புதுயுகம் பிறக்கிறது
சிறுகதைகள்
Backபுதுயுகம் பிறக்கிறது
மு. தளையசிங்கம்
--------------------------------------
புதுயுகம் பிறக்கிறது
மு. தளையசிங்கம்
அரசு வெளியீடு,
231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு - 13, (இலங்கை).
--------------------------------------
அரசு வெளியீடு 11
முதற் பதிப்பு: டிசம்பர், 1965
விலை: ரூ. 2-75
Puthuyukam Pirakkirathu
(A Collection of Short-Stories)
Author: M. THALAYASINGHAM, B. A.
Publisher: ARASU PUBLICATIONS,
231, Wolfendhal Street,
Colombo-13, (Ceylon).
First Edition: 10th December, 1965.
Price: Rs 2-75
---------------------------------------
தம்பிக்கு
-----------------------------------------
பதிப்புரை
தமிழிலக்கியப் பற்றினையும், அதன் வளர்ச்சி குறித்து நாமும் ஏதாவது தொண்டியற்றல் வேண்டும் என்ற ஆர்வத்தையுமே பிரதான மூலதனங்களாகக் கொண்டு, மூன்றாண்டுகளுக்கு முன்னர் அரசு வெளியீடு நிறுவப்பட்டது. 'ஈழத்தின் தலைசிறந்த முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரும், பழைய எழுத்தாளர் கோஷ்டியுடன் எழுத ஆரம்பித்து இன்றுவரை தொடர்பு அறாமல் எழுதிவரும் சிறுகதையாசிரியருமான திரு. வ. அ. இராசரத்தினம் அவர்களின் 1951 - 1954 ஆண்டுச் சிறுகதைகளிற் பதினான்கை எங்களின் முதல் வெளியீடாக'த் தோணி என்னுஞ் சிறுகதைத் தொகுதி மூலம் அளித்தோம். அவ்வாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டலப் பரிசு நமது முதலாவது வெளியீட்டிற்கே கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது.
அதைத் தொடர்ந்து கவிதை - சிறுவர் இலக்கியம் - உருவகக் கதை - பேனாச் சித்திரங்கள்- இலக்கிய வரலாறு - சொற்பொழிவுகள் ஆகிய பல துறைகளைச் சார்ந்த இலக்கிய நூல்களைத் தமிழன்னையின் திருவடிகளில் வைத்தோம். இப்பொழுது, அரசு வெளியீடுகளின் தசதி முடிந்து, புதுயுகம் பிறக்கிறது பதினோராவது நூலாக வெளிவருகின்றது. முதலாவது வெளியீடு சிறுகதைத் தொகுதியாக அமைந்து, பதினோராவது வெளியீடே நமது இரண்டாவது சிறுகதைத் தொகுதியாக வெளிவருதல் அரசு வெளியீடு இயற்றும் பரந்துபட்ட இலக்கிய சேவைக்குச் சான்றாகவே அமைகின்றது.
இத்தொகுதியில், புதியதோர் எழுத்து வேகத்துடன் சிறுகதைகள் எழுதிவரும் மு. தளையசிங்கம் அவர்கள் 1961 - 1964 ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதிய பதினொரு கதைகள் இடம்பெறுகின்றன. 'தோணி'யுடன் இதனை ஒப்பிட்டு வாசித்தால், இடைப்பட்ட தசாண்டுகளின் கால ஓட்டத்தில், ஈழத்தின் சிறுகதைகள் உருவத்தைப் பொறுத்தும், உள்ளடக்கத்தைப் பொறுத்தும் அடைந்துள்ள மாற்றங்களை ஒருவாறு உய்த்துணரலாம். மு. தளையசிங்கம் அவர்கள் ஈழத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - அவசரக் குறிப்புகள் என்ற கட்டுரைத் தொடர்மூலந் தமக்குத் தனித்துவமான - நேர்மையான - பரந்துபட்ட இலக்கியப் பார்வை உண்டென்பதை நிலைநாட்டினார். இருப்பினும், அவர் நல்லதொரு சிறுகதை ஆசிரியரும் என்பதைப் பலர் அறியத் தவறிவிட்டனர். அவருடைய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் காரசாரமாக அமைவதாலும், அவருடைய சிறுகதைப் பரிசோதனைகளுக்குப் 'பெரிய' பத்திரிகைகள் களம் அமைக்க மறுத்தபடியாலும் அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக ஈழம் காலந்தாழ்த்தியே உணருகின்றது. பத்திரிகைகளுக்காக அல்லாமல், ஒரு தொகுதியை மனதில் வைத்துக்கொண்டு சிறுகதைகளை எழுதும்பொழுது, அக்கதைகளுக்கிடையில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்னும் வகையிற் சட்டென்று புலப்படாத ஒருமைப்பாடு கதைகளுக்கிடையில் ஊடுருவியிருக்குமென நம்புகின்றார். பத்திரிகைகளில் வெளிவராது, இத்தொகுதிக்காக எழுதப்பட்டவையே பெரும்பாலான சிறுகதைகள். இத்தொகுதி மூலம் புதிய பார்வையுடைய சிறுகதை எழுத்தாளர் ஒருவரை ஈழம் ஏற்றுக்கொள்ளுகின்றது.
*
நமது முதலாவது வெளியீட்டில், 'ஈழத்திலும், தமிழகத்திலும் மேலுறைக்காகச் செலுத்தப்படும் அக்கறையை நாங்கள் தவிர்த்து, அட்டையிலும் அமைப்பிலும் புது முறையைக் கையாண்டுள்ளோம். இப்புது அமைப்பை எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்பார்களென்று எண்ணுகிறோம்' எனக் குறித்தோம். நாம் கருதியது காரிய சாதனையாகிவிட்டது. அரசு வெளியீட்டு நூல்கள் வகுத்த வழியில் நூல்களைப் பிரசுரிக்கப் பலர் முன்வந்துள்ளார்கள். இதுவும் நமக்கு மன நிறைவைத் தருகின்றது.
வணக்கம்
எம். ஏ. ரஹ்மான்
அரசு வெளியீடு.
+++++++++++++++++++
உள்ளே
வீழ்ச்சி 5
புதுயுகம் பிறக்கிறது 17
தேடல் 28
கோட்டை 53
இரத்தம் 70
கோயில்கள் 83
பிறத்தியாள் 94
தொழுகை 108
சாமியாரும் பணக்காரரும் 118
சபதம் 125
வெளி 133
+++++++++++++++++++
வீழ்ச்சி
யன்னல் கம்பிகளுக்கூடே தெரியும் காட்சி வகைப்படுத்திக் கூறமுடியாத ஓர் பரவச உணர்ச்சியைக் கிளப்புகிறது. உயர்ந்து வளைந்து நிற்கிறது ஓர் தென்னை. பின்னால் சில கமுகுகள். இன்னும் வேறு சில பெயர் தெரியாத மரங்கள். முன்னால் மஞ்சள் பூக்களோடு ஊசி இலைகள். பச்சை நிறத்தில் அப்படி என்ன இருக்கிறது மனதைக் கிளறுவதற்கு? யன்னல் கம்பிகளுக்கூடாய் மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தெரிகிறது.
காலையில் நித்திரை விட்டெழுந்து அப்படியே சுவரோடு சாய்ந்தவாறே படுக்கையில் உட்கார்ந்த வண்ணம் அந்தக் காட்சியை அவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நினைவுகளற்ற நிலை. நெஞ்சுக்குள் ஏதோ கிளறப்படும் ஓர் பரவச உணர்ச்சி மட்டும் நிற்கிறது.
தலை நீட்டிநிற்கும் தென்னை மரத்தின் உச்சிக்கு அப்பால் யன்னலின் மேல்விளிம்பு போடும் எல்லை வரை நீலவானம் மெல்லப் பரவிய சூரிய ஒளியில் விரிந்து தெரிகிறது. அங்கும் சலனமற்ற நிலை. அவனது அகத்தின் பிரமாண்டமான பிம்பம்போல் அதில் ஒரு பொட்டு முகில் கூட்டங்கூட இல்லை. பச்சை மரங்களில் அவன் கண்ட அந்தப் பரவச உணர்ச்சிக்குரிய காரணம் இப்போதான் அவனுக்கு விளங்குகிறது. ஆமா, அவற்றுக்குப் பின்னாலுள்ள அந்த நீலவெளிதான் காரணம். இல்லாவிட்டால் அவை வெறும் மரங்களாகத்தான் தெரிந்திருக்கும். பின்னாலுள்ள அழகு வெளியின் பிணைப்பற்ற வெறும் சின்ன மரங்கள். அவற்றால் மட்டும் அவனுடைய அகத்துக்குள் அந்தப் பரவச உணர்ச்சியைப் பிறப்பிக்க முடியாது.
அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் அதே வேளையில் அடுத்த அறையில் முடுக்கி விடப்பட்ட வானொலியும் அலறத் தொடங்குகிறது. அது அவனோடு போட்டி போடுகிறதா? ஆரம்பத்தில் அதைப்பற்றி அவன் கொஞ்சங்கூடக் கவலைப்படவில்லை. அவனுக்கும் அவனுடைய நிலைக்கும் தொடர்பற்ற ஏதோ ஓர் தூரத்துச் சத்தம் போல் தான் அது கேட்கிறது. ஒருவேளை அந்த உணர்வுகூடக் கொஞ்சம் தாமதித்துத்தான் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பின்னர் அது மெல்ல மெல்லக் கூடிக் கொண்டே வந்து தன்னை வலுக்காட்டயமாக அவனுக்குள் திணிக்கிறது. அதை எதிர்க்க முடியாமல் வலுவிழந்துபோன காதுகளும் அந்த ஆக்கிரமிப்பை இறுதியில் ஏற்றுக்கொள்ளவேதான் செய்கின்றன.
"வடவியட்னாமில் அமெரிக்க விமானங்கள் புதியதோர் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. ஐம்பதுக்கதிகமான வியட்கொங் வீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஐந்து பாலங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஓர் அமெரிக்க ராணுவ அதிகாரி கருத்துத் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்தி கூறுகிறது..."
புதிதாக வந்த எரிச்சலோடு அவன் அதை உலுப்பிவிட முயல்கிறான். உலுப்பிவிட்டுத் திரும்பவும் பழைய பரவசக் கிளறலில் அவனது மனம் தன்னை இழந்துவிட முயல்கிறது. அவன் திரும்பவும் வெளியே பார்க்கிறான்.
யன்னலுக்கூடாய் நீலவெளி முன்பைப் போலவே விரிந்து கிடக்கிறது. ஆனால் எப்படியோ அங்கு முன்பு படர்ந்திருந்த சூரிய ஒளி திடீரென்று மங்கத் தொடங்குவது போன்ற ஓர் உணர்வு. வெறும் பிரமையா? இல்லை, அது உண்மைதான். அவன் நிச்சயப்படுத்திக் கொள்கிறான். மங்கிய ஒளியோடு மரங்கள்கூட ஆடத் தொடங்குகின்றன. கூடவே குளிர்காற்று. மழை வரப்போகிறதா? முந்தின சலனமற்ற மௌனம் பிறப்பித்த பரவசம் இப்போ கரைவது போன்ற அறிகுறி. அதற்குப் பதிலாக நெஞ்சில் ஓர் மெல்லிய இனந்தெரியாத வேதனைதான் கசியத் தொடங்குகிறது.
"மரண அறிவித்தல்"
அவன் திடுக்கிடுகிறான். அதே வானொலியின் அறிவிப்பு. இல்லை, அலறல். அந்த நேரத்தில் அது அவனுக்கு அப்படித்தான் படுகிறது. அப்போதுள்ள நிலையில் அடுத்த அறை வானொலியை அவன் சுக்குநூறாக நொருக்கிவிடக்கூடத் தயார். ஆனால் முடியவில்லை. அதன் மரணச்செய்தி தொடர்ந்து கேட்கவே செய்கிறது. அதக்கூட அவனால் தடுக்க முடியவில்லை.
"இளைப்பாறிய முத்துத்தம்பி பொன்னையா காலமானார் ...."
வானொலி தொடர்கிறது.
"தங்கம்மாவின் அருமைக் கணவரும் களுத்துறை சீ. ரீ. பி. அலுவலகத்தில் வேலை பார்க்கும் முத்துக்குமாரரின் தகப்பனாரும் நியூசிட்டி கொம்பனியின் மனேஜர் விஸ்வநாதனின் தமையனாரும், கிங்ஸ்வுட் ஆசிரியர் பேரின்பநாயகம், ஹோலிபமிலி கொன்வென்ட் ஆசிரியை செல்வி பொன்னையா ஆகியோரின் பாட்டனாருமான இளைப்பாறிய முத்துத்தம்பி பொன்னையா காலமானார். மரணச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொட்டாஞ்சேனை மைதானத்தில் நடைபெறும். உறவினரும் நண்பர்களும் இதை ஏற்றுக்கொள்ளவும். மீண்டுமொருமுறை வாசிக்கிறேன். இளைப்பாறிய முத்துத்தம்பி பொன்னையா காலமானார் ...."
காதுகள் அவற்றைக் கேட்டு வாங்கிக் கருத்தில் பதிய வைக்க அவனுடைய மனதில் பலவகை உணர்வுகள் ஊற்றெடுக்கின்றன. பலவகையான கற்பனைகள் உருவாகின்றன. இளைப்பாறிய பொன்னையரின் உருவத்தை அவனது மனம் படம் பிடிக்க முயல்கிறது. வழுக்கைத் தலை. வீட்டு விறாந்தையில் ஈசிச் செயாரில் மூக்கிலோர் கண்ணாடியுடன் அவர் சாய்ந்து கிடக்கிறார். பக்கத்தில் ஓர் பத்திரிகை கிடக்கிறது. இல்லை, ஈசிச்செயாரில் சாய்ந்துகொண்டு அதைத்தான் அவர் வாசித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் அவருக்கு அறிவூட்டும் ஒரே ஒரு சாதனம். அவர் கண்ட உலகம், பிரபஞ்சம் எல்லாமே அதன் பக்கங்களுக்குள்ளேதான். இப்போ அதுவும் அடங்கி விட்டது. ஈசிச்செயாரில் அவர் இனி இருக்க மாட்டார். இப்போ அவரைச்சுற்றி அவருடைய இளைப்பாறாத மக்களும் பேரன்மாரும் சுற்றத்தாரும் அழுத முகங்களோடு காட்சியளிப்பார்கள். அல்லது ஒருவேளை அருகு வீட்டு வானொலியிலே, தாங்கள் கொடுத்த மரணச்செய்தி சரியாக வருகிறதா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ? அது சரியாகவே வந்ததினால் பெரிய சாதனையொன்றைச் செய்துவிட்டதுபோல் திருப்தியோடு தலையாட்டிக் கொள்கிறார்களோ? இருக்கலாம் என்றே அவனுக்குப் படுகிறது. இளைப்பாறிப் பின்னர் இறந்தும்விட்ட பொன்னையரின் உலகம் பத்திரிகைதான் என்றால் இளைப்பாறாத அவருடைய இப்போதைய சந்ததியாரின் உலகம் வானொலியும் சினிமாவுந்தானே? இனிவரும் சந்ததிக்கு டெலிவிசனாக இருக்கலாம். ஆனால் இப்போதைய சந்ததிக்கு சினிமாவும் வானொலியுந்தான். ஆமாம் அவர்களும் இப்போ வானொலியில் அந்த மரணச் செய்தியைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். கேட்டுத் திருப்தியோடு தலையாட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். "கொட்டாஞ்சேனை மைதானத்தில் நடைபெறும்..."
"இரண்டாவது மரணச்செய்தி. சுந்தரமூர்த்தி கனகரத்தினம் காலமானார். அரசாஙக மொழி அலுவலகத்தில் வேலை பார்த்த சுந்தரமூர்த்தி காலமானார்"
அதற்கு மேலும் அவனால் அதைக் கேட்கமுடியவில்லை. கேட்க விரும்பவில்லை. அவை மரணச் செய்திகளா? பதவி பட்டங்களின் விளம்பரங்களா? அவன் திரும்பவும் யன்னலூடாக வெளியே வெளியே சென்றிருந்த பார்வையோடு மனதையும் திருப்ப முயல்கிறான். ஆனால் அடுத்த அறைக்குள்ளிருந்து வரும் அறையிலிருந்து தப்புவது இப்போ அத்தனை இலேசானதாகத் தெரியவில்லை. "சீ. ரீ. ஓ வில் வேலை பார்க்கும் மிஸ் சிவகாமியின் தந்தையும் யாழ்ப்பாணம்..." யன்னலூடாகக் குளிர் காற்று வீசுகிறது. நீலவெளியில் வரவரக் கருமை படர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கருமையின் மூலக் காரணமாக அடிவானத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து தெரிகிறது கார்மேகத் திரள். அதிலிருந்து அங்குமிங்குமாய் ஊடுருவிச் செல்லும் முன்னணிப் படைகள்போல் தென்னைமர உச்சிவரை சில கிளைமேகங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. "உறவினர்களும் நண்பர்களும் இதை ஏற்றுக்கொள்ளவும். மீண்டுமொருமுறை வாசிக்கிறேன். சுந்தரமூர்த்தி கனகரத்தினம் காலமானார்." முன்னால் தெரியும் மரங்கள் எல்லையற்று விரிந்து கிடந்த பழைய நீலவெளியின் பின்னணியிலிருந்து கார்மேகத்தால் பிரிக்கப்பட்டுப் பழைய அமைதியை இழந்து, பிரிவினையினால் வந்த வேதனையைத் தாங்கமுடியாமல் தவிப்பனபோல் குளிர் காற்றில் அங்குமிங்குமாக அசைந்து கொண்டிருக்கின்றன. அவனால் தொடர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. யன்னலூடாகக் குளிர் காற்று முன்பைவிட வேகமாக வீசுகிறது. பழைய பரவசத்தின் நினைவுகூட இப்போ அவனுக்கு இல்லை. இப்போ அவனுக்கும் ஏதோ வேதனையாகத்தான் இருக்கிறது. "உறவினர்களும் நண்பர்களும் இதை ஏற்றுக் கொள்ளவும்.."
இருக்கையை விட்டிறங்கி காரணமற்று அறைக்குள் அங்குமிங்குமாக அவன் நடக்கத் தொடங்கின்றான். வெளியே வண்டிச் சில்லுகள் தெருவில் போட்டிபோட்டுக் கடகடக்கின்றன. பள்ளி மாணவிகள் போகிறார்கள். நடந்து சென்ற அவன், அடுத்த யன்னலோரமாக நிற்கிறான். அவனிருந்த அறையின் அடுத்த கண் அதுதான். முன்னால் முச்சந்தி கிளைவிட்டுப் பிரிந்து கிடக்கிறது. பள்ளி மாணவிகளை ஏற்றிச் செல்லும் சின்ன மாட்டு வண்டிகள் சதங்கைச் சத்தத்துடன் தார் றோட்டில் கடகடத்து ஓடிக் கொண்டிருக்கின்றன. பின்னால் போகும் வண்டியில் சென்ற ஒருத்தி அவனைப் பார்த்து விடுகிறாள். அவனும் பார்க்கிறான். ஒருகணத்துக்குள் அவளின் முழு உருவத்தையும் அவனுடைய கண்கள் எடைபோட்டு விடுகின்றன. புத்தகக் கட்டைத் தாங்கியவாறு வெள்ளைக் கவுணின் கீழ்விளிம்புக்கு வெளியே மடக்குப் பட்டவாறே தலைநீட்டிய முழங்கால்கள், அவனுடைய யூகத்துக்கு விட்டுக்கொடுக்கும் அவற்றின் மேற்பரப்பு. பச்சைக் கழுத்தணியின் வீழ்ச்சிக்கு இருபக்கமும் கரை எழுப்பும் குரும்பெட்டிப் பொம்மல்கள். குறுஞ்சிரிப்புத் தவழும் முகம்... இல்லை, இதழ் விரித்தே அவள் சிரித்து விடுகிறாள். அவனும் சிரிக்கிறான். புதியதோர் உணர்ச்சி அவன் உடலில் பாய்கிறது. ஏதோ ஒன்றின் தேவை அரிப்பாக மாறுகிறது. வண்டி மறையும்வரை பஸ்டில் (Bastille) சிறையன்னலில் பார்த்து நிற்கும் சாடைப்போல் (Sade) யன்னலோடேயே அவன் ஒட்டிக்கொண்டு நிற்கிறான்.
எவ்வளவு நேரம் அவன் அப்படி நின்றானோ அவனுக்கே தெரியாது. வானொலியின் அலறல்தான் திரும்பவும் அவனைத் தட்டிவிடுகிறது.
"நேரம் ஏழு முப்பத்தியொன்று. தேர்ந்த இசை."
திடுக்கிட்டவன்போல் அவன் திரும்புகிறான். நெஞ்சில் திடீரென்று பழைய வேதனை பாய்கிறது. வண்டியில் கண்ட சிரித்த முகக்காட்சி அவ்வளவு தடுத்ததாகத் தெரியவில்லை. முடுக்கிவிட்ட யந்திரம்போல் அதற்குப்பின் அவன் அசுர வேகத்தில் இயங்கத் தொடங்குகிறான்.
நேரம் சரியா? மேசையில் கிடந்த கைக்கடிகாரத்தை அவசரமாகத் திருகித் திருத்திக் கொள்கிறான். இன்னும் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு அரை மணித்தியாலம் இருக்கிறது. அவன் கணித்துக் கொள்கிறான். அதற்குள் எத்தனையோ சடங்குகள் செய்து தீர்க்கப்படவேண்டும். ஆனால் அதற்குப் பிறகுதான் நிம்மதி வந்துவிடுமா? மனதில் புதியதோர் கசப்பு பழைய வேதனையோடு கலக்கிறது. போகும்வாக்கில் சுவரில் தொங்கிய கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிறான். எப்படியோ நான்கு நாட்களாக அவன் கடத்திவந்த ஒன்று இன்று கட்டாயச் சடங்காகப் பயமுறுத்துகிறது. ஓர் வருத்தக்காரனின் தோற்றம். அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் அடுத்தவர்கள் கவலைப்படுவார்கள், காரணங்கூடக் கேட்பார்கள். ஓ, இந்த அடுத்தவர்களும் அவர்களுடைய அபிப்பிராயங்களும்! யார் கவலைப்பட்டார்கள்? ஆனால் அதேசமயம் பற்பசையோடும் பிறஷ்ஷோடும் துவாயோடும் சவர்க்காரப் பெட்டியோடும் சவரக் கருவிகளையும் அவன் காவிச் செல்லத் தவறவில்லை. பாத்ரூம். ஆனால் அதற்குள் இன்னோர் சடங்கு. மலக்கூடம். முதல் சடங்குகளை முடித்துக்கொண்டு முகச்சவரம் செய்ய முயன்ற போதுதான் அதற்குரிய கண்ணாடியைக் கொண்டு வரவில்லை என்பது தெரிய வருகிறது. திரும்பவும் அறைக்கு ஓர் ஓட்டம். திரும்பி வரும்போது பாத்ரூமில் இன்னொருவர்! அவர் வெளியே வரும்வரைக்கும் ஒற்றைக்காலை மாற்றி மாற்றி வெளியே அவன் அவசரத் தவம் செய்கிறான். பின்னர் சவரம் செய்ய ஒருபடியாகச் சந்தர்ப்பம் கிடைத்த போதுதான் பிளேட் பழசாகிவிட்டது தெரியவருகிறது. ஆனால் புதிது வாங்க இனி எங்கே நேரம்? அங்குமிங்கும் விழும் இரத்தக் கீறல்க்ளையும் பொருட்படுத்தாது அவன் அதைக்கொண்டே சமாளிக்கிறான். கழுவும் போது முகம் எரிகிறது. அவன் கவலைப்படவில்லை. இந்த 'அரை வட்ட' வாழ்க்கையில் முழு உயிரே போகிறபோது இரத்தம் போனால் என்ன? முகம் எரிந்தால் என்ன?
அறைக்குள் திரும்பி வரும்போது மேசையில் கிடந்த கைக்கடிகாரம் நேரம் ஏழு ஐம்பத்திரெண்டு என்று காட்டுகிறது. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் அங்கே பள்ளிக்கூடத் தலைமையாசிரியரின் மேசைக்குமுன்னால் கிடக்கும் புத்தகத்தில் சிவப்புக்கோடு கீறப்பட்டுவிடும். வழக்கம்போல் இன்றும் அவன் அதற்குக் கீழேதான் கையெழுத்திடப் போகிறான். அந்தத் தலையாசிரியர் வழக்கம் போல் தலையாட்டிக் கொண்டு இன்றும் சிரிக்கத்தான் போகிறார். அந்தச் சிரிப்புத்தான் அவனுக்குப் பிடிக்காது. Let him go to hell; let the fellow go and -
அவசர அவசரமாக அவன் காற்சட்டையை மாட்டிக்கொள்கிறான். நல்லகாலம் அவன் சப்பாத்துப் போடுவதில்லை. செருப்பு. ஆனால் வெளியே மழை பெய்கிறதா?
யன்னலுக்கு வெளியே சென்ற பார்வை இருண்டு கறுத்துவிட்ட மேகத்தையும் பெய்யத்தொடங்கி விட்ட மழைத் தூறலையுமே சந்திக்கின்றது.
சினத்தோடு அவன் செருப்பை விட்டுவிட்டுச் சப்பாத்தையே மாட்டிக்கொள்கிறான். மாட்டிவிட்டு காலைச் சாப்பாடு-தேநீர் என்ற பெயரில் நாயர் அனுப்பியிருந்த கர்மக் கடனைப் பெயருக்கு அவசர அவசரமாக வாய்க்குள் போட்டுக் கொள்கிறான். போட்டுக்கொள்ளும்போதே அன்றைய டைம் டேபிளையும் புரட்டுகிறான்.
செவ்வாய்க்கிழமை 8-00 - 8-45 சரித்திரம் எஸ். எஸ். ஸி. 8-45 - 9-30 பூமிசாஸ்திரம் எஸ். எஸ். ஸி. 9-30 - 10-15 குடியியல் ...
ஓய்வான பாடம் அன்று ஒன்றுமே இல்லை!
மனக்கசப்போடு கையைக் கழுவிவிட்டு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு அவன் பள்ளிக்கூடம் புறப்படுகிறான். வெளியே வானம் இருண்டு கிடக்கிறது. குளிர் காற்றோடு மழை சீறியடித்துப் பெய்கிறது. போவதா வேண்டாமா? போகாமல் விட்டால்தான் என்ன வந்துவிட்டது?
அந்த வாழ்க்கைக்கும் அதன் சின்னங்களான டைம்டேபிளும் சிவப்புக்கோடும் பிரதிபலிக்கும் அந்த அதிகார அமைப்புக்கும் எதிராக அவன் செய்யக்கூடிய ஒரே ஒரு புரட்சி அப்படி அடிக்கடி பிந்திப்போவதும் இடைக்கிடை காரணமற்றுப் போகாமல் விடுவதுந்தான். இன்று அப்படிப் போகாமல் விட்டால் என்ன? ஆனால் மனம் அதைக் கணித்துக் கொண்ட அதே சமயம் உடல் அறைக்குள்ளிலிருந்து ஓர் சின்னக் குடையை எடுத்து விரித்துக் கொண்டு மழையில் ஒடுங்கி நடுங்கியவாறு வெளியே புறப்படுகிறது. அவனுடைய சிந்தனைகளின் பலவீனத்தை அவனே உணராமலில்லை. வேதனையோடும் ஆத்திரத்தோடும் வேறு வழியின்றித் தனக்குள்ளேயே திட்டிக்கொண்டு அவன் நடக்கின்றான்.
போகும்போது சந்தியடிச் சின்னக்கடையில் சினிமாப் பாட்டுக் கேட்கிறது.
நடையா, இது நடையா?
நாடகமன்றோ நடக்குது?
இடையா, இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது
வெள்ளிக்கண்ணு மீனா வீதிவலம் போனா
தையத்தக்க தையத்தக்க ஹைய்ய்ய்.
அது இலங்கை வானொலியின் திரை இசை. அதாவது திரை அலறல். ஆனால் இந்தமுறை அவனுக்கு வானொலியில் வந்த பழைய ஆத்திரம் இருக்கவில்லை. மாறாக அந்தப் பாட்டோடு சேர்த்து ஏனோ சிறிது நேரத்துக்கு முன் வண்டியில் போன அந்தப் பள்ளிக்கூட மாணவியின் தோற்றந்தான் அவனுக்குச் சுவையோடு நினைவுக்கு வருகிறது. அந்தப்பாடலுக்கும் அவளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை என்பது அவனுக்கே தெரியாமலில்லை. இருந்தாலும் அவளைப்பற்றித்தான் அது கூறுகிறது என்று நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. அந்த நினைவு அதுவரை அவனது மனதில் நிரம்பிய கசப்பை கொஞ்சம் கரைக்க உதவுகிறது. அதை வேண்டுமென்றே அவன் வலிந்து இன்னும் விருத்திசெய்ய முயல்கிறான்.
வண்டியில் அந்த மாணவி போகிறாள். சிரித்த முகம், பச்சைக் கழுத்தணி, சட்டைப் பொம்மல்கள், நீட்டி மடித்துள்ள முழங்கால்களும் அவற்றின் மேற்பரப்பும்.... இது நடையா? இது நடையா? ஒரு நாடகமல்லோ நடக்குது, இடையா இடையா.....
திடீரென்று அவனுக்கோர் சிகரட் தேவைப்படுகிறது. மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. Bristol. Filter tipped. Virginia blended Cigarette.
அருகிலிருக்கும் சிகரட் கடையை நோக்கி அவன் அவசரமாகத் திரும்புகிறான். வெள்ளிக் கண்ணு மீனா வீதிவலம் போனா தையத்தக்க தையத்தக்க ஹைய்ய்ய்... அங்கும் அது கேட்கிறது. அதை ரசித்து அனுபவித்துக்கொண்டே அவன் அணுகுகின்றான். எதிரே ஏற்கனவே அழுக்கடைந்துவிட்டிருந்த அவனது காற்சட்டையில் இன்னும் சேற்றை வாரி இறைக்கும் நோக்கத்துடன் இருண்டுவிட்ட வானத்தின் இடிமுழக்கத்துக்கு ஏற்ப இரைச்சலோடு ஓர் கறுத்தக் கார் பிசாசுபோல் ஓடிவருகிறது.
*
--------------------------------
புதுயுகம் பிறக்கிறது
கௌரி இன்றும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திரிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிறாள். பக்கத்தில் சுற்றிப் போர்த்தி, அந்தச் சிறு உருவம் கிடக்கிறது. அது உருவமா? உள்ளே எலும்பென்பது இருக்குமா? அந்தக் கண்கள்? அந்த வாய்? உயிர் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு?
கனகரத்தினம் கல்லாய் நிற்கிறான். கௌரி இனி கண்ணனைத் திறக்கும் போது அவன் என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது?
கனகரத்தினத்தின் நெஞ்சு கனக்கிறது. நேற்று, முந்தநாள், ஏன் இரண்டு மாதங்களுக்கு முன் கௌரி அந்தக் கதையை ஆரம்பித்தது முதல் அவன் என்னென்னவெல்லாம் சொன்னான்! எப்படியலெ¢லாம் சொன்னான்!
கனகரத்தினத்தால் தாங்கமுடியவில்லை. அடக்க முடியாத வேதனையோடு நினைவுகள் சேர்ந்து நெஞ்சை அமுக்குகின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன்பு....
'அரோகரா ' என்று கேலியாகக் கத்திக் கொண்டு சாமி அறைக்குள் எட்டிப் பார்த்தான் கனகரத்தினம். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.
ஊதுபத்தியைப் பற்றவைத்துச் சாமிபடத்துக்கு முன்னால் கும்பிட்டுக் கொண்டு நின்ற கௌரி ஒருகணம் திரும்பினாள். முகத்தில், ஒரு புன்னகை நின்றாலும் அடியிலிருந்த சினம் தெரியாமலில்லை. கனகரத்தினத்தின் கையிலிருந்து அறைக்குள் நுழைந்த சிகரெட் புகையைப் பார்த்த பின், அந்த மெல்லிய புன்னகையும் மறைந்துவிட்டது. திரும்பவும் தலையைத் திருப்பிக் கொண்டு கும்பிடத் தொடங்கினாள்.
சிலநேரம் சென்று வெளியே வந்த கௌரி யின் முகத்தில் பழைய சினம் இருக்கவில்லை. 'உங்களுக்கு எந்த நேரமும் பகிடி' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே வந்தாள். முகத்தில் நிம்மதி நிறைந்த சாந்தி நின்றது. நெற்றியில் விபூதிப் பொட்டு ஒளிவிட்டது. கூடவே தாய்மையின் பூரிப்பு.
கௌரியின் முகத்தில் அப்படி ஒரு களை சதா ஒளியிடத்தான் செய்யும். ஆனால், முக்கியமாக அவள் சாமி அறையிலிருந்து வெளிவரும்போது அந்தக் களையின் ஒளிவிட்டங்களைக் கூடக் கண்டு விடலாம் என்ற ஒரு பிரமை ஏற்படும். கனகரத்தினத்திற்கு அந்தத் தோற்றம், கௌரியின் அம்மாவை நினைவூட்டும். அவன் சின்னவனாய் இருக்கும்போதே இறந்து போன அவனின் தாயாரை நினைவூட்டும். அம்மாவின் அம்மாவை, என்று அதற்குப் பின் ஒரு தொடர் நினைவுகள் ஓடும். எல்லோர் முகங்களிலும் அதேவித அமைதி, தெய்வீகக்களை, ஒளிவிடும் விபூதிப் பூச்சு. அதுதான் கிழக்குப் பண்பாடு என்று ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சொல்லும். சாமி அறைக்குள் போய்நின்று அந்தத் தொடர்பேற்படுத்திக் கொள்கிறாளா? ஐக்கியப் பட்டு விடுகிறாளா ? அச்சாியத்தோடு கனகரத்தினம் தன்னையே அப்படிக் கேட்டுக் கொள்வான். அந்தக் கேள்விகளுக்கு அவனால் விடை கண்டு கொள்ள முடியாவிட்டாலும், கௌரியின் முகத்தில் நிற்கும் அந்த அமைதி நிறைந்த களைக்கு மனதுக்குள் அவனால் மரியாதை கொடுக்காமல் இருக்க முடியாது. அவளின் பழக்க வழக்கங்கள், பழைய பரம்பரை பழக்க வழக்கங்களாய் இருக்கலாம். ஆனால், அவற்றில் உள்ள அமைதியும், பொறுமையும் போற்றப் படக்கூடியவைதான். அவனது புரட்சி எண்ணங்களில், அவன் காணூம் புதுயுகப் பெண்களில், அவற்றின் வெறுமையினால் ஏற்படும் குறையை அப்போதுதான் அவனால் உணரமுடியும். ஆனால் அதற்காக கௌரி யில் அதிக அன்பைக் காட்டுவதைத் தவிர தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள அவன் விரும்புவதில்லை. கட்சியும், கொள்கையும் அறிவை அடிப்படையாகக் கொண்டவையே ஒழிய, உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவையல்ல என்ற வழக்கமான அவனின் சுலோகத்தை அதற்குக் காரணமாகவும் காட்டிவிடுவான்.
'இண்டைக்கென்ன டைம்டேபிளில் ஒரு மாற்றம்? பகல் பத்துமணிக்கும் ஒரு கும்பிடு. ஞாயிற்றுக்கிழமை எண்டும் பாராமல்?' என்ற கௌரி யைப் பார்த்து அவன் கேட்ட போது பகிடியோடு ஓர் இனந்தொியாத வாஞ்சையும் சேர்ந்து நின்றது.
'உங்களுக்கென்ன? ஊர்சுற்றியிற்று வருவேங்க. விடிஞ்சாப் பொழுதுபட்டா கட்சி, கட்சியெண்டு பீத்துவேங்க. வேறென்ன தெரியும்? '
'அடேயப்பா புதிசா ஏதோ தெரிஞ்சு வைச்சிருக்கிற போலிருக்கே ' என்று கனகரத்தினம் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணலாக்கிச் சிரித்தான். 'என்ன அமெரிக்கன்காறங்கள் சந்திரனுக்குப் போயிற்றாங்களா? அல்லது நூறு மெகடன் அணுகுண்டை வெடிக்க வைச்சிற்றாங்களா?
அல்லது கென்னடிதான் ஒரு கொம்யூனிஸ்ட்டாக மாறியிற்றேரா?"
'போங்களப்பா, உங்களுக்கு எப்பவாவது நல்லதாக ஏதாவது கதைக்க முடிகிறதா? ' என்றாள் கௌரி.
கனகரத்தினத்திற்குச் சாடையாகச் சுட்டது. எப்போதாவது அவன் நல்லதாக இல்லாத, ஏதாவதைப் பற்றிக் கதைத்ததுண்டா? நிரந்தரப் புரட்சி, தொழிலாளர் எழுச்சி, சோஸலிஸ அமைப்பு, முதலாளி வர்க்க ஒழிப்பு என்பவற்றைவிட நல்லவை வேறு இருக்கிறதா?
'சரி நீ நல்லதாக ஏதாவது கதை பாப்பம்?' என்றான் கௌரியைப் பார்த்து வேண்டுமென்றே.
'சுசீலா இருக்கே?' என்று ஆரம்பித்தாள் கௌரி.
ஆனால் கனகரத்தினம் விடவில்லை. 'எந்தச் சுசீலா?' என்று இடைமறித்தான்.
'நம்மோடு வாசிற்றியில் இருந்துதே அது' என்றாள் அவள்.
'அதுக்குப் பிறந்த முதல் குழந்தை செத்துப் பிறந்திருக்காம். முகம், கண், மூக்கெல்லாம் அசிங்கமாக இருந்திச்சாம். என்னவோ வியாதியெண்டு இப்ப கோமளா சொல்லிற்றுப் போகுது '.
'அவளுக்கு வீ.டி.யாக்கும்' என்றான் கனகரத்தினம்.
'யாருக்கு?'
'பிள்ளையைப் பெத்த சுசீலாவுக்கோ, கிசீலாவுக்கோ?'
'சும்மா பைத்தியம் போல் கதைக்காதீங்க' என்று பதை பதைத்துச் சொன்னாள் கௌரி. 'அவள் எவ்வளவோ நல்லவள். அவள் ஒரு றிலிஷியஸ் கேள்'
'அப்ப அவளின்ர புருருனுக்காக்கும்' என்றான் கனகரத்தினம் எந்தளவிலும் தன் காரணம் பிழைக் காததுபோல்.
கௌரிக்கு, கனகரத்தினம் இன்னும் கூடுதலான ஒரு பாவத்தைச் செய்துவிட்டது போல் பட்டிருக்க வேண்டும். அவளின் பதைபதைப்பு இன்னும் கூடிற்று. 'மற்றவையெல்லாம் தன்னைப்போல் எண்ட எண்ணமாக்கும். ஏனிப்பிடி வீணாப் பாவத்தைத் தேடிக் கொள்றேங்க? அது ஒரு சாமிப் போக்கு, சுசீலாவை விட நல்லம். என்னுடைய (Batchmates) பற்ச்மேற்ஸைப் பற்றி எனக்குத் தெயாதா? மூண்டு வருசத்துக்கு முந்தியிருந்த உங்களுக்கென்ன தெயும்? நீங்கதான் முந்தி அங்கையும், இஞ்சையும் திரிஞ்சீங்களெண்டு இப்பேயும் கதைக்கினம். '
'சரி அதுக்கு இப்பவேன் சண்டே ஸ்பெசல் கும்பிடு போட்டனி? சுசீலாவின்ர குழந்தை உயிர்த்தெழ வேண்டுமெண்டா? ' கனகரத்தினம் கதையை மாற்றி னான்.
'இல்லை, உங்கட பிள்ளைதான் சுகமாகப் பிறக்க வேண்டுமெண்டு. மூன்று வருசத்திற்குப் பின் அருமை பெருமையாக கிடைச்சிருக்கெண்டு அக்கறை இருக்கா உங்களுக்கு?'
கனகரத்தினம் ஓவென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான். 'அதுக்குத்தான் நீ இப்ப ஸ்பெஷல் கும்பிடு போட்டாய்? பைத்தியம். நீ எரிக்கிற கற்பூரமும், ஊதுபத்தியும் நம் நாட்டுப் பணத்தை ஷப்பானுக்கும், இந்தியாவுக்கும் அனுப்புமேயொழிய கடவுளட்ட ஒண்டும் சொல்லாது. இந்த விசயங்களுக்கெல்லாம் கடவுளிட்டக் கேட்கிறதும், காசி, கதிர்காமம் போறதுவும் இந்தக் காலத்திலை செய்யிறதில்லை. அது அந்தக் காலம். இது அணுக் குண்டுக் காலம் கௌரி, இது அணுக் குண்டுக்காலம், விஞ்ஞானம் எதை யும் செய்யும். கடவுளிட்டக் கேட் கிறத விட்டிற்று டொக்டரிட்டப் போகோணூம்'.
'சரி, சரி உங்கட லெக்ஸர் போதும்', என்று சொல்லிக் கொண்டே, அவன் அதை முடிக்கமுன்பே, கௌரி தன்பாட்டில் குசினிப்பக்கம் போய்விட்டாள். கனகரத்தினம் தொடர்ந்து சிரித்தான். அது ஒரு வெற்றிச் சிரிப்பு.
****
பரீட்சார்த்தமாக வெடிக்கப்பட்ட அதிக மெகட்டன் அணூக்குண்டுகள் அவனைப் பொறுத்த வரையில் அதே செய்தியைத்தான் கொடுத்தன. வழி எப்படியாய் இருப்பினும் தன் நோக்கம் தலை சிறந்தது என்பது அவனது நம்பிக்கை. அதைக் கௌரியும் உள்ளுக்குள் உணர்ந்திருந்தாள் என்பது அவனுக்குத் தொியும். ஆனால் கௌரி வழியைப் பற்றிக் கவலைப்பட்டாள். கனகரத்தினத்துக்கு அந்தக் கவலை இருக்கவில்லை. மாறாக அது ஒரு பழைய பரம்பரைப் பிற்போக்குச் சுபாவம் என்று சிரித்தான். அடுத்த இரண்டு மாதங்களாக கௌரி கவலைப்படும் போதெல்லாம் கனகரத்தினம் அப்படித்தான் சிரித்தான். அப்படித்தான் பகிடி பண்ணினான். ஆனால், அடுத்த இரண்டு மாதம் வரைக்குந்தான்.... அதற்குப் பின்?
கௌரி கண்திறந்து ஐந்தாறு நிமிடங்களாகின்றன. கஸ்டப்பட்டு பிரசவித்தபின் கௌரி இப்போதுதான் கண் திறந்திருக்கிறாள். நிதானமாக அறிவு வந்தபின் அங்குமிங்கும் அவள் கண்கள் தேடுகின்றன.
கனகரத்தினத்தின் முகத்தில் அப்படி எழுதி ஒட்டி விட்டிருக்கிறதா?
'பிள்ளை எங்கே?' என்ற பயத்தோடு அவள் கேட்கிறாள்.
பிள்ளை கிடக்கும் பக்கத்தைக் கனகரத்தினம் காட்டுகிறான். போர்வையை அகற்றிக் காட்டும்படி அவள் வேண்டுகிறாள். பேசாமல் நிற்கிறான் கனகரத்தினம். அவளால் பொறுக்க முடியவில்லை. கஸ்டத்தோடு தானே முயல்கிறாள். அதைப் பொறுக்க முடியாமல் கனகரத்தினமும் உதவுகிறான். போர்வை அகற்றப்பட்டு உருவம் தெரிகிறது. அடுத்தகணம் கௌரி கீச்சிட்டுக் கொண்டே முகத்தைத் திருப்பி விடுகிறாள்.
கனகரத்தினத்தக்கு எப்படித் தேற்றுவதென்று தெரியவில்லை. ஐந்து நிமிடங்களுக்குப் பின் கனகரத்தினம் பக்கம் அவள் பார்வை திரும்புகிறது. அதில் நிற்கும் அந்தக் கேள்வி?
'அப்போ உங்களுக்கும் வீ.டி தானா ? உங்களுக்கும் அதுதானா ? '
'இல்லை, கௌரி, இல்லை. இது என்ன வியாதியெண்டு தெரியவில்லையாம். அணூக்குண்டுகளின் றேடியோ அச்டிவ் துசுகளினால் வந்திருக்கலாம் எண்டு டொக்டர்ஸ்மார் சொல்லீனம்' என்று கனகரத்தினம் சொல்லும் போது அவனுக்குக் கண்ணீர் வடிகிறது.
கௌரியின் கண்கள் விரிகின்றன. பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் மறுபக்கம் தலையைச் சாய்த்துக் கொள்கிறாள். முன்பு இருந்த விம்மல், குலுங்கல் ஒன்றும் இல்லை. அனால் கண்களில் நீர் ஆறாகப் பெருகி ஓடுகிறது. கனகரத்தினத்தின் நெஞ்சை அந்தக் காட்சி நெருடுகிறது. என்னத்தை நினைத்து அவள் அழுகிறாள்?
கடைசியில் உங்கள் விஞ்ஞானம், உங்கள் அறிவு வழியல்ல. நோக்கமும் முடிவுந்தான் முக்கியம் என்ற கொள்கை எல்லாம் இதைத்தானா செய்தன? என்றா நினைக்கிறாள்?
'அழாதே கௌரி, அழாதே, எல்லாம் கடவுளின் செயல்' என்று என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் உளறினான் கனகரத்தினம்.
'இல்லை' என்றாள் கௌரி. முனகினாலும் நிதானமாகக் குரல் வந்தது. 'இல்லை, இது கடவுளின் செயலல்ல, உங்கள் முன்னேற்றம் எங்கட கடவுளையே கொண்டு போட்டுது'.
*
----------------------------
தேடல் (pdf)
கோட்டை (pdf)
இரத்தம் (pdf)
கோயில்கள் (pdf)
பிறத்தியாள் (pdf)
தொழுகை (pdf)
சாமியாரும் பணக்காரரும் (pdf)
சபதம் (pdf)
-------------------------------------
மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாட ஐ. நா. சபை ஏற்பாடு செய்கிறது. இலங்கை இந்தியர் பிரச்சனைக்குச் சிறீமாவும் சாஸ்திரியும் ஓர் முடிவு கண்டிருக்கின்றனர். ஐந்தேகால் இலட்சம் பேர்களை இந்தியா ஏற்றுக் கொள்ளும். மூன்றரை இலட்சம் பேரை இலங்கை ஏற்றுக் கொள்ளும். மிகுதி ஒன்றரை இலட்சம் பேர்களின் தலைவிதி பின்னர் நிர்ணயிக்கப்படும். கொங்கோவில் அமெரிக்காவும் பிரிட்டனும் பெல்ஜியமும் ஆக்கிரமிப்புச் செல்வதாக ஓர் பிரஞ்சு அதிகாரி புகார் செய்கிறார். யீமனில் குடியரசு வீரர்களுக்கும் முடியரசு வீரர்களுக்குமிடையே தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது. போரில் ஈடுபட்ட எகிப்திய வீரன் ஒருவனின் உடல் யாரும் தேடுவாரற்று அரபிய பாலைவனத்தில் தலைவேறு முண்டம் வேறாகச் சிதைந்து கிடக்கிறது. கொங்கோவில் புரட்சிக்காரர்கள் எழுபதினாயிரம் பேரைக் கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய வியட்னாமில் அரசாங்கத் துருப்புகளுக்கும் வியட்கொங் துருப்புகளுக்குமிடையே நடந்த போரில் எழுபது வியட்கொங்குகளும் ஒரு அமெரிக்க இராணுவ அலோசகர் உட்பட பதினைந்து அரசாங்க வீரர்களும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எல்லையில் சீனா திரும்பவும் படை குவிப்பதாக இந்தியா குற்றஞ் சாட்டுகிறது.
வெளி
சச்சி சும்மா உட்கார்ந்திருந்தான். கிணற்றடியில் வீடு கட்டுவதற்காக வெட்டி அரிந்து அடுக்கப்பட்டிருந்த அரிகல்லுக் கட்டின்மேல் பேசாமல் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் ஒரு குறிப்புக் கொப்பி. காற்றில் படபடத்த வண்ணம் அதற்குள் சில புல்ஸ்கப் தாள்கள். எல்லாவற்றுக்கும் மேலே ஒரு புத்தகம். ஏர்ன்ஸ்ட் பிஷரின் "கலை பற்றிய மார்க்ஸீயக் கண்ணோட்டம்." ஆனால் சச்சிக்கு எதுவும் செய்ய மனமில்லை. படிக்கவும் மனமில்லை, எழுதவும் மனமில்லை. அவன் பேசாமல் உட்கார்ந்திருந்தான். வெளியே கிணற்றடி வேலிக்கு மேலால் வயல் வெளி விரிந்து கிடந்தது. ஒரே வெய்யில். கூடவே மழையில்லாத வாடைக்காற்றின் குளிர். பயிர்கள் வாடிக் கருகிப் போய் கதிர் வராமலேயே வைக்கோலாகிக் கொண்டிருந்தன. வெய்யிலின் கோரத்தைக் காட்டுவது போல் கானல் கீற்றுகள் நெளிந்து நெளிந்து தூரத்தில் நிழலாட்டம் காட்டின. சச்சிக்குச் சங்கரரின் நினைவு வந்தது. கயிறு பாம்பாகத் தெரிகிறது, கானல் நீராகத் தெரிகிறது. ஆனால் அந்த நினைவை அவன் வளரவிட விரும்பவில்லை. வளர்க்க அவனால் முடியவில்லை. அவை எல்லாம் அப்போது அவனுக்குத் தேவையற்ற அனாவசியங்களாகத்தான் நின்றன. அப்படியே பேசாமல் செயலற்றுச் சிந்தனையற்றுச் சும்மாவே இருந்தான். அந்த நிலையை வேறு எந்தச் சிந்தனையாலும் அவன் குழப்ப விரும்பவில்லை. அவனால் குழப்ப முடியவில்லை. அப்படியே கல்லுக்கட்டில் இருந்து பார்க்கும்போது வேலிக்கு மேலால் தெரிந்த வயல் வெளி மிக இதமாக இருந்தது. அதுவே அவனுக்கு அப்போது போதுமாகப் பட்டது. பொதுவாக அந்தக் கல்லுக்கட்டில் ஏறி வயல்வெளியைப் பார்க்கத் தொடங்கிவிட்டால் அந்த இடத்தைவிட்டு அவனை எழுப்புவது கஷ்டந்தான். இப்போதும் அப்படித்தான் இருந்தது.
சச்சிக்கு வேறு எந்தக் கவலையும் இல்லை என்றுகூடச் சொல்ல முடியாது. நேற்றுத்தான் அவனுடைய ஒரே ஒரு அக்காவுக்கு காசம் என்றுகண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தார்கள். அதுவே போதும் மற்ற்வசர்களை மாதக்கணக்காகக் கவலைப்படச் செய்வதற்கு. சச்சிக்கும் கவலைதான். ஆனால் அந்தநேரத்தில் ஏனோ அவனால் அதைப்பற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாமலிருந்தது. அவனுக்குக் கூட அப்போது சுகமில்லை. ப்ரொங்கைட்டிஸ். கரட்டுக் கரட்டென்று நெஞ்சுக்குள் சளி இழுபட்டுக் கொண்டுதான் இருந்தது. இரவு முழுவதும் ஒரே கொக்கல். இப்போ மூச்சையடைக்கும் வாடைக்காற்றுச் சேர்ந்த அந்த வெய்யிலில் இருப்பதுகூட மிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. அதோடு அதற்கு வட்டியாக இரவு முழுதும் இழுத்துத் துலைக்க வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியாமலில்லை. இருந்தும் அவன் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் அப்படியே இருந்தான். எல்லாவற்றுக்கும் ஈடுகட்டுவது போல் வெளியே வயல்வெளி விரிந்து கிடந்தது. வாடைக் குளிர்காற்று, கூடவே கொழுத்தும் வெய்யில், கருகிப் போகும் பயிர்கள், கானல் திரை, வற்றிப் போகும் குளம், வரட்சி காட்டத் தொடங்கிவிட்ட வயல்வெளி - இவை எல்லாம் அழகுக்காட்சிகளா அப்படி மெய்மறந்து உட்கார்ந்திருப்பதற்கு?
சச்சிக்கு அந்தச் சந்தேகம் எழுவதில்லை. அவன் தன்னை மறந்திருந்தான். தூரத்துக் குளத்து நீர் அலை எழுப்ப பச்சைப் பசேலென்று வயல்வெளி பயிர்களோடு காட்சியளித்தாலும் சரி, எல்லாமே வரண்டு கருகிப்போய் கானல் எழுப்பினாலும் சரி சச்சிக்கு எல்லாம் ஒன்றுதான். அது அழகு இது அழகிலை என்று அவன் ஒதுக்குவதில்லை.அழகிலும் சரி எதிலும்சரி முரண்பாடுகளுக்கும் வித்தியாசங்களுக்கும் இடம் இருப்பதாக அவன் நினைப்பதில்லை. முரண்பாடு இருந்துதான் ஆகவேண்டும் என்று யாராவது அழுத்தினால் அழுத்துபவர்களைத் திணறடிக்க விரும்புபவன் போல் முன்னதைவிடப் பின்னதைத்தான் அவன் தேர்ந்தெடுப்பான். பச்சைப் பசேலென்று பயிர்களோடு தெரியும் வயல் வெளியைவிடக் காய்ந்து கருகிப்போய் வரண்டு தெரியும் வயல்வெளிதான் நீடித்த அழகுடையது, நிரந்தரமானது என்று அவன் வற்புறுத்துவான். அவன் என்ன ஓர் அனாகிஸ்ட்டா? ஓர் சூன்யவாதியா? சச்சிக்கு அந்த விசாரணை கிடையாது. லேபல் ஒடுவது அவனுக்குப் பிடிக்காத வேலை. அது அறிவாளிகள் என்று கூறப்படுபவர்களின் தொண்டு. அவனுக்குப் பிடித்தது சும்மா இருப்பதுதான். சும்மா பார்த்துக் கொண்டிருக்க வயல்வெளி இருந்தது. ப்ரொங் கைட்டிஸ் இல்லாதிருந்தால் பக்கத்தில் கூடவே ஒரு கள்ளுப்போத்தலும் இருந்திருக்கும். கள்ளுக் குடிப்பது இன்றைய போலி மரியாதை மரபை உடைக்கும் ஓர் செயல் என்று சில புரட்சிவாதிகள் கருதலாம். ஆனால் சச்சிக்கு அதன் அர்த்தம் அதைவிடப் பெரியது. அவனுக்கும் அந்த வயல்வெளிக்குமிடையே இருந்த நேர, இட, உருவ வித்தியாசங்களை எல்லாம் முற்றாக அழித்து வெளியோடு வெளியாக ஒன்றிவிடக் கள்ளு உதவியாயிருக்கும். இருந்தாலும் கவலை இல்லை. கள்ளு இல்லாமலேயே அதோடு ஒன்றிவிட அவனால் முடியாது என்றில்லை. இப்போ அப்படி ஒன்றிப்போய்த்தான் அவன் உட்கார்ந்திருந்தான்.
திடீரென்று கேட்ட கோயில் மணி ஓசை சச்சியைத் திடுக்கிட வைத்தது. ஆனால் அதற்குப்பின் அதோடு ஒட்டிவந்த ஓர் பரவச உணர்வு அவனது உடலைப் புல்லரிக்க வைத்தது. வயல்வெளியில் அவன் நடந்து வரும் வேளைகளில் எங்கிருந்தாவது வரும் கோயில் மணி ஓசை அவனால மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒரு புளகாங்கிதத்தை வழக்கமாகக் கொடுப்பதுண்டு. ஆனால் இப்போதைய நிலையில் அதை அனுபவிப்பது உடலைப் புல்லரிக்க வைத்தது. அந்த நேரத்துக்கும் நிலைக்கும் மிகப் பொருத்தமான ஓர் ஓசை அது. யாரோ அவனது நிலையை உணர்ந்து, ஆமோதித்துச் செய்வித்ததுபோல் வந்தது அந்த ஓசை.
சச்சி வடகிழக்காக இருந்த தன் பார்வையை வலதுபக்கமாகத் திருப்பினான். அங்கே அவன் இருத வளவுக்குரிய கிணற்று வேலியை அடுத்து ஊர்மனைக்குள் ஓர் ஓடைபோல் உட்புகுந்திருந்த வயல்வெளியின் ஓர் கிளையில் மணிக்கூட்டுக் கோபுரத்துடன் நன்குபக்க மதில்சுவருடனும் காட்சி கொடுத்தது பிள்ளையார் கோயில். யாரும் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஐயர் வந்துவிட்டார் என்பதற்கு அறிகுறியாக வெளியே மதில்சுவரோடு சைக்கிள் மட்டும் சார்த்தப்பட்டு நின்றது. ஆட்கள் இன்றி ஆரவாரமற்றுத் தெரிந்த அந்தக் காட்சி வயல்வெளிக்கும் கோயிலுக்குமிடையேயுள்ள ஒற்றுமையை அதிகரிக்கச் செய்து அதன் அழகை இன்னும் கூட்டுவதுபோல்தான் சச்சிக்குத் தெரிந்தது. பிள்ளையார் கோயிலிலிருந்து சச்சியின் பார்வை திரும்பவும் வடகிழக்காகத் திரும்பி தூரத்தே குளத்துக்கும் அப்பால் சிவப்பு ஓட்டுக் கூரையோடும் கோபுரத்தோடும் தெரிந்த நாச்சியார் கோயிலை நோக்கிச் சென்றது. அது அந்த வயல்வெளிக்குரிய இரண்டாவது கோயில். மூன்றாவது கோயில் அவனுக்குப் பின்னால் பார்வைக்குத் தெரியாமல் வயல்வெளியின் தெற்கு மூலையில் இருந்தது. சிவன் கோயில். சச்சி அந்த நேரத்தில் அதையும் நினைத்துப் பார்த்த்கு கொண்டான். அங்குகிங்குமாக அவை மூன்றும் நட்டுக் கொண்டு நின்றன. அவற்றுக்கிடையே வயல்வெளி நீண்டு விசாலித்துக் கிடந்தது. ஒரு பெரிய குளம். கருகிப்போகும் பயிர்கள். கானல். தூரத்தே ந்ல்லை வைப்பது போல் வடக்கூர் வேலி.
"என்ன அழகு!"
சச்சி தன்பாட்டில் முணுமுணுத்துக் கொண்டான்.
ஆனால் அதிகநேரம் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. வெளியோடு வெளியாய் அவன் ஒன்றி விட்டிருந்த அந்த வேளையில் தூரத்தே வடக்கூர் வேலியோடு ஏதோ ஓர் உருவம் மிக வேகமாக அசைந்து கொண்டிருந்த காட்சி அவனை வேறு திசையில் இழுத்துவிட்டது. அசைவற்ற அந்த மோன வெளியில் அந்த அசைவு பெரியதோர் முரண்பாடாகத் தெரியாவிட்டாலும் சச்சியின் ஆச்சரியத்தைக் கிளறக் கூடியதாய் இருந்தது.
'அது என்ன, அப்படி வேகமாகப் போகுது?'
சச்சிக்கு ஆரம்பத்தில் அது ஏதோ ஓர் யந்திரமாகவேதான் தெரிந்தது. ஆனால் கடைசியில் அது காருமல்ல யந்திரமுமல்ல சாதாரண ஒரு மனித உருவந்தான் என்பது கொஞ்ச நேரத்துக்குள் தெளிவாகி விட்டது. தூரத்தே வேகமாகப் போவதால் கால்களின் அசைவு தெரியாமல் ஏதோ யந்திரம் பறப்பது போன்ற காட்சி. அவ்வளவுந்தான். ஆனால் ஏன் அந்த அவசரம்?
சச்சிக்கு ஆச்சரியம் போய் இப்போ அது வேடிக்கையாகத்தான் இருந்தது.
'அதோ அப்படி வேகமாகப் போகும் அந்த சீவனைப் பற்றி, அதன் இப்போதைய நிலையைப் பற்றி இந்தப் பென்னம்பெரிய உலகத்தில் யாராவது இப்போது அக்கறைப் படுகிறார்களா? அல்லது அத்தனை வேகத்தில் போகும் அந்தச் சீவனுக்குத்தான் தன்னைப் பற்றியும் தன் நிலையைப் பற்றியும் சரியானதோர் உணர்வு சாடையாகவாவது இருக்குமா?'
இரண்டுக்கும் சச்சிக்கு இல்லை என்றே பட்டது. 'பிறகேன் அந்த அவசரம்? அது எங்கே அப்படி அவசரமாகப் போகிறது?'
சச்சி பார்த்துக் கொண்டே இருந்தான். அது போய்க் கொண்டே இருந்தது. போகப் போக தூரத்தில் நிழலாட்டம் போட்ட கானல் திரையோடு அந்த உருவம் கரைந்து கொண்டே இருந்தது. கடைசியில் அதோடு இரண்டறக் கலந்து விட்டது போல் முற்றாக மறைந்து விட்டது.
திரும்பவும் சச்சி வயல்வெளியோடு ஒன்றிப்போய் சும்மா இருந்தான். இப்போ அப்படி இருப்பதில் ஒரு புதிய திளைப்பு. அவனது நிலையை ஆமோதிப்பதுபோல் டாங், டாங், டாங் என்று திரும்பவும் வந்தது மணியோசை. இப்போது அது பின்னாலிருந்த சிவன் கோயிலின் பெரிய மணியோசை.
--------------------------------------
குறிப்பு
இத்தொகுதியில் இடம்பெறும் "சபதம்" என்ற கதை சங்கப் பாடல்களின் அமைப்பை இக்காலச் சிறுகதைகளின் உருவ அமைப்புக்கு ஓர் பின்னணியாயாக எடுத்து இரண்டையும் இணைக்க முயலும் ஓர் முயற்சி. "வீழ்ச்சி"யும் அப்படியே. கதைகளின் நோக்கத்துக்கு அந்த அமைப்பு அருமையாகப் பொருந்துகிறது என்று நினைக்கிறேன். "தேடல்" என்ற கதை யதார்த்தத்துக்குள்ளும் கனவுக்குள்ளும் பிடிபடாமல் நிற்கும் ஓர் விதக் 'காஃப்கா' ரகக் கதை. காஃப்காவின் கதை அமைப்புக்குத் 'தேடல்' பொருந்துகிறதென்று சொல்ல முடியாது. பொருந்த வேண்டுமென்று எழுதப்படவும் இல்லை. கதை கூறும் கருத்தும் வேறானதே. இருந்தாலும் படிப்பவர்களின் வசதிக்காக, வேறு பெயர் இல்லாதபடியால், அதை ஓர் 'காஃப்கா' ரகக் கதை என்று சொல்லலாம். "வெளி"யில் எமிங்க்வே சில கதைகளில் உருவாக்கிய உத்தியைப் பின்பற்றி இக்காலத்துக்குரிய ஓர் anti-short story யை நம் வெதாந்தப் பின்னணிக்கேற்ற வகையில் வெற்றிகரமாக எழுதியுள்ளேன் என்று நினைக்கிறேன். கடைசியில் கதைத்தொகுதி முழுவதும் ஓர் anti-மரபு, anti-உருவம், anti-அமைப்புத் தொனி அடிநாதமாக நிற்கிறது என்றால் ஆச்சரியப்படத் தேவையில்லை. உருவங்களும் சடங்குகளும் உருவங்களுக்கும் சடங்குகளுக்கும் அப்பால் பட்ட ஒன்றோடு இணைய உதவுவதற்குத்தானே? அவையே முடிந்த முடிவாக மாறிவிடுவதற்கல்லவே?
இறுதியாக இத்தொகுதி பற்றி அப்போதைக்கப்போது ஆலோசனை கூறி உதவிய நண்பர்கள் எம். ஏ. ரஹ்மானுக்கும் எஸ். பொன்னுத்துரைக்கும் என் நன்றி உரியது.
- மு. த.
----------------
கருத்துகள்
கருத்துரையிடுக