இறைவர் திருமகன்
வரலாறு
Back
இறைவர் திருமகன்
Story of Jesus Retold in simple style for children
பாவலர் நாரா. நாச்சியப்பன்
இறைவர் திருமகன்
நாரா நாச்சியப்பன்
தமிழாலயம்
137, ஜானி ஜான் கான் தெரு,
சென்னை - 600 014.
பதிப்புரை
கடவுளின் பிள்ளை என்றும் இறையரசு நிறுவ வந்த திருமகன் என்றும் பெருமையாகப் பேசப்படுகின்ற இயேசு நாதரின் கதை இது. இயேசுநாதரின் வரலாறு கேட்டால் நெஞ்சம் உருகும். உலகில் ஏழைஎளியவர்களுக்காகவும், உண்மையான கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் அவர் அடைந்த துன்பங்களின் தொகுப்பே அவருடைய வாழ்க்கையாகும். மனித குலத்தின் உயர்வுக்காகத் தம் துன்பங்களைப் பொருட்படுத்தாது, அன்பு அரசு ஒன்றை நிலைநிறுத்த வந்த இயேசுநாதரின் கதையை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
சிறு குழந்தைகள் இந்நூலைப் படிப்பதால், தெளிவான இறையுணர்வும், பாகுபாடற்ற மனித இன ஒருமைப்பாட்டுணர்வும், அன்புணர்வும், இரக்க நெஞ்சும் உடையவர்களாக மாறுவார்கள் என்பது திண்ணம்.
எளிய அழகிய தமிழ் நடையில் திரு நாரா நாச்சியப்பன் இந்நூலை வழங்கியிருக்கிறார். ஆசிரியர்களும் பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு இந்நூலே வாங்கியளிப்பதன் மூலம் தம் மக்களிடத்தே நல்லியல்புகளை வளர்த்திட முடியும்.
—தமிழாலயம்
பொருளடக்கம்
1. தொழுவத்திலே பிறந்த இளவல்
2. அரசனைத் தேடிய அறிஞர்
3. அறிஞர் மெச்சிய அறிஞன்
4. சைத்தான் நடத்திய தேர்வு
5. அடுத்தவன் என்றால் யார்?
6. திருந்திய பாவிக்கு விருந்து
7. எளிமையில் கிடைக்கும் உயர்வு
8. நெஞ்சுவக்கும் பிஞ்சுமக்கள்
9. பாதகன் வீட்டு விருந்து
10. திருவடியில் நறுமணத்தைலம்
11. இறைமகன் சென்ற திருவுலா
12. குத்தகைக்கு விட்ட தோட்டம்
13. உழைத்தவர் பெற்ற உயர்வு
14. உடலும் குருதியும் உங்களுக்கே
15. காலைச் சேவலின் கூவல்
16. கை கழுவிய பாவம்
17. இறைவனின் பிள்ளை இவரே
18. என்றும் அன்பரோடு இருப்பவர்
1. தொழுவத்திலே பிறந்த இளவல்
ரோமாபுரியின் பேரரசர் ஒர் ஆணையிட்டிருந்தார். டேவிட் அரசரின் பரம்பரையினர் அனைவரும், அவர் பிறப்பிடமான பெத்தலெம் நகரில் சென்று பெயர்ப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ஆணை.
அந்த ஆணையைக் கேட்டு, பெத்தலெம் நகருக்கு வந்து குவிந்த மக்கள் பலர். சுற்றிச் சூழ்ந்திருந்த பல ஊர்களிலிருந்து மனிதர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அரச பரம்பரையில் பிறந்தவர்கள் என்று தங்கள் பெயரை எழுதிக் கொள்ள வந்தவர்களின் கூட்டம் பெத்தலெம் நகர் வீதிகளில் இழைந்து கொண்டிருந்தது.
ஜோசப் ஒரு தச்சு வேலைக்காரன். ஆனல் அவனும் அரச வம்சத்தின் வழி வந்தவன். அவன் தன் மனைவி மேரியை ஒரு கழுதையில் உட்கார வைத்து அதை நடத்திக் கொண்டு பெத்தலெமுக்கு வந்து சேர்ந்தான்.
பெத்தலெம் சத்திரத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு தனக்கும் தன் மனைவிக்கும் தங்குவதற்கு வசதியான ஓர் இடம் கிடைக்குமா என்று ஜோசப் தேடிப் பார்த்தான். சத்திரத்தின் மூலை முடுக்குகளில் கூட ஆட்கள் இடம் பிடித்துக் கொண்டு தங்கியிருந்தார்கள். அத்தனை கூட்டம்! அவ்வளவு பேரும் அரச பரம்பரை!
ஜோசப் சத்திரத்துச் சொந்தக்காரனைப் போய்ப் பார்த்தான். "நான் என்ன செய்வேன்; ஒதுக்கித் தருவதற்குச் சிறிது கூட இடமில்லையே!” என்று சத்திரக்காரன் கையை விரித்துவிட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் ஜோசப் கலங்கி நின்றான். “ஐயா, இன்று இரவு தங்குவதற்கு மட்டும் ஒரு சிறு இடம் கொடுத்து உதவுங்கள்!" என்று கெஞ்சினான்.
சத்திரத்துச் சொந்தக்காரன் சிந்தித்தான். திடீரென்று அவன் முகம் மலர்ந்தது.
“ஐயா, தொழுவத்திலே வேண்டுமானால் சிறிது இடம் ஒதுக்கித் தருகிறேன். இரவுப் பொழுது அங்கே நீங்கள் தங்கிக்கொள்ளலாம்” என்றான்.
ஜோசப் நன்றியறிதலோடு சத்திரக்காரனைப் பின் தொடர்ந்தான். ஒட்டகங்களும் கழுதைகளும் கட்டிக் கிடந்த தொழுவத்தின் ஒரு புறத்தைக் காட்டினான். ஜோசப் மகிழ்ச்சியோடுமேரியை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
தெருவில் நிற்காமல் இந்த இடமாவது கிடைத்ததே என்ற நிறைவு ஒருபுறம்; மனித நெருக்கடியுள்ள சத்திரத்தை விட, தனிமையும் அமைதியுமுள்ள இடம் அல்லவா இது என்ற அமைதி ஒரு புறம், தொழுவத்தில் கிடந்த வைக்கோலை எடுத்து ஓரிடத்தில் பரப்பினான். அதன் மேல் ஒரு விரிப்பை விரித்தான். மேரியை அதன் மீது படுத்துக் கொள்ளச் சொன்னான்.
சுகமான மெத்தைதான். ஆனால், அன்று இரவு அவர்கள் தூங்க முடியாமல்தான் போய் விட்டது. ஏனெனில், நள்ளிரவில், பெத்தலெம் நகர் முழுவதும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அமைதியான நேரத்தில் மேரி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அந்தப் பச்சைக் குழந்தையை வெள்ளைக் கந்தைத் துணிகளினால் சுற்றி மூடினாள் மேரி. அதற்குத் தொட்டில் வேண்டுமே! அதை எதிலே படுக்க வைப்பது? என்று எண்ணிய அவள், அங்கிருந்த மரப் புல் தொட்டி ஒன்றை எடுத்துத் தொட்டிலாக்கினாள். காய்ந்த புல் இருந்த அந்த மரத் தொட்டியில் கந்தைகளை விரித்து அதன் மேல் தன் அருமைக் குழந்தையைக் கிடத்தித் தூங்க வைத்தாள்.
எளிய தொழுவத்தில் மேரியின் மணி வயிற்றில் பிறந்த இந்தக் குழந்தை தான், எல்லாம் வல்ல இறைவனின் அருளுக்குரிய திருமகன் என்பதை அறியாமல் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், தேவ தூதர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்கள் இயேசு நாதர் பிறந்த செய்தியை உலகுக்கு அறிவிக்க வந்த போது வானம் ஒளிமயமாக விளங்கியது.
இனிமையான ஒளி வான் பரப்பிலே தோன்றியதையும், தேவ தூதர்களின் புகழ்ப் பாட்டின் இசை காற்றிலே பரவியதையும் அறியாமல் மக்கள் துயின்று கொண்டிருந்தனர். ஆனால் பெத்தலெம் நகருக்கு வெளியேயிருந்த குன்றுகள் நிறைந்த பகுதியிலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் இச்செய்தியை அறிந்தார்கள்.
குளிர் காய்வதற்காக வளர்த்திருந்த நெருப்பைச் சுற்றி, தம் போர்வைகளை இழுத்து மூடிக் கொண்டு பாதி தூங்கியும் பாதி தூங்காமலும் தங்கள் ஆட்டுக் கிடைகளோடு தரையில் படுத்துக் கிடந்த அவர்கள் வானில் தோன்றிய அதியற்புதமான பேரொளியைக் கண்டு வியந்து தலை தூக்கிப் பார்த்தனர்.
அந்தப் பேரொளியின் இடையிலே ஒரு தேவதூதன் தோன்றினான். அவனைக் கண்டு அஞ்சி எழுந்த ஆட்டிடையர்கள் வணங்கித் தொழுதார்கள்.
“அஞ்சாதீர்கள்! எல்லா மக்களுக்கும் இன்பந்தரும் ஒரு செய்தியையே நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன். டேவிட் அரசர் பிறந்த இந்தப் பழம் பெரு நகரிலே இன்று மக்களைக் காக்கவந்த மகன் இயேசு பெருமான் பிறந்திருக்கிறார். புல்யொன்றிலே கந்தைத் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை நீங்கள் காணலாம், அந்தக் குழந்தையே உங்கள் காப்போன் ஆவார்.”
தேவதூதனின் இந்த அதிசய மொழிகளைக் கேட்டு அந்த ஆட்டிடையர்கள் மலைத்துப் போனார்கள். மேலும் அதிசயமான சில காட்சிகளை அவர்கள் கண்டார்கள். வானக முந்தும் தேவதூதர்கள் பலர் வந்து நின்று வாழ்த்துப் பாடல்கள் பாடினார்கள்.
பாடி முடிந்ததும் தேவதூதர்கள் மறைந்து விட்டார்கள். "வாருங்கள்! நாம் பெத்தலெம் நகருக்கு போவோம். இறைவனால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்த உண்மையை நாம் கண்டு வருவோம்" என்று பேசிக் கொண்டு அந்த ஆட்டிடையர்கள் புறப்பட்டார்கள். பொழுது விடியும் கருக்கல் நேரத்தில் அவர்கள் பெத்தலெம் நகருக்குள் வந்து சேர்ந்தார்கள்.
சத்திரத்தின் சிறிய தொழுவத்தை அவர்கள் கண்டார்கள். மெல்ல மெல்ல அந்தத் தொழுவத்தின் கதவருகே சென்று நின்று எட்டிப் பார்த்தார்கள். மங்கலாக அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பசுவும் ஒரு கழுதையும் கட்டிக் கிடப்பதைக் கண்டார்கள். ஆண்டவனின் மகனைப் பெற்ற அன்னை மேரியை ஆவலோடு பார்த்துக் கொண்டு நிற்கும் ஜோசப்பை அவர்கள் கண்டார்கள். இக்காட்சிகளுக்கு மத்தியிலே அவர்கள் ஆவலோடு தேடி வந்த அந்தச் சிறு குழந்தையை அப்போது பிறந்த பச்சைக் குழந்தையை மரத் தொட்டியின் நடுவே சாய்ந்திருந்த புல்லின் மேலே படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் இறைவனின் திருமகனைக் கண்டு இன்ப மடைந்தார்கள்.
தாங்கள் கண்ட இந்த இன்பக் காட்சியைத் தங்கள் சுற்றஞ் சூழல் அனைவருக்கும் தெரிவிக்க அவர்கள் திரும்பிச் சென்றார்கள். இறைவன் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் இன்பம் நிறைந்த உள்ளத்தோடு, தங்கள் ஆட்டு மந்தைகள் இருக்கும் குன்று நோக்கித் திரும்பினார்கள்.
2. அரசனைத் தேடிய அறிஞர்
சில மாதங்கள் கழிந்தன. ஜெருசலம் நகரின் வீதிகளின் வழியாக மூன்று அன்னியர்கள் சென்றார்கள். அவர்கள் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒட்டகங்களில் ஏறிச் சென்றார்கள். பணியாட்கள் சிலரும் அவர்களுடன் சென்றார்கள். அந்தப் பெரிய மனிதர்கள் கீழ்த் திசையிலிருந்து வந்தார்கள். அவர்களைப் பார்த்த போதே சிறந்த அறிஞர்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது, அவர்கள் தங்கள் முன் எதிர்பட்டவர்களை யெல்லாம், "யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கும் அந்தக் குழந்தை எங்கே?" என்று கேட்டார்கள். அந்தக் குழந்தையின் நட்சத்திரத்தை நாங்கள் கீழ்த்திசையிலே கண்டோம். அவனைத் தொழுது செல்வதற்காக வந்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.
கீழ்த் திசையிலிருந்து வந்த இந்த அறிஞர்களைப் பற்றியும், அவர்கள் மக்களிடம் கூறிய செய்திகளைப் பற்றியும் ஜெருசலத்தின் அரசன் ஹெராடு கேள்விப்பட்டான். ஹெராட் ரோமப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசனாக இருந்து வந்தான். இந்தப் பெரிய மனிதர்கள் கூறிய செய்தியைக் கேட்டதும் அவனுக்குக் கோபமும் அச்சமும் உண்டாயிற்று. தனக்கு இருக்கும் சிறிய அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ள ஓர் அரசன் முளைத்துவிட்டானா என்று எண்ணி அவன் மனங் கலங்கினான்.
ஆலயத்துக் குருமார்களையும், வேதங்களைப் படியெடுத்து எழுதி வைக்கும் எழுத்தர்களையும் கூட்டி வரும்படி ஆணையிட்டான். கிழக்கிலிருந்து வந்த அந்தப் பெரிய மனிதர்கள் கூறும் செய்திக்கு வேதத்தில் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். அவர்கள் பழைய வேத நூல்களை ஆராய்ந்து, யூதர்களின் அரசன் பெத்தலெம் நகரில் பிறப்பான் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதைக் கேட்டதும் ஹெராடு மன்னனின் திகில் மேலும் அதிகமாயிற்று.
அந்த மூன்று அறிஞர்களையும் தன் சபைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான். அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் கண்ட நட்சத்திரம் எங்கே எப்போது தோன்றிற்று என்றெல்லாம் விசாரித்தான்.
"அரசே, நாங்கள் நெடுநாளாக இந்த நட்சத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஏனெனில் பழைய வேத நூல்களில் யூதர்களின் அரசன் ஒருவன் பிறப்பான் என்றும், அவன் பிறக்கும் நேரத்தில் சிறந்த நட்சத்திரம் ஒன்று வானில் தோன்றும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆண்டுக்கணக்காக வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்த எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்தான் அந்த நடசத்திரம் தோன்றியது. உடனே நாங்கள் அந்த வருங்கால அரசனைக் கண்டு தொழுவதற்காகப் புறப்பட்டு விட்டோம்" என்று கூறினார்கள்.
“பெத்தலெம் நகருக்குச் செல்லுங்கள். அங்கே தான் அந்தக் குழந்தை பிறந்திருக்க வேண்டும். நன்றாகத் தேடிப் பாருங்கள். நீங்கள் அந்தக் குழந்தையைக் கண்டு பிடித்த பின் திரும்பி வந்து என்னிடம் செய்தியறிவியுங்கள். ஏனெனில் நானும் அந்த அரசனை வணங்க விரும்புகிறேன்" என்றான் ஹெராடு மன்னன்.
அந்த மூன்று அறிஞர்களும் சரியென்று கூறிவிட்டுச் சென்றார்கள். ஹெராடு மன்னன் அந்தத் தெய்வக் குழந்தையைக் கொல்லக் கருதித்தான் அவ்வாறு நயவஞ்சமாகப் பேசினான் என்பதை அவர்கள் அறியவில்லை.
பெத்தலெம் நகருக்கு வந்து சேர்ந்தவுடன் தங்களுக்கு வழிகாட்டிய அந்த நட்சத்திரம் அந்த நகருக்கு மேலே மின்னி நிற்பதை அவர்கள் கண்டார்கள். அந்த நட்சத்திரம் கடைசியாக அசையாமல் நின்ற இடம் தான் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதிர்கால அரசனின் இருப்பிடம் என்று அறிந்தார்கள்.
எதிர்கால அரசனாகப் பிறந்த அந்தச் சிறு குழந்தை இருந்த இடம் எளிய சின்னஞ்சிறிய வீடாயிருந்தது. வியப்புடன் அந்தப் பெரிய மனிதர்கள் அவ்வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கே ஒளிமயமான அந்தத் தெய்வக் குழந்தையைக் கண்டதும் அவர்கள் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளத்தில் மிதந்தது ! ஆம்! அவர்கள் தேடிவந்த அரசன், அந்த எளிய சிறு வீட்டில் இருந்த அக் குழந்தைதான்.
அந்தச் சிறு குழந்தையின் முன்னே மூன்று பெரிய மனிதர்களும் மண்டியிட்டுத் தொழுதார்கள். ஒரு கிழவர் தம்மிடமிருந்த பொன் முடியொன்றை வருங்கால அரசனுக்கு உகந்த காணிக்கையாகக் கொடுத்தார். இரண்டாமவர் ஒரு கூடை நறும் புகைத் தூளைத் தம் காணிக்கையாகக் செலுத்தினர். மூன்றாமவர் விலையுயர்ந்த கந்தரசம் அடங்கிய ஒரு ஜாடியை அளித்தார்.
புனிதக் குழந்தையைத் தொழுது எழுந்த பின் அந்த மூன்று அறிஞர்களும் அங்கிருந்து அகன்றனர்.
மேரி, வியப்புடன் தன் அருமைக் குழந்யைப் பார்த்துக் கொண்டே நெடு நேரம் நின்றாள். அவளுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. பிள்ளை பிறந்த அன்று தொழுவத்தின் கதவோரத்தே சென்ற ஆட்டிடையர்களையும், பின்னர், ஆலயத்துக்குச் சென்ற பொழுது பிள்ளையைக் கையில் வாங்கிக் கொண்டு விண்ணை நோக்கி இறைவனுக்கு நன்றி கூறிய அந்தக் கிழவனையும் சற்றுமுன் எங்கிருந்தோ வந்து தன் குழந்தையை வணங்கிச் சென்ற யூதரினத்தைச் சேராத அந்தப் பெரிய மனிதர்களையும் நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அது ஒரு தெய்வக் குழந்தை என்றே தோன்றியது. பெருமையினால் அவள் மனம் பூரித்தது. யாரும் பெறாத பேறு பெற்றதை எண்ணி அவள் மனம் களித்தது.
அந்த மூன்று பெரிய மனிதர்களும் திரும்பி வருவார்கள் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து ஏமாந்து போனான் ஹெராடு மன்னன். இறைவன் அவர்களை வேறு பாதையாகத் தங்கள் தாயகம் செல்லும்படி கனவில் எச்சரித்து அனுப்பிவிட்டான்.
அவர்கள் குழந்தை இருக்குமிடத்தை வந்து சொன்னால், தன் ஆட்களை அனுப்பி அதைக் கொன்று விடலாம் என்று நினைத்திருந்த அவன் எண்ணம் மண்ணாயிற்று. அதனால் பெருஞ்சினம் கொண்ட அவன், தன் படை வீரர்களை அழைத்து ஒரு கொடிய கட்டளையிட்டான்.
"பெத்தலெம் நகரில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எல்லோரையும் கொன்று விடுங்கள்” என்பது தான் அந்தத் தீயவனின் கட்டளை. "எனக்குப் போட்டியாக ஓர் அரசன் இந்த மண்ணில் பிறப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று அவன் கறுவினான்.
அன்று இரவு. ஜோசப் ஒரு கனவு கண்டான். அக்கனவில் இறைவன் அவனிடம் கீழ்க்கண்ட சொற்களைக் கூறினார். “எழுந்திரு. உன் பச்சைக் குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்கு ஓடு. ஹெராடு மன்னன் இந்தக் குழந்தையைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறான். நான் மீண்டும் கூறும் வரை நீ எகிப்து நாட்டிலேயே இரு."
ஆண்டவனின் அறிவிப்பைக் கேட்டதும் ஜோசப் பதறிக் கொண்டு எழுந்திருந்தான். உடனே அவசர அவசரமாகத் தன் கழுதைக்கு சேணம் பூட்டினான். மேரியையும் குழந்தையையும் உட்கார வைத்துக் கழுதையை ஒட்டிக் கொண்டு தென்திசை நோக்கிப் பயணமானான். எகிப்துப் பெருநாட்டிற்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தான்.
ஹீெராடு தன் இரண்டாவது முயற்சியிலும் ஏமாந்து போனான்.
3. அறிஞர் மெச்சிய அறிஞன்
மன்னன் ஹெராடு இறந்த பின் சோசப் தன் மனைவியையும் மகனையும் எகிப்திலிருந்து கூட்டிக் கொண்டு வந்து நாசரத் என்ற சிற்றூரில் தங்கினான்.
நாசரத் ஓர் அழகிய ஊர். அங்கே இயேசு நன்றாக வளர்ந்து வந்தான். நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்று வந்தான். இயேசுவுக்கு வயது பனிரெண்டாகியது. அப்போது நாசரத்தில் உள்ளவர்கள் ஆண்டு தோறும் ஆவலோடு எதிர் பார்க்கும் ஒரு நாள் வர விருந்தது. அது யூதர்களின் விருந்து விழா ஆகும். அவ்விருந்து விழாவிற்கு எல்லா ஊர்களிலிருந்தும் செருசலம் நகருக்கு வருவார்கள். ஆண்டுக்கொரு முறை எல்லோரும் கூடி நடத்தும் அந்த விருந்து விழா மிகச் சிறப்பாயிருக்கும்.
விருந்து விழா அணுகியதும், நாசரத்திலுள்ள மக்கள் பலரோடு சோசப்பும், மேரியும் அவர்களின் மகன் இயேசுவும் அவன் தோழர்களும் செருசலம் நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் வழி நடந்து போகப் போக வெவ்வேறு பாதையிலிருந்து மக்கள் பலர் வந்து சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறாகப் போகப் போகக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்து கடைசியில் அதுவே ஒரு பெரிய ஊர்வலமாகி விட்டது.
“இறைவன் இருக்கும் ஆலயத்தை
எய்து வோமென் றுரைத்தார்கள்
குறைவில் லாத மகிழ்ச்சியுடன்
குதித்துப் பறந்து வந்தேனே!"
என்று இன்பப் பாட்டுப் பாடிக் கொண்டே அந்தக் கூட்டத்தினர் நடந்தார்கள்.
மாண்பு மிக்க செருசலத்தை
மலைகள் சுற்றி இருப்பதுபோல்
ஆண்ட வன்தன் மக்களையே
அணைத்துக் காப்பான் கண்டீரே.
செருசலம் நகரின் அருகில் வந்தவுடன் அவர்கள் இப்படிப் பாடிக் கொண்டு நடந்தார்கள்.
செருசலம் ஆலயத்திலே மக்கள் கூட்டம் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இசையோடு கூடிய இறை விளக்கப் பாடல்கள் எங்கும் ஒலித்தன. புகைகளின் நறுமணம் எங்கும் சூழ்ந்தது. குருமார்கள் புத்தாடையணிந்து வந்திருந்து எல்லா மக்களுக்கும் தொழுகை நடத்தி வைத்தார்கள்.
விருந்து விழா நாட்கள் இன்பமாகவும் கேளிக்கையாகவும் கழிந்தன. வெளியூர்க்காரர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு ஒவ்வொருவராகவும், கூட்டங் கூட்டமாகவும் புறப்பட்டுப் போயினர். மேரியும் சோசப்பும் புறப்பட்டார்கள். இயேசு தன் நாசரத் தோழர்களுடன் வருகிறான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். பகலெல்லாம் வழிநடந்து இரவு நெருங்கிய போது தான் அவர்கள் தங்கள் கூட்டத்தில் இயேசு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் வந்து கொண்டிருந்த இயேசுவின் நண்பர்களைக் கண்டு கேட்ட போது, அவனைப் பார்க்கவேயில்லையே என்று கூறிவிட்டார்கள்.
அவ்வளவு தான் பெற்ற மனம் பகீர் என்றது. பிள்ளையைக் காணோமே என்று கலங்கி அவர்கள் மீண்டும் செருசலத்தை நோக்கித் திரும்பினார்கள். வழியெல்லாம் விசாரித்துக் கொண்டே நகருக்குள் நுழைந்தார்கள். நகரில் புகுந்து வீதிவீதியாகத் தேடினார்கள், எங்கும் இயேசு காணப் படவில்லை. கடைசியில் அவர்கள் ஆலயத்தை அடைந்தார்கள். ஆலய மண்டபத்தின் நடுவே பண்டிதர்களின் சிறுகூட்டம் ஒன்று இருந்தது. அந்தப் பண்டிதர் கூட்டத்தின் இடையே இயேசு அமர்ந்திருந்தான். அவர்கள் கூறும் வாசகங்களைக் கேட்டுக் கொண்டும், அவர்கள் கேள்விகட்கு விடையளித்துக் கொண்டும் இருந்தான் அவன்.
அந்த யூத அறிஞர்கள் சிறுவனின் அறிவுத் திறத்தைக் கண்டு வியந்தார்கள். அவனோ தன்னை மறந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியைக் கண்ட மேரிக்குப் பொருமையாகத் தான் இருந்தது. இருந்தாலும் 'மகனே! இப்படிச் செய்யலாமா? நாங்கள், உன்னைக் காணாமல் எவ்வளவு துடித்துப் போனோம்? எங்கேங்கே தேடினோம் தெரியுமா?” என்று வருந்திய குரலில் கேட்டாள்.
"அம்மா என்னைத் தேடினீர்களா? நான் என் தந்தையின் வீட்டில் தான் இருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டான் இயேசு. இறைவன் ஆலயத்தைத் தான் தந்தையின் வீடு என்று குறிப்பிட்டான் அவன்.
பின்னர் அந்த அறிஞர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தன் தாய்தந்தையருடன் வீட்டுக்குத் திரும்பினான் இயேசு.
4. சைத்தான் நடத்திய தேர்வு
ஜோர்டான் ஆற்றங்கரையிலே ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
"தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகின் நல்லரசு உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்று அந்த இளைஞன் கூவினான். அவன் குரல் எட்டுத் திசையிலும் பரவியது. சிற்றூர்களிலிருந்தும் நகர்களிலிருந்தும் மக்கள் வந்து குவிந்தார்கள். ஏழைகளும், செல்வர்களும், மீன்பிடிப்பவர்களும், வரி வசூலிப்பவர்களும், ரோமானியப் போர் வீரர்களும் ஜெருசலம் நகரத்து மதவாதிகளும் இந்தப் புதிய போதகனின் சொற்களைச் செவிமடுக்க வந்து கூடினார்கள்.
அந்த இளைஞன் ஒட்டகத்தின் மயிரினால் நெய்யப்பட்ட முரட்டு ஆடையை அணிந்திருந்தான். இடையிலே தோல்வாரினைச் சுற்றிக் கட்டியிருந்தான்.
"யார் இவர்? இவர்தான் தூதர் எலி ஜாவா? இல்லை, ஆண்டவனால் அனுப்பப்படவிருப்பதாகச் சொல்லப்பட்ட கிறிஸ்துதானா?" என்று மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு அந்த இளைஞனே பதில் கூறினான் வனாந்தரங்களிலே கூவிக் கொண்டிருக்கும் ஒருவனுடைய குரலே நான். மக்களே, இறைவனின் வழியைச் சீராக்குங்கள்; நேராக்குங்கள்!" என்று கூவினான்.
"இவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரே! கிறிஸ்து பெருமான் வருங்காலம் நெருங்கிவிட்டது போலும்" என்று மக்கள் கருதினார்கள்.
அந்த இளைஞன்தான் ஜான்! ஜான் ஒரு திருத்தூதரே! பூவுலகில் வரப்போகும் இறையரசுக்கு மக்களை ஆயத்தப்படுத்த ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதர் அவர்.
கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவராக ஜான் அருகில் சென்றார்கள். தங்கள் பாவங்களைக்கூறி அவற்றைச் செய்ய நேர்ந்தமைக்காக வருந்தினார்கள், கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு தாங்கள் அருகதையற்றவர்கள் என்று சொல்லிப் புலம்பினார்கள். ஜான் ஒவ்வொருவராக ஆற்றிலே இறக்கி முழுக்காட்டினார். அவர்களுடைய பாவ அழுக்குகளை அகற்றித் தூய்மைப்படுத்தினார்.
"நான் உங்களைத் தண்ணீரினால் தூய்மைப்படுத்துகிறேன். ஆனால் என்னைக் காட்டிலும் வல்லமை மிக்க ஒருவர் வருவார். அவர் உங்களைப் புனித ஆவியினால் தூய்மைப் படுத்துவார்” என்று ஜான் கூறினார்.
நாள் தோறும் மக்கள் ஜானைத் தேடிவந்த வண்ணம் இருந்தார்கள். வந்த ஒவ்வொருவரின் பாவக் கறைகளையும் அகற்றி ஆற்றில் இறக்கி முழுக்காட்டி வைத்தார் அவர்.
ஒருநாள் நாசரத்திலிருந்து தச்சு வேலை செய்யும் ஓர் இளைஞன் வந்தான். தன்னையும் முழுக்காட்டித் தூய்மைப்படுத்துமாறு அவன் ஜானை வேண்டினான்.
ஜான் அந்த இளைஞனை உற்றுநோக்கினார். அவன் யார் என்று அடையாளம் புரிந்து கொண்டார். தன் தாய்வழி உறவினன் இயேசு தான் அது என்று தெரிந்து கொண்டார்.
"நான் அல்லவா உன்னால் தூய்மைப்படுத்தப்பட வேண்டியவன்; நீ என்னிடம் வருவது பொருந்துமா?” என்று கேட்டார் ஜான்.
உண்மைதான். ஆண்டவனின் மகனாகப் பிறந்த இயேசு எந்தப் பாவமும் புரிந்தவரல்லர். இருப்பினும் அவர் தாம் திருமுழுக்காட்டப்பட வேண்டும் என விரும்பினார். தாம் வைத்திருந்த தச்சுக் கருவிகளை அப்பால் போட்டு விட்டு அவர் திருமுழுக்காடுவதற்கு ஆயத்தமாக நின்றார்.
இயேசுவின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல், ஜான் அவரையும் ஆற்றிலே இறக்கித் திருமுழுக்காட்டினார். அவர் ஆற்றில் முழுகி எழுந்து கரையேறிய பொழுது வானில் திடுமென ஓர் ஒளி மின்னியது. புனித ஆவி ஒரு புறாவின் வடிவில் அவர் மீது வந்து அமர்ந்தது. அதே சமயம் "நான் மிகவும் விரும்புகின்ற என் அருமை மகன் இவனே" என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலித்தது. ஆம், வேதங்களால் முன்னறிவிக்கப்பட்ட திருமகன் வந்துவிட்டார். அவருடைய திருத்தொண்டு தொடக்கமாகிவிட்டது கிறிஸ்து அவரே.
அன்றே இயேசு மலைகளும் பாறைகளும் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார். இரவு பகல், வெயில் பனி, பசி பட்டினி எதையும் இலட்சியம் செய்யாமல் ஓநாய்களின் ஓலம் நிறைந்த அந்த மலைக் காட்டின் மத்தியிலே இருந்து இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.
நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பு இருந்தடன் அவருக்கு ஒரே பசியாயிருந்தது. அப்போது தீய சக்தியாகிய சைத்தான் அவர் முன் தோன்றி "நீ கடவுளின் பிள்ளையாயிருந்தால் இந்தக் கற்களையெல்லாம் ரொட்டித் துண்டுகளாக மாற்று” என்று கூறியது.
"மனிதன் ரொட்டியைக் கொண்டுதான் வாழவேண்டும் என்பதில்லை; இறைவனின் திருவாயிலிருந்து வெளிப்படும் கட்டளைகளைக் கொண்டே வாழ வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று கூறினார் இயேசு.
சைத்தான் அவரைப் புனித நகரமாகிய ஜெருசலத்துக்குத் தூக்கிக் கொண்டுபோய் ஆலயத்தின் ஒரு கோபுரத்து உச்சியில் வைத்தது.
“நீ கடவுளின் பிள்ளையாய் இருந்தால் கீழே குதி. ஏனென்றால் நீ கீழே குதித்தால், கல்லில் நீ மோதி விடுமுன்னால் தேவ தூதர்கள்வந்து உன்னைத் தங்கள் கைகளில் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது. அது உண்மையா என்று பார்க்கலாம்" என்று கூறியது சைத்தான்.
"உன் கடவுளாகிய இறைவனை நீ சோதிக்க முற்படாதே! என்றும் வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று இயேசு பதில் சொன்னார்.
மீண்டும் சைத்தான் அவரை ஒரு பெரிய மலைக்குக் கொண்டு சென்றது. அங்கிருந்தவாறே உலகப் பேரரசுகள் எல்லாவற்றையும் அவற்றின் செல்வச் சிறப்புக்களையும் அது சுட்டிக் காட்டியது.
"நீ என்காலடியில் விழுந்து வணங்கினால் இந்த அரசுகள் செல்வங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்" என்றது.
"சைத்தானே, பேசாமல் இங்கிருந்து போய்விடு. நான் உன்னை வணங்கப் போவதில்லை. ஏனெனில் உன் கடவுளாகிய இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும், அவன் ஒருவனுக்கே பணிபுரிய வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று இயேசு பதிலளித்தார்.
இனித் தன் ஏமாற்று வேலை எதுவும் பலிக்காதென்று உணர்ந்த சைத்தான் அவரை விட்டு அகன்று விட்டது. தேவகணங்கள் வந்து அவருக்கு ஊழியம் செய்தன.
ஜானைச் சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அறிந்த இயேசு கலீலீ நகருக்குப் புறப்பட்டார்.
கலீலீ கடற்கரையின் ஓரமாக நடந்து செல்லும் போது இயேசு இரண்டு மீனவர்களைக் கண்டார். பீட்டரும் அவன் உடன் பிறந்தானாகிய ஆண்ட்ரூவும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்து, “என்னைத் தொடர்ந்து வாருங்கள். மனிதர்களை வசப்படுத்துபவர்களாக உங்களை ஆக்குகிறேன்” என்றார் இயேசு.
அவர்கள் அப்பொழுதே தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
மேலும் நடந்து செல்கையில், செபிடீ என்பவரின் மக்களான ஜேம்ஸ் ஜான் என்பவர்கள், தங்கள் தந்தையுடன் ஒரு கப்பல் தட்டில் உட்கார்ந்து வலையைச் சரி செய்து கொண் டிருந்தார்கள். அவர்களை இயேசுநாதர் அழைத்தார்.
அவர்கள் உடனே தங்கள் தந்தையையும் கப்பலையும் விட்டுப் பிரிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.
நான்கு சீடர்களும் பின் தொடர் அவர் கலீலீ நகரில் எங்கெங்கும் சென்று இறைவனின் பேரரசைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே சென்றார். அவருடைய புகழ் எங்கெங்கும் பரவியது.
5. அடுத்தவன் என்றால் யார்?
இயேசுநாதரின் திருவுரைகள் ஏராளமான மக்களைக் கவர்ந்தன. அவர் தமக்குள்ள அற்புதமான இறையருளால், தம்மை வந்து சார்ந்தோரின் குறைகளையெல்லாம் நீங்கச் செய்தார். நாள்தோறும் அவரைத் தேடி வந்த கூட்டத்தின் அளவு பெருகிக் கொண்டே போயிற்று. ஒரு நாள் அவர் ஒரு மலையின் மீது ஏறிச்சென்று ஓரிடத்தில் அமர்ந்தார். அவருடைய சீடர்கள் அவரைப்பின்தொடர்ந்து சென்றார்கள். தம்மைச் சூழவந்து நின்ற சீடர்களை நோக்கி அவர் பல புதிய பொருள்களைக் கூறிப் போதித்தார். இறையருளைப் பெற அவர் போதித்த அறநெறிகள் புதுமையானவையாகவும், பொருத்தமானவையாகவும், விரும்பிப் பின்பற்ற ஏற்றனவாகவும் இருந்தன. அவர் திருவாயிலிருந்து வெளி வந்த அந்த வாசகங்கள் மனித சமுதாயத்தையே மேன்மைப்படுத்துவனவாக இருந்தன.
அவர்தம் போதனைகளை முடித்தபின் கீழே இறங்கி வந்த போது அவரைத் தொடர்ந்து ஏராளமாக மக்கள் பின்பற்றிச் சென்றார்கள். துன்பமுற்று அவரை நாடி வந்தவர்களின் துன்பத்தை அவர் துடைத்தருளினார்.
வேதநூல்களை எழுதிப் பேணி வந்தவர்களும், மதபோதகர்களுமாகிய பழமை விரும்பிகள், இயேசுநாதரின் செல்வாக்கு, மக்களிடையே வளர்வதைக் கண்டு வெறுப்பும் பொறாமையும் கொண்டனர். மோசஸ் முதலான இறையருள் பெற்ற முன்னறிவிப்போர்களின் நெறிமுறைகளைப் பின்பற்றி வந்த அந்தப் பழைமைவாதிகள் அப்பெரியோர்களே இயேசு நாதரின் வருகையை அறிவித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டனர். அவர்களில் சிலர் இயேசுநாதரைக் குற்றம் உடையவராக எடுத்துக் காட்ட வேண்டுமென எண்ணினர். அதற்காக கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் வந்து கலந்து கொண்டு நின்றனர். அவ்வப்போது, இயேசுநாதரைக் குதர்க்கமான கேள்விகள் கேட்டுச் சோதனைகள் செய்யத் தொடங்கினர்.
அந்த பழமைவாதிகள் மோசஸ் பெருமான் அருளிய நெறிமுறைகளை வாழ்வில் ஒழுங்காகக் கடைப் பிடித்து வந்தனர். தங்கள் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர். குறிப்பிட்டநாட்களில் நோன்பிருக்க அவர்கள் சிறிதும் தவறியதேயில்லை. எல்லோருக்கும் கேட்கும்படியாகக் குரலெடுத்து அவர்கள் நாள்தோறும் இறைவனைத் தொழுது வந்தார்கள். கடமை தவறாத அவர்கள் நல்லொழுக்கத்தினைப் பிறர் பாராட்டினாலும் யாரும் அவர்களைப் பின்பற்றியதில்லை. அவர்கள் போதனைகளைக் கேட்கயாரும் விரும்பி வந்ததில்லை. குழந்தைகள் அவர்கள் அருகில் செல்லவே பயப்பட்டார்கள்.
இயேசுநாதரோ ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி யாவரோடும் கலந்து உறவாடினார். தம்மைச் சார்ந்தவர்கள் யாராயினும் அவர்களோடு அன்பு கனியப் பேசினார். தொல்லை யுற்று வந்தவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களை எல்லையற்ற மகிழ்ச்சியடையச் செய்தார். சின்னஞ்சிறு குழந்தைகளும் அவரைக் கண்டால் அச்சஞ் சிறிதுமில்லாமல் பாய்ந்தோடிச் சென்று அவருடைய கைகளை அன்போடு பற்றிக் கொள்ளும். யாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று அன்புடன் பேசி மகிழ்வார்.
இந்தக் காட்சிகளையெல்லாம் அந்தப் பழைமைவாதிகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் மீது பொறாமை ஏற்பட்டது.
இப் பொறாமையின் காரணமாகவே அவர்கள் இயேசுநாதரைப் பலப்பலவாறு கேள்வி கேட்டுக் குற்றங் கூற வேண்டும் என்று எண்ணினார்கள்.
“மோசஸ் பெருமானின் நெறி முறைகளைக் குலைக்க நான் வரவில்லை; மாறாக அவற்றைப் புதுப்பித்து நிறைவு பெறச் செய்யவே வந்திருக்கிறேன்" என்று இயேசுநாதர் அடிக்கடி கூறினார்.
“கொலை செய்யக் கூடாது" என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. நான் கூறுவேன், நீங்கள் கோபம் கொள்ளவே கூடாது என்று. கொலை செய்தால் எப்படி வேத நெறியை மீறியவர்களாவீர்களோ, அவ்வாறே கோபம் கொண்டாலும் வேதநெறியை மீறியவர்கள் ஆவீர்கள்.
"அடுத்தவனிடம் அன்பு கொள்; பகைவனை வெறு" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நான் கூறுவேன்: பகைவர்களிடமும் அன்பு காட்டுங்கள்; உங்களுக்குக் கேடு செய்தவர்களுக்காகவும் தொழுகை நடத்துங்கள். உங்கள் நல்ல செயல்களை மற்றவர்கள் கண்டு புகழும்படி வெளிப்படையாகச் செய்யாதீர்கள். நீங்கள் நோன்பிருந்தாலும், தொழுகை நடத்தினாலும் ஏழைகளுக்கு உதவி செய்தாலும் எல்லாவற்றையும் மறைவாகவே செய்யுங்கள். விண்ணுலகில் உள்ள தந்தையாகிய இறைவன் அவற்றைக் காண்பார்; உரிய பரிசைத் தருவார்."
இவ்வாறெல்லாம் இயேசுநாதர் உபதேசம் செய்தார். புத்துணர்ச்சிமிக்க இச்சொற்பொழிவுகளை மக்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் கேட்டார்கள். மோசஸ் பெருமானின் தூய நெறி முறைகளுக்கு அவர் கொடுத்த அழகான விளக்கங்கள் மக்கள் நெஞ்சைக் கவர்ந்தன. ஆனால், பழமை வாதிகள் தலையை அசைத்து தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தினர்.
கடினமான கேள்விகளைக் கேட்டனர்.
ஒருமுறை இயேசுநாதர் மக்களுக்கு நன்னெறிகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு, நீதி நூல்கற்ற ஒருவன் முன்னால் வந்து நின்றான். இயேசுநாதரை ஒரே கேள்வியில் திணறடிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவன் முன்வந்திருந்தான்.
“தலைவரே, முடிவற்ற வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் அந்த நீதிநூல் அறிஞன்.
“வேதநெறி என்ன கூறுகிறது?" என்று கேட்டார் இயேசுநாதர்.
“இறைவனிடம் மனதார அன்பு செலுத்து; உன்னைப் போலவே அடுத்தவனையும் கருதி அன்பு கொள்! என்று கூறப்பட்டிருக்கிறது" என்றான்.
“சரியான பதில்தான். இவ்வாறே நீ நடந்துவா. முடிவற்ற வாழ்வை நீ பெறுவது உறுதி” என்று களங்கமற்ற இயேசு கூறினார்.
அந்த மனிதனோ, "தலைவரே, இன்னும் சற்று விளக்கம் வேண்டும். அடுத்தவன் என்றால் யார்?" என்று கேட்டான்.
இதற்கு நேரடியான சொற்களில் பதில் கூறாமல் இயேசுநாதர் ஒரு கதையே கூறினார்.
அக்கதை கீழ் வருவது தான் :
ஒரு காட்டுப்பாதை. அந்தப் பாதை கரடு முரடானது. பாறைகளும், மலைக்கற்களும் நிறைந்த அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதில் இடையிடையே இருண்ட மலைக் குகைகளும் இருந்தன. அவற்றில் திருடர்கள் மறைந்திருப்பார்கள்.
அந்தப்பாதை வழியாக ஒரு வழிப்போக்கன் சென்றான். திடீரென்று, இம்மலைக் குகைகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட திருடர் கூட்டம் ஒன்று அந்த வழிப் போக்கனைச் சூழ்ந்து கொண்டது. திருடர்கள் அவனை அடித்து உதைத்து அவனிடம் இருந்த பணத்தையும் துணிமணிகளையும் பறித்துக்கொண்டார்கள். பாதி செத்த நிலையில் அவனைப் பாதையோரத்தில் தள்ளிவிட்டு அத்திருடர்கள் போய்விட்டார்கள்.
அந்தத் திருடர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜெருசலத்திலிருந்து அந்தப் பாதை வழியாக ஆலயத்துக் குருக்கள் ஒருவர் சென்றார். காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் அந்த மனிதனைக் கண்டார். ஆனால், அவர் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை. நிற்காமல் அவர் தம்வழியே நடந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் சென்றபின், அந்தப் பாதையில் ஒரு பண்டாரம் சென்றான். அவன் ஒரு கணம், அடிபட்டுக் கிடந்த மனிதனை நின்று பார்த்தான். பிறகு வேகமாக நடந்து சென்று விட்டான்.
அடுத்து அந்த வழியாகச் சென்றவன் சமாரியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன். ஒரு கழுதை மேல் நிறையச் சுமை ஏற்றிக் கொண்டுவந்த அம் மனிதன் பாதையோரத்தில் கிடந்த மனிதனைக் கண்டான். அன்பு நிறைந்த அவன் உள்ளம் இரக்கம் கொண்டது. அவன் விரைந்து சென்றான். பாதையோரத்தில் துடித்துக்கொண்டு கிடந்த மனிதனைக் கண்டான். அடிபட்டுக் கிடந்தவன் ஓர் யூதன். யூதர்களுக் கும்சமாரியர்களுக்கும் பிறவிப்பகை. ஆயினும் பகையெண்ணத்தை முற்றும் விலக்கிவிட்டு, அந்த சமாரியன் அந்த யூதனுக்கு உதவி செய்யத் தொடங்கினான். நண்பனோ, அயலவனோ யாராயினும் ஒருவன் துயரத்துக்காளானால் அவனுக்கு உதவி செய்வதே மனிதன் கடமையாகும்.
அந்த சமாரியன் விரைவாகத் தன் மூட்டையை இறக்கி அவிழ்த்தான். திராட்சைச் சாற்றினால், அடியுற்றவனின் காயங்களைக் கழுவினான். பின் அப்புண்களில் அவை ஆறத்தக்க ஒரு எண்ணெய் மருந்தை ஊற்றினான். துணியொன்றைக் கிழித்துக் காயங்களையெல்லாம் கட்டினான். கைத்தாங்கலாக அந்த யூதன் எழுந்திருக்கச் செய்து தன் கழுதையின் மீது உட்கார வைத்தான். மெல்ல மெல்ல அதை ஓட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த சிறு சத்திரத்தை அடைந்தான்.
சத்திரக்காரனை நோக்கி, “ஐயா, இந்த மனிதன் குணமாகும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், நான் தரும் இந்தப் பணத்தை அவன் செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் அதிகமாகச் செலவு செய்ய நேரிட்டால், மீண்டும் நான் திரும்பி வரும்போது அத் தொகையைத் தந்துவிடுகிறேன்" என்று கூறிச் சென்று விட்டான்,
இக்கதையைக் கூறி முடித்த இயேசுநாதர், "திருடர்களிடம் அகப்பட்டு அடிப்பட்டவனுக்கு இந்த மூவரில் யார் அடுத்தவன் என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.
"அவனுக்கு இரக்கங் காட்டியவனே!" என்றான் அந்த நீதிநூல் அறிஞன்.
"அவனைப் போல் நீயும் நடந்துவா” என்று கூறினார். இயேசு நாதர். அந்த நீதி நூல் அறிஞன் நல்லறிவு பெற்றுச் சென்றான்.
6. திருந்திய பாவிக்கு விருந்து
வரிவசூலிப்பவர்களைக் கண்டாலே யூதர்களுக்குப் பிடிக்காது. வரிவசூலிக்கும் இந்த அதிகாரிகள் ரோமானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். யூதர்களிடம் வரிவசூலித்து ரோமானியப் பேரரசர்க்கு அனுப்பிவைப்பது அவர்கள் வேலை. யூதர்கள் ரோமானியரின் அடிமை என்பதை நினைவுபடுத்தும் அவமானச் சின்னங்களாக இந்த வரி வசூலிக்கும் அதிகாரிகள் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிகாரிகள் நாணயமும் ஒழுக்கமும் நேர்மையும் மனிதாபிமானமும் அற்ற விலங்குகளாகவும் இருந்தார்கள். எனவே யூதர்கள் இவர்களைப் பாவிகளாகவே கருதினார்கள். இந்தப் பாவிகளின் வீட்டு வாயிற் படியில் காலடி எடுத்து வைப்பதே கேவலம் என்று நினைப்பவர்கள் யூதர்கள்.
சமுதாயத்தினால் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த வரிவசூலிக்கும் பாவிகளிடமும் இயேசு நாதர் அன்பாகப் பழகினார். நரகத்திலே இடம்பிடிக்க வேண்டிய அந்தப் பாவிகளும் சொர்க்கத்தை அடைய மார்க்கமுண்டு என்று இயேசுநாதர் கூறியது அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. தாங்கள் செய்த பாவங்களுக்காக வருந்தி ஆண்டவனிடம் மன்னிப்புப் பெற்று நல்வாழ்க்கை வாழத் தொடங்கினால் அவர்கள் இன்ப உலகம் பெறலாம் என்று கூறிய இயேசு நாதரை அவர்கள் போற்றினார்கள். தங்கள் வீடுகளுக்கு வரவேற்று விருந்தளித்தார்கள்.
“பாவிகளுடனும் வரிவசூலிப்பவர்களுடனும் இவர் ஏன் ஒன்றாக இருந்து சாப்பிட வேண்டும்?" என்று பழைய மதவாதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
"நேர்மையானவர்களை அழைப்பதற்காக நான வரவில்லை; பாவிகளைத் திருந்தி வாழச் செய்வதற்காகவே நான் வந்திருக்கிறேன். கூட்டங் கூட்டமாகவரும் நல்லவர்களைக் காட்டிலும், திருந்திவரும் ஒரு பாவியைத் தான் விண்ணுலகம் மிகுந்த களிப்புடன் வரவேற்கக் காத்திருக்கும்” என்று இயேசுநாதர் தம்மைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்தினரிடம் கூறுவார்.
இறைவன் மக்களிடம் எத்தகைய அன்புடையவர் என்று எடுத்துக் காட்டுவதற்காக இயேசுநாதர் ஒரு கதை சொன்னார்.
அக்கதை இதுதான்.
ஒரு மனிதனுக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் நல்லவன்; அடக்கமுடையவன்; தந்தையிடம் அன்பு மிக்கவன். இளையவனோ செலவாளி.
இளையவனுக்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுண்டாயிற்று, ஆகவே அவன் தன் பங்கைப் பிரித்துத் தரும்படி தந்தையிடம் வம்பு செய்தான். என்றேனும் ஒரு நாள் பிரித்துக் கொடுக்க வேண்டியது தானே என்று தன் மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டு, தந்தை பங்கு பிரித்துக் கொடுத்தான்.
கையில் நிறையப் பணத்துடன் வேறு நாட்டுக்குக் கிளம்பினான் இளையவன், மிகத்தொலைவில் உள்ள அந்த நாட்டில் அவனுக்குப் பல நண்பர்கள் சேர்ந்தார்கள். அவன் தன் நண்பர்களுடன் கோலாகலமான வாழ்வுநடத்தினான். நாளுக்கொரு கேளிக்கையும் வேளைக்கொரு விருந்துமாக அவன் பணம் செலவழிந்தது. வெகு விரைவில் அவன் கைப்பணம் கரைந்து விட்டது.
காசு இல்லை என்றவுடன் தங்கள் நேசத்தை எல்லாம் நிறுத்திக் கொண்டு நண்பர்கள் பிரிந்து சென்று விட்டார்கள்.
தொலைவில் உள்ள ஓர் அன்னிய நாட்டில், பழகியவர்களால் கைவிடப்பட்ட அந்த இளையவன் தன்னந்தனியாய்த் துன்பத்திற்காளாகித் திரிந்தான். கையில் காசில்லாமல், கடன் கொடுப்பார் யாருமில்லாமல் என்ன செய்வதென்று புரியாமல் அவன் மயங்கினான்.
ஒவ்வொரு வீடாகச் சென்று ஏதாவது வேலை கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டு சென்றான். கடைசியில் ஒரு குடியானவன் அவனைப் பன்றி மேய்ப்பவனாக வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். அந்த வேலை பார்த்தும் அவனுக்கு வயிற்றுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. மேலும் அந்த நாட்டில் பஞ்சம் வேறு வந்து விட்டதால், அவ்வளவு எளிய சம்பளத்தில் அவனால் தனக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்கே வழியற்றுப் போய்விட்டது. சிலசமயங்களில் மிகப் பசியெடுக்கும் போது, பன்றிகளுக்கு வைக்கும் உணவையே சாப்பிட எண்ணுவான்.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் அவன் தன்னைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.
“என் தந்தையாரின் வீட்டில் வேலைக்காரர்கள் கூட மிச்சம் வைக்கும் அளவுக்கு நல்ல சாப்பாடு நிறையக் கிடைக்கிறது. நானோ இங்கே பட்டினியாய்க் கிடக்க வேண்டியிருக்கிறது”
தன்னைத் தானே நொந்து கொண்ட அந்த இளைஞன் திரும்பவும் தன் தந்தையின் இல்லத்துக்குப் போகலாமா என்று நினைத்தான். 'எவ்வளவு சண்டை போட்டுப் பணத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு வந்தேன். இனிமேல் என் முகத்தில் விழிக்கக் கூட அப்பா விரும்ப மாட்டாரே' என்று தோன்றியது அவனுக்கு. நினைத்துப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தன் தந்தையிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது.
“அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். செய்யக் கூடாத பாவத்தை நான் செய்து விட்டேன். இனித் தங்களுக்கு மகன் என்று சொல்லிக் கொள்ளக்கூட எனக்கு அருகதையில்லை. இருந்தாலும் என்னை மன்னித்து உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதென்று அவன் தீர்மானித்தான்.
தந்தையோ, வீட்டை விட்டு அவன் வெளியேறிச் சென்றதிலிருந்து அவன் நினைவாகவே இருந்தான். உலகம் அறியாத பிள்ளை எங்கே போய் எப்படித் துன்பப் படுகிறானோ என்று துடித்துக் கொண்டிருந்தான். என்றாவது தன் இளைய மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு அவன் காத்திருந்தான். அடிக்கடி மகன் சென்ற திசையை நோக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.
அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. அந்த இளைய மகன் ஒரு நாள் திரும்பி வந்து விட்டான். எப்படி வந்தான்?
எலும்புந்தோலுமாக, வற்றி மெலிந்த உடலுடனும், அந்த உடலை ஒட்டியிருந்த அழுக்குப் படிந்த கந்தையுடையுடனும், பரட்டைத் தலையுடனும் பார்க்க ஒரு பிச்சைக்காரனைப் போன்ற தோற்றத்துடன் வந்தான், உருமாறியிருந்தாலும் தந்தை தன் மகனை யடையாளங் கண்டு கொண்டான். வீட்டின் அருகில் வருமுன்னேயே அவனை வரவேற்கத் தந்தை ஓடோடிச் சென்றான்.
'அப்பா, நான் பெரும் பாவி. தங்கள் மகன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதை யற்றவன்" என்று கண்ணீர் வழியக் கூறினான் மகன்.
ஆனால், தந்தையோ அவன் சொன்னதை யெல்லாம் கவனிக்கவில்லை. "அன்பு மகனே, வந்துவிட்டாயா?" என்று ஆசையோடு கூறி அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டான். பர பர வென்று வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு வந்து, "குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். சிறந்த ஆடைகளைக் கொண்டு வாருங்கள். வைர மோதிரத்தை எடுத்து வந்து கைவிரலில் போடுங்கள். வீட்டில் இன்று நல்ல விருந்து ஆக்கிப் படையுங்கள். காணாமற்போன என் மகன் இன்று திரும்பி வந்து விட்டான். இன்று நாம் நன்றாக உண்டுகளித்திருப்போம்" என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தான்.
வயலுக்குச் சென்று திரும்பி வந்த பெரிய மகன், வீட்டில் ஆட்டமும் பாட்டும் ஒரே கோலாகலமாக இருப்பதைக் கவனித்தான். என்ன செய்தியென்று வேலைக்காரர்களை விசாரித்தான்.
தம்பி திரும்பி வந்த கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே இல்லை. தந்தையிடம் சண்டை போட்டுப் பணத்தை வாங்கி, வீட்டை விட்டு வெளியேறிச் சென்று எல்லாவற்றையும் வீணடித்து விட்டுத் திரும்பி வந்த ஒரு தீயவனை வரவேற்க அவன் விரும்பவில்லை. அவன் திரும்பி வந்ததற்காக ஏன் களிப்படைய வேண்டும் என்பது தான் பெரியவனின் கேள்வி?
பிடிவாதத்தோடு வீட்டுக்குள் நுழையாமல் அவன் திரும்பிச் செல்வதை அறிந்த தந்தை ஓடோடிச் சென்றான். வீதியில் அவனைச் சந்தித்தான்.
“இத்தனை நாளாக நான் உங்களுக்காக உழைத்தேன். உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன். ஒரு நாளாவது நான் என் நண்பர்களோடு உல்லாசமாக விருந்துண்ண ஏற்பாடு செய்தீர்களா?" என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் பெரியவன்.
"என் அன்பு மகனே, எல்லாவற்றையும் ஒன்றாக அனுபவித்துக் கொண்டு என்னுடனேயே எப்போதும் இருந்து வருகிறாய் நீ. உன் தம்பியோ தீயவழியில் சென்று திருந்தி விட்டான். காணாமல் போன அவன் இப்போது அகப்பட்டுவிட்டான். இதற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா? வாடா மகனே வா! “என்று அவனை அன்போடு வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு வந்தான்.
இயேசுநாதர் கதையை முடித்தார். பாவம் செய்த தன் மகனை மன்னித்த அன்புள்ள தந்தையைப் போல ஆண்டவன், திருந்திய பாவிகளை ஏற்றுக் கொள்வார் என்னும் கருத்தையும், பழைய மதவாதிகள், பெரிய மகனைப் போல, திருந்த முற்படும் பாவிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்ற பொருளையும் இக்கதை தெளிவாக விளக்குவதை மக்கள் உணர்ந்தார்கள். இயேசு நாதரின் அன்புத் தத்துவத்தை மிக எளிதாக அவர்களுக்குப் புரியவைத்தது இக்கதை.
7 எளிமையில் கிடைக்கும் உயர்வு
“இறைவனின் பேரரசை நிலைநாட்டவே நான் வந்திருக்கிறேன்" என்று இயேசுநாதர் கூறிவந்தார். இதைக் கேட்ட அவருடைய பன்னிரண்டு சீடர்களும், உண்மையிலேயே பூவுலகில் அவர் ஓர் அரசாட்சியினை நிறுவப் போகிறார் என்று எண்ணினார்கள். எத்தனையோ நாட்கள் அவர் கூடவே இருந்தும் அவர்கள் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. ரோமானியர்களை விரட்டிவிட்டு அவர் ஜெருசலத்தின் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த எண்ணம் அவர்கள் மனத்தில் பல கற்பனைகளை உருவாக்கியது. புதிய அரசில் நம் நிலை என்ன? என்று அவர்கள் மனக்கோட்டை கட்டத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் வீடு வாசலைத் துறந்து இயேசு நாதரின் பின்னே சுற்றிக் கொண்டிருந்ததற்கு தக்க பரிசு கிடைக்காமல் போகாது என்று அவர்கள் நம்பினார்கள். நம்மிலே யாருக்குப் பெரிய பதவி கிடைக்கும்? என்று அவர்கள் ஆலோசித்தார்கள்.
தங்களுக்குள் அவர்கள் பலவாறு பேசிக் கொண்டாலும், இயேசுநாதரிடம் எதுவும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
தனக்குச் சிறிது தொலைவில் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசிக் கொண்டு வந்ததெல்லாம் அவர் காதில் விழவில்லை. ஆனாலும் அவர்களின் எண்ணங்களை அவர் அறிந்து கொண்டார்.
கேப்பர்நவும் நகருக்கு சென்று ஓய்வாக இருக்கும்போது இயேசுநாதர் அவர்களைத் தம் அருகில் அழைத்தார். "அன்பர்களே, வழியில் என்ன பேசிக் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்.
அவர்களுக்குத் தாங்கள் பேசிய செய்தியைச் சொல்லக் கூச்சமாயிருந்தது. யாரும் வாய் திறக்கவில்லை.
பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை அவர் கூப்பிட்டார். அது ஆவலோடு ஓடிவந்தது.
அவர் தம் பன்னிரண்டு சீடர்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். "உங்களில் யாராவது பெரியவராக வேண்டுமானால், அவர் எல்லாருக்கும் ஊழியராக இருக்க வேண்டும். இந்த உலகில் யார் மிகவும் எளியவராக இருக்கிறாரோ அவரே விண்ணுலகப் பேரரசில் மிகப் பெரியவராக இருக்க முடியும். ஆனால், நான் உங்களுக்கு ஒன்று கூறுவேன்: நீங்கள் பணிவு மிக்கவர்களாகவும், இந்தக் குழந்தையைப் போல என்னிடம் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லாவிட்டால், நீங்கள் விண்ணுலகப் பேரரசில் இடம்பெறவே முடியாது" என்று கூறினார்.
பன்னிரண்டு அன்பர்களும் வாய் திறவாமல், இயேசுநாதரையும் அந்தச் சிறு குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவருக்குத்தான் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு !
8. நெஞ்சுவக்கும் பிஞ்சுமக்கள்
ஒரு நாள் ஜோர்டான் ஆற்றங்கரையிலே இயேசுநாதர் போதனை புரிந்து கொண்டிருந்தார். மக்கள் ஏதோ கூட்டமாக அவரைச் சுற்றிச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தின் இடையில் வேதம் எழுதி வைத்திருக்கும் பழைய மதவாதிகள் நின்று அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சில தாய்மார்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சிலர் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், சிலர் கையில் பிடித்து நடத்திக் கொண்டும் வந்தார்கள். அவர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, இயேசுநாதரின் அருகில் செல்ல முயன்றார்கள்.
"எங்களுக்கு வழிவிடுங்கள். இயேசு நாதரிடம் எங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துப்பெற வந்திருக்கிறோம்" என்று அவர்கள் கூட்டத்தினரிடம் முறையிட்டு வழி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இயேசுநாதரின் சீடர்கள் இதைக் கவனித்தார்கள். விரைந்து அந்தத் தாய்மார்களிடம் வந்தார்கள். கூட்டத்தை விலக்கி அவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் வரவில்லை. “நீங்கள் இப்போது அவருக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். அவர் இப்போது இன்றியமையாத வேலையில் ஈடுபட்டிருக்கிறார். நீங்கள் அவரைக் காண முடியாது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி அவர்களைக் கண்டித்தார்கள். ஆனால் அந்தத் தாய்மார்கள் திரும்பிச் செல்லவில்லை. மீண்டும் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்புகவே முயன்றார்கள்.
சீடர்கள் திரும்பவும் வந்து அவர்களைத் திருப்பியனுப்ப முற்பட்டார்கள். இருசாராருக்கும் இடையே பேச்சு மிகுந்தது. இந்தக் கூச்சல் இயேசுநாதரின் காதில் விழுந்தது. அவர் என்ன நடக்கிறதென்று கவனித்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவர்கள் பேசிக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.
கோபத்தோடு தாய்மார்களிடம் சச்சர விட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களை நோக்கி "குழந்தைகளை வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், அந்தக் குழந்தைகள் இறைவன் பேரரசுக்கு உரியவை" என்று கூறினார்.
தொடர்ந்து அவர் வந்திருந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் தம் அன்புக் கையினை வைத்து ஆசி கூறினார். சிறு குழந்தைகளைத் தம் கைகளில் ஏந்தி வாழ்த்தினார். அந்தத் தாய்மார்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.
இயேசுநாதர் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதைச் சீடர்கள் இரண்டாவது முறையாகத் தெரிந்து கொண்டார்கள்.
9. பாதகன் வீட்டு விருந்து
ஜெரிச்சோ என்ற நசரின் வழியாக இயேசு நாதர் சென்று கொண்டிருந்தார். ஊருக்கு வெளியே வந்து கொண்டிருக்கும்போதே, அவர் வரப்போகும் செய்தி ஊரெங்கும் பரவிவிட்டது. வழிநெடுகிலும் மக்கள் கூட்டங் கூட்டமாக நின்று அவரை வரவேற்கவும் அவர் வாழ்த்தைப் பெறவும், அவர் வருவதைக் காணவும் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
வீதி ஓரங்களில் இடித்து நெருக்கிக் கொண்டு நிற்பவர் பலர்; சாளரங்களிலும் வாயிற்படிகளிலும் ஏறிநின்று அவரை நன்றாகப் பார்க்க முயன்றவர் பலர்; வீட்டுக் கூரைகளிலேயே நின்று கொண்டு காணவிரும்பியவர் பலர்; இப்படியாக அவரைப் பார்க்கும் ஆவலுடன் மக்கள் கூடிநின்றார்கள். வழியில் வீதியோரமாக நின்ற ஒரு பெரிய மரத்தைக் கூர்ந்து நோக்கினார் இயேசுநாதர்.
அந்த மரக்கிளை யொன்றிலிருந்து இயேசு நாதரைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். இயேசுநாதரும் அவனைப் பார்த்து விட்டார்.
அந்த மனிதன் பெயர் சாச்சியஸ். ஜெரிச்சோ நகர் முழுவதும் அவனையறியும். ஆனால், மக்களில் ஒருவர் கூட அவனை விரும்பியதில்லை. அத்தனை பேரின் வெறுப்புக்கும் ஆளாகிய அவன் ஒரு வரி வசூல் அதிகாரி அவன் மிகவும் குட்டையானவன். எனவே, தன்னை வெறுக்கும் கூட்டத்தின் இடையில் புகுந்து முன் செல்ல முடியாமல் அவன் மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து அவன் இயேசு நாதரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இயேசுநாதர் தன்னைக் கவனிப்பார் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. "சாச்சி யஸ், விரைவில் கீழே இறங்கி வா. இன்று நான் உன் வீட்டில்தான் தங்கப் போகிறேன்" என்று இயேசுநாதர் கூறியவுடன் அவன் வியப்பு மேலும் பெருகியது.
யாருக்கும் கிடைக்காத பேறு பாவியாகிய தனக்குக் கிடைத்ததை எண்ணி அவன் உள்ளம் களிபொங்கியது. மகிழ்ச்சியுடன் பரபரவென்று அவன் மரத்தினின்றும் இறங்கினான். இயேசுநாதருக்கு விருந்து ஏற்பாடு செய்வதற்காகவும், அவர் வரும் போது தானே முன்னின்று வரவேற்பதற்காகவும் அவன் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.
சாச்சியசுக்கு அது அவன் வாழ்விலே ஒரு பெரிய நாள். எதிர்பாராத இன்பத் திருநாள். அவன் ஒரு பெரிய பணக்காரன்தான்; அருமையான வீட்டையுடையவன்தான். ஆனால் அவன் ஒரு பாவி. மக்களால் வெறுக்கப்படும் வரி வசூல் அதிகாரி. தன் அதிகாரத்தை அவன் முறையோடு செலுத்தியவனும் அல்லன். தன் அதிகாரத்தைத் தவறான வழிகளிலேயே பயன்படுத்தி மக்களைக் கசக்கிப் பிழிந்த மாபாதகன். அப்படிப்பட்ட தீயவனாகிய அவன் வீட்டுக்கு இயேசுநாதர் எழுந்தருள முன் வந்தது வியப்பாகவேயிருந்தது.
இயேசுநாதர் அவன் வீட்டுக்கு வந்து விட்டார். அவருடைய சீடர்கள் பன்னிருவரும் கூடவே வந்துவிட்டார்கள். சாச்சியஸ் அவர் எதிரில் வந்தான். அவன் உள்ளம் குறுகுறுவென்றது. எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றான். தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். தன்னைப் பற்றிய அருவருக்கத்தக்க உண்மையை வாய்விட்டுக் கூறினான்.
"பெருமானே, உண்மையில் நான் ஒரு பாவி, என் செல்வம் அனைத்தும் தீயவழியில் சேர்க்கப்பட்டவை. பெருமானே, என் சொத்துக்களில் பாதியை நான் ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். தவறான முறையில் நான் சேர்த்த ஒவ்வொரு காசுக்கும் நான்கு காசு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று இயேசுநாதரின் முன் வீழ்ந்து வணங்கினான்.
"அப்பா, நீ உண்மையிலேயே திருந்திவிட்டாய்! ஆண்டவன் உன்னை மன்னிப்பார்" என்று திருவாய் மலர்ந்து அருள் புரிந்தார் இயேசுநாதர்.
வீட்டுக்கு வெளியே நின்ற யூதர்களோ, பாவியொருவன் வீட்டிலே சென்று இயேசு நாதர் தங்குவதைப் பற்றித் தமக்குள் வெறுப்புடன் பேசிக் கொண்டனர். அவருக்குத் தங்குவதற்கு வேறு இடமா கிடைக்கவில்லை என்று கேட்டுக் கொண்டனர்.
சாச்சியஸ் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரமாயிருந்தது. தன் பாவங்களை யெல்லாம் அவன் உணர்ந்து ஒப்புக்கொண்டு விட்டான் இயேசுநாதரின் மூலமாக அவன் ஆண்டவனின் மன்னிப்பைப் பெற்றுவிட்டான். இயேசுநாதரோ, வரி வசூலிப்பவனாகிய அவனுடன் உட்கார்ந்து சாப்பிட முன்வந்ததன் காரணமாக, விண்ணுலகப் பேரரசில் ஒருவனைச் சேர்க்கும் பேறு பெற்றார்.
இந்த இன்ப மாற்றத்தினை வெளியில் இருந்த கூட்டம் உணரவில்லை!.
10. திருவடியில் நறுமணத் தைலம்
ஜெரிச்சோ நகருக்கும் ஜெருசலம் நகருக்கும் இடையில் குன்றுகள் நிறைந்திருக்கின்றன. இந்தக் குன்றுப் பகுதியில் பெத்தானி என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் இயேசுநாதரின் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மார்த்தா, மேரி, லாசரஸ் என்போராவர்.
இயேசுநாதர் ஜெருசலத்திற்குப் போகும் போதெல்லாம், பெத்தானிக்குச் சென்று அந்நண்பர்களைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். அவர் வரும் போதெல்லாம், அவருக்கு நல்ல உணவுகளைச் சமைத்துப் படைத்து இன்பங் காண்பாள் மார்த்தா. அவர் லாசரசோடு பேசிக் கொண்டிருக்கும் போது கூட இருந்து கவனித்துக் கொண்டிருப்பாள் மேரி.
விருந்து விழாவிற்காக ஜெருசலம் செல்ல நேர்ந்த போது, பெத்தானியில் தங்கியிருந்து நாள்தோறும் ஜெருசலம் போய் வருவது என்று முடிவு செய்திருந்தார் இயேசுநாதர்.
இயேசுநாதர் வரும் செய்தியறிந்து முன்னதாகவே விருந்து தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள் மார்த்தா. இயேசுநாதருடன் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவள் பல நண்பர்களையும், பன்னிரு சீடர்களையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
மேரியோ துயரத்தோடு சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள். குருமார்கள் இயேசுநாதரின் மீது அழுக்காறு கொண்டிருந்தார்கள் என்று அவள் அறிவாள். ஜெருசலத்தில் அவருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று அவள் பயந்தாள். இயேசு நாதருக்கும் இது தெரியும் என்று அவள் நம்பினாள். துணிவுடன் அவள் அதைச் சந்திக்கப் போவது குறித்து அவள் வியந்தாள்.
இயேசுநாதர் மீது தான் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று அவள் சிந்தித்தாள். விருந்தினர் அனைவரும் வந்து சாப்பாட்டுக்கு உட்காரும் வரையில் அவள் காத்திருந்தாள். எல்லோரும் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்தபின் அவள் ஒரு சிறு போத்தலில் இருந்த நறுமணத் தைலத்தை எடுத்துச்சென்றாள். மெல்ல மெல்ல அவள் நடந்து சென்று இயேசு நாதரின் திருவடிகளில் அந்த நறுமணத் தைலத்தை ஊற்றினாள். பின்னர் தன் நீண்ட கூந்தலினால், அதைத் துடைத்தாள். இனிய நறுமணம் வீடெங்கும் நிறைந்து கமழ்ந்தது. இயேசுநாதர் குனிந்து பார்த்தார். மேரி தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். தன் மீது அவள் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டுவதற்காகவே அவள் இவ்வாறு செய்தாள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
விருந்தினர் அனைவரும் மேரிக்கு இயேசு நாதரிடம் இருந்த அன்பினைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான ஜூடாஸ் இஸ்காரியட் என்பவன் இச்செயலைக் கண்டு தன் முகத்தைச் சுளித்தான்.
‘அந்த நறுமணத் தைலம் எவ்வளவு விலை யிருக்கும்' என்று அவன் எண்ணினான். அவன் பணத்தாசை கொண்டவன். 'காலடியில் இவ்வளவு விலையுயர்ந்த தைலத்தை அப்படியே போத்தலோடு கவிழ்த்து விட்டாளே; வீணாக்கி விட்டாளே; என்ன மூடத்தனம்!" என்று அவன் நினைத்தான்.
"முந்நூறு பென்சுக்கு அதை விற்றிருக்க முடியும். அவ்வாறு விற்றிருந்தால் எத்தனை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்!" என்று அவன் முணுமுணுத்தான்.
மேரியின் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இயேசுநாதர் தம் கண்களை இருண்ட முகத்துடன் இருந்த அச்சீடனின் பக்கம் திருப்பினார்.
“அவளை ஒன்றும் சொல்லாதீர்கள். அவள் ஒரு நற்செயலையே புரிந்தாள். ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் நினைத்தபோது அவர்களுக்கு நன்மை செய்யலாம். ஆனால், நான் எப்போதும் உங்களுடன் இருக்க முடியாதே!” என்று கூறினார் இயேசுநாதர்.
தாம் உலகில் இருக்கும் நாள் அதிகமில்லை என்பதை இயேசுநாதர் உணர்த்தினார். ஆனால் இவ்வாசகங்களின் பொருளைச் சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.
11. இறைமகன் சென்ற திருவுலர்
மேரி நறுமணத் தைலத்தால் இயேசு நாதரின் திருவடிகளைக் கழுவித் தன் கூந்தலினால் துடைத்த நிகழ்ச்சி நடந்ததற்கு மறுநாள் ஜெருசலம் நோக்கி இயேசுநாதர் புறப்பட்டார். தம் சீடர்கள் பின்தொடர அவர் ஆலிவ் மலையின் மீது நடந்து சென்றார். தம் சீடர்களில் இருவரை அவர் அழைத்து தமக்கு முன்னதாக விரைந்து செல்லச் சொன்னார்.
"அடுத்தாற்போல் இருக்கும் சிற்றூருக்குச் செல்லுங்கள். அவ்வூருக்குள் நுழைந்தவுடன் ஒரு சிறு கழுதை கட்டிக் கிடப்பதைக் காண்பீர்கள். இதுவரை மனிதர்கள் யாரும் ஏறிச் செல்லாத கழுதை அது. அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது ஏதாவது கேட்டால், பெருமானுக்கு அது தேவைப்படுகிறது என்று சொல்லுங்கள்.
அவர்கள் மறுப்புரைக்காமல் நேரே அதை இங்கே அனுப்பி வைப்பார்கள்” என்று கூறி அந்த இரு சீடர்களையும் அனுப்பினார்.
அந்த இரு சீடர்களும் ஆர்வத்தோடு விரைந்து சென்றார்கள். அரசர்களும் ஆண்டவனின் திருத்தூதர்களும் கழுதையின் மேல் ஏறிச்செல்வார்கள். அதுபோல் இயேசு நாதரும் ஜெருசலத்துக்குக் கழுதையின் மேல் ஏறிச் செல்லப் போவதால், இந்த முறை அவர் தம்மையே அரசராக அறிவித்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஆர்வத்திற்குக் காரணம் இதுதான்.
இயேசுநாதர் குறிப்பிட்ட இடத்தில் கழுதை கட்டிக் கிடந்தது. கழுதைக்கு உரியவனிடம் பெருமானுக்கு அது தேவைப்படுகிறது என்று கூறியவுடன், அவன் மறுப்பெதுவும் கூறாமல் கழுதையை அவிழ்த்துச் செல்ல அனுமதித்தான். சீடர்கள் இருவரும் அதை நடத்திக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
சீடர்கள் தங்கள் மேல் சட்டைகளைக் கழற்றிக் கழுதையின் முதுகில் போட்டார்கள். இயேசுநாதர் அவற்றின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, மெல்ல மெல்ல முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தார். சீடர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். ஜெருசலம் நெருங்க நெருங்க அவரைப் பின்தொடர்ந்து சென்ற கூட்டம் அதிகரித்தது. அம்மக்களில் சிலருக்கு முன்னிருந்த திருத்தூதர்களில் ஒருவர் வேதத்தில் மொழிந்திருந்த வாசகம் நினைவுக்கு வந்தது. உடனே அவர்கள், "டேவிட்டின் மைந்தர் வாழ்க இறைவன் பெயரால் வருபவர் அருளுக்குரியவரே! மேலானவர் வாழ்க!" என்று கூவினார்கள். உடனே கூடியிருந்த மக்கள் அனைவரும் அவ்வாழ்த்து மொழிகளைச் சேர்ந்து முழக்கினார்கள்.
மக்கள் கூட்டத்தினரில் பலர் முன்னால் ஓடிச் சென்று, தங்கள் மேல்சட்டைகளைக் கழற்றி தூசியும் புழுதியும் நிறைந்த அந்தப் பாதையில் வரிசையாய் விரித்தார்கள். ஓர் அரசருக்குரிய பாதையாக மாற்றுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். சிலர் மரக் கிளைகளை ஒடித்து இழுத்துவந்து வீதியின் இரு மருங்கிலும் கிடத்தினார்கள். ஒரு சிலர் நகரினுள் ஓடிச் சென்று அரசர் வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அங்கிருந்தோர் அனைவருக்கும் விளம்பரப்படுத்தினார்கள். இச் செய்தியைக் கேட்டு. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டங்கூட்டமாக அவரைச் சந்திக்க விரைந்து சென்றார்கள். குருத்தோலைகளை விரித்து ஆட்டி வரவேற்று, “டேவிட்டின் மைந்தர் வாழ்க" என்று முழங்கினார்கள்.
பெருமிதமான - வெற்றிகரமான அந்த ஊர்வலம் கோயில் வாசலில் சென்று சேர்ந்தது. இயேசுநாதர் கழுதையின் முதுகிலிருந்து இறங்கி அந்தப் பெரிய ஆலயத்தினுள் நடந்து சென்றார். எழுச்சி மிக்க அக்கூட்டமும் அவரைத் தொடர்ந்து ஆலயத்தினுள் நுழைந்தது.
"டேவிட்டின் மைந்தர் வாழ்க! டேவிட்டின் மைந்தர் வாழ்க!" என்று கூச்சலிட்டுக் கொண்டே குழந்தைகள் ஆலயத்தினுள் சென்றார்கள். ஆலயத்துக் குருமார்கள் ஆத்திரத்துடன் இயேசுநாதரை அணுகினார்கள். ஐயா, அவர்கள் என்ன சொல்கிறார்கள், கேட்டீர்களா? முதலில் அவர்கள் கூச்சலை நிறுத்துங்கள்” என்று அதிகாரத்தோடு கூறினார்கள்.
இயேசுநாதர் அதைப் பொருட்படுத்தவில்லை. குழந்தைகளைத் தடுக்க அவர் முற்படவில்லை. "குழந்தைகளின் மழலையிலிருந்து வெளிப்படுவதுதான் உண்மையான புகழ்ச்சியாகும்" என்று வேதத்தில் எழுதியுள்ளதை நீங்கள் படித்ததில்லையா? என்று அவர்களையே திருப்பிக் கேட்டார்.
குருமார்கள் மனத்திற்குள் அவரைச் சபித்துக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
இயேசுநாதரைப் பிடித்து அப்போதே அவருக்குச் சாவுத் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். ஆனால் அவரைத் தொடக்கூட அவர்களுக்குப் பயமாயிருந்தது. ஏனெனில் மக்கள் கூட்டம் அவர் பக்கமிருந்தது. எனவே இயேசுநாதருக்கு எதிராக மக்களைத் திருப்புவதில் அன்றுமுதல் அவர்கள் முனைந்தார்கள்.
12. குத்தகைக்கு விட்ட தோட்டம்
ஆலயத்தினுள் இயேசுநாதர் போதனை புரிந்து கொண்டிருந்தார். அப்போது பெரிய குருமார்களும் முதிய பெரியோர்களும் அவரிடம் வந்தனர்.
“எந்த அதிகாரத்தின் பேரில் நீர் இச் செயல்களைச் செய்து வருகிறீர் ! உமக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர் யார்?” என்று கேட்டார்கள்.
"நான் உங்களை ஒன்று கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அதன் பின் நான் எந்த அதிகாரத்தின் பேரில் இச் செயல்களைச் செய்து வருகிறேன் என்பதைக் கூறுகிறேன்" என்று பதிலளித்தார் இயேசு நாதர்.
"ஜான் திருமுழுக்காட்டும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? விண்ணுலகிலிருந்தா? அல்லது மக்களிடமிருந்தா?" என்று கேட்டார் அவர்.
இந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று அவர்கள் சிந்தித்தார்கள். 'விண்ணுலகிலிருந்து கிடைத்தது என்று சொன்னால், அப்படியானால் நீங்கள் ஏன் ஜானை நம்பவில்லை என்று கேட்டுவிடுவார். மக்களிடமிருந்து கிடைத்தது என்று சொன்னால், மக்களின் பகையை அடைய நேரிடும். ஏனெனில் ஜான் இறைவனால் அனுப்பப்பட்ட முன்னறிவிப்பாளர் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு மாறுபாடாக நம் பதில் இருக்குமானால், நாம் அவர்களிடையே உள்ள செல்வாக்கை இழக்க வேண்டி வரும்.
இவ்வாறு குழம்பிய அவர்கள் நாங்கள் இதற்குப் பதில் சொல்வதற்கில்லை என்று கூறி விட்டார்கள். நானும் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கில்லை என்று மறுமொழி கூறினார் இயேசுநாதர்.
தொடர்ந்து இயேசுநாதர் ஒரு கதை கூறினார்.
ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஒருநாள் தந்தை தன் மூத்த மகனிடம் சென்று “மகனே என் திராட்சைத் தோட்டத்தில் போய் வேலை செய்" என்று கூறினான்.
“நான் வேலை செய்ய முடியாது" என்று மறுத்துவிட்டான் அவன். ஆனால் தந்தை சென்றபின் தான் அவ்வாறு கூறியதற்காக வருத்தப்பட்டு, போய் வேலையைச் செய்தான்.
தந்தை தன் இளைய மகனிடம் சென்று திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யச் சொன்னான். "இதோ போகிறேன் அப்பா!" என்று கூறினான் இளையவன். ஆனால் அவன் வேலை செய்யப் போகவேயில்லை.
“இந்த இருமக்களில் யார் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியவன்" என்று கேட்டார் இயேசுநாதர்.
"மூத்த மகன்!" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
"ஜான் உங்களுக்கு நேர் வழியைப் போதித்த போது நீங்கள் அதை ஏற்க மறுத்தீர்கள். ஆனால் பாவிகளாகிய வரிவசூல் செய்பவர்களும் தீயவர்களும் அதை நம்பினார்கள். தங்கள் தீச்செயல்களுக்காக வருந்தினார்கள். நீங்கள் உங்கள் தவறுகளுக்காக வருந்துவதாகவே தெரியவில்லை. நீங்கள் அவரை நம்பவேயில்லை. எனவே பாவிகளும் தீயவர்களும் உங்களுக்கு முன்னால் இறைவனின் பேரரசை எய்துவார்கள்” என்று கூறிய இயேசுநாதர் மற்றுமொரு கதை கூறினார்.
குடித்தனக்காரன் ஒருவன் திராட்சைத் தோட்டம் ஒன்றை அமைத்தான். அதைச் சுற்றி வேலி கட்டினான். சாறுபிழியும் பொறி ஒன்றை அமைத்தான். ஒரு கோபுரமும் கட்டினான். அதைத் தன் பண்ணையாட்களிடம் விட்டு விட்டு அவன் வேறொரு நாட்டுக்குச் சென்று விட்டான்.
பழுக்கும் பருவத்தில் அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பித் திராட்சைப் பழங்களைக் கொண்டுவரும்படி சொன்னான்.
வந்த வேலைக்காரர்களை அந்தப் பண்ணையாட்கள் கொடுமைப்படுத்தினார்கள். ஒருவனை அடித்து விரட்டினார்கள். மற்றொருவனைக் கொன்று போட்டார்கள். இன்னொருவனைக் கல்லெறிந்து விரட்டி விட்டார்கள்.
மீண்டும் அந்தக் குடித்தனக்காரன் அதிக எண்ணிக்கையில் வேலைக்காரர்களை அனுப்பினான். அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது.
கடைசியில் அவன் தன் மகனை அனுப்பினான். "என் மகனுக்கு அவர்கள் மரியாதை காட்டுவார்கள்" என்று அவன் நினைத்தான்.
ஆனால் அந்தப் பண்ணையார்கள் “இவன் அவனுடைய வாரிசு. வாருங்கள் இவனைக் கொன்று போட்டு வாரிசுரிமையை நாமே அடைவோம்" என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள்.
அவனைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியில் இழுத்துச் சென்று வெட்டிக் கொன்று விட்டார்கள்.
"பண்ணைச் செந்தக்காரன் வரும்போது இந்தப் பண்ணையாட்களை என்ன செய்வான்?" என்று கேட்டார் இயேசுநாதர்.
"அந்தக் கொடியவர்களை ஒழித்துக் கட்டி, தன் பண்ணையை, ஒழுங்கான வேறு ஆட்களிடம் ஒப்படைப்பான்" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
"கட்டிட வேலைக்காரர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே, மூலைக்கு முதற்கல்லாக அமைந்தது. என்று நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா? இதுதான் இறைவனின் செயல். இதுதான் நமக்கு ஆச்சரியம் தருவது.
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற இறைவனின் பேரரசு பறிக்கப்படும் அது பயன் கொடுக்கும் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
“இந்தக் கல்லின் மேல் விழும் யாரும் உறுப்பொடிந்து போவார்கள். யார் மேல் இந்தக் கல் விழுகிறதோ அவர்கள் நசுங்கித் தூளாகிப் போவார்கள்."
இந்தக் கதைகள் தங்களைத் தான் குறிக்கிறதென்று பெரிய குருமார்களும் பழைமைவாதிகளும் கண்டறிந்தார்கள்.
ஆனால் அவர்கள் இயேசுநாதரின் மேல் கை வைக்க அஞ்சினார்கள். ஏனெனில் மக்கள் இயேசுநாதரின் பக்கம் இருந்தார்கள். அம் மக்கள் இயேசுநாதரை ஆண்டவன் அனுப்பிய முன்னறிவிப்பாளராகக் கொண்டாடினார்கள்.
13. உழைத்தவர் பெற்ற உயர்வு
ஆலயத்திலிருந்து புறப்பட்ட இயேசு நாதர் பெத்தானிக்குப் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு மலைச்சரிவில் சிறிது நேரம் தங்கினார்.
அங்கிருந்து பார்க்கும்போது ஜெருசலம் ஆலயம் அழகாகத் தோன்றியது, வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அதன் அழகிய கோபுரம் ஒளிவீசிக் கொண்டிருந்தது.
இயேசுநாதரின் சீடர்களில் ஒருவன் “ஆலயத்தைப் பாருங்கள்! உயர்ந்த கற்களால் அது எவ்வளவு அழகாகக் கட்டப் பெற்றிருக்கிறது!" என்று அழகுணர்ச்சியுடன் கூறினான்.
இதைக் கேட்ட இயேசுநாதர், துயரத்துடன், “இங்கே ஒரு கல்லின் மேல் மற்றொன்று நில்லாத நாள் வரப் போகிறது" என்றார்.
சீடர்கள் திகைத்து நின்றார்கள். "தலைவரே இதெல்லாம் எப்பொழுது நடக்கும்?" என்று கேட்டார்கள்.
“ஒரு நாட்டுக்கெதிராக மற்றொன்று கிளர்ந்து எழும். ஓர் அரசுக்கெதிராக மற்றொன்று புறப்படும்! போர்க்குரல்கள் எங்கும் ஒலிக்கும்! எங்கும் பஞ்சம் பரவும்! கொள்ளை நோய் கூத்தாடும்! நிலநடுக்கங்கள் ஏற்பட்டு நாடுநகரங்கள் சரியும்.
"ஏமாற்றுக்காரர்கள் பலர் தோன்றுவார்கள். நீங்கள் ஏமாந்து போகாதீர்கள்.
"அரசர்கள் அதிகாரிகள் முன்னால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். அடித்துச் சிறையில் தள்ளப்படுவீர்கள். எனக்காக நீங்கள் எல்லா மனிதர்களாலும் வெறுக்கப்படுவீர்கள். ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை புனித ஆவி உங்களுக்குச் சொல்லும். இறுதிவரை உறுதியாக நிற்பவன் காப்பாற்றப்படுவான்.
"இறுதி நாளிலே நான் தேவதூதர்கள் சூழ வருவேன். அப்போது அவரவர்க்குரிய தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று எந்த மனிதராலும் சொல்ல முடியாது. விண்ணுலகத் தேவ தூதர்களாலும் விளம்ப முடியாது.
"இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்திருக்கிறான். சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்த சிறப்பான திறமைகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறான். அத்திறமைகளை ஒவ்வொருவரும் நன்கு பயன்படுத்தித் தத்தமக்குரிய வேலைகளை ஒழுங்காக முடிக்க வேண்டும்"
இவ்வாறு கூறிய இயேசுநாதர் இதற்கொரு கதை சொன்னார்.
ஒரு மனிதன் வெளிநாடு போக வேண்டியிருந்தது. அவன் தன் வேலைக்காரர்களை அழைத்து அவர்களிடம் தன் பொருள்களை ஒப்படைத்தான்.
ஒருவனுக்கு அவன் ஐந்து நிறை பொன் கொடுத்தான்; மற்றொருவனுக்கு இரண்டு நிறை பொன் அளித்தான்; மூன்றாமவனுக்கு ஒரு நிறை பொன் வழங்கினான். "உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொருளை வீண் செலவு செய்யாமல் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுர்கள். நான் திரும்ப வரும்போது கணக்குச் சொல்ல வேண்டும்" என்று கூறி விட்டுச் சென்றான்.
முதல் வேலைக்காரன் தனக்குக் கிடைத்த பொன்னைக் கொண்டு வாணிபம் செய்தான். தன் திறமையினால் அவன் மேலும் ஐந்து நிறை பொன்னீட்டினான்.
இரண்டாவது வேலைக்காரனும் தனக்குத் தெரிந்த ஒரு வாணிபத்தைச் செய்து மேலும் இரண்டு நிறை பொன்னைச் சேர்த்தான்.
மூன்றாவது வேலைக்காரன் ஒரு சோம்பேறி. ஆகவே, அவன் தனக்குக் கிடைத்த ஒரு நிறை பொன்னைப் பத்திரமாகத் தரையில் புதைத்து வைத்தான்.
நெடுநாள் சென்று அவர்களுடைய முதலாளி திரும்பி வந்தான். ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, "உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளுக்குக் கணக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.
“தலைவரே தாங்கள் எனக்கு ஐந்து நிறை பொன் கொடுத்தீர்கள். நான் மேலும் ஐந்து நிறை ஈட்டியிருக்கிறேன், இதோ பாருங்கள்" என்று பத்து நிறை பொன்னைக் காட்டினான் முதல் வேலைக்காரன்.
இரண்டாவது வேலைக்காரன் தனக்குக் கிடைத்த இரண்டோடு தான் சேர்த்த இரண்டையும் சேர்த்து நான்கு நிறை பொன்னைக் காட்டினான்.
"நன்றாகப் பயன்படுத்தினாய், நீயே உண்மையான வேலைக்காரன்" என்று அவர்கள் ஒவ்வொருவரையும் முதுகில் தட்டிக் கொடுத்தான் முதலாளி, தான் கொடுத்ததையும் ஈட்டியதையும் அவர்களையே வைத்துக்கொள்ளும்படி கூறினான்.
மூன்றாவது வேலைக்காரன் முதலாளி வந்து விட்டார் என்று அறிந்ததும் தான் புதைத்து வைத்திருந்த பொன்னைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். "தலைவரே, நீங்கள் பொல்லாதவர் என்பது எனக்குத் தெரியும். செலவழித்துவிட்டால் சும்மா விடமாட்டீர்கள் என்று அறிவேன். ஆகவே, நீங்கள் தந்த ஒரு நிறை பொன்னையும் பத்திரமாகத் தரையில் புதைத்து வைத்திருந்தேன். இதோ அப்படியே கொண்டு வந்திருக்கிறேன் ஒரு காசு கூடக் குறையவில்லை; எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான்.
“ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிப் பயலே! நான் பொல்லாதவன் என்றுதான் உனக்குத் தெரியுமே, என் பணத்தை ஒன்றுக்கும் பயனில்லாமல் வீணாக வைத்திருந்தாயே அறிவற்றவனே. வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருந்தாலும் வட்டி வரும்படியாவது வந்திருக்குமே." என்று கூறி அந்தப் பணத்தைத் திருப்பி வாங்கினான். அதைப் பத்து நிறை வைத்திருந்த முதல் வேலைக்காரனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான்.
கதையைக் கூறி முடித்த இயேசுநாதர் தீர்ப்பு நாளிலும் இதே கதை தான் நடக்கும். ஆண்டவன் தங்களுக்குக் கொடுத்த ஆற்றலையும் திறமையையும் நன்கு பயன்படுத்தியவர்கள் அவனுடைய பாராட்டைப் பெறுவார்கள். திறமையைப்பயன்படுத்தாது சோம்பேறியாகக் காலங் கழித்தவர்கள், அவன் சினத்துக்கே ஆளாவார்கள்.
"அந்தத் தீர்ப்பு நாளில் உங்கள் அரசர் நல்லவர்களை அழைத்து 'ஆண்டவன் அருளைப் பெற்றவர்களே, உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் பேரரசுக்கு வாருங்கள். நான் பசித்திருந்தபோது நீங்கள் எனக்கு உணவு கொடுத்தீர்கள். நான் தவித்திருந்த போது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் அயலவனாக வந்த போது நீங்கள் விருந்தினனாக ஏற்றீர்கள். உடுத்தத் துணியில்லாதிருந்த போது ஆடைகள் வழங்கினீர்கள். நோயுற்றிருந்த போது என்னை வந்து பார்த்தீர்கள். சிறைப்பட்டிருந்த போதும் தேடிவந்தீர்கள் நல்லவர்களே. இச்செயல்களை யெல்லாம் நீங்கள் என் உடன் பிறந்த மிக எளிய மனிதனுக்குச் செய்தாலும் அது எனக்குச் செய்ததையே ஒப்பாகும்" என்று கூறுவார்.
நேர்மையும், திறமையுமுள்ள நல்லவர்களுக்கு நிலையான பேரின்பவாழ்வு கிடைக்கும் என்பதை விளக்கிக் கூறிய இயேசுநாதர் தம் சீடர்களிடம் விடை பெற்றுக் கொண்டு பெத்தானிக்குச் சென்றார். அங்கு இரவு அமைதியாகக் கழிந்தது. மறுநாள் விடிகாலையில் எல்லாரும் ஜெருசலம் வந்து சேர்ந்தார்கள்.
இயேசுநாதர் மக்களிடையிலே நடமாடினார்; அவர்களுக்கு நல்லறிவுரைகள் போதித்தார். குருமார்களும் பழைமைவாதிகளும் அவரைக் கண்டு பொருமினார்கள் - புகைந்தார்கள். மக்கள் நடுவில் அவரைத் தொடவும் அஞ்சினார்கள். ஏதாவது மறைவிடத்தில் அவரைத் தனியாகப் பிடிக்கத் திட்டமிட்டார்கள். அவருடைய சீடர்களிலே ஒருவனை வசப்படுத்திவிட்டால் அவரை எளிதாகப் பிடிக்கலாம் என்று எண்ணினார்கள்.
14. உடலும் குருதியும் உங்களுக்கே
அன்று வியாழக்கிழமை. இயேசுநாதரின் சீடர்கள் அவரிடம் வந்து, “இன்று தாங்கள் விருந்துண்பதற்கு எந்த இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
“நகருக்குச் செல்லுங்கள். குடத்தில் ஒருவன் தண்ணீர் கொண்டு செல்வான். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அந்த மனிதனுடைய தலைவனை அணுகி, பெருமானார் தன் சீடர்களுடன் விருந்துண்பதற்குரிய விருந்து அறை எது? என்று கேட்டுவரச் சொன்னார் என்று கூறுங்கள். அவர் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் இயேசு நாதர். பீட்டரும் ஜானும் ஜெருசலம் நகருக்கு விரைந்து சென்றார்கள். அங்கே ஒரு கிணற்றடியில் பெண்கள் தண்ணீர் பொண்டு சென்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்தப் பெண்களினிடையே ஓர் ஆடவன் குடத்தில் தண்ணீர் மொண்டு செல்லும் நடைமுறையில் இல்லாத காட்சியையும் கண்டார்கள். அந்த மனிதனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலைவனைச் சந்தித்தார்கள். இயேசு நாதர் கூறியபடி அவர்கள் கெட்டவுடன் அந்த வீட்டுக்காரன் மகிழ்ச்சியுடன் தன் வீட்டின் பெரிய அறை ஒன்றை அவர்களுக்குக் காண்பித்தான்.
விருந்துண்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த அறையில் எல்லாம் ஆயத்தமாக வைக்கப்பட்டன.
இயேசுநாதர் தம் சீடர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
எல்லாரும் அமர்ந்து விருந்துண்ணும் போது அவர் மனவருத்தத்துடன் இருப்பது போல் காணப்பட்டார். சீடர்கள் அதைக் கவனித்தவுடன் அவர் தம் துயரத்தின் காரணத்தை வாய்திறந்து கூறினார்.
"உண்மையில் உங்களில் ஒருவன் என் பகைவர்களிடம் என்னைக் காட்டிக் கொடுத்து விடுவான் !"
இச் சொற்களைக் கேட்டு அச் சீடர்கள் திகிலடைந்தார்கள்.
“பெருமானே, நானா ? நானா?" என ஒவ்வொருவரும் கேட்டார்கள்.
“என்னோடு ஒன்றாக அமர்ந்து வட்டிலில் உண்ணும் உங்களில் ஒருவன்தான் - நான் வட்டிலில் கை வைக்கும் போது தானும் கை வைக்கும் அந்த மனிதன்தான்" என்று பதிலளித்த பெருமான் ஜூடாஸ் இஸ்காரியட் என்ற சீடனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். "நீ செய்வதை விரைவாகச் செய்" என்று கூறினார்.
பெருமான் தன் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டார் என்பதை ஜூடாஸ் இஸ்காரியட் அறிந்து கொண்டான். உடனடியாக எழுந்து அறைக்கு வெளியில் சென்று இருளில் மறைந்துவிட்டான்.
அவ்வளவு நேரமும் அவன் பெருமானைக் காட்டிக் கொடுப்பதற்கு வாங்கிய கைக் கூலியான முப்பது வெள்ளிப் பணமும் அவனிடம் இருந்தது.
இயேசுநாதர் தாம் இருந்த இடத்திலேயே எழுந்து நின்றார். ஒரு ரொட்டியைக் கையில் எடுத்தார். அதைப் பிய்த்துத் தன் சீடர்கள் ஒவ்வொருவருக்கும். ஒவ்வொரு துண்டு கொடுத்தார்.
“இதைச் சாப்பிடுங்கள், இதுதான் உங்களுக்காகக் கூறு போடப்பட்ட என் உடல், என் நினைவாக இதைச் சாப்பிடுங்கள்" என்றார்.
ஒரு கோப்பை திராட்சைச் சாற்றை எடுத்தார். இந்தக் கோப்பையில் உள்ளதை எல்லாரும் சிறிது சிறிது அருந்துங்கள். ஏனெனில் இதுதான் என் குருதி. உங்களுக்காகவும் வேறு பலர்க்காகவும் சிந்தப்படும் குருதி இது. என் நினைவாக இதைக் குடியுங்கள்."
சீடர்கள் இந்தச் சொற்களின் உட்பொருள் தெரியாமல் மயங்கினார்கள். அவர் அளித்த ரொட்டித் துண்டுகளையும் திராட்சைச் சாற்றையும் உட்கொண்டார்கள். துயரமும் அச்சமும் அவர்கள் உள்ளங்களை ஆட்கொண்டன.
“அஞ்சாதீர்கள் ! மனத்துயரம் கொள்ளாதீர்கள் ! நீங்கள் இறைவனை நம்புகிறீர்கள் ! என்னையும் நம்புகிறீர்கள் ! நான் உங்களுக்குரிய இடத்தை ஆயத்தம் செய்து வைப்பதற்காகப் போகிறேன். நான் போவது உங்கள் நன்மைக்காகவே. நான் போகா விட்டால் உங்களைக் காத்தாள்பவன் வரமாட்டான். புனித ஆவியாகிய அவன் வரும்போது நான் கூறிய அனைத்தும் உங்கள் நினைவுக்கு வரும்.
"நான் உங்களிடம் அன்பு கொண்டிருந்தது போல் நீங்கள் ஒருவரிடம் ஒருவர் அன்பு கொள்ளுங்கள். தன் நண்பர்களுக்காக உயிரைக்கொடுக்கக் கூடியவனிடம் உள்ள அன்பைக் காட்டிலும் பேரன்புடையவர் யாருமில்லை. இதுதான் என் கட்டளை. நீங்கள் என் நண்பர்கள். எனவே நான் கட்டளையிடுவதைச் செய்யுங்கள்."
விருந்து முடிந்தது. அதுதான் சீடர்கள் இயேசுநாதருடன் உண்ட கடைசி விருந்து. யாவரும் எழுத்து நின்று மாலைத்தொழுகைப் பாட்டைப் பாடினார்கள். பிறகு யாவரும் ஒன்றாக வெளிப்புறப்பட்டு வீதியில் நடந்து சென்றார்கள்.
15. காலைச்சேவலின் கூவல்
இயேசுநாதர் தம் சீடர்களுடன் ஆலிவ் மலையடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவர் தம் சீடர்களை நோக்கி, “இன்றிரவு என்னால் நீங்கள் அனைவரும் துன்பத்திற்காளாவீர்கள். ஏனெனில் ஆட்டிடையனாகிய நான் கொல்லப்படுவேன் என்றும், என் ஆட்டு மந்தைகள் சிதறிவிடும் என்றும் எழுதப் பெற்றிருக்கிறது. என்னைத் தனியாக விடுங்கள். யாரும் துணையில்லா விட்டாலும் என் தந்தை யாகிய இறைவன் என்றும் என்னருகில் இருப்பான்" என்றார்.
இதைக்கேட்ட பீட்டர், “பெருமானே ! எல்லாரும் உங்களைப் பிரிந்து சென்றுவிட்டாலும் நான் பிரியமாட்டேன். சிறைச்சாலைக்கானாலும், இறப்பின் வரையிலேனும் நான் உங்களைத் தொடர்ந்து வரக் காத்திருக்கிறேன்” என்று கூறினான்.
"பீட்டர், நான் இப்போது சொல்லுகிறேன். காலைச் சேவல் கூவு முன்னால் இன்றிரவிலே என்னைத் தெரியவே தெரியாதென்று மூன்று முறை கூறப்போகிறாய்" என்று அவனை உற்று நோக்கியவாறு உரைத்தார் இயேசு நாதர்.
"பெருமானே, தங்களோடு சேர்ந்து சாக நேரிட்டாலும், நான் உங்களை மறுத்துரைக்க மாட்டேன்" என்று உறுதி நிறைந்த குரலில் கூறினான் பீட்டர். அதுபோலவே மற்ற பத்துச் சீடர்களும் உறுதி கூறினார்கள்.
நடந்துகொண்டிருந்த இயேசுநாதர் ஓரிடத்தில் நின்றார். "நண்பர்களே நீங்கள் இந்த இடத்தில் இருங்கள். நான் சிறிது அப்பால் சென்று தொழுகை செய்துவிட்டு வருகிறேன்" என்றார். எட்டுச் சீடர்கள் அங்கேயே நின்று கொண்டார்கள், பீட்டர், ஜேம்ஸ், ஜான் என்ற மூவர் அவரைத் தொடர்ந்து நடந்தார்கள்.
மற்றும் ஓர் இடத்தில் அவர்களை நிறுத்தினார் அவர். "நீங்கள் இங்கேயே இருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருங்கள்" என்று கூறிவிட்டுச் சிறிது தொலை சென்றார்.
தரையில் மண்டியிட்டு, இறைவனை நோக்கித் தொழுதார். "இறைவா, என் தந்தையே! எல்லாம் உன் எண்ணப்படியே நடக்கட்டும்!" என்று கூறித் தொழுதார். அவரைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டிய சீடர்களோ, தரையில் விழுந்து கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
திரும்பிவந்து பார்த்த அவர், அவர்களை எழுப்பி, ஒரு மணி நேரம் கூட உங்களால் விழித்திருக்க முடியவில்லையா ? என்று கேட்டார். மீண்டும் அவர் சென்று தொழுகை புரிந்து விட்டுவந்தார். அப்போதும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை எழுப்பிவிட்டு மூன்றாம் முறையாகத் தொழுகை செய்யச் சென்ற போதும் அவர்கள் மீண்டும் தூங்கத் தொடங்கி விட்டார்கள்.
அமைதியாயிருந்த அந்தக் காட்டின் இடையிலே தீடீரெனப் பல பேர் ஓடிவரும் காலடி யோசை கேட்டது. தீவட்டிகளின் ஒளிக்கதிர்கள் மரங்களின் இடைவெளிகளில் ஊடுருவிக் கொண்டு வந்தன. சீடர்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். இயேசு நாதரைச் சூழ்ந்து கொண்டார்கள். தீவட்டி வெளிச்சத்தில் போர்வீரர்கள் நடந்துவரும் காட்சியைக் கண்டார்கள். அந்தப் போர்வீரர்களை நடத்திக் கொண்டு வந்தான் ஜுடாஸ் இஸ்காரியட்.
அவன் ஓடோடி வந்து, “தலைவரே வாழ்க!" என்று கூவிக் கொண்டே இயேசு நாதரை முத்தமிட்டான். அந்தப் போர் வீரர்கள் முன்னேற்பாட்டின்படி முத்தம் பெற்றவர் தான் தாங்கள் பிடித்துப் போகவேண்டிய ஆள் என்று அடையாளம் புரிந்து கொண்டார்கள்.
இயேசுநாதரின் சீடர்களில் ஒருவன், தன் வாளை உருவி அவரைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனின் காதை அறுத்து விட்டான். காதிழந்தவன், ஆலயத்துப் பெரிய குருவின் வேலைக்காரன் ஆவான்.
"அன்பனே, கத்தியை உறையில் போடு. கத்தியெடுத்தவர்கள் யாவரும் கத்திக்கே இரையாகி யழிவார்கள்" என்று கூறினார். தொடர்ந்து “அன்பனே, நான் இப்போது இறைவனை வேண்டினால், என் உதவிக்குப் பத்து வெள்ளம் தேவ தூதர்களை அனுப்ப மாட்டார் என்றா நினைக்கிறாய்? ஆனால், எழுதிவைத்திருப்பதெல்லாம் நிறைவேறுவது எப்படி?" என்று கூறினார்.
பிறகு அவர் தன்னைப் பிடித்துப் போகவந்தவர்களை நோக்கி, வாளும் வேலும் தூக்கிக் கொண்டு, ஒரு திருடனைப் பிடிக்கவந்தது போலவா நீங்கள் என்னைப் பிடிக்க வர வேண்டும்? நாள்தோறும் கோயிலில் வந்திருந்தேனே அப்போது பிடிக்கவில்லையே! என்று கேட்டார்.
அவர்களோ, இயேசு நாதரைப் பிடித்துக் கயிற்றினால் கட்டி இழுத்துக் கொண்டு சென்றார்கள். தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று பயந்த சீடர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள்.
பீட்டர் மட்டும், சிறிது தொலை பின்னால் இருந்தபடியே, அந்தப் போர்வீரர் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றான்.
இயேசு நாதர் பெரிய குருவின் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆலயக் குருமார் பலர் இருந்தார்கள். அவர்கள் யாவரும் சேர்ந்து இயேசு நாதரைக் குற்றஞ் சாட்டிப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பொய்ச் சான்றுகள் பல கூறி அவர் நாத்திகம் பேசினார் என்று பழித்தார்கள்.
அந்தத் தீயவர்கள் இயேசு நாதரின் முகத்தில் உமிழ்ந்தார்கள்; தலையில் குட்டினார்கள்; கன்னத்தில் அறைந்தார்கள். அத்தனையும் பொறுத்துக் கொண்டு அமைதியின் வடிவமாக அவர் இருந்தார். நடப்பதையெல்லாம் எட்டிப் பார்த்துக் கொண்டு வெளிவாசல் அருகில் நின்றான் பீட்டர்.
வெளியில் குளிருக்காக நெருப்பு மூட்டி, அதிகாரிகளும் வேலையாட்களும் அதைச் சுற்றியிருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். பீட்டரும் அங்கே சென்று அவர்களோடு கூட அமர்ந்து குளிர் காய்ந்தான். நெருப்புக்கு நேரே தன் கைகளை நீட்டிச் சூடு படுத்திக் கொண்டான். அப்பொழுது பெரிய குருவின் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த ஒரு வேலைக்காரி பீட்டரைக் கவனித்தாள், நெருப்பு வெளிச்சத்தில் அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.
“நீ இயேசுவோடு இருந்தவனல்லவா ?" என்று அந்த வேலைக்காரி கேட்டாள்.
இதைக் கேட்டு அச்சம் கொண்ட பீட்டர் சற்றும் தயங்காது, "நீ என்ன சொல்கிறாய்? எனக்கு அவரைத் தெரியாதே" என்று கூறினான். பிறகு அந்த இடத்தை விட்டுச் சிறிது அப்பால் அகன்று சென்றான்.
தலைவாசல் அருகே அவன் சென்ற போது அங்கிருந்த ஒரு வேலைக்காரி, “இந்த மனிதன் நாசரத் இயேசுவின் கூட இருந்தவனல்லவா !" என்று வியப்புடன் கூறினாள்.
மீண்டும் பீட்டர் ; “எனக்கு அவரைத் தெரியவே தெரியாது" என்று ஆணையிட்டுக் கூறினான்.
சிறிதுநேரம் சென்ற பின், நெருப்புக் காய்ந்து கொண்டிருந்தவர்களிற் சிலர் அவனருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன் பீட்டரைப் பார்த்து, “நீ அவரோடு இருந்தவனே தான். உன் பேச்சே உன்னைக் காட்டிக் கொடுக்கிறது" என்று உறுதியாகக் கூறினான்.
இதைக் கேட்டுக் கோபத்துடன் பீட்டர் அந்த ஆளை நோக்கி, "நீ சொல்லுகிற அந்த மனிதரை எனக்குத் தெரியவே தெரியாது தெரிகிறதா?" என்று கூறினான்.
அவன் கூறி வாய் மூடிய நேரத்தில் எங்கிருந்தோ காலைச் சேவல் ஒன்று கூவியது.
உடனே பீட்டருக்கு இயேசு பெருமானுடன் தான் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவரோடு சேர்ந்து சாவதாகத் தான் வாக்களித்ததையும், தான் அத்தகைய உறுதியில்லாத கோழை என்பதைச் சுட்டிக்காட்டி "மூன்று முறை நீ என்னை மறுத்துரைப்பாய்!" என்று அவர் கூறியதையும் நினைத்துக் கொண்டான்.
தன் கோழைத்தனத்தை எண்ணி நொந்து அழுது கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.
இயேசு நாதரை அடையாளங் காட்டிக் கொடுத்த ஜுடாஸ் இஸ்காரியட்டை அவன் வேலை முடிந்த பின் கவனிப்பார் யாருமில்லை.
இரவு முழுவதும் அவன் எங்கெங்கோ சுற்றியலைந்து கொண்டிருந்தான். அவன் மனமும் அமைதியில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. தான் செய்த செயல் எவ்வளவு கொடுமையானது என்று எண்ணி எண்ணி நைந்தான்.
உலகைப்புரக்க வந்த உத்தமரைக் காட்டிக் கொடுக்க அவன் ஆசைப்பட்டு வாங்கிய கைக் கூலியான அந்த முப்பது வெள்ளிக் காசுகளும் அவன் பையை மட்டுமல்லாமல் மனச்சாட்சியையும் உறுத்திக் கொண்டிருந்தன. அவற்றைத் தந்த குருமார்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதென்று அவன் முடிவு செய்து விட்டான். அவற்றைத் தான் வைத்துக் கொள்வதோ, செலவழிப்பதோ மேலும் பாவத்தைச் சுமப்பதாகும் என எண்ணினான்.
அதிகாலையில் அவன் குருமார்கள் கூடி யிருந்த அவைக்குச் சென்றான்.
"நான் பாவம் புரிந்து விட்டேன். நல்லவர் ஒருவர்க்கு இரண்டகம் செய்து விட்டேன்" என்று கூவினான்.
"அதனால் எங்களுக்கென்ன வந்தது ?" என்று கேட்டார்கள் அந்தக் குருமார்கள்.
அவன் திருப்பிக் கொடுத்த பணத்தை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். மேலும் அவனைக் கடிந்து பழித்துப் பேசினார்கள்.'
ஜுடாஸ் கடுந்துயரத்திற்காளானான். குருக்கள்மார் முன்னால் தன் கையில் இருந்த வெள்ளிக் காசுகளைத் தரையில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து விரைந்து சென்றான்.
அன்பே வடிவமான - யாருக்கும் கிடைக்காத அரும்பேறான - ஓர் இனிய தலைவருக்கு இரண்டகம் செய்த தான் உயிர்வாழ்வதற்கே தகுதியற்றவன் என்ற உணர்வுடன் அவன் சென்று கொண்டிருந்தான். இறுதியில் தன்னை யழுத்தும் துன்பத்தைத் தாங்க முடியாமல் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்து போனான்.
16. கை கழுவிய பாவம்
ரோமானிய ஆட்சித்தலைவன் பாண்டியஸ் பைலேட். வெள்ளிக் கிழமை அதிகாலையில் அவன் சபைக்கு யூதர்கள் கூட்டம் ஒன்று வந்தது. கூச்சலும் ஆரவாரமும் மிகுந்த அந்தக் கூட்டம் பாண்டியஸ் பைலேட்டின் தீர்ப்புக்காக ஒரு கைதியைப் பிடித்துக் கொண்டு வந்தது. அந்தக் கூட்டத்தின் முன்னணியிலே ஜெருசலம் ஆலயத்தின் பெரிய குருமார்கள் வந்திருந்தார்கள். அவர்கள் பிடித்து வந்த குற்றவாளி இயேசுநாதர்தான்!
அமைதியும் பெருந்தன்மையான தோற்றமும் கொண்ட இயேசுநாதரைக் கண்ட பாண்டியஸ் பைலேட் மலைத்துப் போனான். இவரா குற்றவாளி இருக்கவே முடியாது. நாள்தோறும் குற்றவாளிகளையே கண்டுகண்டு . பழகிப்போன அவனுக்கு - கொடுமையும், புன்மையும் நிறைந்த குற்றவாளிகளின் முகங்களையே கண்டுகண்டு பழகிப்போன அவனுக்கு, இந்தப் புதிய குற்றவாளியைக் காண வியப்பாயிருந்தது.
குருமார்கள் இயேசுநாதர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். பொய் கலந்த அந்தக் குற்றச் சாட்டுகளிலே பெரிய குற்றச்சாட்டு அவர் தம்மை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகிறார் என்பதுதான். அத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டுக் கொண்டு அவர் பேசாமல் நின்றார்.
பாண்டியஸ் பைலேட், அவரை நோக்கி, "நீங்கள் யூதர்களின் அரசர் என்பது உண்மையா?" என்று கேட்டான்.
'ஆம்! நான் ஓர் அரசன்தான்! உண்மையை அறிந்தவர்கள் என் சொற்கள் உண்மை என்று காண்பார்கள்" என்றார் அவர்.
உண்மை பொய் என்பதெல்லாம் ரோமானிய ஆட்சித் தலைவனுக்குத் தெரியாது. சாட்சியங்களைக் கேட்டு அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு அச் சாட்சியங்களுக்கேற்ற தண்டனையை அளிப்பது தான் அவன் வழக்கம். இயேசுநாதருக்கு எதிராக இருந்த சாட்சியங்களோ பல; அவை வன்மையானவை! மக்கள் கூட்டத்தின் பெருந்தலைவர்களான குருமார்களால் சாட்டப்பட்டவை. ஆனால் அத்தனை சாட்சியங்களைக் கேட்ட பின்னும், அவரைத் தண்டிக்க அவன் மனம் இடங் கொடுக்கவில்லை.
எக் காரணத்தைக் காட்டியாவது அந்தப் பெருந்தன்மை மிக்க, அமைதி வடிவமானமனிதரை விடுவித்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவன் மனத்தில் மேலோங்கி நின்றது. தன் மனக் கருத்தை நிறைவேற்றிக் கொள்ள அவன் ஒருவழியையும் கண்டுபிடித்துவிட்டான்.
பாரபாஸ் என்ற கொள்ளைக்காரன் ஒருவன் பிடிப்பட்டுத் தண்டிக்கப்பட விருந்தான். அவனால் மக்கள் அடைந்த துன்பங்கள் பல. அவன் பெயரைச் சொன்னாலே பிள்ளைகள் அழுத வாய் மூடும்; பெரியவர்கள் நடுநடுங்கிச் சாவார்கள்; பெண்களோ அதிர்ந்து தன் நினைவு இழந்து போவார்கள். அப்படிப்பட்ட பயங்கரமான திருடன் அவன்.
இயேசுநாதரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கொண்ட அந்த ரோமானிய ஆட்சித் தலைவன் மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறினான்; “யூதர்களின் விருந்துவிழா முடியுங்காலத்தில் யாராவது ஒரு கைதியை விடுவிப்பது நெடுநாள் வழக்கம். இப்போது நான் யாரை விடுதலை செய்ய? ஒரு குற்றமுமற்ற இவரையா? அல்லது கொள்ளைக்காரன் பாரபாசையா?"
எல்லாருக்கும் தீமையே புரிபவனான பாரபாசை விடுதலை செய்யும்படி யாரும் கேட்க மாட்டார்கள்; அதனால் பெருந்தன்மை மிக்க இயேசுநாதரை விடுவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தான் பாண்டியஸ் பைலேட். ஆனால், குருமார்கள் பாரபாசை விடுதலை செய்யும்படி கேட்குமாறு மக்களைத் தூண்டி விட்டார்கள்.
கண்ணை மூடிக் கொண்டு குருமார்கள் கூறியதைப்பின்பற்றிய அக்கூட்டத்தினர், "இந்த மனிதன் வேண்டாம்! பாரபாசையே விடுதலை செய்யுங்கள்; பாரபாசையே விடுதலை செய்யுங்கள்" என்று கூவினார்கள்.
மக்கள் கூட்டத்தின் கண் மூடித்தனமான இந்த வேண்டுகோளைக் கேட்டு பாண்டியஸ் பைலேட்டு மலைத்துப் போனான். அவன் எதிர்பார்த்தது ஏமாற்றமாகி விட்டது.
“தாம் ஓர் அரசர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மனிதரை என்ன செய்வது?" என்று கேட்டான்.
“சிலுவையில் அறையுங்கள்" என்று கூறியது மக்கள் கூட்டம்.
“இந்தத் தண்டனை தேவைதானா? தம்மை ஓர் அரசர் என்று சொல்லிக் கொண்டதைத் தவிர அவர் உங்களுக்கு என்ன தீமை செய்தார்?" என்று கேட்டான் ஆட்சித் தலைவன்.
இந்தக் கேள்வி அவர்கள் மனத்தை மாற்ற வில்லை. இரக்கவுணர்வோ, நீதி நெறி என்ற எண்ணமோ சற்றுமற்ற அந்தக் கும்பல், “சிலுவையில் அறையுங்கள்!" என்றே மீண்டும் மீண்டும் கூவியது.
"உங்கள் அரசரையா நான் சிலுவையில் அறைய வேண்டும்?" என்று மீண்டும் ஒரு முறை கேட்டான் பாண்டியஸ் பைலேட்..
“சீசரைத் தவிர எங்களுக்கு யாரும் அரசரல்லர். இந்த மனிதனை நீர் விடுதலை செய்தால் நீர் சீசரின் நண்பர். அல்லர்!" என்று வன்னெஞ்ச மிக்க குருமார்கள் அவனை அச்சுறுத்தினார்கள்.
சீசர் என்ற சொல் காதில் விழுந்தவுடன் பாண்டியஸ் பைலேட் மனம் துணுக்குற்றது. அவன் சீசரின் கீழ் வேலை செய்பவன். அவருக்காக ஜெருசலத்தை ஆள்பவன். அவரிடம் தன்னைப் பற்றி இந்தக் குருமார்கள் ஏதேனும் தவறாகச் சொல்லி வைத்தால் தன் கதி என்ன ஆகும் என்று நினைத்த போது அவன் உள்ளம் நடுங்கியது. ஒருவரைக் காப்பாற்றுவதற்காகத் தான் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை அவன் விரும்பவில்லை.
பாண்டியஸ் பைலேட் தன் ஆட்களைத் தண்ணீர் கொண்டு வரச் செய்தான். கூட்டத்தின் முன் அத்தண்ணீரால் தன் கைகளைக் கழுவிக் கொண்டான். “தண்டனைக் குரிய குற்றம் எதுவும் புரியாத இந்த மனிதரைத் தண்டிக்கும் பாவம் என்னைச் சேர்ந்ததல்ல. இவருடைய இரத்தத்தைச் சிந்தும் செயலுக்கு நான் பொறுப்பாளியல்ல! கண்டீர்களா?" என்று கேட்டான்.
"அந்தப் பாவம் எங்களைச் சேரட்டும், அவருடைய இரத்தம் எங்களைச் சேரட்டும்; எங்கள் குழந்தைகளைச் சேரட்டும்!" என்று கூட்டத்தில் இருந்த எல்லாரும் ஒருமித்துக் கூறினார்கள்.
இதைக் கேட்டபின், அவன், கொள்ளைக்காரன் பாரபாசை விடுதலை செய்தான். இயேசு நாதரைச் சிலுவையில் அறையுமாறு தன் வீரர்களிடம் ஒப்படைத்தான்.
17. இறைவனின் பிள்ளை இவரே!
வீரர்கள் இயேசுநாதரைப் பொதுக் கூடத்திற்கு நடத்திச் சென்றார்கள். அங்கு எல்லாப் போர் வீரர்களும் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர் உடுத்தியிருந்த ஆடைகளைக் கழற்றி விட்டு ஒரு சிகப்புத்துண்டை எடுத்து அவரைப் போர்த்தினார்கள்.
அரசர்களின் திருமுடியைப் போல் முள்ளினால் செய்து அதை அவர் தலையில் சூட்டினார்கள். அவரது வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்தார்கள். அவர் எதிரில் மண்டியிட்டு வணங்கி, "யூதர்களின் அரசரே, வாழ்க!" என்று கூவி நகையாடினார்கள்.
பின்னர் அவர்மேல் உமிழ்ந்தார்கள். கைக்கோலைப்பறித்து அதனால் அவர் தலையில் அடித்தார்கள்.
இந்தப் புன் செயல்களெல்லாம் முடிந்த பின் சிலுவையில் அறைய நடத்திச் சென்றார்கள். சைமன் என்ற ஒருவன் அவ்வழியாகச் சென்றான். அவனைப் பிடித்து வந்து கட்டாயப்படுத்தி அவரை அறைவதற்குரிய சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரச் செய்தார்கள்.
ஜெருசலம் நகருக்கு வெளியில் கல்வாரிக் குன்றில் சிலுவையை நாட்டி அதில் அவரை அறைந்தார்கள். உயிரோடு சிலுவையில் அறையப் பெற்ற அவருடைய தலைக்கு மேலே “இவர் தான் இயேசு; யூதர்களின் அரசர்" என்று எழுதி வைத்தார்கள். அவருக்கு வலதுபுறத்திலும் இடது புறத்திலும் நாட்டிய சிலுவைகள் இரண்டிலும் இரண்டு திருடர்களை அறைந்து வைத்தார்கள்.
"கடவுளின் மகனாக இருந்தால் நீ இந்தச் சிலுவையிலிருந்து இறங்கிவா!" என்று கூறி நகையாடினார்கள் அந்த வீரர்கள்.
“இவர் மற்றவர்களைக் காப்பாற்றினார்; தம்மைக் காத்துக் கொள்ள முடியவில்லை. இவர் இஸ்ரேலின் அரசராயிருந்தால், சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும்! அப்படி வந்தால் நாம் இவரை நம்புவோம். கடவுளின் மகனல்லவா இவர். அந்தக் கடவுள் தன் மகனை இப்போது சிலுவையிலிருந்து விடுதலை செய்யட்டும்” என்று பலபலவரறு ஆத்திரத்தோடு பேசினார்கள் குருமார்கள்.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட ஆறாவது மணி நேரத்தில், பெரிய பெரிய மேகங்கள் யாவும் கீழிறங்கி வந்தன. அவை கதிரவனை மறைத்தன. எங்கும் கனத்த இருள் சூழ்ந்தது. தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கும்பல் அஞ்சி நடுங்கி ஜெருசலம் நகருக்குத் திரும்பியது.
மூன்றுமணி நேரம் இருள் உலகைக் கவ்விக் கொண்டிருந்தது.
இறுதியில் "இறைவா என் வேலை முடிந்தது. உன் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்." என்று இயேசுநாதர் மகிழ்ச்சியோடு கூவினார். அதே நேரத்தில் பூமியதிர்ந்தது. பாறைகள் வெடித்தன. ஜெருசலம் ஆலயத்துத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.
அவர் அருகில் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோமானிய வீரன் " உண்மையில் இந்த மனிதன் கடவுளின் பிள்ளைதான் " என்று தன் வாய்க்குள் கூறிக்கொண்டான்.
இயேசுநாதரின்பால் அன்பு மிகவுடையவனான ஜோசப் என்னும் செல்வன், பாண்டியஸ் பைலேட்டிடம் சென்று அவருடைய உடலை ஒப்படைக்கும்படி கேட்டான். பைலேட் அவ்வாறே கட்டளையிட்டான்.
அந்திப் பொழுதில் ஜோசப்பும் மற்றோர் அன்பனான நிககேடெமசும் அவர் உடலைத் தூக்கிக் கொண்டு ஒரு மலைக் குகைக்குச் சென்றார்கள். அவர்களைத் தொடர்ந்து, மேரியன்னையும், மேரிமக்தலேனாவும் வேறு சில பெண்மணிகளும் சென்றார்கள். அக்குகையின் உள்ளே அவருடைய உடலைக் கிடத்தி, கடைசியாக ஒரு முறை பார்த்து விட்டு அவர்கள் திரும்பினார்கள். ஒருபெரும் பாறாங்கல்லால் அந்தக் குகை வாயில் மூடப்பட்டது.
மறுநாள் ஆலயத்துக் குருமார் பைலேட்டைத் தேடிக் கொண்டு சென்றார்கள்.
“ஐயா, அந்த ஏமாற்றுக்காரன் தான் இறந்த மூன்றாவது நாள் மீண்டும் எழுந்திருப்பேன் என்று சொல்லியிருக்கிறான். அதனால் அவன் சீடர்கள் உடலைத் திருடிச் சென்று அப்புறப்படுத்திவிட்டு, செத்தவன் எழுந்துவிட்டதாகக் கதைகட்டிவிடுவார்கள். ஆகவே, அந்தக் கல்லறைக்குக் காவல் போட வேண்டும்” என்று கூறினார்கள்.
காவல் வைப்பதாக ஆட்சித் தலைவன் கூறியவுடன், அந்தக் குருமார்கள் மனநிறைவுடன் திரும்பினார்கள்.
அவர்களுக்குக் கூறியவண்ணம் காவலுக்கு ஏற்பாடு செய்தான். அவர்களே நேரில் சென்று குகை வாயிலை அடைத்துக் கொண்டிருந்த பாறையில் முத்திரை வைத்து விட்டுச் சென்றார்கள்.
18. என்றும் அன்பரோடு இருப்பவர்
ஞாயிற்றுக் கிழமை காலையில் மேரியும் மேரிமக்தலேனாவும் கல்லறையைப் பார்த்து வருவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்போது ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டது. இறைவனின் தூதன் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து குகைவாயிலை மூடிக் கொண்டிருந்த பாறையைப் புரட்டினான். அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான்.
அவனைக் கண்ட காவல் வீரர்கள் அஞ்சிச் செத்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்.
குகையை நோக்கி வந்த பெண்மணிகளைப் பார்த்த தேவதூதன், "அஞ்சாதீர்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரைத் தேடிக் கொண்டு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அவர் இப்போது இங்கு இல்லை அவர் எழுந்து சென்றுவிட்டார் வாருங்கள்; அவர் கிடந்த இடத்தை வந்து பாருங்கள்.
"செத்தவர்களிருந்து அவர் எழுந்துவிட்டார் என்ற இச் செய்தியை அவரின் சீடர்களிடம் கூறுங்கள். அவர் கலீலிக்குச் சென்றுள்ளார். அங்கே நீங்கள் அவரைக் காணலாம்."
தேவதூதன் கூறிய இச் செய்திகளைக் கேட்டு அச்சமும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்த அப்பெண்மணிகள் மற்ற சீடர்களைத் தேடி விரைந்து சென்றார்கள்.
அவர்கள் மற்ற சீடர்களைத் தேடிச் சென்ற போது இயேசுநாதர், "யாவரும் வாழ்க!” என்று கூறிக் கொண்டே அவர்களைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் திருவடியைப் பற்றிக் கொண்டு வணங்கினார்கள்.
"அஞ்சாதீர்கள்! கலீலிக்குச் செல்லுமாறு என் அன்பர்களிடம் கூறுங்கள். அங்கு அவர்கள் என்னைக் காணலாம்" என்று கூறினார்.
அப்பெண்மணிகள் சீடர்களைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது காவலுக்கிருந்த வீரர்களில் சிலர் ஓடிச்சென்று குருமார்களிடம் நடந்ததெல்லாம் கூறினார்கள்.
குருமார்கள் அந்த வீரர்களிடம் நிறையப் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். “அந்த மனிதனுடைய சீடர்கள் இரவில் வந்து, நீங்கள் தூங்கும் போது அவர் உடலைத் திருடிக் கொண்டு போய் விட்டதாகச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்தக் காவல் வீரர்களும் அவ்வாறே செய்தார்கள்
இயேசுநாதரின் பதினொரு சீடர்களும், அவர் குறிப்பிட்டபடி கலீலியில் ஒரு மலையில் சென்று அவரைச் சந்தித்தார்கள். அவரைக் கண்டவுடன் அவர்கள் வணங்கினார்கள். அப்படியும் அவர்களில் சிலருக்கு ஐயமாகவே யிருந்தது.
“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எல்லா அதிகாரமும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் இப்போதே புறப்படுங்கள். எல்லா நாடுகளிலும் என் போதனைகளைப் பரப்புங்கள். எல்லாருக்கும் தந்தையான இறைவன் பெயராலும், அவர் மகனாகிய என் பெயராலும், புனிதஆவியின் பெயராலும், எல்லாருக்கும் திருமுழுக்குச் செய்து வையுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லா நன்னெறிகளையும் யாவருக்கும் போதியுங்கள். நான் எப்போதும் உலக முடிவுகாலம் வரையிலும் உங்களுடனே இருப்பேன்! அவ்வாறேயாகுக!” என்று கூறிச் சென்றார் இயேசு நாதர்.
கருத்துகள்
கருத்துரையிடுக