பாணபுரத்து வீரன்
நாடகங்கள்
Back
பாணபுரத்து வீரன்
வெ. சாமிநாத சர்மா
1. பாணபுரத்து வீரன்
1. காப்புரிமை அறிவிப்பு
2. நன்றி
3. மூலநூற்குறிப்பு
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. அணிந்துரை
6. பதிப்புரை
7. நுழையுமுன்…
8. பாணபுரத்து வீரன்
9. நாந்தி
10. நாடக பாத்திரங்கள்
2. முதல் அங்கம்
1. முதற் களம்
3. இரண்டாம் அங்கம்
1. முதற்களம்
2. இரண்டாங் களம்
3. மூன்றாங் களம்
4. மூன்றாம் அங்கம்
1. முதற்களம்
2. இரண்டாங் களம்
3. மூன்றாங் களம்
5. நான்காம் அங்கம்
1. முதற் களம்
2. இரண்டாங் களம்
6. ஐந்தாம் அங்கம்
1. முதற் களம்
2. இரண்டாங் களம்
பாணபுரத்து வீரன்
வெ. சாமிநாத சர்மா
நன்றி
இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : பாணபுரத்து வீரன்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 11
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16+296=312
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 195/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 24339030
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002. >டோரதி கிருஷ்ணமூர்த்தி
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
பதிப்புரை
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல்
களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி
யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
- படைப்பு இலக்கியமே நாடக இலக்கியம் ஆகும். மாந்த இனம் தோன்றியபொழுதே உணர்ச்சிகளும் தோன்றின. மொழி அறியாத மாந்தன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு இன்பம் - துன்பம் கண்ட காலத்தும் தம்முடைய உணர்வு களைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் விருப்பமாகவே ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே பின்னர் நாடகமாக செழுமையுற்றது.
- அரசியல், வரலாறு, மொழிபெயர்ப்பு, அறிவியல் சார்ந்த நூல்களைத் தமிழுலகுக்குத் தம் பங்களிப்பாகச் செய்த சாமிநாத சர்மா இந்திய நாட்டின் விடுதலையையும், தமிழகத்தின் குமுகாயப் போக்கையும் நெஞ்சில் நிறுத்தி பாண புரத்து வீரன், அபிமன்யு, மனோதருமம், உத்தியோகம், உலகம் பலவிதம் போன்ற நாடகங்களைப் படைத் தளித்தார்.
- மனோதத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகம் _மனோ தருமம்_ ஆகும். இதன் பின்னணியும், படைப் பாற்றாலும் நாடகத்திற்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஒரு பெண்ணின் மரணச் செய்தி அந்தக் குடும்பத்தாரிடம் பக்குவ மாக எடுத்துரைக்கப்படும் நிலையும், நுண்ணிய மனவுணர்வு களின் உரையாடல்களும் வாழ்க்கை நிலையற்றது என்பதும் இந்நாடகத்தின் மூலம் அறியும் செய்திகள்.
- பழந்தமிழ் பண்பாட்டின் பண்டைச் சிறப்பும், மேலை நாகரிகத்தால் புண்ணாகிப் போன தமிழர் நிலையும், நாட்டின் நலனை மறந்து வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை பார்ப்பதும். நரம்பெழுந்து உலரிய . . (புறம்.278) என்னும் புறநானூற்று வரி _உத்தியோகம்_ எனும் இந்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வரியாகும்.
- பாரதக் கதையை தழுவி எழுதப்பட்ட நாடகமே _அபிமன்யு._ பழமைக்குப் புதுப்பொலிவூட்டும் நாடகம். பழய நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளுக்குப் புதிய ஆடை அணிவித்து, புத்துணர்ச்சியூட்டி தமிழர்களுக்குக் காட்சியாக அமைத்து தந்த நாடகமே அபிமன்யு.
- செந்தமிழ் நாடெனும் போதினிலே. . .”, காவிரி தென் பெண்ணை பாலாறு . . ”., செல்வம் எத்தனையுண்டு. .”., என்னும் பாரதியின் இந்த வரிகள் இந்நாடகத்தைப் படிப்பார்க்கு தமிழ்மொழி, நாட்டுப்பற்றும், விடுதலை உணர்வும், வீர முழக்கமும் ஏற்படுத்தும்.
- காட்லாந்து விடுதலைப் போராட்டக் கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு வழி நூலே _பாணபுரத்து வீரன்_ என்னும் இந்நாடகப் படைப்பு. குறியீடுகளும், காட்சியமைப்பு களும், உரையாடல்களும் இந்தியத் தேசிய விடுதலையைக் களமாக வைத்து எழுதப்பட்டது.
- ஆங்கில வல்லாண்மையின் சூழ்ச்சிகளையும், மக்கள் எழுச்சியையும் நடுவமாகக் கொண்டு விடுதலை! விடுதலை!! விடுதலை!!! என்னும் வீர முழக்கங்களை மக்களுக்குக் கண்ணாடிப் போல் காட்டுவது. கணவரின் பிரிவும், தன்னை மறப்பினும் தாய் நாட்டை மறவாதீர் என்று கணவனை வேண்டும் வீரமகளின் குறிப்பு.
- தமிழ் நாடக உலகில் முதன் முதலில் ஓரங்க நாடகத்திற்குப் பொன்னேர் பூட்டியவர் சாமிநாத சர்மா. _உலகம் பலவிதம்_ என்னும் ஓரங்க நாடகம் குமுக வாழ்வில் மாறுபட்ட உணர்ச்சி களையும், வேற்றுமைகளையும், சுவையான நிகழ்ச்சிகளையும் படைத்துக்காட்டுவது.
- அரசியல் - இலக்கியம் எனும் கருத்தோட்டத்தின் அழுத்தத்தை மீறி ஒரு நாடக ஆசிரியனாக இருந்துகொண்டு இந்திய விடுதலை யுணர்விற்கு ஊக்கம் ஊட்டியவர். நாட்டுப்பற்றும், குமுகாய ஒழுக்கமும் அமைந்த நாடகம். இரண்டாம் உலகப் போரின் காலச்சூழலில் வெளிவந்த நாடகம். இதில் பதின்மூன்று நாடகங்கள் அடங்கியுள்ளன.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
பாணபுரத்து வீரன்
நாந்தி
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகை யொன்றை நான் படித்துக் கொண்டிருந்த காலத்து, காத்லாந்து தேசத்திற்கு நல்வாழ்வளித்த ராபர்ட் ப்ரூ என்பானைப் பற்றி ஒரு அழகியக் கட்டுரையைக் கண்டேன். இளமையில் இவனைப் பற்றிப் படித்திருந் தேனாயினும், இப்பத்திரிகையின் கண் பொலிந்த கட்டுரை என் மனத்தைக் கவர்ந்ததுமன்றி, தமிழில் அக்கதைப் போக்கைத் தழுவி மனத்தில் ஒரு நூல் எழுத வேண்டுமென்ற அவாவையும் எழுப்பியது. அதன் முடிவே இச்சிறிய நாடகம். நாடகாசிரியன், தோற்றத்துக்கும் நடிப்புக்கும் இயைந்த வாறு கதையை மாற்றிக் கொள்ளலாம் என்ற உரிமையை இந்நாடக விஷயத்தில் நன்கு அநுபவித்திருக்கிறேன். ஆதலின் இதனை வழி நூலாகக் கொள்க.
இந்நாடகத்தை எழுத ஆரம்பித்த காலத்து இதனை ஒரே தொடக்கத்தில் எழுதி முடிக்க வேண்டுமென்று எண்ணங் கொண் டேன். ஆனால் அவ்வெண்ணத்தை அநுபவத்தில் நிறைவேற்ற முடியவில்லை. 1921ஆம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாந்தேதி தொடங்கி இந்நாடகத்தில் நான்கு களங்கள் வரை, தமிழ் நாட்டுக்குத் திலகமாயிலங்கி வரும் நவசக்தி என்னும் வாரப் பத்திரிகையில் நாடகாசிரியன் என்ற புனைபெயருடன் வெளி யிட்டு வந்தேன். பிறகு சில காரணங்களால் முற்றும் வெளிவராமல் நின்றுவிட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து, - 1924ஆம் வருஷத்தில்- மீண்டும் நவசக்தியில் இது முழுவதும் வெளியாயிற்று. அதனையே ஒருவாறு சீர்திருத்தி புத்தக வடிவாக இதுகாலை வெளியிட்டிருக் கிறேன். இதற்கு மகிழ்ச்சியுடன் அங்கீகாரம் தந்த நவசக்தி ஆசிரியருக்கு எனது வந்தனங்கள் உரியன.
இதனை வெளியிட இசைந்த எனது நண்பர், எ. ராதா அண்ட் கம்பெனியின் சொந்தக்காரரான ஸ்ரீமான் அ.கோ. சீநிவாசா சாரியாருக்கு வந்தனம். இந்நூலின் இரண்டு பதிப்புகளை மாத்திரம் அச்சிட்டுக் கொள்ள அவருக்கு உரிமை அளித்திருக்கிறேன். இந்நூலைச் சார்ந்த பிற உரிமைகள் யாவும் என்னுடையனவே. முதற் பதிப்புப் பிரதிகள் முடிந்ததும் இரண்டாம் பதிப்பை வெளியிடும் போது என் அங்கீகாரத்தைப் பெற்றுப் பின்னர் வெளியிடுவதற்கு அவர் இசைந்திருக்கிறார்.
அடியேனது வேண்டுகோளுக்கிணங்கி, புன்மொழிகளாலாய இந்நூலுக்குச் சிறந்த ஒரு முன்னுரை உதவிய தமிழ்நாட்டுக் கவியரசியாக இலங்கும் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் அவர்கட்கு எனது வணக்கங்களைச் செலுத்துகிறேன். அம்மை யாருடைய காந்தி புராணத்தைப் படித்து ஈண்டு வரையமுடியாத ஓர் உணர்ச்சியைப் பல்கால் அடைந்திருக்கிறேன். கவியரசி என்பதைத் தவிர வேறெவ்வித அடை மொழியையும் அம்மை யார்க்கு இங்கு அடியேன் அளிக்க வில்லை. அவரை அதிகமாகப் புகழ நான் அருகனல்லேன் என்பதே அதற்குக் காரணம். கவிஞரைச் சிறப்பிக்கக் கவிஞரே உரியர். அங்ஙனமிருக்கும் போது, புல்லனேன், பண்டிதையார்க்கு எங்ஙனம் நன்றி செலுத்த வல்லேன்? உள்ளம் நிறைந்த அன்பினனேனும், அதை வாயால் எடுத்துரைக்கவும் கரத்தால் வரையவும் கூர்த்த மதி கொண்டிலேன். எனது உள்ளத்தில் பொங்கியெழும் அன்புவாரத்தை என் அன்னை போன்ற இவ் வம்மையாருடைய திருவடிகளுக்கு அபிஷேகம் செய்கிறேன். சக்தி வடிவாயிலங்கும் பெண் மக்களுக்கு எல்லா நலன்களும், எல்லா உரிமைகளும் அளிக்க வேண்டுமென்றே கொள்கையுடைய அடியனேன் வரைந்த இச்சிறு நூல் ஒரு சக்தி சொரூபியின் ஆசிபெற்று வெளிவருவது எனக்குக் கழிபேருவகை கொடுக்கிறது. இஃதெனது பாக்கியமேயாகும். தண்டமிழ்த் தேவிக்கும் பாரத மாதாவுக்கும், ஸ்ரீமதி பண்டிதையார், இன்னும் பல பாமாலைகள் சூட்டுவதற்குப் போதிய திடனையும் நீடிய ஆயுளையும் ஆண்டவன் அவர்க்கு அருள வேண்டுமென்றே பிராத்தனை யுடன் இதனை நிறுத்திக் கொள்கிறேன்.
இந்நூல் எழுதப்பட்ட காலத்தும், அச்சான காலத்தும் என்னைப் பலவாறு ஊக்கியும் வேறு பல உதவிகளைப் புரிந்தும் வந்த ஸ்ரீமதி மங்களதேவிக்குப் பெரிதும் நன்றி பாராட்டுகிறேன்.
ஓய்ந்த வேளைகளில் அவ்வப்பொழுது சிறு சிறு பகுதியாக எழுதி முடிந்த இந்நாடகத்தில் பல குற்றங்கள் செறிந்திருக்கக் கூடும். அவைகளுக்காக என்னை மன்னிக்குமாறு எங்ஙனம் கேட்பேன்? கல்லாப் பிழையும். . . எல்லாப் பிழையும் பொறுத்தருளுமாறு தமிழ் நாட்டாரைக் கேட்டுக் கொள்கிறேன்
மயிலாப்பூர்,
இரக்தாட்சி வருடம்
புரட்டாசி மாதம் 15.
30 - 9 - 1924.
நாடக பாத்திரங்கள்
வாலீசன் - பாணபுரத்தின் தலைவனாயிருந்து தண்டிக்கப்பட்டவன்.
புரேசன் - அவன் பின் வந்தோன்; பாணபுரத்து வீரன். (நாடகத் தலைவன்)
நாகநாதன் - புரேசன் நண்பன்.
அதிரதன் - ஈசானபுரத்தரசன்.
துருபதன் - அதிரதனின் மந்திரி.
சேம வீரன் - அதிரதனால் ஆதரிக்கப்பட்டவன்.
விதிப்பிரபு - வாலீசனைத் தண்டித்த நீதிபதி.
சுதர்மை - புரேசன் மனைவி. (நாடகத் தலைவி)
அனலை - சுதர்மையின் சிறுபெண்.
மற்றும் ஆதானிகர், சிறைக்காவலாளர், சேவகர், வீரர், தூதர் முதலியோர்.
நாடக நிகழ்விடம் : ஈசானபுரத்திலும் பாணபுரத்திலும் கடம்ப வனத்திலுமாம்.
முதல் அங்கம்
முதற் களம்
இடம் : ஈசானபுரத்தில் நியாயதலம்
காலம் : நண்பகல்.
_(விதிப்பிரபு என்னும் நியாயாதிபதி ஓருயர்ந்த ஆசனத்தில் அமர்ந் திருக்கிறார். வாலீசன், தலையில் பச்சிலைகளா லாக்கப்பட்ட ஒரு கிரீடம் தரிக்கப்பட்டு ஒரு தனி இடத்தில் நிற்க வைக்கப்பட்டிருக் கிறான். நியாயதலத்தின் இரு புறத்திலும் வீரர்கள் வாளேந்திய கையர்களாய் ஒழுங்காக நிற்கின்றார்கள். நியாயவாதிகள் அமர்ந் திருக்கிறார்கள்.)_
விதிப்பிரபு : _(வாலீசனை நோக்கி)_ நீ கூற வேண்டியது ஏதேனு முண்டோ?
வாலீசன்: இவ்வுலகம் மனிதரால் ஆக்கப்பட்டதன்று; கடவுளால் படைக்கப்பட்டது. ஆதலின், இப்புவியை இருப்பிடமாகக் கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை யுண்டு. ஏழைகளை யும், தேசாபிமானிகளையும், பர நலத்துக்கு உழைப்பதே பிறவிப் பயனென எண்ணி ஒழுகுபவர்களையும் இவ்வுலகத்தினின்றும் ஓட்டிவிட கடவுள் உத்தரவு செய்யவில்லை. ஈசனின் அருள் வழி நின்று மக்களுக்கு உபகாரமாய் நீதி நூற்களை வகுத்த எவரும் அங்ஙனம் கூறினாரில்லை. யான் செய்த குற்றந்தான் யாது? எவரை யேனும் அநியாயமாகக் கொலை செய்தேனோ? பெண்டிரை யேனும், பாலரையேனும், முதியரை யேனும் ஆற்றொணா அல்லற்குட்படுத்தினேனோ? அரசர் பெருமானுக்கு விரோதமாக ஏதேனும் சூழ்ச்சிகள் செய்தேனோ? வேந்தர்க்கு விரோதமாக ஜனங்களைத் தூண்டி விட்டேனோ? வேறென்ன குற்றஞ் செய்தேன்? இங்ஙனம் பலர் பார்த்து நகைக்கும் வண்ணம் நீதி தலத்திற்குக் கொண்டுவரும் பெருங் குற்றம் என்ன செய்தேன்? என் நாவறிய, உள்ளமறிய, கரணங்களறிய எவ்விதமான குற்றத்தையும் நான் செய்ததில்லையென்று தங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஆனால், - ஆனால் என்ற மொழியைக் கண்டு நீங்கள் ஆறுதலடைய வேண்டாம் - ஆனால், யான் என் தாய் நாட்டின் மீது அதிக பற்றுள்ளங் கொண் டிருந்தேன் என்பதுண்மை. அப்பற்றுள்ளம் ஒரு குற்றமாயின், அக் குற்றத்தின் பயனாக ஏற்படும் தண்டனைகளுக்கு நான் உட்படு கிறேன். தேசாபிமானி என்று கூறி எனக்குத் தாங்கள் தண்டனை விதிப்பின், அதனைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளச் சித்தமா யிருக்கிறேன். என் நாட்டின் பொருட்டு என் உயிரைக் கொடுக்க ஒரு சிறிதும் பின் வாங்க மாட்டேன். தான் பிறந்த நாட்டின் மீது அபிமானங் கொள்ளாதிருப்பவன் ஒரு மானவனோ? தன் ஜன்ம பூமி சீர்கெட்டுப் போயிருப்பின், அதனைத் திருத்தியமைக்க முயற்சிகள் செய்யாதவன் ஒரு மானியோ?
உடலெனும் வீட்டில் தேசபக்தியெனும் சுடர்விட்டெரியா விட்டால் அவ்வுடல் இருள்மயமான இல்லத்திற்கு ஒப்பாகும். இருளிடங்களில் பாம்பும் தேளும் வசிப்பது போல தேசபக்தி யில்லாதவனிடத்தில் வஞ்சம், பொய், சூது, பொறாமை முதலிய தீக்குணங்கள் குடிகொண்டிருக்கும் என்பது நிச்சயம், தேசாபி மானம் எனும் ஒரு சோதி இருப்பின் அரியேனும் அரவேனும் அவனிடத்தில் வந்தணுகா. யான் செய்த குற்றமெல்லாம் யான் கொண்டிருந்த தேசபக்தியேயாயின், அக்குற்றத்திற்காக நான் தண்டிக்கப்படுவேனாயின், அத்தண்டனையினின்றும் விடுதலை யான பின் மறுபடியும் அக்குற்றத்தையே யான் செய்வேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும். என் தாய் நாட்டின் நிலையை நினைக்கின், அந்தோ! என் மெய் விதிர்ப்புறுகின்றது; உள்ளம் குழம்புகின்றது; இரத்தம் கொதிக்கின்றது.
நீதியை நெறியாக நடத்தும் விதிப்பிரபு! என் நாட்டின் கதியை நீவிர் சிறிதளவேனும் அறிந்திருப்பீராயின் என்னை இங்ஙனம் உங்கள் முன்னிலையில் நிறுத்திக்கொள்ளச் சம்மதிக்க மாட்டீர். எனது பாணபுரம் சிறிய தேசம்; சிறிய நாடேயாயினும், பல்லாயிரம் ஆண்டுகள் பிறர் வயப்படாமல் சுதந்திரமாகவே இருந்தது. ஆனால் சில்லாண்டுகளுக்கு முன்னர் அதிரத அரசர் பாண புரத்தைத் தம் வசமாக்கிக் கொண்டார். அது நல் வினைக்கோ தீவினைக்கோ என்பதை யான் ஈண்டுக் கூறப் போவ தில்லை. அவருடைய ஆட்சியின் கீழ் என் நாட்டினர் படுந்துன்பம் அளவிடற் பாலதன்று. அத்துன்பங்களை ஒழிக்கவே யான் பிரயத்தனப் பட்டேன். அதுவே அடியேன் செய்த குற்றம் போலும்! எதிர்க் கட்சி நியாய வாதி நான் இராஜத்துரோகி யென்று கூறினார். இராஜத் துரோகி என்ற மொழிக்கு எப் பொருள் கொண்டு அவர் அங்ஙனம் கூறினாரோ தெரிய வில்லை. யான் என் நாட்டை நேசித்ததுண்மை; என் நாட்டின ருடைய துன்பங்களை நீக்க முயன்றதுண்மை; என் சகோதரர் களை உயர் நிலைக்குக் கொண்டு வரப் பல்வகையாலும் பிரயத்தனப்பட்ட துண்மை. ஆனால், அதிரத அரசருக்கு விரோதமாக யான் எவ்விதமான சூழ்ச்சி களையும் செய்ய வில்லை. அதிரத அரசருக்கு எவ்வாறானும் யான் துரோகம் செய்யவில்லை. அங்ஙனமிருக்க என்னை எங்ஙனம் இராஜத் துரோகி என்றழைத்தல் கூடும்? ஆனால் தேசத்துரோகி யென்று என்னைக் குற்றஞ் சாட்டாமல் இராஜத்துரோகி என்று என்னைக் குற்றஞ் சாட்டிய தற்கு ஒருவாறு சந்தோஷ மடை கிறேன். இராஜத்துரோகம் என்னும் மொழி இப்பொழுது பொருளின்றி உபயோகிக்கப்படுகிறதென நான் நினைக்கிறேன். என் தேசத்தார் எவரும் என்னைத் தேசத்துரோகி யென்று அழைக்கவில்லை. அதற்கு நான் பெரிதும் சந்தோஷப்படு கிறேன். ஒருவனைத் தேசத்துரோகியென் றழைக்கத் தேசத் தாருக்கும் இராஜத் துரோகியென் றழைக்க அரசரின் பிரதி நிதிகளுக்குமே உரிமையுண்டு.
யான் அதிரத அரசரை ஒரே ஒருமுறைதான் யுத்த களத்தில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பினால் யான் அவருக்கு எங்ஙனம் துரோகம் செய்துவிட்டேன் என்பது எனக்கே விளங்க வில்லை. யுத்த களத்தில் என்னுடைய சேனை தோற்றுப் போக, அதனை ஆதாரமாகக் கொண்டு என்னைச் சிறை பிடித்து, இராஜத் துரோகக் குற்றஞ் சாட்டி இங்ஙனம் அவமானப்படுத்துதல், இதற்குமுன் எந்த நாட்டிலும் எவருக்கும் நடந்திரா தென்று நினைக்கிறேன். யுத்த களத்தில் தோற்ற வீரரை மரியாதையுடன் நடத்தல் உத்தம அரசரின் இலக்கணம். போற்றார்ப் பொறுத் தலே நெறியுடை மன்னர் கடன். போற்றாரை ஒறுத்தல் வீரத்தை ஒறுத்தற் போலாம். ஆனால், நான் அரசரைப் பகைவராகக் கொள்ளவில்லை. அவர் மாத்திரம் என்னைப் பகைவராகக் கொண்டிருக்கிறார்! அஃதென் குற்ற மல்ல. (பொறுத்து) நியாயாதிபதியவர்களே! யான் அதிகமாக இனி ஒன்றும் கூறப் போவதில்லை. எனக்கு நீங்கள் விதிக்கும் தண்டனையைத் தைரியத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். என் தாய் நாட்டின் பொருட்டு இறக்க நேரிடுவது எனக்குப் பெருமகிழ்ச்சியை யூட்டுகிறது. ஆனால், என்னுடைய தாய் நாட்டைப் பற்றி நினைக்கச் சிறிது காலங் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். (நியாயாதிபதி தலையசைக்கிறார்)
தாயே! _(பாணபுரத்தின் படம் நீதிதலத்தின் சுவரில் மாட்டப் பட்டிருப்பதைக் கண்டு)_ இதோ, என் அன்னை ஈண்டு வீற்றிருக் கிறாள். அம்மணி! உமது பாதார விந்தங்களுக்கு ஒரு கோடி நமகாரம். உமது முன்னேற்றத்தின் பொருட்டு என் உயிரைப் பலிகொடுக்கிறேன், அதனை அன்புடன் ஏற்றுக் கொள்வீராக. யான், உம்முடைய உதரத்தில் தோன்றி, உம்மை நன்னிலைக்குக் கொண்டு வர முயன்று, உம் பொருட்டே உயிர் விடுகின்றேன். யான் அந்நியரை யறியேன்; உம் மொருவரையே அறிவேன். நீவிர் அதிரத அரசரால் படாத பாடுபடுகின்றீர். இதனை அவருடைய நியாய தலத்திலேயே கூறுகின்றேன். உம்மைத் துன்பங்களி னின்றும் விடுதலை செய்ய எவ்வளவோ முயன்றேன். ஆனால் என் முயற்சிகள் விரைவில் பயனளிக்க வில்லை. யான் வானுலகு செல்லினும் உம் நலத்தையே கோரிக் கொண்டிருப்பேன். இந்தப் பூத உடல் வீழ்ந்த போதிலும், இந்த ஊனக்கண்ணும் பீளை மூக்கும் உலக்கைக் கைகளும் பிறவும் வெந்தணலில் வெந்துபோன போதிலும் என் ஆத்மா உமது திருவடிகளை என்றும் பூசித்து வரும். நீங்கள் உயர்ந்த நிலையையடையா வரை, உமது மேனி மெருகிடப்படாதவரை, உமது வயிற்றில் உத்தம புத்திரர்கள் தோன்றாதவரை, கடலெனும் ஆடை யுடுத்து நறுமலர் கொண்ட குன்றமெனும் கூந்தல்வாரி நதியெனும் ஆரம் அணிந்து தாளாண்மை வேளாண்மை யெனும் இருகண்கள் கொண்டு உலகத்தை உயிரெனக் கொண்ட மன்னனெனும் திலகமணிந்து தாங்கள் தங்கள் மக்களுக்குத் தரிசனம் தராதவரை இந்த ஜீவன் உமது சரணங்களில் துடித்துக் கொண்டே யிருக்கும். ஆண்டவன் சந்நிதியில் யான் இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற போதிலும், அதனைவிடத் தங்கள் முன்னிலையில் தங்கள் பொருட்டுத் துன்புற்றிருப்பதே பெரிதெனக் கருதுவேன், இச் சுவைதவிர அச்சுவை வேண்டேன்.
யான் இப்பொழுது இறப்பதைக் குறித்து ஒரு சிறிதும் வருத்த மடையவில்லை. என் பெண்டிரும் மக்களும் உறவின் முறை யாரும் என் பிரிவாற்றாமையால் கூவிக் கூவி அழுவார்களே என்று மனங் கலங்கவில்லை. என்னை, உமக்குத் தொண்டு புரிந்து கொண்டிருந்த இச்சிறியனைக் கொலை செய்த பிறகு, என் கொலைக்குக் காரணர் பாவத்திற்குட்படுவரே என்று துக்கிக்கவில்லை. ஆனால், அன்னாய்! உம் பொருட்டே யான் விசனிக்கின்றேன். யானிறந்த பிறகு என் போன்ற புத்திரர் பலர் தோன்றாமற் போயின் அப்பொழுது நீங்கள் எவ்வளவு கஷ்டப் படுவீர்கள்? அதை நினைத்தே இப்பொழுது நான் அழுகின் றேன். உம் நிலையை நினைக்க நினைக்க என் உள்ளமெனும் பாறை உருகி உருகி உம்மடியின் கீழ்ச் சரணடைகின்றது. ஈசானபுரத்து மக்கள் உம்மை எவ்வாறு ஆதரித்த போதிலும் நீவீர் திருப்தியடைவீரோ? திருப்தியடைய மாட்டீரே! உங்களை நினைத்த மாத்திரத்தில், இந்த உயிரை எங்ஙனமாவது காப் பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் போகின்றது. ஆனால், நீதியும் நெறியும் சத்தியமும் தருமமும் அஞ்சாமையும் என்னைத் தடுக்கின்றன. அஞ்சா நெஞ்சு கொண்ட அடியேன், குற்றமறி யாத உளத்தனான அடியேன், உம் பொருட்டு இந்த நியாயாதி பதியின் கட்டளையை ஏற்றுக்கொள் கிறேன். உம்மை, என்னைப் பெற்றெடுத்த உம்மை, இப்பிறவியிலேனும் மறு பிறவியிலேனும் இன்னும் ஏழேழு பிறவிகளிலேனும் மறவேன். சத்தியம். சத்தியம். விதிப்பிரபு! இனித் தாங்கள் எனக்குத் தண்டனை விதிக்கலாம்.
விதிப்பிரபு : என்னுடைய கடமையை நான் செய்து விடுகிறேன். வாலீசன், இராஜத்துரோகக் குற்றஞ் செய்ததாகப் பல்வகைச் சாட்சிகளால் புலப்படுதலானும், தற்போது நமது நாடுள்ள தன்மையை நோக்கியும், அவனுக்கு மரண தண்டனை விதிக் கிறேன்.
_(நியாயாதிபதி உடனே செல்கிறார்)_
காவலாளர்: _(வாலீசனை நோக்கி)_ வம்மின் ஐய! _(கைபிடித்திழுத்துச் செல்கின்றனர்.)_
வாலீசன் : _(செல்லும் போது)_ தேசாபிமானம்! - மரண தண்டனை ! எவ்வளவு நெருங்கிய சம்பந்தம்!
இரண்டாம் அங்கம்
முதற்களம்
இடம் : பாணபுரம்
காலம் : காலை
_(புரேசனும் நாகநாதனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.)_
புரேசன் : நண்பனே! உண்மையில் கூறுகிறேன். என் நாட்டின் நிலையை நினைக்கின் - இதோ என் உள்ளத்தைத் தொட்டுப் பார். என் உணர்ச்சியை வாயால் அளந்து கூற முடியவில்லை.
நாகநாதன் : உண்மை. எத்தகைய இழிஞனுக்கும் நாட்டுணர்ச்சி இருக்கும். வாலீசனிடத்தில் பழகி அவனால் பெரிதும் பாராட்டப் பட்டு வந்த உனக்குத் தேச உணர்ச்சி இராமலிருக்குமோ? ஆயினும் சிறிது அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டு மென்றே நான் கேட்டுக் கொள்கிறேன்.
புரே : ஆனால், கலகம் விளைவித்து நாட்டில் குழப்பம் உண்டாக்க வேண்டுமென்று கூறுகின்றேனோ? ஒருகாலுமில்லை. கலகச் சூழ்ச்சியி னாலும், குழப்பப் பெருக்கத்தாலும் நம் நாடு முன்னேற்ற மடையாது; எந்த நாடும் முன்னேற்ற மடைந்ததாகச் சரித்திரங் கூறவில்லை. நியாய வரம்புக்குட்பட்ட காரியங்களை நாம் செய்து கொண்டு போனால், ஈசன் நமக்குத் துணையாய் இருப்பான் என்பது நிச்சயம். நான் கூறுவதெல்லாம் யாதெனில், நியாயத்திற்குக் கட்டுப் பட்டுள்ள சுதந்திரங்களை நாம் ஏன் அநுபவித்தல் கூடாதென்பதே யாம். அதிரத அரசரின் சிறு கருணையால் அளிக்கப் பட்டிருக்கும் இச்சிறிய சுதந்திரத்தை அநுபவிக்கவும் நம்மவரிற் சிலர் பின்னடை கின்றனர். அஃதேன் என்பதே என் கேள்வி.
நாக : அஃது அவரவருடைய மனத்தின் தன்மையைப் பொறுத் திருக்கலாம்.
புரே : மனமாவது? தன்மையாவது? அவர்களுக்கு மனமேயில்லை யென்று நான் கூறுவேன். அவர்களை நான் மனமிலிகள், அறிவிலிகள் என்று அழைப்பேன்.
நாக : உன்னுடைய கோரிக்கைகளுக்கு அவர்கள் இணங்காமலிருத் தலினாலேயே அவர்கள் அறிவிலிகளோ? அங்ஙனம் கூறுவதைச் சிலர் சம்மதிக்க மாட்டார்.
புரே : ஏன்? யான் தவறாகக் கூறவில்லை. அவர்கள் - அவ் வறிவிலி கள் - நாட்டின் நலத்தை நாடவில்லை. நாட்டின் நன்மையை விரும்பாமற் போனபோதிலும், நாட்டைச் சத்துருக்களுக்குக் காட்டிக் கொடா மலிருந்தால் போதும். அதுவும் இல்லை. ஒன்றும் செய்யாமல் பேசாம லேனும் இருக்கிறார்களா? அதுவும் இல்லை. மேலும் செல்கிறார்கள்; கீழும் இறங்குகிறார்கள். அவர்களை நாம் என் செய்வது?
நாக : அவர்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்?
புரே : கவனியாமல் விட்டுவிட்டால் நம் நாடு அதோகதிதான். அவர்கள் அதிரத அரசருக்கும் இச்சகமாகப் பேசுவார்கள்; ஜனங்களிடத்தும் வந்து, உங்களுக்கு நன்மை செய்யவே நாங்கள் பிறந்திருக்கிறோம் என்று கூறுவார்கள். கடைசியில் அவர்க ளுடைய செய்கையை ஆராய்ந்து பார்ப்போமாயின் சுயநல மாகவே வந்து முடியும். நாம் இச்சிறு கூட்டத்தாரைக் கவனி யாது விடுவோமாயின், ஜனங்கள் இவருடைய கூற்றை நம்பி மோசம் போவார்கள். ஆகையால்தான் இக்கூட்டத்தாரின் செல் வாக்கைக் குறைக்க வேண்டுமென்று நான் கூறுகிறேன்.
நாக : உன்னுடைய கோரிக்கைகளில் எனக்கு மிக்க அநுதாபமுண்டு. ஆனால் நீ இப்பொழுது எக்கூட்டத்தாரைப் பற்றிக் குறை கூறு கின்றனையோ அக்கூட்டத்தார் நம் நாட்டவரே என்பதையும் அதனால் அவர்கள் நம் சகோதரர்களே என்பதையும் நீ நன்குணர்தல் வேண்டும்.
புரே : அவர்கள் நம்மவர்களானது பற்றித்தான் நான் அவர்கள் பொருட்டு இரங்குகின்றேன். அவர்கள் நம் நாட்டிலேயே பிறந்து, நம் நாட்டிலேயே வளர்ந்து நம் நாட்டிலேயே தம் வாழ்க்கைக்குரிய சாதனங் களைப் பெற்றுக்கொண்டு, கடைசி யில், நம் நாட்டின் நன்மையை விரும்பாமலிருக்கின்றார்கள். அதைக் குறித்தே நான் பெரிதும் விசனிக்கின்றேன். (பொறுத்து)
நாகநாதா! நம் நாட்டின் தற்போழ்துள்ள நிலையை இப் பொழுது நீ அறிந்திருக்கின்றனையோ? அந்தோ! அதை யெடுத்துக் கூறவும் என் வாய் கூசுகின்றது. நண்பனே! நம் நாட்டுப் பூர்வ சரித்திரத்தை நீ படித்திருக் கின்றனையா? அப் பொழுது நம் நாட்டில் கல்விமகளும் செல்வமகளும் நெருங்கிய உறவு கொண்டு நாட்டியம் புரிந்து வந்தார்கள். அரசன் ஆணைக் கஞ்சி வருணன் தன் கருணை மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான். ஊர்வனவும், பறப்பனவும், நடப்பனவும் இன்புற்று வாழ்ந்து வந்தன. நம் பெரியோர் அறநெறிப்பட்டு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் தத்தமக் குரிய கடன்களைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர், வியாபாரம் செழித்திருந்தது. கைத் தொழில் நித்தியம் போற்றப் பட்டு வந்தது. காமனை வென்ற காளையர் கடல் மீது கலஞ் செலுத்திப் பிறநாடுகளில் பண்ட மாற்றல் செய்துவந்தார். பிற நாட்டரசர் நம் நாட்டு வேந்தரைப் போற்றி வந்தனர். அக்காலத் தில் பிச்சைக் காரரைக் காண்டல் அருமையா யிருந்தது. ஒரு புலவர், நம் நாட்டு வளப்பத்தைக் குறிக்குங் காலத்தில், இந்நாட்டில் வலிமையென்பதே மாந்தருக்கில்லை, இப்பெரும் பதி வாழ்வார் உலோபிகளாகவே இருக்கின்றார் என்பன போன்ற பிரயோகங் களை வேடிக்கையாக உபயோகிக்கின்றார். இப்பிரயோகங் களின் பொருளென்னை? இந்நாட்டிலுள்ளார்க்கு வலிமையே இல்லை யென்றால் சத்துருவே கிடையாதென்றும், உலோகபிக ளல்லாதாரைக் காண்டல் அருமையெனின் தரித் திரரே இல்லையென்றும் பொருள் கூறுவர் புலவர். இங்ஙனமே நம் நாட்டுப் பண்டைப் பெருமையை எத்தனை இரவுகள் வேண்டு மானாலும் கூறிக் கொண்டு செல்வேன். இப் பொழுது நம் நாட்டின் நிலையைச் சிறிது யோசித்துப்பார். அதிரத ருடைய ஆட்சியில் நம் நாடு மெலிவடைந்து கொண்டே வரு கிறது. நம் நாடு மிகச் சிறிய நாடு. இதில் எண்ணிறந்த நோய்கள் தலைவிரித் தாடுகின்றன. ஏழை மக்களின் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. நம் நாட்டை அண்டை நாட்டுப் படைகள் காத்துக் கொண்டி ருக்கின்றன. பாணபுரத்துச் சேனை புதைந்து புல்லும் முளைத்துப் போயிற்று. நம் நாட்டு மக்களின் வீரம் குன்றப் பட்டுப் போய்விட்டது. நோயும், வறுமையும், கொடுமையும் அதிகரித்துப் போகவே, கலைமகளும் அவள் மாமியும் வேற்றுமைப் பட்டு வேற்று நாடுகளுக்கு ஓடி விட்டனர். நமது வியாபாரத் துறை தூர்ந்து போயிற்று. கைத் தொழில் செத்தது. அண்டை நாட்டரசரின் ஆட்சியால் நாம் சொல்லொணாத் துன்பங்களை அநுபவித்து வருகின்றோம். இவைகளைக் கண்ட எந்தச் சண்டாளனுக்கும் பாணபுரத்தின் மீது இரக்கம் பிறக்கும், ஆனால் நம் நாட்டுச் சகோதரிற் சிலர் இவைகளைப் பொருட் படுத்தாது தம் சுயநலத்தைக் கருதி வாளா காலங்கழிப்பது மன்றி நம் தாய் நாட்டிற்குத் தீங்கு செய்யவும் துணிகிறார்.
_(புரேசனின் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒரு கனவான் பிரவேசிக் கிறார்.)_
கனவான் : யார் மீது அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது?
நாக : எல்லாம் உங்கள் மீதுதான்.
கன : நாங்கள்தான் புரேசருடைய கையில் அகப்பட்டு விழிக் கின்றோம்.
புரே : என்னிடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிப்பானேன்? அதிரத மஹாராஜருடைய தயவு இருக்கும் போது நீங்கள் யாரிடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும்?
கன : புரேசரே! உங்களுடைய தேசபக்தியை நான் மெச்சுகிறேன், நீங்கள் தேச முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதை நான் பாராட்டு கிறேன். ஆனால் நீங்கள் வழங்கும் உரைகள் மாத்திரம் மிக்க கடுமையாயிருக் கின்றன. அதனையே நானும் என் சார்பாரும் வெறுக்கின்றோம்.
புரே : நீங்கள் எதைத்தான் வெறுக்கவில்லை? என்னை வெறுக் கிறீர்கள்; என் கூட்டத்தாரை வெறுக்கிறீர்கள்; என் பேச்சுக் களையும் வெறுக்கிறீர்கள். என் தாய் நாட்டை வெறுக்கிறீர்கள். அதிரத அரசரைத் தவிர உங்களால் வெறுக்கப்படாத வதும் இவ்வுலகில் உண்டோ? உங்களால் வேண்டப்படுவது அரச ருடையவும் அவரைச் சார்ந்தோரு டையவும் தயவு. அஃது உங்களுக்குப் பூரணமாகக் கிடைத்துவிட்டால் மற்றவைகளின் மீது உங்கள் கவனம் ஏன் செல்ல வேண்டும்? ஐயா! நீங்கள் - நீங்கள் எனின் உங்களைக் குறித்து நான் கூறவில்லை; உங்கள் கூட்டத்தாரைப் பொதுவாகக் கூறுகிறேன். - உத்தம தேசாபி மானிகளாக இருக்கலாம்; சீமான்களாக இருக்கலாம்; அறிஞர் களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யுந் தேசத் தொண்டு என் போலியரால் வெறுக்கப் படுகின்றன. நீங்கள் இத்தகைய தேசத் தொண்டு செய்யாமல் வாளா கிடப்பின், உங்கள் பாதங்களுக்கு மாத்திரமல்ல உங்கள் சந்ததியார் அனைவருக்கும் என் கூட்டத்தாரின் பொருட்டு நான் வந்தனஞ் செய்வேன்.
கன : புரேசரே! நீர் இளைஞர். இன்னும் அதிக அநுபவம் வேண்டும், தேசத்தின் நிலையையும், ஜனங்களின் தன்மையையும், அர சாட்சியின் அமைப்பையும் நீங்கள் இன்னும் நன்கு அறிய வில்லை. நாங்கள் சென்ற ஐம்பது வருஷ காலமாகத் தேசத் தொண்டு செய்து வருகிறோம். நாங்கள் அறியாததை நீங்கள் ஒன்றும் புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை. எங்கள் வார்த்தை யைப் பின்பற்றி நடந்தால், உங்களுக்கும் நமது நாட்டிற்கும் க்ஷேமம் உண்டு என்பதை மாத்திரம் தெரிவிக்கிறேன். இச் சமயத்தில் உங்களுடன் பேசுவது தகாது. நீங்கள் அதிகக் கோபத் துடன் இருக்கிறீர்கள். ஆதலால் மற்றொரு முறை உங்களுடன் இதைப் பற்றிப் பேசுகிறேன். (செல்கிறார்.)
புரே : கிழப் பிணங்கள்! பாப ஜன்மங்கள்! புதிய உயிர் இல்லை. புதிய உணர்ச்சி இல்லை. இவர்களாலேயே நம் தேசம் கெட்டு விடு கின்றது.
நாக : பெரியவர்களின் மனம் புண்படாதிருக்குமாறு நாம் வேலை செய்ய வேண்டும். அஃதொன்றையே நான் கூறக் கூடும்.
_(ஈசனாபுரத்துச் சேவகனொருவன் பிரவேசிக்கிறான்.)_
சேவகன் : (ஒரு கடிதத்தைப் புரேசனிடம் கொடுத்து) அரசரின் ஆக்ஞை.
புரே : அதிரத அரசரா? எந்த மூலையில் எந்த நட்சத்திரம் மாறி விட்டது! (அக்கடிதத்தை _வாங்கிப்படித்து ஆச்சரியத்துடன்)_ நாகநாதா! இஃதென்ன நற்காலம்! இந்தக் கடிதத்தைப் பார்.
நாக : அதிரத அரசர் நம்மை அழைத்திருக்கிறார். (சேவகனைப் _பார்த்து)_ நீ செல். கடிதத்தைச் சேர்ப்பித்து விட்டதாக அரசரிடத்தில் சொல்லிவிடு. (சேவகன் _செல்கிறான்.)_
புரே : கடிதத்திற்கு நீ என்ன பதில் கூறப்போகின்றாய்?
நாக : இணங்க வேண்டிய தவசியமே.
புரே : இங்ஙனம் இணங்க என் மனம் ஒருப்படவில்லை. வாலீசர் இங்கு இல்லை. யுத்தம் முடிந்த பிறகு சாத்தியப்பட்டால் ஈசான புரத்திற்குச் சென்று இரகசியமாக அந்நாட்டின் நிலையை அறிந்துகொண்டு வருவதாகக் கூறினார். இந்தச் சமயத்தில் நாம் பாணபுரத்தை விட்டு அகல்வது சரியானது என்று நினைக்கி றாயா? மேலும் நம் நாட்டை நலிவு படுத்திக் கொண்டிருக்கும் அரசனிடத்தில் நாம் எங்ஙனம் செல்வது?
நாக : நாம் சென்று அவர் தவறைத் திருத்த வேண்டும். அதுவே ஆண் தன்மைக்கு அழகு. துஷ்டன் என்று தூர விலகி விட்டால் அத்துஷ்டன் திருந்துவ தெங்ஙனம்? நாமன்றோ அவனைத் திருத்த வேண்டும்.
புரே : ஆனால் அதிரத அரசருடைய அழைப்புப் பத்திரத்திற் கிணங்கி ஈசானபுரம் செல்ல வேண்டுமென்கிறாய்.
நாக : ஆம்; வேறு பேச்சு வேண்டுவதில்லை. இதைப் பற்றி எவ்வித தருக்கமும் வேண்டாம்,
புரே : எப்போது வரச் சொல்லியிருக்கிறார்?
நாக : தை மாதம் இருபதாந் தேதி வெள்ளிக் கிழமை காலை எட்டு நாழிகைக்கு மேல் பத்து நாழிகைக்குள் தம்மை வந்து காணு மாறு எழுதியிருக்கிறார்.
புரே : எந்த இடத்தில்?
நாக : திருவோலக்க மண்டபத்தில்
புரே : (தனக்குள்) இதில் ஏதோ விசேஷமிருக்க வேண்டும்.
_(யோசித்த வண்ணம் செல்கிறான். நாகநாதனும் பின் தொடர்கிறான்.)_
இரண்டாங் களம்
இடம் : அதிரதன் அரண்மனையில் ஒரு தாழ்வாரம்.
காலம் : பிற்பகல்.
_(அதிரதனும் சேமவீரனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.)_
அதிரதன் : வாலீசன் நிலை எங்ஙனமாயிற்று என்பது உனக்குத் தெரியுமோ?
சேமவீரன் : தெரியும். இன்று காலையில்தான் அவனுடைய சிரம், வெற்றி மண்டபத்தின் மேல் ஒரு தம்பம் நாட்டப்பட்டு அதில் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.
அதி : வாலீசன் என்னிடத்தில் தன் வீரத்தைக் காண்பிக்க முயன்றான். அஃதெங்ஙனம் பலிக்கும்?
சேம : அரியினிடத்தில் நரி என்ன செய்ய முடியும்? தங்களுடைய வீரத்தையும் பிரதாபத்தையும் மேன்மையையும் அறியாது தங்களை வாலீசன் விரோதித்துக் கொண்டான். அதற்குத் தக்க பலனைப் பெற்று விட்டான்!
அதி : அப்படிச் சொல்! வாலீசன், தன் பக்கம் ஜனங்கள் இருப்பதாக எண்ணி அகமகிழ்ந்து என்னை விரோதித்துக் கொண்டான். என் துருப்புகள் முன்னர் - என் ஆயுத பலத்துக்கு எதிரே - அவன் ஜனங்களின் உதவி என்ன செய்ய முடியும்? நெருப்புக்கு முன்னர் தூசிப்படாம் என் செய்யும்? அவன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டபோது நீ இருந்தனையோ?
சேம : இருந்தேன். எல்லாவற்றையும் நேரில் பார்த்துச் சந்தோஷ மடைந்தேன். தேசாபிமானமாவது? மண்ணாவது? பணமில்லா விட்டால் தேசாபிமானந்தான். செல்வமிருந்தால் தேசாபிமானம் காற்றாடியாகப் பறந்து போகும்.
அதி : நம் நாட்டில் சிலர் தேசாபிமானம் என்று கூவி நாட்டையும் நாட்டின் ஜனங்களையும் கெடுத்து வருகின்றனர். அவர்களை அடக்கிப் போட வேண்டும்.
சேம : வாலீசனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையே அவர்களுக்கு ஒரு பாடமாயிராதா?
அதி : உயிருக்குத் துணிந்தவரும் சிலர் இருக்கின்றனர். அவரை அடக்குவதுதான் சிறிது கடினம். புரேசனும் இந்த வகுப்பில் சேர்ந்தவனே.
சேம: ஆம். புரேசனை நீங்கள் இங்குவரும்படி உத்தரவு செய் திருப்பதாகக் கேள்விப்பட்டேள். அஃதுண்மையா?
அதி : ஆம்.
சேம : ஏன் அவனை வரவழைக்கின்றீர்கள்?
அதி : அவனைப் பற்றி நீ ஒன்றும் அறிய மாட்டாயோ? புரேசனுக்குப் பாணபுரத்திலும் அதனைச் சுற்றிலுமுள்ள பிரதேசங்களிலும் வாலீசனைவிட அதிகமான செல்வாக்கு உண்டு. வாலீசன் உயிருட னிருக்குங் காலத்தில், அவனுக்கு வலது கண்ணாகப் புரேசன் இருந்தான். வாலீசன் என்னால் தண்டிக்கப்பட்ட விஷயம் புரேசனுக்குத் தெரியுமாயின் அவனுக்கு என் மீது இயற்கையாக வுள்ள கோபம் அதிகமாகும். என்னை எங்ஙனமாவது தொலைக்க புரேசன் முயற்சி செய்வான். ஆகவே, அவனிடத்தில் சாம, தான, பேத, தண்டம் என்னும் நான்கு வித உபாயங்களை வரிசைக் கிரமமாக உபயோகப்படுத்தி அவனை வதைக்க வேண்டும் என்று நிச்சயித்திருக்கிறேன்.
சேம : புரேசனை வரவழைத்து என்ன செய்யப் போவதாகத் தீர்மானித்திருக்கிறீர்கள்?
அதி : அவனை அன்புடன் வரவேற்று என் விருந்தினனாகச் சில நாள் இருக்கும்படி அவனை வற்புறுத்தப் போகிறேன். அதற்கு அவன் கட்டாயம் இணங்குவான். பிறகு அவனுக்கு ஒரு நியாயாதிபதி உத்தியோகம் அளிக்கப் போவதாகக் கூறுவேன். அதற்கு அவன் இசைந்து இங்கேயே வசித்து வருவதாக ஒப்புக் கொள்வான். பிறகு ஒரு நாள் சமயம் பார்த்துத் தர்மராஜனுக்கு அவன் உயிரை அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
சேம : ஒருகால், அவன் தப்பித்துக் கொண்டு சென்றால்?
அதி : நீ எதற்காக இருக்கிறாய்?
சேம : அங்ஙனமாயின் சரி. அவன் உயிரை நானே நேரில் சென்று இயமனிடத்தில் ஒப்புவித்துவிட்டு வருகிறேன்.
அதி : உன்னைப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எனக்கென்ன குறை?
சேம : தங்களைப் போன்ற மஹாராஜர்களின் அபிமானம் எனக்கு இருக்கும்போது தரித்திரம் என்பது ஏன் என்னிடத்தில் நெருங்கு கின்றது?
அதி : அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டுவதேயில்லை. புரேச னுடைய உயிர் உன்னிடத்தில் இருக்கிறது என்பதை நன்குணர் தல் வேண்டும். (பொறுத்து) ஒருகால் என்னுடைய சூழ்ச்சிக்கும், உன்கைக்கும் அகப்படா விட்டால் என்ன செய்வது?
சேம : எவ்வளவு பெரிய சந்தேகம்? நம்முடைய யானைப் படை, குதிரைப்படை, ஒட்டகப்படை, காலாட்படை முதலிய யாவும் எங்குப் போயின? புரேசன் தன் சேனை அனைத்தையும் திரட்டிக் கொண்டுவந்த போதிலும் ஒரு நிமிஷத்தில் நம் சேனை அவனையும் அவன் சேனையையும் பறக்கடிக்காதா?
அதி : அப்பொழுதும் நீதான் உதவி புரிய வேண்டும்.
சேம : அரசே! இஃதென்ன அடிக்கடி இப்படி கூறுகின்றீர்கள்? என் உயிரே உங்கள் வசத்தில் இருக்கிறது. ஒருகால் நான் இறந்து போனால் அஃது உங்கள் பொருட்டாக இருக்கு மேயன்றிப் பிறர் பொருட்டாயிரா தென்பது நிச்சயம். நான் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டேன். புரேசன் உயிரேனும் போகும்; அல்லது நானாவது இறப்பேன்.
அதி : முன்னது நிறைவேற வேண்டுமென்பதே என்னுடைய பிரார்த் தனை.
சேம : என் கோரிக்கையும் அதுவே. என்னைப் பற்றித் தனியாக ஒரு விஷயம் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அதி : என்ன? _(செல்கிறார்கள்.)_
மூன்றாங் களம்
இடம் : புரேசன் விடுதியில் ஒரு பாகம்
காலம் : மாலை
_(புரேசனும் சுதர்மையும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.)_
புரேசன் : ஆனால் நான் ஈசனாபுரம் செல்வதில் உனக்கு விருப்பமா?
சுதர்மை : தேசத்தின் பொருட்டுத் தாங்கள் எங்குச் சென்றாலும் அஃதெனக்குச் சம்மதமே. தாய்நாட்டின் விடுதலைக்காகத் தாங்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் எனக்கு அநுதாப மிருக்கிறது.
புரே : கண்ணே! நீ கூறிய இம்மொழிகள் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. தங்கள் குடும்பத்தினருடைய - முக்கியமாகத் தம் மனைவியருடைய - அநுதாபத்தைப் பெற்றுத் தேச ஊழியம் புரிவோர்க்கே கவலைகள் குறையும்; ஊக்கம் அதிக மாக உண்டாகும். தீரிகள் தேச விஷயங்களில் எப்பொழுது அதிக கவலை எடுத்துக் கொள்கிறார்களோ அப்பொழுதே அந் நாட்டின் முன்னேற்றம் உறுதிப்படும். ஆண் மக்களுடைய தேச பக்தி வளர்வதற்கும் குன்றுவதற்கும் பெண்மக்கள் ஒரு விதத்தில் காரணர்களாயிருக்கிறார்கள். இஃதுண்மையல்லவா?
சுத : உண்மை. பெண் மக்களின் தேசபக்தி வளர்வதற்கும் குன்று வதற்கும் ஆண்கள் ஒருவிதத்தில் காரணர்கள் என்று ஏன் திருப்பிக் கூறக்கூடாது?
புரே : ஆம். பொதுவான காரியங்களில் ஆண் மக்களும் பெண் மக்களும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்றே கூறுகிறேன். தேச முன்னேற்றத்திற்கு இரு பாலருடைய உதவியும் வேண்டாற் பாலதேயாம். பொதுக் காரியங்களில் தலை யிட்டுழைக்க ஆண் மக்களுக்கு மாத்திரம் உரிமையுண்டென்றும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே பரிபாலனம் செய்ய வேண்டியவர்க ளென்றும் சிலர் கருதுகின்றனர். வீட்டுக்கரசிகளாகப் பெண் மணிகள் விளங்க வேண்டுமென்பது உண்மை யானாலும் பொது விஷயங்களில் அவர்கள் தங்களுக்குரிய பங்கை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்தக் காரியத்தையும் சக்தி யின்றிச் செய்ய முடியாது. சக்தியின் வடிவாகப் பெண்மணிகள் விளங்குகிறார்கள். ஆதலின் தேவரீருடைய உதவி அடியேனுக் கும் அவசியம் வேண்டும்.
சுத : பேசிக் கொண்டே போகும்போது திடீரென்று ஏன் பரிகாசம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள்?
புரே : நான் சொல்வதில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னித்தருள வேண்டும்.
சுத : (சிறிது _கம்பீரமாக)_ நான் மன்னிக்க மாட்டேள்.
புரே : பிறகு நான் எந்நிலையடைவது?
சுத : சுதர்மா தேவியார், அவருடைய காதல் என்னும் சாகரத்தில் தங்களை அமிழ்த்தி விடுவதாகத் தீர்மானித்திருக்கிறார்.
_(ஒரு சேவகன் பிரவேசிக்கிறான்)_
சேவகன்: வெண்புரவி வேகமாகச் செல்ல வெளியில் காத்துக் கொண்டிருக்கிறது.
புரே : ஆனால் இதோ வந்து விட்டேன். _(சேவகன் செல்கிறான்)_
கண்மணி! எனக்கு உத்தரவு கொடுக்கிறாயா?
சுத : தாங்கள் எப்பொழுது திரும்பி வருவீர்கள் ?
புரே : அதை நான் இப்பொழுது நிச்சயமாகக் கூற முடியாது. அதிரதருடைய அழைப்பில் எனக்குச் சந்தேகம் இருந்து கொண்டே யிருக்கிறது. சென்ற வாலீசர், இன்னும் திரும்பி வரக் காணோம். ஆதலின் நான் வரச் சிறிது காலம் ஆயினும் ஆகும். நீ அதுவரை மிக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேச ஜனங்களின் ஊக்கம் சிறிதளவும் குறையாதிருக்குமாறு பார்த்துக் கொள். ஒருகால், நான் தேசத்தின் பொருட்டு உயிர் துறக்க நேரிட்டால் -
சுத : நாதா! அந்த மொழிகளை தங்கள் வாயால் கூற வேண்டாம்.
புரே : வேண்டாம். கண்ணே! என் மனைவியாக இருந்து, இங்ஙனம் நீ மனங் கலங்கலாமா? நான் திரும்பி வந்தாலும் வராவிட்டா லும் தேசத்தின் பொருட்டு உழைப்பதில் நீ சிறிதும் பின்வாங்க மாட்டாய் என்று கருதுகிறேன்.
சுத : தாங்கள் அது விஷயத்தில் சிறிதும் கவலை கொள்ள வேண் டாம். கூடிய விரைவில் திரும்பி வாருங்கள். பாணபுரத்தினர் தங்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருப்பர்.
புரே : விரைவில் வர முயல்கிறேன். இனி நீ உன் முயற்சியை அதிக மாகப் பெண்மக்களிடையே செலுத்த வேண்டும். பாணபுரம் அதிரதருடைய கொடுமையினின்று விடுதலையடைய வேண்டிய அவசியத்தைப் பற்றி நீ அவர்களுக்குப் பலவாறாக எடுத்துச் சொல்ல வேண்டும். நாகநாதனும் நானும் இல்லாக் காலத்து உன் பொறுப்பு அதிகமாகிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். (பொறுத்து) நேரமாகிறது. நான் போய் வரட்டுமா?
சுத : தங்கள் கட்டளைப்படி நடந்து கொள்கிறேன். எவ்வித இடை யூறுகள் நேரினும், யாரை மறந்தாலும் பாணபுரத்தை மறவாதீர் கள், அஃதொன்றே என் வேண்டுகோள் (புரேசன் _கையை முத்தமிடுகிறாள்)._
புரே : (சுவற்றில் _மாட்டப்பட்டிருக்கும் பாணபுரத்தின் படத்தைப் பார்த்து)_ அம்மணி! உம்மையே நம்பிச் செல்கிறேன். விடை கொடும்.
_(வணங்கிச் செல்கிறான்.)_
மூன்றாம் அங்கம்
முதற்களம்
இடம் : ஈசானபுரத்தில் ஒரு வீதி
காலம் : காலை
_(வாலீசனுடைய தலை, வெற்றிமண்டபத்தின் மேலுள்ள ஒரு தம்பத்தில் மாட்டப்பட்டிருக்கிறது. புரேசனும் நாகநாதனும் பிரவேசிக் கிறார்கள்.)_
புரேசன் : (வாலீசன் _சிரம் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்து)_ ஆ நண்பனே! இஃதென்ன கோலம்?
நாகநாதன்: (பொறுத்து) வாலீசப் பிரபுவின் முகமன்றோ இது?
புரே: அந்தோ! என் வாலீசன் உயிருடனிக்கிறான் என்ற ஆவலுட னன்றோ நான் இங்கு வந்தேன். அவனுக்கு இந்தக் கதி எப்படி யாரால் நேர்ந்தது?
_(ஈசனாபுரத்து வீரன் ஒருவன் பிரவேசிக்கிறான்)_
ஐயா! தாங்கள் இருப்பது இந்த ஊரேயோ?
ஈ-வீரன்: ஆம்.
புரே: இந்த முண்டம் ஈண்டு மாட்டப்பட்டிருப்பதன் வரலாற்றை எனக்கு விவரமாகத் தெரிவிக்க முடியுமோ?
ஈ-வீரன்: அந்த துக்ககரமான செய்தியைச் சொல்லும்படியான துர்ப் பாக்கியத்தை எனக்கோ கொடுக்கிறீர்கள்? தாங்கள் யார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.
புரே: நான் ஒரு வீரன் என்பதை மாத்திரம் இப்பொழுது உங்க ளுக்குத் தெரிவிக்கிறேன். நான் கேட்டதைப் பற்றி விரைவில் தெரிவியுங்கள்.
ஈ-வீரன் : உங்கள் முகம் உங்கள் வீரத் தன்மையை நன்கு காட்டு கிறது. இந்த நாட்டார், அசத்தியம், அதருமம், அநீதி என்ற மூன்று மகளிரையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொண் டிருக்கிறார். அரசருக்குத் துணைசெய்யச் சில உத்தமர்கள் இந்நாட்டில் உலாவு கிறார்கள். அவர்கள் யார் மீது கொலைக் குற்றஞ் சாட்டலாம், எவர் மீது பழிகளைச் சுமத்தி அவை மூலமாக அரசனிடத்தில் சன்மானம் பெறலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாய் தவறி யாரேனும் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அதனுடன் அவன் வாழ்க்கை யழிந்தது. ஆயுள் பரியந்தம் அவன் சிறைவாசமோ பிறவாசமோ செய்ய வேண்டியவனே. இதனாலேயே நான் யாருடனும் அதிகமாகப் பேசும் வழக்கத்தைச் சிறுது காலமாக ஒழித்து விட்டிருக்கி றேன்.
புரே: என்னிடத்தில் இந்தச் செய்தியைப் பற்றிக் கூறுவதனால் உங்களுக்கு எவ்விதமான தீங்கும் உண்டாகாது. அதிரத அரசரை நான் அதிகமா யறியமாட்டேன். என்னைப் பற்றி நீங்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டாம். தயை செய்து இனியும் தாமதியாமல் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள்.
ஈ-வீரன்: பாணபுரம் என்ற ஒரு சிறிய நாடு சமீபத்தில் இருக்கிறது. அச்சிறிய தேசம் பல்லாயிர வருடங்களாகச் சுயேச்சையுடன் இருந்து வந்தது. சென்ற சில ஆண்டுகளாக அதிரத அரசர் வசத்தில் அந்த நாடு அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறது. அதிரத அரசருடைய ஆட்சியை அந்நாட்டு ஜனங்கள் வெறுத்து வருகி றார்கள். அவர்கள் தாங்கள் அநுபவித்து வந்த சுயேச்சையை மீண்டும் விரும்புகிறார்கள். அதிரத அரசரின் ஆட்சி முறையைக் கண்டித்து, ஜனங்களின் குறைகளை அவ்வப்பொழுது தைரியமாகத் தெரிவித்து, தேசத்தின் முன்னேற்றத்திற் காகப் பாடுபட்டு வந்த வாலீசருடைய சிரமே இது.
_(இதைக் கேட்டதும் புரேசனும் நாகநாதனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். புரேசன் தனது ஆத்திரத்தையும் துக்கத்தையும் அடக்கிக் கொள்கிறான்.)_
அதிரதருடைய கொடுமைச் செயல்களை வாலீசர் அஞ்சாமல் எடுத்துரைத்து வந்ததால் முன்னவர் பின்னவரை வெறுத்து வந்தார். வாலீசரைப் பிடித்துத் தண்டிப்பதற்குத் தக்க சமயம் பார்த்து வந்த அதிரதர் கடைசியில் ஒரு யுத்தத்தில் அவரைப் பிடித்து இந்தக் கோலத்துக் குள்ளாக்கினார். வாலீசர் எங்ஙனம் பிடித்து வரப்பட்டாரென்பதையும் அவர் தண்டிக்கப்பட்ட வரலாற்றையும் நீங்கள் கேட்பின் உங்கள் உள்ளம் உருகும் என்பதில் ஐயமே யில்லை. வாலீசருடைய ஒரு பக்கத்து மீசையும், ஒரு புறத்துத் தலைமயிரும் சிரைக்கப்பட்டன. பிறகு அவர் தலையில் பல இலைகளைக் கொண்ட ஒரு தலைப்பாகை கட்டி அதன் மேல் ஒரு நாகதாளிப்படை வைக்கப்பட்டது. அவர் நெற்றியில் தாரும், கண்ணைச் சுற்றி வச்சிரமும், செவி களைச் சுற்றிச் சுண்ணாம்பும், முகத்தின் மற்றப் பாகங்களில் செம்மண்ணும் பூசப்பட்டன. அவருக்கு ஒரு பெரிய கோணி ஆடையாகக் கொடுக்கப்பட்டது. பெரியதொரு காகிதத்தில் பாணபுரத்து இராஜத் துரோகிகளுக்குத் தலைவனான வாலீசன் என்று எழுதி, அஃது அவர் முதுகிலும் மார்பிலும் ஒட்டப் பட்டது. இந்தக் கோலத்துடள் அவர் கழுதை மேலேற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவரை நியாய தலத்தில் விசாரணை செய்தார்கள். இவ்வளவு தூரம் அவமானப் படுத்திய அவ்வீரரை நியாய தலத்தில் விசாரணை செய்வா னேன்? பேசாமல் அதிரதர் மனம் களிப்படையும்படி கொன்று விட்டிருக்கலாம். ஆயினும் வாலீசர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படாத பாடு படுத்தப்பட்டார். கடைசியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தண்டனை எங்ஙனம் நிறைவேற்றப் பட்டது என்பதைக் கூற என் நா பின் செல்கின்றது. வாலீசரை நான் இங்குப் பார்த்ததற்கு முன்னர்ப் பார்த்ததே யில்லை. ஆனால் அவரைப் பார்த்த பிறகு அவரைப் போன்ற உத்தம வீரர் இப்பூவுலகில் வேறொருவரு மில்லை யென்ற எண்ணம் எனக்கு உண்டாகிவிட்டது. அவர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை எவ்வளவு தைரியமாகவும் சந்தோஷ மாகவும் ஏற்றுக்கொண்டார் என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். ஆறரை அடி அளவு நெருப்பு ஜுவாலை உயரும் படியாகப் பெரிய தீ மூட்டி அதன் அருகில் அவர் நிற்க வைக்கப் பட்டார். உடனே அவருடைய இரண்டு கைகளும் எரிக்கப் பட்டன. அப்பொழுது அவர் ஒருவருடைய கட்டுக்கும் உட்படாமல் தமியராய்த் தைரியமாக நின்று எவ்வித மான சப்தமும் போடாமல் தம்மிரண்டு கைகளையும் எரித்துக் கொண்டார்.
பிறகு அவரைப் படுக்க வைத்து அவருடைய உடலம் முழுதும் இருப்பாணிகள் அடிக்கப்பட்டன. அப்புறம் அவர் ஓருயர்ந்த தானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுக் கடவுளைத் துதித்துக் கொள்ளும்படி காவலரால் கூறப்பட்டார். ஆனால் அவர் என் தாய் நாடு; புரேசன் என்ற இரு சொற்களையே கூறினார். இச்சொற்கள் வெளிவந்தன. அவர் சிரம் உடலத்தினின்று வேறாக்கப் பட்டது. (இதுகாறும் _தம்பமாக நின்றிருந்த புரேசன் மூர்ச்சையாகிறான். நாகநாதன் அவனைத் தாங்கிக் கொண்டு உபசாரம் செய்கிறான்.)_ ஐயா! வாலீசருடைய வரலாற்றைக் கேட்டு மூர்ச்சையாகிப் போன இவர் யார்?
நாக : (அழுத _வண்ணம்)_ இவர்தான் புரேசர்.
ஈ-வீரன்: இவரை நினைந்தோ வாலீசர் உள்ளம் உருகி உயிர் விட்டார்? பாணபுரத்து வீரமணி எனக் கூறப்படும் புரேசர் என்பார் இவரேயோ? _(புரேசன் பாதத்தில் கையைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறான்)_ ஐயா! எழுந்திரும். துக்கப் படுவதால் பயன் என்ன? நடந்தது நடந்துவிட்டது. இனி என் செய்வது?
புரே : (கோபமும் _துக்கமும் கலந்தவனாய்)_ என் செய்வது? உலகம் அநியாயத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது.
ஈ-வீரன்: தயை செய்து மெதுவாகப் பேசும்படி கேட்டுக் கொள் கிறேன்.
புரே : ஏன்? உமது உயிருக்கு அஞ்சுகின்றீரோ? உம்மைப் பார்த்தால் வீரர்போல் தோன்றுகின்றது. உம் உள்ளம் வீரமுள்ளதாகக் காணப்படவில்லையே!
நாக : புரேசா! என் தோள் மீது சாய்ந்துகொள். சிறிது நேரங் கழித்துப் பேசலாம். (புரேசன் _அங்ஙனமே செய்கிறான்)_ ஐயா! இவ்விஷயங்கள் யாவும் கூறினமைக்கு நான் தங்களுக்கு வந்தன மளிக்கிறேன். நீங்கள் சொன்ன விஷயங்கள் யாவும் இரகசியமாக நடைபெற்றனவோ?
ஈ-வீரன்: ஆம். நியாயதலத்தில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. அது எங்ஙனம் நிறைவேற்றப்பட்ட தென்பதைப் பற்றிய விஷயங்கள் யாவும் மிக்க இரகசியமாகவே நடைபெற்றன. அரசாங்க அந்தரங்கங்களை அறிந்து கொண்டிருக்கும் சிலருக்கே இவை தெரியவரும். வெளியார் யாவருக்கும் வாலீசர் சிறையிலிருப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. வாலீசருடை டைய முகத்தை அறிந்த பலர் இது வாலீசருடைய முகமாக இருக்கிறதேயென்று கேட்டால் அவரைப் போன்ற முகத்தினர் இவர் என்று சமாதானம் கூறப்படுகின்றது. பலர்க்கு இந்த முகம் வாலீசருடையது என்று தெரியாமலே இருக்கிறது. முகத்தில் பலவித வர்ணங்கள் பூசியிருக்கின்றமையால் ஒன்றும் அறியக் கூடாமலிருக்கின்றது. (பொறுத்து) நீங்கள் ஏன் இங்கு வந்தீர் கள்?
நாக : அதிரதர் புரேசரை இங்கு வரும்படி கட்டளையிட்டனுப் பினார். அவருடன் அவர் நண்பனான நானும் வந்தேன்.
ஈ-வீரன்: உங்களை அதிரதர் எதற்காக அழைத்தார்?
நாக : காரணங் குறிப்பிடவில்லை.
ஈ-வீரன்: ஐயோ! புரேசரைக் கொல்லவன்றோ அவர் வழி தேடிக் கொண்டிருக்கிறார்.
புரே : என்னைக் கொல்லவோ அதிரதர் இங்கு அழைத்தார்?
ஈ-வீரன்: ஆம்; அதற்கு வேண்டிய ஏற்பாடுகளனைத்தையும் அவர் செய்து கொண்டிருக்கின்றனரே.
புரே : என்னென்ன ஏற்பாடுகள்? தயைசெய்து தெரிவிக்க முடியுமா?
ஈ-வீரன்: ஏற்பாடுகள் என்ன? உங்களை அன்புடன் வரவேற்பதாகப் பாசாங்கு செய்து பிறகு வஞ்சகத்ததால் கொலை செய்வது தான்.
புரே : அவ்வளவுதானே. அதிரதர் வஞ்சகம் யாரிடத்தில் செல்லும்? நாகநாதா! நாம் இப்படியே திரும்பலாமா?
நாக : செல்ல வேண்டியதுதான். வேறு என்ன வழி? ஐயா! நீங்கள் கூறுவன யாவும் உண்மைதானே என்று மற்றொரு முறை நான் கேட்பதற்காக மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
ஈ-வீரன்: உங்கள் நன்மையை நாடியே நான் இவ்வளவு தூரம் கூறினேன். புரேசர் என்று நீங்கள் கூறியவுடன் என் மனம் மிக்க பரிதாபமடைந்தது. இன்னும் சில காலம் உயிருடனிருந்து பாணபுரத்துக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்ப மிருந்தால் தயைசெய்து இப்படியே திரும்ப வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாக : மிக்க வந்தனம் தங்களுக்கு. புரேசா! புறப்படலாம்.
ஈ-வீரன்: அந்தோ! அதிரதரின் குதிரைப் படைகளுடைய காலோசை கேட்கின்றது. தாங்கள் விரைந்து செல்லுங்கள். ஒருகால் தங்களை நோக்கியே அவர்கள் வரக்கூடும்.
_(மெதுவாகச் செல்கிறான்.)_
புரே: நாகநாதா! நம் குதிரைகள் சரியாக இருக்கின்றனவா? விரைவில் வீட்டை நோக்கிச் செல்லுமன்றோ?
நாக : அதற்கெல்லாம் நான் பொறுப்பாளி.
புரே : சரி. ஜாக்கிரதை. நாம் இப்பொழுது ஓடுதல் ஆண்மைக் கழகன்று. நம்மைப் பார்த்த பிறகே ஓடுகிறார்கள் என்று அவர் கள் நினைத்துக்கொள்வார்கள். ஆதலின் அவர்கள் வந்த பிறகு எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்யலாம்.
_(சேமவீரனை முன்னிட்டுச் சில குதிரை வீரர்கள் பிரவேசிக் கிறார்கள்.)_
சேமவீரன் : ஐயா! நீங்கள்தானே புரேசர்.
புரே : ஆம்.
சேம : இவர்? உங்கள் நண்பர் நாகநாதரோ?
புரே : ஆம்.
சேம : இதுகாறும் நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள் ?
புரே : உங்களையறிய நான் பெரிதும் ஆவலுள்ளவனாயிருக்கிறேன்.
சேம : என்னைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அநாவசியம்.
புரே : அங்ஙனமானால் நான் யாருடன் பேசிக் கொண்டிருந்தேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதும் அநாவசியம்.
சேம : நான் யாரென்பதையும், என்னைச் சுற்றிலு முள்ளவர்களை யும் அறிந்து மரியாதையாகப் பேச வேண்டும்.
புரே : அதையே நானும் தங்களுக்குத் திருப்பிக் கூறுகின்றேன்.
சேம : நான் அரசருடைய ஆக்ஞையால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேனென்பதையும், என் பெயர் சேமவீர னென்பதை யும், நீ யாருடன் பேசிக் கொண்டிருந்தாய் என்பதைத் தெரிவியா மற் போனால், உன்னைச் சிறையிலடைக்க எனக்கு அதிகாரமுண் டென்பதையும் நீ நன்கறிய வேண்டும்.
புரே : சிறையிலடைக்கத்தான் அதிகாரமுண்டோ? அதற்கு மேலு முண்டோ?
சேம : உன்னைக் கொலை செய்யவும் எனக்கு உரிமையுண்டு.
புரே : என்னைப் பெற்ற அப்பனோ, வளர்த்த மாமனோ நீ, என்னைக் கொல்ல உனக்கு உரிமை இருப்பதற்கு? யாரைக் கொல்ல யார் உரிமை பெற்றிருக்கிறார்?
சேம : வீண் பேச்சில் பயனில்லை. உண்மையை உரைக்கின்றாயா? அல்லது வாலீசனுடன் வசிக்க விரும்புகிறாயா?
புரே : நான் யாரிடத்தில் பேசிக் கொண்டிருந்தே னென்பதைக் கூற முடியாது.
சேம : அப்படியானால் மரண தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் வாலீசனுடன் உன்னைச் சிறையிலடைத்து வைக்கப் போகிறேன்.
புரே : என்னைச் சிறையில் அடைக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
சேம : உன்னைக் கொல்ல எனக்கு உரிமை இருக்கும்போது உன்னைச் சிறையிலடைக்க எனக்கு அதிகாரமில்லையா?
புரே : என் உயிர்மீது உனக்கு எவ்வளவு உரிமையுண்டோ அவ்வளவு உரிமை உன் உயிர் மீது எனக்கும் உண்டு. (பொறுத்து) உம். - நமக்குள்ள உரிமையைப் பற்றிப் பிறகு வாதம் செய்து கொள்ள லாம். வாலீசர் சிறையிலிருப்பதாகக் கூறினாயே, எந்தச் சிறையில்?
சேம : சிறையிலிருக்கின்றான். அவ்வளவே நான் கூற முடியும்.
புரே : அதிரத அரசருடைய சிறையிலா? இயமதர்ம இராஜனுடைய சிறையிலா?
சேம : சிறையிற் சென்ற பிறகு தெரிந்து கொள்ளலாம். மரியாதை யாக என் பின் வா. இல்லாவிட்டால் இந்த வீரர்களால் கட்டப் பட்டுச் சிறைக்குக் கொண்டு போகப்படுவாய்.
புரே : சிறைக்கு நான் வரமாட்டேன். யாரோ ஒரு வழிப்போக்கன் எனக்குக் கட்டளையிடுவது; நான் சிறைக்குச் செல்வது; நியாயம் நன்றாக இருக்கிறது!
சேம : அதிகமாகப் பேசினால் இதோ தொங்கிக் கொண்டிருப்பவ னுடைய கதியே உனக்கும் நேரிடும்.
புரே : நீ குறிப்பிடும் இந்த முண்டம் யாருடையது?
சேம : அவன் ஒருவன். உன்னைப் போல் ஆடி அடங்கினான். நீ அடங்கப் போகின்றாய்.
புரே : ஓ! ஓ! இந்த ஒருவனைக் கொன்ற மாபாதகன் எவன்?
சேம : ஏது? எம் அரசரையே வசைகூற ஆரம்பித்து விட்டாய் வீரர்காள்! இவனை உடனே பிடித்துக் கட்டுங்கள்.
புரே : (வீரர்களைப் _பார்த்து)_ நீங்கள் உண்மை வீரர்களாயிருப்பின், உங்கள் உயிர்களை இமயனிடத்தில் ஒப்புவித்து விட்டாவது, மேலுலகத்தில் தக்க வசதிகள் ஏற்படுத்திவிட்டாவது பிறகு என் னிடத்தில் வாருங்கள். என்னைக் கட்டும் ஒரு வீரனும் இவ் வுலகிலிருக்கின்றானோ? சேமவீரா! நீ வீரனாயிருந்தால் என் னிடத்தில் யுத்தத்திற்கு வா. ஏன் இத்தனை உயிர்களை முதலில் பலி கொடுக்கின்றாய்?
சேம : வாள் வீச்சோ? தோள் வலியோ? எதைக் கொண்டு இங்ஙனம் செருக்காகப் பேசுகின்றாய்? எடு உன் வாளை; ஏறு உன் அசுவத் தின் மீது. வீரர்காள்! விலகி நில்லுங்கள்.
_(இருவரும் குதிரைமீது ஆரோகணித்துக் கொள்கின்றனர்.)_
புரே : இந்த வாள் என் தாய் நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு உபயோகப்படும் வாள். என் ஜன்ம பூமியின் நன்மைக்காவே உன்னைக் கொல்கிறேன். இந்த வாலீசனுக்கு எவன் காலனாக நேர்ந்தானோ அவனுக்கு இவ்வாள் காலனாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை. சரி? நம் யுத்தத்தை ஆரம்பிக்கலாமா? நாகநாதா! ஜாக்கிரதை. சேமவீரா! கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்வதா யிருந்தால் செய்து கொள். கடைசி காலத்திலாவது ஆண்டவ னின் நாமத்தைச் சொல்லி நன்மை பெறுவாய்.
சேம : சீ! மடையா! யாருக்கு இந்த உபதேசம்?
புரே : (ஆத்திரத்துடன்) யார் மடையன் ?
_(தன் வாளால் சேமவீரனைக் குத்துகிறான். அதைச் சேமவீரன் தடுத்துக் கொள்கிறான். இருவரும் சிறிது நேரம் யுத்தம் புரிந்து, கடைசியில், சேம வீரன் புரேசன் வாளால் அடிபட்டுக் கீழ் வீழ்ந்து உயிர் துறக்கிறான்.)_
நாகநாதா! வா. நம் வேலை முடிந்துவிட்டது. இனி நாம் இங்கிருத்தல் தகாது.
_(இருவரும் செல்கின்றனர்.)_
சேமவீரன் வீரர்களில் ஒருவன் : சேமவீரர் சேமமாய்ப் போய்ச் சேர்ந்தார்.
மற்றொருவன் : சேமவீரரின் வாய்க் கொழுப்பு உயிருக்கு வழி காட்டிவிட்டது.
பிறிதொருவன் : சரி. இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லலாம். இங்குப் பேசுவதில் என்ன பயன்? வந்தவர் தம் காரியத்தை முடித்துக் கொண்டு போய்விட்டார்.
வேறொருவன் : உம். தூக்குடாப்பா தூக்கு. ஏலேலோ.
_(சேமவீரன் பிணத்தைத் தூக்கிக் கொண்டு வீரர்கள் போகிறார்கள்.)_
இரண்டாங் களம்
இடம் : பாணபுரத்திற்கும் ஈசனாபுரத்திற்கும் இடையேயுள்ள ஒரு யுத்த களம்.
காலம் : காலை.
_(அதிரதன், தன் சேனாதிபதியுடனும் சில யுத்த வீரர்களுடனும் பிரவேசிக்கிறான்.)_
அதிரதன் : சேனாதிபதி! நம் படைகள் யாவும் சரியாக அணி வகுக்கப்பட்டு இருக்கின்றனவா?
சேனாதிபதி : அரசருடைய ஆசியைப் பெற வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதி : இதோ வந்துவிட்டேன். (பொறுத்து) இன்று சேனைத் தலைமைப் பதவியை நான் வகிக்க வேண்டுமென்று நீ கூறினை யாமே.
சேனா : ஆம்; தாங்கள் சேனைகளை நடத்தினால், வீரர்களுக்கு ஒருவித உற்சாகமும் துணிவும் உண்டாகுமென்றே அங்ஙனம் கூறினேன். நானும் தங்களுடனிருந்து வேண்டும் உதவிகளைச் செய்கிறேன்.
அதி : நீ கூறுவதிலும் உண்மை இருக்கிறது. சேனைகளை நடத்திச் செல்லும் தொழிலை நான் மேற்கொண்டு விட்டால், சேனை களுக்கு வேண்டும் உணவுப் பொருள்களை வினியோகம் செய் வதையும் சத்துருக்களுடன் வேண்டும் போது கடிதப் போக்குவரவு செய்வதையும் பிற விஷயங்களையும் யார் கவனிப்பது?
சேனா : வேறு ஓர் உத்தியோகதர் அவைகளைக் கவனித்துக் கொண்டு செல்கிறார்.
அதி : அது முடியாத காரியம். நான் பாடி வீட்டில் இருந்து விஷயங் களைக் கவனித்துக் கொண்டு வருகிறேன். நீ சேனையை நடத்தி, யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும்.
சேனா : நம் சத்துருக்களின் தலைவரான புரேசர், தாமே சேனை களை நடத்துவதாகக் கேள்விப்படுகிறேன்.
அதி : அதைப் பற்றி இங்கு என்ன? அவனை நாம் பின்பற்ற வேண்டு மென்ற விதி ஏதேனும் இருக்கிறதா? (பொறுத்து) படைகளை எப்பக்கத்தில் நிறுத்தி வைத்திருக்கிறாய்?
சேனா : யுத்தகளத்தின் கிழக்கு பாகத்தில்.
_(சேனாதிபதி முன் செல்ல மற்றவர் பின் செல்கின்றனர். புரேசன், நாகநாதனுடனும் சில வீரர்களுடனும் பிரவேசிக்கிறான்.)_
புரேசன் : இம்முறை நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்குத் தோன்றவில்லை.
நாகநாதன் : இதற்குள் எப்படி அறிந்துவிட்டாய்?
புரே : இருக்கப்பட்ட நிலைமையைப் பார்த்தால் எனக்கு அங்ஙனம் தோன்றுகிறது. என் உள்ளத்தில் ஊக்கமும் உண்டாக வில்லை; உற்சாகமும் தோன்றவில்லை. ஆயினும் பார்ப்போம். இதனை நீ எங்கும் வெளியிடாதே.
நாக : நாம் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி வேண்டுவன செய்வோம். வா; இனி இங்குத் தாமதிக்கலாகாது.
_(யுத்த களத்தில் யுத்த வாத்தியங்கள் முழங்குகின்றன. யுத்தம் நடை பெறுகிறது. சிறிது நேரங் கழித்து அதிரதனும் அவன் சேனாதிபதியும் பிரவேசிக்கின்றனர்.)_
அதி : ஈசானபுரத்துப் படை வெற்றி பெற்றதற்குக் காரணமாயிருந்த உனக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். உனக்கு என் நாட்டில் எல்லாவித நன்மைகளும் கிடைக்கும். இப் பொழுது இந்த வெற்றியைவிடக் கஷ்டமானதொரு வேலையைச் செய்ய வேண்டும்.
சேனா : உத்தரவுப்படி செய்யச் சித்தமாயிருக்கிறேன்.
அதி : யுத்தகளத்தில் நாம் புரேசனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகலின் அவனை எங்ஙனமாவது கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும். ஒருகால் அவன் அகப்படாவிட்டால் அவன் மனைவியையும் மகளையும் சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும். உனக்கு வேண்டிய படைகளை அழைத்துக் கொண்டு செல்லலாம்.
சேனா: புரேசன் அகப்பட்டால், அவன் மனைவியையும் மகளையும் சிறைபிடிக்க வேண்டிய அவசியமில்லையே.
அதி : இல்லை.
சேனா : புரேசனை ஒரு நொடியில் பிடித்துக் கொண்டு வருகிறேன். அவன் எங்குச் சென்றிருக்கப் போகிறான்? இப்பொழுதே சென்றால்தான் நல்லது.
ஆதி : ஆம். நீ செல். யான் பாடி வீட்டிற்குச் சென்று பிற காரியங் களைப் பார்க்கின்றேன்.
_(இருவரும் செல்கின்றனர்.)_
மூன்றாங் களம்
இடம் : ஈசனாபுரத்துச் சிறைச்சாலையில் ஓர் அறை.
காலம் : மாலை
_(சுதர்மை துக்காக்கிராந்தையாய் உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய சிறுபெண் அனலை அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள்.)_
அனலை : ஏன் அம்மா நீ எப்பொழுதும் கண்ணில் ஜலம் விட்டுக் கொண்டே யிருக்கிறாய்? நான் ஒரு நாளாவது உன்னைச் சிரித்த முகத்துடன் பார்த்ததில்லையே.
சுதர்மை: (தனக்குள்) அந்தோ! தாதிமார் தோளிலும் தகப்பனார் மடியிலும் விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய இக் குழந்தை, இப்பொழுது சிறையாளரின் சில்லரைச் சேஷ்டைக ளுக்கு இணங்கி நிற்கின்றது. தேசபக்தர்களின் வீர கோஷத் துக்குத் தலையசைப் பதினால் ஏற்படும் இக்குழவியின் கழுத்தில் உள்ள முத்து மாலையின் பிரகாச மானது, இப்பொழுது, அதிரதருடைய அநீதிக்கு அஞ்சி அடங்கிக் கிடக் கின்றது. அன்பர் உள்ளமும் குழைந்துருகும்படியான இச்சிறு ரத்தினத் தின் மழலைச் சங்கீதத்திற்குப் பதில், இதுகாலை வயிற்றுக்குப் போதிய உணவின்றியும் தன் தாகத்தைச் சாந்தி செய்துகொள்ளத் திறமை யின்றியும் அழுங்குரலையே கேட்கிறேன். ஐயோ! என் பிராணநாதர் எங்குத் தவித்துக் கொண்டிருக்கின்றனரோ? எந்தக் காட்டில் எந்த மிருகத்துடைய கடுமையான ஒலியைக் கேட்டுத் திடுக்கிடுகின்றனரோ? தன் உயிருக்கும் இனிதாய் மதித்திருந்த இச்சிறு பெண்ணை நினைத்து நினைத்து எங்கே தம் மெய்மறந்து துக்க சாகரத்தில் அமிழ்ந்து கிடக்கின்றனரோ? ஐயோ! அவருடைய ஆற்றலும் அஞ்சாமையும் சத்தியமும் அதிரத அரசருடைய அநீதியின் முன் நில்லாமல் ஓடிப் போயினவே. இதுவும் கால வித்தியாசமோ? தம் தேசத்தில் அதிக அபிமானம் கொண்ட காரணத்தினாலேயே என் நாதரின் தலைவர் தலை வாங்கப் பட்டாராம். நியாய வரம்புக்குட்படு வோருக்கு இது காலமல்லவோ? அந்தோ! நாட்டில் அநியாயமும் நாத்திகமும் பழுத்து நிற்கின்றனவே!
அன : அம்மா? ஏன் அழுகின்றாய்? என் அப்பா எங்கே? நாம் ஏன் இங்கே இப்படி பட்சிகள் கூட்டில் அடைக்கப் பட்டிருப் பதைப் போல் அடைக்கப்பட்டிருக்கிறோம்.
சுத : அம்மா ! குழந்தாய்! உனக்கு நான் என்னவென்று எடுத்துச் சொல்வேன்? நம்முடைய நாட்டிற்குப் பாணபுரம் என்று பெயர். இது சிறிய தேசமா யிருந்தபோதிலும் பல வருஷ காலமாகச் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்தது. ஆனால் சில வருஷ காலமாக ஈசானபுரத்தரசர் நம் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு தம் மனம் போனபடி யெல்லாம் ஆண்டு வருகிறார். இதனால் நாட்டிலுள்ள ஜனங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு அளவே கிடையாது. குடிகளுடைய துன்பத்தைப் போக்கித் தம் ஜன்ம பூமிக்குச் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டி வாலீசர் என்ற ஒரு பெரியவரும் உன்னுடைய தகப்பனாரும் உழைத்து வந்தனர். ஆனால் அதிரத அரசர் வாலீசரை அநியாயமாகக் கொலை செய்துவிட்டார்; உன் தகப்பனாரையும் காட்டிற்குத் துரத்திவிட்டார். அது போதாமல் உன்னையும் என்னையும் சிறையில் வைத்திருக்கிறார்.
அன : நம்மை ஏன் சிறையில் வைக்க வேண்டும்?
சுத : நாம் பாணபுரத்திலேயே இருந்தால் பாணபுரத்து ஜனங்கள் உன் தகப்பனார் மீது கொண்டுள்ள ஒரு பக்தியினால் என்னை யரசி யாக்கு வார்களோ என்ற பயமும், என்னையே உன் தகப்பனாரின் பிரதிநிதியாகக் கொண்டு அவர்கள் ஒருங்கே திரண்டு மறுபடி யும் தம்மீது எங்குப் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சமும் அதிரதருடைய உள்ளத்தைப் பிடித்துத் துன்புறுத் தினமையால் நம்மைச் சிறையில் வைத்தனர்.
அன : பெண்களைச் சிறையில் வைக்கும் வழக்கம் எந்த இராஜாங் கத்திலேனும் அனுஷ்டானத்தில் இருந்ததாக நான் படித்த கதை களில் காணோமே.
சுத : அதிரதருடைய ஆட்சியில் எல்லாம் நடக்கும். கேளாத புதுமை களைக் கேட்கலாம். காணாத விநோதங்களைக் காணலாம். இவைகளை யெல்லாம் கண்டித்ததினாலேயே உன் தகப்பனார் இப்பொழுது வனவாசம் செய்து வருகிறார்; வாலீசர் உயிர் துறந்தார். உன் தகப்பனாரின் நண்பர் களாயிருந்த பலர் இங்ஙனமே கடுமையான தண்டனைகளுக்குப் படுத்தப் பட்டனர். உன் தகப்பனாருக்காகப் பாணபுரத்தில் எவ்வித கிளர்ச்சியும் இருக்கக் கூடாதென்ற நோக்கத்துடனோ வேறறெந்த நோக்கத்துடனோ உன்னையும் என்னையும் அதிரதர் சிறையில் வைத்திருக்கிறார். (ஒரு _சிறைக் காவலன் பிரவேசிக்கிறான்.)_
சிறைக் காவலன் : அம்மா! தங்களைப் பார்த்தால் பரதேவதை போலிருக்கிறது. வீரத்தில் வல்ல புரேசருடைய பாரியையான தங்களைப் பெண்டாளவே அதிரத அரசர் இப்பொழுது உங்களைச் சிறையில் வைத்திருக்கிறார்
சுதர் : ஐயோ! ஐயோ! _(பக்கத்திலுள்ள சுவரில் சாய்ந்து கண்ணீர் வடிக்கிறாள்.)_
சி.கா :அம்மணி! விசனப்படாதீர். நான் அதிரத அரசருடைய ஊழியனாயிருந்த போதிலும் அவர் செய்யும் அக்கிரமச் செயல் களை வெறுப்பவனாய் அவருடைய எண்ணத்தைத் தங்களிடத் தில் கூறு கின்றேன். அவருடைய உப்பைத் தின்று நான் ஜீவிக்கின்றேனெனினும் அவர் செய்யும் அநீதியான காரியங் களில் நான் கொண்டுள்ள வெறுப்பினால் உண்மையை உரைக்கத் துணிந்தேன். நான் இழி தொழில் செய்கிற வனாயிருந் தும் என் வார்த்தைகளுக்குச் சிறிது செவி சாய்க்க வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன். தாயே! அறம் வெல்லும்; மறம் தோற்கும். சத்தியம் கீர்த்தியைக் கொடுக்கும்; அசத்தியம் இகழைத் தரும். நீதி தூநெறியில் விடும்; அநீதி தீநெறியில் தள்ளும். சுதந்தரம் வாழ்வைக் கொடுக்கும்; அடிமைத்தனம் தாழ்வைக் கொடுக்கும். சுதந்தரத்துடன் வானத்தில் பறக்கும் ஒரு பட்சிக்கும் அச்சுதந்தர உணர்ச்சியை நுகராத சக்ரவர்த்திக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. இப்பொழுது நீங்கள் சுதந்தரமின்றிக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றீர்கள். சுதந்தரத்துடன் இருக்க வேண்டியவர்களை ஓரிடத்தில் கட்டுப்படுத்தி வைப்பது தருமமாகாது. ஒருவருடைய சுதந்திரத்தை மற்றொருவர் கட்டுப் படுத்தல் மனிதச் செய லாகுமோ? ஆதலின் அம்மணி! தாங்கள் அநியாயமாகச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நான் நன்குணர்கிறேன். என் தேகத்திலுள்ள நரம்புகள் யாவும் தங்களுக்குச் செய்யப்பட்டுள்ள அநீதியைக் கண்டு கோபங் கொண்டு எழுந்து நிற்கின்றன. அதிரதரின் கீழ் நான் சுமார் இருபது ஆண்டுகளாகச் சேவகம் செய்திராமல் இருந்தேனா யாகில் தங்களை நான் எப்படியாவது காப்பாற்றியிருப்பேன்.
சுத : அதிரத அரசர் என்னை நியாய முறை தவறிச் சிறையிலடைத்த போதிலும் நாமும் நியாய முறையின்றி அச் சிறையினின்றும் வெளியேறுதல் கூடாது. அறிஞர் செய்கை அதுவன்று.
சி.கா. : அம்மணி! தாங்களே பெண்கள் நாயகம்; மாதர் சிகாமணி. துன்பம் நேர்ந்த காலத்து அறிவிற் சிறந்த பெரியோரும் சிறிது மனக் கலக்கம் அடைவர். தாங்களோ நாடிழந்து, உயர் பதவியை யிழந்து, நாதனிழந்து சிறையில் வாசம் செய்து கொண் டிருந்த போதிலும் வாய்மையும் அகத் தூய்மையும் கொண்டு விளங்குகின்றீர். இந்த அருங்குணம் உத்தம தேசபக்தரிடத்தும் புலவர் பெருமான்களிடத்தும் காண்டல் அருமையாயிருக்கிறது. பாணபுரத்திலிருந்து சிறைபிடித்து வரப்பட்ட எத்தனையோ தேசபக்தர்கள் அதிரதருடைய ஏவலாட்களின் கொடுமைகளுக் கஞ்சி, தம் மனச் சான்றுக்கு மாறாகத் தங்கள் நாட்டையும் தங்கள் சகோதரர்களையும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவர் களுடைய செயலை நினைக்குந்தோறும் என் உள்ளத்தில் உண்டாகும் மனக் கொதிப்பை அளவிட்டுரைக்க முடியாது. புரேசருடைய தர்ம பத்தினியான தாங்கள் அவரைப் போல் கலங்கா நெஞ்சமும் உறுதியும் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை, தங்களைக் காணாதிருக்கு முன்னரே எனக்குண்டு. யான் அப்பொழுது கொண்ட நம்பிக்கை இப்பொழுது உறுதி யாகி விட்டது. ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவார். இந்தச் சிறைச்சாலையில் தாங்கள் இருக்கும் வரை சிறிது ஜாக்கிரதை யாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போன்ற சிறையாளரிற் பலர் தங்களை மாய உரைகளால் மயக்கி அதிரதர் வசப்படுத்த முயல்வர். அதிரத அரசர் நேரிலேயே இவ் விடம் வரினும் வரக்கூடும். ஆதலின் தாங்கள் எதற்கும் அஞ்சாது எவ்வித மாய மொழிகளுக்கும் வசப்படாது உறுதியுடனிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். யான் சொல்லக் கூடியது அவ்வளவே யாகும்.
சுத : எட்டி மரங்களிடையே ஒரு மாமரம் இருந்தவாறு போல் அதிரதனுடைய காவலாளர்களில் நல்லவன் ஒருவனைக் காண்பது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
_(வேறொரு காவலாளன் பிரவேசிக்கிறான்.)_
வேறொரு.சி.கா : (முதற் _சிறைக் காவலனைப் பார்த்து)_ இன்னாண்ணே! இந்தம்மாவோட நீ நெடுநேரமா பேசிக்ணு இருக்ரையே.
சி.கா. : இதுவும் ஒரு குற்றமோ? அம்மணி! அடியேற்கு உத்தரவு கொடுக்க வேண்டும். அரக்கர்கள் மத்தியில் சீதாதேவி தம் கற்பைக் காத்துக் கொண்ட விதத்தை மட்டும் இச்சமயத்தில் நினைவூட்டுகிறேன்.
வே.சி.கா : மகாராஜா இங்கு வரார் என்று சொல்லத்தான் நான் இங்கே வந்தேன்.
சி.கா. : அடியார்களைக் காவாது ஏன் அண்டவன் இருக்கிறான்?
_(சிறைக்காவலர் இருவரும் சுதர்மையும் அனலையும் பின்னடைகின் றனர். அதிரதன் சில ஆதானிகர்களுடன் பிரவேசிக்கிறான்.)_
அதிரதன் : அம்மையார் எப்படியிருக்கிறார்?
_(அனைவரும் மௌனமாயிருப்பதைக் கண்டு சிறிது நேரங் கழித்து)_
இங்கிருந்த காவலர்கள் எங்கே?
_(வேறொரு சிறைக்காவலாளன் கையைக் கட்டி வாய்பொத்தி நிற்கிறான்)_
இங்கே ஒருவரும் காவல் புரிவதில்லையா?
வே.சி.கா. : (மிக்க _பயத்துடன்)_ இ-ல்-லெங்-கோ.
அதி : இல்லையா? பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
வே.சி.கா.: இங்கேதான் இருந்தேனுங்கோ.
அதி : உம் - அந்த ஆஷாடபூதி எங்கே?
_(சிறைக்காவலன் எதிர்வந்து நின்று வணங்குகிறான்.)_
நீ சரியாகக் காவல் புரிவதில்லையாமே.
சி.கா : என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து வருகிறேன்.
அதி : பாணபுரத்தின் தேவதை எந்நிலையிலிருக்கிறாள்?
சி.கா : தேவதை தேவனை நொந்துகொண்டிருக்கிறாள்.
அதி : அவள் பெயரென்ன?
சி.கா : (தனக்குள்) ஈசனே! என்ன கஷ்டம்! (வெளிப் _படையாய்)_ சுதர்மா தேவியார்.
அதி : சுதர்மா! என் எதிரே வந்து நில்.
_(அங்குள்ளார் அனைவரும் இதனைக் கேட்டு ஒருவிதமான வெறுப்பையடை கின்றனர்.)_
எங்கே? இன்னும் வரக் காணோம். நான் அதிரத மஹாராஜா என்பதையும் என் மொழிப்படி நடவாதவர் பெரிய தண்டனை களுக்குட் படுவர் என்பதையும் சுதர்மை நன்குணர வேண்டும். என் வீரம் எவரையும் அடக்கி வைத்திருக்கிறது. என் செல்வம் எவருடைய கரத்தையும் என்னிடத்தில் நீட்டச் சொல்கிறது. என் வனப்பைக் கண்டு ஆடவரும் பெண்மையை அவாவு கின்றனர். நாடில்லாதவன், நகரமில்லாதவன், செல்வமில்லா தவன், ஜனங்களின் ஆரவாரத்தையே பெருந்துணையாகக் கொண்டு என்னுடன் போருக்கு வந்து தோற்று ஓடிப் போன வன், புரேசன் என்னும் சிறு பெயரான் - அவன் மனைவி என்ற முறையில் நீ இன்னும் சிறையிலிருந்து கொண்டு துன்புற லாமோ? மனக் கவலையை ஒழித்துவிட்டு ஈசான புரத்தரசியாய் வீற்றிரு.
_(சிறிது நேரம் மௌனம்)_
பதில் ஒன்றையும் காணோம். சுதர்மை அங்கிருக்கின்றளா? இல்லையா?
(சிறைக் _காவலனைப் பார்த்து)_ சுதர்மையை இங்கே பிடித் திழுத்துக் கொண்டு வா. (பொறுத்து) என்ன பேசாமலிருக் கிறாய்? பிடித்திழுத்துக் கொண்டு வருகிறாயா? மாட்டாயா?
சி.கா. : (எதிரே _வந்து முழந்தாளிட்டு)_ ஐயனே! அக் காரியத்திற்கு நான் ஒருபோதும் உடன்படேன். என்னை வாள் கொண்டு வீசினும் தாள் கொண்டு மிதிப்பினும் அத்தீத்தொழிலுக்கு ஒருபோதும் உடன்படேன். யான் துச்சாதனன் அல்லேன். மஹா ராஜா! தயைசெய்து இப்பொழுது தாங்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடுங்கள். தனி மனிதன் என்ற முறையில் இம்மொழிகளைக் கூறுகிறேன். பிற மாதர் களைக் கண்ணெடுத்தும் பார்த்தல் கூடாதென்று நீதி நூல்கள் முழக்க மிடுகின்றன. முக்கியமாக க்ஷத்திரியர்கள் இதனை மிக்க ஜாக்கிரதை யுடன் அநுசரிக்க வேண்டும். ஒழுக்கத்தை விட்ட மன்னர்கள் குடிகளின் அன்பை நாளாவட்டத்தில் இழந்து அதன் பலனாக நாட்டையும் தோற்று விடுகிறார்கள். தன் பொறிகளை அடக்கி யாள முடியாதவன் ஒரு நாட்டை எங்ஙனம் அடக்கியாள முடியும்? ஒரு சிறந்த வீரரை யுத்தகளத்தில் தோற்கடித்துக் காட்டில் ஓட்டிவிட்டு அவருடைய மனைவியைச் சிறையி லடைத்து பெண்டாள நினைப்பது ஆண்டகைமையா? வீரர் களுக்கு அழகா? உயர்ந்த வேந்தர்களுக்குப் பொருந்துமா? தங்களுடைய ஆதானிகர்கள் இந்தச் செயலை உண்மையில் அங்கீகரிக்கிறார்களா? இத் தொழிலுக்குத் தாங்கள் உடன் பட்டால் பிறகு என்ன நேரும் என்பதைத் தங்கள் அமைச்சர்கள் தங்களுக்கு எடுத்துக்காட்ட வில்லையா? இப்பொழுது தங்கள் அண்டையில் அலங்காரமாய் நிற்கும் ஆதானிகர்கள் எந்த நீதி நூல்களையும் வாசிக்கவில்லையா? தெய்வம் ஒன்றிருக்கிற தென்று இவர்கள் உணரவில்லையா? இவர்கள் அதரும வீட்டில் பிறந்தவர்களா? அசத்திய இல்லத்தில் வளர்ந்தார்களா? ஒழுக்கமின்மை யென்னும் இடத்தில் வாழ்க்கையை நடத்துகிறார் களா? அரசே இக்காரியத்திற்குத் தாங்கள் உடன் பட்டீர்க ளானால் தங்களுடைய குடிகள் இன்னும் எவ்வளவு இழிவான நிலையில் இறங்கிவிட மாட்டார்கள் என்பதைத் தாங்கள் சிறிதும் கருதவில்லையா? குடிகளுக்கு மன்னரன்றோ வழி காட்டியாயிருக்க வேண்டும்? தாங்கள் இத்தகைய எண்ணங் கொண்டு பாணபுரத்தின் தெய்வத்தைச் சிறையிலடைத்தீர்கள் என்பதைப் பாணபுரத்து ஜனங்கள் தெரிந்து கொண்டார்க ளானால் தங்கள் நாடு, தங்கள் செல்வம், தங்கள் ஆண்மை எல்லாம் என்னவாகும்! உலகம் இதைப் பொறுக்குமா? புரேசர் இதைக் கேட்டால் என்ன பாடுபடுவார் என்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள்.
தாங்களும் ஒரு குடும்பத்திலேயே பிறந்தீர்கள்; குடும்பத் திலேயே வளர்ந்தீர்கள்; குடும்பத்துடனேயே இருக்கிறீர்கள். தங்களுடைய குடும்பத்தைப் பற்றி மாற்றான் ஒருவன் தீய எண்ணம் எண்ணினால் தாங்கள் சும்மாயிருப்பீர்களா? தங்க ளுடைய மீசை துடியாதா? கண்களில் தீப்பொறி பறவாதா? இரத்தம் கொதியாதா? தங்களுடைய வீர வாள் உறையுளே வீழ்ந்துகிடக்குமா? இவைகளை யெல்லாம் நினைத்துப் பாருங்கள். தங்களிடத்தில் இருபதி யாண்டுகள் ஊழியம் செய்து வந்தேனாதலினாலும், தங்களுடைய எதிர்கால நன்மையை நாட வேண்டியிருப்பவனாதலினாலும் இம்மொழிகளைக் கூறினேன். தங்களுடைய பாதங்களைப் பிடித்துக் கொள்கிறேன். இக்கொடுந் தொழிலுக்கு மாத்திரம் உட்பட வேண்டாம், வேண்டாம், வேண்டா மென்று மும்முறை கூறுகிறேன்.
ஆதானிகர்களில் ஒருவன் : (தனக்குள்) மரத்தினின்றும் தோன்றிய கோடாரி மரத்தையே வெட்டத் துணிகிறது.
ஆதானிகர்களில் வேறொருவன் : அரசர்களுக்கு இழிஞர்கள் உபதேசம் செய்கிறார்கள்! என்ன காலம்!
ஆதானிகர்களில் ஒருவன் : அங்ஙனம் உபதேசம் செய்யும் இழிஞர்கள் இன்னும் உயிருடனிருக்கிறார்கள்!
சி.கா. : தங்களுடைய விருப்பம் அதுவானால் அங்ஙனமே அரசருக்கு ஆலோசனை கூறலாம். தங்களைப் போன்ற ஆதானிகர்கள் இருக்கும் நாட்டில் வாழ்வதை விட வைவசுவத பட்டினத்தில் இயமதர்ம ராஜனுடைய கிங்கரனா யிருந்து வேலை செய்யலாம்.
அதி : சை ! - (காலால் _உதைத்துத் தள்ளிவிட்டு வேறொரு சிறைக் காவலாளனைப் பார்த்து)_
அடே! அந்தக் குழந்தையை இங்கு அழைத்துக் கொண்டுவா.
_(அவன் அங்ஙனமே அனலையை அழைத்து வந்து எதிரில் நிற்க வைக்கிறான்.)_
அன : என் அப்பாவை வெளியே துரத்திவிட்டு அம்மாவை ஜெயிலில் வைத்திருக்கும் ராஜா நீங்கள்தானோ?
அதி : (தனக்குள்) என்ன தைரியம்!
(வெளிப்படையாய்) எதற்காகக் கேட்கிறாய்?
அன : பெண்களை ஜெயிலில் வைக்கலாமென்று எந்தப் புதகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?
அதி : அநியாயம் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று பெரியவர்கள் கூறவில்லையா?
அன : எங்கள் அப்பாவும் அம்மாவும் என்ன அநியாயம் செய்தார்கள்?
அதி : அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்கன்றோ தெரியும்.
அன : அப்படியானால் ஏன் இங்கே இப்பொழுது வந்தீர்கள்?
அதி : நீயும் உன் தாயாரும் ஏன் இங்கே கஷ்டப்பட வேண்டும்? அரண்மனையில் வந்து சௌக்கியமாக இருக்கலாமென்று சொல்லவே வந்தேன்.
அன: அப்பா இல்லாதபோது அம்மா அரண்மனைக்கு வரமாட் டாள். நாங்கள் ஜெயிலில் இருக்கிறோம் என்று எங்கள் அப்பாவுக்குத் தெரியுமானால் உங்களையெல்லாம் கொன்று விடுவார்.
அதி : (இழிநகை புரிந்து) என்னைக் கொன்றுவிடுவாரா! (பொறுத்து _வேறொரு காவலாளனைப் பார்த்து)_
அடே! நான் இன்னும் சில நாட்கள் கழித்து வருகிறேன். அப்பொழுதேனும் வழிக்கு வருகிறாளா பார்ப்போம். அதுவரை ஜாக்கிரதையாகப் பாதுகாவல் செய்து வா.
(சிறைக் _காவலனைப் பார்த்து)_ இவனை விலங்கிட்டு அழைத்து வரும்படியாகச் சொல். நாளை இவனைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும்.
_(ஆதானிகர்களுடன் செல்கிறான்.)_
சி.கா. : விசாரணை! எதனை? நியாயத்தையா? அநியாயத்தையா?
_(சுதர்மை வெளிவருகிறாள்)_
சுத : அப்பா! எனக்காக நீ விலங்கிடப்பட்டுக் கஷ்டப் படுகிறாயே.
சி.கா : அம்மணி! தங்களுக்காக நான் துன்புறவில்லை. தருமத்திற் காகத் துயர்வுறுகிறேன்; சத்தியத்திற்காகச் சாகுந் தறுவாயிலிருக் கிறேன். இதனால் எனக்குத் திருப்தியே யன்றி ஒருகுறையும் கிடையாது. தாங்கள் எதற்கும் விசனப்பட வேண்டாம். ஆண்டவன் அருள் உள்ளளவும் நமக்கு ஒரு குறையுமில்லை. (திரும்பிப் _பார்த்து)_ அதோ! என்னை அழைத்துச் செல்ல ஆட்களும் வந்து விட்டார்கள். நான் இனித் தங்களைக் காண் பேனோ காண மாட்டேனோ அறியேன், தங்கள் பொருட்டு நான் கஷ்டப் படுகிறேன் என்று மாத்திரம் எண்ணித் தாங்கள் கவற்சியடைய வேண்டாம். அரசர் எதிரியாயிருந்தாலும் தருமமும் சத்தியமும் நமக்குத் தோன்றாத் துணையாய் நிற் கின்றன. ஆதலின் ஒன்றுக்கும் பயப்பட வேண்டிய தில்லை. அம்மணி! எனக்கு உத்தரவு கொடுங்கள். ஈசன் உங்களைக் காப்பாற்றுவான்.
_(ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறான்.)_
சுத : ஆ! நல்லவர்களுக்கு இது காலமில்லை. பொய்யருக்கும் துரோகிகளுக்கும் அதிர்ஷ்ட தேவதை வசமாகிறாள். இவ் வஞ்சகரைக் கண்டு தருமதேவதை நடுங்குகிறாள் போலும். (பொறுத்து) என்ன அரசர்! என்ன நீதிமுறை!
அன : (உள்ளிருந்து) அம்மா!
சுத : என் கண்ணே!
_(செல்கிறாள்.)_
நான்காம் அங்கம்
முதற் களம்
இடம் : கடம்பவனம்.
காலம் : மாலை.
_(புரேசன் தான் இருப்பிடமாகக் கொண்டுள்ள குகையின் வெளிப் புறத்தில் மேற்றிசையை நோக்கிய வண்ணம் உலாவிக் கொண்டிருக் கிறான்.)_
புரேசன் : (தனக்குள்) செக்கர் வானம்! தெய்வீகக் காட்சி! அருட்பெருஞ் சோதி! தனிப்பெருங் கருணை! ஆகாயம் ஒன்றினைக் கொண்டே ஆண்டவன் பெருமையை அளந் தறியலாம். கற்றார் முன் கல்லார் பதுங்குவதுபோல் ஆதித்தன் உதயமானதும் உடுக்கள் ஒளிந்து கொள்கின்றன. பகலவன் மறைந்ததும் விண் மீன்கள் மையுண்டார் கண்கள் போல் மிளிர்ந்து நிற்கின்றன. இவைகள் எங்ஙனம் தோன்று கின்றன என்பதும் எங்ஙனம் மறைகின்றன என்பதும் ஆராய்ச்சிக்குட் பட்டனவேயாம். (சிவந்த _வானத்தைப் பார்த்து)_ முப்புரமெரித்த முக்கண்ணன் இந்நிறத்தவனே என ஆன்றோர் அறைகின்றார். இதுகாறும் அதனைப் பற்றிச் சந்தேகித்துக் கொண்டிருந்த நான் இப் பொழுதே உண்மை தெளிந்தேன். ஆனால் சூரியனைப் போன்ற ஒரு வெப்பமான வது ஆண்டவன் பக்கலில் அமர்ந்திருக்கிறதோ? (சிறிது _யோசித்து)_ ஆம்; இருக்கிறது. அடியார்க்கு அளிதந்து, மடிகளைக் கடிந்து நிற்கும் நந்தியம் பெருமான் கோல்கொண்டு ஆட்சிபுரிகிறான். அங்ஙனமே பானுவும் சில காலம் கடுமையோடும் சில காலம் கருணையோடும் ஆட்சி செலுத்தி வருகிறான். அதோ! அவன் பூமிக்குள் இறங்கு கிறான். இப்பொழுது அவனைப் பார்த்தால் எவனுக்கும் ஒருவித அச்சம் உண்டாகும். உலகத்தில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கோபிக்கிறான் போலும். மார்த்தாண்டனே! வீணாக இந்தப் பேயுலகத்தை ஏன் கடிந்து கொள்கிறாய்? பெரியோர் களின் அமுத மொழிகளுக்குச் செவிகொடுத்துக் கேட்டு நல்வழித் திரும்பாத இந்த உலகம் உன் கொடிய கோபத்துக்கு அஞ்சி நடக்கப் போகிறதோ? இல்லை; முக்காலுமில்லை. உன்னையும் இப்பாழும் உலகத்தையும் படைத்த கடவுளிடத்தில் சென்று முட்டிக்கொள். ஒரு கணத்தில் இவ்வுலகனைத்தையும் அழித்துவிடச் சொல். அப்பொழுதும் இவ்வநியாய உலகம் நன் மதிபெறாது. வலியார் மெலியாரை ஒறுத்தலும் பொருள் நெறி பற்றியவரைப் போற்றலும் அருள் நெறிப் பற்றியவரைத் தூற்றலும் இவ்வுலகத்தில் பெருகி வருகின்றன. அன்பு என்பது அணு அணுவாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெற்ற தாயிடத்தில் அன்பில்லை; வளர்த்த தந்தை யிடத்தில் அன்பில்லை; தவழ்ந்து ஓடி ஆடி விளையாடிய நாட்டிடத்தில் அன்பில்லை; பேசும் மொழி யிடத்து அன்பில்லை; உய்விக்கக் கூடிய மதத்திடத்தில் அன் பில்லை. (பொறுத்து) பொருள், பொருள் என்று அலறும் மாந்தர் தம் நிலையை நினைக்கின் - சை! அதைப் பற்றி எண்ணி ஏன் என் உள்ளத்தை ஆபாசப்படுத்திக் கொள்ள வேண்டும்? இயற்கையில் ஈடுபட்டிருக்கும் போது இப்பாழும் எண்ணங்கள் எங்கு வந்து சேர்ந்தன? (பொறுத்து) பாண புரத்தின் நிலைமை - (பெருமூச் _செறிந்து)_ அதை நினைக்க என் மனம் துடிக்கிறது; உரைக்க முடியாத ஓர் உணர்ச்சி அப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில் உண்டாகிறது. (பொறுத்து) பாணபுரத்து மக்களின் வீரம் அதிரதனுடைய கொடுமைக்கு அஞ்சிக் கிடக்கின்றதோ? அல்லது தலை நிமிர்ந்து என் வரவை எதிர்பார்க்கிறதோ? ஒன்றுந் தெரியவில்லை. நாகநாதன் தனியனாய் என்ன செய்து கொண் டிருக்கிறனோ? என்னை, பெற்ற அப்பன்போலவும் உற்ற சகோதரன் போலவும் எண்ணி நடத்திவந்த நாகம் இப்பொழுது புற்றில் அடங்கிக் கிடக்கிறதோ? அல்லது படமெடுத்து ஆடிப் பகைவரை அலறச் செய்து கொண்டிருக்கிறதோ? ஒன்றுந் தெரியவில்லை. (ஆகாயத்தில் _செல்லும் ஒரு பறவைக் கூட்டத் தைப் பார்த்து)_ புள்ளினங்காள்! யாண்டிருந்து வருகின்றீர்? எங்குச் செல்கின்றீர்? பாணபுரத்திலிருந்து வருகின்றீரானால் அதன் நிலைமை என்ன என்பதைத் தெரிவிப்பீரா? ஏன் அங்கிருந்து ஓடிவந்து விட்டீர்கள்? அதிரதருடைய ஆட்சிக்கு அஞ்சியா? (ஒரு _குயில் கூவுவதைக் கேட்டு)_ ஆம் என்று இக்குயில் பதிலிறுக்கின்றது. அங்ஙன மானால் என் பாணபுரத்து மக்கள் கொடுமைக்குட் பட்டிருக்கிறார்களா? என் நாகநாதன் அவர்களை இன்னும் விடுதலை செய்யவில்லையா? நான் வந்தால்தான் பாணபுரத்து ஜனங்கள் சுதந்தரம் பெறுவார்கள் போலும்! (பொறுத்து) நான் வருவது - ! பாணபுரத்து ஜனங்கள் சுதந்தரம் பெறுவது - ! எங்ஙனம் முடியும்? ஒருமுறை - இருமுறை - ஆறுமுறை முயன்றும் பயனடையவில்லை யென்றால் ஏழாவது முறையிலா நான் பாணபுரத்துக்குச் சுதந்தரம் பெற்றுக் கொடுக்கப் போகிறேன்? முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முது மொழி உண்மைதான். ஆனால் அம்முயற்சிக்கும் ஓர் அளவுண்டல்லவோ? அநியாயமும் அசத்தியமுமன்றோ வெற்றியடைகின்றன! (பெருமூச்சு _விட்டு)_ இன்றேல் எந்த அரசன் சத்துருவின் மனைவியைப் பெண்டாள நினைத்துச் சிறையில் வைத்திருப்பான்? இதை உலகம் பொறுத்துக் கொண்டிருக்கிறது! வேற்றரசர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால் என் மனைவியும் குழந்தையும் அதிரதர் வசப்பட்டிருப்பதற்காக யான் சிறிதும் கவற்சி யடையவில்லை. என் நாட்டை அவனுடைய கட்டினின்றும் நீக்கிவிட்டால் போதும். என் நாட்டை அடிமைத்தனத்தினின்று மீட்டுக் கொடுத்தால் என் மனையியையல்ல, என் மக்களையல்ல, என் உற்றாரையல்ல அனைவரையும் கொடுத்து விடுகிறேன், என் உயிரையும் அவனடியில் ஒப்புவிக்கச் சித்தமாயிருக்கிறேன். என் நாட்டை, எனது பாணபுரத்தை, என் வளங்குன்றாச் செல்வத்தை, எனது அரும்பெறல் மாணிக்கத்தை, என் தாயை விடுதலை செய்து விட்டால் போதும், என் தாயே! வானத்தில் உன்னையே பார்க்கிறேன்; காற்றில் உன்னையே நுகர்கிறேன்; காட்டுத் தீயில் உன் உருவத்தையே காண்கிறேன். (பெருமூச்செறிந்து) ஆயினும் உன்னை மீட்க வகையறியாது தவிக்கிறேன். (பொறுத்து) இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமா? முன்னொரு முறை வந்திருந்தபோது சேனைகளை ஆயத்தப்படுத்தி வைப்ப தாக நாகநாதன் கூறினான். ஆறுமுறை போர் தொடுத்ததன் பயனாக அதிரதனும் சிறிது சலித்தே இருப்பான். அவன் படை களிற் பெரும்பாலான சீர்குலைந்து போனதாகக் கோள்வி. ஆதலின் இந்தத் தடவை எங்ஙனமாவது முயன்று பார்க்க லாமா? (யோசித்துக் _கொண்டிருக்கும்போது ஒரு சிலந்தியின் வலையைப் பார்த்து அதனைக் கவனிக்கிறான்.)_ ஆ! ஆண்ட வனின் பெருமையை என்னென்றுரைப்பது? அந்தச் சிலந்திப் பூச்சி தன் வீட்டைச் சரியாக அமைத்துக்கொள்ள எவ்வளவு பாடுபடுகிறது! எத்தனை தரம் ஏறுகிறது! - ஐயோ பாவம்! அறுந்து விட்டது - மற்றொரு முறை முயற்சிய்து வலையைக் கட்டப் பார்க்கிறது - (பொறுத்து) அதுவும் வீணாயிற்றா? எத்தனை தரம் இது முயற்சி செய்கிறது பார்ப்போம். (சிறிது _நேரங்கழித்து)_ அப்பா! கடைசியில் ஏழாவது முறை இதன் முயற்சி பயன்பெற்றது. நாமும் ஏழாவது முறை வெற்றி பெறுவோமா? என் உள்ளத்தில் ஒருவித சந்தோஷம் உண்டாகிறதே! என் வெற்றிக்கு இச்சிலந்திப் பூச்சியின் முயற்சி ஓர் அறிகுறிபோலும். மறுபடியும் நான் படை யெடுக்கலாமா?
_(நாகநாதன் பின்புறமாய் பிரவேசிக்கிறான்.)_
நாகநாதன் : கட்டாயம் படையெடுக்கலாம்.
புரே : ஆ! நாகநாதா! எப்பொழுது எங்கிருந்து எப்படி வந்தனை? உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டே யிருந்தேன். உம் - பாண புரம் எந்நிலையிலிருக்கிறது?
நாக : உன் தலைமையின் கீழ் அதிரதர் மீது படை யெடுக்கச் சித்தமாயிருக்கிறது.
புரே : எனது பாணபுரம் படையெடுக்கச் சித்தமாயி ருக்கிறதா? தனது முயற்சியில் அஃது இன்னும் தளரவில்லையா? ஐயனே! இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்? இஃதொன்றே யான் இதுகாறும் அடைந்த துன்பங்களையெல்லாம் மறக்கடிக்கச் செய்துவிட்டது. உம் - நீ எப்பொழுது புறப்பட்டனையோ? அதோ இருக்கும் ஊற்றிற்குச் சென்று தேக சுத்தி செய்து கொண்டு வா. சிறிது சிரம பரிகாரம் செய்து கொள்ளலாம்.
நாக : உன்னைப் பார்த்தபோதே என் மெய்வருத்தம் பறந்து போய் விட்டது. ஆயினும் உன் கட்டளைக்கு இணங்குகிறேன்.
_(ஊற்றிற்குச் செல்கிறான்.)_
புரே : (நாகநாதன் _ஏறிவந்த குதிரையைத் தட்டிக் கொடுத்து)_ நாற்கால் பாய்ச்சலாக ஓடி வந்தனையோ? என்னைக் கண்டால் உனக்கேன் அவ்வளவு சந்தோசம்? (குதிரை _கனைக்கிறது)_ இந்தக் குதிரைக்கிருக்கும் நன்றி அந்த அதிரத அரசருக்குக் கூட இல்லையே. இந்த அசுவம் என்னால் பலவித துன்பங்களை அநுபவித்திருந்தபோதிலும் தன் நன்றியைச் செலுத்துவதில் சிறிதும் பின்வாங்குவதில்லை. (இதற்குள் _புரேசனுடைய குதிரை யைப் பார்த்த நாகநாதனுடைய குதிரை சந்தோஷ ஆரவாரம் செய்து அதனிடத்தில் போக முயல்கிறது. புரேசன், நாகநாத னுடைய குதிரையை அவிழ்த்து விடுகிறான்)_ என்ன அன்பு! இருவரும் நீண்ட காலத்து நண்பர்கள். இவ்வளவு அன்பு மனிதருக்கு ஏற்பட்டிருக்குமானால், இந்த உலகம் - பயனற்ற உலகம் - எவ்வளவோ முன்னேற்ற மடைந் திருக்கும். அரசர் களும் அன்பு ஆட்சியில் நம்பிக்கை யிழந்தவர்களாய் ஆயுத ஆட்சியிலன்றோ உறுதி கொண்டிருக்கிறார்கள்? அதிரதரை விட வேறோர் உதாரணம் வேண்டுமா?
_(நாகநாதன் திரும்பவும் பிரவேசிக்கிறான்)_
நாகநாதா! வந்துவிட்டனையா! இதோ இந்தக் குடிசையில் கனிகள் வைத்திருக்கிறேன். அவைகளை எடுத்துக்கொள். உனக்கு நான் மரியாதை செய்ய வேண்டுமோ?
நாக : நான் மரியாதை மனிதன் அல்லவே.
_(நாகநாதன் பழங்களைத் தின்றுவிட்டு வருவதற்குள் புரேசன் ஆங்குக் கிடக்கும் ஒரு பெரிய மரக் கிளையைப் புரட்டிக் குடிசையின் அருகாமையில் சேர்த்து அதன் மீது அமர்கிறான். நாகநாதனும் வருகிறான்.)_
புரே : நாகநாதா! இந்த இடத்தில் உனக்கு நான் அளிக்கக்கூடிய ஆசனம் இதுவே.
நாக : இதுதான் நிரந்தரமான ஆசனம். எவராலும் என்றும் அளிக்கக் கூடிய ஆசனம். அரியாசனங்களும் மயிலாசனங்களும் அற்பமான ஆயுளைக் கொண்டவை. இது நீடித்து நிற்கக் கூடியது (பொறுத்து) இந்த உபசாரங்களைப் பிறகு ஒருவர்க் கொருவர் செய்து கொள்வோம். நீ இப்பொழுது எந்நிலையி லிருக்கிறாய்?
புரே : என் உடல் புரேசனுடையதாயும் உள்ளம் பாணபுரத்தாயும் இருக்கின்றன. அவ்வளவே கூறமுடியும். பாணபுரத்து ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய ஊற்றமாவது உணர்ச்சி யாவது தளர்ந்திருக்கின்றதோ?
நாக : இதைப் பற்றி எள்ளளவும் நீ சந்தேகப்பட வேண்டுவ தில்லை. தங்களுடைய தலைவர் புரேசர் என்னவாயினாரோ என்ற ஒரு கவலையே அவர்களை வருத்திக் கொண்டிருக்கிறது. அவர் களுடைய வேண்டுகோளின் படியே நான் இங்கு வந்தேன். ஆறு முறை தோற்றுப் போயினும் ஏழாவது முறை எங்ஙனமாவது வெற்றி யடையலாம் என்று அவர்கள் ஓர் உறுதி கொண்டு நிற்கிறார்கள்.
புரே : நாகநாதா! என் தாய் நாட்டினர் சுதந்தரம் பெறுவதை முன் னிட்டு ஒரே உறுதியுடனிருக்கின்றனர் என்று நீ கூறியது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது தெரியுமா? எனது பாண புரம் இனியும் சுதந்தரம் பெறமாற் போகுமா? (பொறுத்து) நாட்டில் இன்னும் என்னென்ன விசேஷம்? எல்லாவற்றையும விவரமாகக் கூறு.
நாக : நீ காட்டிற்கு வந்த பிறகு பாணபுரத்தில் நடந்த சம்பவங்களை ஒரு பெரிய சரித்திர நூலாகவன்றோ எழுத வேண்டும்? வாலீ சனைக் கொலை செய்த பிறகே அதிரத அரசருக்கு ஒரு தைரியம் பிறந்தது. நீயும் வனத்திற்குச் செல்லவே அவருடைய ஆடம் பரங்களை வருணிக்கவும் வேண்டுமோ? அவர் இட்டதே சட்டம். பாணபுரத்தைத் தமது பாதத்தின்கீழ் அடக்கி வைத் திருக்க அவர் செய்யும் முயற்சிகள் அளவிறந்தன. அவர் பேச்சு கரும்பினும் சுவையுடைத்தாயிருக்கிறது; செயலோ வேங்கை யினும் கொடிய தாயிருக்கிறது. வாலீசன், அல்லது புரேசன் என்ற பெயர்களைக் கூறுகிறவர்களும் தண்டிக்கப்படுகிறார் கள் என்றால் நான் வேறென்ன கூற வேண்டும்? உன்னடி பற்றி நடந்த தேசபக்தர் எத்தனையோ பேர் இதுகாலை சிறையில் தவங்கிடக்கிறார். பலர் வீர சுவர்க்கத்தை அடைந்துவிட்டனர். மனிதனுடைய பிறப்புரிமைகள் நசுக்கப்படுகின்றன என்று பொதுவாகக் கூறலாம். பாணபுரத்து ஜனங்கள் அதிரதருடைய கொடுமைகளுக்குச் சிறிதும் அஞ்ச வில்லை. அவர்கள் சுதந்தரம் என்ற ஒரே குறிக்கொண்டு நிற்கிறார்கள். இடையிலே நேரும் இடையூறுகளை ஒரு பொருட்படுத்தவில்லை. பாணபுரத்திலே இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தீரிக்கும் ஒவ் வொரு குழந்தைக்கும் - ஏன்? ஓரறிவு முதல் ஆறறிவுயிர் ஈறாக உள்ள அனைத்திற்கும் - தேச உணர்ச்சி பிறந்திருக்கிறது. பாண புரத்திலே கிடக்கும் ஒவ்வொரு புல்லும் தலை நிமர்ந்து நிற்கிறது. அதிரதருடைய அதிகார அடியைக் கண்டு அவைகள் வணங்குவதில்லை. நாடெங்கணும் ஒரு விதமான பரபரப்பு குடிகொண்டிருக்கிறது. அதிரதருடைய அதிகாரங்கள், சட்டங் கள், ஆயுதங்கள் யாவும் பாண புரத்தாருடைய வீரம், உறுதி, ஊக்கம் இவைகளுக்குச் சிறிது பணிந்தே நிற்கின்றன என்று கூற வேண்டும். அதிரதர் மீது யுத்தம் செய்ய அனைவரும் சித்தமா யிருப்பதாகப் பாணபுரத்துப் பிரதிநிதிக் குழுவினர் உனக்குத் தெரிவிக்கும்படி வேண்டினர். உடனே புறப்படு.
புரே : இப்பொழுதே புறப்படுவதா?
நாக : ஆம். அதற்காகவே இந்த மாலைப் பொழுதில் வந்தேன். நேரே நாம் யுத்தகளத்திற்குச் செல்ல வேண்டியவர்களே.
புரே : இதென்ன ஆச்சரியம்! அவ்வளவு ஏற்பாடுகள் முடிந்து விட் டனவா?
நாக : யாவும் சித்தமாயிருக்கின்றன. அதிரத அரசருக்கும், அவர் ஆச்சரியப்படும் வண்ணம் உன்னுடைய தலைமையின் கீழ் பாணபுரத்து வீரர்கள் யுத்தம் செய்ய வருவதாகப் பிரதிநிதிச் சபையார் தெரிவித்துவிட்டனர். முன்னொரு முறை நான் இங்கு வந்திருந்த போது இதைப் பற்றிக் குறிப்பாகக் கூறவில்லையா?
புரே : அங்ஙனமானால் இதுகாறும் எனக்கு நிழல் கொடுத்து ஆதரித்து வந்த குடிசையையும், கனிகள் உதவிய மரங்களையும், செவிக்கின்பந் தந்துவந்த பட்சிகளையும், என்னைத் தூய்மைப் படுத்திய இந்த நீரோடையையும் பிரிந்துவிட்டு வரவேண்டு மென்று கூறுகின்றனையா? நீ இங்கு வந்து என்னுடன் சில காலம் தங்கியிருக்க வேண்டு மென்றன்றோ எண்ணினேன்?
நாக : சுதந்தர வீரர் என்ற முறையில் திரும்பவும் வந்து இவ் விடத்தில் சில காலம் வசிக்கலாம்.
புரே : இந்த இருளிலேயே புறப்பட வேண்டுமா?
நாக : ஆம். இப்பொழுது புறப்பட்டால் விடியற்காலை நாம் யுத்த களத்திற் கருகாமையில் சென்று பாணபுரத்துப் பிரதிநிதி களைச் சந்திக்கக்கூடும்.
புரே : ஆனால் இந்தக் குடிசைக்குள்ளிருக்கும் என் உடை முதலியவை களை எடுத்துக் கொண்டுவா.
_(நாகநாதன் குடிசைக்குள் செல்கிறான்.)_
புரே : (தனக்குள்) இயற்கையின் வடிவமாய் இலங்கும் மரங்களே! மலைகளே! சிறு குழவியின் உள்ளத்தைப் போன்ற தூய நீரோ டையே! இடும்பைகூர் எற்கு அவ்வப்பொழுது ஆறுதல் அளித்து வந்த காற்றே! என் அனலையை - ஐயோ! சுதர்மை, அனலை எங்ஙனம் இருக்கிறார்கள் என்பதைக் கேட்க மறந்து விட்டேனே - (பொறுத்து) என் அனலையை, அடிக்கடி ஞாபகப் படுத்தும் மான்காள்! என் சுதர்மையை நினைவூட்டும் மயில் காள்! குயில்காள்! உங்கள் அனைவரி டத்திலும் விடை பெற்றுக் கொள்கிறேன். சுதந்தர இன்பத்தை நுகர்ந்துவரும் நீங்களே புண்ணியர்கள்; முற்பிறவியில் நற்றவம் செய்தவர்கள். பிறவியில் உங்களை விட மேன்மை யானவர் என்று மனிதர் - அதிலும் என்னைப் போன்றவர் - பெருமை பாராட்டிக் கொள்ளலாமே யன்றி உங்களுடைய வாழ்க்கை அவர்களுடைய வாழ்க்கையை விட எவ்வளவோ மேலானது. உங்களிடையில் இவ்வளவு காலம் நான் வாழ்ந்து வந்தது என் பாக்கிய மென்றே கூற வேண்டும். உங்களாலேயே படைப்பின் விளக்கமும் ஈசனின் பெருமையும் நன்கு விளங்குகின்றன. ஆதலின் ஆண்டவனை அறிய விரும் புவோர் முதலில் உங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உதவியின்றி மனிதன் ஒரு கணமும் வாழ முடியாது. மனிதனுடைய தினசரி வாழ்க்கைக்கு நீங்கள் எங்ஙனம் இன்றியமையாதவர்களோ அங்ஙனமே அவன் சுதந்தரம் பெறுவதற்கும் நீங்கள் துணைக் கருவிகளா யிருக்கிறீர்கள். இதற்காக மனித சமூகம். உங்களுக்கு என்னை கைம்மாறு செய்யப் போகிறது? உங்களுடைய ஆதரவில் இது காறும் வாழ்ந்துவந்த அடியேனுக்கு விடை கொடுத்தனுப்பு வீர்களா? உங்களை மற்றொரு முறை வந்து தரிசித்துச் செல்கிறேன்.
_(நாகாகாதன் உடைகளை எடுத்துகொண்டு குடிசையிலிருந்து வருகிறான்.)_
நாக : போகலாமா?
புரே : செல்லலாம். (பொறுத்து) சுதர்மை முதலாயினோர் எங்ஙன மிருக்கின்றனர் என்பதைப் பற்றி ஏதேனும் தெரியுமா?
நாக : அவர்கள் இன்னும் அதிரதருடை காராக்கிருகத்திலேயே இருக்கிறார்கள். நாம் சென்றுதான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். சுதர்மாதேவியாருடைய கற்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் குழந்தை அனலை, பால் மணம் மாறாப் பேதை, சிறையிலடைபட்டிருப்பதைக் குறித்தே பாணபுரத்து ஜனங்கள் வருந்திக் கொண்டிருக் கிறார்கள். பெண்களைச் சிறையிலடைத்து வைக்கும் பாவம் அதிரதரை விரைவில் விடாது.
புரே : நான் கொண்டிருந்த தேசபக்திக்கு இந்தத் தண்டனையா! (பெருமூச்செறிந்து) உம் - ஆண்டவனே! ஆண்டவனே!
_(இருவரும் செல்கின்றனர்.)_
இரண்டாங் களம்
இடம் : ஈசானபுரத்தரண்மனையில் ஒரு தனிமண்டபம்.
காலம் : இரவு
_(அதிரதனும் துருபதனும் சில ஆதானிகர்களும் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.)_
முதல் ஆதானிகர் : எதற்கும் ஒரு வரம்பு உண்டு. அளவு கடந்த தயை காட்டியதன் பயனாக இந்தக் கடிதம் கிடைத்திருக்கிறது.
இரண்டாவது ஆதானிகர் : ஆறுமுறை தோல்வியுற்றும் அவர்கள் சலிப்புறாது எழாவது முறை படையெடுக்க முன் வந்திருக்கிறார் களானால் அவர்களுடைய செருக்கை என் னென்று கூறுவது?
துருபதன் : அவர்களுடைய வீரத்தைப் புகழ வேண்டும்.
மூன்றாவது ஆதானிகர் : துருபதருடைய பேச்சைக் கேட்டே நாம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். முதன்முதலாக அதிரத அரசருக்கு விரோதமான இயக்கம் கிளம்பிய போதே அதனை அடக்கிவிட்டிருந்தால் இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டிரா. துருபதர், கருணை கருணை என்று சொல்லி அப்பொழுது நம்மை அடக்கிவிட்டார். இப்பொழுது அக் கருணை நம்மீதே திரும்பிக் கொண்டது.
அதிநாதன் : நடந்ததைப் பற்றி வாதம் செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. இப்பொழுது பாணபுரத்துப் பிரதிநிதிச் சபையார் அனுப்பி யிருக்கும் கடிதத்திற்கு என்ன பதில் அனுப்புவதென் பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
மு.ஆ. : மஹாராஜா! இதைப் பற்றி நாம் இன்னும் யோசனை செய்து கொண்டிருப்பதில் பயனில்லை. இதுகாறும் காட்டிய கருணை போதும். சத்துருக்களிடத்தில் அன்பு காட்டுவது அரச தருமத்துக்கு விரோதமாகும். நாமும் அந்தத் தருமத்தை மறந்து கருணை மேலீட்டினால் ஆறு முறை பாணபுரத்தாரையும் அவர் தலைவன் புரேசனையும் மன்னித்தோம்.
துரு : (தனக்குள்) மன்னிப்பு! கருணை! பாழும் பதங்கள்! என்ன பொருள்!
மு.ஆ. : இனியும் பாணபுரத்தாரிடம் அடங்கிப்போக மஹாராஜர் பிரியப்படுகின்றாரா? அநேக நூற்றாண்டுகளாக ஈசனா புரத்தரசர் வசப்பட்டுக் கிடந்த பாணபுரம் சென்ற ஒரு தலை முறையாகத் தலைவிரித் தாடுகிறது. அந்தப் பேயாட்டத்தை அடக்குவது நமது கடமையல்லவா? பாணபுரத்தாரை அடக்கி யாளாவிட்டால் பிற நாட்டார் நம்மை என் சொல்ல மாட் டார்? வாலீசனுடைய தலைமையின் கீழ் எழுந்த இந்த இயக்கத்தை ஆதியிலேயே அறுத்து விட்டிருந்தால் இவ்வளவு கவலையும் பொருள் நஷ்டமும் உயிர்ச்சேதமும் நமக்கு ஏற் பட்டிரா. அரசாங்கத்துக்கு விரோதமாகக் கிளம்பிய இத்தகைய இயக்கத்தை யாரேனும் இவ்வளவு காலம் உயிர்கொடுத்து வைத்திருந்தனரா? எந்த அரசாங்க சரித்திரத்தி லிருந்தேனும் இதற்கு ஓர் உதாரணம் காட்டமுடியுமா? இராஜவிரோத இயக்கமென்னும் கொடிய பாம்பைப் பால் வார்த்து வளர்த்து விட்டுப் பிறகு அது நம்மையே கடிக்கிறதென்றால் அது யாருடைய குற்றம்? வாலீசன் முதன் முதலாகக் கிளம்பின காலத்திலேயே அவனைக் கடுமையாகத் தண்டித்து அவனுடன் சேர்ந்திருந் தவர்களைத் தேசத்திற்கு வெளியே துரத்தி விட்டிருந்தால் இவ்வளவு கஷ்டங்கள் நமக்கு உண்டாயிருக்க மாட்டா. புரேசனும் தோன்றி இங்ஙனம் நம்மைச் சண்டைக் கிழுத்திருக்க மாட் டான். நம்முடைய கௌரவமும் இங்ஙனம் குலைந்து போயிரா. ஆறு முறை பாணபுரத்தாரோடு போர் தொடுத்து அவரைத் தோற்கடித்த நாம், இந்த ஏழாவது முறை அவருடன் சமாதானம் செய்து கொள்வோமானால் அதைப் போன்ற அவமானம் வேறொன்றுமில்லை. இதனால் அவர் அதிக கர்வங் கொண்டு ஈசானபுரத்தையே தம் வசமாக்கிக் கொள்ள முயல்வர். அதற்கு மஹாராஜா சம்மதிக்கிறாரா? ஈசான புரத்து அரச வம்சம் அடியோடு அழிந்துவிட அவர் விருப்பங் கொள்கிறாரா? அங்ஙன மில்லை யானால் எவ்வித ஆலோசனையுமின்றி பாணபுரத்தின் மீது படையெடுக்க வேண்டுமென்று சேனாதிபதிக்கு உத்தரவு அருள்வாராக. நம்மிடத்தி லிருக்கும் சேனா சமூக மனைத்தையும் ஒருங்கே திரட்டிக் கொண்டு சென்று பாணபுரத்தை என்றும் தலையெடுக்க வொட்டாது அடக்கிவிட வேண்டும்.
இ.ஆ. : ஈசானபுரத்தின் கீழ்ப் பல்லாண்டுகளாக அடங்கிக் கிடந்த பாணபுரம் சில்லாண்டுகளாக நம்மீது பகைமை பாராட்டிப் படையெடுத்து வருவதனால், ஈசனாபுரத்து ஜனங்களுக்கு எவ்வளவு அவமானம் நேர்ந்திருக்கிறது என்பதை அரசர் பெருமான் கவனித்தல் வேண்டும். ஆறுமுறை பொறுத்து விட்டோம். இனியும் நாம் நம்முடைய அதிகாரத்தை, நம் முடைய கௌரவத்தை நிலை நிறுத்தாமற் போனால் ஈசான புரத்துக்கு முடிவு காலம் நேர்ந்து விட்டதென்றே நினைத்துக் கொள்ளலாம். இனி நாம் கடுமையான முறைகளை அநுசரிக்க வேண்டும். சிறையில் கிடக்கும் புரேசனின் மனைவியையும குழந்தையையும் கொலை செய்துவிட வேண்டும். யுத்த களத்தில் புரேசனையும் அவனுக்குத் தோன்றாத் துணையாக இருந்து வரும் நாகநாதன் என்பவனையும் பாணபுரத்துச் சேனைகளின் கண் முன்னரே துண்டு துண்டாக வெட்டி பறவைகளுக்கு இரையாகச் செய்துவிட வேண்டும். பிறகு, பாணபுரத்தவரில் எவரேனும் பேச்சினாலாவது செய்கை யினாலாவது வேறு எவ்விதத்தினாலாவது ஈசானபுரத்துக்கு விரோதமாகக் கிளம்பி னால் அவர் எவ்வித விசாரணையுமின்றி எவ்வித தாமதமு மின்றிச் சுடப்படுவர் என்று பகிரங்கமாக விளம்பரம் செய்ய வேண்டும். இங்ஙனம் சிறிது கடுமையான முறைகளை அனுஷ்டித் தாலன்றி, பாணபுரத்தில் கலகமும் குழப்பமும் இராஜத் துரோக இயக்கங் களும் ஒழியா. ஈசான புரத்து அரச வம்சத்தின் புகழ் மங்கா திருக்க வேண்டு மென்ற விருப்பமிருக்கு மானால், பாணபுரம் ஈசனாபுரத்திற்குக் கட்டுப் பட்டிருக்கிறது என்பதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்ட வேண்டுமானால், நாம் இதுகாறும் செலுத்தி வந்த அதிகாரம் சீர்குலையாதிருக்க வேண்டுமென்ற எண்ண மிருக்குமானால் உடனே மேற்கூறப் பட்டமுறைகளை அநுசரிக்க வேண்டுமென்று மஹா ராஜாவைக் கேட்டுக் கொள் கிறேன். எனக்கு முன் பேசிய பிரபுவின் அபிப்ராயம் அனைத்தை யும் நான் ஆதரிக்கிறேன்.
துரு : பாணபுரம் நம் கீழ் அடங்கியிருப்பதற்குச் சில முறைகளை இரண்டாவது பிரபு கூறினார். பாணபுரத்தை நம்முடைய நீண்ட நாள் விரோதியாகச் செய்துகொள்ள வேண்டு மென்பது அவரது விருப்பமானால் அந்த முறைகளை அநுஷ்டிப்பதில் எனக்குச் சிறிதும் ஆட்சேபம் இல்லை. இதுகாறும் நாம் பாணபுரத்தில் நடத்தி வந்த ஆட்சி முறையினாலேயே, அதனை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பாணபுரம் இப்பொழுது நமக்கு விரோதமாயிருக்கிறதென்றால் அதற்குக் காரணர் யார்? எந்தத் தேசமும், அதன் உரிமையை இழந்து பிறர் வசப்பட்டிராது. அப்படியிருந்தாலும் அதிருப்தியும் சமாதான மின்மையும் அவ்வடிமை நாட்டில் குடிகொண்டே யிருக்கும். அது சிறிது காலம் சமாதானத்தோடு இருப்பதாக வெளித் தோற்றத்திற்குக் காணப் படினும் உள்ளே அதிருப்தியானது புகைந்து கொண்டுதானிருக்கும். எரிமலை வெளிப் பார்வைக்குச் சாதாரண மலைபோல் தோன்றினும் திடீரென்று ஒருநாள் அஃது அக்கினியையும் பிற மரணக் கருவிகளையும் வெளிக் கிளப்ப வில்லையா? பாணபுரத்தை ஈசானபுரம் அநியாய மாகவே கைப்பற்றியது. சுதந்தரத்துடனிருந்த அந்தச் சிறிய தேசத்தை நம் வசப்படுத்தி பல வருஷ காலம் அதனை அந்தகாரத்தில் ஆழ்த்தி வைத்திருந்தோம். எத்தனை வருஷ காலம் அஃது அடிமைக் கடலில் ஆழ்ந்து கிடக்கும்? இதுகாறும் நாம் அந்நாட்டிலிருந்து பெற்ற ஊதியம் போதும். அச்சிறிய நாட்டை வறுமைப்படுத்தி நம் நாட்டைச் செல்வ நாடாக்கிக் கொண்டோம்.
மூ.ஆ : அந்நாட்டிற்கு நாம் செய்திருக்கும் அளவிறந்த நன்மைகளை மந்திரியார் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
துரு : அந்நன்மைகளினால் பாணபுரத்தார் ஏன் திருப்தியடைய வில்லை என்ற கேள்வியை பிரபு தமக்குத் தாமே கேட்டுக்கொள் வாரா? நாம் பாணபுரத்துக்கு அளவிறந்த நன்மைகள் செய்திருக்கிறோமென்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் அந்நன்மைகள் பாணபுரத்தாரைத் திருப்தி செய்துவிட்டன என்று நினைப்பது அறியாமை. ஒருவனை வயிற்றுக் கில்லாது பட்டினிபோட்டு உனக்கு நல்ல காற்று வரும்படியான ஒரு சிறந்த மாளிகை தருகிறேன். அதில் சிலகாலம் தங்கியிருப்பாய் என்று கூறினால் அவன் எதை விரும்புவான்? ஒரு கவள அன்னத்தை விரும்புவானா? மாளிகையில் உலாவ விரும்பு வானா? தனக்கு மாளிகை யளித்தவர்களை அவன் வந்தனை செய்வானா? நிந்தனை செய்வானா? இதனை அரசர் பெருமான் யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் இதுகாறும் பாணபுரத்தில் சத்தியம், தருமம் என்பவனவற்றை மறந்து, நீதி, நியாயம் என்பனவற்றைக் காற்றில் பறக்கவிட்டு ஆட்சி புரிந்து வந்திருக் கிறோம். இதை ஒவ்வொரு பிரபுவினுடைய மனசாட்சியும் கூறும். இன்னும் அந்தத் தீ நெறியிலே நாம் செல்ல வேண்டு மென்று என் நண்பர் கூறுவது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. பாணபுரத்து ஜனங்கள் ஆறு முறை தோல்வி யுற்றும் சலிப்புறாதவர்களாய் ஏழாவது முறை படையெடுக்க முன் வந்திருக்கிறார்கள். இதனைக் கொண்டு அவர்களுடைய விடா முயற்சியையும் ஊக்கத்தையும் பிடிவாதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஏழாவது முறையும் நாம் அவர்களைத் தோற்கடித்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். பிறகு அவர்கள் நம்மிடத்தில் அடங்கியிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இனி நமக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறீர்களா? யுத்த முயற்சியை அவர்கள் விட்டு விடுவார்கள் என்று எண்ணு கிறீர்களா? மஹாராஜா! இவ்விஷயத்தில் ஆழ்ந்து யோசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நாம் அற்ப சந்தோஷத்தை விரும்பக் கூடாது. பாணபுரத்துக்கும் ஈசான புரத்திற்கும் இருக்க வேண்டிய எதிர்கால சம்பந்தத்தைப் பற்றிக் கவனிக்க வேண்டும். பாணபுரத்தை நம் தொடர்பினின்றும் அடியோடு அறுத்துவிட வேண்டுமானால் இந்த யுத்தத்தில் இறங்கலாம். இன்றேல், புரேசன், நாகநாதன் முதலிய ஜனத் தலைவர்களை வரவழைத்து ஒருவித சமாதானம் செய்து கொள்ளலாம். இங்ஙனம் சமாதானம் செய்து கொள்வதனால் நம் கௌரவம் குலைந்து போய் விடாது. யுத்தத்தை விரும்புவது கௌரவமென்றும் சமாதானத்தை விரும்புவது கௌரவக் குறைவென்றும் நினைப்பது தவறு, பாணபுரத்தாரின் கோரிக்கைகளைத் திருப்தி செய்துவிட்டால் நம் பெருமையாவது அதிகாரமாவது சீர்குலைந்து போகாது. எனது நண்பர், புரேசன் மனைவி முதலாயினோரைக் கொலை செய்துவிட வேண்டு மென்று கூறினார். அந்தக் கொடிய காரியத்தை நிறைவேற்றி விடுவது மிகவும் சுலபம். ஆனால் அதற்குப் பிறகு நம் நிலைமை என்னாகும் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கொடிய செயலை நாம் செய்துவிட்டால் உலகத்தார் நம்மை ஒரு நாகரிக அரசாங்கமாக மதிப்பாரா? உலகத்தில் நாம் பிறகு தலை யெடுத்துப் பார்க்கமுடியுமா? மானிட தருமத்திற்கு நாம் அஞ்ச வேண்டாமா? இதுகாறும் ஆயுத பலத்தைக் கொண்டு பாண புரத்தை அடக்கியாண்டது போதாதா? இதைப் பற்றி நான் இனி அதிகமாக ஒன்றுங் கூறப் போவதில்லை. க்ஷத்திரிய தருமப்படி நடக்க வேண்டு மென்று மஹாராஜாவைக் கேட்டுக் கொள் கிறேன். வாலீசனைக் கொலை செய்த பாவம் நம்மை விரைவில் விட்டு விலகாது. அந்த ஒரு செய்கையினாலேயே பாணபுரம் அனைத்தையும் நம் சத்துருவாக்கிக் கொண்டோம். பாணபுரம் ஜனங்கள் விடாமுயற்சியுடன் அடிக்கடி படையெடுத்து வருவதன் காரணமென்னவென்று நினைக் கிறீர்கள்? இந்த ஏழவாது முறை அவர்கள் எளிதில் விடமாட்டார்கள் என்று எனக்குப் புலப்படுகிறது.
மு.ஆ. : சத்துருவினுடைய விஷயங்கள் எவையேனும் மந்திரி யாருக்குத் தெரியுமா?
துரு : பாணபுரத்தாருக்கும் எனக்கும் இரகசியமாகச் சம்பந்தம் உண்டென்று எனது நண்பர் கருதுகிறாரா? அந்த எண்ணம் அவருக்கு உண்டானால் அது தவறு என்று நான் அறிவிக் கிறேன். சத்தியத்தையும் நியாயத்தையும் மனத்தில் கொண்டு பேசினால் அதற்காகச் சந்தேகிப்பதா? பாண புரத்தாரைச் சந்தேகித்துச் சந்தேகித்தே அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டோம். அவர்களிடத்தில் நம்பிக்கை வைத்து நாம் ஆட்சி புரிந்திருந்தால் அவர்களைப் பகைவர்களாக்கிக் கொண் டிருக்க மாட்டோம். ஆதலின் இனியேனும் அவர்களுடைய திறமையில், அவர்களுடைய நட்பில் நம்பிக்கை வைத்து ஆட்சிபுரிய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இ.ஆ. : இதுகாறும் கூறியதனால் மந்திரியாரின் அபிப்ராயம் என்ன என்பது சரியாக விளங்கவில்லை. பாணபுரத்துப் பிரதிநிதிச் சபையாரிடமிருந்து வந்திருக்கும் கடிதத்திற்கு என்ன பதில் கூறுவதென்பதைப் பற்றி நண்பர் ஒன்றுந் தெரிவிக்கவில்லை.
துரு : அதைப் பற்றி என் பேச்சின் முற்பாகத்திலேயே தெரிவித்திருக் கிறேன். இந்த ஏழாவது முறை பாணபுரத்தாரோடு யுத்தம் செய்யக்கூடா தென்பதே எனது அபிப்ராயம். யுத்தம் வேண்டா மென்றும், பாணபுரத்து ஜனங்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து வைப்பதாகவும், அவர் களுடைய பிரதிநிதிகளிற் சிலரை இங்கு உடனே அனுப்பவேண்டு மென்றும் இந்தக் கடிதத்திற்குப் பதில் தெரிவிக்க வேண்டும்.
மூ.ஆ. : ஒருகால், இந்த யுத்தத்தில் பாணபுரத்து ஜனங்கள் வெற்றி பெற்றார்களானால் அவர்கள் நமது நண்பர் துருபதரையே தங்கள் அரசராக நியமித்துக் கொள்வார்களென்று நம்புகிறேன்! பாணபுரத்து ஜனங்களுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டு மென்று அவர் எங்ஙனம் மணந் துணிந்து கூறினாரோ தெரியவில்லை. இதுகாறும் நாம் செலுத்திக் கொண்டுவந்த அதிகாரத்தைத் திடீரென்று விட்டுக் கொடுக்க அவர் விரும்புகிறாரா? பாணபுரத்தை இப்பொழுதே கைநழுவ விட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். ஈசானபுரத்தின் எதிர்கால நிலைமையென்ன? இவைகளை யெல்லாம் ஆலோசி யாமல் மானிட தருமத்தைப் பற்றியும் ஆட்சி முறையைப் பற்றியும் பேசுவதில் பயனில்லை. ஆதலின் எங்ஙன மாவது இந்த முறை பாணபுரத்தாரை அடக்கி இனியும் தலையெடுக்க வொட்டாத படி செய்துவிட வேண்டும். இந்த முறை நாம் வணங்கினோ மானால் ஆறு முறை போர் தொடுத்ததனால் ஈசானபுரத் தரசாங்கம் சலித்துப் போய்விட்டதென்று வேற்று நாட்டார் கருதுவர். இதற்கு மஹாராஜர் சம்மதிக்கமாட்டாரென்று நம்புகிறேன். ஆதலின் உடனே யுத்தத்திற்குச் சன்னாகம் செய்யுமாறு கட்டளையிட வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன்.
அதி : ஆதானிகரில் பெரும்பாலோருடைய அபிப்ராயப்படி யுத்தத்திற்கு நாம் புறப்பட வேண்டியதே. இறந்து போன அந்த வாலீசனை விட இந்தப் புரேசன் அதிக செருக்குள்ளவனாகக் காணப் படுகிறான். முன்னொரு முறை நம் நாட்டெல்லைக் குள்ளேயே வந்து நமது சேமவீரனைக் கொன்றுவிட்டுச் சென் றான். ஆறு முறை தோற்கடிக்கப் பட்டும் அவனுக்கு இன்னும் யுத்த வெறி விடவில்லை போலும். இந்த முறை எங்ஙனமாவது அவனைத் தொலைத்துவிட வேண்டும். இரக்கம் காட்டினால் நமது நாட்டிற்கே தீங்கு நேரிடும் என்று ஆதானிகர் கூறியதை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன். மந்திரி துருபதர் மாத்திரம் இங்கிருந்து இராஜ்ஜிய நிருவாகம் செய்யட்டும். ஆதானிகர் மூவரும் என்னுடன் யுத்த களத்திற்கு வந்து வேண்டிய உதவி களைச் செய்வாரரென்று எதிர்பார்க் கிறேன். (துருபதனைப் _பார்த்து)_ சேனாதிபதியை உடனே வரவழைப்பீர் களா?
துரு : வரவழைக்கிறேன். (செல்கிறான்)
அதி : யுத்த சன்னாகம் செய்து கொள்வதன் பொருட்டு நாம் பிரிய லாமா?
_(ஆதானிகர் எழுந்திருக்கின்றனர்.)_
அதி : (இரண்டாவது _ஆதானிகரைப் பார்த்து)_ நீங்கள் எந்தப் படைக்குத் தலைமை வகிக்கப் போகிறீர்கள்? (பேசிக் _கொண்டே இருவரும் செல்கின்றனர்.)_
மு.ஆ. : எந்தப் படைக்கு அவர் தலைமை வகிக்கப் போகின்றார்? எம பட்டணத்திற்குச் செல்லும் படைக்கு அவர் தலைமை வகிப்பார்!
மூ.ஆ. : நுணலுந்தன் வாயால் கெடும். யுத்தம் செய்ய வேண்டு மென்று நாம் கூறியதன் பயன்! அரசர் நமக்கே தாம்பூலம் பிடிக்கிறார்! என் செய்வது?
மு.ஆ. : என் செய்வது? புரேசனுடைய பாதத்தில் முட்டிக் கொள்வது.
_(இருவரும் செல்கின்றனர்.)_
ஐந்தாம் அங்கம்
முதற் களம்
இடம் : பாணபுரத்துக்கும் ஈசானபுரத்துக்கும் இடையேயுள்ள ஒரு மைதானம்.
காலம் : அதிகாலை.
_(பாணபுரத்து வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். எங்கும் யுத்த கோஷம் நிறைந்திருக்கிறது. இச்சமயத்தில் நாகநாதனாலும் பாண புரத்துப் பிரதிநிதிச் சபையின் தலைவர் சிலராலும் புடைசூழப் பட்டு புரேசன் பிரவேசிக்கிறான். யாங்கணும் ஓர் ஆரவாரம் உண்டா கிறது. புரேசன் மட்டும் தன் குதிரை மீது ஆரோகணித்துக் கொள்கிறான். உடனே புரேசருக்கு ஜெய என்று வீரர்கள் சந்தோஷக் கூச்சலிடு கிறார்கள்.)_
புரேசன் : வீரர்களே! தாய் நாட்டின் பொருட்டு உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருக்கும் தீரர்களே! என் அன்பர்களே! உங்களுக்கு இச்சமயத்தில் நான் அதிகமாக ஒன்றுங் கூறப் போவதில்லை. இன்னும் சிறிது நேரத்திற்குள் உங்களுடைய வாட்கள் சத்துருக் களுக்கு மின்னலாய் விளங்கப் போகின்றன; உங்களுடைய தோட்கள் பகைஞரின் தோட் களோடு மலையப் போகின்றன; உங்களுடைய வீரக் கழலொலி - அதோ - பாடி வீட்டில் கிடக்கும் அதிர தருடைய ஆண்மையைக் கலங்கச் செய்யப் போகின்றது. உங்களுடைய வாளிலும் தாளிலும் தோய்ந் திருக்கும் இரத்தத்தைக் கண்டு கூற்றுவன் கதறப் போகிறான். உங்களுடைய ஜெய பேரிகையைக் கேட்டு சுதந்தரதேவி தாண்டவம் செய்யப் போகிறாள். அவளுடைய வரவில் நீங்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்களுக்கு ஆண்டவன் அருள் செய்வானாக. (பொறுத்து) நீங்கள் இதற்கு முன்னர் ஆறுமுறை தோற்றுப் போயிருக் கிறீர்கள் என்பதையும் இப்பொழுது ஏழாவது முறை யுத்த களத்தில் வந்து நிற்கிறீர்கள் என்பதையும் ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள் இம்முறையும் நீங்கள் தோல்வி யுற்றுப் போவீர் களாயின் உங்களைப் பேடிகளென்று உலகம் அழைக்கும். உங்களைக் கண்டு அறம் ஓலமிடும்; சத்தியம் அஞ்சும்; ஆண்மை என்னும் அரிய செல்வம் நகைக்கும். பிறகு நீங்கள் இந்த உலகத்தில் இருந்தும் ஒன்றே; இறந்தும் ஒன்றே. நடை பிணங்களாகவே உங்களைச் சுதந்தர உலகம் கருதும். இவை களுக்கெல்லாம் நீங்கள் சம்மதிக்கிறீர்களா? பாணபுரத்திலே பிறந்து, வாலீசரால் பழக்கப்படுத்தப்பட்ட நீங்கள் இந்த யுத்தத் தையும் அதிரதருக்கு விடுத்து அதனால் உங்கள் தாய் நாட்டிற்கும், உங்களை உயிராகப் போற்றிவந்த வாலீசருக்கும் அழியாத அவமானத்தைத் தேடித் தருவதாயின் இப் பொழுதே இந்த யுத்தகளத்தினின்றும் ஓடி விடுங்கள். ஆயுத பாணிகளாய் வீரர்களைப் போல் இங்கு நிற்க வேண்டாம். ஆண்மையைவிட, பொருளைவிட, உயிரை விட மானமே பெரிது. மானமின்றி வாழ்வோர் மானிகளல்லர். அம்மானத்தை நீங்கள் ஆறுமுறை விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இந்த ஏழாவது முறையேனும் அதனை நீங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டாமா? வாலீசரால் வணங்கப் பட்டு வந்த சுதந்தர தேவதை அதிரத அரசரால் கொல்லப் பட்டு வருகிறாள். வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புவீர்களா? அத்தேவியை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டாமா? (பொறுத்து) யுத்தத்தில் வெற்றி பெறுவது, அல்லது இங்கேயே மாள்வது என்ற எண்ணமே இங்குள்ள வீரர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக் கிறதென்று நம்புகிறேன். அவ்வுறுதியில்லா தவர்கள் விலகிச் செல்லலாம். மற்றவர்கள், சத்துருக்களின் காப்பு நிலையம் அதிரும்படி ஜெயகோஷம் செய்யட்டும். (வீரர் _அனைவரும் ஜெயகோஷம் செய்கின்றனர்)._
இதுவே ஆண்மை. இதுவே வீரம். இப்பொழுதே நான் உண்மை யான புரேசனாயினேன். சுதந்தர அரசியின் சிலம்பொலி என் செவிகளில் கேட்கிறது. அவள் அடியில் உயிரை விடுவோரே வீரர்; அவள் பொருட்டு உலக இன்பங்களைத் தவிர்ப்போரே துறவியர்; அவள் நிலையை அறிவோரே ஞானியர்; அவள் புகழைப் பாடுவோரே கவிஞர். பொன்னைப் போக்கலாம்; பெண்ணை நீக்கலாம்; மண்ணை மறக்கலாம். சுதந்தரத்தை இழக்க முடியுமோ? சுதந்தரமின்றி அடிமைகளாக நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? அல்லது சுதந்தரத்திற்காகப் போர் புரிந்து உயிரை விட விரும்புகிறீர்களா? முன்னது வேண்டுமாயின் பின்னால் பாருங்கள்; பின்னது வேண்டுமாயின் முன்னால் நோக்குங்கள். (பொறுத்து) வீரர்களே! ஒருவன் தேசத்தின் பொருட்டு எல்லாத் தியாகங் களையும் செய்ய வேண்டும். என் உடலிலுள்ள ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் ஒவ்வோர் உயிர் இருப்பின் அத்தனை உயிர்களையும் என் தாய் நாட்டிற்காக, சுதந்தரத்திற்காகப் பலியிடுவேன். ஆனால், ஆண்டவன் - பாழும் ஆண்டவன் - எனக்கு ஓர் உயிரையே அளித்திருக் கிறான். இந்த அற்ப உயிரையும் என் தாய் நாட்டிற்கு அர்ப்பணம் செய்யாம லிருப்பேனோ? நீங்கள் என்னைத் தலைவனாகக் கொண் டிருப்பது உண்மையானால் இந்த யுத்தத்தில் எங்ஙனமாவது வெற்றிபெற வேண்டும். பாண புரத்தின் பண்டைய நிலையை யும் அஃது அடைந் திருக்கும் தாழ்ந்த நிலையையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் பாணபுரத்திலேயே பிறந்தவர்களா யிருந்தால் பாணபுரத்தின் எல்லைக்குள் இருக்கும் ஐம்பெரும் பூதங் களையும் நீங்கள் கட்டியாண்ட துண்மையானால், அதோ - அநியாயம், அத ருமம், அசத்தியம் என்ற மூன்றனையும் குறிப்பதுபோல் முச்சக் கரங்களைக் கொண்டு அலையும் அதிரதருடைய கொடியை அறுத்து வீழ்த்தி இதோ பாண புரத்துச் சுதந்தரக் கொடியை நிலைத்து நிற்கச் செய்யுங்கள். (சில _வீரர்கள் ஜெய ஜெய கோஷத்திடையே பாணபுரத்துக் கொடியை, அசுவத்தின் மீது ஆரோகணித்துக் கொண்டிருக்கும் புரேச னுடைய பக்கத்தில் நிறுத்துகிறார்கள்.)_
அதோ, அடிமைக் கொடி அலமருகிறது; இதோ சுதந்தரக் கொடி சுழல்கிறது. அதோ, அதிரத அரசர் நால்வகைச் சேனை யுடனும் கணக்கிலடங்காச் சில்லரைச் செல்வங்களுடனும் நம்மெதிர் நிற்கிறார். நமக்குப் பாடி வீடில்லை; நால்வகைப் பரிவாரங்கள் இல்லை; அரச போகங்கள் இல்லை. நாம் உண்மையை ஆயுதமாகக் கொண்டிருக்கிறோம்; அஞ்சா மையை அரணாகக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கையிலே கொண்டிருக்கும் சில்லரை ஆயுதங்களும் உங்களுடைய துரகங் களும் உண்மைக்கும் அஞ்சாமைக்கும் துணைக்கருவிகளே யாகும். அதிரதர் அடிமைக்காகப் போர் புரிகிறார். நாம் சுதந்திரத்திற்காக யுத்தம் செய்கிறோம். ஆதலின் நீங்கள் உங்கள் உறுதியைக் கொண்டே வெற்றி பெற வேண்டும். சத்துருக்களின் படைத் தொகையைக் கண்டு நீங்கள் எவ்விதத்திலும் தளர்ச்சி யுறவேண்டாம். சத்தியத்தின்முன் அசத்தியம் நில்லாது; நியாயத்தின் முன் அநியாயம் தோன்றாது. இவைகளை உள்ளத் தில் கொண்டு நீங்கள் உங்கள் காலை முன் வைக்க வேண்டும். அதோ சத்துருக்கள், நம் கொடி தூக்கப்பட்டு விட்டதைக் கண்டு யுத்த சித்தம் செய்து கொள்கிறார்கள். நீங்கள் இனிச் சிறிதும் தாமதிக்கக் கூடாது. கடைசி முறையாகக் கூறுகிறேன். நாம் வணங்கும் தெய்வத்தின் மீது ஆணை; நாம் பிறந்த நாட்டின் மீது ஆணை; அந்நாட்டின் மீது நாம் கொண் டிருக்கும் பற்றின் மீது ஆணை; சத்தியத்தின் மீது ஆணை; தருமத்தின் மீது ஆணை; நாம் வாழ்ந்த வாழ்க்கையின் மீது ஆணை; நமது வீரத்தின் மீது ஆணை; நமது பெண்டிர் கற்பின் மீது ஆணை; நாம் போற்றும் வாலீசர் மீது ஆணை. இம் முறை நாம் யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும். அடிமை அகல வேண்டும்; சுதந்தரம் உதயமாக வேண்டும்; வீரபேரிகை அதிர்க! வெற்றி முரசம் ஆர்க்க! இன்னியங்கள் ஒலிக்க!
_(சேனைகள் அணிவகுத்துச் செல்கின்றன.)_
இரண்டாங் களம்
இடம் : பாணபுரத்தில் ஒரு பொதுஜன மேடை.
காலம் : மாலை.
_(யுத்தத்தில் புரேசன் வெற்றி பெற்றான் என்பதைக் கேள்வியுற்று பாணபுரத்து ஜனங்கள் ஒன்று கூடி ஆர்ப்பரித்துக் கொண்டிருக் கிறார்கள். இச்சமயத்தில் புரேசன் நாகநாதனைத் தவிர்த்து அதிரத ருடைய மந்திரியாயிருந்த துருபதர் உள்பட சில நண்பர்களுடன் மேடைக்கு வருகிறான். உடனே ஜனங்கள் கடல்போல் புரேச மஹாராஜாவுக்கு ஜெய என்று ஆரவாரம் செய்கிறார்கள். புரேசன் கையமர்த்த ஜனங்கள் மௌனமா யிருக்கிறார்கள்.)_
புரேசன் : ஈண்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வந்தனத் தையும் நன்றியையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பிறகு அடிமைத்தனத்தை நிலைநாட்டுவதற்காகப் போர்புரிந்து யுத்தகளத்தில் மாண்டு போன அதிரத அரசருடைய குடும்பத் தாருக்கு என் அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழாவது முறை ஈசானபுரத்து யுத்தத்தில் வெற்றிபெற்றதற்கு நான் காரணம் என்று நீங்கள் கருதுவதாக அறிகிறேன். யுத்த வெற்றிக்குப் பாணபுரத்து வீரர்களே காரணர்கள். ஆனால் நாம் ஆறு முறை தோல்வியுற்றிருக்கிறோ மென்பதையும் ஏழாவது முறையே வெற்றி பெற்றோமென்பதையும் நீங்கள் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். நடைபெற்றவைகளைப் பற்றி இன்புறுதலும் துன்புறுதலும் கூடாவாம். இனி நடைபெற வேண்டி யவைகளைப் பற்றியே நாம் கவனிக்க வேண்டும். ஈசானபுரத் தரசருடைய கட்டினின்றும் நாம் விடுதலை யடைந்து விட்டோம். இனி நமக்குரிய ஓர் ஆட்சி முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதவசியம். (ஜனங்கள், _நீங்களே அரசர் நீங்களே அரசர் என்று கூச்சலிடு கிறார்கள்.)_
நிருவாக மனைத்தையும் நானே இருந்து நடத்த வேண்டு மென்பது உங்கள் விருப்பமானால் அதற்கு நான் இணங்க வேண்டியவனே யாகிறேன். (ஜனங்கள் _மறுபடியும் புரேச மஹாராஜாவுக்கு ஜெய என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.)_
மற்றொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஈசானபுரத்து நிருவாகத்தையும் இனிப் பாணபுரத்தாரே ஏற்று நடத்தி வரவேண்டு மென்று ஆங்குள்ள பெரும்பாலோர் அபிப்பிராயப்படுவதாக இதோ ஈண்டு விஜயஞ் செய்திருக்கும் துருபதர் தெரிவிக்கிறார். அவர்க ளுடைய வேண்டுகோளுக்கு இணங்கியே தாம் இங்கு வந் திருப்பதாக அவர் கூறுகிறார். உங்கள் முன்னிலையில் அவருக்கு நான் ஒரு வார்த்தையே உரைப்பேன். பாணபுரத்தார், எந்த நாட்டையும் தம் வசப்படுத்தி ஆள வேண்டுமென்று ஏழு முறை யுத்தம் செய்யவில்லை. தங்களை அடிமைக் கட்டினின்றும் விடுதலை செய்து கொள்ளவே அவர்கள் போர்புரிந் தார்கள். ஆதலின் அவர்கள் ஈசானபுரத்தின் நிருவாகத்தை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. மற்றும், அதிரதருடைய அரசாங் கத்திற்கு அவருடைய புதல்வர் உரிமையாளராய் இருக்கும் போது வேற்று நாட்டார் அவரை நீக்கிவிட்டு ஆட்சி முறையை ஏற்றுக் கொள்வது நியாயமாகாது. ஈசானபுரத்தாரும், தங்கள் அரசரை விடுத்து வேற்று நாட்டாருக்குட்பட விரும்பு வது அறிவுடைமையாகாது. விருப்பமானால், அதிரதருடைய புதல்வருக்கு இராஜ்ய நிருவாக விஷயத்தில் வேண்டப் படும் உதவிகளைச் செய்ய பாணபுரத்தார் சித்தமாயிருக்கின்றனர். இந்தப் பதிலையே துருபதருக்குச் சொல்லி யனுப்பலாமென்று நினைக்கிறேன். நான் கூறியது உங்களுக்குச் சம்மதந்தானா?
ஜனங்கள் : சம்மதம்; சர்வ சம்மதம்.
புரே : துருபதரை மந்திரியாகப் பெற்றுள்ள ஈசானபுரத்தாருக்கு எவ்விதக் குறைவுமில்லை யென்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.
_(நாகநாதனை முன்னிட்டு சுதர்மாதேவியும் அனலையும் பிரவேசிக் கிறார்கள்.)_
ஜனங்கள் : சுதர்மா தேவிக்கு ஜெய! அனலா தேவிக்கு ஜெய! நாக நாதருக்கு ஜெய!
புரே : யான் இன்பம் நுகர்ந்த போதும் துன்பம் உற்ற போதும் எனக்குத் தோன்றாத் துணையாக இருந்து உதவிபுரிந்த நாக நாதருக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
ஜனங்கள் : நாகநாதருக்கு ஜெய!
துருபதர்: சுதர்மாதேவியார் இக்கூட்டம் கலைவதற்குள் இங்கு வந்து விட்டதால் யான் இரண்டொரு மொழிகள் கூற வேண்டியதா யிருக்கிறது. தேவியாரையும் அவருடைய திருக்குமாரியையும் அதிரத அரசர் சிறையிலடைத்து வைத்திருந்தார் என்பது நீங்கள் அறிந்த விஷயமே. அதிரதருடைய இந்த அடாத செயலை ஈசாபுரத்தார் ஆதரித்தனர் என்று நீங்கள் எண்ண வேண்டாம். அதிரதருடைய ஆட்சியில் நீங்கள் மாத்திரம் கஷ்டப்பட்டதாகக் கருத வேண்டாம். உங்களை விடப் பன் மடங்கு அதிகமாக ஈசானபுரத்தாரும் துன்புற்றிருக்கின்றனர். அதிரதர் இறந்ததும் அவர் பதவியில் பாணபுரத்தாரே அமர வேண்டுமென்று கொண்டிருக்கிற எண்ணமொன்றே அவர் பட்ட வருத்தத்தை நன்கு புலப்படுத்தும். சுதர்மாதேவியாரைச் சிறையில் வைத்தது கற்பைச் சிறை வைத்தது போலாகுமென்று நாங்கள் அதிரதருக்குப் பன்முறை எடுத்துக் கூறினோம். அவர் இறந்துபோன பொழுது அவருக்குத் துணை சென்ற ஆதானி கரில் சிலர், அவர் உயிருடனிருந்து செய்த தீச்செயல் களுக்கும் துணையா யிருந்தனர். அநியாயத்தையே அடிப் படையாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அதிரதரிடம் நான் பல வருஷ காலம் ஊழியம் செய்தேனாதலின், அவர் சுதர்மாதேவியாரைச் சிறை செய்த குற்றத்திற்காக இந்தச் சபையின் முன்னிலையில் பாணபுரத் தாருடைய மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். ஈசானபுரத்து ஆட்சி முறையைப் பாணபுரத்தார் ஏற்றுக் கொள்ள முடியா தென்று புரேசர் -
கூட்டத்தில் ஒருவர் : புரேச மஹாராஜர் - !
துரு: ஆம்; மன்னிக்க வேண்டும். புரேச மஹாராஜர் கூறி விட்ட தற்காக எனது நாட்டார் பெரிதும் வருந்துவர். ஆயினும் இரு நாட்டாருக்கும் இதுகாறும் இருந்த பகைமை பனிபோல் பறந்து, நட்பு அதிகமாகும் என்று கருதுகிறேன். ஈசானபுரத்தில், அதிரதருக்கும் அவரைச் சேர்ந்த சிலருக்குமே பிற நாட்டாரைத் துன்புறுத்தித் தாம் இன்புற வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. மற்றெவருக்கும் அந்த எண்ணம் இருந்ததில்லை. ஆதலின் ஈசானபுரத்தால் பாணபுரம் இதுகாறும் அடைந்த அல்லல்களை அது மறந்துவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். புரேச மஹாராஜருடைய நல்லுதவிகளை ஈசானபுரத்தார் என்றும் எதிர் பார்க்கலாம் என்று கருதுகிறேன்.
நாகநாதன் : இங்கு நான் சில வார்த்தைகள் கூறுவது அநாவசிய மாகக் கருதப்படாது என்று கருதுகிறேன். புரேச மஹாராஜரும் சுதர்மா தேவியாரும் ஒருங்கே காணப் பெற்றதனால் யான் அடையும் மகிழ்ச்சியை இங்குள்ள ஜனங்களும் பங்கெடுத்துக் கொண்டு விட்ட தற்காக வருந்துகிறேன். இங்கு இருவரும் ஜனங்களின் அன்பு நிறைந்த ஆரவாரத்துக்கிடையே நிற்பதி னின்று அனைவரும் ஒரு பாடங் கற்றுக் கொள்ள வேண்டும். தாய் நாட்டின் பொருட்டு இவ்விருவரும் துன்புற்றதை ஒவ் வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். புரேசர், தேச நலத்திற்காகக் காட்டில் கொடுமைகள் அநுபவித்ததையும் அவருடைய தர்ம பத்தினியார் சிறைவாசம் செய்ததையும் எண்ணினால் எவருடைய தேகமும் நடுக்குறாம லிராது. புரேசர் ஏன் பொன்னை இழந்தார்? பொருளை இழந்தார்? மனைவி மக்களை மறந்தார்? அதிரதரால் தோல்வியுண்டும் வனத்தில் வேடர்போல் வாழ்க்கையை நடத்தினார்? யாவும் தேசத்தின் பொருட்டேயாகும்.
சகோதரர்களே! இவர்களுடைய தேசாபி மானத்தைப் பாருங் கள். இவர்களைப் பின்பற்ற முயலுங்கள். இவர்கள் நமக்கு நல்வழி நல்கும் பொருட்டு நீடூழி வாழ வேண்டுமென்று ஆண்டவனை வேண்டுங்கள். முடிவாக ஒரு மொழி கூறுகிறேன். பாணபுரத்தின் பிற்கால ஆட்சிமுறை எங்ஙனம் அமைக்கப்பட வேண்டுமென்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தே இருக் கிறது. ஆனால் ஆட்சிமுறை எங்ஙனம் ஏற்பட்ட போதிலும், புதிய ஆட்சி முறையின் தொடக்கத்தில் சுதந்தரதேவிக்கு மகுடாபிஷேகம் செய்துவிட்டுப் பிறகே நாட்டின் தலைவருக்கோ, அரசருக்கோ ஆளும் உரிமை அளிக்கப்பட வேண்டும். இஃதென் னுடைய விருப்பம். நாம் சுதந்திரத்திற்காகவே போராடினோம்; அதன் பொருட்டே பல்வகைத் தியாகங்களைச் செய்தோம். ஆதலின் சுதந்திரதேவிக்கே முதலில் நாம் மகுடாபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கு மஹா ஜனங்கள் இணங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
புரே : என் உள்ளத்தில் தோன்றியதை நாகநாதர் எடுத்துக் கூறியதற் காக அவரை நான் பாராட்டுகிறேன். சுதந்தர தேவியையே நாம் வணங்க வேண்டும்; அவளையே அரசியாகக் கொள்ள வேண்டும். அவளுடைய பிரதிநிதியாக ஒருவர் இருந்து இராஜ்ய நிருவாகம் செய்ய வேண்டும். இதில் எவருக்கும் தடையிரா தென்றே கருதுகிறேன். (இல்லையென்ற _சப்தத்துடன் கர கோஷம்)_
சகோதரர்களே! நாம் எதன் பொருட்டு நெடுநாளாகப் போராடி வந்தோமோ, எதை விரும்பி உலக சுகங்களை மறந்து நின் றோமோ, எதை நோக்கிப் பல்லுயிர்களைப் பலியிட்டோமோ, எதற்காக வாலீசர் இறந்தாரோ அதை - அந்த பெறற்கரிய பேற்றை - சுதந்தரத்தைப் பெற்று விட்டோம். இனிதான் நம் கடமை அதிக மாகிறது. சுதந்தரம் பெற்று விட்டதால் நமக்குக் கர்வம் எற்பட்டிருப்பதாக உலகத்தார் நினைக்கும்படி நாம் நடந்து கொண்டால் நமக்கு அதைவிட வேறு கேடு வேண்டுவ தில்லை. நம்முடைய பொறுமையும் அன்பும் உலகத்தாரால் பரிசோதிக்கப் படலாம். அவைகளுக்கு நாம் ஈடு கொடுத்து நிற்க வேண்டும். ஆண்டவனால் அனைவரும் படைக்கப்பட்டார் என்ற உணர்ச்சி யாண்டும் நிலவ வேண்டும். யாவர்க்கும் ஒரே சட்டம், ஒரே நீதி, ஒரே மதிப்பு வழங்கப்பட வேண்டும். நாட்டில் அறியாமை அடியோடு அகலும்படி செய்யவேண்டும். ஆண்களுக்குரிய உரிமை ஆண்களுக்கும் பெண்களுக்குரிய உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். வறுமை நோய் ஓட வேண்டும். பசிநோய் பறக்க வேண்டும். இத்தகைய ஆட்சி முறையையே நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக எல்லாருடைய உதவியும் வேண்டும். இவ் விஷயத்தில் எவரும் பின்வாங்க மாட்டார் என்று கருதுகிறேன். சுதந்தரம் வாழி! வீரம் வாழி! வாலீசர் வாழி! பாணபுரம் வாழி!
ஜனங்களில் ஒருவர் : பாணபுரத்து வீரர் வாழி!
ஜனங்கள் : புரேச மஹாராஜாவுக்கு ஜெய! பாணபுரத்துக்கு ஜெய!
_(கலைகிறார்கள்.)_
கருத்துகள்
கருத்துரையிடுக