திருவள்ளுவர்
வரலாறு
Back
திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்
1. திருவள்ளுவர்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. பதிப்புரை
4. நுழைவாயில்
5. “திருவள்ளுவர்”
6. மதிப்புரைகள்
7. (1)
8. (2)
9. (3)
10. பகுதி 1 : முன்னுரை
11. பகுதி 2 : வள்ளுவர் குடிப்பிறப்பு
12. பகுதி 3 : வள்ளுவச் சொல்லின் வழக்கும் பொருளும்
13. பகுதி 4 : வள்ளுவர் வாழ்ந்த இடம்
14. பகுதி 5 : வள்ளுவப் பெரியரின் இல்லறக்கிழவியார்
15. பகுதி 6 : வள்ளுவர் வணிகன் வளத்துணையால் வாழ்ந்த வரலாற்றுண்மை
திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : திருவள்ளுவர்
தொகுப்பு : நாவலர் பாரதியார் - நற்றமிழ் ஆய்வுகள் -1
தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி
பதிப்பாளர் : ஆ. ஆதவன்
பதிப்பு : 2009
தாள் : 16 கி வெள்ளைத்தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 304
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உரூபா. 190/-
படிகள் : 1000
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்சு, இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : ஆதி பதிப்பகம்4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004.
பதிப்புரை
20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பம்; வணங்குவோம்.
பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முது முனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை தமிழின் பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெரு நிலத்தின் விடுதலை யின்பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் ச. சாம்ப சிவனார் எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள நூலில் காண்க.
எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள்.
குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது.
அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர்.
தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேறவில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும்.
தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்தவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதிகளாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம்.
இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி.
இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி. விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நூல் கட்டமைப்பாளர் (Binder) வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி.
இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர்.
- பதிப்பாளர்
நுழைவாயில்
முன்னுரை:
பெருமக்களின் வாழ்க்கைகளே வையகத்தின் சிறந்த ஆசிரியர்கள்” என்பர் அறிஞர்.
“பாரதிர்ந் தெழுந்து யார்யாரெனக் கேட்குமா(று)
ஊரெழுந் தோடி, எம் உயிரெனக் கூறுமா(று)
ஏரெழுந் தன்ன, எம் பாரதி எழுந்துசொல்
மாரி பெய்வான், புனல்மாரி பெய்வான்என,
மாத மும்மாரி இம்மண்ணிடைப் பொய்ப்பினும்
நாத மும்மாரி நடாத்துவான் பாரதி!”
என்பது கவிஞர் கண்ணதாசன் கூற்று. 1879ஆம் ஆண்டில் பிறந்து, 1959 ஆம் ஆண்டில் மறைந்த நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மேற்காட்டிய அறிஞர்களின் கூற்றுக்கிணங்க, இவ் வையகத்தின் சிறந்த ஓர் அறிஞராகப் பிறங்கியவர். அன்னைத் தமிழுக்குத் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட இவ் வித்தகச் செல்வர் எழுதிய நூல்களில் “திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாய முறை, சேரர் பேரூர் எனும் இந்நான்கும் அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுபவை. இவ் ஆராய்ச்சி நூல்களைப் பற்றிய ஒருசிறு அறிமுகம் இவண் தரப்படுகின்றது.
நாவலர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
நாவலர் ச.சோ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சுவையுடையது; பிறரால் பின்பற்றத்தக்கது. இவரது வரலாற்றையும், இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் முன்னர்யான் எழுதிய நூல்களில் பரக்கக் காணலாம். எனினும் சுருக்கமாக ஒருசில சுட்டுதல் சாலும்:
1. இவர் , எட்டையபுரத்தில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து, கல்வி கற்று, வழக்கர் தொழில் மேற்கொண்டு, பல்கலைக் கழகப் பேராசிரியர் பணிபூண்டு, இரு பெண்களை மணம் புரிந்து, மக்கட்செல்வம் பெற்று, எண்பதாண்டுகள் வாழ்ந்த பெரியர்;
2. எட்டையபுர அரண்மனைச் சூழல், சி.சு. பாரதியாரின் நட்பு, நெல்லைத் தமிழ்ப் புலவர் தொடர்பு, சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்கள் புகட்டிய அறிவு, வ.உ. சிதம்பரனாரின் தொடர்பு முதலாயின இவரின் தமிழ்த் தொண்டிற்கு அடிப்படையாய் அமைந்தன.
3. செம்மல் சிதம்பரனார் தொடங்கிய கப்பல் கம்பெனியின் செயலராக இருந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்ட சிறப்பும் இவருக்கு உண்டு;
4. இவரது தமிழ்த் தொண்டிற்குச் செல்வம், தொழில், ஆங்கிலப் புலமை பெரிதும் துணைபுரிந்தன;
5. இவர், ஆடவரிற் சிறந்த அண்ணல் எனும்படி தோற்றப் பொலிவும், அஞ்சாமைப் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தார்;
6. புதிய ஆராய்ச்சி நூல்களைப் படைத்தல் முதலாய பல்வேறு தமிழ்ப்பணிகளையும் ஒருங்கே ஆற்றிய பெருந்தகையாளர்.
தலையாய தமிழ்த்தொண்டு!
நாவலர் பாரதியார் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் பலப்பல; அவற்றுள் சிலமட்டும் இவண் குறிப்பிடல் பொருந்தும் :
1. தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கணத்திற்கும், பிற இலக்கியத்திற்கும் புத்துரை காண்டல்;
2. அரிய ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக இதுகாறும் எவரும் கூறாதவாறு புதுமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டல்;
3. மாநாடுகள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள் முதலானவற்றிற் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழுணர்ச்சி ஊட்டுதல்:
4. அரசியல் மேடைகளையும் தமிழ் மேடையாக்குதல்;
5. இந்தி கட்டாய மொழி என ஆக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்துத் தமிழ் காக்கும் போரில் முன்னிற்றல்;
6. வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த பெரு வருவாயினையும் வெறுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்றல்;
7. முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற தமிழ் காக்கும் பேரறிஞர்களை உருவாக்கல்;
8. தமிழ்ப் புலவர்களைப் போற்றுதல்;
9. வறுமையால் வாடிய தமிழ்ப் புலவர்கட்குப் பொருளுதவி செய்தல்;
10. பேச்சாலும், எழுத்தாலுமன்றிச் செயலாலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடல்;
11. பதவியைப் பெரிதெனக் கருதாது, தமிழுக்கு ஊறு நேர்ந்த போதெல்லாம் அஞ்சாது தடுத்து நிறுத்தல்;
12. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலக்கட்டுரைகள் வாயிலாகவும் தமிழ்ப் பெருமையை உலகோரும் அறியச் செய்தல்;
13. தமிழில் நல்ல நடையை (ளுவலடந)க் கையாண்டு, பிறர்க்கும் வழி காட்டுதல்;
14. ‘ஆய்வு நெறிமுறைகள் இவை’ எனக் காட்டி, மாணவரிடையே ஆய்வுமனப்பான்மையை உண்டாக்கித் திறனாய்வுத் துறையை வளர்த்தல்;
15. யார் எது கூறினும், மெய்ப் பொருள் காண்பதே நோக்கமாகக் கொண்டு அதனை வெளிக் கொணர்தல்;
16. தமிழ் மரபு - ஆரிய மரபு இவ்விரண்டிற்குமிடையே காணலாகும் வேறுபாடுகளை அஞ்சாது எடுத்துரைத்துப் பண்டைத் தமிழ் மரபினைக் காக்க வற்புறுத்தல்.
இவ்வாறு பல்வகையானும் தமிழ்ப் பணிசெய்த பான்மையினால், நாவலர் பாரதியார், தாம் வாழ்ந்த காலத்திலேயே, ‘நாவலர்’, ‘கணக்காயர்’, டாக்டர் எனும் பட்டங்கள் பெற்றுப் பெரும் புகழுக்குரியரானார்.
‘திருவள்ளுவர்’
தமிழகத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரைப்பற்றி எழுந்த கட்டுக்கதைகள் பல! அவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்த பெருமைக்கு உரியவருள் நாவலர் பாரதியாரும் ஒருவர். திருவள்ளுவரைப்பற்றிய மெய்யான வரலாற்றைப் பல்வேறு சான்றுகள் காட்டித் திருவள்ளுவர் எனும் அரிய ஆராய்ச்சிநூல் (தமிழ், ஆங்கிலம்) வாயிலாக உலகுக்கு உணர்த்தியவர் இவர். இந்நூல் வாயிலாக இவர் - கூறும் முடிவு
களாவன :
1. திருவள்ளுவர், புலைமகளின் பழிமகவல்லர்;
2. மயிலையில் வாழ்ந்தவரல்லர்;
3. ஏலேலசிங்கரின் உதவி பெற்றவரல்லர்;
4. மூன்றாம் சங்கத்தின் முற்காலத்தே வாழ்ந்தவர்;
5. மதுரையில் வாழ்ந்தவர்;
6. மாதானுபங்கியை மணந்தவர்;
7. குறளடியால் அறம்பாடி உலகுக்களித்தவர்;
8. பண்டைப் பாண்டியரின் உள்படுகருமத் தலைவராயிருந்தவர்;
9. அருந்தமிழ் வேளிர்குடியில் தோன்றிய பெரியர்.
நீதி நூல்களின் தோற்றத்திற்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும்; வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் என்ற நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு.
இதனை நாவலர் பாரதியார் பின்வருமாறு இந்நூலில் வன்மையாக மறுத்துரைக்கின்றார்:
ஆரிய தரும சாத்திர முறை வேறு; தமிழற நூன் மரபு வேறாகும்; இரு முறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள் தமிழ் மரபு வழுவாது பொருளின் பகுதி களான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்கா மாறு? ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல்.
தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகு மென்பது வெள்ளிடை மலையாம்!
இவ்வாறே நூலின் பல்வேறிடங்களிலும், அறிவுக்குப் பொருந்தாக் கருத்துக்களை மறுத்துரைக்கும் நாவலர் பாரதியாரது நுண்மாண் நுழைபுலம் கண்டு மகிழமுடிகின்றது.
இத் திருவள்ளுவர் ஆராய்ச்சியை அறிஞர் பலரும் ஒருமுகமாகப் பாராட்டியுள்ளனர். அவர்களுள் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் கூறுவது இவண் எண்ணத்தகும்:
“வள்ளுவர் வரலாற்று மலர்வனத்தில், அவர் வாழ்க்கைச் செய்தி களாகிய வனப்புமிக்க நறுமணங் கமழும் மெல்லிய அரும்பு மலர்கள் நிறைந்த பயன்றரு சிறுபூஞ் செடிகளை, அகப்புறச் சான்றுகள் யாதுமின்றிச் செவித் தொடர் வழக்காய் நீண்ட பலகாலமாக வழங்கிவந்த புலைக்குடிப் பிறப்பு-மயிலை வாழ்வு-ஏலேலசிங்கர் தொடர்பு-கூடற்சங்க வென்றி - கால அணிமை - ஆரிய முதனூல் பற்றி அறம் பாடியது - என்னும் இன்னோரன்ன பொய்படு செய்திகளாம் பயனில் பெருமரங்கள் பண்டையுருத் தெரியவொட்டாது வேரூன்றியடர்ந்திருத்தலைக் கண்ட நம் பாரதியார், செப்பமுற ஆய்ந்து, தெளிவுரை கூறும் நாக்கோடரியால் அவ்வடர் பெரு மரங்களை வெட்டி வேரறக் களைந்து காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும் வண்ணம் அப்பண்டைப் பயன்றருமலர் வனத்தைப் புதுக்கிப் பழமுது நூற்குறிப்புக்களாக்கிய தெண்ணீர் பாய்ச்சிச் செழிப்புற வளர்க்க முற்பட்டனர்.”
இதனால் நாவலர் பாரதியாரின் திருவள்ளுவர் ஆராய்ச்சி மேன்மை ஒருவாறு புலனாகும்!
‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’
“தசரதன் நேர்மையாளன்” என்றும் “அவனது உயிருக்கே உலைவைத்த மாபாதகி கைகேயி” என்றும் பொதுவாகக் கூறுவதுண்டு. இதன் உண்மையை ஆராய்வான்வேண்டி, நாவலர் பாரதியார், தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் நூலினை வெளியிட்டார். நிறை என்பது, ஈண்டுக், குறை என்பதற்கு மாறான ஒரு சொல்லாகவும் கற்பு என்று பொருள்படும் சொல்லாகவும் அமைந்துள்ள நயம் உன்னத் தக்கது.
தசரதனின் குறைகளாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு :
1. தசரதன், கைகேயியை மணமுடித்தகாலத்து, அவளுக்குக் கன்யாசுல்கமாக அயோத்தி நாட்டினை அளித்தவன்; அதனால் நாடு, பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்;
2. சம்பராசுரப் போரின்போது, தான் கொடுத்த வாக்குறுதியை மீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்;
3. மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்;
4. பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்;
5. பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவு செய்தான்;
6. பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்;
7. பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்துமட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்;
8. ஏதுமறியாப் பரதனைத் தன்மகன் அல்லன் என்றான்.
இவ்வாறு தசரதன்பாலமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை எனப் பட்டியலிட்டும் காட்டுகின்றார்.
1. கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்;
2. தன் மகன் பரதனைவிட இராமனிடத்து அளவற்ற அன்புடையள்;
3. கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்;
4. போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்;
5. தசரதனிடத்து அன்பு பூண்டவள். ஆனால் அவனுக்குப் பழி வந்திடல காது என்பதற்காக வரம் கேட்டவள்;
6. தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்;
7. தெய்வக் கற்பினள் எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள்.
இவ்வாறு கூறுதற்கு அடித்தளமாய் இவர் எடுத்துக் கொண்ட கம்பன் பாட்டொன்று :
“கெடுத்தொ ழிந்தனை யுனக்கரும் புதல்வனை; கிளர்நீ
ருடுத்த பாரக முடையவ னொருமகற் கெனவே
கொடுத்த பேரர(சு) அவன்குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்கு மாம்;பிறர்க் காகுமோ என்றாள்!”
(கம்ப : அயோத்தி; மந்தரை : 76)
இப்பாடலில் வரும் ஒருமகற்கு என்பதற்கு இராமனுக்கு என்பதே இதுகாறும் பலரும் கூறிவரும் உரையாகும். ஆனால் நாவலர் பாரதியாரோ, ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு முன்பே கொடுக்கப்பட்ட பேரரசு எனும் புதுப் பொருள் காண்கின்றார். ஆங்ஙனமெனில், பரதனுக்கு இவ்வரசு எப்போது, எதற்காகக் கொடுக்கப்பட்டது? என்ற வினா எழுதல் இயல்பு. தசரதன் கைகேயியைத் திருமணம் செய்தபோழ்து, தான் அயோத்தி அரசாட்சியைக் கன்யா சுல்கமாகக் கொடுத்திருந்தான். இதன் முழுவிவரம், வான்மீகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
“கம்பரும், இக்கருத்தைப் பின்னால், இராமனது கூற்றில் வைத்து வெளிப் படுத்துகின்றார் என்று கூறும் நாவலர் பாரதியார், பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டுவர்:
“கம்பரும் உந்தைசொல் மரபி னால்உடைத்
தரணி நின்னதென் றியைந்த தன்மையால்
உரனில் நீபிறந் துரிமை யாதலால்
அரசு நின்னதே ஆள்க என்றனன்”
(கம்ப. : திருவடி : 112)
இங்ஙனம் இது, தசரதன் குறைகள் கைகேயி நிறைகள் பற்றிய அரியதோர் ஆராய்ச்சிநூலாக மிளிர்கின்றது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி உலகில் இதுகாறும் எவருமே எண்ணிப் பார்க்காத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக்கண் கொண்டு நோக்கிய பெருமை நாவலர் பாரதியாருக்கு உண்டு!
“அவரது வாதத் திறமைக்கு (தசரதன் குறையும்
கைகேயி நிறையும்) சிறந்த எடுத்துக்காட்டாகும்”
என முனைவர் மா. இராசமாணிக்கனார் கூறுவது சாலப் பொருந்தும்!
அன்றியும், நாவலர் பாரதியார், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும். மாசு கற்பித்தலாகாது என்ற கொள்கையும் கொண்டவர்; தம் கெழுதகை நண்பர் சி.சு. பாரதியார், பாஞ்சாலிக்காகப் பாஞ்சாலி சபதம் பாடியது போல, இவரும் கைகேயிக்காகத் தசரதன் குறையும் கைகேயி நிறையும் கூறினார் என்று கூறுவதும் பொருந்தும்!
இவ்வகையில் தமிழ் இலக்கிய உலகுக்கு இந்நூல் ஒரு முன்னோடி எனலாம்.
‘சேரர் தாயமுறை’
“மக்கட்டாயமுறை, மருமக்கட்டாயமுறை, இவ் விரண்டும் கலந்த தாயமுறை எனத் தாயமுறையில் முப்பிரிவுகள் உண்டு. இவற்றுள் மருமக்கட்டாயமுறை, கேரளத்தில் கடந்த ஐந்து நூற்றாண்டுகட்கு மேலாக இருந்து வருவது . ஆனால் சோழ பாண்டிய நாடுகளில் இருப்பது மக்கட்டாயமே! எனவே, பண்டைச் சேரநாட்டிலும் மக்கட்டாயமே இருந்தது; பின்னர் தான் மருமக்கட்டாயமாக மாறியது என்பர் அறிஞர். இதுபற்றி ஆராய எழுந்ததே சேரர் தாயமுறை என்னும் நூல்!
‘சேரர் தாயமுறை’ என்னும் இவ் ஆராய்ச்சி நூலை முதன்முதலில் நாவலர் பாரதியார், 1929ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் (SystemofSuccession in the Chera Kingdom) எழுதி வெளியிட்டார்; பின்னர்த் தமிழிலும் அது வெளிவந்தது.
கேரளத்தில் வழங்கும் மருமக்கட்டாயமுறைக்கு அடிப்படையாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு:
1. பெண் வழியிலேயே உறவு முறை - தாய்மாரே குடிபேணும் அடிமரம்;
2. ஆடவர்கள், தம் மாமன்மார்க்கு உரிய வழித்தோன்றல்கள்;
3. குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்று மில்லை;
4. குடியின் தலைமை, உரிமை - மருகர்களில் வயது முறைப்படி வரும்;
5. அரசர் குடும்பங்களிலும் நாடாளும் உரிமை, மருகர் வழியே வரிசை முறையில் வருவது;
6. தந்தைமார்க்கு அவர்களின் ஆண்மக்கள் வாரிசு ஆகார்; அத்தந்தையருடன் பிறந்த பெண்வயிற்று மருகரே வழித்தோன்றல்!
இந்நூலின் ஆய்வுக்கு இவர் சான்றாகக் காட்டும் முதன்மை நூல் பதிற்றுப்பத்து ஆகும்.
நாவலர் பாரதியார் கூறும் பல்வேறு கருத்துக்களில் ஒன்றுமட்டும் இவண் குறிக்கத்தகும்.
“சங்க நூல்களில் சேரரைக் குறிக்க வருமிடத்து, ஒரு சேரனையாவது
அவன் தந்தைக்கு ‘மகன்’ என்ற குறிப்புக் கிடையாது அம்
முன்னோனின் ‘மருமகன்’ என்ற குறிப்பே வந்துள்ளது;
‘இளஞ்சேரலிரும்பொறை. பெருஞ்சேரலிரும் பொறையின் மருகன்’
என்ற பொருளில் விறல் மாந்தரன்றன் மருகன் (மருகன்.
வழித்தோன்றல்) என்று பெருங்குன்றூர் கிழார் பாடுகின்றார்!”
இந்நூல் வாயிலாக நாவலர் பாரதியார் காட்டும் ஆய்வு முடிவுகளிற் சில வருமாறு:
1. தமிழ்நாட்டில் குடகுமலைத் தொடருக்கு மேற்கே, குடபுலத்தில் மட்டுமே இம் மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றது. நாயர் என்ற திராவிட சமுதாயத்தார். நம்பூரி என்ற ஆரியப் பிரிவினர், பிறநாட்டி லிருந்து குடியேறிய மாப்பிள்ளைமார் இவர்கள் மருமக்கட்டாயிகளாவர்;
2. இம் ‘மருமக்கட்டாயமுறை’, சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சி பெற்றுத் தொன்றுதொட்டே வழங்கி வருவதாகத் தெரிகிறது;
3. அம் மலைத் தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்க காலந்தொட்டே மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது.
இவ்வாறு கூறுபவர்,
1. மக்கட்டாய மரபும், மருமக்கட்டாய மரபும் ஆகிய இவ்விரண்டும் பண்டைத் தமிழ் மரபா?
2. அவ்வாறாயின், தமிழகத்தில், மருமக்கட்டாயமுறைவழக்கிழந்தது எதனால்?
3. தமிழ் மரபின்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருந்து எப்படி இதனை மேற்கொண்டனர்?
4. மிகப்பழங்காலத்தில் தாய்வழிமரபே இருந்து, பின்பு தந்தைவழித் தாயம் வந்ததாகக் கருதலாமா?
5. மாப்பிள்ளைமார்-அராபி நாட்டினர். மகமதியர், குடநாடு வந்த போது தங்கள் பூர்வீக அராபியப் பழக்கத்தைப் புகுத்தினரா?
6. இத் தாயவழி ஆதிக்கத்தால், நாஞ்சில்நாட்டுத் தமிழர்களும் இம்முறையைப் பின்பற்றினார்களா?
எனும் வினாக்களை எழுப்பி, மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றார்.
ஆனால் இவரது ஆராய்ச்சியைப் பேரறிஞர்களான மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார் ஆகியோர் மறுத்து நூல்களும் எழுதியுள்ளனர். எல். கிருட்டிணசாமி பாரதியார், நாவலர் பாரதியாரின் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் நூல் ஒன்றும் எழுதியுள்ளமை இவண் குறிக்கத்தகும்.
எனினும் “இவ் ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளது; புலவருக்கு நல்விருந்து” என்றும் அறிஞர் போற்றுவர்.
சேரர் பேரூர்
பண்டைச் சேரமன்னர்களின் தலைநகரம் வஞ்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ‘இக்காலத்தில் அஃது எங்கு உள்ளது? என்பதுகுறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.
“கடலோரம்** பேராற்றின் மேலது வஞ்சி” என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் மற்றும் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே. சாமிநாதையர் போன்றவர்களும் கூறுவர். தமிழறிஞர் வி. கனகசபைப்பிள்ளை. “குடமலைத் தொடரின்** அடிவாரத்தில் பேரியாற்றங் கரையில் ஒரு பாழூராகிய திருக்கரூரே வஞ்சி என்பர். அறிஞர் மு. இராகவையங்காரோ. திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரைமேலதாய கரூவூரானிலையே வஞ்சி” என்பர்.
இம் மூன்று கருத்துக்களுள் பொருந்துவது யாது என ஆராய எழுந்ததே சேரர் பேரூர் எனும் ஆய்வு நூல்! இது. பெரும் பாலும் மு. இராகவையங்கார் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூற்கருத்தை அடியோடு மறுப்பதாக அமைந்துள்ளது. போகிறபோக்கில் வி. கனகசபைப்பிள்ளையின் கருத்தையும் மறத்துத் தங்கோள் நிறுவுகின்றார் நாவலர் பாரதியார்.
இவ் ஆய்வு நூல்வாயிலாக இவர் கூறும் முடிந்த முடிபு வருமாறு :
1. பட்டினப்பாக்கமும், அரசன் குடிப்பாக்கமும் கூடியது வஞ்சி மூதூர். பிற்காலத்தில் ‘பட்டினப்பாக்கம்’, மகோதை என்றும்; அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சி முற்றம் என்றும் அழைக்கப்பெற்றன. இவ் வஞ்சிமுற்றம் நாளடைவில் வஞ்சைக் களமாயிற்று. வஞ்சி - வஞ்சை முற்றம் - களம். பிற்காலத்து இது தலங்களுள் வைத்தெண்ணப் படுங்கால் திரு அடைபெற்றுத் திருவஞ்சைக் களமா’க ஆகியிருக்க வேண்டும்.
2. எனவே சேரர் சங்ககாலப் பேரூர், பேராற்றின் மலை வாரத்தே கடலினின்றும் ஏறத்தாழ 30 மைலுக்கு அப்பாலுள்ள திருக்கரூருமன்று; காவிரி ஆம்பிராவதி கூட்டத்திற்கு மேற்கே புனல்நாட்டில் உள்ள சோழர் பழவூரான திருவானிலையுமன்று;
3. சேரர் பேரூரான வஞ்சி மூதூர் மலைநாட்டில், மேலைக்கடற்கரையில் பேராற்றின் கழிமுகத்திலமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டூர் எதுவுமாகாது!
சேரர் தலைநகராம் இவ் வஞ்சிமாநகரம் குறித்து அறிஞர் களிடையே கருத்துவேறுபாடுகள் உள. எனினும் வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை கூறுவதனை இங்குக் குறிப்பது பொருந்தும்.
….ஆயினும் அது (வஞ்சி) மேலைக் கடற்கரையில் இருந்தது என்பதற்கே சிறந்த சான்றுகள் உள்ளனவாகக் கருதலாம். ஒருகால் சேர மன்னர் வஞ்சியையே யன்றிக்கரூவூரையும்மற்றொருதலைநகராகக்கொண்டிருப்பார்!”
உண்மை எதுவாயினும், இந்நூல் ஆராய்ச்சிக்கு நாவலர் பாரதியார் மேற்கொண்ட கடுமையான உழைப்பை எவரும் மறந்துவிட இயலாது. இவரது ஆராய்ச்சித் திறனை விளக்க வல்ல ஓர் அரியநூல் இது எனலாம்!
முடிவுரை
நாவலர் பாரதியார் எழுதிய இந் நான்கு ஆராய்ச்சி நூல்களும் தமிழகத்திற்குக் கிடைத்த அரிய கருவூலங்கள் எனலாம். இந் நான்கினையும்குறித்தவிரிவhன ஆராய்ச்சியை, யான் எழுதிய ‘நவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி’ என்னும் முனைவர் பட்ட ஆய்வு நூலில் (பக்20முதல் 91 முடிய)காணலாம்.
வாழ்க நாவலர் பாரதியார்!
அன்பன்
முனைவர் ச. சாம்பசிவனார்
“திருவள்ளுவர்”
முதற் பதிப்பு - முன்னுரை
தமிழகத்தில் தலைநின்ற தமிழ்ச்சான்றோர் பலரையும் பற்றி அவர் குடிப்பழிப்பான பல ஆபாசக் கதைகள் சமீப காலங்களில் எழலாயின. திருவள்ளுவர், நக்கீரர், கம்பர் முதலிய பெரியாரையெல்லாம் எளிதில் வேளாப் பார்ப்பன ஆண்டிகளுக்கு இழிகுலப் பெண்டிரீன்ற மக்களெனச் சிலர் கதைக்கின்றனர். எனினும் இக் கதைப்பவர் துணிவைவிட, அக்கதைகளைச் சிறிதும் தடையின்றியேற்கும் தமிழ்மக்களின் தற்காலநிலை வியப்பும் விசனமும் விளைக்கின்றது. வள்ளுவரைப் பற்றிய கதைகளை ஆன்ற நூற்சான்று கொண்டு ஒருவாறாக நான் சிறிது ஊன்றி விசாரிக்கலானேன். என் ஆராய்ச்சியிற்கிடைத்த சில கருத்துக்களை முதலிற் சில நண்பர் வேண்டுதலின்படி பண்டிதர் சிலர் முன்பு திருச்சிராப்பள்ளியில் 1952 ஆம் வருடக் கடைசியில் வெளியிட்டேன். அப்போது அவர்கள் என் கருத்துக்களை ஆதரித்து ஊக்கினார்கள்.
பிறகு, மதுரைத் தமிழ்ச்சங்கம், வாலிப கிறித்தவ சங்கம் என்பவற்றின் துணையாதரவில் மதுரை ஐக்கிய கிறித்தவ கலாசாலையில் சில உபந்நியாசங்கள் நிகழ்த்தப்பெற்றன. அவற்றுள் ஒன்று 1926ஆம் வருடம் சனவரி மாதம் 25ஆம் தேதி ரெவரண்டு எச்.எ. பாப்லி துரையவர்களின் தலைமைக் கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர் சரிதத்தைப் பற்றி நான் செய்ய நேர்ந்தது. அங்கு அப்போது விசயம் செய்திருந்த சேது சமத்தான மகா பண்டிதரான உயர்திரு உவே.ரா. இராகவையங்காரவர்கள், சோமேசர் முதுமொழி வெண்பா ஒன்றைச் சுட்டி, அதனால் வள்ளுவர் கீழ்க் குலத்தவர் என்னுங் கதை வலிபெற நிற்பதைக் குறிப்பிட்டார்கள். என்னிடமிருந்து தக்க சமாதானங்கொண்டு என்னை ஊக்கும் அவர்களின் நன்னொழுக்கத்துக்கு நான் பண்டிதவரவர்களுக்கு நன்றி கூறி, அக்கதை அப்பாட்டால் எவ்வித ஆதரவையும் பொறாமையையும், அப்பாட்டு அக்கதையின் உண்மையை ஆராய்ந்து அங்கீகரிக்கும் நோக்குடையதன் றென்பதையும் எடுத்துக் காட்டினேன். பிறகு பண்டிதவரவர்களும் பிறரும் வேறு ஆட்சேபம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆமோதித்தார்கள். அன்று அங்கு அவ்வுபந்நியாசத்தைக் கேட்டிருந்த தமிழ்ச் சங்கத்துத் தலைமைக் கணக்காயர் உயர்திரு. நாராயணையங்காரவர்கள் விரும்பியபடி பின் அக்கருத்துக்களைச் செந்தமிழில் 24ஆம் தொகுதி 9,10 பகுதிகளில் எழுதி வெளியிட்டேன்.
சமீபத்தில் சென்னைச் சர்வகலாசாலையார் வேண்டிக் கொண்டபடி இவ்வாண்டில் சென்ற மார்ச்சு மாதம் 11,12ஆம் தேதிகளில் நான் பச்சையப்பன் கல்லூரியிற் செய்த இரண்டு உபந்நியாசங்களில் முதலது திருவள்ளுவரைப் பற்றியதாகும். அப்போது சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் யாருமே வராவிட்டாலும், மகாமகோபாத்தியாய உயர்திரு உ.வே. சாமி நாதையரவர்கள், பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள், சென்னைச் சர்வ காலாசாலைத் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கக் காரியதரிசி திருவாளர் டி.சி. சீனிவாசையங்காரவர்கள் போன்ற தகவுடைப் பெரியார் பலர் கேட்டு உடன்பாடு கூறி என்னை ஊக்கினார்கள். உபந்நியாச முடிவில் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் என்னை ஆசீர்வதித்து அன்போடு ஆதரவு கூறினார்கள்.
நான் எதிர்பாராத வண்ணம் என்னை ஊக்கிய பெரியார்களுக்கும், என் கட்டுரைக்கு மதிப்புரை தந்துதவிய புலவர்கட்கும், இக்கட்டுரை வெளியீட்டை விரும்பி மேற்கொண்ட தமிழ்ச்சங்கக் காரியதரிசியவர்கட்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்.
என் கருத்துக்கள் துணிந்த முடிபுகளென்று கொள்ள வேண்டா. வழங்கும் பல கற்பனைக் கதைகளையும் நம்பி அவற்றை அப்படியே பரப்பிவரும் குணத்தைச் சிறிது மறந்து, “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” எனும் பொய்யில் புலவர் பொருளுரையைக் கையாளத் தமிழ் மாணாக்கரை என் கட்டுரை எனைத்தளவும் தூண்டுதற்கு உதவுமாயின், அனைத்தளவு என் சிறு முயற்சிக்குப் போதிய கைம்மாறு பெற்றவனாவேன்.
மதுரை,
25-5-1929.
ச. சோமசுந்தர பாரதி
மதிப்புரைகள்
(1)
(மகாமகோபாத்தியாய தாட்சிணாத்யகலாநிதி திரு. உ.வே. சாமிநாதையரவர்கள்)
சென்னைச் சர்வகலாசாலையார் விரும்பியபடி மதுரை, சீமான் சோமசுந்தர பாரதியவர்கள் எம்.ஏ.பி.எல், 1929 ஆம் வருடம் மார்ச்சு மாதம் 11ஆம் தேதி பச்சையப்பன் கலாசாலையில் திருவள்ளுவர் என்னும் விசயத்தைப் பற்றிப் பேசியதைக் கேட்டு இன்புற்றவர்களுள் யானு மொருவன்.
குழறுபடையாகவும் முன்னுக்குப்பின் முரணாகவும் பண்டைக்கால வரலாற்றிற்கு மாறாகவும் இக்காலத்தில் வழங்கும் திருவள்ளுவருடைய சரித்திரப் பகுதிகளுள், கொள்ளத் தக்கவையிவை தள்ளத்தக்கவை யிவை யென்பதையும், அவருடைய கல்விப் பெருமையையும், பழைய புலவர்கள் அவர் திறத்தும் அவர் நூலினிடத்தும் கொண்டிருந்த மதிப்பையும், அவர் இன்ன
நிலையில் இருந்தாரென்பதையும் தடை விடைகளை நிகழ்த்தித் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டிக் கேட்போருடைய மனத்தில் நன்றாகப் பதியும்படி பேசியது பாரதியாரவர்களுக்குள்ள தமிழார்வத்தையும், தமிழ் நூற்பயிற்சியையும், சொல்லாற்றலையும், ஞாபகசக்தியையும், புலப்படுத்திக் கேட்டோர் மனத்தைக் குளிர் வித்தது; வியப்பையும் விளைவித்தது.
இவ்வரிய பிரசங்கம், கேளார்க்கும் பயன்படும்படி பதிப்பிக்கப் பெற்றுப் புத்தகவுருவமாக வெளிவந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இப் புத்தகம் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் அவர்களில் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு புது விருந்தாக இருக்கு மென்றெண்ணுகிறேன்.
திருவேட்டீசுரன்பேட்டை, சென்னை, 21-5-1929.
இங்ஙனம்
வே. சாமிநாதையர்
(2)
(மதுரைத் தமிழ் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திராதிபரும், கலாசாலைத் தலைமையாசிரியருமான திரு. உ.வே. திருநாராயணையங்காரவர்கள்)
மதுரை ஐக்கோர்ட்டு வக்கீல் சீமத் : எஸ். சோமசுந்தர பாரதியார் எம். ஏ., பி. எல்., அவர்கள் திருவள்ளுவரது வரலாறு பற்றி மதுரையில் மதுரைத் தமிழ் சங்கம், வாலிப கிறித்தவ சங்கம், இவற்றின் ஆதரவில் ஓருபந்யாசம் செய்தார்கள். அப்பொழுது அவ்வரலாற்றுள் வழங்கப்பட்டுவரும் சில பிறழ்ச்சிகளைப் பல சான்றுகளாலும் யுக்திகளாலும் ஒருவாறு மாற்றிக் காட்டினார்கள். அதனைப் பலரும் அறியும்படி செந்தமிழில் வெளியிட வேண்டு
மென்று நான் விரும்பியதற் கிசைந்து பழைய தமிழ் நூல்கள் பலவற்றினின்றும் பல சான்றுகள் காட்டி ஓராராய்ச்சியுரையா யெழுதி வெளியிட்டார்கள். பின்பு சென்னைச் சருவ கலாசாலையார் விருப்பத்திற் கிசைந்து இவ்வாராய்ச்சிக்கு வேண்டியன மேலும் சில கூட்டிப் பெருக்கிப் புதுக்கிச் சென்னையில் பாரதியாரவர்களே பிரசங்கித்தார்கள். அப்பொழுது பல சிறந்த பண்டிதர்களால் நன்கு மதிக்கப்பெற்றது பற்றியும் புத்தகமாகப் பதிப்பிக்க வேண்டுமென்று பலர் விரும்பியது பற்றியும் இது பதிக்கப் பெற்றிருக்கிறது.
இதனுள், திருவள்ளுவர் கடைச் சங்க காலத்துக்கு மிகவும் முற்பட்டவர் என்பதும், அவர் புலைவகுப்பினரல்லரென்பதும், பிறவும் பழைய தமிழ் நூல்கள் பலவற்றினின்றும் போதுமான பல குறிப்புகள் காட்டி நிறுவப்பட்டுள்ளன.
இதற்கு மாறாக வழங்குங் கதை, வள்ளுவர் என்ற பொய் ஒன்றே பற்றி அவர் தகைமையறியாதானொருவன் மயங்கிக் கட்டிய கட்டுக்கதை யென்பதும், அது யாதோராதரவுமில்லாத வெறும்பேச்சென்பதும், அதுவும் திருவள்ளுவமாலை பிறப்பதற்கு முன்னமே வழங்கத் தொடங்கி விட்ட தென்பதும் அத்திருவள்ளுவமாலையின்கணுள்ள மாமூலனார் பாடலின் சொற்குறிப்புகளால் உய்த்துணரக் கிடக்கின்றன. ஆயினும், அவற்றையெல்லாம் நன்கு புலப்படுமாறு வெளிப்படையாக்கிக் காட்டியது இவ்வாராய்ச்சியே. இவ்வாராய்ச்சியால் பாரதியாரவர்களுடைய தமிழ் நூலுணர்ச்சியும், மதிநுட்பமும், ஆராய்ச்சிவன்மையும், புலமை வாய்ந்த தமிழ்நடையமைப்பும் புலப்படுகின்றன.
பாரதியாரவர்கள் இன்னும் பல ஆராய்ச்சிகளியற்றித் தமிழுலகுக்குப கரித்துத் தமிழாராய்ச்சிக்கு ஒரு தக்கோராய் விளங்குவ ரென்றெண்ணு கின்றேன்.
மதுரைத் தமிழ் சங்கம்,
மதுரை,28-5-1929.
திரு. நாராயணையங்கார்.
(3)
(மகிபாலன்பட்டி தமிழ் - ஆரியப் புலவரான திருவாளர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்கள்)
அருங்கலை விநோதரும் உயர்தர நீதிமன்றத்து வழக்கறிஞரும் ஆகிய திருவாளர் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.பி.எல். அவர்கள் திருவள்ளு வரைப் பற்றி அரிதின் ஆராய்ந்து இயற்றிய சொற் பொழிவைப் படித்துப் பார்த்தேன். இவர்களுக்கு இயற்கையின் அமைந்துள்ள செந்தமிழ் உயர் சிறப்பு நடைநலன் இச்சொற் பொழிவினும் செல்வன் அமைந்துளதென்பது கூறவேண்டிய தின்று. இச் சொற்பொழிவின் ஒவ்வொரு பகுதியும் நுண் மாணுழைபுல முடையார் சுவைத்துணர்ந் தின்புறத்தக்க விருந்தாக மிளிர்கின்றது.
இதன்கண் இவர்கள் வள்ளுவரைப் புலைக்குடிப் பிறப்பினரல்லர் - அரசியல் வினையில் உள்படுகருமத் தலைவராய் முதுக்குடிப் பிறந்துயர்ந்தவர் எனக் கண்டதும், சகரமுதன்மொழி திருக்குறளி லரிதென ஆய்ந்து அதனாற் காலப்பழமை தேறியதும், கல்லாதார்க்குக் கல்விநலந் துய்த்த சங்கத்தாரை எடுத்துக்காட்டிய முனிவருரையைப்பற்றிய ஆராய்ச்சி யும், உப்பக்கநோக்கி என்னும் அரும்பொருட் செய்யுட்கு உவமனையும் பொருளையும் இயைத்துக் காட்டிய உரைநலனும் பிறவும் மனத்தை வியப்புறச் செய்து மகிழ்விக்கின்றன.
இவர்கள் சங்கப்புலவர் பாடல்கொலோவென ஐயுற்ற வள்ளுவமாலைச் செய்யுளொன்றுகொண்டு இப்பொய்யில் புலவர் வாழ்க்கைப் பேற்றுக்குக் கூடலை யிடனாக்குதல் கூடுங்கொலோவெனின், அறவே பிரமாணமில்லாத கூற்றைநோக்க இஃது எத்துணை வலியுடைத்தென உற்றுநோக்கு வார்க்கு அமையுமென்க. சங்கம் வளர்ந்த தனிப்பெருங்கூடலில் மங்கல வாழ்க்கை வளம்பெறத்தோன்றிய வள்ளுவப் பெரியாரை அவர் மாண்பு நிலையோர்ந்து வலிந்து மயிலைக்கு ஈர்த்துச் சென்றார் வலிநிலையளந்து, இகல்பொருதழித்து, மீண்டும் நம் பாடல் சால்கூடலிற் பண்பறக்கூட்டிய பாரதியார் பேருதவி தமிழகத்தாருள்ளத் தொளிரும் ஒரு பெருமணியாகும்.
வள்ளுவர் வரலாற்று மலர் வனத்தில், அவர் வாழ்க்கைச் செய்திகளாகிய வனப்புமிக்க நறுமணங்கமழும் மெல்லிய அரும்பு மலர்கள் நிறைந்த பயன்றரு சிறுபூஞ்செடிகளை, அகப்புறச் சான்றுகள் யாதுமின்றிச் செவித்தொடர் வழக்காய் நீண்ட பலகாலமாக வழங்கிவந்த புலைக்குடிப் பிறப்பு - மயிலை வாழ்வு - ஏலேலசிங்கர் தொடர்பு - கூடற்சங்கவென்றி- கால அணிமை - ஆரியமுதனூல்பற்றி அறம்பாடியது - என்னும் இன்னோரன்ன பொய்படும் செய்திகளாம் பயனில் பெருமரங்கள் பண்டையுருத் தெரியவொட்டாது வேரூன்றி யடர்ந்திருத்தலைக் கண்ட நம் பாரதியார், செப்பமுற ஆராய்ந்து, தெளிவுரை கூறும் நாக்கோடரியால் அவ் வடர் பெருமரங்களை வெட்டி வேரறக் களைந்து, காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும் வண்ணம் அப் பண்டைப் பயன்றருமலர் வனத்தைப் புதுக்கிப் பழமுது நூற்குறிப்புக்களாகிய தண்ணீர் பாய்ச்சிச் செழிப்புற வளர்க்க முற்பட்டன ரென்பதே என் கருத்துரையாகும்.
இன்னும் இவர்கள் பொருளொடுபொருந்தும் உரைபல வுலகுக்கீந்து நிலைபெறும் உயர்புகழ்பெருகவென்பது என் உளத்தியல் வாழ்த்தாகும்.
மகிபாலன்பட்டி,
9-6-1929.
மு. கதிரேசன்
பகுதி 1 : முன்னுரை
சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்த பாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங் கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப் படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில் திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புகளைத் தெளிந்து துணிதல் எளிதன்று. எனினும், சங்க நூல்களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளுவர் சரித முழுதையும் திரட்டித் தராவேனும்? தற்காலத் தமிழுலகில் வழங்கிவரும் அவர் கதையின் உண்மையை ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவற்றை அவை யிற்றை? உற்றுநோக்குங்கால், பிரதாபக் கதைகளில் நம்பிக்கை நலி வடையக் காண்போம்.
வள்ளுவரின் காலம், ஊர், குடிப்பிறப்பு, சமயம் முதலிய வற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவை பற்றிய தற்காலப் பிரதாபங்களுக்கு உள்ள ஆதரவுகளைச் சிறிது விசாரிப்போம்.
கடைச் சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கப் புலவர் இறுமாப்பை யடக்கின அவதார புருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப் புகழுடைய தம் குறணூலைக் கடைச் சங்கத்தில் அரங்கேற்ற வந்த வள்ளுவரைப் புறக்கணித்து, அவர் தம் அரிய நூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர், தம் தெய்வீகத் தன்மையாற் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி அலமரச் செய்ததாயும் புலவர்கள் வள்ளுவரையும் அவர்தம் குறணூலையும் புனைந்துபாடித் தம்முயிரை இரந்து பெற்றதாயும், குறட்புகழின் பிறப்பே சங்கப் புகழின் இறப்பாக முடிந்ததென்றும் கதைப்பார் பலர் கதைக்கின்றனர். சில தலைமுறையாகப் புலைமை ரத்தக் கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும் புலைப்பிறப்பும் பார்ப்பன வளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறார் எழுவருள் கடைமகவே வள்ளுவரென்றும், குறிசொல்லு பவரும் பறையருக்குப் புரோகிதருமான வள்ளுவ வகுப்பினரால் வளர்க்கப் பெற்றமையின் வள்ளுவரென்பது இவருக்குக் காரணப் பெயராயிற்றென்றும், இவர் மயிலாப்பூர் வணிகனான ஏலேலசிங்கனால் வறுமை வருத்தங்கள் நீக்கப்பெற்று வாசுகி யென்னும் வேளாண் மகளை மணந்து வாழ்ந்து மதுரைச் சங்க வீறழித்துப் பேறுபெற்றாரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள் ஒன்றுக்கேனும் பலநூலாதரவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில பண்டைக் குறிப்புக்களும் இக்கதைகளின் பொய்ம்மை குறிக்கக் காண்கின்றோம்.
முதலில், வள்ளுவர் மூன்றாஞ் சங்கத்தை முற்றுவித்த வரலாற்றின் உண்மையைச் சிறிது துருவியாராய்வோம். குறட்சுவடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந்துரைப் பாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப் புலவராற் பாடப் பட்டதுதானா என்ற வினா நிற்க; அப்புலவர் பாக்களே வள்ளுவ மாலையெனக் கொள்ளினும், சங்கப் புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கேனும், அவர்தம் இறவாக் குறணூல் அப் புலவர்முன் அரங்கேற்றப் பட்டதற்கேனும் ஆன்ற சான்று ஏதும் அவ் வள்ளுவமாலைப் பாக்கள் சுட்டிக் காண்கின்றிலம். கடைச்சங்கப் புலவராற் பாராட்டிச் சேமித்து வைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள் அப்புலவர் சிலர் புனைந்துரைத்த பாக்கள் காணப்படுகின்றன. கடைச் சங்கத்தார் நூற்றிரட்டுக்களில் திருக்குறளும் ஒன்றென்பது தமிழர் யாவருக்கும் ஒப்பமுடிவதாகும். அத்திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவர்நூல் தலைசிறந்த தென்பதற்கு இடை நெடுங்காலம் பிற பல நூலும் வழக்கிழந்தொழியவும், என்றும் பிரபல நூலாகக் குறள் நின்று நிலவியதே போதிய சான்றாம். நாம் அறிந்த சங்கத்திரட்டு நூல்களாவன; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன ஆம். இவையனைத்தும் கடைச்சங்கப் புலவரியற்றியனவும் அவர்க்கு முற்பட்ட புலவர் இயற்றியவற்றுள், சேமித்து வைக்கத் தக்க சிறப்புடையனவாகக் கடைச்சங்கத்தாரும் பிறரும் கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திரட்டு நூல்களுள், தகவுமிகவுடைய திருக்குறளின் பெருமை நோக்கிச் சங்கப் புலவரனைவரும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறு சில நூல்களுக்கும் இவ்வாறே அவரனைவரும் சிறப்புக் கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக்கிழந்த காலத்தே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இறப்பின் வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றா வழக்குடைக் குறளொடு அதன் புகழ்மாலைப் பாக்களும் நின்று நிலவிவந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயினும், திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் கடைச் சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத்தை வீறழித்த கதை சுட்டுங் குறிப்பு ஒன்றேனும் இல்லை.
கடைச்சங்கக் கடைநாளிற் றோன்றித் தம் குறணூல் அரங்கேற்று தலினிடையே வள்ளுவர் மதுரைச் சங்கத்தை அழித்த கதை மெய்யாமேல், புலவர் சங்கமிருந்து இயற்றிய பழம் பனுவல்களிற் குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றாஞ் சங்கப்புலவர்நூல்களிலேயே சுட்டப்பட முடியாத பின்வந்த திருக்குற ளருந்தொடர்கள், அச்சங்கத்தாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்து அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப் பட்ட பழந்தொகைப் பனுவல்களிற் சுட்டப் படுமாறில்லை யென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும். அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப் பழைய தமிழ்த் திரட்டு நூல் களுள்ளும் வள்ளுவரும் அவரற நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம் காணுங்கால், வள்ளுவரை அப்படிப் பாராட்டி யெடுத்தாளும் பாவலருக்கு அவர் சம காலத்தவராதல் வேண்டுவதொன்று. அன்றேல் முன்னோராதல் வேண்டுவதொன்று இஃதன்றிக் காலத்தாற் பிந்தியவராகக் கருதற் கிடமில்லையன்றோ! தமக்கு முற்பட்ட இடைச்சங்கச் செய்யுளும் பிறவுஞ் சேர்த்துக் கடைச்சங்கத்தார் திரட்டிய கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய நூல்களிலும் குறளை மதிப்புடன் எடுத்தாளக் காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு கடைச்சங்கப் புலவராலும் அவர்க்கு முற்பட்ட புலவராலும் எடுத்தாளப்பட்டதுமட்டுமில்லை; குறள் வாக்கியங்கள் அறத்தெய்வக் கூற்றாயும் வள்ளுவர் மெய்த்தெய்வப் புலவராயும் அவர் பலராலும் வாயார வாழ்த்தப்படவும் காணும் நாம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரென்று கொள்ளுதலினால் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே சால்புடைத்தாம்.
புலவரெவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றிய நூலின் மெய்ப் பெருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவருக்கியல்பு. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால், அவர் தமக்கு வள்ளுவர் நீண்ட காலத்துக்கு முற்பட்டவராகவும், அவரற நூலின் இறவாச் சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப் பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம்:
1. “இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்
நல்லா ளிதாத குடி.”
(1030)
“தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான்.”
(சிந்தா - காந்தருவ-6)
2. " வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்."
(1105)
“வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்றோட பூட்டார் சிலைநுதலாட் புல்லாதொழியேனே.”
(சிந்தா - கண - 192)
3. “கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்”
(1137)
“எண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல. தில்லையே”
(சிந்தா - குண - 148)
4. “கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.”
(894)
“யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்”
(895)
“வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார்
தொழிலதாகும்.”
(சிந்தா - குண - 239)
5. “ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.”
(463)
“வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்
ஊணிகந் தூட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்
தேணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார்.”
(சிந்தா - காந்தரு - 278)
6. “இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்”
(905)
“இல்லாளை யஞ்சி விருந்தின்முகங்
கொன்றநெஞ்சிற் புல்லாள னாக.”
(சிந்தா - மண்மகளிலம்பகம், செய் - 217)
7. “உலகந் தழீஇய தொட்ப மலர்தலும்
கூம்பலு மில்ல தறிவு.”
(425)
“கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதா நட்பாட்சி - தோட்ட
கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரு நட்பாரு மில்.”
(நாலடி - நட்பாராய்தல் - 5)
8. “ஒருநா ளெழுநாள்போற் செல்லும்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு” (1269)
“பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னாம்
உள்ள முடைந்துக்கல் கால்.” (1270)
“ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு” (1284)
புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கலப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே.
ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில்
கூடுவேன் என்னமிக் கொள்கையி னெஞ்சே.
துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில்
தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே,
எனவாங்கு
பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாம்
துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே
அறைபோகு நெஞ்சுடை யார்க்கு."
(கலி - 67)
9. “துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து” (1218)
“ஓஓ கடலே,
தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப்
பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென்
நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யு மறனி லவன்.”
(கலி - 144)
10. “காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து.” (1163)
11. “காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி.” (1131)
"நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு. (கலி - 142)
“காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம
மெழினுத லீத்தவிம் மா.” (கலி - 139)
12. “அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.” (315)
“சான்றவர் வாழியோ சான்றவிர் என்னும்
பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடனா லிவ்விருந்த
சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென்” (கலி - 139)
13. “குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.” (549)
“குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே.” (கலி - 130)
14. “தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.” (263)
“நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா
நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின்.” (கலி. நெய்தல் -8)
15. “களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தெளித்ததூஉ மாங்கே மிகும்” (928)
“… … … … … … … … காமம்
மறையிறந்து மன்று படும்” (1138)
“தோழிநாங்,
காணாமை யுண்ட கருங்கள்ளை மெய்கூர
நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக்
கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்” (கலி. முல்லை செய்-15)
16. “நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.” (791)
“நாடி நட்பி னல்லது
நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே.” (நற்றிணை - 32)
17. “பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.” (580)
“முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்” (நற்றிணை)
18. “நீறின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.” (20)
“நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி.” (நற்றிணை - 1)
19. “சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ உயிர்க்கு.” (31)
“அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில.” (39)
“சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல.” (புறம் - 31)
20. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (528)
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
“ஈத லெளிதே மாவண் டோன்றல்
அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.” (புறம் - 121)
21. " நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்." (679)
“நாட்டார்க்கு நல்ல செயலினிது எத்துணையும்
ஒட்டாரை யொட்டிக் கொளலதனின் முன்னினிதே.” (இனியவைநாற்பது - 18)
22. “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்.” (349)
“அற்றது பற்றெனி லுற்றது வீடு” (திருவாய்மொழி - 1, 2, 5)
23. “ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.” (370)
“சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றே அப்போ தேவீ டதுவே வீடு வீடாமே.” ( திருவாய்மொழி - 8 -8 -6)
24. “அங்கணத்து ளுக்க வமிழ்தற்று.” (720)
“ஊத்தைக் குழியி லமுதம் பாய்வதுபோல்.” (பெரியாழ்வார் திருமொழி - 4-6-9)
25. “ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின்.” (126)
“ஒருமையு ளாமையோ லுள்ளைந் தடக்கி.” (திருமந்திரம் - முதற்றந்திரம் - 21)
26. “நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறு நாடு கெடும்.” (553)
“நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி
நாடொறு நாடி யவனெறி நாடானேல்
நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால்
நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே.” (திருமந்திரம் - இராசதோடம் - 2)
27. “சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.” (359)
"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் என்றமையால்
சார்புணர்வு தானே தியானமுமாம் - சார்பு
கெடஒழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (திருக்களிற்றுப்படியார்)
28. “தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.” (348)
“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றவையவ ரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல்.” (உமாபதிசிவாசாரியார் நெஞ்சுவிடு தூது)
29. “… … … … … … … … … அவர் சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்” (1261)
“நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி
னோவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல சிவந்த வவ்வரிக் குடைச்சூ
லணங்கெழி லரிவையர்.” (பதிற்றுப்பத்து - 68)
30. “பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.” (319)
“முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றிகாண்.” (சிலப். வஞ்சினமாலை. வரி - 3.4)
31. “தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.” (55)
“தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணாமல் - தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணகமா தர்க்கு விருந்து.” (சிலப். கட்டுரைகாதை)
“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேராய்.” (மணிமேகலை : 22 வரி 59-61)
32. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.” (110)
“நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ.” (புறம் - 34)
இன்னும் இத்தகைய மேற்கோள் வாக்கியங்கள் பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈங்கு இவை போதியவாம். இவ்வாறு உரையொடு பொருளும் உறழும் பலவிடங்களையும் காட்டு மிடத்துக் குறளாசிரியரே அவற்றைப் பிறநூல்களி னின்றும் இரவல் கொண்டிருக்கலாகாதோ எனின், இவ்வாக்கியங்களின் பொருணோக்கும் நடைப்போக்கும் உற்று நோக்குவார்க்குக் குறளே பிறநூலுடையாருக்கு மேற்கோளாதல் வெள்ளிடை மலையாம். அன்றியும் சாத்தனார் மணிமேகலையிலும், ஆலத்தூர் கிழார் புறப்பாட்டிலும் குறளைப் பாராட்டிப்பாடக் கண்டு வைத்தும், குறளாசிரியர் பிறநூலினின்று இரவல் கொண்டாரெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாக் கூற்றாம். எனவே சங்கப் புலவர் பலராலும் எடுத்தாளப்படும் குறள் அவர் தமக்குக் காலத்தான் முந்தியதாதல் ஒருதலை. அன்றியும், கடைச் சங்கப் புலவரான சாத்தனார் பொய்யில் புலவன் பொருளுரை யெனவும் ஆலத்தூர்கிழார் அறம் பாடிற்றே எனவும் குறளையும் அதனாசிரியரையும் போற்றிப் பேணக்காணும் நாம், இப்பழம் புலவராற் குறள் மெய்ம்மறை யெனவும், அதனாசிரியர் பொய்யா அறக்கடவுளெனவும் பாராட்டப் படுவதற்கு வள்ளுவரின் மெய்ப்பெருமை அப்புலவருக்கு வெகுநீண்ட காலத்துக்கு முன்னே நிலைபேறடைந்திருக்க வேண்டு மென்பதை எளிதிற் றெளியலாகும். நமக்குக் கிடைக்கும் சங்க நூல்களெல்லாம் கடைச்சங்கப் புலவராலேயே இயற்றப்பட்டன எனக் கொள்ளற்கும் இல்லை. சில புறப்பாட்டுக்களும் கவிகளும் இடைச்சங்கப் புலவராலேனும் எனைத்தானும் கடைச் சங்கத்துக்கு முற்பட்ட புலவரா லேனும் ஆக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவர் நூல்களிலும் குறள் எடுத்தாளப்படுதலால் வள்ளுவர் கடைச் சங்கக் கடைக்காலத்தவருமில்லை; முதலிடைக் காலத்தவரு மில்லை; அச்சங்கத் துக்கு நெடும் பல்லாண்டுகட்கு முன்பிருந்தவ ராவரென்பது இனிது போதரும்.
இனித் தொல்காப்பியம் முதற்சங்க காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற்றென்பது தமிழ ரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்க காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குகள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக, மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக் கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய் வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச் சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்க வேண்டு மென்று ஊகிப்பதும் இழுக்காது.
சாணக்கியம் முதலிய ஆரியநீதி நூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல் செய்திருக்க வேண்டுமென்றும், ஆதலால் சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்த வராயிருக்க வேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662ஆம் குறளின் விசேடக் குறிப்பில் வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின் என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி அவ்வாக்கியத்திற் கண்ட பின் நீதி நூலுடையார் என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர்தம் வழி நூல்களுக்குக் குறள் சார்பு நூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலகழர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம் வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள் பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்பு நூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக்களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது.
சங்கத்தார் பாடியதாகக் கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள் பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன. வேதங்களுக்கு மிகப் பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகா தென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலு டையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதி நூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ?
மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒருகூறேயா மாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்கலாவ தன்றிக் கேவலம் நீதி நூல்களினின்று அறநூல்களியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதி நூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறளர் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளை மட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினர் என்பது பொருந்தாக்கூற்றாம்.
இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத்துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெரு வழக்குக்களின் இயைபும் முரணும் எடுத்துக்காட்டிச் செல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவற்றின் சார்பு நூலாக எழுந்ததென்பார் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப் படுத்துவ தன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம்.
பகுதி 2 : வள்ளுவர் குடிப்பிறப்பு
திருவள்ளுவர் ஆதி என்னும் புலைமகளுக்கும் பகவன் என்னும் பார்ப்பனனுக்கும் பிறந்த எழுவரில் இளையவர் என்று சில்லோர் சொல்லும் கதையினை நல்லோர் பலரும் நம்புகின்றார். இக்கதையுரைப்போர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ மாகையால், வள்ளுவர் தம் முதற் குறளில் ‘. . . . . . . ஆதி பகவன் முதற்றே யுலகு எனுந் தொடராற் றம் தந்தை தாய்ப் பேணியுள்ளார் என்று கூறித் தம்கோள் நிறுவி விட்டதாக எண்ணி மகிழ்கின்றனர். இக்கதைக் கிவர் விருப்பும், இவர் விருப்புக் கிக்கதையுமே ஆதாரமாவதன்றிப் பிறிது பிரமாணம் காட்டக்காணேம். முதலில் நாயனார் கடவுள் வழிபாட்டு முதற்குறளிற் றம் பெற்றோரை உலகோற்பத்திக்கு முதற் காரணராகச் சுட்டத் துணிவரா என்பது சிந்திக்கத்தக்கது. இனி இப்பெயருடையார் நாயனாரின் முதற் குரவரென்பதைப் பிறிது சான்றுகொண்டு நிறுவியபின்னன்றே இக் குறளி லக்குரவர் பெயரைக் குறிக்க ஆசிரியர் கருதினரா எனுமாராய்ச்சி எழவேண்டும். ஐய மகற்ற ஆராயுங்கால் ஐயப்படுவதனையே ஆதரவாக்கொண்டு ஒரு சித்தாந்தம் செய்வது தருக்க முறையாமா? முதற்குறளிற் கண்ட ஆதி - பகவன் எனுஞ் சொற்கள் குறளாசிரியரின் பெற்றோரைக் குறிக்குமாவென்று விசாரிக்குமுன், அப்பெயருடைய பெற்றோ ருண்டெனக் கண்டறியவேண்டியது முதற்கடனன்றோ? குறட்சொற்களையே கொண்டு அப்பெயரிய பெற்றோருண் டெனவும், அப்பெற்றோருண்மையைச் சங்கையற்ற பிரமாணமாகக் கொண்டு குறள் மொழிகளவரையே குறிக்குமெனவும் அநுமானிப்பது பிடிவாதிகளின் அபிமான வாதமாகலாம்; ஆனால் உண்மை காணும் வாதமுறையாகா தென்பது வெளிப்படை.
இனிப் பகவன்என்பது இவர் தந்தையின் பெயரென்பதற்கு யாதொரு நூலாதரவுமில்லாததோடு, அதற்கு மாறாக “யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி, காதற் காசனி யாகி மேதினி, யின்னிசை யெழுவர்ப் பயந்தன ளீண்டே எனும் ஞானாமிர்த நூலடிகளால் வள்ளுவரின் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்றொரு கதையும் கேட்கின்றோம். இவ்விரு கதைகளில் விலக்குவதெதனை? வேண்டுவதெது? இன்னும், பகவன் எனும் சொல் தமிழிலும் இருக்கு வேதத்திலும் அவ்வுருவிற் பயில்வதன்றிப் பாணினியாதி வையாகரணிகளின் விதிப் படிக்கும் வேதத்துக்குப் பிந்திய வடமொழி நூல்களிலும் பகவன் எனும் பிரயோகம் காணலரிது. பகவான் என்பதே சரியான ஆரியச் சொல்லாகும். இதனாற் குறளாசிரியர் பாணினிக்கு முற்பட்டவரெனத் துணிதற்கிடமாவதன்றிக் கடைச்சங்கக் கடைக்கால வேதியனொருவனுக்குப் பகவன் எனும் பெயருண்மை அசம்பாவிதமாகும். எனைத்தானும் இக்கதைக்குக் கதைப்பவர் காதலன்றிப் பிறிது பிரமாண மில்லை. பேரூரில்லாத பலர் பிற்காலத்திற் பாடிவைத்த தனிப்பாடல்களை யொரு பொருட்படுத்திப் பண்டைச் சரிதங்கள் துணிவது, ஏதவிளைவுக் காதார மாகுமன்றி, உண்மை தெளிதற்குதவுமாறில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன் பின்னிருந்திறந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர்களைக் கூட்டி வைத்துப் போட்டிசெய்வித்தும், காளிதாசன் போசராசன் பவபூதிகளைச் சேர்த்து, அவர் தம்முட் சல்லாபச் சண்டை யுண்டு பண்ணியும் வழங்கிவரும் பல கதைகளையும் தனிச் செய்யுட்களையும் கேட்கும் நாம், அனையதொரு பொறுப்பற்ற நாடோடிகளின் கதையை நம்பி அறத்தேவரைப் பறைப் புலையராக்கத் துணிவதெவ்வாறு கூடும்?
இன்னும், இக்கதைக்குப் பண்டைச் சங்கப் பாட்டுக்களிலேனும் பழைய பிற பனுவல்களிலேனும் ஓராதாரமும் பெறாமையோடு, குறட் பழஞ் சுவடிகளெதனிலு மிக்கதையின் சார்பான தனிச் செய்யுட்க ளெழுதப் படாமையையும் கவனிக்க வேண்டும். திருவள்ளுவமாலை முழுதையும் தொன்றுதொட்டு வரன் முறையேவந்த குறட்சுவடிகளிலெழுதி வரு வானேன்? வள்ளுவரும் அவருடன் பிறந்த பிள்ளைகளும், தாதை வாதையால் வேதனைப்படும் ஆதியன்னையைத் தெருட்ட அவர் பிறந்தவுடன் சேனைப்பால் தானுமறியாச் சிறுகுதலை வாய் திறந்துபதேசித்த தெய்வக் கவிகளை அச்சுவடி பெயர்த்தெழுதிவந்தோர் புறக்கணித்துக் களைந்து கழிக்கக் காரணந்தா னென்னோ? குறளுக்கு உரைகண்ட பண்டிதர் பதின்மரும் இவ் வரலாற்றுக் கவிகளைச் சுட்டாதொழிவானேன்? பிற்காலத்திற் பத்தி வினயத்துடன் குறணூலை ஆராய்ந்து பதிப்பித்து வெளிப்படுத்திய நல்லூர் ஆறுமுகநாவலர், திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரனைய அரிய தமிழ்ப் பெரியாரும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை மட்டுந் தழுவிப் பிறவற்றை நழுவவிட்டிருப்பதும் சிந்திக்கத் தக்கதன்றோ? நக்கீரரையும் கம்பரையும் தமிழகத்திற் றலைநின்ற அறி ஞரனைவரையுமே வேதியர்குருதி பாதி விரவப் பெற்றதாற் பெருமையுற்றன ரெனப் பல கதைகட்டி, அக்கலப்பற்ற தனித் தமிழருள்ளே தகவுடைய ரில்லை யென்றொன்றைப் பொருளெச்சமாகச் சுட்டித் தம்முட்டாம் மகிழும் சில நவீன விற்பனரின் கற்பனைத் திறத்தை யன்றே ஆதிபால் எழுவரை வேளாவேதியன் காதலற்றுக் கடமையிற்றந்த கதை நின்று நிதர்சனமாக்குகின்றது.
கதைப்பவர் காட்டுங் கவிதைகளிரண்டு
இனித் “தேவை வள்ளுவ னென்பானோர் பேதை” யெனும் திருவள்ளுவ மாலைச் செய்யுளடியையும், மெய்த்த திருவள்ளுவனார் வென்றுயர்ந்தார், கல்விநலந் - துய்த்த சங்கத் தார்தாழ்ந்தார், சோமேசா என்ற மாதவச் சிவஞான முனிவரின் சோமேசர் முதுமொழி வெண்பாவையும் எடுத்துக்காட்டி, இவற்றால் திருக்குறளாசிரியரின் புலைக்குலப் பிறப்பு நாட்டப்படுவதாய்க் காட்டுவாரும் சிலருளர்.
முதலில் திருக்குறளின் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் சங்கப் புலவராற் பாடப்பெற்ற செய்தியே சங்கையறத் தெளியப்பட்ட தொன்றில்லை. வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர் மட்டும் தம் பிழைக்கிரங்கிக் குறளையும் அதனாசிரியரையும் புகழ்ந்து பாடியிருந்தால், ஒருவாறு அது நாம் கேட்கும் கதை வரலாற்றோடு சிறிது பொருத்தங்கொள்ளும். ஆனால், சங்கப் புலவரொடு அசரீரி, சிவபிரான், கலைமகள், மூங்கையரான உருத்திரசன்மர் முதலியோரும், அச்சேறி வெளிவராத சில குறட்சுவடிகளில் இன்னும் பலரும் பாடினதாய்க் காணப்படும் பல பாக்களையும் திரட்டிக் குறட் சிறப்புப் பாயிரமாக்கி வைத்திருப்பதைச் சிந்திப்போர்க்குத் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை வள்ளுவராற் பொற்றா மரையிற் றள்ளப்பட்ட சங்கப் புலவர் தம் பிழை பொறுக்கப் பாடின கதையின் உண்மை சங்கைக்கிடமாகும். அதனுடன் அச்செய்யுட்களை நிதானித்துக் கவனிக்குங்கால், தோற்ற சங்கப்புலவர் மனங்கசிந்து அத்தருணம் தத்தமுளத்துதித்த கருத்தை யப்படியே வெளியிட்டதான கதைக்கு முரணாக, ஒருவர் அல்லது ஒரு சிலரே முன் சாவதான யோசனையுடன் பாடித் தொகுத்தபான்மையினை அப்பாக்களே நிரூபிக்கின்றன. வென்றுயர்ந்த வள்ளுவரைப் புகழவந்த சங்கப் புலவரின் பாக்கள் திருக்குறளியல்பும் பெருமையும் மட்டுங் குறிக்க வேண்டுவதியல் பாகவும், திருவள்ளுவமாலைச் செய்யுட்களை யுற்றுநோக்குவார்க்கு அவை திருத்தமாகப் பொருத்தங்காட்டுங் குறிப்புடன் எண்ணித்துணிந்து பாடி வைத்த பாட்டுக்களென விளக்கமாகும். மேலும், கதையின்படி பங்கமுற்ற சங்கப் புலவர் குறையிரந்தியற்றின தனிப்பாக்கள் குறளுக்குச் சிறப்புப் பாயிரமாமாறில்லை; சிறப்புப்பாயிரம் செய்தற்குரியர் தன்னா சிரியன் தன்னொடு கற்றோன், தன் மாணாக்கன் தகுமுரை காரன் என்றின்னோருள் ஒருவரேயாகலானும். சங்கத்தார் இன்னோர் வகையில் யாருமாகாமையானு மென்க. திருவள்ளுவ மாலை குறணூலின் சிறப்புப் பாயிரமென வழங்கப் பெறுதலால் அதனைச் சங்கப்புலவர் செய்தனரெனுங் கொள்கை உறுதிபெறு மாறில்லை. இவ்வுண்மை யெதுவாயினு மாகுக. தற்காலம் அதனைச் சங்கையற்றதெனக் கொள்ளினும், அதனால் வள்ளுவர் புலையராமாறு தெளிதற்கில்லை. அவரைப் புலையராக்குவார் அதற் கெடுத்துரைக்கும் மேற்கோட்செய்யுள் இது:
“அறம்பொரு ளின்பம்வீ டென்னுமிந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை; அவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்”
(திருவள்ளுவமாலை -அ)
எனும் மாமூலர் பெயர்கொண்ட இந்தச் செய்யுளுக்கு “அமானுசியமான அரிய விழுமிய குறளற நூலையாக்கிய கடவுட்டன்மை வாய்ந்த தேவரை வள்ளுவனெனும் பெயர்கொண்டதொரு கேவலம் மனிதனாக வுட்கொண்டு பேசுவா னுளனாயின், அவன் நாயனாரின் தெய்வீகத் தன்மையறிய மாட்டாத அறிவீனன்” என்று குறிப்பதே பொருளாகும். திருவள்ளுவமாலைக்கு உரை கண்ட திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரவர்களும், பிறர் மதமாக “ஒலிக்குறிப்பினாலே சாதியிழிவு தோன்ற வள்ளுவனென்பான் எனினு மமையும்” எனப் பிற்குறிப்பிற் சுட்டினரேனும், தம் முன்னுரையில் அறமுதலாக … வேதப் பொருளாகிய நான்கனது கூறுபாட்டைத் தெரிந்து … சொல்லிய தேவனை மறந்தாயினும் ஒரு மனிதனாக உட்கொண்டு வள்ளுவ னென்று சொல்லுதற்கு ஒருவனுளனாயின், அவன் அறிவில்லாதவனாவன் … அச்சொல்லை அறிவுடையார் கொள்ளார்என இப்பாட்டுக்குப் பொருள் கூறிப்போதலும் சிந்திக்கத் தக்கது. வள்ளுவச் சொல் அவர் காலத்திற் புலைக்குல வகுப்பின் பெயரெனத் தக்க பிறசான்றால் நாட்டினாலன்றி, இக்கவியில் வள்ளுவனென்பதற்கு இழிகுலத்தோனெனப் பொருள்கொள்ளற் கவசியமே கிடையாது. அத்தகைய சான்று காட்டப்படாத நிலையில் இப்பொருளுரைப்போர் பிற்காலக் கதையை வைத்தே இக்கவிக்கு இப்பொருள் கூற முயல்வதல்லால், இக்கவி அக்கதைக்கு மேற்கோளா மாறில்லை யென்பது மலையிலக்காம்.
இனி மாதவச் சிவஞானயோகிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா சற்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் எழுந்ததாகும்; அதனுள் :
"மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார், கல்விநலம்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார், சோமேசா - உய்த்தறியின்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு.
என்னும் வெண்பா வள்ளுவரைப் புலைக்குலத்தவராக்குவாரால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்படுகிறது.
இக்கவியால், அதனைச் செய்தவர் காலத்தில் வள்ளுவர் ஆதிபாற் பகவனுக்குப் பிறந்த கதை வழங்கிய தென்பதும், அக் கதையை அம்முனிவர் தம் முதுமொழி வெண்பாவிற் சுட்டி யுள்ளார் என்பதும் மட்டும் கிடைப்ப தாகும். மற்றப்படி அக் கதைக்கு முதிய முன்னாதரவுண்டென்பதேனும், அதன் சரித வுண்மையை அம்முனிவர் ஆராய்ந்து துணிந்த தம் முடிபாகக் காட்டவந்தாரென்பதேனும் அவர் வெண்பாவால் தெளிதற் கில்லை. எடுத்த குறளுக்கு ஒரு கதை காட்டும் வசியத்தின் பொருட்டு அவர் காலத்திற் கேட்கப்பட்ட இக்கதையை அவர் தம் வெண்பாவில் முடைந்தாரென்பதே முறையாமன்றி, மற்றிதன் உண்மையை ஆய்ந்து தெளிந்து நிலைநிறுத்து வதே முனிவர் கருத்தெனக்கொள்ளின் அதற்குப் பல முரண்பாடு காண் கின்றோம். சங்கத்தை வள்ளுவர் வென்றடக்கியதற்கு வேறு சான்றின் மையை முன்னரே சுட்டியுள்ளோம். அன்றியும், இம் முதுமொழி வெண்பா விற் பின்னெடுத்துக் காட்டுங் குறளொடு இக்கதை பொதிந்த முன்னடிகள் முரணுவது வெளிப்படை. கீழ்ப்பிறந்தும் கல்வியுடைய சான்றோரின் பெருமை, மேற்பிறந்தும் கல்லாத கயவர்க்கில்லை என்பதை வலியுறுத்த வந்த குறளை யுதகரிக்கும் கதையில், தேவரைத் தவிர யாவராலு மெதிர்க் கொணாக் கல்வி நலம் பெருகப் பெற்றுயர்ந்த சங்கத்தாரைக் கல்லாதாரெனக் குறிப்பது பொருத்தமாமா? அக்குறிப்பு முனிவர்க்கில்லை யென்பதைக் ‘கல்வி நலந்துய்த்த சங்கத்தார்’ எனும் அவர் சொற்றொடர் விசேடமே விசதமாக்கும். இதுவுமன்றிப் பலவேறு குலமும் தொழிலுமுடைய சங்கப் புலவரனைவரும் ஒக்க மேற்குலவுயர்குடிப் பிறப்புடையரன்றாகவே, கதை கூறுமாறு வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கத்தாரெல்லாரும் மேற் பிறந்தார் எனவும் கல்லாதார் எனவும் முனிவர் கருதற் கிடனில்லை; முறையுமில்லை. அதனால் இவ்வொரு கவிகொண்டு கற்றுப்பாடுடைய குற்றமுடைமைக்காக வள்ளுவரைப் புலைக்குடிப் புகுத்துவது அவசியமும் அழகுமில்லை. சிவஞான யோகிகளே ஆராய்ச்சியின் பயனாகத் தாம் கண்ட முடிபென இக்கதையின் உண்மையை நிலைநாட்ட நினைத்தாலும் அவராய்ந்த ஆதரவுகளையும் கொண்ட முடிவுக்கு அவர்கண்ட நியாயங் களையும் நாம் விசாரிப்பது முறையாமேல், ஈண்டவர் தந்துணிவு துலக்கு நோக்கின்றிக் கேட்ட கதையைப் பாட்டில் முடைந்ததுகொண்டு அக்கதைக்கு அவரை ஆசிரியராக்கவும் அவர் கவிகொண்டதனை நிலைநாட்டவும் முயல்வது முறையன்றாகும்.
பறைக்குல மறுக்குங் குறிப்புக்களாவன
இனி, வள்ளுவரின் குலமும் குடிப்பிறப்பும் நெட்டிடையிருளில் மறைபட்டுத் தெளிதற்கரிதாகும். பண்டைப் பெரியார் பிறப்பனைத்தும் இவ்வாறே தேடறிய முயற்கொம்பாகத் தெரிகின்றோம். நக்கீரர் முதலிய சங்கப் புலவரும் அவர்தமக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட கம்பரனைய கவிவாணரும் தத்தம் நூலளவில் தமிழகத்தே வாழ்வு பெற்றிருத்தலன்றி, மற்றப்படி அவர்களின் குலம் குடிகளை விளக்கும் குறிப்புக்களொன்றும் கிடைக்கக் காணோம். காளிதாசன் முதலிய வடமொழி மகாகவிகளும் இப்படியே அவர்தம் நூலளவிலன்றிப் பிறாண்டு நமக்கு ஏதிலராகின்றனர். சரிதவுணர்ச்சியும் பயிற்சியும் தொன்றுதொட்டு நிலவிவரும் மேனாட்டிலுங்கூட அண்ணிய நானூறாண்டுகளுக்குள்ளிருந்த நாடக மகாகவியான செகப்பிரியரின் சீவிதக் குறிப்புக் களைப் பற்றியும் அவர் பெயரான் வழங்கிவரும் நாடகங்களின் ஆசிரியத் துவத்தைப் பற்றியும் இன்னும் தீராத வாதப்போர் நிகழக் காணும் நாம், சரித்திரக் குறிப்புக்களில் ஆர்வமும் ஆதரவும் இல்லாத நமது நாட்டில் ஞாபகத்திற் கெட்டாத நீண்ட பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்துலவி மறைந்த பெரும் புலமை யருஞ்சுடரார், பிறங்குமவர் நூற்கிரணவொளியால் நிலைப்ப தல்லால், அவரைப் பற்றிய பிற சிறு குறிப்புக்கள் தமிழகத்திற் பேணப் படாமை கண்டு வியத்தற்
கில்லை. உலகையும் அதன் நிலையற்ற வாழ்வையும் வெறுக்கும் நம்மவர், மக்களின் குலம் குடி நிலைகளை மதிப்பதில்லை. இறவா அறிவற நூல்களை மட்டும் பேணிப் போற்றுவாரன்றி, அந்நூல் செய்தார் வாழ்க்கைக் குறிப்புகளை நம்மவர் பாராட்டும் வழக்கம் இல்லை. இதனால் குறளாசிரியரின் குடிப் பிறப்பும் மற்றும் அவர் சீவிதக் குறிப்புக்களும் இன்று இனைத்தெனத் துணிந்து தெளிதற்குச் சான்று போதா. எனினும், வள்ளுவர் புலைக்குலப் பிறப்பும் சால்புமுடைய ரெனக் கதைப்பவர் கதையொடு பொருந்தாக் குறிப்புக்கள் ஈண்டுச் சில நினைக்கத்தகும். பெற்றோர்ப் பேணலும் பெருங்குடிப் பெருமையும் குறணூலிற் பெரிதும் பாராட்டப் படுகின்றன. நற்குடிப் பிறப்பும் பிறந்த குடியைப் பேணிப் பெருக்கலும் மக்கட்கு அழகும் கடனுமாமென்று புலைக்குல வள்ளுவர் வற்புறுத்துவாரா? அன்றியும், அறம் பொருளின்பங்களையும் அவற்றின் நுட்பங்களையும் திறம்பட விரிக்கும் வள்ளுவர் ஆன்றகுடிப் பிறப்பும் அரசவைப் பழக்கமும் உடையரென்பதை அவர் குறள் பறையறைகின்றதே. இன்னும், அவரறநூல் வேதமனைய ஆரியர் பழம்பெரு நூல்களின் வடித்த சாரமென முழங்குபவர், பறைக்குல வள்ளுவர், வாலப்பருவத்தே கல்வி கேள்விகளால் நிறைந்து, இறவாக்குறள் பாடுமுன் தென்சொற் கடந்து வடசொற் கடலுக்கும் எல்லை கண்டது எப்படிக் கூடுமென்பரோ? அவர்காலப் புலையர் தமிழொடு ஆரியமும் பயின்று வருணபேதமழித்து அறவோர் அறிஞருடன் பயின்று வந்தனர் என்று கொண்டாலன்றிப் பறைக்குல வள்ளுவர் தம் திருக்குறள் காட்டும் அறிவும் கல்வியும் அடையுமாறில்லை. கல்லாமலும் கற்க வேண்டாமலும் அறம்பாடவந்த மனிதவுரு வெடுத்த கடவுள் வள்ளுவர் என்பார்க்கு இவ்வாராய்ச்சி அவசியமில்லை. சால்பும் தூய்மையுமான தெய்வத்தன்மை எனைத்துடையாராயினும் நாயனார் மனித வருக்கத்தினர் எனக் கொள்வோருக்கு மட்டும் இனைய ஆராய்ச்சிகள் பொருளொடு பயனுடைத்தாம். ஆனால், தேவரைப் பிரமனவதாரமென் பார்மாட்டு நாம் கேட்டறிய வேண்டுவதொன்றுண்டு. அறம் பாட அவதரிக்குங் கடவுள், ஓதுவிக்கும் அந்தணராகாமலும், முறை செய்யும் அரசனாகாமலும், பறையறையும் வள்ளுவனாய்ப் பிறக்கவந்த நோக்கமென்னோ? அநாதிதர்மமெனும் சநாதன முறைகளையும் வருண வகுப்பு வரையறைகளையும் நிலை தடுமாற அழித் தொழித்து. எல்லாவுயிர்க்கும் பிறப்பொக்கும், எனும் உண்மையை நிலைநிறுத்தற்கென்றே மறையவர் பிரமன் பறையனாயினனா? அன்றிப் பயன்தான் பிறிது யாதோ? நாள் வழக்கில் நம்மவருட் புலைக்குடி மக்கள் கல்விப் பயிற்சி, கேள்வியறிவு, அறவோர் கூட்டுறவுகளுக்கு இடம்பெற நாம் காண்பதில்லை. திருக்குறளியற்றற்கின்றியமையாத மதிநுட்பமும் நூலறிவும் அந்நூலாசிரியர் பறையர் குலத்திடையே பெற்றிருக்க வொண்ணாதென்பதொருதலை. பழங்காலத்தே பறைச் சிறுவனைப் பார்ப்பனரெவரும் பாராட்டி வளர்த்துத் தமிழொ டாரியமும் பயிற்றுவித்து அறமுதனூலாசிரிய னாக்குவதும் அசம்பாவிதம். ஆகவே வள்ளுவர் இப்பெற்றியெல்லாம் பெறற்கின்றிய மையாத நற்குடிப் பிறப்பும் அறவோர் கூட்டுறவும் உடையராதல் வேண்டுவது அவசியமன்றோ?
மேலும், புலைமைக்கறிகுறி இழிதகவுடைய புலா லுண்ணலும் களிமயக்குமேயாம். அக்குடிப்பிறந்த வள்ளுவர், தம்மவர்க்குக் குலதர்மமும் பார்ப்பாரனைய பிறர்க்கு ஆபத் விர்த்தியும், வேள்வி ஆராதனைகளுக்கு கவசியமுமான புலாலை யும், கள்ளையும், விலக்கின்றி, யாவர்க்கும் விதி முகத்தாற் கடிந்தொதுக்குவது, அவர் புலைக்குடிப் பிறப்பொடு பொருந்து வதாமா? இன்னும், கேவலம் கல்விகேள்விகளால் மட்டும் அறியொணா தனவும், நீண்ட நெருங்கிய பழக்கத்தால் மட்டும் தெரிய வேண்டுவனவுமான அரசர் அமைச்சர் அறவோர் அறிஞர் வணிகர் வேளாளரின் குடிக்குல வழக்கங்களையும் கூட்டுறவு நலங்களையும் நுணுகியாய்ந்து எடுத்துத் திரட்டித் தெருட்டும் திருக்குறள் அதனை ஆக்கியவர் நற்குடிப் பிறப்பும் மேன்மக்களின் நெருக்கமும் உடையராதலைச் சுட்டாதொழியாது.
இதுவேயுமன்றி, வள்ளுவரைப் புலையராக்கும் கதையே அவருக்கு வேளாள மரபில் வாசுகியென்னும் ஒரு மறுவில் கற்புடை மங்கையை மணஞ்செய்வித்து வழுத்துகின்றது. உயர்குடிப்பிறந்த வாசுகியென்பாள் வள்ளுவரின் வாழ்க்கைத் துணையாவதற்கு, அவர் புலைக் குடிப்பிறப்பு ஆசாரச் சீர்த்திருத்தம் அறியாத பண்டைக் காலத்தி லிடந்தருமா? வள்ளுவரும் வாசுகியும் காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபடினும்’, அவள் பெற்றோரும் உற்றோரும் சைவ வேளாள மரபொழுக்கங்களை மறந்து வள்ளுவரை மணமகனாகக் கொள்ளற் கிசைவரா? திணை மயக்கும் குலக் கலப்புமான இம்மணம் அசம்பாவிதமாமேல், அதைக் கூறுங் கதையில் வள்ளுவரின் புலைக்குலப் பிறப்பு மட்டும் அங்கீகரிக்கப்படுமாறுண்டா? இனைய பலவற்றாலும் வள்ளுவரின் புலைப்பிறப்பு அங்கீகரிக்கத்தக்கதில்லை என்று ஒருவாறு துணியலாகும்.
பகுதி 3 : வள்ளுவச் சொல்லின் வழக்கும் பொருளும்
இனி வள்ளுவப் பெயர் பறைக் குலத்தையே சுட்டுகின்றதா என்பதும் சிறிது ஆராயத்தக்கது. பறையரின் புரோகித வகுப்பினரே வள்ளுவராவர் என்பதற்குச் சூடாமணி நிகண்டும் பிற்காலப் பிறநூல்களும் மேற் கோள்களாகக் காட்டப்படுகின்றன. பண்டை நூலொன்றிலேனும் வள்ளுவப் பெயர் தீண்டாம லொதுக்கப்படும் புலையர்க்கா மெனும் குறிப்பும் இல்லை. மணிமேகலையில், வள்ளுவனென்ற பெயரும் இல்லை. பெருங்கதை சிந்தாமணி முதலிய கடைச்சங்கத்துக்கு மிகப் பிற்பட்ட சில காப்பிய நூல்களுள் பெருவிழாக்களையும் மன்னர் மணமனைய நற்செய்திகளையும் பட்டத்துயானைப் பிடர்த்தலையிருந்து அகநகரில் அரசவீதிகளிற் றெரிவிப்போர் வள்ளுவரெனச் சுட்டப்படுவதுண்டு. ஆண்டும் ஆனைமேல் அணைமிசையமர்ந்து பெரு விழாக்களை அரசமுரசொலிக்க அறிவிக்கும் தொழிலுடையோரைச் சுட்டுதற் கன்றிப் புலையர் குலவகுப்பினர் யார்க்கும் வள்ளுவப்பெயர் வழங்கவில்லை. அணைமிசை யமர்தந் தஞ்சுவரு வேழத்துப், பணையெருத்தேற்றிப் பகலவர் சூழ”1 ஊரையும் தம்மையும் உலகையும் வாழ்த்தித் தம் மணம் முதலிய மங்கலவிழாக்களை அறிவிப்பதற்கு வேந்தர் புலையரைத் தேடிக் கொள்ளாரன்றே? மேலும் புறநானூற்றில் துடி பாண் இடும்பனொடு குடியாப் பேசும் பறையரொடு வைத்துப் பிற்காலப் பெருங்கதையும் வள்ளுவ முதியரைச் சொல்லுமாறில்லை. நன்குடிமக்களின் பின்னடிக் குடியான பறையர் சாற்றும் பறையும், அதை அவரறையும் முறையும் வேறு. அரசு கொற்றத் தருங்கடம் பூண்ட வள்ளுவரோ, கோற்றொழில் வேந்தர் கொற்ற முரசம் பெரும்பணைக் கோட்டிலுள் அரும்பலி யோச்சி, முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித், திருநாள் படைநாள் கடிநாளென்றிப், பெருநாட் கல்லது பிறநாட் கறையார் எனப் பெருங்கதை2 பேசுகின்றது. பெருங்கதையுட் போலவே சாத்தனார் தம் மணிமேகலையிலும்,
"வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
முரசுகடிப் பிடூஉ முதுக்குடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
ஒளிறுவாண் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முர சியம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென"
(விழாவறைகாதை - வரி - 27, 28, 31, 32; 68-72)
என்று கூறியுள்ளார்.
இதில், தமிழ்முடியரச ரிமிழ் கடிமுரசை அரணுடையவர் கோயில்களில் வச்சிரக்கோட்டத்தினின் றெடுத்துயானைப் பிடர்த் தலையேற்றி அரசனையும் அனைவரையும் வாழ்த்திப் புகார் அகநகரிற் கரிகாற்சோழன் கட்டளையாற் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றினவனை முதுக்குடிப் பிறந்த வனாகவே சுட்டியுள்ளார். கொங்கு வேளிரும் சாத்தனாரும், அரசன்கோட்டத்துக் கொட்டிலுள் முரசுத் தேவைப் பலியோச்சிப் பழிச்சி விழவுணர்த்த யானையெருத்தத் தேற்றுவதைக் கூறுவது போலவே, பாலைக் கௌதமனாரும், பல்யானைச் செல்கெழுகுட்டு வன் வண்மைவள முழங்கும் தம் பாட்டில், முரசுறைகடவுளை இரும்பலியூட்டிப் பரசியேந்துபவனை உயர்ந்தோன் என விதந்து கூறுவதும்1 கவனிக்கத்தக்கது. இவ்வாறு வேந்தன் பெரும்பணைக்கொட்டி … லுள்ளும் வச்சிரக் கோட்டத்துள்ளும் புலைப்பறையர் சென்று அரும்பலி ஓச்சுவரா? அன்றியும், கழுத்திலிட்டறைந்து காலானடந்து கரையும் பறையரின் பறை வேறு; வள்ளுவ முதுமகன் அரச வேழத்தணை மிசையமர்தந்து மன்னர் மங்கலப் பெருநாள் வழுத்தும் கோதை முத்தொடு தாமம் ததைஇய வேந்தர் கொற்றமுரசமும் வேறன்றோ?
மேலும், ஆத்தான மண்டபத்தில் கொலுவிருந்த படியே, அரசு கொற்றத் தருங்கடம் பூண்ட - முரசெறி வள்ளுவ முதியனைத் தரீஇ”1 அரசரே நேரில் அவனுக்கு ஊருக்குரைப்பன கூறுகின்றதனாலும், வேந்தர் வெற்றி முரசைப் பலிதந்து பரசி அரசுவரு வேழத்துப் பணையெருத் தேற்றி மறவருந் தேரும் மாவுங் களிறுஞ் சூழ்தர உலகை அரசொடு வாழ்த்தி அணிவிழவறையும் வள்ளுவனை அரசு கொற்றத் தருங்கடம் பூண்டவனாயும் முதுக்குடிப் பிறந் தோனாயும் உயர்ந்தோனாயும் பண்டைப் பனுவல்கள் பாராட்டுவதாலும், அரசருக் கருங்கடம் பூண்ட தோருத்தியோகம் உடையனே அவ் வள்ளுவனாக வேண்டுமென ஊகித்துணரக் கிடக்கின்றது.
இனி, இதன் தொடர்பாகச் சேந்தனார் திவாகரத்தில் வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க், குள்படு கருமத் தலைவர்க் கொன்றும் என்று விசதமாக விளக்கியுள்ளமையும் ஈண்டுக் கவனிக்கற்பாற்று. இதனாலும் மன்னர்தம் உள்படு கருமத்தலைவர்க்கு வள்ளுவரென்பது உத்தியோகப் பெயராதல் தெள்ளிதிற் றெளியக்கிடக்கின்றது. தற்காலத்திலும் அரசனனைய பெருமக்களுக்கு அன்பும் நம்பிக்கையுமுடைய ஆப்தர் உட்கருமத் தலைவர் (ஞசiஎயவந ளுநஉசநவயசநைள) ஆக அமரக் காண்கின்றோம். எனவே, பண்டைக்காலத்திலும் தமிழரசர் தம்மகத்தே, புறக் கருமத் தலைவரான ஏனாதியரொத்த வரிசையும் பதவியுமுடைய அகக்கருமத் தலைவரான உத்தி யோகத்தர் இருந்தனரெனவும், அவர் வள்ளுவரென வழங்கப் பெற்றாரெனவும் தெளிகின்றோம். கடைச்சங்கத்துக்கு முற்பட்ட குறளாசிரியர் பழங்காலத்தில் வள்ளுவப்பெயர் சாதி குறியாமல் மன்னருள் படுகருமத் தலைமைப் பதவியையே குறித்ததாக ஏற்படுகின்றது. எனவே, வள்ளுவப்பெயர் சங்க காலத்திற் றமிழரசர் உள்படுகருமத் தலைமை யுத்தியோகப் பெயராயும் (ஊhயஅநெசடயiளே), பெருங்கதையும் சிந்தாமணி யும் எழுந்த இடைக்காலத்தே அவ்வுத்தியோகத்தரின் தொழிலிலொன்றான அரசவிழாக்களை அறிவிப்போர் (ழநசயடனள) பெயராயும் நின்று, பிற்காலத்திற் பறையருக்குப் புரோகிதரும் நிமித்தகருமான ஒரு புலை வகுப்பினரின் சாதிப் பெயராய் வழங்கலாயிற்றெனத் தெரிகின்றோம். இப்படியே முன் சாதி குறியாத குறிஞ்சித்திணைமக்கள் பொதுப்பெயராய் நின்ற குறவர் எனுஞ்சொல் தற்காலத்திற் குறிசொல்லும் ஒரு பஞ்சம வகுப்பினரின் சாதிப் பெயராய் வழங்குவது அறிவோம். இவ்வுண்மையறியும் நாம், இக்காலத் தொருவனை வள்ளுவனெனில் வள்ளுவச் சாதியிற் பிறந்தவனைக் குறிப்பதெனக் கொள்ளுமுறை கொண்டு, பிறப்பாற் சாதிகுறியாத முன்சங்கத் தமிழுலகில் வள்ளுவரெனுஞ்சொல் பதவி-தொழில் குறியாது சாதிகுறிப்பதெனத் துணிதல் முறையாமா? வள்ளுவரென்று ஒரு சாதிவகுப்பே தொல்லைத் தமிழகத்தி லிருந்ததாய் அறிந்தபாடில்லை. பழம் பனுவல்களில் வள்ளுவப்பெயர் அரசரகம்படுகருமத் ததிபரையே சுட்டக் காண்கின்றோம். அதனால், அப்பெரும் பழங்காலத்துக் குறளாசிரியர் வள்ளுவரென்று வழங்கப்பெறுவது கொண்டு - அவரைத் தற்கால வள்ளுவச் சாதிவகுப்பில் தள்ளிவிட யார்க்கும் உரிமையில்லை. அப்பெயரால் நாம் கொள்ளற் குரியது, அவ்வாசிரியர் அவர்காலத் தமிழரசன் ஒருவன்பால் உள்படுகருமத்தலைவராக அமர்ந்தவராதல் வேண்டுமென்பதே. பிரித்தானியா (க்ஷசவையin) வில் பேரமைச்சனாயிருந்த பேகன் (க்ஷயஉடிn) பெருநூலெழுதிய பின்னர் அவனமைச்சனாயிருந்த வரலாறு முழுதும் மறந்து அவனை அறிஞர் கூட்டத்தில் வைத்தெண்ணப் படுவதனையே பெரும்பாலோர் அறிவர். சாணக்கியரை அவர் பெயரால் நின்றுநிலவும் நூலாசிரியரென அனைவரும், சந்திரகுப்தன் மந்திரி என்று அவரை வெகு சிலருமே கூறக்காண்போம். இம்முறையில் நம் முதற்பாவலரும் அரசன் அகக்கருமத் தலைமைவகித்து வள்ளுவப்பதவியும் பட்டமும் பெற்ற அவ்வுபசாரப் பெயரான் அழைக்கப்பட்டிருந்து, பின் அவர் தம் இறவாக் குறணூலை இயற்றிப் புகழ்சிறந்ததனால், கேவலம் உத்தியோகப் பதவியைப் பாராட்டி அவருக்குப் பெருமை கூறக்காரணமில்லாது, அப்பெயர்ப் பொருளை மறந்த மக்களின் நெடுவழக்கால் வள்ளுவப் பெயர் அவர்க்கு இயற்பெயராக நின்று நிலவிவர வாய்த்தது போலும்!
மேலும், வள்ளுவப் பெயர் சங்ககாலத் தமிழகத்திற் பறையரினொரு வகுப்புக்கும் சாதிப் பெயராகாமல், தகவுடைய முடிமன்னர்மகட் கொடைக்குரிய வேளிர் - குறுநில வேந்தரிடை வழங்கிவந்த செய்தியும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. கடைச்சங்க காலத்துக்கு முந்திய புலவர் சிலரின் முதுசுவைப்பாக்களையுங் கொண்டுளதாகக் கருதப்பெறும் புறப்பாட்டில், ஒருசிறைப் பெரியனார், மருதனிளநாகனார்; கருவூர்க் கதப்பிள்ளை எனும் பண்டைப் பாவாணர் பாடிய வேளிர் குலதிலகனாம் நாஞ்சிற் குரிசிலின் பெயர் வள்ளுவன் எனச் சுட்டப்படுகிறது. இஃதவனியற் பெயராதலொன்று; அன்றேல், அவன் சேரன்மாட்டன்புடையனாய் அவனுக்குப் படைத்துணை நின்றதாயறி கின்றோமாகையால், அக் குடச்சேர அரசன்கொற்றத் தருங்கடம் பூண்ட உள்படு கருமத் தலைவனாயிருந்த பதவியாலெய்திய பட்டப் பெயராத லொன்றாம். எதுவேயாயினும், வேளாண்மரபிற் குறுநில வேந்தனுக்கு வள்ளுவன் எனும் பெயர் புறப்பாட்டில் வழங்குவதாலும், சங்க நூல்களில் அது புலைக்குலச் சாதிப் பெயராக யாண்டும் பயிலாமையானும் வள்ளுவப் பெயர் மன்னருள்படு கருமத் தலைவர்க்கொன்றுமென்றே சேந்தனார் திவாகரத்திற் செப்புவதாலும், அப்பெயருடைமைகொண்டு அறப்பழங்காலக் குறளற நூலுடையாரைப் பறைக்குலத்தவராகக் கருதல் முறையன்றாம்.
இன்ன பலகாரணங்களாற் பொய்யில் புலவருக்கு வள்ளுவர் எனும் பெயர் இயற்பெயராகாமல், பதவியும் தொழிலும் உதவவந் தொன்றி நின்றதொரு சிறப்புப் பெயராகுமென்று நினைப்பது இழுக்கன்றாம். அன்றி, இயற்பெயரெனவே இயம்பினும் இசையும், சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும், இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் எனுந் தொல்காப்பியச் சூத்திரவுரையில் - யாருக்கும் காரணச் சிறப்புப் பெயரை முற்கூறி அவர் இயற்பெயரைப் பிற்படவழங்குவதே தமிழ் மரபென்பதை வலியுறுத்து வதற்குச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் இருவரும் முனிவன் அகத்தியன் - சோழன் வன்கிள்ளி என்பவரோடு தெய்வப்புலவன் திருவள்ளுவன் என்றதனையும் உதாரணமாக உடனெடுத்துக் காட்டிய செய்தியைச் சிந்திப்பின், முனியன் சோழன் தெய்வப்புலவன் எனச் சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிகளுக்குப் பிற்படக் கிளக்கப்படும் அகத்தியன் வன்கிள்ளி என்பன போலவே - திருவள்ளுவனென்பதும் நாயனாருக்கு இயற்பெயராமென்பது அவ்விரு பேராசிரியருக்கும் ஒப்பமுடிந்த கருத்தெனத் தெளியலாகும். இவ்வாறு இவர்க்கு இஃது இயற் பெயரென்பாரோடு எமக்கு வாதமில்லை; ஏனெனில், இயற்பெயரென்போர் அப்பெயர் கொண்டு வள்ளுவரைப் புலைக்குலம் புகுத்திப் பிழையார். வள்ளுவப்பெயர் காரணமாகத் தெய்வப்புலவரைப் புலைக்குலத்தவராக்க விரும்புபவருடன் மட்டுமே ஈண்டு வாதமாதலானும், இயற்பெயராக் கொள்ளல் அவ்விருப்புடையோர் வழக்குக்கு உதவாமையானும், காரணச் சிறப்புப்பெயராய் எழுந்து பின் இயற்பெயராய் நிலைத்ததெனக் கொள் வார்க்கு மட்டும் அப்பெயர் நிலைக்கிளவி சாதிகுறியாது வேத்தக வினைமையே குறிப்பதெனக் காட்டியமைவேம்.
இனி வள்ளுவப்பெயர் தொழிலையே குறிக்குமாயின், குறளாசிரியரும் குறளுமே அப்பெயரான் வழங்கப் பெறுவது வழக்காறாமா? என்பார்க்குக் கூறுவம். சால்பும் தகவுமுடைய பெரியாரை அவரியற்பெயராலழைத்தல் தமிழகத்தில் மரபன்று - என்பது யாவரும் அறிந்த தொன்றாம். தற்காலத் திலும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையைப் பிள்ளையவர் களென்றும், நல்லூர் ஆறுமுகநாவலரை நாவலரவர்களென்றும், இன்னும் இப்படியே ஆங்காங்கு அவ்விடத்துப் பெரியோர் சிலரைக் கலைக்டரவர்கள் திவானவர்க ளென்றுமே நம்மவர் சொல்லுவதை யாவரும் அறிவோம். பண்டைக்காலத்திலும் உவாத்திமைத் தொழிலுடைய கணக்காயர் பல ரெனினும் அவருட் சிறந்த நக்கீரர் தந்தையை மதுரைக் கணக்காயரெனவும், சிந்தாமணி ஆசிரியரைத் தேவரெனவும், இளங்கோவை அடிகளெனவும், தொல்காப்பித்திற்கு முதலுரை கண்ட பெரியாரைப் பேராசிரியர், உரையாசிரியர் எனவுமே அவரவர் தொழில் பதவிகளானும், தொல்காப்பியர் முதலிய பழம்புலவர் பலரைக் கேவலம் அவரவர் குடிப் பெயரானும் மட்டும் அழைக்கும் வழக்குண்மை அறியாதாரில்லை. கம்பர் என்பதும் அப்புலவர் பெருமானின் நாட்டினடிப் பிறந்ததொரு சிறப்புரிப் பெயராவதன்றி அவரியற் பெயராகாமை கம்பநாடர், கம்பநாட்டாழ்வார் என்ற பெருவழக்குகளால் விசதமாகும். இப்பெரியோர் எல்லோர்க்கும் இயற்பெயரொன்றில்லை யெனச் சொல்லலாமா? இப்போது அவ்வியற் பெயர்களொன்றேனும் அறியகில்லேம். பெரியார் பெயர் வழக்கின்மை மரபன்றே. இவ்வாறு இன்னவர்தம் இயற்பெயரை மறப்பித்துப் புதுப் பெயர்கள் புனைந்து இவர்க்குச் சூட்டிற்றாகும். எனவே பெரியோர்களியற் பெயர்கள் வழங்காமையும், அவரை அவர்தம் சிறப்புரிமைப் பெயரானே அழைப்பதுமே தமிழகத்தில் தொன்று தொட்டு நின்றுவரும் மரபென்றே அறியலாகும். ஆகவே, தாமே தம் தகுதியாலாவது தம் முன்னோர் வரன்முறையுரிமையாலாவது தமிழ்முடி மன்னரிடம் அவருள்படுகருமத் தலைமைவகித்து, வள்ளுவப் பதவிப்பெயர் வழங்கப்பெற்று, அக்கால வள்ளுவ உத்தியோகம் வகித்த மற்றையோரினும் அறிவு திரு ஆற்றல்களிற் சிறப்பெய்திய காரணத்தால், நமது நாயனார் வள்ளுவரெனும் உத்தியோக உபசாரத் தனிப் பெயராலழைக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், பிறகு அவர் திருக்குறளியற்றிப் பெரும்புகழெய்தப் பெற்று நாளடைவில் ஆட்சியின்மையான் அவரியற் பெயர் அறவே மறக்கப்பட்டு அவருக்குத் திருவள்ளுவப் பெயர் மட்டும் நிலைநின்று வழக்காற்றில் வந்திருக்க வேண்டுமெனவும் ஈண்டு நாமறியலாகும்.
பகுதி 4 : வள்ளுவர் வாழ்ந்த இடம்
இனித் திருவள்ளுவர் மயிலாப்பூர் வாசி யென்பதும், அவரைப் புலையராகப் பாவிக்கும் அடியற்ற கதையையே ஆதாரமாகவுடைத்து, சங்க நூல்களில் மயிலாப்பூர் எனும் பெயரே எங்கும் வழங்கக் காணோம். சங்ககாலத்தில் அவ் வூரிருந்ததற்கு வேறு தக்க சான்று காணப்படவுமில்லை. பிற்காலச் சைவசமயகுரவர் தம் தேவாரத் திருமயிலைப் பதிகப்பாக்களில் மயிலாப்பூருக்கு வள்ளுவர் சார்புடைமை சுட்டவுமில்லை. இக்கதை அவர்காலத்து வழங்கியிருப்பின், சைவப்பெரியார் திருமயிலாப்பூரைத் திருவள்ளுவர் தொடர்பாற் சிறப்பியாது வெறுக்கவும் மறக்கவும் நியாயமில்லை. சங்கத்தாராற் பாடப்பெறாவிடினும் நீண்டகாலமாய் அப் பெரியார் பெயரால் வழங்கி வரும் நீட்சியான ஆட்சியுடைய திருவள்ளுவ மாலையுட் செய்யுளொன்று, பொய்யில்புலவரை மயிலாப்பூருக்குரியராக்காமல் மதுரைக்குரியராகப் பேசுகின்றதும் ஈண்டுக் கவனிக்கத்தக்கது. அக்கவி வருமாறு:
“உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப - இப்பக்கம்
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு”
(21)
நாம் கேட்கும் கதை - அவர் மயிலாப்பூரிலே பிறந்து அவ்வூரிலேயே வளர்ந்து மணந்து வாழ்ந்து முத்தியடைந்தவர் - எனக் கூறுகின்றது. கடைச் சங்கத்தாரை வென்றடக்குவதற்காக மட்டும் மதுரைக்கு ஒருமுறை வந்ததாயும், வந்து தம் இறவாக்குறணூலை அரங்கேற்றியகாலை அவமதித்த தருக்குடைய சங்கத்தார் செருக்குடையத் தாமும். சத்தியலோகத்தில் மனைவியும் தரணியில் தம் தமக்கையுமாய்த் தம்மொடு புலைச்சி ஆதியின் வயிற்றில் அவதரித்திருந்த கலைமகள் ஒளவையும், தம் வைகுண்டத் தந்தை வையத்திற் புலைத்தமையனாயிருந்த இடைக்காடருமாகத் தந்தெய்விகத் தன்மையாற் றமிழ்ப் புலம் புணர் கூட்டுண்ட புலவரைக் கோயிற்குளத்திற் குப்புறவீழ்த்தி வென்ற பின்னர் மதுரைவிட்டு மயிலாப்பூருக்கு இவர் மீளச் சென்று விட்டதாயும், இக்கதை பேசுகின்து. இஃதுண்மையாயின் வள்ளுவர் மயிலாப்பூருக்கே உரிய புலவரும், மதுரைக்கு ஒருமுறை வந்து மீண்டதன்றி மற்றைய தொடர்புச்சிறப்பற்ற வருமாவர். இக்கதையே இவரால் வெல்லப்பட்ட சங்கத்தார் தாமரைக் குளத்திற்றள்ளப்பட்டுத் தத்தளித்த தறுவாயிற் பாடியது திருவள்ளுவமாலை யெனவும் வற்புறுத்துகிறது. எனவே, சங்கத்தாருக்கு நாயனார் மதுரைக்குத் தம்மொடு வாதிடவந்த ஏதிலரென்பது தெரிந்திருக்க வேண்டும். அஃதறிந்த சங்கத்தார், தம் வள்ளுவமாலைச் செய்யுளிலேயே, இவரைப் புனற்கூடற்கச்சு என மதுரைக்கே இவர் சிறப்புரிமை கூறுவது கதைப்பவர் கற்பனைத் திறத்தை விளக்குதற் குதவும். கதை கிடக்க; இவ்வள்ளுவமாலைச் செய்யுள் நம் முதற் பாவலரை வளம்படு கூடலான தென்மதுரைக்கு அச்சாணி போன்றவரென விதந்து கூறுவதால், மதுரைக்கு ஒருமுறை வாதிடவந்து மீண்டாரெனுங் கதைக்கு மாறாக, நாயனார் மதுரைக்கு விசேட நெருக்கமும் தொடர்புமுடையராக வேண்டுமெனத் தோன்றுகிறது. சங்கத்தைத் தாழ்த்தவந்து, வென்றதும் மீண்டுசென்ற வள்ளுவரை - நல்கூர்வேள்வியார் மதுரைக்கச்சு என வழுத்துவதன் நயனும் பயனும் என்னோ? இச்செய்யுளால் அஃதியற்றப்பெற்ற பழங்காலத்தில் வள்ளுவர் கூடலிற் பீடுபெற வாழ்ந்த பெரியாரெனும் வழக்குண்மை வலிபெறுகின்றது. இதனாலும் இக்கதையின் கற்பின்மை தெளியப்படும். இதனால் தமிழெழுந்த நாளெழுந்த பழம் பழையர் பாண்டியரின் மூதூரில் தமிழிசைத்துப் புகழ் சிறந்த கடைச்சங்கத்தாரும் பரசும் நெடும்பழைய முதற்பாவலராய் அறம்பாடி அளிசெய்த தெள்ளியரே வள்ளுவ ரென்றறியலாகும். எனவே, தென்மதுரைப் பெரியாரை வட மயிலைக் குரியரென வழுத்து கதைப் பொய்ம்மை யினி விரிக்கவேண்டா.
பகுதி 5 : வள்ளுவப் பெரியரின் இல்லறக்கிழவியார்
இன்னும் இவ்வெண்பாவை உற்றுநோக்கின் இவர் மனைமாண்ட வாழ்க்கைத் துணைவியின் பெயரும் ஒருகால் ஊகித்தறிதற் கிடம் பெறலாமென்று எண்ணக் கிடக்கின்றது. முன்னிரண்டடிகளில் தமிழில் வடமதுரை என வழங்கப்பெறும் மதுராபுரிக்குக் கண்ணன் அச்சாகி நின்ற விவரம் விளக்கப்படுகிறது. சரவணப் பெருமாளையரவர்கள் இவ் வடிகளுக்குப் பார்வதியைமணந்த சிவபிரான் வடமதுரையிலிருந்து சிறந்தபடி என்றுரைத்து இடர்ப்படுவதறிவேம். இடைக்காடர் பிணக்குத் தீர்க்கப் பெருமான் தமதாலயம் தவிர்த்து அதன் வடக்கே வைகையின் தென்கரையில் மதுரையின் வடபாகத்திலேயே கோயில் கொண்டிருந்ததாக மட்டும் திருவிளையாடற் புராணம் உரைக்கின்றது. மதுரைக்கும் வையைக்கும் வடக்கே வடமதுரை என்றதோர் பிறிதூரிற் கடவுள் சென்றிருந்த கதை யாண்டுங் கேட்டிலேம். மேலும் திருமாலுக்குக் கேசியெனும் பெயரின்மையால், உபகேசி யென்பது உமையவள் பெயராமாறில்லை. நீலகேசி, பிங்கலகேசி என்பனபோல் உபகேசி எனும் பெயர் நம்பின்னையையே குறிப்பதாம். இதனை விசதமாக, சேதுசமத்தான முதற் பாவலரான திரு. இரா. இராகவையங்காரவர்களும், காலஞ்சென்ற ஈழத்துப்பண்டிதர் திரு. அ. குமாரசுவாமிப் புலவரவர்களும், செந்தமிழ் முதற்பகுதியில் இனிது விளக்கி யுள்ளார்களாகையால் ஈண்டு விரித்தல் வேண்டா. இனி,
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை”
(திருப்பாவை - 5)
"மதுரையார் மன்னன்அடிநிலை தொட்டெங்கு
மதிரப் புகுதக் கனாக்கண்டேன்
(நாச்சியார் திருமொழி 6-5)
“வாச மலர்ப்பொழில்சூழ் வடமாம துரைப்பிறந்தான்”
(பெரியதிருமொழி 9-9-6)
“வடமதுரைப் பிறந்தாற்கு” (திருவாய்மொழி 9-1-3)
“மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே”
(மேற்படி 8-5-9)
என்னும் பல பழம்பிரயோகங்களாற் கண்ணன் மதுராபுரியைத் தமிழில் மதுரை எனவும், கூடற்றென் மதுரையினின்று பிரித்து வடமதுரை எனவும் வழங்குவ தறிவோம். இதனாலும், வள்ளுவ மாலைச் செய்யுள் பிறவும் இப்படியே தேவரைத் திருமாலுக்கு உவமித்துச் செல்லுவதாலும், ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தான் எனக் கண்ணனைத் திருக்கோவையிற் குறிப்பதாலும், உத்தரமாமதுரைக்கு அச்சாகி உபகேசி தோண் மணந்தவன் - கண்ணனேயாமெனத் துணியப்படும். அன்றியும், இவ்வெண்பாவைச் சொல்லி இதனுள் உபகேசியார் நப்பின்னைப் பிராட்டியார் என நேமிநாத விருத்திகாரர் கூறிவைத்துள்ளமையானும், இவ்வடிகட்கு இப்பொருளின் இயைபுடைமை வலிபெறுவதாகும். இன்னும், மேற்செய்யுளிற் பின்னையை மணந்த கண்ணன் வடமதுரைக்கு அச்சாணியானாற்போல், வையைவளந்தரு தென்மதுரைக்குத் தமிழ்ப் பெருநாவலர் அச்சாகிநிற்பர் என நல்கூர் வேள்வியார் பாராட்டிப் பாடியுள்ளார். இதிற் கீதைபாடிய கண்ணனால் வடமதுரை சிறந்தவாறு, குறளால் அறம்பாடிய வள்ளுவரால் தென்மதுரை சிறந்ததென, உவமான உவமேயப் பொருத்தமும் விசதமாகிறது. இவ்வளவு பொருத்தமுடனியங்கும் இப்பாவிற் குறளும் கீதையும் உறழும் நயந்தெரித்த புலவர், வாளா உபகேசிதோண் மணந்தான் என உவமானத்தில் அடைகொடுத்து உவமேயத்தில் அதற்கு ஒப்புமை குறியாமல் - உவமையடை பொருளில் சொற்றொடராக நிற்க வைத்திருப்ப ரென்பதினும், அவ்வடைக் கேற்ப உவமேயத்திற் குறளாசிரியர்க்கும் விசேடணஞ் சொல்லியிருப்ப ரெனக் கொள்ளுதல் இழுக்காதன்றே? மூன்றாமடியில் மறுவில் என்பது மருவு என்பதன் திரிபாடமாகக் கொள்ளிற் செய்யுளிற் சொல்லிசையும் பொருணயமும் சிறப்பதுடன், முற்றுவமை முழு நலமும் பெறுவதாகும். இனி மறுவில் என்பதன் இரண்டாம் வல்லெழுத்தை மாற்றி மருவில் என இடையெழுத்தாக்கி நிறுத்தினும் இழுக்காது. உண்மையான பாடம் இதுவெனத் துணிதற்கில்லை. எதுவாயினும், பின்னையைமணந்து கீதை பாடிய கண்ணன் வடமதுரைக்கு அச்சாவது போலவே மாதானுபங்கியை மருவிக்குறணூல் பாடி உலகுய்ய உதவிய பெருநாவலர் தென்மதுரைக்கு அச்சாவர் எனக் கொள்வது பொருத்தம் மிகவுடைத் தென்பதில் ஐயமில்லை. மாதானுபங்கியென்பதைத் தேவர் பெயராக்கு வதினும் - மனைமாண்ட அவர் அறமனையாளின் பெயராக்குவது மிகப் பொருந்தும். அன்னை போலொழுகு பவர் என வலிந்து பொருள் கொண்டு நாயனாருக்காக்கவேண்டு மிப் பெயரில், அப்பொருள் கொள்ளு மாறில்லையெனத் திரு. அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் முன்னமே செந்தமிழில் விளக்கியுள்ளார்கள். மாதம் =மதம்+பங்கி=கெடுத்தவன் எனப் பிரித்துச் சுயகர்வத்தைப் பங்கஞ் செய்தடங்கியவர் என்னும் பொருளுடைய தாக்கி, வள்ளுவருக்கு இப்பெயர் கொள்ளுவதும் சிறப்பும் செவ்வியும் உடையதில்லை. வேதங்களுக்குப் பின் பாவலர் யாவருக்கும் முன் முதற்கவியாவாரான வான்மீகியாரை ஆதிகவி என வடமொழியாளர் காரணச் சிறப்பியற் பெயரால் வழங்குவது போலவே, தமிழகத்திற் பழம்பண்டைப் பெருநாவலரான வள்ளுவரை முதற்பாவலரென வழங்கி வருதல் பொருத்தமும் சிறப்பும் உடைத்தாம். அத்தொல்லை நல்லாசிரியருக்கு இடர்ப்பட்டமைவதாகும். வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதில் நயனும் பயனும் இல்லை. அன்றியும் பொருளொடு சிறந்த பயனுடை மொழிகளால் யாப்புறவுற்ற மேற்கவியில் திருவள்ளுவர்க்கு மட்டும் இருவெறும் பெயர் பெய்துவைத்து, உவமான உவமேய விசேடணங்களுக்கு இயைபுகுன்றும்படி நல்கூர் வேள்வியார் செய்யுள் செய்திருக்கமாட்டாரன்றே. மாதானுபங்கி என்பது தேவர் திருத்தேவியாருக்கு இயற்பெயராயினும் - அன்றிச் சிறப்புப் பெயராயினும் ஆகுக. அத்திரி முனிவரின் மனைவி அனசூயை போல அறவோரும் அறிவருமான குறளாசிரியர் மனையறத் துணைவியாரும் அவர் காலத்தே அறந்தலைநின்று சிறந்த பெருந்தேவியாராகையால், அவ்வம்மையாரை மணந்துயர்ந்த தேவரின் பெருமை இவ்வினிய பழைய வெண்பாவிற் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. வாசுகி யென்பது அவரியற் பெயரென்பதற்கு நாம் கேட்டு வரும் அடியற்ற கதையொழியப் பிறிது பிரமாணமில்லை. ஒருகால் அதுவே அவ்வம்மையாரின் பெயராமேனும், தேவரை வள்ளுவரெனும் இயற் பெயராற் சுட்டாது செந்நாப் போதார் எனும் அவர் சிறப்புப் பெயரால் இக்கவியிற் புகழும் புலவர், இவர் தேவியாரையும் அவருக்கேற்ற சிறப்பியற்பெயர்கொண்டு மாதானுபங்கி எனப்புனைந்து பாராட்டுவதும் பொருத்தமேயாம்.
பகுதி 6 : வள்ளுவர் வணிகன் வளத்துணையால் வாழ்ந்த வரலாற்றுண்மை
இனி மயிலாப்பூரில் தனவணிகர் ஏலேலசிங்கரின் வண்மைக்கு வள்ளுவர் மிகவும் கடப்பட்டவரெனவும், இளமைதொட்டு எஞ்ஞான்றும் ஏலேலசிங்கரின் நட்பு நலமும் ஈகைவளமும் துணைக்கொண்டு வள்ளுவர் தம் மனையறம் வளர்த்து வாழ்ந்தனரெனவும் நாமறியும் நாடோடிக்கதை நவில் கின்றது. இது மேற்குறித்த வள்ளுவப் பெயர் வரலாற்றுண்மை விளக்கத்தாற் பொய்படும். அன்றியும் இவ்வரலாறு வள்ளுவரை வணிகர் பாற்பெறுவிக்கும் பெருநலத்தில் ஒருசிறிது சடையப்பரிடம் பெற்ற கம்பர் அவரையும், அவ்வாறே கூத்தர் காங்கேய முதலியாரையும், புகழேந்திப் புலவர் சந்திரன் சுவர்க்கியையும் அழிவிலா அமரராக்கித் தமது என்றுமுள தென்றமிழ் நூல் நின்றுவளர்புகழுரிமை அவருக்கு உவந்து உதவியுள்ளார். பவ பூதியனைய பல பாவாணரும் வடமொழியில் இவ்வாறே வள்ளியரை வழுத்தியுள்ளார். உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு எனும் அறிந்தெரித்த வள்ளுவரோ அந்நன்றி கொன்று, அனவரதம் அளிசெய்த தனவணிக முதலோனை மறவியெனும்மறலிக்கும் - தொல்லரும் பாவலர் நல்லறமரபிறந்து தம்மைப் பெரும்பழிக்கும் - பலியாக்கும் பான்மையுடையார்? திருமயிலைப் பெருவணிகன்றரும் உதவி ஒரு சிறிதும் பெற்றிருப்பின், வள்ளுவர் அதனைப் பாராட்டி நன்றிக்கடனாற்ற மறக்க மாட்டுவரோ? யாண்டும் எனைத்தளவும் நம்முதற் பாவலராற் சுட்டப்பெறாத ஏலேலசிங்கற்கு அவர் நெடுந் தொடர்பு சொல்லும் இக்கதையே அதன் ஒல்லாமை காட்டற்கு நல்ல சான்றாம்.
இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால், நாயனார் புலை மகளின் பழிம கவல்லரெனவும், கடைச்சங்கக் கடைக் காலத்தவரால் வறியராய் ஏலேல சிங்கரின் வண்மையால் வாழ்ந்தவரல்ல ரெனவும், மயிலாப்பூரில் வாழ்ந்து மதுரை வந்து சங்கபங்கஞ் செய்து மீண்ட தறுகண்ணரல்லரெனவும், மூன்றாஞ்சங்கத்தின் முற்காலத்தே மதுரைவாசியாய் மாதானு பங்கியாரின் மணவாளராய்க் - குறளடிகளால் அறம்பாடி யுலகுய்யவுதவிய வள்ளன்மை யுடையராய்ப் - பண்டைப் பாண்டியருக்கு அருங்கடம் பூண்டு அவருள்படுகருமத் தலைமை வகித்துயர்ந்த பெருந்தகையாய் - அருந்தமிழ் வேளிர் பெருங்குடிப்பிறந்து சிறந்து பெரியருமாவரெனவும் ஒருவாறு தெளியலாகும். தேரா ஊரார் ஓராதுரைக்குங் கதையளவிற் கூறப்படும் புலைக்குலப்பிறப்பும், மயிலாப்பூர் வணிகன் கீழ்த் தொழுதுண்டு பின் செல்லும் வாழ்வும், சங்கபங்கத்தருக்கும் தக்கசான்றெதுவு
மின்றித் தேவர்க்கீவது உண்மையுணரும் ஒண்மையுடையோர்க்குச் சால்பன்றென்பது நடுநிலையாளருக்கு ஒப்ப முடிவதொன்றாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக