அகத்தியர்
வரலாறு
Back
அகத்தியர்
ந.சி. கந்தையா
1. அகத்தியர்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
அகத்தியர்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : அகத்தியர்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
அகத்தியர்
முன்னுரை
இன்று அகத்தியர் வரலாறு என வழங்குவன கற்பனைகளாகத் தோன் றும் சில பழங்கதைகளே. இவைதான் அகத்தியரின் உண்மை வரலாறுகள் என்று கூற எவரும் துணியமாட்டார். கற்பனைகள் போன்ற பழங்கதை களும் காலந்தோறும் வளர்ச்சியடைகின்றன. சாத்தன் உவாந்தி எடுத்தான். அதனைப் பார்த்திருந்த ஒருவன் சாத்தன் கறுப்பாக உவாந்தி எடுத்தான் என ஒருவனிடம் கூறினான்; அவன், “சாத்தன் காகம்போல் கறுப்பாக உவாந்தி எடுத்தான்” என்று மற்றொருவனுக்குக் கூறினான். அவன் “சாத்தன் காகம் உவாந்தி எடுத்தான்” என்று இன்னொருவனிடம் கூறினான். இச் செய்தி ஊர் எங்கும்பரவிற்று. பலர் இவ்வியப்பைக் காணச் சென்றனர். இதன் உண்மையை ஆராய்ந்தபோது சாத்தன் உவாந்தி எடுத்தான் என்பதே உண்மையாயிற்று; மற்றவை எல்லாம் பொய். இன்று பழங்கதை வடிவில் வழங்கும் வரலாறுகள் பல சாத்தன் காகம் உவாந்தி எடுத்த கதை போன்ற னவே; ஆயினும் பயனற்றனவென்று பழங் கதைகளைத் தள்ளிவிடுமாறும் இல்லை. அவை தம்முள் சிறிய உண்மைகள் இருத்தலும் கூடும். அகத்தியரைப் பற்றிய வரலாறும் இவ்வகையினதே. அகத்தியர் வரலாற்றைக் குறித்துப் பலர் ஆராய்ந்திருக்கின்றனர். சிலர் அகத்தியர் தமிழ்நாட்டில் இருந்தவரல்லர் எனக் கூறினர். சிலர் அவர் வடநாட்டினின்று வந்து தென் னாட்டை ஆரிய மயமாக்கியவர் எனக் கூறினர். வேறு சிலர் வேறு பலவாறு கூறினர். அவை தம்மையெல்லாம் கருத்திற் கொண்டு ஆராய்ந்து இந் நூல் அமைவதாயிற்று. புராணக் கதைகளைத் தனித்தனி விரிக்கின், அதில் அளவு கடந்து விரியுமென அஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.
சென்னை
பிப். 1948
ந.சி. கந்தையா
அகத்தியர்
தோற்றுவாய்
தமிழ் ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் அகத்தியரைப்பற்றிய வரலாற்றை ஆராயவேண்டியிருக்கின்றது. தமிழ் மொழிக்கு முதன் முதல் இலக்கணம் செய்தவர்1 அகத்தியர் என்றும், அவருடைய மாணவர்களுள் ஒருவர் தொல்காப்பியர் என்றும் கூறும் பழங்கதைகள் வழங்குகின்றன. தமிழ் ஆராய்ச்சி செய்வோர் பலர் அகத்தியரும் தொல்காப்பியரும் வடநாட்டவ ரென்றும், அவர்கள் வடநாட்டு வழக்குகள் பலவற்றைத் தமது நூல்கள் மூலம் தமிழ் நாட்டிற் புகுத்தினர் என்றும் கூறிவருகின்றனர். டாக்டர் போப் தமிழில் இலக்கணம் செய்தாரென்றால் அவர் ஆங்கில வழக்குகளைத் தமிழிற் புகுத்தினார் என நாம் கூறமுடியாது. இதனை ஒப்பவே அகத்திய ரும் தொல்காப்பியரும் ஆரியராயினும் அவர்கள் தமது நூல்கள் மூலம் ஆரிய வழக்குகளைத் தமிழ் நாட்டில் நிலை நாட்ட முடியாது. அகத்தியர் என்பார் யார்? அவர் ஆரியரா? தமிழரா? அவரைக்குறித்து வழங்கும் பழங் கதைகள் நம்பத்தகுந்தனவா? நம்பத்தகாதனவா? என்பவை போன்ற வற்றைத் தமிழ் மாணவரும் பிறரும் ஆராய்ந்து தெளிதல் வேண்டும். அவ்வகையில் ஆராய்வதே இச்சிறிய நூலின் இலக்காகும்.
அகத்தியர்
உருவச்சிலைகளை ஆராய்ச்சி செய்வதில் வல்லவராகிய காங்குலி1 என்பார் அகத்தியரைப்பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் சுருக்கத்தை ஈண்டு தருகின்றோம்.
ஆரிய வர்த்தத்தினின்றும் தென் தேசத்தை ஆரிய மயமாக்கும் பொருட்டு விந்திய மலையைக் கடந்து சென்றவர்களுள் கும்பத்தில் பிறந்தவராகிய அகத்தியர் முதன்மையுடையவர். ஆரியர் குடியேறு வதற்குப் புதிய வயல்களையும் மேய்ச்சல் நிலங்களையும் பெறுவதற்கு வழி காட்டியவர் இவரேயாவர். புராணங்களில் சொல்லப்படும் பழங்கதைகளைக் கொண்டு ஆரியரின் நாகரிகம் ஆரியவர்த்தத்துக்கு வெளியே எவ்வாறு பரவிற்று என நாம் உய்த்து அறிதல் கூடும். அகத்தியர் சிவ வழிபாட்டினர். காசி அவருடைய பிறப்பிடமும் இருப்பிடமுமாகும். அவர் தினமும் கங்கையாற்றில் நீராடுவதற்குச் செல்வார் என்றும் அப்போது அவர் நிலத்தில் கோடாங் கற்கள்போன்று கிடக்கும் சிவலிங்கங்களை மிதிக்காது விலகி மிதியடி தரித்துச் செல்வாரென்றும் புராணங்கள் கூறுகின்றன. அவர், வடிவழகில் ஒப்பில்லாத உலோபா முத்திரை என்னும் விதர்ப்ப அரசனின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டார். அவர் வடக்கே நீண்ட காலம் வாழவில்லை. அவர் தென் திசைக்குப் போகவேண்டியிருந்தது. இவரது முன்னோர் பலர் இவரைப்போலவே மீண்டு வராதிருக்கும் தென் தேச யாத்திரை செய்தார்கள். போய் மறுபடியும் திரும்பிவராத யாத்திரைக்கு ‘அகத்திய யாத்திரை’ என்னும் பெயர் வழங்குகின்றது. அகத்தியர் தெற்கே யுள்ள காட்டை அழித்து நாடாக்கினார். இராமாயணம் இதைக்குறித்துத் தெளிவாகக் கூறியுள்ளது.
“(அகத்தியர்) தனது புண்ணிய கருமங்களால் கொலைத் தொழி லுடைய அசுரரைத் தொலைத்துத் தென்பூமியை மக்கள் உறைதற்கேற்ற இடமாக மாற்றினார்” - (ஆரணிய காண்டம். சருக்கம் 11, சுலோகம் 81).
இராமர் இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வந்த செயல் அகத்தியர் மக்கள் நுழைய முடியாத தென் தேசத்தை வென்றதோடு உவமிக்கப்பட்டுள்ளது. (இலங்க காண்டம் 117-வது சருக்கம், 13-14 சுலோகம்).
அவர் தென் தேசத்தில் திரிந்து தங்கிய இடங்கள் ஆசிரமங்கள் எனப்பட்டன. தண்டகாரணியத்துக்குச் சில மைல் தூரத்திலுள்ள நாசிக் என்னும் இடத்தில் அவர் தங்கியிருந்தாரென இராமாயணம் கூறுகின்றது. ஆனால் அவர் அவ்விடத்தில் அமைதியுற்றிருக்க முடியவில்லை. அங்கு மிங்கும் குடியேறியிருந்த ஆரியரை அரக்கர் தாக்கினார்கள். அவர்களை அழிக்கும்பொருட்டு அகத்தியர் தனது தவவலியைப் பயன்படுத்தினார். அரக்கர், இராக்கதர், அசுரர் என்பன ஆரியக் கொள்கைகளை எதிர்த்து நின்ற வர்களுக்கு இடப்பட்ட பெயர்கள், வில்வலன், வாதாபி என்போர் இராக்கதத் தலைவருட் சிலராவர். வடக்கே தண்டகாரணியத்தில் வாழ்ந்த ஆரியருக்கு இவர்கள் காலன் போன்றிருந்தனர். இவர்களைப் பாதாமியிலிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள மலைகூடம் அல்லது தென்காசியில் உறைந்த அகத்தியர் அடக்கினார். கி.பி.150 வரையில் வாழ்ந்த தாலமி, பாதாமி என்னும் இடத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வாதாபி என்பதே பிற்காலத்தில் பாதாமி எனப்பட்டது. இது இந்திய ஆட்சியில் அரசியல் முதன்மை பெற்று விளங்கிற்று. வாதாபியிலிருந்து ஆட்சி நடத்திய சிம்மவிஷ்ணுவிட மிருந்தே முதலாம் புலிகேசி என்னும் சாளுக்கிய அரசன் பாதாமியை கி.பி.ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைப்பற்றினான். அய்கோலி, பாதாமி என்னும் இடங்களில் பழைய இந்திய கோவில்கள் காணப்படு கின்றன. அகத்தியர் அவ்விடங்களிலுள்ள குறுநில மன்னர்களிடையே பிராமண மதத்தைப் பரவச்செய்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் தமது மதத்தைப் பரப்பும் பொருட்டு மாணாக்கரைச் சேர்த்துச் சபைகளைக் கூட்டியும் இருக்கலாம். செவிவழக்கிலும், பழங்கதை மூலமும் வந்த செய்திகள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்கு, சிறப்பாகப் பாண்டியருக்குக் குரு அல்லது புரோகிதராகவும் இருந்தார். சின்னமண்ணூர் பட்டையத்தில் அகத்தியர் அரசரின் ஆசிரிய ராயினாரென்றும் சுந்தரபாண்டியன் அகத்தியர் மாணாக்கன் என்றும் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்குக் குரு, அல்லது புரோகித ராக இருந்தார் எனப்பல பழங்கதைகள் உள்ளன. °கந்தபுராணம் அவரை வச்சிராங்கதன் என்னும் பாண்டிய அரசனோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றது. அகத்தியர் சோணே°வரர் என்னும் சிவலிங்கக் கடவுளுக்கு காணிக்கைகளைக் கொடுக்கும்படி அவனைப் பணித்தார். அவன் தனது செல்வம் முழுவதையும் அக்கடவுளுக்குக் கொடுத்து அகத்தியரதும் அவர் மனைவி உலோபா முத்திரையதும் அருளைப் பெற்றான். அகத்தியர் தென்னாட்டை ஆரிய மயமாக்கும் தொழிலைத் தனியே செய்திருக்க முடியாது. அகத்தியர் கோத்திரம் ஒன்று தொடங்கி அக் கோத்திரத்திற் பலர் பெருகினார்கள். அகத்தியர் கோத்திரம் இன்றும் உள்ளது. அவரிடமிருந்து தோன்றிய புதல்வர்கள் பலரைப் பற்றி மச்சபுராணங் கூறுகின்றது.
