சைவம் வளர்த்த சான்றோர்கள்
வரலாறு
Backசிவமயம்
சைவம் வளர்த்த சான்றோர்கள்
1848 - 1924
மகான் காசிவாசி
சி. செந்திநாத ஐயர்
ஆக்கம்
க.சி.குலரத்தினம்
வெளியீடு :
சிவதர்மவள்ளல், சிவநெறிப்புரவலர், மில்க்வைற் தொழிலதிபர், சமாதான நீதவான்
க.கனகராசா அவர்கள்
1983
----------------------------------------------------------------
சிவமயம்
சைவம்
வளர்த்த
சான்றோர்கள்
மகான் காசிவாசி
சி.செந்திநாத ஐயர்
ஆக்கம் :
க.சி.குலரத்தினம்
வெளியீடு : சிவதர்மவள்ளல்,சிவநெறிப்புலவர்,மில்க்வைற் தொழிலதிபர்,
சமாதான நீதவான்
க.கனகராசா அவர்கள்
28-8-1983
-----------------------------------------------------------------
பிரார்த்தனையோடு
கூடிய
தரிசன உரை
மகான் செந்திநாதையர் அவர்கள் நாவலர் பெருமானின் வலக்கரம்.
நாவலர் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் முழுகித் திளைத்தவர்கள் ஐயர் அவர்கள்.
நாவலர் காலத்தில்,நாவலர் வண்.சைவப்பிரகாச வித்தியாசாலையில் நாவலர் மருகர் வித்துவசிரோமணி ந.ச.பொன்னம்பலபிள்ளை அவர்கள் உதவியாசிரியராயிருக்க,
தலைமையாசிரியராயிருந்தவர்கள் ஐயர் அவர்கள். இந்தத் தலைமைப்பதவி ஒன்றுமே ஐயர் அவர்களை “மகான்”என்பதற்குப் போதுமானது.
÷ ÷ ÷
ஐயர் அவர்கள் எத்தனையோ கண்டன நூல்களும் வேறு பிற நூல்களும் இயற்றியிருக்கின்றார்கள்.
தேவாரம்,வேதசாரம்,சைவ வேதாந்தம் என்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
÷ ÷ ÷
அவர்களின் இல்லம்
புத்தகங்கள்,ஏடுகள் என்பவற்றின்
இருப்பிடமாகவேயிருந்தது.அவர்கள் பல வருட காலம்
காசிவாசியாய்
சம்ஸ்கிருத மேதைகளோடு நெருங்கிப் பழகி
அவர்களிடம் பயிலவேண்டியவைகளைப் பயின்று,
பயின்றதன் பெறுபேறாக
வியாசர் அருளிய
உத்தர மீமாஞ்சை
என வழங்கும்
வேதாந்த சூத்திரத்துக்கு
நீலகண்ட சிவாசாரியார் அருளிய
நீலகண்ட பாஷியத்தைத்
தமிழில் மொழிபெயர்த்து
அச்சிட்டார்கள்.
பாஷியத்தின் முகப்பில்
உபநிடத உபக்கிரக மணிகை,பிரமசூத்திர உபக்கிரக மணிகை
என இரு முன்னுரைகள் வழங்கியிருக்கின்றார்கள்.
இம் முன்னுரைகள்
விலை மதித்தற்கரியவை.
வைதிக சைவ தத்துவ ஆராய்ச்சியாளர்களுக்குச்
கிடைத்தற்கரிய
அமிர்த பொக்கிஷங்கள் அவை.
முன்னுரைகள் இரண்டும்
தனிப்புத்தக வடிவில் வரவேண்டியவை.
காசி வாசியாய
மகான் அவர்கள்,
அந்திய காலத்தில்
திருப்பரங்குன்ற வாசியாய்,
அங்கே ஒரு ஆசிரமம் அமைத்து
ஆசிரம வாசியாய்
அமரத்துவம் எய்தினார்கள்.
÷ ÷ ÷
மகான் ஐயர் அவர்களைக்
காணாதவர்கள் சிலைவடிவிலாவது கண்டுகளிக்க
அநுக்கிரகித்த
தெய்வ சந்நிதியைப்
பிரார்த்திப்போமாக.
÷ ÷ ÷
குப்பிழான்பதி
ஐயர் அவர்களின் பிறப்பிடம்
தானே என்பதை அறிந்து
குதூகலிக்கின்றது.
÷ ÷ ÷
இனிக்
குப்பிழான்
யாழ்ப்பாணத்தில் தலைநிமிர்ந்து விளங்குவதொரு
திருப்பரங்குன்றம்.
இலக்கிய கலாநிதி
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
கலாசாலை வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
20-7-1983.
----------------------------------------------------------
முன்னுரை
சைவசமயத்துக்கும் சைவசித்தாந்த தத்துவத்துக்கும் இலங்கையின் உபகரிப்பு என்னும் நூலில்,சைவம் வளர்த்த சான்றோர் வரிசையில்,ஆறுமுகநாவலர் அவர்களுக்கு அடுத்தவராக அமைபவர், குப்பிழான் ஊரைச் சேர்ந்த,காசிவாசி. சி. செந்திநாதையர் அவர்களாவர்.
ஐயரவர்களைப்பற்றி எழுதிய எம்முடைய சிரமத்திலும் பார்க்கப் பெரியது, இதனை அச்சிடுவதற்கு மனமுவந்து இசைவுதந்த மில்க்வைற் தொழிலதிபர், சிவநெறிப்புரவலர், சிவதர்மவள்ளல், சமாதானநீதவான் க.கனகராசா அவர்களின் சிரமமாகும்.
காகிதவிலையும் அச்சுக்கூலியும் அதிகரித்துள்ள இக்காலத்தில், நாட்டுக்கு நல்லதையே செய்யும் திடசங்கற்பம் பூண்டொழுகும் இவரின் தொண்டின் பெருமையை நாடறியும். மாதந்தோறும் மில்க்வைற் செய்தி என்னும் ஏட்டினை வெளியிட்டு நன்மை செய்வதோடு, அவ்வப்போது சமயம், தமிழ், ஆசாரம், ஓழுக்கம், விவசாயம், பனையபிவிருத்தி, நாட்டு வளம் முதலிய நல்ல துறைகளைப்பற்றி வெளியிடுமாறு ஊக்கப்படுத்திவருபவர் இவர்.
சைவம் வளர்த்த செந்திநாதையர் அவர்கள் வரிசையில் நாவலரவர்களின் முன்னோரான ஞானப்பிரகாசத்தம்பிரான், நீர்வேலிச்சங்கரபண்டிதர், கோப்பாய் சபாபதி நாவலர், சித்தன்கேணி அம்பலவாண நாவலர், மேலைப்புலோலி கதிரைவேற்பிள்ளை, வண்ணை முத்துக்குமாரசுவாமித் தம்பிரான், கந்தர்மடம் சாமிநாதபண்டிதர், சித்தாந்தவித்தகர் சிற்.கைலாசபிள்ளை, முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்தர் தென்கோவை வித்தகம் கந்தையாபிள்ளை, புலோலி சைவப்பெரியார் சிவபாதசுந்தரம்பிள்ளை, கொக்குவில் சபாரத்தின முதலியார், ஊரெழு சரவணமுத்துப் புலவர், வண்ணை விசுவநாதபிள்ளை முதலானோரின் பங்களிப்புகள் காலந்தோறும் வெளிவர ஆயத்தமாக உள்ளன.
இப் பெரியவர்களின் ஊரினர் இவர்கள்மீது கொள்ளும் அபிமானத்தையும், மில்க்வைற் தொழிலகத்துக்கு அன்னார் காட்டும் ஆதரவையும் பொறுத்து இவர்களைப்பற்றிய நூல் வெளிவரலாம். ஆதரவுபெருகினால் அறப்பணி பெருகலாம்.
செந்திநாதையரவர்கள் நாற்பத்தைந்து நூல்கள் வரையில் எழுதினார் என்பர். அவற்றில் அச்சேறாத நூல்களும் இருந்தன எனக்கருத இடமுண்டு. அச்சேறிய நூல்களிலும் சில எமக்குக் கிடைப்பனவாகவில்லை.
பெரியவர்களும் மேலிடத்தவர்களும் இன்று ஐயரவர்களின் நூல்களில் அபிமானங்கொண்டு தேடித்திரிகிறார்கள். சிலர் அவற்றைக்கண்டு போட்டோஸ்ராற் பிரதிகள் எடுக்கவும் ஆயத்தமாயுள்ளார்கள்.
இந்நிலையில் குப்பிழான் ஊரினர் ஐயரவர்கள் தோன்றித் தவழ்ந்து விளையாடிய மண்ணில் சிலைவைத்து வணங்க முன்வந்துள்ளார்கள். பெரிய சிவாசாரியராயும், யோகியாயும் இருந்த அவரைக் கும்பிடுகின்றவர்களை நாம் கும்பிடுகிறோம். இதன்கண் உள்ள குற்றங்கள் குறைகளை நமக்குச் சுட்டிக்காட்டுமாறு அன்பர்களிடம் கேட்டுக்கொள்ளுகிறோம். இதனை நல்லமுறையில் அச்சிட்டுத்தந்த சாந்தி அச்சக உரிமையாளருக்கும், ஊழியர்கட்கும் உளம் நிறைந்த நன்றி உரியதாகுக.
செந்தி நாதையரவர்கள் பெருமை என்றும்
நின்று நிலவுவதாக.
க.சி.குலரத்தினம்
19-7-1983.
அம்மன் வீதி,
கந்தமடம்,
யாழ்ப்பாணம்.
-------------------------------------------------------
மகான் காசிவாசி சி.செந்திநாத ஐயர்
தோற்றமும் இளமைக்காலமும்
சிவபூமி எனப் பெயர்பெற்ற இலங்கைத் திருநாட்டின் வடபாலமைந்த யாழ்ப்பாணம் ஒருபெரும் பிரதேசம்.அது முற்காலத்தில் தமிழரசரின் இராசதானியமைந்த சிறப்பினையும் கொண்டு நிலவியது.ஊர்கள்தோறும் கோயில்களும் குளங்களும் யாழ்ப்பாணத்தவரின் நாகரிக வளர்ச்சிக்கு மையமாயிருந்தன.ஊர்கள் தோறும் செந்தமிழும் சைவசமயமும் வளரும் பண்ணைகள் இருந்தன.பண்ணைகள் தோறும் பண்டிதர்கள், வித்துவான்கள்,புலவர்கள் வாழ்ந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்தார்கள்.
சைவமும் தமிழும் வளர்ந்த பண்ணைகள் நிறைந்த பகுதிகளுள் வலிகாமப்பிரிவும் ஒன்று.அங்கே சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, குப்பிழான் முதலாய ஊர்களிற் பரம்பரை பரம்பரையாகப் புலவர்கள் வாழ்ந்து வந்தார்கள். சுன்னாகப் பண்ணையில் வரதபண்டிதர் என்னும் ஐயர் ஒருவர் வாழ்ந்து சைவமும் தமிழும் வளர்த்த பெருமையுடையவராயிருந்தார். அவரின் பின் முத்துக்குமார கவிராயர், முருகேசபண்டிதர், குமாரசுவாமிப்புலவர் முதலானோர் இருந்தார்கள்.
இங்ஙனமே ஏழாலை,குப்பிழான் முதலிய ஊர்களும் சைவப்பண்பாட்டுக்குப் பெயர்பெற்று விளங்கின. இலங்கைக் கரை நாடுகளைக் கைப்பற்றியாண்ட பறங்கியர் என்னும் போத்துக்கேயர் கொழும்பைக் கைப்பற்றி நூறாண்டுகளுக்குப் பின்னரே யாழ்ப்பாணத்திற் காலடிவைத்தார்கள். யாழ்ப்பாணத்தை அவர்கள் ஆண்டகாலத்தில் சைவக்கோயில்களைத் தரைமட்டமாக்கியும்,தம் மதம் புகுத்தியும் பறங்கியர் முப்பத்தெட்டு ஆண்டுகள் செய்த அழிவுகள் அளவில்லாதன.அவர்களின் பின் ஒல்லாந்தர்களும் ஆங்கிலேயர்களும் ஐரோப்பிய நாகரிகத்தையே நம் பிரதேசங்களில் வேர்கொள்ளச் செய்யப் பெருமுயற்சி எடுத்தார்கள்.
அக்காலங்களில் அடிவளவுகளிலும் கிணற்றடியிலும் அடுப்படியிலும் நம்மவர் சிவபெருமானையும் அவர்தம் அருள் மூர்த்தங்களான தெய்வத் திருவுருவங்களையும் வாயாலும் மனத்தாலும் வணங்கிச் சைவச் சால்பைப் பேணிப் பாதுகாத்து வந்தார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் ஓரளவு சைவச் சால்வு தலையெடுத்தது.ஆறுமுகநாவலர் அவர்கள் சைவப் பிரசங்கங்களாலும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாயும், புராணபடன வாயிலாகவும் சைவம் வளர்க்கத் தொடங்கினார்.
நாவலரவர்களைப் பின்தொடர்வதற்கு ஊர்கள் தோறும் பெரியவர்கள் தலையெடுத்தார்கள்.எத்தனையோ எதிர்ப்புக்களுக்கிடையே நீறுபூத்த நெருப்புப்போல அமைதியாயிருந்த சைவத் தமிழ் மெல்ல மெல்ல ஒளிவீச ஆரம்பித்தது.
சைவத் தமிழ்ப் பண்ணைகளுள் குப்பிழான் ஊரும் ஒன்று.அங்கே வாழ்ந்த இரத்தினேசுவரர் என்னும் அந்தணரின் மைந்தர் சின்னையா ஐயராவர்.பரம்ரையாகப் பெற்ற சைவப் பண்பாட்டில் உருவான சின்னையர் அவர்கள், கௌரியம்மையார் என்பாரை மணந்து வாழ்ந்த காலத்தில் முதலில் தோன்றிய மைந்தர் செந்திநாதர்.
செந்திநாதர் ஐயர் அவர்கள் 1848 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்து உரோகிணி நாளில் தோன்றினார். பிராமணப் பிள்ளைக்குச் செய்யவேண்டிய சம்ஸ்காரங்கள் என்னும் சுபகருமங்கள் யாவும் செய்யப்பெற செந்திநாதர் நல்ல முறையில் உருவாகி வளர்ந்தார்.
செந்திநாதரின் தாய் மாமனாராய கதிர்காம ஐயரென்பார் புன்னாலைக்கட்டுவனில் வாழ்ந்தார்.அவர் அக்காலத்தில் வடமொழி, தென்மொழி வல்லுநரான நீர்வேலிச் சங்கர பண்டிதரிடம் முறையாகக் கற்று விற்பத்திமானாகி இருந்தார். செந்திநாதர் தாய் மாமனாரையடுத்துப் பத்தாண்டுப் பராயம் வரை தமிழில் போதியளவு அறிவைப் பெற்றார்.
செந்திநாதருக்குப் பத்து வயதானபோது பெற்றோர் அவருக்கு ஆங்கிலக் கல்வியூட்ட விரும்பி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அனுப்பினார். அக்காலத்தில் மத்திய கல்லூரியில் புலமைவாய்ந்த ஆங்கிலேயர் பலர் ஆசிரியர்களாயிருந்தனர். அதனால் செந்திநாதர் ஆங்கில மொழியை நன்றாகக் கற்றார். ஏறக்குறையப் பத்தாண்டுகள் ஆங்கிலங் கற்றபின் அவர் கல்லூரியைவிட்டு விலகினார்.
அக்காலத்தில் அவருடைய ஆங்கிலப் படிப்பின் தரத்துக்கு உயர்ந்த அரசாங்க உத்தியோகம் பார்க்கலாம். உத்தியோக உயர்வில் நாட்டமில்லாத அவர்,மேலும் தமிழ் படிக்க விரும்பி நல்லூரில் வாழ்ந்த சம்பந்தப் புலவரின் இருப்பிடஞ் சென்றார்.சம்பந்தப் புலவர்,இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் முறையாகக் கற்ற பெரும் புலவராவர்.ஆறுமுகநாவலரவர்களும் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடமே கல்வி கற்றவராவர்.
செந்திநாதையர் சம்பந்தப் புலவரவர்களிடம் முறையாகக் கற்றுவந்தபோது, பெரியபுராணத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.இத்தகைய ஈடுபாடு ஆறுமுகநாவலரவர்களுக்கும் இளமையிலேயே உண்டாகி வளர்ந்தது. செந்திநாதையரின் இருபத்திரண்டாம் வயதுப் பருவத்தில் அவர் பெரியபுராண வித்தகராய் விளங்கினார்.
முதல்யாத்திரைப் பேறு
பெரிய புராணத்தில் தேவார முதலிகள் திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்த முறையில் தாமும் தலங்கள் தோறும் போய் வருதல் வேண்டும் என விரும்பித் தம் நோக்கத்தைத் தந்தையாருக்குக் கூற,அவர் தாமும் உடன் வருவதாக மகிழ்ந்து கூறிக் குடும்பசமேதராய்த் தமிழ் நாட்டுக்குச் சென்றார்கள். திருச்செந்தூரில் 1871 ஆம் ஆண்டில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் செந்திநாதையரின் மனம் முருகப்பெருமான்மீது வெகுவாகப் பதிந்துகொண்டது. அவர் முருகப்பெருமானை உபாசனா மூர்த்தியாகக் கொண்டார் என்றும் கருத இடமுண்டு.
ஆசிரியர் வேலை
ஆறுமுகநாவலரவர்கள் தமது பன்னிரண்டாண்டுவரை தமிழும் சைவமும் நன்றாகப் படித்தபின்,மத்திய கல்லூயில் ஏழாண்டுகள் ஆங்கிலங் கற்றவர்.அவர் ஆங்கிலங்கற்றபின், ஏழாண்டுகள் ஆசிரிய வேலை பார்த்தவர். செந்திநாதையர் அவர்களின் அறிவாற்றலை அறிந்த நாவலர் அவர்கள்,அவருக்குத் தமது சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியர் வேலை கொடுத்தார்.
ஐயரவர்கள் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறாண்டுக் காலமும்,பின்னர் நாவலரவர்கள் ஆரம்பித்த ஆங்கில வித்தியாசாலையில் ஒரு வருடமுமாக ஏழாண்டுகள் ஆசிரியர் வேலையை நாவலரவர்களின் பூரண திருப்திக்கு அமையச் செய்து,நாவலரவர்களின் நன்மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்த ஏழாண்டுக் காலத்தில் ஐயரவர்கள் நாவலரவர்களை நிழல்போற்றொடர்ந்து, அவர் எங்கெங்கே சைவப்பிரசங்கம் செய்தாரோ,அவற்றையெல்லாம் மனங்கொண்டு இரவிரவாகக் குறிப்பெழுதி வைத்த பின்னரே உறங்கும் நியமம் பூண்டவராயிருந்தார்.
நாவலரவர்களை அன்போடும் அச்சத்தோடும் மதித்துப் பின்பற்றி வந்த ஐயர் அவர்களிடம் நாவலரவர்கள் அன்பு பாராட்டி வந்த காலத்தில்,புறமதத்துப் பிரசாரகர் ஒருவர், சைவசமயத்தைத் தாக்கி இல்லாததும் பொல்லாததுமாகப் பேசியும் எழுதியும் வந்தார். அதைக் கவனித்த நாவலரவர்கள் தமக்குக் கைவந்த கண்டனம் ஒன்றெழுதி ஐயரவர்கள் பெயரில் அச்சிட்டுப் பரப்பிப் புகழ்பெற்ற புறமதப் பெரியாரின் பிரசாரத்தைத் தடுத்தார்கள். ஐயரவர்கள் கண்டனம் எழுதிய கலையை நன்றாகக் கற்று வந்தார்.
ஐயரவர்களும் இலங்கை நேசன் பத்திரிகையும்
யாழ்ப்பாணம் கந்தமடத்து அம்மன் வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பார்,1877 ஆம் ஆண்டு தை மாதம் முதலாக மாதமிருமுறை இலங்கை நேசன் என்னும் வாசிகபத்திரத்தை வெளியிட்டு வந்தார்.அந்தக் காலத்தில் அப்பத்திரிகையின் ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாவாக இருந்தது.பத்திரிகை பலவிடயங்களை நெருக்கமாகக் கொண்டதாய்ப் பெரியவர்கள் பலரின் அபிமானத்தைக் கொண்டு நன்றாக நடந்து வந்தது. அதில் ஆறுமுகநாவலர் அவர்களும் அடிக்கடி எழுதி வந்தார்.
செந்திநாதையர் அவர்கள் நாவலரவர்கள் வழியில் கட்டுரைகளும் கண்டனங்களும் எழுதி,இலங்கை நேசன் பத்திரிகையில் நல்ல மதிப்புப் பெற்றிருந்தார்.அவரின் கட்டுரைகளைப் பொதுமக்கள் வெகுவாக விரும்பிப் படித்து வந்தார்கள்.அவரின் கண்டனக் கட்டுரைகளைப் பெரியவர்கள் கருத்தூன்றிப் படித்து வந்தார்கள்.
இவ்வாறாக அக்காலச் சூழ்நிலைக்கேற்பப் புறச் சமயத்தவர் சிலர்,தங்கள் மதப் பிரசாரத்தில் வல்லவரும் கண்டனங்கள் எழுதுவதில் ஆற்றல் உள்ளவரும் விவாதப் பேச்சில் நிபுணருமான ஒரு நிபுணரை தமிழ் நாட்டிலிருந்து,அழைத்து வந்து,சைவ நிந்தனை செய்வித்தார்கள்.
இதனையறிந்த நாவலரவர்கள் புறச் சமயப் பெரியவரோடு வாதஞ் செய்ய வல்லவர் ஐயரவர்களே எனக்கண்டு,அப்பணியை அவரிடமே ஒப்படைத்தார்கள்.புறச் சமயத்தவரின் சைவ நிந்தனைக் கட்டுரைகளை ஐயரவர்கள் கண்டித்துத் தர்க்க ரீதியாகத் தகர்த்து எழுதிப் பெரும் புகழ் பெற்றார்கள்.அவ்வளவோடு விடாமல் புறமதத்தவர் செய்து வந்த கெடுபிடிகளைத் தகர்ப்பதற்குப் பொது மேடையில் சமய வாதம் செய்யவும் ஆயத்தமானார்.
நாவலரவர்களிட்ட நற்பணியைத் தலைமேற்கொண்ட ஐயரவர்கள்,1878 ஆம் ஆண்டு ஆனி பதின்முன்றாம் நாள் வெளிவந்த இலங்கை நேசன் பத்திரிகையில்,புறமதத்துப் பெரியவர்களைத் தம்முடன் வாதஞ் செய்ய வருமாறு விளம்பரம் செய்தார்கள்.சமய வாதத்தில் தாம் தோற்றால் தாமும் தம் மாணாக்கர்களும் புறமதத்திற் சேர்ந்து,எவ்வித கைமாறும் பெறாமல் அவர்களின் மதப் பிரசாரம் செய்வதாக உறுதிகூறி எழுதினார்.
ஐயரவர்களின் அழைப்பை ஏற்று எவரும் சமய வாதஞ் செய்வதற்கு முன்வரவில்லை.ஆனால் புறமதத்தவர் தங்கள் பத்திரிகையொன்றில்,யாரோ ஒருவரின் புனை பெயரில், “இழிமொழித் திமிர தீபிகை” என்ற தலைப்பில் எழுதியதற்கு ஆறுமுகநாவலரவர்கள்,29-6-1878 ஆம் நாள் வெளிவந்த இலங்கை நேசனின் செந்திநாதையரவர்களின் படிப்பாழத்தையும்,தர்க்க ரீதியாக வாதஞ் செய்யும் சிறப்பாற்றலையும் குறிப்பிட்டு எழுதினார்கள்.
திருமணமும் மகப்பேறும்
செந்திநாதையரவர்கள் வண்ணை hநச்சியார் கோயிலடியைச் சேர்ந்த விசுவநாத ஐயர் அவர்களின் புதல்வி,சிவகாமியம்மை என்பாரைத் திருமணஞ் செய்து,மீனாட்சி என்னும் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றார். மகவீன்ற மனைவி சில மாதங்களில் நோயுற்று,1878 ஆம் ஆண்டிற் காலமானார்.ஐயரவர்கள் தம் வினைப்பயன் உணர்ந்து,நாட்டிற்கு நற்பணிபுரிதலையே தம் தவமாகக் கருதி,முழு நேரத் தொண்டு செய்வதற்குத் தம்மைத் தயாராக்கி வந்தார்.
பண்முறையும் சாரங்கி வாத்தியப் பயிற்சியும்
ஐயரவர்கள் நாவலரவர்களோடு நெருங்கிப் பழகியதால் நல்ல சமய அறிவும் திருமுறைப் பயிற்சியும் பெற்றிருந்தார்.நாவலரவர்கள் திருமுறையோதுவதற்குப் பண்முறை மிகவும் அவசியம் எனக் கண்டு,தமிழ் நாட்டில் பண்ணிசையில் பெரும் புகழ்பெற்றிருந்த சுப்பிரமணிய ஓதுவர் மூர்த்தியவர்களையும் அவர்தம் கூட்டத்தவரையும் இங்கே அழைத்துப் பணி செய்யுமாறு வசதி செய்து கொடுத்தார்.
சுப்பிரமணிய ஓதுவா மூர்த்திகள் பண்ணுக்கேற்ற சாரங்கி என்னும் வாத்தியமும் மீட்கவல்லவராயிருந்தார். அவரோடு கூடவந்தவர் கூட்டத்தில் அவர்தம் மைந்தர் பொன்னோதுவாரும் இருந்தார்.இத்தகைய பேர்படைத்த ஓதுவா மூர்த்திகளிடம் பயின்றவர்களுள் செந்திநாதையரவர்களும் ஒருவர்.
ஐயரவர்கள் பண்ணிசையோடு சாரங்கி வாத்தியமும் பழகியிருந்தார். ஆறுமுகநாவலரவர்கள் சிவபூசை செய்யும் வேளைகளில் உடனிருந்து திருமுறையோதும் சலுகையையும் அவர் பெற்றிருந்தார்.நாவலரவர்கள் பெரிய சிவ பூசா துரந்தரர்.தம்மைச் சதாசிவ மூர்த்தத்தில் ஒப்படைத்து உணர்ச்சி பெற்று நற்கருமங்கள் செய்தவர். பெரியபுராண சூசனம் அவ்வுணர்ச்சி வேகத்தில் அவருக்கு ஊறிவந்த பேறு.
கல்வியாத்திரை
ஐயரவர்கள் முப்பதாம் ஆண்டளவில் மனைவியையிழந்ததும்,பிள்ளையைத் தம் உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு,பாரதநாட்டுக்குச் சென்று மேலும் படிப்பதற்கு விரும்பினார்.சைவசித்தாந்த தத்துவமே உறுதியானது, உண்மையானது, இயற்கையானது என்றெல்லாம் உளங்கொண்டிருந்த அவர்,மேலும் வேதங்கள்,ஆகமங்கள்,வேதாங்கங்கள்,தனிசனங்கள் கூறுவனவற்றை பெரியவர்கள் வாய்கேட்டறிய விரும்பினார்.
நாவலரவர்களிடம் பயபக்தியோடு தம் விருப்பத்தை விண்ணப்பித்து அவரின் நல்லாசியோடு விடைபெற்று ஆசிரியர் வேலையைப் பரித்தியாகஞ் செய்துவிட்டு வடநாட்டுக்குப் பிரயாணமானார்.
வடக்கே சென்ற ஐயரவர்கள் கன்னியாகுமரி முதல் தமிழ்நாட்டுத் தலங்களெங்கும் தரிசித்து,ஆங்காங்கே பெரியவர்கள் அழைப்புக்கிணங்கிச் சைவசத்தாந்தப் பிரசங்கஞ் செய்து வந்தார்.நாவலரவர்களின் பிரசங்கங்கள் கேட்டு எழுதிக்கொண்ட குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு நாவலரவர்களின் வழியிற் பிரசங்கஞ் செய்த அவருக்கு,நல்ல சாரீர வசதியும்,சாரங்கி வாத்தியம் வாசிக்கும் திறமையும் வாய்ப்பாக இருந்தன.தேவாரத் திருமுறையைப் பண்ணோடு பாடிப்பழகிய ஐயரவர்களுக்குச் சைவப்பிரசங்கம் அமைவாயிருந்தது. அவரின் சைவப் பிரசங்கங்களைத் தமிழ்நாட்டுப் பெரியவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
திருவனந்தபுரத்திற் படிப்பும் பணியும்
அந்தக்காலத்து மலையாளநாட்டின் தலைநகராயிருந்த திருவனந்தபுரத்து உயர்நீதிமன்றத்து நீதிபதியாயிருந்தவர் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை தா. செல்லப்பாபிள்ளை என்பவராவர். செல்லப்பாபிள்ளையவர்களின் உதவி பெற்ற ஐயரவர்கள், அங்கே உயர்ந்த பீடத்தமர்ந்திருந்த வடமொழி விற்பததிமான்களாய சுப்பா சாஸ்திரியார், அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் என்பவர்களிடம் வடமொழியில் காவியம், தர்க்கம், வியாகரணம் முதலாய கருவி நூல்களையெல்லாம் ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்து விற்பத்திமானாயினர்.
நாவலரனுப்பிய நன்னடக்கைப் பத்திரம்
திருவனந்தபுரத்தில் விற்பத்திமானாய் விளங்கிய ஐயர் அவர்கள்,தாம் மேற்கொண்ட பணிகளுக்கு ஆறுமுகநாவலரவர்களின் நற்சாட்சிப் பத்திரம் உதவியாயிருக்கும் எனக்கருதி,அங்கிருந்தவாறே நாவலரவர்களுக்கு விண்ணப்பித்தார்.நாவலரவர்கள் 1879 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்துப் பதினாறாம் நாள் அதனை எழுதி அனுப்பினார் என்பர்.
மகா ஸ்ரீ சி.செந்திநாதையரை நான் ஏழு வருஷ காலம் அறிவேன்.இவர் ஆறு வருஷம் என்னுடைய தமிழ் வித்தியாசாலையிலும்,ஒரு வருஷம் என்னுடைய இங்கிலீஷ் வித்தியாசாலையிலும் உதவி உபாத்தியாயராக இருந்து,தமது கடமையை ஜாக்கிரதையோடு பிறழாமல் நடாத்திக்கொண்டு வந்தவர்.ஒழிவுள்ள பிற நேரங்களிலே நான் பொது நன்;மையின் பொருட்டு எடுத்துக்கொண்ட பிற கருமங்களையும் நிறைவேற்றினார்.
இங்ஙனம்
க.ஆறுமுகநாவலர்
யாழ்ப்பாணம்
1879 புரட்டாதி,16
அந்நாள்களில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரவர்கள்,தென்னிந்தியாவில் தலயாத்திரை செய்தபோது, அவரைக் கண்டு மகிழ்ந்த ஐயரவர்கள், நாவலரவர்களுக்கு ஒரு நன்றிக் கடிதம் வரைந்து, புலவரவர்களிடம் கொடுத்தார்கள்.அக் கடிதம் நாவலரவர்கள் கையிற் கிடைப்பதன்முன் நாவலர் அவர்கள் 1879 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஐந்தாம் நாளில் மறைந்துவிட்டார்கள். இச்சம்பவம் ஐயரவர்களை வெகுவாக வாட்டிக் கண்ணீர் மல்கப் பண்ணிற்று.அவர் கண்ணீர் மல்கிப்பாடியவைகளுள் இரண்டு வெண்பாவும் ஒரு கட்டளைக் கலித்துறையும் கிடைத்துள்ளன.
வெண்பா
நன்னடக்கைப் பத்திரிகை நாவலனே நீயனுப்ப
என்னதவஞ் செய்தேனோ யானறியேன் - அன்னதனுள்
உள்ளசில வாசகங்க ளுற்றுணரும் போதெல்லாம்
வெள்ளம் பொழியும் விழி.
சுன்னைக் குமார சுவாமியிடத் தோர்கடிதம்
உன்னைக் குறித்தனுப்பி யுள்ளுவந்தேன் - அன்னதுன்பாற்
சேருமுன்னம் நாவலனே சென்றாய் சிவலோகம்
யாரும் பதைபதைக்க வி;ங்கு.
கட்டளைக் கலித்துறை
தேவாரம் யான் சொலக் கேட்டு
மகிழ்ந்து சிரத்தையுடன்
பூவாதி கொண்டு புரிசிவ
பூசைப் பொழிலழகும்
பாவாணர் மெச்சச் செயும்பிர
சங்கமும் பார்த்தினியான்
நாவார வாழ்த்திடு நாளுமுண்
டோநல்லை நாவலனே.
தம்பையா முதலியாரின் அழைப்பு
ஐயரவர்கள் ஏறக்குறையப் பத்தாண்டுகள் வரை தமிழ் நாட்டிற் சைவப்பணி செய்து அங்குப் பெரும் புகழ் பெற்று வாழ்ந்தமையைக் கேட்ட கொழும்புத் தர்மவான் தம்பையா முதலியார்,ஐயரவர்களை அழைத்து தமது தம்பையா சத்திரத்தில் சைவப் பிரசங்கம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.
ஐயரவர்களும் பெருவிருப்பத்தோடு அரன்பணி செய்வதற்குப் பெருவாய்ப்புக் கிடைத்ததை உன்னி மகிழ்ந்து,ஆறுமாத காலம் அங்குத்தங்கி அரிய பிரசங்கங்கள் செய்து வந்தார்கள்.அக்காலத்தில் சேர்.அருணாசலம் முதலாய பெரியவாகளோடு நெருங்கிப் பழகிவந்தார்.
அருணாசலம் அவர்கள் சித்தர்களோடும் ஞானியர்களோடும் நெருங்கிப் பழகிச் சைவசித்தாந்தத் திறனைக் தம்முடைய ஆங்கில நண்பர் பேராசிரியர் எட்வேட் காப்பென்ரர் என்பாருக்கு எழுதிவந்தார்.எட்வேட் காப்பென்ரர் மெய்யியல் என்றொரு நூல் எழுதுவதற்கு அருணாசலம் அவர்களின் தொடர்பு வாய்ப்பாக இருந்தது.
அருணாசலம் அவர்கள் ஐயரவர்களிடம் கந்தபுராணத்தில் ஏதாவது செய்யுமாறு கேட்டார்கள்.ஐயரவர்கள் கதிர்காமஞ் சென்று பன்னிரு தினங்கள் உபவாசமிருந்து கந்தபுராணத்தைக் கருத்தூன்றிக் கற்று வந்தார்கள்.
மீண்டும் தமிழ்நாட்டில்
ஐயரவர்கள் 1882 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கே திருநெல்வேலியில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராயிருந்தார். ஊர்ப்பெரியவரான சுப்பிரமணியபிள்ளை என்பாருக்குச் சொந்தமான சுஜனமனோரஞ்சனி என்னும் பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்.இவரின் எழுத்தாற்றலைக் கண்ட கிறிஸ்தவர் சிலர் இவரை அணுகி,சாணார் எல்லாம் ஷத்திரியர் என்று சற்குணர் என்பார் எழுதிய நூலுக்குக் கண்டனம் எழுத வேண்டினர்.இவரும் உடன்பட்டு சாண்சத்திரிய பிரசண்டமாருதம் என்னும் கண்டன நூலை எழுதிக்கொடுத்தார்.
தீட்சைகளும் ஆச்சாரியாபிடேகமும்
ஐயரவர்கள் சைவசித்தாந்த நெறியில் முறை தவறாமல் ஒழுகி,சோபான முறையில் தமக்கு வேண்டிய விசேட தீட்சைகள்,ஆச்சாரியாபிடேகம் முதலியன பெறுவதற்குத் தகுதியான குருவைத் தேடிக் கண்டார்.திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சிவாசாரிய சுவாமிகளை வணங்கி,அவரிடம் தமக்கு வேண்டிய தீட்சைகள், உபதேசங்களைப் பெற்று,1884 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஒரு நல்ல வேளையில் நிருவாண தீட்சையும் ஆச்சாரியாபிடேகமும் பெற்று,அகோர சிவாசாரியர் என்னும் தீட்சாநாமமும் பெற்றுயர்ந்தார்.
ஐயரவர்கள் பிரசங்கங்கள் கட்டுரைகள் மூலம் தமிழ் நாடெங்கும் புகழ்பெற்றிருந்த காலத்தில், திருக்கோயி;ல்களின் முகாமையாளர்கள் பலர்,அவரையழைத்துத் திருவிழாக் காலங்களிற் பிரசங்கங்கள் செய்வித்தனர்.பேரூர் என்னும் பெருந்தலம் மேலைச் சிதம்பரம் எனப் பெயர் பெற்றது.அங்கே சாந்தலிங்க சுவாமிகளின் தர்மப் பிரகாச மடமும் உண்டு.அங்கு சென்று பேசிய ஐயரவர்கள்,உடுமலைப் பேட்டை முதலாய ஊர்களிலும் உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன், ஞானத்தின் திருவுரு முதலாய விடயங்கள் பற்றிப் பேசினார் என்பர்.
கந்தபுராண நவநீதம்
இவ்வாறாக முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றை முறையாக வணங்கி வந்த ஐயரவர்கள்,முன்னர் கந்தபுராணத்தில் ஏதாவது செய்தல் வேண்டும் என்று சேர் அருணாசலம் அவர்கள் இட்ட பணியை நினைவிற்கொண்டு,கந்தபுராண நவநீதம் என்னும் பெயரி;ல் ஒரு நூல் எழுதுவதற்கு ஆயத்தம் செய்தார்.
கல்வி கரையிலாக் காஞ்சிபுரத்துக் குமரகோட்டத்து கச்சியப்ப சிவாசாரியர் செய்த கந்தபுராணம்,அவர் காலத்திலேயே யாழ்ப்பாணத்திலும் குடிபுகுந்து, கலாசாரமூலமாக வேர்கொண்டு பரந்தது. அதனை அங்கிருந்து ஏட்டுருவில் படியெடுத்து வந்தவர் கச்சிக் கணேசர் என்பவராவர்.
கந்தபுராண படனத்தில் முன்னேறிவந்த யாழ்ப்பாணம் நாவலர் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.நாவலரவர்களின் மருகர் வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையவர்களின் கந்தபுராண தாடனம் தமிழ்நாட்டிலும் புகழ்பெற்றிருந்தது.யாழ்ப்பாணத்துக் கோயில்கள் எங்கும் புராணபடனம் ஒழுங்காக நடைபெற்று வந்தது.அவற்றைவிடப் புராணபடனத்துக்கென்றே சில ஊர்களில் மடங்களும் உருவாயின.ஊர்மக்கள் கூடியிருந்து புராணபடனம் கேட்டல் தமக்கு உறுதி தரும் என ஒழுகிவந்தார்கள்.இத்தகைய மடம் அமைந்த ஊர் ஒன்று மடத்தின் மகிமையால் கந்தமடம் என வழங்குகிறது.
இத்தகைய புகழ்பூத்த கந்தபுராணப் பாற்கடலில் முழுகிய ஐயரவர்கள்,அதில் வெண்ணெய் திரட்டி எடுத்தாற்போல் கந்தபுராண நவநீதம் என்னும் நூலை உருவாக்கினார்.இதன் உபோற்காதத்தி;;ல் இதற்குரிய விளக்கத்தையும் தந்துள்ளார்.
“திகடசக்கரச் செம்முகமைந்துளான்”என்னும் தலைக்காப்பு முதல், “பாராதியேனைப் பொருளாகி”;என்னும் கடைக்காப்பு இறுதியாகக் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்ட அதியற்புத அதிமதுர திவ்விய வாக்காகிய கந்தபுராணத்தினின்று சாரமாகத் திரட்டிச் செய்யப்பட்டமையால், இந்நூலுக்குக் கந்தபுராண நவநீதம் என்றும் பெயர் கொடுக்கப்பட்டது.
கந்தபுராண நவநீதம் எழுதி முடிந்ததும் அதனை அச்சேற்றுவதற்காக சேர்.அருணாசலம் அவர்களின் பொருளுதவி பெற்றுச் சென்னைக்குச் சென்று,அதனை 1882 ஆம் ஆண்டில் அச்சிட்ட பின்னர்,ஐயரவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மீண்டார்.
சைவசித்தாந்த பாடம்
அருணந்தி சிவாசாரியர் செய்த சிவஞானசித்தியார் என்னும் சைவசித்தாந்தப் பெருநூலுக்குப் பலர் அற்புதமாக உரை எழுதியுள்ளார்கள்.அவற்றுள் அறுவர் உரையெனப் புகழ்பெற்ற ஆறினுள் ஒன்று ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் செய்த உரையாகும்.
இந்த ஞானப்பிரகாசத்தம்பிரான் சுவாமிகள் நாவலரவர்களின் தாயார் சிவகாமியின் தந்தையார் வேதவனத்தாரின் முன்னோர்.அவர் வங்காளஞ் சென்று வடமொழி பயின்ற மாமேதை.யாழ்ப்பாணத்துப் பறங்கியாட்சியில் பசுக்கன்று திறைகொடுக்க மறுத்து நாட்டைவிட்டுப் போனவர்.சிதம்பரத்தில் திருக்குளமும் திருமடமும் அமைத்தவர்.
ஞானப்பிரகாசத்தம்பிரான் செய்த உரையை நாவலரவர்களிடம் படித்த இணுவில் நடராசா ஐயரவர்கள்,அவ்வுரையைப் பாதுகாத்துவைத்து,1882 ஆம் ஆண்டில் அச்சிட்டார்.இந்த இணுவில் நடராசா ஐயரவர்களிடம்,செந்திநாத குரு முறையாகப் பாடங்கேட்டுச் சிவஞானசித்தியாரில் தீர்க்கதாடனமுள்ளவராயிருந்தார். பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்ற வாக்கியத்துக்கு அமைய ஒழுகிய செந்திநாதையரவர்கள்,தமது முப்பத்தொன்பதாம் ஆண்டுப் பராயத்தில் அடக்கமாக இருந்து சித்தாந்த பாடம் படித்த அமைவினை நம்மவர் கவனித்து ஒழுகுதல் கடனாகும்.
சைவசித்தாந்தத்துறை கைவந்தபின்,மீண்டும் தமிழ் நாட்டுக்குச் சென்று பெரியபுராணச் செய்யுள்களை விளக்கிப் பிரசங்கங்கள் செய்து,1887 ஆம் ஆண்டில் ஞானபோத விளக்கச் சூறாவளி என்னும் நூலை எழுதி அச்சேற்றினார்.
அமிர்தபோதினி
அப்பால் சென்னையைவிட்டுச் சேலம் சென்று,திருப்பற்றூரிலே அமிர்தபோதினி என்னும் வார வெளியீடு ஒன்றை நடத்தி வந்தார்.அக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த புறச்சமயத்தவர் சிலர்,சிவனுந்தேவனா என்றொரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டனர்.அதைக்கண்டு மனம் பொறாத இரத்தினஞ் செட்டியார் என்பார்,ஐயரவர்களைக் கொண்டு,”சிவனுந் தேவனா என்னும் தீயநாவுக்கு ஆப்பு”என்னும் கண்டனப் பிரசுரத்தை எழுதுவித்தார்.அதனைத் தொடர்ந்து ஐயரவர்கள் பிரமவித்திய பத்திராதிபர் முதலானோர் சமுகத்திலே நீண்ட சைவப் பிரசங்கஞ் செய்தார்.
சித்தாந்த சிகாமணி
ஐயரவர்களின் சைவப் பணியை அறிந்து வியந்த திருமங்கலக்குடி சூரியனார் கோயிலாதீன ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரதேசிகரவர்கள் இவருக்கு சித்தாந்த சிகாமணி என்னும் பட்டஞ் சூட்டி வாழ்த்தினார்கள்.
நிறைகல்வி தவவொழுக்கஞ் சான்றாண்மை
கண்ணோட்ட நெடுக மன்பு
பொறைமேன்மைச் சிவஞான முதிர்ச்சியநு
பூதிமுதற் குணங்க ளெல்லாம்
குறையாம் னிறைசெந்தி நாதமறை
யோய்நின்னைக் குறித்தியா மிட்ட
மறை வாய்மைச் சித்தாந்த சிகாமணியாம்
பெயர் பிறர்க்கு வழங்க லாமோ.
காசிவாசி
இமயமலையிலிருந்து இழிந்தோடி வரும் புனித நீர்ப்பெருக்கான கங்கை,1500 மைல் நீளமானது.அதில் வாரணம் ,அசி என்னும் இரு கிளைகளுக்கிடையிலமைந்த நிலப்பகுதி வாரணாசி எனப் பெயர்பெறுவது. அதைக் காசி எனவும் வழங்குவர்.கங்கைக் கரையில் நான்கு மைல் நீளமுள்ள காசி சைவசமயத்தவரின் புண்ணிய பூமி,தலைநகரம்.முத்தி தரும் நகரங்களுள் ஒன்று.வேத வேதாங்கங்களின் ஆய்வுப் பூமி. அறுபத்துநான்கு கட்டங்களும், ஆலயங்களும்,மதாசாரியர் பீடங்களும்,பல்கலைக்கழகமும் எல்லாம் அமைந்த பெரிய இடம்.தென்னகத்து சங்கராசாரியரும்,குமரகுருபர சுவாமிகளும் பெருமடங்கள் அமைத்த ஞான பூமி. இத்தகைய புண்ணிய பூமியில் ஒரு கர்ப்பகாலம் எனப்படும் பத்துமாதமாவது வாழ்தல் வேண்டும் என்பர். அது கூடாதவர் பத்து நாட்களாவது வாழ்தல் நன்றென்பர்.
இத்தகைய புகழ்பெற்ற புண்ணிய நதிக்கரையிலே புனித பூமியிலே செந்திநாதையர்,1888 ஆம் ஆண்டு முதல் 1898 ஆம் ஆண்டு வரை பத்தாண்டுக் காலம் தங்கி வாழ்ந்து படித்தார் என்றால் அவர் செய்த தவப்பயனை என்னென்பது.அவர் காசிவாசி செந்திநாத ஐயர் என்னும் மதிப்புக்குரிய பெயருக்கு அருகதை உள்ளவரானார்.
குமரகுருபர சுவாமிகளின் ஞானபரம்பரையில் வந்தவர்களான திருப்பனந்தாள் மடாதிபதிகளுக்கே காசிவாசி என்னும் கௌரவமுரித்தாயிருப்ப,இவருக்கும்,பழனி வேதாகம பாடசாலையதிபர் ஸ்ரீலஸ்ரீ ஈசானசிவாசாரியர் போன்ற சிலருக்குமே இப்பட்டம் உண்டாவதாயிற்று.இலங்கையருள் முன்னும் பின்னும் இப்பட்டத்தைப் பெற்றார் எவரும் இல்லை.ஈழத்திருநாட்டிலே காசிவாசி என்றால் அது செந்திநாதையர் அவர்களையே குறிப்பதாகும்.
செந்திநாதயோகி
செந்திநாதையரவர்கள் காசிவாசியாய்,கங்கைக்கரையில் வாழ்ந்து, விசுவநாதரையும் விசாலாட்சியையும் நியமமாக வழிபட்டு,விசுவநாதர் ஆலயத்து உட்பிராகாரக்கட்டுகளில் பிராமணர்கள் வேதமோதக் கேட்டுவந்தும்,குமரகுருபரசுவாமிகளின் குமாரசாமிமடம் என்னும் காசிமடத்துப் பண்டிதர்களோடு சைவசித்தாந்தம் பேசியும்,மகிழ்ந்த காலத்திலே அவ்வப்போது பல கட்டுரைகள் எழுதி வந்தார்.
சைவசமயம், சைவசித்தாந்தம், சிவனே முழுமுதற்கடவுள், முப்பொருளுண்மை, முதலாகப் பல கட்டுரைகளை எழுதிய ஐயரவர்கள், அவற்றை அக்காலத்தில் வெளிவந்த இந்துசாதனம், விவேகதிவாகரன், நாகை நீலலோசனி, விஜயத்துவஜம், வெற்றிக்கொடியோன் முதலிய பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.
யாழ்ப்பாணத்தில் வெளியான இந்துசாதனம் என்னும் பத்திரிகைக்கு அக்காலத்தில் பத்திராதிபராய் இருந்தவர் ஸ்ரீமத்.த.கைலாசபிள்ளை அவர்களாவர்.இவர் ஆறுமுகநாவலரின் தமையனார் தம்பு என்பாரின் மைந்தரும், நாவலர் தர்மபரிபாலனப் பொறுப்பதிகாரியும்,சிவனேசச்செல்வரும் தர்மப்பிரபுவுமாவர். இவர் ஐயரவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து,வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த சமயம் என்னும் நூலாக்கி 1897 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வெளியிட்டார்.அவ்வைபவத்தில் ஐயரவர்களின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டி, அவருக்கு செந்தில்நாதயோகி என்னும் சிறப்புப்பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்கள்.
தமிழ்நாட்டிற் பணி
பத்துவருடகாலம் காசியில் வாழ்ந்து கற்கவேண்டியனவற்றைக் கற்றுக்கொண்டு 1898 ஆம் ஆண்டிறுதியிலே தமிழ் நாட்டுக்குச் சென்று,சென்னையில் தங்கினார்கள்.திருவொற்றியூரில் வாழ்ந்தபின்,பழவேற்காடு என்னும் ஊரில் வாழ்ந்து வந்தகாலத்தில்,மறைமலையடிகளாரின் ஆசிரியரான சோமசுந்தரநாயகரின் வேண்டுகோளுக்கிணங்கி சென்னை ஏகாம்பரேசுவரர் ஆலய மண்டபத்தில் பிரசங்கம் செய்து வந்தார்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளையவர்கள் சைவப்பிரசங்கம் செய்தபோதெல்லாம் தலைமைதாங்கி வந்தார்.ஒருசமயம் மாயாவாதிகள் ஒருபுறமும், கதிரைவேற்பிள்ளை மறுபுறமுமாக அமர்ந்து வாதப்போர் செய்தபோது,கதிரைவேற்பிள்ளை வெற்றியீட்டியதைக் கொண்டாடி, மாயாவாததும்சகோளரி என்னும் பட்டத்தைக் கதிரைவேற்பிள்ளை அவர்களுக்குச் சபையார் சார்பில் சூட்டிப் பெருமைப்படுத்தினார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் தென்னகம் புகுந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மதுரையிலே வாழ்ந்து பிரமஞான சபையினர் வேண்டுகோளுக்கிணங்கிச் சைவசித்தாந்தம் பேசிவந்தார்கள்.
வித்தியாசாலை தாபித்தமை
முருகப்பெருமான் மீது அத்தியந்தபக்தி பூண்டொழுகிய ஐயரவர்கள் திருச்செந்தூரில் 1902 ஆம் ஆண்டில் வைதிகசுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை எனப்பெயர் கொண்ட பாடசாலையை நிறுவி தமிழ், சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய மொழிகளையும் சைவசித்தாந்த ஞானத்தையும் போதித்து வந்தார்கள். பின்னர் அப்பாடசாலையைத் தக்க பெரியவர்களிடம் ஒப்படைத்துவி;ட்டு தம் பணிமேற்கொண்டு தலங்களுக்கு யாத்திரை செய்துவந்தார்.
பாண்டித்துரை தேவர் கொடுத்த மதிப்பு
தமிழ்நாட்டில் மூவேந்தரும் முச்சங்கங்களும் மறைந்த பின்னர்,இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த சேதுபதிகள் குடும்பத்துப் பாண்டித்துரைதேவர் என்னும் புலவரும் புரவலரும் தமிழ்மீது கொண்ட ஆராமையால்,மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்துப் புலவர்களை ஒருங்கணைத்துப் பெரும் பணிபுரிந்து,மாதந்தோறும் செந்தமிழ் என்னும் சிறந்த தமிழ் வெளியீட்டையும் நடத்திவந்தார்கள்.
இத்தகைய புகழ்பூத்த பாண்டித்துரை தேவர் அவர்கள் யாழ்ப்பாணத்தாரின் கல்விமேம்பாட்டை நன்கறிந்தவர். ஆறுமுகநாவலர்,தாமோதரம்பிள்ளை, சிவசம்புப்புலவர், முருகேசுபண்டிதர், அம்பலவாண நாவலர், சபாபதி நாவலர், சுவாமிநாதபண்டிதர், குமாரசுவாமிப்புலவர், முத்துத்தம்பிப்பிள்ளை, கனகசபைப்பிள்ளை, கனகசுந்தரம்பிள்ளை முதலானோரை நன்கறிந்தவர். இந்தவகையில் அவர் செந்திநாதையரவர்களையும் சிக்கெனப்பிடித்துத் தங்கள் திங்கள் ஏடான செந்தமிழ் பத்திரிகைக்குச் கட்டுரைகள் எழுதும் வண்ணம் அன்புக்கட்டளையிட்டார்கள். ஐயரவர்களும் அகமகிழ்ந்து திருப்பாசுரம், திருச்சிற்றம்பலம், கடவுள் முதலாய தலைப்புகளில் எழுதினார்கள். இக்கட்டுரைகள் செந்தமிழின் முதல் இரண்டாம் ஆண்டுகளில் மலர்ந்து மணம் வீசியுள்ளன.
ஞானாமிர்தப் பதிப்புக்கு உதவி
மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் செந்தமிழ் என்னும் திங்கள் வெளியீட்டை வெளியிட்டதோடு,ஏட்டுருவிற் கிடந்த பல நூல்களையும் பெரும் புலவர்களைக் கொண்டு பரிசோதனஞ் செய்து வெளியிட்ட பெருமைக்குரியவர்கள். அவர்கள் கைதொட்ட முதற்புத்தகம் வாகீச முனிவர் செய்தருளிய ஞானாமிர்தம் என்னும் பெரு ஞானக்களஞ்சியமாகும்.அது சிவஞானபோதத்துக்கும் முந்தியது.
சிவஞானபோதத்துக்கு முதலில் உரையெழுதிய பாண்டிப்பெருமாளும்,பின்னர் உரையொழுதிய சிவஞான முனிவரும் ஞானாமிர்தத்திலிருந்து மேற்கோல்காட்டியுள்ளார்கள்.ஞானாமிர்தம் கடுமையானதாகவும், கிடைத்தற்கரியதாகவும் இருந்தமையால் அந்நூல் சைவசித்தாந்திகள் மத்தியில் அதிகம் பரவவில்லை.
மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் அதனை 1903 ஆம் ஆண்டிற் பரிசோதித்து அச்சிட்டபோது,பதிப்பாளராயிருந்தவர் சேற்றூர் சுப்பிரமணிய கவிராயர் என்னும் சைவப் பெரியாராவர்.அவருக்கு இரும்புக்கடலை எனக்கருதப்பட்ட ஞானாமிர்தத்தை நன்றாகப் பதிப்பதற்கு உதவிசெய்தவர் செந்திநாதையராவர்.
சைவசித்தாந்தப் படவிளக்கம்
ஐயரவர்கள் 1904 ஆம் ஆண்டில் பிரணவப் பொருளை விளக்குவதற்கு அரிதின்முயன்று,பெரிய பொறியியலாளர் படவரைவு செய்தாற்போல வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்தபடம் வரைந்தார்கள். இப்படம் மூன்றடி நீளமும் இரண்டரையடி அகலமும் உள்ளது.இதில் சுத்தாத்துவைத சைவசித்தாந்த உண்மை நிலை என்பதை ஆங்கிலத்திலும் அமைவாக விளக்கியுள்ளார்.(வுhந ளுரிசநஅந பழயட ழக வாந ளுரனனாயவாரஎயiவாய ளுயiஎய ளுiனாயவொய ளுஉhழழட:வுhந ழடெல ளஉhழழட)
இன்னும் வியாசபகவான் செய்த உத்தரமீமாம்சை என்னும் பிரமசூத்திரத்துக்குத் தனித்தனி உரை செய்தவர்களாகிய சங்கராசாரியர் சொன்ன ஏகான்மவாத நிர்க்குணப்பிரமநிலை,இராமானுசாசாரியர் சொன்ன விசிட்டாத்துவித சகுணநிலை,நீலகண்ட சிவாசாரியர் கண்ட சிவாத்துவித அத்தியாசிரம நிலை என்பனவற்றையெல்லாம் இடங்கள் வகுத்து நிறுத்தி விளங்கவைத்துள்ளார்.
சுத்தாத்துவித சைவ சித்தாந்த உண்மை நிலையை விளக்கும் வரைபடத்தில், ஞானசரிசனம் முதல் தொடங்கிப் பதினெட்டாம் படியில் பரமானந்தாவச சாயுச்சிய சிவபோக நிலையைக்காட்டியுள்ளார். இது சைவசித்தாந்தத்துக்கே தனிச்செம்மைவாய்ந்த பெருகு சோபானமாகும்.
இங்ஙனமே படிமுறையில் உச்சியில் பிரணவப்பொருள் சிவன் என்பதை விளக்கியுள்ளார்.சிவ,உமா சம்பந்தம், சிவலோக அமைவு,ஆத்மா, முப்பத்தாறு தத்துவம்,பாசநிலை என்பனவற்றை எல்லாம் ஓங்காரத்துள் அமைத்து விளக்கியுள்ளார்.இத்தகைய விளக்கப்படம் வெளியிட்ட பெருமையை வியந்த சைவத் தமிழன்பர்கள் ஐயரவர்களுக்கு சித்தாந்தபாநு என்னும் சிறந்த பட்டத்தைச்சூட்டி மகிழ்ந்தார்கள்.ஐயரவர்கள் இதனையடுத்து சைவசித்தாந்த அத்துவிதப்பட வினாவிடை என்றொரு நூலையும் எழுதி வெளியிட்டார்கள்.
அருட்பா:மருட்பா வழக்கு
ஐயரவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் 1904 ஆம் ஆண்டின் யூன் மாதத்தில் சென்னை பொலிஸ் நீதிமன்றத்தில் பரபரப்பான வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டு வந்தது.அது எப்பவோ முடிந்த காரியமொன்றையிட்டு மறுதலித்த காய்ச்சலாகும்.
மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளையவர்கள் திரு.வி.க.முதலான இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாகச் சைவப்பிரசங்கங்கள் செய்துவந்த காலத்தில்,வல்லடி வழக்காக வந்த வழக்காகும்.அது 1904 ஆம் ஆண்டில் 24533 ஆம் இலக்கத்தை உடையது.பிள்ளையவர்கள் திருமுறைகளின் பெருமை பேசியபோது,அருட்பா என்றால்; என்ன என்றும்,மருட்பா என்றால் என்ன என்றும் வரைவிலக்கணம் வகுத்தபோது,மருட்பா சபையினராய சிலர் அப்படியுமாமோ என்று கொதித்து எழுந்து வைத்த வழக்கு.
பிள்ளையவர்கள் சார்பில் சட்டத்தரணிகளாய விசுவநாத சாஸ்திரிகள்,ராம சாஸ்திரிகள் என்னும் பெரியார்கள் பேசினார்கள்.அவர்கள் ஆதாரமாகக் காட்டிய நூல்கள் எண்ணிறந்தவை.அத்தனை ஆதாரங்களுக்கும் பின்னணியில் நின்று சாட்சிசொல்லி உதவிபுரிந்தவர் செந்திநாதையர் அவர்களாவர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அஜீஜூடின் சாயுபுபஹதூர் அவர்கள் அருட்பா, மருட்பா என்பனவற்றின் பேதத்தை நன்குணர்ந்து,பிள்ளையவர்கள் பேசியது சரியென்று தீர்ப்பளித்ததும்,வழக்குத் தள்ளுப்பட்டது.
பிள்ளையவர்கள் தாம்பெற்ற வெற்றி, ஐயரவர்கள் ஈட்டித்தந்த வெற்றியென்று கொண்டாடிப் பாட்டிசைத்துப் பாராட்டிக் கௌரவித்தார். பிள்ளையவர்கள் எழுதிய வாசகமும் பாக்களும் மிக நீளமானவை.அவற்றின் சுருக்கத்தின் சுருக்கத்தையாவது அறிதல் நன்று.
”நீதிபதி முதற் பலரும் வியப்புறச் சுவாமிகள் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிய வாக்கன்றோ எமக்கு இப்பெருஞ் செயத்தை உண்டாக்கிற்று!இஃது எல்லோரும் அறிந்ததொன்றே.சுவாமிகள் பரங்குன்று நோக்கி என்னைப் பார்த்து,”நின்வழக்கு நினக்குச் செயமாகவே முடியும்.அங்ஙனமின்றி மாறுபடவரின் நீறு கண்டிகை வேல் மயில் என்பனவற்றை வேண்டிலன்”என அன்பால் நைந்து அருளிய ஆசிமந்திரம் என் மனத்தைவிட்டகலாது”.
இவ்வாறு கதிரைவேற்பிள்ளையவர்கள் ஐயரவர்களின் ஆளுமை பற்றி அருமையாகப் பாடியும் எழுதியும் உள்ளார்.அவை விரிக்கிற் பெருகி நீளுமெனவே இவற்றோடு அமைவோமாக.
அச்சுக்கூடம் தாபித்தமை
யாழ்ப்பாணத்திலே தோன்றித் தமிழ்நாட்டுக்கேகிச் சைவத் தமிழ்த்தொண்டு செய்த ஆறுமுகநாவலரவர்கள் அங்கே வித்தியானுபாலன யந்திரசாலையைத் தாபித்தார்.அவர் வழியில் சுவாமிநாதபண்டிதர் சைவவித்தியானுபாலன யந்திரசாலையைத் தாபித்தார்.
செந்திநாதையரவர்கள் சைவத் தமிழ்த்தொண்டு நிரம்பச் செய்தல் வேண்டும்,தமிழ்நாடு முன்னேறவேண்டும் என்னும் கருத்துக்கொண்டவர்களாகிய தேவகோட்டைப் பெரும் புரவலர்களாகிய சோமசுந்தரஞ் செட்டியார், இராமநாதன் செட்டியார் ஆகிய இருவரும் கொடுத்த திரவியங்கொண்டு திருச்செந்தூர் முருகனை நினைத்து செந்திநாதையசுவாமி யந்திரசாலை என்னும் பெயரி;ல் ஒரு அச்சுக்கூடத்தை 1906 ஆம் ஆண்டில் தாபித்தார்கள்.
கட்டுரைகளும் கண்டனங்களும்
ஐயரவர்கள் எழுதிய கட்டுரைகள் கண்டனங்களின் எண்ணிக்கை அதிகம்.அவர் இங்கும் அங்குமாக எழுதியவை பல.அச்சுக்கூடந் தாபித்தபின் அங்கிருந்து எழுதி அச்சிட்டவை வைதிக சைவசித்தாந்த சமயத்தாபனத்தின் பொருட்டானவை.
கோட்டைய10ர் என்னும் இடத்தில் வாழ்ந்துவந்த சந்நியாசி ஒருவர்,ஆதி சைவகுலத்திற் பிறந்தவருடைய முகத்தைத் தகர்க்கும் கோல் என்னும் பொருள் தரும் ஆதி சைவநாமக கவுலேயக முகபங்க முற்கரம் என்னும் நூலையும் தாந்தரிக கண்டனம் என்னும் நூலையும் எழுதிப் பதிந்து ஒழுகும் சைவ சமயத்தவர்களையும் வெகுவாக நிந்தனை செய்து வந்தார்.
இத்தகைய கண்டனங்களையும் தாக்குதல்களையும் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டாத துணிவுமிக்க ஐயரவர்கள் சந்நியாசியாரை நேரடியாகத் தாக்குவதற்கு வஜ்ரடங்கம் (வச்சிரதண்டம்)என்னும் கண்டனத்தையும், தாந்திரிக துண்ட கண்டன கண்டனம் என்னும் நூலையும் எழுதிப் பரப்பினார்.
ஐயரவர்கள் எழுதிய கண்டன நூல்களுள் மகாவுக்கிரவீரபத்திராஸ்திரம் என்பதும் ஒன்று.அதைச் சைவப் பெரியாராய சாம்பவஸ்ரீ சதாசிவ பண்டித சிவாசாரியர் என்பவர் தம்பொறுப்பில் அச்சிட்டுப் பரப்பினார் என்பர். இங்ஙனமே ஐயரவர்களின் கட்டுரைகள் பலவற்றைச் சைவப்பெரியார்கள் முன்வந்து உதவி செய்து அச்சிட்டுப் பரப்பினர்.
தமிழ்நாட்டிலே சென்னை நகரில் தலைமையலுவலகம் அமைத்திருந்த வேதாந்த விசாரணைச் சபையார் அக்காலத்து நெருக்கடியில்,புறச் சமயத்தார் விடுத்த பிரசாரங்களுக்குச் சுடச்சுடப் பதிலடி கொடுத்துவந்த போதெல்லாம் ஐயரவர்களின் அம்புபோன்ற சொற்கள் சைவப் பாதுகாப்புக்கு வெகுவாக உதவி செய்தன. தருக்கம் என்னும் அளவை நூல் வல்ல தம்பு என்னும் திருஞானசம்பந்தபிள்ளை யாழ்பாணத்தில் தருக்க கோடரி எனப் பெயர் பெற்ற தன்மையில்,ஐயரவர்களும் முன்னரே புறமத கண்டன குடாரி எனப் பட்டம் பெற்றவராவர்.
சைவ வேதாந்தம்
செந்திநாதையரவர்கள் எழுதிய சைவ வேதாந்தம் என்னும் நூல் சென்னையிலுள்ளாரைப் பெரிதும் மகிழ்வித்தது.அதனைக் காரைக்குடி முத்த.வெ.வெள்ளைச் செட்டியார் என்பார் பொருளுதவிபுரிந்து அச்சேற்ற ஊக்கப்படுத்தினார் என்ப.
முன்னர் சிவனுந் தேவனா என்றவர்களைப்போல,மாயாவாதஞ் சொன்னோர் பிரமம் சிவனுக்கு மேற்பட்டது என்றனர்.அவர்களுக்கெல்லாம் செந்திநாதர் தக்கபதில் கொடுப்பதற்கு எழுதிய நூல்களில் சைவ வேதாந்தமும் ஒன்று.
மாயை இல்லை என்பவர்களும்,எல்லாம் பிரமம் என்பவர்களும்,திருவருள் இல்லையென்பவர்களும் இந்துசமய வரிசையில் குந்தியிருக்கிறார்கள். இவர்களையடுத்து மாயை,உயிர் எல்லாம் பிரமத்துக்குள் அடங்கும் என்பவரும் இருக்கிறார்கள்.இவர்கள் எல்லோரும் வியாசபகவான் செய்த பிரமசூத்திரம் என்னும் உத்தரமீமாம்சையை ஆதாரமாகக் காட்டுவர்.
பிரமசூத்திரத்துக்குத் தங்கள் வசதி கருதி உரைகண்ட பெரியவர்கள் மூவர் ஒருபுறமும்,தனியொருவர் ஒருபுறமுமாக இருக்கிறார்கள்.மூவரும் தத்தமக்குள் வேறுபாடுகள் பலவிருக்கவும்,நாலாம் ஆளை அடக்குவதற்காக ஒரு முகாமில் குந்தியிருக்கிறார்கள்.நாலாம் ஆள் நல்லவர்.வல்லவர்.நல்லதையே உள்ளதையே உள்ளவாறு சொன்னவர்.நல்லதையே உள்ளதையே உள்ளவாறு உரைத்தவர் பக்கசத்தை உணர்ந்தவர் செந்திநாதையரவர்கள்.
பிரமசூத்திரத்தைக் கைப்பொம்மையாக்கித் தங்கள் பக்கத்துக்கு ஆடவைக்கும் உரையெழுதியவர்கள் ஒருபுறமாக,அதற்கு முற்பட்டனவாய வேதங்களில் சிவபரத்துவம் இல்லவே இல்லை என்று தொண்டை கிழியக் கத்தினவர்களும் இருந்தார்கள்.வேதநாயகன் என்றும்,வேதப்பொருள் என்றும்,வேதங்கள் ஐயா என அழைக்கும் ஆரியன் என்றும் தேவார திருவாசகங்கள் முழங்குவதையும் ஐயரவர்கள் கேட்டார்கள்.
அந்தத் திருமுறை ஒலியோடு பின்னணியில் அப்பையதீட்சதர்,அரதத்த சிவாசாரியர் முதலாய மகான்கள் எழுதிய சிவாத்துவைத நிர்ணயம்,சிவதத்துவ விவேகம் முதலிய நூல்களில் அவர்களின் குரலையும் கேட்டார்கள்.
ஐயரவர்களால் தாமதிக்கமுடியவில்லை.சைவவேதாந்தம் என்னும் நூலை உள்ளதை உள்ளபடியே,நல்லதை நல்லது என்றவாறு நாமறிய எழுதினார்.அவர் எழுதியதாவது,வேதங்களின் சிரசு,என்றும் வேதாந்தம் என்றும் உள்ளவை உபநிடதப்பகுதிகள்.அவை வேதங்களின் உட்பிரிவுகள்.அவை ஞானத்தைப் பற்றியே கூறுகின்றன. திருநான் மறை முடிவு என்று ஒளவைப்பாட்டியார் சின்னஞ் சிறிய குழந்தைகளும் விளங்கக் கூறியுள்ளார்.
உபநிடத ஞானமாகிய வேதாந்த ஞானத்தையும் சித்தாந்த ஞானத்தையும் வேறுபடுத்த முடியாது.அவை கூறுகின்ற சமரச நன்னிலை பெற்ற வித்தகர் தாயுமான சுவாமிகள்.அவர் உண்மை வேதாந்தி,உயர்ந்த சித்தாந்தி.வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் பருகியவர் அவர்.
இவ்வாறாக,பிரம வேதாந்தம் பேசிப் பிசகுகள் செய்த பிற்காலத்தவரை வெகுவாகக் கண்டித்து ஒதுக்கி, உண்மை வேதாந்தத்தின் உயர்வைத் துலக்கி,அது சைவவேதாந்தம்,சிவபரத்துவமானது என்பதைத் தாபிப்பது ஐயரவர்கள் அரிதின் முயன்று எழுதிய சைவ வேதாந்தம்.
நீலகண்ட பாடிய மொழிபெயர்ப்பு
செந்திநாதையரவர்கள் செய்த பகீரதப் பிரயத்தனம் எனத்தக்கது,நீலகண்ட சிவாசாரியர் வடமொழியிற் செய்த பாடியத்தை மொழிபெயர்த்துத் தமிழில் தந்தமையாகும்.அஃதாவது வியாசபகவான் செய்த பிரமசூத்திரத்துக்கு சங்கராசாரியர்,இரமானுசாரியர்,மத்துவாசாரியர் செய்தவாறு,நீலகண்ட சிவாசாரியர் செய்த பாடியம் என்னும் பேருரையின் தமிழாக்கமாகும்.சங்கரர் கண்ட ஏகான்மவாதம்,இராமனுஜர் கண்ட விசிட்டாத்துவைதம்,மத்துவர் கண்ட துவைதம் போல,நீலகண்டர் கண்டது சிவாத்துவைதமாகும்.நீலகண்டர் பிரமசூத்திரத்தில் சிவபரத்துவம் கண்டவர்.அவ்வழி அவர் உரையும் சிவாத்துவைதம் காண வழிகாட்டிற்று.
பிரமசூத்திரம் செய்தவர் வியாசர்.வியாசர் என்பது அவர் வேதங்களைத் தொகுத்தமையாற் பெற்ற பெயர்.அவர் இலந்தைவனத்தில் தவஞ் செய்தவதெனவே அவர் வாதராயணர் எனப் பெயர் பெற்றவர்.அவர் கருநிறமுடையவராயிருந்தமையால் அவரின் பழைய பெயர் கிருஷ்ணர்.
வியாசரின் தந்தையார் பராசரர்.அவர் பகைவருக்கு அம்புபோன்ற கூரிய சொற்களைப் பிரயோகித்ததால் அப்பெயர் பெற்றார்.அவரின் பழைய பெயர் சாக்தேயர்.சாக்தேயரின் தந்தையார் சக்தி.சக்தியின் தந்தையார் வசிட்டர்.
இத்தகைய மரபில் வந்த வியாசபகவான்,சிவபரத்துவமாகச் செய்த பிரமசூத்திரத்தைப் பிறர் வேறாகக் கண்டதைச் செந்திநாதையரவர்களால் சகிக்க முடியவில்லை.நீலகண்டர் வேதங்களும் ஆகமங்களும் ஒன்றேயென்றவர். உபநிடதங்கள் வாயிலாகப் பிரமசூத்திரத்துக்கு உரையெழுதி பரப்பிரமம் என்ற சத்தத்திற்குச் சிவனே பொருள் என்றவர்.அவர் வழியில் அப்பைய தீட்சதர் சிவார்க்கமணி தீபிகை என்றும் சிவதத்துவ விவேகம் என்னும் நூல்கள் எழுதியர்.
நீலகண்டர் வேதத்துக்கும் ஆகமத்துக்கும் நெருங்கிய உறவு கண்டவர்.விஷ்ணுவையும் வியாசரையும் சைவராகவே கண்டவர்.எனவே பிரமசூத்திரம் சிவபரத்துவமேயாம் என்றவர்.சைவமே பரம தருமம் என்றவர்.வேதாந்தப் பொருளாகிய ஞானம்,பரமசுபமாகிய சித்தாந்தம் என்று மகுடாகமம் மொழிந்ததை சான்றாகக் காட்டியவர்.சித்தாந்தம் வேதசாரம் என்பது சுப்பிரபேதம்.
வித்தைகள் அனைத்துக்கும் கர்த்தா ஈசானர்.பதினெண் வித்தைகளுக்கும் சாட்சாத்தாக முதற் கர்த்தாவாகவுள்ளவர்,சூலபாணியாகிய சிவபெருமான்,வேதங்களும் புராணங்களும் ஏகார்த்தமுடையவை. வேதாந்த சாரநிதியாவது புராணம்.
இருக்கு யசுர் சாமம் அதர்வணம், இதிகாசம், புராணம், வித்தை, உபநிடதம் யாவும் இறைவனின் சுவாசம்.ஈசன் சிவபெருமான்.ஈஸ்வரனால் காக்கப்பெறுதலில் இவ்வுலகம் ஈசாவாசியம்.பிரமம் என்பது சிவன்.
சிவனார் பொன்வண்ணர்.”உனக்கு ஆன்மாவாக உள்ளவர் எவரோ,அவர் அந்தர்யாமியாகிய சிவன்”. அழியாதவராகிய சிவன் ஒருவரே கர்த்தா.
மனிதன் சிவசாமியமுற்றுப் பிரம்மானந்தத்தை அடைகிறான்.அது சிவானந்தம்.அது மேன்மைக் குணம் உள்ளது.சிவன,;மகேசுவரன்,உருத்திரர்,விஷ்ணு,பிதாமகர்,சம்சாரவைத்தியர்,சர்வஞ்ஞர்,பரமான்மா என்னும் பெயர்களெல்லாம் நாமாட்டகம், எனப் போற்றப் பெற்றுள்ளன.
நீலகண்ட பாடியத்தின் பெருமை
ஸ்ரீ நீலகண்ட சிவாசாரியார் பிரமசூத்திரத்துக்குச் சிவபரத்துவங்கண்டு எழுதிய சைவ பாடியம் மிகச் சிறந்ததொரு நூல்.அது சைவசித்தாந்தத்துக்குப் பேரரணாய் விளங்குவது,தேவார திருவாசகங்களாய திருமுறைகளின் உட்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.சைவ சித்தாந்தத்துக்குத் தர்ப்பணம் போலமைந்தது.
”தேவர் குறளும்,திருநான் மறைமுடிவும்,மூவர் தமிழும்,முனி மொழியும்,கோவை திருவாசகமும்,திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்றுணர்” என்று ஒளவையார் அறுதியிட்டுப் பாடும் முனி மொழி வியாச முனிவர் செய்த பிரமசூத்திரமேயாம்.இதற்கு வாய்த்த பேருரை நீலகண்ட சிவாசாரியர் செய்த பாடியம்.
நீலகண்ட சிவாசாரியர் செய்த சைவபாடியம்,ஈசகேநாதி உபநிடதங்களும் பிரமசூத்திரமும் வைதிக சைவர்களுடைய சொந்த ஆஸ்தி என்று விளங்க வைப்பது.
இத்தகைய பொருமை வாய்ந்த நீலகண்ட பாடியம் மாயாவாதம் பேசுவோரின் வாயை அடக்குவதற்கும், சைவ சமயத்தைத் தாபனஞ் செய்வதற்கும் வாய்த்த பாசுபதாஸ்திரம் என்பது செந்திநாத யோகியின் துணிபு.இதில் சீவரத்தினமாகிய சிவசப்தங்கள் மிகுதியும் உண்டு என்பர்.
”இத்துணைப் பெரிய அரிய பாடியம் வடமொழியிலிருப்பதால்,இதன் மேன்மையை யாவரும் அறிதல் கூடாமையின்,இதனைத் தமிழ் வசன நடையில் மொழிபெயர்த்து அச்சிலேற்றிப் பிரகடனஞ் செய்ய வேண்டுமென்னும் ஆசை மீதூரப் பெற்றோம்.”
”அறிவினாலும் பொருளினாலும் மற்றெவ்வாற்றானும் வலிகுன்றிய எம்போலியர்க்கு,அங்ஙனம் பிரகடனஞ் செய்தல் பெரிதும் கஷ்டமாயவிடத்தும்,பாருக்குள்ளே கலியுகத்திலே கண்ட பரம தெய்வமும் செந்தின்மேய வள்ளிமணாளருமாகிய செந்திநாத சுவாமியின் திருவருள் வன்மையால் இது முற்றுப்பெற்றதெனச் சிவநேயர்கள் யாவரும் உணர்ந்து கொள்வாராக”.இவ்வாறு ஐயரவர்கள் 1917ஆம் ஆண்டு ஜப்பசி மாதத்தில் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்தபோது எழுதியுள்ளார்கள்.
ஸ்ரீ நீலகண்டர் மீது கொண்ட பக்தி
செந்திநாதையர் அவர்கள் காசியில் வாழ்ந்த காலத்தில் மதாசாரியர்களின் உருவச் சிலைகள் பெற்ற மதிப்பினை நன்கறிந்தவர்கள்.அந்த வகையில் ஸ்ரீ நீலகண்ட சிவாசாரிய சுவாமிகளுக்கும் விம்பப் பிரதிஷ்டை செய்தல் வேண்டும் எனப் பெரிதும் விரும்பினார்கள்.அந்த விருப்பத்தை அவர் அருமையாக எழுதியுள்ளார்கள்.
“மத்துவர்களுக்கு ஆனந்ததீர்த்தரும்,வைணவர்களுக்கு இராமானுசாரியரும்,ஏகான்மவாதிகளுக்குச் சங்கராசாரியரும் ஆசிரியர்களாய் அமைந்தாற்போல,சிவபெருமானை ஆண்டவர் என்றும் ஆன்மாக்கனை அடிமைகள் என்றும் கொண்டு சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டொழுகும் சிவத்துவிஜர்களுக்கும் மற்றைச் சைவசமயிகளுக்கும் ஆசாரியராய்,(ஒரே முக்கியப் பொருள் பொருந்த)பிரமசூத்திரங்களுக்குச் சத்தியார்த்தஞ் செய்து வைதிக சைவ சமயஸ்தாபனஞ் செய்த பரமாசாரியராகிய ஸ்ரீ நீலகண்ட சிவாசாரியாரது திருவுருவவிம்பத்தைத் தொண்டைமண்டலத்து வடதிருமுல்லை வாயிலிற் போல மற்றைய சிவாலயங்கள் தோறும் பிரதிட்டை செய்து ஆவணி மாதத்துப் பூசநட்சத்திரத்திற் குருபூசை செய்து இராப்போதிலே உற்சவம் நடத்தி வைதிக சைவசமயப் பிரபு திலகர்கள் யாவரும் பெரும் புகழையும் சிவபுண்ணியத்தையும் பெற்று நீடு வாழ்வாராக.”
இங்ஙனம்
ஸ்ரீ காசிவாசி செந்திநாதையர்
தேவாரம் வேதசாரம்
கந்தமடவ10ர் தம்பையா உபாத்தியாயர் என வழங்கிய சாமிநாத பண்டிதர் அவர்கள்,வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையவர்களின் மாணாக்கர்.நாவலர் பாரம்பரியத்தில் நைட்டிகப் பிரமசாரியாயிருந்து தமிழ்நாட்டிற் சைவம் வளர்த்தவர்.கந்தமடத்துத் தரகன்வளவு என்னும் தமது சொந்த வீடுவளவை விற்றுச் சைவம் வளர்ப்பதற்குச் சைவ வித்தியானுபாலன யந்திரசாலை தாபித்தவர்.திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய வித்தியாசாலையும்,சிதம்பரத்தில் அறுபத்துமூவர் வித்தியாசாலையும் தாபித்தவர்.உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் கந்தமடம் வந்து பாடஞ் சொல்லுமளவில் உபகரி;;த்தவர்.தேவாரத் திருமுறைகள் ஏழையும் தலவரலாறு தவறாமல் முதன் முதலில் அடங்கன்முறையென அச்சிட்டுப் பரப்பியவர்.வேதாகமங்களில் நிரம்பிய பற்றுள்ளங் கொண்டவர்.சபாபதி நாவலர்,புலோலி கதிரைவேற்பிள்ளை முதலானோரிடம் நட்புப் பூண்டவர். செந்திநாதையரவர்களிடம் பெருமதிப்புக் கொண்டு அவர்தம் நூற்களிற் பெரும்பாலான பிரதிகளை விலைகொடுத்து வாங்கி ஊக்கப்படுத்தி உதவியவர்.அவர்,1934ஆம் ஆண்டில் மறைந்தபோது பண்டிதமணி கணபதிபிள்ளை அவர்கள் உள்ளம் உருகி முந்நூறுக்கும் அதிகமான அடிகளைக் கொண்ட இரங்கற்பா பாடியுள்ளார்.இது நிற்க.
செந்திநாதையரவர்கள் அரிதின் முயன்று எழுதிய தேவாரம் வேதசாரம் என்னும் திவ்வியம் பழுத்த செந்தமிழ் நூலை,சாமிநாத பண்டிதரவர்கள் தமது சைவவித்தியானுபாலன யந்திரசாலையில் 1917 ஆம் ஆண்டு சித்திரை மாதத்திற் பதித்துக் கொடுத்ததோடு,ஆராய்ச்சியோடு கூடிய சிறப்புப்பாயிரமும் எழுதிக்கொடுத்தார். அதில் ஐயரவர்களின் புகழ் பேசும்பகுதி வருமாறு:-
“ வடமொழி தென்மொழிகளில் வல்லுநராய்,அவற்றோடு ஆங்கிலமும் பயின்று,சுவமதஸ்தாபனமும் புறமத நிராகரணமும் செய்து சைவசமயத்தைப் பரப்புதற் பொருட்டும் தமிழ்க் கல்வியை விளக்குதற் பொருட்டும் உடல் பொருள் ஆவி மூன்றனையும் அவற்றின் பொருட்டுத் தத்தஞ் செய்த,ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் போல,இருமொழியிலும் வல்லுநராய்,ஆங்கி;லம் பயின்று சுவமதஸ்தாபனமும் புறமத நிராகரணமும் செய்தலிற்றானே தங்காலம் கருத்து முதலியவற்றைப் போக்குகின்ற காசிவாசி ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையரவர்கள் நன்கிதினுணர்ந்து,உணர்ந்த மாத்திரையிலமையாது,அதனை வடமொழியுணராந்தென்மொழியாளர்க்கும், தென்மொழியுணரா வடமொழியாளர்க்கும் இருமொழிப் பிரமாணங்களாலும் தெரிவிக்க விரும்பி,அங்ஙனம் தெரிவி;க்குமுகத்தானே சிவபிரானே எப்பொருட்கும் இறைவன் என்பதை,வாயுமுகத்தசையாத வச்சிரமலை போலவும்,அக்கினிமுகத்தழியாத தங்கம் போலவும் நனிதவநிறுவி,தேவாரம் வேதசாரம் எனப்பெரிய நூலொன்று இயற்றினார்கள்.”
முன்னர் செந்திநாதையரவர்களுக்குச் சித்தாந்த சிகாமணி என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டிப் பாடியருளிய ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர் அவர்கள்,தேவாரம் வேதசாரம் வெளியானபோது பெரிதும் பாராட்டிச் சிறப்புப் பாயிரமும் வழங்கியுள்ளார்.
“இவர்கள் தமிழ்மொழி வல்லோர் கற்றறிந்து களிக்குமாறு ஸ்ரீ நீலகண்ட பாடியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் பிரகடனஞ் செய்தும்,வடமொழியுதாரணங்களுடன் சிவஞானபோத வசணாலங் காரதீபம் என்னும் நூலை எழுதி வெளிப்படுத்தியும்,சைவஸ்தாபன நூல்களைச் சதாகாலமும் ஆராய்ச்சி செய்து பரமதநிராகரணஞ் செய்தும் தமது கால முழுவதையும் சைவசமயாபிவிருத்தியின் பொருட்டே உபயோகப்படுத்தி வருகின்றார்கள்.”
செந்திநாதையரவர்களைக் குருவாகக் கொண்ட குடும்பத்தினர் ஏகாம்பரன்,மங்கையர்க்கரசியார் தம்பதிகளாவர். மங்கையர்க்கரசியாரே ஆண்டாளம்மையார் என எல்லோரும் மதிக்கச் சைவப்பிரசங்கஞ் செய்து வந்தார். அவர் ஒருமுறை யாழ்ப்பாணத்துக்கும் வந்து சொன்மாரி பொழிந்தவர்.
அம்மையாரவர்கள் தேவாரம் வேதசாரம் என்னும் நூலைத் தம் சொந்தப் பொறுப்பில் அச்சிட்டுக் கொடுத்ததோடு விசேஷ விஞ்ஞாபனமும் எழுதிக் கொடுத்தவர்.சைவத்தின் மேற் சமயம் வேறில்லை. சிவமாந்தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லை என்பது அம்மையாரின் கோட்பாடு.அவரே ஐயரவர்களின் சிவஞான போதவசனாலங்காரதீபம் என்னும் நூலையும் அச்சேற்றிக் கொடுத்த புண்ணிய சீலராவர்.
“எமக்குப் புத்தக வியாபாரம் ஜீவனோபாயமன்று என்பதை அறியாதாரிலர்.எங்ஙனமாயினும் சைவவுலகம் வாழ்வதற்கு இன்றியமையா நூல்கள் சிலவற்றை முன்னின்று உழைத்துக் கைப்பொருளும் இயன்றளவு செலவிட்டு அச்சேற்றி உலகிற்குதவிச் சிவபுண்ணியங்கைக்கொண்டு எடுத்த பிறப்பினைச் சபலமாக்க வேண்டும் என்பதை ஒருகாலும் இருகாலும் முக்காலும் எமக்கு ஆசையென்றறிக.
சைவசமய நூலாராய்ச்சியிற் றலைநின்ற சாம்பவஸ்ரீ காசிவாசி செந்திநாதையரவர்கள் தேவாரம் வேதசாரம் என்னும் மாட்சிமை தங்கிய நூல் வரைந்து வைத்திருப்பதாக அறிந்து,அதனை அவர்களிடத்தில் வேண்டிப் பெற்று வெளியிட்டோம்.இந்நூல் சைவசமயிகட்கு இன்றியமையாத தொன்றே.ஒவ்வொரு சிவநேசச் செல்வர் கரத்திலும் இருக்கற் பாலதொன்றே.”
தேவாரம் வேதசாரம் என்னும் நூலின் உபோற்காதம் என்னும் பகுதியில் செந்திநாதையரவர்கள் தாம் இந்த நூலை எழுதியதன் நோக்கத்தை நன்கு விளக்கியுள்ளார்.
“தேவாரம் வேதசாரம் என்றமையால் வேதத்தின் மொழிபெயர்ப்புத்தான் தேவாரமோ எனின்,அற்றன்று.பின் அதன் கருத்து என்ன எனில்,வேதம் என்று நிரூபிக்கப்பட்ட வேதம்,வேதாந்தம்,ஆகமம்,ஆகமாந்தம்,இதிகாசம், புராணம் என்பவைகளிலே இலைமறை காய்கள் போன்றும்,மலரன்மலையிற் பொற்கொடிகள் போன்றும், அங்கங்கே இலங்கும் சீவான்ம பரமான்மாக்களின் ஐக்கியத்தினால் நேர்ந்த ஆனந்த நிலைகளையும், சிவபெருமானது அளவிறந்த குணாதிசயங்களையும்,இலக்கணங்களையும்,எந்தத் தேவராலும் முடிக்க இயலாதனவாய் அச்சிவபிரான் ஒருவராலே ஒருவரால் முடிக்கப்பட்டனவாயுமுள்ள அளவிறந்த வீரச்செய்கைகளையும் பிறவற்றையும் குணோபசங்காரக்கிரமத்தினால் ஆதரம் கொண்டிசைத்துப் புகழ்ந்து தேவாரம் துதிப்பதினால் அது வேதசாரம் எனப்படும்.(குணோபசங்காரம் - குணங்களைத் தொகுத்துறல். தேவாரத்தைக் கூறவே திருவாசகம் முதலிய ஏனைய திருமுறைகளும் தழுவப்படும்.)
வேதம் முதலியவற்றில் சிவபெருமானின் புகழ்
செந்திநாதையர் வேதம் முதலியவற்றில் எடுத்துக் காட்டிய இடங்கள் யாவும் சிவபெருமானின் பரத்துவத்தையும் புகழையும் என்றுமுள்ள தன்மையையும் பிறவற்றையும் கூறுவனவாகும்.
மகா பிரளயகாலத்தில் சிவபெருமான் ஒருவரே உள்ளவர்.
பிரம விஷ்ணுக்கள் அழிந்த பின்னும் நிற்பவர் சிவன்.
பிரம்மசப்தம் சிவபெருமானை உணர்த்துவது.
இருதயக்ருகையில் பிரவேசித்தவர் சிவபெருமான்.
சீவான்மா,பரமான்மா என்பன இரு பட்சிகள்.
பிரம விஷ்ணு உருத்திரருக்குச் சிவனே தலைவர்.
சிவபெருமானை உமாபதி எனவும் வழங்குவர்.
உமாதேவியார் சிவபெருமானுக்குச் சாரீரம்.
சிவபெருமானையே பசுபதி என்பது வழக்கம்.
சிவபெருமான் இடப வாகனர்.
சிவபெருமான் யாகாதிபதி:அவிக்குரியவர்.
சிவபெருமானே வேதம் முதலானவற்றின் கர்த்தா.
சிவபெருமானே வேதத்தின் உட்பொருள்.
சிவபெருமான் பஞ்சகிருத்தியஞ் செய்பவர்.
தேகமுள்ளபோதே சிவனை வழிபடல் வேண்டும்.
விபூதி,உருத்திராக்கம்,பிரணவம்.
சிவபெருமான் பன்றிக் கொம்பு தரித்தமை.
சிவபெருமான் ஆமையோடு தரித்தமை.
சிவபெருமான் சந்திரனைத் தரித்தமை.
சிவபெருமான் கங்கையைத் தரித்தமை.
இவ்வாறாக நூற்றுக்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுகளை வடமொழியில் சுட்டிக்காட்டி,அவற்றின் உச்சரிப்பையும், மொழிபெயர்ப்பையும் தந்து,அந்தக் கருத்து தேவாரமாகியவற்றில் எங்கெங்கே உள்ளன என்பனவற்றை முற்றாகக் காட்டி நாநூறு பக்கங்கள் கொண்ட நூலை உருவாக்கியுள்ளார்.
ஐயரவர்களும் நல்லசாமிப்பிள்ளையவர்களும்
சைவப்பெரியார் ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை அவர்கள் 24-11-1864 ஆம் நாளில் திருச்சினாப்பள்ளியில் தோன்றியவர்.தத்துவ சாத்திரத்தில் பட்டம் பெற்றுச் சட்டம் பயின்று நீதிபதி உத்தியோகமும் பார்த்தவர்.சைவசித்தாந்தத்தில் பெரிதும் ஈடுபாடுகொண்டு சிவஞானபோதம் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் அருமையாக மொழிபெயர்த்தவர்.தேவாரப் பதிகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்ததோடு தமிழ்ப் பண்பாட்டில் தலைப்பாகை திருநீறு சந்தனம் முதலியவற்றைப் பேணியவர்.
ஆங்கிலேயர் பலருக்கும் ஆனந்தக்குமாரசுவாமி,சுவாமி விவேகானந்தர் முதலானோருக்கும் சித்தாந்தம் கைவரச் செய்தவர்.புகழ்பெற்ற ரமணாசாஸ்திரிகள் பாராட்டுமளவில் 1900 முதல் 1906 ஆம் ஆண்டு வரை சித்தாந்த தீபிகை என்னும் ஆங்கில மாத வெளியீட்டில் அருமையாகச் சைவம் பரப்பி வந்தவர்.அன்றி மதிப்புக்குரியவரான மகாதேவ சாஸ்திரிகள் என்பவரைக்கொண்டு நீலகண்ட பாடியத்தை ஆங்கிலத்தில் ஸ்ரீபாஷ்யம் என்னும் பெயரில் அருமையாக மொழிபெயர்ப்பித்து வெளியிட்டு வந்தவர்.
பிரசண்டமாருதம் சோமசுந்தரநாயக்கர் என்னும் பெரியவரோடு இணைபிரியாது சேர்ந்து சைவம் வளரப் பல வழிகள் அமைத்தவர்.கற்கத்தா,அலகபாத் நகரங்களில் நடைபெற்ற சமய விழாக்களில் சைவம் பேசி ஆங்கிலேயரைக் கவர்ந்தவர்.கிழக்குத்தேய ஞான நூல் வரிசைகளை ஆங்கிலத்தி;ல் தொகுத்து வெளியிட்ட பேராசிரியர் மாக்ஸ்முல்லர் என்பார் பிள்ளையவர்களுக்குக் கடமைப்பட்டிருந்தார்.இத்தகைய புகழ்பூத்த நல்லசாமிப்பிள்ளையவர்கள் தாம் ஆறுமுகநாவலரவர்களின் நூல்களை நன்கு கற்றதாகக் கூறியுள்ளார்.
நல்லசாமிப்பிள்ளையவர்கள் செந்திநாதையரவர்களைப் பெரிதும் மதித்துப் பலவிடயங்களில்; பேசியும் எழுதியும் உள்ளார்.அவற்றை இங்கே தருவதாயின் அவை தனியொரு சுவடியாக அமையும்.விரிவஞ்சி ஒருசில வரிகளையாவது படித்தறிவோமாக.
“எமக்குத் தெரிந்தமட்டில்,இத்தமிழ்நாட்டில் இருமொழியிலும் வல்லுனராகி அதிலும் வேதாகம நூல்களிற் பயின்று நம் ஆகமாந்தங்களையும்,அதன் பூர்வோத்திரங்களையும் பூர்த்தியாயுணர்ந்து,அதிலும் அவ்வுண்மைகளை நம்மனோர் உணரும் பொருட்டு அநேக நூல்களையும்,பத்திரிகைகளையும் பதிப்பித்து நம் சைவத்தை வளர்த்தவர்களில் நம் ஐயரவர்களைவிட இன்னும் பெரியாரைக்கண்டிலம்.”
சைவசித்தாந்த கலாநிதி
செந்திநாதையரவர்கள் மறைந்த முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் அவருக்குச் சைவசித்தாந்த கலாநிதி என்னும் பட்டமளித்து,அவரின் பெரும் புகழை நன்கு பரப்பியவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களாவர்.பண்டிதமணியவர்கள் ஐயரவர்களை மகான் செந்திநாதையரவர்கள் என்றே மனமுருகி வழங்குதல் வழக்கமாகும்.
பண்டிதமணியவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்துசேர்ந்தவை ஐயரவர்கள் உபயோகித்த புத்தகப் பலகையும் அன்னாரின் நூல்கள் சிலவுமாகும்.ஐயரவர்கள் செய்த சித்தாந்தப் படத்தின் பிரதிகள் பலவற்றைப் பண்டிதரவர்கள பலருக்கு அன்பளிப்புச் செய்ததும் உண்டு.
யாழ்ப்பணக் கலாசார மூலம் கந்தபுராணம் என்றும்,வைதிக சைவசித்தாந்த இலக்கியம் என்றும் பேசிவந்த பண்டிதமணி, “இந்த யாழ்ப்பாணத்திலே ஒரு செந்திநாதையர் சிந்திக்கத் தொடங்கினார்” என்றவாறு ஐயரவர்களின் பெருமை பரப்பப் புறப்பட்டார்.
வியாசபகவான் செய்த பிரமசூத்திரத்துக்கும் அதற்குள் சங்கராசாரியர் செய்த பாடியத்துக்கும் தொடர்பில்லை என்று கண்டு சொன்னவர் செந்திநாதையர் என்பர்.
சங்கராசாரிய சுவாமிகள் பத்து உபநிடதங்களுக்குச் செய்த உரைகளிலும் சைவம் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கண்டு,சைவ வேதாந்தம் என்னும் நூலை எழுதியவர் செந்திநாதையர்.
செந்திநாதையர் செய்த நீலகண்ட பாடிய மொழிபெயர்ப்பில் எழுதிய உபக்கிரமணிகை என்னும் முகவுரைகள் இரண்டு.இந்த இரண்டும் தனித்தனி கோடி பொன்பெறும் என்றும்,தனித்தனி கலாநிதிப் பட்டத்துக்குத் தகுதி போதும் என்றும் பண்டிதமணி கருதுவர்.
ஐயரவர்கள் எங்கள் கலாசாரத்துக்குச் செய்த அரும்பெரு முயர்ச்சிகளைக் கணக்கிட்டு விளக்கிய பண்டிதமணி,ஐயரவர்களின் உபக்கிரமணிகள்,தத்துவப்பட விளக்கக்குறிப்பு,சைவ வேதாந்தக் குறிப்பு, கந்தபுராண நவநீதக் குறிப்பு ஆகியன மிக இன்றியமையாதன என்றும்,அவை யாழ்ப்பாணக் கலாசாரத்தின் கலங்கரை விளக்கங்கள் என்றும் கருதுவர்.
ஐயரவர்கள் திரட்டிய கந்தபுராண நவநீதத்தில் உள்ள எட்டுப் பிரகரணங்களின் அடிக்குறிப்பை பண்டிதமணியவர்கள் வெகுவாகப் போற்றுவர்.
செந்திநாதையரவர்கள் எப்படியான சைவசித்தாந்தியாக இருந்திருப்பார் என்பதை ஆராய்ந்த பண்டிதமணியவர்களுக்கு,ஐயரவர்களின் அருமைப் புதல்வி வழிகாட்டியாயிருந்தார்.அந்த அம்மையார் தந்தந்தையாரின் நூல்களை விற்பனை செய்தபோது,புத்தகக் குவியலிற் கிடந்த சூதசங்கிதை என்னும் நூலை வெளியே கொடுக்க விரும்பவில்லை.அந்த நூலில் ஏகான்மவாதிகள் இடைச் செருகலாகச் செய்த திருவிளையாடல்கள் பொதிந்திருந்தமையால்,அந்நூல் ஊரைக் கெடுத்துவிடும் என்று அம்மையார் கருதினார். இதுவொன்றே அம்மையாரின் தந்தையாரான ஐயரவர்களின் சித்தாந்த சைவப் பற்றை அறியப் போதுமானது என்பர்.
ஐயரவர்களின் அரிய உபகரிப்பு
ஐயரவர்கள் தம் பெயர் நிலவத் தயாரித்து உபகரித்த பெரிய நூல்களைவிட,தர்க்காPதியிலமைந்த கண்டனங்களும் ஒருசிலவாகும்.அக்காலத்து மரபுக்கமைய ஆறுமுகநாவலரவர்கள் ஆரம்பித்த கண்டனத் துறையை,ஐயரவர்கள் அருமையாக வளர்த்துள்ளார்.அவரின் கண்டனங்கள் தகர்க்க முடியாதன.அவற்றால் அவர் சைவசமயத்தை அரண் செய்துள்ளார்.
ஐயரவர்கள் அவ்வப்போது செய்த சிறிய நூல்கள் சில அச்சேறியிருந்தன.ஸ்ரீ சீகாழிப் பெருவாழ்வின் சீவகாருண்ணியமாட்சி,சிவலிங்க மகத்துவம்,திருநீற்றின் உண்மை,ஞானரத்தினாவளி முதலிய நூல்கள் ஏகாம்பர முதலியாரவர்கள் முயற்சியால் அச்சிடப்பெற்றன.
ஐயரவர்களின் ஞானபரம்பரை
ஞானி என்றும் யோகி என்றும் அன்பர்கள் போற்ற வாழ்ந்த ஐயரவர்களுக்குத் தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் மாணாக்கர் பரம்பரை உண்டு.புன்னாலைக்கட்டுவன் மகாவித்துவான் கணேச ஐயர்,மந்திர உபதேசம் பெற்றுச் சித்தாந்த சாத்திர நுட்பமறிந்த வைபவம்,அவர் கந்த புராணத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் முதலியன,தொல் காப்பியப் பெருமையால் மறைந்துள்ளன போலும்.
தமிழ்நாட்டில் செந்திநாதையரவர்களின் ஞான பரம்பரை சென்னை,சீகாழி,திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம், காரைக்குடி,தேவகோட்டை முதலிய பகுதிகளில் பாரம்பரியமாக நிலவி வந்தது.
ஐயரவர்களின் சகோதரர்களாய பொன்னையர்,சிவசம்புநாதையர்,ஐயரவர்களின் மகள் மீனாட்சி, பொன்னையரின் மைந்தர் சுந்தர சர்மா(பிரேமசுந்தரன்)முதலானோர் பாரம்பரியத்தைப் பேணிவந்தனர். புன்னாலைக்கட்டுவன் கணேசையரவர்களிடம் முறையாகப் படித்தவர்களுக்கும் செந்திநாதையர் அவர்களின் பாரம்பரியம் சொந்தமாய் நிலவியது.சிவபெருமான் உலகத்துக்குக் கருத்தா,அவரே முழுமுதற் கடவுள் என்னும் சைவப் பாரம்பரியம் நிலைப்பதற்கு நாவலர் பாரம்பரியம் உறுதுணையாயிருந்தவாறு, செந்திநாதையரவர்களின் பாரம்பரியமும் அரணாய் அமைவதாயிற்று.
மறைவு
செந்திநாதையரவர்கள் எழுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்தவர்.அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைத் தமிழ்நாட்டிலே சைவத்துக்காக வாழ்ந்து கழித்தவர்.சைவத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் உறுதுணையாயுள்ள வடமொழி நூல்களைத் தொட்டுக் காட்டியவர்.சைவப் பண்ணையில் முளைகொண்ட களைகளையகற்றியவர்.பண்ணை மாடுகளுக்குக் குறிசுட வந்த புறமதத்தவர்களை வெருட்டிக் கலைத்தவர். சைவ வாழ்வை வாழ்ந்து வழிகாட்டியவர்.அவர் வாழ்ந்த திருப்பரங்குன்றம்,ஈழத்துக் குடுமிகள் எனுந் தொடருக்கு வரலாற்றுப் புகழ் பெற்றது.அவர் முற்றிப்பழுத்த சைவப் பழமாய் 5-5-1924 ஆம் நாளில் அத்த நட்சத்திர வேளையில் முத்தியடைந்தார்.
சைவம் வாழத் தமிழ் வளரும்
சுபம்
நல்லதையே செய்வோம்
வரண்ட காலத்தில் குளங்களை ஆழமாக்குவோம்.
விஜயதசமி நாள்களில் பயன் மரங்கள் நாட்டுவோம்.
மழை பெய்யும்போது இயன்றளவு நீரைத் தேக்குவோம்.
பனையபிவிருத்தி தொழிலபிவிருத்தியாகும் என்போம்.
சுற்றாடல் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்.
நோயணுகா விதிகளையறிந்து சுகாதாரம் பேணுவோம்.
உள்நாட்டு மூலப்பொருள்களை உற்பத்திக்கு எடுப்போம்.
உள்ள10ர் உற்பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம்.
விவசாயத்துறைக்கு விரைவுநடை பழக்குவோம்.
வீண் செலவை விடுத்து வாழ்வுக்கு வழி அமைப்போம்.
சமயப்பணி,தமிழ்ப்பணி,சமூகப்பணி செய்வோம்.
ஊர்கள் தோறும் கோயில்களைப் புனரமைப்போம்.
எமது பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணுவோம்.
பெரியவர்தம் நினைவுநாள்களைக் கொண்டாடுவோம்.
கிடைத்தற்கருமையான நூல்களை அச்சேற்றுவோம்.
இயன்றளவு கல்விப்பணியை இலவசமாகச் செய்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக