சிறு கதைகள் நான்கு
சிறுகதைகள்
Backசிறு கதைகள் நான்கு
அறிஞர் கா. ந. அண்ணாதுரை
-
Source:
சிறு கதைகள் (நான்கு)
சி. என். அண்ணாதுரை
திராவிடப் பண்ணை
தெப்பக்குளம்
இரண்டாம் பதிப்பு 1951
உரிமையுடையது
விலை ரூ. 1-0-0
விக்டரி பிரஸ், பாலக்க கீரை, திருச்சிராப்பள்ளி.
--------------
உள்ளடக்கம்
-
1. காமக்குரங்கு
2. சொல்லாதது
3. தீர்ப்பளியுங்கள்
4. சுடுமூஞ்சி
சிறு கதைகள் - சி. என். அண்ணாதுரை
1. காமக் குரங்கு
முதல் தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கிறது. சவுக்கு எடுக்கவே தேவையில்லை. ”டிராட்" கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால், கண்களிலே ஒரு மிரட்சி, கால்கள் துடிக்கின்றன, காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானது தான். ஆனால் வண்டி மட்டும், ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால், குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை. வண்டிக்கு வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!
மிராசுதார் மீனாட்சிசுந்தரர், அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் "ஆமாம்" என்றார், வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார், பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள், பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர், மிராசுதார். அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு எராளம். வருவாய் அமோகம். வாட்டம் எது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததை விட மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷ மூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள்வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமான வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள், இரவிலே, பனிபடாதிருக்க, பட்டுப் போர்வை . குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபடப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.
மீனாட்சி சுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்ததுபோன்றே சந்தோஷப்-பட்டாள். குதிரை, மாளிகையிலே குடி புக வந்ததும், வேலையாட்கள் புடைசூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக்கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக்கொள்வாள், முத்தமிடுவாள். அதன் கண், தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்க மணி கட்ட வேண்டு-மென்று கூறுவாள். வண்டிதான், புராதனம், இதற்கு ஏற்றதல்ல, என்றுரைப் பாள். ஊர் முழுதுமே, இதேபோலத்தான் பேசிற்று, வண்டி பழையது குதிரை புதியது, குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. "என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர், வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர், சொல்லியும், அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே, இது முறையா?" என்று எப்படிக் கூறும்!
குதிரைக்குத்தான் கூறிடும் திறமை இல்லை, குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டி பூட்டுவதைப்போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துகள் நேரிடும் போது, இருக்கவே இருக்கிறது, "விதி" என்ற வெட்டிப்பேச்சு!
மாகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூர பந்து. பழைய பாத்யதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச்செய்யவே, மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடலும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர்நாள் மதுரவல்லியையும் கண்டார்; கண்டதும், நினைப்பு உறுதியாகிவிட்டது. மதுரவல்லி, யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழவேண்டுமென்ற நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மலரின் மணம், வண்டுகளை இழுக்கவில்லையா? கானாற்றின் ஒலி காட்டு மிருகங்களுக்குக் கீதமாகவில்லையா? வானத்திலே ஒளிவீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்க வில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள். வெறும் செல்வவான் வீட்டுப் பெண்ணல்ல. கொஞ்சம் படித்தவள். அதிகம் தெரியாதென்றாலும், ஆடை அணிகளிலே புது 'பாஷன்,' மினுக்குப் பொட்டுகளிலே புது ரகம், ஜடை சீவலிலே புதிய முறை கற்றுக்கொள்ளும் அளவு தெரிந்துவிட்டது. அந்தஸ்து, அழகு, அலங்காரம் என்னும் மும்மணிக் கோவையாளுக்குக் கொவ்வை இதழ், குளிர்மதிப்பார்வை, குறுநகை, கோகில த்வனி இவ்வளவும் கூட்டுச் சரக்காயின. மாகாளிப்பட்டியார் மனதிலே அலைமோதியதிலே ஆச்சரியபென்ன! மிட்டாதாரரின் விருப்பத்தை, மிராசுதாரருக்கு முதன் முதல் கூறியபோது அவர் புதுக் குதிரையின் விஷயமாகக் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால், "பார்ப்போம்! அதற்கென்ன! செய்வோம்" என்று சம்பிரதாயமாகக் கூறினார். மாகாளிப்பட்டியார் மகா சந்தோஷமுற்றார். இனி நமக்கென்ன குறை ! கடனும் தீரும், கனியும் கிட்டும் என்றெண்ணிக் களித்தார். ஆனால் அவர் பழைய வண்டி ! மதுரத்துக்கு ஏற்றவரல்ல !!
மாகாளிப்பட்டியார் ஜரூராகத் திருமணக் கோலத்திலே கவனம் செலுத்திவரலானார். நரை மயிர் கருக்குந் தைலங்களென்ன, நவஜீவன் லேகிய வகைகளென்ன, சில்க் மேலாடைகளும், சீமைக் கமல மோதிரங்களும், சிறிய சைஸ் கைக்கடியாரமும், சிங்கமுகத் தங்கப் பூண் போட்ட கைத்தடி ஆகியவைகளென்ன, மாகாளிப்பட்டி யாரின் மாப்பிள்ளைக் கோலம் மலர்ந்துவிட்டது. மேலும் அவருக்கு அது புதிதுமல்ல; பழக்கமுண்டு ! இரண்டாவதாகவே, இந்த இன்பவல்லியைத் தேடினார். முதலாமவள் தனது மூலக் கருத்தைக் கூறிட மார்க்கமேயின்றி, மூண்ட கோபத்தையும் சோகத்தையும் மூடி மூடி வைத்து, மங்கி மாண்டாள் பாபம்! அதனாலென்ன? அவள் "வினை"
அது!
மாகாளிப்பட்டி மகாலிங்க ஐயர் மகா சமர்த்தர். வேத சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று வேதியக் கூட்டம் கூறும். மற்றதுகளுக்கு என்ன தெரியும் அந்தத் தேவ பாஷை! எனவே "அப்படிங்களா ! அவர் முகத்திலேயே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்" என்று கூறினர். அவர் தான் கிளம்பினார், முகூர்த்தம் நிச்சயிக்க. வந்தவருக்கு மிராசுதாரர் உபசாராதிகள் செய்து, குசலம் விசாரித்து, குருக்கள் வீட்டிலே போஜன ஏற்பாடு செய்து வைத்தார் . 'பிராமணாளிடம் விசேஷ மரியாதை இரு குடும்பத்திலும். இலட்சுமி புத்ராள். ஞானஸ்தாள் ' என்று, வயிறார உண்ட புரோகிதர், வாயாரப் புகழ்ந்தார். வந்த காரியத்தைக் கூறினார், வம்பு விளைந்ததை மிராசுதாரர் அப்போதுதான் உணர்ந்தார். "ஏதோ சொன்னேன். ஆனால் மாகாளிப் பட்டியார் பிடிவாதமாக இருப்பாரென்று கருதவே இல்லையே. மதுரத்துக்கும் அவருக்கும் வயதிலே, அதிக வித்தியாசமிருக்குமே" என்று கூறினார். புன்னகை புரிந்தார் புரோகிதர். "வயது வித்தியாசம் பார்த்தால், வம்சாவளிக்கு ஏற்ற விதமாகக் காரியம் நடக்க வேண் டாமோ? வயதைப்பற்றித் தள்ளுங்கோ . ஸ்ரீராமரை விட சீதா பிராட்டியார் வயதிலே மூத்தவளென்றுதான் இதிகாசம் கூறுகிறது. மாகாளிப்பட்டி சம்பந்தம் இலேசானதல்ல. நீண்டகாலமாகன்னோ நடந்துவருகிறது" என்று சமாதானங் கூறினார்.
வேலையாளொருவன் ஓடோடி வந்தான் அப்போது. "எஜமான்! பெரிய ஆபத்தாயிடுத்துங்களே! வண்டி மரத்திலே மோதி, தூள் தூளாயிட்டுதுங்கோ . குதிரைக்கும் பலமான அடி பட்டு துங்க. எதுவோ ஒரு மாடு மிரண்டு ஓடிவந்து துங்க. குதிரை காலைக் கிளப்பியடித்தது. அடக்க முடியலே. வண்டிதான் பழசாச்சிங்களே, மரத்திலே மோதி.........." என்று விபத்து விவரத்தைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே, மிராசுதாரர், வேக வேகமாகச் சென்று விபத்து நடந்த இடத்திலே, வண்டியையும் குதிரையையும் கண்டு கஷ்டப்பட்டார். குதிரை அவரைப் பார்த்த பார்வை, "என்மீது தவறு இல்லை! எனக்கேற்ற பாரமான பலமான வண்டியைப் பூட்ட வில்லையே. அது உங்கள் தவறு" என்று வாதாடுவது போலிருந்தது. குதிரையின் காலில் பலமான அடி. பிறகு அது சரியான சவாரிக்கு இலாயக்குள்ளதாக இருக்கவே முடியாது என்று மிருக வைத்தியர் கூறிவிட்டார்.
அருமையான குதிரை போச்சு என்று ஆயாசப்பட்டார் மிராசுதாரர். ஆயாசமேலீட்டால் அதிகம் பேசவும் முடியாதிருந்த நேரத்திலே மாகாளிப்பட்டி பார்ப்பனர், மிட்டாதாரின் சம்பத்து விசேஷத்தைப்பற்றிச் சரமாரியாக அளந்து மிராசுதாரரைச் சரிப்படுத்தி விட்டார். கலியாணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. அந்த வட்டாரமே கண்டு அதிசயிக்கும்படியான ஆடம்பரத்துடன் கலியாணம் நடந்தது. கலியாணத்துக்கு வந்தவர்கள் விருந்து, வேடிக்கை, கேளிக்கைகளை அனுபவித்துவிட்டு, காயமுற்ற குதிரையைக் கண்டு பரிதாபப்பட்டு, பின்னர் வீடு சென்றனர். ஐம்பது வயதுக் கிழவருக்கு அந்த இருபதாண்டு இளமங்கையைப் பெண்டாக்கினதைப்பற்றி, பேச முடியுமா! பெரிய இடமாயிற்றே, நமக்கேன் பொல்லாப்பு ! என்று வாயை மூடிக் கொண்டனர். அவர்கள் தான் பேச வில்லை, மதுரவல்லியாவது பேசினாளா? இல்லை !
அவளுக்கு மனம் மலரவில்லை! கண் மட்டும் இருந்தது, கருத்துக் குறட்டையிலிருந்தது. மிராசுதாரர் மகள் ஒரு மிட்டா தாரருக்கு வாழ்க்கைப்படுவது, ஜெமீன் வீட்டுப் பெண் மற்றோர் ஜெமீன் வீட்டில் மருமகளாவது, சகஜமான, சம்பவம். ஆகவே மாகாளிப்-பட்டிக்கு மதுரவல்லி, மனதிலே எந்தவிதமான தொல்லையும் இல்லாமல் தான் பிரவேசித்தாள். பிரவேச விழாவுக்கு மாகாளிப்பட்டியார் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்தஸ்துக்கு ஏற்றபடி ஆடம்பரம் இருக்க வேண்டாமா! ஊர்வலம் பிரபல நாதஸ்வரத்துடன் ! பெரிய அலங்காரக் கொட்டகையிலே, அன்றிரவு சதிர்க்கச்சேரி. சபையினர், சதிர்க் கச்சேரியைக் கண்டு ரசித்தனர், கலை உணர்வால் அல்ல! ஆடின அணங்குகள், கண்டவரின் ஆசையைத் தமது விழிகளால் கிளறிக் கொண்டிருந்ததால்! மாகாளிப்பட்டி யார், அன்று அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. அவருடைய அந்தரங்கக் காரியதரிசி கனியூர் ஜெமீனில் மானேஜராக இருந்து, "டிஸ்மிஸ்" செய்யப்பட்ட, வேதாந்தம் என்னும் பார்ப்பனர். அவர், மாகாளிப் பட்டியார் காதிலே குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருந்தார். வேதாந்த ஐயரின் பேச்சைக் கேட்டு ரசிப்பதும், கனைப்பதும், மீசையை முறுக்குவதும், ஆடலழகிகளை முறைத்துப் பார்ப்பதுமாக இருந்தார் மிட்டாதாரர்! சபையிலே இருந்த மற்றவர்கள், மாகாளிப்பட்டியார் தங்களைப் பார்க்காத சமயமாகப் பார்த்து, ஆடலழகிகளைக் கண்டு களித்தனர்.
அன்றிரவு 12 மணிக்கு மேலாகிவிட்டது விழா முடிய. மாகாளிப்பட்டியாரின் தர்ம பத்தினியான மதுரவல்லிச்குச் சேடிகள், படுக்கை தயாரித்துக் கொடுத்துவிட்டுத், துணைக்கு இருக்க உத்தரவு கேட்டனர். மதுரவல்லி, துணை வேண்டாம், வேண்டு-மானால் கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு, அலுத்துப் படுத்துவிட்டாள் அழகான மஞ்சத்திலே. விழாவின் விமரிசையிலும், மிட்டாதாரரிடம் பலரும் காட்டிய மரியாதையான போக்கிலும் கவனம் செலுத்திய மதுரவல்லிக்கு, ஒரு சீமாட்டியின் வாழ்க்கைகுத் தகுந்த இடமே கிடைத்தது என்ற திருப்தி ஏற்பட்டது. தூங்கும் போது மதுரவல்லியின் முகத்திலே திருப்தியின் தாண்டவம் தென்பட்டது.
நடுநிசி! தடால் என்ற சத்தம் கேட்டு அலறி எழுந்தாள் மதுரவல்லி! விளக்கைப் பெரிதாக்கினாள். வெட வெடவென்று உடல் நடுங்க, வியர்வையும் கண்ணீரும் பொழிய, பெண் ஒருவள் நிற்கக் கண்டாள். சீமாட்டியின் சத்தத்தைக் கேட்டு வேலையாட்கள் ஓடிவந்தனர் உதவிக்கு. அந்தப் பெண், மதுரவல்லி காலில் விழுந்து கும்பிட்டு, "என்னைக் காப்பாற்றுங்கள்! அவர்கள் கண்ணிலே நான் பட்டால் என்னைக் கொன்று போடுவார்கள். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்" என்று அழுகுரளிற் கேட்டாள். வேலையாட்கள் விரைந்து வருவது தெரிந்தது. மதுரவல்லிக்கு அந்தப் பெண்ணிடம் பரிதாபம் பிறந்தது. உடனே, அவளைத் தன் கட்டிலுக்கு அடியிலே ஒளிந்து கொள்ளச் செய்துவிட்டு, அறையின் வாயிற்படியருகே நின்றுகொண்டு, ஓடிவந்த வேலையாட்களை நோக்கி, "என்ன சத்தம்!" என்று கேட்டாள். "இங்கேதான் ஏதோ சத்தம் ; யாரோ ஓடி வந்தது போல ஒரு சத்தம் கேட்டது. அதனால் தான் நாங்கள் வந்தோம்" என்று வேலையாட்கள் கூறினர்.
"புத்தியைக் காணோமே உங்களுக்கெல்லாம். சத்தம் எந்தப்பக்கமிருந்து வருகிறது என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையா? ரொம்ப இலட்சணம்! போய்த் தோட்டத்துப் பக்கம் பாருங்கள்!" என்று மதுரவல்லி கோபமாகக் கூறி வேலையாட்களை விரட்டினாள். அவர்கள் போய்விட்டபிறகு, கதவை மூடித் தாளிட்டு விட்டு, "எழுந்து வா இப்படி" என்று நிதானமான குரலிலே கூறினாள். கட்டிலடியிலே ஒளிந்து கொண்டிருந்த காரிகை வெளியே வந்தாள், மறுபடி ஒரு தடவை வணங்கினாள்.
"அடி, நீயா? நீதானே சதிர் ஆடினவள்"
“ஆமாம், அம்மணி. நான்தான் ஆடியவள்."
"மற்றொருவள்?"
"அவள் என் அக்கா, அதாவது கூட ஆடுபவள்."
"சரி! நடு ராத்திரியிலே நீ ஓடிவரவேண்டிய காரணம்?"
"ஐயோ ! இதைத் தெரிந்து கொள்ள வில்லையா தாங்கள்?"
"எதாவது களவாட முயற்சித்து, கண்டுபிடிக்கப் பட்டு, ஓடி வருபவளாக நீ ஏன் இருக்கப்படாது?"
" அம்மா! நான் கள்ளியுமல்ல, களவாடவும் இல்லை."
"கதை பேசாதே ! உன்னை நான் அந்த வேலையாட்களிடமிருந்து தப்பச் செய்ததாலேயே, உன்னை நான் ஒரு தர்ம தேவதை என்று நம்பிவிடுவேன் என்று நினைக்காதே. நடுநிசியிலே, நீ அலங்கோலமாக இங்கே ஓடிவரவேண்டிய காரணம் என்ன?"
"ஒரு பெண், இந்த நேரத்தில், இப்படி நடுநடுங்கிக் கொண்டு, அபயமளிக்கும்படி கேட்கிறாள் என்றால், அதன் பொருளை அறிந்துகொள்ள முடியாதா?"
"கள்ளி! விடுகதை பேசி வீண் பொழுது ஒட்டாதே. ஆடிப் பிழைக்கவந்த சிறுக்கிக்கு அர்த்த ராத்திரியிலே நடமாட்டம் ஏன்? உண்மையைச் சொல்."
"ஆடத்தான் நான் இங்கு வந்தேன், ஆடினேன் ஆனால் உன் கணவர் என்னை ..............”
"உன்னை .................. என்னடி உளறுகிறாய்? சொல் சீக்கிரம்."
"இன்றிவை நான் அவருடன் கழிக்கவேண்டு மென்று கூறிவற்புறுத்தினார் .........”
"அவர் வற்புறுத்தவே நீ சாவித்திரி தேவி, இந்தத் தீயகாரியத்துக்கு உட்படமுடியாது என்று கூறிப், பயந்து ஓடோடி வந்துவிட்டாயா? எண்டி, எது, நீ பலே கைக் காரிபோலிருக்கே. யாரிடம் இந்தக் கதை பேசுகிறாய்? ஒரு மிட்டாதாரர் அழைத்தால், உன்னைப் போன்றதுக்கள், தலைகீழாக நடந்து கொண்டுவரும். என்னமோ அவர் அழைத்தார், வற்புறுத்தினார், நான் மறுத்தேன் என்று பத்தினிப் பல்லவி பாடுகிறாயே; உண்மையைச் சொல்கிறாயா, வேலை யாட்களைக் கூவி அழைத்து, உன்னைப் பிடித்துக்கொண்டு போய்த் தக்க தண்டனை தரச்சொல்லட்டுமா? இரண்டே நிமிஷம்! இதற்குள் தீர்மானித்துவிடு."
"அந்தக் காமக் குரங்குக்கு ஏற்றவளாகத்தான் வந்து சேர்ந்திருக்கிறாய். என் பேச்சை நம்பாவிட்டால் எனக்கொன்றும் நஷ்டம் இல்லை. பொழுதுபோக்காகப் பேசிக் கொண்டிருப்போம் வா, என்று வற்புறுத்தி அழைத்தான் உன் கணவன். காம வெறி பிடித்த கிழம், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என்னை இம்சிக்கத் தீர்மானித்தான். தடுத்துப் பார்த்தேன். தலைவலி என்றேன். தகாது என்றேன். கிழவன் விட மறுத்தான். வேறு வழி இல்லை. ஓடி வந்தேன் அவனை ஏய்த்துவிட்டு. இது உண்மை !"
"உண்மையா? உன்னைத்தான் கேட்கிறேன். நீ ஏன் அவருடைய இஷ்டத்திற்கு மறுத்தாய்? யார் நம்புவார்கள் இந்தப் பேச்சை? அவர் ஒரு மிட்டாதார், நீ ஒரு விலை மகள், அப்படியிருக்க அவருடைய இஷ்டத்திற்கு நீ மறுக்க வேண்டிய காரணம் என்ன?"
"அந்தக் கிழட்டுக் காமுகனிடம் யாருக்கம்மா இஷ்டம் பிறக்கும்? உன்னைப்போல வேண்டுமானால் அந்தக் கிழத்தைக் கலியாணம் செய்து கொள்ளச் சில பெண்கள் சம்மதிப்பார்கள். அது வேறு விஷயம். பிரேமைக்குப் பாத்திரமாக முடியுமா அந்தக் கிழவன்?"
"என் எதிரிலே என் கணவரைக் கிழவர் என்று கூறுகிறாய் துணிவாக! உன்னை என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?"
”தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காமுகனிடமிருந்து எப்படி என்னால் தப்பித்துக் கொள்ள முடிந்ததோ அதேபோலவே, நீ எனக்கு உண்டாக்க விரும்பினாலும் என்னால் தப்பித்துக்கொள்ள முடியும்."
இந்தப் பேச்சுக்குப் பிறகு, அந்தப் பெண் தைரியம் கொண்டவள் போலக் கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு, "இதோ இப்படி வா, நாம் ஏன் சண்டைபோடவேண்டும். நீயும் ஓர் அபாக்யவதிதான், உன் கணவனைக் கிழவன், காமுகன் என்று திட்டி விட்டேனே என்று கோபியாதே. ஆத்திரம் எனக்கு, என்றாலும் அறிவில்லாத பேச்சல்ல நான் சொன்னது. மாகாளிப்பட்டி மிட்டாதாரர் வயது என்ன தெரியுமா உனக்கு" என்று கொஞ்சம் அன்பு கலந்த குரலிலே கேட்கலானாள். சற்று முன்பு நடுநடுங்கியவள், இவ்வளவு தைரியம் பெற்றதைக் கண்டு மதுரவல்லி ஆச்சரியமடைந்தாள். ஒரு சமயம், தைரியம் இருப்பது போல் பாசாங்கு செய்கிறாள் போலும் என்று நினைத்துக் கோபக் குரலிலே,
"என்னிடம் உன்னுடைய மாயமெல்லாம் நடவாது. மரியாதையாக நடந்து கொள் . அவர் கிழவர், அதுபற்றி உனக்கென்ன கவலை " என்று கேட்டாள்.
"உனக்குக் கவலை இல்லாமலிருக்கலாம். எனக் கென்னமோ உன்னைப் பார்த்த பிறகு, எப்படி இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட பெண், அதிலும் ஒரு மிராசுதாரர் மகள், இப்படி ஒரு பொருத்தமற்ற கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டாள். இவனைக் கட்டிக் கொண்டு, இவள் வாழ்க்கையிலே எப்படிச் சுகமடைய முடியும்? என்ற கவலை அதிகமாகிவிட்டது. அந்தக் கவலையிலே என் கவலையைக்கூட மறந்துவிட்டேன்" என்று பேசியபடி, மதுரவல்லியின் கையைப் பரிவுடன் பிடித்து இழுத்து கட்டிலிலே, தன் பக்கத்திலே உட்கார வைத்துக்கொண்டு, எதிரே இருந்த பெரிய கண்ணாடியிலே தெரிந்த உருவங்களைக் காட்டி,
"இப்போது நாம் இருவரும் ஏறக்குறைய சகோதரிகள் போலிருக்கிறோமல்லவா?" என்று கேட்டுக் கொண்டே மதுரவல்லியை அணைத்துக்கொண்டாள். மதுரவல்லியின் ஆச்சரியம் இன்னம் அதிகமாகிவிட்டது.
"சாகசக்காரியடி நீ! என் கோபத்தைக்கூட மாற்றி விடுவாய் போலிருக்கிறதே!" என்று கேட்டுக்கொண்டே, ஆடலழகியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.
"இதோ இப்போது, உன் விளையாட்டு எனக்கு எவ்வளவோ இன்பமாக இருக்கிறது. அப்பப்பா ! நினைத்துக்கொண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது, உன் கணவனின் சேஷ்டையை. வயதாகிவிட்டாலே ஆண்களுக்கு இப்படித்தான் பெண் பித்தம் தலைக்கேறிவிடும். குரங்குக் கூத்துக்கள் நடக்கும்" என்று சொன்னாள்.
"அடி! உன் பெயரைக் கூடக் கேட்க மறந்து விட்டேன், ஏதோ குழந்தைப் பருவ முதல் பழகியவர்கள் போல இப்படி விளையாடுகிறோமே " என்று மதுரவல்லி கேட்டுவிட்டுச் சிரித்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் மஹா மாயக்காரி! எப்படியோ மயக்கிவிட்டாள்! கன்னத்தைக் கிள்ளுகிறாள், கூந்தலைக் கோதுகிறாள், புருவத்தைத் தடவுகிறாள், அணைத்துக்கொள்கிறாள், முத்தம் கூடத் தருகிறாள் ! அடா ! அடா ! இவள் சின்னக் குழந்தையிலிருந்தே மகா குறும்பு போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள் மதுரவல்லி. எவ்வளவு கோபம் முதலிலே இருந்ததோ அதைவிட அதிக அளவு சிநேகம் உண்டாகிவிட்டது, அவ்வளவு விரைவிலே. பக்கத்திலே அந்தப் பாவை உட்கார்ந்திருப்பதும், விளையாடுவதும், பேசுவதும், மதுரவல்லிக்கு ஏதோ ஓர் காந்தசக்தி போலிருந்தது.
”என் பெயர் என்ன என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. என் பெயர் ஆயிரம் உண்டு, எதைச் சொல்ல உனக்கு" என்று கேட்டாள் அந்த ஆடலழகி.
"போடி குறும்புக்காரி! பெயரைச் சொல்லடி என்றால், விகடம் பேசுகிறாள். உன் பெயர் என்னடி" என்று கொஞ்சும் குரலிலே கேட்டாள் மிட்டாதாரரின் மனைவி.
"நான் உண்மையைச் சொன்னாலே உனக்கு ஏனோ நம்பிக்கை பிறக்கவில்லை. அடி, பைத்தியமே ! நிஜமாகவே சொல்கிறேன், எனக்கு ஒரு பெயர், இரண்டு பெயர் அல்ல. பல பெயரிட்டு என்னை அழைப்பார்கள். ஒவ் வொரு சமயம் ஒவ்வொரு பெயர் எனக்கு" என்றாள் ஆடலழகி.
"சரி சரி ! உனக்குப் பூஜை கொடுத்தால் தான் வழிக்கு வருவாய். வேலையாட்களைக் கூப்பிட்டு, இதோ இந்தக் கள்ளி என் அறைக்குள் நுழைந்து, திருடப் பார்த்தாள் என்று சொல்லிவிடுகிறேன். பார் அப்போது உனக்கு நடக்கப் போகிற வேடிக்கையை" என்று மிரட் டினாள் மதுரவல்லி, விளையாட்டாக .
"நீயும் கூப்பிட்டு என்னைப்பற்றிச் சொல்லு, நானும் சொல்கிறேன்" என்று சவால் விடுத்தாள் சாகசக்காரி.
"பழைய கதைதானே! படுக்கை அறைக்கு மிட்டா தாரர் இழுத்தார். பத்தினி நான் பயந்து ஓடி வந்தேன் என்றுதானே சொல்லப்போகாய்? தாராளமாகச் சொல்லு. மிட்டாதார் பயப்படமாட்டார். மற்றவர்கள் அதுகேட்டு அவருடைய பதிப்பைக் குறைத்துவிட பாட்டார்கள்" என்று மதுரம் கூறினாள்.
"அதையா சொல்வேன்? உன்னைப்பற்றியல்லவா ஒரு சேதி சொல்வேன்."
"என்னைப்பற்றி என்ன இருக்கிறது நீ சொல்ல?"
"எவ்வளவோ இருக்கிறது ! இல்லாவிட்டால் தான் என்ன? ஏதாவது ஒரு பழி சுமத்துகிறேன்."
"என்மீது பழி சுமத்தத்தான் முடியுமா? அப்படி என்னடி பழி சுமத்துவாய்? சொல்லடி கேட்போம் "
"செச்சே ! வேண்டாம். விளையாட்டே வினையாகி விடும் என்று சொல்லுவார்கள், வேண்டாம்."
"சொல்லடி கள்ளி 1 தலை ஒன்றும் போய்விடாது சொல்லு."
"அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா உனக்கு? பேஷ்! மிட்டாதாரரின் மனைவி என்ற தைரியம் . ஆனால் பாபம், பதறிவிடுவாய் நான் உன் மீது குற்றம் சுமத்தினால்."
"சுமத்து பார்ப்போம். பதறவுமாட்டேன், கதறவும் மாட்டேன் - நான் என்ன குழந்தையா?"
"குழந்தை மட்டுமா நீ! பைத்தியக்காரக் குழந்தை. பக்குவமறியாத பெண்! பயனில்லாத வாழ்க்கை ! பரிமள மில்லாத புஷ்பத்தைப் போன்று இருக்கும் உன் வாழ்வு! நீ விஷயமுணர்ந்தவளாக இருந்தால், கிழவனுக்கு வாழ்க்கைப்படச் சம்மதிப்பாயா?"
"என்னடி பெயரைக் கேட்டால், பழி சுமத்துவேன் என்று கூறினாய், என்னடி பழி சுமத்த முடியும் என்று கேட்டால் கிழவன் குமரன் என்று பேசுகிறாய், பேச்சை மாற்றி, என்னை ஏமாற்றுகிறாய். உன் பெயர்தான், என்ன? சொல்லடி."
"எத்தனை தடவை சொல்லுவது, எனக்கு ஒரு பெயர் இரண்டு பெயரல்ல. பல உண்டு. என்னைச் சாவித்திரி என்று கூப்பிடலாம், அனுசூயா என்று அழைக்கலாம், வசந்தசேனா என்று சொல்லலாம், சீதா, அல்லி, பவளக் கொடி, ருக்மணி என்றும் கூப்பிடலாம். இன்று மலர்க் கொடி, நாளைக்கு என்ன பெயர் கிடைக்குமோ தெரியாது!'
"இந்தப் பெயரெல்லாம் உனக்குப் பொருந்தாது. வாயாடி என்று பெயர் வைத்துக் கொள், அதுதான் பொருத்தம்."
இந்தப் பேச்சுக்குப் பிறகு இரண்டு அணங்குகளும், படுத்துத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். முதலிலே தூங்கிய மாது மதுரவல்ளிதான். மலர்க்கொடிக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலின்மீது உட்கார்ந்து கொண்டு, தூங்கும் போதுகூட அழகுடன் காணப்பட்ட மதுரவல்லியைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்.
# # #
பொழுது விடியுமுன், மலர்க்கொடி, தூங்கிக்கொண்டிருந்த மதுரவல்லியை எழுப்பி விடைபெற்றுக்கொண்டு, தனது ஜாகைக்குப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான், மதுரவல்லிக்கு மிட்டாதாரரின் காமச் சேட்டை பற்றிய கவனமும், கோபமும் வந்தன. அந்தக் கிழம்! காமக்குரங்கு! சேட்டைகள் செய்தான்! ஆட வந்தேன் அலங்கோலப்படுத்த நினைத்தான்!' - என்று பலர்க்கொடி கூறிய வாசகங்கள், மதுரவல்லி முன்பு உரு வெடுத்து நின்று கூத்தாடுவது போலத் தோன்றின. 'யோக்யதையற்றவன், விழாவுக்காக ஆடவந்தவளை, அவளுடைய இஷ்டத்திற்கு மாறாக இம்சிப்பதா? அவள், தற்செயலாக என்னிடம் ஓடிவந்து முறையிட்டாள். வேறு யாரிடமாவது சொன்னால், இவருடைய யோக்யதையைப் பற்றி ஊர் சிரிப்பாகச் சிரிக்காதா? செச்சே! வயதாயிற்றே தவிர, புத்தி வளர்ந்ததாகத் தெரியவில்லை! இருக்கட்டும், இருக்கட்டும்! என்னிடம் வருவாரல்லவா, இளித்துக் கொண்டு பேச, அப்போது பேசிக்கொள்கிறேன்' என் றெல்லாம் நினைத்து வருந்தினாள்.
"எங்கேயடி போய்விட்டாய் இரவெல்லாம்?"
"நானா? அக்கா! அந்த வெட்கக்கேட்டை என் கேட்கிறாய்"
"என்ன நடந்தது? எங்கேயோ தோட்டத்துப்பக்கம் போனாய் என்று எண்ணிக்கொண்டு நான் தூங்கிவிட் டேன். என்ன நடந்தது?"
"என்ன நடக்கும்., நமக்கு! ஆள்விட்டான் அந்தக் கிழவன்."
" எந்தக் கிழவன்?"
”மாப்பிள்ளைக் கிழவன்தான்!"
"சீ! வாயாடி ! மிட்டாதாரரைச் சொல்கிறாயா அப்படி?"
"ஓஹோ ! மிட்டதாரராக இருந்தால் வயதானாலும் வாலிபரா? எனக்குத் தெரியாது அந்த நியாயம்! என் கண்ணுக்கு ஒரு கிழ உருவம்தான் தெரிந்தது. அவனுடைய மிட்டா தெரியவில்லை!"
"சரி, அழைத்து ..........”
"அழைத்து, அடி அம்மா மலர்க்கொடி! நீயும் உன் அக்காவும் ஆடின ஆட்டமிருக்கே அதைக் கண்டு நான் ஆனந்தமாகிவிட்டேன், உங்களுக்குத் தேவையான வரம் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினான். அதுதானே உன் நினைப்பு ; பைத்தியம் நீ, அழைத்தான், கட்டிலறைக்கு வா என்று இழுத்தான், அந்தக் கிழக் குரங்கை ஏமாற்றி விட்டு நான் ஓடினேன்."
"எங்கே ஓடினாய்?"
"அதுதான் வேடிக்கை. அவனுடைய மனைவி இருக்கிறாளே, பாவம், நல்ல வயது, குணமும் அழகும் பொருந்திய பெண், அவள் படுக்கை அறைக்குப் போனேன், தற்செயலாக ."
"அடி பாவி! பிறகு?"
"பிறகு என்ன? அந்தப் பாதுகாப்பு அறைக்குள் அவன் எப்படி வருவான்? விடியும் வரை அவளோடு தங்கி இருந்துவிட்டு வந்தேன்."
”அவள் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா?"
"ஒன்றா? ஒன்பதாயிரம் கேட்டாள். நானும் உன் புருஷன் யோக்யதையைப் பாரடி என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அக்கா ! காசுக்காக வாழும் எனக்கே அவன் பீடையாகத் தெரிகிறானே, பாவம், அந்தப் பெண் பத்தரை மாற்றுத் தங்கப் பதுமை போல இருக்கிறாள், கள்ளமற்ற சுபாவக்காரி, கலகலவெனச் சிரித்துப் பேசு கிறாள், அவளுக்கு எப்படித்தான் மனம் சம்மதிக்கும் இந்தக் கிழக் குரங்குடன் வாழ ?"
"அந்த வேதாந்தத்தையும் அவளுக்குப் போதித்து விட்டு வருவதுதானே, வீண் வேலைக்குத்தான் நீ முதல் தாம்பூலம் வாங்குபவளாச்சே."
மலர்க்கொடி மற்றோர் ஆடலழகியுடன், மிட்டாதாரரின் காமவெறிபற்றியும், தன் நிலை பற்றியும் பேசிக்கொண் டிருப்பாள், இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள், என்று மதுரவல்லி நினைத்தாள். நினைத்ததும் அந்தக் காட்சியே கண் முன் தெரிவது போலிருந்தது. கோபம் அதிகரித்தது. அன்று பகல் விருந்திலே மதுரவல்லி கலந்து கொள்ளவில்லை. படுக்கை அறைக்கே சாப்பாடு கொண்டுவரப்பட்டது. அதை அவள் தொடவுமில்லை. மிட்டாதாரர், விருந்தைப் பகிஷ்கரிக்கவில்லை. நடு நிசி விருந்து நடைபெறாததால் இருந்த விசாரத்தை அவர், பான வகைகளால் கழுவி விட்டார் . மதுரவல்லி விருந்துக்கு வராமலிருந்ததுமட்டும் கொஞ்சம் மனவருத்தமளித்தது.
அன்று பகல், மாளிகையிலே இருக்க மனமின்றி மிட்டாதாரர், வேட்டையாடச் சென்றுவிட்டார். போகு முன், சதிராட வந்தவர்களை, அலுப்பிவிடக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்துவிட்டார். மலர்க்கொடியும் மாணிக்கமும், தங்க இருந்த ஜாகைக்குக் காவலும் போடப்பட்டது. மிட்டாதாரரைத் தேடி அலைந்தார் வேதாந்தாச்சாரி. வேட்டைக்குப் போன விஷயம் தெரிந்தது. காட்டுக்குப் போய்வர மனமின்றி, மாளிகையிலேயே காத்திருந்தார். இருட்டிய பிறகே வந்து சேர்ந்தார் மிட்டாதார், இரண்டு காடைகளுடன் ! பகலெல்லாம், கோபமும் சோகமும் கொண்டு படுத்துப் புரண்டிருந்த மதுரவல்லிக்கு, மாலையிலே ஓர் யோசனை தோன்றிற்று. மிட்டாதாரரின் காமச் சேட்டையைப்பற்றி வெளியே யாருக்கும் கூறாதிருக்கும் படி, மலர்க்கொடியைக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று எண்ணினாள். அவள், தன் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.
"மலர்க்கொடி போய்விட்டாளா?" என்று, மதுரவல்லி பணிப்பெண்ணைக் கேட்டாள். போகவில்லை என்பது தெரிந்ததும்,
"நேற்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாதே, தயவுசெய்து. அவருடைய பெயருக்குப் பங்கம் வரக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட சிநேகத்தினால், உன்னை வேண்டிக்கொள்கிறேன். என் பொருட்டு நீ, இரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன். நான் அடுத்த மாதம், என் தகப்பனார் மாளிகைக்குப் போகிறேன், தயவுசெய்து அங்கே வந்து என்னைக் காண வேண்டுகிறேன். ஒரே இரவிலே நீ என் மனதையே கொள்ளை கொண்டாய்.
மதுரவல்லி.
என்று கடிதம் எழுதிக் கடிதத்துடன், ஒரு தங்கச் சங்கலியும் தந்து, பணிப்பெண் மூலம், மலர்க்கொடிக்கு அனுப்பினாள்.
பணிப்பெண், மலர்க்கொடியிடம் இக்கடிதத்தைக் கொடுக்கும் நேரத்திலே, மிட்டாதாரர், தலைவிரி கோலமாக வேதாந்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். வேலைக்காரி பயந்தாள், பதறிக் குளறினாள். கடிதத்தை வாங்கிப் படித்தார் மிட்டாதாரர் . "கள்ளி ! அடி பாதகி! மோசம் போனேனே!" என்று கூவினார். மலர்க்கொடி தவிர மற்றவர்கள் நடுங்கினர். அவள் மட்டும், அஞ்சவே இல்லை.
"நேற்று இரவு, நீ மதுரவல்லியுடனா இருந்தாய்?" என்று கோபத்தோடு கேட்டார் மிட்டாதாரர்.
"ஆமாம்! நேற்றிரவு முழுவதும், உன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்லவள்" என்று மலர்க்கொடி கூறினாள். அந்தக் குரலிலே ஓர் வித வீரம் தொனித்தது. மிட்டாதாரர் வேதாந்தத்தைப் பார்த்தார், வேதாந்தம், மலர்க்கொடியை முறைத்துப் பார்த்து,
"உன் சூது யாருக்கும் தெரியாது என்று நினைத்தாய், எங்களை ஏமாற்றினாய் " என்று கர்ஜித்தான். மலர்க்கொடி சிரித்துக்கொண்டே, "ஏமாந்தீர்கள் ! ஏமாற்றவில்லை. அதுவும் இந்தக் கள்ளி, கூறித் தெரிந்துகொண்டிருப்பீர்கள்" என்று கூறிக்கொண்டே, மற்றோர் நடன மாதை நோக்கினாள், கோபத்துடன். அவள், " ஆமாம், நான்தான் உன் சூதைச் சொன்னேன். உன்னுடைய தைரியம், எப்படிப் பட்ட காரியம் செய்தாய்? நினைத்துப்பார் ! மிட்டாதார் மனைவியின் படுக்கை அறையிலே நேற்றிரவு பூராவும் போயிருந்துகொண்டு............" என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கியபடி நின்றாள்.
"வேதாந்தம்! எனக்கு ஆத்திரம் அடங்காது, இருவரையும், புளிய மரத்திலே கட்டிவைத்துத் தலையாரியை விட்டு, மிலாரினால் அடித்தாலொழிய என் மனம் நிம்மதி அடையாது" என்று மிட்டாதாரர் வெறிபிடித்தவர் போலக் கூவினார்.
"போய், மதுரவல்லியை அழைத்துக்கொண்டுவாரும், வேதாந்தாச்சாரியாரே! சாட்சாத் மிட்டாதாரர், கட்டளை பிறந்துமா, சும்மா இருக்கிறீர் ! ஒரு பேச்சு கேட்டாரோ இல்லையோ, உடனே நேற்றிரவு ஓடிவந்தீரே, தோட்டத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போக, இப்போது என் மரம் போல நிற்கிறீர்? மதுரவல்லி இந்தக் கிழக் குரங்குடன் வாழ்வதை விடப், புளிய மரத்திலே கட்டி வைத்து அடிக்கப்படுவது, பெரிய துன்பமல்ல" என்று ஆத்திரமும் ஆணவமும் கலந்த குரலிலே, மலர்க்கொடி பேசினாள். மிட்டாதாரர் எதிரிலே, ஒரு ஆண்மகன்கூட இப்படிப் பேசத் துணிய மாட்டான். ஒரு பெண், அதிலும் சதிராட வந்தவள், இவளுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிவு பிறந்தது என்று, பணிப்பெண் ஆச்சரியமுற்றாள்.
"இவ்வளவு விபரீதமும் உன்னால் விளைந்தது' என்று மிட்டாதாரர் வேதாந்தத்தின் மீது பாய்ந்தார்.
"மிட்டாதாரரே! என் மீது கோபிக்கப்படாது. சின்னக்குட்டியைத் தோட்டத்துக்கு அழைத்து வரச் சொன்னீர்கள், உத்தரவுப்படி செய்தேன். உங்க இரண்டு பேரையும் தோட்டத்திலே இருக்கச் செய்துவிட்டு, நான் பொழுதுபோக்காகப் பெரியவளிடம் பேசிக்கொண்டிருக்க வந்தேன். அந்தத் தடி முண்டையும் நேக்கு முதலிலே விஷயத்தைச் சொல்லலே. ரொம்ப நேரம் கழித்த பிறகு தான் சொன்னாள். உடனே பதறினேன். அட்டா! என்ன அபசாரம், என்ன கிரகசாரம் என்று சோக மடைந்தேன், நான் என்ன செய்யட்டும், என்னை க்ஷமிக்க வேணும்' என்று வேதாந்தாச்சாரி கூறிக்கொண்டே மிட்டாதாரரின் காலில் விழப்போனார். மிட்டாதாரரோ, அங்கோர் ஆசனத்திலே சாய்ந்தார். தலைமீது அடித்துக் கொண்டார். "கடிதத்தை வேதாந்தாச்சாரியாரிடம் காட்டிப், படித்துப்பாரய்யா ! என் மானம் போகுதே, உயிர் துடிக்குதே! அந்தப் படுபாவி, மனதைப் பறிகொடுத்தேன் --- மறக்காதே- வெளியே - சொல்லாதே---அடுத்த மாதம் வா - என்றெல்லாம் எழுதி இருக்கிறாளே . இன்னம் என்ன ருஜு வேண்டும். நான் வாழ்ந்த வாழ்வு என்ன எனக்கு இப்போது வந்திருக்கும் இடி என்ன ! அட ராமச்சந்திரா!” என்று ஆயாசப்பட்டார்.
'கோபப்படாமல் கேட்கவேண்டும் ஒரு விஷயம். கடிதமோ நம்மிடம் இருக்கு. இந்தக் கழுதைகளை விரட்டி விடுவோம். விஷயம் எதுவும் வெளிவர மார்க்கமில்லை, வீணாக மனக்கிலேசம் அடையத் தேவையில்லை" என்று வேதாந்தாச்சாரியார் கூறினார். மிட்டாதாரரின் பெரு மூச்சு, அது பயனில்லாத யோசனை என்பதை அறிவித்தது.
"நீ இரு இங்கே. இதோ நான் வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கடிதத்துடன் ஓடினார் மிட்டாதாரர், மதுர வல்லியின் அறைக்கு. கதவு உட்பக்கம் தாளிடப்பட் டிருந்தது. தடதடவெனத் தட்டினார். கதவு திறக்கப்பட் டது. தன் எதிரிலே, மிகக் கோபத்துடன் மிட்டாதாரர் இருக்கக் கண்டாள் மதுரவல்லி. அவரைக் கண்டதும், அடக்கிவைத்திருந்த கோபம், கரையைப் பிளந்து கொண்டு வரும் வெள்ளம் போலாகிவிட்டது. மீண்டும் கதவை மூட முயற்சித்தாள். மிட்டாதாரர், முரட்டுத்தனமாகத் தடுத்து, ”கள்ளி! உன் வேலையை இங்கே காட்டாதே!" என்று மிரட்டினார்.
"நீர் ஒரு மிட்டாதாரர், மிரட்டத் தெரியும் உமக்கு . நான் ஒரு மிராசுதாரர் மகள். எனக்கு இந்த மிரட்டல் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சி. என்னிடம் காட்ட வேண்டாம் உமது வீராவேசத்தை" என்று உறுதி கலந்த குரலிலே, தீப்பொறி பறக்கப் பேசினாள், மதுரவல்லி.
மின்சாரத்தால் தாக்குண்டவர்போலானார் மிட்டாதாரர். கோபம் பயத்துக்கு இடமளித்தது. "இவள் சாமான்ய மானவளல்ல! பயம் காணோம் ! பதறக்காணோம்! நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு கொண்டவளாக இருக்கிறாள்" என்று தோன்றிற்று. திகிலும் அதிகரித்தது. கடிதத்தைக் காட்டி, ”நீதானே இதை எழுதினாய்?" என்று கேட்டார். "ஆமாம்" என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் மதுரவல்லி "ஏன்?" என்று மறு கேள்வி கேட்டார் மிட்டாதாரர். "உன் மானத்தைக் காப்பாற்ற" என்று கூறிவிட்டு மதுரவல்லி மிட்டாதாரர், அறைக்கு வெளியே விழுந்தடித்து ஓடும்படி, வேகமாகக் கதவைச் சாத்தினாள். கதவு மோதி, மிட்டாதாரர், அறைக்கு வெளியே விழ, கதவைத் தாளிட் டுக்கொண்டாள், மதுரவல். கண்களிலே உதிரத் தொடங்கிய நீரையும் துடைக்கவில்லை.
விழா முடிவதற்குள், தனக்குப் பழக்கமான ஒரு உருப்படியைத் தேடிக்கொண்டு போயிருந்த மிராசுதாரர் மீனாட்சிசுந்தரர், மிட்டாவுக்கு அந்த நேரத்தில்தான் வந்து சேர்ந்தார். மிட்டா மாளிகையிலே ஒரே அமர்க்களமாக இருக்கக் கண்டார். சதிராட வந்தவளுக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்று மட்டும் இருந்தால், விஷயம் விளங்கிவிட்டிருக்கும். மதுரவல்லிக்கும் மிட்டாதாரருக்கும். சண்டை என்றாலும் பொருள் விளங்கும். இந்தச் சண்டையோ, மிட்டாதாரர், மதுரவல்லி, மலர்க்கொடி மூவருக்குள், என்கிறார்கள், இதற்கு அர்த்தமே விளங்கக் காணோம், என்று ஆச்சரியமடைந்த மிராசுதாரர், மிட்டா தாரரிடம் விஷய விளக்கம் கேட்டார்.
தகப்பனார் வந்த விஷயம் தெரிந்ததும் மதுரவல்லி, அறையைவிட்டு வெளியே வந்தாள். தகப்பனாரைப் பார்த்து "அப்பா ! இனி இங்கே நான் இருக்கமுடியாது" என்று கூறினாள். "உன்னை இங்கே, மானங்கெட்டு வைத்திருக்க எந்த மடையனும் சம்மதிக்கப் போவதில்லை" என்று மிட்டாதாரர் போர்முரசு கொட்டினார் . மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். ”நாக்கை அடக்கிப் பேசவேண்டும், நான் கோபக்கார னல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல" என்றார் மிராசுதாரர். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். "ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்" என்று கூறிக் கடிதத்தைக் கொடுத்தார், மிராசுதாரரிடம் மிட்டாதாரர். கடிதத்தைப் படித்துவிட்டுக், கொஞ்சம் பதறி, மகளைப் பார்த்து "நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?" என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார், களத்துக்கு.
"இவளுக்குத்தான்" என்று மதுரவல்லி பதிலளித் தாள் நிதானமாக.
"சதிர் ஆடினவள் தானே!" என்று கேட்டார் மிராசுதாரர், குழம்பிக்கொண்டே.
"ஆமாம் அப்பா ! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்கு ஓடிவந்துவிட்டாள்" என்று கூறினாள் மதுர வல்லி.
மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார். "இது யோக்யதையா?" என்று கேட்பதற்குப் பதிலாக.
”இவள் தங்கமானவள், வேடிக்கைக்காரி. இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்" என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார், "உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள். இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே, முட்டாளே " என்று பார்வை பேசிற்று.
"இரவெல்லாம் அவளுடன் என்ன பேசிக்கொண்டிருந்தாய் நீ" என்று மிட்டாதாரர் மலர்க்கொடியைக் கேட்டார் . அவள், புன்னகையுடன், "பல விஷயங்கள் பேசினோம். உன்னைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கிழவனுக்குக் குமரி வாழ்க்கைப்படுகிற வேதனையைப் பற்றி, பல விஷயம் பேசினோம். மிட்டாதாரரே ! எனக்கும் நேற்றிரவுதான் ஆனந்த இரவு! அவளுக்கும் இன்ப இரவு அது ஒன்றுதான் ! மீண்டும் எங்கள் இருவருக்கும் அந்த இன்ப இரவு கிடைக்காது" என்று மலர்க்கொடி கூறினாள். குரலிலே சோகம் கப்பிக்கொண்டிருந்தது. புதுமையாகவு மிருந்தது, மதுரவல்லியின் செவிக்கு.
”இதற்கு ஏன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறீர்?" என்று மிட்டாதாரரை மிராசுதாரர் கேட்டார். மிட்டா தாரர், வேதாந்தத்தையும், மலர்க்கொடியையும் மாறி மாறிப் பார்த்தார் மிரட்சியுடன். விளக்கம் ஏதும் கூற வில்லை. மிராசுதாரருக்குக் கோபம் அதிகரித்தது.
”வயது ஆயிற்று, இவ்வளவு. கிளிபோல எனக்கு ஒரே மகள், உனக்குக் கொடுத்தேன். நீ சதிராட வந்தவளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச் சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள் மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?" என்று மாளிகை அதிரும்படி கூறினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!
வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேச லாயினர்.
'எப்படி விஷயத்தைச் சொல்வது?"
"சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு."
"சொல்லாவிட்டால், மிராசுதாரர் கோபம் அடங்காதே."
"சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்."
"கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுகிறாரே. பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?"
"கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்துவிடுவோமா இப்போது."
"நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்."
இவ்விதம், வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திரா லோசனை நடத்திக்கொண்டிருக்கும் போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு
வண்டியிலே அமர்ந்துகொண்டு, மலர்க்கொடியையும் கூட வரும்படி அழைத்தாள். மிட்டாதாரர், கலங்கினார். மிராசு தாரரிடம் ஓடினார், "நான் பிறகு சொல்கிறேன்! தயவு செய்யுங்கள்! உங்கள் காலில் விழுகிறேன். பெண்ணை வேண்டுமானால் அழைத்துக்கொண்டு போங்கள். இந்த மலர்க்கொடியை மட்டும் கூட அழைத்துச் செல்லாதீர்கள். என் பேச்சை இந்த ஒரு விஷயத்திலே கேளுங்கள்," என்று கெஞ்சினார்.
"பைத்யக்காரன் நீ! உன் பேச்சும் பார்வையும் நடத்தையும் எனக்குத் துளிகூடப் பிடிக்கவில்லை. மலர்க் கொடி சம்மதித்தால் நீ மகராஜனாக நிறுத்திக்கொள் " என்று மிராசுதாரர் கூறினார். இவ்வளவு பகிரங்கமான பிறகுகூட, மலர்க்கொடியிடம் மோகம் பிடித்து இவன் அலைகிறானே, என்று மிராசுதாரருக்குக் கோபம் அதிகப் பட்டது. மலர்க்கொடி, மறுத்துப் பேச முடியவேயில்லை, மதுரவல்லி, அவளை அணைத்துக் கொண்டு, "வந்தால் தான் விடுவேன்" என்று வற்புறுத்தினாள். வண்டி புறப்பட் டது ! சக்கரத்தின் அடியிலே படுத்துச் சாகிறேன் ! என்று கூறினார் மிட்டாதாரர் . அப்படியே செய்துவிடுவார் போலுமிருந்தது.
இதேது பெரிய சனியனாகப் போச்சு! ஏனய்யா இப்படி உயிரை வாங்குகிறீர்? உமது போக்கே மகா மோசமாக இருக்கிறதே. மலர்க்கொடியை நான் அழைத் துக்கொண்டு போய் உன்னைப்போலக் காமக் கூத்தாடவா எண்ணுகிறேன். விடு சக்கரத்தை, என் மகளோடு அவள் இருக்கப்போகிறாள் இரண்டோர் நாள்," என்று சமாதானமாகக் கூறினார் மிராசுதாரர்.
"அதுதான் கூடாது, என் பேச்சைத் தட்ட வேண்டாம். உங்கள் மகளோடு, மதுரவல்லியோடு, அவனை ..." என்று அழுகுரலிற் கூறினார் மிட்டாதாரர்.
"அவனையா? எவனை" என்று கேட்டார் மிராசுதார், மிட்டாதாரருக்கு நிஜமாகவே பைத்யம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்து, மிட்டாதாரர் மிராசுதாரரின் கேள்விக குப் பதில் கூறமுடியாமல், மலர்க்கொடியைச் சுட்டிக் காட்டினார் .
"இவளைத்தானே அழைத்து ...”
"இவனைத்தான்"
"இவனா?"
"ஆமாம் ! மலர்க்கொடி, பெண்ணல்ல!"
மாமனார் மருமகப்பிள்ளையின் உரையாடலிலே வேதாந்தாச்சாரி கலந்து கொண்டு, மிராசுதாரரைத் தனியாக அழைத்து 'கோபப்படாமே என் வார்த்தையைக் கேளுங்கோ . மலர்க்கொடி, பெண்ணல்ல ! ஆண்! மனமோகனதாஸ் கம்பெனியிலே ஸ்திரீபார்ட் போடுபவன். அசல் பெண் போலவே வேஷம், பேச்சு நடிப்பு இருக்கும். அவனுடைய ஆசை நாயகியும் அவனும், நேற்றுச் சதிராடினா. அவ பேர் மாணிக்கம் ; இவன் பேர் சீதாபதி. இது எனக்கு நேற்று தெரியாது அவருக்கும் தெரியாது. உம்ம குழந்தைக்கும் தெரியாது. சதிராடும் போது சகலரும் இவனை மாணிக்கத்தின் தங்கை என்றே எண்ணிக்கொண்டனர். மிட்டாதாரும் அப்படியே எண்ணித்தான் இஷ்டப்பட்டார். தோட்டத்துக்கு வரச் சொன்னார் . இவன் போனான். மிட்டாதார் தமது இச்சையைச் சொன்னதும் பயந்து போய், அவரை விட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்கள். இரவெல்லாம் அங்கேயே இருந்திருக்கான். நேக்கு இவன் பெண்ணல்ல என்ற விஷயத்தை மாணிக்கம் சொன்னாள். பிறகு மிட்டாதாரருக்குத் தெரிந்தது. ஒரு இரவு முழுவதும் மதுரவல்லியம்மையாரின் கொட்டடியிலே இருக்க நேரிட்டது தெரிந்து, மிட்டாதாரருக்குக் கோபம் வந்தது. அதே சமயம் இந்தக் கடிதம் வந்தது. எரிகிற நெருப்பிலே எண்ணெய் போலாயிற்று" என்று கூறினார்.
பிரமித்துப் போனார் மிராசுதாரர். அதேசமயத்திலே, சீதாபதி மதுர வல்லியிடம், மெள்ள மெள்ள விஷயத்தை விளக்கி விட்டான். மதுரவல்லி ஆச்சரியமுற்றுச், சீதாபதியை விறைக்க விறைக்கப் பார்த்தாள். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு! மலர்க்கொடி, ஆண்! அவனுடன் ஒரு இரவு முழுவதும், விளையாடினோம். அணைத்தான், கன்னத்தைக் கிள்ளினான், முத்தம் கூடக் கொடுத்தானே! சாகசக்காரக் கள்ளன் !! - என்று மதுரவல்லி எண்ணினாள். கோபம், அதைத் துரத்தி அடிக்கும் வேகத்திலே ஆச்சரியம், அந்த ஆச்சரியத்தை அப்புறப்படுத்திவிட்டுப் பரிதாபம், அந்தப் பரிதாபத்தைப் பறக்க அடித்தது பிரேமை!
" என்மீது தப்பு இல்லை. நிலைமை அப்படியாகி விட்டது. இப்போது உன் தகப்பனாரிடம் மிட்டாதாரர் கூறிவிட்டிருப்பார். நீங்கள் போய்விட்ட பிறகு, என் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆத்திரம் அடங்குமட்டும், என்னை ஆட்களை விட்டு, அடிக்கச்சொல்வார்கள். மதுர வல்லி! என் வாழ்க்கையே விசித்திரமானதுதான்! இரவு நான் இராணி! பகலிலே, ஏழை! இரவு வேளைகளிலே மாளிகை, உப்பரிகை, தாதிகள், மண்டியிடும் மன்னர்கள்! பொழுது விடிந்ததும், பழையபடி உழைப்பாளி இந்த விசித்திரத்தை எல்லாம் விட, நேற்று எனக்கு இன்ப இரவ இனி எனக்கு வரப்போகிறது இடிமேல் இடி, துன்பம், ஒரு வேளை மரணமே வந்தாலும் வரக்கூடும். மதுரவல்லி! நான் வேண்டுமென்றே உன்னை ஏமாற்றினேன் என்று மட்டும் எண்ணாதே. என்னை மன்னித்துவிடு. நான் நிரபராதி" என்று, உருக்கமாகக் கூறினான் சீதாபதி.
"நீயா நிரபராதி!" என்று கேட்டாள் மதுரவல்லி, கோபத்துடன் அல்ல, புன்சிரிப்புடன், புதுப்பார்வையுடன்.
விஷய விளக்கம் பெற்ற மிராசுதாரர், வண்டி அருகே வந்தார், "இறங்கு கீழே!" என்று கொஞ்சம் கண்டிப்பான குரலிலே, கூறினார், சீதாபதியை நோக்கி. மதுர வல்லியைப் பார்த்து, "அம்மா! மலர்க்கொடி இங்கே இருக்கட்டும். நான் விஷயத்தைப் பிறகு சொல்கிறேன்" என்று மகளிடம் சொன்னார். மதுரவல்லி, "எனக்கே விஷயம் தெரியும் ! இப்போதுதான் ! ஆனால் அப்பா! இவனை இங்கே நிறுத்திவிடவேண்டாம், கொன்று விடுவார்கள் " என்று கூறினாள்.
மலர்க்கொடியை, மிராசுதாரர் தன் வண்டியிலே ஏற்றிக்கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. முன்னால் நாலு காவலாளிகள் தீவர்த்தி சகிதம் கிளம்பினர். அவை போகும் திக்கு நோக்கியபடி திகைத்து நின்றார் மிட்டா தாரர்.
# # #
மது மனோஞ்சித சபையின் பிரதம நடிகராகச் சீதாபதி புகழ் பெற்றார். "தெரியுமோ விஷயம்! சீதாபதிக்கு, வரப்பிரசாதம், மதுரவல்லித்தாயார் கடாட்சத்தால் கிடைத்தது" என்று ஊரிலே பலர் வம்பு பேசினர். அதாவது, சீதாபதி என்ற நடிகனுக்கும் மிராசுதாரர் மகள் மதுரவல்லிக்கும் தொடர்பு என்று வம்பளப்பு ! அதனுடைய உண்மை யாருக்குத் தெரியும்! மதுரவல்லி மட்டும், கடைசி வரை, மிட்டாதாரர் மாளிகைக்குப் போக மறுத்து விட்டாள்! மதுர மனோரஞ்சித சபை நாடகங்களுக்குப் போவதற்கும் தவறுவதில்லை!! அந்தக் கம்பெனியார், "காமக் குரங்கு" என்ற நாடகத்தை எந்த ஊரிலே நடத்தும் போதும், மதுரவல்லியைக் காணலாம். அந்த நாடகத்தை நடத்தாமலிருக்கச் செய்ய மாகாளிப்பட்டி மிட்டாதாரர், எவ்வளவோ முயன்றார், முடியவில்லை என்றும் ஊரிலே வதந்தி. ஆனால், அந்த நாடகம் தான் அக்கம்பெனியின் முதல்தர நாடகம், வைர விழா நாடகம்! அவ்வளவு ஆதரவு அதற்கு!
---------------
2. சொல்லாதது
அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை. சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக்கொண்டு ஆஹா ! என்ன மணம், எவ்வளவு இன்பம் !' என்று சொல்லாமலே, எவ்வளவோ பேர், முகந்து ரசிக்க வில்லையா? சுந்தரியின் சிறு பிராய முதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய் வீடு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம், அப்பெண்ணுக்கு . பள்ளி யிலே பலநாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்லே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால் . அப்படிப் பட்ட மாணவியை, முட்டாள், தடிக்கழுதை, உதைக்கிறேன் பார், என்று எவ்வளவோ வசை மொழி சொல்லலாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒருநாளாவது, சொல்லவேண்டுமென்று எண்ணியதைச் சொன்னதேயில்லை. புன்சிரிப்புடன் தலையை அசைப்பார், சுந்தரியின் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டுப்படும். அது ஒரு புதுவிதமான களையைத் தரும், அதை ரசிப்பார் ஆசிரியர். வேறு மாணவியின் காதை இழுப்பார், கன்னத்தைக் கிள்ளுவார், தலையைக் குட்டுவார், சுந்தரி மீது சுடு சொல் வீசமாட்டார், அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து.
"குட்டி பெரியவளானால் மகா ரூபவதியாக இருப்பாள். கண்களே போதும் ஆளை மயக்க, அந்தப் புன்சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதேயில்லை. சுருண்டு கருத்து அடர்ந்து, காற்றிலே அலையும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே, அட்டா என்ன நேர்த்தி, என்ன இலாவண்யம்" என்று, சுந்தரியின் பாலப் பருவ ரசிகர்கள் சொல்லவில்லையே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர்களே கிடையாது.
"சுந்தரி, நாமோ ஏழைகள், விதவிதமான துணிகள் உனக்குக் கிடைக்காது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக்கொண்டுதானே இரண்டு ஜீவன்கள் வாழவேண்டும்? உன் தகப்பனோ, எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு ஊறு காய்தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல்லாம் " என்று சுந்தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கியவதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே. அந்தப் பச்சை நிறச் சொக்காயும், பாக்குக் கலர் பாவாடையும், அவளுடைய பவுன் நிற மேனிக்கு அழகாகத்தான் இருந்தது, பம்பாய் சில்க்கும் சீமை வாயிலும் அவளுக்கு எதற்கு? ' அழுமூஞ்சி அன்னம், பொட்டைக் கண் பொன்னி, வழுக்கைத் தலை வனிதா இவர்களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள், என்று தனபாக்கியம் சொல்லவில்லை. ஆப்பம் சுட்டு விற்பவளுக்குப் பணக்கார வீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா?
சுந்தரியின் வளர்ச்சியும், வீட்டிலே வறுமையின் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவளுடைய அழகு வளர்ந்தபடி இருந்தது, எதையும் சட்டை செய்யாமல்.
“எனக்கு மட்டும் கொஞ்சம் சொத்து, ஒரு சொந்த வீடு இருந்துவிட்டால், என் தங்கத்துக்கு ஏற்றவனாக ஒருவனைத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்துவைக்க முடியும். கண்டேன் கண்டேன் என்று கைலாகு கொடுக்க எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி, ஆப்பக் கடைக்காரியின் பெண்ணாயிற்றே, எந்தத் தடியனோ வெறியனோ எவனோ ஒருவனுக்குத்தானே வாழ்க்கைப் பட்டாக வேண்டும்" என்று தனபாக்கியம் சொல்லவில்லை. அவளுடைய கண்ணீர், ஏற்கனவே தூசு நிரம்பிக் கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கிவிட்டது.
"அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டிலே உலாவினாலே போதும், கிருக லட்சுமியாக இருப்பாள். நமது பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண். என்ன செய்வது? அவள் ஆப்பக்கடைக்காரிக்கா பிறக்க வேண்டும்? அரச மரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல், அடுத்த தெருவிலே, அழுதுகொண்டிருக்கிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றிலே பிறந்திருக்கக் கூடாதா? நமது பையனுக்குக் கல்யாணம் செய்துகொள்ளலாமே" என்று லோகு முதலி சொல்ல வில்லை. மனதிவே இதுபோலப் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண்டு இழந்தவர், ஒரே மகன் அவருக்கு, ஒய்யாரமான பையன், அவனுக்குச் சுந்தரிடம் மையல்.
"கனகு, ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக்கடைக்குப் போய்வருகிறாயாமே, அந்தப் பெண் சுந்தரியை நேசிக்கிறாயாமே" என்றும் லோகு முதலி சொன்னதில்லை, மகனிடம் இதுபோலப் பேசக்கூடாது என்ற சம்பிரதாயத்தினால்.
"எனக்கு என்னமோ அப்பா, அந்தக் கடைப் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய்வராவிட்டால், சந்தோஷம் உண்டாவதில்லை. அப்பா, சுந்தரியின் அழகு என்னை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? தூக்கமே இருப்பதில்லை, தவறித் தூங்கினாலோ, கனவுதான். கனவிலே அந்தக் கிளிமொழியாள் பிரசன்னமாகிறாள் அப்பா, நான் என் உயிர்போவதானாலும் சுந்தரியைத் தவிர வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவே மாட் டேன். சத்தியமாகச் சொல்கிறேன் அப்பா, சுந்தரிதான் எனக்கு வேண்டும், இல்லாவிட்டால் கலியாணமே வேண் டாம்" என்று கனகசபேசன் சொல்லவில்லை. தந்தையிடம் தனயன் இதுபோலப் பேசுவது தகுமா?
.
சுந்தரியாவது சொன்னாளா மனதிலே நினைத்ததை, சொல்லவேயில்லை. அம்மா, கனகு, என்னைக் கண்டதும் ஒருமாதிரியாகச் சிரிக்கிறான். தண்ணீர் கேட்கிறானே, அப்போது நான் குவளையைக் கொடுக்கும் போது, வேண்டு மென்றே என்னைத் தொடுகிறான். என்னைத்தான் கலியாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறுகிறான், என் காதில் படும்படி" என்று சுந்தரி சொல்லவில்லை. அவள் சொல்வானேன், சுந்தரியைப் போலத் தனபாக்கியமும் வாலிபப் பெண்ணாக இருந்தவள் தானே!
"சுந்தரி, உன்னை நான் கட்டாயமாகக் கலியாணம் செய்து கொள்கிறேன். எமாற்றி விடுவேன் என்று எண்ணாதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் வீட்டிலே தள்ளிவிடுவார்கள் என்றும் கருதாதே. பார், எப்படியாவது எங்கள் வீட்டாரைச் சரிப்படுத்திக்கொண்டு உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்."
"என்னையாவது நீங்கள் கலியாணம் செய்து கொள்வதாவது, அறுபது வேலிக்குச் சொந்தக்காரர் உங்கள் அப்பா, நான் ஆப்பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதாவது. அதெல்லாம் நடவாத காரியம், ஏன் வீணாக என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!"
"சுந்தரி, சத்தியம் செய்கிறேன். என்னை நம்பு."
"சத்தியமா? ஆசைக்குக் கண்மண் தெரியாது. அதனாலே பேசுகிறீர்கள் இதுபோல வீணாக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை."
"எங்கள் வீட்டிலே மண்டை உடையக்கூடிய சண்டை நடப்பதானாலும் சரி, உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்துவிட்டேன்."
"மனக்கோட்டை இது, இடிந்துபோகும். இலுப்பப் பட்டி மிராசுதார் மகள் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல இருக்குதாம்! இருந்தால் என்ன, அவள்தான் உனக்கு நாயகியாக வரப்போகிறவள்."
"சீ! அந்தக் குரங்கையா, நான் கலியாணம் செய்து கொள்வேன்?"
இவை சுந்தரிக்குக் கனகு சொல்லாதவை, கனகுக்குச் சுந்தரியும் சொன்னதல்ல!
சில காலத்துக்குப் பிறகு இலுப்பப்பட்டி மிராசுதாருக்குத்தான் கனகு மருகனானான்.
"குரங்கு போல இருக்கிறாயே, உன்னைக் கட்டிக் கொண்டேனே, நான் ஒரு மடையன். அப்பன் மிரட் டினால் என்ன, பிடிவாதமாக இருந்தால், எப்படி நடந்திருக்கும் இந்தக் கலியாணம் பாழான பணத்தாசை எனக்கும் பிடித்துக்கொண்டதால்தான், நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். பத்தரைமாற்றுத் தங்கம் போன்ற சுந்தரியை இழந்துவிட்டேன். இனி உன்னோடு அழ வேண்டும், என் விதி! விதி என்ன செய்யும்? என் புத்தியைக் கட்டையாலே அடிக்க வேணும்' என்று கனகு சொல்லிக் கொள்ளவில்லை, எண்ணாமலுமில்லை. அவன்தான் என்ன செய்வான் பாவம்! அறுபது வேலி நிலமும் இலுப்பப்பட்டியாரிடம் அடகு இருந்தது, தன்னுடைய அழுமூஞ்சியைக் கனகு கழுத்திலே கட்டி விட்ட பிறகு தான், வட்டியும் அசலும் செல்லாகிவிட்டதாக மிராசுதார் எழுதிக்கொடுக்க இசைந்தார். பட்ட கடனுக்கு இது தண்டனை என்று கனகு நினைத்துக்கொண்டான். சொல்ல முடியுமோ?
தேசாந்திரம் செய்து கொண்டிருந்த திருவேங்கடம், 'எனக்கு மனைவி உண்டு, ஒரு மகளும் உண்டு, சிகப்பாக இலட்சணமாக இருப்பாள். என் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு, ஏதேதோ பாடுபட்டு, என் மகளை வளர்த்து வருகிறாள். எனக்கு வேலை செய்ய முடிவதில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, இப்படி ஊரூராக அலைந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்க முடிகிறதே யொழிய வீட்டோடு இருக்கப் பிடிக்கவில்லை. நான் கட்டியிருப்பது காவிதான். ஆனால் கள்ளச் சாவி கிடைத்தால் போதும், போதைக்குச் சரியான "சான்சு" கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி" என்று, திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனால் அவன் எண்ணம் அதுதான். சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, வீட்டின் வறுமையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஷயம் பற்றியோ, அந்தக் காதலை அவன் வீட்டு நிர்ப்பந்தத்தினால் கைவிட வேண்டி நேரிட்டதுபற்றியோ, ஊரூராகச் சுற்றிக்கொண்டு, ஓய்வுக்கு மடங்களிலே தங்கி, தேர் திருவிழாக் காலங்களிலே, திருப்தியாக வாழ்ந்துவந்த திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை.
கனகுவின் மனைவியானாளே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்குக் சனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லை. ஆப்பக்கடைக்காரியின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் அதைப் பேசுவது என்ற பயத்தால்.
இவ்வளவுதானா, கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளைகளிலே நடந்து கொண்ட விஷயத்தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவேயில்லை.
இது ஏன் இந்தப் பெண் இவனோடு இப்படிக் குலாவுகிறாள்' என்று தனபாக்கியம் பல சமயங்களிலே எண்ணின துண்டு, சொன்னதில்லை. 'அடி அப்பா, ஜாக்கிரதை. அவன் அப்படி இப்படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னால் கேட்காதே. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டிவை' என்றும் சுந்தரிக்கு அவள் தாயார் சொல்லவில்லை. கனகு கெட்ட பேச்சுப் பேசியிருந்தால்தானே, சுந்தரி, அம்மாவிடம் தானாகவாவது சொல்லியிருப்பாள்? அவன் சொன்னதுதான் அவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க.
"அம்மா, வாயைக் குமட்டுகிறது, சாதம் பிடிக்கவில்லை, மயக்கமாக இருக்கிறது, என்னமோ போல இருக்கிறது உடம்பு' என்று சுந்தரி சொல்லாமலேயே, தனபாக்கியம் நிலைமையைக் கண்டு கொண்டாள். "ஐயையோ, மோசம் வந்துவிட்டதே, அந்தப் பயல் அநியாயமாக ஏதுமறியா என் மகளைக் கெடுத்துவிட்டான் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளை நல்ல இடத்திலே யாரும் கேட்க வில்லை. இப்படியும் நேரிட்டுவிட்டால் என் கதி என்னாவது? அடி பாழும் பெண்ணே ! இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினாயே, அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத்துப் போனாயா?" என்றெல்லாம் சொல்லித் தனபாக்கியம் சுந்தரியைக் கண்டிக்கவில்லை, விஷயம் வெளிவந்து விட்டால் விபரீதமாகிவிடுமே என்ற பயத்தால். ஆனால் தனபாக்கியத்தின் பெருமூச்சும், தானாக வழிந்த கண்ணீரும் சுந்தரிக்கு இதைவிட விளக்க மாகத் தாயின் மனோவேதனையைத் தெரிவித்தது.
"தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிறாய். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் இறுமாப்பினால் கஷ்டமடைந்தவர்களை யெல்லாம் உன் கருணையால் காப்பாற்றுகிறாய். இவ்வளவு நல்லவனான உன்னால் என் குடும்பமே பாழாகிவிட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப் பாலி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே. வளருகிறதே உன்னால் ஏற்பட்ட வம்பு. ஊரார் தூற்றுகிறார்களே. சுந்தரியின் கண்ணீர் என்னைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ, அப்பனுக்குப் பயந்தோ ஒருவளைக் கலியாணம் செய்துகொண்டாய். உன் அன்பு மொழியை நம்பினாளே இந்த அபலை, இவளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா இரண்டாந்-தாரமாக? இழிவு போகுமே," என்று தனபாக்கியம் கனகனிடம் கூறவில்லை. கூறிப்பார்ப்போம் என்று பலதடவை எண்ணுவாள். எப்படிக் கூறுவது, சொல்லிப் பயன் என்ன, என்று எண்ணி, ஏங்குவாள்.
”அம்மா, கன்னி கருவுற்றாள். ஊர் தாற்றும் என்று பயந்து ஓடிவந்துவிட்டோம். நீ காப்பாற்று," என்று சொல்ல மனம் இடந்தரவில்லை தனபாக்கியத்துக்கு . ஊரை விட்டுத் தொலைந்தால் போதும், என்று சுந்தரியை அழைத்துக்கொண்டு வேறு ஊர் வந்து குடி ஏறினாள். சுந்தரிக்குப் பத்தாம் மாதம்! மருத்துவம் பார்க்கவந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்தரங்கக் கதையைக் கூறவில்லை. "அவளுடைய புருஷன் அக்கரைக்கு ஓடிவிட்டான் " என்று பொய்யுரைத்தாள். தாலி இருந்தது சுந்தரியின் கழுத்திலே, தாய் மகளுக்குக் கட்டிய தாலி!!
தங்க விக்ரஹம்போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு. பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோயிலிலே பலமான பூஜை நடத்திக்கொண்டிருந்தார் லோகு முதலி.
கலியாணமோ இல்லை, குழந்தையோ தவழ்ந்தது அந்தக் குடிசையிலே ! மாளிகையிலே, கனகனும் காவேரியும், கனபாடிகளின் பூஜை, காளி உபவாசியின் தாயத்து, சித்த வைத்தியரின் செந்தூரம் ஆகியவற்றை நம்பிக் கிடந்தனர், பலனின்றி .
"என் மகன் ராஜாபோல இருக்கிறான், எனக்கென்ன கவலை?" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது! தெரிந்தாலும் கூறமுடியுமா?
'போனவன் திரும்பவில்லையே!' என்று பலர், ஆயாசமும் ஆச்சர்யமும் கொண்டு, சுந்தரியைக் கேட்டனர். 'அக்கரை இல்லை அவருக்கு' ஆகவே அவர் அக்கரையில் இருக்கிறார், என்று சாக்குக் கூறுவது தவிர வேறு வழியில்லை. விழியிலே நீர் வழிய வழிய வதைபட்டுக்கிடந்த அந்த வனிதைக்கு, காலம், அவளுடைய கவலையைப் பற்றிய கவலையால் ஓய்ந்து விடுமா? அது ஓடிக்கொண்டேயிருந்தது. ஓராண்டு, ஈராண்டு, மூவாண்டு, ஐந்து ஆண்டுகள் கழிந்தன, தாலியுடன் மணமாகாத மங்கை உலவிக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் காணாது தத்தி நடக்கும் பருவ மடைந்தான் தங்கராஜன், தாய் தங்கமே என்று கொஞ்ச, பாட்டி ராஜா என்று கொஞ்ச, இரண்டு ஆசை மொழிகளும் திரண்டு, குழந்தைக்குத் தங்கராஜன் என்ற பெயராக ஏற்பட்டது. தங்கராஜனின் தகப்பனாரின் "ராஜ்யம்", "தங்கம்" இரண்டுக்கும் தேய்வு ஏற்பட்டுக்-கொண்டே இருந்தது, இந்த ஐந்து வருஷங்களிலே! இலுப்பப்பட்டி மிராசுதாரருக்கு ஒரு வியாஜ்யம். அது முனிசீப்புக் கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட் சென்றது. இந்தப் பிரயாணச் செலவு மிராசுதாரரின் தங்க நகைகளை மார்வாடிக்கும், நிலத்தின் முக்கிய பகுதிகளை, வேறோர் ஜெமீனுக்கும் கட்டணமாக்கிவிட்டது.
"எந்த வேளையிலே நீ எனக்கு மருமகனாக வந்தாயோ, அன்றே என்னைச் சனி பிடித்துத் கொண்டது. என் முகத்திலே விழிக்காதே, உன்னைக் கண்டாலே எனக்குக் கடுங்கோபம் பிறக்கிறது."
"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும், கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. உன்னுடைய பணத் திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே, உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக்கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும் போதே எனக்கு வருகிற கோபம் கோடாரி யையோ அரிவாளையோ தேடச் சொல்கிறது."
மாமனாரும் மருமகனும் சொல்லிக்கொள்ளவில்லையே யொழிய, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போ தெல்லாம், கண்கள் இக்கருத்துகளையே காட்டின.
கேஸ் தோற்றுவிட்டது. கஷ்டம் முற்றிவிட்டது. இலுப்பப்பட்டி கைமாறி விட்டது போலத்தான் - என்று மிராசுதாரர் சொல்லவில்லை, அவருடைய வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், இவைகள் வேறு என்ன கூறின !!
சீமானின் மருமகனாகிச் சிங்காரமாக வாழ நினைத்த கனகு, சீரழிந்த மிராசுக் குடும்பத்தைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப்பைத்தான் பெற்றான், குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதைபோல!
தேசாந்திரி திருவேங்கடத்துக்குத் தன் குடும்பத்தின் நிலைமையை யாரும் கூறவில்லை. யாருக்கு என்ன அக்கரை ! அவன் ஒருநாள் அன்போடு, உபசரித்தான் ஒரு ஆண் டியை! அந்த ஆண்டி மாறுவேடத்திலே வந்திருந்த இலட்சாதிகாரி என்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்குக் கிடைத்த சோறு வேறொருவனின் பசியைத் தீர்க்க உதவட்டும் என்ற பெரிய தத்துவத்தையும் அவன் யாரிடமும் பாடங் கேட்டவனல்ல. அன்று அவலுக்குப் போதை! சோறு இருந்தது நிரம்ப, பசி இல்லை, பாதையிலே சுருண்டுக்கிடந்தான் ஒரு பரதேசி ; தூக்கி எடுத்துவைத்துக்கொண்டு உபசரித்தான் திருவேங்கடம்!
பரதேசிக்கோலத்திலே பல ஊர் சுற்றித் தர்மவான்களின் தப்பிலித்தனம், புண்ணியவான்கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக்கண்டு அனுபவ அறிவு பெற்றுவந்த அருமைநாயகம் பிள்ளை, பல இலட்சத்தைப் பாங்கியில் வைத்திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது கண்ட அருமைநாயகம், அந்த ஆண்டிக்கே தன் சொத்து முழுவதையும் தந்துவிடுவது என்று தீர்மானித்து விட்டான். அதைச் சொன்னால் அவன் நம்பமாட்டான் என்பதற்காகத் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. தன்னுடன் வரும்படி கூறினான். 'விடு நமக்கு நாடு முழுதுமே, ஓடு உண்டு கையில்' என்ற விருத்தத்தைப் பாடியபடி சம்மதித்தான் திருவேங்கடம். இருவரும், பல ஊர் அலைந்துவிட்டு அருமைநாயகத்தின் ஊராகிய ஆற்றூர் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றூரிலே, தன் குடும்பம் இருப்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. யாருக்குத் தெரியும்? ஆற்றூரிலே அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்கையில், தனபாக்கியத்தைத் திருவேங்கடம் கண்டான், ஆச்சரியமடைந்தான், குடிசை சென்றான், சுந்தரியைக் கண்டான், தங்கராஜனைக் கண்டான், தகதக வென ஆடினான் சந்தோஷத்தால். மெள்ள மெள்ள விஷயத்தைத் திருவேங்கடம் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித்தது.
"எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக்கிறேன்."
"வேண்டாம். அவன் பெரிய பணக்காரன். உலகம் அவன் பக்கம் பேசும்."
"துறவிக்கு வேந்தன் துரும்பு, தெரியுமா? அவன் மனிதனாடி? இந்தச் சொர்ண விக்ரகத்தை அவன் கண்டானா? அவன் பணக்காரனானால் எனக்கென்ன பயமா? சீ! நான் எத்தனையோ பணக்காரன் பரதேசிப்பயலாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன். இதோ இதே ஊரிலே இருக்கிறாரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்குத் தெரியும். பணமாம் பணம். அது என்னடி செய்யும்?"
திருவேங்கடம். தன் மனைவியிடம் இதுபோலச் சொல்லிக்கொண்டு இல்லை, மனதிலே எண்ணினான் பல, சொல்ல வாய் வரவில்லை.
திருவேங்கடத்தின் குடும்பத்தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிர்க்கதியாகி, நிந்தனைக் குட்பட்டுக்கிடந்த ஒரு குடும்பத்தைக் காய் பாற்றும் சக்தி தனக்கு இருந்ததற்காகச் சந்தோஷ மடைந்தார். குடிசை காலியாகிவிட்டது. தங்கராஜன், பெரிய தாத்தா மடியில் கொஞ்ச நேரமும், சின்னத்தாத்தா தோளில் கொஞ்ச நேரமும் இருப்பான், கூத்தாடுவான், கூவுவான். கண்டு களிப்பாள் சுந்தரி, மறுகணம், அவள் கண்களிலே நீர் பெருகும். ஏழ்மையிலே மூழ்கியிருந்த சமயத்திலாவது, சதா ஜீவனத்துக்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டி யிருந்ததால், விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமை நாயகத்தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம் இல்லாமற் போகவே, சுந்தரிக்கு விசாரம் விடாதநோயாகிவிட்டது.
இலுப்பப்பட்டியார் இறந்தார், கனகனின் தகப்பனார் அவரைத் தொடர்ந்தார், காவேரி காச நோய்க்குப் பலியானாள் . கனகன் கப்பலேறினான், பர்மாவுக்குக் கடைக் கணக்கப்பிள்ளையாக ! அக்கரையிலிருக்கிறான் சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகி விட்டது!
தங்கராஜனுக்கு வயது பத்தாகிவிட்டது. அவனுக்குச் சொல்லவில்லை, தாயாரின் துயரத்தை. 'தகப்பன் அக்கரையிலே ஏன் இருக்கிறார், எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?' என்று அவன் கேட்கவுமில்லை. என்ன காரணத்தாலோ, மனைவியிடம் சண்டையிட்டு விட்டு, அவர் போய்விட்டார் என்று நம்பியிருந்தான்.
கனகன் வேலைக்கு அமர்ந்திருந்த கடையின் முதலாளி, கொடுமைக்காரன். அவன் தந்த இடி பொறுக்க மாட்டாமல், கனகன், தாய்நாடு சென்று அன்னக்காவடியாக வாவது வாழலாம் என்று அக்கரையை விட்டு இக்கரை வந்தான். சுந்தரி இருப்பதை, அவனுக்கு யாரோ சொல்லியல்ல அவன் ஆற்றூருக்கு வந்தது. ஆற்றூரிலே அருமைநாயகம் என்பவர், ஆலை வைத்திருக்கிறார், அங்கு சென்றால் வேலை கிடைக்கும் என்ற செய்தி தெரிந்து, வேலைக்காக அவர் வீடு வந்தான்.
கனகனுடைய வரலாற்றினைக் கேட்டார் அருமை நாயகம்.
"நீதானா அந்த ஆசாமி! அட மடையனே, உன்னாலே நிராகரிக்கப்பட்ட பெண்ணிடம் போய் மன்னிப்புக் கேட் டுக்கொள்" என்று அவர் சொல்லவில்லை.
"உட்கார் தம்பி! உட்கார்! உன்னைக் காணப் பல நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தேன். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் மருமகன் கனகு நீதானா. சரி, சரி ! உட்கார்" என்று கூறினார், அருமைநாயகம் . ஆச்சரியத்தால் திகைத்துப்போனான் கனகன்.
"தங்கம்! ராஜா ! டே, தம்பி, தங்கராஜ் " என்று அழைத்தார். "தாத்தா, இதோ வந்தேன்" என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் பையன்.
"உன் அப்பா வந்திருக்கிறார்" என்றார், கனகன் மிரண்டான், பையனின் கண்கள் அகன்றன, வாய் திறந்தபடி நின்றான், முகத்திலே ஓர் விவரிக்கமுடியாத உணர்ச்சிக்குறி!
அடுத்த விநாடி 'அப்பா!' என்றான், பாய்ந்தோடி கனகுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான், கனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஐயா ! இது என்ன? வேலை தேடிக்கொண்டு இங்கே நான் வந்தேன். இது யார் இந்தச் சிறுவன் என் மகன் என்று கூறுகிறீரே. அவனும் அப்பா என்று அழைக்கிறானே, இதென்ன விந்தை!" என்று கனகன் கேட்கவில்லை. அவனுடைய கண்களின் மிரட்சியைக் கண்டு, அருமைநாயகம் சிரித்தபோது, கனகன் இப்படிக் கேட்க எண்ணுகிறான் என்பதை அவர் தெரிந்தேதான் சிரித்தார் என்பது தெரிந்தது.
அடுத்த விநாடி துள்ளி ஓடினான் தங்கம்.
'அம்மா, அம்மா, அப்பா, அப்பா, அப்பா, வந்து விட்டார். ஓடிவா, சீக்கிரம் வா '- என்று கூவினான்; ஓடினான் வீட்டுக்குள் தாயைத் தேடிக்கொண்டு.
”அப்பா, அப்பா, அப்பா, வந்துவிட்டார்."ஆம், ஆம். அவனுடைய செவிகளுக்கு அந்த மொழி எவ்வளவு தான் இன்பம் தந்தது. பல நாட்கள் மெல்லிய குரலிலே, யாருக்கும் தெரியாதபடி, அவனாகக் கூறிக்கொள்வான், அப்பா, அப்பா, இல்லை, அப்பா இங்கே இல்லை, அப்பா வரவில்லை. அப்பா, இன்னமும் வரவில்லை, என்று. அப்பா வந்துவிட்டார், என்று கூவினான், மான் போலத் துள்ளிக் குதித்தான். தங்கராஜனின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட சுந்தரிக்குப் பயமாகிவிட்டது, அவனுக்குப் பித்தம் பிடித்துவிட்டதோ என்று. தாயைக் கண்ட உடனே, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் தங்கராஜன், கனகன் இருந்த அறைக்குள். வாசற்படியருகே சென்றாள். உள்ளே இருந்த கனகன் "சுந்தரி." என்று கூவினான், இருவரிலே யார் முதலிலே பாய்ந்தது என்று தெரிய முடியாதபடி, ஒரு ஆனந்த அணைப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும் ஒரு சிறுவனும் அங்கே இருந்ததை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இருவர் விழிகளிலும் நீர் குபு குபுவெனக் கிளம்பி வழிந்தது.
"சுந்தரி ! சுந்தரி ! கண்ணே சுந்தரி," என்று கதறினான் கனகு . முகத்தைத் தன் இருகரங்களிலும் பிடித்துக் கொண்டு உற்றுப்பார்த்தான். அவள் கன்னத்திலே புரண்டோடிய கண்ணீரைத் துடைத்தான், மீண்டும் அணைத்துக் கொள்ளச் சென்றான் ; கழுத்திலே தாலி இருக்கக்கண்டான் - பயந்தான், சுந்தரியின் முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது.
"தங்கம், சின்னத் தாத்தாவை அழைத்துவா" என்று கூறினாள், சிறுவன் ஓடினான், அவனைப் பின்தொடர்ந்து சென்றார் அருமைநாயகம். "அரை மணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக்கூடாது" என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரிதத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம் . கனகன் தன் கதையைக் கூறினான், அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட்டான்.
"அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்துவிட்டார்' என்று ஆற்றூர்-வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு, சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல்லவில்லை, தாய் கட்டியதாலி, 'அக்கரைக்குப் போன அவள் புருஷன் வந்துவிட்டான். இனி இக்கரையிலேயேதான் இருப்பானாம்' என்று ஊரார் சொல்லிக்கொண்டார்கள். அவன் கட்டாத தாலி அவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய அந்த நாள் நடவடிக்கையை யார் அவர்களுக்குச் சொன்னார்கள்?
சுந்தரி : - தங்கம்! உங்க அப்பாவை ரொம்ப நல்லவ ரென்று எண்ணாதே ! ஜாக்கிரதை. ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லி டட்டுமா?"
கனகன் :-"சுந்தரி, சுந்தரி, சொல்லாதே சுந்தரி ! உனக்குக் கோடி புண்யம், அதைமட்டும் சொல்லாதே!"
தங்கம் :-"அம்மா, அம்மா, சொல்லம்மா, சொல்லு! அப்பா, அம்மா வாயை மூடிடாதே! அம்மா, சொல்லு!
சுந்தரி :- "உங்க அப்பா என்ன செய்தாரு தெரி யுமா? ஒருநாள்.. ....
கனகு :-"ஆ, அப்பா அடிவயிற்றிலே வலிக்குதே, அப்பப்பா, பொறுக்க முடிய வில்லையே, தம்பி, ஓடிப்போய்க் கொஞ்சம் தண்ணீர் எடுத்துவா. (பையன் ஓடினதும், கனகன், சுந்தரியைக் கட்டித் தழுவிக்கொண்டு) சுந்தரி, கண்ணில்லே, சொல்லாதம்மா, தயவுசெய்து சொல்லாதே கண்ணு.
சுந்தரி :- இப்படித் தளுக்கு செய்துவிட்டுத்தானே என்னைத் தவிக்கவைத்துவிட்டுப் போயிட்டிங்க முன்னே.
கனகன் :-"அதற்காகத்தான் தீவாந்திர சிட்சையை அனுபவித்தாகிவிட்டதே!”
சுந்தரி :- ஐயோ! பாவம்! என்னாலே உங்களுக்கு இத்தனை கஷ்டம்.
(அறைக்கு வெளியே சிறுவன்)
தங்கம் :- அப்பா! இதோ தண்ணீர்.
(அறைக்குள்ளே சுந்தரி )
சுந்தரி :---விடுங்கள், பையன் வந்துவிடுவான்.
(உள்ளே நுழைந்த சிறுவன்)
தங்கம்:-- அப்பா வலி போயிடுத்தா?
சுந்தரி :- ஓ! கிலியும் போயிடுத்து.
தங்கம் :- நீ, என்னா புலியா, எங்க அப்பா கிலி அடைய. அது சரி, அம்மா ! சொல்றேன் சொல்றேனுன்னு சும்மா இருக்கறயே, சொல்லம்மா!
இந்த ரசமான நாடகம் அடிக்கடி நடந்தது, ஆனால் சுந்தரி ஒருநாளாவது, தங்கராஜனுக்குக் காவேரியிலே ஸ்நானம் செய்த கனகனின் கதையை மட்டும் சொல்லவே யில்லை, எப்படிச் சொல்ல முடியும் !!
-------------
3. தீர்ப்பளியுங்கள்!
என் கண்பர், மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, கோர்ட்டிலே மட்டுந்தான் கோபமாகக் காணப்படுவார்.
அதைக்கூட அவர் கோபமென்று ஒப்புக்கொள்வதில்லை. நீதியின் உருவம்!-என்று கூறுவார். "என்னமோ மருது! நீதி இப்படி மிரட்டும் உருவிலே இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை" என்று நான் கூறுவதுண்டு- கோர்ட்டு நேரத்தில் அல்ல.
அன்று மாலை, மருதவாணம் பிள்ளை, என்னைக் கண் டதும், "வா, வா ! உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் . நாளைக்கு ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்க வேண்டும், உன்னிடம் அதைக் கூறி, உன் தீர்ப்பு என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.
"இதுதானா எனக்கு வேலை! உனக்குத்தான் சர்க்காரிலே சம்பளம் தருகிறார்கள். சட்டத்தைப் படித்துச் சம்பவங்களை அலசி, துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்ய. எனக்கேன் அந்த வேலை?" என்று நான் கேலியாகக் கூறினேன்.
"உனக்கே மாஜிஸ்ட்ரேட் வேலை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்ளேன்" என்றார் மருதவாணம், மாலை வேளையிலே அவருக்கு இயல்பாகவே மலரும் மகிழ்ச்சியுடன்.
"எனக்கு அந்த வேலை கிடைத்தால் தானே !" என்று நான் கொஞ்சம் கெம்பீரமாகக் கூறினேன். மருதவாணர், மாஜிஸ்ட்ரேட் குரலிலே ஆரம்பித்தார் :
"பெயர் மகாலிங்கம். வயது முப்பது. தொழில், நிலையாக ஒன்றுமில்லை; குற்றச்சாட்டு, பித்தளைச் சங்கலியைத் தங்கச் சங்கலி என்று ஏமாற்றி விற்றான் - இதுதான் வழக்கு . இதிலே தீர்ப்புக் கூறவேண்டும்."
"சரி! மகாலிங்கத்தின் வாக்குமூலம் என்ன?" என்று கேட்டேன், ஒரு அதிகாரி போலவே.
"அதிலே சிக்கல் ஒன்றும் இல்லை. அவன் ஒப்புக் கொள்ளுகிறான்" என்றார் மருதவாணம்.
"இவ்வளவுதானா? இதிலே யோசனைக்கு என்ன இடமிருக்கிறது? குற்றவாளி, குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறான். உடனே சட்டப் புத்தகத்திலே, அந்தக் குற்றத்திற்காகச் செக்ஷன் என்ன, அதற்கான தண்டனை என்ன என்று பார்க்க வேண்டியதுதானே. இதற்கு என்னைப் பரீட்சிக்க என்ன இருக்கிறது?" என்று நான் கூறினேன்.
"தங்கச் சங்கலி என்று முலாம் பூசியதை விற்றிருக்கிறான், ஒப்புக்கொண்டு மிருக்கிறான், சாட்சியங்களும், அதேபோல அப்பு அழுக்கு இல்லை என்றாலும் இது சிக்கலான பிரச்னை" என்றார் மருதவாணர்.
"வேடிக்கையாகவன்றோ நீர் பேசுகிறீர்" என்று நான் கொஞ்சம் மரியாதையாகவே சொன்னேன், நண்பரின் முகத்திலே, கோர்ட்டுக்களை தட்டுவது கண்டு. கொஞ்சநேரம் மௌனமாகவே இருந்தார் மருதவாணர், கவலையுடன் காணப்பட்டார். எனக்கு ஏதாவது பேசி வைப்போம் என்ற எண்ணம் உண்டாயிற்று.
"மகாலிங்கம் என்ற ஆள் தெரிந்தவனா?" என்றேன் நான். உடனே மருதவாணரின் உடல் குலுங்கிற்று. முள்தைத்தவர் அலறுவது போன்ற குரலிலே, "தெரிந்தவனானால் என்ன, தெரியாவிட்டால் என்ன? நீதியின் கண்களுக்குச் சினேகிதன், பந்து, இவைகள் உண்டா ? பைத்தியக்காரா! எனக்கு எப்போதும் அம்மாதிரி எண்ணம் வருவதே கிடையாது. யாருக்கும் வரக்கூடாது. நீதியின் சக்கரம் சாமான்யமானதல்ல" என்று கூறினார். இதேது, இன்று இரவு நெடுநேரம் வரையிலே இவருடைய உபதேசத்தைக் கேட்க வேண்டும் போலிருக்கிறதே" என்று நான் சற்று பயந்தேன்.
"மகாலிங்கம், கள்ளன், அயோக்யன், குடியன் ; இவற்றிற்கு ருஜு இருக்கிறது" என்று தனக்குத்தானே கூறிக்கொள்பவர் போலப் பேசினார் என் நண்பர்.
சரி! ருஜு இருக்கும் போது, கள்ளனை, அயோக்யனைத் தண்டிக்க வேண்டியதுதானே. இதிலே தயவு தாட்சணியம் என்னமோ இல்லை. கூடாது. இன்னம் யோசனை ஏன்?" என்று நான் மாஜிஸ்ட்ரேட்டானேன். மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளையோ ஒரு விசித்திர வக்கீலானார்.
"மகாலிங்கம், கள்ளன், அயோக்யன், குடியன் என்பதற்கு எப்படி ஆதாரம் இருக்கிறதோ அதேபோலவே அவன் சாது, யோக்யன், ஏமாந்தவன் என்பதற்கும் ருஜு இருக்கிறது" என்றார்.
உண்மையிலேயே இது சிக்கலான பிரச்னைதான், என் நண்பர் கவலைப்படுவதற்குக் காரணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன்.
"வேடிக்கையாக இருக்கிறதே சொல்வது! யோக்யன், அயோக்யன், என்று ஒரே ஆளை எப்படிக் கூறுவது? அமாவாசை பௌர்ணமி தினத்தில் எனக் கூறுவது போல இருக்கிறதே!" என்று நான் உவமையை உதவிக்கு இழுத்தேன். மருகவாணர், அதிலும் சளைக்கவில்லை. "பச்சை ஒணான், அடிக்கடி நிறம் மாறும் தெரியுமா?" என்று கேட்டார் . ”ஆமாம்!" என்று நான் இழுத்தேன். "என்ன ஆமாம், எதற்கும் ஆமாம் சாமி போடுகிறாய். ஊரைக் கொளுத்துவது தவறுதானே?" என்று வேறோர் கேள்வியைக் கேட்டார். திடுக்கிட்டு, "நிச்சயமாகத் தவறுதான்" என்றேன். "தவறுதான்! ஆனால் இலங்கா தகனம் புண்ய காரியமாகப் பாவிக்கப் படவில்லையா?" என்றார் நண்பர். இதேது வம்பு வளர்ந்தபடி இருக்கிறதே என்று அஞ்சி, "அது வேறு விஷயம்! அரக்கனுடைய ஊரை அனுமார் கொளுத்தினார், அது .........." என்று முடிக்கவேண்டிய அவசியமில்லாத வாசகத்தை வீசினேன் . "அது கடவுள் விஷயம், அதுதானே உன் வாதம்" என்று என் நண்பர் என் வாசகத்தை முடித்து விட்டு, மேலே பேசலானார் : "மகாலிங்கம் யோக்யன் தான், அயோக்யனுந்தான்! ஏமாற்றினான் என்பதும் உண்மை, ஏமாந்தான் என்பதும் உண்மைதான்!" என்றார்.
"எனக்கு விளங்கவில்லையே ! கோர்ட்டிலே வந்த சாட்சிகள், அவன் யோக்யன், சாது, ஏமாந்தவன் என்றா சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதுதானே கிடையாது! கோர்ட்டிலே அவ்வித சாட்சியே கிடையாது" என்று கூறிவிட்டு, உள்ளே சென்றார், சில கடிதங்களுடன் வந்து சேர்ந்தார், ஒன்றை எடுத்தார்.
"இதோ பார், இது குலாப்சந்த் சௌகார் சாட்சியம்."
"நம்பள் கடையிலேதான் இந்த மனுஷன் வந்தான். கொஞ்சம் இருட்டு. நம்பள் கடையிலேயும் விளக்குச் சரியா இல்லை. எண்ணெய் ரேஷன் காலம். சங்கலி கொடுத்தான், எத்தனை சவரன்? இது நம்பள் கேட்டது. எடை போட்டு பார் சேட்! அவன் சொன்னான். நம்பள்கி சந்தேகம். என்னா? சங்கலி கொண்டாந்தவன் எடை சொல்லாமே என் இருக்கான்னு யோசிச்சான். நாம்பள் சந்தேகம் வந்தாச்சா, உடனே போலீசுக்கு ஆள்விடுவான். பத்து வருஷமா நம்பள் வியாபாரம் இப்படித்தான். சாயா சாப்பட்டு வர்ரேன்னு சொல்லி போனேன், 308 கான்ஸ் டெபிள் மூலைக்கடை பக்கம் இருந்தான், கூப்பிட்டு வந்து, காட்டினேன், லாக்கப் ஆனான், நம்பள், ராம்ஜீ தயவிலே
ஆபத்திலே மாட்டாமே தப்பினான்."
இது மற்றொரு சாட்சி, சதாசிவம் வாக்குமூலம்:
"தங்க முலாம் பூசிய சங்கலியை விற்றுத் தந்தால் எனக்குப் பாதி பாகம் தருவதாக மகாலிங்கம் என்னைக் கூப்பிட்டான், சங்கிலியையும் காட்டினான். நான் இம் மாதிரி திருட்டுக் காரியத்துக்கு உடந்தையாக இருக்க முடியாதென்று சொல்லிவிட்டேன்."
308ம் நம்பர் கான்ஸ்டெபிள், "சேட் வந்தழைத்ததும், நான் கடைக்குப் போனேன். என்னைப் பார்த்த உடனே இவன் முகத்திலே பயம் வந்துவிட்டது. ஏதடா சங்கலி என்று கேட்டேன். பதில் சொல்லாமல் மரம் போலிருந்தான். இதற்குள் சேட், உறைத்துப் பார்த்து, ”அரேரே! இது பொன் இல்லை, பித்தளை என்று சொன்னார். உடனே இவனை லாக்கப் செய்தேன்" இப்படியே சாட்சியங்கள் உள்ளன - என்று மருதவாணர் கூறிவிட்டு, ஆயாசத்தோடு இருந்தார். இவ்வளவு வெள்ளையாக வழக்கு இருக்க இவர் என் வேதனைப்படுகிறார் என்பது விளங்கவில்லை எனக்கு.
"சரியானபடி சிக்கிக்கொண்டிருக்கிறான். இனி என்ன இருக்கிறது நான் கூற' என்று சொன்னேன்.
# # #
”எனக்கோ கடுமையான ஜூரம்! வைத்தியர் கூட மிரண்டுவிட்டார். மார்புச் சளி அதிகமாக இருக்கிறது, சுவாசம் வருவது கூடச் சிரமமாக இருக்கிறது என்று கூறினார். என் மனைவி என்ன செய்வாள்? அவள் மேலே, ஒரு நகையும் கிடையாது. இருந்தது ஒரு வளையல், அது போனமாதம் தீர்ந்துவிட்டது. வீட்டிலே பாத்திரங்கள் கூடக் கிடையாது. இந்த நிலையிலே, பத்து ரூபாயாகும் ஊசிபோட என்று டாக்டர் கூறிவிட்டார். கையிலே பணம் வந்தாகவேண்டும் என்றார். நிர்க்கதியாக விடப் பட்ட நான், பிராண அவஸ்த்தையிலே இருப்பதை எடுத்துச் சொல்லி, நான் வண்டியோட்டும் முதலாளியிடம் போய் அழுதாள் என் மனைவி. பத்து நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறேனே பாதிப் பிராணன் போய்விட்டதே என்று ஈவு இரக்கம் கொஞ்சமும் இன்றி, அந்தக் கொலை காரப் பாதகன், ஒரு பைசாகடத் தரமுடியாது, அவன் ஏற்கனவே ஆறு ரூபாய் பாக்கி என்று கூறிவிட்டான். மாங்கலியப் பிச்சை தரவேண்டும் என்று என் மனைவி கேட்டாளாம். அதற்குக் கோயில் சுற்று என்று சொல்லித் துரத்தி விட்டானாம் ! மாடாக உழைத்தேன், எனக்கு உயிர் போகிறது என்றால் பத்து ரூபாய் தர மறுத்துவிட்டான். இப்படிப்பட்ட என்னெஞ்சர்கள் வாழ்கிறார்கள்.
கஷ்டாளிகள் கால் வயிற்றுக்குக் காலமுழுதும் உழைக்கிறார்கள், சரி, சாக வேண்டியதுதான் என்று எண்ணி ஏங்கினேன். நான் மாண்டு போனால் மங்காவின் கதி என்னாகும்? என் ரங்கன், நாலு வயதுப் பையன், அவன் தெருவிலே அலை வான். இந்த இலட்சணத்திலே அவள் எட்டாம் மாதம்! இந்த உலகிலே, என்னைக் காப்பாற்ற, மரணத்திலிருந்து என்னைத் தப்பவைக்க யாரும் இல்லை. மங்கா அழுதவள் அழுதபடியே இருந்தாள். அந்த நேரத்திலே, புண்யமூர்த்தி மகாலிங்கம் வந்தான். அவன் பூர்ணாயுசுடன் நோய் கொடி யின்றி வாழவேண்டும் . என் நிலைமையைக் கண்டதும், கோவெனக் கதறினான். வரதா! உனக்கு இவ்வளவு அதிகமாக ஜூரம் என்று எனக்குத் தெரியாமல் போச்சே என்று விசனித்தான். "அக்கா ! அழாதே. ஆண்டவன் நல்லவழி காட்டுவார்" என்று என் மனைவிக்குத் தேறுதல் கூறினான். அவனுடைய அன்பு எனக்கு ஆயிரம் டாக்டர்களின் உதவியைவிட மேலானதாக இருந்தது. உயிருக்கு ஊசலாடிக் கொண்டு, ஊரிலே ஒருவர் உதவியின்றி, வேலை செய்துவந்த இடத்திலே கைவிடப்பட்ட இந்தத் தர்பக்கட்டையிடம் தயை காட்டி, ஆறுதல் கூறினான். அவனுடைய தர்ம சிந்த னையைப் பார்த்தபோது, கைதுக்கிக் கும்பிட்டேன். அது வரையிலே அடக்கிவைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டினாள், என் மனைவி.
"ஆண்டவன் எனக்கு என்ன வழியப்பா காட்டப் போகிறார்? ஆண்டவன் இருக்கிறானா? எங்கே இருக்கிறான்! இதோ என்புருஷர் வதைகிறார். கண்ணைத் திறக்கிறேன் கலம் தண்ணீர் விடுகிறேன். தெய்வம் என்ன செய்கிறது? தெருவிலே ஏழைகளை அலைய வைக்கிறது, தெய்வமாம் தெய்வம்! திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என் பது பாட்டி கதை" என்று அழுது கொண்டே கூறினாள்.
"அழாதே அக்கா ! ஆண்டவன் இருந்துதான், என்னை இங்கே அனுப்பிவைத்தார்" என்று சொன்னான் அந்தச் சாந்தமூர்த்தி. " ஆமாம் உன்னைப்போல, ஈரமுள்ள நெஞ்சு கொண்டவர்கள் வந்துதான் ஆண்டவனின் மானத்தைக் காப்பாற்ற வேண்டி யிருக்கிறது" என்று அவள் பதறிப் பேசினாள். பத்து ரூபாய் கேட்கிறார் டாக்டர் என்பதைக் கூறினாள். பத்து ரூபாய் என்றதும் பாவம், மகாலிங்கம், பயந்து போனான், அவனிடம் ஏது அவ்வளவு பணம்? அவன் என்னைப்போல் ஒரு ஏழை. எனக்காவது ஒரு குழந்தை. அவனுக்கு நாலு. எனக்கு ஒரு இடம் இருந்தது வேலை செய்ய, அவனுக்கோ ஒரு வேலையும் நிலையாக இருப்பதில்லை. நோயாளி மனைவி, வயதான தாய், வருமானம் கட்டை. இந்த இலட்சணத்திலே பத்து ரூபாய் தர முடியுமா அவனுக்கு?
"அப்பா! நீ பக்கத்திலே இருந்தாலே போதும், பத்து ஆயிரம் கொடுத்த மாதிரிதான். என் பிராணன் போகிற சமயத்திலே, உன்னைப்போன்ற ஒரு உத்தமச் சினேகிதன் பக்கத்திலே இருந்தால், அதுவே என் மரண வேதனையைக் குறைக்கும் என்று நான் ஈனக்குரலிலே கூறி னேன். எழுந்தான் "இதோ வருகிறேன்" என்றான். வெளியே போனான். வேதனையைக் காணச் சகியாமல் வெளியே போனான் என்று நான் நினைத்தேன். அரைமணி நேரத்திற்கெல்லாம், டாக்டருடன் வந்தான். ஊசி போட் டார், என்னைப் பணம் கேட்கவில்லை. அதிலிருந்து ஜுரம் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. நான் எழுந்து நடமாடும் சக்தி பெறுகிறவரையிலே, ரொட்டியும் அவன் தான் வாங்கித்தந்தான். 'ஏது மகாலிங்கம் பணம்?' என்று எத்தனையோ தடவை கேட்டேன். பதிலே சொல்ல வில்லை அந்தத் தர்மசீலன், தயாளமூர்த்தி, புண்யாத்மா, அவதாரபுருஷன், என் உயிரைக் காப்பாற்றினான். ஏழை, ஏழைக்கு உதவி, ஏழையே, ஏழைக்கு உயிர்கொடுக்கும் தெய்வம். மகாலிங்கம், சாதாரண பிறப்பல்ல. அவன் தெய்வப் பிறப்பு."
இது, வண்டிக்கார வரதன் வாக்குமூலம் - கோர்ட் டில் சொன்னதல்ல. என்னிடம் நேரில் சொன்னான், காலில் விழுந்து, "எப்படியாவது அந்தக் காருண்யவானைக் காப்பாற்ற வேண்டும்" என்று கெஞ்சிக் கேட்டான். உண்மையிலேயே ஒரு டாக்டருக்கு, ஒரு உயிர் போகுமே, நம்மாலான உதவி செய்வோம் என்ற எண்ணம் தோன்ற வில்லை. நம்மிடம் நாய்போலக் கிடந்தானே, உயிருக்கே ஆபத்தாக இருக்கிறதாமே ஒரு பத்து ரூபாய் கடன் தருவோம் என்ற எண்ணம், ஒரு பணக்காரனுக்குத் தோன்றவில்லை. பராரி மகாலிங்கத்தின் மனதிலே, அவ் வளவு அன்பு ததும்பி இருந்தது. ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு அவன் துடித்தான். ஒரு குடும்பத்தின் கண்ணீரைக் கண்டு கலங்கினான். மகாலிங்கம், யோக்யன், தர்மவான், குணசீலன், அந்த வரதன் சொன்னது போல அவன் தெய்வப் பிறப்பு - என்று இந்த வாக்குமூலம் ஒன்றைக் கொண்டே சொல்லிவிடலாம்" என்று கூறிவிட்டுப் பெரு மூச்செறிந்தார் மாஜிஸ்ட்ரேட். நான் ஆச்சரியத்தால் என்னையே மறந்தேன். மகாலிங்கம் எவ்வளவு பெரிய கர்மயோகி! அவன் மனதிலே எவ்வளவு கருணை ! அவ னுடைய செயல் எவ்வளவு சிலாக்கியமானது ! என்று புகழ்ந்தேன்.
"ஆனால் மறந்துவிடாதே, மகாலிங்கம் செய்திருக்கும் குற்றத்தை" என்று மாஜிஸ்ட்ரேட் கவனப்படுத்தினார். 'ஆம்! அவன் தண்டிக்கப்படவேண்டியவன்' என்பதை நினைத்ததும், என் உடல் குலுங்கிற்று. இப்படிப்பட்டவனுக்குத் தண்டனை !! அவன் காட்டிய சினேக வாஞ்சை, மனிதாபிமானம், ஆபத்தில் உதவுதல், இவைகளுக்குப் பரிசு கிடையாதா? இவைகளைக் கவனிப்பவர் இல்லையா? இல்லை ஏன்? அவன் திருடன்! தியாக புருஷன் திருடனானான் ! பௌர்ணமியிலே அமாவாசை இருக்கமுடியுமா என்று நான் கேட்டேன் பைத்யக்காரத்தனமாக ! இதோ இருக் கிறதே !! கருணையைப் பொழிந்த மகாலிங்கம் களவுமாடி யிருக்கிறான் !!
"இன்னொரு வாக்குமூலம் கேள் : 'தர்மதுரையே ! மகாலிங்கம், மகாயோக்யனுங்க. பெரிய குடும்பம். பிழைப்புக்காக, யார் காலால் இட்ட வேலையையும் தலையால் செய்பவனுங்க என் மகன். அவன் சின்ன வயசிலிருந்தே யோக்யனுங்க. கஷ்ட ஜீவனம். அந்தக் கஷ்ட ஜீவனத்தி லேயும், பசி என்று சொல்லி யாராவது வந்துவிட்டா போதுங்க, தன் வயிற்றுக்குப் போதாவிட்டாலும் பரவா யில்லை என்று சொல்லி, அவர்களுக்குச் சோறு போடுவானுங்க. கெட்ட நினைப்பே கிடையாதுங்க. அவனை நீங்க காப்பாற்றாமே போனா, நாலு குழந்தையோடு அவன் பெண்ஜாதி நடுத் தெருவிலே நிற்கும். நானும் அப்படித் தான். வயசு அறுபதுக்கு மேலே ஆகுதுங்க' என்று கூறி என் காலில் விழுந்து அழுதாள் மகாலிங்கத்தின் தாய். அவள் வாக்குமூலத்திலிருந்து மகாலிங்கம், சாது, யோக் யன், அன்புகாட்டுபவன் என்று ஏற்படுகிறது. ஆனால் வழக்கோ விளக்கமாக இருக்கிறது; அவன் கள்ளன், அவனே குற்றத்தை ஒப்புக்கொண்டு மிருக்கிறான். இப்படிப்பட்ட யோக்யன் ஏன் அயோக்யனானான்!" என்று மருதவாணர் கேட்டார் . "எனக்குத் தலை சுழலுகிறது இதைக் கேட்கக் கேட்க" என்று நான் சொன்னேன், உண்மையாகவே எனக்கு அப்படித்தான் இருந்தது.
"நம்ம வீட்டுத் தோட்டக்காரன் இருக்கிறானே துரைசாமி, அவன் சொன்னதோ இதைவிட அதிகம். மகாலிங்கம், எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்வானாம். யாராவது வீதியிலே, தூக்கமுடியாமல் பாரமான மூட்டையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டால் அவன் தான், உதவிக்கு வருவானாம். போக்கிரி எவனாவது யாரிடமாவது வம்புக்குப் போனால், இவன் போய்ச் சமாதானம் செய்வானாம், அந்தப் போக்கிரி அடித்தால் கூடப் பட்டுக்கொள்வானாம். அனாதைகள் இருந்தால், வீடு வீடாகப் பிடி சோறு எடுத்து, அவர்களுக்கு உணவளிப்பானாம். ஒரு தடவை, நம்ம தோட்டத்திலே தேங்காய் திருடி விட்டானாம் எவனோ, மகாலிங்கந்தான் திருடினான் என்று நினைத்துக்கொண்டு, துரைசாமி, மகாலிங்கத்தைச் சண்டைக்கு இழுத்துப் பலமாக அடித்து விட்டானாம். மகாலிங்கம் அவ்வளவு அடியும் பட்டுக் கொண்டு, சத்தியமாக நான் திருடவில்லை என்று சொன்னானாம். கடைசியில் திருடன் வேறு ஒருவன் என்று தெரிந்ததாம். நம்ம துரைசாமிக்கு மனந்தாளாமல், மகாலிங்கத் திடம் போய் மன்னிப்புக் கேட்டானாம். "இது என்ன பிரமாதம்! என்னமோ விஷக்கடி வேளை" என்று மகாலிங்கம் பொறுமையாகப் பேசினானாம். அப்படிப்பட்ட
பொறுமைசாலியை நான் கண்டதே கிடையாதுங்க. ரொம்ப யோக்யன். எப்போதாவது அதிகக் கஷ்டமான வேலை செய்தால், குடிப்பான். ஆனால் குடித்துவிட்டுக் கூத்தாடுகிறவனுமல்ல. 'என் கையிலே பணம் ஏராளமாக இருந்தால் ஏழைகளுக்கெல்லாம் உபகாரம் செய்வேன். நான் இல்லாதவன். என்ன செய்வது' என்று ஏக்கப் படுவானாம் மகாலிங்கம்" என்று கூறினார் மாஜிஸ்ட்ரேட், துரைசாமி சொன்னான் என்று.
"ஐயோ பாவம் ! இப்படிப்பட்டவனுக்கு ஏன் கெட்ட எண்ணம் பிறந்தது" என்று நான் பரிதாபத்துடன் கேட்டேன்.
"அதை ஏன் கேட்கிறாய்! அதைச் சொன்னால் -- நீ மூர்ச்சையாகி விடுவாய், எங்கெங்கு விசாரம் இருந்ததோ அங்கெல்லாம் மகாலிங்கம் முன்னாலே நின்று உதவி செய்வான். நோயாளிக்கு மருந்து வாங்கித் தருவான். ஏழையின் வீடு இடிந்தால், இவன் கூலி இல்லாமல், வெறும் கூழுக்கே வேலை செய்வான், குழந்தை ஏதாவது தவறி வந்துவிட்டது என்றால், வீடு கண்டுபிடித்துக் கொண்டு போய்ச் சேர்க்கிறவரையிலே, வேறு வேலையைக் கவனிக்க மாட்டான். இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்ததால் அவனுக்குக் கிடைக்கும் வேலையும் நிலைப்பதில்லை. பரோபகாரி வருகிறார், இவருக்கு வேலை வெட்டி எதற்கு? என்று கண்டித்து அனுப்பி விடுவார்கள். குடும்பமோ பெரிது. அதை நடத் திக்கொண்டு போவதே சிரமம். தன் சக்தியையும் உணராமல் உதவி செய்யும் சுபாவம். அதற்கு வேறு செலவு. இந்த நிலையிலே, நடந்திருக்கிறது இவன் வாழ்க்கை .
இச் சமயத்திலே, இவன் அதிருஷ்டச் சீட்டுக் கட்டியிருந்தான். அதிலே நூறு ரூபாய் கிடைத்தது. ஆனந்தமடைந்தான். கடன் தீரும், குடும்பத்துக்குச் சௌகரியமாகும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் முடியும் என்று மகிழ்ந்தான். அழுக்கு உடையும், தலைவிரி கோலத்துடனும், தள்ளாடி நடந்து கொண்டு, யாரோ ஒருவன், மகாலிங்கத்திடம் வந்து சேர்ந்தான் சனியன் போல. அவனுடைய நிலைமையைக் கண்டதும், மகாலிங்கத்தின் மனம் பாகாக உருகி விட்டது. "ஐயோ ! சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ? பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே" என்று சொல்லித் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறான்.
அவன் தண்டச் சோற்றைத் தாராளமாக தின்றுவிட்டு, "ஐயா! நான் பர்மாவிலிருந்து கால்நடையாக வந்தவன். ரங்கூனில் பெரிய வியாபாரி . போராத வேளையால் இந்தக் கோலம் வந்தது" என்று தன் கதையைக் கூறலானான். பர்மாவிலிருந்து பயங்கரமான ஆபத்துக்குள்ளாகிப் பல மக்கள் வதைபட்டதை மகாலிங்கம் ஏற்கனவே கேள்விப் பட்டவன். பத்து நாள் அன்னாகாரம் இல்லாமல் அவதிப் பட்டவர்கள் ! பாம்பு கடித்து இறந்தவர்கள், பாம்புக்குப் பலியானவர்கள் ! காட்டு ஜாதியாரால் கொலை-யுண்டவர்கள்! என்று பல சோகச் சேதிகளைக் கேட்டிருந்தான். ஆகவே, பர்மாவிலிருந்து வந்தேன் என்று சொன்ன உடனே மகாலிங்கத்துக்குக் கண்களிலே நீர் ததும்பிற்று.
வந்தவன், "என் குடும்பம் அடியோடு நாசமாகி விட்டதப்பா !" என்றான். மகாலிங்கம் அழுதுவிட்டான். "எப்படியோ நான் வந்து சேர்ந்தேன். திக்கு இல்லை திசை தெரியவில்லை. நீ கிடைத்தாய் பழனி யாண்டவர்போல" என்று சொல்லிக் கும்பிட்டான். "ஐயோ ! பெரியவங்க நீங்க. இந்தப் பஞ்சைப் பயலைக் கும்பிடக்-கூடாதுங்க. நான் என்ன பிரமாதமான உதவி செய்துவிட்டேன் உங்களுக்கு" என்று மகாலிங்கம் கூறினான். அப்போதுதான், வந்தவன், மெதுவாக மடியிலிருந்து, சங்கிலியை எடுத்தான். "அப்பா இது மூணு சவரன். இதை விற்க வேண்டும். விற்றால் நான், ஊர் போய்ச் சேர்ந்து ஏதாவது கடை வைத்துக்கொண்டு பிழைப்பேன். இந்த ஊருக்கோ நான் புதியவன். கடை வீதிக்கு நகையை எடுத்துக்கொண்டு போனால், சுலபத்திலே வாங்க மாட்டார்கள். அதிலும் நான் இருக்கிற அலங்கோலத்தைக் கண்டால், இது திருட்டுச் சொத்தோ என்று கூடச் சந்தேகப் படுவார்கள். ஆகையினால் எனக்கொரு உபகாரம் செய். இது மூன்று சவரன். இன்றைய விலையிலே இருநூறு ரூபா தாளும். எனக்கு ஒரு நூறு ரூபாய் கொடு போதும். சங்கிலியை நீ எடுத்துக்கொள் என்று கெஞ்சினான். மகாலிங்கம் மறுக்கவில்லை. அதிர்ஷ்டச் சீட்டுப் பணத்தை அப்படியே அந்தப் பர்மா அகதிக்குக் கொடுத்தனுப்பிவிட்டான். அந்தச் சங்கிலியைத்தான் பிறகு, மார்வாடி கடையிலே விற்க வந்தான், பிடிபட்டான். இது, மகாலிங்கத்தின் மனைவி, தன் நாலு மக்களோடு என் காலிலே விழுந்து சொன்ன வாக்குமூலம் என்றார். நான் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து, "இந்த வாக்குமூலத்தைக் கொண்டே, மகாலிங்கத்தை விடுவித்து விடலாமே" என்று சொன்னேன். மருதவாணர் சிரித்துக்கொண்டே "குற்றவாளியின் மனைவியின் வாக்குமூலத்தைக்கொண்டே எப்படி தீர்ப்பளிக்கமுடியும்? சட்டம் இடந்தராதே. மேலும் பர்மா அகதியாக நடித்தவன் யார் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, முலாம் பூசுவதற்கான சாமான்கள் மகாலிங்கத்தின் வீட்டிலேயிருந்து போலீசார் கண்டு பிடித்து எடுத்திருக்கிறார்கள்" என்று கூறினார் . "அந்தப் பர்மா அகதியாக வந்த புரட்டனே, மூலாம் பூசும் சாமானை அங்கே வைத்திருப்பான்" என்று நான் கூறினேன். "இருக்கலாம்! ருஜு ? ருஜு வேண்டுமா ! மகாலிங்கம் நிரந்தரமான தொழிலற்றவன். அவன் முலாம் பூசிய நகையை விற்க முயற்சித்தான். அதை அவனே ஒப்புக் கொள்கிறான். அவன் வீட்டிலே முலாம் போடும் கருவி கிடைத்தது. தண்டனைக்கு ஏற்றபடி ருஜக்கள் உள் எனவே, நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.
"சிக்கலான பிரச்னைதான் !" என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. நானா, தீர்ப்பளிக்க வேண்டியவன் ! என் தீர்ப்பு நெடுநாட்களுக்கு முன்பே பதிவாகி விட்டது, ஒரு வழக்குக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. அதாவது, ஏழைகள் செய்யும் குற்றங்களுக்குக் காரணம் அவர்களின் ஏழ்மை. ஆகவே தண்டிக்கப்படவேண்டியது ஆட்களல்ல, பொருளாதார பேத அமைப்பு முறை. இது என் தீர்ப்பு. ஆனால் மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, சட்டப்படி, இந்த மகாலிங்கம் வழக்கிலே, என்ன தீர்ப்பு அளிப்பது என்று கேட்கிறார் ! சொல்லுங்கள் பார்ப்போம்!!
------------
4. சுடு மூஞ்சி!
"சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே!"
- கணக்கப்பிள்ளை.
"சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டி முடியம்மா மாலையை. மணி ஆறாகப்போகிறது, அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது." -- மாலை விற்பவன்.
"ஒருநாள் கூடத் தவறமாட்டார், பெரிய பக்திமானல்லவோ அவர் ! மணி இன்னும் ஆறு ஆகவில்லையே. வந்துவிடுவார்." -- குருக்கள்.
"நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது." -- வேதம்.
"மணி ஆறா ? சரிதான், இப்பத்தான் பைத்யம், கோயிலுக்குக் கிளம்பி இருக்கும்."
--- இராமி.
# # #
சனியன், உருத்திராட்சப் பூனை, பக்திமான், கிழக்குரங்கு,
பைத்தியம்! இந்தப் "பஞ்சாட்சர" அர்ச்சனை, ஒரே நேரத்தில் ஒரே ஆசாமிக்கு, ஐந்து வேறு வேறு ஆசாமிகள் மூலம் நடந்தது. இன்னமும் எங்கெங்கு அவரைப்பற்றி என்னென்ன விதமான அர்ச்சனை நடந்தது என்று விவரித்தால் சஹஸ்ரநாமத்துக்குப் போகும். அவர் பெயர் ஆறுமுக முதலியார்.
இந்த அர்ச்சனையைப் பெற்றுக்கொண்டு, ஆறுமுக முதலியார், சும்மா இருந்தாரா? இருப்பாரா? அவர் கையில் என்னமோ, கணக்குப் புத்தகந்தான் இருந்தது. மனம்?
"சனியன் இன்னும் போய்த் தொலையவில்லையே" என்று மௌன பூஜை செய்துகொண்டிருந்த கணக்கெழுதுபவனை, ஆறுமுக முதலியார், " ஏண்டா, தின்னு கூலி " என்று திட்டினார். அந்தச் சோம்பேறி இன்னும் மாலையைக் கட்டினானோ இல்லையோ என்று, அதே நேரத்தில் எந்த மாலை விற்பவன் தன் தாயாரிடம் முதலியாரை உருத்திராட்சப் பூனை என்று அர்ச்சித்துக் கொண்டிருந்தானோ, அந்த மாலை விற்பவனைப்பற்றிச் சொன்னார்; ஒரு விநாடி ஓய்வெடுத்துக்கொண்டார். "போய் ஆகணும், போகலைன்னா விடப்போறானா அந்தப் பணம் பிடுங்கி" என்று முணுமுணுத்தார். கோயிலிலே அதே நேரத்தில் தான் குருக்கள் வேறோர் 'பக்தரிடம்' முதலியாரைப், "பெரிய பக்திமான்" என்று அர்ச்சித்தது. அழகான 'பதத்தை' ஆனந்தமாகப் பாடிக் காட்டிய, 'வித்வானை' விட்டுப் பிரிய மனமில்லாத வேதம், முதலியார் வருகிற வேளையாகிறது என்று கூறின நேரமும் அதுதான். அவள் தந்த அர்ச்சனை, அந்தக் 'கிழக்குரங்கு' என்பது. அவளுக்கும் முதலியார் அர்ச்சனை செய்யாமல் விட்டாரா? நாலைந்து பத்து ரூபாய் நோட்டுகளை மணிபர்சில் எடுத்துத் திணித்துக்கொண்டே, "மானசீக பூஜை" செய்தார். "இன்று தராவிட்டா, அந்த அல்லி தர்பார் பெரிசா இருக்கும்" என்று. "பைத்யம்" கோயிலுக்குப் போகிற நேரமாகுது என்று, முதலியாரின் இரண்டாந்தாரம் இராமி, சொல்லிக்கொண்டிருந்தது போலவே, முதலியாரும் மனதுக்குள் தன் மனைவியைப்பற்றி, "அந்தச் சுடு முஞ்சி " கஷாயம் போட்டுவைக்குதோ, இல்லைனா சினிமாவுக்குக் கிளம்பி விட்டதோ?" என்று சொல்லிக்கொண்டார். இவ்வளவு அர்ச்சனைகளும், அன்று மாலை ஆறு மணிக்கு நடந்தேறிய பிறகு, "தின்னுகூலி "யைக் கடையைப் பூட்டிக்கொண்டு போகச் சொல்லிவிட்டுச் "சோம்பேறி'" கட்டிவைத்திருந்த மாலையை வாங்கிக்கொண்டு, "பணம் பிடுங்கி" நின்று கொண்டிருந்த கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு, "அல்லி "க்குச் செலுத்தவேண்டிய காணிக்கையைக் கொடுத்து விட்டு, அவள் அடி வயிறு வலி என்று அலறியது கேட்டு, அதற்கு வைத்ய முறை கூறி விட்டு, வீட்டுக்குள் புகுந்து "சுடுமூஞ்சி" தந்த கஷா யத்தைக் குடித்துவிட்டு, "அப்பனே ! முருகா" என்று கொட்டாவி கலந்த குரலால் பஜித்துக்கொண்டே, படுக் கையில் புரண்டுகொண்டிருந்தார், அரிசி மண்டி ஆறுமுக முதலியார்.
ஒவ்வொரு நாளும் அவர் கடையில், 'அரிசி' வாங்கிக் கொண்டு போகிறவர்கள் தரும்' அர்ச்சனை' யையும், அவர்களுக்கு இவர் தரும் 'அர்ச்சனை' யையும், தொகுத்துக் கூறினால், அகராதி ஆகிவிடும்.
"இது எந்தப் பாவி கடை அரிசி....? கல்லுமாதிரி இருக்கே, வேகவே மாட்டேனெங்குதே" என்பது அடுப்பறை அர்ச்சனை, "அந்த மஞ்சா கடுதாசிக்குக் கடன் கொடுத்தா பணம் எப்ப வரும்?" இது, பணத்திலே குறியாக முதலியார், வாடிக்கைக்காரனுக்குத் தரும் அர்ச்சனை. இவ்விதம், விதவிதமான அர்ச்சனைகளைப் பெற்றுக்கொண்டும், வழங்கிக்கொண்டும், காலையிலே எட்டு மணிக்குக் கடைக்கு வருவதும், மாலை ஆறு மணிக்குக் கிளம்பிப், பூமாலை வாங்கிக்கொண்டு புவனேஸ் வரி கோயிலுக்குப் போய், அங்கு வைத்தீஸ்வர ஐயரிடம் விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொண்டு, தாசி வேதம் வீட்டுக்குப் போய் அங்கு எட்டு, ஒன்பது மணி வரையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்குப் போவார், இரண்டாந்தாரம் இராமியின் கோபத்தைப் பெற்றுக்கொள்ள.
இராமி, தாய் வீட்டிலே "கோபக்காரி" என்று பெயரெடுத்ததே இல்லை. ஒரு சமயம், இராமியின் தகப்பனார், கோபால முதலியார், சொல்லத்தகாத வார்த்தை யெல்லாம் சொல்லித் திட்டினார் ; தாயார், "பவிஷ கெட்டவளே! குலத்தைக் கெடுத்தவளே!" என்றெல்லாம் ஏசினாள். இராமி "மரம்போல நிற்பாள், அல்லது 'மல மல' வென்று கண்ணீர் வடிப்பாள், எதிர்த்து ஒரு பேச்சுப் பேசினதில்லை. பேசுவது நியாயமல்ல என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொள்வாள். அவ்வளவுக்கும் காரணம், அந்த "எதிர்வீட்டுப் பிள்ளையாண்டான் " தான். அவனிடம் இராமி, உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டாள்! பெற்றோர்களுக்குக் கொஞ்சம் 'வாடை' அடித்தது; பெண்ணைத் திட்டி அடக்கினார்கள். அந்தச் சமயத்திலே திட்டும் போதெல்லாம், இராமி, கோபித்துக்கொண்டதே இல்லை. புருஷன் வீட்டுக்கு வந்த பிறகுதான், அவளுக்கு அந்தக் "கோபம்' ஏற்பட்டது.
தாய் வீட்டிலே, எவ்வளவோ 'திட்டுகள்' கேட்டாலும், இராமிக்கு ஒரு நம்பிக்கை, அந்த நம்பிக்கையால் ஒரு சந்தோஷம் எப்போதும் அவள் உள்ளத்திலே இருந்து வந்தது. "உன் வீட்டிலே என்ன தடை விதித்தாலும் நீ பயப்படாதே இராமி! நான் எப்படியும் உன்னைக் கலியா ணம் செய்து கொள்கிறேன். எங்க பட்டணத்து மாமன் வரட்டும், அவரைக்கொண்டு உங்க அப்பாவுக்குச் சொல் லச்சொல்லிக், கலியாணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்கி றேன். இல்லைன்னா என் பேரு, ஏகாம்பரமா, பாரு" என்று, அவன் கடிதம் எழுதிக்கொடுத்திருந்தான். அதனால் இராமிக்கு நம்பிக்கை, சந்தோஷம். ஏகாம்பரத்தை எப் படியும் பெற முடியும் என்று எண்ணிக்கொண்டாள்.
இப்போதும் அவனுக்குப் பெயர் ஏகாம்பரமாகத் தான் இருந்தது. இராமியோ அரிசி மண்டி ஆறுமுக முதலியாருக்கு இரண்டாந்தாரமாகிவிட்டாள். அன்று மண அறையிலே துக்கம் மட்டுந்தான் இருந்தது, புருஷன் வீடு புகுந்ததும், கோபமும் அவள் மனதிலே புகுந்தது. ஏன்? சாந்தி முகூர்த்தத்தன்று கூறினார் ஆறுமுக முதலியார் ஒரு இரசசியத்தை, தன் சாமர்த்தியத்தை விளக்க.
"இராமி!" இதோ இப்படிப் பாரு. அடாடா! இவ்வளவு வெட்கமா? நான் என்ன வாலிபனாடியம்மா? உன்னைப்போல, "பிகுவு தளுக்குச் செய்ய" என்று
ஆரம்பித்தார், சரசப் பேச்சு.
இராமி ஒன்றும் பேசவில்லை. எந்த இராமிதான் பேச முடியும்!
"முதலியாரே! இந்த அரிசி நல்லா இல்லையே, வேறே கொடுங்களேன்' என்று வாடிக்கைக்காரர் மல்லாடி நிற் பார். ஆறுமுக முதலியார் 'சரி' என்று கூறுவாரா, எவ் வளவோ சமாதானம் கூறுவார், அரிசியைத் துடைத்துக் காட்டுவார், வாயிலே கொஞ்சம் போட்டுக் காட்டுவார், வாங்கின விலைப் பட்டியைக் காட்டுவார், ஆணை இடுவார் எதை எதையோ செய்து, வேண்டாமென்றவன் தலையிலே அதே அரிசியைக் கட்டி அனுப்புவார். அனுபவசாலி! வாதாடும் ஆண்களிடமே, வெற்றிபெற்ற அந்த அனுபவ சாலி, விழியால் பேசும் அந்தப் பெண்ணிடமா வெற்றி பெறாமல் போவார். உஹும்! ஐயயோ! என்ற வார்த்தைகளை எல்லாம் அவர், "இதோ இலை போட்டாகிவிட்டது, நெய்க் கிண்ணம் எடுத்து வருகிறேன்" என்று விருந்திடுபவர், விருந்தாளிக்கு, விருந்து நேரத்தில் கூறும் வார்த்தைகள் என்று கொண்டார். இராமிக்கு முன்பு கண்ணம்மா இதேபோலத்தான்! இருபது வயது இருக்கும் போதே தனக்குச் சினேகமான வேதம் கூடத்தான் முதலிலே, எவ்வளவோ 'பிகுவு' செய்தாள். ஆறுமுக முதலியார், கடைசியில் வெற்றி பெற்றார்! தொட்டுத் தாலி கட்டினவனாயிற்றே, விட்டுவிடுவானா!! ஆறுமுக முதலியார் செய்த தவறு அது அல்ல. தன் சாமர்த்தியத்தைக் காட்டுவதற்காக ஒரு இரகசியத்தைக் கூறினார் இராமியிடம்.
"ஏகாம்பரம் தட்டிக்கொண்டு போக இருந்தானே" என்று துவக்கினார். வேறுபக்கம் திரும்பிக் கொண்டிருந்த இராமி, அவர் பக்கம் திரும்பினாள், தன்னையும் அறியாமல்.
"பட்டணத்து மாமனை விட்டு, உங்க அப்பனைக்கூட மயக்கிவிட்டான்" என்றார் முதலியார். முகம் சிவந்தது இராமிக்கு .
முதலியார், கொஞ்ச நேரம் அந்தப் பேச்சை விட்டு விட்டு, மெல்லிய குரலால் பாடலானார். உரத்த குரல், காலை வேளையிலே, விநாயகர் அகவல் படிக்க ! இப்போது அவர், பாடியது, "மானே ! மருக்கொழுந்து " என்ற பாட்டு அரைகுறையாகத்தான் பாடினார், வேதத்தைப் பாடு பாடு" என்று கேட்டு, அவள் அரை மனதுடன் பாடிய பாட்டுத்தானே அது.
ஏகாம்பரத்தைப்பற்றி மேற்கொண்ட ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஏங்கினாள் இராமி. எப்படி கேட்கமுடியும்! என், தன்னைக் காதலித்தவன், பட்டணத்து மாமனைத் தூது அனுப்பி, தன் தகப்பனாரின் மனதைக்கூட மாற்றிவிட்டு, ஜாதகத்தையும் வாங்கிக், குருக்களிடம் காட்டியவன், திடீரென்று, அந்தப் பெண் எனக்கு வேண்டாம், என்று கூறினான் என்பது இராமிக்கு அன்றுவரை விளங்கவேயில்லை. அந்த இரகசியத்தை அறிந்தவரோ பாடுகிறார், அதுபற்றிப் பேசாமல். அவருக்கு அது இன்ப இரவு ! அவளுக்கு அப்படியா?
பாடி முடித்தார். அவரால் தன் வெற்றிப் பிரதாபத்தைக் கூறாமலிருக்க முடியவில்லை. "இராமி! ஒரு கதை சொல்லேன்" என்றார் ; தெரியாது' என்று ஜாடை காட்டினாள் இராமி. 'நான் சொல்லட்டுமா ஒரு கதை?' என்று கேட்டார். அவள் சொல்லச் சொல்ல வில்லை : அவரே சொல்ல ஆரம்பித்தார்.
"ஒரே ஒரு ஊரிலே ஒரு பெண். உன்னைப்போலத் தான், நல்ல அழகு. அவ சிரிச்சா, கன்னத்திலே குழி விழும்" என்று கூறிக்கொண்டே, கன்னத்துக் குழியைத் தேடினார், இல்லை! அவள் சந்தோஷத்தில் இருந்தால் தானே! அந்தக் கன்னத்திலே ஏகாம்பரம் தன் உயிரையே வைத்திருந்தான் என்ற நினைப்பிலே அவள் சித்தம் சென்று விட்டது. கதையைத் தொடர்ந்து கூறலானார் மாப்பிள்ளை. '
“அந்தப் பெண்ணையேதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று, ஒரு பையன், தலைகீழாக நின் றான். என்னென்னமோ தந்திரமெல்லாம் செய்தான். அவனுடைய மாமன் ஒருவன். அவன் பட்டணம். அவனை விட்டுப் பெண்ணுடைய தகப்பனாருக்குப் போதனை செய் யச் சொன்னான். பெண்ணின் தகப்பனும் ஒப்புக்கொண் டான், ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்தார்கள்."
அதுவரையில் அவளுக்கும் தெரியும். அதற்கு மேலே என்ன நடந்தது? அதுதானே தெரிய வேண்டும் ! கனைத்து விட்டு, முதலியார், மேலால் கூறலானார்.
"ஜாதகம் பார்த்தாச்சா. திடீருன்னு அந்தப் பையன், நான் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு சொல்லிவிட்டான். யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை" என்று கூறிவிட்டு, எழுந்து போய், மேஜைமேல் வைத்திருந்த பால் செம்பை எடுத்தார் குடிக்க. அதிலே ஒரு வாழைப்பழத் துண்டு கிடப்பதைக் கண்டார், சிரித்தார், சிரித்துக்கொண்டே, அந்தத் துண்டை எடுத்து வாயிலே போட்டு மென்றுகொண்டே "அந்தப் பெண் வேண்டாமென்று அந்தப் பயல் சொல்லிவிடவே, அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்று நெடுநாளாக ஆசையாய் இருந்த ஆறுமுகத்துக்குப், பழம் நழுவிப் பாலிலே விழுந்தது போலாச்சு, பக்கத்துக்கு ஒரு ரதி வந்தாச்சு " என்று கதையும் முடித்தார், பாலையும் குடித்தார், பரமானந்தத்துடன் பாவையின் பக்கமும் சேர்ந்தார், உரிமையோடு.
இதுவும் தெரிந்த கதைதானே ! ஏகாம்பரம் ஏன் கலியாணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். அதுதானே தெரிய வேண்டும் - என்று துடித்தாள் இராமி. எப்படிக் கேட்பது என்று பயந்தாள் கொஞ்ச நேரம். கேட்டால் என்ன என்று தைரியம் பிறந்தது. "நல்ல கதை' என்று கேலி செய்தாள் மெள்ள.
"நல்லாயில்லையா? சரி, நீ சொல்லு நல்ல கதையாக!" என்று ஆறுமுக முதலியார் கொஞ்சத் தொடங்கினார். அதுபோன்ற 'கொஞ்சுதலைக்' கண்டு வேதம் அவருக்குத் தந்த அர்ச்சனைதான் கிழக்குரங்கு' என்பது. இராமி பேசவேயில்லை. 'இராமி ! உண்மையைச் சொல்லட்டுமா? நான்தான், அந்தக் கலியாணம் நடக்க முடியாதபடி தடுத்தேன். அவனுக்கு இஷ்டந்தான். ஆனா நான் கண் வைச்சா, வேறே ஆசாமியிடம் சிக்குமா எதுவும். மண்டித்தெருவிலே போய்க் கேட்டுப்பாரு, அடேயப்பா! ஆறுமுக முதலி, விலை பேசிவிட்டாரு, நமக்கு வேண்டாம் அவனிடம் போட்டின்னு இலட்சாதிகாரி எல்லாம் ஓடி விடுவாங்க. எதற்கும் தைரிய இலட்சுமி வேணும். பட்டணத்தான் பேச்சைக் கேட்டுவிட்டு உங்க அப்பன் பல்லை இளிச்சி விட்டான். பார்த்தேன். தைரியத்தைக் கைவிட்டேனா? ஆறுமுகமா தைரியத்தைக் கை விடுகிறவன். ஒரு யோசனை வந்தது. நேரே ஐயர்வீட்டுக்குப் போனேன். 'சாமி!"ன்னு சொல்லி ஒரு கும்பிடு, ஐஞ்சு நோட்டு பத்து ரூபா நோட்டு; என்ன முதலியார் என்று கேட்டார். உங்க தயவாவே இராமியை இரண்டாந்தாரமாக நான் அடையணும்" என்று சொன்னேன், "அட பாவமே ! நேத்துத்தானே பெண்ணு ஜாதகத்தை ஏகாம்பரம் மாமன் கொண்டுவந்து கொடுத்திருக்கான்" என்றார்.
"தெரிஞ்சு தான் வந்தேன் சாமி! நீங்க மனசுவைச்சா எதுவும் ஆகும்' என்றேன். கொஞ்சநேரம் யோசிச்சார் . "பொருத்தம் இல்லைன்னு சொல்லலாமோ?" என்று என்னையே கேட் டார். "சொல்லலாம். ஆனா வேறே ஜோதிடாளைக் கலந்தாளான்னா? என்று நான் கேட்டேன்; அதைத் தானே நானும் யோசிச்சிண்டு இருக்கேன்" என்று ஐயர் இழுத்தார், உடனே ஒரு யோசனையை வீசினேன், பெண் ஜாதகத்தைக், கொஞ்சம் மாற்றிவிடுங்க. எவனிடம் கொடுத்தாலும், பொருத்தமில்லைன்னு சொல்றமாதிரியா மாத்தல் இருக்கணும். பெண்ணு மூல நட்சத்திரமுன்னு மாத்திவிட்டா, போதும். மூல நட்சத்திரத்திலே பெண் கட்டினா, மாமியாரை மூலையிலே உட்காரவைச்சுடும்னு சாஸ்திரம் இருக்கே, அது போதும், பட்டணத்தான் கிட்டச் சொல்லிவிடுங்க, பக்குவமா ஜாதகத்தையும் மாத்திவிடுங்கள் என்றேன். ஐயர் தயவாலே, உன் நட்சத்திரம் மூலமாக மாறிவிட்டது. பட்டணத்தான் விழுந்தடிச்சு ஓடினான் ஏகாம்பரத்தின் காலிலே விழுந்து, "தம்பி! என் பேச்சைக் கேளு. அந்தப் பெண்ணை மறந்துவிடு. அந்தச் சனியன் மூல நட்சத்திரமாம், உங்க அம்மா மூணே மாசத்திலே சாவாளாம்" என்று சொல்ல, ஏகாம்பரத்தின் தாயார் என்னைச் சாகடிக்கத்தானா அந்தச் சண்டாளியைக் கட்டிக்கப்போறேன்னு கேட்க, வீடு ஒரே அமர்க்கள மாயிடுத்து. ஒண்ணும் பேசமுடியலை.
அந்தப் பெண் வேண்டாம் என்று ஒரே அடியாச் சொல்லிவிட்டான் ஏகாம்பரம். வேறே ஜோதிடன் கிட்டக் கூடக் கேட்டுப் பார்த்தானாம். எல்லோரும் மூல நட்சத்திரம் ஆகாது என்றே சொன்னார்கள், வேறே என்ன சொல்வார்கள்? புத்தகத்திலே அப்படித்தானே எழுதியிருக்கு. ஆனா, அவனுங்க கண்டாங்களா, பிர்மா உன்னைப் பூச நட்சத் திரத்திலே பிறக்கவைச்சாரு, உன் புருஷன் அதை மூல நட்சத்திரமா மாத்தினாருன்னு!" என்று கதையைக் கூறி முடித்தார் முதலியார்.
அந்த விநாடி, அவள் உள்ளத்திலே குடி புகுந்த கோபம், நாளுக்குநாள் வளர்ந்ததேயொழிய துளியும் குறையவில்லை. ஆறுமுக முதலி வேதத்திடம் போய் விளையாடுகிற நேரமாகப் பார்த்து, வேலைக்காரியின் தயவால் ஏகாம்பரத்தை வரவழைத்து அவனிடம் நடந்த "சூதைச் சொன்ன பிறகு கூட, அவளுடைய கோபம் அடங்கவில்லை. ஏகாம்பரம், "அயோக்யன்! இப்படியா சூது செய்தான். என் கண்ணைப் பறித்துக்கொண்டானே" என்று ஆத்திரத்தோடு கூவினான். "நான் ஒரு முட்டாள் ஏமாந்தேன்" என்று அழுதான். "அழாதே கண்ணு அதனதன் தலைவிதிப்படி நடக்குது, நாமென்ன செய்வது" என்று இராமி தேறுதல் கூறினாள். தேறுதல் கூறும் கட்டத்தோடு முடிந்துவிடுமா? முந்தாணையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள். "உன்னை இழந்தேனே" என்று கூறியபடி அவளை அவன் அணைத்துக்கொண்டான். "போதும் கண்ணே ! நாம் கொடுத்துவைத்தது அவ்வளவு தான்" என்று அவள் புலம்பினாள். அவள் கண்ணீரை அவன் துடைத்தான். அதரத்தின் துடிப்பை முத்தமிட்டு அடக்கப் பார்த்தான். முடியுமா? அவர்கள் இன்பக் கேணியில் இடறி வீழ்ந்தார்கள். பிறகு வருத்தமடையவு மில்லை. முதலியார் புவனேஸ்வரி பூஜையில் இருக்கும் சமயமெல்லாம், ஏகாம்பரம் இராமியுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பான்! பூஜைக்குப் பிறகு, 'வேதம்' படித்து விட்டு, வீடு திரும்புவார், சாமர்த்தியசாலியான ஆறுமுகம், அவர் வீட்டுக்குள் வந்ததும் இராமி, "சுடுமூஞ்சிக் "காரி யாவாள்!
------
கருத்துகள்
கருத்துரையிடுக