மக்கத்துச் சால்வை
சிறுகதைகள்
Backமக்கத்துச் சால்வை
எஸ்.எல்.எம். ஹனீபா
------------------------------------------------------
வறுமையாலும் வைராக்யத்தாலும்
என்னை வளர்த்தெடுத்த
உம்மாவுக்கும் வாப்பாவுக்கும்
---------------------------------------------------
எஸ்.பொ.வின்
முன்னீடு
சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தால் நான் பரதேசியானவன். அளைந்த மண்ணின் தவனம் துறக்காத பரதேசி. மண்ணின் புழுதி நுகர்ந்த கடிதங்களும் வரும். விஷம் தோய்ந்தவையும்; ஓளஷதம் சுமப்பனவும்! இதோ, எஸ்.எல்.எம். ஹனீபாவின் கடிதம். இது எதிலே சேர்த்தி?.... "...என் கதைகள் சிலவற்றைத் தொகுத்து 'மக்கத்துச் சால்வை' என்ற மகுடத்தில் வெளியிட நிச்சயித்துள்ளேன். இந்தப் பெயர் என் மரபையும் சம்பிரதாயங்களையும் பேணுவதாக அமையும். தொகுதிக்கான கதைகளை அனுப்புகிறேன். அதற்கு உங்கள் முன்னுரை தக்கது. இந்தச் சம்பிரதாயத்தை நீங்கள் மறுத்தாலும், இலக்கிய வரலாற்று நேர்மையை நாட்டவாவது எழுதவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். யாரையும் சாடாத கலைப்பூர்வமான தேடலை யாசிக்கிறேன்..." பன்னீர் தெளித்தும் கடிதம் நீளுகிறது. அட, சொக்கா! வரலாற்று நேர்மையை நாட்டுதல்வேண்டும்; யாரையும் சாடலாம்...இது மகா ஆக்கினை. சிஷ்ட பரிபாலனத்துக்கு துஷ்ட நிக்கிரகமும் நடக்கணும். சாடல் துஷ்ட நிக்கிரகத்திற்கான போர்க்கருவிகளுள் ஒன்று. ஆக்கினையின் தீப்பிழம்பில் சுயதரிசனமும், என் எழுத்துப் பணிபோரே. போரைக் காண்பிக்கும் வெறியனும்.
இது தொற்றித் தேவையான தேடலும். எழுத்து ஊழியந்தான் என்ன? சௌந்தர்ய உபாசனையா? கலை ஆராதனையா? அழகுணர்ச்சி சலனங்களின் ஊற்று. பிரேமை என்கிற அன்பும் உணர்ச்சிகளின் அழகே. ஊற்றின் உதைப்பு ஆக்கம். கலை ஆக்க வெளிப்பாடே. கலா நிறைவு ஆனந்த; இன்பம். இவற்றிலே ஒரு Catch உண்டு எழுத்து ஊடகம் இன்றியும் இக்கிரியைகள் சாத்தியம். சத்திய எழுத்தின் சரஸ் விடுதலை வெறியே. வெறியின் அம்ஸம் ஆவேசம் அடக்குமுறை, அட்டூழியம், அக்கிரமம், அநியாயம், அதர்மம், அழிவு எனப் புழுத்துப்பெருகும் ஊழல்களைக் கண்டு ஆவேசம் அவற்றிலிருந்து 'மனிதம்' விடுதலை சுசிக்கவேண்டும் என்கிற வெறி. புகழும் பணமும் விடுதலைக்கு ஈடு அல்ல. சத்தியத்தினதும் தர்மத்தினதும் பரிபாலனம் விடுதலைக்கான உத்தரவாதம். இவையே பானுஷ“கத்தின் ஆதாரம். மானுஷ“கத்தைப் பேணும் வெறியில் எழுத்தாளன் போராளியும். விடுதலை வாய்த்ததும் முறைமை. ஊழியம், கிரமம், நியாயம், தர்மம், வாழ்க்கை ஆகிய நிலவும். இவற்றின் பரிபாலனத்துக்குப் போராளி தன்னையே அதிகாரியாக நியமிப்பதில்லை. போர் ஈடுபாட்டில் அவன் அகங்காரம் நியமிப்பதில்லை. போர் ஈடுபாட்டில் அவன் அகங்காரம் அடங்கிவிடும். சத்தியஜோதியில் அவன் ஆகுதியாய்க் கலக்கிறான். பாரதத்தின் வரும் பாத்தனும் விடுதலை வெறியனே. பந்த சொந்தங்களினால் அவன் நினைவு சோருகின்றது. அது மாயை தீர்த்தனின் சகாயம் கசிய, மாயை அறுக்கப்பட்டது. வெறி நெறியாகிறது. முடிவு மகாபாரதமாய் நிலைத்தது. அவனுக்கு வில் கருவீ. எழுத்து வெறியனுக்கு சொல் ஆயுதம். போரே நியதியும் நித்தியமும் என்றாகிய பிறகு. அந்தக் கடமையே யோகம். அவனுக்கு பிரேமை-சத்தியம்-ஆனந்தம் அனைத்தும் கடமை யோகத்திலே கலந்துவிடும். அத்தகைய எழுத்துப் பணி பரம சுகமானது.
இச்சுகம் சாமான்யனுக்குச் சித்திக்காது. சாமான்யர்களும் எழுத்தாளராகக் கூத்துக் காட்டலாம். மக்களே போல்வர். இக்காலத்தில் அரசியல்வாதிகள் தேவர்களிலும் கலாதி. அவர்கள் அனைவரும் அதிகாரம், புகழ் என்கிற பயன்களை நத்தும் இரவலர்களம், இழிப்பவனுக்குச் சுதந்திரம் சித்திப்பதில்லை. ஏனையோருடைய காருண்யத்தில் வாழ்பவனுக்குக் காலத்தை வென்று நிற்கும் தத்துவமோ அதிகாரமோ இல்லை. விடுதலை வெறியின் சுதந்திரத்தைச் சகிக்காது சாகலாம். ஆனால், சுதந்திரம் அவனை நித்தியமாக்கும். பாரதி என்றோ செத்துப்போனான். பிறகு வாய்த்த சுதந்திரத்திற்கு அவனுடைய எழுத்து ஊழியமே தமிழிசை ஊட்டிற்று. இப்பேறு சாமான்யர்களுக்கு வாய்ப்பதில்லை. பிறிதொரு வழியும் பொருந்தும். பயனிலே பற்று வைக்காத விமுக்கிதப் பணியே எழுத்து வல்லானுக்குத் தோது. இத்தோதினைச் சுகிக்கும் சமத்தினால், எழுத்து ஊழியத்திலே என் பிள்ளையாகப் பாசம் கொண்டாடுகிறார் எஸ்.எல்.எம். ஹனீபா.
ஆனால், 'யாரையும் சாடாத' என்கிற நிபந்தனை என் நெஞ்சை நெருடுகின்றது. இங்கு நானும், ஹனிபாவும், சல சிறுகதைகளும் மட்டும் சம்பந்தப்படவில்லை. ஈழத்து இலக்கிய நாணயமும் புகுந்து விட்டது. போர் நெறியாகப் பயிலப்படும் எழுத்து ஊழியத்தில் சாடுதல் அம்ஸமான தர்மம். இயல்பை மறுதலித்து எழுதுதல் ஆக்கினையும். நாற்பத்தைந்து ஆண்டுகள் விரியும் என் ஊழியத்தில், என நிழலில் எழுத்துப் பயிற்சி பெற்றவர்கள் பலர். வயசால் மூத்தவர்களும். பிறகு திசைகள் மாறின. புகழை நத்தி என்னை நரி‘கரிக்கவும் செய்தார்கள். அவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் சித்தித்திலது. பஜகோவிந்த பஜனைக் கோஷ்டியிலே கரைந்தார்கள். ஆனால், இருபத்தைந்து ஆண்டு எழுத்து ஊழியத்துக்குப் பின்னரும், பல இழப்புகளுக்கும் பேரழிவுகளுக்கும் யதார்த்தச் சாட்சியாய் அமர்ந்தும், 'நீங்கள் வளர்த்த பிள்ளை' என்று பாசம் பாராட்டுதல். எழுத்து ஊழியம் பற்றிய ஒத்த தரிசனத்தில் வேர் கொண்டது. இலக்கிய நாணயம் பேணப்படுதல் வேண்டும் என்ற பிரார்த்தனை சங்கையானது. சங்கைக்கு மசிதல் ஆக்கினையை உள்ளடக்கும். வெறியன் ஆக்கினைக்கு அஞ்சான்.
'மக்கத்துச் சால்வை'யின் மடிப்புகளை நெகிழ்த்துகிறேன். காலத்தின் மடிப்புகளும் நெகிழ, மக்த்துச் சால்வைதாரிகளான மக்கள் வாழும் அந்த மண்ணின் செழுமையான கலைக்குரல் தவழ்ந்து வரும ஓயில்....
நானிலச் செழுமைகளும் மட்டக்களப்பு மாநிலத்தில் மொக்கும். நிலத்திலும் வளம்; நீரிலும் வளம். காலாலே கிளறி மரப்போறையை ஊன்றினால் கிணறு. 'மட்டக்களப்பார் வலு விண்ணரல்லோ? மரத்தைத் தோண்டியல்லே தண்ணி அள்ளுகினம்' என்று யாழ்ப்பாணத்தவரை மூக்கிலே விரல் ஊன்ற செய்யும் நீர்வளம். அந்த வளம் வழியாகவும் வலய வரும். அதில் வாழும் மீனினம் பாடுமாம், யாழ்நூலார் நாட்டிய ஐதிகம். ஆனால், 'முழுமதி முகமும் முட்டாக்குமா' மருத வரம்புகளிலே வெற்றிலை குதப்பித் திரியும் கோதையர் வாய்களிலே நாட்டார் பாடல் பிறக்கும் நிகர்சனம். மண்வளச் சொற்கள் பாடல்களிலே பண்தடவிச் சேரும். இத்தகைய உச்ச பாமரப் புலமையை நான் பிறந்த யாழ்ப்பாணத்தில் அனுபவித்ததில்லை. உணர்ச்சிக் குதுகுதுப்பில், மனசுபேசும் அந்தப் பாடல்களை நான் அதன் ஊற்றுவாயிலே சுவைத்து நாற்பது ஆண்டுகள் அதன் ஊற்றுவாயிலே சுவைத்து நாற்பது ஆண்டுகள் ஆகின்றனவா? அட்டப்பளம். குக்கிராமம். உதயசூரியனிலே அளகம் அலர்த்தும் தெங்குகளின் ஊடாக அப்பொழுது நிலவின் ஒளி ஒழுகுகின்றது. குருத்து மணல் பொழுது நிலவின் ஒளி ஒழுகுகின்றது. குருத்து மணல் பரப்பிய முற்றம். சிவமுகிலியை ஆகுதியாக்கிய 'சிலிம்பி'கைகள் மாறி, 'இழுவை'கள் சுவைத்து வலம் வருகின்றது. ஞானமோ? ஞான ஒடுக்கமோ? மோனத்தின் மோகனம் போலவும் அதனைப் பிளந்து நாட்டார் பாடல் ஒன்றினை காற்றின் இனிமைக்கு அவழ்த்துவிட்ட வாய், சிலிம்பியின் காற்றின் இனிமைக்கு அவழ்த்துவிட்ட வாய், சிலிம்பியின் வருகைக்காகக் காத்திருக்கின்றது. தவிப்பின் மௌனம், அந்த மௌனத்தை ஊடறுத்து, ஒலித்த பாடலுக்குப் பதில் அளிப்பது போலவும், முற்றத்தை அறிக்கை செய்த வேலிக்கு மறுபக்கமிருந்து இசைக்கப்படும் பாடல், தவழும் தென்றலுக்குச் சீதளஞ் சேர்க்கின்றது. பெண்குரல். பண்பாய் இழைப்பதிலே விரல்கள் விந்தை பயில, சொல்முடையும் எத்தனமின்றிப் பதில் பாடல் இசைக்கின்றாள். அவளுக்குக் கவிதை வாசியல்ல; சுவாசம்! நாட்டார் பாடல் அரங்கேறும் அந்தக் களரியிலே அமரும் சுகம்...
ஆனாலும் அந்த அற்புத கவி வளத்தைக் கொச்சைப்படுத்தித் தமது தொப்பைகளை வளர்த்தவர்கள் எத்தனைபேர்? ஊற்றின் மூலச் சுரப்பினைத் தரிசித்தவனின் சினம். அக்கொச்சையாளரின் கொட்டத்தினைச் சகிக்க முடியவில்லை. நாட்டார் பாடலைச் சுவைத்தல் வேறு; பாமர வித்துவத்திலே குளிர் காய்ந்து இலக்கியவாதியாகி விட்டதாகத் தம்பட்டம் அடிப்பது வேறு. உள்ளத்து உணர்ச்சிகளை எடுத்தடி மடக்காகப் பா புனையும் இலக்கியப் புலமை பெற்ற மண்ணே உன்னை ஆராதிக்கின்றேன். அதன் ரஷனையை மலிவிப்பதாகப்பாவலாச் செய்து தங்களை எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் உயர்த்திக் கொண்டவர்களை மூல மரத்தின் பசுமையையே உறிஞ்சிய மேடைகளிலேகூட இந்த நாட்டார் பாடல்கள் தூள் கிழப்பின; வாக்குகள் பெற்றன.... எத்தகைய கொச்சை? சோகம்? சோரம்? இத்தகைய பிசக்குதல்களுக்கு இலக்கியக் கடை திறந்தவர்களைப் பெயர்சொல்லிச் சாடாது விடுதல் ஆக்கினை அல்லவா?
அனைத்து வளமிருந்தும் மட்டக்களப்பு மாநிலம் பாவபட்ட பூமியும், 'சோறுடைத்து' என அண்டினால் தோஷமில்லை. 'சொல்லிருந்து ஒம்பி வருவித்து பார்த்திரு'க்கும் அருள் இம்மண்ணின் 'போடி'கள் பலருக்கு உண்டு. 'தேனாடு' 'மீனாடு' எனப் புளுகிப் புளுகியே அதன் வளங்களைச் சூறையாடவும் பிற மாநிலத்தார் அண்டினர். நேற்று என் கண்முன்னால் நிகழ்ந்தன. வாங்கக் கடலிலே பரதம் பயின்று சீதளம் அப்பிவரும் அப்பிவரும் காற்று, முதிரை- சமண்டலை-தேக்கு-வேம்பு ஆகிய மரங்களில் அளைந்து நரம்பிசை மீட்கவும், நெய்தல் நீரில் வேர்களைக் குத்துக்கால் இறக்கிச் செழித்த கண்ணாப்பற்றை வாழ் புள்ளினம் 'சீழ்க்கை' அடிக்கவும்...அத்தனை முல்லை வளமும் அழிக்கப்பட்டு, பிற மாநிலங்களின் வீடுகளுக்கு அழகு சேர்க்க Lorry Loadsஸாகச் செய்யப்பட்ட 'மண்கொள்ளை'கள்... பேராதனையை மையமாகக்கொண்டு டாக்டர் சரத் சந்திராவும், அவரைத்தொடர்ந்து டாக்டர் வித்தியானந்தனும் மேடை நாடகத்திற்குப் புதுமை செய்வதற்கு, சேரர் தமிழ்மரபாக மட்டக்களப்பு மாநிலம் போற்றிய கூத்துக் கலையே அருட்டுணர்வாகவும் ஆதர்ஷமாகவும் விளங்கின என்கிற வாஸ்தவங்களும் மறக்கப்பட்டு....Oh. Vandalism in its crudest form! இதன் காரணர்களை, வரலாற்று நாணயம் பேணுவதற்கேனும், பேர் குறித்துச் சாடாது விடுதல் எத்துனை ஆக்கினை?
மண்ணிலே அடி பதித்து, மனைகளிலே மனிதம் சுகித்த பாமர நெஞ்சங்களிலே பொங்கி நுரை கக்கிய பாடல்கள் பலவற்றின் சுயாதீன வீறினை ஏட்டு வடிவத்தின் மரக்கறித்தனம் ஏற்றலும் ஒண்ணா...அறிந்தும் ஏட்டுவடிவம் கொடுப்பதான அணாப்புதல்களும்... மட்டக்களப்புத் தமிழின் இருபதாம் நூற்றாண்டின் முனைப்புகளின் உருபுவாய்ந்த தனித்த அத்தியாம் விபுலானந்தர். மெய்யாத்தான் போற்றுவோம். மாதவி மீட்டிய யாழ் தொடக்கம், மேலைநாட்டு மதங்கர்களின் சூளாமணி நிகர் சேக்ஸ்பியர் வரை அவருடைய இலக்கிய அக்கறை அகன்றது. இடையில் கல்விப் பணியும் துறவுப் பற்றம் புகுந்தும். அவர் தம் இலக்கிய ஓர்மம் மழுங்கவில்லை. அவரைத் தொடர்ந்து வந்த பண்டிதர்கள் விபுலானந்தத் தமிழின் வெப்பத்திலே குளிர் காய்ந்தார்கள். அவர் இட்ட பலமான அடித்தளத்தில் புத்திலக்கியக் கோபுரத்தினை அமைக்க எழுத்துப் பணியிலே புகுந்த முன்னோடிகள் மிகப் பரிதாபமாகத் தவறிவிட்டார்கள். சிலர் அவர் ஊழியத்தின் உயிர்ப்பினை உணராத பண்ணாடைகளாய் வாழ்ந்தமை மகாதுன்பம். தவிர்க்கப்பட வேண்டிய கந்துகளையும், சிம்புகளையும், கஞ்சல்களையும், மண்டிகளையம் தாங்கின! இவற்றையே அவர்கள் விபுலானந்த சாரமாகக் கற்பித்தமையும் காமித்தமையும் உச்சக் கொடுமை. ஜனரஞ்சகம் என்கிற பிழையான விளக்கத்தில், 'கல்கி' மோகித்த அக்கிராரத்துத் தமிழையும், மனோரதியக் கற்பனைகளையும், 'குமஸ்தா' வர்க்கத்தின் பகடிகளையும் புத்திலக்கியத்தின் அற்புத சிகரங்கள் என மயங்கிய 'பாலாமணி'ச் சாதியார். சேரர் தமிழ் தோய்த்தும் வீறுபெற்ற மட்டக்களப்புத் தமிழைப் புறக்கணித்தார்கள். இவர்களுட் சிலருக்கு பத்திரிகைகளின் பக்கங்களை 'ரொம்பவும்' வாய்ப்புகளும் பொசியலாயின. இவர்களாலும் மட்டக்களப்பு மாநிலத்தின் தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு அநியாயம் நிகழ்ந்தது. இந்த அநியாயங்களைக் கணக்கெடுக்காது விடுதலும் அநியாயமே. அஃது ஆக்கினையும்!
இந்தத் தமிழ்ப் புசக்கல்கள் தங்கு தடையின்றி நிகழ்ந்த வேளையில், தமிழின் மறுமலர்ச்சி என்கிற கவர்ச்சியில் நாவலர் முடுக்கிய சமுதாய அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் தமிழ்ப் பணியே என்ற ஞானம் கைவரப்பெற்ற நான், மட்டக்களப்பாள் ஒருத்தியை என் பாதியாக்கி, மட்டக்களப்பு மண்ணின் உபாசகனாக மாறினேன். புதிய தேவைகளிலே சேததைச் சிரத்தை ஊன்றும் ஓர் ஊழியம் என்னுள் துளிர்த்தது. எழுத்து முயற்சிகளிலே ஈடுபட்டவர்களுடைய கேள்மையை நாடினேன். கிழக்கிலங்கையின் புதிய இலக்கிய முயற்சிகளைச் சரியான திசையிலே தரிசித்த கதைஞர் இருவருடைய உறவு இனித்தது. ஒருவர் மூதூரைச் சேர்ந்த வ.அ. இராசரத்தினம். மற்றவர் 'பித்தன்' என்ற புனைபெயரிற் புகுந்துகொண்ட கே.எம்.ஷா. இருவரும் 'மணிக்கொடி' வட்டத்தை - குறிப்பாகப் புதுமைப் பித்தனை- துரோணாச்சாரியாக வரித்து எழுத்து வித்தை பயின்ற ஏகலைவன்கள். இவர்களது நட்பை இன்றளவும் சுகிக்கின்றேன். வ.அ.இ.யின் 'தோணி' சிறுகதைத் தொகுதி 1960 களின் முதற் கந்தாயத்துகளில் வெளிவந்தது. பித்தனின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவருதல் வரா‘ற்றுச் சத்தியத்தின் தேவை. அவருடைய எழுத்துக்கள் Archives ஸ’லிருந்து மீட்கப்பட்ட செய்தியை ஹனிபா மூலம் அறிந்தேன். மகிழ்ச்சி. தொகுதியை, நூலுருவில் விரைவில் எதிர்பார்க்கும் ஆர்வலர்களுள் நானும் ஒருவன்.
புத்திலக்கியத் தாக்கம் இன்னோர் இடத்திலே கருத்து விடுதலைக் கண்டும் அகமகிழ்ந்தேன். கவிஞர் நீலாவணனை மையமாகக் கொண்டு, கல்முனை எழுந்தாளர் சங்கம் என்ற பெயரில், இந்த முனை உருபு காட்டிற்று. நீலாவணனின் உபகாரத்தினால் மருதுர்க் கொத்தன், எம்.ஏ.நுஃமான் ஆகிய கதைஞரின் உறவும் கிட்டிற்று. நுஃமான் கதை இலக்கியத்திலிருந்து மெல்ல விலகி கவிதைத் துறையிலே சிறிதுகாலம் சிரத்தை ஊன்றி, 'படித்தவர்கத்தினர்' காமிக்கும் வித்தாரங்களிலே ஈடுபாடு சொரிகிறார். அவருடைய சமாதானம் எதுவாக இருந்தாலும், அவர் போக்கால் மட்டாகளப்பின் ஆக்க இலக்கியம் முட்டுப்பட்டது. மருதூர்க்கொத்தனின் எழுத்தின் மண்வாசினை கமுழ்ந்தது. முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கையை அவர்களது பழகு தமிழிற் சித்திரிக்க அவர் காட்டிய மோகம் புதுப் பெரிவு காட்டிற்று. முஸ்லிம் கதைஞர்களுள் அ.ஸ.அப்துஸ்ஸமது காலத்தாலும் மூத்தவர். இலக்கிய நேசிப்பு மிக்கவர். ஆனால், அவர் 'பாலாமணிச் சாதியாரின் சிக்கல்களிலிருந்து விடுபடப் பஞ்சிப்பட்டார். இதனால், பித்தன் துவக்கிய பணியை முன்னுக்குக் கொண்டுசெல்லவல்ல கதைஞராய் மருதூர்க் கொத்தனை இனங்கண்டு அவர் முயற்சிகளைப் போற்றுவதில் முந்தி நின்றேன். 'மறுகா' அவர் எழுத்துலகத்திலிருந்து ஒதுங்கியவராக வாழ்ந்தமை எனக்குத் துக்கமே. அவருடைய கதைத்தொகுதி ஒன்று வெளிவந்ததாக அண்மையில் அறிந்தேன். மகிழ்ச்சி. ஆனாலும், அதிலே ஒரு மாமாங்கததுக்கு முந்திய கதைஞனைத்தான் தரிசிக்க ஏலும் என்பது என் ஆதங்கம்.
இந்த மான்மியத்தையும் உள்ளடக்கியதுதான் மட்டக்களப்பு மாநிலத்தில் கதை இலக்கிய எத்தனங்கள். எதிர்கால ஞானத்திற்கு இது தேவை. இதைப் பிரஸ்தாபிப்பதற்கு இந்த முன்னீடு தரும் வாய்ப்பு மிகப் பொருந்தும். ஏனெனில், இம் மாநிலத்தின் இலக்கிய வரலாற்றில் 'மக்கத்துச் சால்வை'க்கு ஒரு நியாயமான இடம் உண்டு. மட்டக்களப்பு மாநிலத்தின் அச்சாவான பாத்திரங்களை, அவர்கள் இயல்பாகப் பயிலும் தமிழிலே தோய்த்தெடுத்து, அவர்களுடைய நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களுக்கும் சம்பாவனை செய்யும் அவர்களை மனித நேசம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் கதைகளை இது தொகுத்துத் தருகின்றது. மட்டக்களப்பு மாநிலத்தின் தமிழ் ஓர்மையை மட்டிட எத்தனிக்கும் எதிர்காலச் சந்ததியினரும் இத்தொகுதியை நாடுவர்; தேடுவர். அத்தகைய ஒரு தொகுதியின் நுழைவாயிலாக அமையும் இதில் சில சத்தியங்கள் பிரசித்தமாகுதல் சங்கை. காலத்தை எதிர்நீச்சல் செய்து படைப்பிலக்கிய வீறுகளை வந்தனை செய்யும் நாளைய தமிழ்ச் சுவைஞனை இச்சத்தியங்கள் சென்றடைதல் அவசியம் ஆரோக்கியமானதும்.
எழுத்துலகத்திலே, சிறுகதைகளுக்கும் அப்பாலான துறைகளிலும் நாளைப் பிசக்கிக்கொண்டிருந்த காலத்திலே, அறுபதுகளின் மதியந்தாண்டிய வேளை என்று நினைவு, ஹனிபாவின் அறிமுகம் நிகழ்ந்தது. தூசி தட்டித் துலக்குகின்றேன். நிமிர்ந்த ஓடிசலான உடல் 'பையன்' போன்ற முகம் குறுகுறுத்த பார்வை நேசிப்புத் தவழும் பேச்சு. எதையும் அந்தம் வரை அறிந்துவிடும் ஆர்வம். செய்வன திருந்தச்செய்யம் முயற்சி எதையும் கிரகிக்கும் துடிப்பு. நிறைந்த வாசிப்பு. கமக்கட்டுக்குள் எப்பொழுதும் இரண்டொரு புத்தகங்கள். அவர் ஈடுபாடு காட்டிய எழுத்தாளர்களே அவரை ஆழ்ந்து நோக்கத் தூண்டினர். கொழும்புப் பத்திரிகைகள் சிலவற்றின் தயவால், மட்டக்களப்பில் எழுத்தாளரென விசாலமிட்ட பலரும் தொட்டுப் பார்த்திராத தி.ஜானகிராமன், லா.ச.ரா.சுந்தரராமசாமி. சிதம்பர ரகுநாதன், சி.ராஜநாராயணன், நீலபத்மநாபன்...குறிப்பாக லா.ச.ரா. அவருடைய ஊமைக்குழல் வாசிப்பிலே நான் ஊன்றிய ஈடுபாட்டினை மிஞ்சியது ஹனிபாவினுடையது. நான் நீண்ட காலம் தேடியலைந்த ஓர் உறவு ஹனிபாவின் உருவில் வாய்த்தது.
இதே காலப்பகுதியில் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அமாவாசை இருட்டில் கறுத்தப் பூனையைக் குருடன் கேட்டிக்கபால் அடித்ததுபோல...தினம் ஒரு சிறுகதை என்ற திட்டத்தின்கீழ், புதிய கலைஞர்களுக்கு ஒரு புதிய பிரசுரகளம் வாய்த்தது. அதனை உருபு வாய்ந்த வழியில் ஆற்றுப்படுத்த முந்தி நின்றவர் 'இளம்பிறை' ரஹ்மான். ஈழத்தின் ஆற்றலிலக்கிய பிரசுரத்துறையில் அதிகம் சாதித்த அவர், இளம் ஆற்றல்களை உரிய முறையிலே ஊக்கப்படுத்துதலையே இலக்காகக் கொண்டு 'கதைவளம்' என்கிற மாசிகையை வெளியிட்டார். இஃது ஈழததமிழில் பயனுள்ள முதல் முயற்சியாகவும் அமைந்தது இத்தகைய ஒரு சகாயச் சூழலில், மலையகத்திலிருந்து மலரன்பன், மாத்தளை வடிவேலன், மாத்தளைச் சோமு ஆகியோரும், தெற்கிலிருந்து திக்வலை கமால், எஸ்.ஐ.நாகூர் கனி, கலைவாதி கலீல், எம்.எச்.எம். சம்ஸ் ஆகியோரும், மட்டக்களப்பிலிருந்து வை அஹ்மது, எஸ்.ஜோன் ராஜன், எஸ்.எல்.எம். ஹனிபா ஆகியோரும் கதைஞர்களாகக் கோலங்காட்டினார்கள். இவர்களுட் சிலருடைய சிறுகதைத் தொகுதிகள் நமக்குக் கிடைத்துள்ளன. அத்தொகுதிகளுடன் 'மக்கத்துச் சால்வை'யை ஒப்புநோக்கிப் பார்த்தலும் பயனுள்ளது. இருப்பினும், 'முன்னீடு'வின் எல்லைக்கட்டுகளை உன்னி இஃது இங்கு புத்திபூர்வமாகத் தவிர்க்கப்படுகின்றது. 'கதைவள'த்தில் ஹனிபாவின் ஆற்றல்கள் குறித்து ரஹ்மான் நிரம்பிய நம்பிக்கை தெரிவித்தார். அந்த நம்பிக்கை இப்பொழுது நிரூபணமாவது மகிழ்ச்சி.
ஏனைய 'பணிவிடை'களுடன் 'இலக்கியச் சளப்பலும்' என்று இல்லாமல் இருப்பதால் ஆண்டுகளாக இலக்கியப் பணியை வாழ்க்யையின் இன்றியமையாத அம்ஸமாக இணைத்து வாழும் நேர்த்தியை மட்டக்களப்பு எழுத்தாளர்களிடம் காண்பது அரிது. இந்த நேர்த்தியை மெச்சினாலும், அதற்காகவே அவருக்கு இலக்கியத் திருத்தவிசிலே ஓர் இடம் அளியுங்கள் எனச் சிபார்சு செய்தலும் இலக்கியப் புருடாவே! மாறாக, சிறுகதை வித்தை பயில ஹனிபா தமக்கென ஒரு பார்வையையும், பாணியையும் வகுத்துள்ளார்; இவற்றின் மூலம் மட்டக்களப்புக் கதைக் கலையை இன்னொரு வளர்ச்சிக் கட்டத்திற்கு மேன்மைப்படுத்தியுள்ளார் என உன்னி மகிழ்ந்து, ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அவருக்கு உரிய இடமளித்தல் வலு சங்கையானது.
ஹனிபா சௌந்தர்ய தாஸரல்லர். 'கலை கலைக்காக' என்கிற மதவாதியுமல்லர். அவர் மானஷ“கத்தின் பரமார்த்த உபாசகர். எல்லாக் கதைகளிலும் மனித நேசிப்பு ஊடுபாவாக, சட்டென்று புரியாவண்ணம், மிக நொய்ப்ப நேர்த்தியில் நெசவாகியிருக்கின்றது. ஐம்பதுகளின் கடைக்கூறில், அரசியல் யதார்த்தத்தினை திசை திருப்பும் முகமாகவும், இதுவரையிலும் அவாகளே விளங்கிக்கொள்ளாத 'சோஷலிஸ யதார்த்த'த்தினைக் கட்டிப்பிடித்து எழுத்தாளர்கள் கோஷ்டி சேர்ந்து, 'இலக்கிய ஆக்கங்களில் மானுஷ“கத்திற்க வலுவான இடம் அளித்தல்வேண்டும்' என்பதை அரசியல் கோஷ சாங்கத்திலே முன்வைத்தார்கள். அவர்கள் மானுஷ“கத்தைக் குறிப்பிட்ட அரசியற் சாயத்திலே முக்குளித்து எடுக்கப்பட்ட வெப்பமானியிலே அளந்தார்கள். Haves எல்லாரும் அரக்கர்களையும், Vave-Nots எல்லாரும் தேவர்களாகவும் சோடிக்கப்பட்டார்கள். இதனால், அவர்களுடைய எழுத்துக்களிலே மானுஷ“கம் என்கிற ஆரவாரம் அன்றேல் பூச்சு மிக Crude-ஆக வெளிப்படுத்தப்பட்டது. நிறக்கலவைகளே சித்திரம் என விளங்கிக்கொள்ளும் மனோபாவத்துடன் ஒரு அப்புதல் வண்ணங்கள் துலங்கும் அளவுக்குச் சித்திரமோ, சங்கதியோ வெளியாவதில்லை ஹனிபாவுக்கு மனிதநேசிப்பின் இன்னொரு ஸ்திதிதான் இலக்கியம். மானுஷ“கத்தினை அழகு சிதையாமல், கலை பழுதுபடாமல், மப்பு வானில் கணநேரக் களிப்புக் கோலங்காட்டும் வானவில்லைப் போன்ற ஒரு கலாதி! இத்தகைய அணுகல் ஹனிபாவுக்கு ஒரு தனித்துவம் சேர்க்கின்றது. Public Justice, Hyperbole போன்ற எழுத்தாள அதிகாரங்களையும் அவர் நாடவில்லை. அவர் தமக்கென வாலப்படுத்தும் கதை சொல்லும் பாங்கிற்கு இவை தேவையுமில்லை. இவை சேராமலும், அதே சமயம் நொய்ப்பமாகவும் இழையோடும் பிரகரணம் துல்லிய ஓவியமாகவும் அழகு சுண்டுகிறது. சமுதாயத்தின் மகா கீழ்த்தட்டில் நடமாடும் கிராமியப் பாத்திரங்களின் அடிமனங்களிலே ஒளிரும் சுத்த சுயம்புவான மனித நேயத்தைத் தரிசிப்பதிலே ஹனிபாவுக்கு அக்கறையும் எனக்குத்தெரிந்த முந்திய தலைமுறையைச் சேர்ந்த கதைஞர்கள் பலர், கதைகளுக்கான கதாசம்பவ விந்து (இதைத்தான் அவர்கள் PLOT என்ற மேதமைச் சொல்லால் விளங்கிக்கொண்டார்கள்) ஒழுகிக் கிடக்கும் என்று, 'மணி'யான கருத்தை (அவர்களுக்கு இது சமன் அரசியல் கோஷம்) ஏற்றுவதற்குத் தோதான பாத்திரங்கள் 'அகப்படும்' என்றும், யாழ்ப்பாண பஸ் ஸ்ராண்ட் வழியேயும், கொழும்பு அங்காடிகளிலும் அல்லாடித் திரிந்ததை நான் அறிவேன். இந்த விதத்தில் ஹனிபா படுபாமரன். இந்தப் பாமரத்தனமே அவர் பலமும் கற்குடாத் தொகுதியில், வாழைச்சேனை மகா வித்தியாலயத்தின் அதிபராய் நான் பணிபுரிந்ததும் உண்டு ஹனிபா, புஹாரி, இப்ராஹ’ம், சிவலிங்கம், நிக்கலஸ் ஆகிய இளைஞர்களின் தோழமையுடன் அத்தொகுதியின் ஒவ்வொரு அங்குல மண்ணையும் அடியளந்திருக்கிறேன். அந்த மண்ணிலே அநாமதேயங்களாக நடமாடிய பாத்திரங்கள் பல, ஹனிபாவின் கதைகளிலே முகம் அப்பிய மனிதர்களாக வலம்வரும் விந்தையைக் காண்கிறேன். மொறக்கொட்டாஞ்சேனை 'மைக்செட்'. காத்தான்குடி மாப்பிள்ளை, தம்பங்கடவைப் பயிர்ச் செய்கை ஆகியனகூட, மீளாவோடை-ஓட்டமாவடி மண்ணிலே சீவிக்கும் பாத்திரங்களுடன் சம்பந்தப்பட்டவையே தவிர, அந்நியமல்ல. நேரம்பற்றிய சேதநைகூட, காகித ஆலையின் 'சைரன்' ஒலிக்கும் பொழுதும், 'பாமி'லே விசில் ஊதும் பொழுதும் மட்டுமே ஹனிபாவுக்கு உறைக்கின்றது. அவர் பேனா நாட்டிய வாழியில் பாத்திரங்கள் நடக்கவில்லை. பாத்திரங்களின் அடிச்சுவடுகளை அவர் பேனா புள்ளியிடுகிறது. இந்த உபாயத்தினால், சாமான்ய நிகழ்வுகளே அவர் கதைகளிலே கலையழகாகக் கோலங்காட்டுகின்றன.
வாசக வட்டத்தின் மெச்சுதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சத்தியத்தினை ஹனிபா நேசிப்பதாகவுந் தோன்றும். கதைகளிலே அவர் தம்முடைய வார்த்தை வளக்கணக்கெடுப்பு நடத்தவில்லை. பாத்திரங்களுடைய இயல்புகளுக்கு அநியாயம் நிகழாத அவதானமும் நிதானமும் உண்டு. லா.ச.ரா.வைத் துரோணாச்சாரியராய்ச் சம்பாவனை செய்யும் ஒருவனுக்கு இத்தகைய வாசி பொருந்துதல் அபூர்வம். ஓட்டமாவடி, மீராவோடைக் கிராமத்து வீடுகள் தோறும், கிராமத்துப் புறம்பான 'வெட்டை'களின் காயான் பற்றைகளை வகிடு பிரித்துச் செல்லும் குறுமணல் குச்சொழுங்கை தோறும், பயிலப்படும் தமிழே, அதன் ஒலித் தனித்துவம் சிதறாமல், இக்கதைகள் சிலவற்றிலே இலக்கிய அந்தஸ்துப் பெற விழைகின்றது. அவருடைய பாத்திரங்கள் கற்பனையின் குறளியல்ல. வாழ்பவை. எனவே, அவர்கள் பயிலும் தமிழுக்கு, அதன் இலக்கிய அந்தஸ்து பற்றிய உசாவுதல் இன்றி, சாம்பாவனை செய்யும் போக்கு, கதைகள் பிரசுரமான காலங்களை உள்வாங்கி, இக்கதைகளை வாசிக்கும் பொழுது, ஈழத்துப் பத்திரிகைகள் பயிலும் தமிழை நிராகரித்து, கிராமத்து மொழியுயர்வைக்கொண்டு வருவதற்கு, ஹனிபா நீண்ட பரிசோதனைக்குள் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்பதும் புரியும். தன்னை இழந்து, இன்னொன்றின் தனித்துவமாக மாறுவதற்குக் கடின உழைப்பு மட்டுமன்றி, சடைத்த பற்றுத் தேவை. இந்த வித்தையில் கரிசல்காடு கி.ராஜநாராயணன் அழுங்குப்பிடியன். அவருக்கு, இப்பொழுதுதான், ஹனிபா உருவின் முறையான சீடன் உருவாகுகின்றான். கதைகள் சிலவற்றிலே பயிலப்படும் வட்டாரத் தமிழிலே ஒன்றிக்கொள்ளுதல் சிலருக்கு ஆக்கினையாக இருக்கலாம். பொழுதினைச் சாகடிக்கும் 'லாகிரி யாவாரத்'துக்கு எழுதுவதற்குத்தான் ஆயிரம் 'எழுத்தாளர்கள்' இருக்கிறார்களே! ஆனால், சத்திய தரிசனம் நோக்கிய பயணத்திலே, ஆயிரத்துள் ஒருவனே ஈடுபடுகிறான். அந்த ஒருவனாகும் ஹனிபாவின் துடிப்பு சில கதைகளிலே குதியாட்டமிடுகிறது. இந்தக் குதிப்பின் கோலத்தில் களிப்பதற்கு, இலக்கியச் சுவைப்பிலே ஒரு பக்குவந் தேவை. இலக்கிய யஞ்ஞத்தினால் வாலப்படுத்திக்கொள்ளும் யோகமே தேர்ந்த இலக்கியச் சுவைப்பு என்பது என் அநுபவம். என் கர்வங்களுள் ஒன்று நான் இன்னமும் ஒரு பரமார்த்த வாசகனாய் இருப்பதுதான். என் சுவைத்தளத்தில், இத்தொகுதியிலுள்ள பல கதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. பிடித்ததை ஏனைய வாசகர்களுக்கும் சிபார்சு செய்தல் மகா நாணயம்.
'மக்கத்துச் சால்வை'யின் சுவைப் பயணத்துக்கு 'மணிதம்' பற்றிய அலசலும் தேவை. 'மனிதம் என்கிற நாணயம் செலாவணியில் அடக்க மதிப்புப் பெறுவதற்கு, சத்தியம் என்கிற ஒரு முகம் மட்டுமல்ல தர்மம் என்கிற மறு முகத்திலும் அச்சுதம் தேவை. தர்மத்திற்கு ஒரு மூர்க்கமுண்டு ஒருவகை ஆவேசம். அதுவே தர்மாவேசம் எழுந்து வெறியனுக்கு இது வாலாயம். அந்த ஆவேசம் இல்லாத நபுஞ்சகன், தர்மத்தை வேறு நயங்களுக்காக Compromise செய்கிறான். இணக்கம் காணும் எழுத்தாளர்கள் பதர். வேளாண்மையின் எதிர்பார்ப்பு நெல். ஆனால், பதரும் விளையும். பதர் தூற்றிக் கழிக்கப்படுதல் விதி. அதுவரையில் அதுவும் நெல்லின் மரியாதை சுகிக்கும். தூற்றாது மணி நெல்லைப் பெறுதல் சாலாது. தூற்றலுக்கு இது களமல்ல என்பது ஹனிபாவின் விநயம். இதனாலும் எனக்கு ஆக்கினை....இருப்பினும், வேறு கோணத்தில், ஆக்கினையும் இல்லை. ஹனிபாவின் கதைகள் பலபற்றிலே வலோற்காரமான தர்மாவேசத்தினை அடையாளங் காணலாம். பதப் பருக்கை தருதும்; "....'அடிபட்டிட்டு' நானும் மம்மலியும்தான் கூப்போட்டோம்...." மக்கத்துச் சால்வையில் ஒரு கட்டம். 'தலையாலெ தெறிச்சதுகள்' என்ற பட்டத்துடன் தர்மாவேசம் நின்றுவிடவில்லை. அதன் விடியலுக்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருத்தல் முடிவு? நூ குத் தம்பி தோற்கவும் நுட்பம் அப்படித்தான். பிரசார கனதி புகாத நேர்த்தியில் இருவருக்குமிடையிலுள்ள வர்க்க முரண்பாடு பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஓவியத்துக்கு ஒருவகை ஆழத்தினைக் கொடுக்கும் நிழல்போல, இந்த முரண்பாடு கலாசீர்த்தியுடன் தீட்டப்பட்டுள்ளது. தர்ம முனிவு சங்கை நாட்டல் மட்டுமல்ல. அது சிலுவைச் சுமையும் தாங்கும். 'பேய்களுக்கு ஒரு வாழ்க்கை'யில், புதி தரிசனம் பெற்று. பேயறைந்த கோலத்தில் 'மாத்தையா' வருகிறார். 'வேலி' யில் கரீமுக்குக் கொடுக்கவேண்டிய ஐந்து ரூபாவை ராஹ’லா சேலைத்தலைப்பில் முடிந்துகொள்ளுகிறாள்.
" 'வேட்டை'யில், குசவைக்குளம் தொடக்கம் மோட்டான் குளம் வரை மான் வேட்டையில் காதன் அலைகின்றான். அதன் படுதா நிழலாக மட்டக்களப்பு மாநிலத்தின் வடமேற்கு எல்லையின் அழகுகள் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களுடைய மன அவலங்களும் சித்திரிக்கப்படுகின்றன. உழைப்பு வெற்றியின் எதிர் நிகழ்வாக ஊழைச் சதையின் காமம் சொறிநாயாக ஏழையின் மானத்தைக் குதறுகின்றது. கண்ணாடி நொருக்கலிலே பட்டுத்தெறிக்கும் ஒளிக்கதிர் நம் ஊனக் கண்களை மறைத்து, ஞானக் கண்ணைத் திறக்கின்றது.!"
காளியப்பரின் இயலாமையை விளங்கிக்கொள்ளாது '....ஆரோ தீட்டுக்காரியும் இஞ்செய் வந்திட்டாடி....' என்று பொன்னம்மா பாமரத்தனமாக ஒப்பாரி வைக்கிறாள். 'சோத்துக்கடையின் அடுப்படி ஆளைப்போல ஒருவன்....' என்பது 'மருத்துவம்' கதையில் யாருமே கவனிக்க இயலாத மெல்லிய கோடு. 'எப்படியும் நிப்பாட்டி என்னெ ஒரு கை புடிச்சுட்றுவானுகள்' என்று மீராவெல்வை அவ்வா உம்மா என்கிற மாமி கடைசி வரையிலும் சுமக்கும் நம்பிக்கையிலேதான் எத்தனை சுருதிகள்? இவை, தர்மாவேசங்கொண்ட ஓர் எழுத்தாளனின் கோபத்தை-முனிவை-ஆத்திரத்தை சுட்டெரிக்கும் கங்குகளாக அல்லாமல், பூத்த நீறாகக் கோலங்காட்ட உதவுகின்றனவா? 'சன்மார்க்கம்'- சமூக அநீதிகளுக்கு எதிராக நிர்வாண அக்கினியைக் கக்குகின்றது. 'கடுகு' அரசியல் பிரச்சினைகளையும் பிரஸ்தாபிக்கின்றது. சிறுவனின் நனவோட்டமான இக்கதையிலே, அவலங்களின் மத்தியிலே ஹனிபா மனித நேயத்தைத் தேடியிருக்கிறார். 'தமிழண்ட ஆஸ்பத்திரி. எல்லாம் புலிகள்' என்று மருத்துவச்சி விஞ்ஞானஞ்செய்வது இயல்பு 'சோனிகளுக்குப் புத்தியில்ல' என்று தாட்சண்யம் பார்க்காமல் சவுக்கடி கொடுக்கும் ஹனிபா குறுகிய வட்டங்களுக்கு அப்பாலான தேடலில் ஈடுபடும் சத்திய கலைஞராகவுந் தோன்றுகின்றார். கதைகளின் பிரகரணங்களையும், தரிசனங்களையும் தொட்டுக்காட்டுவதைப் புத்திபூர்வமாகத் தவிர்க்கின்றேன். என் சுவைத் தளத்தில் நின்று வாசகனை ஆற்றுப்படுத்துதல் அவனுடைய சுதர்மத்தை அவமதிப்பதும் ஆகும் சுயதேட்டமாகக் கிட்டும் இன்பத்தில் சுவை அலாதியானது. அஃது இதன் வாசகர்களுக்குக் கிட்டுவதாக!
ஓட்டமாவடிச் சூழலிலே நடமாடும் மகா சாமாண்ய மனிதர்களிலே அவர்கள் பயிலும் தமிழிலே, மனிதத்துவத்தின் சத்தியம்-தர்மம் என்ற இரு முகங்களையும் தரிசிக்க நடாத்தும் ஓர் இலக்கியத் தேடலாகவும் இத்தொகுதியிலுள்ள பல கதைகள் அமைந்துள்ளன. தேடுபவனுக்குத்தான் விடுதலை வாய்க்கும். 'தள்ளம்பாடாத' நிதான வெறி ஹனிபாவின் எழுத்திலே மண்டிக்கிடக்கிறது. ஏழைப்பட்ட பாமர மக்களுக்கும் விமுக்தி கிடைத்தல் வேண்டுமென்கிற மானுஷ“க வெறி. மட்டக்களப்பு மாநிலத்தின் வாழ்க்கையை முழுமையாக அல்லாவிட்டாலும், வலு நேர்மையாகத் தரிசிக்க விழையும் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுதான். தனித்தனி மனிதனிலே பொதிந்துள்ள மானுஷ“கத்தின் தேலிலே இலக்கியம் அவாவும் சமஸ்தத்தைத் தரிசிக்கலாம் என்கிற பிரக்ஞையுடன் அமைந்துள்ள வார்ப்புகளும் இதில் உண்டு. இந்த ஆரோக்கியமான பிரக்ஞை ஹனிபாவின் எழுத்து ஆற்றலின் Plus Point ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளம் முஸ்லிம் கதைஞர்களுடைய பங்களிப்பையும் உள்ளடக்கியதுதான்' என்கிற உண்மையை உரத்து ஒலிப்பதற்கு 'மக்கத்துச் சால்வை' நிகர்த்த ஒரு சிறுகதைத் தொகுதி இதுவரை வெளிவந்திலது. உண்மை; வெறும் புகழ்ச்சியல்லை.
'என்னை என்னிலிருந்து மீட்டுத்தந்தவர்' என்று ஹனிபா என்னைப்பற்றி எங்கேயோ எழுதியதாக ஞாபகம். அவை அடக்கமா? பாசக் குழைவோ? நான் அறியேன். ஆனால், முஸ்லிம் கதைஞருடைய கௌரவத்தினை மீட்டுத் தருவதையும் ஹனிபாவின் எழுத்துப் பணி உள்ளடக்கியுள்ளது என்பதை நான் மனசார அறிவேன். அவர் எழுத்துப் பணிகள் தொடர என் ஆசிகள்.
எஸ்.பொன்னுத்துரை.
East Wood 2122.
Australia
01.01.1992
* * *
கொடியேற்றம்
அந்த நாள்கள் பற்றிய நினைவுகளும், இந்தச் சிறுகதைத் தொகுப்பு வேலைகளிலே ஈடுபட்டிருக்கும்பொழுது, ஏன் வளைய வலம் வரவேண்டும்?
இரவின் ஏதோ ஒரு வேளையில் - அதை வைகறை என்றும் சொல்ல ஒண்ணா-உம்மா எழும்பிடுவா. குப்பிலாம்பின் துணையோடு உம்மாவின் தொழில் துவங்கும். நித்திரையில் ஊருறங்கும். அதனை ஒட்டில் களிமண்ணை 'தொம்' மென்று போட்டு உம்மா கலைப்பா. கொஞ்ச நேரத்தில் ஒட்டில் குந்திய களிமண் 'தொம்' அழகான சட்டியாக, பானையாக, குடமாக உருவெடுக்கும். அந்த அதிசயத்தை நாடியில் கை கொடுத்துப் பார்த்திருப்பென்.
அதிகாலை நான்கு மணிக்கே எழும்பிவிடும் அந்தப் பழக்ம் இன்றுவரை களிமண்ணைப்போலவே என்னில் ஒட்டிக்கொண்டது.
வாப்பாவும் உழைப்பாளிதான். அவரும் வெள்ளாப்பில் எழும்பிவிடுவார். ஊரிலிருந்து ஐந்து மைல்களுக்கப்பால் கடற்கரை. அங்கேதான் வாப்பா மீன் வாங்கிவரப் போவார்.
அவர் தோளில் கமுகு வைரத்தின் காத்தாடி. அதன் இரு முனைகளிலும் கயித்து உறியில் பிரம்புக் கூடைகள் தொங்கும். "கிறீச் கிறீச்' என்ற ஓசையுடன் வாப்பாவின் தோளில் கிடக்கும் காத்தாடியின் கூடைகளிரண்டும் கூத்துப் போடும்.
கூடைக்குள் பொன்னிவாகை இலையை நீக்குப்பார்த்தால்....வெள்ளித் துண்டுகளாக மீன்கள் 'மினுமினு'க்கும்.
எங்கள் ஊரில், அந்தக் காலத்தில், 'அஞ்சாப்பு'வரை படித்த நான்கைந்து பேரில் வாப்பாவும் ஒருவர். அவர் எழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். நாள் தவறாமல் பத்திரிகை வாசிப்பார்.... வாசலில் தெங்குகள். காற்றில் கலையும் ஓலைக் கீற்றுகளுக்கிடையில் நிலவு துண்டு துண்டாகத் தோட்டுப் பாயில் கோலம் போடும். காசீம் படைப்போர், சீறாப்புராணம், பெண்புத்திமாலை, ராஜநாயகம் என்றெல்லாம் வாப்பா ராகமெடுத்துப் படிப்பார். வாப்பாவைச் சுற்றிப் 'பொண்டுகள்' வட்டமிட்டிருப்பர்.... வாப்பாவிலும் பார்க்க அதிகமாக வாசிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு.
இத்தகைய பழக்கங்கள் என்னுள் ஒட்டிக்கொள்ள ஆதர்சமாக இருந்த உம்மா, வாப்பாவை இப்பொழுதும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்....'நீ' அதிஸ்டமில்லாதவன். 'உன்டெ முகத்திலெ முழிச்சிட்டுப் போனா நெத்தலியும் கிட்டாது' என்று எனது பிஞ்சுப்பருவத்திலேயே ஏன் நான் எனது பெற்றோரால் ஒதுக்கப்பட்டேன்? இதுவரை நான் விளங்கிக்கொள்ளாத பலவற்றுள் இதுவும் ஒன்று.
வாப்பா கடலிலும் கரண்டிக்கால் புதையும் குருத்து மணலிலும் உழைப்பு! உம்மா சூளையிலும் மணிக்கட்டு மறைக்கும் களிமண்ணிலும் உழைப்பு! எத்தகைய உழைப்பு! உடுத்த துணிக்கு மாற்றுத்துணியில்லாத உழைப்பு. வேளைக்குச் சோறு கிடைக்காத உழைப்பு.... ஒரு காலத்தில் எனக்கு அகோரப்பசி. எதைத் தின்றாலும் தின்ற கையோடு பசியெடுக்கும். கூளாப் பழம், நாவல் பழம், சுரவணியம் பழம், சிமிட்டிப் பழம் என்று எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள காட்டில் நிறைஞ்சிருக்கும். இதுகளுக்கெல்லாம் அடங்காத பசி கடைசியில், கொச்சிக்கா ஆலிம்டெ தோட்டத்திலெ இரண்டு கள்ள இளநீர் பறித்துக் குடிச்சாத்தான் அடங்கும். அது என்ன பசியோ?
ஊரில் வாப்பா ஒரு கட்சி. பெரிய்ய கட்சி. நான் வேறு கட்சி. வாப்பா உயிரோடிருக்கும் காலமெல்லாம் ஒரே கருத்து மோதல் தான். இந்தக் கருத்துச் சுதந்திரப் பசி வந்த பின்னர், நான் வயிற்றுப்பசி பற்றி நினைத்துப் பார்த்ததேயில்லை.
என் கிராமத்தில் ஊரறியப் பேரறியக் காதல் மணம் செய்து கொண்டவன் நான். இருந்தும், என் முதல் காதல் தோல்வியிலேயே முடிந்தது. வாலிப வயசின் பசி என்னை எழுத்தாளனாக்க உதவியதா? நான் எழுதிய காதல் கடிதங்கள் மகா கலாதியானவை. குத்துமதிப்பாக இரண்டாயிரத்துக்கு மேல். அவற்றைத் தொகுத்தால், இதைப் போலெ பல தொகுதிகள். அவை சுடச்சுட யாவாரமாகும்...
கடைசியில் இன்று எனக்கு வாழ்க்கைப்பட்டு எனது 'வள்'ளென்ற பாய்ச்சலுக்கெல்லாம் வழிவிட்டு நிற்கும் இவளிடம் - என் மனைவியிடம் அகப்பட்டுக் கொண்டேன். இந்த இல்லற வாழ்க்கைப்பற்றி, என்னைப் பார்க்கிலும் அவளுக்கே உரித்து அதிகம் இருக்கி என்று நினைப்பது என் சுபாவம்.
தமிழ் ஆசரியனாக வாழ்வைத் தொடங்கவே ஆசைப்பட்டேன். அரசியல் குரோதங்கள் எனது ஆசையின் கதவுகளை இழுத்துச் சாத்தியது. அன்று எனக்கு வீசிய துரும்புகளின் எச்ச சொச்சங்களை இன்று எனது பிள்ளைகளுக்கும் வீசுகிறார்கள்.
மனிதர்கள் ஓர் அரசியல் பிராணி என்று ஒரு தத்துவ ஞானி எழுதி வைத்திருக்கிறானாம். சமூகப் பிரக்ஞையின் ச மக அநீதிகளக்கு எதிராகப் போராடி மானுஷ“க தர்மங்களை வென்றெடுக்கவேண்டும் என்ற பிரக்ஞையின்-செயற்பாட்டுக்கு ஏற்ற கருவி அரசியல் என்று நான் நினைத்த காலமும் உண்டு.
அரசியல் பேசுவதற்க நல்லது வஸ்த்து-நிஷான்! இனி இல்லையென்ற மஸ்த்துங்கூட... அகங்கார வழிபாடுகள்!... சுடலை ஞானந்தான் எச்சில்!
என்னைச் சூழவும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்கள், அறியாமையோடும் வறுமையோடும் வானம்பார்த்த பூமியை வைத்துக்கொண்டு மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்மார் நடாத்துகின்ற அரசியல் புரோக்கர்கள் ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமோ நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய மானுஷ’கத்தினைத் தரிசிப்பது தான் என் எழுத்துப் பணி. 'சன்மார்க்கம்' கதை பிரசுரமான காலத்திலேயே சிலர் 'ஹனிபாடெ கையெ முறிச்சிப் போடணும்' என்றும் சொம்பினார்களாம். 'மருத்துவம்' கதையிலே வரும் டாக்டர் தன் வசமுள்ள 'குறடு' கொண்டு என் இரண்டு பற்களையாவது பிடுங்கிவிடவேண்டும் என்று கர்விக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'சமூகப் பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்து ஊழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்துவிடுவது சாத்தியமே.
எழுத்தாளனுடைய வாழ்க்கை முழுத்துவம் பற்றிய தேடலே... இந்தத் தேடலிலே வெற்றி இலேசில் வாய்த்து விடுவதில்லை. வாழ்வின் நாணயம், ரஷனையைப் பெருக்கும் வாசிப்பு, தொடர்ந்த பயிற்சி எனப் பல வந்து பொருந்தவேண்டும்.
குறுக்கு வழிகளும் உண்டு. ஒரு அணியாகத் திரண்டு கொண்டு களத்தில் இறங்க வேண்டும். அப்பொழுது நாம் ஒருவரை ஒருவர் மேதாவியாக்கி, ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து.... ஆ! என்னெ சுகம். அந்த சுகம் இந்தச் சுகமும் ஒருவகை போதைதான். போதையில் எனக்கு நம்பிக்கையில்லை.
வாழ்கையை கலாபோதையுடன் பார்ப்பதெல்லாம் பாவலா. நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் கூட கதைகளாக வடிக்கத் தயங்கினேன். நான் அனுபவித்தவற்றையே எழுதுகிறேன். என் அனுபவம் சத்தியம் என்றால், என் எழுத்தும் சத்தியக் கோலம் புனையும்.
இன்று, எழுதாமல் வீணாகிப்போன நாட்களை எண்ணித் துக்கிக்கின்றேன். என் மனதைக் குடைந்துகொண்டிருக்கும் சங்கதிகளிலே பத்து வீதந்தானும் நான் எழுத்திலே கொண்டு வரவில்லையே என்ற ஆதங்கம் என்னை உதைக்கின்றது. என் மனத்திலே நாளும் நிதமும் உருண்டு புரளும் என் கிராமத்தின் மகா சாமன்யர்களான மகா புருஷர்களை கதா மாந்தராக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லியும், என்னை நச்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நச்சரிப்புக்கு மசிவதையும் என் வாழ்க்கையாக்குவேன்.
ஈழத்து இலக்கிய வயலிலே பரஸ்பர முகஸ்துதிகளே இலக்கிய விமர்சனம் எனச் செலாவணியாகும் அநியாயம் நீண்ட காலமாக நடைபெறுகின்றது. ஒரு திறமையின்மையைக் கொலுவிருக்கச் செய்வதற்கு எத்தனை திறமைகள் மறுதலிக்கப்படுகின்றன? இந்த அனாசாராங்களையும் அநியாயங்களையும் வென்று, சிலுவை சுமக்கப் பிறந்தவன் கலைஞன். அதுதான் அவன் கேட்டுவந்த வரம். அவன் தன்னைத் தானே எரித்துக்கொண்டு, ஒளியுடன் ஒன்றுதலே தர்மம்.
அரைக்க்கம்பத்தில் கொடி!
வாழ்வின் ஆரவாரங்களினின்றும் ஒரு கணம் விலகி நிற்கிறேன்.
மோனத் தவமியற்றும் தருணம்;
அங்கே எஸ்.பொ. என்கின்ற ஆசான், பித்தன் என்கின்ற முன்னோடி, எனது கதைத் தொகுதியைக் காண வேண்டுமென்று-என்னைக் காரியத்தில் இறக்கிவிட்ட அன்பன் அன்புமணி, என் கதைகளைப் பிறந்த மேனியாகப் பிரசுரித்து உற்சாகம் தந்த இன்ஷான் லத்தீப், இளம்பிறை எம்.ஏ.றகுமான், வீரகேசரி ராஜகோபால்....
எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியப் பெருந்தகைகள் சாம்பல்தீவு செல்லத்துரை, பங்குடாவெளி விநாயமூர்த்தி மருதமுனை ஹபீப் முஹம்மது, கல்முனைக்குடி ஆதம்பாவா, ஓட்டமாவடி அப்துல்காதர்....
இவர்களோடு சேர்ந்து என் தாழ்விலும் வாழ்விலும் இருவர் பங்கேற்றார்கள். ஒருவர் ஆங்கில ஆசிரியர் கொழும்பு பரீத் அவர்கள்-மற்றவர் பறகஹதெனிய ஆங்கில கல்வி அதிகாரி எம்.பாளிஹு அவர்களாகும்...
இந்தத் தொகுதியை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் நான் இறங்கியபோது எனக்கருகிலிருந்து கதைகளைப் படித்து ஆலோசனைகள் வழங்கிய தமிழாசிரியர் கவிஞர் வீ.ஏ.ஜுனைத்....
எனது கதையை சிங்கள வாசகர்களுக்கு எத்திவைத்தும், அட்டைப் படத்தை அழகுற அமைத்தும் உதவிய மாத்தறை அன்பன் நிலார். என்.காஸ“ம் அவர்கள்... மரதங்கடவெல கே.எம்.நஸ“‘ அவர்கள்....
புனித வளனார் கத்தோலிக்க அச்சகத் தொழிலான அன்பர்கள்...மாவட்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன்....
இவர்கள் எல்லோரும் என் நெஞ்சில் நிறைந்தவர்கள்...
முடிவாக...
தமிழ்ச் சிறுகதைக்கு வளமூட்டிய அனைத்துப் பிரமாக்களுடைய சிருஷ்டிகளையும் படித்தபின்னர், இந்தத் தொகுதியைக் கொண்டுவரச் சற்றே தயக்கம்...
எஸ்.பொ. என்கின்ற ஆசான் இதுபற்றி என்ன நினைக்கின்றார் என்பதை அறியும் ஆவலும். பிறதேசங்களிலே சஞ்சரிப்பதை அவர் தமது வாழ்க்கையாக்கிய பிறகு, தொடர்பு அறுந்திருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களுடைய கலை இலக்கிய வாழ்க்கைக்குப் புதிய களங்கள் உருவாக்குவதிலே ஈடுபட்டிருக்கும் அவருடைய முகவரி 'அக்கினிக்குஞ்சு'வின் மூலம் கிடைத்தது. அவருடன் தொடர்புகொண்டு இதற்கு ஒரு முன்னீடு தரும்படி கேட்டேன். அவருடைய அங்கீகாரம் கிடைப்பதுபோல, அவர் முன்னீடு கிடைத்தது. அதற்காகவே இத்தொகுதி வெளிவரும் காலம் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஸ்.பொ. வைப்பற்றி நான் பிரஸ்தாபித்துத்தான் நீங்கள் அறியவேண்டுமா?
இதோ, உங்கள் வாசிப்புக்கு என் 'மக்கத்துச் சால்வை'. எஸ்.பொ.வின் மதிப்பீடு சரியா? அல்லது நமது சிறுகதைச் சித்தர் புதுமைப்பித்தன் சொன்னதுபோல மீன் குஞ்சா? தவளைக் குஞ்சா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்? காத்திருப்பது என் வேலையல்ல. இன்ஷா அல்லாஹ் என் எழுத்துப் பணி தொடரும்.
அன்புடன்
எஸ்.எல்.ஏம். ஹனிபா
'ஷனூபா மன்ஸ’ல்',
மூன்றாம் வட்டாராம்,
ஓட்டமாவடி,
இலங்கை-கி.மா.
01.06.1992.
................
உள்ளே.....
பக்கம்
1. வேலி 1
2. திசைகள் 12
3. சன்மார்க்கம் 19
4. தீட்டு 23
5. தபஸ் 30
6. மக்கத்துச் சால்வை 37
7. பொம்மைகள் 48
8. பேய்களுக்கு ஒரு வாழ்க்கை 54
9. ஒரு விமர்சனம் 59
10. கடுகு 67
11. பிறவிகள் 73
12. மருத்துவம் 80
13. மருமக்கள் தாயம் 88
14. சலனம் 97
15. வேட்டை 107
---------------------------------------------------
நன்றி
இன்ஸான்
இளம்பிறை
சுதந்திரன்
சுடர்
வீரகேசரி
சிந்தாமணி
பூரணி
கணையாழி
பாமிஸ்
றாவய (சிங்களம்).
------------------------------------------------------------
வேலி
இருள் திட்டுத் திட்டாக வானத்தை அடைத்துக் கொண்டது. இரவின் முற்பகுதி விரிந்து படர்ந்து, சயன மஞ்சப் பாடலை தொண்டைக்குழியில் வைத்து முணுமுணுக்கும் சாயல்.
"சே! என்னெண்டாலும் இப்பிடிச் கணங்கியிரிக்கப் படாது."
குற்ற உணர்வின் கூரியமுள் ராஹ’லாவின் நெஞ்சத்தை உறுத்தியது. அங்கமெல்லாம் வியர்வைப் பருக்கள் அள்ளிச் சொரிந்தன. கடப்பைத்தாண்டி உள்ளே வந்து, குடிசையைப் பார்க்கிறாள். இருளின் மோனத்திற்குள் ஒப்புக்கொடுத்து, தாலியறுந்தவளின் வாழ்க்கையைப் போன்று சாரமற்றுக் கிடப்பதாக அது தோன்றியது.
அனுதாப உணர்ச்சிகளை வெட்டிப்பிறந்து-இவ்வளவு காலமும் பேயுறக்கத்தில் ஆழ்ந்திருந்த பருவ உணர்ச்சிகள் சடைத்துக் கொண்டன.
'இன்டெய்க்கி மட்டும் குடியிலே இந்தெ விளக்குப் பத்தட்டும்.' மனம் தீர்மானம் எடுத்தது.
அவளுடைய காலடி ஓசையைக் கேட்டதும், குடிசைக்குள் உயிர்ப்பின் குரல்.
"ராயிலாவா?
"ஓம்...ஓம்...!"
"என்னெ இண்டெய்க்கி இவ்வளவுநேரம்?"
"என்னெ செய்யிறெ? நெடுகெ நேரத்தோடெ வரெ ஊட்டுக்காரன் அங்கெ விறகெடுத்துக் கட்டியா வெச்சிரிக்கான்?"
ராஹ’லா வெடுக்கெனப்பாஞ்சாள். தோட்டுப் பாய்க்குள் சுருண்டு கிடந்தவனுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
வேதனையை நெஞ்சத்தின் ஆழத்திலே புதைக்க எடுத்த எத்தனத்தில் காங்கை மிக்க ஒரு பெருமூச்சு....
முகத்தில் பொக்களமிட்டு வழிந்த வியர்வைக் காட்டை முன்றானையால் ஒத்தியெடுத்தவளுக்கு, தான் தேவையற்ற கொடூரத்தைத் தனது பதிலிலே குழைத்து விட்டதான ஓர் எண்ணமும் மெல்ல மெல்லக் கண்ணாமூச்சி காட்டியது.
கடமையின் உணர்ச்சியுடன் குடிசையின் விளக்கை ஏற்றினாள். ஊமை வெளிச்சம் பரவியது அந்த வெளிச்சத்தில் பாய்க்குள் சுருண்டு கிடந்த உருவத்தை ராஹ’லாவின் விழிகள் தேடின. அந்த உருவம் அந்நியமானதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஹ’லாவின் கணவன் என்ற ஸ்தானத்தை அந்த உருவந்தான் பூர்த்தி செய்து வருகின்றது.
எதிர்பாராத ஊற்றுக்கண்ணின் உடைவு;
பரிவின் கசிவு!
'பாவம்' என்று அவள் மனம் ஏங்கிற்று.
"உங்கெளுக்கு என்ன செய்து?"
சற்று முன்னர் நடந்த உரையாடலை அவன் முற்றாக மறந்து விடுகிறாள். தண்டித்த தாயின் மடியிலே பிஞ்சுக் கால்களால் உதைத்துக் 'கெம்மி' ஏறும் குழந்தைத்தனத்தில் அவன் மனம் இலேசாகியது.
"ராயிலா! இண்டெய்க்கி எனைக்கி காய்ச்சல்போலெ இரிக்கி. நெஞ்சிக்குளெயும் ஏதோ அடைக்கிற மாதிரி. எனைக்கி காய்ச்சல்போலெ இரிக்கி. நெஞ்சிக்குளெயும் ஏதோ அடைக்கிற மாதிரி. எனைக்கி ஏலாது. ஏன்டா கொஞ்செம்போலெ குறுணலெப் போட்டு கஞ்சி காச்சித்தா."
இத்தனை வார்த்தைகளையும் மலையைப் பிளந்தெடுத்த பாரிய பிரயத்தனத்துடன் தான் அவன் சொல்லி முடித்தான்.
'மாப்பிள்ளையின் சோக்குக்கு கஞ்சியா கேட்கிறது?' என்று ஏதாவது ஏளன வார்த்தை நறுக்கு வந்து விழுந்து விடுமோ என்றெ அச்சம் வேறு அவனைப் பீடித்துக் கொண்டது.
கடந்த ஆறேழு மாதங்களாக அவன் என்ன சொன்னாலும், செய்தாலும் சீறிப்பாய்வதென்பது அவளுக்கு இரண்டாஞ் சுபாவமாக வளர்ந்துள்ளது. ஆனால் இன்று வழக்கத்திற்கு சற்று மாறாக எதிர்வார்த்தை எதுவுமே பேசாது அவன் விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் அவள் கஞ்சி காய்ச்சத் தொடங்கினாள்.
நெருப்புப் பொறியை உள்வாங்கிய அடுப்பு புகையைக் கக்கத் தொடங்கியது. கண்களைக் கசக்கிக்கொண்டே அவள் வாயை உப்பி ஊதிக்கொண்டிருந்த முயற்சியின் பலிதமாக அடுப்பிலே நெருப்பு 'பகீ' ரெண்று பற்றியப் படர்ந்தது.
அத்தீக்குஞ்சின் பிரகாசத்தில் அவள் மேனி பொன்னெனப் பொலிவு காட்டி மிளிர்வதாக அவனுக்குத் தோன்றியது.
தன் ஒற்றைக்காலை நீட்டிக்கொண்டு அந்த மண் குடிசையின் சுவரில் சாய்ந்திருந்தான் ராஹ’லாவின் கணவன்.
நெஞ்சிலே வேதனையின் கனம். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
கழுத்தையும் தலையையும் தாங்கிக் கொண்டிருந்த தலையணை சுகத்தைக் கொடுத்தாலும், கண்களைப் பறிக்கும் மனைவியின் கொள்ளை அழகின் புதிய கோணப் பொலிவு அவன் நெஞ்சிலே நெருஞ்சிக் காட்டை வித்திக் கொண்டிருந்தது.
உலையிலே நெருப்பு விளைந்து நிலைத்ததும், ராஹ’லா குடிசையின் வீட்டுப்பகுதிக்குள் வந்தாள். அவளின் திருமணத்திற்கு வாங்கிய பூச்சிலுக்கும், 'வெல்வெற்' ரவிக்கையும் கட்டுப் பெட்டிக்குள் தேடுவாரற்றுக் கிடந்தன. புதிய வாஞ்சையுடன் அவற்றைக் கையிலெடுத்தவள், கயிற்றுக் கொடியில் உலரப் போட்டாள்.
வானத்தில் பிறைச்சந்திரன் எழும் அறிகுறியாக ஏதோ ஒரு வகை ஒளி படர்கின்றது. அவள் உள்ளத்திலும் இனந்தெரியாத, இன்னும் பிரகாசம் பெறாதா, ஒளியின் வீச்சு! மறுபடியும் ராஹ’லா உலையடியில் வந்து குந்தினாள். அவர்களுள் யாருமே பேசவில்லை. ஆனால் அந்த மனங்களிரண்டும் பேச்சுக்களிலும் பார்க்க இத்தகைய மௌனத்திலேயே அதிகமாக தங்களுடைய உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டன.
அரிசியை 'அரிக்கிமிலா'யிலே அரித்து உலையிலே போட்டுக் கலக்கத் தொடங்கினாள் ராஹ’லா.
அவனுடைய கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தன.
'ராஹ’லாவை ஒரு பெண்' என்று ஏக வசனத்தில் அறிமுகப்படுத்திவிட முடியாது. கொத்துக்குள் விளைந்த மாம்பழத்தின் அபூர்வ கவர்ச்சி அவளுடையது. முகத்திலே புன்னகை படரும் பொழுது, இடப்பக்கக் கன்னத்திலே சுழிந்து குமிழும் குழியின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் காலமெல்லாம்! அழகின் தனித்துவ முத்திரையைப் பொறிப்பதற்கு ஆண்டவன் தேர்ந்தெடுத்த பாலைவனப்பூ அவள் என்றுதான் அவனுக்கு இப்பொழுதும் தோன்றுகிறது.
மச்சி முறையான அவள் அழகிலே சொக்கி-தன் விடா முயற்சியான உழைப்பிலே கவர்ச்சி காட்டி அவளை அடைந்த பொழுது, உலகத்தின் செல்வமனைத்தும் தம் காலடிகளிலே குவிந்து கிடப்பதான பெருமையே அவனுக்கு ஏற்பட்டது.
ஒரு சுற்றுப் பருந்து, சில அங்குலம் வளர்ந்து விட்டதான பெருமிதம் அவனுக்கு. பெருமை அவன் கைக்குள் பிடிபடவேயில்லை. புதுமாப்பிள்ளை என்றெ முத்திரைச் சின்னமாகப் பலகார உமல்களைத் தோளிலே போட்டுக்கொண்டு கூலி வேலையாக காடு வெட்டித் திரும்பும் அவனைப் பார்க்கும் பொழுது, மனோராஜ்யம் ஒன்றின் சக்கரவர்த்தியாக அவன் வாழும் தனித்துவம் மிளிரும்.
வானவில்லின் கோலமயக்கம்; புல் நுனியில் நித்திலப் பொலிவு காட்டும் நீர்த்துளியின் கொள்ளை அழகு... இப்படித் தன் வாழ்க்கை அமையுமென்று ஆருடம் பார்க்கவோ கவித்துவமாகக் கற்பனை செய்யவோ இயலாத பாமரன் அவன்.
ஒரு தடவை காடு வெட்டப்போய் திரும்பிவந்தான். வலது காலை ஊன்றி நடப்பதற்குச் சிரமப்பட்டான். மரம் வெட்டும் பொழுது கிளையொன்று வந்து முழங்காலில் அடித்து விட்டது என்று சிரித்தபடியே சொன்னான். ராஹ’லாவின் மோகனப் புன்னகையே அதனை மாற்றிவிடக் கூடிய மருந்தென நம்பினான்போலும். நம்பிக்கையை உண்மை உலர்த்தி எடுத்தது. சீழுடன் புரையோடிய முழங்காற் புன் 'புளியந்தீவு ஆஸ்பத்திரி' என இரண்டு மாதங்கள் இழுத்தடித்து, அவன் வலதுகாலை துண்டித்து, நிரந்தர நோயாளியாக வீட்டின் தோட்டுப்பாயிலே கொண்டு வந்து சரித்தது. இவ் வைத்தியத்தில் அற்ப சொத்துக்களும் அவள் உடலில் மின்னிய 'பொன்னி'களும் கரைந்து போனதுதான் மிச்செம்.
கடைசியில் அரசாங்க வெம்புப் பூமியில் ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டு, கணவனை அதில் வாழச் செய்து, அவனுக்குத் துணையாக வாழ்வதிலே சகல சுகமும் காண முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழத் தலைப்பட்டாள் ராஹ’லா.
இளமையின் கனவுகளுக்கெல்லாம் பொருள் கண்டுவிட்டதான் பூரிப்பில் மிதந்தது கனவாக தன் கன்னிப் பருவத்தின் பூரிப்பை அம்மணமாக்கிய கூச்சம் மட்டுமே அடிநாக்கில் சுவைக்க, மனைவி என்ற போர்வைக்குள் தன்னைக் கவசப்படுத்திக் கொண்டு, விறகு பொறுக்கியும் விற்றும் சுய சம்பாத்தியம் தேடிக்கொள்ளும் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தியாயினாள்.
இந்த இடர்மிகு வாழ்க்கையிலே சில ஆண்டுகள் சிக்கி, இதழ் இதழாகப் பூட்டறுந்து, இற்ற பின்னர், இன்றுதான் பிரச்சினையின் காளாத்திரி பூதாரமாக எழுந்து நிற்கின்றது.
கஞ்சி உலை கொதித்துக் கொண்டிருக்கிறது. மனத்திலே அன்று நடந்த சம்பவங்களும் சூடு ஆறாத நிலையில் தகித்து தணல் விரித்து....படர்ந்தது.
துரவடிக்குப்போன ராஹ’லா கால் முகங்களைக் கழுவியவளாக விறகுக் கட்டை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அதவனின் அஸ்தமனத்திற்கு கீழ்வானில் செந்தூரக் கோலம் போடப்பட்டிருந்தது.
'இன்டைக்கி அலியார் வட்டவிதானட்டெ கொள்ளி போடுறெநாள்' என்றெ நினைவுதான் முதலில் எழுந்தது. அந்த வீட்டை நினைத்ததும் அவளை அறியாமலே ஒருவகைக் கூச்சத்தில் அவள் மேனி சிலிர்த்தது.
** இ.தொ. makkatu2.mtf**
** makkatu1.mtf ன் தொடர்ச்சி.
விறகைச் சமையல் கட்டுப்பக்கம் போட்டுவிட்டு கிணற்றில் நீளை அள்ளிப் பருகும் போதுதான் 'கரேச்' பக்கமிருந்து வட்ட விதானையார் வீட்டு 'ட்ரக்டர்' றைவர் கரீம் பிரசன்யமானான். அவன் அவளுடைய தரிசனத்திற்காகவும், அவள் அவனுடைய தரிசனத்திற்காகவும் காத்திருப்பது எட்டு மாத காலமாகப் பழகிவிட்டது. இருவருக்கும் இது தெரியும். இருவரும் இதுவரை இதை வார்த்தைகளில் வெளியிட்டதுமில்லை.
திறந்த 'கரேச்' கதவின் நீவினூடே பாய்ந்த ஒளிக்கீற்று ராஹ’லாவின் மேனிக்குத் தங்கமுலாம் பூசியது. சுருங்கிய இமைகளின் கோடியிலே விழிகளைப் புரட்டியபடி
"இவெங்கெ எங்கெ போனெயோ?" என்றாள்.
"பள்ளிறெ இண்டெய்க்கி அவெங்கெட நாரிசா. அதான் வட்டானையும் வூட்டுக்காரியும் போயிரிக்காங்கெ..."
அவன் கண்கள், அவள் அணிந்திருந்த ரவிக்கையையும் திமிறிப்புடைத்த குமரிமையின் கொள்ளைத் திரட்சியை காட்டிய மார்புகளை மேய்ந்து கொண்டிருக்க-அவன் உதடுகள் வெறுமனே பதில் சொல்லின.
தன்னைப் பற்றிய பூரண உணர்வு என்னும் மின்னல் தாக்குதலில், அவள் தன் உடலைத் தானே வாஞ்சையுடன் பார்த்துக் கொள்ளுகின்றாள். நான்கு வருடங்களாகத் தன் கணவனால் பூசிக்கப்படாது. அன்றலர்ந்த மலரின் வாளிப்புடன்-கடின கூலி வேலையில் மேலும் திடமும் உறுதியும் பெற்று....
நாணம்; மறுகணம் ஆவேசம்!
விழிகளால் அவன் தன்னை அம்மணமாக்கிப் பார்ப்பது விரசமானது என்ற எண்ணம் இன்று, அதிலே ஏதோ சுகம் வந்து ஓட்டுவதாக 'கிச்சா மூச்சம்!'
அந்நிலையில் யுகயுகாந்திரமான எண்ணம் எழுச்சிகளை அந்த விழிகளில் பரிமாறிக் கொள்ளுகின்றன.
மறதியிலே கிளைத்த சுவைப்பினைப் பிளந்து, பிரக்ஞையின் பிரசவம்.
குடிசையிலே கணவன் என்ற ஓர் உருவத்தின் மங்கலான நினைவு.
"கொள்ளி கொண்டாந்திருக்கென். வட்டானைக்கிட்டெச் சொல்லுங்கெ. சில்லறையிருந்தாத்தாங்கெ" வார்த்தைகள் தொண்டைக் குழியினின்றும் திக்கித்திக்கி எழுந்து மடிகின்றன.
"செரி! உள்ளலெவா!" என்று கதவை இன்னுஞ் சற்று சாத்தியபடி கரீம் 'கரேச்' சுக்குள் நுழைகின்றான்.
இளமையின் இன்பாநுபவத்தை வாழ்வின் கானலாகக் கண்டு நிற்கும் ராஹ’லாவின் ஒடுங்கிய உணர்வுகளை அவனைக் காணும்போதெல்லாம் தளம்பத்தொடங்கின. ஆரம்பத்தில் அவள் கணவனின் கருணை முகமும்-இயலாமையும் இணைந்து அந்த எண்ண அலைகளுக்கு அரணிட்டன.
காலப்போக்கில்...
அவள் கணவனோடு உறவாடும்போதெல்லாம், நினைவில் குமிழ்விடும் இவனின் அழகிய முகமும், சதா புன்னகையும் அவள் மனதிலே குறுக்கு இழைகளாக இணையத் தொடங்கின.
அரண் முற்றாகத் தளர்ந்துவிட்டது. கனவு நிலையில் தன் உடலை அவனுக்கு ஒப்படைத்து அனுபவிக்கும் ஊமை இன்பம் உடலிலே பரவத் தொடங்கி....
அதுவே இன்பம் என்ற நிலையும், இன்று அரிதாக வாய்த்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கரீம் தன்னை அழைப்பதை அவள் உணர்வாள். அவனுடைய விருப்பத்தின் சுவட்டிலே நடப்பவளைப்போல 'கரேச்'சுக்குள் நுழைந்தாள்.
உள்ளே மௌனத்தின் மோனமே இருவரையும் இணைத்தது. ஒருவர் மூச்சு மற்றவர்மீது படும் அளவுக்கு நெருக்கம். அவளுடைய வாலிபப் பூரிப்பை விழிகளாலேயே பருகிவிடலாம் என்ற ஆவேசம்கொண்டவனைப்போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்னது விழுங்கிவிங்கெபோலெ" என்றவளின் முகத்தில் புன்னகை கோலமிடுகின்றது.
ராயிலா! உன்டெ நிலமெ எனைக்கித் தெரியும். எத்தினையோ தரம் உனக்கிட்டக் கதய்க்கப் பாத்தென் முடியல்லெ. இன்டெய்க்கித்தான் சந்தப்பெம் கிடைச்சிது. சம்மதமிண்டாச் செல்லு."
சஞ்சலமும் துயரமும் நிறைந்த தன் வாழ்க்கை எனும் சிறையிலிருந்து மீளவேண்டுமென்ற நினைவை இவ்வளவு காலமும் கரீமின் பார்வையே ஊட்டி வந்தன. மூன்றாம் மனிதனாக நின்றவன் இரண்டாம் மனிதனாக அருகில் நின்று பேசம் பொழுது நம்பிக்கை அவள் மனதில் பற்றிப் படருகிறது.
"அல்லாவுக்கு மத்திச்செமா என்னெக் கைவிட மாட்டீங்கென்டா புறகாலெ வாறென்."
அந்த வார்த்தைகள் அவளின் அதரங்களைப் பிளந்து கொண்டு வெளிப்போயின. அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
"ராயிலா!" என்று கூறிக்கொண்டே நீண்டநாளைய வேட்கையைப் பூர்த்தி செய்யும் ஆசை கனயவே அவளைத் தனது அணைப்பிற்குள் கரீம் முற்றாகச் சிறை வைத்தான். அந்த அணைப்பில் தன்னை இழந்த அவள், இடையிலிருந்து கீழாக ஊர்ந்த அவன் கையை விலக்கும் சக்தியை இழந்தாள். வீதியில் யாரே கதைக்கும் சப்தம். தாங்கள் இந்த 'கராச்' மனித சங்காரமற்ற உலகமல்ல என்பதை உணரச் செய்தது.
"இருந்தாப்லெ வட்டானெ வந்திட்டா" ராஹ’லா தயங்கினாள்.
"நானும் மறந்திட்டேன். வாற நேரந்தான். கொள்ளிக் காசியெ அவருக்கிட்டெ வாங்கு. அப்பெதான் அவங்களும் ஒண்டும் நினைக்கெமாட்டாங்கெ... சிலவுக்கு இந்த அஞ்சிரூவா செக்சிக்கெ..." என கரீம் ஐந்து ரூபா நோட்டு ஒன்றை நீட்டினான். ராஹ’லா அதற்கும் தயங்கினாள்.
"இனி நான் உழைக்கிறதெல்லாம் உனக்குத்தானெ. இகெ வெச்சிக்கெ..." அவன் கைக்குள் திணித்தான். அவளும் பெற்றுக் கொண்டாள்.
"ராயிலா! மறந்திடாதெ. செரியா விடியச்சாமக் கோச்சி கூவக்கொளெ உன்னெ நான் ஆலயடியிலெ காத்திருப்பேன்."
அசையாத சிலையாக இத்தனைக்கும் விட்டுக் கொடுத்தவள். சம்மதத்திற்க அடையாளமாக தலையைத் தொங்கப்போட்டு கொண்டாள். கால்கள் நடக்கத் தொடங்கின.
கஞ்சி உலை கீழே இறக்கப்பட்டது. தாலாப்பீங்கானில் கஞ்சியை ஊற்றி ஆற்றும்போதே-காகித ஆலையின் 'சைரன்' ஒலி அந்த பிரதேசத்தையெல்லாம் நிறைத்துக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த கணவனை ராஹ’லா "இஞ்செப்பாருங்கெ. பத்து மணியாப் போச்சிது. எழும்பிக் கஞ்சியெக் குடிச்சிட்டுப் படுங்கெ...."
ஓலைச் செத்தையில் சாய்ந்தவாறு-கஞ்சியை உறிஞ்சிக் குடித்துக்கொண்டே-
"ராஹ’லா என்னாலெ உனக்கு எம்பட்டுக் கஸ்டம் தான். ஆண்டவன் நெடுகிலும் கஸ்டத்தெ தரடியா போறான். ஒரு நாளைக்கு உன்டெ பொழுதும் விடிஞ்சிடும்."
கதைத்துக் கொண்டே கைகளைக் கழுவியவன் அதே பாயிலெ சுருண்டு கொள்கிறான்.
குப்பி விளக்க புகை சுக்கி எரிந்துகொண்டிருந்தது. உச்சிக்கு வந்துவீட்ட நிலவைக் கருமேகக் குவியல் ஒன்று மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டு வந்தது.
வெள்ளைப்பட்டால் பந்தல் இழுத்தாற்போல பனிப்படலம் எங்கும் பரவிக் கிடந்தது.
மங்களகரமான காலைப் பொழுதின் உதயத்திற்கு பறவையினங்களின் முதலாவது சுருதி ராஹ’லாவின் செவிகளில் துல்லியமாக விழுந்தது.
துரவடிக்குப் போய் காலைக் கடனை முடித்துக்கொண்டாள்.
ஆலையடியில் கரீம் தனக்காகக் காத்திருக்கும் காட்சி.
அவள் மனத்தில் நில பாவாடை விரித்தது.
பாயின் அடியில் கிடந்த பூச்சிலுக்குச் சேலையும் 'வெல்வெற்' ரவிக்கையும் அணிந்து, தன் அழகின் பூரணத்துவத்தை ஒரு முறை பார்த்துக் கொள்ளுகின்றாள்.
இறுதியாக கதவிடுக்கினூடே ஒரு சம்பிரதாயமான பார்வை-நோயின் அழுத்தத்தால் சூம்பிப்போன கரங்களிரெண்டும் மேல் நோக்கி இறைஞ்சிய வண்ணமிருந்தன. கண்களில் பெருகிய நீர்த்துளிகள் கன்னக் காதுப்புகளில் சரம் கோத்து பின்னழுவிக் கொண்டிருக்க...அவனுடைய உர்ந்துபோன அதரங்களைப் பிளந்து கொண்டு....
"படைச்செறப்பே! நான் தெரிஞ்சிம் தெரியாமலும் செய்த பாவத்தையெல்லாம் பொறுத்து என்னெ நரகத்தெ விட்டு தூரப்படுத்து றகுமானெ! என்டெ மனவி என்னாலெ படுறெ கஸ்டத்தயெல்லாம் குறைச்சி, அவளுக்காவது இந்த உலகத்திலெ நல்ல வாழ்வெ கொடு றஹ்மானே!"
நின்ற நிலையில் தன் கால்கள் வேர்கள் பாய்ச்சி விட்டன போன்று ராஹ’லாவுக்குத் தோன்றியது.
புழுப்போலாகி வாழ்வின் சகதியில் நெளியும் நிலையிலும் அளவற்ற அன்பைச் சொரியும் கணவனை நினைக்கும்போது....
அந்நிலையில் புதிய துணிவும் வைராக்கியமும்.
அலியார் வட்டவிதானையாரின் வீட்டிற்குப் போனால், கரீமுக்கு கொடுக்கவேண்டிய ஐந்து ரூபாய் நோட்டைச் சேலைத் தலைப்பிலே முடிந்து கொண்டாள்.
பழைய பானை, புதிதாக அவள் மூட்டிய உலையிலே ஏறி அமர்ந்தது.
- 1970 -
.........
திசைகள்
மதங்கொண்ட யானைகள் திரண்டெழுந்து செல்வதைப்போல மாந்தராறு தனது முழு உக்ரத்தையும் வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருந்தது.
ஆங்காங்கே எழும் சுழிகளில் கண்களை நிலைகுத்தி நின்ற மாணிக்கம் ஏதோ நினைவுக்கு வந்தவனாக வெற்றிலைக் குட்டானைத் தலையில் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கினான்.
உடலின் பலத்தையெல்லாம் கைகளுக்கனுப்பி, அவன் ஆற்று நீரைப் பின்னுக்குத் தள்ளி நீந்தத் தொடங்கிய கண நேரத்திற்கெல்லாம் திடீரெனத் தோன்றிய பெருஞ் சுழியொன்று அவனைத் திக்குமுக்காடச் செய்தது.
"முருகா!" பெருமூச்சுடன் வெளிவந்த அந்த வார்த்தையின் உந்துதல் அவனக்குப் புதிய தெம்பையும் பலத்தையும் கொடுத்திருக்கவேண்டும். நான்கு கை எறிதலில் அவன் ஆற்றின் மறுகரையை எட்டினான்.
விலா எலும்புகள் உப்பிப் புடைக்க அவனுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அந்த பணற்பரப்பில் அவன் 'சடா'ரென விழுந்தான். இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து நீரைப் பிழிந்துவிட்டு, முகம், தலை என்று ஒரு தடவை துடைத்துவிட்டான்.
தலையில் பவித்திரப் படுத்தியிருந்த வெற்றிலைக்குட்டான் கைக்கு மாறியது.
வெற்றிலையோடு புகையிலையும் சுண்ணாம்பும் நனைந்து 'பிசுபிசு'த்துப்போயின. அருவருப்பை ஊட்டினாலும் குத்து மதிப்பில் அள்ளிக் குதப்பிக்கொண்டான்.
அவ்விடத்தை விட்டும் எழும்பும்போது மீண்டும் ஒரு முறை தான் கட்டியிருந்த துண்டை முறுக்கிவிட்டு தோளில் போர்த்திக்கொண்டான். பெருமழையில் வீதியெல்லாம் நாய் கடித்துப்போட்ட தோல்வாரைப்போல....
போதாதற்கு வண்டில் பட்டம்வேறு வீதியை வெட்டி வெட்டித் தின்றுகிடந்தது.
கருங்கல்லும் கிறவல் உடைசல்களும் அவன் கால்களைக் குத்தின.
'பெருமானே! எப்பதான் ஊட்ட போறயோ?' எண்ணும்போதே அவன் மனவானில் மனைவியும் அவன் குஞ்சு குருமான்களும் ஒருமுறை நினைவுச் சொடுக்கில் மின்னினார்கள்.
மூக்கர் கல் சந்தியில் ஏறி - அவன் கால்கள் இறக்கத்தில் மிதக்கும்போது- கிழக்கே செல்லும் சாமான் கோச்சியின் சப்தம் அவன் காதுகளைக் கடித்தது.
கால்களை எட்டிப்போடத் தொடங்கினான்.
இருள் அரக்கியின் கரிய போர்வையின் அரவனைப்பிற்குள் வயல்வெளி கிடந்தது.
"டேய்! யார்ராலெ?" இருட்டில் வந்த உருவத்தோடு முட்டிக்கொண்டே முணுமுணுத்துக் கொள்கிறான்.
"ஆ! நம்மெடெ முஸ்தாக்காவா? இந்தெ நேரத்திலெ எங்கடாக்கா?" அளவுகடந்த களைப்பின் தொய்வு அவன் கேள்வியில் இழுபட்டது.
"மாணிக்கன்! நான் மயிலெவட்டவானுக்கெ போறென். பகல் இஞ்செ அத்துல்ஹமீதிடெ கடையிலெ குடைய அயத்து வெச்சிட்டேன். அதிரிக்கெ ஆத்திலெ தண்ணி எப்பிடிப் பம்பலோ?"
"அதென்னத்தெ போசிறாய். இந்தெ மழை மனிசனெ அழிக்க வந்தாப்லெ இலுவா இரிக்கி. ஆறு தமாராப் போவுது. நான் நம்பெல்லெ இந்தெ நாளயிலெ வானம் வெளிக்குமெண்டு."
"அதானெ மூணுமாசமாப் பேயுதெ. சனியன் புடிச்செவானம். இந்தெக் கிழம உச்சிவடக்கல் அவுலியாடெ பேராலெ கந்தூரி குடுப்போம் என்றிரிக்கெம்."
அவர்களின் கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போலெ வானத்தின் ஒரு மூலையிலே 'பளீர்' என்ற மின்னல் கம்பிகளின் சுடர் மாணிக்கத்தின் கண்களை மூடி மூடித் திறக்கச்செய்தன. தொடர்ந்து அந்த மூலையே இடிந்து விழுவதைப்போன்ற பேரிசைச்சலுடன்...
அந்த இடியோசையில் முஸ்தவாக்கா சொன்னவைகள் அவனுக்கு விளங்கவில்லை போலும். அவன் கால்கள் மீண்டும் வேகமாக நடைபோடத்தொடங்கின.
நீர் கொழுத்த புகாரிக்குள் தன்னை ஒப்புக்கொடுத்த சந்திரன் சோகை பிடித்த பெண்ணைப்போலெ....
எங்கிருந்தோ கூவிய சாமக் கோழியைத் தொடர்ந்து இன்னும் சில கூவல்கள்....
'வீட்டெ போகெ விடிஞ்சிடும்' மனத்தில் எண்ணிக்கொண்டே போடியாரின் கேற்றில் நின்றவண்ணம் குரல் விட்டான்.
"ஆரெது? மாணிக்கமா?" அந்த மாரிகால தூக்கக் கலக்கத்திலும் அவரின் செவிகள் அவன் குரலைக்கொண்டே அடையாளம் காட்டின.
சாவிக் கொல்லையைத் தலைமாட்டிற்குள்ளிருந்து எடுத்தவர் போர்டிக்கோ கதவைத் திறக்கிறார். அவரின் கையிலிருந்த 'டோர்ச்' அவன் கால்களில் ஒளியைத் துப்புகிறது.
"என்னெ மாணிக்கன் ஆத்திலெ தண்ணி எப்பெடி? சூட்டடியிலே தண்ணி ஏறிரிக்கா?" போடியார் எதார்த்தமான விசயத்தில் இறங்கினார்.
மாணிக்கம் மங்கலான நிழலில் அவர் முகத்தைப் பேந்தி பேந்திப் பார்த்தான். 'சூடு' அடிக்கவேண்டும் என்ற ஆவல் முகத்தை ஆட்கொண்டிருப்பதான உணர்வு அவன் உள்ளத்தைத் தொட்டது.
அந்தக் கணத்திலிருந்து அவனுள் புரியாத வேதனையும் வேக்காடும் முடிளகொண்டது.
விதை விதைத்தவன் அவன்தானே!
"களத்தடியிலெ முழங்கால் தண்ணி. நாமெ இந்தெ நாளையிலெ சூடடிச்சாப்லெதான்." வெறுப்பு விரக்தியின் உருவில்.
"மெய்தான் துவக்கெங்கே?"
மாணிக்கத்தின் செவிகளை நாகம் தீண்டியதைப் போலெ, அடிநாக்கு மேல் முரசுடன் ஒட்டிக்கொண்டது. அவன் பேசமுடியாமல் திணறிக்கொண்டே-
"புரையிலெ எடுத்துவைச்சாப்லெ"
"பளீர்! பளீர்!"
போடியாரின் கை அவன் கன்னங்களில் அறைந்து ஓய்கின்றது.
"பறநாயெ உனக்கு மண்டையிலெ களிமண்ணாடா? வளிசெக்கூதிரெ மகன்!" அந்த வார்தைகள் போடியாரின் மனைவியும் தூக்கக் கிறக்கத்திலிருந்து எழும்பியது.
திறந்திருந்த கதவினூடாக அவள் கணவனையும் மாணிக்கத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு அடுப்பங்கரையை நோக்கினாள். அந்த வேளையில் அவர் மாணிக்கத்தை அப்படிச் சினந்து ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை.
மாணிக்கம் மூக்கன் போடியாரின் முல்லைக்காரன் என்றுமட்டும் சொல்லமுடியாது. போடியாரின் அந்தரங்கத்துக்குவப்பான சகல காரியங்களிலும் அவன் பங்கும் உண்டு. அவன் போடியாரிடன் 'முல்லைக்கார'னாக வந்த நாட்களில் ஓடிஆடித் திரிந்த அவரின் ஒரே செல்வப் புதல்வன் இன்னும் சிலநாட்களில் தந்தையாகப் போகிறான். இடையில் இருபத்-திரண்டு வருடங்கள்! அவனைப் பொறுத்த வரையில் இருபத்திரண்டு நாட்கள்தான்!
போடியாருக்கு அவன்மீது சினம் வெடிக்கும்போதெல்லாம் அவரின் கையிலிருக்கும் எந்தெ ஆயுதமானாலும் அவனடையப் பதம் பார்க்கத் தவறாது.
உலுமுத்தம் வரிச்சி, வேலைக்காரன் கம்பு, மண்வெட்டிப்பிடி என்று அவனுடலை அள்ளிக் கொஞ்சும். அந்தக் காயங்கள் மாறுவதற்கு முன்னரே அவன் அந்தச் சம்பவங்களை மறந்துபோய்விடுவான்.
எவ்வளவு பெரிய்ய மனம் அவனுக்கு? ஆனால் அவன் எப்படி உழைத்தாலும் திருப்தி காணாதவொரு சுபாவம் போடியாருக்கு. போடியாரின் மனம் மாணிக்கத்தையும் துவக்கையும நினைந்து நினைந்து புகை கக்கியதினால்- முகம் சிவப்பேறி - சினம் வெடிக்கும் தருணத்தை குறி பார்த்துக்கொண்டிருந்தது.
'குடையை எடுத்துக்கிட்டு சந்தெப்பக்கம் போவெம். ராவெல்லாம் பெஞ்செ மழையிலெ, சூடெலாம் அடிச்சிட்டுப் போனாலும் போயிரிக்கிம்'.
குடையின் போர்வைக்குள் உடம்பை ஒப்புக்கொடுத்தவராக நடை பயில்கிறார் மூக்கன் போடியார். அவர் வீதயில் இறங்கியதுமே அவரைத் தேடியவராக அவரின் வலது கையான அவக்கன் போடியாரின் தரிசனமும் சித்தித்தது.
"போடியார் புளியடித்துறப்பக்கம் ஒரு நட போவெம். வெள்ளம் எப்பிடிண்டு பாப்பெமெ." மூக்கன் போடியாரின் நாசித்துவாரங்கள் புடைத்துச் சரிந்தது.
"போய்ப் பார்த்து என்னதான் செய்யப்போறம். வானத்தை மறைச்சி பந்தலா போடப்போறம்."
அவக்கன் போடியாரின் சாரன் முழங்காலைச் சுற்றிக் கொள்ள-தோளில் கிடந்த துவாய் தலையைச் சுற்றிக்கொள்கிறது.
நுங்கும் நுரையுரமாகப் பொங்கி வழிந்துசெல்லும் ஆற்றின்மீது மிதந்துசெல்லும் உப்பட்டிகளைக் கண்டதும்
"சேய்! என்னெ மசிரு மழையிது. ஒவ்வொரு உப்பட்டியிலெயும் நாலு மரைக்கா நெல்லிலுவா போவுது. இந்தெ மாரிக்கு மரைக்கால் பதினைஞ்சிக்கு விக்கலாமே!" இதயம் மறுகி ஆலாய்ப் பறந்தது.
அன்றெல்லாம் அப்பிரதேசம் கார்மேகத்தின் அணைப்புக்குள்ளாகி...இரவோடு இருளாக...
வாடியில் தவைந்துவிட்ட கணவன்மார்களையும் பிள்ளைகளையும் எண்ணிக் கலங்கி அக்கிராமத்தின் சந்து, பொந்துகளிலெல்லாம் சிணுங்கல்களும் கூடவே கண்ர் மணிகளும் தெறிக்கத்தொடங்கின.
மோட்டு வளையில் துணிகளில் சில்லறைக் காசுகளும் பச்சை அரிசியும் காணிக்கையாகத் தொங்கத் தொடங்கின.
இரண்டு நாள்கள் அடைமழையில் கரைந்தன.
மூன்றாம் நாள் ஒரு என்ஜின் வள்ளம் அந்தக் கிராமத்தின் சில மனித மூட்டைகளைச் சுமந்த்வண்ணம் வயல் வெளியை நோக்கி நீரைக் கிழித்துக்கொண்டு செல்கிறது.
அங்கே சோகத்தின் நிழலாய் மூக்கன் போடியார்.
இரண்டு நாள்களாக எதையோ பறிகொடுத்த பதறலில்-வெள்ளத்தில் கரையேறிய கயல்போல் துடிதுடித்தது.
'மாணிக்கன் எங்கெ போனான்? ஆண்டவன்தான் அவனக் காக்கணும்.' இவரைப்போலவே அந்த வள்ளத்தில் பயணம்செல்லும் போடிமார்கள் இறைவனைப் பக்திபூர்வமான தேடலில் தரிசனம் காணும் முயற்சியில் இறங்குகிறார்கள். ஓடிக்கொண்டிருந்த அந்த வள்ளத்தை-எங்கிருந்தோ தோன்றிய பெருஞ்சுழியொன்று அந்தப் பென்னம்பெரிய மருத மரத்தில் அடராக்கி நிறுத்தியது.
ஒரு முறை வள்ளம் ஆடி நின்றது.
அந்த மரத்தின்மேலே கைக்கு எட்டும் உயரத்தில் ஒரு காட்சி- அவர்களின் கண்களைப் பறித்து இழுத்துப் பயம் காட்டியது.
அங்கே மருதமரத்தின் கிளைகளில் சிக்கி-மாணிக்கத்தின் உடல் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது.
உடலில் ஆங்காங்கே வெள்ளைப் புண்கள். கண்கள் இருந்த இடம் வெறம் மூழியாக-மீன்கள் கொத்தித்தின்றிருக்கவேண்டும்.
அதற்குமேலே! அந்த மரத்தின் நடுப்பகுதியில் துவாயினால் சுற்றிக் கட்டப்பட்ட - அந்த இரட்டைக்கண் குழல்துவக்கு அவர்களை நோக்கிக் குறிபார்ப்பதுபோலக் காட்சிதந்தது.
- 1976 -
.................
சன்மார்க்கம்
ம்ஹ் இவனுகெள் பெரிய்ய மனுசனுகளாமெ!
பெரிய்ய மனுசனுகள் செய்யிற செயலையா செய்றானுகெள். இல்லாட்டி இப்பிடியே இவனுகெள் நினைச்சதையெல்லாம்...இவெங்கெ பெரிய்ய சண்டியனுகளாம். ஆர்ருக்கிட்டே காட்ரெ. இல்லாத ஏழைகளுக்கிட்டயா காட்ரெ.
அவள் ஒரு குமரு.
இந்த மண்ணிலெ உழுந்த நாள் துடங்கி-இண்டெய்க்கி வரையிலெயும்- அந்தப் புள்ளே படுறபாடு. நினைச்சாலும் நெஞ்சி பத்திது.
உதவி ஒத்தாசையில்லாமெ அனாதையா வளந்தாள். இண்டெய்க்கி மானம் கெட்டு வாழ்றாளாம்.
வாழ்றாளோ இல்லியோ இவெங்க பெரிய்ய மனுஷனுகெள் சொல்லிட்டாங்கென்டா மறுபேச்சில்லை.
கண்கெட்டெ நாலுபேரு சென்னா, கருத்துக்கெட்ட பத்துப்பேரு நம்புறானுகெள்.
அப்பிடி என்னெதெத்தான் அவள் செஞ்சிபோட்டாள்.
இவனுகெள் பணம் சேக்கெ என்னென்னெ கூத்தெல்லாம் செய்றானுகள். இவள் தன்டெ பசியைத் தீக்க இப்பிடி உழைக்குறது இவனுகளுக்குப் பிடிக்காது.
நல்ல சமத்துவம் பேசிறாங்கெ. வாழ உதவாதத்தைப் பேசி ஆர்ருக்கு என்னடா லாபம்?
இல்லெ...இல்லெ...
இவனுகள்றெ இஸ்டத்திக்கு, இவனுகளுக்கு, ஏத்தாபோலெ எல்லாத்தையும் மாத்திப்போட்டானுகள்.
கடைசியிலெ பாவம் சமத்துவம். அவள் குமர்ப்பெட்டயாம்.
ஆனைவயிறனுகளும் பெரிய்ய மனுசனுகளும் ஆலாப் பறக்கானுகள். இவளப் பாக்க இவனுகளுக்குப் பெறுக்கப்போலே...
இதுக்கு இவள் என்னெ செய்வாள்?
இவள் மட்டுந்தானா இந்தெ ஊர்லெ குமர்ப்பெட்டயாயிரிக்காள்?
சேர்மென்டெ மகளும் குமருதானெ!
இதெல்லாம் இவனுகள்ற கண்ணுக்குள்ளெ தைக்காது.
அதெல்லாத்தையும் மறைக்கத்தானெ ஆசியாரு, ஜேபி, மரைக்கா பட்டமில்லாமிரிக்கெ-
அவள் குமருதான், குமரெண்டாப்ப பசியாதோ?
முதல்லெ அவள்ற வவுத்துப் பசியைப் போக்கிப் போட்டிலுவா மத்தக்காரியம் பாக்கனும்? நீதி செய்றாங்களாம்.
இவனுகளுக்கு நீதிண்டா என்னெண்டு தெரியுமாடா? இல்லாட்டி இப்பிடியெல்லாம் செய்யிவானுகளா?
இவனுகள் பெரிய்ய மனுஷன் பத்த-இவளென்ன அப்பிடிச் சின்ன மனுஷ’ பத்தினவள்?
ஒவ்வொரு நாளும் சாயந்திரத்திலெ, இந்தெ ஊர்சேர்மென்டெ மகளுந்தான் இந்தெ றோட்டாலெ போறாள்.
அவள்ற கோலம். சுப்ஹானல்லாஹ்...! முதுகுப்பக்கம் வாழமட்டபோலே வெட்டாறினெக் கிடக்கு. முன்னுக்க பால் காம்பு வெளிலெ ஓடிவரப்பாக்கு, வெள்ளரிப்பழத்தப் போல அடிவயித்தையும் காட்டிக்கிட்டு இவள் குலுக்கித் திரியிறதெல்லாம் இந்தச் சீமானுகள்றெ கண்ணிலெ படமாட்டிது.
அப்பிடிப்பட்டாலும் அதானெ இவனுகளுக்கு முமீன்கள்றெ அடையாளம். ஆனா -
தன்டெ பசியத்தீக்கெ மத்தவங்கெட கையப்பாக்காமெ இவள் கஸ்டப்படுறத்த இவனுகளாலெ பொறுக்கமுடியாது.
பாழ்பட்டு போவானுகெள்!
அவள் துண்டுப் புடவெ உடுத்திரிக்காளாம்.
நேத்து வட்டி மூசா ஆசியார்ரெ பொஞ்சாதி செல்றாள்.
இதுக்குப் போன கிழமெ இவள் லைலோன் புடவய்ய உடுத்துகிட்டு-தண்ட அழுக்கையெல்லாம் விளம்பரம் செய்துகிட்டு 'காணிவெல்' பாக்கப்போனெதெ நான் கண்டென்.
இதெல்லாம் இந்தப் பெரிய மனுஷனுகளுக்கு 'கூறுலீங்கள்'றெ காட்சி.
ஆனா இவள் துண்டுப் புடவெய உடுத்துகிட்டு தண்டவவுத்தையும், தாய்ரெ வவுத்தையும் கழுவுறத்துக்காகச் செய்யிற காரியமட்டும் 'ஹராம்' என்கிறானுகள்.
நல்ல ஹறாமும் ஹலாலுந்தான்! நேத்து முஸ்த்தவா ஆசியாரு இவளுக்குச் செய்த அநியாயம்.
இதுக்கு இவென்ட மகன்-போன மாசெம் கொழும்பிலெ ஆரோ ஒரு சிங்களப் பொட்டையோடெ கூடிக் கிடந்ததெண்டு வாங்கு வாங்கென வாங்கிட்டானுகளாம். காணாத்திக்கு கைலயும் ஓண்டெ உடச்சி கழுத்திலெ மாலையாவும் போட்டிருக்கானுகெள்.
அவனுகள்தான் அசில் சண்டியனுகள். இதெல்லாம் இந்தெ மாராசனுகளுக்குத் தெரியாது.
இவெனுகளுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆசியார்ரெமகென் இலவத்தம்பி பந்துவிளையாட்லெ கையை உடைச்சிட்டாராம் என்டெ சங்கதிதானெ!
மெய்தான் அவரு விளயாடின பந்துதான். அது அந்தப் பந்து...பாவெம் நேத்து அவள்பட்ட ஆச்சினெ...அவள்ற தலையிலெ இரிந்தெ சட்டிபானையெல்லாம் நொறுக்கி-அந்த வண்டிவவுறன் மக்காவுக்குப் போன ஆசியாரு, எம்பிரெ வலது கையாம்...!
அவள் கொண்டையையும் புடிச்சித்திரிவி....
சீ! மானங்கெட்ட செயல்....
அடியே! தட்டுவாணி! சட்டிபான விக்கிற சாட்டிலெ ஆம்புளப்புள்ளகளல்லாம் கெடுக்கப்போறாயிலுவாடி.
உண்டெ சாமான்லெ மண்ணெப்போட்டு....
சீ! என்னெ ஹறாமானெ கதெ...அதுவும் மக்காவுக்குப் போன ஆசியார்ரே வாய்லிருந்து...கதைக்கயும் வெக்கமாரிக்கி.. இதுக்கு இவெண்டெ ராத்தாரெ பொடியனுகெள் போனெ இலக்ஷனிலே கட்டப்பாவாட பொட்டைகளோடெ கட்டாக்காலிகளா திரிஞ்செவனுகெள்!
இவனுகள்றெ நாத்தத்தை எப்பிடியெல்லாமோ மூடி மறைக்கானுகெள்!
ஏழைகளெண்டால் ஓர நியாயந்தான். இண்டெய்க்கெல்லாம் அவள் சந்தப்பக்கம் வரயுமில்லெ...
ஓம்! ரெண்டு சீவனுகெள் பட்டினி
இவனுக்கு இதெப்பத்தி என்னெ கவலெ.
நாதமாப் போவானுகெள்!
- 1968 -
...........
தீட்டு
உச்சிதொடங்கி உள்ளங்கால் வரை வியர்த்துக்கொட்டியது. நீர்த்திவலைகளையெல்லாம் துடைத்தவளாக அந்தத் தாய் அவனைப் படுக்கையினின்றும் எழுப்பியிருத்துகிறாள். ஓட்டி உலர்ந்த அந்த உடலின் மூட்டுக்களெல்லாம் முடிச்சாய்த் தெரிகின்றன. உயிரைத் தக்கவைத்துக் கொள்ளும் எழும்புக்கூடு. தசைக்கோளங்கள் வற்றி வடிந்திருந்தன. துணியில் சுற்றிய விறகுக் கட்டையைப்போல உருவம். தொண்டைக்குழியிலிருந்தும் உயிரின் அசைவாக தீனக்குரலில் முனகல்.
இன்றா நேற்றா? இரண்டு மாதங்களாக இதே அவஸ்தை. சுருங்கிப்போன அந்தக் கழுத்தில் அம்மியைப் போல தாயத்தும், கையில் களவியைப்போல சுற்றிக் கட்டப்பட்ட 'அச்சர'க் கூடும்- அந்த உருவத்துக்குப் பாரச்சமையை ஏற்றிவைத்ததைப்போல....
"லொக்...க்ள்...லொக் லெக்...ம்ஹ்"
இருமும்போது அவன் மார்பு இரண்டாக வளைந்து மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது. அடித்தொண்டையினின்றும் வெளிவரும் கோளையைக் காறித்துப்பியதும் அவனடையும் அமைதி, அடுத்த கணமே ஆரம்பமாகப் போகும் மரண அவஸ்தையின் அடையாளமாக.
நெஞ்சிலே சாய்ந்திருந்த மகனைத் தலைக்கும் இடுப்பிற்குமாகத் தலை அணையை வைத்து, சுவரிலே சாத்திய பொன்னம்மாள், பாயை உதறி மீண்டும் படுக்கையில் போட்டாள். அந்தப் படுக்கையைச் சுற்றிக் கற்பூரச்சட்டியும் வேப்பங் குழையும் காவலாகக் கிடக்கின்றன. அந்தப் படுக்கைக்கு நேர் எதிரே இறப்பில் கதிர்காமக் கந்தனக்குக் காணிக்கையாகக் கட்டின குத்திக்காசு வெள்ளைத் துணியில் உறங்கியது.
அந்த மகனின் தலையைச்சுற்றி 'நேர்த்திக்கடன்' செய்த 'பாணிச்சாவலும், வெள்ளப்போடும்' வாசலில் சுகதேகிகளாக இரைக்காகக் கிளறிக் கொண்டிருந்தன. பொன்னம்மாள் துப்பட்டியை எடுத்துப் போர்த்திவிட்டாள். மகனின் கண்கள் பனிப்பதைக் கண்டவள்-
"என்னெ ராசா செய்யிது?" தாய்மை துடித்தது.
"நெஞ்சிக்குள்ளே முள்ளப்போட்டு இழுக்கிறாப்வெ இருக்கம்மா!" இவ்வளவும் சொல்வதற்குள் அவன் உயிர் போய்த் திரும்பியதைப்போல முக்கி முணகிக்கொண்டே மீண்டும் புரண்டு படுத்தான். மகனின் வேதனையில் பொன்னம்மாளின் ஈரக்குலை, நெருப்பில் விழுந்த புழுப்போல நெளிந்து துடித்தது.
என்றும் போல அன்றும் கிருஷ்ணன் கிண்ணயடிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது-கோடை மழையீல் நன்றாக நனைந்துவந்து-
"மேலெல்லாம் உளையுதம்மா" என்று பாயில் படுத்தவன்தான். காலையில் எழும்பும்போது தும்மலுடன் கண் விழித்தான். அதற்குப்பிறகு தடிமல், காய்ச்சல், இருமல் என்று அவனுடைய நோய்க்குப் பல பெயர்கள் வைத்துச் சொன்னார்கள். நோயின் பெயர் மாறினாலும் உடல் மட்டும் சுகப்பட்டு வரவேயில்லை. மாதங்கள் மூன்று மூச்சு விடாமல் கரைந்துவிட்டது. அவனது உடலைப்போல.
பொன்னம்மாள் தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியம் முழுவதையும் அவன்மீது பிரயோகித்துப்பார்த்து...தோல்வி கண்டு, கடைசியில் வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போனாள். மேனாட்டு வைத்தியத்தைக் கரைத்து குடித்தவரென்று நம்பப்படும் அந்த டாக்டர் அவனை நன்கு பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மேசையில் கிடந்த வெள்ளைத் தாளில் கோழிக்கீறல்மாதிரி எதையோ கிறிக்கிக்கொடுக்க, முத்தையா ஓடலியும் தண்ரில் பலவித நிறங்களையும் ஊற்றிக் கலக்கி அடித்துக் கொடுத்தார்.
எட்டுத் தடவைகளுக்கு தந்த மருந்து முடிந்ததும் மீண்டும் அவனை அந்த டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் பொன்னம்மாள் நினைத்திருந்தாள். அதற்கிடையில் பக்கத்துவீட்டு வள்ளியக்காவின் இலவச ஆலோசனை கொத்துவேலி போட்டு அவளைத் தடுத்தது.
"பொடிச்சி! ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரின்னு பொடியனுக்கு பச்சத்தண்ணியெ வாங்கி ஊத்தினா வருத்தம் சுகப்படாது. மாலைக்குள்ளே புள்ளெ எங்கெயும் பயந்திருப்பான். எதுக்கும் நம்மெட காளியப்புவப் புடிச்சி, ஒரு குறிபார்த்து நூலக் கட்டினா மூணு நாளிலே எல்லாம் பறந்திடும் பொடிச்சி!"
வள்ளியக்கை லெக்கணமாக் கதைப்பா.
வள்ளியக்கையின் ஆலோசனையில் போதிய நம்பிக்கை வைத்துத்தான், பொன்னம்மாள் குறியெல்லாம் பார்த்து அச்சரமும் கட்டி கோழியும் நேர்ந்தாள். மூன்று நாட்களுள் 'காரணம் காட்டும்' என்ற உத்தரவாதத்திலே உண்மை இல்லாமல் நோய் நீடித்தது.
காளியப்பர் லேசுபட்ட பேர்வழியல்லர். அவர் ஏழு நாட்கள் கெடுப்போட்டு, தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளையெல்லாம் செய்துபார்த்துவிட்டார். அவருடைய கெடு ஏழு நாளிலிருந்து- இன்னுமொரு ஏழு நாளுக்கு இழுபட்டு மூன்று மாதங்களாகியும் இன்னும் கெடு முறியவுமில்லை; சுகம் கிடைக்கவுமில்லை.
ஒவ்வொரு நாளும் மாலைக்குள் வந்து....
"ஏய்! பொன்னம்மா செம்பிலெ தண்ணியெ எடு பொடிச்சி." சொல்லிக்கொண்டே காளியப்பர் கிருஷ்ணனின் தலைமாட்டுப் பக்கமாக அமர்ந்துகொள்வார்.
உடனே பொன்னம்மாள் கைபடாது அள்ளிய தண்ர்ச் செம்பையும் வேப்பங்குழையையும் அவர் முன்னால் கொண்டுவந்து வைப்பாள்.
காளியப்பர் வெற்றிலைப் பெட்டியில் கிடக்கும் பாக்கு வெட்டியை எடுத்து, செம்பிற்குள் குத்தினெ இறக்கி அவை எழுப்புவார்.
ஓம் சரவண சண்முகா சத்துரு சங்கார
அருகிரு முருகா ஆங்கார முருகா - எரிஎரி திருதிரு
இவர்மேல் வரப்பட்ட பூதபிசாசு வஞ்சனைகளையெல்
லாம் உச்சாடு நசிநசி விலகு விலகு ஓடு ஓடு
இவரை விட்டு அகன்று போகவே சிவாக....
ஒவ்வொரு முறையும் அவர் ஓதி ஊதும்போது உண்டாகும் காற்றோடு - வெற்றிலைப் பாணியும் வீணியும் கலந்து, தூறல் மறைபோல அந்தச் செம்பு நீரில் படிவது அவருடைய மந்திரம் ஓதும் கிரியையின் ஒரு கிருபையாகும்.
ஓதி முடிந்ததும் வேப்பங்குழையைத் தண்ரில் துவட்டி அவன் முகத்தில் 'சரே'லென அடிப்பார். ஈ விழுந்தாலும் ஈட்டி குத்தியபோன்று வலி எடுக்கும் கிருஷ்ணனின் நொந்த உடம்பில் காளியப்பர் தன் 'கை இருப்பு'க் காட்டி வேப்பங்குளையால் அடித்துக்கொண்டிருக்கும்போதே இருமலும் தொடங்கிவிடும். மரண அவஸ்தையோடு இருமிக்கொண்டே படிக்கத்தில் காறி உமிழும்போது சளியில் இரத்தத் துணுக்குகள் புரையோடிருப்பதை யாரும் கவனித்தாகத் தெரியவில்லை.
மந்திரம் ஓதும் சடங்குகள் தினமும் கிரமப் பிரகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாள்களில், ஒருநாள் கிருஷ்ணனை அவனுடைய வகுப்பாசிரியரும் பார்க்கவந்தார். அவருக்க உண்மை இலேசாக விளங்கியது.
உடனே பொன்னம்மாவை ஒரு பக்கமாக அழைத்து.
"அம்மா! கிருஷ்ணனை இப்படியே வைத்திருப்பது நல்லதல்ல, பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோனால்-அவர்கள் படம்பிடித்துப் பார்த்து நல்ல மருத்துவம் செய்வார்கள். பயப்படாமல் கொண்டுபோங்கள்." என்றார்.
பொன்னம்மாளின் மனத்திலே குடிகொண்டிருந்த 'கரையாக்கன் பேய்'பற்றிய பீதி ஆசிரியரின் அக்கறையான அறிவுரையை விரட்டியடித்தது.
என்றுமில்லாதவாறு அன்று கிருஷ்ணன் ஒரு கவளம் சோறு சாப்பிட்டு, பழைய சிரிப்பின் சாயலையும் ஒரு முறை கோடிகாட்டினான். பொன்னம்மாளின் முகத்தில் செல்வரத்தையின் ஊடுருவல். அவள் மனத்திற்குள் காளியப்பரைச் சங்கை கூர்ந்தாள்.
"ஓமோம். இண்டெய்க்கி செய்கிற கழுப்பிலெ எல்லாம் சரியாப்போகும்."
தனக்குத்தானே உள்ளகமாகக் கூறிக்கொண்டாள். பொழுதும் புளயடித்துறைப் பக்கமாகக் கெளிந்துவிட்டது. அவள் கழிப்புக்குத் தேவையான பொருட்களையெல்லாம் ஒழுங்குபடுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டாள்.
வெள்ளைத் தோட்டுப்பாயை எடுத்து - வள்ளியக்காவும் தானுமாக - ஓடிஆடிச் சேர்த்த வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூசனிக்காய், கரையாக்கன் பூக்கள்....
அவற்றையெல்லாம் பார்க்கும்போது ஊமை மகிழ்ச்சி அவள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது.
'என்டெ பிள்ளெ இன்னெம் நாலு நாளையிலெ எழும்பிப் பள்ளிக்குப் போயிடுவான்'. மனம் ஆறியதில், கவலை சற்றே விலகியது.
"பொன்னம்மா பாமிலெ பத்துமணி விசிலும் ஊதிட்டிது. எல்லாத்தையும் ஆயத்தப்படுத்தி எடு. நான் சின்னப் பொடிச்சியையும் காளியப்பரையும் கூட்டிட்டு வாறென்."
வள்ளியங்கா குரல் கொடுத்தாள்.
அவள் அவசரப்படுத்திக் கொண்டிருக்கும்போதே காளியப்பரின் குரலும் கடப்பைத் தாண்டியது.
"என்னெ பொடிச்சி எல்லாஞ்செரியா? பொடியனெக் கூட்டிட்டு வெளிக்கிடென்."
வழக்கமாகப் போடுவதைவிட, அன்று அவர் கொஞ்சம் கூடத்தான் 'பாவி'த்திருந்தார். அதன்மூலம் 'கரை யாக்கனை' மடக்கும் பக்குவம் தனக்கு வந்துவிட்டதான தைரியம். அவரின் கட்டளையைத் தொடர்ந்து காரியங்கள் விரைவாகின.
செழிப்பினைத் தாங்கிய அந்தப் பென்னம்பெரிய ஆலமரம். அடர்ந்து பரந்து செறிந்த அதன் கிளைகளில் வெளவால்களின் - "க்யூசிக்!" செண்பகங்களின் "மர்ஹ்ம்ஹ். ஹம்!"
இரவின் அயர்வுக்குச் சுருதி சேர்த்துக்கொண்டிருந்த மாரிக்கால தவளைகளின் அலறலும் இவற்றுடன் சேர்ந்த போது அந்தச் சூழலுக்கு ஒரு பயங்கரம் பொருந்திற்று.
காளியப்பர் காரியத்தில் இறங்கினார். பக்குவமாகப் பரப்பியிருந்த சாமான்களுக்கு மத்தியிலிருந்த கற்பூரத்தட்டை எடுத்தார். அவரின் கரங்களிரண்டும் தன்னியல்பாகவே கிருஷ்ணனின் தலையைச்சுற்றவாரம்பித்தன. தனக்கு வாலாயமான மந்திரம் என்ற சொற்களின் கோர்வையை அதரங்கள் உருட்டத்தொடங்கியதில், வார்த்தைகளின் உச்சாடனம் ஓங்க அவரின் உடம்பும் குரலும் நடுங்கத் தொடங்கின. அவர் பாவித்த சாமானின் கைங்கரியமும் அவருக்குத் துணைவந்தனபோலும்.
அவருடைய ஆட்டத்திலும், வார்த்தைகளின் உருட்டலிலும் அனைவரும் கட்டுண்டுகிடந்தார்கள். கிருஷ்ணன் நோயாளி என்கின்ற முக்கியத்துவம் அனைவரின் மனத்தினின்றும் நீங்கியிருந்தது. காளியப்பரே மையமானார்.
சடுதியாக கிருஷ்ணன் அடக்கமுடியாத அவஸ்தையுடன் இருமத்தொடங்கினான். பொன்னம்மாள் பதறிப்போய் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
அவனுடைய வாய்வழியாக இரத்தக் கட்டிகள் கொப்பளித்து வடியலாயின. அந்தக் கொடூரம் பொன்னம்மாளின் பெற்ற வயிற்றில் தீ மூட்டியது.
அவனுடைய நிலையைக்கண்ட காளியப்பருக்கு 'உஷார்' வெறி தலைக்கேற மந்திர உச்சாடனத்தை உச்சக் சுருதிக்குக் கொண்டுசென்றார்.
இருமிக் களைத்த கிருஷ்ணனின் கண்கள் தாயின் முகத்தைப் பரிவுடன் நோக்கிய நிலையில் 'வெறித்து' நின்றன.
வாழ்க்கையின் முழு நிதியத்தையும் இழந்த ஆவேசத்துடன், அந்த இடுகாட்டுப் பிரதேசம் நடுங்க பொன்னம்மாள் ஒப்பாரி வைத்தாள்.
"ஐயோ! ஆரோ தீட்டுக்காரியும் இஞ்செய் வந்திட்டாடி...ய்...அதான் கோவப் பார்வையிலே கரையாக்கென் அடிச்சிப்போட்டிய்ய....!"
வள்ளியக்காவும் அவளுடன் கோரஸ் ஆனாள்.
- 1968 -
.................
தபஸ்
"கதீஜா!"
"ம்ஹ்"
சுங்கான் மீன் வெட்டிக்கொண்டிருந்தவள், கத்தியைத் தீட்டும் பாவனையில், செவிகளுக்கும் கூர்மை ஏற்றிக் கொண்டே அவனைக் குறுக்காக வெட்டிப்பார்க்கின்றாள்.
மூன்றாம் நாள் இரவுகூட 'புள்ளெக்குட்டியொண்டு அந்தெ வவுத்திலெ செமியாதா?' என்று அவள் ஏங்கிய விரகத்திலே, அவள் தன் ஊன் உடலுடன் உயிர்ப்பையும் இணைத்து அவனிடம் அம்மணமாகவே ஒப்புக்கொடுத்த காட்சி, சாணை பிடிக்கும் பொழுது கத்தியிலிருந்து சீறும் பொறிகளின் வாக்கில் அவன் மனத்திலே எரி உமிழ்ந்தது.
"இஞ்செப்பாரு, இந்தத்தரம் மதுரங்குண்டுச் சூடடிச் சுவந்த கையோடெ நாமெ ரெண்டு பேரும் கதிர்காமத்திக்கு ஹயாத்து நபி அப்பாடெ 'தறஜா'க்கு ஒரு பயணம் போயிட்டு வரணும்."
வார்த்தைகளிலே ஆதங்கத்தின் ராகம் லயத்துடன் இணைந்தது.
இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையிலே திரைவிட்டிருக்கும் மெல்லிய சேலையிலே ஒரு கிழிசல். அதனூடே ஆண்மையைத் தரிசித்த வேகத்தில் முனிவின் திரட்சி. அவள் பார்வை தணலாக வீசுகின்றது.
"என்னெ ஒரு சயிஷானெ பார்வெ?"
"இல்லெ, அஞ்சொகுத்தும் பள்ளியும். வெள்ளிக் கிழமெ ராமுழுக்கப் பள்ளிலெ. கடசிலென்னடாண்டா கதிர்காமத்துக்குப் பயணம்!"
பேச்சின் முத்தாய்ப்பாக கேலிச்சிரிப்பு.
அகமதின் கண்களில் கோபத்தின் உக்கிரம்.
"கஸ்ஸா! என்னெடி கதைக்காய்? யாரிட்டெப்பழகினெ நீ". மீன் வெட்டிய கைகளை கழுவிக்கொண்டு எழுந்து ஈரத்தை முன்றானையால் துடைத்துக்கொண்ட கதீஜா, கணவன் தன் பதிலுக்குக் காத்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.
"உங்கெளுக்கிட்டான்" அத்துடிப்பான பதில் ஏளன முறுவலின் உந்துவிசை பெற்று அவனைத் தாக்கியது.
"பளீர்" சற்றும் சதிர்பாராத மின்சார அதிர்ச்சியை அவனுடைய கை அவள் கன்னத்தில் பாய்ச்சியது. அவள் கண்களில் குறுத்துக் கங்கைகள் இரண்டு துளிர்த்தன.
அகமது வெறும் பார்வையை வெளியினூடே நுழைத்தான்.
பனிப்புகார்கள் திட்டுத்திட்டாக்த் தேங்கி நிற்கும் மோனம். உச்சியில் மேய்ந்த பார்வை இலக்கத்தேடும் பாவத்தில் நிலவை நோக்கி...
வானத்தின் மேற்கே-அதன் விளிம்பில் தேய்ந்த லாடனை பிரதிமை எடுத்த பின்னிரவுப் பிறை மங்கிய ஒளியில் தன் பொலிவைத் தேடுகின்றது.
வாடியின் மேற்குப் புறத்தில் வயோதிபம் ஏறிய புளிய மரம். அதன் கிளைகளிலே குடித்தனம் நடத்தும் செண்பகங்கள் 'ம்' விட்டுக்கொண்டிருக்கின்றன.
நாற்று மேடைக்குத் தண்ர் பாய்ச்சும் அலுவலின் முனைப்பு.
பந்தற்காலில் தூக்கியிருந்த பட்டைகளை எடுத்துக் கொண்டு துரவடிக்குப் போகின்றான்.
இருளைக் கதிரவன் ஒளி விழுங்கிக் சீரணிப்பதற்கிடையில் இருபதினாயிரம் நாற்றுகளுக்கும் தண்ர் இறைத்த பெருமிதத்தில் தேநீரில் தவனம் தாவுகின்றது.
உடலின் பலத்தையெல்லாம் உதட்டில் திரட்டி ஊதி ஊதிப் பார்த்தும் ஏனோ அடுப்புப் பற்றவேயில்லை. மாறாகக் கண்ணுள் புகுந்த புகை அவன் நெஞ்சில் நினைவின் நெருப்பை மூட்டியது.
அவன் உள்ளத்துணர்வுகளோடு ஒன்றிப்போன நினைவுக்கயிறு முறுக்கேறிப் புரிப்புரியாகத் தெறித்து எகிறிநின்றன.
பனியில் தோய்ந்த மலர்க் கூட்டம் புதுவெளியிலில் பளபளப்பதைப் போலெ, அவள், அவன் மனத்தில் தோன்றிப் 'பளபள'ப்பதான மயக்த்தில்....
மறுகணமே மனம் மறுகிச் சவுங்கியது.
இமைகள் கொட்டக் கொட்ட, அதரங்கள் துடிதுடிக்க, கண்கள் சிவந்து கிடக்கின்றன.
என்றுமே அவனுக்குள் அடங்கிவிடும் அவள் அன்று சுயேச்சை பெற்ற நளினத்தின் ஓங்காரம் பெற்றாள்.
"இந்த மலடியெ உட்டுப்போட்டு. இன்னொண்டெப் பாக்கிறானெ?"
வார்த்தைகளிலே விரக்தியின் திரட்சி முகங்காட்டியது. அகமது சடாரென்று வீட்டுக்குள் போனான். 'பொட்டகத்'தைப் 'படா'ரென்று திறந்தான். கைகளிரண்டும் அங்கிருந்த உறுதிக்கட்டுகளையும் உடுபுடவைகளையும் வாரி அடித்தன.
"இந்தாரிக்கி உங்கெ உம்மா வாப்பாடெ ஆதனமெல்லாம். நான் வாறென்." அன்றே கோச்சி ஏறியவன்தான். நாளை மறுதினம் மூன்று மாதங்கள் முற்றுப்பெற்றுவிடும். தம்பன் கடவையில் ஒரு சிங்கள முதலாளியிடம் கொச்சி வாடியில் வேலைக்கு அமர்ந்தான். ஓடி ஆடி உழைக்கும் அவன்மீது அவருக்குப் பற்று. இதனால் சில சமயங்களில் அவருக்குச் 'சுவை' கூட்டும் குடிவகைகளில் ஒரு பங்கை அவனுக்கும் கொடுக்க எத்தனிப்பார். அவ்வேளைகளில் அவரினின்றும் அவன் விலகி நிற்பான்.
"முதலாளி வேலைக்கேத்தெ கூலியெ மட்டுந்தாப் போதும். எங்கெடெ மார்க்கத்திலெ விலக்கினெத்தெ தொட்டுப்பாக்கிறெயும் பாவம் முதலாளி." அகமது விலகி நின்றாள்.
"என்னா அகமது பேசுற. உங்கட தொரமாரெல்லாம் இப்பொ நல்லாத் தண்ணி போட்றான். எல்லாஞ் சாப்புட்றான். நாமெ எல்லாம் ஒண்டுதானெ." சொல்லிக்கொண்டே சாராயம் ரொப்பிய 'கிளாஸை' அவர் தொண்டைக்குள் 'மடமட' வென்று கொட்டினார்.
அகமதுக்கு அடிவயிற்றைப் புரட்டியது. அவனுடைய 'மறுப்பு' அவன்மீது ஒருபடி மேலான 'மதிப்பை'க் கூட்டியது. முதலாளியின் முழு நம்பிக்கைக்கும் அவன் பாத்திரமானான்.
நம்பிக்கையின் கிளையாக, சந்தான விருத்தியிலே கொண்டிருந்த நம்பிக்கையிலே ஏற்பட்ட உடைவினைத் தொற்றி நினைவுகள் படருகின்றன.
கதீஜாவிடம் கட்டுக்குலையாத கொள்ளை அழகின் முழுக்கவர்ச்சியும் பொங்கி வழிந்தது. சிலையிலே வடிந்த மார்பகங்களின் லாவண்யத்துடன் அழகினைக் குதறிக்கக்கும் அவளுடைய அங்கங்களை மேய்வதில் அவனுடைய கண்களுக்கு எப்போதுமே அடங்காத பசி. அந்தப் பார்வையிலே உருகி, அவள் அவனின் இன்பமாகவே இரண்டறக் கலப்பதும் உண்டு.
இறைவன் வைத்த விளையாட்டு. பூரணத்துவத்தில் ஒரு மறு. அழகு திரண்ட அவளுடைய மணிவயிறு. தாய்மையின் பூரிப்பிலே திமிர்த்தது கிடையாது. பத்து வருடத் தாம்பத்ய வாழ்வில், அவன் இறைவனிடம் இறைஞ்சாத பொழுதேயில்லை. ஆண்மையிலே கொண்ட நம்பிக்கை தளர்ந்தது. அவ்லியாக்கள்மீதும் 'அவை' கட்டி எழுப்பிய ஒருவகை ஆசாரங்கள்மீதும் தன் இயலாமைக்குப் பரிகாரம் தேடும் அலுவலிலே புலன் செலுத்தினான்.
நேர்ச்சைக்கான காணிக்கையாகவும், பலிப்பொருளாகவும் பட்டியிலே நின்ற காளைக் கன்றுகள் தொடங்கி கூட்டிலே கிடந்த கோழிகள் ஈறாகக் கரையத் தொடங்கின. முயற்சி தொடர்ந்தது... விளைவு கிட்டவில்லை.
ஆனால் நேர்சையின் பலிதத்திலே மட்டும் நம்பிக்கை வழுவவில்லை.
*இ.தொ.makkatu3.mtf*
யிலையை உறிஞ்சி உறிஞ்சிக்
** makkatu2.mtf இன் தொடர்ச்சி**
சீனிமுட்டாயைக் கடித்துக்கொண்டே தெயிலையை உறிஞ்சி உறிஞ்சிக் உறிஞ்சிக் குடித்தவன் - இடுப்பிலிருந்த சிறுவாலை இளக்கிவிட்டவனாக கங்கையில் குத்தினெ இறங்கினான்.
திசை தப்பிய எருமைகள் காட்டில் தறிகெட்டு ஓடுவதைப் போலெ மகாவலி கங்கையும் தனது முழுப்பலத்தையும் உதைத்துக் கொண்டே ஓடியது. கிழக்கே விழித்து ஆதவனின் பிஞ்சுக்கரங்கள் அந்தப் பிரதேசத்தின் பச்சையழகை நிர்வாணமாகப் பருகிவிடும் வேட்கையில் முதுகைப்பெறத் தொடங்கின.
'ஜில்'லென்ற நீரில் மூக்கைப் பொத்திக்கொண்டு மூழ்கி எழும்போதே அவன் உடலை கதீஜாவின் நினைவுகள் தீண்டலாயின. மூன்று மாதங்களும் அந்த மாளாத நினைவுகளின் அரக்கப்பிடியில், அவன் மனம் பொறியில் வெட்டுண்ட பல்லியின் வாலாக....
குளிப்பைச் சீக்கிரமே முடித்துக்கொண்டு வாடிக்கு வந்தான். 'தண்ணிச்சோறும் எருமைத் தயிரும்' அவன் வலக்கரத்தில் குழைந்து-கங்கை நீர்போல் அவன் குடலினுள் இறங்கியது.
"என்னெ தம்பி! ஊர்ப்பக்கெம் போறலியா? நாளைக்கிக் கொண்டாட்டம். ஓடெக்கரையிலெ பூலாமீர் சாய்வுடெ 'கோடு கச்சேரி'யாம் விலாவாடிக்காரெ யூனூஸ்க்காவின் கேள்வி. அகமதின் கண்களை 'கரைச்சோத்து'ப் பீங்கானிலிருந்து கிளப்பியது.
"நமெக்கெல்லாம் சேப்பிலெ காசிரிந்தாக் கொண்டாட்டந்தான்". பதிலுக்கு காத்திராமல், குந்துகட்டையை யூனூஸ் காக்காவின் தள்ளிக் கொடுத்தான்.
இன்னொரு பீங்கானை எடுத்து, அதில் ஒரு அகப்பைச் சோற்றையும் இரண்டு அகப்தைத் தயிரையும் வெட்டிக் கொடுத்தான். சோத்துப்பீங்கானில் தயிர் குடு மபி மலைபோலெ குந்தியிருந்தது.
"மெய்தான் அகமது உன்டெ பொஞ்சாதி நேத்து ஊட்டெ வந்தாடா தம்பி. உன்னெப்பத்தி விசாரிக்கெத்தான் வந்திருக்கெணும். ஆனாக் கதைக்கெல்ல."
"என்னக்கா பாவெம்? புரிஷனுக்கு அடங்காதெவளுக்கெல்லாம் இப்பிடித்தான் செய்யணும்" அகமது திமிறினான்.
"அந்தெப்புள்ளெ என்னடா செய்யிம்? நம்மெடெ சினத்திக்கு?"
"அவள்றெ கதையெ உட்டுப்போட்டு, பேறென்னமும் இரிந்தாக் கதைங்கெ."
"அகமது தயிரு கூடிப்பெய்த்திடா. மெய்தான்டா உன்டெ பொஞ்சாதி நேத்து ஊட்டெ வந்தெபுள்ள எங்கெடெ மாவிலெ கிடந்தெ பிஞ்சியெலாம் பிச்சிட்டுப் போச்சிடா. என்டெ வூட்டுக்காரிட்டெ விசயத்தெச் சொல்லிச்சிடா. மூணுமாசாமாப் புடவெ போடிறெல்லப் போலெ."
தன்பாட்டில் பேசிக்கொண்டே யூனூஸ் காக்கா தாலாப் பீங்கானை வழித்துக் குடித்தார்.
இனம் புரியாத பரபரப்பில்-தொண்டைக்குள் இறங்கிய கரைச்சோறு அவனுக்கு 'கிச்சாமூச்சா'க் காட்டுவதான சிலிர்ப்பு.
அவன் மனக்கங்கையில் நீண்ட நாட்களுக்குப்பிறகு அவன் மனைவியின் தாய்மைச் செழிப்பு, உடலைக் குலுக்கி 'கலகல' வெனச் சிரிக்க-அந்தச் சிரிப்பின் உக்ரம் தலைக்கேற-கண்ர் முத்துக்கள் வெடித்துச் சிதறி அவனுடலில் தெறிக்க....
நினைவில் மூழ்கியிருந்தவனின் எதிரே கொச்சித்தோட்ட முதலாளி டயஸ”ம் தன்னுடலைச் சுமந்து மெல்ல மெல்ல வந்துகொண்டிருந்தார்.
"எப்படி? உங்கட பெருநாள்த்தானெ ஊரெபோறெல்ல....? இந்தா அம்பத்து ரூவா ஊரெப்போய்டக்கிணு வாங்கோ."
முதலாளியிடம் காசை வாங்கி வார்ப் பக்கற்றுக்குள் திணித்துக்கொண்டவன், பத்திரிக்கைக் கம்பில் கொளுக்கை கட்டிக் கொண்டு வாடியின் தலைமாட்டுப் பக்கம் நின்ற புளியை நாடினான்.
புளியம்பழத்தின் கலகலப்பில் அவன் மனைவியின் வெற்றிச்சிரிப்பும் இணைந்து நிறைந்தது போல் கலகலத்தது.
செங்காய்களாகத் தெரிந்து உமலை நிரப்பிக் கொண்டவன்-போகும் வழியில் விளாங்காய்களும் தேடிப்பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
பத்துமணிக் கோச்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற வேட்கையில்-அவன் கால்கள் இருபது வயது இளைஞனின் வாலிப வேகத்தையும் திமிரையும் பெற்றன.
- 1970 -
...............
மக்கத்துச் சால்வை
"தம்பி மம்மனிவா ஞாபகமிரிக்காடா மனெ? அண்டெய்க்கி உங்கெ வாப்பால்லாம் பேசாமெ வாயெப் பொத்திட்டாங்கெ. நீ சின்னப்பொடியன். காகத்தெப்போலெ அதெக் கண்டுக்கிட்டாய். உண்டெ சத்தெம் எனைக்கி விசிலடிச்சாப்லெ இரிந்திச்சி."
"அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு."
"நீ மட்டும்தாண்டா மனெ அதெக் கண்டாய். இண்டெய்க்கிம் அந்தச் சத்தம் என்டெ காதிலெ இரையிதிடா மனெ."
அது எப்பவோ நடந்த விளையாட்டு. நேற்றுப்போலெ தான் இருக்கிறது. நெஞ்சில் அப்படியே ஈரமாக...
அப்பவெல்லாம் மூன்று நான்கு நாள்களுக்கு முந்தியே பெருநாள் மணக்கத் தொடங்கிவிடும்.
பொழுது விடிந்தால் பெருநாள். பையென்னா ஹோட்டெல் 'கலகல'த்தது. கண்ணாடி 'ஷோட்கேஸ்' இரண்டும் 'பளிச்' சென்று - உள்ளெ தின்பண்டங்கள் கண் சிமிட்டும். பசு நெய்யில் பையென்னாவின் கைபட்டுப் பக்குவப்பட்ட 'மஸ்கெற்' வாசம். ஒரு துண்டின் விலை இருபது சதம். 'ரீ' ஒன்று பத்து சதம்.
அதுவும் பையென்னாடெ கையால் 'நோனா மார்க்' கட்டிப் பாலில் ரீ போட்டால் தனிச் சுவைதான். இறுகிய சாயமும் கட்டிப்பாலும் அவர் கைபட்டுச் சுவை கூட்டும் வித்தை. 'மஸ்கெற்'றில் ஒரு துண்டைக் கடித்து 'ரீ'யும் அடித்துவிட்டு வெளியே வரும்போதுதான் ஹொட்டெலுக்குக் குளிரூட்டி நின்ற பூவரசு மரத்தில் ஒட்டியிருந்த கடதாசி கண்ணில் பட்டது.
'ஹஜ்' பெருநாளை முன்னிட்டு நாளை அசர் தொழுகையில் பிறகு மாபெரும் கம்பு விளையாட்டுப் போட்டி, பிரபல சீனடி வாத்தியார் நூகுத்தம்பியுடன் மோதுபவர்கள் முன்வரலாம். பரிசாக ஒரு மக்கத்துச் சால்வையும் பறங்கி வாழப்பழக் குலையும் வழங்கப்படும்.'
அந்த வருஷத்துப் பெருநாள் பெரும் கொண்டாட்டமாகவே இருந்தது. பெருநாள் பொழுது உச்சியைக் கடந்து உப்பாத்துப் பக்கமாகக் கெளிந்தும்விட்டது. பக்கத்தூர் சனங்களெல்லாம், கிராமத்தின் சந்தை முகப்பில் ஈயாய் மொய்த்துவிட்டார்கள்.
முன்வரிசையில் - பெரியவர்களின் முழங்கால்களுக்கிடையில் நாங்கள்-வாண்டுக்கூட்டம்-குந்திக்கொண்டோம்.
ஊரின் விதானையாரும், மத்திச்செமாரும் கூட்டத்தில் ஒழுங்கை நிர்வகித்துக்கொண்டிருந்தார்கள். பொழுது ஊர்ந்தது. போட்டிக்கு வந்த அண்ணாவியாரும் அவரின் சீடப் பிள்ளைகளும் துடித்துக்கொண்டிருந்தார்கள். சவால் விட்ட நூகுத்தம்பி வாத்தியார் இன்னும் ஆஜராகவில்லை. எல்லோரும் ஆற்றங்கரை வீதியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேலிப் பேச்சுகளும் நக்கல்களும் கிளம்பத் தொடங்கின. தூரத்தே ஒரு சைக்கிள் வண்டி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது.
"அன்னா வந்திட்டார்! ஹோய்ரா...!"
கூச்சலுடன் கூட்டம் கலகலத்திற்று.
நூகுத்தம்பிதான் வந்துகொண்டிருந்தார். வந்த வேகத்திலேயே அவரின் சைக்கிள் இன்னொருவரின் கைக்கு மாறியது. அடுத்த கணமே அவர், விளையாட்டு நடைபெறும் வீதியின் மையத்தில் பாய்ந்து நின்றார்.
கருங்காலி போன்ற உடல்வாகு. வீச்சுத் தொழிலில் உரம் ஏறிப்போன விசைகொண்ட கைகளும் கால்களும். கட்டுக்டங்காத காளையின் தோற்றம்.
மீண்டும் கைதட்டல்கள் சீழ்க்கை ஒலிகள் - உடுத்தியிருந்த பழைய 'கார்ட்' சாரணை களைந்தார். கையிலிருந்த சாரன் பறந்துபோய் பூவரச மரத்தில் ஒட்டிக் கொண்டது. உள்ளெ முழங்கால் மறைந்த சிறுவாலும் கைவைத்த பனியனும்...
விம்மிப்புடைத்த நெஞ்சிலிருந்து வெட்டுவாளாகக் கரங்களிரண்டும் வெளிக்கிளம்பியது. நின்ற நிலையிலேயே கரங்களிரண்டையும் சுற்றி - அந்தரத்தில் பாய்ந்து - திடீரெனக் குனிந்து பூமியைத் தொட்டு முத்தமிட்டு - ஒப்புதல் எடுத்துச் சலாம் வரிசை போட்டார். மகிழ்ச்சிப் பிரவாகம் கடல்போல் கொந்தளித்து அடங்கியது.
"நூகுத்தம்பியுடன் சிலம்பம் விளையாட விரும்புபவர்கள் வரலாம்." விதானையாரின் அறிவித்தல்.
சனத்திரனின் மறுகரையில் இன்னோர் உருவம். சுற்றிச் சுழன்று - மின்னல் கோடுகளாய் - கையிலிருந்த கல் விண்ணாங்குத்தடி "ங்...ய்....ய்" ஊதி வெளிவந்திற்று. அகமதுலெவ்வை அண்ணாவியார்தான். அவரின் கையிலிருந்த தடி ஓர் பாம்புபோல அவரைச் சுற்றிச் சுற்றிப் படமெடுத்தாடியது.
பார்வையாளர்களின் பாதங்கள் பூமியில் தாவவில்லை. விளையாடத் தெரிந்தவர்களுக்குக் கையும் காலும் தினவெடுத்திற்று.
"இப்பொழுது நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வாழைப்பழக் குலையொன்று பரிசாக வழங்கி, மக்கத்துச் சால்வையால் போர்த்தப்படும்."
விதானையாரின் அறிவிப்பு வந்ததும் கரகோஷம் வானைப் பிளந்தது.
ஒருபக்கம் அகமதுலெவ்வை அண்ணாவியார். மறுபக்கம் நூகுத்தம்பி வாத்தியார். ரெண்டும் ரெண்டுதான். சோடையில்லாத சோடி.
முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு நான்கு பாக இடைவெளி விட்டு நின்றார்கள். விதானையார் 'ஆரம்பம்!' சொன்னார். அடுத்தகணமே புழுதிப் படலம் கிளம்ப இருவரும் சலாம்வரிசை எடுத்தார்கள்.
சுற்றிச்சுற்றி - அந்தரத்தில் கிளம்பி - நான்கு கைகளும் அரிவாள்போன்று மின்னல் வெட்டி.... உருவங்கள் இரண்டு பம்பரம்போல் சுழல்வது மட்டுமே கண்களுக்குப் புலனாகின.
சலாம் வரிசை எடுத்ததும் மீண்டும் அவரவரின் மூலைக்குள் போய் நின்று கொண்டார்கள்.
அகமதுலெவ்வை அண்ணாயாருக்கு வெலிகாமத்து மவுலானா வாப்பாதான் குரு. மவுலானா வாப்பாவின் கையால் தொட்டு வாங்கிய தடியை, அவரின் மகன் தொட்டுக்கொடுக்க மிகவும் பாந்தமாகப் பற்றிக்கொண்டார்.
இரு கைகளின் விரல்களுக்கிடையில் நின்று - அக்கம்பு "ங்ய்...ய்" ஊதி நர்த்தனமாடியது. ஒரு தடி, நான்காகி, பதினாறாகிப் பல்கிப்பெருகி கண்களுக்குள் மாயாஜால வித்தை காட்டிற்று.
எதிர்த்திசையில் நூகுத்தம்பி வாத்தியார். தனது குருவான இந்தியக்கார நானாவின் கையால் வாங்கிய பிரம்புடன் நின்றுகொண்டிருந்தார்.
இரு விளிம்புகளிலும் வெள்ளிப் பூண்களால் மோதிரம் போடப்பட்ட மூங்கில் பிரம்பைத் தனது வலது கையால் மட்டுமே எடுத்துச் சுற்றிச் சுழற்றினார்.
இடக்கை அசையாமலிருக்க வலக்கை மட்டு ம சுற்றிச் சுழன்றது. அந்த நுட்பம், லாவகம் அவருக்கே கைவந்த வித்துவம். ஒரு வெள்ளிப் பறவை தனது பரிவாரங்களுடன் தாளலயம் தப்பாது - சிறகடித்துப் பறந்து பறந்து மாயுமே, அவ்வாறு நூகுத்தம்பியின் கையிலிருந்த வெள்ளிப்பூண் பிரம்பு பறந்தலைந்தது.
முதல் சுற்று முடிந்து - இரண்டாவது ஆட்டமும் தொடங்கிற்று. காகங்களிரண்டும் கம்புகளினூடாக தங்கள் தங்கள் பார்வையைக் குவித்துக் கறுவிக்கொண்டன. ஒன்றையொன்று துரத்தித் துரத்தி...ஒன்றையொன்று போருக்கு அழைத்து அழைத்து...அலைக்கழித்து அதே கணம் மின்னலெனச் சீறிப்பாய்ந்து....ஒன்றையொன்று கொத்திக்குதறி....
புழுதிப்படலம் மேலெழும்ப அந்த அற்புதக் காட்சி!
திடீரெனப் புறப்பட்ட நூகுத்தம்பியின் வெள்ளிப்புறா அகமதுலெவ்வை அண்ணாவியாரின் தோளைத் தொட்டுப் பார்த்துத் திரும்பியது. தடுமாறிய அண்ணாவியார், தழும்பிய பாதங்களை நிலத்தில் பலமாகப் பதித்துக்கொண்டார்.
"அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு" நானும் மம்மலியும்தான் கூப்போட்டோம். ஊரில், 'தலையாலெ தெறிச்சதுகள்' என்று பட்டம் வேறு வாங்கியிருந்தோம்.
"டேய்! பொத்துங்கடா வாயை. யாருக்கிட்டெ கதைக்கிறீ கெ" அண்ணாவியார்ரெ சீடப்பிள்ளைகளில் ஒருவரனான ஈறாங்குட்டி சீறிப்பாஞ்சான்.
"அடிபடெல்லெ அடிபடல்லெ...இவ்வளவு பெரிய மனுஷனுகள்றெ கண்ணையும் மறச்சிட்டு - இந்தெ ஹறாங் குட்டிகள்றெ கண்ணிலெ மட்டும் தைச்சிட்டு..."
மத்திச்செம் பார்த்த புகாரி விதானையார் - அந்தத் தருணம் பார்த்துத் தனது பார்வையை எங்கோ கோட்டை விட்டுவிட்டார். கூச்சலும் இரைச்சலும் கூடிவிட்டது. அண்ணாவி அகமதுலெவ்வையின் சீடப்பிள்ளைகள் சுற்றி வட்டமிட்டு நின்றார்கள். ஒவ்வொருத்தனும் "நறநற" வென்று பல்லைக் கடித்து....
நூகுத்தம்பி வாத்தியாரின்மீது பாய்ந்து குதறிக் கிழிக்க வேண்டும்போல் ஆத்திரத்தில் "படபட"த்தனர்.
"டேய்! எங்கெட ஆளுக்கு அடிக்க ஏலுமாடா? வாங்கடா பாப்பம்?" ஆளுக்கொரு கம்புடன் ஆவேசத்துடன் பொங்கினார்கள்.
நூகுத்தம்பி வாத்தி தன்னந்தனியனாய் - வாயில் கைவைத்து விக்கித்துப்போய் நின்றான். ஊர் மத்திச்சத்தினருக்கு அவர்களைச் சமரசத்திற்குக் கொண்டுவருவதே பெரும்பாடாகிவிட்டது.
"டேய்! யாரும் சத்தம் போடவேண்டாம்." கையில் பிரம்புடன் முகம் 'கடுகடுக்க' விதானையார் ஆணையிட்டார். கூட்டம் பெட்டிப்பாம்பாக அடங்கியது.
"போட்டியை மீண்டும் ஆரம்பிப்போம்."
விதானையார் முடிவெடுத்தார்.
"என்னெ திருப்பியும் விளையாடவா?" அலப்பெ வேணாம்!" நூகுத்தம்பி வாத்தி அடம்பிடித்தான்.
"நீ அடிச்செத்தெ நாங்கெ பாக்கெல்லெ..." கூட்டத்தில் பெரும்பகுதியினர் கூச்சல் போட்டனர்.
நூகுத்தம்பியின் உள்ளம் குமுறியது.
"நான் வென்றதும் போய். கடைசியிலெ கரையானிண்டும் ஏசிப்போட்டானுகள்." அவன் கண்கள் கலங்கியது. ஆவேசம் வந்தவனைப்போல - வெள்ளிப்பூண் பிரம்பைக் கையிலெடுத்தான். அட்டம் தொடங்கியது. அனைவரின் கண்களும் பிரம்பிலும்....கம்பிலும்...குத்திட்டுப் பாய்ந்து நின்றன.
விளையாடிக்கொண்டிருந்த நூகுத்தம்பியின் கண்களுக்குள் - நெருப்பு மணி ஒன்று காற்றில் வந்து விழுந்ததைப் போல - கண்கள் பற்றி எறிந்தன. அவன் தம் கையொன்றை கண்களுக்கு அருகில் கொண்டுபோன அதேசமயம் - அவன் தோளை அண்ணாவியார் ஏவிய பாம்பு கொத்திவிட்டு மீண்டது.
"அடிபட்டிட்டு அடிபட்டிட்டு....அண்ணாவியாருக்கு வெற்றி."
அண்ணாவியாரைத் தூக்கிக்கொண்டார்கள். விதானையாரும் மததிச்செமாரும் அவரை மக்கத்துச் சால்வையால் போத்தினார்கள். பையன்னா தமது கடையில் தொங்கிய பறங்கி வாழப்பழக் குலையை அண்ணாவியாரின் கையில் கொடுத்தார்.
சலவாத்துடன் 'பொண்டுகளி'ன் குரவையொலியும் இணைந்து வானைமுட்ட - அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.
"தம்பி என்னெ யோசிக்காய்?"
பழைய ஞாபகத்தில் மூழ்கியிருந்த என்னை அவர் குரல் நிணத்திற்கழைத்தது.
"நல்லா ஞாபகமிரிக்கி. எனைக்கி நல்லா ஞாபகமிரிக்கி அண்டய்க்கி உங்கெளுக்கு நடந்தது அநீதிதான்." நான் மிகவும் நிதானமாகச் சொன்னேன்.
"அண்டய்க்கி இந்த மண்ணெவிட்டு - சொந்த பந்தங்களை விட்டு போனெவன் நான். இண்டய்க்கி முப்பது வருஷத்தைக்குப் பிறகு வந்திரிக்கென். நீயெல்லாம் ஊரிலே பெரியாக்காளாப் போனீங்களாம். எனைக்கிச் சந்தோசம்."
அவரின் கண்கள் பனித்தன.
"மம்மனிவா! என்டெ புள்ளகள் ரெண்டுபேரு கொழும்புக் கெம்பெஸ’லே படிக்கானுகள். மூத்தவன் வெளிநாட்டுக்குப் போய்வந்து தனியா ரெண்டு 'இன்ஜின்போடு' வாங்கி ஆழ்கடலுக்குப் போறாண்டாமனெ. மலையிலெ எங்கெளெயும் மனுசனா மதிக்காங்கெடா. அண்டய்க்கி எங்களுக்கு கரையானுகளெண்டுதானே நீதி கிட்டெல்லெ... இண்டைய்க்கி எங்கெடடெவென் ஊருக்கும் அல்லாஹ்ட பள்ளிக்கும் தலைவனா வந்திட்டான். எங்கெடெ நாத்தெப்பிலாலுக்கு கிலோ நூறு ரூவாடா மனெ. அரிசி விலையைக் காட்டிலும் அஞ்சிமடங்கு கூடிட்றா."
அவர் நெஞ்சில் என்றோ கிளைத்த சுழி - பேரலையாகிப் பொங்கிக் குமுறியது.
"இப்பெ என்னெ செய்வெம்?"
"எனைக்கி நீதி வேணும். நான் திரும்பவும் அகமதுலெவ்வை அண்ணாவியோடெ கம்பு விளையாடணும். என்னையும் மக்கத்துச் சால்வையாலெ போத்தணும்!" அவர் விடாது பேசினார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு - இந்த மனிதனுக்கு இப்படியொரு ஆசையா? மூளையேதும் பிசகோ?"
என் மனம் தவித்தது.
"என்னெ யோசினெ? ராவைக்கு நான் மூத்த ராத்தாட்டான் தங்குவென். சுப்ஹு தொழுதாப்லெ வருவென். முடிவெச் சொல்லு."
பஞ்சுப் பொட்டியாய் தொங்கிய தாடியைக் கோதி விட்டுக்கொண்டே அந்த மனிதர் 'கிடுகிடு'வென்று படியிறங்கிக்கொண்டிருந்தார்.
"யார்ரு வீட்லெ?" நான்.
"வாங்கம்பி உள்ளெ!"
அகமதுலெவ்வை அண்ணாவியார்ரெ மனைவிதான் அழைக்கிறா.
"அண்ணாவியார் எங்கெ?"
"படுகாட்டு வயலெப் பாக்கப்போனாரு. இனி வாறநேரந்தான்." கூறிக்கொண்டே மெதுவாக அடுப்பங்கரையை நோக்கி...
தேயிலைப் பானை அடுப்பில் ஏறியது. ஐம்பதைத் தாண்டியும் கட்டுக்குலையாத அழகு. அத்தனை பல்லும் முத்துப்போல. அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியில் மட்டும் வெள்ளிக்கோடுகள்....
"என்னெ தம்பி கனகாலத்தைக்குப் புறகு?"
"அண்ணாவிச் சாச்சாவைக் காணணும்" நான் சொல்லி முடீவதற்குள்-முன் வாசலை சைக்கிள் எட்டிப் பார்த்தது. எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிவளைத்து - நூகுத்தம்பி வாத்தியாருடன் சங்கமித்தது.
"சாச்சா! அது நடந்து முப்பது வரிஷம். இன்னெம் நெஞ்சிலெ அப்படியெ..."
"ஓம்! மனெ அண்டெய்க்கி அவர்தான்...." அண்ணாவியார் பேச்சை மடக்கிக்கொண்டார். அவர் முகத்தில் ஏதோவொரு உணர்வுகளின் சாயல் படருகிறது. அவர் தோளில் மக்கத்துச் சால்வை பாரச் சுமையாகியதைப்போல....
"திருப்பி விளையாடனுமா? அதுக்கென்னெ விளையாடுவெம்" என்றவரின் மனம் எதையோ அசைப்போட்டது.
"என்னெ சீனடி விளையாட்டா? இந்தெ வயசிலெ இந்தக் கிழவனுகெள்?" சாச்சி கேலி பண்ணினா.
அன்று ஜும்ஆ நாள்.
அசர் தொழுகையின் பின்னால் தங்கள் பயங்களையெல்லாம் மறந்தவர்களாக....மக்கள்....
பையென்னா ஹோட்டெல் பாழடைந்து - சந்தைக் கடைகளெல்லாம் எப்பவோ மூடி - பூட்டுகளில் கறள் கட்டியும்விட்டது.
இழவு வீடுபோல் காட்சியளிக்கும் அந்த வீதியில் மக்கள் 'திமுதிமு'வென்று...
எழுபது வயது இளைஞர்கள் இருவரும் களத்தில்....
அகமதுலெவ்வை அண்ணாவியார் தனது மூக்குக் கண்ணாடியின் கால்களை - றப்பரைக்கொண்டு கட்டி, பிடரிப்பக்கமாக முடிச்சுப் போட்டுக்கொண்டார். நாற்பது வயதுக்குப்பிறகு அவருக்குப் பார்வைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது.
அன்றைக்கு மத்திச்செம் பார்த்தவர்களில் எவரும் இப்போது உயிரோடில்லை. எல்லோரும் மண்ணுக்குள் மறைந்து விட்டார்கள். புதிய இரத்தங்கள் ஊரைப் பரிபாலித்தது.
"ஆரம்பம்!"
விளையாட்டு ஆரம்பமாகியது. புதிய தலைவர் ஆணையிட்டார். அண்ணாவியாரின் கையில் அதே கல் விண்ணாங்குத்தடி காய்ந்து - தைலம் வற்றி "ங்ங்...ய்" ஊதிக்கொண்டு படமெடுத்தாடியது. அவர் குந்தி எழுந்து சுற்றிச் சுழன்றார். அந்தரத்தில் வட்டமிட்டு - அதேவேகத்தில் காலடி மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக்கொண்டார்.
நூகுத்தம்பி ம றுதானின் கையிலும் அதே வெள்ளிப்பூண் மூங்கில் பிரம்பு. கையிலிருந்து சிறகடித்து கொக்கரித்தது. அவரின் ஒற்றைக் கைச்சுழலில் மூங்கில் பிரம்பு விண்ணொலி பிழிந்தது.
எழுபது வயதுக் காகங்கள் இரண்டும்....நீச்சலடித்து; கரைகட்டி நின்றன. அவர்களின் மார்புகள் உயர்ந்து உயர்ந்து தணிந்தன.
மீண்டும் விளையாட்டுத் தொடங்கியது.
நூகுத்தம்பி மஸ்த்தானோ பழைய வஞ்சத்தை நெஞ்சில் நிரப்பி நெருப்பாகச் சுற்றிச் சுழன்றார்.
அகமதுலெவ்வை அண்ணாவியார் - நின்று நிதானித்து எதிரியை மடக்கிப் பிடிக்கப்பார்த்தார். மூங்கில் பிரம்பின் ஒவ்வொரு அடியையும் - லாவகமாகவும் புத்திசாதுரியமாகவும் தடுத்துக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது.
அகமதுலெவ்வை அண்ணாவியாரின் கண்ணாடி கழன்று - வீதியின் மறுகரையில் விழுந்து நொருங்கியது...அதேசமயம் நூகுத்தம்பியின் வெள்ளைப்புறா அவரின் தோளின் அருகில் போய்...
புறா நினைத்திருந்தால் கொத்திக் காயமாக்கியிருக்கலாம். ஒருகணம்தான் பின்வாங்கிற்று...
அண்ணாவியாரின் கண்களுக்குள் பாநூறு வெள்ளைப் புறாக்கள் - அவர் திக்குமுக்காடிப் போனார்.
நூகுத்தம்பி மஸ்தானின் வேகம் மட்டாகியது. கையிலிருந்த மூங்கில் பறவை, பறந்து பறந்து, சுழன்று சுழன்று அடித்துக்கொள்ள - சிந்தனைக் காகம் அடம்பிடித்தழுதது.
'கண் பார்வை புகைச்செல்போலெ. இவருடன் நான் மோதுவது நீதியில்லெ. இந்தெ வயசிலெயும் அல்லாஹ் எனைக்கி இவ்வளவு பிலத்தையும் கண்ணிலே ஒளியெயும் தந்தானெ இதான் பெரிய பரிசு.' அவர் மனசு மத்திச்செம் கூறியது.
மறுகணம் அவர் கையிலிருந்த வெள்ளிப் பூண்போட்ட மூங்கில் புறா எங்கோ பறந்துகொள்ள - ஓரே பாய்ச்சலில் அவர் அகமதுலெவ்வை அண்ணாவியாரை 'முசாபா'ச் செய்யக் கட்டிப்பிடித்தார்.
அகமதுலெவ்வை அண்ணாவியாரும் தமது கல் விண்ணாங்குத் தடியைத் தூர எறிந்தார்.
இரண்டு காகங்களும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து....முசாபாக் செய்து....முத்தமிட்டு...
பார்வையாளர்களின் கண்கள் கசிந்து மேனி சிலிர்த்திற்று -
மஸ்தானின் பிடியிலிருந்து விலகிய அண்ணாவியார் ஏதோ பேச ஆயத்தமானார். கூட்டத்தினர் வாயடைத்து நின்றனர்.
"அஸ்ஸலாமு அலைக்கும்! முப்பது வருஷத்திக்கு முந்தி நடந்த போட்டிலெயும் நூகுத்தம்பிதான் வெத்தினார். அண்டெய்க்கி அந்தெ வெத்தியெ என்டெ வரட்டுக் கவுரவம் எத்துக்கெல்ல. அண்டெய்க்கிம் இண்டெய்க்கும் இவருதான் வெத்திவீரன்." என்றவர் உடனே முப்பது வருடங்களுக்கு முன்னர் ஊர்மக்கள் தன்னைப் போர்த்தி, சங்கை செய்த மக்கத்துச் சால்வையை இடுப்பிலிருந்து பவ்யமாக எடுத்தார். சால்வையின் இரு கரைகளையும் ஒன்றாகப் பிடித்து உதறியவராக - அதேவேகத்தில் நூகுத்தம்பி மஸ்தானைப் போர்த்தியும் விட்டார். இத்தனை வையை வழங்கிவிட்ட திருப்தியில் - பாவச்சுமை கழன்றுவிட்ட ஆனந்தத்தில் அவரின் கண்கள் கசிந்தன.
நாயகத்தின் பெயரால் சலவாத்து வானத்தை எட்டியது. அந்தப் பூவரச மரமும் ஆனந்தத்தில் சிரித்துக் கொள்ள - நூகுத்தம்பி மஸ்தானின் தோளில் கிடந்த மக்கத்துச் சால்வையின் அத்தர் வாசனை காற்றில் கலந்து நிறைந்தது.
- 1991 -
பொம்மைகள்
கோடை காலத்து வெப்பம் சினைத்த வெய்யிலிருந்து கொடுமையை, வாசலில் போடப்பட்டிருந்த நாலுகால் பந்தல் சற்றத் தணித்தது. களிமண்ணுடன் குருத்து மணலையும் துவைத்துப் பதப்படுத்திய பின்னர். அவ்வாக்குட்டி 'பளார் பளார்' என ஒன்றின்மேல் இன்னொன்றாக பாளங்களாக்கி அடுக்கினாள். நீரில் தோய்த்தெடுத்த சீமையால் மூடிய பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக தனது மகளைக் கூப்பிட்டாள்.
"ஆசியாம்மா...வோய்!"
தாயின் குரலைக் கேட்டதும் அவள் "வர்றேங்...காய்...!" என்று பதில் குரல் விட்டாள். இந்தக் கூப்பாட்டில் அவ்வாகுட்டியின் 'கடைக்குட்டி' மகன் இலவத்தம்பி எழும்பிவிட்டான்.
தூக்கக் கலக்கம் கலைந்தும் கலையாத நிலையில் ஒரு வாரமாகத் தன் தாயாரிடம் நச்சரித்துவந்த பொம்மையின் ஞாபகம் வரவே.
"வும்மா...ஏக்...கு..கிளி பொம்மெ வாபா...த்தா..."
பிடித்தால் அவன் அணுங்குப் பிடியன். அவனுக்கு வாப்பாவிடம் சொல்லி கிளி பொம்மை வாங்கித்தரணுமாம். இதுதான் அவன் சிந்திய மழலையின் அர்த்தம்.
"உன்டெ வாப்பா வெத்தான் நீ பொறந்து தூக்கிக் குடுத்திட்டீயெ"
அவளுடைய அதரங்கள் சோகப் பொருமலில் இலேசாகத் துடித்து ஓய்ந்தன. அத்துடிப்பினூடே அவள் மூன்று ஆண்டுகால ஓட்டத்தில் எதிர் நீச்சலடித்து மிதந்தாள்.
இன்று பால் குடிக்கும் அந்த ஊனம் - மகன் உறவு கொண்டாடும் அந்த குதலை, அவளின் கருப்பையிலே சிசுவாக வளர, கணக்கின்படி, அவள் ஏழுமாதப் பிள்ளைத் தாச்சியாக இருக்க.... தாய்மைச் சுமையின் சிரமத்திற்கு பக்கபலமாக அவளின் கணவனான சுலைமாலெவ்வையும், மகள் ஆசியாவுமேயிருந்தார்கள். இனபந்துக்கள் என்று வேறு யாருமேயில்லை. ஆசியா, வயதுக்குமீறிய பெண்மை உணர்வுடன் வீட்டின் பணிகளின் பெரும்பகுதியை இயற்றினாள். அதில் அவளுக்குத் தனி இன்பம்.
ஆசியாவின் அழகையும் குணநலன்களையும் புகழாதவர்கள் அயலில் யாருமில்லை.
"அவ்வாக்குட்டி பொள்ளெப் பெத்து வளத்தாளிண்டு நாமெளும் பெத்தோமெ. ஹறாங் காலிகளெ. ஏன்டி ஆசியாடெ மூத்திரத்திலே வாங்கிக் குடிங்கெடீ புத்திவரும்."
சொக்கிலெ ஒரு இடுங்கு இடுங்கியபடி தம்மைத் திட்டித் தீர்க்கும் தாய்மார்களை, ஆசியாவுடன் இணைத்துச் சபிப்பார்கள் பக்கத்துவிட்டுப் பிள்ளைகள்.
அவ்வாக்குட்டியின் கணவன் சுலைமாலெவ்வையின் பூர்வீகத்தை யாரும் விசாரித்ததில்லை. எங்கிருந்தோ வந்தான். எப்படியோ அவள் வாழ்வில் இணைந்தான். இளமையிலேயே அன்னியோன்னியத் தம்பதிகளாக வாழத் தொடங்கிவிட்டார்கள். மூத்தவள் ஆசியா தொடக்கம் கடைக்குட்டி இலவத்தம்பி வரை ஆறு பிள்ளைகள். அவர்களின் மூவர் வாழ்நாளை இடையிடையே முடித்துக் கொண்டார்கள். ஆசியாவுக்கு அடுத்தவன்-
'லவுக்குச் சோத்துக்கும் - வரிசெத்திலெ ஒரு புதுடுப்புக்கும்' குருவிக்காரெப் பொடியன் என்ற பெயரில் மதுரங்குண்டில விதானெப் போடியாருடைய வயலிலெ கசங்குகிறான். அவனுக்கு அவ்வல் கலிமாவும் தெரியாது அரிவரியும் தெரியாது.
மாடு, கலப்பை, வாடி, அகப்பை என்று அவனும் ஒரு ஜெடமாகிவிட்டான். பதினைந்து வயதிலேயே முதுமையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட தோற்றம்.
இப்படித்தான் ஏழெட்டு வருஷங்களுக்கு முதல் ஒரு நாள், மகனையும் கூட்டிக்கொண்டு சுலைமாலெவ்வை கால போக 'வெள்ளாமெ' வெட்டப் போனான். பொழுதுபடும் வேளையில் விதானெப் போடியாரின் மாட்டு வண்டியில் 'மையத்தாகி'....
கருவளைப் பாம்பு அவனுக்கு காலனின் உருவில் வந்து.... நினைவில் மூழ்கியிருந்த அவ்வாக் குட்டியின் கண்களில் நீர்த்திவலைகள் பெருக்கெடுத்தன. அவள் தன் சேலைத் தலைப்பால் விழிகளைத் துடைத்துக்கொண்டாள்.
"உம்மா ஏங்கா அழுவுறீங்கெ?" மகள் ஆசியா கலங்குவரைக் கண்டு அவள் சுயமானாள்.
ஆசியாவோ தாயாரின் வேதனையை அறிந்தும் அறியாதவளைப்போலெ - களிமண்ணுடன் குருத்து மணலைக் கலந்து துவைக்கத் தொடங்கினாள். வாழைத்தண்டைப் போன்ற அவளுடைய அழகிய கால்களிரண்டும் அந்தக் கலவையில் ஒட்டியும் ஒட்டாமலும் பரதம் பயின்றன. மண்ணைப் பதப்படுத்தியதும் பாண்டங்களை உருவாக்குவதிலே தாயும் மகளும் முணைப்புக் காட்டினர். பழக்கத்திலே தேர்ந்த கரங்களின் சுறுசுறுப்பு வனைவு ஓட்டிலே முண்டமாகக் குந்தியிருக்கும் மண் குவிவல் 'சத்துநேத்தை'க் கிடையில் அழகு பொருந்திய குடமாகவும், பானையாகவும் அவதாரம் எடுக்கும் விந்தையை என்னவென்பது!
ஒரு சுற்றில் வேலைகளெல்லாம் முடிந்தது. இனி உள்ள பொழுதில் 'ராப்பாட்டை' பார்க்கவேண்டும். பாழும் வயிறும் 'புறுபுறுக்கத் தொடங்கியது. இடையில் கடைக்குட்டியும் கத்தத் தொடங்கிவிட்டான். வற்றிப்போன மார்பகங்களின் ஒன்றை அவன் வாய்க்குள் திணித்தாள். அவனோ கிளிப் பொம்மை படலத்திலேயே கூத்துப்போட்டான்.
"மனெ ஆசியாம்மா தம்பியெக்கூட்டிப்போய் மீராசாடெ கடெயிலே ஒரு கிளிப்புள்ளெ வாங்கிக் குடுமனெ. உம்மா சட்டி பானெ சுட்டு காசி தருவாண்டு செல்லு தங்கோம்." வார்த்தையில் பாசக் குழைவு விளைந்தது.
பிள்ளைகளைக் கடைக்கனுப்பிவிட்டு அவள் அடுக்களைப் பக்கம் போனாள். வெறும் பானை கிடைந்தது.
'ஆண்டவனே! ராவைக்கு கஞ்சிக்கும் வழில்லியே' அவள் மனம் ஏங்கும்போது - போடியாராக்காவின் பெண் சாதி மரியம்மச்சியின் ஞாபகம் வந்தது. அவள் ஓட்டமும் நடையுமானாள்.
"இப்பெ அரிசிண்டா தங்கம். கொத்து மூணுசிலின். எனைக்கி இந்தச் சூளயிலெ சுடுறெ பானையிலெ மூணைத் தந்திரணும்." மரியம் மச்சி - அரிசியைக் கொடுத்து கறாராச் சொன்னாள்.
"அவ்வா மெய்தான் புள்ளெ. இளவிலெ அயத்துப் பெய்த்தென். உங்கெ காக்கா உன்னெப் போய்ப் பாத்து விசயத்தெ செல்லச் சென்னவெரு. உன்டெ மகளுக்கு மாப்பிள்ளெ பாத்திரிக்காராம். எப்பிடியும் வாறெ வெள்ளிக் கிழமெ கொத்துவாக்குப் புறகு காவின் எழுதணுமாம். செலவெப்பத்தி நீ கவலெப்படாதெ. எல்லாத்தெயும் மாப்புளெ பாப்பாரு." மரியம் மச்சி ஒன்றும்விடாமல் ஒப்புவித்தாள். எதிர்பாராத இந்த வார்த்தைகளில் அவ்வாக்குட்டி சிக்குண்டாள். அவள் காதுகளையே அவளால் நம்பமுடியவில்லை.
"மாப்புள்ளெ எப்பிடி மச்சி?"
"மாப்புளெக் கென்னெடி. தம்பன் கடவயிலெ மாட்டுப்பட்டி, காணி வயலெல்லாமிரிக்கி. மூத்தெ பொஞ்சாதி மவுத்தாப் பெய்த்தாவாம். உன்டெ காக்கா, போடியாரு ஒரு காரியம் பாத்தா அதிலெ ஒரு குறையும் வராது."
அவ்வாக் குட்டியின் மனம் சட்டிபானைத் திடலில் கூத்துப்போட்டது. மரியம் மச்சி தம்பன் கடவயிலெ சென்னை, மாட்டுப்பட்டியின் பசுவும் கன்றும் வாலைக் கிளப்பில் கொண்டு ஓடியன...
அவளும் வீட்டை அடையவே -
"வும்மா... ஏக்கு....ராத்தா கிளிம்...மா" அவள் மகிழ்ச்சி பிரவாகித்தில் மகனை, முகத்திலும் நெற்றியிலும் முத்தமழை பொழிந்தாள்.
ஆசியா அடுப்பை மூட்டி உலைவைக்கத் தொடங்கினாள். பந்தக்காலில் போடப்பட்டிருந்த ஊஞ்சல் பலகையில் அவ்வாக்குட்டி.
"கண்ணே! எண்டெ கண்மணியே....
கண்ணுறங்கு ராசாவே....
ஹயாத்து நபியவெங்கெ காவலுடா கண்ணுறங்கு..."
உம்மாவின் 'கிளுகிளு'ப்பில் ஆசியாவுக்கு எதுவுமே விளங்கவில்லை.
"மனெ ஆசியா! எனெக்கிம் மண் பினைஞ்சி பினைஞ்சி உடம்பு ஓடாப்பெய்த்து. அதான் போடியார் மாமா உனக்கிண்டு மாப்புளெ பாத்திரிக்காராம். உன்டெ சம்மதெத்தெக் கோக்காமெ நானும் முடிவுடுத்திட்டென்."
பருவ வயதை எட்டிப்பிடிக்கும், அந்தப் பேதையின் கன்னக் காதுப்புகள் சிவந்தன. அடுப்பில் எரிந்துகொண்டிருந்த விறகின் வெளிச்சம் அதற்கு அழகு சேர்த்தது. ஏதோவொரு உணர்ச்சி மேலிட உடல் சில்லிட்டு நின்றன.
இவையெல்லாம் மௌன மொழியில் அவள் அலர்த்திய சம்மதம்.
ஒருவாரம் கழித்து, நீண்டு வளைந்து செல்லும் அந்தச் செம்மண் பாதையில் - பஞ்சுப் பொதியென தாடி மீசையுடனும், வழுக்கைத் தலையை மூடி மறைத்திருக்கும் குல்லாய்த் தொப்பியுடனும், காற்றில் அசையும் பட்டை மரத்தைப் போலெ - கிழடு தட்டிப்போன ஓர் உருவம் நகர்ந்துகொண்டிருந்தது. அந்தக் கிழவனின் பின்னாலே பட்டுச் சோமனுக்குள் மறைந்தவண்ணம் ஆசியாவும் நடந்து கொண்டிருந்தாள்.
அந்தக் காட்சியை பார்க்க விரும்பாதவளைப்போல, குருத்து மணலைக் களிமண்ணுடன் சேர்த்துப் பிசையத் தொடங்கினாள் அவ்வாக்குட்டி. அவளின் காலடியிலே கிடந்த கடைக்குட்டி மகன்-
"வும்...மா... தாத்தா கிளி வொம்மெ...வாங்கி...மச்சான் போச்சி...."
என்று ராத்தா அவனுக்கு வாங்கிக்கொடுத்த கிளி பொம்மையை களிமண் பாத்தியிலே வீசினான். சேற்றுள் அமுங்கிய அந்த பொம்மையைக் கண்டதும் அவள் கால்கள் தரித்தன. விழிகள் பனிக்கலாயின.
- 1967 -
..............
பேய்களுக்கு
ஓரு வாழ்க்கை!
அடிபட்ட பாம்பைப்போலெ அன்றையப் பகற்பொழுது சீறிக்கொண்டு மறையும் வேளை....
அப்பிக் கொள்ளும் கரியைப் போலெ இரவு ஊர்ந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக நரிகளின் ஓலங்கள் செவிப்பறைகளே தூளாகும் வண்ணம் முட்டிமோதிச் செல்கிறது.
அந்த ஓலங்களுக்கப்பால், நீண்ட தூரத்தில் வேலவை வில்லிலிருந்து வரும் யானைகளின் பிளிறல்...
தலைக்கு மேலால் பறந்து செல்லும் ஆள்காட்டி குருவிகளின் க்யூ...க்யூ...ஓசைகள். பேய்கள் தான் ஆற்றுக்கு வருகின்றனவோ?
என் உணர்வுகள் உறைந்து கொண்டு வருவதைப் போல - கால்கள் முன்னேற மறுத்து அடம்பிடிக்க - ஓர்மம் எங்கோ ஒடி ஒழிந்துகொண்டதைப்போல....
'சே! இண்டெய்க்கி அதை எப்பிடியும் பாக்கத்தான் வேணும்.'
எனக்கு நானே தைரியம் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.
கையில் தொங்கிய 'டோர்ச்சை' சரி பண்ணிக்கொண்டு மெதுவாகவே நடக்கத் தொடங்கினேன்.
"பூக்...பூ....பூக்...!"
ஒரு கணம் இரத்தம் உறைந்து வருவதைப்போலெ...
"சீ! பன்றிகள்...ஹறாமில புறந்ததுகள்...."
பயத்தை உதறிக் கொண்ட எனது கால்கள் அடிக்கொரு தரம் தயங்கியவைகளாக நடைபோடுகின்றன.
இடையில் - மனம் போன வெள்ளிக்கிழமை இரவு துறைக்காரண்டெ பெண்சாதியும் றபீக்காட உம்மாவும் சொன்ன வார்த்தைகளைத் தேடியது.
பயத்தில் கண்களிரெண்டும் பிதுங்கி வெளித்தள்ள - கடைவாயிலிருந்து வழிந்தோடும் வெற்றிலைப்பாணியை புறங்கையால் வழித்துக்கொண்டே அவர்கள் கூறியதை....
"டாக்குத்தர்! உங்களுக்குத் தெரியுமே பொழுது பட்டா எங்கெட துறையிலெ ஒரு பொம்புள்ளெ தலையையும் விரிச்சிப் போட்டிட்டு, தாய் பெத்த மேனியோடெ குளிக்கெ வருது. என்ன தான் அழகு டாக்குத்தர்."
"மெய்தானா?" எனது சந்தேகம் சவாலாக அவர்கள் அடுத்த வீட்டு மரியங்கண்டையும் சாட்சிக்கழைக்கிறார்கள்.
"ஓம்! டாக்குத்தர். சுலைமாலெவ்வெட பொஞ்சாதியை முதள கொண்டு போனெ நாள்லெரிந்து - நெடுகெ இப்பிடித்தான். அலெட ஆவிண்டுதாங் கதைக்காங்கெ. என்னதான் அழகு மாத்தயா?"
அதிசயமும் அங்கலாய்ப்பும் அந்தக் கண்களில் ஒளிர்ந்தன.
'அப்பெ நான் இதெப்பாக்கத்தான் வேணும்' எனது உறுதி கலந்த குரலில் இருந்த நம்பிக்கையை சிதறடிப்பதைப் போல அவர்கள்....
"போவாணாம் டாக்குத்தர். பயந்து கியந்து போனாலும் கரச்செல்."
"சீ! அதெயுந்தான் பாப்பமெ."
மீண்டும் என்னை ஓர்மத்திற்குள் தோய்த்து எடுத்துக் கொண்டவனாக நடைபோடுகின்றேன்.
இருள் வானத்தை நீக்கமற அடைத்துக்கொண்டுவிட்டது. தூரத்தே பெய்த மழையில் தோய்ந்த ஊதல் காற்று உடலில் 'சில்' லென்று ஊடுருவியது.
வேலவை வில்லிலிருந்து யானைகள் புல்லடிக்கும் சத்தம் துணி வெளுக்கும் தாளலயத்தோடு....
"சக்கு...சக்கு...சக்கு..."
நானும் அந்த சப்தத்தை மனத்திலெ சப்தித்துக் கொண்டவனாக...
ஆற்றை நெருங்க நெருக் எனது கண்கள் புலன்களுக்கு சாணை பிடிக்கின்றது.
"அதோ! அம்மணமாக...தலைவிரி கோலமாக...ஒரு பெண். நிச்சயமாக அந்த மருதமரத்தின் மறைவிலேதான் ஒளிந்திருக்கவேண்டும்.
'பேய்களுக்குத்தான் கால்கள் நிலத்தில் தாவாதாமே!
அப்படியென்றால், சேற்றில் அமுங்கிப் போயிருப்பது மனிதக்கால்களல்லவா?
எனது சிந்தனை கூர்மை பெறுகிறது. கால்களை எட்டிப் போடுகிறேன்.
"டாக்குத்தர் மாமா!" பிஞ்சுக் குரலொன்று அந்த இருட்டையும் கிழித்துக் கொண்டு தவழ்ந்து வருகிறது.
எனது 'டோர்ச்'சின் வெளிச்சத்தில் அந்தச் சின்னஞ்சிறுசு கண்களைக் கூசிக்கொண்டே அண்மித்துவிட்டது.
இந்தப் பிள்ளயெ நான் எப்பவோ பார்த்த ஞாபகெம். ஒரு கணம் மனத்தில் மின்னலெனெ ஓடி மறைய்ய, அந்தெநான் உடனெ ஞாபகத்திற்க வருகிறது. நான் இந்த ஊருக்கு மாற்றலாகிவந்த புதிதில் ஒருநாள் இந்தப் பிள்ளையையும் இதன் பிஞ்சு இடையில் இன்னொரு குஞ்சுமாக என் மனைவியிடம் ஏதோ கேட்க அவள் என்னிடம் அபிப்பிராயம் கேட்டாளே!
'இதுகளெல்லாம் இப்பிடித்தான். யாருக்காவது வித்துப்போட்டு நாளைக்கிம் நமக்கிட்டெ வந்து பல்லெக்காட்டுங்கள். நீ உண்டெ வேலயெப்பாரு.'
எனது சினத்தைக் கண்டதும் அந்தச் சின்னஞ் சிறுசுகள் சென்று விட்டன.
அன்று வந்த அந்த மூத்த சிறுமிதான். இந்தெ நேரத்தில் இங்கே -
"என்னெ பிள்ளெ இந்தெ நேரத்திலெ."
பக்கிளைப்போலெ கண்களைக் கசக்கிக் கொண்டே-அவள் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்கிறாள்.
"உம்மாக்கு தண்ணிவாக்கெ உதத்தாடெல்ல மாமா. அதான் நாங்கெ ராவிலெ ஆத்துக்கு வந்து குளிக்கெம். ஆனைகள் வாறத்துக்கு முந்திப் போவணும் மாமா."
திடீரென எங்கிருந்தோ ஓடிவந்த காட்டெருமை என் மனக்குளத்தை கலக்கி - சேற்றை வாரி வாலால் முகத்தில் அடித்ததைப்போல....
அந்த வார்த்தைகளில் கண்ணி வெடியில் நான் சிக்குண்டவனாகிய நிலையில் - எனது நெற்றிப் பொட்டில் 'விண்'ணென்று வலி எடுத்தது.
"பிள்ளெம்மா நாளைக்கி எங்கெடெ பங்களாக்கு வாறியா?" அந்தக் குஞ்சு தலையை ஆட்டுகிறது.
'சுலைமாலெவ்வெட பொஞ்சாதியின் ஆவியெப் பாத்திருந்தாலுங்கூட என்டெ மனம் இப்பிடிப் பிஞ்சிரிக்குமோ? நானறியேன்!"
மனத்திலே சடுதியா சுமக்க இயலாத பாரத்தினை ஏற்றி வைத்ததைப்போலெ....
பழக்க வழிப்பாட்டில் மீண்டும் பயணம்.
வழியில் துறைக்காரர்ரெ பொஞ்சாதியும் றபீக்காட உம்மாவும் எதிர்பார்த்து பாத்திருப்பவர்களைப் போலெ....
"என்னெ டாக்குத்தர் பேயைப் பாத்தீங்களா?" இருவரும் ஏக காலத்தில் கேட்கிறார்கள்.
நானோ மௌனியாகி ஊமைக் கண்ர் வடிக்கிறேன்.
ஊதல் காற்றோடு அவர்கள் கேள்வி கலந்து சிதற-எனது கால்கள் நடைபோடுகின்றன.
கொஞ்சத்தூரம் திரும்பும்போது...அவர்கள்
"டாக்குத்தர் நல்லாப் பயந்திட்டாரு போலெதான். அடியேப் மரியெம் இஞ்செ வந்து பார்த்தாயாடி மாத்தயாடெ கோலத்தை....
- 1975 -
..............
ஒரு விமர்சனம்
இன்றா நேற்றா? ஆறு மாதங்களாக அவன் வரவேயில்லை.
நேற்று அந்த ஊருக்குப் புதிதாய் வந்த நகைக்காரன் அவளிடம் சொன்னவை நினைவுத்தடத்தில் விரைகின்றன.
"இவருக்கு...அதான் உங்கெட மொய்தீனுக்கு புதூரிலயும் ஒரு கல்யாணமாம். அதிலெயும் மூணு புள்ளகளிருக்கி"
எந்தப் பெண்ணிற்கும் அதுவும் குழந்தைகள் இரண்டிற்குத் தாயான பிறகு - நிலை குலையச் செய்யும் அந்தச் செய்தி, அவள் மனத்தில் எந்த விதச் சலனத்தையும் ஏற்படுத்தாத பாவம். அதற்கு மாறாக அவள் அந்த நகைக்காரனின் முகத்திலே அறைந்தாற்போல -
"நமக்கென்ன? எத்தினயெண்டாலும் வச்சிக்கட்டும், எனைக்கும் என்டெ குட்டிகளக்கும் குடிக்கக் கஞ்சியும் உடுக்கத் துணியும் தந்தாப்போதும்" நடுங்கும் குரலில் உருட்டப்படும் வார்த்தைகளிலே அமானுஷ’யமான பதி பக்தித்திரட்டு.
இரவின் போர்வைக்குள் விறைத்து, மோன மயக்கத்தில் மூழ்கிக்கிடந்த கிராமம் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டு வந்தது. கிராமம் என்ற சொல்லின் முழுமை மேற்கே கண்ணாடியை உருக்கி வார்த்தாற்போல ஆடி அசைந்தோடும் ஆறு கிராமத்திற்கு நேர் வகிடு இழுத்து அழகு காட்டுகின்றது.
அந்தக் கிராமத்தின் அழகில் நெஞ்சம் பறி கொடுத்து அங்கு வந்த கவிஞர்கள், யாத்திரிகள் ஆகியோருடைய விபரங்களை அதிகம் அறிய முடியவில்லை.
ஆனால் பிழைப்பு நாடி அக்கிராமத்திற் குடியேறி வம்சவேர்களை ஆழ இறக்கி நிலை கொண்டவர்கள் பலர். அவர்களுள் ஒருவன்தான் நகைக்கார மொய்தீனும். வந்த புதிதில் அந்தக் கிராமத்திற்கே அவன் புதியதொருகளையை ஏற்படுத்திய பிரமை நிலைத்தது. அந்தக் கிராமத்தின் நடை, உடை பாவனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு....
காலுக்குப் பளபளக்கும் 'பம்' சூஸ். சூஸ’ன் முன்முகப்பை முத்தமிட்டு நிற்கும் பழையகாட சாரனின் வெள்ளிக்கரை வாட்டி. மடிப்புக் கலையாத நைலோன் ஷேர்ட். இவையெல்லாம் இணைந்து காண்பவர்களையெல்லாம் அவனுக்கு நண்பர்களாக்கிற்று.
தங்கம்....வெள்ளி....தங்க நகைகள்...
அவன் குரல் காற்றோடு இணைந்து - சூன்யத்துள் கலந்து காற்றுச் செல்லும் திக்கெல்லாம் அவனைக் காண விழிகள் பல காத்துநிற்கும்.
தன்னுடைய தொங்கட்டானுக்குத் தூக்கு வாங்க வேண்டுமென்ற ஆசையில் முகிழ்த்து - சப்தம் வந்த திசையில் காதைத் தீட்டி நின்ற மரியங்கண்டு துவைத்துக் கொண்டிருந்த களிமண் பாத்தியை விட்டும் துள்ளிக் கொண்டு கடப்பிற்கு வந்தாள்.
"என்னெரிக்கி?"
"எல்லாமிரிக்கி!" அவன் வார்த்தைகள் குத்தலாகப் பாய்ந்தன.
"எல்லாமிண்டா?"
'உங்களைப் போலவங்களுக்குத் தேவையானயெல்லாம்". அவன் ஒரே வார்த்தையில் ஒப்புவித்தான்.
மரியங்கண்டோய்....நகக்கார ஆள கூட்டிட்டு வா புள்ளேய்..." அவள் உம்மாவின் கூப்பாடு அந்தக் கிராமத்தின் ஒரு தெருவை நகைக்கார மொய்தீனுக்கு தன்பாட்டிலேயே விளம்பரம் கொடுத்தது.
அவனைச் சுற்றிவளைத்து - பொண்டுகள், பிள்ளைகள் என்று.... அவன் அந்தத் தோல்பையைத் திறந்து ஒவ்வொன்றாய் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தான்.
கூட்டமெல்லாம் கலைந்த பின்னர் மரியங்கண்டின் தாய்,
"தம்பி! இந்தப் புள்ளைக்காகிய தூக்கிரிக்கா எண்டு பாருங்கெ பாப்பம்" வார்த்தைகள் சாவதானமாக வந்து விழுந்தன.
ஆயத்தமாக வைத்திருந்தவனைப் போல அவனும் தூக்கை அவள் கையில் வைத்தான்.
காலை இளம் வெய்யிலில் அவளின் உள்ளங்கையில், உருண்டு திரண்ட வெள்ளித்தூக்குகள் இரண்டும் பனித்துளிகள்போல் 'பளபள' த்திற்று.
வாசலில் போட்டிருந்த பந்தற்காலுக்கு மரியங்கண்டு முட்டுக் கொடுத்து நின்றாள்.
"இஞ்செ வாபுள்ளெ பாப்பெம்" உம்மா அழைத்து - அவளின் காதுகளில் பொருத்திப்பார்த்தாள். முயற்சி பலிதமாகவில்லை.
மீண்டும்...மீண்டும்...
மரியங்கண்டின் பூப்புரை சிவந்து, குருதி உறைந்து கொண்டு வருவது கண்களுக்குள் தைக்கவே மொய்தீன்
"இஞ்செ கொண்டு வாங்கெ பாப்பெம்" என்றான்.
மரியங்கண்டு - அவள் சிலிர்த்து, அவன் அருகில், தாயின் பக்கத்தில் குந்திக் கொண்டாள்.
நீண்ட நாள் பயிற்சியின் பலிதமாக அடுத்த கணமே அவளின் காதுகளில் அந்தத் தூக்குகள் 'டால்' அடித்தன.
தான் நினைத்ததை அடைந்து விட்டதான பெருமிதத்தில் அவள் மிதக்கும்போது...
ஆண் மனம் நிதர்சனத்திற்கு அப்பால், ஆன்மீக வலிமையை ஒடுக்கி, அதன் கட்டிப்பில் அவளுடைய அம்மண மேனியின் அள்ளு அழகை தரிசிக்க விழைகின்றது.
மகளின் கழுத்தில் மூன்று முடிச்சு விழுவதிலேயே கண்ணும் கருத்துமாய் நிற்கும் மரியங்கண்டின் தாய், மொய்தீன் மகளைப் பார்ப்பதை அனுமதிப்பவளைப் போல தன் செய்கையையும், பார்வையையும் வேறொன்றிற் காட்டினாள்.
கணவனை இழந்து - கைம்பெண்ணாகி - மூன்று பெண் மக்களையும் 'கடைக்குட்டி' மகனையும் தன் கையாலேயே காப்பாற்றிவரும் மரியங்கண்டின் தாய்....
உழைப்பு அவளாகியது. ஆனால் சாண் தைக்க முழும் கிழிவதைப்போல வறுமையின் நிழல் அவள்மீது கவிந்து நெடிது வளர்ந்தது. அந்த வாழ்வின் முதுசமாக பக்குவப்பட்டு நிற்கும் மரியங்கண்டும், மொட்டாகி நிற்கும் ரஸ்னாவும் - முகையென அரும்பும் ஜெமீலாவும் 'கடைக்குட்டி' அகமதுந்தான்.
"தம்பிக்கு தெயிலெ வெய் புள்ளெ..." அவன் பார்வையில் சிக்குண்டு நின்ற மரியங்கண்டு விடுபட்டு அடுப்பில் புகை மூட்டத் தொடங்கினாள்.
"தம்பீ! இப்பெ காசெடுக்கேலாது. சட்டி பான சுட்டுத் தானெடுக்கணும்."
"அதுக்கென்ன புறகெடுக்கலாம்." என்றவனின் பார்வை அடுப்பில் புகையோடு மல்லுக்கட்டும் மரியங்கண்டில் விழுந்தது.
அன்று பகல் அவனுக்கு அங்குதான் சாப்பாடு.
சாயந்திரம் அங்குள்ள சந்தையில் பெரியதொரு விரால்மீன் கோர்வையையும் - மூக்கைத் துளைக்கும் மான் கொட்டை மணச்சவுக்காரத்துடன் கூடிய சில்லறைச் சாமான்களையும் வாங்கி, மரியங்கண்டின் தங்கச்சி ரஸ“னாவிடன் கொடுத்தவன் முச்சந்தி பக்கம் நடையைக் கட்டினான்.
அடுத்த நாள் 'பொலபொல' வென்று விடிந்த காலைப் பொழுது, 'மரியங்கண்டுக்கும் நகைக்கார மொய்தீனுக்கும் ராவு கலியாணம் முடிஞ்சிட்டதாம்' என்ற மங்களகரமான செய்தியையும் பரப்பியது.
அதற்குப்பிறகு - அவளின் திருமணத்திற்குப்பிறகு அவளை மரியங்கண்டு என்று யாரும் அழைப்பதில்லை. அவள் பெயரின் பின்னால் இருந்த 'கண்டை' வெட்டி பீலியை அங்கு மோகத்துடன் ஒட்டிக்கொண்டான் மொய்தீன். அதுவும் நிலைத்துவிட்டது.
கொஞ்சக் காலத்திற்குப் பிறகு அந்தக் குடிசையும் இரண்டறை மண்டபமும் வீடாக மாறியது.
அந்தச் சிறிய தோற்பைக்குள்ளேயே அத்தனை பேருக்கும் - அதுவும் இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் - வாரிவழங்கும் அந்த இறைவனின் மகிமையை எண்ணி ஆச்சரியப்படாதவர்களேயில்லை.
ஆரம்ப நாட்களில் அவனை அலட்சியம் செய்தவர்கள் நாட்கள், செல்லச் செல்ல, அவன் கைக்கடிகாரத்தில் நேரத்தைக் கேட்டுக்கொண்டே 'கொக்கற்'றில் அமுங்கிக் கொண்டிருக்கும் 'சிகரெட்'டை எடுத்து பற்றவைக்கும் அளவுக்கு அன்பர்களாயினர்.
அந்தக் கிராமத்தில் எத்தனையோ பேர்களுக்கு கொழும்பைக் காட்டிக் கொடுத்த பெருமையும் அவனுக்குண்டு. ஆனால் சில நாட்களில் பெளியூர்களில் அவன் வியாபாரத்தை முடித்து வீடு திரும்பியதும் - அந்த பெரிய வீட்டின், சிறிய கேற்றை இழுத்து மூடிக்கொண்டே உள்ளெ போவான்.
அவன் பின்னால் செல்லும் அத்தனை பிள்ளைகளும், அந்தத் தகர கேற்றில் முட்டி மோதிப் பின்னழுவுவார்கள். அவனின் அந்தச் செய்கை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் பயம் கலந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து....
"மரியத்திடெ புரிசென் அவின் யாவாரெம் செய்றயாமெ?"
"இல்லெடி. அந்தாற்றெ முகத்தப்பாத்து அப்பிடிச் செல்றியெ."
"இவக்கு அவன் இனிக்கெ வெச்சிட்டான்." இந்தெ நாளெயிலெ எந்தெக் கோணரையும் நம்பேலாது."
சட்டிபானைத்திடலில் பொண்டுகளின் 'குசுகுசு' மகா நாடு. மரியம் பீவியின் உம்மாவின் வருகையினால் 'கம்சிப்' ஆகிறார்கள்.
புதிய நகைக்காரன் கூறிய செய்தியின் சலனம் மோனம் கொள்கின்றது.
கடந்த ஆறு மாத காலமாக அவனைக் காணாது - அவன் நினைவிலேயே காலம் கழிக்கும் அவளும் அந்தச் சின்னஞ் சிறுசுகளும்....
€க்குழந்தை அழத்தொடங்கவே பால் அடித்துக் கொடுக்க எண்ணி 'மாடின்'னைத் திறந்தாள். 'டின்' காலியாகிக் கிடந்தது. கையில் ஒரு சதக் காசுமில்லை. அவன் போட்டு அழகுபார்த்த நகை நட்டுகளை விற்றே இத்தனை நாட்களையும் கடத்திவந்தாள்.
நினைக்கும்போது அடிநாக்கில் இனிமை சுரந்தாலும், அடுத்த கணமே நிஜவாழ்க்கை தொண்டைக் குழிக்குள் உப்பாகக் கரித்தது.
'அப்படியென்றால் மண் ஏத்துகிற சின்னவனுக்கிட்டச் செல்லி ஒரு கரத்தெக் களி வாங்கி - சட்டி பானை வெய்க்க வேண்டியதுதான்'.
எண்ணம் உறுதி கொள்கிறது.
அந்தக் குழந்தையின் பிஞ்சுக்கால்களைக் கொண்டு இடையைச் சுற்றிக் கொண்டவள், நடையைக் கட்டத் தொடங்கினாள்.
சங்கக்கடையைத் தாண்டும் போது - அன்றைய 'மந்தி' பத்திரிகையை கையில் வைத்துக்கொண்டே அந்தக் கிராமத்தின் மெத்தப் படித்த மேதையாக திகழும் மனேஜர் உரக்கச் சப்தம் போட்டுப்படித்தார்.
'முகமூடித்திருடன் பிடிபட்டான். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளை அடித்து, வீட்டிலுள்ளோர்களையும் கத்திக் கத்துக்குள்ளாக்கிய அ.முகைதீன் என்பலன் கையும் மெய்யுமாகப் பொதுமக்களால் பிடிக்கப்பட்டான். நாட்டில் நடந்த பல கொள்ளைகளில் மேற்படி நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியக்கிடக்கிறது.
"ஆரு? நம்மெடெ மரியத்திரெ புரிஷனா?" என்று பாத்தும்மா ராத்தா சற்றே உடற்குழைவுடன் கேட்டாள்.
நாற்பதைத் தாண்டிவிட்ட உடலிலும் பதினெட்டு வயது எழுச்சிகளை கண்ணாமூஞ்சி விளையாடவிட்டு அவள் பேசுவது சற்று விரசமாகத் தோன்றும் அந்த விரசத்திற்குத் தாளம் போட்டுப் பேச இசைவதற்கிடையில் நடந்துவரும் மரியம் பீவியின் உருவத்தை மனேஜரின் விழிகள் குடிக்கின்றன.
** இ.தொ. makkatu4.mtf **
** makkatu3.mtfன் தொடர்ச்சி **
பார்வையின் திருப்பமும் மனேஜரின் அக நாக்கில் புரளும் சுவைத்தினவும் பாத்தும்மா அறியாதவளல்ல. வானம் பார்த்த பூமி. கருணை பொழியாது, கடந்து செல்லும் வெண்முகிலைக் கண்டு சினந்து கொள்ளுமே! அதைப் போன்ற ஒரு வகை முனிவின் வெடிப்பு.
"நடு ஊருக்குள்ளே கள்ளனோட கட்டிப்புரண்டவன் போற பசிந்தெப் பாத்தீங்களா?" இப்படிச் சொல்லியதில் தன்னுடைய பத்தினித்தனத்துக்கு அத்தரை அள்ளித் தெளித்துக்கொண்ட சுகத்தில் பாத்தும்மா....
மனேஜரோ இளம்பசிக்காரன். இந்த உணர்ச்சிகளை அழகுடன் சுவைக்க ஆலாப்பறப்பர்.
பாத்தும்மாவின் செவிகளைக் கடிப்பதுபோல....
"இருந்தாலும் நகக்காரண்டே சாமான் சங்குதான்." சொல்லக்கூடாத ஒன்றை சொன்ன உணர்வில் நாக்கைக் கடித்துக்கொண்டான்.
"மகரிக்குள்ளெ கள்ளக்கோழி படிக்கப்போறவங்களுக்குத்தான் மத்தவங்கெட சாமான் தெரியும்."
பிணங்கிக்கொண்டே பாத்தும்மா நழுவுகின்றாள்.
சங்கக்கடையில் கோலமிட்டு வைக்கப்பட்ட மிருக உணர்ச்சி மோதல்களை அறியாதவர்களாக - ஆறு மாதங்களாக பிரிந்து வாழும் தன் அன்புக் கணவன் நகைக்கார முகைதீனின் உருவத்தை மனமெல்லாம் இருத்தி - அந்த ஒடுக்கமான சுகத்திற்குள் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்த திருப்தியுடன் மரியம்பீவி நடந்து கொண்டிருக்கிறாள்.
- 1970 -
கடுகு
வாப்பா உங்களுக்கு கதெ தெரியுமா?
இஞ்செ இரிக்கேலாது வாப்பா. பொழுது விடிஞ்சா ஒரே சண்டதான். நானாவும் ராத்தாவும் என்னெப் போட்டுப் படுத்திறபாடு.
அதுக்குப் பிறகு ஸ்கூல் இரிக்கிதெ. அங்கெயும் ஒரே கூத்துத்தான்.
எல்லாப் புள்ளகளையும் ஒண்டாப்போட்டு மவுலவிசேர் கதவெல்லாம் அடைச்சிப் போடுவாரு. எங்கெட பள்ளிக்கு அவருமட்டும்தான் சேரு வாப்பா-
சாந்தி ரீச்சரும் மாறிப் யெய்த்தா. அவெடெ வீட்டெயும் பத்தவச்சிப் போட்டானுகளாம். அவ இரிக்கி மட்டும் ஒரே பாட்டும் கதயுந்தான்.
'வண்ணாத்திப் பூச்சி வண்ணாத்திப் பூச்சி பறக்கிறது, பறக்கிறது பார்'.... அவ வண்ணாத்திப் பூச்சிபோலெ பறப்பா.....
மவுலவி சேர் வருவாரு.
பிள்ளைகளெல்லாம் எழும்புங்கெ - கையெ உசத்துங்கெ. எல்லாரும் இரிங்கெ. நான் வரமட்டும் இதப்பாத்து எழுதுங்கெ.
சொல்லிப்போட்டு ஆள் மாறிருவாரு.
இனி எங்கெட கூத்துத்தான்.
வெளிநாட்டுக்கு அறவுக் கடிதம் எழுதெ எங்கெடெ பள்ளிக்கு ஆக்களெல்லாம் வருவாங்கெ...
ஒரு கடிதம் எழுதினா இருவது ரூபா.
அப்பிடி யாரும் வந்தா அவரு படுறபாடு.
பிள்ளைகளைக் கடிச்சித் தின்றுவாரு.
இப்ப நான் மொனிட்டரில்லெ...அவள் மகாரிதான் மொனிட்டராம்.
சேரில்லாட்டி அவ பெரிய்ய வாத்தியாம்மா என்டெ நினைப்புத்தான்.
இதுக்கு இவள் என்னிடக் கறுப்பி.
சாந்தி ரீச்சர்தான் என்ன மொனிட்டராக்கினவெ. நாத்தானெ வகுப்பிலெயும் முதலாவது.
மவுலவி சேரு வந்து மாத்திப்போட்டாரு. மகாரிர மூத்தப்பா முதலாம் மரைக்காரப்பத்தி நீங்கெ மேடயிலெ பேசினயாம். அதுக்கு என்னெ மாத்திப்போட்டாங்கெ.
என்ன வெலெ பாத்தீங்களா?
இதுக்கு இவரு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வாறயுமில்லெ....
இவெங்கெ என்னெ படிச்சா தாறாங்கெ...?
நாங்கெல்லாம் பாத்திருப்பம். சேர் மாரெல்லாம் கென்டீன்லெ பெட்டிசு வாங்கித் தின்பாங்கெ....
பாறூக்கு மாமா படிச்சித்தரக்கொள ஆளுக்கொரு ஜொக்கு விஸ்கொத்துத்தான் கொடுப்பாரு.
இவரிண்டா றினோசாக்கு ரெண்டு ஜொக்கும் - அலியார் சேர்ரெ மகளுக்கு ரெண்டு ஜொக்கும் கொடுப்பாரு.
இடவேளைக்கு விஸ்கொத்தை வாங்கிட்டு நானாட பக்கம் போகத் தேவலெ. பறிச்சித்தின்றிருவான். சின்னப் பிள்ளைகளுக்கு கொடுக்கிறப் பெரிய்ய ஆக்கள் தின்னலாமா?
எங்கெட சேர் இரிக்காரெ அவரும் ஒவ்வொரு நாளும் விஸ்கொத்தோடேதான் வூட்டெ போவாரும்.
என்ன வேலெ வாப்பாயிது?
இணடெய்க்குச் சந்தையிலெ ஒண்டுமில்லெ.
பகல் உம்மா முட்டை பொரிச்சித்தான் சோறு தந்தா.
ஹர்த்தாலாம்.
சோறு பொறுக்கத் தொடங்கிற்று -
ஏன்டெ பீங்கானிலெ இருந்தெ முட்டய நானா களவெடுத்துப் போட்டான்.
சின்னப் பிள்ளைகள்றத்தெ பெரிய ஆக்கள் களவெடுக்கலாமா?
இன்னாபோகுது நம்மெடெ ராணிப் பசு. காலெயிலெ உம்மா பால் கறந்தா - கண்ணன் உதைச்சிப்போட்டான்.
வரவர ஆளுக்குப் பெரிய கெப்பறு.
வாப்பா நம்மெட களுத்தறுப்பான் கோழி குட்டி பொரிச்சிட்டுத் தெரியுமா?
கறுப்பு - புள்ளி - சிவப்பு வெள்ளெயெல்லாம். இஞ்சப் பாருங்கெ நேத்து என்டெ கையக் கொத்திப்போட்டிது.
இந்தெ றோட்டாலே போகாதீங்கெ - இந்தியா கொமாண்டஸ் வருவான்.
நானும் உம்மாவும் இந்தெ றோட்டாலே போனம். இந்தெ வூட்டச் சுத்தி - ஆரோ சுமிதாவாம். வெளிநாட்டுப் பொம்புளயாம். ஓரே பொலிஸ’தான் வாப்பா.
இப்பெ நம்மெட ஊர்ரிலெ ஆர்லெவாயப் பாத்தாலும் வெளிநாட்டுக் காரியப்பத்தினெ கதெதான்.
சீ! அவள பெரிய்யெ மோசமாம். ஆனா நல்லெ அழகியாம் வாப்பா.
கொஞ்செம் சைக்கிள நிப்பாட்டுங்கெ. செருப்பு உழுந்திட்டு...
செரி போவெம்...
நேத்து யூசுப் நானா கெம்பஸ’லெ இருந்து வந்தாரு. அங்கெ றோட்டெல்லாம் புலிதானாம். துவக்கயெல்லாம் வைச்சிட்டு நிப்பானுகளாம். புலி என்டா எப்பிடி வாப்பா இரிப்பானுகள்?
நம்மட ஊட்டெ வாறெ சபா மாமாவையும் கொமாண்டஸ் கொண்டு யெய்த்தானாம்.
அவருக்குச் செரியான அடிதானாம். நரேஸ் நானாடெ மாமி சென்னா. காலும் உடைஞ்சி பெய்த்தாம்.
அந்தத் தாடிவெச்செ கண்ணாடி போட்டெ மாமா ஏன் வாப்பா நம்மடெ ஊர்ட்டெ வாறல்லெ....
நேத்திராவெல்லாம் நித்திரையேயில்லெ...
ஒரே வெடிலும் முழக்கமுந்தான். பெருநாளேயில சுடுவோமே அப்பிடித்தான் இருந்திச்சி.
நம்மட ஊட்டுக்கு மேலால ஹெலிபோச்சி...
நானும் ராத்தாவும் மேசைக்குள்ளே பூந்திட்டம். நான் மட்டும் வெளியெபோய் ஒழிச்சிப் பாத்துக்கிட்டிருந்தான்.
குண்டும் தலையிலெ விழுந்தா என்னெ நடக்கம் ஏன்தான் இவனுகெள் சண்டெபிடிக்காணுகளோ?
இண்டைக்கி ஒடாவியார்ரெ ஆயிஷா வந்தாள். ஸ்கூல் 'கலகல'த்துப் போச்சி.
அவள்றெ புதினம்.
டிஸ்கோ மின்னி. வெளிநாட்டு மெக்ஸ’. குதிகால் சப்பாத்து...
அவளுக்கிட்டே 'ஓடிக் குளோன்' எப்பிடி மணத்திச்சி...
நம்மடெ உம்மாவையும் வெளிநாட்டுக்கு அனுப்புவோமா?
நம்மளுக்கு ரேடியோவுமில்லெ ரிவியுமில்லியெ.
அவள்றெ உம்மா முன்னயெல்லாம் கறுப்புத்தானாம்.
இப்பெ வெளிநாட்டிலிருந்து வெள்ளக்காரியப்போலெ வந்திரிக்காவாம்.
சதீக்கிடெ தங்கச்சியப்போலெ வெள்ளயாம். பெரு மடிச்சிக்கிட்டா. ஆயிஷாடெ உம்மா ஊட்லயும் மெக்ஸ’ தான் போடுறயாம்.
தாவணியெல்லாம் போட மாட்டாவாம்.
வாப்பா உங்களுக்குத் தெரியுமா?
நேத்திராவு உசன் போடியார்ரெ ஊட்டெ கள்ளணுகள் வந்து - அவர்ரெ பொஞ்சாதிரெ காப்பு, கொடி, காசி எல்லாத்தையும் கொண்டு பெய்த்தானுகளாம். அது மட்டுமா? நம்மெடெ வண்டிக்காரண்டெ மாட்டயும் கொண்டுபோய் அறுத்துப்போட்டானுகெள்.
அந்த மாடு குத்தயுமாட்டாது. புள்ளெபோலெ வாப்பா.
உம்மா ராவைக்கெல்லாம் படுக்கிறயிமில்லெ. நம்மடெ பசுவையும் கொண்டு அறுத்துப்போட்டானுகளென்றால்....
இஞ்செ இப்பெ கள்ளனுகளாலே செரியான கஸ்டம். எனைக்கி இந்த மாசச் சம்பளத்திலெ கட்டாயம் குதிகால் சப்பாத்து வாங்கித்தரணும். போனே மாசம் வாங்குவோம் என்டீங்க. கடசிலெ வாங்கித்தரல்லெ....
இந்த மாசம் கட்டாயம் வாங்கித்தரணும். ராவைக்கு என்ன கறி வாங்குவெம் வாப்பா. ஒட்டிமீது எண்டா எனைக்கு விருப்பம். அரைச்சியாக்கிப் பொரிச்சா நல்லா இரிக்கிம்.
ராத்தாக்கு மீன் பொரிக்கத் தெரியா. தீயவெச்சிப் பொடுவா.
எனைக்கி மேலெல்லாம் ஒரே கடியும் சொறியும்தான். வேர்க்குரு பவுடரும் முடிஞ்சிபெய்த்து. மடவளயிலெ நோனாராத்தாட்டெ இப்பிடியெல்லாம் வேர்க்காது. அங்கெயெல்லாம் என்னேரமும் கூதல்தான்.
நேத்திராவு நம்மெடெ றோட்டாலெ எவ்வளவு ஆமிக்காரன் போனான்.
புதுசா வந்தெ ஆமிக்காரன் ஒரு பொம்பிளடெ சொக்கையும் கடிச்சிப்போட்டான்.
ஒவ்வொரு நாளும் நோன்பு பிடிக்க எழுப்பவருவாரெ பாவா மாமா - அவரையும் ஆமிக்காரென் சுட்டுப்போட்டானாம். பாவம் வாப்பா.
உம்மா கேத்தெப்போய் பூட்டிப்போட்டா!
நான் உங்கெடெ மேசைக்கு மேலெ நிண்டு ஜன்னலுக்குள்ளாலெ எட்டிப்பார்த்தன். ஒரே புழுதிதான்.
பெரிய்யெ சப்பாத்தையும் போட்டுக்கிட்டு - தோளிலெ துவக்கையும் மாட்டிக்கிட்டு போறானுகெள். மெய்தானா வாப்பா சின்னப்புள்ளகளையும் சுடுவானுகளாம்.
என்ன செய்யெ எனக்கிட்டெ துவக்கிருந்தா நானும்....
"?"
- 1988 -
...............
பிறவிகள்
அந்தக் கிராமத்தின் முதல் பங்களா வீடு. மூன்று அறைகளும் மண்டபமும் கூடவே த€லைவாசல் படியும் கொண்ட பெரிய்ய வீடு.
வாசலில் பூதங்களின் வயிறாகப் புடைத்து நிற்கும் நெல் பட்டறைகள். சற்றுத்தள்ள கல் கிணறு. ஊரின் முதல் கிணறும் அதுதான். தேறிய முதிரை வைரத்தில் காலும் துலாவும், புறவளவு மா, பலா, முருங்கை, வேம்பு என்று சோலையாகப் பரந்துகிடந்தது.
இன்று அந்தப் பெரிய பங்களா வீட்டில் திருமணம். அதுவும் ஈசாலெவ்வைப் போடியாரின் ஒரே மகள். முறக் கொட்‘ன்சேனையிலிருந்து 'மோகன் லைஸ்பீக்கரும், லைற் மிசினும்' கொண்டுவந்து இருந்தார்கள். வீட்டின் மதிலில் பச்சை, சிவப்பு, நீலம் என்று ஒளிக்குண்டுகள் ஏறிக் குந்திக்கொண்டு 'பளிச்' தெறித்தன.
வீட்டிற்கு வெளியே - புறவளவையும் தாண்டி - மையத்துப் பிட்டியில் பூதாகாரமான வேப்ப மரங்கள், கச்சான் காற்றில் பேய்க்கூத்தாடின.
வீதியோரமாக - வேர் பாய்ச்சி நிழல் பரப்பிக்கொண்டிருந்த நெருப்பு வாகை வேறு பூத்துக்கிடந்தத. தீப்பந்தங்கள் கொழுந்து விட்டெரிவதைப்போன்று பூக்கள் நிறைந்து பகலிலே வித்தை காட்டும். அதன் கிளைகளுக்குள்ளிருந்து வடக்கையும் தெற்கையும் பார்த்தவிதமாக 'லைஸ்பீக்கர்' குழலில் பாட்டு.
'சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
ஜமுனா ராணிதான் பெரிய குரலில் அலறிக்கொண்டிருந்தா.
இடையில் இஷாத் தொழுகைக்கான பாங்கொலி கேட்டதும் கல்யாண வீடு ஒரு படி மேலாக களைகட்டுகிறது. பரபரப்புக் கூடி....
சிலர் பாய்களை விரித்து, வெள்ளைபோட்டார்கள். படிககங்களும் தண்ர்க் கோப்பைகளும், மடிப்புத்திமிறும் பாய்களை அமர்த்திக்கொண்டிருந்தது.
மேற்குத் தலைவாசல் பக்கமாக - வடக்குத் தெற்காகச் செல்லும் வீதியின் இரு மருங்குகளிலும் - வரவேற்பாளர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் பருத்த உருவங்களையும், நாசித் துவாரங்கள் நறுமணமிக்க செண்டு வாசனையில் மூழ்கியவர்களையும் வரவேற்கத்துடித்தன. இடையிடையே எளிமையான உடைகளோடு போன உருவங்களையெல்லாம் அவர்கள் பார்த்த தாகக்கூடக் காட்டிக்கொள்ளவில்லை.
வருவோரும் போவோரும் வாயை வெற்றிலையில் குதப்பிக்கொண்டிருப்போருமாக - இத்யாதி வகையறாக்களெல்லாம் அந்த திருமண வீட்டை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன.
பெரிய இடத்துக் கல்யாணம். அதுவும் கிழக்கின் சிங்கப்பூரான காத்தான்குடியில் மாப்பிள்ளை. மட்டுநகரில் 'சில்க்' ஹவுஸ்! உன்னிச்சை, றூகம் என்று பல இடங்களிலும் நூறு ஏக்கரும் மேலாக வயல் காணியின் சொந்தக்காரர்.
பெண் வீட்டாரும் போட்டவர்களில்லை. தம்பன் கடவையில் வெள்ளை மாட்டுப்பட்டி. ஆயிரத்துக்கும் மேல் உருப்படிகள். அத்தனைக்கும் கல்யாணப் பெண்ணின் 'மு.சு.' குறி அடையாளம். அக்குறானையிலும், காரையடிப் பட்டியிலும் பலநூறு ஏக்கர் வயல்கள் அவள் பெயரில்.
கட்டை வாத்தியாரிடம் 'அரிவரி' வகுப்பும் - கறுவக்குட்டி ஆலிமிடம் 'அம்மெஜுஸ”'ம் ஓதியிருக்கிறாள். வீட்டில் உம்மாவிடம் 'முழுக்கு' இறுப்பதற்கான 'துஆ'வும் மனப்பாடம் செய்திருக்கிறாள்.
பெரிய்ய இடங்கள் - விளம்பரம் வேண்டியதுதான்.
திடீரெனக் கதவு திறந்ததில் - 'நெய்ச்சோறும், இறைச்சிக் கறியினதும் வாசனையில் பித்துப் பிடித்துவிட்ட ஏழைச் சிறுவர்கள் சிலர் முற்றத்தில் வரவேற்பாளர்களை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
வரவேற்பதில் முன் நின்று முக்கியஸ்தன் என்ற பதவியைத் தானே தன் தலையில் இழுத்துப்போட்டு, அந்தப் பதவியின் இறுமாப்பில், தனக்கே புரியாத தலை மயக்கத்தை அதிகாரமாக்கி மற்றவர்கள்மீது திணித்துக் கொண்டிருந்தான் மீன்கார அசன் காக்கா.
அவன் கையிலிருந்த பச்சை முருக்கைத்தடி, அந்த வாண்டுகளின் புழுதி உறைந்த மேனியில் பட்டு, புண்ணென வலி எடுக்கச் செய்தது.
"டேய்! உங்களுக்கெல்லாம் நேரங்கிடக்கு, பெரியாட்கள்றெ களரி முடியட்டும். வாய்ப் பொத்திட்டிரிக்கணும்".
அவர்களையெல்லாம் ஒதுக்கிக்கொண்டுபோய், உழவுமெஸ’ன் போடும் 'கராஜ்'குள் போட்டு, கதவை இழுத்து மூடினான்.
அந்தப் பிஞ்சுகளெல்லாம் தாயைப் பிரிந்த கன்றுகளைப் போல....
பசியும் களைப்பும், தூக்கமு ம அங்கலாய்ப்புமாக அவர்கள்-
அவர்களின் பார்வைகள் ஒவ்வொன்றும் பலநூறு ஊமைக் கதைகளையல்லவா கூறுகின்றன!
அதோ! அந்தக் கும்பலில் ஒருவனாக, வடக்கு மூலையின் ஒதுக்குப்புறத்தில் குந்திக் கொண்டு தூங்குகிறானே ஓர் எட்டு வயதுச் சிறுவன் அவன்தான் மம்முசுமாயில்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் - ஒரு நாள் சுப்ஹு தொழுகைக்குச் சென்று கொண்டிருந்தவேளையில் - பிறந்த கண் விழித்த கோலத்தில், கதறிக் கொண்டிருந்த குழந்தை தான் இந்த மம்முசுமாயில்.
கண்டெடுத்து - கண் விழித்து வளர்த்தெடுத்த - அந்த ஓடக்கர அப்பாவும் மண் மறைஞ்சிபோனார். மம்முசுமாயிலுக்கு இன்று துணையென்று எவருமில்லை. அனாதை என்ற முத்திரை குத்தப்பட்டவர்களில் அவனும் ஒருவன்.
அவன் உருவம் எவரையும் கவரும் தனிக் கவர்ச்சி உடையது. பெரிய்ய இடத்துப் பிள்ளையின் சாயல் அவன் முகத்தில் கோடி காட்டியது. அங்கும் ஒரு உண்மை அமுங்கப்போய் கிடந்தது.
அவள் பெரிய இடத்துப் பெண். பனிரெண்டு வயதிலேயே பதினெட்டு வயதின் திரட்சியும் 'கொழுகொழுப்பும்' பருவக் குமரி சுபைதா. பக்கத்து வீட்டு விதானையாரின் மகனுடன் ஏதோ விளையாட்டாக நடந்தது. விளைவை எதிர்பார்க்காத சிறுபிள்ளை வேளாண்மை. விளைந்து வினையாக முடிந்தது.
மூன்று அறையும் பங்களாவும் - அங்கு பிறந்த மம்முசுமாயில் 'தொப்புள்கொடி' அறுபட்ட கையோடு பள்ளிக்காட்டிற்குள் வீசப்பட்டான்.
சுபைதா, உலகின் கண்களுக்கு, பணத்தின் பவிசினால் கற்பு நிறை கன்னியானாள். அவளைப் போலவே முழு உருவமைப்பும் கொண்ட அவ்வூர் விதானையாரின் மகனுக்குத்தான் மம்முசுமாயில் பிறந்தான் என்று பலரும் காதோடு காதாக....
உலகம் அவன் தந்தையைக் கண்டுபிடித்துவிட்டது. தாய்?
எங்கு பெரிய பானையும் நெருப்பும் காட்சியளிக்கிறதோ- அங்கெல்லாம் மம்முசுமாயில் தரிசனம் கொடுக்கத் தவறமாட்டான். அவனுக்கு யாரும் அழைப்புக் கொடுக்கத் தேவையில்லை. வரவேற்கவேண்டிய அவசியமுமில்லை. யாருடைய வீடாக இருந்தாலும் ஏறி இறங்குவான். அவனுக்குத் தேவை சாப்பாடு ஒன்றுதான்.
அவனுடைய வாழ்வு அலாதியானது. மீராவோடைக் கிராமத்தின் வடபகதி சந்தை தொடங்கி, பாசிக்குடாக் கடற்கரையின் ஓரங்கள் ஈறாக அவன் கால்கள் ஓடித்திரியும். அவனைப் பொறத்தவரையில் 'உலகம் ஒரு உல்லாச விடுதி'. வருவோரும் போவோரும் சாப்பாட்டுக்குத்தான் வருகிறார்கள். சாப்பாட்டு முடிந்த கையோடு சந்தூக்கில் போய்விடுவார்கள். இதுதான் அவனது வாழ்க்கைத் தத்துவம். கற்பிக்கவில்லை. அவ்வாறு வாழ்ந்தான்.
கல்யாண வீடுகளில்லாத நாட்களில் 'பையன்னா ஹொட்டெலுக்கு'த் தண்ர் இறைத்துக் கொடுத்தும், பீங்கான் துப்புரவு செய்து கொடுத்தும், அவர்கள் 'ஆகிறத்து நன்மையை நாடி' கொடுக்கும் ஊசிப்போன வடைகளையும், காய்ந்த பனிஸ்களையும் கொண்டு தன் பாதி வயிற்றை 'ரொப்பிக் கொள்வான். எதுவும் கிட்டாத வேளைகளில் புளியடித்துறைப் பக்கமாகச் சென்று - பனிச்சம்பழம், ஈச்சம்பழம் என்று வயிற்றை நிறைத்து - நீரைக் குடித்து பசியைத் தீர்த்துக்கொள்வான்.
அவனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள். பொழுது போகாத வேளைகளில் அவர்களுடன் 'குஷ்தி' போட்டுக் குதூகலிப்பான். வீதியில் படுத்துக்கொண்டு சைக்கிளை தனக்குமேல் ஓட்டும்படி செய்து மற்றவர்களை வியப்பிலாழ்த்துவான். வானொலியில் 'டிங்கிரி டிங்காலே' கேட்டு விட்டால்போதும். உலகை மறந்து சுற்றிச்சுழல்வான். அவனது வாழ்க்கைச் சக்கரம் நினைவு தெரிந்த நாட்களாக இப்படியே சுழலுகிறது.
'டிரக்டர்' கொட்டிலில் தூங்கி வழிந்த மம்முசுமாயிலுக்கு காகித ஆலையின் 'சைரன்' ஒலி இரவு பத்து மணி என்பதை அறிவுறுத்தியது. அவன் இன்றுவரையிலும் சென்ற கல்யாண வீடுகளல் 'கடைசிக்களரி' இவ்வளவு காலம் கடந்து எங்கும் இடம் பெறவில்லை. ஒன்றில் பத்து மணிக்கு முதல் சாப்பாடு - கிட்டாத வேளைகளில் வயிறு முட்டிய தண்ரோடு நித்திரா தேவியை அணைத்துக் கொள்வான். இன்றைக்கு வழமைக்கு மாறாக - கடந்த ஒருவார காலமாக சாப்பாடு அவனைவிட்டும் தூரப்போய் விட்டதைப் போல....
மனம் நிறைந்த ஆசையோடு, போடியார் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு 'வெட்டு வெட்டலாம்' என்றெண்ணி வந்தான். கடைசியில் அதுவும் நப்பாசையாக...
நினைக்கும்போது வெப்பிசாரம் வெடித்துவிடும் போலிருந்தது.
அவன் அதரங்கள் துடிதுடிக்க கண்கள் பனித்தன.
பெரிய மனிதர்களெல்லாம் சாப்பிட்ட பிற்பாடு, அங்கு மிஞ்சிய எச்சில் கறிகளையும், அடிப்பானையில் தீய்ந்து கருகிய சோற்றையும் ஒன்றாகக் கலந்து குழையலாக்கி - ஒரு பழைய ஒலைப் பெட்டியில் எடுத்துக்கொண்டு, அந்தக் கொட்டிலில் நுழைந்தான் மீன்கார அசன் காக்கா. இத்தனைக்கும் அவனும் இந்தெ மம்முசுமாயிலெப் போலெ பிறந்தவன்தான். அதெல்லால் மறந்துபோய் நெடுங்காலம். இன்று ஊரில் அவனும் ஒரு 'மடிச்சிக்கட்டி'
"டேய்! எல்லாரும் ஒழுங்காக இரிங்கெ."
உத்தரவு அவர்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
'இறைச்சிக் கறியும் நெய்ச்சோறும்' உமிழ்நீரைச் சப்புக்கொட்டி விழுங்கிக் கொண்டார்கள்.
அசன் காக்காவின் கையில் அடிபட்டுக் கண்ர் விட்டுக் கொண்டிருந்த மம்முசுமயிலுக்கு அப்போதுதான் சுயநினைவு உறைத்தது. களைப்பினால் வியர்த்த நீர், புழுதி படிந்த அவனுடலில் சுழித்து, தோட்பட்டையால் குதித்து பின்னழுவியது. மயக்கத்திற்கும் தூக்கக் கலக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் மம்முசுமாயில்
"டேய்!"
உரத்த அதட்டலில் அவன் சுயத்திற்கு வந்தான். அவனுக்கு முன்னால் ஒரு 'தாலாப்பீங்கா'னைப் போட்டு அதில் தான் கலந்த அந்த குழையலில் இரண்டு அகப்பையை அள்ளிப்போட்டு பின்னகர்ந்தான் அசன் காக்கா.
"மூஸ்மூஸ்" என்று சோற்றை அள்ளித்தின்று கொண்டிருந்த மம்முசுமாயிலுக்கு தொண்டை இறுகிக் கொண்டு வருவதைப்போல....
விழிகள் பிதுங்கிய நிலையில்.... அவன் தீனக்குரலில்...
"தண்ர்" என்றான்.
"டேய்! யார்ரெவென். சோறு தின்ன முந்தி தண்ணி கேக்கிறவென்?" அசன் காக்கா எனும் சாடிக்கு மூடியாக வந்து நின்ற முஸ்தவாப் போடி சீறிப்பாய்கிறான்.
"தண்...ணிய்யி..." மீண்டும் மம்முசுமாயில். இப்போது அவன் குரல் முன்பைவிட அடங்கியிருந்தது. கண்கள் இரண்டும் வெளியில் வந்து பாய்ந்துவிடும் போல்...
அவன் சோர்ந்து விழுந்தான். அடுத்த கணமே அசன் காக்கா அவனருகில் -
"என்னெ? ஹவால்லெ சோத்தெ அப்பிடியெ முளுங்கிட்டியா?" தண்ணியாம் தண்ணி. கிணத்தடிக்குப்போ. இல்லாட்டி உம்மாகிட்டெப்போ" சீறிப்பாஞ்சான்.
'உம்மாக்கிட்டெப் போவெச் சொன்னாரே! அப்பிடிண்டா உம்மா கேக்கிறதெல்லாம் தாறெ சீதேவியா? எனைக்கி உம்மா இல்லியெ, உம்மாவெ நான் கண்ணாலெயும் காணலியெ. என்டெ உம்மாவெ எங்கெரிக்கிங்கெ.'
தீனமாய் குளறிய அவன் மனம், எப்போதோ, பிறந்த பொழுதிலேயே பிரிந்துவிட்ட உம்மாவை, கண்முன்னே கொண்டு வரமுயன்றான். முயற்சியின் தோல்வி -
அந்த இயலாமைக்குப் பெரிதும் அவதிப்பட்ட வேளையில், அவனுடைய தாயான - உம்மாவான - புதுமணப் பெண் சுபைதா, கல்யாணச் சடங்குகளெல்லாம் முடிந்து, தன் காத்தான்குடி புது மாப்பிள்ளையுடன் - இன்னுமொரு மம்முசுமயிலுக்காக மலர் தூவப்பெற்ற மஞ்சத்தைக் கொண்ட அறையை நோக்கி - திறந்திருந்த கதவினூடாக கணவனை முன் நடத்திப் பின் செல்லுகிறாள்.
- 1967 -
............
மருத்துவம்
"கெதிய்யாக் காலெ எட்டிவெய்ங்கெ"
சலவாத்து சப்தத்துக்கிடையில் முஅத்தின் குரல் விட்டான்.
மையத்தைத் தொடர்ந்தவர்கள் காலை எட்டிப் போட்டார்கள்.
இடையில் மையித்து -
சந்தூக்கை சுமந்து வந்தவர்களில் மஜ“தும் ஒருவன்.
அவன் தோளில், அவன் மனைவி செய்னம்பூ மையத்தாகி....
நேற்று - நிறைமாசத்தோடெயும் அவனுக்கு அவள்தான் ஆக்கிப்போட்டாள்.
'பச்சரிசிச் சோறும், மாங்கா வெச்சிச் சூடெமீன் பாலாணமும்' நாவுக்கு ருசிய்யா எப்பிடி ஆக்குவாள்.
'இண்டெய்க்கிம் பொலபொலத்து விடியக்கொள தலப்புள்ளத்தாச்சி - செப்புக்குடம்போலெ - அவள் வயிறு மினுமினுத்து' அவன் கண்ணுக்குள் வாளிப் பாஞ்சாள்.
இப்பொ -
அவன் தோளில் அவள் மையத்தாகி -
நினைவுகள் மட்டும் அவனைவிட்டு நீங்கவில்லை.
கருமாரி வீடு அமளிதுமளிப்பட்டது.
"முகைதீன் ஆண்டவரே! என்டெ புள்ளெட வவுத்துச் சுமய நீங்கான் இறக்கோணும்."
"புள்ளெ! ஒப்பாரி வெச்செ போதும் - இந்தெ விளக்கில எண்ணெயெ ஊத்திட்டு வா. ஊடு இரிட்டாக் கிடக்கு."
"போட்டெ போட்டெ இடத்திலெ சாமாஞ்சக்கட்டுகள். ஆரோ 'தடார் புடாரெ'ன்று ஒதுங்கப் பண்றாங்கெ..."
"இந்தெக் கதவ அடைக்கயுமேலா, துறக்கயுமேலா. ஓடர்விர்ரெ வூட்டெ நாய் பூர்ரெண்டு சும்மாவா சொன்னானுகள்."
கதவெ இளுத்து ஆரோ அடைக்காங்கெ -
வாசலிலெ மடாப் பானையிலே தண்ணி கொதிச்சிக் கிடக்கிறது. ஆவீ புகைபோலெ மேலெ கிளம்புது. அடுப்பச் சுத்தி உரிமட்டய்கள் பத்தியும்...பத்தாமலும்...
அடிக்கொருதரம் முக்கலும் முனகலுமாக வீட்டுக்குள்ளிருந்து சத்தம் -
மஜ“துக்கு ஈரல் குலையப் பினைஞ்சிது.
"ஆண்டவனே! என்டெ வூட்டுக்காறிரெ சுமய்ய இறக்கிப் போடு..."
"கஸ்ஸா மருத்துவிச்சி வந்திட்டா"
"உங்கெளெ எங்கெயலாம் தேடிறயோ?"
"என்னெ தம்பி செய்யிறெ - நாமெ ஆஸ’பத்திரிக்கெல்லாம் போவலாமா? மவுத்தாயினாலும் வூட்டோடெ கிடந்து சாவம்."
"மறுவாலைக்கி நஞ்சூசப்போட்டாலும் போடுவானுகள். ஆரும் ஆஸ்பத்திரிப் பக்கம் போற கதய்யக் கதைக்கப்படாது."
"குழப்பந் துடங்கினத்திலிருந்து ஆரும் ஆசிபத்திரிப்பக்கம் போறலியெ. அதாலெ இப்பெ மருத்துவிச்சிக்கித் தான் செரியான வாசி."
"ஒரு புள்ளெ கழுவெ முன்னூறு. என்னத்தெ வித்தும் குடுக்கணும்."
"ஆல வூட்டுத் திண்ணையிலே கூடின பொண்டுகெள் கதைச்சி கொட்றாங்கெ....
உள்ளெ -
"எங்கெ பாப்பெம் விலவுங்கெ." கஸ்ஸா மருத்துவச்சி இந்தக் கதையெல்லாம் காதுக்கு எடுக்காதவளாக - பிள்ளைத்தாச்சியின் அருகில் வந்து, இடுப்பத்தொட்டு - வவுத்தத் தடவி எதையோ ஊகித்துக்கொண்டவளாக -
"மன்சூரெக் கூட்டி வாங்க. ஊசி போட்டாத்தான் புள்ளெ புறக்கும்."
"தம்பி! சைக்கிளத் தள்ளுங்கெ" மஜ“திட மாமி.
பத்து வருஷமாகக் கிறவலைக்காணாத அந்தரோட்டிலெ மஜ“தின் சைக்கிள் பந்துபோல் உருண்டது.
மன்சூரின் டிஸ்பென்ஸரி மெள்ள மெள்ள பெரிய ஆஸ்பத்திரியாகிக் கொண்டுவந்தது. பக்கத்து ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய்க்கி ஒவ்வொரு வாட்டாகிக் கொண்டு....
போட்டா போட்டியில்....
"பாருங்களென் உங்கெட ஊரிலெ ஆஸ’பத்திரி போட்டிருக்கிற மன்சூர், எங்கெட ஊரிலெ அத்துறகுமான்டெ ஆஸ்பத்திரியில துண்டு குடுத்த பொடியன். எட்டாம் வகுப்புத்தான் படிச்செ.... என்ன மாத்தான் மருந்து செய்றான்."
புதுசா ஊருக்குள் வரும் மன்சூரின் ஊரவர்கள் - இந்த கெட்டித்தனத்தில் சொக்கிப்போய் மூக்கில் விரலை வைப்பார்கள்.
"மன்சூர் இப்பவெல்லாம் பல்லும் புடுங்கிறாரு. கொழும்பிலிருந்து பெரிய்ய கதிரயும் பெரிய்ய குறடும் வாங்கியந்திரிக்காராம். சின்னச் சின்ன ஒப்பரேசனும் நல்லாச்செய்ய பழகிட்டாராம்."
ஊரவர்கள் அவர் புகழ் பாடத் தொடங்கினார்கள்.
ஆனா - அவர் கண் வைத்தியம் பார்த்ததில் முஸ்தபாடெ பெண்சாதியில் வலது கண் பொட்டாயாகப் போன சங்கதி யாருடைய கண்களிலும் படவில்லை. கூப்பன் கடை மனேச்சருக்கு கையிலே தையல் போட்டு கையே முடமான கதய இந்த ஊருல யாரும் கதைக்கல்லெ....
அவர் பல் புடுங்கிய வசையிலே உசனாருக்கு புத்துநோய் வந்து மகரகமயிலே மவுத்தாப்போனா விசயம் யார்ரெ காதிலயும் தைக்கல்லெ....
மஜ“துக்கும் அவர்மேலே நம்பிக்கை புடிச்சது.
"கொஞ்சம் இரிங்கெ இன்னம் நாலுபேர்தான்."
சோத்துக் கடையின் அடுப்படி ஆளைப்போல ஒருவன் வந்து மஜ“துக்கு விசளம் சொல்லிப் போனான்.
அவன் கையில் பல வண்ணங்களில் போட்டுத் தோய்த்தெடுத்த - கருந்தழும்பேறிய மருந்து கலக்கும் தடி.
மஜ“து வாங்கின் மூலையில் அமர்ந்துகொண்டான்.
"ஆ....ஊ...! ஆண்டவனே...ய்!"
"தடீர்!"
யாரோ ஒருவருடைய கொடுப்புப்பல் தாலாப் பீங்கானுக்குள் குப்புற விழும் சப்தம்.
'தம்பி! இந்தக் குளிசையெல்லாம் ரெண்டு நாளைக்கிப் போடணும். ரெத்தம் நிக்காட்டி ஊசி போடணும். பிறகு வாங்கெ. எல்லாத்துக்கும் நூத்தி அம்பது."
கொடுப்பு நிறைஞ்செ பஞ்சுடன் - தன் சட்டப் பையிலிருந்து இரண்டு மஞ்சள் நோட்டுகளைக் கொடுத்து மீதியை வாங்கிக் கொண்டான்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மஜ“து உள்ளே போனான்.
"ஆ...! வாங்கெ. எப்பெ வருத்தம் கண்டெ?"
"விடியச்சாமம் பன்னிக்குடம் புறந்திட்டிது. இன்னம் புள்ள புறக்கல்ல."
"ஆர்ரு மருத்துவிச்சி. நம்மட கஸ்ஸாம்மாவா?"
"ஓம்...ஓ...ம்!"
அவரின் கையிலிருந்து மருத்துவப் பெட்டி அவன் கைக்கு மாறியது -
வூட்டுக்குள்ளெ இரிக்கிறவெங்கெ வெட்டக்கிறங்கிங்கெ. டாக்குத்தரு வாறாரு."
ஒரு பட்டாளம் பொண்டுகள் வீட்டிற்குள்ளிருந்து தள்ளினார்கள்.
மண்ணெண்ணெய் விளக்கின் வாடையும், மனித நெடியும் வருத்தக்காரிக்கு இன்னும் அதிக வேதனையைக் கொடுத்ததுபோலெ....
கஸ்ஸா மருத்துவச்சி வேறு, முக்கச் சொல்லிச் சொல்லி வானலைப் போக்கியிருந்தாள்.
"சுடு தண்ணியெ எடுங்கெ." டாக்டர் துரிதப்படுத்தினார். கொஞ்செ நேரத்தில் ஊசி மருந்து அவளின் சோர்ந்த உடலில் புகுந்தது.
"பிரசரும் 260யில இரிக்கிது. காச்சலும் 104ல காய்து சா...சேலனும் குடுக்கணும்."
வழமையாக நோயாளிக்கு அவர் ஊட்டுகின்ற தெம்பு வார்த்தைகள்.
வீட்டு உலாத்தையில் உலக்கையைத் குறுக்காலபோட்டு 'சேலன்' கொடுக்கத் தொடங்கினார்.
காரியமெல்லாம் கச்சிதமாக நடந்தது.
முப்பதே நிமிடங்களில் ஒரு பைந்து சேலைன் செய்னம்பூவின் உடலில் பாய்ந்தது.
கஸ்ஸா மருத்துவச்சிக்கும், கூடயிருந்தவர்களுக்கும் நிம்மதி தட்டியது.
மற்றபடி செய்னம்பூ என்னவோ மரண அவஸ்தையில்....
"இனி என்னெ? குழந்தெ கிடச்சிடும்."
மஜ“தின் நெஞ்சில் ஆம்புளப்புள்ளெ துள்ளி மிதிச்சான்.
பொழுது சாய்ந்தது.
"என்ன புள்ளயாம்."
"ஆம்புளப் புள்ளயாம். இன்னம் மாக்கொடி உழலயாம்."
"தலையிலெ சன்னியும் அடிச்சிட்டாம்."
பேறுவீடு...மையத்து வீடுபோலெ...சனம் அடிச்சி விலகாது....
அந்த ஊரிலுள்ள இன்னொரு டாக்கத்தரையும் மஜ“து கூட்டிவருகிறான்.
"தம்பி! எதையும் பாக்காதெ. அவசரமா ஆஸ்பத்திரிக்கி கொண்டுபோ. எம்.ஓ.கிட்ட காட்டினாத்தான் நல்லது."
இந்த டாக்டருக்குக் கொஞ்சம் நெஞ்சில் ஈரம்.
"அங்கெ ஆரு போறெ. அது தமிழன்ட ஆஸ்பத்திரி. எல்லாம் புலிகள். இவருக்கு இதெல்லாம் தெரியாது. நீ போய் மன்சூரக் கூட்டிவா. இன்னொரு ஊசியப் போட்டுப் பாப்பம்."
கஸ்ஸா மருத்துவிச்சி மஜ“தை விரட்டினாள்.
"தம்பி! நான் சொற்தக் கேளு. புள்ள புறந்து நாலு மணித்தியாலமாகிறது. இன்னம் மாக்கொடி உழல்லெ. தாய்ர உடம்பிலெ நஞ்சும் கலந்திடும். நீ உடனெ ஆஸ்பத்திரிக்கிதான் போகணும்."
"புள்ள புறந்து ஒரு தியாலமாகிறது. புள்ளய்க்கிம் கல்கண்டுத் தண்ணிதான். தாய்க்கி பால் வருத்தமும் கூடெ."
மஜ“துக்கு தலை வெடிச்சிடும்போலிருந்தது.
முச்சந்திக்குப் போய் - கார் ஒன்றைக் கூட்டிவந்து - பிள்ளையையும் தாயையும் காரில் ஏற்றிக்கொண்டு - 'பெற்றோல் ஷெட் சென்றி'யில் நிற்பாட்டி - மஜ“துக்கு தெரிந்த சிங்களத்தில் ஏதோ சொல்லிவிட்டு....
கார் அவசர வேகத்தில் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது.
"என்னயிது சவத்தக்கொண்டு வந்திரிக்கியள்? சோனிகளுக்குப் புத்தியில்லெ...."
மஜ“து கூனிக் குறுகினான்.
கங்காணிப் பொம்புள்ளெ ஒரு பாட்டம் திட்டித் தீர்த்துவிட்டு, எம்.ஓ. விடம் போய்ச் சொல்ல - அவர் வந்து பரிசோதித்து...முகத்தில் பரபரப்பும்....வேகமும் இணைந்து
"யார் கொண்டு வந்தது?"
"நான்தான் சேர்!" மஜ“து.
"உங்கெட மனைவிதானெ. வருத்தம் கண்டகையோடு கொண்டுவந்திருக்கலாமெ. எல்லாம் கெட்டுப்போச்சு. உடம்பிலெ நஞ்சும் கலந்திட்டுப்போலெ. இந்த நேரத்தில் என்னாலெ என்னெ செய்யமுடியும்?"
டாக்டரின் முகத்தில் இயலாமையின் தவிப்பு.
"இரண்டு மணிக்குத்தான் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜ“ப்பு பொலனறுவைக்குப் போனது. நேரகாலத்தோட வந்திருந்தால் அந்த ஜ“ப்பில் அனுப்பிப்பென்."
அவர் குரல் தொய்ந்து இழுபட்டது.
மீண்டும் காரில் அவன் மனைவியை பக்குவமாகத் தூக்கி ஏற்றினான். உதவிக்கு அவன் மாமி சுலைகா ராத்தாவும்....
"இதுக்குத்தானே இஞ்செ வாறல்லெ..."
"வாயப் பொத்திக்கிட்டு இரிக்கணும் - எல்லாம் அறிவு கெட்டதுகள்றெ கதய்யக் கேட்டு வந்தது..."
கார் பறந்து ஆறாம் கட்டை இராணுவ முகாமைத் தாண்டுவேளை...
மஜ“தின் மனைவி செய்னம்பூ காலையும் கையையும் போட்டு அடித்தாள்.
துவாலையும் இறைக்கத் தொடங்கிற்று....
கார் புனாணை சென்றியில் நிற்க - செய்னம்பூவின் கண்கள் மேலே சொருகிக்கொண்டன.
வெட்டுண்ட கழுத்து விழுந்ததைப்போலெ அவள் தாயின் மடியில் கெளிந்தாள்.
"என்டெ...மகளேய்... எங்களயெல்லாம் உட்டுப் போட்டுப் பெய்த்தியாடிய்..."
- 1991 -
................
மருமக்கள் தாயம்
சூரியன் மறைந்துகிடந்தான். வானமும் மப்பும் மந்தாரமுமாய்....
ஊரும் அடங்கி ஒடுங்கி-ஆற்றங்கரையில் தங்கும் காகங்கள் கூடக் கரையவில்லை.
தோட்டத்திற்குள், முந்திரிகையிலும் மஞ்சோணாவிலும் அடைக்கலமாகும் குருவிகள், மைனாக்கள்கூட எங்கெ போனதோ?
"Bபா...Bபா.." மாமி இடது கை உள்ளங்கையை நெற்றியின் தாழ்வாரமாக்கிக் கொண்டே பாணிச்சேவலையும், புள்ளிப் பேட்டையும் கனிவு பொங்க அழைத்தாள்.
'குடுகுடு' வென்று ஓடிவந்த சோடி கூட்டிற்குள் புகுந்து கொண்டன.
பிழிந்த தேங்காய்ப்பூவும் தவிடும் கலந்த குழையலை, கூட்டிற்குள் வைத்து-பலகைத்துண்டால் அடைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
இரண்டு கைகளும் இடுப்பிற்கு முட்டுக்கொடுத்து அவள் நிற்பதற்கு உதவியது.
'ஆத்துப்பக்கமாக என்னயோ புகெ எழும்புறாப்லெ'
முணுமுணுத்துக்கொண்டே - கண்களிரண்டையும் கசக்கி விட்டுக்கொண்டாள்.
"மெய்தான் ஊருதான் பத்திது" மாமிக்கு விளங்கிற்று. பரபரப்புடன் தனக்கு வழங்காத இடது காலை இழுத்து இழுத்து குடிலுக்குள் புகுந்தாள்.
மாமிக்கு காலும் ஓடல்லெ...கையும் ஓடெல்லெ..."சனியென் நெருப்பெட்டியெ எங்கெ வெச்சென்." தட்டுத்தடவும்போது தீப்பெட்டி கையில் அகப்பட்டுக்கொண்டது.
பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த நெருப்புக்குஞ்சு குப்பி விளக்கில் ஏறி அமர்ந்துகொண்டது.
அந்த ஊருக்குள மாமியைத் தெரியாதவர்கள் எவருமில்லை.
தோட்டக்கார மாமி, சீட்டுக்காரிமாமி. சட்டிபானைக்கார மாமி என்று மாமிக்குப் பல நாமங்கள். முன்னால் ஒரு பட்டப் பெயருடன் முடிவில் மாமி என்று வந்துவிட்டால் அது மீராலெவ்வை அவ்வா உம்மா எனப்படும் இந்த மாமிதான்.
இந்த நாமங்களெல்லாம் ஊரில் மாமிக்கு மட்டுமே சொந்தமான உறவுகள். வேரோடிப் பற்றிப் படர்ந்த பந்தங்கள்.
பொழுது கிழக்கே ரெண்டுபாகம் கிளம்பினால்-மாமி ஊன்றுகோலின் உதவியுடன் ஊருக்குள் புகுந்து விடுவாள்.
ஒவ்வொரு வீடாக ஏறி....இறங்கி...அது அதற்கு ஏற்ற விதமாக தனது வளைசல் கால்களை வழிநடாத்திச் செல்வாள்.
வெம்புக்காறண்டெ றோட்டாலெ போய்-பாலையடிச் சந்தியாலெ திரும்பி-மருங்கைக்கேணி வழிநடாத்திச் செல்வாள்.
இன்றும் அப்பிடித்தான் ஒரு வீட்டையும் விட்டுவிடாமல் ஊரை ஒரு சுற்றுச்சுற்றிவந்துவிட்டாள். மாமியின் பாடு பரவாயில்லை ஏழு கொத்துத்தேறும். இந்தக்கிழமை நிவாரணம் வேறு கொடுத்திருந்தார்கள். அரிசியென்ற பெயரில் பச்சைக்குறுணல். 'இந்தக் குறுணலுக்கு ஒரு கறியும் ஒத்துவராது. சுங்கான் கருவாட்டைப் போட்டு-திராயிலையைச் சுண்டனா ரெண்டுவாய் தின்னலாம்.'
மாமிக்கு பசியெடுத்தது.
அரிசியைப் பானைக்குள் கொட்டி வைத்துவிட்டு-அடுப்பில் 'தெயிலெ' வைக்கத் தொடங்கினாள். அப்போதுதான் அந்தச் சப்தம் அவள் காதுகளைத் துளைத்தது.
'பட் பட் பட் பட் பட் பட் பட்' மெய்தான் பொடியனுகள்றெ துவக்குச் சத்தந்தான். இந்தக் காபிர்கள் படுத்திறபாடு. காணாத்திக்கு நம்மட ஹறாங்குட்டிகளும் போய்ச் சேந்திட்டானுகள்'.
'டூ.....மீ....ல் டும்!'
'ஆண்டவனே! தோட்டத்துக்குள்ளதான் குண்டு வந்து விழுந்திட்டுப் போலெ.
காதுகளிரண்டும் விண்ணென்றிருந்தது.
கூட்டிற்குள் கோழிகளிரெண்டும் பயத்தில் கேவிக் கேவி அடைந்தன.
'ஆயுதத்தாலெ சோடிக்கிட்டு ராவும் பொடியனுகள் வந்தானுகள். பாத்துப் பழகினெ நமக்கே ஈரக்குலெ காய்ஞ்சி பெய்த்து-'
'என்னெ மனெ சண்டெ துவங்கிட்டிப்போலெ?'
'சீ! இதெல்லாம் ஒரு சண்டையா ரெண்டு மணித்தியாலத்திலெ முடிஞ்சிடும்'.
நம்மெட புகாரிதானெ கைகொட்டிச் சிரிச்சான். என்னத்தையோ மனசுக்குள்ள வெச்சிட்டுத்தான் சிரிச்சிரிக்கான். ஆள்தின்னிகள்.
எப்பெயும் துவக்கையெல்லாம் இந்தக் குடிலுக்குள்ளெ வெச்சிட்டு ஓன்டிரண்டு ஆயுதத்தோடெதானெ ஊருக்குளெ போவானுகெள். ராவு எல்லாத்தையும் கையோடெகொண்டு போனதிலெ எனக்கு சஸ’பிஸந்தான்.
வலது உள்ளங்கையில் சீனியைக் கொட்டிக்கொண்டு நாக்கைநீட்டி பத்திரமாகச் சீனியைத்தொட்டு-கீழ் உதட்டை விரித்து, நாக்கை மேல் முரசில் சீனியுடன் தட்டி-அந்த இனிப்பில் தேநீரை உள்ளிழுக்கும்போது-
'டூ...மீ...ல்டும்!'
மாமியின் முகத்தில் மண்ணை வாரி அடித்தது.
'முகைதீன் ஆண்டவரே!' மாமி சப்தமிட்டாள். பயத்தில் உடம்பு 'வெட வெட'வென்று ஆடியது.
மாமி எதையுமே கவனிக்கவில்லை. இடுப்பில் பாவாடைக்கு மேலால் சுற்றியிருந்த சேலை கழன்றதும் நினைவில்லை.
எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு - ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு-வழங்காத காலைக் கெந்திக் கெந்தி வெளியில் வந்து பாத்தாள். வானத்திலெ பறவக்கப்பல். ஊரை வளைச்சி கப்பல் திடீரெனத் தோட்டத்திற்குள்ளெ விழுந்திடும் போலெ குப்புற வந்தது.
மாமி பயத்திலெ வாசலிலெ நின்ற மஞ்சோணா மரத்தோட அப்பிக்கொண்டாள்.
'தி...டூம்!'
கப்பல் குண்டு போடுது இனி ஊரு தப்பாது.
'பட் பட் பட் பட் பட் பட் பட்'
பொடியனுகளும் சுடுறாப்லானிரிக்கி.
மாமி குமராகயிருக்கும்போது கல்குடாவில் பறவைக் கப்பல்கள் வந்து குண்டுகள் போட்டதைப் பார்த்திருக்கிறாள்.
வரிசை வரிசையாக ஜப்பான்காரன் கப்பெல்லெ வந்து குண்டுகள் போட்டான். 'ராணிர தேசத்து தண்ணிக்கப்பல் கல்குடாவிலெ தாண்டும்போச்சிது.'
மாமிக்கு அந்த வேளையிலும் பழைய நினைவுகள் ஏகே 47யின் சப்தச் சிதறல்களாக - மின்வெட்டி மறைந்தது.
அப்பொதான் மாமிக்க விசயம் பிடிபட்டது. 'குளினிக்குளெ ஒரு மனிசெ ஊசாட்டமுமில்லெ' நெஞ்சிக்குள்ளெ 'திம்திம்' என்று உலக்கைபோட்டது.
'இண்டைக்கி பள்ளிலெ பாங்கும் கேக்கலியெ. அல்லாட பள்ளிக்கும் சோதினையா? றஃமானெ இந்த லோகத்திக்கு என்ன கேடு வந்திரிக்கோ?' மாமி பெருமூச்சு விட்டாள்.
'தோட்டக்கார மாமி ஓடியாங்கோ...ஆமிக்காரன் வந்திட்டானாம். சண்டை வந்திட்டி...எல்லாரும் பள்ளிவாசலுக்கெ போறாங்கோய்...! காற்றில் வந்த குரல் மாமியின் காதைக்கடித்தது. குடிலை விட்டுப்போவதில் மாமிக்கு என்னவோ போலிருந்தது.
'அரிசிப்பானெ-சில்லறைக்காசி ரின்-சீனி தெயிலெ ரின் சட்டிபானைகள். பாணிச் சாவலும் கொண்டெபோடும்;
இவையெல்லாம் மாமியின் சொத்துகள்.
'இப்பிடித்தானெ நாலைஞ்சி வரிஷத்திற்கு முந்தி தமிழ் குழப்பமும் வந்தது.'
சாமாஞ்சக்கெட்டெயெலாம் உட்டுட்டுப்போய் கடசியிலெ தெயிலெ வெய்க்கிற முட்டியெய்யும் வளிச்சித்துறச் சிட்டுப் பெய்த்தானுகள்.
நாசமாய் போவாராலெ-வயசிபோனெ காலெத்திலெ ஒருடெத்தெ கிடந்து வழில்லெ-
மாமிக்க வெப்பிசாரம் முட்டியது.
உடனெ காரியத்தில் இறங்கினாள். குடத்தைக் கெளித்து ஒரு சிரட்டைத் தண்ரை வார்த்து - உலைவைத்த அடுப்பை ஒரே அடியில் அணைத்தாள். நெருப்பு அணைந்ததில் புகை கிளம்பி மாமியின் முகத்தை மூடியது. கண்களை கசக்கிக் கொண்டே ஓலைத்தட்டியை இழுத்துச்சாத்தினாள்.
'அல்லா உன் புறத்தெ'
துயரச்சலிப்புடன் நெஞ்சின் அடியிலிருந்து...அனைத்தையும் படைத்த றப்பிடம் பாரப்படுத்திவிட்டு-கம்பிவேலியைக் கடந்து, தார் வீதியில் கால் வைத்ததும்தான் மாமிக்கு எல்லாம் தெளிந்தது.
ஒவ்வொருவரும் அவரவர் கைக்கு அகப்பட்டதை அள்ளிக்கொண்டும்..குஞ்சு குருமான்களைக் கூட்டிக்கொண்டும் அள்ளுண்டு போய்க்கொண்டிருந்தார்கள். 'நமக்குத்தான் கால் ஏலாதெ. இந்தெக் கம்புமில்லாட்டி நம்மெடெ கெதி அதோ கெதிதான.'
பெருமூச்சுடன் மாமியும் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டாள்.
'நல்லா இருட்டிட்டு....'
மாமிக்க கண்ணும் கொஞ்சம் புகைச்சல்.
'டூ..மீல்...டும்!'
கெந்திக் கொண்டுபோன மாமிக்கருகில், இடி இறங்கிய தைப்போலெ-அதிர்ச்சியில் ஊன்றுதடி கையை விட்டும் விலகிப்பாய்ந்தது.
'அல்லா...வே...ய்ய்!'
மாமியின் கால்கள் இடற அவள் வீதியில் குப்புற விழுந்தாள்.
நல்லகாலம் தலை அடிபடெல்ல. முழங்கைகளும் முழங்கால்களும் வீதியில் உராய்தநதில் பற்றி எரிந்தது.
மாமியைக் கடந்து ஊரே எழும்பிப்போனது. யாரும் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மாமிக்கு சுயபிரக்ஞை வந்தபோது- ஒன்றிரண்டு மனிச ஊசாட்டம் மட்டும் காதுக்கு விளங்கியது.
'மௌலானா வாப்பாடெ வூட்டாலெ வரக்கொளதானெ கால் இடறிச்சி?,
'ஓம்! ஓம்!' மனம் சொல்லிற்று மாமி கெளிந்து பார்த்தாள்.
மௌலானா வாப்பாடெ வீட்டுச் சுவரின் வெள்ளை கண்களுக்கு வெளிச்சத்தை ஏற்றியது.
'மௌலானா வாப்பாவுக்கு படைச்செறப்பு எல்லாத்தையும் நேரே காலத்தோடெ அறிவிச்சிப்போட்டான். அதான் அவரு குடும்பத்தையும் கூட்டிட்டு ஊர உட்டுப் பெய்த்தாரு. அந்தச் சீதேவிகளெல்லாம் போனத்தாலாம் ஊருக்கிருந்தக் கேடு.'
மாமி மனத்திற்குள் மௌலானா வாப்பாவைச் சங்கைப் படுத்தினாள்.
'மனெ! ஆர்ரு வாப்பா போறீங்கெ?'
மாமியைக் கடந்து ஓர் உருவம்-தோளில் சுமையுடன் ஓட்டமும் நடையுமா....
'மம்மலிவா...மனெ மம்மலிவா...நான் தோட்டக்கார மாமி மனெ. வாப்பா என்னெயும் ஒரு கை புடிச்சுட்று சீதேவி....'
'மௌலானா வாப்பாடெ வூட்டோடெ ஒட்டினாப்லெ தானெ மம்மலி வாடெவூடு. ஒரு சத்தத்தையும் காணலியெ' மனம் அசைந்தது.
'புள்ளெ ரோசர்ம்மா நீயாவது வந்து ஒரு கை தாமனெ....நானும் அல்லா படைச்செ சீவந்தானெ மனெ. எல்லாரும் என்னெ உட்டுட்டுப் போறீங்களெ.'
மாமி சிணுங்கிச் சிணுங்கி புலம்பத் தொடங்கினாள். எப்படியோ முழுப்பத்தையும் கைகளுக்கேற்றி அதே வேகத்தில் வீதியில் குந்தி எழும்பிக் குந்திக்கொண்டாள்.
பாலையடிச் சந்தியாலெ மாட்டு வண்டில் ஒன்றின் சலங்கைச் சப்தம்.
'தம்பி! ஆர்ரு வாப்பா? ஆமதுலெவ்வையா? நாந்தான் தம்பி தோட்டெக்கார மாமி. என்னெயும் ஒளுப்பெம் வண்டில்லெ ஏத்திக்கெ மனெ...'
இரட்டை மாட்டு வண்டில் அந்தப் பகுதியில் அகமது லெவ்வைக்கு மட்டுமே உண்டு. மாமிக்கு அந்த மாடுகளிரண்டும் நல்ல பழக்கம்.
'மனெ! உண்டெ மாடிரெண்டும் எண்டெ தோட்டெத்திலெ தானெ மனெ மேய்ரெ. என்னடா மக்காள் ஒருவரும் என்னெ என்னெண்டும் பாக்கிங்கெல்லெ....'
'அல்லா! எண்டெ புள்ளரிந்தா எனக்கிந்தெக்கெதி வருமா? போனெ குழப்பத்திலெ எண்டெ மகளெ ஆரோ கடத்திக்கொண்டு போட்டானுகள். புளியடித்துறைக்கு தூண்டலுக்குப்போன புள்ளெ. பேப்புள்ளெண்டாலும் எண்டெ புள்ளெ-றப்பேச் இந்தெச் சீவனெப் போட்டு நீயேன் இந்தப்பாடு படுத்திறாய்.'
மாமிக்கு வெஞ்சம் உடைப்பெடுத்துப் பீறிட்டது. யாரும் மாமியைக் கவனிப்பதாகயில்லை.
'நன்றி கெட்டதுகெள். நாயெண்டாலும் இம்பெட்டுச் சத்தத்திற்கு திரும்பிப்பார்க்கும்.
குலை குலையா இளநீ இறக்கிக் குடுத்து இவனுகள்றெ வயித்து நெருப்பெ எத்தினெ நாள் நூத்திருப்பென். கடசிலென்டான்டா என்னெ ஒரு கை புடிச்சுடெ ஒரு மனிசரிலெ.
கறுவாக்கேணி காபிரிகள் இவனுகளப் பாக்கத்திறம். தம்பிஐயா இந்தப்பக்கம் வருவானெண்டா என்னெ ஒரு கை புடிச்சுட்ருவான்.
நம்மெடெவனுகள் வரவர படைச் செறப்புக்கு மாறு செய்யப்பழகிட்டானுகள். ஹறாந்தின்னிகள்,
இதெல்லாம் அல்லாடெ கோபப்பார்வை....
மாமி குந்தியவாறு-வீதியில் இரு கைகளையும் விட்டு ஊன்று தடியைத் தேடித்தேடி துளாவினாள். கண்கள் கசிந்து கசிந்து பிசிறடித்தன. இந்தெக் குழப்பத்திலெ நம்மெடெ தோட்டெம் தப்பாது. போனெ குழப்பத்திலெயும் இப்பிடித்தான். கறுவாக்கேணி ஹறாங்குட்டிகள் குடிலக்கொளுத்திப் போட்டிருகள்.
ஏசிஏ தந்தெ நிவாரெணக் காசிலெதான் குடிலெ வைச்சென். எப்பெடுத்தெகுழப்பமிது. எப்பெமுடியப் போவுதோ?'
இது நல்லா வாற துன்யாயில்லெ...நாசமாப்போறெது தான் மாமி நினைவுகளோடு மல்லுக்கட்டினாள்.
சப்தம் அடங்கி -ஊர் அடிபட்ட பாம்பைபோலே 'ம்'மென்று கிடந்தது.
மாமிக்கு வயிறும் 'புறுபுறு'க்கத் தொடங்கிற்று....குடலுக்குள் எதுவுமில்லெ...
பசியும் தாகமும்...பீதியும் கலவரமும்...ஒன்றையொன்று துரத்தித் துரத்தி அவளை விழுங்கிவிடும்போலிருந்தது.
நெருப்புப்பசி...
'பகல் உமறுக்குட்டிரெ கடயிலெ வாங்கினெ கங்கான் கருவாடும்-மய்யறுக் கிழங்கும், ஒரு ஆணம்காச்சி இந்நேரம் சோறும் ஆக்கித்திண்டிரிக்கலாம்.'
மாமி நாக்கில் சுரந்த உமிழ்நீரைச் சப்புக்கொட்டி விழுங்கிக்கொண்டாள்.
தூரத்தே-கறுவாக்கேணிப் பக்கமிருந்து-ஒரு வாகனம் மிகவும் வேகமாக வந்துகொண்டிருந்தது. மாமியின் கண்கள் கூசியது.
மெய்தான் நம்மெடெ பொடியனுகள்றெ ஜ“ப்புத்தான் வருகுதுபோலெ. அவனுகளுக்கு எத்தினெதரந்தான் பானை பானையாகத் தெயிலெ வெச்சிக் குடுத்திரிக்கென். எப்பிடியும் நிப்பாட்டி என்னெ ஒரு கை புடிச்சுட்ருவானுகள்?
மாமி பாவாடையை இறுக்கிக்கொண்டாள். ஓடிவந்த வாகனம் மாமியைக் கண்டுகொள்ளாது-கிண்ணையடித் துறைப்பக்கமாக ஓடி மறைந்தது.
- 1991 -
..............
சலனம்
முழுநிலவு பாலொளியைப் பீச்சிக் கொண்டிருக்கிறது. பளிங்கு போன்ற அவள் முகத்திலும் அது பட்டுத் தெறிக்கிறது.
முற்றத்தில் கிடந்த தென்னங்குற்றியில் அமர்ந்து, முன்னங் கால்களை கட்டிப் பிடித்துக்கொண்டே அந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தவள்...
அழுகையா?
'பொல பொல' வென்று பிதுங்கிய கண்ர் முத்துக்கள் அவள் கன்னத்தில் சரம் கோர்த்து பின்னழுவிக் கொண்டிருக்கிறது. முன்றானை எடுத்து கண்களைத் துடைத்துக்கொள்ளும்போது....
பகலவன் கண்ணாக் காட்டிற்குள் மறையும் தருணம் பார்த்து - கிழக்கே நிலவு குதித்தெழுந்த போது, அவளுடைய சாம்ராஜ்யத்தின் அரியாசனமான அந்தத் தென்னங் குற்றியில் வந்தமர்ந்தவள்தான். இத்தனை நேரமாக அந்த நிலவையும் அது நீந்தும் நீலவானையும், கண்சிமிட்டும் விண்மீன்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்.
அவளின் மேனியைத் தழுவிச்செல்லும் தென்றலையோ தென்றலின் அசைவில் சாமரம் வீசும் தென்னங்கீற்றுகளின் அழகையோ அவள் கவனித்ததாகத் தெரியவில்லை.
அதைப்பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையுமில்லை.
முழுநிலவு வானில் வந்தால் போதும். அவள் உலகையே மறந்து விடுவாள். அது அவள் சுபாவமாகிவிட்டது.
அவளும் நிலவும் ஒன்றாகி....நிலவும் அவளும் உயிராகி...உருகி உருகி...
நிலவு வராத நாளெல்லாம் 'பிறவா நாள்.'
அயலவர்கள் அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்றார்கள். சிலர் பைத்தியம் என்றும், வேறு சிலர் 'மோகினி பிடிச்சிட்டுது' என்றும், பட்டம் வேறு சூட்டி வம்பளத்தார்கள்.
இத்தனைக்கும் அவள் முஅத்தினுக்கு ஒரே பிள்ளை.
நாவலடி தைக்காவில், சுத்தம் பாத்திஹா, மௌவிது என்று அவ்வப்போது கிடைக்கும் சில்லறைக் குத்திகளால் சீராட்டி வளர்த்த மகள்.
பனிரெண்டு வயதிலேயே அவள் உடலில் பதினாறு வயதுக் குமரிமையின் கொள்ளை அழகு....
செழுமைமிகு மாதுளங்கனியாக அவள் உடலில் பதினாறு வயதுக் குமரிமையின் கொள்ளை அழகு....
செழமைமிகு மாதுளங்கனியாக மதர்த்தெழு மார்பகங்கள்...கால்களும் கைகளும் 'கொழு கொழு' வென்று....
வட்ட வடிவமான அந்த விழிகள். மிரளப் பார்க்கும் அந்தப் பார்வையை இன்னொரு விழி சந்திக்க தயாராகும் வேளை... அவள் தன் பார்வையைத் தாழ்த்திக் கொள்வாள்.
அதிலும் ஒரு கொள்ளை அழகு...
முஅத்தினாருக்கு ஆண்டவன் கொடுத்த அற்புதச் சொத்து.
கடைசியில் இன்று அவள் பாரச்சுமையாக்கி-
மகளைப் பார்க்கும் போதெல்லாம் முஅத்தினாருக்கு நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது.
தலைமுடி சிக்குப்பிடித்து.... கரண்டிக் காலில் ஊத்தை கட்டி....
அவரும் தனக்குத் தெரிந்த 'ஆயத்துக்குரூஸ்' 'மன்ஜில் துஆ' என்றெல்லாம் - நாளாந்தம் ஓதி ஓதி ஓய்ந்து விட்டார்.
ஆனாலும் 'பெத்தெமனம்' கேட்கிறதா?
கடைசியில் வாழைச்சேனை ஆஸ்பத்திரியின் பெரிய்ய ஐயா குகதாசன் கூடக் கையை விரித்து விட்டார். அவர் கையை விரித்தால் ஆண்டவன் பொத்திக் கொண்டான் என்றுதான் அர்த்தம்.
எவராலும் அவளின் நோயைக் கண்டறிய முடியவில்லை.
முடிவில் படைத்தவனிடமே ஒப்புக்கொடுத்ததான பாவனையில் முஅத்தினாரும் மனைவியும் வாழப் பழகிக் கொண்டார்கள்.
பார்வை எங்கோ சூன்யத்தை வெறித்துப்பார்க்க- அந்த உள்ளத்தின் உணர்வுகளெல்லாம் இனம்புரியாத மோனத்தில் லயித்துக் கொண்டிருக்கும். வெள்ளிப்பாத்திரத்தில் உருளும் கருநாவல் பழம்போன்ற அவள் கண்ணின் கருமணிகள் கீழும் மேலும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும்.
அவள் அன்று தொடங்கி இன்று வரையிலும் யாருடைய கேள்விகளுக்கும் எவ்வித பதிலுமின்றி, அவளே ஒரு கேள்வியாகி....
அவளுண்டு அந்த நிலவுண்டு.
அவளுக்கும் நிலவுக்கும் அப்படியொரு பிடிப்பு. பாந்தம். உறவு.
இந்த ஓர் ஆண்டுக்கிடையில் முஅத்தினார் பத்து வருட முதுமையை அள்ளிக் கொண்டவர் போலத் தோன்றினார்.
** இ.தொ. makkatu5.mtfன் தொடர்ச்சி**
** makkatu4.mtfன் தொடர்ச்சி**
இப்போதெல்லாம், வயிற்றை எக்கி, நெஞ்சக் கொட்டுக்குள் காற்றைரொப்பி, தொண்டையின் நரம்புகள் புடைத்தெழ அவரால் பள்ளியில் பாங்கு கூடச் சொல்ல முடியவில்லை.
அவரின் மனைவி ஓட்டுக்குள் புகுந்து வாழும் பிடிப்பு அற்ற ஒரு வாழ்க்கையை மேற்கொண்டாள். அடுப்படியில் புகையோடு நெருப்பாகி, அவளும் ஒரு அப்பச்சட்டியாகி விட்டாள்.
மூன்று பேரைக் கொண்ட குடும்பம் இன்று மூன்று துருவங்களாக...இஷாத் தொழுகை முடிந்ததும், தைக்காவின் கதவுகளையெல்லாம் இழுத்து அடைத்துவிட்டு, நடையைக் கட்டினார். வீட்டு வாசலில் கால் வைக்கும்போது - தென்னங்குற்றியில் அமர்ந்திருக்கும் மகளின் கோலத்தில் அவர் கண்கள் நிலைத்தன.
மகளையும் நிலவையும் அவர் மாறி மாறிப் பார்த்துக் கொள்கிறார் அலர்ந்திருந்த அதரங்கள் துயரத்துடிப்பில் 'படபட'க்க, கண்களில் ஒரு வெறுமை, எல்லாமே சூன்யமாகத் தெரியும் ஒரு வெறுமை.
அவருடைய மனைவி நிலைப்படியில் நின்றுகொண்டிருக்கிறாள். மகளைப் பார்த்த கண்களிரண்டும் குறுக்குவெட்டாக, மனைவியையும் ஒரு தடவை நோட்டம் விட்டுக் கொள்கிறது.
அந்தக் கண்களிலும் அதே கலக்கம்; ஏக்கம் இழையோடிக் கிடக்கிறது.
வீட்டிற்குள் புகுந்தவர் கணநேரத்திற்கெல்லாம் கையலம்பத் தொடங்கிவிட்டார். அவரைப் பொறுத்தவரையில் அந்த உணவு உயிரைப் பிடித்து வைத்துக் கொள்ளத்தான். மற்றப்படி நாவுக்கு ருசி வைத்து க கொள்ளத்தான். மற்றபடி நாவுக்கு ருசி என்பதெல்லாம் எப்பவோ மறந்துவிட்ட சங்கதிகள்.
யாரும் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டதும் அவர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானார். இந்தத் தள்ளாத வயதிலும் தாங்க முடியாத அந்தத் துயரத்தை இறைவன் சந்நிதியிலேயே நாளெல்லாம் சமர்ப்பித்து விடுவோம் என்ற தாபம் போலும்.
கணவனை அனுப்பிவிட்டு மகளின் அருகே வந்தவள், 'எழும்புமா சாப்பிட்டு வரலாம்' என்றாள்.
தாயின் மனம் தவித்துக் கொள்கிறது.
அவள் எதுவுமே பேசவில்லை. காய்ந்து கொண்டிருக்கும் அந்த நிலவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அதில் அவள் பசி தீர்ந்துவிடும் போலும்.
மகள் அசையாமல் இருப்பதை அறிந்தவள், கணவன் உட்கொண்ட மீதியைக் கொண்டு தன் பாதி வயிற்றை நிரப்பியவளாக மகளின் அருகே படுக்கையை விரித்துக் கொண்டாள்.
கவலையின் அழுத்தத்தால் ஏற்பட்ட தளர்ச்சி உடன் அவளைக் கண்ணயரச் செய்கின்றது.
அமீனாவோ பெருமூச்சுவிட்டவளாகக் காய்ந்து கொண்டிருக்கும் அந்த நிலவையே வெறித்துக் கொண்டிருக்கிறாள்.
அன்றும் அப்பிடித்தான். எப்பவும் போல் அமீனா தந்தைக்கு கோப்பியும் அப்பமும் எடுத்துக்கொண்டுபோனால்,
மேற்கே விடிநிலவு காய்ந்து கொண்டிருந்தது.
அவர்களின் வீட்டிற்கும் தைக்காவுக்கமிடையில் மையத்துப் பிட்டி பரந்து கிடந்தது. வேம்புகள், அத்திகள், மர முந்திரிகைகள், ஆயிரம் கால் மண்டபம்போல் தம் விழுதுகள் நிலத்தில் பதிந்து நிற்கும் பென்னம் பெரிய ஆலமரம் என்று மையத்துப்பிட்டி அடர்ந்து நிறைந்து....
அந்தி, அதிகாலை வேளைகளில் வாப்பாவுக்கு கோப்பியும் அப்பமும் கொண்டு போவதென்றால் அமீனாவுக்கு இனி இல்லை என்ற மகிழ்ச்சி....
உம்மா அவளை உசுப்பி எழுப்பியதும், கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டே கிணற்றடிக்கும் போகாமல்-அவள் ஓட்டமும் நடையுமாக அந்தக் காட்டுப்பகுதியைக் கடந்து செல்லுவாள். விடியற் சாமவேளையில் அமீனா தன்னந்தனியாகப் போவதை அடுத்த வீட்டு இஸ்மாயில் அடிக்கடி கவனித்துவந்தான். அமினாவின் பள்ளியில் அவன் பெரிய வகுபிபில் படிக்கிறான்.
சில நாட்களில் அவன் இவளைப் பின்தொடர்ந்து செல்வதும் - நான்கு எட்டு அடி வைத்ததும் ஏதோ உள்ளுணர்வு உறுத்த, அவன் மீண்டும் போய் பாயில் குப்பறபடுத்துக்கொள்வான். அவன் கால்களிரண்டும் அடித்து அடித்துப் பூமியைக் கொத்தும்....
உணர்ச்சிகளில் அவன் மனம் திமிறிப் பாயும்.
அந்த அழகிய மொட்டை - அந்தத் தருணத்தில், அந்தக் கோலத்தில் பார்ப்பதில்.... கொத்துவேலிக்குள்ளிருந்து கள்ளத்தனமாக அவன் கண்கள்....
அவனுள் எதோவொரு உணர்வு எட்டிப்பார்த்து கூர்மை பெறும்.
அவள் துள்ளித்துள்ளி....குதித்துப் பாய்ந்து...
அவன் மனம் 'படபட'க்கும். நெஞ்சுக்குள் ஏதோ புகைந்து அடி வயிற்றில் பகீரென்று...கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்க...மனம் பதறித் துடிக்கும்.
அவளைக் கட்டிப்பிடித்து...முகத்திலும் கழுத்திலும் முகத்தைப் புதைத்து....
அவன் கால்கள் நிலத்தில் தாவாமல் ஆடியது.
இன்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளைப் பின்தொடர்ந்தான்.
குருத்துமணல் பூத்திருந்த அந்த வெளியில் - தன் கிளைகளைப் பரப்பியவாறு பூமியை முத்தமிட்டுக்கொண்டு நின்றது அந்தப் பென்னம் பெரிய முந்திரிகை மரம்.
அது பழுக்கும் காலம் - அதிகாலையில் கிளிகளும் வெளவால்களும் கலகலக்கத் தொடங்கிற்று. கிளிக்கூட்டங்கள் கிளைதாவும் போதெல்லாம் அமீனாவும் தன்னிலையிழந்த பரவசத்திலாழ்ந்தாள்.
இத்தனையும் பார்த்துக்கொண்டிருந்தவள் - தன கால்களினால் கிளைகளை விலக்கிக்கொண்டே கூடாரம் போன்ற முந்திரிகை மரத்தினுட் புகுந்தாள்.
அப்ப பீங்கானையும் கோப்பி போத்தலையும் மரத்தினடியில் வைத்தவளாக அந்த நிலவொளியில் அமீனா பழம்பறிக்க முனையும்போது - அவளின் தளிர்க்கரங்களை மறைந்திருந்த இன்னொரு கை அழுத்திற்று.
அவள் கதிகலங்கிப் போனாள். செய்வரென்னவென்றறியாமலே திகைக்கும்போது அவன் அவளை நெருக்கமாக அணைத்துக் கொண்டான். ஆவேசம் வந்தவன்போல அவளின் நெற்றியிலும் கழுத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்.
உணர்ச்சியின் உச்ச நிலையில்...அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
முந்திரிகையில் பழம் குடித்துக் கொண்டிருந்த வெளவால்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின.
புளியடித்துறையில் தங்கும் காகங்கள் அவர்களின் தலைக்கு மேலாகக் கரைந்து சென்றவண்ணமிருந்தன.
எல்லாம் ஏதோ அற்புதக் கனவுபோல....
அந்தக் கனவில்....அந்தக் கணத்தில்.... அவள் அடைந்த பரவசம் பதறல் கண்களில் நீர் முட்டி - கன்னக் கதுப்புகள் இரத்தச் சிவப்பேறி....
அவளுடன் ஆடியது. பயம்! மறுகணம பரவசம்...
அவளினின்றும் ஏதோ ஒரு அனுபவம் மடலவிழ்ந்து வீழ்ந்தது.
அவனுக்கு ஆசை தீர்ந்தது போல் அவளுக்கோதான் இத்தனை காலமாகத் தேடிய ஒன்றைக் கண்ணில் காட்டிய மறுகணமே... பறித்துக்கொண்டதைப்போல....
அந்த உணர்ச்சிப் போராட்டங்களின் கிறக்கத்தில் அவள் மயங்கும்போது-
"அல்லாஹு அக்பர்!" என்றெ அவளின் தந்தை விடுத்த வைகறைத் தொழுகைக்குரிய அழைப்பு அவள் காதுகளில் பீரங்கிபோல் முழங்கிற்று.
பாங்கொலியோடு அவனும் எங்கோ மறைந்து விட்டான். அமீனா அடைபட்ட முந்திரிகைக்குள்ளிருந்து வெளியே வரும்போது விடிநிலவு மட்டும் மேற்கே சாய்ந்த வண்ணம் காய்ந்து கொண்டிருந்தது.
அந்த வழியில் யாரோ சிலர் தொழுகைக்காக வந்து கொண்டிருந்தார்கள்.
முகம் காட்டாத பயம் அவளைப் பிடித்துக் குலுக்க-அப்படி அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டுத் தலைவிரி கோலமாக வீட்டை நோக்கி ஓடினாள்.
இவ்வளவு நேரமும் தன் மகள் வராததை உணர்ந்த முஅத்தினார் துடிதுடித்துக்கொண்டே வீட்டிற்குள் நடையைக் கட்டினார்.
அங்கே வீட்டின் நிலையில் அமீனா அவரை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் எதுவுமே பேசவில்லை.
அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவள் வாழ்வே விசித்திரமாகி....
சில வேளைகளில் வாய்விட்டு அழுவாள். அதே கனம் 'கலகல' வென்று கைகொட்டிச் சிரிப்பாள். பௌர்ணமி நாள்களில் தன்னை அழகாக அலங்கரித்துச் சிலிர்ப்பாள். அதேபோல் நாள்கணக்கில் குளிக்காமல் வியர்வை நெடியுடன் நடைப்பிணமாகக் கிடப்பாள்.
அவள் எந்த நேரத்தில் எதைச் செய்வாள் என்று யாருக்குமே தெரியாது. அப்படியும் இன்று ஒரு வருடம் கழிந்துவிட்டது. ஆனால், இன்றுபோல் அவள் என்றுமே இப்படி இந்த நிலவையே வெறித்துக் கொண்டிருக்கவில்லை. அப்படியொரு லயிப்பு....
முற்றத்தில் தென்னங்குற்றியில் தானும் ஒரு மரத்துண்டாக ஆழ்ந்த தூக்கத்தில் அமீனாவின் உம்மா கிடந்தாள்.
பதினாலாம் பக்கத்துப் பெருநிலவு வானில் வலம் வந்து கொண்டிருந்தது.
ஏதோ நினைவுக்கு வந்த அமீனா தண்ர் செம்பை எடுத்துக்கொண்டு கொல்லைப்பக்கம் போகிறாள். ஓலை வேலியைக் கடந்த பார்வை பக்கத்து வீட்டு முற்றத்தில் விழுகிறது.
தென்னை மரத்தோடு இணைந்தாற்போல இரு உருவங்கள்.
நெருக்கமாக - மிகவும் இறுக்கமாக- ஓருவரையொருவர் ஆரத் தழுவிய நிலையில்...
புளியடி ஆற்றில் மிதந்து வந்த ஊதற் காற்று அவள் முகத்தில் 'ஜில்' என்று அறைந்து விட்டு, கிழக்கே செல்கிறது.
அவர்களின் பார்வையில் இவள் படுகிறாள் போலும். அவர்கள் பிரிந்து கொள்கிறார்கள்.
அமீனாவின் நெஞ்சுக் கூட்டிற்குள் ஏதோவொன்று 'படபட'வென்று சிறகடித்துப் பறந்தது.
செம்பை அந்த இடத்திலேயே 'திடும்' எனப் போட்டவள். மின்னல் வேகத்தில் மீண்டும் அந்தத் தென்னங் குற்றியில் வந்து அமர்ந்து கொள்கிறாள்.
நிலவு மேற்கே சாய்ந்துவிட்டது. காகங்கள் அன்று போல் தான் இன்றும் அவளின் தலைக்கு மேலால் 'விர்' ரென்று...
முந்திரிகையின் அடப்பிற்குள் நடந்தேறிய இத்தனை காட்சிகளும் - அவள் மனத்திடலில் உருவேறி நடனமிடத் தொடங்கி ஊழிக் கூத்தாடியதுபோல்....
திடுதிப்பென்று அவள் எண்ணத்தில் அவளோடு கலந்து வாழ்ந்த ஆண்பிள்ளைகளெல்லாம் சிக்குண்டார்கள்.
அதில் அவன் மட்டும் - இஸ்மாயில் விடுபட்டுத் தனித்து நின்றான்.
ஜாடை காட்டி, கைகொட்டிக்கெக்லித்தான்.
அன்று அதிகாலை வேளையில் வாப்பாவுக்கு கோப்பியும் அப்பமும் கொண்டுபோனபோது-
தன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு...நிலத்தில் வீழ்த்தி... தொடையெல்லாம் குருத்துமணல்கள் பூத்துக் குலுங்கிற்று.
நினைக்கும்போது அவள் மனம் இலேசாகக் கனத்தது.
ஏதோவொருவகை மாயத்தாகம். அடிவயிற்றில், நெஞ்சுக்குள், தொண்டைக்குள், என்று புரண்டு புரண்டு படமெடுத்தாடியது.
எண்ணங்கள் மறுகரையில் திரண்டு திரும்ப...
அவள் வீட்டிற்குள் செல்கிறாள்.
மிகவும் பிடித்தமான அந்த மஞ்சள் நிறப்பாவாடையையும் வாழைக்குருத்துப் பச்சையில் பிளவுஸ”ம் அவளுடலை மறைத்துக்கொள்ள - நீல நிறத்தாவணியால் மார்பைச் சுற்றி இடுப்பில் செருகிக் கொண்டாள். கூடவே கண்ணாடியில் முகம் பார்த்து தலையும் படிய வாரிவிட்டுக்கொண்டாள்.
கடைசியாகத் தாயின் தலைமாட்டில் வந்து நிற்கும் போது - அந்தப் பள்ளிவாசலினின்றும் "அல்லாஹு அக்பர்" என்றெ பாங்கொலி அப்பிரதேசத்தைச் சுற்றிப் படர்கிறது.
இஸ்மாயில் அவளின் கழுத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டதைப் போல - அந்த மணம் ஆணின் முதல் மணம். அவளின் நாசித்துவாரங்கள் புடைக்க புடைக்க அந்த மணத்தை அப்படியே அறிஞ்சி...ஒத்தி....அவளின் உடல் புல்லரித்தது.
மீண்டும் அதே பாங்கொலி அவள் காதுகளைத் தேனாக நிரப்புகிறது. அந்தத் தேனாறு வந்த திசையை நோக்கினாள். அங்கே அப்பொழுது சாய்ந்துவிட்ட பெருநிலவு காய்ந்து கொண்டுதான் இருந்தது.
அவளுக்கு என்ன வந்துவிட்டதோ தெரியவில்லை.
அந்த பாங்கொலி வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அவள் வாசல் கடந்து - வழி கடந்து - இப்போது வீதியில் போய்க்கொண்டிருக்கிறாள்.
- 1969-
...........
வேட்டை
வானம் கருக்கூட்டிக் கிடந்தது. பறனில் நின்று கொண்டிருந்த காதன் கண்களை திறந்துவிட்டான். பார்வை 'விர்ர்' ரென்று போய் குசவைக் குளத்தைச் சுற்றி வலம் வந்து - கிழக்கே அடர்ந்திருந்த மருதஞ்சோலையில் கரையேறியது. சோலை ஆடாமல் அசையாமல் நிற்பதான மோனம். இரவு பகல் பாராது எப்போதுமே அலறிப்பறக்கும் கொக்குகளும் குருவிகளும் கூட அசந்து தூங்கியதோ....
மீண்டும்- இமைக் கூட்டிலிருந்து விடுபட்ட பார்வை வளைந்து வானத்தில் அலைந்தது. ஒரு நட்சத்திரம் கூடக்கண் சிமிட்டவில்லை. மேற்கே- தேய்பிறை மகாவலி கங்கையில் குளித்து...
இன்னும் கொஞ்ச நேரத்தில், கருக்கூட்டிய இருள் ஒரு தூறல் போட்டால் நிச்சயம் காதனுக்கு வேட்டைதான்.
அவனுடைய மனக்காட்டில் மான் கூட்டம் துள்ளிப்பாய்ந்தது. கைகளிரண்டையும் மடக்கிய காதன் மீண்டும் அவைகளைப் பலமாக உதறிக்கொண்டான்.
"மாஸ்டர் எழும்புங்கெ விடிவெள்ளி கிளம்பிட்டு...."
"என்னெங்கெ இப்பிடிக் குளிருது. நம்மெ கண்டியயும் தோக்கடிச்சிடும்போலிருக்குது."
"இஞ்செ மாரிமழை வந்தா உங்கெடெ கண்டியெல்லாம் பிச்செ வாங்கணும்." காதனுக்குப் பெருமை.
கண்டி மாஸ்டர் நெருப்புத் தீனாக்குள் கையையும் காலையும் காய்ச்சிக்கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் கிழக்கிலிருந்து வீசும் கொண்டல் காற்றுக்குத் தங்கள் மனித வாடையைப் போக்குக் காட்டிவிட்டு, வடமேற்காக குசவைக் குளத்தை வளைக்கத் தொடங்கினார்கள்.
காதன் நடக்க நடக்க மாஸ்டர் ஓடத்தொடங்கினார்.
அந்த ஊரில் காதனைப்போல் நடக்கக்கூடியவர்கள் இருவரே. ஒருத்தன் புலியன்சேகு. மறுகா, நூகு வட்டெ விதானையும்தான்.
காதனுடைய பாதங்களில் குத்திய முட்களெல்லாம் 'சுருக்' என்ற ஓலத்துடன் முனை மழுங்கின. காதனின் கால் பாதம் முற்றி விளைந்த மரையின் கழுத்துத் தோல் போலெ விறைத்துக் காய்ச்சிக் கிடந்தது. மாஸ்டர் எட்டுக் கொருதடவை தமது பாதங்களைத் தடவிக்கொண்டவராக ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
'இன்றைக்கு எப்பவும் சூட்டிறைச்சி கொண்டுபோகணும்.' இருவர் மனத்திலும் ஒரே எண்ணம். இருவரும் தேடலில்...காதல் மீண்டும் கதையைத் தொடங்கினான்.
"என்னெ மாஸ்டர்! ராவிலெண்டாப்லெ தூக்கமா? பகலெல்லாம் மாடுகளோடெ மாடா மேயணும். சாயந்தரம் மாத்தயாவுக்கு மீன்பிடிக்க 'பேலெவெ' வில்லுக்குப் போவெணும் - மீனில்லாட்டிக் குறைஞ்ச விலெயிலெ முட்டெ வாங்கிக் குடுக்கணும் இருந்தாப்லெ இரிந்து ஆரும் மாறிப்போவாங்கெ. அண்டெய்க்கி எப்பிடியும் பண்டி சுட்டுக் குடுக்கணும்." காறித் துப்பிக்கொள்ள...
'டோர்ச்' எதையோ கண்டு பார்வையைக் குவித்தது. கரிய போர்வையில் பதித்த பச்சை நிறக் கோலிக் குண்டுகளாக...'மான் கூட்டம்தான்...' உடன் அவன் நாக்கு உள்ளே சுருட்டிக்கொண்டது.
"சீ! அது பக்கிள் மாஸ்டர். ஆருவந்தாலும் வாறெ புதிசிலெ நீதி நியாய மிண்டுதான் கதெ. போகப்போவெ எல்லாக் கழுதையும் ஒரு கழுதான். அதிலெயும் சேனாயக்கா பெரிய்ய மோசெம். அவனுகளுக்கு நம்மெடவளுகெள் பல்லுவெட்டெப் போனா ஒரே கண் விளையாட்டுத்தான். இவெளுகளும் பல்லெ காட்டிக்காட்டி ஒரு சுணையுமில்லாப் போனாளுகெள்." காதன் அலுத்துக்கொண்டான்.
மாஸ்டரின் சிந்தனை உரத்திற்று.
'காதனுடைய பொஞ்சாதியைப் பற்றிய 'குசுகுசு'ப்பு அந்த நேரத்தில் அவருக்கு நினைவுப்பாய் விரித்தது.
'என்னெ உண்மையோ?' இப்பிடி இரைஞ்சா மான்மரெ எங்கெ தவையப்போது. காதென் இண்டெய்க்கி பாத்தமுத்து ராத்தாடெ காஞ்சாவிலெ கொஞ்செம் கூட அடிச்சிட்டான் போலெ' மாஸ்டரின் எண்ணங்கள் ஆமையைப்போலெ தலையை இழுத்து மூடிக்கொண்டன.
"'மாஸ்டர்' புளியடி பட்டிலெ ஒளுப்பம் கூதக் காஞ்சிட்டு, மோட்டான் குளத்தெ ஒரு சுத்துச் சுத்துவெம். ஏதும் கய்ப்பிக்கும்."
உடம்பு கூதலில் 'படபடவென்று நடுங்க மாஸ்டர் மஸ்' விட்டுக் கொண்டார்.
"எப்பிடி மாஸ்டர் புளியெ காய்ச்சிரிக்கி. இந்தெப் புளிலெ போட்டுக் காய்ச்செ மான் எலும்பு இரிக்கோணும்." காதனின் நாக்கில் உமிழ் நீர் சுரந்தது. 'ச்சூ' விட்டுக் கொண்டான்.
"டேய்! அனிபாக்கா என்னடாப்பா அப்பிடிக்கூதல். நெருப்புத் தீனாக்குளெ போய் போறாய்"
காதனுடைய பேச்சில் பட்டிக்காரெ அனிபாக்கா எழும்பிக் குந்தினான். கைகளிரண்டையும் மடக்கி மடக்கி வீசிவிட்டு. அவனும் நெருப்புத் தீனாக்குள் கைகளையும் கால்களையும் விட்டு விட்டு எடுத்தான்.
"முட்டாசியில்லியா தெயிலெ வெப்பெம்?" காதன்.
"முட்டாசியெக் கண்டு எந்தெக்காலெம்!" அனிபாக்கா.
"மாஸ்டர்! எலும்புங்கெ. நெருப்புடியெ இரிந்தா இரிக்கெத்தான் செய்யிம். நம்மெடெ வேலெயெப் பாப்பெம்" காதன் வேட்டையில் தீவிரம் காட்டினான்.
"காதென்! மோட்டான் குளத்தத்தான் பாரு. பகல் மாடு சாச்சிவரக்கொள நேத்திராவு மரெ அடிச்சிரிந்திச்சி. அம்புட்டா எங்கெளேயும் பாத்திக்கெ." பேசிக்கொண்டே அனிபாக்கா கைகளிரண்டையும் தீய்த்துக்கொண்டான். "மாஸ்டருக்காகத்தான் இண்டெய்க்கி வந்தனான். மாறிப்போறாரு அவருதானெ நம்மெட பிள்ளெகளுக்கு 'ஆனா, வெண்டாலும் சொல்லிக்குடுத்தாரு. மாறிப் போறெவருக்கு நம்மெடுவனுகள் ஒரு சோறாவது குடுக்கெல்லெ. எம்பிமாரெண்டா போத்தலும் வாங்கி மானும் சட்டுக்குடுப்பானுகெள்."
கட்டுத் துவங்க்கு தோளில் ஏறி அமர - அவன் நடையைக் கட்டினான். கண்டி மாஸ்டர் ஓடத் தொடங்கினார்.
"காதர்! சரியாக் குளிருதப்பா. குருத்தெலும்பும் அழுவுது."
"ஓம் ஓம்! சப்தம் போடெவாணாம்." காதன் எச்சரிக்கை செய்துகொண்டே கையிலிருந்த டோர்ச்சை குளக்கட்டில் மேயவிட்டான்.
ஒளிக்கோடுகளை இருள் விரிந்து விரிந்து விழுங்கிக் கக்கியது. ஒரு கூட்டம் மான்கள் துள்ளிப்பாய்ந்தது, ஒளியில் சிக்குண்டு தலைவந்தன. மறுகணமே "டுமீல்!" வெடிச்சத்தம் அந்தப் பிரதேசத்தையே அதிரவைத்தது.
குண்டடிபட்டமான் இடுப்பால் இளுவி இளுவி பற்றைக்குள் செல்லத் துடித்தது. மாஸ்டர் அதன் கால்களை மடக்கி, கிப்லாவை நோக்கி....
அதரங்களின் அசைவில் 'பிஸ்மில்லாஹ்' என்றெ ஒலி வெளிப்போக மானின் கழுத்தில் கத்தி இறங்கியது.
சற்று நேரத்திற்கெல்லாம் காதன் மீண்டும் கத்தியைத் தீட்டிக்கொண்டே விறைத்த மானின் தோலை உரிக்கத் தொடங்கினான். அவனுடைய கையிலிருந்த கத்தி ஓர் கலைஞனின் தூரிகைபோலே அதன் உடலில் விளையாடியது.
"மாஸ்டர்! எனைக்கித் தெரியும். புளியடிக்காறிரெ சொறிநாயிலெ முழிச்சிட்டுப்போனா எப்பிடியும் வேட்டான்!"
மாஸ்டரோ கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்க, இறைச்சியைக் காவிக்கொண்டு களைக்க களைக்க - அந்த அதிகாலையில் அவருக்கு வியர்த்துக்கொட்டியது.
நிலம் தெளிந்துகொண்டு வந்தது.
"மாஸ்டர்! உங்கெளுக்கிட்டெயும் முட்டாசில்லெயா. வூட்டெ போனா எப்பெடியும் தெயிலெ குடிக்கணும் மாஸ்டர்."
"வாங்கோவென் பள்ளிக்கே போவெம். இந்தெ இறைச்சியை நீங்கள்தான் கீலன் போட்டுத்தரணும்."
"இப்பெ வரெ ஏலா மாஸ்டர். நான் ஊட்டெ போயிட்டு, அப்பிடியே இறைச்சிலெ கொஞ்செத்தெ மாத்தயாக்கும் குடுத்திட்டு, பிரட்டிலேயும் பேரெப் போட்டிட்டு எட்டுமணி போலெ வாறென்."
காதன் ஒரு சந்து இறைச்சியையும் மானின் தலையையும் காவிக்கொண்டு புளியடிச்சந்தியாலெ திரும்பினான்.
"மாஸ்டெர்! ஆணைகள் காடேறி வாறெ நேரம். கவனமாப் போங்கெ." காதனின் வார்த்தையில் அவன் கவனம் குவிந்தது.
காதன் தனது பாம் குவாட்டெஸ் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, பின்னால் ஏதோ நெருங்கிவருதான அரவம். அங்கே புளியடிக்காரெ பாத்துமுத்துராத்தாடெ சொறிநாய். வாலை ஆட்டி ஆட்டி, குழைந்து வளைந்து -
"வாவா! வீட்டெ போவெம்."
நாய் வாலை ஆட்டிக்கொண்டு நாக்கைச் சப்புக் கொட்டியது.
வீட்டை நெருங்கியதும் கையிலிருந்த இறைச்சித் தூக்கு கம்பிவேலிக்கு மாறியது. அவனுக்கு சிறுநீர்க் கழிக்க வேண்டும்போலெ....
வீட்டின் முன் விறாந்தையில் அவன் கால்களை வைத்ததுமே உள்ளேயிருந்து வெளிப்போன ஒலி அலைகள் அவன் காதுகளைத் துளைத்தது. அவன் மனம் இழுவி...இழுவி.... குண்டடிபட்ட மான் பற்றைக்குள் புகுந்துகொள்ள....
"எழும்புங்கெ இனி அவரு வாறெ நேரெம்." காதனின் களுத்தில் கத்தி இறங்கியதைப்போலெ.....
அந்த அதிகாலை வேளையிலும் அவனுக்கு அடிவயிற்றைப் புரட்டியது.
பலம் கொண்ட மட்டும் அவன் காறித்துப்பினான்.
பார்வை பொழுதுப்பக்கமாகியது.
அங்கே - வேலியில் தூக்கியிருந்த இறைச்சியை புளியடிக் காறிரெ சொறிநாய் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது.
- 1978 -
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக