ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒர் தீர்க்கதரிசி
வரலாறு
Back
ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒர் தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா
ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒர் தீர்க்கதரிசி
1. ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒர் தீர்க்கதரிசி
1. காப்புரிமை அறிவிப்பு
2. நன்றி
3. மூலநூற்குறிப்பு
4. அணிந்துரை
5. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
6. பதிப்புரை
7. நுழையுமுன்…
8. ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒரு தீர்க்கதரிசி
9. பிரசுராலயத்தின் வார்த்தை
10.வாசகர்களுக்கு
2. தோன்றிய காலம்
3. வாழ்ந்த வாழ்க்கை
4. மகான் தன்மை
5. பல கோணங்களில்
6. அளித்த நன்கொடை
7. உபதேச மணிகள்
நன்றி
இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒர் தீர்க்கதரிசி
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 3
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16 + 256 = 272
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 170/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர்,சென்னை - 600 017. தொ.பே. 2433 9030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப்பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெரு மக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்தசாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர் விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர் களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒரு போதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர் களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாண புரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்து கின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனை யாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலை முறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக் காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
இராமகிருட்டிணர்
- மாந்தநேயப் பண்பாளரின் திருப்பெயர் இராம கிருட்டிணர். ஆன்மீகத்தின் இமயம். அமைதியின் வெளிப்பாடு. மௌன மொழிகளால் மக்களோடு பேசியவர். வசீகர கண்களால் மக்களை ஈர்த்தவர்.
- அன்பை அடித்தளமாகக் கொண்டவர். தொண்டால் வான்தொட வளர்ந்தவர். தூய்மையின் பிறப்பிடம்.இவர் வாழ்வு, - இலட்சிய அடையாளங்கள்.புது உலகின் பொன் விடியல்கள். மாந்தர்குல மாண்புகள்.
துறவின் மலை
- மண்ணாசையையும், பொன்னாசையையும் துறந்த பெருந்துறவி. இவருக்கு முன்பும் உலகத்தைத் துறந்த வர்கள் உண்டு. இவருடைய துறவோ நெருப்பின் நடுவே குளிர்ச்சி தருவது; கதிரவன் முன்பு பனிமலை கரைவது போன்றது.
- இந்தியப் பெருநிலத்தின் ஆன்மீகத்திற்குப் பெருமை சேர்த்த வரலாறு. இந்திய அரசியலுக்கும் குமுகாய வாழ்வுக்கும் பொருளாதார வளத்துக்கும் ஊற்றுக் கண்ணாய் அமைந்த வரலாறு.
- இவரைப் பற்றிப் பேசப்பட்ட பொருள் பெரியது. அதை எழுதிய முறையோ அதனினும் பெரியது. நம் முன் உயிரோ வியமாய்த் தரப் பட்டுள்ளது உள்ளே செல்லுங்கள்.
தளராத தாய்மொழிப் பற்று
- தாய்மொழிப் பற்றில் தளராத ஆர்வம் கொண்டவர். பளபளக்கும் பல பட்டைகளை உடைய உறுதியான வயிரம் போன்ற நெஞ்சினர்.
இராமகிருட்டிணர் - விவேகானந்தர்
- அலை அடங்கி அமைதியாக இருக்கின்ற கடலைப் போன்றவர் இராமகிருட்டிணர். குமுறிக் கொந்தளிக்கும் கடலைப் போன்றவர் விவேகானந்தர்.
- முன்னவர் (இராமகிருட்டிணர்) கீழை அறிவியலுக்குச் சமமானவர். பின்னவர் (விவேகானந்தர்) மேலை அறிவியலை ஆன்மீகக் கண்கொண்டு பார்த்தவர்; முன்னவர் அன்பின் நிறைவாய் இருந்தவர் - பின்னர் அறிவின் நிறைவாய் இருந்தவர்;
- முன்னவர் மௌனத்தில் இனிமையைக் கண்டவர்- பின்னவர் பேச்சிலே பெருமிதம் கொண்டவர்; முன்னவர் ஒளியாய் இருந்தவர் - பின்னவர் ஒலியாய் வாழ்ந்தவர்;
- முன்னவரின் ஆன்மீக ஆற்றலின் முன்னே பின்னவரின் அறிவு ஆற்றல் அடங்கிப் போயிற்று. இப்பெருமக்கள் இருவராலும் இந்தியா பெற்ற பேற்றினை - பெருமையைப் படியுங்கள். வாழ்க்கையைப் பண்படுத்திக் கொள்ளலாம்.
- இலக்கிய வானில் கதிரவனைப் போல் ஒளிவிட்டவர்கள், குமுகாயத் தொண்டில் நிமிர்ந்த நடையினராய் வாழ்ந்த வர்கள், அறிவின் சிகரமாய் இருந்தவர்கள், ஆளுமையால் செல்வத்தால் உச்சத்தில் நின்றவர்கள் இவர்களிடம் கைகட்டி நின்ற வரலாற்றை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் கண்ட நால்வர்
- திரு.வி.க., வ.வே.சு. அய்யர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் - தமிழகம் ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள். இந்திய விடுதலை வேள்வியில் இவர்களின் வாழ்க்கை பின்னிப் பிணைந்த போராட்ட வரலாறு. எளிய வாழ்க்கை யையும், அப்பழுக்கில்லாத மாந்த நேயப் பண்புகளையும் உயர்ந்த வாழ்க்கையாகக் கொண்டவர்கள்.
- நால்வரும் சிறந்த புலவர்கள். உண்மையான புலவன் நாட்டுப் பற்றில்லாதவனாயிருக்க முடியாதென்ற கருத்துடை யவர்கள். இதனால்தான் அரசியலிலே தீவிரமாக ஈடு பட்டார்கள். அரசியலிலே ஈடுபடாதிருந்தால்கூட அறிஞர்கள் என்ற முறையில் பேரும் புகழுமெய்தியிருப்பார்கள்.
- நால்வரும், நல்ல பண்பாடு இன்னதென்பதை உணர்ந்து அந்தப் பண்பாடாகவே வாழ்ந்தவர்கள். நால்வரும், தாங்கள் இந்திய நாகரிகத்தின் படிநிகராளிகள் என்பதை மறவாமல் வாழ்க்கையை நடத்தியவர்கள். இவர்களுடைய அன்றாட வாழ்க்கை எளிய வாழ்க்கை- உயர்ந்த நோக்கம் என்ற வாசகத்திற்கு இலக்கணம் வகுத்தாற் போல் அமைந் திருந்தது.
- நால்வரும் இறைப் பற்றர்கள்; பித்தர்கள் என்றும் கூறலாம். நால்வரிடத்திலும் சமய அறிவு முழுமையாகப் பொலிவுற் றிருந்தது; இதனால் சமரச நோக்குடையவர் களாக இருந்தார்கள். நால்வரும் சாதி, வகுப்பு, இன, மொழி வேற்றுமைகளைக் கடந்தவர்கள்.
- நால்வரும் அகத்துறவு பூண்டவர்கள். நால்வரும் பழமை யையும் புதுமையையும் இணைத்து வைக்கும் பாலமாய் அமைந் திருந்தார்கள்.
- நால்வரும் பேசுவதைப் போலவே எழுதுவதிலும், எழுதுவதைப் போலவே பேசுவதிலும் ஒரே மாதிரியான ஆற்றல் படைத்தவர்கள். நால்வரும் ஒழுக்கநெறி பெரிது முடையாராய் வாழ்ந்தவர்கள்.
- நால்வரும் தாய்நாட்டின் விடுதலைக்காக, தங்களுக் கேற்பட்ட எல்லா இன்னல்களையும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டவர்கள்.
- இவர்கள் விடுதலைக்காக மட்டும் உழைத்தவர்கள் அல்லர். மிகச் சிறந்த அறிவாளிகள். தமிழ் மக்களின் அறிவை வளர்த் தெடுத்தவர்கள். அவர்களின் நெஞ்சத் தைப் பண்படுத்திக் கொடுத்தவர்கள். பலகோணங்களில் வைத்து மதிப்பிட வேண்டிய வயிரம் போன்றவர்கள். இவர்களைத் தமிழகம் அறிந்திருக்க வேண்டாமா?
பெரியாரின் பெருந்தொண்டு
- சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், திராவிட இயக்க வளர்ச்சிக்கு நீரூற்றி வளர்த்த வரலாற்றைப் பற்றி இந்நூலில் உள்ள முரண்பட்ட செய்திகள் நெஞ்சில் முள்ளாக உறுத்து கின்றன. நடுநிலை தவறிய மனவுணர்வு இந்நூலுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. சிந்தியுங்கள். பெரியாரின் பெருந் தொண்டை நினையுங்கள்.
- இதழ்ப் பணியில் வணிக நோக்கம் மேலோங்கி இருக்கும் இன்றைய நிலையில் அன்று தொடங்கப் பட்ட தேசபக்தன் இதழின் நாட்டுத்தொண்டும், தமிழ்த் தொண்டும் இன்றைய தமிழக இதழாளர்கள் படித்துக் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. தமிழர்கள் அறிய வேண்டிய ஒன்று; இந்நூலில் வ.உ.சி. பற்றிய வரலாறு இடம் பெறாதது மிகுந்த மனவருத் தத்தைத் தருகிறது. படியுங்கள்.
- யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - திரூமூலரின் வாக்கிற்குச் சான்றாக வாழ்ந்த இப்பெரு மக்களை நெஞ்சில் நிறுத்துங்கள். சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் ஒழுக்கமே உயர்வாக கொண்டவர்களின் வாழ்வியல் கூறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர்கள் வழிநின்று பண்பட்ட குமுகாயம் அமைவதற்கு சிந்தனை வித்தை ஊன்றுங்கள்.
- இன்று நம் கண்முன்னே பட்டொளி வீசிப் பறந்து கொண் டிருக்கும் தேசியக் கொடிக்கு அடிப்படையாக இருந்த வர்கள். நமக்கு கலங்கரை விளக்கமல்லவா? இவர்கள் யார்? நூலின் உள்ளே தெரிந்து கொள்ள வேண்டாமா?
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய்
_மெய்ப்பு_ வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒரு தீர்க்கதரிசி
பிரசுராலயத்தின் வார்த்தை
ஒரு நாட்டின் பெருமை அதனை ஆளும் அரசர்களிடத்திலே இல்லை; அதனை ஆட்டி வைக்கும் அரசியல் வாதிகளிடத்திலேயு மில்லை. பண பலமோ புய வலியோ படைத்தவர்களாலும் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தரமுடியாது. வற்றாத நதிகளும் குறையாத சுரங்கங்களும் ஒரு நாட்டினுடைய செழுமையை அதிகரிக்கச் செய்யமாட்டா. உயர்ந்த மலைகளும் மதில்களும், அழகிய கட்டிடங்களும் கோயில்களும் ஒரு நாட்டினுடைய உயர்வுக்கும் பண்பாட்டிற்கும் சாட்சிகளாக மாட்டா. ஒரு நாட்டினுடைய பெருமை, செழுமை, உயர்வு எல்லாம் அந்த நாட்டிலே அவதரிக்கும் மகான்களைப் பொறுத்திருக்கிறது. அப்படியானால், இந் நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டாகிய, இந்த மகானுடைய - இந்த நாட்டினுடைய - பெருமையை எங்கள் ஆசிரியர் சர்மாஜி மூலம் ஒரு நூல் வடிவாகச் சமர்ப்பிக்கும் கடமையிலிருந்து நாங்கள் வழுவவே முடியாதல்லவா?
பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்
வாசகர்களுக்கு
கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது வரும். அப்படி வருமானால் அதனைக் கடவுளின் பக்கம் திருப்பலா மல்லவா? இதனாலேயே சத் சங்கம் வேண்டுமென்று சொல்கிறார்கள் பெரியோர்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், கடவுளைக் கண்ட ஒரு மகா புருஷர். இவரைப் பற்றிச் சொல்வது கடவுளைப் பற்றிச் சொல்வதாகும். இவரை அறிவது ஹிந்து மதத்தை அறிவதாகும். ஹிந்து மதமானது யாரையும் அந்நியர் என்று கருதுவதில்லை. எல்லோரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் என்றே ஹிந்து மதம் அநாதிகாலந் தொட்டு கோஷித்துக் கொண்டு வருகிறது. இந்தக் கோஷம் உலகெங்கும் பரவவேண்டும். பலவித வேற்றுமைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்பட்டிருக்கிற இன்றைய உலகத்திற்கு ஹிந்து மதத்தின் சாரத்தை ஊட்டுவது பிரதியொரு ஹிந்துவினுடைய கடமையுமாகும். இந்தக் கடமையைச் செய்வதற்கு இந்தச் சிறிய நூல் ஒரு தூண்டு கருவியா யிருக்குமானால் அது யான் பெற்ற பேறாகும்.
இந்த நூலை எழுத வேண்டுமென்று என்னை ஊக்கிய அன்பர் ஸ்ரீ அரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
வெ. சாமிநாதன்
தோன்றிய காலம்
_“சங்கரருடைய அறிவும் சைதன்யருடைய இருதயமும் கொண்ட ஒருவர் தோன்றுவதற்குக் காலம் பக்குவமுடையதா யிருந்தது. பிரதியொரு மதத்திடமும் ஒரே சக்தி, ஒரே கடவுள் இருப்பதைக் காணக் கூடிய ஒருவர் தோன்றுவதற்குக் காலம் பக்குவமுடையதாயிருந்தது… இத்தகைய ஒரு மனிதர் தோன்ற வேண்டியது அவசியமாயிருந்தது. அந்த மனிதர்தான் ஸ்ரீ ராம கிருஷ்ணர் .”_
- சுவாமி விவேகானந்தர்
ஒரு நாட்டின் பெருமை அதனை ஆளும் அரசர்களிடத்திலே இல்லை: அதனை ஆட்டிவைக்கும் அரசியல் வாதிகளிடத்திலேயும் இல்லை. பண பலமோ புயவலியோ படைத்தவர்களாலும் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தர முடியாது. வற்றாத நதிகளும், குறையாத சுரங்கங்களும் ஒரு நாட்டினுடைய செழுமையை அதிகரிக்கச் செய்ய மாட்டா. உயர்ந்த மலைகளும் மதில்களும், அழகிய கட்டிடங்களும் கோயில்களும் ஒரு நாட்டினுடைய உயர்வுக்கும் பண்பாட்டிற்கும் சாட்சி களாக மாட்டா. ஒரு நாட்டினுடைய பெருமை, செழுமை, உயர்வு எல்லாம் அந்த நாட்டிலே அவதரிக்கும் மகான்களைப் பொறுத்திருக்கிறது.
எந்த நாட்டில் மனிதத் தன்மைக்கு இலக்கியமாயுள்ள மகா புருஷர்கள் தோன்றுகிறார்களோ, எந்த நாட்டில் நான், எனது, எனக்கு என்று வாழாமல், பிறர், பிறரது, பிறருக்காக என்று வாழ் கின்ற உத்தமர்கள் உதிக்கிறார்களோ, எந்த நாட்டில் மனிதர்க ளுடைய மேலான தன்மைகளைத் தூண்டி விடக் கூடிய சிருஷ்டி களைச் செய்கின்ற கர்த்தர்கள் உதயமாகின்றார்களோ, அந்த நாடுதான் பெருமை கொள்ளத் தகுதி யுடைய நாடு. அந்த நாட்டைத் தான் உயர்ந்த நாடு, செழுமையுள்ள நாடு என்று சொல்ல வேண்டும். அந்த நாடுதான், சரித்திரத்திலே சாசுவதமான தானத்தைப் பெறுதற்குரியது.
எந்த நாட்டில் இத்தகைய மகான்கள் தோன்றுவது நின்று விடுகிறதோ அந்த நாட்டினுடைய நல்வாழ்வும் முற்றுப் பெற்று விடுகிறது. அந்த நாட்டினுடைய புராணம், நாகரிகம் ஆகிய யாவும், பொருட்காட்சி சாலையைப் புகலிடமாகக் கொண்டு விடுகின்றன. கிரீ தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கி.மு. நான்காவது நூற்றாண்டு வரை அதற்கேற்பட்டிருந்த பெருமையும் புகழும் போல, அந்த நூற்றாண்டுக்குப் பிறகு அதற்கு ஏற்படவே யில்லை. ஏனென்றால், அந்த நாட்டிலே வழிவழியாக வந்து கொண்டிருந்த மகான் பரம்பரையானது அரிட்டாட்டலோடு1 நின்றுவிட்டது. அவனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள், எத்தனையோ நாவலர்கள், எத்தனையோ வீரர்கள் அந்த நாட்டில் தோன்றினார்க ளென்பது வாதவம். ஆயினும் என்ன பிரயோஜனம்? அவர்கள் மகான்களில்லையே. ஒரு நாட்டிற்குப் பெருமையை உண்டுபண்ணுஞ் சக்தி, இருக்கிற பெருமைக்குப் பங்கம் வராமல் பாதுகாக்குஞ் சக்தி, மகான்களுக்குத்தான் உண்டு. மகா அலெக்ஸாந்தர்2 அரிட்டாட் டலினுடைய சிஷ்யன்தான்; சிறந்த வீரன்தான். ஆனாலும் அவனால் கிரேக்க வாழ்வுக்குப் பெருமை தேடித்தர முடியவில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய பேராசையிலே தன்னையும் அழித்துக் கொண்டு, தனது நாட்டின் பெருமைக்கும் முற்றுப் புள்ளிவைத்து விட்டான். மகா அலெக்ஸாந்தருடைய மரணத்தோடு, கிரேக்க இலக்கியத்திற்கும், தத்துவஞானத்திற்கும், கலைகளுக்கும் ஏற்பட்டிருந்த செழிப்பான காலமும் முடிந்து விட்டது என்பது ஒரு சரித்திராசிரியனுடைய வாக்கு.
மகான்கள், கால தேச வர்த்தமானங்களைக் கடந்தவர்கள். இவர்கள் ஒரு காலத்திலே தோன்றி, அந்தக் காலத்திற்கேற்ற வகையில் சில காரியங்களைச் செய்கிறார்களென்பது வாதவம். ஆனால் அந்தக் காரியங்கள், எக்காலத்திற்கும் பொருத்தமுடையனவாயிருக் கின்றன; பிரயோஜனமுடையனவாகவும் இருக்கின்றன. இங்ஙனமே இவர்கள், ஒரு தேசத்திலே பிறந்தாலும் உலகத்திற்காக வாழ்கி றார்கள். எந்நாட்டவரும் எக்காலத்தவரும் போற்றக்கூடிய விதமாக வும் பின்பற்றக் கூடிய விதமாகவும் இவர்களுடைய வாழ்க்கை இருக் கிறது. இவர்கள் காலத்திலே நிகழும் வர்த்தமானங்கள், இவர்க ளுடைய தீர்க்க திருஷ்டியை மறைப்பதில்லை; உலகத்தை ஒரு குடும்பமாகக் கருது கின்ற இவர்களுடைய மனப்பான்மையை மாற்றுவதில்லை; இவர் களுடைய மன அமைதியைக் குலைப்பது மில்லை.
இவர்கள் பிறந்த நாடு மண்ணிலே புதைந்து போய்விடுகிறது; இவர்கள் வாழ்ந்த காலம் ஜனங்களுடைய மறதியின் ஆழத்திலே மறைந்து விடுகிறது; இவர்களுடைய அன்றாட வாழ்க்கையை யொட்டி நடைபெற்ற நிஜமான சம்பவங்கள்,காலாந்தரத்தில் கட்டுக்கதைகளாக மாறிவிடுகின்றன. ஆனால் இவர்கள் நித்தியமாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்; இவர்களுடைய சிருஷ்டிகள் என்றும் ஜீவகளையோடு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன; இவர் களுடைய தொண்டு பிற்காலத்தவருக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கிறது.
ஜூலிய சீஸருடைய1 ரோமராஜ்யம் சரித்திராசிரியர் களுடைய ஆராய்ச்சிப் பொருளாகப் போய் விட்டது. முஸோலினியி னுடைய2 இத்தாலிய சாம்ராஜ்யம் நிலை குலைந்து போய்விட்டது. ஆனால் வர்ஜிலும்3 தாந்தேயும்4 இன்னமும் அங்கு இசை முழக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; செயிண்ட் பிரான்சிஸும்5 ஸவோன ரோலாவும்6 இன்னமும் அங்கு உலவிக் கொண்டுதான் இருக்கி றார்கள்.
மகா ஆட்டோ மன்னன்7 கண்ட ஜெர்மனி எங்கே? மகா ப்ரெடெரிக்8 ஆண்ட ஜெர்மனி எங்கே? ஹிட்லர்9 நிர்மாணித்த மூன்றாவது ஏகாதிபத்தியம்10 எங்கே? சீரழிந்து சிதறுண்டு போய் விட்டது. ஆனால் மார்ட்டின் லூதருடைய11 வாக்கும் கெதேயி னுடைய12 வாக்கும் இன்னமும் அங்கு ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
பொஹிமியா13 என்றொரு தேசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களல்லவா? அதன் உருமாறி பெயரும் மாறிப்போய் விட்டது. ஆனால் அந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவன் ஒரு குருடன். ஜான் ஜிகா14 என்று பெயர். அவன் அடிமைக் குழியிலே அழுந்திக் கிடக்கிறவர்களுக்கு இன்னமும் வெளிச்சம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.
சீனாவின் மீது உங்கள் சிந்தனையைச் சிறிது செலுத்துங்கள். அந்தச் சீனாவைப் பெருஞ்சுவர் போட்டு வளைத்துக் கட்டினான் ஹுவாங் தீ15 என்ற ஓர் அரசன். பெரிய காரியந்தான். உலகத்து ஏழு அதிசயங்களுள் அந்தச் சீனப் பெருஞ்சுவர் ஒன்றாக இருக்கிற தென்பது வாதவம். ஆனால் அவனையோ, அவன் ஆண்ட சீனாவையோ எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துக்கொண் டிருக்கிறார்கள்? கன்பூஷியஸ்!16 இந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் சீனாவின் மீது நமக்கு ஒருவித பக்தி உண்டாகிறது. அவனுடைய இனிய உபதேசங்கள் நம் செவியிலே வந்து விழுந்து கொண்டிருக்கிற மாதிரியான உணர்ச்சி ஏற்படுகிறது. சீனாவின் நாற்புற எல்லைகள் எத்தனை தடவை எப்படி எப்படி மாறிய போதிலும், கன்பூஷியஸும், அவனைப் போல் அந்த நாட்டில் அவதரித்த மற்ற மகான்களும் சன்மார்க்கத்திலே செல்லும் பிரயாணிகளுக்கு, என்றென்றுமுள்ள வழி காட்டிகளாக இருந்து கொண்டிருப்பார்கள்.
மகான்கள், காலத்தின் தேவையை அனுசரித்து அவதரிக்கிறார்கள்; அந்தக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். ஜனங்களுடைய எண்ணத்திலே கலக்கம். பார்வையிலே சூனியம், செயலிலே தடுமாற்றம், இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் மகான்கள் தோன்றி அந்த ஜனங்களுடைய எண்ணத்திலே தெளிவையும், பார்வையிலே பிரகாசத்தையும், செயலிலே நிதானத்தையும் உண்டு பண்ணுகிறார்கள். இவர்கள் நித்திய புருஷர்களானபடியால், எந்த நாடு, எந்தக் காலம், தங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறது என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவர்கள் தீர்க்கதரிசி களானபடியால், இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற விதமாகத் தங்கள் சொல்லையும் செயலையும் அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொல்லாலும் செயலாலும் என்ன பயனேற்படு மென்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பயனை எதிர்பார்த்தால்தானே கவலைப் படப் போகிறார்கள்? ஆனால் இவர்கள் எதிர்பார்த்தாலும் எதிர்பாரா விட்டாலும் இவர்களுடைய சொல்லும் செயலும் நிச்சயமாகப் பயனளிக் கின்றன. பயனை எதிர்பாராமல் பணி செய்வது இவர்கள் சுபாவம்; பயனுண்டாகு மானால் அஃது இவர்களுடைய பணியின் பரிணாமம்.
உலகத்தில் இதுவரை எத்தனையோ மகான்கள் அவதரித் திருக்கிறார்கள். அவர்கள் அவதரித்த காலத்தின் நிலைமையை நாம் சிறிது நினைவுக்குக் கொண்டு வந்து பார்த்தோமானால், அவர் களுடைய வருகை எவ்வளவு அவசியமாயிருந்தது என்பதும், அந்த அவசியத்தை நிறைவேற்றவே அவர்கள் அவதரித்தார்கள் என்பதும் நன்கு புலனாகும்.
உதாரணமாக யேசுநாதர் அவதரித்த காலத்தின் நிலைமையைச் சிறிது கவனிப்போம். அவர் பிறந்த காலத்தில் உலகத்தை அடர்ந்த (அஞ்ஞான) அந்தகாரம் மூடிக்கொண்டி ருந்தது. அப்பொழுதைய உலகத்தின் நெடுகிலும் உருவ வழிபாடு நிறைந்திருந்தது. மூடப் பழக்க வழக்கங்களும் அனாசாரங்களும் மலிந்திருந்தன. கிரீ என்ன, ரோமாபுரி என்ன, எகிப்து என்ன, இந்த நாடுகளிலெல்லாம் ஜனங்கள் பலவிதமான தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள். அக் காலத்து ஜனங்களுடைய மனதில் இந்தப் பல தெய்வ வழிபாடு நன்றாக ஊறிக்கிடந்தது. ஆடம்பர வாழ்க்கை, சுகபோகங்கள் ஆகிய இவைகளுக்கு மத்தியில் ஒழுக்க மென்பது உடைந்துபோய்விட்டது. அவ்வப்பொழுது மகாபுருஷர்களால் ஏற்றிவைக்கப்பட்ட அறிவு விளக்கு, உண்மை விளக்கு, அணைந்து போயிருந்தது. எந்த தரும நியாயங்களை மகான் ஸாக்ரட்டீ1 வகுத்து விட்டுப் போனானோ, எந்த தரும நியாயங்களுக்காக அவன் தன் உயிரையே பலி கொடுத்தானோ, அந்த தரும நியாயங்களின் அனுஷ்டானத்தினால் ஏற்பட்டு வந்த நன்மைகள் யாவும் அடையாளம் தெரியாமலே போய்விட்டன. இதே கதியைத் தான் பேரறிஞனாகிய பிளேட்டோ2 வகுத்துவைத்துப் போன தத்துவ ஞானமும், அரிட்டாட்டல் வகுத்து வைத்துப் போன விஞ்ஞான அறிவும் அடைந்தன. உண்மை யான தத்துவ ஞானத்திற்குப் பதிலாக போலித் தத்துவங்கள் அங்கு மிங்குமாக உலவின. பெரும்பாலோ ரான ஜனங்கள், உண்பது, குடிப்பது, சந்தோஷமாயிருப்பது என்ற வகையிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்; பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டார்கள். இன்னும் பலர், ஒழுக்கத்தின் அடி வேரையே வெட்டி வீழ்த்திவிட்டனர். உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்பட்டிருந்த இந்தச் சீரழிவுக்கு மத்தியிலே, யூதமதம் மட்டும் தனிப்பட்ட சிறப்புடன் காட்சி யளித்துக்கொண்டிருந்தது. கடவுள் ஒருவரே என்ற கொள்கையை அந்த மதம் முக்கியமாகக் கொண்டிருந்த தனால், அஃது - அந்த மதம் - மேற்படி சீரழிவுக்கு மத்தியிலே பெரிய ஆறுதலாயிருந்தது. ஆனால் அந்த மதத்திலே கூட வெறும் சடங்குகள் நிரம்பிக் கிடந்தன. இந்த மதத்தினர் இரண்டு பிரிவின ராகப் பிரிந்திருந்தனர். ஆக, உலக முழுவதும் ஒரே இருட்டாகக் காணப்பட்டது. அந்த நிலையில் ஒரு வெளிச்சம் தேவை யாயிருந்தது. மானிட சமுதாயம் கடுமையானதொரு வியாதியினால் அவதைப் பட்டுக்கொண்டு இறக்குந் தறுவாயிலிருந்தது. அதிலிருந்து காப்பாற்ற அவசரமான ஒரு பரிகாரம் அவசியமாயிருந்தது. இந்த அவசியத்திற்காகவே யேசுநாதர் தோன்றினார். அந்தக் காலத்திற்கு அவர் வருகை தேவையாக இருந்தது.
மகான்களுடைய அவதார வரலாறுகளை நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், அவர்கள் அவதரித்த காலத்தில், ஏறக்குறைய மேலே சொன்ன நிலைமைதான் இருந்தது என்பது நன்கு தெரியவரும். புத்தர், கன்பூஷிய, ஸாக்ரட்டீ ஆகிய இப்படிப்பட்ட மகான்கள் அவதரித்த காலத்தில் உலகம் இருந்த நிலைமை என்ன? அவரவர்கள் நாடு இருந்த நிலைமை என்ன? அப்பொழுதைய ஜனங்களின் மனப்போக்கு எப்படி இருந்தது? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் ஆசிரியனுடைய வாக்குப்படி, அப்பொழுதிருந்த தலைமுறையினருக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இருந்த தொடர்பு அற்றுவிட்டது. தேசீய உணர்ச்சி என்பது இறந்தொழிந்தது. போர்க்குணம் எங்கும் பரவியிருந்தது. இந்த நிலைமையிலிருந்து உலகத்தைக் காப்பாற்று வதற்காகவே, ஜனங்களை நல்வழிப் படுத்துவதற்காகவே மேற் சொன்ன மகான்கள் தோன்றினார்கள். எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் மகான்கள் அவதரிக்கிற போழ்து இந்த மாதிரியான ஒரு நிலைமையே இருந்திருக்கிறது.
இனி, புனிதமான நமது நாட்டிற்கு வருவோம். உலகத்திற்கு உய்யும் வழி காட்டிய உத்தமர்கள் எத்தனை பேர் நமது தாய் நாட்டில் உற்பவித்திருக்கின்றனர்! எண்ணித்தான் ஆகுமா இவர்களின் வரிசையை? சொல்லத்தான் போகுமா இவர்களின் பெருமையை?
இத்தகைய உத்தமர்களை ஈன்றளிக்கிற விஷயத்தில் இந்தியா தனிச் சிறப்பு வாய்ந்ததென்பதை நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் இந்தியாவிலேதான் மகான் களின் பரம்பரை என்ற ஒரு பரம்பரை உண்டு. இந்த மகான் பரம்பரைக் கொடியின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று எந்தச் சரித்திராசிரி யனாலும் துணிந்து கூற முடியாது. அப்படியே இந்தக் கொடி எவ்வளவு தூரத்திற்குப் படர்ந்து செல்லும் என்று எந்த தீர்க்கதரிசியினாலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
இந்தியாவின்மீது எத்தனையோ படையெடுப்புகள் வந்து மோதியிருக்கின்றன; அந்நியர்களுடைய ஆதிக்கங்கள் நடைபெற்றிருக் கின்றன. வேறெந்த நாடாயிருந்தாலும் இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்து பட்டிருக்கும். ஆனால் இந்தியா வீழவே இல்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறது; இன்னும் பல் கோடி நூறா யிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும்; வாழ்ந்து கொண்டிருப்ப தோடு மட்டுமல்லாமல், உலகத்திற்கு வழி காட்டிக் கொண்டுமிருக்கும். இஃது உறுதி. இப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்ன ஆதார மென்று வாசகர்கள் கேட்கலாம். இந்தியாவிலே நூற்றாண்டுகள் கணக்காக அவதரித்துக் கொண்டு வந்திருக்கிற உத்தம புருஷர்கள் - இவர்களை மகான்களென்றோ, மகா புருஷர்களென்றோ, தீர்க்க தரிசிகளென்றோ, எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள் ளுங்கள். - இந்தியா, சாசுவதமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், உலகத்திற்கு நிரந்தரமாக வழிகாட்டிக் கொண்டிருப்பதற்குமான அதிவாரத்தை அமைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த அதிவாரந்தான் ஆத்மீக அதிவாரம். இந்த அதிவாரத்தின் மீதுதான் இந்தியாவின் அரசியல் வாழ்வு, சமுதாய வாழ்வு, பொருளாதார வாழ்வு ஆகிய யாவும் நிர்மாணம் செய்யப் பட்டிருக் கின்றன. அழியாத ஒன்றை அதிவாரமாகக் கொண்டிருப்ப தனால் தான், இந்தியா, அழியாமல் இருந்து வருகிறது; இனியும் இருந்து வருமென்று சொல்ல முடிகிறது.
இந்தியாவிலே அவதரித்த மகான்கள், எந்த நிலைமையிலே எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள்; எந்த இடத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள்; சிருஷ்டிக்க வேண்டிய இடத்திலே சிருஷ்டித்தும், சம்ஹரிக்க வேண்டிய இடத்திலே சம்ஹரித்தும், பரிபாலனம் செய்ய வேண்டிய இடத்திலே பரிபாலித்தும் வந்திருக்கிறார்கள்.
ஜனசமுதாயத்தின் கட்டுக் கோப்பு தளர்ந்து போயிருக்கிறதா? பழமையின்மீது துரு ஏறிவிட்டதா? லௌகிக சக்திகள் வலுத்துப் போய் பாரமார்த்திகத்தை அழுத்திக் கொண்டி ருக்கின்றனவா? ஜனங்கள், அறியாமையாகிற அந்தகாரத்தில் தவித்துக் கொண்டி ருக்கிறார்களா? அசிரத்தை காரணமாகத் தூங்கிக் கொண்டி ருக்கிறார்களா? அடிமைக் குழியிலே விழுந்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்களா? இந்த அறியாமையினாலும் அடிமைத்தனத் தினாலும், அவர்களிடத் திலே நியாயமாக இருக்கவேண்டிய மேலான தன்மைகளெல்லாம், இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிப்போய் அடியோடு நசித்துப் போய் விடுகின்ற நிலைமையை அடைந்து விட்டனவா? இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் மகான்கள் தோன்றி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள். எந்த மாதிரியாக இவர்கள் தோன்றிய போதிலும், அதாவது சிருஷ்டி கர்த்தர் களாகவோ, சம்ஹார மூர்த்திகளாகவோ, பரிபாலன புருஷர் களாகவோ எப்படித் தோன்றிய போதிலும், இவர்களுடைய நாட்ட மெல்லாம் நிலையான ஒன்றின்மீதுதான் எப்பொழுதும் பட்டுக் கொண்டேயிருந் திருக்கிறது. அதனின்று இவர்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதே கிடையாது. அதற்கு ஒரு பெயர் கொடுத்து, அந்தப் பெயருக்குள்ளே அதனைச் சிறைப்படுத்தவும் இவர்கள் விரும்பவில்லை. அறிஞர்கள் அதற்குப் பல பெயர்களிட்டழைத்தாலும், அஃதென்னவோ ஒன்று தான், அது நிலையாயுள்ளது, காலத்தைக் கடந்தது, மனிதனுடைய சிந்தனா சக்திக்கு அப்பாற்பட்டது, அஃது இன்ன உருவமுடையது என்று நிர்ணயித்துச் சொல்ல முடியாது என்பதே இவர்களுடைய கோட்பாடா யிருந்தது.
நிலையாயுள்ள அந்த ஒன்று என்ன? அதுதான் சத்தியம்; தர்மம்; அன்பு; அழகு; சிவம்; சக்தி;கிருஷ்ணர்; யேசு; அல்லா. யார் எந்தப் பெயரிட்டழைத்தாலென்ன? பெயரிலே என்ன இருக்கிறது? எங்கும் இருக்கின்ற, எல்லாருக்கும் தேவையாயிருக்கின்ற நீரை, சிலர் ஜலம் என்கிறார்கள்; சிலர் பானி என்கிறார்கள்; சிலர் வாட்டர் என்கிறார்கள். இப்படிப் பல பெயர்களிட்டழைப்பதினால், அந்த நீர், பல நீர்களாகி விடாதல்லவா? அதனுடைய தன்மையும் மாறா தல்லவா?
நிலையாயுள்ள அந்த ஒன்று - அந்தப் பரம்பொருள் - எல்லா ஜீவராசிகளிடத்திலும் சிறு பொறியாக விளங்கிக் கொண்டிருக் கிறது. ஆகையால் எல்லா ஜீவராசிகளும் அந்தப் பரம்பொருளின் - அந்த ஒரு கடவுளின் - குழந்தைகள். எப்படி ஒரு தாயின் வயிற்றிலே பிறந்தவர்கள் அத்தனை பேரும் சகோதரர்களோ அப்படியே ஒரு கடவுளின் குழந்தைகளான அத்தனை கோடி ஜீவராசிகளும் - ஆம், கோடானுகோடி ஜீவராசிகளும் - சகோதரர்கள்.
இத்தகைய உண்மைகளையே எல்லோருக்கும் உணர்த்தி வந்தனர் இந்தியாவிலே தோன்றிய மகா புருஷர்கள். இவர்களுடைய வாக்கி லிருந்து உதித்த எந்த மணிமொழியை வேண்டுமானாலும் கேளுங்கள்; இவர்கள் புரிந்த எந்த ஒரு செயலை வேண்டுமானாலும் பரிசீலனை செய்து பாருங்கள்; அவற்றில் இந்த உண்மைகள் ஒளிவிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கும்.
இந்த உண்மைகளை உணர்ந்திருந்தமையாலும், பிறருக்கு உணர்த்தி வந்தமையாலும், இவர்கள், யாரையும் தங்கள் ஆதிக்கத் திற்குக் கட்டுப் படுத்த விரும்பவில்லை; தங்களுடைய அறிவுக்குக் கூட மற்றவர்களை அடிமைப்படுத்தக் கூடாதென்று கருதினார்கள்; தங்களுடைய உபதேசங்களுக்கு இணங்கி நடக்க வேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்தியது கிடையாது. இந்தியாவில் தோன்றிய மகான்களிடத்திலே காணப்பெறுகின்ற விசேஷமான அமிசம் இது.
இந்த மகான்களின் வரிசையிலே வந்தவர்தான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர். பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்தில் இவர் வருகை இந்தியாவுக்கு அவசியமாயிருந்தது. எப்படி அவசிய மாயிருந்த தென்பதைப் பற்றிச் சிறிது விளக்குவோம்.
பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நன்றாக வேரூன்றத் தொடங்கி விட்டது. ஆங்கிலேயர்களுடைய நிருவாகத் திறமை, கல்வி முறை, எண்ணப்போக்கு இவைகளில் இந்தியர்களுக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட ஆரம்பித்தது. அன்றாட விவகாரங்களில் ஆங்கில பாஷையை உபயோகிப்பதும், ஆங்கில முறைகளைப் பின்பற்று வதும், ஆங்கில அரசாங்கத்தின் கீழ் உத்தியோகம் வகிப்பதும் கௌரவமாகக் கருதப் பட்டன. உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்ற எண்ணத் திற்குப் பதில் உத்தியோகம் புருஷலட்சணம் என்ற எண்ணம், கிராமங்களிலே வசித்துவந்த மத்தியதர வகுப்பின ரிடத்தில் பரவத் தொடங்கியது. இதன் விளைவாகக் கிராமங்களின் செல்வாக்கு குன்றி வந்தது; நகரங்களுக்குப் புதிய வாழ்வு பிறந்தது.
நாட்டிலே ஆங்கிலம் பயிலுவிக்கும் கல்விச் சாலைகள் அதிகரித்து வந்தன. இந்தக் கல்விச்சாலைகளில் பயின்ற இளைஞர்கள், இந்திய உடலும் ஆங்கில உள்ளமும் படைத்தவராயினர். மேனாட்டி லிருந்து வந்த எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு கொள்கையையும் கைகொட்டி வரவேற்றனர். அப்படி வரவேற்றதோடல்லாமல், இந்தியாவின் பழமையைப் பரிகசிக்கவும் தலைப்பட்டனர். இந்தியாவுக்கென்று தனியான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கலாசார பரம்பரை இருக்கிறதா, நமது முன்னோர்களுக்கு லௌகிக வாழ்க்கை யென்பது ஏதேனும் தெரியுமா என்று இப்படியெல்லாம் கேட்கலாயினர். இனி நாம் இந்த நாகரிக உலகத்தில் மற்ற நாட்டினரைப் போல் வாழ வேண்டுமானால், நமது முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் பிரயோஜன மில்லை; மேனாட்டினர் செல்லும் பாதையிலே, அவர்கள் கோலும் வழியிலே செல்லவேண்டும்; இவை போன்ற எண்ணங்கள் இவர்களை ஆட்கொண்டன.
மற்றும் பதினெட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மேனாட்டில் பரவி வந்த உலகாயதக் கொள்கைகள் இந்தியாவிலும் பிரவேசித்தன. அந்தக் கொள்கைகளை ஆதரித்து எழுதப் பெற்ற நூல்களை இந்திய இளைஞர்கள் படித்தனர். படித்துவிட்டு, கடவுள் ஒருவர் உண்டா, அப்படி உண்டானால் அவரை அறிவினால் அறிய முடியுமா, மதம் வாழ்க்கைக்கு அவசியமா என்பன போன்ற கேள்வி களைக் கேட்க முற்பட்டனர். நாதிகம், மெதுவாக இவர்கள் மனதிலே முளைவிட்டது. மேனாட்டின் மீது இவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு ஆர்வத்துடனும் பக்தியுடனும் தங்கள் பார்வையைச் செலுத்தினரோ அவ்வளவுக் கவ்வளவு வேகமாக, தாய் நாட்டின் மீதும் அதன் புராதனத்தின் மீதும் இவர்கள் கொண்டிருந்த பிடிப் பானது தளர்ந்து வந்தது.
ஆங்கிலம் பயிலுவிக்கும் கல்விச்சாலைகள் நாட்டில் அதிகரித்து வந்தன என்று மேலே சொன்னோமல்லவா, இதற்கு முக்கிய காரணமா யிருந்தவர்கள் கிறிதுவப் பாதிரிமார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்வி யோடு கிறிதுவ மதத்தையும் சேர்த்துப் பரப்பினர். கல்விக்காக இவர்கள் செய்த சேவையை யாராலும் பாராட்டாமலிருக்க முடியாது; அதனை யாரும் மறக்கவும் முடியாது. அதற்காக இவர்களுக்கு இந்தியா என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் கிறிதுவ மதத்தைப் பரப்புகிற உற்சாகத்தில் என்பதற்குப் பதில் திணிக்கிற உற்சாகத்தில் என்று சொன்னாலும் பொருந்தும். - பிற மதங் களைக் கண்டபடி தூற்றினர்; கிறிதுவ ரல்லாதாருக்குப் பாவத்தினின்று விடுதலையே கிடையாதென்கிற மாதிரியாகப் பிரசாரஞ் செய்தனர்.
இவர்களுடைய பிரசாரம், ஜனங்களுடைய மனதில், சிறப்பாக ஆங்கிலம் படித்த இளைஞர்களின் மனதில் மெது மெதுவாகப் படிந்து வந்தது. இந்தப் பாதிரிமார்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு எப்பொழுதும் எவ்வகையிலும் கிடைத்து வந்தது. இந்த ஆதரவை வைத்துக்கொண்டு இவர்கள் கல்விச்சாலைகளென்ன, ஆபத்திரிக ளென்ன, ஆகிய இவைகளை ஆங்காங்கு நிறுவினர்; பத்திரிகைகள் நடத்தினர்; சுதேச பாஷைகளில் பல நூல்களை வெளியிட்டனர். தவிர, இந்தப் பாதிரிமார்கள், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக எவ்வித கஷ்டங்களையும் சகித்துக் கொண்டார்கள்; பொறுமை யைக் கடைப்பிடித்தார்கள்; இனிய பேச்சுக் களினாலும் அன்பான உபசரணைகளினாலும் ஜனங்களைத் தங்கள் வசப்படுத்தினார்கள். இவையெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு ஜன சமுதாயத்திலே ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தச் செல்வாக்கின் பயனாக இவர்களுடைய மதப் பிரசாரத்திற்கு ஜனங்கள், சிறப்பாக மேலே சொன்ன மாதிரி ஆங்கிலம் படித்த இளைஞர்கள், சுலபமாக ஈடுபடலானார்கள்.
இங்ஙனம் இவர்கள் ஆங்கிலக் கல்வி பயின்றதன் விளைவாக வும், கிறிதுவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும், இரண்டுங் கெட்ட நிலையை அடைந்தனர். இந்தியாவின் புராதனப் பண்பாடுகள் இவர்களிடத்திலிருந்து அகன்றன. மேனாட்டு நவீனக் கோட்பாடுகளை இவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் புராதனத்திற்கு இவர்கள் அந்நியர்களாயினர். அப்படியே மேனாட்டு நவீனத்திற்கும் இவர்கள் அந்நியர்களாயினர். இந்தக் காலத்து நிலையைப் பற்றி ஸ்ரீ கேசவ சந்திர சேனர் ஒரு பிரசங்கத்தில் கூறுகிறார்:-
இந்தியாவின் புராதன தாபனங்களை நாம் அழித்து விட்டோம். ஆனால் இந்த அழிவினின்று நாம் ஒரு புதிய வாழ்வு கோலும் விஷயத்தில் வெற்றி பெறவில்லை… ஆங்கிலம் படிக்காத நமது நாட்டாரே, ஆங்கிலம் படித்தவர்களிடத்தில் பல குறைகள் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர். நம்முடைய படிப்பை அவர்கள் வியந்து போற்றுகின்றனர்; ஆனால் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் இளைஞர்கள், முந்திய தலைமுறையினரைப் போல் யோக்கியதை யுடையவர்களாகவோ, ஒழுக்கமுடையவர்களாகவோ இல்லை யென்று கூறுகின்றனர்.
சுருக்கமாக, பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்தி லிருந்து பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலம் வரையுள்ள சுமார் நூறு வருஷ காலத்தில் இந்தியாவின் கலைகள், நாகரிகம் முதலிய யாவும் மிகவும் தாழ்வான திதியை அடைந்து கொண்டு வந்தன. எந்த ஆத்மீக அடிப்படை மீது ஹிந்து சமுதாயம் நிர்மாணிக்கப் பட்டிருந்ததோ, எந்த ஆத்மீக அடிப்படை ஹிந்து சமுதாயத்தை இத்தனை வருஷ காலமாகக் காப்பாற்றிக் கொண்டு வந்ததோ அந்த ஆத்மீக அடிப்படை தகர்ந்து விடும் போலிருந்தது.
ஆனால் நல்ல வேளையாக - இதனைக் கடவுள் சித்தம் என்று சொன்னாலும் சரி, ஹிந்து தர்மத்தின் அழியாத் தன்மை யென்று சொன்னாலும் சரி, - இந்த ஆபத்து ஏற்படவில்லை. இதற்கு முன் ஹிந்து ஜாதிக்கு இந்த மாதிரியான ஆபத்துகள் எத்தனையோ தடவை ஏற்பட்டிருக் கின்றனவல்லவா, அப்பொழுதெல்லாம் ஹிந்து தர்மத்தினிடமுள்ள எந்த ஜீவசக்தியானது ஹிந்து சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததோ அதே ஜீவசக்திதான் இப்பொழுதும் ஹிந்து சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும்.
ஹிந்து சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்வதையும், ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சில இயக்கங்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே தோன்றத் தலைப்பட்டன. பிரும்ம சமாஜம் என்ன, ஆரிய சமாஜம் என்ன, பிரும்மஞான சபை (தியஸாபிகல் சொஸைட்டி) என்ன, இந்த மாதிரியான இயக்கங்கள் தோன்றி ஹிந்து சமுதாயத்தின் மீது படிந்திருந்த தூசு மாசுகளை அப்புறப்படுத்தின; கிறிதுவப் பாதிரிமார்கள், ஹிந்து மதத்தைப் பல விதமாகத் தாக்கிப் பிரசாரஞ் செய்துவந்தார்களல்லவா, அந்தப் பிரசாரத்திற்கு இரையாகி விடாதபடி ஹிந்து மக்களைத் தடுத்தன. மதச் சீர்திருத்த இயக்கங்க ளாகவும் சமூதாயச் சீர்திருத்த இயக்கங்களாகவும் தோன்றி இந்த அளவுக்கு இவை செய்த வேலைகளை யாருமே பாராட்ட வேண்டும். ராஜாராம் மோகனராய் (1774-1833), கேசவ சந்திர சேனர் (1838-1884), தயானந்த சரவதி (1827-1883), ப்ளாவ்ட்கி அம்மையார் (1831-1891), ஆல்க்காட்துரை (1832-1907) இப்படிப் பட்டவர்களெல்லோரும் இந்தக் காலத்தில் அரும்பாடு பட்டனர். இவர்கள் செய்த வேலைகளை இவர்கள் காலத்துக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கவேண்டும். அப்பொழுது தான் இவர்கள் ஆற்றிய தொண்டின் அருமை தெரியும். ஒரு பக்கத்தில் கிறிதுவப் பாதிரிமார்களின் எதிர்ப்பு, மற்றொரு பக்கத்தில் பழமையிலே ஊறிப் போயிருந்த வைதிகர்களின் துவேஷம், இன்னொரு பக்கத்தில் புதுமையில் அபாரமோகங் கொண்டிருந்த ஆங்கிலம் படித்த இளைஞர்களின் பரிகாசம், ஆகிய இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில் இருந்து கொண்டு இவர்கள் வேலை செய்தார்கள். இவர்கள் ஹிந்து சமூகத்தின் நன்றிக்கு என்றும் உரியவர்கள்.
ஆனால் இவர்கள் ஹிந்து மதத்தின் ஓரோர் அமிசத்தை எடுத்துக்கொண்டு அதை மட்டும் சீர் திருத்தினர். ஹிந்து மதமானது பல கிளைகளையுடைய ஒரு மரம்; பல துறைகளையுடைய ஒரு தடாகம். இந்தப் பேருண்மையைக் காண இவர்கள் தவறிவிட்டார்கள். பரம்பொருள் ஒன்றுதான். அது நாமரூப மற்றது என்ற உண்மையை மட்டும் ஒப்புக் கொண்டு, அதனைச் சுற்றிக் காலக்கிரமத்தில் எழுந்த பல கோட்பாடுகள், எண்ணங்கள் முதலியவற்றை யெல்லாம் வெறும் மூடக்கொள்கைகள், அர்த்த மற்றவை யென்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். ஹிந்து மதத்தை இவர்கள் மொத்தமாகப் பார்க்கவில்லை. அதன் வேற்றுமைகளுக்குக் கீழேயுள்ள ஒற்றுமை யைக் காணவில்லை.
இந்த நிலைமையில், ஹிந்து மதத்தின் பல்வேறு அமிசங்களை யும் ஒற்றுமைப் படுத்திக் காட்டி, அதன் பழமையிலே பொதிந் துள்ள உண்மையை உணர்த்தக் கூடிய ஒரு மகா புருஷர் தேவையா யிருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தோன்றியவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
வாழ்ந்த வாழ்க்கை
“கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே
காண்பதற்கு உருகிற்றென்னுள்ளமும்…”
** -அப்பர்**
ஸ்ரீராமகிருஷ்ண பரம்ஹம்ஸர் கடவுளின் குழந்தை. சாதாரண உலகரீதிக்கு அவர், ஓர் ஏழைக் குடும்பத்திலே பிறந்து, எல்லாப் பிள்ளை களையும் போல் வளர்ந்து, எல்லாப் பிள்ளைகளுடனும் விளையாடி, எல்லோரையும் போல் ஒரு பெண்ணை விவாகஞ் செய்து கொண்டு, ஒரு கோயிற் பூஜகராக வாழ்க்கையை நடத்தி னார் என்று சொல்லிவிடலா மாயினும், உண்மையில் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கடவுள் வாழ்க்கையாகவே இருந்தது; ஒவ்வொரு நிமிஷமும் அவர் கடவுள் நினைவாகவே இருந்தார். அவருடைய வாழ்க்கையைப் பாரமார்த்திகக் கண் கொண்டு பார்க்கவேண்டும்; அப்படிப் பாராமல் லௌகிக திருஷ்டியில் பார்த்தோமானால், குருடன் பாலைப் பார்த்த கதையாகத்தான் முடியும். ஸ்ரீராமகிருஷ்ணரே இந்தக் கதையைச் சொல்லி யிருக்கிறார். ஓர் ஊரில் ஒரு குருடன் இருந்தான். அவனுக்குப் பால் எப்படி இருக்குமென்று தெரிந்துகொள்ள ஆசை. தன் நண்பனொருவனை அழைத்து, பால் எப்படி இருக்குமென்று கேட்டான். அவன் கொக்கைப் போல் வெளுப்பாய் இருக்கும் என்றான். கொக்கு எப்படி இருக்கு மென்று கேட்டான் குருடன் மீண்டும். அரிவாளைப் போல் கழுத்து வளைந் திருக்கும் என்றான் நண்பன். அப்படியானால் அரிவாள் எப்படி இருக்கு மென்று சொல்வாயா என்றான் மறுபடியும் அந்த அந்தகன். எப்படியிருக்கு மென்று சொல்வது? அந்த நண்பனுக்குப் புரியவில்லை. சிறிது நேரங் கழித்து, தன் முன் கையை ஓர் அரிவாளைப் போல் வளைத்து வைத்துக் கொண்டு, இதைத் தொட்டுப்பார்; இப்படித்தான் இருக்கும் அரிவாள் என்றான். உடனே அந்தக் கபோதி, இப்பொழுது நன்றாகத் தெரிந்து கொண்டேன், பால் எப்படி இருக்குமென்று; முன் கை, வளைந்திருப்பதைப் போலிருக்கும் என்று சந்தோஷமாகக் கூறினான். இந்தக் கதையாகத்தான் ஆகும் பாரமார்த்திகக் கண்ணில்லாமல், ஸ்ரீராமகிருஷ்ணருடைய வாழ்க்கையை நோக்குவதும், அப்படி நோக்கினால் அவருடைய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததோடு மட்டுமல்ல, தவறாகவும் புரிந்து கொள்ளும்படி யாகிவிடும். இதைக் காட்டிலும், ஒரு மகானுக்கு இழைக்கக்கூடிய அபசாரம் ஒன்றுமில்லை. அவரைப் போற்ற நமக்குத் தெரியாவிட்டாலும், பிறர் தூற்றுமாறு அவரை வைக்கக் கூடாதல்லவா?
ஒரு ராஜதந்திரியினுடைய ஜீவிய சரித்திரத்திலாகட்டும், ஒரு போர் வீரனுடைய வாழ்க்கை வரலாற்றிலாகட்டும். எத்தனையோ அதிசய சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்படி நிகழ்வது அவர் களுடைய வாழ்க்கைக்கு இயல்பு. அவர்களுடைய வாழ்க்கையில், வெற்றி தோல்விகளென்ன, உருட்டல் மிரட்டல்களென்ன, அந்தரங்க பகிரங்க சூழ்ச்சிகளென்ன, இப்படிப்பட்டவைகளைச் சந்திக்கிறோம். விதியை, மதி எதிர்த்து நிற்கிறது; மதியை, விதி, புறமுதுகிடச் செய்கிறது. வாதத்தினால் வெற்றி கிடைக்கிறது சிலசமயங்களில்; பிடிவாதத் தினாலும் காரியம் கை கூடுகிறது. வேறு சில சமயங்களில். மந்திரத்தில் மாங்காய் விழுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில்; தந்திரத்தினால் எதுவும் பலிக்காது போவது முண்டு. இன்னும் சில சந்தர்ப்பங்களில். வாழ்க்கைக்கு ஆத்மீக அடிப்படை யென்பதொன்றுண்டு என்பதை உணராத சாதாரண ஜனங்கள் இருக்கிறார்களல்லவா, அவர்களால் பெரிய மனிதர்க ளென்று கருதப்படுகின்றவர்களுடைய வாழ்க்கையில், இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். இவை களைப் படித்தும் கேட்டும் விடுகிற அந்தச் சாதாரண ஜனங்கள், அவர் களிடத்தில் - அந்தப் பெரிய மனிதர்களிடத்தில் - ஒரு பிரமை கொண்டு விடுகிறார்கள்; அவர்களால்தான் உலகம் நிற்கிறது, நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு விடுகிறார்கள்.
ஆனால் அப்படியல்ல. யார், பல் உயிர்களாகி எங்கும் பரந்தவன்காண் ஈசன் என்ற உண்மையை உணர்ந்தவர்களா யிருக்கிறார் களோ, அந்த உண்மையை உணர்ந்ததன் விளைவாக எல்லா உயிர் களையும் தம்மைப்போல் நேசிக்கிறார்களோ அவர்களிடத்தில் தான், அந்த உயர்ந்தோர் மாட்டுத்தான் உலகம் இருக்கிறது; அவர்களால்தான் இயங்குகிறது. அவர்கள் தான் மகான்கள். அவர்கள் நன்றுடையார்; தீயதிலார். அவர்கள், தாம் வேறு, கடவுள் வேறு என்று நினைப்பதில்லை. அது வென்றால் எதுவென ஒன்றடுக்குஞ் சங்கையாதலினால், அது வெனலு மறவே விட்டு மதுவுண்ட வண்டென இருப்பர். இதனால், தாம் வேறு, கடவுள் வேறு என்று நினைக்கும் சாதாரண ஜனங்கள் அவர்களை மதிப்பதில்லை; பித்தரென்றும் பேயரென்றும் பரிகசிக்கின்றனர். ஆனால் அவர்கள்தான் கடவுளின் நிஜமான குழந்தைகள்; அவர் களிடத்தி லிருந்துதான் தெய்வ வாக்கு பிறக்கிறது. கடவுள் சில சமயங்களில், பித்தர், குடியர், குழந்தைகள் ஆகிய இவர்கள் வாயிலாகப் பேசுகிறார் என்ற வாசகம் இங்குக் கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படிப்பட்ட நிஜமான குழந்தைகளிலே ஒருவர். அவரை யறிய வேண்டுமனால், குழந்தை மனம் வேண்டும்; பாரமார்த்திகப் பார்வை வேண்டும். ஆதலின் வாசகர்களே, உங்கள் மனம் எங்குப் போயிருந் தாலும் சரி, உங்கள் பார்வை எங்குத் திரும்பி யிருந்தாலும் சரி, தயை செய்து அவற்றைத் திருப்பி வரவழையுங்கள்; குழந்தை மனமாகவும் பாரமார்த்திகப் பார்வை யாகவும் மாற்றிக் கொண்டு விடுங்கள். நிச்சயம் ஸ்ரீராமகிருஷ்ணர் - ஆம்; மகானாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் - உங்களுக்குக் காட்சி யளிப்பார்.
வங்காள மாகாணத்திலுள்ள ஹூக்ளி ஜில்லாவில் காமர்ப்புகூர் என்பது ஒரு பெரிய கிராமம். இதில் க்ஷுதிராம் சட்டர்ஜி என்ற ஒரு பிராமணர், வைதிக நெறி தவறாது வாழ்க்கை நடத்திவந்தார். இவருடைய தர்மபத்தினி சந்திரமணிதேவி. மனமொத்த இவ்விருவ ருடைய இல்லற வாழ்க்கையின் இனிமையில் கிராமவாசிகள் பெரிதும் ஈடுபட்டவர்களாய் இவர்களிடத்தில் அன்பும் மரியாதை யும் செலுத்தி வந்தனர். இந்தத் தம்பதிகளுக்கு நான்காவது புத்திரராக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிறந்தார். இவர் பிறந்தது 1836ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பதினெட்டாந்தேதி காலை. இவருக்கு மூத்தவர்களாக ராமகுமாரர், ராமேசுவரர் என்ற சகோதரர் இருவரும், காத்யாயினி என்ற சகோதரி ஒருத்தியும் இருந்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் பிறப்பதற்கு முந்தி, க்ஷுதிராம்-சந்திரமணி தம்பதிகள் கயை க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகப் போயிருந் தார்கள். இந்த யாத்திரைக்குப் பிறகு பிறந்த குழந்தையாகையால், ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, கயை க்ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் கடவுளின் திருநாமமாகிய கதாதரன் என்ற பெயரை வைத்தனர்.
கதாதரருடைய குழந்தைப் பருவம், அன்பு நிறைந்த சூழலின் மத்தியில் கழிந்தது என்று சொல்ல வேண்டும். இதற்கு முதலாவது காரணம், இவர் பிறந்ததும், குடும்பத்தில், வறுமை அகன்றது; தன லட்சுமியும் தானிய லட்சுமியும் பிரவேசித்தனர். இதனால் குடும்பத் தினர் எல்லோரும் இவரிடத்தில் தனியான ஓர் அன்பு செலுத்தினர். அதிருஷ்டத்தைக் கொண்டு வந்த குழந்தையல்லவா?
இரண்டாவது காரணம், கதாதரர், பார்ப்பதற்கு மிகவும் லட்சணமா யிருப்பார். குழந்தையைப் பார்த்தாலே, கையிலெடுத்துச் சீராட்ட வேண்டு மென்று தோன்றும். அவ்வளவு வசீகரமான தோற்றம். தேகத்தைத் தொட்டால் புஷ்பம் போல இருக்கும். முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்பு. குறு குறுத்த பார்வை. பெண்மை யெல்லாம் திரண்டு இங்ஙனம் ஆண் உருவெடுத்து வந்திருக்கிறதோ என்று சொல்லும்படியாக இருக்கும். கேட்பானேன் எல்லோரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் குலாவுவதற்கு?
கதாதரருடைய பிற்காலப் பெருமைக்கு அறிகுறியெனச் சொல்லத்
தக்க சிற்சில பாலிய நிகழ்ச்சிகளை மட்டும் இங்குச் சுருக்கமாக எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
கதாதரருக்குச் சிறு பிராயத்திலிருந்தே, இயற்கைக் காட்சி களில் ஈடுபட்டு, அவற்றில் தம்மை மறந்து விடக்கூடிய மனோ பரிபக்குவம் ஏற்பட்டிருந்தது. இதனைப் பூர்வ ஜன்மத்து வாசனை யென்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் நெறியிலே செல்கின்ற ஆத்மாக்களுக்கு இது சகஜமான அனுபவம். இயற்கைக் காட்சி களையெல்லாம் கடவுள் காட்சியாகவே அவர்கள் காண்பார்கள். ஒருநாள் காலை, கதாதரர், கிராமத்து நிலங்களூடே வரப்பின்மீது சென்று கொண்டிருந்தார். வானத்தில் கரிய மேகங்கள் திரண்டு சென்று கொண்டிருப்பதையும், அவற்றின் கீழே வெண்ணிறக் கொக்குகள் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருப்பதையும் பார்த்தார். அவற்றின்மீது இவர் மனம் சென்றது. கருமைக்குக் கீழே வெண்மை! நேர் விரோதமான நிறம்; ஆனால் அற்புதமான காட்சி! திருமாலும் லட்சுமியும் இல்லையா? கதாதரர் இந்தக் காட்சியைக் கண்டு மெய்மறந்து போய் அப்படியே கீழே விழுந்துவிட்டார். அந்த வழியே அகமாத்தாக வந்தவர்கள் பார்த்து இவரை வீடு தூக்கிச் சென்றார்கள். இந்த மாதிரி தம்மை மறந்து நிற்கிற நிலை இவருக்குச் சிறு வயதிலேயே பலதடவை ஏற்பட்டிருக்கிறது.
இயற்கைக் காட்சிகளிலே யாருக்கு அதிகமான ஈடுபாடு இருக்கிறதோ அவர்கள், கவிதை, சித்திரம், சங்கீதம் ஆகிய இப்படிப் பட்டவைகளில் அதிகமான விருப்பமுடையவர்களாயிருப்பார்கள். ஏன், அவர்களே கவிஞர்களாகவும், சித்திரக்காரர்க ளாகவும், சங்கீதம் பயில்வோராகவும் திகழ்தல் கூடும். அவர்கள் மனம் விரைவிலே ஒன்றுபடும்; ஒரு நிலையிலே நிற்கும். இந்த ஒரு நிலை மனந்தான் அவர்களைக் கடவுள் நெறியிலே அழைத்துச் செல்கிறது; அந்தக் கடவுளோடு அவர்களை ஒன்று படுத்துகிறது. இதனாலேயே காவியம், ஓவியம், இசை ஆகிய இவை பலவும் கடவுளைக் காட்டும் வழிகாட்டிகள் என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
கதாதரருக்கு, அழகான சரீரத்தைப் போலவே இனிமையான சாரீரமும் உண்டு. சிற்பக் கலையும் நன்றாகத் தெரிந்திருந்தது. கிராமத்துக் குயவர்கள், களி மண்ணினால் பல உருவங்களைச் செய்வார் களல்லவா? கதாதரர் அங்கெல்லாம் சென்று, அவர்கள் எப்படிச் செய் கிறார்கள் என்று நுணுக்கமாகக் கவனிப்பார். மணிக் கணக்காக இப்படி உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். சிறு பிள்ளைதானே? சிறிது கூட சலிப்புக் காட்டமாட்டார். தாம் பார்த்த உருவங்களை அப்படியே செய்தும் விடுவார். அவை அழகா யிருந்தன வென்று சொல்லவும் வேண்டுமோ? கைத் திறனும் மன ஒருமைப் பாடும் சேர்ந்து செய்த உருவங்களல்லவோ? இங்ஙனம் பழகிப் பழகி கதாதரர் ஒரு சிறந்த சிற்ப நிபுணராகி விட்டார். சிற்பக் கலையில் கைதேர்ந்த பலரும் - வயதும் அனுபவமுடையவர்கள் - இவருடைய ஆலோசனையைக் கேட்கத் தொடங்கினார்கள்; சிறு பிள்ளைதானே என்று அலட்சியம் செய்ய வில்லை. இவருடைய சிற்பக் கலைத் திறமையிலே அவர்களுக்கு அவ்வளவு மதிப்பு!
கதாதரர், இங்ஙனம் அழகான உருவங்களைச் செய்து என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? விற்றுவிடுவார். பார்த்த வர்கள் வாங்காமலிருக்கமாட்டார்கள். அவைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படிக் கிடைக்கிற பணத்தைக் கொண்டு, தம்முடன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்குத் தின் பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். இந்தச் சிறிய உடலிலே எவ்வளவு பெரிய மனம்!
கதாதரர், சாரீர சம்பத்துடையவராய் இருந்தபடியால் கேட்ப வர்கள் அனுபவிக்கக் கூடியவிதமாகப் பாடுவார். பாடுகிறபோது அபிநயமும் பிடிப்பார். கிராம ஜனங்கள் தங்கள் தங்கள் வீட்டுக்கு இவரை அழைத்து வந்து பாடச் சொல்லிக் கேட்டும், ஆடச் சொல்லிப் பார்த்தும் அக மகிழ்வார்கள். சிறப்பாகப் பெண்கள் இவரிடத்தில் அதிக பிரியங் காட்டினார்கள். இவருக்குப் பிடித்த மான தின்பண்டங்கள் செய்து கொடுப்பார்கள். அயல் வீட்டுப் பிள்ளையாயிற்றே என்ற சங்கோஜம் சிறிதுமில்லாமல் சகஜமாக இவரிடத்தில் பழகுவார்கள். சுருக்கமாக, கதாதரர், கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் குழந்தையாகவும் இருந்தார்.
கதாதரர், பிள்ளைப் பருவத்திலிருந்தே, தமது நடை உடை பாவனைகளால் மற்றவர்களை மகிழ்விக்கும் ஆற்றல் படைத்தவரா யிருந்தார். சில சமயங்களில், பெண்ணுடை தரித்துக்கொண்டு, அண்டை அயலிலுள்ள வீடுகளுக்குச் செல்வார். யாரோ பெண் குழந்தை வந்திருக்கிறதென்று நினைத்து, அங்குள்ள பெண்கள் இவரைத் தங்கள் இருப்பிடத்திற்குத் தாராளமாக அழைத்துச் சென்று இவருடன் கூச்சமில்லாமல் பழகுவார்கள்.
திடீரென்று இவர், தமது பெண்ணுடையைக் களைந்துவிட்டு, கதாதரனாகத் தோன்றுவார். ஏமாற்றமடைந்து போனோமே யென்று அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இவரும் கூடச் சிரிப்பார். பிறரைச் சந்தோஷப்படுத்துவதிலே இவருக்கு எப்பொழுதும் ஒரு சந்தோஷம்.
கதாதரருக்கு ஞாபக சக்தி நிரம்ப உண்டு. எதுவும் இவர் மனதிலே சீக்கிரம் பதிந்து விடும். பார்த்ததை அப்படியே செய்வார்; கேட்டதை அப்படியே ஒப்புவிப்பார். நமது நாட்டில் தெருக் கூத்துக்கள் நடைபெறு வதுண்டல்லவா? இதிகாச புராணங்களிலே வரும் கதைகளே நாடகங் களாக நடித்துக் காட்டப்பெறும். காமர்ப்புகூரிலும் அக்கம்பக்கத்தி லுள்ள கிராமங்களிலும் நடை பெறும் இந்தத் தெருக்கூத்துகளுக்கு கதாதரர் விடாமல் சென்று பார்ப்பார். அங்குப் பாடப்பெறும் பாடல்களும், பேசப் படும் பேச்சுக்களும் இவருக்கு நன்றாக நெட்டுருவாகிவிடும். வீட்டுக்கு வந்து, தாம் பார்த்ததையும் கேட்டதையும் அப்படியே நடித்துக் காட்டுவார். இங்ஙனம் சிறு வயதிலேயே இவருக்கு புராண இதிகாசக் கதைகளில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது; அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாக நடித்துக் காட்டும் ஆற்றலும் இருந்தது. எந்தப் பாத்திரமாக நடிக்கிறாரோ அந்தப் பாத்திரமாகவே ஆகி விடுவார். இந்த மாதிரி சம்பவங்கள் சில இவருடைய பாலியத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய மாந்தோப்பு. பசும்புல் மூடிய மைதானத்தின் நடுவே இந்தத் தோப்பு இருந்தது. காலை நேரம். சூரியன் தன் கிரணங்களை மெதுவாகத் தோப்புக்குள் புகவிட்டு அவைகளின் மூலம் அங்கு என்ன நடைபெறுகிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறான். கதாதரரும், அவரையொத்த சில சிறுபிள்ளை களும் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கூச்சலும் வேடிக்கையுமாக இருக்கிறது. கதாதரர் ஒரு பாடலைப் பாடுகிறார். கூச்சலும் வேடிக்கையும் அடங்கி விடுகின்றது. பாட்டின் இனிமையிலே சிறு பிள்ளைகள் ஈடுபட்டுவிடுகிறார்கள். என்று கதாதரர் கேட்கிறார். ஆட்சேபமென்ன? எல்லோரும் ஒப்புக்கொள்கி றார்கள். உடனே நாடகம் துவங்குகிறது. என்ன நாடகம்? பக்கத்துக் கிராமத்திலே இவர்கள் பார்த்த நாடகந்தான். ஸ்ரீகிருஷ்ண பகவான் மதுரையிலே இருக்கிறார். பிருந்தாவனத்திலுள்ள கோபிகை திரீகள், அவரை விட்டுப் பிரிந்திருப்பதனால் அடைகிற துன்பத்தை வருணிக் கின்ற நாடகம். கதாதரர், ராதையானார்; மற்றச்சிறுவர்கள், கோபிகை களானார்கள். இவர்களிலே ஒருத்தி பெயர் பிருந்தை. ராதை, பிரிவாற்றாமையால் பெரிதும் துயருறுகின் றாள். அவளுடைய உயிருக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்று தோழிகள் அஞ்சு கிறார்கள். உடனே பிருந்தையை கிருஷ்ணனிடம் தூது அனுப்பு கிறார்கள். பிருந்தை, புறப்படுவதற்கு முன், கிருஷ்ண னிடம் என்ன சொல்ல வேண்டுமென்று ராதையைக் கேட்கிறாள். அவளோ தன் மனத்தைக் கிருஷ்ணனிடம் பறிகொடுத்து விட்டிருக் கிறாள். எனவே அவளால் ஒன்றுஞ் சொல்லமுடியவில்லை. கண்களிலே நீர்மட்டும் பெருகிக் கொண்டே யிருக்கிறது. கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விடுகிறாள். அவ்வளவுதான். நாடகம் நின்று விட்டது. மூர்ச்சையாகிக் கீழே விழுந்து கிடப்பது யார்? ராதையென்ற பாவனையில் இருக்கிற கதாதரர்!
இன்னொரு சம்பவம். கதாதரருக்கு ஒன்பது வயது. கிராமத்திலே ஒரு நாடகம் நடைபெற்றது. அதில் கதாதரர் சிவனாக வேஷந்தரித்துக் கொண்டார். மெய்யெல்லாம் திருநீறு; தலையிலே சடைமுடி; இடுப்பிலே புலித்தோல்; கையிலே திரிசூலம். இந்தக் கோலத்துடன் கம்பீரமாக நடந்து வந்து மேடையிலே நின்றார். பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். முகத்திலே ஈசுவர களை ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கதாதரருடைய நிலைமை யென்ன? மேடை மீது வந்து நின்றதுதான் தெரியும்; தம்பிதமாகி விட்டார். தாமே சிவனானார். கண்களிலே ஆனந்தபாஷ்பம். நாடகம் மேலே நடைபெறவில்லை. கதாதரருக்குச் சுயநிலை ஏற்பட மூன்று நாளாயிற்று.
இந்த மாதிரி இவர் அடிக்கடி சுயநிலை இழந்து விடுவதைக் கண்டு, உற்றார் உறவினர் பெரிதும் அஞ்சினர்; காக்கை வலி யென்று கருதினர். என்ன அறியாமை! ஆனால் கதாதரர், தமக்கு அந்தமாதிரி வியாதி யொன்றும் இல்லையென்றும், தம்மைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் உறுதியாகக் கூறுவார்.
கதாதரருக்குச் சிறு வயதிலிருந்தே அச்சமென்பது தெரிய வில்லை. வயதானவர்கள் போவதற்கு அஞ்சுகிற இடங்களுக்குக்கூட இவர் தைரியமாகச் செல்வார். நள்ளிரவானாலும் சரி, சுடுகாடானா லும் சரி, இவர் பயப்பட்டதே கிடையாது. அச்சமென்பது அறியாமையினின்று பிறந்தது. அந்த, அறியாமை பிறவியிலேயே இவரை விட்டு அகன்றது போலும்!
ஆனால் கதாதரருடைய பெற்றோர்கள் இதனை அறிவார் களா? உலக வழக்கப்படி இவருக்கு ஐந்தாவது வயதில் அட்சராப் பியாசம் செய்வித்தனர். அதிருஷ்டத்தோடு பிறந்த தங்கள் மகன் அறிவு நிறைந்த வனாகப் பிரகாசிக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு இருக்கு மல்லவா? ஆனால் கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவே இல்லை. தம்மைச் சுற்றியுள்ள இயற்கை யன்னையிடமிருந்து, உலகத்திடமிருந்து, கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்க, புதகங்களை வைத்துக் கொண்டு படிப்பதற்கு என்ன இருக்கிறது, வெறும் புதகப் படிப்பிலே என்ன பிரயோஜனம் என்ற எண்ணம் இவரை யறியா மலே இவரிடத்தில் குடிகொண்டிருக்க வேண்டும். இதனால்தான் பள்ளிக்கூடப் படிப்பு இவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை. சிசு போதம் என்ற முதற்பாட புத்தகத்திற்கு மேல் இவர் மனஞ் செல்ல வில்லை. கணக்கா? அது பிடிக்கவே பிடிக்காது. எப்படியோ கூட்டல் மட்டும் தெரிந்து கொண்டார். கணக்குக்கு அடங்காத ஒன்றின்மீது மனம் லயித்துப் போயிருக்கிறவர்கள், சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டி ருப்பார்களா? அவர்களால் தான் முடியுமா? உலகத்தினருக்குச் சாதாரணமாயிருப்பது அவர் களுக்கு அசாதாரணமாகவும் அனாவசியமாகவும் இருக்கிறது. அவர்களுக்குச் சாதாரணமாகவும் அவசியமாகவும் இருப்பது உலகத் தினருக்கு நேர் விரோதமா யிருக்கிறது. சரித்திர, காலந்தொட்டு அவதரித்து வந்திருக்கிற மகான்களின் வாழ்க்கையில் இதனைச் சகஜமாக காண்கிறோம்.
கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்லவில்லையென்றா லும், அங்குப் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் இவரிடத்தில் மிகவும் அன்பு காட்டினர்; மரியாதையாகவும் நடந்துகொண்டனர். பள்ளிக்கூடம் முடிந்ததும், மாலை நேரங்களில், கதாதரர், பிள்ளை களை ஒன்றுகூட்டி வைத்துக் கொண்டு, ஆடியும் பாடியும் அவர் களை மகிழ்விப்பார். தாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த புராண இதிகாசக் கதைகளை அவர்களுக்கு அழகாக எடுத்துச் சொல்வார். இதனால் அவர்கள் இவரிடத்தில் அதிக ஈடுபாடுடையவர்க ளானார்கள்.
பிள்ளைகள் அனைவரும் இவரிடத்தில் ஈடுபட்டிருக்கிறார் களென்பதையும், இதற்குரிய காரணத்தையும் பள்ளிக்கூட ஆசிரியர் தெரிந்துகொண்டு ஒருநாள் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு இவரைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான். இதற்குப் பிறகு ஒழுங்காகப் பள்ளிக்கூடம் வருவதில்லை யென்பதற்காகவோ, பாடங்களைச் சரியாகப் படிப்பதில்லை யென்பதற்காகவோ இவரைக் கடிந்து கொண்டதே கிடையாது. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும், பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு இவரை ஓரிரண்டு பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார்.
கதாதரர் பள்ளிக்கூடப் படிப்பிலே அதிக சிரத்தை காட்ட வில்லையென்றாலும், படித்தவர்களைக் காட்டிலும் அதிக அழகாக வும், கேட்பவர் மனத்திலே பதியும் படியாகவும் புராண இதிகாசக் கதைகளைச் சொல்வார். தன்னுடனொத்த சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு நடித்துக் காட்டும் நாடகங்களுக்கு வேண்டிய பாடல் களையும் வசனத்தையும் இயற்றிக் கொடுப்பார். இயற்கையி லேயே இவருக்கு அறிவு நிரம்பி யிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை. படித்த புலவர்களுக்குப் புரியாத விஷயங்கள் இவருக்குச் சுலபமாகப் புரிந்துவிடும்.
யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய ஈமச் சடங்குகள் முடியுந் தறுவாயில், பல பண்டிதர்களை வரவழைத்துப் பிரசங்கங்கள் செய்விப்பது நம் நாட்டில் சில இடங்களில் வழக்கம். ஒரு சமயம் காமர்ப்புகூரிலுள்ள ஒரு பணக்காரருடைய வீட்டில் இத்தகைய பண்டித சபை யொன்று நடைபெற்றது. கூடியிருந்த பண்டிதர்கள் பல பிரச்சனைகளைக் குறித்துத் தர்க்கம் செய்துகொண்டிருந்தனர். கதாதரர் அவர்களுக்குச் சமதையாக இருந்து தர்க்கம் செய்தார். இவருடைய புத்தி சாதுரியத்தைக் கண்டு பண்டிதர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறுபிள்ளை, எதிர்காலத்தில் அதி மானுஷ்ய சக்தியுடையவ னாவான் என்பதில் சந்தேகமில்லை என்று ஆசீர்வதித்தார்கள்.
கதாதரருக்கு, பிரகலாதனிடத்தில் ஈடுபாடு அதிகம். அவ னுடைய ஆழ்ந்த பக்தியையும் கடவுளின் உண்மையிலே அவனுக் கிருந்த உறுதியையும் இவர் படித்துச் சொல்கிறபோது கேட்பவர் களுக்கு மயிர்க் கூச்செறியும். காமர்ப்புகூரில் மாது என்ற ஒரு கைக்கோளன் இருந்தான். நல்ல பக்திமான். அவன், அடிக்கடி சாயங்கால நேரங்களில் பள்ளிக் கூடம் விட்டதும், கதாதரரைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், தன்னாலியன்ற உபசரணை களைச் செய்து, பிரகலாதனுடைய சரித்திரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பான். படித்தறியாத தானும், தன்னைப் போன்றவர்க ளும் பிரகலாதனுடைய சரித்திரத்தைக் கேட்டுப் பயன் பெற வேண்டுமென்பது அவன் எண்ணம். கதாதரர், சிறு பிள்ளையா யிருந்தும் அபார சக்தியுடையவர். அவர் ஒரு தெய்வாமிசம் என்பது அவனுடைய நம்பிக்கை. இங்ஙனமே கிராமத்திலுள்ள வேறு சிலரும் கதாதரரிடத்தில் பக்தி பூண்டொழுகி வந்தனர்.
சீனிவாசன் என்ற ஒருவன். சின்னு என்று இவனை எல்லோரும் அழைப்பர். சங்கு அறுப்பது இவன் தொழில். படிப்பு வாசனை யில்லாதவன். இவனுக்குக் கதாதரரிடத்தில் அபார பிரேமை. இவரை ஒரு தெய்வமாகவே கருதி வழிபட்டு வந்தான். இவரைத் தனியாக ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு போவான். அங்கே இவரை உட்கார வைத்து, கோயிலிலுள்ள ஒரு விக்கிரகத்திற்கு என்னென்ன மாதிரி பூஜை செய்வார்களோ அந்தந்த மாதிரியே இவரையும் பூஜிப்பான். மலர் களால் அர்ச்சனை, தீபங்காட்டல், நைவேத்தியம் படைத்தல் எல்லாம் நடைபெறும். கடவுளை நேரிலேயே கண்டு விட்டதாக ஆனந்த பரவசனாவான். ஆனந்த மேலீட்டால் அழுவான். இங்ஙனம் கதாதரரிடத்தில் ஈடுபட்டவர்கள் கிராமத்தில் இன்னும் சிலர் இருந்தனர். அப்பொழுது இவருக்கு என்ன வயது தெரியுமா? ஏழுட்டு வயதுதான்!
காமர்ப்புகூரில் ஒரு சத்திரம் உண்டு. பூரி-ஜகந்நாத க்ஷேத்திரத் திற்கு யாத்திரையாகச் செல்லும் சாதுக்கள் பலரும் இங்கு வந்து தங்கிப் போவது வழக்கம். சிறுபிள்ளையாகிய கதாதரர் அவர் களிடம் சென்று பழகுவார். அவர்களுக்குத் தேவையான விறகு, நீர் ஆகியவைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; இன்னும் பலவிதங் களிலும் அவர்களுக்குச் சேவை செய்வார். அவர்கள் நடத்தும் ஆத்மார்த்தமான சம்பாஷணைகள், சங்கீர்த்தனங்கள் முதலியவை களில் பக்தி சிரத்தை யோடு கலந்து கொள்வார். அவர்களுடைய யாத்திரை வரலாறுகளைக் கேட்டு அகமகிழ்வார். அவர்களுடைய தெய்வபக்தி, எளிமையும் தூய்மையும் கலந்த வாழ்க்கை, அகப் பட்டதைக் கொண்டு திருப்தியடை கிற மனப்பான்மை ஆகிய இவை யாவும் பாலிய கதாதரருடைய பசுமனதில் நன்றாகப் பதிந்து விட்டது. அவர்களுடைய துறந்த வாழ்க்கையில் பற்றுள்ளங் கொண்டு விட்டார்.
ஒருசமயம் இவருடைய தாயார், இவருக்கு ஒரு புதிய துணியைக் கொடுத்து அதைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார். அப்படியே கட்டிக் கொண்டு இவர் மேலே சொன்ன சாதுக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வழக்கம்போல் சென்றார். அவர்கள் கௌபீன தாரிகளாயிருப்பதைக் கண்டார். என்ன தோன்றியதோ என்னவோ? தாமும் அப்படி உடுத்திக் கொள்ளத் தீர்மானித்து விட்டார். கட்டியிருந்த புதுத்துணியைத் துண்டு துண்டாகக் கிழித்து, அவைகளில் இரண்டு துண்டுகளை எடுத்து அவர் களைப் போல் கோவணமும் அரைஞாண் கயிறுமாக உடுத்திக் கொண்டார். இந்த வேஷத்துடன் தாயிடம் ஓடிவந்து அம்மா, நான் எப்படி ஒரு சாதுவாக, சந்நியாசியாக ஆகி விட்டேன், பார் என்று சந்தோஷத் துடன் கூறினார். இவரை இந்தக் கோலத்தில் பார்த்ததும் தாயாருக்குக் கோபம் வந்தது. எந்தத் தாயினுடைய கண்கள்தான், தன் மகனைத் துறவியாகக் காணச் சகிக்கும்? கடிந்து கொண்டாள். ஆனால் உடனே அந்தத் தாய் மனம் இரங்கிவிட்டது. குழந்தையைக் கட்டியணைத்து உச்சி மோந்தாள்.
கதாதரர், ஏழாவது வயதில் தந்தையை இழந்த தனயனானார். குடும்பப் பொறுப்பை மூத்த மகனான ராமகுமாரர் ஏற்றுக் கொண்டார். இரண்டு வருஷங்கழித்து, கதாதரருடைய ஒன்பது வயதில், இவருக்கு உபநயனம் செய்வித்தார். உபநயனச் சடங்கின் போது, உபநயனம் செய்விக்கப்பெற்ற பிரும்மசாரி பவதி பிட்சாந் தேஹி என்று சொல்லிக் கொண்டு பிட்சை கேட்கவேண்டு மென்பது சம்பிரதாயம். அநேகமாக உற்றார் உறவினர்களிடமே இந்தப் பிட்சை கேட்க வேண்டும்; அல்லது பிராமணர் வீடுகளி லேயே கேட்கவேண்டும்; பரம்பரையாக நடைபெற்று வருகின்ற முறை இது. ஆனால் கதாதரர் இப்படிச் செய்யச் சம்மதப்பட வில்லை. தனி என்ற கொல்ல மாது ஒருத்தி, சந்திரமணி தேவியின் அன்புக்கு உரியவள்; நேரிய வாழ்க்கையும் நிரம்பிய சீலமும் உடையவள். அவளிடம் சென்று பிட்சை கேட்டார் கதாதரர். இது கூடாது என்று தடுத்தனர் கூட இருந்தவர்; அந்தணருக்கு இஃது இழுக்காகு மென்று சீறினர். ஆனால் கதாதரர் கேட்கவில்லை. அந்த அம்மையாரிட மிருந்து பிட்சை பெறுகிற வரையில் சாப்பிடப் போவதில்லை யென்று சொல்லி ஓர் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டுவிட்டார். உபநயனச் சடங்குகள் மேற் கொண்டு நடைபெறவில்லை. ஒரு நாள் பூராவும் இப்படிக் கழிந்தது. கடைசியில் கதாதரருடைய விருப்பம் நிறைவேறியது. அந்தக் கொல்ல மாதிடமிருந்தே பிட்சை பெற்றார். உபநயனச் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்தன. பரந்த உள்ளத்தில் குறுகிய எண்ணங்கள் இடம் பெறுவதில்லை யென்பதற்கு இஃதோர் உதாரணம்.
தகப்பனார் இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை எற்றுக் கொண்ட ராமகுமாரர், சிறிது காலங் கழித்து கல்கத்தா சென்று அங்கு ஜோதிட ராகவும், பெரிய மனிதர் வீடுகளில் பூஜகராகவும் இருந்து ஜீவனம் நடத்தி வந்தார். கூடவே, இலவசமாக சம்கிருத பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வந்தார். இதுதான் இந்தியாவினுடைய பண்பாட்டின் விசேஷம். ஒருவன், எவ்வளவு வறுமையுடையவனாக இருந்தபோதிலும் அவன், தான் கற்ற வித்தையை பிறருக்கு இலவச மாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமே தவிர, அதற்கு எவ்வித பிரதிப் பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. வித்தையை வர்த்தகம் செய்தல் கேவலமென்று இந்தியாவில் தொன்று தொட்டு கருதப்பட்டு வந்திருக்கிறது. ராமகுமாரருடைய செறிந்த புலமையும் அடங்கிய தன்மையும், அவரைப் பெரிய மனிதர் பலருடைய நன் மதிப்புக்குரியனவாக்கின. தமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு பகுதியை, காமர்ப்புகூரிலுள்ள தமது தாயார், சகோதரர்கள்டங்கிய குடும்பத் திற்கு அனுப்பிவந்தார்.
கதாதரரோ, இங்குக் காமர்ப்புகூரில், பள்ளிக்கூடம் போவதை அடியோடு நிறுத்தி விட்டார். தெய்வத்திற்குப் பூஜை செய்வதும் தாய்க்குத் தொண்டு செய்வதும் இவருடை முக்கிய வேலைகளாயின. வழக்கம் போல் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கடவுள் சம்பந்த மான பாடல்கள் பாடுவதிலும் நாடகங்கள் ஆடுவதிலும் மற்றப் பொழுதைப் போக்கி வந்தார். இப்படியே இவரை விட்டுவைக்க லாமா? இவருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொண்டிருந்த இராமகுமாரர் இவரைக் கல்கத்தாவுக்கு வரவழைத்து தம்முட னிருத்திக் கொள்ளத் தீர்மானித்தார். தமையனார் விருப்பத்திற் கிணங்க கதாதரர் தமது பதினேழாவது வயதில் கல்கத்தா சென்றார்.
கல்கத்தா வந்தடைந்த கதாதரரை, பெரிய மனிதர் வீடுகளில் தாம் செய்யும் பூஜைகளுக்கு உதவியாயிருக்கும்படியும், கூடவே சம்கிருதம் படிக்குமாறும் ராமகுமாரர் கூறினார். அப்படியே கதாதரரும் சில வீடுகளில், தமையனாருக்குப் பதில் பூஜை செய்து வந்தார். ஆனால் இவர் செய்த பூஜைக்கும் மற்றவர்கள் செய்கிற பூஜைக்கும் எவ்வளவோ வித்தியாசமிருந்தது. சுருக்கமாக இவர் மனம் வைத்துப் பூஜை செய்தார். இங்ஙனம் இவர் மனம் பூஜையில் சென்றதே தவிர படிப்பில் செல்லவில்லை. ஆயினும் தமையனா ருடைய விருப்பத்தை மறுக்க முடியாதவராய் சம்கிருத இலக்கணத்தைப் படிக்கத் தொடங்கினார். சில நாட்கள் படித்தார். மனதில் பதிந்தால்தானே?
இப்படி யிருக்கிறபோது ஒருநாள் இவர் தமது அறையின் தாழ்வாரத்தில் தனிமையில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண் டிருந்தார். அப்பொழுது இவருக்குத் தெரிந்த பண்டிதர் - நியாயம், மீமாம்சை இவைகளில் மகா வல்லவர்- ஒரு சிறு மூட்டையை எடுத்துக் கொண்டு வந்தார். என்ன மூட்டை அது சுவாமி? என்றார் கதாதரர். ஒன்றுமில்லை; கொஞ்சம் அரிசியும் இரண்டு வாழைக்காயுந்தான். அதோ இருக்கிற அந்த மாளிகையில் கிடைத்தது என்றார் அந்தப் பண்டிதர். அவருடைய பதில் கதாதரரைச் சிந்தனையிலாழ்த்தி விட்டது. அடே, இவ்வளவு படித்ததற்கு இந்த அரிசியும் வாழைக்காயுந்தானா? எழுத்தறி வில்லாத ஒரு சாதாரண கூலிக்காரன் கூடவல்லவோ இதைக் காட்டிலும் அதிகமாகச் சம்பாதிக்கிறான். இந்த அற்பத்திற்காகவா, தர்க்கமென்ன, மீமாம்சை யென்ன இவைகளையெல்லாம் படிக்க வேண்டும். என்றெல்லாம் எண்ணினார். அந்த நிமிஷத்திலிருந்து இந்த வயிற்றுப் படிப்பு வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். சில நாள் படிப்பு ஒரு நிமிஷத்தில் முடிந்து விட்டது. தமையனார் எவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை.
இப்படி யிருக்கையில் ராமகுமாரருக்குப் புதிய வேலை யொன்று கிடைத்தது. கல்கத்தாவுக்குச் சுமார் நான்கு மைல் தொலைவிலுள்ள தட்சிணேசுவரம் என்ற இடத்தில் ராணி ராசமணி என்ற ஒரு ஜமீன்தாரிணி, காளிதேவிக்குப் பெரிய தொரு கோயில் கட்டுவித்தாள். இதனோடு சேர்ந்தாற்போல் சிவனுக்கும் விஷ்ணு வுக்கும் ஆலயங்கள் நிர்மாணிக்கப் பெற்றன. நல்ல இடம்; கங்கைக் கரை; சுற்று முற்றும் பழந்தருமரங்களும் குளிர்தரு சோலைகளும். இதனால் யாத்திரிகர்கள் வந்து தங்கிப் போவதற்குச் சௌகரியமான இடமாயிருந்தது. மற்றும் ராசமணி அம்மையார், பரதேசிகளுக்குச் சாப்பாடு கிடைக்கும்படியான ஏற்பாடுகளும் இங்குச் செய்தார். இதனாலும் இங்கே ஜனங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டிருந் தார்கள்.
இந்தக் காளிகோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப் பெற்றார் ராமகுமாரர். இதனால் தட்சிணேசுவரத்திலேயே இவர் வசிக்க வேண்டிய தாயிற்று. கூடவே சகோதரரான கதாதரரையும் அழைத்துக் கொண்டு போனார். சில நாட்கள் கழித்து இவர்களுடைய சகோதரியின் புத்திரர் இருதயர் என்பவரும் வந்து சேர்ந்து கொண்டார். ராமகுமாரர், தமது பூஜைத் தொழிலிலே பக்தி சிரத்தையோடு ஈடுபட்டார். கதாதரரோ, அங்குள்ள தெய்வங்களை வழிபட்டுக்கொண்டும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டுமிருந்தார்.
ஒரு நாள் கதாதரர், கங்கைக் கரையிலுள்ள களிமண்ணை எடுத்து அதைக் கொண்டு ரிஷபவாகன ரூடராக சிவபெருமானின் உருவத்தைச் செய்து வைத்தார். அழகா யிருந்ததென்று சொல்லவும் வேண்டுமோ? பார்த்தவர் அனைவரும் அதன் அழகை வியந்து பாராட்டினர். அப்பொழுது அந்த வழியாக மதுரநாத விசுவாசர் உலாவிக் கொண்டிருந்தார். இவர் ராணி ராசமணி அம்மையாரின் மருமகப் பிள்ளை. அந்த அம்மையாரின் ஆதி பாதிகளை யெல்லாம் இவர்தான் நிருவாகம் செய்துவந்தார். இவர் மேற்படி உருவத்தைப் பார்த்து அதிசயங்கொண்டு ‘இந்த அழகிய உருவத்தைச் சமைத்தது யார்? என்று அருகிலிருந்தவர்களைக் கேட்டார். கதாதரர் என்று அறிந்து அவரைக் காண ஆவல் கொண்டார். அப்படியே கதாதரர் மதுரநாதரை வந்து பார்த்தார். இவருடைய இந்த முதல் சந்திப்பு குரு சிஷ்யத் தொடர்பாக முற்றி விட்டது. தமது குருவாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவ்வப் பொழுது இடும் கட்டளைகளை அவ்வப்பொழுது மதுரநாதர் நிறை வேற்றி வந்த வரலாறுகளை நாம் பின்னாடி பார்க்கப் போகிறோமல்லவா?
மதுரநாதர், கதாதரரை, அவருடைய தமையனார் ராமகுமாரருடைய அர்ச்சக வேலையில் உதவிசெய்து கொண்டிருக்கும்படி கேட்டுக் கொண்டார். கதாதரரும் அப்படியே செய்துகொண்டு வந்தார்.
விஷ்ணுகோயிலில் வேறோரு பிராமணர் அர்ச்சகரா யிருந்து வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் இவருடைய அஜாக்கிரதையி னால் பூஜா விக்கிரகத்தின் கால் ஒடிந்து போய்விட்டது. எல்லோரும் கலவர மடைந்தனர். மூளியாகப் போன உருவத்திற்குப் பூஜை செய்யலாமா என்பதைப் பற்றி பண்டிதர்களுக்குள் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றன. ராணி ராசமணி அம்மையாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் கதாதரரையும் அபிப்பிராயங் கேட்டார்கள். ஒரு திரீ, தன் புருஷனுடைய காலொடிந்து போனால் அந்தப் புருஷனை அந்த திரீ என்ன செய்யவேண்டுமென்று யோசனை சொல்கிறார்கள் இந்தப் பண்டிதர்கள்? அவனை நிராகரித்து விடவேண்டுமென்று சொல்கி றார்களா? அல்லது வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெறவேண்டும் என்று சொல்கிறார்களா? என்று திருப்பிக் கேட்டார். பண்டிதர்கள் சிகிச்சை செய்வதுதான் சரியென்று ஒப்புக்கொண்டார்கள். கதாதரர், ராணியைப் பார்த்து நீங்களென்ன, இறந்துபோன உங்கள் கணவரை - ராணி ராசமணி அம்மையார் ஒரு விதவை யென்பதை இங்கு வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். - இதுகாறும் வழிபட்டுக் கொண்டு வந்தீர்களா? அல்லது வெறும் விக்கிரகத்தை வழிபட்டுக் கொண்டு வந்தீர்களா? என்று கேட்டார். இந்தக் கேள்வியின் அர்த்தத்தை அந்த அம்மையார் புரிந்துகொண்டு விட்டார். கதாதரர் ஒரு சிறந்த சிற்பி யென்பது அவருக்குத் தெரியும். இவரைக் கொண்டு அந்த விக்கிரகத்தைச் செப்பனிடச் செய்து, இவரையே அந்த விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். சுமார் ஆறுமாத காலம் இந்த வேலையைப் பார்த்தார் கதாதரர். பின்னர் இவர், காளி கோயிலின் அர்ச்சகராகவும், ராமகுமாரர் விஷ்ணு கோயிலின் அர்ச்சகராவும் மாறிக் கொண்டார்கள்.
காளிகோயிலின் அர்ச்சகராக கதாதரர் நியமிக்கப்பட்டவுடன் இவரிடத்தில் ஒரு பெரிய மாறுதல் தோன்றத் தொடங்கியது. வெறும் விக்கிரகத்திற்குத் தாம் பூஜை செய்வதாக இவர் கருதவே யில்லை. சர்வஜீவராசிகளையும் சிருஷ்டித்துக் காப்பாற்றுகின்றவள் எவளோ, நம்பினோரை ஆதரிக்கின்றவள் எவளோ, அவளே, அந்த ஜகன்மாதாவே, தமது போஷணையில் இருப்பதாகவும் அவள் சந்தோஷப்படுகிற வகையில் அவளுக்குச் சிசுருஷை செய்து வருவது தனது கடமை யென்றும் கருதினார். பரிசுத்தமான மலர்களைக் கொய்து கொண்டு வந்து அழகான மாலையாகத் தொடுத்து அணிவிப்பார்; இனிமையான பாடல்களைப் பாடுவார்; நல்ல வெயிலாயிருக்கிற பொழுது அருகில் நின்று விசிறிக் கொண்டி ருப்பார்; நல்ல வெற்றிலையையும் பாக்கையும் பார்த்தால், அம்பாளுக்குப் பிடிக்குமென்று சொல்லி அழகான தாம்பூலச் சுருளாக மடித்துக் கொடுப்பார். இப்படியே தின்பண்டங்கள் விஷயத்திலும். சுருக்கமாக, காளிதேவியின் பூஜகராக நியமிக்கப் பெற்ற சில மாதங்கள் வரை, கதாதரர், தம்மை மறந்து அந்தக் காளிதேவியின் நினைவாகவே இருந்தார்.
