பாபு இராஜேந்திர பிரசாத்
வரலாறு
Back
பாபு இராஜேந்திர பிரசாத்
என். வி. கலைமணி
பாபு இராஜேந்திர பிரசாத்
புலவர் என். வி. கலைமணி, எம்.ஏ.,
பாரதி நிலையம் 126 / 108, உஸ்மான் சாலை,
தியாகராய நகர், சென்னை-600 017.
விலை ரூ. 22.00
* * *
▢ BABU RAJENDERA PRASAD ▢ A Book on Life & Sayings of RAJENDRA PRASAD ▢ By : N.V. KALAIMANI ▢ First Edition : December 2001 ▢ Price : Rs. 22.00 ▢ © BHARATH NILAYAM ▢ Published By: BHARATHI NILAYAM, 126/108, Usman Road, T.Nagar, Chennai - 600 017 ▢ Printed of : Sivakami Printo Graphics, 160/117, Big Street, Triplicane, Chenndi-600 005.▢ ✆ 8445051 ▢
பாபு
இராஜேந்திர பிரசாத்
உள்ளே...
பக்க எண்
1. நேருவின் சுயசரிதத்தில் பாபு இராஜேந்திர பிரசாத்
2. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
3. ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை படிப்பில் புலியானார்!
4. பாபு இராஜேந்திரர் எழுதிய கண்ணீர்க் கடிதங்கள்
5. குடும்ப சேவையும் ஒரு தவமே!
6. வழக்குரைஞர்களின் ஒழுக்கங்கள் ராஜன் பாபு ஓர் உதாரணம்!
7. காந்தியடிகள் கைது
8. பீகார் காந்தி ராஜன் பாபு
9. ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவப் பிரசாரம்
10. காந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம்!
11. சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே!
12. குடியரசு விழா
13. இராஜன் பாபு மறைந்தார்! வாழ்க அவர் எண்ணங்கள்!
பாபு இராஜேந்திர பிரசாத்
* * *
1. நேருவின் சுயசரிதத்தில்
பாபு இராஜேந்திர பிரசாத்
“சில சமயங்களில் நான் காங்கிரஸ் காரியதரிசி என்ற முறையில் பீகார் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் காரியாலயத்தைப் பரிசோதனை செய்யச் சென்றிருக்கிறேன். காரியாலயத்தை அவர்கள் நன்றாக வைத்துக் கொள்ளவில்லையென்றும், வைத்துக் கொள்ளும் திறமை அவர்களுக்கு இல்லையென்றும் கருதி நான் அவர்களைக் கடுமையான வார்த்தையில் கண்டித்திருக்கிறேன்.
நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கலாமே! உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் படுத்துக் கொண்டிருக்கலாமே! என்பதைப் போன்ற மனப்பான்மை பீகார் காங்கிரஸ்காரர்களுக்கு இருந்ததாகத் தோன்றிற்று. காரியாலயத்தில் சாமான்கள் அதிகமாயில்லை. ஏனென்றால், அவர்கள் நாற்காலி, மேஜை முதலிய வழக்கமான காரியாலய செளகரியங்கள் இல்லாமலே வேலை நடத்திக் கொண்டு வந்தார்கள். என்றாலும், அக்காரியாலயத்தை நான் எவ்வளவோ கண்டித்தாலும், காங்கிரஸ் லட்சியப்படி பார்த்தால், அந்த மாகாணம் இந்தியாவில் காங்கிரசிடம் மிகுந்த பக்தி சிரத்தை கொண்ட மாகாணமென்று எனக்குத் தெரியும்.
காங்கிரஸ் அங்கு ஆடம்பரமாய் இருக்கவில்லை. ஆனால் விவசாயிகள் அனைவரும் காங்கிரசை ஆதரித்து வந்தார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கூட, பீகார் அங்கத்தினர்கள் எந்த விஷயத்திலும் ஒரு பொழுதும் மாறுபட்ட மனப்பான்மை காண்பதில்லை. இந்தப் பெரிய சபைக்கு இவர்கள் ஏன் வந்தார்கள் என்று அவர்கள் திகைத்துக் கொண்டிருப்பதைப் போல. அவர்களைப் பார்த்தால் தோன்றும். ஆனால், இரண்டு சட்ட மறுப்பு இயக்கங்களிலும் பீகார் காண்பித்த வேலைக் கணக்கு அபாரமாகும்.
பீகார் பூகம்ப நிவாரணக் கமிட்டி, இந்த நேர்த்தியான காங்கிரஸ் அமைப்பின் மூலமாக விவசாயிகளுக்கு உதவி செய்ய முடிந்தது. கிராமங்களில் வேறு எந்த அமைப்பும் இதைப் போல அவ்வளவு ஒத்தாசையாக இருக்க முடியாது. அரசாங்கத்தால் கூட ஆகாது. பீகார் காங்கிரஸ் அமைப்புக்கும் நிவாரணக் கமிட்டிக்கும் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத். அவர் பீகாரில் நிகரில்லாத் தலைவர். பார்த்தால் அசல் குடியானவன், பீகார் மண்ணோடு ஒட்டிக்கொண்டு பிறந்த திருப்புதல்வன். முதல் தடவை அவரைப் பார்த்தால் அவரைப் பற்றி ஒன்றும் பிரமாதமாகத் தோன்றாது. ஆனால், சத்தியம் பேசும் அவருடைய கூர்மையான கண்களும், சிரத்தை நிறைந்த அவருடைய பார்வையும் யாருடைய கவனத்தையும் இழுக்கும்.
அந்தப் பார்வையையும், அந்தக் கண்களையும் ஒருவரும் மறக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கண்களின் மூலமாக சத்தியம் உங்களைப் பார்க்கின்றது. அதைச் சந்தேகிக்கவே முடியாது.
விவசாயியைப் போலவே அவர் ஒருக்கால் தமது நோக்கில் குறுகியவராக இருக்கலாம். நவீன உலகத்துக்குப் பொருந்தாதவர் என்று ஒருக்கால் தோன்றக்கூடும். ஆனால், அவருடைய நிகரில்லா வல்லமையும், அவரது பரிபூரண யோக்கியப் பொறுப்பும், அவரது ஊக்கமும், இந்திய விடுதலைக்காக அவர் காண்பிக்கும் பக்தியும் மிகச் சிறந்த தன்மைகளாகும். அவைகளுக்காக அவரை பீகார் மாகாணம் முழுவதும் கொண்டாடி நேசிப்பதல்லாமல், இந்தியா முழுவதுமே அவர் நேசிக்கப்படுகிறார்.
இந்தியாவில் எந்த மாகாணத்திலும், இராஜேந்திர பாபுவை பீகாரில் கொண்டாடுவது போல, ஏகமனதாக எல்லோரும் கொண்டாடக்கூடிய தலைவர் வேறு எவருமே கிடையாது. காந்தியின் தத்துவத்தை உண்மையாகவும், முழுமையாகவும் யாரேனும் ஒருவர் அறிந்து உணர்ந்திருக்கக் கூடுமானால், அது அவர்தான். அத்தகைய ஒருவர் பீகார் பூகம்ப நிவாரண வேலைக்குத் தலைமை வகிக்க நேர்ந்தது மக்களது பாக்கியமே ஆகும். அவரிடம் இருந்த நம்பிக்கையினாலேதான் இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பணம் பீகாருக்கு வந்து கொட்டிற்று.
ராஜேந்திர பாபுவிற்கு அப்போது உடம்பு சுகமே இல்லை.என்றாலும், அவர் நிவாரண வேலையில் அப்படியே யோசனையின்றிக் குதித்து விட்டார். எல்லா அலுவல்களுக்கும் அவர் மத்தியப் புள்ளி போல் விளங்கியதாலும், எல்லோரும் அவரிடம் யோசனை கேட்க வர நேர்ந்ததாலும், அவர் தமது உடல் வலிமைக்கு மீறியே உழைத்தார்.
–ஜவஹர்லால் நேரு
("ஜவஹரின் சுய சரித்திரம் பூகம்ப பகுதி
பக்கம் 843-845)
பாரதத்தின் முன்னாள் பிரதமராகவும், அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபையின் முன்னாள் பொதுச் செயலாளராகவும், மகாத்மா காந்தியடிகளின் அரசியல் வாரிசாகவும், மனிதருள் மாணிக்கம் என்று இந்த மாபெரும் ஞாலத்தால் போற்றிப் புகழப்பட்டவருமான பண்டிதர் ஜவகர்லால் நேரு “ஜவஹரின் சுய சரித்திரம்” என்ற நூலில் 843 முதல் 845 வரையுள்ள பக்கங்களில் மேற்கண்டவாறு, டாக்டர் இராஜேந்திர பிரசாத்தின் பண்புகளை, வழங்கியுள்ளார்.
அதற்கேற்ப, இரோசேந்திர பிரசாத் மிக எளிய தோற்றம் உடையவர்; அமைதியான ஒளி நிலா, அன்பு உருவான தென்றல்; அடக்கமே தவழ்கின்ற அருவிச் சுனை! அருள் சுரக்கின்ற விழிகள்; புன்னகை மணக்கும் பூத்தமல்லி, இனிய பேச்சு நல்ல செயல்கள் துய சிந்தனைகள், வெற்றி பெற்றால் சிரிப்போ, தோல்வியைச் சுமந்தால் சலிப்போ இல்லாமல், பாடறிந்து ஒழுகும் இத்தனை பண்புகளும் இதழ் இதழாக அன்றலர்ந்த தாமரை போல காட்சி தரும் குணசீலர் இராஜேந்திர பாபு அவர்கள்.
முறுவல் எப்போதும் முகாமிட்ட முகம்; வீரத்தில் தீரர்; கிராமத்தான் போன்ற காட்சிக்குரியவர்; ஆனால் ஏறுநிகர் நெஞ்சம்; தியாகத்தில் வைரம்; எண்ணற்ற இவையொத்த சுபாவங்கள் இராஜேந்திர பிரசாத்துக்கு இயற்கையாகவே அமைந்து விட்ட காரணத்தால்தான், அவர் அகிலம் போற்றும் முதல் குடியரசுத் தலைவரானார். அந்தப் பதவி அவரால் தகுதி பெற்றது. அவனியும் அதை அறிந்தது.
நமது இந்திய நாடு விடுதலை பெற்றிடத் தன்னலம் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு பெருந்தியாகம் செய்தவர்களில், டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத்தும் ஒருவர் ஆவார். எப்போதும் தொண்டுள்ளம் படைத்த தொண்டராகவே வாழ்ந்த சீலர்,
டாக்டர் இராஜேந்திர பிரசாத், மற்றபிற சுதந்திரப் போராட்டத் தலைவர்களை விட தனி இடத்தைப் பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம் பாபுஜியின் குறை காண முடியாத தேசத் தொண்டுதான் என்றால் மிகையன்று!
ஒரு நிலையில் நாட்டுப் பற்றுணர்வுகள் பொங்கப் பொங்க அவர் ஆற்றிய தேசத் தொண்டு, மறுநிலையில் உழவர் பெருமக்களுடைய துன்பங்களை, குறைகளைப் போக்குவதற்காக, அவர் பாடுபட்டு அரிய உழைப்பாளியாகவும் திகழ்ந்தார். அதனால்தான், ராஜன் பாபு இந்திய விடுதலை வீரர்களுக்குள் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தார் எனலாம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை, மாவீரன் பகத்சிங், சுப்ரமணிய சிவா, திலகர், அரவிந்தர், வி.டி.சவர்க்கார் போன்ற மாவீரர்களது தேசாபிமானத் தொண்டுகளை மக்கள் படிக்கும் போதும், எண்ணும் போதும், அவர்களது உடல் புல்லரிக்கின்றது. இரத்தம் சூடேறுகிறது. ஏன்?
வெள்ளைக்காரன் ஆட்சியில் நாம் அடிமைகளாக இருந்தோம், சட்டத்தை எதிர்த்தோம். போலீஸ் கொடுமைகளோடு போரிட்டோம். நீதிமன்றப் படிக்கட்டுகளை வலம் வந்தோம். கடுங்காவல், சிறைத் தண்டனை, தூக்குமேடை, ஆயுள் தண்டனை இவற்றை அவர்கள் அனுபவித்துச் செத்தார்களே என்று எண்ணும் போதுதான். நமது தேசாபிமானமும், மனிதாபிமானமும் நமது ரத்தத்தைச் சூடேற்றுகின்றன.
இவ்வாறு பலவித கொடுமைகளையும் அனுபவித்த பிறகுதான் நமக்குரிய சுதந்திரத்தை வெள்ளையன் வழங்கினான். என்றாலும், ஆங்கிலேயர்கள் கொடியவர்கள்; கொள்ளையர்கள் என்று எண்ணுகிற போது, எரிமலை போல நமது மனம் குமுறுகிறது அல்லவா?
ஆனால், ராஜன் பாபுவின் தேசீயப் போராட்ட வரலாறை, படிக்கும்போது, ரத்தம் சூடாகாது. நிலாவைப் போல சாந்தமே நமது நெஞ்சிலே பொழியும். நம்மை அறியாமல் நமது மனம் அருவியின் சலசலப்பை போல நயமான அமைதியை எழுப்பும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்ற தத்துவத்தைப் போல, யாரையும் பகை கொள்ளப் பண்பையூட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.
எல்லோரும் நல்லவரே எம்கடன் பணி செய்து கிடப்பதே! நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டுக்கு நீ என்ன செய்தாய்? என்ற கேள்வியை எழுப்பி, அந்த உணர்விலே நமது தொண்டுகளைப் பதிவு செய்து கொள்வோம். நாம் வாழ்வது நமக்காக அன்று. நாட்டின் எதிர்கால வாரிசுகளுக்கே என்ற மனநிறைவையும் மகிழ்வையும் ராஜேந்திர பிரசாத் வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.
2. விளையும் பயிர்
முளையிலேயே தெரியும்
பீஹார் மண்ணில் இராசேந்திர பிரசாத் பிறப்பதற்கு முன்பு அவரது முன்னோர்கள் இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்து பீகாரில் குடியேறினார்கள். பீகாரில், சார்ண் என்ற மாவட்டத்தில் ஜீராதேயி என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள்.
இராஜேந்திர பிரசாத் பாட்டனார், ஜீராதேயீ கிராமத்துக்கு அருகிலே உள்ள ஹதுவா என்ற சிறு சமஸ்தானத்தில், திவானாகப் பணியாற்றி வந்தார். இவர், புள்ளிக் கணக்கில் வல்லவராக இருக்கும் கணக்குப் பிள்ளை குலத்தில் பிறந்தவராதலால், எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கியதால், தனது திவான் பணியை ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் செய்து, மக்களிடையேயும், சமஸ்தானத்திலும் புகழ் பெற்றவராக இருந்தார். அவர்களுள் ஒருவரான மகாதேவ சகாய் பெரிய பணக்காரர் அல்லர். ஆனால், ஏழையும் அல்லர்! விளை நிலங்கள் ஓரளவு இருந்தன. ஆனால் வழிவழியாக செல்வாக்குடன் அந்த சமஸ்தானத்திலேயும் கிராமத்திலேயும் பணியாற்றி வாழ்ந்தவர்களாவர்.
மகாதேவ சஹாயருக்கு மகேந்திர பிரசாத் என்ற மகனும், அவருக்குப் பிறகு மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. கடைசியாக, இரோஜேந்திர பிரசாத் என்ற ஆண் குழந்தை 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி பிறந்தார்.
இரோஜேந்திரர் தந்தைக்கு மாந்தோப்புகள் சில இருந்தன. நிலங்களில் தானிய வகைகளைப் பயிரிடுவார். கிராமத்தில் அவரைத் தேடி யார் வந்தாலும் அவரவர்களுக்குரிய உதவிகளும் உணவு வகைகளும் பரிமாறப்படுவதுடன் இல்லாமல், வந்தவர் தேவைகளை அறிந்து அதற்கான சிறு சிறு பொருளதவிகளை தங்களது குடும்ப சக்திக்கேற்றவாறு செய்து வந்தார். அதனால் அக்கிராமத்திலும், அதற்கு அக்கம் பக்கத்துக் கிராம விவசாயிகள் இடையிலும், மகாதேவ சஹாய்க்கு நல்ல மதிப்பும் மரியாதையும் வளர்ந்து வந்தது.
மகாதேவ சஹாய் சமஸ்கிருத மொழியில் வல்லவர். பார்சி மொழியில் வித்வான் பட்டம் பெற்றவர். ஆயுர் வேத மருத்துவத்தில் நல்ல பயிற்சி பெற்றவர். யாருக்கு அவர் சிகிச்சை செய்தாலும் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று விடுவார்கள். இவ்வாறு பலருக்கு மருத்துவம் செய்ததால் அவர் கைராசிக்காரர் என்ற பெயரும், புகழும் பெற்றார்.
வேதம் ஓதுவதும், சோதிடம் பார்ப்பதும் அவருக்குப் பழக்கமாகும். இந்த இரண்டும் அவருக்கு கிராமத்தில் நல்ல பெயரை உருவாக்கித் தந்தன. இவைகட்கான ஆராய்ச்சி நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். பயிற்சி பெறுவோருக்குத் தேவையான நூல்களை ஆதாரத்துக்கான ஆய்வுக்காக அடிக்கடி கொடுத்து உதவுவார். இதற்காகவே, அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் தேசாயிடம் வந்து நூல்களைப் பெற்றுச் செல்வார்கள்.
மகாதேவ சஹாய் குதிரைச் சவாரி செய்வதிலும் பயிற்சி பெற்றிருந்தார். குதிரைச் சவாரியில் இன்பம் அனுபவித்த அவர், தனது செல்லக் குமாரனான ராஜேந்திரருக்கும் குதிரைச் சவாரி செய்யப் பழக்கினார். அதுபோலவே, சிறு வயது கிராமத்து விளையாட்டுக்களான சடுகுடு, கில்லிப்புல் ஆட்டம், நீச்சல் விளையாட்டு, மரம் ஏறிப் பிடிக்கும் ஆட்டம் போன்ற ஆட்டங்களையும் ஆடிக் களிப்பார் இராஜேந்திரர்! ஆனால், மரமேறுவதிலும், நீச்சல் கற்பதிலும் அவருக்கு அச்சம் இருந்ததால், அவற்றின் மீது அவர் ஈடுபாடு காட்டாமலே பிள்ளைகள் மத்தியில் பதுங்கி விடுவார்.
மாவீரன் சிவாஜிக்கு அவரது தாயார் பாரத ராமாயணக் கதைகளைக் கூறி புத்தி புகட்டியதைப் போலவும், மகாத்மா காந்தியடிகளாருக்கு அவரது அன்னையார் அரிச்சந்திரன் மற்றும் பாரத ராமாயண நீதிக்கதைகளை விளக்கிக் கூறுயதைப் போலவும், ராஜேந்திரன் அம்மாவும், அம்மம்மாவும் ராமாயண, பாரதக் கதைகளைக் கூறி நீதிகளை விளக்குவார்கள். இந்து மத ஆன்மீகப் பாடல்களைப் பாடிக் காட்டி, பொருளுரைத்து மகிழ்வார்கள்.
குளிர்காலம் வந்து விட்டாலே போதும், ராஜன் பாபு விடியலில் எழுவார் நீராடுவார்; வெள்ளையாடைகளை அணிவார்; உடன் தனது தாயாரையும் தூக்கத்தை விட்டு எழுப்பி விடுவார்; அந்த அம்மையாரும் குளித்து, உடை பூண்டு, சுத்தமாக பூஜை அறைக்குச் சென்று சிவ பஜனைப் பாடல்களைப் பாடிப் பூஜிப்பார்; சில நேரங்களில் இதிகாசக் கதைகளைப் பிரசங்கம் செய்வது போல தனது பிள்ளைகளுக்குப் போதிப்பார். அந்தப் பஜனைகளைக் கேட்டு, கதைகள் நெறிகளை உள்ளத்தில் பதித்துப் பேரானந்தம் அடைவார். தாயாரும். பாட்டியும் மாறி மாறிக் கூறும் கருத்துக்கள் எல்லாம் பாபு உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல பதிந்து விட்டன.
அக்காலத்தில் இந்து - முஸ்லீம் மக்களிடையே எந்த வித இன, மத பேதமும் எப்போதும் எழுந்ததில்லை. இந்துப் பண்டிகை என்றால் முஸ்லீம்கள் குடும்பத்தினருடன் சென்று.கோலாகலமாகக் கொண்டாடி, உடுத்தி, உண்டு மகிழ்ந்து நன்றி கூறி அவரவ்ர் வீடு செல்வார்கள்.
அதே போன்றே, முஸ்லீம்கள் விழா என்றாலும், இந்துக்கள் அவரவர் குடும்பத்தினருடன் சென்று கலந்து, மகிழ்ந்து, விருந்துண்டு களித்து, அவரவர் இல்லம் போய், உண்டு பெற்ற உற்சாகத்தை அடிக்கடி நினைத்து உறவு முறை கொள்வார்கள்.
குழந்தை இராஜேந்திரருக்கு ஐந்து வயதானது. இந்துக்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி, அப்போதெல்லாம் இந்து - முஸ்லீம் என்ற வகுப்புணர்வு பேதம் இல்லாமல், பெரும்பாலான பள்ளிகளில் முஸ்லீம் மெளலவிகளே, இந்துக் குழந்தைகளுக்கும் அட்சராப்பியாசம் செய்து வைப்பார்கள். எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா? அதனால், எழுத்துக்களைப் போதிக்கும் மெளலவிகளுக்கு குரு காணிக்கை வழங்கிக் குருகுலம் போல பாடம் கற்றுக் கொள்வார்கள் இந்துக் குழந்தைகள். ஏன் மெளல்வியையே குருவாக ஏற்பார்கள் என்றால் அக்காலத்தில் பிள்ளைகளை நேராகப் பள்ளிகளில் சேர்க்க முடியாது. மெளலவியிடம் ஓரெல்லைவரை கட்டாயம் படித்தாக வேண்டும். ஆனால், படிக்கப் போகும் ஹதுவா சமஸ்தானத்துப் பள்ளிகளில் முதலில் கற்பிக்கும் எழுத்தே பார்சி மொழி எழுத்துக்களாகவே இருந்தன. அதனால், அதற்குரிய ஆசான்கள் மெளல்விகளே என்று கருதி இந்துக்களும் - அவரவர் குழந்தைகளை அப்பள்ளிகளுக்கே அனுப்பி வைப்பார்கள்.
இராஜேந்திர பாபு மட்டும் தனியே பள்ளிக்குச் செல்லவில்லை. அவருடைய பெரியப்பா மகன்களும் அவருடன் கூடிச் சென்று வந்தார்கள். பெரியப்பா மகன்கள் பாபுவுக்குச் சகோதரர்கள் தானே! அதனால், அவர்கள் செய்யும் போக்கிரித்தனத்தையும், குறும்புகளையும், விஷம வேலைகளையும் பாபு பெற்றோரிடம் கூறமாட்டார்; அந்தச் செயல்களில் கலந்து கொள்ளவும் மாட்டார். அவ்வளவு அமைதியாகப் பள்ளிக்குப் போவார், வருவார். ஒரு மெளலவி எழுத்துக்களைக் கற்பித்தவுடன் - வேறோர் மெளலவி பார்சி பாடங்களை நடத்த வருவார். இவ்வாறு பார்சி பாடங்களை எல்ல்ாம் மெளலவியே கற்றுக் கொடுத்து விடுவார்.
கற்றுக் கொடுத்தப் பாடங்களை எல்லாம் மாணவர்கள் மனனம் செய்ய வேண்டும்; ஒப்பிக்க வேண்டும்; இது பிள்ளைகளுக்குத் துன்பம் என்பதால், ஆசானை எவ்வாறு ஏமாற்றலாம் என்பதற்கான சூழ்ச்சிகளை அவரவர் அறிவுக்கேற்றவாறு செய்து கொண்டே இருப்பார்கள்.
இளமைப் பருவம் முழுவதும் இராஜேந்திரர் தனது சொந்தக் கிராமத்திலேயே பெற்றோர்களுடன் இருந்தார். அந்தக் கிராம மக்களது சூழ்நிலைதான், அவரது வாலிபம், வயோதிகம், பதவிக்காலம் எல்லாவற்றிலும் எளிமையினையே கடைப்பிடிக்கும் வழக்கமானது.
கிராமங்கள் பெரும்பாலும் எந்தப் பொருட்களையும் வெளியே இருந்து வாங்குவதில்லை. ஆனால், கிராமப் புற பேரூர்களில் வாரத்துக்கு ஒருமுறை சந்தை கூடும். கிராமத்திலே உள்ள குழந்தைகளுக்கு அன்று ஒரே ஆரவார மகிழ்ச்சிதான். இதுபோலவே, ராஜேந்திரர் கிராமத்திலும் திருவிழா போல ஒரு நாள் சந்தை கூடுவதுண்டு. அங்கே ஏராளமான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், சந்தை விற்பனைக்காக வரும். அதற்குப் பிறகும் சிறுவர்களது உற்சாகத்துக்குச் சொல்ல வேண்டுமா? ஒரே ஆரவாரக் கொண்டாட்டம் தானே!
கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற தமிழ்நாட்டுப் பழமொழிபோல, வடநாட்டுக் கிராமங்களிலும் பல சிறு சிறு கோயில்கள் உண்டு. அங்கு காலை,மாலை நேரங்களில் பூசைகள் நடக்கும்; மணி ஒலிக்கும்; சங்கு ஊதுவார்கள். ராம நவமி, ஜன்மாஷ்டமி காலங்களில் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்து திருவிழா கொண்டாடுவார்கள். ராஜேந்திரர் மற்றக் குழந்தைகளோடு சேர்ந்து இந்த அலங்கார வேலைகளைச் செய்வார். இந்தத் திருவிழா நாட்களில் அவர் விரதமும் இருப்பார். ஆலய வழிபாடுகளுக்குச் செல்வார். தரிசனம் செய்வார். இறுதி வரை ஆழ்ந்த ஆன்மிகப் பற்றோடும், நம்பிக்கையோடும், இறையுணர்வோடும் அவர் வாழ்ந்தவர் என்பதற்குரிய அடையாளமாகவே அவர் வாழ்ந்து காட்டினார்.
கிராம மக்களது நன்மை தீமைகள், வாழ்வு சாவுகள், திருமணம் திருவிழாக்கள் போன்ற எல்லாவற்றிலும் ஒவ்வொரு வீட்டாரும் கலந்து கொண்டு பங்கேற்பார்கள். அது போலவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாபுவும் கலந்து கொண்டு பங்கேற்பார். அந்தப் பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரையும் உறவின் முறையாக்கிக் கொள்வதுமுண்டு. இதனால் கிராமவாசிகள் உண்மையானவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், சூதுவாது, கபடமற்றவார்களாகவும் இருப்பார்கள். இராஜேந்திரரிடமும் இதே கிராமீயப் பண்பாடுகள் மிக அதிகமாகக் குடிகொண்டு ஒரு கிராமத்ததானைப் போலவே உருவாக்கி விட்டது எனலாம். அதனால்தான், பாபு சாகும் வரை கிராம மக்களின் மனிதாபிமானத்தைப் பெற்ற ஒரு தனி மனிதராகவே காட்சி தந்து மறைந்தார்.
எனவே, ரஜேந்திர பிரசாத்தின் கிராமக் கல்வி, கிராம ஆன்மீகம், கிராம விவசாயம், கிராமப் பழக்கவழக்கங்கள், கோயில், திருவிழா, சந்தை, கொண்டாட்ட ஆரவாரக் கோலாகலங்கள், தெய்வீக உணர்வுகள் அத்தனையும் அவரிடம் இறுதிவரை குடிகொண்டிருந்தன.
3. ஆரம்பப்பள்ளி முதல்
பல்கலைக்கழகம் வரை
படிப்பில் புலியானார்!
அவரது சொந்தக் கிராமமான ஜீராதேயியில், ஆரம்பக் கல்வியைப் பார்சியிலும், சப்ரா பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்விலும், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளிலும், கல்கத்தா ‘டப்’ காலேஜில் இங்கிலீஷிலும் மற்றக் கல்வித் துறைகளிலும், அதாவது பள்ளி முதல் பல்கலை வரையுள்ள படிப்புத் தேர்வுகளில் கல்வியில் புலியாகவே இருந்து எல்லாவற்றிலும் முதல்வராகவே வெற்றி பெற்றார் பாபு ராஜேந்திர பிரசாத்.
அவரது அறிவுத் திறமையிலே மகிழ்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஓராண்டிற்கு இரண்டு வகுப்புகளாய் பாபுவை உயர்த்தினார்கள். ஆனால், இராஜேந்திர பிரசாத்தின் தந்தை மகாதேவ தேசாயக்கு ஆசிரியர்களது இச்செயல் அறவே பிடிக்கவில்லை. இந்த இருவகுப்புத் தேர்வால் தனது மகனுடைய கல்வி குன்றி விடுமே என்று அஞ்சினார். ஆசிரியர்களை அழைத்து பாபுவுக்கு இருவகுப்புத் தேர்வுகளைச் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இரோஜேந்திர பிரசாத், சமஸ்கிருத மொழியை வீட்டிலேயே கற்றார். இந்தி மொழிப் பயிற்சி அவருக்கு நீண்ட நாட்கள் நீடிக்காமல் போனாலும், இந்தி மொழியில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களைப் புரிந்து கொள்வது மட்டுமன்று பார்சி மொழிச் சொற்களையும், சமஸ்கிருதச் சொற்களையும் கலந்து, அழகாக இந்தியில் பேசும் ஆற்றல் அவருக்குக் கைவந்தக் கலையாகவே இருந்தது.
அவரது மெட்ரிகுலேஷன் படிப்பும், சப்ரா பள்ளியிலேயே முடிவுற்றது. பிறகு, அவர் கல்கத்தா சென்றார். அங்கே உள்ள ‘டப்’ கல்லூரியிலே சேர்ந்தார். அக்கல்லூரியிலே அப்போது ஜகதீச சந்திரபோஸ் தாவரவியல் விஞ்ஞானம் கற்பித்தார். டாக்டர் பி.சி.ராய் ரசாயனப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்தக் கல்லூரியில் ராஜேந்திர பாபு படித்த போது, அவரே முதல் மாணவராக விளங்கினார்.
எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றதற்குரிய உபகாரச் சம்பளம் மாதம் இருபத்தைந்து ரூபாயைக் கல்லூரி வழங்கியது. இந்த உபகாரத் தொகை அவருக்குப் பல ஆண்டுகளாகக் கிடைத்து வந்தது. அதற்கடுத்து பி.ஏ. தேர்விலும் அவரே முதல் மாணவமணியானார். கிடைத்து வந்த உபகாரச் சம்பளம் இருபத்தைந்து ரூபாய் தொண்ணூறு ரூபாயாக உயர்ந்தது.
இவ்வாறாகக் கல்வித் துறையின் ஒவ்வொரு பிரிவிலும், ராஜன் பாபு முதல் மாணவராகத் தேர்வு பெற்றுக் கொண்டே வந்ததில் ஓர் உண்மையும், சிறப்பும் இருந்தது. அந்த நேரத்தில் பீகார் மாகாணம் வங்காள மாகாணத்தோடு சேர்ந்திருந்தது. பீகார் மாணவர்கள் எல்லாருமே கல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்!
வங்க மொழி பேசுவோர் தெளிவான அறிவுடையோர், உணர்ச்சியின் போர்வாட்கள்; ஆனால், பீகார் மக்கள் அவ்வாறல்லர்; அப்பாவிகள்; எடுப்பார் கைப் பிள்ளைகள்; சுறுசுறுப்பு இல்லாமல் எக்காரியத்தையும் ஆமை வேகத்திலே செய்பவர்கள். அதனால், பீகாரிகள் என்றாலே வங்காளிகளுக்கு எப்போதும் கேலிப் பொருளாகவே தெரியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏளனமாகவே வங்காளிகள் அவர்களைப் பேசுவர்! புத்தி மட்டு யாருக்கென்று ஒரு வங்காளியைக் கேட்டால், சற்றும் யோசிக்காமல், இது தெரியாதா? பீகாரிகள் தான் என்பார்கள்.
வங்காளிகளின் இந்த வக்ரப் புத்தியை வங்கக் கடலிலே தூக்கி எறிந்தார் இராஜேந்திரர்! அடுத்து வந்த ஒரு பரீட்சையில் இராஜேந்திரரிடம் புறுமுதுகு காட்டி ஓடினார்கள் வங்காள மாணவர்கள். பீகாரிகள் புத்தி நுட்பம் உடையவர்கள் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
பல்கலைக் கழகப் புதுமுகப் பரீட்சை அடுத்து வந்தது. அந்த தேர்விலே ராஜன் பாபு முதல் எண் பெற்றுத் தேறினார். இந்த செய்தியைக் கேட்ட பீகார் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. பீகார் மக்கள் அறிவாளிகளே என்பதை இராஜேந்திரர் மீண்டும் ஒருமுறை யெமப்பித்தார். இதனை ஒரு முறைக்கு இருமுறை நேரில் கண்ட வங்கப் பெருமக்கள் அவரை வியந்து பாராட்டினார்கள். என்றாலும், பீகாரிகளின் பெருமிதத்துக்கு இவை இணையாகுமா?
பீஹாரிலே இருந்து வெளிவந்த ‘இந்துஸ்தான் ரிவியூ’ என்ற திங்கள் இதழ், மாணவர் குல நாயகமான இராஜேந்திரரை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்து எழுதியது. வாலிபர் ராஜேந்திரர் எல்லா வகைகளிலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகத்திலும் அவர் இவ்வாறே சிறந்து விளங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் இராஜேந்திரருக்குப் பெரும் பதவிகள் கிட்டும் என்று நம்புகிறோம். நீண்ட ஆயுளோடு அவர் வாழ்ந்தால், எந்தப் பதவியும் அவருக்கு அரியதன்று. மாகாண உயர்நீதிமன்றத்தில் அவர் நீதிபதி பதவியை வகிக்க முடியும். இந்துஸ்தான் பத்திரிகை 1902 ஆம் ஆண்டில் எழுதியதற்கேற்றவாறு இராஜேந்திரப் பிரசாத் தேசிய காங்கிரஸ் மகா சபைக்குத் தலைவரானார்.
1906- ஆம் ஆண்டில் இராஜேந்திர பிரசாத் பி.ஏ. பரீட்சையில் தேறினார். அதே ஆண்டில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் தேசிய மகா சபை தொண்டர் படையில் பாபு பிரசாத்தும் சேர்ந்து சிறப்பாகச் சேவை செய்தார். அந்த மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்கள் பலர், இராஜேந்திரர் சேவையைப் பாராட்டினார்கள். அப்போது முதல் அவருடைய கவனம் தேச சேவையின் பக்கம் திரும்பியது.
கல்வியில் அவர் போதிய கவனம் செலுத்தினார் படிப்பில் ஆழ்ந்த, உறுதியான எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால், பி.ஏ. வகுப்பு வரை நடைபெற்ற தேர்வுகளில் அவர் கல்வியில் புலியாகவே எல்லாருக்கும் காட்சி தந்தார். அவர் எம்.ஏ. வகுப்பில் படிக்கும் போது தேச சேவை அவரை ஈர்த்தது. அதனால் எம்.ஏ. தேர்வி முதல் மாணவராக வரும் வாய்ப்பை அவர் இழந்தார். இந்த நேரத்தில் இராஜேந்திரரின் தந்தையார் மகாதேவ தேசாய் இறந்து விட்டதால், அவர் மீள்முடியாத துன்பமடைந்தார்; சோகமே உருவமானார்.
இராஜேந்திரர் வீட்டார் அவரை ஐ.சி.எஸ். படிக்க லண்டனுக்கு அனுப்பிட விரும்பினார்கள். ஆனால்,பாரிஸ்டராக பாபு விரும்பினார். சூழ்நிலை அவருக்கு சரியாக அமையாததால், அவர் எண்ணம் நிறைவேறாது போயிற்று.
4. பாபு இராஜேந்திரர் எழுதிய
கண்ணீர்க் கடிதங்கள்
என்று இராசேந்திரர் கல்வி பயிலத் துவங்கினாரோ அன்று முதல், அவர் தேர்வு எழுதிய எல்லாப் பரீட்சைகளிலும், அதாவது, பி.ஏ. படிப்பு வரையுள்ள தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவராகவே திகழ்ந்து வந்தார். அதனால், கல்லூரிகள் ராஜேந்திரரைப் பேராசிரியராகப் பணியாற்றிட அழைப்பு விடுத்தன.
முசபர்பூர் கல்லூரியில் சரியான பாடப் பயிற்சி இல்லை என்ற கருத்து அங்குள்ள பொது மக்களிடையே ஒரு குறையாகவே பல ஆண்டுகளாக இருந்தது. எனவே, கல்லூரி நிர்வாகம் இராஜேந்திரரின் தகுதி திறமைகளை அறிந்து அவரை ஆங்கிலப் பேராசிரியராகப் பதவி ஏற்குமாறு அழைத்தது.
அக்கல்லூரி நிர்வாகம் தன்னைத் தேர்வு செய்து விட்டதால், அதனைத் தவிர்க்காமல் பேராசிரியர் பொறுப்பை ஏற்றுப் பத்து மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தார். அதன்பின் கல்கத்தா சட்டக் கல்லூரியில் சேர்ந்து, 1915 ஆம் ஆண்டின் போது, அவர் வழக்குரைஞரானார்.
பாட்னா என்ற பாடலி புத்திர நகரில் உயர்நீதிமன்றம் ஒன்று 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதனால் பாபு வேறு மாகாணத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டிய அவசியமில்லை. பாட்னாவிலேயே தனது வக்கீல் பணியை ஆரம்பித்தார்.
வழக்குகள் ஏராளமாக அவரைத் தேடிவந்தன. வந்த வழக்குகளில் பெரும் வெற்றியே பெற்றார். அதனால் இராஜேந்திரருக்கு பீகார் மாகாணத்திலும், கல்கத்தாவிலும் நல்ல புகழும் பெயரும் உருவானது. காந்தியடிகளாருடைய தேச சேவையின் தொடர்பு இராஜேந்திரருக்கு ஏற்படும் வரை வக்கீல் தொழில் செம்மையான வருவாயுடன் நடைபெற்றது. காந்தி பெருமான் அவரை சுதந்திரப் போர்ப் பணிக்கு வருமாறு அழைத்துக் கொண்டார்.
கல்கத்தா ‘டப்’ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ராஜன்பாபுவுக்குத் தேசப் பணியில் ஈடுபட்ட அனுபவம் இருந்தது. 1905 ஆம் ஆண்டில் வங்களா மாகாணத்தை கவர்னராக இருந்த கர்சான் பிரபு இரண்டாகப் பிரித்தார். அதனால், அப்போது வங்க மாகாணம் மட்டுமன்று, ஏறக்குறைய இந்திய பூபாகமே கொதித்தெழுந்து எதிர்த்தது.
அந்த எதிர்ப்பு காரணமாகத்தான் அயல்நாட்டுத் துணி பகிஷ்கரிப்பு நடந்தது. இந்திய மக்களின் சுதேசி இயக்கம் நாடெங்கும் தீவிரமாக உருவாகியது. அந்த சுதேசிப் போராட்டத்தில் ராஜன் பாபுவும் கலந்து கொண்டார்.
சுதேசி இயக்கப் போராட்டம் நடந்த அடுத்த ஆண்டில் கல்கத்தா மாணவர்கள் சம்மேளனம் என்ற ஓர் இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு சுதேசிப் பற்றும், தேசிய உணர்வுகளும் உருவாக்கப்படுவதே நோக்கமாக இருந்தது.
இந்த மாணவர் இயக்கம் ஏற்பட ராஜன் பாபு அரும்பாடுபட்டார் என்ற செய்தி காந்தியடிகள் போன்ற தலைவர்களுக்கெல்லாம் எட்டியது. காந்தியடிகளின் தொடர்பு ராஜன்பாபுக்கு ஏற்படும் முன்பே, அவருக்கு நாட்டுப் பணியாற்றிய அனுபவம் இருந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாடு 1906 ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற போது, லோகமான்ய பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ், தாதாபாய் நெளரோஜி, மோதில்லா நேரு போன்ற இந்தியப் பெருந்தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியை ஒவ்வொருவரும் அவரவர் நோக்கில் எதிர்த்து முழக்கமிட்டார்கள்.
இந்த தேசிய வீர உரைகளை எல்லாம் ராஜன்பாபு கூர்மையுடன், உற்று நோக்கிக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பேச்சுக்களது கருத்துக்கள் எல்லாம் அவருடைய சிந்தனையில் ஊடுருவி, தேசியக் தொண்டாற்றும் ஈடுபாட்டை மேலும் அதிகமாக்கியது. வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதே தனது நாட்டுக் கடமை என்று அவர் உறுதி செய்து கொண்டார்.
தேசிய மகாசபை காங்கிரஸ் தலைவரான கோபாலகிருஷ்ண கோகலேயிடம் இருந்து ராஜன்பாபுக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்ற வருமாறு அக்கடிதத்தில் அவர் அழைப்பு அனுப்பியிருந்தார்.
கோபால கிருஷ்ண கோகலே சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிகாட்டி, பண்பாளர்; எப்போதும் தேசத் தொண்டே அவரது மூச்சும்- பேச்சுமாக இருந்தது. அவர் இந்திய ஊழியர் சங்கத்தையும் உருவாக்கி இருந்தார். இந்த சங்க உறுப்பினர்கள் இந்திய மக்களின் வறுமை நிலையினை உணர்ந்து, அதற்காகக் குறைந்த சம்பளத்தையே பெற வேண்டும் என்று விரதம் பூண்டவர்களாவர். தங்கள் காலம் முழுவதையும் தேச சேவையிலேயே கழிக்க வேண்டும் என்பது அந்தச் சங்கத்தின் விதியாகும்.
ராஜன்பாபு ஆற்றியுள்ள செயல்கள் அனைத்தையும் அறிந்த கோபால கிருஷ்ண கோகலே, தனது ஊழியர் சங்கத்தில் சேர்ந்து தேசத் தொண்டாற்ற வருமாறு அழைத்திருந்தார்.
கோகலே அழைப்பை ஏற்ற ராஜன்பாபு பூனாநகர் சென்று அவரைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, கோகலேயின் இந்தியர் ஊழியர் சங்கத்தில் சேர விரும்பினார். ஆனால், அண்ணன் மகேந்திர பிரசாத் அனுமதியைப் பெற்றுச் சேர்ந்திட தமையனாருக்கு கடிதம் எழுதினார்.
அன்புள்ள அண்ணா!
எப்போதும், எந்நேரமும் தங்களுடனேயே இருக்கும் நான், தங்களுடன் அஞ்சல் வாயிலாகப் பேசுவதைக் கண்டு தாங்கள் வியப்படைவீர்கள். தங்களிடம் அச்சமும் - நாணமும் உடைய என்னால், தங்கள் முன் நின்று பேச முடியாத வெட்கமான ஒரு கூச்ச நிலையால், கடிதம் மூலமாகப் பேசுகின்றேன்.
அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையின் தலைவரான கோபால கிருஷ்ண கோகலே அவர்களை நான் முன்பு சந்தித்த விவரங்களை நீங்கள் அறிவீர்கள். அவர் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அவ்வாறு என்னால் செய்ய இயலுமா? முடியக் கூடிய செயல்தானா? என்று அன்று முதல் சிந்தித்தபடியே இருந்தேன். அந்த ஆழ்ந்த யோசனையின் விளைவாக, தேச சேவையில் ஈடுபடுவது நல்லது என்று எனக்குத் தெரிந்தது.
நம்முடைய குடும்பம், வாழ்வும் - வளமும் பெற்றிட என்னையே நம்பி இருக்கிறது. எனவே, என்னுடைய இந்தக் கருத்துக்களைக் கேட்டதும் தாங்கள் திடுக்கிடுவீர்கள் என்பதையும் உணர்கின்றேன். குடும்பத்தினர், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள் என்று நான் விலகிவிட்டால், நம் குடும்பத்துக்குப் பெரும் துன்பங்கள் ஏற்படும் என்பதையும் அறிகிறேன்.
ஆனால், குடும்பத்தின் மீதுள்ள கடமையைவிடப் பெரிய அழைப்பு ஒன்று என் உள்ளத்தில் தோன்றியுள்ளது. துன்பத்திலும், துயரத்திலும் உங்களைத் தவிக்க விட்டு விட்டு நான் பிரிந்து போவது நன்றி கெட்ட செயலாகவே இருக்கும்.
எல்லாவற்றையும் நான் நன்றாக உணர்ந்துள்ளதால், நம் இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாகாது என்றே எண்ணுகிறேன். நாம் இருவரும் அண்ணன், தம்பி மட்டுமன்று. நமது குடும்பத்தை இன்றுவரை தாங்களே நடத்தி வருகிறீர்கள். எங்களுக்கு எல்லாம் எல்லாத் தேவைகளுக்கும் உதவியாக உள்ளீர்கள். அதற்காக, நான் தங்களிடம் அன்பு கொள்ளவில்லை. தம்பியால், வருவாய் வரும் என்பதற்காகத் தாங்களும் என்னிடம் அன்பு வைக்கவில்லை. இவை எல்லாவற்றையும் விட நமது அன்பு மேலானது; உயர்வானது; ஆழமானது. ஒருவர் வழிமாறிச் செல்வதால், அதனால் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், நமது பேரன்புக்கு ஊறு நேராது. மாறாக, அந்த அன்புக்குமுண்டோ அடைக்குந்தாழ்? என்பதே எனது எண்ணமாகும்.
நமது இந்திய நாட்டில் வாழும் முப்பது கோடி மக்களின் நன்மைகளை எண்ணித் தியாகம் செய்யுமாறு தங்களை வேண்டுகின்றேன். கோகலே சங்கத்தில் சேருவதால் நான் பெரிய தியாகம் எதுவும் செய்து விடவில்லை. எந்த நிலையிலும் அந்த நிலைக்கு ஏற்றவாறு நான் வாழப் பழகிவிட்டேன். நன்மையோ, தீமையோ இந்தப் பழக்கம் எனக்கு ஏற்பட்டு விட்டது. எனவே, அதிக அளவு வசதிகளுக்காக நான் ஏற்பாடு எதுவும் செய்யத் தேவையில்லை. சங்கம் கொடுக்கும் சம்பளப் பணமே எனக்குப் போதுமானது. அதுவே முழுத் திருப்தியையும் ஏற்படுத்தும்.
கோகலே சங்கத்தில் சேர்ந்திட எனக்கு நீங்கள் அனுமதி வழங்கினால் அதுவே எனக்குச் செய்த பெரிய தியாகமாகும். நான் அதிகமாகப் பணம் சேர்ப்பேன் என்று நினைக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நமது எதிர்காலத்தைச் சீர்குலைத்துவிடும். நமது குடும்பமே அதனால் குழப்பத்திற்குள்ளாகும்.
அண்ணா! நமக்குக் குடும்பச்சொத்து கொஞ்சம் உள்ளது. நானும் பணியாற்றினால், நமது வருமானம் கூடும். குடும்பத்தின் தரம் உயரும். இது உண்மைதான் அண்ணா!
நாம் வாழும் மக்கள் சமூகத்தில் பணம் உள்ளவனே பெரிய மனிதன். எல்லாப் பெருமைகளும் அவனைத் தேடிச் சென்று அடையும். பணக்காரன் சமூகத்தில் பெறும் மதிப்பும் மரியாதையும் பண்புள்ள நல்ல குணாளனுக்குக் கிடைக்காது என்பதையும் நான் அறிவேன்.
ஆனால் இந்த உலகம் நிலையற்றது. நீர்மேல் குமிழி போன்றது. தோன்றுவன மறைவன, செல்வம், பதவி, புகழ் பெருமை மற்றபடி எல்லாமே இப்படிப்பட்டதுதான்! ஆசை உருவாவது பணத்தால் தானே தேவை மிகுவதும் அதனால் அல்லவா? தங்கத்தால் இன்பம் பெறலாம் என்று மக்களும் நினைக்கிறார்கள்.
ஆனால், போதுமென்ற மனமே முழு வாழ்க்கை இன்பத்துக்கு அடிப்படை, மகிழ்ச்சி, துன்பம் என்பன எல்லாமே உள்ளத்தைப் பற்றியன. சாதாரண காசு பணங்களை வைத்திருக்கும் ஏழைகள், எத்தனையோ பணக்காரர்களை விடச் சந்தோஷமாக இருப்பதை நாம் பார்க்கவில்லையா அண்ணா! ஆனால் நான் வறுமையை வெறுப்பதாக எண்ண வேண்டாம். நமது முன்னோர்கள் எல்லாருமே ஏறக்குறைய ஏழைகளாகவே வாழ்ந்தவர்களாவர்.
பொருள் இல்லையே என்பதால், ஆரம்பத்தில் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கலாம். ஆனால், உலகத்தையும், வாழ்க்கையையும் நன்குணர்ந்த ஞானிகள், என்றைக்குமே மனித ஜாதியின் மதிப்புக்கு உரியவர்கள்தான். அவர்களை இகழ்ந்தவர்களே மண்ணோடு இரண்டறக் கலந்து விட்டார்கள்.
நம்மை யார் இகழ்ந்தாலும் அல்லது புகழ்ந்தாலும் அதையெல்லாம் நாம் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. கேலி, கிண்டல் செய்வோர் நம்மீது நல்லெண்ணம் உடையவர்களா? இல்லையே! அவர்களிடம் அறிவும் வலிமையும் இருக்காது. ஆனால் பெருந்தன்மையான எளியவர்களோ அவர்களைப் பார்த்து இரங்க நேரிடும்.
அன்புள்ள அண்ணா, வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே ஆசை! நாட்டுக்கு ஏதாவது ஒரு சேவையாவது செய்தாக வேண்டும் என்பதே. சேர்வாரிடம் சேர்ந்து விட்ட பழக்கத்தால் ஏற்பட்டு விட்ட குணத்தால் இந்த ஆசை வந்ததோ என்று சிலர் எண்ணுவர். பரோபகாரம் செய்து உலகுக்கு நல்லவனாக நடமாட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை முதன் முதலில் எனக்குப் போதித்தவரும் அதற்குரிய பாதையைக் காட்டியவரும் எனது அண்ணனாகிய தாங்களே அல்லவா? அதனால்தான் இதை நினைவு படுத்துகிறேன்.
என்னை லண்டனுக்கு அனுப்பி ஐ.சி.எஸ்.பட்டப் படிப்பை படிக்குமாறு நமது குடும்பம் ஊக்குவித்தது. ஆனால், அப்போது தங்களது கருத்து என்னவோ, அது எனக்குத் தெரியாது. காரணம் நமது அப்பா அப்போது எடுத்த முடிவு அது எனக்கு அப்போது அந்தக் கல்வியில் ஆர்வம் இல்லை. ஏனென்றால், அந்தக் கல்வியில் வெற்றிபெற்றுத் திரும்பினால், எனது ஆசைக்கேற்ப பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டு விடும். அப்போதும் கூட எனது கருத்துக்களைத் தங்களிடம் கூறினேன். தங்களது எணத்தை எனக்கும் தெரிவித்தீர்கள்.
மற்றொரு சந்தர்ப்பம் இப்போது வந்துள்ளது. தைரியமாக எனது எண்ணத்துக்கு ஆதரவு காட்டுங்கள். தங்களுக்கு எனது எண்ணங்கள் மீது உடன்பாடில்லை என்றால், அதற்காக நான் வருந்துவேனே அல்லாமல் ஆச்சரியப்படமாட்டேன்.
எதிர்காலத்தில் குடும்பம் என்னால் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காகவே, நீங்கள் என்னிடம் அன்பு காட்டுகிறீர்களா? அப்படியானால், அது சிறுமை என்றுதான் நான் வருந்துவேன். எனவே, எனக்கு ஏமாற்றம் அளிக்காமல் எனது கருத்தை ஆமோதித்து ஒப்புதல் உத்தரவு கொடுங்கள் என்று தங்களைப் பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணா, என்னையே நான் வஞ்சித்துக் கொள்ள விரும்பவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவன் பிறரிடம் எப்படி உண்மையாக நடக்க முடியும்? தாங்கள் இப்போது என்னைத் தடுத்துவிட்டால், அது என் வாழ்நாளையே சிக்கலாக்கி விடும். வழக்குரைஞர் தொழிலில் நான் பணம் பெருக்க முடியும் என்பதும் சந்தேகமாகி விடும். இது மாதிரியான சங்கட நிலையில் என்னைத் தவிக்க விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தக் கடிதத்திலே எனது ஆசை, எனது ஆசை என்று அடிக்கடி எழுதினேன். என்ன ஆசை அது? வேறு ஒன்றுமில்லை. நாம் பிறந்த பாரத மண்ணுக்கு சிறுபணியாவது செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை.
பாட்னா உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞனாகப் பணியாற்றினால் அந்த எனது ஆசை வெற்றி பெறுமா? வக்கீலாகத் தொழில் செய்தால், பணம் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக் கணக்கிலும் குவிக்கலாம். ஆயிரம், லட்சம், கோடி என்று பணம் படைத்தோரைப் பார்த்தால் சில நேரங்களில் நமக்கு வேதனையாகவும், பரிதாபமாகவும் இருக்கலாம்.
தேசத் தொண்டுகளில் பணியாற்றினால், பிறருக்குப் பயன்பட முடியும். அதனால் பெருமை பெறலாம். கோகலேயைப் போல செல்வாக்கும் புகழும் பெற்ற வேந்தர் யாராவது இருக்கிறார்களா? ஆனால், கோகலே பெரும் ஏழை ஆயிற்றே! அவரை விட நாம் ஏழைகள் தானே!
இலட்சக்கணக்கான ஏழை மக்கள் இரண்டு அல்லது மூன்று ரூபாய் மாத வருமானத்தில் காலம் தள்ளவில்லையா? நம் குடும்பத்தில் நூற்றுக் கணக்கில் வருவாய் வருகிறது. நாம் வசதியாக வாழ முடியாதா? தேசப் பணி என்றால் மனம் திருப்தியுறும் வகையில் உழைக்கலாமே! அமைதியாக நான் நாட்டுப் பணியில் ஈடுபட நினைக்கிறேன். அதனால் வரும் தியாகமும் புகழும் தங்களுக்கே!
கோகலேயின் தலைமையில் நான் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்தால், எனது சொந்த செலவுகளுக்கு தாங்கள் பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. எனது செலவுக்குத் தேவையான ஊதியத்தை அவர்கள் தருவார்கள். குடும்பத்துக்காக சிறிதளவு பணஉதவியைச் செய்வார்கள். சிறு தொகைதான் அது என்றாலும், அதை நான் தங்களுக்கே அனுப்பி வருவேன். முப்பதாயிரத்துக்குப் பதிலாக முப்பது வந்தாலும் மன நிறைவு பெற வேண்டியதுதான்.
கல்விச் செலவுகளுக்காக அந்தச் சங்கம் ஏதோ உதவி செய்கிறது. ஆகவே, பிள்ளைகள் படிப்புச் செலவைப் பற்றித் தாங்கள் வருந்த வேண்டியதில்லை.
அன்புமிக்க அண்ணா, இதுவரை நான் எழுதிய எல்லாவற்றையும் நன்றாகச் சிந்திக்க வேண்டுகிறேன். உடனடியாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இருபது நாட்களாக நான் ஆழ்ந்து சிந்தித்தேன். கெளரவம், பதவி, அந்தஸ்து என்பவை எல்லாம் மாயை. மனிதனுக்குப் பெருமை விளைவிப்பது செல்வம் அல்ல! மனத் திருப்திதான். தங்களுக்கும் அந்தப் பரந்த மனப்பான்மை உண்டு என்பதை நான் அறிவேன்.
நான் கூறும் கருத்தை வேறொரு வகையில் சிந்தித்துப் பார்க்கலாம். நான் திடீரென்று பிளேக் நோய்க்குப் பலியாகி விடுகிறேன். அப்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை வைத்துக்
கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் அல்லவா? எனவே, ஞானம் என்பது எல்லாருக்கும் பொது, ஞான பூர்வமாகப் பார்த்தால், இருப்பதை வைத்துக் கொண்டு நாம் மன நிறைவு அடைய வேண்டியவர்கள் தாமே!
நான் இல்லாமல் தாங்கள் வாழ வேண்டும் என்பது கடவுள் சித்தமானால் அதை தாங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆகையால், பொது மக்களுக்கு முன்னால் கொஞ்சக் காலம் தரத்தில் தகுதியில் குறைந்தவர்களாகவே இருப்போம் என்று எண்ணி வறுமையை மேற்கொள்ளுங்கள்.
சுதந்திர சிந்தனையையும், பெருமிதமான புத்தியினையும் தங்கள் வாயிலாக உலகுக்கு உணர்த்துங்கள். உலகத்தில் பெரியோர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பூமி புரிந்து கொள்ளட்டும்.
பணம் அல்ல பொருள்! தொண்டே மெய்ப் பொருள் என்பதை உலகத்துக்கு அறிவுறுத்துங்கள் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு முன்னுதாரணமாக விளங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, என் நன்றிக்கு ஓர் இலக்காக இருங்கள்!
எனது முடிவைப் பற்றி என் மனைவிக்கும் எழுதியிருக்கிறேன். அம்மாவுக்கு எழுதத் துணிவு உண்டாகவில்லை. அம்மாவுக்கு தள்ளாத வயது. திகைத்து விடுவார்.
தங்கள் அன்புள்ள
இராஜேந்திர பிரசாத்
இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தார் மகேந்திர பிரசாத். மலைத்துப் போய்விட்டார். சிறிது காலத்துக்கு முன்புதானே தந்தையை இழந்தோம். அந்த மனத் துன்பம் மாறுவதற்குள் இப்போது உடன்பிறந்த ஒரே ஒரு தம்பியையும் கை நழுவ விடுவதா? என்று எண்ணியபடியே தாரை தாரையாக அவரது கண்களிலே இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, தம்பி ராஜேந்திரர் அண்ணன் இருக்கும் பக்கம் வந்தார். அப்போது தனது தமையன் கண்களிலே இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டு மனம் தளர்ந்து போனார்.
தம்பியைப் பார்த்த மகேந்திர தேசாய், உணர்ச்சி தாளமுடியாமல், கவலையும் ஆத்திரமும் பொங்கியபடியே ‘தம்பி’ என்று கதறிக் கதறி அழத் தொடங்கினார். அண்ணன் தேம்பித் தேம்பி அழுவதைக் கண்ட ராஜேந்திரரும் உணர்ச்சி வயப்பட்டு, அண்ணனைக் கட்டித் தழுவிக் கொண்டு ‘கோ’வெனத் தன்னையுமறியாமல் அழுதுவிட்டார். இருவரும் மனம் உருகினார்கள். இருவருக்கும் பேச ‘நா’ எழவில்லை. உடனே விர்ரென்று ராஜேந்திரர் அவசரம் அவசரமாக வெளியேறிவிட்டார்.
தம்பி சென்ற வேகத்தைக் கண்டு மகேந்திர தேசாய் மீண்டும் வேதனைப்பட்டார். குடும்பச்சுமையைத் தாளாமல் அவர் துவண்டு கொண்டிருந்தார். அவரது வருவாய்க்கு மீறிய செலவு, பெற்ற தாயாருக்கோ உடல் நலம் சரியில்லை, அதற்கும் பணச் செலவு அதிகமாகின்றது. இவற்றை எல்லாம் எண்ணி தனியே இருந்த அவர் தள்ளாடி விழுந்து விட்டார். அப்போது ராஜேந்திரரின் மனைவி தனது கணவன் வந்தாரா என்று அறிய வந்தார்.
மகேந்திர தேசாய் மயக்கமடைந்து வீழ்ந்து கிடந்ததைப் பார்த்த அவர், அவரைத் துக்கி குடிக்கத் தண்ணீர் தந்து ஆசுவாசப் படுத்தி இளைப்பாற வைத்து, என்ன நடந்தது என்று கேட்டார்.
மீண்டும் மகேந்திர தேசாய் அழுத முகத்தோடு, தம்பி நம்மையெல்லாம் விட்டு விட்டு பூனா சென்று இந்தியர் ஊழியர் சங்கத்தில் 25 ரூபாய் சம்பளத்துக்காகச் சேரப் போகிறானாம். வக்கீல் வேலைக்கு பாபு சென்றால் நமது குடும்பம் உயர்நிலை அடையும் என்று நம்பினேன். தம்பி இராஜேந்திரன் எம்.ஏ.படித்துக் கொண்டிருந்த போது அப்பா காலமானார். அதற்குப் பின் தம்பியைச் சட்டப் படிப்பு படிக்க வைத்தேன். மூன்று தங்கைகளுக்கும் தக்க இடத்தில் திருமணங்களைச் செய்தேன். இவையெல்லாம் செலவினங்கள் என்றாலும் வரவு ஏதம்மா? வழக்கம்போல்தானே இப்போது அம்மாவுக்கும் உடல் சரியில்லை. இந்த நேரத்தில் தம்பி குறைந்த சம்பளத்திற்காக, நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து போகிறேன் என்கிறானே அந்த மனவேதனையை என்னால் தாங்க முடியவில்லை என்று மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார்.
மகேந்திரர் நிலையைக் கண்டு ராஜன் பாபு மனைவியாருக்கும் கண்ணீச் சுரந்துவிட்டது. மன ஆறுதலுடன் மகேந்திரரை அமைதிப்படுத்தி விட்டு வீட்டுக்குச் சென்றார்.
இந்த நிலையில் ஒருவாரத்துக்குள்ளாகவே, மீண்டுமோர் கடிதம் ராஜன் பாபுவிடம் இருந்து வந்தது.
அன்புள்ள அண்ணா!
எதிர்பாராமல், தங்களை எனது கடிதத்திற்குப் பிறகு பார்த்தபோது, நான் மிகவும் திகைத்து விட்டேன். என் மீது எவ்வளவு பெரிய விசுவாசமும், பாசமும், அன்பும் இருந்திருந்தால் என்னைப் பார்த்துத் தேம்பித் தேம்பிக் கட்டி அழுவீர்கள் என்பதைப் பிறகுதான் சிந்தித்தேன்.
தங்களது எண்ணம் என்ன என்பதை எனது மனைவியும் என்னிடம் கண்ணீர் சிந்தியவாறே கூறினாள். தங்களுடைய கருத்தைப் புரிந்து கொண்டேன். ஆனால், என்ன கூறுவது என்றுதான் புரியவில்லை. எவருக்கும், எப்போதும் மனம் நோகத் துன்பம் தரக் கூடாது என்பதே எனது கருத்து. எனவே,தந்தைக்குத் தந்தையாக என்னை ஆதரித்துக் காத்த தங்களுக்கோ, நம் அன்புள்ள வயோதிக அன்னைக்கோ ஒருபோதும் நான் மனக் கவலையை உண்டாக்க மாட்டேன்.
கோகலேயின் சங்கத்தில் நான் சேர எண்ணிய போது, அதுதான் எனது முடிந்த முடிவாகக் கருதியதில்லை. இன்று வரை நான் தந்தை சொல்லையோ, அவருக்குப் பிறகு தங்கள் வார்த்தையையோ என்றும் மீறி நடந்ததில்லை. கடவுள் சித்தத்தால் இனியும் நான் மீற மாட்டேன். ஏனென்றால் தகப்பனற்ற மகன் என்ற நிலையை, துன்பத்தை, என்றுமே நீங்கள் எனக்கு உருவாக்கியவரல்லர்! எனவே தங்களது மனத்தை நான் புண்படுத்தும் பாவியாக மாட்டேன்.
இனிமேல் தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடப்பேன் அதிலே இன்பம் பெறுவேன். தங்கள் தம்பி தங்களது உத்தரவு இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். பிற்கால வாழ்க்கையில் நான் பலவிதத் துன்பங்களை அனுபவிப்பேன் என்று எண்ண வேண்டாம். திடீர் என்று எதன் மீதாவது பற்றுக் கொள்பவன்தானே நான்?
என் வயதுக்கேற்ற புத்தியால் தங்களை வருத்திவிட்டேன்! நீங்கள் என்மீது வைத்திருந்த பற்றை மறந்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா! நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் மன்னிக்க!
இனிமேல் தங்களுக்கு மனவருத்தம் உண்டாக்கும் கடிதங்களை எழுத மாட்டேன். மன உளைச்சலை உண்டாக்குவதற்காகவும் நான் அக்கடிதத்தை எழுதவில்லை அண்ணா! அக்கடிதத்தை எழுதிய பிறகு நேரில் நான் தங்களைக் கண்ட பிறகு கண்ணீர் வடித்தேன்; அழுதேன். இன்னும் கண்ணீர் விடுவேன் எதிர்காலத்திலும் அழுது கொண்டே இருப்பேன்.
அப்பாவுக்கும் நான் மனத்துயர் நேரக் காரணமானேன். அது அவரது உயிருக்கே அபாயமாகி விட்டது. இப்போது அம்மா உடல் நிலையும் சரியில்லை. மீண்டும் அம்மாவுக்கும் அபாயம் உருவாக்க மாட்டேன். தந்தை இடத்திலே தந்தையாக உள்ள உங்களையும் தானாத் துயருக்குள்ளாக்கிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா.
தங்களன்புள்ள
இராஜேந்திர பிரசாத்
அண்ணன் மகேந்திர தேசாய் தம்பியினுடைய இரண்டாவது கடிதத்தைப் படித்து விட்டு மனம் மகிழ்ந்தார்! ஒருமுறைக்கு இருமுறை அந்தக் கடிதத்தை அவர் திரும்பத் திரும்பப் படித்துக் களிப்படைந்தார்! கடிதத்தைத் தனது கண்களிலே ஒத்திக் கொண்டு பூரித்துப் போனார்.
5. குடும்ப சேவையும் ஒரு தவமே!
தம்பியின் கடிதம் கண்டு கண்ணீர் சிந்திக் கதறுகின்ற தமையனையும், அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கின்ற தம்பியையும் பார்ப்பதே அரிதல்லவா? ராஜேந்திரர் குடும்பம் வைதிகமானது பழமையில் ஊறியது. அந்த வீட்டின் உறவினர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தில் வசித்தார்கள். கூட்டுக் குடும்பம்தான் இந்திய நாகரீகத்தின் உயர்ந்த உறுப்பு. கடைசி வரையில் அவர் இதை உறுதியாக நம்பினார்.
இராஜேந்திரர் குடியரசுத் தலைவர் ஆனதற்குப் பிறகு, இந்துகோட் மசோதாவுக்கு அவர் முழு ஆதரவு அளிக்காததற்குக் காரணம் இதுவே. அவருடைய குடும்ப அமைப்பு பழைய விதிகளை ஒட்டியே இருந்தது. வீட்டில் மூத்தவர்களுக்குத் தாம் முதல் மரியாதை அவர்களைக் கலந்து கொண்டே எதையும் செய்வார்கள்,
மகேந்திர பிரசாத், ராஜேந்திர பிரசாத்தை விட எட்டு வயது பெரியவர். ஆகையால், அண்ணாவின் சொல்லை அவர் ஒரு நாளும் மீறியதில்லை. அண்ணாவுக்கோ தம்பியிடம் அளவுக்கு மீறிய அன்பு, பொதுப்பணிகளில் கலந்து கொள்ள தம்பி பாபுவுக்கு அவர் முழுச் சதந்திரமும் அளித்தார்.
இராஜேந்திரர் இல்லாத காலத்தில் அவரே குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். இவ்வாறு அவர் வீட்டுப் பணியை நடத்தி வந்ததால்தான் இராஜேந்திரர் அமைதியாக நாட்டுப் பணியை மேற்கொள்ள முடிந்தது.
காந்தியடிகள் கஸ்தூரி அம்மையாரை சிறுவயதில் திருமணம் செய்து கொண்டதைப் போலவே, ராஜன் பாபுவும் குழந்தைப் பருவத்திலேயே, அதாவது அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, பன்னிரண்டாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். ராஜன் பாபு மாமியார் இல்லம் அவர் பிறந்த ஜீராதேயீ என்ற ஊருக்கு அருகிலேயே இருந்தது. எப்படி பாபுவுக்குத் திருமணம் நடந்தேறியது என்பதைப் பற்றி அவரே எழுதுகிறார் பாருங்கள்.
“ஜீரோ தேபியில் நடக்க வேண்டிய சடங்குகளை முடித்துக் கொண்டு மண ஊர்வலம் புறப்பட்டது. ஓர் அலங்காரமான பல்லக்கில் நான் உட்கார்ந்து கொண்டேன். அண்ணா குதிரை மீது ஏறி வந்தார். ஆனி மாதம், பல்லக்குக்கு மேலே மூடி இல்லை. அதனால் வெயில் கடுமையாகத் தாக்கியது. அனல் தெறித்தது. வெயிலும், ஆவியும் தாக்க நான் பல்லக்கிலே இருந்தவாறே தவித்தேன். ஒரு வழியாக ஊர்வலம் லட்சியத்தை அடைந்தது. ஆனால், அதற்குள் இரவு வெகுநேரம் ஆனது. எனக்கு இரவில் விரைவில் தூங்கிவிடும் பழக்கமுண்டு. ஆகையால், ஊர்வலம் போய்ச் சேரும் முன்பே நான் பல்லக்கில் தூங்கி விட்டேன்.”
“இரண்டு நாள் அலைச்சல் காரணமாக அயர்ந்த தூக்கம். இடத்தை அடைந்ததும் அண்ணா என்னை எழுப்பினார். வரவேற்புச் சடங்குகள், கல்யாணத்தின் மற்றச் சடங்குகள் நடந்தேறின. எனக்கு மணமாகி விட்டது. ஆனால், அப்போது என்ன சடங்குகள் நடந்தன. அவற்றில் நான் கொண்ட பங்கு என்ன என்பதைப் பற்றி எனக்கு நினைவே இல்லை. குழந்தைப் பருவத்தில் என் சகோதரிகள் பொம்மை ஆட்டங்கள் விளையாடுவார்கள். என் கல்யாணமும் என்னைப் பொறுத்த வரை அவ்வாறுதான் நடந்து முடிந்தது.”
தம்பதிகள் இருவரும் குழந்தைகள்தான் என்றாலும், பல ஆண்டுகள் அவர்கள் அமர்ந்து பேசவே சமயம் வாய்க்கவில்லை. ராஜன்பாபுவின் மாணவ வாழ்க்கைக்குப் பிறகே அவருக்கு கணவன் மனைவி தாம்பத்தியம் என்றால் என்ன என்று தெரிந்தது.
அதற்குப் பிறகு தேச சேவை; சுதந்திரப் போரின் பணிகள்; பொதுமக்கள் பிரச்சனைகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் இவ்வளவும் சிறுகச் சிறுகவும் இடைவெளி விட்டும் ஏற்பட்டதால் குடும்ப வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் முழுமையாக அனுபவிக்கவே முடியவில்லை.
வழக்குரைஞர் பணியிலே பாபு ஈடுபட்ட போது, அடிக்கடி கல்கத்தா நகர் நீதிமன்றத்துக்குப் போகும் நிலை நேரும், ஆனால், அவரது வீட்டார் எல்லாரும், ஏன் புதுமணப் பெண் உட்பட எல்லாருமே பாட்னாவிலேயே தங்கிவிட எண்ணினார்கள். அதற்கேற்றவாறு பாபுவும் அங்கேயே தங்கிவிட்டார்.
கல்கத்தா நகரிலே ராஜன்பாபு 1920-ஆம் ஆண்டில் துவங்கிய ஒத்துழையாமைப் போர் இயக்கத்திலே கலந்து விட்டார். இந்த நேரத்திலே குடும்பம், இல்வாழ்வு இன்பம் எல்லாவற்றையும் மறந்துதானே ஆக வேண்டும்? பாட்னாவிலே உள்ள ‘சதாகத்’ ஆசிரம வாழ்க்கையே அவருக்கு வீடாக மாறியது. ஆனாலும், இல்லற வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அவரைப் பாதிக்காமல் இருக்குமா? இருப்பினும் இன்ப துன்பங்களும் அவருக்கு இணைந்தே வந்தன.
இந்த இக்கட்டான நேரத்தில், ராஜன் பாபுவின் அண்ணன் மகேந்திர பிரசாத் மறைந்தார். குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்ட பண்பாளர் அல்லவா? தம்பியின் முன்னேற்றமே தனது குடும்ப முன்னேற்றம் என்று நட்ந்து வந்தவர். பொறுப்புகளை எல்லாம் ராஜன் பாபு தோள்களிலே சுமக்க வைத்து விட்டுக் காலமாகி விட்டார்.
அரிசி ஆலை ஒன்றை நட்டத்திலும் நடத்தி வந்தவர் மகேந்திர பிரசாத். எப்படியோ அவர் சாகும்போது அறுபதாயிரம் ரூபாய் கடன்களை வைத்து விட்டு மறைந்தார். அந்தக் கடன் அடைக்க இராஜேந்திரர் தனது நிலத்தை விற்றார். அப்போதும் தீரவில்லை கடன் தொகை. சேட்ஜம்னா லால் பஜாஜ் என்பவர் உதவி செய்தார். தீர்ந்தது கடன்.
இராஜேந்திர பிரசாத்திற்கு இரண்டு ஆண் மக்கள். மூத்தவர் மிருத்யுஞ்சயன். இளையவர் தனஞ்செயன். மகேந்திர பிரசாத் மறைந்த பிறகு அவரது குடும்ப பாரத்தை இராஜேந்திர பிரசாத்தின் இரு புதல்வர்களும் ஏற்று நடத்தி வந்தார்கள்.
மூத்த மகன் மிருத்யுஞ்சயனுக்கு தேச பக்தர் விரஜகிஷோர் பாபுவின் மகளைத் திருமணம் செய்து வைத்தார். சிறிது காலத்துக்குள் அவர் தனது மனைவியை இழந்தார். அதே நேரத்தில் சிறிது நாட்கள் கழித்து அவரது மாமனாரும் மாண்டார். இந்த நிகழ்ச்சிகள் அந்த வீட்டையே மிகவும் சோகமயமாக்கி விட்டன. இதோ அந்த சோகங்களை அவரே எழுதுகிறார் படியுங்கள்.
“பீஹாரில் ஹிந்து முஸ்லீம் கலகம் என்று கேள்விப்பட்டு பாட்னா நகர் சென்று கொண்டிருந்தோம். மிருத்யுஞ்சயன் மனைவி இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. வீட்டுக்குப் போனேன். பெண்களது ஒப்பாரியும், குழந்தைகளது ஓசையும் வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு, பாட்னா மாவட்டத்திலே நடந்து கொண்டிருந்த இந்து - முஸ்லீம் கலவரங்களை அடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆயிரக்கணக்கானவர்கள் கொலையுண்டு, ஆயிரக் கணக்கான வீடுகளில் அழுகையும் புலம்பலுமாக இருந்ததைக் கேட்டேன். அங்கு என் வீட்டுத் துக்கம் வெட்கி அடங்கிவிட்டது போலும்.”
குடும்பத்தில் நடந்த மற்றொரு மரண சம்பவத்தைப் பற்றி பாபு எழுதுவதைப் படியுங்கள்.
“ராஞ்சியில் பல நாட்கள் கஷ்டப்பட்ட பின், குழந்தை பிரகாஷ் அகாலத்தில் காலமாயிற்று. அப்போது நான் தில்லியில் இருந்தேன். தொலைபேசி மூலமாக குழந்தையின் அபாயச் செய்தி வந்தது. புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அவனுடைய அண்ணன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செத்துப் போனான். அந்தக் காயம் இன்னும் ஆறவில்லை. அந்த எண்ணம் மீண்டும் நினைவில் நிழலாடியதாலே கண்களில் நீர் நிறைகின்றது. இப்போது, இந்த இரண்டாவது காயம். இதைத் தவிர்க்க வழியில்லை. தெய்வ சித்தம் இது. குழந்தைகள் இப்படி வந்து போக வேண்டுமானால், அவர்கள் ஏன்தான் வருகிறார்களோ? இதுவும் கடவுளின் திருவிளையாடலே. இதன் ரகசியத்தை அவனே அறிவான். அவனுடைய லீலைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது.
இராஜேந்திர பிரசாத், முதல் குடியரசுத் தலைவரான பிறகும், அவரது வாழ்க்கை முறையே மாறவில்லை. எப்போதும் போல எளிய வாழ்க்கையே நடத்தினார் குழந்தைகளோடு விளையாடுவது என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். நாட்டுப் பணிகளோடு வீட்டுப் பணிகளையும் அவர் தவறாமல் கவனித்துக் கொண்டார்.
தனது தமையனார் மறைந்த பின்பு அவருடைய குடும்பத்தின் பொறுப்புகளையும் இராஜேந்திரரே ஏற்றுக் கொண்டார். தேச சேவை எப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வேள்விச் சாலையில் எழும் ஒளியோ, அதனைப் போலவே ஒவ்வொரு குடிமகனின் குடும்பச் சேவையையும் ஒரு தவச்சாலையாக ஆற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது இல்லத்துச் சேவைப் பணிகளை தவச் சாலையாக மாற்றிக் கொண்ட புனிதராகவே வாழ்ந்தவர்.
6. வழக்குரைஞர்களின் ஒழுக்கங்கள்
ராஜன் பாபு ஓர் உதாரணம்!
வழக்குரைஞர் ராஜன் பாபுவுக்கு வழக்குகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. அவரது தோற்றம், அடக்க சுபாவம், இனிய பேசும் தன்மை, ஒழுக்கத்தோடு சட்டத்தை அணுகும் திறன், பொய் வழக்குகளைப் பணத்தாசையால் தொடுத்துக் கெட்ட பெயரைப் பெறாத உயர் நோக்கம், வழக்குகளின் நுட்பமறிந்து அதன் அடிப்படை யூகங்களை ஆய்ந்து வழக்குகளைத் தேர்வு செய்யும் வியூகம், இவ்வறால்ராஜன் பாபுவின் புகழும் வருமானமும் பெருகியது. பாபுவைப் போன்ற ஜூனியர் வக்கீல்கள் எவரும் அவரைப் போல அளவுகடந்த வருமானத்தைச் சம்பாதிக்கவில்லை என்றே கூறலாம்.
1915 ஆம் ஆண்டில் எம்.எல். பட்டத் தேர்வுக்குப் பரீட்சை எழுதினார். மாகாணத்திலேயே முதல் இடம்பெற்று வழக்கறிஞராக ஆனதால், ராஜன் பாபு கல்கத்தா வழக்கறிஞர் என்ற பெயரைப் பெற்றார். அதனால், கல்கத்தா வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பாபுவுக்கு விருது வழங்கி விருந்து வைத்தனர்.
பீகார் மாகாணத்தின் தலைநகரான பாட்னாவில் 1916 ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றம் உருவானது. கல்கத்தாவிலே பணியாற்றிய ராஜன்பாபு உடனே பாட்னா வந்து வக்கீல் தொழிலைத் தொடர்ந்தார். அங்கேயும் அவருக்கு தொழில் விரைவாகவும், வளமாகவும் நடந்து வந்தது. கல்கத்தா வழக்கறிஞர் என்ற பெயர் இங்கேயும் அவருக்கு தொடர்ந்து வந்து நிலைத்தது. இவ்வளவு பெரிய பெயரும் புகழும் செல்வாக்கும் மக்கள் இடையே வளர்ந்தோங்கியதற்குப் பிறகும் கூட, ராஜேந்திரர் எளிய ஒரு குடியானவனைப் போலவே வாழ்க்கையை நடத்தினார். பாபுவின் சட்டப் புலமையை மதித்து ஆங்கிலேயர் அரசு அவரை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்க பரிசீலனை செய்து வந்தது.
வழக்குரைஞர் பணி ஒன்று மட்டுமே நமது பிறப்புரிமைக்குப் போதுமானது, உகந்தது என்று அவர் கருதாமல், ஓய்வு எப்போதெல்லாம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம், பொது நலப் பணிகள் ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொண்டே இருந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம்.
பாட்னாவில் ஒரு பல்கலைக் கழகத்தை ஏற்படுத்திட தில்லி சட்டமன்றத்தில் ஆங்கிலேயர் ஆட்சியினர, ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்திலே பல குறைபாடுகளும் - குழப்பங்களும் இருந்தன. பீகார் மக்கள் இக்காரணத்தால் அந்தச் சட்டத்தை இழிவாய்க் கருதினார்கள்.
மக்கள் நினைத்த குறைபாடுகளை, ராஜன் பாபு பத்திரிக்கைகளுக்கு விளக்கிக் கட்டுரைகள் எழுதினார். பல பொதுக் கூட்டங்களை நடத்தி தானறிந்த அக்குறைபாடுகளை விளக்கி மக்கள் இடையே பேசினார். அந்தச் சட்டத்தை எதிர்த்து பீகார் மக்களும் கிளர்ச்சி செய்யலானார்கள்.
பொது மக்களது கிளர்ச்சியின் பயனாக, பிரிட்டிஷ் அரசு பல்கலைக் கழகத்தின் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. அதேநேரத்தில் ராஜன்பாபுவும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் ஓர் உறுப்பினரானார் ஏழை மக்களால் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பை பெற முடியாத அளவுக்கு சம்பளம், மற்ற செலவினங்கள் அதிகமாகக் கூடின. கல்வி வாணிகம் போல இருந்ததைக் கண்ட ராஜன்பாபு கல்வித் துறை வகுப்புக்களுக்குரிய சம்பள விகிதங்களையும், பிற செலவுகளையும் குறைக்க ஏற்பாடுகள் செய்தார்.
பல்கலைக் கழகப் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிகம் சேர ராஜேந்திரர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். கல்லூரி பயிற்சி நேரத்தைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்தார். பல்கலைக் கழக வளர்ச்சிக்கு மேற்கண்ட ஆக்கப் பணிகளைச் செய்தார்.
இந்த நேரத்தில்தான், மகாத்மா காந்தியடிகள் வெள்ளையராட்சியை எதிர்த்து ஒத்துழையாமைப் போரைத் துவக்கினார். அந்தப் போராட்டத்திலே ராஜன் பாபுவும் கலந்து கொண்டார். இதன் எதிரொலியாக, அவர் பல்கலைக் கழக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்தார். பல்கலைக்கழக அதிகாரிகள் அவரது பதவித் துறப்புக் கடிதத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் மிக வருத்தத்துடன் ஏற்றார்கள்.
இந்திய இளைஞர்களுக்குப் போதிக்கப்பட்டு வரும் ஆங்கிலக் கல்வி முறைகளை எதிர்த்து, இந்திய தேசீயக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற காந்தியடிகளாரது கருத்துக்கள் அப்போது, நாடெங்கும் பரவி வந்தது. பல மாகாணங்களில் காங்கிரஸ் மகா சபை தேசியக் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது.
பாட்னா நகரில் பீகார் வித்யா பீடம் என்ற தேசியக் கல்வி நிறுவனத்தை 1920-ஆம் ஆண்டு காந்தியடிகளைக் கொண்டு ராஜன்பாபு தோற்றுவித்தார். ஆங்கிலம் கல்வி முறையில் பாடங்களைக் கற்பிக்காமல், பாரத நாட்டின் பெருமையை உணர்த்தும் கல்விப் பாடங்கள் அந்த வித்யா பீடத்தில் நடத்தப்பட்டதால், ஏராளமான மாணவர்கள் வித்யா சாலையில் சேர்ந்து படித்தார்கள். அவர்களில் பலர் தேச பக்தர்களாக பிற்காலத்தில் உருவானதைக் கண்ட ஆங்கில ஆட்சி அதை 1930 ஆம் ஆண்டில் பலாத்காரமாக மூடி சீல் வைத்து விட்டது.
7. காந்தியடிகள் கைது
பீஹார் மாகாணத்தில் சம்பரான் என்றொரு மாவட்டம் உள்ளது. அங்கே சண்பக மரங்கள் காடுகளைப் போல பெருகி அடர்ந்து பரந்து விரிந்து வளர்ந்திருந்ததால், அப்பகுதிக்கு சண்பகாரண்யம் என்ற பெயர் வந்தது. இந்த சண்பகாரண்யம் என்ற சொல் நாளடைவில் பேச்சு வழக்கில் மருவி சம்பரான் என்றாயிற்று. அது சரித்திரப் புகழ் பெற்ற ஒரு பழமையான மாகாணம்.
அண்ணல் காந்தியடிகள் இதுபற்றி தனது சுயசரிதையான “சத்திய சோதனை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ள விவரம் வருமாறு:
“ஜனகமகாராஜன் ஆண்ட நாடு சம்பாரன். அங்கே மாந்தோப்புகள் ஏராளமாக இருப்பதைப் போலவே, 1917 ஆம் ஆண்டு வரையில், அவுரித் தோட்டங்களும் நிறைய இருந்து வந்தன. சம்பாரன் குடியானவர் ஒவ்வொருவரும், தாம் சாகுபடி செய்யும் நிலத்தின் இருபதில் மூன்று பாகத்தில் தமது நிலச்சுவான்தாரருக்காக அவுரியைக் கட்டாயம் பயிர் செய்தாக வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதற்கு கதியாக்கள் கதியா முறை என்று பெயர். அதில் மூன்று ‘கதியா’வில் அவுரிச் சாகுபடி செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்ததால் அம்முறைக்குத் ‘தீன் கதியா’ என்று பெயர். இந்த சம்பரானில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெருந்துன்பங்களை அனுபவித்து அவுரியைப் பயிரிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான அந்த விவசாயிகள் அனுபவித்து வரும் அநீதியை எப்படியும் போக்க வேண்டும் என்பதே சம்பரான் அவுரிப் போர்!” -காந்தியடிகள் சுயசரிதை
அங்கு வாழும் விவசாயிகள் தங்களது நிலத்தின் ஆறில் ஒரு பகுதியில் கட்டாயமாக அவுரியைப் பயிரிட வேண்டும். இல்லையேல் நிலம் உழவனுக்குக் கிடைக்காது. அவுரி சாயத்திற்கு இங்கிலாந்து நாட்டில் நல்ல விலை உயர்வு இருந்ததால், பிரிட்டிஷார் இவ்வாறான கெடுபிடிகளை சம்பரான் பகுதி விவசாயிகளுக்குச் செய்து வந்தார்கள். இந்தக் கட்டாயப் பயிர் முறையால் உழவர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வந்தார்கள்.
லக்னோ நகரில் அப்போது 1916 ஆம் ஆண்டில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் தேசிய மகாசபையில், அவுரி பயிரிடுவோரின் அல்லல்களை அகற்றிட சம்பரானில் ஓர் அறப்போர் துவங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி ஒருவர் லக்னோ வந்த காந்தியடிகளிடம் விவசாயிகளின் துயர்களை விரிவாக எடுத்துரைத்து அவரைச் சம்பரான் மாவட்டப் பகுதிகளுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
பாட்னா நகர் சென்ற காந்தியார், ராஜன் பாபு வீட்டில் தங்குவதற்காக சென்றார். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியூர் போயிருந்தார். ராஜேந்திரர் இல்லத்து வேலைக்காரர்கள் முன்பின் காந்தியடிகளாரைக் கண்டிராததால், அவரை அவர்கள் மதிக்கவே இல்லை. கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் அனுமதி தரவில்லை. தீண்டத்தகாமை அவ்வளவு மோசமாக அப்போது அங்கே இருந்தது. அன்னியர்களைக் கிணற்றில் தண்ணீர் சேந்தவும் விடுவதில்லை.
மகாத்மா சம்பரான் சென்றார். விவசாயிகளில் பலரைக் கண்டு விவரம் தெரிந்தார். வேதனைகளாலும், அச்சங்களாலும் அவதிப்பட்ட விவசாயிகள் அவரிடம் தங்களது எல்லாக் குறைகளையும் முறையிட்டுச் சொன்னார்கள். அவர்களுக்கு அவர் ஊட்டிய தைரியத்தாலும், ஊக்கத்தாலும் அவர்கள் துணிவடைந்தார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிடவும் முன்வந்தார்கள்.
வெள்ளைக் குத்தகைதாரர்கள் காந்தியடிகளது போராட்டச் செயல் ஏற்பாடுகளை அறிந்து கோபமடைந்தார்கள். அரசாங்கம் வெள்ளையர்களுடையது அல்லவா? அதனால் திருடனுக்குத் தேள் கொட்டிய நிலைக்கு ஆளானார்கள்.
மற்ற வெள்ளையதிகாரிகளுக்கு குத்தகைதாரர்கள் தந்தியடித்து காந்தியாரின் போராட்ட அபாயங்களைத் தெரிவித்தார்கள். உடனே எதிர்பாராமல் கெடுபிடிகள் சூழ காந்தியடிகளைக் கைது செய்து விட்டார்கள். அதைக் கண்ட சம்பரான் ஊர் பொதுமக்கள், பெரிய மனிதர்கள் திரளாகத் திரண்டு விட்டார்கள். இதை அறிந்ததும் ஊர் திரும்பிய இராஜேந்திர பிரசாத் அவ்வூர் மக்களோடு கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார். ‘காந்தியை விடுதலை செய்’ என்ற கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. ராஜேந்திர பிரசாத் காந்தியாரைக் கண்டு பேசி, ‘எதற்கும் நாங்கள் தயார்’ என்ற உறுதியை அவரிடம் தெரிவித்தார்.
பொதுமக்கள், பெரிய மனிதர்கள், செல்வாக்குடையோர் நிர்ப்பந்தம் நேரம் ஆக ஆகக் கடுமையானது. இதையறிந்த பீகார் அரசு அவரைக் கைது செய்த இடத்திலேயே விடுதலை செய்து விட்டது. அதே இடத்தில் அவுரி விவசாயிகள் குறைகளை அகற்றிட அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, அக்குழுவுக்குக் காந்தியடிகளையுமம் ஓர் உறுப்பினராக நியமித்தது.
அவுரி சாகுபடி செய்வோரது விசாரணைக் குழு காலம் கடத்தாமல் விவசாயிகளின் குறைகளை விரைவாகவே விசாரித்தது. அக்குழு முடிவின் பேரில், அவுரி சாகுபடியாளர்களது குறைகளை நீக்கிட ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக விவசாயிகள் பட்ட வேதனைகள் ஒழிந்து அவர்கள் ஓரளவு ஆறுதலும் பெற்றார்கள்.
சம்பரான் போராட்டத்தில் காந்தியடிகளுக்குத் தளபதி போல நின்று, ஊர் மக்களை ஒன்று கூட்டி கடைசி வரை ஒத்துழைத்தவர் ராஜன் பாபுவே ஆவார். இதனால், பாபுக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கும் பேரும் புகழும் மேலும் கூடியது.
மகாத்மாக காந்தியை இந்தப்போராட்டத்தின் போது ராஜன் பாபு சந்தித்ததால் அவரது வாழ்க்கையில் ஓர் அரிய பெரிய மாற்றமே ஏற்பட்டு விட்டது. இதற்கு முன்பே, மாணவர் பருவத்திலிருந்தே, வழக்குரைஞராக இருந்த போதே எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பாபு, மேலும் எளிய வாழ்க்கையோடு, ஒரு கிராமத்துக் குடியாவை உழவனைப் போலவே தனது வாழ்க்கையை நடத்தலானார். ஏழை மக்களுக்கும், எளிய உழவர்களுக்கும், உழைப்பதே தனது மக்கட் சேவை என்பதை உணர்ந்த அவர் - சாகும் வரை, குடியரசுத் தலைவராக ஆனபிறகும் கூட ஏழைபங்காளராக வாழ்ந்து காட்டினார்.
காந்தி பெருமான் தனது சுயசரிதையில் ராஜன் பாபுவைப் பற்றி எழுதும்போது “விரஜ கிருஷ்ண பாபு, ராஜேந்திர பாபு ஆகிய இருவரும் இணையில்லா நண்பர்கள். அவர்களுடைய உதவிகளின்றி நான் ஒரு வேலையும் செய்திருக்க முடியாது. ஓரடியும் நடந்திருக்க முடியாது. அவர்களுடைய தொண்டர்களும், நண்பர்களும், பொது மக்களும் எந்நேரமும் எங்களோடு இருப்பார்கள். குறிப்பாக, ராஜன் பாபுவின் சீடர்களான, சம்பு, பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு போன்றவர்கள் எப்போதும் எங்களுடன் இருந்து வந்தார்கள். விந்தியா பாபுவும், ஜனக்தாரி பாபுவும் அப்போதைக்கப்போது வந்து எங்களுக்கு உதவி செய்தார்கள். இவர்கள் எல்லாரும் பீகாரிகள். இவர்களது முக்கியமான வேலை விவசாயிகளிடமிருந்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொள்வதுதான்.”
காந்தியடிகளிடம் ராஜன்பாபுவுக்கு எத்தகைய அபிமானம் இருந்தது என்பதையே அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். பாபு தனது சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார் :
“சம்பரான் அதிகாரிகள் மகாத்மாவைக் கைது செய்ததைக் கேட்டு ஆண்ட்ரூஸ் வந்தார். காந்தி மீது வழக்கு நடக்கப் போவதில்லை என்று தெரிந்ததும், அவர் திரும்பிப் போக விழைந்தார். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களின் குறைகளைப் போக்க அவர் அங்கு செல்ல விரும்பினார். சம்பரானிலோ, ஐரோப்பியத் தோட்டக்காரர்களின் தொல்லைகள் தீரவில்லை. ஆகையால் அவர் சம்பரானிலே இருந்தால் நலமென்று நாங்கள் எண்ணினோம்.”
மகாத்மாக காந்தி கூறுவது போல் செய்வதாக ஆண்ட்ரூஸ் கூறினார். மாலையில் மகாத்மாவிடம் செய்தியைத் தெரிவித்தோம். அப்போது காந்தியடிகள் கூறிய பதில் எங்களது மனப்போக்கையே மாற்றி விட்டது. அவர் மேலும் கூறும் போது,
“ஐரோப்பியத் தோட்டக்காரர்களுடன் போராட்டம் நடப்பதால், ஐரோப்பியரான ஆண்ட்ரூஸ் நம்மோடு இருப்பது நல்லதென்று எண்ணுகிறீர்கள்.”
இவ்வாறு நாம் வலிமை தேடித் தருவதோ, தேடிக் கொள்வதோ முறை ஆகாது. அவ்வாறு நாம் வலிமை சேர்க்க முனைவதே நமது பலவீனத்துக்கு அறிகுறியாகும். ஆகையால், அவர் உடனே இங்கேயிருந்து போய்விட வேண்டும் என்பதே எனது முடிவு. அதுதான் அவசியம். அப்போதுதான் உங்களது பலவீனம் நீங்கும் என்றார் காந்தியடிகள்.
“பிஜித் தீவுக்கு அவர் போவதை விட சம்பரானில் இருப்பதே நல்லதென்று ஆண்ட்ரூசோ அல்லது நாங்களோ கருதினால், அவர் இங்கேயே இருக்கலாம். முடிவு செய்ய வேண்டியவர் ஆண்ட்ரூஸ்தான்” என்றார் காந்தியண்ணல்.
இறுதியில், “ஆண்ட்ரூஸ் பிஜித் தீவுக்கு போவது நல்லது” என்று காந்தியடிகளும் மற்றவர்களும் தீர்மானம் செய்தார்கள்.
காந்தியடிகளுடன் சுயராச்சியம் பற்றி அடிக்கடி பேசினோம். ‘உங்களுக்கு சுயராச்சியம் என்றால் என்ன என்று தெரியவில்லையா? நான் அதற்கான பணிகளைத் தானே செய்கிறேன்’ என்றார். நாங்கள் அவருடைய சொற்களில் இருந்த பொருட்செறிவைப் புரிந்து கொள்ளவில்லை.
அவுரி விவசாயிகள் விசாரணைக் குழுவின் விசாரணை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வந்ததைக் கண்ட லெப்டினெட் கவர்னர் சர் எட்வர்டு கெயிட் தம்மை வந்து பார்க்குமாறு காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதினார்.
காந்தியடிகள் நேரில் சென்று அந்தக் கவர்னரைப் பார்த்தபோது, “விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை, அவர்களிடமிருந்து வெள்ளைக்காரக் குத்தகைதாரர்கள் பணம் பறித்து வந்தது சட்ட விரோதமானது என்றார். அவர்கள் வசூலித்த பணத்தின் ஒரு பகுதியைத் தோட்ட முதலாளிகள் விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று விசாரணைக்குழு அறிக்கை தந்துள்ளது உறுப்பினராக உள்ள உங்களுக்கும் தெரிந்த ஒன்றுதானே! எனவே, சட்டத்தின் மூலம் விவசாயிகளின் ‘தீன்கதியா’ முறையை ரத்துச் செய்து உத்திரவிட்டிருக்கிறேன்” என்றார்.
எந்தக் குறிக்கோளுக்காக காந்தியடிகளும் ராஜேந்திர பிரசாத்தும் அரும்பாடுபட்டு உழைத்தார்களோ, அந்த லட்சியம் விவசாயிகளது தீன்கதியா ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. தோட்ட முதலாளிகளின் பலம் அளவற்றது. விசாரணைக் குழு அறிக்கையையும் பொருட்படுத்தாமல் மசோதாவை வைராக்கியமாக எதிர்த்து வந்த போதும் கூட, லெட்டினன்ட் கவர்னர் சர்எட்வர்டு கெயிட் தனது சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி, காந்தியடிகளது போராட்டத்திற்கும், ராஜன்பாபு உழைப்புக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அது மட்டுமல்ல, ராஜன் பாபு விவசாயிகளது கஷ்டங்கள் அனைத்தையும் அறிந்தவர். ஆதலால், அவர்களது தேவைகள் என்னென்ன? நீக்கல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலைப் போட்டுக் காந்தியடிகள் மூலமாகக் கவர்னரிடம் கொடுத்து பரிந்துரைகளை எல்லாம் கவர்னர் நிறைவேற்றிக் கொடுத்ததால், ராஜன் பாபுவுக்கு சம்பரான் பகுதி விவசாயிகள் மத்தியில் செல்வாக்கும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து விட்டது.
ஒரு நூறாண்டுக் காலம் விவசாயிகளிடம் இருந்து வந்த ஆறில் ஒரு பங்கு நிலத்தில் அவுரி விவசாயம் பயிரிடும் கட்டாய ‘தீன்கதியா’ முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அத்துடன், தோட்ட முதலாளிகளின் கெடுபிடிக் கொடுமையும் ஆதிக்க ஆணவமுறையும் அழிக்கப்பட்டது. நசுக்கப்பட்டு நலிந்து கிடந்த விவசாயிகள், ராஜன் பாபுவின் அறிவுப் பிரச்சாரத்தால் அடிமைத்தனத்திலே இருந்து விடுபட்டு சுதந்தர மக்களானார்கள். அதற்குக் காரணம் காந்தி பெருமானின் அறப்போர்தான், சம்பரான் மக்களது சுதந்தரப் போர் உணர்வை தட்டி எழுப்பியது. இதைத்தான் பாபுவிடமும், மற்ற பீகாரிகளிடமும், “உங்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவில்லையா? அதற்கான பணிகளைத்தான் மக்களிடம் செய்து வருகிறேன்” என்று காந்தியடிகள் முன்பு ஒருமுறை குறிப்பிட்டதின் சொற்சுவையும் - பொருட்சுவையுமாகும் என்பதை அவர்கள் இந்த சம்பவத்திற்குப் பிறகு உணர்ந்து கொண்டார்கள். அதே நேரத்தில், அவுரிக் கறையை யாராலும் அழித்து விடவே முடியாது என்று மக்களிடம் ஆழப்பதிந்திருந்த மூடநம்பிக்கையும் பொய்யாகி விட்டதல்லவா?
இராஜன் பாபுவுக்கு சம்பரான் வெற்றிக்குப் பிறகு, பீகார் மாகாணம் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற அக்கறை மேலும் வலுத்தது. விவசாயிகளிடம் உள்ள அறியாமைகளைப் போக்கி அவர்களை அறிவு ஜீவிகளாக்க அரும்பாடுபட்டார்.
விவசாயிகள் தங்களது குழந்தைகளை, அவர்களது விருப்பம்போல கண்டபடி அலைய விட்டு வந்ததையும், காலையிலே இருந்து இரவு வரையில் நாளொன்றுக்கு இரண்டு செப்புக் காசுக்காக அவுரித் தோட்டங்களில்மாடு போல உழைத்து வந்த போக்கையும் தடுத்து நிறுத்திட விவசாயப் பெற்றோர் சங்கத்தை உருவாக்கி அவர்களைத் திருத்தி வந்தார்.
அந்த நாட்களில் மூத்த ஓர் ஆண் விவசாயிக்கு இரண்டனாவுக்கு மேல் கூலி இல்லை. எந்த ஒரு விவசாயி அல்லது தொழிலாளி, நான்கணா சம்பாத்யத்தை செய்து விடுவானேயானால், அவன்தான் அதிர்ஷ்டக்காரன்.
காந்தியடிகள் திட்டமிட்டிருந்தபடி அவரை அழைத்து வந்து ஆறு கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகளை ராஜன்பாபு துவக்கி வைத்தார். அப்போது அதற்கான ஆரம்ப ஆசிரியர்கள் அங்கே கிடைப்பது அருமையாக இருந்தது. ஊர்ப் பெரிய மனிதர்களை ராஜன் பாபு சந்தித்து, பள்ளி ஆசான்கள் தங்க இடமும், உணவுத் தானியங்களும் தந்தால்போதுமானது என்று ஒப்புதல் பெற்றார்.
காந்தியடிகளது கருத்துப்படி, பள்ளி ஆசான்கள் பாடங்களைப் போதிப்பதை விட, ஒழுக்கத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கேற்றவாறு அவர்களது இலக்கிய ஞானத்தை விட குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஒழுக்கம் ஓம்பும் ஞானத்துக்கான ஆசிரியர்களை ராஜன் பாபு தேடியும் கிடைக்கவில்லை. அதனால், காந்தியடிகளது சம்மதத்தின் பேரில் பத்திரிகையில் பொதுக் கோரிக்கை என்ற பெயரில் ஓர் அறிக்கை விடுத்தார்.
அந்த அறிக்கையைக் கண்டவர்களில் சிலர், “அன்னயாவினும் புண்ணியம் கோடி; ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதி வாக்குக்கேற்றவாறு, பாபா சாகிப் சோமன், புண்டலீகர் என்ற இருவரை கங்காராவ் தேஷ் பாண்டே என்ற காந்தியடிகளது நண்பர் அழைத்துக் கொண்டு ராஜன்பாபுவிடம் வந்தார். பம்பாயிலே இருந்து அவந்திகாபாய் கோகலே என்ற அம்மையார் ஒருவரும் புனாவிலே இருந்து ஆனந்திபாய் வைஷம்பாயன், சோட்டலால், தேவதாஸ், சுரேந்திரநாத் ஆகியோரும் வந்தனர். இவர்களை வைத்துப் பாபு ஆரம்பப் பள்ளிகளை மிகவும் மொழிச் சிக்கல் கஷ்டங்களுடன் நடத்தி வந்தார். இந்தப் பெண் ஆசிரியைகளால் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன என்பதை விவசாயப் பெண்கள் தெரிந்து புரிந்து கொள்ளச் செய்யுமாறு போதிக்க வேண்டும் என்றார் பாபு.
ராஜன்பாபு பீகார் மக்களுக்கு கல்வியைப் போதிப்பதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு கிராமமாகச் சென்று அவரவர்களுக்குத் தேவையான கிராம சுகாதார முறைகளையும் உணர வழிகாட்டினார். எங்கெங்கே ஏழை மக்களிடம் சுகாதாரச் சீர்கேடுகள் நிறைந்திருந்தனவோ, அசிங்க சந்து முனைகளாக இருந்தாலும் சரி, அங்கங்கே எல்லாம் சென்று, பொது மக்களது உதவியாலும், அரசு அதிகாரிகள் உதவியாலும் சுகாதாரம் வழங்கப் பாடுபட்டார்.
குறிப்பாக, கிணறுகளைச் சுற்றிக் குழம்பிக் கிடக்கும் சேறு, நாற்றங்களை நீக்குவதிலும் கொசு மருந்துகளை அடிக்கச் செய்வதிலும், பல வகையான தோல் நோய்களால் அவதிப்பட்ட வயோதிகர்களைக் குணப்படுத்துவதிலும் சுருங்கச்சொல்வதானால், மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்வதற்கான பழக்க வழக்கங்களையும் மக்களுக்குப் போதித்து, அதிகாரிகள் வரமுடியாத இடங்களில் மக்களைக் கொண்டே பணியாற்றிடும் பழக்கத்தை உருவாக்கியவர் ராஜேந்திர பிரசாத்!
இந்த வேலைகளுக்குரிய மருத்துவர்கள், செவிலியர் தேவையை, இந்தியர் ஊழியர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் பெற்றார். பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர், பொது நண்பர்கள் எனப்படுவோர் நாள்தோறும் கூடி அந்தந்த இடங்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சுகாதார நல்வழிகளைச் செய்து வரும் நிலையை உருவாக்கினார் பாபு.
கிராம மக்களது கஷ்டங்களை நீக்கி, அவர்களது வாழ்க்கையை உயர்த்த வேண்டுமானால், தொண்டர்களிடம் சத்தியம் வேண்டும். அவர்களிடம் அச்சம் அறவே இருக்கக் கூடாது. வறுமை ஒழிப்பு நோன்பை ஒவ்வொரு மாகாணத் தலைவர்களும் உணர்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உயர்ந்த லட்சியத்தைத்தான் காந்தியடிகளது ஏழ்மை ஒழிப்பு, சம்பரான் சேவை நமக்கு உணர்த்தியது என்று ராஜன்பாபு மக்கள் இடையே பேசும் போதெல்லாம் சுட்டிக் காட்டி, அதற்காக அயராது உழைத்தார்.
“நானும், எனது நண்பர்களும் பாட்னாவிலே இருந்து சம்பரான் என்ற நகருக்குச் சென்ற போது, எங்களில் பலருக்கு பல வேலைக்காரர்கள் இருந்தார்கள். எங்களுக்குரிய உணவுகளைத் தயாரிக்க சில சமையற்காரர்களும் உடனிருந்தார்கள். சில மாதங்கள் சென்ற பின்பு, நாங்கள் வேலைக்காரர்களைக் குறைத்துக் கொண்டோம். பிறகு, ஒரே ஒரு பணியாளனை வைத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் நாமே செய்து வந்தோம்.”
“எங்களில் பலர் அன்று வரை கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீரையும் எடுத்ததில்லை. எங்களது உடைகளைத் துவைத்துக் கொண்டதும் இல்லை. சுருக்கமாகக் கூறினால் ஒரு சிறு வேலையையும் நாங்கள் செய்தது கிடையாது. அவரவர்களுக்கு அவரவர் கைகளே உதவி என்ற காந்தீயப்படி நாங்கள் நடந்து வந்தோம்” என்று ராஜன் பாபு உழவர்கள் இடையே பேசும் போது குறிப்பிடுவார்.
இதற்கெல்லாம் காரணம், சம்பரானுக்கு மகாத்மா அறப்போர் செய்ய வந்து தங்கிய போது பழகியவைதான். எல்லா வேலைக்காரர்களையும் நாங்கள் வேலையிலே இருந்து அறவே நிறுத்திவிட்டோம். அதன் எதிரொலி என்ன தெரியுமா?
நாங்களே கிணற்றிலே இருந்து குடங்குடமாகத் தண்ணீரைச் சேந்திச் சேகரித்தோம். அவரவர் துணிகளை அவரவர்களே துவைத்துக் கொண்டார்கள். என்னென்ன வேலைகள் எங்களுக்கு உண்டோ அவற்றை நாங்களே பிறரது குறுக்கீடுகள் இல்லாமலேயே செய்து கொண்டோம்!
நாங்கள் தங்கியிருந்த அறைகளை நாங்களே பெருக்கிச் சுத்தம் செய்தோம். உணவு தயாரித்து உண்பதற்கு முன்பும் பின்பும் சமையல் பாத்திரங்களைத் துலக்கி சுத்தம் செய்து கொண்டோம். உணவு தயாரிப்பதற்குரிய பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கி வந்தோம். ரயிலுக்குப் போனால், எங்களது மூட்டைகளை நாங்களே சுமந்து கொண்டு போனோம், எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்த பழக்கம் எங்களை விட்டே அகன்று, எங்களுக்கு நாங்களே தக்க உதவிகளைச் செய்து கொண்டோம். இதனால், எங்களது உடல் சுறுசுறுப்பும் ஒருவிதத் துறுதுறுப்பும் பெற்றது.
சமையல்காரர்களை அவரவர் வேலையை விட்டு விட்டுப் போக சொன்னதும், காந்திஜீயின் மனைவியான கஸ்தூரி அம்மையார் எங்களைச் சேர்ந்த எல்லோருக்காகவும் உணவு தயாரித்துத் தாயன்புடன் எங்களுக்கு உணவு பரிமாறினார். மகாத்மா காந்தியை நாங்கள் சந்திப்பதற்கு முன்பு, ரயிலில் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதைக் கேவலமாகவும், இழிவாகவும் நினைத்தோம். அவரைச் சந்தித்ததற்குப் பிறகு இந்த மனப்போக்கு அடியோடு மாறிவிட்டது.
காந்தியடிகள் அணிகின்ற எளிய ஆடையும், அவர் மக்களுக்காக எவ்விதத் தன்னலமும் இல்லாமல் செய்து வருகின்ற தியாக மனப்பான்மையினையும், பார்த்து நாங்கள் போதிய உணர்வுகளைப் பெற்றோம். அவரது அக்கவர்ச்சி, பழகுந்தன்மை, பொதுநலநோக்கு எங்களது மனதைக் கவர்ந்தன. அந்தக் கவர்ச்சி எங்களது அறிவுக்கான மறுமலர்ச்சியை ஊட்டியது. அதனால், அவரைப் பின்பற்றத் தொடங்கினோம்.
8. பீகார் காந்தி ராஜன் பாபு
முதல் உலகப்போர் முடிந்தது! பிரிட்டிஷ் ஆட்சி பல தேசத் தலைவர்களைப் போர்க்காலத்தில் சிறையில் பூட்டியது. போர் முடிந்த பின்னர், இந்தியத் தேசத் தலைவர்களை சுதந்திர லட்சியத்திற்காக இயங்கவிடாமல் அவர்களை முடக்கி வைக்க வேண்டுமென்று எண்ணியதால் பிரிட்டிஷ் அரசு, ‘ரெளலட்’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டம் ஆட்சி முறைக்கு வந்தால், இந்திய நாடு சிறைக கூடு ஆகிவிடும் என்பதால், இமயம் முதல் குமரி வரையுள்ள மக்கள் அனைவரும் மூர்க்கத்தனமாக அதை எதிர்த்தார்கள்.
தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்றத்தில் ரெளலட் சட்டத்தை எதிர்த்தவர்கள். தங்களது பதவிகளைத் துக்கி எறிந்தார்கள். நாடெங்கும் இக்கிளர்ச்சி நடந்து கொண்டே இருக்கும் போது வேறு சில உறுப்பினர்கள் எழுந்து சட்டத்தைக் காரசாரமாக எதிர்த்துக் கண்டனம் செய்தார்கள்.
இந்திய சட்ட சபைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விவரத்தைக் கண்டிட காந்தியடிகள் அந்த சட்ட சபைக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அதுதான் அவரது வாழ்நாளில் அவர் பார்த்த முதல் சட்டசபைக் கூட்டமும் - கடைசிக் கூட்டமும் ஆகும். ரெளலட் மசோதா எவ்வாறு சட்ட சபையில் மதிக்கப்படுகிறது. அதன் ஆதரவு - எதிர்ப்புகளது நிலையென்ன. நாடு எப்படி அந்த மசோதாவை மதிப்பீடு செய்கின்றது என்பன பற்றியெல்லாம் நேரில் பார்ப்பதற்காகவே காந்தியடிகள் சென்றார்.
சென்னையைச் சேர்ந்த சில்வர் டங் சீனிவாச சாஸ்திரிகள், ரெளலட் மசோதாவை எதிர்த்துப் புயல் போல கடுமையாகக் கண்டனம் செய்து கொண்டிருந்தார். ஆவேசமாக அவர் பேசிக் கொண்டிருந்ததையும், அவரது ஆங்கில அனந்தெறிப்பு வாதத்தையும் கண்டு காந்தியார் பிரமித்தபடியே அமர்ந்திருந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை நசுக்குவதற்காகக் கொண்டு வந்த சட்டம்தான் ரெளலட் சட்டம். இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது ஏன்? அதன் உள் நோக்கம் என்ன? இந்த சட்டம் மூலமாக யாரானாலும் சரி, எதற்கானாலும் சரி, எப்போதானாலும் சரி, காரணம் சொல்லாமலே கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம். சுட்டுத் தள்ளலாம். இந்திய சட்டமன்றக் கவுன்சிலின் அனுமதி பெற்றாலே இந்தக் கொடுமைகளை நடத்தலாம். சுதந்திரம், விடுதலை என்பனவற்றைப் பேசவிடாமல் ‘நா’க்கறுக்கும் சட்டம்தான் இச்சட்டம் என்பதை மறுக்க முடியுமா?
சட்டத் தயாரிப்புக் குழுத் தலைவரான ரெளலட் துரையின் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், அந்தச் சட்டம் செயற்படுத்தப்பட்டால், நாடு சுடுகாடாகும் என்பதை அறிந்து அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள். சாதாரண மக்கள் பயப்படுகிறார்கள். இந்த மசோதா சட்டமானால், அதன் கொடுமைகளை மிக மோசமான விளைவுகளை நாட்டில் ஏற்படுத்துமானால், அதன் பொறுப்பை பிரிட்டிஷ் ஆட்சிதான் ஏற்றாக வேண்டும் என்று ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரியார் அனல் தெறிக்க எச்சரித்துப் பேசிய ஆங்கில உரையைக் கண்டு காந்தி தனது புருவங்களை மேலேற்றி பாராட்டி வியந்தார்.
அதே நேரத்தில் சீநிவாச சாஸ்திரியின் கனல் தெறிக்கும் பேச்சைக் கேட்ட இந்திய வைஸ்யராய் கண்கொட்டாமல் அவரைப் பார்த்தபடியே பிரமித்துப் போய் உட்கார்ந்து விட்டார். அவருடைய உரையில் உண்மையும் உணர்ச்சியும் உந்தி உந்தி வந்ததைக் காந்தியடிகளும் கேட்டு உடல்புல்லரித்துப் போனர்.
தில்லி சட்மன்ற பேச்சுக்கள் நாட்டிலே ஓர் உணர்ச்சியை உருவாக்கி விட்டன. இதனால் நாடெங்கும் கிளர்ச்சி கட்டுக்கு மீறி நடந்தது. மக்களும் ஆங்காங்கே ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஊர்வலமும், கண்டனமும், பேரணியும் நடத்தினார்கள்.
மகாத்மா, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட, நாடெங்கும் மக்களது மனோநிலைகளை அறிய சுற்றுப் பிரயாணம் செய்தார். அங்கே நடந்த பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கிளர்ச்சிகளைச் செய்யும் தளபதிகளை ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்ந்தெடுத்தார்.
வங்காளத்தில் சித்த ரஞ்சன்தாஸ் எனப்படும் சி.ஆர்.தாஸ், சென்னையில் ராஜாஜி, குஜராத்தில் வல்லபாய் பட்டேல், உத்தர பிரதேசத்தில் ஜவகர்லால் நேரு, பீகாரில் ராஜேந்திர பிரசாத் போன்றவர்களைப் பேராட்டத் தளபதியாகத் தேர்வு செய்தார். அறப்போர் இயக்கம் தொடங்கு முன்பு, சத்யாக்ரக சபையை அமைத்தார். அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த சபையில் ராஜேந்திர பிரசாத்தும் ஓர் உறுப்பினர்.
இராஜன் பாபு அறப்போருக்கு பீகார் முனையில் தலைமை ஏற்றார். மக்காணம் முழுவதும் பாபு சுற்றுப் பயணம் செய்து படைக்கு ஆள்திரட்டுவதைப் போல சத்யாக்ரகத்துக்கு ஆள் சேர்த்தார்! காந்தியின் திட்டம், அதன் தத்துவம், ரெளலட் கொடுமைகள் என்பனவற்றைப் பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார் பாபு. பிரச்சாரம் மிக வேகமாக மாகாணம் முழுவதுமாக எதிரொலித்தது. அதனால், ராஜன் பாபுவை பீகார் காந்தி என்று மக்கள் அன்போடு அழைத்தார்கள்.
இந்த இயக்கத்தில் பங்கேற்ற பிறகு, ராஜன் பாபுவுக்குத் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை என்பதே இல்லாமல் போனது. முழு நேரத்தையும் ராஜன் பாபு நாட்டுப் பணியிலேயே செலவிட்டார்.
இந்தக் கிளர்ச்சிக்கு பொதுமக்கள் பேராதரவு தந்தது மட்டுமன்று; இந்த அடக்குமுறை பஞ்சாப் மாநிலத்தில் ராட்சத உருவம் பெற்றது. ரெளலட் சட்டத்தை எதிர்க்க அல்லது கடுமையாகக் கண்டிக்க, பஞ்சாப் அமிர்தசரசில், ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மேல் ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயன் குண்டுகள் இருந்த வரையில் சுடச் சொன்னான். அதனால்,போலீகம், ராணுவமும் சுட்டன. ஏறக்குறைய ஆயிரக்கணக்கான் மக்கள், சுவர்களைத் தாண்டி ஓடும் போது சுடப்பட்டதால் சுவர் மீதே சாய்ந்து பிணமானார்கள். எத்தனையோ ஆயிரம் பேர் படுகாயமடைந்தார்கள்.
கற்பழிக்கப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட மாதரசிகள் எண்ணற்றவர்கள் ஆவர். இவற்றை எல்லாம் கண்ட மக்கள், நாட்டில் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி விட்டார்கள்.
இதற்கு இடையில், ஐரோப்பியப் போரின் விளைவாகத் துருக்கி நாடும் துண்டாடப்பட்டது. இதை எதிர்த்து முஸ்லீம்கள் கிலாபத் இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். மகாத்மா காந்தியும், ராஜன் பாபு போன்ற முக்கியத் தலைவர்களும், அதாவது பொது மக்களது சக்தியிலே இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட மற்ற தலைவர்களும் இதற்குத் தங்கள் ஆதரவைத் தந்தார்கள். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக அறப்போர் இயக்கத்தில் பங்கு பெற்றனர்.
கிலாபத் மாநாடு 1920 ஆம் ஆண்டில், பாட்னா நகரில் ராஜன் பாபு தலைமையில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. அவருடைய மாநாட்டுத் தலைமையுரை, பீகார் மக்கள் மனதிற்கு மகிழ்ச்சி தந்தது. இதனால் அறப்போர் இயக்கம் மேலும் பலமடைந்து வளர்ந்தது.
அகில இந்திய காங்கிரஸ் மாநாடு 1920-ஆம் ஆண்டு நாகபுரி நகரில் கூடியது. இந்த மாநாடு காந்தியடிகளாரின் ஒத்துழையாமை என்ற அறப்போரை ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொண்டது.
பட்டம் - பதவிகளையும், கல்லூரிகள், வழக்கு மன்றங்கள் முதலியவைகளையும், துறக்க வேண்டும், பகிஷ்கரிக்க வேண்டும். அதற்கான சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் சட்டங்களை மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற உணர்வை எல்லாரும் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் நாம், அரசாங்கத்துடன் ஒத்துழையாமல் இருக்கின்றோம் என்பதே காந்தியடிகளின் திட்டமாகும்.
இராஜேந்திர பிரசாத், காங்கிரஸ் தீர்மானத்துக்கு இணங்கி வக்கீல் தொழிலைக் கை விட்டார். ஒவ்வொரு மாதத்துக்கும் நான்கு அல்லது ஐந்து ஆயிரம் ரூபாய் வருவாயை அவரது வழக்குரைஞர் தொழில் தந்து கொண்டிருந்தது. ஆனால், அவ்வளவிலும், ராஜேந்திர பிரசாத் தனது எதிர்க்கால குடும்ப வாழ்க்கைக்காக எதையும் சேமித்து வைக்கவில்லை. ஆனாலும்,தன்னிடமுள்ள செல்வத்தை ஏழை மக்களுக்காக வாரித் தந்தார் என்பது சத்தியமாகும். எனவே, ராஜன் பாபு வழக்குரைஞர் தொழிலை வெறுத்துக் கைவிட்ட போது, அவருடைய வங்கி சேமிப்புக் கணக்கில் இருபத்தைந்தே ரூபாய் மட்டுமே இருந்தது என்பதே உண்மை.
இங்கிலாந்து நாட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு 1921 ஆம் ஆண்டில் வந்தார். ஆனால் காந்தியடிகள் பகிரங்கமாக அவரது வருகையை வெறுத்து, பகிஷ்கரித்தார். இளவரசர் எங்கெங்கு வருகை தந்தாரோ, அங்கங்கே எல்லாம் கருப்புக் கொடிகள் இளவரசரை வரவேற்றன. ஆலைத் தொழிலாளர்கள் பல்வகைத் தொழிலிலே பணியாற்றுபவர்கள் ஒன்று கூடி கண்டன ஊர்வலங்களை நடத்தினார்கள், இதனால், பிரிட்டிஷபு அரசு ஆத்திரம் கொண்டது. தொண்டர்களைக் கொடுமை செய்ய முற்பட்டது.
காங்கிரஸ் அறப்போர் தொண்டர்களைச் சேர்க்க அரும்பாடுபட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ராஜன் பாபுவின் பொது வாழ்க்கை நாணயத்தை நம்பி தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவகர்லால் நேருவின் தந்தையாரான பண்டித மோதிலால் நேரு போன்ற எண்ணற்றோர், தங்களைத் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். அரசு அவர்களைக் காராக்கிரகத்தில் அடைத்துக் கொடுமைகளைச் செய்தது. ஆனால், ராஜன் பாபுவை மட்டும் கைது செய்திட பீகார் அரசுக்கு துணிவு வரவில்லை.
ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் வெள்ளையராட்சியால் கைது செய்யப்பட்டு விட்டதல், காங்கிரஸ் போராட்ட இயக்கம் பலவீனமானது. மக்களும் சோர்வடைந்து விட்டார்கள். மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள், சட்டமன்றங்களிலே கலந்து கொண்டு, பிரிட்டிஷார் கொடுமைகளை எதிர்த்துப் போராடிட முடிவு செய்தார்கள். இவர்கள் கருத்து மகாத்மா காந்தி கருத்துக்கு முரணானது.
இராஜேந்திர பிரசாத், ராஜாஜி போன்றவர்களை ‘மாறுதல் வேண்டாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் முழுக்க முழுக்க காந்தியடிகளது கருத்தையே பின்பற்றினார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய நிர்மாண வேலைகளை மட்டுமே செய்தார்களே ஒழிய சட்டமன்றப் போராட்டங்களைச் செய்யவில்லை.
காங்கிரஸ் தொண்டர்கள் கதர் நூல்களைத் தயாரிப்பதும், கதராடைகளை உருவாக்குவதும் அதற்கான பயன்பாடுகளை மக்களிடம் விளக்கிக் கூறி பொருளாதாரத்தைப் பெருக்கும், கதர் பிரச்சாரத்தையும் செய்தார்கள். ராஜேந்திர பிரசாத் இந்தப் பணியை தொண்டர்கள் இடையே தீவிரப்படுத்தினார். பாபுவும் இறுதிவரை ஒவ்வொரு நாளும் நூல் நூற்று வந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றப் பிறகும் கூட, கதர் பணிகளைச் செய்யும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை.
இதே பணிகளை சுமார் எட்டு ஆண்டுகள் ராஜன் பாபு தொடர்ந்து செய்து வந்தார். அதைக் காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளிலே ஒன்றென எண்ணிச் செய்தார். 1928-ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் போராட்டச் சங்கு முழங்கியது.
பிரிட்டிஷ் அரசு நியமித்த சைமன் கமிஷனை காங்கிரசும் நாடும் பகிஷ்காரம் செய்தது. 1930 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையில் லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. இந்த மாநாட்டில் தான் இந்திய நாட்டுக்கு முழு சுதந்திரம் தேவையென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து உப்புச் சத்தியாக்கிரகப் போரை ஆரம்பித்தார். ராஜேந்திர பிரசாத் இந்தப் போராட்டத்தில் தீவிரமாய் கலந்து கொண்டார். 1930- ஆம் ஆண்டில் ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார்.
அதற்குப் பிறகு, 1932 ஆம் ஆண்டில் ராஜன் பாபு மீண்டும் கைது செய்யப்பட்டு, மறுபடியும் ஆறுமாதம் தண்டனையை அடைந்தார். இத்தகையவர், இரண்டு முறை ஆறாறு மாதம் அடுத்தடுத்துச் சிறை சென்றதால், அவர் காசநோய்வாய் பட்டார். பிறகு, நாளாவட்டத்தில் அந்த நோய் வெளிப்படையாகவே அவரை துன்புறுத்தியது. சிறை அதிகாரிகள் அவருக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சையை அளித்துக் கொண்டே இருந்தார்கள்.
ராஜன் பாபு, மற்றுமோர் முறை போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் பதினைந்து மாதம் சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கொடுமையான சிறைத் தொல்லைகளால் அவருள்ளே இருந்த காசநோய் அதிகமாக வருத்தியது. அதற்காக அவர் தளரவில்லை. அவர் சிறை புகுந்ததைக் கண்ட பீகார் மக்கள் ஆயிரக்கணக்காக அவரைப் பின்பற்றி சிறை சென்றார்கள்.
சத்தியாக்கிரக இயக்கத்தை நசுக்க முனைந்த பிரிட்டிஷ் அவசரச் சட்டத்தால், பாபு நடத்தி வந்த ‘தேசம்’ என்ற ஹிந்திப் பத்திரிகையும் வெளிவராமல் தடை செய்யப்பட்டது. இந்தி மொழியில் அவருக்கிருந்த புலமை காரணமாக அவர் பல நூல்களை எழுதியுள்ளார். ‘சம்பரான் சத்தியாக்கிரகம் காந்திஜீ மகத்துவம்’, ‘காந்தி தத்துவம்’ முதலிய நூல்கள் அவர் எழுதியுள்ளவைகளில் மிகவும் சிறப்புடையவை. அவர் ‘லா வீக்லி’ என்ற சட்டப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார். பீகாரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சர்ச் லைட்’ என்ற இங்கிலீஷ் பத்திரிகையின் நிர்வாகியாகவும் இருந்தார்.
இராஜன் பாபு சிறையிலே இருந்த போது 1934 - ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள், பீகார் மாகாணத்தைக் கொடிய பூகம்பம் தாக்கியது. பூமி பிளந்தது. மாளிகைகளும், வீடுகளும், கோபுரங்களும், தொழிற்சாலைகளும் மண்ணுக்குள் மூழ்கின. சில இடங்களில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்தது. நகரின் முக்கிய பகுதிகள் எல்லாம் மணற்காடாகக் காட்சியளித்தன. மக்களும், கால்நடைகளும் ஏராளமாக மாண்டு மறைந்து, எங்கும் பிணவாடைகள் வீசின. வீடிழந்தோர், உறவிழந்தோர். பொருள் பறி கொடுத்தோரின் ஒலங்களால் பீகார் மாநிலம் பரிதாபமாகக் காட்சியளித்தது.
இந்தக் கோரக் காட்சியைக் கண்ட காந்தியடிகள் ‘தீவினைப் பயன்தான் இது’ என்று வருந்தினார். ‘இயற்கையின் சீற்ற லீலைகள்’ என்றார் கவியரசர் தாகூர். அப்போது ராஜன் பாபு காச நோய் கொடுமை காரணமாக பாட்னா மருத்துவமனையிலே சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பூகம்பம் ஏற்பட்ட இரண்டு நாள் கழித்து அவர் மருத்துவ மனையிலே இருந்து ஓரளவு உடல் நலத்தோடு வெளியே வந்தார்.
பீகார் மாகாணம் முழுவதும் அரைகுறை உடல் நலத்தோடு சுற்றிச் சுற்றி வந்து மக்களின் பரிதாப அழிவுகளைக் கண்டு பதறினார் மனம் தடுமாறினார்! தனது உடல்நலனையும் பொருட்படுத்தாமல், பூகம்ப நிவாரண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
பூகம்ப அழிவால் வட பீகார் சின்னாபின்னமானதற்கும், லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல் இழந்து அனாதைகளாக்கப் பட்டதற்கும் எப்படி நிதி திரட்டலாம் என்று அவர் திட்டமிட்டார். வீடிழந்தோர் தங்குவதற்கும், உணவும், ஆடை, மருத்துவ வசதிகளும் கிடைக்க, யார் யாரை அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் சென்று பார்த்து வேண்டிய வசதிகளைத் திரட்டினார்.
பூகம்ப அழிவு விவரங்களைக் கணக்கிட்டு, தேவைகளையும் கணக்கிட்டு, இந்த நேரத்தில் எல்லா நாடுகளும் பீகார் அழிவுகளுக்கு உடனடியாக நிதியுதவி, பொருள் உதவி, தானிய வகைகள் உதவி ஆகியவைகளைச் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் எல்லாவற்றுக்கும் அறிக்கைகளை எழுதி வெளியிட்டார். பத்திரிக்கைகள் அவரது அறிக்கைகளைப் பரபரப்புடன் வெளியிட்டு உதவின. இந்த நிலைகளை எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் மகாசபைக்கும், காந்தியடிகளாருக்கும் நேரிலும், பத்திரிக்கை வாயிலாகவும், கடிதங்கள் மூல்மாகவும் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்தார்.
பூகம்பம் அழிவுகளைப் பற்றிக் கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிப்பதற்காக ஜவகர்லால் நேருவும் வேறு சிலரும் பாட்னா நகருக்கு வந்தார்கள். அப்போதுதான் ராஜன் பாபு சிறையிலே இருந்து விடுதலையாகி வந்திருந்தார். ‘நாங்கள் கொடுத்த தந்திகள், பிற விவரங்கள் எதுவும் ராஜன்பாபுவிடம் போய் சேரவில்லை. காரணம் பூகம்ப அழிவுச் சக்திகளால் ஏற்பட்ட சேத விளைவுகள் தான். எனவே ராஜன்பாபுவுடன் வெட்ட வெளியிலேயே தங்கினோம்’ என்கிறார்.நேரு தனது கயசரிதையில்.
பிரிட்டிஷ் ஆட்சி இடிந்து விழுந்த கல், மண்ணை நீக்கிட எந்த வேலையையும் செய்யவில்லை. சவங்கள் அப்படியப்படியே நாறிக் கிடந்தன. பிரிட்டிஷ் அரசு எந்த உதவிகளையும் பீகார் மக்களுக்கு மனிதாபிமானத்துடன் செய்ய முன் வரவில்லை.
வெள்ளைக்காரர்களின் இந்த அரக்க மனோபாவத்தை விளக்கி ராஜன்பாபு இந்திய மக்களுக்கு அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்ததின் பயனால், நாடெங்கும் இருந்து நன்கொடைகள் வந்து குவிந்தன. ஒவ்வொரு மாகாணத்திலே இருந்தும் தொண்டர் படையினர் வந்து குவிந்தார்கள். லட்சக் கணக்கில் பணம் நிதியாக வந்தபடியே இருந்தது. வந்து சேர்ந்த அனைத்தையும் ஒழுங்காகப் பிரித்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய்ச் சேர ராஜன் பாபுவும் அவரது குழுவினரும் தளராமல் வேலை செய்தார்கள். இந்த மாதிரியான பூகம்ப நிவாரண வேலை இரவும் பகலுமாக ஓராண்டு காலம் வரை நடந்து வந்தது. மக்களும் வேண்டிய உதவிகளைப் பெற்று வந்தார்கள்.
இவ்வாறு, முப்பது லட்சம் ரூபாய், அவரது வேண்டுகோளை ஏற்று மனிதாபிமானிகள் உடனுக்குடன் அனுப்பி வைத்தார்கள். இந்த நிவாரண வேலைகளுக்காக ராஜன்பாபு மக்களைத் திரட்டும் முறைகளையும், தனது நோயையும் உடல் உருக்குலைப்பையும் கண்டு சோர்ந்து விடாமல் செயல்புரியும் தன்மையினையும் கண்டு, நாடே ராஜன் பாபுவை இரு கை கூப்பி வணங்கி வாழ்த்தியது.
எந்த வித உதவியையும் பிரிட்டிஷ் ஆட்சி, பீகார் மக்களுக்கு செய்யாமல் இருந்தும் கூட, தனியொரு மனிதன் இவ்வளவு தீவிரமாகப் பூகம்ப நிவாரண வேலைகளைச் செய்து வருவதைக் கண்டு, அதே அரசு ராஜன் பாபு பணிகளைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியது மட்டுமல் வலிய வந்து வேண்டிய உதவிகளைச் செய்து ஆட்சிக்கு நற்பெயரைத் தேடிக் கொண்டது.
பூகம்ப நிவாரணப் பணிகளைப் பொறுத்த வரையில் ராஜேந்திர பிரசாத் கட்சி பேதம் ஏதும் காட்டாமல், எல்லாரிடமிருந்தும் எல்லா உதவிகளையும் ஏற்று, பீகார் மக்களுக்குத் தெய்வம் போல நின்று கடமையாற்றினார்.
9. ஐரோப்பிய நாடுகளில்
காந்தீய தத்துவப் பிரசாரம்!
காந்தியடிகளாரின் ஒத்துழையாமைப் போர் ஆரம்பமானவுடனே காங்கிரஸ் கட்சியின் கட்டளைக்குட்பட்டு ராஜன்பாபு தனது வழக்குரைஞர் பணியைத் தூக்கி எறிந்தார். அப்போது, ஒரே ஒரு வழக்குக்கு மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று அனுமதியைப் பெற்றிருந்தார் ராஜன் பாபு!
அது லண்டன் மாநகரிலே உள்ள ப்ரிவி கவுன்சிலுக்குச் சென்று வழக்காட வேண்டிய ஒரு பெரு வழக்கு. இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சென்று அந்த வழக்கை வாதாடாவிட்டால், வழக்காளருக்கு பெருத்த பண நஷ்டமும், கெளரவக் குறைவும் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தைப் பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டி ராஜன்பாபு அனுமதி பெற்றிருந்தார். இதுபோன்ற வேறொரு வழக்கை நடத்திட பண்டித மோதிலால் நேருவுக்கு அனுமதித்துள்ளதையும் ராஜேந்திர பிரசாத் ஆதாரம் காட்டி தனது வழக்குக்குரிய அரசு அனுமதியைப் பெற்றிருந்தார்.
இராஜேந்திர பிரசாத்துக்கு அனுமதி அளித்த வழக்கு 1928- ஆம் ஆண்டில் ப்ரீவி கவுன்சில் முன்பு விசாரணைக்காக வந்தது. அவர் அதற்காக லண்டன் மாநகர் சென்றார். அங்கே இருந்த வழக்குரைஞருக்கு வாதாடுவதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தார்.
அந்த வழக்கில் ராஜன் பாபுவிடம் நியாயம் இருப்பதாக எண்ணிய நீதிமன்றம், அவர் வழக்கு வெற்றி பெறும் நிலையில் தீர்ப்பளித்தது. வந்த வேலை முடிந்த ஆர்வத்தால், ராஜேந்திர பிரசாத் இங்கிலாந்து நாடு முழுவதுமாகச் சென்று சுற்றிப் பார்த்தார்.
எங்கெங்கு பாபு பயணம் செய்தாரோ, அந்தந்த இடங்களிலே எல்லாம் காந்தீய தத்துவங்களின் மேன்மைகளை எடுத்துரைத்தார். இடையிடையே இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் கேட்டுப் போராடுகிறோம் என்ற காரண, காரியங்களை விரிவாகவும், விளக்கமாகவும் சொற்பொழிவாற்றி அங்குள்ள ராஜ தந்திரிகளுக்கும், கல்விமான்களுக்கும் பொதுமக்களுக்கும் புரியும்படி இந்திய நிலையை எடுத்துரைத்தார்.
இங்கிலாந்து நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்ட ராஜேந்திர பிரசாத் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். அங்கே காந்தியடிகள் கொள்கைகள் மீதும், அவரது தத்துவங்கள் மேலும் தனிப்பட்டதோர் பற்றுக் கொண்ட அறிஞர் ரோமேன் ரோலந் என்பவரைச் சந்தித்து, இருவரும் நீண்ட நேரம் அளவளாவி மகிழ்ந்தார்கள். காந்தியடிகளது மெய்ப் பொருளை உண்மையாகவே பின்பற்றும் ஒரு காங்கிரஸ் விசுவாசி ராஜன் பாபு என்பதை அவர் உணர்ந்தார். அதனால், அவரை உளமார வரவேற்று தனது வீட்டில் விருந்துபசாரம் நடத்தி இரண்டொரு நாட்கள் தங்கவும் வைத்தார்.
அந்த நேரத்தில், அகில உலக இளைஞர்கள் மாநாடு ஒன்று பிரான்சு நாட்டிலுள்ள பாரிஸ் நகரில் நடந்தது. அந்த மாநாட்டிற்கு ராஜேந்திர பிரசாத் சிறப்பு அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டு, காந்தீய தத்துவங்களின் அடிப்படைகளை விளக்கிப் பேசினார்.
பாரிஸ் மாநாடு முடிந்த பின்பு, ரோமன் ரோலந்து அறிஞரிடம் பிரியாவிடை பெற்று, ஆஸ்திரியா என்ற நாட்டின் தலைநகரமான வீயன்னா நகருக்கு அவர் சென்றார். அங்கே நடந்த யுத்த எதிர்ப் மாநாடு ஒன்றில் சிறப்பு அழைப்பின் பேரில் வரவேற்கப்பட்டார்.
அந்த ‘யுத்த எதிர்ப்பு மாநாட்டுக்கு’ உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் சமாதானவாதியான பென்னர் பிராக்வே தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் ராஜன் பாபுவும் கலந்து கொண்டு பேசும் போது,
“அன்பால்தான் உலகத்தில் வாழ முடியும். அகிம்சையால் தான் உலகம் உய்யும். முன்னேறும்” என்பதற்கான காந்திய தத்துவத்தின் சான்றுகளை எடுத்துக் காட்டி அற்புதமாகப் பேசினார்.
யுத்த எதிர்ப்பு மாநாட்டில் சிலர், கலகம் செய்வதற்கென்றே வந்திருந்தார்கள். அவர்கள் அப்போது கலகத்தை உருவாக்கி, மாநாட்டுத் தலைவர் பென்னர் பிராக்வேயையும், ராஜன் பாபுவையும் அடித்து நொறுக்கிப் படுகாயங்களை உண்டு பண்ணி விட்டார்கள். ராஜன் பாபு பட்ட அடி படுகாயங்களானதால், அந்த காயங்கள் ஆறுவதற்கு ஆறேழு வாரங்களாயின. அந்தக் காயங்கள் ஆறி உடல் நலம் தேறும்வரை ராஜேந்திர பிரசாத் வெளியே எங்கும் போக முடியாமல் படுத்த படுக்கையாகவே அவர் தங்கியிருந்த வீட்டில் சிகிச்சை பெற்றார்.
உடல் நலமானது. சிறிது காலம் ஐரோப்பா நாடுகளைச் சுற்றி அங்குள்ள மக்களின் சுதந்திர நிலைகளைக் கண்டுணர்ந்தார். குறிப்பாக, இந்திய நாட்டிலே இருந்து வெளிநாடு சுற்றுப் பயணம் போகிறவர்கள் எல்லாம், பெரும்பாலாக, தங்களது உடைகளை அந்தந்த நாடுகளின் பருவ நிலைகளுக்கு ஏற்றவாறும் தட்ப வெட்ப சூழலுக்குத் தகுந்தவாறும் மாற்றிக் கொள்ளவது இன்றும் கூட வழக்கம்.
ஆனால் ராஜன் பாபு மட்டும் தனது ஆடைகளை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார். வழக்கமான கதராடைகளையே அணிந்தார். இதைக் கண்ட மேனாட்டவருக்கு வேடிக்கையாகவே இருந்தது. சிலருக்கு ஏளனமாகவும் காட்சியளித்தது. ஆனால், வேறு சிலர், மோட்டா கதர் துணியின் மர்மத்தை ராஜன் பாபுவிடமே கேட்டார்கள். அதற்குராஜன் பாபு பதில் கூறியபோது, ‘கதர் இந்திய தேசியத்தின் சின்னம்’ என்றார். இந்தியப் பொருளாதாரத் தத்துவத்தையும் அவர் விளக்கினார். இவ்வாறாக ராஜன் பாபு, ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவங்களை விளக்கிக் கூறி விட்டு தனது பயணத்தினையும் முடித்து, எகிப்து நாட்டுக்குச் சென்று, பிறகு இந்தியா வந்து சேர்ந்தார்.
10. காந்தியிசம்; சோசலிசம்
ராஜன்பாபு விளக்கம்!
பதவி, பட்டம், புகழ், பகட்டு, படாடோபம் இவற்றை எல்லாம் தேடி அலைந்தவர் அல்லர் ராஜேந்திர பிரசாத் காந்தி! பெருமான் என்ன சொல்கிறாரோ, அதைச் சேவையாகச் செய்வதே தனது கடமை என்பதே அவரின் லட்சிய நோக்கமாகும்.
பீகார் காந்தி ராஜன் பாபு என்று மக்களால் பரவலாகப் பேசப்பட்ட அவரின் நாட்டுப் பற்றைத் தேச சேவையை இந்திய மக்கள் கவனித்துக் கொண்டேதான் இருந்தார்கள். எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுவதானால், பீகார் மாநிலத்தில் பூகம்பம் புயலாட்டமிட்டபோது, ராஜேந்திர பிரசாத்தின் பெருமை வானளாவ உலகறிய ஒளிர்ந்தது.
இராஜன் பாபுவின் தன்னலம் கருதாத உயர்ந்த பணியையும் செயற்கரிய செயலையும் பாராட்டிக் கெளரவிக்க இந்திய நாடும், அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையும் விரும்பியது.
1930-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1931, 1932, 1933 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மகா சபை அமைதியாகக் கூட முடியவில்லை. தில்லியிலும், கல்கத்தாவிலும் நடந்த சிறப்புக் காங்கிரஸ் நடவடிக்கைகள் அமைதியாக நடக்க வழி இல்லை.
பம்பாயில் காங்கிரஸ் மகா சபை 1934 ஆம் ஆண்டு கூடுவதாக இருந்தது. ராஜன் பாபு தான் அந்த சபைக்குத் தலைமையேற்கத் தகுதியுள்ளவர் என்று காங்கிரசார் எல்லோருமே முடிவு செய்தார்கள். அந்தக் காலத்தில், தேச சேவைக்குக் கிடைத்த பெரிய பதவி எது தெரியுமா?
காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை ஏற்பது ஒன்றே பெரிய கெளரவம் என்றும் மக்கள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பதவியை ஏற்பதால் வரும் நஷ்டங்களும் உண்டு. ஊர்ப் பெரியவர்கள், மூத்த கட்சியினரின் கோஷ்டிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசினரின் பகைகள். இந்த முப்பெரும் விரோதங்கள் அவ்வளவு சுலபமாகவோ, விரைவாகவோ முடிவனவும் அல்ல.
ஆனால், இந்திய மக்களுக்கு, பீகார் மக்களுக்கு ராஜன் பாபுவிடம் உள்ள மதிப்பையும், செல்வாக்கையும் உலகுக்கு உணர்த்திட அவருக்கு காங்கிரஸார், கட்சியின் தலைமைப் பொறுப்பை மனமார வழங்கினார்கள்.
தலைவர் பொறுப்பை ஏற்றிட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு பம்பாய் நகர மக்கள் மட்டுமன்று, குமரி முதல் இமயம் வரையுள்ள காங்கிரஸ்காரர்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள். ராஜன் பாபுவின் தலைமை உரை காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்களை வரையறுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. தலைவரின் அந்த முழக்கத்தின் சில பகுதிகளைக் கவனிப்போம்;
பீகாரில் நிலநடுக்கம் விதியின் விளைவாகவே நடந்தது. அதைத் தொடர்ந்து பீகாரில் பெரும் வெள்ளம் வந்தது. இந்தப் பரந்த நாட்டிலுள்ள எல்லாரும் பொருளுதவி செய்ததோடு கண்ணீரும் வடித்தனர். உழைக்கவும் முன் வந்தனர். அந்த மாகாணத்தின் மீது உங்களுக்குள்ள அன்பு காரணமாகவே இன்று எனக்கு இந்த தலைவர் பதவியை நீங்கள் அளித்துள்ளீர்கள்.
நாடு, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பல தியாகங்களைச் செய்தது. துன்பமும் பெற்றது. ஆயிரக்கணக்கான இளங்காளையர்கள், மாணவர்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் ஆகியோர் தடியடிபட்டார்கள். துப்பாக்கித் தர்பாருக்கு ஆளாயினர். அபராதமும் விதிக்கப்பட்டார்கள். பலர் தம் உடல், பொருள், ஆவியை இழந்தார்கள். சிறைக்கும் சென்றார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒடுங்கிவிடவில்லை...
அவசரச் சட்டங்கள் நிரந்தரச் சட்டங்களாயின. நீதிமன்றங்களுக்கு வேலை தராமல், அதிகார வர்க்கமே அளவில்லாத அதிகாரத்தை ஏற்றது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டடன. சாதாரணச் செயல்கள் குற்றங்கள் ஆயின.
பயங்கர இயக்கத்தை நாம் அடியோடு வெறுக்கிறோம். அதனால், நாட்டின் முன்னேற்றம் தடைப்படுகிறது. கேடுகள் அதிகமாகின்றன. ஆனால் பயங்கர இயக்கத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அடக்குமுறைகளால் நல்வழிப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
“சுயராஜ்யம் அடைய நீதியும் அமைதியும் நிறைந்த வழியை மேற்கொள்வதே நம் கோட்பாடு. நீதியும் அமைதியும் நிறைந்த வழி என்றால் என்ன? சத்தியமும் அகிம்சையும் அமைந்த வழியே அது. வேறு வழியை நாம் மேற்கொண்டிருந்தால், நம் போராட்டத்தை உலகம் கவனித்திராது. இன்னும் கொடிய மிருகத்தனத்துக்கும் தீமைகளுக்கும் நாம் ஆளாகி இருப்போம்.”
“நம்மிடம் தவறுக்கள் இருக்கலாம். ஆயினும், நாம் மிக விரைவுடன் முன்னேறியுள்ளோம். பதினைந்து ஆண்டுகளில் சாதித்தவற்றை இப்போது பொறுமைக் குறைவினால் கெடுத்துவிடக் கூடாது. என் நண்பர்களான சோசலிஸ்டுகளுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உற்சாகம் தரக்கூடிய கொள்கை ஒன்றை வகுத்தால்தான். ஒருவரே ஏகபோகம் கொள்வது அகலும் என்று அவர்கள் கருதுகிறார்கள் சத்தியத்தையும்அகிம்சையையும்விட உயர்ந்த கொள்கை ஒன்று உண்டா? ஒருவரே ஏக போகம் பெறும் வாய்ப்புகளை ஒழிக்க வேண்டும் என்று நாடு தீர்மானித்துள்ளது.
பாவத்தை நீக்க நாம் போராடுகிறோம். வன்முறையைப் பயன்படுத்துவதால் நமக்கே இரு பங்கு தீமை உண்டாகும். பாவிகளை மெல்லத்தான் திருத்த முடியும் என்று தோன்றலாம். என்றாலும், சத்தியப் பாதையே சீரிய பாதையாகும். பிற்கால வரலாற்றில் சிறப்புப் பெறும் வழியும் ஆகும்.
ஏராளமான பணிகள் உள்ளன. போனது போக; இனி நடக்க வேண்டியதை நன்கு கவனிப்போம். மிகவும் பிரம்மாண்டமான வேலைத் திட்டம் வேண்டும் என்பதில்லை. மிகச் சிறிய பணியை ஏற்றாலும் அதனை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். நமக்குள்ள பொறுப்பு ஏராளம். நம்மை ஆளுவோர். தம் அதிகாரத்தைக் கைவிட விரும்பவில்லை. சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க அவர்கள் இன்னும் வலுவாக முயல்வார்கள்...
பரிபூர்ண சுயராஜ்யமே சுதந்திரப் போரின் முடிவாகும். அந்நியர் ஆட்சி தொலைவது மட்டும் சுயராஜ்யம் அன்று. மக்களில் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைச் சுரண்டுவதும் ஒழிய வேண்டும். அதுதான் முழுமையான சுயராஜ்யம்...
முழுமையான சுயராஜ்யம் என்னும் போது யாருக்கும், எந்நாட்டவருக்கும் தீமை நினைத்தில் கிடையாது. நம்மைச்சுரண்டிப் பிழைப்போருக்கும் கேடு விழைவதில்லை. அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட சுயராஜ்யத்தில் அனைவரிடத்திலும் நல்லெண்ணம் கொள்வதே நம் நோக்கம்.
...துன்பம் கண்டு தளர வேண்டாம்; நேர் வழியை விட்டு அகல வேண்டாம். நம் கொள்கைக்கேற்ப நாம் ஒழுகுவோமாக! உறுதி குன்றாமல் உழைப்போமாக. சத்தியாக்கிரகத்தில் தோல்வி என்பதே கிடையாது. சத்தியாக்கிரகம் என்றால் வெற்றி என்பதே பொருள்.
இராஜன் பாபு காந்தியத் தத்துவத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.
11. சுதந்திர இந்தியாவின்
முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே!
பீஹாரில் ஏற்பட்ட கொடுமையான பூகம்பத்தை விட மிகப் பெரியதாக, பயங்கரமாக, ஏறக்குறைய 25 ஆயிரம் மக்களுக்கு மேல் மாண்டதாகக் கணக்குக் கூறும் கோரமான பூகம்பம், பெலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகராக உள்ள குவெட்டாவில் ஏற்பட்டது.
குவெட்டா நிலப்பிளவால் துன்புற்ற மக்களுக்கு நேரிடையாகச் சென்று வேண்டிய நிவாரண உதவிகளை ராஜன் பாபு செய்யத் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால், பீகாரில் ஏற்பட்ட பூகம்ப அழிவுச் சக்திகளை நேரில் கண்டு நிவாரணத் தொண்டு புரிந்தவர் அல்லவா? எனவே, குவெட்டா மக்களின் துயரத்தை நீக்குவதற்கான திட்டங்களோடு புறப்படத் தயாரானார்.
ஆனால் பிரிட்டிஷ் அரசு, ராஜன் பாபுவையும், காந்தியடிகளாரையும் குவெட்டா பூகம்ப நிவாரண வேலைகளுக்குப் போகக் கூடாது என்று தடை செய்து விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தெந்த வகையில் உதவி செய்தது என்பதையும் மக்களால் அறிய முடியவில்லை. காரணம், பூகம்பச் செய்திகளைப் பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாது என்று அரசு தடைவிதித்துவிட்டதேயாகும். அதனால், பூகம்ப இடங்களிலே என்ன நடக்கிறது என்பதையே அறிய முடியாத நிலையாகி விட்டது. இவைதானே அடிமைத் தனத்தின் கொடுமைகள்?
இந்திய நாட்டின் சுதந்திரப் போரில் 1930 -ஆம் ஆண்டு முதல் மக்கள் தீவிரமாகப் போராடி வருவதை பிரிட்டிஷ் ஆட்சியினரால் அலட்சியப்படுத்தவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. ஆனால், ஏதாவது சில சீர்திருத்தங்களை வழங்கி, பாரத மக்களை மகிழ்விக்க எண்ணியது அரசு!
1935 ஆம் ஆண்டிலே வெள்ளையராட்சி இந்தியருக்கு மாகாண சுயாட்சி அளித்தது. சுயாட்சி என்றால் என்ன? கவர்னருக்கும் வைசியராயிக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய ஆட்சிக்கு மாகாண சுயாட்சி என்று பெயர். அரசியல் திருத்தச் சட்டம் என்று பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான் என்றுணர்ந்த காங்கிரஸ் சபை, அதை ஏற்றுக் கொள்ள அறவே விரும்பவில்லை.
அப்படியானால், காங்கிரஸ் கட்சியின் கருத்து என்ன என்வதை உலகமும், அரசாங்கமும் அறிய வேண்டுமல்லவா? ஆனால், மாகாண சட்டசபைகளின் தேர்தல்களில் போட்டியிட்டுக் காங்கிரஸ் கட்சி எட்டு மாகாணங்களில் வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது.
பீகார் மாகாணத்தில் அமைந்த அமைச்சரவைக்கு ராஜன் பாபுவை முதல் மந்திரியாக இருக்கும்படி அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக அதை மறுத்து விட்டார். எனக்குப் பதிலாக எனது நண்பர்களே மந்திரிப் பதவிகளை ஏற்பார்கள் என்று கூறினார். காரணம் என்ன? பதவிகளை விடக் கட்சித் தொண்டே முக்கியமானது என்றார். இவ்வாறு அவர் கூறியது பாபுவின் பெருமைக்குமேலும் பெருமை தந்தது. அதனால், அமைச்சர் அவையைக் கண்காணிக்கும் குழுவிற்கு பாபு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாகாணத்திலும் உருவான மந்திரி சபைகள் மிகத் திறமையாக நடந்து வந்தன. 1939 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியர்களையோ, மாகாணங்களில் பதவி வகித்த காங்கிரஸ் அமைச்சர்களையோ, மந்திரி சபையையோ கலந்து யோசியாமல், பிரிட்டிஷ் வைசியராய் இந்தியாவையும் போரில் சேர்த்து விட்டார். வைசியராயின் இந்த ஆணவப் போக்கைக் கண்டிப்பதற்காக மாகாண காங்கிரஸ் மந்திரி சபைகள் தங்களது பதவிளைத் தூக்கி எறிந்து விட்டன.
காந்தியடிகள் தனிமனிதர் சத்தியாக்கிரகம் ஒன்றைத் தொடங்கினார். ஏன் இதை ஆரம்பித்தார்? சத்தியாக்கிரகத்தை ஓர் இயக்கமாக்கி அதனால் பிரிட்டிஷ் அரசுக்குத் தொல்லைகளை உருவாக்கக் கூடாது என்று அவர் எண்ணினார். அதனால் தான் - தனி மனிதர் அறப்போரை நடத்தினார். இதை உணராத எதேச்சாதிகார வெள்ளையராட்சி அறப்போர் செய்தவர்களைச் சிறையில் அடைத்தது. அதே காரணத்தைக் கொண்டு ராஜன் பாபுவையும் சிறையிலே அடைத்தது அந்த ஆட்சி.
இதனை நன்கு உணர்ந்த மகாத்மா காந்தி, இதற்கு மேல் வெள்ளையராட்சிக்கு பணிந்து போகக் கூடாது என்றெண்ணி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தனது கடைசி அறப்போரை 1942 ஆம் ஆண்டு துவக்கினார்.
பம்பாய் மாநாட்டில் எல்லாத் தேசியக் காங்கிரஸ் தலைவர்களும் கூடினார்கள். ராஜன் பாபுவும் செயற்குழுவில் அமர்ந்திருந்தார். வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தைக் காந்தியடிகள் அந்த மாநாட்டில் முன் மொழிந்து போராட்டக் காரண காரியங்களை விளக்கிப் பேசினார். மாநாட்டிற்கு வந்திருந்த எல்லா தேசியத் தலைவர்களும் ஒருமுகமாக ஆதரித்தார்கள். அவரவர் கருத்துக்களையும், அதனால் உருவாகும் நன்மை தீமைகளையும் வெளிப்படையாகப் பேசி, தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றார்கள்.
இந்த மாநாட்டில் நடைபெற்ற எல்லா விவரங்களையும் இரகசிய ஒற்றார்கள் மூலமாகத் தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு, மறுநாளே எல்லாத் தலைவர்களையும் கைது செய்தது. ராஜன் பாபுவும் கைது செய்யப்பட்டார். அனைவரையும் ஆமதுநகர் சிறையிலே அடைத்தது. அந்த சிறையிலே உள்ள ஓர் உணவுண்ணும் அறையிலே தலைவர்கள் கூடிப் பேசியும் எதிர்காலத் திட்டத்திற்கு எவ்வழியும் புலப்படாமையால், மூன்றாண்டுகளாக இவ்வாறு சிறையிலே வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
மூண்டது இரண்டாவது உலகப் போர் - 1945 ஆம் ஆண்டில்! அரசு எல்லாத் தலைவர்களையும் சிறையிலே இருந்து விடுதலை செய்து வெளியே அனுப்பிவிட்டது. இந்தியர்களை இனிமேல் அடக்கி வைக்க முடியாது என்பதையும் அரசு திட்டவட்டமாக உணர்ந்து விட்டது.
அப்போது, இங்கிலாந்திலே தொழிற்கட்சி அரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. வைசியராய் காங்கிரஸ் கட்சியையும் - முஸ்லீம் லீக் கட்சியையும் இடைக்கால அரசு அமைக்குமாறு கூறினார். வைசியராயைத் தலைவராகக் கொண்ட மந்திரி சபையில் இரண்டு கட்சியினரும் பங்கேற்றார்கள்.
ஆனால், முஸ்லீம் லீக் கட்சியின் பிடிவாதத்தால் இடைக்கால அரசு பணியாற்ற முடியவில்லை. லீக் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அடிக்கடி இடையூறுகளை எழுப்பி, நாட்டுப் பிரிவினைதான் எங்களுக்குத் தேவை என்று பிடிவாதம் செய்து இடைக்கால அரசை இயங்கவிடாமல் செய்து வந்தார்கள். அதனால், அரசு நிலைகுலையும் நிலையேற்பட்டது.
வைசியராயின் இடைக்கால அரசில் ராஜன்பாபு உணவு அமைச்சராக இருந்தார். அக்காலம் உணவுத் தட்டுப்பாடு இருந்த காலமாதலால் ராஜன் பாபு அதைத் திறமையாகச் சமாளித்தார். முஸ்லீம் லீக் கட்சியுடனும், அதன் தலைவரான ஜனாப் ஜின்னாவுடனும் சமரசம் கண்டிட ராஜன் பாபு பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், முஸ்லீம்களுக்கென தனிநாடு தேவை என்ற கோரிக்கையை ஜின்னா கைவிடுவதாக இல்லை. அதனால், ராஜன் பாபு செய்த சமரசப் பேச்சு வெற்றி பெறாமல் போய்விட்டது.
பாரதம் சுதந்திரம் பெற வேண்டுமானால், ஓர் அரசியல் சட்டம் தேவை அல்லவா? அந்தச் சட்டத்தை எழுதுவதற்காக ஓர் அரசியல் நிர்ணய சபை அமைக்கப் பெற்றது. அந்தச் சபைக்குத் தலைமை ஏற்றிடத் தகுதி பெற்றவர் ராஜேந்திர பிரசாத் என்று ஒருமனதாக அந்தச் சபை தீர்மானம் செய்தது.
இடைக்கால அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்த ராஜன்பாபுவை அரசியல் நிர்ணய சபைத் தலைவராக்கினார்கள். இந்த அவை, டாக்டர் அம்பேத்கர், கே.எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற பேரறிஞர்களின் துணையோடு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தது.
இதற்கிடையில், முஸ்லீம் லீக் கட்சியின் வைராக்கியத்தால், காங்கிரஸ் கட்சி நாட்டுப் பிரிவினைக்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள், இந்திய நாடு, இந்துஸ்தான், பாகிஸ்தான் என்ற இரு சுதந்திர நாடுகள் ஆயிற்று.
மகாத்மாக காந்தியடிகளின் தலைமையில் நடந்த அறப் போராட்டங்களால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. நாமும் இன்று சுதந்திர பாரதத்தில் வாழ்கின்ற நிலை உருவானது. காந்தியண்ணலின் உழைப்பு வெற்றி பெற்றது; பாரதத்தலைவர்கள், மக்கள் கனவுகள் சுதந்திரமாகப் பலித்தன.
ஆனால், பாகிஸ்தான் பிரிவினை என்பது கொடுமையானது தான், ‘எனது பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் நாடு பிரிய வேண்டும்’ என்று மகாத்மாக காந்தி கூறுமளவுக்குத் தீமையானதுதான். என்றாலும் பிரிட்டிஷ்காரனிடம் அடிமை வாழ்க்கை வாழ்வதை விட, நாடு பிரிவினையே மேலானது என்று அந்த நேரத்துக்கேற்றவாறு காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தார்கள்.
இவ்வாறு அரும்பாடுபட்டுப் பெற்ற பாரத நாட்டிற்குத் தான் முதல் தலைவராக, முதல் ஜனாதிபதியாக பாபு இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12. குடியரசு விழா
இராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்து, மூன்றாண்டு காலமாக அரும்பாடுபட்டு அரசியல் சட்டத்தைத் தயாரித்தவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
இந்த சபை அரசியல் சட்டத்தை தயாரிக்கும் போது, எவ்வளவோ கருத்து வேற்றுமைகள், தகராறுகள் அவரவர் இன சுயநலத் திட்டங்கள், யார் பெரியவர் என்ற மனப்போராட்டங்கள் எல்லாம் எழுந்தன. ஆனால், அவற்றை எல்லாம் ராஜன் பாபு பொறுமையோடும், பொறுப்போடும் அவரவரைச் சரி செய்து, சமரசம் உருவாக்கும் பேராற்றலோடு செயலாற்றிய திறமையால் அரசியல் சட்டமே உருவாகி வெளிவந்தது.
ஆனால், அரசியல் சட்ட உருவாக்கப் பெருமையை இன்று யார் யாரோ கொண்டாடிக் கோலாகல விழா எடுத்துக் கொள்கிறார்கள். அரசியல் சட்டத்தை உருவாக்கியதில் பெரும் பொறுப்பு டாக்டர் அம்பேத்கருக்கு உண்டு என்றாலும் அதை எல்லோரும் ஏற்கும் வண்ணம் செய்த பெருமை டாக்டர் ராஜன்பாபுவுக்கே உண்டு.
தனது சொந்தக் கருத்து எதற்கும் வளைந்து கொடுக்காமல், மாறுபட்ட கருத்துக்களை அரசியல் நிர்ணய மன்றம் ஏற்குமானால், ஏற்றுவிட்டால், அதை ராஜன் பாபுவும் ஏற்றுக் கொண்டு பொறுமையாகவும், திறமையாகவும், அருமையாகவும் சமாளிக்கும் மனதிடம் கொண்டவராக விளங்கினார்.
1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாளன்று, பாரதநாடு குடியரசு நாடாக மாறியது. குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது! இதில் ராஜன் பாபுவே போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பொதுவாழ்க்கைப் பொறுப்புடையவன் எவனாக இருந்தாலும் அவனுக்குத் தொண்டுள்ளமும், தியாகமும் தலைமையேற்று நடத்தும் பண்புமிருந்தால், அவனைத் தேடி நிச்சயமாக எப்படிப்பட்ட பதவியானாலும் வந்து சேரும்.
ஜனாதிபதி அதிகாரங்கள் ஒரு வரம்க்குட்பட்டவைதான் என்றாலும், பாரத அமைச்சரவைக்குத் தேவையான நேரங்களில், தேவையான அறிவுரைகளையும், உதவிகளையும் செய்து வந்தவர் பாபு. அவர், ஜனாதிபதி என்ற பெரும் பதவியிலே இருந்தாலும், அந்தப் பதவிக்கே அழகு சேர்த்தவர் என்பதற்கான எளிமையோடு வாழ்ந்தவர் ஆவார்.
மறுபடியும் இரண்டாவது முறையாவும் ராஜன் பாபுவே குடியரசுத் தலைவரானார். அரசியலில் அவருக்கு இருந்த ஒவ்வொரு காரியத்தின் மீதிருந்த கவனமும், விரோதியானாலும் சரி, அவனே நேராகவே பார்த்து சமரசம் செய்யும் பணிவான போக்கும், கருத்து வேறுபாடோ, முரண்பாடோ கொண்டு கட்சிப் பணிகளிலே இருந்து விலகி, மனம் குமுறும் தொண்டர்களையும், சில தலைவர்களையும் இணைக்கும் பாலமாக அவர் இயங்கும் கடமை ஆற்றலும்தான் ராஜன்பாபுவை மிகப் பெரிய மனிதராக மாற்றிற்று எனலாம்.
ராஜன் பாபுவின் உடன் பிறந்தவர் தமக்கை படவதிதேவி. அந்த அம்மையார் ராஜன் பாபுவைக் குழந்தையாக இருந்த நேரம் முதல் அவரது குடியரசுத் தலைவர் பதவி பெறும் காலம் வரை தனது கண்களைப் போல அல்லும் பகலும் பாதுகாத்து வளர்த்த அருந்தாய் அவர். அந்த அம்மையாரோடு தில்லி ராஜபவனத்தில் ராஜன்பாபு வசித்து வந்தார்.
அந்த அன்னை, பண்புடைய தாய், அதாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் அருமைத் தமக்கையான படவதிதேவி பெருமாட்டி, 1960 - ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று இரவு திடீரென்று இறந்து விட்டார்.
மறுநாள் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள். ஆண்டுதோறும் இந்திய அரசு மிகக் கோலாகலமாக கொண்டாடி வரும் விழா நாள். மத்திய அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலமும் மிகச் சிறப்பாக இந்த நாளை விழாவெடுத்துக் கொடியேற்றி, ராணுவ மரியாதைகள் ஏற்று மகிழும் நாள் என்பதை பாபு ராஜேந்திர பிரசாத் எண்ணி ஒரு முடிவுக்கு வந்தார்.
தனது தமக்கை இரவிலே இறந்து போன விடயத்தை அரசுக்கு அறிவிக்கவில்லை.நாட்டுக்கும் தெரியப்படுத்தவில்லை. வெளியே தமக்கையின் மரணச் செய்தி தெரிந்துவிட்டால், குடியரசு தினக் கொண்டாட்ட விழாக்களுக்கு இடையூறாக இருக்குமே, விழாவுக்குக் களங்கம் சூழுமே என்று சிந்தித்தார். அதனால் பாபு அதை வெளியிடாமல் மறைத்து வைத்து விட்டார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் என்ற பெருமையோடு முப்படை அணிவகுப்புக்களைப் பார்வையிட்டார். ராணுவ வணக்கத்தை ஏற்றார். தனது நாடு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற திட்டங்களை விழா மேடையிலே பேசி விவரித்தார். விளக்கினார். ஜனகண மன பாடலும் முடிந்தது.
நேராகக் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி வந்தார். தனது தமக்கை படவதிதேவியின் மரணச் செய்தியை வெளியிட்டார்.
தனது சொந்த விவகாரங்களால் அரசாங்கப் பணிகளுக்கு தடையேற்பட்டு விடக் கூடாது என்பதுடன், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அந்தப் புனித விழாவிற்குத் தன்னால் களங்கமேதும் சூழ்ந்துவிடக் கூடாதே என்றும் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றினார்.
இராஜன் பாபுவுக்கு 1962 ஆம் ஆண்டில் அரவது கட்சி, அரசியல், சமூக, கல்வித் தொண்டுகளைப் பாராட்டி, இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பாரத ரத்னா’ என்பதை வழங்கியதுடன் பாரத அரசு பாராட்டி அவருக்கு விழாவெடுத்து மகிழ்ந்தது. இவ்வாறு ராஜன்பாபு அமைதியின் உருவமாக, ஆற்றலின் திறனாக ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் தில்லி மாநகரிலே தங்கி எல்லோருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்தார்.
13. இராஜன் பாபு மறைந்தார்!
வாழ்க அவர் எண்ணங்கள்!
பாரதநாடு பழம் பெரும் நாடு! பகுத்த ஞான சித்தர்கள் பெருகிய நாடு மாபெரும் தேசபக்தர்கள் வாழ்ந்து மறைந்த நன்னாடு, இந்நாட்டிற்கான விடுதலையை காந்தி பெருமான் பெற்றுத் தந்தான் என்று சுதந்திரம் பெற்ற பாரத நாட்டிலே மக்கள் காந்திப் பள்ளுப் பாடினார்கள்.
சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பதவி குடியரசுத் தலைவர் பதவி, இந்த உயர்ந்த பதவியை முதன் முதல் ஏற்றவர் ராஜன் பாபு! இந்த உயர்வுக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை உயர்த்திய சக்தி எது?
குடியரசுத் தலைவர் பதவியால் ராஜேந்திர பிரசாத் பெருமை பெற்றாரா? அல்லது ராஜன்பாபுவால் குடியரசுத் தலைவர் பதவி புகழ்மாலை சூடிக் கொண்டதா? என்றால் இந்த நூலைப் படிப்பவர்களுக்கு அந்த பெருமையின் அருமையை உணர முடியும்!
அடக்கம் என்ற அகத் தன்மையால் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய பெருமைக்குரியவர் பாபு ராஜேந்திர பிரசாத் உயர்ந்த அவரது வாழ்க்கைக்கு அவரிடம் குடி கொண்டிருந்த பல நற்குணங்களைக் காரணமாகக் கூறலாம்.
கிடைத்த ஓர் அரசியல் பதவியை வைத்துக் கொண்டு, அது வேண்டும், இது வேண்டுமென்று அலைந்து திரிந்து, பிறகு எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று தேடி அலையும் பொருட் பித்தரல்லர் பாபு!
வானளாவும் பதவி பெற்றவன் என்று அவர் இந்திய உணவமைச்சராக இருந்த போது கூறியவருமல்லர் நடந்து காட்டியவரும் அல்லர் அவர்! கொஞ்சம் அதிகமாகக் கூறுவதானால், பீகார் மாகாண முதலமைச்சர் பதவி அவரை வலியத் தேடி வந்து வற்புறுத்தியபோதும் ‘எனக்கு வேண்டாம், எனது நண்பர்களுக்கு கொடுங்கள்’ என்று கூறிய பண்புக் கோமகனாக அவர் விளங்கியதால்தான், இமயச் சிகரம் போன்ற குடியரசுத் தலைவர் பதவி அவரிடம் சரணடைந்தது. அந்தக் காலகட்டத்தில், இவரை விடச் சிறந்த பாடறிந்து ஒழுகும் பண்பாளர் எவருமில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
நான்தான் உயர்ந்தவன், எல்லாம் அறிந்தவன், சிந்தனையினையே நான் தான் உருவாக்கிய காலச்சிற்பி, எதையும், செய்யத் தக்கவன் என்று தருக்கித் திரிந்த செருக்குடைய முறுக்கல் புத்தி அவருக்கு எப்போதும் ஏற்பட்டதல்ல.
நிலாவின் முழு ஒளியை நானிலத்தில் பொழிந்து, அன்பெனும் வழியைக் காட்டி, மக்களிடையே நற்பண்புகளெனப்படும் அருளை எதிர்நோக்கிய அருட்சீலராக வாழ்ந்து காட்டிய அற உணர்வாளர் ராஜேந்திர பிரசாத்! அதனால்தான், குடியரசுத் தலைவரென்ற பதவி, ராஜேந்திர பிரசாத்தை நாடி வந்து, அவர்தான் அதற்கு சிறந்தவர், தக்கவர் என்று பாராட்டுதல்களைப் பெற்றுத் தரும் பொறுப்பை ஏற்றுப் பெருமையும் பெற்றது.
இராஜன் பாபு, காந்தீயத் தத்துவக் கனிகளில் ஒன்றாகப் பழுத்தவர். ஆறுவது சினம். அவ்வை அவருக்காகவே எழுதினாரோ என்னவோ கனிச் சொற்களையே பேசுவாரே தவிர, காய்ச்சொற்கள் அவரை என்றுமே கவர்ந்ததில்லை. ஆபத்தைக் கண்டு என்றுமே அஞ்சியவரல்லர். அபாயம் அவரைக் கண்டு அஞ்சிப் பதுங்கிய சம்பவங்கள் பலவுண்டு.
ஏழைகளின் துயர் கண்டு கலங்கினவர். கண்ணீர் சிதறியவர். தனது குடும்பத்தில் மரணம் அடுத்தடுத்து வந்த போதும் கதறியழுதவர் அல்லர். தேசத் தொண்டுகளிலே அடுக்கடுக்காக இன்னல்கள் வந்த போதெல்லாம் கடமைகளைச் செய்யத் தவறியவரல்லர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தான் ராஜன் பாபுவின் தாரக மந்திரமாக இருந்தது.
மகாத்மாவுக்குக் கூட, மாபாவி, கோட்சே தொழுத கையுடன் துப்பாக்கி ஏந்தி வந்த பகையுண்டு. ஆனால், ராஜன் பாபுவுக்கு பகையே இல்லை எனலாம். அப்படி மீறித் தள்ளாடித் தடுமாறி ஏதாவதொன்று வருமானால், அதைக் கூட தனது நகைச் சொல்லால் நகர வைத்து விடுவார். அவர் நெஞ்சு அத்தகைய ஈரமிக்க பஞ்சு.
பிரிட்டிஷ் அரசு சிறைக்கு அனுப்பும் போதெல்லாம், சில நூல்களை எழுதிக் கொண்டே வெளிவரும் சிந்தனையாளர் ராஜன் பாபு! எடுத்துக்காட்டாக சில நூல்களைக் கூறலாம். குறிப்பாகக் கூறுவதானால், பாபுவின் பிரிக்கப்பட்ட இந்தியா (Divided India) என்ற நூல், நாட்டில் பிரிவினையால் ஏற்பட்ட கேடுபாடுகளையும், தலைவர்கள் இடையே அப்போது சமரசம் கண்ட சம்பவங்களையும் மிக அழகாக, நினைவாற்றல் சின்னமாக நிலை நிறுத்தியுள்ளது எனலாம்.
இராஜேந்திர பிரசாத் பழமையைப் போற்றும் பண்பாளர். அதற்காக எதையும் குருட்டுத் தனமாக ஏற்று நடப்பவரல்ல! காலத்துக்கேற்ற கருத்துடன் அவற்றுக்கு மறு உருவழங்கும் சீர்த்திருத்தச் செம்மல்.
கலப்பு மணம், தீண்டாமமை விலக்கு, அறிவியல் கல்வி ஆகியவற்றை ஆதரித்து அதற்கான முன்னேற்றங்களுக்கு காலநிலைக்கேற்ப உதவி புரிந்தார். அதே நேரத்தில் பசுவதைத் தடுப்பு, மிருகபலி இவற்றை எதிர்த்துத் தடுத்து நிறுத்த வழி கண்டார்.
வேலைகளைச் செய்யும் போது இது பெரியது அது சிறியது என்று பாராமல், எந்த வேலைகளானாலும் அவற்றைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார். தான் பேசும் பொதுக் கூட்டங்களிலும், கட்சிப் பணி கலந்தாலோசனைகளிலும், மாநாட்டுப் பேச்சுகளிலும் இதே எண்ணத்தைக் கூடியுள்ள மக்களுக்கு அறிவுரையாகச் சொல்லுவார்.
அதிகாலையிலே எழுந்திருப்பார், அலுவலகக் கோப்புகளைப் பார்த்து அவற்றிற்கேற்றவாறு குறிப்புகளை எழுதி முடித்து விடுவார். வந்துள்ள கடிதங்களுக்குரிய பதில்களையும் எழுதி அனுப்புவார். இந்து மதப் பண்பாடுகள் கெடாமல், தெய்வ பக்தி வழிபாடுகளைத் தவறாமல் செய்து வருவார்.
காலம் பொன்னானது, நேரத்தை வீணாக்காதே; காலத்தோடு கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவரது பொன்மொழியாகும்.
ராஜன் பாபுவிடம் பழகும் வாய்ப்பு ஒருமுறை பெற்றவர் கூட, பிறகு தவறாமல் வலிய வந்து காணுமாறு வந்தவர்களை இனிமையாக வாழ்த்தி அனுப்புவதை அவரது வழக்கங்களில் ஒன்றாகக் கடைபிடித்தார்.
இத்தகைய பண்பாளர், நாட்டுக்குரிய விடுதலை கிடைத்த பிறகும் கூட, ஓய்வு ஒழிச்சலின்றி மக்களும் பாரத நாடும் வளமாக வாழ்வதற்குரிய திட்டங்களோடு, அதற்கான முன்னேற்ற வழிகளை உருவாக்குவதிலும் அயராது உழைத்திட ஆசை கொண்ட அவர் ‘சதாகத்’ என்ற ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது இறுதி நாட்களை அங்கேயே கழித்து வந்தார்.
வயோதிகம் தனது வாசலிலே நின்று அவரை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்தது. நோய்கள் அவரை நொடி நொடிப் பொழுதாக நொறுக்கிக் கொண்டிருந்தன. இந்த நெருக்கங்கள் இடையே சிக்கி நலிந்த அந்த நெடிய மேனி, 1963 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் முதல் நாளன்று பாரத மாதா தாளிலே துவண்டு விழுந்து மரணமடைந்தது! காலத்தோடு இரண்டறக் கலந்து காலமானார் ராஜன்பாபுவின் ஆவி அமைதியைத் தேடி அடைக்கலமானது.
வாழ்க அவரது அரசியல் ஒழுக்க சீலங்கள்!
★ ★ ★
கருத்துகள்
கருத்துரையிடுக