சின்னஞ்சிறு பாடல்கள்
கவிதைகள்
Back
சின்னஞ்சிறு பாடல்கள்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
CHINNANCHIRU PADALKAL
(Nursery Rhymes)
Author : AL Valliappa
Illustrator : Sagar
Publisher : Kulandai Puthaka Nilayam, Madras - 40
Sole Distributor : Paari Nilayam, Madras -1
Printer : Jeevan Press, Madras - 5
Sixth Edition : JANUARY 1992
Price : RS, 3–00
வெளியிட்டோர் : குழந்தைப் புத்தக நிலையம்
சென்னை–40
விற்பனை உரிமை:
பாரி நிலையம்
184, பிராட்வே சென்னை- 600001
தொந்திக் கணபதி, வா வா வா.
வந்தே ஒருவரம் தா தா தா.
கந்தனின் அண்ணா, வா வா வா.
கனிவுடன் ஒருவரம் தா தா தா.
ஆனை முகத்துடன் வா வா வா.
அவசியம் ஒருவரம் தா தா தா.
பானை வயிற்றுடன் வா வா வா.
பணிந்தேன்: ஒருவரம் தா தா தா
எல்லாம் அறிந்த கணபதியே,
எவ்வரம் கேட்பேன், தெரியாதா?
நல்லவன் என்னும் ஒருபெயரை
நான்பெற நீ வரம் தா தா தா.
மாம்பழமாம் மாம்பழம்.
மல்கோவா மாம்பழம்.
சேலத்து மாம்பழம்.
தித்திக்கும் மாம்பழம்.
அழகான மாம்பழம்.
அல்வாபோல் மாம்பழம்.
தங்க நிற மாம்பழம்.
உங்களுக்கும் வேண்டுமா?
இங்கே ஒடி வாருங்கள் :
பங்கு போட்டுத் தின்னலாம்.
தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.
மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.
புளியமரத்தில் ஏறலாம்,
புளியங்காயைப் பறிக்கலாம்.
நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக் காயைப் பறிக்கலாம்.
வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கி வழுக்கி விழுகலாம் !
பசுவே, பசுவே, உன்னைநான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.
வாயால் புல்லைத் தின்கின்றாய்.
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.
சேர்த்து வைக்கும் பாலெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.
கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம்.
கடகடா கடகடா வண்டி வருகுது
காளை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது.
டக்டக் டக்டக் வண்டி வருகுது.
தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது.
ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது,
சீனு ஏறி ஒட்டும் சைக்கிள் வண்டி வருகுது.
பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது.
பாய்ந்து வேக மாக மோட்டார் வண்டி வருகுது.
குப்குப் குப்குப் வண்டி வருகுது.
கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது!
குதித்துக் குதித்தே ஓடும்
குதிரை அதோ பாராய்.
அசைந்து அசைந்து செல்லும்
ஆனை இதோ பாராய்.
பறந்து பறந்து போகும்
பருந்து அதோ பாராய்.
நகர்ந்து நகர்ந்து செல்லும்
நத்தை இதோ பாராய்.
தத்தித் தத்திப் போகும்
தவளை அதோ பாராய்.
துள்ளித் துள்ளி நாமும்
பள்ளி செல்வோம், வாராய்.
வெங்கு, வெங்கு, வெங்கு
வெங்கு ஊதினான் சங்கு
நுங்கு நுங்கு நுங்கு
நுங்கில் எனக்குப் பங்கு.
வள்ளி, வள்ளி, வள்ளி
வள்ளி கொலுசு வெள்ளி.
பள்ளி, பள்ளி, பள்ளி
பள்ளி செல்வோம் துள்ளி.
பட்டு, பட்டு, பட்டு
பட்டு வாயில் பிட்டு.
துட்டு, துட்டு, துட்டு
துட்டுத் தந்தால் லட்டு!
நத்தை யம்மா
நத்தை யம்மா, நத்தை யம்மா,
எங்கே போகிறாய் ?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்
கொண்டு போகிறேன்.
எத்த னைநாள் ஆகும் அத்தை
வீடு செல்லவே ?
பத்தே நாள் தான்; வேணு மானால்
பார்த்துக் கொண்டிரு.
எங்களுடைய
அப்பா
எங்களுடைய அப்பா—அவர்
என்றும் அணிவார் ஜிப்பா.
எங்களுடைய அம்மா—அவள்
எதுவும் தருவாள் சும்மா.
எங்களுடைய தங்கை—அவள்
இனிய பெயரோ மங்கை.
எங்களுடைய தம்பி—அவன்
என்றும் தங்கக் கம்பி.
எங்களுடைய பாட்டி—அவள்
எவர்க்கும் தருவாள் பேட்டி!
யானை வருது
யானை வருது. யானை வருது
பார்க்க வாருங்கோ.
அசைந்து, அசைந்து நடந்து வருது
பார்க்க வாருங்கோ.
கழுத்து மணியை ஆட்டி வருது
பார்க்க வாருங்கோ.
காதைக் காதை அசைத்து வருது
பார்க்க வாருங்கோ.
நெற்றிப் பட்டம் கட்டி வருது
பார்க்க வாருங்கோ.
நீண்ட தங்தத் தோடே வருது
பார்க்க வாருங்கோ.
தும்பிக் கையை வீசி வருது
பார்க்க வாருங்கோ.
தூக்கி ‘சலாம்’ போட்டு வருது
பார்க்க வாருங்கோ.
மியாவ் மியாவ் பூனையார்
மியாவ் மியாவ் பூனையார்.
மீசைக் காரப் பூனையார்.
ஆளில் லாத வேளையில்
அடுக்க அளக்குள் செல்லுவார்.
பால் இருக்கும் சட்டியைப்
பார்த்துக் காலி பண்ணுவார்.
மியாவ் மியாவ் பூனையார்.
மீசைக் காரப் பூனையார்.
இரவில் எல்லாம் சுற்றுவார்.
எலிகள் வேட்டை ஆடுவார்.
பரணில் ஏறிக் கொள்ளுவார்.
பகலில் அங்கே துங்குவார்.
மியாவ் மியாவ் பூனையார்.
மீசைக் காரப் பூனையார்.
மெல்ல மெல்லச் செல்லுவார்.
மேலும் கீழும் தாவுவார்.
‘ளொள்ளொள்’ சத்தம் கேட்டதும்
கொடியில் ஓடிப் பதுங்குவார்.
மியாவ் மியாவ் பூனையார்.
மீசைக் காரப் பூனையார்.
அந்த மிருகம்
டக்டக் சத்தம் போடுமாம்.
தாவித் தாவி ஓடுமாம்.
கொள்ளும் புல்லும் தின்னுமாம்.
குதித்துக் குதித்துச் செல்லுமாம்.
'ஹீ..ஹீ' என்று கனைக்குமாம்,
கிட்டப் போனால் உதைக்குமாம்.
வண்டி இழுக்க உதவுமாம்.
வாலைச் சுழற்றி ஆட்டுமாம்.
சண்டித் தனமும் பண்ணுமாம்.
சாட்டை அடிகள் வாங்குமாம்.
அந்த மிருகம் என்னவாம் ?
அதுவே குதிரை, குதிரையாம் !
ஆப்பிள்
தங்கம் போலப் பளப ளென்றே
ஆப்பிள் இருக்குது.
தங்கைப் பாப்பா கன்னம் போலே
ஆப்பிள் இருக்குது.
எங்கள் ஊருச் சங்தையிலே
ஆப்பிள் விற்குது.
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன
ஆசை இருக்குது.
இன்பமாக உண்ணலாம்
வாழைக்காய் வேணுமா?
வறுவலுக்கு நல்லது.
கொத்தவரை வேணுமா?
கூட்டுவைக்க நல்லது.
பாகற்காய் வேணுமா ?
பச்சடிக்கு நல்லது.
புடலங்காய் வேணுமா ?
பொரியலுக்கு நல்லது
தக்காளி வேணுமா ?
சாம்பாருக்கு கல்லது.
ஃ ஃ ஃ,
இத்த னையும் வாங்கினால்,
இன்றே சமையல் பண்ணலாம்.
இன்றே சமையல் பண்ணலாம்.
இன்ப மாக உண்ணலாம்.
வீடு எங்கே?
வண்ணக் கிளியே, வீடெங்கே?
மரத்துப் பொந்தே என்வீடு.
தூக்கணங் குருவி, வீடெங்கே:
தொங்குது மரத்தில் என்வீடு.
கறுப்புக் காகமே, வீடெங்கே ?
கட்டுவேன் மரத்தில் என்வீடு.
பொல்லாப் பாம்பே, வீடெங்கே ?
புற்றும் புதருமே என்வீடு.
கடுகடு சிங்கமே, வீடெங்கே?
காட்டுக் குகையே என்வீடு.
நகரும் நத்தையே, வீடெங்கே?
நகருதே என்னுடன் என்வீடு !
வாழைமரம்
வாழைமரம், வாழைமரம்
வழ வழப்பாய் இருக்கும் மரம்.
சீப்புச் சீப்பாய் வாழைப்பழம்
தின்னத் தின்னக் கொடுக்கும் மரம்.
பந்திவைக்க இலைகளெலாம்
தந்திடுமாம் அந்த மரம்.
காயும் பூவும் தண்டுகளும்
கறிசமைக்க உதவும் மரம்.
கலியாண வாசலிலே
கட்டாயம் நிற்கும் மரம்!
மரப்பாச்சி மாப்பிள்ளை
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை.
மரப்பாச்சி மாப்பிள்ளை.
பூப்போட்ட சட்டையைப்
போட்டிருக்கும் மாப்பிள்ளை.
சாப்பிடவே மாட்டாராம்.
சாதுபோலே இருப்பாராம்.
கூப்பிட்டாலும் திரும்பியே
குரல் கொடுக்க மாட்டாராம்.
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை
மரப்பாச்சி மாப்பிள்ளை
கறுத்த நிறம் ஆனாலும்
களையுடனே இருப்பாராம்.
சிரித்தமுகம் ஒருபோதும்
சிடுசிடுக்க மாட்டாராம்.
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை
மரப்பாச்சி மாப்பிள்ளை
கண்ணைமூட மாட்டாராம்.
கால்கடுக்க நிற்பாராம்.
சின்னப்பிள்ளை கூட்டத்திலே
செல்லமாக இருப்பாராம்.
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை
மரப்பாச்சி மாப்பிள்ளை.
அப்பா தந்த புத்தகம்
அப்பா வாங்கித் தந்தது
அருமை யான புத்தகம்
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா, மிக அற்புதம்!
யானை உண்டு, குதிரை உண்டு
அழகான முயலும் உண்டு
பூனை உண்டு, எலியும் உண்டு
பொல்லாத புலியும் உண்டு
அப்பா வாங்கித் தந்தது
அருமை யான புத்தகம்.
குயிலும் உண்டு, குருவி உண்டு.
கொக்கரக்கோ கோழி உண்டு.
மயிலும் உண்டு, மானும் உண்டு.
வாலில்லாத குரங்கும் உண்டு.
அப்பா வாங்கித் தந்தது
அருமை யான புத்தகம்.
பந்து உண்டு, பட்டம் உண்டு.
பம்பரமும் கூட உண்டு.
இன்னும் அந்தப் புத்தகத்தில்
எத்தனையோ படங்கள் உண்டு !
அப்பா வாங்கித் தங்தது
அருமை யான புத்தகம்.
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா, மிக அற்புதம் !
பறவைக் கப்பல்
அதோ, அதோ பறவைக் கப்பல்,
ஆகாயத்தில் செல்லுது !
அதிசயமாய் எல்லோ ரையும்
அங்கே பார்க்கச் சொல்லுது.
வெள்ளைப் பறவை போலே அதுவும்
மேலே நமக்குத் தோன்றுது.
மேகத் திற்குள் புகுந்து புகுந்து
வேடிக் கையும் காட்டுது.
மனிதர் தம்மைத் தூக்கிக் கொண்டு
வானத் திலே பறக்குது.
வயிற்றுக் குள்ளே பத்திரமாய்
வைத்துக் கொண்டே செல்லுது.
காடு மேடு கடல்க ளெல்லாம்
கடந்து கடந்து செல்லுது.
கண்ணை மூடித் திறப்பதற்குள்
காத துாரம் தாண்டுது !
வாயை மூடிப் போடும் சத்தம்
வந்து காதைத் துளைக்குது.
வால் இருந்தும் சேஷ்டை இல்லை;
வழியைப் பார்த்துப் போகுது !
கப்பல் ஏறுவேன்
அப்பா வோடு நானுமே
கப்பல் ஏறப் போகிறேன்.
கப்பல் ஏறி உலகெலாம்
கண்டு நானும் திரும்புவேன்.
அப்பா வோடு நானுமே
கப்பல் ஏறப் போகிறேன்.
அப்பா லுள்ள நாடுகள்
அனைத்தும் கண்டு திரும்புவேன்.
அப்பா வோடு நானுமே
கப்பல் ஏறப் போகிறேன்.
எப்போ கப்பல் ஏறுவேன்
என்று தானே கேட்கிறீர் ?
அப்பா கப்பல் ஏறிடும்
அன்றே நானும் ஏறுவேன்.
அப்போ உங்கள் அனைவரின்
ஆசி பெற்றுச் செல்லுவேன்.
வெள்ளைக் கன்றுக் குட்டி
வெள்ளை வெள்ளைக் கன்றுக் குட்டி,
மிகவும் நல்ல கன்றுக் குட்டி.
துள்ளிக் குதிக்கும் கன்றுக் குட்டி.
சோம்பல் இல்லாக் கன்றுக் குட்டி.
அம்மா என்னும் கன்றுக் குட்டி.
ஆசை யான கன்றுக் குட்டி.
சும்மா சும்மா தலையை ஆட்டிச்
சொல்வ தென்ன கன்றுக் குட்டி ?
உன்னைப் போல வேக மாக
ஓடு வேனே கன்றுக் குட்டி.
என்னைத் துரத்திப் பிடிக்க வருவாய்.
எங்கே பார்ப்போம், கன்றுக் குட்டி.
தோசை நல்ல தோசை
தோசை நல்ல தோசை—அம்மா
சுட்டுத் தந்த தோசை.
ஆசை யாக எனக்கே—என்
அம்மா தந்த தோசை.
வட்ட மான தோசை—அது
மாவில் சுட்ட தோசை
தட்டு கிறைய நிறைய—அம்மா
சுட்டுத் தந்த தோசை.
காசு கேட்க வில்லை—என்னைக்
காக்க வைக்க வில்லை.
தோசை வேணும் என்றேன்—அம்மா
சுட்டுச் சுட்டுத் தங்தாள்.
ஒன்று, இரண்டு, மூன்று—என்றே
உள்ளே பிய்த்துப் போட்டேன்.
இன்னும் ஒன்று, ஒன்று—என்றே
எடுத்து, எடுத்து வைத்தாள்.
தின்றேன் நிறையத் தோசை—மேலும்
தின்னத் தானே ஆசை.
என்ன செய்வேன்? வயிற்றில்—துளி
இடமும் இல்லை, இல்லை !
நானே ராஜா
ஆயிரம் தங்கக் காசிருந்தால்
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
அதன்மேல் ஏறி அமர்ந்திடுவேன்.
தெருவில் எங்கும் சுற்றிடுவேன்.
சிறுவர் தொடரச் சென்றிடுவேன்.
அருமை நண்பன் முத்துவையும்
அருகில் ஏற்றிக் கொண்டிடுவேன்.
‘நானே ராஜா’ என்றிடுவேன்.
நண்பன் முத்து மந்திரியாம்.
ஆனை வாங்கப் பணம்தேவை.
ஆசை உண்டு; காசில்லேயே !
பொம்மைக் கல்யாணம்
பொம்மைக்கும் பொம்மைக்கும் கல்யாணம்.
புறப்படப் போகுதாம் ஊர்கோலம்.
தெருவில் எங்கும் தடபுடலாம்.
சிறுவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்தனராம்.
கிட்டு தலைமேல் மாப்பிள்ளை.
கீதா தலைமேல் மணப்பெண்ணாம்.
தகரக் குவளை தவுலாகும்.
சங்கரன் அடிப்பான் டும்டும்டும்.
ஓலைச் சுருளே நாகசுரம்.
உத்தமன் ஊதுவான் பிப்பீப்பீ.
உப்பிய கன்னம் இரண்டுடனே
ஒத்தூ திடுவான் முத்தையா.
ஃ ஃ ஃ
மாப்பிள்ளைப் பையன் ஊர்எதுவோ ?
மணப்பெண் ஊரும் தெரிந்திடுமோ ?
திருப்பதிப் பொம்மை மாப்பிள்ளையாம்.
சீரங்கப் பொம்மை மணப்பெண்ணாம்.
அழைப்பில் லாமல் நடக்கிறதே
ஆஹா, அற்புதக் கல்யாணம் !
திராட்சைப் பழம்
திராட்சைப் பழம்—நல்ல
திராட்சைப் பழம்.
தின்னத் தின்ன இனிமை யான
திராட்சைப் பழம்.
கொத்துக் கொத்தாய் இருக்குமாம்.
கொடியில் மேலே தொங்குமாம்.
அத்தனையும் பறிக்கவே
ஆசை யாக இருக்குமாம்.
திராட்சைப் பழம்—நல்ல
திராட்சைப் பழம்.
காற்றில் ஆடி ஆசையுமாம்.
கற்கண் டைப்போல் இனிக்குமாம்.
பார்க்கப் பார்க்க, எட்டியே
பறித்துத் தின்னத் தூண்டுமாம்.
திராட்சைப் பழம்—நல்ல
திராட்சைப் பழம்.
பச்சைக் கோலி போலவே
பளபளப்பாய் இருக்குமாம்.
நிச்ச யமாய் வாயிலே
எச்சில் ஊறச் செய்யுமாம்.
திராட்சைப் பழம்—நல்ல
திராட்சைப் பழம்.
தின்னத் தின்ன இனிமையான
திராட்சைப் பழம்.
ஞாயிற்றுக்கிழமை
பிறந்த பிள்ளை
ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.
திங்கட் கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்.
செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்.
புதன் கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொற்படி நடந்திடுமாம்.
வியாழக் கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்.
வெள்ளிக் கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்.
சனிக் கிழமை பிறந்த பிள்ளை
சாந்த மாக இருந்திடுமாம்.
ஃ ஃ ஃ
இந்தக் கிழமைகள் ஏழுக்குள்
எந்தக் கிழமையில் நீ பிறந்தாய் ?
அலமு
ஞாயிற்றுக் கிழமை நான் பிறந்தேன்.
நன்றாய்ப் பாடம் படித்திடுவேன்.
அழகப்பன்
வெள்ளிக் கிழமை நான்பிறந்தேன்.
வேண்டும் உதவிகள் செய்திடுவேன்.
இப்படியே ஒவ்வொரு குழந்தையும் அவரவர்
பிறந்த கிழமைக்கு ஏற்றபடி பதில் கூறலாம். :
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் பாடல்களைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உள்ள குழந்தைகள் விரும்பிப் பாடிப் பாடி மகிழ்கின்றனர்.
இதுவரை இவர் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதித் தந்திருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக