சங்க கால வள்ளல்கள்
வரலாறு
Back
சங்க கால வள்ளல்கள்
பாலூர் கண்ணப்ப முதலியார்
உள்ளுறை
1. பாரி
2. வல்வில் ஓரி
3. ஆய் அண்டிரன்
4. திருமுடிக் காரி
5. நள்ளி
6. நெடுமான் அஞ்சி
7. பேகன்
இறுவாய்
கட்டுரைப் பயிற்சி
சங்க கால வள்ளல்கள்
* * *
தோற்றுவாய்
திருவள்ளுவரையும் அவர் யாத்த திருக்குறள் பெரு நூலையும் எல்லா மொழியினரும், இனத்தவரும் சமயத்தவரும் பெரிதும் பாராட்டுதற்குரிய காரணங்கள் பலவற்றுள் ஒன்று, எல்லாச் செய்திகளையும் திருவள்ளுவர் நன்கு சிந்தித்து வரையறுத்துத் தம் நூலில் பாடி அமைத்திருத்தலே யாகும். அங்ஙனம் அமைத்த கருத்துக்களில் “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்பதும் ஒன்று. அஃதாவது உயிர் அடையவேண்டிய பேறாக இருப்பது தமக்மென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, இயல்வது கரவாது ஏற்றவர்க்கு இல்லையெனக் கூறாது ஈந்து, அங்கனம் ஈந்ததனால் இசைதோன்ற வாழ்வு நடாத்துதலே யாகும் என்பதாம். ஈதலையே தம் வாழ்வாகக் கருதி அவ்வாழ்வே தம் மறுமையிலும் தொடரவேண்டும் என்று விரும்புபவர்களும் பலர் நம் நாட்டில் இருந்திருக்கின்றனர். கன்னனது ஆவியோ நிலையில் கலங்கி இருந்தது. அவ்வாவி ஆக்கையின் அகத்ததோ, புறத்ததோ என்னும் நிலையில் இருந்தது. அந்நிலையிலும் அவன் கண்ணனுக்கு வேண்டியதை ஈந்து கன் இசையை நிலை நிறுத்தினான் என்பதைக் கேள்விப்படுகிறோம் அல்லவா? அப்படி ஈந்த அவனை நோக்கிய கண்ணன் “கன்னா நீ வேண்டிய வரங்களைக் கேள் ; யான் தருகின்றேன்” என்று வினவியபோது, அங்கர்பூபதி வேறு எதையும் விரும்பாமல், “இல்லை என்றுரைப்போர்க்கு இல்லை யென்று உரையா இதயம் ஈந்தருள்," எனக் கேட்டதாக நாம் படிக்கும்போது, ஈகையில் எத்துணைப் பெருவிருப்பம் கொண்டிருந்தனர் நம் முன்னோர் என்பதை உணரலாம் அன்றோ ?
இங்ஙனம் பிறர்க்காக வாழ்ந்த பெரியவர்களையே நம்மவர் வள்ளல்கள், ஈகையாளர்கள், கொடையாளிகள், வண்மைமிக்கவர் என்று பாராட்டி வந்தனர். இங்ஙனம் உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் வள்ளியோர் என உரைக்கப்பட்ட பெருமை வாய்ந்தவர்கள் பலராக இருந்தாலும் இவர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்து, இருபான் ஒருவர் என ஒரு தொகைப்படுத்திக் கூறுகின்றன நம் தொன்னூல்கள். அவ்விருபான் ஒருவரையும் மூன்றாக வகைப்படுத்தி எழுவர் எழுவராகவும் தொகைப்படுத்தினர். அங்ஙனம் தொகையாகக் குறிப்பிடப் பட்டவர்களை முதல் எழுவள்ளல்கள், இடையெழு வள்ளல்கள், கடையெழு வள்ளல்கள் எனக் கணித்துங் காட்டினர். அவர்களுள் முதல் எழுவள்ளல்களாக முதல் அணியில் நிற்பவர்கள் ‘சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், என்பவர்கள். இடையெழு வள்ளல்களாக இருந்து ஏற்றம் பெற்றவர்கள், அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் என்பவர்கள். கடையெழு வள்ளல்களாகக் கண்ணியம் கண்டவர்கள், பாரி, ஆய் அண்டிரன், எழினி, நள்ளி, மலயமான் திருமுடிக்காரி, வையாவிக் கோப்பெரும் பேகன், ஓரி என்பவர்கள். அவ் விருபான் ஒருவருள் கடைநின்ற கடையெழுவள்ளல்களின் வரலாறுகளை மட்டும் ஈண்டு உணர்வோ வி
1. பாரி
பாரியின் பொது இயல்பு
பாரி என்பவன் பறம்பு நாட்டிற்குத் தலைவன். அப்பறம்பு, மலையும் மலையைச் சார்ந்த முந்நூறு ஊர்களையு முடையது. இவன் பறம்பு மலைக்கும் பறம்பு நாட்டிற்குந் தலைவனாக இருந்தாலும், பேர் அரசர் என்னும் பெயரைப் பெறுதற்குரியன் அல்லன். இவன் குறுநில மன்னன் என்றே குறிப்பிடத்தக்கவன். இவன், குறுநில மன்னனேயானாலும் பெரு நில மன்னர்க்குரிய தகுதிகள் பலவும் அமையப்பெற்றவன். இவன் வீரமும் ஈரமும் ஒருங்கே அமைந்து விளங்கியவன். இவன் வீரத்திலும் இவன் மாட்டு அமைந்த ஈரமே இசையால் திசைபோயதாய்க் காணப்பட்டது. இவனைக் கபிலர் இகழ்வது போலப் புகழும் முறையில் ஓர் அழகிய பாட்டையும் பாடி, இவனது கொடைத் திறத்தைச் சிறப்பித்துள்ளனர். அப்பாட்டின் திரண்ட பொருள், “உலகில் பொது மக்களும், புலவர் பெருமக்களும் பாரி பாரி என்று இவனையே கொடைக்கு எடுத்துக்காட்டாகப் புகழ்ந்து பேசுகின்றனர். இவ்வுலகை வறுமையால் நலியாவண்ணம் காப்பவன் பாரி ஒருவனே அல்லன், மாரியும் உண்டு,” என்பதாம். உலகைக் காப்பதற்கு மாரியும் பாரியுமன்றி வேறல்லர் என்பதாம். இதன் நுண்பொருளைச் சிந்திக்கவும். இது வரம்புகடந்த புகழ்ச்சியேயானாலும், பாரி கொடைத்திறத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தான் என்பதில் ஐயமின்று. இவன் இங்ஙனம் கொடையில் சிறந்து காணப்பட்டமையால்தான், ஆளுடைய நம்பியாகிய சுந்தரர் தம் திருப்பாட்டில், "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை," என்று இவன் கொடுக்கும் ஆற்றலைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
பாரி முல்லைக்குத் தேர் ஈந்தது
பாரி இன்னார்க்கு இது கொடுத்தல், இன்னார்க்கு இது கொடுத்தல் ஒண்ணாது என்று எண்ணும் இயல்பினனல்லன். இவன் கொடுக்குமுன், இஃது அஃறிணைப்பொருள், இவர்கள் உயர்திணை மக்கள் என்று கூடச் சிந்திப்பதில்லை. இருதிணைப் பொருள்களையும் ஒக்கவே எண்ணி ஈந்துவந்தான். ஒருசமயம் பாரி தன் மலைவளங்காணத் தன் ஆழியில் ஊர்ந்து வெளியே சென்றவன், இயற்கை எழிலை இனிது துய்த்துக்கொண்டு வந்தான். காணவேண்டிய காட்சிகளைக் கண்டு களித்தான். பின்னர் அரண்மனை நோக்கி ஆழிமிசை இவர்ந்து வருவானானான். வருகின்ற வழியில் ஒரு முல்லைக்கொடி படர்ந்து தென்றலங் குழவி மெல்லெனத் தவழ்தலால், அலைப்புண்டு ஆடிக்கொண்டிருந்தது. அதனைக் கண்டான் பாரி. உடனே தன் வையத்தினின்று கீழே இழிந்தனன். "ஆ! இம்முல்லைக்கொடி, தான் நன்கு செழித்துப் படர் தற்குரிய கொழுகொம்பு இன்றி இப்படி அலைகிறது போலும்! இதற்கு ஆண்டவன் வாயினை அமைத்திருப்பின் தன் இடர்ப்பாட்டை எளிதில் வெளியிட்டிருக்கும். அஃது இன்மையால் இப்படி ஆடி அசைந்து தனக்கு உதவி வேண்டும் என்பதைக் காட்டுகின்றது போலும்!" என்று எண்ணினவன், அது படர்தற்குரிய கொழுகொம்பு ஒன்றைத் தன் அரண்மனை ஆட்களின் மூலம் அனுப்புதலின்றித் தான் இவர்ந்து போந்த இரதத்தினையே அது படர்தற்கு அதன் அண்மையில் நிறுத்தி, அக்கொடியினையும் அதன் மேல ஏற்றித் தான் நடந்தே தன் திருமாளிகையை நோக்கித் திரும்பினான். இவன் தேர் இன்றித் தமியனாய் வருதலைக் கண்ட அமைச்சரும், தானைத் தலைவர் முதலான மற்றுமுள்ளோரும் இறும்பூதுற்று, இவன் அருகேவந்து உசாவ, இவன் நடந்த வண்ணம் நலின்றனன். அவர்கள் யாவரும் பாரியின் வள்ளன்மையை வாயாரப் புகழ்ந்தனர். “ஓர் அறிவு உயிரான முல்லைக்கொடிக்கு ஆழியீந்த அருமை வள்ளலே” என்று பாராட்டியும் பேசினர். இப்புகழ், நகர் எங்கும் நாடெங்கும் பரந்தது. இவனது இச்சீரிய செயலால், இவன் தலைசிறந்த கொடையாளி என்பது புலனாகவில்லையா ?
கபிலர், பாரியின் மகளிரை இருங்கோவேள் என்பானுக்கு அறிமுகப்படுத்திக் கூறவேண்டிய நிலையேற்பட்டது; அந்நிலையிலும் பாரியைப்பற்றி வேறு எதையும் கூறாமல், இவன் முல்லைக்குத் தேர் ஈந்த கொடைத் திறத்தினேயே எடுத்து மொழிந்தனர். இவ்வாறே விச்சிக் கோவிடமும் பாரி மகளிரை மணந்துகொள்ளவேண்டி அவர்கள் இன்னார் என எடுத்துக்காட்டுகையிலும், “பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை, நாத்தழும்பு இருப்பப் பாடாதாயினும், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த, பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் ” என இதனையே எடுத்து மொழிந்துள்ளார். ஆகவே, இவன் முல்லைக்குத் தேர் ஈந்த சிறப்பு மூவுலகு முற்றும் எட்டியது புலனாகிறது.
விறலியரும் கபிலரும்
விறலியர் என்பவர் தம் தொழில்திறனை விறல் படக்காட்டி நடித்துப் பரிசில் பெற்று உயிர் வாழ்பவர். அத்தகைய குடியினள் ஒருத்தி தன் எதிரே வரக்கண்ட கபிலர், அவள் வறுமைக்கோர் உறைவிடமாக அமைந்தவளாய், நல்ல அணிகலன்கள் இன்றி நல்லாடை இன்றி இருத்தலையுங் கண்டு இரக்கங்கொண்டு, அவட்கு இவை அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் வாய்க்கப் பெற்றுத் தாம் பெற்ற இன்பம் இவளும் பெற்று இன்புடன் வாழவேண்டுமென்ற கருத்துடையவராய், அவளை நோக்கி, "ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியே! நீ வேள் பாரியை அணுகினால், அவன் உனக்கு நல்ல செம்மை வாய்ந்த அணிகலன்களை அளிப்பன். அவன் மலையினின்று இழியும் நீரினும் மென்மைத்தன்மை வாய்ந்தவன் ; கொடுத்தற்கு மறான். அறிவிலரேனும், அறிவுடை யரேனும், அவனை அடைந்து கேட்டால் இல்லை என்னாது ஈயவல்லவன். அவன் வாழ் இடம் பறம்பு. இப்பறம்பு நல்ல சந்தன மரங்களைக் கொண்டது. அச்சந்தன மரங்களே அப்பறம்பு மலையில் வாழும் குறத்தியர்கள் அடுப்பெரிக்கும் கட்டைகள் ஆகும். அப்படி எரிப்பதனால் ஏற்படும் புகை அம்மலைப்பாங்கரில் வளர்ந்துள்ள வேங்கைமரங்களில் சூழ்ந்து காணப்படும். ஆகவே, அம்மலையிடத்துச் சந்தன மரமும், வேங்கைமரமும் தவிர்த்து ஏனைய மரங்கள் இருக்கமாட்டாத அப்பறம்பு நாட்டில் இவ்வட்டில் புகையே அன்றி அடுபோர்ப் புகை காணப்படல் அரிது. அத்தகைய பறம்பு மலைகளையும் கூறுபடுத்திக் கூறுபடுத்திப் பரிசிலர் பலர் பாடிப் பெற்றுச் சென்றுள்ளார். நீயும் பாடி ஆடிச் செலின் நல்லணி கலன்களைப் பெறுவை,” என ஆற்றுப்படுத்தி அனுப்பியுள்ளார். இதனால், பாரி தன்னிடம் வருகின்றவர்களுக்கெல்லாம் ஈபவன் என்பது தெற்றெனப் புலனாகிறதன்றோ!
மூவேந்தர் முற்றுகையும் கபிலர் கட்டுரையும்
பாரிக்கும் கபிலருக்கும் நெருங்கிய நட்புத் தொடர்பு உண்டு. இவன் கொடையும் வீரமும் கண்ட கபிலர், இவனிடத்திலேயே உறைவாராயினர். தம்மைப் பாரியின் நண்பர் என்றே பலரிடமும் கூறிக்கொண்டனர்; பாரியின் மகளிரையும் தம் மக்களாகக் கருதியவர். இருங்கோவேளிடம் தம்மைப்பற்றிக் கூறிக்கொள்கையில் "இவர் யார் என்குவையாயின், இவரே பாரி மகளிர், யானே தந்தை தோழன். இவர் என் மகளிர்,” என்று இத்துணை உரிமை பாராட்டிப் பேசியுள்ளார். பாரி இறந்தபின் அம்மகளிர்க்கு மணமுடித்துவைக்கும் பொறுப்பினைத் தம்மதாகவே கொண்டனர் என்றால், வேறு கூறுவானேன் ?
ஒரு சமயம் சேர சோழ பாண்டியர்களான முடியுடை மன்னர் மூவரும் கூடிப் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். இம்முற்றுகையால் உள்ளிருப்பவர் வெளியிலும், வெளியில் இருப்பவர் உள்ளும் போதற்கின்றி வருந்தினர். அந்த நிலையில் பாரியின் நெருங்கிய நண்பரான கபிலர், அம் மன்னர் முன்னர் நின்றார். மன்னர்களை உற்று நோக்கினார். உள்ளதை உள்ளவாறு உரைக்க வேண்டுமென எண்ணங்கொண்டார். அவர்களை நோக்கி “முடியுடை மூவேந்தர்காள்! நீங்கள் எதிரிகளின் படைகளை எதிர்த்துத் தாக்கும் படைவலி படைத்தவர்கள் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை. இத்தகைய பெருவலிபடைத்த நீங்கள், எம் குறுநில மன்னனான பாரியை எதிர்த்துள்ளீர்; பறம்பையும் சூழ்ந்துள்ளீர்; அப்பறம்பு நாடு முந்நூறு ஊர்களையுடையது. அதனை நீங்கள் கைப்பற்றுதல் என்பது முயற்கொம்பே யாகும். நீங்கள் எத்துணை நாட்களாக முற்றுகையிட்டுக் கிடந்தாலும் நாங்கள் வருந்தமாட்டோம். உணவு இன்றென உயங்க மாட்டோம். எங்கள் பறம்பு நாடு இயற்கை வளன் இயையப்பெற்றது. இயற்கையில் கிடைக்கும் உணவினைப் பெறவேண்டும் என்னும் நிலையினில் நாங்கள் இருப்பவரல்லேம். “விச்சதின் றியே விளைவு செய்கு வாய்,” என்பதற்கு இணங்கவும், “வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ,” என்பதற்கு ஏற்பவும், யாங்கள் விளைத்தல் இன்றிப் பெறக்கூடிய உணவு எங்கள் பறம்பு மலையில் உண்டு. அவை இன்னவென நீங்கள் அறிய விரும்பின் அறைகின்றனன். அவற்றையும் கேளுங்கள்: சிறிய இலையினையுடைய மூங்கில் நெல் எங்கட்கு முட்டின்றி விளையும். அவற்றைக் கொண்டு உணவு சமைத்து உண்டு வருவோம். எங்கள் பறம்பு மலைப்பாங்கர், எங்கும் தீஞ்சுனைப் பலா முழவென முதிர்ந்து காணப்படும். அவற்றை உண்டு ஆனந்தம் உறுவோம். வள்ளிக்கிழங்கு எங்கட்கு வளமுறக் கிடைக்கும். அவற்றை அருந்தி ஆர்வம் அடைவோம். எங்கள் நாடு குறிஞ்சி நாடு. ஆதலின், தேன் இறால்கட்குத் தியக்கம் கிடையாது. குன்றுதோறும் தேன் அடைகள் தூங்கிக்கொண்டிருக்கும். ஆக, இந்நான்கு உணவுப் பொருள்களால் நாங்கள் உடற்சோர்வும் உள்ளச் சோர்வுமின்றி உண்டு வாழவல்லோம். 'உண்ண உணவு உண்டேல், பருக நீருண்டோ?' என நீங்கள் பகரவும்கூடும். ஆம்! ஆம்! நீங்கள் நினைக்கவும்கூடும். பாரியின் மலை ஆகாயத்தைப்போன்றது. அவ்விண்ணில் விளங்கும் மீன்களைப் போன்றவை, இப்பறம்பில் காணப்படும் சுனைகள் என்றால், நீர்ச்சுனைகளின் மிகுதிப்பாட்டை இதற்கு மேலுமா இயம்ப வேண்டும்! நீங்கள் கொணர்ந்த வேழத்திரளையும், தேர்க் கூட்டத்தையும் நான் காண்கின்றேன். அவ்யானைகளைக் கொணர்ந்து இப்பறம்பு மலையின் மரங்கள் தோறும் கட்டியுள்ளதையும் காண்கின்றேன். தேர்த்திரளினைத் திசைகள் தோறும் நிறுவியுள்ளதையும் காண்கின்றேன். இத்தப் படைப்பெருக்கைக் கொண்டு எங்கள் பாரியை நீங்கள் வெல்ல இயலாது. பறம்பையும் கொள்ள முடியாது. உங்கள் முயற்சியும் பயன் தராது. நான் ஒன்று கூறுகிறேன். அதன்படி நடவுங்கள். அப்படி நடந்தால் உங்கட்குப் பறம்பு கிடைக்கும். அப்பொழுதும் பறம்பு நாடு கிடைக்கமாட்டாது. அந்நாடு முந்நூறு ஊர்களையுடையதுதான். என்றாலும், அம் முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பாடி வந்து பெற்றுப் போயினர். இப்பொழுது இருப்பவர்கள் பாரியும் யானும் இக்குன்றுமே ஆகும். உங்கட்கு இக்குன்று வேண்டுமாயின், நரம்பினைக்கொண்டு யாழினைப் பண்ணுங்கள். நீங்கள் பரிசிலர் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். விறலியரும் உம் பின் வரப் பார்த்துக்கொள்ளுங்கள். இம்முறையில் "பரிசில் தா," என எங்கள் பாரியை வேண்டுங்கள்: இவன் இக்குன்றை யீவன்," எனக் கூறினார் என்றால், பாரி ஈகைக்கு எத்தனை எளியவனாய் இருந்தனன் என்பது வெளிப்படுகின்றதன்றோ !
பாரியின் இறப்பும் பாரி மகளிரும்
அந்தோ ! இவன் இத்துணைக் கொடைவள்ளலாய் இருந்தமையாலும், புறமுதுகு காட்டி ஓடா வீரனாய்த் திகழ்ந்த காரணத்தாலும், இவன் இருப்பதால் நம் இசைக்கு வசை ஏற்படும் என்று எண்ணியதாலும் மூவேந்தரும் வஞ்சனையால் பாரியை மாய்த்துவிட்டனர். அந்தக்காலத்துக் கபிலரும் பாரி மகளிரும் மற்றும் உள்ளோரும் வருந்திய வருத்தத்திற்கு அளவே இல்லை. பாரிமகளிர் நல்ல தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள். பாடல் இயற்றும் பான்மையும் பெற்றவர்கள். அவர்கள் பிற்கால இரட்டைப் புலவர்களைப்போன்று முற்கால இரட்டைப் புலவர்களாக இருந்து, இருவரும் ஒன்று சேர்ந்து பாடும் பீடும் பெற்றவர்கள். அவர்கள் பாடிய பாடல்கள் பலவாக இருக்கலாம். ஆனால், நமக்கு இப்பொழுது கிடைத்த பாடல் ஒன்றேயாகும். அப்பாடல் கற்பார் நெஞ்சைக் கரையச் செய்யவல்லது, அது தம் தந்தையார் இன்மையால் வருந்திப் பாடப்பட்டது. தந்தையார் இறந்து ஒரு திங்கள் ஆயிற்று. மறு திங்களும் வந்துற்றது. அப்பொழுது அவர்கள் தம் தந்தையாரை எண்ணி, “சென்ற மாதம் முழுமதி நிலவில் யாமும் எம் தந்தையாரும் ஒருங்கிருந்து அளவளாவினோம். ஆனால், இந்தத் திங்களில் இம் முழு நிலவில் எங்கள் தந்தையாரை இழந்து வாடுகின்றோம். சென்ற மாதம் எங்கள் தந்தையார் பறம்புநாடு எங்கட்கே உரியதாய் இருந்தது; குன்றையும் எவரும் கொண்டிலர். இந்தத் திங்களில் முரசினையுடைய மூவேந்தரும் வஞ்சித்து எம் தந்தையாரைக் கொன்றனர்; குன்றையும் கொண்டனர்,” என வருந்திப் பாடினர்.
புலமைப் பேறு இருந்ததுபோலத் தம் தந்தையார்போல ஈகைப் பண்பும் அமையப் பெற்றிருந்தனர் இம்மகளிர். இதற்குச் சான்றாக இவர்கள் செய்த அறச்செயல் ஒன்றே போதுமானதாகும். ஒருமுறை மழைபெய்தல் இன்றிப் பஞ்சம் நேர்ந்த போது, ஒரு பாணன் தம் வறுமை காரணமாக இவர்களிடம் இரந்துண்ண வந்தான். அன்னவனுக்குப் பொன்னீந்து சோறும் நல்கி உபசரித்தனர் எனப் பழமொழி நானூறு கூறுவதினின்றும் அறியலாம்.
கபிலர் பறம்பினை விட்டுப் பிரிதல்
கபிலரும் இனித் தமக்குப் பறம்பினிடத்து இருக்க இடம் இல்லையென உணர்ந்து, பிரிந்து செல்கையில் அப்பறம்பு மலையைப் பார்த்துக் கூறிய பாடல் உள்ளத்தை உருகச் செய்வதாகும். அவர் பறம்பை நோக்கி, "ஏ பறம்பே! நீ பாரி இருந்த காலத்தில் எம்மொடு நட்புச் செய்தாய். இப்பொழுது பாரி இறந்தமையால் நாங்கள் கலங்கிச் செயல் அற்று நீர்வார் கண்களையுடையவராய் நின்னைத் தொழுது வாழ்த்திச் செல்கிறோம். ஏ பறம்பே உன் தோற்றப் பொலிவை நாங்கள் என் என்பது? நீ உன்னை நெருங்கி நின்று காண்போர்க்கும் காட்சி அளிப்பை. சிறிது தொலைவு சென்று நின்று காண்போருக்கும் காட்சி அளிப்பை,” என்று கூறி வருந்தினார். இது பறம்பைப் புகழ்ந்ததாக மட்டும் அமையாமல், பாரியையும் உடன் புகழ்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், அவர் அப் பறம்பைக் கண்டு அதன் இயற்கை வளத்தை எண்ணி அதனையும் எடுத்து இயம்பி வருந்திப் பாடினார் அஃதாவது, பாரியின் மலையில் ஒரு பக்கம் அருவி ஆரவாரஞ்செய்து ஒழுகிக்கொண்டிருக்கும் எனவும், பாணர்கட்கு வார்க்க வேண்டி மலையில் உள்ள தேன் கூடு உடைந்து தேனைச் சொரிந்து கற்களை உருட்டிக் கொண்டுவரும் என்றும் கூறினார்.
பாரி தான் உயிருடன் இருந்த காலத்துத் தன்னாட்டைச் செங்கோல் தவறாது ஆண்டுவந்திருக்கிறான். அதனால்தான், இவன் நாட்டில் உற்பாதங்கள் நிகழ்வது இல்லை. சனி என்னும் நட்சத்திரம் எரிந்து புகைதலும், தன் பகைராசிகளான இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு சேர்தலும், எல்லாத் திசையினும் புகைதோன்றுதலும், வெள்ளி தென் திசையில் சென்று முளைத்தலும், உற்பாத நிகழ்ச்சிகள். இத்தகைய உற்பாதங்கள் ஒருவேளை பாரியின் பறம்பு நாட்டில் தோன்றினாலும், இவன் நாட்டில் விளைவு குறைதல் கிடையாது. மலர் மரங்கள் பூத்தலில் குறைவு படுதல் இல்லை. இதனால், பாரி அறத்தாற்றில் அரசு புரிந்தான் என்பது தெரிகிறது.
இத்தகைய பறம்பு, பாரி இறந்தபின் பயன் அற்றுப் பொலிவற்றுப்போயது என்பது கபிலர் கருத்து, சிறிய குளம் பாதுகாப்பார் இன்றி, உடைவதுபோலப் பாரியின் பறம்புநாடும் பாதுகாப்பார் இன்றிப் போயது என்று கூறி வருந்தினர். பறம்பு நாட்டு வாழ்வுடை மக்கள் உணவின்றி வருந்தாதவர் என்பது முன்பு உரைக்கப்பட்டதன்றோ ஆகவே, அப்பறம்பு நல்ல தினை விளைவு உடையதாய் இருந்தது. நிழல் இல்லா ஒரு கனி மரம் நின்று, வழிப்போக்கர்க்கு உதவுவதுபோல, இவன் நாடும் பறம்பு மலையும் இரவலர்க்குப் பேருதவியாய் இருந்தன.
கபிலர் பறம்பு நாட்டைவிட்டுப் பிரிந்து சென்றாலும், தாம் பாரியின் நண்பராக இருந்த காரணத்தால், அப் பாரியின் மகளிரைத் தக்கோர்க்கு ஈயப் பெரும் பாடுபட்டுப் பல சிற்றரசர்கள்பால் எல்லாம் அழைத்துச் சென்றார். அச்சிற்றரசர்கள் இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்கள். அவர்கள் யாவரும் அம்மகளிரை மணக்க மறுத்தனர். அவர்கள் மறுத்தமைக்குப் பல காரணங்கள் இருப்பினும், ஒரு காரணமாகச் சொல்லக்கூடியது அம்மகளிர் மூவேந்தர்களின் பகைவனான பாரியின் மகளிர் என்பதே யாகும். அவர்கள் அம்முடியுடை மூவேந்தர்களுக்குத் தாம் பகைவர் ஆதல் கூடாது என்பதாம். என்றாலும், இறுதியில் கபிலர் அந்தணர் ஒருவர்க்கு இம்மகளிரை மணம் முடித்து, தம் கடமையை முடித்து மகிழ்ந்தனர்.
2. வல்வில் ஓரி
ஓரி யாவன்?
ஓரி என்பவனும் வள்ளல் வரிசையில் வயங்கும் ஒருவன். இவன் வல்வில் ஓரி என்றும், ஆதன் ஓரி என்றும் அழைக்கப்படுபவன். இவன் கொல்லி என்னும் மலைக்கும், அதனைச் சார்ந்த இடங்கட்கும் தலைமைபூண்ட தகைமையாளன். இவன்பால் ஈகைப் பண்பு இயைந்து காணப்பட்டமையால், இவனைப் புலவர்கள் பாடிப் புகழ்வாராயினர் அப்படிப் பாடிய புலவர்கள் வன்பரணர் என்பாரும், கழைதின் யானையார் என்பாரும் ஆவர். இவ்விரு புலவர்களும் தனிப்பட்ட முறையில் இவனைக் குறித்துத் தனித்தனிப் பாடல்களை இயற்றியவர்கள். இவர்களே அன்றி, இவனையும் இவனைச் சார்ந்த ஏழு வள்ளல்களையும் புகழவந்த இடத்துப் பாடிய புலவர்கள் இருவர். அவர்கள், பெருஞ் சித்திரனாரும் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய புலவரும் ஆவர். பெருஞ் சித்திரனார் இவனைக் குறித்துப் பாடுகையில் “பிறங்குமிசைக் கொல்லியாண்ட வல்வில் ஓரி,” என்றனர். சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் "காரிக்குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரி,” என்று பாடியுள்ளனர். இங்ஙனம் ஓரி இப்புலவரால் சுட்டப்பட்டிருத்தலை நோக்கின், இவன் காரி என்பானுடன் போரிட்டவன் என்பதும், காரியென்பானிடம் இருந்த இவுளி காரிக் குதிரை என்பதும், ஓரி யிவர்ந்த குதிரை ஓரி என்பதும் இங்கு உணர்த்தப்பட்ட செய்கைகளாகும் இதனால்தான் “காரிக் குதிரைக் காரியோடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் ” என்று இருவரும் இங்ஙனம் சிறப்பிக்கப்பட்டனர்.
ஓரியும் கழைதின் யானையாரும்
வல்வில் ஓரியின் ஈகையினைக் கழைதின் யானையார் கூறுகையில், ஈகையின் உயர்வையும், ஈகை புரியாமையால் எய்தும் தாழ்வையும் நன்கனம் சித்தரித்துப் பாடியுள்ளனர். இப்புலவர் இரத்தலை மிக மிக இழிவாகக் கருதியவர். அதனால், “ஈ என இரத்தல் இழிந்தது," என்றும் மொழிந்தார். வள்ளுவர்க்கும் இரத்தல் இழிவாகக் காணப்பட்டது. "ஆவிற்கு நீர் என்று இரப்பினும் இழிவு," என்கிறார் அவர். “இரந்து, உயிர்வாழவேண்டுமென ஒருவன் படைக்கப்பட்டானாயினும், அங்ஙனம் படைத்தவன் முதலில் அழிவானாக,” எனவும் வைது வசை பாடுகிறார். இரத்தலால் தனக்குரிய மானம் போய், தருமமும் துடைக்கப்பட்டுவிடும் எனக் கடிந்து பேசுகிறார் புகழேந்தியார். “ஏற்பது இகழ்ச்சி” என்பது நம் ஒளவை மூதாட்டியார் அறவுரை அல்லவா? “பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்தில்கூட்டிச் சொல்வெல்லாம் சொல்லி நாட்டித் துணைக் கரம்விரித்து நீட்டி இல்லெலாம் இரத்தல், அந்தோ இழிவு இழிவு எந்த ஞான்றும்,” என்பது குசேலோபாக்கியானக் கவிஞர் கூற்று. இந்த நிலையில் ஒருவர் வந்து கேட்கையில் இல்லை என்று கூறுவது எத்துணை இழுக்கு என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இவற்றை எல்லாம் நன்கு அறிந்த கழைதின் யானையார், “ஈ என இரத்தல் எத்தனை இழிவோ அதனிலும் இழிகுணமானது இரந்தவர்கட்கு ஈயேன் என்பது,” என்று கடிந்தும் பாடினார். மேலும், அனுபவ முதிர்ந்து அறிவு சான்ற கழைதின் யானையார், தம்மை வந்து யாசித்தவர்கட்குக் கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்ததாகக் கருதினார். அதனினும் உயர்ந்ததாகப் பிறர் கொடுக்கையில் கொள்ளேன் என்பதையும் உடன் கூறி நம்மை உவகைக் கடலில் திளைக்கவும் செய்கிறார். வேண்டாமை என்பது விழுச் செல்வம் தானே! இதற்கு ஒப்பாவது இம்பரும் இல்லை உம்பரும் இல்லை. இந்த நால்வகைக் கருத்துக்களையே வற்புறுத்த வேண்டிய புலவர் பெருமான் ஓரியை நோக்கி “ஈயென இரத்தல் இழிந்தன்று! அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந் தன்று” எனப் பாடி இவனைப் பரவசமுறச் செய்தனர்.
மேலும் வல்வில் ஓரி சுருங்கிய செல்வமுடையனாயினும், அச்செல்வத்தினைப் பலர்க்கும் ஈந்து, பார் அறியும் புகழ் உடையவன். ஒருசில மக்கள் பெருஞ்செல்வமுடையராயினும் எவர்க்கும் உதவாத பான்மையராய் வாழ்பவர் என்பதையும் நல்ல உவமை கூறி விளக்கி வைத்தார் புலவர் பெருந்தகையார். பெருஞ் செல்வனை எல்லையற்ற நீரையுடைய உவர்க்கடலுக்கு உவமையாக்கினர். ஆதன் ஓரியை அக்கடல் அருகு அமைந்த சிறு ஊற்று நீருக்கு உவமைப்படுத்தினர். கடல் பரப்புடையதாயினும், அதன் நீரைப் பருகுதற்கு எவரும் செல்லார். அது போலப் பெருஞ்செல்வம் உடையானொருவன், உலோபக் குணம் உடையனாயின், அவனை எவரும் அணுகார், ஊற்றுநீர் சிறு அளவினையுடையதாயும் விலங்குகளால் சேறும் நீருமாகக் கலக்கப்பட்ட கலங்கல் நீராக இருப்பினும், அந்த நீரைப் பருகுதற்குப் பலரும் சென்று அவ்வூற்று நீரை அடைதற்குரிய வழிகளைச் செய்து வைப்பர். அதுபோல வல்வில் ஓரியைப் பலரும் நச்சிப் பரிசில் பெற்றுச் சென்றதனால், இவன் வாழ் இடமும் பல அதர்களையுடையது என்பதை எத்துணை நயம்பட ஓரியின் வரையா வள்ளன்மையைப் பாடியுள்ளார்! ஓரியை விரும்பி வந்தவர் பரிசில் பெறுதல் இன்றித் திரும்பார். பரிசிலர்கள் ஓரியைக் காணப் புறப்பட்ட காலத்தில் ஏதேனும் தீய நிமித்தங்கள் தோன்றியதனாலும், அன்றித் தாம் புறப்படும் வேளை நல்லோரையாக இல்லாமல் இருப்பதாலும் ஒருவேளை ஓரியைக் காணல் இது சமயம் அன்று என நின்று போயின், பரிசில் பெறாதது அவர்கள் குற்றமே ஆகும். அந்தத் தீய முகூர்த்தத்திலும், கொடிய சகுன வேளையிலும் புறப்பட்டு ஓரியைக் கண்டால், இவன் “இதுபோது இல்லை," என இயம்பும் இயல்புடையவன் அல்லன். “அஞ்சேல்” என்ற சொல்லும் அடையா நெடுங்கதவும் உடையான் வல்வில் ஓரி. ஆகவே, இவன் கருவானம்போல வரையாது சுரக்கும் வள்ளியோன் ஆவன்” எனப் பாடிப் புகழ்ந்தார் கழைதின் யானையார்.
ஓரியும் பரணரும்
ஓரியின் ஈகை உலகம் அறிந்த ஓர் உண்மையாக இருந்தமையால், பரணர் என்னும் புலவரும் இவன் ஈகைப் பண்பை நன்கு எடுத்து இயம்பியுள்ளார். அப்படி இயம்பிய புலவர், தாம் ஓரியின்பால் பெற்ற பொருளினைத் தாமே துய்த்துப் பிறர் துய்க்க ஒண்ணாது என்னும் எண்ணம் கொள்ளாதவராய்த் தம் உறவினர்களையும் இவன்பால் விடுத்து, ஈயும் பொருளினைப் பெற்று இன்படையச் செய்ததாகவும் அவர் பாடலால் அறிகிறோம். அவர் தம் உறவினர்களை ஓரியின்பால் உய்த்தபோது, இவனது இயல்பை நன்முறையில் எடுத்து இயம்பி அனுப்பியுள்ளார் என்று நாம் அறிகிறோம். “இவன் நல்ல வளமுடைய மலையில் வாழ்பவன், இவன் வற்றிச் செத்த கானமும் மலை அருவியும் உடையவன் அல்லன். இவன் குன்றம் மழையைப் பெற்ற மாண்புடையது” என்று இவன் நாட்டு வளத்தை நவின்றார். அந்நாடு இவனுக்கே உரியது. பிறர்க்கு உரியது அன்று என்பதை விளக்கவே “மழையணி குன்றத்துக் கிழவன்,” என்றும் குறிப்பிட்டார். அத்தகையவனை இரவலர் அடைந்தால் அவர்கட்கு யானைகளை ஈபவன் என்றும் அவ்வானைகள், பூண் பன பூண்டு பொலிவுடன் விளங்குவன எனவும் குறிப்பிட்டது உன்னற்குரிய அரிய குறிப்பாகும்.
ஈகை அளவுகடந்து சென்றால், செல்வமும் குறைந்து, பின்னர் வரும் ஏழை யெளியர்கட்குக் கொடுக்க இயலாது, தாமும் வறுமையில் வாடும் நிலையையும் எய்துவிக்கும். ஆனால், அங்ஙனம் இரப்ப வர்க்கீந்து வறுமையுற்றவன் அல்லன் வல்வில் ஓரி இவன் நல்ல பொருள் வளம் படைத்தவன்; இவன் நன்கு ஒளிவிடுகின்ற பசும்பொன்னால் ஆன அணிகளையும், வளைந்த கடகம் அமைந்த முன் கைகளையும் உடையவனாய்த் திகழ்ந்தான். இதனால் அன்றோ இவனை “வெறுக்கை நன்குடையன்,” என நவின்றார். கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடையவனாய் விளங்கினான் ஆதலால் இவன், “மாரிவண்கை ஓரி” என்றே உரைக்கப்படுபவனானாதலால், இத்தகைய ஈரநெஞ்சினனிடத்தில் பரணர் தம் உறவினர்களை அனுப்பினார். அவர்களும் சென்றனர்; ஓரியைக் கண்டனர். ஓரியைக் காண்டல்வரை தானே தடைகள்? கண்டால், இவன் தன்னைக் கண்டவர்களை வெறுங்கையினராய் அனுப்புதல் இல்லையே. ஆகவே, பரணரது உறவினர்கட்கு நல்ல விலையுயர்ந்த மணிகளால் ஆன குவளை மலர்களை இவன் ஈந்தனன்; அம்மலர்களை இணைத்து, மாலையாக அணிய வெள்ளியால் ஆன நாரினை ஈந்தனன்; பொன்னரி மாலைகளையும் உதவினன்; இவைகளே அன்றிப் பொன் பூண்களையும் கொடுத்தனன்; வேழம் ஈந்தும் அவர்களுக்கு வேட்கையை உண்டாக்கினன். இங்ஙனம் பரணர் சுற்றத்தார் தாம் எதிர்பாராவண்ணம் இத்துணையும் பெற்றதனால் தம்மையே மறந்தனர். அணிகலங்களை மட்டும் அணிந்து அனுப்பி இருப்பனோ? இனிமையான உணவையும் அளித்திருப்பான் அல்லனோ? ஆகவே, அவர்களை வயிறார உண்பித்தான். உணவுப் பெருக்காலும், அளவு கடந்த அணிகலன்களை அடைந்த காரணத்தாலும், முழவுகொட்டி முன்னே இருந்து ஆடுதலை மறந்தனர்; பாடுதலையும் மறந்தனர். இங்ஙனம் தம்மை அடைந்தவர்கள் தம்மை மறந்து, மயங்கும் வண்ணம் ஈந்து உவந்தவன் ஓரி.
ஓரியின் கொடைத் திறத்தை இம்முறையில் புகழ்ந்த பரணர் அவன் படைத் திறத்தையும் பாங்குறப் பகர்ந்துள்ளார். இவன் அம்பு எய்தலில் ஆற்றல் மிக்கவன். இவன் எய்யும் ஓர் அம்பினால் பல விலங்குகளையும் அலக்கழிக்கும் ஆண்மை பெற்றவன். இவன் ஒருமுறை எய்த அம்பு, “பெரிய வாயுடைய புலியை இறக்கச்செய்து, துளை பொருந்திய மருப்பினையுடைய புள்ளிமான் கலையினைக் கீழே உருட்டி, உரல்போலும் தலையுடைய பன்றி ஒன்றினை விழச்செய்து, அதன்பின் அவ்வேனத்தின் அயலதாக இருந்த உடும்பினையும் தைத்தது” எனப் பரணர் பாராட்டியுள்ளார்.
இப்படி எய்ய வல்லவன் ஓரி என்பதை உணர்ந்த பரணர் முற்றும் மகிழ்ந்து தம்முடன் இருந்தவர்களை நோக்கி, “சுற்றங்காள்! இப்படி வேட்ட மேல் நாட்டங் கொண்டவன் நம் வல்வில் ஓரியோ எவனோ? என்றாலும், யான் ஒருவண்ணம் பாடுகிறேன். நீங்கள் மத்தளத்தில் மார்ச்சனையிட்டு முழக்குங்கள்; யாழிலே பண்ணமைத்து வாசியுங்கள்; யானையின் துதிக்கை போலும் நீண்டுவளைந்த பெருவங்கியத்தை இசையுங்கள்; சல்லியை வாசியுங்கள்; சிறு பறையை முழக்குங்கள்; பதலையினைக் கொட்டுங்கள்,” எனக் கூறிப் பாடவும் பல்லியங்களை இசைக்கவும் கூற, அங்ஙனமே பரணர் சுற்றம் செய்தது. அப்பாடலையும் ஆடலையும், இசைக்கருவி முழக்கத்தினையும் கேட்ட ஓரி, அவர்கட்குத் தான் வேட்டையில் எய்த மானினைத்தானே பக்குவப்படுத்தி, உணவையும் சமைத்து, மலைத் தேனையும் பருக ஈந்ததோடு நில்லாது, பொன்னால் ஆகிய மணி ஆரங்களையும் தந்தனன்.
இப்படி ஈந்தபோதும் தான் இன்னான் எனத் தன்னை இயம்பிக்கொள்ளாமையாலேயே இவனது மனப்பண்பின் மாண்பு புலனாகிறது. வலக்கையால் ஈவது இடக்கைக்கும் தெரிதல் கூடாதென இக்காலத்தில் கூறப்படும் உணர்ச்சி, இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிர ஆண்டுகட்கு முன்பே நம் நாட்டில் நிலவியது என்பதை நாம் அறிந்தபோது பெருமகிழ்வு கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
இங்ஙனம் ஓரி ஈயத் தாம் பசி தணிந்தனர். அதற்கு மேல் ஆடலை மறந்தனர். ஆடலை அகற்றும் இந்நிலைக்கு அவர்களைச் செய்தவன் ஓரியே யாவான். இவன் ஈகை வாழ்க.
3. ஆய் அண்டிரன்
அண்டிரன் வீரமும், ஈரமும்
ஆய் என்பவனும் கடையெழுவள்ளல்களில் ஒருவன். இவன் ஆய் எனத் தனிப்பெயராலும் ஆய்-அண்டிரன் எனத் தொடர்ப் பெயராலும் அழைக்கப்படுவன். இவன் உழுதுண்ணும் வேளாளர், உழுவித்துண்ணும் வேளாளர் எனப் பாகுபடுத்திக் கூறப்படும் வேளாண் மரபில் உழுவித்துண்ணும் வேளாளர் மரபினன். வேளாளர்கட்குரிய தனியுரிமைப் பெயராக விளங்கவல்ல - வேள் என்னும் பட்டப்பெயர் அரசர்களால் அளிக்கப்பட்ட அரும் பெருமை அமையப்பெற்றவன். ஆகவே, இவன் ஆய் வேள் என்றும் வேள் ஆய் என்றும் கூறப்படுபவன்.
ஆய் அண்டிரன் பாண்டிய நாட்டில் பெருமைக்கோர் உறைவிடமானதும், அகத்தியர் வாழ்ந்த அழகிய இடமும் ஆன பொதிகை மலைக்குத் தலைவனாக இருந்து வந்தான். அப்பொதிகை மலைக்கு அண்மியதான ஆய் குடிக்குத் தலைவனும் இவனே.
ஆயின் ஈகை
ஆய் தலைசிறந்த வீரனும் ஆவான். வீரமன்னர்களான சேர சோழ பாண்டியர்கட்கு முறையே பனை, ஆத்தி, வேம்பு மாலைகள் அடையாளமாக அமைந்திருப்பனபோல, இவனுக்குச் சுரபுன்னை மாலை அடையாளப் பூவாகும். இவனைப் பகை அரசர்கள் அணுகுதல் அரிது. இவனைப் பகை வேந்தர் அணுகுதல் என்பது அருமைப் பாடுடைத்து என்பதை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அழகுபடப் பாடியுள்ளார். அவர் இக்கருத்தைக் கூறுகையில், “அவன் வீரவளையை உடையவன். அவன் பொதிகைமலை மேகம் தவழப்பட்டது. அவனை அணுகுபவர் ஆடல் மகளிரன்றி அரசர் குழுவினர் அல்லர்,” என்றனர். இவன் கொங்கு நாட்டவரோடு பொருது அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்தவன் என்பதால் இவனது வீரத்தினை உணரவாம்.
இவனது கொடையும் புலவர் பாடும் புகழினைப் பெற்றது. புலவர்கட்கு வரையாது கொடுக்கும் வள்ளலாய் இவன் திகழ்ந்தான். இவன் தன்னையடைந்த பாணர்கட்கும், இரவலர்கட்கும் யானைகளைக் கணக்கின்றி ஈந்தவன். இவன் இரவலர்கட்கும் பாணர்கட்கும் வேழங்கள் பலவற்றை ஈந்தமையைப் புகழ்ந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், “இவன் கொடுக்கும் யானையின் தொகைக்கு அளவே இல்லை. அவை வானத்தின் கண் காணப்படும் விண்மீன்களினும் பலவாகும்,” என உயர்வு நவிற்சியணி தோன்ற உயர்த்திக் கூறியுள்ளார். மேலும், அத்தொகையின் மிகுதிப்பாட்டைக் கூறுகையில், “இவன் கொங்க நாட்டவர்மீது போரினைத் தொடுத்த காலத்தில் விடப்பட்ட வேலினும் பலவாகும்,” எனவும் மொழிந்துள்ளார். இப்படிக் கூறிய இப்புலவர் பெருமானுக்கே ஓர் ஐயமும் பிறந்தது. யானை ஒரு முறைக்கு ஒரு குட்டியே ஈன வல்லது. இது குறித்தே “பன்றி பல ஈன்றிடினும் என் ? குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பலனுண்டாமே, "எனவும் படிக்காசுப் புலவரும் பாடியுள்ளார். அவ்வாறு இருக்க, இவ் ஆய் அண்டிரன் ஒரு பாணர்க்குப் பல மாதங்கங்களை மகிழ்வுடன் ஈந்து உவக்கின்றனனே. ஒருவேளை இவன் மலையில் வாழும் பிடிகள் ஒரு சூலில் ஒன்றுக்கு மேற்பட்டுப் பத்துக் கன்றுகளை ஈன வல்லனவோ என்று கருதுவாராயினர். அப்படிக் கருதி இவனை நேர்முகமாக விளித்து, “நின்னாட்டு இளம்பிடி ஒரு சூலில் பத்துக்கன்றுகளை ஈனுமோ?' என்று வினவினர். இப்புலவர் கொண்ட ஐயம் ஓர் இளம்பிடி ஒரு சூலில் ஒரு கன்று ஈனுவதின்றிப் பத்துக் கன்றுகளைப் பரிவுடன் ஈனுமோ? என்பதோடு இல்லாமல், இதற்கு மேலும் செல்வதாயிற்று. ஆய் ஆண்டிரன் தன்னையணுகிக் கேட்பவர்களுக்கெல்லாம் யானைகளை ஈபவன் என்பதை இவ்வண்டிரன் காடும் அறிந்து, இவனை அண்டி, பாடல் பல பாடி இவ்வானைப் பரிசில்களைப் பெற்றதோ ? எனவும் கருதுவாரானார். இக்கருத்துப்பட அவர் பாடியதன் காரணம் யாதெனில், இவ்வாய்வேள் கானகம் கணக்கற்ற கைம்மாக்களைப் பெற்றிருந்தது என்பதாம். அத்தொகையின் பெருக்கத்திற்கு உவமை கூற வந்த புலவர், விண்ணில் சிறு இடமும் இன்றித் தாரகைக்கணங்கள் முழுமையும் காணப்பட்டால் எத்துணையளவு மிகுதியான தொகை காணப்படுமோ, அத்துணையளவான யானைகள் என உவமை காட்டினர்.
ஆய் அண்டிரனுக்கு உரிமையான பொதிகை மலையும், அதற்கு அண்மையதான ஆய் குடியும் புலவர்களால் பெரிதும் சிறப்புடன் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவை புனைந்துரைகளாக இன்றிப் புகழுரைகளாகவும், மெய்யுரைகளாகவும் உள்ளன.
இவன் நாட்டின் பொதிய மலையில் வாழும் குரங்குகள் பரிசிலர்கள் கட்டிவைத்த முழாக்களைப் பலவின் பழங்களோ என எண்ணி, அவற்றினைத் தொட்டமாத்திரத்தில் அவை ஓசையை எழுப்ப, அவ்வோசைக்கு மாறாக எதிர் ஓசையினை அன்னச்சேவல் ஒலிக்கும் என அவை வர்ணிக்கப்பட்டுள்ளன. இதனால், இவன் மலை இரவலர்களால் எப்பொழுதும் சூழப்பட்டுள்ளது என்பதும், அம்மலை வருக்கைப் பழங்களை வளமாகப் பெற்றது என்பதும் அப்பழங்களும் நன்கு பருத்து நீண்டு மத்தளம்போல வளர்ந்திருந்தன என்பதும், அங்கு வாழும் குரங்குகள் நன்கு தின்று கொழுத்துக் கவலைக்கிடனின்றிக் குறும்புகட் குறைவிடமாய் இருந்தன என்பதும், அன்னச் சேவல்கள் எதிர் ஒலிசெய்தன என்பதால் நீர் வளத்திற்கும் நிகரற்று அம்மலை திகழ்ந்தது என்பதும் புலனாகின்றன.
இகழ்வதுபோலப் புகழ்தல்
இவன் மலையில் வாழும் மக்கள் மூங்கிற்குழாயின்கண் வார்த்திருந்த நன்கு முதிர்ந்த மதுவினை நுகர்ந்து வேங்கை மரத்தினையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தாடி மகிழ்வர்.
ஆயின் கொடைச் சிறப்பால் வறுமையுற்றவன் என்பதை இகழ்வது போலப் புகழ்ந்து பாடப்பட்ட செய்யுளும் புறநானூற்றில் உண்டு. ஆய் அண்டிரன் இரவலர்க்கு இருங்கை வேழங்களை ஈந்து ஈந்து மேலும் அவற்றைத் தன்னை அடைந்தவர்கட்கு ஈயும் கடப்பாடு அற்றவனாயினும், இவனுடைய இல்லம் பொலிவுற்றிருத்தலில் குறையாது. இவன் மனை மாண்பொருள் படைத்து நுகரும் இனிய தாளிப்பையுடைய உணவைத் தனித்துண்ணும் மன்னர்களின் மாளிகையினும் மாண்புடையது என்பதுதான் ஆயைப்பற்றிய வஞ்சப்புகழ்ச்சியாகும். இங்ஙனம் பாடியவர் ஏணிச் சேரி முட மோசியாராவார்.
பயன்கருதாப் பண்பு
ஈகையில் முனைபவருள் பெரும்பாலோர் ஒரு பயன் கருதிச் செய்தல் உண்டு. இம்மையில் ஈகையினை மேற்கொள்ளின், அம்மையில் அதன் பயன் பெரிது என்று கருதி இருந்தனர் பலர். இப்படிப் பயன் கருதுதல் வாணிப முறையாகும். அந்த வாணிப முறை பற்றியும், பயன்கருதியும் ஆய் ஈகை புரியும் இயல்பினன் அல்லன். இவன் மேற்கொண்ட ஈகை, “நல்லாறெனினும் கொளல் தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று” என்னும் கொள்கையும், சான்றோர் சென்ற நெறி வழியே தானும் சென்று நடத்தல் வேண்டும் என்னும் குறிக்கோளுமுடையதாகும். இதனைப் புலவர் எத்துணை அழகுறப் பாராட்டியுள்ளார் பாருங்கள்.
“இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் ”
என்பது புலவர் பாட்டு. இவ்வாறு பயன் கருதாது செய்யப்படும் ஈகையே தலையாய ஈகை. இந்த ஈகையே பாராட்டற்குரிய ஈகையும் ஆகும். மானும் மரையினமும், நரந்தையும் நறிய புல்லும் மேய்ந்து, பின்னர்க் குவளைகள் மலர்ந்த சுனை நீரையும் பருகித் தகரமரத்தின் நிழலில் தங்கி இன்புறும். வடதிசையில் வயங்குவது இமயம். தென் திசைக் கண்ணே திகழ்வது ஆய்குடி. இவ்விருபாலும் மலையும், குடியும் மாணுற அமைந்திருத்தலினால் தான், இவ்வையம் தன் நிலையில் குலையாது நிற்கின்றது, இன்றேல் திசை தடுமாறிக் கீழது மேலதாகும்; மேலது கீழதாகும் ” என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறியதன் உட்பொருளை உற்று நோக்கின், உலகம் நிலைத்தற்கு அத்துணை ஆதரவானதாக ஆய் அண்டிரன் ஈகை இருந்துவந்தது என்பது புலனாகிறது. “இவன் ஈகையே ஈகை. இத்தகையவனை யான் முன்பே அடையாமல் எவர் எவரிடமேர் சென்று வீண்பொழுதைப் போக்கினேன். இவன் அன்றோ என்னால் முன்னர் நினைக்கப்படுபவன். இதனை யான் அறியாதது என் குற்றமே ஆகும். ஆகவே, என் உள்ளம் அமிழ்வதாக ! இவனை விடுத்துப் பிறரைக் கூறிய என் நா கருவியால் பிளக்கப்படுவதாக. இவன் புகழையன்றிப் பிறர் புகழைக்கேட்ட என் செவி பாழ்பட்ட கிணறுபோலக் கேட்கும் நிலையற்றுச் செவிட்டு நிலை உறுவதாக,” எனத் தம்மைத்தாமே வெறுத்துப் பேசிக்கொண்டனர் என்றால், ஆய் அண்டிரனது கொடைக்குணத்தை என்னென்று கூறுவது.
உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் தாம் அறியாமல் பிறரை முன்னர் எண்ணி இடர்ப்பட்டுப் போனமையால் பிறரும் அவ்வாறு செய்யாது, முன்பே ஆய் அண்டிரனை அண்மி, அரும்பொருள் பெற்றுத் திரும்புவாராக என்பதன் பொருட்டு, விறலி ஒருத்தியைப் பார்த்து, “மென்மையான சாயலைப் பெற்ற விறலி! உனக்கு ஆய் அண்டிரனைத் தெரியுமோ? அவனைத் தெரியாமல் எவரும் இருக்க இயலாது. அவனைத் தம் கண் முன் கண்டிலராயினும், செவியால் அவனது இசையினைக் கேட்டிருப்பர். நீயும் அவர்களைப்போலக் கண்ணால் காணாது, செவியால் அவன் புகழ் கேட்டவள் என எண்ணுகிறேன். நீ அவனைக் காணவேண்டுமானால், நேரே அவனைச் சென்று காண். அவன் மாரிபோல வரையா வண்மையுடையவன். உனக்கு வேண்டுவன தருவன்,” என வழிகூட்டி அனுப்பினர்.
முடமோசியார் அண்டிரனைக் காணல்
இங்ஙனம் ஆய் அண்டிரனைப் பாராட்டிய உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் தாமே நேரில் சென்று வள்ளலைக் கண்டார். கொடை வள்ளலைக் கண்டதும் என்ன கூறுவது என்பதும் உணராதவராய், இவனை நோக்கி முதலில் இவனது ஈரத்தினும் வீரத்தினையே புகழ விருப்பங்கொண்டவராய், “பகைவரது மாறுபாட்டை வென்ற உரம் படைத்த உத்தமனே,” என்றார். மேலும், இவனை நோக்கி, “யாவரும் ஒருசேரப் புகழும் நாட்டையுடை யோனே,” என்றும் புகழ்ந்தார். “இதற்கு மேல், அண்டிர! யானும் என் விறலியுமாகப் புறப்பட்டு வந்தனம். என்னுடன் வந்த விறலியோ நல்ல உடல் உரம் படைத்தவள் அல்லள். உடல்வளைவைப் பெற்றவள். அடியிட்டு நடக்கும் மெல்லிய நடையினள். இத்தகையவளோடு நான் வந்த வழியும் நேரிய வழியன்று; புலி இயங்கும் நெறி. சிகரம் உயர்ந்த நெடிய மலையில் ஏறுதற்கரிய பிளவுபட்ட சிறியவழி. இத்துணைத் துன்பந்தரும் வழியில் நின்னைக் காண இங்கு வந்தோம். உன்னை நினைத்து இங்கு வரச்செய்தது இரவலர்க்கும் பரிசில் மாக்களுக்கும் நீ ஈந்து அடைந்த புகழே ஆகும்.”
“நீ உன் மன்றத்தில் அமர்ந்திருக்கையில் உன் கண்முன்னே பரிசிலர்களைக் காணின், கன்றும் பிடியும் கலந்து கொடுக்கும் கடப்பாடுடையவன் என்பது யான் அறிந்ததே. என்றாலும், யான் இது போது இங்கு உன்னை நாடி வந்துற்றது, உன்னிடம் மாதங்கம் பெற்று மகிழ்ந்து போதற்கன்று. குதிரைகளைப் பெற்றுக் குதூகலத்துடன் செல்ல அன்று. ஆனால், யான் வந்தது நின்னைக் கண்டு, நின்னை வாழ்த்திச் செல்லவே யாகும். வாழ்க நின் கொற்றம் ஓங்குக நின் வாழ்நாள்!” என்று வாழ்த்தினரே அன்றி, எதையும் வாங்க வந்திலர். என்றாலும், அண்டிரன் அவரை யாதொன்றும் ஈயாது வாளா அனுப்பி இருப்பனோ? பொன்னும் மணியும் சிறக்கவே ஈந்திருப்பன். கற்பகத்தைக் கண்டவர் வறிதே மீள்வரோ? மீளார்.
அண்டிரனும் ஓடைகிழாரும்
ஆய் அண்டிரன் ஈகையைப் புகழ்ந்து துறையூர் ஓடைகிழார் என்பாரும் பாடியுள்ளார். இவரே அன்றிக் குட்டுவன் கீரனார் என்பாரும் பாடியுள்ளார். துறையூர் ஓடைகிழார் தம்மை மிகவும் வறுமை நோய் பன்னாள் வருத்த, அதனால் சொல்லொணாத் துன்பத்தினை நுகர்ந்தவர். அவர் தாங்கொணா வறுமை வந்தால் ஓங்கிய அறிவு குன்றும் என்பதற்கு இணங்க வறுமையால் பன்னான் வாடினும் ஆய் அண்டிரனை அடைந்து அல்லலை அகற்ற வேண்டுமென எண்ணிலர்போலும்! அத்தகையவர் திடுமென ஆயினைக் காணப் புறப்பட்டனர். அவர் புறப்பட்டு வந்த நெறிகள் ஆறலை கள்வர் அமைந்த வழிகள். வெம்மைக்கோர் உறைவிடமான கொடும் பாலை வழிகள். அவர் வந்த காலத்தில் அவ்வாறலை கள்வர்கள் அவரிடமிருந்த சிறு பொருள்களையும் குரங்கு போலப் பறித்துக் கொண்டனர். அக்கள்வர்கள் அப்புலவருடைய நிலையினைக் குறித்துச் சிறிதும் இரக்கம் கொண்டிலர். இந்த நிலைகள் ஒரு புறமிருக்க அவர் உண்ணாது உயங்கிய வருத்தத்திற்கு அளவே இல்லை. அவரே அன்றி அவருடன் இருந்த சுற்றத்தினரும் உண்ணாமையால் உடல் மெலிந்து நடைதளர்ந்து, வருத்தமிகுதியால் கண்களில் நீர்கலங்கக் காணப்பட்டனர். இன்னமும் அவரைப்பற்றி இரக்கங் கொள்ள வேண்டிய நிலை யாதெனில், அவர் வறுமை காரணமாகத் தலைமயிர் எண்ணெய் தடவப்பெறாது ஈரும் பேனுமாய் நிரம்பி இருந்ததுவே. ஆகவே, அப்புலவர்க்கு, ஈரும் பேனும், ஆறலைகள் வரும், சுர நெறியும் பெரும் பகையாகக் காணப்பட்டன. ஆனால், அப்பகைகள் யாவும், ஆய் அண்டிரனை அணைவோம் என்னும் எண்ணத்தின் எதிரில் நிற்க இயலாமல், பரிதியைக் கண்ட பனிபோல நீங்கிப் போயின. ஆய் அண்டிரனை வந்து அணுகிப் புரவலனைப் புலவர் கண்டார். தம் பகை அன்றோடு பறந்துபோயது என உறுதிகொண்டார். தாயைக் கண்ட சேய்போல உவகை கொண்டார். தமக்குக் கேட்க உரிமை, உளதாதல்போல அண்டிரனுக்கும் கொடுக்க உரிமை யுண்டாதலால் அவனை நோக்கி “நுண்ணிய மணவினும் பல நாள் நீ வாழ்க பெரும! நின்னை எம் வாயால் வாழ்த்தி வந்தனம். நின் புகழை நச்சி வந்தனம். ஆகவே நீ இப்பொழுது உதவுதல் வேண்டும். நீ எனக்கும் என் சுற்றத்திற்கும் ஈவதால் நினக்கே ஈந்துகொண்டவனும் ஆகின்றாய். நீ தரும் வளம், நாங்கள் நெடுநாள் உண்டு உவத்தற்குரியதாகும். நாளும் நின்னை வாழ்த்தற்கும் உரியதாகும்” என்று கேட்டனர். இவ்வளவு வற்புறுத்தி ஆய் அண்டிரனைக் கேட்கவும் வேண்டுமோ? இவன் குறிப்பறிந்து அளிக்கும் கொடையாளி. “வறியார்க்கு ஒன்று ஈவதே கொடை; மற்றையவர்க்குக் கொடுக்கப்படும் கொடைகள் யாவும் ஒரு குறிக்கோளை எதிர்நோக்கிக் கொடுக்கப்படுவனவாகும்,” என்னும் சீரிய கருத்தைக் கொண்டவன். மேலும் துறையூர் ஓடை கிழார் தோற்றத்தைப் பார்த்த அளவில் ஈயும் மனம் இல்லாத எத்தகைய கொடியோனும், பொருளினை ஈந்து விடுப்பான் எனில், கொடுப்பதே தன் பிறவிப் பயன் எனக் கொண்டு வாழும் ஆய் அண்டிரன் கொடாதிருப்பானோ? துறையூர் ஓடைகிழார் உளம் கொளும் வகையில் செல்வந் தந்து சீரிய முறையில் அனுப்பி வைத்தான்.
ஆய் அண்டிரன் நடமாடும் கோயிலாகிய ஏழை எளியவர்கட்கு ஈந்துவந்து வந்ததுபோலப் படமாடும் கோயில் பரமனுக்கும் ஈந்து உள்ளம் உவகைகொள்வோனாய் விளங்கினான். நீல நாகம் தந்த ஆடையினை ஆலமர் செல்வனாம் முக்கண் மூர்த்திக்கு ஈந்து முகமலர்ச்சி கொண்டனன். இவனைச் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர்,
"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்”
எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.
அண்டிரனது பிரிவாற்றாமை
இத்தகைய பெருமைபெற்ற ஆய் இறந்தனன். அதுகாலை இவன் மாட்டு அன்புகொண்ட புலவர்கள் வருந்திப் பாடிய பாடல்கள் உள்ளத்தை உருக்கும் தன்மையன.
தம் இல்லத்திற்கு வந்த நல்விருந்தினரை உபசரித்து, இனி வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவர்களையும் நன்முறையில் உபசரிக்கக் காத்து நிற்பவர் இறந்தபோது, இவர்களை நன்முறையில் உபசரித்து வரவேற்கத் தேவர் காத்து நிற்பர் என்பது நம் தமிழ் மறையின் துணிபாதலின், இம்முறையில் வாழ்க்கை நடத்திய ஆய் அண்டிரன் இறந்து மேலுலகம் சென்றபோது, இந்திரன் தன் திருமாளிகையின் முன் முரசம் ஒலிக்கச்செய்து “அண்டிரன் வருகின்றான்” எனக் கூறி வரவேற்கக் காத்து நின்றான் எனக் கையறு நிலை பாடிக் கவலை கொண்டனர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார்.
குட்டுவன் கீரனார் பாடுகையில், 'அந்தோ ! அசையும் நடையுடைய பரியும் கரியும் பரிந்து அளிக்கும் பண்புடைய ஆயின் உடலம் சுட்டெரிக்கப் பட்டதே! தேரும் ஊரும் தெரிந்து கொடுக்கும் தெளிவுடை மனத்தனான அண்டிரனைக் கண்ணோட்டமில்லாத காலன் கவர்ந்தனனே', எனக் கதறி அழுதனர். ஆந்தைகள் அலறுதலைக் கண்ட புலவர், “இயமனையும் இயமபடரையும் சுட்டுக் குவியுங்கள்; இவர்கள் நல்ல ஈகைப் பண்புவாய்ந்த ஆய் அண்டிரன் உயிரைக் கொண்டு போயினர்,” என்று செத்தாரை எழுந்து அவ்வெம்படருடன் போராட அலறுகின்றனபோலும், என்று தற்குறிப்பேற்ற அணியாகவும் பாடிப் பரதவித்தனர். "இனி எனக்கும் எம்போல்வாராகிய பரிசில்மாக்களுக்கும் ஆய் குடி வாழ் இடம் இன்றி, வேற்றுக் குடியில் போவது நேர்ந்ததே," என்று எண்ணி ஏங்கினர். எவ்வளவு வருந்தி யென்? ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? வாரார். அண்டிரன் பருவுடல் மறைந்தது. மறைந்ததேனும், இவன் நுண்ணுடலான புகழுடல் இன்றும் என்றும் நிலைத் திருப்பதாகும்.
4. திருமுடிக்காரி
திருமுடிக்காரியின் வீரப் பண்பு
திருமுடிக்காரி என்பவன் ஒரு சிற்றரசன் இவன் மலையமான் திருமுடிக்காரி எனவும், மலையமான் எனவும் அழைக்கப்படுபவன். இவன் சான்றோருடைத்துத் தொண்டை நாடு எனச் சாற்றப்பெறும் பெருமை பெற்ற தொண்டை நாட்டிற்கும், சோழவளநாடு சோறுடைத்து என்று சொல்லப்படும் சோழ வளநாட்டிற்கும் இடைப்பட்ட நடு நாட்டில் மலாடு என்னும் நாட்டின் அரசன் ஆவான் இம்மலாடு பெண்ணையாற்றங்கரையில் உள்ளது இவன் மலயமா நாட்டிற்கு மன்னனாக இருந்து திருக்கோவலூரைத் தன் நாட்டுத் தலைநகராகக்கொண்டு செங்கோல் செலுத்திவந்தான். இவனுக்குரிய மலை முள்ளூர் மலையாகும். இவன் சிற்றரசனேயாயினும் போர்முகத்தில் நின்று புறமுதுகுகாட்டாது போரிடும் ஆற்றல் மிகப் படைத்தவன். போர் என்ன வீங்கும் பொலங்கொள் தோளுடைய மறவர் பலரைக் கொண்டவன். இவ்வாறு படைபலமும், தோள்வன்மையும் இவன் கொண்டிருந்த காரணத்தால், இவனது துணையைப் பெரிதும் முடியுடைமூவேந்தர்களும் விரும்பியுள்ளனர். அவ்வேந்தர்கள் தம் ஒன்னார் மீது அமர்தொடுத்த காலத்தில் இவன் பெரிதும் துணை புரிந்துள்ளான். இதற்குச் சான்று சேரமான் மாந்தரலம் சேரல் இரும்பொறையும், சோழன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடிய பாட்டும் புறநானூற்றில் உள்ளது. அதனை வட வண்ணக்கன் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார். இப்போரிற் சோழனே வென்றான்.
இவனை யார் துணையாகக் கொள்கின்றனரோ, அவர்கள் வெற்றி பெறுதல் திண்ணம். அதில் யாதோர் ஐயமும் இன்று. இதன் பொருட்டே மூவேந்தர்களும், சமயம் வந்தபோதெல்லாம் இவன் துணை வேண்டி நின்றனர். இதனைக் கபிலர் அழகு படக் கூறுகையில், “ வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவருள் ஒருவன் துப்பாகியன்,” என்றும் “முரண் கொள் துப்பின் மலையன்," என்றும் புகழ்ந்தனர். இவன் வன்மையுடையவன் என்னும் பொருளில் தான் துப்பின் மலையன், துப்பாகியன் எனவும் சிறப்பிக்கப்பட்டனன்.
இவனது வீரத்திற்கு அஞ்சி ஓடிய வீரரும் உளர். ஒருமுறை ஆசிரியர் இவனது முள்ளூர் மலையை நெருங்கிப் போரிட்டபோது, அவர்களுக்கு இடையில் புல்வாய்கட்கிடையே புலிக்குட்டி புகுவது போலப் புகுந்து இவன் தன் வாளினை உறை கழித்து வீசி நின்றபோது, அவர்கள் இரிந்து ஓடினர் என்பதை நற்றிணை, “ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியது” எனக் கூறுகிறது.
புலவர்கட்கும் பரிசில் மாக்களுக்கும், பாணர் விறலியர்கட்கும் இல்லையென்னாது ஈயும் கடப்பாடும் கொண்டவனாய்த் திகழ்ந்தனன். அந்தணர்கட்கு நிலம் ஈந்து அகம் மகிழ்ந்தனன். ஆய் அண்டிரன் எங்ஙனம் தன்பால் வந்த இரவலர்க்கு ஆனைகள் பல ஈந்து அகம் களித்து வந்தனனோ, அது போலவே, இவனும் பரிசிலர்க்குப் பரிகள் பலவற்றை ஈந்து பரவசம் உற்றவன். இவன் குதிரைகளை ஈந்து குதூகலிப்பவன் என்பதற்காகவே போலும் சிறுபாணாற்றுப்படை “காரிக்குதிரைக் காரி” என்றே இவனைப் போற்றுகிறது. இவுளிகள் பலவற்றை ஈவது போலவே இவுளியினை இவர்ந்து போதலிலும் சிறப்படைந்தவன் என்பதைப் பெருஞ் சித்திரனார் பேசுகையில் “காரியூர்ந்துபேர் அமர்க் கடந்த மாரியீகை மறப்போர் மலையன்” என்று இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். காரியென்பது இவன் இவர்ந்து நடாத்தும் குதிரையின் பெயராகும்.
காரி ஈர நெஞ்சினன் என்பதை “மாரியீகை” என இவனது ஈகைக்குக் கைம்மாறு வேண்டாத மாரியை உவமை கூறியிருத்தலினின்றே உணர்கிறோம். ஈரத்திற்கு ஏற்ற வீரம் உடையவன் என்பது மறப்போர் மலையன் என்று அந்நூலே சிறப்பிப்பதிலிருந்து தெளியலாம். இவனைப் போலக் கொடை வள்ளலாகத் திகழ்ந்த வல்வில் ஓரியுடன் மலைந்தவன் என்பது, ஓரியைப் புகழ வந்த பெருஞ்சித்திரனார் “காரிக் குதிரைக் காரியோடு மலைந்த ஓரிக்குதிரை ஓரியும்" என்று குறிப்பிட்டிருப்பதனால் உணரலாம்.
ஈகைப் பண்பு
மலையமான் திருமுடிக்காரி இசையால் திசை போயவன் என்ற காரணத்தால் இவனை நேர்முகமாக நின்று புகழ்வதோடு இன்றி, இவனையும் இவன் ஊரையும் உவமையாகக் காட்டிப் புகழ்ந்துள்ளனர் புலவர்கள், அம்மூவனார் என்னும் புலவர் ஒரு பெண்ணணங்கின் கூந்தலைப் புகழ்கையில் அக்கூந்தற்குப் பெண்ணையாற்றின் நுண் மணலை உவமை கூறினர். அப்படிக் கூறுகையில், இம்மலையமான் திருமுடிக்காரியைக் குறிப்பிட்டு, “துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க்காரி கொடுங்கா முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங்கதுப்பு” என்று சிறப்பித்துப் பாடினர். ஈண்டு கொடுங்கால் என்பது காரியின் ஆட்சிக்குட்பட்ட ஊரினைக் குறிப்பதாகும். இக்கருத்து அகநானூற்றில் காணப்படுவது. இவ்வாறே குறுந்தொகை யென்னும் நூலில் கபிலர் இவனது முள்ளூர்க்கானம் நறுமணம் நிறைந்த இடம் என்பதைப் பாடினர்.
கபிலர் காரியின் புகழைப் பலபடப் புறநானூற்றில் பாராட்டிப் பேசியுள்ளார். இவன் முள்ளூர் மலைக்கு உரியவனாய்த் திருக்கோவலூர் இருக்கை யுடையவனாய் இருந்தாலும், இவனை வந்து காணும் இரவலர்கள் பலர், நானாபக்கங்களினின்றும் வந்து பரிசில் பெற்று மீள்வர் என்றும் கபிலர் கருதுகிறார். அதனால், “ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள்,” எனப் பாடுகிறார். திருமுடிக்காரி இன்னாருக்கு இது கொடுத்தல் சாலும், என்று எண்ணி ஈபவன் அல்லன். எவர்க்கும் வரையாது எதையும் ஈபவன். இக்குணம் இவனிடம் கண்ட புலவர் கபிலர், அதனைச் சிறிது மாற்றவேண்டி, இவனை நோக்கி "மாவண் தோன்றலே, நீ வரையாது வழங்கும் வள்ளன்மையைக் குறித்து எனக்கு மகிழ்வே. என்றாலும், இரவலர்க்கும், என் போன்ற புலவர்களாகிய பரிசில்மாக்களுக்கும் சிறிது பாடு தோன்ற நீ பரிசில் ஈதல் உன் பண்பாடாகும்," என்று அறிவுறுத்துவார் போல “பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” என்று தெருட்டுவாராயினர்.
காரி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாதவன் என்பதைக் கபிலர் கூறும் கருத்து நாம் படித்துச் சுவைத்தற்குரிய பகுதியாகும். வரையாது கொடுக்கும் வள்ளல் என்பதை அக்கருத்தில் பதிய வைத்துள்ளார் புலவர் பெருமான், காரி பிறருக்குத் துணையாகும் துப்புரவினன் என்பது முன்பே கூறப் பட்டதன்றோ! அப்படிப்பட்டவனுடைய கோவலூரையோ முள்ளூர் மலையையோ எப்பகைவரேனும் கைப்பற்ற எண்ணுவரோ? எண்ணார். அன்றி, அவன் நாடு கடலால் கொள்ளப்பட்டு அழிவுறுமோ எனில், அதுவும் இயலாதது. ஏனெனில், நல்லவருடைய நாடு அங்ஙனம் அழிதல் இல்லையன்றோ ? ஆகவே, “வீரத்தண்டை அணிந்த காரியே நின்னாடு பரவையாலும், பகைவராலும் கொள்ளப்படாதது,” என்று விதந்து கூறினார். இவன் தனக்கென அந்நாட்டினை வைத்திருந்தால்தானே பகைவர் கொள்ள எண்ணமும் கொள்வர். அவை மழை வளம் தருதற்பொருட்டு வேள்வியினைச் செய்யும் நல்ல அந்தணர்களுக்குரிய பொருளாகிவிட்டன, அதாவது தன் நாடுகளை அந்தணர்களுக்கு அளித்து வந்தவன் என்பது தெரிகிறது.
காரி அந்தணர்களுக்கு நாடுகளைக் கொடுத்து உதவியதுபோல், இரவலர்கள் வந்து கேட்டபோது அவர்கட்குக் கொடுத்தற்கு உதவியாய் இருந்த பொருள், மூவேந்தருள் எவரேனும் தமக்குத் துணையாக வேண்டும் என அழைத்தகாலத்து ஈந்த பொருளேயாகும். அவற்றைத் தானே துய்க்காமல் “தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற்பொருட்டு,” என்னும் கருத்துக்கு இணங்கக் கொடுத்து வந்தவன். இப்படித் தன் நாட்டை அந்தணர்கட்கு ஈந்தும் தான் மூவேந்தர்பால் பெற்ற பொருளைப் பரிசில் கேட்டார்க்கு ஈந்தும், காரி வாழ்வு நடத்தினால், தனக்கென ஒன்றையும் பெற்றிலனோ எனில், அவனுக்கென உரிமையாக அமைந்தவள் அருந்ததி அனைய அவனது இல்லக் கிழத்தியே அன்றி வேறு எவரும் இலர். வேறு எதுவும் இன்று. இப்படி அன்றோ வாழ வேண்டும்! இத்தகையோனையன்றோ புலவர் உலகமும் பொது மக்கள் உலகமும் புகழும்.
மலையமான் திருமுடிக்காரி பிறர்போலத் தான் கள்ளுண்டு மயங்கிய காலத்து மகிழ்ச்சியால் ஈயும் இயல்பினன் அல்லன். தான் மதுவுண்டு மயங்காது இருக்கின்ற காலத்தும் மகிழ்ந்து ஈயவல்லவன். இப்படி இவன் ஈய வாங்கிச் சென்றவர் தொகை எண்ணில் அடங்காது. இவர்களை ஓர் உவமை கூறி விளக்க வேண்டுமாயின், இவர்கள் முள்ளூர் மலையின் உச்சியில் விழுந்த மழைத் துளியினும் பலராவர். இதனால், காரியின் ஈகை இயற்கையில் இவனுடைய பிறவிக் குணத்தால் அமைந்த ஈகையே அன்றிப் பிறரைப் போலச் செயற்கையால் அமைந்த ஈகை அன்று. இவனைப் பாடிச் சென்றவர் வெறுங்கையினராய் மீளுதல் அரிது. இவனைக் காணப் புறப்பட்டவர்கட்கு நல்ல நாளாக அல்லாமற்போயினும், நிமித்தங்கள் தீயனவாகத் தோன்றித் தடைக்குறிகளைக் காட்டுவனவாக இருந்த போதிலும், பரிசில் மாக்கள் இவனைக் கண்டு பாடிய மாத்திரையில் பரிசில் பெற்றே மீள்வர்.”
புலவர் பாராட்டும் புகழ்மை உடையது
இனி மலையமான் திருமுடிக்காரியை வடமவண்ணக்கன் பெருஞ் சித்திரனார் எங்ஙனம் அறிந்து பாராட்டியுள்ளார் என்பதைக் சிறிது சிந்திப்போம். இப்புலவர் பாராட்டும் பாராட்டில் காரியின் கொடைக் குணமும் படை வன்மையும் தோன்றக் காணலாம். காரி பிறர்க்கு ஈந்து மிகுந்ததையே தான் உண்ணும் கடப்பாடுடையன் என்று பாராட்டியுள்ளார். அதனால், தனக்கு விஞ்சியது தருமம் என்னாது, பிறர்க்கு ஈந்து மகிழ்தல் மாண்புடையது என்று எண்ணும் கொள்கையுடையவன் என்பது தெரியவருகிறது. காரி போர்க்களத்தில் நின்று போராடுங்காலத்து இவன் சார்பாய் நின்று வென்றவர் இவனைப் புகழ்வர் என்றும், தோற்றவரும் “இவனன்றோ நம்மைத் தோல்வியுறுமாறு செய்தவன்” எனப் புகழ்ந்தே பேசுவர் என்றும் இப்புலவர் கூறுவதை நாம் உற்று நோக்கின், இவன் நட்டார் ஒட்டார் ஆகிய இரு திறத்தாராலும் பாராட்டப்படும் பெருமை சான்றவன் என்பது அறியக் கிடக்கிறது.
மாறோக்கத்து நப்பசலையார் என்னும்புலவரும் காரியின் ஈகைக் குணத்தையும் வென்றிச் சிறப்பையும் புகழ்ந்தனர். காரி புலவர் பாடும் புகழ் படைத்தவன் என்று இப்புலவர் குறிப்பிட்டிருப்பது நம் சிந்தனைக்குக் கொணர வேண்டியதாகும். இவர் இப்படிக் கூறியதன் நோக்கம், காரி வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலனால் பாடப்பட்டிருத்தலேயாகும். இதனை இவர் குறிப்பிடுகையில் “புலன் அழுக்கற்ற அந்தணாளன் பரந்திசை நிற்கப் பாடினன்” என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளார் இதனால் கபிலர் காரியின் புகழை அவ்வளவு பரக்கப் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படி இவர் பாடிவிட்டதால் இனிக் காரியிடம் வரும் புலவர்கட்கு இன்னது பாடுவது என்பது தெரியாமல் தடுமாறினர் என்பதும் நாம் அறியவேண்டி இருக்கிறது. இந்நிலையில் மாறோக்கத்து நப்பசலையார் தம்மை மிடிபிடித்து உந்த, சில சொற்களைக் கொண்டேனும் பாடிப் பரிசில் பெற்றுச் செல்லலாம் என்று வந்ததாகக் கூறிப் பரிசில் வினவுகிறார். அந்தோ ! புலவரின் வறுமை தான் என்னே ! அவர் சில சொல்லி என்? பல சொல்லி என்? காரி தன்னைப் புகழ்ந்த காலத்துத்தான் ஈய வல்லனோ? அல்லன், அல்லன். இவன் தன்னைக் கண்டவர்க்கெல்லாம் களிப்புடன் ஈயும் கடப்பாடுடையவன். மேலும், காரியின் ஈகையை இப்புலவர், “இவன் பகைவரை வென்று, அவர்களின் யானைகளைக் கைப்பற்றி முக படாத்தில் அமைந்த பொன்னைப் பாணர்களுக்கு ஈந்து மகிழ்பவன்,” என்று பாடுகிறார். ஆகவே, மலையமான் திருமுடிக்காரி ஈர நெஞ்சமும், வீர உள்ளமும் படைத்தவன் என்பதை நன்கு உணர்வோமாக.
5. நள்ளி
நள்ளியின் நாட்டு வளனும் தோற்றப் பொலிவும்
நள்ளி என்பானும் கடையெழு வள்ளல்களின் வரிசையில் ஒருவனாகத் திகழவல்லவன். இவனைக் கண்டீரக் கோப்பெருநள்ளி எனவும், கண்டிற்கோப் பெருநற்கிள்ளி எனவும், கண்டிரக்கோன், கண்டிரக்கோ எனவும், நள்ளி யெனவும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவன் தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலை நாட்டிற்கும் காடுகளுக்கும் தலைவனாக இருந்தவன். இவன் வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார் என்னும் பெரும் புலவர்களால் பாடப்பட்ட பெருமை சான்றவன். இவன் “இயல்வது கரவேல்” என்பதற்கு இணங்கத் தன்னை விரும்பி வந்தவர்கட்கெல்லாம் இல்லறத்தை இனிது நடத்தப் பொருள்களை ஈந்து மகிழ்ந்தவன். அப்படிக் கொடுக்குங் காலத்தும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்," என்பதற் கிணங்க யாதொரு தட்டுத் தடங்கல் இன்றி அளித்து வந்தவன்; நல்ல தோற்றப் பொலிவும் உடையவன். தாள்தோய் தடக்கையூடையவன். இவன் இத்தகைய நல்லோன் ஆதலின், இவன் மலையும் நல்ல மழை வளங்கொண்டு விளங்க, அத்தோட்டி மலைக்குத் தலைவனாக இருந்தவன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் அல்லவா?
மாரி இடையறாது பொழிந்தால் அன்றோ தானம் தவம் இரண்டும் நிலவுலகில் தங்கும் வானம் வழங்காது எனில் இவ்விரண்டும் தங்காவே. ஆகவே இவன் மழை வளம் தரும் தோட்டி மலையில் மாண்புடன் வாழ்ந்து வந்தனன். இதனைச் சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் வெகு அழகுபட,
"கரவாது நாட்டோர் உவப்பநடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி ”
என்று பாடிக் களித்துள்ளனர்.
வன்பரணர்க்கும் நள்ளிக்கும் இருந்த நட்புடைமை
இனி வன்பரணருக்கும் நள்ளிக்கும் இருந்த தொடர்பையும் அன்பையும் சிறிது கவனிப்போமாக. பரணர் என்னும் பெயருடையார் வேறு இரு பெரும் புலவர்கள் இருந்துள்ளனர். கபிலருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் பரணர் என்பவர். இதனால், 'கபில பரணர்' என்னும் தொடரும் நீண்ட நாளாக வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை இச்சந்தர்ப்பத்தில் நீங்கள் அறிதல் சாலவும் நன்றெனவே இங்கு யான் குறிப்பிட்டனன். இவ்விரு பரணர்களினும் இவர் வேறுபட்டவர் என்பதை வன்பரணர் என இவருக்கு முன்னுள்ள அடைமொழியால் நன்கு உணரலாம். வன்பரணர் கண்டீரக் கோப்பெருநற் கிள்ளியின்பால் பெற்ற பரிசில் பல என்பது இவருடைய பாட்டால் அறிகிறோம். நள்ளி இலம் என்னும் சொல்லைப் பிறரிடம் சென்று மீண்டும் கேட்காதவாறு இவருக்கு ஈந்திருக்கின்றான் என்பதுந் தெரிகிறது. புலவர் இதனைக் குறிப்பிட்டுப் பாடுகையில் "உச்சிக்கண்ணிருந்து ஒலியுடன் ஒழுகும் அருவியையுடைய உயர்ந்த தோட்டி மலையையுடைய நள்ளி! உன் செல்வத்தை வாழ்த்தி வந்தனம். நின் செல்வம் எம்போலும் புலவர்களால் வாழ்த்தி வளர்தற்குரிய பெருமை வாய்ந்தது. ஏனெனில் அச்செல்வம் நின் தளர்ச்சியில்லாத வலிய முயற்சியால் ஆயது. அது தாள் ஆற்றித் தந்த பொருள். ஆகவே, அஃது என் போலியரால் நச்சப்படும் தன்மையுடையது. அச்செல்வத்தை நீயே துய்க்க எண்ணங்கொள்ளாமல், பரிசிலர்க்கும் ஈந்துவிடுகின்றாய். அந்தப் பண்புக்கு ஏற்ப எனக்கும் அளவுகடந்து அளித்து விட்டாய். இப்படி நீ அளித்தமையால் என்னுடைய நாக்கு, ஈத்து உவக்கும் இன்பமும் பெருமையும் படைக்காத அரசரை நச்சிப் புகழும் செயலை மறந்தது. நின்னையே பாடும் பண்பாடு பெற்றது” என்று பாடியுள்ளார். இதனால் பிற மன்னர்கள் தாமே துய்க்கும் குணம் படைத்தவர் என்பதையும், இவன் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை என்பதையும் நன்கு உய்த்து உணர்ந்து கொள்க. மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும், காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்பதும் இப்புலவர் பெருமானால் குறிப்பிட்டுப் பேசப்படுவதை உற்று நோக்கினால், நள்ளி மகிழ்ச்சியால் தம்மையே மறக்கும். அளவுக்கு ஈயவல்லவன் என்பது தெளிய வேண்டி இருக்கிறது.
பாராட்டற்குரிய பண்பாடு
இக்கண்டீரக்கோப் பெருநற்கிள்ளியினிடம் அமைந்த குணம் ஒன்று மிக மிகப் பாராட்டற்குரியது. அதுதான் இசைவேண்டா ஈகைக் குணமாகும். இவன் “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை மீரதுடைத்து” என்னும் கொள்கையுடையவன். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன் என்பதும், மற்றையவை ஆரவாரத் தன்மையுடையன,” என்பதும் இவன் உளங்கொண்ட உண்மைகளாகும். வாழ்க்கையில் ஒரு முறை இவன் நடந்துகொண்ட தினின்றும் இதனை நன்கனம் உணரலாம்.
வன்பரணர் ஒரு முறை தாமும் தம் சுற்றமுமாகப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். இப்புலவர் ஒரு குசேலர். அஃதாவது கிழிந்த ஆடையை அணிந்திருந்தவர். அக்கிழிசலும் நேர்நேராக இன்றி உடையிடையே சந்துகளைப் பெற்றதாக இருந்தது. இஃது இவ்வாறு இருந்தது என்பது இவர் கூறும் உவமையால் புலனாகிறது. அது பருந்தினுடைய இறகைப்போல இருந்ததாம். பருந்தின் இறகு ஒரே நிறமுடையதாக இன்றி இடையிடையே வெண்புள்ளி கலந்ததாக இருக்கும் அல்லவா ? அப்புள்ளிகளே ஈண்டு ஆடையில் அமைந்த கிழிசலுக்கு உவமையாகும். இதனைச் செய்யுள் அடியில் குறிக்கையில் “பருந்தின் இருஞ் சிறகன்ன பாறிய சிதர்” என்றனர் புலவர்.
நள்ளி வேட்டைமேல் நாட்டமுற்றவனாய்க் காட்டகத்து வந்திருந்தனன். புலவரது நல்லோரையின் காரணமாக நள்ளி புலவரைக் கண்ணுற்றதும் கழிபெருந்துயர் கொண்டான்; புலவரது வறுமைக் கோலத்தையும்; பசியால் உயங்கிய வாட்டத்தையும் கண்ணால் கண்டான்; நெக்கு நெக்கு உருகினான். தன்னை உற்று நோக்குகிறான் எவனோ ஒரு வேட்டுவன். அவனுக்கும் ஒரு வணக்கம் செலுத்துவோம் என்பார் போலப் புலவர் தம் இரு கைகளையும் குவித்து மெல்ல அஞ்சலி பண்ணினார். விரைவாகவும் கைகளை முகிழ்த்து வணக்கம் செலுத்தப் புலவர்க்கு இயலவில்லை. அத்துணைப் பல ஈனராய்ப் புலவர் இருந்தனர். பசியால் உடல் மெலிந்திருந்தமையே அதற்குக் காரணம். இத்துணை கெட்ட நிலையினும் கையெடுத்து வணங்குகின்றனரே இவர், என இரக்கங்கொண்ட நள்ளி அவரை எழுந்திருக்க விடாது கையமர்த்தி இருக்கச் செய்தான். தான் வேட்டையில் வீழ்த்திய மான் ஒன்றன் மாமிசத்தைத் தீக்கோல் கொண்டு தீ மூட்டிப் பக்குவப்படுத்தி, “ஐய நீயும் நின்னுடன் வந்துள்ள நின் சுற்றமும் புசித்திடுக,” என்று ஈந்தனன். இதனைத் தன்னுடன் வந்த இளையரும் ஏனையோரும் தன்னை வந்து அணுகுதற்கு முன்பு செய்து முடித்தனன். அப்படி இவன் செய்ததன் நோக்கம் தான் ஓர் அரசன் என்பதைப் புலவர் அறியாதிருக்கும் பொருட்டேயாகும்.
புலவரும் புலவர் சுற்றமும் மான் தசையினை யுண்டு மகிழ்ந்தனர். உணவுகொண்ட இப்புலவர்க்கும் புலவர் சுற்றத்திற்கும் நீர் வேட்கை மிக்கிருந்தமையால் மலையினின்று கீழே இழி தரும் அருவி நீரை அருந்தி, நீர்வேட்கையையும் போக்கிக்கொண்டனர். உண்ண உணவும், பருக நீரும் உதவிய கண்டீரக் கோப்பெரு நள்ளி புலவரை அண்மி “ஐய! யான் இது போது காட்டகத்து உள்ளேன், நாட்டகத்து இல்லேன். ஆகவே, நும் உள்ளம் மகிழ உதவுவதற்குரிய அணிகலன்கள் என்னிடம் இப்பொழுது இல்லை என்றாலும், உம்மை வெறுங் கையினராய் அனுப்புதற்கு எனக்கு விருப்பமின்று. ஆகவே, இதோ, இம்முத்தாரத்தைப் பெறுக. யான் செய்வது தினைத் துணைய தானமே யானாலும், உம்போல்வார் பனைத்துணையாகக் கொள்வர் என்னும் எண்ணங்கொண்டே இதனை ஈகின்றேன்; ஏற்றருள்க,” என்று வினயமாகக் கூறியீந்தனன். நள்ளி கொடுத்தது தரளமாலை என்றாலும், மிகுதியாகக் கொடுத்தற்கு இல்லையே என்று இவன் எண்ணியதை நாம் நினைக்கும் போது, இவனுக்கு ஈவதில் எத்துணை இன்பம் இருந்தது என்பது தெற்றெனத் தெரிகிறது அன்றோ ? நித்திலக் கோவையை ஈந்ததோடு அல்லாமல், தன் முன்கைக் கடகத்தையும் கொடுத்து இன்புற்றான். உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் வள்ளியோன் இவன் என்பதில் ஐயம் என்ன இருக்கிறது ?
இங்ஙனம் ஈந்த வள்ளலை நோக்கிப் புலவர் பெருமான், ‘ஐயா நீர் யாரோ? நும் பெயர் என்னவோ? நும் வாழ் இடம் எதுவோ?’ என்று உசாவினன் இத்துணை வினாக்களுக்கும் கண்டீரக் கோப்பெருநள்ளி யாதொரு விடையும் ஈயாது சென்றனன், இவ்வாறு இவன் சென்றது இவனுக்கிருந்த செருக்கன்று. தான் செய்த தருமம் பிறர் அறிதல் கூடாது என்பதற்கே யாகும். ஆனால், புலவர் மனம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. தாம் புறப்பட்டுச் சென்ற செல்லாறுதோறும் கண்டாரை யெல்லாம் தமக்கு ஈந்தவன் செயல்கள் அனைத்தையும் செப்பிக் கேட்டுக்கொண்டே செல்ல, இத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவன், நள்ளியைத் தவிர்த்துப் பிறர் எவரும் இருக்க இயலாது, ஆகையால் புலவரைக் கண்டவர்கள் எல்லாம், “தோட்டி மலைக்குத் தலைவனான நள்ளி தான் உமக்கு இத்துணை உபசரணை செய்து உதவியவன்” என்று கூறக் கேட்டுப் புலவர் இவனது ஈகைக்குணத்தைப் பெரிதும் பாராட்டுவாரானார். ஈகையாளன் என்றால் இவ்வாறு அன்றோ இருக்க வேண்டும் ! இதனால் நள்ளி செய்த நன்கொடை யாவும் புகழுக்காகவோ புண்ணியத்திற்காகவோ செய்யப்பட்டவை அல்ல, என்பதன்றோ தெரியவருகிறது? வாழ்க அவன் கொடை ; வளர்க அவன் புகழ்.
கண்டீரக் கோப்பெருநள்ளி பெருந்தலைச் சாத்தனாரால் பாராட்டப்பட்ட முறை வியந்து பேசுதற்குரியதாகும். ஒருமுறை நள்ளியின் இளவலான இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கே வீற்றிருந்தனர். அவ்வமயம் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அவண் வந்துற்றனர். அங்ஙனம் வந்தவர், இருவரையும் ஒருசேரக் கண்டனர். என்றாலும், நம் நள்ளியின் இளவலான இளங்கண்டீரக்கோவை மட்டும் அன்பு காரணமாக நெஞ்சிறுகப்புல்லி இன்புற்றார். இளவிச்சிக்கோ என்பானைத் தழுவாது வாளா இருந்தனர். ஒரு பெரும் புலவர் ஓர வஞ்சனையால் இவ்வாறு செய்தால், எவர்தாம் பொறுப்பர்? அறிஞர் ஒருவர் இப்படிச் செய்தார் என்றால், இதற்கு ஏதேனும் காரணம் இருக்கவேண்டுமல்லவா ? ஆகவே, இளவிச்சிக்கோ புலவர் பெருமானை நோக்கி, “புலமை மிக்கீர்! இளங்கண்டீரக்கோவும் யானும் ஒருங்கே வீற்றிருத்தலைக் கண்டும், அவனை மட்டும் புல்லி, என்னைப் புல்லாது விடுத்தீரே, இதற்கு ஏதேனும் காரணம் உளதோ?” என உசாவினன். பெருந்தலைச் சாத்தனார் உள்ளதை உள்ளவாறு உரைக்கும் இயல்பினர். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் குணமுடையர் அல்லர். ஆகவே, புலவர் இளவிச்சிக்கோவைப் பார்த்து, "இளவிச்சிக்கோ! இவ்விளங்கண்டீரக்கோ, கண்டீரக் கோவின் இளவல். அக்கண்டீரக்கோ எத்தகையவன் எனில், தான் இல்லாத காலத்திலும் அவனது வாழ்க்கைத் துணைவியார் தம்மை அடைந்து கேட்கும் இரவலர்களின் பெண்டிர்கட்குப் பெண்யானைகளை நன் கனம் பொன்னணி பூட்டி ஈயும் கடப்பாடு உடையவர். அவ்வில்லக்கிழத்தியாரே அத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவராயின், அவருடைய கொழுநனான கண்டீரக்கோப்பெருநள்ளி எத்துணை ஈகைப் பண்பு வாய்ந்தவனாக இருப்பான் என்பதை நீயே உணர்ந்துகொள். அத்தகைய மரபினனான நள்ளியின் இளவலாக இளங்கண்டீரக்கோ இருந்தமையால், என் மார்பகம் ஞெமுங்கப் புல்லினேன். நீயோ, “பரிசிலர் வருவர், வந்து ஏதேனும் கேட்பர். அவர்கட்கு ஈயவேண்டுமே” என்பதைக் கடுப்பதற்காக நின் அரண்மனையை எப்பொழுதும் அடைபட்ட நிலையில் தாழிட்டிருப்பை. இதனை யறிந்த என்போலும் பரிசில் மாக்கள் நின்னையும் நின் மரபில் உள்ளாரையும் பாடுதலை நீக்கினார். அங்ஙனம் பாடிற்றிலர் என்பதனை நன்கு உணர்ந்த யான், நின்னை யாங்ஙனம் புல்லுவேன் ? ஆகவே, யான் நின்னைத் தழுவிலேன்” என்று காரணம் காட்டினர். இதனால், நள்ளி ஒருவன் செய்த கொடைச்சிறப்பு அவனது சுற்றத்தாருக்கும் பெருமை தருவதாக அமைந்தது என்றால், நள்ளி வள்ளல் வரிசையில் வைக்கப்படுதற்கு எல்லாப்படி யானும் பொருத்தமா தலை அறிந்து இன்புறுக.
6. நெடுமான் அஞ்சி
அஞ்சியின் பொது இயல்பு
நெடுமான் அஞ்சியும் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் அதிகமான் நெடுமான் அஞ்சி, அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, நெடுமான் அஞ்சி, எழினி எனவும் அழைக்கப்படுபவன். இவன் போரில் பெரு விருப்புடையவன். அவ்விருப்பத்திற்கு இணங்கச் சமர்செய்து சயத்துடன் திரும்பும் அவ்வளவு ஆண்மையாளன். இவன் பெருவீரன். அமராபரணன் என்பது சேரன், சோழன், திதியன், எருமையூரன், இருங்கோவேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் எழுவருடனும் பகைத்துப் போரிட்டு, அவர்கட்குரிய அடையாளச் சின்னங்களையும் அவர்களுக்குரிய நாடு நகரங்களையும் அரச உரிமையையும் கைப்பற்றினமையி லிருந்து விளங்கும். கோவலூரை வென்று அதனையும் தன் ஆட்சிக்குட்படுத்தியவன். இவன் தன்பால் கொண்டிருந்த வீரர் மழவர் என்னும் பெயரைப் பெற்றிருந்தனர். ஆகவே, இவன் மழவர் தலைவன் என்றும் கூறப்பட்டனன். இவன் ஊர் தகடூர் என்பது. இவன் மலை குதிரை மலையாகும். இவன் சூடியமாலை வெட்சி மலரும், வேங்கைப்பூவும், கூவிளங்கண்ணியும் ஆகும். இவன் சேர மன்னருக்கு உறவினன் என்ற காரணத்தால் அச்சேரரது அடையாள மாலையாகிய பனந்தாரினையும் பாங்குற அணியம் மாண்பு பெற்றவன்.
நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் தேவர்களைப் போற்றிக் கரும்பினை அத்தெய்வலோகத்திலிருந்து கொணர்ந்து தமிழ் நாட்டில் பயிரிட்டவர்கள். இது நமக்கு ஒரு சிறந்த பேறு அன்றோ ? அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் விண்ணுலகினின்று விண்ணவரைப் போற்றி வேழக் கரும்பினைக் கொண்டு வந்திலர் எனில், இக்குவின் இயல்பை யாம் அறிந்திருக்க இயலாதல்லவா? அத்தேவர்களும் அஞ்சியின் மூதாதையர்களின் அன்புடைமைக்குப் பெரிதும் ஈடுபட்டவர்களாய் அவர்கள் நேரே தாமே வரங்கொடுத்துச் செல்வதற்கு வந்து தங்கிய பூங்கா ஒன்று, அதிகமானது நாட்டில் இருந்ததாகவும் இலக்கியத்தில் பேசப்படுகிறது. இவன் “மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” என்பதற்கிணங்கப் பிள்ளைப் பேற்றினையும் சிறக்கப் பெற்றவன். அப்பிள்ளையே பொகுட்டெழினி என்னும் பெயரினன்.
அஞ்சி ஒளவையார்க்கு நெல்லிக்கனி ஈந்தது
அஞ்சியின் கொடைக்குணத்திற்குச் சிறப்புடைய செயலாகக் குறிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஒளவையாருக்கு நெல்லிக்கனி ஈந்த கொடையேயாகும். நெல்லிக்கனி ஈந்தது ஒரு கொடைச் சிறப்போ என்று நீங்கள் கூறவும் கூடும்; எண்ணவும் கூடும். அந் நெல்லிக்கனியினை யார் உண்ணுகின்றனரோ, அவர்கள் நீண்ட காலம் நரை திரை மூப்பு அடைதல் இன்றி வாழ்வு நடத்த வல்லவர். அதனை அஞ்சி பெற்றதும் எளிய முறையில் அன்று; அருதின் முயன்றே அதனை அடைந்தனன் அக்கனி பழைய நிலைமையினையுடைய பெரிய மலையிடத்து, இரு மலைகளின் பிளவுக்கு இடையே ஏறுதற்கரிய உச்சியில் சிறிய இலைகட்கு நடுவே, மறைந்து காய்த்த நெல்லிக்கனியாகும். அதனை அரிதின் முயன்றே அஞ்சி கொணர்ந்தனன். அதன் அருமை அவனுக்குத் தெரிந்ததே. கொணர்தல் பெருமுயற்சி என்றாலும், உண்ட அளவில் எய்தும் பேறு அளவிடற்கரியது. அஃதாவது உண்டார் இறவாது நெடுநாள் உயிருடன் இருப்பதாகும். இத்துணையும் அறிந்திருந்தும், அதனை ஒளவையாருக்கு ஈந்து அக மிக மகிழ்ந்தான். தான் நீண்ட நாள் உயிருடன் இருத்தலினும், ஒளவை மூதாட்டியார் பல காலம் இருந்தால் தமிழ்மொழி மேலும் வளம்படும் என்பது இவன் கருத்து. திருத்தமுறாதவர் பலர் இவ்வம்மையாரால் திருத்தமுறுவர் என்பது இவன் எண்ணம். இன்றேல், என்ன காரணங்களால் தாம் பெருமுயற்சியுடன் பெற்ற நெல்லிக் கனியினை ஒளவை மூதாட்டியாருக்கு அளித்தனன்? அப்படி அளிக்கும் காலத்தும் அதனை அரிதில் முயன்று பெற்ற வரலாற்றினையோ, அன்றி அதனை உண்பதால் அடையும் பேற்றினையோ, ஒளவையாருக்கு உரைக்காது அளித்துப் புசிக்குமாறு ஈந்தனன். இப்பலனைக் கூறினால் ஒரு வேளை ஒளவையார் ஏற்க மறுத்து அதிகமானே அருந்தி நாட்டுக்கும் தம் போன்ற பரிசில்மாக்களுக்கும் பயனுடையவனாய் இருக்கட்டும் என்று எண்ணிவிட்டால், என் செய்வது என்பது இவனது எண்ணம். அவ்வருங்கனியை ஒளவையாரே அருந்தவேண்டும் என்பது இவனுடைய ஆழ்ந்த கருத்து. அவ்வம்மையார் அதனை வாங்கியுண்ட பிறகு அதன் அருமை பெருமைகளை உணர்த்தினன். அதுகாலை ஒளவையார் இவனது செயல் கண்டு மனம் உவந்து வாழ்த்தினர். அவ்வாழ்த்து :
"போர்அடு திருவில் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொல்நிலப்
பெருமலை விடர் அகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே”
என்பது. இவ்வாழ்த்தில் ஒரு நயம் தோன்றவும் ஒளவையார் வாழ்த்தினர். “நுதல்விழி நாட்டத்து இறைவனை சிவபெருமான்போல வாழ்க” என வாழ்த்தினர். அதன் கருத்து அவன் சாதற்குக் காரணமான நஞ்சினையுண்டும் சாகாது இறைமைப் பண்பு காட்டி நின்று அழியாது இருத்தல் போல, நீயும் அழியாது நிலைத்திருக்க என்பதாகும். அதிக மானின் பூத உடல் நீங்கினாலும் புண்ணிய உடலான நுண்ணுடல் இன்றும் நிலைத்திருக்கிறதன்றோ ? ஆகவே, அதிகமான் இரண்டாயிரஆண்டுகட்குமுன் இறந்தவனேனும் இறவாதவனே என உணர்க. இங்ஙனம் இறவாத இன்ப அன்பு இவன் எய்தப் பெற்றமையால்தான், ஒளவையாரே அன்றிப் பாணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார் போன்ற புலமைசான்ற புலவர் பெருமக்களால் பாடும் பேறு பெற்றவனானான்.
அதிகமானது பகைவர்க்கு ஒளவையார் அறிவுறுத்தல்
அதிகமான் போரில் தனிப்பட்ட முறையில் வீரங் தோன்றப் பொருபவன். இவன் கைப்பட்டவர் தப்புதல் அரிது. இதனை ஒளவையார் பன்முறை கண்டுள்ளார். ஆதலின், ஒரு முறை இவனோடு பொர முனைந்து நின்ற வீரர்களை நோக்கிக் கூறிய கூற்றுக்கள் எதிரிகள் வீணே பொருது இறக்க நேரிடுமே என்ற இரக்கந் தோன்ற இயம்பப்பட்டனவாகத் தோன்றும். ஒளவையார் அவ் வீரர்களைப் பார்த்து, ஓ வீரர்களே ! போர்க்களம் புகுதலை ஒழியுங்கள். எங்கள் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி வன்மையும் அஞ்சாமையும் ஒருங்கே படைத்தவன். அவன் வன்மைக்கு உவமை கூறின், ஒரு நாளைக்கு எட்டுத் தேர்செய்யவல்ல அத்துணைத் தேர்ச்சிபெற்ற தச்சன், ஒரு திங்கள் வரை செய்த உருளை எத்துணை உறுதியும், திண்மையும் உடையதாய் இருக்குமோ, அத்திண்மையையும் உறுதியையுமே உவமையாகக் கூறலாம். நீங்கள் எப்படிப்பட்ட வீரமும், தீரமும் உடையவர்களானலும், உங்கள் போர் அணியும், தூசிப் படையும் எங்கள் அதிகமான் முன்பு காற்றிடைப்பட்ட பஞ்சேயாகும். ஆகவே, எம் தலைவன் உங்களைக் காணுதற்கு முன் களத்தைவிட்டுச் செல்லுங்கள். அவன் கூரிய வேலைத் தாங்கியவன். அவன் மார்பகம் பூணணிந்து பொலிவுடன் பரந்து விளங்குவது. அவன் தோள் முழவுபோலத் திரண்டு உருண்டு காணப்படுவது. தான் பல வெற்றிகனைக் கொண்டமைக்கு அறிகுறியாகப் பல களவேள்வியினைச் செய்தவன் எங்கள் தலைவன்.' என்று அறிவுறுத்தியுள்ளார். இங்ஙனம் பகைவரை நோக்கிக் கூறியதன் நோக்கம், அதிகமான் அத்துணை ஆண்மை படைத்தவன் என்பதை அறிவிக்கவேயாகும். இவனிடம் அமைந்த வீரர்கள் அரவம்போலும் சீறும் குணம் படைத்தவர்கள். பாம்பை அடிக்க அடிக்க அது மேலும் மேலும் கோபங்கொண்டு எழுவதுபோல, இவன்பால் இருந்த வீரர் பகைவர்கள் தம்மைத் தாக்கத் தாக்க எதிர்க்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதிகமானும் நாடக அரங்கினும், பாடல் அரங்கினும் முழவுகட்டித் தொங்கவிடப்பட்டிருப்பின், அம்மத்தளங்களில் காற்றின் வேகம் தாக்கியபோது எழும் ஓசையைக் கேட்டு இவ்வோசை பகைவர் எழுப்பும் போர்ப் பறையின் ஒலிபோலும் என்று உவகையுடன் வரவேற்று அவ்வோசை வழிச் சென்று எதிர்க்கும் விருப்பம் உள்ளவன்.
திருக்கோவலுர் வெற்றி
அதிகமான் பகைவர்க்கு இன்னாதவனாகவும் புலவர்களுக்கு இனியவனுமாகவும் விளங்கினன். அதிகமான், திருக்கோவலூர் அரசனை மலையமான் திருமுடிக்காரி பல வேற்றரசர்களை வென்று சிறப்புற்றுப் பெருமிதத்துடன் விளங்கியபோது அப்பெருமிதத்தினை அடக்கத் திருக்கோவலூரை முற்றுகையிட்டனன். திருமுடிக்காரி போர் வலி படைத்தவன் ஆதலால் அவனும் வீராவேசத்துடன் எதிர்த்தனன். இரு பெரு வீரர்களும் வீரர்களின் படைகளும் மண்டிப் போர் இட்டன. அந்த நிலையில் ஒளவையார் ஆண்டு வந்தனர். மலையமான் திருமுடிக்காரி அதிகமானேடு போர்புரிதலைக் கண்ணுற்றனர். வீணே திருமுடிக்காரி அஞ்சியுடன் எதிர்த்துப் போராடித் தோற்றுப் பல உயிர்கள் அழிதற்குக் காரணமாக இருக்கின்றனனே என்று இரக்கங்கொண்டவராய், திருமுடிக்காரியையும், அவன் படை வீரர்களையும் பார்த்து, வீரர்காள் அதிகமான் எளியவன் என்று எண்ணாதீர். அவன் வாட்கள் பகைவரது யாக்கையில் படிந்து கதுவாய்போய் வடிவிழந்துள்ளன. அவனது அயில்வேல்கள் குறும்பரது அரண்களை வென்று நாட்டை அழித்து ஆணியும் காம்பும் தளர்ந்து உள்ளன. ஆனைகள் எதிரிகளின் அரண்களை அழித்துத் தம் தந்தங்களில் கட்டிய பூண்களை நிலை தளரச் செய்து நிற்கின்றன. அவனது அசுவங்கள் வைரிகளின் மார்பகத்தில் ஓடி உலவிக் குருதிபட்ட குளம்பினை யுடையன வாகவுள்ளன. அதிகமானால் கோபிக்கப்பட்டவர் உயிர் பிழைத்தல் அரிது. உங்களது நீர்வளனும் நிலவளனும் அமைந்த ஊர்கள் உங்கட்கே உரிமை யுடையனவாக இருக்க விரும்பினாலும், உங்கள் மனைவிமாரை விட்டுப் பிரியாது உடன் வாழ அவாவினீராயினும், அவனுக்குத் திறை கொடுத்துச் சந்து செய்து கொள்ளுதலே சாலவும் அறிவுடைமையாகும். நான் உள்ளதை உள்ளவாறே கூறினேன். யான் சொன்னவற்றை நன்கு சிந்தித்தபிறகு நீங்கள் போரில் இறங்குங்கள்,” என்று கூறி அறிவுறுத்தினர். என்றாலும் திருமுடிகாரி முன்வைத்த காலைப் பின்வைக்கும் இயல்பினன் அல்லன். ஆதலின், எதிர்த்தே போரிட்டான். அப்போரில் அதிகமானே வெல்ல மலையமானே தோற்று ஓட நேர்ந்தது. திருக்கோவலூர் அதிகமான் ஆட்சிக்குள்ளாக்கப்பட்டது. இத்தகைய வீராதி வீரனாக அதிகமான் விளங்கினான். இவன் தகடூர் எரிந்து வெற்றிகொண்ட சிறப்பைப் பரணர் சிறப்பித்துப் பாடியுள்ளார் என ஔவைப் பிராட்டியாரே குறிப்பிடுவராயின், இவனது வெற்றிச் சிறப்பினை என்னென விளக்குவது! அதிகமான் மிகுந்த வீரன் என்பது மற்றொரு செயலாலும் நமக்குப் புலனாகிறது. அதிகமான் தகடூரை வென்றான். வென்று மீளுகையில் தனக்கு நீண்ட நாள் மகப்பேறின்றி யிருந்து ஓர் ஆண் மகன் பிறந்தனன் என்பதைக் கேள்வியுற்றதும், போர்க்கோலம் பூண்டிருந்த நிலையிலேயே அக்கோலத்தைக் களையாமல் கையில் உள்ள வேலுடனும், காலில் கட்டிய கழலுடனும், உடம்பில் இருந்த வியர்வையுடனும், பகைவரைச் சினந்து நோக்கிய நோக்குடனும் சென்று கண்ட காலத்திலும், அச்சினத் தீ எழுந்தவண்ணம் இருந்தது என ஔவையார் கூறுவதால் அறியலாம். இத்தகைய சீற்றமறா தவனோடு சிலைப்பவர் பிழைத்துப் போதல் ஒண்ணுமோ? ஒண்ணாது.
ஔவையாரும் தொண்டைமானும்
அதிகமான் வீர உணர்ச்சியினன் என்றாலும், அறப்போர் புரியவே எண்ணும் இயல்பினன். இவனது போர் வன்மையை முற்றிலும் உணராத காஞ்சி மா நகரை அரசிருக்கையாகக் கொண்டு அரசாண்ட தொண்டைமான், அதிகமானோடு அமர் புரிய எண்ணங்கொண்டிருப்பதை அஞ்சி அறிந்தனன். “வீணே தன்னொடு பொருது படைவலியும் துணைவலியும் இழந்து தொண்டைமான் மடிவானே; அவனுக்கு நம் ஆற்றல் இன்னது என்பதை அறிவித்தல் நலம்” என்று எண்ணி அதனை அறிவிக்கும் ஆற்றல் சான்றவர் ஔவையாரே என்பதை உணர்ந்து ஒளவை மூதாட்டியாரை அவனிடம் தூது போக்கினன்.
ஔவையாரும் தொண்டைமானுழைத் தூது போயினர். தொண்டைமான் ஔவையாரது புலமையை நன்கு உணர்ந்தவன் ஆதலின், அவ்வம்மையாரை நன் முறையில் வரவேற்று உபசரித்தனன். அடுத்த நாள் தன்படைவலி இத்தகையது என்பதைக் காட்ட எண்ணி, அவனுடைய படைக் கொட்டிலிற்கு அழைத்துச் சென்று காட்டினன். அங்குப் படைகள் யாவும் நன்கு நெய்பூசப்பெற்றுக் கைப்பிடிகள் செவ்வனே செய்யப்பட்டு மாலை அணியப்பட்டு ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கண்ட ஔவையார் “தொண்டைமான் தன் படைப்பெருக்கைக் காட்டவே நம்மை இக்கொடிடிற்கு அழைத்து வந்து காட்டுகின்றனன். இவனுக்கு நன்முறையில் அறிவு புகட்ட வேண்டும்” என்னும் எண்ணமுடையவராய், தொண்டையர் காவல! உன் படைகள் யாவும் போர்முகத்தைக் காணாதனவாய் நல்ல முறையில், செய்தவை செய்தனபோலவே, இக்கொட்டிலில் அலங்காரத்துடன் இருக்கின்றன. ஆனால், அதிகமானிடம் இருக்கும் ஆயுதங்கள் போரில் முனைந்து நின்று பொருந்தாதாருடைய உடலில் பாய்ந்து, கூர் மழுங்கிக் காம்பு தளர்ந்து ஆணிகள் அகன்று உள்ளன. அவை மீண்டும் செம்மையுறும் வண்ணம் கொல்லனுடைய உலைக்களத்தில் சென்றுள்ளன” என்று கூறி அதிகமான் போர்ச்சிறப்பைக் கூறாதது போலக் கூறிக் காட்டினர். இதனால், தொண்டைமானைப் போர் முகம் காணாதவன் என்பதைப் புகழ்வது போல இகழ்ந்து, அதிகமானை இகழ்வது போலப் புகழ்ந்து பேசினார். இப்படிப் பேசித் தொண்டைமான் செருக்கையும் அடக்கினர்.
அதிகமானின் இறுதிக் காலம்
முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவது திண்ணமல்லவா ? அதிகமானின் வாழ்நாள் குறுகி விட்டது. மலையமான் திருமுடிக்காரியும் ஒரு சிறந்த மானி. அவனுக்கோ தன் தகடூரை அதிகமான் கைப்பற்றியது குறித்து வருத்தமாகவே இருந்தது. எப்படியும் அவ்வூரைக் கைப்பற்றச் சமயம் நோக்கிக் கொண்டிருந்தனன். அதன் பொருட்டுச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பானைத் தனக்குத் துணைசெய்ய வேண்டினன். சேரனும் அவ்வேண்டு கோளுக்கிணங்கினான். அச்சேரனுக்குப் பகைவன் வல்வில் ஓரி. அவனை முதலில் வென்று பின்பு அதிகமானோடு போர்புரியலாம் எனச் சேரன் மலையமானுக்குக் கூறினான். அதற்குக் காரியும் இசைந்தனன். இதையறிந்து வல்வில் ஓரி அதிகமானைத் தனக்குத் துணையாகுமாறு வேண்டினான். அதிகமானும் துணைபுரிவதாக இசைய, பெரும்போர் மூண்டது. இப்போரில் அதிகமானுக்குத் தோல்வியே கிட்டியது. அதிகமான் தகடூர்புக்குப் போரிடாது ஒளிந்திருந்தனன். சேரனும், காரியும் தகடூரை முற்றுகையிட்டனர் ; அவ்வமயம் ஔவையார் அதிகமானிடம் சென்று அவன் ஒரு தனிப் பெரு வீரனாக இருந்து போர்புரியாது வாளா இருத்தலைக் கண்டு அவனை ஊக்கிப் போரிடச் செய்ய வேண்டுமென, “அஞ்சி! புலி சீரின் புல்வாய் எதிர் நிற்குமோ ? ஞாயிறு கீழ்த்திசை யெழின் இருள் எதிர்த்து நிற்குமோ ? இவை நடவா அல்லவோ? போய் நீ எதிர்த்து நிற்பாயாக! உன்னுடன் எதிர்த்து நிற்கும் பகைவரும் உளரோ?” என்று ஊக்கப்படுத்தினர். அதிகமான் அந்த மொழிகளைக் கேட்டதும் மிகுந்த வீரத்துடன் போர்புரிந்தனன். அப்போரில் அவன் முகத்திலும் மார்பிலும் கழுத்திலும் பட்ட புண்கள் அனந்தம். இவனால் வெட்டுண்டவரும் பலர். இறுதியில் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை விட்ட அம்பு அதிகமானது நெஞ்சைப் பிளக்க, அதிகமான் அமரர் உலகம் புக்கனன்.
அதிகமானின் பிரிவும் புலவர்கள் ஆற்றாமையும்
அதிகமான் இறந்தனன். இவனது இறப்பு புலவர்களின் உள்ளத்தை உருக்கியது. அதிலும் ஔவையார் உற்ற துயருக்கு அளவே இல்லை. ஏனெனில், ஒளவையாரை அதிகமான் அதிகமாக நேசித்தவன்; ஔவையார் தன்னிடம் வந்து தங்கிய காலத்தில், அவ்வம்மையாரை எளிதில் பிரிய மனமற்றவனாய்ப் பரிசில் ஈந்தால் உடனே சென்று விடுவர் என்ற எண்ணத்தனாய்ப் பரிசில் கொடாது நீட்டித்தனன். இவனுடன் அப்பொழுதுதான் ஒளவையார் பழகுகின்றனர் ஆதலின், அவன் உள்ளக்கிடக்கையை உணராதவராய், “தம்மைச் சிறிதும் மதியாது பரிசில் தந்து பெருமைப் படுத்தா தொழிந்தனன்,” என்று, அதிகமானின் வாயில் காவலனை நோக்கி, “என்போன்ற பரிசில்மாக்கட்குத் தடை கூறாது வழிகாட்டும் வாயிலோயே! நின் தலைவன் நெடுமான் அஞ்சி என் தரம் அறிந்திலனோ? பரிசில் ஈய ஏன் தடைப்படுத்தினன் ? இதோ யான் புறப்படுகின்றனன். என் போன்றவர்க்கு எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறு, இதனை நின் தலைவனுக்கு அறிவிக்க,” என்ற காலத்து அவ்வாயிலோனும் தன் தலைவனுக்கு ஔவையார் கூற்றினை அறிவித்தமாத்திரத்து ஔவையார் அவா அடங்க உதவினன். அவ்வுதவி பெற்ற ஔவையார் அப்பொழுது பாடிய பாடல் அரிய கருத்துடைய பாடலாகும். ஔவையார் தம் நெஞ்சினை நோக்கி, “நெஞ்சகமே! நீ தவறாக அதிகமானை எண்ணிவிட்டனை. அதிகமான் முதல் நாள் சென்று காணும்போது எவ்வளவு அன்புடன் ஏற்று உபசரிப்பனோ அதுபோலவே பல நாள் தொடர்ந்து செல்லினும் முதல் நாள் போன்றே முகமலர்ச்சியுடன் வரவேற்கும் இயல்பினன். தனித்து யான் சென்றபோது மட்டுமே இங்ஙனம் நன்முகன் காட்டி நல்வரவேற்பு அளிப்பன் என எண்ணாதே. யான் பலரோடு சென்றாலும், அவர்களுக்கும் என்னிடம் காட்டும் அன்பினையே காட்டி அகமகிழ்ந்து உபசரிப்பவன். அதிகமான் பரிசில் ஈந்திலன் என அவனைச் சிறிது முன்பு பழித்துப் பேசிவிட்டனை. அவன் பரிசில் கொடுக்க நாட்களை நீட்டித்தனன். என்றாலும், பரிசில் கொடாது ஒரு போதும் இரான். யானையின் கோட்டிடை வைத்த கவளம் எங்ஙனம் தவறாது அதன் வாயில் செல்லுதல் உறுதியோ, அதுபோல அஞ்சியை அடைந்த நாம் அவனால் உதவி பெறுதல் திண்ணம். இஃது உண்மை. வெறும் புகழ்ச்சி அன்று. ஆகவே, அவன் தாள் வாழ்வதாக” என்று இவனது கொடுக்கும் முறையை இத்துணைப் பெருமைபடப் பேசியுள்ளார்.
"அதிகமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே”
என்பது இவ்வம்மையார் பாட்டு.
இப்படி ஈந்த அஞ்சி இறந்தனன் என்றால், எவர்தாம் ஏக்கம் கொள்ளார் ! அதிகமான் அருஞ் செயல்களை எண்ணி எண்ணி இறங்கினார் ஔவையார். “அதிகமான் தான் பருகப்போகும் மது சிறிய அளவினையுடைய தானாலும், ஒளவைக்கு ஈந்தே பருகுவன். மிகுதியும் பெற்ற காலத்திலும் அதனையும் ஈந்து மகிழ்வுடன் அருந்துவன், தான் தனித்து உண்ணாது விருந்தோடு உண்ணும் குணத்தினன். உணவு சிறிதாக உள்ள காலத்திலும் அவனுடன் பலர் இருந்து உண்பர். மிகுதியாக இருந்த காலத்திலும் பலர் அவனுடன் இருந்து அருந்துவர். அதிகமானும் ஔவையாரும் இணைந்து செல்லுங்காலத்துச் செல்லாறுதோறும் முன்னர் ஒளவையார்க்கு உணவுகொடுத்து உளமகிழ்ந்து செல்வன். போர்க்களத்தில் வேல் நுழையும் இடங்களில் தான் முன்னர் நிற்பன். ஒளவையாரிடத்தில் வைத்த அன்பின் காரணமாக அவ்வம்மையார் தலை, எண்ணெய் காணாது நீவுதல் உறாது, புலால் நாற்றம் வீசும் தன்மையுடையதாகக் காணப்பட்டாலும், அதனைத் தன் தூய, இனிய, மணம் நிறைந்த கையால் தடவிக்கொடுப்பன். இவையெல்லாம் போயினவே,” என்று வருந்தினர். “அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பகத்தில் தைத்த அம்பு, இவன் மார்பகம் மட்டும் ஊடுருவிச் சென்றிலது. இரப்பவர் கையைத் துளைத்தது. இரவலர் கண்களில் நீர் உகச் செய்தது. புலவர் செந்நாவிலும் தைத்து அவர்களைப் பாடாதவாறு செய்தது,” என்று ஏங்கி இரங்கினர். ஐயோ “அதிகமான் எங்கு, இருக்கின்றனனே ? என அரற்றினர். “அதிகமான் இறந்தான். இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஈவாரும் இல்லை. உலகில் பலர் செல்வம் படைத்தும் உயிருடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பகன்றை மலர் மலர்ந்தும், அதனைச் சூடுவார் அற்றுக்கிடப்பது போன்றது. அஃதாவது அவர்கள் எழை எளியர்கட்கு உதவாமையால் புலவர்களால் பாடும் பேறு பெறாதவர் ஆவர்,” எனப் பாடி வருந்தினர்.
எவ்வளவு வருந்தி யாது பயன்! இறந்தவன் இறந்தவனே. விட்டுவிடப் போகு துயிர். விட்ட உடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். அவ்வாறே அதிகமானை ஈமத்தில் ஏற்றி எரி மூட்டினர். அப்படி எரித்த காலத்தில் இவன் உடல் அழிந்தது. புகை வானத்தைச் சூழ்ந்தது.
இதைக் கண்ணுற்ற ஒளவையார், “அதிகமான் பொய்யுடல் மாய்ந்தது. என்றாலும், புகழ் உடல் என்றும் மாயாது” என்னும் பொருளில், “திங்கள் அன்ன வெண்குடை ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே” என்று பாடினர். அதிகமான் பீடு பல எழுதி, நடுகல் அமைத்துப் பராவத் தொடங்கினர். அச்சிலை முன்னர்ப் படையல் போட்டுப் பண்டம் பல வைத்தனர். அவற்றைக் கண்டனர் ஒளவையார். “ஐயோ இவனையின்றி யான் தனித்து வாழும் நாள் இல்லாமல் போவதாக. அதிகமான் நாடு கொடுப்பினும் கொள்ளா இயல்பினன். அத்தகையோன் இப்பொழுது படையல் மூலம் கொடுக்கப்படும் பொருள்களை ஏற்பனோ? ஏற்கான்,” எனவும் பாடி வருந்தினர்.
ஒளவையார் அதிகமானின் பிரிவுக்கு ஆற்றாது அரற்றியதுபோல, அரிசில்கிழாரும் வருந்திப் பாடியுள்ளார். அவர் காலனை நோக்கிக் கடிந்து கூறுகின்றனர். “ஏ கூற்றுவனே! எங்கள் அதிகமானை அழித்தனையே! அவன் ஏழை பங்காளன் அல்லனோ? அவனுடைய பிரிவு எப்போதும் பரிசில்மாக்களுக்கும் இரவலர்களுக்கும் தாயைப் பிரிந்த சேய்கள்போல அன்றோ அமைந்தது. நீ அறக்கடவுள் என்று பெயரைப் பெற்றது இலக்கணத்தில் அமங்கலச் சொற்கள் எல்லாம் மங்கலம் என்று குறிப்பிடப்படுவது போன்றது. வாழ்நாள் முழுமைக்கும் உதவவல்ல வித்தினையே குற்றியுண்ணும் மதியிழந்த உழவன் போலப் பலர்க்கும் பயன்படும் அதிகமானைக் கொன்றனையே. இது முறையோ ? இவன் இறப்பு எங்கட்கு மட்டும் துயர் அளித்தது என்று எண்ணாதே. உனக்கும் இவனது பிரிவு துயரம் தருவதன்றோ ? இவன் ஒருவன் உயிருடன் இருப்பின், இவனது பகைவர்கள் எல்லோரையும் இவன் கொல்ல , நீ உண்டு மகிழலாம் அன்றோ ? அது போய் நீ என் செய்வாய் ?” என்று அதிகமானுடைய போர் வன்மையையும் கார் அன்ன வழங்கும் கைவண்மையையும் ஒருங்கே புகழ்ந்தார்.
அதிகமான் இறந்ததனால் பொய்மை புகலாப் புலவர் நெஞ்சங்கள் துடித்தன; வாடி வருந்தின. ஆயினும், என்? அதிகமான் நெடுமான் அஞ்சி, துஞ்சிப் போயினன். என்றாலும், இவனுடைய பரு உடல் அழிந்துபோவதே அன்றி, இவனது நுண்ணுடலான புகழுடல் போயதோ ? இன்று. அது குன்றின் மேல் இட்ட குலதீபம்போல் அணையாது விளங்கிக் கொண்டிருக்கிறது. உடல் எடுத்தாலும் இவ்வாறன்றோ எடுத்தல் வேண்டும்.
* * *
7. பேகன்
கொடை மடமும் படை மடமும்
தண்டமிழ் மொழியில் கொடை மடம், படை மடம் என இரு பெருந் தொடர்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் படைமடமாவது எதிரில் நிற்க இயலாமல் புறமுதுகுகாட்டிப் போர்க்களத்தினின்று இரிந்தோடும் வீரன்மீதோ, அன்றி ஆயுதமின்றி வெறுங்கையினனாய் நிற்கும் வீரன்மீதோ, வீரப்பண்பு இல்லாதார் மீதோ, புண்பட்டார்மீதோ, மூத்தார் மீதோ, இளையார் மீதோ, போர் செய்தற்குச் செல்லுதலாகும். இப்படிச் சென்று படை மடம்பட்ட பார்த்திபர்களோ, வீரப்பெருமக்களோ நம் செந்தமிழ் நாட்டில் இருந்திலர். ஆனால், கொடை மடம்பட்ட கொற்றவர் நம் நற்றமிழ் நாட்டில் இருந்துளார். கொடை மடமாவது தமக்கு அமைந்த பிறவிக் குணமாகிய கொடைக் குணத்தால் அறியாமைப்படுதலாகும்! தம்மை அணுகிக் கேட்டற்கு இயலாதவையான அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்புகாட்டி, இன்னது கொடுத்தல் இதற்குத்தகும் என்றுகூடச் சிந்தியாமல், தம் உள்ளத்தின் போக்குக்கு இயைய ஈவதாகும். ஞானாமிர்தம் என்னும் நூல், கொடை மடம் என்னும் தொடருக்குப் பொருள்காண்கையில், அகாரணத்தால் கொடைகொடுத்தல் என்று கூறுகிறது. திவாகரம் என்னும் நூல், வரையாது கொடுத்தலாகும் என்று விளக்குகிறது. எவ்வாறு பொருள் காணினும், கொடைமடம் என்பது கொடுக்குங்கால் மடமைப்படுதலாம். அஃதாவது அறியாமையுறுதல் என்பதே நேரிய பொருளாகக் கொள்க. இங்ஙனம் அறியாமைப்பட்டவர்கள் பலராக இருப்பினும், இலக்கியங்களில் எடுத்துக்காட்டாக அமைந்தவர் இருவர். அவர்களே பாரியும் பேகனும் ஆவர், இவ்வுண்மையை ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள,
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் எந்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்.
என்னும் வெண்பாவால் அறியலாம். இவர்களுள் பாரியின் வரவாறு முதற்கண் கூறப்பட்டது. இங்குப் பேகனது வரலாற்றை வரைந்து காட்டுவோமாக.
பேகன் பரம்பரை
வையாவிக் கோப்பெரும் பேகன் சேரர் குடியின் தொடர்புடையவன். இவன் குடி முதல்வன் வேளாவிக் கோமான். சேரன் செங்குட்டுவனது மாற்றாந்தாயின் தந்தையாவான். அஃதாவது சேரன் செங்குட்டுவனுக்குப் பாட்டன் முறையினன். இவன் பொதினிமலைக்குரிய ஆவியர் குலத்தில் தோன்றியவன். பொதினி மலை என்பது இப்பொழுது சீரும் சிறப்பும் பேரும்புகழும் பெற்றுவிளங்கும் பழனி மலையாகும். ஆவியர்குடி தோன்றல்களால் ஆட்சி புரியப்பட்டுவந்தமையால், இப்பழனித் திருப்பதி ஆவினன்குடி என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆவியர் குடியில் தோன்றியவனே வையாவிக்கோப்பெரும் பேகன் ஆவான். ஆகவே, இவனும் மலை நாட்டு மன்னனாவன். மலை நாட்டு மன்னனே யானாலும், இவன் வாழ்ந்த ஊர் நல்லூர் என்று நவிலப் பெறும். இவன் யாதோர் அடைமொழியுமின்றி வெறும் பேகன் என்றும் கூறப்படும் பெருமை பெற்றவன்.
மயிலுக்குப் போர்வை ஈதல்
இவன் கொடை, கல்வி, அறிவு, ஆண்மை ஆகியவற்றில் தலைசிறந்தவன். இவனது கொடைத் திறனும் படைத்திறனும், ஆள்வினையுடைமையும் கண்டே கபிலர், வென்பரணர், அரிசில் கிழார், பரணர், பெருங்குன்றூர்க் கிழார் முதலானவர்கள் பாடும் பீடுபெற்றவன். இத்தகையோனுக்கு வாழ்க்கைத் துனைவியாக அமைந்தவள் கண்ணகி என்னும் காரிகையாவாள் ; அவள் மாசிலாக் குலத்து வந்தவள் ; வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம் மிக்கு உடையவள் ; கொழுநன் நினைப்பு அறிந்து ஒழுகுபவள் ; திண்கற்பும் வாய்ந்தவள். இங்குக் குறிப்பிடப்பட்ட கண்ணகி என்பாள், கோவலனுக்கு இல்லக்கிழத்தியாக வாய்ந்த ஏந்திழையல்லள். அவள் வேறு. இவள் வேறு. இன்னோரன்ன பெண்மைக்குரிய இயல்புடையாளோடு இல்லறத்தை இனிது நடத்தி வரலானான் பேகன்.
பேகன் வாழ் இடம் மலைப்பாங்கர் அன்றோ ? அம்மலைப்பக்கல் கண்கொள்ளாக் கவின் பெருங்காட்சி நிறைந்தது. இயற்கைக் குடிலாக இலங்க வல்லது. இவ்விடத்து இயற்கை எழிலை அடிக்கடி பேகன் கண்டு இன்புறுவதுண்டு. ஒருநாள் பேகன் தன் நாட்டு வளங்காணப் பணியாட்களுடன் வெளியே சென்றான். ஒவ்வோர் இடமாகக் கண்டு களித்துக்கொண்டே வந்தான். வான்முகில்கள் வரைகள் மீது தவழ்ந்து ஏகும் பொலிவைக கண்டு பூரித்தான். அக்கொண்டல்கள் மலைகட்குக் கவிகை தாங்கி நிற்பன போலும் எனக் கற்பனை செய்து களிப்புக்கொண்டான். கானமயில்கள் ஈட்டம் ஈட்டமாகவும், கூட்டம் கூட்டமாகவும் குலவி விளையாடுவதைக கண்டான். அவற்றுள் ஒன்று தனித்துத் தன் தோகையினை விரித்துக களிப்புடன் ஆடுவதையும் கண்ணுற்றான். அம்மஞ்சை மேகங்கண்டு மோகங்கொண்டு தோகை விரித்து ஆடுகின்றது என்பதை ஓராதவனாய், அது குளிர்க்கு வருந்தித் தன் தோகையை விரித்து ஆடுகின்றதே? என்று எண்ணி , அதன் நளிரினைத் தீர்க்க யாது வழி என்று சிந்தனை கொண்டான். அவன் சிந்தனைக்கு யாதொன்றும் புலனாகவில்லை. தான் அணிந்திருந்த விலைமதித்தற்கரிய பொன் ஆடையை அதற்குப் போர்வையாக ஈவதே பொருத்தமானது என்று உறுதி கொண்டான். அவ்வாறே தான் மேலே அணிந்திருந்த பீதாம்பரத்தினை அத்தோகைக்கு இத்தோன்றல் ஈந்து உள்ளம் மகிழ்ந்தான். இதனைப் பாராட்டிப் புலவர் பாடிய பாட்டுக்கள் மிக மிக அருமைப்பாடுடையன :
உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்சைக்கு, ஈத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்.
என்பதும்,
மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!
என்பதும் பரணர் பாட்டு.
"வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞசைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்”
என்பது சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் பாட்டு.
இங்ஙனம் மயிலுக்குப் படாம் அளித்துத் தன் மாளிகைக்குச் சென்று, அன்று தான் செய்த அரும்பெருஞ் செயல் குறித்து அகங் களிகொண்டனன். ஈத்து உவக்கும் இன்பம் அவாவுபவன் ஆதலின், இவன் செயல் குறித்து இவனே இத்துணை மகிழ்ந்தனன்.
பேகனது ஈகையின் இயல்பு
பேகன் பண்டம் மாற்றுப்போலத் தன் பொருள்களை இரவர்களுக்கு ஈந்து அதன் மூலம் புண்ணியத்தைப் பெறவேண்டும் என்று எண்ணுபவன் அல்லன். எத்துணையாயினும் ஈதல் நன்று என எண்ணும் மனப்பான்மையன். இவன் தான் செய்யும் ஈகை மறுமைக்குப் பயன் தரவல்லது என்று நினைத்துச் செய்யும் ஈகையன் அல்லன். யாசகர்களின் வறுமை நோக்கி, அவ்வறுமை தீரக் கொடுத்தல் முறையென்பதை உள்ளங்கொண்டவன். “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்னும் பண்பு வாய்ந்தவன். இதனை அழகுப்படப் பரணர்
"எத்துணை ஆயினு மாத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ? அன்றே; பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே”
என்று நமக்கு அறிவுறுத்துவார் ஆயினர். ஆகவே, இவன் கொடைமடம் படுபவனே அன்றிப் படை மடம் படான் என்றும் இவன் கொடையினைப் புகழ்ந்தார்.
ஒரு முறை பரணர் பேகனைக் கண்டு பொற்றாமரை யணியினையும் பொன்னரி மாலையினையும் பெற்றுத் தாமும் தம் விறலியுமாக ஒரு சுரத்திடையே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அதுபோது ஓர் ஏழை இரவலன் இவரைக் கண்ணுற்று, “ஐயன் மீர். நீவிர் யாவீர்?” என்று கேட்டனன். இங்ஙனம் வினாவிய அவனை நோக்கி, “ஐயா யானும் உன் போல் ஓர் இரவலன். யான் பேகன் என்பானைக் காணுதற்கு முன், நின்னைப்போலவே வறுமைக் கோர் உறைவிடமாக இருந்தனன். அவனைக் கண்டதும் என் மிடி தீர்ந்தது. அதன் பின் இங்ஙனம் பூண்களைப் பூண்டு பொலிவு பெற்றனன். அப் பேகன் கரியும் பரியும் பெற்றுக் கண்ணியமாய் வாழ்பவன். தான் கொடுக்கப்போகும் போர்வையை உடுத்திக்கொள்ளாது; போர்த்தும் கொள்ளாது என்பதை அறிந்தும் மயிலுக்குப் பொன்னாடை போர்த்த பெருந்தகை;” எனக் கூறி ஒரு பாணனை ஆற்றுப் படுத்திப் பேகனது கொடைக் குணத்தைச் சிறப்பித்தனர்.
இசையில் ஒரு வசை
பேகன் நல்லோனே ; ஈகையில் ஓகை கொண்டோனே ; புலவர் பாடும் புகழ் உடையோனே அறிவில் துறை போயோனே; கல்வியில் கண்ணிய முடையோனே ; ஆண்மையில் மேன்மை மேவினோனே. என்றாலும், இவன்பால் தீயசெயல் ஒன்று இருந்தது. அதுவே, இவன் கற்புக்கரசியான கண்ணகியைத் தணந்து வேறொரு மாதுடன் இன்புடன் வாழ்ந்து வந்ததாகும். அந்தோ ! கண்ணகி என்னும் பெயர் பெற்ற காரிகைமார்கட்கு அமைகின்ற கணவன்மார்கள் எல்லாம் தம் ஆருயிர் அனைய இல்லக்கிழத்தியரை விடுத்துப் பிற மாதரொடு வாழும் பெற்றியினர் போலும் ! கண்ணகியைத் தணந்து மாதவி என்பாளுடன் வாழ்ந்தனன் அன்றோ கோவலன்! அவனைப் போலவே வையாவிக் கோப்பெரும் பேகனும், கண்ணகியைத் தணந்து வேறொருத்தியிடம் வாழலானான்.
கண்ணகியின் துயரம்
இங்ஙனம் தன்னை மறந்து வேறொருத்தியுடன் தன் கணவன் வாழ்க்கை நடத்தினன் என்றாலும், அது குறித்துக் கண்ணகி அவனைத் தூற்றுதல் இன்றி, “எந்நாளேனும் இங்கு வந்து சேருவன்” என்று எண்ணி ஆறாத் துயருடன் வாழ்ந்துவரலானாள். ' குலமகட்குத் தெய்வம் தன் கொழுநனே' என்பது சட்டமேயானாலும், “தெய்வந் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்,” என்பது மறை மொழி என்றாலும், தன் கணவன் தகாத ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ளமையின், அவனைத் தக்கவழியில் திருப்புவான் வேண்டி, இறைவனை வந்தித்து வாழ்த்தி வணங்கி வருவாளானாள்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் அன்றோ ? இவள் பராவி வழிபட்ட கடவுள் இவட்கு நற்காலம் வருமாறு திருவுளங் கொண்டு புலவர் பெருமக்களைத் தூண்டினர். அத்தூண்டுதல் காரணமாகப் புலவர்கள் பேசுனைக் கண்டு அறிவுபுகட்டத் தொடங்கினர்.
பேகனைத் திருத்தக் கபிலர் செய்த முயற்சி
ஒரு முறை கபிலர் பேகனைக் காண இவன் வாழ்ந்த மலைப்பாங்கர் சென்றனர். அவர் சென்றதற்குக் காரணம், அவர் சுற்றம் பசியால் வாட்ட முற்றதனால் அதனைத் தீர்த்தற்கு ஆகும். பேகனைக் காணின், பசி நீங்கும் என்பது அவர் கருத்து. சென்றவர் முரசுபோல ஓசை செய்துகொண்டு, அருவி சொரிதலையும் அவண் ஓங்கிய மலையின் உயர்ச்சியையும் கண்டு, பேகன் மனையிடத்தின் வாயிலண்டைப் போந்து மலையினை வாழ்த்தி நின்றார். பேகன் ஆண்டு இலன். இவன் கண்ணகியைப் பிரிந்து வேற்று மங்கையுடன் வாழ்ந்து வந்தனன் என்பது முன்பே குறிப்பிடப்பட்டதன்றோ ?
கபிலர் பேகன் பெயரைச் சுட்டிப் பாடியதைக் கேட்ட கண்ணகி, தன் கணவன் பேரையேனும் காதால் கேட்ட உணர்ச்சி வயத்தளாய், வாயிற்கு வெளியே வந்தனள். அழுகையும் மிக்கது. அவ்வழுகையும் இனிமை தரத்தக்கதாகவே குழல் போல் இருந்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட கபிலர், இரக்கம் மிகக் கொண்டவராய், அங்கு இருக்கவும் மனம் அற்றவராய்ப் பேகன் ஆண்டு, இல்லாமையை உணர்ந்து, அவன் உறையும் உறைவிடம் நேரே சென்றார்; பேகனைக் கண்டார். கண்டு “மழை பெய்ய வேண்டிய முகிற் குழாங்கள் மலைமீது தவழ்வதாக என்று தெய்வம்பராவி, அங்ஙனமே தாம் வழிபட்டதன் பலனாக மழைவளந் தரவும், மீண்டும் அம்மேகம் பெய்தது சாலும்; மேலே செல்வதாக, என்று கடவுளைப் போற்றும் இயல்புடைய குறமகளிர் குலவி மழையின் பயனால் தினைப்புனம் செழிக்க அத்தினையரிசி யுண்டு வாழ்கின்ற மலை நாட்டு மன்ன!” எனவும், “சினத்தினால் செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையினையும் உடையோனே! என்றும் காற்றினும் கடுகிப் பாயும் கலினமா உடைய மண்ணியோனே எனவும் விளித்து, யான் நின்னை நாடி நின் அகத்தை அடைந்து நின் லையைப் பாடி நின்னையும் வாழ்த்தி நின்றேன். அப்பொழுது ஓர் எழிலுடை யணங்கு நின் பேரைக் கேட்டதும் அகத்தினின்றும் புறத்தே போந்து, நீர் வார்க்கண்ணளாய், குழல் போல இசைக்கும் ஒலியுடன் அழத் தொடங்கினாள். அவளது இரக்க நிலை, மிக மிக உருக்கமான நிலையாக எனக்குத் தென்பட்டது. அவள் யாரோ அறிகிலன். அவள் யாராகிலும் என் ? அவள் உன் பேரைக் கேட்ட அளவில் வாட்டமுற்று அழும் அழுகையளாகக் காணப்படுதலின், உனக்கு நெருங்கிய உறவினளாக இருத்தல் வேண்டும். அவள் உனக்கு நெருங்கிய உறவினளாயினும் சரியே. அன்றிப் புற இனத்தவள் ஆயினும் சரியே. அவளுக்கு நீ தண் நளி செய்யவேண்டுவது உன் தலையாய கடனாகும்” என்று கூறினார். இங்ஙனம் கபிலர் பாடி அறிவுறுத்திய பாடலால், நின்மலையிற் குறவர்மாக்கள் கடவுளைப் பேணி மழை வேண்டியபோது அம்மழையினைப் பெற்றுத் தாம் வேண்டும் உணவினை நுகரு மாறுபோல, இவளும் நின் அருள் பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டும், என்னும் பொருள்படப் புலவர் பாடியுள்ளார் என்னும் கருத்து தொனிக்கின்றதன்றோ ?
பரணர் மேற்கொண்ட முயற்சி
பரணர், பேகன் இல்லம் சென்றனர். சென்று செவ்வழிப் பண்ணை யாழில் இசைத்துப் பேகனது மழை தவழ் மலையினைப் பாடி நின்றனர். பேகன் மனைவி கண்ணகி எப்பொழுதும் பேகன் நினைவே நினைவாகக் கொண்டு இணைந்து வாழ்ந்து வந்தனள் ஆதலின், பல நாள் உண்ணாது பட்டினியால் கிடப்பவன் காதில் கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா?” என்று விரைவது போல, பேகன் என்னும் பெயரை எவர் கூறினும், பேகனைக் காண்க போயினும் அத்திருநாமத்தைச் செப்பியவனையேனும் கண்டு சிறுமகிழ்வு கொள்ளும் நிலையில் இருந்தவள் கண்ணகியாதலின், பரணர் பேகனையும் பேகன் வாழ் மலையினையும் பாடி வந்தபோது வெளியில் வந்தனள். வருகின்றபோதே அவளது நீலநறுநெய்தல் மலர்போலும் மையுண்ட கண்களிலிருந்து நீர்த்துளிகள் நித்திலங்கள் உதிர்வனபோல மார்பகம் நனைய உகுத்த வண்ணம் இருந்தன. பரணர் இத்துயரமுற்ற கோலத்தைக் கண்டனர். கபிலர் போல யாதொரு மொழியையும் கண்ணகியை வினவாது, அடிபெயர்த்து அப்பாற் செல்ல ஒருப்பாடிலர். “இங்ஙனம் இம்மாது அழக்காரணம் என்னவாக இருக்குமோ? அதனை உசாவ வேண்டும்,” என உறுதி கொண்டனர். மெல்ல அம்மாதின் சந்தி வதனத்தை நோக்கினர். “அம்மணி! நீ யார் ? எம் உழுவல் அன்புடைக் கெழுதகை நண்பன் பேகன் என்பானுக்கும் நினக்கும் உறவுமுறை ஏதேனும் உளதோ ? அவன் பெயரைக் கூறிய மாத்திரையில் இங்ஙனம் உளங் குழைந்து உயங்குகின்றனையே. உண்மை கூறு,” என்று வினயமாக வினவினர். பெரியவர் ஒருவர் பேசுகையில், அவர் விடுத்த வினாவிற்கு விடை இறுக்காது இருத்தல், முறையன்று என்று ஓர்ந்தவளாய், காந்தள் மொட்டுப்போலும் விரலாலே தன் கண்ணீரினைத் துடைத்துக்கொண்டு
அன்பும் அறிவும் சான்ற ஆன்றவரே! யான் எங்ஙனம் எம் கொழுநர்க்கு உறவினள் ஆவேன். யான் உறவினள் ஆயின், அவர் என்னை விடுத்து வேற்றொருத்தியின் பால் வாழ எண்ணியிருப்பரோ? இரார்,” என்று சொல்லாமலே உண்மைச் செய்திகளைச் சொல்லி விட்டனள். இந்த மொழிகளைக் கேட்டதும் பரணர் வருத்தமுற்றனர்; பேகன் செயல் அடாதது என்பதை உணர்ந்தனர்; அப்பேகன் வாழ்ந்த இடத்தை நேரே அடையப் புறப்பட்டனர்; பேகனைக் கண்டனர்; கண்டவற்றை விண்டனர்; பேக! நீ இப்பொழுதே இவணின்று அவண் போந்து அவட்கு அருள் பண்ணுக. இங்ஙனம் பண்ணாயாயின், அது மிகக் கொடிது” என்று இடித்து மொழிந்தனர்.
அந்த அளவில் கூறியும் அமைந்திலர் புலவர். தமக்கு இப்பொழுது பேகன்பால் பரிசில் பெற வேண்டும் என்பது எண்ணம் இல்லை. எப்படியேனும் இவனைக் கண்ணகிபால் சேர்க்கவேண்டும் என்பதே எண்ணமாகும். அதனை வெளிப்படுத்தியும் கூறிவிட்டனர். பேகனுக்கு எம்முறையில் கூறினால், அவன் திருத்தமுறுவான் என்று சிந்தித்தனர். அதன்பொருட்டு இவன் செய்த கொடையைக் கூறி விளித்தனர். “மெல்லிய தகைமையினை யுடைய கரிய மயில், குளிரால் நடுங்குமென அருள் கூர்ந்து படாம் கொடுத்த பேகனே!” என்று விளித்தனர். இங்ஙனம் சுட்டியதன் நோக்கம், ஓர் அஃறிணைப் பொருளின் துயரங் கண்டு ஆற்ற ஒண்ணாத அருங்குணம் படைத்த நீ, ஓர் உயர்திணைப் பொருள், அதிலும் நின்வாழ்க்கைக்கு அரும்பெருந் துணையாக அமைந்த ஒருத்தி நின்னைக் காணாது, கூடி மகிழாது அலமந்து ஆழ்துயரில் உள்ளாள் என்பதைச் சிறிதும் உணராது, இருத்தல் முறையாமோ? என்பதை உணருமாறு செய்தற்கே இங்ஙனம் விளித்தனர். "நீ நின் இல்லக்கிழத்திக்கு இரக்கங்காட்டிலை எனில், நின் இசைக்கு வசையே வரும். ஆகவே, நின் இசையினை இழக்காமல் இருக்க விழைந்தால், அவட்கு அருள்பண்ணுக” என்பதற்காகவே இவனுக்கு இவன் பெற்ற இசையினை நினைவுபடுத்த “நல் இசைக் கடாஅ யானைக் கலிமான் பேக!” எனவும் விளித்தனர். விளித்து யாது கூறினர் ? “பேக! யான் பசித்து வந்திலன். எனக்கும் என்னை எதிர்நோக்கி வாழும் சுற்றமும் இல்லை. ஆகவே, நீ எற்கு இது போது பரிசில் தருக என நின்னை வினவவும் மாட்டேன். என்றாலும் ஒன்றைமட்டும் நின்னை இதுபோது கேட்க அவாவி வந்தனன். அது தான், நீ இன்றைப் பொழுதே ஆழி இவர்ந்து, நின் அருமனை புகுந்து, ஆயிழை கண்ணகியின் அருந்துயர் களைவதேயாகும் " என்று வேண்டி இரந்து நின்றார்.
அரிசில்கிழார் அறவுரை
பரணரைப் போலவே அரிசில்கிழார் என்னும் புலவர் பெருந்தகையாரும் பேகனும் கண்ணகியும் கூடிவாழப் பெரிதும் முயன்றனர். அரிசில்கிழார் கருத்தும் பரணர் கருத்தும் இந்த முறையில் ஒன்றாகவே காணப்பட்டன. அரிசில்கிழாரும் பேகன் மனையாள் கண்ணகியின் நிலையை அறிந்துகொண்டனர்; நேரே பேகனிடம் சென்றனர். பேகன் ஏனைய புலவர்கள் புகழ்ந்து விளித்தது போன்று விளிக்காது, இவனது போர் வெற்றியை மட்டும் புகழ்ந்து விளித்தனர். “அடுபோர்ப்பேக” என்றனர். இங்ஙனம் இவர் விளித்ததன் நோக்கம், உன் வெற்றிகள் யாவும் இல்லக்கிழத்தியோடு இல்லறம் நடாத்தாதபோது பயனற்றனவேயாகும். “புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை, இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை” என்பது பொதுமறை. “நின் இல்லக்கிழத்தி உடன் இல்லாத போது உன் வெற்றிச் சிறப்பு வெற்றெனப்படுவதே” என்பதைச் சுட்டிக்காட்டவே இங்ஙனம் விளித்தனர். பிறகு இப்பேகனை நோக்கி, “யானும் நின்னால் தரப்படும் பெறுதற்கரிய அணிகலன்களும் செல்வமும் ஆகிய அவற்றைப் பெறுதலை விரும்பேன். யான் சிறிய யாழைச் செவ்வழியாகப் பண்ணி வாசித்து நின் வலிய நிலமாகிய நல்ல மலை நாட்டைப் பாட, அது கேட்டு என்னை விரும்பி எற்குப் பரிசில் தர விரும்புவையாயின், அப்பரிசினை யான் வேண்டேன். நீ அருள் புரியாமையால் கண்டார் எல்லாம் இரங்கும் வண்ணம் மெலிந்து அரிய துயரால் நின் இல்லக்கிழத்தி இல்லின் கண் மழையைக் காணாது வாடிய பயிரினைப் போல் வருந்தி நிற்கின்றாள். அவளிடம் சென்று அவளது அடர்ந்த குழலில் அழகிய மலரைச் சூட்டி மகிழும் பொருட்டு நின் தேரில் பரியினைப் பூட்டி விரைந்து செல்க. இதுவே யான் வேண்டும் பரிசில்” என்று இன்னுரை பகர்ந்தனர். “அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டா, வன்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே” என்பது இப்புலவர் வாய்மொழிகள்.
பெருங்குன்றூர்க்கிழாரும் அவர் புகட்டிய பேருரையும்
பெருங் குன்றூர்க்கிழாரும் பரணர் கருத்தையும், அரிசில்கிழார் கருத்தையும் அடியொற்றிப் பாடினர். பெரும் புலவர்களின் கருத்துக்கள் யாவும் ஒரு படித்தாகவே காணப்படும்.
பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, “ஆவியர் கோவே! யான் நின்மாட்டு வேண்டுவது பொருள் பரிசில் அன்று. நீ நேரே இவண் நின்று நீங்கிக் கண்ணகி வாழும் அவண் சென்று அவட்கு மலர்சூட்டி மகிழ்க. அதுவே யான் வேண்டும் பரிசு. அவள் கூந்தல் தோகை போல் அடர்ந்து மென்மையாகக் காணப்படுவது. அவ்வழகிய குழல் பூசுவன பூசிப் பூண்பன பூண்டு பன்னாள் ஆயது. அதனால், அது பொலிவிழந்து காணப்படுகிறது. அது மீண்டும் பொலிவு பெற நீ அருள் செய்க” என்று வேண்டி நின்றார்.
இங்ஙனம் புலவர்கள் யாவரும் ஒருமனப்பட்டுப் பேகனை அணுகித் தாம் பரிசில் பெறுதலையும் அறவே மறந்து இவன் எவ்வாறேனும் கண்ணகி என்னும் கற்பரசியாளுடன் இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்தப் பெரிதும் பாடுபட்டனர். இவர்கள் பாடு பாழாய் இருக்குமோ? இராது பேகன் கண்ணகியிடம் சென்றிருப்பான். அவளுடன் இல்லறத்தை ஏற்று இனிது வாழ்ந்திருப்பான்.
"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச சொல்,”
என்பது பொய்க்குமோ? ஒருக்காலும் பொய்க்காது.
--------
இறுவாய்
இதுகாறும் கடை எழு வள்ளல்களின் வரலாற்றை ஒழுங்காக உணர்ந்தீர். இவ்வெழுவரும் வள்ளல்களாக மட்டும் இருந்ததோடு இன்றிப் பெரும் வீரர்களாகவும் விளங்கினர் என்பதையும் உணர்ந்துகொண்டீர்கள். இன்னோரன்ன வீரமும் கொடையும் நிறைந்த சிற்றரசர்கள், பேர் அரசர்கள் வரலாறுகள் பல நம் செந்தமிழ் நூல்களில் சிறக்கக் காணப்படுகின்றன. அவை யாவும் பொய்யுரையாகவோ புனைந்துரையாகவோ இன்றி, உள்ளதை உள்ளவாறு உணர்த்தும் வரலாறுகளே யாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து படித்தல் அறிவுடைமையாகும். இம்முன்னோர்களின் உண்மை வரலாறுகளை அறிதற்குப் பெருந்துணை செய்வன சங்கமருவிய நூற்களே யாகும். அவையே திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம் என்னும் பத்துப் பாட்டும், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகையும், நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இனியது நாற்பது, இன்னா நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூற்களாகும். இவற்றொடு சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காவியங்களும் பண்டை வரலாற்றை அறியத் துணைசெய்வன. தண்டமிழ் மொழியில் அறிவு பெற்றுத் தமிழ் முன்னோர் ஒழுகலாற்றை உணர விழைவோர் இந்நூற்களைப் பயின்று பேர் அறிவு பெறுவாராக.
இதனுடன் இந்நூலில் எழுதப்பட்ட கடையெழு வள்ளல்கள் இன்னார் என ஒரு சேரக் குறிப்பிட்ட இரு நூல்களில் காணப்படும் பாடல்கள் இரண்டும் பயில்வார்க்கு இன்பந்தரும் என்று எண்ணிச் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் படித்துப் பயனுறுவார்களாக.
________________
சிறுபாணாற்றுப்படை
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் சுரும்புஉண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் அருவி வீழுஞ் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
வீர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும் நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாபம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நல்மொழி ஆயும் மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் கரவாது
"நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும் நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
எழுவர்
. - நல்லூர் நத்தத்தனார்
புறநானூறு
முரசுகடி இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல்அலைத்து ஒழுகும்
பறம்பில் கோமான் பாரியும், பிறங்குமிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும் காரி
ஊர்ந்து பேர் அமர்க் கடந்த
காரி ஈகை மறப்போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம் உற்று
உள்ளி வருவர் உலைவு நனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு
எழுவர்.
-பெருஞ்சித்திரனார்
வாழ்ந்த ஊரும், மலையும்
பாரி - பறம்பு மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.
வல்வில் ஓர் - கொல்லி மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.
ஆய் அண்டிரன் - பொதியின் மலையும், ஆய்குடி ஊரும்.
திருமுடிக்காரி - முள்ளூர் மலையும், மலாடு, திருக்கோவலூர் ஊர்களும்.
நள்ளி - தோட்டி மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.
நெடுமான் அஞ்சி - குதிரை மலையும், தகடூர் ஊரும்.
பேகன் - ஆவினன்குடி மலையும், நல்லூர் ஊரும்.
பாடிய புலவர்கள்
பாரி : கபிலர், இவன் மகளிர்.
வல்வில் ஓரி : வன்பரணர், கழைதின் யானையார்.
ஆய் அண்டிரன் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர்
ஓடைக்கிழார், குட்டுவன் கீரனார்.
திருமுடிக்காரி : கபிலர், மாறோக்கத்து நப்புசலையார்.
நள்ளி : வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார்
நெடுமான் அஞ்சி : ஔவையார், பரணர் பெருஞ்சித்திரனார்,
பொன்முடியார்.
பேகன் : பரணர், கபிலர், வன்பரணர் அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார்.
ஈந்த பொருள்கள்
பாரி - முல்லைக்குத் தேர் ஈந்தவன்.
வல்வில் ஓரி - நாடு கொடுத்தவன்.
ஆய் அண்டிரன் - சிவபெருமானுக்கு நீல நிறப்பட்டாடை ஈந்தவன்.
திருமுடிக்காரி - நாட்டையும் குதிரையும் கொடுத்தவன்.
நள்ளி - இல்லறம் நடத்த வேண்டுவன ஈந்தவன்.
நெடுமான் அஞ்சி - ஒளவையார்க்கு நெல்லிக்கனியைத் தந்தவன்.
பேகன் - மயிலுக்குப் போர்வை தந்தவன்.
கட்டுரைப் பயிற்சி
சிறப்புக் கட்டுரைகள்
ஒவ்வொரு தலைப்பினையும் கொண்டு இரண்டு பக்கங்கட்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.
பாரி
1. பாரியின் பறம்பும் மூவேந்தர் முற்றுகையும்
2. பாரியின் ஈகையும் முல்லைக் கொடியும்
3. கபிலரும் பாரி மகளிரும்
4. பறம்பு மலையும் கபிலரின் பிரிவாற்றாமையும்
வல்வில் ஓரி
1. ஓரியும் ஈகையும்
2. ஓரியும் வன்பரணரும்
3. ஓரியும் கழைதின் யானையாரும்
4. ஓரியும் காரியும்
ஆய் அண்டிரன்
1. அண்டிரனும் ஆலமர் செல்வனும்
2. அண்டிரனும் போர் வெற்றியும்
3. அண்டிரனும் முடமோசியாரும்
4. அண்டிரனும் அவனது வரலாற்றுக் குறிப்பு
திருமுடிக்காரி
1. மலையமானும் வீரப்பண்பும்
2. மலையமானும் ஈகைப்பண்பும்
3. மலையமானும் அவனைப்பாடிய புலவர்களும்
4. மலையமானும் அவன் அரசிருக்கையும்
நள்ளி
1. நள்ளியும் வன்பரணரும்
2. நள்ளியும் பெருந்தலைச் சாத்தனாரும்
3. நள்ளியும் கொடைச் சிறப்பும்
4. நள்ளியும் அவன் நாட்டியல்பும்
நெடுமான் அஞ்சி
1. அஞ்சியும் ஔவையாரும்
2. ஔவையாரும் தொண்டைமானும்
3. அஞ்சியின் பிரிவும் ஔவையார் துயரும்
4. அஞ்சியும் அவன் போர் வெற்றியும்
பேகன்
1. கொடை மடமும் படை மடமும்
2. பேகனும் கண்ணகியும்
3. பேகனும் புலவர்களின் அறிவுரைகளும்
4. பேகனும் கொடை மடமும்
பொதுக் கட்டுரைகள்
1. ஈதலும் இசைபட வாழ்தலும்
2. தமிழ்ப் புலவர்களும் அறவுரைகளும்
3. கடையெழு வள்ளல்களும் ஈகைப் பண்பும்
4. வள்ளல்களும் பரிசில்மாக்களும்
------------
கருத்துகள்
கருத்துரையிடுக