இவருடைய நிலைமையைப் பார்த்தார் ராமகுமாரர். பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தார். இப்படியே விட்டுவைக்க லாகா தென்று தீர்மானித்தார். இவரை காமர்ப் புகூருக்கு அனுப்பி, அங்கு உத்தம குலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முக்கர்ஜியின் அருமைப் புதல்வி ஸ்ரீ சாரதாமணிதேவியை இவருக்கு விவாகம் செய்வித்தார். அப்பொழுது கதாதரருக்கு வயது இருபத்திரண்டு அல்லது இருபத்துமூன்று இருக்கும். சாரதாமணி தேவிக்கு வயது ஐந்து.
விவாகமானதும், கதாதரர், மீண்டும் தட்சிணேசுவரம் போந்து அம்பாளின் அர்ச்சகராக அமர்ந்து கொண்டார். அன்னையின் நினைவு முன்னைக் காட்டிலும் அதிகமாகிவிட்டது. எங்கும் எல்லாவற்றிலும் ஜகன்மாதாவையே கண்டார். அன்னையின் நினைவில் தமது நினைவை யிழந்து பலநாட்கள் இருந்ததுண்டு. இந்தக் காலத்தில் இவர் ஒரு கடவுட் பித்தராகவே இருந்தார். இவர் உடல் நலம் குன்றியது. கூட இருந்தவர்கள் பெரிதும் கவலை கொண்டார்கள். இந்தச் சமயத்தில், இவருடைய வாழ்க்கையில் சிரத்தை கொண்ட ராமகுமாரர் காலமாகி விட்டார். இவரைத் தனியாக ஒருவர் இருந்து பராமரித்துக் கொண்டிருக்க வேண்டியதா யிருந்தது. இந்தப் பொறுப்பை, ஏற்கனவே சொல்லப் பெற்ற இவருடைய சகோதரியின் மகனான இருதயர் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமபிரானுடைய பதினான்கு வருஷ வனவாசத்தின் போது, லட்சுமணப் பெருமாள், கூடவே நிழல்போலிருந்து சேவை செய்தார் என்று படித்திருக்கிறோம். ஆனால் இங்கே இருதயர், சுமார் முப்பது வருஷகாலம், ஸ்ரீராமதிருஷ்ணருக்கு, நிழல் போல் இருந்து தொண்டு செய்ததைப் பார்க்கிறோம்.
கதாதரருடைய தேக நிலையிலும் மனோ நிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அர்ச்சகர் பொறுப்பினின்று விலக்கப் பட்டார். கட்டுகளற்ற ஒன்றின்மீது மனம் லயித்துப் போயிருக்கும் ஒருவரை எந்த விதமான கட்டுகளும் உட்படுத்த யாரும் விரும்ப மாட்டார்களல்வா? இந்தச் சந்தர்ப்பத்தில் ராணி ராசமணி அம்மையார் தேகவியோகமடைந்தார். மதுரநாதர் ஜமீன்தாரியின் நிருவாகத்தை ஏற்றுக்கொண்டார். அவர் கதாதரரிடம் அத்தியந்த விசுவாசம் கொண்டவரல்லவா? கதாதரருடைய ஆத்ம சாதனைக்குத் தேவையான சகல சௌகரியங்களையும் செய்து கொடுத்தார்.
இந்தக் காலத்தில் கதாதரருடைய உடலத்திற்குப் பல உபாதிகள் ஏற்பட்டன. பசியின்மை; தூக்கமின்மை; மேலெல்லாம் எரிச்சல். உடல் நிலைதான் இப்படியென்றாலோ, உள்ளத்திலே ஒரு குமுறல்; பெரிய புயற்காற்று அடித்துக் கொண்டிருந்தது. உடல் உபாதிகளுக்குப் பரிகராங் காண மதுரநாதருடைய முயற்சியின் பேரில், வைத்தியர்கள் பலர் வந்து பரிசோதனை செய்து பார்த்தனர். இன்ன வியாதி என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடலை யொட்டிய வியாதியாயிருந்தால் தானே? மனதோடு மட்டும் ஒட்டிய வியாதியா யிருந்தாலும் மனோதத்துவ சாதிரிகளால் சிகிச்சை செய்ய முடியும். ஆனால் கதாதரரைப் பற்றிக்கொண் டிருக்கிற வியாதி இவைகளுக்கெல்லாம் மேற்பட்ட கடவுள் வியாதியல்லவோ! கடவுளைக் கண்டால்தானே அந்த வியாதி போகும். கடவுளைக் காட்டுவார்தான் இப்பொழுது வேண்டும். அப்படிக் காட்டுவார் ஏற்பட்டனர் கதாதரருக்கு. இவருடைய வாழ்க்கையில் இஃது ஓர் அதிசயமான விஷயம். கடவுளைக் காண பலவழிகளுண்டு. அவரவரும் அவருடைய பக்குவத்திற்கேற்றபடி ஒவ்வொரு வழியாகச் சென்று அந்தக் கடவுளைக் கண்டிருக்கின்ற னர். கதாதரர், இந்தப் பல வழிகளாகவும் சென்று அந்த ஒன்றான பொருளைக் கண்டிருக்கிறார். அப்படி ஒன்றாகக் கண்டதோடல் லாமல் அந்தந்த வழியினால் காட்டப்பெற்ற விதமாகவும் கண்டி ருக்கிறார். எந்த வழியாகச் சென்று அந்தப் பரம்பொருளைக் காண வேண்டுமென்று இவர் மனம் விழைகிறதோ அந்த வழியாக இவரை அழைத்துச் செல்ல, அந்த வழியிலே சென்று பழகினவர்கள் அவ்வப்பொழுது இவருக்கு வாய்த் திருக்கிறார்கள்.
பரம் பொருளைப் பராசக்தி வடிவமாகக் காண்டல் ஒரு முறை. இதற்குத் தாந்திரிக மெனப் பெயர். ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் சமரஸபடுத்திச் செல்கின்ற இந்த முறையில் அறுபத்து நான்கு சாதனங்கள் உண்டென்றும், இது மகா கடினமான தென்றும் கூறுவர். இந்தத் தாந்திரிக மார்க்கத்தில் கதாதரரை அழைத்துச் செல்ல பைரவி பிராம்மணி என்ற ஓர் அம்மையார் வழி காட்டியாயமைந்தார். சுமார் மூன்று வருஷ காலம் இந்தத் தாந்திரிக சாதனங்கள் பலவற்றையும் பயின்று ஜகதம்பிகை யின் பல தோற்றங்களையும் கண்டு களித்தார் கதாதரர். ஜிதேந்திரிய ரானார். அஷ்டமாசித்திகளும் இவருக்குக் கிடைத்தன. ஆனால் அவைகளைத் துச்சமெனத் தள்ளினார். உலகை மயக்குவதற் கல்லவோ அவை தேவை யென்று கருதினார். இந்த மூன்று வருஷ காலத்தில் இவர் முகத்தில் ஒரு தேஜ உண்டாயிற்று; உடலைப் பற்றியிருந்த நோய்கள் யாவும் பறந்தன.
இதற்குப் பிறகு பக்தி மார்க்கத்திலே செல்ல விரும்பியது இவர் மனம். இதற்கு இசைவாக ஜடதாரி என்ற ஒரு வைஷ்ணவப் பெரியார் இவருக்கு வாய்த்தார். கடவுளை, பெற்ற குழந்தையாகவும், உற்ற தோழனாகவும், மணந்த நாயகனாகவும் இப்படிப் பல வகை முறைகளால் வழிபடுகிற இந்தப் பக்தி மார்க்கம் பூராவையும் கடந்தார்.
இதற்குப் பிறகு அத்வைத மார்க்கத்திலே திரும்பியது இவர் மனம். தோதாபுரி என்ற ஒரு பெரியார் இந்தக் காலத்தில் இவருக்குக் குருவாக வந்து சேர்ந்தார். இவருடைய ஆணைப்படி கதாதரர் சந்நியாசம் பெற்றுக் கொண்டார்; அத்வைத சாதனங்கள் பலவற்றை யும் பயின்றார். தேகாத்ம வாத புத்தியை ஒழித்தார். இரண்டற்ற ஒன்றாகிய பரம் பொருள் காலத்தைக் கடந்தது, அதற்குத் தோற்றமு மில்லை, முடிவு மில்லை, எண்ணத்திற்கு அப்பாற்பட்டது அது, வரம்பில்லாத பேரின்பம் அது, பேசாத நிலை அது, அதனைச் சொல்லால் சொல்லிக் காட்ட வேண்டு மானால் சச்சிதானந்தம் என்று சொல்லலாம், அங்கு எல்லாம் அடங்கி ஒடுங்கி விடுகின்றன என்ற உண்மையை உணர்ந்தார் கதாதரர். உணர்ந்தாரென்ன, தாமே அதுவாகி விட்டார். ஜீவாத்மாவோடு பரமாத்மா ஐக்கியப்பட்டிருக் கின்ற நிலையே நிர்விகற்ப சமாதியாகும். இந்த நிலை, எப்படி யிருக்மென்று சொல்ல முடியாது; இதனை அனுபவிக்கத்தான் முடியும்; அனுபவித்ததைச் சொல்லவும் முடியாது. சொல்லுக்கு அப்பாற் பட்டதன்றோ இந்த நிலை. இந்த நிலையிலே கதாதரர் பல நாட்கள் இருந்தார். இஃது - இந்த நிலையை யடைவது - இவருக்குச் சர்வ சாதாரணமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்ஙனம் பிரும்ம சாட்சாத்காரம் பெற்ற பின் இவரிடத்தில் எல்லா வேற்றுமை களும் அற்றுப் போயின; பச்சைக் குழந்தை போலானார்.
இங்ஙனம் பிரும்ம சாட்சாத்காரம் பெற்றவர்கள் மறுபடியும் உலக நினைவு பெறுவதில்லை யென்று சொல்வர். ஆனால் கதாதரர், உலகத்திற்கு நல்வழி காட்டும் பொருட்டு, உடல் நினைவோடு இன்னும் சில வருஷ காலம் இருக்கவேண்டுமென்று பராசக்தி தனக்குக் கட்டளை யிட்டிருப்பதாக உணர்ந்தார். இதன் பிறகு பிரபஞ்ச உணர்ச்சி பெற்ற வரானார். இதற்கு - இந்த உடல் நினை வோடு கூடிய நிலைக்கு - வர இவர் சுமார் ஆறு மாதகாலம், வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்களுக்கு உட்பட வேண்டியதாயிற்று.
இதற்குப் பிறகு, வேற்று மதத்தினர் கடவுளைக் காண எந்தெந்த வழியாகச் செல்கிறார்களோ அந்தந்த வழியாகத் தாமும் செல்ல வேண்டு மென்று ஆசை கொண்டார். இங்ஙனமே இலாமிய மதத்தை அவலம்பித்தார். ஒரு முலிமைப்போலவே உடை உடுத்து, தினந்தோறும் நமா சொல்லிவந்தார். ஏன், ஒரு முலிமாகவே வாழ்ந்தார் என்று சுருங்கச் சொல்லிவிடலாம். கடைசியில் இந்த இலாமிய மார்க்கத்தின் மூலமாகக் கடவுளைக் கண்டார். இந்த இலாமிய சாதனையைத் தொடங்கியபோது கதாதரருக்கு ஏறக்குறைய முப்பது வயது.
இதற்குப் பிறகு சுமார் எட்டு வருஷங்கழித்து, தமது முப்பத் தெட்டாவது வயதில், கதாதரர், கிறிதுவ மதத்திலே ஈடுபட்டு, ஓர் உண்மைக் கிறிதுவராக வாழ்ந்து, கிறிதுவர்கள் காண்கிறபடி கடவுளைக் கண்டார். அதவைத மார்க்கத்திலே சென்று கொண் டிருந்த காலத்தில் இவர் புத்த மத அனுபவங்களையும் பெற்றார் என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
இலாமிய சாதனம் பயின்று முடிந்த பின்னர் கதாதரர் உடல் நல நிமித்தம், காமர்ப்புகூருக்குச் சென்று சுமார் ஏழெட்டு மாதகாலம் வசித்துவிட்டு பின்னர் தட்சிணேசுவரம் வந்து சேர்ந்தார். அது போழ்து, ஸ்ரீ சாரதமணி தேவியாரும், கணவரோடு சேர்ந்து வாழ்வதற் குரியராய் தட்சிணேசுவரம் போந்தார். அவர், தம் நாதர் அடைந்துள்ள மேலான நிலையை அறிந்தவராய், அவருக்குத் தாய் போலிருந்து போஷிப் பதிலும், சிஷ்யை போலிருந்து சிசுருஷை செய்வதிலும் திருப்தி யடைந்தார். உலகத்திலே அவதரித்த மகான் களிற் பலர், தங்கள் தாய்மார்களால் பெருமையடைந்திருக்கி றார்கள்; ஆனால் கதாதரர், தமது தர்மபத்தினியால் பெருமை யடைந்தார். இப்படிச் சொல்வது இவருடைய பெருமையை எந்த விதத்திலும் குறைப்பதாகாது.
இதற்குப் பிறகு, அதாவது 1866ஆம் வருஷத்திலிருந்து, கதாதரருடைய வாழ்க்கை மகான் தன்மை நிறைந்த வாழ்க்கையாக இருந்ததென்று சொல்ல வேண்டும். சுமார் இருபது வருஷ காலம் இவர், வெல்ல மலையாகவும் மலர்க் கூட்டமாகவும் இருந்தார். இந்த வெல்ல மலையை மொய்த்துக் கொண்டிருந்த உழைப்பாளிகளான எறும்புகள் தான் எத்தனை? இந்த மலர்க் கூட்டத்திலிருந்து ஞான மதுவுண்டு கொண்டிருந்த வண்டுகள் தான் எத்தனை? இந்தக் காலத்தில் கதாதரர், மதுரநாதருடன் அநேக க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். கடவுட் தன்மை எங்கெல்லாம் குடி கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அந்தத் தன்மையை வழிபட்டார். தமக்குப்பின் சந்ததியாராக ஒரு தொண்டர் குழாத்தைச் சிருஷ்டித்தார். இவர் அருளிவந்த உபதேசங் களின் விளைவாக, பாரத நாட்டிலே அதுவரை பரவியிருந்த அறியாமை இருள் அகன்றது. மேனாட்டுப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த பலர் தங்கள் தாய்த் திருநாட்டை நோக்கலாயினர்; அதனை, அதன் பழைய பெருமையிலே கொண்டு வந்து நிறுத்த வேண்டு மென்று சங்கற் பித்துக் கொண்டனர். பொதுவாக பாரத மக்கள் விழிப்படைந்தனர். வந்த வேலை முடிந்து விட்டது என்று உணர்ந்தோ என்னவோ, கதாதரர் 1886ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினைந்தாந் தேதி கடைசியாகக் கண் மூடிக் கொண்டு விட்டர்.
மகான் தன்மை
*“நிறைந்த ஞானம் மூடத்தனம் போலிருக்கிறது.*
_சிறந்த நாவன்மை தட்டுத்தடுமாறிப்_
*பேசுவது போலிருக்கிறது.“*
- லாவோத்ஸே
க்ஷூதிராம் சட்டர்ஜியின் குழந்தையாகப் பிறந்த கதாதரர் மறைந்துவிட்டார். ஆனால் கடவுளின் குழந்தையாக, கடவுளின் அமிசமாக அவதரித்த ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்து கொண்டிருக்கி றார். ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தது யாரோ அவரே இந்த உடலில் ராமகிருஷ்ணனாக வந்துள்ளார் என்று ஸ்ரீ ராம கிருஷ்ணரே சொல்லி யிருக்கிறார். ராமர் தசரதருடைய மகனாகத் தோன்றியதும், கிருஷ்ணர் வசுதேவருடைய பிள்ளையாகப் பிறந்த தும். கதாதரர்க்ஷூதிரா மின் புதல்வராக உடம்பெடுத்ததும் எல்லாம் ஒரு வியாஜந்தான். உண்மையில் இவர்களெல்லோரும் கடவுட் சக்திகள். அருவமாயுள்ள இந்தச் சக்திகள், அந்தந்தக்கால நிலைமைக்கேற்றவாறு மேற் சொன்ன உருவங்களாக அவதரித்தன. ஹிந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை இது.
இந்த நம்பிக்கை ஒருபுற மிருக்கட்டும். சாதாரண திருஷ்டியி லிருந்து பார்த்தாலும், கதாதரர் என்ற பெயர் எல்லோருடைய நினைவி லிருந்தும் அகன்று போகலாம். ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயர் எல்லோருடைய நெஞ்சத்திலும் எந்நாளும் இருந்து கொண்டிருக்கும். ஆதலின் இந்த அத்தியாயத்திலிருந்து கதாதரர் என்ற பெயருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயருக்கு வணக்கஞ் செலுத்தி வரவேற்போம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய வாழ்க்கையின் பிற் பகுதிக் காலத்தில், பலவித சாதனைகள் பயின்றதன் விளைவாக, அவருடைய உடல் சுருங்கி, அழகு குன்றி விட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற முறையில் அவரை ஜனங்கள் தெரிந்துகொண்ட சமயத்தில் அவர் உடலழகு இல்லாதவராகவே காணப்பட்டார். அழகு சொட்டும் குழந்தையென்று எந்த கதாதரரை நாம் வருணித்தோமோ அவரையே இங்கே உடலழகு வாய்க்கப்பெறாத ராமகிருஷ்ணர் என்று கூறத் துணிகிறோம். ஏனென்றால் இங்கே நாம் பார்ப்பது கதாதரர் அல்ல; ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
சரி; ஸ்ரீ ராமகிருஷ்ணர் உடலழகு இல்லாதவர்; வட மொழியோ ஆங்கிலமோ பயிலாதவர். இவருக்குக் தெரிந்த ஆங்கில மெல்லாம் ஐந்தாறு வார்த்தைகள்தான். வாட்டர் டாம் தாங்க் யூ1 இந்த மாதிரி சில வார்த்தைகளே தெரியும். தாய்மொழியாகிய வங்காளியிலும் அதிக பரிச்சயமுடையவர் என்று சொல்லமுடியாது. ராமாயணத்தைக் கம்பன் தமிழில் ஒரு காவியமாகச் செய்திருப்பது போல வங்கமொழியில் கீர்த்தி வாசர் என்ற கவிஞர் காவியமாகச் செய்திருக்கிறார். இதில் யுத்த காண்டத்தின் ஒரு பகுதியை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது பதினேழாவது வயதில் குண்டு குண்டான எழுத்துக்களில் எழுதினார். இப்படிப் பெயர்த்தெழுதியதில்கூட அநேக பிழைகள். இதுதான் இவருடைய வங்க மொழிப் பயிற்சிக்கு அத்தாட்சி. அழகாக, ஆற்றொழுக்குப் போல் பேசும் ஆற்றலும் இவருக்கு இல்லை. பேசுகிறபோது கொஞ்சம் நெருடி நெருடி, அதாவது தத்தித்தத்திப் பேசுவார். இத்தகையவரிடத்தில், ஆங்கிலத் திலும் வடமொழியிலும் சமயஞானப் பயிற்சியிலும் வல்லுநர்களான பலரும், மேனாட்டு நாகரிகத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த இளைஞர் பலரும், செல்வமும் சமுதாயத்திலே செல்வாக்குமுடைய பலரும் ஆட்பட்டிருந்தார்கள். மைக்கேல் மதுசூதன தத்தர் என்ன, பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ன, பண்டித ஈசுவர சந்திர வித்தியா சாகர் என்ன, மகரிஷிதேவேந்திரநாத் தாகூர் - இவர் ரவீந்திர நாத் தாகூரின் தந்தை - என்ன, இப்படிப் பட்டவர்க ளெல்லோரும் இவரிடத்தில் தலைவணங்கி நின்றார்கள். ஹிந்து மதத்தைப் புனருத் தாரணம் செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சில இயக்கங்கள் தோன்றின வென்று முன்னே சொன்னோமல்லவா, அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அத்தியந்த விசுவாசிகளானார்கள். சிறப்பாக பிரும்ம சமாஜத்தின் முக்கியதரான கேசவ சந்திரசேனர், இவருடைய பரந்த மனப் பான்மையிலும் சமரஸ நோக்கிலும் பெரிதும் ஈடுபட்டார். கேசவசேனரின் நாவன்மை, ஸ்ரீ ராமகிருஷ் ணரின் எளிய வார்த்தை களுக்கு முன்னர் மௌனஞ் சாதித்தது. கேசவசேனரும் அவருடைய சகபாடிகளும், மணிக்கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் முன்னிலையில் உட்கார்ந்து உபதேச அமுதைப் பருகிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மட்டுமென்ன? சிறந்த நாடகாசிரிய ரான கிரீஸ சந்திர கோஷ், ஸ்ரீ ராமகிருஷ்ணரால் பெரிய மாற்றத்தை யடைந்தார். தர்க்க சாதிரத்தில் மகா பண்டித ரான கௌரிகாந்த தர்க்க பூஷணர் என்பவர், தட்சிணேசுவரம் போந்து ஸ்ரீ ராம கிருஷ்ணரிடம் ஞான வெளிச்சம் பெற்றார். ராஜ புதனத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற புகழ் படைத்தவர் பண்டித நாராயண சாதிரி என்பவர். வேதாங்கங்கள் ஆறையும் கரைகண்டவர். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்று உபதேசம் பெற்று சந்நியாசம் வாங்கிக் கொண்டார். பர்த்வான் சமதானத்தில் பிரதம வித்துவானாக விளங்கிய பண்டித பத்மலோசன தர்க்காலங்காரர் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரை ஓர் அவதார புருஷ ரென்று கருதினார்; பயபக்தியுடன் இவருடைய உபதேசங்களைக் கேட்டு வந்தார். இன்னும் அநேக உதாரணங் களைச் சொல்லலாம். இங்ஙனம் இலக்கியவானிலே சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந் தவர்கள், சமுதாய சாகரத்தில் கம்பீரமாக ஊர்ந்து சென்ற நாவாய் போன்றவர்கள், இந்த எளிய மனிதரிடத்தில் ஏன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்? இவரிடத் தில் என்ன மகிமை இருந்தது? அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு மகான். இப்படி ஒரு வார்த்தையாகச் சுருக்கிச் சொல்வதிலேயே நாம் திருப்தியடைகிறோம். எப்படி இவருடைய எளிய தன்மையிலே இவருடைய அருமை பெருமைக ளெல்லாம் அடங்கி யிருந்தனவோ அப்படியே மகான் என்ற இந்த ஒரு வார்த்தையிலேயே எல்லா அர்த்தங்களும் அடங்கி யிருக்கின்றன. இவருடைய மகான் தன்மைக்கு முன்னர் அறிவு, அதிகாரம், பதவி, பட்டம், பணம் ஆகிய யாவும் அடங்கி ஒடுங்கி விட்டனவல்லவா?
இந்த மகான் தன்மையுடையவர்களையே தீர்க்க தரிசிக ளென்றும், அவதார புருஷர்களென்றும் சொல்கிறோம். இவர்களை ஈசுவர கோடிகள் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இவர்கள் மானிட ஜாதியின் நன்மைக்காக அவ்வப்பொழுது கடவுளால் அனுப்பப் பெறும் விசேஷ தூதர்கள். இவர்கள் உலகத்தினருக்காக உலகத் தினரைப்போல் வாழ்வார்கள். ஆனால் இவர்களுடைய நாட்டமெல் லாம் கடவுளிடத்திலே தான் இருக்கும். இஷ்டப்பட்ட போது மேலே செல்லவும், அதாவது கடவுளிடத்திலே ஐக்கியமாகி இருக்கவும், இஷ்டப்பட்டபோது கீழே இறங்கி வரவும், அதாவது உலக விவகாரங்களில் ஈடுபடவும் இவர் களால் முடியும். இவர்கள், சீன ஞானி கன்பூஷிய கூறுகிற மாதிரி, பூவுலகையும் வானுலகையும் சமரஸப் படுத்திக்கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவர்கள். இப்படிப்பட்ட ஈசுவர கோடிகளில் ஒருவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
மகான்கள் தண்ணீரைப் போன்றவர்கள். எல்லா ஜீவராசி களுக்கும் முக்கிய ஆதாரமாக இருப்பது நீர். இருந்தாலும் அஃது எல்லாவற்றிற்கும் கீழான இடத்தில் தங்கியிருக்கிறது. நீரைப்போல் மிருதுவான வது கிடையாது; ஆனால் அது நெருப்பை அணைக்க வல்லது; கற்பாறயைக் கரைக்குஞ் சக்தியுடையது. தண்ணீர் எல்லோருக்கும் எவ்வித வித்தியாசமும் பாராட்டாமல் தன்னை வழங்கிக் கொண்டிருக்கிறது; ஆனால் உடனுக்குடன் அது நிரம்பி யும் விடுகிறது. அதனுடைய தாழ்மையிலேதான் அதன் உயர்வு இருக்கிறது; அதன் வழங்குத் தன்மையிலேதான் அதன் நிறைவு இருக்கிறது. மகான்களும் இப்படித்தா னல்லவா? இவர்கள், தங்களைப் பெருமைப் படுத்திக்கொள்வதில்லை; எல்லோருக்கும் முன்னால் வந்து நிற்பதுமில்லை; அடக்கம் ஒடுக்கமாக இருப்பதிலேயே இவர்கள் திருப்தி யடைகிறார்கள். ஆனால் எல்லோருடைய பார்வையும் இவர்கள் மீதுதான் விழுகிறது; எல்லோரும் இவர்களை நாடித்தான் வருகிறார்கள். இவர்கள் இனிய சுபாவமுடையவர்களா யிருக்கிறார்கள்; ஆனால் இவர்களைக் கண்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் ஒருவித பயபக்தி உண்டாகிறது. இவர்கள் அன்பான வார்த்தைகளைத்தான் சொல்கிறார்கள்; ஆனால் அந்த வார்த்தைகள் கல்போன்ற மனத்தினைக் கரைத்து விடுகின்றன.
இன்னும் மகான்கள், யாருடனும் சண்டை போடுவதில்லை; இதனால் யாருக்கும் இவர்களுடன் சண்டைபோடும் தைரியம் உண்டாவ தில்லை. அநேக சம்பவங்கள் நிகழ்வதற்கு, அநேக மனிதர்கள் வளர்ச்சி யடைவதற்கு, இவர்கள் உதவியாயிருக்கிறார்கள்; ஆனால் அந்தச் சம்பவங்களின் நிகழ்ச்சியிலே, அந்த மனிதர்களின் வளர்ச்சியிலே இவர்கள் தலையிடுவதில்லை. இவர்களுக்கென்று சொந்தமான இருதயம் கிடையாது; உலகத்திலுள்ள சர்வ ஜீவராசி களுடைய இருதயங்களும் இவர்களுடைய இருதயந்தான். இவர்கள், நன்மையை நன்மையினால் சந்திக்கிறார்கள்; தீமையையும் நன்மையினால் சந்திக்கிறார்கள்.
மகான்களைச் சிலர் காற்றுக்கு ஒப்பிட்டுச் சொல்வார்கள். எல்லோருக்கும் தேவையாயிருக்கிற காற்று எல்லோராலும் பார்க்கப் படுவதில்லை யல்லவா? எல்லோர் கண்களுக்கும் இல்லாம லிருந்து கொண்டே அஃது எல்லோருக்கும் சேவை செய்கிறது. வானுற ஒங்கி வளர்ந்திருக்கும் மரங்களும் இந்தக் காற்றுக்கு முன்னர் தலை வணங்கிக் கொடுக்கின்றன. மகான்களும் இப்படித்தான். இவர்கள், மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அந்த மற்றவர்க ளுடைய வாழ்க்கைக்கு உதவியாயிருக்கிறார்கள். செல்வச் சிறப்புடை யவர்கள், கல்விச் செருக்குடையவர்கள், அதிகாரத் திமிர் படைத்த வர்கள் ஆகிய எல்லோரும், மகான்களுக்கு முன்னர், பள்ளிக்கூடத் தில் வாத்தியாருக்கு அடங்கின பிள்ளைகள் மாதிரி ஆகிவிடுகி றார்கள்.
மகான்களைப் பற்றி சீன ஞானியாகிய லாவோத்ஸே1 கூறு கின்ற வாசகம் இங்குக்கவனிக்கத்தக்கது:- இவர்கள், தங்களுடைய சொற்களால் மற்றவர்களுக்குக் கற்பிப்பதில்லை; செயல்களாலேயே கற்பிக்கின்றனர். இந்தச் செயல்களுக்கு இவர்கள் எந்த விதமான சன்மானத்தையும் எதிர்பார்ப்பதில்லை. பூரணத் துவத்திற்காக இவர்கள் உழைக்கிறார்கள்; அந்த உழைப்புக் குண்டான மதிப்பு தங்களுக்குக் கிடைக்க வேண்டு மென்று இவர்கள் ஆசைப்படுவ தில்லை. ஆத்மீக வாழ்க்கையைப் பற்றின அலுவல்களிலேயே இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவசியத்திற்கு அதிகப்பட்டவை களையெல்லாம் அவர்கள் ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். தன் முனைப்பு என்பது இவர்களுக்கு இருப்பதே இல்லை. தீமைகளைக் களைகிற விஷயத்தில் இவர்கள் மென்மையான சுபாவமுடையவர் களாகவும் இருப்பது கிடையாது. கௌரவம், அகௌரவம் இரண்டும் இவர்களுக்கு ஒன்றுதான். எல்லாரும் இவர்களுடைய குழந்தைகள். நன்னெறியே இவர்களுடைய தாய்.
மகான்கள், இயற்கையோடியைந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதனால் இவர்கள், செயற்கையான வாழ்வு நடத்துகிறவர்களுக்கு, அதாவது சாதாரண உலக விவகாரங்களிலே ஈடுபட்டிருக் கிறவர் களுக்கு, இயற்கைக்கு விரோதமான வாழ்வு நடத்துகிறவர் களாகத் தென்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள், தங்களுடைய செயற்கை வாழ்வையே இயற்கை வாழ்வென்று நினைத்துக் கொண்டிருக் கிறார்களல்லவா? ஆதலின், அவர்கள், மகான்களைப் பித்தரென்று பேசுவதிலே என்ன ஆச்சரிய மிருக்கிறது? உண்மையில் மகான்கள் கடவுட் பித்தர்கள்தான்.
கடவுட் பக்தர்கள் வேறே; கடவுட் பித்தர்கள் வேறே. உலக விவகாரங்களுக்கு மத்தியில், அதாவது உலக விவகாரங்களைக் கவனித்துக்கொண்டு, கூடவே கடவுளைப்பற்றி நினைக்கிறவர்கள், கடவுட் பக்தர்கள். கடவுட் பித்தர்கள் இப்படியல்ல. உலகத்தினை, அதாவது உலக விவகாரங்களை, அடியோடு மறந்துவிட்டு கடவுள் நினைவாகவே இருப்பார்கள். இவர்களுக்குக் கடவுளைப் பற்றிய பிரக்ஞை ஒன்று தவிர, மற்றவைகளின் மீது பிரக்ஞையே இராது. பக்தர்களைப் பச்சைக் காய்களுக்கும் பித்தர்களைப் பழுத்த பழங்களுக்கும் ஒப்பிடுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்தக் கடவுட் பித்தையே பிரேமை என்பார்கள்.
உலக நினைவை இழந்து கடவுள் நினைவாக இருக்கிறவர் களைச் சித்த சுவாதீன மில்லாதவர்கள் என்று உலக நினைவாகவே இருக்கிறவர்கள் கருதி விடுகிறார்கள்; இவர்களை ஏசவும் பேசவும் முற்படுகிறார்கள். அத்தா! அரியே! என்றுன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றார் என்னை, முத்தே! மணி மாணிக்கமே! முளைக்கின்ற வித்தே! உன்னை நான் எங்ஙனம் விடுகினே என்று கதறுகின்றார் திருமங்கையாழ்வார். இந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் தகுந்தாற்போல் கடவுள் நினைவுடையவர்களும் நடந்துகொள்கி றார்கள். சில சமயங்களில் இவர்களைப் பார்த்தால் குடித்து விட்டிருக்கிற வெறியர்கள் மாதிரி இருக்கும்; பகலென்றும் இரவென்றும் வித்தியாசம் தெரியாது. எப்படி ஒரு குடிகாரன், உடம்பிலே அணியவேண்டிய சட்டையைச் சில சமயங்களில் தலையிலும், சில சமயங்களில் காலிலும் அணிந்து கொள்கிறோனோ அதைப்போல கடவுள் வெறியர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தினைப் பற்றிய நினைவே இல்லாமல் நடந்து கொள்கிறார் கள். சில சமயங்களில் இவர்களுடைய செயல்கள் குழந்தைகளின் செயல்கள் போலிருக்கும்; இன்னும் சில சமயங்களில் அனுபவம் நிறைந்தவர்களின் செயல்களைப் போலிருக்கும். அநேக சமயங் களில் இவர்களுக்குத் தங்கள் தேகத்தின் நினைவே இராது. இப்படிப்பட்டவர்களை மத்தர் பேயரோடு பாலர் தன்மையது மருவியே துரிய வடிவமாய், மன்னு தேகமொடு காலமாதியை மறந்த நின்னடியர் என்கிறார் தாயுமானார். இவர்களுக்கு நன்மையோடு தீமையில்லை, நாடுவதொன்றில்லை, சீல மில்லை, கோலமில்லை, புலனில்லை, கரணமில்லை, குணமில்லை, குறியில்லை, குலமு மில்லை…
இங்ஙனம் உலகத்தினர் இவர்களை, இந்த மகான்களைப் பித்தர்களென்று கருதுவதைப் போல் இவர்களும், இந்த மகான் களும், உலகத்தினரைப் பித்தர்களென்று கருதுகிறார்கள். பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும் என்கிறார் ஒருவர். இப்படிப் பரபரம் ஒருவரையொருவர் கருதிக்கொண்டு விடுவதால் இருவருக்கும் மத்தியில் ஓர் இடைவெளி ஏற்பட்டு விடு கிறது; ஒருவரிடமிருந்து மற்றொருவர் ஒதுங்கியே இருக்கிறார்கள். இருந்தாலும் மகான்கள், கடவுள் நினைவுக்கு உலகத்தினரைத் திருப்பவே பாடுபட்டு வருகிறார்கள். உலகத்தினரோ, இந்த மகான் களுடைய பிற்காலத்தில் தான் இவர்களைப் புரிந்துகொண்டு இவர் களுடைய அருகில் வருகிறார்கள்.
உலகத்தினரைக் கடவுள் நினைவுக்குத் திருப்பவேண்டு மென்கிற கருணையுடையவர்களா யிருப்பதனால்தான் மகான்கள், உலகத் தினருக்குச் சுலபமாகப் புரியக்கூடிய உலக விஷயங்களை உதாரணங் களாகக் காட்டி, கடவுள் தன்மையை விளக்குகிறார்கள்; எல்லா ஜனங்களும் கடவுள் நிலையை அடைய வேண்டுமென்பதற் காகவே எல்லா ஜனங்களும் புரிந்து கொள்ளக்கூடிய பாஷையில் பேசுகிறார்கள். இவர்களுடைய உபதேசங்கள், மண்ணிலே பிறந்து, திறந்த வெளியிலே வளர்கின்றன. எத்தகைய சிக்கலான பிரச்னை களையும் இவர்கள் சாதாரண உபமான உபமேயங்களைக் காட்டிப் புரியவைத்து விடுகிறார்கள். இதனால்தான், இவர்களுடைய உபதேசங் களில் சிறு கதைகள், விடுகதைகள் எல்லாம் காணப் படுகின்றன. புத்தர், ஸாக்ரட்டீ, யேசுநாதர், கன்பூஷிய, இப்படிப் பட்ட மகான்களுடைய உபதேசங்களைச் சிறிது படித்துப்பாருங்கள். எவ்வளவு எளிய உவமைகள்! ஆனால் எவ்வளவு பெரிய உண்மை களை விளக்குகின்றன! யாரார் எப்படி எப்படி வழிபடுகின்றார் களோ அப்படி யெல்லாம் கடவுள் காணப்படுகின்றார் என்ற உண்மையை ஸ்ரீ ராமகிருஷ்ணர், எத்தகைய அருமையான சிறு கதையின் மூலம் விளக்குகிறார் கேளுங்கள்.
“ஒருவன் ஒரு காட்டிற்குள் சென்று மரத்தின் மீது பிராணி யொன்றிருப்பதைப் பார்த்தான். பார்த்துவிட்டுத் திரும்பிவந்து, தன் நண்பன் ஒருவனிடம் ‘நண்பா, காட்டில் நான் ஒரு பிராணியைப் பார்த்தேன்; அஃது எவ்வளவு அழகான சிவப்பு தெரியுமா?’ என்றான். அந்த நண்பன் ஓ, நான்கூட காட்டிற்குள் சென்றிருந்தபோது அந்த பிராணியைப் பார்த்தேனே; அதனைச் சிவப்பு என்று எப்படிச் சொல்கிறாய்? பச்சை நிறமல்லவோ அது என்றான். இந்தச் சமயத்தில் வேறோருவன் வந்து, நீங்கள் இரண்டு பேர் சொல்வதும் தவறு; அந்தப் பிராணி மஞ்சள் நிறமுடையது என்றான். இப்படிப் பலர் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு நிறத்தைச் சொன்னார்கள். ஒருவன் சாம்பல் நிறமென்றான்; இன்னொருவன் ஊதா நிற மென்றான். யார் சொல்வது சரி யென்பதைப்பற்றி இவர்களுக் குள்ளே சண்டை வந்துவிட்டது. கடைசியில் மரத்தருகில் சென்று பார்ப்பதென்று தீர்மானித்து அப்படியே சென்றார்கள். அந்த மரத்தடியில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனிடத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் பார்த்த நிறத்தைப்பற்றிச் சொன்னார்கள். அவன் கூறினான்:- சகோதரர்களே, நான் இந்த மரத்தடியில்தன் வசிக்கிறேன். நீங்கள் சொல்கிற பிராணியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அனைவர் சொல்வதும் சரியே. அந்தப் பிராணி ஒரு சமயத்தில் சிவப்பாகவும், இன்னொரு சமத்தில் மஞ்சளாகவும், மற்றொரு சமயத்தில் ஊதாவாகவும், இப்படி ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுகிறது. அது பச்சோந்தி. சில சமயங்களில் அதற்கு எவ்வித நிறமும் இருப்பதில்லை.”
மகான்கள், பெண்மையை வழிபடுகின்றார்கள்; பெண்மை யிலே இறைமையைக் காண்கிறார்கள். இவர்களுடைய பெண் ணுள்ளந்தான், எல்லோருடைய துன்பங்களுக்கும் பரிகாரம் காணவேண்டுமென்று விழைகின்றது; அந்தப் பெண்ணுள்ளத்தின் பலகணிகள் போன்றிருக்கிற கண்கள்தான் எல்லோருடைய துக்கத்திற்காகவும் கண்ணீர் வடிக்கின்றது. மகான்களுடைய உடலமைப்பையோ உள்ளப் பாங்கையோ சிறிது உற்றுப் பாருங்கள். பெண் தன்மையின் அமிசங்கள் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். புத்தர் என்ன, யேசுநாதர் என்ன, இப்படிப் பட்டவர்களுடைய முகத்தில்தான் என்ன சாந்தம்! உதட்டில்தான் என்ன அழகான புன் சிரிப்பு! கண்களில்தான் எவ்வளவு அருள் நிறைந்த பார்வை! இவர் களுடைய கண்களில், ஓர் அறிஞர் கூறுகிற மாதிரி, அறிவின் உயரம், தெய்வீக அமைதி, ஆத்மீக ஆழம் எல்லாம் நிரம்பியிருக் கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிறு வயதில் ஒரு பெண்ணைப் போலவே இருந்தார் என்றால் அஃது இவருடைய பிற்கால மகான் தன்மையின் ஆரம்ப சூசகமேயாம்.
ஆனால் சிலர் கேட்கலாம், ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது உபதேசங்களில் அடிக்கடி பெண்ணையும் பொன்னையும் விலக்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்கிறாரே என்று. வாதவம்; ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படித் தான் சொல்கிறார். காமினி (பெண்) காஞ்சனம் (பொன்) என்ற வார்த்தை களை அடிக்கடி உபயோகித் திருக்கிறார். ஆனால் எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்லி யிருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெண்ணாசையையும் பொன்னாசையையுமே இவர் வெறுக் கிறார்; விலக்கச் சொல்கிறார். எல்லா மகான்களும் இதைத்தானே சொல்லி யிருக்கிறார்கள்? ஆத்ம சாதனைக்கு இந்த இரண்டு ஆசைகளும் இடையூறா யிருக்கின்றன என்ற காரணத்தினாலேயே இவைகளை விலக்கச் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஆத்மீகத் துறையில் இறங்கத் தீர்மானித்தவர்கள், ஆணாயிருந்தால் பெண்ணாசையையும், பெண்ணா யிருந்தால் ஆணாசையையும் துறந்துவிட வேண்டியது அவசியமாகும். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உபதேசங்களில் வலியுறுத்தி யிருக்கிறார்.
பெண்ணாசையைத் துறக்க வேண்டுமென்று சொன்ன ஸ்ரீ ராமகிருஷ்ணர், எல்லாப் பெண்களையும் ஜகன்மாதாவின் வடிவங் களாக வழிபட்டார். இந்த விஷயத்தில் தம் மனைவியென்றும், மற்ற திரீகளென்றும் இவர் வேற்றுமை பாராட்டவேயில்லை. எல்லோரும் இவருக்குத் தாய்மார்களாக, அருள் வடிவங்களாக, தியாகமூர்த்தி களாகவே தென்பட்டார்கள். இவர் தாந்திரிக சாதனத்தை ஒரு திரீயினிடம் பயின்றதை இங்கு வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
பெண்ணுள்ளம் படைத்த மகான்கள், மற்றவர்களுடைய துக்கத்திற்காகக் கண்ணீர் வடிக்கிறார்களென்று மேலே சொன் னோமே, அது வெறும் அலங்கார பாஷையல்ல; உண்மை வாசகம். இவர்கள், மற்றவர்களுடைய துக்கத்திற்காக மட்டும் கண்ணீர் வடிப்பதில்லை; மற்றவர்களுடைய அறியாமைக்காகவும் அழுகி றார்கள். இப்படி அழுகிறபோதுதான், இவர்களைப் பைத்தியக் காரர்களென்று, இவர்களை அறியாத, இவர்களை அறிந்துகொள்ள முடியாத உலகம் சொல்கிறது. ஆனால் இவர்களுடைய மனப் புண், அதிலிருந்து கசிகிற ரத்தம், இவைகளெல்லாம் அதற்கென்ன தெரியும்?
கிறிது பிறப்பதற்குச் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே கிரீ தேசத்தில் ஹெராக்ளீட்ட1 என்றொரு ஞானி இருந்தான். இவன் ஸாக்கரட்டீஸின் ஆசிரியன் என்று சொல்வர். இவன், மானிட ஜாதியின் அறியாமைக்காக எப்பொழுதும் அழுதுகொண்டிருப்பான். ஐயோ, மனிதர்கள் சன்மார்க்கத்திலே செல்லாமல் இப்படிக் கெட்டுப் போகிறார்களே என்று இவனுக்கு ஆத்திரம் வரும். அந்த ஆத்திரம் அழுகையாக வெளிப்படும். இதனால் இவனை, இவன் சமகாலத்தவரும், பிற்காலத்தவரும் அழுகின்ற ஞானி என்று அழைத்தார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், பலதடவைகளில், உலகத்தின் அறியாமையைக் குறித்து வருந்தியிருக்கிறார்; அழுதிருக்கிறார். இங்ஙனமே மற்றவர் களுடைய துயரத்திற்காகத் தாம் துயரப்பட்டு மிருக்கிறார். ஒரு சமயம் இவர் கங்கைக்கரையின் மீது உலவிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு படகோட்டி, மற்றொரு படகோட்டியைக் கன்னத்திலே நன்றாக அறைந்து விட்டான். அதைப் பார்த்து விட்டார் இவர். தாமே அறை பட்டதாக உணர்ந்தார். ஐயோ, நோகிறதே, நோகிறதே என்று உரக்கக் கதறினார். அருகிலிருந்தவர்கள் ஒடிவந்து பார்த்தார்கள். என்ன கண்டார்கள்? இவர் முதுகில், அடித்த விரல் அடையாளங்கள் இருந்தன. என்ன ஆச்சரியம்! எல்லா ஜீவராசிக ளையும் தானாகப் பார்க்கிற ஒரு நிலையை, எல்லா ஜீவாராசிகளின் துன்பத்தையும் தன்னுடைய துன்பமாகக் கருதுகின்ற ஒரு தன்மையை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடைந்திருந்தார் என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
இதனால்தான், அதாவது தான் வேறு, மற்ற ஜீவராசிகள் வேறு என்ற பேதமற்ற நிலையிலே இருந்த காரணத்தினால்தான், ஸ்ரீ ராம கிருஷ்ணர், ஜீவராசிகளிடத்தில் கருணை காட்டவேண்டும், அவை களுக்கு உதவி செய்யவேண்டும், என்று யாராவது சொன்னால், அவர்களைக் கண்டித்துவந்தார். நரேந்திர நாதரையும், மற்றும் சில சிஷ்யர்களையும் பார்த்து ஒரு சமயம் கூறுகிறார்: ஜீவராசிகளிடத் தில் கருணைகாட்டுவதாம்! என்ன அகங்காரம்! ஜீவன்கள் யார்? இவனைத் தவிர்த்து வேறில்லை. பிரதியொரு ஜீவனையும் கடவுளாகக் கருதி, அதற்குப் பக்தி சிரத்தையோடு தொண்டு செய்யவேண்டும்; கருணை மேலீட்டால் தொண்டு செய்தல் என்பது கூடாது. கருணை யென்பதே, மேலானவர் கீழானவர் என்ற வேற்றுமையைக் கற்பித்து விடுகிறது. இந்த வேற்றுமை யில்லாமல், எல்லா ஜீவராசிகளையும் தானாகக் கருதி, அந்த ஜீவராசிகளே தானாக இருந்து கொண்டு அவைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்பதே ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய கருத்து. சுவாமி விவேகானந்தர், பிற்காலத்தில்,
ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய பெயரால் ஒரு திருத்தொண்டர் குழாத்தை அமைத்ததற்கு இந்தச் சீரிய உபதேசமே வித்தாயிருந்தது.
உலகத்தினருடைய அறியாமையைக் கண்டு, அந்த அறியாமை காரணமாகத் துன்பப்படுகிறவர்களைக்கண்டு, எப்படிச் சிலர் அழுகிறார் களோ அப்படியே சிலர் சிரிக்கிறார்கள். சிரிப்பு என்பது அழுகையின் மறு புறந்தானே? மிதமிஞ்சிய துக்கமானது சிரிப்பாக வெளிவருகிறது. இப்படிச் சிரிக்கிற மகான்களும் பலர் இருந்திருக் கிறார்கள்.1 உலகத்தின் அறியாமையைக் கண்டு, அந்த அறியாமை காரணமாக அது துன்புறுவதைக்கண்டு வருந்துகிறவர்கள் அழு கிறார்கள்; சிந்திக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.
உலகத்தின் அறியாமையையும் துன்பத்தையும் கண்டு மகான்கள் அழுவார்களென்று சொன்னால், இவர்கள் எப்பொழுதும் அழுது கொண்டிருப்பார்கள், சிரிக்கவே மாட்டார்கள் என்பது அர்த்தமல்ல. இவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள்; மற்றவர் களையும் சிரிக்க வைப்பார்கள். சுருக்கமாக இவர்கள் நகைச்சுவை யின் ஊற்றுக்களமாயிருப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களில் இந்த நகைச்சுவை, ஒளிவிட்டு வீசுவதைப் பல இடங்களில் பார்க்கலாம்.
கடவுள் தன்மை படைத்த மகான்கள் லட்சியத்திற்காகவே வாழ்கிறார்கள். அந்த லட்சியத்திற்காக தோல்வியைத்துலையற்றார் கண்ணுங்கொள்கிறார்கள்; துன்பங்களை யெல்லாம் இன்பமாக அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு, நேர்மை இன்னது, அழகு இன்னது, நல்லது இன்னது என்பது சுலபமாகப் புரிந்து விடுகிறது. எது சரி, எது தவறு என்ற சந்தேகமே இவர்களுக்கு உண்டாவ தில்லை. இந்தச் சந்தேகமில்லாத காரணத்தினால், இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்கிறார்கள்; எந்த ஓர் அபிப்பிராயத்தையும் திடமாகச் சொல்கிறார்கள்; இப்படிச் சொல்வதற்கு மற்றவர்களை இணங்க வைக்கிறார்கள். இவர்களுடைய மனோ உறுதியின் முன்னர் மற்ற வர்கள் தலைவணங்குகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு விவகாரத் திலும் தான் என்பது லவலேசமும் இருப்பதில்லை. இதனால் இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் மற்றவர்கள் சுலபமாக ஆட்பட்டு விடுகிறார்கள். அவர்கள் இவர்களை - இந்த மகான்களை - தனி மனிதர்களாகக் காண்பதில்லை; ஏதோ ஒரு சக்தியாகவே காண்கிறார்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில் யாருக்குமே ஒருவித பயபத்தி உண்டாகிறது; இவர்களிடத்தில் தங்கள் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. இவர்கள் அதிகார தோரணையோடு சொன்னாலும், அதில் அன்பும் இனிமையும் கலந்திருப்பதால், அதற்காக யாரும் வருந்துவதில்லை. இவர்கள், மற்றவர் களைக் கண்டித்தாலும், அதில் தன்னலம் இல்லாததினால், அதனை யாவரும் ஏற்றுக் கொள்கி றார்கள்.
மகான்கள் எதைச் சொன்னாலும் அது புதிதாகவே இருக் கிறது. மற்றவர்களிடமிருந்து இவர்கள் எண்ணங்களை இரவல் வாங்குவ தில்லை. தங்கள் சுய அறிவிலிருந்து, சுய உணர்ச்சி யிலிருந்து, சுய அனுபவத்திலிருந்து உண்டாகிற எண்ணங்களையே இவர்கள் வெளியிடுகிறார்கள். இவர்களுடைய அறிவு, கல்வி கேள்விகளின் விளைவாக ஏற்பட்டது அல்ல. இயற்கையிலேயே, அதாவது பிறக்கிற போதே இவர்களுக்கு அறிவு இருக்கிறது. மற்றும், தங்களுடைய லட்சியத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையானது, இவர்களுக்கு அபார ஞானத்தையும் அனுபவத்தையும் அளித்து விடுகிறுது. இவர்கள், மற்றவர்களுடன் தர்க்கம் செய்து தர்க்கம் செய்து உண்மையைக் காண் கிறார்களில்லை; நம்பிக்கை யினாலேயே உண்மையைக் காண்கிறார்கள். பேரறிஞர்களுக்குக்கூட புலப்படாத உண்மைகள், இந்த நம்பிக்கை காரணமாக, இவர்களுக்கு எளிதிலே புலப்பட்டு விடுகின்றன. இதனால்தான் இவர்கள், தாங்கள் பிறந்த சமுதாயத்திற்கு, வாழ்கின்ற காலத்திற்கு, எதைச் செய்தால் சந்தோஷம் உண்டாகுமோ அதைச் செய்யாமல், எதைச் செய்தால் நன்மை உண்டாகுமோ அதைச் செய் கிறார்கள். நன்மையைச் செய்ய முன்வருவோர் தீமையை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும். மகான்கள் இதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
மகான்கள் புதிதாகச் சொல்வதோடு குறைவாகவும் சொல்கி றார்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய இவர்கள் அவதரிக்க வில்லை; மற்றவர்களை நல் வழிப்படுத்தவே அவதரிக்கிறார்கள். மற்றவர்களை நடத்திச்செல்ல முன் வருவோர் தாங்களும் நடக்க வேண்டுமல்லவா? உட்கார்ந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தால், மற்றவர்களை நல்வழியிலே அழைத்துச் செல்லமுடியுமா? நான் அப்படிப் பேசினேன்; இப்படிப் பேசினேன்; ஒருவரும் என் பேச்சைக் கேட்கவில்லையே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். அங்கலாய்ப்பதில் என்ன பிரயோஜனம்? பேச்சுக்குள்ள மதிப்பு தற்காலிக மதிப்புத்தான்; செயலுக்குத்தான் நிரந்தர மதிப்பு உண்டு.
மகான்கள் உபதேசகர்களாக வாழ்வதில்லை; உபதேசமாக வாழ்கிறார்கள். இவர்கள் ஞானபோதகர்கள் அல்ல; ஞானிகள். இவர்கள் செல்வத்தை வழங்கும் கொடையளிகள் அல்ல; இவர்களே செல்வம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஹிந்துமதம் என்றால் என்ன வென்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காணும் முயற்சியில் தமது வாழ்நாளைக் கழிக்கவில்லை. இவர் ஹிந்து மதமாகவே வாழ்ந்தார். இதில்தான் இவருடைய மகிமை யெல்லாம் தங்கி யிருக்கிறது. இவர் ஓர் உபதேசகர் அல்லர்; பிறருக்கு உபதேசிப்பதை இவர் தொழிலாகக் கொள்ளவில்லை. குருவா யிருப்பதையே தொழிலாக உடையவர்கள் அற்ப புத்தி படைத்தவர்கள் என்றும் கடவுளின் கட்டளை யில்லாமல் மற்றவர்களுக்குப் போதனை செய்வதில் அர்த்தமில்லை யென்றும் இவரே கூறியிருக்கிறார். இவர் வெறும் உபதேசகராக மட்டும் இருந்திருந்தால் இவருக்கு இவ்வளவு பெருமை ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம். நமது நாட்டில் எத்தனையோ புலவர்கள், நூலாசிரியர்கள் வாழ்ந்து வந்திருக்கி றார்கள். அவர்கள் பெயரையும் நம்மிலே பலர் அறியார். ஆனால் ஹனுமானையோ, துருவனையோ, பிரகலாதனையே, கண்ணப் பனையோ, காரைக்கா லம்மையாரை யோ அறியாதவர், அவர்களுக்குத் தலை வணங்காதவர், நமது நாட்டிலே யாரேனும் உண்டோ? ஏன்? அவர்கள் பக்தியாகவே வாழ்ந்தார்கள்; பக்தியைப்பற்றி அவர்கள் உபதேசிக்கவில்லை. இங்ஙனமே ராமாயணத்தில், லட்சுமணன் சேவையாக வாழ்ந்தான்; பரதன், எல்லாம் உன்னடிமையே, எல்லாம் உன் உடைமையே என்ற லட்சியமாக வாழ்ந்தான்.
மதமானது, மனிதனிடத்திலேயுள்ள தெய்வத் தன்மையைத் தூண்டிவிட வேண்டும்; அவனைச் சன்மார்க்கத்திலே செலுத்த வேண்டும்; அவனிடத்தில் சகோதரத் தன்மையை வளர்க்க வேண்டும்; சர்வ ஜீவராசி களுக்கும் அவன் இருதயத்தில் இடம் அளிக்க வேண்டும். உண்மையான ஒரு மத புருஷனுக்குப் பிற மதங்களிலே துவேஷம் இராது; பிற மதத்தினரைத் தன் சகோதரர்கள் போலக் கருதி அவர்களுடைய மத அனுஷ்டானங்களுக்கு மதிப்புக் கொடுப்பான்; எல்லா மதத்தினரும் வணங்கும் கடவுள் ஒருவர்தான், அவரை, அவரவரும் அவரவருடைய மனோ பரி பக்குவத்திற்குத் தகுந்தபடி பல பெயர்களிட்டழைக்கின்றனர், பல மாதிரியாக வழிபடுகின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்வான். இந்தப் பேருண்மையைத் தான் ஹிந்து மதமானது காலத்தின் ஆரம்பத்திலிருந்து முழக்கம் செய்து வருகிறது. யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அப்படியே அவர்களுடைய தகுதிக்கு என்னை ஆக்கிக்கொள்கிறேன். மனிதர்கள் எல்லோரும் என் வழியையே பின்பற்று கிறார்கள் என்பது கீதாவாசகம்.1 உண்மையான ஒரு ஹிந்துவுக்கு, ஹிந்து வல்லாதான் ஒருவனுமே இல்லை. அவனுக்கு எல்லோரும் கடவுள் புத்திரர்கள்தான்; அதனால் தன்னுடைய சகோதரர்கள்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படிப்பட்ட ஹிந்துவாகவே வாழ்ந்தார். இவர் பிற மதங்களைப் படித்து அவற்றின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வில்லை; அந்தந்த மதமாகவே வாழ்ந்தார்; அந்தந்த மதத்தின் கடவுளைக் கண்டார். இவருக்கு அல்லா வேறு, யேசு வேறு, கிருஷ்ணன் வேறு என்ற வேற்றுமையே தோன்றவில்லை. சர்வ மதங்களின் ஐக்கியமாக இவர் வாழ்ந்தார்.
சிக்காகோ நகரத்தில் கூடிய சர்வமத மகாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பேச எழுந்ததும் முதன் முதலாக சகோதரிகளே! சகோதரர்களே! என்று தொடங்கினார். வேற்று நிறத்தினரும், வேற்று நிலத்தினரும், வேற்று மதத்தினருமான அங்குக் கூடியிருந்த வர்களைப் பார்த்து சகோதரிகளே! சகோதரர்களே! என்று அழைத்தாரல்லவா, அதில்தான் ஹிந்துமதத்தின் சாரம் அடங்கி யிருக்கிறது. எல்லா உயிர்களிடத்தும் ஈசன் பரந்து விளங்குகின்றான். எல்லாம் அவனுடைய குழந்தைகள், ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் அனைவரும் எப்படிச் சகோதரர்களாவார்ளோ, எப்படிச் சகோதர பாவத்துடன் வாழவேண்டுமோ அப்படியே ஈசன் குழந்தைகளாகிய மக்களனைவரும் சகோதர சகோதரிகளே. அந்தச் சகோதர பாவத் துடன்தான் உங்களைப் பார்க்கிறேன், உங்கள் முன் வந்து நிற்கிறேன், என்னை வேற்றுமனிதனாகக் கருத வேண்டாம், என் நிறம் கருப்பாயிருக்கலாம், என் உடை உங்களுக்கு விநோத மாகத் தென்படலாம், எனது தாய்ப் பாஷை வேறு, எனது தாய்நாடு வேறு, என்னுடைய நாகரிக பரம்பரை வேறு, இருந்தாலும் என்னிடத்தில் எந்தப் பரம்பொருள் குடிகொண்டிருக்கிறதோ அந்தப் பரம் பொருள்தான் உங்களிடத்திலும் குடிகொண் டிருக்கிறது, ஆதலின் இங்குக் கூடியுள்ளவர் அனைவரும் என்னுடைய சகோதர சகோதரி களே என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இந்தச் சகோதரத் துவத்தைப் போதிக்கிற மதந்தான் ஹிந்துமதம். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்.
பரம்பொருளை அடைவதற்கான வழிகள் என்னென்ன உண்டோ, ஆத்ம வளர்ச்சியில் ஒரு மனிதன் அடைய வேண்டிய நிலைகள் என்னென்ன உண்டோ அவைகளை யெல்லாம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கற்றுத் தெரிந்து கொண்டவரல்லர்; பிறகுக்குக் கற்பித்தவருமல்லர்; அனுபவத்தில் உணர்ந்தவர், ஸ்ரீ ராம கிருஷ்ணரைப் பொறுத்தமட்டில் யோகாப்பியாசம், பராபக்தி, ஈசுவர சக்தி, நிர்விகல்ப சமாதி, பிரும்ம சாட்சாத்காரம், சச்சிதானந்தம் ஆகிய இவை யெல்லாம் வெறும் வார்த்தைகளல்ல; அனுபவ உண்மைகள்.
இங்ஙனம் ஒவ்வொன்றையும் அனுபவித்துச் சொல்கிற காரணத் தினால்தான், ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களை, படித்தவர்களும் பாமரர்களும் எளிதிலே புரிந்து கொள்ள முடிகிறது; அனுஷ்டானத்திலே கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. பாமரர்களும் புரிந்து கொள்ளக்கூடிய உபமான உபமேயங்களையே இவர் கையாள்கிறார்; அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களையே உதாரணங்களாகக் காட்டி பெரிய வேதாந்த உண்மைகளை விளக்குகிறார்.
மகான்கள், இயற்கை யறிவு படைத்திருக்கிற காரணத்தினால் தீர்க்கதரிசிகளாயிருக்கிறார்கள். இவர்களுக்கு வருங்காலத்தில் இன்னது நடக்கப் போகிறதென்பது சுலபமாகத் தெரிகிறது. வருங்காலத்தைத் தங்கள் கண் முன்னாலேயே பார்க்கிறார்கள். யார் என்ன நினைக்கிறார்கள், யாருக்கு என்ன லபிக்கப் போகிறது என்பவைகளை நேரில் காண்பது போல் சொல்லி விடுகிறார்கள். இத்தகைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இதை நிரூபிப்பதற்கு இவருடைய வாழ்க்கையிலிருந்து ஓரிரண்டு உதாரணங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
இவருக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று இவருடைய தாயாரும் இவருடைய மூத்த சகோதரரும் பல இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார்கள். சரியான பெண் அகப்படவில்லையேயென்று ஒருநாள் தாயாரும் மூத்த மகனும் ஏக்கப் பட்டுத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் - அப்பொழுது கதாதரர் - அவர்களைப் பார்த்து ஏன் வீணாக அலைகிறீர்கள்? அருகிலுள்ள ஜயராம்வடி என்ற கிராமத்தில் ராமச்சந்திர முக்கர்ஜி என்ற ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டில் எனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள் காத்துக் கொண்டிருக்கிறாள் என்றார். தாயாரும் தமையனாரும் முதலில் இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிறிது திகைத்தார்கள். பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன மாதிரி சென்று பார்த்த போது, ராமச்சந்திர முக்கர்ஜியினுடைய வீட்டில் ஸ்ரீ சாரதாமணி தேவியார் இருப்பதைக் கண்டார்கள். அவரையே பின்னர் விவாகம் செய்து வைத்தார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பல சிஷ்யர்கள் ஏற்பட்டிருந்தார்க ளல்லவா, இப்படித் தமக்குச் சிஷ்யர்கள் ஏற்படுவார்கள் என்பது இவருக்கு முன்னாடியே தெரிந்திருந்தது. இதை அடிக்கடி பிரதாபித்தும் இருக்கிறார். ஒருநாள், எனக்குச் சிஷ்யர்கள்- என்னுடைய நெருங்கிய தோழர்கள், என்னுடைய பிரதிபிம்பங்கள்- பலர் ஏற்பட்டிருப்பதாக ஒரு காட்சி புலப்பட்டது. உடனே,……நீங்க ளெல்லோரும் எங்கே? இங்கே வாருங்கள். உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டி ருக்கிறேன் என்று கதறினேன் என்று கூறுகிறார் ஓரிடத்தில், அப்பொழுது சிஷ்யர்களாக யாரும் இவரை வந்து அடையவில்லை. இங்ஙனமே, தம்மிடம் பேச வருகிறவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது, எந்த எண்ணத் தோடு, எந்த மனப்பான்மையோடு தம்மை நாடி வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டுவிடுவார். அதற்குத் தக்கபடி பேசி அவர்களை நல் வழிப்படுத்துவார். தீர்க்கதரிசிகளின் லட்சணம் இதுவே யன்றோ?
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு பரமஹம்ஸர். பரமஹம்ஸர்களுடைய லட்சணம் இன்னது என்பதை இவரே விவாதித்திருக்கிறார். இஃது இவருடைய சுய சரித்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இவர் கூறுவதன் சாரமாவது: பரமஹம்ஸர்கள் ஐந்து வயதுக் குழந்தைகள் போன்றவர்கள். பார்க்கு மிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரி பூரணானந்தத்தையே பார்க்கின்றனர். இவர்களுக்கு அந்நிய ரென்றும் உறவினர் என்றும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள், தங்கள் நடை உடை பாவனைகளில் சிந்தை செலுத்தாதவர்களா யிருக்கிறர்கள். ……சில சமயங்களில் பரமஹம்ஸர்கள் பைத்தியக் காரர்கள்போல் நடந்து கொள்கிறார்கள். நான்கூட இப்படிப் பைத்தியக்காரனாக நடந்து கொண்டிருக்கிறேன். இங்கு தட்சிணேசு வரத்தில் காளிகோயில் தாபிதமான சில நாட்கள் கழித்து ஒரு நாள் ஒரு பைத்தியக்காரன் வந்தான். உண்மையில் அவன் ஒரு ஞானி. அவன், ஒரு கையில் மாமரத்துக் குச்சிகள் சிலவற்றையும், இன்னொரு கையில் மாஞ்செடி ஒன்றையும் வைத்துக் கொண்டிருந்தான். காலிலே கிழிந்த செருப்பு போட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எந்தவிதமான மட்டு மரியாதை களும் தெரியவில்லை. கங்கையிலே குளித்தான். குளித்த பிறகு அனுஷ்டானமெதுவும் அவன் செய்ய வில்லை. தான் வைத்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து ஏதோ எடுத்துத் தின்றான். பின்னர் காளி கோயிலுக்கு வந்து, கோயிலே அதிர்ந்து போகும் படியாகச் சில பாடல்களைப் பாடினான். எல்லோருக்கும் சாப்பாடு போடுகிற இடத்தில் அவனை யாரும் அனுமதிக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை அவன் பொருட்படுத்தவு மில்லை. பக்கத்தில் எச்சில் தொட்டி இருந்தது. அதில் தனக்கு ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா என்று தேடிப் ர்த்தான். கூட நாய்களும் இருந்தன. நாய்களும் அவனைப் பொருட்படுத்தவில்லை; அவனும் அந்த நாய்களைப் பொருட்படுத்த வில்லை. இதப்பார்த்த ஹல்தாரி - ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உறவினர்; சிஷ்யர் - ஓடி வந்து நீயார்? நீ ஒரு பூரண ஞானியா? என்று அவனைப் பார்த்துக் கேட்டார். இதற்குஅவன்உஷ்;ஆம்;நான்ஒரு பூரணஞானிதான் என்றான்…….நாங்களெல்லோரும் அவனைப் பார்க்ப் போனோம். அவன் ஞானமொழிகளைப் பேசினான்; ஆனால் பைத்தியக்காரன் போல் நடந்துகொண்டான். போகிறபோது சொன்னான்:- இந்தக்குட்டைத் தண்ணீருக்கும் கங்கை ஜலத்திற்கும் வித்தியாசமில்லையென்ற மனோ நிலை உங்களுக்கு எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் உங்களுக்குப் பூரணஞானம் வந்ததாக அர்த்தம். இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் போய்விட்டான். பரமஹம்ஸநிலை இன்னது என்று இப்பொழுது நமக்கு நன்கு தெரிகிறதல்லவா?
பல கோணங்களில்
_“அச்சம் இலர், பாவம் இலர், கேடும் இலர், அடியார் நிச்சம் உறுநோயும் இலர்……….. திருப்பாதம் பணிவாரே.”_
-சம்பந்தர்
மகான்கள் பல பட்டைகளையுடைய வைரம் போன்றவர்கள். எந்தப் பட்டையிலிருந்து பார்த்தாலும் அந்த வைரம் பிரகாசிப்பதைப்போல், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மகான்களுடைய மகத்துவம் நமக்குப் புலனாகின்றது. ஏனென்றால் இவர்களுடைய வாழ்க்கை பூரண வாழ்க்கை. வாழ்க்கையின் ஓர் அமிசத்தைமட்டும் தொட்டுவிட்டு இவர்கள் மறைந்து போவ தில்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கையின் எந்த அமிசத்தை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அந்த அமிசம் நிறைவுடையதாகவே இருக்கிறது. எல்லாக் கால நிலைகளுக்கும் பொருந்துகிறவர்களா யிருப்பதைப்போல் இவர்கள் எல்லோருடைய மனோ நிலைகளுக்கும் பொருந்துகிறவர்களா யிருக்கிறார்கள். பக்தனுக்குப் பக்தனாகவும் ஞானிக்கு ஞானியாகவும் இப்படி அவரவருக்கும் அவரவராகவே காட்சி யளிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எல்லோ ருடைய வாழ்க்கையும் கலந்திருக்கிறது; இவர்களுடைய உப தேசங்களில் எல்லோருக்கும் பயன்படும்படியான மணிகள் இருக்கின்றன. இதனால் இவர்கள் எக்காலத்திற்கும் வழிகாட்டிகளா யிருப்பதைப்போல் எல்லோருக்கும் வழிகாட்டிகளா யிருக்கிறார்கள். இங்ஙனம் எக்காலத் திற்கும் எல்லோருக்கும் சொந்தமாயிருப்பத னால், இவர்களுடைய சொல்லும் செயலும் சில சமங்களில் முரண்பாடுடையனவாகத் தென்படு கின்றன. ஆனால் இந்த முரண்பாட்டில்தான் இவர்களுடைய மகத்துவம் இருக்கிறது. கடவுளின் லட்சணம் பல முரண்பாடுகளுடையது என்பது ஓர் அறிஞருடைய வாக்கு. அப்படியானால் கடவுளின் அமிசமா யிருக்கப்பட்ட மகான்களும் முரண்பாடுடையவர்களாக இருப்பது சகஜந்தானே?
மகான்களுடைய வாழ்க்கை ஒரே அடிப்படையின் மீதுதான் அமைந்திருக்கிறது. இதனால் எந்த மகானையும் எந்த மகானுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது சுலப சாத்தியமாகிறது. புத்தர், ஸாக்ரட்டீ, கன்பூஷிய, யேசுநாதர், பன்னிரண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சங்கரர், ராமானுஜர், சைதன்யர், துக்காராம், காந்தி ஆகிய இவர்களில், இவர்கள்போல் நமது நாட்டிலும் மற்ற நாடுகளிலும் உதித்த இன்னும் பலரில், யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு யாருடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஸ்ரீ ராம கிருஷ்ணருடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஆச்சரியகரமான ஒற்றுமைகள் பலவற்றைக் காண்பீர்கள். ஆனால் இந்த ஒப்பிட்டுப் பார்க்கிற வேலையில், வாசகர்களே, இப்பொழுது நீங்கள் இறங்க வேண்டாம். அது தனியாகச் செய்ய வேண்டிய வேலை. இப்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சந்நிதானத்திற்கு வாருங்கள். இவர் எந்தெந்த விதமாகத் தோற்றமளிக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப் பார்க்கிறபோது, மற்ற மகான்களுடைய தரிசனமும் உங்களுக்கு ஏகதேசமாகக் கிடைக்கும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்படி எல்லா மதங்களுக்கும் உரியவராக இருக்கிறாரோ அப்படியே எல்லா ஆசிரமங்களுக்கும் ஏற்றவராக இருக்கிறார். இவர் ஒரு பிரும்மசாரியா? ஆம்; கிருகதரா? ஆம்; வானப் பிரதரா? ஆம்; சந்நியாசியா? ஆம் எல்லாக்கேள்விகளுக்கும் ஆம் என்ற பதில்தான் இவருடைய வாழ்க்கையிலிருந்து கிடைக் கிறது. அதாவது இவர் பிரும்மசாரிகளுக்கு பிரும்மசாரியாகவும், கிருகதர்களுக்கு கிருகத ராகவும், வானப் பிரதர்களுக்கு வானப் பிரதராகவும், சந்நியாசிகளுக்கு சந்நியாசியாகவும் இருக்கிறார்; அவரவர்களுக்கும் அவரவர் நிலையிலிருந்து வழிகாட்டியாக இருக்கிறார் என்பதே இதன் தாத்பரியம்.
இங்ஙனம் எல்லா ஆசிரமங்களுக்கும் பொருந்துகிற விதமாக இவருடைய வாழ்க்கை அமைந்திருந்த போதிலும், மொத்தமாகப் பார்க்கிறபோது, இவருடைய வாழ்க்கை முற்றுந் துறந்த முனிவர் வாழ்க்கையே யாகும். இவருடைய துறவு பரிபூரணமானது; எவ்வித கலப்பும் இல்லாதது. ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு முன்னால் எத்தனையோ பேர் உலகத்திற்காக உலகத்தினைத் துறந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் மகான்கள்தான்; ஆட்சேபமில்லை. அனால் அவர் களுடைய துறவுக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய துறவுக்கும் வித்தி யாசம் இருக்கிறது. உதாரணமாக, புத்தர் இல்லறத்தி லிருந்துவிட்டு பிறகு துறவறத்தை மேற்கொண்டார்; சங்கரர் இல்லறத்திற்குள் பிரவேசியாமலே துறவறத்திற்குள் நுழைந்து விட்டார்; திருநீல கண்ட நாயனார், தாம் எடுத்துக்கொண்ட ஒரு பிரதிக்ஞைக்காக இல்லறத்திலிருந்து விலகி யிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரோ இல்லறத்திலிருந்து கொண்டே துறவியா யிருந்தார். இவருடைய துறவு, நெருப்பின் மத்தியிலே குளிர்ச்சியா யிருக்கிற மாதிரி; சூரியன் முன்னர் பனிமலை கரையாமலிருக்கிற மாதிரி.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாமணி தேவியாருடன் எத்தகைய தொடர்புடையவரா யிருந்தாரென்பதைப் பற்றிச் சொல்வதற்குமுன், இவர் உள்ளத்தில் ஆசையென்னும் பாசி படராமலே இருந்ததைப் பற்றிச் சில உதாரணங்களைக் காட்ட விரும்புகிறோம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு பிடி பொன்னும் ஒரு பிடி மண்ணும் ஒன்றுதான். ஒரு நாள் நான் பஞ்சவடிக் கருகில் கங்கைக்கரையின் மீது உட்கார்ந்து, ஒரு கையில் ஒரு ரூபாயும் மற்றொரு கையில் களி மண்ணையும் வைத்துக் கொண்டு இந்த ரூபாயும் மண்தான், இந்த மண்ணும் ரூபாய்தான் என்று சொல்லி இரண்டையும் கங்கையில் வீசி எறிந்தேன் என்று இவரே கூறியிருக்கிறார். செம்பு, பித்தளை முதலிய உலோகங்களினாலாய பாத்திரங்களைத் தொட்டாலே இவர் உடல் பூராவும் வலிக்கும். இந்தமாதிரி பல சமயங்களில் துன்பப் பட்டிருக்கிறார். உலோகங்களி னாலாய பாத்திரங்க ளென்ன, எந்த ஒரு பொருளையும் தமது என்று இவர் வைத்துக் கொள்ளாதவரா யிருந்தார். அப்படி யாரேனும் நிர்ப்பந்தப்படுத்தி இவரிடத்தில் ஒரு பொருளைக் கொடுப்பார் களானால் இவர் படும் அவதையைச் சொல்லிமுடியாது. இவருடைய அனுபவங் களில் சிலவற்றை இவர் வாக்கு மூலமாகவே கேளுங்கள்:- நான் ஏதேனும் ஒரு நாணயத்தைத் தொட்டேனாகில் என் கை முறுக்கிக் கொண்டு விடுகிறது; என் மூச்சு நின்றுவிடுகிறது. இன்னும், நான் உடுத்தி யிருக்கும் வேஷ்டியில் ஒரு சிறிய முடிச்சைக் கட்டுவேனாகில் என்னால் மூச்சு விடமுடியாமல் போய் விடுகிறது. அந்த முடிச்சை அவிழ்க்காத வரையில் என் மூச்சு நின்றே போய் விடுகிறது……. ஒரு நாள் நான் சம்பு மல்லிக்கின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு வயிற்றுத் தொந்திரவு அதிகமாயிருந்தது. அவ்வப் பொழுது கொஞ்சம் அபினியை உட்கொண்டு வாருங்கள், வயிற்றுத் தொந்திரவு நீங்கிவிடுமென்று சொல்லி அவர் கொஞ்சம் அபினியை என் வேஷ்டியில் வைத்து முடிச்சுப் போட்டு அனுப்பினார். சிறிது தூரம் வந்தேன். மேலே செல்ல எனக்கு வழி தெரியவில்லை. தட்டுத்தடுமாறிக் கொண் டிருந்தேன். முடிச்சை அவிழ்த்து அபினியை எறிந்த பிறகுதான் என்னால் மேற்கொண்டு செல்ல முடிந்தது…….. ஒரு நாள் காமர்ப் புகூரில் சில மாம்பழங்களைப் பொறுக்கி யெடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். ஆனால் என்னால் வழி நடக்க முடியவில்லை. ஒரே இடத்திலேயே நின்றுவிட்டேன். கொண்டுவந்த மாம்பழங்களை என்னிடமிருந்து அப்புறப் படுத்திக்கொண்ட பிறகுதான் என்னால் மேற்கொண்டு செல்ல முடிந்தது.
மார்வாரி வகுப்பைச் சேர்ந்த லட்சுமி நாராயணர் என்பவர் ஒரு வேதாந்தி. அடிக்கடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்து போவார். ஒரு நாள் இவருடைய படுக்கையின் மீதிருந்த விரிப்பு அழுக்கடைந் திருந்ததைப் பார்த்துவிட்டு அந்த மார்வாரி கனவான் உங்கள் பெயரால் பதினாயிரம் ரூபாய் பாங்கியில் போட்டு வைக்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் வட்டியை உங்கள் செலவுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்றார். இதைக்கேட்ட ஸ்ரீ ராம கிருஷ்ணருக்குத் தடிகொண்டு அடித்தமாதிரி இருந்தது; தன் வசமற்றவரானார்.
இவைகளினால் என்ன தெரிகிறதென்றால் ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு உடைமை உணர்ச்சி என்பது லவலேசமும் இல்லாம லிருந்தது. ஆம்; நான் என்பது அற்றுவிட்ட இடத்தில் எனது எனக்கு என்பது எப்படி இருக்கும்?
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உத்தமமான கணவர். ஒரு புருஷன் தன் திரீயினிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு இவர் வழி காட்டியாயிருந்தார். ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்கு அவ்வப்பொழுது, ஒரு குடும்பத்தை எப்படி ஒழுங்காக நடத்துவது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து வந்தார். அவருக்கு - ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்கு - பரிபூரண உரிமை அளித்திருந்தார். இதனால் அந்த அம்மையாரும் தமது கடமைகளை உணர்ந்து செய்து வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சிஷ்யர் களிடம் வேடிக்கையாகச் சொல்வார்:- நான் விவாகம் செய்துகொண்டு என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் திடமில்லாத தேகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு எனக்கு மனைவி இல்லாதிருந்தால் என்கதி என்னவாயிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். என் ஆகார விஷயங்களில் யார் இவ்வளவு சிரத்தை யோடு செய்யமுடியும்?
ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்குக் கணவராக இருந்ததோடு குருவாகவும் இருந்தார். அப்படியே ஸ்ரீ சாரதாமணி தேவியார், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு மனைவியாக இருந்ததோடு தாயாகவும் இருந்தார். இருவருக்குமிடையே இருந்த உறவு மகா அற்புதமானது. உலக சரித்திரத்தில் இந்த மாதிரியான தாம்பத்ய உறவை வேறெங்கும் காணமுடியாது? இருவருடைய உறவும் பால் உணர்ச்சியற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாமணி தேவியை காளி மாதாவாகக் கண்டாரே தவிர சாதாரண திரீயாகக் காணவில்லை; அப்படிப்பட்ட கருத்து இவர் மனத்தில் ஒரு கணமும் உதித்ததில்லை. ஒரு நாள் இரவு ஸ்ரீ சாரதாமணி தேவியார் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய திருவடிகளை வருடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அம்மையார் தமது பர்த்தாவை நோக்கி தாங்கள் என்னை எவ்வாறு கருதுகிறீர்கள்? என்று கேட்டார். என்னை ஈன்றவள் ஜெகன்மாதா. அவளே இப்பொழுது இந்த வடிவம் தாங்கி எனக்குச் சிசுருஷை செய்து கொண்டிருக்கிறாள் என்று உடனே கூறினார். என்ன உயர்ந்த நிலை! இப்படிக்கூறியது மட்டுமல்ல, ஸ்ரீ சாரதா தேவியை, காளிமா தேவியாகக் கருதி, தந்திர சாதிரங்களில் கூறியுள்ளபடி அவருக்குப் பலதடவைகளில் பூஜையும் செய் திருக்கிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாமணி தேவியைத் தாயாராகக் கருதியது போல் ஸ்ரீ சாரதா தேவியாரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தாயாராகக் கருதினார். இது தான் வேடிக்கை. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உடலைக் கழற்றி எறிந்தபோது ஸ்ரீ சாரதா தேவியார் தாயே, தாயே, என்னை விட்டுவிட்டு எங்கே சென்று விட்டீர்? என்று கதறியது இப்பொழுதும் நமது உள்ளத்தை உருக்குகிறது. இருவரும் உத்தமமான காதலர்கள். ஆனால் இவர்களுடைய காதல் உடலைப் பற்றியதன்று; ஆத்மாவைப் பற்றியது. பிளேட்டோ கூறிய ஆத்மீகக் காதல் இருக்கிறதே, அது வெறும் கற்பனையல்ல, அனுபவ சாத்திய மானது என்பதை ஸ்ரீ ராமகிருஷ்ண - சாரதாமணி தாம்பத்ய வாழ்க்கை நிரூபிக்கிறது.
உலகத்திலே தாய்மார்களால் மேன்மையடைந்த புத்திரர்கள் உண்டு. ஆனால் மனைவிமார்களால் அமர நிலை யடைந்தவர் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒருவர் என்று சொன்னால் அஃது அவருடைய பெருமைக்கு எந்த விதத்திலும் இழுக்காகாது. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய தெய்வீக வாழ்வு சோபித மடைவதற்கு ஸ்ரீ சாரதா தேவியார் ஒரு தூண்டா விளக்குப் போலிருந்தார் என்று சுருக்கமாகச் சொல்வதே பொருத்தமா யிருக்கும்.
இங்ஙனம் ஸ்ரீ சாரதாமணி தேவியாருடன் ஆத்மீகக் காதல் வாழ்க்கை நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாதாரண ரீதியில் குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குச் சிறந்த வழி காட்டியாயிருக்கிறார். இல்லற வாழ்க்கையை இவர் அலட்சியப் படுத்திப் பேசவில்லை. அதற்கு மாறாக அதைச் சிறப்பித்துப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். கடவுள் வாழ்க்கைக்குக் குடும்ப வாழ்க்கை முரண்பட்ட தல்ல என்பது இவருடைய கருத்து. குடும்பப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்புவித்துவிட்டு, தான் கடவுளை நாடிச் செல்வதாகக் கூறுகிறவன் ஒரு கோழை, கடமையைச் செய்யத் தவறியவன் என்பது இவருடைய அபிப்பிராயம். தன் குடும்பப் பொறுப்பை மறந்து விட்டு அவர்களை மாமியார் வீட்டுப் பாதுகாப்பில் விட்டுச் செல்வது தன்மதிப்பற்ற செயலாகும் என்று இவர் ஓரிடத்தில் கூறியிருக்கிறார். கிருகதர்கள், கோட்டைக் குள்ளிருந்து சண்டை போடும் வீரர்கள்; சந்நியாசிகள், திறந்த மைதானத்திலிருந்து கொண்டு சண்டை போடும் வீரர்கள் என்று இவர் இல்லறத்தையும் துறவறத்தையும் இணைத்துச் சொல்வது, இரண்டின் இன்றியமையாத் தன்மையை எடுத்துக் காட்டுவது, எவ்வளவு ஆச்சரியமா யிருக்கிறது? வீரர் யார் என்பதற்கு இவர் கூறும் லட்சணமே வேறு. சித்தத்தைச் சிவன்பாலிருத்தி விட்டு, உலகத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகளை எவன் ஒழுங்காகச் செய்து கொண்டு வருகிறானோ அவன்தான் நிஜமான வீரன். தலையிலே ஒரு பெரிய சுமையை வைத்துக் கொண்டு ஒரு கலியாண ஊர்வலத்தைப் பார்ப்பது ஒரு பலசாலியினால் தானே முடியும்? என்று இவர் கேட்கிறார்.
தட்சிணேசுவரத்தில் இவர் கடவுட் பித்தராய் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமது உறவினர்களிடத்தில் அதிக வாஞ்சை காட்டி வந்தார்; அவர்களுடைய சுகதுக்கங்களில் கலந்து கொண்டார். ஒரு சந்நியாசிக்கு இது பொருந்துமா என்று சிலர் கேட்கலாம். ஆனால் பூரணத் துறவு பூண்டவர்களுடைய இருதயத் திலே உறவினர் என்றும் அந்நியர் என்றும் வேற்றுமையே உதிப்ப தில்லை. அவர்கள், எல்லோரிடத்திலும் கடவுளைக் காண்கி றார்கள்; எல்லோரிடத்திலும் ஒரே விதமான அன்பு செலுத்துகி றார்கள். அவர்கள் உறவினர்களை அந்நியர்களாகக் கருதுகிறார்கள்; அப்படியே அந்நியர்களை உறவினர்களாகக் கருதுகிறார்கள். புத்தர் பிரானும் சைதன்ய சுவாமிகளும் ஞானோதயம் பெற்ற பிறகு, தங்கள் உற்றார் உறவினரிடத்தில் அன்பு பாராட்டி வந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது தாயாரிடத்தில் பரம பக்தியுடை யவர். அந்த அம்மையார்-சந்திரமணிதேவி என்பது அந்த அம்மாளுடைய பெயர் என்பது நேயர்களுக்கு ஞாபக மிருக்கலாம்.-தட்சிணேசுவரத்திற்கு வந்து கங்காதீர வாசம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய அந்திம காலம் வரை அவருக்கு வேண்டிய பணிவிடைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தவறாது செய்து வந்தார். அவருடைய சிறிய சிறிய தேவைகளையும் கவனித்து ஆவன செய்வார். தாயன்பானது கடவுள் அன்புக்குச் சமமானது என்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்குணர்ந்தவர். உலகத்தைத் துறந்த மகான்கள் யாருமே தங்கள் தாயைத் துறக்கவில்லை. சைதன்யர் துறவு பூண்டு விட்டதைக் கேட்ட அவருடைய தாயார் மிகவும் வருத்தமடைந் திருந்தார். அதை யறிந்த சைதன்யர் அவரிடம் சென்று அம்மா, வருத்தப்படாதீர்கள்; நான் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று ஆறுதல் கூறினார். முற்றத் துறந்த பட்டினத்தடிகளும் சங்கரரும் தங்கள் தங்கள் தாய்மாரிடத்தில் பரம பக்தியுடனேயே நடந்து வந்தனர். யானு மிட்ட தீ மூள்க மூள்கவே என்ற பட்டினத்தடிகளின் வாக்கு இச் சந்தர்ப்பத்தில் நமது நினைவுக்கு வருகிறதல்லவா? இவர்களைப் போலவே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் தமது தாய்க்கு மகனாக இருந்து, தாயாரிடத்தில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதற்குச் சிறந்த வழி காட்டியா யிருந்தார்.
இல்லற வாழ்க்கை இனிது நடைபெற வேண்டுமானால் பெண்ணும் பொன்னும் அவசியமென்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்கு உணர்ந்திருந்தார். உலக வாழ்க்கையில் பணம் அவசிய மானதுதான்; ஆனால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராதே. வருவதைக்கொண்டு திருப்தி யடைவதுதான் நல்லது என்றும், பணமிருந்தால் ஒருவன் உண்ணவும், உடுக்கவும், வீடு கட்டிக் கொண்டு வசிக்கவும், கடவுளைத் தொழவும், அடியார்களுக்குத் தொண்டு செய்யவும், ஏழைகளை ஆதரிக்கவும் முடிகிறது. இந்த மாதிரியான வழிகளில்தான் பணத்தை உபயோகிக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கோ, தேக சுகங்களுக்காகவோ, சமுதாயத்தில் ஓர் அந்ததைப் பெறவோ பணம் இருக்கவில்லை என்றும் இவர் சொல்லியிருக்கிறார். பணத்தின் உபயோகத்தைப்பற்றி இதைவிட அழகாகவும் சுருக்கமாகவும் எந்தப் பொருளாதார சாதிரியாவது கூற முடியுமா? இதிலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய அனுபவ ஞானம் நன்கு புலப்படும். சில மார்வாரி பக்தர்கள் தம்மைத் தரிசிக்க வந்தபோது அவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம் செய்கையில் வியாபாரத்தில் லாப நஷ்டங்கள் வரலாம்; ஆனால் எந்த விதத் திலும் வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியது இங்குச் சிந்திக்கத் தக்கது.
ஹெராக்ளீட்ட என்ற கிரேக்க ஞானி1 அதிகமான புதகப் படிப்பினால் அறிவு உண்டாகாது என்று கூறினான். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பல தடவைகளில் வலியுறுத்திச் சொல்லி யிருக்கிறார். வெறும் புதகப் படிப்பினால் மனிதன் வளர்ச்சி யடையமாட்டான். அதனால் அவனுக்கு நன்மை உண்டாகாது என்பது இவர் கருத்து. இந்தக் கருத்தை இவர், தமது கல்கத்தா வாசத்தின் போதே வெளியிட்டிருக்கிறார்.2 பாரமார்த்தி கத்தைப் பின்னணியாகக் கொள்ளாத புலமையை இவர் வெறுத்தார். கடவுளை அறிவதுதான் அறிவு; மற்றவையெல்லாம் அறிவாகாது, அறியாமையின் பாற்படும் என்று இவர் கூறியிருப்பது, இந்திய பரம்பரையான பண்பாட்டைச் சாரமாக எடுத்துச் சொல்வது போலிருக்கிறது. கேசவ சந்திர சேனர் ஓரிடத்தில் கூறுகிறார்:- இந்த நாட்டை-இந்தியாவை - புனருத்தாரணம் செய்யவேண்டுமானால், உங்களுடைய எல்லாச் சீர் திருத்த இயக்கங்களுக்கும் மதத்தை அடிப்படையாகக் கொள்ளுங்கள். ……………இந்தியாவுக்கு நீங்கள் ரெயில், தந்தி முதலிய லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான சௌகரியங்களை ஏற்படுத்திக் கொடுப்ப தற்கு முன்னர் அதற்கு உயிரைக் கொடுங்கள். உண்மையான ஆத்மீக வாழ்க்கையைக் கொடுங்கள்; வெறும் புதகப் படிப்பினால் நன்மை யுண்டாகாம லிருப்பது மட்டுமில்லை, அதனால் தீமையும் உண்டாகிறது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் கருதுகிறார். அதிகமான மதக் கிரந்தங்களைப் படித்து விடுவதனால் நன்மைக்குப் பதில் அதிகமான தீமையே உண்டாகிறது; மதக்கிரந்தங்களின் சாரத்தைத் தெரிந்து கொண் டிருந்தலே போதுமானது என்பது இவருடைய வாக்கு.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உண்மையான குரு. கடவுளையும் மனிதனையும் ஒன்று சேர்த்து வைக்கிறவர்தான் உண்மையான குரு என்ற தம்முடைய வாசகத்திற்குத் தாமே இலக்கியமாயிருந்து கொண்டு, தம்மை நாடிவந்த சிஷ்யர்களை கடவுள் நிலைக்கு அழைத்துக் கொண்டு போனார். அப்படி அழைத்துக் கொண்டு போகிறபோது, தம்மிஷ்டத்திற்கு, தம்முடைய பாதையில் அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க வில்லை; வரவேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்தவுமில்லை. அவரவருடைய வாழ்க்கை நிலைக்கும் மனோ நிலைக்கும் தகுந்தபடி அவர்களை வருமாறு செய்தார். தமது சிஷ்யர்கள் கடவுள் வாழ்க்கையை வாழவேண்டு மென்பதுதான் இவருடைய நோக்கமாயிருந்ததே தவிர, அவர்கள் எப்படி வாழவேண்டு மென்பது இவருடைய நோக்கமாயிருக்க வில்லை. இவருடைய சிஷ்யர்களிலே வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களு மிருந்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களை இவர் செய்யவில்லை; ஒரே வழியைக் கோலிக் காட்டவில்லை; யாரையும் அவரவருடைய வழியிலிருந்து விலகி வருமாறு கூறவில்லை. வயதானவர்களை இல்லறத்திலேயே இருக்கு மாறு கூறினார்; இளைஞர்களைத் துறவறம் பூண்டு தொண்டு செய்யுமாறு கூறினார். இல்லறத்திலே ஈடுபட்டிருக்கிற தமது சிஷ்யர்களைப் பார்த்துச் சொல்வார்:- உலகத்தைத் துறப்பதனால் நீங்கள் அடையக்கூடிய லாபமென்ன? குடும்ப வாழ்க்கை ஒரு கோட்டை மாதிரி. மற்றும் ஞானமடைந் தவன் முக்தன். நான் பந்தத்திற்கு உட்பட்டிருக்கிறேன் என்று பைத்தியக்காரன்தான் சொல்வான். மனந்தானே எல்லாவற்றிற்கும் காரணம். அது பந்தமற்றிருக்குமானால் நீயும் பந்தமற்றிருப்பாய். நான் காட்டிலே இருந்தாலும் சரி நாட்டிலே இருந்தாலும் சரி எப்பொழுதும் பந்தத்திற்குட்பட்டிருப்பதில்லை. நான் கடவுளின் குழந்தை. ஆதலின் அரசர்களுக்கு அரசன். என்னை யார் பந்தத்திற்குட்படுத்த முடியும்? ……..நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறபோது, உங்கள் ஒரு கை வேலை செய்து கொண் டிருக்கட்டும்; மற்றொரு கை கடவுளின் பாதங்களைப் பிடித்துக் கொண்டிருக்கட்டும் வேலை முடிந்த பிறகு சும்மாயிருக்கிற சமயத்தில் அந்தப் பரந்தாமனின் இரண்டு பாத கமலங்களையும் உங்கள் இரு கைகளாலும் பற்றி உங்கள் இருதயத்திலே வைத்துக்கொள்ளுங்கள்.
லௌகிக எண்ணங்களினால் கறைப்படாத மனமுடைய தம்மை நாடிவந்த இளைஞர்களுக்கு இவர் காட்டிய வழி வேறு. இவர்களைத் தமது பிற்கால பாரமார்த்திக சந்ததிகளாகக் கருதி னார்; அதற்குத் தகுந்தாற்போல் இவர்களைத் தயார் படுத்தினார். அஞ்ஞான இருட்டில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பாமரர் களுக்கு ஞான வெளிச்சம் காட்ட வேண்டிய இவர்களைப் பலவித பரிசோதனைகளுக்குட்படுத்தி நெருப்பிலே காய்ச்சப் பெற்ற தங்கம் போலாக்கினார். இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தை நாடு கின்றவர்களல்லர்; மற்றவர்களுடைய முன்னேற்றத்தை நாடு கின்றவர். எனவே இவர்கள், தங்களை அழித்துக்கொண்டு மற்றவர் களுக்காக வாழ வேண்டும். கடின மார்க்கந்தான். ஆனால் இந்தியா வின் வருங்கால நல்வாழ்வுக்காக இத்தகைய ஒரு தொண்டர் கூட்டம் அவசியமானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்கு உணர்ந்தார். இந்த விஷயத்திலும் இவர் ஒரு சிறந்த தீர்க்கதரிசியாயிருந்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சிஷ்யர்களிடத்தில் ஒரு தாயைப் போல் நடந்து கொண்டார். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை யில் பெரிதும் சிரத்தை காட்டுவார். அவர்களுடைய குறை நிறை களை விசாரித்துத் தம்மாலியன்ற பரிகாரத்தைச் செய்வார். அவர்களுடைய சுக துக்கங் களிலே கலந்து கொள்வார். சிஷ்யர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய முன்னிலையில் இருக்கிற போது பரம சந்தோஷத்தை யடைந்தவர்களா யிருப்பார்கள்.
இங்ஙனம் பலருக்கு இவர் குரு வாயிருந்த போதிலும் இவர் தம்மைக் குரு என்று ஒரு பொழுதும் சொல்லிக் கொண்டது கிடையாது. தம்மை யாராவது குரு அல்லது எஜமானர் அல்லது தந்தை என்று அழைத்தால் தமது மனம் பெரிதும் புண்படுவதாக இவர் அடிக்கடி சொல்வ துண்டு. சச்சிதானந்தமாயிருக்கிற பரம் பொருள் ஒன்றுதான் உண்மை யான குரு என்பது இவர் கருத்து. எல்லோரும் குருமார்களாக இருக்க வேண்டு மென்கிறார்கள். ஆனால் யாரும் சிஷ்யர்களாக இருக்க விரும்புவதில்லை என்கிறார் ஓரிடத்தில்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் உண்மையான ஒரு சிஷ்யராகவும் இருந்தார். பைரவி பிராம்மணி, ஜடதாரி, தோதாபுரி ஆகிய இவர்களிடத்தில், ஒரு சிறுபையன் எப்படி தன் பள்ளிக்கூட ஆசிரியரிடத்தில் நடந்து கொள்வானோ அப்படியே நடந்து கொண்டார். தோதாபுரியி னுடைய பரிகாசம், பைரவி பிராம்மணியின் கோபம் எல்லாவற்றை யும் இவர் சகித்துக் கொண்டார். அவர்களிடத்தில் இவர் எவ்வித குறையையும் காண்பதில்லை. பைரவி பிராம்மணி இவரோடு சில வருஷகாலம் தங்கி யிருந்த காலத்தில், அவரைத் நமது தாயாகக் கருதி அவரிடத்தில் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டு வந்த தோடல்லாமல், ஸ்ரீ சாரதாமணி தேவியையும், தமது மாமியாராகக் கருதி அவரிடத்தில் நடந்து கொள்ளுமாறு கூறினார். மேற்படி பைரவி பிராம்மணி, ஜடதாரி, தோதாபுரி ஆகியோர் இவரிடத்திலிருந்து தெரிந்து கொண்டவை பல; அவர்களுடைய மனப்போக்கே மாறிவிட்ட தென்றும் சொல்லலாம். ஆனால் அவர் களிடத்தில் தாம் பயின்றதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் முக்கியமாகக் கருதினார்; அவர்களை குருமார்களாக என்றென்றும் போற்றி வந்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த பக்தர். ஆனால் இவருடைய பக்தியானது, கடவுளை வாயாரப்புகழ்ந்து பாடுவதோடும் அவர் நிகழ்த்திய அற்புதச் செயல்களை நினைந்து மனமுருகுவதோடும் நிற்கவில்லை. யாருடைய புகழுக்காகவும் கடவுள் காத்துக் கொண் டிருக்கவில்லை; மானிடர்கள் வியந்து பாராட்டுவார்க ளென்று எதிர்பார்த்து அவர் எந்த அற்புதச் செயலையும் செய்யவில்லை. அவருடைய கடமையை அவர் செய்து கொண் டிருக்கிறார். அவருடைய குழந்தைகளாகிய நாம் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டாமா? பிள்ளைகள், தங்கள் தாயாரிடம் சென்று, தாயே, நீ ரூபவதி, குணவதி, சுசீலை என்று தோத்திரம் செய்து கொண்டிருந்தால் அந்தத் தாயார் திருப்தி யடைந்து விடுவாளா? அப்படி தோத்திரம் செய்து கொண் டிருப்பது அவளுக்குச் சிசுருஷை செய்ததாகுமா? தன்னுடைய சந்ததிகள் தன்னை என்றும் புகழ்ந்து பாடிக்கொண் டிருப்பார்கள் என்பதை எதிர்பார்த்து ஒரு தாயார் தன் சந்ததிகளை போஷித்துக் காப்பாற்றுவதில்லை. அப்படி எதிர்பார்ப்பது தாய்மையின் தன்மை யல்ல. அவளுக்குத் துக்கம் ஏற்படுகிற காலத்தில் அந்தத் துக்கத்தைத் துடைக்க வேண்டும்; அவளுடைய சுகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளுடைய கடமை இதுவே யாகும். அதுபோல், சர்வ ஜீவராசிகளுக்கும் தாயா யிருக்கப்பட்ட கடவுளைப் புகழ்ந்து பாடுவதோடு திருப்தியடை யாமல் அந்தக் கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அதுதான் கடவுள் பிள்ளைகளாகிய மானிடர் களின் கடமை. கடவுள் தொண்டாவது என்ன? கடவுளின் அமிசமா யிருக்கிற எல்லா ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்வதுதான் கடவுள் தொண்டு. இந்தத் தொண்டு செய்கிறவன்தான் பக்தன்; கடவுளுக் குகந்தவன்; கடவுள் நெறியில் செல்கிறவன். இதுதான் ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய கோட்பாடு. இதையே விவேகானந்தருக்கும் வலியுறுத்திக் கூறினார். சமாதி நிலையிலேயே இருக்கத் தாம் விரும்புவதாகவும் அதுவே தமக்கு ஆனந்தமா யிருக்கிறதென்றும் விவேகானந்தர் கூறியபோது, அது கூடாது; அது சுய நலத்தை நாடுவதாகும். ஜனங்களுக்கு ஆத்மீக உணர்ச்சியை ஊட்டுவாயாக; ஏழைகளுடைய துயரத்தைப் போக்குவாயாக என்று கட்டளை யிட்டார் அவருடைய குருநாதர். இந்தக் கட்டளையை நிறைவேற்றி வைக்கு முகத்தான், தமது குருநாதருடைய பெயரால் ஒரு தொண்டர் தாபனத்தை நிறுவினார் விவேகானந்தர் அதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்.1 இந்த தாபனம், எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் எல்லோருக்கும் சேவை செய்கிற ஒரு தாபனமாக இது காலை உலகெங்கும் வியாபித்திருக்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் இட்ட கட்டளை, தம்மை எப்படிப் பிணித்திருக்கிற தென்பதைப்பற்றி விவேகானந்தர், தமது சகபாடிகளிடம் ஒரு சமயம் பின்வருமாறு கூறினார்:- ஓ, நான் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. நான் ராமகிருஷ்ணருடைய அடிமை. தாம் செய்யவேண்டிய வேலையை எனக்கு விட்டுவைத்துப் போயிருக்கிறார். அதை நான்முடிக்காத வரை எனக்கு அவர் ஓய்வுகொடுக்கமாட்டார்…………எனக்கு ஓய்வு கிடையாது. ராமகிருஷ்ணர், காளி என்றுஎதஅழைத்தாரேhஅஃது-அந்தச்சக்தி-அவர் இந்தப் பூவுலக விட்டுச் செல்வதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முந்தி, எனது உடலையும் ஆத்மாவையும் தன்னுடையதாக்கிக் கொண்டு விட்டது. அதுவே என்னை வேலை செய், வேலை செய் என்று கட்டாயப்படுத்துகிறது; என் சொந்த விஷயங்களில் என் கவனம் சென்று விடாதபடி தடுக்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது தெய்வ பக்தியை, ஏழை மக்க ளுடைய துயரத்தைப் போக்குவதன் மூலமாக வெளிப்படுத்தி யிருக்கிறார். அநேக சந்தர்ப்பங்களில். ராணி ராசாமணி அம்மை யாருடைய மருகரான மதுர நாதருடன் இவர் க்ஷேத்திர யாத்திர செய்துவந்தாரல்லவா,1 அப்பொழுது யாத்திரையை முடித்துக் கொண்டு கல்கத்தாவுக்குத் திரும்புகையில், வழியில் தேவகார் என்ற இடத்தில் ஒருநாள் தங்கும்படி நேரிட்டது. அதுகாலை அந்தப் பிரதேசத்தில் கடுமையான பஞ்சம். ஜனங்கள் நாட்கணக்கில் உணவின்றி வாடினர்; எலும்புக் கூடுகளாயினர்; உடுக்கக் கந்தையு மில்லாமல் கஷ்டப்பட்டனர். இந்த நிலையிலிருந்த ஜனங்களை ஸ்ரீ ராமகிருஷ்ணர் பார்த்துவிட்டார். இவருடைய அருள் நெஞ்சம் உருகியது. உரக்க அழுதுவிட்டார். அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இவர்களுக்கு உணவும் உடையும் உடனே கிடைக்குமாறு செய்யுங்கள். இல்லா விட்டால் இவர் களோடு நானும் பட்டினி கிடந்து சாவேன் என்றார் மதுரநாதரிடம். மதுரநாதரால் மறுக்கமுடியுமா? சிறந்த குருபக்த ரல்லவா? உடனே எல்லோருக்கும் உணவு உடை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குத் திருப்தி உண்டாயிற்று. அதற்குப் பிறகுதான் எல்லோரும் கல்கத்தா வந்து சேர்ந்தார்கள். இந்த யாத்திரையினால் மதுரநாதருக்கு ஏற்பட்ட செலவு சுமார் எண்பதினாயிரம் ரூபாய் என்பர்.
இன்னொரு சமயம் மதுரநாதர் கிதி வசூலுக்காகத் தமது ஜமீனுக்குச் சென்றிருந்தார். கூட ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்பொழுது குடிஜனங்களுக்கு மிகவும் சிரமமான காலம். ஏனென்றால் இரண்டு வருஷமாகத் தொடர்ந்தாற்போல் சரியான விளைவு இல்லை. கிதி பாக்கியைக் கொடுக்கமுடியாமல் கஷ்டப்பட்டார்கள். தங்களுடைய அன்றாட ஜீவனத்திற்கு வழி தெரியாமல் தவித்தார்கள். பார்த்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவர்களுடைய திதியை. தம்மை ஆட்கொண் டிருக்கும் காளிமாதேவி, வறுமை வடிவெடுத்துத் தம்மைச் சுற்றி உலவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். மதுரநாதரைப் பார்த்து, இவர்களிடமா கிதி பாக்கியை வசூல் செய்யப் போகிறீர்கள்? அப்படிச் செய்யக்கூடாது. இவர் களுக்குத் தேவையான உணவு வகைகள் துடைக்குமாறு செய்யுங்கள்; nபாதிய gணcதவியும் bசய்யுங்கள். ஜf‹ kதாதான் இந்த Mதிgதிகளுக் கெல்லாம் எஜமானி; அவளுடைய பிரதிநிதி தான் நீங்கள் vன்பது உங்களுக்கு ஞபகமிருக்கட்டும். ஆதலின் அவளுடைய பணத்தை அவளுடைய குடியானவர்களுக்குச் செலவழிக்க நீங்கள் சிறிது கூடத் தயங்கக் கூடாது என்று கூறினார். மதுர நாதர் அப்படியே செய்தார்.
ஆகவே படமாடுங் கோயிலுக்குள் சென்று பாசுரம் பாடிக் கண்ணீர் வடிப்பதோடு தன் பக்தியைக் கரை கட்டிக்கொண்டு விடுகிறவன் உண்மை யான பக்தனாகமாட்டான், யார் நடமாடுங் கோயில்களாகிய ஜனங்களிடம் சென்று ஆறாய்ப் பெருகும் அவர்களுடைய துக்கக் கண்ணீரைத் துடைக்கிறானோ, யார் வறுமையி னாலும் அறியாமையினாலும் வளைந்து போயிருக்கிற அவர்க ளுடைய வாழ்க்கையை நேர் படுத்தி விடுகிறானோ, அவனே பக்தனா வான் என்பதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த உதாரணபுருஷராய் இருக்கிறார் என்பது பெறப்படுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உத்தமமான வீரர். இப்படிச் சொல்வது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால், யார் அன்பு நிறைந்தவர் களாயிருக்கிறார்களோ, யாரிடத்தில் உடைமை உணர்ச்சி என்பது லவலேசமும் இல்லையோ அவர்கள் அஞ்சுவது யாதொன்று மில்லை. அவர்கள் நமனையும் அஞ்சார்; யாருக்கும் பணியார். ஆம்; கடவுளைத் தவிர வேறு யாருக்கும் அவர்களுடைய தலை வணங்கு வதில்லை. உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன், இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் என்கிறார் பெரியாழ்வார். அவர்களுடைய உள்ளம், மற்றவர்களுடைய துயரத்தைக் கண்டு எளிதிலே நெகிழக் கூடியதாயிருந்தாலும், தீமைகளை எதிர்ப்பதில், தீமைகளைக் களைவதில், அசாதாரண மான உறுதியுடைய தாயிருக்கும். அவர்கள், தங்களையும் மற்றவர்களையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்ப்ப தில்லை யாதலினால், தங்களிடத்திலேயுள்ள குறைநிறை களை எளிதிலே உணர்ந்து கொள்வது போல் மற்றவர்களிடத்திலேயுள்ள குறை நிறைகளையும் சுலபமாக அறிந்து, அவர்களைச் சீர்திருத்த முற்படு கிறார்கள். ஏனென்றால் தங்களைப்போல் மற்றவர்களும் தீமைகளினின்று விலகி நல்லவர்களாயிருக்க வேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். இந்த நோக்கமுடையவர்களாயிருப்பதனால் அவர்களை எல்லோரும் போற்று கிறார்கள்; எல்லோரும் அவர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்; அதாவது அவர்களுடைய அஞ்சாமையைக் கண்டு அஞ்சுகிறார்கள், எந்த இடத்தில் கோழைத்தனம், துவேஷம், அச்சம் ஆகிய இவைகளின் ஆட்சி நடைபெறுகிறதோ அந்த இடத்திற்குக் கடவுள் வருவதில்லை என்பது ஒரு வாக்கு.
பரம்பொருள் பயமற்றது. இதனால் அந்தப் பரம்பொருளை அடைந்தவர்களுக்கும் பயம் உண்டாவதில்லை. பாலூட்டி வளர்த்த தாயாயினும் சரி, போற்றிப் பராமரித்து வந்த பிறராயினும் சரி, அவர்கள் தெய்வநெறியிலிருந்து மயிரிழை பிசகி நடந்தாலும் உடனே அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்துகிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நன்றிக்குரியவ ராகிய ராணி ராசமணி அம்மையார் ஒருசமயம் தட்சிணேசுவரம் போந்து காளிதேவியை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணர், அம்பாளைப் போற்றி உருக்கமாகச் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ராசமணி அம்மையார் நடுவில் கொஞ்சம் கவனக்குறைவா யிருந்தார். தமது ஜமீன் சம்பந்தமான ஒரு வழக்கில் அவர் மனம் சென்றது. இதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் அறிந்து கொண்டுவிட்டார். உடனே அவருடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தார். அக்கம் பக்கத்தி லிருந்தவர்கள் அதிர்ச்சி யடைந்து போனார்கள். ஆனால் அந்த அம்மையார் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராயிருந்தது போலவே பெரிய மனமும் படைத்த வராயிருந்தார். தமது குற்றத்தை உணர்ந்தார். ஒரு சிறுமியைப்போல் வெட்கித் தலைகுனிந்தார். ஜகன் மாதாதான் தமது பிசகை உணர்த்த தண்டனையளித்ததாகக் கருதினார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் அந்த அம்மாள் செலுத்தி வந்த பக்தி இன்னும் அதிகமாயிற்று. கோயிற் பரிவாரத்தினரும் இவரிடத்தில் - ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் - முன்னைக் காட்டிலும் அதிகமான மரியாதை காட்டத் தொடங்கினர்.
இந்தப் பயமற்ற தன்மையுடையவராயிருந்ததனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது மனதில் தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன் தெரிவித்து விடுவார். ஒரு சமயம், சில மார்வாரி பக்தர்கள், இவருக்குச் சில பிரசாதங்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். அவை பொய் சொல்லிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று காரணஞ் சொல்லி, அவைகளை ஏற்க மறுத்துவிட்டார்.
மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையானாலும் சரி, மற்றவர்களைப் பற்றித் தமது அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டி யிருந்தாலும் சரி, அதை, அவ்வப்பொழுது இனிய மொழிகளால் சொல்லி விடுவார். கேசவ சந்திரேசேனர், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், சுவாமி தயானந்த சரவதி ஆகிய இப்படிப்பட்ட பெரியார்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண ரிடத்தில் பெரிதும் ஈடுபட்டவர்கள். ஆனால் அவர்களுடைய கொள்கைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அழகாக எடுத்துச் சொல்லி விடுவார். ஒரு நண்பரிடம் தேவேந்திர நாத் தாகூரைப்பற்றி கூறுகிறார்:- ஒரு சமயம் நான் மதுரநாதருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவருக்குப் பல சிறிய குழந்தைகள் இருப்பதை அப்பொழுது பார்த்தேன். குடும்ப வைத்தியர், மருந்துகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எட்டுக் குழந்தைகளுக்குப் பிறகு, ஒரு மனிதன், கடவுளைப்பற்றி நினைக்காவிட்டால், வேறு யார்தான் நினைக்கப் போகின்றார்? இவ்வளவு ஐசுவரியத்தை அனுபவித்த பிறகு தேவேந்திரர், கடவுளைப் பற்றி நினைக்கா விட்டால் அவருக்கு அது வெட்க மல்லவோ? ஆனால் குடும்பத் திலே இருந்துகொண்டு பக்தி செலுத்துகிறவர்களுக்கும், எல்லா வற்றையும் துறந்துவிட்டு பக்தி செலுத்துகிறவர்களுக்கும் வித்தி யாசம் உண்டு. முன்னவர், மலர்மீது அமர்ந்து மதுவுண்ணும் தேனீ மாதிரி. இந்தத் தேனீ, மலரிலிருக்கும் தேனைத் தவிர வேறோன்றை யும் சாப்பிடாது. பின்னவரோ ஈ மாதிரி. ஈ யானது புண்ணின் மீதும் உட்காருகிறது; பட்சணத்தின் மீதும் உட்காருகிறது. அதைப்போல் குடும்பத்திலே இருக்கிற பக்தன், ஒரு சமயம் கடவுள் நினைவாக இருக்கிறான்; அடுத்த சமயம் உலக நினைவு அவனுக்கு வந்து விடுகிறது.
உண்மையைக் கடைப்பிடிக்கிறவர்கள், சொன்னபடி செய்வதில் மிகுந்த சிரத்தை காட்டுவார்கள்; பிறரிடமிருந்தும் இந்தச் சிரத்தையை எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறிய விஷயங்களில் கூட இந்தச் சிரத்தையைக் காட்டினார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே முடிப்பார். சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்கவேண்டு மென்பது இவர் கருத்து. உண்மை யென்பதும் இதுதானே? கூறுகிறார்:- ஒருவன் உண்மையைக் கடைப் பிடிக்காவிட்டால் அவன் எல்லாவற்றையும் இழந்து விடுகிறான். தோட்டத்திற்குப் போகிறேன் என்று அகமாத்தாக நான் சொல்லி விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் போவதற்கு அவசியமில்லா விட்டால்கூட நான் போயே ஆகவேண்டும். அப்படிப் போகா விட்டால் நான் உண்மையினின்று பிறழ்ந்தவனாவேன். ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய உண்மை நெறி எவ்வளவு கடினமானது!
தன்னம்பிக்கை யுடையவர்கள், கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருப்பார்கள். இங்ஙனமே தன்னம்பிக்கையானது, கடவுளின் உண்மையிலே நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறது. கடவுளைக் காட்டுவீர்களா? என்று விவேகானந்தர் கேட்டபோது காட்டுவேன் என்றும், கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்றபோது ஆம்; பார்த்திருக்கிறேன்; இப்பொழுதும் பார்க்கிறேன்; உன்னை இங்கே எப்படிப் பார்க்கிறேனோ அதைவிட அதிகமாகப் பார்க்கிறேன் என்றும் கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்த உறுதியான வாசகந்தான், கடவுளின் உண்மையிலே கொண்டிருந்த இந்தத் திட நம்பிக்கைதான், விவேகானந்தரை இவரிடத்தில் ஈடுபடுத்தியது.
ஸ்ரீராமகிருஷ்ணர், தாய்மொழிப் பற்று நிரம்ப உடையவர். தம் எதிரில் தமக்குத் தெரியாத ஆங்கிலத்தில் யாராவது பேசுவார்க ளானால் அதை நாசூக்காகக் கண்டித்து விடுவார். ஒரு சமயம், வங்க இலக்கியத்திற்குப் புதியதொரு ஜீவகளையை ஏற்படுத்திக் கொடுத்த வரும், அரசாங்க உத்தியோகத்திலிருந்தவருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தரிசிக்க முதன் முதலாக வந்தார். அவருடன் கூட வந்திருந்த நண்பர், இவர்தான் பங்கிம் என்று பங்கிம் சந்திரரை அறிமுகப் படுத்தி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், பங்கிம்! உங்களைக் கூனலாக்கிவிட்டது, வளையச் செய்துவிட்டது எது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பங்கிம் என்றால் வங்க பாஷையில் கோணல் அல்லது வளைவு என்று அர்த்தம். பூட் தான் இந்தக் கோணலுக்குக் காரணம். நமது வெள்ளை எஜமானர் களுடைய பூட் உதைகள் என் உடம்பைக் கூனலாக்கி விட்டன என்றார் பங்கிம்சந்திரர். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ணபகவான் ஏன் சியாமள வர்ணமாயிருக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடித்ததும், இவர் சொன்னதைப் பற்றி பங்கிம் சந்திரரும் அவருடைய நண்பரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கி றீர்களா? என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். நீங்கள் இதுகாறும் சொன்னதைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள் அவர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே பின்வரும் கதையைக் கூறினார்:-
ஒரு சமயம் ஓர் அம்பட்டன் ஒரு பெரிய மனிதருக்கு க்ஷவரம் செய்து கொண்டிருந்தான். அப்படிச் செய்து கொண்டிருக்கிற போது, ஏதோ தவறுதலாக, அந்தப் பெரிய மனிதருடைய முகத்திலே காயம் பட்டுவிட்டது. பெரிய மனிதர், கோபமேலிட்டவராய் டாம் என்றார். அந்த அம்பட்டனுக்கோ இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டான். மேற்கொண்டு க்ஷவரம் செய்யவில்லை. இப்பொழுது டாம் என்று சொன்னீர்களே, அதனுடைய அர்த்தம் என்ன? என்று கேட்டான். அந்தப் பெரிய மனிதர் வீணாகப் பேசாதே. அதற்கு அர்த்தமொன்றுமில்லை. கொஞ்சம் ஜாக்கிரதையாக க்ஷவரம் செய், அவ்வளவுதான் என்றார். அம்பட்டன் விடுகிற பெயர் வழியா யில்லை. டாம் என்ற வார்த்தைக்கு நல்ல அர்த்த மாயிருந்தால், நான் டாம், எங்கப்பா டாம், எங்கள் முன்னோர்களெல்லோரும் டாம்கள். ஆனால் அந்த வார்த்தைக்குக் கெட்ட அர்த்தமாயிருந்தால் நீங்கள் டாம், உங்களப்பா டாம், உங்கள் முன்னோர்களெல் லோரும் டாம், டாம், டாம் என்றான் அவன்,
ஒரு பாஷையைத் தெரியாதவர் முன்னிலையில் அந்தப் பாஷையில் பேசக் கூடா தென்றும், அப்படிப் பேசுவது மரியாதைக் குறைவு என்றும், நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக இந்தக் கதையைச் சொல்லிக் காட்டினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், தாய் மொழிப் பற்றுடையவரா யிருந்ததைப் போல் தாய் நாட்டுப் பற்றுடைய வராகவும் இருந்தார். இவர் அரசியலைப் பற்றி ஒன்றும் பேசவில்லையென்பது வாதவம். ஆனால் லட்சியம் வாய்ந்த ஓர் அரசியலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய முக்கியமான அமிசங்கள் யாவும் இவருடைய உபதேசங்களில் அடங்கியிருக்கின்றன என்று திடமாகக் கூறலாம். கடவுள் தூதர்கள் எப்பொழுதும் மனிதர்களாகவே இருக்கி றார்கள்; அவர்கள் செய்கிற உபதேசங்களும் அரசியல் தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றன என்பது ஒரு வாசகம். சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையும் வாக்குகளும் இந்த வாசகத்திற்கு நல்ல உதாரணங்களா யிருக்கின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சூழ்நிலையை நன்கு அறிந்தவர்; நமது நாட்டின் நிலைமையும் நன்கு உணர்ந்தவர். இந்தியா, அந்நிய ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதையும் அதனால் ஏற்பட்டிருக்கிற விளைவுகளையும் பற்றி எவ்வளவு அழகாகக் கூறுகிறார் கேளுங்கள்:- வேதங்களிலே சொல்லப்பட்டிருக்கிற சடங்குகளை இப்பொழுது நாம் அனுஷ்டிப்பது மிகவும் கடினம். மற்றும் இப்பொழுது ஜனங்கள் அடிமைகளுடைய வாழ்க்கையை நடத்து கிறார்கள். தொடர்ந்தாற்போல் சுமார் பன்னிரண்டு வருஷகாலம் மற்றவர்களிடம் வேலை செய்கிறவர்கள் அடிமைகளாகிவிடு கிறார்கள். யாரிடத்தில் வேலை செய்கிறார்களோ அவர்களுடைய சுபாவங்களெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இவர்கள், தங்கள் எஜமானர்களின் கீழ் வேலை செய்து கொண்டிருக்கிற போது, அந்த எஜமானர்களுடைய ரஜோகுணத்தையும், தமோ குணத்தையும், பலாத்கார உணர்ச்சியையும், ஆடம்பரப் பிரியத்தை யும், இவை போன்ற மற்றத் தன்மைகளையும் அடைந்து விடுகி றார்கள். இவர்கள், தங்கள் எஜமானர்களுக்கு வேலை செய்வதோடு மட்டுமில்லை; உத்தியோகம் முடிந்தபிறகு உபகாரச் சம்பளமும் பெறுகிறார்கள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், குழந்தைகளோடு குழந்தையாயிருந்து விளையாடுவார்; இளைஞர்களோடு இளைஞராயிருந்து அவர் களுடைய தர்க்க வாதங்களுக்கெல்லாம் சாவதானமாகப் பதிலளிப்பார்; ஞானி களோடு ஞானியாயிருந்து மௌன சம்பாஷைனை செய்வார்; பக்தர்களோடு பக்தராயிருந்து பரம்பொருளின் புகழைப் பாடுவார். இவர், எந்த நிலைக்கும் தகுதியுடையவர்; எந்தக் கோணத்திற்கும் பொருந்து கிறவர்; எல்லோருக்கும் உரியவர்; எக் காலத்திலும் இருக்கிறவர். இவர், அனுபவ அறிவுக்கு எடுத்துக் காட்டு; ஆத்ம ஞானத்திற்கு ஒளி; மகான்; தீர்க்கதரிசி.
அளித்த நன்கொடை
_“என்னுடைய சர்வத்தையும் இன்று உனக்குக் கொடுத்து விட்டேன். இப்பொழுது ஒன்றுமில்லாத ஓர் ஏழைதான் நான். இந்தச் சக்தியைக் கொண்டு நீ உலகத்திற்கு மகத்தான நன்மையைச் செய்வாயாக! .இந்த வேலை நிறைவேறாத வரையில் நீ திரும்பி வராமலிருப்பாயாக!”_
** -பரமஹம்ஸர்**
ஸ்ரீராமகிருஷ்ணர் அனைத்தையும் துறந்தவர். ஆனால் மகத்தான தொரு நன்கொடையை அளித்திருக்கிறார். என்ன ஆச்சரியம்! ஆனால் என்ன முரண்பாடு! மற்றவர்களுக்காக எல்லா வற்றையும் அளித்துவிட்டு தாம் ஒன்றுமில்லாதவராதல் உலகத்திலே சகஜம். இப்படிப்பட்ட மகான்களைப் பற்றிப் படித்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். ஆனால் ஒன்றுமே இல்லாதவர், எல்லாவற்றை யும் அளித்தல் எங்ஙனம் சாத்தியம்? ஸ்ரீராமகிருஷ்ணர் விஷயத்தில் இது சாத்தியமாகவே இருந்திருக்கிறது. தம்மையே மற்றவர்களுக் காக ஒப்புக்கொடுத்து விட்டவர் பலருண்டு உலகத்திலே. தம்மைக் காட்டிலும் மேலான ஒன்றைத் தாமே சிருஷ்டித்து, அதை மற்றவர் களுக்காக ஒப்புக் கொடுத்து விட்டு, அப்படி ஒப்புக்கொடுத்து விட்டதனால் மேன்மையடைந்தவர் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ராம கிருஷ்ணர் ஒருவர். இவர் அளித்த நன்கொடைதான் சுவாமி விவேகானந்தர்.
இந்திய தேசத்தின் சரித்திரத்தில், ஹிந்து மதத்தின் சரித்திரத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு நிரந்தரமான தானம் ஏற்பட்டி ருக்கிறது. அவருடைய மகிமையை இன்று பலரும் அறிந்து கொண் டிருக்கின்றனர் என்று சொன்னால் அதற்கு சுவாமி விவேகானந்தர் தான் காரணம். இங்ஙனமே இந்தியாவின் பெருமையை, ஹிந்து தர்மத்தின் மேன்மையை சுவாமி விவேகானந்தர், உலகிற்கு அறிமுகப் படுத்தி வைத்தாரென்று சொன்னால், இந்திய தேசீய வாழ்க்கையில் ஒரு புதிய ஜீவசக்தியைப் புகுத்தினாரென்று சொன்னால், அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர்தான் காரணம். ஸ்ரீ ராம கிருஷ்ணர் இல்லா விட்டால் சுவாமி விவேகானந்தர் இல்லை; சுவாமி விவேகானந்தர் இல்லாவிட்டால் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் இல்லை.
உலகத்திலே அவதரித்த மகான்களிற் பலர், தங்களுடைய பிற்காலத்தில், தங்களுடைய சிஷ்ய கோடிகளால் விபரீதமாக வியாக்கியானம் செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். இது விஷயத்தில் அதிருஷ்டம் வாய்ந்த மகான்கள் ஒருசிலரேயென்று துணிந்து கூறலாம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த ஒருசிலரில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேச மணிகளை விளக்கிக் கொண்டிருப்ப தோடு விவேகானந்தர் திருப்தியடைய வில்லை; அவைகளைச் செயலில் கொண்டுவந்தார்; அநேகருடைய வாழ்க்கையில் கொண்டு புகுத்தினார்; ஊற்றாகத் தோன்றியதை ஆறாகப் பெருக்கினார்; அந்தப் பெருக்கை அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் பக்குவமாகப் பாய்ச்சினார்; ஆத்மீக வறட்சியடைந் திருந்த மேனாட்டுக்கு இந்தியாவின் ஆத்ம சக்தியைப் புகட்டினார்; லௌகிக சித்திகளில் வறட்சியடைந்திருந்த இந்தியாவுக்கு மேனாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டினார்; தமது குருநாதனுடைய புகழைப் பாடுமுகத்தான் இந்தியாவின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துக்கூறினார். சுருக்கமாக மேனாட்டாருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த இந்தியாவைப் பற்றிய அறியாமை இருளை விளக்கிய சூரியன் விவேகானந்தர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இருந்த தொடர்பை சொற்களினால் சொல்லிக்காட்ட முடியாது. மன ஒருமையை வார்த்தைகளுக்குள்ளே சிறைப்படுத்த முடியுமா? தாய் தந்தையருக்கும் மக்களுக்கும் இடையே இருக்கிற அன்பு, தம்பதிகளிடையே நிலவும் காதல், சகோதர வாஞ்சை, ஆண்டான் அடிமை விசுவாசம், நவில்தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும் இன்பம் தரு நட்பு, இவை யெல்லாம் ஒன்று சேர்ந்தால் என்னவாகிறதோ அது தான் ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் தொடர்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்தமாதிரியான குருசிஷ்ய சம்பந்தத்தை உலக சரித்திரத்தில் ஏகதேச மாகத்தான் பார்க்கிறோம். ராமபிரானுக்கும் ஹனுமானுக்கும், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும், புத்தருக்கும் ஆனந்தருக்கும், ஸாக்ரட்டீஸுக்கும் பிளேட்டோவுக்கும் எத்தகைய தொடர்பு இருந்ததோ அத்தகைய தொடர்பே ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இருந்த தென்று கூறலாம்.
சாதாரணமாக குருமார்களை நாடித்தான் சிஷ்யர்கள் செல்வது வழக்கம். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் விஷயத்தில் சிஷ்யனை நாடி குரு செல்கின்ற ஆச்சரியத்தைக் காண்கிறோம். தமக்குப் பின்னால் தமது உபதேச பொக்கிஷத்தை, ஆத்மஞான அனுபவக் களஞ்சியத்தை முறை யாகக் காப்பாற்றி உலகிற்கு வழங்கக்கூடிய ஒருவர் தேவையென்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் உணர்ந்தார். இதற்குத் தகுதியானவர் நரேந்திரர்தான் - இதுதான் சுவாமி விவேகானந்தருடைய பூர்வாசிரமப் பெயர் - என்பதை, அவரை முதன் முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டார். தீர்க்கதரிசியல்லவா? இதனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடத்தில் தனியன்பு செலுத்தினார். முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பரிச்சயமானவர் போலவே பழகத் தொடங்கினார். மற்றச் சிஷ்யர் களிடத்தில் விவேகானந்தரைப் புகழ்ந்து பேசுவார்; அவரை ஒரு நித்திய சித்தர் என்பார். நரேந்திரரைப் பாருங்கள். அவருக்கு யாரும் லட்சிய மில்லை… தமக்குத் தெரிந்ததை யெல்லாம் என்னிடத்தில் கூட அவர் சொல்வதில்லை. மற்றவர்களிடத்தில் அவருடைய மேதையைப் பற்றிப் புகழ்ந்து பேசுவேனோ என்ற பயம் அவருக்கு. அவர் அஞ்ஞானத் தினின்றும், மாயையினின்றும் விடுபட்டவர். அவருக்கு பந்தமென்பதே இல்லை. அவர் ஒரு மகாத்மா. அவரிடத்தில் அநேக நல்ல குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த சங்கீத நிபுணர்; பேரறிஞர். மற்றும் அவர் தமது ஆசாபாசங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். தாம் விவாகமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறுகிறார் இப்படியெல்லாம் நரேந்திரரைப் புகழ்ந்து பேசுவார்.
இன்னும் ஓரிடத்தில் சொல்கிறார்:- நரேந்திரர் எப்பொழு தாவது இங்கே - தட்சிணேசுவரத்திற்கு - வந்தால், அறையில் எத்தனைபேர் இருந் தாலும் அவரிடத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பேன். மற்றவர் களிடத்திலும் பேசுங்கள் என்பார் அவர். பிறகுதான் மற்றவர்களிடத்திலும் பேசுவேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டுவிட்டது. அவருக்காக, அவர் வரவில்லையே யென்பதற்காக, அழுதிருக்கிறேன்.
தமது குருநாதர் தம்மிடத்தில் எத்தகைய அன்பு காட்டினார் என்பதை நரேந்திரர் உடல் புளகித்து உள்ளமெல்லா உருகக் கூறுவதைக் கேளுங்கள்:- என்னுடைய தகப்பனார் இறந்துபோன பிறகு எனது தாயாரும் சகோதரர்களும் பட்டினியால் வருந்தி னார்கள். குருநாதர், குஹா என்பவரை ஒரு நாள் சந்தித்து நரேந்திர ருடைய தந்தையார் இறந்து விட்டார். அவருடைய குடும்பம் நிரம்பப் கஷ்ட தசையிலே இருக்கிறது. அவருக்கு இப்பொழுது நண்பர்கள் பண உதவி செய்தால் நல்லது என்று கூறினார். குஹா என்பவர் சென்றவுடன், குருநாதரை நான் கடிந்து கொண்டேன். ‘இவைகளையெல்லாம் அவரிடத்தில் போய்ச் சொல்வானேன்? என்று கேட்டேன். குருநாதர் அழுது விட்டார். உனக்காக வீட்டுக்கு வீடு பிச்சையெடுப்பேன் என்றார். அவர் தமது அன்பினால் எங்களை அடக்கியாண்டார் நான் தட்சிணேசுவரத்திற்கு மூன்றாவது தடவ சென்றபோது,குருநாதர் சமாதியிலாழ்ந்துவிட்டார். என்னைக் கடவுள் போல் நினைத்துப் பலவிதமாக தோத்திரம் செய்ய ஆரம்பித்து விட்டார். என்னிடம் கூறினார்,- ஓ நாராயணா, எனக்காக இந்த உடம்பெடுத் திருக்கிறாய் என்றார்… அவர் நோயாயிருந்த போது, கையலம்பிக் கொள்ள நான் தண்ணீர்வார்த்தால் கூடாது’ என்பார்… அவர் என் பொருட்டு ஜகன் மாதாவிடம்எத்தனை தடவை பிரார்த்தனை செய்திருக்கிறார்!… என் மனத்தில் எப்பொழுதாவது கெட்ட எண்ணம் உதித்தால் அது குருநாதருக்கு உடனே தெரிந்து விடும். சில சமயங்களில் நான் கெட்டவர்களுடைய சகவாசத்தில் ஈடுபட்டுவிடுவேன். அப்பொழு தெல்லாம் குருநாதர் என் கையிலிருந்து எவ்வித ஆகாரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவருடைய கை ஆகாரத்தை எடுக்கும்; ஆனால் வாயண்டை செல்லாது. நீ இன்னும் தயாராகவில்லை போலிருக்கிறது என்பார் என்னிடம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், நரேந்திரரை, குழந்தையாகக் கருதிக் கொஞ்சுவார் ஒரு சமயம்; பரம்பொருளின் வடிவமாகக் கருதிப் போற்றுவார் இன்னொரு சமயம். ஒரு நாள், பிரபல நாடகாசிரியரான கிரீசந்திரகோஷின் வேண்டுகோளுக்கிணங்கஅவருடையவீட்டுக்கு,ஸ்ரீராமகிருஷ்ணர்,தமதுசிஷ்யர்கள்சகிதம்சென்றிருந் jர். vல்லோரும் ஓரிடத்âš அமர்ந்தhர்கள். பல விஷயங்களைப் பற்றித் தர்க்க வாதங்கள் நடைபெற்றன. அப்பொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணர் ஓரிடத்திலும் நரேந்திரர் அவருக்குச் சிறிது எட்டினாற் போலவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஸ்ரீராமகிருஷ்ணர், மெது மெதுவாக நரேந்திரர் அருகே நகர்ந்து வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பை மெதுவாகத் தடவிக் கொடுத்தார்; தாடையைத் தொட்டுக் கொண்டே ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம் என்றார். இப்படிச் சொல்லிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்துவிட்டார். அவருடைய கை, நரேந்திரருடைய பாதத்தைத் தொட்டுக் கொண் டிருந்தது; இந்த நிலையிலும், ஒரு கையினால் நரேந்திரருடைய உடம்பைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவரிடத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நரேந்திரரைப் பார்த்து, கூப்பிய கையராய் ஒரு பாட்டு; தயை செய்து ஒரு பாட்டு; பிறகு நான் சரியாகிவிடுவேன் என்றார். நரேந்திரரும் பாடினார். பாட்டைக் கேட்டுக் கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதியி லாழ்ந்து விட்டார். இங்ஙனம் நரேந்திரரிடமிருந்து பெருக்கெடுத்து ஓடிவந்த இசை வெள்ளத்திலே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மை இழந்து விட்டிருக்கிறார் பல சமயங்களில்.
நரேந்திரருக்கு விவாகம் நிச்சயிக்கப் பட்டிருப்பதாக ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு யாரோ சொல்லிவிட்டார்கள். அவரால் இதைச் சகிக்க முடியவில்லை. காளி மாதாவிடம் சென்று அவருடைய திருப்பாதங் களைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர்பெருக தாயே, எப்படியாவது விவாகம் நடைபெறாமல் செய்துவிடு. என்னுடைய நரேந்திரனை சம்சார சாகரத்தில் மூழ்கடித்து விடாதே என்று பிரார்த்தனை செய்தார். நரேந்திரருக்கு விவாகம் நடைபெற வில்லை. விவேகானந்தருடைய எதிர்கால வாழ்க்கை எவ்வித பந்தங்களுக்கும் உட்படாததாய், தியாகத்தின் நிறைவாக இருக்க வேண்டுமென்பதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு எவ்வளவு சிரத்தை இருந்ததென்பது இதனின்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை சிவபெருமான் தடுத்தாட் கொண்ட வரலாறு இங்கே நமது ஞாபகத்திற்கு வருகிற தில்லையா?
தம்மை நாடிவரும் சிஷ்யர்கள் தாமரை மலர் போன்றவர்கள் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். சிலர் பத்து இதழ்களுடைய தாமரை, இன்னுஞ் சிலர் பதினாறு இதழ்களுடைய தாமரை, வேறு சிலர் நூறு இதழ்களுடைய தாமரை, ஆனால் நரேந்திரரோ ஆயிரம் இதழ்களுடைய தாமரையென்று சொல்லி விவேகானந்தரிடத்தில் தமக்குள்ள விசேஷ மதிப்பை வெளிப்படுத்துகிறார். நான்கு பேர் மத்தியில் தாம் இருக்கிறபோது, தமது பக்கத்தில் நரேந்திரர் இருந்துவிட்டால், தமக்குப் பெரிய பக்க பலமாயிருக்கிறதென்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். அவருடைய ஆத்ம சக்தியிலே எவ்வளவு நம்பிக்கை! இந்த நம்பிக்கை இருந்ததனாலேயே தமது கடைசி காலத்தில் சிஷ்யகோடிகள் அனைவரையும் விவேகானந்த ரிடத்தில் ஒப்புவித்து அவர்களை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். இதே நிறையிலேயே விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ணரை வைத்துப் போற்றுகிறார். ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்:-இப்பொழுது நான் என்ன முடிவுகட்டியிருக்கிறே னென்றால், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குச் சமதையானவர் வேறுயாரு மில்லை யென்பதுவே யாகும். இத்தகைய நிறைவை, இத்தனை ஆச்சரியகரமான அன்பை, பந்தப்பட்டுக் கிடக்கும் மனிதனிடத் திலே காட்டப் படுகின்ற இத்தகைய கருணையை, உலகத்திலெங்கும் காணமுடியாது… பேராபத்துகள் ஏற்பட்ட காலத்தில், ஆசாபாசங்கள் சூழ்ந்துகொள்ளும் காலத்தில், நான் பெரிதும் துக்கமடைந்தவனாய் அழுத வண்ணம் கடவுளே, என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்திருக்கிறேன்; ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆச்சரியகரமான முனிவர் அல்லது அவதார புருஷர் அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள், இவர், மனிதனுடைய இருதயத்தை ஊடுருவிப் பார்க்கும் தமது சக்தியி னால், என் மனோ வேதனைகளையெல்லாம் அறிந்து, என்னையும் மிஞ்சி என்னைத் தம்மிடம் அழைத்துக் கொண்டதன் மூலம் அந்த வேதனைகளை யெல்லாம் அகற்றினார். கடவுளிடத்தி லிருந்து பெற முடியாததைத் தமது குருநாதரிடத்திலிருந்து பெற்றதாக இவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பக்தி இவைகளையே காட்டுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் ஏன் விவேகானந்தரை ஆட்கொண்டார்? ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து உபதேசம் பெறவேண்டுமென்பதற்காக விவேகானந்தர் அவரை நாடவில்லை. இதை விவேகானந்தரே பின்னொரு சமயம் ஒப்புக் கொண்டிருக்கிறார். குருநாதர் சொன்ன வைகளில் பெரும்பாலனவற்றை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வில்லை. ‘அப்படியானால் ஏன் இங்கே வருகிறாய்-? என்று ஒரு நாள் என்னைக் கேட்டார். உங்களைப் பார்க்க வருகிறேனே தவிர கேட்க வரவில்லை யென்று பதில் கூறினேன். .. இதைக் கேட்டு அவர் பெரிதும் சந்தோஷப் பட்டார். இந்தக் கடைசி வாக்கியத்தில்தான், விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் ஈடுபட்டதன் ரகசியம் அடங்கியிருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் நேர்மையுள்ளவர்; கள்ளங் கபடில்லாதவர்; சத்திய மூர்த்தி; நேர்மையுள்ளவர்களால்தான் நேர்மையை அறிந்து கொள்ள முடியும்; பாராட்ட முடியும். சத்திய புருஷர்கள் தான் சத்தியத்தின் மகிமையை உணரமுடியும். விவேகானந்ருடைய பரிசுத்த இருதயத்தையும், உண்மையைக் காணவேண்டுமென்பதிலே அவருக் கிருந்த துடிதுடிப்பையும் ஸ்ரீராமகிருஷ்ணர் சுலபமாகத் தெரிந்து கொண்டு விட்டார்; அவரை ஆட்கொண்டார். குடியான வர்கள் நல்ல உழவு மாடுகள் வாங்கிவர சந்தைக்குச் செல்வார் களல்லவா? அப்படிச் சென்று ஒவ்வோர் எருதாக வாலைப் பிடித்துப் பார்ப்பார்கள். இப்படிப் பிடித்துப் பார்க்கிறபோது சில எருதுகள் எவ்வித உணர்ச்சியும் பெறாமல் அப்படியே படுத்துக்கொண் டிருக்கும். இவற்றை, சப்பைமாடுகள்; பிரயோஜனமில்லை என்று சொல்லி நிராகரித்து விடுவார்கள். இன்னுஞ் சில மாடுகள், வாலைத் தொட்ட மாத்திரத்தில் சுறுசுறுப்புக் காட்டும். இப்படிப்பட்டவை களைத்தான் விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். நரேந்திரர், இந்தப் பிந்திய எருது களைப் போன்றவர். அவரிடத்தில் நிரம்பத் துடி துடிப்பு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பரமஹம்ஸர்.
சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை முதன் முதலில் சந்திக்கிறபோது, குமுறிக் கொந்தளித்தெழுகின்ற சமுத்திரமும் அலை யடங்கி அமைதியாயிருக்கின்ற சமுத்திரமும் சந்திப்பது போல இருந்தது;1 புதுமையும் பழமையும் கலப்பது போல இருந்தது; மேனாட்டு விஞ்ஞானமும் கீழ் நாட்டு ஞானமும் கூடுவது போலிருந்தது. விவேகானந்தர் அறிவின் நிறைவாயிருந்தார்; ராமகிருஷ்ணர் அன்பின் நிறைவாயிருந்தார். முன்னவர் அறிவுக் கண்களைக் கொண்டு கடவுளைக் காண முடியுமாவென்று கேட்டுக் கொண்டிருந்தார்; பின்னவர் நம்பிக்கையைத் துணை பற்றிச் சென்று கடவுளைக் கண்டே இருந்தார். முன்னவர் பேச்சிலே பெருமிதம் கண்டிருந்தார்; பின்னவர் மௌனத்திலே இனிமை கண்டிருந்தார். இந்த நிலைமையிலேதான் இருவருக்கும் சந்திப்பு ஏற்பட்டது. அறிவு, அன்பிலே அடைக்கலம் புகுந்தது; பேச்சு, மௌனத்திலே லீன மாகியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சாதாரண மனிதராகவே காணப் பட்டார். அவருடைய சொற்களும் செயல்களும் எளிமையுடையன வாகவே இருந்தன. இத்தகையவரிடத்தில் மகாமேதாவியான, அந்த மேதையிலே பெருமிதங் கொண்டிருந்த விவேகானந்தர் எப்படி அடங்கிப் போனார் என்பது ஆச்சரியமான விஷயமே யாகும். ஆனால் இஃது இந்தியாவின் பண்பாட்டையே காட்டு வதாயிருக்கிறது. ஆத்ம சக்திக்கு முன்னே அறிவுச் சக்தி அடங்கிப் போகிறது. முழு முதற்பொருளைக் கண்டவரிடத்தில், மற்றப் பொருள்களுடைய வர்கள் ஐக்கியப் பட்டு விடுகிறார்கள். இந்திய சரித்திரத்தின் நெடுகிலும் இந்த மாதிரியான சம்பவங்களை அடிக்கடி சந்திக்கிறோம். இந்தியாவின் நாகரிகம், ஓர் அறிஞர் கூறிய மாதிரி, மலர்களின் அழகைப் பற்றிக் கவலைப் படுவதில்லை; விதையின் அர்த்தத் திலேயே அதிக கவனஞ் செலுத்துகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணருடைய வாழ்க்கையையும் சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையையும் ஒன்று சேர்த்தே பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தியாவினுடைய வாழ்க்கையின் முழுத் தன்மையும் தெரியும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒளியென்றால் விவேகானந்தர் அதன் ஒலியாயிருந்தார். ராமகிருஷ்ணர் கவிதை யென்றால் அதன் விரிவுரையாயிருந்தார் விவேகானந்தர். ராம கிருஷ்ணர் போதித்த உண்மைகளை எவ்வளவு அழகாக, எவ்வளவு கம்பீரமாக சொல்லால் முழக்கிக் காட்டுகிறார் விவேகானந்தர்! கேளுங்கள் சிலவற்றை:-
சென்ற காலத்தில் நிலவிய மதங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; அவைகளுக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். அந்தந்த மதத்தினரோடு சேர்ந்துகொண்டு, அந்தந்த மதத்தினர் வழிபடுகின்ற முறையில் நான் கடவுளை வணங்குகிறேன். நான் ஒரு முகம்மதி யருடைய மசூதிக்குச் செல்வேன்; கிறிதுவருடைய ஆலயத்திற்குச் சென்று அங்கே சிலுவையின் முன்னால் முழந்தாளிட்டு வணங்குவேன்; புத்தர் கோயிலுக்குச் சென்று புத்தரிடத்திலும் தர்மத்தினிடத்திலும் சரணமடைவேன்; காட்டிலே சென்று, எல்லோருடைய இருதயங்களையும் பிரகாசமய மாக்குகின்ற ஜோதி எதுவோ அந்த ஜோதியைக் காண முயன்று கொண்டிருக்கிற ஹிந்துவுடன் தியானத்தின் ஆழ்ந்திருப்பேன். இப்படி யெல்லாம் நான் செய்வதோடல்லாமல், வருங்காலத்தில் தோன்றக் கூடிய மதங்களனைத்திற்கும் என் இருதயத்தைத் திறந்து வைத்துக் கொண்டுமிருப்பேன்.
மதமென்பது நூல்களிலே இல்லை; புத்தி பூர்வகமான அங்கீகாரத்தில் இல்லை; அறிவிலும் இல்லை. அறிவு, தத்துவங்கள், ததாவேஜுகள், கொள்கைகள், நூல்கள், சடங்குகள் இவை யெல்லாம் மதத்திற்குத் துணை செய்வனவேயாம். மதமென்பது மெய்ப்பொருளை அடைவதிலேயே இருக்கிறது.
உலகத்திலுள்ள எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை யல்ல; விரோதமானவையுமல்ல. அவை, நித்தியமா யுள்ள ஒரு மதத்தின் பல தோற்றங்களேயாம். அந்த ஒரு மதமே, பல நிலை களிலுள்ளவர்களுக்கு, பலவகை அபிப்பிராயங்களுடையவர் களுக்கு, பல ஜாதியினருக்கு ஏற்றவிதத்தில் பல மதங்களாகத் தோற்றமளிக்கிறது.
விவேகானந்தர், ராமகிருஷ்ணரைப் போல் ஒரு தீர்க்கதரிசி. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், நிகழ்கால நிலையைப் புலப் படுத்துவதோடு எதிர்காலத்திற்கு வழி காட்டியாகவு மிருக்கிறது. அவர் அன்று சொன்னது இன்றும் பொருத்தமாயிருக்கிறது. சங்கநாதம் செய்கிறார் ஓரிடத்தில்:-
“ஆணை பிறந்துவிட்டது. இந்தியா எழுந்திருக்க வேண்டும்…. பாரத மாதாவை இனி யாரும் தடுக்க முடியாது. இனி அவள் ஒரு போதும் தூங்கப் போவதில்லை. வெளிச் சக்திகள் எவையும் அவளைப் பின் தள்ள முடியாது. அவள் எழுந்து நிற்க முற்பட்டு விட்டாள்… நீண்ட இரவு கழிந்து விட்டது; கொடிய துன்பங்கள் விலகிவிட்டன. ஒரு குரல் நம்மை நோக்கி வருகிறது … இமய மலையி லிருந்து வருகிற காற்றைப் போல், இறந்து போகுந் தறுவாயிலிருந்த அவளுடைய எலும்புகளிலும் தசை நார்களிலும் அஃது - அந்தக் குரல் - உயிரளித்துக் கொண்டு வருகிறது. அவளுடைய சோர்வு நீங்கி விட்டது. அவள் - நமது தாய் நாடு - விழித்துக் கொண்டு விட்டாள்.”
உபதேச மணிகள்
_“சந்திரன் மேலும் மேலும் வளர்ச்சியடைவதைக் கண்டு சமுத்திரத்தின் கொந்தளிப்பு அதிகமாகிறது. அதுபோல் பிறர் மேன்மையடைவதைக் கண்டு மகான்கள் சந்தோஷப்படுகிறார்கள்.”_
-துளசிதாஸர்
ஸ்ரீராமகிருஷ்ணர், மேடை மீதேறி ஒரு பிரசங்கமும் செய்ய வில்லை; ஆத்மஞான வகுப்புகள் வைத்து நடத்தவில்லை; யாருக்கும் மந்திரோபதேசம் செய்யவில்லை. இருந்தாலும் இவரைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். இந்தக் கூட்டத் தினருடன் இவர் எப்பொழுதும் சம்பாஷணை செய்து கொண்டிருப்பார். இவருடன் ஒருமுறை அல்லது இருமுறை சம்பாஷித்து விட்டுச் சென்றவர்கள், இதுகாறும் தங்களுக்குத் தெரியாமலிருந்தனவெல்லாம் இப்பொழுது தெரிந்துவிட்டதாக உணர்வார்கள்; மேலும் மேலும் இவருடன் சம்பாஷிக்க வேண்டு மென்று ஆவல் கொள்வார்கள்; இவருடைய வாக்கிலிருந்து வரும் ஒவ்வொன்றையும் உபதேச மணியாக ஏற்றுக்கொண்டு, அவற்றை பக்தி சிரத்தையுடன் தங்கள் இருதய பொக்கிஷத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று விருப்பங் கொள்வார்கள். ஏனென்றால் அவை, வாழ்க்கையில் வழிகாட்டும் விளக்குக ளல்லவா? இத்தகைய விளக்குகளாயுள்ள உபதேசமணிகளிற் சிலவற்றை இங்கே தருகின்றோம்.
பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தைப் போஷணை செய்ய பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். உங்கள் வருமானம் அதிகமாவதற் கான முயற்சிகளை நீங்கள் செய்யலாம். ஆனால் அதை யோக்கியமாகச் செய்யவேண்டும். வாழ்க்கையின் லட்சியம் பணம் சம்பாதிப்பதல்ல; கடவுளுக்குத் தொண்டு செய்வது. கடவுள் தொண்டுக்காகப் பணம் பிரயோஜனப்படுமாகில் அப்பொழுது அதனால் கெடுதல் இல்லை.
(காளிதேவியிடம்) தாயே, ஒவ்வொருவரும் தங்கள் தங்க ளுடைய கடிகாரந்தான் சரியென்று சொல்கிறார்கள். கிறிதுவர்க ளென்ன, பிரும்மசமாஜத்தார் என்ன, ஹிந்துக்க ளென்ன, முஸல்மான்களென்ன, இவர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய மதந்தான் உண்மையானது என்று சொல்கிறார்கள். ஆனால், தாயே, உண்மையில் யாருடைய கடிகாரமும் சரியான தில்லை. உன்னை உண்மையாக யார் அறிய முடியும்? உன்னை ஒருவன் மனப்பூர்வ மாக வழிபடுவானாகில், உனது அருளினால், எந்த மார்க்கத்தின் மூலமாகவேனும் உன்னை வந்து அடையக் கூடும்.
தர்க்கம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. தர்க்கவாதத்திற்கு அப்பாற்பட்டவர் கடவுள். உலகிலுள்ள அனைத்தையும் நான் கடவுளாகவே காண்கிறேன். அப்படியிருக்க தர்க்கவாதம் செய்வதில் என்ன பிரயோஜனம்? தோப்புக்குள் சென்று மாம்பழங்களைத் தின்றுவிட்டு வெளியே வாருங்கள். அவ்வளவுதானே? மாமரங்களி லுள்ள இலைகளைக் கணக்கிடவா நீங்கள் தோப்புக்குள் செல்கி றீர்கள்? இல்லையே. அப்படியிருக்க, மறுபிறவியைப் பற்றியோ, உருவ வழிபாட்டைப் பற்றியோ வாதம் செய்து கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்குவானேன்?
திரீகளெல்லோரும் சக்தியின் வடிவங்கள். இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில், விவாகத்தின் போது, மணமகள் தன் கையில் ஒரு கத்தியைப் பிடித்துக் கொள்ளவேண்டுமென்பது ஒரு வழக்கம். வங்காளத்தில் மணமகள் பாக்குவெட்டியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மணமகன், தெய்வ சக்தியின் வடிவமாயிருக்கப்பட்ட மணமகளின் துணைகொண்டு மாயாபந்தத்தை அகற்ற வேண்டு மென்பது வேயாகும்
கடவுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிரிக்கிறார். வைத்தியர், நோயாளியின் தாயாரைப் பார்த்து, அம்மா, பயப்படாதீர்கள்; உங்கள் பையனை நான் நிச்சயம் சொதப்படுத்தி விடுகிறேன். என்று சொல்கிற போது, கடவுள் சிரிக்கிறார். நான் இந்தப் பையனுடைய உயிரை எடுத்துக் கொண்டு விடப்போகிறேன். ஆனால் இந்த வைத்தியர் அந்த உயிரைக் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்கிறார் என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டு சிரிக்கிறார் கடவுள். கடவுள்தான் எஜமானர் என்பதை வைத்தியர் மறந்துவிட்டு தாம்தான் எஜமானர் என்று நினைத்துக் கொள்கிறார். இரண்டு சகோதரர்கள் தங்கள் நிலத்தைக் கயிறு போட்டு இரண்டு பங்காகப் பிரித்து இந்தப் பக்கம் என்னுடையது; அந்தப் பக்கம் உன்னுடையது என்று சொல்லிக் கொள்கிற போதும் கடவுள் சிரிக்கிறார். உலகம் பூராவும் என்னுடைய தாயிருக்க, இவர்கள் என்னுடையது என்று சொல்லிக் கொள்கிறார்களே யென்று சொல்லிச் சிரிக்கிறார்.
ஒருவன் உலக வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த போதிலும் அவன் அடிக்கடி ஏகாந்தத்தில் இருக்க வேண்டும். ஒருவன் குடும்பத்தை விட்டுத் தனியாகச் சென்று மூன்று நாட்களுக்காவது கடவுளை நினைத்து அழுதால் போதும். அவனுக்கு ஓய்விருக்கிற போது ஒரு நாளைக்காவது கடவுளைப் பற்றி நினைத்தால் போதும். அதனால் அவனுக்கு நன்மையே உண்டாகும். தங்களுடைய மனைவிக்காகவும் மக்களுக்காவும் ஜனங்கள் ஒரு பானை கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் கடவுளுக்காகக் கண்ணீர் வடிக்கிறவர் யார்?
மனிதர்களைத் தானியங்களுக்கு ஒப்பிடலாம். யந்திரத்தில் அகப்பட்டுக்கொண்டு அரை படப் போகிற தானியங்களைப் போல் அவர்கள் இருக்கிறார்கள். நடு அச்சைச் சுற்றியுள்ள தானியங்கள் மட்டுந் தான் அரை படாமல் தப்பித்துக் கொள்கின்றன. அது போல் மனிதர்களும் கடவுளாகிய அச்சினிடம் அடைக்கலம் புக வேண்டும். அவரை அடையுங்கள்; அவர் பெயரைச் சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள் முக்தி பெறுவீர்கள். இன்றேல் யமனால் நசுக்கப்பட்டு விடுவீர்கள்.
ஒவ்வோர் உபாதியும் மனிதனுடைய சுபாவத்தை மாற்றி விடுகின்றது. அழகான கறுப்புக் கரை அங்கவதிரத்தைப் போட்டுக் கொள்ளட்டும், உடனே அவன் காதல் பாட்டுகளைப் பாட ஆரம்பித்து விடுகிறான். சீட்டாட்டம், கைத்தடி ஆகிய இவையெல் லாம் உடனே தொடர்ந்து விடுகின்றன. ஒரு நோயாளி கூட உயர்ந்த பூட் போட்டுக் கொண்டு விட்டானாகில், பாருங்களேன் அவனை, விசில் அடித்துக் கொண்டு ஓர் இங்கிலீஷ்காரணைப் போல் மாடிப் படிகள் ஏற ஆரம்பித்து விடுகிறான். ஒரு மனிதன் பேனாவைக் கையிலே பிடித்துக கொள்ளட்டும், அகப்பட்ட காகிதத்தில் கிறுக்கத் தொடங்கி விடுகிறான். பேனாவுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
பணமும் ஒரு பெரிய உபாதிதான். பணமிருந்து விட்டால் அது மனிதனை எவ்வளவு மாற்றி விடுகிறது… ஒரு தவளை, தனது வளையில் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு யானை அந்த வளையின் மீது போய்க்கொண்டிருந்தது. உடனே தவளைக்குக் கோபம் வந்துவிட்டது. தன் வளையிலிருந்து வெளியிலே வந்து, யானையை உதைக்கிறாற் போல் காலைத் தூக்கிக் கொண்டு ஏ யானையே, என் தலை மீது நடந்து செல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டது. பணத்தினால் உண்டாகக் கூடிய கர்வம் இத்தகையது!
யார் மீதும் துவேஷம் கொள்ளாதே. சிவன், காளி, அரி இவை யெல்லாம் ஒரு பரம்பொருளின் வெவ்வேறு தோற்றங்கள் தான்.
எவ்வளவுக் கெவ்வளவு கடவுளுக்கருகில் வருகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு சாந்தி உண்டாகிறது. கங்கைக்கு அருகில் வரவர அதனுடைய குளிர்ச்சியை அதிகமாக உணர்கிறீர்கள். அந்தக் கங்கையிலேயே அமிழ்ந்து விட்டாலோ பரிபூரண நிம்மதி ஏற்படுகிறது.
ஒருவருக்கொருவர் சிநேகமாயிருங்கள். அப்படியிருப்பது உங்களுக்குத்தான் நன்மை. அதனால் எல்லாருக்கும் சந்தோஷம். நாடகத்தில், சங்கீத கோஷ்டியினர் ஒத்துப் பாடினால்தான் நாடகம் நன்றாக இருக்கிறது; பார்க்க வந்திருக்கும் ஜனங்களும் சந்தோஷப் படுகிறார்கள்.
விறகிலே தீ இருக்கிறதென்று அறிதலும் நம்புதலும் ஞானம். அந்தத் தீயிலே சோறு சமைப்பதும், அந்தச் சோற்றைச் சாப்பிடுவதும், அதிலிருந்து போஷணை பெறுவதும் விஞ்ஞானம். தன்னுடைய சொந்த அனுபவத்தினால் கடவுள் இருக்கிறார் என்று உணர்வது ஞானம். அந்தக் கடவுளோடு பேசுவது, அவரைக் குழந்தையாகவோ, நண்பனாகவோ, எஜமானனாகவோ, காதலனாகவோ அனுபவிப்பது, விஞ்ஞானம்.
எந்தவிதமான பொய்யும் நல்லதல்ல. புனிதமான உடையா யிருந்தால் கூட அது பொய்யுடையாயிருந்தால் அது நல்லதல்ல. அந்தரங்க எண்ணத்தைப் போல் பகிரங்க உடையும் இல்லா திருந்தால் அது நாளாவட்டத்தில் நாசத்தையே உண்டு பண்ணும். பொய் சொல்லிக் கொண்டும் பொய்யான காரியங்களைச் செய்து கொண்டு மிருந்தால் பொய்யைப் பற்றிய பயமே போய் விடுகிறது. ஒரு கிருகதனுடைய வெள்ளை ஆடையே சிறந்தது. உலகப்பற்று வைத்துக் கொண்டு. லட்சியத்திலிருந்து அடிக்கடி நழுவிப் போக, வெளியிலே காஷாயந்தரித்துக் கொண்டிருப்பது எவ்வளவு கேவலம்!
மெய் பேசுவது கலியுகத்தின் தவமாகும். இந்த யுகத்தில் மற்றத் தவங்களைச் செய்தல் கடினமாகும். உண்மையைக் கடைப் பிடிக்கிறவன் கடவுளை அடைகிறான்.
சுயநலம் சிறிதேனும் இல்லாமல் மற்றவர்களுடைய நன்மைக் காக வைத்தியன் தன் தொழிலைச் செய்வானாகில் வைத்தியத் தொழில் மிகவும் மேன்மையானது.
வார்த்தைகளை வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோஜனம்! ஏதாவது செய்யுங்கள். சித்தி என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதனால் நீங்கள் ஏதேனும் சித்தி பெற முடியுமா?
உலர்ந்த தீக்குச்சிகளாயிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்துக் கிழித்தாலும் உடனே நெருப்பு கிடைக்கிறது. அவை ஈரமாயிருந்தால், ஐம்பது குச்சிகளைக் கிழித்தாலும் நெருப்பு உண்டாவதில்லை. தீக்குச்சிகள் தான் நஷ்டம். அது போல உங்கள் மனம் உலக சுகங்களிலே தோய்ந்திருக்கு மானால், கடவுளுணர்ச்சி உங்களுக்கு உண்டாகவே உண்டாகாது. ஆயிரந்தடவை நீங்கள் பிரயத்தனப் படலாம்; ஆனால் எல்லாம் வீண்தான். உலக சுகங்களின் மீது உங்களுக்கிருக்கப்பட்ட பற்று உலர்ந்து போகட்டும், அதாவது இல்லாமற் போகட்டும், உடனே கடவுளுணர்ச்சி உண்டாகும்.
ஞானமில்லாதவன், பிறருக்கு ஞானோபதேசம் செய்ய முற்படுவது, தனக்குப் படுக்கையில்லாதான், பிறரைத் தன் படுக்கையில் படுத்துக் கொள்ளுமாறு சொல்வது போலிருக்கிறது.
தர்க்கவாதம் செய்வது எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. தர்க்கத்திற்கெல்லாம் அப்புறப்பட்டவர் கடவுள். உலகத்திலுள்ள சகலமானவற்றையும் நான் கடவுள் மயமாகவே காண்கிறேன். அப்படி யிருக்க தர்க்கம் செய்வதில் என்ன பிரயோஜனம்?
பயப்படாதீர்கள். உங்களை வழிநடத்திச் செல்கிறவர் கடவுள். அப்படியிருக்க யாருக்கு நீங்கள் பயப்படவேண்டும்? கடவுளே உங்களுடைய துணையாயிருக்கிறார். அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை அழைத்துச் செல்வார்.
எவன், நான் அடிமை, அடிமை யென்று சொல்லிக் கொண்டிருக் கிறானோ அவன் உண்மையிலேயே அடிமையாகி விடுகிறான். உலக பந்தங்களிலிருந்து நான் விடுதலை பெற்றி ருக்கிறேன்; நான் சுதந்திர புருஷன் என்று எவன் சொல்லிக் கொண்டிருக்கிறானோ அவன் உண்மையிலேயே சுதந்திர புருஷனா கிறான். பந்தம் என்பது மனதைப் பொறுத்தது; சுதந்திரம் என்பதும் மனதைப் பொறுத்தது,
ஒருவன் தன் திரண்ட செல்வத்தை யெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்வானாகில் அதை அவர் பொருட்படுத்துகிறாரா என்ன? இல்லவே இல்லை. அன்பையும் பக்தியையும் எவன் அளிக்கிறானோ அவன்மீதுதான் அவருடைய திருவருள் விழுகிறது. அவரால் பெரிதும் மதிக்கப்பெறுவது அன்பு, பற்றின்மை, துறவு ஆகிய மூன்றுந்தான்.
அறிவு, பலவீனமுடையது; நம்பிக்கை, சர்வ சக்தியை யுடையது. அந்த நம்பிக்கைக்கு முன்னர், இயற்கையின் சக்திகள் கூட ஒதுங்கி வழி விடுகின்றன. ஆத்மார்த்தமான முன்னேற்றத்திற்கு வேர் போலிருப்பது நம்பிக்கை. மற்றவைகளை யெல்லாம் நீங்கள் ஒதுக்கித் தள்ளி விடலாம்; ஆனால், நம்பிக்கை மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
புலன்களிடத்தில் உனக்கு எவ்வளவுக் கெவ்வளவு பற்றுதல் குறைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு கடவுளிடத்தில் நீ கொண் டிருக்கிற அன்பு அதிகமாகும். எவ்வளவுக்கெவ்வளவு கடவுளருகில் நீங்கள் வருகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்மீது உங்களுக் கிருக்கும் பக்தியும் அதிகப்படும்.
உண்மையான ஒரு பக்தன் எப்படி நினைக்கிறான், எப்படி உணர்கிறான் தெரியுமா? ஆண்டவனே, நீ எஜமானன்; நான் உன் வேலைக்காரன்: நீ தாய்; நான் உன் குழந்தை; நீ எல்லாமும்; நான் உன்னிலே ஓர் அமிசம்: இப்படியாக நினைக்கிறான்; உணர்கிறான்.
உலகத்திலே நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர் களும் இருக்கிறார்கள். அதாவது கடவுளை நேசிக்கிறவர்களும் இருக்கிறார்கள்; நேசியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எல்லாருடைய இருதயத்திலும் கடவுள் இருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக