யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பணமே
கவிதைகள்
Backயாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பணமே
நிலாந்தன்
----------------------------------------------------------
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பணமே
நிலாந்தன்
----------------------------------------------------------
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பணமே
ஒரு பரிசோதனை
ஆசிரியர்
நிலாந்தன்
உரிமை
ஆசிரியருக்கு
முதற் பதிப்பு
மார்ச், 2002
பக்கங்கள் iv+37
வெளியீடு
மகிழ், புதுக்குடியிருப்பு 04 - முல்லைத்தீவு
அச்சிட்டோர்
வவுனியா வடக்கு ப. நோ. கூ. சங்க பதிப்பகம்,
புதுக்குடியிருப்பு.
லே அவுட்
கருணாகரன்
முகப்போவியம்
நிலாந்தன்
ஆனைக்கோட்டை முத்திரை
பின் அட்டை ஓவியம்
நிலாந்தன்
சிந்துவின் நடன மாது
அட்டை ஸ்கிரீன் பிரின்ற்
மாறன் பதிப்பகம்
உள்ளோவியங்கள்
நிலாந்தன்
சிந்துவின் மாந்தரும் மிருகங்களும்
விலை - ரூ 100/-
----------------------------------------------------------------
பொருளடக்கம்
பகுதி ஒன்று
புதிய யாழ்பாடி - 01
பகுதி இரண்டு
யாழ்ப்பாணம்
பாலை நிலத்தின் புதிர் - 08
பகுதி மூன்று
கந்தபுராண கலாசாரத்திலிருந்து கரும்புலிகள் வரை - 31
-------------------------------------------------------
பகுதி ஒன்று
புதிய யாழ்பாடி
1
ஒரு பாடலுக்குப் பரிசாகத் தரப்பட்ட
தரிசு நிலம் நீ
படையெடுத்து வந்த
எல்லாப் பகைவர்க்கும்
கவர்ச்சிப் பொருளானாய்
இரு ஆறுகளை விழுங்கிய
பாலை நிலம் நீ
உனது தாகம்
ஒரு புதிய வீரயுகத்தின்
பாடு பொருளானது.
உனது ஜனங்களோ
ஈமத்தாழிகளில் புதைக்கப்பட்டு
புத்திர சோகத்தால்
களையிழந்த நகரத்தெருக்களில்
புனர் சென்ம மெடுக்கிறார்கள்.
நிகரற்ற வீரத்தோடு
ராங்கிகளை மோதிப் புரட்டுகிறார்கள்
பீரங்கிகளைக்
கவர்ந்து வருகிறார்கள்
பாக்கிய சாலி நீ
பலசாலிகளைப் பெற்றவள் நீ
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
யாருக்கும் பணியாத நிலமே
வணக்கம்.
2
உனது முதற் பாடகன்
ஒரு குருடனும்
நாடோடியுமாவான்
உனது முதற் பாடலோ
விழிகள் ஆயிரம் பெற்று
எல்லாத் தலைநகரங்களிலும்
பக்தியோடு இசைக்கப்படுவதாயிற்று.
யாராலுமுன்னைப்
புரிந்து கொள்ள முடியவில்லை
உனது வீரம்
யாருடைய படப்புத்தகத்துள்ளும்
ஏற்கனவே சொல்லப்படவில்லை
நீ யொரு புதிர்
எல்லாப் பண்டிதர்களையும்
திகைக்கச் செய்யுமொரு நொடி
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
3
நீ மிகச் சிறியவள்
உனது கனவுகளோ பெரியவை
அபூர்வமானவை
பொன்னிறமானவை
பொற்காலம் பற்றிய பிரமைகளற்றவை
பூர்வ சென்ம ஞாபகங்களால்
வனையப்பட்டவை
உனது பனை மரங்களைப் போல
யாருக்கும் பணியாதவை
நெடுங்கோடையில்
தார் உருகும் உனது
சாலைகளின் மருங்கில்
வேலிகளில்
தீச்சுடராய்ப் பளிச்சிடும்
முள்முருக்கம் பூவில்
உனது குணமிருக்கும்
உனது வீரமிருக்கும்
உனது விவேகமிருக்கும்
தந்திரமிருக்கும்
சுயநலமிருக்கும்.
4
நூதனமானவள் நீ
நகரங்களிற்குள்
நிகரேது மற்றவள் நீ
எப்பொழுதும்
எதிரிக்குப் பொறியாய் மாறியவள்
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
நானொரு
புதிய யாழ்பாடி
யுத்தம்
எல்லா வற்றையும் விட
நிச்சயமானதுபோற் தோன்றிய
ஓர் நாளில்
பிணங்கள் ஒதுங்குமுனது
கடலேரிகளின் ஓரம்
புனர் சென்ம மெடுத்தேன்
ஈமத்தாழிகளில்
கதிரமலை ரகசியங்களோடு
சேர்த்துப் புதைக்கப்பட்ட
உனது முதல் யாழின்
ஆதி நரம்புகள் அதிர
இன்று பாடலுற்றேன்
புலம் பெயர்ந்து வரும்
பெயர் தெரியாப் பருவகாலப் பறவைகள்
எனது பாடலை
உலகமெலாம்
மொழிபெயர்த்துப் பாடும்
புலம்பெயர்ந்து
ஊசியிலைக் காடுகளில்
உதிரிகளாய்த் திரியும்
எனது எல்லா ஜனங்களும்
இதைக் கேட்பர்.
இனி வரும்
ஏதோ ஒரு பண்டிகைக்காவது
நகரம் மீட்கப்பட்டுவிடும் என்று
யூதர்களைப் போலக் காத்திருக்கும்
எனது எல்லா ஜனங்களும்
மகிழ
நான் பாடுவேன்
இனிப் பாடுவேன்
மொகஞ்சதாரோவின்
மெலிந்த நடன மாது
தனது உடைந்த கைகளையும் கால்களையும்
வீசி ஆட
நான் பாடுவேன்
இனிப் பாடுவேன்
சிந்துவின் எல்லா எருதுகளும்
ஏரிகளைச் சிலிர்த்த படி
உயிர் பெற்றெழும்
அரிதான நாளொன்றுக்காக
நான் பாடுவேன்
இனிப் பாடுவேன்
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
இதோ உனது நாட்கள்
வரும் வரும்
பகைவர்க்குப் பொறியாகும்
உனது சிறிய கடலேரிகளை
புராணங்கள் உறங்ங்குமுனது
புராதன மண் மேடுகளை
இளவரசி நீராடி
குதிரை முகம் நீங்கப்பெற்ற
உனது புண்ணிய தீர்த்தங்களை
மீட்கும் நாள்
இதோ வரும் வரும்
5
எதிரிகள் உனைப் பிடித்தனர்
உனது அழகிய கடலேரிகளின் வழியே
உன்னைச் சுற்றி வளைத்தனர்
உனது கோபுரங்களை இடித்துக்
கோட்டை கட்டினர்
உனது கடவுள்களை
எடுத்துச் சென்று
கிணறுகளில் ஒளித்தாய்
நீ உணவருந்திய
வாழையிலைகளை
கூரைகளில் மறைத்து வைத்தாய்
உனது ஆறுகளைப்
பாதாளக் குகைகளில் தொலைத்தாய்
உனது பிள்ளைகளைச்
செம்மணி வெளியிலே தொலைத்தாய்
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே...
உனது கோடை கொடியது
அதனிலும் கொடியது
உனது முற்றுகை
ஆயினும் நீ வலியன்
முற்றுகைகள் உன்னை
மகத்தானவளாக்கின
சேமிக்கத் தெரிந்த
உனது ஜனங்களை
அற்புதங்கள் செய்ய வைத்தன.
துயரில் நீ கனிந்தாய்
தோல்விகளில்
விளைந்தாய்
காயங்களால்
உருவாகினாய்
கடுங்கோடையிலே
ஒளிரும்
முள் முருக்கம் பூவாய்
கப்பூது வெளியிலே
நிமிரும்
ஒற்றைப் பனையாய்
நீ நிமிர்வாய்
ஒரு நாள் நிமிர்வாய்
சிதைந்த துயிலுமில்லங்களில்
சிதிலமான பழைய நகரங்களில்
பாடுகிறான்
அந்தக் குருட்டுப் பாடகன்
கேட்கிறதா
யாழினிசை
கேட்கிறதா
கதிரைமலை தொடக்கம்
கல்லுண்டாய் வெளி வரைக்கும்
அதற்குமப்பால்
சப்த தீவுகளிலும்
கேட்கிறதா
யாழினிசை
கேட்கிறதா
வழுக்கியாறு தொடக்கம்
வல்லிபுரக் கடல் வரைக்கும்
அதற்குமப்பால் குருந்தூரிலும்
படுவான் கரையிலும்
கேட்கிறதா
யாழினிசை
கேட்கிறதா
உடைந்த கை கால்களை வீசி
ஆடுகிறாள்
மூத்த திராவிடிச்சி
கேட்கிறதா
கொலுசுச் சத்தம்
கேட்கிறதா
ஈமத்தாழிகளைத் திறந்து கொண்டு
எழுகிறார்
புதிய வீரரெல்லாம்
கேட்கிறதா
எனது பாடல்
கேட்கிறதா
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
வருகிறோம்
கதவைத் திற.
பகுதி - இரண்டு
யாழ்பாணம்
பாலை நிலத்தின் புதிர்
பகுதி ஒன்றிற்கான உரையும்
அதன் தொடர்ச்சியும்
(01) பூர்வகாலம் - யாழ்பாடி
அவனது உலகம் முழுதும் ஓசைகளாலும்
ஸ்பரிசத்தாலுமானது
விழிக்குப் பதிலாக செவிகளே அவனது பிரதான
உணரிகளாயிருந்தன.
ஒளிக்குப் பதிலாக ஓசையே அவனது கற்பனையின்
ஊடகமாயிருந்தது
எல்லாவற்றையும் அவன் அதிகம் ஓசைகளிற்கூடாகவே
கற்றுக் கொண்டான்
கோடையின் ஓசையை
அவன் காகங்களிடமிருந்து கற்றான்
வாடையின் ஓசையை
மரங்கள் இலைகளிடமிருந்து கற்றான்
வேனிலின் ஓசையை அவன்
அதிகாலைக் குயில்களிடமிருந்து கற்றான்
மழையின் ஓசையை அவன்
தாளமிடும் கூரைகளிடமிருந்து கற்றான்
இலையுதிர் கால மணற்சாலையில்
சருகுகள் நொறுங்குமோசை
அவனது செவிகளை நிறைத்த
நாளொன்றில்
அவன் குடாநாட்டிற்குள் வந்தான்
கோடையில்
யாழின் முறுகிய நரம்புகள்
அதிர
அவன் பாடிய போது
வழுக்கியாறுக்கும் தொண்டைமானாறுக்கும்
விடாய்க்கத் தொடங்கியது
இளவரசி
திரைக்குப் பின்னாலிருந்தாள்
குருடனை அவள் பார்க்கக் கூடாது.
யாழின் முறுகிய நரம்புகள்
அதிர அதிர
அவளுக்கும் விடாய்க்கத் தொடங்கியது.
கப்பூது வெளிக்கும் கைதடி வெளிக்கும்
கல்லுண்டாய் வெளிக்கும் வல்லை வெளிக்கும்
பொம்மை வெளிக்கும் கொம்படி வெளிக்கும்
விடாய்க்கத் தொடங்கியது.
கல்லுண்டாய் மேடுகளின் அடியில்
ஈமத்தாழிகளில் துயின்றிருந்த
மூத்த தமிழர்கள் எல்லாருக்கும்
விடாய்க்கத் தொடங்கியது.
கந்தரோடையின்
கதிரமலையரசின் சிதிலங்களினடியில்
புதைந்திருந்த
எல்லா மூத்த தமிழருக்கும்
விடாய்க்கத் தொடங்கியது.
அவன் பாடப் பாட
யாழின் முறுகிய நரம்புகள்
அதிர அதிர
விடாய் மேலும் அதிகரித்துச் சென்றது.
தீரா விடாய் அது.
ஆறுகளை அருந்தியும் தீரவில்லை
கடலேரிகளை அருந்தியும் தீரவில்லை
பரணிக் கூழ் அருந்தியும்
விடாய் தீரா
பாலை நிலத்தின் காளிக்கு
வந்த விடாய் அது.
பிறகும் பிறகும் விடாய்க்கலாயிற்று
கோணேச்சரத்திலே
குளக்கோட்டனுக்கு விடாய்த்தது.
கொக்கட்டிச் சோலையிலே
ஆடக சவுந்தரிக்கு விடாய்த்தது.
நகுலேசரத்திலே
மாருதப் புரவல்லிக்கு விடாய்த்தது.
மன்னன் சங்கிலியனுக்கும் விடாய்த்தது.
கைலை வன்னியனுக்கு விடாய்த்தது.
அரியாத்தைக்கு விடாய்த்தது.
பண்டார வன்னியனுக்கு விடாய்த்தது.
முடிவில் பிரபாகரனுக்கு விடாய்த்தது.
அது புலிகளின் தீரா விடாயாக மாறியது.
பிறகும் பிறகும் விடாய்க்கலாயிற்று........
(02) இடைக்காலம் - சிங்கைநகர்
நல்லை மூதூர்
முடி கொடி
பதிணென் ஜாதி இவற்றுடன்
நாற்றிசையும் கோயில்கள்
நாற்றிசையும் துறைமுகங்கள்
பண்ணையில் செம்மணியில்
கோப்பாயில் கொழும்புத்துறையில்
காவற் கோபுரங்கள்
சங்கிலியன் தோப்பில்
யாழினிசை
ஒரு ஆதி ரகசியம் போல
எழும்
ஊர்காவற்துறையில்
யானைகள் வந்திறங்கும்
கச்சாய்த்துறையில்
முத்துக்கள் வந்து குவியும்
வல்லிபுரத் துறையில்
போர்க்கலங்கள்
கரையொதுங்கும்
நந்தி இளைப்பாறும்
கொடி
புரவிகள் இளைப்பாறாத
ராஜவீதி
மன்னன் சங்கிலியன்
மகா பலசாலி
நந்தியின் புடைத்த ஏரிகளையொத்த
புஜங்களைப் பெற்றவன்
பறங்கியரைச் சிரங் கொய்தவன்
மன்னாரில்
"மதத்துரோகிகளை"
வதஞ் செய்தவன்
பறங்கிகள்
பீரங்கிகளோடும் பைபிளோடும்
வந்தார்கள்
கடவுளால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
போலத் தோன்றினார்கள்
ஜனங்களோ
பஞ்சாங்கப் பூச்சிகள்
கடவுளுக்கும் பயம்
பீரங்கிகளுக்கும் பயம்
வீரகாளியம்மன்
கோயிற்றிடலில்
மூண்டது சமர்
வாள்கள் எதிர்
பீரங்கிகள்
மொத்தம் பதினொரு நாட்கள்
முதலில் வென்றது சங்கிலி
முடிவில் வென்றது பறங்கி
வாளெடுத்த வீரரெல்லாம்
பீரங்கித் தீனியாய்ப் போயினர்
குருதி பெருகிப்
புழுதி யடங்கியது.
கொற்றவை வயிறார நிணக்கூழ் குடித்த
நாளது.
பறங்கிக்கு வெற்றி.
மன்னனின் தலையைக் கொய்து
ஈட்டியில் நட்டு
காட்சிக்கு வைத்தான் பறங்கி
ஆனால் சங்கிலிக்குச் சாவில்லை
பறங்கியரும் தோற்பதில்லை.
தளபதி ஒலிவீரா
வெற்றியின் ருசி தெரிந்தவன்
கோயில்களை இடித்துக்
கோட்டை கட்டினான்
கோயில்கள் இருந்த இடத்தில்
சிலைகளில்லாத
புதுக்கோயில்களைக் கட்டுவித்தான்
அயலில்
பெரிய சந்தைகளைக் கட்டுவித்தான்
புதிய சட்டங்களையும் தண்டனைகளையும்
அறிவித்தான்.
யாரும் சிலைகளை வணங்கக் கூடாது
யாரும் வாழையிலையில்
உணவருந்தக் கூடாது
யாரும் திருநீறு பூசக் கூடாது
யாரும் தேவாரம் பாடக்கூடாது.
சிலை வணங்கிகளுக்கு
பட்டினத்தில் இடமில்லை
பூசகரெல்லாம்
சிலைகளைக் கிணறுகளின் ஆழத்தே
ஒளித்து விட்டு
புகலிடம் தேடிப்
பரதேசம் போயினர்
வெல்லக்கடினமான போர்
சங்கிலியன்
எழுநூறு
கத்தோலிக்கரை வெட்டினான்
ஒலிவீரா
ஐநூறு
கோயில்களை இடித்தான்
கணக்குக்கு கணக்குச் சரி
ஆனால் யாருக்கும்
இறுதி வெற்றியில்லை
குருதியில் நனைந்து
புழுதியில் வீழ்ந்தது
நந்திக் கொடி
சங்கிலியன் தோப்பை
மந்திரி மனையை
புதர் மூடியது
யாழினிசை
கேளாதே போயிற்று
பிறகு.
(03) நவீன காலம் - தென்னிந்தியத் திருச்சபை
வெளிநாட்டு மிஷன்கள்தான் நவீன யாழ்ப்பாணத்தின் தொடக்கம். அதிலும் குறிப்பாக அமெரிக்க மிஷனிலிருந்துதான் நவீன யாழ்ப்பாணத்தைத் துலக்கமாக அடையாளங் காணலாம்.
இதற்கு முன்பு வந்த எல்லா மிஷன்களும் நாடுபிடிக்கும் ஆசையின் ஒரு பகுதியாகவே காணப்பட்டன. ஆனால் அமெரிக்க மிஷன் அப்படியல்ல. அது அமெரிக்கா அத்தகைய ஆசைகளற்றிருந்த ஒரு காலம். எனவே இங்கு வந்த முதல் அமெரிக்கர்கள் அமெரிக்கப் பக்தி இயக்கத்தின் மெய்யான தூதுவர்களாகவே காணப்பட்டார்கள். நாடு பிடிகாரர்களாய் அல்ல.
நாடு பிடிகாரர் எப்பொழுதும் தமது நலன்களிற்கூடாகவே சிந்தித்தார்கள். ஆளுமாசை காரணமாக எப்பொழுதும் தமது நோக்கு நிலையிலிருந்தே அணுகியபடியால் அவர்களால் யாழ்ப்பாணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை.
ஆனால், ஆளுமாசையற்றிருந்த அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்தை அதனியல்புகளிற் கூடாகப் புரிந்துகொள்ள எத்தனித்தார்கள். இதனால் மற்றெல்லா மிஷன்களையும் விட அவர்கள்தான் யாழ்ப்பாணத்துக்கு மிக நெருக்கமாக வந்தார்கள்.
அமெரிக்கர்கள்தான் யாழ்ப்பாணத்தை ஒப்பீட்டளவில் சரியாகக் கண்டுபிடித்த அந்நியர்கள்.
மானிப்பாய் கிறின் ஹொஸ்பிற்றலை நிறுவியவரும் மேற்கத்தைய மருத்துவத்தை முதலில் தமிழுக்கு மொழி மாற்றம் செய்தவருமான டொக்ரர் கிறின் யாழ்ப்பாணத்தவரைப் பற்றி ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்.
"இயல்பாகவே கூர்ந்த மதியும் சுபாவத்திலேயே மெய்ப் பொருளைக் காணத்துடிக்கும் ஆர்வமுமுள்ள இம்மக்கள் தமது ஆற்றலைப் பிரயோகிக்க உண்மையான விஞ்ஞானத்தைக் கொண்டிராதமையால் தமது சிந்தனையாற்றலையும் மதிநுட்பத்தையும் தாய்மொழியை வளம்படுத்தச் செலவிட்டுள்ளார்கள்."
அமெரிக்கர்கள் இங்கு வந்த கதையும் சற்று வித்தியாசமானது. அந்நாட்களில் பிரிட்டிஷ் ஆள்பதிகள் அமெரிக்கர்களைச் சந்தேகத்தோடும் எரிச்சலோடும் பார்த்தார்கள். அமெரிக்க புரட்சியின் விடுதலை வேட்கையை புரட்டஸ்தாந்து மதத்துடன் கலந்து பரப்ப முயன்ற அமெரிக்கர்களை ஆளுமாசையோடிருந்த பிரிட்டிஷ்காரர் தூரத்தில் வைத்திருக்கவே விரும்பினார்கள்.
இதனால் இலங்கைத் தீவுக்கு முதலில் வந்த அமெரிக்கர்களை கேந்திரமான இடங்களில் தங்க அனுமதி மறுத்த பிரிட்டிஷ் ஆள்பதி அவர்களை ஆனையிறவுக்கு அப்பாலிருக்கும் பாலைவெளிக்கு அனுப்புவதைத்தான் அதிகம் விரும்பினார். இப்படி, அந்தப் பாலைநிலத்துக்கு முதலில் வந்த அமெரிக்கர்கள் அதன் வீரியத்தைக் கண்டுபிடித்தார்கள்.
மேலும் அவர்கள் யாழ்ப்பாணத்தை தென்னிந்தியாவுக்கான ஒரு பிதளமாகத்தான் முதலில் கருதினார்கள்.
பெரிய தென்னிந்தியாவில் மதம் பரப்புவதற்கு யாழ்ப்பாணத்தை ஒரு பிதளமாகப் பாவிப்பது என்பதே அவர்களது மதப்பரப்புகை உத்தியாகவிருந்தது.
அதனால்தான் தமது மிஷனுக்கு தென்னிந்தியத் திருச்சபை என்றும் பெயர் வைத்தார்கள்.
ஆனால் நடைமுறையில் அமெரிக்க மிஷன் தீவின் வட பகுதிக்குள்ளேயே அதிகபட்சம் சுருங்கிவிட்டது.
இதனால் காலப்போக்கில் அதன் தலைமையகம் யாழ்ப்பாணத்திலேயே அமைந்தும் விட்டது. இப்படி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு சிந்தித்த முதலாவது மிஷன் என்ற காரணத்தால் அது நவீன யாழ்ப்பாணத்தை கணிசமான அளவு தீர்மானித்த காரணியாகவும் மாறியது.
மதம் பரம்புமிடங்களில் மக்களை அறிவூட்டிச் சிந்திக்க வைப்பது என்பது அமெரிக்கர்களின் மதப்பரப்புகையின் அடிப்படை உத்தியாகவிருந்தது. அநேகமாக மற்றெல்லா மிஷன்களும் நகரங்களையண்டிப் பள்ளிக்கூடங்களைக் கட்டின. ஆனால் அமெரிக்க மிஷன் அதிகமதிகம் கிராமங்களை நோக்கிப் போனது.
இலங்கையின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும் தமிழில் இரண்டாவதுமாகிய "உதயதாரகை" அமெரிக்க மிஷனால் வெளியிடப்பட்டது.
தென்னாசியாவில் முதலாவது மகளிர் பாடசாலையை அவர்கள் உடுவிலில் கட்டினார்கள்.
இதெல்லாம் யாழ்ப்பாணத்தின் கல்வித்தரத்தையும் சிந்திக்கும் திறனையும் உயர்த்தலாயின.
பின்னாளில் மிஷன்களிடமிருந்து கற்ற மதபிரசார உத்திகளைப் பின்பற்றி மிஷன்களோடு போட்டிக்குப் புறப்பட்ட நாவலரும் அவரது சகாக்களும் இந்து போர்ட்டும் போட்டிக்கு பள்ளிக்கூடங்களைக் கட்டலானார்கள்.
குறிப்பாக அமெரிக்க மிஷனோடு போட்டி போட்டுக் கொண்டு யாழ்ப்பாணத்தின் உட்கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் எழுந்தன.
இந்தப் பள்ளிக்கூடம் கட்டும் போட்டியின் பேறாய் யாழ்ப்பாணத்தின் கல்விநிலை நாட்டின் பிற பாகங்களோடு ஒப்பிடுகையில் வழமைக்கு மாறான வேகத்தில் வளர்ச்சி பெற்றது.
ஒரு முறை லலித் அத்துலத் முதலி இனப்பிரச்சினைக்கு அமெரிக்க மிஷனும் காரணம் என்றார்.
ஏனெனில் அமெரிக்க மிஷனால் யாழ்ப்பாணத்தின் கல்வித்தரம் ஏனைய பகுதிகளை விட அசாதாரணமாக வீங்கிவிட அதற்கேற்ப வேலை வாய்ப்புக்களில் அதிகரித்த பங்கைக் கேட்டு யாழ்ப்பாணத்தார் உருவாக்கியதே இந்தப் போராட்டம் என்றுமவர் கூறினார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது மாணவப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கன்ரி பேரின்பநாயகமும் தமிழர்களால் தந்தை என்று அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகமும் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி அமெரிக்க மிஷனும் ஏனைய மிஷன்களும் தமது மதபிரசார நோக்கத்திற்காகத் தொடங்கிய பள்ளிக்கூடங்கள், அச்சகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றின் பேறாகவும் இந்த மிஷன்களுக்குப் போட்டியாக சைவர்கள் தொடங்கிய பள்ளிக்கூடங்கள், அச்சகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றின் பேறாகவும் நவீன யாழ்ப்பாணம் அதற்கேயான புதிரான இயல்புகளோடு முகிழ்ந்து மலர்ந்தது.
இதோடு சேர்ந்து சர்ச்சைக்குரிய யவ்னா மென்ராலிற்றியும் -யாழ்ப்பாண மனோபாவம்- அதன் நவீன வடிவத்தைப் பெறலாயிற்று.
(04) சமகாலம்
(அ) எக்ஸ்ஸோடஸ்
(1)
பொதுவாக, படித்த யாழ்ப்பாணத்தார் உலகில் உள்ள மூன்று "ஜே"க்களைப் பற்றி அடிக்கடி கூறிப் பெருமைப் படுவதுண்டு. யூதர், யப்பானியர், யாழ்ப்பாணத்தார் ஆகிய மூன்று இனங்களின் ஆங்கில முதலெழுத்துக்களே அவை.
ஆசியாவின் வெவ்வேறு இனவேர்களிலிருந்து தோன்றிய இம்மூன்று இனங்களிற்கிடையிலும் அபூர்வமான சுபாவ ஒற்றுமை இருப்பது பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது.
யூதர், யப்பானியர் போலவே யாழ்ப்பாணத்தவரும் கடும் உழைப்பாளிகள், சுயநலமிகள், தந்திரசாலிகள். அதோடு சேமிப்பார்வம் உடையவர்கள் என்று கூறப்படுகிறது.
மற்றது பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் ஒரு வித விளங்கக் கடினமான ஒத்திசைவைப் பேணுவதில் இம்மூன்று இனங்களும் ஒரே மாதிரியானவை என்றும் அவதானிக்கப் பட்டுள்ளது.
ஒரு புறம் கடும்பிடியாகப் பழைமை பேணுவார்கள். இன்னொரு புறம் மிக நவீனமானவற்றில் தமக்கு வசதியானதை எதுவித அசௌகர்யமும் இன்றி தம்வயப்படுத்தி விடுவர்.
மேலும் தமது சொந்தச் சாம்பலிலிருந்து புத்திளமையுடன் மீண்டெழும் மிக அரிதான வீரம் இம்மூன்று ஜனங்களுக்குமுரியது.
இப்படித் தங்களை யூதர், யப்பானியரோடு எப்பொழுதும் ஒப்பிட்டுப் பெருமைப்பட்டு வந்த யாழ்ப்பாணத்தார் ஒருநாள் யூதர்களைப் போலவே ஒரு எக்ஸ்ஸோடஸிற்கும் ஆளாக வேண்டி வந்தது.
எக்ஸ்ஸோடஸ் என்பது பைபிளில் பழைய ஆகமத்தில் வரும் ஒரு மகா இடப்பெயர்வு. மிக ஆதியான காலமொன்றில் நிகழ்ந்தது. எகிப்திய நாகரிகத்தில் நூற்றாண்டுகளாக இரண்டாம் தரப் பிரசைகளாயிருந்து வந்த யூதர்களை அவர்களது தீர்க்கதரிசி மோஸஸ் மீட்டெடுத்து ஏற்கனவே ஆதி பிதாவால் "வாக்களிக்கப்பட்ட நாட்டை" நோக்கி வழிநடத்திச் சென்றார்.
வழிநெடுக அற்புதங்கள் செய்தார்.
பசித்த காலைப் பொழுதில் வானிலிருந்து மன்னாவைப் பொழியச் செய்தார்.
பாதை முடிந்த இடத்தில் செங்கடலைப் பிளந்து வழி செய்தார். இது வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி நிகழ்ந்த எக்ஸ்ஸோடஸ். ஆனால் யாழ்ப்பாணத்து எக்ஸ்ஸோடஸ் ஒரு படையெடுப்பிலிருந்து தப்பும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டது.
மகா இடப்பெயர்வுகள் என்பதைத் தவிர இரண்டுக்குமிடையில் அடிப்படை வேறுபாடுகள் உண்டு.
ஈழப்போரில் முன்னரும் பல அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எக்ஸ்ஸோடஸ் அவற்றுக்குள் தனித்து நிற்கிறது. முதலாவது ஈழப்போரில் வடமராட்சியைப் பிடித்த ஒபரேஷன் லிபறேஷன்.
பிறகு ஐ. பி. கே. எவ் உடனான இரண்டாவது ஈழப்போரில் நிகழ்ந்த யாழ்ப்பாணத்துக்கான சண்டை.
பிறகு மூன்றாவது ஈழப்போரில் (இப்பொழுது நடந்து கொண்டிருப்பது) நிகழ்ந்த தீவுப்பகுதி இடப்பெயர்வு மற்றும் ஒபறேஷன் லீப்போர்வேர்ட். ஆனால் இவை எல்லாவற்றுக்குள்ளும் எக்ஸ்ஸோடஸ் ஒரு தனி அனுபவமாகப் பிரிந்து நிற்கிறது.
முன்னொரு போதும் நகரமிப்படி நெடுங்காலம் ஜனங்களைப் பிரிந்து இருந்ததில்லை.
போத்துக்கிசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்தியர் என்று பலர் கையிலது மாறி மாறி வீழ்ந்திருக்கிறது.
ஆனாலெப்பொழுதும் அது ஜனவசியமிழந்ததில்லை.
ஜனங்களையிழந்து தரிசானதுமில்லை.
அதன் ஆயிரமாயிரம் ஆண்டுகால இருப்பில் ஜனங்களில்லாத ஆறு மாதகாலம் என்பது இதுதான் முதற் தடவை.
மேலும் இங்கேயொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில்தான் 1995இல் எக்ஸ்ஸோடஸ் ஏற்பட்டது என்பது.
(2)
யாழ்ப்பாணம் 30.10.1995
அது ஒரு வெள்ளிக்கிழமை
மழைநாள்
அட்டமித் திதி.
ஒளி குறைந்த
குளிரான
பின்மாலை
மழை பெய்து ஓய்ந்திருந்த
சாலைகளின் வழியே
சைக்கிளை மிதித்துச் சென்ற போது
அந்த அறிவிப்புக் கேட்டது.
"அன்பான ஜனங்களே...
எதிரி
நகரைப் பிடிக்க வருகிறான்
நீங்கள்
உங்கள்
உடைமைகளையும் எடுத்துக் கொண்டு
உடனடியாக
தற்காலிகமாக
ஊர்களை விட்டோடுக"
அவகாசமில்லை
ஒரு சிறிதும்
அவகாசமில்லை
நாடு
திகிலடைந்து
ஒரு நாயைப் போல
தெருவிலோடியது.
சபிக்கப்பட்டோம்.
காதுள்ளவன்
கேட்டிருக்கக் கூடாத
வார்த்தைகள் அவை
கண்ணுள்ளவன்
பார்த்திருக்கக் கூடாத
காட்சிகள் அவை
ஓரிரவுக்குள்
முதுமை
திடீரென எமைத் தாக்கியது
செம்மணி வெளியில்
சோகமாய் நின்ற
நகரின்
வரவேற்பு வளைவைக்
கடந்த அக்கணத்திலேயே
எமது கனவுகள்
நரைக்கத் தொடங்கின
இருண்ட கடலேரியில்
இடையிடை எரிந்த
பரா ஒளியில்
தப்பியோட இருந்த
ஒரே வழியூடாக
காயப்பட்ட
ஒரு மலைப்பாம்பாக
ஊர்ந்தூர்ந்து போனது
நாடு
ஒரு புண்ணியமும் செய்திராத
நாடு
வழி நெடுக்க குழந்தைகள்
களைப்பாலிறந்தன
கால் நடைகள்
வழி மாறித் தொலைந்தன
முதியோருக் கெலாம்
இறுதி நாளது
ஊழிப் பெரு மழை
பெய்ததப் போது
உலகமே எங்களை
மறந்து விட்டதா?
யாரும்
யாருக்கும்
ஆறுதலாயிராத
ஒரு நாள் வருமென்று
யாராவது
நினைத்திருந்தோமா?
ஒரு இரவு முழுதும்
ஒரு பகல் முழுதும்
இரு சிறிய
பாலங்களின் மீது
பிச்சைக்காரராய் கத்திருக்க
ஒரு நாள் வந்ததே.
எமது குழந்தைகள்
மழை நீரை
ஏந்திக் குடிக்கவும்
எமது முதியோரைத்
தெருவோரம்
கைவிட்டுச் செல்லவும்
ஒரு நாள் வந்ததே
எல்லாக் கலையாடிகளும்
எல்லாக் குறி சொல்வோரும்
பொய்யராய்ப் போயினரன்று
எமது நகரின்
கடைசி இரவது
துயிலாதே
தாகமாயிருந்த
இறுதியிரா வதிலே
கண்டி வீதி நெடுக
நாமிருந்து
அழுதோம்
யாழ்ப்பாணமே
ஓ... யாழ்ப்பணமே
பாலை நிலத்தின் புதிரே
உன்னைப் பிரிந்தோம்
அன்றுன்னைப் பிரிந்தோம்.
இடிந்த கோடையே
எரிந்த நூலகமே
குருட்டு மணிக்கூட்டுக்
கோபுரமே
உமைப் பிரிந்தோம்
அன்றுமைப் பிரிந்தோம்
பண்ணைத் துறையே
பறங்கித் தெருவே
பொம்மை வெளியே
உமைப் பிரிந்தோம்
அன்றுமைப் பிரிந்தோம்
யாழ்ப்பாணமே
ஓ... யாழ்ப்பணமே...
(3)
சுமார் மூன்று நாட்களாக எக்ஸ்ஸோடஸ் தொடர்ச்சியாக நிகழ்ந்தது.
குடாநாட்டின் ஜனங்கள் மிகுந்த வலிகாமம் பகுதியிலிருந்து ஒரு சிறு பகுதியினர் தவிர அநேகமாக எல்லாருமே இடம்பெயர்ந்து போயினர்.
எங்கே போகிறோம், எப்பொழுது திரும்பி வருவோம் என்பது பற்றிய நிச்சயங்கள் எதுவுமின்றி ஜனங்கள் கடலேரிகளைக் கடந்து போனார்கள்.
அதிசயங்களோ அற்புதங்களோ நிகழாப் பெருஞ்சாலை வழியே முழுநகரமும் சோகமாய் வடிந்து போனது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
பாலை நிலத்தின் புதிராய்
ஒரு தொடர்ச்சியான பண்பாட்டு மையமாய்
தென்னாசியாவின் ஜெருசலமாய்
செருக்குற்றிருந்த தலைநகரம் ஒன்று
ஜனங்களையிழந்து தனித்தது.
அதன் சிறிய கடலேரிகளின் வழியே
அதன் கழுத்தை நெரித்த
பகைவரின் கையில் முடிவிலது வீழ்ந்தது
யாழ்ப்பாணம் வீழ்ந்தது.
சிதறியோடிய ஜனங்கள் மறுபடியும் சுமார் ஆறு மாதங்களிற்குப் பிறகே வீடு திரும்பினார்கள். அதிலும் கணிசமான தொகையினர் கடலேரிகளைக் கடந்து வன்னிப் பெருநிலம் வந்தனர். இன்றுவரை நகர் மீளாத அந்த ஜனங்களெல்லாரும் யூதர்களைப் போலவே ஒவ்வொரு திருநாளின் போதும் பெருநாளின் போதும் நகரம் மீட்கப்பட்டுவிம் என்று காத்திருப்போராயினர்.
(ஆ) யாழ்ப்பாணம் அல்லது அமைதி நகரம்
1996 ஏப்ரில் மாதம் ஜனங்கள் வீடு திரும்பிய பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடிதங்கள் சில.
(1)
24. 06. 1996,
யாழ்ப்பாணம்.
இம்முறை மிக நீண்ட கோடை
ஒரே வெயில்
ஒற்றனைப் போல ரகசியமாய் வீசும் காற்று
இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட்ரக்குகளுக்குமுரியது
பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது
தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.
இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றி வளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.
ஆனால் இவையெல்லாவற்றுக்கும் அவர்கள் சூட்டிய பெயர் "அமைதி நகரம்"
யாழ்ப்பாணம் இப்பொழுது "அமைதி நகரம்"
நாங்கள் எல்லாரும் அமைதி நகரின் கைதிகள்
அல்லது மந்தைகள்
ஒரு பெரிய மந்தத்தனம் எம்மீது கவிந்து வருகிறது.
யாழ்ப்பாணம் இப்பொழுது வெண்தாமரை அரசியின் உயிருள்ள ஷோகேஸ் ஆக மாறி வருகிறது.
(2)
21. 08. 1996
யாழ்ப்பாணம்
மின்சாரம் வந்து விட்டது
பஸ் ஓடுகிறது
மினிசினிமா கொகோ கோலா
புளூஃபில்ம் எல்லாம் கிடைக்கிறது.
இருக்கிற ஜனங்கள்
இல்லாத ஜனங்களின் வீடுகளில்
திருடுகிறார்கள்
ஆளில்லாத வீடுகளில் அநேகமாக
விபசாரம் நடக்கிறது
கசிப்பு பெருக்கெடுத்தோடுகிறது.
சந்திச் சண்டியர்கள்
மறுபடியும் களத்திலிறங்கி விட்டார்கள்
கோயிலில் தொடங்கிய சண்டைகள்
பெரும்பாலும்
கொலைகளில் முடிகின்றன
எல்லா வற்றிலிருந்தும்
ஒரு மகா பின்வாங்கல்
மகா மகா சறுக்கல்
காணாமல் போனவர்களைப் புதைத்த
வெளிகளில்
உப்பு விளைகிறது
ஊரி சேர்கிறது.
(3)
23. 10. 1996
யாழ்ப்பாணம்
உன்னுடைய பெரிய ஓவியங்கள் பத்திரமாயுள்ளன. ஆனால் திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த சிறிய சைஸ் ஓவியங்களைக் காணவில்லை. மாற்குவின் ஓவியங்களும் அதிகம் தொலைந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பவற்றைப் போய் எடுக்கலாமா என்று யோகன் கேட்டான். ஆனால் பயமாயிருக்கிறது. கைலாசநாதனுடைய ஓவியங்கள் முழுவதும் தொலைந்து விட்டன. அ. இராசையாவின் ஓவியங்களும் அநேகமாக மிஞ்சவில்லை.
எல்லாவற்றையும் திரும்பவும் முதலிலிருந்தே வரைய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும்... எல்லாவற்றையுமே...
(4)
31. 10. 1996
(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி கைதடியில் வைத்து பிடிக்கப்பட்டு சுமார் 11 படையாட்களால் சிதைக்கப்பட்டார். பிறகு செம்மணியில் புதைக்கப்பட்டார். இது தொடர்பாக எழுதப்பட்ட இக்கவிதை யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுர வடிவில் விநியோகிக்கப்பட்டது)
அமைதி நகரின் மனம்பேரிகள்
அழகிய மனம்பேரி
அவள் ஒரு போராளி
அவளை அவர்கள் பிடித்தனர்
ஒரு அழகி என்பதால்
அவளிடம் ரகசியங்கள்
இருந்ததால்
அவளை அவர்கள் சிதைத்தனர்
நிர்வாணமாகக் குறையுயிராக
தெருவிலே விட்டுச் சென்றனர்.
அழகிய மனம்பேரி
ஆனால் அவளைப் போல
அவளது மரணம்
அழகானதேயல்ல
அழகிய கிரிஷாந்தி
இவள் ஒரு போராளியல்ல
ஆனாலும் அவளையவர்கள் பிடித்தனர்
கைதடி வெளியெலாம்
அவள் கதறிய குரல் அலைய
அவளை அவர்கள்
பல்முறை சிதைத்தனர்
பிறகு
கழுத்தை நெரித்து
செம்மணியில் புதைத்தனர்
அவளைத் தேடிச் சென்ற
தாயை தம்பியை அயலவரை
எல்லாரையுமே
கழுத்தை நெரித்து
செம்மணியில் புதைத்தனர்
அழகிய ராஜினி
இவளும் ஒரு போராளியல்ல
ஆனாலும் அவளையவர்கள் பிடித்தனர்
யாருமில்லாத வீடொன்றின்
சுவர்களில்
அவள் அழுத குரல்
மோதி அழிய
அவளை அவர்கள் சிதைத்தனர்
பிறகு
கழுத்தை நெரித்து ஒரு
மலக்கிடங்கில் புதைத்தனர்.
ராஜினி கிரிஷாந்தி
இருவரும்
அமைதி நகரின் மனம் பேரிகள்
விதவை அரசி சொன்ன
பொய்களின் பின்
சென்றார்கள்
தனியே சென்றார்கள்
வெண்தாமரைப் பொறிகளில்
சிக்கினார்கள்
அமைதி நகரம்
அவர்களின்
அழகை இளமையைக் கேட்டது.
அதன் சாப இருளில்
பேய்கள்
பலம் மிகப் பெற்றெழுந்து
மனம்பேரிகளைத்
தூக்கிச் செல்கின்றன
மனம்பேரிகளுக்கு ஆபத்து
தனியாகப் போகும்
எல்லா அழகிய பெண்களுக்கும்
ஆபத்து
மனம் பேரிகளின் கதறல்
அமைதி நகரெலாம் நிறைகிறதே...
கைதடி வெளியே
செம்மணி வெளியே ஐயோ
அமைதி நகரமே
அமைதி நகரமே
அருவருப்பான ஒரு பொய்யே
உனக்கும் ஐயோ...
இதோ
சமாதானம்
அதன் மரண நெடியுடன்
ஒரு மாய வலையென
எமது நகரங்களின் மீது
விழுகிறது.
வருகிறார்
விதவை அரசி
வெற்றிக் கொடி
வெண் தாமரை
இரண்டிலும் குருதி வடிய
அதே வசியச் சிரிப்பு
அதே வெறித்த விழிகள்
அதே முறிந்த
வாக்குறிதிகள்
வருகிறாள் விதவை அரசி
கவனம்
அமைதி நகரின் மக்களே
கவனம்
அழகிய எல்லாச் சிறு பெண்களும்
கவனம்
யாழ்ப்பாணம் அழைக்கிறது
கவனம்
மனம்பேரிகளின் ஆவி
ஒரு நாள்
விதவை அரசிகளைத் துரத்தும்
முன்பொரு
விதவையின் வெற்றிக்கொடி
அறுந்து
புழுதியில் வீழ்ந்தது போலே
மனம் ரேரிகளின் ஆவி
எழும்
அதுவரை
அமைதி நகரின் மக்களே
கவனம்
அழகிய எல்லாப் பெண்களும்
கவனம்
அமைதி நகரம் அழைக்கிறது.
கைதடியில் கதிர்காமத்தில்
புல் மூடிய
புதைகுழி நீத்து
எல்லா மனம்பேரிகளும் எழுக
அமைதி நகரம் அழைக்கிறது
அமைதி நகரம் அழைக்கிறது
அதன் வாசலில்
கிரிஷாந்தி
அமைதியுறா மனத்தினளாய்
விழிகளில் வன்மத்தோடு
வாசலிலே கிரிஷாந்தி...
கைதடி வெளியெலாமாகி...
செம்மணி வெளியெலாமாகி...
மனம்பேரி -
ஒரு அழகுராணி. ஜே.வி.பி. போராளி. 1971 கிளர்ச்சியின் போது பிடிக்கப்பட்டு கடுமையாகச் சிதைக்கப்பட்டு பின் கொல்லப்பட்டார். அவர் சிதைத்துக் கொல்லப்பட்ட விதம் பின்னாளில் சிறிமாவோ ஆட்சிக்கு எதிரான மேடைகளில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. கதிர்காமத்து அழகி மனம்பேரியின் ஆவி அவர் தோற்கும் வரை துரத்திச் சென்றது.
விதவை அரசிகள் -
சிறிமாவும் அவரது மகள் சந்திரிகாவும் விதவைகளாயிருந்த படியால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது. இருவரும் அநுதாப வோட்டுக்களால் பதவிக்கு வந்தவர்கள்தான். கொல்லப்பட்ட அரசியல் தலைவர்களின் மனைவிகளாயிருந்த படியால் அத்தலைவர்களின் வாரிசுகளாக இவர்கள் முடிசூட முடிந்தது. குறிப்பாக சந்திரிகா தானொரு விதவை என்றும் விதவைகளின் துயரம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியும் என்றும் தன்னை விதவைகளின் அரசியாகவும் காணாமல் போனவர்களின் தாயாகவும் வேஷங் காட்டித்தான் பதவிக்கு வந்தார். இது காரணமாகவே இங்கு தாயும் மகளும் விதவை அரசிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
(5)
ஜெயசிக்குறு நாளில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடிதம்
19. 12. 1998
யாழ்ப்பாணம்.
வழமை போலத்தான் எல்லாமும்
சுற்றி வளைக்கப்பட்ட நாட்களும்
சுற்றி வளைக்கப்படாத நாட்களும்
இம்முறை மழை பிந்தி விட்டது
கடும்பனி; கடும் வெயில்
பரவலாக சளியும் வைரஸ் காய்ச்சலும்
வன்னியிலிருந்து வந்தவர்களிடமிருந்து காய்ச்சல்
தொற்றுகிறது. இதில் சிலர் இறந்து போனார்கள்.
நீ காய்ச்சலாகி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்ததாக
அறிகிறோம். கவலையாயிருக்கிறது.
மல்லாவி ஒரு ஐ. என். ஜி. ஓ நகரம் என்று
எழுதியிருந்தாய். யாரோ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அதை குட்டி ஜெனிவா என்று கூறியதாக ஒரு தகவல். நீ அங்கேதானிருக்கிறாய் என்பது எமக்கு ஓரளவுக்கு ஆறுதலாயிருக்கிறது.
(4)
ஓயாத அலைகள் மூன்றுக்குப் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கடிதம்
27. 10. 2001.
யாழ்ப்பாணம்.
வீடு திரும்பி விட்டோம். இது நாலாவது திரும்புதல். ஏற்கனவே கோட்டைச் சண்டையின் போது முதல்முறை ஓடித் திரும்பினோம். பிறகு ஐ.பி.கே.எவ் சண்டையின் போதும் ஒரு ஓடித்திரும்புதல். பிறகு எக்ஸ்ஸோடஸ். இம்முறை ஓயாத அலைகளுக்காக.
வீட்டிற்கு பெரிய சேதம் இல்லை.
சிறிதும் எதிர்பாராத இடப்பெயர்வு இது.
ஜெயசிக்குறுவின் தோலிவிகள் கடலேரி தாண்டியும்
வரமுடியும் என்று யாருமே கற்பனை செய்திருக்கவில்லை.
கடலேரிக்கப்பாலிருந்து நகரம் குறிபார்க்கப்படும் என்றும்
யாரும் கற்பனை செய்திருக்கவில்லை
ஹிற்லரின் ஒப்பறேஷன் பாபறோசா விற்குப் பிறகு உலகில் (உள்நாட்டில்) மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட படை நடவடிக்கையாக ஜெயசிக்குறு கூறப்பட்டது. முடிவில் அது பாபறோசாவைப் போலவே பெரிய றிவேர்ஸ் எடுத்தது.
மொஸ்கோவைப் பிடிக்கப் புறப்பட்ட பாபறோசாவின் தோல்விகள் கிழக்கு ஜேர்மனி வரையிலும் பிறகு ஹிட்லரின் வீழ்ச்சி வரையிலும் விரிந்து போயின. அது போலவே ஜெயசிக்குறுவின் தோல்விகளும் மன்னார், மணலாறு, குடாநாடு என்று மும்முனைகளிலும் விரிந்து வந்தன.
எந்த ஒரு பாடப் புத்தகத்துக்கூடாகவும் வியாக்கியானம் செய்ய முடியாத திடீர்க் காட்சி மாற்றம் இது.
ஒரு வித இராணுவ அதிசயம் தான்.
பீரங்கிக் குண்டுகள் கடலேரி மீது பரஸ்பரம் கூவிப் பறந்தன.
கடற்காகங்கள் செத்து வீழ்ந்தன.
தென்மராட்சியைப் பீரங்கிகள் சல்லடை போட்டன.
காவலரண்கள் மாறி மாறி வீழ்ந்தன.
நகருக்கான சண்டை எந்த வினாடியும் வெடிக்கலாம்
என்று வதந்திகள் பரவின.
ஆனால் பிறகது நடக்கவில்லை.
வேட்டோசைகள் மெல்லத் தணிந்து பூநகரிக்கரை நோக்கி பின்வாங்கிச் சென்றன.
இப்போதி எல்லாமும் வழமைக்குத் திரும்பி விட்டாற் போலத் தோன்றுகின்றது. ஆனால் அது வெறும் தோற்றம்தான்.
எப்பொழுது மற்படியும் பீரங்கிகள் வெடிக்குமோ என்ற பீதி கலந்த எதிர்பார்ப்பை எங்கும் அவதானிக்க முடிகிறது. இப்போதைக்கில்லா விட்டாலும் என்றைக்கோ ஒருநாள் யாழ்ப்பாணத்துக்கான சண்டை வெடிக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.......
எப்போது?
பகுதி - மூன்று
கந்தபுராண கலாசாரத்திலிருந்து கரும்புலிகள் வரை
(1)
கோடையும் நெய்தலும் கலந்துருவாக்கிய
ஒரு நூதனம்தான்
யாழ்ப்பாணத்தான்
சங்ககாலச் சூரியன்
பாலை நிலத்தின் பிளவுகளிற்கிடையில்
தனது மனைவி சாயையைத்
தேடியலைந்த பகலொன்றில்
அவன் பிறந்தான்
பாலைநிலத்துத் தெய்வம்
கொற்றவை
பகைவரை வேட்டையாடி
பேய்கள் காய்ச்சிக் கொடுத்த
நிணக்கூழ் அருதி
அயர்ந்திருந்த ராவொன்றில்
அவனுக்கு ஏடு தொடக்கப்பட்டது
அவன் யானையேற்றம் குதிரையேற்றம் பயின்றான்
கோடையும்
கடலேரி மீதும் வீசும்
உலர்ந்த உப்புக்காற்றும்
ஆறுகளை விழுங்கிய
சுண்ணக் கற் பாறை நிலமும்
அவனது கனிகளை
ருசியானவை யாக்கின
அவனது புகையிலையைக்
காரமானது ஆக்கின
அவனது இதயத்தை
வலியது ஆக்கின
யாழ்ப்பாணத்து மாம்பழம் தனிருசி
யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனிருசி
யாழ்ப்பாணத்து புகையிலை தனிருசி
யாழ்ப்பாணத்தவனும் ஒரு தனி ரகம்
உப்புக்காற்றில்
ஊரிக்கடற்கரையில்
கோடை வெயிலைக் குடித்தும்
புகையிலைச் செடிகளின் மீது அரும்பிய
அதிகாலைப் பனித்துளிகளை உண்டும்
வளர்ந்தவன் அவன் என்பதால்
வலியனாயும் சுழியனாயும்
அயராத உழைப்பாளியாயும்
அவன் உருவாகினான்.
ஆறுகளோ மலைகளோ அடர்ந்த காடுகளோ இல்லாத பாலை நிலம் அது. இடையிடையே பருவகால ஆறுகளும் கடலேரிகளும் குறுக்கறுத்தோடிய பயனற்ற ஊரிவெளிகளால் துண்டாடப் பட்டிருக்கும் அது.
இதில் தனது தோள்களையும் சொந்தச் சேமிப்பையும் நம்பித்தான் அவன் சீவித்தான். நிலத்தின் வளத்தைவிடவும் தனது அயரா உழைப்பின் பலத்தையே அவன் அதிகமதிகம் நம்பினான்.
அவனது அழகிய சிறிய கடலேரிகளின் வழியே எப்பொழுதும் முற்றுகையிடப்படக் கூடியவனாக இருந்தான். இது அவனை பிறரில் தங்கியிராத, எப்பொழுதும் பிறத்தியாரை சந்தேகிக்கின்ற, தனது சொந்த சேமிப்பிலேயே தங்கியிருக்கின்ற, தன்னம்பிக்கை மிக அதிகமுடைய ஒரு தந்திரசாலியாக்கியது. இப்படி வீரம், விவேகம், விச்சுழி, தந்திரம், சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம், புதுமைநாட்டம், விடுப்பார்வம், விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு தினுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி.
யாரும் அவனுக்குப் பொருட்டில்லை.
யாருடைய அங்கீகாரமும் அபிப்பிராயமும் அவனுக்குப் பெரிதில்லை.
யாரையும் நெடுகவும் அவன் நம்பியதில்லை.
யாரையும் சந்தேகிக்காமல் விட்டதுமில்லை.
ஆனால் யாரோடும் "தட்டாமல் முட்டாமல்" விலகி நடக்கும் வித்தை அவனுக்குத் தெரியும்.
ஒரு புன்னாலைக்கட்டுவன் வாசி ஒருமுறை சொன்னார். யாழ்ப்பாணத்தான் ஒரு பெண்டூலத்தைப் போன்றவன் என்று. அவனால் இரண்டு எதிர்த்துருவங்களுக்கும் போகமுடியும் என்று. இது மிகச் சரி.
முன்னாளில் அவன் "தின்னாமல் உண்ணாமல் அண்ணாமலைக்குக் கொடுப்பவனாய்", வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேமிப்பவனாய்", சுயநலமியாய், விச்சுழியனாய்க் காணப்பட்டான். ஆனால் பின்னாளில் நம்ப முடியாத அளவுக்கு வீரனாய் தியாகியாய் யுத்தகளத்தில் சித்துக்கள் செய்பவனாய் மாறினான்.
நூறு நூறாண்டுகளாய் அவன் தேடிய தேட்டமனைத்தையும் ஒரே நாளில் கைவிட்டு இடம்பெயர்ந்து போகுமொருவனாய் மாறினான்.
யுத்தம் அவனைச் செதுக்கியது.
சுயநலமியாய் சேமிப்பில் வெறியனாய் இருந்தவனை வீரனாக்கியது.
இடம் பெயர்வுகள் அவனைப்
பண்பு மாற்றம் பெற வைத்தன.
கந்தபுராண கலாசாரத்திலிருந்து
அவனைக் கட்டாயமாக இடம் பெயரவைத்தன.
ஒவ்வொரு இடப் பெயர்வும் அவனுக்கு
மனப் பெயர்வாய் மாறியது.
ஒவ்வொரு படையெடுப்பும் அவனுக்குப்
பட்டப்படிப்பாய் மாறியது.
இப்போதுள்ள யாழ்ப்பாணி
ஒரு யுத்தத்தின் கனி
ஒரு மகா அனுபவசாலி
ஒரு மகா தந்திரசாலி
ஒரு மகா விவேகி
பூமியில் வேறெந்த ஜனங்களிற்கும் நடந்திராத தொடர்ச்சியான சோதனைகள், இழப்புக்கள் என்பவற்றின் பேறாய் உருவாகியவன்.
யாரும் இதுவரை பட்டிராத காயங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் இவை யாவும் அவனைக் கந்தபுராண கலாசாரத்திலிருந்து கரும்புலிகள் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றன.
பெண்டூலம் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்திற்கு வந்திருக்கிறது.
இனி அவனை யாரும் மேய்க்க முடியாது.
யாரும் அவனுடன் பேரம் பேச முடியாது
யாருமவனை முற்றுகையிட முடியாது
எல்லா முட்கம்பிச் சுவர்களையும்
எல்லா மண் அரண்களையும்
எல்லா மந்தத் தனங்களையும்
துரோகத்தனங்களையும்
பிளந்து கொண்டு
றிவிரச அகதிகள்
நகர் மீளும் நாள்
வரும் போது
சங்கிலியன் தோப்பிலும்
மந்திரி மனையிலும்
பண்ணைத்துறையிலும்
கொழும்புத்துறையிலும்
பாடுவான்
புதிய யாழ்பாடி
முழு நிலவு
யமுனா ஏரியின்
பாசி படிந்த நீரில்
பளிச்சிடும்
சுப நாளில்
சுப முகூர்த்தத்தில்
எரிந்த காவலரண்களைத் தாண்டி
இடிந்த கோட்டைச் சுவர்களைத் தாண்டி
ஏரி நிறைந்த பிணங்களைத் தாண்டி
சிங்கை நகரின்
தோரண வாயிலில் நின்று
பாடுவான்
புதிய யாழ்பாடி
மீட்கப்பட்ட நகரின்
வெற்றிப் பாடலை
வீடு திரும்பிய ஜனங்களின்
மகிழ்சிப் பாடலை...
(2) நகர் மீளும் பாடல்
(மெலிஞ்சிமுனை கத்தோலிக்கக் கூத்து மெட்டில் பாடப்பட வேண்டும்)
எமது காய்ந்த தெருக்கள் தோறும்
எரிக்கும் வெயிலைக் கேள்
எமது விறைத்த பனைகளோடு
கதைக்கும் காற்றைக் கேள்...
(எமது காய்ந்த...)
எமது கிராமம் எரிஞ்சு போச்சு
எமது வீதி தனித்ததாச்சு
எமது காற்றில் மரண மூச்சு
எமது இதயம் கருகிப் போச்சு
(எமது காய்ந்த...)
எமது நகரின் சிதைந்த வாயில்
தொலைவில் தெரியுதே
எமது வெளியில் நிமிரும் பனைகள்
எம்மை அழைக்குதே...
(எமது நகரின்...)
எமது கடல் எமது வயல்
எமது வெளி எமது குளம்
எமது நிலம் எமது வனம்
எமது நதி எமது சனம்
எமதெனவே எமதெனவே
எமதெனவே எமதெனவே
(எமது காய்ந்த...)
21. 11. 2001
சூரன் போர் அன்று
திருநகர் - மல்லாவி.
--------------------------------------------------------------------
நன்றி
எனது தாயார் அடிக்கடி சொல்வார் 18 வயது வரை நீ ஒரு Problematic Child என்று ஒரு சாத்திரியார் சொன்னவர் என்று.
அவ்வளவு குளப்படி நான்.
ஆனால் மெய்யாகவே நான் அவருக்கு Problematic ஆகியது 18 வயதுக்குப் பிறகுதான்.
முதிரா இளம்வயதில் யுத்தம் என் வேர்களையறுத்தது.
வீட்டுக்கும் எனக்கும் பொருத்தமேயில்லை.
சுமார் 19 ஆண்டுகால அலைச்சல்.
இந்த அலைந்த வாழ்வினூடே உருவாக்கியவைதான் எனது மொழியும் எனது பரிசோதனைகளும்.
யுத்தம் என்னை ஜனங்களுக்குள் இறக்கியது.
எல்லாவற்றுக்கும் சாட்சியாயிருக்கக் கற்றுக் கொடுத்தது. ஜனங்களின் மொழியிலேயே ஜனங்களுக்கு விளங்கும் விதத்திலேயே எதையும் கூறுமாறு எனக்கது விதித்தது. அதனாலது எனது மொழியை இலகுவாக்கிக் கொடுத்தது. இருக்கின்ற எந்த ஒரு வடிவத்திலும் திருப்திப்படாத, எதையும் இறுதி வடிவமாக ஏற்றுக் கொள்ளாத, எல்லாவற்றையும் ஏதோ ஒரு கட்டத்தில் கடந்து போய்விடத் துடிக்கின்ற ஒருவித வேக மனோநிலையை எனக்குள்ளது உருவாக்கியது. இதிலிருந்து வந்தவைகள்தான் எனது இந்தப் பரிசோதனைகள். இதன்படி பார்த்தால் எனது முதல் நன்றிகள் யுத்தத்திற்கே.
பிறகு திருவருக்கும் சந்திராக்காவுக்கும்.
இருவரும்தான் எனது முதல் வாசகர்கள், விமர்சகர்கள்.
பிறகு கருணாகரனுக்கு.
எழுதிய கையோடு இதை அச்சில் போட்டவர் அவர்தான். தானாக முன் வந்து இதை வெளியிட்டார். முகப்போவியத்திலிருந்து உள்ளோவியங்கள் வரை எல்லாவற்றையும் புளொக் செய்தார். புரூவ் பார்த்தார். லே அவுட் செய்தார்.
முக்கியமாக எனது பரிசோதனை வடிவங்களை அவற்றுக்கே உரிய தனித்துவமான லேஅவுட்டில் அச்சில் போட்டவரும் அவரே. அவரில்லையென்றால் இது இத்துணை விரைவாக அச்சில் வந்திருக்காது.
பிறகு திரு. இளங்குமரனுக்கும் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கும். இருவரும் எனக்குத் தேவையான புத்தகங்களைத் தந்து உதவியவர்கள். அவர்களுடைய புத்தகங்கள் கிடைத்திராவிட்டால் இதில் வரும் பல விசயங்களை நான் சரிபார்த்திருக்கவே முடிந்திருக்காது.
பிறகு வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அச்சகத்தாரிற்கும் அன்ரனிக்கும். இதை இத்துணை விரைவாக செம்மையாக அச்சிட்டதற்காக.
பிறகு மாறன் பதிப்பகத்திற்கும், றெஜிக்கும். நூலின் அட்டைப்படத்தை ஸ்கிறின் பிறின்ற் செய்ததற்காக.
பிறகு அன்புமணிக்கு, கவர் மேக்கிங்கிற்கு உதவியதற்காக.
பிறகு எனக்குத் தனிப்பட்ட முறையில் உதவிய திரு. B. அழகேஸ்வரனுக்கும், சு. சுகந்தனுக்கும்.
பிறகு கலாநிதி பொ. ரகுபதிக்கு.
நூலின் அட்டைப்படத்தில் வரும் ஆனைக்கோட்டை முத்திரையை வரையத் தேவையான மூல வடிவத்தை அவரது EARLY SETTLEMENTS IN JAFFNA என்ற நூலிலிருந்தே பெற்றேன்.
இவற்றோடு இறுதியாக எமது வாசகர்களுக்கு.
எனது பரிசோதனைகளை விமர்சித்தும் ஆதைத்தும் எனது வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தது அவர்கள்தான்.
எல்லாருக்கும் எனது நன்றிகள்.
நிலாந்தன்
09. 02. 2002
யோகபுரம்
மல்லாவி.
---------------------------------------------
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
இதோ உனது நாட்கள்
வரும் வரும்.
பகைவர்க்குப் பொறியாகும்
உனது சிறிய கடலேரிகளை
புராணங்கள் உறங்குமுனது
புராதன மண்மேடுகளை
இளவரசி நீராடி
குதிரை முகம் நீங்கப்பெற்ற
உனது புண்ணிய தீர்த்தங்களை
மீட்கும் நாள்
இதோ வ்ரும் வ்ரும்.
மகிழ்.
-----------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக