உயிர்வெளி
கவிதைகள்
Backஉயிர்வெளி
-பெண்களின் காதல் கவிதைகள்
பதிப்பாசிரியை
சித்திரலேகா மௌனகுரு
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
-------------------------------------------------
உயிர்வெளி
பெண்களின் காதல் கவிதைகள்
(கவிதைத் தொகுதி) டிசம்பர், 1999
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
46/2, பழைய வாடி வீட்டு வீதி,
மட்டக்களப்பு,
இலங்கை
பதிப்பாசிரியை : சித்திரலேகா மௌனகுரு
அட்டை : வாசுகி
அச்சகம் : நியூ கார்த்திகேயன் அச்சகம்
501/2, hஒட்டேல் சிலோன் இன்ஸ்,
காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு - 06
விலை : 60/=
---------------------------------------------------------------
தன்னாற்றலினதும் உண்மையினதும் வெளிப்பாடாகக் காதல் கவிதைகள்
இலக்கியத்தினதும் கலைகளினதும் ஒரு பொதுப் பொருளாகக் காதல் பன்னெடுங்காலமாகவே தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை எனுமளவிற்கு காதல் சகல கவிஞர்களுடைய படைப்புகளிலும் இடம் பிடித்துள்ளது. உலகின் பேரிலக்கியங்களும் காவியங்களும் காதலைப் பற்றிப் பேசுகின்றன. ரோமியோ ஜூலியற், லைலா மஜ்னு, அம்பிகாவதி அமராவதி என்ற காவியப் பாத்திரங்கள் காதலின் மாண்பை எடுத்துக் காட்டுவதற்காகவே படைக்கப்பட்டவை.
"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்; சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."
எனக் காதலின் மகிமையைப் பாடினார் பாரதி.
காதலின் மையமாகப் பெண்களைக் கொண்டு அவர்களது வடிவழகை வர்ணித்தும், அவர்களது காதலுக்காக ஏங்கியும் அவர்கள் அளிக்கும் இன்பத்தைப் புகழ்ந்தும் பாடுவதாகப் பெரும்பாலான காதல் கவிதைகள் உள்ளன. இவ்வகையில் ஆண்கள், பெண்கள் மீதான தமது காதலுணர்வுகளைப் புலப்படுத்துவதாக இவை அமைகின்றன.
இன்னோர் வகைக் கவிதைகள், பெண்கள் ஆண்களின் மீதான தமது காதலைப் புலப்படுத்துவனவாக, காதல் ஏக்கத்தையும் பிரிவுத் துயரையும் எடுத்துக் கூறுவனவாக உள்ளன. ஆண்கள், பெண்களாகத் தம்மைப் பாவித்து ஆக்கியவை இவை. குறிப்பாகத் தமிழ் இலக்கிய மரபில் இத்தகைய இரு போக்குகளையே பெரும்பாலும் காணலாம். இத்தகைய காதல் கவிதைகளில் குறிப்பிடக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால் இவை பெரும்பாலும் ஆண்களாலேயே ஆக்கப்பட்டிருப்பதாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலை ஆண்கள் பாடியது மாத்திரமன்றி பெண்களின் உணர்வுகளுக்கும் அவர்களே வடிவம் கொடுத்தனர். ஆண்களே பெண்களின் உணர்வுகளையும் சித்திரித்தனர். இவ்வகையில் காதல் பற்றிய ஒரு பக்கப் பார்வையே எமக்குக் கிடைத்துள்ளது.
இதற்கு ஒரு காரணம் பெண்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படையாகப் புலப்படுத்துவது பெண்மையின் பாற்பட்டதல்ல; அது தகுதியற்றது என்ற கருத்துப் பலமாக நிலவி வந்தமையாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்ட பேசா மடந்தையாகப் பெண்ணைக் கட்டமைத்த தமிழரது ஒழுக்கவியலும், பண்பாட்டு மரபுகளும் பெண்கள் தமது இயல்பான உணர்வுகளைத் தமது குரலிலேயே வெளிப்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதித்தன. இத்தகைய ஓர் ஒழுக்க, கலாசார மரபின் காரணமாகப் பெண்களது காதலுணர்வுகள் இலக்கிய வடிவம் பெறுவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.
எனினும் இதற்கு விதிவிலக்காக பழைய இலக்கியங்களில் சில பெண் இலக்கிய கர்த்தாக்கள் காதலையும் பெண்களின் காதலுணர்வுகளையும் பாடியுள்ளனர். ஆனால் அவை பிரபல்யப் படுத்தப்படவில்லை; அங்கீகரிக்கப்படவில்லை; மாறாக மறைக்கப்பட்டுள்ளன.
இவ்வகையில் இதுவரை காலம் எமக்குக் கிடைத்தவை எல்லாம் ஆண்கள் பெண்கள் மீதான காதலைப் பாடிய பாடல்களும் அவர்கள் தம்மைப் பெண்களாக உருவகித்துப் பாடியவையுமேயாம். இவை ஆண் நோக்கில் பெண்களின் உணர்வுகளை வெளியிடும் கவிதைகளேயன்றி உண்மையான பெண்களின் உணர்வுகளைத் தாங்கியவையல்ல.
நான் மேலே குறிப்பிட்டவாறு பெண்கள் இயற்றிய காதல் கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் மறைக்கப்பட்டமைக்குச் சிறந்த உதாரணங்களாக அமைவன ஔவையாரின் கவிதைகளாகும்.
தமிழ் இலக்கிய மரபில் ஔவையார் என்ற பெயரில் வெவ்வேறு பெண்புலவர்கள் இலக்கியங்களை இயற்றியுள்ளனர். இவர்களது படைப்புகளுக்கிடையே தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த வேறுபாடுகளை அலட்சியம் செய்து ஔவையார் ஒருவரே என நிறுவவே பலரும் முயற்சிய்யுள்ளனர். பொதுசன மட்டத்தில் ஔவைப்பாட்டி என்று அழைக்கப்படுகின்ற வயது முதிர்ந்த பெண்பாற் புலவரது பிம்பம் ஒன்றே கட்டமைக்கப்பட்டுள்ளது. சங்ககால மன்னர்களுக்கிடையே தூது சென்றும், மன்னர்களது கொடைத்திறத்தை வாழ்த்தியும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் ஆகிய அறநூல்களை இயற்றியும் வாழ்ந்தவராகவே இந்த ஔவையார் கருதப்படுகிறார்.
ஆனால் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் வெவ்வேறு ஔவையார்கள் காணப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு காலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். இன்று எமக்குக் கிடைக்கும் சான்றுகளை நோக்கும் போது மூன்று ஔவையார்களை அடையாளம் காணலாம். தமிழ் இலக்கியங்களிலேயே பழமையானவையான சங்கத் தொகை நூல்களில் இடம் பெறும் செய்யுட்கள் சிலவற்றை இயற்றியவர் ஒரு ஔவையார். இன்னொருவர் இடைக்காலத்தைச் சேர்ந்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற அற நூல்களை ஆக்கியவர். இன்னொருவர் சமய நூல்களை இயற்றியவர்.
சங்ககால ஔவை இயற்றிய கவிதைகளில் கணிசமானவை காதலைப் பொருளாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த ஔவையார் பற்றிப் பேசுவோர், அவர் போர், கொடை ஆகியவை பற்றி இயற்றிய பாடல்களையே அதிகம் எடுத்துக் காட்டுவர். அகநானூறு, குறுந்தொகை ஆகிய சங்கத் தொகை நூல்களில் ஔவையார் இயற்றிய இருபத்தியாறு காதற்பாடல்கள் உள்ளன. மிகுந்த உணர்ச்சியாழம் கொண்டவை அவை. பிரிவுத் துயரின் வெவ்வேறு சாயைகளையும், விரகதாபத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள். ஔவையாரை வயது முதிர்ந்த, கூன் விழுந்த பெண்ணாகவும் அறம் போதிக்கும் புலவராகவும் பிரபலப்படுத்திய தமிழ்ச் சமூகத்தில் அவரது காதல் கவிதைகள் மறைந்து போனதில் வியப்பில்லை.
இவ்வாறு இலக்கிய உலகில் பெண்களின் இயற்கையான உணர்வுகள் மறைக்கப்படுவதற்கு இன்னோர் உதாரணத்தை தெலுங்கு இலக்கியத்திலும் காணலாம்.
ராதிகா சந்வனம் என்ற தெலுங்கு மொழி நெடும் பாடலை இயற்றிய முதுபழனியம்மா 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆடலும் பாடலும் கைவரப் பெற்ற கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலைத் திறமைக்காக அக்காலத் தெலுங்கு மன்னரால் பாராட்டப்பட்டவர். கண்ணனில் மையலுற்ற ராதாவின் உணர்வுகளைக் கூறுவதாக ராதிகா சந்வனத்தை இவர் இயற்றினார். இது மிகுந்த சிருங்கார ரஸம் கொண்ட நீள் கவிதையாகும். 1887 ஆம் ஆண்டு கண்டு குரி வெங்கடேசு என்பவர் இந்த நெடும்பாடலை அச்சில் பதிப்பித்தார். ஆனால் அப்பதிப்பில் கவிதையின் சில பகுதிகளை நீக்கியே பதிப்பித்தார். முதுபழனியம்மா தனது குடும்பத்தின் இலக்கியப் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் முன்னுரையும் சிருங்காரஸம் கொண்ட பாடல் பகுதிகளுமே இவ்வாறு நீக்கப்பட்டவையாகும்.
பெங்களூர் நாகரட்ணம்மா எனும் இன்னோர் கலைஞர் இந்நெடுங் கவிதையால் வசீகரிக்கப்பட்டு, அதன் விடுபட்ட பகுதிகளையும் சேர்த்து 1910 ஆம் ஆண்டில் ஒரு மீள் பதிப்பினை வெளியிட்டார். இப்பதிப்பு வெளிவந்த போது இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியது. பாலியல் உணர்வுகளை மிக அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஆபாச இலக்கியம் என்று பலரும் கண்டித்தனர். இத்தகைய கண்டனங்களை முன் வைத்தவர்கள் சமூகத்தின் வைதீக மரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் அரசாங்கத்தை வற்புறுத்தியதன் பேரில் 1911 ஆம் ஆண்டு இந்நூல் தடை செய்யப்பட்டது. இத்தடையினை எதிர்த்துப் பதிப்பாளர்கள் தொடுத்த வழக்கும் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுந்த வாதங்களும் மிகவும் சுவையானவையாகும்.
எனினும் இந்த நூலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பிருந்தது. இலக்கிய உலகில் ஒரு பகுதியினர் இதன் சிறப்பைப் புகழ்ந்தனர். அவர்களது தொடர்ச்சியான கோரிக்கையால் இந்நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 1947 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
முதுபழனியம்மாவின் ராதிகாசந்வனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தெளிவுபடுத்தும் விடயம் ஒன்று உள்ளது. இலக்கியத்தில் நீண்ட காலமாகவே காதலும் சிருங்காரமும் காமமும் பாடு பொருள்களாக இடம் பெற்றே வந்துள்ளன. அவை பேசப்படுவதற்கு எத்தகைய தடையும் இருக்கவில்லை. ஆனால் இவ்விடயங்களை ஒரு பெண் பேசும்போது அது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகிறது. பெண்களது க்கதலுணர்வுகளை ஆண்கள் பாவனை செய்து எழுதும்போது அதற்கு எத்தகைய எதிர்ப்பும் எழுவதில்லை. ஆனால் பெண்கள் தாமாகத் தமது உள்ளத்துணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது அவை ஆபாசம் என்றும் வக்கிரம் என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றன. இந்த இரட்டை நியாயம் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
பெண்கள் ஆண்களது காதலுக்கும் ஆசைக்கும் உரியவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் சொந்த உணர்வும், செயலும் , சித்தமும் இல்லாதவர்களாகவே நோக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இன்னொருவரின் ஆசையின் இலக்காகக் கருதப்படுவதற்கு எத்தகைய கட்டுப்பாடும் இருக்கவில்லை. இவ்வாறு பெண்கள் சுயாதீனம் அற்றவர்களாகவும் உடமை கொள்ளப்படுபவராகவும் கருதப்பட்டதால் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபட்ட ஒழுக்கத் தராதரங்கள் உருவாக்கப்பட்டன. மேலே எழுப்பப்பட்ட இரட்டை நியாயம் பற்றிய வினாவுக்கு விடை பெண் பற்றிய இந்தக் கருத்தியலிலேயே பொதிந்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறிச் சுயாதீனம் வெளிப்படும்போது ஔவையாரின் காதல் கவிதைகள் பற்றி அதிகம் பேசாமையோ முதுபழனியம்மாவின் ராதிகாசந்வனம் பதிப்புக்கு தடை விதிப்பதோ நிகழ்ந்து விடுகிறது.
பெண்களது சுய இருப்பினதும், உண்மையான உணர்வுகளதும், சுயாதீனத்தினதும் ஒரு அடையாளமாக அவர்கள் ஆக்கிய காதல் கவிதைகளைக் கொள்வோமானால் அவற்றினுடைய தனித்தன்மைகள் எவை? ஆண்களின் கவிதைகளிலிருந்து அவை எவ்வகையில் வேறுபட்டவை போன்ற வினாக்களையும் எழுப்ப வேண்டும்.
உலக இலக்கியப் பாரம்பரியத்தில் இடம்பெறும் பெண்களின் கவிதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்கள், அவை காதலுக்குரியவர்களைத் தெய்வங்களாகவோ அதிபுகழ்ச்சிக்கு உட்படுத்தியோ நோக்கவில்லை எனக் குறிப்பிட்டனர். கணிசமான கவிதைகள் காதலர்களை யதார்த்தமான மனிதர்களாகவே நோக்குகிறன. காதலுடன் கூட கோபம், இகழ்ச்சி போன்ற உணர்வுகளும் இவற்றில் வெளிப்படுகின்றன. அத்துடன் சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும் சமத்துவத்தின் அற்புதத்தையும் இவை பாடுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான காதலை மட்டுமல்லாது பெண்களுக்கிடையேயான அன்பையும் சகோதரித்துவத்தையும் பேசுகின்றன.
இங்கு குறிப்பிட்ட அம்சங்களே ஆண்களின் கவிதைகளிலிருந்து பெண்களின் கவிதைகளை வேறுபடுத்துபவை, பெண்களின் உணர்வுகளை ஆண்கள் பேசும் முறையிலிருந்து வேறுபடுத்துபவை.
மேலும் காதலுக்குரியவர்களைப் பாடுவது மாத்திரமல்லாது காதல் பற்றிய பெண்களின் சிந்தனையையும் இவை காட்டுகின்றன. காதல் அனுபவத்தின் முரண்பாடுகள், காதல் பற்றிய விவாதம் போன்றவையும் பெண்களது காதற் பாடல்களின் பொருளாயுள்ளன. காதலுறவின் வெவ்வேறு சாயைகள், நெருக்கம், அன்பு, கோபம், மனத்தாங்கல், வேடிக்கை எனப் பலவாறாக அவை அமைகின்றன. காதலுறவு பற்றிய எச்சரிக்கை, பிரலாபம் ஆகியவற்றையும் இக்கவிதைகளிற் காணலாம். இவ்வகையில் இவை விரிந்த பொருட்பரப்பைக் கொண்டனவாக அமைந்துள்ளன.
உலக இலக்கியப் பாரம்பரியத்தில் வெவ்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஆங்கில மொழியில் ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. பெண்களின் காதல் கவிதைகள்: காலங்காலமாக உலகம் பூராவுமுள்ள கவிதைகளின் தொகுதி (Love Poems by Women: An Anthology Around the World and through the Ages) என்ற தலைப்பிலான நூலினை வென்டி மல்போட் என்பவர் (Wendy Mulford) ஹெலன் கிட்(Helen Kidd), ஜீலியா மிஸ்கின்(Julia Mishkin), சன்டி ரஸல் (Sandi Russel) ஆகியோருடன் இணைந்து பதிப்பித்துள்ளார். இந்தத் தொகுதியிலேயே மேற்கூறிய கருத்துக்களை அவர் தெரிவிக்கின்றார்.
மேற்கூறியவற்றை விட இன்னொரு குறிப்பிடத்தக்க வேறுபாடும் ஆண்களதும் பெண்களதும் காதல் கவிதைகளுக்கிடையே உள்ளது. ஆண்களது கவிதைகள் பெண்களின் மீதான காதலைப் பாடும்போது அவர்களின் உடலை மையப்படுத்துகின்றன. உடலின் உறுப்புக்களை அதீதமாகப் புகழ்ந்தும் வர்ணித்தும் பேசுகின்றன. முலை, இடை, தொடை, இதழ், கன்னம் என்று உடலுறுப்புக்களை விஸ்தாரமாக விபரிக்கினறன. பண்டைய இடைக்காலத் தமிழிலக்கியங்களில் இப்பண்பைப் பரவலாகக் காணலாம். பெண்ணுடலை ஆசையின் மையப் பொருளாகப் பார்ப்பதும் பெண்ணுடலை உடமையாகக் கருதும் தந்தமைக் கருத்துநிலையும் இதற்குக் காரணமாகும்.
ஆனால் பெண்களின் காதல் பாடல்களில் இந்த அம்சம் மிக மிகக் குறைவே. பாலியல்பையும் காமத்தையும் அங்கீகரித்த ஆக்கப்பட்ட பாடல்களில் கூட உடல் உறுப்புகளைத் தனிமைப்படுத்திப் பாடுவது பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். காதலுறவே அவர்கள் கவிதைகளில் முதன்மை பெறுகின்றது. இந்த வேறுபாடு தொடர்பாக மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
பெண்நிலை இலக்கியம் என்றாலே அவை மிகவும் கடுமையான போக்குக் கொண்டவை எனவே பலரும் கருதுகின்றனர். மார்க்சீயர்களது இலக்கிய ஆக்கங்கள் யாவும் வர்க்கப் போராட்டம் பற்றிப் பேசுவதாகவும் சமத்துவம், சுதந்திரம் போன்ற சுலோகங்களால் நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்ப்பது போன்றதே இது. பெண் நிலை இலக்கியம் வரிக்கு வரி ஆணாதிக்கத்தை விமர்சிப்பது; மிக வலுவான சொற் பிரயோகங்களும் வன்மையான படிமங்களும் கொண்டது என்று கருதுவோர் பெண்நிலைவாதிகள் அழகியல் உணர்வும் ரசனையுமற்ற வரட்டுத்தனம் மிக்கவர்கள் என்றும் எண்ணுகின்றனர். பெண்நிலைவாதத்தின் அடிநாதத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்சனையாலேயே இத்தகைய கொச்சையான கருத்துக்கள் ஏற்படுகின்றன.
பெண்களின் காதல் பற்றிய உணர்வுகள் எவ்வாறு மறைக்கப்பட்டனவோ அவ்வாறுதான் அவர்களது அழகியல் உணர்வும், ரசனையும், நகைச்சுவையும் வாழ்வின் மீதான ஆர்வமும் மறைக்கப்பட்டுள்ளன.
வாழ்தலுக்கான அவசியமான ஆதாரங்களில் அழகும் சுவையும் இடம் பெறவேண்டும் என்பதைப் பெண்கள் எப்போதும் வற்புறுத்தியே வந்துள்ளனர். "எமக்கு உண்பதற்கு ரொட்டி மாத்திரமல்ல; ரசனைக்காக மலர்களும் வேண்டும்" என்ற கருத்துப்பட அமைந்த "We want bread and Roses too" என்ற தொடர் பெண்களது வாழ்க்கை நோக்கினை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கூறுவோர் வரட்டுத்தனமானவர்கள் அல்லர்; உணர்வும், இரத்தமும், சதையும் ஜீவனும் நிறைத வாழ்வின் வளத்தை உணர்தவர்கள். வாழ்வின் அழகிய, ஆழமான, பன்முகத் தன்மை கொண்ட உணர்வுகளை அங்கீகரிப்பவர்கள்.
இவ்விடத்தில் திரைப்படங்களில் இடம் பெறும் காதல் பாடல்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இன்று மனிதரது சிந்தனை, உணர்வு, கருத்துக்கள் என்பதை வடிவமைப்பதில் திரைப்படம் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக இளம்வயதினரையும் பெண்களையும் இது வெகுவாகப் பாதிக்கிறது. அவர்களது உளவியல், கருத்துநிலை ஆகியவை முதல் ஆடை, அலங்காரம், நடை ஈறாக வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்துகிறது. இத்தகைய பலம் வாய்ந்த சாதனம் ஒன்றின் மூலம் வெளிப்படுகின்ற காதல் பற்றிய கருத்துக்களும் காதல் என்கிற மனித உறவு பற்றிய போலித் தோற்றங்களையும் கனவுகளையும் உருவாக்குகின்றன. பெரும்பாலான இளம் வயதினரின் காதல் பற்றிய எண்ணக் கரு திரைப்படங்களூடாகவும் இலக்கியம் ஊடாகவும் வளர்க்கப்படுகிறது. இளம் பராயத்தினர் பரிமாறிக் கொள்ளும் காதல் கடிதங்களில் திரைப்படப்பாடல் வரிகள் தாராளமாகப் பயன்படுகின்றன. தமது உணர்வுகளையும் உறவுகளையும் அடையாளம் காண்பதற்கு அவர்களுக்குத் திரைப்படங்கள் வழிகாட்டுகின்றன. இதன் விளைவு நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளும் பிறழ்வுகளுமாகும்.
இப்போக்கிற்கு மாறாக பெண்களது வாழ்க்கை நோக்கு, உறவுகள் பற்றிய பார்வை, அவர்களது நேசத்தின் பரிமாணங்கள் என்பவற்றையும் இக்காதல் கவிதைகள் உணர்த்த வல்லன.
பெண்களது சுயாதீனம், தனித்துவம், சுய இயல்பு, அடையாளம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று மேலோங்கி வருகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலேயே பெண்களது இலக்கியம் என்ற கருத்தாக்கமும் வளர்ந்தது. குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களிடையே பெண்கள் அமைப்புகளும் பெண்களது கலாசாரச் செயல்வாதம் பற்றிய கருத்துக்களும் விவாதங்களும் தோன்றத் தொடங்கியிருக்கும் சூழலிலேயே பெண்களது காதல் கவிதைகள் என்ற இத்தொகுப்பும் வெளிவருகின்றது. பெண்கள் தமது சுய உணர்வுகளுக்கும் அனுபவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் கலைவடிவமும் மொழி வடிவமும் தருவதும் அவை பொதுத்தளத்திற்கு வருவதென்பதும் முக்கியமானதாகும். அவர்கது தன்னாற்றலையும் சொந்தக் குரலையும் காட்டும் சாதனங்களாக இவை அமையலாம்.
இத்தகைய ஒரு கருத்தோட்டத்தின் பின்னணியிலேயே தமிழில் பெண்களால் இயற்றப்பட்ட கவிதைகள் சிலவற்றை ஒரு தொகுதியாக வெளியிட எண்ணினோம்.மேலும் சம காலத்தில்
மாத்திரமல்லாமல் இத்தகைய கவிதைகள் நீண்ட பாரம்பரியத்தை உடையன என்பதைக் காட்டவும் முனைந்தோம். அவ்வகையிலேயே சங்ககாலத்திலிருந்து சமகாலம் வரையுள்ள கவிதைகளில் சிலவற்றை இங்கு சேர்த்துக் கொண்டோம்.
இவ்வகையில் சங்கத்தொகை நூலான குறுதொகையிலிருந்து பாடல்கள் ஆறு இங்கு இடம் பெறுகின்றன. ஔவையார், நன்னாகையார், வெள்ளி வீதியார் ஆகியோர் இயற்றியவை இவையாகும். இக் கவிதைகளின் மொழி இன்றைய மொழிப்பாவனையிலிருந்து மிகவும் வேறுபட்டிருப்பதால் அவற்றின் அர்த்தம் சராசரி வாசகர்களுக்கு இலகுவில் புலப்படாது. எனவே கவிதையை விளங்கிக் கொள்ள வழிவகுக்குமுகமாக அக்கவிதைகளின் அர்த்தமும் தரப்பட்டுள்ளது.
சங்ககாலப் பெண்கவிஞர்களைப் போலத் தன் காதலுணர்வுகளைப் பாடிய இன்னொருவரான ஆண்டாள், நாச்சியார், கோதை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றெல்லாம் அழைக்கப்படும் வைணவப் பக்தை ஆவர். இவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது இலக்கிய வரலாற்றாய்வாளர்களின் ஊகமாகும்.
பக்தி மரபில் இறையை ஆணாகவும்/ காதலானகவும் பாவித்து அவனை அடைவதற்கு ஏங்குவதாகப் பாடும் மரபு ஒன்று உண்டு. ஆண்பக்தர்கள் தம்மைக் காதலியாகப் பாவித்துப் பாடுவர். இது 'நாயக- நாயகி பாவம்' என்று கூறப்படும். இந்து மதத்தின் பக்தி மரபுகள் யாவற்றிலும் இப் போக்கினைக் காணலாம்.
ஆண்டாள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர். திருமாலில் காதல் கொண்டவர். திருமாலை ஒரு ஆணாகவும் தனது காதலனாகவும் கொண்டவர். இறை பக்திக்கும் ஆணின் மீதான காதலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆண்டாளின் பாடல்களில் இல்லமல் போகிறது. இதன் பலன் எத்தகைய பாவனைகளுமற்ற, உண்மையான காதல் கவிதைகள். சமய மரபில் இவை பக்திப் பாடல்கள் எனக் கூறப்பட்டாலும் அவற்றைக் காதல் கவிதைகள் என்று சொல்வதற்கான சகல இயல்புகளும் அவற்றில் பொருந்தியுள்ளன. ஆண்டாளின் ஆராக்காதலும் காதலனை அடைவதற்கான பரிதவிப்பும் பாடல்கள் முழுக்க விரவியுள்ளன. காதலும் காமமும் மாறி மாறி விளையாடும் மொழியாடல்களாகக் கவிதைகள் அமைந்துள்ளன. தனது பாலியல்பை ஒடுக்கிக் கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ முயலாமல் அதனை இயற்கையாக அங்கீகரித்து வெளிப்படுத்துவது ஆண்டாளின் கவிதைகள் முழுக்கப் பரந்து கிடக்கிறது.
ஔவை, வெள்ளி வீதியார், நன்னாகையார், ஆண்டாள் ஆகியோருடைய கவிதைகளுடன் சமகாலக் கவிதைகள் இருபத்தியைந்தும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இலங்கைப் பெண் கவிஞர்களுடைய இக்கவிதைகள் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆக்கப்பட்டவை. இவற்றுள் சில இது வரையில் பிரசுரமாகாதவை. ஏனையவை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் ஏற்கனவே வெளிவந்தவை. குறிப்பாகச் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் கணிசமானவை.
சமகாலக் காதல் கவிதைகள் காதலின் பல்வேறு சாயைகள் பற்றிப் பேசும் அதே சமயம் காதல் பற்றிய பெண்களின் நவீன சிந்தனையோட்டத்தையும் காட்டுகின்றன. காதல் பற்றிய விவாதத்தை எழுப்புகின்றன. மனிதருக்கிடையேயான உறவில் ஏற்படும் பல்வேறு சுழிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் காதலர்களுக்கு இடையேயும் ஏற்படுவது இயல்பேயாகும். இத்தகைய சிக்கல்களையும் பன்முகத்தன்மைகளையும் கூட இவை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வகையில் காதலின் பல்பரிமாணத்தன்மையை இக்கவிதைகள் தொட்டுச் செல்கின்றன.
இத்தொகுதி முழுமையான ஒரு தொகுதி அன்று; சமகாலக் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கைக்கு எட்டியவையே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெண்கள் இலக்கியத்தின் பல்பரிமாணங்களில் ஒரு முகப்பைச் சுட்டிக்காட்ட இவை போதுமானவையாக அமையும் என எண்ணுகிறேன்.
இத்தொகுப்பு முயற்சியில் உதவிகள் புரிந்த கிழக்குப் பலகலைக்கழக் மொழித்துறை விரிவுரையாளர் கி. வானதி, சூரியா பெண்கள் நிலையத்தின் கலாசாரக் குழு உறுப்பினர் கவிதா, சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
சித்திரலேகா மௌனகுரு
மட்டக்களப்பு,
இலங்கை.
15. 12. 1999.
------------------------------------------------
உன் நினைவு.... மழை நீர்.... கண்ணீர்....
-நஜீபா-
நீ பிரிந்து போன இந்த நிமிடங்கள்
எனக்கெந்த
மகிழ்ச்சியையும் தரவில்லை
இருந்த
சுதந்திரமும் அற்றுப்போன உணர்வைத் தவிர
நீயும் நானும்
இவ்வளவு கெதியில் பிரிவோம் என
நான் துளியும் எண்ணவில்லை.
இனி ஒரு நிம்மதி வேண்டி இறையடி சேரலாம்.
எதுவும் உன்னிடம் பேச முடியாதபடி நான்
ஒரு ஊமையாக இருத்தப்பட்டுள்ளேன்.
உன்னுடன் பேசிக் கொண்டிருந்த
இந்தப் பொழுதுகளைப் பற்றி
இப்போது மழையுடன் பேசுகிறேன்.
நினைவுகளுக்கென நான் மீட்டுப் பார்க்கிறேன்.
நமது இறந்து போன கடந்த காலங்களை
இனியும் எவ்வளவோ
உன்னிடம் பேச வேண்டும்.
நான் தான் ஊமையாக்கப்பட்டிருக்கிறேன்.
நீ
இப்போது என்னுடன் இருந்தால்
உன்னை இறுக்கிக் கொண்டு
'ஓ' வென்று அழுதிருப்பேன் அல்லது
கதறியிருப்பேன்.
அழுது கண்ணீர் திரையாகிறது.
ஒரு துளியேனும் உனக்காயன்றி
விட்டதில்லை நான்
பிரியேன் உன் நினைவுகளை விட்டும்
உன்னை விட்டும்.
இப்போ தெல்லாம்
எனக்கு பெறுமதியான பொழுதுகளாய்
இவை தெரியவில்லை
நீயும் நானும் வாழ்ந்த
அந்தக் கணங்களை விட
ஆத்மா பிரிந்த ஆவியாக நான் கிடக்கிறேன்
எனக்குள் உனக்குத் தெரியாமல்
நீ போய் விட்டாய் வெகு தூரம்
உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
இறுதி நேரங்களில்
என் விழிகள் நனைகின்றன.
ஆத்மாவைப் பிரிந்த ஆவியாய்
கிடக்கின்றேன்.
---------------------------------------------------
புத்துயிர்த்தல்
-பெண்ணியா-
எனது தகப்பனின்
நம்பிக்கையற்ற பார்வைகளினூடும்
தாயின் குமுறல்களினூடும்
உறவுகளின்
என் திருமணம் பற்றிய
சகிக்க இயலாத பேச்சுக்களினூடும்
சுதந்திரமாய் நான் வாழ்வதென்பது எவ்வாறு?
என் இனிமை,
இதம் என்பன வெல்லாம் அவளுக்கானவை
அவளற்ற என் உலகுபற்றி
கனவுகளும் வேண்டாம் ஒருவருக்கும்
போலியும்
வஞ்சகப் பாசமும் நிறைந்த முகங்கள்தான்
எனைச் சூழ எங்கும்
மென்மேலும் என்னால்
தோல்வியுறுதல் இயலாது
எனது அவள் தோழி மட்டுமல்ல...
அது பற்றியும் சொல்வேன்
அது காதல்
அவளது வேர்களைப் பிடுங்கி எறியவும்
பிறருக்கிருக்கும் மனதின் பரப்பெங்கும்
கள்ளிச் செடிகள் நட்டுப் பார்க்கவும்
கணம் கணம் இங்கு போர்
எவ்விதம் பிரிவேன் அன்பே
எவ்விதம் வாழ்வேன் நான்?
ஆயினும் ஆயினும் வாழ்வேன்
ஆச்சரிய மேயாயினும்
எனையழுத்தும் இவ்
இறுகிய பாறைகளினூடிருந்து
வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்.
கூவத்தான் முடியாதாயினும்
ஈனஸ்வரத்திலேனும் என் பாடல்களை முனகியபடி
யார் முன்னும் பணிதலன்றி
எனது உணர்வுகளோடும் அவர்களோடும்
எவ்வகை வாழ்வெனப் புரியாத இது
குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்.
----------------------------------------------------------------------
உதிரும் இலைக்கனவு
-பெண்ணியா-
உன் பெயரை உச்சரிப்பதில்தான்
என் உணர்ச்சிகள் மெய்ய்ப்படுகின்றன.
சிறிது உன்னை நினைக்கிறேன்
பிறகு அழுகிறேன்
என் ஆத்மார்த்தமான காதல்
நீ ப்ரியாதது
இப்போது நீ இல்லை
ஆனபோதும் நான் நேசிக்கிறேன்
அதைப் புரியாமலே நீ போய் விட்டய்
என் ஆசைகளும் நினைவுகளும் வெடித்து
கண்களிலிருந்து
கண்ணீர்க் கோடுகள் துளிகளாய் வீழ்ந்தாலும்
என் உணர்வுகளை நிறுத்த நுடியவில்லை
இப்போதும் நான் வாழ்கிறேன்
மௌனம் நிறைந்தவளாய்
இனி நான் பேசப் போவதில்லை
உன் நினைவுகள் என்னை விட்டு நீங்கும் வரை
அன்று என் நினைவுகளும்
என்னோடேயே இருக்குமா என்ன?
நான் உன்னைக் காதலித்தேன்
என் உணர்வுகளை கடந்து
உன்னைக் காணுகையில்
அதிவேகமாகத் துடித்த என் இதயம்
இன்று மிக மென்மையானதாக
இதமும் உன் நினைவுகளும் நிறைந்ததாக
எவ்விதம் இனி நான்
என் கணங்களைக் கழிப்பது
எனைச் சூழ்ந்திருந்த நீயும் அகன்று போன பின்
உன்னை
உன் பிரிவை
நான் உணர்கின்ற போது
ஒருவரும் இல்லாத தனி வீதியில்
ஒரு மஞ்சள் விளக்குக் கம்பத்தின் கீழ்
மெல்லிய மழைத் துளியில் நனைய நான்
என் கண்களில் நீ
நினைவுகளாய் ஈரலிக்க
நான் மட்டும்
அழ வேண்டும்
என் உணர்ச்சிகளைக் கொட்டி
என் இதயம் கனக்கிறது
ஏதோ ஒன்று மனதில்
பாரம் போல் உணர்கிறேன்
அது உன் நினைவின் துயரா அன்பே
எனக்கு இது பிடித்திருக்கிறது
உன் நினைவில் அமிழ்வது
அழிவது...
என் உயிர் உன்னது
அதை நான் சுமக்க விட்டு
எங்கு போய்ப் போனாய் போ
உன்னுடைய என் பெயரையும்
எடுத்துச் செல்க
செல்க
என் கைகளில் கண்ணீர் வீழ்ந்து உடைகிறது
இனி எதிலும்
ஈடுபாடு இருக்கப் போவதில்லை
என்ற போதும்
ஓர் மௌன ஜீவனாய்...
இன்னும் உனக்காகவே...
நீ எனக்குள் உயிர்க்கிறாய்
என் மனதில் துளிர்க்கும்
நினைவின் குருத்துகளாயென...
-----------------------------------------------------------
நீ... நான்... மழை...
-ரேவதி-
இந்நகரத்து மழையும்
என் உடலில் வெந்து தணியும்
தீயும் ஒன்று தான்
சிணுங்கி, பின் சிணுங்கல்களாகி
சலசலப்புடன் ஓய்ந்து விடுவதற்குள்
எனை நனைத்து
என் உயிரை உறைய வைத்து விடும்.
இப்போதும்
எனக்கு உள்ளும் புறமுமாய்
கொட்டுகிறது மழை
ஓடும் பஸ்ஸிலும்
அவளுடைய மார்பை
திருட்டுத் தனமாய் வருட விழைகிற
அவனது விரல்களும்
குளிருக்குப் போர்வையாய்
அவனை ஆக்கிக் கொள்ளத் துடிக்கும்
அவளது அவஸ்தையுமாய்
யார் யாருக்கோ பயந்து
பஸ்ஸிற்குள் இழுபடும் அவர்கள்
கண்ணாடியால் தெறித்து
என் உதட்டில் வழிந்த
ஒரு துளி மழை
எனை என்னமாய் சிலிர்ப்பிக்காது
என் உடலை
எனை மீறி குளிர்வித்து
மோகத்துள் ஆழ்த்துகிறது
கடந்து போன அழகான மழை இரவில்
எனை இறுகி அணைத்து
"ஏன்டி பயப்படுகிறாய்" என்று
காதோரம் உரசி
என் கூந்தலை நுகர்ந்து
...? போன அவன்.
மனம் நோவு கண்டு அழுகிறது
அறுத்தெறிந்து ஓரமாய்
ஒதுக்கவும் முடியாமல்
நினைவுகளோடும் நில்லாமல்
கனவுகளிலும் அவன் எனை வருட
தோற்றுத்தான் போனேன் நான்
உயிர்ப் பெடுக்க முடியாமல்
இயலாமையில் கண்கள் கலங்க
பற்கள் உதடுகள் கடித்து
கண்ணீரை அடக்கிக் கொண்டது.
வழ்தலின் உயிர் மூச்சுக்காய் ஏங்கி
கால்கள் தன்வழி தொடர்கிறது.
அவன் இப்போதும்
ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடும்
இந்தச் சமூகத்தின்
ஒழுக்கக் கட்டமைப்பு பற்றி.
-------------------------------------------------------
அது தானே நான்
-யாழ். ஆதிரை-
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நான் ஒரு
தொட்டாற் சுருங்கி என்று
மென்மையான இழைகள்
மட்டுமே
என் இதயத்தைச் சுற்றி என்று
என்னால்
ஆற்றிக் கொள்ள இயலாத தருணங்களில்
உன் பார்வையில்
நான்...
மூர்க்கமானவள்
"வினை" பிடித்தவள்
அஃறிணைப் பிறப்பு...
எப்படி யெனினும்
உன் வறட்டுப் பிடிவாதத்திற்கும்
ஆழ் மனத் தாக்கங்களுக்கும்
உன் காயங்களுக்கும்
உத்தியோகத்திற்கும்
கௌரவத்துக்கும்
எதிர் பார்ப்புகளுக்கும்
என்னைத் தானே
இரை கொள்கிறாய்!
நிஜமாகக் கூடி
என் கனவுகளைக் கூட
ஒடித்து விட்டு
அதிலும் கூட திருப்தியுறாது...
எது தான் உன்னைத் திருப்திப் படுத்துமோ?...
உண்மை அன்புக்கு ஏங்குவதாக
அன்று சொன்ன நீ
இன்று
என்னிடமிருந்து அதைப் பெற்றும்
எனக்குரிய தைத்தர
ஏனோ மறுக்கிறாய்
சற்றே திறந்த ஜன்னலுக்கு வெளியே
ஒளியையும் மீறின
சந்தோஷ முகங்கள்...
என் வாழ்க்கை ஏனோ
இழப்புகளுடனும்
ஏக்கத்துடனும்
ஆயினும்
உன்
கூர் மூக்கின் அழகில்
சிறுபிள்ளைத் தனங்களில்
உதாரண குணங்களில்
உனக்குள்ளான மனிதனை
சலித்துத் தேடி...
உன்னில் லயித்து
நீ தரும் ச்ந்தோஷங்களில் கலந்து
அதே புன்னகையுடன்
உனக்காகவே என்றும்...
----------------------------------------------------------------
ஈரமனதைத் துயரப் பறவை
கொத்தி விட்டுப்போகும்
என் மனக் குளத்தின்
எந்த மீனிருப்பதால்
இந்த விதி நேர்கிறதப்படி?
வெண்மை பரவும்
வானில் தொலையும் நீலம்
பின்னரது சூடும்
பொன் நிறைத்ததோர் கோலம்
காற்றிற் காலமும்
காலத்திற் காற்றும்
கரையக்
கணங் கணம் புதிது தோன்றலே
காலத்தினழகின் இரகசியம்
மென் மனதினீரத்தினால்
இன்னுமிங்கு பூ மலரும்
பூமலரக் காரணமாய்
ஏதோவொன்று
மறைந்திருந்து மழையாகும்
கொத்திய காயமும்
கலங்கிய மனமும்
எதோ வொன்றால்
ஆறுதலாகும்.
நானந்தக் கரமறியேன்
தொடுதலும் அணைப்பும்
மாத்திர முணர்வேன்
பூவைக் கொஞ்ச வருங்காற்று
இலைகளை அசைக்காமல்
இடுவதில்லை முத்தம்
எந்தன் மனதில்
அந்தத் தொடுகை
அதிர்வுகளற்ற மௌனத்தில்
நிகழும்
ஒரு தாயின் முத்தம்
மனதினாழத்தினில்
சில நேரம் முகந்தெரியும்
சில நேரம்
வீரமாகாளி
மௌனத்தால்
இந்தப் புவி வாழ்வில்
புதையுண்டு போயினும்
பாயுமொளியாய் உயிரினில் மேவி
வாழ்வின் விதையும்
மழையாகுமுந்தன்
பெயரெழுத
மனதினீரம் தோய்த்தெடுத்த
வாழ்வின் வார்த்தைகளால்
மரணத்தை அழித்தெழுத
ஒவ்வொரு நாளும்
நானுயிர்ப்பேன்.
-துர்க்கா-
-------------------------------------------------------------
கலங்காதே கண்ணே காத்திரு
-சுல்பிகா-
நீ என்னிடம்
அன்புக்காக மண்டியிட்டாய்
கோரைப்புல்லிடம் மண்டியிடும்
கும்பிடு தட்டான் போல்
ஆயிரம் தடவை
இந்த ஆத்மாவில்
அவை எழுதப்படட்டும்
அறிவால் முதிர்வு கொள்
என் அன்பே!
உன் அன்பை ஏற்றுக் கொள்ள
இப்போது முடியாதிருப்பதற்காக
என்னை மன்னித்துவிடு
தேடல்கள், புரிதல்கள்
வெறுத்தல்கள், மறுத்தல்கள்
கோரல்கள், போரிடல்கள்
எனப்பல வேலைகள் உள்ளன
எல்லாம் முடிவில்
நான் உன்னிடம் வருவேன்
உடன் இருக்கவும்
உன் மீது அன்பு செலுத்தவும்
உன் அன்பை ஏற்றுக் கொள்ளவும்
நான் உன்னிடம் வருவேன்
காலைக் கதிரும்
வெளிப்புமாக இணைந்து கொள்ள.
அதுவரை
உன் காதலைக்
காத்து வைத்திரு
கலங்காதே
கன்னா பின்னா என
கோபமும் கொள்ளாதே
போர்க்காலம் கொடியது
என்னையும்,
உன்னையும்
நம் காதலையும்
சுட்டெரித்து விடும்
போரின் முடிவில்
நான் உன்னிடம் வருவேன்
காரிருளில் உன்
காலகளிடை
முகம் புதைக்க
கவலை மறந்து
உன் மார்பில்
சாய்ந்து கொள்ள
என் தலையைக்
கோதி....விடும் உன்
கைகளில் முத்தங்கள்
கணிக்கை தர
உன்னை நீயும்
என்னை நானும்
மறந்து போக
யாரும் கண்டறியாத
எம் உயிரை
நாம் உயிர்த்தெடுக்க
நான் உன்னிடம் வருவேன்.
--------------------------------------------------
இதயராகம்....
-சுல்பிகா-
நீலவானில் நிலா
வைகறைப் பொழுதில் எழுந்திருக்கின்றது.
மேகத்தின் மெல்லிய திரை அதனைச் சுற்றி
மோகன வட்டமிட்டுள்ளது.
அதன் மருங்குகளில்
வானவில்லின் வர்ணங்கள் ஒளிர்கின்றன.
அமைதி எங்கும் ஆட்கொண்டுள்ளது
மெல்ல செவிமடுத்துக் கேள்,
எங்கிருந்தோ பாடும் அவளது
இதய ராகம் காற்றோடு கலந்து வருகின்றது
ஆக்காண்டிப் பறவை அவள் குரலை
எங்கும் எடுத்துச் செல்கின்றது
இளம் தென்றல் அவள் மென்மணத்தை
எங்கும் தூவிச் செல்கின்றது
அவளது வரவை உன்னால்
உணர முடிகின்றதா?
இதோ அழகிய நட்சத்திரங்கள்
அவள் கண்ணிலிருந்து ஒளிபெற்று
மின்னுகின்றன.
கடலும் தொடுவானமும் அவள் வண்ணம்
கொண்டு மிளிர்கின்றன.
அதே ஒலி...
அதே ராகம்...
மீண்டும் மீண்டும் தொடர்கின்றது.
நன்றாகச் செவிமடுத்துக் கேள்-
அவள் இதயத்தின் ஒலிக்கூடாக
உன் பெயர் உச்சரிக்கப்படுகின்றது.
உதடுகளால் அவள் அதை உச்சரிப்பதில்லை.
காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது
ஆயினும்,
உதடுகளுக்கு இல்லாத சக்தியை
அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள்.
அதனால் தானோ என்னவோ,
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும்
அவளது ராகம் ஒலிக்கின்றது.
முடிந்தால் அதற்கப்பாலும் சென்று
செவிமடுத்துக் கேள்.
காற்று;
அதனால் அவளது
இதயத்தினுள் புக முடியாது.
அது; அவளது ராகத்தைத்
தடுக்க முடியாது தவிக்கட்டும்.
அவள் கண்களில் மினுங்கும்
சோகக் கதிர்களை
உன் மனத்திரை பதிவு செய்யக்கூடும்.
நீ பெற்றுக் கொண்ட
துலங்கலைக் கூட
அவள் கண்கள்
மீளவும் பெறவும் கூடும்.
எனினும்,
அவளது இதயராகம்
உண்மைக் கவிஞனின்
பேனா முனையினால் கூட
இதுவரை எழுதப்படாதவை
அவளைச் சுற்றி
எத்தனை வேலிகள்.
இவைகளைத் தாண்டி,
உன் மனத்திரையை அடையும்படி
உடன் பதிவு செய்து கொள்,
இந்தப் பொல்லாத காற்று,
அதனைக் கூட அள்ளிச் செல்லக்கூடும்.
------------------------------------------------------------
இது ஓர் மென்னுணர்வு
-சுல்பிகா-
அது எனது சிருஷ்டி
கண்ணாடி இழை கொண்டு
பின்னப்பட்ட அழகிய 'sponge'இலும்
மென்மையானது.
தாயின் கருவறையில்
வளரும் சிசுவிலும் தூய்மையானது.
இளங்காலைக் கரிர்பட்டு
நகைக்கும் தளிரிலும்
மகிழ்ச்சியானது.
இயற்கையையே
'இல்லை' என்று விடும்போல்
அற்புதம் மிக்கது.
அது என் உடலின்
உள்ளத்தின்
உயிர்ப்போட்டம்.
அதுவே எனது பிரபஞ்சம்
முழுவதையும் ஆட்கொண்டுள்ளது.
எனினும் அது மிக மென்மையானது
மென் இளந் தென்றல் கூட
பொல்லாரின் இன்சொற்கள் கூட
அதனை அழித்துவிடக் கூடும்
அதன் அழகை
அற்புதத்தை
இனிமையை
மகிழ்ச்சியை
தூய்மையை
மென்மையை இழக்கச் செய்துவிடக் கூடும்.
என்றும் நான் காப்பேன்
கொடிய புயலிலும்
நான் அதைக் காப்பேன்
என் முளை கலங்களிலும் பார்க்க
பெறுமதி மிக்க அதை
என் உணர்வுகளை இவ்வுடன்
இழக்கும் வரை காப்பேன்
அது என் சிருஷ்டி
முடிந்தால்
அதற்கப்பாலும்
அதனை என்னால் காக்கவும் முடியும்.
------------------------------------------------------------
துணைசேர
-செல்வி-
பனி சிலிர்க்க
நட்சத்திரங்கள் மட்டுமே ஒளிர்கின்ற நள்ளிரவு
சில் வண்டின் இரைச்சலிடை சாமத்துக் கோழிகளும்
நாய்களும் இடையிடை குரலெழுப்ப
தூக்கம் பிடிக்காத
யன்னலூடு இழையும் பனிக்காற்று மட்டுமே
சொந்தமான தனி இரவு
ஆழ்மனதில் பதிந்திருந்து
கிளரும் நினைவுகளில்
ஏன் இந்த சோகம்?
மொட்டுக்கள் முகிழ்ந்து நறுமணம் வீசிய
இரவு உதிரா இளங்காலைப் பொழுதில்
எனக்கும் உனக்குமிடையேயிருந்த இறுக்கமும்...
ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள்
கூரையிடை கண்களைச் சிமிட்டவும்
ஓவென்றிருந்த குளத்துக்குளிர் காற்று
பற்களைக் கிட்ட வீசிய இரவில்
பலநூறு கோடி யுகங்கள் வாழ்ந்ததாய்
இலயித்துக் களித்ததும்
நினைவுகளாய் வெறும் நிழல்களாக
நெருடுவது எதற்காக?
மனித விருப்புகளற்று
வேறெல்லாம் முடிவு செய்யும் வாழ்வினை வெறுத்து
புரிந்து கொள்ளலில் புரிந்து கொண்ட
இனிய வாழ்வில்
நூலிடை தளர்வு எப்படி வந்தது?
எவ்வாறு சகிப்பது?
முடியாது
வா, பேசுவோம்
வாழ்க்கையின் பரிமாணங்களை
பரிமாணங்களை புரிந்து கொள்ளுவோம்
உதயத்திற்கு சிறிது நேரந்தான் உண்டு
அதிகாலை மிகமிக இரம்மியமானது.
-----------------------------------------------------
ஒரு கடிதம்
-ஔவை-
அன்பே!
நீ அருகில் இல்லை
தொலை தூரம் போய்விட்டாய்
கடிதங்கள் நீள
கற்பனைகள் தான் மிஞ்சும்
சிறகடிக்க முடியாது
நான்கு சுவர்கள்
கலைத்துவம் இன்றி
சிதறிக்கிடக்கும்
புத்தகங்களும்
சில்லறைப் பொருட்களும்
தத்துவெட்டியும் எறும்பும்
குடியிருக்கும் வாடகையறை
ஓர் மூலையில் புத்தகப்பூச்சியாய் நான்
காற்று வருவதற்காய்
ஒரு சிறு யன்னல்
சிலவேளை அதனால்
வானம் தெரியும்
கண் சிமிட்டும் நட்சத்திரங்களும்
கேலி செய்வதாய்
காற்றசைந்து
முகிலோட
வெண்ணிலா நிலவெறிக்க
கடலருகில் நாமிருந்து
ஊடலுறும் காலமிது
என் செய்வேன்
என்னுயிரே
தூங்காத விழிகளுடன்
மூலை அறையில்
வாழ்வு விரிகிறது.
-------------------------------------------------------------------------
காத்திருப்பு
-ஔவை-
கருவிழியில் ஒளி ஏந்தி
கண் நிறைந்த காதலுடன்
காலமெல்லாம் வாசல் வர வேண்டுமெனக்
காத்திருப்பேன்.
காலமெல்லாம் கரைந்துருகி
கனவாகிப் போhஆமல்
மீள ஒரு பொழுது சுகம் தரவருமெனெ
உடல் தகிக்க
உணர்வூறும் பொழுதுகளில்
கண் மூடித் துயில் கொள்ள
விழைகின்ற என் மனம்
உன் வரவில் உயிர் கொள்ளும்.
கருத்தொன்றிக் காதலுடன்
கனல் மீது நகர்கின்ற பொழுதுகளாய்
காலம் நகர்கிறது
காத்திருப்பு தொடர்கிறது.
-------------------------------------------------
உணர்வுகள்....
-ஔவை-
ஆம்.
அன்று நான் உன்னை ஒருமுறை
நோக்கினேன்
ஒரே முறை நோக்கினேன்
நீல விழியின் அழகுதான் காரணமோ?
இல்லை, இல்லை
ராஜநடை போட்டு-நீ
வாசலில் நின்றபோது
மனம் சிலிர்க்கும்
நோக்கினேன்....
என்றும் போல் அதே பார்வை....
அதே கணத்தில்
பார்வைகள் ஆயிரம் சங்கமித்தன
மனதின் உணர்வை அடக்கி
நோக்கினேன்
வாயில் அரும்பிய சொற்கள் உதிர
விடை பெற்றுச் செல்வாய் நீ
ஆம்- அதிலுமோர் அழகு தான்
வட்டப் புல் வெளியில்
வானத்தை நோக்கி
கைகளை ஆட்டி
கால்களை உதைத்து
நிற்கும் அழகில்
உன்னில் தெறிக்கும்
ஆயிரம் பார்வையில்
அர்த்தமுள்ள-
அர்த்தமாயுள்ள பார்வை ஒன்றே
உன்னைத் துளைக்கும்
இப்படி இப்படி எத்தனையோ
ஆனாலும்-
சமூகத்தில் நடக்கும் அசிங்கங்களைப்போல்
ந்ங்கள் உறவுகள்
ஆகிவிட வேண்டாம்
கண்கள் நோக்கும்
கால்கள் அசையும்
ஆனாலும் நான்
வருதல் கூடாது
--------------------------------------------------
இன்னொருவனுக்கு....
-ஊர்வசி-
இப்போதும் என்னை
நினைத்துக் கொண்டுதான்
இருக்கிறாயா?
'மறந்து விடு' என்று
உனக்கு,
நான் சொல்ல முடியாதுதான்
இருந்தாலும்
பொருந்தாத வேஷங்கள் எதற்காக?
நீயும் நானுமாய்
நடந்த வெளிகளில்
இன்று,
கட்டிடங்கள் அரைகுறையாய்...
சூழவும் மணல்
தடங்களுடன்
'அவனதும் என்னதும்'
உனக்கு நினைவிருக்கிறதா?
அந்த மஞ்சள் மலர்கள்...
இப்போதும்,
மரம் நிறைய,
தரை நிறைய
மஞ்சள் தான்
மற்றபடி, இங்கு
எல்லாமே படுமோசம்!
இன்று,
இவனருகில்
மணல் வெளியில்
திரிதலில்
ஏனோ உன்மிகம்
நினைவுக்கு வருகிறது,
அடிக்கடி,
ஒரு புரியாத புத்தகத்தைப்
படிக்க விரும்புகிற
குழந்தையின்
முகம் போல....
--------------------------------------------------------
சூரியன் மறைந்த பிறகு...
-ஊர்வசி-
இரண்டு மாலைகள்,
முழுமையாக ஒரு பகல் பொழுது,
உன்னையும் என்னையும் தவிர
நாங்கள் பேசிக்
கொண்டதும்,
சேர்ந்து திரிந்ததும் தவிர
எல்லாமே அர்த்தமிழந்து போய்,
மீண்டும், மீண்டும்
என்னை உனக்குள் இழந்து
உன்னை எனக்குள் ஈர்த்து
பிரிகையில்
மிக மிக இரகசியமாய்
விரல் பற்றி அழுத்தி
விடை தந்தபின்,
இன்று,
மீண்டும் வீடு வருகிறேன்
பூமரங்கள் மட்டும்
எனைக் கண்டு
தலையசைக்கும்
மற்றபடி எல்லோரும்
வெறுமரங்களாக
வார்த்தையிழந்து
நிற்பார்
பிறகு
மெல்ல மெல்ல
வேகம் கொண்டு
வார்த்தைகள் என்னைச்
சாடுகின்றன
சுடுநீர் போல...
எதிராளி இல்லாத போராளிகளாக
தங்கள் கவசங்களை
இழுத்துப் பூட்டுவர்
ஆனாலும்
எனது மௌனம் நீளும்
மீண்டும் நான்
எனது அறையுள்...
அடைந்த தனிமையில்
யன்னலுக் கப்பால்
விரியும் வெளியில்
வானும் முகிலும்
அழகாய்,
உனது நினைவுகளுடனே.
------------------------------------------------------------
கத்திருப்பு எதற்கு
-ஊர்வசி-
எதற்காக இந்தக் காத்திருப்பு?
வயல் தழுவிய பனியும்
மலை மூடிய முகிலும்
கரைவதற்காகவா
இல்லையேல்
காலைச் செம்பொன் பரிதி
வான் முகட்டை அடைவதற்காகவா?
அது வரையில் என்னால்
காத்திருக்க முடியாது
என் அன்பே
எத்தனை பொழுதுகள்
இவ்விதம் கழிந்தன?
காதல் பொங்கும் கண்களை
மதியச் சூரியன் பொசுக்கி விடுகிறான்
கடலலைகள் அழகு பெறுவதும்
தென்னோலையில் காற்று
கீதம் இசைப்பதும்
காலையில், அல்லது
மாலையில் மட்டுமே!
ஆனால்
எமது பூமி எமது பொழுதுகள்
எதுவுமே எமக்கு
இல்லையென்றான பின்
இது போல் ஒரு பொழுது
கிடைக்காமலும் போகலாம்...
தொடரும் இரவின் இருளில்
எதுவும் நடக்கலாம்.
ஆதலால் அன்பே
இந்த அதிகாலையின்
ஆழ்ந்த அமைதியில்
நாம் இணைவோம்...
----------------------------------------------------------------
காத்திருத்தல்
-மைத்ரேயி-
நேற்றுப் போல இருக்கிறது
எங்கள் திருமணம் நடந்தது.
பந்தலைப் பிரிக்குமுன்,
வந்த உறவினர் போகுமுன்
நீதான் போய்விட்டாய்.
என் மன ஆழத்திற்கு
இது தெரிந்து தானிருந்தது
இருந்தும்,
திருமணம் சிலவேளை
உனை மாற்றலாமென...
பலவந்தமாக -
ஆம், பலவந்தமாகத்தான்
உன்னை மணந்தேன்.
எனக்கு அப்போது
உன் லட்சியத்தின் களபாரிமாணமோ
உன்னைத் தடைசெய்ய முடியா தென்பதோ
விளங்கியிருக்கவே யில்லை.
இப்போது துக்கப்படுகிறேன் -
அன்று உன்னைத்
தடைசெய்ய நினைத்ததற்கு.
உன் லட்சியத்தின் நியாயம்
இப்போதுதானே புரிகிறது.
எனினும் ஒரு சந்தோசம்
மனைவியான படியால் தானே
உன் சாதனைகளில் மகிழ்தலும்
உனை நினைத்து அழுதலும்
சாத்தியமாயின.
இரவுகள் தூங்குவதற் கென்பது
என்வரையில் பொய்யாயிற்று.
நிசப்த ராத்திரிகளில்
இடையிட்டு எழும் ஒலிகளில்
காலடி ஓசைக்காகக்
காத்திருந்து காத்திருந்து...
கனத்த இருளினுள்
கறுப்புப் பூனையைத்
தேடித் தேடித் தோற்று..!
சிலவேளை காலடிகள்
கனத்த பூட்ஸ்களாய்
நெஞ்சில் -
கண்ணிவெடி விதைக்கும்.
ஆனால்,
நான் இன்னும்
நம்பிக்கை இழக்கவில்லை.
காத்திருந்த இரவுகள்
கணக்கு வைக்க முடியாமற்
பெருகி விட்டன
கல்யாணத்தன்று நட்ட முருக்கு
கொப்பும் கிளையுமாய்
சிவப்பாய்ப் பூத்திருக்கு.
பாலர் வகுப்புக்குச் செல்லும்
மகன் கேட்கிறான்:
'ஏனம்மா
எங்கட வீட்டுப் பின்கதவை -
நீ பூட்டுறேல்ல? '
'முன்கதவு திறந்திருந்தா மட்டும்
கண்டவன் எல்லாம் நுழைவான்
பூட்டு பூட்டு எண்டுவாய்.'
எனது காத்திருத்தல்கள்
அவனுக்குப் புரிய
இன்னும் சில காலமாகாலாம்.
அதன் பின்,
அவன்
கேள்வி கேட்க மாட்டான்.
-----------------------------------------------------
கண்கள் சொன்ன கதை
-மசூறா ஏ. மஜீட்-
நான்
இறக்கை பிடுங்கப்பட்ட
குயிற்பெடு
பறக்க முடியாமற்தான்
இந்தக் கல்யாணக் கூண்டின்
கைதியானேன்-
மனத்தோடு வளர்ந்த
நம் நேசத்தை
மதத்தோடு பறித்தார்கள்
முடிவு....
நீயோ ஜித்தாவில்
நான் இங்கு
திறந்த இத்தாவில்
என் கண்ணீருக்குக்
கட்டுப்பாடு விதிக்கின்ற
உன் கடிதங்களும்
தம் வருகையைக் கட்டுப்படுத்திக் கொண்டன
என் கண்ணீரும்
கட்டுப்பாட்டைத் தளர்த்திற்று
காத்திருந்த என்னை
உதாசீனம் செய்துவிட்டு
இப்போது
வாழ்த்துப்பாட
வந்திருக்கிறாய்
என்னிடமிருந்து
எப்படி நீ
தொலைந்து போனாய்?
தொலைந்து போன என்
இதயத்திற்கு
எப்படி நீ வாழ்த்துப்பாட முடியும்?
-------------------------------------------------------
எப்போது வருகிறாய்?
-மசூறா ஏ. மஜீட்-
எனது மௌனத்தை
மொழி பெயர்த்து விட்டு
நீ மௌனமாயிருப்பதேன்?
உடைத்துப் பார்த்துவிட்டு
உதாசீனம் செய்வதற்கு
இது ஒன்றும்
கல்லல்ல மனது
உன் நினைவுகளால்
என் கனவுகளெல்லம்
கவிதைகளாகவே கன்னி கட்டியிருக்கின்றன
உன் தரிசனத்தின் பின்தான்
தாம் புஷ்பிக்கப்போவதாக
அறிக்கை விட்டிருக்கின்றன
நீ எப்போது வருகிறாய்?
நீ வந்து போனபின்தான்
என் கவி அகலிகை
விமோசனம் பெற இருக்கின்றாள்
நீ பார்க்கிற
பூக்களையெல்லாம்
என் முகமாகவே
நினைத்துக்கொள்
அவற்றில் தெரிகிற
பனித்துளிகளை எல்லாம்
என் கண்ணீர்த் துளிகளென்றே
கருதிக்கொள்.
எப்போது வருகிறாய்
அல்லது
உன் சேதிகளைச் சொல்லி
ஒரு சோடி
வண்ணத்துப் பூச்சிகளையாவது
அனுப்பி வைக்கிறாயா?
--------------------------------------------------------
உயிர் வெளி
-சங்கரி-
நிசப்தம்;
பனி படரும்;
மலர்களின் நறுமணம்
மிதக்கும்
நள்ளிரவு
வானத்தைப் பார்த்தபடி
புல் தரையில் படுத்துள்ளேன்
தூரத்தே
மத்தளமும்
யாரோ ஒருவர் பாடுதலும்
இடையிடையே
துப்பாக்கி வெடியொலியும்
ஏந்தி வரும் காற்று
பாட்டின் தாளத்தில்
விண்மீன் அசையும்
மேகங்கள் நடனமிடும்
காற்று நெட்டுயிர்க்கும்
ககனமெல்லாம்
இசை நிறையும்
தென்றல் தடவும்
எனது தலைமயிரில்
காதின் மடலில்
காலின் பெருவிரலில்
மார்பகத்தின் மேட்டில்
இன்பம் கொப்பளிக்கும்
எனதுயிரும்
எனதுடலும்
இவ் விரவின் தேன் பருகும்
நான்
விண்ணை வலம் வந்து
விண்மீனை முத்தமிட்டு
சந்திரனைப் பாடி
மரத்தில் இளைப்பாறி
மலர்களினைத் தழுவி
எல்லையில்லா அண்டப் பெருவெளியில்
என்னை இழந்து
என் நாமம் கெட்டு
சதுராடிச்
சுழல்வேன்
துயர் மறுப்பேன்.
-----------------------------------------------------------
கண்கள்
-சங்கரி-
எனது கண்ணெதிரே
இருண்டு கவிந்த வானமும்
ஓரிரு நட்சத்திரங்களும்
உனது பெரிய கண்களும் மாத்திரம்,
உலகின் மீதியெல்லாம்
எனது ஆடைகளைப் போல்
அப்புறமாய்.
எனது புலன்களுந்தான்
உனது கண்களில் ஒடுங்கினவா?
பார்வையும்
ஸ்பரிசமும் மாத்திரம்
உயிர்ப்புடன்
உனது கண்கள்
என்னுடன் பேசுவது அதிகம்
உனது தொடுதல்
பேசுவதை விட
கண்களை விபரிக்க முயன்று
எப்போதும் தோற்றுப் போகிறேன்
நட்சத்திரங்கள் எனவோ
கயல் எனவோ
கடல் எனவோ
என்னால் கூற முடியாது,
உனது கண்கள்
என்னைப் பார்க்கின்றன;
தொடுகின்றன;
அணைக்கின்றன
முகர்கின்றன
சிலசமயம்
எனதும் உனதும்
கண்கள் இடம் மாறுகின்றன
கண்கள் இல்லாவிடின்
எமது சேர்க்கை எப்படியிருக்கும்?
எனது கண்கள் இல்லாவிடின்
உலகின் பாதியை அறிந்திரேன்
உனது கண்கள் இல்லாவிடின்
காதலையும் அறிந்திரேன்
இந்தக் கணத்தில்
எஞ்சியிருந்த
வானமும் ஓரிரு நட்சத்திரமும் மறைய
உனது கண்களும்
நானும்
எமது காதலும் மாத்திரம்
------------------------------------------------------------
இடைவெளி
-சங்கரி-
உனது கையினைப் பற்றி
இறுக்கிக் குலுக்கியும்
நெற்றியில் ஒரு சிறு
முத்தம் இட்டும்
எனது அன்பினை
உணர்த்தவே விரும்பினேன்.
நண்பனே
இராக்குயில் கூவும்
சோளகக் காற்றின் உறுமல் கேட்கும்
நடுநிசிப் போதிலும்
கூர் உணர்திறனும்
விழித்த கண்ணுமாய் கடமையாற்றுவாய்.
என்றும்
மனித வாழ்க்கை பற்றியும்
எமது அரசியற்சூழல் பற்றியும்
உயிர்ப்பாய் இயங்கும்
உன்னை நோக்கி
வியப்பும் உறுவேன்
அவ் வியப்பும்
நீண்ட கால நெருக்கமும்
என்னிற் காதலை விளைக்கும்.
அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்த விரும்பினேன்.
எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது;
எனது நெஞ்சில் பெருகும்
நேசத்தின் ஒரு பரிமாணம்.
எனினும் நண்பனே
ஒரு பெண்ணிடம்
சொல்வது போலவும் உணர்த்துவது போலவும்
உன்னை அணுக அஞ்சினேன்.
பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்.
பெண்ணை
என்றும் பேதையாகவும்
ஆணை
வீரபுருஷ நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும்
எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
உனக்கும் தெரியும்.
அதை நான் விரும்பினேன்
எனது ந்ண்பனே
இந்த இடைவெளி
எமக்குள் இருப்பின்
எனது கதலை
உணரவே மாட்டாய்.
என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால் அந்த உச்சிக்கு
வரமுடியாதே!
----------------------------------------------------------
இரவுத் துயர்
-சங்கரி-
அமைதி எங்கும் கவிந்து
நட்சத்திரங்களின்
மினுங்கல் ஒளி
தனியே தவழும் இன்றைய இரவில்
நான் துயருற்றேன் அன்ப,
சற்று முன் தான் அச் செய்தி அறிந்தேன்.
திடீரென அதிர்ந்தேன்
சிறிது சிறிதாய்ச்
சோகம் நிறைந்து
கனக்கும்
காலின் உள்ளே
முறிந்த முள்ளாய்
துயரம்,
இடைக்கிடை இதயம் வலிக்கும்,
எந்தத் தொடர்பும் இல்லாது
எந்தச் சிறு சொல்லும் சொல்லாது
போகின்றேன் என்று எதுவும் புகலாது
போனாய்
ஏன்?
எதுவுமே நிச்சயமில்லா
நாட்கள் எம்முடையவை
கணத்தின் பாதித்துளியுனுள் கூட
கை நழுவிப் போய்விடும்
வாழ்வு
இந்த நிமிடம்
எனது தலைக்கு மேலும்
குண்டொன்று விழலாம்
நட்சத்திரங்களின் மினுங்கல் ஒளி
மறைந்து போக, அமைதி குலைய
வெப்பம் உமிழலாம்
மீண்டும் நீயும் நானும்
சந்திக்காமலே போகலாம்
இந்த நிச்சயமின்மையைத்
தாண்டியும்
ஒரு நம்பிக்கை தளிர்க்கும்
இன்று போல்
அமைதியே கவிந்த
நட்சத்திரங்களின் மினுங்கல் ஒளி
தனியே அலையும்
முன்னிராப் போதில்
ஒரு நாள்
மீண்டும்
நீ வரலாம்
ஆயினும் எதற்கு
போய் வருவேன் என்ற
சொற்கள் அற்ற
இப்போக்கு?
உனக்காக
அசையும்!
சலிப்புறும்
மனது.
------------------------------------------------------------------
காலங்கள் தோறும் நாம்....
-விஜயலட்சுமி-
தோழனே...
திங்கள் போன்று
திகழ்பவனே
காலங்கள் எத்தனையோ
அத்தனையும்
நம் காதலை
காவியமாக்கட்டும்
என்...
கண்ணின் மணியாய்
உடலில் உயிராய்
என்
வாழ்வின் பொருளாய்
வ்சந்தம் சேர்ப்பவனே
வா...
விண்ணிலே ஊஞ்சலிட்டு
மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் அமைப்போம்.
விடியலை விளக்காய்
காதலை நூலாய்
இதயத்தில் ஏந்தி
கவிதைகள் படிப்போம்
காதலனே வா...
காலங்கள் தோறும்
கலங்கரை விளக்காய்
காதலுக்கு வழிகாட்டும்
நம் காதல்
----------------------------------------------------------
மீண்டும் வளரும்
-விஜயலட்சுமி-
கவிதை...
அது நீயே...
அத்தனையும் கண்ணீர்
கதையாய்
என் ஏட்டில்
விதைத்தவனே
எழுந்து வா...
இருண்ட நம் வாழ்வில்
உதயம் உண்டாக்கலாம்
உதிரிப் ப்ப்விற்கு
வாசம் உண்டு
உலர்ந்த உன் உடலில்
என் உயிர் உண்டு
நிலவே...
மறைந்து என் வாழ்வை
மயானமாக்காதே...
சமாதிகளில் சந்ததி உண்டாக்கலாம்
முடிந்த உன் விதிக்கு
முற்றுப் புள்ளி வைக்கலாம்
எழுதிய தீர்ப்பை
திருத்தி எழுதலாம்
எழுந்து வா...
உதிரிப் பூக்களை
ஒட்ட வைக்கலாம்
எழுந்து வா...
------------------------------------------------------------
ஆண்டாள் பாடல்கள்
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசிந்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
* * *
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலமேறி அன்ன வசஞ் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே!
* * *
ஆரே உலகத்து ஆற்றுவார்? ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பைப் போக்கீரே!
* * *
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டாக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே!
* * *
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவந்தானென
செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே
* * *
வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே!
* * *
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டியரிசி அவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உனை வணங்குகிறேன்
தேச்ம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தாக்கிற்றியே
* * *
-----------------------------------------------------------------------
ஔவையார் பாடல்கள்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பினெம் அளவைத்து அன்றே வருத்தி
வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
(குறுதொகை 102)
பொருள்
காதலரைப் பற்றி எண்ணும்போது எனது நெஞ்சம் வேகுகின்றது. அவரை எண்ணாமல் இருபதோ எமது சக்திக்கு உட்பட்டது அல்ல. எனது காமமோ வானத்தை முட்டுமளவு வளர்ந்துள்ளது. நாம் கூடிய காதலர் (இவ்வாறு என்னைத் தவிக்க விடுவதால்) நல்லவர் அல்லர்.
* * *
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆ ஓல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயுவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
(குறுதொகை 28)
பொருள்
பிரிவினால் ஏற்பட்ட எனது வேதனையை அறியாது அமைதியாகத் தூங்கும் இந்த ஊரை நன் என்ன செய்வேன்? இதனை எரிமூட்டுவேனா, தாக்குவேனா? ஆ! ஓ! எனக் கூவுவேனா?
* * *
செல்வார் அல்லர் என்றுயான் இகழ்ந்தனனே
ஒவ்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நலராக் கதுவி யாங்கேன்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
(குறுதொகை 43)
பொருள்
எனது காதலர் என்னை விட்டுப் பிரிய மாடார் என நான் அலட்சியமாயிருந்தேன். தாம் பிரிந்து போக வேண்டியுள்ளது என்று சொன்னால் நான் சம்மதிக்க மாடேன் என அவர் கூறாமல் இருந்தார். இவ்வாறு இருவரிடையேயும் இருந்த தயக்கத்தினால் இப்போது (அவர் பிரிந்தபின்) நல்லபம்பு கடித்தது போன்ற வேதனையை எனது மனது அனுபவிக்கின்றது.
* * *
-----------------------------------------------------------------
வெள்ளி வீதியார் பாடல்கள்
நிலந் தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலரோ!
(குறுந்தொகை 130)
பொருள்
எமது காதலர் நிலத்தைத் தோண்டி அதற்குள் புகுந்திருக்க மாட்டார். வானத்தில் பறந்தும் போயிருக்க மாட்டார். நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், அங்குள்ள குடிகள் தோறும் தேடினால் அகப்படாமல் போவாரோ.
* * *
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகம்
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமற்று இல்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே
(குறுந்தொகை 158)
பொருள்
எனக்கு அறிவுரை கூறும் உறவினரே! அவ்வாறு அறிவுரை கூறுவதை விட்டு எனது உடலை உருக்கும் நோயைத் தணிக்க ஏதும் செய்ய முடியுமாயின் நல்லது. வெயில் சுடுகின்ற பாறையில் வைக்கப்பட்டிருக்கின்ற நெய்யை கையில்லாத ஊமை ஒருவன் அது உருகி ஓடாதவாறு பாதுகாக்க முனைவது எவ்வாறு அவனது சக்திக்கு அப்பாற்பட்டதோ அதுபோல இந்தக் காதல் நோய் வளாவதையும் தடுக்கும் சக்தி எனக்கில்லை.
* * *
-----------------------------------------------------------
நன்னாகையார் பாடல்
சேறும் சேறும் என்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகஎன் றேனே அன்னோ
ஆசா கேந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே
(குறுந்தொகை 325)
பொருள்
நான் போகப் போகிறேன் எனக் காதலர் கூறிய போது அவர் கூறுவது பொய் எனக் கருதி செல்வதாயின் செல்லுங்கள் என்று கூறினேன். அவர் சென்று விட்டார். இப்போது அவர் எவ்விடத்தில் இருக்கிறாரோ! எனது கண்ணீர் நிறைந்து எனது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல ஆனது.
* * *
----------------------------------------------------------------------
இக் கவிதைத் தொகுதியில் இடம் பெறும் சமகாலக் கவிதைகளில் ஏற்கனவே வேறு நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டவற்றின் விபரம்
நஜிபா *உன் நினைவு... மழைநீர்... கண்நீர்...
-சரிநிகர்- இதழ் 109: 1996
பெண்ணியா *புத்துயிர்த்தல்
-சரிநிகர்- இதழ் 136: 1997
*உதிரும் இலைக்கனவு
-சரிநிகர்- இதழ் 153: 1998
ரேவதி *நீ...நான்...மழை...
-சரிநிகர்- இதழ் 127: 1997
யாழ் ஆதிரை *அது தானே நான்
-சரிநிகர்- இதழ் 138:1998
துர்க்கா *ஈரமனதைத்...
-சரிநிகர்- இதழ் 74:1995
சுல்பிகா *இதயராகம்
*இது ஓர் மென் உணர்வு
"விலங்கிடப்பட்ட மானுடம்" 1993
ஔவை *உணர்வுகள்
சொல்லாத சேதிகள் 1986
ஊர்வசி *காத்திருப்பு எதற்கு?
-புதுசு- இதழ்: 8:1983
மைத்ரேயி *காத்திருத்தல்
மரணத்துள் வாழ்வோம் 1986
மசூறா.ஏ.மஜீட் *கண்கள் சொன்ன கதை
-தினகரன்- 03. 10. 1984
*எப்போது வருகிறாய்?
-தினகரன்- 17. 03. 1991
சங்கரி *இடைவெளி
சொல்லாத சேதிகள்:1986
--------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக