தமிழ் நாவலர் சரிதை
வரலாறு
Back
தமிழ் நாவலர் சரிதை
ஒளவை துரைசாமி
தமிழ் நாவலர் சரிதை
1. தமிழ் நாவலர் சரிதை
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. முன்னுரை
7. நூலாராய்ச்சிக்குச் சிறப்பாய்த் துணைசெய்த நூல்கள்
8. முச்சங்க வரலாறு
9. இறையனார்
10.முருகவேள்
11.நாமகள்
12.நக்கீரர்
13.கபிலர்
14.பெருந்தலைச் சாத்தனார்
15.கோவூர் கிழார்
16.சாத் தந்தையார்
17.சங்கத்தார்
18.திருவள்ளுவர்
19.ஒளவையார்
20.பொய்யா மொழியார்
21.கம்பர்
22.தொல்காப்பிய தேவர்
23.இரட்டையர்கள்
24.சயங்கொண்டார்
25.ஒட்டக்கூத்தர்
26.புகழேந்தி
27.மூவேந்தர்
28.சேரமான் கணைக்காலிரும் பொறை
29.பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
30.பாண்டியன்
31.பாண்டியன் தேவி
32.சோழன் புலவன்
33.பாண்டியன் புலவன்
34.ஒரு தாதி
35.சோழனும் தேவியும்
36.குருநமச்சிவாயர்
37.ஏகம்பவாணன்
38.முனைய தரையன்
39.கோடைச் சிவந்தான் புலவன்
40.உத்தரநல்லூர் நங்கை
41.திருவாரூர் நாகரச நம்பி
4புங்கனூர் கிழவன்
43.குடி தாங்கி
44.கச்சிராயன்
45.கண்டியதேவன்
46.விண்ணன்
47.வாயற்பதிவடுகன்
48.கச்சியப்பன்
49.ஒரு புலவன்
50.பிராமணப் பிள்ளையன்
51.அம்மைச்சி
52.காளமேகப் புலவர்
53.குமார சரசுவதி
54.தத்துவப் பிரகாசர்
55.கவிராச பிள்ளை
56.பரமேசுரப் புலவர்
57.உண்ணாமுலை எல்லப்ப நயினார்
58.அந்தகக்கவி வீரராகவ முதலியார்
தமிழ் நாவலர் சரிதை
ஒளவை துரைசாமி
நூற் குறிப்பு
நூற்பெயர் : தமிழ் நாவலர் சரிதை
தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 9
உரையாசிரியர் : ஒளவை துரைசாமி
பதிப்பாளர் : இ. தமிழமுது
பதிப்பு : 2009
தாள் : 16 கி வெள்ளைத்தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 24 + 264 = 288
நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 180/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி
தி.நகர், சென்னை - 17.
அட்டை ஓவியம்: ஓவியர் மருது
அட்டை வடிவமைப்பு: வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்சு
இராயப்பேட்டை, சென்னை - 14.
பதிப்புரை
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.
வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.
இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.
“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,
“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”
என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.
அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.
இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி
தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.
நன்றி
பதிப்பாளர்
பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”
என்று பாவேந்தரும்,
“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”
என்று புகழ்ந்ததோடு,
“அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”
எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.
பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.
உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.
பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.
கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.
“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
நற்றமிழ் தழைக்க வந்தார்!”
என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.
கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.
ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.
ஒளவை நடராசன்
நுழைவாயில்
செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.
எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.
எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.
சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.
பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.
சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.
தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.
ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.
ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.
ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.
ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.
அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.
ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.
ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.
“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.
ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.
ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.
**rமுனைவர் இரா.குமரவேலன்
தண்டமிழாசான் உரைவேந்தர்
உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.
ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.
நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.
எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.
“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”
எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.
உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.
தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.
“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,
“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’
என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.
சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.
நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”
எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.
இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.
உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.
“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”
எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!
முனைவர் வேனிலா ஸ்டாலின்
தமிழ் நாவலர் சரிதை
முன்னுரை
தமிழகத்தில் தொல்காப்பியத்தைப் பாயிரத்தோடு படிக்கத் தொடங்கிய நாள் முதலே அறிஞர் தமிழ்நாட்டுக்குத் தென்னெல்லை குமரி யென்றும், மேற்கிலும் கிழக்கிலும் எல்லை கடலென்றும் வடக்கெல்லை வேங்கடமென்றும் கூறி வரு வாராயினர். வட வேங்கடமலை வடக்கே வடபெண்ணையாறு வரை தொடர்ந்து நிற்பதாகும். ஆகவே, தமிழகத்தின் வடவெல்லை வடவேங் கடத்தையும்வடபெண்ணை யாற்றையும் கொள்வதாயிற்றென்பது கல்வெட்டுக்களாலும் வலியுறுவதாயிற்று.
தமிழகத்தின் எல்லை ஓராற்றால் விளங்குகிற தென்றாலும், இவ்வெல்லையிடையே கிடந்து விளங்கும் தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதார சமுதாய சமய வரலாறு இதுகாறும் விளங்கக் காணப்படவில்லை. சங்ககாலந் தொடங்கியேனும் தமிழ் நாட்டின் வரலாறு ஒருவாறு காணப்படுமாயினும், அதனை ஒழுங்கு செய்து எழுதும் முயற்சி நாட்டில் காணப்படவில்லை. இந்திய நாட்டின் வரலாறெழுதும் அறிஞர் பலரும் வடநாட்டின் வரலாறு கூறுவதிற் பெரும் பகுதி செலவுசெய்வர்; தமிழ் நாட்டிற்கு வருங்கால் அவர்கட்கு இடமும் குறுகிவிடுகிறது; ஊக்கமும் சுருங்கிவிடுகிறது. ஓரிரு நிகழ்ச்சிகளைக் குறிப்பதிலேயே அறிஞர் செயல் முடிந்து விடுகிறது. முடிவில், தமிழ்நாட்டு இளைஞர் கட்குத் தமிழ்நாட்டு வரலாறு தொடர்புற அறிந்திருக்க வேண்டிய அமைதி இல்லையாய்விட்டது.
சங்ககாலத்துக்குச் சங்க நூல்களும், இடைக்காலத்துக்குப் பல்லவ பாண்டிய சோழர்கள் வழங்கியுள்ள கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், தமிழ் இலக்கியங்களும், வேறு பிற குறிப்புக்களும் கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர வேந்தர் முதலியோருடைய வரலாறுகள் அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், திரு. நீலகண்ட சாஸ்திரியார் முதலியோர் களால் எழுதப் பட்டுள்ளன. இவற்றையும் மேனாட்டவர் குறிப்புக்களையும் ஒருங்கு வைத்துத் தமிழ் நாட்டின் வரலாற்றை ஒரு கோவையுறத் தொகுத்தெழுதலாம். அதனைச் செய்விக்கும் பணியில் தமிழ்ச் செல்வர்களும் அரசியலறிஞர்களும் ஆசிரியப் பெரியோர்களும் இறங்குதல் வேண்டும்.
தமிழகத்துத் தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கட்கு ஒரு வரலாறு காண்டல் வேண்டும் என்னும் வேட்கை இந்நாளில் மிக்கு நிலவுகிறது. இலக்கிய வரலாறென்பது, நாட்டு வரலாற்றி லிருந்து பிரிந்து விரிந்து தோன்றும் பெருமையுடையது. நாட்டு வரலாற்றின் அடிப்படையின்றி இலக்கிய வரலாறு காண்பதென்பது ’அரங்கின்றி வட்டாடு’வது போல்வதாகும். நாட்டின் பொருளாதாரம், சமுதாயம், வாணிகம், சமயம், அரசியலமைப்பு முதலிய துறை பலவற்றிற்கும் தோற்றமும் வளர்ச்சியும் முடிவும் காண்டல் அருமையன்று. ஆனால், இவற்றிற்கெல்லாம் அடிப்படை நாட்டின் பொது வரலாறு. அவ்வரலாறில்லாக் குறையால், வரலாறுடைய நாட்டவர், வரலாற்றறிவு கொண்டு ஆராய்ந்து வகுக்கும் அரசியல்முறை, இடையீடும் இடையூறும் எய்தி முட்டுப்படுவதைக் காண்கின்றோம். “காவற்சாகாடு உகைப் போன் மாணின், ஊறின்றாகி ஆறினிது படுமே,” என்றான் சங்ககாலத்து அரசிளங் குமரனொருவன். மாணுதலாவது, அரசியற்குரிய அங்கம் பலவற்றினுடைய வரலாற்றறிவு பெற்று விளங்குவதென. அறிக.
நம் தமிழ் நாட்டிற்குரிய பொது வரலாற்று நூல் ஒன்று இல்லாதது பெருங்குறை. அதனால், சமய வரலாறு, சமுதாய வரலாறு, பொருளாதார வரலாறு முதலிய பல வரலாறுகளைச் செவ்வையுற அறிந்து, நன்றும் தீதும் கண்டு, தீது விலக்கி நல்லது கைக்கொள்ளும் வகையறியாது விழிக்கின்றோம். இவ் விழிப் புக்கும் திகைப்புக்கும் இடையே இலக்கியத்துறையில் மட்டில் சிறு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.
சங்க காலத்திறுதியில் வாழ்ந்த வேந்தர்களும் சான்றோர்களும் சங்ககாலப் புலவர்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களைத் தொகுத்து ஏற்ற பெற்றி இடமும் காலமுங் காட்டிப் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலியனவாகத் தொகுத்து வைத்தனர். அவை, தமிழகத்தின் பொது வரலாற்றினை ஒரு கோவையுற நீட்டி யெழுதுதற்குத் துணை செய்யாவிடினும், வரலாற்றுக் குறிப்புச் செறிந்து நிற்கின்றன. அதற்குப்பின் ஒன்பதாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பார், சங்கத்தார் தொகுத்துவைத்த தொகை நூல்கட்குக் கடவுள் வாழ்த்துப்பாடிச் செம்மை செய்தார்.
இடைக்காலத்தே புறத்திரட்டு, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, சிவப்பிரகாசத் திரட்டு, தனிப்பாடற்றிரட்டு, பன்னூற்றிரட்டு எனப் பல தொகை நூல்கள் தொகுக்கப் பட்டன. அவை சமயம் பற்றியும்; திருக்குறள் காட்டும் பான்முறை பற்றியும் வகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை தொகை வகையில் சிறந்து நிற்பனவாயினும், இலக்கிய வரலாற்றுக்குப் பெருந்துணையாவனவல்ல. இத்திரட்டுக்கட்கிடையே, இலக்கிய வரலாற்றுக்கு ஓரளவு துணை செய்யக்கூடிய அளவில் உண்டான தொகை நூல் இத் ’தமிழ் நாவலர் சரிதை’யென்பது.
தமிழ் நாவலர் சரிதை யென்ற பெயரே இந்நூல் தமிழ் நாவலர் வரலாற்றுக்குத் துணையாகும் நோக்கத்துடன் தொகுக்கப் பட்டதென்பதை வலியுறுக்கின்றது. இதன்கண் சங்கச் சான்றோர் முதல் முந்நூறு ஆண்டுகட்குமுன் வாழ்ந்த பெயர் தெரியாத புலவர் ஈறாகப் பல நாவலர்கள் வழங்கிய நல்ல பாட்டுக்கள் அவை பாடநேர்ந்த சந்தர்ப்பத்தோடு தொகுக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பெற்றிருக்கும் நெறியை நோக்கின், தொகுப்பாசிரியர் வரலாற்றுக்கண் கொண்டு தொகுத்தாரெனக் கருதுதற் கிடமுண்டாகிறது. நாட்டின் பொது வரலாற்றறிவு பெறற்கு வாய்ப் பில்லாமையால் கால முறையில் சில வழுவாயினும், தொகுத்திருக்கும் முயற்சி குறித்து இதன் தொகுப்பாசியர் பாராட்டத் தக்கவரென்பது யாவரும் உடன்படக் கூடியதொன்று.
தொடக்கத்தே தொகுக்கப் பெற்றிருக்கும் உயர்ந்த பாட்டுக்களைப் படிப்பார்க்கு இடையில் காணப்படும் சில பாட்டுக்கள் விலக்கப்பட்டிருப்பின் பாட்டு வகையில் இத்தொகை நூல் மிக்க அழகுபெற்றிருக்கும். பாடத்தகாத சில கருத்துகளும், கோக்கத் தகாத சில கொச்சை மொழிகளும் கொண்ட பாட்டுக்கள் இதன்கண் உள்ளன. பெயர் தெரியாத சில புலவர் பாட்டுக்களும் இச்“சரிதை”க்கண் சேர்ந்திருக்கின்றன. எனினும், இந்நூலைத் தொகுத்த ஆசிரியர் யாது கருதி இவற்றைச் சேரக்கோத்தாரென்பது விளங்கவில்லை.
தமிழ்நாவலர் சரிதையைத் தொகுத்த ஆசிரியர் பெயர் தெரிந்திலது. ஆயினும், இந்நூற்கண் தொகுத்திருக்கும் காப்புச் செய்யுளையும் இறையனார் முருகவேள் முதலாயினோர் பாட்டுக் களையும் தொடக்கத்தில் வைத்திருப்பது கொண்டு, அவர் ஒரு சைவரென்பது தெளிவாகிறது. இதன் இறுதியில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் “சரிதை”யைக் கோத்திருத்தலால், இதன் ஆசிரியர், பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர்த் தோன்றி இத்திருப்பணியைச் செய்தாரென்று கொள்ளலாம்.
இந்நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் வித்துவான் தேர்வுக்குச் செல்வோர்க்குப் பாடமாக வைக்கப்பெற்றிருந் தமையின், சென்ற சில ஆண்டுகட்கு முன் இதனை மாணவர்கட்குக் கற்பிக்கும் கடன் என்பால் வருவதாயிற்று, அக்காலத் தில் கல்வெட்டுக்களையும், பிற வரலாற்று நூல்களையும் ஒப்ப நோக்கிக் கற்பிக்கும் பணியாற்றவேண்டியிருந்தபடியால், அப்போது இதன்கட் காணப்படும் பாட்டுக்கட்கு இயன்ற அளவு குறிப்புக்கள் தேடித் தொகுத்துவைத்தேன். என்பால் திரு.தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் வெளியிட்ட பிரதியொன்றும் எனக்குச் சிறுபோதில் தமிழாசிரியராக இருந்த சீகாழி. திரு. கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் கையெழுத்துப் பிரதியொன்றும் இருந்தன. திருநெல்வேலிச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகச் செயன்முறைத் தலைமையாளர் திரு. வ.சுப்பையா பிள்ளை யவர்கள், கோயமுத்தூர் திரு. சி.கு.நாராயணசாமி முதலியார் வெளியிட்ட பிரதியொன்றினைத் தந்தார். இம்மூன்றையும் கொண்டு ஒப்புநோக்கியதில் உண்டான திருத்தங்கள் பல.
இதன்கண் செய்யுள்தோறும் தரப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் குறிப்புக்கள், இந்நூலைப் படிப்பவர்க்குப் பெரிதும் துணையா மென்று கருதியே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல குறிப்புக் களுக்கு வரலாறு விளங்கவில்லை. ஆராய்ச்சியெல்லாம் காலம் செல்லச் செல்ல, வரலாற்றுக் குறிப்புக்கள் மிகுதியாக அகப்பட விளக்கம் பெறுமாகலின், முன்னைய பதிப்புக்களைவிட இப்பதிப்பு, திருந்திய பாடமும் விரிந்த வரலாற்றுக் குறிப்பும் உடையதா மென்பதை இதனைக் காண்பார் இனிதறிவர்.
இந்நூல் சில ஆண்டுகட்கு முன்னமே அச்சாக வேண்டி யிருந்த போதிலும், அச்சுவேலைக்கு உண்டான முட்டுப்பாட்டாலும், போர் நெருக்கடியாலும் இத்துணைக்காலம் தாழ்த்து வருவதாயிற்ற. இன்னமும் அந்நெருக்கடி போதிய அளவில் நீங்காதிருப்பவும், இதனை இவ்வளவில் அழகுற வெளியிடும் பணி மேற்கொண்டு, தமக்கு இயல்பாகவுள்ள செவ்விய முறையில் அச்சிட்டுத் தமிழுலகிற்கு உதவும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
இத்துறையில் என்னைப் பணிகொண்டு என்னையும் தன் தொண்டருள் ஒருவனாய் ஆட்கொண்டருளும் தமிழன்னையின் திருவருளையும், தில்லையம்பலத் தாடலரசின் திருவடி மலர்களையும் மனமொழி மெய்களால் வழிபடுகின்றேன்.
அண்ணாமலைநகர்,
26-12-1948
ஒளவை சு. துரைசாமி
நூலாராய்ச்சிக்குச் சிறப்பாய்த் துணைசெய்த நூல்கள்
1. அகநானூறு
2. அருணகிரியந்தாதி
3. இராசராச சோழனுலா
4. இறையனார் களவியலுரை
5. உபதேச காண்டம்
6. ஏகாம்பரநாதருலா
7. ஐங்குறு நூறு
8. கல்லாடம்
9. கடம்பவன புராணம்
10. கம்பராமாயணம்
11. களவழி நாற்பது
12. கலிங்கத்துப்பரணி
13. கலித்தொகை
14. குறுந்தொகை
15. சிலப்பதிகாரம்
16. சீகாளத்தி புராணம்
17. சோழமண்டல சதகம்
18. சீவக சிந்தாமணி
19. சுந்தரர் தேவாரம்
20. சேக்கிழார் புராணம்
21. சௌந்தரிய லகரி
22. ஞானாமிர்தம்
23. ஞானசம்பந்தர் தேவாரம்
24. திருவாலவாயுடையார்
திருவிளையாடல்
25. திருவள்ளுவமாலை
26. தொல்காப்பியம் -
பேராசிரியர் உரை
27. தொண்டை மண்டல சதகம்
28. தொல்காப்பியம்-நச்சினார்க்
கினியர் உரை
29. திருப்புகழ்
30. திருக்கை வழக்கம்
31. தொல்காப்பியம் -
தெய்வச்சிலையார் உரை
32. திருப்பாதிரிப்புலியூர்க்
கலம்பகம்
33. திருக்குறள்
34. திருப்பல்லாண்டு
35. தீபங்குடிப்பத்து
36. திருப்புகலூரந்தாதி
37. தக்கயாகப்பரணி
38. திருவாரூருலா
39. தமிழ்ப்புலவர்வரலாறு
16-ம் நூற்றாண்டு
40. நற்றிணை
41. நளவெண்பா
42. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
43. பெருந்தேவனார்-பாரத
வெண்பா
44. பதினோராந் திருமுறை
45. புறநானூறு
46. பாண்டிமண்டல சதகம்
47. பெருந்தொகை
48. பதிற்றுப்பத்து
49. பாய்ச்சலூர்ப் பதிகம்
50. பொன்வண்ணத்தந்தாதி
51. பரிபாடல்
52. வில்லிபாரதம்
53. விக்கிரம சோழனுலா
54. யாப்பருங்கலவிருத்தி
55. Catalogue of Madras
Government Manuscripts
Library
56. History of Ceylon
57. Nellore Inscriptions
58. Pudukottah Inscriptions
59. Sewell’s forgotten Empire
60. Trichinopoly District Gazetteer
61. SouthIndian Inscriptions
VoI. I, II, III, V, VIII
62. Inscriptions Of Madras
Presidency Volume I
63. Madras Annual Reports of
South Indian Epigraphy
from 1909 to 1938
64. Indian Antiquary, 1882
உ
திருச்சிற்றம்பலம்
தமிழ் நாவலர் சரிதை
கடவுள் வாழ்த்து
காப்பு - வெண்பா.
தனிமைபெறு சீர்த்தித் தமிழ்நா வலர்சீர்
இனிமை பெறச்சேர்த் தெழுத - நனிதுணையாம்
இந்துமுகத் தந்தி யெனுஞ்செஞ் சடைமோலி
ஐந்துமுகத் தந்தி யடி. 1
குறிப்பு :- ஐந்துமுகத் தந்தியடி, தமிழ் நாவலர் சீர் எழுத நனி துணையாம் என இயையும். இந்துமுகத்து அந்தி யெனும் செஞ்சடைமோலி - திங்கள் தன்மேல் விளங்கத் திகழும் அந்திப் போதின் நிறமென்று சொல்லத்தக்க சிவந்த சடையாகிய முடி. தந்தி - யானை.
கரும்பு மிளநீருங் கட்டிக் கனியும்
விரும்பும் விநாயகனை வேண்டி - அரும்பவிழ்தார்ச்
சேரமான் சொன்ன சிலப்பதிகா ரக்கதையைச்
சாரமாய் நாவே தரி. 2
இதுவு மது.
குறிப்பு : - அரும்பவிழ்தார்ச் சேரமான் - அரும்பு மலர்ந்த பூக்களாலாகிய மாலையணிந்த சேரவேந்தராகிய இளங்கோவடிகள். சாரமாய்த் தரி - சாரமான பொருள் தேர்ந்து சொல்லுவாயாக. (கட்டி - கருப்பங்கட்டி.)
இப்பாட்டுச் சிலப்பதிகார அரும்பத வுரையின் காப்புச் செய்யுளாகக் காணப்படுகிறது. இதனை இங்கே சேர்த்துள்ளதன் காரணம் தெரிந்திலது.
மதிபாய் சடைமுடித்து மாசுணப்பைம் பூட்டுச்
சதிபாய் குறுந்தாட்டுத் தான - நதிபாய்
இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்தெ னுள்ளம்
உருகவிட்டு நின்ற வொளி. 3
இதுவு மது.
குறிப்பு:- இது தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையேட்டிற் காப்புச் செய்யுளாகவும், வாகீச முனிவர் அருளிய ஞானாமிர்த உரையின் காப்புச் செய்யுளாகவும் காணப்படுகிறது.
முடித்து - முடியினையுடையது. மாசுணப்பைம் பூட்டு - பாம்பாகிய பசிய பூணையுடையது. சதி - கூத்து. குறுந்தாட்டு - குறுகிய தாளையுடையது. இரு கவுட்டு - இரண்டாகிய கவுளை யுடையது. நால்வாய்த்து - தொங்குகின்ற வாயையுடையது. விட்டுநின்ற -விட்டு விளங்காநின்ற. ஒளி, முடித்து, பூட்டு, தாட்டு, கவுட்டு, முக்கட்டு, நால்வாய்த்து என இயையும்.
முச்சங்க வரலாறு
தலைச் சங்கத்தார் இடைச் சங்கத்தார் கடைச் சங்கத்தார் எனப் புலவர் மூவகையர்.
அவருள் தலைச்சங்க மிருந்தார், அகத்தியனாரும் இறைய னாரும் முருகவேளும் நிதியின் கிழவனும் 1முரஞ்சியூர் 2முடிநாகரா யரும் என்று இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர். அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினார். அவர்களாற் பாடப்பட்டன நூறு பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக் கத்தன. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது நாலாயிரத்து நானூற்று 3நாற்பத்தொன்பதியாண்டு. அவர்க்கு 4நூல் அகத்தியம்.5
இடைச்சங்கமிருந்தார், அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் 6கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பி யனாரும் சிறுபாண்டரங்கனும் 7மதுரை யாசிரியன் மாறனும் 8துவரைக் கோமானும் என இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன் பதின்மர். அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினார். அவர் களாற் பாடப்பட்டன கலியுங் குருகும் வெண்டாளியும் வியாழ மாலையகவலும், 9கலவியன் மாலையும் என இத்தொடக் கத்தனவென்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் தொல்காப்பியமும் 10பனம்பாரமும் என்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு 1கபாடபுரத் திருந்தார்; அப்போது மதுரையைக் கடல் கொண்டதென்ப.
கடைச்சங்க மிருந்தார் கபிலரும் பரணரும் சிறுமேதாவி யாரும் சேந்தம்பூதனாரும் 2அறிவுடைநம்பியும் பெருங்குன்றூர் கிழாரும் 3இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மதுரை மருதனிளநாகனாரும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரு மென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் ணணணஆயிரத் தெண்ணூாற்றைம்பதியாண்டு.7
அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீராண்டு மழை பெய்யாது வற்கடம் சென்றது. சங்கத்தாரெல்லாரும் வேறு வேறிடத்துப் போயினார். பின்பு மழைபெய்து நாடுவிளைய அவரெல்லாரையும் மதுரையிடத் தழைப்பித்துத் தமிழாராய்ந்தார். பொருளதிகாரங் காணாமற்போனதால் ஆலவா யிறையனார் 8அறுபது சூத்திரம் பாடினார்.
இறையனார்
ஆசிரியப்பா
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே. 4
இது, தருமியென்னும் பிரமசாரிக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுக்க இறையனார் சிந்தா சமுத்தி பாடியது.
குறிப்பு - தன் மனைவி கூந்தலில் எழுந்த நறுமணங் கண்ட பாண்டிவேந்த னொருவன், தன் மனக்கருத் தமையப் பாடிவரு வோர்க்கு இப்பொற்கிழி தருவேன் எனச் சங்கத்து முன்றிலில் கட்டினான்; அக்காலையில் திருமணஞ் செய்துகொள்ளப் பொருளில்லாது வருந்திய தருமி யென்னும் பார்ப்பனப் பிரமசாரி யொருவன் அப்பொற்கிழியைப் பெறும்பொருட்டு மதுரை ஆலவாய் இறைவனார் இப்பாட்டைப் பாடித்தந்து பொற் கிழியும்பெறுவித்தார். இவ் வரலாறு கல்லாடம், திருவாலவா யுடையார் திருவிளையாடல், கடம்பவன புராணம், சீகாளத்திப் புராண முதலிய நூல்களில் காணப்படுகிறது.
கொங்கு -தேன்; நறுந்தாது மாம். காமம் செப்பாது – நான் விரும்பியதையே விரும்பிக்கூறாமல். பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் என்னோடுபயிலுதல் பொருந்திய நட்பு; செறி எயிற்றரிவை - நெருங்கிய பற்களையுடைய அரிவையாவாள். கூந்தலின் - கூந்தலைப்போல. நறியவும் - நறுமணம் கமழும் பூக்களும். சிந்தாசமுத்தி - ஒருவர் சிந்திப்பதனை யறிந்து அச்சிந் தனையமைய வேறொருவர் பாடுவது.
திருமுக அகவல்
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை
அன்னம் பயில்பொழி லாலவாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
தன்போ லென்பா லன்பன் றன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. 5
இது பாணபத்திரனுக்காகச் சொக்கநாத சுவாமி சேரமான் பெருமாளுக்கு எழுதித் தந்தது.
குறிப்பு:- பாணபத்திரன் என்பார் பாணனார் என்றும் பத்திரனார் என்றும் வழங்கப்படுவர். இவர் மதுரையில் திருவாலவாய் இறைவன் திருமுன் நின்று உண்மையன்பால் இன்னிசையால் வழிபாடாற்றினார். அவர் கனவில் இறைவன் எழுந்தருளிவந்து, “சேரமான் பெருமாளுக்கு யாம் தரும் ஓலைகொண்டு காட்டிப் பெரும் பொருட் பரிசில் பெற்றுக்கொள்க” என்று உரைத்து, விழித்தவுடன் ஓலையும் காணத் தந்தருளினார். பத்திரனாரும் அதனை யெடுத்துச்சென்று சேரமான் பெருமாளுக்குக் காட்டிப் பெருஞ்செல்வம் பெற்றார். அந்த ஓலைத்திருமுகத்துப் பாடலே இப்பாட்டாகும்.
மதிமலிபுரிசை - மதிமண்டலத்தைத் தடவ வுயர்ந்த மதில். பால்நிற வரிச்சிறை யன்னம் - பால்போல் வெண்மையான நிறத்தையும் வரிபொருந்திய சிறகுகளையுமுடைய அன்னப் பறவை. பருவக்கொண்மூ - கார்காலத்து மழைமுகில். உரிமையின் உதவி - மிக்க உரிமையுடன் வேண்டுவன வரையாது வழங்கி. குருமாமதிபுரை - வட்டமான அழகிய முழுமதியத்தையொத்த. செருமா உகைக்கும் - போரில் வல்ல குதிரையைச் செலுத்தும். பண் - இசை. பண்பால் என்றுமாம். ஒருமையினிருமையு மென்றும் குருமாணிநிரைக் குடையத னிழற்கீழ் என்றும் பாட வேறு பாடுண்டு. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள், பதினோராந் திருமுறையில் உள்ளது.
வெண்பா
என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேனிரைக்கு நீர்மையவாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் செவ்வித் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். 6
இது, வள்ளுவரைச் சங்கத்தார் பாடிய வள்ளுவமாலையில் இறையனார் பாடியது.
குறிப்பு: - என்றூழ் என்றும் பாடம். யாணர் - புதுநலம். தேன்இரைக்கும் - வண்டினம் சூழ்ந்தொலிக்கும். தேனிறைக்கும் என்றும் தேன்பிலிற்றும் என்றும் பாடம். நீர்மைய - இயல்பினை யுடைய. தெய்வத் திருமலர் என்றும் பாடம். செவ்வி- பதம் போன்ம் - போலும். மன்புலவன் - மன்னனாகிய புலவன். வாய்ச் சொல் - வாயிற் பிறந்த சொல்லாகிய திருக்குறள்.
வெண்பா
கோட்டாற் கொழும்பிரசங் குத்தி யதனடுவே
பாட்டாற் பனைக்கை புகமடுத்துக் - காட்டானை
தேனீ ரருந்துஞ் சிராமலையே செஞ்சடைமேல்
வானீர் கரந்தான் மலை. 7
இஃது இறையனார் பொய்யாமொழிப்புலவர் முன்பு சிராமலையைப் பாடியது.
குறிப்பு :- ஒருகால் பொய்யாமொழிப் புலவர் சிராப் பள்ளிக்குச் சென்று, அங்குள்ள இறைவனைப் பாடக் கருதினாராக, அவர்க்கு உள்ளத்தே இனிய பாட்டெழாதாயிற்று. அப்போது இறைவனார் தோன்றி இப்பாட்டைப் பாடினா ரென்பர்.
கொழும் பிரசம் - கொழுவிய தேனடை. பாட்டால் பனைக்கை - பெருமையால் பனைபோலும் கை. பாட்டார் என்றும் பாடம். மடுத்து - நுழைந்து. காட்டானை - காட்டுள் வாழும் யானை. தேன்நீர் - தேனாகியநீர். வான்நீர் - கங்கை. ஆனை, குத்தி, மடுத்துத் தேனீர் அருந்தும் சிராமலை என இயையும்.
முருகவேள்
வெண்பா
விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழ்ந்தால்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினாள்
பொய்யா மொழிபகைஞர் போல். 8
இது, முருகவேள் பொய்யாமொழியாரைப் பாடியது.
குறிப்பு:- பொய்யாமொழிப் புலவர் சிராப்பள்ளி நீங்கி மதுரைக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒருநாள் முருகவேள் வேட்டுவனொருவன் உருக்கொண்டுவந்து தன் பெயர் முட்டை யென்றுசொல்லித் தன்மேல் ஒரு பாட்டுப் பாடுமாறு கேட்க, பொய்யாமொழியாரும் ஒரு பாட்டு (70)ப் பாடினார். அதன்கண் பாலையைப் “பொன்போலும்” எனத் தொடங்கியது சீரிதன்றெனச் சொல்லி, முருகவேள் இப்பாட்டைப் பாடிக் காட்டினர் என்பர்.
வீழ்ந்தால்:- ஒருகால் நிலத்தே விழுமாயின். என்று - என்றும். செழுங்கொண்டல் - நீர்நிறைந்த மழைமுகில். பகைஞர் போவதுபோலப் பெய்வளையும் போயினாள் என இயையும். பெய்வளை - பெய்யப்பட்ட வளையணிந்த என்மகள். என்றும், என்றும் ஏங்கிக் கொண்டல் பெய்யாதாயிற் றென்பதாம்.
நாமகள்
வெண்பா
நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
எள்ளுவன் மீனுயர்த்த வேந்திலைவேல் வேந்தனே
வள்ளுவன் வாயதென் வாக்கு 9
இது, வள்ளுவ மாலையில் நாமகள் பாடியது.
குறிப்பு :- எள்ளிய வென்றியிலங்கிய வேல்மாறபின் வள்ளுவன் என்றும் பாடம். முதல் - முதற்கண். நாடா - நாடி. பாடா - பாடி. கூடாரை எள்ளுவன் மீன் உயர்த்த ஏந்திலைவேல் வேந்தனே - பகைவரை இகழ்ந்த வலிய மீனக்கொடியை யுயர்த்திய உயர்ந்த இலைமுகத்து வேலையுடைய பாண்டிவேந்தனே. முதல் நான்முகன் நாவில் நாடி நான்மறை பாடி, இடையில் பாரதம் பகர்ந்தேன்; இப்போது என் வாக்கு வள்ளுவன் வாயதாயிற்று என இயைத்துக்கொள்க.
நக்கீரர்
வெண்பா
முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரணர் கபிலரும் வாழி - அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்
ஆனந்தஞ் சேர்கசுவா கா. 10
நக்கீரர் நாடத்துக் குயக்கொண்டானைச் சாவப் பாடியது.
குறிப்பு:- மதுரையில் இருந்த பட்டிமண்டபத்துத் தெற்கு வாயிற் கதவு ஒருகால் திறவாதாக, நக்கீரர் தமது தமிழ்ப்பாட்டால் திறப்பித்தார். அதுகண்ட பட்டிமண்டபத்தார் வியப்புற்றனர். அவர் பொருட்டு நக்கீரர் செந்தமிழால் ஒருவனைச் சாவவும் பிழைக்கவும் பாடக்கூடும் என்றனர். பட்டி மண்டபத்தார் தலைவனாக இருந்த குயக்கோடன் அங்ஙனம் வாழவும் சாவவும் செய்ய வல்லது ஆரியமேயன்றித் தமிழன் றென்றான். அவனோ சாவவும் பிழைக்கவுமாக நக்கீரர் இப்பாட்டையும் இதனையடுத்து வரும் பாட்டையும் பாடினர். இந்நூலை முதற்கண் பதிப்பித்த தில்லைநடேசச் செட்டியார் அவர்கள், “தெற்கண் வாயில் திறவாப்பட்டி மண்டபத்தார் வடமொழிச் சங்கத்தார்” என்றும், “இதனால், கொண்டான் என்னும் குயவன் மதுரையில் வடமொழிச் சங்க மொன்றில் தலைவனாயிருந்து தமிழை இகழ்ந்தன னென்பதும், நக்கீரர் அவனைச் சாவவும் பின் வாழவும் பாடித் தமிழின் பெருமை புலப்படச் செய்தா ரென்பதும் விளங்கும்” என்றும் குறிக்கின்றார். குயக்கொண்டான் என்றும், அரணிய வென்றும் பாடவேறு பாடுண்டு. ஆசிரியர் பேராசிரியர், “நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப” (தொல்.செய் 178) என்பதன் உரையில் இப்பாட்டையும் இதனை யடுத்துவரும் பாட்டையும் காட்டி, “இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார்பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின” என்று கூறியுள்ளார்.
முரண் - மாறுபாடு. புத்தேள் - அகத்தியர். அரண்இலா - தமிழால் அரண்செய்துகொள்ள இயலாத. ஆனந்த வேட்கையான் - சாக்காட்டை விரும்புபவன். வேட்கோ - குயவர்குலம். குயக் கோடன், குயம் என்னும் சிறப்புப்பெற்ற கோடன் என்ற இயற் பெயருடையவன். ஆனந்தம் சேர்க - இறந்தார் உலகம் செல்க. சுவாகா, குறிப்புமொழி.
வெண்பா
ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா. 11
இஃது அவர் அவனைப் பிழைக்கப் பாடியது.
குறிப்பு:- காலக் கோட்பாட்டான் - இறந்தவன்; அவன் வேட்கோக் குயக்கோடன் என்பவன். அவனது ஊர் நாடம் என்பது பின்பு கோடனூராகி இப்போது கோடகநல்லூர் என வழங்குகிறது. இடைக்காலத்தில் இது மேல் வெம்பாநாட்டுக் கோடனூரான குலசேகரச் சதுர்வேதிமங்கலம் (A.R. No.204 of 1932-33) என வழங்கிற்று. ஆணையினா லென்றும் பாடமுண்டு.
கபிலர்
ஆசிரியப்பா
அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரச மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாயமீ தழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்செரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே யாங்கும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும்
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலான்
யானறி குவனது கொள்ளுமாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூத்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே. 12
இது, பாரியின் கோட்டையையும் மலையையும் சேரனும் சோழனும் பாண்டியனும் வளைத்ததின் பிறகு அவர்கள் மூவரும் வலியக் கூடாரம் பிடுங்கிக் கொண்டு போகக் கபிலர் பாடியது.
குறிப்பு:- வேள்பாரி பாண்டிநாட்டில் பறம்புமலைக் குரியனாய்க் கைவண்மையும் போராண்மையும் உடையனாய்ப். புகழ் கொண்டு விளங்கினான். பறம்புநாடு முந்நூ றூர்களை யுடையது. இவனுக்கு அங்கவை சங்கவை யென்ற இருமகளிர் உண்டு. இப் பறம்புமலைக்குத் தெற்கில் இருந்த வாதவூரில் கபிலர் பிறந்து புலமை சிறந்து விளங்கினார். அவர்க்கும் வேள் பாரிக்கும் நெருங்கிய நட்புண்டு. அதனால் அவர் வேள்பாரியோடே பெரிதும் இருப்பாராயினர். பாரிபெற்ற புகழ் கண்ட தமிழ் மூவேந்தரும் அவன்மேற் பகைகொண்டனர். மேலும், படை கொண்டுவந்து பறம்புமலையையும் முற்றிக்கொண்டு போர் உடற்றக் கருதினர். அவர் முயற்சி கைகூடாதாயிற்று. அதனால் கபிலர், இப் பாட்டால் அவர்களை மீண்டேகுமாறு தெரிவித்தார். இதன் பொருள் “தமிழ் வேந்தர்களே, நீவிர் மூவிரும் ஒருங்குகூடி நின்று இப்பறம்பினை முற்றுகையிட்டிருக்கிறீர்கள். இப்படியாகப் பன்னாள் இருப்பினும், வேள்பாரியை வெல்லுதலும் அரிது; அவனது பறம்புமலையைக் கைப்பற்றுவதும் அரிது; பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவுகளாகிய நெல்லும் பழமும் கிழங்கும் தேனும் மக்கள் முயற்சியின்றியே எளிதில் கிடைக்கும். அகல நீள உயர வகையில், பறம்புமலை வானத்தை யொக்கும்; அதிலுள்ள சுனைகளோ வானத்தில் உள்ள விண் மீன்களை யொக்கும்; ஆகவே, நீவிர்மரந்தோறும் களிறுகளைப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர்களை நிறுத்தி, உங்கள் மெய்ம் முயற்சியாலும் படைத் திறத்தாலும் பறம்பினைப் பெற கருதுவது முடியாத செயலெனத் தெளிமின்; அவ்வாறு கொள்ளக் கருதுவதும் அறியாமையின் பாற்படுவதாம்; எனக்குத் தெரியும் அதனைக் கொள்ளும் வழி. அஃதோர் அரிய செயலன்று. நீவிர் நும்முடைய வேந்தர் வடிவினை மாற்றிக் கூத்தர் வேடமும், நும்முடைய மகளிர் விறலியர் வேடமும் கொண்டு வேள்பாரியின் திருமுன் ஆடலும் பாடலும் செய்து காட்டுவீராயின், அவன் அவற்றிற்கு வியந்து தன்னாட்டையும் மலையையும் ஒருங்கே பரிசிலாக அளிப்பான்,” என்பது.
வெதிர், மூங்கில். அணிநிற ஓரி பாய்தலின் - அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலான். தேன் நாட்பட்டு நிறம் மாறுமாயின் ஓரி பாய்ந்துவிட்டதென்றல் இக்காலத்தும் வழக்கம். சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி - வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறியயாழை இசைக்கேற்ப அமைத்து வாசித்து.
ஆசிரியப்பா
ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருகுவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
ஈத லெளிதே மாவண் டோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. 13
இது மலையமான் திருமுடிக்காரியை வரிசையறியாது கொடுத்த விடத்துத் கபிலர் பாடியது.
குறிப்பு:- மலையமான் திருமுடிக்காரி திருக்கோவலூரி லிருந்து ஆட்சிபுரிந்த குறுநில மன்னனாவான். கடையெழு வள்ளல்களுள் இவனும் ஒருவன். இவனது குதிரைக்கும் இவன் தன் பெயரையே வைத்துப் பேணிவந்தான். செங்கைமாவின் தெற்கே பெண்ணையாற்றின் தென்மேற்கிலுள்ள மூள்ளூர் இக்காரிக் குரியதாய் மிக்க பாதுகாப்புடன் விளங்கிற்று. ஒருகால் அதனைக் கைப்பற்றக் கருதி வடநாட்டு ஆரியமன்னர் பெரிய வேற்படையோடு போந்து முற்றுகையிட்டனர். அதனையறிந்த காரி கோவலூரினின்றும் சென்று தன் வேற்படை கொண்டு தாக்கினானாக, அவ்வாரியர் கூட்டம் அரியேற்றின்முன் நரிக்கூட்டமென அஞ்சி யோடி விட்டது. இவன் புலவர் பாணர் முதலிய இரவலர் பலர்க்கும் அவர் வேண்டுவனவற்றை வரையாது வழங்கிப் புகழ்விளைத்தான். தமிழ்வேந்தர் மூவரும் இவன்பால் பெருமதிப்பும் உயர்நட்பும் உடையவராயிருந்தனர். இடைக்காலத்தே மலையமான்கள் சீர்குன்றிச் சீறூர்கட்குத் தலைவராயிருந்தனரெனத் திருக்கோவலூர் நாட்டிற் காணப்படும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்நாட்டு வாணகோப்பாடி நாடும், செங்குன்ற நாடும் மலாடும் கிளியூர் மலையமான்களின் ஆட்சியில் இருந்தன ( A.R.No. 190 of 1934 -5) என்றும், கிளியூர் நாட்டுக் கிளியூர் மலையமான் பெரியன் (A.R.No. 223 of 1936 -7) மலையமான் சித்தவடவன் (A.R. No. 252 of 1936 - 7) முதலியோர் சிறப்பெய்தி யிருந்தனரென்றும் கல்வெட்டுக்களால் அறிகின்றோம்.
நிற்க, ஒருகால் கபிலர் மலையமான் திருமுடிக்காரியைக் காணச்சென்றபோது, அவன் யாவரையும் தன்னொப்பக் கருதும் கருத்தால் எல்லார்க்கும்போல அவர்க்கும் வேண்டும் சிறப்பினைச் செய்தான். அக்காலை அவர், “வேந்தே, யாவர்க்கும் ஈதல் எளிது; ஆயினும், ஈத்தது கொள்ளும் பரிசிலருடைய வரிசை யறிதல் அரிது; அதனை யறிந்து வழங்குவதே சிறப்பு. ஆதலால், புலவர் பால் வரிசைநோக்காது பொதுநோக்கு நோக்குதலை யொழிக” என்று இப்பாட்டால் வற்புறுத்தினார்.
உள்ளி - நினைந்து, பொதுநோக்கு - யாவரையும் ஒருதரமாகப் பார்த்தல்.
ஆசிரியப்பா
நெட்டிலை யிருப்பை வட்ட வான்பூ
வாடாதாயிற்
பீடுடைப் பிடியின் கோடேய்க் கும்மே
வாடினோ
பைந்தலைப் பரதவன் மனைதொறு முணங்குஞ்
செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே. 14
இது கபிலர் பிறந்தபோது பாடியது.
குறிப்பு:- இப்பாட்டினைக் கபிலரே பாடினரென்று, “நீதியார் மதூகநீழல் நெட்டிலை யிருப்பையென்றோர், காதல்கூர் பனுவல்பாடும் கபிலனார் பிறந்த மூதூர், சோதிசேர் வகுளநீழற் சிலம்பொலி துலங்கக்காட்டும், வேதநாயகனார் வாழும் வியன்திரு வாதவூரால்” (ஞானோப .4) என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுதலா லறியலாம்.
நெட்டிலை - நீண்டஇலை. வான்பூ - வெண்மையான பூ. பீடு - பெருமை. உணங்கும் - உலரும். இறவின் சீர் - இறாமீனின் துண்டு.
பெருந்தலைச் சாத்தனார்
ஆசிரியப்பா
ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தோ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலென் அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே. 15
இது தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
குறிப்பு :- பெருந்தலைச் சாத்தனார் ஆவூர் மூலங்கிழா ரென்ற நல்லிசைச் சான்றோருடைய மகனாராவர். இவர் கொங்கு நாட்டிலுள்ள பெருந்தலை யென்னு மூரில் வாழ்ந்தமையின் இவரைச் சான்றோர் பெருந்தலைச்சாத்தனார் என வழங்கினர். இவர்க்குக் குமணனுடைய கொடைப்புகழில் பேரீடுபாடுண்டு. குமணன் என்பவன் பழனி உடுமலைப்பேட்டை நாடுகளைச் சார்ந்த ஆனைமலைத் தொடரிலுள்ள முதிரமலைக் குரியன். இப்போது அங்குள்ள குமணமங்கலம் குமணனது பெயரை நினைவுறுத்துக் கொண்டிருக்கிறது. குமணன் என்னும் பெயருடனே தலைவர் சிலர் இடைக்காலத்தும் இருந்துள்ளனர். தொண்டை நாட்டு ஆமூர்க்கோட்டத்து ஆமுரில் குமணன் என்பவன் ஏரி குளங்களை வெட்டிய செய்தியை, இராயமங்கலத்துக் கல்வெட் டொன்று (A.R.No. 80 of 1933 -34) கூறுகிறது. இதுநிற்க, குமணனுடைய புகழ்மிகுதிகண்டு பொறாமையுற்ற அவன் இளவல், அவனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அவனையும் கொல்லுதற்குச் சூழ்ந்தான். அதனை அறிந்த குமணன், நாட்டின் நீங்கிக் காட்டையடைந்து வாழ்ந்து வந்தான். அக்காலத்தே பெருந்தலைச் சாத்தனார் மிக்க வறுமையுற்று அவன்பாற் பரிசில்பெற முதிரத்துக்கு வந்தார். வந்தவர் நாட்டில் நிகழ்ந்திருக்கும் செய்தி யறிந்து பெரிதும் ஏமாற்றமடைந்தார். ஆயினும், இளங்குமணன் மனத்திட் பமில்லாதவ னென்பதைச் சூழ்ந்தறிந்து, உடன்பிறந்தார் இருவர்க்கிடையே நிலவிய பகைமையைப் போக்கி ஒற்றுமை யுளதாக்குதற்கு முயல்வாராயினர். வேறு நெறி யொன்றும் புலப்படாமையால் காட்டில் குமணன் இருக்குமிடத்தை யறிந்து அவன்பாற் சென்று சேர்ந்தார். ஆங்கே அவற்குத் தன் கருத்தைப் புலப்படுத்தாது தன்பால் நின்று வருத்தும் வறுமைத் துன்பத்தை யெடுத்து விளங்கவோதி, “வேந்தே, நீ வயிரியர் வறுமை தீர்க்கும் குடியிற் பிறந்தவன்; வறுமையுற்று வாடும் என்மனைவியின் துன்பத்தைக் காணமாட்டேனாய் நின்னை நினைந்து வந்தேன். என் நிலை இதுவாகும்; இந்நிலையில் யான் நின்னை வளைத்துக் கொண்டு ஏதேனும் பரிசில் பெற்றல்லது மீண்டுசெல்லும் கருத்தினே னல்லேன்” என இப்பாட்டின்கண் குறித்துரைத்தார்.
ஆடு - சமைத்தல். ஆம்பி - காளான். உழவா - வருந்தி இல்லி - துளை. படர்ந்திசின் - நினைந்துவந்தேன். தொடுத்துங் கொள்ளாதமையலென் - வளைத்தாயினும் பரிசில் கொள்ளாது விடேன். வயிரியர் - கூத்தர்.
வெண்பா
ஆறு பெருக் கில்லா தருந்திடர்தான் பட்டாலும்
ஊறலமை யாதோ வுலகாற்றத் - தேற
வறியைநீ யானாலு மென்வறுமை தீர்க்கச்
சிறியையோ சீர்க்குமணா செப்பு. 16
இதுவு மது. இந்தப் பாட்டுக்குக் குமணன் தலைகொடுத்தது.
குறிப்பு :- “இந்நிலைத் தொடுத்துங் கொள்ளா தமையலென்” என்று பெருந்தலைச் சாத்தனார் கூறியதுகேட்ட குமண வள்ளற்குச் செய்வதறிய லாகாத திகைப்புண்டா யிற்று. அவரது வறுமையை நோக்கினான்; தன் னாடிருந்த திசையை நோக்கினான்; தானிருந்த காட்டை நோக்கினான்; தன்னையும் நோக்கினான். அவன் தடுமாற்றத்தை நோக்கினார் பெருந்தலைச் சாத்தனார்; “நீ மிக்க வறுமையுற்றிருப்பதை நான் அறி வேன்; ஆயினும், என் வறுமையைத் தீர்க்கமாட்டாத அத்துணைச் சிறுமை உனக்கு உண்டாகவில்லை; ஆறானது நீர்பெருகுதலின்றி வறண்டு மேடு பட்டபோதும் அதன் ஊற்று உலகிற்கு நீரளித்து உதவுகின்றதன்றோ?” என்ற கருத்த மைந்த இந்த வெண்பாவைப் பாடினார். இதுகேட்ட குமணன் தன் தலையைக் கொண்டு வருவோருக்கு. மிக்க பொருள் தருவதாகத் தன் தம்பி பறையறைந்திருக்கும் செய்தியை நினைவுகூர்ந்தான். தன் கைவாளைப் பெருந்தலைச் சாத்தனார் கையிற்றந்து, “இதனால் என் தலையைக் கொய்து கொண்டுசென்று என் தம்பிக்குக் காட்டிப் பொருள் பெற்றுச் சென்று, நீவிர் நுமது வறுமையை நீக்கிக்கொள்ளுதிர்” என மொழிந்தான்.
அருந்திடர் - எளிதில் போக்கமுடியாத மேடு, ஊறல் - ஊற்று. உலகாற்ற - உலகிற்கு உதவிசெய்ய. தேற - மிகவும்; தெளிவாக. வறியையேயானாலும் என்றும் பாடம்.
கோவூர் கிழார்
ஆசிரியப்பா
இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்னகண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே
இருவீர் வேற் லியற்கையு மன்றே, அதனால்;
குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. 17
இஃது உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியையும் அடைத் திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர்கிழார் பாடியது.
குறிப்பு :- சோழன் நலங்கிள்ளியும் சோழன் நெடுங் கிள்ளியும் ஒரு குடியிற் பிறந்து வேறு வேறிடங்களிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில் இருவர்க்கும் எவ் வகையாலோ பகைமை யுண்டாக, அதனால் போரும் நிகழ்வதாயிற்று. தொடக்கத்தில் சோழன் நெடுங்கிள்ளி நலங்கிள்ளிக்குரிய ஆவூர்க் கூற்றத்தைக் கைப்பற்றி ஆவூரிற் றங்கினான். ஆவூர்க்கூற்றம் திருக்கருகாவூர், திருவவளிவணல்லூர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. (A.R.No. 174 & 179 of 1930 -31) சோழன் நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தினின்றும் போந்து ஆவூரை வென்றுகொண்டான்; நெடுங்கிள்ளி தோற் றோடித் தனது உறையூரில் தங்கினான். வலியப் போர்தொடுத்த நெடுங்கிள்ளியை விடாது தொடர்ந்து சென்ற நலங்கிள்ளி உறையூரைச் சூழ்ந்துகொண்டான். அக் காலையில் நெடுங்கிள்ளி போர்க்கெழும் வலியின்றி அடைபட்டுக் கிடந்தான். சோழர்குடிக் குரியராகிய இருவர் தம்முள் பகைகொண்டு மாறி மாறிப் போர்செய்து வலியழிந்து கெடுவது நன்றன்றெனத் தெரிந்த சான்றோராகிய கோவூர்கிழார் இருவரையும் தனித் தனியே கண்டு, “நின்னோடு போர்செய்பவன் பனந்தோ டணிந்த சேரனுமல்லன்; வேம்புமாலையணிந்த பாண்டியனுமல்லன்; நீவிர் இருவரும் சூடுவது சோழர்க்குரிய ஆத்திமாலையே; நும்மில் ஒருவர் தோற்பினும் சோழர் குடியே தோற்றதென்ற சொல்லே யுண்டாகும்; இருவரும் வெல்வதென்பதும் உலகில் இயல்பன்று; இச்செயல் பகைவர் இகழ்தற்கு இடமேயன்றி நும் குடிக்குரிய புகழ்தரும் செயலாகாது” என்று இப்பாட்டால் வற்புறுத்திப் போர் நிகழாவாறு தடுத்தார்.
ஆர் - ஆத்திப்பூ. வேறல் - வெற்றி பெறுதல். குடிப்பொருள் - குடிக்குத் தக்க செயல். மெய்ம்மலி உவகை- உடம்புபூரிக்கும் உவகை. இகல் - மாறுபாடு.
ஆசிரியப்பா
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய வென்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ வின்றே திறப்பட
நண்ணார் நாண வண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ்
மண்ணாள் செல்வ மெய்திய
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. 18
இது, சோழன் நலங்கிள்ளி யுழைநின்று உறையூர் புக்க இளந்தத் தனை நெடுங்கிள்ளி ஒற்றுவந்தானென்று கொல்லப் புக்குழிக் கோவூர்க்கிழார் பாடி உய்யக்கொண்டது.
குறிப்பு:- நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்திலும், நெடுங் கிள்ளி உறையூரிலும் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில் இருவர்க்கும் இடையே எவ்வகையாலோ கருத்து வேறுபாடும், அதுவே வாயிலாகப் பகைமையும் உண்டாகிப் படிப்படியாகப் போர் மூளுதற்கேற்ற ஏது நிகழ்ச்சிகட்கு அடிப்படை கோலிவந்தன. அவ்வகையால், ஒரு கால் சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்த னென்னும் ஒரு புலவன் உறையூர்க்கு வந்தான். அவன் ஒருகால் நலங்கிள்ளி பொருட்டு ஒற்றுவந்திருக்கலாமெனச் சிலர் நெடுங்கிள்ளிக் குரைத்து அவன் மனத்திற் சினத்தீயைத்தூண்டி யெழுப்பினர். இளந்தத்தனை வினவியதற்கு அவன் புலமைக் குரிய செம்மாப்புடன் விடையிறுத்தான். நெடுங்கிள்ளி அவனைக் கொலைசெய்யுமாறு பணித்தான். இச்செய்தி ஆங்கே இருந்த கோவூர் கிழார் செவிக்கு எட்டியது. அவர் நெடுங்கிள்ளிபால் வந்து உண்மையை எடுத்தோதி இளந்தத்தனை உய்வித்தார். அக்காலையில் அவர் இப்பாட்டினைப் பாடினார். இதன்கண், “வேந்தே, வரிசை நோக்கி வாழும் புலவரது பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீங்குசெய்வதன்று; பழுத்தமரங்களை நாடிச்சென்று சேரும் பறவைபோல வள்ளியோரை நாடிச்சென்று அவரைப் பாடி அவர்தரும் பொருள் கொண்டு பகுத்துண்டு பல்லுயி ரோம்புவது பரிசிலர் தொழில்; மண்ணாளும் செல்வமுடைய நும்போலும் வேந்தரை யொப்பக் கல்வியால் மாறுபட்டோரைத் தம் புலமையால்வென்று தலைமை பெறுவது அவர்க்கு இயல்பு. அத்தலைமைபற்றி அவரைப் பிறழவுணர்ந்து கொலைபுரியக் கருதுவது அறமன்று” எனத் தெருட்டியுள்ளார்.
ஓம்பாதுண்டு - தாமும் பொருளைப் பாதுகாவது உண்டு. கூம்பாதுவீசி - உள்ளம்மலர்ந்து வழங்கி. அண்ணாந்தேகி - தமது கல்வியால் வென்று தலையெடுத்து நடந்து. வடியா நாவின் வல்லாங்குப்பாடி - திருந்தாத நாவால் தாம் வல்லபடி பாடி. செம்மல் செவ்வியதலைமை.
ஆசிரியப்பா
நீயே, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர் 19
களிறுகண் டழூஉ மழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. 20
இது, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மலையமான் மக்களை யானைக்கிடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது.
குறிப்பு :- கிள்ளிவளவன் சோழவேந்தர்களுள் ஒருவன். இவன் தன் இறுதிநாளில் குளமுற்றம் என்னும் ஊரில் போர்ப் புண்பட்டு இறந்ததனால், பின்வந்த சான்றோர் இவனைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என வழங்கினர். இவன் ஆட்சி புரிந்த காலத்தில் இவனுக்கும் மலையமானுக்கும் பகைமை யுண்டாயிற்று. மலையமான்கள் திருக்கோவலுரைத் தலை நகராகக் கொண்ட மலாடு என்ற பகுதியை ஆண்ட வேந்தராவர். மலையமான் நாடு மலாடென வந்தது. கிள்ளிவளவன் மலைய மானோடு போர்செய்து அவனை வென்று. அவன் மக்களைப் பற்றிக் கொணர்ந்து அருள் சிறிதுமின்றி அவர்களை யானைக் காலில் இட்டுக் கொல்லக்கருதினான். கொலையானை யொன்றும் கொணரப்பட்டது. மலையமான் மக்களும் அதன்முன் நிறுத்தப் பட்டனர். அவர்களும் அதனைக் கண்டதும் அஞ்சியழுதனர். உடனே அச்செய்திகேட்டு விரைந்தோடிவந்த கோவூர்கிழார் தடுத்தனர். அந்த மக்களும் அழுகை மறந்து அவரை நோக்கினர். அவர் மனங் குழைந்து, “வேந்தே, நீ புறாவின்பொருட்டுத் தன்னையே வழங்கிய சோழன் மரபிற் பிறந்தவன்; இவர்களோ புலவர்கட்குப் பெருங் கொடை நல்கி வாழும் பெரியோர் மரபினர்; மிகவும் இளையர். களிறுகண்டஞ்சிய அழுகைநீங்கி, இக்கொலைக்களத்தை மருண்டு நோக்கி இதுகாறும் தாம் கண்டறியாத மனவேதனை யெய்துகின்றனர்; அருள்செய்வது பேரறமாகும்; யான் கூறுமிதனைக் கேட்டுப் பின்னர் நீ விரும்புவது செய்க” என்ற கருந்தமைந்த இப்பாட்டினைப் பாடினர். சோழனும் தான் மேற் கொண்ட தீச்செயலைக் கைவிட்டான்.
மருகன் - வழித்தோன்றியவன். புலன் உழுதுண்மார் - அறிவான் உழுதுண்ணும் கற்றோர். மன்று - ஈண்டுக் கொலைக்களம். செய்ம்மே - செய்வாயாக.
சாத் தந்தையார்
சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்டமாரி ஞான்றஞா யிற்றுக்
கட்டி னிணக்கு மிழிசினன் கையது
போழ்துண்டு டூசியின் விரைந்தன்று மாதோ.
ஊர்கொள வந்த பொருநனோ
டார்புனை தெரிய னெடுந்தகை போரே. 21
இது கோப்பெரு நற்கிள்ளி முக்காவனாட்டு ஆழர்மல்லனைப் பொருதட்டு நின்றானைச் சாத் தந்தையார் பாடியது.
குறிப்பு :- கோப்பெருநற்கிள்ளி தித்தன் என்னும் சோழனுக்கு மகன். இக்கிள்ளிக்கு மற்போர் முதலியன செய்து இன்புறுவதில் பெருவிருப்புண்டு. அதனால் இவன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியெனவும் வழங்கப்படுவன். ஒருகால் இவன் தன் தந்தை யொடு கருத்து வேறுபாடுகொண்டு முக்காவல் நாட்டு ஆமூரில் இருந்துவந்தான். அங்கும் போரவைகூட்டி வீரரை வருவித்து மற்போர் முதலியன நிகழ்த்தி இன்புற்றான். அப்போது முக்காவல் நாட்டு ஆமூரில் வாழ்ந்த மல்லனொருவனோடு இக்கிள்ளியே மற்போர்செய்து மாண்புற்றான். அக்காலை அதனை நேரிற் கண்டு இன்புற்ற சான்றோர் இச்சாத்தந்தையார். சாத்தந்தை யென்பது சாத்தன் தந்தையெனப் பொருள்படு மாயினும், ஈண்டு, ஆந்தையார், கீரந்தையார் என்பனபோல இயற் பெயராகவே யுளது. இவர் இக்கிள்ளியின் போர்ப்புகழில் பேரீடுபாடு உடையர். இப்பாட்டின் கண், பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனொடு செய்த மற்போரின் மாண்பையும் விரைவையும் கண்டு வியந்து பாடியுள்ளார். முக்காவல்நாட்டு ஆமூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் வடகரைநாட்டில், தென்கரைக் குளித்தலைக்கு நேர்வடக்கில் உள்ளது.
சாறுதலைக்கொண்டென - ஊரின்கண் விழாத்தொடங் கிற்றாக அவ்விழாவிற் குதவப்போகவும். பெண்ஈற்று உற்றென - தன்மனைவி பிள்ளைபெறுதலைப் பொருந்தினாளாக அவள் மெய்ந்நோவிற் குதவப்போகவும். கட்டில்நிணக்கும் இழிசினன் - கட்டிலைப் பிணிக்கும் புலைமகன். மற்போரில் வென்றார்க்கு இந்த ஆமூர் உரியது எனத் தெரிவித்திருந்தமையின், மற்போர் செய்ய வந்த மல்லன், “ஊர்கொளவந்த பொருநன்” என்று கூறப் பட்டான். போழ்துன் னூசியென்றும் போர்தரவந்த பொருந னென்றும் பாடவேறுபாடுண்டு.
சங்கத்தார்
காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி
வேலையுங் குளனும் வெடிபடச் சுவறித்
தந்தையை மக்கள் முகம் பாராமே
வெந்த சாகம் வெவ்வே றருந்திக்
குணனுள தனையுங் கொடுத்து வாழ்ந்த
கணவனை மகளிர் கண்பா ராமல்
விழித்த விழியெல்லாம் வேற்று விழியாகி
அறவுரை யின்றி மறவுரை பெருகி
உறைமறந் தொழிந்த வூழிக் காலத்துத்
தாயில் லவர்க்குத் தாயே யாகியும்
தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவும்
இந்த ஞாலத் திடுக்கண் டீர
வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்
நீலஞ் சேரு நெடுமால் போல்வன்
ஆலஞ்சேரி மயிந்த னென்பான்
ஊருண் கேணி நீரொப் போனே
தன்குறை சொல்லான் பிறர்பழி யுரையான்
மறந்தும் பொய்யான் வாய்மையுங் குன்றான்
இறந்து போகா தெம்மைக் காத்தான்
வருந்தல் வேண்டா வழுதி
இருந்தன மிருந்தன மிடர்க டீர்ந்தனமே. 22
இது, பாண்டியன் வற்கடகாலத்து நம்மைத் தாங்கியோர் யாரென்றவற்குச் சங்கத்தார் பாடியது.
குறிப்பு:- சிலப்பதிகாரக்காலமாகிய இரண்டாம் நூற்றாண் டிற்குப்பின்னும் பல்லவராட்சி தமிழகத்திற்றோன்றுதற்கு
முன்னுமாகிய காலங்கட் கிடைப்பட்ட காலத்தில் பௌத்தரும், சமணரும் தோன்றித் தங்கள் சமயக் கருத்துக்களை நாட்டிற் பரப்பும் பொருட்டுச் சங்கங்களை யேற்படுத்தியிருந்தனர். அச்சங்கத்தார் காலமொன்றில் பாண்டிநாட்டில் வற்கடமுண்டாயிற்று. பாண்டி வேந்தன் அவர்களை யாதரிக்கும் பொருள்நலம் இலனாயினான். அவர்கள் வடக்கே சோழநாட்டிலும் பிற நாடுகளிலும் சென்று தங்கினர். அவர்கள் நீங்கிய காலத்திற்றான் நாலடியார் முதலிய நூல்கள் சில தொகுக்கப்பட்டன. வற்கடம் நீங்கி நாடு நாடானபின், அச்சங்கத்தார் பாண்டிநாடு திரும்பி வந்து சேர்ந்தனர். சேர்ந்தவர்களைப் பாண்டியன் நலம் வினவினான். அவர்கள் தம்மைச் சோழநாட்டு ஆலஞ்சேரியில் வாழ்ந்த, மயிந்தனென்பவன் கண்டு தன்னூர்க்கு அழைத்துச்சென்று தந்தை போலவும் தாய்போலவும் பேணிப் புறந்தந்தனன் என இப்பாட்டில் உரைத்துக்காட்டினர். இச்சங்கத்தார் ஆலஞ்சேரியிலிருந்தபோது பாண்டியன் அவர் நலமறியும் பொருட்டுத் தூதுவிட, அத்தூதிற்கு விடையாக இப்பாட்டை யெழுதி விடுத்தனரென்றும் கூறுவர். இச்செய்தியைச் சோழமண்டல சதகமுடையார், “பயந்த மழைநீர் பெய்யாது பன்னீ ராண்டு பஞ்சமுற, வியந்த சங்கத் தமிழோர்க்கு வெவ்வேறுதவி விடிந்தவுடன், நயந்த காலை யெனுந்தமிழை நாட்டுந் துரையா லஞ்சேரி, மயிந்த னுயர்பாண்டியன் புகழ வாழ்ந்தோன் சோழ மண்டலமே” (30) என்றனர். ஆசிரியர் நச்சினார்க்கினியாரும்,“அவருள் உழுவித் துண்போர் மண்டிலமாக்களும் தண்டத் தலை வருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும்… நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும்…. பதியிற் றோன்றி…. முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராகுப இருங்கோ வேண்மானருங்கடிப் பிடவூர் (புறம்.395) எனவும், ’ஆலஞ்சேரி மயிந்தன்………… ஊருண்கேணி நீரொப்போ’னெனவும் செய்யுட் செய்தார்” எனக் கூறுவர்.
சாகம் - இலைக்கறி. உறை - மழை. ஊருண்கேணி - ஊரார் உண்ணும்நீர் நிறைந்த கிணறு. சில ஏடுகளில் ஊரூண்கேணி நீரொப்போனே என்ற அடியில்லை. அயிந்தனென்றும் பாடம். இடர்கெடுத்தனனே என்றும் இடர்கெடுத்தின்னேயென்றும் பாடவேறுபாடுண்டு.
திருவள்ளுவர்
வெண்பா
பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவி யளந்தோனுந் தாமிருக்க - நாவில்
இழைநக்கி நூனெருடு மேழையறி வேனோ
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து. 23
இது, திருவாலங்காட்டுத் திருநடங் கண்டீரோ வென்று முனிவர் கேட்கத் திருவள்ளுவர் பாடியது.
குறிப்பு :- திருவள்ளுவனார் தாம்பாடிய திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றி அச்சங்கப் புலவர் களுடன் இனிது உரையாடிக் கொண்டிருக்கையில், அங்கே யிருந்த முனிவர்கள், “நீ மயிலாப்பூரில் உள்ளீரே; அண்மையில் உள்ள திருவாலங் காட்டில் இறைவனார் இயற்றும் திருக்கூத்தைக் கண்டீரோ?” என வினவினர். அத் திருநடம் காணும் பேறு தனக்கு இல்லை யெனவும், தாம் மேற்கொண்டிருந்த நெசவுத் தொழில் தடையாகயிருந்த தெனவும் இப்பாட்டால் குறிப்பாகவும், “பிரமனும் உலகளந்த திருமாலும் காண்டற்கரிய திருமுடியும் திருவடியுமுடைய இறைவன் திருமுடி யசைத்துத் திருவடி தூக்கி யாடும் திருக்கூத்தைக் காண்பது எங்ஙனம்” என வெளிப்படை யாகவும் விடைகூறினார்.
பிஞ்ஞகம் - பின்னகம் என்னும் தலைக்கோலமுடைய இறைவன். பின்னகம், பிஞ்ஞகம் என வந்தது, அன்னை அஞ்ஞை என வருதல்போல, நூல்நெருடுதல் - நூலைத் திரித்தல்.
ஒளவையார்
வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே. 24
இஃது ஓளவையார் தமக்கு நெல்லிப்பழம் கொடுத்த அதியமானைப் பாடியது.
குறிப்பு :- அதியர் என்பவர் தமிழகத்துக் குடிவகையினருள் ஒரு சாரா ராவர். அவர்கட்குத் தலைவன் அதியமான் எனப்படுவன். அதனால் நெடுமானஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சியென வழங்கப்படுவானாயினன். அஞ்சியின் தலைநகர் தகடூர் என்பது. சேல நாட்டிலுள்ள தருமபுரியென்னுமூர் தகடூரென்றும், அதன் பகுதியைச் சார்ந்த அதமன்கோட்டை யென்பது அதியமான் கோட்டை யென்பதன் மரூஉவென்றும் கூறுவர். தருமபுரி நாட்டி லுள்ள பாப்பாரப்பட்டியிலுள்ள கல்வெட்டொன்று “நிகரிலி சோழமண்டலத்துத் தகடூர்நாட்டுந் தகடூ”ரென அவ்வூரைக் குறிக்கிறது (A.R.No. 235of 1927-8). இந்த அதியமான் நெடுமானஞ்சி ஒரு குறுநில மன்னன் சேரர்கட்குரியனாய் அவர்கட்குரிய கண்ணியும், தாரும் தனக்கும் உரியவாகக் கொண்டவன்; மழவ ரென்னும் ஒருசார் கூட்டத்தாருக்கும் தலைவன். கொங்கு நாட்டுக் கொல்லிமலைக்குத் தெற்கில் காவிரியின் வடகரைப் பகுதியால் இவனை மழவர் பெருமகன் என்பது வழக்கம். இவன் ஒருகால் தன்னாட்டு மலையொன்றில், உச்சிப்பிளவின் சரிவில் நின்ற அருநெல்லிமரத்தின் அருங்கனியைப் பெற்றான். அக்கனி தன்னையுண்டாரை நெடிதுநாள் வாழப்பண்ணும் ஆற்றலுடைய தென் ஆங்கிருந்த சான்றோர்களால் அறிந்தான் அதனைப் பெற்ற அதியமான், இச் செய்தி யறிந்தும், அதனைத் தானே உண்டொழியாது தன் அவைக்களத்தே யிருந்து புலமைநலந்தால் சிறப்புச் செய்து கொண்டிருந்த ஒளவையாருக்கு அளித்து உண்பித்தான். ஒளவையார் அதனையுண்ட பின்பு அதன் ஆற்றலையும் தெரிவித்தான். அதுகண்டு பெருவியப் புற்ற ஒளவையார் இப்பாட்டால் அவனைப் பாராட்டிப் புகழ்ந்தார். இதன்கண், “அதியர் கோமானே, சென்னியில் பிறைவிளங்க, கடல்விடத்தை யுண்டும் கருத்த திருக்கழுத்தோடு நிலைபெற்றிருக்கும் இறைவன்போல நீ ‘நெடிது வாழ்வாயாக; தன்னையுண்டாரை நெடிது வாழப்பண்ணும் ஆற்றலுடையது இந்த அருங்கனி யென்ப தறிந்தும், இதனை நீயே உண்ணக் கருதாது, அதன் ஆற்றலையும் எனக்குரையாது நின் மனத்தே மறைத்துக் கொண்டு யான் சாதலினின்றும் நீங்குமாறு எனக்கு அளித்தாய். தன்னை யுண்டாரைச் சாவப்பண்ணும் நஞ்சினைத் தானுண்டு ஏனைத் தேவருக்கு அமுதம் தந்த இறைவன், அமுதுண்டவர் சாவவும் நஞ்சுண்ட தான் சாவாது நிலைபெற்றி ருக்கின்றான். அவனைப்போல நீயும், சாதலை நீக்கும் கனியை எமக்குத் தந்து சிறப்பித்தா யாகலின், அவனை யொப்ப நீயும் அருள்பெருக தனிக்கடலாய் அமைந்தனை” என்றார்.
வலம்படு வாய்வாள் - வென்றி தருதலில் தப்பாத வாள். கழல்தொடி - கழலவிடப்பட்ட வீரவளை. ஆர்கலி - மிக்க ஆரவாரம். குறியாது - பெறுதற் கரிதென்று கருதாமல்.
வெண்பா
பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கு
மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றி னாவை
அறுப்பித்தா யாமலகந் தந்து. 25.
இஃது அப்போது பாடியது.
குறிப்பு :- இப்பாட்டிற் குறிக்கப்படும் அதியமான்; அதிய மான் நெடுமானஞ்சியின் குடியில் தோன்றியவனாதல் வேண்டும். இடைக்காலத்தில் அதியமான்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் தம்பால் வரும் புலவர்கட்குத் தங்கள் முன்னோன்போல நெல்லிக்கனி தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இடைக் காலத்தில் இருந்த ஒளவையார் பெண்ணையாற்றின் கரையிலுள்ள மீ கொன்றை நாட்டுப் புல்வேளூர்ப் பூதன்பால் விருந்துண்டு மேம்பட்டவர். அவர் இடைக்கால அதியமானொருவன் தனக்கு நெல்லிக்கனி தரப்பெற்றுப் பெருமகிழ்ச்சி கொண்டு இவ்வெண் பாவைப் பாடினாராதல் வேண்டும். பின்வந்தோர் சங்க காலத்து ஒளவையார் பாட்டாகவே இதனையும் கருதிவிட்டனர். இவ் வெண்பாவின் நடை சங்ககால நடையன்று.
பூங்கமலவாவி - அழகிய தாமரைகள் நிறைந்த குளம். புல்வேளூர் திருவண்ணாமலை நாட்டில் உள்ளது. ஆமலகம் - நெல்லிக் கனி.
வெண்பா
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென் றேபுளித்த மோரும் - பரிவுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ
றெல்லா வுலகும் பெறும். 26
இஃது ஒளவையார் புல்வேளூர்ப் பூதன் தமக்கு வரகு சோறிட்ட போது பாடியது.
குறிப்பு :- புல்வேளூ ரொன்று செங்கற்பட்டு நாட்டில் உள்ளது. இப்போது அது புல்லலூரென வழங்குகிறது. ஆயினும் கல்வெட்டுக்கள் அதனை எயிற்கோட்டத்துப் புல்வேளூர் (A.R.No. 46 of 1923) என்று கூறுகின்றன. இப்பாட்டிலுள்ள புல்வேளூர் பெண்ணையாற்றின் வடகரையில் பல்குன்றக் கோட்டத்துப் பகுதியில் மீகொன்றை நாட்டில் உள்ளது. இஃது ஒருகாலத்துப் பெருவேளூராயிருந்து (A.R.No 66of 1933- 34) பின்னர் மேல் வேளூர் கீழ்வேளூரெனப் பிரிந்திருந்தது (A.R.No. 69of 1933. 34) அங்குள்ள நடுக்கல்லொன்றைப் பூதங்கோயில் என அவ்வூரவர் கூறுகின்றனர். அதிலுள்ள கல்வெட்டு “மீ கொன்ற நாட்டு மேல் வேளூர்ப் பொங்காலத் தொண்டைமான் மகன் வேம்படி யென்பவன் “கரந்தைப் போர் செய்து நிறைமீட்டபின் இறந்த தன்பொருட்டு நடப்பட்டதெனக் கூறுகிறது. (Vide also A.R.No. 67 of 1933 -4) அக் கல் நிற்குமிடம் பூதங்கோயில் என வழி வழியாக வழங்கப்படுவதால், ஒளவையார் காலத்துப் பூதன் என்ற வள்ளலது கோயில் (அரண்மனை) அவ்விடத்திருந் திருக்கலாமென எண்ணற் கிடனாகிறது. ஒருகால் ஒளவையார் புல்வேளூர்ப் பூதன் தன் நிலங்கட்குக் கிணற்றுநீரை இறைத்துப் பாய்ச்சுவதை மேற்பார்வை செய்து வருகையில், அவனைக் கண்டு தமது பசி வருத்தம் கூறினார். அவற்கு அப்போது வர கரிசிச் சோறும் வழுதுணங்காய் வறுவலும் மிகப் புளித்த மோரும் வந்திருக்க அவ்வுணவை ஒளவையாருக்குத் தந்து பூதன் மகிழ் பூத்தான். ஒளவையார் பசி தீர்ந்து மனம் கனிந்து அன்பால் இவ் வெண்பாவைப் பாடினர். வாழைத்தோட்டத்துக்குப் பூதன் நீர்பாய்ச்சிக்கொண்டிருந்தா னென்றும், ஒளவையார் “அழியா வாழையும் ஒழியாக் கிணறு மாகுக” வென்று வரந்தந்தாரென்றும் கூறுவர். தொண்டைமண்டல சதகம், “சொல்லாயு மௌவை பரிவாய் தனக்கிட்ட சோறுலக, மெல்லாம் பெறுமென்று பாட்டோதப் பெற்றவளின்னருளாற், கல்லாரற் சுற்றிக் கிணறேறிப் பாயும் கழனிபெற்றான், வல்லாளன் பூத மகிபாலனுந் தொண்டை மண்டலமே” ( 54.) என்று கூறுவது காண்க. இனி, இத் தொண்டை மண்டல சதகத்துக்கு உரையும் வரலாற்றுக் குறிப்பும் எழுதிய திரு.சி.கு.நாராயணசாமி முதலியார், புல்வேளூ ரென்று இப்பாட்டுக் குறிப்பது காஞ்சி புரத்துக்கு வடக்கிலுள்ள எயிற் கோட்டத்துப் புல்வேளூரேயா மெனக்கருதி, அவ்வூரில் ஒளவையார் சிறப்பித்த கிணறும் நன்செய் நிலமும் இன்றும் உள்ளனவென்றும், “மழையின்றிய கடுங்கோடையிலும் இக் கிணற்றுநீர் அருகிலுள்ள வாழைக்கொல்லைக்கும் நெல் வயலுக்கும் தானே சுரந்து பாய்ந்து பயன்றந்து ஆயிரம் வருஷத்திற்கு முன்னடந்ததொரு சம்பவத்தை இன்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னே தமிழ்ப் புலமையின் பெருமை!” என்றும் குறித்துள்ளார். ஈது உண்மையாயின், “ஆங்கு வருபாற் பெண்ணை யாற்றினையும்” (25 என்றதற்கு ஆங்கே ஓடிவருகின்ற பாலியாறாகிய பெண்ணையாறு என்று கொள்ளல்வேண்டும். ஒரு காலத்தே பாலியாறு காஞ்சி புரத்துக்கு வடக்கே ஓடிற்றென் பதற்குச் சைவத் திருமுறைகளும் கல்வெட்டுக் களும் பிறவும் சான்று பகருகின்றன.
வழுதுணங்காய் வாட்டு - கத்தரிக்காய்ப் பொரியல், சோறு எல்லாவுலகும்பெறும் - சோற்றுக்கு எல்லா வுலகினையும் ஈடாகத்தரலாம். அத்துணை நலமுடையது.
வெண்பா
வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா - னாதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்
யாதவர்கோ னில்லை யினிது. 27
இது, பழையனூர்க் காரிக்கு ஆடு வாங்கிக் கொடுக்க, வாதவன், வத்தவன், யாதவன் மூவரிடத்தும் போய் அவர்கள் கொடாதபடியினாலே சேரமானிடத்துப் போய் ஒளவையார் சொல்லியது.
குறிப்பு:- இங்கே கூறிய வாதவன் முதலியோரை வாதக் கோன் வஞ்சிக்கோன் ஏதக்கோன் என்று கூறுதலு முண்டு. யாதவர்கோன் சொல்லே யினிது என்றும் பாடவேறுபாடுண்டு. பழையனூரென்ற பெயரால் ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூரும் (A.R.No. 270 of 1927), திருபாசூர்க் கோயிற்குத் தேவதானமாகக் குறிக்கப்படும் பழைய னூரும் (A.R.No. 128 of 1929 -30) திருவாலங்காட்டருகே யொரு பழையனூருமெனப் பலவூர்கள் உள்ளன. திருப்பாசூர்க் கோயிற்குத் தேவதானமானது திருப்பாசூர்க் கருகில் உள்ளதாய் ஈக்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த ஊராமெனத் திருப்பாசூர் கல்வெட் டொன்றால் (A.R.No. 109 of 1929 - 30) அறியலாம். இப் பழையனூர் ஒன்றில் வாழ்ந்த வேளாண் தலைமக்களில் காரி யென்பவன் ஒருவன்; ஒளவையார்பால் பெருமதிப்புடையவன். ஒருகால் இவற்கு ஆடு ஒன்று வேண்டியிருந்தது. அதனையறிந்த ஒளவையார் அக்காலத்தே தாமறிந்த செல்வருள் வாதவன், வத்தவன் யாதவன் என்ற மூவரையும் கண்டு ஆடு ஒன்று தருமாறு கேட்க, அவர் மூவரும் முறையே பின்னையென்றும் நாளை யென்றும் ஒன்றும் இல்லையென்றும் கூறினர். பின்பு அவர் அக்காலத்தே சேரநாட்டில் இருந்து ஆட்சிபுரிந்த சேர மன்னனைக் கண்டு கேட்டார். அப்போது அச்சேரமானுக்கு இப்பாட்டைப் பாடிக் காட்டினார்.
வெண்பா
சிறப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச்
சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந்தான்
இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தங்கொடையின் சீர். 28
இது, சேரமான் பொன்னாடு கொடுக்க, அப்பொழுது ஒளவையார் பாடியது.
குறிப்பு :- வாதவன் முதலிய மூவர் செயலையும் சொல்லையும் ஒளவையார் உரைக்கக் கேட்ட சேரவேந்தன் பொன்னால் ஆடொன்று செய்து அவர்க்கு வழங்கினான். அது பெற்ற மகிழ்ச்சியால் ஒளவையார் அவனெதிரே இதனைப் பாடினார். பொன்னாட்டைச் சேரன் கொடுத்தபோது ஒளவையார், “சேரா, உன்னாடு பொன்னாடு” என்றாரென நாட்டிற் பலரும் கூறும் வழக்கொன்று முண்டு. உன்னாடு என்பது உனது ஆடு என்றும், உன்னுடைய நாடு என்றும், பொன்னாடு என்பது பொன்னாலாகிய ஆடு என்றும், பொன்வளம் மிக்க நாடு என்றும் இருபொருள் பயந்து நிற்கும்.
சுரப்பாடு - குட்டிக்குப் பால் தரும் ஆடு. ஒளவையாருடைய வரிசையும் தனது தகுதியும் நோக்கிச் சேரமான் பொன்னாலாகிய ஆடு தந்தானாகலின், “கொடுப்பவர் தாம் அறிவர் தங்கொடையின் சீர்” என்றார்.
வெண்பா
தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு. 29
பத்தம்பிற் பாதி யுடையா னிரண்டம்பிற்
கொத்தம்பி யென்பாள் கொளப்புக்குச் - சுத்தப்
பசும்பொ னரவல்குற் பாவையர்க்குத் தோற்று
விசும்பிடைவைத் தேகினான் வில். 30
இவை பொய்யா மொழியார் பாதி பாட ஒளவையார் பாதி பாடியவை.
குறிப்பு: - ஒருகாற் பொய்யாமொழிப் புலவர் சோழ நாட்டிலுள்ள அம்பர் என்னும் ஊர்க்குச் சென்றிருக்கையில், அங்கே வாழ்ந்த சிலம்பி யென்பா ளொருத்தியைக் கண்டார். முற்காலத்தே, தேவரடியார்களாய்ப் பூத்தொடுத்தல் நெற்குற்றுதல், திருவலகும் திருமெழுக்கும் இடுதல் முதலிய கோயிற்றிருப் பணிகளோடு சாந்திக்கூத்து, தமிழ்க்கூத்து, திருப்பாட்டோதுதல் முதலிய பணிபுரிந்து வந்த மகளிர் பிற்காலத்தே தேவரடி யராதலோடு, தம்முடைய ஆடல் பாடல் அழகுகளைக் காட்டி செல்வர் செல்வம் பறிக்கும் பொருட்பெண்டிரு மாயினர். அங்ஙனமாகிய மகளிரில் சிலப்பி யென்பவளும் ஒருத்தியாவாள். அவள் பொய்யா மொழியாரின் புலமைச்சிறப்பைக் கேள்வியுற்றிருந்தாளாதலால் அவரைத் தன்னைக் குறித்துப் பாட்டியற்று மாறு வேண்டினாள். புகழெனின் உயிர்கொடுக்கும் புரையோர் வாழும் நாடு தமிழ் நாடு. புலவர் பாடும் புகழ் பெற்றோர் ஏனைப் புகழ் பெற்றோரினும் மிக்கோரெனக் கருதுவது அந்நாளை இயல்பு. அதனால் அவள் மிக்க பொருள் கொடுத்தேனும் அவராற் பாடப் படுவதில் விருப்பம் உடையளானாள். பாட்டுப் பாடுதற்கு அவள் அவர் கேட்கும் பொருள் தர இயலாதவளானாள். அதனால் அவர் பாதிபாதியாக இரண்டு வெண்பாக்களைப் பாடிக்கொடுத்துப் போய்விட்டார். பொருள்கொடுத்தும் குறைப்பாட்டு பெற நேர்ந்தது குறித்து அவட்கு வருத்தமே உண்டாயிற்று. நாட்கள் சில கழிந்தன ஒரு நாள் அவ்வூர்க்கு ஒளவையார் வந்தார். அவர் வரவறிந்த சிலம்பி அவரை வரவேற்று இனிய உணவு தந்து நிகழ்ந்தது முற்றும் கூறினாள். ஒளவையார் உடனே அவ்விரு வெண்பாக்களையும் பின் பாதி பாடி முடித்துவிட்டுச் சென்றார். சிலம்பியும் மனக்குறை நீங்கி மகிழ்வெய்தினாள். அவ்வெண் பாக்கள் இரண்டும் இவையே யாம். இவற்றின் முதலிரண்டடி பொய்யாமொழி பாடியன; பின்னிரண்டடிகள் ஒளவையார் பாடியன. நாட்டில் வழங்கும் வரலாறு, பொய்யாமொழியாரை யொழித்துக் கம்பர்தான் இவ்வாறு குறைப்பாட்டுப் பாடித் தந்து விட்டுப் போனாரென்று கூறும். அம்பர்ச் சிலம்பி மேலே கூறிய வாறு புலவர் பாடும் புகழ்பெற்ற திறத்தைச் சோழமண்டல சதகம், “தண்ணீர்விரவுங் காவேரி தார்வேந் தனுமே தகுஞ் சோழன், பெண்ணா ளவளம் பர்ச்சிலம்பி பிறங்கு மலையு மேருவென்றே, எண்ணா ரௌவை யுரைத்தமுறை யேழுபுவியி லெண்டிசையில், மண்ணா வதுதண் டலைவேலி வளஞ்சேர் சோழ மண்டலமே” (22) என்று கூறுகிறது. காவேரி யென்றும், வேந்தனுஞ் சோழன் என்றும் பாட வேறுபாடுண்டு. கொத்தம்பி யென்பார் என்றும் பாட வேறுபாடுண்டு.
அரவிந்தம் - தாமரை. பத்தம்பிற்பாதி யுடையான் - ஐந்து அம்புகளையுடைய மன்மதன். இரண்டு அம்பின் - இரண்டாகிய அம்புபோன்ற கண்களால். இரண்டு அம்புகொண்டு ஐந்தாகிய அம்புகளைக் (பூக்களை) கொத்தாகக் கவர்ந்துக்கொண்டதனால், மன்மதன் தன் வில்லை வானிலே எறிந்துவிட்டுப் போய்விட்டான் என்பதாம்.
வெண்பா
அற்ற தலையி லருகிற் றலைய தனைப்
பற்றித் திருகிப் பறியேனோ - வற்றன்
மரமனையா னுக்கிம் மனையாள யீந்த
பிரமனையான் காணப் பெறின். 31
இஃது, ஒருநாள் பசியினாலே ஒளவையார் ஒருவன் மனைக்குப் போக, அவன் “சோறில்லை, போ” என்று சொன்ன பின்பு, அவன் மனைவி உபசாரஞ் சொல்லி அன்னமிட அப்போது அவர் பாடியது.
குறிப்பு:- அற்ற தலை போக வறாத தலை நான்கினையும் என்றும், மானை வகுத்த பிரமனை யென்றும் பாட வேறுபாடுண்டு. பிரமனுக்கு உள்ள தலை ஐந்தனுள், சிவபெருமானால் கொய்யப் பட்டதலையொன்று நீங்க, எஞ்சியன நான்கு, சிவபெருமான் கருவிகொண்டு நீக்காது கைந்நகத்தாற் கொய்தனரெனக் கதை கூறுதலால், தாமும் கருவிகொண்டு நீக்காமல் “பற்றித் திருகிப் பறியேனோ” என்றும், அன்பாகிய ஈரமில்லாதவனாதலால், “வற்றல் மரமனையான்” என்றும் கூறினார்.
வெண்பா
கூரிய வாளாற் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பா யுயர்மரமாய்ச் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டுபோ னிற்கப் பணி. 32
இஃது, ஒரு குறவன், விரும்பி வளர்த்த பலாவைப் பகைவர் வெட்டிப் போட்டுவிடக் கண்டு வருந்துகையில், அவன் பொருட்டு அப் பலா வளர ஒளவையார் பாடியது.
குறிப்பு:- குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர் தலைவன் ஒருவன் பலாமரம் ஒன்றைப் பேரன்புடன் பேணி வளர்த்து வந்தான். அது நன்றாய்ச் செழித்து வளர்ந்து காய்த்துப் பழுத்துக் காண்பார் கண்ணுக்கு அழகிய காட்சி தந்து நின்றது. ஒருகால் அவன் வேட்டம் குறித்து வெளியே சென்றிருந்த செவ்விநோக்கி, அவனுடைய பகைவர் அதனை வெட்டி வீழ்த்திவிட்டுப் போய் விட்டனர். திரும்பவந்து கண்ட குறவனுக்கு உண்டான வருத் தத்துக்களவில்லை. பகைவரைத் தேடிக் கண்டு அவருடலையும் துண்டு துண்டாக வெட்டி யழிக்கவேண்டுமெனும் பெரு வெகுளி அவன் நெஞ்சிற் புகைந்தெழுந்தது. அவ்வமயம் ஒளவையார் அவன் பால் வந்து செய்தியறிந்து தாமும் வருந்தினார். அவனது வெகுளியின் வெம்மை மிகுதியையும் கண்டார். வெகுண்ட படியே பகைவரை வெட்டி வீழ்த்தினால், அது வீழ்த்தப்பட்ட பலாவைப் பண்டு போல் தழைத்துக் காய்த்துக் கனிந்துநிற்கப் பண்ணாதென்பதை எடுத்துக்காட்டி அவனது வெம்மையைத் தணித்தார். தெளிவெய்திய குறவன், ஒளவையாரை வணங்கித் தன்மனம் அமைதி பெறுதற்குத் தக்கதொன்றை யருளுமாறு வேண்டினான். அப்பலா மறுபடியும் வளர்ந்து சிறக்குமாறு செய்வதைவிட வேறொன்றும் அவன் மனத்துக்கு உவகை தாராதென வெண்ணி இறைவனை வேண்டி இப்பாட்டைப் பாடினர்.
குறைபட்ட - வெட்டி வீழ்த்தப்பட்ட. கூன்பலா - வளைவு பொருந்திய பலாமரம், சீரிய வண்டு - முதிர்ந்த வண்டு. பணி - (ஆண்டவனே) அருள்வாயாக.
வெண்பா.
கூழைப் பலாத்தழையப் பாடக் குறச்சிறார்
மூழக் குழக்குத் தினைதந்தார் - சோழாகேள்
உப்புக்குப் பாடிப் புளிக்கு மொருகவிதை
ஒப்பிக் குமென்ற னுளம். 33
இஃது அப்போது குறப்பிள்ளைகள் நாழித் தினை கொடுக்க வாங்கிக்கொண்டு சோழனிடத்தில் வந்து ஒளவையார் பாடியது
குறிப்பு :- மேலேகண்ட குறவர் தலைமகன் மனையில் சின்னாள் தங்கிய ஒளவையார் அவன்பால் விடைபெற்றுச் சோழநாடு நோக்கிப் புறப்பட்டார். அவர்க்குக் குறவருடைய சிறுவர்கள் கூடிக் கையுறையாக நான்கு உழக்குத் தினையரிசி தந்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு சென்ற ஒளவையார் சோழநாடு அடைந்து சோழவேந்தனைக் கண்டு அவன்பால் அதனைத் தந்தார் “அரிய பாட்டுக்களைப் பாடிப் பெரிய செல்வம் பெறற்குரியதாயிருக்க, இப்புல்லிய தினையைப் பெறுவதோ மாண்பு” என்ற கருத்துப்படச் சோழவேந்தன் நோக்கினான். அக் குறிப்புணர்ந்த ஒளவையார், “வேந்தே, என்னுள்ளம் பெரிய செல்வத்துக் கென்றே பாட்டுப்பாடும் பண்புடையதன்று; உப்புக்கும் பாடுவேன்; புளிக்கும் பாடுவேன்; என் பாட்டுப் பெரிய செல்வத்தையே நோக்கித் தோன்றுவது அன்று” என இப் பாட்டினைப் பாடினர்; கூழைப்பலா - வெட்டிக் குறைக்கப் பட்ட பலாமரம். மூடிக்குழக்கு - மூவுழக்கும் உழக்கும்; மூவுழக்கு என்பது மூழக்கென மருவிற்று. ஒப்பிக்கும் - உரைக்கும். நான்கு உழக்குக் கொண்டது ஒரு நாழி.
வெண்பா
ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொத்துற் - றாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. 34
இஃது அறம் பொருள் இன்பம் வீடு நான்கும் வரப் பாடியது.
குறிப்பு :- கற்று வல்ல பாவலர் கூடிய அவைக்களமொன்றில் ஒளவையார் இருந்தார். அக்காலையில், ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி யென்ற நால்வகைப் பாக்களாலும் பாடத்தக்க பொருள்பற்றிய பேச்சு உண்டாயிற்று. அவருட் சிலர், இந்த நான்காலும் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப் பொருளும் பாடப்படும் என்றனர். இவர்கள், “அந்நிலை மருங்கின் அறமுதலாகிய, மும்முதற்பொருட்கு முரிய வென்ப” (தொல்: செய். 105) என்ற நூற்பாவை யெடுத்தோதினர். வேறு சிலர், “அறம்பொருளின் பம்வீடடைதல்நூற் பயனே” என்ற நூற்பாவை யோதி அறமுதனான்குமே பொருளாமென்றனர். ஒளவையார், அறமுதல் நான்கையுமே ஆசிரியம் முதலிய பாவகை யொவ்வொன்றாலும் பாடலாம் என்றனர். அது கேட்டதும், அவருட் பலர் வெண்பா ஒன்றில் அறமுதல் நான்கும் வரப் பாடுமாறு ஒளவையாரை வேண்டினர். அவ் வேண்டுகோட் கிசைந்து இவ் வெண்பாவை ஒளவையார் பாடினரென்பர். அப்பாவலர் இன்னா ரென்றும், அவர் கூடியிருந்த அவைக்களம் இது வென்றும் தெரிந்தில, தீவினை - பழிபாவம் பயக்கும் தீச்செயல். கருத்து ஒருமித்து என்றும் பாட வேறுபாடுண்டு. ஆதரவு - காதலன்பு. பரன் - கடவுள். பேரின்ப வீடு - அந்தமில் இன்பந் துய்க்கப்படும் அழிவில்லாத நிலையம். பரன் நினைவு இல்வழி இம்மூன்றும் விடப்படா வென்றற்குப் “பரனை நினைந்து விட்டதே”யென்றும், விட்டவிடத்து வீடெய்துதல் ஒருதலையாதலின் “விட்டதே வீடெ”ன்றும் கூறினார்.
ஆசிரியப்பா
தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாஞ்சில
அரிசி வேண்டினெ மாகத் தான்பிற
வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. 35
இது, (துவரை) யரிசி கேட்க யானை கொடுத்த நாஞ்சில் வள்ளுவனைப் பாடியது.
குறிப்பு: - நாஞ்சில் என்பது ஒரு மலை. இதனைச் சூழவுள்ள தமிழ்நாடு நாஞ்சில் நாடாகும். இப்போது இது நாகர்கோயி லென்னும் பேரூரையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நாங்கு னேரியிலிருந்து நாகர்கோயிற்குச் செல்லும் வழியில் உள்ள வள்ளியூர் இவ்வள்ளுவற் குரியதாகும். இதன் கண் பழையதோர் அரண்மனையும் இருந்ததெனக் கல்வெட்டுக்களால் (A.R.No. 254 of 1927 -28), அறிகின்றோம். இவ்வூர்க்கு அண்மையில் நிற்கும் மலைத் தொடரில் நாஞ்சில் என்ற பெயருடைய மலை இருந்ததென்பர். இப்போது அப்பெயர் மறைந்துவிட்டது. இனி, பழனிமலையைச் சார்ந்த மலைத்தொடர்களில் தோன்றியோடும் காட்டாறுகளுள் ஒன்று நாஞ்சிலா றென்ற பெயர்கொண்டிருப்பது கொண்டு, நாஞ்சில் மலையும் இதன் ஓர் பகுதியாகவும், இதற் குரியவன் வள்ளுவனாகவும் இருக்கலாம் என்றும் சிலர் கருது கின்றனர். இவ்வள்ளுவன் சேர மன்னர்க்குக் கீழ்நின்ற சிறந்த குறுநில மன்னன். இவன் முன்னோர் போரிற் புறங்கொடாத புகழ்பெற்றவர். இவனைப் பண்டை நல்லிசைச் சான்றோருள் ஒருசிறைப்பெரியனார், மருதன் இளநாகனார் முதலிய சான்றோர் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர். ஒருகால், இவ்வள்ளுவனது ஊர்க்கு ஒளவையார் விறலியர் பலர் தம்மைச் சூழ்வரச் சென்றிருந் தார். அவ்விறலியர் தாம் தங்கியிருந்த மனைப்பக்கத்தே முளைத்துத் தழைத்திருந்த கீரைகளைப் பறித்துச் சமைக்கலுற்றனர். அதன் கண்ணுறையாக இடுதற்குத் துவரை யரிசி வேண்டி யிருந்தது. அவர்பொருட்டு ஒளவையார் வள்ளுவனை யடைந்து சில துவரையரிசி தருமாறு கேட்டனர். அவன் அவரது வரிசையும் தன் தகுதியும் சீர்தூக்கி மலை போல்வதொரு களிறு சுமக்கும் அளவில் துவரை யரிசியைக் களிறொன்றின் மேலேற்றித் தந்தான். அவனது கொடைமடத்தை வியந்த ஒளவையார், ஏனைச் சான்றோர்களை நோக்கி, “செந்நாப் புலவர்களே, நாஞ்சில் வள்ளுவன் தெளிவாக மடவனேயாவன் யாம் சில அரிசிவேண்ட, எமக்கு மலை போல்
வதொரு களிற்றை நல்கினான். இத்தகைய தொரு கொடை மடமும் உண்டோ? பெரியோர்தாம் செய்தற்குரிய கடமையைச் செய்யுமிடத்துத் தெளிய ஆராய்ந்து செய்யாரோ?” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினார்.
தடவுநிலைப் பலவு - பெரிய நிலைமையையுடைய பலா மரம். பொருநன் - வேந்தன். படப்பை - மனைப்பக்கம். கண் ணுறையாக - மேல்தூவுவதாக. அரிசி, துவரையரிசி. கடறு - காடு. பெருங்களிற்றின்மேல் அது சுமக்கும் அளவிற்றாய துவரை யரிசியை யேற்றி அக்களிற் றோடே நல்கினமை தோன்ற.
“பெருங்களிறு நல்கியோனே” என்றார். தேற்றா ஈகை - தெளியாக் கொடை. கடன்போற்றார் - செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்.
வெண்பா
இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே
குருடேயு மன்றுநின் குற்றம் - மருடீர்ந்த
பாட்டு முரையும் பயிலா தனவிரண்
டோட்டைச் செவியு முள. 36
இஃது ஏழிற் கோவைப் பாடிய அங்கதம்.
குறிப்பு:- ஆசிரியர் பேராசிரியர் இதனைச் செம்பொருளங்க தத்துக்கு எடுத்துக்காட்டி, “ஏழிற் கோவை ஒளவை முனிந்து பாடியது” என்று கூறினர். ஏழில் என்பது மேற்கு மலைத்தொடரில் உள்ளது. இதனை இந்நாளில் சப்தசயிலம் என்று வழங்குகின்றனர். இம்மலை நன்னனென்னும் வேந்தனுக் குரியதென ஆசிரியர் பரணரும் (அகம். 152) மாமூலனாரும் (அகம். 349), குடவாயிற் கீரனாரும் (அகம் .345) பாலைபாடிய பெருங் கடுங்கோவும் (நற்.391) கூறுகின்றனர். இது கொண்கான நாட்டைச் சேர்ந்தது. நன்னன் வழிவந்தோருள் ஒருவன் ஏழிற்குன்றத்துக் குரியனாய் ஆட்சிபுரிந்து வருகையில் ஒளவையார் ஒருகால் அவன் பால் சென்றார். அவன் அவரை இனிது வரவேற்றிலன். அதனால் சினங்கொண்டவர், இப்பாட்டைப் பாடினார்.
இருள்தீர்மணி - இருளைக் கெடுக்கும் ஒளிபொருந்திய மணி. மருள்தீர்ந்த - குற்றமில்லாத. பயிலாதன - பயிற்சியில் லாதனவாகிய. சொல்வனவற்றை வாங்கி உள்ளத்தே நிறுத்தாமல் விட்டுவிடுதலின், “ஓட்டைச் செவி” யென்றார்.
வெண்பா
தண்டாம லீவது தாளாண்மை தண்டி
அடுத்தக்கா லீவது வண்மை - அடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூவி பின்சென்றும்
பொய்த்தா னிவனென்று போமே லவன்குடி
எச்ச மிறுமே லிறு. 37
சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று
மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை - முன்றிலில்
துச்சி லிருந்து துடைத்தழுகண் ணீராலேழ்
எச்ச மிறுமே லிறு. 38
வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி
வழக்கை வழக்கழிவு சொல்லின் - வழக்குடையார்
சுற்றமுந் தாமுந் துடைத்தழுகண் ணீராலேழ்
சுற்ற மிறுமே லிறு. 39
இவையும் மேல் வருனவும், மூன்று கிழிக்குச் சங்கிலி இறப்பாட, ஒரு கிழிக்கு நிறை நில்லாத கவி பாட, ஒரு கிழிக்கு நாலு கோடி கவிபாட என்று ஆக அஞ்சு கிழியும் பாண்டியன் வாசலிற் கட்டிவைத்தபோது ஒளவையார் பாடியன.
குறிப்பு :- ஒருகால் ஒரு பாண்டியன் ஐந்து பொற்கிழிகளைத் தன் அரண்மனை வாயிலில் தூக்கி, ஒரு சங்கிலியும் நிறைநிற்கும் துலாக் கோலும் வைத்து, இச்சங்கிலி இறுமாறு பாடுவார்க்கு மூன்று கிழியும், இக் கோல் நிறை நில்லாவாறு பாடுவார்க்கு ஒரு கிழியும் தருவேன்; எஞ்சி நிற்கும் ஒரு கிழியை நான்கு கோடி கவி பாடுவார்க்குக் கொடுப்பேன் என்று புலவர் கூட்டத்துக்குத் தெரிவித்தான். புலவர் பலர் அவற்றைப் பெற முயன்றும் வெற்றி பெறா தொழிந்தனர். அவ்வழியே வந்த ஒளவையார் இம் மூன்று வெண்பாக்களையும் பாடினர்; உடனே சங்கிலி இற்று வீழ்ந்தது. மேல் வரும் “வையகமெல்லாம்” என்று தொடங்கும் பாட்டைப் பாடியதும் துலாக்கோல் நிறை நில்லாதாயிற்று. அதன்பின் “கோடியுறும்” என முடியும் நான்கு குறள் வெண்பாக் களைப் பாடி நான்கு கோடி கவியெனக் காட்டினார். இவற்றைக் கேட்ட சான்றோர் வியந்தனர். பாண்டியன் கிழியைந்தனையும் ஒளவை யார்க் களித்து அகமகிழ்ந்தான்.
தண்டாமல் - குறைவுண்டாகாமல். எச்சம் - வழிமுறை. மன்றுழுதுண்பான் : மன்று - ஊரானிரைகள் சென்று தங்கும் பொது நிலம். அஃது ஆனிரைகளின் சிறு நீரும் சாணமும் தோய்ந்து உரம் சிறந்திருக்கும். துச்சில் - ஒதுக்கிடம். ஏழ் எச்சம் - ஏழ்தலை முறை. வழக்கு அழிவு - ஓரம் பேசுதல் .ஏழ் சுற்றம் - ஏழுபிறப் பிலும் உளதாகும் சுற்றம். இறுமேல் இறு - இற்றொழிதல் உண்மையாயின் இச் சங்கிலியும் இற்றுப் போவதாக.
நிறைநில்லாத அகவல்
வையக மெல்லாம் வளவயலா வானோர்
தெய்வமா முகடு சேரிய தாகக்
காணமு முத்து மணியுங் கலந்தொரு
கோடானு கோடி கொடுப்பினு மொருநாள்
ஒருபொழு தொருவனூ ணொழிதல் பார்க்கும்
நேர் நிறை நில்லா தென்னுமென் மனனே
நேர் நிறை நில்லா தென்னுமென் மனனே 40
குறிப்பு :- நேர்நிறை நில்லாதென்னு மென்மனனே என்பது மடங்கிவரப் பாடியதுபற்றி இப்பாட்டு, நிறைநில்லாத பாட்டெனப் படுவதாயிற்று, வையக மெல்லாம் அளவளா யென்றும் பாட வேறுபாடுண்டு. வானோர் தெய்வமாமுகடு - வானோரும் பிற தெய்வங்களும் உறையும் உச்சியினையுடைய இமயமலை. வயல் சார்ந்த ஊர்களைச் சேர இருப்பது சேரியாகும். காணம் - பொன் கோடானுகோடி - கோடிக்குத் துணையாக மேலும் கோடி. ஊணொழிதல் - உணவின்றிப் பட்டினி கிடப்பது. என் நேர்மனம் என்னும் நிறை நில்லாது என மாறிக் கூட்டி, எனது நேர்மை பொருந்திய மனம் சிறிதும் நிறுத்த நில்லாது வருந்திச் சுழலுவதா யிற்றென்று பொருள் கூறுக.
நாலுகோடி கவி
மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி யுறும். 41
உண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும். 42
கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும். 43
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும். 44
குறிப்பு:- பாட்டு ஒவ்வொன்றினும் கோடி யென்பது வரப் பாடின காரணத்தால் இவை நாலுகோடி கவியெனப் பட்டன. உறும் - தக்கதாம். உண்ணீர் உண்ணீர் என அடுக்கியது உண்பிக்கும் அன்பு தோற்றி நின்றது. அடுக்காது உண்ணும் நீர் இதனை உண்பீராக என வுரைப்பினு மமையும். நாக் கோடாமை. சொன்னசொல் தவறாமை.
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
கல்லாத வொருவனையான் கற்றா யென்றேன்
காடேறித் திரிவானை நாடா வென்றேன்.
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்.
போர்முகத்துக் கோழையையான் புலியே யென்றேன்
மல்லாரும் புயமென்றேன் றேம்பற் றோளை
வழங்காத கையனையான் வள்ளா லென்றேன்
இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே. 45
இஃது ஒருவனைப் பாடி அவன் ஒன்றுமில்லை யென்றானாக அப்போது ஒளவையார் பாடியது.
குறிப்பு:- தொண்டை நாட்டில் சோழிசொற்கொளோம் என்றோர் ஊர் உண்டு. அவ்வூர் இப்போது சோழகுளம் என்று வழங்குகிறது. அவ்வூரில் வாழ்ந்த செல்வனொரு வனை ஒளவையார் அடைந்து இனிய பாட்டொன்றைப் பாடினார். அது கேட்டவன் “சோழ நாட்டவளாகிய நீ சோழி: சோழி சொல்லை யாம் கொள்ளோம்; என்பால் ஒன்றும் இல்லை” யென்றான். ஒளவையார் அக்காலை மனம் வருந்தி இப்பாட்டைப் பாடிவிட்டு அண்மை யிலுள்ள பந்தன் மங்கலத்துக்குச் சென்று பந்தனைப் பாடிச் சோழகுளத்துக்கு வடக்கிலுள்ள குப்பத்தைத் தரப்பெற்றாளென வழி வழியாகக் கூறப்படும் வரலாறு கூறுகிறது. அவன் சோழி சொற் கொளோம் என்றது பற்றி, அவ்வூர் சோழிசொற் கொளோம் என்று பெயர் பெற்றது. அதுமருவி சோழகுள மாயிற்று.
பாடிவரும் புலவர்க்குப் பரிசு தரும் பண்பினன் என்று கேள்வியுற்று ஒளவையார் அவன்பாற் சென்று பாடவும், அவன் ஒன்றுமில்லையென மறுத்தது கண்டார். அவன் நெஞ்சு திறம்பிய தற்குக் காரணம் யாதாமெனத் தமக்குள்ளே ஆய்ந்தவர் இல்லாது சொல்லிப் பாடியது என் குற்றம்; ‘அவ்வியல்புகள் ஒன்றும் என்பால் இல்லை; அதனால் தருதற்கு ஒன்றும் இல்லை’ யென்றான் எனத் துணிந்து “இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான், யானுமென்றன் குற்றத்தால் ஏகின்றேனே” என்று பாடினார்.
தேம்பல் தோள் - மெலிந்த தோள். மல்லாரும் புயம் - மற்போர் செய்து பயின்று காழ்ப்புற்ற தோள்.
அங்கத அகவல்
எம்மிக ழாதவர் தம்மிக ழாரே
எம்மிகழ் வோரே தம்மிகழ் வோரே
எம்புக ழிகழ்வோர் தம்புக ழிகழ்வோர்
பாரி யோரி நள்ளி யெழினி
ஆஅய் பேகன் பெருந்தோண் மலையனென்
றெழுவரு ளொருவனு மல்லை யதனால்
நின்னை நோவ தெவனே யுறுவட்
டாற்றாக் குறைக்கட்டி போல
நீயு முளையே நின்னன் னோர்க்கே
யானு முளனே யெம்பா லோர்க்கே
குருகினும் வெளியோய் தேஎத்துப்
பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே. 46
இஃது ஒளவையார் ஒருவனைப் பாட அவன் இகழ்ச்சி சொல்ல அப்போது பாடியது.
குறிப்பு:- இங்கே பாடப்பட்டவன் பெயரும் அவன் இகழ்ந்த தன் காரணமும் பிறவும் தெரிந்தில. தொல்காப்பியச் செய்யுளிய லுரையில் செம்பொரு ளங்கத்திற்கு உதாரணமாக இது காட்டப்பட்டுளது; ஆயினும் அங்கேயும் இந்த வரலாறு காணப்படவில்லை. இஃது ஒளவையாராற் பாடப்பட்டதென்பது கூடக் குறிக்கப்பட வில்லை. இதனால், இப்பாட்டு ஒளவையார் பாட்டாகாதெனக் கருதுவோரும் உண்டு. மேலும் இதன்கண், “உறுவட்டாற்றாக் குறைக்கட்டி போல்,” என்ற அடியின் உண்மை வடிவும் புலப்படவில்லை. கோவை திரு. சி.கு.நாராயணசாமி முதலியார் பதிப்பு, “உலவா தட்டார்க் குதவாக் கட்டிபோல” எனக் காட்டி அடிக்குறிப்பில் இவை, “உண்மைப் பாடம் விளங்காமையால் ஊகிக்கப்பட்டவை” எனக் குறித்துளது. “யானு முளனே தீம்பாலோர்க்கும்” என்றும் பாடமுண்டு. தீம்பா லோர்க்கும் குரு கென்றது அன்னத்தை.வெண்மை, நல்லறிவின்மை.
அகவல்
மூவர் கோவையு மூவிளங் கோவையும்
பாடிய வென்றன் பனுவல் வாயா
லெம்மையும் பாடுக வென்றனிர் நும்மையிங்
கெங்கனம் பாடுகென் யானே வெங்கட்
களிறுபடு செங்களங் கண்ணிற் காணீர்
வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்
புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீர்
இலவு வாய்ச்சிய ரிளமுலை புல்லீர்
அவிழ்ச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தேரீர்
உடீஇர் உண்ணீர் கொடீஇர் கொள்ளீர்
ஒவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே. 47
இது சில புல்லறிவோர் தங்களைப் பாடச் சொன்னபோது ஒளவையார் பாடியது.
குறிப்பு :- ஒரு கால் ஒளவையார் ஒரு காட்டுவழியே சென்று கொண்டிருக்கையில், சிலர் அவரை வழிமறித்து அவர் கவிபாடும் நலம் சிறந்த ஒளவையாரென்று தெரிந்து தங்களைப் பாடுமாறு கேட்டனர். அவர் அவர்களது புன்மை கண்டு, ஏதேனும் ஒன்று பாடினால்லலது அவர்கள் தம்மைப் போகவிடா ரென்று உணர்ந்தார்; முடிவில் இப்பாட்டைப் பாடினார்.
மூவர் கோவையும் மூவிளங் கோவையும் - முடிவேந்தரான சேர சோழ பாண்டியரையும் இளவரசர் மூவரையும். பனுவலா னெம்மையும் என்றும் பாட வேறுபாடுண்டு. கையெழுத்துப் பிரதிகளில் எங்ஙனமென்னாது எங்கனமென்றே காணப்படுகிறது. கேட்டமாத்திரையே அஞ்சி யோடுவதுபற்றிக் “கண்ணிற்காணீர்” என்றார். வெளிறுபடு நல்யாழ் - உள்ளத்துப் படிந்த மாசினைக் கெடுக்கும் நல்ல. இசையினைச் செய்யும் யாழ். அவிழ் - சோறு. ஒவ்வாக் கானம் - பசையில்லாத கொடுங்கானம். துவ்வாக் கனி உண்டற்காகாத எட்டிக்கனி.
வெண்பா
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
நெய்தா னளாவி நிறையிட்டுப் - பொய்யே
அடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள்
கடகஞ் செறியாதோ கைக்கு. 48
இது திருக்கோவலூரில் அங்கவை சங்கவை என்கிற பெண்கள் வீட்டில் ஒளவைக்கு இலைக்கறியிட்ட போது அவர் பாடியது.
குறிப்பு :- அங்கவை சங்கவை என்ற பெண்கள் இருவரும் வேள்பாரியின் மகளிர். அவன் இறந்த பின்பு, புலவர் பெருமானான கபிலர் இம்மகளிர் இருவரையும் திருக்கோவலூரில் பார்ப்பார் இல்லத்தில் அடைக்கலப்படுத்திச் சேரநாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வரலாறு ஒளவையார்க்குத் தெரியாது. அவர் ஒருநாள் இரவுமழை பெய்துகொண்டிருக்கையில், நனைந்து குளிர் வருத்த வருந்திக்கொண்டே அம்மகளிர் இருந்த மனைக்கு வந்து சேர்ந்தார். மகளிர் அவரது ஈர ஆடையை நீக்கி நீலச் சிற்றாடை யொன்று நல்கிக் குளிர்போக்கி, அவரது பசி நீங்கச் சோறு சமைத்து இலைக் கறி பொரித்து உண்பித்தனர். அப்போது ஒளவையார் மனமகிழ்ந்து இவ்வெண்பாவைப் பாடினர்.
அடகு - இலைக்கறி, நிறைய இட்டு என்பது நிறையிட்டென வந்தது. ஒருத்தி உபசரிக்க, ஒருத்தி அமுது படைத்தாளாதலின் இட்டாளென ஒருமையாற் கூறினார். இட்டாரெனப் பாட மோதுவாரு முளர்.
வெண்பா
பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரியன் றீத்த களைக்கோலுஞ் - சேரமான்
வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர். 49
இது பாரிமகளிர் சிற்றாடை கொடுக்க அப்போது ஒளவையார் பாடியது.
குறிப்பு :-இவ்வெண்பா முன்னும் “வெய்தா” யெனத் தொடங்கும் வெண்பா பின்னும் இருக்கவேண்டுவது முறை; தொகுத்தோரால் இவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது. பறி - பொன். வேள்பாரி ஒளவையாரைத் தன்பால் சின்னாள் இருக்க வேண்டுமென இரந்த வழியும், அவர் விரைந்து செல்லவே விரும்பினாராக, அவன் அவர்க்குத் தந்த பரிசிலாகிய பொன்னைத் தன் னேவலரைக் கள்வர் வடிவிற் சென்று பறிக்கச் செய்து அவர் மீளத் திரும்பி அவன்பால் வரவே, தான் விரும்பியவாறே தன்மனையில் சின்னாளிருக்கச்செய்து முன்னே பறித்த பொன்னையும் மேலும் பல பொன்னையும் தந்து விடுத்த வரலாறு பாரி பறித்த பறியால் குறிக்கப்படுகிறது. பழையனூரில் வாழ்ந்த காரி தன்பால் வந்த ஒளவையாரைத் தன்பால் சில நாள் இருத்த வேண்டிக் களைக்கோல் ஈந்தான். களையெடுத்துத் தீருநாள் வரை ஒளவையார் அங்கே இருந்தார். சேரமான் என்றது தகடூரில் இருந்து ஆட்சி புரிந்த அதியமான். சேரமான் மனையில் நடந்த விருந்தொன்றிற்குப் புதியோர் ஒருவர் வர, அவர்க்கு இடமளிக்க வேண்டி, ஒளவை யாரைத் தன்னோடிருக்க வைத்து, அவ்விருந்தினர்க்கு ஒளவை யிருந்த இடத்தை யளிப்பானாய் “வாரா”யென உரிமையுடன் அழைத்துக்கொண்ட அன்பு மிகுதி தோன்ற “வாராயோ வென்றழைத்த வார்த்தை” என்று குறித்தார். பாரி முதலிய மூவரது அன்புக்கு, இம்மகளிர் அன்பு குறைந்த தன் றென்பார், “நீலச் சிற்றாடைக்கு நேர்” என்றார்.
வெண்பா
ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுரிவைக் கங்காளன் செம்மல் - காரிமுகவன்
கண்ணால வோலைகடி தெழுத வாரானேல்
தன்னாண்மை தீர்ப்பேன் சபித்து. 50
இஃது அங்கவை சங்கவையைத் தெய்வீகனுக்குக் கலியாணம் பண்ணுவிக்கிறபோது ஓலை யெழுத விநாயகனை அழைக்கப் பாடியது.
குறிப்பு:- தெய்வீகன் என்பான் திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்த மலையமான் திருமுடிக்காரியின் மக்களுள் மூத்தவன். மூத்தவன் அங்கவையையும் இளையவனான கண்ணன் என்பான் இளையவளான சங்கவையையும் மணந்து கொண்டனர் என்பர். நால்வாய் - தொங்குகின்றவாய். கரியுரிவைக் கங்காளன் செம்மல் - யானைத் தோலை யுடைய சிவபெருமான் மைந்தன்.
வெண்பா
சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவல்
ஊரளவுந் தான்வருக வுட்காதே - பாரிமகள்
அங்கவையைக் கொள்ள வரசன் மனமிசைந்தான்
சங்கியா தேவருக தான். 51
புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து- நகாதே
கடுக வருக கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள். 52
வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே - தையற்கு
வேண்டுவன கொண்டு விடியப்பதி னெட்டாநாள்
ஈண்டு வருக விசைந்து. 53
இவை சேர சோழ பாண்டியர்க்கு ஒளவையார் விநாயகன் எழுதப் பாடியவை.
குறிப்பு:- சேர சோழ பாண்டியர் மூவர்க்கும் வேள் பாரி பகையாயினமையின், அவன் மகளிர் திருமணத்திற்கு அவர்கள் வாராதிருத்தல் நன்றன் றென்பது தோன்ற, “உட்காது வருக” என்றும், “தகாதென்று தான் அங்கிருந்து நகாது வருக” என்றும் “செய்யத் தகாதென்று தேம்பாது வேண்டுவன கொண்டு ஈண்டு வருக” என்றும் குறித்துள்ளார்.
திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின் றார்மணப் பந்தரிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்துக்
கொங்கிற் குறத்தி குவிமுலை போலக் குறும்பைவிட்டு
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே. 54
இது மூவரும் வந்தபோது ஒளவையார் பனந்துண்டத்தைப் பாடியது.
குறிப்பு:- பாரி மகளிர் திருமணங் குறித்து ஒளவையார் விடுத்த ஓலை கண்டு தமிழ்வேந்தர் மூவரும் வந்திருந்தபோது, அங்கே கிடந்த பனந்துண்டத்தைப் பார்த்து, ‘இது தழைக்கப் பாடுக’ வென ஒளவையாரை அவர்கள் வேண்டின ரெனவும், அவர். பொருட்டு ஒளவையார் இப்பாட்டைப் பாடினரெனவும் கூறுவர்.
திங்கட்குடை - திங்கள் போலும் வெண்கொற்றக்குடை. “பச்சோலை சலசலக்கா தெனினும், சலசலக்க வேண்டு மெனப் பணிக்கின்றாராதலின்” “பச்சோலை சல சலத்” தென்றார். வேந்தர் மூவரும் வேண்டுதலின், “மூன்று பழம் தரவேண்டும்” என்றார்.
வெண்பா
முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து
தத்திருவரு நெய்பா றலைப்பெய்து - குத்திச்
செருமலை தெய்வீகன் றிருக்கோவ லூர்க்கு
வருமளவிற் கொண்டோடி வா. 55
இஃது அந்தக் கலியாணத்தில் ஒளவையார் பெண்ணை யாற்றைப் பாடியது.
குறிப்பு:- அந்தக் கலியாணத்திற்கு நெய்யும் பாலும் வேண்டுமென்ற கருத்தால் ஒளவையார் பெண்ணையாற்றை நோக்கி ‘நீ நீராய்ப் பெருகுதலைத் தவிர்த்து, நெய்யும் பாலுமாகப் பெருகி வரல் வேண்டு’மென்று இப்பாட்டைப் பாட, அவ்வாறு அவர் விரும்பிய வண்ணமே வந்ததென்பர். இதனைப் பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் மகனார் வரந்தருவார் என்பார், தாம் அந்நூற்குப் பாடிய பாயிரத்தில், “ஒளவை பாடலுக்கு நறுநெய் பால் பெருகி அருந்தமி ழறிவினாற் சிறந்து, தெய்வமா நதிநீர் பரக்குநாடந்தத் திருமுனைப் பாடிநன்னாடு” என்று குறித்துள்ளார். பெண்ணை, அண்மை விளி. செருமலை தெய்வீகன் - போர் செய்து வென்றி மிகும் தெய்வீகன். இனி, தெய்வீகனுக் குரிய மலை செருமலை யென்றும், அதுவே பின் சிறுமலையாயிற் றென்றும் கூறுவர்.
வெண்பா
கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் - பெருமணத்து
நன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரதுதவிர்ந்து
பொன்மாரி யாகப் பொழி. 56
இஃது ஒளவையார் அப்போது வருணனைப் பாடியது.
குறிப்பு:- திருமணத்துக்கு வந்திருந்த வேதியர்க்குப் பொற் கொடை வழங்கும் பொருட்டு ஒளவையார் வருணபகவானை நோக்கி, ‘நீ மழை பொழிவது விடுத்து இப்போது பொன்மழை பொழிக’ என வேண்டி இதனைப் பாடினராகப் பொன்மழை பொழிந்த தெனவும், பலரும் வரைவின்றிப் பொன் பெற்றா ரெனவும் கூறுப. மலையமான் மகனாதலின், தெய்வீகனை மலையன் என்றார்.
வெண்பா
நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை
நாற்றிங்க டன்னிற் கிழிந்துபோம் - மாற்றலரைப்
பொன்றப் புறங்கொண்ட போர்வே லகளங்கா
என்றுங் கிழியாதென் பாட்டு. 57
இது சோழன் ஒரு துகிலைப் பார்த்துப் பராக்காக இருப்ப, அப்போது ஒளவையார் பாடியது.
குறிப்பு:- திருமணத்துக்கு வந்திருந்த புத்தாடைகளுள் ஒன்றன் வேலைப்பாட்டைக் கண்டு சோழ வேந்தன் அதனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். அக்காலையில் ஒளவையார் பாடிய பாட்டுக்களை அவன் நோக்கானாயினன். அவன் கருத்தைத் தம் பாட்டின்கட் செலுத்த வேண்டி, ஒளவையார் இப்பாட்டினைப் பாடினர். நூறுபத்தாயிரம் - பத்து லக்கம். நாற்றிங்கள் - நான்கு திங்கள். பொன்ற - அழிய. அகளங்கன் - குற்றமில்லாதவன். கிழியாது - அழியாது.
வெண்பா
திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்
மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும்
இலையுமிலைப் பூவுமிலைக் காயுமிலை யென்றும்
உலகில் வருவிருந்தோ டுண்டு. 58
இது திருக்குடந்தையில் இரண்டு வேளாளர், ஒருத்தன் உலோபியும் ஒருத்தன் விதரணியுமாக இருந்தவர்களை, ஒளவையார் பாடியது.
குறிப்பு:- மருத்தன் என்பான் கொடுக்கும் பண்புடைய வேளாளனும், திருத்தங்கி என்பான் கொடாத உலோபியுமாவர். குடந்தை யென்பது கும்பகோணம். ஈண்டுக் குறிக்கப்படும் செய்தியைச் சோழமண்டலசதகம், “தாழப் புதைக்குந் திருத்தங்கி தடங்கா வாழை தனிபழுப்பப், பாழிப்புய மாலாமருத்தன் பலர்க்கு முதவும் பான்மையினால், காழிற்பொலியு மிலை யரிதாய்க் காயு மரிதாய்க் கனியு மின்றி, வாழைக் குருத்துங் கிடையாத வளஞ்சேர் சோழ மண்டலமே” (65) என்று கூறுகிறது. வருவிருந்தோடு உண்பதனால், மருந்தனது வாழைத் தோட்டத்தில் குருத்தோ, இலையோ, காயோ, கனியோ ஒன்றும் இல்லையா யிற்றென்பது.
வெண்பா
விரக ரிருவர் புகழ்வாரும் வேண்டும்
விரனிறைய மோதிரமும் வேண்டும் - அரையிலொரு
பஞ்சேனும் பட்டேனு மில்லையோ பாணிகவி
நஞ்சேனும் வேம்பேனு நன்று. 59
இஃது ஒருவன், ஆடம்பரவானாக வந்த கீழான புலவன் கவியைக் கேட்டு ஒளவையார் கவியைக் கேளாதிருந்தானாக, அப்போது அவர் பாடியது.
குறிப்பு:- விரகர் - இடமும் காலமு மறிந்து தக்கவாறு சொல்லாடும் திறம் படைத்தவர். பஞ்சும் பட்டும் ஆகு பெயரால் அவற்றால் னியன்ற ஆடை மேல் நின்றன. “பாணிகவி” யென்பதனின் வேறாக “அவர் கவிதை” யென்றும் பாடமுண்டு. பாணி - கை.
கலித்துறை
மதுர மொழியி னுமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையுந் தேரு மதன்பின்வருங்
குதிரையுங் காதங் கிழவியுங் காதங் குலமன்னனே. 60
இது, சேரன் கயிலைக்குப் போகிறபோது ஒளவையாரை அழைக்க, அவர் விநாயக பூசை பண்ணித் தாமதமாயிருக்க, விநாயகன் தன் துதிக்கையா லெடுத்துக் கயிலையில் விடச் சேரனைக் கண்டு ஒளவையார் பாடியது.
குறிப்பு:- இச் சேரன் அதியமானோ வேறொரு சேரமா னோயாவனோ தெரியவில்லை. சேரமான் கயிலைக்குச் செல்பவன் ஒளவையாரை உடன் வருமாறு அழைக்கையில் அவர் விநாயக பூசை செய்துகொண்டிருந்தார். அதனால் அவர் உடன்புறப்பட இயலவில்லை. காலம் தாழ்ப்பதறிந்த சேரன் தான் மட்டில் தன் பரிவாரத்துடன் கயிலைக்குச் சென்றான். பூசை முடிந்தபின் ஒளவையார் விநாயகரை வணங்கிக் கயிலைக்குப் போக விரும்பும் தமது கருத்தைத் தெரிவித்தார். யானைமுகக் கடவுள், தமது துதிக் கையால் ஒளவையாரைத் தூக்கிக் கயிலையில் விட்டார். அவர்க்குப் பின்னே கயிலை வந்துசேர்ந்த சேரமானை ஒளவையார் கண்டு, “வேந்தே, குதிரையுங் காதம் கிழவியுங் காதம் என்றும் பழமொழி யுண்டென்பது அறிக” என்ற கருத்தமைந்த இப் பாட்டினைப் பாடினார்.
முதிர நிலையவல்லார் - மிக்க அன்புடன் நினைந்து பரவு பவர். நாற்படையினும் யானைப் படை முன்னே செல்வது மரபு. “யானையுடைய படை காண்டல் முன்னினிதே” (இனி. 40) என்ப.
வெண்பா
சிறுக்கீரை வெவ்வடகுஞ் சேதாவி னெய்யு
மறுப்படாத் தண்டயிரு மாந்தி - வெறுத்தேனை
வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்குங் கை. 61
இது, சேரன் கயிலையி லிருக்கத் திரும்ப வந்து ஒளவையார் பாடியது.
குறிப்பு :- சேதா - செம்மையான பசு. மறு - குற்றம். மாந்தி வெறுத்தேனை - மிகவும் உண்டு தெவிட்டி வெறுப்புக் கொண்டிருந்த என்னை. மன்னவன் கையேற்பித்தான் என இயையும். புற்கை - கூழ். “புற்கை யுண்கமா கொற்கை யோனே” என்றாற் போல.
அகவல்
அரியது கேட்குந் தனிநெடு வேலோய்
மக்கள் யாக்கையிற் பிறந்தலு மரிதே
மக்கள் யாக்கையிற் பிறந்த காலையும்
மூகையுஞ் செவிடுங் கூனுங் குருடும்
பேடு நீங்கிப் பிறத்தலு மரிதே
பேடு நீங்கிப் பிறந்த காலை
ஞானமுங் கல்வியு நற்குற லரிதே
ஞானமுங் கல்வியு நற்குறு மாயினும்
தானமும் தவமுந் தரித்த லரிதே
தானமும் தவமும் தரித்தோற் கல்லது
வானவ னாடு வழிதிற வாதே. 62
இஃது ஒளவையார் முருகவேள் கேட்கப் பாடியது.
குறிப்பு :- ஒருகால் ஒளவையார் காட்டுவழியே போய்க் கொண்டிருக்கையில், முருகவேள் ஓர் இளஞ்சிறுவன் உருவில் தோன்றி உலகில் அரிய பொருள்பற்றிச் சொல்லாடினரெனவும். அப்போது ஒளவையார் இதனைப் பாடினரெனவும் கூறுவர். மூகை - மூங்கை. ஊமை நீக்கிப் பிறத்தலும் என்றும் பாடவேறு பாடுண்டு. நன் குறல், நற்குற லென நின்றது. நன்கு உறல் - நிரம்பப் பொருந்துவது. தரித்தல் - மேற்கொள்வது. வானவர்நா டென்றும் பாட வேறுபா டுண்டு. வானவன் இந்திரன்.
வெண்பா
ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்றன் வீரமே வீரம் - ஒன்றானும்
சாவாமற் கற்பதே வித்தை தனைப்பிறர்
ஏவாம லுண்பதே யூண். 63
இஃது ஒருகால் ஒளவையாரைச் சிலர் சமய தத்துவங்களை யுரைக்குமாறு வேண்ட, அவர்க்கு ஒளவையார் தத்துவங் கூறியது.
குறிப்பு:- “ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்” என்ற திருமந்திரப்படியே சாதி சமய வேறுபாடின்றி ஒருமையுறக் காண்பதே நற் காட்சி; இதனைச் சம்மிய திருட்டி யென்பர். புலன் - புலன்கள் மேற் செல்லுகின்ற ஆசை சாவாமல் சோர்வு படாமல். பிறர்க்குத் தொண்டுசெய்து உணவுபெற்று உண்டு வாழ்வது மானமுடைய உரிமை வாழ்வாகா தென்பார், “தனைப் பிறர் ஏவாம லுண்பதே ஊண்” என்றார். “போனக மென்பது தானுழந் துண்டல்” என்பது கொன்றைவேந்தன்.
வெண்பா
ஏரு மிரண்டுளதா யில்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வரவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால்
என்று முழவே யினிது. 64
இது சிலர் ஒளவையாரை உழவு நன்றே என்று கேட்ட போது பாடியது.
குறிப்பு:- வடநூல்களில் உழவுத் தொழில் சிறப்பாகக் கூறப்படாமை கண்ட சிலர் ஒளவையாரை நோக்கி உழவுத் தொழில் நன்றோ என வினவினர். அவர்கட்கு இப்பாட்டால் ஒளவையார் விடையிறுத்தார். ஒரேருழவன் சிறப்படையான் என்பதைச் சங்க இலக்கியங்களில் காணலாம். செய்வார் - ஏவின செய்யும் பணியாட்கள். ஏகாரம் தேற்றம்; ஏனைத் தொழி லெல்லாவற்றையும் பிரித்தலின் பிரிநிலையுமாம்.
பொய்யா மொழியார்
வெண்பா
வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே
ஆய்த்த வரகா ரணிவயலிற் - காய்த்த
கதிரைமா ளத்தின்ற காளிங்க னேறும்
குதிரைமா ளக்கொண்டு போ. 65
குறிப்பு:- இப் பாட்டினைப் பொய்யாமொழியார் எவ்வமயம் பாடினாரென்பது தெரிந்திலது. வயிரபுரம் என்பது தொண்டை நாட்டிலுள்ளதோர் ஊர். இவ்வூர் பதினோராம் நூற்றாண்டிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் வயிரமேகபுரம் (A.R.No. 253.254, 256,257 of 1913), என்றும், வயிரமேக நகர மென்றும் வழங்கிப் பின்னர் வயிரபுரம் எனத் தொடங்கி இன்றுகாறும் அவ்வாறே வழங்கிவருகிறது. இதனை “சயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மா நாட்டுத் திருநல்லூர் நாட்டு வயிரமேகபுரமான சனநாதபுரம் என்றும், வயிரமேக நகர மென்றும், வயிரமேக
புரமான சனநாத நல்லூரென்றும் இவ்வூர்க், கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வூரைச் சார்ந்துள்ளதாகக் கூறப்படும் படாகை (Hamlet) எயிலூர் எனப்படும். எயிலூர் காளிங்கராயனது எயிலைச் சார்ந்த ஊராகும். பொய்யா மொழியார் பதின்மூன்றாம் நூற்றாண்டி விருந்தவர், அவர் சிறுவராயிருந்த காலத்தில் வரகு கொல்லைக் காவற்குப் போனவிடத்துக் காளிங்கராயன் குதிரை போந்து வரகு கதிரை மேய்ந்தது கண்டு வெகுண்டு இப்பாட்டைப் பாடினராக, குதிரை வீழ்ந்து இறந்து போயிற் றென்பர். பிற்காலத்தே, இவ்வரலாற்றைக் கம்பர்மேலேற்றி, வயிரபுரமென்பது, சேத்திரபாலபுரம் மென்றும், மாயூரந் தாலுகாவிலுள்ள தென்றும், இப்பாட்டுக் கம்பர் பாடிய தென்றும்” கூறுவாருளராயினர். ஆய்த்த - நுணுகிய. அருகா ரணிவயலில் என்னும் பாட
வேறுபாடு முண்டு.
வெண்பா
பொதியி லகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்
அதிக வமண்பாக் கிழானாய்த் - துதிபெருகு
செங்காட்டுக் கோட்டந் துறையூ ரெனுந்தலத்துச்
சங்காத்தங் கொண்டிருப்பாய் தான். 66
இஃது இவர் ஆசிரியர் பாடியது.
குறிப்பு :- பொய்யாமொழியார் வயிரபுரத்திலிருந்து தமிழ் கற்றுக் கவிபாடும் புலமையும் சிறந்து தம்முடைய ஆசிரியரை வணங்கி விடைபெற்றபோது ஆசிரியர் இப்பாட்டால் பொய்யா மொழியாரை வாழ்த்தின ரென்பர். பொய்யாமொழி யென்பது திருவள்ளுவனார்க் குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. இலக்கணப் புலமையில் அகத்தியன் போலவும், இலக்கியப் புலமையில் திருவள்ளுவர் போலவும், செல்வவாழ்வில் கிழானாகவும் விளங்க வேண்டு மென்பது ஆசிரியர் கருத்து. பொய்யாமொழி யென்ற சிறப்புப் பெயர் பயில வழங்கவே, இயற்பெயர் மறைந்து போயிற்று. இதன் இரண்டாமடி “யதிகவமண்பாக்கிழானாய்” என்றிருப்பது கொண்டு பலரும் “யதிகையமரப்பர்க்காளாய்” என்றும், “யதிக வமணப்பர்க் கீழாய்” என்றும், “யதிகை யமண் பார்க்கக் கீழாய்” என்றும் பாட மோதுவாராயினர். அதிக வமண்பர்க் கிழானாய் என்பது திருந்திய பாடமாகத் தோன்றுகிறது. செங்காட்டுக் கோட்டத்தில் சிறப்புற்ற ஊர்களுள் அதிகத்தூர் என்பது ஒன்று; அஃது அதிக மெனக் குறைந்து நின்றது. அமண் பாக்கக் கிழானென்பது அமண்பாக் கிழானென வந்தது; கொள்ளம் பாக்கக் கிழான் கொள்ளம் பாக்கிழான் பாக்கிழான் (S.I.Ins. Vol. V. No. 464) என்றும். பெரும்பாக்கக் கிழான் பெரும்பாக்கிழான் (S.I.I.V.No. 487) என்றும் வழங்கினாற் போல. “அமண்பாக்கம், சயங்கொண்ட சோழ மண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டுராசசூளாமணிச் சதுர்வேதி மங்கலத்தின் தென் பிடாகை அமண்
பாக்கம்” எனப் பரகேசரி வன்மன் விசைய இரோசேந்திர சோழனது நான்கா மாண்டிற் பிறந்த கல்வெட்டொன்று (S.I.I. Vol. III. No. 29) கூறுகிறது. துறையூர் என்பது பையூர் இளங்கோட்டத்துத் தேக்கூர் நாட்டிலுள்ளதாகச் சத்தியவேட்டுக் கல்வெட்டொன்றால்
(A.R.No. 31 of 1912) தெரிதலால், வேறுபடுத்திக் காட்டச் “செங்காட்டுக் கோட்டந் துறையூர்” என்றார். பொய்யாமொழி மங்கல மென்றே ரூருண் டெனவும், அது பெருநம்பி யென்பவனுக்குக் காணியாட்சி யெனவும், அவன் அவ்வூர்க் கடிகை மக்களுள் முத்தமிழாசிரியனென்ற சிறப்புற்று விளங்கிய சாத்தானார் ரென்பவருடைய வழித்தோன்ற லெனவும் கல்வெட்டொன்று (A.R.No.301 of 1909) கூறுகிறது. இதன் காலம் தெரிந்திலது. ஆயினும் இதனால் இப் பொய்யாமொழிமங்கல மென்னுமூர் பொய்யாமொழியார்க்குரிய தென்பது விளங்குகிறது. அவர் வழித்தோன்றலே பெருநம்பி யென்பது தெளியப்படுதலால். அவனால் குறிக்கப்படும் முத்தமிழாசிரி யரான சாத்தனார் பொய்யாமொழியாராதல் துணியப்படும். படவே, சாத்தனார் என்பது இயற்பெயரெனவும், முத்தமிழாசிரியர், பொய்யாமொழியார் என்பன சிறப்புப்பெயரெனவும் பெற்றாம். அதிகத்தூர் அவர் பிறந்தவூராகவும், அமண்பாக் கிழான் என்பது குடிப்பெயராகவும், வயிரபுரம் அவர் கல்வி பயின்ற வூராகவும், பெண் கொண்டதனாலோ, வழிபடு கடவுளுக்குரிய இடமாதலாலோ துறையூர் நல்ல தொடர்புடைய வூராகவும் கொள்ளலாம். இச்சாத்தனாரை மணிமேகலையாசிரியராகச் சிலர் கருதுவது (Ins. M.P.cg. NO.129) பொருத்தமாகத் தோன்றவில்லை. சங்காத்தம் - நற்றொடர்பு; உறவுமாம்.
கட்டளை கலித்துறை
புழற்கா லரவிந்தங் கூம்பக் குமுதம் பொதியவிழ்ப்ப
நிகற்கான் மதியமன்றோ நின்றிருக் குலநீ யவன்றன்
அழற்கா லவிர்சடை மீதே யிருந்துமவ் வந்திவண்ணன்
கழற்கால் வணங்குதி யோவணங் காமுடிக் கைதவனே. 67
இது பொய்யாமொழியார் பாண்டியன் வாசலிற் போய்ப் பாதி வசையும் நசையுமாகப் பாடியது.
குறிப்பு:- புழைக்கா லரவித்த மென்றும் குழற்கா லரவிந்த மென்றும் அழற்கா லொளிர் சடை யென்றும் பாட வேறுபாடுண்டு. சிறப்புடைய தாமரை கூம்ப, சிறப்பில்லாத குமுதம் மலர, மதியம் நிலவு பொழியு மென்பது நசை; இறைவன் முடி மேல் சடைக்கு அழகு செய்யும் மதிக்குலத்தோனாகிய நீ, அவன் அடியில் வீழ்ந்து வணங்குவது அழகன் றென்பது வசை. பொதிய விழ்ப்ப - மலர. அழற்கால் அவிர்சடை - நெருப்புப்போல் ஒளி செய்யும் சடை. கைதவன் - பாண்டியன். சிறப்புடைய புலவராகிய தம்மை நோக்காது,சிறப்பில்லாத ஏனோர் முகம் மலரச் செய்வது குறித்து வசையும், புலவர் வரிசை நோக்கானாயினும் சிவ வழிபாட்டில் தவறாமையின் நசையும் தோன்றப் பொய்யா மொழியார் இப்பாட்டைப் பாடியிருப்பது காண்க. பொய்யா மொழியார் மதுரையிற் பழைய சங்கத்தைப் புதுப்பிக்க எண்ணிப் பாண்டியனைக் காணச்சென்றன ரெனவும், அங்கே பாண்டியனைத் திருவாலவாய்த் திருக்கோயிலில் வழிபட்டு வணங்கும் நிலையில் கண்டு இதனைப் பாடின ரெனவும் கூறுப.
வெண்பா
உங்களிலே யானொருவ னெப்ரபேனோ வொவ்வேனோ
திங்கள் குலனறியச் செப்புங்கோள் - சங்கத்துப்
பாடுகின்ற முத்தமிழென் பன்னூலு மேற்குமோ
ஏடவிழ்தா ரேழெழுவீ ரின்று. 68
இது பொய்யாமொழியார், சங்கப்பலகையிற் சிலாரூபமான சங்கத்தாரைப் பாடியது. சங்கப்பலகையிற் சிவபெருமான் சங்கத்தைப் பாடியதென்றும் பாடவேறுபாடுண்டு.
குறிப்பு:- மேலே காட்டிய கலித்துறையைக் கேட்டு வியப்புற்ற பாண்டியன் பொய்யாமொழியாரது புலமை நலத்தை வியந்து அன்புகொண்டு அளவளாவி அவர் பழைய சங்கத்தைப் புதுப்பிக்கும் கருத்துடையராதலையும் அறிந்தான். வேந்தனும் பொய்யாமொழியாரும் பிற சான்றோரும் பேசிக்கொண்டே சங்கத்தார் கோயிலை யடைந்தன ரெனவும், அப்போது பாண்டியன் பொய்யாமொழியாரை நோக்கி, “இச் சங்கத்தார் திருவுருவம் எழுந்து தலையசைக்குமாறு பாடுவீராயின், பழைய சங்கத்தை நீர் புதுப்பிக்க இயலு” மென்றானாக, அவன் பொருட்டு இப்பாட்டைப் பாடினா ரெனவும் கூறுவர். திங்கட்குலன் - சந்திர குலத்தவனான பாண்டியன். ஏடு - பூவின் இதழ். ஏழ் எழுவீர் - நாற்பத்தொன் பதின்மரே.
வெண்பா
பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்
பாவேந்த ருண்டென்னும் பான்மைதா - மாவேந்தன்
மாற னறிய மதுரா புரித்தமிழோர்
வீறணையே சற்றே மித. 69
இது, பொய்யாமொழியர் சங்கப்பலகை மிதப்பப் பாடியது.
குறிப்பு:- பொய்யாமொழியார் சங்கத்தார் கோயிலில் நின்று தங்குதடையின்றிப் பாடக்கண்ட பாண்டியன் அவரைப் பழைய சங்கத்தார் வீற்றிருந்த சங்கப்பலகை பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிவிட்ட தெனவும், அது மறுபடியும் சிறிது மிதந்து காட்டவேண்டு மெனவும் பாண்டியன் சொல்லப் பொய்யா மொழியார் இப் பாட்டைப் பாடின ரென்பர். தமிழோர் - சங்கத் திருந்த நல்லிசைச் சான்றோர். வீறணை - சிறப்பு மிக்க சங்கப் பலகை.
வெண்பா
வாச மலர்மடந்தை போல்வார்வண் கானப்போர்
ஈசன் றமர்க ளெழுபதின்மர் -தேசத்
திரவலர்மே னீட்டுவர்கை யீண்டுலகங் காக்கும்
புரவலர்மே னீட்டுவர்பொற் கால். 70
இது காளையார் கோயில் தேவரடியார் எழுபதுபேரும் எழுபதினாயிரம் பொன் கொடுக்கப் பொய்யாமொழியார் பாடியது.
குறிப்பு:- ‘ஈசன்றன் மக்களென்றும் நீட்டுவர் தங்கால்’ என்னும் பாடவேறுபா டுண்டு. சில நூற்றாண்டுகட்கு முன்பு தென்னாட்டுத் திருக்கோயில்களில் மகளிர் பலர் தேவரடியா ரெனவும், பதியிலா ரெனவும், கோயிற் பெண்க ளெனவும் இருந்து, நெற்குற்றுதல், திருவலகிடுதல், பூத்தொடுத்தல் முதலிய பல திருப்பணிகள் புரிந் தொழுகினர். வேறு சிலர் கூத்தும் இசையும் பயின்று சந்திகளிலும் விழாக்காலங் களிலும் சாந்திக் கூத்தாடலும், நல்லிசை நவிற்றலும் செய்தனர்; இவர்களுள் செல்வமிக்குடை யோர் சீரழிந்த கோயில்களில் திருப்பணி செய்தலும், இல்லாமலும் சீரழிந்தும் போன திருவுருவங்களை ஏற்படுத்துதலும், புதுக்குதலும் செய்துள்ளனர். திருக்கோயிலாட்சி முறைகள் சீரழியத் தொடங்கிய பின், இவர்களுட் பலர் வரைவில் மகளிராகிய கணிகைமகளி ராயினர். முடிவில் திருக்கோயில் கட்கும் இம் மகளிர்க்கும் தொடர்பே இல்லாதொழியவே, இவர்களனைவரும் காசுக்கு நலம் விற்கும் கடை மகளிராக மாறினர். தேவரடியா ரென்ற பெயர் மாறிற்று. தேவரடியார், பதியிலார், கோயிற் பெண்கள், நாடக மகளிர் என்பன முதலிய பெயர் நீங்க, தேவரடியார் தேவதாசி என்ற பொதுப்பெயர் உண்டாயிற்று. பொய்யாமொழியார் காலத்தே தேவரடியார் பலர் செல்வர் பொருள் பறிக்கும் தேவரடி யாட்களாய் மாறியிருந்தனர். திருக்கானப்பே ரென்னும் காளையார் கோயிலுக்குச் சென்றிருந்தபோது தேவரடியார் எழுபதின்மர் அங்கே இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு ஆயிரம் பொன்னாக எழுபதினாயிரம் பொன் பொய்யாமொழியார்க்கு இரவலர் இன்மை தீர்க்கும் கருத்தால் நல்கின ரெனவும், அக்காலத்தே அவர் இப்பாட்டைப் பாடினரெனவும் கூறுவர். வாசமலர் மடந்தை - திருமகள். புண்ணியமுள்ள அளவும் ஒருவனைப் பற்றியிருந்தது, அப்புண்ணிய முலர்ந்த பின் அவனைக் கையற் றொழிவது திருமகள் தொழில். அவ்வாறே இத்தேவமகளிரும் செல்வமிருக்குமளவும் ஒருவனைப் பற்றியிருந்து அச் செல்வம் தொலைந்தபின் அவனைக் கையுதிர்த்து நீங்குவர். அதுபற்றியே “வாச மலர்மடந்தை போல்வார்” என்றார். தேவரடியா ரென்பது தோன்ற, “ஈசன் தமர்கள்” என்றார். இரவலர் மேல் கையும், புரவலர் மேல் காலும் நீட்டுவர். கால் நீட்டுவர் - கலவிக்கண் ஊடிக்காட்டி யின்புறுத்துவர். பொற்சிலம் பணியும் கால் என்பதனைப் “பொற்கால்” என்றார். உலகாளும் வேந்தரும் இம் மகளிர் நலம் நயந்தமை தோன்ற, “உலகங் காக்கும் புலவலர்” என்றார்.
கலி விருத்தம்
அளிகொ ளுந்தொடை யானர சைக்குமன்
ஒளிகொள் சீநக்க னின்றுவந் திட்டசீர்ப்
புளியஞ் சோறுமென் புந்தியிற் செந்தமிழ்
தெளியும் போதெலாந் தித்தியா நிற்குமே. 71
இது பொய்யமொழியார் சீநக்கன் கட்டுச்சோறு கொடுக்கப் பாடியது.
குறிப்பு : - நக்கன் என்பது சிவன் பெயர்களுள் ஒன்று; ஸ்ரீ நக்கன் என்பது சீநக்கன் என வழங்கிற்று; ஸ்ரீதரனைச் சீதர னென்பது போல. அளி - வண்டு. தொடை - மாலை. அரசை - அரசூர். பொய்யாமொழியார் சீநக்கனைக் காண விரும்பி அவனது அரசூர்க்குச் சென்றுகொண்டிருக்கையில் இடைவழியில் வேறு வேலையாக அவனே வந்திருப்பக் கண்டு இன்புற்றார். அப்போது அவன் தன்பொருட்டுக் கொண்டுவந்திருந்த புளிச் சோற்றினை அவர்க் கிட்டு மகிழ்ந்தானக, அப்போது இப்பாட்டுப் பாடப்பட்ட தென்பர். சோறிட்ட செய்தியைச் சோழமண்டல சதகம், “பொய்யா மொழியார் பசிதீரப் புளியஞ் சோறு புகழ்ந் தளித்த, செய்யா ரரசூர்ச் சீநக்கர் செய்த தெவருஞ் செய்தாரோ, கையாருதவி பொறையுடைமை காணியாளர் கடனன்றோ, மையார் புவியின் முதன்மைபெற்றோர் வளஞ்சேர் சோழ மண்டலமே” (செய்.54) என்று குறிக்கிறது. அரசூர், சோழநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்தில் உள்ளதோர் ஊர். இங்கே செல்வனான சீநக்கன் வாழ்ந்தா னென்பர்.
வெண்பா
திறையின் முறைகொணர்ந்து தெவ்வரெல்லா மீண்ட
இறையு மிறைகடக்க லாகா - அறைகழற்கால்
போர்வேந்தர் போர்மாளப் போர்வா ளுறைகழித்த
தேர்வேந்தன் தஞ்சைத் தெரு. 72
இது பொய்யமொழியார் சீநக்கனுக்குப் பாடிக் கொடுத்தது.
குறிப்பு:- அரசூரில் வாழ்ந்த செல்வனான சீநக்கன் ஒருகால் தஞ்சையில் உள்ள சோழவேந்தனைக் காணச் செல்லலுற்றான். அவன்பால் பொய்யாமொழியார் வந்திருந்தார். வேந்தனைக் காணச் செல்லும் தான் கொண்டகை யுறைகளோடு தமிழ்ப் பாட்டொன்று கொண்டுபோக விரும்பினானாக, அவற்குப் பொய்யாமொழியார் இப்பாட்டைப் பாடித்தந்தா ரெனவும், சீநக்கன் அதனைக் கொண்டு சென்று வேந்தர்க் களிக்க, அச் சோழவேந்தன் பாட்டின் நலங்கண்டு வியந்து சீநக்கன் வாழ்ந்த அரசூர் உள்ளிட்ட ஏழுர்களை அச் சீநக்கனுக்கு அளித்தா னெனவும் கூறுவர். இதனைச் சோழமண்டல சதகம், “திறையின் முறையென் றுலகறியச் செப்பும் பொய்யா மொழிதமிழ்க்காத், துறையி னளகை ராசேந்தர சோழன் வரிசை தொகுத்தளித்தே, அறையும் பெருமைச் சீநக்க ரரசூர் முதலா வேழூரும், மறுவிலாது விளங்கியது வளஞ்சேர் சோழ மண்டலமே” (53) என்று கூறுவது காண்க. ஏழூரு மாவன: “சிற்றரசூர் பேரரசூர் தென்மாவை பூந்துருத்தி, சுத்தமல்லி கண்டி குறுகாவூர்” (பெருந் - 1450) என்பனவாம். சிற்றரசூர் திருப்பூந்துருத்திக் கல்வெட்டொன்றிலும் (A.R.No.111 of 1930 -31). காணப்படுகிறது. மாத்தூர் மாவையென வந்தது; இது நித்தவினோத வளநாட்டைச் சேர்ந்தது (A.R.No.150 of 1933 -4) சுத்தமல்லி யென்பது சோழ நாட்டிலுள்ளதோ ரூர். சீநக்கனுக்கு ஊர் ஏழுந் தந்து மும்முடி சோழக்கண்டியூர் நாடாள் வான் என்ற சிறப்பும் செய்தான் சோழவேந்தனான ராசேந்திரன். பொய்யாமொழிபால் தான் கொண்ட பெருநட்புத் தோன்ற அவர் பெயரையும் சேர்த்துப் பொய்யாமொழி மும்முடிச்சோழக் கண்டியூர் நாடாள்வான் என்று சீநக்கன் பின்பு விளக்கமுறுவானா யினான். இந்த ராஜேந்திரன் பதின்மூன்றாம் நூற்றாண்டில் விளங்கியவன் சீநக்கனது இச்சிறப்பு, மாறவன்மன் சுந்தரபாண்டி யனுடைய பதினைந்தா மாண்டுக் கல்வெட்டொன்றால் (A.R.No.71 of 1924) தெரிகிறது. சீநக்கமங்கலமென்றோர் ஊர் சோழநாட்டிலிருந்ததாக அச்சுதமங்கலக் கல்வெட்டொன்றால் (A.R.No.406 of 1925) அறிகிறோம். சீநக்க மங்கலமென்பது சீதக்க மங்கலமெனத் தவறாக வெளியாகியிருக்கிறது. தெவ்வர் - பகைவர். இறை - சிறிது. “போர்வேந்தர் போர்மாளப் போர்வாள்” என்பது சொற் பொருட்பின் வருநிலை.
வெண்பா
தூசுதூ சாக்குவார் பாவை சுடர்த்தொடிக்கை
ஆசிலாக் கண்டியூ ராரணங்கு - வாசமலர்க்
கண்ணங்கை கொங்கைமுகங் காலுங் கடிக்கமலம்
கண்ணங்கை கொங்கைமுகங் கால். 73
இது பொய்யாமொழியார் கண்டியூர் வண்ணாத்தியைப் பாடியது.
குறிப்பு:- இக் கண்டியூரில் சீநக்கன் வாழ்ந்துவந்தான். இங் காண்டியூரும் “ஆர்க்காட்டுக் கூற்றத்துப் பிரமதேயமான திருகண்டியூர்” (S.I.Ims. Vol. V.no.575) என்று கூறப்படுகிறது. பொய்யாமொழியார் சீநக்கன்பால் பெரு நட்புக்கொண்டிருக் கையில் அவ்வூரிலிருந்த வண்ணாத்தி யொருத்தியைக் கண்டார். அவளைப்பற்றிப் பாடவேண்டிய நிலைமையொன்று உண்டாயிற்று. அது தெளிய விளங்கவில்லை. ஆயினும் இப்பாட்டு வண்ணாத் தியைப் பொய்யாமொழியார் பாடிய தென்ப. தூசு தூசாக்குவார் - உடையைத் தூயதாக்குவர். தூயது என்பது தூசு என வந்தது. ஆசு - குற்றம், வாசமலர்க்கண் நங்கை - மணங்கமழும் தாமரைப்பூவில் இருக்கும் திருமகள். கொங்கை முகங்காலும் கடிக்கமலம் - தேனை முன்னே சொரிகின்ற மணங்கமழும் தாமரை. கொங்கு - தேன். கண், அங்கை, கொங்கை, முகம், கால் ஆகிய இவை தாமரையை ஒக்கும் என்பதாம்.
வெண்பா
பொன்பாவுங் கன்னிப் பொறிப்புறவே யேதிலன்பின்
என்பாவை செல்லற் கியைந்தனளே - மின்பாயும்
மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
கானவேன் முட்டைக்குங் காடு. 74
இது பொய்யாமொழியார் முருகவேளைப் பாடியது.
குறிப்பு:- ஒருகால் பொய்யாமொழியார் ஒரு காட்டு வழியே சென்றுகொண்டிருக்கையில் முருகவேள் ஒரு வேட்டுவன் வடிவில் குறுக்கிட்டு நின்று தன்மேல் ஒரு பாட்டுப்பாட வேண்டு மென்றாரெனவும், பொய்யாமொழியார் வேட்டுவன் பெயர் கேட்டு முட்டையென விடைபகரக்கொண்டு இப் பாட்டைப் பாடினரெனவும் கூறுவர். பாவும் - பரவும், பொன் - பொன்னிறம். பொறிப்புரி - வடுவுண்டாக. மானவேல் முட்டை - பெருமை பொருந்திய வேலையுடைய முட்டை யென்பவன். வேல்முள் தைக்கும் காடு என்க. வேல்முள் - வேலமரத்தின்முள். காடு செல்லற் கியைந்தனளே என இயையும். இவ் வரலாற்றை அருண கிரியாரும், “குறமகள் மேல்மால் முற்றித்திரி வெற்றிக் குருபர முற்பட்ட முருட்டுப்புலவனை முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே” (சமா. பதி. 953) எனக் குறிப்பது காணலாம்.
கட்டளைக் கலித்துறை
அங்கம் புலியத ளாடையைச் சாத்தி யரவமுடன்
பங்கம் புலிவைத்த பண்பர்க் கிடம்பணை வாளெயிற்று
வெங்கட் புலியைவிட் டானையைத் தேடி விதவிதமாய்ச்
சிங்கமிருந்து தனித்தனி நோக்குஞ் சிராமலையே. 75
இது பொய்யாமொழியார் சிராமலையைப் பாடியது.
குறிப்பு:- இதனைப் பொய்யாமொழியார் பாடுதற்குரிய காலமும் இடமும் விளங்கவில்லை. அங்கம் - உடல். புலியதள் - புலித்தோல். பங்கு அம்புலி - பிறைத்திங்கள். பண்பார்க்கு இடம் சிராமலையென்று இயையும். சிராப்பள்ளிக்குன்று சிராமலை யெனப்பட்டது.
வெண்பா
கூத்தாண் முகத்திரண்டு கூர்வேல்கள் கூத்தாடன்
மூத்தாண் முகத்தின் முழுநீலம் - மூத்தாடன்
அன்னை முகத்தி லரவிந்த மன்னைதன்
அன்னை முகத்திரண் டம்பு. 76
இது பொய்யாமொழியார் நாலுபேருக்குக் கண்தெரியப் பாடியது.
குறிப்பு : திருக்கானப்பேரை (காளையார் கோயிலை) ஒரு நாள் நள்ளிரவில் பொய்யாமொழியார் சென்றடைந்தார். மிகப் பசித்திருந்த அவர் அங்கே அப்போது கூத்தாளென்ற தேவரடியாருள் ஒருத்தி வீட்டை யடைந்து சோறு வேண்டினார். கூத்தாளும் அவள் தமக்கையும் அவர் தாயும் பாட்டியும் குருடர்களாய் வருந்திக் கொண்டிருந்தனர். அதுகண்டு பொய்யாமொழியார் மனங்கசிந்து இப்பாட்டைப் பாடினா ரென்ப.
வெண்பா
அறமுரைத் தானும் புலவன் முப்பாலின்
திறமுரைத் தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவ னெனில். 77
இது பாண்டியன், “நீவிரும் நல்ல புலவரே” என்றாராகப் பொய்யாமொழியார் பாடியது.
குறிப்பு:- மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த மாறவன்மனான சுந்தரபாண்டியன் பொய்யாமொழியாருடைய புலமையும் பாவன்மையுங் கண்டு வியப்பு மிகுந்து “நீரும் பண்டைப்புலவர்கள் போல நல்ல புலவரே” என்றான். அதுகேட்ட பொய்யா
மொழியார் அடக்கம்பெரிது முடையராய் இப் பாட்டைப் பாடினரென்ப. அறமுரைத்தான் - தென்முகக் கடவுளாயிருந்து அறமுரைத்த சிவபெருமான். முப்பால், திருக்குறள். குறுமுனி, அகத்தியன். தரணி - நிலம்.
கொச்சகக் கலிப்பா.
தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர்
நாரியார் தாமறிவார் நாமவரை நத்தாமை
கோரைவாய் பொன்சொரியுங் கொற்றவன் றன்கண்டி
யூரைவாய் மூட வுரையறிந்தோ மில்லையே. 78
இது பொய்யாமொழியார்க்கு அபவாதம் வந்தபோது அவர் பாடியது.
குறிப்பு:- சீநக்கன் பெருமனையில் பொய்யாமொழியார் இருந்து வருகையில் ஒருநாள் அவன் உறங்கும் கட்டிலிற் படுத்து உறங்கிவிட்டார். அதனையறியாது அவன் மனைவியும் அவரருகே படுத்து உறங்கினார். பின்னர் உறங்கற்கு வந்த சீநக்கன் “இஃது அறியாது நிகழ்ந்த” தென்றெண்ணி அவரை மெல்ல எழுப்பித் தனக்கும் சிறிது இடம் தர வேண்டினன். பொய்யாமொழியார் நிகழ்ந்தது நினைந்து பெரிதும் வருந்தி விலகிக்கொண்டார். இந் நிகழ்ச்சி மெல்ல ஊரவர்க்குத் தெரியவே, பொய்யாமொழியைச் சிலர் தூற்றத் தொடங்கினர். அது குறித்து அவர் இப்பாட்டைப் பாடினார். தேரை என்பது தேங்காயைப் பற்றுவதொரு நோய். அந் நோயுற்ற தேங்காயில் உள்ளீடு ஒன்றும் இராது. அது பற்றியே அத் தேங்காயைத் தேரை மோந்ததென்னும் வழக்குண்டாயிற்று. தேரை, தவளையினத்துள் ஒன்று. நாரியார், சீநக்கன் தேவியார். நத்தாமை, - விரும்பாமை. ‘உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூடலாகாது’ என்பது பழமொழி.
வெண்பா
கோதில்குல மங்கைக் குலோத்துங்கச் சாவகனென்
றோதினேன் றன்னை யொறுப்பதனான் - மாது
துளையாது முத்துவடந் தூக்கின ளாரம்
விளையாடு செப்பிரண்டின் மேல். 79
இது பொய்யாமொழியார் புலையன்றன் உடல் வெடிக்கப் பாடியது.
குறிப்பு:- ஒருகால் பொய்யாமொழியார் தனியே போய்க் கொண்டிருக்கையில் அவர் மேலுண்டான பொய்ப் பழியை மெய்யென்று கருதிச் செற்றங் கொண்டிருந்த புலைய னொருவன் கண்டு, “நீர்யா”ரென்று வினவ, அதற்குப் பொய்யாமொழியார் தம்மைத் குலோத்துங்கச் சாவகனென்று விடையிறுத்தார். உடனே, அவர்பாற் கொண்டிருந்த செற்றத்தால் அவரை நன்கு புடைத்து வருத்தினான். அவனது மிக்க செயல் கண்டு பொய்யாமொழியார் அவனை வெகுண்டு நோக்கினார். அவன் தன்னுடல் வெடித்து வீழ்ந்து மாண்டான். அவன் மனைவி கண்ணீர் மார்பகம் நனைப்பச் சொரிந்து அழுது புலம்பினாள். அதனை இப்பாட்டால் எடுத் துரைத்துள்ளார். குலோத்துங்கச் சாவகனென்பது சீநக்கன் தந்த சிறப்புக்களுள் ஒன்று; இது குலோத்துங்கச் சாத்தனென்றோதினேன் என்று பாஉமிருத்தல் வேண்டும். துளையாது தூக்கினாள் - துளைத்து நூலிட்டுக் கோவாது அணிந்தாள். முத்துவடம், ஈண்டுக் கண்ணீராகிய முத்து. ஆரம் - முத்துமாலை. செப்பு - கொங்கைகள்.
வெண்பா
அன்றுநீ செல்லக் கிடவென்றா யாருயிர்விட்
டின்றுநீ வானுலக மெய்தினாய் - வென்றிதிகழ்
வானக்க பூண்மடவார் மார்பனே கண்டியூர்ச்
சீநக்கா செல்லக் கிட. 80
இது பொய்யாமொழியார் சீநக்கனுடன் தீப்புகுந்த பாட்டு.
குறிப்பு :- பொய்யாமொழியார் கண்டியூரில் தமக்குண்டான பொய்ப்பழி காலக்கழிவால் நீங்குமென்று கருதிப் பாண்டி நாட்டிற்குச் சென்று, அங்கே தஞ்சாக்கூரில் வாழ்ந்த வாணன் என்பானுடைய நட்புப்பெற்று அவன்மேல் தஞ்சைவாணன் கோவையைப் பாடிச் சிறப்பிக்க, அவனும் அவர்க்கு வேண்டும் நலம் பலவும் செய்தானாக, இதற்குள் சில யாண்டுகள் கழிந்தன. பின்பு அவர் பாண்டிநாட்டை விட்டுக் கண்டியூர் வந்து சேர்ந்தார். சின்னாளில் சீநக்கன் உயிர் துறந்தான். அவனுடலை ஈமத்தில் எரிக்கும்போது உடனிருந்து கண்ட பொய்யாமொழியார் அவன் பிரிவாற்றாராய் இப் பாட்டைப் பாடிவிட்டுத் தாமும் அவ்வெரியில் வீழ்ந்து உயிர்விட்டார். அன்று - அறியாது அவன் படுத்துறங்கும் கட்டிலில் தாம் படுத்துறங்கின அன்று. செல்லக்கிட - சிறிது ஒதுங்கி எனக்கும் சிறிது இடமுண்டாகப்படு. வானக்க பூண்மட வார் மார்பன் - பெருமை விளங்கும் பூணாரமணிந்த மகளிர் தழுவும் மார்பையுடையவன்.
கம்பர்
வெண்பா
மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே - நாட்டில்
அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லும்
உடையான் சரராம னூர். 81
இது கம்பர் தெய்வ வரத்தினாற் கவிசொல்லிய நாளிற் பாடியது.
குறிப்பு:- நெடுநாள் கவிபாடும் திறன் இன்றியிருந்த கம்பர் தெய்வவரத்தினால் கவிபாடும் திறம் பெற்றபோது வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பனைச் சிறப்பித்து இப் பாட்டைப் பாடினா ரென்பர். மோட்டெருமை - பெரிய எருமை. வாவி - நீர்நிலை. கன்றென்று - தன் கன்றென நினைந்து கனைப்ப; இராமாயணத் திலும் கம்பர் இக் கருத்தை, “காலுண்டசேற்று மேதிக் கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த, பாலுண்டு துயில” (நாடு.) என்று கூறியிருப்பது காண்க. வெண்ணை - வெண்ணெய் நெல்லூரின் மரூஉமுடிபு. சரராமன் என்பது சடையப்பன் பெயர்களுள் ஒன்றென்பர். (கம்பராமா. நாகபாச. 263) சடையப்பனூர் என்றும் வெண்ணெ யென்றும் பாடவேறுபாடுண்டு.
வெண்பா
ஆழியான் பள்ளி யணையே யவன்கடைந்த
வாழி வரையின் மணித்தாம்பே - பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட. 82
இஃது ஏரெழுபது பாடி யரங்கேற்றும்போது புதுவைச் சேதி ராயனை விடந்தீண்ட அது தீரக் கம்பர் பாடியது.
குறிப்பு:- கம்பர் வேளாளரைச் சிறப்பித்து ஏரெழுபது பாடி அரங்கேற்றியபோது அங்கே வந்திருந்த புதுவைச் சேதிராய ரென்பான் காலில் ஒரு பாம்பு சுற்றிக்கொண்டதாக, அது நீங்குமாறு கம்பர் இப் பாட்டைப் பாடினரென்பர். சேதிராயனை விடந் தீண்டியதாகவும், கம்பர் அது நீங்கப் பாடியதாகவும், “அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண்டது மறைத்தேர், எழுபதுங்கொண்ட புகழ்க் கம்ப நாடனெழுப்ப விசை, முழுவதுங் கொண்டு” (57) என்று தொண்டை மண்டல சதகமும் “குணங்கொள் சடையன் புதுச்சேரிக் குடையான் சேதிராயன் முதற், கணங்கொள் பெரியோர் பலர் கூடிக் கம்பநாடன் களிகூர, இணங்கும் பரிசிலீந்து புவியேழும் புகழே ரெழுபதெனும், மணங்கொள் பெருங் காப்பியப் பனுவல் வகித்தார் சோழ மண்டலமே” (78) என்று சோழ மண்டலமும், “பாவலர்தாம், ஏரழுபதோதியரங் கேற்றுங்களரியிலே, காரிவிட நாகங்கடிக் குங்கை” எனற் றிருக்கை வழக்கமும் (69,70) கூறுகின்றன. மேலும், புதுவைச் சேதிராய னென்பான், “புதுவையூரில் வாழ்ந்த சடையன் என்பானுக்கு மகனாவன். இதனைப்”புதுவைவாழ் சடையனுதவுசேய், பூதலம் பரவு சேதிபன்" (பெருந்தொகை.) என்ற சாசனப் பாட்டாலறியலாம். வெண்ணெய்ச் சடையன் வேறு, புதுவைச் சடையன் வேறு. இருவரையும் ஒருவாராகக் கருதுவோரு முளர். மணித்தாம்பு - மணியையுடைய பாம்பாகிய கயிறு; அது வாசுகிப்பாம்பு. பூழி - திருநீறு. பொற்சிலை - பொன்மலையாகிய வில்.
வெண்பா
மங்கை யொருபாகன் மார்பிலணி யாரமே
பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே - திங்களையுஞ்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
ஏறிய பண்பே யிறங்கு. 83
இதுவுமது.
குறிப்பு:- மங்கை - உமாதேவி. பண்பு - முறை. இப் பாட்டிரண்டையும் தில்லை மூவாயிரவரில் ஒருவர் பிள்ளையை நாகந்தீண்ட அவன் இறந்துபடவே அவன் உயிர்பெற்றெழுமாறு கம்பர் இவற்றைப் பாடினரெனக் கூறுதலுமுண்டு.
வெண்பா
மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரியே - பொய்கழுவும்
போர்வேற் சடையன் புதுவையான் றன்புகழை
யார்போற்ற வல்லா ரறிந்து. 84
இது காவிரி எச்சில்படக் கம்பர் பாடியது.
குறிப்பு:- ஒருகால் சிலரிடையே காவிரி நீரின் சிறப்புப்பற்றி ஒரு சொல்லாடல் நிகழ, அங்கிருந்த கம்பர் அவர்களை மறுப்பது போலப் புகழ்ந்து இப் பாடலைப் பாடினர். விருந்துண்டவர் உண்ட தம் எச்சிற் கையைக் காவிரியில் கழுவுவரென்றும், அதனால் காவிரிநீர் எச்சிற்பட்ட நீரென்றும் தோன்ற, “உண்டு மீளுமவர் கை கழுவநீர் போதுங் காவிரியே” என்றார். போர்வே ளென்றும் பாடம். இப்பாட்டு மூவலூர்க் கல்வெட்டில் (A.R.No.29, of 1925) “புதுவையான் இல்லறத்தை” யென்ற பாட வேறுபாட்டுடன் காணப்படுகிறது. புதுவையைப் புதுவாபுரியெனத் திருக்கோடிகா கல்வெட்டு (A.R.No.58 of 1930 -1) கூறுகிறது.
வெண்பா
கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரையழிந்து போனாளென் - றிந்நீர்
உரைகிடக்க லாமோ வுலகுடைய தாயே
கடைகடக்க லாகாது காண். 85
இது கம்பர் காவிரி பெருங்கடங்கப் பாடியது.
குறிப்பு:- கம்பர் காலத்தில் ஒரு சமயம் காவிரியாறு பெருக்குமிடத்து கரை கடந்து நாட்டிற் பரவியது கண்டு மக்கள் வருந்தினர். அது கண்ட கம்பர் காவிரிப் பெருக்கில் ஓலை நறுக்கொன்றில் இவ் வெண்பாவை யெழுதி விட்டாராக, பெருக்கு அடங்கு வதாயிற்றென்பர். மழை மிகப் பெய்தலால் ஆறு நீர் பெருகுங்கால், அஃது அடங்குவது குறித்து இவ் வெண்பாவை ஓலைத்துண்டில் எழுதி ஆற்றில் விடும் வழக்கம் சிற்றூர்களில் காணப்படுகிறது. கன்னி யென்றது குமரியாறு; அது கடல் கொள்ளப் பட்டது பற்றி, “கன்னியழிந்தனள்” என்றார். வானத்தே யோடிக் கொண்டி ருந்த கங்கை பகீரதன் தவம் காரணமாக நிலத்திற்குவந்து சிவபெருமான் சடைவழியாகவும் சன்னு முனிவன் செவி வழியாகவும் நெருக்குண்டு வெளிப்பட்டுக் கடலடைந்த தென்ற புராண வரலாற்றை யுட்கொண்டு, “கங்கை திறம்பினள்” என்றார். இந்நீர் உரை - இத்தகைய பழிச் சொல். “வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி யொழியாய்வழி காவேரி” (சிலப் - கானல் 27.) என்பது பற்றி ஈண்டும் காவிரியை “உலகுடைய தாயே” என்றார்.
வெண்பா
செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - இட்டமிலாப்
பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோம் பரிசறிந்து
காப்பா ருழவாளர் காண். 86
இஃது ஒரு வேளாளன் களத்தில் குறுணி நெல் வாங்கி வேலிக் காலில் இறைத்துக் கம்பர் பாடியது.
குறிப்பு:- ஒருகால் கம்பர் தமது வேலிக்காலில் விதை விதைக்கும்போது குறுணிநெல் குறைய அது குறித்துப் பலரையும் கேட்க, அவர் இல்லையென்றாராக, நெற்களத்தில் இருந்த வேளாளன் ஒருவனைக் கேட்கவே, அவன் உடனே தந்து அவர் குறையை நீக்கினானென்றும், அதனை வியந்து கம்பர் இப்பாட்டினைப் பாடினரென்றும் கூறுவர். பொட்டிமக்கள் - பொருளீட்டம் ஒன்றையே கருதிவாழும் மக்கள். இட்டமிலாப் பார்ப்பார். பிறர்க்கு உதவுதலில் விருப்பமில்லாத பார்ப்பனர்; “யானோ கொடுக்கும் பார்ப்பான்” என்ற வழிக்கொடைத் தொழில் பார்ப்பான் மேலேறுதலின், யானோ கொடுப்பக் கொள்ளும் பார்ப்பான் எனப் பொருளுரைக்க வேண்டு” (தொல் - சொ. 228) மெனத் தெய்வச் சிலையார் உரைப்பது ஈண்டு ஒப்புநோக்கற் குரியது. பரிசு – தகுதி
கட்டளைக் கலித்துறை
கூளம் பிடித்தெள்ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்குக்
காளம் பிடித்திடிற் சின்னம் படுமன்னர் காதலிமார்
வேளம் பிடித்தகண் வெள்ளம் பிடிக்கவெம் பேய்க்கிளம்பேய்
தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே. 87
இது கம்பர் வாணியன் தாதன் விருதுகாளம் பிடிக்கப் பாடியது.
குறிப்பு:- வாணியன் தாதன் என்பவன் தொண்டை நாட்டில் வாழ்ந்த புலவன். அவன் கம்பர் பாடிய மும்மணிக் கோவை யென்னும் நூலிற் குற்றங்காட்டி ஒரு பாட்டுப் பாடினானாக, அவன்பால் கம்பருக்கு அருவருப் புண்டாயிற்று; அவன் பாட்டுக்கள் சிறப்பில்லாதனவா யிருந்தன. ஆயினும் சோழ வேந்தன் அத்தாதனைச் சிறப்பித்து விருது காளம் முதலிய சிறப்புடையனாகச் செய்து, தொண்டை நாட்டுத் திருவிற் கோலமாகிய கூவத்தை அத்தாதனுக்கு வழங்கினான். தாதன் விருதும் காளமும் கொண்டு மேன்மையுறுவது கண்ட கம்பர் அதனை இகழ்ந்து இப் பாட்டைப் பாடினார் என்ப. எள் கொண்டு எண்ணெயும் பிண்ணாக்கும் வகுத்தெடுக்கும் செக்கார் செயைலத் தாதனை இகழும் குறிப்பில் வைத்து, “கூளம் பிடித்து எள்ளின் கோதுவைப்பான்” என்றார். சின்னம்படும் - குறைவுண்டாம். வேள் அம்பு இடித்த கண் - காமவேள் அம்பாகிய பூவை வென்ற கண்கள். வெள்ளம் பிடிக்க - கண்ணீர் சொரிய, காளம் பிடித்தல் - எக்காளம் ஊதுதல். கோதுவைப்பானாகிய வாணியன் தாதன் காளம் பிடித்திடின், நம் குலக்கவிக்குச் சின்னம் படும் என இயையும்.
கொச்சகக் கலிப்பா
தாதா வென்றாலுந் தருவென்று சொன்னாலும்
தாதா வென்றாலுந் தருவனோ தாராதான்
தாதா வென்றாலுந் தருவென்று சொன்னாலுந்
தாதா வென்றாலுந் தருவனந் தாதனே. 88
இது கம்பர் வாணியன் தாதனைப் பாடியது.
குறிப்பு:- கம்பர் ஒருகால் தொண்டை நாட்டிலுள்ள திருவிற் கோலமாகிய கூவமென்ற ஊர்வழியே பல்லக்கில் வந்து கொண்டிருந்தார். அவ்வூரவர் பலரும் வேளாளர். அவர்கள் கம்பரைக் கண்டு தம்மூரைச் சிறப்பித்தொரு கவி பாடுமாறு கேட்க, அவர் “இவ்வூர் வாணியன் தாதனுக் குடைமை; இவ்வூரவர் அத்தாதற்கடிமை; ஆதலால் யான் பாடேன்” என்றார். அவர்கள் எவ்வாறேனும் அவர்பால் ஒரு பாட்டுப் பெறவேண்டுமென்ற வேட்கையால் அவர் ஊர்ந்த சிவிகை சுமந்தும் அடப்பையிட்டும் வழிபட்டனர். அவர் அன்பு கண்டு வியந்த கம்பர், அவ்வூரவர் ஊரைச் சிறப்பித்துப் பாடவேண்டுமென்று விழைகின்றராயினும், அவர்கள் கருத்து அவ் வூரையுடைய தாதன் பாற் கொண்டிருக்கும் வெறுப்பு நீங்கி அன்பு கொள்ளவேண்டுமென்பதாமெனத் தம் புலமைக் கண்ணாலறிந்து இப் பாட்டைப் பாடினர். இதனைத் தொண்டைமண்டல சதகம், “பேணிய செந்தமிழ்த் தாதனுக்கே யன்பு பெற்றமையால், நாணிய கம்பர் சிவிகையுந் தாங்கி நயந்த தமிழ் பூணிய நின்றதும் பொச்சாப்பிலாது புகுந்து பின்னும், வாணியத் தாதற்குத் தாதனதுந் தொண்டை மண்டலமே” (45) என்றும், பழம் பாட்டொன்று, “ஓங்கிய செந்தமிழ்த் தாதற் கடிமை யவ்வூரதனால், நாங்கவி சொல்வது மில்லையென்றே கம்பநாடன் சொல்ல, ஆங்கவனேறுஞ் சிவிகை சுமந்து மடப்பை யிட்டும், தாங்கவி கொண்டதுங் கூவந்தியாக சமுத்திரமே” என்றும் கூறுகின்றன. தாதா - கொடை வள்ளல். தரு - கற்பகத்தரு. தாதா - கொடு கொடு. தாதன் - வாணியன் தாதன். கூவம், “கூவமான தியாக சமுத்திர நல்லூர்” என்று கல்வெட்டுக்கள் (A.R.No.329 of 1909) கூறுகின்றன அக்காலத்தே திருக்கோடி காவுக்கும் தியாகசமுத்திரமென்னும் பெயருண்மையின் (A.R.No.49 of 1930 -31) இதனை தியாக சமுத்திர நல்லூரெனச் சிறப்பித்தனர் போலும்.”
வெண்பா
காத மிருபத்து நான்கொழியக் காசினியை
ஓதக் கடல்கொண் டொளித்ததோ - மாதவா
கொல்லி மலையுடைய கொற்றவா நீமுனிந்தால்
இல்லையோ வெங்கட் கிடம். 89
இது, கம்பர் சோழனுடன் கோபித்துக்கொண்டு மதுரைக்குப் போம்போது பாடியது.
குறிப்பு:- சோழன் அவைக்களத்தேயிருந்து அதனைச் சிறப்பித்துக் கொண்டிருந்த கம்பருக்கும் சோழ வேந்தனுக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. அதனைப் பொறாத சோழ வேந்தன் செயலும் சொல்லும் கம்பருக்குச் சினத்தை யுண்டு பண்ணின. அதனால் அவர் பாண்டி நாடு செல்லப் புறப்பட்டவர் இப் பாட்டைப் பாடினர் என்பர். சோழ நாட்டின் பரப்பு இருபத்துநான்கு காதம் என்பர். இதனைக் “கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு, குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையி, லேனாட்டுப் பெண்ணை யிருபத்துநாற் காதம், சோணாட்டுக் கெல்லையெனச் சொல்” (பெருந். 2093) என வருவது காணக். காசினி - நிலம். கம்பர் காலத்தில் சோழ நாட்டெல்லை மேற்கில் கொல்லிமலையைத் தனக்குள் அடக்கிக் கொண்டிருந்தது. முனிந்தால் - வெறுத்தால்.
வெண்பா
என்னுடைய தம்பி சரராம னுக்கிளையான்
கன்னன் மதயானைக் கண்டன்மகன் - துன்னு
பணையார்நீர் வேலிப் பழனஞ்சூழ் சோணாட்
டிணையார மார்ப னிவன். 90
இது கூட்டிக்கொண்டு வரச் சோழன் அனுப்பிய இணையார மார்பனைப் பாண்டியன் “இவன் யார்?” என்று வினவக் கம்பர் பாடியது.
குறிப்பு :- கம்பர் நீங்கிய சின்னாட்கெல்லாம் சோழன், தன் தவற்றுக் கிரங்கியும் கம்பரது கல்விப் பெருமையை விரும்பியும் அவரை மீளத் தன்பால் அழைத்துக்கொள்ள விழைந்து, வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பருடைய தம்பி இணையாரமார்பன் என்பவனைக் கம்பர்பால் விடுத்து அவரை யழைத்துவருமாறு பணித்தான். இணையாரமார்பன் கம்பர் பாண்டிநாட்டு மதுரையில் பாண்டியன் அவைக்கள தில் இருப்பது தெரிந்து அவர் பால் வந்து செய்தி தெரிவித்தான். அக்காலை, பாண்டியன் இணையாரமார்பனைப் பார்த்து இவன் யாவன் என்று கேட்க, கம்பர் பாண்டியற்கு இப் பாட்டால் விடை கூறினார். சடையப்பர் பெருமனையில் கம்பர் வளர்ந்து மேம்பட்டவராதலின், அத்தொடர்பு தோன்ற, “என்னுடைய தம்பி” யென்றும், வெண்ணெய்ச் சடையன் தந்தை பெயர் கண்டன் என்பதாகலின், கண்டன் மகன் என்றும் கூறினார். கன்னன், கொடையில் கன்னனை யொப்பவன். பணை - வயல், இணையாரமார்பன் என்றது பெயர். மன்னுங், கணையாழி முத்துதிர்க்கும் காவிரி சூழ் சோணாட்டு” என்றும் பாட வேறு பாடுண்டு. இப் பாட்டிற் குறித்த செய்தியைச் சோழமண்டல சதகம், “தீரம் பெரிய தென்னர்பிரான் சிங்கா சனத்திற் சேர்த்தியிவன், ஆரென் றுரைப்ப நம்பியிணை யார மார்ப னடியேற்குஞ், சாருஞ் சரரா மனுக்கு மொரு தம்பியெனக் கம்பன்புகழும், வாரம் பெறுவெண்ணையர்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே” (70) என்று கூறுகிறது.
வெண்பா
உமையவளு நீயு மொருங்கொப்பை யொப்பை
உமையவளுக் குண்டங்கோ ரூனம் - உமையவடன்
பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியனின்
பாகந்தோய்ந் தாண்டான் பதி. 91
இது, பாண்டியனும் தேவியும் பல்லக்குச் சுமக்க அப்போது கம்பர் பாடியது.
குறிப்பு:- இந்த வரலாறு விளங்கவில்லை. பாண்டிமா தேவியை நோக்கிக் கம்பர் பாராட்டிப்பாடிய கருத்து இதன்கண் விளங்குகிறது. ஆண்டான் முன்னது பெயர், பின்னது வினை முற்று. பலிக்கு உழன்றான் - பலிவேண்டி ஊரூராய்த் திரிந்தான். பதி ஆண்டான் - மதுரையம் பதிக்கு அரசாய் அதனை ஆட்சி செய்கின்றான். பாண்டி நாட்டரசியாதலில் பாண்டிமா தேவியும் உமாதேவியும் ஒத்தலால், “உமையவளும் நீயும் ஒருங்கு ஒப்பை” யென்றார். “பலர்புகழ் கம்ப னுமையுடனீயு மொப்பா யென்றதும்” என்று பாண்டிமண்டல சதகம் இச்செய்தியைக் குறிக்கின்றது.
வெண்பா
மன்னவனு நீயேயோ மண்ணுலகு மிவ்வளவோ
உன்னையோ நான்புகழ்ந்திங் கோதுவது - மென்னை
விருந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ சோழா
குரங்கேற்றுக் கொள்ளாதோ கொம்பு. 92
இது, கம்பர் பின்பொருகாற் சோழனுடனே கோபித்துக் கொண்டு சொன்ன பாட்டு.
குறிப்பு :- கம்பர்க்குக் காவேரி யென்றொரு மகளிருந்தா ளெனவும், அவளைச் சோழவேந்தன் விரும்பினானாக, அவன் விருப்பத்திற் கிசையாது அவள் காவிரியாற்றில் வீழ்ந்து இறந்தா ளெனவும், அதனால் கம்பர் வருத்தமும் சினமும் கொண்டு அவனிடமிருந்து நீங்கிச் செல்லலுற்று இப்பாட்டைப் பாடின ரெனவும் கூறுவர். இப்பாட்டே, “மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ, உன்னையறிந் தோதமிழை யோதினேன் - என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ, குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு” என்று வேறுபட்டும் காணப்படுகிறது.
வெண்பா
அவனிமுழு துண்டு மயிரா வதத்துன்
பவனி தொழுவார் படுத்தும் - புவனி
உருத்திரா வுன்னுடைய வோரங்க னாட்டிற்
குருத்திரா வாழைக் குழாம். 93
இது கம்பர், பிரதாபருத்திரனிடத்திற்போய் அவன் அடைப்பை கட்டிவரப் பாடியது.
குறிப்பு:- பிரதாப ருத்திரன் என்பவன் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓரங்கல் நாட்டை யாண்ட கணபதி வேந்தர்களுள் ஒருவன். பிரதாபருத்திரீய மென்னும் வடநூலுக் குரியவன் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினான் காம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமிருந்த இரண்டாம் பிரதா பருத்திரனாவான். கம்பர் காலத்தவன் முதல் பிரதாபருத்திரன். ஓரங்கல் நாட்டில் அனும கொண்டாவில் காணப்படும் பிரதாப ருத்திரனுடைய கல்வெட்டொன்றில் (Ind. Antiq. Jan. 1882 II 9) காலம் கி.பி. 1162 என்று தெரிகிறது. இக்கல்வெட்டு இவன் சோழவேந்தன் நகரத்தைக் கைப்பற்றினானென்றும் கூறுகிறது. கணபதி வேந்தருள்ளும், ஒரிசா நாட்டு வேந்தருள்ளும் இப் பெயருடைய வேந்தர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் வரலாறும் சோழநாட்டோடு தொடர்புறுகிறது. ஆயினும் அவர்கள் காலத்தால் மிகவும் பிற்படுகின்றனர். கம்பர் இவனையடைந்து இவனது துணையால் சோழன்பால் தமக்கிருந்த செற்றத்தை நீக்கிக்கொண் டிருப்பாரெனக் கருதுகின்றனர். இவ்வாறு பிற்காலத்தே வேறு வகையாகத் திரித்துக் கூறப்படுவதாயிற்று. அவனி முழுதுண்டும் - உலகிலுள்ளார் பலரும் வந்து உண்ணுதாலாலும். அயிராவதம் - பிரதாபருத்திரனது பட்டத்து யானை. தொழுவார் - தொழும் மகளிர். படுத்தும் - காமவேட்கையாற் பிறந்த வெப்பந்தணிய வாழைக்குருத்தைப் பரப்பி அதன் மேற்படுத்தாலும். வாழைக் குழாம் குருத்திரா - வாழை மரங்கள் குருத்து இல்லரவாயின.
கொச்சகக் கலிப்பா
இல்லென்று தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையையும் பாரித்துக்
கொல்லொன்று காமனையுங் கார்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லென்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே. 94
இது, கம்பர் திருவொற்றியூர் வல்லியைக் கண்டு சொல்லியது.
குறிப்பு:- கம்பர் ஒருகால் திருவொற்றியூருக்குச் சென்றிருக் கையில் அக் கோயில் தேவரடியாட்களுள் வல்லியென்பாள் ஒருத்தியைக் கண்டு அவள்மேல் தம் கருத்தைச் செலுத்தி வருந் தினாரென்றும், அவ் வருத்தத்திடையே இப் பாட்டைப் பாடின ரென்றும் கூறுவர். கம்பருடைய கல்விப் பெருமையும் புலமையும் நோக்க, இதுவும் இதுபோல் காணப்படும் கதைகளும் இவற்றைக் குறிக்கும் பாட்டுக்களும் உண்மையென்று கொள்ளும் தகுதி யுடையவையென்று எண்ண முடியவில்லை; தூங்கினவன் துடையில் திரித்தவரையில் கயிறு என்பதுபோலப் புலவர்கள் வரலாறு இல்லாதது கொண்டு இடைக்காலத்தார் திரித்துப் பொய்யே புனைந்த கதைகளும் பாட்டுக்களுமாம் இவையெனக் கொண் டொழிவது நலம். ஆம்பல் - ஆம்பல் போலும் வாய். பாரித்து - மேற்கொண்டு.
விருத்தம்
நடக்கி லன்னமா நிற்கினல் வஞ்சியாம்
கிடக்கி லோவியப் பாவை கிடந்ததாம்
தடக்கை யான்சது ரானன பண்டிதன்
மடத்து ளாளென் மனத்துறை வல்லியே. 95
இது கம்பர் பின்பு சொன்ன பாட்டு.
குறிப்பு :- பின்பு கம்பர் அத் தேவடியாள் வீட்டில் அன்றிரவு தங்கி மறுநாள் அவள் நலம் பாராட்டி இப் பாட்டைப் பாடினர் என்பர். சதுரானன பண்டிதர் கோப்பர கேசரி இராசேந்திர சோழன் காலத்தில் திருவொற்றியூரில் ஒரு மடம் நிறுவிக்கொண்டு அங்கே வாழ்ந்து வந்தவர். அவர் திருவொற்றியூர்க் கோயில் இறைவனுக்கு இராசேந்திர சோழன் திருநாளாகிய “மார்கழித் திருவாதிரை ஞான்று நெய்யாடியருள” வேண்டுமென நூற்றைம்பது பொற்காசு கொடுத்ததாகத் திருவொற்றியூர் கல்வெட்டொன்று (S.I.Ins. Vol. V. 1354) கூறுகிறது. இவ்வேந்தன் காலம் பதினோராம் நூற்றாண்டாகும். நடையில் அன்னத்தை யொப்பாளென்பார், “நடக்கில் அன்னமாம்” என்றார். வஞ்சி - வஞ்சிக்கொடி. ஓவியப் பாவை - ஓவியத்தில் எழுதிய பாவை. தடக்கை - பெரிய கை. மனத்துறை வல்லி - மனத்தில் தங்கியிருக்கும் வல்லி யென்பவள். முன் பாட்டில், “நெஞ்சைவிட்டுப் போகா” ரென்றமையின், இப் பாட்டில், “மனத்துறை வல்லி” யென்றார்.
வெண்பா
புக்கு விடைதழுவிக் கொண்டுழுத புண்ணெல்லாந்
திக்கிலுறை காளிங்கன் றென்புழன்மான் - அக்கணமே
தோள்வேது கொண்டிலளேற் சுந்தரப்பொற் றோன்றலுக்கு
வாழ்வேதுங் கொண்டிலமே மற்று. 96
இது, கம்பர் அப்போது வல்லி வீட்டுக்கு எருமை வாங்கிவரப் போய் காளிங்கன் நிரைகள் மேய்ப்பானைக் கண்டு அவன் பேரிற் பாடிய பாட்டுச் சொல்ல அவன் ஈன்ற எருமை ஆயிரங் கொடுத்த பாட்டு.
குறிப்பு:- கம்பர் திருவொற்றியூர்த் தேவரடியாள் வல்லி யென்பவள் வீட்டில் இருக்கையில் அவள் தனக்குப் பால் பொருட்டு ஈன்ற எருமை வேண்டுமொன்றாளாக, அவர் புழலென்னுமூரில் மிக்க எருமையுடையவனான ஆயன் காளிங்கன் என்பானைக் கண்டு இப் பாட்டைப்பாடித் தனக்கு ஈன்ற எருமை வேண்டு மென்றனர் எனவும், அவன் மகிழ்ந்து கன்றீன்ற எருமை ஆயிரம் தந்தானெனவும் கூறுவர். புழல் என்பது திருவொற்றியூருக்கு மேற்கிலுள்ள தோரூர். தொண்டை நாட்டுக் கோட்டம் இருபத்து நான்கனுள் இது புழற் கோட்டத்தின் தலைநகராகும் திருவொற்றியூரும் அக்காலத்தே புழற் கோட்டத்தைச் சேர்ந்திருந்தது. (A.R.NO.367 of 1911) கருதிய பெண்ணை மணக்க வேண்டி, அவள் பெற்றோர், குறிக்கும் கொல்லேற்றைக் தழுவியடக்குவது பண்டை நாளை ஆயர் முறை. இதனை முல்லைக் கலித்தொகையிற் காணலாம். திக்கில் உறை காளிங்கன் - நான்கு திக்கிலும் புகழ் பரவி நிற்கும் காளிங்கன். காளிம்பன் என்றும் பாட வேறுபாடுண்டு. மான் - மான்போலும் அவன் காதலி. தோள் வேது கொண்டிலளாயின் - தன் மார்பகம் பொருந்தித் தழுவித் தன் கொங்கையின் வெம்மையால் ஒற்றி நோய் தணித்திலளாயின். “முயங்கிப் பொதிவேம் முயங்கிப் பொதிவேம், முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவேம், கொலை யேறு சாடிய புண்ணையெங்கேளே” (முல்லைக்கலி.6) என வரும் ஆய்மகள் பாட்டுக் காண்க. தோன்றல் - தலைவன்.
வெண்பா
அண்ணறிரு வாலி யணிமயிலை யத்தனையும்
வெண்ணிலவின் சோதி விரித்ததே - நண்ணும்
தடந்துப்பு விற்பாணந் தன்முகத்தே கொண்டு
நடந்துப்பு விற்பா ணகை. 97
இது, கம்பர் மயிலாப்பூரிற் போய்த் தட்டான் திருவாலிமேற் பாடியது.
குறிப்பு :- கம்பர் திருவொற்றியூரில் இருக்கையில் மயிலாப் பூரில் திருவாலியென்ற பெயரையுடைய தட்டானொருவன் வாழ்ந்துவந்தான். அவன் வல்லியின் பொருட்டுக் கம்பர்க்கு நகைகள் செய்து தருவது வழக்கம்; அவன் தன்மேல் ஒரு பாட்டுப் பாடுமாறு கம்பரை வேண்டிக்கொள்ள அவர் இப்பாட்டைப் பாடினாரென்பர். அத்தனையும் - முழுதும். தடம் - குளம். துப்பு - பவளம். விற்பாணம் - வில்லும் அம்பும்; புருவம் வில், கண், அம்பு, நடந்து உப்பு விற்பாள் காலால் தெருத்தோறும் நடந்து உப்பு விற்பவள். “நெல்லும் உப்பும் நேரே யூரீர், கொள்ளீரோ வெனச் சேரிதொறும்” (அகம். 390) உப்பு விற்றல் பழைய நூல்களிலும் கூறப்படுவது காண்க. குளம் நெற்றியையும் பவளம் வாயையும் குறிக்கும்.
கட்டளைக் கலித்துறை
சொல்லியைச் சொல்லி னமுதான சொல்லியைச் சொற்கரும்பு
வில்லியை மோக விடாய்தவிர்ப் பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப் பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப் புல்லிய கைக்கோ விவள்வந்து வாய்த்ததுவே. 98
இது பின்பொருகால் கம்பர் குரும்பை யென்னுந் தாசியைத் தழுவிச் சொல்லிய பாட்டு.
குறிப்பு:- திருவொற்றியூரில் வல்லியின் வீட்டில் இருந்து வந்த கம்பர் மயிலாப்பூருக்கு அடிக்கடி போய்வருகையில் மயிலையில் வாழ்ந்த குரும்பை யென்னும் தேவடியாள் ஒருத்தியைக் கண்டு அவள்மேல் தன் கருத்தைச் செலுத்தி அவளையடைந்து இன்புற்றார். அப்போது அவள் நலத்தை வியந்து இப்பாட்டைப் பாடினரென்பர். சொல் - புகழ். கரும்புவில்லி - கரும்பை வில்லாகவுடைய காமவேள். கொல்லி - கொல்பவள். கொல்லியம் பாவை - கொல்லிப்பாவை. வல்லி - வல்லியென்னும் தேவரடியாள். வல்லியினும் குரும்பை சிறந்தவளாதலின், அவளது கிடைத்த லருமைதோன்ற, “வல்லியைப் புல்லிய கைக்கோ இவள் வந்து வாய்த்ததுவே” யென்றார்.
பூழற் பாட்டு
சென்னி விளைகழனிச் செஞ்சிவாழ் சோழாண்டே
மன்னுபுக ழொற்றியூர் மட்பக்க நாச்சியார்
தம்மை வரவிட்ட பூழலோ பூழல். 99
இது, கம்பர் அதிகாரியை வெட்டுவிக்கப் பாடிய வழுப்பாட்டு.
குறிப்பு:- இதில் குறிக்கப்படும் செய்தி விளங்கவில்லை. செஞ்சி, செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ளதோரூர். இதனை “மணவில் கோட்டத்து மணவில் நாட்டுச் செஞ்சி” (A.R.No. 159 of 1929-30) எனக் கல்வெட்டுக்கள் கூறும். ஒற்றியூர் சிவன் பெயர் படம்பக்கநாதரென்றும், தேவி பெயர் மட்பக்க நாச்சியாரென்றும் கூறுவர். மட் பக்கநாச்சியாரென்பது இப்போது வட்டப்ப நாச்சி யாரென மருவி வழங்குகிறது. பூழல், இதன் குறிப்புத் தெரியவில்லை. சாழல்போல்வதொரு விளையாட்டுப் போலும். பூழ் ஒரு பறவை.
வெண்பா
ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை - பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி. 100
இது பின்பு கம்பர் காளியைப் பந்தம் பிடி யென்று பாடியது.
குறிப்பு:- தாம் பாடிய இராமாயணத்தைத் தம்பாற் பயின்ற மாணவர்க்குக் கம்பர் பாடஞ் சொல்லுகையில் அவர்கள் பாட்டுக்களை எழுதிக்கொள்ளும் பொருட்டு விளக்குப் பந்தம் குறைபடாமல் பிடிக்குமாறு இப்பாட்டைப் பாடினா ரென்பர். திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உறையுங் காளி, அவ்வூர் காக்கும் காளி. வெற்றியூர் காகுத்தன் - வெற்றிபொருந்திய இராமன். நந்தாது - குறைவு படாமல். பிந்தாமல் - பிற்பட்டொழியாதபடி.
வெண்பா
வில்லி களந்தைமின்னை விண்ணவர்தங் கோமானை
வல்லிநெடுஞ் சேடனையும் வாணனையும் - புல்லியுறப்
பார்க்கும்போ தும்மதரம் பற்றும்போ துந்தனத்தைச்
சேர்க்கும்போ தும்நினைப்பஞ் சென்று. 101
இதுவும் ஒரு பாட்டு.
குறிப்பு:- ஒருகால் கம்பர் தாமற் கோட்டத்திலுள்ள களத்தூர்க்குச் சென்றிருந் தாரென்றும் அங்கே திருமால் கோயில் தேவரடியாள் ஒருத்தியின் நட்புக்கொண்டு அவளைக் கூடிய காலத்தில் அவள் தந்த நலம் பாராட்டி இப்பாட்டைப் பாடின ரென்றும் கூறுவர். வில்லிமின்னை - வில்லேந்திய திருமால் கோயில் தேவரடியாளை. மின்னைப் புல்லி உறப் பார்க்கும் போதும் பற்றும் போதும் சேர்க்கும்போதும் என இயையும். கோமான் - இந்திரன்; இவன் மேனி முழுதுங் கண்ணுடையவன். சேடன் - ஆதிசேடன்; இவன் ஆயிரம் நாவினையுடையன். வாணன் -இவன் ஆயிரங் கைகளை யுடையன். பார்க்கும்போது கோமானையும், பற்றும்போது சேடனையும், சேர்க்கும் போது வாணனையும் நினைப்போம் என்பது. அவர்களைப்போல நமக்கும் கண் முதலியன இல்லையே யென இரங்கியதுபோலப் புகழ்ந்தவாறு.
நெற்பயிர் விளைகழனி நென்மலி வாழ்தச்சன்
கற்படு திண்டோளன் கங்கண கணகணவன்
விற்புரை திருநுதலாள் மின்மினு மினுமினுமி
சொற்படி வேலைசெய்வாள் துந்துரு துருதுருமி. 102
இதற்குத் தியாகம் ஆயிரக்கல நெல்லு.
குறிப்பு:- இப்பாட்டெழுந்த வரலாறு விளங்கவில்லை. நெல்மலி ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திலுள்ளதோர் தொண்டை நாட்டூர். கம்பர் காலத்தே இது “களத்தூர்க் கோட்டத்து வல்ல நாட்டு நென்மலி” (A.R.No. 14 of 1932 -3) என வழங்கிற்று. ஒரு கால், கம்பர் களந்தையில் தான் நட்புற்ற தேவடியாள் பொருட்டு இவ்வூர்த் தச்சனை இப்பாட்டைப் பாடிப் பாராட்டி அவனால் ஆயிரக்கல நெல் தரப்பெற்றார் போலும். கணகண கங்கணன் என்பது மாறிநின்றது; கணகணவென ஒலிக்கும் கங்கணம் அணிந்தவன் என்பது பொருள். விற்புரைநுதல் - வில்போன்ற நெற்றி. மின்மினு மினுமினுமி யென்றது, அவளது மேனி மினுக்கை யுணர்த்துவது போலும். துந்துரு துருதுருமி யென்பது பணிபுரியும் அவளது சுருசுருப்பையுணர்த்துவது போலும். “உழுமாறு பாட்டு” என்றறொரு குறிப்பு சில ஏடுகளிற் காணப்படுகிறது. இனிச் சோழ மண்டல சதகம், “நிச்ச முறவே நெற்பயிராய் நீளுந் தமிழ்க்கு நென்மலிவாழ், தச்சன் பொலியா யிரக்கலநெல் தந்தா னுலகில் தாதாவாய், மெச்சு மவன தாண்மையினால் வென்றே கொடியின் விருதுகட்டி, வைச்ச கொடையின் தர மெளிதோ வளஞ்சேர் சோழ மண்டலமே” (97) என்று கூறுகிறது. இதனால் இந்த நென்மலி சோழநாட்ட தென்றும், இந்நிகழ்ச்சி அங்கே நிகழ்ந்த தென்றும் காணலாம். இதன் உண்மை தெரிந்திலது.
கட்டளைக் கலித்துறை
வெங்கண் சிவந்து வெடிவான்முறுக்கி வெகுண்டெழுந்தென்
அங்கம் பிளக்க வரும்புலி யேயன் றிரணியனைப்
பங்கப் படப்பட வள்ளுகி ராலுரம் பற்றியுண்ட
சிங்க மிருப்பது காண்கெடு வாயென்றன் சிந்தையுள்ளே. 103
இது, சோழன் புலியைக் கொல்லவிட்டபோது கம்பர் பாடியது.
குறிப்பு:- கம்பர் பிரதாபருத்திரனைக் கொணர்ந்து தன்னை யச்சுறுத்தியதும், தன்னினும் வெண்ணைச் சடையன்பால் பேரன்பு வைத்ததும் சோழவேந்தனுக்குக் கம்பர்பால் பெருஞ் செற்றத்தை யுண்டு பண்ணியிருந்தன. அவன் அதனை வெளிக்காட்டாமல் உள்ளத்தே வைத்திருப்பது அவர் தன்னை நோக்கிவரும் செவ்வி நோக்கி, புலியைக் கூட்டிலிருந்து விட்டு விடுமாறு ஏற்பாடு செய்திருந்தான். புலி தன்னைக் கொல்லவருவது கண்ட கம்பர் இப்பாட்டைப் பாடினர் என்பர். பங்கம் பட - பிளவு பட்டுத் துண்டாக. உரம் - மார்பு. சிங்கம் - நரசிங்கமாய்த் தோன்றிய திருமால். என்றன் சிந்தையுள் சிங்கம் இருப்பது காண்; நெருங்கின் கெடுவாய் என்பது.
வெண்பா
வில்லம்புஞ் சொல்லம்பு மேதகவே யானாலும்
வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து - வில்லம்பு
பட்டுருவிற் றென்னையென் பாட்டம்பு நின்குலத்தைச்
சுட்டெரிக்கு மென்றே துணி. 104
இது, கம்பர் சோழன் எய்தபோது பாடியது.
குறிப்பு:- புலிவரக்கண்டு அஞ்சாது பாட்டுப்பாடி நிற்கும் கம்பரைக் காக்கும்பொருட்டு அதன்மேல் அம்பு எய்பவன் போலச் சோழன் கம்பர் மார்பிற் றைக்குமாறு தன் அம்பைச் செலுத்தி அவரை வீழ்த்தினான். வீழ்கின்றகம்பர் அப்போது இவ்வெண்பாவைப்பாடி உயிர்நீத்தாரென்பர். மேதகவு - மேலானவை. வீறு - சிறப்பு. பட்டுருவிற்று - மார்பிற்பட்டு ஊடுருவிச் சென்றது. என்னை யென்றது என்னொருவனை மட்டில் என்பதுபட நின்றது.
வெண்பா
ஆன்பாலுந் தேனு மரம்பைமுதல் முக்கனியுந்
தேம்பாய வுண்டு தெவிட்டுமனந் - தீம்பால்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போதேனு மினி. 105
இது கம்பர் மரண காலத்திற் பாடியது.
குறிப்பு:- சோழனால் வீழ்த்தப்பட்ட கம்பர் வெகுண்டு சோழனைப் பாடிய பின் தன்னைப் பேணிப் புறந்தந்த வெண்ணெய் நல்லூர்ச் சடைய வள்ளலைத் தாம் இந்த இறுதிப் போதும் மறவாமையை வற்புறுத்தி, இப்பாட்டைப் பாடினாரென்பர். அரம்பை - வாழை. அரம்பை முதல் முக்கனி - வாழை, மா, பலா, முக்கனி யென்பன. தேன்பாய என்பது தேம்பாய என வந்தது. “ஒள் வாழைக்கனி தேன்சொரி யோத்தூர்” (ஞானசம்.) எனச் சான்றோரும் கூறுவது காண்க. தீம்பால் - தீவிய அன்பாகிய பால். கம்பன் என்றது, தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பு, “சாத்தன் தாய் இவை மறப்பலோ” என்றாற்போல. இவ் வரலாற்றையும் சோழ மண்டல சதகம், “ஆன்பா னறுந்தேன் முக்கனிநீ டமுதிற் சுவையா றுடனருந்தித், தான்பா லணைய மறப்பதிலைச் சடையா வென்று தமிழோறுந் தேன்பா யலங்கற் கம்பனுக்குச் செழும்பா ரிடத்திற் செய்தநன்றி, வான்பா லிருக்கச் செய்துநலம் வைத்தார் சோழ மண்டலமே” (79) என்று கூறுவது ஈண்டு நோக்கத் தக்கது. “இறக்கும்போ தல்லாலினி” (பெருந். 1513) என்றும் பாட வேறுபாடுண்டு.
கட்டளைக் கலித்துறை
கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்சொன்ன
மும்மணிக் கோவை முதற்சீர் பிழைமுனை வாளெயிற்றுப்
பைம்மணித் துத்திக் கணமணிப் பாந்தட் படம்பிதுங்கச்
செம்மணிக் கண்பதம் பொக்கக்கொல் யானைச் செயதுங்கனே. 106
இது வாணிய தாதன் கம்பர்மேற் பாடிய வசைப்பாட்டு.
குறிப்பு:- கம்பர் மும்மணிக் கோவையொன்று பாடின ரெனவும், அதன் முதற்பாட்டு முதற் சீர் பாட்டியல் முறைப்படி குற்றமுடையதென்று வாணிய தாதன் குற்றங்கூறின னெனவும் அவன் அக்குற்றத்தை இப் பாட்டாற் பாடிக்காட்டின னெனவும் கூறுவர். கைம்மணிச் சீர் - கோயில்களில் கையால் அசைத்தியக்கப் படும் மணியோசை. கம்பர் உவச்சர் குடியிற் பிறந்தவ ரென்றும், உவச்சர் கோயில்களில் மணியடித்தல் முதலிய பணி செய்பவ ரென்றும் கூறப்படும் வரலாற்றுக் குறிப்பிற்கேற்ப, இப்பாட்டுக் “கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக் கம்பன்” எனக் கூறுகிறது. பை -படம். துத்தி - புள்ளி. பாந்தள் - பாம்பு. சயதுங்கன் - வெற்றியால் உயர்ந்தவன். இது சோழனைப் புகழ்ந்து நின்றது.
வெண்பா
இன்றோநங் கம்ப னிறந்தநா ளிப்புவியில்
இன்றோதான் புன்கவிகட் கேற்றநாள் - இன்றோதான்
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல்வாங்கு நாள். 107
இது, கம்பர் இறந்தது கண்டு வாணிய தாதன் வருந்திப் பாடிய கையறம்.
குறிப்பு:- கையறம் - கையறுநிலைப் பாட்டு; இக் காலத்தே இதனைச் சரமகவி யென்பர். புன் கவிகள் - புல்லிய கவி பாடுபவர். பூமடந்தை - திருமகள். நாமடந்தை - கலைமகள். நூல் - திருமங்கல நாண். கம்பன் இறந்ததனால், கலைமகள் கைம்பெண் ணாயினள் என்பதாம்.
வழுப்பாட்டு
பந்தரிலே வாளைதூக்கும் பனையன்மகன் சோரன்
தங்களதுவீட்டி லிருந்தாலும் - தங்களது
ஆத்தாள்தன் வீட்டி லிருந்தாலும் இருந்தான். 108
இது வாளை தூக்கிய வலையனைப் பாடியது.
குறிப்பு:- இப் பாட்டு மிக்க பிழைபட்டுளது. இதனைக் கம்பர் பாடியதெனக் கருதுவதும் தவறு. இஃது ஏடுகளில், “தங்கள் வீட்டிலிருந்தாலும் இருந்தான், தங்கள் ஆத்தாள் வீட்டிலிருந் தாலும் இருந்தான்” என்று காணப்படுகிறது.
தொல்காப்பிய தேவர்
வெண்பா
வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண்
பாதந் திருப்பா திரிப்புலியூர்-நாதர்
பரமாம் பரமாம் படுகடலெண் டிக்குங்
கரமா மவர்க்குயிர்ப்பாங் கால். 109
இது தொல்காப்பியதேவர் சமணர் கோயிலுக்குச் செங்கலனுப் பிக்கச் சிவதலத்தார் தங்களெல்லை யென்றபோது பாடியது.
குறிப்பு:- தொல்காப்பிய தேவரென்பவர் இடைக்காலத்தில் வாழ்ந்த புலவர். ஒருகால் திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த சமணர் தங்கள் கோயிலுக்குச் செங்கல் அறுக்கவேண்டி ஒரு நிலத்தை வேலையாட்களுக்குக் காட்டினர். அது சிவன் கோயிலுக் குரியதென அக்கோயிலார் கூறினர். நடுநின்ற தொல்காப்பிய தேவர் சிவன் கோயிலார் கூறுவதுண்மையாதல் கண்டு இப் பாட்டைப் பாடினர். இதன் நலங்கண்ட சான்றோர் இதனை யுட்கொண்டே கலம்பகமொன்று பாடுமாறு அவரை வேண்ட, அவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகத்தைப் பாடினர். இது மகா மகோபாத்தியாய உ.வே. சாமிநாதையரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்கண் இஃது இரண்டாம் பாட்டு. சுடர் விழி - ஞாயிறு, திங்கள், தீ என் முச்சுடரும் கண்கள். மண் பாதம் - நிலம் திருவடியாம். நாதர் - நாதருக்கு. பரம அம்பரமாம் படுகடல் - மேலான ஆடையாகும் ஒலிக்கின்ற கடல், எண்திக்கும் கரம் - எட்டுத் திசைகளும் அவர்க்கு எட்டாகிய தோள்கள். கால் - காற்று. “பாதம்புவனி” யென்று தொடங்கும் பொன்வண்ணத் தந்தாதியும், “மாநிலஞ் சேவடியாக” என்ற நற்றிணைச் செய்யுளும் ஈண்டு ஒப்புநோக்கற் குரியன.
கொச்சகப் கலிப்பா
பாடுவார் பாடும் பரிசில் வரிசையெல்லாம்
ஆடுவா ரன்றி யயலா ரறிவாரோ
தோடுவார் காதன்றே தோன்றாத் துணையையர்
பாடுவா ரோரிருவர்க் கிட்ட படைவீடே. 110
இது கேட்டுக் கலம்பகம் பாடச்சொல்லத் தொல்காப்பிய தேவர் கலம்பகம் பாட, அதனை அரங்கேற்றுங் காலத்திற் கயிறு போட்டுப் பார்க்கக் கண்டது இப்பாட்டு.
குறிப்பு:- திருப்பாதிரியூர்க் கலம்பகத்தைத் தொல்காப்பிய தேவர் பாடியபின்பு அதனைச் சிதம்பரத்தில் அரங்கேற்றினர். அப்போது அதன்கண் கயிறிட்டுப் பார்த்தனரெனவே கலம்பக அரங்கேற்றத்தின்போது ஏதோ ஒரு நிகழ்ச்சி யுண்டாயிற்றென்று தெரிகிறது; அஃது இன்னதெனத் தெரிந்திலது. இது பற்றி, திரு. தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள், “சிதம்பரத்திற் கலம்பகம் பாடுவதற்கு முன் இரட்டையர்கள் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகப் புத்தகத்தில் கயிறு சார்த்திப் பார்த்தார்களென்றும், அப்போது இந்தப் பாடல் அகப்பட்டதென்றும் மகா மகோ பாத்தியாய சாமிநாத ஐயரவர்கள் தாம் அச்சிட்ட திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்து முகவுரையில் கூறும் கூற்றுப் பொருத்தமாகக் காணப்படவில்லை. அன்றியும், ‘தொல்காப்பியதேவர் சொன்ன தமிழ்ப்பாடலன்றி’ என்றற்றொடக்கத்துக் கவி இரட்டையரைத் திருவாமாத்தூருக்குக் கலம்பகம் சொன்னபோது சொன்னதன்றி, மகா மகோபாத்தியாயர் சொல்லுமாறு சிதம்பரத்திற்குக் கலம்பகம் பாடச்சொன்ன போது சொன்னதன்று,” என்பர். ஆடுவார் - நடராசர்; இவரைக் “கூத்தாடுந் தேவர்” என்பது கல்வெட்டுக்களிற் காணப்படும் திருப்பெயர். பிற்காலத்தார் ஊர்ப் பெயர்களையும் ஆங்காங்குள்ள தெய்வப் பெயர்களையும் வடமொழியிலாக்கிய போது, கூத்தாடுவார், கூத்தாடுந் தேவர், ஆடவல்லான், ஆடலரசு என்று வந்த தமிழ்ப்பெயரை நடராசரென மொழி பெயர்த்து வழங்குவாராயினர்; அக் காலத்திற்றான் சிற்றம்பலம் சிதம்பர மெனத் திரிக்கப்பட்டது. “தோன்றாத்துணையையர்” என்றது திருப்பாதிரிப் புலியூரிலுள்ள சிவனுக்குப் பெயர். அசுவதரர், கம்பளர் என்ற நாகர் இருவர் கலைமகளருளால் இசை வல்லுநர் களாய் சிவனை நோக்கித் தவஞ்செய்து அவர் காதிலணியும் தோடுங் குழையுமாய் இசை பாடிக்கொண்டிருக்கின்றனரென்பது கதை. அது “பாடுவாரோ ரிருவர்கிட்ட படைவீடு” என்பதனால் குறிக்கப்படுகிறது. “பாடு வார்க்கருளும் எந்தை” (ஞானசம்) என்பவாகலின், “ஆடுவாரான்றியயலாரறிவாரோ” என்றார்.
இரட்டையர்கள்
விருத்தம்
சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன்
றமிழ்க்கொங்கர்கோன்
பாணுற்ற வரிவண்டு சேர்வக்க நகராதி
பக்கத்திலே
ஊணுக்கு வாரா திருப்பாய் விருப்பாகி
யுயர் வானிலே
வீணுக்கு நின்னாக மெலிகின்ற திவ்வாறு
வெண்டிங்களே. 111
இஃது இரட்டையர் திருவக்கைக் கொங்கராயன் அசன மிடுவித்த போது பாடியது.
குறிப்பு:- இப் பாட்டிற் குறிக்கப்படும் வக்கநகர் வக்கபாகை யென்றும், அதனையுடைய ஆட்கொண்ட நாயனாக கொங்கர் கோன் கொங்கர்குல வரபதி யாட்கொண்டான் என்றும், இந்த வக்கபாகை பெண்ணையாறு பாயும் நாட்டைச் சேர்ந்ததென்றும், இவனே வில்லிபுத்தூராரைப் பாரதம் பாடச் செய்தவனென்றும் கூறுவர். இவனை இரட்டையர்கள் காணச் சென்றபோது, இவன் அவர்கட்கு நல்ல சோறிட்டு இன்புறுத்தினானெனவும், அதனால் மகிழ்ந்து அவர்கள் இப் பாட்டைப் பாடினரெனவும் உரைப்பர். சாணர் - தழும்புடைய வீரர்;தழும்பாவது போரில் முகத்திலும் மார்பிலும் புண்படுத் தழும்புண்டாகப் பெற்றவர். சாணம் - தழும்பு. பாண் - பாட்டு. வானிலே இருக்க விருப்பாகி, ஊண் பெருமையால், வீணுக்கு இத் திங்கள் நாளும் மெலிகின்ற தென்பதாம்.
வெண்பா
மன்னுதிரு வண்ணா மலையிற்சம் பந்தனுக்குப்
பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன் - மின்னின்
இளைத்த விடைமடவா ரெல்லாருங் கூடி
வளைத்திழுத்துக் குட்டாம லுக்கு. 112
இஃது திருவண்ணாமலைச் சம்பந்தன் சமுத்திபாடச் சொன்ன போது இரட்டையர்கள் பாடியது.
குறிப்பு:- திருவண்ணாமலைச் சம்பந்தன் என்றது. பதினான் காம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த வீரவல்லாள தேவன் காலத்தில் திருவண்ணாமலையின் இருந்த ஒரு மடத்துக்குத் தலைவன். (A.R.384 / 1937-8) இவனது முழுப்பெயர், பொன்னுழான் திருவண்ணாமலைப் பெருமாள் சம்பந்தாண்டான் என்று திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டொன்று (S.I.Ins Vol. VIII. No.89) கூறுகிறது. இவன் கி.பி.1340-ஆம் ஆண்டில், திருவண்ணாமலைக் கருகிலுள்ள அகரம்பத்திப் பாடியிலிருந்த பட்டர்களுக்குத் தன் மடப்புறமான நிலங்களும் மனையும் கொடுத்திருக்கிறான். இக் கல்வெட்டில் இவன், “என் மடப்புறமான மதிமாலையன் பூண்டி” யென்றும், “எனக்கு மடப்புறம் இறையிலியாக நான் கொண்டு” என்றும் கூறுவதுகண்டு ஒரு மடத்துக்குத் தலைவன் என்பது விளங்குகிறது. மடத்துக்குத் தலைவனாயிருந்து கொண்டே திருவண்ணாமலைக் கோயில் நடைமுறைகளை மேற்பார்வையும் செய்துவந்தான். இதனை, “உடையார் திருவண்ணாமலையுடைய நாயனார் கோயில் கேட்கும் பொன் னுழான் திருவண்ணாமலைப் பெருமாள் சம்பந்தாண்டானேன்” எனத் தன்னை இக் கல்வெட்டிற் குறித்துள்ளான். இவனை அக்காலத்தே ஒருநாள் இரட்டையர் காணச் சென்றபோது, இவன் தலைச் சவரம் செய்துகொண்டிருந்தான். அந்நிலையில் இவன் தன் செல்வச் செருக்கால் இரட்டையரை நோக்கி “மன்னென்று தொடங்கி மலுக்கென முடியுமாறு ஒரு வெண் பாப்பாடுங்கோள் பார்ப்போம்” என்று கேட்டான். சோழ நாட்டிற் குடந்தைக் கருகிலுள்ள இளந்துறையிற் பிறந்து இனிய தமிழ் நலம் சிறந்து பாவன்மை படைத்தோங்கும் இரட்டையர், அவன் செருக்கடங்குமாறு இவ் வெண்பாவைப் பாடினர் என்பர். தலைச் சவரம் என்றது முண்டிதமாகத் தலையைச் சிரைத்துக் கொள்வது குறித்து நிற்கிறது. இளைத்த இடை - மெல்லிய இடை. மடவார் - இளமகளிர். சம்பந்தாண்டான் செய்யும் குறும்புக்கு அவனை அவர்கள் வளைத்திழுத்துக் குட்டுவர் என்பதாம்.
கட்டளைக் கலித்துறை
எறிக்கும் புகழ்க்கச்சி யேகாம் பரன்சம்பன்
எண்டிசைக்கும்
பொறிக்கும் புலிக்கொடி யான்புயம் வேட்டபின்
பூவையன்னாள்
வெறிக்குங் குமக்கொங்கை மீதே விழிசொரி
வெள்ளந் துள்ளித்
தெறிக்குந் துவலை யழிக்குஞ் சிந்தூரத்
திலகத்தையே. 113
இது, சம்பராசன் விகட சமுத்தி பாடச் சொல்ல, இரட்டையர் பாடியது.
குறிப்பு:- இங்கே சம்பராசனென்றது சம்புவராயன் என்பதன் குறுக்கமாகும். இவனுக்கு ஏகாம்பரநாத சம்புவராயனென்பது முழுப்பெயராகும். இவன் வென்று மண்கொண்ட சம்புவராய னென்றே கல்வெட்டுக்களிற் பெரிதும் கூறப்படுகின்றான். இவன் இறந்தபின் இவனது என்பைக் கங்கையிலிட்டுச் “சிராத்தம்” செய்யுமாறு, இவனுடைய மகனான இராஜநாராயணச் சம்புவராயன், அரண்மனை அகம்படி முதலிகளில் தலைவனான எழும்போதன் கங்கையாடி மாதையன் என்பானை விடுத்து, அவற்கு குட்டிய மென்னும் ஊரை இறையிலியாக அளித்தான். (A.R.No.32of1933-4) அந்த எழும்போதனான கங்கையாடி மாதையன், வென்று மண்கொண்டவனான ஏகாம்பரநாதச் சம்புவராயன் பெயரால், குட்டியமென்னுமூரில் ஏகாம்பரநாதர் கோயிலைக் கட்டியுள்ளான். (A.R.No. 33 of 1933-4) என அவ்வூர்க்கல் வெட்டால் அறிகின்றோம். இந்த ஏகாம்பரநாதர் பேரில் இரட்டையர்கள், ஏகாம்பர நாதருலாவைப் பாடிச் சம்புவராயனை மகிழ்வித்தனர். இனி, காஞ்சி யேகாம்பரநாதர்பேரில் இவ்வுலாவைப் பாடினரென்பது முண்டு. அவன் ஏகாம்பரநாதர்க்குத் திரு முடியும், திருத்தேரும் நல்கி, அக்கோயிலில் துலாபார மண்டபமும் கட்டினான் என்று ஏகாம் பரநாதருலா (61,102,147,151) கூறுகிறது. வென்று மண் கொண்ட சம்புவராயனுக்கு மல்லி நாதனென்றொரு பெயருமுன் டென்பதை இந்த உலாவே, “வடித்த சுடர் வேற்சம்பன் வாழ் மல்லிநாதன்” (102) என்று குறிக்கிறது. இவன் பெயரால் வட ஆர்க்காடு மாவட்டத்துக் காங்கேயே நல்லூர் “மல்லிநாதச் சதுர்வேதி மங்கலம்” (S.I.Ins. No.104,105) என்று வழங்கப்பட்து, இதற்குப் பழம் பெயர் நீலகண்டச் சதுர்வேதி மங்கலமென்ப (A.R.No.199 of 1921) தாகும்; இவன் மகனான இராஜநாராயணச் சம்புவராயன் தன்னை, “மல்லிநாதன் ராஜநாராயணன்” என்று கூறிக்கொள்வ தனாலும் இவ்வுண்மை வலியுறுகிறது. இராஜ நாராயணனுக்குப் பின்பு ஆட்சி புரிந்தவன் அவன் மகனான மல்லிநாதச் சம்புவராயன் (A.R.No. 390 of 1905) இவ்வரலாறு, “படைவீட்டரசு” என்ற பெயரால் இந்நூற் குறிப்புரைகாரர் எழுதிய நூலில் விரியக் கூறப்படுகிறது ஒருகால் இரட்டையர் ஏகாம்பரநாதனான வென்று மண்கொண்ட சம்புவராயனைக் காணச் சென்றனர். அவன் விகடசமுத்தியொன்று தந்துபாடச் சொன்னான். அதற்கு அவர்கள் இப்பாட்டைப் பாடினரென்றும் இப்பாட்டுப் பல்லவராயன் கோவையிலுள்ளதென்றும் கூறுவர். ஏகாம்பரன் என்பதற் கேற்பக் கச்சியென்பது விசேடித்து நின்றது. புலிக்கொடி யானென்றது, சோழர் கீழ் வாழ்ந்த குறிப்புணர்த்தி நின்றது. சிந்தூரத் திலகம் - சிந்தூரப்பொட்டு.
வெண்பா
காற்றா லலைப்புண்டுங் கண்ணன் கடல்கடைந்தும்
ஏற்றா னெடுத்துவளைத் தெய்திளைத்தும் - ஆற்றாத
செம்பொன் மலையன்று சேலுக் கிடங்கொடுக்கச்
சம்பன் மலைகை தவா. 114
இஃது இரட்டையர்கள், சம்பராசனதுபடை வீடு முற்றியிருந்த பாண்டியனுக்குப் பாடியது.
குறிப்பு:- ஏகாம்பரச் சம்புவராயன் காலத்தில் பாண்டி வேந்தனொருவன் படைவீட்டை முற்றுகையிட்டான். அவன் புலவர் பால் அன்புடையன். அப்போது இரட்டையர்கள் இப்பாட்டால், “பாண்டியனே, நின் கொடியிலுள்ள மீனுக்குப் பொன் மலையேற்றதே யன்றி, சம்புவராயனது மலை ஏற்றதன்று” என்றார். இம்மலைக்கு இராஜகம்பீரன் மலையென்று பெயரெனக் கல்வெட்டு (S.I.Ins. Vol. I. No.81) கூறுகிறது. பாண்டியன் முற்றுகை நீங்கி வடபுலம் நோக்கிச் சென்றான். அப்பாண்டியன் மாறவன்மன் சுந்தரபாண்டியனாதல் வேண்டும். காற்று - வாயு தேவன். ஏற்றான் - சிவன். சேல் - மீன் முத்திரை. கைதவன் - பாண்டியன்.
கட்டளைக் கலித்துறை
ஆற்குழை யோவர வோவாயர் பாடி யருமனையோ
பாற்கட லோதம்ப மோதங்ககு மாவம் பலபலவாம்
மார்க்கமு மாகிநின் றார்மாதை நாதர் வலங்கொள்பம்பை
மேற்கரை கோயில் கொண்டார் புரஞ்சீறிய வெங்கணைக்கே. 115
இஃது இரட்டையர் பாடிய ஆறு விலகிய பாட்டு.
குறிப்பு:- பெண்ணையாற்றிலிருந்து பிரிந்தோடி வரும் பம்பையாறு திருவாமாத்தூரருகே ஆமாத்தூர் இறைவன் திருக் கோயிற்கு மேற்கில் ஓடிற்றென்றும், இரட்டையர் பாடிய திருவா மாத்தூர்க் கலம்பகத்தை அவர்கள் அரங்கேற்றுகையில் அதிலுள்ள இப்பாட்டு கீழ்க்கரையிலுள்ள கோயிலை மேற்கரையில் உள தென்றல் பொருந்தாதென அவையோர் ஏலாராயின ரென்றும் அன்றிரவு பெய்த மழையால் பம்பையாறு நீர்பெருகித் திருக் கோயிற்குக் கிழக்கில் ஓடத் தலைப்பட்டதென்றும், அது கண்டோர் இப்பாட்டின் தெய்வப் பான்மை கண்டு வியந்தன ரென்றும் கூறுவர். திருவாமாத்தூர்க் கோயில் கல்வெட்டொன்று (A.R.No. 48 of 1922) மூஞ்சியாறு என்றோராற்றைக் குறிக்கிறது. அஃது இப் பம்பையோ வேறோ தெரியவில்லை. ஆற்குழை - ஆலிலைத்தளிர். அரவு - ஆதிசேடன், ஆவம் - அம்பறாத் தூணி; ஈண்டு இடம் என்றும் பொருள் தந்து நின்றது. தம்பம் - இரணியன் மனையிலிருந்த தூண். மாத்தூர் மாதை என வந்தது. புரஞ் சீறிய வெங்கணை - முப்புரத்தை யெரித்தற் பொருட்டுத் தீயுமிழும் அம்புருவாகிய திருமால். திருமாலைக் கணையென்றதற் கேற்ப, அவர் உறையும் இடமாகிய ஆற்குழை முதலியவற்றை, “ஆவம்” என்றார்.
கொச்சக் கலிப்பா
தொல்காப் பியதேவர்சொன்ன தமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைத்த தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்துக் கண்பிசைந்து
பல்காற் பொருளழற்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே. 116
இது திருவாமாத்தூர்க் கலம்பகம் பாடச்சொன்னபோது இரட்டையர் பாடியது.
குறிப்பு:- சகலலோகச் சக்கரவர்த்தி இராச நாராயணச் சம்புவராயனால் இரட்டையர் நன்கு மதிக்கப்பெற்றுச் சிறப்புடன் நிலவுகையில், அவனோடு இத்திருவாமாத்தூருக்கு ஒருகால் அவர்கள் வந்திருந்தனர். அவனுடைய கல்வெட்டொன்றும் (A.R.No. 44of 1922) இவ்வூரில் உளது. அங்கிருந்த சான்றோர் இரட்டையரைத் திருவாமாத்தூர் இறைவற்கொரு கலம்பகம் பாடுமாறு வேண்டினர். அந்நாளில் தொல்காப்பிய தேவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடிய செய்தியும் அஃது அரங்கேறிய செய்தியும் பரவியிருந்தன. அச் சான்றோர்க்கு விடை கூறுவாராய், இரட்டையர் இப்பாடலால் தமது அடக்க முடைமையை வெளிப்படுத்தினர் என்ப. தமிழ்ப்பாடல் - திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம். மல்கா - மல்கி, நிறைந்து. பல்கால் - பன்முறை, பொருள்- உபமன்னியு முனிவனாகிய மகன். மக்களைப் பொருளென்றல் மரபு; “தம் பொருளென்பதம் மக்கள்” (திருக்குறள்.) எனத் திருவள்ளுவனார் குறிப்பது காண்க. பாற்கடல் ஈந்த வரலாறு, “பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்தபிரான்” (9) என்று சேந்தனார் கூறுவது காண்க.
வெண்பா
குன்றும் வனமுங் குறுகி வழிநடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ - ஒன்றுங்
கொடாதாரைச் சங்கென்றுங் கோவென்றுஞ் சொன்னால்
இடாதோ வதுவே யிது. 117
இது, காட்டுவழியிற் போம்போது இளஞ்சூரியர் வினாவுக்கு முது சூரியர் விடை கூறியது.
குறிப்பு :- இளஞ்சூரியர் முதுசூரியர் என்பன இரட்டையர் இருவருடைய பெயர்கள். இவருள் ஒருவர் குருடர், மற்றவர் முடவர் என்றும், குருடர் முடவரைச் சுமந்து செல்வரென்றும், முடவர் வழிகாட்டுவரென்றும், பாட நேரும்போதெல்லாம் ஒருவர் ஒரு பாதிபாட, மற்றவர் மற்றொரு பாதியைப் பாடி நிறைப்பரென்றும் கூறுவர். ஒருகால் ஒரு காட்டுவழியே இரட்டையர் செல்கையில், நடை வருத்தமுணர்ந்த இளஞ்சூரியர் “குன்றும் வனமும் கடந்து திரியும் இச்செயல் என்றும் நம்மை விட்டு நீங்காதோ?” என்று வினாவினார்; அவர்க்கு முதுசூரியர், “அஃது எங்ஙனம் தீரும் நாம் கொடாத புல்லரைச் சங்கநிதியே காமதேனுவே யbறு சொல்லுகிறோமன்றோ, அச்சொல் நம்மை இவ்வாறு வருத்துகிறது காண்” என்றாரென்பது. சங்கு - சங்க நிதி. கோ - காமதேனுவாகிய தெய்வப் பசு.
சயங்கொண்டார்
ஆசிரிய விருத்ம்
செய்யும் வினையு மிருளுண் பதுவுந்
தேனுந் நறவும் ஊனுங் களவும்
பொய்யுங் கொலையும் மறமுந் தவிரப்
பொய்தீ ரறநூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதழும் விழியும்
காலுந் நிறமும் போலுங் கமலம்
கொய்யு மடவார் கண்வா யதரங்
கோபங் கமழுந் தீபங் குடி. 118
இது சயங்கொண்டாரை அபயன் “உமது ஊர் யாது?” என்று கேட்டபோது அவர் சொன்னது.
குறிப்பு:- அபயன் என்றது பதினோராம் நூற்றாண்டின் இறுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்திற் சிறந்து விளங்கிய சோழ வேந்தன். சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியென்னும் வரலாற்றுக் குறிப்புச் செறிந்த தமிழ் நூலை வழங்கிய புலமைச் சான்றோர். இவரது ஊர் தீபங்குடி யென்பது. தீபங்குடி யென்ற பெயருடன் தொண்டை நாட்டில் ஓரூரும் சோழநாட்டிலோரூரும் உள்ளன. தஞ்சை மாவட்டத்துக் கூகூரிலுள்ள கல்வெட்டொன்று “இளங்கா நாட்டுத் தீபங்குடி” (A.R.No. 281 of 1917) யென்றோர் ஊரைக் குறிக்கிறது. சயங்கொண்டார் இவற்றுள் இன்னவூரினரென அறுதியிட்டுக் கூற முடியவில்லையாயினும், முதற் குலோத்துங்கனைச் சிறப்பித்திருப்பதால் சோழநாட்டுத் தீபங்குடியினரெனக் கோடல் பொருந்தா தெனப் படாது. தீபங்குடிப் பத்தென்னும் தமிழ் நூலில் இப்பாட்டு, சில பாட வேறுபாட்டுடன் மூன்றாவது பாட்டாகவுளது. “தேனும் நறவு மூணு முயிரும்” எனவும், “கொலையுங் களவுந் தவிர” எனவும், “அறநூல் செய்வார் தமதூர்” எனவும், “முகமும் விழியுங் குயமுங் காலும் கமலம்போலு மெனவே, கொய்யு மடவார் கனிவாயதரங் கோபங் கடியுந் தீபங்குடியே” எனவும் பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருளுண்பது - இரவில் உணவு கொள்ளுதல். மறம் - களவாகிய பாவம். கமலம் - தாமரை. கோபம் - இந்திர கோபமென்னும் தம்பலப் பூச்சி. கமழும் - நிகர்க்கும்.
வெண்பா
காவல ரீகை கருதுங்காற் காவலர்க்குப்
பாவலர் நல்கும் பரிசொவ்வா - பூவினிலை
யாகாப் பொருளை யபயனளித் தான்புகழாம்
ஏகாப் பொருளளித்தேம் யாம். 119
இஃது அபயன்மேற் கோபம் வந்தபோது சயங்கொண்டார் பாடியது.
குறிப்பு:- அபயனான முதற் குலோத்துங்கனைக் கலிங்கத்துப் பரணி பாடிப் புகழ் நிறுவிக் கவிச் சக்கரவர்த்தியாய் அவன் அவைக் களத்திற் சிறப்புற்றிருந்த சயங்கொண்டார், ஒருகால் அவன் செய்த சிறப்புச் சிறிது குறைந்து தன் மனத்தைப் புண்படுத்தப் பொறாராய்ச் சினங்கொண்டு இப் பாடலைப் பாடினாரென்பர். ஈகை - ஈயும் பொன். பரிசு - பாட்டாகிய பரிசுக்கு. பூவில் நிலையாகப் பொருள் - நிலத்தின் கண் ஒருவரிடத்தும் நில்லாது நீங்கும் பொருள். புகழ் நிலவுலகை யாதாரமாகக் கொண்டு நிலைநிற்ப தாகலின், “புகழாம் ஏகாப்பொருள்” என்றார்.
வெண்பா
ஆடுவதுஞ் செக்கே யளப்பதுவு மெண்ணெயே
கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே - நீடுபுகழ்க்
கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம்
உச்சிக்குப் பின்புகா ரூர். 129
இது செட்டிகண்மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் புகார் தங்களுக்கு ஊர் என்று பாடச் சொல்லச் சயங்கொண்டார் பாடியது.
குறிப்பு:- செக்கார் செட்டிகளைப் போல வாணிகம் செய்பவராயினும், அவரின் வேறாய் இடைக்காலத்தே கொடுமை யுடையராய் இருந்தனர் போலும். கம்பர் “செக்காரப் பொட்டி மக்கள்” (85) என்றதும் இவர், “கூடுவதுஞ் சங்கிலியைக் கோதையே” என்றதும் அக் கருத்தை வற்புறுத்துகின்றன. கச்சிச் செப்பேட்டிற் கணிக்குங்கால் - கச்சிப்பதியிலுள்ள செப்பேட்டு வழக்கை யெண்ணுமிடத்து. உச்சிக்குப் பின் எவரும் எண்ணெய் வாங்கா ராதலால், ஊர்க்குள் எண்ணெய் விற்றற்கு முன்பே செல்லுவர் என்பதாம். இசையாயிரம் என்பது, செட்டிகளின் புகழ் பொருளாக ஆயிரம் பாட்டுக்கள் கொண்டதொரு நூலாகும். இந் நூலைப் பற்றிய செய்தியொன்றும் இக் குறிப்பின் வேறாகக் கிடைத்திலது.
ஒட்டக்கூத்தர்
கட்டளைக் கலித்துறை
நடித்தது நச்சர வுச்சியி னுச்சி மதிலிலங்கை
பிடித்தது வென்ற திருபது தோள்பதி னெண்பகலே
முடித்தது பாரதம் வீரப் புலிவைப்ப மூரிச்செண்டால்
அடித்தது பொற்கிரி விக்ரம சோழ வகளங்கனே. 121
இது, சரசுவதி தம்பலங்கொடுக்கக் கவிதையுண்டாகிய கூத்த முதலியாரை, அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது விக்கிரம சோழன் கேட்டு ஒரு கவியை யொட்டச் சொல்லென்று சொன்ன போது ஒட்டக்கூத்தர் பாடியது.
குறிப்பு:- அரும்பைத் தொள்ளாயிர மென்பது அரும்பகைத் தொள்ளாயிர மென்றும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இலக்கண விளக்கப் பாட்டியலுரையில் (80) எண் செய்யுளுக்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் அரும்பைத் தொள்ளாயிரம் இவர் பாடியது போலும். ஒருகால் விக்கிரம சோழன் கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடி வருவது கண்டு, அதனுள் வரும் ஒரு கவியை ஒட்டி வேறொரு கவிபாடச் சொன்னானென்றும், அவ்வாறே இதனைப் பாடினாரென்றும், இதனால் இவர்க்கு ஒட்டக் கூத்தரென்ற பெயருண்டாயிற்றென்றும் கூறுவர். தன் மீது இவர் செய்திருக்கும் உலாவிலுள்ள கண்ணியொன்றைக் காட்டி அதனையொட்டி ஒரு கவி பாடுமாறு விக்கிரம சோழன் கேட்க, கூத்தர் இதனைப் பாடின ரென்பதும் உண்டு. புலி - புலிப்பொறி. பொற்கிரி - இமயமலை, “வேங்கை வைக்க, ஒரு திருக்கைச் செண்டாற் கிரி திரித்த சேவகனை” (155) என விக்கிரம சோழனு லாவில் இக்கூத்தரே குறிப்பது காண்க. சயங்கொண்டாரும் புலிப்பொறி வைத்த செய்தியை, “செண்டு கொண்டு கரிகாலனொரு காலினிமயச், சிமய மால்வரை திரித்தருளி மீளவதனைப் பண்டு நின்றபடி நிற்க விதுவென்று முதுகிற், பாய்புலிக்குறி பொறித்தது மறித்த பொழுதே” (கலிங். தா. 165) என்று குறித்துள்ளார். கூத்தரது ஊர் மலரி யெனப்படும் இதனை, “மலரிவரும் கூத்தன்றன் வாக்கு” (பெருந். 1483) என வரும் பழம் பாட்டாலறியலாம். இக் கூத்தனார் நெடுநாள் கவிபாடும் வன்மையின்றி யிருந்தாரெனவும், பின் சரசுவதி தேவியை வழிபட, அவள் மக்கள் வடிவிற் போந்து தம்பலம் கொடுத்தாளெனவும், அதனை வாங்கி யுண்டபின் கூத்தர்க்குக் கவிபாடும் வன்மை யுண்டாயிற்றெனவும் மேலும் அதுமுதல் அவரும் அவர்வழி வந்தோரும் கலைமகளையே வழி படு கடவுளாகக் கொண்டொழுகினரெனவும் தஞ்சை மாவட்டத் திலுள்ள கூத்தனூரென்பது ஒட்டக்கூத்தருக்குச் சோழவேந்தனால் அளிக்கப்பட்டதெனவும் கூறுவர். இதனை வற்புறுத்தற்கு அக் கூத்தனூரிலுள்ள கல்வெட்டொன்று (A.R.No. 109 & 110 of 1927-8) மலரி கவிச் சக்கரவர்த்தி பெயரன் கவிப்பெருமாள் ஆனந்த வரத கூத்தனென்பான் கலைமகளுருவை எழுத்தருளுவித்தான் என்றும், வேறொரு கல்வெட்டு, புருஷோத்தம பாரதிசீபாத ரென்பவர் அக்கலைமகள் வழிபாட்டுக்கு நிபந்தம் விட்டாரென்றும் குறிக்கின்றன.
விருத்தம்
இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன்
றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களந்
திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன்
றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன
படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம்
பதிக்கங் கங்கணம் பரிக்கக் குஞ்சரம்
கடுக்கக் குண்டலங் கலிக்கச் சங்கினம்
கவிக்குப் பஞ்சரங் கவிக்கத் தொங்கலே. 122
இது, சோழன் வரிசையளித்து விடுத்தபோது கூத்தர் கூறிய வகுப்பு
குறிப்பு:- ஒட்டக்கூத்தர் சோழ வேந்தனை உலாப்பாடிச் சிறப்பிக்க, அவன் கம்பள முதலிய பல விலையுயர்ந்த பொருள்களைப் பரிசிலாக அளித்து மகிழ்வித்தான். அம் மகிழ்ச்சி வாயிலாக அவர் இப் பாட்டைப் பாடினார் என்பர். நிரப்பு - வறுமை சிங்களம் - சிங்கள நாடான இலங்கை நாட்டவர். பரிக்க - தாங்க. கலிக்க - ஒலிக்க, தொங்கல் - மாலை.
விருத்தம்
பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போய் முடிய
பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடையே
மத்துக்கொண் டமுதத்தைக் கடையாழித் திருமால்
வடிவாகிப் புவிகைக்கொண் டருண்மானா பரணா
முத்துப்பந் தரினிற்குங் குருளைக்குஞ் சினவேன்
முருகற்கும் பொதியக்கோ முனிவற்கும் பதுமக்
கொத்தற்குஞ் சடிலக்குந் தளருக்கு மல்லாற்
கூழைத்தண் டமிழற்கென் கொடியுங் காளமுமே. 123
இஃது இந்த விருதுகள் யாருக்கென்றபோது ஓட்டக்கூத்தர் பாடியது.
குறிப்பு:- சோழன் கூத்தரது புலமை நலம் கண்டு காளமும் கொடியுமாகிய பல விருதுகளைத் தந்துவிட, அவை கூத்தரை நோக்கி வந்தன. கூத்தர் நிகழ்ந்த தறியாது “இவ் விருதுகள் யாருக்கு?” என வினவினர். வேந்தன் அவை தங்கட்கே எனக் கூறினன். அவர் நன்றியறிவால் தமது அடக்கமும் கடவுள் மாட்டன் புடைமையும் தோன்ற இப் பாட்டைப் பாடின ரென்பர். திக்கு களும் விண்மீன்களும் கடல் கடைந்த அதிர்வால் துளங்கின என்பார், “பத்துக்கொண்டன…. சிந்த” என்றார். கடை திருமால் - கடைந்த திருமால் என இறந்தகாலம் தொக்கி நின்றது. மானா பரணன் - மானத்தை ஆபரணமாகக் கொண்டவன். முத்துப் பந்தரில் நிற்கும் குருளை - திருஞான சம்பந்தப் பெருமான். குந்தளம் - முடி. சடிலக் குந்தளர் - சிவபெருமான். கூழை - பின்னிற்பது. குருளை முதலியோரை வழிபடும் தன்னை “கூழைத் தண்டமிழன்” என்றார். “கூத்தத் தண்டமிழற் கெனவும் பாட வேறுபாடுண்டு. கூத்தர் தாம் பாடிய தக்கயாகப் பரணியின் கடவுள் வாழ்த்திலும் நூலகத்தும் திருஞான சம்பந்தரைச் சிறப்பாக வழிபட்டிருப்பது குறிக்கத் தக்கது. கொடியும் காளமும் என்னென்றது” அவரது அடக்கத்தின் பெருமைக்குச் சான்று.
வெண்பா
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயுஞ்
செய்ய கரிய திருமாலே -வையம்
அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளென் மான். 124
இஃது ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலாப் பாடியபோது அதிலொரு கண்ணியைவைத்து ஒரு பாட்டாகப் பாடென்ற போது அவர் பாடியது.
குறிப்பு:- ஒட்டக்கூத்தர் பாடிய உலாவைக் கேட்ட சான்றோர் உலாவின் ஒவ்வொரு கண்ணியும் வெண்டளைப் பொலிவால் வீறுகொண்டு விளங்குவது கண்டு வியந்தனர். அவருள் ஒருவர் கூத்தரைப் பாராட்டி, எவையேனும் இரண்டு கண்ணிகளைக் கோத்து ஒரு பாட்டாகப் பாடிக் காட்டவேண்டு மெனக் கேட்க, கூத்தர் இதனைப் பாடினாரென்பர். இப் பாட்டின் கண் முதலிரண்டடி விக்கிரம சோழனுலாவில் வரும் 158-ஆம் கண்ணி பின்னிரண்டடி அக் கண்ணியை முடித்தற்கு வந்தன. செய்ய கரிய வென்ற குறிப்புப் பெயரெச்சங்கள் திருமா லென்ற பெயர் கொண்டன. வேந்தரைத் திருவுடைய திருமாலாகக் கூறும் மரபுபற்றி இவ்வாறு கூறினார். அகளங்கன் - களங்கமில்லாதவன். நின்மாட்டுளதாகிய வேட்கையால் என் தலைவி மேனி மெலிந்தாள் என்பாள், “தளர்ந்தாள் என்மான்” என்பதாம். மான் - மான் போன்றவளாகிய என் மகள்.
வெண்பா
அன்றையிலு மின்றைக் ககன்றதோ வல்லாது
குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ - என்றும்
அடைந்தாரைத் தாங்கு மகளங்கா நீயும்
நடந்தாயோ நாலைந் தடி. 125
இது கவிகளையறுத்தபோது, சேரனும் பாண்டியனும் பாவமென்று ஓலை வரவிட, இராசா வெட்டவந்த போது பாடியது.
குறிப்பு:- நல்ல கல்வியும் பயிற்சியும் பெறாதார் பலர் தாமும் கவிபாடித் தமிழிலக்கியத்தின் மாண்பைச் சீரழித்து வரக்கண்ட ஒட்டக்கூத்தர், அவர்களால் தமிழ்ச்சான்றோர் சால்புக்கும் தமிழினது மாண்புக்கும் பழிவளர்தல் கண்டு வேந்தனை வேண்டி அவர்களை ஒறுத்தாலல்லது தமிழ்ப்பாநலம் சிறப்பெய்தாதென அறிவுறுத்தினர். அச்செயல் கல்வி வளம்பெறுதற்கும் சீரிய புலவர்களின் சிறப்பு மேம்படுதற்கும் தமிழ் மொழி பழி நீங்கு வதற்கும் ஏற்றதாமெனத் தெளிந்து வேந்தன் புன்கவிகளை ஒறுக்க லுற்றான். அதனைச் சேர வேந்தனும் பாண்டி வேந்தனும் வேறோராற்றால் அச் செயல் உயிர்க்கொலையாகிய பாவமா மென ஓலை விடுத்தனர். தமிழகத்தின் புகழைக் கொலைசெய்வார் செயல், அவர் பூதவுடம்பைக் கொல்லற் கிடந்தருவ தனையே யெண்ணிச் சோழவேந்தன் வாளேந்தி நாலைந்தடி முன் வந்தான். அவனது தமிழன்பும் மானவுணர்வும் கண்டு வியந்த ஒட்டக் கூத்தர் இதனைப் பாடினர். “அடைந்தாரைத் தாங்கும் அகளங்கா” என்றது சோழ வேந்தனது அருண் மிகுதியை யுணர்த்தி நின்றது.
வெண்பா
கண்டன் பவனிக் கவனப் பரிநெருக்கால்
மண்டுளங் காதே யிருந்தவா - கொண்டிருந்த
பாம்புரவி தாயல்ல பாருரவி தாயல்ல
வாம்புரவி தாய வகை. 126
இது கண்டன் செண்டு வெளியிற் குதிரை யேறியபோது ஒட்டக் கூத்தர் பாடியது.
குறிப்பு:- கண்டன் என்பது இரண்டாம் இராசராச சோழனுக்குள்ள பெயர்ச் சிறப்புக்களுள் ஒன்று. அகழிக்கும் காட்டரணுக்கும் இடையேயுள்ள வெள்ளிடம் செண்டுவெளி யெனப்படும். இவ்விடத்தே அரசர் குதிரை யேற்றம், யானை யேற்றம், தேரேற்றம் முதலியன பயில்வர். செண்டாடல் என்பது குதிரை மேலிருந்தாடும் ஒருவகைப் பந்து விளையாட்டு. இஃது இக்காலத்தார் ஆடும் போலோ (Polo) என்ற விளையாட்டுப் போல்வது விக்கிரம சோழன் ஒருகால் செண்டாடற்குக் குதிரை யேறிய நலங்கண்ட ஒட்டக்கூத்தர் இப் பாட்டைப் பாடின ரென்பர். கவனம் - விரைந்து செல்லும் செலவு. நெருக்கால் - குளம்பால் நெருங்குவதால். இருந்தவா - இருந்ததற்குக் காரணம். பாம்பு உரவிதாய் அல்ல - ஆதிசேடன் வலியுடையனாய் இருப்ப தனாலன்று. பார் - நிலம் வாம்புரவி - தாவியோடும் குதிரை . தாய - தாவிய.
வெண்பா
இன்னங் கலிங்கத் திகல்வேந்த ருண்டென்றோ
தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ - சென்னி
அகளங்கா வுன்ற னயிரா வதத்தின்
நிகளங்கால் விட்ட நினைவு. 127
இஃது யானை நிகளம் விடுத்தபோது பாடியது.
குறிப்பு:- ஒருகால் சோழன் தனது யானையேறி வெளிச் செல்லக் கருதி அதன் நிகளத்தை அறுத்துவிட்டான். அதனைக் கண்ட ஒட்டக்கூத்தர், “முன்பே கலிங்க நாட்டையும் பாண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திக் கொண்டாய்; இப்போது யானையின் காலைப் பிணித்திருக்கும் நிகளத்தை நீ நீக்கியதன் குறிப்பு விளங்கவில்லை” யென்ற கருத்துப்பட இப்பாட்டைப் பாடினர். அயிராவதம் - யானை. அயிராவதம் என்பது இந்திரன் யானைக்குப் பெயர்; அதுவே இவ்யானைக்கும் பெயர். “கண்ட னயிராபத மதங்கால் காலத்துக் கொண்டதொரு சுவடுமேல் கொண்டு” என இராசராச சோழனுலா கூறுதல் காண்க;
கட்டளைக் கலித்துறை
தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொற் றுலர்த்திடைவண்
டுழுகின்ற தார்க்கண்ட னேறிய ஞான்றி னுவாமதிபோய்
விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலையில் வேலையில்வந்
தெழுகின்ற ஞாயிறொத் தான்குல தீப னெதிர்த்தட்டிலே. 128
இது கண்டன் துலா புருடதானம் பண்ணியபோது ஒட்டக் கூத்தர் பாடியது.
குறிப்பு:- துலாபுருட தானம் என்பது, துலாக்கோலை நிறுவி கொடுக்கும் வள்ளல் ஒரு தட்டிலும், கொடுக்கப்படும் பொன் ஒரு தட்டிலும் சமநிற்பக் கொடுப்பது. இதனை ஒருகால் கண்டனான இரண்டாம் இராசராசன் செய்தான். அக்காலத்தே ஒட்டக்கூத்தர் உடனிருந்து பெரு மகிழ்வு கொண்டு இப்பாட்டைப் பாடினாரென்பர். வண்டு உழுகின்ற தார் - வண்டு கிளரும் பூமாலை. ஞான்று - சமயத்தில். உவாமதி - முழுமதியம். வேலை - கடல். குல தீபம் - குல விளக்கு.
கட்டளைக் கலித்துறை
கரத்துஞ் சிரத்துங் களிக்குங் களிறுடைக் கண்டன்வந்தான்
இரத்துங் கபாட மினித்திறப் பாய்பண் டிவனணங்கே
உரத்துஞ் சிரத்துங் கபாடந் திறந்திட்ட துண்டிலங்கா
புரத்துங் கபாட புரத்துங்கல் யாண புரத்தினுமே. 129
இஃது இராசமாதேவி ஊடலாற் கதவடைத்தபோது ஒட்டக் கூத்தர் பாடியது.
குறிப்பு:- கண்டனான இராசராசனுக்குப் புவன முழு துடையாள் முதல் தென்னவன் கிழானடிகள் ஈறாக மனைவியர் ஐவருண்டு. அவருள் ஈண்டு ஊடியவள் முதற்றேவியாகிய புவன முழுதுடையாள். கபாடம் - தாழ். இரத்தும் – வேண்டு கின்றோம். உரத்தும் சிரத்தும் கபாடம் திறந்திட்டதுண்டு - பகைவருடைய மார்பையும் தலையையும் பிளந்திட்டதுண்டு. இலங்காபுரம் - இலங்கை வேந்தர்க்குரியது; கபாடபுரம் - பாண்டியர்க்குரியது. கல்யாணபுரம் - சாளுக்கியருக்குரியது
கட்டளைத் கலித்துறை
பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே
தாட்டுக் கடற்புலி யஞ்சலன் றோவறுத் துக்கிடந்த
சூட்டுக் கதிர்க ணிலத்தடங் காமற் றொகுத்துமள்ளர்
மேட்டுக் குவாலிடும் பொன்னிநன் னாடுடை வேற்கண்டனே. 130
அது கவிகளை அறுத்தபோது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக் கூத்தர் பாடியது.
குறிப்பு:- புன்மையும் வழுவும் நிறைந்த கவிகளால் தமிழிலக் கியத்தின் பொலிவழிக்கும் புன்கவிகளை ஒட்டக்கூத்தர் கண் ணோடாது ஒறுத்தது ஏனைப் புலவரெல்லாலர்க்கும் அவர்மேல் வெகுளியை விளைத்தது. அதனால் அவர்களும் அவர்வழிவந்த வர்களும் அவர்மேல் பொய்க் கதைகள் பல புனைந்து பரப்பினர். ஒட்டக்கூத்தர் அவர் செய்கைக்கு அஞ்சாமல் இப் பாட்டைப் பாடினார். பேது ஆட்டுக்கு அடற்புலி அஞ்சுதல் - பேதமை பொருந்திய ஆடுகளைக் கண்டு வலிமிக்க புலியேறு அஞ்சுவது. சூட்டுக் கதிர்கள் - நெற் சூடுகள். மள்ளர் - உழவர். குவால் இடும் - குவியலாகவைக்கும். பொன்னி - காவிரி.
கட்டளைக் கலித்துறை
கோக்கண்ட மன்னர் குரைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்ட கொட்டியும் பூவா தொழிந்தில பூவில்விண்ணோர்
காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்திநின் கட்டுரையாம்
பாக்கண்ட டொளிப்பர் களோகவி பாடிய பாவலரே. 131
இது கவிஞரை வெட்டவேண்டாமென்று ஒட்டக்கூத்தரை நெற்குன்றவாண முதலியார் பாடியது.
குறிப்பு :-நெற்குன்றவாணர் தொண்டை நாட்டினர். இவர் தம்மைச் சிறப்பித்துப் பாடிய யாதவர் கோன் நம்பிக்கு மிக்க பொருளைத் தந்துவிட்டுச் சோழநாட்டுத் திருப்புகலூரையடைந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் பூம்புகலூர்ப் புண்ணியனைப் பரவி மேன்மையுற்றிருந்தனர். தொண்டை நாட்டு நெற்குன்றம் “ஐயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பேரூர் நாட்டு நெற்குன்றம்” (A.R.No.205 1929-30) எனக் குன்றத்தூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது. இவர் திருப்புகலூர்ப் பெருமான்மேல் திருப்புகலூரந்தாதி பாடியுள்ளார். இதனைத் தொண்டமண்டல சதகம், “கிளப்பார் கிளப்ப வடிமடக்காகக் கெழுமிய சொல், வளப்பா மதுரத்துடன்பூக் கமலமென் றாய்ந் தெடுத்த, களப்பாளன் நெற்குன்ற வாணனந்தாதிக் கலித்துறையே, வளப்பார் புகழை வளர்ப்பிக்கு மாற்றொண்டை மண்டலமே” (26) என்று கூறுகிறது: “பூக்கமலத்து விழிவளர் வானென்றும் போற்றியவூர், மாக்கமலத்து மகிழ்கின்ற வூர்மது வானிறைந்த, தேக்கம லத்து வழியே பரக்குந் திருப்புகலூர், நோக்க மலத்துயர் சோதி நெஞ்சே நம்மை நோக்குதற்கே” என்று வரும் திருப்பு கலூரந்தாதி மேற்கோளும் ஈண்டு நோக்கத் தக்கது. நெற்குன்ற வாணர் தம்மைப் பாடிவந்த காளி நம்பிக்கு மிக்க பொருளைத் தந்துவிட்டுப் புகலூரடைந்த செய்திக்கு ஆதரவாகச் சோழ மண்டலசதகம், “பன்னுந் தமிழ்க்கவன் மாமனை தாதி பரிசளிப்ப, முன்னம்பி காளிக்கு நெற்குன்ற வாண முதலியென்போன், பின்னுஞ் சிலபல பொன்னுங் கொடுத்துத்தன் பேர்நிறுத்த, மன்னுந் தமிழு முரைத்தா னவன்றொண்டை மண்டலமே” (83) என்றும், பழம் பாட்டொன்று, “கற்குங் கவிவல்லை யாதாவர்கோனம்பி காளிக்கியாம், விற்கும் பரிசன மாகிவிட் டோம்வட வேங்கடமும், பொற்குன்றமும் புகழ் கங்கா நதியும் பொதியமும்போல், நெற்குன் றமுநம் மரபுமெந் நாளும் நிலைநிற்கவே” என்றும்கூறு கின்றன. கோ - அரசர்க்கரசரான பேரரசர். குரை கடல் - முழங்குகின்ற கடல். விண்ணோர்கா - தேவ ருலகத்துக் கற்பகச் சோலை. பாவலர் - பல்வகைப் பாக்களையும் பாடவல்லுநர்,
கட்டளைக் கலித்துறை
ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
நீடுங் குடையிற் றரித்த பிரானென்றும் நித்தநவம்
பாடுங் கவிப்பெரு மானொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்கச் சோழனென் றேயென்னைச் சொல்லுவனே. 132
இஃது ஒட்டக்கூத்தர் பாதி, சோழன் பாதி பாடியது.
குறிப்பு:- விக்கிரம சோழன் மகனான குலோத்துங்கன் ஒட்டக்கூத்தர்பால் தமிழ் பயின்று அவரிடம் பேரன்பும் பெருமதிப்பு முடையவனாய் இருந்தவன். ஒருகால் ஒட்டக்கூத்தர் குலோத்துங் கனுடைய ஆட்சி நலமும் புலமை நயமும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு, “ஆடுங் கடைமணி நாவசையாமல் அகிலமெல்லாம், நீடுங்குடையில் தரித்த பிரான் என்றும்” என்று பாராட்டிப் பாடத்தொடங்கினார். குலோத்துங்கன் அந் நலமெல்லாம் பெறுதற்கு உரிய ஆசிரியரானவர் ஒட்டக்கூத்தரே என்பதைத் தன் பணிவும் அடக்கமும் காட்டுமாறு, “நித்த நவம்…. சொல்லுவனே” என அப்பாட்டை முடித்து இன்புறுத்தினானென்பர். கடைமணி - குறை வேண்டியும் முறை வேண்டியும் வரும் மக்கள் அரசர்க்குத் தம் வருகை யுணர்த்தற் பெருட்டு அரசன் கோயில் முற்றத்திற் கட்டியிருக்கும் மணி; இதனை ஆராய்ச்சி மணி யென்பதும் வழக்கு. குடை - வெண்கொற்றக் குடை. சோழன் என்றும் என்னைச் சொல்லுவேன் என எண்ணும்மை விரித்துக் கொள்க.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
செங்கான் மடவன்னம் படர்தீயா மெனவெருவிச்
சிறையிற் பெடைமறையக் கொடுதிரியத் திரள்கமுகின்
பைங்காய் மரகத மீதுபடர்ந் தேறிநறுந்தண்
பாளைக்கிடை பவளக்கொடி படர்கா விரிநாடா
தங்கா தலியருமைந் தருமுடனா கவணங்கித்
தலைகா வெமதுடல்கா வெமதுயிர்கா வகளங்கா
கொங்கா மன துங்கா வெனமதுரே சர்வணங்குங்
கொல்யானைய பங்காவிவள் குழலோசை பொறாளே. 133
இது பேராசிரியர் ஒட்டக்கூத்தர் உலாப் பாடியபோது நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது.
குறிப்பு:- இக் கூறிய கொளு ஏடுகளில் ஒட்டக்கூத்தர் உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியதெனக் காணப்படுகிறது. நேமிநாதர் என்பவர் கூத்தர் பால் பேரன்புகொண்ட செல்வரும் புலமை நலமுடைய வருமாவர். ஒட்டக்கூத்தர் வேந்தனைச் சிறப்பித்து உலாப் பாடக் கண்ட நேமிநாதர் அதன் சொற்சுவை பொருட்சுவைகளில் ஈடுபட்டுப் பட்டோலை பிடித்தனர். பட்டோலை, பட்டாடையிற் பொதிந்த ஓலை. இச்செய்தியை வற்புறுத்தும் குறிப்பொன்றும் இப்பாட்டிற் காணப்படுகின்றிலது. பேராசிரியர் நேமிநாதர் என இயைத்துப் பேராசிரியராகிய நேமிநாதரென்பதும் உண்டு. இந்த நேமிநாதர் சின்னூலாகிய நேமிநாதம் செய்த குணவீர பண்டிதரு மல்லர். தொல்காப்பியத்துக்குரை கண்ட பேராசிரியருமல்லர். நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பேராசிரியர் பாடினரெனவும், அவர் ஒட்டக்கூத்தரின் வேறாவரெனவும் கருதுவோரும் உண்டு. அபங்கன் - பங்கமில்லாதவன்.
வெண்பா
தன்னுடைய தேவியர்க்குத் தார்வளவன் றானுரைப்ப
துன்னுடைய கீர்த்தி யுயர்நலமே - துன்னுபுகழ்ச்
சோமா திரிபுவனத் தோன்றலே நின்புகழை
யாமா ருரைக்க வினி. 134
இஃது இராசாவுக்கு வேளை யேதென்று
கேட்ட சோமனுக்கு ஒட்டக்கூத்தர் சொல்லியது
குறிப்பு:- சோமன் என்பவன் தஞ்சைமா நாட்டிலுள்ள திரிபுவனத்தில் வாழ்ந்த செல்வர்களுள் ஒருவன். ஒருகால் இவன் வேந்தனைக் காணவந்து, எதிரே வந்த ஒட்டக்கூத்தரைக் கண்டு “இராசாவைக் காண்பதற்கு வேளை யேது?” என்று கேட்க, அவற்குக் கூத்தர் இப்பாட்டால் விடையிறுத்தாரென்பர். இனி - இப்பொழுது. துன்னுபுகழ் - நெருங்கிய புகழ்.
வெண்பா
அடையென்பார் தள்ளென்பா ரன்பொன்றில் லாமற்
புடையென்பார் தங்கடைக்கே போகேங் - கொடையென்றால்
முந்துஞ்சோ மாபுவனை முன்னவனே நின்கடைக்கீழ்
வந்துய்ஞ்சோ மாதலான் மற்று. 135
இஃது ஒட்டக்கூத்தரைப் பழிகாரர் தொடர்ந்தபொழுது சேரமன் வாசலில் ஓடிச்சொன்ன கவி.
குறிப்பு:- ஒருகால் பழிக்கத்தக்க செயலுடையார் சிலர் ஒட்டக்கூத்தரைப் பற்றித் துன்புறுத்த முயன்றனர். அப்போது அவர் திரிபுவனத்துக்கருகே வந்திருந்தார். அவர்களுடைய செயலைக் கண்டு அஞ்சிய கூத்தர் அவர்கள் கைக்கு அகப்படாமல் ஓடிச் சோமனுடைய பெருமனையை யடைந்தார். அவனும் அவர்க்கு வேண்டும் பாதுகாப்பும் பொருளுதவியும் புரிந்து சிறப்பித்தான். அதுகண்டு இப்பாட்டைப் பாடினாரென்பர். ஒன்று சிறிதும். கடைக்கு - வீட்டிற்கு, புவனைமுன்னவன் - திரிபுவனத்து வாழ்வோருள் முன்னணியில் விளங்குபவன். உய்ந்தோம் என்பது உய்ஞ்சோமெனச் சிதைந்தது. இங்கே குறிக்கப்பட்ட செய்திபற்றி ஒரு கதையும் கூறப்படுவதுண்டு. ஒருகால் செங்குந்தருட் சிலர் ஒட்டக்கூத்தரையடைந்து தமது செங்குந்தர் குலத்தைச் சிறப்பித்துப்பாட்டியற்றுமாறு வேண்டினர். தாம் பிறந்த குலத்தைத் தாமே புகழ்வது நன்றன்றெனக் கூத்தர் அதற்கு இசைந்திலர். அவர்கள் சினங்கொண்டு, குலப்பற்றில்லாத இக்கூத்தரைக் கொல்வதும் குற்றமன்றென எழுந்தனர். அவர்கைக் ககப்படாமல் திரிபுவனத்தில் வாழ்ந்த சோமனிடம் அவர் அடைக்கலம் புகுந்தார். அவன் அவரை ஒரு புடையில் மறைத்து விட்டுப் பேழையொன்றில் தன் மகனை வைத்து, “இதனுள் புலவர் இருக்கிறார்; எடுத்துச் சென்று வேண்டுவது செய்க” என்று அவர்களிடம் தந்தான். வெகுண்டு வந்த செங்குந்தர் அதனை எடுத்துச் சென்று திறந்து பார்த்து அதனுள் சோமன் மகன் இருக்கக் கண்டு தீராச் சினத்தராய்ச் சோமனிடம் வந்து ஆரவாரித்தனர். அவன், “நீங்கள் உங்களுடைய உண்மை வீரத்தைக் காட்டி நிலை நிறுத்துவீராயின், கூத்தர் உங்களை வியந்து பாடுவர்” என்றான். அவர்கள் தங்கள் தலையை அறுத்து அவன் பெருமனை முற்றத்தில் வைத்தார்கள். கூத்தரும் சோமன் சொல்லியபடியே அவர்கள் தலைகளை அடுக்கி இருக்கையாகக் கொண்டு ‘ஈட்டியெழுபது’ பாடி அரசன்முன் அரங்கேற்றினார். பின்பு அவர் தலைகளும் ஒட்டிக்கொண்டன- இஃது அந்தக் கதையாகும்.
கலிப்பா
மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின வின்னமென்மகள் கண்ணுறங்கிலள் கையணைக்
கோவுறங்குக டைத்தலைக்குல தீபவள்ளைகு தட்டநின்
றாவுறங்கு புகார சஞ்சல வஞ்சலென்னவ டுக்குமே. 136
இது கூத்தன் மாணாக்கன் பாடிய அந்தாதிச் சமுத்தி.
குறிப்பு:- இதுபற்றிய வரலாறு விளங்கவில்லை. மகள் மெலிவு கண்டு ஆற்றாத தாய் தலைமகற்குரைக்குந் துறையில் இப்பாட்டு அமைந்துள்ளது. தண்டலைக்கா - தண்டலையாகிய சோலை. கோ - சிற்றரசர். குலதீப - குலவிளக்காகிய வேந்தனே! வள்ளை - ஒருவகைக் கொடி. அசஞ்சல - சஞ்சலமில்லாதவனே! அடுக்கும் - தகும்.
விருத்தம்
ஏகா வடமென் னிருகொங் கையின்மேல்
ஆகா வடமா னதறிந் திலையே
தியாகா பரணா திசையா னைகளின்
பாகா பரரா சபயங் கரனே. 137
இதன் இரண்டாமடி அம்பிகாபதி பாடியது.
குறிப்பு:- இப்பாட்டின் முதல் இரண்டடியை ஒட்டக் கூத்தர் பாடி யாது காரணத்தாலோ குறையாக விட்டுவிட்டார். இதனைப் பின்வந்த அம்பிகாபதி என்பவர் பாடி நிறைவித்தன ரென்பர். இங்கே குறிக்கப்படும் அம்பிகாபதி யென்பவரைக் கம்பருடைய மகன் எனவும், ஒட்டக்கூத்தருடைய மாணாக்கருள் ஒருவரெனவும், உற்ற நண்பருள் ஒருவரெனவும் கூறுவர். ஏகா வடம் - ஏகாவலி யென்னும் ஒற்றை வடமாலை. காமவெப்பத்தால் மாலை வெறுக்கப்படுதலின், “ஆகா வட மானதறிந்திலையே” என்றான். தியாகாபரணா - தியாகத்தைப் பூணாரமாகக் கொண்டவனே. பரராச பயங்கரன் - வேற்றரசர்களுக்கு அச்சத்தைச் செய்பவன்.
கட்டளைக் கலித்துறை
கொலையைத் தடவிய வைவே லரக்கர் குலமடியச்
சிலையைத் தடவிய கையே யிதுசெக தண்டத்துள்ள
மலையைத் தடவிய விந்தத் தடவி மலைந்தவொன்னார்
தலையைத் தடவி நடக்குகொல் யானை சயதுங்கனே. 138
இஃது இராசா கைகொடுத்தபோது பாடியது.
குறிப்பு:- ஒருகால் சோழன் அரண்மனையில் ஓரிடத்திலிருந்து வேறொரிடத்திற்கு அமைச்சர் முதலிய அரசியற் சுற்றத்தோடு வந்த அரசனுடன் ஒட்டக்கூத்தர் போகவேண்டிய நிலையுண்டாயிற்று. அவ்விடத்திற்குச் சில படிகளை யேறி யடையவேண்டும். அவருடைய முதுமை கண்ட சோழவேந்தன் கூத்தருக்குப் படி யேறிவரக் கைகொடுத்தான். அப்போது அவர் அவன் கையை வியந்து இப்பாட்டைப் பாடினார். கொலையைத் தடவிய வைவேல்- உயிர்க்கொலைகளை மிகப் புரிந்த கூரிய வேல். திருமாலின் வடிவமாக வேந்தரைக் கூறும் மரபுபற்றி, “அரக்கர் குலமடியச் சிலையைத் தடவிய கை” யென்றார். சிலை - வில். கன்னட வேந்தனான சந்திரகௌரீ வல்லபனைக் கலியாணபுரத் தினின்றும் விந்தாடவிக்குத் துரத்திச் சென்று அதன்கண் ஒளித்த அவனை அவ்வடவியைத் தீக்கிரையாக்கி வென்ற செயலை, “விந்தத் தடவி மலைந்த வொன்னார் தலையைத் தடவி நடக்கும் கொல்யானைச் சயதுங்கனே” யென்றார். இச்செய்தியை, “வெம்பு கருநடர் வந்த வனமெனும் விந்த வனமென வேவவும்” (62) என வரும் தக்கயாகப் பரணியுரையிற் காண்க.
கட்டளைக் கலித்துறை
மீனகம் பற்றிய வேலையு மண்ணையும் வெற்படங்கப்
போனகம் பற்றிய மாலலை யோபொருந் தாவரசர்
கானகம் பற்றக் கனவரை பற்றக் கலங்கள் பற்ற
வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனதுங்கனே. 139
இது சோழன் மடையனைத் தண்டஞ் செய்ததை விலக்க ஒட்டக் கூத்தர் பாடியது.
குறிப்பு :- ஒருகால் சோழவேந்தன் அரண்மனையில் அட்டில் தொழில் புரியும் மடைத் தொழிலாளருள் ஒருவன் குற்றம் செய்தானாக, அதனை யாராய்ந்த வேந்தன் அவனைத் தண்டஞ் செய்யக் கருதினான். குற்றத்தின் பொறுக்கத்தக்க தன்மையும் தண்டத்தின் கடுமையும் சீர்தூக்கிய கூத்தர் வேந்தனை இப்பாட்டால் இரந்து குற்றஞ்செய்த மடையனை உய்வித்தா ரென்பர். மீன்அகம்பற்றிய வேலை - மீனினங்களைத் தன்னிடத்தே கொண்ட கடல். போனகம்பற்றிய மால் - உணவாக உண்டொடுக்கிய திருமால். மனதுங்கன் - உள்ளத்தால் உயர்ந்தவன்.
கட்டளைத் கலித்துறை
ஆரே யெனுமொன்று சொல்லத் தொடங்கினு மவ்விடத்துன்
பேரே வருமென்ன பேறுபெற் றேன்பெரு நான்மறையின்
வேரே மிதிலையின் மின்னுட னேவெய்ய கானடந்த
காரே கடல்கொளுந் தச்சிலை வாங்கிய காகுத்தனே. 140
இஃது அரியைப் பாடவேண்டுமென்ன ஒட்டக்கூத்தர் பாடியது.
குறிப்பு:- ஒட்டக்கூத்தர் முதன்முதற் சோழ வேந்தனைக் காணச் சென்றார். அவன் அவரது புலமை நலம் காணவேண்டி “அரியைப் பாடுக” என்று கேட்டான். தாம் முதற்கண் வேந்தனைக் காணவந்தபோது, அவன் திருமாலைப் பாடுக வென்றது, அவன் திருவாயினின்று முதற்கண் திருமாலின் பெயர் வருவதை வியந்து இப்பாட்டைப் பாடினாரென்பர். ஆரேயெனும் - யாரேனும் ஏதேனும். “ஆரேயெனு மொன்று சொல்லத் தொடங்கினுமவ் விடத்துன், பேரே வரும்” என்ற கருத்து, ‘பொன்னார மார்பிற்புனை கழற்காற் கிள்ளிபேர், உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கண்னோ, மனனோடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப், புனனாடன் பேரே வரும்’ எனவரும் பழம்பாட்டை நினைவுறுத்துவது காண்க. வேர் - காரணம்.
புகழேந்தி
கட்டளைக் கலித்துறை
சத்தம் பயிலும் புலவோர் கதலித்தண் டோட்டம்புக்க
பித்த னிவனென்ப தென்னைக்கண் டாய்பிழைத் துக்கணத்தே
தத்த முதுகிட்ட தெவ்வேந்தர் தங்கள் தடமகுட
சத்த மவசத்த மாகுங்கொல் யானைச் சயதுங்கனே. 141
இது புகழேந்தியார் பாடியது.
குறிப்பு:- ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் சோழன் அவைக்களஞ் சென்றிருந்தபோது, அங்கிருந்த சான்றோருட்சிலர் புகழேந்தியாரைக் குறித்து “இவர் யார்?” என்று கூத்தரை வினவ, அவர்கட்குக் கூத்தர், “இவன் பித்தன்” என்றாரெனவும், அது கேட்டுப் புகழேந்தியார் இப்பாட்டைப் பாடினாரெனவும் கூறுவர். சத்தம் - இலக்கணம், கதலித் தண்டோட்டம் - வாழை யினது குளிர்ந்த தோட்டம். தெவ்வேந்தர் - பகையரசர். அவசத்தம் - தீயோசை. துங்கன் - உயர்ந்தவன், பித்தர் வாழைத் தோட்டத்துக்குள் பித்த சாந்தியின் பொருட்டுச் செல்வது வழக்கு என்பர்.
கட்டளைக் கலித்துறை
தூபங் கமழும்பைங் கோதையன் விக்ரம சோழன்மன்னர்
தீபன் புறங்கடை வந்துநின் றானின் றிருப்புருவச்
சாபங் குனிய விழிசிவப் பத்தலை சாய்த்துநின்ற
கோபந் தணியன்ன மேயெளி தோநங் குடிப்பிறப்பே. 142
இழையொன் றிரண்டு வகிர்செய் தவற்றொன் றிணையுமிடைக்
குழையொன் றிரண்டுகட் கொம்பனை யாய்கொண்ட கோபந்தணி
மழையொன் றிரண்டுகைம் மான பரன்கண்டன் வாசல்வந்த
பிழையொன் றிரண்டு பொறுப்பதன் றோகடன் பேதையர்க்கே 143
நானே யினிச்சொல்லி வேண்டுவ தில்லை நளினமலர்த்
தேனே கபாடந் திறந்துவி டாய்செம்பொன் மாரிபொழி
மானே ரபய னிரவி குலோத்துங்கன் வாசல்வந்தால்
தானே திறக்குநின் கைம்மல ராகிய தாமரையே. 144
இவை தேவி ஊடலாற் கதவடைத்தபோது புகழேந்தியார் பாடியன.
குறிப்பு:- ஒருகால் அரசமாதேவி விக்கிரம சோழனாகிய கணவன்பாற் கொண்ட ஊடலால் கதவைத் தாளிட்டுக்கொண்டாள். அவள் ஊடல் தணியும்பொருட்டுப் புகழேந்தியார் இப்பாட்டுக் களைப் பாடினா ரென்பர். கோதை - மாலை. மன்னர் தீபன் - வேந்தர்கட்கு விளக்குப்போல் திகழ்பவன். சாபம் - வில். எடுத்ததற் கெல்லாம் எளிதிற் சினக்கும் சிறுமையுடையதன்று நம் குடி யென்பது. மானபரன் - பெருமையுடைய மேலோனாகிய வேந்தன். கண்டன்,விக்கிரம சோழனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. பேதையர் - மகளிர். நளினமலர்த்தேன் - தாமரைப் பூவிலுள்ள திருமகளை யொப்பவள். தேன் திருமகள் மேற்று. மால் நேர் அபயன் - திருமாலையொக்கும் சோழன்.
வெண்பா
பொருந்த வொருதட்டு மேருப் புகினும்
இருந்த வொருதட் டெழாதால் - திருந்து
மறைபுக்க சொல்லபயா வன்புறவுக் காக
நிறைபுக்க தெவ்வாறு நீ. 145
இஃது இராசா துலாபுருட தானம் பண்ணியபோது புகழேந்தியார் பாடியது.
குறிப்பு:- சோழவேந்தன் துலாபுருட தானம் செய்தபோது ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் ஒருங்கிருப்ப, சோழன் இருந்த தட்டினும் பொன்னிறைந்த தட்டு மிக்கபோது கூத்தரும், சோழன் அதனின் மிக்கபோது புகழேந்தியும் பாடினரெனவும், அக்காலையிற் புகழேந்தியார் பாடியது இப்பாட்டெனவும் கூறுவர். மறைபுக்க சொல் - மறை வழி வழாத சொல். புறவுக்காகத் துலைபுக்க சிபி சோழர் குலமுன்னோன் என்பர்; “குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரைபுக்க, வரையாவீகை யுரவோன் மருக” (புறம். 43) எனச் சான்றோர் கூறுவது காண்க.
கட்டளைக் கலித்துறை
பழியும் புகழு மெவர்க்குமுண் டாமிந்தப் பாரிலுனக்
கழியுஞ் சிலையுங் கயலுமன் றோவக ளங்கதுங்க
மொழியும் பொழுதெங்கள் பெண்சக்ர வர்த்தி முகத்திரண்டு
விழியும் புருவமு மாகியிப் போதுன்னை வெல்கின்றவே, 146
இது சூதில் தேவியை யுயர்த்திப் புகழேந்தியார் பாடியது.
குறிப்பு:- ஒருகால் பொழுது போக்குக்காகச் சோழவேந்தன் தன் தேவியுடன் சூதாடினான். புகழேந்தியார் அதனைக் கண்டிருந்தார். சூதாட்டத்தில் தேவிபக்கமே வெற்றி வரக்கண்ட புகழேந்தியார் அவளைப் புகழ்வது பொருளாக இப்பாட்டைப் பாடினா ரென்பர். சிலையும் கயலும் அழியுமென்றது சேரனும் பாண்டியனும் தோற்பர் என்பது பட நின்றது. மொழியும் பொழுது- சொல்லு மிடத்து. பெண் சக்ரவர்த்தி - இரசாமாதேவி; “எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு,, பெய்த மலரோதிப் பெண் சக்ரவர்த்தி” (விக்கிர. 39.40) எனக் கூத்தரும் கூறுதல் காண்க. தேவியின் விழியாகிய கயலும், புருவமாகிய சிலையும் உன்னை வெல்கின்றன என்பது நேர்பொருள்.
வெண்பா
கவியரசர் தம்முனிவு கண்டாற் புகழ்கொள்
புவியரசர் சீறார் பொறுப்பர் - கவியரசர்
உன்னான் முனியி லவர்பொறா ரோதுமவர்க்
கெந்நாடுஞ் செல்லாத தில். 147
இது சாருவபூமன் உண்டி நிமித்தமாகக் கோபித்து, ஆரிய சேகரன் தன் வாசலிலேயும் இந்தக் குறும்பு செல்லுமோ என்னப் பாடியது.
குறிப்பு:- இது முதல் ஏழுகவிகள் புகழேந்தியார் பாடியன எனப்படுகின்றன. இவற்றால் புகழேந்தி யென்பவர் இலங்கைக்குச் சென்று அங்கே விளங்கும் கண்டி, கதிர்காமம் முதலிய இடங்கட்குச் சென்றவரெனவும், அக்காலத்தே இலங்கையிலிருந்து ஆட்சி புரிந்த சிங்கையாரியச் சக்கரவர்த்தியைப் பாடிச் சிறப்பித்தவ ரெனவும் அறியலாம். சிங்கையாரியச் சக்கரவர்த்தி பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்தவனென இலங்கைநாட்டு வரலாறு கூறுகிறது. ஆகவே இப்புகழேந்தி யெனப்படுபவர் புகழேந்திப் புலவரின் வழிவந்தோராவர். ஒட்டக்கூத்தர் காலத்தவரான புகழேந்தியார் பன்னிரண்டாம் நூற்றாண்டினராவர். இப்புகழேந்தி சாருவபூமன் புகழேந்தி யெனப்படுபவர். சித்தூர் மாவட்டத்திலுள்ள (Chittoor Dt.) மகாதேவமங்கலத்துத் திருக்கண்டீஸ்வரர் கோயில் கல்வெட் டொன்று, “ஐஞ்ஞூற்றுவதேச வள்ளுவன் புகழேந்தி” (A.R.No. 169/1931-2) என ஒருவனைக் குறிப்பதுஈண்டு நோக்கத்தக்கது. பிற்காலத்தார் இச்சாருவபூமன் புகழேந்தியின் பாட்டுக்களையும் புகழேந்தியென்றபெயரொப்புமை கண்டு புகழேந்திப் புலவரின் பாட்டுக்களாக தொகுத்தனரென நினைத்தற் கிடனுண்டாகிறது. ஒருகால் புகழேந்தியான சாருவபூமன் இலங்கைக்குச் சென்று அங்குள்ள வேந்தன் ஆரிய சேகரனைக் கண்டு உணவுகாரணமாகச் சினந்துகொண்டார். அதுகண்ட ஆரியசேகரன், “இந்தக் குறும்பு ஆரிய சேகரன் வாசலில் செல்லாது” என்றானாக, சாருவபூமன் இதனைப் பாடினான். கவியரசர் - கவிபாட வல்ல பெரும்புலவர். முனிவு - சினம். சீறார் பொறுப்பர் - சீற்றம் கொள்ளாமல் பொறுத்துக் கொள்வர். முனியில் - முனியப்படின். “ஓதுமவர்க்கு எந்நாடும் செல்லாத தில்” என்றான், ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன், சாந்துணையும் கல்லாத வாறு.’ (குறள்.) என்ற திருமொழியை மேற்கொண்டுரைத்தலின். சாருவ பூமன் என்பது, சார்வபௌமன் என்றும், சார்வபௌம பாண்டிய னென்றும் பாட வேறுபாடுண்டு.
வெண்பா
அ ஆ விதி யோவட லாரியர் கோமான்
எ ஏ வலரா விழிந்தநாள் - ஒ ஓ
தருக்கண்ணி லுங்குளிர்ந்த தண்ணளிதந் தாண்ட
திருக்கண்ணி லுஞ்சுடுமோ தீ. 148
இஃது ஆரிய சேகரனிடத்திற் போயிருந்து யுத்த சமயத்திற் கடகம் யானை வாங்கி மீண்டு மதுரையில் வந்து பாண்டியன் வரிசை யளிப்ப இருந்தபின் ஆரியசேகரன் பட்டானென்று கேட்ட போது, புகழேந்தியார் பாடியது.
குறிப்பு:- ஆரிய சேகரனென்னும் சிங்கள மன்னன் புத்த சமயத்தவன். அவன்பாற் போயிருந்த சாருவபூமனான புகழேந்தியும் புத்தசமயத்தை மேற்கொண்டு புத்த தருமங் கேட்டு அச்சமயத் தவர் தந்த கடகமும், யானையும் பரிசிலாகப் பெற்றுத் தமிழ் நாட்டுக்கு வரவே, பாண்டியனும் அவற்குரிய வரிசையளித்துச் சிறப்பித்தான். அதுபெற்ற சாருவபூமன் மதுரையில் இருந்த காலத்தில் ஆரியசேகரன் பட்டொழிந்தான். அவன் பட்ட வரலாறு சாருவபூமனுக்கு எட்டவே, அவன் இக்கையறுநிலைப் பாட்டைப் பாடினானென்பர்.
வலர் - போர்வல்ல வீரர். தருக்கண் - கற்பக மரத்தின் கிளைநிழல். ஆரியசேகரன் அகப்பட்டானென்று கேட்டபோது என்று பாடமாயின் ஆரியசேகரன் கி.பி. 1288-ல் சிங்கள வேந்தனை வென்று அவனது செல்வத்தைப் பாண்டி வேந்தனுக்குத் தந்தானென இலங்கைநாட்டு வரலாறு கூறுதலின், அப் பாடம் பொருந்தாது.
கட்டளைக் கலித்துறை
பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்கும்
காவலர் நிற்கும் படிவைத்த வாகண்டி யொன்பதினும்
மேவலர் மார்பினும் திண்டோளினும் செம்பொன் மேருவினும்
சேவெழு தும்பெரு மாள்சிங்கை யாரிய சேகரனே. 149
இஃது ஆரியசேகரன் யானைமேல் ஆயிரம் பொன்னும் மணியும் வரவிட அந்த யானையைப் பாண்டியன் வந்து கேட்கப் புகழேந்தி பாடியது.
குறிப்பு:- சாருவபூமனான புகழேந்தியென்பான் பாண்டி யனைக் காணவந்தபோது தனக்கு இலங்கை யாரியச் சக்கரவர்த்தி வரவிட்ட யானைகளோடு வந்தான். அவற்றைக் கண்டு மிக்க வியப்புற்ற பாண்டியனுக்குச் சாருவபூமன் புகழேந்தி இப்பாட்டைப் பாடினான். பாவலர் வாங்க, காவலர் நிற்கும்படி வைத்தவா என இயையும். கோகழியைஞ்ஞூறு, இரட்டபாடி ஏழரையிலக்கம் என்பனபோலக் கண்டியொன்பது எனப்படுகிறது. இஃது இலங்கை நாட்டில் சிங்களவரசரும் தமிழ்வேந்தரும் அரசுபுரிந்த காலத்தில் தலைநகராக விளங்கியது. இப்போது மத்திய மாகாணத்துக்குத் தலைநகராக விருக்கிறது. சே - எருது.
கட்டளைக் கலித்துறை
எண்ணீர்மை நூலுக் ககத்தி யனாமிவ னென்பதெல்லாம்
வெண்ணீர்மை யன்றி விரகல்ல விக்ரம மாறன் செஞ்சொற்
பண்ணீர்மை தேரும் பராக்ரம மாறன் பதங்கழுவுந்
தண்ணீர் குடித்தல்ல வோகும்ப யோனி தமிழ்கற்றதே. 159
இது பாண்டியன் வாசலில் வந்து அவன் புறப்படவில்லை யென்று பழியாகப் பாதி பாடி, அவன் வந்து வணங்கப் புகழாகப் பாதி பாடியது.
குறிப்பு:- விக்கிரமபாண்டியனை ஒருகால் சாருவபூமன் புகழேந்தி யென்பான் காணவந்து வாசலில் நின்று தன் வரவினை அவற்குத் தெரிவித்தான். அதுகேட்டும் பாண்டியன் வெளிப் போந்து புகழேந்தியை எதிர்கொள்ளானாயினான். அது கண்டு வெகுண்ட புகழேந்தி, “எண்ணீர்மை…… விக்கிரம மாற” என்று பாடினன். இதனைப் பாடி முடித்ததும், பாண்டியன் போந்து வரவேற்று உரிய சிறப்புகளைச் செய்தான். உடனே புகழேந்தி பின்னிரண்டடிகளால் அவனைப் புகழ்ந்து பாடினான்.
வெண்ணீர்மை - புன்மை; அறியாமை. விரகு - புலமை நலம். பண்ணீர்மை - பாட்டின் இசையுடைமை. கும்பயோனி - கும்பத்திற் பிறந்தவனான அகத்திய முனிவன். பராக்கிரமன் - விக்கிரமனுக்குத் தம்பி.
கட்டளைக் கலித்துறை
புராதன மெண்ணுங் கவிப்புல வீரிந்தப் புன்குரங்கு
மராவனம் விட்டிங்கு வந்ததென் னோவந்த வாறுசொல்வேன்
தராதல மெண்ணுந் தமிழ்மா றனையுமித் தம்பியையும்
இராகவனென்றும் இலக்குவ னென்றுமிங் கெய்தியதே. 151
இது சித்திரத் தனுமனைப் பாடச்சொல்லப் பாடியது.
குறிப்பு :- ஒருகால் சாருவபூமன்புகழேந்தியென்பான் பாண்டி வேந்தனான விக்கிரமாண்டியனும் அவன் தம்பி பராக் கிரமபாண்டியனும் உடன்வரச் சித்திரசாலைக்குச் சென்றனர். அங்கே இருந்த சித்திரங்களுள் குரங்கொன்று அழகுற எழுதப் பட்டிருக்கக்கண்ட பராக்கிரமன் கேலியாக, மராமரக் காட்டி லிருத்தற்குரிய இக்குரங்கு இங்கே எங்ஙனம் வந்ததென்றான். அது தன்னைச் சுட்டிநிற்பதைக் குறிப்பாகவுணர்ந்த சாருவபூமன் இப்பாட்டைப் பாடினானென்பர்.
புராதனமெண்ணுங் கவி - பழமையான பாட்டுக்கள்; சங்கச் செய்யுட் களென்றுமாம். மராவனம் - மராமரம் நிறைந்த காடு. வந்தவாறு சொல்வேன் என்பது முதலியன சாருவபூமன் கூற்று. இத்தம்பியென்றது பராக்கிரம பாண்டியனான இளவலை.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கயக்காவி நாறுங் கொழும்பிற் பிரசண்டா
காரோர் கொடைச்செங்கை யாரோதன் மைந்தா
இயக்காநின் மார்பிற் கொழும்புன்னை யந்தார்
இப்போதில் நீநல்கி லென்பேதை தன்மேற்
சயக்காம வேளம்பு தையாது முத்தின்
தாமஞ் சுடாசந் தனம்பூசி னாலும்
தியக்காது வேயுஞ் செவிக்கும் பொறுக்கும்
தீயென்று மூளாது திங்கட் கொழுந்தே. 152
இது சாருவபூமனான புகழேந்தி இராசாவைப் பாடாமல் ஓடக் காரனைப் பாடியது
குறிப்பு:- இஃது இராமச்சந்திர கவிராயர் பாட்டாகவும் கூறப்படுகிறது. கொழும்பு - இலங்கையின் தலைநகரம். யாரோ தன் என்பது பாட்டுடைத் தலைவனுடைய தந்தை பெயர். இயக்கா - இயக்கனே. இவனுடைய அடையாளமாலை புன்னைப் பூமாலை. காம வயப்பட்டார்க்குப் பூவும், முத்தும், சந்தனமும் வேய்ங்குழலிசையும் திங்களும் வருத்தம் செய்யு மென்ப. இப் பாட்டெழுந்த காலமும் இடமும் பிறவும் தெரிந்தில.
வெண்பா
தாயரவை முன்வருத்துஞ் சந்த்ரோ தயந்தனக்குன்
வாயரவை விட்டுவிட மாட்டாயோ - தீயரவைச்
சீறு மயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள்
ஏறு மயிற்பெருமா ளே. 153
இது கதிர்காமத்து வேலர்முன் பாம்பை மயில் விடப் பாடியது.
குறிப்பு:- சாருவபூமனான புகழேந்தி கதிர்காமத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே வேற்கடவுள் மயில்மேல் எழுந் தருளும் கோலங்கண்டு,மயில் வாயிற் பாம்பைக் கவ்வி நிற்கும் தோற்றத்தை வியந்து பாம்பை விடுமாறு மயிலைப் பணிக்க வேண்டும் என்னும் குறிப்பாக இப் பாட்டைப் பாடினார். விரக வேட்கையால் முழுமதியங் கண்டு வருந்துந் தலைவி பொருட்டுத் தாயர் கூறுந் துறையில் இப்பாட்டு அமைந்துளது. தாயார் நடுவண் இருந்து தலைவி வருந்துதலால், தாயரும் வருந்துமாறு தோன்ற, “தாயரவை” என்றார்.
வெண்பா
இந்து நுதலழ கோரகுரா மாவிவட்குக்
கொந்து முடிமுகிலோ கோவிந்தா - வெந்திறல்சேர்
வேலோ விழியிரண்டும் வேங்கடவா ணாவயி
றாலிலேயோ நாரா யணா. 154
இது வேம்பத்தூரார் சமுத்தி சொல்லப் பாடியது.
குறிப்பு:- வேம்பத்தூர் வேம்பற்றூர் என்பதன் மரூஉ. இது பாண்டி நாட்டி லுள்ளதோரூர். இது சங்க கால முதற்கொண்டே செந்தமிழ்ப் பாவளஞ் சிறந்தது. வேம்பற்றூர்க் குமரனாரும் வேம்பற்றூர் நம்பியும் இதன் பெயர் என்றும் பொன்றாநலம் பெறுவித்தவர். இக் காலத்தும் இவ்வூர் பாவாணர்களின் பாநலத் தால் சிறந்து நிற்கிறது. சாருவபூமனான புகழேந்தி ஒரு கால் வேம்பற்றூர்க்குச் சென்றிருந்த போது அங்கிருந்த சான்றோர் ஒரு வெண்பாவில் ரகுராமா, கோவிந்தா,வேங்கடவா, நாராயணா என்ற சொற்கள் வரப் பாடச்சொன்னாராக, அது குறித்து இப்பாட்டு புகழேந்தியாற் பாடப்பட்டது.
இந்து - திங்கள், நுதல் - நெற்றி,கொத்து - கொந்து எனவந்தது.
மூவேந்தர்
சேரன் வெண்பா
யாவரே காராளர் யாவ ரிணையாவார்
நாவலோ நாவலோ நாவலோ - கோவைப்
பொருப்பா லளித்தார்க்குப் போதுமே யுண்மை
நெருப்பா லளித்தார்க்கு நேர். 155
சோழன் வெண்பா
எல்லை பலகடந்திட் டெங்கும் புகழ்பூத்துத்
தொல்லை மனுக்காக்கத் தோன்றிற்றே - கொல்லை
வழியிலொரு பேய்நின்று வஞ்சனையாற் செய்த
குழியிலெழு செந்தீக் கொழுந்து. 156
பாண்டியன் வெண்பா
பிழைத்தாரோ காராளர் பேய்மகள்சொற் கேட்டுப்
பிழைத்தார்க ளல்லல்பிழை தீர்ந்தார் - பிழைத்தார்
எல்லாருங் காண எரியகத்தே மூழ்கினார்
எல்லாரு மின்று முளர். 157
இவை, பழைய னூரார் பழிதீர்த்த தீக்குழி அவியா தெரிய மூவேந்தரும் வந்து பார்த்துப் பாடியவை.
குறிப்பு:- ஒருகால் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வணிகனொருவன் இளைய மனைவியின் சூழ்ச்சியால் தன் மூத்த மனைவியைக் கொன்றொழித்தான். மூத்தாள் பேய்வடிவுகொண்டு திருவாலங் காட்டில் திரிந்துகொண்டிருக்கையில், ஒருநாள் அவ்வணிகன் பேய் திரியும் வழியிற் சென்றானாக. அந்தப் பேய் பல வஞ்ச மொழி களைச் சொல்லிற்று. அவன் அவற்றை யேலாது பழையனூர் சென்று சேர்ந்தான். பேயும் ஒரு பெண்வடிவுகொண்டு கையில் குழந்தையொன்றைத் தாங்கிக்கொண்டு பழையனூர் வேளாளர் பால் முறையிட்டு, “இவன் என் கணவன்; இஃது இவற்குப் பிறந்த குழந்தை; இவன் தன் இளையாள் பால் கொண்ட வேட்கை மிகுதியால் என்னைக் கைவிட்டுச் செல்கின்றா”னென்றது. சான்றாகத் தன் கைக்குழந்தையை அப்பேய் கீழே விட, அது சென்று வணிகன் மடித்தலத்தை யடைந்தது. இதற்குள் பகற் போது கழியவே இரவு வந்தது. எழுபதின்மர் கூடிய வேளாண வையினர், “இன்றிரவு இவ்வறையில் தங்கியிரு; உன் உயிர்க்கு இறுதி நேரின், நாங்கள் எழுபதின்மரும் தீயிற் பாய்ந்து உயிர்விடு வோம்” என, உடன்படமறுத்த வணிகற்குக் கூறித் தங்குவித்தனர். இரவில் அப்பேய் அவன் உயிரையுண்டொழித்து நீங்கிவிட்டது. விடியலில் வேளாண்மக்கள் வணிகன் இறந்துகிடப்பது கண்டு தாம் கூறிய வண்ணம் தீப்பாய்ந்து உயிர் கொடுத்தனர். இதனை, “வஞ்சம் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டு, அஞ்சும் பழையனூ ராலங்காட்டெம் மடிகளே” எனத் திருஞான சம்பந்தர் திருப்பதிகமும், “மாறுகொடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால் வணிகனு யிரிழப்பதாங்கள், கூறியசொற் பிழையாது துணிந்துசெந்தீக்குழியிலெழு பதுபேரு மூழ்கிக்கங்கை, ஆறணி செஞ் சடைத்திருவா லங்காட்டப்பன் அண்டமுற நிமிர்ந்தாடு மடியின்கீழ் மெய்ப்,பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற் பிரித்தள விட்டி வளவெனப் பேசலாமோ” எனச் சேக்கிழார் புராணமும், “இன்னும் புகழ்நிற்க வோர்பழிக் காமற் றெழுபதின்மர், துன்னுந் தழல்புக் கொளித்ததெல் லாஞ்சுரு திப் பொருளாய், உன்னும் புரிசைத் திருவாலங் காட்டி னுரைபதிக, மன்னுந் தமிழில் வகுத்ததன் றோதொண்டை மண்டலமே” (8) எனத் தொண்டை மண்டல சதகமும் கூறுதல் காண்க.
இவ் வண்ணம் வணிகன் பொருட்டு வேளாளர் எழுபதின் மரும் தீப்பாய்ந்த செய்தி தமிழக முழுதும் காட்டுத் தீப்போல் பரவிற்று. இதனைக் காண்டற்குத் தமிழ்நாட்டு மூவேந்தரும் பழையனூருக்கு வந்தனர். தீக்குழியில் தீ அவியாதிருந்தது அதுகண்ட வேந்தர் மூவரும் தனித்தனியே இப் பாட்டுக்களைப் பாடினர் என்பர்.
கோவைப் பொருப்பால் அளித்தார் - சேரர். உண்மை - மெய்ம்மை. கொல்லை வழி - முல்லை நிலத்துவழி. தீ வீழ்ந்து இறந்தாராயினும், புகழுடம்பு கொண்டு இன்றும் உளராயினர் என்பார், “எல்லாரு மின்றுமுளர்” என்றார்.
சேரன் வெண்பா
தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்குஞ் செந்நெல்
தனைவிளைத்தார் முற்றமது தானாங் - கனைசீர்
முரசுணங்கச் சங்குணங்கு மூரித்தேர்த் தானை
அரசுணங்கு மச்சுதன்முற் றத்து. 158
சோழன் வெண்பா
அரச குலதிலக னச்சுதன்முற் றத்தில்
அரச ரவதரித்த வந்நாள் - முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை
வெட்டிவிடு மோசை மிகும். 159
பாண்டியன் வெண்பா
குறையுளா ரெங்கிரார் கூர்வே லிராமன்
நிறையாறு திங்க ளிருந்தான் - முறைமையால்
ஆலிக்குந் தானை யலங்குதா ரச்சுதன்முன்
வாலிக் கிளையான் வரை. 169
இவை அச்சுதகளப்பாளன் தளையிட்டபோது பாடியவை.
குறிப்பு:- இங்கே குறிக்கப்படும் அச்சுத களப்பாளர் இன்னாரென்றும், இவரால் வென்று தளையிடப்பட்ட மூவேந்தர் களும் இன்னாரென்றும், தளையிடற்கு நேர்ந்த காரணமும் தெரியவில்லை. பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டில் நடுநாட்டில் அச்சுதகளப்பாளரென்பார் காணப்படுகின்றனர். இந் நடுநாட்டுக் களப்பாளர் சித்தாந்த சைவ சந்தான ஆசிரியருள் முதல்வராகிய மெய்கண்டதேவர்க்குத் தந்தையாரு மொருவர். மூவேந்தரையும் தளையிட்டவர் இக் களப்பாளராயின், மூவேந் தராவார் மூவேந்தர் குடிவழிவந்த சிற்றரசராய், கிளியூர் மலைய மான்களையும் தகடூர் அதியமான்களையும் போல இடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவர்களாய் இருந்தவர்கள் எனக் கருதவேண்டும். களப்பாளராவார் வேளாளர். களப்பிரர் வேறு; களப்பாளர் வேறு.
இனி, இங்குக் குறிக்கப்படும் அச்சுதகளப்பாளர் மூவேந் தரையும் வென்று தளை யிட்டுச் சிறையிட்டபோது, அவர்கள் தமிழ்க்குடியில் தோன்றிய தமிழ்த் தோன்றல் களாதலால் முறையே தனித்தனி இவ் வெண்பாக்களைப் பாடினார். அது தானாம் - அந் நெல்லே உணங்கும். மூரித்தேர் - வலிய தேர். வேண்டாத வேந்தரை யொடுக்குதலும் வேண்டினாரை எடுத்தலும் செய்தலில் களப்பாளன் வல்லுநன் என்பது தோன்ற, “அரசுணங்கும் அச்சுதன் முற்றத்து” என்றான். அரசர் அவதரித்த அந்நாள் - அரசராகும் குழவிகள் பிறக்கும் நாளில். அரசர் குடும்பங்களில் குழவி பிறந்தால் சிறைப் பட்டார்க்குச் சிறைவீடு செய்வது மரபு. வாலிக்கிளையான் - சுக்கிரீவன். கார் காலம் கழிந்த பின்பும் சுக்கிரீவன் தானை பண்ணற்குத் தாழ்த்திருந்த செய்தி இங்கே பாண்டியனால் குறிக்கப்படுகிறது. இதனால் இம்மூவேந்தரும் அச்சுத களப்பாளரால் வென்று தளையிடப்பட்டனரெனக் கொள்வதினும், தானை பண்ணிப் போந்து துணைசெய்தற்குத் தவறின குற்றத்துக்காகத் தளையிடப்பட்டனரெனக் கோடல் செவ்விது.
வெண்பா
குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்
கிடவர் வடகடலென் றார்த்தார் - வடகடலர்
தென்கடலென் றார்த்தார்தென் தில்லையச்சு தாநின்றன்
முன்கடைநின் றார்க்கு முரசு. 161
பாண்டியன் இது பாடியபின்பு ஒரு விலங்கு கூடப்போடப் பின்பு பாடியது.
குறிப்பு:- “குறையுளார் எங்கிரார்” என்ற பாட்டைப் பாண்டியன் பாடக்கேட்ட அச்சுதகளப்பாளன் குறையும் முறையும் தேறாமையாகிய குற்றம் தன்பால் உண்டாகப் பாடினானெனப் பாண்டியனை வெகுண்டு மேலுமொரு விலங்கிடப் பணித்தான். பின்பு ஒருகால் அச்சுதகளப்பாளன் பெருமனை முற்றத்தில் முரசதிரக் கேட்ட பாண்டியன் போர் முரசு போலும் என வியந்து இப் பாட்டைப் பாடினான்.
குடகர் - சேரர்; இடவர் - பாண்டியர். “தென்தில்லை யச்சுதா” என்றதனால் இக்களப்பாளன் சோழநாட்டுத் தில்லை நகர்க்கண் இருந்து ஆட்சிசெய்தவனென்பது தெளிவாம்.
சேரமான் கணைக்காலிரும் பொறை
ஆசிரியப்பா
குழவி யிறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே. 162
இது சேரமான் கணைக்காலிரும்பொறை செங்கணானாற் குண வாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு. இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான்.
குறிப்பு:- இவ் விரும்பொறை சான்றோர்களால் கோச்சேரமா னென்றும், சேரமான் என்றும் வழங்கப்படுவன். இதனால் இவன் காலத்தே இவன் மிக்க சிறப்புடைய வேந்தனாகக் கருதப்பட்டா னென்பது தேற்றம். இவனது தலைநகர் தொண்டி யென்பது. இதன்கண் பெரிய கோட்டையொன்று மிருந்தது. தன்னொடு பகைத்துப் போர்செய் தொழிந்த மூவன் என்பவனைக் கொன்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கிக் கோட்டைவாயிற் கதவில் வைத்து இழைத்துக்கொண்டா னெனப் பொய்கையார் கூறியுள்ளார். இவன் காலத்தே சோழநாட்டை யாண்ட செங்கணானுக்கும் இவனுக்கும் யாது காரணத்தாலோ பகைமையுண்டாக, இரு வருக்கும் பெரும்போர் மூண்டது. போர் நிகழ்ந்த விடம் கழுமலம் எனக் களவழியும், குணவாயிற்கோட்டமென இந்நூலும், திருப் போர்ப்புறமெனப் புறநானூறும் (74) கூறுகின்றன இவன் பாசறைக் கண் தங்கியிருக்கையில், இரவில் களிறொன்று மதஞ்செருக்கித் திரிந்து பாசறையோர்க்குத் தீங்கு செய்வதாயிற்று. இச்சேரமான். அதனை யடக்கிச் செருக்கடக்கியாவரும் “திரைதபு கடலின் இனிது கண்படுப்ப”ச் செய்தனன். இப் பெற்றியோன் சோழனொடு செய்த போரில் வலி குறையலானான். படையும் உடைந்து கெட்டது. சேரமான் சோழன் கையகப்பட்டுக் கால்யாப்புற்றுச் சிறையிடப்பெற்றான். சிறைக்கோட்டைக் காவலரை, ஒருநாள் உண்ணும் நீர் கொணருமாறு சேரன் பணித்தான். அவர்கள் அவன் பணியை யவமதித்துச் சில நாழிகை கழித்துக் கொணர்ந்து தந்தனர். அந்த மானக் கேட்டைப் பொறாத சேரமான், “அரசராயினார் குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவை வாள்வாய்ப்பட்டு இறந்தாலன்றி நலமில்லை யாம் எனக்கருதி வாளாற் போழ்ந்து அடக்கம்செய்வர். அக்குடியிற் பிறந்த ஒருவன் சிறைப்பட்டுக் கிடந்து உயிர்நீத்தல் குற்றம். இத்தகைய மறக்குடியினரான என் பெற்றோர், பகைவரிடத்தே உணவிரந் துண்டு உயிர் வாழுமாறு மக்களைப் பெறார்” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடிப் பொய்கையார் என்ற சான்றோர்க்கு விடுத்துவிட்டுத் தான் உயிர்நீத்தான். இந்நூல், சான்றோராகிய பொய்கையார்க்கு இப் பாட்டை விடுத்தானெனவும், அவர் களவழிநாற்பது என்னும் நூலைப் பாட, அதன் பரிசிலாகச் சோழன் செங்கணான் சேரமானைச் சிறைவீடு செய்தான் எனவும் கூறுகிறது.
ஊன்தடி - கரு நிரம்பாத தசைப்பிண்டம். ஞமலி - நாய். கேளல் கேளிர் - பகைவர். உண்ணீரைச் சிறுபதம் என்றது. உணவாய் உண்ணப்படுதல் பற்றி. மதுகை - வலி. வயிற்றுத் தீ - பசிநோய்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரு மாவும்
படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன்றலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. 163
இது, பாண்டியன் நெடுஞ்செழியனைச் சேரனும் சோழனும் சிறியனென் றிகழந்திடப் பொய்கையார் வந்து கூறக் கேட்ட நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினக் காஞ்சி.
குறிப்பு:- இங்கே குறிக்கப்படும் பாண்டியன் நெடுஞ் செழியன் தலையாலங்கான மென்னுமிடத்தே தன்னை எதிர்த்துப் பொருத முடிவேந்தர் இருவரும், வேளிர் ஐவருமாகிய எழுவரை வென்று வாகைசூடிய மாண்புபற்றித் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ எனச் சிறப்பிக்கப் படுவன். இவன் மிக்க இளமைப்போதிலே அரசு கட்டி லேறித்தன் மறமாண்பினால் நெடிது ஆட்சிபுரிந்தவன். இவன் இளையனாக இருப்பதைக் கண்டு, அக்கால முடிவேந்தரான சேர சோழர் இருவரும் “இளையன் இவன்” என இகழ்ந்து போர் உடற்ற வந்தனர். அதனை நேரிற் கண்ட இடைக்குன்றூர் கிழா ரென்ற சான்றோர், இளையனாகிய செழியன் கடும்போருடற்றி நிற்பது கண்டு வியந்து, “வாழ்க அவன்கண்ணி; தார்பூண்டு தாலி களைந் தன்று மிலனே; பால்விட்டு, அயினியும் இன்றயின் றனனே; வயின் வயின், உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை, வியந்தன்று மிழிந்தன்று மிலனே; அவரை, அழுந்தப்பற்றி யகல்விசும் பார்ப் பெழக் கவிழ்ந்து நிலஞ்சேர அட்டதை, மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினுமிலனே” (புறம். 77) என்று பாராட்டியுள்ளார். இது புறநானூற்றிற் காணும் செய்தி. இந்நூல்,சேரசோழர்கள் இவனைச் சிறியனென் றிகழ்ந்த செய்தியை அறிந்து போந்து இவனுக் கறிவித்தவர் பொய்கையாரனெக் கூறுகிறது. இடைக்குன்றூர் கிழாரெனல் வேண்டியது தவறாகப் பொய்கையாரெனக் குறிக்கப் பட்டுளது. ஏனைப் பகைவேந்தர் இருவரும் தன்னை இளையனென இகழ்வதும், தாம் யானையும், தேரு மாவும் மறவரும் உடையமெனச் செருக்குவதும் தன் வலியை யறியாமையா னாகுமென்று கூறுவது நோக்கத்தக்கது.
உடல் சினம் - மாறுபடுதற் கேதுவாகும் சினம். செல்நிழல் காணாது - வேறு புகலிடம் பெறாது. மாங்குடி மருதனார், இப்பாண்டியனை மதுரைக்காஞ்சி யென்னும் பெரும்பாட் டொன்றைப் பாடிச் சிறப்பித்தவர்.
வரைக - நீக்கு. புன்கண் - துன்பம். புரப்போர் - தன்னாற் பாதுகாக்கப்படுபவர். “செழியன் நாட்டை மீக்கூறுவோர் நகுத் தக்கவர்; அவன் இளையன்” எனச் சேரசோழர் இகழ்ந்து கூறியது இவனுக்கு மிக்க வருத்தத்தைச் செய்தமை தோன்ற “உளையக் கூறி” என்றான்.
பாண்டியன்
கட்டளைக் கலித்துறை
மாகுன் றனையபொற் றோளான் வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனளென்று சொல்லீ ரயன்றைச் சடையனுக்கே. 164
இது, பாண்டியன் கழாய்க்கூத்துப் பார்க்குமிடத்தில் பராமுகமாகக், கூத்தாடினவள் கோபித்துக்கொண்டு விழுங்கால் பாடியாது.
குறிப்பு:- கழாய்க்கூத்தாடும் மகளொருத்தி அரசவையோர் காண ஒருகால் கழாய்க்கூத் தாடினள். அரிய கூத்தொன்றை அவள் ஆடுங்கால் பாண்டிவேந்தன் வேறொருத்தியைப் பார்த்துக் கொண்டு இருந்தொழிந்தான் அதுகண்ட கூத்தி வருத்தமுற்றாள். பாண்டியன் தான் பாராதுபோனதற்கு வருந்தாமல் அவளை மறுபடியும் அக்கூத்தையே ஆடச்சொன்னான். மறுமுறையும் ஆடுவளேல் அவள் உயிரிழப்பது உறுதி. அதனை யுணராது வேந்தன் ஆடுமாறு பணிப்பதால் தான் இறப்பது தெளிவாதலை யறிந்தும், அவன் ஆணையை மறுத்தற்கஞ்சியும், அவள் இப்பாட்டைப் பாடிக் கழைக்கூத்து மாடி உயிர்நீத்தாள் எனவும், அக்கூத்து விச்சுளிப்பாச்ச லென்னும் கூத்தெனவும் கூறுவர் இவ்வரலாற்றைத் தொண்டைமண்டல சதகம், “பாகொன்று சொல்லியைப் பார்த்தமை யாலன்று பாண்டியன்முன்,நோகின்ற சிற்றிடை வேழம்பக் கூத்தி நொடிவரையிற், சாகின்ற போது தமிழ்சே ரயன்றைச் சடையன்றன் மேல், மாகுன்றெனச் சொன்ன பாமாலையுந்தொண்டை மண்டலமே” (33) என்று கூறுகின்றது. அயன்றைச் சடைய னென்பான் கூத்தரைப் புரந்த நல்ல வள்ளல். கழைக்கூத்தின் அருமை பெருமைகளை இனிதறிந்தவனாதலின், “அயன்றைச் சடையனுக்குச் சொல்வீர்” என்றாள். அவள் ஆடல் நலத்தைக் காணின்,வேந்தன் அவள்பால் தன் கருத்துத் திரிவனென அஞ்சிப் பாண்டியன் தேவி பாண்டியனை அவள் கூத்தைக் காணாவாறு சூழ்ச்சிசெய்தா ளென்றும், ஒரு முறை விச்சுளிப்பாய்ச்ச லென்னும் கூத்தையாடுபவர், மறுமுறையும் ஆடவேண்டின், ஆறு திங்கள் மூச்சடக்கும் பயிற்சி செய்தல் வேண்டு மென்றும், இன்றேல் இறப்பது உண்மை யென்றும் கூறுவர். “கூத்தாடுகின்றவள் கழைமீதேறி, அதிலிருந்தபடியே பலவித்தைகளைச் செய்து, இருந்தாற் போலத் தன் மூக்கிலிருக்கும் இரத்தின மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு, அது கீழே சற்றுத் தூரம் வந்தவுடனே, தான் விச்சுளி யென்னும் பறவைபோலக் கழைமேலிருந்து கீழே பாய்ந்து, கையிற்றொடாமல் பாய்ச்சலிலேயே அம்மூக்கணியை மூக்கிற் கோத்துக்கொண்டு, கீழே குதிக்காமல் அந்தரத்தில் இருந்தபடியே பின்னும் மேலே பாய்ந்து கழைமே லேறிக்கொள்வது” விச்சுளிப்பாய்ச்ச லென்னும் கூத்து என்பர். அயன்றை யென்பது அயண்டம்பாக்கம் எனவும் வழங்கும். திருக்கச்சூர்க் கல்வெட்டொன்று அயண்டம் பாக்கம் என்று குறிக்கிறது (A.R.No. 45 of 1932 -33) இப்போது அயனம் பாக்க மென்னூமூர் இதுவேபோலும். இப்பாண்டியன் பெயர் தெரிந்திலது. அயன்றைச் சடையனைப் பற்றி வேறு குறிப்பொன்றும் தெரிந்திலது. ஞாயிறு, அம்பத்தூர், ஆவடி, எழுமூர் முதலியன அடங்கிய கோட்டம் புழற்கோட்ட மாகும்.
ஆசிரியப்பா
இரவ லாளரே பெருந்திரு வுறுக
அரவுமிழ் மணியு மலைகட லமுதுஞ்
சிங்கப் பாலுந் திங்கட் குழவியும்
முதிரை வாலுங் குதிரை மருப்பும்
ஆமை மயிரு மன்னத்தின் பேடும்
ஈகென விரப்பினு மில்லென லறியான்
சடையனை யயன்றைத் தலைவனை
உடையது கேண்மி னுறுதியா ராய்ந்தே. 165
இது, பாண்டியன் (கழைக்கூத்தி பாடிய) இந்தக் கவிதை கேட்டுச் சோதிக்கச் சிலரை விடுக்க, அவன் சூலி முதுகிற் சோறிட்ட போது பாடியது.
குறிப்பு:- கழைக்கூத்தி பாடி உயிர்விட்டது கண்டு உண்மை கேட்ட பாண்டியன் அதனைச் சோதிப்பான் சில கழைக்கூத்தரை விட்டான். அவர்கள் உயிரிழப்பின் வரும் பாவம் தீர்வது குறித்துச் சூலியாகிய காளிக்கு முதுகில் குருதிச்சோறிட்டு வழிபாடு செய்தான். அக்காலையில் அவன் இப்பாட்டைப் பாடினன் என்ப. எனவே, கழைக்கூத்தி மாட்டாமை கூறி மறுத்தற் கஞ்சி உயிர் வழங்கியது போல, அவட்குத் தலைவனான அயன்றைச் சடையன் தன்னை யிரவலர் இல்லதொன்று கேட்டு இரப்பின், இல்லெனற் கஞ்சி உயிர் கொடுப்பன் என்பது தெளிந்தா னென்றும், ஆதலால் இரவலர் அவனை உள்ளதொன்று கேட்டு இரந்து பெறுவது அறமென்றும் இதனால் குறிக்கின்றான்.
சிங்கப் பால் - புலியினது பால்; அரிமாவின் பாலுமாம். முதிரை - துவரை. குதிரைமருப்பு - குதிரைக்கொம்பு. அன்னத்தின் பேடு கூறுதலின், அப்பேடு கிடைப்பதும் அரிதென்பதாம். சூலி முதுகில் சோறிடும் செயலை, “அன்று கூலி முதுகன்ன மிட்டவ னெனன்னை கூன்முது கழிக்கிலான்” என ஆறைக் கலம்பகமும், “சூலிமுதுகிற் சுடச்சுடவப் போதுசமை, பாலடிசில் தன்னைப் படைக்குங்கை” (12) எனத் திருக்கை வழக்கமும் குறித்துரைக் கின்றன.
அறுசீர் விருத்தம்
வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரென்
றையன் களந்தைப் புகழேந்தி யாண்டா னுரைத்த வவரோநீர்
எய்யுங் சிலைவேள் வடிவோனே யிராசா திபனே யிரப்போர்கள்
ஐயந் தவிர்த்த பெருமானே யாவோ மடியோ மடியோமே. 166
இது, தொண்டைமண்டலத்து வேளாளரைப் பாண்டியன் பாடப் பின்னிரண்டடி யவர் பாடியது.
குறிப்பு:- புகழேந்தியாண்டா னென்னும் புலவர், செஞ்சிக் கலம்பகத்தில் தலைவனாகிய கொற்றந்தையைப் பாடுமிடத்து, “நையும் படியென் னாங்கொற்ற நங்கோன் செஞ்சி வரைமீதே ஐயம் பெறுநுண் ணிடைமடவாய் அகிலின் றூப முகிலன்று, பெய்யுந் துளியோ? மழையன்று பிரசத் துளியே பிழையாது, வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே” என்று பாடியது கண்டு, அக்காலத்திருந்த பாண்டியன் இன்புற்றிருந்தான். அக்காலத்தே தொண்டைநாட்டுச் சிலர் சென்று அவனைக் கண்டனர். அவர்களை, “வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டார்” என்று களந்தைப் புகழேந்தியாற் பாராட்டப்பட்டவர் நீவிர் போலும்” என்று வியந்தான். அதற்கு ஆம் என்பாராய், “எய்யுஞ் சிலைவேள் வடிவோனே… அடியோம் அடியோமே” என்றனர். களந்தை - களத்தூர். இனி, ஒருகால் செஞ்சியர்கோனான கொற்றந்தை யவையில் கம்பர் தாம் பாடிய ஏரெழுபதால் வேளாளரைச் சிறப்பித்திருப்பதுபற்றிப் பேச்சு நிகழ்கையில், செஞ்சியர்கோன் “வேளாளர் புலவர்பாடும் புகழ்பெறத்தக்க தகுதியுடையரோ?” என்றான். அதுகேட்டங்கிருந்த வேளாளர் அது மெய்யென வற்புறுத்திச் சிவக்கக் காய்ச்சிய நெய்யில் மூழ்கி யெழுந்தும், பழுக்கக்காய்ச்சிய மழுவைக் கையிலேந்தியும் மெய்ப்பித்தனர்; இதனை, “அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண்டது மறைத்தேர், எழுபதுங் கொண்டு புகழ்க்கம்ப நாட னெழுப்பவிசை, முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யில் முழுகிக்கையில், மழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தால்தொண்டை மண்டலமே” (57) என்று கூறுகிறது. செஞ்சியர்கோன் வேளாண்மக்களின் தகுதி யறிந்த தறிந்து வியந்து பாராட்டுவாராய்ப் புகழேந்தியார் செஞ்சிக்கலம் பகத்தில் “நையும்படி” யென தொடங்கும் பாட்டைப் பாடினர் என்பர். இதனைத் தொண்டைமண்டல சதகம், “காரார் களந்தைப் புகழேந்தி சொன்ன கலம்பகத்தி, னேரான நையும் படியென்ற பாடலை நேரியர்கோன், சீராகச் செப்பிய நற்பாடல் கொண்டவன் செஞ்சியர்கோன், மாராபி ராமனங் கொற்றந்தையூர் தொண்டை மண்டலமே” (63) என்றும், பாண்டியன் “வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டா” ரென்பது கேட்டு வியந்த வரலாற்றை, “கேட்டாலு மின்பங் கிடைக்குங்கண் டீர்கொண்ட கீர்த்தி யொடு, பாட்டாலுயர்ந்த புகழேந்தி சொன்ன படியறிந்து, பூட்டார் சிலை மன்னன் வையம் பெறினும்பொய் தானுரைக்க, மாட்டா ரெனச்சொன்ன நாட்டார் திகழ்தொண்டை மண்டலமே” (17) என்றும் கூறுவது காண்க. இங்கே கூறிய செஞ்சி, தொண்டை நாட்டில் மணவிற் கோட்டத்து மணவில்நாட்டுச் செஞ்சி (A.R.No. 159 of 1929 - 30) யெனக் கருதப்படுகிறது. தென்னார்க் காடு மாவட்டத்துச் செஞ்சியெனக் கருதுவோரும் உளர். இச் செஞ்சியர் தலைவர்கள், சோழர்கட்குத் தானைத்தலைவர்களாய் இருந்துள்ளனர். விக்கிரம சோழனுடைய தானைத்தலைவர்களுள், “கடியரணச், செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர் கோன், கம்பக் களியானைக் காடவனும்” (விக். உலா. 80) என ஒட்டக் கூத்தராற் குறிக்கப்படுகிறான். திருப்பரங்குன்றத்துக் கல் வெட் டொன்று (A.R.No. 860 of 1917) செஞ்சி வேந்தர்களைக் குறிக்கிறது.
கட்டளைக் கலித்துறை
உங்கண் மனந்தெரி யும்புல வீரொரு சீர்மரபோன்
திங்கண் மரபினத் திங்களின் கூடச்செம் பூரறமா
துங்கன மரபினிற் கங்கையுஞ் சூடினன் சோதியன்றோ
எங்கண் மரபுண் டெனக்கவி பாடினம் யாமவற்கே. 167
இஃது அறம்வளர்த்த முதலியாரைப் பாண்டியன் கலம்பகம் பாடலாமோ என்ற புலவர்க்குப் பாண்டியன் கூறியது.
குறிப்பு:- இப்பாட்டு ஏடுகளில் பிழை மிக்குக் காணப்படு கிறது. “சீர் மர பெண்” என்றும், “திங்கண் மரபு மத்திங்களின்” என்றும், “கூடற் செம்பூரறமால்” என்றும், “கூடச் செம்பூரணமா” என்றும் பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன. மரபுண்டென என்றவிடத்து “எங்கண் மரபொன்றென” என்றொரு பாடவேறு பாடு முண்டு. அறம்வளர்த்த முதலியாரென்பவர் ஒரு வள்ளல். அவர் செம்பூர் என்னும் ஊரினர்; செம்பூர்க்கோட்டத்தில் உள்ளது செம்பூர். இவரது புகழ் கண்டு வியந்த பாண்டிய னொருவன் இவர்மீது கலம்பகம் பாடத் தலைப்பட்டான். அவன் பாலிருந்த புலவர் கவிராசர்க் குரியது கலம்பகம் பாடுந் தொழில்; அதனைப் புவிராசர் பாடுவது தகுமோ என்றாராக, அவர்க்கு அவன் இப்பாட்டைப் பாடின னென்பர். பாண்டியனைப் பற்றியும் அவன் பாடிய கலம்பகத்தைப்பற்றியும் வேறே வரலாற்றுக் குறிப்பொன்றும் தெரியவில்லை. திங்களைச் சூடுவோன் கங்கை யையும் சூடிக்கொள்வது போலத் திங்கள் மரபினனான பாண்டியன், கங்கை மரபினனான அறம்வளர்த்த முதலியைப் பாடல் தகும் என்பது கருத்து. வேளாளர் கங்கை மரபினர். சந்திரகிரியாண்ட வேந்தர் களுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் அறம்வளர்த்த முதலியா ரென்றோர் அமைச்சர் இருந்தரெனத் தெரிகிறது.
வெண்பா
தொட்டி லிருக்கத் தொடங்கிய நாண்முதலாய்
அட்டதிக்கு நின்குடைக்கீ ழாயிற்றே - விட்டலையா
தன்குமரி யன்றித் தனிக்குமரி கொள்ளாநீ
தென்குமரிக் கேகுவதென் செப்பு. 168
இது பாண்டியன் விட்டல ராசாவைப் பாடியது.
குறிப்பு:- “இந்த விட்டலராசா விசயநகரத்து இராசவமி சத்தைச் சார்ந்தவர். இவர் சதாசிவராயூர் (கி.பி. 1542 -67) காலத்தில் இருந்தவர். தஞ்சாவூர்ச் சில்லாவில் கோவிலடி என்னு மூரிலுள்ள கல்வெட்டும்,தோசூரிகோனேரு கவிசெய்த தெலுங்குப் பாலபாகவதமும் இவரைச் சந்திரவமிசத்தவ ரென்றும், ஆரவீடு புக்கராயரின் பெரும்பேரன் என்றும் கூறுகின்றன. ஆரவீடுபுக்கராயன் மகன் ராமராயன்; ராமராயன் மகன் திம்மராயன்; திம்மராயன் மகன் விட்டலராயன். விட்டலராயன் சகோதரனாகிய சின்ன திம்மராயன் என்பவன் சந்திரகிரியை ஆண்டுகொண்டிருந்ததாகக் கல்வெட்டுக்களால் தெரிகின்றது. “வீரப்பிரதாப ஸ்ரீமகா மண்ட லேஸ்வர ராமராச திம்மராச விட்டலதேவ மகாராசா” என்பது விட்டலராசாவுடைய முழுப்பெயர் திருவிடைமருதூரிலுள்ள கல்வெட்டொன்று, சக வருஷம் 1466-ல் (கி.பி.1544 -45) வெட்டப்பட்டது. இவர் அனந்தசயனத்துக்கு (திருவாங்கூருக்கு)ப் படையெடுத்துச் சென்றதாயும் இவருடைய சேனை தெற்கிலுள்ள அனந்தசயனந் தொடுத்து வடக்கில் ( நைசாம் தேயத்தில்) உள்ள முதுகல் வரைக்கும் சண்டைசெய்து ஊர்களைப் பிடித்ததாயும், இவர் திருவிடைமருதூர்ச் சிற்றம்பலத்தான் என்பவன் வேண்டு கோளின்படி திருவிடைமருதூர்ச் சிவன்கோயிலுக்குரிய ஆவணம், சிற்றாடி என்னும் இரண்டு கிராமங்கள், மறுபேர் கைப்பட்டிருந்த வற்றை விசாரணை செய்து அவற்றின் எல்லைக்கல்லில் மருதப் பேசுரர் முத்திரையிட்டிருந்தமை கண்டு சிவன்கோயிலுக்குச் சேர்த்ததாயும் கூறுகின்றது. இன்னு மிவர் கன்னியாகுமரி வரைக்கும் சென்றதற்குச் சான்றாகக் கன்னியாகுமரிக்குச் சமீபத்திலுள்ள சுசீந்திரத்தில் ஒரு கல்வெட்டு, கொல்லமாண்டு 722-ல் (கி.பி.1546- 47) வெட்டியது, அங்குள்ள விஷ்ணுகோயிலில் இவர் பிறந்த நாளில் அர்ச்சனை செய்வதற்காகச் சயதுங்க நாட்டுப் பூதலவீர இராமவன்மா என்னும் கேரளவரசன் பொருள் வைத்ததைக் கூறுகின்றது. இவர் திருச்சிராப்பள்ளிச் சீமையை ஆண்டவர். ராபர்ட் சிவெல் என்பவர் எழுதிய புராதன பட்டி கையால் இவர் மதுரையில் கி.பி. 1547-48ல் அரசாண்டதாகவும் தெரிகிறது. “விட்டு, விட்டி,விட்டல என்னும் கன்னடச்சொற்கள் விஷ்ணு என்னும் சமக்கிருத பதத்தின் திரிபு. விஷ்ணு என்னும் வடமொழி தமிழிற் போலக் கன்னடத்திலும் விட்டு என்று திரியும்” - என்று திரு. தி.த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் குறிப்பது அறியத்தக்கது. விட்டலராயன் தென்குமரிக்குச் செல்வது கண்டு, பாண்டியன் இப்பாட்டைப் பாடியுள்ளான். விட்டல் ஐயா - விட்டல் என்னும் பெருயடைய ஐயனே. பிறன்மனை நயவாத பேராண்மையுடையான் விட்டல்ராயன் என்பான், “தன் குமரி யன்றித் தனிக்குமரி கொள்ளா நீ” என்றான்.
பாண்டியன் தேவி
விருத்தம்
என்னையவ ரறமறந்தும் யானவரை
மிகநினைந்திங் கிருந்து வாட
முன்னைவினைப் பயன்றானோ வப்பிறப்பிற்
செய்ததவ முடிந்த வாறோ
கன்னன்மத னபிராமன் வரதுங்க
ராமனியற் காசி நாட்டில்
அன்னவயற் குருகினங்கா ளினியெவ்வா
றுயிர் தரித்திங் காற்று மாறே. 169
செப்பாரு முகிழ்முலையா ரெல்லாருங்
கணவருடன் சேர்ந்து வாழ
ஒப்பாரு மில்லாவென் கணவனுடன்
யான்கூடி யுறவா டாமல்
வெப்பாலு மிகுகாமத் துயராலு
நாடோறு மெலிந்து வாடி
இப்பாடு படவென்றோ விறையவனென்
றலையோட்டி லெழுதி னானே. 170
வேறு
எண்டிசா முகமுந் திங்க
ளிளநிலா வெள்ளங் காயக்
கொண்டமால் பெருகுந்தோறுங்
கொழுங்கணீர் முலையிற் கோப்பப்
பண்டுநா மறியாக் காமத்
துயரினாற் படுவ தெல்லாம்
வண்டுகா ளுரையீ ருங்கள்
வரதுங்க ராம னுக்கே. 171
இவை பணியாரக்குடத்துள் மதுரைக்குப் பாண்டியன் தேவி விடுத்த கவி.
குறிப்பு:- இம்மூன்று பாட்டுக்களும் வரதுங்கராம பாண்டியன் மதுரைக்குச் சென்றிருந்தபோது தென்காசியில் இருந்து அவன் மனைவி யெழுதி விடுத்த பாட்டுக்களாகும். இவற்றை அவள் பணியாரக் குடத்திலிட்டு விடுத்த வரலாறு விளங்கவில்லை. வரதுங்கன் அரசியல்வினை குறித்து மதுரையில் பன்னாள் தங்கி விட்டானாக, அவன் பிரிவாற்றாத தேவி தன் வேட்கை மிகுதியை வெளிப்பட எழுதித் தெரிவிப்பதற் கஞ்சி இவ்வாறு செய்தனளென்று கோடல் நேரிது. புதுக்கோட்டை செப்பேட்டில் காணப்படும் தலைவர்களுள் வரதுங்கனும் ஒருவனாகக் காணப்படினும், அவன் நெடிது பிரிந்திருந்ததற்குக் காரணமும் தெளிவாகத் தெரிந்திலது. இந்த வரதுங்கனை அதி வீரராமபாண்டியனுக்கு இளைய தம்பி யென்பது பெருவழக்கு. புதுக்கோட்டைச் செப்பேட்டால், அதிவீரராமன் திருநெல்வேலிப் பெருமாளான சாலிவாடிபதியின் மகன் என்றும், வரதுங்கன், பராக்கிரமனான குலசேகர பாண்டியன் மகன் என்றும், குலசேகரனும் திருநெல்வேலிப் பெருமாளும் உடன்பிறந்தவர்களாதலால் வரதுங்கனுக்கு அதிவீரராமன் சிற்றப்பன் மகனென்று அறிகின்றோம். (AR. 1906 Para .29) அதிவீரராமன், நைடதமும், காசி காண்டமும் நறுந்தொகையும், இலிங்க புராணமும், கூர்ம புராணமும் எழுதின னெனவும், வரதுங்கன் பிரமோத்தர காண்டமும் கருவை யந்தாதிகளும் பாடின னெனவும் கூறுவர். அதிவீரராமன் கொற்கையிலும் வரதுங்கன் கரிவலம்நல்லூரிலும் இருந்தன ரென்பர்.
காசிநாடென்பது தென்காசியைச் சூழ்ந்த நாடு; இதனைத் தென்னாரி நாட்டுச் சித்திரா நதி வடகரைத் தென்காசி (A.R.No. 502 of 1917) என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தென்காசி, திருக்குற்றாலம் முதலிய இடங்களிற் காணப்படும் கல்வெட்டுக்களில் வரதுங்கன், அதிவீரராமன் என்ற இருவடைய குறிப்புக்கள் (A.R.No. 482, 574 of 1917) காணப்படுகின்றன. மால் - காமமயக்கம்.
சத்திமுற்றப் புலவன்
நாராய் நாராய் செங்கா னாராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கா னாராய்
நீயுநின் பெடையுந்
தென்றிசைக் குமரி யாடி வடதிசைக்
காவிரி யாட வேகுவி ராயின்
சக்தி முற்றத்து வாவியிற் சென்று
நனைசுவர்க் கூரை யரிகுரற் பல்லி
வரவுபார்த் திருக்கு மனைவியைக் கண்டெங்
கோமான் வழுதி கூடன் மன்றத்(து)
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலுறத் தழீஇ
அலகுதிறந் தன்ன பல்லின னாகிப்
பேழைசெய் பாம்பென வுயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டன மென்மே. 172
இது, சத்திமுற்றத்தில் ஒரு புலவன் பாண்டியன் மதுரைக்குப் போகப் பாண்டியன் வாசற்புலவர் வாசல் விடாமல் மறிக்க, ஊரில் அம்பலத்திற் கிடந்தான் பாடியது. இதனை யரசன் நகரசோதனை வருவான் கேட்டு மறுநாள் வரிசைபண்ணி, வீடும் ஆள்விட்டுக் கட்டுவித்துப் பின்பு அனுப்பினான்.
குறிப்பு :- சத்திமுற்ற மென்பது தஞ்சைமா நாட்டிலுள்ள பட்டீச்சுரத்தின் ஒருபகுதியாகும். இதனை இராசராசபுரமென்றும் கல்வெட்டுக்கள் (A.R.No. 266 of 1927) கூறுகின்றன. இச் சத்திமுற்றத்தைக் குலோத்துங்க சோழ வளநாட்டுத் திரு நறையூர் நாட்டுத் திருச்சத்திமுற்ற மென்பதும் (A.R.No. 262 of 1927) வழக்கு. இங்கு வாழ்ந்த புலவரொருவர் பாண்டிவேந்தன் புலவரைப் புரக்கும் புரவலனாய் விளங்குதலறிந்து, ஒருகால் அவனது மதுரைநகர்க்குச் சென்றாராக, அங்கிருந்த புலவர் அவர்பால் அழுக்காறுகொண்டு, பாண்டிவேந்தனைக் காண வியலாதவாறு வாயில்காவலற்குச் சொல்லி இடையூறு விளைத்து விட்டனர். அதனால் சத்திமுற்றத்துப் புலவர், வருத்தமும் வறுமை மிகுதியால் மிக்க களைப்பும் கொண்டு, மதுரைநகர் மன்றத்தே கிடந்தார். ஒருநாள் பாண்டி வேந்தன் அவ்வழியே நகரசோதனை செய்து வந்தான். அவன் மனத்தே நாரையின் வாயலகைச் சொல்லோவியஞ் செய்தற்கு வேண்டும் உவமை காணமாட்டாத கலக்கம் குடிபுகுந் திருந்தது. அப்போது மன்றத்திற் கிடந்த புலவர் வானத்தே பறந்து சென்றுகொண்டிருந்த நாரைக் கூட்டத்தைக் கண்டு, அவற்றிற்குத் தூதுரைப்பார் போல், தமது இரங்கத் தக்கநிலையைச் சோழநாட்டுச் சத்திமுற்றத்தில் வறுமையுற்று வாடிப் பிரிவுத்துயரால் மெலிவுற் றிருக்கும் தம்முடைய மனைவிக் குரைக்குமாறு வேண்டும் கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினர். இதனைக் கேட்ட பாண்டியன் வழிபடுதெய்வத்தை நேறிக்கண்டாற்போல் பேரன் புடையனாய்ப் புலவரைக் கண்டு அளவளாவி, வேண்டும் சிறப்பினை நல்கிச் சின்னாள் தன்பால் இனி திருக்கப் பணித்தான். இதற்கிடையே தன் ஆட்கள் சிலரைச் சத்திமுற்றத்துக்கு விடுத்து, புலவர் வீட்டையும் செவ்வையுறக் கட்டுவித்தான். பின்பு புலவர் பாண்டிவேந்தன் தந்த வரிசையும் பரிசும் பெற்றுத் தம் சத்திமுற்றம் சென்று சேர்ந்தார். இவ்வரலாற்றைச் சோழமண்டல முடையார், “நினையுங் கழற்காற் சிலம்பலம்ப நின்ற பெருமா னிலைநாடிப், பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் நாரையென்றே, புனையு முதனூற் சத்திமுற்றப் புலவன்முது பொசிந்தூர, வனையு மதுரத் தமிழ்வாடை மணக்குஞ் சோழ மண்டலமே” (63) என்று குறித்துள்ளார். கனைகுரற் பல்லி யென்றும், பாடுபார்த்திருக்கும் மனைவியை யென்றும் பாட வேறுபா டுண்டு.
சத்திமுற்றம் காவிரியின் தென்கரையில் உள்ளதாகலின், “காவிரியாட வேகுவிராயின்” என்றும், புலவர் வீடு வாவிக் கரையி லுள்ளதாகலின், “வாவியிற் சென்று” என்றும் குறித்தார். வாவி - திருக்குளம். ஏழையாளனை - ஏழையாகிய என்னை.
சோழன் புலவன்
வெண்பா
மான பரனபயன் வந்தா னெனவழுதி
போனவழி யாரேனும் போவரோ - ஆனால்
படவே யமையாதோ பாவியே னிந்தக்
குடைவே லுடைநுழைந்த தோ. 173
இது, பாண்டியன் போரிற் புறந்தந் தோடுவது கண்டு சோழன் புலவன் கூறியது.
குறிப்பு:- இடைக்காலத்தில் வாழ்ந்த சோழபாண்டிய ரிடையே அடிக்கடி போர் நிகழ்வது வழக்கம். ஒருகால் ஒரு சோழனுக்கும் பாண்டியனுக்கும் போருண்டாயிற்று. அப்போரில் சோழன் செய்த போர்க்கு ஆற்றாது பாண்டியன் தோற்றோடலானான். அவன் உடைந்தோடிய நிலப்பகுதி உடைவேலமரங்கள் நிறைந்த பகுதியாகும். இச்செய்தியைச் சோழவேந்தன் அவைக்களத்திருந்த புலவனொருவன் கேட்டு இப்பாட்டைப் பாடினானென்பர்.
மானபரன் - மானத்தால் மேம்பட்டவன். வந்தான் - பொருதற்குச் சினங்கொண்டு வந்தான். படவே அமையாதோ - பகைவர்க்குப் புறந்தந்தோடுவது மானமுடைய வேந்தர்க்கு இழிவாதலின் அவர்க்கு அது நேருமாயின் உயிர்விடுவதே முறை; அதனைச் செய்தலாகாதோ. புறங்கொடுத்தலின் உயிர்விடுவது செயத்தக்க தென்பதாம். குடைவேல் உடை - குடைபோற் கவிந்து விரிந்திருக்கும் வேலமரமாகிய உடைவேலமரம்; இவற்றை இப்போதும் தென்பாண்டிநாட்டில் மிகுதியாகக் காணலாம். இடை நுழைந்த கோ என்றும் பாடவேறுபாடுண்டு. பாவி இந்தக் குடை வேலுடை நுழைந்தது ஏனோ என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டி முடிக்க. பாண்டியனைப் பாவி யென்றது தோற்று உயிர்க்கிரங்கி யோடிய இழிவு குறித்து.
வெண்பா
இலங்கிலைவேற் கிள்ளி யெதிர்மலைந்த வந்நாட்
பொலங்கலனும் பொன்முடியும் சிந்த- நிலங்குலுங்க
ஓடினார் மேலோ வுயர்தரள வெண்குடையாய்
பாடினார் மேலோ பழி. 174
இது வசைபாடிய புலவன், மதுரையிற் பாண்டியன் கண்டு முனியப் பின்னுங் கூறியது.
குறிப்பு:- பாண்டியன் புறந்தந்தோடக் கண்டு பழித்துப் பாடிய சோழவேந்தனுடைய புலவன் பின்பொருகால் மதுரைக்குச் சென்றானாக, அங்கே யிருந்தோர் அவனைப் பற்றிக்கொண்டு சென்று பாண்டியன் முன்னே நிறுத்தினர். அவனைக் கண்ட பாண்டியனுக்கு அவன்மேல் மிக்க சீற்றமுண்டாயிற்று. பரிசிற்குப் பாடும் பாவலனாகிய அவனைக் கொல்வதோ சிறையிடுவதோ அரசுமுறை யன்றாதலின், வெகுண்ட சொற்கள் பல விளம்பினான். அவன் வெகுளிக்குத் துணுக் குறாத அப்பாவலன் இப்பாட்டைப் பாடினான் என்பர்.
இலங்கிலைவேல் கிள்ளி - விளங்குகின்ற இலைபோலும் வடிவத்தையுடைய வேலை யேந்திய சோழன். பொலங்கலன் - பொன்னாபரணம். தரளம் - முத்து. தோற்றோடினவர்மேல் பழிநிற்குமே யன்றி யதனைப் பாடினவர்மேல் பழி யில்லையாம் என்பதாம்.
வெண்பா
பாண்டியரிற் பாண்டியரிற் பாழான பாண்டியரில்
ஈண்டிரென விட்ட வெழுத்தல்ல - பூண்டதிருப்
போகவென்றும் வேற்றூர் புகுதவென்றும் நீயிவண்விட்
டேகவென்று மிட்ட வெழுத்து. 175
இது கம்பனைக் கொன்றானென்று பழி கூறுதலின் பாண்டியனிடத்திற் சோழன் விட்ட புலவன் முடிசூட்டுமங்கல நாளிற் பாடிய வசை. இது கேட்டு நன்றாகவே பொருள் கூறவும் பரிசில் கொடுக்க மறுத்தான், நீ வந்த காரியம் வேண்டின் சோழன்பாற் போக வென்றனன்.
குறிப்பு:- கம்பனைச் சோழன் கொன்றா னென்றே செய்தி தமிழ்நாட்டிற் பரவியபோது தென்பாண்டிநாட்டுப் பாண்டி வேந்தன் சோழனைப் பழித்துரைத்தான். அதனைக் கேட்ட சோழன் செயலின்றி யிருந்தொழிந்தான். இருக்கையில், பாண்டி வேந்தனுக்கு முடிசூட்டுமங்கலநாள்விழா நிகழ்வதாயிற்று. அப்போது சோழன் அரசர் மரபின்படி தன் அவைக்களப் புலவனைப் பாண்டியன் அவைக்குச் செல்லவிடுத்தான். சென்றவன் பாண்டியன் பழித்த பழிக்கு எதிராக இப்பாட்டைப் பாடினான். இதனைக் கேட்ட பாண்டியன் சீற்றங்கெண்டு புலவன் அவன் மகிழுமாறு இனிய புகழாகவே பொருள் கூறவும் ஏலாது, அப்புல வனுக்குப் பரிசில் நல்காது சோழவேந்தனிடமே சென்று சேருமாறு பணித்தான். புலவன் நாணி வருந்தி இப்பாட்டைப் பாடினான் என்பர். ஈண்டிர் - வருவீர்களாக. விட்ட எழுத்து - விடுத்த திருமுகம்.
பாண்டியன் புலவன்
வெண்பா
ஆறெல்லாஞ் செந்நீ ரருகெல்லாம் பல்பிணங்கள்
தூறெல்லாஞ் சோழன் சுரிகுஞ்சி - மாறில்லாக்
கன்னிக்கோ னேவமுடிக் காரிக்கோன் பின்றொடரப்
பொன்னிக்கோன் போன புகார். 176
சோழன் புறக்கொடையிற் பாண்டியன் புலவன் கூறியது.
குறிப்பு:- ஒருகால் பாண்டிவேந்தனுக்கும் சோழவேந் தனுக்கும் போருண்டா யிற்று. இவ் வேந்தர்கள் பெயரும் காலமும் தெரிந்திலவாயினும், இப்பாட்டால், இவர்கள் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேந்தர்க ளாகலாமெனக் கருதப் படுகின்றனர். காரிக்கோன் என்பவன் சோழநாட்டின் மேற்கே காவிரியின் வடகரைப்பகுதியில் காரியாறு பாயும் நாட்டில் வாழ்ந்த சிற்றரசன். இப்போரில் பாண்டிவேந்தன் தன் படையைச் சோழவேந்தன்மேற் செலுத்திய காலை, சோழ வேந்தன் தோற்றோடினான்; அவற்குத் துணையாய் வந்த காரிக்கோனும் அவனைப் பின்றொடர்ந்து ஓடினான். காரிக்கோனை, பாண்டிய னுடைய படைத்தலைவனாகக் கருதுபவரும், கிளியூர் மலைய மான்களில் ஒருவனாகக் கருதுபவரும் உண்டு.
செந்நீர் - குருதி. சுரிகுஞ்சி - சுருண்ட தலைமயிர். மாறு இல்லா - மாறுபடும் பகைவர் இல்லையாகப் பொருது வென்றி மேம்பட்ட. கன்னிக்கோன் - கன்னி நாடாகிய பாண்டி நாட்டு வேந்தன்.
ஒரு தாதி
.
வெண்பா
முன்னா ளிருவர் முயங்கும் படிகண்டு
மன்னா பனிதவிர்த்து வாழ்வித்தாய் - துன்னார்தஞ்
சேனைகண் டாலிக்குஞ் செம்பியர்கோ னின்செங்கண்
டானைகண் டார்தா மவர். 177
ஒரு தாதியை ஒரு புலவனுக்களிப்ப அவன் ஊடலிற் சொல்லியது
குறிப்பு:- ஒரு புலவனுக்கு ஒருகால் சோழவேந்த னொருவன் பரிசில் தருங்கால் தனக்குரிய தாதியருள் ஒருத்தியையும் பரிசிலாக நல்கினான். அப்போது அத்தாதி தன்னைப் புலவற்குப் பரிசிலாகத் தருதற்கு ஊடி இப்பாட்டைப் பாடினாள். பரிசிலாகும் நாட்கு முன்னாளில் அத்தாதி தான் வேந்தற்குரியளாக இருந்தும் வேறே இருவரைக் கூடினாள். அதனை வேந்தன் கண்டுவிட்டானாயினும், அது பொருட்பெண்டிரின் இயல்பென்று கருதி, அவளை ஒறுக் காமல் அருளினான். தன் குற்ற முணர்ந்து வேந்தன் வெகுளிக்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அவளும் “உய்ந்தேன் வாழ்ந்தேன்” எனத் தேறியிருந்தாள். பரிசிலாதற்கு ஊடி, “வேந்தே முன்னாள் என் பிழை பொறுத்து வாழ்வித்தாய்; இன்று என்னைப் பரிசிலாக நல்குகின்றாய்; இவ்வாறு அருள் வழங்கும் நின் செங்கட் பாவை யாகிய படைமுன்நின்ற பகைவரும் இவ்வாறு அருளப்படுவது ஒருதலை; அற்றாக, நீ வென்றி பெறுவது எவ்வாறு?” என்பாளாய், “நின் செங்கண் தானை கண்டார்தம் அவர்,” என்றாள். செங்கண் விழித்தானை யென்றும், எவர் என்றும் பாட வேறுபாடுண்டு. அவர் என்பது அப்பெற்றிய ரென்பது படநின்றது. தாமும் என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது.
தாதியர், வேந்தர் மனையிலும் செல்வர் மனையிலும் மகளிர்க் கொப்பனை செய்தல் முதலிய தொழில் புரிவதும் செல்வக் காளை கட்குக் காமக் கருவியாதலுமகிய பணிசெய்யும் பெண்டிர்.
சோழனும் தேவியும்
விருத்தம்
காடுமீ னம்படக் கண்டநங் கண்டன்வேற்
கோடுமே யுந்துறைத் தொண்டியிக் கோனகர்
தேடுநீ டுங்கொடி தெரியநா முய்யவந்
தாடுமே பாடுமே யன்னமே யின்னமே. 178
இது சோழன் தேவி பாடியது.
குறிப்பு :- ஈண்டுக் குறிக்கப்படும் சோழனைக் கண்டன் என்று கூறுவதால், இதனைத் தனக்குச் சிறப்புப் பெயராகக் கொண்ட இரண்டாம் இராசராச சோழனெனவும் இவனைத் தெளியலாம். “கண்டனென்றது சிறப்புப்பெயர். இதனை இயற் பெயரென்று மயங்கா தொழிக; இரசா ராசனென்பது இயற்பெயர்” (தக்க. 549. உரை) எனத் தக்கயாகப்பரணி யுரைகாரர் கூறுவது காண்க. இப்பாட்டைப் பாடியவள் இவன் தேவியருள் ஒருத்தி. விக்கிரம சோழனையே “தொண்டிக்கோன்” (விக்க. உலா. 254) என்பதனால், இவன் காலத்தும் தொண்டிநகர் சோழர்க் குரிய தாகவே யிருந்திருக்கின்றது. தன்னை யெதிர்த்த பாண்டியர்களை வென்று அவர்கள் காடுகளிற் படர்ந்தோடுமாறு செய்த இவனுடைய முன்னோரான சோழர் செயலை இவன்மேலேற்றி, “காடுமீனம் படக் கண்ட நம் கண்டன்” என்றாள். மீனம் - மீனக்கொடியுடைய பாண்டியர்.கோடு - சங்கு. தொண்டி இந்நாளில் மணமேற்குடிக் கருகில் இருப்பதும். பண்டைநாளில் யவனர்களால் பெருந் துறைமுகப்பட்டினமாகக் குறிக்கப்படுவதுமாகிய கடற்கரைப் பேரூர். தேடு நீடுங்கொடி - வானுலகு தேடி நீண்டு உயர்நதிருக்கும் புலிக்கொடி. தெரிய - நம் கண்முன்னே தெரியுமாறு.
இராசராசனைப் பிரிந்து தொண்டிநகர்க்கண் உறைந்த அவன் தேவியருள் ஒருத்தி, அவன் பிரிவாற்றாது மெலிந்திருப்பவள், சோழனுடைய புலிக்கொடி சேணிற் பொலிந்து தோன்றக் கண்டு ஆற்றாது கையற்றுப்பாடுவது இப்பாட்டு. இதனாற் பயன். சோழன் கேட்டு விரைந்து வந்து கூடுவானாவது. பாடும் - பாடுவேம்.
விருத்தம்
மலையினுங் கானினும் போயினார் வருவரே
முலையின்மேற் பசலைபோய் முதனிறங் கொள்ளுமே
துலையிலங் கியதொடைச் சோமன்வாழ் புவனையில்
தலையிலங் கியதடத் தன்னமே யின்னமே. 179
இது சோழன் பாடியது.
குறிப்பு :- மேலே தேவி பாடிய பாட்டைச் சோழன் திரிபுவனை யென்னும் ஊரிலிருந்து கண்டான். தான் வினைமேற் கொண்டு மலையிடையிட்டும் காடிடையிட்டும் பிரிந்துவர நேர்ந்திருப்பினும் குறித்த காலத்தில் வந்து கூடுதல் தப்பாதென் பானாய், “மலையினும் கானினும் போயினார் வருவரே” யென்றும், கூடுங்கால், மேனியிற் பரந்திருக்கும் பசலை கெடுமென்றும், மாவின் தளிர் போலும் மெய்ந்நிறம் வந்து பரத்தல் ஒருதலை யென்றற்கு, “பசலை போய் முதல் நிறங் கொள்ளுமே” என்றும், இப்பாட்டால் ஆறுதல் கூறினான். இருமருங்கும் ஒப்பத் தொடுக்கப் பட்ட மாலையை, “துலையிலங்கிய தொடை” யென்றான். சோமன் என்பவன் திரிபுவனத்தில் வாழ்ந்த வள்ளல். அவனை ஒட்டக் கூத்தர், “துன்னுபுகழ்ச் சோமா திரிபுவனைத் தோன்றலே” (த.நா.ச. 133) என்றும், “கொடையென்றால் முந்துஞ் சோமா புவனை முன்னவனே” (த. நா. ச. 134) என்றும், புகழ்ந்து சிறப்பித்துள்ளார். இவன் சோழவேந்தர்க்கு உயரிய துணைவன். திரிபுவனத்தில் வாழ்ந்த செல்வன். அதனால் சோழன் திரிபுவனத்தைக் குறிக்கப்புகுந்து சிறந்தமை பற்றிச் சோமனை விதந்து “துலையிலங்கிய தொடைச் சோமன், வாழ்புவனை” என்றான். இது பிரிவிடை யாற்றாத தலைவியைத் தோழி வற்புறுத்த லென்னும் துறை.
வெண்பா
கானொந்தேன் வந்தேன் கடுக வழிநடந்தேன்
யான்வந்த தூர மெளிதல்ல - கூனன்
கருந்தேனுக் கங்காந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே யிடம்? 180
குறிப்பு:- இதனைப் பாடினார் இன்னாரென் றறிதல் இயலவில்லை. இது சிந்தா சமுத்தி வெண்பா வெனவும் சில ஏடுகளில் உள்ளது. இதனை ஒளவையார் பாடினாரெனவும் கூறுவர். “இது கேட்டுச் சோழன் மடியில் வைத்தான்” என்றொரு குறிப்புக் காணப்படுகிறது. ஒருகால் ஒரு புலவர், சோழன்பால் பேரன்புடையராய் அவனைக் காண்டற்கு வந்தார். அக்காலத்தே அரசன் சுற்றம் சூழ வீற்றிருந்தான். வந்த புலவர் இருத்தற்கு அங்கே இடமில்லை. அதனால் அவர், தம் புலமை நலம் தோன்ற இப்பாட்டைப் பாடினாராக, தமிழின்பத்தில் தடையிலா அன்புடைய வேந்தன் அவரைத் தம் அருகழைத்துத் தன் மடித்தலத்தில் இருத்திக்கொண்டான் என்பது நிகழ்ச்சி. கூனன் என்றது ஈண்டு முடவன் என்னும் குறிப்பிற்று. பெறற்கரி தாயினும், அதன் அருமை நினையாது தேன்பெற விரும்புவன் என்றது, அவரவர் வேட்கையறிந்து வேண்டுவன நல்கும் மேம்பாடு சோழன்பால் உளதென்பது விளக்கிநின்றது. கருந்தேன் - மிக்க தேன்.
குருநமச்சிவாயர்
வெண்பா
அத்தி முதலெறும்பீ றானவுயி ரத்தனைக்கும்
சித்த மகிழ்ந்தளிக்குந் தேசிகா - மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
எரிக்குதையா காரோண ரே. 181
இது குருநமச்சிவாயர் பாடியது.
குறிப்பு :- குருநமச்சிவாயர் திருவண்ணாமலைக் குகை நமச்சிவாயருடைய மாணவர். குருநமச்சிவாயர் சிதம்பரத்தில் இருந்து திருப்பணி பல செய்துள்ளார்.சிதம்பர வெண்பா, திருவண்ணாமலை வெண்பா முதலிய பல நூல்களைச் செய்த தோடு பல மாணவர்கட்கு ஞானமும் அருளினவர். இவருடைய மாணவருள் ஆனந்த நமச்சிவாய ரென்பவர் விரிஞ்சிபுரத்தில் மடம் ஒன்று கட்டுதற்காகப் புன்னாற்றூர் பெரிய ஏரம நாயக்க ரென்பவர் நிலம் கொடுத்த செய்தி விரிஞ்சிபுரத்துக் கல்வெட் டொன்றால் தெரிகிறது. (S.I.I.Vol. i No. 58). இதன் காலம் சகம் 1514; கி.பி. 1592ஆகும். (Vide also A.R.No. 61 of 1887). இக் கல்வெட்டு, ஆனந்த நமச்சிவாயரை, “சிதம்பரம் குருநமச்சிவாய மூர்த்தி யடியார் ஆனந்த நமச்சிவாய பண்டாரமவர்களுக்கு” என்று குறிப்பதால், குருநமச்சிவாயர் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவரென்பது தெளிவாம் காஞ்சி, குடந்தை, நாகை என்ற மூன்று ஊர்களிலுமுள்ள சிவன்கோயில் கட்குக் காரோண மென்பது பெயர். காரோணரே எனப் பொதுப்படக் கூறுதலின், இப்பாட்டு மேலே கூறிய மூன்றிடங்களுள் எதனைச் சிறப்பாகக் குறிக்கிறதென்பது விளங்கவில்லை. நாகைபோலக் காஞ்சியும் குடந்தையும் பயில வழங்காமையின், ஈண்டைக் காரோணமென்றது நாகைக் காரோணத்தையெனக் கொள்ளின், இழுக்காகாதென்க. இனிக் காரோணமென்பது, காயாவரோகணம் என்ற வடசொற்றொடரின் சிதைவென்றும், செம்பொருளாகிய சிவன் மக்களுடம்பில் இறங்கி மக்கள்போலத் தோன்றுமிடம் என்பது இதன் பொருளென்றும், லகுளீசாவதாரம் இதனாலாவ தென்றும் வடமொழி இலிங்கபுராணம் கூறுகிற தென்பர். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவ பரம்பொருட்குப் பிறப்பிறப் புக்களுண்டென்றும், கந்துடை நிலையாகிய சிவக்குறியை ஆண்பெண் குறியென்றும் பொய்புனைந்த வடமொழிப் புராணக் கூற்றை நெடுநாட்கு முன்பே தமிழறிஞர் மறுத்தொதுக்குவாராய், காரோணமென்பது, காயாரோகணமென்பதன் சிதைவென்று காட்டி, அரி யயன் முதலிய தேவருள்ளிட்ட அனைவரும் ஒடுங்குங் காலத்து, அவர்தம் காயத்தைத் தம் திருமேனியிற் றாங்கிவருதலின் சிவபெருமான் காயாரோகணரெனப் பட்டாரெனச் சிவஞான முனிவர் முதலாயினார் தெருட்டியுள்ளனர். இக்கருத்தே தோன்ற நம்பியாரூரரும் நாகைக் காரோணத் திருப்பதிகத்தில் சிவனை, “செந்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்” என்று குறித் தருளியது ஈண்டு நினைவுகூரத் தக்கது. அத்தி -யானை.
குருநமச்சிவாயர் ஒருகால் மிகப்பசித்து உணவின்மையால் வருந்தி இப்பாட்டினைப் பாடினாராக, “காரோணர் அமுது கொடுத்தார்” என்றொரு குறிப்பு இப்பாட்டின் இறுதியில் ஏடுகளிற் காணப்படுகிறது. “இலாட தேசத்திலே காரோகணம் என்றோரூருள” தென்றும், “அங்கே சிவன் லகுலீசபட்டாரகராக அவதரித்தா ரென்றும் சிலாசாசனம் கூறு” மென்றும் கூறுவர். அவதரிக்குஞ் செயல் சிவனுக்கு என்றும் எங்கும் இல்லை யென்பது குருநமச்சி வாயருடைய ஆசிரியரான குகைநமச்சிவாயர், “சோணேசர் - இல்லிற், பிறந்தகதை யும்கேளோம் பேருலகில் வாழ்ந்துண், டிறந்தகதை யுங்கேட்டி லோம்” (அருண. யந். 70) என்ற வற்புறுத் தலால் விளங்குதலின், குருநமச்சிவாயர்க்கு வடமொழி இலிங்க புராணக் கூற்றுச் சிறிதும் உடன்பாடன்றெனத் தெளிதல் வேண்டும்.
ஏகம்பவாணன்
வெண்பா
அலங்க லணிமார்ப னாறையர்கோன் வாணன்
விலங்கு கொடுவருக வென்றான் - இலங்கிழையீர்
சேரற்கோ சோழற்கோ தென்பாண்டி நாடாளும்
வீரற்கோ யார்க்கோ விலங்கு. 182
இது, வாணன் தாதிமேற் கோபமாய் விலங்கு கொண்டு வா என்றபோது வாணன் சேடியர் பாடியது.
குறிப்பு:- ஏகம்பவாணன் என்பவன் இடைக்காலத்தே தமிழ் நாட்டில் விளங்கிய வாணகுலத் தலைவர்களுள் ஒருவன். வாணர்கள் பிற்காலத்தே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் இருந் திருக்கின்றனர். தென் பெண்ணையாற்றங்கரையில் திருக்கோவலூர் நாட்டில் உள்ள ஆற்றூரில் இந்த ஏகம்பவாணன் சிறப்புற்றிருந்தான். இவன்காலத்தே பாண்டிநாட்டில் சீவல்லபமாறன் என்பான் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாதலின், ஏகம்பவாணன் அக்காலத்தவன் என்பது தெளிவாம். ஏகம்பவாணன் இருந்த ஆற்றூர் ஆறையெனப் புலவர்களாற் குறிக்கப்படுவதுண்டு. அதனால் இப்பாட்டு இவ்வாணனை “ஆறையர் கோன் வாணன்” என்று கூறுகிறது. இவ்வாறே, திருச்செந்தூர் நாட்டிலுள்ள ஆற்றூரும் “தென்குட நாட்டு ஆறை” (A.R.No.438 of 1929 - 30) என்று குறிக்கப்படுவது காணலாம். ஏகம்பவாணன் போர்வன்மையும் புலவர் புகழும் வள்ளன்மையும் சிறக்கவுடையன். இவனைச் சிறப்பித்துப் பாடப் பட்ட பாட்டுக்கள் பலவுண்டு. அவற்றுள்,
“தேருளைப் புரவி வாரணத் தொகுதி
திறை கொணர்ந்து வரு மன்னநின்
தேசமே துனது நாம மேதுபுகல்
செங்கையால் தடவு பாண கேள்
வாரு மொத்தகுடி நீரு நாமுமக
தேச னாறை நகர் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளிக்க மிகு
வரிசை பெற்றுவரு புலவன் யான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகு மேகுமவன் முன்றில் வாய்
நித்திலச் சிகர மாட மாளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆரு நிற்குமுயர் வேம்பு நிற்கும்வளர்
பனையு நிற்கு மத னருகிலே
அரசு நிற்கு மரசைச் சுமந்தசில
அத்தி நிற்கு மடை யாளமே” (பெருந். 1192)
என வரும் பாணாற்றுப்படை பயில வழங்குகிறது. பண்டை நாளை நாஞ்சில் வள்ளுவன்போல இவ்வாணனும் அரிசி வேண்டிய புலவ னொருவனுக்குக் களிற்றியானை தந்தா னென்னும் செய்தி தெரிவிக்கும்.
சேற்றுக் கமலவயல் தென்னாறை வாணனையான்
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா றெவ்வா றவன். (பெருந். 1189)
என்ற வெண்பா வொன்றும் வழங்குகிறது. இது நிற்க, ஏகம்ப வாணனிடம் பெருஞ் செல்வமேயன்றி அவன் பணி புரிவ தற்காகப் பூதமொன்றிருந்து ஏவின செய்துவந்த தெனவும், ஒருகால் அவன் தன்னை இகழ்ந்த சேர சோழ பாண்டியர் மூவரையும் பற்றிக் கொணர்ந்து சிறையிடுமாறு பணிக்க, அது பாண்டியன் பாலுள்ள வேம்புக்கஞ்சி ஏனையிருவரையே கொணர்ந்து சிறையிட்ட தெனவும், பின்பு அவன் மகளிர் நால்வரை விடுப்ப, அவர்கள் சென்று எளிதில் பாண்டியனது வேம்புமாலையைப் பெறவியலாது முடிவில், இகழ்ந்து பாடின ரெனவும், (த.நா.ச. 185) அது கேட்டு நாணிய பாண்டியன் சீவல்லவன் தன் வேம்பு மாலையைத் தந்தான் எனவும், பிறகு வாணனது பூதம் அவனையும் கொணர்ந்து சிறையிட்டதெனவும் கூறுவர். இச்செய்தியை, “ஆரான் முடியுமிக் காரியந் தோடவி ழாத்திமலர்த், தாரானை வேம்பின் தொடை யானைப் பெண்ணையந் தாமனையும், போராடிக் காவலில் வைத்தவப் பாட்டும் புனைந்ததன்றோ, வாராரு மோட்டிளங் கொங்கைநல் லாய்தொண்டை மண்டலமே” (55) என்று தொண்டைமண்டல சதகம் கூறுகிறது. இவ்வாறு ஏகம்பவாணன் பாண்டியனைச் சிறையிட்ட செய்தி யறிந்து, பாணனொருவன், அவன் புகழ்பாடி மகிழ்விக்க, அவற்குத் தான் வென்ற பாண்டி நாட்டைத் தந்தான் எனவும், அதனைக் கண்ட பாவலர்,
“பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான்
வாணர் புகழவரு மேகம்ப - வாணன்
கரும்போ தகமேநின் கால்பணிவேன் மீண்டு
வரும்போ தகமே வரின்” (பெருந். 1191)
என்று பாடிப் பரவினரெனவும் கூறுவர். முடிவில் பாண்டியன் மனைவி வேண்டிக்கொள்ள வாணன் பாண்டியர்க்கு நாட்டையளித்து, அதனைக் கொண்டிருந்த புலவனுக்குக் கோடி செம்பொன் தருமாறு பாண்டியனைப் பணித்தான்; அவனும் அதனைப் புலவனுக் களித்து வாணனது நட்பைப் பெற்று மகிழ்வானாயினான்.
இவ்வண்ணம் புகழ் மேம்பட்டு வாழும் ஏகம்பவாணன் ஒருகால் தன் தாதிமேற் சினங்கொண்டு, விலங்கு கொண்டுவருக எனத் தன் ஏவலரைப் பணித்தான். இதனைக் கேட்ட அத் தாதி, பாநலம் படைத்த நாவினளாதலின், விலங்கு சேரற்கோ, சோழற்கோ, பாண்டியற்கோ என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினள் என்பர். அலங்கல் - மாலை. இலங்கிழையீர் - விளங்குகின்ற அணிகளை யுடையீர். மூவேந்தர்க் கிடற்குரிய விலங்கை எனக்கிட விரும்பான் ஏகம்பவாணன் என்பது குறிப்பு.
வெண்பா
தென்னவா மீனவா சீவலமா றாமதுரை
மன்னவா பாண்டி வரராமா - முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த தூயதமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண். 183
இது, பாண்டியன் மாலையை வாங்கிக்கொண்டுவர நாலுதாதியரை அனுப்ப அவர் பாடியது,
குறிப்பு :- ஏகம்பவாணன் ஒருகால் தன் வயல்களைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அவனைக் காண்டற்கு வந்த சேர சோழ பாண்டி வேந்தர் மூவரும் வந்து, செய்தியறிந்து, வாணனை இகழ்ந்து பேசினர்; திரும்பிவந்த வாணன் நிகழ்ந்ததறிந்து, மூவரையும் தன் பூதத்தை விடுத்துப் பிணித்துச் சிறையிடுமாறு பணித்தான். பாண்டியனது வேம்புக்கஞ்சி அப்பூதம் ஏனையிரு வரையுமே சிறையிட்டது. பாண்டியனது வேம்பைப் பெறுமாறு வாணன் தாதியர் நால்வரை விடுத்தான். அவர்கள் சென்று பாண்டியன் மனத்தைத் தம் ஆடல் பாடல் அழகுகளால் நெகிழ் வித்து, அவனணிந்த வேம்பினைப் பெறற்கு முயன்றனர். அக் காலையில் ஒருத்தி பாடியது இப்பாட்டு. சீவலன் - ஸ்ரீவல்லபன். இவன் பதினாறாம் நூற்றாண்டில் தென்பாண்டிநாட்டில் இருந்து அரசு புரிந்தவன்; இவனை அதிவீரராமபாண்டியன் என்றும் கூறுவர். தன் மாலையின் பூவிலுள்ள தேனைச் சுரும்புகள் மொய்த் துண்ண இடமளிக்கும் அருளுடைமை தோன்றச் “சுரும்புக்குத் தேனளித்த தூய தமிழ்நாடா” என்றாள். சுரும்புக்குத் தேனளித்த நீ எனக்கு அதனை யளிப்பது அரிதன்று என்பது குறிப்பு. கரும்புக்கு - கரும்புபோலும் சொல்லையுடைய பெண்ணுக்கு இப்பாட்டைக் கேட்டும் பாண்டியன் வேம்பு கொடானாயினன்.
வெண்பா
மாப்பைந்தார்க் கல்லமுத்து வண்ணத்தார்க் கல்லவஞ்சி
வேப்பந்தார்க் காசைகொண்டு விட்டாளே - பூப்பைந்தார்
சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவலமா றாதமிழை
ஆய்ந்துரைக்கும் வீரமா றா! 184
இது, வேறொருத்தி பாடியது.
குறிப்பு:- முதலிற் சென்ற தாதி வேம்புமாலைப் பெறாளாகவே, இரண்டாமவள் சென்று, வேந்தன் பொன்னும் முத்தும்பரிசிலாகத் தர அவற்றை மறுத்து, இப்பாட்டைப் பாடினாள். மா - பொன். வஞ்சி - வஞ்சிக் கொடிபோலும் இடையினையுடையவள் நெல்வேலி - திருநெல்வேலி. சீவல்லபனுக்கு வீரமாறன் என்பதும் பெயர்.
வெண்பா
வேம்பா கிலுமினிய சொல்லிக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ - தேம்பாயும்
வேலையிலே வேலைவைத்த மீனவா நின்புயத்து
மாலையிலே மாலை வைத்தாண் மான். 185
இது, வேறொருத்தி பாடியது.
குறிப்பு:- மூன்றாமவட்கும் பாண்டியன் தன் வேப்பமாலை யொழிய ஏனைப் பொன்னும் முத்தும் கொண்ட மாலை நல்கிய போது, அவன் வேம்புமாலை வேண்டி இப்பாட்டைப் பாடினாள். வேம்பாகிலும் இனிய சொல்லிக்கு - வேகின்ற பாகிலும் இனிய சொல்லையுமுடையவட்கு. வேலையில் - கடலில், வேலை வைத்த மீனவன் வேற்படையைச் செலுத்திய பாண்டியன் மரபில் தோன்றினவனே.மீனவன் - மீன் கொடியையுடைய பாண்டியன். மாலைவைத்தாள் - ஆசைவைத்தாள். மான் - மான்போன்ற பெண். இது கேட்டும் பாண்டியன் மாலை கொடானாயினான்.
வெண்பா
இலகு புகழாறை யேகம்ப வாணன்
அலகை வரும்வருமென் றஞ்சி - யுலகறிய
வானவர்கோன் சென்னியின்மேல் வண்ண வளையெறிந்த
மீனவர்கோன் கைவிடான் வேம்பு. 186
இது நான்காமவள் பாடியது. இது கேட்டு மாலை கொடுத்தான்.
குறிப்பு:- தாதியர் நால்வருள் மூவரும் பாண்டியனது வேம்பினைப் பெறாராகவே, நான்காமவள் அவன் கருத்து இதுவெனத் தெரிந்துகொண்டு, அவன் வேம்பு கொடானாவதை யறிந்து இப்பாட்டினைப் பாடினாள். இது தன் புகழ்க்கு மாசு தருமென நாணிய பாண்டியன் முடிவில் தன் வேம்பு மாலையைக் கொடுத்து வாணனது பூதத்தால் சிறைப்படுத்தப்பட்டான். ஆறை - ஆற்றூர். இந்திரன் முடிமேல் பாண்டியன் வளையெறிந்த திருவிளையாடற் குறிப்பு, இதன் கண் “வானவர் கோன் சென்னி யின்மேல் வண்ண வளை யெறிந்த மீனவர்கோன்” என்று காட்டப் படுகிறது.
வெண்பா
சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்தவருஞ் சேற்றில் - மானபரன்
மாவேந்தன் வன்கண்ணன் வாணன் பறித்துநடும்
மூவேந்தர் தங்கண் முடி. 187
இது, வாணனுடைய பாணன் மதுரையிற் போனபோது பாண்டியன் தியாகம் கொடுக்க பாணன் வலக்கை யாலல்லாமல் இடக்கையால் ஏற்கப் பாண்டியன் (வாணனை) உழவனென் றிகழ்ந்தபோது பாடியது.
குறிப்பு :- இடக்கையால் மேழி பற்றி வலக்கையால் உழவு மாட்டையோட்டும் நெறியில், வலக்கை, உழவெருதின் கயிற்றையும் மேழியையும் ஒருசேர வலித்துப் பிடிக்க, இடக்கையே ஒன்றை வாங்கவும் பற்றவும் பயன்படுதலின், பாணன் இடக்கை யால் வாங்கியது பாண்டியன் இகழ்தற்கிடனாயிற்றுப் போலும். மானபரன்,வேந்தன், கண்ணன் என்பன வாணனையே குறித்து அடுக்கி நின்றன. மூவேந்தரும் ஏகம்பவாணன் மனைக்குச் சென்றிருந்தபோது, அவன் வயலில் நாற்று நடச் சென்றிருந்தா னென்றும், அதுகேட்டு அவர்கள் வாணனை இகழ்ந்தனரென்றும். அவன் மனைவி இகழ்ந்த வேந்தர் நாண இப்பாட்டைப் பாடின ளென்றும் கூறுவதுண்டு. நடும் - நடுவான்.
முனைய தரையன்
வெண்பா
இன்றுவரி லென்னுயிரை நீபெறுவை யிற்றைக்கு
நின்று வரிலதுவு நீயறிவை - வென்றி
முனையா கலவி முயங்கியவா றெல்லாம்
நினையாயோ நெஞ்சத்து நீ. 188
இது, திருக்கண்ணபுரத்துத் தாதி முனைய தரையனுக் கெழுதி விடுத்த பாட்டு.
குறிப்பு:- திருக்கண்ணபுரம் சோழநாட்டில் உள்ளதோரூர். இது சயமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டுத் திருக்கண்ணபுரம் (A.R.No. 498 of 1922) என்றும் கல்வெட்டுக்களில் வழங்கும். முனையதரையன் விக்கிரம சோழன் கீழிருந்த தலைவர்களுள் ஒருவன். இவனுடன் கருணாகரத் தொண்டமானும் விக்கிரம சோழனுலாவிற் கூறப்படுகின்றான். திருக்கண்ணபுரத்துக் கல் வெட்டுக்களிற் காணப்படும் கருணாகரவீரர் மடம் இக்கருணாகரன் பெயரால் நிறுவப்பட்டதோ என எண்ணுதற்கிடந் தருகிறது. இங்கே குறிக்கப்படும் முனையதரையனை விக்கிரம சோழனுலா, “பலர் முடிமேல், ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள், பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்குத், தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும்” (69-71) என்று சிறப்பிக்கின்றது. இம் முனைய தரையன் திருக்கண்ண புரத்தில் தண்டத்தலைவனாயிருந்தான் எனவும், அக்காலத்தே நாட்டில் பஞ்சமுண்டாக, அதுகண்டுபேரிரக்கங் கொண்ட முனைய தரையர், அரசனுக்குரிய திறைப்பொருளை மக்கள் பொருட்டுச் செலவிட்டு, நாடு வளம்பெற்ற பின்னும் அதனைச் செலுத்தானாயினனெவும்,அதுகண்டு வெகுண்ட சோழ வேந்தன் அவனைச் சிறையிலிட்டானெனவும், சிறையிலிருக்குங்கால், அவற்கு இத்திருக்கண்ண புரத்து தாதி இப் பாட்டினையெழுதி விடுத்தாளெனவும் கூறுவர். இத்தாதி திருக்கண்ண புரத்துத் திருமாலை வேண்டி ஐந்து நாட்களுள் தன் காதலனான முனைய தரையன் சிறைவீடு பெற்று வாரானாயின் தான் தீப்புகுந்து உயிர்விடுவதாக உறுதிகொண்டாள். திருமால் சோழன் கனவிற் றோன்றி முனையதரையனைச் சிறைவீடு செய்யுமாறு சோழனைப் பணித்தார். முனையதரையன் சிறைவீடு பெற்றுத் திருக்கண்ணபுரம் சார்ந்து தன் காதலியாகிய தாதியைக் கண்டான். அவள் அவனுக்கு இனிய உணவு சமைத்து அவனை உண்பிக்கையில், அவன் அதனை முதற்கண் திருமாலுக் குரிமையாக்கி யுண்டான். மறுநாள், கண்ணபுரத்துத் திருமால் திருமேனியில் நெய்யுணவின் நெய் வழித்திருப்பதைக் கண்டு யாவரும் வியந்து உண்மையறிந்து பாராட்டினர். முனையதரையனும் அன்று முதல் திருக்கண்ண புரத்து திருமாலுக்குப் பொங்கலமுது படைக்குமாறு ஏற்பாடு செய்தான் என்றும், அஃது இன்றுகாறும் நடைபெற்று வருகிற தென்றும், அப்பொங்கலுக்கு முனையோதனம் என்பது பெய ரென்றும் கூறுவர். இச் செய்தியைச் சோழமண்டல சதகம், “புனையுங் குழலாள் பரிந்தளித்த பொங்கலமுதும் பொரிக்கறியும், அனைய சவரி ராசருக்கே யாமென்ற ருந்து மாதரவின், முனைய தரையன் பொங்கலென்று முகுந்தற் கோதுமுதுகீர்த்தி, வனையும் பெருமை யெப்போதும் வளஞ்சேர் சோழ மண்டலமே” (42) என்று கூறுகிறது. திருக்கண்ணபுரத்துத் திருமாலுக்குச் சௌரிப் பெருமாள் என்பது பெயர் என அவ்வூர்க் கல்வெட்டும் (A.R.No. 498 of 1922) குறிக்கின்றது.
கோடைச் சிவந்தான் புலவன்
வெண்பா
என்னெஞ்சு மென்விழியுங் கொண்டோ விலங்கேசன்
பொன்னஞ் சிகாமணியும் பொன்முடியும் - வன்னெஞ்சும்
சிந்துங் கொடைச்சிவந்தான் தென்கோடை யார்கழங்கும்
பந்துஞ்சா தித்த படி. 189
கண்டு பணியக் கடவேனோ காதலுடன்
தொண்டை யிதழருந்தித் தோய்வேனோ - கொண்டற்
கொடைச்சிவந்தான் கோடைக் குளிர்காவி லன்ன
நடைச்சிவந்தா லென்செய்வே னான். 190
இது, பரிசில் பெற்றுக் கிராமப் பிரதட்சிணம் வரும் புலவன் உப்பரிகைமேற் பார்த்த ஒருத்தியைக் கண்டு விரகமாய்ப் பாடியது. இந்தக் கவியை ஒற்றனாய மழவராயன் கேட்டிருந்து வரைந்து கொண்டு அவளைக் கொடுத்தான்.
குறிப்பு:- கோடைச் சிவந்தான் என்பவன் கோடைமலைக் குரியனாய் வாழ்ந்த ஒரு செல்வன் போலும். அவன்பால் ஒரு புலவன் பரிசில் பெற்று யானைமீது ஊர்வலம் வருகையில், விலை மகளொருத்தி தன் மாடிமேலிருந்து அவனைக் கண்டாள். அவளைக்கண்டு புலவனும் வேட்கைகொண்டு இப்பாட்டுக் களைப் பாடினான். அருகே இருந்த மழவராயன் என்பவன் சிவந்தானுடைய ஒற்றன். அவன் அப்பாட்டுக்களை எழுதிக் கொண்டு சென்று தன் தலைவற்குக் காட்டி அவன் ஆணை பெற்றுப் புலவன் வேட்கை நீங்க அவ்விலைமகள் கூட்டத்தை அவன் பெறுமாறு செய்தான். கோடைமலை பாண்டி நாட்டி லுள்ளதாகலின், கோடைச் சிவந்தானும் பாண்டி வேந்தர்க்குத் துணைசென்று இலங்கை வேந்தனை வெற்றிகண்டிருத்தல் வேண்டும். இதனை, “இலங்கேசன் பொன்னஞ் சிகாமணியும் பொன்முடியும் வன்னெஞ்சும் சிந்தும் கொடைச் சிவந்தான்” என இப்பாட்டு குறிக்கிறது. ஜடாவன்மன் சுந்தர பாண்டியன் தான் இலங்கை வேந்தனை வென்றதாகக் கூறுதலின், இச்சிவந்தான் அவற்குத் துணை செய்திருக்கலாம். கோடைமலை மிக்க வேனிற்காலத்தும் வெம்மையின்றிக் குளிர்ந்திருக்கும் இயற்கை நலமுடையதாகையால் “கோடைக்குளிர் கா” விதந்தோதப்படுகிறது. மழவராயன் என்பது, வேந்தர், தம்பால் அருஞ்செயல் புரிந்தார்க்குத் தரும் சிறப்புப் பெயர்களுள் ஒன்று; ஒற்றனாகிய மழவராயன் இயற் பெயர் தெரிந்திலது. கொண்டற் கொடை - மழைபோல் கொடுக்கும் கொடை அன்ன நடைச்சி - அன்னம்போலும் நடையினை யுடையவள். நடைச் சிவந்தாளென்றும் பாடம் உண்டு.
உத்தரநல்லூர் நங்கை
விருத்தம்
சந்தன மரமும் வேம்புந் தனித்தனி கந்த நாறும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால துமண நாறக் காணேன்
செந்தலைப புலைய னார்க்குத் தீமண மதுவே நாறும்
பந்தமுந் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே. 191
இஃது, உத்தரநல்லூர் நங்கை பிராமணரைப் பாடிய வசை.
குறிப்பு:- உத்தரநல்லூர் நங்கை பாய்ச்சலூர்ப் பார்ப்பனரை இவ்வாறு வசைபாடியதற்குரிய காரணம் புலப்படவில்லை. இப்பாட்டும் பாய்ச்சலூர்ப் பதிகம் என்னும் சிறு நூலிற் காணப்படும் பாட்டுக்களுள் ஒன்று. சில ஏடுகளில் இதனோடு மேலும் இரண்டு பாட்டுக்கள் காணப்படுகின்றன. “குலங்குல மென்பதெல்லாங் குடுமியும் பூணு நூலும், சிலந்தியு நூலும் போலச் சிறப்புடன் பிறப்ப துண்டோ, நலந்தரு நான்கு வேத நான்முகன் படைத்த துண்டோ, பலந்தரு பொருளு முண்டோ பாய்ச்சலூர்க் கிராமத் தாரே;” “ஊருள பார்ப்பார் கூடியுயர்ந்தன சாலை கட்டி, நீரிலே மூழ்கிவந்து நெருப்பிலே நெய்யை விட்டுக், கார் வயற்றவளை போலக் கதறிய வேத மெல்லாம், பாரைவிட்டகன்ற தோதான் பாய்ச்சலூர்க் கிராமத் தாரே;” என்ற இரண்டுமே அவை. இப்பாய்ச்சலூர் “திருச்சிராப்பள்ளிக்கு நேரே கொள்ளிடத்தின் வடக்கிலுள்ளது” என்பர்; கொள்ளிடத்தின் வடக்கிலுள்ளதனைப் பழங்குறிப்புக்கள் பலவும் பாச்சில் என்றே குறிக்கின்றன; “வடகரை ராஜராஜ வளநாட்டு மழநாட்டுப் பாச்சில் கூற்றத்துப் பாச்சில்” “என்பதே வழக்கம். இது பாய்ச்சலூர் என வழங்குகிறது. திருவண்ணாமலைக்கு மேற்கில் பாய்ச்சல் என்ற பெயருடையதோ ரூருளது; அது முன்னாளிலும் இந்நாளிலும் பாய்ச்சலென்றே வழங்கப்படுகிறது. சந்தனக்கட்டையும் வேப்பங்கட்டையும் தீயிலிடின் வேறு வேறு மணம் நாறும்; அவ்வாறு பார்ப்பனரையும் புலையரையும் தீயிலிட்டால் வேறு வேறு மணம் நாறுவதில்லை; ஆதலால் சாதி வேற்றுமை கொள்வது தகுதியன்றென்பது இப் பாட்டின் கருத்து. பல நூற்றாண்டு கட்கு முன்பே பெண்ணொருத்தி சாதி வேற்றுமையால் நாட்டிற் குண்டாகும் கேட்டினை நன்கறிந்து அதனைப் போக்குதற்கென்றே பாய்ச்சலூர்ப் பதிகம் என்ற நூலெழுதியிருப்பது இக்காலத் தறிஞர்கட்கு நல்விருந்தாகும்.”
திருவாரூர் நாகரச நம்பி
வெண்பா
முன்னா ளறுபத்து மூவரிருந் தாரவரில்
இந்நா ளிரண்டுபே ரேகினார் - கன்னான்
நருக்கின்றான் விற்றுவிட்ட நாகரச நம்பி
இருக்கின்றான் கிட்டினரா யா. 192
இது,திருவாரூர் நாகரச நம்பி செய்த குற்றங் கிள்ளைக்குச் சொல்லுவித்துத் தலத்தார் இராயருக்குச் சொல்லி அறிவித்தது.
குறிப்பு :- பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய விசயநகர வேந்தருள் ஒருவரான கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருவாரூர்க் கோயிலில் சீகாரியம் செய்தவர்களுள் நாகரச நம்பி என்பவன் செல்வாக்குடன் இருந்தான். அக்காலத்தே அவன் அக் கோயிலில் இருந்த அறுபத்துமூவர் படிமங்களுள் இரண்டைக் கள்ளத்தனமாக எடுத்துக் கன்னானொருவற்கு விற்றுவிட்டான். இதனை யறிந்த ஊரவர் வெளிப்படையாக முன்வந்துரைக்க அஞ்சி, கிளி யொன்றுக்கு இப்பாட்டைக் கற்பித்து மீளமீளச் சொல்லுமாறு பயிற்றி வேந்தரான கிருஷ்ண தேவராயர் திருவாரூர்க் கோயிலுக்கு வந்தபோது அவரிடம் சொல்லுமாறு செய்தனர். அதுகேட்டு அவர் நிகழ்ந்ததை யாராய்ந்து முறை செய்தனர் என்பர். ஊரவர் கிளிக்குக் கற்பித்த பாட்டு இது. இரண்டுபேர் - இருவர் திருவுருவங்கள். கன்னான் நருக்கின்றான் - கன்னான் அவற்றைத் துண்டங்களாக வெட்டிப் பயன் கொள்ளு கின்றான். இருக்கின்றான் - இன்னும் முறை செய்து விலக்கப் படாது சீகாரியம் செய்பவனாகவே யுள்ளான்; அதுகூடாது என்பது குறிப்பு.
புங்கனூர் கிழவன்
கட்டளைக் கலித்துறை
வெண்ணெயும் பார்த்தன்னை கண்ணையும் பார்த்துத்தன் மெய்யிற்பட்ட
புண்ணையும் பார்த்த திருநெடு மால்புங்க னூர்கிழவன்
பண்ணையுஞ் சேலுக ளுந்தட நீள்கயல் பாயுநெடுந்
திண்ணையுங் கெண்டை புரட்டுங்கல் யாணத்திற் சென்றவர்க்கே. 193
இது புங்கனூர் கிழவனைக் கலியாணத்தொருவன் பாடியது. இது கேட்டுப் புங்கனூர் கிழவன் பிராணத் தியாகம் பண்ணினான்.
குறிப்பு:- புங்கனூர் என்பது சோழநாட்டில் சீகாழிப் பகுதியில் உள்ளதோரூர். இப் புங்கனூரில் வாழ்ந்த வேளாளர் தலைமகனொருவன் புங்கனூர் கிழவன் என்று இங்கே காணப்படு கின்றான். இவனது இயற்பெயர் தெரிந்திலது. இவன் பெருமனையில் நடந்த திருமணத்துக்குப் பாவலர் உள்ளிட்ட பல விருந்தினர் வந்திருந்தனர். திருமண விருந்தில் வழங்கப்பட்ட உணவில் விடபேதிக்குரிய நஞ்சு கலந்துவிட்டது. அதனால் பலர் இறந்தனர். அதனை யறிந்த புலவனொருவன் இப்பாட்டைப் பாடி அவற்குத் தெரிவித்தான். தான் கொடுத்த உணவால் பலர் இறந்தது அறிந்த புங்கனூர் கிழவன், மனம்பொறாது உயிர் விட்டான் என்பர். புங்கனூர் கிழவனைத் திருமாலே எனச் சிறப்பித்தலின், அதற்கேற்ப, திருமால் கண்ணனாய்த் தோன்றி வெண்ணெய் திருடித் தாயாரால் வெகுண்டு நோக்கப்பட்டதும், மெய்யிற் புண்ணுண்டாகக் கட்டுண்டடிபட்டதும் புங்கனூர் கிழவன் மேலேற்றி, “வெண்ணெயும் பார்த்து அன்னை கண்ணையும் பார்த்துத் தன் மெய்யிற்பட்ட புண்ணையும் பார்த்த திருநெடுமால்” என்றான். பண்ணை - நன்செய் வயல். கெண்டைபுரட்டும் - விடபேதியால் வருந்தி இறப்போர் இறக்கும் நிலையில் கணைக்காலில் உண்டாகும் நோய். இதற்குக் கெண்டைபுரட்டுதல் என்று பெயர் என்பர்; குறுக்கலிழுத்தல் என்றும் குரக்குவலித்த லென்றும் வழங்கும். கெண்டை - கணைக்கால். இதனைச் சோழமண்டல சதகம், “அறங்கூர் பெரியோர் மாசுவரி லாற்றா ரஃதே யமைகவினிக், கறங்கூர் கெண்டை புரட்டுமெனக் கலியாணத்திற் கவி கேட்டுப், புறங்கூர் பவளக் கடன் முழுகும் பொன்னங் கலத்திற் புடை சோர்ந்த, மறங்கூர் புங்க னூர்கிழவன் வளஞ்சேர் சோழ மண்டலமே” (72) என்று கூறுகிறது.
குடி தாங்கி
கட்டளைக் கலித்துறை
வெறும்பற் கையுமரி தாய்க்கிள்ளை சோரவென் வீடுகெட்டேன்
எறும்புக்கோ ரார்பத மில்லைகண் டாயென் னிருங்கலியின்
குறும்பைத் துரத்துங் குடிதாங் கியைச்சென்று கூடியபின்
தெறும்புற்றெள் யானை கவளங் கொள்ளாழை தெவிட்டியதே. 194
இது பாதி கேட்டுப் பரிசில் கொடுத்தபின் பாதி பாடியது.
குறிப்பு :- குடிதாங்கி யென்னும் பெயருடையார் பலர் பல காலங்களில் இருந்திருக்கின்றரெனக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். சில அளவைகட்கும் குடிதாங்கி யென்ற பெயர் குறிக்கப் படுவதைப் புதுக்கோட்டை நாட்டுக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. “திருமழபாடிக் கல்வெட்டொன்றில் வளவனல்லூ ருடையான் நீலன் குடிதாங்கியான ஜயங்கொண்ட சோழ வீரமன்னன்” (S.I. Ins. Vol. V. No. 641) என்றொரு தலைவன் காணப்படுகின்றான். ஆயினும், இப்பாட்டிற் குறிக்கப்படும் குடிதாங்கி யென்பவன் இன்னானென வரைந்துகாண முடியவில்லை; இவன் சோழ நாட்டவனென்று சோழ மண்டல சதகத்தால் தெளிகின்றோம். மன்னார்குடி நாட்டிலுள்ள களந்தை இக்குடிதாங்கிக் குரியதென்பாரும் உண்டு. வறுமையால் சிறுமையுற்று வாடிய புலவனொருவன் குடிதாங்கியையடைந்து இப்பாட்டைப் பாடினானாக, பாதிப்பாட்டுக் கேட்டதும் குடிதாங்கி, அப்புலவற்கு மிக்க பரிசில் நல்கி, வறுமைநோயைப் போக்கினன். இதனைச் சோழ மண்டலசதகம், “உலகிலிலை யென்றுரையாமே யுதவல் குணத்தோர்க் குளதாமே, இலகு மெறும்புக் கார்பதம் வேறில்லை யெனயா வதுமீந்தான், புலவன் மகிழ்ந்து பிற்பாதி புகலக் கேட்ட புகழாளன், மலைகொள் புயத்துக் குடிதாங்கி வளஞ்சேர் சோழ மண்டலமே” (82)என்று கூறுகிறது. “ஆர்பத மில்லை முன்னாள்” என்றும், “கிள்ளை சோரவும் வீடுமின்றி” யென்றும், “இருங் கலியைக் குறும்பைத் தவிர்த்த” என்றும் பாட வேறுபாடுண்டு. இது சத்திமுற்றப் புலவர்க்கு அவரை யறியாமலே பெரும் பரிசில் பாண்டிவேந்தன் தர, அதுகண்டு அவர் வியந்து பாடியதாகக் கூறப்படுவதுண்டு. இதனை வற்புறுத்தத்தக்க சான்றுகள் கிடைத்தில.
கச்சிராயன்
சிந்தியல் வெண்பா
குப்பாய மிட்டுக் குறுக்கே கவசமிட்டுக்
கைப்பாச மிட்டுவருங் கண்டியதே வாவுனது
தொப்பாரத் தின்கீழ் மயிர். 195
இது, கச்சிராயன் கண்டியதேவனைப் பாடியது.
குறிப்பு:- கச்சிராயன் என்பது ஒரு புலவன் பெயர். திருமுதுகுன்றத்துக் கோயிற்கு மடைப்பள்ளி கட்டியுதவிய அரச நாராயண ஏழிசை மோகனான கச்சிராயன் வழிவந்தவனாக இப்புலவன் இருப்பான்போலும். கண்டிய தேவனும் இனிய பாட்டுப்பாட வல்லவன். கண்டியதேவன் விருதுகளுடன் போர்க் கோலம் பூண்டு வரக் கண்ட கச்சிராயன் இப்பாட்டைப் பாடியுள்ளான். குப்பாயம் - அட்டை; கைப்பாசம் - கைச்சரடு ; இதனை வம்பு என்பதும் வழக்கு: “வம்புகளை வறியாச் சுற்றம்” (பதிற்.19) எனச் சான்றோர் கூறுவது காண்க. வம்பாவது, கைச்சரடு என்பர் பதிற்றுப்பத்தின் பழைய வுரைகாரர். தொப்பாரம் - வீரர் தலையில் அணியும் ஒருவகை அணி.
கண்டியதேவன்
கட்டளைக் கலிப்பா
அலைவ ளைத்த திருப்பாற் கடலிலே
யாட ராவி னணையிலை பச்சையால்
இலைவளைத்த மணிமண் டபமிலை
யிங்கு நீவந்த வாறே தியம்புவாய்
கொலைவ ளைத்த விலங்கேசன் மாமலர்க்
கொத்து மாமுடி பத்துக்கு மன்றொரு
சிலைவ ளைத்த கரநீல கங்கனே
திங்கள் வெண்குடைச் சிற்றம் பலவனே. 196
இது கேட்டுக் கண்டியதேவன் விருதெறிந்து போட்டுக் கச்சிரா யர்க்குச் சரக்கறை தியாகங்கொடுக்க வந்த நீல கங்கனைக் கண்டியதேவன் பாடியது. இது கேட்ட அவன் குதிரை கொடுவந்தே னேன்று குதிரை கொடுத்தான்.
குறிப்பு :- இவ்வண்ணம் பெரும் பரிசிலுடன் விருது தாங்கி வரும் தன்னை இகழ்வது போலக் கச்சிராயன் பாடக் கேட்டதும், தன்னுடைய விருதுகளை யெறிந்து, மேற்கொண்டிருந்த குப்பாயம், கைப்பாசம், தொப்பார முதலியவற்றையும் களைந்து தான் கொணர்ந்த சரக்கறையையும் கண்டியதேவன் கச்சிராயற்குக் கொடைவழங்க முற்பட்டான். கண்டியதேவற்கு அவற்றை வழங்கிய பெருஞ் செல்வன் நீலகங்கன் என்பவனவான். அவன் இதனை யறிந்து தானே முற்படவந்து, கண்டியதேவற்கு மிக்க செல்வங்களை நல்கினான்.அதுகண்டு வியப்பு மிகக் கொண்ட அவன், இப்பாட்டினைப் பாடினானென்பர். “கச்சிராயர் சரக்கறை தியாகங் கொடுக்கப் பலிதூக்கவந்த நீலகங்கனைக் கண்டிய தேவன் பாடிய” தெனவும், “பராலிக்கவந்த,” “பலிதூக்க வந்த” எனவும் பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன. “இது கேட்டு அவன் (நீலகங்கன்) குதிரை கொடுவந்தே னென்று குதிரை கொடுத்தான்” என்றொரு குறிப்பும் உண்டு. சோழநாட்டிலுள்ள திருச்சிற்றேமம் என்ற ஊர் இடைக்காலத்தே திருச்சிற்றம்பலம் என்று வழங்கியதாகலின் (A.R.No. 184 of 1926) நீலகங்கன் என்பவன் திருச்சிற்றேமத்தில் இருந்தவன் போலும். மேலும், இவ்வூர்க் கோயிலில் மலைமண்டலத்துக் குதிரை வாணிகன் திருப்பணி செய்திருப்பதும் (A.R.No.182 of. 1926), குதிரை கொடு வந்தேனென்று நீலகங்கன் குதிரை கொடுத்தா னென்றொரு குறிப்புக் காணப்படுவதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. சிற்றரசனான நீலகங்கனைத் திருமாலாகக் கூறுங் கருத்தால், திருப்பாற் கடலில்லை, ஆடரவின் அணையில்லை, ஆலிலை யில்லை என்பன வற்றையும் “சிலைவ ளைத்த கரநீல கங்கனே” யென்றும் கூறினான். இலங்கேசன் - இராவணன். சடையவன்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கொங்குநாட்டில் கண்டியதேவன் என்பான் ஒருவன் ஆட்சி செய்திருந்தானெனத் தாரமங்கலத்துக் கல்வெட்டுக் (S.I.Ins. Vol. VII. No.30) கூறுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது.
விண்ணன்
வெண்பா
கூர்ந்த வறுமையிடக் கோளரவ மீன்றமணி
சார்ந்த புலவன் றனக்களித்தான் - வார்ந்ததரூ
மேலைவிண்ணில் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த
சாலைவிண்ண னுக்கிணையார் தாம். 197
இது, விண்ணன் அரவின்மணி கொடுத்தபோது ஒருபுலவன் பாடியது.
குறிப்பு:- சாலை யென்னும் ஊரில் வாழ்ந்த இவ்விண்ணன், சிறந்தகொடையாளி. இவ்வூர் தொண்டைமண்டலத்தின் திண்டி வனநாட்டில் உளது. விண்ணனென்னும் பெயருடைய தலைவ னொருவன் பழையாறையில் சைத்திய மொன்று கட்டியதாக யாப்பருங்கலவிருத்தி மேற்கோட் செய்யுளொன்று, “மன்னர் வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கியவை வேல்விண்ணன் செழுந்தண் பழசையுட் சிறந்து நாளுஞ்செய, எழுந்த சேதிகத்துள் இருந்த அண்ணல்” (யா.வி.67. மேற்.) என்று கூறுகிறது. ஈண்டு விண்ணன் என்பவன் சாலைவிண்ண னென்னுந் தலைவனாவான். இவன் பெருஞ் செல்வமும் வரையாது வழங்கும் வள்ளன்மையு முடையனாய் முடிவில் வறியனானான். அக்காலத்தும் கொடைத் தன்மை குன்றாது தன்னை யிரந்தார்க்கு இயல்வன கரவாது ஈத்துவந்தான். ஒருகால் புலவனொருவன் வறுமைத்துயர் மிகுந்து விண்ணனை யடைந்தானாக, அவனுக் கீத்தற் கியலானாகிய விண்ணன் இல்லை யென்னும் எவ்வம் உரைத்தலின் உயிர்விடுதல் தக்கதெனத் தேர்ந்து தன் மனைப்புறத்தி லிருந்த பாம்புப்புற்றில் தன் கையை விட, அதன்கண் இருந்த நாகம் தன் மணியை அவன் கையில் அளித்தது. அதனைக் கொணர்ந்து விண்ணன் புலவர்க் களித்து மகிழ்வித்தான். அதுகண்டு வியந்த அப்புலவன் இப்பாட்டைப் பாடினான். தரு - கற்பகமரம். வார்ந்த - நேரிய.
வாயற்பதிவடுகன்
கட்டளைக் கலித்துறை
தன்னுடன் கூடப் பிறந்துயி ராகிய தம்பியையும்
அந்லை மாண்டது தோன்றாமல் மூடிவைத் தன்னமிட்டான் மன்னவர் போற்றிய வாழ்செந் தலங்கை வடுகனுக்குக்
கன்னனுஞ் சோமனு மோநிக ராயினிக் காண்பதுவே. 198
இது, பிணத்தை மூடி யன்னமிட்டபோது, ஒரு புலவன் பாடியது.
குறிப்பு :- வாயற்பதி யென்பது தொண்டைநாட்டி லுள்ள தோரூர். இதனைச் செந்தலங்கை யென்பர் போலும். தொண்டை நாட்டிலுள்ள தலங்கை யென்னு மூர்தான செந்தலங்கை யெனவும் வாயற்பதி யெனவும் குறிக்கப்படுகிறதோவென நினைத்தற் கிடமுண்டாகிறது. செங்கலங்கை யென்றும் பாட வேறுபாடுண்டு. இவ்வூரில் வாழ்ந்த செல்வன், வடுகநாதன் என்பவன். ஈத்தற்கண் உளதாகும் இன்பத்தில் பேரீடுபாடுடையவன் இச்செல்வன். ஒருகால் இவனுடைய தம்பி நோய் வாய்ப்பட்டு இறந்தான். அந்நிலையில், அதனை யறியாது பசி நோயால் துயருற்ற புலவ னொருவன் வடுகனை யடைந்தான். உடனே வடுகன் தன் தம்பியின் பிணத்தை மூடிவைத்துவிட்டு, வெளியே வந்து புலவருக்குச் சோறிட்டுப் பசி போக்கினான். அதனைப் பின்பறிந்த புலவன், இப்பாட்டைப் பாடி வடுகன் புகழை நிலைபெறு
வித்தான். அப்புலவன் இன்னா னென்றும், இவ்விருவரும் இன்னகாலத்தவ ரென்றும் அறிய முடியவில்லை. இச்செய்தியைத் தொண்டை மண்டல சதகம், “நேயத் துடன்பிறந்தோன்பிண மூடி நெருப்ப வித்து, தாயொப் பெனவெதிர் கொண்டழைத் தேதன் னுடனெனவே, ஆயத் தமிழ்கொண் டருங்கவிராயனுக்கன்பு செய்த, வாயற்பதியில் வடுகனும் வாழ்தொண்டை மண்டலமே” (58) என்று கூறுகிறது. அதன் மேற்கோளாக இப்பாட்டும் காட்டப்பட்டுளது. மேலும், வாழைக்கன்றும் கனியுதவும் என்பது போல வடுகநாதனுடைய மகனும், தன் திருமணத்துக்கு வந்து சிறப்பிக்க வேண்டு மென வற்புறுத்தி கேட்டுக்கொண்ட புலவனொருவனது திருமணத் தன்று, தன் மனைவியிறந்தாளாக, அவள் பிணத்தை மூடி வைத்துச் சென்று புலவனை மகிழ்வித்தா னென்று தொண்டைமண்டல சதகம் கூறுகிறது. “நெடுக விரித்துப் பிணமூடி னோன்மகன் நீயெனில்வா, கடுக வெனக்குமுன் முந்தஎன் றேயோர் கவிதை சொல்ல, முடுக வழைப்பு மனையாள் பிணந்தனை மூடிச்சென்ற, வடுக னளித்த மகன்வா யலான்தொண்டை மண்டலமே” (59) என வருதல் காண்க. “முந்தவிளை யோன்மாள முத்தமிழோற் கன்ன மிட்ட, அந்த வடுகன் மகனாயின் - வந்தென், தலைக்கலியா ணத்துக்கே தன்பிணத்தை மூடி, இலக்கணமாய்ச் செய்குவைநீ யே” என்பது திருமணம் புரிந்துகொண்ட புலவன் பாட்டு. இப்புலவன் வடுகன் மகனுடன் உடன்பயின்ற தோழன் போலும். “உயிராகிய தம்பியையும்” என்றது வடுகனது செயற் சிறப்புணர்த்தி நின்றது. கன்னன் - பாரதத்திற் காணப்படும் கன்னன். சோமன் - திரிபுவனத்தில் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த வள்ளல்.
கச்சியப்பன்
வெண்பா
மண்படுமோ வெய்யிலிலே வாடுமோ புல்லரிரு
கண்படுமோ வன்பாகக் கற்றவர்க்கும் - மண்புகழ
மெச்சியப்பா லுங்கொடுக்கும் வீறுவல்லைக் காளத்திக்
கச்சியப்ப னையுதைத்த கால். 199
இது, கச்சியப்பனை யுதைத்த புலவன் பாடியது.
குறிப்பு:- வல்லை யென்பது திருவல்லத்துக்குப் பெயர். குறட்டி வீரவரதையா என்னும் புலவர் திருவல்லத்துக் கோயில் கொண்டிருக்கும் இறைவன் மீது வல்லையந்தாதி பாடி வேந்தராற் சிறப்பிக்கப்பெற்றவரென்று திருவல்லம் கல்வெட்டொன்று (A.R.No.235 of 1921) கூறுகிறது. கச்சியப்பனை யுதைத்த புலவனும் வீரன் எனப்படுவதை நோக்கின் இந்த வல்லையந்தாதி பாடிய வீரவரதையன் அப்புலவனோ என நினைத்தற் கிட முண்டாயினும், வீரவரதையன் காலம் பிற்பட்டதாகலின், பொருந்துவதாக இல்லை. தொண்டைமண்டல சதகவுரைகாரர், வல்லை யென்பது செங்கற்பட்டை யடுத்து வல்லமென்றும், காளத்தி முதலியார் மகன் கச்சியப்பன் என்றும் கூறுவர். காளத்தி மகனான கச்சியப்பன் மிகுந்த செல்வமும், சிறந்த கொடை நலமும், பிழைத்தாரைப் பொறுக்கும் பெருந்தகைமையும் உடையவன். ஒருகால் வீரனென்ற புலவன் கச்சியப்பன் முன் பாடிச் சென்றானாக, கச்சியப்பன் வேறு காரியம் பார்த்ததனால் அதனைச் செவிக்கொள்ளானாயினன். அதுகண்ட வீரன், தமிழ்ப் புலமையை யிகழ்ந்தானென வெகுண்டு, கச்சியப்பனை மார்பில் தன் காலால் உதைத்தான். உதையுண்ட கச்சியப்பன், அதற்கு அவனை யொறுக்காது பொறுத்துத் தமிழைக் கேளாது புறக் கணித்தது தன் தவறென்று நினைந்து வீரற்குக் காலுக்குப் பொன் வெண்டயமும் வேறு பல பரிசிலும் நல்கினான். புலவனும், தான் நாணத் தனக்கு நன்னயம் செய்த கச்சியப்பனது பெருந்தகைமையை வியந்து, இப்பாட்டைப் பாடினா னென்பர். இதனைத் திருக்கை வழக்கம் என்னும் நூல், ‘நேர்த்திபெற, வண்டமிழோன் றானுதைத்த வாகுளகா லுக்குப்பொன், வெண்டயமிட் டேவணங்கும் வெற்றிக்கை’ என்று குறிக்கின்றது. ‘மிகுதியான் மிக்கது செய்த வீரனைத் தான் தன் தகுதியால் வென்று’ வணக்கத்தால் மேம்பட்டமை தோன்ற, திருக்கை வழக்கம் “வெற்றிக்கை”யென்பதாயிற்று. வீரன் என்பவனை அரிச்சந்திர புராணம் பாடிய வீரகவிராயர் என்று கூறுவோரும் உண்டு. “எப்போதுங் கற்றவர்க்குப் பண்புடனே” என்றும் பாடவேறுபா டுண்டு. காலுக்கு வெண்டயமும் வேறு பல செல்வங்களும் நல்கினமையின், “மெச்சி யப்பாலும் கொடுக்கும்” என்றான். காளத்திக் கச்சியப்பன் - காளத்திக்கு மகனான கச்சியப்பன். பெருஞ் செல்வனாயினும் தவறு செய்த வழிக் கழிகண்ணோட்டஞ் செய்யாது உதைத்தொறுத்தமைக்குக் கச்சியப்பன் மெச்சினா னென்றான்.
இச்செய்தியை, “வில்லைச் செருப்பிட்ட காலா லுதைத்து வியனுலகிற், சொல்லற் கரிய புகழ்கொடுத் தோன்துட்ட வீரன் றன்னாற், பல்லக்கி லேயன்றி மண்படு மோவென்னும் பாடல் கொண்ட, வல்லைப் பதிக்கச்சி யப்பனும் வாழ்தொண்டை மண்டலமே” (60) என்று தொண்டைமண்டல சதகம் கூறுகிறது.
ஒரு புலவன்
வெண்பா
அடும்போதுஞ் சொல்லில்லை யென்னு மடுஞ்சோ
றிடும்போதுஞ் சொல்லில்லை யென்னுங் - குடும்பமெனும்
பேய்க்கொளித்துப் போகின்றேன் பேரையூ ராதிபனே
தாய்க்கொளித்த சூலுண்டோ தான். 200
இது, வண்டியூர்க் கெழுந்தருளப் பண்ணுகிற மண்டபத்திற் சொல்லியது.
குறிப்பு :- இதனைப் பாடிய புலவனும் பாட்டுக் கொண்ட பேரையூர் அதிபனும் இன்னாரென்று தெரியவில்லை, பேரையூ ரென்பது பாண்டி நாட்டில் திருமங்கலத்துக்கு மேற்கில் உளது. பேரையூர் தலைவன்பால் விடைபெற்றுத் தனக்குரியதாகிய வண்டியூர்க்குப் புறப்படுங்கால், முகப்பு மண்டபத்தே நின்று புலவன் இப்பாட்டைப் பாடினன்; வண்டியூர் மதுரைக்கு அண்மையில் உளது. இனி, வண்டியூர்ந்து தன்னூர்க்குச் செல்வான் விடைபெறும் புலவன் மண்டபத்தே நின்று சொல்லியதென்றும் கூறுவர். சொல், நெல்லையும் குறிக்கும். அடும் போதும், இடும் போதும் சொல்லில்லை யென்றது, எப்போதும் இல்லை யென்னும் சொல்லே நிலவும் குடும்ப நிலை குறித்துநின்றது. இது நீ நன்கறிந்த தென்பான், “தாய்க் கொளித்த சூலூண்டோ தான்” என்றான். தாயறியாத சூல் உண்டோ என்பது உலக வழக்கு.
பிராமணப் பிள்ளையன்
வெண்பா
ஒன்று மறியோநா மும்மாணை யப்பரே
சென்று தொழில்புரியுஞ் சீபதியார் - கன்றக்
கயிற்றினாற் கட்டிக் கதவுபடத் தேற்றி
இயற்றினா லென்செய்வோம் யாம். 201
இது கேட்டு வேம்பத்தூர் பிராமணப் பிள்ளையன் பாடியது.
குறிப்பு:- பேரையூர் அதிபன் மண்டபத்திற் புலவன் இவ்வாறு பாடுகையில் வேம்பத்தூர்ப் பிராமணப் பிள்ளையன் என்பவன் அங்கே யிருந்து அதனைக்கேட்டு இப்பாட்டைப் பாடினான். இப்பிள்ளையனது வேம்பத்தூர் பாண்டிநாட்டு வேம்பித்தூர். சீபதியார் - திருமால். குடும்பமெனும் பேயோடு உம்மை நீங்கவொட்டாது பிணித்திருக்கின்றராகலின், இது குறித்து நாம் ஒன்றும் செய்யும் வலியில்லேம் என்பான், “என் செய்வோம்யாம்” என்றான். கன்ற - தழும்புண்டாக. “ஓடியுய்தலுங் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம். 193) என்று சான்றோர் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது.
அம்மைச்சி
வெண்பா
பெருமாள் திருநாளைப் பேயாக்க வென்றோ
வருமாண்டு தோறுமிந்த மாண்பா - ஒருநாளும்
மாக்குதிரை யேறறியார் மாசனங்க ளாமணக்கஞ்
சாய்க்குதிரை யேறினார் தாம். 202
பாப்புக் குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர்
தேப்பெருமா ளேகச்சிச் செல்வரே - கோப்பமைந்த
கொம்மைச் சிகரலங்கைக் கோட்டையென்று கொண்டீரோ
அம்மைச்சி வாழ்வா ளகம். 203
இவை, அம்மைச்சி, பிராமணர் தன் வீட்டைப் பிடுங்கிய போது பாடியவை.
குறிப்பு:- அம்மைச்சி என்பவள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு தாசி. அவள் இனிய கவி பாடும் வன்மையுடையள். காஞ்சி புரத்தின் பெருமாள்கோயில் தேர் வரும் தெருவில் அவள் வீடு இருந்தது. பெருமாள் தேர் அவள் வீட்டருகே வந்ததும் சாய்ந்து வீட்டருகே சென்றதென்றும், அதன்பொருட்டு வீட்டின் முகப்பை இடிக்கவேண்டு மென்றும் தேரைச் செலுத்தும் பிராமணர்கள் அவள் வீட்டுக் கூரையைப் பிரித்து, முகப்பை இடிக்கத் தலைப் பட்டனர். அதுகண்டு வருந்திய அம்மைச்சி, இவ்விரு வெண்பாக் கையும் பாட, அத்தேர் நேரே செல்வதாயிற் றென்றும் கூறுவர். மாக் குதிரை - விலங்காகிய குதிரை. அறிவாரேல், இவ்வாறு வீட்டின்மேல் தேர் செல்ல விடார் என்பது. ஆமணக்கஞ் சாய்க் குதிரை - ஆமணக்கந் தட்டைக் கொண்டு செய்யப் பட்ட குதிரை. பாப்புக் குரங்கு - பார்ப்பனராகிய குரங்கு. சிகரலங்கை - சிகரங் களை யுடைய இலங்கைநகர்.
காளமேகப் புலவர்
வெண்பா
தந்தை பிறந்திறவாத் தன்மையாற் றன்மாம
னந்தம் பிறந்திறக்கு மாதலால் - முந்துமளி
நாணிக்கு வில்வேளு மாய்தலா னன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண். 204
இது, காளமேகம் சீரங்கத்தில் பிள்ளையார் வருவானே, னென்றதற்குப் பாடியது.
குறிப்பு:- காளமேகப்புலவர் ஒரு பார்ப்பனர். இவர் காலத்தே தென்னாட்டைச் சாளுவத் திருமலைராய னென்பவன் ஆண்டுவந்தான். அவன் கி.பி. 1453 முதல் 1468 வரை ஆட்சி புரிந்தா னென்பது வரலாறு. சகம் 1375ல் தோன்றிய அவனது கல்வெட்டொன்று திருவானைக்காவில் உளது. காளமேகப் புலவருடைய இயற்பெயர் வரதன் என்பது. ஒருகால் திருவரங்கத்தில் அரங்கநாதர்க்கு நடந்த விழாவில் விநாயகப்பிள்ளையார் எழுந் தருளுவது கண்ட சிலர், அங்கிருந்த காளமேகப்புலவரைக் காரணம் வினவினர். அவர்கட்கு விடைகூறுவாராய், இப்பாட்டைப் பாடின ரென்பர். தந்தை - சிவபெருமான், மாம் - மாமன். அனந்தம் - பன்முறையும், அளி நாண் - வண்டாகிய நாண். இக்கு வில் - கரும்பாகியவில். வேள் -மன்மதன். நன்மாமன் - தாய்மாமன். மாமனும் மாமன் மகனான மன்மதனும் இறந்து போதலால், பிள்ளையார் மாமன் காணிக்கு உரிமைகொண்டாட வந்தார் என்பதாம்
கட்டளைக் கலித்துறை
தடக்கட லிற்பள்ளி கொள்ளுவம் யாமதைச் சங்கரனார்
அடற்புலிக் குட்டிக் களித்தன ராலது கேட்டுநெஞ்சம்
நடுக்கம துற்றது கைகா லெழாநளி னத்தியென்னை
இடுக்கடி பாயைச் சுருட்டடி யேறடி யம்பலத்தே. 205
இது, பாகவதரிட்ட சமுத்திக்குப் பாடியது. “இடுக்கடி பாயைச் சுருட்டடி யேறடி யம்பலத்தே” என்பது பாகவத ரிட்ட சமுத்தி.
குறிப்பு:- காளமேகப்புலவர் ஒருகால் சீரங்கத்திலிருந்த பாகவதர் ஒருவரைக் கண்டார். விஷ்ணுபத்தர்களைப் பாகவத ரென்பவாகலின், இங்கே பாகவதரென்பவர் சீரங்கத்தில் செல்வ மிக்குடைய திருமாலடியாராவர். அவர் சிறந்த தமிழறிவு முடையரா யிருந்தமையின், காளமேகப்புலவரை நோக்கி, “இடுக்கடி பாயைச் சுருட்டடி ஏறடி யம்பலத்தே” என்பதை ஈற்றடியாகக் கொண்டு கட்டளைக் கலித்துறை பாடுக என்றார். அவர் விரும்பியேற்குமாறு காளமேகனார் இப்பாட்டைப் பாடினாரென்பர். திருமால் திருமகளை நோக்கிக் கூறும் கூற்றாக, இப்பாட்டு அமைந்துள்ளது. தடக் கடல் - பெரிய கடலாகிய பாற்கடல். அடற் புலிக்குட்டி - வியாக்கிரபாத முனிவருடைய மகனாகிய உபமன்னியு. “பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்தபிரான்” என்று சேந்தனார் கூறுவது காண்க. நளினத்தி - தாமரைமலரில் இருக்கும் திருமகளே. என்னை இடுக்கடி - என்ன சங்கடம். பாய் - தாமரைப்பூ. சுருட்டுதல் - கூப்புதல். அம்பலம் - தில்லையம்பலம். ‘எங்கட் குரிய இடத்தைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டீரே; வேறிடம் இல்லையே’ என முறையிடவேண்டும் என்பான், “ஏறடி யம்பலத்தே” யென்றான்.
வெண்பா
சீரங்கத் தார்க்குந் திருவானைக் காவார்க்கும்
போரங்க மாகப் பொருவதேன் - ஓரங்கள்
வேண்டாமி தெல்லாம் விகற்பந் தெரியாதே
ஆண்டாருந் தாசருமா னால். 206
இது, சைவர்க்கும் தாதர்க்கும் சண்டையானபோது பாடியது.
குறிப்பு:- சிவனடியார்களை ஆண்டா ரென்றும், திருமாலடி யார்களைத் தாசரென்றும் கூறுவது வழக்கு. தாராசு ரத்துக் கல்வெட்டுக்கள் சிவனடியார்களை ஆண்டார் என்றே குறிப்பது காண்க. தாச ரென்பது தாதரென வழங்கும். போர் அங்கமாகப் பொருவது அவரவரும் தங்கள் திருப்பணியின் அங்கமாகப் பொருவதைச் செய்கின்றமை. ஓரம் - ஒரு பக்கம் சாய்தல். விகற்பம் - வேறுபாடு. ஆண்டாரும் அடிமைகளும் (தாதர்கள்) கூடினால் உயர்வு தாழ்வு குறித்து வேறுபடுவது இயல்பாதலால், “விகற்பம் தெரியாதோ” என்றான். சைவருக்கும் வைணவருக்கும் சண்டையுண்டானதாகச் சீரங்கத்துக் கல்வெட் டொன்று (A.R.No. 106 of 1937 - 8) கூறுகிறது.
கட்டளைக் கலித்துறை
முதிரத் தமிழ்தெரி நின்பாட றன்னை முறையறிந்தே
யெதிரொக்கக் கோப்பதற் கேழெழு பேரில்லை யின்றமிழின்
பதரைத் தெரிந்தெறி கோவில்லை யேறப் பலகையில்லை
மதுரைக்கு நீசென்ற தெவ்வாறு ஞான வரோதயனே. 207
இது, ஞானவரோதயர் மதுரைக்குப் போனபோது காளமேகம் எழுதியனுப்பின கவிதை.
குறிப்பு:- ஞானவரோதயர் எனப்படுவர் திருச்சிராப் பள்ளிக்கு மேற்கிலுள்ள வயலூரில் வாழ்ந்த சைவத்துறவி; கந்தபுராணப்பகுதிகளுள் ஒன்றாகிய உபதேசகாண்டத்தைச் செய்யுளாக எழுதிய செந்தமிழ்ப்புலவர். இந்த உபதேசகாண்டம் முழுதும் சென்னை அரசியற் கையெழுத்து நூல்நிலையத்தில் உள்ளது. இதன்கண், “இதில் ஆறு காண்டமும் காஞ்சிபுரம் ஆயிரக்கால் மண்டபத்திலே எழுந்தருளியிருக்கும் உலக முட்கொண்டுவப்பச் செந்தமிழ்க் கொருசீர் வரம்பாகிய என்று பாடச்சொல்லிக் கச்சியப்பருக்கு அனுக்கிரகம் பண்ண, அவர் ஆறு காண்டமும் 10500 செய்யுளும் பாடினார். பின்பு உறை யூருக்கு மேற்கே வயலூரி லெழுந்தருளியிருக்கும் ஆறுமுகசுவாமி உலக முட்கொண்டுவப்ப முருகவேள் என்று பாடச்சொல்ல, ஞானவ ரோதய பண்டாரம் ஏழாம் காண்டம் உபதேசகாண்ட மொன்றும்ட 2600 ஆகப் பாடினார். சங்கர சங்கிதையில் சிவரகசிய காண்டம் 13000 கிரந்தமும் ஏழு காண்டமாகத் தமிழ் பண்ணின பாட்டு 13221,” என்றொரு குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இதனுடைய காப்புச் செய்யுள், “வயலூர் தனிலெந்தைக், கெங்கணுலகும்புகழ வுபதேசஞ்செய் தெளியேற்கு மவ்வழியென் றிரங்கிச் சீர்த்தி, பொங்குதமிழ் மொழியினுப தேசகாண்டம் புகறியெனச் சிறிதருளும் புனிதன் செவ்வேள்” என்று கூறுவது மேலே குறித்த குறிப்பை வற்புறுத்துகிறது. கோனேரியப்பர் பாடிய உபதேசகாண்டம் இவர் பாடிய உபதேசகாண்டத்துக்குப் பிற்பட்டது. இந்த வரோதயர் மதுரைக்குப் போனபோது காளமேகப் புலவர் அவரது புலமைச்சிறப்பை வியந்து இப்பாட்டைப் பாடி விடுத்தா ரென்பர், ஏழேழு பேர் நாற்பத்தொன்பது புலவர் கோ- பிள்ளைப் பாண்டியன். பலகை - சங்கப்பலகை. “காளமேகப்புலவர் இப் பெரியாரை யும் இவர் புலமையையும் பெரிதுஞ் சிறப்பித்துப் பாடுதலாலும் வயலூர்ப்பக்கத்துள்ள திருவானைக்காச் சிவ பிரானிடம் ஈடுபாடுடைமையாலும், அப்புலவர்க்கு இப்பெரியார் ஆசிரியர்போலும்” என்று திரு. மு. இராகவையங்கார் கருதுகின்றார்.
வெண்பா
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த விறைவர் சடாம
குடத்திலே கங்கையடங் கும். 208
இது, திருமலைராயன் சபையிற் ‘கங்கை குடத்திலே அடங்கப் பாடு’மென்று சொன்னபோது காளமேகப் புலவர் பாடியது.
குறிப்பு:- சாளுவத் திருமலைராயன் தமிழ்ப்புலவர்களை ஆதரிக்கும் சிறந்த தமிழன்பன். அவனவையில் பாவலரும் புலவரும் கூடியிருந்து புலமைக்கூட்டுண்பது வழக்கம். ஒருகால் புலவ ரவையிலிருந்த காளமேகப் புலவரை நோக்கிக் ‘கங்கை குடத்திலே யடங்கப் பாடுக’ என்று திருமலைராயன் சொல்லவே, புலவர் இப் பாட்டைப் பாடினர். பெண்ணையிடத்திலே வைத்த இறைவர் உமாதேவியை இடப் பாகத்திலே யுடைய இறைவனாகிய சிவபெருமான். சடாமாகுடம் - சடையாகிய முடி. சடாம குடத்திலே என்பதை, சடாம எனவும், குடத்திலே யெனவும் முறித்துக் கொண்டது காளமேகத்தின் பாவன்மை.
விருத்தம்
இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா
னக்கினி யுதரம்விட் டகலான்
எமனெனைக் கருதா னரனெனக் கருதி
நிருதிவந் தென்னையென் செய்வான்
அந்தமாம் வருண னிருகண்விட் டகலான்
அகத்துமக் களுக்குமப் படியே
அநிலமா மரியே யமுதமாய் வருவ
னாரெனை யுலகினி லொப்பார்
சந்தத மிந்த வரிசையே பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலைசெயு மென்னை நிலைசெய்கல் யாணிச்
சாளுவத் திருமலை ராயன்
மந்தரப் புயனாங் கோப்பைய னுதவு
மகிபதி விதரண ராமன்
வாக்கினாற் குபேர னாக்கின னிவனே
மாசிலீ சானனா னவனே. 209
இது, காளமேகப்புலவர் சாளுவத் திருமலைராயனைப் பாடியது.
குறிப்பு:- சாளுவத் திருமலைராயன் பதினைந்தாம் நூற்றாண்டில் தென்னாட்டில் விசயநகர வேந்தர் கீழ் வாழ்ந்த சிற்றரசன். இவனது தலைநகரம் திருமலைராயன் பட்டின மென்பது. இதுவே இவனுடைய கல்வெட்டுக்களில் கூறப்படும், “சுங்கந் தவிர்த்த சோழநல்லூரான திருமலைராசபுரம்” போலும். தான் பண்டைய சளுக்க மன்னர்களின் வழித்தோன்றல் என்பது தோன்ற இவன் தன்னைச் “சாளுவத் திருமலை தேவமகாராசர்” (S.I.I.Vol. II. No. 23) என்று கூறிக்கொள்ளுகிறான். இதனால் இவன் காலத்தவரான காளமேகனார், “கல்யாணிச் சாளுவத் திருமலைராயன்” என்று குறிக்கின்றார். இத்திருமலைராயன் தந்தை கோப்பையன் என்பது. கல்யாணி, மேலைச்சளுக்க மன்னர் களின் தலைநகரம். திருமலைராயன் காளமேகனார்க்குத் தக்க பரிசிலும் மிக்க செல்வமும் தந்து சிறப்பித்தது கண்டு அவனை வியந்து இப்பாட்டைப் பாடினார். இந்திரன் கலையாய் என்மருங் கிருந்தான்- உடலெங்கும் கண் படைத்த இந்திரன் யான் உடுக்கும் உடையாய் இடையில் இருந்தனன்; என் உடை முழுதும் பீறி யிருந்தது. அக்கினி யென்றது பசித்தீயை. அரன் - சிவன். எமன் சிவனை யணுகான், முன்பொருகால் சென்று உதையுண்டதனால். வருணன், தண்ணீரைக் குறிப்பது. அநில அரி - காற்று. அமுதமாய் வருவன் - காற்றே உணவாவது. சந்ததகம் - எப்பொதும். தரித்திரராசன் - வறுமையாகிய வேந்தன். எளிதில் வெல்ல முடியாமை தோன்ற. வேந்தனென உருவகம் செய்தார். தலை செயும் - இடந்தோறும் திரியும். மந்தரப்புயன் - மந்தரமலை போலும் தோளையுடையவன். ஈசானன் - செல்வன். இப்பாட்டில் இந்திரன் முதலிய திக்குப்பாலகர் எண்மரும் கூறப்படுவது காண்க.
வெண்பா.
கோக்குதிரை நின்குதிரை கோவன்மது ராவொன்னார்
மாக்குதிரை யெல்லா மனைக்குதிரை - தூக்குதிரைத்
துங்கக் கரைக்குதிரை சொக்கன் குதிரைசது
ரங்கக் குதிரைகளே யாம். 219
இது, காளமேகனார் அதிமதுர கவிராசன் பின்னே காணவரப் பாடியது.
குறிப்பு :- ஒருகால் காளமேகப்புலவர் போய்க்கொண்டி ருக்கையில் அவர் பின்னே அதிமதுர கவிராசன் என்பவர் ஒரு குதிரையூர்ந்து அவரைக்காணவந்தார். அவரை விரும்பி வர வேற்று அன்பால் அளவளாவிய காளமேகனார் அவருடைய குதிரையை வியந்து இப்பாட்டைப் பாடினார். கோக்குதிரை தலையாய குதிரை; கோவேறு கழுதையுமாம்; பண்டைநாளிற் செல்வமுடையார் கோவேறுகழுதையின் மேற் செல்வது மரபு “வானவண்கையன் அத்திரி யேற” (சிலப். 6:119) என இளங் கோவடிகள் கூறுதல் காண்க. கோவல் - கோவலூர்; இஃது அதிமதுரகவியின் ஊர். மனைக்குதிரை - நெசவாளர் பாவோடு தற்கு மனையில் வைத்திருக்கும் குதிரைகள்; இனி மனைகளில் தூலங்களின்மேல் நிறுத்தப்படும் குதிரைச்சட்டங்கள் என்று உரைத்தலு மொன்று. திரை - அலை. துங்கம் - உயர்வு. கரைக் குதிரை - நீருடைப்புக்களை யடைத்தற்கு வைக்கோல் முதலிய வற்றோடு கட்டப்பட்டு நிறுத்தப்படும் மரச்சட்டம்; “படும் குதிரை, கடும்புனலை ஒடுக்கப் பாய்ந்த பல குதிரைத் தறிபோன்ற” (கலிங்.463) என்பது காண்க.
சொக்கன் குதிரை - நரி; பொய்க்குதிரை. சதுரங்கக் குதிரை - சதுரங்கம் (Chess) ஆடுவோர் கொள்ளும் குதிரை.
வெண்பா
சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர்
மாலை யழகா மணிமார்பா - வேலை
அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி
விடங்கா பிரியா விடை. 211
இஃது, ஆரூரில் அதிமதுரகவிராசன் உடன் வந்து கோயிலிலே ஒரு கவி பாடுகெனக் காளமேகம் பாடியது.
குறிப்பு :- ஒருகால் காளமேகம் திருவாரூருக்குச் சென்றார். அவருடன் அதிமதுர கவியும் சென்றார். இருவரும் திருக்கோயிற்குச் சென்று இறைவனை வழிபடுகையில், அதிமதுரகவி காளமேகத்தை நோக்கி ஒரு கவி பாடுக என வேண்ட, அப்போது காளமேகம் இப்பாட்டைப் பாடினர். தேவர் அகண்டா தேவர்களாலும் அளந்து காணவியலாதவன்; இது திருவாரூர் இறைவன் திருப் பெயர்களுள் ஒன்று. அடங்கார்புரம் - திரிபுர வசுரர்களின் மதில். வீதிவிடங்கன் - திருவாரூர் இறைவன் பெயர்களுள் ஒன்று. விடங்கன் - அழகன்; உளியாற் செய்யப் படாது தானே தோன்றியது விடங்கம்.
வெண்பா
நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம்
பாணந்தான் மண்டின்ற பாணமே - தாணுவே
சீராரூர் வாழுஞ் சிவனேயஃ தெப்படிநீர்
நேராரூர் செற்ற நிகழ்வு. 212
இஃது, அதிமதுர கவிராசன் பாடியது.
குறிப்பு : தான் வேண்டியவுடனே காளமேகம் பாடக்கண்ட அதிமதுரக்கவி, காளமேகத்தின் குறிப்புப் படி இப்பாட்டைப் பாடினாரென்பர். சிவன் ஏந்திய வில்லுக்கு நாண் பாம்பாதலால் “நாணென்றால் நஞ்சிருக்கும்” என்றார். நஞ்சிருக்கும் என்பது நைந்து வலியிழந்திருக்கும் என்பது மற்றொரு குறிப்பு. கற்சாபம். கல்லாகிய வில். வளையாத வில்லென்பதற்கு “நற்சாபம்” என்றார். மண்தின்ற பாணம் - மண் முதலிய உலகுகளை யுண்ட திரு மாலாகிய அம்பு. “மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ” (பெருமா. திரு.) என்று சான்றோர் கூறுதல் காண்க. இப்பாட்டைப் பாடுங்கால், “பாணந்தான்” என்றபின், அதிமதுர கவிக்குப் பாட்டு வராதொழிய அருகிருந்த காளமேகம், “மண்டின்ற பாணமே” என்று எடுத்துக்கொடுத்தார் என்பர். மண்டின்ற பாணம் என்றது, மண்ணால் அரிப்புண்டு வலியிழந்த அம்பு என்று மற்றொரு குறிப்பும் தோன்றுதல் காண்க. தாணுவே - சிவனே. நேரார் - பகைவராகிய அசுரர். நிகழ்வு - செயல். நினைவு என்றும் பாடவேறுபா டுண்டு.
வெண்பா
சொக்கன் மதுரையிற் றொண்டர்க்கு முன்னவிழ்த்த
பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ - மிக்க
கரசரணா வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம்
அரசரணா மாவலிவா ணா. 213
இது, காளமேகப் புலவர் மாவலிவாணனைப் பாடிய வசை.
குறிப்பு:- மாவலிவாண ரென்னும் வாணர்குல வேந்தர்கள் தென்னாட்டில் விசயநகர வேந்தர் காலத்தில் சிற்றரசர்களாய் இருந்துவந்திருக்கின்றனர். அவருடைய கல்வெட்டுக்கள் பல திருச்சிரப்பள்ளி மதுரை நாடுகளில் காணப்படுகின்றன. அவர்களுட் பலர் தம்மை, “மூவராயர் கண்டன் மதியாத மன்னர் மணவாளன் சமரகோலாகலன் வீரகஞ்சுகன் வேதியர் காவலன் புவனேகவீரன் பூபால கோபாலன் பட்டமானங் காத்தான் பரராசதண்டதரன் நவகண்டபரகண்டன் சேதுமூல ரக்ஷாதுரந்தரன் மதுராபுரி மகாநாயகன் மானபூஷணன் ராஜபுங்கவன் வழுதிசேகரன் பாண்டிய குலாந்தகன் கருடகேதனன் கங்காகுலோத்தமன்” (P.S.I. No. 672) என்று சிறப்பித்துக் கொள்வதைக் காணலாம். காளமேகனார் காலத்தில், மதுரை நாட்டில் சிறப்புற்றிருந்த மாவலிவாணராயன் திருமாலிருஞ் சோலைநின்றான் மாவலிவாணாத ராயனும் அவன் மகன் சுந்தரத் தோளுடையான் மாபலிவாணாதராயனும் பிறரு மாவர். இவர்களுள் ஒருவனையே காளமேகப்புலவர் இப்பாட்டில் வைத்துப் பாடுகின்றார். இவ்வாறு அவர் பாடுதற்கு நேர்ந்த காரணம் விளங்கவில்லை. மற்று, இப்பகுதியில் வாழ்ந்த வாணர்கள் புலவர் பாடும் புகழுடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். குடுமியாமலைக் கல்வெட்டொன்று, மாவலிவாணரது கருடக் கொடியை வியந்து, “சென்னி புலிக்கொடியுந் தென்னன் கயற் கொடியும், மின்னுங் கழற்பிறையோன் விற்கொடியும் - மன்னும், வருசைக் கொடைத்திருமால் மாவலி வாணன், கருடக் கொடிக் கொடியுங் காண்” (P.S.I.No. 674) என்றும், மற்றொன்று, “மன்னாடு பூங்கழலான் வாணற் கிளங்கோமான், அன்னாள் வடுகெறிந்த வார்வத்தா -லின்னம், மீறங்கால்வே லண்ணல் வரும்வருமென்றஞ்சி, உறங்கா வடவேந்த ரூர்” (P.S.No. 676) என்றும், வேறொன்று, “இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றென், றழைத்த வழுகுரலோ யாவாந் - தழைத்தகுடை, மன்னவர் கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த, தென்னவர் nன திசை” (P.S.I. No.678) என்றும் கூறுவதனால் இதனைத் தெளியலாம். காளமேகப் புலவர் மாவலிவாணன் தென்னாட்டு வேந்தனைப் பொருது தோற்பித்தது குறித்தோ வேறுயாது காரணம் குறித்தோ இதனால் இகழ்ந்து கூறுகின்றார். சொக்கன் - திருவாலவாயுடைய சிவபெருமான். தொண்டர் - திருவாதவூரடிகள். பொய்க்குதிரை - பொய்யாகக் குதிரை யாக்கப்பட்ட நரிகள். கரசரணா - கையும் காலு முடையவனே; மக்களுருவேயன்றி மக்கட்குரிய பண் பில்லாதவனே என்பது கருத்து கரும்புறத்தார் - “மாக்களை வில்லாலே கொன்று அவற்றின் தசையைத் தின்கின்ற பல்லினராகிய இழிதொழிலாளர்” (சீவக. 2751. நச்சி. உரை); கரும்புறத்தார்க் கரசனாகிய நீ உலகுக்கு அரணாகா யன்றோ என்பார், “கரும்புறத் தார்க் கரசு அரணா” என்றார்.
வெண்பா
நள்ளாற்றுத் தெண்டிக்கு நல்வரதன் தீட்டுமயல்
விள்ளாம லெத்தனைநாள் வெம்புவேன் - கள்ள
மதனப் பயலொருவன் வந்துபொருஞ் சண்டைக்
குதவக் கடுகிவர வும். 214
இது, தெண்டிக்கு வரதன் விடுத்த தீட்டுக்கவி.
குறிப்பு:- தெண்டி யென்பது திருநள்ளாற்றில் பிறந்தாளொரு தாசியின் பெயர். இவள் பின் நாகபட்டினம் சென்று அங்கே வாழ்ந்தாளாயினும், நள்ளாற்றுத் தொடர்பு நீங்காது நள்ளாற்றுத் தெண்டி யெனவே வழங்கப்பட்டாள். தண்டி யென்பது தெண்டி யென மருவிற்று. வரதன் என்பது காளமேகனாரது இயற்பெயர். தீட்டும் - எழுதும். காளமேகப் புலவர் நாகபட்டினம் சென்றிருக் கையில் நள்ளாற்றுத் தெண்டியை ஒரு நாள் கண்டு, அவள்பால் தன் கருத்தை யிழந்தார். பின்பு அவள் உறவைப் பெற்று வாழ்ந்து வருகையில், அவள் ஒருகால் திருநள்ளாற்றுக்குச் செல்ல, அவர் திருக் குடந்தைக்குச் சென்றார். அபபோது அவர் இதனை எழுதி அவட்கு விடுத்தாரென்பர். விள்ளாமல் - சொல்லாமல். வெம்புதல் - காமத்தீயால் வேதல். உதவிசெய்பவர் தமது உதவியைக் காலமறிந்து விரைந்து செய்ய வேண்டு மென்பதுபட, “உதவக் கடுகிவர வும்” என்றார்.
வெண்பா
தேற லமிர்தந் தெவிட்டிடி னுங்கனிவாய்
ஊற லமிர்த முவட்டாதே - வீறுமதன்
தன்னாணை நள்ளாறர் தம்மாணை யும்மாணை
என்னாணை தெண்டியா ரே. 215
இது, தெண்டி நள்ளாற்றினின்று திருக்குடந்தை வந்த போது பாடியது.
குறிப்பு:- காளமேகப்புலவர் தீட்டிவிடுத்த கவியைக் கண்ட தெண்டி, உடனே புறப்பட்டுத் திருக்குடந்தைக்கு வந்து சேர்ந்தாள். அவளது கூட்டம் பெற்ற காளமேகப் புலவர் இப் பாட்டினைப் பாடின ரென்பர். தேறல் அமிர்தம் - தேன்கலந்த பால். வாய் ஊற லமிர்தம் - வாயில் ஊறும் நீர். உவட்டாது - தெவிட்டாது; மேன்மேலும் வேட்கையே விளைவிக்கும் என்பதாம்
வெண்பா
பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக்
காலமென வந்த வடைக்கலவன் -சூலந்
திருக்கையிலே யேந்துஞ் சிவனிருக்க வேளான்
இருக்கையிலே சாகலா னான். 216
இது, வேளாளன் வீட்டிலிருந் தில்லை யென்று சொன்ன போது, காளமேகப் புலவர் பாடியது.
குறிப்பு:- ஒருகால் காளமேகப்புலவர் செல்வனான ஒரு வேளாளனைக் காண அவன் வீட்டிற்குச் சென்று வினவினார். அக்காலை, அவன் உள்ளே இருந்து கொண்டே தன்னை இல்லை யென்று சொல்லுமாறு வீட்டிலுள்ளாரை யேவினான். அவர்களும் அவ்வாறே சொல்லிவிட்டனர். வேளாளன் வீட்டினுள்ளே இருப்பதைக் காளமேகனார் எவ்வண்ணமோ தெரிந்துகொண்டு உள்ளே யிருக்கும் அவன் காதிற் படும்படியாக இப்பாட்டைப் பாடினார். பால் அலகை - ஒருபால் உடல்தாங்கி நின்றே பேயாய் உருமாறிய காரைக்காலம்மையார். கோத்திரம் - கூட்டத்தாராகிய சிவனடியார் கள். காலம் என - காத்தற்கு இது காலம் என வேண்டிய மாத்திரையே. அடைக்கலவன் - எமனது கைப் பாசத்திற் படாது காத்து அடைக்கலம் தந்தவனான சிவன். இல்லை யெனற்குரியார் செத்தாரேயாகலின், இலன் என்று சொல்லப் பட்ட வேளாளனை, “சாகலானான்” என்றார்.
வெண்பா
முற்றாத காஞ்சியினு முல்லையினும் பாலையினும்
கற்றான்பின் சென்ற கருணைமால் - பெற்றான்சேர்
ஆலைப் பதித்தா ரளகத்தி யார்க்கயனார்
வேலைப் பதித்தார் விழி. 217
இது, நாகபட்டினத்துச் செட்டி கடையடைப்பித்துக் தன்னைப் பாடச்சொன்னபோது பாடினவற்றி லொருபாட்டு.
குறிப்பு:- நாகபட்டினத்தைச் சார்ந்த நாட்டில் ஆலங்குடி என்றோர் ஊருண்டு. அவ்வூர் வணிகனொருவன் நாகபட்டினத்திற் கடைவைத்து வாணிகம் செய்துவந்தான். அவற்குக் காளமேகப் புலவரைக்கொண்டு தன்மீது பாட்டுப் பாடிக்கொள்ள வேண்டு மென்ற விருப்பமுண்டாயிற்று. வேந்தர்களையும் பெருஞ்செல்வர் களையுமே பாடிவரும் அவரைத் தன் கருத்தை நிறைவேற்றுமாறு பன்முறை முயன்றும் வெற்றிபெறானாயினான். அவர்க்கும் தெண்டிக்கும் உளதாய நட்பினை யறிந்து, அவள் வாயிலாகப் பாட்டுப்பெற முயன்றான். அவள் ஒரு சூழ்ச்சி யெண்ணி, “இன்று நீ நெடுநேரம் கடையடையாதிருப்பாயாயின், காளமேகரை உன்பால் வரச்செய்வேன். அப்போது உன் கருத்தை நிறைவேற்றிக் கொள்,” என்று சொல்லிவிட்டு, அன்றிரவு வந்த காளமேகருக்குத் தான் உடல்நலமில்லாதிருப்பதாகவும், அதற்குச் சில சரக்குகளைச் சொல்லி வாங்கிவரவேண்டுமென்றும் சொன்னாள். இரவுப்போது வந்து நெடுநேர மாகியதனால் கடைகளெல்லாம் மூடப்பட்டன. காளமேகனார் கடைத்தெரு முற்றும் திரிந்து முடிவில் ஆலைப்பதி வணிகன் கடை திறந்திருப்பது கண்டு, அவனையடைந்து வேண்டும் சரக்குகளைத் தரச்சொன்னார். தான் கடையை அடைக்கப் போவதாகவும், தன்மீது பாட்டுப்பாடினால் தருவதாகவும் வணிகன் தெரிவித்தான். அப்போது அவர் சில பாட்டுக்களைப் பாடினா ரெனவும், அவற்றுள் இப்பாட்டு ஒன்று எனவும் கூறுவர். முற்றாத காஞ்சி யென்றது காஞ்சிபுரத்துக்கு வெளிப்படை. காஞ்சியிற் கற்றான்பின் திருமால் சென்றது கணி கண்ணனென்னும் புலவன் பின்னே திருமால் சென்ற வரலாறு. முல்லையில் கற்றான்பின் சென்றது இடையர் சேரியில் திருமால் கண்ணனாய்க் கன்றுகளை யுடைய ஆன்கூட்டத்தின் பின்னே சென்று மேய்த்த செய்தி. பாலையில் கற்றான்பின் சென்றது, திருமால் இராமனாய்த் தோன்றி விசுவாமித்திரரது வேள்வி காத்தற்கு அவர் பின்னே சென்ற வரலாறு. பெற்றான், வணிகனது இயற்பெய ரென்பர். ஆலைப்பதி ஆலங்குடி. அளகத்தியார் கூந்தலையுடைய மகளிர். அயனார்விழி வேலைப்பதித்தார் - பிரமதேவன், கண்களாக வேலை முகத்திற் பதித்துவிட்டான். கழறிய பாங்கற்குத் தலைவன் கூறும் கூற்றாக அமைந்தது இப்பாட்டு.
வெண்பா
சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்கெழுந்த வாயா புலையா - திருக்குடந்தை
நாயா நரியாவுன் னாயகமுஞ் சேய்வடிவுந்
தாயார்தான் கண்டிலளோ தான். 218
இது, காளமேகம் சவையப்ப நாயனைப் பாடிய கவி.
குறிப்பு:- சவையப்பநாய னென்பவன் திருக்குடந்தையில் வாழ்ந்தானொரு சோழியப் பார்ப்பனன். சோழியர் முன்குடுமி யுடையவர் என்பதை “நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலக் குடுமித் தலைய மன்ற, நெடுமலை நாட னூர்ந்த மாவே” (ஐங்.) எனச் சான்றோரும் கூறுதல் காண்க. நாயா - நாயனே. கண்டிலையோ என்றும் பாடவேறுபா டுண்டு. சவையப்ப நாயனைப் பற்றி இவ்வாறு பாட நேர்ந்தற்குரிய பொருத்தமான வரலாறொன்றும் தெரிந்திலது. பொருக் குலர்ந்த என்றும் பாடங்கூறுவர்.
வெண்பா
தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தா ரெல்லாந்
திருக்குளத்து மீனொழியத் தின்றார் - குருக்கொடுக்கும்
நம்பிமா ரென்றிருந்தோ நாட்டி லழிகூத்தி
தம்பிமா ராயிருந்தார் தாம். 219
இது, காளமேகம் திருக்கண்ணமங்கை நம்பியாரைப் பாடிய வசை,
குறிப்பு :- திருக்கண்ணமங்கை நம்பிமாரைக் காளமேகம் இவ்வாறு வசைபாடற் குரிய காரணம் தெளிவாகத் தெரிந்திலது. தானத்தார் - கோயில்களில் இருந்து பணிபுரியும் உயர்ந்தோர். “ஸ்ரீவல்லவச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீகயிலாசமுடையார் கோயில் தானத்தாருக்கும்” (A.R.No. 170 of 1895) என்று கல்வெட்டுக்கள் கூறுவது காண்க. குரு - பெருமை. உளத்துத் திருக்கு ஒழிய மீன் தின்றார் என இயைத்துக் கொள்க. திருக்கண்ணமங்கை, சோழநாட்டி லுள்ளது.
வெண்பா
கந்த மலரயனார் கண்ணபுர மின்னாருக்
கந்தவிள நீரைமுலை யாக்கினார் - சந்ததமுந்
தோற்றமுள தீத்தாட்குத் தோப்பைமுலை யாக்கினார்
ஏற்றமெவர்க் காமோ வினி. 229
இது, கண்ணபுரம் தீர்த்தாளைப் பாடிய வசை.
குறிப்பு:- திருக்கண்ணபுரத்திலே வாழ்ந்த ஒரு தாசிக்குத் தீர்த்தாள் என்பது பெயர். வசை பாடும் இயல்பினரான காள மேகப்புலவர் தீர்த்தாளைப் பாட நேர்ந்தபோது இதனைப் பாடினார் மின்னார் - மின்போலும் இடையையுடைய மகளிர். தோற்றம் - அழகு. தீர்த்தாள் என்பது தீர்த்தாளென மருவியது போல தோற்பை யென்பதும் தோப்பை என மருவிற்று. பொதுவாக மகளிர்க்கு இளநீரை முலையாக்கினவர், தீர்த்தாட்கு மட்டில் சிறப்பாகத் தோப்பை (தென்னந்தோப்பை) முலையாக்கினா ரென்றும், தோற்பையை முலையாக்கினா ரென்றும் கூறியவாறு. பிரமன் படைப்பில் தீர்த்தாள் ஒரு சிறந்த படைப்பு என்றற்கு “ஏற்ற மெவர்க் காமோ வினி” என்றார்.
கட்டளைக் கலித்துறை
செக்கோ மருங்குல் சிறுபய றோதனஞ் சிக்களகம்
வைக்கோற் கழிகற்றை யோகுழி யோவிழி வாவிதொறும்
கொக்கேறி மேய்குட வாசல்விண் ணாள்வரைக் கோம்பியன்னீர்
எக்கோ படைத்தது நீரே நெருப்பி லெரிந்தவரே. 221
இது, குடவாசல் விண்ணாள் தானே வசைபாடச் சொல்லக் காளமேகம் பாடிய கவி.
குறிப்பு :- குடவாசல் என்பது தஞ்சைமா நாட்டிலுள்ள தொரு பேரூர்; இதனைச் சான்றோர் குடவாயில் என்றனர்; பிற் காலத்தே அது குடவாசலென மருவிற்று. இவ்வூரில் வாழ்ந்த தாசிகளுள் விண்ணா ளென்பவள் ஒருத்தி. அவள் நல்ல அழகு டையவள். அவள்பால் காளமேகப் புலவர்க்கு அன்புண்டு. புலவர் வசைபாடுவதில் வித்தக ரென்ற பெயர் நாட்டில் பரவி யிருந்தமையின், ஒருகால் அவள் அவருடைய வசைப்பாட்டைக் கேட்க விரும்பித் தன்னையே வசைபாடுமாறு வேண்டினள். அதனால் காளமேகம் இப்பாட்டைப் பாடினார். அளகம் சிக்கு - கூந்தல் சிக்குண்டு தீயமணம் நாறுவது. அளகம் வைக்கோற் கழி கற்றையோ என இயையும். கோம்பி - ஓணான். எக்கோ படைத்தது - எந்தத் தலைவன் உங்களை வைத்துப் புரப்பான்.
விருத்தம்
போன போனவி டந்தொ றுந்தலை
பொட்டெ ழப்பிறர் குட்டவே
புண்ப டைத்தம னத்த னாகிய
பொட்டி புத்திர னத்திரன்
மான வீனனி லச்சை கேடனொ
ழுக்க மற்றபு ழுக்கையன்
மாண்ப னாம்புலிக் குட்டிச் சிங்கன்
வரைக்கு ளேறியி றங்குவீர்
பேனு மீருமெ டுக்க வோசடை
பின்னி வேப்பெணெய் வாக்கவோ
பிரிவி ழிக்கரி யெழுத வோவொரு
பீறு துண்டமு டுத்தவோ
கான கந்தனில் வைக்க வோவிரு
கால்வி லங்கிடு விக்கவோ
கற்க ரங்கொடு சாட வோவொரு
காரி யந்தனை யேவுமே. 222
இது காளமேகம் புலிக்குட்டிச் சிங்கனைப் பாடிய வசை.
குறிப்பு :- புலிக்குட்டிச் சிங்கனைப் பற்றிய வரலாறொன்றும் தெரிந்திலது. எவ்வாறோ அவன்மேல் வசைபாடவேண்டிய நிலை காளமேகத்துக்கு உண்டாகவே, இதனைப் பாடியுள்ளார். இப் பாட்டு, புலிக்குட்டிச்சிங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு தலைவன் தோழியைக் குறையுற்று “நீர் வேண்டுவன பணிமின்; யான் உமக்கு எல்லாச் செயலும் செய்யவல்லேன்;” என்னும் துறையில் அமைந்ததாகும். பொட்டெழ - பொட்டலாக. பொட்டி புத்திரன் - அறிவில்லாதவள் பெற்ற மகன். அத்திரன் - அம்புசெலுத்துபவன். வேம்பின் எண்ணெயைத் தலைக்கிட்டு மயிர் ஒப்பனை செய்தல் தாழ்ந்த மக்கள் செயல். அரி யெழுதல் - கண்ணில் மை தீட்டுதல். பீறு துண்டம். கந்தல் உடை. கல் கரங்கொடு சாடவோ - கல்லைக் கையிற்கொண்டு எறியவோ.
வெண்பா
நூலார்நா லாயிரநா னூற்றுநாற் பத்தொன்பான்
பாலார்நா னூற்றுநாற் பத்தொன்பான் - மேலார்நாற்
பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்கும்
கத்தன் மதுரையிற்சொக் கன். 223
இது முச்சங்கம், திருவிளையாட்டு, மதுரைச் சொக்கர் எல்லா மடங்கப் பாடிய கவி.
குறிப்பு :- ஒருகால் அறிஞர் சிலர் கூடியிருக்கையில் ஒரு பாட்டில் முச்சங்கத்தாரையும் மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களையும் மதுரைச் சொர்க்கரையும் அடக்கிப்பாடு மாறு காளமேகத்தைக் கேட்டனர். கேட்டார் மகிழக் காளமேகம் இவ்வெண்பாவிற் பாடிக்காட்டினார். நூலார் - நூல்வல்லாராகிய முதற்சங்கத்தவர். நாலாயிரநானூற்று நாற்பத்தொன்பான் - நாலாயி ரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர். பாலார் - இடைப்பாலாராகிய இடைச்சங்கத்தார்; இவர் நானூற்று நாற்பத்தொன்பது பேர். மேலார் - மேலாராகிய கடைச்சங்கத்தார்; இவர் நாற்பத்தொன் பதின்மர் கடைச் சங்கத்தாரென்றது, தகுதி பற்றியன்று என்றற்கு, “மேலா : ரென்றார். கத்தன் - தலைவன்.”
விருத்தம்
தூதஞ்சு நாழிகையி லாறுநா ழிகையினிற்
பல்சந்த மாலை சொலவும்
சூழுலா வந்தாதி யேழுநா ழிகையினிற்
றொகைபெற வகுத் தோதவும்
பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகையினிற்
பரணியொரு நாண் முழுதினிற்
பாரகா வியமெலா மீரிரு தினத்தினிற்
பகரவே கொடி கட்டினேன்
சீதஞ் செயுந்தொங்கன் மார்பினா னியலிசை
தெரிந்ததிரு மலை ராயன்முன்
சீறியே வாதுகவி பாடுதற் கெதிர்வருந்
திருட்டுக் கவிப் புலவரைக்
காதும் பிடித்துக் கவித்துக் கதுப்பிற்
கரத்திட் டடித்து முதுகிற்
கலனைவைத் தேமுழுக் கடிவாள மிட்டேறு
கவிகாள மேக நானே. 224
இது, காளமேகம் திருமலைராயன் சபைக் கெழுதிவிடுத்த கவி.
குறிப்பு :- இங்கே குறிக்கப்படும் திருமலைராயன் சாளுவத் திருமலைராயன். இவன் திருமலைராயன் பட்டினத்தில் இருந்த போதோ, திருவானைக்கா வந்திருந்தபோதோ காளமேகனார் இதனை எழுதி விடுத்தாராவர். இது தனது தகுதியை விளக்கி அரசர்க்குத் தெரிவிக்கும் கருத்துடையதாகையால் தற்புகழ்ச்சி யாகாது என்பர். தூது, பல்சந்தமாலை, உலா, அந்தாதி, மடல், கோவை, பரணி, பெருங்காவியம், சிறுகாவியம் முதலிய பல வகைத் தமிழ் நூல்கள் கூறப்படுவது காண்க. இவற்றின் இயல்பை இலக்கணவிளக்கப்பாட்டியல், வச்சணந்திமாலை முதலிய நூல்களுட் காணலாம்.
வெண்பா
வாசவய னந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகளா மேகமே - பூசுரனே
விண்டின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்
மண்டின்ற பாணமென்ற வாய் 225
இஃது அதிமதுர கவிராசன் பாடிய கையறம்.
குறிப்பு :- காளமேகப்புலவர் இறந்தபின் அவருடலைச் சுடலையில் வைத்துத் தீயிட்டனர். அப்போது உடனிருந்தவருள் அதிமதுரகவியும் ஒருவர். காளமேகத்தின் பிரிவு அவர்க்கு மிக்க துயரத்தைச் செய்தது. அவர் மனங்கசிந் துருகி இப்பாட்டைப் பாடினார். நந்தி என்பது காளமேகம் பிறந்த ஊராகிய நந்திபுரம். இஃது இப்போது நாதன்கோயில் என வழங்கும்; கும்பகோணத்துக் கருகிலுள்ளது. வரதன் என்பது காளமேகத்தின் இயற்பெயர். கவி வீசு காளமேகமே என இயையும், பூசுரன் - பார்ப்பான். பூசுரா என்றும், வேவதோ என்றும் ஐயையோ வென்றும் பாடவேறு பாடுண்டு. விண் தின்ற வெவ்வழல் - தீ காற்றிலும் காற்று விண்ணிலும் ஒடுங்கு மாயினும், காற்றுக் கட்புலனாகா மையின் “விண் தின்ற வெவ்வழல்” என்றார். பாவியேன் - பாவியேன் பொருட்டு; பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு விகாரத்தால் தொக்கது. மண்டின்ற பாண மென்ற வரலாற்றை இந்நூல் 211-ஆம் பாட்டுக் குறிப்பின்கட் காண்க.
குமார சரசுவதி
வெண்பா
கலிங்க மிழந்துதுதிக் கைச்சங்கந் தோற்று
மெலிந்துகட கந்நழுவ விட்டாள் - மலிந்தமலர்ப்
பொன்னிட்ட மானகிட்ண பூபாலா வுன்றனக்குப்
பின்னிட்ட வொட்டியன்போற் பெண். 226
இது, குமாரசரசுவதி, கிருட்டிணபூபாலன் ஒட்டியனைச் சயித்த போது பாடியது.
குறிப்பு:- கிருட்டினராயரென்பவர் விசயநகர வேந்தருள் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த ஒரு சிறந்த வேந்தராவர். இவர் வேந்தரானபின், உதயகிரியிலிருந்து குறும்புசெய்த ஒட்டிய வேந்தன் கசபதி பிரதாபருத்திரனை வென்று, கி.பி.1510-ல் அதனைக் கைப்பற்றினார் என்று வரலாறு (A.R. Para. 41 of 1934) கூறுகிறது, கிருட்டினதேவராயர் வேந்தரானபின், கசபதி பிரதா பருத்திரன் முகமதியருடன் கூடிக்கொண்டு சதிசெய்கிறானென ஒற்றரால், அறிந்து கிருட்டினதேவராயர் அவனை வளைத்துக் கொண்டனரென்றும், அவன், தன் தானைத்தலைவர்கள் தன்னைக் கைவிட்டன ரெனப் பிறழ வுணர்ந்து காட்டிற்கு ஓடிவிடவே, அவனுடைய தானைவீரர்களும் ஊக்கமிழந்து விசயநகரப்படைக் குடைந்து போயினரென்றும், பின்பு கிருட்டினதேவராயர் கசபதி இருப்பதை யறிந்து பெருந்தகைமையுடன் அவனொடு உறவு கொள்ள நினைந்து, அவன் மகளை மணந்துகொண்டாரென்றும் கசபதி பின்பு அவர்க்கு இணக்கமாய் நடந்துகொண்டானென்றும் கிருஷ்ணராயவிஜயம் என்ற நூல் கூறுகிறது. இதனை எழுதியவர் குமார துர்ஜதி யென்பாராவர். அவர் கிருட்டின ராயர்க்குப் பிற்பட்ட வேந்தர் காலத்தவர். ஆயினும் வரலாற்று ஆராய்ச்சி யாளரான இராபர்ட் சூவெல் என்பவர் (Robert Sewell) தாமெழுதிய1 நூலில், கிருட்டினதேவராயர் பிரதாபருத்திரனை வென்று அவன் மகள் துர்க்காதேவியை மணந்து கொண்டா ரென்று கூறியுள்ளார். பேராசிரியர் கிருஷ்ணசாமி அய்யங் காரவர்கள், பிரதாபருத்திரனை வென்ற செய்தியை உடன்பட்டு, அவன் மகளை மணந்துகொண்ட செய்தியை வற்புறுத்தும் வரலாற்றுச் சான்று இதுகாறும் கிடைக்கவில்லை யென்று ஒழி கின்றார். கிருட்டினதேவராயர் ஆந்திரமொழியில் இனிய கவிபாடும் பாவன்மையும், கற்றாரை ஆதரிக்கும் புலமை நலமும் உடையவர். ஆந்திரகவியான அல்லாசனி பெத்தண்ணா என்பவரைக் கிருட்டின தேவராயர் பலபடியாலும் சிறப்பித்திருக்கும் செய்தியைக் கல்வெட்டுக்களால் (A.R.1926 -7 Para 82) அறிகின்றோம். அக்காலத்தே குமாரசரசுவதியும் கிருட்டினதேவராயரால் ஆதரிக்கப் பெற்றனர் போலும்.
பிரதாபருத்திரனைக் கிருட்டினதேவராயர் வென்ற செய்தி கேட்டுத் தாயிரங்கல் என்னும் துறையில் இருபொருள்படச் சரசுவதியார் இப்பாட்டைப் பாடியுள்ளார். கிருட்டினபூபாலா, என் பெண் உனக்குப் பின்னிட்ட ஒட்டியன்போல் இழந்து, தோற்று, மெலிந்து நழுவ விட்டாள் என இயைத்து வினை முடிவுசெய்க. ஒட்டியன், கலிங்க நாட்டை யிழந்து கைச் சங்கம் தோற்றுக் கடகம் நழுவவிட்டான் என இயையும். இம்முறையில் கலிங்கம் கலிங்கநாடாகும். துதிக்கைச் சங்கம். வணங்குதற்குரிய சங்கமீச்சுரர் இருக்கும் சங்கம் என்னும் ஊர். இது வட பெண்ணைக் கரையில் உளது. இதன் பழம் பெயர் விரியூர் என்பது. இங்கேயுள்ள சிவபெருமான் திருக்கோயிலுக்குச் சங்க மீச்சுரம் என்று பெயர். அதனால் நாளடைவில் விரியூர் என்பது மறைந்து, சங்கமென்று மருவி வழங்கலாயிற்று. இதனை, அவ்வூரி லுள்ள கல்வெட்டு, “ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு- 5- வது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பாக்கை நாட்டில் விரியூரில் பெண்ணாற்று வடகரையில் ஸ்ரீசங்க மீச்சுரமுடைய நாயனார்க்கு” ‘No. 108 of Nellore Taluk) என்று கூறுவதனால் அறியலாம். கடகம் என்பது இப்போது கட்டாக் (Cuttack) என்று வழங்குகின்றது. பெண்ணுக்காம் போது கலிங்கம் ஆடையையும், சங்கம் வளையையும், கடகம் கைக்கடகத்தையும் குறிக்கும். நுதிக்கை யென்றும் பாடமுண்டு.
வெண்பா
கூத்தாடி லஞ்சக் கொடுக்கா வரேபேட்டிச்
சோத்தாட்டா வைவேசித் தொண்டனே - ஆத்தான
அந்த விழுப்புரமு மம்பிநக ருங்கெடுக்க
வந்தகுலா மாவபிரா மா. 227
இஃது அபிராமன் நாலுபாஷையிலும் பாடுகிறவரோ என்ற போது குமார சரசுவதி பாடியது.
குறிப்பு:- இந்த அபிராமனைப்பற்றிச் சோமசுந்தர தேசிக ரவர்கள் “அபிராமன் என்று பேருடைய கிருட்டின தேவராயரது தளபதி யொருவன் விழுப்புரத்துச் சீமையை மேற்பார்த்துக் கொண்டிருந்தான்; அவன் குமார சரசுவதியைப் பார்த்து ஏளனமாக “நான்கு பாஷையிலும் பாடுகிறவரோ” என்று கூறினான். அதனைக் கேட்ட புலவர் உடனே அவனுடைய தீயகுணங்களைச் சுட்டி, இவ்வெண்பாவைப் பாடி அவனை அவமானமடையச் செய்தார்” என்று கூறுகின்றார். இந்தப் பாட்டின் பொருள், கூத்தாடிப் பயலே, வேசிகனே, அடே மகளைப் பெண்டாள்
பவனே, இறுமாப்புக் கொண்டவனே, கொள்ளை கொண்டவனே, விழுப்புரத்தையும் அம்பி நகரையும் கெடுக்கவந்த அடிமைப் பயலே என்பதாம். ஐவேசியென்பது முதல், அபிராமா என்பது வரையிலுள்ளவை தமிழ், லஞ்சக்கொடுக்கு - தெலுங்குமொழி அரே பேட்டி சோத் - இந்துஸ்தானி; தாட்டான் - கன்னடம்; ஆத்தானம் - வடமொழி. இதன்கண் காணப்படும் விழுப்புரம் அக்காலத்தும் சிறந்து விளங்கிற்றென்பதை, “பனையூர் நாட்டு விழுப்புரத்துப் பிரமதேயமான ஜனநாதச் சதுர்வேதிமங்கலம்” (A.R.No.65 of 1918) என்று கல்வெட்டுக் கூறுவதால்காண்க. அம்பி யென்பது இப்போது ஹம்ப்பி (Humpi) என வழங்குகிறது.
தத்துவப் பிரகாசர்
வெண்பா
மருவுபுகழ்க் கிட்ண மகாராய ராணை
அரிய வடமலையா னாணை - திருவாரூர்ப்
பாகற் கொடியறுப்பார் பாதந்திரு வாணை
தியாகக் கொடியறுக்கா தே. 228
இது, திருவாரூர்க் கொடியிறக்காமல் தத்துவப்பிரகாசர் தகைந்தது.
குறிப்பு:- தத்துவப்பிரகாசர் கும்பகோணத்துக் கண்மை யிலுள்ள சிவபுரம் என்ற வூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் மரபிலே தோன்றிக் கல்வி கேள்விகளில் நிறைந்து, சீகாழியை யடைந்து சிற்றம்பல நாடிகளிடத்தில் ஞானோபதேசம் பெற்றுத் திருவாரூர் சென்று வாழ்ந்துவந்தார்; அங்குச் சிவபெருமான் திருக்கோயில் நிர்வாகத்தை வகித்து நடத்துங்கால் பட்டர்களுள் ஒருசாரார் சரிவரக் கோயிற் காரியங்களை நடத்தாமைகண்டு வருந்தியிருந்தார். அப்போது திருவாரூர் கோயில் திருவிழா முடிவில் கொடியிறக்க வேண்டிய நிலை வந்தது. செய்தற்குரிய செயல்வகைகளைப் பட்டர்கள் குறைவறச் செய்யாமையால் கொடியை யிறக்கக் கூடாதென்பாராய் தத்துவப்பிரகாசர். இப்பாட்டினைப் பாடினார். தத்துவப்பிரகாசம் என்ற நூலை யெழுதிய காரணத்தால் இவர்க்குத் தத்துவப்பிரகாசர் என்ற பெயருண்டாயிற்று. இவரது இயற்பெயர் மறைந்துவிட்டது. கொடியை இறக்கலாகாது எனத் தகைதலின் வேந்தன்பேரில் ஓராணையும் அவனுடைய அதிகாரியின் பேரிலோராணையும் இறைவன்பேரிலோராணையும் செய்தார். கிட்ணமகாராய ரென்பவர் முன்னே சொன்ன விசயநகர வேந்தரான கிருட்டின தேவமகாராயராவர். வடமலையென்பது கிருஷ்ணராயருக்குப் பதிலாக இருந்து அரச காரியம் பார்ப்பவர். இவர், “தஞ்சை நாட்டில் கிருட்டினதேவராயரது பிரதிநிதியாக இருந்தவ” ரென்றும், “அரிதாசருடைய தமையன்” என்றும் “திருவேங்கட முடையார் புத்திர”னென்றும் இலக்கண விளக்கப் பரம்பரைச் சோமசுந்தர தேசிகர் *கூறுகின்றார். பாகற்கொடி யறுப்பார். திருவாரூர்த் திருக்கோயிலில் பங்குனித்திங்களில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் இறைவன் தேரினின் றிழிந்ததும் இராசநாராயண மண்டபத்தில் திருமுழுக்காட்டப்படுவதும், பின்பு வேலங்குடி யென்னும் ஊர்க்குச் சென்று அங்கே உண்டாக்கப்பட்டிருக்கும் பாகற் கொடியை யறுத்துவிட்டுத் திரும்ப வந்து மக்கட்குக் காட்சி வழங்குவதும் வழக்கம். இதனால் திருவாரூர்த் தியாகப்பெருமானைப் “பாகற்கொடியறுப்பார்” என்றார். “ஆடாது மாடித் தியாகர் பாகற்கொடியறுப்பார்” என்பது நாட்டு வழக்கு. “தியாகக் கொடியே தனிவளரச் செய்தொருநாள், பாகற்கொடியே பல வறுப்பான்” (421) என்பது திருவாரூ ருலா.
வெண்பா
ஊழித் துலுக்கல்ல வொட்டியன் றானுமல்ல
வீழித் துலுக்குவந்து மேலிட்டு - வாழி
சிறந்ததிரு வாரூர்த் தியாகருடைப் பூசை
இறந்ததே கிட்டினரா யா. 229
இது, தத்துவப்பிரகாசர் கிருட்டினமகாராயர்க் கெழுதி விடுத்த பாட்டு.
குறிப்பு :- திருவாரூர்க் கோயிற் காரியம் செய்த பட்டர்களுள் ஒருசாரார் திருவீழமிழலையிலிருந்து வந்தவர். அவர்கள் தம் கடமையைக் முற்றச் செய்யாது அழிவு வேலைகளே மிகுதியும் செய்தனர். அதுகண்டு பொறாத தத்துவப்பிரகாசர், “திருவாரூர்த் தியாகப் பெருமான் திருக்கோயிற் பூசை கெட்ட” தெனக் கிட்டினதேவராயார்க்குத் தெரிவிப்பாராய் இவ்வெண்பாவை எழுதிவிடுத்தார் என்பர். கிட்டினதேவராயர் காலத் துக்கு முன்பே தமிழ் நாட்டில் துலுக்கரும் ஒட்டியரும் புகுந்து பல தீங்குகளைச் செய்தனர். இவற்றைத் திருவாமாத்தூரிலுள்ள கல்வெட்டும் (A.R.No. 434 of 1903) திருக்கோயிலூரிலுள்ள கல்வெட்டும் (A.R.No. 1 of 1905) ஜம்பையிலுள்ள கல்வெட்டும் (A.R.No. 93 of 1906) குறிப்பது காண்க. துலுக்கர் செய்ததுபோலவே திருவீழி மிழலைப் பட்டர்களும் செய்ததுபற்றி, அவர்களை “வீழித் துலுக்குவந்து மேலிட்டு” என்றார்.
வெண்பா
உண்ட வயிற்றி லுமிக்காந்த லிட்டதே
தொண்டரே வீழித் துலுக்கரே - பண்டெல்லாம்
அப்ப மவலெள் ளதிரசமுந் தோசைகளும்
கப்புவதும் போச்சே கவிழ்ந்து. 230
இது கேட்டு ராயர் சிரீ பட்டரை மாற்றியபோது தத்துவப் பிரகாசர் பாடியது.
குறிப்பு :- தத்துவப்பிரகாசர் விடுத்த செய்தியைக் கேட்டு இராயர் உண்மை தெரிந்து அந்தப் பட்டர்களை வேலை யினின்றும் நீக்கிவிட்டார். அவர்கள் வேலையிழந்து போகக்கண்ட தத்துவப் பிரகாசர் தமது மனக்குறை தீர்ந்ததனா லுண்டான மகிழ்ச்சியால் பட்டர்களை யிகழ்ந்து இப்பாட்டைப் பாடினார். உண்ட வயிற்றில் உமிக்காந்தலிட்டது - சோறுண்ட வயிற்றிற்கு இனிச் சோறு கொடாது வெந்து கரிந்த உமியைக் கொடுப்பது என்பது உலக வழக்கு. திருக்கோயிலில் சிவப்பணி புரியும் சீரியோராதலின், தொண்டரெனப் படுவர்; ஈண்டு இகழ்ச்சிக்குறிப்பு. கப்புவது - வாயிலிட்டு மென்றுண்ணாது விழுங்குவது கவிழ்ந்து போச்சு என இயையும்.
வெண்பா
மூட்டை கலம்புழுதி முக்கலம் சுத்தப்பாழ்
வீட்டை விடுதியாய் விட்டாயே - போட்ட
தடுக்கெல்லாம் பீறல் தலையணையேல் வைக்கோல்
படுக்கலா மோசொல்லப் பா. 231
இது, சாளுவநாயக்கர் படுத்துக்கொள்ளச் சொன்னபோது, தத்துவப்பிரகாசர் பாடிய கவி.
குறிப்பு :- இச்சாளுவ நாயக்கர் சாளுவ மல்லப்ப நாயக்கர் என்றும், இவர் கிருட்டினதேவராயருக்குப் “பிரதிநிதியாய்” வழுதிலாம்பட்டுச் சாவடியில் இருந்தா ரென்றும், இராயர் பெயரால் திருப்பணி பல செய்துள்ளாரென்றும் கல்வெட்டுக் களால் (A.R.No. 230 of 1927 para. 83 of A.R. 1926- 27) அறிகின்றோம். ஒருகால் தத்துவப்பிரகாசர் அவரைக் காணச் சென்றபோது, இரவுப்போதானபடியால், ஒரு விடுதியைத் தந்து அதில் இவரை இருக்கச்செய்தார். அவ் விடுதி பாழிடமாகவும் இருத்தற்காகாதாகவும் காணப்பட்டதனால், தத்துவப்பிரகாசர் இப்பாட்டைப் பாடினார். மூட்டை - மூட்டைப் பூச்சி. தடுக்கு - பாய். இதுகேட்டு நாயக்கர், வேறு விடுதிதந்து இனிது உறங்குதற் கேற்ற ஏற்பாட்டைச் செய்தார் என்பர்.
விருத்தம்
ஆயிரம் புலவோரி லொருவன் பிரபந்தகவி
அவரா யிரர்க்கு ளொருவன்
அந்தாதி தூதுலாப் பரணிகோவைக் கமகன்
அவரா யிரர்க்கு ளொருவன்
போயிடம் பெறுநா டகபுரா ணிகனவன்
போல யிரர்க்கு ளொருவன்
பொருட்பெருங் காப்பியம் புகல்வாக்கி மற்றவன்
போலா யிரர்க்கு ளொருவன்
பாயிரந் தருபஞ்ச லட்சண விதானியப்
படியா யிரர்க்கு ளொருவன்
பரசமய தருக்கநூல் பகர் வாதிமற்றுமப்
படியா யிரர்க்கு ளொருவன்
தேயமெண் டிசைபரவு தேசிகோத் தமனத்
திறத்தா யிரர்க்கு ளொருவன்
சிவனைத் துதித்துண் டுடுத்துக் கொடுத்திடுந்
தெய்வச் சிவக்கியானியே. 232
குட்டுதற் கோபிள்ளைப் பாண்டியனா ரில்லை
குறும்பியள வாக்காதைக் குறித்துத் தோண்டி
எட்டினா லறுப்பதற்கு வில்லி யில்லை
இரண்டொன்றாய் மயிரைமுடிந் திறங்கப் போட்டு
வெட்டுதற்குக் கவியொட்டக் கூத்தனில்லை
விளையாட்டுக் கவிப்பாட்டு விரைந்துபாடித்
தெட்டுதற்குத் தமிழறியாத் துரைகளுண்டு
தெல்லடித்துப் புலவரெனத் திரியலாமே. 233
நினைவுகவி சொல்வோ மெனச்சொலிப் பிறர்கவிதை
நினைவினைத் திருடிவையோம்
நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று
நீள்வசைகள் பாட லறியோம்
பினையினைய நாவலரு டன்பங்கு பேசிப்ர
பந்தங்கள் பாடிக் கொடோம்
பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய
பேய்க்கிரந் தங்கள் பேசோம்
இனிமைதரு குலத்துக் குருக்களை மறந்தெட்
டிடங்களில் தீட்சை போகோம்
இட்டசிறு பேர்மாற்றி மாதமொரு பேரிட்
டழைக்கநா மிறுமாந்தி ரோம்
தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்பாடு
தணியவே கவிபாடுவோம்
சமணூல் கனைப்பொரு ளெனக்கொளோம் திருஞான
சம்பந்த னடியர் நாமே. 234
இது, கேட்டுத் திருத்தோணியப்பர் பாடியவை.
குறிப்பு:- திருத்தோணியப்பரென்பார், தத்துவப்பிரகாச ருடைய மாணவர். தமது ஆசிரியரைக் கண்டு ஒரு பண்டார மெனப் பொதுப்பட எண்ணி, சாளுவநாயக்கர் பாழ்வீடு விடுதியாகத் தந்ததும் அவர் பாடியதும் பின்பு வேறு நல்ல விடுதி தந்ததும் கண்ட தோணியப்பர், நாயக்கர் உண்மை தெளியுமாறு இப்பாட்டுக்களைப் பாடினா ரென்பர். ஆயிரம் புலவர்களுக்கு ஒருவன் பிரபந்தம் பாடும் கவிஞனாவான்; ஆயிரம் பிரபந்த கவிகட்கு ஒருவன் அந்தாதி முதலியன பாடும் கமகனாவான்; ஆயிரம் கமகர்களுக்கு ஒருவன் நாடக புராணிகனாவான்; ஆயிரம் புராணிகருள் ஒருவன் வாக்கியாவான்; ஆயிரம் வாக்கி கட்கு ஒருவன் பஞ்சலட்சண விதானியாவான்; விதானிகள் ஆயிரவருக்கு ஒருவன் தேசிகனாவன். தேசிகர் ஆயிரவருக்கு ஒருவன்தான் சிவஞானியாவான் தெட்டுதல் - பொருள் பெறுதல். தமிழறிந்தார் இருப்பாராயின், இவர்களைத் தேர்ந்து வரிசை யறிந்துசிறப்பிப்பர் என்பதாம். பாடிலோம் - யாம் பாடினது கிடையாது. பேய்க்கிரந்தங்கள் - புலமையறிவுக்கு வேலைதந்து இன்பந்தராத பாட்டும் உரையுமான ஏடுகள். குலத்துக்குரு - வழிவழியாக முறைமை பிழையாது அறிவு வழங்கும் குரு. மாதமொரு பேரிட்டழைத்தல் - அவ்வப்போது பழம்புலவர்கள் பெயரையோ, புதுப் புதுப் பெயரையோ தமக் கிட்டுக்கொண்டு பிறரை யேமாற்றுவது. பாடு - பெருமிதம்.
கட்டளைக் கலித்துறை
மன்கவி தாவும் பொழிற்கூத்த
னூரப்பன் வாய்த்தலைமன்
தன் கவி தெள்ளிய பால்வால
கோகிலந் தானுரைத்த
நன்கவி பாலுக் கிடுசர்க்
கரைக்கவி நாங்கள் சொல்லும்
புன்கவி யுப்பொடு காயமென்
றேசொல்லிப் போற்றுவரே. 235
இது, கூத்தனூரப்பன் வாலகோகிலம் கவிகள் எப்படி யென்று இராயர் கேட்கத் தத்துவப்பிரகாசர் சொல்லியது.
குறிப்பு :- கூத்தனூரப்பன், வாலகோகிலம் என்பார் வரலா றொன்றும் தெரிந்திலது. கிருட்டின தேவராயர் காலத்தில் இவர்கள் கவிபாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனரென்று மட்டில் தெளிவாய்க் கூறலாம். கவி தாவும் பொழில் - குரங்குகள் தாவியேறும் சோலைகள். கூத்தனூர், ஒட்டக்கூத்தர்க்குச் சோழவேந்தர் அளித்த ஊர்; சோழநாட்டில் இன்றும் அப்பெயருடன் விளங்கு கிறது. ஆயினும் இங்கு அஃது அப்பன் என்னும் சொல்லோடியைந்து ஐயாறப்பன் என்பதுபோல ஒரு சொல்லாய் ஒட்டி நின்று ஒரு பெயராயிற்று. வாய்த்தலை யென்பது தஞ்சைமாநாட்டி லுள்ள தோரூர். அஃதிப் போது வழுதலை என மருவி வழங்குகிறது. கூத்தனூரப்பனாகிய வாய்த்தலைமன் என இயையும். கூத்தனூரப்பன் கவி பால் என்க. வாலகோகிலம் என்பது ஒரு பெண்பாற் பெயர் போலத் தோன்றுகிறது. வாலகோகிலத்தின் கவி பாலுக்கு இடும் சர்க்கரை போன்றுளது என்பார், “வாலகோகிலந் தானுரை நன்கவி பாலுக்கிடு சர்க்கரை” என்றார். கவிநாங்கள் - கவிஞர் களாகிய நாங்கள்; எனவே அவ்விருவரும் சீர்த்த கவிஞர்களல்லர் என்பது குறிப்பு. காயம், கறிகட்குக் கூட்டப்படும் கூட்டு.
வெண்பா
பறியாரோ நின்வாயிற் பல்லதனைப் பாரோர்
முறியாரோ நின்முதுகின் முள்ளைச் - சிறியவொரு
மட்டப்பேர் போதாதோ வாக்கிதுவே யானக்கால்
ஒட்டக்கூத் தன்றா னுனக்கு. 236
இஃது ஒட்டக்கூத்தனென் றொரு புலவன் வரக் கேட்டுத் தத்துவப் பிரகாசர் சொல்லியது.
குறிப்பு:- கூத்தனூரப்பனே ஒருகால் ஒட்டக்கூத்தனெனத் தன் பேரைச் சொல்லிக்கொண்டு வந்தான்போலும். கவிச்சக்கர வர்த்தி ஒட்டக்கூத்தருடைய பாநலத்தை நோக்க, இவ்வொட்டக் கூத்தனென்பவன் பாட்டுச் சுவையற்ற வெள்ளைப்பாட்டாக இருக்கக்கண்ட தத்துவப்பிரகாசருக்கு மிக்க சினமுண்டாகவே இப்பாட்டைப் பாடினராதல் வேண்டும். பாவோர் என்றும் பாட வேறுபாடுண்டு. முதுகின்முள் - முதுகெலும்பு. சிறுகவொரு என்றும் பாடவேறுபா டுண்டு. மட்டம் - அளவு.
விருத்தம்
வெற்றிப் பாடுங் குணப்பாடும் வீரப் பாடு
மொருகவியில்
தொற்றிப் பாட வதுகண்டு சீநக் கரசர்
துகிலீந்தார்
பற்றிப் பார்க்க வதனூடே பலதே வேசர்
வீற்றிருந்தார்
சுற்றிப் பார்க்கப் பயப்பட்டுத் தூர வைத்துத்
தொழுதோமே. 237
இது சீநக்கர் தந்தாரென ஒருவன் புடவை தரப் பார்த்துத் தத்துவப் பிரகாசர் சொல்லியது.
குறிப்பு:- சீநக்கரென்பவர் அக்காலத்திருந்த ஒரு சிற்றரசர் அவர் ஒருகால் தத்துவராயர்க்குத் தம் மனைக்கண் இருந்ததொரு பட்டாடையைக் கொடுத்தனுப்பினார். அதனைத் தத்துவப் பிரகாசர் கண்டு நெடுநாட்குமுன் வாங்கிவைக்கப் பெற்றிருந்தமை தெரிந்து அவனையே அதனைப் பிரிக்கச்சொன்னார். அது முழுதும் பூச்சி புகுந்து அரிக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் கைகுவித்து, இப்பாட்டைப் பாடினார். இப்பாட்டின்கண் தாம், சீநக்கரசருடைய வெற்றியும் குணமும் வீரமும் கண்டு வியந்து பாடியதாகவும் அதற்குப் பரிசிலாக அவர் இதனைத் தந்ததாகவும் குறிப்பது நோக்கத்தக்கது. தேவேசர் - இந்திரர்.
விருத்தம்
குரங்குமாய் நண்டுகட்டித் தேளுங் கொட்டிக்
குடியாத மதுக்குடித்தே பேயு மேறி
இரங்கவருங் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை யில்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர். 238
இது, தத்துவப்பிரகாசர் உலோபரைப் பாடியது.
குறிப்பு :- தத்துவப்பிரகாசர் இதனைப் பாடியதற்குக் காரணம் விளங்கவில்லை. கொள்ளிபிடித் தெரிந்தாற்போல என்றும் பாட வேறுபாடுண்டு. சம்பத்தேறி - சம்பமோடு ஏறி; செல்வம் மிகுந்து. கருங்கை - வலிய கை. காடேறி - காடுகளில் உழன்று. நாடேறி - நாடுகளில் அலைந்து.
பாம்புகடித் தாலதுவு மீட்க வல்லோம்
பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்
வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்
விறல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்
சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்
தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை
தீம்பரைநல் லவராக்கிக் குணமுண் டாக்கத்
திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே. 239
இது, தத்துவப்பிரகாசர் தீயோரைப் பாடியது.
குறிப்பு :- இதற்கும் முன்னைப் பாட்டிற் போலப் பாடற்கு நேர்ந்த காரணம் தெரியவில்லை. பசாசு - பேய். நீறு - திரு நீறு. அதிக மதம் - மிக்க மதவெறி. தீம்பர் - தீம்பு செய்பவர்; தீயவர் என்பதாம். திறமது - அது, பகுதிப் பொருள் விகுதி.
கவடிகளா கத்திரியுங் கள்ளர்கா ணன்னூற்
சுவடியிருந் தாவதென்ன சொல்வீர் குவலயத்துக்
காட்டுக் கெரித்தநிலாக் கண்ணிரண்டு மில்லாதான்
வீட்டுக் கெரித்த விளக்கு. 240
இது, தத்துவப்பிரகாசருக்கு இலக்கணம் வருமோ என்ற போது, அவர் பாடியது.
குறிப்பு:- தத்துவப் பிரகாசர் சிறந்த புலவர் என்ற புகழ் நாடெங்கும் பரவவே, அவர்பால் அழுக்காறு கொண்ட சிலர் அவர்க்கு இலக்கணம் வருமோ என ஐயுற்று எள்ளி இகழ்ந் துரைத்தனர். அது, தத்துவப்பிரகாசருக்கு எட்டியது. அவர்கள் அறியுமாறு இப் பாட்டைப் பாடினார். கவடிகள் - கபடர்கள். குவலயம் - நிலவுலகம். காட்டிய எரிக்கும் நிலா - வொளியும் குருடன் வீட்டில் எரியும் விளக்கொளியும்போல, நன்னூற் பயன் அறியும் திறமையில்லாதார்க்கு அந் நன்னூல் கையிலிருப்பினும் பயன்படாது என்பதாம்.
கவிராச பிள்ளை
வெண்பா
செந்தமி ழோர் தங்கள் சீபாத தூளிபொர
வந்த புலவோர்தம் மார்பாணி - கந்தன்
அடிகையா ரப்பரவு மாசுகவி ராசன்
கடிகையார் கோலா கலன். 241
இஃது, ஆசுகவி ராசசிங்கம் கடிகையாரைப் பாடியது.
குறிப்பு:- கவிராச பிள்ளை ஆசுகவி இராசசிங்கம் என்றும் சேறைக் கவிராசபிள்ளை யென்றும் வழங்கப்பெறுவர். இவர் கருணீகர் மரபினர்; சைவ சமயத்தவர். விரைந்து கவிபாடும் வன்மையால் ஆசுகவி யெனவும், வண்ணம்பாடும் சிறப்பால் வண்ணக் கட்சி, வண்ணக் களஞ்சியம் எனவும் சிறப்புப் பெயர்கள் பல இவருக்குண்டு என்று சுன்னாகம் குமாரசாமிப் புலவரும் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்களும் கூறினர். திருவாரூர்ச் சோமசுந்தர தேசிகர், “இவர் திருக்காளத்தியிலுள்ள வேங்கடராய முதலியாரால் ஆதரிக்கப்பட்டிருப்பது கொண்டும் தொண்டைமண்டலத்திலுள்ள *கடிகையார் என்றொருவரைப் புகழ்ந்திருப்பது கொண்டும் தொண்டை நாட்டினரென்று கொள்ள வேண்டி யிருக்கிற" தென்றனர். தொண்டைநாட்டுச் சேற்றூரிற் பிறந்து கடிகையென்னு மூரில் தமது பாட்டனாரான கடிகை மலைப்பிள்ளை யென்பவரால் இளமையில் ஆதரிக்கப் பெற்றவ ரெனவும், இயற்பெயர் இராசப்பிள்ளை யெனவும், கருணீகர் மரபினரிடையே ஒரு வரலாறு நிலவுகிறது. கடிகைமலை யென்பது இப்போது சோளிங்க புரமென வழங்கும். பலர் கடிகாசல மென்ற பெயர் கொண்டிருப்பது வடார்க்காட்டு வடபகுதியில் மிகுதியும் காணப்படும்.
கவிராசப்பிள்ளை இப்பாட்டைப் பாடுதற்கு நேர்ந்த காரணம் தெரியவில்லை. தூளி - பொடி. தூளி பெற என்றும் பாடமுண்டு. கோலாகலன் - ஆரவாரம் செய்பவன்.
விருத்தம்
தென்பா ராS மறிவிற் குறுமுனி
தெக்கிண கயிலையில்வாழ்
செங்குத் தக்குல வேங்கட ராயன்
திருவாசற் புலவன்
என்பேர் வண்ணக் கட்சிய தன்றி
யெதிர்த்தவர் மார்பாணி
இந்தத் தேசப் புலவர் மனத்துக்
கிடியென வந்தேன்காண்
உன்பால் யான்வர வாசற் காரர்க்
குத்தாரம் பண்ணி
உள்ளுக் கென்னை யழைப்பித் தாகி
லுரைக்குங் கவிதைகள்கேட்
டென்பால் வரிசைகள் பரிசில்க ணல்கி
யிரட்சித் திடவேணும்
இராமர் சீவல மாறா பாண்டிய
இராசவ ரோதயனே. 242
இது, பாண்டியராசா ஆரென்று கேட்டபோது கவிராசபிள்ளை பாடியது.
குறிப்பு :- ஒருகால் கவிராசபிள்ளை தொண்டைநாட்டி னின்றும் தென்பாண்டி நாட்டிற்குச் சென்று தென்காசியிலிருந்து ஆட்சி, புரிந்த சீவல வேளென்னும் அதிவீரராம பாண்டியனைக் காண முயன்றாராக, பாண்டியன் இப்புலவர் யாரென்று வினவினான். அவர்க்குக் கவிராசர் இச் சீட்டுக்கவியை யெழுதி விடுத்தார். பாண்டியன் கவிகண்டு மகிழ்ந்து வேண்டும் பரிசில் நல்கிச் சிறப்பித்தான். பின்பு அவன் வேண்டுகோட்கிசைந்து திருக்காளத்தி நாதர் கட்டளைக்கலித்துறை என்றொரு சிறு நூலைப் பாடினார். இச்செய்தியை அந்நூலிலேயே ஒரு பாட்டிற் குறித்துள்ளார். அதிவீரராமன் கி.பி. 1563ல் முடிசூடினானாதலின், கவிராச பிள்ளையின் காலம் பதினாறாம் நூற்றாண்டென்பது தெளிவாம். திருக்காளத்திக்குத் தெக்கிண கயிலாயமென்றும் பெயருண்டென அவ்வூர்க் கல்வெட்டும் (A.R.No. 160 of 1922) கூறுகிறது.
பரமேசுரப் புலவர்
கட்டளைக்கலித்துறை
கண்ணார் மதிக்குங் கவிராச சிங்கம் கடந்துதிரு
அண்ணா மலையப்பர் மேல்வண்ணம் பாடிமுத் தாலத்திகொண்
டெண்ணாயிரமட வார்சூழப் பல்லக்கி லேறிவந்தான்
உண்ணா முலையெல்லன் மூலைக டோறு மொதுங்கின்னே. 243
இது, பரமேசுரப் புலவன் திருவண்ணாமலையிற் பாடியது.
குறிப்பு:- கவிராசபிள்ளை தென்பாண்டி நாட்டிலிருந்து திரும்பி வருகையில் வழியில், சோழநாட்டில், திருவாட்போக்கி யென்னும் இரத்தினகிரி வந்து அங்கே வணிகர் தலைவனான வேலாயுதனென்பான் செய்த வேண்டுகோட்கிணங்கி வாட்போக்கி நாதருலாப் பாடிச் சிறப்பித்துத் தொண்டைநாடடைந்து, சேயூர் முருகன்பேரில் சேயூர் முருகனுலாப்பாடி அவனை வணங்கி வழி பட்டபின் திருவண்ணாமலைக்குச் சென்றார். அங்கே அண்ணா மலை யார்மேல் திருவண்ணாமலையார் வண்ணம் பாடி வழி பட்டார். அங்கிருந்த தலைவர்கள் செய்த சிறப்புக்களைக் கொண்டு பல மகளிர் சூழவரப் பல்லக்கிலேறி ஊர்வலம் வந்தார். அது கண்டு அங்கே வாழ்ந்த உண்ணாமுலை எல்லப்ப நயினா ரென்பார், அழுக்காற்றால் அவ்வூர்வலத்தைக் காணமாட்டாராய்த் தம்மனைக் கண்ணே ஒடுங்கியிருக்க, அவ்வூரிலுள்ள திருமடமொன்றிலிருந்து புலமை நடாத்திய பரமேசுரப் புலவர் என்பவர், இந் நிகழ்ச்சிகளை இப்பாட்டிற் குறித்துப் பாடினார் என்பர். எல்லன் - எல்லப்பன்.
உண்ணாமுலை எல்லப்ப நயினார்
வெண்பா
பாழ்ப்பாய் மடத்துப் பரமாவுன் பாண்கவிதை
கேட்பாரெல் லாம்புத்தி கெட்டபேர் - தோட்பாவும்
ஓணான் விழுந்தாலு முண்டுபரி காரமிது
வாணா ளளவே வரும். 244
இஃது, உண்ணாமுலை எல்லப்பநயினார் பாடியது.
குறிப்பு :- இந்த எல்லப்ப நயினார் என்பவர் உண்ணா முலை நயினார் என்பவருடைய மகன் என்றும், இவர் காளிங்கராயன் வழி (கோத்திரம்) வந்தவரென்றும் கல்வெட்டுத்துறையார் ஆண்டறிக்கை (A.R.No. of 1929 - 30. p. 87) கூறுகிறது. இவர் பாடியனவாகத் திருவண்ணாமலைக் கோயிற் கல்வெட்டுக்களில் (A.R.No. 419, 420 of 1919) காணப்படும் வெண்பாக்களால் சகம் 1494, அஃதாவது கி.பி. 1572ல் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் இந்த எல்லப்ப நயினார் இருந்தனரென அறிகின்றோம். திருவண்ணா மலை நாட்டில் உள்ள தாழனூர் இவரது ஊர்; வாணகப்பாடி நாட்டுப் பெண்ணை வடகரை உடைக்காட்டு நாட்டுத் தாயனூர் (A.R.No. 72 of 1935 -6) இவ்வூர் போலும். இவர் அருணாசல புரணம் திருவிரிஞ்சைப்புராணம் என்ற புராணங்களையும் அருணையந்தாதி திருவாரூர்க் கோவை என்ற நூல்களையும், வீரைக் கவிராசர் என்பவர் எழுதிய சௌந்தரியலகரிக்கு “இறையள வெனினும் தவறிலாது உரைதேர்ந்து” எழுதிய உரை யினையும் செய்துள்ளார். இத்தகைய சிறப்புடைய இவர் பரமேசுரப் புலவன் கூறியதுபோலக் கவிராச சிங்கம் ஊர்வலம் வரக்கண்டு ஏன் ஒதுங்கிநின்றாரென்று தெரியவில்லை. ஒதுங்கி நின்றதற்குக் காரணம் அழுக்கா றெனவெண்ணியோ வேறுயாது பற்றியோ பரமேசுரப் புலவன் இகழ்ந்து பாடியது அறிந்த எல்லப்பருக்கு மிக்க சினமுண்டாகவே இப்பாட்டைப் பாடுவாராயினர். பாழ்ப் பாய் மடம் - பாழ்பரந்த மடம். பரமா - பரமேசுரப் புலவனே. பாண்கவிதை - கீழான பாட்டு. பாழ்ங்கவிதை யென்றும் பாடம் உண்டு. பாவும் ஓணான் தோள்விழுந்தாலும் பரிகார முண்டு என இயையும். இது - யான் கூறும் இவ் வசை.
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
விருத்தம்
பொங்குகமி ழயோத்தியில்வாழ் தசரதனென்
போனிடத்தும் பூதூர் வேந்தன்
துங்கவடு கன்னிடத்தும் வீரரா கவரிருவர்
தோன்றி னாரால்
அங்கொருவ னொருகலைமா னெய்திடப் போய்
வசைபெற்றா னவனி பாலன்
இங்கொருவன் பலகலைமா னெய்திடப் போய்க்
கவியினா லிசைபெற் றானே. 245
இது, கவி வீரராகவன் காஞ்சிபுரத்திலே படித்தபோது கந்தபுராணங் கச்சியப்பர் பாடியது.
குறிப்பு :- வீரராகவ முதலியார் இனிய கவிபாடும் சிறப்புப் பெற்றபின் கவி வீரராகவ முதலியார் என அழைக்கப்படுவாராயினர். இவர் பிறவிக் குருடரானமைபற்றி அந்தகக்கவி என்று குறிக்கப் படுகின்றனர். இதனைக் “கவி வீரராகவன் கச்சியிலே தன்னெஞ்ச மேடெனக் கற்றா னொருமுத் தமிழையுமே” என்றும்; “ஏடா யிரங்கோடி யெழுதாது தன்மனத் தெழுதிப் படித்த விரகன்” என்றும் (த.நா.ச. 246, 25) வருவனவற்றாலறிக. இவரதூர் பொன்விளைந்த களத்தூர்க் கருகிலுள்ள பூதூர். இவர் தந்தை வடுகநாத முதலியாரென்பவ ராவர். இவர் பெற்றோர் களத்தூர்க்கு வந்து அங்கே தங்கினமையின் இவரதூர் களத்தூர் என்பது முண்டு. இவர் காஞ்சிபுரத்தில் மேலே கூறியவாறு வந்து செவியும் நெஞ்சும் கருவியாகத் தமிழ்நூல் பலவும் கற்றுப் புலமை மிக்கார். இவர் தமிழகம் முழுதும் சுற்றி, ஆங்காங்கிருந்த செல்வர்கள் தந்த சிறப்புக்களைப் பெற்றனர். ஈழநாட்டிற்குச் சென்று அதனை யாண்ட வேந்தனால் நன்கு சிறப்பிக்கப் பெற்றார். திருக்கழுக்குன்ற புராணம், சந்திரவாணன் கோவை. திருவாரூருலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களை இக்கவி வீரராகவ முதலியார் எழுதியுள்ளனர். கந்தபுராணங் கச்சியப்பர் - கந்த புராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியர். கச்சியப்பரும் பெரும் புலவர். புலமைமிக்கவர் புலமையைப் புலமை மிக்கவரே யினிது காண்ப ரென்பதற் கேற்பப் பெரும்புலவராகிய கச்சியப்பர் பெரும்புலமையுடைய வீரராகவரைப் பாராட்டியது மிக்க இன்பந்தருவதாம். கலைமானையெய்திடச் சென்ற வீரராகவர் இருவருள் ஒருவன் (மனைவியைப் பறிகொடுத்தானென) வசை பெற்றான், ஒருவன் இசை பெற்றான் என்பதாம்.
வெண்பா
பொங்குமிடி யின்பந்தம் போயதே யென்கவிதைக்
கெங்கும் விருதுபந்த மேற்றதே - குங்குமந்தோய்
வெற்பந்த மானபுய வீரபர ராசசிங்கம்
பொற்பந்த மின்றளித்த போது. 246
இது, பரராசசிங்கம் பொற்பந்தங் கொடுத்தபோது பாடியது.
குறிப்பு :- யாழ்ப்பாணப் பகுதியைப் பதினாறாம் நூற் றாண்டின் இடையில் அரசுபுரிந்த பரராசசேகரனே பரராசசிங்கம் என்று சிறப்பிக்கப்படுவன். இவன் தந்தை கனக சூரிய சிங்கை யாரியன் எனப்படுவான். இவன் விசயவாகுவென்னும் சிங்கள வரசனை வென்ற வெற்றி மிகுதி யுடையவன். பரராச சேகர சிங்கையாரியன் என்ற இவன் பெயர் சுருக்கமாய்ப் பரராசசிங்க மெனப் படுகிறது. விசயவாகுவை வென்ற சிறப்புக்கு இப்பெயர் பொருத்தமாகவேயுளது. மிடியின் பந்தம் - வறுமையின் தொடர்பு. வெற்பு - மலை. பொற்பந்தம் - பொற்கிழி.
கட்டளைக்கலித்துறை
இன்னங் கலைமகள் கைம்மீது புத்தக மேந்தியந்தப்
பொன்னம் புயப்பள்ளி புக்கிருப் பாளென்ன புண்ணியமோ
கன்னன் களந்தைக் கவிவீர ராகவன் கச்சியிலே
தன்னெஞ்ச மேடெனக் கற்றா னொருமுத் தமிழையுமே. 247
இஃது, இராமாயணம் அவதானிக்கச் சொன்னபோது இராசா பாடியது.
குறிப்பு:- அந்தகக்கவி வீரராகவனார், ஈழநாட்டு யாழ்ப் பாணத்து வேந்தன் அவையில், இராமாயண அவதானம் செய்தார். அக் காலை, அவர் இராமாயணப்பாட்டுக்களை வாய்ப்பாடமாகவே சொல்லிச் சொன்மழை பொழியக் கண்ட வேந்தனான பரரா சிங்கம், கழிபேருவகையும் வியப்பும்கொண்டு இப் பாட்டினைப் பாடினான் என்பர். அந்தப் பொன் - அழகிய பொன்னாகிய கலைமகள். அம்புயப்பள்ளி - தாமரையாகிய பள்ளி; பள்ளிக் கூடமுமாம். களந்தை - களத்தூர். நெஞ்சு கருவியாகக் கற்றது தோன்றத் “தன்னெஞ்ச மேடெனக் கற்றா னொருமுத் தமிழையுமே” என்றான்.
கலி விருத்தம்
விரகன் முத்தமிழ்க் கவிவீர ராகவன்
வரகவி மாலையை மதிக்கும் போதெலாம்
உரகனும் வாணனும் ஒப்பத் தோன்றினாற்
சிரகர கம்பிதம் செய்ய லாகுமே. 248
இது, வண்ணம் பாடிய போது இராசா பாடியது.
குறிப்பு :- கவி வீரராகவனார் யாழ்ப்பாணத்து வேந்தன வையில் ஒருகால் இனியதொரு வண்ணக்கவி பாடினார். அது கேட்டு அங்கிருந்த புலவரனைவரும் தலையசைத்துக் கைகொட்டி இன்பத்தால் ஆரவாரம் செய்தனர். வேந்தன் மனமகிழ்ந்து இப் பாட்டைப் பாடினா னென்பர். முத்தமிழ் விரகன், வரகவி என்பன சிறப்புக்கள். விரகன் - மிகவும் வல்லவன். மாலை, ஈண்டு வண்ண மாலை மேற்று. மதிக்கும் போது - நெஞ்சிற்கொண்டு நினைந்து மகிழும்போது. எலாம் - கேட்போர் எல்லாரும்; எல்லாரும் என்றது உயர்ந்தோர் தாழ்ந்தோர் அனைவரையும் எஞ்சாமல் தழுவிநின்றது. உரகன் - ஆயிரந் தலையையுடைய ஆதிசேடன். வாணன் - ஆயிரங்கைகளையுடையவன். கேட்போர் ஒவ்வொருவரும் ஆதிசேடன் வாணன் என்ற இருவரியல்பையும் ஒருங்கு பெறுவதால் “சிரகர கம்பிதம் செய்யலாகுமே” என்றான்.
வெண்பா
வேசையரே மல்குமூர் வீதியிலார் வந்தாலும்
பேசிவலை வீசிப் பிடிக்குமூர் - ஆசைமயல்
பூட்டுமூர் கையிற் பொருள்பறித்தே யோடுகொடுத்
தோட்டுமூர் சீவிலிபுத் தூர். 249
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சீவிலிபுத்தூரிற் பாடிய கவி.
குறிப்பு :- கவி வீரராகவனார் தென்பாண்டிநாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள சீவில்லிபுத்தூருக்குச் சென்றார். அவ்வூர் பெரியாழ்வார் சூடிக்கொடுத்த நாச்சியாராகிய ஆண்டாள் என்ற இவர்கள் பிறந்த ஊராகும். அங்கே அவரை வேசியர் வளைத்துக்கொண்டு பொருள் பறித்துக்கொண்டனரென்றும், அதனால் இப்பாட்டைப் பாடினரென்றுங் கூறுவர்.
ஓடு - பிச்சையெடுப்போர் கையில் ஏந்தும் உண்கலம்.
கட்டளைக் கலித்துறை
சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
தூயசெங் கண்ண னிணையொப்ப னோ தண் டுழாயணிந்த
மாய னளக்கும் படிமூன்று கிட்ணைய மாமழவ
ராய னளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே. 250
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் அரியலூர் மழவ ராயன் படி கொடுத்ததற்குப் பாடிய கவி.
குறிப்பு:- அரியலூர் விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழியாகத் திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் உள்ளதோ ரூர். இவ்வூரில் நானூறு ஐந்நூறு ஆண்டுகட்கு முன் அவருள் கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயன் காலத்தில் அந்தகக் கவி வீரராகவ முதலியார் அரியலூருக்குச் சென்று மழவரா யனைக் கண்டார். அவன் அவற்கு நாடோறும் சிறந்த முறையிற் படி கொடுத்துதவினான். அதனை வியந்து கவி வீரராகவனார் இப்பாட்டைப் பாடி அவனை மகிழ்வித்தார் என்பர். இந்த மழவராயர் கட்கு அரியலூர் இருப்பிடமாயினும் பெண்ணை யாற்றின் வடகரை வாணகப்பாடி நாட்டுச் செங்குன்றம் தாயகமாகும். அஃது அரியலூர்க்கு வடக்கே மிக்க தொலைவில் இருப்பதனால் “சேய செங்குன்றை” என்றார்போலும். அரியலூர் மழவராயர்களுள் கி.பி.1635-ல் அரசு நிலையிட்ட ஒப்பிலாத மழவராயனும் (A.R. No. 88 of 27) 1742-ல் அரங்கப்ப மழவராயன் மகன் விசய ஒப்பிலாத மழவராயனும், (A.R.No. 91 of 1927) 1808-ல் விசய ஒப்பிலாத மழவராயனும் (A.R.No. 89 of 1927), 1832ல் குமார ஒப்பிலாத மழவராயர் மகன் விசய ஒப்பிலாத மழவராயனும் (A.R.No. 90 of 1927), குமார ஒப்பிலாத மழவராயர் மகன் விசய ஒப்பிலாத மழவராயனும் (A.R.No. 94 of 1927) இருந்திருக் கின்றனரெனக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இவருட் பழையோனான அரசு நிலையிட்ட ஒப்பிலாத மழவராயன் காலத்துக்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டளவு முன்பிருந்தவர் நம் கவி வீரராகவனா ராதலின், அவர் காலத்தே இருந்தவன் இந்த விசய கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயன் என்று கோடல் நேரிது. இவர்களுடைய முன்னோருள் ஒருவன் துறையூர் வேந்தர் கட்குத் துணைபுரிந்து வெற்றி பயந்தது கொண்டு இவர்கட்கு “விசய” என்ற சிறப்புப் பெயரும், அரியலூரில் உள்ள ஒப்பிலாத அம்மன்ஒரு மழவராயன் கனவில் தோன்றிக் குலதெய்வமாக இருந்து உதவிசெய்வதாகத் தெரிவித்ததனால் “ஒப்பிலாத” என்ற சிறப்பும் இம்மழவர்கட்கு வழிவழியாக வழங்கிவருகின்றன எனத் திருச்சிராபள்ளி மாவட்ட வரலாறு (Trichinopoly Dist.Gazetteer பக். 344) கூறுகிறது. செங்கண்ணன் - திருமால்; திருமாற்குக் கண் சிவந்திருப்பது இயல்பு; “செங்கண்” கோபத்தாலன்றி இயல்பாகவே சிவந்த கண் என்பர் பரிமேலழகர் (பரி. 4 : 10. உரை). படி, முன்னது உலகம், பின்னது நாளுணவு. உண்டே யென்பதிலுள்ள ஏகாரம் எதிர்மறை.
கட்டளைக் கலித்துறை
வாழொப் பிலாதவன் சேயொப் பிலாத மழவதிசை
ஆழக் கடல்விட்டு நீபாடுங் காலத் தரிசெலுங்கால்
நீழற் கவுத்துவ நீத்துச்செல் வானந்த நீண்மணிதான்
காழொப்பினுநின் னிசைகேட்குங் காற்கரைந் தேகுமன்றோ. 251
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார், குமார ஒப்பிலா தான் சங்கீதத்தைக் கேட்டுப் பாடியது.
குறிப்பு :- குமார ஒப்பிலாதான் கிருஷ்ணைய மழவரா யனுக்கு மகனாவான். இவன் நல்ல இசைப்பயிற்சி பெற்றுக் கேட்டோர் பரவத்தக்க வகையிற் பாடவல்லவனாக இருந்தான். கவி வீரராகவ முதலியார் அரியலூரில் நாளும் படிபெற்றுத் தங்கி யிருக்கையில் ஒருநாள் இக்குமார ஒப்பிலாதான் புலவர் கேட்கத் தன் இசைநலத்தைப் பாடிக்காட்டினான். முடிவில் கவி வீரராக வனார் இந்தப் பாட்டால் அவன் இசைப்புலமையைச் சிறப்பித் தார். வாழ் ஒப்பில்லாதவன் சேய்- ஒப்பில்லாத வாழ்வுடையனான சிவனுடைய மகனான முருகன்; குமரன் என்றவாறு. இறத்தலும் பிறத்தலும் இல்லாமையால் சிவனை “வாழொப்பிலாதவன்” என்றார். நீ பாடுங்காறும் இருந்து கேட்டுவிட்டுத் தன் கடலாகிய, பாற்கடற்குச் செல்லுங்கால் என்றற்கு “ நீ பாடுங்காலத்து அரி செல்லுங்கால்” என்றார். பாற்கடல் நாற்கடலுக்கும் அப்பாற் பட்ட தாகலின், “திசையாழக் கடல் விட்டு” என்றார், நாற்கடற்கும். அப்புறத்தே சாகத்தீவும் அதற்கப்புறத்தே பாற்கட்டலும் உள்ளன. எனச் சிவாகமங்கள கூறும். நீழல் - ஒளி. கார் - வயிரம். காழ்த்த கவுத்துவமணி தானும் இந்த இசை கேட்கின் கரைந்துருகு மென்பது கருத்து.
கட்டளைக் கலித்துறை
வாவிய பொற்பரி யாவூரில் வீரையன மைந்தபஞ்ச
காவியந் தேர்கின்ற தீத்தாசங் கீதத்திற் காவலர் தம்
ஓவிய சாலையெல் லாங்கொல்லி யாளுள் ளுருகும்ரத்ன
மேவிய கூடமெல் லாந்திரி கூடத்தின் மேற்படுமே. 252
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் தீத்தான் சங்கீதத்தைக் கேட்டுச் சொல்லியது.
குறிப்பு :- சோழநாட்டுத் திருக்கருகாவூர்ப் பக்கத்திலும் திருவண்ணாமலை நாட்டிலும் ஆவூரெனப் பெரியவூர்கள் இருக்கின்றன. இவற்றுள் இங்கே குறிக்கும் ஆவூர் இன்ன நாட்டின தென்று விளங்கவில்லை. ஆவூரில் வாழ்ந்த வீரையன் என்பானுடைய மகன் தீத்தான்; அவன் இசையில் வல்லுநனாய் அவ்வூர்க்கு வந்திருந்த கவி வீரராகவரை இசைபாடி மகிழ்வித்தான். அதனைப் பாராட்டி அவர் இப்பாட்டினைப் பாடினார். வாவிய பொற்பரி - தாவிசெல்லும் அழகிய குதிரை. பொற்பரி வீரையன் என்பதனால், வீரையன் ஒரு தானைத்தலைவன் என்று தெரிகிறது. ஓவியசாலை - ஓவியங்கள் எழுதப்பட்டிருக்கும் இடம். கொல்லியாள - கொல்லிப்பாவை. திரிகூடம் - திரி கூடமலை; திருக்குற்றாலத் திருமலையும் திரிகூடமலையெனப்படும்; இராவணனுடைய இலங்கைநகர மிருந்ததும் திரிகூடமலை யெனப்படும்.
கட்டளைக் கலித்துறை
சாலப் பழுத்த மரம்பார்த் தெறிவர் தண் ணீர்சுரக்கும்
ஞாலத் தகழ்வர் கறக்கின்ற வாவைநற் காறளைவர்
நீலக் கடல்விட்டுப் பாலாழி மத்திட்டு நிற்பரென்னீர்
சேலத்து வேந்தனகத் தாகந் தீர்த்த செழியனுக்கே. 253
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் செழியதரையன் பரிசில் கொடுத்தனுப்பினபோது சில பொருள் வேண்டிப் பாடியது.
குறிப்பு :- இங்கு வரும் செழியதரையனுக்குத் ‘தாகந்தீர்த்த செழியதரையன்’ என்று பெயர். இவன் பாலைக்காடு சேலம் முதலிய விடங்களிற் பாண்டி வேந்தன் பொருட்டுப் போர் செய்து புகழ்பெற்ற செல்வன், கவி வீரராகவர் இவனைக் கண்டு பாடியபோது அவருக்குத் தக்க பரிசில் கொடுத்துவிட்டான். அதுகண்ட கவி வீரராகவர், தமக்கு மேலும் சில பொருள் வேண்டியிருந்தமையின், அக்குறிப்புத் தோன்ற, இப்பாட்டைப் பாடினா ரென்பர், எறிவர் - பழத்துக்குக் கல்லெறிவார்கள். கால் தளைவர் - காலைக்கட்டுவர். நீலக்கடலாகிய உப்புக்கடலை மத்திட்டுக் கடையாது பாற்கடலையே கடைவர்; அதுபோல என் போற் புலவர் மேலும் பொருள்வேண்டி நின்னையே யடைவர் என்பது கருத்து.
விருத்தம்
ஏடாயிரங்கோடி யெழுதாது தன்மனத்
தெழுதிப் படித்த விரகன்
எதுசொலினு மதுவே யெனச்சொலுங் கவிவீர
ராகவன் விடுக்கு மோலை
சேடாதி பன்சிர மசைக்குங் கலாகரன்
திரிபதகை குலசேகரன்
தென்பாலை சேலஞ் செயித்ததா கந்தீர்த்த
செழியனெதிர் கொண்டு காண்க
பாடாத கந்தருவ மெறியாத கந்துகம்
பத்திகோ ணாத கோணம்
பறவாத கொக்கனற் பண்ணாக கோடைவெம்
படையாய்த் தொடாத குந்தம்
சூடாத பாடலம் பூவாத மாத்தொடை
தொகுத்து முடியாத சடிலம்
சொன்னசொற் சொல்லாத கிள்ளையொன் றெங்குந்
துதிக்க வரவிட வேணுமே. 254
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் செழியதரையனுக்கு விடுத்த சீட்டுக் கவி.
குறிப்பு:- தாகந்தீர்த்த செழியதரையன் தென்பாலை சேலம் முதலியவிடங்களில் வென்றி மேம்பட்டதைப் பாராட்டித் தமக் கொரு குதிரை வேண்டுமென்பதை இக்கவி வாயிலாகத் தெரிவித்துக் கேட்டார். அவன் குதிரையேயன்றி, மேலும் பல பரிசில் நல்கினான். “மிகைபடத் தந்ததனால் யான் இனி வராதொழிவேனென எண்ணவேண்டா; வேண்டும்போதெல்லாம் நின்னிடமே வருவேன்” என்ற கருத்துப்படத்தான் முன் பாட்டைப் (த.நா.ச. 252) பாடினார். சேடாதிபன் - ஆதிசேடன். கலாகரன் - கலை கட்கெல்லாம் இருப்பிடமானவன். திரிபதகை - கங்கை. சேகரன் - தலைவன். தென்பாலை - தெற்கேயுள்ள பாலைக்காடு. வடக்கி லுள்ளது திருப்பாலைவனம் எனப்படுவது. பாலைக்காடு (Palghat) இப்போது சிறந்த நகரமாக உளது. திருப்பாலை வனம் சென்னைக்கு வடக்கில் பொன்னேரி நாட்டில் உளது. கந்தருவம் - இசை; குதிரை. கந்துகம் - பந்து, குதிரை. கோணம் - மூலை, குதிரை. கொக்கு - கொக்கென்னும் பறவை, குதிரை. கோடை - கோடைக் காலம், குதிரை. குந்தம் - ஒரு படைக் கருவி, குதிரை பாடலம் -ஒருவகைக் காலணி, குதிரை. மா - மாமரம், குதிரை . சடிலம் - சடை, குதிரை. கிள்ளை - கிளி. குதிரை. பத்தி - வரிசை. தொடை - மாலை.
விருத்தம்
மின்னு மாளிகை யனந்தை யாதிபதி
சந்தர வாணமகி பாலன் முன்
வீரராகவன் விடுக்கு மோலைதன்
விருப்பினால் வலியவே யழைத்
துன்னு காவியமதிற் பெருத்ததொரு
கோவை யோதுகென வோதினன்
ஓதமாத மொரு மூன்று மோதியொரு
நாலுமாத வள வாகியும்
இன்னமுந் தனது செவியி லேற்றதிலை
யென்னி லிந்தவுல கெண்ணுமோ
இராசராசர் திறை கொள்ளுமென் கவிதை
யிங்கு வந்து குறையாகுமோ
தன்னையென் சொலுவ ரென்னை யென்சொலுவர்
தமிழ்க்குத் தான் மானமல்லவோ
தன்புகழ்க்கு மிது நீதியோ கடிது
தானிந் நேரம் வரவேணுமே. 255
இஃது அந்தகக்கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் மீது கோவை பாடியபோது பாடியது.
குறிப்பு:- சந்திரவாணன் என்பவன் வாணர் குலச் சிற்றரசருள் ஒருவன். இவன் விழுப்புரநாட்டில் (தாலூகா) உள்ள அனந்த புரம் என்னும் ஊரிலிருந்தவன். இது பாட்டில் அனந்தையெனக் குறிக்கப்பட்டுள்ளது. கவி வீரராகவனார் இச் சந்திரவாணன் மேல் ஒரு கோவை நூலை அவன் வேண்டுகோட்கிணங்கிப் பாடினார்; அது பாட மூன்று திங்கள். கழிந்தன; பாடி முடித்ததும் அதனை வாணற்குத் தெரிவித்தார். அவன் அதற்குமேல் நான்கு திங்கள் காறும் அரங்கேற்றத்திற் கேற்பாடு செய்யானாயினன். பின்பு அவர் இக் கவியை யெழுதி அவனுக்கு விடுத்தார். கவி வீரராகவரைச் சந்திரவாணன் வலிய அழைத்துத் தன்மேல் காவிய நலஞ்சிறந்த கோவை பாடுமாறு கேட்டுக்கொண்டானென்பது அவரது மான மிகுதி யுணர்த்தி நிற்கிறது. இப்பாட்டிற் சினக் குறிப்புத் தோன்றினும் கடுஞ் சொல்லில்லாமை குறிக்கத்தக்கது. மணமல்லவோ என்றும் பாட வேறுபாடுண்டு.
விருத்தம்
இனிதினிற் றமிழ்ச் சேர சோழ பாண்டியர் மெச்சி
யிச்சித்த மதுரவாக்கி
ஈழமண் டலமளவு திறைகொண்ட கவிவீர
ராகவன் விடுக்குமோலை
வனிதையர் விகாரமன் மதராச ரூபனம்
மயிலையதிபதி சக்கிர
வாளத்தி யாகிநங் காளத்தி கிட்ணப்ப
வாணனெதிர் கொண்டு காண்க
கன தமிழ்த் துறையறி மரக்கலங் காதல்கூர்
கன்னிகா மாட நன்னூற்
கட்டுபொற் கொட்டாரம் வாணிசிங் காதனம்
கவிநாட கஞ்செய் சாலை
வினவுசிவ கதையிற் சரக்கறை யெனத்தக்க
வினையே னுடம்பு நோயால்
மெலியுமோ மெலியாத வகைபால் பெருத்ததொரு
மேதிவர விட வேணுமே. 256
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் எருமை வரவிடப் பாடியது.
குறிப்பு:- கவி வீரராகவர் காலத்தில் திருமயிலாப்பூரில் காளத்தி கிருஷ்ணப்பவாண னென்றொரு செல்வன் இருந்தான். காளத்தியென்பது தந்தைபெயராயின், காளத்திவாணன் மகன் கிருஷ்ணப்பவாணன் என்பதாம். அவனுக்குக் கவி வீரராகவர் பால் பெருமதிப்பும் அவன்பால் வீரராகவருக்குப் பேரன்பும் உண்டு. ஒருகால் கவி வீரராகவருக்கு உடல்நலங் குறைந்ததனால் மோரும் பாலும் மிகப் பெறவேண்டி எருமை யொன்று விரும்பி இந்தச் சீட்டுக்கவியைப் பாடிக் கிருஷ்ணப்பவாணற்கு விடுத்தார். அவரும் விரும்பிய வண்ணமே எருமையொன்று கொடுத்து விட்டார் வனிதையர் விகாரம் - காணும் மகளிர் வேட்கையால் காமவிகாரங்கொள்ளச் செய்யும் மேனி நலமுடையவன்; “மங்கை யர்கள் தம் மனத்தை வாங்குந் தடந்தோளான்” (நள.வெ) என்று புகழேந்தியாரும் கூறுவதும் காண்க. “நம்மயிலை” என்றது நட்புரிமை சுட்டிநின்றது. சக்கிரவாளத் தியாகி - நிலவுலகு முற்றும் புகழ்பரவிய கொடைவள்ளல். கொட்டாரம் - சாலை நாடகஞ் செய்சாலை - கூத்தாடும் சாலை. சரக்கறை - பொன் சேமித்து வைக்கும் அறை; பொக்கிசசாலை யென்பர். மேதி - எருமை.
விருத்தம்
இந்நா ளிருந்தபேர் புதிய பாகம்பண்
டிருந்தபேர் பழைய பாகம்
இருபாக மும்வல்ல லக்கணக் கவிவீர
ராகவன் விடுக்கு மோலை
அன்னாதி தானப்பிர வாகன் பிரசங்கத்
தனந்தசே டாவ தாரன்
அகிலப் ரகாசனாம் திம்மைய வப்பைய
னகமகிழ்ந் தினிது காண்க
தன்னாளு மோலையும் வரக்கண்டு நாம்வேத
சயிலப் புராணத் தையித்
தனைநாளி ருந்தோதி னோமரங் கேற்றுவது
தான்வந்த லாம லில்லை
நன்னாவ லோருட னிகைக்கேட் டெனைச்சோழ
னாட்டுக் கனுப்ப வேண்டும்
நவிலோலை தள்ளாம லேசுக்ர வாரத்து
நாளிங்கு வர வேணுமே. 257
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் திருக்கழுக்குன்றப் புராணம் பாடியபோது பாடியது.
குறிப்பு :- அந்தக்கவி வீரராகவனார் திருக்கழுக்குன்றத் தல புராணம் பாடி, அதனை அரங்கேற்றற்கு நாள் குறித்துத் திம்மைய அப்பையனென்ற செல்வனுக்கு இச்சீட்டுக் கவியை விடுத்தார். அரங்கேற்றம் முடிந்தபின் அவர் சோழநாட்டுக்குச் செல்லவேண்டியவரா யிருந்தார். இந்தத் திம்மைய அப்பையன் எவ்வூரினனென்று தெரியவில்லை. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் செங்கற்பட்டில் ஒருதலைவன் இருந்திருக்கிறான். அந்தகக்கவி பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலி ருந்தவராகலின், ஒரு கால் அவர் காலத்திருந்த திம்மைய வப்பையன் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தவனுக்குப் பாட்டனாக இருக்கலாம். இந்தத் திம்மையன் ஒருகால் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத் திலிருந்த கிருஷ்ணதேவராயருக்கு மந்திரியா யிருந்த திம்மையராக இருக்கலாமெனக் கருதுபவரும் உண்டு. தானப்பிரவாகன் - வெள்ளம்போல் அள்ளி வழங்கும் கொடைவள்ளல். அனந்த சேடாவதாரன் - அநந்தனாகிய ஆதிசேடனது அவதாரமானவன்; விரும்பிக் கேட்பவன் என்பது கருத்து. அகிலப்ரகாசன் - உலகு முழுதும் புகழ் பரவியவன். வேதசயிலம் - திருக்கழுக்குன்றம்.
கட்டளைக் கலித்துறை
தீட்டுக் கவியென்று சொல்வார் சிலரந்தத் தீட்டுக்கவி
காட்டுக் கெறித்த நிலவாகிய போஞ்செங் கனகரத்னச்
சூட்டுக் கிரீட முடிவேந்த ருட்பத்தி சூறைகொள்ளும்
நாட்டுக் கிலக்கியங் கவிவீர ராகவ னற்கவியே. 258
இது, கவி வீரராகவ முதலியார் எழுதீய தீட்டுக் கவிக்கு நிரஞ் சனநாதர் பாடியது.
குறிப்பு:- அந்தகக்கவி வீரராகவனார் பாடிய சீட்டுக் கவிகள் பல. அவற்றைப் புலவர் பலரும் படித்து இன்புறுவது வழக்கம் அவருள் நிரஞ்சனநாத ரென்பவர் ஒருவர். அவர் திருவொற்றியூரிலிருந்த கோளகி மடத்தைச் சேர்ந்தவர். கோளகி மடத்தை அங்கேகண்ட நிரஞ்சன குரவர்பெயரே இவருக்குத் தீக்கைப் பெயராக இடப்பட்டுள்ளது. அவர் திம்மைய வப்பையற்கு வந்த இந்தத் தீட்டுக்கவிகளைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து இப் பாட்டைப் பாடினார். தீட்டுக்கவிகளைச் சீட்டுக்கவி யென வழங்குவது பெருவழக்கு. சூட்டு - உச்சி. பத்தி சூறைகொள்ளும் - அன்பைப் பெற்றுவிடும் நாட்டுக் கிலக்கியம் - நாட்டிலுள்ளார் படித்து இன்புறம் இலக்கியம்.
கட்டளைக் கலித்துறை
புவியேர் பெறுந்திரு வாரூ ருலாவைப் புலவர்க்கெல்லாஞ்
செவியே சுவைபெறு மாறுசெய் தான்சிவ ஞானவனு
பவியே யெனுநங் கவிவீர ராகவன் பாடியநற்
கவியே கவியவ னல்லாத பேர்கவி கற்கவியே. 259
இஃது, அந்தகக்கவி வீரராகவனார் பாடிய ஆரூருலாவைக் கேட்டுப் பரராசசேகரன் பாடியது.
குறிப்பு :- பரராச சேகரனான யாழ்ப்பாணத்து வேந்தன் திருவாரூர்த் தியாகேசன்பால் பேரன்பு கொண்டவன். அதனாலவன் ஆண்டுதோறும் திருவாரூர்க்கு வந்துபோவது வழக்கம். அவனுக் கென திருவாரூரில் தனி மாளிகை யிருந்ததென்றும், மாளிகைக்கும் கோயிற்கும் இடையே கரவுவழி ( சுரங்கம்) அரசு மகளிர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்ததென்றும், அவன் விருப்பத்துக் கிசைந்தே அந்தகக்கவி திருவாரூருலாவைப் பாடின ரென்றும் கூறுவர். ஏர் - அழகு. சிவஞான அனுபவி - சிவ ஞானம் கைவரப்பெற்ற அனுபவஞானி. கற்கவி - வாயில்களின் மேல் கவிந்த வடிவினதாகச் செய்யப்படுவது; மரத்தாலும் கல்லாலும் செய்யப்படுவதனால், மரக்கவியினீக்குதற்குக் கற்கவி யென்றார்.
வெண்பா
ஒட்டக்கூத் தன்கவியு மோங்கியகம் பன்கவியும்
பட்டப் பகல்விளக்காய்ப் பட்டதே - அட்டதிக்கும்
வீசுங் கவிவீர ராகவனாம் வேளாளன்
பேசுங் கவிகேட்ட பின். 260
இஃது, அந்தகக்கவி உலா பாடியபோது கயத்தாற்று ராசா பாடிய கவி.
குறிப்பு :- கயத்தாறு என்பது திருநெல்வேலி மாநாட்டில் உள்ளது. இவ்வூர்க்கருகில் வடக்கே பாழ்பட்ட கோட்டை யொன்றும் திருமால் சிவன் கோயில்களும் உள்ளன. இங்கே முற்காலத்தில் வேந்தர்கள் இருந்து ஆட்சி புரிந்ததாகவும் கூறுவர். இவ் வேந்தருள் ஒருவன், அந்தக்கக்கவி திருவாரூருலாப் பாடி யரங்கேற்றியபோது திருவாரூர்க்கு வந்திருந்தான் போலும். அவன் திருவாரூ ருலாவின் நலத்தை வியந்து இப்பாட்டைப் பாடினான். ஒட்டக்கூத்தர், கம்பர் முதலிய கவிச் சக்ரவர்த் திகளை யெடுத்தோதுதலின், கயத்தாற்று ராசா, சிறந்த தமிழறிஞ ரென்பது தெளிவாம்.பட்டதென்பதை இரண்டிடத்தும் கூட்டுக. பட்டப்பகல் விளக்கு ஒளி மழுங்கிப் போவதுபோல இருவர் கவிகளும் ஒளிமழுங்கின என்பது.
கட்டளைக் கலித்துறை
திருமாலு மீசனும் பின்போயுந் தூதூ செலத்துணிந்தும்
அருமா துரியத் தமிழ்வளர்த் தாரவ ரோடுபங்காய்
வருமா மறையவன் பேர்சாதித் தேமிக வண்டமிழ்க்குப்
பெருமான் சிவிகைப்பின் சென்றான் விசயப் பிரமனுமே. 261
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார், விசயராசன், பல்லக்கின் பின் வந்தபோது பாடிய கவி.
குறிப்பு:- விசயராசன், விசயராசப் பிரமராயன் எனப் படுவன். இவன் பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த அரசியற் றலைவர்களும் ஒருவன் இவன் ஒரு பார்ப்பனன்; தமிழ் வல்லவன். திருவாரூர்க்கு இவனும் வந்திருந்து, அந்தகக் கவி பல்லக்கில் செல்லும்போது அவர்க்குப் பின்னே வந்தான். அதுகண்ட கவி வீரராகவனார் இக் கவியைப் பாடினா ரென்பர். பல்லவ வேந்தன் காலத்தில் திருமால், காஞ்சிபுரத்தில் கணி கண்ணன் என்னும் தமிழ்ப்புலவன் பின்னே சென்றார்; சிவன் நம்பியாரூரர் பொருட்டுத் திருவாரூரிலும் திருவொற்றியூரிலும் முறையே பரவையாரிடமும் சங்கிலியாரிடமும் தூதுசென்றார். இச்செய்கைகளால் தமிழ்ப்புலமை வளம்பெற்றமையின், “தமிழ் வளர்த்தார்” என்றார். பிரமனும் அவ்வாறு சென்று தமிழ்ப்பணி செய்யவில்லையே என்ற குறை நீங்க விசயராசப் பிரமராயன் “சிவிகைப்பின் சென்றான்” என்றார். வண்டமிழ்க்குப் பெருமான் பிரமன் பின் சென்றான் என்க. மறையவன் - பிரமன். சிவிகை - பல்லக்கு.
வெண்பா
பசிமுடுக நோவதல்லாற் பாழ்வீட்டிற் பாழ்த்த
கொசுகுகடி யாலுங் குமைந்தோம் - மிசையில்
நெடும்பாவம் யாஞ்செய்தா னீரென்ன செய்வீர்
இடும்பா வனநாத ரே. 262
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் இடும்பாவனத்திற் பாடிய கவி.
குறிப்பு :- இடும்பாவனம் என்பது சோழநாட்டிலுள்ள தொரு சிவன்கோயிற் றிருப்பதி. இதனைத் திருஞானசம்பந்தர் முதலியோர் பாடியுள்ளனர். இதற்கொருகால் அந்தகக்கவி வீரராகவனார் சென்றிருந்தார். அவர் தங்குதற்கொரு பாழ்வீடு காட்டப்பட்டது. அதன்கண் தங்கின வீரராகவனார்க்குப் பசி வேளையறிந்து சோறு தரப்படவில்லை. கொசுகுகடி மிகுந்து வருத்தம் செய்தது. அதனால் இப்பாட்டைப் பாடினார். குமைந் தோம் - மிக வருந்தினோம்; செத்தோம் என்றவாறு. மிசையில் - முன்னைப் பிறப்பில். சிவபரம்பொருள், அவரவர் செய்யும் வினைகட்குரிய வினைப்பயன்களை அவரவரையே நுகரப்பண்ணும் “பால்வரை தெய்வ” மாகலின், “நெடும்பாவம் யாம் செய்தால் நீரென்ன செய்வீர்,” என்றார். இடும்பாவனம் என்பது இடும்பாவ வனம் என்பதன் மரூஉ வாக்கி, பாவவனத்து நாதராகிய நீர் யாம் செய்த பாவத்துக்கு யாது செய்வீர் என்றொரு நயங்கூறுவதுமுண்டு.
விருத்தம்
வாயிலொன்று கல்லுமொன்று
நெல்லதான வண்ணமும்
வாடலாக வாறுமாதம்
வைத்திருந்த கத்தரிக்
காயிலுப்பி லாதகஞ்சி
யைக்கலந்த வண்ணமும்
காம்பொடிந்த தோரகப்பை
கைப்பிடித்த வண்ணமும்
மோயிலாத மீன்கள் வந்து
மொலுமொ லென்றசட்டியும்
மோருதற் கிடக்கொணர்ந்த
……………………………………
……………………………………
……………………………………நாக
தேவனிட்ட வூணைநாம்
மறப்பதில்லை காணுமே. 263
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் நாகதேவனைப் பாடியது.
குறிப்பு :- இப்பாட்டு ஏடுகளிற் சிதைந்து காணப்படுகிறது. பல ஏடுகளிலும் காணப்பட்டவற்றைத் தூக்கி இவ்வடிவில் தரப் பட்டுள்ளது.நாகதேவன் யாவனென்றும் அவனை இவ்வாறு பாடுதற்குரிய காரணம் யாதென்றும் விளங்கவில்லை. வாடல் -வற்றால். மோத்தல், மோருதல் என வந்தது. இது, நெய்க்கரண்டியைக் குறிக்கும் போலும்.
வெண்பா
சிரையன் றினகரனைச் செந்தமிழ்க்கு நல்ல
துரையென்று நாங்கவிதை சொன்னோஞ் - சுரையுண்பான்
வண்ணமே செய்தான் வரகவிக்கு வண்மையென்னும்
எண்ணமே செய்தா னிலை. 264
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சிரையன் தினகரனைப் பாடிய வசை.
குறிப்பு :- சிரையன் தினகரன் என்பவனது வரலாறொன்றும் தெரிந்திலது. அவன் இன்ன வூரினனென்றும் தெரியவில்லை. துரை - தலைவன். சுரையுண்பான் - கள்குடிப்பவன். சுரை யுண்ணும் என்றும் பாடவேறுபா டுண்டு.
விருத்தம்
மாதாவைப் போற்பிறக்கத் தந்தையைப்போற்
செனிக்க விந்த வையந்தன்னில்
ஏதேனு மொன்றல்லா னந்திய
மாணிக்கமிவ னேற்றம் பாரீர்
……………………………………
……………………………………
பாதாதி கேசமெலாந் தன்றாயைப்
போற்படைத்தான் பதுமத்தா னே. 265
இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் நந்திய மாணிக் கத்தைப் பாடியது.
குறிப்பு :- நந்திய மாணிக்க மென்பவனைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இப்பாட்டின் மூன்றாமடி உருத்தெரியாதவாறு சிதைந்துவிட்டது. மகன் தன் தந்தை யைப் போலவோ தாயைப் போலவோ இருப்பது இயல்பு என்பது முற்பகுதியின் கருத்து. நந்தியமாணிக்கம் “பாதாதிகேசமெல்லாம்” தாயைப்போலவும் உரை செயல் ககௌல்லாம் தந்தை போலவும் உள்ளான் என்பது இப்பாட்டின் கருத்துப்போலும்.
கட்டளைக் கலித்துறை
கொடையாண்ட மன்னரிற் கச்சிநல் லானைக் குறுகியன்னோன்
தொடையாண்ட முல்லைப் புயவரைச் சாரலிற் றுன்னிமுப்பான்
உடையாண் டிருந்து கவிமத மாக்க ளுடன்பொருது
சடையாண்டி கையிற் குசங்காண வாமுத் தமிழ்ச் சிங்கமே. 266
இஃது, அந்தகக்கவி வீரராக முதலியார் சடையாண்டியைப் பாடிய வசை.
குறிப்பு:- இங்கே குறிக்கப்படும் சடையாண்டியைப் பற்றி ஒரு குறிப்பும் கிடைத்திலது சடையாண்டி யென்ற பெயருடைய முதலியார்கள் சிலர் வடார்க்காடு மாவட்டத்திற் காணப்படுகின்றனர். கச்சி நல்லான் எனவே இவன் காஞ்சிபுரத்திலிருந்த செல்வனென அறியலாம். முல்லைப்புயம் - முல்லைமாலை யணிந்த தோள். கவிமத மாக்கள் - கவி பாடவல்ல பாவலர்கள். குசம் - தருப்பைப்புல்; அங்குசமுமாம்.
விருத்தம்
கள்ளர் தீச்சூடு முனையர் மடத்திலிட்ட
வூண் மறக்கச் சடைப்பெரிய தேவனுக்கு
விண்ணப்பத் தீட்டெழுத வைத்த தெய்வம்
ஏதென…………………………………… 267
இஃது ஏடுகளில் உருத் தெரிய வாராத வகையிற் சிதைந்து முடிவு பெறாமல் கிடக்கிறது. முனையர் மடமென்றும், சடைத்தேவன் என்றும் வரும் பெயர்களைக் கொண்டு ஒருவகைச் செய்தியும் பெற முடியவில்லை.
வெண்பா
மனந்தான் றளர்ந்தார்க்கும் வாயுமுண்டோ கச்சி
அனந்தா புதனா ளகல்வோஞ் - சினந்து
வடித்தெடுத்த வேற்கண் மணியிரண்டு கொண்ட
கொடித்தடுத்தா லாரேகு வார்,. 268
இது, குடந்தைப் பயணந் தவிர்த்து ஒரு தாதி நிமித்த மாயிருந்த போது அந்தக்கவி வீரராகவ முதலியார் பாடியது.
குறிப்பு: ஒருகால் அந்தகக்கவி வீரராகவனார் திருக் குடந்தை செல்லப் புறப்பட்டார். எதிரிலே கூர்த்த பார்வையை யுடைய தாசி யொருத்தி குறுக்கிட்டாள். அதனை நன்னி. மித்தமாகக் கொள்ளாமல் கவி வீரராகவனார் அடுத்துவரும் புதன்கிழமை புறப்படுவதாக முடிபு செய்துகொண்டு, தமது முடிபினைக் கச்சி அனந்தன் என்பவனுக்கு இப்பாட்டால் தெரிவித்துள்ளார். கச்சி அனந்தன் என்பனைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஒருகால் அவனும் உடன்வரச் சமைந்திருந் தானோ, அன்றி வீரராகவனாரைக் காண விரும்பினானோ தெரியவில்லை. வடித்தல் - கூர்மை செய்தல். கொடி - பூங்கொடி, கொடிபோலும் பெண்;காக்கை
வெண்பா
இன்னமுதப் பாமாரி யில்வுலகத் திற்பொழிந்து
பொன்னுலகிற் பெய்யப் புகுந்ததால் - மன்னும்
புவிவீர ராகமன்னர் பொன்முடிமேற் சூட்டுங்
கவிவீர ராகவமே கம். 269
வெண்பா
தோற்றா தொளிந்திருந்த தூலக் கவிகளெல்லாம்
மேற்றா ரகையின் விளங்கியவே - ஏற்றாலும்
கன்னாவ தாரன் கவிவீர ராகவனாம்
பொன்னாருஞ் செங்கதிரோன் போய். 270
இவை, கயத்தாற்றுராசா பாடிய கையறம்.
குறிப்பு :- அந்தக்கக்கவி வீரராகவனார் இறந்தாராக, அச்செய்தி கயத்தாற்று ராசாவுக்கு எட்டியது. அவர் கவி வீரராக வனார் பாடிய பாட்டுக்களில் மிகவும் ஈடுபாடுடையவர். இதனை அவர்பாடிய “ஒட்டக்கூத்தன் கவியும்” (த.நா.சா.259) என்ற வெண்பா எடுத்துக் காட்டி நிற்கிறது. அவர்க்குண்டான துயரத் திற்கு அளவில்லை. அதனால் அவர் கையற்று இப்பாட்டுக்களைப் பாடினா ரென்பர். பொன்னுலகு - விண்ணுலகம். வீரராக வனாரை மேக மென்றலின், அதற்கேற்பப் “புகுந்ததால்” என்றார். வீரராக மன்னர் - வீரத்தை விருப்பும் வேந்தர். சூட்டுங் கவி - அணிந்து கொள்ளும் கவி. நுண்மாண் நுழை புல மில்லாத கவிகளைத் “தூலக் கவிக” ளென்றார். மேல் - விண். தாரகை - விண்மீண்கள். கன்னாவதாரன் - கொடையிற் கன்னனை யொப்பவன். பொன் - ஒளி. செங்கதிரோன் மறைந்த வழி, விண்மீன்கள் தோன்றி மேம்படுதல்போலத் தூலத் கவிகள் தோன்றி நிலவுவவாயின என்பதாம். அச்சுப் பிரதிகளில் இவை வேறிடத்தில் கோக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாவலர் சரிதை
முற்றும்.
பாட்டுமுதற்குறிப்பு அகரவரிசை
(எண் பாட்டு எண்களைக் குறிக்கும்)
அஆவிதியே 148
அங்கம்புலி 75
அடும்போதும் 200
அடையென்பார் 135
அண்ணறிரு 97
அத்திமுத 181
அரசகுல 159
அரியது 62
அலங்கலணி 182
அலைவளைத்த 196
அவனிமுழு 93
அளிகொளுந் 71
அளிதோ 12
அறமுரைத்தா 77
அற்றதலை 31
அன்று நீ 80
அன்றையிலும் 125
ஆடுங்கடை 132
ஆடுநனி 15
>ஆடுவதுஞ் 120
ஆயிரம் 232
ஆரியம் 11
ஆரேயெனும் 140
ஆழியான் 82
ஆறுபெருக்கு 16
ஆறெல்லாம் 176
ஆற்குழை 115
ஆன்பாலுந் 105
இடுக்கட் 122
இந்திரன் 209
இந்து நுத 154
இந்நாளிருந்த 257
இரவலாள 165
இருடீர் 36
இரும்பனை 17
இலகுபுக 186
இலங்கிலை 174
இல்லென்று 94
இனிதினிலுற் 256
இன்றுவரில் 188
இன்றோ 107
இன்னங்கலிங் 127
இன்னங்கலை 247
இன்னமுதப்பா 269
இழையொன் 143
ஈதலறந் 34
உங்களிலே 68
உங்கண் 167
உண்ட 230
உண்ணீ 42
உமையவளும் 91
ஊழி 229
எண்டிசா 171
எண்ணீர்மை 149
எம்மிகழாதவர் 46
எல்லைபல 156
எறிக்கும் 113
என்றும் 6
என்னுடைய 90
என்னையவர் 169
என்னெஞ்சு 189
ஏகாவடம் 137
ஏடாயிரம் 254
ஏருமிரண் 64
ஒட்டக்கூத்தன் 260
ஒருகை 50
ஒருதிசை 13
ஒற்றியூர் 100
ஒன்றாக 63
ஒன்றுமறி 201
கண்டன் 126
கண்டு 190
கண்ணார் 243
கந்தமல 220
கயக்காவி 152
கரத்துஞ் 129
கருணையால் 56
கரும்பு 2
கலிங்கம் 226
கல்லாத 45
கவடிகளாக 240
கவியரசர் 147
களிறு 20
கள்ளர் 267
கன்னி 85
காடுமீனம் 178
>காதமிருபத்து 89
காலை ஞாயிறு 22
காவலரீகை 119
காற்றால் 114
கானொந்தேன் 180
குடகர் 161
குட்டுதற்கு 233
குப்பாயம் 195
குரங்குமாய் 238
குழவி 162
குறையுளார் 160
குன்றும் 117
கூத்தாடி 227
கூத்தாண் 76
கூரிய 32
கூர்ந்த 197
கூழைப்பலா 33
கூளம் 87
கைம்மணிச்சீர் 106
கையு 124
கொங்குதேர் 4
கொடையாண்ட 266
கொலையைத் 138
கோக்கண்ட 131
கோக்குதிரை 210
கோடானு 44
கோடி 43
கோட்டாற் 7
கோதில் 79
சத்தம் 141
சந்தன 191
சாணர்க்கு 111
சாலப் 253
சாறுதலை 21
சிரையன் 264
சிறப்பார் 28
சிறுக்கீரை 61
சீரங்கத் 206
செக்கோ 221
செங்கான் 133
செட்டிமக்கள் 86
செந்தமிழோர் 241
செப்பாரு 170
செய்யும் 118
சென்றுழு 38
சென்னி 99
சேயசெங் 250
சேரலர் கோன் 51
சேலை 211
சேனை 187
சொக்கன் 213
சொருக்கவிழ்ந்த 218
சொல்லியை 98
தடக்கடலிற் 205
தடவுநிலைப் 35
தண்டாம 37
தண்ணீருங் 29
தந்தை 204
தருக்குலவு 219
தனிமை 1
தன்னுடன் 198
தன்னுடைய 133
தாதாவென் 88
தாயரவை 153
திங்கட் 54
திருத்தங்கி 58
திருமாலு 261
திறையின் 72
தினைவிளைத்தார் 158
தீட்டுக்கவி 258
தூசுதூசாக் 73
தூதஞ்சு 224
தூபங் 142
தென்பாராளு 242
தென்னவா 183
தேரையார் 78
தேறலமிர்தந் 215
தொட்டி 168
தொல்காப்பிய 116
தொழுகின்ற 128
தோற்றா 270
நகுதக்கனரே 163
நடக்கி 95
நடித்தது 121
நள்ளாற்றுத் 214
நாடா 9
நாணென்றா 212
நாராய் 172
நானேயினி 144
நினைவுகவி 234
நீயே புறவின் 19
நூலார் 223
நூற்றுப் பத்தா 57
நெட்டிலை 14
நெற்பயிர் 102
பசிமுடுக 262
பத்தம்பிற் 30
பத்துக்கொண்டன 123
பந்தரிலே 108
பழியும் 146
பறியாரோ 236
பாடுவார் 110
பாட்டுத் 130
பாண்டியரிற் 175
பாப்புக் 203
பாம்பு 239
பாரி 49
பாலலகை 216
பாவலன் 149
பாழ்ப்பாய் 244
பிழைத்தாரோ 157
புகார் மன்னன் 52
புக்கு 96
புராதனம் 151
புவியேர் 259
புழற்கால் 67
பூங்கமல 25
பூவிலயனும் 23
பூவேந்தர் 69
பெருமாள் 202
பொங்குதமிழ் 245
பொங்குமிடி 246
பொதியி 66
பொருந்த 145
பொன்பாவுங் 74
போனபோன 222
மங்கை 83
மண்படுமோ 199
மதிபாய் 3
மதிமலி 5
மதியாதார் 41
மன்கவி 235
மதுர 60
மருவுபுகழ் 228
மலையினுங் 179
மனந்தான் 268
மன்னவனு 92
மன்னுதிரு 112
மாகுன்றனைய 164
மாதாவைப் 265
மாப்பைந்தார் 184
மாவுறங்கின 136
மானபர 173
மின்னுமாளிகை 254
மீனகம் 139
முதிரத் தமிழ் 207
முத்தெறியும் 55
முரணில் 10
முற்றாத 217
முன்னாளறு 192
முன்னாளிரு 177
மூட்டைகலம் 231
மூவர் கோவையு 47
மெய்கழுவி 84
மோட்டெருமை 81
யாவரே 155
வரகரிசி 26
வலம்படு 24
வள்ளியோர்ப் 18
வழக்குடையார் 39
வாசமலர் 70
வாசவயனந்தி 225
வாதவர்கோன் 27
வாயிலொன்று 263
வாய்த்த 65
வாவியபொற்பரி 252
வாழொப்பிலா 251
விண்ணுக் 208
வீரகரிருவர் 59
வீரகன் முத்தமிழ் 248
வீரராகவன் 255
வில்லும்புஞ் 104
வில்லி 101
விழுந்ததுளி 8
வெங்கண் 103
வெண்ணெயும் 193
வெய்தாய் 48
வெறும்புற்கையு 194
வெற்றிப்பாடு 237
வேசையரே 249
வேம்பாகிலு 185
வேதமொழி 109
வையகமெல்லாம் 40
வையம்பெறினும் 166
வையத்துறை 53
அரும்பொரு ளகர வரிசை
(எண் தலைப்பு எண்களைக் குறிக்கும்)
அகத்தியம் 1
அகத்தியனார் 1,4,12,18
அகநானூறு 11
அகரம் பத்திப்பாடி 15
அகளங்கன் 17
அங்கதப்பாட்டு 4,11
அங்கவை 4,11
அச்சுதகளப்பாளன் 19
அச்சுதமங்கலம் 12
அச்சுதன் 19
அதிகத்தூர் 12
அதிமதுர கவிராசன் 45
அதியமான் 11,19
அதிவீரராமன் 23,30,48
அந்தகக்கவி வீரராகவனார் 51
அந்தாதி 45,47
அந்தாதிச் சமுத்தி 17
அபயன் 16,18,25
அபிராமன் 46
அம்பி 46
அம்பிகாபதி 17
அம்மைச்சி 44
அமண்பாக்கம் 12
அயண்டம்பாக்கம் 22
அயன்றைச் சடையன் 22
அயிராவதம் 13,17
அயோத்தி 50
அரசூர் 12
அரிச்சந்திரபுராணம் 41
அநிதாசர் 47
அரியலூர் 51
அருணகிரியார் 12
அருணகிரியந்தாதி 50
அருணாசலபுராணம் 7
அரும்பைத் தொள்ளாயிரம் 17
அல்லாசனி பெத்தண்ணா 46
அறம்பவளர்த்த முதலியார் 22
அறிவுடைநம்பி - (முச்சங்க வரலாறு) அனந்தசயனம் (திருவாங்கூர்) 22
அனந்தபுரம் 51
அனந்தை 51
அனுமகொண்டா 13
ஆசுகவிராச சிங்கள 48
ஆண்டாள் 51
ஆதிசேடன் 13,51
ஆந்தையார் 8
ஆமூர் 68
ஆர்க்காடு 12
ஆரவீடு புக்கராயர் 22
ஆரிய சேகரன் 18
ஆலஞ்சேரிமயிந்தன் 9
ஆலவாய் 1
ஆலவாய் இறையனார் 1
ஆவணம் 22
ஆவூர் 51
ஆவூர் மூலங்கிழார் 6
ஆற்றூர் 30
ஆறை 30
ஆறைக்கலம்பகம் 22
ஆனந்த நமச்சிவாயர் 29
ஆனந்தவரத கூத்தன் 17
இசை நுணுக்கம் - முச்சங்க வரலாறு
இசையாயிரம் 16
இடும்பாவனம் 51
இடைக்குன்றூர் கிழார் 21
இடைச் சங்கத்தார் 45
இணையார மார்பன் 13
இந்திரன் 13
இமயமலை 11
இரட்டபாடி யேழரையிலக்கம் 18
இரட்டையர்கள் 15,16,17
இரணியன் 13
இராசமாதேவி 17
இராச நாராயணச் சம்புவராயன் 15
இராச நாராயணன்
மண்டபம் 47
இராசராச சோழனுலா 17
இராசராசன் II 17,26
இராச ராசபுரம் 24
இராஜாதி ராஜன் 46
இராசேந்திர சோழன் 12,13
இராபர்ட் சூவெல் 46
இராமச்சந்திர கவிராயர் 18
இராமன் 13
இராம ராயன் 22,51
இராமாயணம் 13
இராயமங்கலம் 6
இராவணன் 51
இராஜகம்பீரன்மலை 15
இருந்தையூர் கருங்கோழி- முச்சங்க வரலாறு இலக்கண
விளக்கப் பாட்டியல் 17,45
இலங்காபுரம் 17
இலங்கை 51
இலங்கேசன் 32,33,34,
35,36,37
இலகுளீசபட்டர் 29
இலாடதேசம் 29
இலிங்கபுராணம் 23,29
இளங்கோவடிகள் - கடவுள் வாழ்த்து
இளஞ்சூரியர் 15
இளந்தத்தன் 7
இளந்திருமாறன் முச்சங்க வரலாறு
இளந்துறை 15
இளம்பூரணர் - கடவுள் வாழ்த்து 2
இறையனார் - முச்சங்க வரலாறு - 1
ஈட்டி எழுபது 17
ஈழநாடு 51
ஈழமண்டலம் 51
உக்கிரப் பெருவழுதி 1
உடுமலைப் பேட்டை 6
உண்ணாமுலை எல்லப்ப நயினார் 49,50
உத்தரநல்லூர் நங்கை 33
உத்தரமதுரை 1
உதயகிரி 46
>உலா 47
உவச்சர் 13
உறையூர் 7
எயிலூர் 12
எழும்போதன் கங்கையாடி
மாதையன் 15
ஏகம்பவாணன் 30
ஏகாம்பரன்சம்பன் 15
ஏகாம்பரநாத சம்புவராயன் 15
ஏகாம்பரநாதர் 15
ஏகாம்பரநாதருலா 15
ஏதக்கோன் 11
ஏரம நாயக்கர் 29
ஏரெழுபது 13
ஏழில் 11
ஐங்குறு நூறு
- முச்சங்க வரலாறு 47
ஐயாறப்பன் 47
ஒட்டக்கூத்தர் 17,41,47,51
ஒட்டியன் 46
ஒரிசா நாடு 13
ஒருசிறைப் பெரியனார் 11
ஒற்றியூர் 13
ஓத்தூர் 13
ஓய்மாநாடு 12
ஓரங்கல் நாடு 13
ஒளவையார் 11
கங்க நாடு - முச்சங்கவரலாறு
கங்கணகணகண 13
கங்கை 13,15,17
கச்சி 15,51
கச்சி நல்லான் 51
கச்சியப்பன் 41,42,51
கச்சியப்பசிவாச்சாரியார் 51
கச்சியனந்தன் 51
கச்சிராயன் 38
கடகம் (கட்டாக்) 46
கம்பவனபுராணம் 1
கடிகைமலைப்பிள்ளை 48
கடிகை முத்துப்புலவர் 48
கடிகைப்பட்டினம் 48
கடிகையார் 48
கண்டன் 13,17,18,28
கண்டி 12,18
கண்டியதேவன் 38
கண்ணன் 11
கணபதிவேந்தர் 13
கணிகண்ணன் 51
கதிர்காமம் 7,18
கந்தபுராணம் 51
கந்துடைநிலை 29
கபாடபுரம் 1
கபிலர் 1,5
கம்பர் 13,17,25,51
கமகன் 47
கயத்தாற்றுராசா 18,51
கரிவலம்வந்தநல்லூர் 23
கருணாகர வீரர்மடம் 31
கருநடர் 17
கருவையந்தாதிகள் 23
கல்லாடம் 1
கலவியன்மாலை - முச்சங்க வரலாறு
கலிங்கம் 17,46
கலிங்கத்துப்பரணி 46
கலித்தொகை - முச்சங்கவரலாறு
கலியாணபுரம் 17
கவிராசசிங்கம் 49,50
கவிராசப்பிள்ளை 48
கழுமலம் 20
களத்தூர் 51
களந்தை 13,22,36,51
களப்பாளர் 19
களப்பிரர் 19
களரியாவிரை - முச்சங்க வரலாறுகளவழி 20
களவியலுரை 1
கனகசுந்தரம்பிள்ளை
தி.த, 14,22
கனகசூரியசிங்கையாரியன் 51
கன்னிக்கோன் 26
கன்னியாகுமரி 22
கஜபதிபிரதாபருத்திரன் 46
காகுத்தன் சரிதை 13
காங்கேயநல்லூர் 14
காசிகாண்டம் 23
காசிநாடு 23
காஞ்சி 29
காஞ்சிபுரம் 11,44,51
காயாரோகணம் 29
காரி 11,26
காரிக்கோன் 26
காரோணர் 29
காவிரி 13,24,26,28
காவிரிப்பூம்பட்டினம் 7
காளத்தி 41
காளத்திவாணன் 51
காளமேகம் 45
காளமேகப்புலவர் 45
காளி 13
காளிங்கன் 13
காளிங்கராயன் 12,51
காளையார்கோயில் 12
கிருஷ்ணசாமி அய்யங்கார்
பேராசிரியர் 46
கிருஷ்ண்தேவராயர்
34,46,47,48,51
கிருஷ்ணப்பவாணர் 51
கிருஷ்ணராய விஜயம் 46
கிருஷ்ணைய வொப்பிலாத மழவராயர் 51
கிள்ளி 17
கிள்ளிவளவன் 7
கீரந்தையார் 8
கீழ்வேளூர் 11
குகை நமச்சிவாயர் 29
குட்டியம் 15
குடந்தை 11,15,29,51
குடநாடு 30
குடவாயிற்கீரனார் 11
குடிதாங்கி 36
குணவாயிற்கோட்டம் 20
குணவீர பண்டிதர் 17
குப்பம் 11
கும்பகோணம் 11,45,47
குமணமங்கலம் 6
குமணன் 6
குமரி 13,24
குமார சரசுவதி 46
குமாரசாமிப்புலவர்
சுன்னாகம் 48
குமார துர்ஜதி 48
குமாரவொப்பிலாதான் 51
குயக்கோடன் 4
குருக்கள் 47
குரும்பை 13
குருநமச்சிவாயர் 29
குலசேகரச்சதுர்
வேதிமங்கலம் 4
குலசேகரன் 23
குலோத்துங்கன் 17,18
குளமுற்றம் 7
குளித்தலை 8
குறுகாவூர் 13
குறுந்தொகை
- முச்சங்க வரலாறு
குறுமுனி 48
கூகூர் 16
கூடல் 24
கூத்தர் 18
கூத்தன் 17
கூத்தனூர் 47
கூத்தனூரப்பன் 47
கூத்து - முச்சங்க வரலாறு
கூர்மபுராணம் 23
கூவம் 13
கைதவன் 15
கொங்கர் குலவரபதி ஆட்கொண்டான் 15
கொங்கன் 17
கொங்குநாடு 11,38
கொண்கானநாடு 11
கொல்லிப்பாவை 13
கொல்லிமலை 13
கொழும்பு 18
கொற்கை 23
கொற்றந்தை 22
கொன்றை நாடு 11
கோகழியைஞ்ஞாறு 18
கோடகநல்லூர் 4
கோடனூர் 4
கோடைச்சிவந்தான் 32
கோடைமலை 32
கோப்பெருநற்கிள்ளி 8
கோமுனி 17
கோவலூர் 11
கோவிலடி 22
கோவூர் கிழார் 7
கோவை 11,45,47
சங்கத்தார் 9
சங்கம் 46
சங்கமீச்சுரம் 46
சங்கவை 511
சடைத்தேவன் 51
சடையன் 13
சடையப்பன் 13
சடையாண்டி 51
சத்திமுற்றப் புலவர் 24
சத்திமுற்றம் 24
சத்தியவேடு 12
சதாசிவ ராயர் 21
சதுரானன பண்டிதன் 13
சந்திரகிரி 22
சந்திரகௌரி வல்லபன் 17
சந்திரவாணன் கோவை 51
சப்தசயிலம் 11
சம்பந்தன் 15
சம்பந்தாண்டான் 15
சம்பன்மலை 15
சம்பராசன் 15
சம்புவராயன் 15
சம்மிய திருட்டி 11
சமணர் 14
சமணூா ல் 47
சமுத்தி 15,18
சயங்கொண்டார் 16
சயதுங்கன் 13
சன்னுமுனிவன் 13
சனநாத நல்லூர் 12
சனநாதபுரம் 12
சாத்தந்தையார் 8
சாத்தனார் 12
சாமிநாதையார் டாக்டர்
உ.வே. 14
சார்வபௌம பாண்டியன் 18
சார்வபௌமன் 18
சாருவபூமன் புகழேந்தி 18
சாலிவாடிபதி 23
சாலை 39
சாழல் 13
சாளுவநாயக்கர் 47
சாளுவ மல்லப்பநாயக்கர் 47
சிங்களம் 51
சிங்கையாரிய சக்ரவர்த்தி 18
சித்திராநதி 23
சிதம்பரம் 14,29
சிதம்பர வெண்பா 29
சிந்தா சமுத்தி 1,28
சிராமலை 1,12
சிராப்பள்ளிக்குன்று 12
சிரீ பட்டர் 47
சிரையன் தினகரன் 51
சிலப்பதிகாரம் கடவுள் வாழ்த்து. 13
சிலம்பி 11
சிவக்கியானி 47
சிவஞான முனிவர் 29
சிவபுரம் 47
சிற்றம்பலம் 14
சிற்றம்பல நாடிகள் 47
சிற்றரசூர் 12
சிற்றாடி 22
சிற்றிசை முச்சங்க வரலாறு சிறுகாவியம் 45
சிறுபாண்டரங்கனார் முச்சங்க வரலாறு
சிறுமேதாவியார்முச்சங்க வரலாறு
சின்னூல் 17
சீகாளத்திபுராணம் 1
சீகாழி 47
சீநக்க மங்கலம் 12
சீநக்கன் 12,47
சீரங்கம் 45
சீவல்லபன்மாறன் 30
சீவலவேள் 48
சீவில்லிபுத்தூர் 51
சுசீந்திரம் 22
சுத்தமல்லி 12
சுந்தரபாண்டியன் 12,15,32,38
சுப்பிரமணியப் பிள்ளை
பேராசிரியர், கா.சு. 48
சூடிக்கொடுத்த நாச்சியார் 51
சூலி 22
செங்கணான் 20
செங்கற்பட்டு 11,13,41,51
செங்குந்தர் 17
செங்குன்றம் 51
செங்கைமா 5
செஞ்சி 13,22
செஞ்சிக்கலம்பகம் 22
செம்பூர் 22
செம்பூர்க்கோட்டம் 22
செவ்வப் பநாயக்கர் 51
செழியதரையன் 51
சென்னை 51
சேடாதிபன் 51
சேத்திரபாலபுரம் 12
சேதிபன் 13
சேதிராயன் 13
சேந்தம்பூதனார்
முச்சங்க வரலாறு
சேயூர் 49
சேயூர் முருகனுலா 49
சேயூர் முருகன்
பிள்ளைத்தமிழ் 51
சேரமான் கணைக்காலிரும்
பொறை 20
சேரமான் பெருமாள் 1
சேலம் 51
சேற்றூர் 48
சேறைக்கவிராசபிள்ளை 48
சோணாட்டெல்லை 13
சோமசுந்தரதேசிகர் -
திருவாரூர் 46,48
சோமன் 17,28,40
சோழகுளம் 11
சோழி சொற்கொளோம் 11
சோழமண்டலசதகம் 11,13
சோளிங்கபுரம் 48
சௌந்தரியலகரி 50
சௌரிப்பெருமாள் 31
ஞானசம்பந்தர் 14
ஞானாமிர்தம்
கடவுள் வாழ்த்து
தக்கயாகப்பரணி 17
தகடூர் 11
தசரதன் 51
தஞ்சாக்கூர் 12
தஞ்சைநாடு 47
தஞ்சைவாணன் கோவை 12
தத்துவப்பிரகாசம் 47
தத்துவப்பிரகாசர்
தமிழ்நாடு 17
தருமபுரி 11
தருமி 1
தலங்கை 40
தாதியர் 27
தாயிரங்கலென்னுந்துறை 46
தாரமங்கலம் 38
தாழனூர் 50
தித்தன் 8
திம்மைய அப்பையன் 51
தியாகசமுத்திரம் 13
தியாகசமுத்திரநல்லூர் 13
தியாகம் 13
தியாகேசன் 51
திரிகூடம் 51
திரிபுவனம் 17,40
திரிபுவனை 28
திருக்கச்சூர் 22
திருக்கண்டியூர் 12
திருக்கண்ணபுரம் 31
திருக்கருகாவூர் 7,51
திருக்கழுக்குன்ற புராணம் 51
திருக்கழுக்குன்றம் 51
திருக்காளத்தி 48
திருக்காளத்திநாதர கட்டளைக் கலித்துறை 48
திருக்கானப்பேர் 12
திருக்குடந்தை 11
திருக்குற்றாலம் 23
திருக்குற்றாலத்திருமலை 51
திருக்குறள் 1,10
திருக்கை வழக்கம் 13
திருக்கோடிகா 13
திருக்கோவலூர் 5,7,11,47
திருச்சிராப்பள்ளி 8,22,33,51
திருச்சிற்றம்பலம் 38
திருச்சிற்றேமம் 38
திருச்செந்தூர் 30
திருஞான சம்பந்தர் 17,19,47,51
திருத்தங்கி 11
திருத்தோணியப்பர் 47
திருநல்லூர் நாடு 12
திருநெல்வேலி 30,51
திருநெல்வேலிப் பெருமாள் 23
திருப்பரங்குன்றம் 22
திருப்பாசூர் 11
திருப்பாதிருப்புலியூர் 14
திருப்பாதிருப்புலியூர்க் கலம்பகம், 14,15
திருப்பாலைவனம் 51
திருப்புகலூர் 17
திருப்புகலூரந்தாதி 17
திருப்போர்ப்புறம் 20
திருமங்கலம் 42
திருமயிலாப்பூர் 51
திருமலைராயன் 45
திருமலைராயன் பட்டினம் 45
திருவண்ணாமலை 11,15,22,49,51
திருவண்ணாமலை வெண்பா 29
திருவல்லம் 41
திருவவளிவணல்லூர் 7
திருவள்ளுவர் 1,3,10,12
திருவாமாத்தூர் 15.17
திருவாமாத்தூர்க்
கலம்பகம் 14,15
திருவாரூர் 34,47,51
திருவாரூர்க்கோவை 17
திருவாரூருலா 47,51
திருவாலங்காடு 10
திருவாலவாயுடையார்
திருவிளையாடல் 1,5
திருவாலி 13
திருவானைக்கா 45
திருவிடை மருதூர் 22
திருவிடைமருதூர்ச்
சிற்றம்பலத்தான் 22
திருவிரிஞ்சைப்புராணம் 50
திருவிளையாடல் 30
திருவீழிமிழலை 47
திருவேங்கடம் 47
திருவொற்றியூர் 13,51
தில்லைமூவாயிரவா 13
தீட்சை 47
தீத்தாள் 51
தீபங்குடி 16
தீபங்குடிப்பத்து 16
துந்துரு துரு துரு 13
துவரைக்கோமான் முச்சங்க வரலாறு
>துர்க்காதேவி 46
>துலாபுருடதானம் 17,18
>துறையூர் 12,51
>தூது 45,47
>தெக்கிணகயிலை 48
>தெய்வச்சிலையார் 13
>தெய்வீகன் 11
>தென்காசி 23,48
>தென்பாண்டிநாடு 25,30,49
>தென்பாலை 51
>தென் பெண்ணையாறு 30
>தென்மாவை 12
>தென்றில்லை 19
>தேக்கூர் 12
>தேசிகோத்தமன் 47
>தேப்பெருமாள் 44
>தேவரடியார் 12
>தேவாரம் 47
>தொண்டி 28
>தொண்டைநாடு 12,13,48
>தொண்டைமண்டல
சதகம் 11,13,17
>தொல்காப்பியதேவர் 14,15
தொல்காப்பியம் முச்சங்க வரலாறு
>தோசூரி கோனேருகவி 22
>தோன்றாத்துணையையர் 14
>நக்கன் 12
>நக்கீரர் 4
>நச்சினார்க்கினியர் 9
>நடராசர் 14
>நந்தி 45
>நந்தியமாணிக்கம் 51
>நம்பியாரூரர் 29,51
>நலங்கிள்ளி 7
நற்றிணை முச்சங்க வரலாறு
>நறுந்தொகை 23
நறையூர்நாடு 24
>நன்னன் 11
>நன்னூல் 47
>நாகதேவன் 51
>நாகர்கோயில் 11
>நாகரச நம்பி 34
>நாகை 29
>நாஞ்சில் வள்ளுவன் 11,30
>நாடம் 4
>நாதன்கோவில் 45
>நாமகள் 3
>நாராயணசாமி முதலியார்
சி.கு. 11
>நான்முகன் 3
>நிரஞ்சனநாதர் 51
>நீலகங்கன் 38
>நீலகண்டசதுர்
வேதிமங்கலம் 15
>நெடுங்கிள்ளி 7
நெடுந்தொகை முச்சங்க வரலாறு
>நெற்குன்றம் 17
>நெற்குன்றவாணர் 17
>நேமிநாதர் 17
>நேமிநாதம் 17
>நைடதம் 23
>பகீரதன் 13
>பஞ்சலட்சணவிதானி 48
>பட்டிமண்டபத்தார் 4
>பட்டீச்சுரம் 24
>படம்பக்கநாதர் 13
>படைவீட்டரசு 15
>படைவீடு 15
பத்துப்பாட்டு - முச்சங்க வரலாறு
>பதிற்றுப்பத்து
>பதினோராந்திருமுறை 1
>பந்தன் 11
>பந்தன்மங்கலம் 11
>பம்பை 15
>பரணர் முச்சங்க வரலாறு 4,11
>பரணி 45,47
>பரமேசுவரன் 49
>பரராசசிங்கன் 51
>பரராசசேகரன் 51
>பராக்கிரம பாண்டியன் 18,23
பரிபாடல் - முச்சங்க வரலாறு
>பல்சந்தமாலை 45
>பல்லவராயன் கோவை 15
>பழனி 6
>பழையனூர் 11,19
>பழையாறை 39
>பறம்புமலை 5
பனம்பாரம் - முச்சங்க வரலாறு
>பனையன் 13
>பனையூர்நாடு 46
>பாக்கைநாடு 46
>பாச்சில் கூற்றத்துப்பாச்சில் 33
>பாண்டிமண்டல சதகம் 13
>பாண்டியன்
தலையாலங்கானத்துச்செரு
வென்ற நெடுஞ்செழியன் 21
>பாணபத்திரன் 1
>பாணாற்றுப்படை 30
>பாய்ச்சலூர் 33
>பாரதம் 3,11,15,17
பாரதவெண்பா
முச்சங்க வரலாறு
>பாரதிசீபாதர் 17
>பாரி 5
>பாலபாகவதம் 22
>பாலியாறு 11
>பாலைக்காடு 51
>பாலைபாடிய
பெருங்கடுங்கோ 11
>பிரதாபருத்திரன் 13
>பிரதாபருத்திரீயம் 13
>பிரபந்தகவி 47
>பிரமோத்தரகாண்டம் 23
>பிராமணப்பிள்ளையன்
>பிள்ளைப்பாண்டியன் 47
>புகழேந்தி 18,22
>புகார் 16
>புங்கனூர் 35
>புதுக்கோட்டைச் செப்பேடு 23
>புதுக்கோட்டை நாடு 36
>புதுவாபுரி 13
>>புதுவைச்சடையன் 13
>புதுவைச்சேதிராயன் 13
>புதுவையூர் 13
>புராணிகன் 47
>புல்லலூர் 11
>புல்வேளூர் 11
>புலியூர்க்கோட்டம் 17
>புழல் 13
>புழற்கோட்டம் 22
>புறநானூறு - முச்சங்க வரலாறு 11
>புன்னாற்றூர் 29
>பூதலவீரராமவன்மா 22
>பூதன் 11
>பூதூர் 51
>பூந்துருத்தி 12
>பூம்புகார் 17
>பூழ் 13
>பூழல் 13
>பெண்சக்கரவர்த்தி 18
>பெண்ணையாறு 111,15,50
>பெரியாழ்வார் 51
>பெருங்காப்பியம் 45,47
பெருங்குன்றூர் கிழார்- முச்சங்க வரலாறு
>பெருந்தலை 6
>பெருந்தலைச் சாத்தனார் 6
>பெருந்தொகை 13
>பெருநம்பி 12
>பெருவேளூர் 11
>பேய்க்கிரந்தங்கள் 47
>பேரரசூர் 47
>பேராசிரியர் 17
>பேரிசை - முச்சங்க வரலாறு
>பேரூர் நாடு 17
>பேரையூர் 42,43
>பொதியம் 17
>பொய்கையார் 20
>பொய்யாமொழியார் 11,13
>பொருளதிகாரம் 1
>பொன்வண்ணத்தந்தாதி 14
>பொன்விளைந்தகளத்தூர் 51
>பொன்னிக்கோன் 26
>பொன்னுழான் 15
>பொன்னேரி 51
>பொற்குன்றம் 17
>மகதேசன் 30
>மகாதேவமங்கலம் 18
>மங்கலம் 11
>மட்பக்கநாச்சியார் 13
>மடப்புறம் 14
>மடல் 45
>மணமேற்குடி 28
>மணவில்நாடு 13,22
>மதிமாலையான் பூண்டி 15
>மதுரேசர் 17
>மதுரை 13,22,24,25,42
>மதுரைக்கணக்காயனார்
மகனார் நக்கீரனார்
- முச்சங்க வரலாறு
>மதுரைக்காஞ்சி 21
>மதுரை மருதனிளநாகனார்
முச்சங்க வரலாறு
>மதுரையாசிரியர் நல்லந்துவனார்
முச்சங்க வரலாறு
>மதுரையாசிரியன்மாறன்
முச்சங்க வரலாறு
>மயிலாப்பூர் 10,13
>மயிலை 13,51
>மருகல்நாடு 31
>மருத்தன் 11
>மருதப்பேசுரர் முத்திரை 22
>மருதனிள நாகனார் 11
>>மல்லிநாதன் 15
>மலரி 17
>மலாடு 7
>மலையமான் 7,11,19,26
>மலையமான்
திருமுடிக்காரி 5,11
>மலையன் 11
>மழநாடு 33
>மழபாடி 36
>மழவராயன் 32,51
>மன்னார்குடி 36
>மாகனூர் நாடு 12
>மாங்குடி மருதனார் 21
>மாத்தூர் 12,15
>மாதை 15
மாபுராணம்
- முச்சங்க வரலாறு
>மாமூலனார் 11
>மாயூரம் 12
>மாவை 12
>மின்மினுமினுமினு 13
>மீகொன்றை நாடு 11
>முடத்திருமாறன் 1
முத்தொள்ளாயிரம்
- முச்சங்க வரலாறு
முதற்சங்கத்தார் 45
>முதுகல் 22
>முதுகுருரு - முச்சங்க வரலாறு
>முதுசூரியர் 15
>முதுநாரை- முச்சங்க வரலாறு
>மும்மணிக்கோவை 13
முரஞ்சியூர் முடிநாகராயர்
முச்சங்க வரலாறு
>முருகவேள் 2,11,12
>முல்லைக்கலி 13
>முனையதரையன் 31
>முனையர்மடம் 51
>முனையோதனம் 31
>மூஞ்சியாறு 15
>மூவலூர் 13
>மூவன் 20
>மெய்கண்டதேவர் 19
>மேல்வேளூர் 11
மோசி - முச்சங்க வரலாறு
>யவனர் 28
>யாதவர்கோன் நம்பி 17
>யாதவன் 11
>யாப்பருங்கலவிருத்தி 39
>>யாழ்ப்பாணம் 51
>வக்கநகர் 15
>வக்கபாகை 15
>வக்கை 15
>வச்சணந்தி மாலை 45
>வஞ்சிக்கோன் 11
>வட்டப்பநாச்சி 13
>வடபெண்ணை 46
>வடமலை 47
>வடவார்க்காடு 48,51
>வடவேங்கடம் 17
>வடுகநாதர் 51
>வடுகன் 40
>வண்டியூர் 42
>வண்ணக்கட்சி 48
>வண்ணக்களஞ்சியம் 48
>வத்தவன் 11
>வயிரபுரம் 12
>வயிரமேகநகரம் 12
>வயிரமேகபுரம் 12
>வரதன் 45
>வரதுங்கராமன் 23
>வரந்தருவார் 11
வரி - முச்சங்க வரலாறு
>வருணன் 11
>வல்லம் 41
>வல்லை 41
>வலையன் 13
>வழுதலை 47
>வழுதிலாம்பட்டு 47
>வள்ளுவன் புகழேந்தி 18
>வாக்கி 47
வாகீச முனிவர் கடவுள் வாழ்த்து
>வாட்போக்கி நாதருலா 39
>வாணகப்பாடி 50,51
வாணன் 12,13,30
>வாணியன் தாதன் 13
>வாதக்கோன் 11
>வாதவன் 11
>வாதவூர் 5
>வாய்த்தலை 47
>வாயற்பதிவடுகன் 40
>வாலகோகிலம் 47
>விக்கிரம சோழன் - 17,18,22,28,31
>விக்கிரமசோழனுலா 17
>விக்கிரமபாண்டியன் 18
>விச்சுளி 22
>விசயநகரவேந்தர் 46
>விசயராசன் 51
>விசயவாகு 51
>விசயவொப்பிலாத
மழவராயன் 51
>விட்டலையன் 22
>விட்டலராசன் 22
>விட்டலதேவமகாராசா 22
>விண்ணன் 39
>விநாயகன் - கடவுள் வாழ்த்து
>வியாழமாலையகவல்
- முச்சங்க வரலாறுவிரிஞ்சிபுரம் 29
>விரியூர் 46
>வில்லிபுத்தூரார் 11,15,47
>விழுப்புரம் 46,51
>வீரகவிராயர் 41
>வீரமாறன் 30
>வீரவரதையன் 41
>வீரவல்லாளதேவன் 15
>வீரன் 41
>வீரைக்கவிராசர் 50
>வீரையன் 51
வெண்டாளி - முச்சங்க வரலாறு
>வெண்ணெய்நல்லூர் 13
>வெண்ணை 13
>வெள்ளூர்க்காப்பியனார்
- முச்சங்க வரலாறுவென்று மண்கொண்ட
சம்புவராயன் 15
>வேங்கடராயமுதலியார் 48
>வேதசயிலம் 51
>வேம்பத்தூரார் 18
>வேம்பத்தூர் 43
>வேம்பற்றூர்க்குமரனார் 18
>வேம்பற்றூர் நம்பி 18
>வேலாயுதன் 49
>வேள்பாரி 11
>ஜம்பை 47
1. முரிஞ்சியூர் - பாடவேறுபாடு. 2. முடிநாகனாரும் - பா. வே. 3.நாற்பதிற்றியாண்டு என்பது களவியலுரை. 4. நூல் - இலக்கணம். 5. “அவர்களைச் சங்கமிரீ இயினார் காய்சினவழுதிமுதற் கடுங்கோ னீறாக எண்பத்தொன்பதின்மர் என்ப; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியரென்ப; அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப” - களவியலுரை. 6.கருங்கோழி
மோசியும் - பா.வே. 7. மதுரையின் மாறனும் - பா.வே 8. துவரை யென்ற பெயருடைய வூர்கள் பாண்டியநாட்டிலும் கங்கநாட்டிலும் இருந்திருக்கின்றன. (P.S.Ins. 120; தோர சமுத்திரம் In Mysore State) 9.கல்வியகவன் மாலை - பா.வே. 10. பண்டிபாரமும் பூதபுராணமும் - பா.வே.
2. கபாடபுரம் என்பது தாமிரபரணி கட்லொடுகலக்குமிடத்துள்ள தென்றும், அதுவே பண்டைநாளிற் பாண்டிநாட்டுத் தலைநகரமென்றும் (செந்தமிழ். Vol. VII.) இது பாண்டிவாயில் என்ற பெயருடைய தாயிருந்து வடவராற் கபாடபுரமென மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கருதுவர். “அவரைச் சங்க மிரீஇயினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திற மாறனீறக ஐம்பத்தொன்பதிமர் என்ப; அவருட் கவியரங்கேறினர் ஐவர் பாண்டியரென்ப” - களவியலுரை.
3. அறிவுடைநாயனாரும், அறிவுடையரனாரும் - பா.வே.
4. இளந்திரையனும் - பா.வே.
5. நானூற்று நாற்பத்தொன்பதின்மர் - களவியல்.
6. முத்தொள்ளாயிரம் சங்கத்தார் பாடிய தன்றெனக் கருதுவோரு முளர்.
7. இப்பாரத வெண்பா, பெருந்தேவனார் பாடிய பாரத வெண்பாவுக்கு முற்பட்டது.
8. “சங்கமிரீ இயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன் பதின்மர் என்பது அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரையென்ப; அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டிய ரென்ப” - களவியலுரை.
9. கல்லாடம்
10. R.Seewell’s “Forgotten Empire”
- தமிழ்ப் புலவர்கள் வரலாறு (பதினாறாம் நூற்றாண்டு)
- திரு தேசிகரவர்கள் கடிகையார் என்பதன் அடிக்குறிப்பில், “கடிகை முத்துப் புலவர் இந்த வூரினரோ வென்பது ஆராயத் தக்கது” என்று குறித்துள்ளார். த.பு.வரலாறு. கடிகைப்பட்டினமென்றோர் ஊர் பாண்டி நாட்டில் உளது (A.R.No. 284 of 1927-28) அவ்வூர் பண்டை நாளில் முத்துவாணி கத்திற் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டவராதலால், புலவருடைய பெற்றோர் கடிகைமுத்து எனப் பெயரிட்டனராக, அவர் பிற்காலத்தே கடிகைமுத்துப் புலவரென வழங்கப்பட்டன கோடல் வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக