கர்நாடக சங்கீதம்


இசை நூல்கள்

Back

கர்நாடக சங்கீதம்


கர்நாடக சங்கீதம்

வரலாற்று பின்னணி

தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.

தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.

நாதம்

செவிக்கு இனிமை கொடுக்கும் த்வனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன;

1. ஆகதநாதம் - மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும்.

2. அநாகதநாதம் - மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும்.

சுருதி

பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...

1. பஞ்சம சுருதி - மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். ஸபஸ் எனப் பாடுவது.

2. மத்திம சுருதி - மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். ஸமஸ் எனப் பாடுவது.

சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன.அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் ஸ்வரங்கள் ஸபஸ் (ஸா பாஸாபாஸா).

ஸ்வரம்

இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.

சப்த ஸ்வரங்கள் வடமொழிப் பெயர்கள் தமிழ் பெயர்கள்
ஷட்ஜம் குரல்
ரி ரிஷபம் துத்தம்
காந்தாரம் கைக்கிளை
மத்யமம் உழை
பஞ்சமம் இளி
தைவதம் விளரி
நி நிஷாதம் தாரம்

தாளம்

கையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.

தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.

லயம்

பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.அவையாவன,

1. விளம்பித லயம்

2. மத்திம லயம்

3. துரித லயம்

ஆவர்த்தம்

ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு // உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.

கர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல்

நரம்பு வாத்தியங்கள்

யாழ்

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது.

யாழின் வரலாறு

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன

வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வீணையின் வரலாறு

பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

வீணையின் பாகங்கள்

குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணையின் அமைப்பு

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.

தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.

யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.

நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.

தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.

தம்புரா

தம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது.

சுருதிக்குப் பயன்படும் கருவிகள்

சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

சுருதி பெயர் ஸ்வரம் விகிதாச்சாரம் சுருதி அதிர்வெண்
க்ஷோபீனி ஷட்ஜா 1 466.1638
திவ்ற கோமல் ரிஷப் 256/243 491.1026
கும்தாவதி 16/15 497.2414
மண்ட 10/9 517.9598
சந்தோவதி ஷுத்த ரிஷப் 9/8 524.4343
தயாவந்தி கோமல் கந்தர் 32/27 552.4904
ரஞ்சனி 6/5 559.3966
ரக்திகா 5/4 582.7048
ருத்ரி ஷுத்த கந்தர் 81/64 589.9886
குரோதி ஷுத்த மத்யம் 4/3 621.5517
வஜ்ரிக 27/20 629.3211
பிரசரிணி திவ்ற மத்யம் 45/32 655.5428
ப்ரிதி 729/512 663.7371
மர்ஜானி பஞ்சம் 3/2 699.2457
க்ஷிதி கோமல் தைவத் 128/81 736.6539
ரக்த 8/5 745.8621
சண்டிபிணி 5/3 776.9397
அளபினி ஷுத்த தைவத் 27/16 786.6514
மட்னி கோமல் நிஷாத் 16/9 828.7356
ரோகினி 9/5 839.0948
ரம்யா 15/8 874.0571
உக்ர ஷுத்த நிஷாத் 243/128 884.9828
க்ஷோபீனி ஷட்ஜா 2 932.3276

வயலின்

வயலின் வயலின் (பிடில்) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம்.

வயலினின் வரலாறு

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.[1] அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. [2] வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

கருநாடக இசையில் வயலின்

தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையில் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் (solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது .

வயலினின் கட்டமைப்பும் இயங்கும் விதமும்

வயலின் பல அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு

பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம். அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு. மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள். வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள். வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.

கோட்டு வாத்தியம்

கோட்டு வாத்தியம் (மற்ற பெயர்கள்: சித்திரவீணை அல்லது மகாநாடகவீணை) என்னும் இசைக்கருவி வீணையைப் போன்ற ஒரு நரம்புக் கருவியாகும். ஆனால் வீணையில் உள்ள மெட்டுகளும், மெழுகுச் சட்டமும் இக்கருவியில் இருக்காது. கோடு என்றால் மரக்குச்சி என்று பொருள். மரக்குச்சி அல்லது மரத்துண்டு ஒன்றால் வாசிக்கப்பட்ட கருவி கோட்டு வாத்தியம் ஆகும். இதற்கு மகாநாடக வீணை என்றும் பெயர். கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

காற்று வாத்தியங்கள்

புல்லாங்குழல்

புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.

வரலாறு

இதுவரையான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது. இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாக கருதப்பட்டன.

அமைப்பு

புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி

புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.

வாசிக்கும் முறை

குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.

புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.

நாதசுவரம்

நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.

தோற்றம்

நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.

வகைகள்

நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.


முகவீணை

முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.

கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.

தாள வாத்தியங்கள்

தவில்

தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். சிறிய பக்கத்தில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் முழக்குவர். விரல்களில் கவசங்கள் அணிந்திருப்பார்கள். பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அணிந்த விரல்களைக் கொண்டும் முழக்குவர். எனினும், இடது கையால் குச்சியையும் வலது கையால் விரல்களையும் பயன்படுத்தும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

தவில் இசை

தவில் வாசிப்பதற்கு அடிப்படை இசையாவன:

1. த தி தொம் நம் ஜம்

2. த தி தொம் நம் கி ட ஜம்

வரலாறு

தவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது பாவனைக்கு வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புராணங்கள், இதிகாசங்களில் டின்டிமம் என்னும் ஒரு தாள வாத்தியம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் குச்சியாலும் மறுபக்கம் கையாலும் முழக்கப்படும் பறை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் எழுதப்பட்டுள்ளது.


மிருதங்கம்

மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

அமைப்பு

'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.

வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.

கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.


கஞ்சிரா

கஞ்சிரா (Kanjira) சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இவ்வாத்தியம் பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும்.

டேப் எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார்.

கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.


கடம்

கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்பி இரசிகர்களை பிரமிக்க வைப்பார்கள்.

கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.

கடம் தயாரிப்பு

தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்துள்ளது.


மோர்சிங்

மோர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 4ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது.


ஜலதரங்கம்

ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் சிறி தளவு நீரைவிட்டு, அதன் விளிம்பில் ஒரு கரண்டியால் தட்டுங்கள். 'டங்' என்று இனிய ஒலி பிறக்கிறதல்லவா? இனி, அந்தக் கிண்ணத்தில் மேலும் சிறிது நீரை ஊற்றிய பின் நட்டுங்கள். மீண்டும் ஒலி எழும்பும்; ஆனால் ஒலியில் சிறிது வேறுபாடு இருக்கும். முதல் ஒலியின் சுரமும், இரண்டாவது ஒலியின் சுரமும் வெவ்வேறாக இருக்கும். ஒரு கிண்ணத்தைத் தட்டினால் எழும்பும் ஒலி, அதிலிருக்கும் நீரின் அளவைப் பொறுத்து வேறுபடும். இவ்வாறு பலவேறு சுரங்களை ஒலிக்கும் வகையில் நீர் உள்ள பல கிண்ணங்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே இசைக்கலாம்! அதுதான் ஜலதரங்கம். ஜலதரங்கத்திற்கு "உதக வாத்தியம்' என்னும் பெயரும் உண்டு. அறுபத்து நான்கு கலைகளில் ஜலதரங்கம் வாசிப்பதும் ஒன்றாகும். ஜலதரங்கம் வயலின், மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு ஜலதரங்க இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இதில் எழும் ஒலி மிக இனிமையாக இருக்கும். பண்டைக்காலத்தில் ஜலதரங்கத்திற்கு வெண்கலக் கிண்ணங்களைப் பயன்படுத் தினர். இன்று பீங்கான் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதை வாசிப்பவர், வேவ்வேறு சுரங்களை உண்டாக்கும் பீங்கான் கோப்பைகளைத் தம் முன்னால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கோப்பைகளின் சுருதி உயர்ந்துகொண்டே போகும். இவ்வாறு 16 கோப்பைகள் இருக்கும். குறிப்பிட்ட இராகத்திற்கு வேண்டியவாறு கோப்பைகளின் சுருதியைக் கூட்டுவார்கள். அதில் வராத சுரங்களுக்கும் கோப்பைகளைச் சுருதி சேர்த்து, அவற்றை அரைவட்டத்திற்கு வெளியே அந்தந்தக் கிண்ணத்திற்கு அருகில் வைப்பார்கள். வாசிக்கும் இராகத்திற்கு ஏற்ப, வேண்டிய கோப்பைகளை வெளிப்புறத்தி லிருந்து உட்புறம் அரைவட்டத்தில் வைத்து, வேண்டாத கோப்பைகளை வெளியே நகர்த்தி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை வாசிக்க முடிகின்றது. கோப்பையிலுள்ள நீர் பல வழிகளில் பயன்படுகிறது. சீராக சுருதி சேர்த்துக் கொள்வதற்கும், இனிய நாதத்தை உண் டாக்குவதற்கும் இது உதவுகிறது. நீர்மட்டத் தின் மேல் இலேசாகத் தட்டினால் இசைக்கு வேண்டிய கமகங்கள் உண்டாகும். மிக வேகமாகக் கோப்பைகளைத் தட்டி வாசிக்கும்போது, அவை புரண்டுவிடாமல் இருக்கவும் அவற்றிலுள்ள நீர் உதவுகிறது.


உடுக்கை

உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவதுண்டு.

உடுக்கைப்பாட்டு

உடுக்கைப்பாட்டு என்பது, உடுக்கை என்னும் இசைக்கருவியை, இசைத்துப் பாடப்படும் கலை ஆகும். இது இசைக்கருவியால், பெயர் பெற்ற கலையாகும்.[1] உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக, அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியன உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி முதலிய பகுதிகளிலும், கோவில்களிலும், பிற இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்