தமிழ் மொழியை ஆரம்பித்து அதற்கு இலக்கணஞ் செய்தவர் அகத்தியரென்று இன்றும் பழைய பண்டிதர்கள் நம்பிவருகின்றார்கள். அவர் செய்த இலக்கணம் அகத்தியம் எனப்படுகின்றது. அவர் தமிழ்ச் சங்கத் துக்குத் தலைவராயிருந்தார். கடவுள் உருவங்கள் அமைக்கும் விதிகூறும் அகத்திய சகலாதிகா என்னும் நூலின் ஆசிரியரும் அவராவர். அவருக்குப் பன்னிரண்டு மாணாக்கர் இருந்தார்கள். அவருள் தலைமையுடையவர் தொல்காப்பியர். அவருக்கு அமைக்கப்பட்ட பல கோவில்கள் உண்டு. அவர் பொதியமலையோடு சம்பந்தப்பட்டவர். இம்மலை கன்னியா குமரிக்கு அண்டையில் திருநெல்வேலி மாகாணத்திலுள்ளது. அகத்தியர் அங்கு மக்களின் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் எனப் பலர் நம்பி வருகின்றார்கள். அவர் தெற்கே வானத்தில் அகத்திய நட்சத்திரமாக விளங்குகின்றார்; அவர் தென்னிந்தியாவை அடைந்தபின் இடை யிடையே சிலகாலம் சடுதியில் மறைந்து விடுவாரென்றும், அவர் எங்குச் சென்றா ரென்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும் என்றும் பழங்கதைகள் உண்டு. அவர் பிராமண மதத்தலைவராகவும், சைவ சமயத்தைப்பற்றிப் போதிப்ப வராகவும், தென்னிந்திய அரசர் பலரின் புரோகிதர் அல்லது குருவாகவும் இருந்தமையால் அகத்தியர் வழிபாடு தொடங்கியது. பல ஆலயங்களில் அகத்தியர் வடிவங்கள் வழிபாட்டின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. அகத்தியரை வணங்கவேண்டிய முறை °கந்த புராணத்திலும் அக்கினி புராணத்திலும் காணப்படுகின்றன. அகத்தியர் வழிபாட்டுக்குப் பேர் போனவை இரண்டு கோவில்கள்: ஒன்று வட ஆர்க்காட்டில் புத்தூர் புகை வண்டி நிலையத்துக்கு அயலேயுள்ள அகத்தீசுவர சுவாமி கோவில்; மற்றது வேதாரணியம். அகத்தியர் வழிபாடு தென்னாட்டில் இருந்தது போலவே வடநாட்டில் வசிட்டர் வழிபாடு இருந்தது. நேப்பாலில் கிடைத்த பட்டையத் தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் திரைமோதும் கடலைப்பற்றி அஞ்சவில்லை. அவர் தனது சித்தியினால் கடற் கடவுளரைப் பணியவைத் தார். அகத்தியர் கடலைக் குடித்தார் என்று புலவர்கள் இச் செயலை வருணித்துக் கூறுவாராயினர்.
கம்போதியாவில் அகத்தியர்
அகத்தியர் தென்னிந்தியாவில் சிவன் கோவில்களைக் கட்டித் தமது குடும்பத்தவர்களை அவற்றில் நிலை நாட்டுவதிலும் முயன்று வந்தார். அவர் தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகளில் சிவன் கோவில்களை அமைத்துத் தாம் அவ்விடங்களில் இருந்தமையைச் சான்றுபடுத்தியு முள்ளார். அவர் சிலகாலம் கம்போதியாவில் இருந்தார். கம்போதியாவில் அங்கோவாற்றில் காணப்பட்ட பட்டையமொன்று இதற்குச் சான்று பகர்கின் றது. “ஆரிய பூமியிற் பிறந்த பிராமணராகிய அகத்தியர் சிவ வணக்கத்தில் சிறந்தவர். அவர் தனது சித்தியினால் கம்போதியாவிலுள்ள சிறீபட்டிரே°வர என்னும் சிவலிங்கத்தை வணங்கும்பொருட்டு வந்தார். அவர் நீண்ட காலம் அச் சிவலிங்கத்தை வணங்கிய பின் முத்தியடைந்தார். இம் முனிவர் சிவனை வணங்குவதில் மாத்திரம் நின்றுவிடவில்லை, இவர் யசோமதி என்னும் அழகிய பெண்ணை மணந்து ஒரு அரச பரம்பரையையும் தோற்றுவித்தார். சக ஆண்டு 811இல் வெட்டப்பட்ட பட்டையத்தில் அகத்திர் யசோவர்மன் என்னும் அரசனின் சந்ததிக்கு முன்னோர் என்று காணப்படுகின்றது. கல்வெட்டில் சொல்லப்படுவது பின் வருமாறு: “வேதங்களில் வல்லவரும் பிராமணருமாகிய அகத்தியர் ஆரிய பூமியிலிருந்து வந்து மகிஷிடவமிசத் திலுள்ள யசோமதியை மணந்து ஒரு மகனைப் பெற்றார். அவன் நரேந்திர வர்மன் எனப்படுவான்.”
இவ்வரச வழி வேறு பாட்டையங்களிலும் கூறப்பட்டுள்ளது. அகத்தியர் தென்னிந்திய முறையைப் பின்பற்றிக் கம்போதியாவிலுள்ள சிவாலயத்தை எடுத்திருக்கலாம். அகத்தியரிலிருந்து தோன்றிய அரச பரம்பரையினர் அதனை நன்னிலையில் வைத்திருந்தார்களாகலாம். தென்னிந்தியாவில் காணப்பட்டவை போன்ற ஐந்து உலோகத்தினாற் செய்யப்பட்ட திருவுருவங்கள் கம்போதியா, சீயம்1 முதலிய இடங்களில் காணப்படுகின்றன. சிலவற்றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இத் திருவடிவங்கள் தென்னிந்திய தமிழ்ச் சிற்பிகளால் செய்யப்பட்டவை என்று வெளிப்படையாகத் தெரிகின்றது. அவை தென்னிந்தியாவிற் செய்து சீயத்துக்கும் கம்போதியாவுக்கும் கொண்டு போகப்பட்டவை. அகத்தி யருக்கு நெடுங்காலத்துக்கு முன் தென்னிந்தியாவுக்கும் அந் நாடுகளுக்கு மிடையில் போக்குவரத்தும் கருத்துக்களின் கலப்பும் உண்டாயிருக்கலாம். அகத்தியர் மீகாங்2 ஆற்றங்கரையில் முதல் ஆரிய குடியேற்றத்தைத் தொடங்கியிருக்கலாம். அவ்விடங்களில் காணப்படும் திருவுருவங்கள் தென்னிந்தியருக்கும் அந் நாடுகளுக்கும் கடல் வழியாகப் போக்குவரத்து இருந்ததென்பதை உறுதியாக வலியுறுத்துகின்றன. சோணமலையில் சிவன் கோயிலை அமைத்தானென்று °கந்த புராணத்தில் கூறப்படும் பாண்டியன் கம்போதிய குதிரைமீது சென்றான். இவ்வாறு குறிக்கப்பட்டிருத்தலும் இரு நாடுகளுக்கிடையிலிருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றது. தென்னிந் தியரே இந்திய நாகரிகத்தை கம்போதியாவில் பரப்பியவர்கள் ஆகலாம். கம்போதியா, சீயம் முதலிய நாடுகளின் கலையிலும் நாகரிகத்திலும் இந்தியச் சார்புகள் காணப்படுகின்றன.
மலாய தீவுகளில்3 அகத்தியர்
அகத்தியர் போர்னியோ, சந்தாத்தீவுகள்4, மலாய தீவுகளுக்கும். சாவகம்5 முதலிய தீவுகளுக்கும் சென்றார் என வாயுபுராணம் கூறுகின்றது; அவர் மலாய தீவில் மலைய பர்வதத்தில் இருப்பவராகவும் குறிப்பிடுகின் றது. மலைய பர்வதம் என்பது தென்னிந்தியாவிலுள்ளதன்று; வேறானது. இன்றும் மலையம் என வழங்கும் முக்கிய மலை ஒன்று சாவகத்திலுள்ளது. போர்னியோவிலும் சாவகத்திலும் பழைய சமக்கிருத பட்டையங்கள் கிடைத்தன. அப் பட்டையங்கள் பிராமண சமயத்தையும் புத்த சமயத்தை யும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. அத் தீவுக் கூட்டங்களின் பழைய நாகரிகம் பிராமண மதம் சம்பந்தப்பட் டது. அகத்தியர் சந்தாத் தீவுக்குச் சென்றார் என்னும் பழங்கதை பிராமண நாகரிகம் அங்குச் சென்றதைக் குறிப்பிட லாம். பிராமணர் குடியேறியதற்குப் பின்னரே புத்த மதம் சம்பந்தமான பட்டையங்கள் காணப்படுகின்றன. இந்தியரின் ஆட்சி கம்போதியாவில் கி.பி.137இல் ஆரம்பித்ததெனச் சீன வரலாறு கூறுகின்றது. இது இந்துச் சீனாவில்1 மலையில் பொறிக்கப்பட்ட பட்டையத்தால் நன்கு உறுதிப்படு கின்றது. அப் பட்டையம் கி.பி.2வது அல்லது 3வது நூற்றாண்டில் எழுதப்பட்டது. அது சிறீமாறன் என்னும் அரசனைக் குறிப்பிடுகின்றது. இந்துச் சீனாவில் கி.மு.400இல் பொறிக்கப்பட்ட இரண்டு பட்டையங்களும் கவனத்துக்குரியன. முதல் பட்டையம் தரும மகாராசா பத்மவர்மன் செய்த யாகத்தைக் குறிப்பிடுகின்றது. இரண்டாவது பட்டையம் மகாதேவ வட்ரேசுவர சுவாமிக்குத் துதியாகவமைந்தது.
இவைகளுக்குப்பின் ஒன்றன் பின் ஒன்றாகப் பல பட்டையங்கள் காணப்படுகின்றன. அவை சிவன் கோவில்கள் பழுதுபார்க்கப்பட்டமையையும் அவைகளுக்குக் கொடுக்கப் பட்ட காணிக்கைகளையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. சத்திரிய அரசன் ஒருவன் போர்னியோவில் யாகம் செய்ததைப்பற்றி ஒரு பட்டையம் கூறுகின்றது. இந்தியாவில் கி.பி.102இல் நாட்டப்பட்ட யூபக்கல்லில் பொறிக்கப்பட்டிருப்பதுபோல் போர்னியோவில் காணப்பட்ட கல்லிலும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. அக் கல்லில் எழுதப்பட்டிருப்பது வருமாறு: பேரோங்கிய மூலவர்மன் என்னும் அரசர்க்கரசன் பசுவர்ணக யாகத்தை முடித்தான். அந்த யாகத்தில் இருபிறப்பாளருள் தலைவர் இக் கல்லை நிறுத்தினார். இக் கல் கிழக்கு போர்னியோவிலுள்ள கோஎற்றி என்னுமிடத்தில் கிடைத்தது. இது கி.பி.400இல் உள்ளது என்று கருதப்படு கின்றது. இன்னொரு பட்டையம் மேற்குச் சாவகத்திலுள்ள பூரணவர்மன் என்பவனைப்பற்றிக் கூறுகின்றது. இது கி.பி.5ஆம் நூற்றாண்டில் பொறிக் கப்பட்டது. அப் பட்டையத்தில் கூறப்படுவது வருமாறு : “இவ்வுலகத்தின் வலிய வேந்தனாகிய பூரணவர்மன் தரும பட்டினத்தின் அரசன். அவனுடைய இரண்டு பாதங்களின் சுவடுகள் இவை. இவை விஷ்ணுவின் பாதச்சுவடு களை ஒப்பப் பெருமை யுடையன.” இங்குக் காட்டப்பட்ட மூன்று பட்டை யங்களும் பிராமண மதம் சம்பந்தமானவை;
புத்த சமயம் சம்பந்தப்பட்ட வையல்ல. பிராமண நாகரிகத்தில் இரண்டு பட்டையங்களைக் காணலாம். ஒன்று வேத சம்பந்தம்; மற்றது புராண சம்பந்தம். பசிபி க்கடல் ஓரங்களி லுள்ளவை சிவன் கோயில்கள் எனக் காட்டியுள்ளோம். கி.பி. 732இல் வெட்டப்பட்ட பட்டையம் ஒன்று திசாங்கல்1 என்னும் இடத்தில் கிடைத்தது. இது மத்திய சாவகத்தில் குடியேறிய சன்யாய என்னும் அரசனைக் குறிப் பிடுகின்றது. குஞ்சர குஞ்ச என்னும் கூட்டத்தினரிலிருந்து இவர்களுக்குக் கைமாறிய சிவன் கோயில் ஒன்றைப் பற்றியும் அப் பட்டையம் குறிப்பிடு கின்றது. அது வருமாறு: “சாவகம் என்னும் பெயருடைய தீவு, தீவுகளுள் சிறந்தது. அங்கு ஒப்பிடமுடியாத தானியக் களஞ்சியங்களும் பொன் சுரங்கங்களும் உண்டு. இத் தீவில் புதுமை மிக்க சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. குஞ்சர குஞ்ச தேசத்திலுள்ள மக்களைச் சேர்ந்தவர்களால் அது கையளிக்கப்பட்டது.” குஞ்சர குஞ்ச எனக் கூறப்பட்ட இடம் தென்னிந்தியா விலுள்ள தென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. விசயநகர காலத்தில் குஞ்சர கோண என்னும் பெயர் காணப்படுகின்றது. இது ஆணிகண்டி என்னும் கன்னடப்பெயரின் சமக்கிருத மொழிபெயர்ப்பு. இது ஹம்பிக்கு எதிரே துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ளது. அரிவம்சம் என்னும் புராணம் குஞ்சர மலையில் அகத்தியர் ஆச்சிரமம் இருந்ததெனக் கூறுகின்றது. இப் பகுதியிலிருந்து சென்ற மக்களே சாவகத் தீவில் கோயிலமைத்திருக்கலாம். சாவகத்திலே முதல் முதலாகக் கட்டப்பட்ட சிவன் கோயில் குஞ்சரகோணம் என டாக்டர் கேண் என்பார் கூறியுள்ளார். இன்னொரு பட்டையம் சிவன் கோயில் ஒன்று அகத்தியரால் கட்டப்பட்டதெனக் கூறுகின்றது. அச் சாசனத் தில் கூறியிருப்பது வருமாறு : “எல்லா மக்களும் தாம் விரும்பியவற்றைப் பெறுமாறு அகத்தியர் வரதலோக என்னும் கோவில் திருப்பணியைச் செய்தார்.” அகத்தியரின் பிற் சந்ததியினர் சிலர் அகத்தியர் கோத்திரத்தினர் என்று நமக்குத் தெரிகின்றது. அவர்கள் சைவ சமயத்தினர். அவர்களுள் ஒரு பிரிவினர் சாவகத்தில் குடியேறி யிருந்தார்கள். ஆ°வலாயன கிரிகிய சூத்திரத்தில் சொல்லப்படும் 49 பிராமண கோத்திரங்களுள் அகத்திய கோத்திரம் காணப்படுகின்றது.
சாவகத்திற் போலவே தென்னிந்தியாவிலும் அகத்தியர் பிராமண நாகரிகத்துக்குரியவராகவிருந்தார். கி.பி.1524இல் பொறிக்கப்பட்ட ஒரு பட்டையத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டுவித்த அயிலபட்டர், தான் அகத்திய கோத்திரத்தவர் எனக் கூறியுள்ளார். அகத்தியர் ஜாவானிய குடும்பங்களுக்குத் தலைவரும், கோயில்களைக்கட்டியவருமாய் மாத்திரம் இருந்தாரல்லர். அவர் இந்தியாவிலும் சாவகத்திலும் வழிபடவும்பட்டார். போலிநீசிய மொழியில் அகத்தியர் என்னும் பெயர் வாலிங் என மொழி பெயர்த்து வழங்கப்படும். சாவகத்திலும் பாலியிலும் சத்தியம் செய்வதற்கு உரிய வாசகங்களுள் அகத்தியரின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அது வருமாறு: “சூரியர் சந்திரர் உள்ளளவும், உலகம் கடலால் சூழப்பட்டு உள் ளளவும், காற்று உள்ளளவும், வாலிங்கின் பெயர் நிலைபெறும்.” காவீ(Kawi) தீவு மக்கள் அகத்தியர் என்னும் பெயரை அரிச்சந்திரானா என வழங்குவர். கி.பி.760இல் வெட்டப்பட்ட பட்டையமொன்று கிழக்கு சாவகத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியரின் திரு வுருவத்தைப்பற்றிக் கூறுகின்றது. அச் சாசனம் கூறுவது வருமாறு: “தனது முன்னோரால் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியர் திருவடிவம் விழுந்தபோது கல்வி அறிவுள்ள அரசன் கருங்கல்லில் அவ்வடிவத்தை அமைக்கும்படி சிற்பிக்குக் கட்டளையிட்டான்; அரசன் கும்பயோனியாகிய அகத்தியர் திருவுருவத்தைக் குருமார், வேதம் அறிந்த முனிவர்கள் முதலியவர்களால் பிரதிட்டை செய்வித்தான்.”
சாவகத்தில் ஊன்றிய அகத்திய வழிபாடு ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவினின்று சென்றிருக்க வேண்டுமெனக் கூறினோம். இந்தியா விற் காணப்படும் அகத்தியர் திருவுருவங்களின் சாயலாகவே இந்தியக் குடியேற்றத் தீவுகளிலும் அவர் உருவங்கள் காணப்படுகின்றன. சாவகத்தில் இருபதுக்கு மேற்பட்ட அகத்தியர் உருவங்கள் காணப்படுகின்றன. அவர் சடை, உருத்திராக்கம், கரகம் முதலியன உடையவராகக் காணப்படுகின் றனர். அவர் காசியிலேயே சிவ வழிபாட்டிற் சிறந்தவராக விளங்கினார். அகத்திய குண்டத்திலே உள்ள அகத்திய சிவன் அகத்தியரின் ஞாபகமாக விளங்குகின்றார். அவரின் அடையாளமாக அங்குச் சூலம் உள்ளது.
சாவகத்திற் காணப்படும் அகத்திய விக்கிரகத்தின் உடை, இந்தியாவி லும் இலங்கையிலும் காணப்படும் விக்கிரகங்களின் உடையை ஒத்தது. அகத்திய உருவங்களை சாவக மக்கள் சிவ குரு, பாரத குரு என வழங்கி னார்கள். அவருக்கு எப்பெயர்கள் வழங்கிய போதும் அவை அகத்தி யரையே குறிக்கின்றன என்பது தெளிவு. அவர் சிவ சமயத்தைப் போதித் தமையால் சிவ குரு எனப்பட்டிருக்கலாம். கலசய, கும்பயோனி, சர்வஞ்ஞ, மித்திரவர்ணமுத்திர என்பவர் இவரேயென சாவக மக்கள் வழங்கும் பெயர்களைக் கொண்டு நன்கு அறியலாம். தென் சாவகத்தில் கெடோயிலே தஞ்சிபெனன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை முதன்மையுடை யது . இது கி.பி. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அகத்தியரின் வடிவம் எவ்வாறிருந்தது என்பதை அத் தீவிலுள்ளவர்கள் எவ்வாறு கற்பனை செய்தார்கள் என இவ்வடிவைக் கொண்டு அறிகின் றோம். பிற்காலங்களில் அகத்தியர் உருவங்கள் பலவாறு செய்யப்பட்ட போதும் கமண்டலம், உருத்திராக்கம், சடை என்பன விடுபடவில்லை. சாவகத்தில் காணப்பட்ட அகத்தியர் உருவத்தைப் பலர் சிவன் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவன் வடிவம் ஒருபோதும் தொந்தி வயிறும் தாடியுமுடையவராக எங்கும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அகத்தி யருக்கு பகையாயிருந்தவர் திரணபிந்து என்றும் அவர் சமதக்கினி புதல்வர் என்றும் ஒரு பழங்கதை உளது.
வாயு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் சமதக்கினி துவாபரயுகத்தில் இருபத்து மூன்றாவது வியாசர் எனக் கூறப்படுகின்றார். திரணபிந்து சைவராயிருந்தார். இவருக்கு நேர்ந்த குட்டநோயைச் சிவபெருமானே கலசத்தில் தோன்றி ஆற்றினார். இவருக்கு அக த்தியரே குருவாகவிருந்தார். அகத்தியர் தெற்கே வந்தபோது அவரை யும் அழைத்துச் சென்றார். தெற்கே அவர் திரணதூமாக்கினி எனப்பட்டார். அவர் தொல்காப்பியர் எனவும் தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்டார். அவர் தமிழ் இலக்கணத்தை ஒழுங்குபடுத்தி அமைக்க அகத்தியருக்கு உதவி புரிந்தார். திரணபிந்துவால் செய்யப்பட்ட தொல்காப்பிய மென்னும் இலக்கணம் தமிழ் இலக்கணங்களுள் முதன்மையுடையது. அகத்தியரோடு இவருக்குள்ள தொடர்பைக் குறித்த வியப்பான கதை ஒன்று கூறப்படுகின் றது. வடக்கேயிருந்து தனது மனைவியாகிய உலோபாமுத்திரையை அழைத்து வரும்படி அகத்தியர் திரண பிந்துவுக்குக் கட்டளையிட்டார். வருமிடத்து உலோபாமுத்திரைக்கும் திரணபிந்துவுக்குமிடையில் ஒரு கோல் தூரம் இருக்கவேண்டுமென அவர் கட்டளையிட்டார். அவர் வையை ஆற்றைக் கடக்கும்போது உலோபாமுத்திரை ஆற்றில் மூழ்கி உதவி வேண்டிச் ச த்தமிட்டார். ஆசிரியரின் ஆணையை மறந்து திரணபிந்து உலோபாமுத்திரையின் கையைப்பிடித்து அவரைக் காப்பாற்றினார். அகத்தியர் இந் நிகழ்ச்சியைக் கேட்டவுடன் கோபங்கொண்டு திரணபிந்து வுக்குச் சுவர்க்கத்தின் கதவு அடைபட வேண்டுமெனச் சாபமிட்டார். திரண பிந்து அகத்தியருக்கும் சுவர்க்கக்கதவு அடைபட வேண்டுமென மறு சாப மிட்டார். இவ்வாறு குரு மாணாக்கருக்குப் பகை நேர்ந்தது.
அகத்தியர் திரண பிந்துவின் இலக்கணம் பிழையுடையதெனக் கூறினார். ஆனால் தொல் காப்பியம் பிழையில்லாத இலக்கணம் எனத் திரணபிந்துவால் நாட்டப் பட்டது. திரணபிந்துவுக்கு விசாலன், சூனியபந்து, தும்பிரபந்து என்னும் மூன்று குமாரரும் இலிபிளை என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். இவர் காசியப்பாவுக்குப் பெண் கொடுத்த மாமனும் புலத்தியரின் தாய்மாமனு மாவர். சாவகத்தில் பகவான் திரணபிந்து என எழுதப்பட்ட பல கல் உருவங்கள் காணப்படுகின்றன. அகத்தியரோடு சம்பந்தப்பட்ட மரீசி என்னும் ஒரு முனிவரின் சிற்பமும் அங்கு காணப்படுகின்றன. மரீசி என்னும் பெயர் தேவநாகரியில் எழுதப்பட்டுள்ளது.
மத்திய சாவகத்தில் இந்திய பிராமணர் குடியேறியிருந்ததற்கு அடை யாளம் காணப்படுகின்றது. அங்குத் துர்க்கை, விநாயகர் திருவுருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சயப் பட்டையத்தால், அகத்தியர் அல்லது அகத்தியர் கோத்திரத்திலுள்ள ஒருவரால் தென்னிந்திய கோவில்களைப் போன்ற ஒன்று சாவகத்தில் எடுக்கப்பட்டதெனத் தெரிகின்றது. பிரம்பனம் (Prambanam) என்னும் அழிபாடுகளில் சிவலிங்கங்களும், சிவன், விஷ்ணு, பிரமா, திரிமூர்த்தி முதலிய கடவுளரின் திருவுருவங்களும் காணப்படு கின்றன. இவை பத்துப் பதினோராவது நூற்றாண்டைய தென்னிந்திய சிற்பங் களை ஒத்துள்ளவை. மலாய தீவுகளில் காணப்பட்ட சமக்கிருத பட்டை யங்கள் இந்திய பட்டையங்களின் மாதிரியில் வெட்டப்பட்டவை என்று நன்கு அறியப்படுகின்றன. தென்னிந்திய பட்டையங்களிலும் மலாய தீவு களின் பட்டையங்களிலும் வெட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் ஒரே வகை யின. சாவகத்தின் பழைய நாகரிகம் கலிங்க தேசத்திலும் பார்க்கத் தமிழ் நாட்டின் வடகரையோடு சம்பந்தப்பட்டதென டாக்டர் பர்நெல் (Dr.Burnell) கூறியுள்ளார்.
சிவன், விஷ்ணு, பிரமா முதலிய உருவங்களின் ஆபரணங்கள், நிலை, முத்திரை, ஆசனம், தாமரைப்பீடம் போன்றவைகளைக் கவனித்தால் இவை இந்திய சிற்பங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டவை என்று நன்கு தெளிவாகும். சாவகக் கோவில்களின் வாயில் காவலர் தென்னிந்திய கோவில்களின் துவாரபாலகரைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பாலித்தீவில் இன்றும் இந்தியக் கடவுளரின் வழிபாடுகள் காணப்படுகின்றன. பாரத குரு, பாரத பிரமா, பாரத விஷ்ணு, பாரத சிவன் முதலிய கடவுளர் அங்கு வழிபடப்படுகின்றனர். மகாதேவர் என்னும் பெயர் அவர்களின் சமய நூல்களில் காணப்படுகின்றது. அகத்தியர் சாவகம், பாலி முதலிய இடங்களில் மேலான கடவுளாக வழிபடப்பட்டார். சாவகத்தில் வழங்கும் பழங்கதைகளில் கலிங்க நாட்டினின்றும் மிகப் பல குடும்பங்களும், அரசரும், ஒருவர் பின் ஒருவராக அங்குச் சென்றார்கள் எனக் கூறப் படுகின்றது.
குறிப்பு : கான்குலி புராண சம்பந்தமாக வழங்கிய வரலாறுகளையும் பிற்காலத்தில் தென்னிந்தியாவினின்றும் மலாய தீவுகள், கம்போதியா முதலிய நாடுகளில் சென்றிருந்த அகத்தியர் வழிபாடு முதலியவைகளை யும் கூறியுள்ளார். கிறித்துவம், புத்தம், சைனம், என்னும் மதங்களைப் போலப் பிராமண மதமும் வடநாட்டினின்றும் தென்னாடுவந்த தொன் றாகும். சீனாவில் சீன மக்களின் பழைய கொன்பியூச°1 மதமும், புத்த மதமும் பின்னி ஒன்றுபட்டது போலத் தென்னாட்டிலும் பிராமண மதமும் தமிழர் மதமும் பின்னி ஒன்றுபடலாயின.2 பிராமண மதம் பரவிய பிற்காலத் திலேயே அகத்தியர் வழிபாடு கம்போதியா, மலாய்த் தீவுகளிற் பரவுவ தாயிற்று.
------------------------------------------------------------------------
அகத்தியர் பலர்
*அகத்தியரைப்பற்றிய பழங்கதைகள் பல்வேறு வகையாக வளர்ந்து ஒன்று சேர்ந்து அகத்தியர் வரலாறாக இன்று வழங்குகின்றன.
1உலாபாமுத்திரையின் கணவர்
சமக்கிருதத்தில் இரண்டு அல்லது மூன்று அகத்தியர் பெயர்கள் காணப்படுகின்றன. வான்மீகருக்கு முற்பட்டவரும் வேத காலத்தவருமாகிய அகத்தியர் ஒருவர் இருந்தார். இவர் கங்கைக்கரையில் வாழ்ந்த ஆரியக் கூட்டத்தினரின் தலைவரும் உலோபாமுத்திரையின் கணவருமாவர். வேறு இரண்டு அல்லது மூன்று அகத்தியர்களைப் பற்றி இதிகாசங்கள் கூறுகின்றன. முதல் அகத்தியர் சுதர்சன இருடியின் அண்ணனாவார்.
இராமர் காலத்து அகத்தியர்
இவர் விந்தத்துக்குத் தெற்கே குடியேறச் சென்ற ஆரியக் கூட்டத்தி னரின் தலைவராவார். இவர் பஞ்சவடிக்குத் தெற்கே அல்லது நருமதை ஆற்றின் வட மேற்குப் பள்ளத்தாக்கில் உள்ள நாசிக்கில் ஆரியரல்லாத அநாகரிக மக்களிடையே போர் தொடுத்துக் கொண்டிருந்தார். இவர் இராமரை வரவேற்று அவரைத் தமது பகைவராகிய இராக்கதரோடு போர் செய்வதற்கு உடன்படும்படி செய்தார். வான்மீகர் ஆரியக் கொள்கைகளை நாட்டும் பொருட்டு அன்னிய நாட்டில் போர் செய்துகொண்டிருந்த முனிவரைக் குறித்துப் புகழ்ந்துள்ளார்.
மலையமலை யிலுறைந்த அகத்தியர்
கிட்கிந்தா காண்டத்தில் இன்னொரு அகத்தியரைக் குறித்து வான்மீகியும் கம்பனும் கூறியுள்ளார்கள். இங்கு அகத்தியர் தென்கடலுக்கு அண்மையிலுள்ள மலையத்திலுறையும் சாந்தமான முனிவராகக் கூறப்பட்டுள்ளார். கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையைத் தேடி வரும்படி வானர வீரர்களை ஏவும்போது தென் பக்கமாகச் செல்லுதற்குரியாரை நோக்கிச் சொல்லியதாக வான்மீகி கூறியவை அடியில் வருமாறு: “……….. பின் பூந்தாதுக்கள் நிறைந்தும், விசித்திரமான சிகரங்களுடையதும், பலவர்ண மான பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும், சந்தன வனங்கள் செறிந்ததுமான பெரிய அயோமுக மலையைத் தேடுங்கள்; அதன்பின் தேவ அரம்பையர் வந்து நீராடுகின்ற திவ்வியமான தெளிந்த நீரையுடைய அழகிய காவேரி நதியை அங்கே காண்பீர்கள்; அந்த மலையமலையின் சிகரத்தில் ஆதித்தனுக்குச் சமானமான மிகுந்த ஒளியுடைய முனிவர்களுள் சிறந்தவரான அகத்தியரைக் காண்பீர்கள். பின்பு அம் முனிவரிடம் ஆணை பெற்றுச்சென்று முதலைகள் நிரம்பிய பெரிய தாமிரபர்ணியைத் தாண்டுங்கள். அந் நதி அழகிய சந்தனச் சோலைகளால் மூடப்பெற்ற திட்டுக் களையுடையதாய், கணவனிடத்து அன்புள்ள யுவதியானவள் புக்ககம் புகுமாறு போலக் கடலுள் சென்றுவிழும். பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடையதாயும் முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப் பெற்றதாயும் பாண்டியர்க் குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக்கடவீர்”
“தென்றமிழ் நாட்டகன் பொதியிற் றிரு
முனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்பீரேல்
என்று மவனுறை விடமா மாதலினாலம்
மலையை யிடத்திட் டேகி” – கம்பன்
பஞ்சவடி அகத்தியரும் பொதிய மலை அகத்தியரும்
வெவ்வேறினர்
பஞ்சவடியிலிருந்த அகத்தியரே இவர் என்று எண்ணுதற்காவது சந்தேகிப்பதற்காவது இடமில்லை. ஆரணிய காண்டத்தின் பலவிடங்களில் வேதக்கிரியைகளை இயற்றிக் கொண்டு வடக்கேயுள்ள காடுகளில் வாழ்ந்த அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. தெற்கிலே பாண்டி நாட்டில் அகத்தியர் இருந்ததைப் பற்றிக் கிட்கிந்தா காண்டம் கூறுகின்றது. புலவரின் வாக்குக்களே இவ்விரு அகத்தியர்களும் வெவ்வேறினர் என்பதை விளக்குகின்றன. மலையத்தில் இருந்த அகத்தியர் வேதக்கிரியைகளைச் செய்து கொண்டிருந்தார் என்று யாண்டும் கூறப்படவில்லை. பொதியமலை, அகத்தியருக்கு நிலையானது எனக் கம்பரும் வான்மீகியும் கூறியுள்ளார்கள். ஒரு முனிவர் பஞ்சவடியில், ஆரியரல்லாத மக்களோடு பகைமை கொண் டிருந்தார். மற்ற அகத்தியர் பொதிய மலையில் அமைதியுடன் வாழ்ந்தார். இவர்கள் எண்ணூறு மைல் தூரத்துக்குமேல் இடைத்தொலைவுள்ள இரு இடங்களிலும் வாழ்ந்தவர்கள் என்பதை வான்மீகர் நன்கு உணரவைத் துள்ளார் என்பது நன்கு தெளிவாகின்றது.
தெற்கே வாழ்ந்த அகத்தியர் ஆரிய முனிவரா அல்லது ஆரிய அகத்திய கோத்திரத்தினரா? வான்மீகர் புகழும் அகத்தியர் வடநாட்டிலும் தனது புகழைப் பரவச் செய்த தமிழ் அறிவரா1? என்பன போன்றவை ஆராய்ச்சிக்குரியன.
சங்க நூல்களில் அகத்தியர் பெயர் இல்லை
சங்க நூல்கள் ஒன்றிலும் அகத்தியரைப் பற்றிய பெயர் காணப்பட வில்லை. பரிபாடலின் பதினோராம் செய்யுளில் அகத்தியன் என்னும் பெயர் வந்துள்ளது. அது விண்மீன் ஒன்றைக் குறிக்கின்றது. இப் பாடலைச் செய்தவர் கலித்தொகையில் நெய்தற் கலியைச் செய்தவராகிய நல்லந்து வனார். அவர் காலம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன். அகத் தியரைப் பற்றிய வரலாறு அக் காலத்தில் பழங்கதையாக மாறியுள்ளதெனத் தெரிகின்றது. இம் முனிவர் பொதிய மலையில் இருந்தார் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. இலக்கிய காலத்துக்கு முன்னும் அறியப்பட்ட அகத்தியர் ஒருவரைப் பற்றிய நினைவு சங்ககாலத்தும் இருந்ததெனத் தெரிகின்றது. இவருடைய புகழ் மிகப் பரவியிருந்தமையால் இவர் பெயர் தமிழ்நாட்டில் மறக்கப்படாமல் இருந்தது. இல்லையாயின் இவர் பெயர் பரி பாடலில் தோன்றியிருக்க மாட்டாது. பெதுருங்கேரியரின் படம் என்னும் உரோமர் வரலாற்றுக் குறிப்பில் அகத்தியர் கோயில்1 ஒன்று தென்னாட்டில் இருந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. பெதுருங்கேரியர் படத்தின் காலம்
கி.பி. 100 வரையில், இதனாலும் அகத்தியர் புகழ் சங்ககாலத்தும் மிகப் பரவி யிருந்ததென விளங்கும்.
அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியரல்லர்
தொல்காப்பியம் என்பது இன்று தமிழில் காணப்படும் பழைய இலக் கணம். தொல்காப்பிய இலக்கணம் செய்தவராகிய தொல்காப்பியர் அகத்தி யரின் மாணவர் என்னும் பழங்கதை வழங்குகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. தொல்காப்பியத்துக்கு முன் பல இலக்கணங்களும் பல இலக்கியங்களும் இருந்தனவென்று தொல்காப் பியமே கூறுகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைக் குறித்து யாண்டும் கூறாமையால் அவர் அகத்தியரின் மாணவரல்லர் என்பது எளிதில் விளங் கும். இவர் அகத்தியர் மாணவராயின், மிகப் புகழ் படைத்த தனது ஆசிரி யரைக் கூறாது மறைக்கும் நன்றியில்லாக் குணத்தை இச் சிறந்த ஆசிரியர் மீது ஏற்ற நேரும். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் பகை உண்டா யிருந்ததெனவும் ஓர் பழங்கதை உளது. அது உண்மையாயின் தொல்காப் பியத்துக்குச் சிறப்புப்பாயிரஞ் செய்த பனம்பாரனார் தொல்காப்பியரின் குற்றத்தை நியாய முடையதாகக் கொண்டு தனது ஆசிரியரின் புகழை மறைக்க வேண்டிய காரணமுமில்லை. அகத்தியர், அவர்களின் ஆசிரிய ராக இருந்தாராயின், அவர்கள் அவர் புகழை எடுத்து உலகுக்கு நன்கு விளக்கியிருப்பார்களன்றோ?
தமிழ் ஆசிரியராகிய அகத்தியர் தமிழரே
ஆரியர் விந்தத்தைத் தாண்டித் தெற்கே வரத் தொடங்கியது
கி.மு. 1000 வரையில் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதற்கு முற்பட்ட பழைய காலத்தில் ஆரியவர்த்தத்தில் வாழ்ந்த ஆரியரொருவர் தெற்கே இருண்டு அடர்ந்து கிடந்த காட்டைக் கடந்து தன்னந்தனியே பொதிய மலையில் தங்கியிருந்தார் என்பது நம்பத்தகாதது. அவர் வேடரும் கொடிய விலங்குகளும் வாழும் காட்டைக் கடந்து தெற்கே வந்து அங்கு வழங்கிய மொழியையும் இலக்கியத்தையும் கண்டு அவைகளில் விருப்பங் கொண்டு அவற்றைக் கற்று இலக்கண ஆசிரியராய் விளங்கினாராயின் அவர் நாகரிகத்துக்கு இருப்பிடமாகிய நகரில் வாழாது விலங்குகள் வாழும் மரஞ்செடிகள் அடர்ந்த இடத்தைத் தமக்கு உறைவிடமாகக் கொண்டிருக்க மாட்டார். இருக்குவேத காலம் முதல் ஆரியருக்கும் தமிழருக்கும் (தேவருக்கும் அசுரருக்கும்) போராட்டம் மலிந்திருந்தன. அதனால் தமிழ் நாட்டவர் ஆரியரை1 மிலேச்சர் என வழங்கி வந்தனர் என்றும், அவர்மீது பகை கொண்டிருந்தனரென்பதும் நன்கு விளங்குகின்றன. தமிழை இகழ்ந்த வடநாட்டரசர்மீது சீற்றங்கொண்டு சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். இதனால் மிகமிகத் தொன்மையே தமிழ் அறிவு சான்றிருந்த தமிழ்ப் புலவர்கள் ஆரியர் ஒருவரைத் தமது தலைவராக ஒப்புக்கொண்டார்கள் எனக் கூறுவது இயலாத காரியம். அகத்தியர் தமிழாசிரியராயிருந்தனராயின் அவர் தமிழ் மக்களிடையே மதிப்புப் பெற்று விளங்கிய தமிழர் ஒருவராதல் வேண்டும். அவர் புகழ், மறந்துபோக முடியாத அவ்வளவு பெரிதாயிருந்தமையில் அவர் பெயரைச் சுற்றிப் பல கற்பனைக் கதைகள் வந்தடைந்தன. இக் கற்பனைப் போர்வையை ஊடுருவி நோக்கி அவருடைய உண்மை வரலாற்றை அறிந்து கொள்வது கடினமாகின்றது.
நாம் அவர் வரலாற்றைக் குறித்துப் பின்வருமாறு உய்த்துக் கூறலாம்: ஆரியர் வருகைக்கு முன் அகத்தியர் என்னும் பெயருடைய தமிழ் அறிஞர் ஒருவர் தமிழ் நாட்டில் விளங்கினார். இவர் சமக்கிருதத்தோடு தொடர்பு பெற்ற அகத்தியரில் வேறானவர். அவர் தமிழர் மதிப்பு அளித்த அறிஞர் களுள் ஒருவர். தொல்காப்பியருக்குப் பிற்பட்ட மக்கள் ஆரிய சம்பந்தமான பல கற்பனைகளை அகத்தியரோடு சம்பந்தப்படுத்திக் கட்டி வைத்தார்கள். தமிழ்ப் பெயர்களை ஆரியர் தம்முடையவைகளாகத் தமது பழங்கதை களில் எடுத்து வழங்குவது இயல்பு. தமிழ் முருகன் சுப்பிரமணியராகவும், தமிழ் மால் விஷ்ணுவாகவும் வழங்கப்படுகின்றமையை நாம் அறிவோம். தமிழ்க் கருத்துக்களை ஆரியமாக்குமிடத்துத் தமிழ்க் கடவுளர் ஆரியராக மாறினர். தமிழ்நாட்டிலுள்ள இடங்கள், ஆறுகள், மக்களுக்கு ஆரியப் பெயர்கள் இடப்பட்டன. வெண்காடு சுவேதாரணியமாகவும், தண்பொருநை தாம்பிரபர்ணியாகவும் மாறின. ‘பண்டை’ என்னும் அடியாத்தோன்றிய பாண்டிய பரம்பரைப் பெயர் பாண்டவ அல்லது பாண்டு வமிசமாக மாறிற்று. இவ்வாறே தமிழ் அகத்தியர் சமக்கிருத அகத்தியராக மாறியிருத்தல் வேண்டும். தமிழ் நாட்டில் வழங்கும் அகத்தியர் வரலாற்றுக்கு அடிப்படை பொதிய மலையில் இருந்த ஒருவராதல் வேண்டும்; இல்லையேல் அகத்தியரைப் பற்றிய பழங்கதைகள் அந்தரத்தில் எடுத்த கோட்டையாக மாறிவிடும். தமிழ்ப் புலவர்கள் ஆரியரொருவரைத் தமிழ்க் கல்விக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதினாலும் அகத்தியர் தமிழராவர் என்பது வலியுறுகின்றது. புராண காலத்தில் அகத்தியரைப் பற்றி ஆரியப் போக்கான கற்பனைக் கதைகள் வளரத் தொடங்கின. அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயர் அகத்திய என்னும் ஆரியப் பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமை கொண்டு அவர் ஆரியராக்கப்பட்டனர்.
முத்தூர் அகத்தியன்
அவர்கள் இவரைப் பஞ்சவடியில் இருந்த அகத்தியராகக் கொண்ட தோடு அமையாது அவரைக் குறித்த பல கற்பனைக் கதைகளையும் எழுதி வைத்தனர். தமிழ் மக்களும் ஆராய்வின்றி அக்கட்டுக் கதைகளை நம்பத் தலைப்பட்டனர். இவர் பஞ்சவடியிலிருந்த அகத்தியர் ஆக்கப்பட்டதல்லா மல் இருக்கு வேத காலத்தவரும் உலோபா முத்திரையின் கணவருமாகிய அகத்தியருமாக ஆக்கப்பட்டார். அகத்தியரைப்பற்றி இன்று வழங்கும் பழங்கதைகள் இன்று ஆராய்ச்சிக்கு நிற்கவில்லை. செங்கோன் தரைச் செலவில் முத்தூர் அகத்தியர் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் பெயர் காணப் படுகின்றது. அவரை ஒப்ப மதிப்பைப் பெற்றிருந்த ஒருவரே அகத்திய ராவர். முத்தூர் கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்து மறைந்துபோன பாண்டி நாட்டின் பகுதியில் உள்ளது. இதனால் ஆரியர் தென்னாடு வருவ தன் முன் அகத்தியர் என்னும் தமிழர் ஒருவர் இருந்தாரென்பது செங்கோன் தரைச் செலவு என்னும் நூலால் தெரியவருகின்றது. தமிழ் நாட்டில் அகத்தி யர் என்னும் பெயருடன் பலர் விளங்கியிருத்தல் கூடும். அவர்களுள் ஒருவnர மிகப் புகழ் படைத்தவர். இவருடைய பெயரைச் சுற்றி அவர் புகழை விளக்கும் பல கதைகள் வந்து திரண்டன. இவ்வாறே ஆரிய அகத்தியரைக் குறித்த கதைகளும் அவர் பெயரைச் சுற்றித் திரண்டன. சங்க காலத்துக்குப்பின் ஆரியக் கதைகளும் தென்னாட்டு அகத்தியர் கதைகளோடு வந்து கலந்தன.
நச்சினார்க்கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறும் பழங்கதை
நச்சினார்க்கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறியுள்ள கதையே இதற்குச் சான்று. அவர் கூறியிருப்பது வருமாறு:….. “அவரும் (அகத்தியரும்) தென்திசைக்கண் போதுகின்றவர், கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர், யமதக்கினியாருழைச் சென்று அவர் மாணாக்கர் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியாருழைச் சென்று அவ ருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி வேளிருள்ளிட் டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிற் கண்ணிருந்து இராவணனை கந்தருவத்தால் பிணித்து இராக்க தரை ஆண்டு இயங்காமல் விலக்கி……….”
அகத்தியர் இராவணன் காலத்தவரும் கண்ணன் காலத்தவருமாதல் முடியாது
இவ்வகைப் பழங்கதைகள், வடநாட்டு அகத்தியரை தமிழ் இலக்கியங் களின் தந்தை ஆக்குவதல்லாமல், அவர், கிருஷ்ணனின் துவாரகையி லிருந்து யாதவர் கூட்டத்தினர் பலரைத் தெற்கே கொண்டு வந்து குடியேற்றி னவராகவும் கூறுகின்றன. மத்தியகால உரையாசிரியர்களுள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் அகத்தியர் இராவணனை இசையில் வென்றார் எனவும் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைகள் ஒன்றை ஒன்று மறுப்பனவாயுள்ளன. அகத்தியர் இராவணன் காலத்தவராயின் அவர் இரண்டாவது திரேத உகத் தில் வாழ்ந்தவராவர். ஆகவே அவர் துவாரகைக்குப் போயிருக்க முடியாது. துவாரகை கண்ணனால் மூன்றாவது துவாபர உகத்தில் அமைக்கப்பட்டது. அவர் துவாரகையிலிருந்து மக்களை அழைத்து வந்தவராயின் அவருக்கும் இராமரின் பகைவனாகிய இராவணனுக்கும் யாதும் தொடர்பு இருக்க முடியாது. இவ் வில்லங்கத்தைத் தடுப்பதற்கு வேளிர் வரலாறு எழுதியவர் அகத்தியரால் இசையில் வெல்லப்பட்டது. இராவணன் இராமரின் பகைவ னாகிய இராவணனல்லன் என்றும், அவன் இராவணப் பெயர் தாங்கிய இன்னொருவனென்றும் கூறுவாராயினர். இந்நியாயம் நிலைபெறுமாறில்லை.
அகத்தியரோடு இராவணன் நிகழ்த்திய இசைப்போரைப் பற்றிக் கூறும் பிற வரலாறுகள் வான்மீகி கூறும் இராவணனையே குறிக்கின்றன. அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் நச்சினார்கினியர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியரின் மாணாக்கனாகிய தொல்காப்பியர் சமதக்கினியின் புதல்வனும் பரசு இராமனின் உடன் பிறந்தானுமாகிய திரண தூமாக்கினி எனவும் அவர் கூறியுள்ளார். பரசு இராமர் இராமருக்கு முன்பட்டரென்பது வால்மீகியின் கூற்றால் விளங்குகின்றது. திரணதூமாக்கினியும் வால்மீகி கூறும் இராமரும் பரசு இராமர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இதனால் திரணதூமாக்கி னியின் ஆசிரியராகிய அகத்தியர் இராமரின் பகைவனாகிய இராவணனைச் சந்திக்க முடியுமெனத் தெரிகிறது. இக் காரணத்தினாலும் அகத்தியர் தமிழரின் முன்னோராகிய வேளிரைத் துவாரகையிலிருந்து அழைத்துவர முடியாதெனத் தெரிகின்றது. இக் கதைகள் இவ்வாறு ஒன்றோடு ஒன்று மாறுபடுவனவாயிருக்கின்றன. இராமருக்கும் கிருட்டிணனுக்கும் இடையி லுள்ள காலம் ஒரு இலட்சம் ஆண்டுகள் வரையில். இராமாயணத்துக்கும் பாரதப் போருக்கும் இடைப்பட்ட இவ்வளவு நீண்டகாலம் யாரும் வாழ முடியாது. இதனால் அகத்தியரைப் பற்றிய கதைகள் சங்ககாலத்திற்குப் பின் ஆராய்வின்றிக் கட்டப்பட்டவை எனத் தெரிகின்றது.
நெடுமுடி அண்ணல் நிலந்தருதிருவில் நெடியோன்
(தொல்காப்பியம் கி.மு. மூன்றாம், அல்லது நாலாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நூல் என இற்றை ஞான்றை ஆராய்ச்சியாளர் முடிவு செய் கின்றனர். அவ்வாறாயின் இராமர் காலத்திலோ, கண்ணன் காலத்திலோ தொல்காப்பியர் இருந்தார் எனக்கொள்வது சிறிதும் பொருத்தமற்றதாகும்.)
நச்சினார்க்கினியார் கூறும் சில சொற்றொடர்கள் அகத்தியர் பொதிய மலையின் தெற்கிலிருந்து வேளிர்களுடன் வந்தாரென்பதை விளக்குவன. நச்சினார்க்கினியர் நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் என்னும் பெயரால் கண்ணனைச் சுட்டுகின்றார். கண்ணனின் தலைநகரைத் துவாரகை எனவும் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சியில் வரும் நெடுமுடி அண்ணல் என்பதற் கும் அவர் கண்ணன் எனப் பிழையான பொருள் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சி ஆசிரியர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை அல்லது புலவர் குழுவை ஆதரித்த பாண்டியனைக் குறிக்க நிலந்தருதிருவில் நெடியோன் என்னும் பெயரை ஆண்டுள்ளார். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது நிலந்தரு திருவிற் பாண்டியன வையில்.
துவரை என்னும் பெயருடைய பல இடங்கள் தமிழ் நாட்டில் இருந்தன. கடல்கொண்ட நாட்டில் அவ்வகை இடங்கள் இருந்தன. பாண்டியரின் தலை நகராயிருந்த கபாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது. துவாரபதி என்பதே கபாடபுரமென வடமொழிப் படுத்தப்பட்டிருத்தல் கூடும். பாண்டி நாட்டுக்குத் தெற்கே கிடந்த நிலத்தைக் கடல் கொண்டபோது மக்கள் வடக்கு நோக்கிச் சென்று (தமிழ் நாட்டில்) குடியேறினார்கள் எனக் கலித்தொகை கூறுகின்றது. ஆகவே அகத்தியர் தெற்கே கடல்கொண்ட பாண்டி நாட்டினின்றும் வந்தவராகலாம். தெற்கிலிருந்து வந்த பாண்டியர் அவையிலிருந்த வேளிர் தமது அரசனை நெடுமுடி அண்ணல் எனக் கூறினாராகலாம். நெடியோன், நெடுமுடி அண்ணல் என்பன பாண்டியப் பேரரசனைக் குறிப்பன. அகத்தி யர், வேளிர்கள் சிலரோடு பொருநை ஊற்றெடுக்கும் இடத்தில் தங்கினாராதல் வேண்டும். இவரே தமிழ்க் கல்வியிற் புகழ்பெற்று விளங்கினார். அகத்திய ருடன் சென்ற வேளிர் அயலேயுள்ள மலைநாடுகளில் இராச்சியங்களை உண்டாக்கிக் குறுநில மன்னராயினர். ஆய், ஆவி முதலிய குறுநில மன்னர் பலர் வேளிர் மரபினர் எனப்படுகின்றனர்.
அகத்தியர் நிலந்தருதிருவிற் பாண்டியன் அல்லது நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் காலத்தவராயின் தொல்காப்பியரும் அகத்தியரும் ஒரே காலத்தவராகலாம். நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையிலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. அகத்தியரும் தொல்காப்பியரும் ஒரே காலத்தவர்களாயினும் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்பதற்குப் பழைய சான்றுகள் யாதும் காணப்படவில்லை.
சிற்றகத்தியமும் பேரகத்தியமும்
அகத்தியர் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்னும் இரு இலக்கண நூல்கள் செய்தாரென்னும் கதை செவிவழக்கில் உள்ளது. அகத்தியம் என்னும் பெயருடன் மத்தியகால உரையாசிரியர்கள் எடுத்தாண்ட சில சூத்திரங் களும் உள. இச் சூத்திரங்கள் இன்று வழங்கும் அகத்தியர் வாகடங்கள் போன்றவையே யாகும்.
தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலில் கூறப்படுவது வருமாறு:
1“அண்மையில் பேரகத்தியத்திரட்டு என்னும் சிறு நூல் ஒன்று வெளி யாயிற்று. அது அகத்தியம் என்னும் இலக்கணச் சூத்திரங்களின் திரட்டு எனக் கூறப்பட்டுள்ளது. அகத்தியருடையன என்பனவல்லாத வேறு சில சூத்திரங்களும் அந்நூலிற் காணப்படுகின்றன. அவை கழாரம்பர் என்னும் அவர் மாணவரால் செய்யப்பட்டன என்று தமிழ்ப் பண்டிதருள் ஒரு சாரார் நம்பி வருகின்றனர். இவ்விருவகைச் சூத்திரங்களும் எவராலோ செய்யப்பட்ட போலிகள் எனக் கொள்வதற்குப் பல நியாங்கள் உள.”
1. அச் சூத்திரங்களின் நடை மிகச் சமீப காலத்தது. அவைகளில் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியச் சூத்திரங்களை யும் இவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இது நன்கு தெளிவா கின்றது.
2. அகத்தியர் காலத்தில் தமிழில் சமக்கிருதச் சொற்கள் அருகி வழங்கியிருத்தல் வேண்டும். புத்தமித்திரன் பவணந்தி காலங்களிற் போல வடசொற்களை தமிழில் ஆள்வதற்குரிய விதிகள் அக் காலத்தில் தோன்றி யிருக்க மாட்டா. தொல்காப்பியர் வடசொற்கள் தமிழில் வழங்குவதற்கு ‘சிதைந்தன வரினுமியைந்தன வரையார்’ எனப் பொது வகையால் விதி கூறினாரேயன்றிச் சிறப்பு வகையில் விதிகள் கூறிற்றிலர்.
பேரகத்தியத் திரட்டில் இருபத்தினான்கு சூத்திரங்கள் வடமொழிச் சந்தி, சொல்லாக்கங்களைப் பற்றிக் கூறுகின்றன… பேரகத்தியம் என்னும் நூல் கி.பி.1,250க்குப்பின் பெருவழக்கிலிருந்து நன்னூலுக்குப் பதில் சைவ மாணவர்கள் பயிலும்படி திருநெல்வேலி அல்லது தஞ்சாவூர்ப் பகுதிகளில் இருந்த யாரோ மாடதிபதி ஒருவரால் செய்யப்பட்டிருந்தல் வேண்டுமெனத் தெரிகிறது.
தொல்காப்பியர் எங்காவது அகத்தியத்தையோ அகத்தியரைப் பற்றியோ ஒரு வார்த்தை தானும் கூறவில்லை. தொல்காப்பியப் பாயிரம் கூறுவது வருமாறு:
“…தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிருமுதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச்
செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப்
புலந்தொகுத் தோன்.”
என்பதாகும்.
இப் பாயிரத்தினால் தொல்காப்பியருக்கு முன் அகத்தியம் என்னும் இலக்கணம் ஒன்று இருந்ததோ என்பது சந்தேகத்துக்கு இடனாகின்றது. அகத்தியரைத் தமிழ் மொழியோடு சம்பந்தப்படுத்திக் கூறும் கற்பனைக் கதைகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் முளைத்திருத்தல் வேண்டுமென நான் கருதுகின்றேன்.
பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்காரவர்கள் அகத்தியரைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்கள் வருமாறு:
சமக்கிருத நூல்களில் இஷ்வாகு காலம் முதல் கிருஷ்ணன் காலம் வரையில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள் ஒரு தனி அகத்தியர், விசுவாமித்திரர், வசிட்டர்களைக் குறிப்பனவல்ல. அவை குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கிய பெயர்களாகும். அப்பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்ல1.
* * *
முதல் அகத்தியர் விதர்ப்ப அரசன் புதல்வியாகிய உலோபாமுத்திரை யின் கணவன். இவர் இராமருக்கு இருபது தலைமுறைகளின் முன்வாழ்ந்த சவர்க்கன் என்னும் காசி அரசன் காலத்தவர். ஆதி அகத்தியர் விந்தியத் துக்குத் தெற்கே வாழ்ந்தார். அவர் விந்தத்தை அடக்கினார் என வழங்கும் பழங்கதையின் பொருள், அவர் விந்தத்தைக் கடந்து தெற்கே சென்றார் என்பது ஆகலாம். அவருடைய ஆச்சிரமம் சாத்பூராமலைத் தொடரின் மேற்குப் பகுதியிலுள்ள வைடூரிய மலையிலுள்ளது. அவர் தமது தவத்தின் மகிமையால் தென் தேசத்துக்குத் தீமை நேராதபடி காத்தார். பஞ்சவடிக்கு இரண்டு யோசனை தூரத்தில் இராமர் சந்தித்த அகத்தியர் முதல் அகத்திய ராயிருந்தல் முடியாது; அவர் பிற்கால அகத்தியர்களுள் ஒருவராயிருத்தல் வேண்டும். இராமர் காலத்து அகத்தியர் கோதாவரிக்கு அண்மையில் வாழ்ந் தார். அவர் தெற்கு நோக்கிப் பயணஞ் செய்தபோது அகத்தியர் அவ்விடத்தி லேயே தங்கினார். இராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் திரும்பி வந்தபோதும் அகத்தியர் ஆச்சிரமம் அவ்விடத்திலேயே இருந்தது. இராமர் அலைந்து திரிந்தகாலம் முழுமையிலும் அகத்தியர் ஆச்சிரமம் பஞ்சவடியி லிருந்து இரண்டு யோசனை தூரத்தில் இருந்ததெனத் தெரிகின்றது. சுக்கிரீ வன் வானர வீரரை நோக்கிக் கூறியதாக வரும் பகுதியில் காவேரி ஆறு ஊற் றெடுக்கும் மலையமலையில் அகத்தியர் ஆச்சிரமம் உள்ளதாகக் கூறப்பட் டுள்ளது. சீதையை இராவணன் மாயமாகத் தூக்கிச் சென்றதுபோல இராமா யணஞ் செய்த புலவரும் அகத்தியரைப் பஞ்சவடியிலிருந்து மலையமலைக்கு மாயமாகக் கொண்டுபோய் விடுகின்றார். அகத்தியர் மலையமலையில் இருந்தார் எனவரும் பகுதியைப் பிற்காலப் புலவர் எவரோ எழுதினாராகலாம்1.
------------------------------------------------------------------------
கி.பி. முதல் ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் எவற்றிலாவது அகத்தியர் கடவுளிடமிருந்து தமிழைக் கற்றாரென்றாவது, அவர் தமிழைத் தோற்றுவித்தாரென்றாவது கூறப்படவில்லை. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் செய்தாரென்றும், அவர் சிவபெருமானிடத்தும் சுப்பிரமணியக் கடவுளிடத்துமிருந்து தமிழைக் கற்றாரென்றும் வழங்கும் கதைகள் கி.பி. 1,000க்குப் பின் தோன்றின வாதல் வேண்டும்.2
* * *
அகத்தியரென்னும் பிராமண முனிவர் பொதிய மலையில் சென்று தங்கித் தமிழ் இலக்கியங்களைச் செய்தார் என்னும் வரலாறு பிராமணரின் அதிகாரம் தென்னாட்டில் ஊன்றிய பிற்காலத்தில் தோன்றியிருத்தல் கூடும். இக் கதைக்கு ஆதாரம் சமக்கிருத நூல்கள் ஆகலாம்.3
* * *
சின்ன ஆசியாவில் அகத்தியர்
இந்தியநாட்டில் மாத்திரம் அகத்தியர்கள் இருக்கவில்லை. மேற்குத் தேசங்களிலும் அகத்தியர்கள் விளங்கினார்கள். சின்ன ஆசியாவில் அகத்தியா° (Agathias) என்னும் ஒருவர் விளங்கினார். இவர் சரித்திர ஆசிரியரும் புலவருமாகிய கிரேக்கர், இவர் கி.பி.530-ல் பிறந்தார்.4
5சித்திய மக்களிடையே (உள்ள) ஒரு குழுவினர் அகத்திரிசிகள் (Agathias) எனப்பட்டார்கள் என எரதோதசு (Heradotus p.K.480) என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். இவர்கள் தமது சட்டங்களை ஒரு வகைப் பாடல் மூலம் வாய்ப்பாடஞ் செய்து காப்பாற்றிவந்தனர். அரி° டோட்டில் காலம் வரையில் இவ்வழக்கு இருந்தது. அகத்திரிசி என்னும் இடப்பெயரும் ஐரோப்பாவில் உள்ளது6.
வடநாட்டு இருஷிகள் எனப்பட்டோர் பலர் திராவிட இரத்தக் கலப்புடையராயிருந்தனரென்றும் வசிட்டர், அகத்தியர், விசுவாமித்திரர் முதலியோர் அவ்வகையினரென்றும் இரங்காச்சாரியர் அவர்கள் கூறுவர்.1
பழைய தமிழ் நூல்களில் அகத்தியரைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறும் பகுதிகள்
“வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழுக்கு விளக்காகென
வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ்
ஆனாப்பெருமை அகத்திய னென்னும்
அருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” - பன்னிருபடலப் பாயிரச் சூத்திரம்
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்கால் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் - புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம்
பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து
குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த்
தலைகட லடக்கி மலையத் திருந்த
இருந்தவன் றன்பா லியற்றமி ழுணர்ந்த
புலவர்பன் னிருவருட் டலைவனாகிய
தொல்காப் பியன். - அகப்பொருள் விளக்கப்பாயிரம்
மதிவெயில் விரிக்குங் கதிரெதிர் வழங்கா
துயர்வரை புடவியின் சமமாக்கிக்
குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி
யாசமித் துயர்பொதி நேசமுற்றிருந்த
மகத்துவ முடைய வகத்திய மாமுனி
தன்பாலருந்தமி ழின்பா லுணர்ந்த
வாறிரு புலவரின் வீறுறு தலைமை
யொல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி.” - இலக்கணக்கொத்துரைச் சிறப்புப் பாயிரம்.
இவற்றுட் பன்னிரு படலமென்பது தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் தனித்தனி ஒவ்வோர் படலமாகச் செய்து சேர்க்கப்பட்ட நூல் எனப்படுகின் றது. இது தொல்காப்பியர் முதலியோர் செய்ததாகாதென இளம்பூரணர் தமது உரையில் காட்டியுள்ளார். அதனால் பன்னிரு படலமென்பது பிற்காலத்தா ரெவரோ தொல்காப்பியர் முதலியோர் பெயரால் புனைந்த நூலெனத் துணிய லாம். தொல்காப்பியப் பாயிரத்திற் காணப்படாத அகத்தியர் வரலாறு இந் நூலிற் காணப்படுதலும் ஆராயத்தக்கது. நூல்களுக்குப் பாயிரம் செய்யும் விதி தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. இறையனாரகப் பொரு ளுக்குப் பாயிரமில்லை. இறையனாரகப் பொருளுரையில் நூலுக்குப்பாயிர மின்றிமையாததெனக் கூறப்பட்டுள்ளது. இக் கருத்து வலிபெற்ற காலத்தி லேயே தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்னும் ஒருவரால் பாயிரம் செய்யப்பட்டதெனக் கருதக்கிடக்கின்றது. தொல்காப்பியத்துக்குப் பாயிரம் செய்யும் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியரிடம் தமிழ் பயின்றவர் என்னும் கதை தோன்றவில்லை எனத் தெரிகின்றது. ஐந்திரம் கற்றவரெனத் தொல்காப்பியரைச் சிறப்பித்த பனம்பாரனார், இவர் அகத்தியரின் மாணவராயின் அதனை ஒருபோதும் கூற மறந்திருக்கமாட்டார்.
புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. ஏழாம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்டது. இதனை ஒட்டிச் சிறிது முன் பன்னிருப்படலம் செய்யப் பட்டதாகலாம். அக் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்னும் வரலாறு தோன்றி வழங்கியிருத்தல் வேண்டும்.
திருமூலர் கி.பி.5-ம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவராவர். இவர்,
நடுவுநில் லாதிவ்வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென்றானே.
எனத் திருமந்திரத்துள் கூறியுள்ளார். அகத்தியர் தமிழோடு சம்பந்தப் பட்டதை அவர் கூறவில்லை. கி.பி.5-ம் நூற்றாண்டுக்கும் கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குமிடையில் அகத்தியரைத் தமிழோடு சம்பந்தப்படுத்தும் கதைகள் எழுந்தன எனக்கூறுதல் பிழையாகாது. மணிமேகலை என்னும் சங்ககாலத்துக்கு அண்மையிலுள்ள இலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிக் கூறப்படும் இடங்கள் சில உள.
“உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்புமே படீஇய
ஒங்குயர் மலையத் தருந்தவ னுடிரப்பத்
தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்”
“மன்மருங்கறுத்த மழுவா ணெடியோன்
றன்முன் றோன்ற றகாதொளி நீயெனக்
கன்னி யேவலிற் காந்த மன்னவன்
அமர முனிவ னகத்தியன் றனாது
துயர்நீங்கு கிளவியின் யாறோன் றறவும்.”
“செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்கும்
கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட
அமரமுனிவன் அகத்தியன் றனாது
கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுதிய சம்பாதி.”
- மணிமேகலை
சீத்தலைச் சாத்தனார் காலத்தில் அகத்தியரைப் பற்றிய வரலாறு மிகப் பழங்கதையாக வழங்கிற்றேயன்றி அகத்தியர் தமிழோடு தொடர்பு பெற வில்லை. அக் காலத்தில் அகத்தியர் பொதியமலையில் இருந்தாரென்றும் வரலாறு வழங்கிற்று. அகத்தியர்1 குடத்தில் பிறத்தல், பிரமதேவருக்கு ஊர்வசி யிடம் பிறத்தல் போன்ற கதைகளை ஆராய்தல் மணல் சோற்றில் கல் ஆராய்தல் போலாகுமெனக் கருதி அவற்றை ஈண்டு ஆராய்ந்திலேம்.
எஎஎஎ
எனது துப்பாக்கியுடனும் நாயுடனும் அடுத்த கடற்கரைப் பக்கம் சென்றேன்
எனக்கு கடற்பயணம் செய்ய விருப்பமுண்டு
ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போதல்
அடிமை எனத் தெரிவித்தல்
குடித்தது உடுத்தது
குடித்தது உடுத்தது
1 “தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன்”
“என்றுமுள தென்றமி ழியம்பி யிசைகொண்டான்”
“நீண்டதமிழ் வாரி நிலமேனிமிர விட்டான்”
“உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்க வினினும் மரபினாடி
நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட்
டழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்”. - கம்பன்
தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத்தெண்ணீரருவிக்
கானார் மலயத் தகுந்தவன் சொன்னகன் னித்தமிழ். - அமிர்தசாகரர்
ஓங்க விடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஓங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ். - பழம்பாடல்
தமிழ் பொதிய மலையில் தோன்றியதெனப் பொருள்பட வரும் இப்பழம் பாடலும் தமிழ் பொதிய மலையிடத் திருந்த அகத்திய முனிவரிடத்திற் பிறந்த தென்பதையே குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக