, ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் விஷயத்தில் பிரிட்டன் எப்படி நடந்து கொண்டாலும் சரிதான்; தான் அதற்கு அவசியம் உதவி செய்யப் போவதாக பிரான்ஸ் ஜம்பம் பேசியது. படைகளைத் திரட்டி தன் கிழக்கெல்லையில் தயாராக வைத்திருப்பதாக உலகத்திற்கு அ றிவித்தது. ஆனால் தானே, பிரிட்டனுடன் சேர்ந்து ஜெக்கோ ஸ்லோ வேகியாவை, ஜெர்மனிக்கு பலி கொடுத்துவிட்டது!
ஒன்றுக்கொன்று, நெருங்கியுள்ள சிறிய தேசங்கள் பரஸ்பர நேசப்பான்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பதற் காக ஜெக்கோ ஸ்லோவேகியா, யூகோ ஸ்லேவியா, ருமேனியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து 1921-ஆம் வருஷம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்குச் சிற்றரசுகளின் ஒப்பந்தம் (Little Entente) என்று பெயர். ஐரோப்பிய யுத்தம் முடிந்து சிறிது காலத்திற்குப் பின்னர், ஹங்கேரி ராஜ்ஜியமானது, இழந்துபோன தனது நாடுகளை மீண்டும் பெற முயற்சி செய்தது. அதைத் தடுக்கவே, இந்தச் சிற்றரசு களின் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப் பட்ட மூன்று நாடுகளும் தங்களுக்குள் அதிகமான நெருங்கங் கொண்டன. இந்த மூன்று நாடுகளும் சேர்ந்தாற் போல் வெளிநாட்டு விவகாரங்களில் நடந்து கொள்ள ஆரம்பித்தன. இவை களுக்குப் பொதுவான ஸ்தாபனம் முதலியன உண்டு. இந்த மூன்று நாட்டு ராணுவ தளகர்த்தர்களும் கலந்தாலோசித்து ஒரு முகமாக நடந்து கொள்ளக் கூடிய சாதனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிற்றரசுகளின் ஒப்பந்தத்தை உடைக்க, அதாவது இவைகளினி டையே நிலவுகிற ஒற்றுமையைக் குலைக்க ஜெர்மனியும், இத்தலி யும், சில சமயங்களில் போலந்தின் துணை கொண்டு முயற்சி செய்தன. ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பொறுத்த மட்டில் அதிக மான பயன் உண்டாகவில்லை. இந்த ஒற்றுமை குலையாமலிருந் ததற்கு முக்கிய காரணமாயிருந்தது ஜெக்கோ ஸ்லோவேகியாதான். ஆனால், இதன் வாழ்வுக்கே உலை வைக்கப்பட்டபோது, ருமேனி யாவோ, யூகோஸ் லோவிகியாவோ இதற்காக ஒன்றுஞ் செய்ய முடிய வில்லை.
இத்தலி, மத்திய தரைக்கடலில், தான் நாயகியாக இருக்க வேண்டுமென்று விரும்புவதைப் போல், பால்கன் பிரதேசங்களிலும், பூர்விக ரோம ஏகாதிபத்தியத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டு மென்று விரும்புகிறது. இதனால், ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, ஜெக்கோ ஸ்லோவேகியா முதலிய மத்திய ஐரோப்பிய நாடுகளுடன் சல்லாபம் செய்ய ஆரம்பித்தது. 1924-ஆம் வருஷம் ஜெக்கோ ஸ்லோவேகி யாவுடன் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் 1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனியின் நட்டைப் பெரிதாகக் கருதி, அதன் பேராசைக்கு ஜெக்கோ ஸ்லோவேகியாவை பலியாக்கச் சம்மதித்து விட்டது.
ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் போலந்துக்கும் ஆரம்பத் திலிருந்தே சுமூகமான தொடர்பு இருக்கவில்லை. இரண்டு நாடு களிலும் ஏறக்குறைய ஒரே சமூகத்தினர், ஒரே பாஷை பேசுவோர் வசிக்கிறார்கள் என்பது உண்மை. ஒரே சந்தர்ப்பத்தில் தனி நாடு களாக உருக்கொண்டன வென்பதும் வாஸ்தவம். ஆனால் இரண்டு நாடுகளின் எல்லைப் புறத்திலுள்ள டெஷேன் (Teschen) என்ற ஜில்லாவை யார் சுவாதீனப்படுத்திக் கொள்வதென்பதைப் பற்றியே இந்த மனஸ்தாபம் எழுந்தது.
சுமார் ஐந்நூறு சதுரமைல் விஸ்தீரணமுடைய இந்த டெஷேன் ஜில்லா, ஐரோப்பிய யுத்த முடிவுக்கு முன்னர், ஆஸ்திரிய ஆதிபத்தியத்துக்குட்பட்டிருந்தது. இங்கு நிலக்கரிச் சுரங்கங்கள் மிக அதிகம். வார்சேல் சமாதான மகாநாட்டின் போது, இந்த ஜில்லாவை, தத்தமுடைய எல்லைக்குள் சேர்த்துவிட வேண்டுமென்று ஜெக்கோ ஸ்லோவேகியாவும், போலந்தும் முறையே போராடின. கடைசியில் 5.11.1918-ல், இந்த ஜில்லாவை இரண்டு கூறாகப் பிரித்து இரண்டு நாடுகளுக்கும் சரிசமானமாகக் கொடுத்து விடுவது என்று தீர் மானிக்கப் பட்டது. இதற்கு போலந்து சம்மதிக்கவில்லை. போலந்து அரசாங்கத்தினர் தங்கள் நாட்டின் மற்ற ஜில்லாக்களில் நடை பெற்ற, பார்லிமெண்ட் தேர்தல்களைப்போல் இந்த ஜில்லாவிலும் நடத்தினார்கள். இதனால், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார், 1919-ஆம் வருஷம் ஜனவரி மாதம், இந்த ஜில்லா முழுவதையும் தங்கள் சுவாதீனப்படுத்திக் கொண்டார்கள். இது சம்பந்தமாக அநேக தகராறுகளும், மத்தியஸ்தங்களும் ஏற்பட்டன. 1919-ஆம் வருஷக் கடைசியில், சர்வதேச அரசியல் தூதர்கள் மகாநாட்டில் இந்த பிரச்னை ஒருவிதமாகத் தீர்மானிக்கப்பட்டது. டெஷேன் ஜில்லாவை இரண்டு கூறாகப் பிரித்து ஒரு பாதியை ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும், மற்றொரு பாதியை போலந்துக்கும் கொடுத் தார்கள். இது போலந்துக்கு உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ஏனென்றால், இந்த ஜில்லாவில் அகப்படும் நிலக்கரியானது, கைத் தொழில் அபிவிருத்திக்கு மிகவும் சாதகமாயிருக் கிறது. உதாரண மாக, ஜெக்கோ ஸ்லோவேகியாவில் மொத்த நிலக்கரி உற்பத்தி 64,890 லட்சம் டன். இவற்றில் 61,430 லட்சம் டன் இந்த டெஷேன் ஜில்லாவிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்தது. நிலக்கரி, இந்தப் பிரதேசத்தில் அதிகமாகக் கிடைப்பதினாலேயே, இங்கு இரும்பு, எஃகு முதலியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகம். எனவே, போலந்துக்கு இது விஷயத்தில் நீண்ட நாட்களாகவே மனக் கசப்பு இருந்து கொண்டிருந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டே, ஜெக்கோ ஸ்லோவேகியாவில் வசிக்கும் போலிஷ்காரர்கள் சரியாக நடத்தப்பட வில்லையென்று அடிக்கடி குறை கூறிக்கொண்டு வந்தது. ஆனால் நல்ல சமயம் பார்த்து, தன்னுடைய இந்தக் குறையைத் தீர்த்துக் கொண்டு விட்டது. ஸுடேடென் பிரச்னையை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஜெர்மனி, ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் பய முறுத்திக் கொண்டு வந்த காலத்தில், போலந்தும், போலிஷ்காரர் களுடைய உரிமைகளை வலியுறுத்த ஆரம்பித்தது. கடைசியில், ஸுடேடென் பிரதேசங்களை ஜெர்மனி 1.10.38ல் ஆக்ரமித்துக் கொள்வதற்கு மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் சம்மதித்துவிட்டன வென்று தெரிந்ததும், அதே தினத்தில், போலந்தும், தன் மனதை நீண்ட நாட்களாக உறுத்திக்கொண்டு வந்த டெஷேன் ஜில்லாவை ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது. இப்படி தைரியமாக நடந்து கொண்டதற்கு ஜெர்மனியின் தூண்டுதலும் ஆதரவும் இருந்து வந்ததே காரணம்.
ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்தினுடைய மரணத்தின் மீது, ஜெக்கோ ஸ்லோவேகியா பிறந்ததேயாயினும், ஆரம்பத்திலிருந்தே இரண்டு நாடுகளும், மஸாரிக்கின் பெருமுயற்சியால் சிநேகப் பான்மையுடன் நடந்து வந்தன.1 ஆனால் இரண்டு விஷயங்களை இங்கே குறிப்பிட வேண்டும். ஆஸ்திரியாவை, தன் ராஜ்ஜியத்திற்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட வேண்டுமென்ற எண்ணம் ஜெர்மனிக்கு உண்டு என்பதை நன்கு தெரிந்து கொண்டிருந்த ஜெக்கோ ஸ்லோ வேகியா, ஆரம்பத்திலிருந்து இந்த ஐக்கியத்தை எதிர்த்து வந்திருக் கிறது. அதே மாதிரி, ஆஸ்திரியா, மறுபடியும் முடியரசு நாடாகி, ஹாப்ஸ்பர்க் மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் வரக்கூடாதென்ப திலும் இது கவலை கொண்டிருந்தது. இவ்விரண்டில், ஹாப்ஸ்பர்க் மன்னர் பரம்பரையின் ஆதிகத்தைவிட, ஜெர்மனியின் ஆதிக்கத்தை ஜெக்கோ ஸ்லோவேகியா அதிகமாக வெறுத்து வந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியாவின் மீது ஆதிக்கங் கொண்டு விடுமானால், அடுத்த தாம்பூலம் தனக்குத்தான் என்பதை, ஜெக்கோ ஸ்லோவேகியா, தன் ஆரம்ப தசையிலேயே உணர்ந்திருந்தது. ஆனால் அஃது எதிர்பார்த்த படியே, எல்லாம் 1938-ஆம் வருஷத்தில் நடைபெற்றுவிட்டன. ஆஸ்திரிய - ஜெர்மானிய ஐக்கியத்திற்கு ஜெக்கோ ஸ்லோவேகியா விரோதமாயிருப்பதை ஜெர்மனி நன்கு தெரிந்து கொண்டிருந்தது. ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மீது அது கொண்டிருந்த கோபத்திற்கு, அநேக காரணங்களுள் இதுவும் ஒன்று. ஜெர்மனி இப்பொழுது ஸுடேடென் பிரதேசங்களை ஆக்ரமித்துக் கொண்டு விட்டபடி யால், இந்தக் கோபத்தை இனி அது பகிரங்கமாகப் பலவிதங் களிலும் காட்டும் என்பதில் ஐயமில்லை.
ஹங்கேரிக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும், வார்சேல் சமாதான ஒப்பந்த காலத்திலிருந்து மனக்கசப்பு இருந்து வந்திருக் கிறது. மேற்படி ஒப்பந்தமானது, ஹங்கேரியின் புதிய எல்லையை வகுத்தபோது, அதனுடைய பழைய ராஜ்ஜியத்தின் மூன்றில் இரண்டு பாகம் அதற்கு இல்லாமல் போய்விட்டது. இங்ஙனம் அதற்கு இல்லாமல் போன பிரதேசங்களில் ஸ்லோவேகியாவும் ருத்தேனியா வும், ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன வல்லவா? இழந்துவிட்ட இந்தப் பிரதேசங்களை எப்படியாவது தனக்கு மீட்டுக் கொண்டுவிட வேண்டுமென்று ஹங்கேரி பிரயத் தனப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. இடையில்-அதாவது 1936-ஆம் வருஷத்தில் - ஹங்கேரிக்கு, ஜெக்கோ ஸ்லோவேகியா விஷயத்தில் சிறிது மனமாற்றம் ஏற்பட்டது. ஏனென்றால், இந்தக் காலத்தில்தான், ஜெர்மனியினால் தனக்கு எந்தச் சமயத்திலும் ஆபத்து ஏற்படலா மென்பதை ஹங்கேரி நன்றாகத் தெரிந்து கொண்டது. எனவே, ஜெக்கோ ஸ்லோவேகியாவை விரோதித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு, மற்ற மத்திய ஐரோப்பிய நாடுகளுடன் எப்படி சமரஸப் பான்மையுடன் நடந்து வந்ததோ அப்படியே இதன் விஷயத்திலும் நடந்து கொண்டு வந்தது. ஆனால் 1938-ஆம் வருஷம் மார்ச் மாதம், ஜெர்மனி, ஆஸ்திரியாவை ஆக்ரமித்துக் கொண்டுவிட்ட பிறகு, ஹங்கேரியின் பயம் அதிகமாகிவிட்டது. ஜெர்மனிக்கு எந்த விஷயத் திலும் கோப மூட்டக்கூடாதென்று தீர்மானித்தது. அதனோடு கூட, எந்தெந்தக் காரியத்தைச் செய்தால் ஜெர்மனிக்குத் திருப்தியாயிருக் குமோ அந்தக் காரியங்களையும் செய்துகொண்டு வரத் தொடங்கியது. 1938-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில், ஹங்கேரி யின் ரீஜெண்டான தளபதி ஹோர்தி (Admiral Horthy) ஜெர்மனிக்கு விஜயஞ்செய்ததற்கும், ஹிட்லரினால் ஆடம்பரமாக வரவேற்கப் பட்டதற்கும் எத்தனையோ காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஹங்கேரியின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிற காலத்தில் இவை வெளியாகுமல்லவா? இது நிற்க.
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் ஸுடேடென் பிரச்னையைப் பற்றி, ஜெர்மனி அதிக கவனஞ் செலுத்திவரத் தொடங்கியது முதல், ஹங்கேரியும், ஸ்லோவேகியப் பிரதேசங்களிலுள்ள ஹங்கேரியச் சிறுபான்மைச் சமூகத்தினருடைய உரிமைகளைப் பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக் கொண்டது. ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் எப்பொழுதும் போல், இந்தப் பிரச்னையைச் சமரஸமாகத் தீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், ஜெர்மனியின் தூண்டுதலின் பேரிலோ, அல்லது ஆதரவின் பேரிலோ ஜெக்கோ ஸ்லோவேகியா வில் உள்ள ஹங்கேரியர்கள் வசிக்கும் பிரதேசங்கள், 1938-ஆம் வருஷம் கடைசிக்குள், ஹங்கேரியைச் சென்று அடைந்துவிடு மானால் அதைக் குறித்து யாருமே ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்படி நாம் கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லாமல் போகவில்லை. ஏனென்றால், ஹங்கேரியப் பிரதி நிதிகளும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்துப் பிரதிநிதிகளும் கோமாரோம் என்ற ஊரில் 9.10.38-ல் சந்தித்து, ஸ்லோவேகியா மாகாணத்தின் எல்லைப் புறத்திலுள்ள சில நகரங்களை ஹங்கேரி வசம் ஒப்புவித்து விடுவதென்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் ஹங்கேரியில் இது திருப்தியை யளிக்க வில்லை. ஸ்லோவேகியாவையும் ருத்தேனியாவையும் தன் வசம் ஒப்புவித்து விட வேண்டுமென்று ஹங்கேரி விரும்புகிறது. இங்ஙனம், சுற்றுப்புற முள்ள எல்லாத் தேசங்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டால் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கு மிகுதியாயுள்ள பிரதேசந்தான் என்ன?
பிரிட்டனைப் பொறுத்த மட்டில், அது மேற்கு ஐரோப்பியப் பிரதேசங்களின் சமாதானத்திலேயும், மத்திய தரைக்கடலின் பாதுகாப்பிலேயும் தன் கவனத்தைச் செலுத்தி வந்திருக்கிறது. மத்திய ஐரோப்பிய நாடுகளின் விஷயத்தில் அதிகமாகச் சிக்கிக்கொள்ள அது விரும்பவில்லை. இந்த மத்திய ஐரோப்பிய பிரச்னைகளில் பிரான்ஸ் தலையிட்டிருப்பதே அதற்குப் பிடிக்கவில்லை. சிறிது காலமாக ஐரோப்பிய அரசியலில் ஒருவித கொந்தளிப்பு ஏற்பட்டி ருப்பதற்குக் காரணமே, பிரான்ஸின் இந்தத் தலையீடுதான் என்று பிரிட்டிஷார் பலர் நினைக்கின்றனர். சர்வதேச சங்க ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்தின்படி, ஜெக்கோ ஸ்லோவேயாவைக் காப்பாற்ற, பிரிட்டன் கடமைப்பட்டிருக்கிற தென்று, தற்போது பிரிட்டிஷ் அர சாங்கம் கையாளுகிற அந்நிய நாட்டுக் கொள்கையைக் கண்டிக் கிறவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்கிற இந்த உடன்படிக்கைகளுக்கும், சிநேக ஒப்பந்தங் களுக்கும் இப்பொழுது என்ன மதிப்பு இருக்கிறது?
XII ஜெர்மனியின் நோக்கமென்ன?
ஐரோப்பாவின் தென் கிழக்குப் பக்கமாகத் தன் ஏகாதிபத்தி யத்தை விஸ்தரித்துக் கொண்டு போகவேண்டுமென்பது ஜெர்மனியின் நோக்க மல்லவா? இஃது, இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஹிட்லர், 1933-ஆம் வருஷம் சர்வாதிகாரப் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு தோன்றியது மல்ல. 1866-ஆம் வருஷத்திலிருந்தே ஜெர்மானியர்கள் இந்த ஏகாதிபத்திய ஆசையில் வாழ்ந்துவரத் தொடங்கினார்கள். இந்த ஆசையை உண்டு பண்ணியவன் பிஸ்மார்க். சென்ற எழுபது வருஷங்களாக ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கிற பலவிதமான அரசியல் கொந்தளிப்புகளுக்கும், ஜெர்மனி, அவ்வப்பொழுது பல நாடுகளுடன் செய்து வந்திருக்கிற ஒப்பந்தங் களுக்கும் அடிப்படை யான காரணமாயிருந்ததும், இருப்பதும் எது என்பதை நாம் கூர்ந்து கவனித்தோமானால் ஜெர்மனியின் இந்த ஏகாதிபத்தியப் பேராசை தான். ஜெர்மன் - ஆஸ்திரிய - ஹங்கேரிய ஒப்பந்தம், பால்கன் யுத்தம், மொராக்கோ சண்டை, 1914-ஆம் வருஷத்து ஐரோப்பிய மகாயுத்தம், ஆஸ்திரிய ஆக்ரமிப்பு, ஸுடேடென் பிரச்னையைக் கிளப்பியது ஆகிய எதை எடுத்துப் பார்த்தாலும், அனைத்திற்கும் கீழே நூலிழை போல் ஓடிக் கொண்டிருந்ததும், இருப்பதும் இந்த ஏகாதிபத்திய ஆசையாக இருக்கும்.
1866-ஆம் வருஷத்திலிருந்து ஜெர்மனியின் சரித்திரத்தை நாம் வேறொரு திருஷ்டியில் பார்ப்போமானால், ஜெர்மனி, ஐரோப் பாவின் மேற்குப் பக்கமாகவே தன் ஏகாதிபத்தியத்தை விரித்துக் கொள்வதில் முனைந்திருப்பதாகத் தோன்றும். பிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும் உள்ள இடைவிடாத பகைமைக்கு இதுதான் காரணமென்று சிலர் கருதலாம். ஆனால் உண்மையில், கிழக்கு ஐரோப்பாவின் கவனத்தை வேறொரு பக்கம் திருப்பிவிட்டு, அப்படி பாராமுகமாயிருக்கிற சமயம் பார்த்து அங்கேயுள்ள ஒவ்வொரு நாட்டையும், தன் கழுகுக் கொடியின் கீழ் கொண்டு வருவதற்காகவே, ஜெர்மனி இங்ஙனம் மேற்குப் பக்கமே தன் கவனமெல்லாம் இருப்ப தாக நடந்து கொண்டு வந்திருக்கிறது.
தன்னுடைய ஏகாதிபத்திய லட்சியத்தையடைவதற்கு, ஜெர்மனி, மூன்று படிகளைத் தாண்ட வேண்டுமென்று திட்டம் போட்டிருக் கிறது. முதல்படி, மத்திய ஐரோப்பாவிலுள்ள சிறிய நாடுகளை யெல்லாம், தன்னுடைய பொருளாதார, ராணுவ ஆதிக்கத்திற்குட் படுத்திக் கொள்ளுதல். இரண்டாவது படி, தன்னிடத்தில் ஐக்கிய மாகிவிட்ட இந்த நாடுகளின் பலத்தைக் கொண்டு, பெர்லின் நகரத் திலிருந்து பாக்தாத் நகரம் வரையில் தன் ராஜ்ஜியத்தை விஸ்தரித்துக் கொள்ளுதல். மூன்றாவது படி, கடலாதிக்கம் பெற்றுள்ள பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தி, அது முகாந்திரமாகச் சமுத்திர ஆதிக்கம் பெற்று உலக வல்லரசாதல். ஹோஹென் ஜொல்லெர்ன் ஏகாதிபத்தியம், முதலிரண்டு படி களைத் தாண்டுவதற்கு ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தை ஒரு கருவியாக உபயோகித்து வந்ததை 1914-ஆம் வருஷ ஐரோப்பிய யுத்தம் வரையிலும் கண்டோம்.1 இதற்கு முன்னரேயே, ஜெர்மனிக் காகத்தான் ஆஸ்திரியா இருக்க வேண்டுமென்றும், ஐரோப்பிய யுத்தம் ஒரு விதமாக முடிவுபெற்ற பிறகு, ஆஸ்திரியாவை ஜெர்மனி யோடு சேர்த்துவிட வேண்டுமென்றும் ஜெர்மானிய ராஜதந்திரிகள் ஒளிவுமறைவின்றிச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். ஆகவே, 1938-ஆம் வருஷம் மார்ச் மாதம், ஹிட்லர் ஆஸ்திரியாவை ஆக்ரமித்துக் கொண்டது திடீரென்று ஏற்பட்ட ஒரு யோசனையினாலன்று என்பதை நாம் திண்ணமாகத் தெரிந்துகொண்டு விடுதல் நல்லது. பிஸ்மார்க் கண்ட கனவை ஹிட்லர் நனவாக்கிவிட்டான். அவ்வளவு தான்.
தன்னுடைய ஏகாதிபத்தியத்தைத் தென்கிழக்குப் பக்கமாக விஸ்தரித்துக் கொண்டு போவதற்கு, ஆஸ்திரியாவும், ஜெக்கோ ஸ்லோவேகியாவும் பெரிய தடையாயிருப்பதாக ஜெர்மனி கருதி வந்திருக்கிறது. ஏனென்றால், ஆஸ்திரியாவுக்கும், ஜெக்கோ ஸ்லோ வேகியாவுக்கும் தென்கிழக்கேயுள்ள நாடுகளில் ஏராளமான மூலப் பொருள்கள் இருக்கின்றன. உதாரணமாக யூகோஸ்லேவியாவில் உலோக வகைகள் நிறையக் கிடைக்கின்றன. ஹங்கேரியிலும் பல் கேரியாவிலும் தானிய வகைகள் அதிகம். ருமேனியாவில் எண்ணெய்க் கிணறுகள் ஏராளம். துருக்கியில் பருத்தி விளைவு ஜாஸ்தி. இந்த மூலப் பொருள் களையெல்லாம் சுரண்டவேண்டுமானால், இந்த நாடுகளை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டுவது அவசியமாகிறது. அப்படி ஆக்ர மித்துக் கொள்வதற்கு ஆஸ்திரியாவும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுமே குறுக்காக நிற்கின்றன. இந்த இரண்டு நாடுகளும் பெரும்பாலும் விவசாய நாடுகளே. ஆயினும் கைத்தொழிலிலும் அதிக அபிவிருத்தி யடைந்து, ஜெர்மனியின் ஏற்றுமதி வியாபாரத்தோடு போட்டி போட்டு வந்தன. எனவே, இந்த இரண்டு நாடுகளையும் முதலில் தன் அணைப்பில் இழுத்துக் கொள்வது ஜெர்மனிக்கு அவசியமாகிறது. அப்பொழுது தான், ஹங்கேரி, ருமேனியா முதலிய நாடுகளுடன் இது நேரான தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.
இந்தப் பொருளாதாரக் காரணங்கள் தவிர, அரசியல் தேவைக் காகவும், ஆஸ்திரியாவையும் ஜெக்கோ ஸ்லோவேகி யாவையும் தன் வசப்படுத்திக் கொள்வது அவசியமென்று ஜெர்மனி கருதியது. இத்தலியின் ரோம ஏகாதிபத்திய நிழல், தன்னுடைய ஏகாதிபத்திய ஆசையின் மீது விழாமலிருக்க வேண்டுமானால் ஆஸ்திரியாவை ஒரு தடைக்கல் மாதிரி உபயோகித்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஆஸ்திரியா, ஜெர்மனியின் சுவாதீனத்திற்குட்பட்டிருக்க வேண்டியது அவசியமில்லையா? இதனால், இத்தலியின் சந்தேகத் திற்கு ஆளாகாமலும் நடந்து கொள்ள வேண்டி யிருந்தது. அதே சமயத்தில் ஆஸ்திரியாவையும் விழுங்க வேண்டி யிருந்தது. இந்த இரண்டு காரியங்களையும் 1936-ஆம் வருஷம் ஜூலை மாதத்தி லிருந்து ஹிட்லர் நிரம்பச் சாமர்த்தியமாகச் செய்யத் தொடங்கி, 1938-ஆம் வருஷம் மாதம் இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கின்றான்.
இப்படியே, ஜெக்கோ ஸ்லோவேகியா, தென் கிழக்குப் பிரதேசங்களில் செல்லவொட்டாமல் ஜெர்மனியைத் தடுத்து நிற்கிற ஒரு நுழைவாயில் மாதிரி இருக்கிறது. இதனை ஜெர்மன் ஏகாதி பத்திய வாதிகள் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்கள்.
மத்திய ஐரோப்பாவின் தெற்குப் பாகத்தில் நுழை யாதபடி பாதுகாத்துக் கொண்டிருக்கும் மலைப்பிரதேசம் ஜெக்கோ ஸ்லோவேகியா. இதனை அப்புறப்படுத்திவிட்டால், டான்யூப் பிரதேசங்களுக்குச் செல்கிற மூன்று ராணுவ பாதை களும் நமது கையிலே சிக்கிவிடும். ஜெக்கோ ஸ்லோவேகி யாவை அழித்துவிடுவதன் மூலம், ஜெர்மனிக்கு 300 மைல் நீளமுள்ள யூரேஷிய பாதை கிடைக்கும். இதனோடு 140 மைல் நீளமுள்ள ஹங்கேரியையும் சேர்த்துக் கொண்டால், மொத்தம் 720 மைல் நீளமுள்ள பாதை நம் வசமாகும்.
ஒரு சமயம் பிஸ்மார்க் என்ன கூறினான்? எவனொருவன் பொஹிமியாவுக்கு நாயகனாகிறானோ அவன் ஐரோப்பாவுக்கும் நாயகனாகிறான். இந்த வாசகந்தான், ஜெர்மனியின் ஜெக்கோ ஸ்லோவேகிய ஆக்ரமிப்புக்கு வழிகாட்டும் வெளிச்சம் போலிருந்தது.
ஜெக்கோ ஸ்லோவேகியா விஷயத்தில், ஜெர்மனி, இரண்டு விதமான முறைகளை அநுசரித்து வந்தது. ஒன்று, பிரான்ஸுடனும் சோவியத் ருஷ்யாவுடனும் ஜெக்கோ ஸ்லோவேகியா செய்து கொண்ட சிநேக ஒப்பந்தங்களை எதிர்த்து, சதா பிரசாரஞ் செய்து வந்தது. இரண்டாவது, சிறுபான்மையோர் பிரச்னையைக் கிளப்பி அதற்கு தூபம் போட்டு வளர்த்து வந்தது. ஹிட்லர், 1933-ஆம் வருஷம் பதவி ஏற்றுக்கொண்டதற்கு முன்னரேயே இந்தச் சிறுபான் மையோர் பிரச்னை, ஜெக்கோ ஸ்லோவேகியாவில் துளிர்விட்டி ருந்தது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் நோக்கம் இன்னவென்பதை அந்நிய நாட்டு விவகாரங்களில் மகா நிபுணர்களான மஸாரிக்கும் பெனேஷும் அறிந்திருந்தும், இவர்கள் ஜெர்மனியுடன் சிநேக மனப்பான்மை யையே காட்டிவந்திருக்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையே சிநேக ஒப்பந்தங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும், ஜெர்மனி, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் அஸ்திவாரத்தில் குழி பறித்துக் கொண்டுதானிருந்தது.
ருஷ்யாவுடன் ஜெக்கோ ஸ்லோவேகியா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது ஐரோப்பிய சமாதானத்திற்கே ஆபத்து என்று ஜெர்மனி இடைவிடாது பிரசாரஞ் செய்து வந்திருக்கிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 1926-ஆம் வருஷம் ஜெர்மனிக்கும் ருஷ்யாவுக்கும் சிநேக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது, ருஷ்யாவினால் எவ்வித ஆபத்துமில்லை யென்று ஜெர்மனி கருதியது. பின்னர் ருஷ்யாவும், பிரான்ஸும் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டபோது, தன் மீது ஏதோ துர்எண்ணங் கொண்டு இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்திருப்பதாக ஜெர்மனி மிரள ஆரம்பித்து விட்டது. கிழக்கு ஐரோப்பிய வல்லரசு ஒன்றும், மேற்கு ஐரோப்பிய வல்லரசு ஒன்றும், ஜெர்மனியின் தலைக்கு மேலே கை குலுக்கிக் கொள்ளும்படிவிடக்கூடாதென்பது பிஸ்மார்க்கின் உபதேசம். எனவே, பிரெஞ்சு - ருஷ்ய ஒப்பந்தத்தைக் கண்டு ஜெர்மனி மருண்டு விட்டதில் ஆச்சரியமில்லை. பிரான்ஸும் ருஷ்யாவும் ஒப்பந்தம் செய்து கொண்ட சந்தர்ப்பத்தில்தான் ஜெக்கோ ஸ்லோவேகிய - ருஷ்ய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை ஜெர்மனி சகிக்குமா?
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் பொதுவுடமை இயக்கம் தலை காட்டவேயில்லை. இந்த நாட்டைச் சுற்றி அரசியல் புரட்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட, இஃது எந்த விதமான புயற் காற்றிலும் அகப்பட்டுக் கொள்ளாமல் நிதான மாகவே நடந்து வந்திருக்கிறது. 1935-ஆம் வருஷம் மே மாதம் 21-ந் தேதி, ஹிட்லர், ஜெர்மன் பார்லிமெண்டில் நிகழ்த்திய ஒரு சொற் பொழிவில், 1918-ஆம் வருஷம் நவம்பர் மாதம் முதல், உலகத்தின் பல நாடுகளிலும் போல்ஷ் வெஸத் தினால் ஏற்பட்ட புரட்சிகளைத் தொகுத்து ஒரு ஜாபிதா கொடுத்திருக் கிறான். அதில் ஜெக்கோ ஸ்லோவேகியாவைக் குறிப்பிடவேயில்லை. அங்கு ஏதேனும் புரட்சி கள் நடைபெற்றிருந் தால்தானே?
ஜெக்கோஸ்லோவேகியா, ருமேனியா, யூகோஸ்லேவியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து செய்து கொண்ட சிற்றரசுகள் ஒப்பந்தம் ஜெர்மனிக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் குலை யாமல் பாதுகாத்து வர முயற்சி செய்தது ஜெக்கோ ஸ்லோவே கியாதான். ருமேனியாவையும், யூகோஸ்லேவி யாவையும் இந்த ஒப்பந்தத்தினின்று பிரித்து விட ஜெர்மனி, பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டு வந்திருக்கிறது. சிறப்பாக 1935-ஆம் வருஷத்தி லிருந்து இந்தப் பிரயத்தனம் மும்முரமாகிக் கொண்டு வந்தது. இப்படித் தனித்தனியாகப் பிரித்து விட்டால்தான், ஒவ்வொன்றையும் இது தனித்தனியாகச் சுவாதீனப் படுத்திக் கொள்ள முடியும். தவிர, இந்த மூன்று ஒப்பந்த நாடுகளுக்கும் பிரான்ஸுக்கும் நெருங்கிய சம்பந்தமிருந்தது. இது ஜெர்மனிக்குப் பிடிக்கவில்லை. தன்னுடைய தென்கிழக்கு விஸ்தரிப்பு யோசனை நிறைவேறா வண்ணம், இந்த மூன்று சிறிய நாடுகளுடன் பிரான்ஸுமல்லவோ சேர்ந்து கொள்ளும்? ஆகவே, இந்த ஒப்பந்தத்திற்கு மூலகாரணமாயிருந்த ஜெக்கோ ஸ்லோவேகியாவை அப்புறப்படுத்தி விடுவது ஜெர்மனிக்கு அவசியமா யிருந்தது.
இங்ஙனம் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் அந்நிய நாட்டுக் கொள்கையைக் கண்டித்துப் பிரசாரஞ் செய்து வந்தது ஒருமுறை. அடுத்தபடியாகச் சிறுபான்மையோர் பிரச்னை எவ்வாறு கிளப்பிவிடப்பட்ட தென்பதையும், அஃது எவ்வாறு வேலை செய்து வந்த தென்பதையும் சிறிது கவனிப்போம்.
உலகத்தின் நானா பாகங்களிலும் நாஜி ஸ்தாபனங்களோ, நாஜி கட்சிகளோ இருக்கின்றன. இவை, ஜெர்மனியிலுள்ள நாஜி கட்சியின் உத்திரவைப் பெற்று இயங்குகின்றன. நாஜி கட்சி வேறு, தற்போதைய ஜெர்மானிய அரசாங்கம் வேறு என்று நாம் பிரித்துக்காட்ட முடியா தல்லவா? அந்நிய நாடுகளிலுள்ள நாஜி கட்சிகளையும் நாஜி ஸ்தாபனங்களையும் கவனிப்பதற் கென்று தனியான ஓர் இலாகா இருக்கிறது. இது, ஜெர்மன் அந்நிய நாட்டு இலாகாவோடு இணைக் கப்பட்டு, அதனுடைய ஒரு கிளை இலாகாவாக இருக்கிறது. இந்த இலாகாவுக்குத் தனியாக ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறான். 30.1.1937-ல், இ.டப்ளியு. பொஹ்ளே (E.W.Bohle - Chief of Foreign Organization attached to the Foreign Office) என்பவனை அதிகாரியாக நியமித்து, அது சம்பந்தமாக ஜெர்மன் அரசாங்கம் விடுத்த ஓர் உத்திரவில், ஜெர்மன் ஏகாதிபத்தியத் திற்கு உட்பட்ட பிரஜைகளாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சம்பந்தமாக எல்லா விவகாரங்களையும் கவனிப்பதும், அவற்றை நிருவாகம் செய்வதும் இந்த அதிகாரியின் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக் கிறதுஎன்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன.1 இந்த அதிகாரிக்கு, மந்திரிச் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் இதை விரித்துக் கூறப் போனால், அந்நிய நாடுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் ஜெர்மன் அரசியல் உத்தி யோகஸ்தர்களுடைய வேலைகளனைத்தும் இந்த இலாகாவினாலேயே கவனிக்கப்படுகிற தென்று சொல்லலாம்.
ஜெர்மானியப் பிரஜைகளாக வெளிநாடுகளில் வசிக்கிற வர்கள் விஷயத்தில் கவனஞ் செலுத்துவது; ஜெர்மன் ராஜ்ஜியத்துப் பிரஜை களல்லாத லட்சக் கணக்கான ஜெர்மானியர்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது; மத்திய ஐரோப்பாவிலும், தென் கிழக்கு ஐரோப்பாவிலும் உள்ள சிறிய நாடுகளின் எல்லைகளை மாற்றிய மைப்பதற்கு என்னென்ன முயற்சிகள் செய்யப்படலாமோ அந்த முயற்சிகளுக்குச் சமமான வேலைகளுக்கு ஆதரவு கொடுப்பது; ஆகிய இவை இந்த இலாகாவின் பொறுப்பாகும்.
ஆக, மத்திய - தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள அரசாங்கங் களிடத்தில் பல விதமான செல்வாக்குகளை உபயோகப் படுத்தவும், சமயம் வந்த போது அவைகளை நெருக்கவும் இந்த இலாகா தனியாக அமைக்கப்பட்டிருக்கிறதென்பது தெளிவாகி விட்டது. இந்தக் காரியங்கள் நிறைவேறுவதற்காக, மூன்று முறைகள் கையாளப்படுகின்றன.
ஆங்காங்குச் சிறுபான்மைச் சமூகத்தினராயுள்ள ஜெர்மானியர்களை, திறமையான பிரசாரத்தினால் நாஜி கட்சியின் செல்வாக்குக்கு உட்படுத்துதல்.
அந்தந்த நாடுகளிலுள்ள பல அரசியல் கட்சிகளில், எவை எவை நாஜி கொள்கைகளுக்கு இணங்கின மாதிரி நடை பெறுகின்றனவோ அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளுதல்.
ஜெர்மனியின் அந்நிய நாட்டுக் கொள்கை எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறதென்பதை அவ்வப்பொழுது பரிசீலனை செய்து பார்த்தல்.
ஜெர்மனிக்குப் புறம்பாக வசிக்கும் ஜெர்மானியர்களனை வரையும், ஜெர்மன் ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்திற்குட்படுத்திவிட வேண்டுமென்று சொல்வது அநுபவ சாத்தியமானதன்று என்பதை யாருமே ஒப்புக் கொள்வர். மத்திய - தென் கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கிற ஜனங் களிடத்தில் அநேக விதமான ரத்தக் கலப்பு ஏற் பட்டிருக்கிறது. இவர்களில் இன்னார் தான் ஜெர்மானியர் என்று பிரித்துக்காட்ட முடியாது. தவிர இவர்கள் அந்தந்த நாட்டு மண்ணோடும், இதயத்தோடும் ஒன்றுபட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணமாக பொஹிமியாவில், ஜெர்மானியர்களும் ஜெக்கர்களும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஒன்றுபட்டவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஜெர்மானியப் பெயர்களை ஜெக்கர் களும், ஜெக்கப் பெயர்களை ஜெர்மானியர்களும் தாங்கிக்கொண்டு, தாங்கள் தனித்தனி ஜாதியினர் என்ற எண்ணமேயில்லாமல், எல்லாரும் ஒரு நாட்டுப் பிரஜைகள் என்ற ஒரே எண்ணத்துடன் வாழ்ந்து வந்திருக் கிறார்கள். இவர்களை எப்படி தனித்தனியாக இப்பொழுது பிரிக்க முடியும்?
ஜெர்மனிக்கு வெளியே - சிறப்பாக மத்திய தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் - அதாவது ட்யூடானிய - ஸ்லாவிய ரத்தக் கலப்பு டைய ஜாதியினரைக் கொண்ட தேசங்களில் - வசிக்கும் ஜெர்மானியச் சகோதரர்கள், அந்நிய ஆட்சியினால் அவதிப்படு கிறார்களென்றும், அவர்களை அந்த அவதியினின்று விடுதலை செய்வதே நாஜி கட்சியின் வெளிநாட்டு இலாகாவின் நோக்க மென்றும் சொல்லப்படுகின்றன. ஆனால் சரித்திர உண்மைகள் வேறுவிதமாக இருக்கின்றன. உதாரண மாக, ஜெக்கோ ஸ்லோவேகியாவிலுள்ள ஜெர்மானியர்கள் எப் பொழுதும் ஜெர்மனிக்குட்பட்டவர்களாயிருக்கவில்லை. இவர் களுடைய வாழ்க்கை, நாகரிகம், கலை வளர்ச்சி முதலிய அனைத்தும் ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்தியத்தின் வாழ்வுதாழ்வுகளைப் பொறுத்தனவாகவே இருந்தன. தவிர, பொஹிமியாவைத்தான், இவர்கள், ஜெக்கர்களோடு சேர்ந்து தங்கள் தாய் நாடாகப் போற்றி வந்தார்களே தவிர, ஜெர்மனியைக் கருதவே யில்லை. சரித்திர பூர்வமாக ஏற்பட்ட இந்தத் தொடர்பை, ஜெர்மனி இப்பொழுது அரசியல் சூழ்ச்சிகளினால் கத்தரித்துவிட்டது. இதே மாதிரி நிலை யில் ருஷ்யா, யூகோஸ்லேவியா, பல்கேரியா, ஹங்கேரி முதலிய நாடு களில் லட்சக்கணக்கான ஜெர்மானியர்கள் இருக்கிறார்கள். இவர் களையும் பிரித்து ஜெர்மனியுடன் சேர்த்து விடுவதா?
சர்வதேச சங்க ஒப்பந்தப்படியும், சிறுபான்மைச் சமூகத்தினர் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் படியும், வெளிநாடுகளில் வசிக்கும் ஜெர்மானிய சமூகத்தினரின் ரட்சகனாக ஜெர்மனி நியமிக்கப் படவில்லை. சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டிருக்கிற உரிமைகள் சரிவர அநுஷ்டிக்கப் படுகின்றனவா என்று கவனிக்கும் பொறுப்பு சர்வதேச சங்கத்தையும், ஹேக் நகரத்தில் ஸ்தாபிதமா யுள்ள சர்வதேசநீதி ஸ்தலத்தையும் சேர்ந்தது. இதனால்தான், 1936-ஆம் வருஷம் மார்ச் மாதம், ஜெக்கோ ஸ்லோவேகியாவின் அந்நிய நாட்டு மந்திரியா யிருந்த டாக்டர் க்ரோப்டா, சர்வதேச சங்க ஒப்பந்தத்தின் 86-வது ஷரத்துப் படி, ஜெக்கோ ஸ்லோவேகியாவி லுள்ள ஜெர்மானியர்கள் விஷயமாக ஜெர்மனி தலையிடுவதற்கு அதிகார மில்லையென்று கூறினான். ஆயினும் நாஜி அரசாங்க மானது விடுதலை செய்யப்பெறாமல் அந்நிய நாடுகளில் அவதி யுறும் ஜெர்மானியர்களை ஒன்றுபடுத்தி, அவர்களைத் தன்னுடைய அந்நிய நாட்டுக் கொள்கைக்குரிய ஒரு கருவியாக வைத்துக் கொண்டு, ஐரோப்பிய சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையை உண்டுபண்ணி, அதன் மூலமாகத் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டு வந்திருக்கிறது. இதை மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் கவனித்து வந்தும், பாராமுகமாகவே இருக்கின்றன. சர்வதேச சங்கமும் இதைப்பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெர்மனிக்குப் புறம்பாயுள்ள எல்லா ஜெர்மானியர்களும் ஒரு ராஜ்ஜியத்திற்குட்பட்டவர்களாதல் வேண்டுமென்ற இந்தக் கொள்கையை, நாஜி அரசாங்கம் பாரபட்சமின்றி எல்லா நாடுகள் விஷயத்திலும் அநுஷ்டித்து வருகிறதென்று சொல்ல முடியாது. தன் கொள்கைகளோடு இணங்கிப்போகிற, தனக்குச் சாதகமாயிருக்கிற தேசங்களிலுள்ள ஜெர்மானியர்களின் குறைகள் இதன் கண்ணுக்குப் படுவதில்லை. உதாரணமாக இத்தலி, போலந்து முதலிய நாடுகளில் ஜெர்மானியர் பெரும்பாலோர் இருக்கின்றனர். இவர்கள் மேற்படி அரசாங்கங்களின் கீழ் சௌக்கியமாக எல்லா உரிமைகளையும் அநுபவித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஜெர்மனிக்கும் இத்தலிக்கும் அடிக்கடி ராஜ தந்திரிகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், தென் டைரோல் மாகாணத்தில் வசிக்கும் ஜெர்மானியர்களுக்குப் பாஷா சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமென்றோ, இவர்களுடைய தெய்வப் பிரார்த்தனைகள் ஜெர்மன் பாஷையிலேயே நடைபெற வேண்டு மென்றோ, இறந்து போனவர்களுடைய சவக்குழிகளின் மீது ஜெர்மன் பாஷையில் சரம வாக்கியங்கள் எழுதி வைக்க உரிமை வேண்டு மென்றோ ஜெர்மானிய ராஜதந்திரிகள் முஸோலியினிடம் கூறினார் களில்லை.
ஜெர்மானியர்கள்ஆயிரக் ஜெர்மானியர்கள்ஆயிரக் - கணக்கில் கணக்கில்
ஜெக்கோ ஸ்லோவேகியா 3,790
ஸ்விட்ஜர்லாந்து 2,900
பிரான்ஸ் 1,634
போலந்து 1,245
ருஷ்யா 1,185
ருமேனியா 800
யூகோஸ்லேவியா 720
ஹங்கேரி 385
டான்ஸிக் 348
லக்ஸம்பர்க் 250
பால்டிக் பிரதேசங்கள் 248
இத்தலி 235
டென்மார்க் 77
பெல்ஜியம் 50
லீஸென்டென்ஸ்னடன் 10
அமெரிக்கா (ஐ.மா) 12,000
ப்ரேஜில் 750
சில்லி 720
அர்ஜண்டைன் 200
ஆஸ்திரேலியா 100
ஆப்ரிக்கா 78
கானடா 50
அமெரிக்காவிலுள்ள மற்ற நாடுகளில் 28
மொத்தம் 27,823
1934-ஆம் வருஷம், ஜெர்மனியும் போலந்தும் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, இந்த நாட்டில் வசிக்கிற ஜெர் மானியர்க ள் விஷயத்தில் நாஜி அரசாங்கம் அதிகமான சிரத்தை கொள்ளவில்லை. ஏற்கனவே ஜெர்மானியர்கள் அநுபவித்து வந்த சில உரிமைகள் கூட இந்த வருஷத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், ஜெர்மனி, தன் விரலைக் கூட அசைக்கவில்லை. இதே பிரகாரம் ஹங்கேரியிலுள்ள ஜெர்மானியர்கள் விஷயத்திலும் நாஜி அரசாங்கம் பராமுகமாக இருந்து வந்திருக்கிறது. எனவே, தனக்குத் தேவையான வகையில், இந்த ஜெர்மானியர் ஒற்றுமைப் பிரசாரத் தையும் ஜெர்மானியரைக் கைதூக்கி விடுகிற பிரசாரத்தையும் ஜெர் மனி செய்து வந்திருக்கிறது. இதனுடைய கவனமெல்லாம் மத்திய - தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மீதுதான். ஏனென்றால் இவற்றைப் பலஹீனப்படுத்தி வைத்தால்தான், தன்னுடைய தென்கிழக்கு விஸ் தரிப்பு சுலபமாக நிறைவேறும் என்பது இதன் எண்ணம்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் இந்தச் சிறுபான்மைச் பிரச்னை எவ்வாறு எழுந்தது என்பதையும், அதன் ஸ்வரம் எப்படி படிப்படி யாக ஏறிக்கொண்டு வந்ததென்பதையும் முந்திய அத்தியாயங்களில் தெரிந்து கொண்டிருக்கிறோம். இந்த ஸுடேடென் ஜெர்மானியக் கட்சியின் தலைவனான ஹென்லைன், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் அந்நிய நாட்டுக் கொள்கையை மாற்றியமைக்கும் விஷயத்தில், முதலிலிருந்து தீவிரமாகப் பிரசாரஞ் செய்து வந்திருக் கிறான். சிற்றரசுகளின் ஒப்பந்தத்திலிருந்தும், பிரான்ஸ்-ருஷ்ய ஒப்பந் தங்களிலிருந்தும், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம் விலகிக் கொண்டு ஜெர்மனியின் தயவில் வாழ வேண்டுமென்பதே இதனு டைய பிரசாரத்தின் அடிப்படையான தத்துவமா யமைந்திருந்தது. 23.8.38-இல் ஹென்லைன் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வரு மாறு கூறினான்:
ஜெர்மன் நாஜி கட்சியின் கொள்கை, எண்ணம் இவற்றை அடிப்படை யாகக் கொண்டே நமது கொள்கைகளும் வகுக்கப் பட்டிருக்கின்றன வென்பதை நாம் பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகிறோம். ஜெக்க ராஜதந்திரிகள் ஜெர்மானியர்களாகிய நம்முடனும், ஜெர்மானிய ஏகாதி பத்தியத்துடனும் நிரந்தர மான ஒரு சமரஸம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புவார்களா னால், அவர்கள் இன்று வரை அநுஷ்டித்து வரும் அந்நிய நாட்டுக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜெக்கோ ஸ்லோவேகியா, தற்போழ்து அநுஷ்டித்து வரும் அந்நிய நாட்டுக் கொள்கையானது அதனை, ஜெர்மானியர்களுடைய விரோதிகளின் கையில் சிக்க வைத்திருக்கிறது.
1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற ஒரு மகா நாட்டிற்கு ஹென்லைன் கட்சிக்குப் பிரதிநிதியாகச் சென்றி ருந்த ஹென்ரிக் ரூதா வென்பவன் பின்வருமாறு கூறினான்:
இப்பொழுது அச்சுறுத்திக் கொண்டிருக்கிற ஆபத்தைக் குறித்து நான் ஐரோப்பா முழுவதுக்கும் எச்சரிக்கை செய்கிறேன். இந்தப் போராட்டத்தின் (ஸுடேடென் ஜெர்மானியப் பிரச்னை யின்) இயற்கையான காரணங்களை அப்புறப்படுத்தா விட்டால், தாய்நாடு (ஜெர்மனி) இவற்றை அப்புறப் படுத்தும். சிறுபான்மைப் பிரதேசங்களில் வசிக்கும் தன் சகோதரர்களை அது காப்பாற்றுகிறது.
1936-ஆம் வருஷக் கடைசியிலேயே, ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் மீது ஜெர்மனி படையெடுக்கப்போகிறதென்று ஐரோப்பிய வல்லரசு களுக்குத் தெரிந்திருந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு ஒவ் வொரு நாடும், தன்னை பந்தோபஸ்து செய்து கொண்டது. இதனையே, ரூதா 1937-ஆம் வருஷத்தில் பகிரங்கமாகக் கூறினான்.
ஆக, ஜெர்மனியின் நோக்கமென்ன? ஜெக்கோ ஸ்லோவேகி யாவிலுள்ள சுமார் 32 லட்சம் ஜெர்மானியர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற வேண்டுமென்பதா? இல்லை. தன்னுடைய தென்கிழக்கு ஏகாதிபத்திய விஸ்தரிப்புக்குத் தடையாயிருக்கிற ஜெக்கோ ஸ்லோ வேகியாவை அப்புறப்படுத்த வேண்டுமென்பதுதான். இந்த நோக்கம் ஒருவாறு நிறைவேறிவிட்டது. அடுத்த பலி யார்? ஹங்கேரியா?
ஐரோப்பாவில் நாடு பெருக்குகிற தன்னுடைய நோக்கம், ஸுடேடென் பிரதேசத்தோடு முற்றுப்புள்ளி பெற்று விடுகிறதென்று ஹிட்லர், சேம்பர்லேனிடம் கூறியிருப்பது உண்மை. ஆனால் இந்த வாசகத்தைச் சுலபமாக ஜீரணிக்க முடியவில்லையே. ஆஸ்திரி யாவைத் தன்னுடைன் ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கு ஒரு மாதம் முன்னர் தான், 11.2.38-இல் ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் சிநேக ஒப்பந்தம் நிறைவேறியது. ஆனால் இந்த ஒப்பந்தம் எவ்வளவு தூரம் கௌரவிக்கப்பட்டது?
XIII ஸோகோல் இயக்கம்
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் எந்த மூலை முடுக்குகளுக்கு நீங்கள் சென்று பார்த்தாலும், அங்குச் சிறுவர் சிறுமியர்கள் தேகப் பயிற்சி செய்வதற்கென்று ஒரு ஸ்தாபனமிருக்கும். இதற்கு ஸோகோல் என்று பெயர். பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு சிறுவர்கள் இந்தத் தேகப் பயிற்சிக் கழகத்திற்கு வந்து பயிற்சி பெற வேண்டுமென்பது பொதுவானதொரு விதி. இந்தக் கழகத்திற்கென்று ஒரு தனிக் கட்டிடம் உண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியன்மார் பலர், தேசத்தின் வருங்கால சந்ததிக்கு உடலுரம் தேவையென்பதை உணர்ந்து, அதற் கேற்ப சிறுவர்களுக்குப் பலவிதமான பயிற்சிகளை அளிக் கிறார்கள். பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள் அனைத்தும் அளிக்கப் படுகின்றன. இவையாவும், அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடை பெறுகின்றன என்று நாம் நினைக்கிறபோது, தேசத்தின் இதய ஓட்டம் சரிவர நடைபெற வேண்டும் என்பதில் இந்த அரசாங் கத்தார் எவ்வளவு கண்ணுங் கருத்துமாயிருக் கின்றனர் என்பது நன்கு புலப்படும்.
பொஹிமியா, ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட் பட்டு பல இன்னல்களை அநுபவித்து வந்த காலத்தில் அதனின்று விடுதலை பெற்றுக்கொள்ள ஆங்காங்குப் பல இயக்கங்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று இந்த ஸோகோல் இயக்கம். அப்பொழுது அரசாங் கத்தை நேர்முகமாகத்தாக்கப் போதிய சக்தியை ஜனங்கள் பெற வில்லை. ஆஸ்திரியாவின் அடக்குமுறை அவ்வளவு மும்முரமாயி ருந்தது. தங்களுக்காட்பட்ட ஜனங்களை கோழைகளாக்கி விடுவதில் ஆஸ்திரிய அதிகாரிகள் பரம திருப்தி கொண்டார்கள். இதனை அப் பொழுதைய ஜனத்தலைவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்களாயினும் எவரும் இந்த உணர்ச்சியைச் செயலில் கொணரத் துணியவில்லை. டாக்டர் மிரோஸ்லாவ் டைர்ஸ் (Dr. Myroslav Tyrs) என்பவன் 1862-ஆம் வருஷம் மார்ச் மாதம் 5ந் தேதி முதன்முதல், இளைஞர்களுக்குச் சிறந்த முறையில் தேகப் பயிற்சியளித்தது அவர்களை வருங்கால சுதந்திரப் பிரஜைகளாக்க வேண்டுமென்ற முன் யோசனையுடன், இந்த ஸோகோல் இயக்கத்தை ஆரம்பித்தான். ஸோகோல் என்ற சொல்லுக்குப் பருந்து என்று பொருள். ஸ்லாவியர்களுடைய புராதன இதிகாசங்களில் வாழ்ந்து வருகிற வீரர்கள், பருந்து என்ற அடைமொழியிட்டே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை யொட்டியே, டைர்ஸ், இந்த இயக்கத்துக்கு ஸோகோல் என்று பெயர் வைத்தான். தொடக்கத்தில் 75 பேரே இதில் சேர்ந்தனர். இப் பொழுது அதாவது சுமார் எழுபத்தைந்து ஆண்டுகட்குப் பிறகு - இந்த இயக்கத்தில் எட்டு லட்சம் பேருக்கதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டிருக் கிறார்கள். ஜெக்கர்களின் தன் மதிப்புணர்ச்சி, தேச பக்தி, ஒற்றுமை எண்ணம் முதலியன வளர்ந்து வந்தது இந்த இயக்கத்தினால்தான். இந்த இயக்கத்தினர், தேகத்தை பலமாக வைத்துக் கொள்வதிலே மட்டும் திருப்தி கொள்ளவில்லை; பல முள்ள தேகத்திலே அழகும் அமைய வேண்டும், அத்தகைய உடலுக் குள்தான் களங்கமற்ற உள்ளம் இருக்க முடியும் என்று இந்நாட்டுத் தலைவர்கள் பலமுறை பேசியிருக்கிறார்கள். இதனாலேயே ஸோகோல் இயக்கத்தின் கீழ் தேகப் பயிற்சி பெறுவோர் ஒழுங்கான சில முறை களைக் கையாள்கின்றனர். தேக அசைவிலும், கை கால்களை நீட்டு வதிலுங்கூட ஓர் அழகு, ஓர் ஒழுங்கு உண்டு. ஜெக்கோ ஸ்லோவே கியாவின் ராணுவத்திற்கு அடிப்படையாயிருப்பது இந்த ஸோகோல் இயக்கந்தான்.
ஸோகோல் இயக்கத்தில் ஸ்லாவிய சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் இடம் பெறலாம். ஆண் பெண் என்ற வேற்றுமை கிடையாது. எல்லா ஸோகோல் தொண்டர்களும் ஒரே மாதிரியான உடை அணிய வேண்டும்.
ஆறு வருஷங்களுக்கு ஒருமுறை ப்ரேக் நகரத்தில் உள்ள சுமார் 567 ஏக்ரா விஸ்தீரணமுள்ள பெரிய மைதானத்தில் ஸோ கோல் விழாவொன்று நடைபெறும். இதற்கு ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் பல பாகங்களிலிருந்தும் ஸோகோல் தொண்டர்கள் வந்து கூடுவார்கள். ஏன்? உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் லட்சக் கணக்கான ஜனங்கள் இந்த அரிய காட்சியைக் காண வருவார்கள். மற்ற நாடுகளில் இளைஞர் இயக்கங்கள் பல இருந்த போதிலும் ஸோகோல் இயக்கத்தைப் போல் அவ்வளவு கட்டுப்பாடான, ஒழுங்குள்ள, தேச முன்னேற்றத்திற் கென்றே இயங்கி வருகிற ஓர் இயக்கத்தை எந்த நாட்டிலும் காண்டல் அரிது.
XIV அளித்த நன்கொடைகள்
ஒரு நாட்டை, அல்லது ஒரு ஜன சமூகத்தை நாம் எந்த திருஷ்டி கொண்டு பார்க்க வேண்டுமென்றால் அந்த நாடு, அல்லது அந்த ஜனசமூகம், உலகத்திற்கு என்ன நன்கொடை யளித்திருக்கிறது; அதனால் மானிட சமூகத்தின் நன்றியை ஓர் அளவுக்கோ அல்லது ஒரு சிறிது காலத்திற்கோ பெற்றிருக்கிறதா என்பதுதான். இந்தத் திருஷ்டியில் நோக்குவதுதான் நமக்கு நல்லது; நமது நாட்டிற்குப் பெருமை. உயர்ந்த மலைகளின் மீது, ஓங்கிய மரங்கள் வளராம லிருக்கலாம்; ஆனால் சிறு குன்றுகளின் மீது இன் கனி வளமுடைய விருட்சங்கள் பல செறிந்து நிற்கலாம். ஒரு நாடு, விஸ்தீரணத்தில் பெரிதாயும், புராதனத்தில் ஆழ்ந்ததாயும் இருக்கும். ஆனால், அஃது உலகத்திற்கு என்ன நன்மையைச் செய்தது என்ற கேள்விக்கு விடையே கிடைக்காது. இந்த நிலையில், கால் நூற்றாண்டு வயது கூட ஆகாத ஒரு சிறிய ராஜ்ஜியம், உலகத்துப் பெரும் பாலாருடைய அன்றாட வாழ்க்கையில் கலந்திருக்கிறது என்று சொன்னால், அது வியக்கத்தக்க விஷயமல்லவா?
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் சர்க்கரையைச் சுவைக்காத நாவும், அந்த நாட்டின் பாடா பூட்ஸ்களை அணியாத காலும் உலகத்தில் மிகக் குறைவு. இது வியாபாரப் பெருக்கமேயல்லாது, உலகத்திற்கு நன்கொடை யாகாது என்று யாரேனும் சொன்னால் அதைப் பற்றி நாம் வாதம் செய்யத் தயாராயில்லை. மனிதனுடைய அன்றாடத் தேவைகளுடன் கலந் திருக்கிறமாதிரி இந்த ஜெக்கோ ஸ்லோவேகிய நாடு, வெகு சீக்கிரத்தில் முன்னேறி வந்த தென்பதைக் காட்டவே இதனைக் கூறினோம்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவில் பல வெந்நீர் ஊற்றுக்கள் இருக் கின்றன. கார்ல்ஸ்பாட், மேரியன்பாட், பிஸ்தனி என்ற ஊர்களிலுள்ள வெந்நீர் ஊற்றுக்களுக்கு உலகத்தின் நானா பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கூடுகிறார்கள். இந்த ஊற்றுக்களில் ஸ்நானம் செய் பவர்கள் எத்தகைய நோயுடைய ராயினும் விரைவில் குணமடைந்து விடுகிறார்கள். இந்தப் பிரதேசங்களிலுள்ள மண்ணுக்கு அபூர்வ மானதோர் ஔஷத சக்தியிருக்கிறது. இந்த மண்ணை அதிக விலை கொடுத்து வெளிநாடுகளுக்குப் பலர் வாங்கிச் செல்கிறார்கள். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் ஏற்றுமதிப் பொருள்களில் அந்த நாட்டு மண்கூட ஒன்று!
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் தலைநகரான ப்ரேக் நகரத்தில் ஒரு கிறிஸ்தவக் கோயில் உண்டு. இஃதொரு சித்திரக் களஞ்சியம்; கற்பனைக்கு உயிர். இதனைக் கட்டி முடிக்க ஆயிரம் வருஷங்கள் சென்றன. கி.பி. 929-ஆம் வருஷத்தில் தொடங்கப் பெற்ற இந்தக் கோயிலின் வேலை, 1929-ஆம் வருஷந்தான் முடிவுற்றது. இந்தக் கோயிலைக் காணவரும் யாத்ரீகர்களினால் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
ப்ரேக் நகரத்திலுள்ள சர்வ கலாசாலைதான் மத்திய ஐரோப்பா வில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வகலா சாலைகளுள் மிகப் புராதன மானது. இது கி.பி. 1348-ஆம் வருஷம் ஏற்படுத்தப் பெற்றது. இதற் கடுத்ததுதான் ஜெர்மனியிலுள்ள பிரசித்தமான ஹைடெல் பெர்க் சர்வ கலாசாலை. இது கி.பி. 1385-ஆம் வருஷம் ஸ்தாபிக்கப் பட்டது. ஜெர்மனியின் நல்வாழ்வுக்கு அடிகோலியவர்கள் ஏறக்குறைய அத்தனைபேரும், இந்த ஹைடல்பெர்க் சர்வ கலாசாலையின் படி யேறியவர்கள்தான். அப்படியே ஜெக்கோ ஸ்லோவேகியாவின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைத்தவர்களும், சமுதாய வாழ்வைச் சீர்திருத்தி அமைத்தவர்களும் இந்த ப்ரேக் சர்வ கலாசாலையினின்று புறப் பட்டவர்களே. கிறிஸ்தவ மதத்தின் புனிதத் தன்மையைக் காப் பாற்றும் பொருட்டு எந்த ஜான் ஹஸ் உழைத்து அதற்காக அந்தக் கிறிஸ்தவ மதப் பாதிரிமார்களாலேயே உயிரோடு கொளுத்தப் பட்டானோ அவன் -அந்தத் தர்ம புருஷன்-இந்த ப்ரேக் சர்வ கலா சாலையில் ஓர் ஆசிரியனாயிருந்தவன். இந்த இருபதாவது நூற்றாண்டில் ஜெக்கோ ஸ்லோவேகியாவை ஒரு சுதந்திர நாடாகச் சிருஷ்டி செய்து அதனைப் பல வருஷ காலம் பரிபாலித்து வந்த தாமஸ் மஸாரிக் இந்தச் சர்வ கலாசாலையில் ஒரு போதகாசிரியனாயிருந்தவன்.
கி.பி. பதினாறாவது நூற்றாண்டு மத்தியில் ஐரோப்பா வெங் கணும் ஒரு பெரிய மதப்புரட்சி ஏற்பட்ட தல்லவா? அந்தப் புரட்சிக்கு விதை போட்டவர்கள் ஜெக்கோ ஸ்லோவேகியாவில் தோன்றியவர்களே. பாதிரிமார்களின் ஆடம்பரத்தையும், மதத்தின் பெயரால் அவர்கள் செய்து வந்த முறை தவறிய செயல்களையும் பகிரங்கமாகக் கண்டிக்கத் தொடங்கியவன் ஜான் ஹஸ்ஸல்லவா? இவன் மதச் சீர்திருத்தத்துக்காக மட்டும் உழைக்கவில்லை; உலக சமாதானத்திற்கும் உழைத்தான். பொஹிமியாவுக்கும், போலந் துக்கும் யுத்தம் நேரிட்ட பொழுது, அதைத் தடுக்க இவன் செய்த முயற்சி கள் பல. இவன் எழுதிய கடிதமொன்றில் கிறிஸ்துநாதரை சமாதான கர்த்தரான நமது தலைவர் என்று அழைக் கிறான்.
ஜெக்கோ ஸ்லோவேகியாவின் மற்றொரு பாதிரியான கொம்மென்னியஸ் என்கிற கொமென்ஸ்கி (Komensky) என்பவன், ஐரோப்பாவில் தற்பொழுது ஏற்பட்டிருக்கிற கல்வி முறைக்கு அடி கோலியவன். இங்கிலாந்தின் கல்வி முறையைச் சீர்திருத்தி அமைத்துக் கொடுக்குமாறு கி.பி. 1641-ஆம் வருஷத்தில், பிரிட்டிஷ் பார்லி மென்டே இவனை அழைத்தது.
ஐரோப்பிய மகா யுத்தத்திற்குப் பிறகு, பிரசிடெண்ட் வில்ஸனு டைய பெரு முயற்சியால் சர்வதேச சங்கம் ஏற்பட்டதென்பதுதான் பொதுவான அபிப்பிராயம். ஆனால் ஜெக்கோ ஸ்லோவேகி யாதான், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இந்தச் சர்வதேச சங்க எண்ணத்தை எழுப்பி, அதற்கான சில செயல்முறைகளையும் கையாண்டிருக்கிறது. பல நாட்டரசர்களோ, அல்லது அவர் களுடைய பிரதிநிதிகளோ ஒரே இடத்தில் ஒரே காலத்தில் கூடி, அந்த நாடுகளுக்குப் பொதுவாயமைந்துள்ள விஷயங்களைப் பற்றிப் பேசி, ஒற்றுமையாகச் சில காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற யோசனையை முதல் முதல் கிளப்பியவன் ஜெக்க மன்னனாகிய ஜார்ஜ் என்பவன். இவன் கி.பி. 1458-ஆம் வருஷம் முதல் கி.பி. 1471-ஆம் வருஷம் வரையில் ஆண்டவன். பல நாடுகளும் சேர்ந்த ஒரு பார்லி மெண்டைக் கூட்டவேண்டுமென்று இவன் தொடக்கத்தில் போலந்து மன்னனுக்கும் ஹங்கேரி மன்னனுக்கும் கடிதங்கள் விடுத்தான். அவர்கள் இதற்குப் பூரண சம்மதம் அளித்தனர். இந்த மூவரும் சேர்ந்து, கி.பி. 1464-ஆம் வருஷம் பிரெஞ்சு மன்னனுக்கு ஒரு தூதுக் கோஷ்டியை அனுப்பினர். ஆனால், அப்பொழுதிருந்த பிரெஞ்சு (பதினோராவது லூயி) மன்னன், இது மிகவும் பெரிய விஷயமென்றும், தீர்க்காலோ சனையின் பேரில்தான் இது தொடங்கப்பட வேண்டுமென்றும் கூறி விட்டான். இதற்குப் பிறகு இந்த விஷயம் அப்படியே கை நழுவ விடப்பட்டது. இதன் பின் விளைவு ஒன்றுமில்லா விட்டாலும், சர்வ தேசங்களும் ஒன்று கூடி பரஸ்பரம் ஆலோசித்துக் கொள்ள வேண்டு மென்ற எண்ணத்தின் சிருஷ்டிகர்த்தன் ஒரு ஜெக்க மன்னன்தான். இதனாலேயோ என்னவோ தற்போதைய சர்வதேச சங்கத்தில், ஜெக்கோ ஸ்லோவேகி யாவுக்கு அதிகமான ஒரு பிடிப்பு இருந்து வந்திருக்கிறது.
உலகத்தில் நாணய சம்பந்தமாக நாம் தற்பொழுது காண்கிற பல சீர்திருத்தங்களுக்கும், மூலகாரணமாயிருந்தது ஜெக்கோ ஸ்லோவேகியாதான். இப்பொழுது மேனாடுகளில் வழங்கப்பட்டு வரும் கிரவுன் அல்லது க்ரோஷன் என்ற நாணயத்திற்குப் பிதா ஜெக்கோ ஸ்லோவேகியா. இந்த நாட்டில் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே செலவாணியிலிருந்த க்ரோட் என்ற நாணயம், பின்னர் பல நாடுகளுக்கும் க்ரோஷனாகவும், கிரவுனாகவும் மாறிச் சென்றது. இப்பொழுது டாலர் என்ற ஒரு நாணயம் அமெரிக்கா முதலிய நாடுகளில் செலாவணியி லிருக்கிற தல்லவா? இதுவும் ஆதியில் ஜெக்கோ ஸ்லோவேகியாவி லிருந்து உற்பத்தியானதுதான். இந்த நாட்டு மன்னன் ஒருவன், தாலர் (Thaler) என்ற நாணயத்தை முதலில் அச்சிட்டு வழங்க அதுவே பின்னர் டாலராக மாறிப் பல நாடுகளுக்கும் சென்றது.
சரித்திர காலத்திற்கு முற்பட்ட மனிதர்கள் எங்கே வசித்துக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கு ஜெக்கோ ஸ்லோவேகி யாதான் சரியான பதில் அளிக்கிறது. இந்த நாட்டிலுள்ள ப்ரூன் (Brunn) என்ற ஊருக்கருகாமையில் புராதனமான சில குகைகள் இருக்கின்றன. இந்தக் குகைகளில்தான் சுமார் இருபதினாயிரம் வருஷங்களுக்கு முன்னர் சரித்திர காலத்திற்கு முற்பட்ட மனிதர்கள் வசித்து வந்தார்களென்று அறிஞர்கள் துணிகிறார்கள். இப்பொழுது கூட ஐரோப்பாவில் எந்தப் பிரசித்தி பெற்ற சரித்திராசிரியனும் இந்தக் குகைகளை வந்து பாராமல் போவதில்லை.
இவையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். கலை உலகத்திற்கு ஜெக்கோ ஸ்லோவேகிய அபரிமிதமான நன்கொடைகளை அளித்திருக் கிறது. ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் எப்பொழுதும் உயர்ந்த முறை சங்கீதங்களை ரசிப்பார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக் கிறோ மல்லவா? இந்த ரசனை உணர்ச்சி பரம்பரையாக அவர்களது ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. இதனாலேயே மேனாட்டு இசைப் புலவர்கள் பலரும், ஜெக்கோ ஸ்லோவேகியாவின் திசை நோக்கித் தொழுதவண்ண மிருக்கிறார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டின் மத்திய பாகத்திலிருந்த ப்ரடெரிக் ஸ்மெடானா (Frederick Smetana) என்ன, த்வோராக் (Dvorak) என்ன, துஸ்ஸேக் (Dussek) என்ன, இவர்கள் எல்லோரும் அதியற்புதமான சங்கீதங்களை யியற்றி உலகத்திற்கு அளித்திருக் கிறார்கள். இப்பொழுதும் மேனாடுகளில், பிடில், பியானோ முதலிய வாத்தியக் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர்கள் ஜெக் கர்களே. பிற நாட்டு இசைப் புலவர்களும், இந்நாட்டுக்குச் சென்று ஜனங்களின் நன்மதிப்பைப் பெறுதலே பெரிய பேறெனக் கருதி வந்திருக்கிறார்கள்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனைப் போற்றி வளர்த்தாலன்றித் தாய் நாடு முன்னேற முடியாது என்ற உண்மையை உலகத்திற்கு அறிவுறுத்தியது ஜெக்கோ ஸ்லோவேகியாதான். தாய் மொழியைக் காப்பாற்றும் பொருட்டு அநேக அறிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி அதற்காக அநேக சங்கடங்களையும் அடைந் திருக்கிறார்கள். ஒரு பொஹிமியன் - சிறப்பாக கி.பி. பத்தாவது பதி னோராவது நூற்றாண்டில் வசித்தவன் - தனது சுய பாஷைக்காக எதை யும் செய்யச் சித்தமாயிருந் திருக்கிறான். சுய பாஷா பண்டிதர் களுக்குத்தான் ஜனங்கள் மதிப்புக் கொடுத்து வந்திருக்கிறார்கள். அரசியலுக்காகவோ, மதத்திற்காகவோ உழைத்து வந்தவர்கள் ஒரு சிறிதளவு பாஷைக்காக உழைத்திராவிட்டால் அவர்களை ஜனங்கள் போற்றுவதேயில்லை. ஜான் ஹஸ் என்பவனை நமது பாஷைக்கு வாழ்வளித்தவன் என்றுதான் ஜனங்கள் கொண்டாடு கிறார்கள். கி.பி. 15-வது நூற்றாண்டின் முதற் பாகத்தில் இந்த நாட்டை சிகிஸ்மண்ட் (Sigismund) என்ற அரசன் ஆண்டு வந்தான். இவன் கொடுமையின் வடிவம். ஜனங்களின் சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து விட்ட பாவியெனப் பெயர் படைத்தவன். ஆனால் ஜனங்கள் இவனை இவற்றிற்கெல்லாம் தூற்றுவதில்லை. எங்கள் தாய் மொழிக்குச் சத்துரு என்றுதான் நிந்தித்துப் பேசுவார்கள். கி.பி. 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து, அதாவது அந்த நாட்டில் சுதந்திரம் அரும்பிய காலத்திலிருந்து ஜெக்கோ ஸ்லோவேகியர்கள் தங்கள் தாய் மொழிக்காக அரும்பாடு பட்டிருக்கிறார்கள். தன் தாய் மொழியைப் பற்றிப் பேசுகையில் ஒரு ஜெக்கன் சிறிதுகூடச் சலிக்கமாட்டான்.
தற்போது ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பிரதம எழுத்தாளன் கார்ல் ஷாபெக் (Karl Capek) என்பவன். இவன் 1890-ஆம் வருஷத்தில் பிறந்தவன். பல நாடகங்களை எழுதியிருக்கிறான். மனிதனைப்போல் எல்லாக் காரியங்களையும் செய்யக்கூடிய ஒரு மின்சாரக் கருவிக்கு ரோபோட் (Robot) என்று பெயர். இந்த வார்த்தையைப் புதிதாகச் சிருஷ்டி செய்தவன் இந்த ஷாபெக்தான். இவனுடைய நூல்கள் பல அந்நிய பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
XV தலைகுனிந்த வாழ்வு
ம்யூனிக் ஒப்பந்தம் நிறைவேறிவிட்டது. ஜெக்கோ ஸ்லோவேகி யாவின் எல்லைப்புறத்தில் ஜெர்மன் பாண்டு வாத்தியங்கள் முழங்கு கின்றன. ஹிட்லர், ஸுடேடென் பிரதேசங்களில் ஆடம்பரமாக வரவேற்கப் படுகிறான். சாம்பல் வர்ணமுள்ள மோட்டார் வண்டியில் நின்று கொண்டு, ஜனங்களுடைய உபசாரங்களுக்குப் பதில் அளிக் கிறபோது, ஜெர்மனியின் எதிர்கால வாழ்வு இன்று, இங்கிருந்தே ஆரம்பமாகிறது என்று அவன் கூறுகிற வாக்கியத்தில் ஜெக்கோ ஸ்லோவேகியாவின் எதிர்கால வாழ்வு இன்று, இங்கிருந்தே மங்கத் தொடங்குகிறது என்ற பொருள் தொனிப்பதாக, அவனுடைய பக்தர் கள் வியாக்கி யானஞ் செய்து கொண்டு, ஸ்வஸ்திகைக் கொடியைப் பறக்கவிட்டு முன் செல்கிறார்கள். ஹென்லைன், ஸுடேடென் பிரதேசங்களுக்கு ஜெர்மன் அரசாங்கத்தின் பிரதிநிதியாக 2-10-38-இல் நியமிக்கப்பட்டிருக்கிறான். அவனுடைய உழைப்புக்குக் கை மேல் பலன் கிடைத்துவிட்டது.
பிரிட்டனிலும், பிரான்ஸிலும் யுத்தம் வராமல் நின்று விட்டதற்காக. சிலுவையின் முன்னர் பணிந்து பணிந்து எழுந்திருக் கிறார்கள் பாதிரிமார்கள். ஆனால் அதே சமயத்தில், சேம்பர்லேனின் சமாதான மாத்திரையை விழுங்க முடியாமல், பிரிட்டிஷ் கடற்படை மந்திரியாகிய டப் கூப்பர் (Duff Cooper) தன் பதவியை 1.10.38-இல் ராஜீ நாமா செய்து விட்டான். இத்தலியின் நட்புக்காக ஈடன் பலி கொடுக் கப்பட்டான்! ஜெர்மனியின் நட்புக்காக டப் கூப்பர் பலியானான்.
இங்கே ஜெக்கோ ஸ்லோவேகியாவில், ஜெக்கர்கள் தாங்கள் அருமையாய் வளர்த்து வந்த சுதந்திரப் பயிர், எந்த நிமிஷத்தில் கருகிப் போகுமோவென்று ஏங்கி, தங்கள் கண்ணீரை அதற்குப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். கார்ப்பேதியன் மலையிலும், ஜெக்கக் கலையிலும் இவர்கள் வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் எங்கே? ஜான் ஹன்ஸினுடைய ஆத்மாவுக்குக்கூட அழிவு ஏற்பட்டு விட்டதா? ஜான் ஜிஸ்கா! நீ குருடனாயிருந்தும், ஜெக்கர்களுக்கு வழிகாட்டினாய் ஒரு காலத்தில்! இப்பொழுது எங்கே இருக்கிறாய்? கண்ணிருந்தும், கழுகுக் கொடியினால் பார்வை மறைக்கப் பட்டிருக்கிற உன்னுடைய ஜெக்கர்களின் முன்னர், சிறிது நேரமா வது வந்து நிற்கமாட்டாயா? தாமஸ் மஸாரிக், இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக எவ்வளவு பாடுபட்டான். அந்நிய நாடுகளில் அவன் வசித்த காலத்தில் எத்தனை முறை அவனை விஷம் வைத்துக் கொல்லப்பார்த்தார்கள்! ஆனால் இப்பொழுது அவன் சிருஷ்டித்து வைத்துப்போன நாட்டுக்கே அடிமை விஷம் ஏறும் போலிருக் கிறதே!
ம்யூனிக் ஒப்பந்தம், மத்திய ஐரோப்பாவிலும் தென்கிழக்கு ஐரோப்பாவிலும் உள்ள சிறிய நாடுகளின் பார்வையில் ஒருவித சூனியத்தை உண்டாக்கிவிட்டது. தங்கள் கதி, அடுத்தபடியா தாகுமோ வென்ற ஏக்கம் ஏற்பட்டுவிட்டதல்லவா?
யுத்தம் வராமல் தடுக்கப்பட்ட தென்னவோ வாஸ்தவம். ஆனால் சமாதானம் ஏற்பட்டுவிட்டதா? ஹிட்லர்கூட, இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாகவே பேசியிருக்கிறான். ம்யூனிக் ஒப்பந்தம் நிறைவேறின பிறகு, ஹிட்லர் சண்டைக்கு மூலகாரணமாயுள்ள ஆபத்து தள்ளி வைக்கப் பட்டது என்று சொன்னான். ஆபத்து இல்லாமற் போய்விட வில்லை. ஆனால் தற்போழ்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அஃது எந்த நிமிஷத்திலும் தோன்றலாம் என்ற சூசகம் மேற்படி வாக்கியத்தில் தானாகவே தோன்றுகிறது.
ம்யூனிக் ஒப்பந்தப்படி ஜெர்மானியர்கள், ஜெக்கோ ஸ்லோவே கியாவின் தென் மேற்கு எல்லையிலும், வடக்கு எல்லையிலும், ஆஸ்திரிய எல்லையிலும் உள்ள எல்லாப் பிரதேசங்களையும் ஆக்ர மித்துக் கொண்டுவிட்டார்கள். இந்தப் பிரதேசங்களில், ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம், பலமான கோட்டை கொத்தளங்களைக் கட்டி பந்தோபஸ்தாக வைத்தி ருந்தது. இவையெல்லாம் ஜெர்மனி வசம் போய்ச் சேர்ந்தன. கைப்பற்றிக் கொள்ளப்பட்ட இடங்களில் முக்கியமான பல கைத்தொழிற் சாலைகளும், வியாபாரப் போக்கு வரவுக்குரிய ரெயில்வே வசதிகளும் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் அப்படியே ஜெர்மனி வசம் ஒப்புவித்து விடுமாறு ம்யூனிக் ஒப்பந்தம் ஆணையிட்டிருக்கிறது. இதற்கு நஷ்ட ஈடாக ஏதேனும் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் திற்குக் கொடுக்க வேண்டு மென்ற குறிப்பைக் கூட ம்யூனிக் ராஜ தந்திரிகள் காட்டவில்லை. இதற்குப் பதிலாக, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத் திற்கு, அதனு டைய பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்து கொள்ளும் பொருட்டு, பிரிட்டன், ஒரு கோடி பவுன் கடன் கொடுக்கச் சம்மதித் திருக்கிறது. ஜெக்கோ ஸ்லோவேகியா, செழிப்பான பிரதேசங்களை இழந்து, கடனாளியாகவும் ஆகிவிட்டது. இனி அதனுடைய வாழ்வு - அது நீடித்து நிற்குமானால் - ஜெர்மனியி னுடையவும் பிரிட்டனு டையவும் தயவைப் பொறுத்திருக்கிறது.
ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கம், சுகவாழ்விலே எப்படித் தலை கால் தெரியாமல் துள்ளிக் குதிக்கவில்லையோ அப்படியே, இந்தத் துக்ககரமான சமயத்திலும் தன் நிலையை மறந்துவிடவில்லை. ஆனால் அதன் இதயம் பொங்கிக் கொண்டிருக்கிறது. இதை யாருமே மறுக்க முடியாது. ஜெக்கர்கள் ஆன்ம பலத்திலே நம்பிக்கை யுடையவர்களாத லால், இப்பொழுது - தங்களைக் கலவாமலும், தங் களுடைய சம்மதத்தைப் பெறாமலும், தங்களுடைய செழுமையான பூமிகளை, பிரிட்டன், பிரான்ஸ், இத்தலி ஆகிய மூன்று வல்லரசு களும் சேர்ந்து ஜெர்மனிக்குக் கொடுத்து விட்டதைப் பார்த்துக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில் - மனம் உடைந்து போகாம லிருக்கிறார்கள்; எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள்.
நாம் சமாதானத்திற்காகவே உழைத்து வந்தோம். நமது நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொள்ள, பல தியாகங் களையும் செய்தோம். இவைகளுக்குப் பதிலாக நமக்குக் கிடைத்ததென்ன? முட்கள் நிறைந்த மகுடம்! ஆயினும் ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசின் வாழ்வு இந்த ம்யூனிக் ஒப்பந்தத்தோடு நின்று விடவில்லை.
ம்யூனிக் ஒப்பந்தத்தைக் கேட்டு உள்ளங் கொதித்த ஜெக்கப் படைகளுக்கு, அவற்றின் சேனாதிபதி பின்வருமாறு தெரிவித்தான்:
போர் வீரர்களாகிய நாம், இதுகாறும் தேசத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுகிறவர்களாயிருந்தோம். இனியும் அப்படி இருப்போம். குடியரசுத் தலைவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக நாம் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மிகவும் துக்ககரமான இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பிர மாணத்தை நாம் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. நமது சேனைத் தலைவரிடத்திலும், குடியரசு தலைவரிடத்திலும், பிரதம மந்திரியிடத் திலும் நமக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் மனிதப் பிரயத்தனம் அத்தனையையும் செய்து விட்டார்கள். உண்மையான ஒரு போர் வீரன், தான் அடைந்த தோல்வியைப் பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். வீரத்தின் ஒருவித லட்சணம் இது. நமது குடியரசுக்குப் பலமான ராணுவம் தேவை. நமது தேசம், தற்போதைய சங்கடமான நிலைமையிலிருந்து சந்தோஷமாக வெளிவரும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
இந்த நம்பிக்கைதான், ஜெக்கோ ஸ்லோவேகியாவின் வருங் கால வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அதற்கு முன்னும் பின்னும் பலாத்கார சக்தி சதா உறுமிக் கொண்டிருக்கிறதே!
ம்யூனிக் ஒப்பந்தத்திற்குப் பிறகு ஜெக்கோ ஸ்லோவேகியாவில், எதிர்பாராத நிகழ்ச்சிகள் சில நடைபெற்றுவிட்டன. குடியரசின் தலைவனான டாக்டர் பெனேஷ் 5-10-38-ல் ராஜீநாமா செய்து விட்டான். இதற்குக் காரணம் இன்ன தென்பதை இவன் சரியாக விளக்கவில்லை. தன்னுடைய ராஜீநாமா கடிதத்தில் இவன் பின்வரு மாறு கூறுகிறான்:
நான் குடியரசுத் தலைவனாக இருந்த மூன்று வருஷ காலத்தின் விளைவு, சென்ற சில நாட்களாக நடைபெற்று வருகிற துக்ககரமான சம்பவங்களாயிருக்கின்றன. இவை, நமது வாழ்க்கையின் அடிப்படையையே மாற்றியமைத்து விட்டன. மாற்றமடைந்த இந்த நிலைமையில் என்னுடைய கடமை என்னவென்பதை நான் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்தப் புதிய நிலைமையில் நான் தலைமைப் பதவியிலி ருப்பது ஒரு தடையாயிருக்குமென்று உணர்கிறேன். சமா தானத்தை நிலைநிறுத்தக்கூடியதாயும், பொருளாதார முயற்சி யிலும், சமுதாய புனருத்தாரணத்திலும் சிரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியதாயும் இருக்கிற ஒரு மந்திரிச் சபையை இப்பொழுது நாம் அமைத்திருக்கிறோம். இந்த மந்திரிச் சபை, உள்நாட்டு வளர்ச்சியிலேயே தன் கவனத்தைச் செலுத்தும். இது, தன் முயற்சியில் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகையால் இந்தப் புதிய நிலை மையில் நான் உத்தியோகத்திலிருந்து விலகிக் கொள்வதே நல்ல தென்று கருதுகிறேன். இதனால் என் பொறுப்பை நான் கழித்து விடுகிறேன் என்பது அர்த்தமல்ல. புயற்காற்றிலே தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு கப்பலை விட்டு விட்டும் நான் போகவில்லை. தற்போதைய மந்திரிச் சபைக்குச் சௌ கரியம் செய்து கொடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் விலகிக் கொள்கிறேன்.
சிரோவி மந்திரிச் சபைக்கும், பெனேஷுக்கும் ம்யூனிக் ஒப்பந்த சம்பந்தமாக ஏற்பட்ட அபிப்பிராய பேதமே, பின்னவனுடைய ராஜீ நாமாவுக்குக் காரணம் என்று இந்தக் கடிதத்தினால் புலப்படுகிறது. ஆனால் எப்படியும், ஜெர்மனியின் கைத் திறத்தை, இனி ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலிலும் காணலாம் என்பது நிச்சயம்.
சிரோவி மந்திரிச் சபை, பெனேஷின், ராஜீநாமாவை அங்கீ கரித்து விட்டது. சிரோவி, தற்காலிகத் தலைவனாக நியமிக்கப் பட்டான். அப்பொழுது இவன் விடுத்த அறிக்கையில் பின்வரும் வாக்கியங்கள் கவனிக்கத்தக்கன:
எஞ்சியுள்ள நமது நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும், புதிய வாழ்வுக்குரிய நிலைமைகளை அமைத்துக் கொள்வதற்காகவும், ம்யூனிக் ஒப்பந்தப்படி நடந்து கொள்ள அரசாங்கத்தார் தீர்மானிக்கின்றனர். நம்மிடத்திலேயுள்ள பரஸ்பர பொறாமைகள், வாதங்கள், அபிப்பிராயங்கள் முதலிய அனைத்தையும் - அவை எத்தகைய நல்லெண்ணத்தோடு கூடினவையாயிருந்தாலும் -ஒதுக்கி வைத்துவிட்டு, தேசத்தின் புனருத்தாரண வேலையில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு நமது நல்லெண்ணத்தையும் ஆதரவையும் அளிப்போமாக. நமது புதிய எல்லைப் புறத்தைப் பாதுகாக்கவும், உள்நாட்டில் அமைதியை உண்டுபண்ணவும் நமது சக்திகளை உபயோகிப் போமாக. நமக்குள் சச்சரவுகள் ஏற்படு மானால், அந்நியர்கள் தலையிடுவதற்கு வழியேற்படும் என்பதை யாரும் மறக்க வேண்டாம். நமக்கு இப்பொழுது வேறுவழியில்லை. நமக் கேற் பட்ட தலைவிதியை அங்கீகரித்துக் கொண்டு நம் கடமையைச் செய்வோமாக.
ஆனால் இதே சமயத்தில் சிரோவி மந்திரிச் சபையும் ராஜீ நாமா செய்து விட்டது! மறுநாள் (6.10.38-ல்) சிரோவியே, புதிய மந்திரிச் சபையொன்றை அமைத்தான். இதில் ஸ்லோவேகியப் பிரதிநிதி களுக்கும், மற்ற மிதவாதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றது. ரோமா புரியில் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் ஸ்தானீகனாயிருந்த டாக்டர் க்வால் கோவ்ஸ்கி (Dr. Chval Kovsky), அந்நிய நாட்டு மந்திரியாக நியமிக்கப்பட்டான். இனி, ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தின் அந்நிய நாட்டுக் கொள்கை, ரோம் - பெர்லின் அச்சினுடைய ஒரு கடையாணியாக இருக்குமென்று ராஜ தந்திரிகள் நினைக்கிறார்கள். அப்படியானால் ஜெக்கோ ஸ்லோவே கியா இன்னும் எவ்வளவு காலம் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கப் போகிறது?
இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய முடியும்? தன் அநு தாபத்தைச் செலுத்தலாம். இந்தக் கடமையை ஏற்கனவே அது செய்துவிட்டது. ஆனால் இதனோடு திருப்தியடைந்துவிடுவதா? ஜெக்கோ ஸ்லோவேகியாவின் தற்போதைய தலைகுனிந்த வாழ்க்கை யிலிருந்து இந்தியர்கள் ஒரு பாடங் கற்றுக் கொள்ள வேண்டாமா?
அநுபந்தம் 1
ஜெக்கோ ஸ்லோவேகிய அரசியல் வாழ்க்கையில் சம்பந்தப் பட்டவர்கள் வரலாறு
தாமஸ் மஸாரிக் (T.G.Masaryk):- ஜெக்கோ ஸ்லோவேகியா விலிருக்கும் மொரேவியா மாகாணத்தைச் சேர்ந்த ஓடோனின் என்ற கிராமத்தில் இவன் 1850-ஆம் வருஷம் மார்ச் மாதம் 7-ந் தேதி பிறந்தான். இவன் ஆஸ்திரிய அரசாங்கத்தின் கீழ் ஒரு குதிரை வண்டி யோட்டு கிறவனுடைய மகன். ஏழைக் குடும்பத்திலே பிறந்ததினால், இவன் பாலியத்தில் கல்வி கற்பதற்குப் போதிய வசதிகளில்லாமல் நிரம்பக் கஷ்டபட்டான். தனது சொந்த முயற்சியினாலும், தனக் கியற்கையா யமைந்திருந்த தீட்சண்ய புத்தியாலும் படித்து முன்னுக்கு வந்தான். பாலியத்திலிருந்தே, இவன் பிறருடைய ஏச்சுப் பேச்சுக்களைக் கவனியாமல், தன் கடமையைச் செய்வதில் கண்ணுங்கருத்துமாயிருந்தான். கடைசியில் இவன் வியன்னா சர்வகலா சாலையில் படித்து தத்துவ ஞானப் பரீட்சையில் தேறி அதில் டாக்டர் பட்டம் பெற்றான். 1882-ஆம் வருஷம் ப்ரேக் நகரத்தில் ஜெக்க சர்வ கலாசாலை ஒன்று ஆரம் பிக்கப்பட்டது. அதில் இவனுக்கு ஓர் ஆசிரியர் உத்தியோகம் கிடைத்தது. இந்தக் காலத்திலிருந்தே இவன் ஜெக்க சமூகத்தின் விடுதலைக்கு உழைத்தான். இதற்காக இவன் தன் கொள்கைகளைப் பத்திரிகை களுக்குக் கட்டுரை களாக எழுதி வெளியிடச் செய்தான். நாளா வட்டத்தில் இவன் ஒரு தினப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை ஆகிய மூன்றையும் ஒருங்கே சேர்த்து நடத்தினான். அரசியலில் நேரடியாக ஈடுபட்டு, ஜெக்க இளைஞர் கட்சியின் சார்பாக, ஆஸ்திரிய பார்லிமெண்டில் ஒரு பிரதிநிதியாக இருந்து வேலை செய்தான். ஐரோப்பிய யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, இவன் வெளி நாடுகளுக்குச் சென்று ஜெக்கோ ஸ்லோவேகியாவின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு உழைத்தான். இந்தக் காலத்தில் இவனுக்கு ஏற்பட்ட இன்னல்கள் பல. இவனுடைய மூத்த மகன் இறந்து விட்டான். இவனுடைய மகளை, ஆஸ்திரிய அதிகாரிகள் கைது செய்து விட்டனர். ஆயினும், இவன் மனஞ் சலிக்கா மல் உழைத்துத்தன் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத் தான். 1918-ஆம் வருஷம், ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசின் முதற் பிரசிடெண்டானான். அதுமுதல் 1935-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் வரை, தொடர்ந்து குடியரசின் பிரசிடெண் டாயிருந்தான். பல ஜாதியினர் நிறைந்த ஜெக்கோ ஸ்லோவே கியாவைக் கட்டுப்பாடான ஒரு நாடாக ஆக்கிய பெருமை மஸாரிக்கையே சாரும். கடைசியில் இவன் 1937-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 14-ந் தேதி பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினான். இவனை எங்கள் பிதா என்று ஜெக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.
டாக்டர் எட்வர்ட் பெனேஷ் (Dr.Edward Benes): பொஹிமியா விலுள்ள ஒரு குடியானவனுடைய எட்டுப் பிள்ளைகளில் ஒருவனாகப் பிறந்தான். இந்த எண்மரில் இவன் மிகவும் புத்திசாலியாயிருந்தபடியால், இவனைப் பெற்றோர்கள், ப்ரேக் நகரத்திலிருந்த இலக்கணப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் இவன், படிப்பை விட, உதை பந்தாட்டத்தில் அதிக கவனஞ் செலுத்தினான். இது காரண மாக இவனுக்குத்தவடையில் காயமுண்டாகவே, விளை யாட்டை விட்டுவிட்டான். மஸாரிக், ப்ரேக் சர்வகலா சாலை ஆசிரியனாயிருந்த போது இவன், அவன் கீழ் மாணாக்கனா யிருந்து படித்தான். பின்னர் பாரிஸ் நகரம் சென்று படித்து அபேதவாதக் கொள்கையில் ஈடுபட்டு, அது சம்பந்தமாகப் பத்திரிகை களுக்குப் பல கட்டுரைகள் எழுதினான். பின்னர், தன்னுடைய 24வது வயதில் ப்ரேக் நகரம் திரும்பி வந்து, மஸாரிக்கின் போதனையினால், அபேதவாதக் கொள்கையை விடுத்து, தத்துவம், அரசியல், சட்டம் முதலிய துறைகளில் புலமை பெற்றான். இந்தக் காலத்தில், ஜெக்க தேசீய இயக்கத்திலும் தீவிரமாகக் கலந்து கொண்டான். 1914-ஆம் வருஷம் ஐரோப்பிய யுத்தம் தொடங்கியதும், மஸாரிக்கின் பிரதம துணைவனாக ஜினீவாவுக்குச் சென்று, அங்கிருந்து தன் நாட்டின் விடுதலைக்குப் பெரிதும் உழைத்தான். 1919-ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட காலத்திலிருந்து 1935-ஆம் வருஷம் வரை, இவன் அந்நிய நாட்டு மந்திரியாக இருந்து வந்திருக் கிறான். 1935-ஆம் வருஷம் மஸாரிக், தள்ளாமை காரணமாக, குடியரசுத் தலைமைப் பதவியினின்று விலகிக் கொண்ட பிறகு, இவன் தலைவனானான். அது முதல் 5.10.38 வரை இவன் இந்தப் பதவியை, மஸாரிக்கின் அடிச் சுவடு பற்றித் திறமை யாக ஏற்று நடத்திவந்தான். டாக்டர் பெனேஷ், சிறந்த ராஜதந்திரி நிபுணன் என்று பெயர் படைத்தவன். எப்படிப் பட்ட அரசியல் சிக்கல்களையும் மிகச் சுலபமாகத் தீர்த்து விடுவான். இவனை, ப்ரேக் நகரத்து சாக்ரடீஸ் என்று அனை வரும் அழைப்பர். சரளமான சுபாவமுடையவன். யாருடைய மனமும் புண்படாமல் காரியங்களைச் சாதிப்பதில் மிகவும் கெட்டிக்காரன். மதுபானம் முதலிய ஒன்றையும் தீண்ட மாட்டான். கடவுள் பக்தி நிரம்பியவன். ஆயினும், இவனு டைய காலத்தில், ஜெக்கோ ஸ்லோவேகியா, பலாத்கார சக்திக்குத் தலைவணங்கிக் கொடுத்துவிட்டது.
டாக்டர் மிலான் ஹோட்ஸா (Dr. Milan Hodza): இவன் ஒரு ஸ்லோவேகியன். இவன் தகப்பனார், புராடெஸ்டெண்ட் மதத்தைச் சேர்ந்த பாதிரி. இவன் இளமையில் ஹங்கேரியின் தலைநகரான புதாபெஸ்த் சர்வகலா சாலையில் படித்தவன். பின்னர் வியன்னா நகரம் சென்று, அங்குத் தத்துவ சாஸ் திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றான். ஐரோப்பிய யுத்தம் தொடங்குவதற்கு முன்னரேயே, இவன் மஸாரிக்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். ஜெக்கர்களுக்கும் ஸ்லோவேகியர் களுக்கும் அரசியல் ஐக்கியம் ஏற்படுவது அவசியமென்று கருதியவர் களுள் இவன் ஒருவன். அதற்காக இவன் பெரிதும் உழைத்தான். 1919-ஆம் வருஷம் இவன் ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தில் ஒரு மந்திரியாக நியமிக்கப்பட்டான். அநேக வருஷ காலம் இவன் விவசாய மந்திரியாகவே இருந்திருக்கிறான். 1935-ஆம் வருஷம், டாக்டர் பெனேஷ், குடியரசுத் தலைவனாகத் தெரிந்தெடுக் கப்பட்ட பிறகு, இவன் பிரதம மந்திரியானான். 22.9.38-இல் இந்தப் பதவியை ராஜீநாமா செய்துவிட்டான்.
தளபதி சிரோவி (General J. Sirovy): ஜெக்கோ ஸ்லோவேகியாவின் பலசாலி என்று இவனுக்குப் பெயர். இவன் 22.9.38 இல் மந்திரிச்சபையை அமைப்பதற்கு முன்னர், ராணுவத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்தவன். ராணுவத்தினிடத் திலும் பொது ஜனங்களிடத்திலும் இவனுக்கு நிரம்பச் செல்வாக்கு உண்டு. ஐரோப்பிய யுத்தத்தின் போது, இவன் ருஷ்யாவின் சார்பாகப் போர் புரிந்து ஒரு கண் இழக்கப் பெற்றான். ஜெக்கோ ஸ்லோவேகியாவின் ராணுவத்தை நவீன முறையில் அமைத்த பெருமை இவனைச் சேர்ந்தது.
டாக்டர் க்ரோப்டா (Dr. Krofta): ஹோட்ஸாவைப் பிரதம மந்திரி யாகக் கொண்ட மந்திரிச் சபையில் அந்நிய நாட்டு மந்திரி யாக இருந்தவன். பின்னர், சிரோவி மந்திரிச் சபையிலும் இவனே அந்நிய நாட்டு மந்திரி. அந்நிய நாட்டு விவகாரங் களில் மிகத் திறமைசாலி என்று பெயர் படைத்தவன்.
கோன்ராட் ஹென்லைன் (Konrad Henlein): சாதாரண ஒரு தேகப் பயிற்சி போதகாசிரியனாக இருந்து, இப்பொழுது ஸுடே டென் ஜெர்மானியப் பிரதேசங்களுக்குத் தலைவனாக நியமிக் கப்பட்டிருக்கிற அதிருஷ்டசாலி. இவனுடைய அரசியல் கொள்கைகளைப் பற்றிப் பலர் பலவிதமான கருத்துக்கள் கொண்டிருந்த போதிலும், இவன் உண்மை யானவன் என்பதை யாருமே மறுக்க முடியாது. இவன் உண்மையான உழைப்பாளியா, அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு அரசியல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறானா என்று, ஜெர்மன் ரகசியப் போலீஸார் பலமுறை இவனைப் பரிசோதனை செய்து பார்த்தனர். அசையாத உறுதி பூண்டவன் என்று தெரிந்த பின்னர்தான் இவனிடத்தில் ஹிட்லருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பொதுக் கூட்டங்களில் அதிகமாகப் பேசிப் பழக்கம் பெறாதவன். ஆனால் மேஜை யைச் சுற்றிக் கூடும் கமிட்டி கூட்டங்களில் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கிச் சொல்லி தன் கருத்துக்கு மாறு பட்டவர்களைப் பணிய வைப்பான். சென்ற மூன்று நான்கு ஆண்டுகளாக ஹிட்லரின் நடை, உடை பாவனைகளைப் பின்பற்றுகிறானென்று இவனைச் சுற்றியுள்ளவர்கள் கூறு கிறார்கள். இவன் 1898-ஆம் வருஷம் பிறந்தான்.
அநுபந்தம் 2
முக்கிய சம்பவங்கள்
கி.பி.
450 ஜெக்கர்கள் பொஹிமியாவில் குடியேறி ஸ்திர வாசிகளா னார்கள்.
873 போரிவோஜ் என்ற ஜெக்க மன்னன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தான்.
1369 ஜான் ஹஸ் பிறந்தான்.
1415 ஜான் ஹஸ் மரண தண்டனையடைந்தான்.
1420 சிகிஸ்மண்ட் என்ற அரசனை, ஹஸ்ஸுக் கட்சித் தலை வனான ஜிஸ்கா என்ற குருடன், யுத்தத்தில் தோற்கடித்தான்.
1620 பொஹிமியா, சுதந்திரமிழந்து ஆஸ்திரியாவின் ஆதிக்கத்துக் குட்பட்டது.
1882 ப்ரேக் நகரத்தில் ஜெக்க சர்வ கலாசாலை ஸ்தாபனம்.
1918 ஆஸ்திரிய - ஹங்கேரிய ஏகாதிபத்திய வீழ்ச்சி. ஜெக்கோ ஸ்லோ வேகியா, தனிச் சுதந்திர நாடானது. மஸாரிக், குடியரசின் முதல் தலைவன்.
1919 டெஷேன் ஜில்லா, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி ஜெக்கோ ஸ்லோவேகியாவைப் போய்ச் சேர்ந்தது.
1921 ஜெக்கோ ஸ்லோவேகியா, யூகோஸ்லேவியா, ருமேனியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து சிற்றரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1924 பிரான்ஸுக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் சிநேக ஒப்பந்தம்.
இத்தலிக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் சிநேக ஒப்பந்தம்.
1925 பிரான்ஸுக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் மற்றோர் உடன்படிக்கை ஏற்பட்டது.
லொகார்னோ ஒப்பந்தம்.
1928 ஜெக்கோ ஸ்லோவேகியக் குடியரசு ஸ்தாபிதத்தின் பத்தா வது வருஷக் கொண்டாட்டம்.
1933 லண்டனில் நடைபெற்ற பொருளாதார மகாநாட்டில், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பிரதேசங்களிலுள்ள மூலப் பொருள்கள் ஜெர்மனிக்குத் தேவையென்று ஜெர்மானிய பிரதிநிதிகள் கூறினார்கள்.
1935 ருஷ்யாவுக்கும் ஜெக்கோ ஸ்லோவேகியாவுக்கும் சிநேக ஒப்பந்தம்.
ஹென்லைன் கட்சிக்கு ஜெக்கோ ஸ்லோவேகிய பார்லி மெண்டில் அதிக ஸ்தானங்கள் கிடைத்தன.
1936 ஜெக்கோ ஸ்லோவேகியாவிடம் விரோத மனப்பான்மை காட்டி வந்த ஹங்கேரி மறுபடியும் சுமுகமான தொடர்பு கொள்ள ஆரம்பித்தது.
1937 ஜெக்கோ ஸ்லோவேகியா படையெடுக்கப்பட்டால், பிரான்ஸ் உதவி செய்யும் என்று பிரெஞ்சு பிரதம மந்திரியான ப்ளும் கூறினான்.
தாமஸ் மஸாரிக்கின் மரணம்.
ஜெக்கோ ஸ்லோவேகிய அரசாங்கத்தார் சிறுபான்மைச் சமூகத் தினர் உரிமை சம்பந்தமாக ஓர் அறிக்கை வெளியிட்டனர்.
1938 ஆஸ்திரியாவின் வீழ்ச்சி
ஹென்லைன் கட்சியினருடைய கோரிக்கைகள் அதிகமா கின்றன.
ம்யூனிக் ஒப்பந்தம். ஸுடேடென் பிரதேசங்கள் ஜெர்மனி யிடம் போய்ச்சேர்ந்தன. டாக்டர் பெனேஷின் ராஜீநாமா. தளபதி சிரோவி தலைமையில் புதிய மந்திரிச் சபை அமைந்தது.
போலந்து, டெஷேன் ஜில்லாவில் ஒரு பாகத்தை ஸ்வாதீனப் படுத்திக் கொண்டது. ஹங்கேரி, ஸ்லோவேகியா மகாணத்தி லுள்ள சில நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக