முதற்குலோத்துங்க சோழன்
வரலாறு
Back
முதற்குலோத்துங்க சோழன்
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
1. முதற்குலோத்துங்க சோழன்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. நுழைவுரை
4. அணிந்துரை
5. பதிப்புரை
6. முகவுரை
2. சோழரும் சளுக்கியரும்
3. குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும்
4. வேங்கிநாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்
5. குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல்
6. குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல்
7. குலோத்துங்கனது அரசாட்சி
8. குலோத்துங்கனுடைய போர்ச் செயல்கள்
9. குலோத்துங்கனது சமயநிலை
10. குலோத்துங்கனது குணச்சிறப்பு
11. குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும்
12. குலோத்துங்கனுடையnஅரசியல் தலைவர்கள்
13. குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர்
14. குலோத்துங்கனது அரசியல்
15. முடிவுரை
1. சேர்க்கை - 1
2. கணியம் அறக்கட்டளை
முதற்குலோத்துங்க சோழன்
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : முதற்குலோத்துங்க சோழன்
தொகுப்பு : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1
ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2007
தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 12 புள்ளி
பக்கம் : 24 + 216 = 240
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 225/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை, பெரியார் குடில், பி.11, குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
116 ஆம் ஆண்டு
நினைவு வெளியீடு
தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960
தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு
உலக அரங்கில் உயர்வும் பெருமையும்
ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு…
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து
உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு…
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி
பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு…
பத்தாம் வகுப்பு வரை
தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய
முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு….
தலைமைச் செயலக ஆணைகள்
தமிழில் மட்டுமே வரவேண்டும்
என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு…
தமிழ்மண் அறக்கட்டளை
நெஞ்சம் நிறைந்த
நன்றியைத் தெரிவிக்கிறது.
நுழைவுரை
முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி
தமிழ் இணைப் பேராசிரியர்
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப் புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார்.
பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார்.
இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர்.
அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணா துறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும்.
இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அது போன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ் விரண்டு நூல்களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர் குடந்தையிலிருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார்.
அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது.
தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டு கோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம் மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும்.
அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கை யெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் , கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார்.
பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பல வற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.
அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தி யாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப்பட்ட காரணங் களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது.
இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக் கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள்வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதி களாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக் கட்டளை வழங்கியுள்ளனர்.
தொகுதி 1
1. முதற் குலோத்துங்க சோழன் 1930
2. திருப்புறம்பயத் தல வரலாறு 1946
3. காவிரிப் பூம்பட்டினம் 1959
4. செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959
தொகுதி 2
5. பாண்டியர் வரலாறு 1940
தொகுதி 3
6. பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949
தொகுதி 4
7. பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951
தொகுதி 5
8. பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961
தொகுதி 6
9. தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955
10. தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955
தொகுதி 7
11. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961
12. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961
தொகுதி 8
13. தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923
14. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998
தொகுதி 9
15. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007
தொகுதி 10
16. சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007
அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல் களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய்திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக் கட்டளையின் இந்த அரிய வெளி யீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு.
அணிந்துரை
கோ.விசயவேணுகோபால்
முதுநிலை ஆய்வாளர்
பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளி
புதுச்சேரி.
1950-60 களில் தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழில் எழுதிய தமிழ்ப் பேராசிரியர்கள் திருவாளர்கள் மா.இராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார், மயிலை.சீனி.வேங்கடசாமி, கா.அப்பாத்துரையார் போன்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் திரு தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். பேராசிரியர் க.அ.நீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு வெளிவந்தபின் அதில் சில கருத்துக்கள் மறுபார்வைக் குரியன என்ற நிலையில் முனைந்து ஆய்வு மேற் கொண்டு சில வரலாற்று விளக்கங்களை மாற்றிய பெருமைக்குரியவர் இவர். தமது இடைவிடா உழைப்பாலும் நுணுகிய ஆய்வினாலும் புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்த சூழ்நிலையில் சிறு நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி மற்றையோர்க்கு வழி காட்டியாய் விளங்கிய பெருமகனார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலை என்னைப் போன்ற மாணவர்கட்குக் கல்வெட்டியலில் ஆர்வமூட்டியவர். எதிர்பாராத நிலையில் அவர் மரண மடைந்தபோது யான், தமிழர் தலைவர் பழ.நெடுமாறன், அ.தாமோதரன் போன்றோர் அவரது பூதவுடலைச் சுமந்து சென்றது இன்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும். எளிமையான தோற்றம், கூர்மையான பார்வை, ஆரவாரமற்ற தன்மை, அன்புடன் பழகுதல் அவரது சிறப்புப் பண்புகளாகும்.
திரு தி.வை.சதாசிவப்பண்டாரத்தாரால் எழுதி ஏற்கனவே வெளி வந்த நூல்கள் சில தற்போது ஒரு தொகுப்பாகத் தமிழ்மண் அறக்கட்டளை யினரால் வெளியிடப்படுகின்றன. முதற் குலோத்துங்க சோழன், திருப்புறம்பயத் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம், செம்பியன்மாதேவித் தல வரலாறு ஆகியன இதில் அடங்கும்.
முதற் குலோத்துங்க சோழன் 1930 இல் வெளியிடப்பட்டது. இது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் விளங்கியது. ஆசிரியரே கூறுவதுபோலத் தமிழகத்தையும் பிற பகுதிகளையும் முதற் குலோத்துங்கன் திறம்பட ஆண்ட ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை விளக்குவது இந்நூல். தமிழில் வரலாற்று நூல் எழுதுவதற்கான முன் மாதிரிபோல் அமைந்துள்ளது இந்நூல். அடிக்குறிப்புக்கள், பிற்சேர்க்கை கள், படங்கள் என ஆய்வு நூல்களில் காண்பன அனைத்தும் இந்நூலின் கண் உள்ளன. இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவருடைய ஆய்வு மனப்பான்மையையும், நேர்மையையும் எடுத்துக் காட்டுவன ஆகும்.
திருப்புறம்பயம் ஆசிரியரது ஊர். புகழ்பெற்ற சிவத்தலம். இதனைச் சுற்றி இன்னம்பர், ஏகரம், திருவைகாவூர், திருவிசயமங்கை, மிழலை, சேய்ஞலூர், திருப்பனந்தாள் போன்ற சிறப்புமிக்க திருத்தலங்கள் உள்ளன. ஆசிரியர், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முறைமையில் இத்தலத்தின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இத்தலம் தொடர்பான உலா, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் ஆகியன இத்தலம் பற்றிக் குறிப்பனவற்றை விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரும் குறைந்தது தாம் வாழும் ஊரினது வரலாற்றையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஸ்ரீ திருப்புறம்பயத்தலவரலாறு ஏற்படுத்துகிறது.
மிகத்தொன்மையானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான காவிரிப் பூம்பட்டினம் பற்றிய நூலுள் இது சோழர்தம் பழைய தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியமையைக் குறிப்பிடுவதோடு சிலப்பதிகாரம் போன்ற பழைய இலக்கியங்கள் சுட்டும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இம்மாநகரை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளார்.
கண்டராதித்த சோழரின் இரண்டாம் மனைவி செம்பியன் மாதேவி. வாழ்நாள் முழுவதும் இறைப்பணிகள் பல செய்த பெருமை யுடையவர். சோழமன்னர் அறுவர் காலத்திலும் வாழ்ந்த பெரு மூதாட்டி. மாதேவடிகள் எனப் போற்றப்படுபவர். பழைய செங்கற் கோயில்கள் பலவற்றைக் கற்றளி களாக்கியவர். இத்தகு சிறப்புக் கொண்ட இவ்வம்மையாரின் பெயரி லமைந்த ஊரில் விளங்கும் திருக்கோவிலின் வரலாற்றை விளக்குவது செம்பியன்மாதேவித் தல வரலாறு. மறைந்த கம்பனடிப்பொடி காரைக் குடி சா.கணேசன் அவர்களின் விமர்சனப் பாங்கோடு கூடிய முன்னுரையுடன் கூடியது இச்சிறு நூல். கோயிலின் பெருமை, வருவாய், நிருவாகம், கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள் எனத் திறம்பட அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பிற்சேர்க்கைகள், விளக்கக் குறிப்புக்கள் என்பவற்றோடு ஆங்காங்கே நல்ல புகைப்படங்களும் இணைக்கப்பட்டு ஆய்வுப் பொலிவோடு விளங்குகின்றது.
இத்தொகுப்பினை வெளியிடும் தமிழ்மண் அறக்கட்டளை யினர்க்கு, குறிப்பாகத் திரு கோ.இளவழகனார் அவர்கட்குத் தமிழ்கூறு நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. இவை முன்பு வெளியிடப்பட்டபோது தமிழ்மக்கள் பெருமளவில் வாங்கிப் பயன்பெற்றதுபோல இப்போதும், குறிப்பாக வரலாறு கற்கும் தமிழ் மாணவர்கள், வாங்கிப் படித்து இவை போலத் தாமும் எழுதத் தூண்டுதல் பெறுவர் என நம்பு கின்றேன். இவர்தம் தொண்டு மேலும் சிறப்பதாக, திரு தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் ஓங்குவதாக.
பதிப்புரை
கோ. இளவழகன்
நிறுவனர்
தமிழ்மண் அறக்கட்டளை
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதி களாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம்.
சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமா மகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.
திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.
பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர்.
பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக் கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.
புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்தி களெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக் கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர்.
பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே.
தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள்.
நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன.
பண்பாட்டுத் தமிழர்க்கு
நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப்
பண்டாரத் தார்க்கும்; ஒரு
மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள்
கொண்டாடும் சோமசுந்
தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக்,
கண்டார்க்க ளிக்கும் வகை
உருவக்கல் நாட்டுவது கடமையாகும்.
எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந்தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர்.
ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள்
பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
கோ. விசயவேணுகோபால்
பி. இராமநாதன்
முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி
க.குழந்தைவேலன்
ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு_ செல்வி வ.மலர்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா
_மெய்ப்பு_ க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
முகவுரை
திருவாங்கூர் இராச்சியத்தின் கல்வெட்டுப் பரிசோதகர் காலஞ் சென்ற திரு. T.A. கோபிநாதராயர் அவர்கள், M.A. எழுதிய சோழவமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலை நான் படித்தபோது நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியரது வரலாறு களை இயன்றவரையில் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவே, கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் சில ஆண்டு களுக்கு முன்னர் ஆராயத் தொடங்கினேன். எனது ஆராய்ச்சி யிற் புலப்பட்ட சரித்திர உண்மைகளை மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், இவற்றின் திங்கள் வெளியீடுகளாகிய செந்தமிழ் தமிழ்ப்பொழில் என்ற இரண்டிலும் அவ்வக் காலங்களில் நான் வெளியிட்டு வந்ததை அன்பர் பலரும் அறிவர். நம் தமிழகத்திலும் பிறநாடுகளிலும் தன் ஆணை செல்லச் செங்கோல் செலுத்திய சக்கரவர்த்தி யாகிய முதற் குலோத்துங்கசோழன் வரலாற்றை விரித் தெழுதுவதற்குரிய கருவிகள் எனக்குக் கிடைத் தமையின் காலக் குறிப்புக்களுடன் இந் நூலை ஒருவாறு எழுதி முடித்தேன்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நாட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில் வெளிவருதல் பெருந் துணையாகும் என்பது அறிஞர் களது துணிபு. ஆதலால், இது, முதலில் தமிழ்ப்பொழில் இரண்டு மூன்றாம் துணர்களில் வெளியிடப்பட்டது; பிறகு 1930-ஆம் ஆண்டில் தனி நூலாக வெளிவந்தது.
சென்னைப் பல்கலைக் கழகத்தார் (Madras University) இதனை நன்கு மதித்து இண்டர்மீடியேட் (Intermediate) பரீட்சைக்குரிய பாடங்களுள் ஒன்றாக அமைத்தமைபற்றிப் பெரிதும் மகிழ்ச்சியுறுவதோடு அக்கழகத் தார்க்கு என்றும் நன்றி பாராட்டுங் கடமையுமுடையேன்.
இதனைப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சித் துறையில் ஊக்கம் பிறக்குமாறு உரிய இடங்களில் பல மேற்கோள்கள் ஆங்காங்குக் கீழ்க் குறிப்புக்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
சரித்திர ஆராய்ச்சியில் எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் முதலில் உண்டுபண்ணியது திரு. T.A. கோபிநாதாரயர் அவர்கள் M.A. எழுதிய சோழவமிச சரித்திரச் சுருக்க மாதலின் அப் பெரியார்க்கும் எனது நன்றியுரியதாகும்.
இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், இனி கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என்பது அறிஞர்கள் நன்கறிந்ததேயாகும்.
இந்நூலைத் திருந்திய முறையில் வெளியிட்டுதவிய சென்னை சாது அச்சுக்கூடத்தாரது பேரன்பு பாராட்டுதற் குரியதாகும்.
சோழரும் சளுக்கியரும்
நம் தமிழகம்1 சேரமண்டலம், சோழமண்டலம் பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று.2 இவற்றுள் சோழமண்டலம் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்3 எனவும் வழங்கப்பெறும்.
இதனைப் பண்டைக் காலமுதல் ஆட்சிபுரிந்து வந்தோர் தமிழ் வேந்தர்களுள் ஒருவராகிய சோழமன்னர் ஆவர். இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழ மன்னர் களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர்களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும்; கொடியும் இலச்சினையும் புலியாம்.4 வடவேந்தரையொப்ப இன்னோர் சூரியகுலத்தினரென்றும் காசிபகோத்திரத்தினரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
பரசுராமர் அரசகுலத்தினரை அழித்தொழிப்பதையே தம் பெருநோன்பாகக் கொண்டு இப்பரத கண்டம் முழுவதும் சுற்றிவந்த நாட்களில், காவிரிப்பூம்பட்டினத்தில் காந்தமன் என்ற சோழமன்னன் ஒருவன் அரசாண்டுவந்தான். அவன் பரசுராமரது வருகையைக் கேட்டுப் பெரிதும் அஞ்சி, பூம்புகார்த் தெய்வமாகிய சம்பாபதிபாற் சென்று, தான் உய்யும்வழி யொன்றுணர்த்து மாறு பணிவுடன் வேண்டினன். அஃது அவனது காதற் கணிகையின் புதல்வனாகிய ககந்தனுக்கு முடிசூட்டிவிட்டு அவனைக் கரந்துறையுமாறு அறிவுறுத்திற்று.1 அவனும் அங்ஙனமே கரந்துறைதலும் சோணாடு சென்ற பரசுராமர் அரியணையில் வீற்றிருந்து அரசாளுவோன் அரசகுலத்தினன் அல்லன் என்பதை யறிந்து கணிகையின் புதல்வனாகிய அவனைக் கொல்லுதல் தம் நோன்பிற்கேற்றதன்று எனக் கருதி அந்நாட்டை விட்டகன்றனர். பரசுராமருக்குப் பயந்து கரந்துறைந்த இக் காந்தமன் என்பவனே காவிரியாற்றைக் கொணர்ந்த பெருந்தகையாளன் என்று பழைய தமிழ் நூலாகிய மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது.2 பிற்றைநாளில், அப்பரசுராமர் இராமபிரான் திருமணஞ்செய்து கொண்டு மிதிலை மாநகரிலிருந்து திரும்புங்கால் அவரை எதிர்த்துத் தோல்வியுற்று, அரச குலத்தினரை வேருடன் களைதற் கெண்ணிய தமது எண்ணத்தை முற்றிலும் ஒழித்து, மலைச்சாரல் சென்று தவம்புரிந்தனர் என்பது இராமாயணத் தால் அறியக் கிடக்கின்றது.
இனி, இராமயண காலத்தில் சோழ மன்னருள் ஒருவன் மலைய மலையிலிருந்த அகத்தியமா முனிவரது ஆணையால் மக்களது இன்னலைப் போக்குமாறு, வானத்தின் கண் அசைந்து கொண்டிருந்த மூன்று மதில்களை அழித்தனன்; அக்காரணம் பற்றியே சிலப்பதிகாரமும் புறநானூறும் அவனைத் தூங்கெயி லெறிந்த தொடித் தோட் செம்பியன் என்று புகழ்ந்து கூறுகின்றன.
பாரதப்போர் நிகழ்ந்த நாட்களில் ஒரு சோழ மன்னன் போர் முடியும் வரையில் தருமன் படைக்கு உணவளித்து உதவிபுரிந்தனன் என்று கலிங்கத்துப் பரணி யுரைக்கின்றது.
ஆகவே, இராமாயண பாரத காலங்களிலும் அவற்றிற்கு முந்தியநாட் களிலும் சோழகுலத்தினர் மிகச் சிறப்புற்று விளங்கினர் என்பது இனி துணரப்படுகின்றது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், மகதநாட்டில் செங்கோல் செலுத்திய அசோகனது ஆணையையுணர்த்துங் கல்வெட்டு களிலும் சோழரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டில், மேனாட்டினின்றும் தமிழ்நாடுபோந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பானது வரலாற்றுக் குறிப்பிலும், மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால், அப்பழைய காலத்தில் எழுதப்பெற்ற பெரிப்ள என்ற நூலிலும் சோழரைப்பற்றிய உயரிய செய்திகள் காணப்படு கின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அன்னாருடன் வாணிபத் தொடர் புடையராய்ப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர் என்பது பெறப்படுகின்றது.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, சோழகுலத்தினர் நம்மனோரால் ஆராய்ந்து அளந்து காண முடியாத அத்துணைப் பழங்காலமுதல் நம் தமிழ்நாட்டின் கீழ்ப்பகுதியாகிய சோழ வளநாட்டில் வீற்றிருந்து, அதனைச் சிறப்புடன் ஆண்டுவந்த அரச குலத்தினர் ஆவர் என்பது நன்கு விளங்குதல் காண்க.
இனிச் சளுக்கியர் என்பார், வடநாட்டினின்றும் போந்து, பம்பாய் மாகாணத்தின் தென் பகுதியிலுள்ள இரட்டபாடி நாட்டை, வாதாபி நகரம்,1மானியகேடம், கலியாணபுரம் முதலான நகரங்களில் வீற்றிருந்து அரசு புரிந்துவந்த ஓர் அரசகுலத்தினர் ஆவர். சீன தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த வழிப் போக்கனாகிய யுவான் சுவாங் என்ற ஆசிரியன், சளுக்கியரது போர்வன்மையைத் தன் நூலுட் புகழ்ந்திருத்த லோடு வடவேந்தனாகிய ஹர்ஷவர்த்தனனைத் தென்னாட்டிற்குச் செல்லாதவாறு போர்புரிந்து விலக்கிய இரண்டாம் புலிகேசி என்பவன் இச்சளுக்கிய குலத்தில் தோன்றிய மன்னன் என்று பாராட்டிக் கூறியுள்ளான்.
இரண்டாம் புலிகேசியின் தம்பியாகிய குப்ஜ விஷ்ணு வர்த்தனன் என்பான் கிருஷ்ணை, கோதாவரி என்ற இருபேராறு களுக்கும் இடை யிலுள்ள வேங்கி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று அதனைக் கைப் பற்றிக் கீழைச்சளுக்கிய நாடொன்றை அமைத்தான்.
இது நிகழ்ந்தது முதல், சளுக்கியர் கீழைச்சளுக்கியர் மேலைச் சளுக்கியர் என்ற இரு கிளையினராயினர்.
இன்னோர் சந்திரகுலத்தினர் என்றும் மானவிய கோத் திரத்தார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவர்களுக்குரிய கொடியும் இலச்சினையும் பன்றி என்பர்.
பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளிற் சோழருக்கும், மேலைச் சளுக்கியருக்கும் அடிக்கடி பெரும் போர்கள் நடைபெற்றன; ஆனால், கீழைச் சளுக்கியர் சோழ மன்னரது பெண்களை மணஞ்செய்து கொண்டு அன்னோர்க்கு நெருங்கிய உறவினராய் நட்புற்று வாழ்ந்து வந்தனர். இவ்வுண்மையை அடுத்த அதிகாரத்தில் நன்கு விளக்குவாம்.
குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், தென் மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத் திறுதிக் காலத்தில் நிலவிய சில சோழ மன்னருடைய பெயர்கள் அச்சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள பாடல்களாலும் நூல்களாலும் தெரிகின்றன. அவர்களுள் சோழன் கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, செங்கணான் முதலானோர் சிறந்தவராவர்.
இன்னோருள் சோழன் கரிகாலன் என்பான் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறந்த துறைமுகப்பட்டினமாகக் கட்டி, அதனை வாணிபத்திற்கேற்ற வளநகராக்கியவன்; காவிரியாற்றின் இருமருங்கும் கரையெடுப்பித்துச் சோணாட்டை வளம்படுத்திச் சோறுடைத்து என்று அறிஞர்கள் புகழுமாறு செய்தவன்.1 இது பற்றியே இவ்வேந்தர் பெருமானைக் கரிகாற் பெருவளத்தான் என்றும் திருமாவளவன் என்றும் மக்கள் பாராட்டிக் கூறுவாராயினர். பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப் படையும், பட்டினப்பாலையும் இம்மன்னன் மீது பாடப் பெற்ற நூல் களேயாம். இவற்றுள் பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு இவ்வேந்தன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அந்நூலைக் கொண்டான் என்று கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகியசயங் கொண்டார் கூறியுள்ளார் இதனால் இவன் நல்லிசைப் புலவர் பால் கொண்டிருந்த பெருமதிப்பு நன்கு விளங்கும். இம்மன்னன் இமயமுதல் குமரிவரையில் தன் வெற்றியையும் புகழையும் பரப்பிய பெருவீரன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாம்.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்; புலவர்க்கும், இரவலர்க்கும் வேண்டியாங்களித்த பெருங் கொடை வள்ளல்; தமிழகத்தில் தன் வெற்றியைப் பரப்பி வீரனாய் விளங்கியவன்.
பெருநற்கிள்ளி என்பான் உறையூரிலிருந்து சோழ வளநாட்டை ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் நாளில், புகார் நகரத்து வணிகனாகிய கோவலனது மனைவி கண்ணகிக்கு உறையூரின்கண் பத்தினிக் கோட்டம் எடுப்பித்து விழா நிகழ்த்தினன்.
பொய்கையார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப் பெற்ற களவழி நாற்பது2 என்னும் நூல்கொண்டவன் சோழன் செங்கணான் ஆவன். 3 இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த சோழரது நிலையும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தளர்வுற்றது. அக்காலத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர் தமிழ்நாட்டில் புகுந்து தொண்டை மண்டலத்தையும் சோழ மண்டலத்தையும் கைப்பற்றிக் காஞ்சிமாநகரையும் மாமல்ல புரத்தையும் தலை நகரங்களாகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். இவர்களது ஆளுகையும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் சோழ மண்டலத்தில் நிலைபெற்றிருந்தது.
பல்லவரது ஆட்சிக் காலத்தில் சோழரின் வழியினர் குறுநில மன்னராகி அன்னோர்க்குத் திறை செலுத்தி வந்தனர். கி.பி. 849ல் விசயாலயன் என்ற சோழ மன்னன் ஒருவன் பல்லவர்களோடு போர் புரிந்து சோழ மண்டலத்தின் ஒரு பகுதியைப்பற்றிக் கொண்டு தஞ்சாவூரில் வீற்றிருந்து முடிமன்னனாக அதனை அரசாளத் தொடங்கினான்.4 இவனையே தொண்ணூற்றாறு புண்கள் மார்பில் கொண்ட வீரன் என்று தமிழ் நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன என்பர். இவன் காலத்தேதான் தஞ்சாவூர் சோழமண்டலத்திற்குத் தலைமை நகரமாயிற்று. இவனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழன் எனப்படுவான். இவன் தன் நண்பனாகிய பல்லவ மன்னனைத் துணையாகக் கொண்டு பாண்டிய னோடு பலவிடங்களில் பெரும் போர்கள் புரிந்தனன். இறுதியில் கி.பி. 880-ஆம் ஆண்டிற் கணித்தாகத் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்த போரில் பாண்டியன் முற்றிலும் தோல்வியுறவே ஆதித்தன் வெற்றியெய்தினன். இப்போரின் பயனாகச் சோழமண்டலம் முழுவதும் ஆதித்தனுக்கு உரித்தாயிற்று. பிறகு தொண்டை மண்டலமும் அவனது ஆட்சிக் குள்ளாயிற்று. பல்லவரும் குறுநிலமன்னராய்ச் சோழமன்னர் கட்குத் திறை செலுத்தும் நிலையை அடைந்தனர். ஆதித்தனும் 27 ஆண்டுகள் அரசாண்டு கி.பி. 907-ல் இறந்தான்.
இவ்வாதித்தனது புதல்வன் முதலாம் பராந்தக சோழன் என்பான். இவன் காலத்தில் சோழரது ஆட்சி உயர்நிலையை யடைந்தது. இவன் பாண்டிய நாட்டையும் ஈழநாட்டையும் வென்று தன்னடிப்படுத்தியவன்; இவனை மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.1 இவன் தில்லையம்பலத்தில் பொன் வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கிய செய்தி யொன்றே இவனது அளப்பரிய சிவபத்தியை நன்கு விளக்குகின்றது. 2 இவன் கி.பி. 907 முதல் கி.பி. 953 வரை அரசாண்டனன்.
இவ்வேந்தனுக்குப் பின்னர் இவனது புதல்வராகிய கண்டராதித்த சோழர் கி.பி. 957 வரைஆட்சி புரிந்தனர். இவரது ஆளுகையில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையாயினும் இவரது சிவபக்தியின் மாண்பும் செந்தமிழ்ப் புலமையும் பெரிதும் போற்றற்குரியனவாம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் தில்லைச் சிற்றம்பலத்தெம்பெருமான் மீது இவர் பாடியருளிய திருப்பதிகம் ஒன்றுளது. எனவே, ஒன்பதாந் திருமுறை யினை யருளிச் செய்த நாயன்மார் ஒன்பதின் மருள் இவ்வரசர் பெருமானும் ஒருவர் ஆவர்.
கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமழபாடி என்னுந் தலத்திற்கு மேற்கே ஒருமைல் தூரத்திலுள்ள கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற நகரம் இவர் அமைத்ததே யாகும். இவரது மனைவியராகிய செம்பியன் மாதேவியாரது சிவபத்தியும் அளவிட்டுரைக்குந் தரத்ததன்று. இவ்வம்மையார் திருப்பணி புரிந்து நிபந்தங்கள் அமைத்துள்ள சிவன் கோயில்கள் நம் தமிழகத்தில் பல உள்ளன. கண்டராதித்த சோழரது படிமம் இவரது மனைவியாரால் கட்டுவிக்கப் பெற்ற கோனேரி ராசபுரம் சிவன்கோயிலில் இன்றும் உள்ளது.
இவ்வரசருக்குப் பின்னர் இவரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பான் சில மாதங்கள் ஆண்டனன். பிறகு இவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தகன் கி.பி. 957 முதல் கி.பி 970-வரைஅரசு செலுத்தினான். இவனைச் சுந்தரசோழன் என்றும் வழங்குவர். அன்றியும், இவனைப் பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவனது மனைவி வானவன் மாதேவி என்பாள்.3 இவ்வரசனுடைய படிமமும் இவன் பட்டத்தரசி வானவன் மாதேவி படிமமும் தஞ்சாவூரிலுள்ள இராசராசேச்சுரத்தில் இவனது மகளாகிய குந்தவையால் எழுந்தருளு விக்கப் பெற்றுப் பூசனைக்கு நிபந்தங்களும் விடப்பட்டுள்ளன.4 இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திறுதியில் இவன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் இளவரசுப் பட்டங் கட்டப் பெற்றான். இவன் பெருவீரன்; பாண்டியனைப் போரில் வென்றமை பற்றி வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் எனப் பாராட்டப் பெற்றனன். சில ஆண்டுகளுக்குள் இவன் பகைவரது சூழ்ச்சியாற் கொல்லப் பட்டனன்.
பின்னர், கண்டராதித்தரது திருமகனாகிய உத்தம சோழன் கி.பி. 970-ல் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 985-ல் உத்தம சோழன் இறக்கவே, இரண்டாம் பராந்தகசோழனது இரண்டாவது மகனாகிய முதலாம் இராசராசசோழன் அரியணை ஏறினான்.
சோழமன்னருள் பல்வகையானும் பெருமையுற்றுப் பெருவீரனாய் விளங்கியவன் இவ்வேந்தனே என்று கூறுவது சிறிதும் புனைந் துரையாகாது. இவனது ஆளுகையில் சோழ மண்டலம் மிக உயரிய நிலையை எய்திற்று. திருநாரையூரில் வாழ்ந்த; ஆதிசைவராகிய நம்பி யாண்டார் நம்பி என்னும் பெரியாரைக் கொண்டு சைவ சமய குரவர்களது திருப்பதிகங் களைத் திருமுறைகளாகத் தொகுப்பித்தவன் இம்மன்னனே யென்பர். இவனுக்கு அக்காலத்தில் இட்டு வழங்கிய சிவபாத சேகரன் என்ற பெயரொன்றே இவன் சைவ சமயத்தில் எத்துணை ஈடுபாடுடையவனாயிருந்தனன் என்பதை நன்கு விளக்கு கின்றது. ஆயினும் இவன் பிறமதத்தினரை என்றும் துன்புறுத்திய வனல்லன்; அன்னோருக்கு மிக்க ஆதரவுகாட்டி யொழுகிவந்தனன் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் உள.
சோழ மன்னர்களது பெருமைக்கும், புகழுக்கும் அக்காலத்திய சிற்ப நுட்பத்திற்கும் ஓர் அறிகுறியாய் இப்போது தஞ்சைமாநகரின் கண் விளங்கு கின்ற இராசராசேச்சுரம் என்ற பெரியகோயிலை எடுப்பித்தவன் இம் மன்னர்பெருமானே யாவன் என்பது ஈண்டு அறியத் தக்கது. இவ்வேந்தன், வேங்கி, கங்கபாடி, நுளம்ப பாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்ட பாடி முதலான நாடுகளை வென்று தன்னடிப் படுத்திப் புகழெய்தியவன். இவற்றுள் வேங்கி என்பது கிருஷ்ணை கோதாவரி என்ற இருபேராறுகளுக்கு மிடையில் கீழ் கடலைச் சார்ந்துள்ளதொரு நாடு என்பதை முன்னரே கூறியுள்ளோம். இது கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டது. கி.பி. 972-முதல் 989-வரை இஃது உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. முதலாம் இராசராசசோழன் அச்சமயமே அந்நாட்டைக் கைப் பற்றுதற்குத் தக்கதெனக் கருதிப் பெரும் படையுடன் அவன் மகனாகிய முதலாம் இராசேந்திர சோழனை அவ்வேங்கிநாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்றதோடு அமையாமல் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனையும் சிறைபிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சைமாநகரில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான்.
பிறகு, முதலாம் இராசராசசோழன் தன் மகள் குந்தவையை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்ததோடு வேங்கி நாட்டையாட்சி புரியும் உரிமையும் அளித்து அந்நாட்டிற்கு அவனை திரும்ப அனுப்பினான்.1 விமலா தித்தனும் அந்நாட்டைக் கி.பி. 1015-முதல் 1022-வரை அரசாண்டான். அவனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இருமக்கள் இருந்தனர். அவர்களுள் இராசராசநரேந்திரன் என்பவனே விமலாதித்தன் இறந்த பின்னர்க் கி.பி. 1022-ல் முடிசூட்டப் பெற்றான். முதலாம் இராசராச சோழனது மகனாகிய முதலாம் இராசேந்திரசோழன் தன் மகள் அம்மங்கைதேவியைத் தன் உடன் பிறந்தாளது மகனும் வேங்கிநாட்டு வேந்தனுமாகிய இராசராச நரேந்திரனுக்கு மணம்புரிவித்தான். மணமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்துவந்தனர்.
அந்நாளில் பட்டத்தரசியாகிய அம்மங்கைதேவி கருப்ப முற்றுத் தன் பிறந்தகமாகிய கங்கைகொண்ட சோழபுரஞ் சென்று அங்குக் கி.பி. 1044-ஆம் ஆண்டில் பூசநாளில் ஒரு தவப்புதல்வனைப் பெற்றாள்.2 திருமகன் பிறந்த நாளிலே நன்னிமித்தங்கள் காணப்பட்டன. அவற்றைக் கண்ட நகரமாந்தர் எல்லோரும் இறும்பூதுற்று, முன்னாளில் இலங்கையை யழித்துப் பின்னாளில் பாரதப் போர் முடித்த திருமாலே இப்புவியின்கண் மறம் நீங்க அறம் வளருமாறு இந்நாளில் அம்மங்கைதேவியின் ஆலிலை போன்ற திருவயிற்றில் தோன்றியுள்ளார் என்று கூறிப் பெருமகிழ்வுற்றனர். முதலாம் இராசேந்திர சோழனது பட்டத்தரசியும் இவற்றையெல்லாம் கண்டு களிப்பெய்தித் தன் காதற்பேரனைக் கைகளில் ஏந்திப் பாராட்டிய போது சில திங்களுக்கு முன் காலஞ்சென்ற தன் நாயகனுடைய அடை யாளங்கள்பல அக்குழந்தையின் பாலிருத்தல் கண்டு இவன் எமக்கு அரு மகனாகி எங்கள் இரவிகுலத்தைத் தளராது தாங்குவானாக என்றுரைத்து அம்மகவிற்கு இராசேந்திர சோழன்1 என்று பெயரிட்டாள்.2 இவ்வரசிளங் குமரனும் அங்கேயே வளர்ந்து வந்தான். இராசேந்திரனும், இளமையில் கல்வி கற்றுப் பலகலைகளிலும் தேர்ச்சியுற்று அறிஞர் யாவரும் கற்றுத் துறைபோய நற்றவக் குரிசில் என்று புகழ்ந்து பேசுமாறு கல்வியில் உயர்நிலையை யடைந்தான். பிறகு இவ்வரசிளங்குமரன், உலகங் காக்கும் கடமை பூண்ட தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியும் பெற்று, யானையேற்றம் குதிரையேற்றங்களும் பயின்று, தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனன். இவனது அம்மான்மார் களாகிய இராசாதி ராசசோழன், இரண்டாம் ராசேந்திர சோழன், வீரராசேந்திரசோழன் முதலானோர் இவனிடத்து மிக்க அன்புடையவர்களாக நடந்து வந்தனர். இவனது ஆற்றலையுணர்ந்த சான்றோர் தந்தையின் சந்திர குலத்தையும் தாயின் சூரியகுலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்து, அவற்றைப் புகழுக்கு நிலைக்களமாக்க வந்த உபய குலோத்தமன் என்று இவனைப் பெரிதும் பாராட்டிப் பேசுவாராயினர்.
வேங்கிநாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்
நம் இராசேந்திரன் பல கலைகளிலும் வல்லவனாய்ப் பல்லோரும் புகழுமாறு கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்துவரும் நாட்களில், வேங்கிநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோயுற்று வருந்திக் கொண்டிருக் கின்றனன் என்று ஒரு திருமுகம் வரப்பெற்றனன். இதனைக் கண்டதும் அவன் பெருங் கவலை யுற்றுத் தன் மாமன்மாரிடம் விடை பெற்றுக்கொண்டு விரைவில் வேங்கி நாட்டை யடைந்தான்; அங்குப் பிணியுற்றுக் கிடந்த தன் தந்தையின் நிலைமையைக்கண்டு பெரிதும் மனமுடைந்து, அவனை விட்டகலாது அணுக்கத்தொண்டனாயமர்ந்து வேண்டியன புரிந்துவந்தான். அந்நாளில் சளுக்கிய இராசராசனும் தனக்குக் கடவுள் அமைத்த வாழ்நாள் முடிவுற்றமையின் கி. பி. 1062 ஆம் ஆண்டில் வானுலகஞ் சென்றனன்.1 தந்தையின் பெரும் பிரிவிற்காற்றாது வருந்திய இராசேந்திரனும் மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய தீக்கடன் நீர்க்கடன் முதலியவற்றை முடித்து, அம்மான் மாரும் ஆன்றோரும் ஆறுதல் கூற, ஒருவாறு அத் துன்பத்தினின்று நீங்கினான் பின்னர், அமைச்சரும் சுற்றத்தினரும் அவனுக்கு முடிசூட்டுவிழா நடத்தற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.
இஃது இங்ஙனமாக, கீழைச் சளுக்கியரது தாயத் தினரான மேலைச்சளுக்கிய மன்னர்களுள் ஆறாம் விக்கரமாதித்தன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் பெரிய போர்வீரன். அவனுக்கும் சோழருக்கும் அடிக்கடி பெரும்போர்கள் நிகழ்ந்துவந்தன. சோழர்கள் தெற்கேயுள்ள பல மன்னர்களைவென்று தம்மடிப் படுத்தித் தாம் முடிவேந்தர்களாய் மேன்மையுற்று விளங்கினர். அங்ஙனமே மேலைச்சளுக்கியரும் தக்கணத்தின் வடபாகத்தில் பெருமையுடன் நிலவினர். இதனால் பேராண்மையும் பெரு வீரமும் படைத்த இவ்விரு அரசகுலத்தினரும் ஒருவரை யொருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் முயற்சியும் உடையவராகவே இருந்தனர். இதற்கேற்ப, முதலாம் இராசராச சோழன் காலமுதல் சோழர்கள் கீழைச்சளுக்கிய மன்னர்களுக்குத் தம் பெண்களை மணஞ்செய்து கொடுத்து அன்னோரைத் தமக்கு நெருங்கிய உறவினராகச் செய்துக்கொண்டதோடு தம் ஆட்சிக்குட் பட்டிருக்கு மாறும் செய்துவந்தனர். இதனால் கீழைச்சளுக்கியரது உதவி மேலைச்சளுக்கியருக்குக் கிடைக்காமற் போயிற்று. அன்றியும் சோழர் களது வலிமையும் பெருமையும் வளர்ச்சியுறலாயின இதனை யுணர்ந்த மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் தன் தாயத்தினரான கீழைச்சளுக்கியரைச் சோழர்களினின்று பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்துடையவனாய் காலங்கருதிக் கொண்டிருந்தான். அதற்கேற்ப அவன் வேங்கியின் மன்னனாகிய இராசராசநரேந்திரன் இறந்ததை யறிந்து, அதுவே தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கோடற்குத் தக்க காலம் என்று கருதித் தன் தண்ட நாயகனான சாமுண்டராயன் தலைமையில் ஒரு படையை வேங்கி நாட்டிற்கனுப்பினான்.
இச்செய்தியை யறிந்த வீரராசேந்திரசோழன் தன் முன்னோர்கள் காலமுதல் நெருங்கிய உறவினால் பிணிக்கப் பட்டிருந்த வேங்கி வேந்தரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கிநாட்டையும் இழப்பதுதன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் இழிவையே பயக்குமென்று துணிந்து ஒரு பெரும்படையோடு அந்நாட்டை நோக்கிச் சென்றான். அங்குக் கடும்போர் நடைபெற்றது. அப்போரில் மேலைச்சளுக்கியரது தண்ட நாயகனான சாமுண்டராயன் என்பான் கொல்லப்பட்டான். அவனது படைகள் எல்லாம் சிதறுண்டு நாற்றிசையிலும் ஓடியுய்ந்தன. வெற்றி யெய்திய வீரராசேந்திரசோழன் தன் மருமகனாகிய இராசேந்திரனுக்கு வேங்கிநாட்டில் ஒருநன்னாளில் முடிசூட்டி, அந்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் மகிழ்வுறச் செய்தான். அக்கீழைச் சளுக்கிய நாட்டின் ஒழுகலாற்றின் படி, நமது இராசேந்திரன் ஏழாம் விஷ்ணுவர்த்தனன்1 என்னும் பெயரை முடிசூட்டுநாளில் எய்தித் தந்தையினும் சதமடங்கு தனயன் என்ற ஆன்றோர் உரைக்கு இலக்காக அரசு செலுத்தி வந்தான். அக்காலங்களில் அவனுக்கு உசாத்துணையாயிருந்து அவனது பேரன்பிற்குரியவனாய் ஒழுகி வந்தவன் விசயாதித்தன் என்ற அவனது சிறியதந்தையே யென்பர். அவனது ஆட்சிக் காலத்தில் வேங்கிநாடு மிகச் செழிப்புற்றிருந்தது. குடிகளும் இன்புற்று வாழ்ந்துவந்தனர்.
குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல்
சோழநாட்டில் முதலாம் இராசராசசோழன் கி.பி. 1014-ல் விண்ணுல கெய்திய பின்னர் அவனது புதல்வனாகிய முதலாம் இராசேந்திரசோழன் அரியணை ஏறினான். இவனைக் கங்கை கொண்ட சோழனென்றும் வழங்குவர். இவனது ஆளுகையில் சோழமண்டலம் ஈடும் எடுப்புமற்ற நிலையை யடைந்தது. மற்றைச் சோழமன்னர்களது ஆட்சிக்காலங்களில் இச்சோழ மண்டலம் இத்தகையதொரு சிறப்பும் பெருமையும் எய்தவில்லை யென்றே கூறலாம். இவ்வேந்தன் மண்ணைக்கடக்கம், ஈழம், இரட்டபாடி, கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம், கடாரம், பப்பாளம், இலாமுரி தேசம் முதலான நாடுகளையும், கங்கை யாற்றைச் சார்ந்த சில பகுதி களையும் வென்று பெரும் புகழுடன் விளங்கினான். இவனைப் பூர்வ தேசமுங் கங்கையுங் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்கள் கூறும். இவன் வடநாட்டு வேந்தர்களை வென்று கங்கைநீர் நிரம்பிய குடங்களை அவர்களுடைய தலைகளில் ஏற்றிச் சோழமண்டலத்திற்குக் கொண்டுவரச் செய்து, திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரியதோர் ஏரி வெட்டு வித்து1 அக்கங்கை நீரை அதில் ஊற்றி அதற்குச் சோழ கங்கம் எனப் பெயரிட்டான். இந்த ஏரியின் பக்கத்துள்ளோர் இதனைப் பொன்னேரி என்று இப்போது வழங்கு கின்றனர். இதனருகில் இவ்வேந்தன் தான் வடநாட்டில் அடைந்த வெற்றிக்கு அடையாளமாக ஒரு நகர் அமைத்து அதற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரிட்டனன். இவன்காலமுதல் இப் புதிய நகரமே சோழர்களுக்குத் தலைநகரமாயிற்று. இங்கு இம்மன்னனால் எடுப்பிக்கப் பெற்ற கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற சிவன் கோயில் ஒன்றுளது. இஃது ஒன்பதாம் திருமுறை யாசிரியருள் ஒருவராகிய கருவூர்த்தேவரால் பாடப்பெற்றது. பழையாறை என்று தற்காலத்து வழங்கும் முடிகொண்ட சோழபுரத்தும்1 இவ்வேந்தனுக்குப் பெரியதோர் அரண்மனை இருந்தது. முடிகொண்டான் என்ற பெயருடன் தஞ்சாவூர் ஜில்லாவில் இப்போதுள்ள முடிகொண்ட சோழப் பேராற்றை வெட்டுவித்தவனும் இவ்வரசனே யாவன். இவ்வேந்தன் கி.பி. 1044-ஆம் ஆண்டில் இறந்தான்.
பிறகு இவனுடைய மக்களுள் முதல்வனாகிய முதலாம் இராசாதி ராசசோழன் பட்டத்திற்கு வந்தான். இவன் தன் தந்தையைப் போன்ற பெருவீரன். இவன் மேலைச் சளுக்கிய ரோடு அடிக்கடி போர்புரிந்து இறுதியில் சளுக்கியமன்னனான ஆகவமல்லனோடு புரிந்த கொப்பத்துப் போரில் கி.பி. 1054ல் உயிர் துறந்தான். இவனைக் கலியாணபுரமும் கொல்லாபுரமும் கொண்டருளி ஆனை மேல் துஞ்சியருளிய பெருமாள் விசய ராசேந்திரசோழன் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. பின்னர், இவனது தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரசோழன் பொருகளத்தில் முடிகவித்து, அப்போரை நடாத்தி வெற்றி பெற்றான். இவன் தன் தந்தையையும் தமையனையும் போலவே சிறப்புடன் அரசாண்டுவந்தான். இவனும் மேலைச்சளுக்கிய ரோடு தொடர்ந்து போர் செய்துவந்தான். இவன் சளுக்கிய ரோடு நிகழ்த்திய போரொன்றில் உயிரிழந்தனன் போலும்.
பின்னர், இவனது இளவலாகிய மும்முடிச்சோழன் என்பான் இராசமகேந்திரன் என்ற பெயருடன் பட்டம் பெற்று அரசாளத் தொடங் கினான். இவன் சோழ மண்டலத்தின் ஆட்சியை அடைவதற்குமுன் தன் தந்தையாகிய கங்கைகொண்ட சோழனது ஆணையின்படி சேரமண்டலத் திற்கும் பாண்டி மண்டலத்திற்கும் அரசப் பிரதிநிதியா யிருந்து சோழ பாண்டியன் என்ற பட்டத்துடன் அவ்விரண்டையும் ஒருங்கே ஆண்டவன். இவன் தன் காலத்தில் சோழமண்டலத்திலுள்ள மக்கள் எல்லோரும் அமைதியாக வாழ்ந்துவருமாறு நன்னெறி வழாது செங்கோல் செலுத்தினான். இத்தகைய பெருங்குணவேந்தனும் சில ஆண்டுகளில் துஞ்சினான்:
பிறகு, இவனது தம்பியாகிய வீரராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கி.பி. 1063-ஆம் ஆண்டில் அரசு கட்டிலேறினான். இவ் வேந்தன் பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன். இவன் முடிமன்னர் களான தன் தமையன் மார்ளுக்கும், அன்னோரது மக்களுக்கும் மேலைச் சளுக்கியர் களால் நேர்ந்த ஆற்றொணா இன்னல்களை மனத்திற் கொண்டு, பெருஞ் செற்ற முடையவனாய் அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு அவர்களது இரட்டபாடி நாட்டின் மேற் சென்றான். இவன், இங்ஙனம் ஐந்துமுறை படையெடுத்துச்சென்று மேலைச் சளுக்கியரது நாட்டைப் பல விடங்களிற் கொள்ளையிட்டும் சிலவிடங்களில் அழித்தும் பாழ்படுத்தினான். இம்மானக் கேட்டைப்பொறாத மேலைச் சளுக்கியர் தம் படையைத் திரட்டிக்கொண்டு இவனோடு பலவிடங்களில் போர் புரிந்தனர். இறுதியில் கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல்சங்கமத்தில் கி.பி. 1064ல் இருபடைகளும் கைகலந்து பெரும் போர்செய்தன. அப்போரில் மேலைச்சளுக்கிய மன்னர் களாகிய ஆகவமல்லன், விக்கிரமாதித்தன் முதலானோர் தோல்வி யுற்றுப் புறங் காட்டி ஓடி ஒளிந்தனர். சளுக்கிய சாமந்தர்களுட் பல்லோர் போர்க் களத்தில் உயிர்துறந்து புகழ் கொண்டனர். வீரராசேந்திரசோழனும் தன்னுடன் பிறந்த முன்னவர் எண்ணம் முடித்து வெற்றித்திருவை மணந்து, தனது தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மகிழ்வுடன் சென்று இனிது செங்கோல் ஓச்சுவானாயினன்.
இங்ஙனம் சோழருக்கும் மேலைச்சளுக்கியருக்கும் நிகழ்ந்து வந்த போர்களில் சோழகுலத்துதித்த முடிவேந்தர் சிலரும் அரசிளங் குமரர் பலரும் இறந்தொழிந்தனர். இறுதியில் எஞ்சியவர் வீரராசேந்திர சோழனும் இவனது மைந்தனான அதிராசேந்திர சோழனுமேயாவர். வீரராசேந்திர சோழனது ஆட்சியில் கி.பி. 1067ல் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற அவன் புதல்வன் அதிரா சேந்திரனுடைய கல்வெட்டுக்களில் வீர ராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு வரை ஆண்டு குறிப்பிடப்பட்டிருத்தலால் வீரராசேந்திரன் கி.பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை உயிர் வாழ்ந்திருந்தனன் எனத் தெரிகிறது. பிறகு அவன் மகன் அதிராசேந்திர சோழன் முடிசூட்டப் பெற்றுச் சில திங்கள் அரசு புரிந்தான். தஞ்சாவூர் சில்லா கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்று அதிரா சேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாமாண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றானென்றும் அவன் நோய் நீங்கி நலம் பெறுதற் பொருட்டுக் கூகூர்க்கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள் தோறும் இருமுறை தேவாரப் பதிகங்கள் ஓதப்பெற்று வந்தன வென்றும் கூறுகின்றது. இவனது ஆட்சியின் மூன்றாமாண்டு இரு நூறாம் நாளுக்குப் பின் இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்பட வில்லை. எனவே நோய்வாய்ப் பட்டிருந்த அதிராசேந்திரன் அந் நாட்களில் உயிர் துறந்தனனாதல் வேண்டும். அதி ராசேந்திரனுக்குப் புதல்வன் இல்லாமையாலும் சோழ நாட்டில் முடிசூட்டப் பெறுவதற் குரிய வேறு சோழ அரச குமாரனொரு வனும் அத்தொல் பெருங்குடியில் இல்லாமையாலும் புகழும் பெருமையும் வாய்ந்த விசயாலயசோழன் காலமுதல் சோழநாட்டில் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த பண்டைச் சோழமன்னர் மரபு அதிராசேந்திர சோழனோடு முடிவெய்துவதாயிற்று.
இந்நிலையில் கங்கைகொண்ட சோழனது மகள் வயிற்றுப் பேரனும் வீரராசேந்திர சோழனது தங்கையின் மகனும் கீழைச் சளுக்கிய வேந்தனு மாகிய இராசேந்திர னென்பான் வடபுலத்துப் போரில் ஈடுபட்டிருந்தனன். இவன் மத்திய மாகாணத்திலுள்ள வயிராகரம் என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரையும் எரியூட்டினான்;1 பின்னர் அம்மாகாணத் திலுள்ள சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆண்டுவந்த தராவர்ஷன் என்னும் வேந்தனோடு போர்புரிந்து அவனைத் தனக்குத் திறைசெலுத்தும்படி செய்தான். இங்ஙனம் இராசேந்திரன் வடபுலத்தில் பெருவீரத்துடன் போர் செய்து கொண்டிருக்கும் நாட்களில் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிராசேந்திரசோழன் விண்ணுல கெய்தி யதை யறிந்து சோழநாட்டிற்கு விரைந்து வந்தனன்.
குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல்
அதிராசேந்திரசோழன் இறந்தபிறகு சோழநாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநிலமன்னரது கலகம் ஒருபுறமும் உண்ணாட்டுக் குழப்பம் மற்றொருபுறமும் மிக்கெழவே, சோழ நாட்டு மக்கள் எல் லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாப் பெருந் துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார்,
மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே
சாதிக ளொன்றோ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியி னில்லா தொழுக்கமு மறந்து போயே
ஒருவரை யொருவர் கைமிக் கும்பர்தங் கோயில் சாம்பி
அரிவையர் கற்புச் சோம்பி யரண்களு மழியவாங்கே
கலியிருள்பரந்தது
என்று இக்குழப்பத்தை அந்நூலிற் கூறியுள்ளார். அன்றியும் சோழநாடு அக்காலத்தில் அரசனின்றி அல்லலுற்றிருந்த செய்தியை,
அருக்க னுதயத் தாசையி லிருக்கும்
கமல மனைய நிலமகள் தன்னை
முந்நீர்க் குறித்த அந்நாள் திருமால்
ஆதிக் கேழ லாகி யெடுத்தன்ன
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தி
எனவும்,
தென்றிசைத்
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவை
தனிமையுந் தவிரவந்த புனிதத்
திருமணி மகுடம் உரிமையிற் சூடி
எனவும் வரும் முதலாங் குலோத்துங்கசோழன் மெய்க் கீர்த்திகளாலும் உணரலாம்.
சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியை யறிந்து வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்துவந்த இராசேந்திரனைக் கண்ட அமைச்சர் படைத்தலைவர் முதலான அரசிய லதிகாரிகள் எல்லோரும் இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சோழர் மரபில் முடி சூடுதற்குரிய அரசகுமாரர் எவருமில்லாமையாலும் கங்கை கொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக் கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழ நாட்டின் அரசனாக முடிசூடும் உரிமை யுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடி சூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கி.பி. 1070-ஆம் ஆண்டு சூன்திங்கள் 9-ஆம் நாளில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் அபிடேகப் பெயரும் எய்தினான். உடனே உண்ணாட்டுக் குழப்பமும் கலகமும் ஒழியவே, சோழமண்டல மெங்கும் அமைதி நிலவிற்று அப்பொழுது சிற்றரசர்கள் இவன் அடிமிசை அறுகெடுத்திட்டு வணங்கினர்; அந்தணர் அரசர் பெருமான் நீடு வாழ்க என்று வாழ்த்தினர்; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ்யாண்டும் பரவுவதாயிற்று. இவனது பேராற்றலையும் இவனால் சோணாடு அடைந்த நலங்களையும்,
நிழலிலடைந்தன திசைகள்
நெறியிலடைந்தன மறைகள்
கழலிலடைந்தனர் உதியர்
கடலிலடைந்தனர் செழியர்.
பரிசில் சுமந்தனர் கவிஞர்
பகடுசுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள்
அவனிசுமந்தன புயமும்
எனவரும் கலிங்கத்துப்பரணி தாழிசைகளால் உணரலாம்.
குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை பற்றி வரலாற்றாராய்ச்சியாளர்க்குள் கருத்து வேறுபாடு உண்டு. அதிராசேந்திரசோழனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் சோழநாட்டாட்சியைக் கைப்பற்றினன் என்பர் சிலர். வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தினமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தால் அவன் கொல்லப்பட்டா னென்றும் அச்சமயத்தில் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டா னென்றும் கூறுவர் வேறு சிலர். கங்கைகொண்ட சோழன் மனைவி, தன்பேரனாகிய இவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டாள் என்பர் மற்றுஞ் சிலர். அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப் பட்டிறந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரமிருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்த போது அந்நாடு அரசனின்றி அல்லலுற்ற நிலையில் இருந்த தென்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப் பரணியும் ஒருங்கே கூறு வதாலும் அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலை நோக்குங்கால் அவன் வைணவசமயத்தில் வெறுப்புடையனல்ல னென்பது நன்று புலனாத லாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு அவன் காலத்துக் கல்வெட்டுக்களில் போதிய ஆதாரங்கள் கிடைத் தலாலும் அவர்கள் கூறுவனவெல்லாம் சிறிதும் பொருந்தாமை காணலாம். கங்கைகொண்ட சோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தன ரென்பது கல்வெட்டுக்களால் தெளியக்கிடத்தலால் அவன் மனைவி தன் பேரனாகிய குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டன ளென்பதற்கும் இடமில்லை.
குலோத்துங்கனது அரசாட்சி
நம் இராசேந்திரன் சோழமண்டலத்தின் ஆட்சியைக் கி.பி. 1070-ஆம் ஆண்டில் எய்தி பின்னர், ஐந்தாண்டுகள் வரை இவனுக்கு இப்பெயரே பெரும்பாலும் வழங்கிவந்தது. அதற்கு முன்னர் இவன் வேங்கி நாட்டை யாண்டுவந்தபோது அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி, இவனுக்கு விஷ்ணு வர்த்தனன் என்ற பெயரும் வழங்கிற் றென்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆயினும் சோணாட்டரசுரிமையை அடைந்த பிறகு கி.பி 1075 முதல் குலோத்துங்கன் என்ற பெயரே இவனுக்கு வாணாள் முழுமையும் நிலைபெற்று வழங்கலாயிற்று. குலோத்துங் கன் என்ற பெயருடைய சோழமன்னருள் இவனே முதல்வனாதலின், இவனை முதலாங் குலோத்துங்கன் என்று வழங்குதலே அமை வுடைத்து. இனி, நாமும் இவனைக் குலோத்துங்கன் என்றே எழுதுவோம். இப்பெயரேயன்றி இவனுக்கு வழங்கிய வேறு பெயர்களும் சில உள. அவை, அபயன், விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், உலகுய்ய வந்தான் என்பன. இப்பெயர்கள் இவனைக் குறித்தலைக் கல்வெட்டுக்களிலும் கலிங்கத்துப்பரணியிலும் தெளிவாகக் காணலாம். சோழ அரசர்கள் தத்தம் ஆட்சியின் தொடக்கத்தில் ஒருவர்பின் ஒருவராகப் புனைந்துகொண்டு வந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள்,1 நம் குலோத்துங்கன் இராசகேசரி என்ற பட்டம் பெற்றவன் ஆவான்.
இவ்வேந்தன் காலத்து நிகழ்ந்த போர்களுள்ளே ஒன்றிரண்டொழிய எஞ்சியன வெல்லாம் இவனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டிற்கு முன்னரே முடிவெய்தின. போர் களெல்லாம் ஒருவாறு முடிவுற்ற பின்னர், கி.பி. 1084 ஆம் ஆண்டில் இவன் சக்கரவர்த்தி என்ற பட்டமும்1 1090-ல் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டமும் புனைந்து கொண்டு பல்வகை யாலும் பெருமையும் புகழும் எய்தி இனிது வாழ்ந்துவந்தான். திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழ மன்னருள் இவனே முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொரு வரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டுவந்தனர். திரிபுவன சக்கரவர்த்தி என்ற தொடர்மொழி சேரமண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை யுணர்த்துவதாகும்.
இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த குலோத்துங்கன் நாட்டிற்கு நலம்புரியக் கருதி முதலில் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் அரசர்க்கு நெடுங்காலமாகச் செலுத்திவந்த சுங்கத்தை நீக்கினான். ஓர் அரசன் தன் நாட்டிலுள்ள எல்லா மக்கட்கும் இனிமை பயப்பனவாகப் பொதுவாகச் செய்யக்கூடிய நலங்களுள் இதனினும் சிறந்தது வேறு யாதுளது? இதனால் மக்கள் எல்லோரும் இவனை வாயாரவாழ்த்திச் சுங்கந்தவிர்த்த சோழன் என்று வழங்குவாராயினர். தவிராத சுங்கந்தவிர்த் தோன்2 என்று புலவர் பெருமக்களும் இவனைப் புகழ்ந்து பாராட்டினர். தஞ்சாவூரைச் சார்ந்த கருத்திட்டைக் குடி இவனது ஆட்சிக்காலத்தில் சுங்கந்தவிர்த்த சோழனல்லூர் என்ற பெயரும் எய்திற்று. பின்னர், சோழமண்டலம் முழுவதையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு அறிந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தல் இயலாது என்று கருதி, அதனை முற்றிலும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும் இவன் பட்டமெய்திய பதினாறாம் ஆண்டாகிய கி.பி. 1086ல் தொடங்கப் பெற்று, இரண்டு ஆண்டுகளில் முடிவுற்றது.3 பிறகு, இவன், குடிகள் எல்லோரும் ஆறிலொரு கடமை நிலவரி செலுத்திவருமாறு ஏற்பாடு செய்தான். இங்ஙனமே இவனது பாட்டனுக்குத் தந்தையாகிய முதலாம் இராசராச சோழன் காலத்தும் சோழமண்டலம் ஒருமுறை அளக்கப்பெற்றதோடு ஆறிலொருகடமை வரியும் விதிக்கப்பெற்றது. குலோத்துங்கனது ஆளுகையில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்களும் உள. அவை, ஊர்நத்தம், குளம், கம்மாளச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, ஊர்நிலத்தூடறுத்துப்போன வாய்க் கால், சீகோயில், ஐயன்கோயில், பிடாரிகோயில், கழனிக் குளங்கள், பறைச்சேரிநத்தம், நந்தவனம், குடியிருக்கை, ஊரிருக்கை, ஓடை, ஈழச்சேரி, வண்ணாரச்சேரி, பெருவழி, திருமுற்றம், ஊருணி, கொட்டகாரம், களம், தேவர் திருமஞ்சனக் குளம், கன்றுமேய்பாழ், சுடுகாட்டுக்குப் போகும்வழி, மனை, மனைப் படப்பை, கடை, கடைத்தெரு, மன்று, கிடங்கு, புற்று, காடு, உவர், ஆறு, ஆறிடு படுகை, உடைப்பு, மீன்பயில்பள்ளம், தேன்பயில் பொதும்பு என்பனவாம்.1 வரி விதிக்கப்பெறாத மேலே குறித்துள்ள இடங்களை ஆராயுங்கால், அந்நாளில் விளைநிலங் களுக்கு மாத்திரம் நிலவரி வாங்கப்பெற்று வந்ததேயன்றி மற்றை நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை என்பது நன்கு அறியக்கிடக்கின்றது.
நம் குலோத்துங்கன் தன் நாட்டிலுள்ள குடிகளது உழவுத் தொழில் வளர்ச்சியுறுமாறு ஆங்காங்குப் பல ஏரிகளையும் குளங்களையும் வெட்டுவித்தான்; காடுகளை யழிப்பித்து மக்கள் வாழ்தற்கேற்ற பல ஊர்களும் நகரங்களும் அமைத்தான்; மக்களது தெய்வபக்தி ஓங்குமாறு ஊர்கள் தோறும் சிவ பெருமானுக்கும் திருமாலுக்கும் பல புதிய கோயில்கள் எடுப்பித்ததோடு அவற்றின் பூசை, திருவிழா முதலிய வற்றிற்கு நிபந்தங்களும் விட்டான்; அன்றியும் நகரங்களிலுள்ள பழைய செங்கற் கோயில்களை இடித்து அவற்றைக் கற்றளிகளாக எடுப்பித்தான். இங்ஙனம் இவனது ஆட்சிக் காலத்தில் மக்கட்குண்டான நன்மைகள் பலவாகும்; விரிப்பிற்பெருகும்.
இக்குலோத்துங்கனது ஆட்சியின் 50-ஆம் ஆண்டில் வரையப் பெற்ற கல்வெட்டுக்கள், திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள காமரச வல்லியிலும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடித் தாலுகாவிலுள்ள கோட்டூரிலும் காணப்படுகின்றன. ஆதலால் இவன் சோழமண்டலத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்டிருத்தல் வேண்டும். இவன் தன் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனாலும், மாமன்மார் களாகிய இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் முதலானோராலும் அரும்பாடுபட்டு உயரிய நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழ மண்டலத்தை, அதன் பெருமையுஞ் சிறப்பும் ஒரு சிறிதுங் குறையாதவாறு யாண்டும் அமைதி நிலைபெறச் செங்கோல் செலுத்திய பெருந்தகை ஆவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட சோழன் கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் முதலான பேரரசர்களை இவனுக்கு ஒப்பாகக் கூறலாமேயன்றி ஏனையோரைக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. இவன் காலத்திற்குப் பின்னர் இவனுக்கு ஒப்பாகக் கூறத்தக்க சோழமன்னன் ஒருவனும் இலன் என்றே கூறிவிடலாம். எனவே, நம் தமிழகம் தன்னைப் புகழுக்கும் பெருமைக்கும் நிலைக்களமாக்கிக் கோடற்குச் சிற்சில காலங் களில் அரிதிற்பெறும் பெருந்தவப்புதல்வர்களுள் ஒருவனாகவே இவனைக் கருதல் வேண்டும். இவனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரையிற் பரவியிருந்தது. அந்நாளில் சோழநாட்டிற்கு வடவெல்லையாகவும் மேலைச்சளுக்கிய நாட்டிற்குத் தென் னெல்லையாகவும் அமைந் திருந்தது இடையிலுள்ள துங்க பத்திரையாறே ஆகும். இப்பெருநில வரைப்பில் நம் குலோத்துங்கன் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பது யாண்டுகள் அமைதியாக ஆட்சிபுரிந்தது மக்களாகப் பிறந்தோர் பெறுதற்குரியனவும் அரியனவு மாகிய பெரும்பேறுகளுள் ஒன்றேயாம் என்று கூறுதலில் தடை யாதுளது.
குலோத்துங்கனுடைய போர்ச் செயல்கள்
நம் குலோத்துங்கன் நடத்திய போர்களுள் ஒன்றிரண் டொழிய ஏனையவெல்லாம் இவனது ஆட்சியின் முற்பகுதி யிலேயே நிகழ்ந் துள்ளன என்று முன்னரே கூறியுள்ளோம். அப்போர் நிகழ்ச்சிகளைத் தற்காலத்தே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு ஒருவாறு ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். அவை :-
1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்
2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர்
3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர்
4. பாண்டியருடன் நடத்தியபோர்
5. சேரருடன் நடத்தியபோர்
6. தென் கலிங்கப்போர்
7. வடகலிங்கப்போர்
என்பன. இப்போர் நிகழ்ச்சிகளின் காரணத்தையும் இவற்றின் முடிவையும் கல்வெட்டுக்களும் முன்னூல்களும் உணர்த்தும் குறிப்புக் களைக் கொண்டு சிறிது விளக்குவாம்.
1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்:- இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிர மாதித்தனோடு கி.பி. 1076-ஆம் ஆண்டில் நடத்தியபோர் ஆகும். தன் மைத்துனனாகிய அதிராசேந்திர சோழன் நோய் வாய்ப்பட்டு இறந்த பின்னர், சோழ வளநாட்டில் குலோத்துங்க சோழன் முடிசூடியதை யுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கிநாடும் சோணாடும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக்குட் பட்டிருப்பது தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனது படை வலிமையையும் வீரத்தையும் குலைத்தற்குப் பெரிதும் முயன்றான். அவன், அம் முயற்சியில் வெற்றியுறும் வண்ணம் ஐந்து ஆண்டுகளாகப் படைசேர்த்தும் வந்தான். இந்நிலைமையில் விக்கிரமாதித்தனுக்கும் அவனது தமையனாகிய இரண்டாம் சோமேச்சுரனுக்கும் ஒற்றுமை குலைந்து மனவேறுபாடு உண்டாயிற்று. உண்டாகவே, விக்கிரமாதித்தன் தன் தம்பியாகிய சயசிங்கனை அழைத்துக்கொண்டு மேலைச்சளுக்கியரது தலை நகராகிய கல்யாணபுரத்தை விட்டுச்சென்றான்.1 பிறகு மேலைச் சளுக்கியரது இரட்ட மண்டலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோமேச்சுரனாலும் விக்கிர மாதித்தனாலும் தனித்தனியாக ஆளப்படும் நிலையை அடைந்தது. இதனை யுணர்ந்த குலோத்துங்கன் சோமேச் சுரனைத் தன்பாற் சேர்த்துக் கொண்டான். பின்னர், விக்கிரமாதித்தன் தான் சேர்த்துவைத் திருந்த படைகளைத் திரட்டிக் கொண்டு குலோத்துங் கனோடு போர் புரியப் புறப்பட்டான். திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுலத்துச் சயகேசி முதலானோர் விக்கிரமாதித் தனுக்குப் பேருதவி புரிந்தனர். அவனது தம்பி சயசிங்கனும் அவன் பக்கல் நின்று வேண்டி யாங்கு உதவினான். சோமேச்சுரன் குலோத்துங் கன் பக்கத்திருந்து போர் புரிந்து உதவுவதாக உறுதியளித்திருந்தான். இறுதியில் குலோத்துங்கனது படையும் விக்கிரமாதித்தனது படையும் துங்கபத்திரை யாற்றங்கரையில் எதிர்த்துப் போர் செய்தன. விக்கிரமாதித்தன் தன் தமையனாகிய சோமேச்சுரன் குலோத்துங் கனோடு சேர்ந்து தன்னுடன் போர் செய்ய இயலாதவாறு ஓர் சூழ்ச்சிசெய்து இடைநின்று தடுத்தான். இப்போரிற் குலோத்துங்கன் வெற்றியாதல் தோல்வியாதல் எய்தினான் என்று கூறுதற்கிடமில்லை. ஆயினும் நம் குலோத்துங்கனுக்கு உதவி புரிதற்குத் துணைப்படை கொணர்ந்த சோமேச்சுரன் தோல்வியுற்றுத் தன் தம்பி யாகிய விக்கிர மாதித்தனாற் சிறைபிடிக்கப் பட்டு நாட்டையும் இழந்தான்.2 குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்கு விக்கிரமாதிதன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்து வந்த பெரும் படையானது அவன் தன் தமையனைத் துங்கபத்திரைப் போரில் இங்ஙனம் தோல்வியுறச் செய்து இரட்டமண்டலத்துள் தன் தமையன் பாலிருந்த நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது. விக்கிரமாதித்தனும் மேலைச் சளுக்கிய நாடாகிய இரட்டபாடி ஏழரையிலக்கம் முழுமைக்கும் முடிமன்னன் ஆயினான். முதலாம் மேலைச்சளுக்கியப் போர் இவ்வாறு முடிவெய்தியது. இதனை முதலாம் துங்கபத்திரைப் போர் என்றும் கூறலாம்.
2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போராகும். இப்போரைப் பற்றிய செய்திகள் இப்போது நன்கு புலப்பட வில்லை. குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியும் இதனை விளக்கிற்றில்லை. ஆயினும், இது, விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நின்று போர்புரிந்த நுளம்ப பாண்டியனாகிய திரிபுவனமல்ல பாண்டியனுடன் குலோத்துங்கன் நடத்திய போராய் இருந்தல் வேண்டுமென்பது ஊகிக்கப் படுகிறது. இப்போர் நிகழ்ச்சியில் நம் குலோத்துங்கன் வெற்றி பெற்றான். இவனது பகை வனாகிய பாண்டியன் கொல்லப் பட்டான். இது குலோத்துங்கன் நுளம்ப பாண்டியரோடு நடத்திய போராதலின், இதனை நுளம்ப பாண்டியப் போர் என்று கூறுதல் பொருத்தமுடையது.
3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர்:- இது, குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டாகிய கி.பி. 1081-ல் நிகழ்ந்தது; விக்கிரமாதித்தன் அவன் தம்பி சயசிங்கன் ஆகிய இருவரோடும் நம் குலோத்துங்கன் நடத்தியதாகும். இச்சண்டைக்குரிய காரணம் நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்று விக்கிரமாதித்தனது தம்பியாகிய சயசிங்கன் என்பான் அரசப்பிரதிநிதியாகவிருந்து ஆண்டுகொண்டிருந்த வன வாசியைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னை வந்தெதிர்த்த விக்கிரமாதித்த னோடு கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் பெரும்போர் புரிந்தனன்.1 இப்போரில், குலோத்துங்கன் வெற்றி எய்தியதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற்கப்பால் துரத்தியுஞ் சென்றான். அங்ஙனந் துரத்திச் சென்றவன் இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங் கண்டான்.1 அளத்தியில் நிகழ்ந்த போரில், இவன் மேலைச் சளுக்கியர் களுடைய களிறுகளைக் கவர்ந்து கொண்டான். அன்றியும், இவன் மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்ட நாயகர்களால் காக்கப்பெற்ற ஆயிரம் யானை களையும் கைப்பற்றிக் கொண்டனன் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.2 இறுதியில் துங்கப்பத்திரைக் கரையில்3 இரண்டாம் முறை நடைபெற்ற போரில் விக்கிரமாதித்தனும் சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்கமண்டலமும் கொண் கானமும் நம் குலோத்துங்கன் வசமாயின. இங்ஙனம் போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியலையும் பெண்டிர்களையும் கவர்ந்து கொண்டு சோணாட்டையடைந்தான்; அவற்றுள், யானைகளையும் பொருட்குவியலையும் தான் போரில் வெற்றிபெறுவதற்குக் காரணமாயிருந்த போர் வீரர்களுக்கும் படைத் தலைவர் களுக்கும் பகுத்துக் கொடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியை யுண்டுபண்ணினான்; சிறை பிடிக்கப்பட்ட மகளிரைத் தன் அரண்மனை யிலுள்ள தேவிமார்களுக்கு வேலை செய்து வருமாறு வேளம் புகுவித்தான். நம் குலோத்துங்கன் மேலைச் சளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போரும் இவ்வாறு வெற்றியுடன் முடிவுற்றது.
4. பாண்டியருடன் நடத்தியபோர் :- குலோத்துங்கன் நடத்தியதாக அறியப்படும் இந்தப் பாண்டியப் போரும் இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி.பி. 1081-ன் தொடக்கத்தில் நடைபெற்றது. வடக்கேயுள்ள நுளம்பபாடிப் பாண்டியனோடு கி.பி. 1076ல் இவ்வேந்தன் புரிந்த போரும் தெற்கேயுள்ள செந்தமிழ்ப்பாண்டி நாட்டின் அரசர்களுடன், கி.பி. 1081-ல் இவன் நிகழ்த்திய இப்போரும் வெவ்வேறு போர்களாம்.
முதலாம் பராந்தகசோழன், முதலாம் இராசராச சோழன் ஆகிய இரு வேந்தர்களின் காலங்களில், பாண்டியர் தம் நிலைகுலைந்து சோழர்களுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் ஆயினர். ஆனால் அவர்கள் சிறிது படை வலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர்களுடன் முரண்பட்டுத் தாம் முடி மன்னராதற்கு முயன்றுவந்தனர். அவர்கள், அங்ஙனம் முரண்பட நேர்ந்தமையின் சோழ மன்னர்களுள் ஒவ்வொரு வரும் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லல் இன்றியமையாததாயிற்று. இதனால் நேரும் துன்பங்களையுணர்ந்த கங்கைகொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசேந்திரசோழன் பாண்டியரை அரியணையினின்று இறக்கித் தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் அளித்துப் பாண்டி நாட்டின் தலை நகராகிய மதுரையில் அரசப்பிரதிநிதி யாயிருந்து அந்நாட்டையாண்டு வருமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன் ஒருவனும் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் அம் மதுரைமா நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர்.
வீரராசேந்திரன் காலத்திற்குப் பின்னர் அதிராசேந்திரன் சோழ வளநாட்டை ஆண்டு வந்தபோது பாண்டியர் தாம் முடிமன்னராதற்கு அதுவே தக்க காலமெனக் கருதித் தம் நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஐந்து அரசர்களாகவிருந்து அவற்றை ஆளத் தொடங்கினர். அவர்களது ஆளுகையும் கி.பி. 1081-வரை நடைபெற்று வந்தது. குலோத்துங்கன் வடக்கே நடத்திய போர்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், தெற்கேயுள்ள பாண்டி நாட்டையும் தன்னடிப் படுத்த எண்ணி, இப்பாண்டியர் ஐவர்மீதும் தும்பை சூடிப் போர்க்கெழுந்தனன். இதனை யுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும்படை யோடு வந்து இவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய நம் குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர்.2 குலோத்துங்கன் பாண்டி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு அவ்விடங் களிலெல்லாம் வெற்றித் தூண்களும் நிறுவினான். இப்போரில் குலோத்துங்கன் கைப் பற்றிய நாடுகளுள் முத்துச் சலாபத்திற்குரிய மன்னார்குடாக் கடலைச் சார்ந்த நாடும் பொதியிற் கூற்றமும் கன்னியாகுமரிப் பகுதியும் சிறந்தவை களாகும்.
5. சேரருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கன் குடமலை நாட்டில் சேரரோடு நடத்திய போராகும். இதுவும் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரும் சேரரைத் தனக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் களாகச் செய்யும் வண்ணம் குலோத்துங்கனால் தொடங்கப் பெற்றது. திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக் கடற்கோடியிலுள்ள விழிஞத்திலும், திருவனந்த புரத்தைச் சார்ந்த காந்தளூர்ச்சாலையிலும் குமரி முனைக்கு வடக்கிலுள்ள கோட்டாறு என்ற ஊரிலும் சேரநாட்டு வேந்தனுக்கும் நம் குலோத்துங்கனுக்கும் பெரும்போர்கள் நடந்தன ;3 சிறிதும் அஞ்சாது எதிர்த்துப் போர் புரிந்த மலைநாட்டாருள் பலர் போர்க் களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னது கப்பற்படையினை இருமுறை யழித்துப் பெருமை எய்தினான்.1 கோட்டாறும் எரிகொளுத்தப் பெற்று அழிக்கப் பட்டது. சேரமன்னனும் குலோத்துங்கனுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களுள் ஒருவனாயினன். சேரரும் பாண்டியரும் தம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் தன்னுடன் முரண்பட்டுத் தீங்கிழைக் காதவாறு கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின்கீழ் நிலைப்படைகள் குலோத்துங்கனால் அமைக்கப்பெற்றன; அவ்வாறு கோட்டாற்றில் நிறுவப் பட்ட படைக்குக் கோட்டாற்று நிலைப்படை. என்று பெயர் வழங்கிற்று.2
6. தென்கலிங்கப்போர்:- இது குலோத்துங்கனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி.பி. 1096ல் நிகழ்ந்தது. இப்போர் வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்த அரசிளங் குமரன் விக்கிரமசோழன் என்பான் தன் இளமைப்பருவத்தில் தென் கலிங்கநாட்டின் மன்னனாகிய தெலுங்க வீமன் மேற்படையெடுத்துச் சென்று அவனை வென்றதையே குறிக் கின்றது. இதனை விக்கிரமசோழனது மெய்க்கீர்த்தி,
தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத் தருளி
என்று தெளிவாக விளக்குதல் காண்க.
இப்போர் குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால் நிகழ்த்தப் பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்திலே நடை பெற்றதாதலின் மகனது வென்றிச் சிறப்பு தந்தைக் கேற்றியுரைக்கப் பட்ட தென்றுணர்க.
7. வடகலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 42-ஆம் ஆண்டாகிய கி.பி. 1112-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்ற போராகும்; வடகலிங்க வேந்தனாகிய அனந்தவன்மன் என்பானோடு குலோத்துங்கன் நடாத்தியது.2 வடகலிங்கத்திற்கு நேரிற்சென்று இப்போரை வெற்றியுற நடாத்தித் திரும்பியவன் குலோத்துங்கனது படைத்தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமானே யாவன். இவனோடு வாண கோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத் தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர்.3 குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சியை விரித்துக் கூறும் நூல் கலிங்கத்துப் பரணி என்பது. அந்நூல் இப்போரைப் பற்றி யுணர்த்தும் செய்திகளை அடியிற் காண்க.
ஒருநாள் நம் குலோத்துங்கன் காஞ்சி மாநகரிலுள்ள அரண் மனையில் ஓவியமண்டபத்து வீற்றிருந்தபோது, வாயில் காப்போரில் ஒருவன் ஓடிவந்து அரசனது அடிகளை முடியுற வணங்கி, எம்பெரு மானே, வேந்தர் பல்லோர் திறைப்பொருள் கொணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றனன். அதனைக் கேட்ட அரசன் அன்னாரை விடுக என,
தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே
கங்கர் கடாரர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் நுளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர் மவிராடர் யிந்தர் சயிந்தர்களே
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர் அவந்தியர் குச்சரர் கச்சியரே
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர் திகத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே
என்ற மன்னர்கள் அம்மன்னனை யணுகிப் பணிந்தெழுந்து மன்னர் மன்ன அடியேம் நினக்கு இறுக்கக் கடவதாய திறைப் பொருள் கொணர்ந்துளேம் என்றுரைத்துத் தாம் கொண்டு வந்துள்ள பொற்கலம் மணித்திரள் முதலான பொருள்கள் அனைத்தையும் அரசன் திருமுன்னர்க் காட்டிக் கைகுவித்து ஒருபுடை நின்றனர்.
அப்போது அரசன் இவர்களொழியத் திறை கொடாதார் இன்னும் உளரோ என்று வினவினான். அச்சமயத்துக் கடகர் முன்றோன்றி, பெருமானே, எங்கள் திறையும் கொண்டு வந்து விட்டோம் என்றுரைத்து அவன் கழல் வணங்கினர். அப்போது, வட கலிங்கத் தரசன் இருமுறை திறை கொணர்கிலன் என்று அமைச்சன் கூற, அதனைக் கேட்ட அரசன் பெரிதும் வெகுண்டு அங்ஙனமாயின் அவனது வலிய குன்றரணம் இடிய வென்று அவனையும் அவனது களிற்றினங்களையும் பற்றி ஈண்டுக் கொணர்மின் என்றனன். அரசன் அங்ஙனம் கூறலும், ஆண்டு அருகிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத் தொண்டைமான் அடியேன் கலிங்க மெறிந்து வருவல்; அடியேற்கு விடை கொடுக்க வென, அரசனும் அங்ஙனமே செய்க என்றனன்.
குலோத்துங்கனிடத்து விடைபெற்ற கருணாகரன் நால்வகைத் தானையோடும் போர்க்கெழுந்தனன்; எங்கும் முரசங்கள் முழங்கின; வளைகள் கலித்தன; நாற்படையும் சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப் போல் திரண்டெழுந்தன. அவற்றைக் கண்டோர் பலரும் வியப்பெய்தி, இவை கடலைக் கலக்குங் கொலோ? ஒன்றும் அறிகிலம்; இவற்றின் எண்ணம் யாதோ? என்று ஐயுற்று நடுக்கமுற்றனர். நாற்றிசை களும் அதிர்ந்தன. தூளிப்படலம் பிறந்தது. பல்லவர் கோனாகிய கருணாகரன் வளவர் பெரு மானோடு களிற்றின் மீது இவர்ந்து இரைவேட்ட பெரும்புலிபோற் பகைமேற் சென்றனன். பாலாறு, பொன் முகரி, பழவாறு, கொல்லி யெனும் நாலாறுந் தாண்டிப் பெண்ணை யாற்றை யும் கடந்து தொண்டைமான் படைகள் சென்றன; அதன் பின்னர், வயலாறு, மண்ணாறு, குன்றியென்னும் ஆறுகளையுங் கடந்து கிருட்டினை நதியும் பிற்படுமாறு போயின; பிறகு, கோதாவரி பம்பாநதி, கோதமை நதி யென்னும் இவற்றையுங்கடந்து கலிங்கநாட்டை யடைந்து, சில நகரங்களில் எரிகொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின.
இத்திறம் நிகழ்வனவற்றைக் கண்ட குடிகளெல்லோரும், ஐயோ, மதில்கள் இடிகின்றனவே வீடுகள் எரிகின்றனவே; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே; அரண் எங்குளது? நமக்குப் புகலிடம் யாண்டுளது? இங்குத் தலைவர் யாவர்? படைகள் வரு கின்றன; அந்தோ நாம்கெடுகின்றனம்மடிகின்றனம்!! என்று ஓலமிட்டுக் கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கித் துணுக்குற்ற குடிகளெல்லாம் ஐயோ! நம் மன்னன், குலோத்துங்க சோழற்கு இறுக்கக் கடவதாகிய திறை கொடாது உரைதப்பினான்; ஆதலின் எதிரே தோன்றியுள்ளது அம்மன்னனது படையே போலும்; அந்தோ! இனி என் செய்வது! என்றலறிக் கொண்டு உரைகுழறவும் உடல் பதறவும் ஒருவருக்கொருவர் முன்னாக அரையிற் கட்டிய துகில் அவிழ ஓடித் தம் அரசனது அடிமிசை வீழ்ந்தனர். அங்ஙனங் குடிகள் தன்னடியில் வீழ்ந்து அலறி ஓலமிடுதலைக் கண்ட கலிங்கர் கோமானாகிய அனந்தவன்மன் வெகுளியினால் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து, அன்னாரை நோக்கி ‘யான் அபயனுக்கே யன்றி அவன் தண்டினுக்கு மெளியனோ? என்றுரைத்துத் தடம்புயங் குலுங்குற நகைத்தனன். பின்னர், நமது நாடு கானரண், மலையரண், கடலரண் இவற்றாற் சூழப் பெற்றுக் கிடத்தலை அறியாது, அவன்படை வருகின்றது போலும்; நல்லது, சென்று காண்போம் என்று கூறினான்.
அம்மன்னன் கூறியவற்றைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சர்தலைவன், அரசர் சீறுவரேனும் அமைச்சனாகிய தான் உறுதியை யுரையாதொழியின் அது தன் கடமையினின்று தவறியதாகு மென்பதை நன்குணர்ந்தவனாய், அரசனை நோக்கி, மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை யிகழாது சிறிது செவி சாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர் களைப் புறங்கண்டு வெற்றி கோடற்குச் சயதரன் படை போதா தோ! அவனே நேரில் வருதல் வேண்டுமோ? அவனுடைய படையினாற் பஞ்சவர் ஐவருங் கெட்ட கேட்டினை நீ கேட்டிலை போலும்; முன்னொருநாள் அவனது படையுடன் பொரு வானெழுந்த சேரர் செய்தி நின் செவிப்பட்ட தில்லையோ? அவன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச் சாலை கொண்டதும் தன் படையினைக் கொண்டன்றோ? தண்டநாயகராற் காக்கப் பெற்ற நவிலையின் கண் ஆயிரம் யானைகளை அவன் கைப்பற்றிக் கொண்டதை நீ யறியாயோ? அபயன் படையினால் ஆரஞருற்றுத் தம் மண்டலங்களை இழந்தவேந்தர் இத்துணைய ரென்றுரைத்தல் சாலுமோ? ஆதலால் அத்தண்டின் முன்னர் நின் புயவலி எத்தன்மைத்தாகுமென்பதை எண்ணித் துணிவாயக; இன்று என்னைச் சீறினும், நாளை அச்சேனைமுன் நின்ற போழ்தினில் யான் கூறிய துண்மையென்பதை நன்குணர்வாய் என்று நன்மதி நவின்றனன்.
அமைச்சர் தலைவன் கூறியவற்றைக் கேட்ட கலிங்க மன்னன் அவனை நோக்கி, யாம் கூறியவற்றை மறுத்துரைப்ப தெனின் இமை யோரும் எம் முன்னர்ப் போதரற்குப் பெரிதும் அஞ்சுவர். பன்னாட்களாகச் செருத் தொழில் பெறாது எம் தோட்கள் தினவுற்றிருத்தலை நீ அறியாய் போலும். முழைக்கண்ணுளதாய அரியேற்றின் முன்னர் யானை யொன்று எளிதென் றெண்ணிப் பொருதற்குக்கிட்டி வருதல் உண்மையாயினன்றோ அபயனதுபடைஎம்முடன் பொருதற்கெழும்1 எமது தோள்வலியும், வாள்வலியும் பிறவலியும் இத்தன்மையன வென்றுணராது பிறரைப் போல் ஈண்டுக் கூறலுற்றாய். இது நின்ப தமையன்றோ? நன்று! நமது நாற்படையு மெழுந்து அபயன் ஆணையாற் போதரும் படையுடன் போர் தொடங்குக என்றுரைத்தனன். அப்பொழுதே
பண்ணுக வயக்களிறு பண்ணுக வயப்புரவி
பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செருநர் நண்ணுக செருக்களம்
நமக்கிகல் கிடைத்த தெனவே’
என்று எழுகலிங்கத்தினும் முரசறையப்பட்டது.
உடனே, கலிங்கர் கோமானது படைகள் போர்க்குப் புறப் பட்டன; வரைகள் துகள்பட்டன; கடலொலிபோல் முரசங்கள் மொகுமொகென் றொலித்தன; இடைவெளியரிதென ஒரு வருடலினில் ஒருவர் தம் உடல்புக நெருங்கிச் சென்று, கலிங்கப்படைகள் கருணாகரன் படைகளின் முன்னுற்றன.
பின்னர் இருதிறத்தார்க்கும் போர் தொடங்கலாயிற்று; ‘படை எடும் எடும்’ என்ற ஓசையும், ‘விடும் விடும்’ என்ற ஓசையும், கடலொலி போன்றிருந்தன; சிலை நாண்தெறிக்கும் ஓசை திசைமுகம் வெடிப்ப தொக்கும். இருதிறப்படைகளும் எதிர்நிற்றல், இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போன்றிருந்தது. பரியொடுபரி மலைவது கடற்றிரைகள் தம்முள் இகலி மலைந்தாற் போன்றிருந்தது. யானை யொடு யானை பொருவது வரையொடு வரை பொருதாற்போன்றிருந்தது; முகிலொடு முகில் எதிர்த்தது போல் இரதமும் இரதமும் எதிர்த்தன. புலியொடு புலி யெதிர்த் தாற்போல் வீரரொடு வீரரும் அரியோடு அரி எதிர்த்தாற்போல் அரசரொடு அரசரும் எதிர்த்துப் பொருவாராயினர்; வீரர்களின் விழிகளிலே சினக்கனல் தோன்றிற்று. அக்கனல் மின்னொளி வீசின; அன்னார் கையிற் கொண்ட சிலைகள் உருமென இடித்துக் கணை மழைபொழிந்தன; அதனாற் குருதியாறு பெருகலாயிற்று. அவ்வாற்றில் அரசர்களது நித்திலக்குடைகள் நுரையென மிதக்கலுற்றன; போரில் துணிபட்ட களிற்றினங்களின் உடல்கள் அவ்யாற்றின் இருகரையென இருமருங்குங் கிடந்தன.
குருதிவெள்ளத்திற் பிளிற்றிவீழுங் களிற்றினங்கள் வேலை நீருண்ணப் படிந்த மேகங்கள் போன்றிருந்தன; அவ்யானை களின் கரங் களை வாளாற்றுணித்துத் தம் புயத்திட்ட வீரர்கள் தோற்பைகளைத் தோளின் கண்ணே கொண்டு நீர்விடுந் துருத்தியாளரைப் போன்றி ருந்தனர்; அம்புகள் தைக்கப் பெற்றுச் சுருண்டு விழும் யானைகளின் கைகள் வளையங்கள் போன்றிருந்தன. இருதொடையும் துணிபட்டுக் கிடந்த மறவர் தம் முன்னர்ப் பொருவா னெழுந்த வாரணத்தின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி அதன் மீதெறிவர்; மற்றொன்றை இனி எறியுமாறு எடுத்துவைப்பர்; சில வீரர் தம் உரத்தின் மீது பாய்வான் எழுந்த இவுளியை ஈட்டியாற்குத்தி எடுத்துத் திரிவது வெற்றிமங்கைக்கு எடுக்கப்பெறும் வெற்றிக் கொடி போன்றி ருந்தது. அன்னார் யானைகளின் மத்தகங்களைப் பிளக்குங்கால் வீழும் முத்துக்கள் அவ்வெற்றி மங்கைக்குக் சொரியப் பெறும் மங்கலப் பொரிகளை யொப்பனவாகும்; மாற்றார் சிலையில் அம்பைத் தொடுக்கு மளவில் தம்மிடத்து அம்பில்லாத வீரர்கள் தங்கள் மார்பினிற் குளித்த பகழியைப் பற்றியிழுத்துச் சிலையிற் றொடுத்து விடுவர். குறை யுடலங் கூத்தாட, அவற்றின் பின்னர்க் களிப்போடாடும் பேயினங்கள் ஆடல் ஆட்டுவிக்கும் ஆடலாசிரியன் மாரையொக்கும். சடசடவெனும் பேரொலியாற் செருக்களம், தீவாய்மடுக்கும் கழைவனம் போன் றிருந்தது.
இவ்வாறு போர் நிகழுங்கால் களப்போரினை விரைவில் முடித்து வாகை சூடுமாறு வண்டையர் அரசனாம் கருணாகரத் தொண்டைமான் தன் வேழ முந்துறச் சென்றனன். அவனது படையும் முன்னர்ச் செல்ல லுற்றது. அங்ஙனஞ் செல்லவே கலிங்கப்படையின் மதயானைகள் துணி பட்டன; துரக நிரையொடு தேர்கள் முறிபட்டன. குடர்கள் குருதியின் மேல் மிதந்தன; அவற்றைக் கழுகுகளும் காகங்களும் உண்டுகளித்தன; ஆயிரம் யானைகளைக்கொண்டு பொருவம் எனவந்த கலிங்கவீரர்கள், தங்கள் அரசன் உரைசெய்த ஆண்மையுங்கெட அமரில் எதிர் நிற்கமாட்டாது ஒதுங்கினர்; இப்படைமாயையோ மறலியோ வென்றலறிக்கொண்டு நிலை குலைந்து விழுந்து ஓடினர்; அபயம் அபயம் என்றலறிக்கொண்டு ஒருவர் முன்னர் ஒருவர் ஓடினர்; அங்ஙனம் ஓடிய கலிங்க வீரர் பதுங்கியது கன்முழையின் கண்ணோ! மறைந்தது அரிய பிலத்தினுள்ளோ! கரந்தது செறிந்த அடவியிலேயோ! இவற்றை முழுதுந் தெரிந்து கோடல், அரிதாகும். அவ்வாறு கலிங்கரோடப் பலப்பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர்கள் ஆகிய எல்லா வற்றையும் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். கைகொண்ட அன்னோரே அவற்றின் அளவைக் கணித்துரைப்பது அருமை யெனின், மற்றையோர் அவற்றைக் கணித்துரைத்தல் எங்ஙனம் கூடும்!
இவற்றைக் கவர்ந்தபின் இனி கலிங்க மன்னனையும் கைக்கொண்டு பெயர்குதும்; அவனிருக்கின்ற இடத்தையறிக என்றனன் கருணாகரன். அவன் சொற்கள் பிற்படுமாறு சில வீரர்கள் விரைந்து சென்று வரை களிலும் வனங்களிலும் தேடிக் காணப்பெறாது, முடிவில் ஒரு மலைக்கு வட்டிற் கரந்திருந்த கலிங்கர் கோனைக் குறுகி நமது அடற்படையைக் கொணர்க வென்றனர். எனலும் அவனைக் கொணருமாறு கருணாகரன் தன் படைஞரை ஏவினன். அவர்கள் சென்று வெய்யோன் அத்தகிரியை அடையுமளவில் கலிங்க மன்னன் கரந்திருந்த வெற்பினையெய்தி வேலாலும் வில்லாலும் வேலிகோலி விடியளவுங் காத்து நின்றனர். பின்னர், செங்கதிரோன் உதயகிரியையடையு முன்னர் அம் மன்னனைக் கைப்பற்றித் திரும்பினர்.
அன்னாரது வழியில் எதிர்ப்பட்ட சில கலிங்கர்கள் தங்கள் உடல்முழுவதும் மாசேற்றித் தலைமயிரைப் பறித்தெடுத்து அரை யிலுள்ள கலிங்கத்தைக் களைந்தெறிந்துவிட்டு, ஐயா! யாங்கள் சமணர்கள்; கலிங்கரல்லேம்: எனக் கூறிப் பிழைத்துச் சென்றனர். சிலர் சிலையின் நாணை மடித்து முப்புரி நூலாக அணிந்துகொண்டு ஐயா! யாங்கள் கங்கை நீராடப் போந்தேம். விதிவலியால் இங்கு அகப் பட்டுக் கொண்டோம்; கரந்தவரல்லேம் எனச் சொல்லி உயிர் பிழைத்தனர். குருதி தோய்ந்த கொடித்துணிகளைக் காவி யுடையாக வுடுத்துக் கொண்டு தலையினை முண்டிதஞ் செய்து கொண்டு ஐயா, எங்கள் உடையைக் கண்டவளவில் எங்களைச் சாக்கிய ரென்று அறிகிலிரோ? என்றியம்பி யுய்ந்தனர் சிலர். சிலர் யானைகளின் மணிகளை அவிழ்த்துத் தாளமாகக் கையிற் பிடித்துக்கொண்டு கும்பிட்டு, ஐயா, யாங்கள் தெலுங்கப் பாணர்கள்; சேனைகள் மடிகின்ற செருக்களங் கண்டு திகைத்து நின்றேம்; இத்தே யத்தினரல்லேம் என்றுரைத்துப் பிழைத்துப் போயினர். இவ்வாறு பிழைத்துச் சென்றவர்கள் தவிர, கலிங்க நாட்டில் உயிர் பிழைத்தவர்கள் வேறு ஒருவருமிலர்.
கலிங்கமெறிந்து வாகைமாலைசூடிய கருணாகரத் தொண்டைமான் களிற்றினங்களோடு நிதிக்குவியல்களையும் பிறவற்றையுங் கவர்ந்து கொண்டுவந்து குலோத்துங்க சோழன் திருமுன்னர் வைத்து வணங்கினான். நேரியர்கோன் பெரிதும் மகிழ்ச்சியுற்றுத் தொண்டை மானது போர்வீரத்தைப் பலபடப் பாராட்டி அவற்குத் தக்க வரிசைகள் செய்தனன்.
குலோத்துங்கனது சமயநிலை
நம் குலோத்துங்கன் கொண்டொழுகியது பொதுவாக வைதிகசமயம் என்பது முந்நூல் பெருமார்பிற் சிறந்தொளிரப் பிறப்பிரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்1 வேதங்கள் நான்கினையும் வேதியர்பாற் கேட்டருளி2 னான் என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியிற் கூறி யிருத்தலால் நன்கு விளங்குகின்றது. ஆனால் இவன் வைதிக சமயத்தின் உட்பிரிவுகளாகிய சைவ வைணவசமயங்களுள் சைவசமயத்தையே சிறப்பாகக் கொண்டொழுகியவன்; சிவபெருமானிடத்து அளவுகடந்த பத்தி செலுத்தியவன். இவன் காலத்திற்கு முற்பட்ட சோழ மன்னர்கள் எல்லோரும் சைவராகவே இருந்திருப்பதோடு தில்லையில் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டும் வந்துள்ளனர். ஆதித்தன், முதற்பராந்தகன் முதலானோர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைச் சிறப்பித்திருக் கின்றனர். நம் குலோத்துங்கனும் தன் முன்னோரைப் போலவே திருச்சிற்றம் பலத் தெம்பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு புரிந்துவந்தான். ஆயினும், தாம் மேற்கொண்ட சமய மொழிய மற்றைச் சமயங்களைக் கைக்கொண்டொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானும் துன்புறுத்தும் அரசர் சிலர்போல இம் மன்னர் பெருமான் புறச்சமயங்களில் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இதற்குச் சில சான்றுகள் எடுத்துக்காட்டிச் சிறிது விளக்குவாம்.
சோழ இராச்சியத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள் தோறும் இவனுடைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சார்ந்த மன்னார் குடியிலுள்ளதும் இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று வழங்கப் பெறுவதுமாகிய திருமால் கோட்டம் இவன் பெயரால் எடுப்பிக்கப் பெற்ற தொன்றாம். குலோத்துங்க சோழ விண்ணகரம் என்பது அதற்குரிய பழைய பெயர். அன்றியும் நாகப்பட்டினத்தின் கண் கடார1த்தரசனாகிய சூடாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவனது மகனாகிய மாற விசயோத்துங்கவர் மனால் முடிக்கப்பெற்ற இராசராசப் பெரும்பள்ளி என்னும் புத்தவிகாரத்திற்கு நம் குலோத்துங்கன் விளைநிலங்களை நிபந்தமாக விட்டிருக்கிறான் கி.பி. 1090-ல் இக்கோயிலுக்கு இவ்வேந்தன் விட்ட நிபந்தங்களை யுணர்த்தும் செப்பேடுகள் ஹாலண்டு தேயத்திலுள்ள லெய்டன் நகரத்துப் பொருட் காட்சிச் சாலையில் வைக்கப் பட்டிருத்தலை இன்றுங் காணலாம். இத்தகைய செய்திகளை யாராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொதுநோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தவன் என்பது இனிது பெறப்படு கின்றது. ஆயினும், இவன் சிவபிரானிடத்து ஆழ்ந்த பத்தியுடை வனாய்ப் பெரிதும் ஈடுபட்டிருந்தான் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இவன் எய்தியிருந்த திருநீற்றுச்சோழன் என்ற அருமைத் திருப்பெயரொன்றே இதனை நன்கு வலியுறுத்தும். ஆகவே இவனைச் சிறந்த சைவர் தலைமணி என்று கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடையதேயாகும்.
குலோத்துங்கனது குணச்சிறப்பு
நம் குலோத்துங்கன் ஒரு செங்கோல் வேந்தனுக்குரிய எல்லா நற்குணங்களையும் ஒருங்கே படைத்தவன். இவன்பாற் காணப்படும் உயர்குணம் பலவுள் முதலாவதாக வைத்துப் பாராட்டத் தக்கது இவனது கடவுள் பத்தியேயாகும். சிறப்பாகச் சிவபெருமானிடத்து இவன் ஒப்பற்ற பத்தியுடைவனாய் ஒழுகிவந்தவன் என்பது முன்னர் விளக்கப்பட்டது. அன்றியும், தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தினின்று புறப்பட்டுக் காஞ்சிமா நகரை நோக்கிச் செல்பவன், தில்லையம் பதிக்குப் போய்ப் பொன்னம்பலத்திலே நடம்புரியும் முக்கட் பெருமானை வணங்கி, அவரது இன்னருள் கொண்டு வடதிசை ஏகினான் என்று கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங் கொண்டார் கூறியிருப்பது இவனது சிவ பத்தியின் மாண்பை இனிது விளக்குகின்றது.
இனி, அடுத்துப் புகழ்தற்குரியதாய் இவனிடத்து அமைந்திருந்த சிறந்த குணம் இவனது வீரத்தன்மையேயாம். இவன் இத்தமிழகம் முழுமையும் இதற்கப்பாலுள்ள கங்கம், கலிங்கம், கொண்கானம், சிங்களம், கடாரம் முதலான பிறநாடு களையும் தன்னடிப்படுத்திப் புகழுடன் ஆண்டுவந்த பெருவீரன் என்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆகவே, இவனை இப்பரதகண்டத்தின் பெரும்பாகத்திலும் இதனைச் சூழ்ந்துள்ள பிறவிடங்களிலும் தன் வெற்றிப் புகழைப் பரப்பிய வீரர்தலை மணி என்றுரைத்தல் சிறிதும் மிகைபடக் கூறியதாகாது. இவனது படைத் தலைவர்களும் அமைச்சர்களும் இவனைப் போலவே வீரத்தன்மை வாய்ந் தவர்களாய் இவனுக்கு உசாத்துணையாய் அமர்ந்து இவனது வென்றி மேம்பாடு யாண்டும் பரவுதற்குக் காரணமா யிருந்தனர் என்பது ஈண்டு அறியத்தக்கது. அன்னோருள் சிலரது வரலாற்றை மற்றோர் அதிகாரத்திற் காணலாம்.
இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த வேந்தன் ஆவன்; சங்கத்துச் சான்றோர் நூல்களையும் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலாய நூல்களையும் நன்கு பயின்றிருந்தான். ஆசிரியர் சயங் கொண்டாரும் இவனைப் பண்டித சோழன் என்று கலிங்கத்துப் பரணியில் ஓரிடத்தில் குறித்துள்ளார்.1 இவன் புலவர்களது கல்வித் திறத்தை அளந்து கண்டறி தற்குரிய பேரறிவு படைத்தவனா யிருந்தமையின் அன்னாரிடத்துப் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந் தான். அன்றியும், அவர்கட்கு வேண்டியன அளித்துப் போற்றியும் வந்தான். எனவே இம்மன்னன் புலவர்களைப் புரந்துவந்த பெருங் கொடை வள்ளல் ஆவன். இவன் கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையி னொடும்2 பொழுது போக்கி வந்தனன் என்பர் கவிச்சக்கர வர்த்தியாகிய சயங்கொண்டார் இவன், செந்தமிழ்ப் புலமை யுடையவனாயிருந்தமையோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந் தான். அன்றியும், இவன் வேங்கிநாட்டில் ஆட்சி புரிந்த போது அந்நாட்டு மொழியாகிய தெலுங்கே அரசாங்கமொழி யாக அமைந் திருந்தது. வேங்கி நாட்டிலுள்ள இவனது கல்வெட்டுக்களும் தெலுங்கு மொழியில் காணப்படுகின்றன. எனவே, இவன் தெலுங்கு மொழியை யும் கற்றவனாதல் வேண்டும். ஆகவே, தமிழ், ஆரியம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வேந்தன் நல்ல பயிற்சி யுடைய வனாயிருந் தனன் என்பது நன்கு புலப்படுகின்றது.
அன்றியும் இவ்வேந்தன் இசைத் தமிழ் நூல் ஒன்று இயற்றி யுள்ளனன் எனவும் அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ்வேந்தனது இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனரெனவும் இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசைவல்லபி என்பாள் தன் கணவன் இயற்றிய இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனள் எனவும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறியுள்ளார்.
நம் வளவர்பெருமான் நூலறிவு எய்தியிருந்ததோடு இயற்கையில் நுண்ணறிவும் அமையப்பெற்றிருந்தான்; நல்லறிஞர் களோடு அளவளாவி அறிய வேண்டியவற்றை நன்கறிந்து பேரறிஞனாய் விளங் கினான். ஆசிரியர் சயங்கொண்டார் இவனை அறிஞர் தம்பிரான் அபயன்1 என்று கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலும் இச்செய்தியை இனிது வலியுறுத்தும்.
இனி, இவ்வேந்தனது செங்கோற் பெருமையும் பெரிதும் மதிக்கத் தக்கதாகும். இவன் குடியுயரக்கோல் உயரும் என்பதை நன்குணர்ந்த வனாதலின் தன் நாட்டிலுள்ள குடிகள் எல்லோரும் வளம் பெறுதற் கேற்ற செயல்களைச் செய்து அவர்களது பேரன் பிற்குரியவன் ஆயினன், இவன், தன் குடிமக்கள் பண்டைக்கால முதல் அரசர்க்குச் செலுத்தி வந்த சுங்கத்தைத் தவிர்த்து அவர்களது வாழ்த்திற்கும் புகழுரைக்கும் உரிமை பூண்டு விளங்கிய செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவனது செங்கோற் சிறப்பை அபயன் இமயத் தினைத் திரித்தகோலில் வளைவுண்டு - நீதிபுனை செய்ய கோலில் வளைவில்லையே2 என்று பாராட்டிக் கூறியுள்ளனர் புலவர் பெருமானாகிய சயங்கொண்டாரும்.
அன்றியும், இவன் அஞ்சாமை, ஈகை, ஊக்கம், சுற்றந்தழுவுதல், காலமறிந்து கருமமுடிக்கும் ஆற்றல் முதலான அருங் குணங்கள் படைத்த பெருந்திறல் வேந்தனாய் அந்நாளில் நிலவினான். சுருங்க வுரைக்குமிடத்து, இம்மன்னர் பெருமான், தன்னடிவந்து பொருந்தினோர் எவரேயாயினும் தண்ணளி சுரந்து அவர்களை வாழ்விக்கும் வண்மையும், எதிர்த்தோர் கூற்று வெகுண்டன்ன ஆற்றலுடைய வராயினும் அன்னோரைப் போரிற் புறங் காணும் வீரமும் உடையவனாய் விளங்கிய பெருந்தகையாவன் என்று கூறி இவ்வதி காரத்தை ஒருவாற்றான் முடிக்கலாம்.
குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும்
குலோத்துங்கனது பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவளே இவ்வேந்தனது முதல் மனைவி. இவளுக்குத் தீன சிந்தாமணி என்ற பெயரும் உண்டு. இவ்வரசி இவனது அம்மானாகிய இரண்டாம் இராசேந்திர சோழனது மகள். இவனுக்கு வேறு இருமனைவியரும் இருந்தனர். அவர்கள் ஏழிசை வல்லபி, தியாகவல்லி என்ற இருவருமேயாவர். பட்டத்தரசியாகிய மதுராந்தகி என்பாள் குலோத்துங்கனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டில் இறந்துவிட்டனள். பின்னர், இவனது மற்றொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளே இவ்வரசனது ஆட்சியின் பிற்பகுதி முழுமையும் பட்டத்தரசியாக விருந்து வாழும் பேற்றை எய்தியவள்.
பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறி யுடனே இனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச் - சென்னி துணை யுடனாணையை நடத்து முரிமை தியாகவல்லி நிறைசெல்வி யுடன் சேர்ந்துவரவே என்னுங் கலிங்கத்துப்பரணிப் பாடலால் பட்டத்தரசி யாகிய தியாக வல்லியின் பெருமையும் அரசன் அவள் பால் வைத்திருந்த மதிப்பும் நன்கு விளங்கும். இவள் சிவனிடத்துமையெனத் தியாகவல்லி - உலக முழுதுடையாள் என்று நம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியிலும் புகழப் பட்டுள்ளாள்.
இனி, ஏழிசைவல்லபியை ஏழிசை வளர்க்க வுரியாள்2 என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலால் இவள் ஏழிசையிலும் புலமை யெய்தி அவற்றை இனிது வளர்த்து வந்தனள் என்பது நன்கு புலப்படுகின்றது.
நம் குலோத்துங்கனது மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கிய வளைப் புவனமுழுதுடையாள் அல்லது அவனி முழுதுடையாள் என்றும், மற்றையோரை ஏழுலகுமுடையாள், திரிபுவனமுடையாள், உல குடையாள் என்றும் அக்காலத்தில் வழங்கிவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவர்களது இயற்பெயர் களோடு இப்பெயர் களையும் சேர்த்துச் சிறப்பிப்பது அந்நாளில் பெருவழக்கா யிருந்தது. இவ்வுண்மையை அக்காலத்துக் கல்வெட்டுக் களைக் கொண்டறியலாம்.
மதுராந்தகி என்பவள் பட்டத்தரசியாக நிலவிய நாட்களில் புவனி முழுதுடையாள் என்றும் அவனி முழுதுடையாள் என்றும் வழங்கப் பட்டனள். அப்போது, ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற மற்ற மனைவியர் இருவரும் ஏழுலகுமுடை யாள் உலகுடையாள் என்னும் சிறப்புப் பெயர்களை எய்தி வாழ்ந்தனர் மதுராந்தகி வானுல கடைந்த பின்னர்த் தியாக வல்லி பட்டத் தரசியாயினள் என்று முன்னரே கூறி யுள்ளோம். அவள் அந்நிலையை எய்தியவுடன் அக்கால வழக்கம் போல் புவனி முழு துடையாள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனள்.
நம் குலோத்துங்கனது முதல் மனைவியாகிய மது ராந்தகிக்கு மக்கள் எழுவர் இருந்தனர். அவர்களுள் முதல் மகன் விக்கிரம சோழன் எனப்படுவான். இரண்டாம் மகன் இராசராசன் என்னும் பெயரினன். மூன்றாம் மகன் வீரசோழன் என்பான். மற்றைப் புதல்வர் களது பெயர்கள் இக் காலத்துப் புலப்பட வில்லை. அன்றியும், அம்மங்கைதேவி என்ற ஒரு மகளும் இருந்தனள். இவர்களுள் முதல்வனாகிய விக்கிரமசோழன் கி.பி. 1108-ஆம் ஆண்டில் சோழ மண்டலத்திற்கு இளவரசுப் பட்டங் கட்டப் பெற்றுத் தன் தந்தையிடம் அரசியல் நுட்பங்களைக் கற்றுவந்தான். இவன், தென் கலிங்க மன்னனாகிய தெலுங்க வீமன்மேல் ஒரு முறை படை யெடுத்துச் சென்று அவனைப் போரிற்புறங்கண்டு வெற்றித்திருவுடன் திரும்பினான்.2 கி.பி. 1120-ல் நம் குலோத்துங்கன் விண்ணுல கெய்தியபின்னர் அரியணை யேறிச் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டு ஆட்சி புரிந்தவன் இவ்விக்கிரம சோழனேயாவன். இவனுக்குத் தியாக சமுத்திரம் அகளங்கன் முதலான வேறு பெயர்களும் உண்டு.1 புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வேந்தன் மீது விக்கிரம சோழனுலா என்று ஓர் உலாப் பாடியுள்ளனர். இம் மன்னன் இப் புலவர் பெருந் தகையைப் பெரிதும் பாராட்டி ஆதரித்து வந்தான்.
இரண்டாம் மகனாகிய இரண்டாம் இராசராசன் என்பான் கி.பி. 1077 முதல் 1078 வரை ஓராண்டு வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாய மர்ந்து அதனை அரசாண்டனன்; பின்னர், தன் தந்தையிடத்தமர்ந்து அணுக்கத் தொண்டுகள் புரிதல் வேண்டு மெனச் சோழ மண்டலத்திற்குத் திரும்பிவந்து விட்டான்.2 மூன்றாம் மகனாகிய வீரசோழன் என்பவன் தன் தமையனாகிய இரண்டாம் இராசராசனுக்குப் பின்னர் வேங்கி நாட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அமர்ந்தான்.3 அங்கு அவனது ஆட்சி பல ஆண்டுகள் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.
குலோத்துங்கனது மற்றை மக்களைப் பற்றிய வரலாறு இப்போது புலப்படவில்லை.
குலோத்துங்கன் சுற்றத்தினர் :
1. தந்தையைப் பெற்ற பாட்டன் … விமலாதித்தன்.
2. தந்தையைப் பெற்ற பாட்டி … குந்தவ்வை II.
3. தந்தை … கீழைச்சளுக்கியனாகிய இராசராசநரேந்திரன்
4. தாய் …. …. அம்மங்கைதேவி I.
5. உடன் பிறந்தாள் …. குந்தவ்வை III.
6. மனைவியர் ….. மதுராந்தகி, ஏழிசைவல்லபி, தியாகவல்லி,
7. மக்கள் …. விக்கிரமசோழன், இராசராசன், வீரசோழன், அம்மங்கைதேவி II
8. சிறிய தாதை … விசயாதித்தன் VII.
9. தாயைப்பெற்ற பாட்டன் … கங்கைகொண்ட(சோழன் என்னும் இராசேந்திரசோழன் I)
10. அம்மான்சேய் … இராசாதிராசன் I.(இரண்டாம் ராசேந்திரசோழன், மும்முடிச் சோழன், வீரராசேந்திரசோழன்.)
11. அம்மான்சேய் … அதிராசேந்திரன்.
12. முதல் மனைவியின் தந்தை … இரண்டாம் ராசேந்திரன்.
குலோத்துங்கனுடையNஅரசியல் தலைவர்கள்
குலோத்துங்கனது ஆளுகையில் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் திருமந்திர ஓலைநாயகமாகவும் திருமந்திர ஓலை யாகவும் திருவாய்க் கேள்வியாகவும் புரவுவரித்திணைக்களத்தி னராகவும் அமர்ந்து அரசாங்கத்தை இனிது நடத்திய அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் ஆவர். அவர்களுட் சிலருடைய பெயர்கள் மாத்திரம் கல்வெட்டுக் களால் தெரிகின்றன. அன்னோருள் மூவரது வரலாற்றைச் சிறிது விளக்குதற்குரிய கருவிகள் கிடைத்துள்ளமையின் அவர்களைப் பற்றிய செய்திகளும் ஈண்டுச் சுருக்கமாக எழுதப்படுகின்றன.
1. கருணாகரத்தொண்டைமான்:- இவனது வரலாற்றைக் கலிங்கத்துப்பரணி ஒன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் ஒன்றிலதேல் தமிழகத்தில் அக்காலத்தே பெருவீரனாய்ப் பெரும் புகழ் படைத்து விளங்கிய இக்குறுநில மன்னனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்து கொள்ளாதவாறு மறைந்தொழிந் திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு சிற்றரசன். இவன், நுண்ணறி விலும் கல்வி கேள்விகளிலும் சிறந்தவனாயிருந்தமையின் நம் குலோத்துங் கனது அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக முதலில் அமர்த்தப் பட்டான். பின்னர், தன் சீரிய ஆற்றலாற் படிப்படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் வேந்தனது அமைச்சர் தலை வனாகவும் படைத்தலைவர் களுள் முதல்வனாகவும் ஆயினான். இவனே, வடகலிங்கப் போர்க்குத் தலைமைப் படைத்தலை வனாகச் சென்று, போர் நடத்தித் தன் அரசனாகிய குலோத் துங்கச் சோழற்கு வாகைமாலை சூட்டியவன். குலோத்துங்கன் எய்திய பெரும் புகழுக்குச் சிறந்த காரணமா யிருந்தோருள் இவன் முதன்மை யானவன் என்று சிறிதும் ஐயமின்றிக் கூறலாம். கவிச்சக்கர வர்த்தியாகிய சயங் கொண்டாரும் இவனை வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி - உலகுபுகழ் கருணாகரன்1 எனவும், கலிங்கப் பரணி நம் காவலனைச் சூட்டிய தோன்றல்2 எனவும் புகழ்ந்துள்ளார். இவனது அரிய அரசியல் ஊழியத்தைப் பெரிதும் பாராட்டி அதற்குரிய அறிகுறியாக வேள் தொண்டை மான் ஆகிய பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப் பட்டன. இவன் இத்தகைய சிறப்பினை எய்திக் குலோத்துங்கனது அரசியலைப் பெருமையுறச் செய்தது இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலே யாகும். இவன், குலோத்துங்கனது மகனாகிய விக்கிரம சோழனது ஆளுகையிலும் இருந்துள்ளான் என்பது விக்கிரமசோழ னுலாவினால் அறியப் படுகின்றது. இவன் வாழ்ந்த ஊர் வண்டை என்பர் ஆசிரியர் சயங் கொண்டார். அவ்வூர், சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழவள நாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டிலுள்ள வண்டாழஞ் சேரியகும் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. அஃது இப்போது வண்டுவாஞ்சேரி என்ற பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலூகாவிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெரு வழி யிலுள்ளது. வண்டாழஞ் சேரி என்பது வண்டுவாஞ் சேரி என்று பிற்காலத்தில் மருவி வழங்கிவருகின்றது.
இவன், சிவபெருமானிடத்தில் அளப்பரிய பேரன் புடையவனாய் திருவாரூரில் அரிய திருப்பணிகள் செய்துள்ளனன். இவன் இறுதியில் திருவாரூரில் தியாகேசரது திருவடிகளிற் கலந்தனன் என்றும் தியாகேசரது திருப்பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்று என்றும் திருவாரூர் உலாக் கூறுகின்றது. இதனால் இவன் அப் பெருமானிடத்துக் கொண்டிருந்த அன்பின் முதிர்ச்சி ஒருவாறு விளங்கும்.
2. அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன் :- இவன் சோழமண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரின் தலைவன் : குலோத்துங்க சோழனது படைத் தலைவர்களுள் ஒருவன். அரசனால் கொடுக்கப் பெற்ற குலோத்துங்க சோழ கேரளராசன் என்ற பட்டம் எய்தியவன்; குலோத்துங்கன் சேரர்களோடு நடத்திய போர்க்குப் படைத் தலைமை வகித்துச் சென்று அதில் வெற்றிபெற்றவன்; இவ்வேந்தனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப் பெற்ற நிலைப் படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கிய நாட்களில் அங்கு இராசேந்திர சோழேச்சுரம் என்ற கோயில் எடுப்பித்துள்ளான்.1 அதற்கு நிபந்தங்களுக்காகத் தேவதான இறை யிலியும் குலோத்துங்க சோழனால் விடப்பட்டுள்ளது. இதனால், இவன் சிவ பெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் இருந்தனன் என்பது நன்கு விளங்குகின்றது.
3. மணவிற் கூத்தனான காலிங்கராயன் :- இவன் தொண்டை மண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன்; குலேத்துங்கனது ஆட்சியின் பிற்பகுதியில் படைத்தலைவனாய மர்ந்து பெரும் புகழ் எய்தியவன்; குலோத்துங்கன் வேணாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத்தலைமை வகித்து வெற்றியுற்று அதனால் தன் அரசனுக்கு என்றும் நிலை பெறத்தக்க புகழை யுண்டு பண்ணியவன்.2 இவனது போர்வன்மை யையும் பெருமையையும் நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக் காலிங்க ராயன் என்ற பட்டம் அளித்தான்.
இவன், தில்லையம்பலத்தில் நடம்புரியும் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டொழுகி, ஆண்டு இயற்றிய திருப்பணிகள் பல; அவற்றுள் தில்லையம்பலம் பொன் வேய்ந்தமையும், அங்கு நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுதற்குரிய மண்டபம், சிவகாம கோட்டம் முதலியவற்றைக் கட்டுவித்தமையும் சிறந்தனவாம். அன்றியும், இவன் தியாகவல்லி முதலான ஊர்களைப் பொன்னம்பலவாணருக்குத் தேவதான இறையிலியாக விட்டிருக் கின்றனன். சமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளை ஆட்கொண்டருளிய திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் இவன் செய்துள்ள அருந் தொண்டுகள் பலவாகும். அங்குக் காமகோட்டம் எடுப்பித்தும், பொன்வேய்ந்தும், ஆடரங்கும் வேள்விச் சாலையும் அமைப்பித்தும், தேவதான இறையிலி விடுத்தும் செய்த அருந்தொண்டுகள் அளவிறந்தன என்பர். இவற்றால் இவனது சிவபத்தி யின் மாட்சி இத்தகையதென்று நன்கு புலப்படுகின்றதன்றோ? இனி, இவன் சைவசமயத்திற்குப் புரிந்துள்ள அரும் பணி களுட் சிறந்தது மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடு களில் எழுதுவித்துத் தில்லையம்பதியிற் சேமித்து வைத்தமையே யாகும்.1 இவன் இவ்வாறு ஆற்றிய அரும் பெருந் தொண்டுகளை விளக்கக்கூடிய பல வெண்பாக்கள் தில்லையம்பதியிலும் திருவதிகை யிலும் உள்ள கோயில்களில் வரையப்பட்டுள்ளன.
இவன், விக்கிரமசோழன் ஆட்சியிலும் இத்தகைய உயர் நிலை யிலே இருந்தனன் என்பது விக்கிரமசோழன் உலாவடி களால் புலனாகின்றது.
குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர்
இனி, குலோத்துங்கன் காலத்துச் சிறந்து விளங்கிய புலவர் பெருமான் கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங் கொண்டார் ஆவர். இவரது வரலாற்றை அடியிற் சுருக்கி வரைவாம்.
இப்புலவர் பெருந்தகையார் சோழமண்டலத்திலே கொரடாச்சேரி புகைவண்டி நிலையத்துக்கு அண்மையிலுள்ள தீபங்குடி என்னும் ஊரின்கண் பிறந்த நல்லிசைப் புலவராவர். இவரது குலமும் சமயமும் நன்கு புலப்படவில்லை. இவர் பெரும் புலமை படைத்தவராய் நம் குலோத்துங்க சோழனைக் காண வேண்டி அவனது அவைக்களத்தை அடைந்தபோது அவ்வரசன் நுமது ஊர் யாது? என்று வினவ,
செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமுந் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதழும் விழியும்
காலும் நிறமும் போலுங் கமலம்
கொய்யும் மடவார் கனிவா யதரங்
கோபங் கமழும் தீபங் குடியே
என்று தம்புலமைக்கேற்பப் பாடலால் விடைகூறினர். இச்செய்தி, தமிழ் நாவலர் சரிதையால் அறியப்படுகின்றது. அரசன் இவரது புலமைக்கு வியந்து தன் அவைக்களப்புலவராக இவரை இருக்கச் செய்தனன் என்று தெரிகிறது.
இவர் அரசனுக்கு விடைகூறிய பாடலில், பொய் கொலை முதலியன நீக்குதலையும், சமணர்க்குச் சிறந்த இரவுண்டல் தவிர் தலையும், தமதூர் சைனக்கடவுளின் தலமாயிருக்கும் சிறப்பையும் எடுத்துரைத்துப் புகழ்ந் திருத்தலால் இவர் சைனமதப் பற்றுடைய வராயிருத்தல் வேண்டு மென்பது நன்கு புலப்படுகின்றது. இவர் தாம் பாடியுள்ள கலிங்கத்துப் பரணியில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் சிவபெருமான், திருமால், நான்முகன், சூரியன், கணபதி, முருகவேள், நாமகள், துர்க்கை, சத்த மாதர்கள் என்ற இன்னோர்க்கு வணக்கங் கூறியிருத்தலாலும் இவர்களுள் சிவபெருமானுக்கே முதலில் வணக்கங் கூறியிருத்தலாலும் இவர் பரணிபாடியகாலத்தில் சைவமதப் பற்றுடையவராக மாறி இருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கு கின்றது. ஆகவே, இவர் முதலில் சைனமதப் பற்றுடையவராயிருந்து சைவமதத் தினனாகிய குலோத்துங்க சோழனையடைந்து அவனது அவைக்களப் புலவராயமர்ந்து பின்னர், சைவமதப் பற்றுடையவ ராயினார் போலும்.
இனி, இப்புலவர் தம்முடன் வாதம்புரிவான் போந்த தென்னாட்டுப் புலவர் சிலரை வென்ற காரணம் பற்றி, சயங் கொண்டார் என்ற ழைக்கப் பெற்றனர் என்பர். ஆயின் இவரது இயற்பெயர் யாதென்பது இப்போது தெளியக்கூடவில்லை.
கலிங்கரைத் தொலைத்து வாகைமிலைந்த குலோத்துங்கன் இப்புலவரை நோக்கி, புலவீர்! யானுங் சயங் கொண்டானாயினேன் என்றனன். உடனே புலவர், அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டானைச் சயங்கொண்டன் பாடுதல் மிகப் பொருத்த முடைந்தன்றோ! என உரைத்துப் போய், சின்னாட்களில் கலிங்கத்துப் பரணி என்ற ஓர் அரிய நூலை இயற்றிவந்து அரசனது அவைக் களத்தே அரங்கேற்றினர். அப்போது அப்பரணி நூல் பாடல்களைப் பரிவுடன் கேட்டுக் கொண்டு வீற்றிருந்த வேந்தர் பெருமான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், பரிசிலாகப் பொற்றேங்காய் களை ஒவ்வொன்றாக உருட்டித்தந்து இவரையும் இவரியற்றிய நூலையும் பெரிதும் சிறப்பித்தனன்.
இக்கதை எவ்வாறாயினும், இப்புலவர், தாம் அரசன் பாற்கொண்ட பேரன்பின் பெருக்கத்தால் அவனது கலிங்க வெற்றியைச் சிறப்பிக்க கருதி, கலிங்கத்துப் பரணி என்ற நூல் பாடினரெனக் கோடலில் இழுக்கொன்று மில்லை. பரணி நூல் கேட்ட வளவர் பெருமானும் புலவர்க்குத் தக்கவாறு பரிசில் அளித்துப் பாராட்டி யிருத்தலும் கூடும்.
இனி, இவரியற்றிய பரணி சொற்பொருள் நயங்கள் நன்கமையப் பெற்று நிலவுதலால், இவரைப் பரணிக் கோர் சயங்கொண்டான் என்று முற்காலத்திய அறிஞர் புகழ்ந்துரைப் பாராயினர். சிலப்பதிகார உரையா சிரியராகிய அடியார்க்கு நல்லாரும் இப்பரணியிலுள்ள சில பாடல்களைத் தம் உரையில் மேற்கோளாக எடுத்து ஆண்டிருத்தலோடு இதன் ஆசிரிய ராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்றும் புகழ்ந்துள்ளார். புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் மகனும் தம்பால் தமிழ் நூல்களைக் கற்றுத் தெளிந்தவனுமாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத் தமிழில் பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கர வர்த்தி பரவச் செஞ்சேவகஞ்செய்த சோழன் திருப்பெயர செங்கீரையாடியருளே என்று கூறி நம் கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்று மனமுவந்து பாராட்டியிருத்தல், ஈண்டு அறியத்தக்க தொன்றாம். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று மன்னர் களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றுக் கவிச்சக்கர வர்த்தி என்ற பட்டமும் எய்தி மிக உயரிய நிலையில் வீற்றிருந்த நல்லிசைப் புலவராகிய ஒட்டக்கூத்தர், ஆசிரியர் சயங்
கொண்டாரிடத்து எத்துணை மதிப்பும் அன்பும் உடைய வராயிருந்தன ரென்பது மேற்கூறியவற்றால் இனிது விளங்காநிற்கும்.
இனி, இப்பரணியில் பண்டைச் சோழவேந்தர்களின் வரலாறுகள் கூறப்பட்டிருத்தலால் சோழரைப் பற்றி ஆராய் வார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். அன்றியும், பண்டைக் கால வழக்க ஒழுக்கங்களுள் பலவற்றை இந்நூலிற் காணலாம்.
நமது சயங்கொண்டார் வணிகர்மீது இசையாயிரம் என்ற நூலொன்று பாடியுள்ளனரென்று தமிழ் நாவலர் சரிதை உணர்த்துகின்றது. அந்நூல் இது போது கிடைக்கப் பெறாமையின் இறந்ததுபோலும். அன்றியும் விழுப்பரையர் என்ற ஒரு தலைவர் மீது உலாமடல் என்னும் நூலொன்று பாடியுள்ளனர் என்று தெரிகிறது. சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் நமது சயங்கொண்டாரேயாவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இனி, கவிகுமுதசந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டரென்பார் கி.பி. 1097-ல் குலோத்துங்க சோழ சரிதை என்று நூலொன்று இவ்வேந்தன் மீது இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனியென்ற ஊரில் இறையிலி நிலம் பரிசிலாகப் பெற்றிருப்பது ஈண்டு அறியத்தக்கதாகும்.
குலோத்துங்கனது அரசியல்
நம் குலோத்துங்கனது அரசியல் முறைகளை இனி விளக்குவாம். பொதுவாக நோக்குமிடத்துப் பழைய தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக் களாலும் செப்பேடுகளாலும் அறியப்படும் அரசாங்க முறைகள் எல்லாம் நம் மன்னர் பெருமானாகிய குலோத்துங்கனுக்கும் உரியவை யென்றே கூறலாம். அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஒன்றையும் விடாது எழுதப்பு கின் அவை ஒரு தனி நூலாக விரியும் என்பது திண்ணம். ஆதலால், அவ்வரசியல் முறைகளை மிகச் சுருக்கமாக எழுதி விளங்க வைத்தலே எமது நோக்கமாகும்.
1. இராச்சியத்தின் உட்பிரிவுகள் :- நமது வேந்தர் பெருமானது ஆணையின்கீழ் அடங்கியிருந்த சோழ இராச்சியம் அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள், சோழமண்டலம், சயங் கொண்ட சோழமண்டலம், இராசராசப் பாண்டிமண்டலம், மும்முடி சோழ மண்டலம், வேங்கைமண்டலம், மலை மண்டலம், அதிராசராசமண்டலம் என்பன சிறந்தவை. இவற்றுள், சோழமண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென்னார்க் காடு ஜில்லாவின் தென் பகுதியையும் தன்னகத்துக் கொண்டுள்ள நிலப்பரப்பாகும்; சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும் பகுதியையும் செங்கற்பட்டு, வடவார்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக் கொண்டது; இராசராசப் பாண்டிமண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்டது; மும்முடி சோழமண்டலம் என்பது ஈழமாகிய இலங்கையாகும்; வேங்கை மண்டலம் என்பது கீழைச்சளுக்கிய நாடாகும்; மலைமண்டலம் என்பது சேர நாடாகும்; இது திருவாங்கூர் இராச்சியத்தையும் மலையாளம் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது; அதிராசராசமண்டலம் என்பது கொங்கு நாடாகும்; இது கோயம்புத்தூர் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது.
இனி, ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது, முதல் இராசராச சோழன் காலத்தில் சோழமண்டலம், இராசேந்திர சிங்கவளநாடு, இராசாசிரய வளநாடு, நித்தவிநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக் கொண்டார் வளநாடு, அருமொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்னும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.1 பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். உதாரணமாக, உய்யக் கொண்டார் வள நாட்டை எடுத்துக்கொள்வோம். அஃது அரிசிலாற்றுக்கும் காவிரியாற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு ஆகும் என்பது தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்திற் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.2 இங்குக் குறிக்கப்பெற்றுள்ள வளநாடு களின் பெயர்கள் எல்லாம் முதல் இராசராசசோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். நம் குலோத்துங்க சோழன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வள நாடுகளுக்குரிய பெயர்களை நீக்கிவிட்டுத் தன் பெயர்களை அவற்றிற்கு இட்டனன். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்க சோழ வளநாடு என்னும் பெயருடையதாயிற்று. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும் கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப் பட்டன. உலகுய்யவந்தான், விருதராசபயங்கரன் என்பன நம் குலோத்துங்கசோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது கலிங்கத்துப் பரணியால் அறியப்படுஞ் செய்தியாகும்.1 பிற மண்டலங்களும் இங்ஙனமே பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலம் மாத்திரம் முன்போலவே இருபத்து நான்குகோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
இனி, ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகப் பகுக்கப் பட்டிருந்தது. வளநாட்டின் உட்பகுதிகளாகிய நாடுகளுள் சில, கூற்றங்கள் எனவும் வழங்கிவந்தன. ஒவ்வொரு நாடும் சில தனியூர்களாகவும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று.
2. அரசனும் இளவரசனும் :- இங்ஙனம் வகுக்கப் பட்டிருந்த சோழ இராச்சியத்திற்குச் சோழ அரசனே தலைவன் ஆவன். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடைய வனாய் நீதி தவறாது ஆட்சிபுரியும் கடமை இவ்வேந்தனுக்கே யுரியதாகும். சோழமன்னர்கள் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டம் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் நன்கு பழக்கிவருவது வழக்கம். இதற்கேற்ப, நம் குலோத்துங்கன் தனது மூத்தமகனாகிய விக்கிரம சோழனுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் இளவரசுப் பட்டம் கட்டி அரசியல் நுட்பங் களை யுணர்ந்து வன்மை யெய்துமாறு செய்தான். இவ்விக்கிரம சோழனே குலோத்துங்கனுக்குப் பின்னர் முடிசூடியவன் என்பது முன்னரே யுணர்த்தப் பட்டது.
3. உடன் கூட்டம் :- அரசன், தான் விரும்பிய வாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவனெனினும் பல அதிகாரி களுடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம்.2 இவ்வதிகாரிகளை உடன் கூட்டத்ததிகாரிகள் என்று கல்வெட்டுக் களும் செப்பேடுகளும் கூறுகின்றன. இவர்கள் அரசனால் அளிக்கப் பெற்ற பலவகைச் சிறப்புக்களையும் எய்திப் பெருமை யுற்றவர்கள்.
4. அரசியல் அதிகாரிகளும் அவர்கள் கடமைகளும்:- நம் குலோத்துங்கனது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர் களாக அமர்ந்த அவனது ஆட்சி நன்கு நடைபெறச் செய்தோர், அமைச்சர், படைத்தலைவர், நாட்டதிகாரிகள், நாட்டையளப்போர், நாடு காவலதிகாரி, புரவுவரித்திணைக் களம், வரிப்புத்தகம், பட்டோலைப் பெருமான், விடையிலதிகாரி, திருவாய்க் கேள்வி, திருமந்திரஓலை, திருமந்திர ஓலைநாயகம் என்ற அரசியல் அதிகாரிகள் ஆவர்.
இவர்களுள், படைத்தலைவர் அரசனது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை இவற்றிற்குத் தலைமைவகித்துப் போர் நிகழுங்கால் அதனை வெற்றியுற நடத்துவோர். நாட்டதிகாரிகள் ஒவ்வொரு உள் நாட்டிற்கும் தலைவர்களாய் விளங்குவோர்; இவர்கள் தம்தம் நாட்டைச் சுற்றிப் பார்த்துக் குடிகளின் நலங்கள், அறநிலையங் கள், நியாயம் வழங்குமுறை முதலானவற்றைக் கண்காணித்து வருவது வழக்கம். நாட்டையளப் போர் ஒவ்வொரு நாட்டையும் கூறுபட அளவிடுவோர். நாடு காவலதிகாரி என்போன் நாட்டிலுள்ள ஊர்களில் களவு, கலகம் முதலான தீச்செயல்கள் நிகழாமல் காத்து வந்த ஒரு தலைவன் ஆவன். புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்த முடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக் கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வரிப்புத்தகம் என்போர் அரசனுக்கு ஒவ்வொர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப் பட்டனவுமாகிய அரசிறைக்குக் கணக்குவைப்போர். பட்டோலைப் பெருமான் நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக்குறிப்பில் எழுதி வைப்போன். விடையிலதிகாரி என்போர், கிராமசபை களினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப் பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடையெழுதியனுப்பு வோர்; அன்றியும் அரசனது ஆணைத்திரு முகத்தை ஊர்ச் சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணிமக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களேயாவர். திருவாய்க் கேள்வி என்போர் அரசன் திருவாய் மலர்ந்தருளியவற்றைக் கேட்டு வந்து திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர். திருமந்திர ஓலை என்போர் அரசனது ஆணையை எழுதுவோர். இவர்களுக்குத் தலைவராயிருப்போர் திருமந்திரவோலை நாயகம் எனப்படுவார்.
இனி, இவர்களேயன்றி அரச காரியங்களை முட்டின்றி நடத்தும் கரும மாராயம் என்போரும் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்தும் அறங் கூறவையத்தாரும் அந்நாளில் இருந்தனர்.
ஆங்கிலேயராட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்களது ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, ராவ்பகதூர் திவான்பகதூர் சர் ‘C.I.E.’ முதலான பட்டங்கள் அளித்து அரசாங்கத்தார் அவர்களை மகிழ்வித்தது போல, பதினொன்றாம் நூற்றாண்டில் நம் தமிழகத்தில் முடி மன்னனாக வீற்றிருந்து செங்கோல் ஓச்சிய நம் குலோத்துங்கனும் தன் அரசியல் அதிகாரி களுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளான் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அரசனால் அளிக்கப் பெற்ற பட்டங்கள், மூவேந்த வேளான் கேரளராசன், காலிங்கராயன், தொண்டைமான், வாணகோவரையன், பல்லவராயன், இளங்கோவேள், காடவராயன் கச்சிராயன், சேதிராயன், விழுப்பரையன் முதலியன வாகும். இப்பட்டங்களை அரசன் பெரும்பாலும் தன் பெயர்களோடு இணைத்தே வழங்குவது வழக்கம்.
இதன் உண்மையைக் குலோத்துங்க சோழ கேரள ராசன், இராசேந்திர சோழ மூவேந்தவேளான், விருத ராசபயங்கர வாணகோவரையன், வீர சோழப் பல்லவ ராயன், சனநாதக் கச்சிராயன் என்று வழங்கப்பெற்றுள்ள பட்டங்களால் நன்குணரலாம். அன்றியும் பெருந்தரம், சிறுதரம் என்ற இரண்டு பட்டங்கள் இருத்தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். இவை அதிகாரிகளது உயர்வு தாழ்வுகளாகிய வேறுபாடுகள் குறித்து இக்காலத்தில் வழங்கப்பெறும் Gazetted and Non Gazetted officers போன்ற இருபிரிவுகளாகும்.
5. அரசிறை:- அக்காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்தி வந்த நிலவரி காணிக்கடன் என்று வழங்கப்பெற்றுள்ளது. இக் காணிக்கடன் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும் காசுமாக வாதல் செலுத்தப் பெறுவது வழக்கம்.1 இக்காணிக் கடனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டு தோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கக் கருவூலத்திற்கு அனுப்புவர். மூன்றாம் ஆண்டு தொடங்கியும் கடந்த ஈராண்டிற்கும் நிலவரி கொடாதவர் நிலங்கள் ஊர்ச் சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம்.2 அங்ஙனம் விற்றமை யால் கிடைத்தபொருள் அரசாங்கத்தில் சேர்ப்பிக்கப் பெறும்.
இனி, நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம், இடைப்பாட்டம், (இடைப் பூட்சி) ஓடக்கூலி, செக்கிறை, வண்ணாரப்பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு, ஈழம்பூட்சி முதலான பலவகை வரிகளும் இருந் துள்ளன.3 எனவே, அந்நாளில் பற்பல தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருத்தல் அறியத்தக்கது. வரிகளின் பெயர்கள் மிகுந்துள்ளமைபற்றி அரசாங்கவரிகள் அக்காலத்தில் மிகுந்திருந்தன என்று கருதற்கு இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் குறிக்கப் பெற்றிருத்தலின் வரிப் பெயர்கள் மிகுந்து காணப்படுகின்றன வேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப் பெயரால் எல்லாத் தொழிலாளரிடத்தும் வரி வாங்கப்படு கின்றது. ஆகவே, இற்றைநாள் தொழில் வரி ஒன்றே எல்லாத் தொழில்களுக்குமுரிய பல்வகைத் தொழில் வரிகளையும் தன்னகத்து அடக்கிக் கொண்டு நிற்றல் காணலாம்.
கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளை யுணர்த்தும் மொழிகளாம். கண்ணாலக்காணம் என்பது கல்யாண வரி என்றும் அது திருமணநாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக்கால் பணமேயாம் என்றும் ஈரோட்டிலுள்ள முதற் பராந்தகசோழன் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது. நாடுகாவல் என்னும் வரி பாடி காவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனிவரியாகும். உல்கு என்பது சுங்க வரியாகும். ஈழம்பூட்சி என்பது கள் இறக்குதற்குச் செலுத்த வண்டிய வரியாகும்.
6. நில அளவு:- ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரியாகிய காணிக்கடன் குடிகளிடத்திலிருந்து அரசாங்கத்திற்கு எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்பட மாட்டா. ஆதலால், சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒரு முறையும், முதல் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது.
இவை முறையே கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216-ஆம் ஆண்டு களில் நிகழ்ந்தவையாகும்.
நிலம் அளந்தகோலை உலகளந்தகோல் என்று வழங்குவர். இக்கோல் பதினாறுசாண் நீளமுடையது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர்நிலம் கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நிலங்கள் நூறுகுழிகொண்டது ஒருமா ஆகவும் இருபதுமா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப் பெற்றன. வேலி ஒன்றுக்கு நூற்றுக்கல விளைவுள்ளதும் அதற்குக் கீழ்ப் பட்டதுமென நிலங்கள் இருதரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்நாளில் நிலத்தின் எத்தணைச் சிறுபகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன் என்பதனால் நன்கு விளங்கும். நிலத்தையளந்து எல்லை யறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.
7. இறையிலி :- நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் வரி விதிக்கப்பெறாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்கள் யாவை என்பது முன்னரே விளக்கப்பட்டது. சைவ வைணவ திருக்கோயில்களுக்கு இறையிலி யாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்த கோயில் களுக்கு அளிக்கப்பெற்றவை பள்ளிச் சந்தம் எனவும், பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரமதேயம் பட்ட விருத்தி எனவும், அறநிலையங்கட்கு விடப்பெற்றவை சாலா போகம் எனவும் வழங்கப்பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும்.
8. நாணயங்கள் :- நம் குலோத்துங்கன் காலத்தில் பொன்னாலுஞ் செம்பாலுஞ் செய்யப் பெற்ற காசுகள் வழங்கி வந்தன. இக்காசுக்களுள் சில இக்காலத்தும் சிற் சில விடங்களிற் கிடைக்கின்றன. அக்காலத்துச் சோழ மன்னர்களது நாணயங்கள் எல்லாம் ஒரே எடையுள்ளனவாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று பழைய நாணயங்களை ஆராய்ந்து அரியநூல் ஒன்று எழுதி யுள்ள டாக்டர் கன்னிங்காம் என்ற துரைமகனார் வரைந்துள்ளனர். காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாள மாகத் துளையிடப் பெற்ற துளைப்பொன்னும் அந்நாளில் வழங்கிற்று.
9. அளவைகள் :- அக்காலத்தில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் வழக்கில் இருந்தன. இவற்றுள் எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள், கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறை கல்லாலும், செம்பு, பித்தளை, வெண்கலம், தரா முதலான தாழ்ந்த பொருள்கள் பலம் கஃசு என்னும் நிறைகல்லாலும் நிறுக்கப்பட்டு வந்தன. அரசாங்க முத்திரையிடப்பெற்ற நிறைகல் குடிஞைக்கல் எனப்படும். பொன்னின் மாற்றறிதற்குரிய ஆணியும் அப்போது இருந்தது என்பது ஈண்டு உணர்தற்குரிய தாகும்.
இனி, செம்பு, பித்தளை முதலியவற்றால் செய்யப் பெற்றவை, இரண்டாயிரம் பலம், மூவாயிரம் பலம் என்று நிறுக்கப்பட்டுள்ள செய்தி, கல்வெட்டுக்களால் வெளியா கின்றது. ஆகவே, அந்நாளில், சேர், வீசை, தூக்கு, மணங்கு ஆகியவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை நன்கு புலப்படு கின்றது.
நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர் முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன. சர்க்கரை, மிளகு, கடுகு, புளி முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. அரசாங்க முத்திரை இடப் பெற்ற மரக்காலும் இருந்தது. தோரை, விரல், சாண், முழம் என்பவற்றால் நீட்டல் அளவை நடைபெற்றது.
எடுத்தல் அளவை
2 குன்றி = 1 மஞ்சாடி
20 மஞ்சாடி = 1 சுழஞ்சு
முகத்தல் அளவை :-
5 செவிடு, = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
8 நாழி = 1 குறுணி
2 குறுணி = 1 பதக்கு
4 குறுணி = 1 தூணி
12 குறுணி = 1 கலம்
10. கிராமசபை :- நம் குலோத்துங்கன் காலத்தில் ஊர்கள் தோறும் சபைகள் இருந்தன. இச்சபையினரே அங்கு நடைபெற வேண்டிய எல்லா வற்றையும் நிறைவேற்றி வந்தனர். சுருங்கச் சொல்லுமிடத்து அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால் தான் நடத்தப் பெற்று வந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் கிராமத்திலுள்ள பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர் ஆவர். அக்காலத்தில் தனியூர்களும் பல சிற்றூர்களடங்கிய சதுர்வேதி மங்கலங்களும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியையும் குடும்பு (Ward) என்று வழங்கினர். ஒவ்வொரு குடும்பிற்கும் பிரதிநிதியாக ஒவ்வோர் உறுப்பினரே தேர்ந்தெடுக்கப் பெற்றனர். செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூர் முப்பது குடும்புகளை யுடையதாகவும் தஞ்சாவூர் ஜில்லாவில் செந்தலை என்று தற்காலத்து வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம் சற்றேறக்குறைய அறுபது குடும்புகளையுடைய தாகவும் இருந்தன. எனவே, உத்தரமேரூரிலிருந்த சபை முப்பது உறுப்பினரை யுடையதா யிருந்தது என்பதும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்திருந்த சபை அறுபது உறுப்பினர்களையுடைய தாயிருந்தது என்பதும் நன்கு விளங்குகின்றன. ஆகவே சபையின் உறுப்பினரது எண் அவ்வவ்வூரின் பெருமை சிறுமைக்கு ஏற்றவாறு குறிக்கப்பெறும் எனத் தெரிகிறது.
இனி, சபையின் உறுப்பினராகத் தேர்தெடுக்கப் பெறும் உரிமை யுடையோர் காணிக்கடன் செலுத்தற் கேற்ற கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராகவும் சிறந்த நூல்களைக் கற்ற அறிஞ ராகவும் காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவராகவும் அறநெறியில் ஈட்டிய பொருளைக் கொண்டு தூயவாழ்க்கை நடத்து வோராகவும் முப்பத்தைந்துக்கு மேல் எழுபத்தைந்துக்குட்பட்ட வயதின ராகவும் மூன்று ஆண்டு கட்கு உள்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத் திலும் உறுப்பினராக இருந்திராதவராகவும் இருத்தல் வேண்டும் என்பது கல்வெட்டு களால் அறியப்படுகின்றது.
இனி, எந்தச் சபையிலாவது உறுப்பினராகவிருந்து கணக்குக் காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும்பாதகங்கள் புரிந்தோரும், கிராம குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், பிறர்பொருளைக் கவர்ந்தோரும், கள்ளக் கையெழுத்திடலாகிய கூடலேகை (Forgery) செய் தோறும், குற்றங்காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் (Bribe) கொண்டோரும், கிராமத் துரோகி என்று கருதப் பட்டோரும், இங்குக் குறிக்கப்பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராமசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர்.
பொதுமக்கள், கிராம சபையின் உறுப்பினரை ஆண்டு தோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுப்பது வழக்க மாகும். தேர்ந்தெடுத் தற்குக் குறிக்கப்பெற்ற நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுதற்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகையில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரையும் கூட்டுவர். அக்கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்பெறும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடத்தை எடுத்து அதனுள் ஒன்றும் இல்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழேவைப்பர். உடனே, அவ்வூரில் ஒவ்வொரு குடும்பிலுள்ளாரும் தமக்குத் தகுதியுடை யார் என்று தோன்று வோர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்குசேர்த்து, அவை எக்குடும்பிற் குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப் பெற்ற வாயோலை யொன்றைச் சேர்த்துக் கட்டி அக்குடத்தில் இடுவர். இங்ஙனமே எல்லாக்குடும்பினரும் குட வோலை இடுவர். பின்னர், அம்முதியார் அங்கு நடை பெறுவதை யுணராத ஓர் இளைஞனைக் கொண்டு அக்குடத்தினின்றும் ஓர் ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறு ஒரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனைக் கொண்டு எடுக்கச் செய்து, அதனைத் தாம் பெற்று, அங்குள்ள கரணத்தான் (கணக்கன்) கையிற் கொடுப்பார். அவன் தன் ஐந்து விரல்களையும் விரித்து உள்ளங்கையில் அதனை வாங்கி, அவ்வோலையில் எழுதப்பெற்றுள்ள பெயரை அங்குள்ளோர் யாவரும் உணருமாறு படிப்பான். பின்னர் அங்குள்ள நம்பிமார் எல்லோரும் அதனை வாசிப்பர் அதன் பிறகு, அப்பெயர் ஓர் ஓலையின் கண் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலை யிற் குறிக்கப் பெற்ற பெயருடையவரே அக்குடும்பிற்குரிய கிராமசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர்.
இங்ஙனமே மற்றைக் குடும்புகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந் தெடுக்கப் பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபின்னர், அவர்களுள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் முதிர்ந்தோர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றையோருள் சிலர் தோட்ட வாரியராகவும், சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்சவாரவாரியராகவும் ஏற்படுத்தப் படுவர். எனவே, கிராமசபை, சம்வத் சரவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்ற ஐந்து உட்கழகங்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. சபையின் உறுப்பினர் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப் பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாது தம் வேலைகளை நடத்துவதற்கு உரிமைபூண்ட வராவர். இவர்களை ஆளுங்கணத்தார் எனவும் பெருமக்கள் எனவும் கூறுவர். இவர்கள் கூடுதற்கு ஊர்தோறும் மாளிகைகள் அமைக்கப் பட்டிருந்தன. இவர்களுள் நியாய விசாரணை செய்வதும் அறநிலையங் கள் நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் சம்வத்சரவாரியரது கடமையாகும். ஏரி குளம் ஊருணி முதலிய நீர்நிலைகளைப் பாதுகாத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமையாகும். நிலத்தைப் பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்டவாரியரது கடமையாகும். பல்வகையாலும் வாங்கப்பட்ட பொற்காசு செப்புக்காசு களை ஆராய்வது பொன் வாரியரது கடமை யாகும். விளைவில் ஆறிலொரு கடமை அரசனுக்காகவும் ஏனை ஐந்து கூறு நிலமுடையார்க்காகவும் பிரித்துக் கொடுப்போர் பஞ்சவார வாரியராவர். இச் சபையார் பணித்தவற்றைச் செய்பவன் கரணத்தான் எனப்படுவான். இவனை மத்தியதன் எனவும் கூறுவதுண்டு. நல்வழியில் ஈட்டியபொருளும் நல்லொழுக்கமும் உடையவனையே கரணத்தானாக அமைப்பர். இவன் கணக்கு எழுதல்வேண்டும். எழுதிய கணக்கைச் சபையார் விரும்பியபோது, தானே நேரில் காட்டவேண்டும். இவன் சபையாரது நன்கு மதிப்பைப் பெறாவிடின் அடுத்த ஆண்டில் இவனுக்கு அவ் வேலை கொடுக்கப்படமாட்டாது. ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும் ஓராண்டிற்கு ஏழுகழஞ்சு பொன்னும் இரண்டு கூறையும் கணக்கனுக்குச் சம்பளமாகக் கொடுக்கப் படுவது வழக்கம். கணக்கன் தான் எழுதிய கணக்கைச் சபையாரிடம் ஆராய்ந்து பார்த்தற்குக் கொடுக்கும் போது கையில் காய்ச்சிய மழுவை (Red Hot Iron) ஏந்தி உறுதிமொழி கூறிக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுக்குங்கால் கையில் ஊறுபாடு நேராதாயின் கணக்கனுக்கு எழுகழஞ்சிற்குமேல் காற்பங்குபொன் சேர்த்துக் கொடுக்கப்படும். ஊறுபாடு நேருமாயின் பத்துக்கழஞ்சு பொன் தண்டமும் வேறு தண்டமும் சபையாரால் விதிக்கப்படும்.
இனி, நியாய விசாரணை நடத்தும் சம்வத்சரவாரியர் கொலை செய்தவனுக்குக் கொலைத் தண்டம் விதித்தலும், பிறவற்றிற்குச் சிறையிடுதலும், தளையிடுதலும், பொன் தண்டம் விதித்தலும் வழக்கம். அறியாமையால் தற்செயலாக நேர்ந்த சாவிற்கெல்லாம் அவ்வவற்றிற்கு ஏற்றவாறு திருக்கோயில்களில் விளக்கிடுவதற்குக் குற்றவாளிகள் பொன் கொடுக்குமாறு சபையார் தீர்ப்புக் கூறுவர். வேட்டைக்குச் சென்றோன் ஒருவன் எய்த அம்பு, குறி தவறி ஓர் உழவன்மேற் பட்டு அவன் இறந்ததற்கும், ஒருவன், தன் மனைவியைத் தள்ள, அவள் விழுந்து இறந் தமைக்கும், ஒருத்தி, தன் மகள் மீது எறிந்த கோல்பட்டு அண்மையில் நின்ற வேறொருபெண் மாண்டதற்கும் திருக்கோயில்களில் விளக்கிடு மாறு தீர்ப்புக் கூறினரே யன்றி அன்னோர்க்குக் கொலைத்தண்டம் விதித்திலர். ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்றா தொழிந்தவர் களுக்குப் பொன் தண்டம் விதித்தல் வழக்கம் என்பதும் அவர்கள் அதனைக் கொடாது ஓடி விட்டால் அன்னோரது வீடு, காணி முதலியவற்றை அரசனது ஆணை யின் படி விற்று ஊர்ச்சபையார் ஒழுங்கு செய்தல் வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன.
11. ஆவணக்களரி:- அந்நாளில் ஊர்கள் தோறும் எழுதப்படும் ஆவணங்களைக் (பத்திரங்கள்) காப்பிட ஆவணக் களரியும் (Registration Office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச் சென்று நிலத்தின் விலையையும் நான்கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன் பாட்டிற்கும் உறுதி மொழி கூறி ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடிய தாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற்சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம்.
12. படை :- நம் குலோத்துங்கன் பால் யானைப் படையும் குதிரைப் படையும் காலாட்படையும் மிகுதியாக இருந்தன. இவன் காலத்தில் தேர்ப்படை ஒரு தனிப்படையாகக் கருதப்பட வில்லை. வில், வேல், வாள், அம்பு, தடி முதலியன அக்காலத்தில் வழங்கிய படைக்கலங்கள் ஆகும். குலோத்துங்கனும் அவனது முன்னோர்களும் நிலத்திலும் கடலிலுஞ் சென்று போர்புரிவதில் சிறந்த ஆற்றல் வாய்ந்த வர்கள் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. எனவே, நம் குலோத்துங்கனிடத்துப் பல கப்பற்படைகளும் இருந்திருத்தல் வேண்டும். இருமுடி சோழன் தெரிந்த வில்லிகள் என்பதனால் ஒவ்வொரு படைக்கும் வெவ்வேறு பெயரிடும் வழக்கம் உண்டு என்ற செய்தி புலனா கின்றது. படைஞர் போர் நிகழாத காலங்களில் உழுது பயிரிட்டுக் கொண்டு இருப்பது வழக்கம். வென்றுகொண்ட நாடுகளில் நிலைப்படை அமைத்தலும் உண்டு. குலோத்துங்கன் சேர மண்டலத்தை வென்றபோது அங்குள்ள கோட்டாற்றில் ஒரு நிலைப்படை ஒருபடைத் தலைவன் கீழ் நிறுவப் பெற்றது என்பது முன்னரே விளக்கப்பட்டது.
13. கோயில்கள் :- அந்நாளில் நம் தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தன. செங்கற்கோயில்களாக விருந்த இவற்றைக் கற்றளிகளாக அமைப்பித்தவர்கள் சோழமன்னர்களும் அன்னோரது அதிகாரிகளுமே யாவர். பல புதிய கோயில்களும் இவர்களால் கட்டுவிக்கப் பெற்றன. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள நீடூர், திருவைகாவூர்1 முதலான தலங் களிலுள்ள கோயில்கள் நம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கற்றளி களாக்கப்பட்டன. சூரியனார் கோவில் என்ற ஊரிலுள்ள சூரியனது ஆலயமும், மன்னார் குடியிலுள்ள குலோத்துங்க சோழவிண்ணகரமும் மேலப்பழுவூரிலுள்ள குலோத்துங்க சோழேச்சுரமும் இவ்வேந்தன் காலத்தில் கட்டப் பெற்றனவேயாம். கோயில்கள் எல்லாம் அரசர்களாலும் பிற அன்பர்களாலும் அளிக்கப் பெற்ற பெரும் பொருளும் நிலமும் உடையனவாய் அக்காலத்தில் விளங்கின. திங்கள்தோறும் பூரணையில் கோயில்களுக்கு விழா நடைபெற்றது. உச்சியம் போதில் கோயில்களில் மாகேச்சுரர்க்கு நாள் தோறும் அன்னம் இடுவது வழக்கம். தேவாரப் பதிகங்கள் நாள்தோறும் திருமுன்னர் விண்ணப்பஞ் செய்தற்கு நிபந்தங்கள் விடப் பட்டிருந்தன.2 கோயிற் காரியங்களை எல்லாம் அவ்வூரிள்ள ஒரு சபையார் நன்கு நடத்தி வந்தனர். அரசனும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டைச் சுற்றிப் பார்த்து வருங்கால் கோயில்கள் திட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றனவா என்று ஆராய்ந்து வருவது வழக்கம்.3 கோயிற்குரிய செலவு போக எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்குச் செலவிட்டு வந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. ஒரு பகுதி மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப் பட்டது என்பது செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால் அறியப் படுகின்றது.
முடிவுரை
இதுகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் சோழமண்டலத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து நம் தமிழகத்தையும் இதற்கப்பாலுள்ள பிறநாடுகளையும் ஆட்சி புரிந்த முடிமன்னனாகிய முதற் குலோத்துங்க சோழனது வரலாற்றை ஒருவாறு நன்குணரலாம். அன்றியும் சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகள்வரை நம் தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இவ்வரலாற்று நூல் இயன்ற வரை இனிது விளக்கா நிற்கும். நல்வினை முதிர்ச்சியால் அறிவு திருவாற்றல்களுடன் நிலவிய நம் வேந்தர் பெருமான் கடைச்சங்க நாளில் சிறப்புடன் விளங்கிய சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலான முடிமன்னர்களோடு ஒருங்கு வைத்து எண்ணத்தக்க பெருமையும் புகழும் உடையவன் என்பதில் சிறதும் ஐயமில்லை. இத்தகைய பெருவீரன் அரசு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடைநகரம் கங்கைகொண்ட சோழபுரம் ஆகும். நம் குலோத்துங்கனது தாய்ப்பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனால் அமைக்கப்பெற்ற இப்பெருநகரம் அவ்வேந்தன் காலத்திலேயே சோழ மண்டலத்திற்குத் தலை நகராகும் பெருமை எய்திற்று. அவனுக்குப் பின்னர், சோழர்களது ஆட்சியின் இறுதிவரை இந்நகரமே எல்லாச் சோழமன்னர்களுக்கும் தலைநகராக இருந்தது. எனவே, இது தஞ்சையினும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும். இந்நகர், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் விக்கிரமசோழனுலாவிலும், கங்கைமாநகர் என்று வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த இந்நகரம் இதுபோது தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து திருப்பனந்தாளுக்கு வடக்கில் கொள்ளிடத் திற்குக் கட்டப் பெற்றுள்ள லோயர் அணையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெரு வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. ஆயினும் இவ்வூரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் சோழச்சக்கர வர்த்திகளின் பெருமையையுணர்தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலை பெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவாலயமேயாகும். இந்நகரில் நம் குலோத் துங்கனுக்குப் பின்னர் வீற்றிருந்து ஆட்சி புரிந்தோர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்போர். இவர்கள் எல்லோரும் புகழாலும் வீரத்தாலும் நம் குலோத்துங்கனது பெருமையைப் பின் பற்றியவர்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். சோழமன்னர்களுள் இறுதியானவன் மேற் கூறிய மூன்றாம் இராசேந்திரனே ஆவன். அவனுக்குப் பின்னர், சோழநாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. சோழர்களும் பாண்டியர்க்குத் திறைசெலுத்தும் குறுநில மன்னர்களாயினர். இவர்களது தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரமும் பகையரசர்களால் முற்றிலும் அழிக்கப் பெற்றுச் சிறுமை எய்திற்று. படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வந்த தமிழ் வேந்தர்களான சோழர்கள் தங்கள் ஆட்சியும் வீரமும் இழந்து தாழ்வுற்றனரெனினும் அவர்களது ஆதரவினால் வெளிவந்த தமிழ் நூல்களும், அவர்களால் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களும், வெட்டப் பெற்ற பேராறுகளும், கட்டப் பெற்ற அணைகளும் இன்றும் நிலைபேறுடை யனவாய் அன்னோரது பெருமையனைத்தும் நம்மனோர்க்குணர்த்தும் கலங்கரை விளக்கமென நின்று நிலவுதல் ஒருவகையால் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது திண்ணம்.
முற்றும்
சேர்க்கை - 1
முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள்
(முதல் மெய்க்கீர்த்தி)
1. திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன்
தோளும் வாளுந் துணையெனக் கேளலர்
வஞ்சனை கடந்து வயிரா சரத்துக்
குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில்
சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத்
திக்கு நிகழத் திறைகொண் டருளி
அருக்க னுதயத் தாசையி லிருக்குங்
கமல மனைய நிலமக டன்னை
முந்நீர்க் குளித்த வந்நா ளாதிக் கேழ லாகி யெடுத்த திருமால்
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தித்
திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப்
புகழுந் தருமமும் புவிதொறு நிறுத்தி
வீரமுந் தியாகமும் மானமுங் கருணையும்
உரிமைச் சுற்ற மாகப் பிரியாத்
தலநிகழ் சயமுந் தானும்வீற் றிருந்து
குலமணி மகுட முறைமையிற சூடித்
தன் கழல் தராதிபர் சூடச் செங்கோல்
நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராசகேசரி
வன்மரான
உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு
(இரண்டாவது மெய்க்கீர்த்தி)
2. புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற்
பொன்மேனி யளவுந் தன்னேமி நடப்ப
விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச்
சக்கரக் கோட்டத்து விக்ரமத் தொழிலாற்
புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம்
வயிரா கரத்து வாரி யயிர்முனைக்
கொந்தள வரசர் தந்தள மிரிய
வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப்
போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி
வடதிசை வாகை சூடித் தென்றிசை
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவையின்
தனிமையுந் தவிரப் புனிதத் திருமணி
மகுட முரிமையிற் சூடித்
தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
தொன்னில வேந்தர் சூட முன்னை
மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை
இருநில வளாக மெங்கணுந் தனாது
திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி
மேருவிற் புலிவிளை யாட வார்கடற்
றீவாந் தரததுப் பூபாலர் திறைவிடு
கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய
தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன்
பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்நாட்
பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ்
சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை
வில்லது கோடா வேள்குலத் தரசர்
அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும்
பட்டவெம் பரியும் விட்டதன் மானமும்
கூறின வீரமும் கிடப்ப வேறின
மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த
நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த
கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத்
தந்நா ளுகந்து தானும் தானையும்
பன்னா ளிட்ட பலபல முதுகும்
பயத்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும்
பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும்
வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும்
மீளாது கொடுத்த வெங்கரி நிரையும்
கங்கமண் டலமும் சிங்கண மென்னும்
பாணியிரண்டு மொருவிசைக் கைக்கொண்
டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங்
கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம்
வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும்
தந்திர வாரியு முடைத்தாய் வந்து
வடகடல் தென்கடல் படர்வது போலத்
தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
வெரிநளித் தோடி யரணெனப் புக்க
காடறத் துடைத்து நாடடிப் படுத்து
மற்றவர் தம்மை வனசரர் திரியும்
பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற
விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி
முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு
மத்தவெங் கரிபடு மய்யச் சையமும்
கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட்
டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள
சாவே றெல்லாந் தனிவிசும் பேற
மாவே றியதன் வரூதினித் தலைவரைக்
குறுகலர் குலையக் கோட்டா றுட்பட
நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்
வீரசிம் மாசனந் திரியவிட் டருளி
வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்
கலிங்க மேழுங் கனலெரி பரப்ப
விலங்கல் போல விலங்கிய வேந்தர்
விட்டவெங் களிற்றோடு பட்டுமுன் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர
வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட
எங்க ராய னிகலவ ரேச்சணன்
மாப் பிறளா மதகரி யிராசணன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
என்றிவ ரனைவரும்
வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு
பருந்தலைத் தெங்கணும் பாப்ப வுயர்த்துக்
கருங்கட லடையத் தராதலந் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல்
ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல
வீரமும் தியாகமும் விளங்கப் பார்தொழச்
சிவனிடத் துமையெனத் தியாக வல்லி
உலக முடையா ளிருப்ப வவளுடன்
கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலதம்
ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள்
வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந்
திருமா லாகத்துப் பிரியா தென்றும்
திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து
வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு -
(மூன்றாம் மெய்க்கீர்த்தி)
3. புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப
நிலமக ணிலவ மலர்மகள் புணர
உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர
ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர
விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத்
திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி
விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப்
புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
கோவி ராச்கேசரி வன்மரான சக்கரவர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு-
சேர்க்கை - 3
திருவைகாவூர்க் கல்வெட்டு
1. ஸவதிஸ்ரீ
புகழ்மாது விளங்க ஜெயமாதுவிரும்ப
நாமகள்நிலவ மலர்மகள்புணர
உரிமையிற்சிறந்த மணிமுடிசூடி
மீன்வர்நிலைகெட வில்லவர்குலை(2)தர
ஏனைமன்னவர் இரியலுற்றிழிதரத்
திக்கனைத்துந்தன் சக்கரநடாத்தி
வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிந் தருளிய கோவிராஜ (3) கேசரிவர்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீகுலோத் துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜ வளநாட்டுப் பாவைசுற்றுப் பூண்டி (4) பூண்டி உடையார் சூரியன் பவழக் குன்றினாரான வன நாடுடையார் உலகுய்யவந்த சோழவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை (5)ய மகாதேவர் கோயில்முன்பு இஷ்டிகை யாய் ஜீரணித்தமையில் இக்கோயில் இழிச்சித்திருக் கற்றளியாகச் செய்கைக்கு யாண்டு முப்பத்திரண்டாவ(6) து விண்ணப்பஞ்செய்து இஷ்டிகை இழிச்சி வித்துத் திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதானமான (7) நிலத்து நெல்லுதிருப்படிமாற்றுக்கும் நிபந்தத் திற்கும் போதாமையில் தேவதானம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய்ய வந்த சோழவள (8) நாட்டு விறை கூற்றத்துக்களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு. ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதானமா (9) க இடுவித்து நிவந்தஞ் செல்லப்பண்ணுவித்தார் ராஜராஜ வளநாட்டுப் பாவை சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான (10) வளநாடுடையார் - இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேவரர் திருவெண்காடுடை யான் திருச்சிற்றம்பல முடையானான தந்தைவிரத முடித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக