கிரீஸ் வாழ்ந்த வரலாறு
வரலாறு
Back
கிரீஸ் வாழ்ந்த வரலாறு
வெ. சாமிநாத சர்மா
1. கிரீஸ் வாழ்ந்த வரலாறு
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
4. பதிப்புரை
5. சர்மாவின் பொன்னுரைகள்…….
6. நுழையுமுன்…
7. வாசகர்களுக்கு
2. கிரேக்க நாகரிகமும் சரித்திரமும்
3. பழைய குடிகள்
4. நகர ராஜ்யங்கள்
5. விசால கிரீஸ்
6. ஒன்றுபடுத்திய இரண்டு
7. ஸ்ப்பார்ட்டா
8. ஆத்தென்ஸ்
9. கிரேக்கர்களின் சில பண்புகள்
10. பாரசீகத்தின் முதல் படையெடுப்பு
11. மறுபடியும் பாரசீகம்
1. இரண்டாவது பகுதி
12. உயர்ந்து நின்ற ஆத்தென்ஸ்
13. ஏகாதிபத்தியம் உருவாகிறது
14. ஏகாதிபத்தியம் வளர்கிறது
15. உரமூட்டிய இருவர்
16. சில்லரைப் பூசல்களும் சமரஸமும்
17. ஆத்தென்ஸ் - ஒரு காட்சி சாலை
18. அரசியலமைப்பும் சமுதாய நிலையும்
19. யுத்தக் குமுறல்
20. பெலொப்பொனேசிய யுத்தம்
21. நல்லாரைக் காண்பதுவும் நன்றே
22. பெலொப்பொனேசிய யுத்தம்
23. செருக்கினால் சறுக்கல்
24. பெலொப்பொனேசிய யுத்தம்
25. பதினாயிரவர் நடைப்பயணம்
1. மூன்றாவது பகுதி
26. ஸ்ப்பார்ட்டாவின் சுயநலம்
27. சுயநலத்தின் விளைவு
28. ஆத்தென்ஸ் தலைதூக்குகிறது
29. தீப்ஸின் மின்னல் வாழ்வு
30. மறுபடியும் சிஸிலி மீது
31. மாஸிடோனிய ஏகாதிபத்தியம்
32. மகா அலெக்ஸாந்தர்
33. ஒளி மங்குகிறது
1. அனுபந்தம் 1
2. அனுபந்தம் 2
3. அனுபந்தம் 3
4. அனுபந்தம் 4
5. அனுபந்தம் 5
6. கணியம் அறக்கட்டளை
கிரீஸ் வாழ்ந்த வரலாறு
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : கிரீஸ் வாழ்ந்த வரலாறு
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 20
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2006
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 24+ 424= 448
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 280/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாண புரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002 .
டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்.
அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.
கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.
நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுயுள்ளேன்.
பதிப்பாளர்
சர்மாவின் பொன்னுரைகள்…….
- மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.
- பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.
- உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.
- பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.
- மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப்பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.
- தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.
- உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.
- ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக் கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.
- கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.
- ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு.
- எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;
- உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.
- நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.
- விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான்.
கிரீஸ் வாழ்ந்த வரலாறு
சில செய்திகள்….
- கிரேக்க வரலாற்றைப் பற்றி முதன்முதலில் தமிழில் வெளிவந்த நூல். மேலை நாகரிக மேன்மைக்குப் பண்பாட்டுப் பண்ணையாகத் திகழ்ந்தத் நாடு. மொழிக்கு இலக்கணம் கண்ட தொன்மைக்குரியவர்கள் வாழ்ந்த நாடு. உலகில் பேசப்படும் அரசியல் தத்துவங்களுக்கு அறிவுக்கோயிலாக விளங்கும் நாடு கிரேக்க நாடு. வாசகர்களுக்கு (பக்.16ல்) எனும் தலைப்பில் வெ. சாமிநாதசர்மா இப்படிக் குறிப்பிடுகிறார். இதோ….
- அறிஞர்கள் பலரை ஈன்றெடுத்த அறிவுக் கோயில். சாக்ரடீசோ, பிளேட்டோவோ, அரிட்டாட்டிலோ இல்லை என்றால் கிரேக்கக் கலைக்கோயில், கொடிக்கம்பம் இல்லாத கோயில் , கிரேக்க வரலாற்றை முழுமைஉடையதாகச் செய்யவேண்டும். அதன் கலைக்கோயில் கொடிக்கம்பமுடைய கோயிலாக இருக்க வேண்டும் என்று தம் உணர்வுகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். பல நூல்களைப் படித்து அதில் புதைந்து கிடைந்த அரிய செய்திகளைத் தமிழர்கள் படித்தறிய வேண்டும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக்காக்க வேண்டும் எனும் நல்ல நோக்குடன் படைத்து நமக்குத் தந்துள்ளார்.
- தனித் தனிமாநிலங்களாகச் சிதறிக் கிடக்கும் பலநூறு தீவுகளைக் கொண்ட ஒரு தொகுப்பே கிரீசு. சிறிய நிலப்பரப்புடையது. சிறு சிறு மலைகளும், கால்வாய்களும் நிரம்பிய மண். கிரேக்க மண்ணில் புதைந்து கிடைக்கும் பழைய சின்னங்களும் அந்நாட்டில் வழங்கி வந்த பண்டைய இலக்கியங்களும் தான் கிரீசு வாழ்ந்த வரலாற்றை உலகுக்கு கண்ணாடி போல் காட்டுகிறது.
- எதனையும் அறிவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும், மாந்த ஆற்றலுக்கு முதன்மை தரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு கிரீசு வாழ்ந்த வரலாற்றை ஆசிரியர் அவர்கள் தமிழ் உலகிற்கு வழங்கியதை மீள் பதிப்பாக வெளியிடுகிறோம்.
நுழையுமுன்…
கிரீஸ் வாழ்ந்த வரலாறு
இன்றைய மேலைநாட்டு நாகரிகத்தின் மேலான நன்மைகள் பலவும் தொன்மையான கிரீஸிலிருந்து வந்தவையே.மொழி, அறிவு முதலாய பலவற்றிற்கும் இலக்கணம் வகுத்தவர்கள் கிரேக்கர்கள். இப்பொழுது எத்தனை விதமான அரசியல் தத்துவங்கள் பேசப்படு கின்றனவோ அவையாவும் கிரேக்கர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை இந்நூலின் வழியே எடுத்துக் காட்டியவர்.
சரித்திர காலக் கிரீஸ் நிஜ வாழ்வு வாழ்ந்ததெல்லாம் ஏறக்குறைய முந்நூறு வருடந்தான். இந்தச் சொற்ப கால வாழ்வில் அது நடத்திய போராட்டங்கள் பல; அடைந்த துன்பங்களும் பல. ஆயினும் இக்காலத்தில் அதன் சரித்திரத்தை உருவகப்படுத்தி அறிஞர்கள் எத்தனை பேர் அங்குத் தோன்றியிருக்கின்றனர். எத்தனை ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக் கின்றன; பொற்காலமென்று சரித்திர மேதைகள் புகழ்ந்து போற்றுகின்ற இந்தக் காலத்துக் கிரேக்க வரலாற்றை விளக்குவதே இந்நூல். பாடப் புத்தகமாக மட்டுமில்லாமல் பலரும் பயன்பெறும் முறையில் கிரீஸ் வரலாற்றைப் பற்றி எழுதித் தமிழில் வெளிவந்த நூல் இதுவே முதலாவதாகும்.
இந்நூலினை 1. காலை வேளையிலே 2) பகற் பொழுதினிலே 3) அந்திநேரத்திலே என்னும் புதுமைத் தலைப்புக்களில் பாகுபாடு செய்துள்ளார். கிரேக்க நாகரிகம், அதன் சரித்திரம், அமைப்பு , கிரேக்கர் களின் பண்பாடு, சர்வாதிகாரம் உண்டான முறை, அரசியலமைப்பு, சமுதாய நிலை, பெலொப்பொனேசியப் போர் பற்றிய பல செய்திகளைக் கூறுவர். செய்திகளைக் கூறும்போது தெளிவாகவும் இனிமையாகவும் நிகழ்ச்சிகளைத் தொடர்புடனும் ஆசிரியர் விளக்கிச் சொல்லும் முறை எண்ணுதற்குரியது. கிரீஸ் தனித் தனி ராஜ்யங்கள் பல அடங்கிய ஒரு தேசம்; அறிஞர் பலரைக் கொண்ட ஒரு கலைக் கோயில். ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் தனித்தனிச் சரித்திரம் உண்டு; ஒவ்வொர் அறிஞரைப் பற்றியும் தனித்தனியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். என்றாலும், ராஜ்யங்களுக்கு ஒரு சில மட்டுமே முக்கியத்துவம் பெற்ற, கிரேக்க இதிகாச மண்டலத்தின் பெரும் பகுதியை கவிந்து கொண்டிருக்கின்றன. அப்படியே அறிஞருள் ஒரு சிலரே, உலகனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, எஞ்ஞான்றும் நின்று நிலவக் கூடிய உண்மைகளை அருளியிருக்கின்றனர். ப்பார்ட்டாவையும் ஆத்தென்ஸையும் விட்டு விட்டுக் கிரேக்க சரித்திரத்தை எழுத முற்படுவது கண்களில்லாமல் முகத்தை மட்டும் வரைவது போலாகும். அங்ஙனமே ஸாக்ரட்டீஸோ, பிளேட்டோவோ, அரிட்டாட்டிலோ இல்லையென்றால், கிரேக்க கலைக் கோயில், கொடிக் கம்பமில்லாத கோயில்தான். எனவே, கிரேக்க சரித்திரத்தைப் பூர்த்தியுடைய தாகச் செய்ய வேண்டும். அதன் கலைக் கோயில் கொடிக் கம்பமுடைய கோயிலாக இருக்கவேண்டும் என்ற நோக்கோடு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
தீப், கொரிந்தியா, ஸைரக்யூ போன்ற நாடுகளுக்கும், ஹோமர், லைக்கர், பித்தாகோர போன்ற அறிஞர்களுக்கும் இந்த நூலில் உரிய அளவு இடமளித்திருக்கிறார். கிரீஸ் முழுவதையும் தொகுப்பாகக் காட்டியுள்ளது பாராட்டத் தக்கது.
நல்லாரைக் காண்பதும் நன்றே என்ற தலைப்பில் புது மலர்ச்சி சிருஷ்டி கர்த்தர்கள் பலரைப் பற்றி விளக்கிக் கூறியுள்ளார். தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்புடைய வகையில் இத்தலைப்பினை அமைத்துள்ளார்.
அநுபந்தம் ஐந்து பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கிரீஸில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், கிரேக்கர்களின் முக்கிய தெய்வங்கள், கிரேக்கர்களின் பன்னிரண்டு மாதங்கள், கிரேக்க நாணய விகிதங்கள் முதலாயின கிரீஸ் குறித்து மேலும் அறிந்து கொள்ளத் துணை நிற்கும். ஏறத்தாழ 424 பக்க அளவில் அமைந்துள்ள இப்பெரிய நூலில் கிரேக்க நாடு பற்றிய பல அரிய படங்களையும் ஆசிரியர் சர்மா இணைத்துள்ளார்.
இவ்வரிய நூலை எழுதும் போது பட்ட இடர்ப்பாடு குறித்தும் அவர் விவரித்துள்ளார். கிரீஸின் சரித்திரத்தை எழுதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதைச் சரித்திராசிரியர்கள் பல இடங்களில் நன்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நூலை எழுதுகிறபோதுதான் இந்தச் சிரமம் தெரிகிறது. காலத்தின் தொடர்ச்சியை அனுசரித்துக் கொண்டு போனால் இடத்தின் தொடர்ச்சி விட்டுப் போகிறது; இடத்தின் தொடர்ச்சியை அனுசரித்துக் கொண்டு போனால் காலத்தின் தொடர்ச்சி விட்டுப் போகிறது. இரண்டையும் இணைத்து; கூடிய மட்டில் வாசகர்களுக்குச் சலிப்புத் தட்டாமலிருக்கும் வண்ணம் இந்நூலை எழுத முயன்றிருக்கிறேன். என்பார்.
வரலாற்று நூலை எழுதும்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகளை ஆசிரியர் உணர்ந்து எழுதியுள்ளமையால்தான் அவர் எழுதிய வரலாற்று நூல்களைச் சுவைபடத் தோன்றுமாறு அமைத்துள்ளார் எனலாம்.
கிரேக்கத்தின் வரலாற்றை விளக்கத் தமிழில் வெளிவந்த முதல் நூல் கிரீ வாழ்ந்த வரலாறு ஆகும். சர்மா நூல்களுக்குள்ளேயே அவர் எழுதுவதற்கு மிகுந்த காலத்தை எடுத்துக்கொண்ட நூல், இந்த நூலாகும்.
கிரேக்க மொழிச் சொற்களைத் தமிழில் தருவது என்பது அவ்வளவு எளிதன்று;இதற்கு அந்த மொழியின் மரபு பற்றிய புரிதல் இன்றியமையாததாகும். இந்தப் பணியில் அவர் சாதனை புரிந்துள்ளதை இந்நூலில் அறியலாம்.
பண்டைய கிரேக்க அரசியல் அமைப்பை, அரசியல் போக்குகளை, சமூக நிலையை, பல்வேறு அரசுகளின் போர்களை, கலை - இலக்கியப் பண்புகளை இந்நூல் விவரித்துள்ளது. கிரேக்கச் சிந்தனையில் மலர்ந்தவை என்பதும் நினைவிற்குரியது. மகா அலெக்ஸாந்தர் (கி.மு. 356-323) பேரரசனுக்குப் பிறகும் நிலவிய கிரேக்க அரசியலை இந்நூல் எடுத்துரைப்பாதால் பண்டைய கிரேக்க, பண்டைய இந்திய அரசியல் சமூக அமைப்புகளை ஒப்பிட்டு தமிழ் வழியே தெளிவுற புரிந்து கொள்வதற்கு இந்நூல் முதல் தரமான இலக்கியமாகத் திகழ்கின்றது.
பி. இராமநாதன்
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
வாசகர்களுக்கு
கிரீஸ், தனித்தனி ராஜ்யங்கள் பல அடங்கிய ஒரு தேசம்; அறிஞர் பலரைக் கொண்ட ஒரு கலைக்கோயில். ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் தனித்தனி சரித்திரம் உண்டு; ஒவ்வோர் அறிஞரைப் பற்றியும் தனித்தனியாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். என்றாலும், ராஜ்யங்களுள் ஒரு சில மட்டுமே முக்கியத்துவம் பெற்று, கிரேக்க இதிகாச மண்டலத்தின் பெரும் பகுதியைக் கவிந்து கொண்டிருக்கின்றன. அப்படியே அறிஞருள் ஒரு சிலரே, உலக னைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எஞ்ஞான்றும் நின்று நிலவக் கூடிய உண்மைகளை அருளியிருக்கின்றனர். ப்பார்ட்டாவையும் ஆத்தென்ஸையும் விட்டுவிட்டு கிரேக்க சரித்திரத்தை எழுத முற் படுவது, கண்களில்லாமல் முகத்தை மட்டும் வரைவது போலாகும். அங்ஙனமே ஸாக்ரட்டீஸோ, பிளேட்டோவோ, அரிட்டாட் டலோ இல்லையென்றால், கிரேக்கக் கலைக்கோயில், கொடிக் கம்ப மில்லாத கோயில்தான். எனவே, கிரேக்க சரித்திரத்தைப் பூர்த்தி யுடையதாகச் செய்யவேண்டும், அதன் கோயில் கொடிக்கம்ப முடைய கோயிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறதென்பதை முதலிய வாசகர்களுக்கு தெரி வித்துக் கொள்கிறேன்.
இப்படிச் சொன்னதனால், கிரீஸின் மற்ற ராஜ்யங்களோ, பிற அறிஞர்களோ மறந்துவிடப்பட்டதாக நண்பர்கள் கருதிவிடக் கூடாது. தீப் என்ன, கொரிந்த் தியா என்ன, ஸைரக்யூ என்ன, இவை போன்ற ராஜ்யங்களை எளிதிலே புறக்கணித்துவிட முடியுமா? இன்னும் ஹோமர் என்ன, லைக்கர்க என்ன, பித்தாகோர என்ன, இப்படிப்பட்ட பல துறை அறிஞர்களைச் சுலபமாக மறந்துவிட முடியுமா? இந்த ராஜ்யங்களுக்கும், இந்த அறிஞர்களுக்கும் இந்த நூலில் உரிய அளவு இடமளிக்கப் பட்டிருக்கிறது. ஆக கிரீ பூராவை யும் ஒரு தொகுப்பாக வாசகர்களுக்கு காட்ட வேண்டு மென்பது தான் என் நோக்கம்.
பார்க்கப்போனால், கிரீஸ் வாழ்ந்ததெல்லாம், நிஜ வாழ்வு வாழ்ந்ததெல்லாம் முந்நூறு வருஷந்தான். ஒரு தேசத்தின் சரித்திரத் தில் முந்நூறு வருஷமென்பது மிகச் சொற்ப காலமே. ஆனால் இந்தச் சொற்ப காலத்திற்குள் கிரீஸின் சரித்திரத் திரைப்படமானது, எவ்வளவு வேகமாக, எவ்வளவு விறுவிறுப்புடன் ஓடியிருக்கிறது? நமது உள்ளத்தை அசைத்துக் கொடுக்கக்கூடிய எத்தனை சம்ப வங்கள் அதில் செறிந்துகிடக்கின்றன? இரண்டாயிரம் ஆண்டு களுக்குப் பிறகு இப்பொழுது நாம் கேட்டவையும் அனுப வித்தவை யுமான அநேக நிகழ்ச்சிகள், அப்பொழுதைய கிரிஸில் நடைபெற்றி ருக்கின்றன. என்ன ஆச்சரியம்! உதாரணமாக, இரண் டாவது உலக யுத்தத்தின் போது (1939-1945) சத்துருக்கள், ஓர் ஊரை ஆக்கிரமித்துக் கொள்ளப் போகிறார்களென்று தெரிந்ததும், அந்த ஊர் ஜனங்கள், தாங் களாகவே, தங்கள் வீடு வாசல்களையும் சொத்து சுதந்திரங் களையும் விட்டுவிட்டு, பாதுகாப்புள்ள வேறோர் ஊருக்குச் சென்று விட்டதை, அல்லது அரசாங்கத்தினரால் தகுந்த ஏற்பாடுகளுடன் அனுப்பப்பட்டு விட்டதைப் பார்த்திருக்கிறோம்: அனுபவித்தவர் களும் உண்டு. இதற்கு ஊரைக் காலி செய்தல் என்கிறோம். இன்னும், ஊரைக் காலி செய்துவிடுவதற்கு முன்னர், சத்துருக்களுக்கு அந்த ஊரில் உபயோகமானதெதுவும் அகப்படக் கூடாதென்பதற் காக, உபயோகமுள்ள யாவும் சுட்டுப் பொசுக்கப்பட்டு விடுகின்றன. இந்த மாதிரியான நிகழ்ச்சிகளும் கிரீஸில் நடைபெற்றிருக்கின்றன. மற்றும், இப்பொழுது தொழில் வரி, வருமான வரியென்று செலுத்து கிறோம். இவையெல்லாம் கிரீஸில் செலுத்தப் பட்டு வந்திருக் கின்றன. பிற நாட்டுச் சரித்திரங்களில் இந்த மாதிரியான உதாரணங் களைக் காணலாமென்றாலும், கிரீஸில் இவை நமக்கு பஷ்ட மாகத் தெரிகின்றன.
கிரீஸின் சரித்திரத்தை எழுதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்பதைச் சரித்திராசிரியர்கள் பல இடங்களில் நன்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நூலை எழுதுகிற போதுதான் இந்தச் சிரமம் தெரிகிறது. காலத்தின் தொடர்ச்சியை அனுசரித்துக் கொண்டு போனால் இடத்தின் தொடர்ச்சி விட்டுப் போகிறது; இடத்தின் தொடர்ச்சியை அனுசரித்துக் கொண்டு போனால் காலத்தின் தொடர்ச்சி விட்டுப் போகிறது. இரண்டையும் இணைத்து, கூடிய மட்டில் வாசகர்களுக்குச் சலிப்புத் தட்டாமலிருக்கும் வண்ணம் இந்த நூலை எழுத முயன்றிருக் கிறேன். இந்த என் முயற்சி எவ்வளவு தூரம் பயன் கொடுத்திருக்கிற தென்பதை வாசகர்கள்தான் கூற வேண்டும்.
இந்த நூலைப் படிக்கிறபோது, கூடவே இதனுடன் சேர்க்கப் பட்டிருக்கும் கிரீஸின் பூகோள படத்தை அடிக்கடி பார்த்துக் கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அப் பொழுதுதான் நிகழ்ச்சிகளை ஒருவாறு சுவைக்க முடியும்.
கிரேக்க பதங்களை உச்சரிக்கிற விஷயத்தில் அறிஞர்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உச்சரிக் கின்றனர். இந்த நூலில் பெரும்பாலோர் உச்சரிக்கின்ற முறையைக் கூடிய மட்டில் பின்பற்றியிருக்கின்றேன். ஆனால் இதுவே சரியென்று நான் சொல்லவில்லை. வாசகர்கள் விருப்பப்படி பெயர்களை உச்சரித்துக் கொள்ளலாம்.
இந்த நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் கி.மு. விலேயே நடைபெற்றமையால், நூலின் இடையிடையே வரும் ஒவ்வொரு வருஷத்திற்கு முன்னரும் கி.மு. என்று குறிப்பிடவில்லை. கி.பி. என்று குறிப்பிடாத வருஷங்கள் யாவற்றையும் கி.மு. வருஷங்க ளென்றே கொள்க.
பிளேட்டோவின் அரசியலையும், அரிடாட்டலின் அரச நீதியையும், துஸிடிடீஸின் பெலொப்பொனேசிய யுத்த சரித்தி ரத்தையும் வாசகர்கள் சுவைத்துப் படிக்க வேண்டுமென்பதை மனத்தில் கொண்டு, இந்த நூலில் சில சில நபர்களைப் பற்றியும், சில சில நிகழ்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். தவிர, கல்லூரி மாணாக்கர்களுக்குப் பயன்பட வேண்டுமென்ற நோக்கத்துடனும் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
இன்றைய கிரீஸைப் பற்றி இந்த நூலில் எதுவும் சொல்லப் படவில்லை. அப்படிச் சொல்வது, எடுத்துக்கொண்ட விஷயத் திற்குப் புறம்பானதாயிருக்குமென்று கருதி விட்டு விட்டிருக்கிறேன். ஆயினும் வாசகர்களின் உபயோகத்திற்காக தற்போதைய கிரீஸைப் பற்றின சில விவரங்கள் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.
கடைசியில் ஒரு வாத்தை. இந்த நூலை எழுத நான் எடுத்துக் கொண்ட காலம் மிக அதிகம். இதற்கு நான் என்ன காரணங் கூறுவது? எனது அசதி, அறியாமையென்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அஃது, இந்த நூலைப் படிக்க வேண்டுமென்று ஆவல் காட்டிய அன்பர்களுக்கு எப்படித் திருப்தியளிக்கும்?
எனது எழுத்துக்களைப் படிக்க வேண்டுமென்று ஆர்வங் காட்டிவரும் தமிழன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.
வெ. சாமிநாதன்
கிரேக்க நாகரிகமும் சரித்திரமும்
1. நன்றிக்குரிய நாகரிகம்
இன்றைய மேலை நாட்டு நாகரிகத்தின் ஆதிமூலம், புராதன கிரேக்க நாகரிகம். இன்றைய மேலைநாட்டு மொழிகள் பல வற்றிற்கும் ஆணிவேர், பூர்விகக் கிரேக்க மொழி. பழமையான இவ் விரண்டிற்கும் மேலை நாட்டார் என்றும் நன்றி செலுத்திக் கொண்டிருப்பர்.
ஏசுநாதர் அவதரிப்பதற்கு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டு களுக்கு முந்தியே, கிரேக்க சாம்ராஜ்யம், ரோம ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. அதனோடு அதன் தனிப்பெருவாழ்வும் முற்றுப்பெற்று விட்டது. ஆனால் அதனுடைய நாகரிகம் - கிரேக்க நாகரிகம் - அழிந்து படவில்லை. அழியவிட வில்லை ரோமர்கள். அதனைத் தங்களுடையதாக ஏற்றுக் கொண்டார்கள். அதன் சிறப்பியல்புகளில் பெரிதும் ஈடுபட்டார்கள். “கிரீஸை, ரோம் வசப் படுத்திக் கொண்டதாயினும், கிரீஸின் கலைகளுக்கு ரோம் வசப் பட்டு விட்டது.” என்னும் கருத்துப்பட ஒரு ரோம கவிஞன் பாடி யிருக்கிறான்.
கிரேக்க நாகரிகத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ரோமர்கள், அதை மேலும் மேலும் விருத்தி செய்தார்கள். ரோம ராஜ்யத்தின் பிரஜைகளாகிவிட்ட கிரேக்கர்களும் இந்த அபிவிருத் திக்கும் துணையாயிருந்தார்கள். கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம் என்ற பெயரால் வளர்ந்தது. கிறிஸ்து சகம் ஆரம்பித்துச் சுமார் ஐந்து நூற்றாண்டுகள் வரை இந்த ரோம நாகரிகம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதற்குப் பிறகு ரோம ஏகாதிபத்தியம் சிதறுண்டு போயிற்று. அது போற்றி வளர்த்த நாகரிகமும் செல்வாக்கிழந்தது.
கி.பி. ஆறாவது நூற்றாண்டிலிருந்து பதினைந்தாவது நூற் றாண்டுகள் வரை ஐரோப்பா முழுமையிலும் ஒரே கலவரம். நாகரிக மற்ற ஒரு நிலைமை நிலவியிருந்ததென்றே சொல்ல வேண்டும். இந்தக் காலத்தை ‘இருளடர்ந்த யுகம்’ என்று சரித்திரக்காரர்கள் அழைக்கிறார்கள்.
பதினாறாவது நூற்றாண்டு பிறந்தது. ‘மறுமலர்ச்சி’ சகாப் தமும் பிறந்தது. இந்த மறுமலர்ச்சி, கிரேக்க, ரோம நாகரிகங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கிரேக்க, ரோம இதிகாசங் களிலும் காவியங்களிலும் அறிஞர்கள் சிரத்தை காட்டலானார்கள்; அவற்றிலிருந்து அநேக அரிய பொருள்களைக் கண்டெடுத்தார்கள்; புதிய நூல்களாக வழங்கினார்கள். ஜனங்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது; புதிய வாழ்வு வாழ வேண்டுமென்ற ஆவல் எல்லாம் சேர்ந்து புதியதொரு நாகரிகமாகப் - பரிணமித்தது. இதைத்தான் இப்பொழுது பொதுவாக மேலைநாட்டு நாகரிகம் என்று சொல்கிறோம்.
ஆகவே, மேலைநாட்டு நாகரிகமென்பது, பழமையினின்று வேறுபட்ட புதுமையன்று; பழமையின் தொடர்ச்சிதான். இன்றைய மேலை நாட்டு நாகரிகத்தை, கிரேக்க நாகரிகத்தின் குழந்தை யென்றே அறிஞர்கள் கூறுவார்கள். கிரேக்கர்கள் பெற்றெடுத்த நாகரிகக் குழந்தையை ரோமர்கள் போஷித்து ஐரோப்பாவுக்கு அளித்தார்கள். இதை வேறு விதமாகவும் சொல்லலாம். மேலை நாட்டு நாகரிகத்தின் தாய், கிரேக்க நாகரிகம்; செவிலித்தாய், ரோம நாகரிகம்.
பெற்றவரும் வளர்த்தவரும் நினைவு கூர்தற்குரியரன்றோ? இதனாலேயே, மேலைநாட்டுக் கல்வித் திட்டத்தில், கிரேக்க, ரோம சரித்திரங்கள் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. பூர்வீகக் கிரேக்க மொழியும் ரோமர்களுடைய லத்தீன் மொழியும், இது காலை பேச்சு வழக்கில் இல்லையென்றாலும், அவற்றில் பயிற்சி பெற வேண்டு மென்ற விருப்பம் அறிஞர்களுக்கு இருந்து வருகிறது. இந்த விருப்பமும், கிரேக்க, ரோம நாகரிகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும், இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் வரை மேனாட்டாரிடையே இருந்து வருமென்பது நிச்சயம். மேனாட்டார் மட்டுமென்ன, உலகத்திலுள்ள நாகரிக ஜாதியினர் அனைவருமே தங்கள் நாகரிகம் நலிந்து போகாமலிருக்க வும், தங்கள் கலாசாரங்கள் கறைப்பட்டுப் போகாமலிருக்கவும், கிரேக்க, ரோம நாகரிகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முற்படுவர். புராதனமென்பது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிற தென்றாலும், அது, நிகழ்காலத்திற்கு எத்தனையோ பாடங்களைப் போதித்துக் கொண்டிருக் கிறதல்லவா? எதிர் காலத்திற்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறதல்லவா?
பெற்றவரும் வளர்த்தவரும் நினைவு கூர்வதற்குரிய ரென்றாலும், பெற்றவருக்கல்லவோ முதல் ஸ்தானம்? அந்த முறையை முன்னிட்டு, புராதன கிரீஸை, அந்த கிரீஸ் வாழ்ந்த வரலாற்றை இந்த நூலின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்புகிறோம்.
புராதன கிரீஸ், மேலை நாட்டுக்கு என்னென்ன பொருள் களைத்தான் வழங்கியிருக்கிறது! பாஷை முதல் மெய்யறிவு வரை பலவற்றிற்கு இலக்கணம் வகுத்தவர்கள் கிரேக்கர்கள். உடலைப் பேணல், கடவுளைக் காண்டல், ஓவியம் வரைதல், காவியம் புனைதல், பாட்டுப் படித்தல், நாடகம் நடித்தல், கட்டடம் சமைத்தல், பிரசங்கம் செய்தல் ஆகிய இவை போன்ற பலவற்றிற்கும் வழிகாட்டியவர்கள் கிரேக்கர்கள். கணிதம், பூகோளம் முதலிய பல்வகைச் சாஸ்திரங் களைச் செய்தவர்கள் கிரேக்கர்கள். இப்பொழுது எத்தனை விதமான அரசியல் தத்துவங்கள் பேசப்படுகின்றனவோ அவை யாவும் கிரேக்கர்களால் சொல்லப்பட்டவையே. இவ்வளவென்ன, இப் பொழுது நாம் எழுதுகையில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலியன இடுகின்றோம். அல்லது ‘பாரா’ பிரித்துப் போடுகிறோம். இவை யெல்லாம் கிரேக்கர்கள் கற்றுக் கொடுத்தவையே. சினிமா என்கிறோம், டெலிபோன் என்கிறோம். இவையெல்லாம் கிரேக்க வார்த்தைகளே. நீராவி இஞ்சினைக் கண்டுபிடித்தது ஜேம்ஸ் வாட் என்று ஆங் கிலேயர் பெருமைப்படலாம். ஆனால் கி.மு.முதல் நூற்றாண்டில், அதாவது ஜேம்ஸ் வாட்டுக்குச் சுமார் ஆயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முந்தி, ஹீரோன் (இவன் கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தானென்று சிலர் கூறுவர். எப்படியிருந்தபோதிலும், இவன் ஜேம்ஸ் வாட்டுக்கு ஆயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முந்தியவனே.) என்ற ஒரு கிரேக்க அறிஞன், இந்த நீராவி இஞ்சினைக் கண்டு பிடித்திருக்கிறானென்று கிரேக்க சரித்திரம் கூறுகிறது. இப்படி இன்னும் எத்தனையோ. இவைகளைப் பற்றிப் போகப் போகத் தெரிந்து கொள்வோம்.
இன்னும் கிரேக்கர்கள், சிந்தனை உலகத்திற்கு அளித்திருக்கிற நன்கொடைகள் அனந்தம். பிரதியொரு மனிதனிடத்திலும் பிரதி பலிக்க வேண்டிய மேலான தன்மைகள் யாவை, அவைகளின் லட்சணம் என்ன என்பன போன்ற பல கடினமான விஷயங்களைப் பற்றி அவர்கள் கூறுகிறபோது நாம் வியப்படைகிறோம். நீதி, காதல், நட்பு, நிதானம், வீரம், சீலம், அழகு, அருள் இவை போன்ற நுணுக்க மான விஷயங்களை அவர்கள் எவ்வளவு சுலபமாகக் கையாண்டிருக் கிறார்கள்? இவைகளெல்லாம் அழியக் கூடியனவல்ல. சிந்தனை உலகத்திற்குச் சிதைவு ஏது? அவர்கள் கட்டிவைத்துப் போன கட்டடங்கள், அமுலுக்குக் கொண்டு வந்த சட்டங்கள், அன்றாட வாழ்க்கையில் உபயோகித்த பொருள்கள், இப்படிப்பட்டவை யெல்லாம் பூமாதேவியின் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டன; அல்லது காலத்தினால் துருப்பட்டுப் போயின. ஆனால் அவர்கள் ஏற்றிவைத்த நீதிநெறி விளக்கம் என்றும் பிரகாசித்துக் கொண்டி ருக்கும்; அவர்கள் கூறிப் போந்த மூதுரைகள் மானிட ஜாதியின் இருதயத்தில் நிலையான இடம் பெற்றிருக்கும். அழியாதன வற்றை அளித்தவரை, அவர் எந்நாட்டவராயிருந்தாலும் எக்காலத் தவராயி ருந்தாலும், அறிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா?
மற்றும் கிரேக்க சரித்திரம், அரச வமிசாவளிகளின் வரிசைக் கிரமமான தொகுப்பன்று; போராட்டங்களின் அட்டவணையு மன்று. அங்கு அரசர்கள் ஆளாமலில்லை; போராட்டங்கள் நடைபெறாமலில்லை. ஆனால் அவைகளைக் காட்டிலும் முக்கிய மான நிகழ்ச்சிகள் பல அங்கு நடைபெற்றிருக்கின்றன; மேலான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எண்ணப் புரட்சிகளென்ன, அரசியல் பரிசோதனைகளென்ன, இவையெல்லாம் அங்கு நடை பெற்றிருக்கின்றன. இவைகளினால் கிரேக்க நாகரிகம், சரித்திர மாணாக்கர்களுக்கு மட்டுமல்ல, பிற துறைகளில் பரிச்சயமுடைய வர்களுக்கும் நல்வழி காட்டுவதாயிருக்கிறது.
கிரேக்கர்களுக்கு எப்பொழுதுமே கதையில் வெகு பிரியம். நீதியைப் போதிப்பதாயிருந்தாலுஞ் சரி, சரித்திர சம்பவங்களுக்குக் காரணங் கூறுவ தாயிருந்தாலுஞ் சரி, கதை மூலமாகவே விளக்கு வார்கள். ஒலிம்பிய விளையாட்டு எப்படி ஆரம்பமாயிற்று? அதற்கு ஒரு கதை. கிரீஸுக்கு ஹெல்லாஸ் என்ற பெயர் ஏன் வந்தது? அதற்கு ஒரு கதை. இப்படி எல்லா வற்றிற்குமே கதைகள் சொல்லி இளைஞர்களின் அறிவைக் கூர்மைப்படுத்து வதோடு மனத்தையும் பண்படுத்திக் கொடுப்பார்கள். இரண்டாயிரம், மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னே தான் இப்படிக் கதைகள் சொல்லிக் கொண்டி ருந்தார்களென்று நினைக்க வேண்டாம். இப்பொழுது கூட, கிரீஸின் கிராமாந்தரங்களில் சென்று பார்ப்பீர்களானால், வயதான வர்கள் தக்ளி அல்லது கைராட்டினத்தில் நூற்றுக் கொண்டோ, தறியில் நெசவு வேலை செய்து கொண்டோ, தங்களைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் சிறுவர் சிறுமியர்களுக்குக் கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். இப்படியே நடைப் பிரயாணத் தின் போதும் கதைகள் சொல்லிக்கொண்டே வழி நடப்பார்கள். வீட்டிலிருந்து வயல்களுக்குச் செல்கிறபோதும், அப்படியே வயல் களிலிருந்து வீட்டுக்கு வருகிறபோதும், பாட்டுப் படிப்பார்கள். அல்லது கதை சொல்லக் கேட்பார்கள்; அல்லது தக்ளியில் நூற்பார்கள். கிரேக்க சரித்திரம் ஒரு தொடர்கதை போன்றது. அதைப் படிக்கத் தொடங்கி விட்டால், மேலும் மேலும் படிக்க வேண்டும், விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உண்டாகுமே தவிர சிறிது கூட சலிப்பு ஏற்படாது.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, புராதன கிரேக்கர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், அனுஷ்டித்து வந்த பழக்க வழக் கங்கள் முதலியவைகளைப் பற்றிப் படிக்கிறபோது அவர்களெல் லோரும் நமது மூதாதையர்களிடமிருந்து பிரிந்துசென்ற ஒரு கிளையினர்தானோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. நமது பாரத நாட்டுப் பண்புகள் பலவும் அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அவர்களை அறிய அறிய, அவர் களிடத்தில் நம்மையறியாத ஒரு வாஞ்சை உண்டாகிறது. அவர்கள், வாழ்க்கையில் அனுபவித்த சுகதுக்கங்கள், யுத்தங்களில் அடைந்த வெற்றி தோல்விகள் ஆகிய யாவும் நமது இதயத்தைத் தொட்டு விடுகின்றன. அப்படியானால், அவர்கள் நமக்கு மிகவும் நெருங்கி யவர்கள் என்பது நன்கு புலனாகின்றதல்லவா? ஆதலின் அவர்களைச் சந்திக்கச் செல்வோம், வாரீர் வாசகர்களே!
முதலில் ஒரு விஷயம். கிரீஸ் என்பதும் கிரேக்கர்கள் என்பதும் ஆதிகாலத்திலிருந்து வந்த பெயர்களல்ல; ரோமர்கள் இட்ட பெயர். கிரீஸைச் சேர்ந்த யூபியா என்ற பிரதேசத்திலிருந்து, கிறிஸ்து சகத் திற்குச் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தி, கிரையீ என்றொரு ஜாதியார், இத்தாலியின் மேற்குப் பக்கத்திலுள்ள நேப்பிள்ஸுக்குச் சமீபத்தில் சென்று குடியேறினர். இவர்களைக் கிரேக்கி என்ற ழைத்தார்கள் ரோமர்கள். இதற்குப் பிறகு, இவர்கள் எந்தப் பிரதேசத்திலிருந்து வந்தார்களோ அந்தப் பிரதேசம் பூராவும் கிரீஸ் என்று அழைக்கப்படலாயிற்று; அங்கு வசித்த அனைவரும் பொது வாகக் கிரேக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர்.
இதற்கு முந்தி கிரீஸுக்கு ஹெல்லாஸ் என்ற பெயர்தான் இருந்து வந்தது. இந்தப் பெயர் எப்படி வந்தது என்று கேட்கி றீர்களா? இதற்குக் கிரேக்கர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். ஒரு காலத்தில் (கிறிஸ்து சகத்திற்குப் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தி இந்தக் காலத்தை வரையறுக்கின்றனர் சிலர்.) உலகத்தில் அக்கிரமம் அதிகரித்து விட்டது. இதைக் கடவுளால் சகிக்க முடிய வில்லை. ஒரு பெரிய பிரளயத்தை உண்டு பண்ணினார். அதில் எல்லா ஜனங்களும் மடிந்து போனார்கள். இருவர் மட்டும் உயிர் தப்பினர். அவர்கள் பெயர் ட்யூக்கேலியான், பிர்ரா என்பது. இருவரும் சதிபதிகள். இவர்களுக்கு ஹெல்லென் என்ற ஒரு மகன் பிறந்தான். இவன் வழி வந்தவர்கள் அனைவரும் ஹெல்லேனீயர்கள் என்று அழைக்கப்படலாயினர்; இவர்கள் வசித்த பிரதேசம் ஹெல்லாஸ் என்று அழைக்கப்பட்டது.
ஹெல்லெனுக்கு இயோலஸ், டோரஸ் என்ற இரண்டு பிள்ளைகளும், ஐயோன், அக்கீயஸ் என்ற இரண்டு பேரப் பிள்ளைகளும் இருந்தார்கள். இவர்களின் சந்ததியினர்தான், கிரேக்கர்களுக்குள்ளே நான்கு பிரிவினராயுள்ள, இயோலியர், டோரியர், ஐயோனியர், அக்கீயர் ஆகியோர். இந்த நான்கு பிரிவு களுக்குள் வராத மற்றவர் அனைவரையும் அந்நியர் என்றே அழைத்து வந்தார்கள் கிரேக்கர்கள்; அப்படியே நடத்தியும் வந்தார்கள்.
2. சரித்திரச் சான்றுகள்
தீவுகளென்ன, தீபகற்பங்களென்ன, இவை பலவும் சேர்ந்த ஒரு சேர்க்கையே கிரீஸ். அது போலவே, தனித்தனி ராஜ்யங்களின் வாழ்வு தேய்வுகளென்ன, அரசியல் அமைப்புகளென்ன, வேறு வேறு இனத்தவரின் உறவு பகைகளென்ன, இவர்கள் பொதுவாக நாகரிகக் களஞ்சியத்திற்குச் சேர்த்து வைத்துப் போன பொருள்களென்ன, இவை பலவும் அடங்கிய ஒரு தொகுப்பே கிரேக்க சரித்திரம். இதனாலேயே, கிரேக்க சரித்திரத்தைச் சொல்கிற போது, எதை மையமாக வைத்துக் கொண்டு துவங்குவது, எந்த முனையிலிருந்து ஆரம்பிப்பது என்பன போன்ற பிரச்னைகள் தோன்றிவிடுகின்றன. “கிரேக்க சரித்திரத்தைச் சொல்ல முற்படும் ஓர் ஆசிரியன், தனித் தனியாகப் பிரிந்திருக்கும் கிரீஸின் பல உறுப்புக்களை ஒன்றாக இணைத்து, ஒரே மாதிரியாகவும், தொடர்ச்சியுள்ள கதையாகவும் சொல்ல வேண்டிய சோர்வுதரும் காரியத்தைச் செய்ய வேண்டியவ னாயிருக்கிறான்” என்று ஓர் ஆசிரியன் கூறுகிறான்.
ஒரு நாட்டின் புராதன சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முக்கிய கருவிகளாயுள்ளவை இரண்டு. ஒன்று, அந்த நாட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் பழைய சின்னங்கள்; மற்றொன்று, அந்த நாட்டில் வழங்கி வந்த பண்டைய இலக்கியங்கள். கிரீஸைப் பொறுத்தமட்டில் இவை நிறையக் கிடைத்திருக்கின்றன. அதன் புராதனத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல், ஆராய்ச்சி யாளர்களிடையே அதிகரித்துக் கொண்டுவருகிறது; அவர்கள், பூமியைக் குடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இங்ஙனமே, அறிஞர்கள், பழைய கிரேக்க காவியங்களில் இலை மறைவு காய் மறைவாக இருக்கும் சரித்திர உண்மைகளைக் கண்டுபிடிப்பதில் கருத்தைச் செலுத்திக் கொண்டு வருகின்றார்கள். கிரேக்க மகா காவியங்களில் முக்கியமான சம்பவங்கள் பல ட்ராய் என்ற நகரத்தில் நடைபெற்றன. இந்த ட்ராய் நகரம், ஒன்பது தடவை தோன்றி மறைந்திருக்க வேண்டுமென்று புராதன சின்னங்களின் பரி சோதகர்கள் இப்பொழுது கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, ஒன்றன் மேலொன்றாக உள்ள ஒன்பது நகரங்களின் அடையாளங் கள் இங்கு இருக்கின்றன. (ஒன்பதாவது தடவை தலையெடுத்த ட்ராய் நகரம், ரோமர்களால் கட்டப்பெற்றது. இதற்குப் புதிய ட்ராய் என்று அவர்கள் பெயர் கொடுத்தார்கள். கி. பி. ஐந்தாவது நூற்றாண்டில் இந்தப் புதிய ட்ராய் அழிந்து போயிற்று. இந்த ஒன்பதுநகரங்களின் மொத்த வாழ்வு ஏறக்குறைய மூவாயிரத்தைந் நூறு வருஷம்). இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்து போயிருக்க வேண்டுமென்பது இவர்கள் கருத்து. இன்னும் இவர்கள், முதலாவதாய் ட்ராய் நகரம் கி.மு. முப்பதாவது நூற்றாண்டுக்கு முன்னரேயே ஒரு சிறு கிராமமாக இருந்திருக்க வேண்டுமென்றும், இலியத்தில் கூறப்பட்டிருக்கிற சம்பவங்கள் கி. மு. பன்னிரண்டாவது நூற்றாண்டில் பிரசித்தமாக இருந்த ஆறாவது ட்ராய் நகரத்தில் நடைபெற்றிருக்க வேண்டுமென்றும் நிர்ணயித்திருக்கிறார்கள்.
இங்ஙனமே இலியத், ஒடிஸ்ஸே என்ற ஆதி காவியங்கள், தனியொரு மனிதனால் இயற்றப்பட்டவையல்லவென்றும், அவ்வக் காலத்தில் பலரால் பாடப்பெற்று வந்த பல நாடோடிப் பாடல் களின் தொகுப்பே இவையென்றும், இந்தத் தொகுப்பு வேலையைச் செய்தவர்தான் ஹோமர் என்ற மகாகவியே தவிர, இவனே மூல ஆசிரியனல்லவென்றும் இப்பொழுது அறிஞர்கள் அபிப்பிராயப் பட்டிருக்கிறார்கள்; மேற்சொன்ன இரண்டு காவியங்கள்தான், ஆதி கிரேக்கர்களைப் பற்றியும் அவர்களுடைய நாகரிக வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு ஆதாரங்களாயிருக்கின்றன வென்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்கள்.
எனவே, முற்கூறிய இரண்டு கருவிகளைக் கொண்டு, அதாவது புராதன சின்னங்கள், புராதன காவியங்கள் ஆகிய இவற்றைக் கொண்டு கிரீஸின் ஆரம்ப சரித்திரத்தை ஒருவாறு நிர்மாணஞ் செய்ய முயல்வோம்.
கிரீஸின் சரித்திரம் கி.மு. பதின்மூன்றாவது நூற்றாண்டி லிருந்து ஆரம்பிக்கிறது. இங்கிருந்து துவங்குவதுதான் அறிஞர் களுடைய சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இந்தப் பதின் மூன்றாவது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பன்னிரண்டாவது நூற்றாண்டு இறுதி வரையுள்ள காலத்தை, அதாவது கி.மு. 1300-ஆம் வருஷத்திலிருந்து 1100-ஆம் வருஷம் வரையுள்ள இருநூறு வருஷ காலத்தை ‘வீர யுகம்’ என்று சொல்வர். இந்த யுகத்தில் நடைபெற்ற சம்பவங்கள்தான், பெரும்பாலும், கிரீஸின் புராதன நாடோடிப் பாடல்களின் பொருள்களாயமைந்திருக்கின்றன. இந்த நாடோடிப் பாடல்களைப் பற்றி வாசகர்களுக்குச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது.
முற்காலக் கிரீஸில், ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்த பாடகர் பலர் இருந்தனர். எந்த நாட்டிலும் இத்தகைய ஒரு கூட்டத்தார் இருந்தனரென்று தெரிகிறது. தமிழ்நாட்டிலும் பாணர் என்ற ஒரு வகையினர் இருந்திருக்கின்றனரல்லவா? கிரீஸிலிருந்த இந்த நாடோடிப் பாடகர்கள், இனிய குரலுடன் கற்பனைத் திறனும் வாக்கு வன்மையுமுடையவர்களாயிருந்தார்கள். அரசவைகளிலும் பொதுஜனங்களிடத்திலும் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. போர் நடைபெறுகிற காலங்களில் இவர்கள் போர்க் களத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுண்டு. போர் செய்து களைத்துப் போயிருக்கிற வீரர்களுக்கு, தினந்தோறும் மாலை நேரத்தில் பாட்டுப்பாடியும் கதைகள் சொல்லியும் உற்சாக மூட்டுவது இவர்கள் வழக்கம்.
இவர்கள் பாடி வந்த பாடல்களும் சொல்லிவந்த கதைகளும், பெரும்பாலும் எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவனைப் பற்றியனவாகவோ, வீர புருஷனைப் பற்றியனவாகவோ இருந்தன. ஏறக்குறைய ஒரே அடிப்படையைக் கொண்டிருந்த இந்தப் பாடல்களும், கதைகளும், இடம், பொருள், ஏவலை முன்னிட்டும், பாடுகின்றவர்களுடைய திறமையை யொட்டியும் நாளாவட்டத்தில் சில சில மாற்றங்களை யடைந்தன. இது சகஜந்தானே? தவிர இவை தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு கேட்கப்பட்டும் வந்தன. பிற்காலத்தில்தான் இவை எழுத்துருவம் பெற்றன. இங்ஙனம் வாய்மொழியாக வந்த காரணத்தினாலும் சில சில மாற்றங்கள் ஏற்பட்டன. இவையனைத்தையும் கோர்வையாகத் தொகுத்து இரண்டு காவியங்களாக உருவம் பெறச் செய்தவனே ஹோமர் என்பர். இதனைப் பின்னரும் சந்திப்போம்.
பழைய குடிகள்
1. அக்கீயர்
உத்தேசமாக கி. மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தார், வடக்கேயுள்ள தெஸ்ஸாலி (இன்றைய கிரீஸின் வடகிழக்கு மாகாணமாயிருக்கிறது. இதன் தலைநகரம்: லாரிஸ்ஸா முக்கியத் துறைமுகப்பட்டினம்: வோலோஸ்) என்ற பிரதேசத்தி லிருந்து, தென் பகுதியிலுள்ள பெலோப்பொனேசிய (சின்ன ஆசியாவின் தற் போதைய துருக்கியின் அனட்டோலியா மாகாணம்) வடமேற்குப் பகுதி முற்காலத்தில் பிரிஜியா என்று அழைக்கப்பட்டது. இதற்கு டாண்ட்டலஸ் என்ற ஓர் அரசன் இருந்தான். இவனுக்கு பெலோப்ஸ் என்ற ஒரு குமாரன். இவன் தன் தகப்பனால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு, இப்பொழுதைய பெலொப்பொனே சியாவின் மேற்குப் பகுதியிலுள்ள எலிஸ் என்ற பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தான். இப்படி வந்து சேர்ந்தது உத்தேசமாக கி.மு.1283-ஆம் வருஷமென்பர். இவன் மேற்படி எலிஸ் பிரதேசத்தின் அரசனுடைய மகளை விவாகஞ் செய்துகொண்டு, அதன் அரசனானான். இவனும், இவன் சந்ததி யாரும் ஆண்ட பிரதேசம், நாளாவட்டத்தில் பெலொப் பொனேசியா என்று அழைக்கப் பெற்றது. (கி. பி. பன்னிரண்டாவது நூற்றாண்டி லிருந்து இது, மொரீயா என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. தீப கற்பகத்தில் வந்து குடியேறினர். இவர்கள் பொதுவாகக் கிரேக்கர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். ஆனால், இவர்கள், கிரேக்கர்களுள் ஒரு பிரிவினராகிய அக்கீயர்கள். இதனால் இவர்கள் குடியேறிய பிரதேசம், (பின்னர் கிரீஸ் முழுவதும்) அக்கீயா என்று சிறிது காலம் வரை அழைக்கப் பெற்றது.
தெஸ்ஸாவியிலிருந்து புறப்பட்ட அக்கீயர்கள், ஒரே காலத்தில் ஒரே கூட்டமாகப் புறப்படவில்லை. சிறுசிறு தொகுதியினராக இவர்கள் புறப்பட்டு, பெலொப்பொனேசியாவுக்கு வந்து ஸ்திரமாக வசிக்க ஆரம்பித்ததற்கு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் - கி.மு. பதினான்காவது, பதின்மூன்றாவது நூற்றாண்டுகள் - பிடித்திருக்க வேண்டுமென்று ஊகிக்கப்படுகிறது.
அக்கீயர்கள் வருகைக்கு முன்பு, பெலொப்பொனேசியா, நாகரிக சூன்யமாயிருக்கவில்லை. இங்கு பெலாஸ்ஜியர் என்னும் ஜாதியினர், அழகான நகரங்கள் அமைத்துக்கொண்டு அவற்றில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந் தார்கள். அவர்களிடையே நிலவி வந்த நாகரிகம், கிரீஸுக்குத் தெற்கேயுள்ள கிரீட் என்ற தீவில் கி.மு. இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முந்திய காலத்தி லிருந்து நிலவி வந்த நாகரிகத்தையொட்டியதாயிருந்ததென்றும், இந்த கிரீட் நாகரிகம், கீழை நாட்டு நாகரிகத்தின் வழித் தோன்றலே யென்றும் அறிஞர் சிலர் கருதுகின்றனர். இவை எப்படி வேண்டு மானாலும் இருக்கட்டும், பெலாஸ்ஜியர்கள் வாழ்ந்து வந்த நகரங்கள், கட்டிவைத்த கோட்டை கொத்தளங்கள் முதலியவை, இப் பொழுதும் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் கட்டிய நகரங்கள் பல வற்றுள் குறிப்பிடத் தக்கது மைஸீனி என்பது. பெர்ஸூஸ் என்ற ஓர் அரசன் கி.மு.1457-ஆம் வருஷம் இதனை நிர்மாணஞ் செய்தா னென்பர். “அழகாகக்கட்டப் பெற்றதும், அகன்ற வீதிகள் கொண்டதும், அதிகமான தங்கத்தையுடையதுமான நகரம்” என்று இதனை வருணிக்கிறான். பிற்காலத்தில் ஹோமர், தனது காவியங் களில், இந்த நகரத்தைப் பற்றி மட்டுமல்ல, பெலாஸ்ஜியர்களைப் பற்றிய ருசிகரமான வரலாறுகள் பலவும் இவனுடைய காவியங் களில் காணக்கிடைக் கின்றன. மைஸீனியர்களென்றும், (இவர்கள், பெலாஸ்ஜியர்களினின்று வேறுபட்டவர்களல்லர். மைஸீனிய நாகரிகமென்றும், தனியாகப் பிரித்துச் சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மைஸீனி நகரம் பிரபலமடைந்திருந்தது.
குடியேறிய அக்கீயர்கள், தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வ தற்காக பெலாஸ்ஜிய - மைஸீனியர்கள்மீது போர் தொடுத்தார்க ளென்றோ அல்லது அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டார்களென்றோ சொல்ல முடியாது. சமாதான முறை யிலேயே, தங்களுடைய பாஷை, மதம், கலாசாரம் ஆகியவைகளைக் கொண்டு புகுத்தி, மேற்படி பூர்வ குடிகளைத் தங்களுக்கு ஆட் படுத்திக் கொண்டார்கள். ஏறக்குறைய கி.மு. 1250-ஆம் வருஷம் இவர்கள் ஆளுஞ் சாதியினரானார்கள். இங்ஙனம் இவர்கள், தங்களுடைய பாஷை முதலிய வற்றைக் கொண்டு புகுத்தினார்க ளென்று சொன்னாலும், பெலாஸ்ஜிய - மைஸீனியர்களிடமிருந்து இவர்கள் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அதிகம்; காலக்கிராமத்தில் அக்கீயர்கள் வேறு, பெலாஸ்ஜிய - மைஸீனி யர்கள் வேறு என்று சொல்ல முடியாதபடி ஒரே இனத்தினராகி- கிரேக்கர்களாகி விட்டார்கள். இந்த ஐக்கியத்திலிருந்தே கிரேக்க நாகரிகம் ஆரம்பமாயிற்று. இதனாலேயே கிரேக்க சரித்திரத்தை இங்கிருந்து - கி.மு. பதின்மூன்றாவது நூற்றாண்டின் இடைக்காலத் திலிருந்து - துவக்குகிறார்கள் அறிஞர்கள். ஆதி கிரேக்கர்க ளென்றாலும், வீரயுக கிரேக்கர்களென்றாலும், பெலாஸ்ஜிய மைஸீனியர்களோடு கலப்புக் கொண்டுவிட்ட இந்த அக்கீயர் களையே குறிக்கும்.
இந்த அக்கீயர்களுடைய வாழ்க்கை எப்படி நடைபெற்று வந்ததென்பதைச் சிறிது கவனிப்போம். விவசாயம், இவர்களுடைய முக்கிய ஜீவனோபாயமாக இருந்தது. கால்நடைகளைப் போற்றி வளர்த்தார்கள். ஒருவனுடைய ஆஸ்தியை மதிப்பிடுகிற போது இத்தனை ஆடுகள், இத்தனை பசுக்கள், இத்தனை குதிரைகள் என்று தான் கணக்கிட்டுச் சொல்வார்கள். எருதுகளும், கோவேறு கழுதை களும், உழுதொழிலுக்கு உபயோகப்பட்டன. கோதுமை, நெல் முதலிய தானிய வகைகள் ஏராளமாக உற்பத்தியாயின. இவையும், இறைச்சி, மீன் முதலியவைகளும் உணவுப் பொருள்களாயிருந்தன. சர்க்கரைக்குப் பதில் தேனை உபயோகித்தார்கள்; ஒரு வகை மதுவையும் அவ்வப்பொழுது உட்கொண்டார்கள்.
குடும்பங்கள் பெரும்பாலும் ஏக குடும்பங்களாகவே இருந்தன. இப்படியே நிலங்கள், குடும்பச் சொத்தாகவே இருந்தன. குடும்பத் தின் தலைவன் இவற்றை நிருவாகஞ் செய்து வந்தான். ஆனால் இவனுக்கு, நிலங்களை கிரயம் செய்யும் உரிமை கிடையாது. சமுதாயப் பொது என்று சொல்லி, சில இடங்கள் ஒதுக்கப்பட்டி ருந்தன. இவை, கால்நடைகளின் மேய்ச்சல் தரைகளாக உபயோ கிக்கப்பட்டன.
அக்கீயர்கள், குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத் தார்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சிறு ராஜ்யம் போலவே நிருவாகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ராஜ்யத்தில் காதல் மணம் வீசியது; அச்சங் காரணமாகவல்லாமல் அன்பு காரணமாகப் பெரியவர்களுக்குச் சிறியவர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். பெண்களுக்கு அதிக மரியாதைச் செலுத்தப்பட்டு வந்தது. அவர்கள், குடும்ப விவகாரங்களிலாகட்டும் மற்றச் சமுதாயப் பொது விவகாரங் களிலாகட்டும் ஆண்களுக்குச் சமதையாக நடத்தப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய தனிமைக்கோ, பெண்மைக்கோ பங்கம் ஏற்படக் கூடாதென்பதில் ஆண்கள் மிகவும் கண்டிப்பாயிருந் தார்கள். வீடுகளில் பெண்கள் புழங்குவதற் கென்று தனியான இடங்கள் இருந்தன. அறுவடை செய்து வரும் தானியங்களைச் சுத்தப்படுத்தி வீட்டில் உரிய இடங்களில் சேர்ப்பித்தல், நூற்றல், நெய்தல், குழந்தைகளைப் பராமரித்தல் முதலிய வேலைகளைப் பெண்கள் கண்ணுங் கருத்துமாகச் செய்து வந்தார்கள். ஆனால் சமையல் வேலையில் அவர்கள் அதிகமாக ஈடுபடவில்லை. இந்த வேலையைப் பெரும்பாலும் ஆண்களே செய்து வந்தார்களென்று தெரிகிறது.
அக்கீயர்களின் விருந்தோம்பும் முறை மிகவும் வியக்கத்தக்கது. முன்பின் தெரியாதவர் யாராயினுஞ் சரி, வீடேறி வந்துவிட்டால், அவர்களுக்குச் சகல உபசாரங்களும் செய்து, போதுமென்ற மட்டும் உணவு அளிப்பார்கள். அவர்கள் ஊரென்ன, பேரென்ன முதலிய வற்றை அவர்களாகச் சொன்னாலொழிய, விசாரிக்க மாட்டார்கள். பரம விரோதியாகட்டும், அவன், ஒலிவ மரத்து இலைக்கொத் தொன்றைக் கையிலே வைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டாலும் சரி, அல்லது நேரே சமையல் கட்டுக்குச் சென்று அங்குள்ள அடுப்பின் முன்னர் மண்டியிட்டுப் பணிந்துவிட்டாலும் சரி, அவனை ஆதரித்து உண்ண உணவும், இருக்க இடமும் கொடுப்பார்கள். அவனுக்கு எவ்விதத் தீங்கும் நேரிடாதபடி பார்த்துக் கொள்வார்கள். பொதுவாக உபசரணை செய்கிற விஷயத்தில், நண்பரென்றும் அந்நியரென்றும் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். அதிலும் வயதான பெரியவர்கள் வந்துவிட்டால், கேட்கவேண்டி யதே யில்லை; அவர்களை, எழுந்து நின்று வரவேற்று, உபசரணைகள் பலவும் புரிவார்கள்.
குடும்பத்தில் பெண் பிறந்துவிட்டால், ‘இந்தப் பெண், எத்தனை ஆடுமாடுகளைக் கொண்டு தரப்போகிறதோ’ என்று பெரியவர்கள் பேசுவார்கள். ஏனென்றால், ஒரு பெண்ணை விவாகஞ் செய்துகொள்ள விரும்புகிறவன், அந்தப் பெண்ணின் தகப்ப னாருக்கு, இத்தனை ஆடுமாடுகளைக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு நியதி இருந்தது. எத்தனை ஆடுமாடுகள் என்பது, அந்தப் பெண்ணின் அழகு, தகப்பனின் அந்தஸ்து இவைகளைப் பொறுத்திருந்தது. இப்படிப் பெண்ணின் தகப்பன், மணமகனிடமிருந்து பெற்றுக் கொண்டாலும், அவன் பெண்ணுக்குச் சீதனம் கொடுக்க வேண்டு மென்றிருந்தது. இந்தச் சீதனம் எந்த வகையில் கொடுக்கப்பட்ட தென்பது தெரியவில்லை. ஆனால் விவாகம் கூடியமட்டில் உறவினர் களுக்குள்ளேயே நடைபெற்றதாகத் தெரிகிறது. சடங்கு முறை யிலேயே விவாகம் நடைபெற்றது. விவாகத்தின் போது விருந்துக ளென்ன, களியாட்டங்களென்ன, ஒருவரையொருவர் பரிகாசஞ் செய்து கொள்ளுதலென்ன, இவையெல்லாம் இருந்தன. தீவட்டி வெளிச்சத்திற்கிடையே மணமகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். ஊர்வலத்திற்கு முன்னே வாத்தியங்கள் ஒலிக்கும்; நாட்டியங்கள் நடைபெறும்.
அக்கீயர்களுக்கு, எழுத்து, படிப்பு ஆகிய ஒன்றும் தெரியாது. அவர்கள் காலத்தில் இவை இல்லவும் இல்லை. தெரிந்துகொள்ள வேண்டியனவற்றை யெல்லாம் வாய்மொழி மூலமாகவே ஒருவரி டமிருந்து மற்றொருவர் கற்றுக்கொண்டனர். தெரிந்துகொள்ள வேண்டியதென்ன? தந்தை செய்தபடி மகன் செய்து வந்தான். தாய் செய்தபடி மகள் செய்து வந்தாள். மகன், கால்நடைகளை மேய்க்கவும், நிலத்தில் உழுது பயிரிடவும், ஆயுதங்களை லாவகமாக உபயோகிக்கவும் கற்றுக் கொண்டான். மகள், நூற்கவும், நெய்யவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் கற்றுக்கொண்டாள். வாழ்க்கைக்கு வேண்டியது இவ்வளவுதானே கணக்கா? கால் நடைகளை எண்ணத் தெரிந்தால் போதும். சரித்திரமா? அதுதான் நாடோடிப் பாடல் களிலும், பெரியோர் சொல்லும் கதைகளிலும் இருக்கின்றதே? பூமி, சமதரையாக இருக்கிறது, இதைச் சுற்றி சமுத்திரம் இருக்கிறது என்கிற அளவுக்குத்தான் இவர்களுடைய பூகோள அறிவு இருந்தது.
அக்கீயச் சிறுவர் சிறுமியர்கள், நாட்டியமாட நன்கு பயின்றி ருந்தார்கள். சில சமயங்களில் நாட்டியமாடிக்கொண்டே பந்தடிப் பார்கள். மற்றும் அக்கீயச் சிறுவர்களுக்கு, ஓடுதல், தாண்டுதல், குதித்தல், மல்யுத்தம், முஷ்டியுத்தம் முதலிய பலவகை விளையாட்டு களும் நன்கு தெரிந்திருந்தன. இந்த விளையாட்டுகளில் அடிக்கடி போட்டிகளும் நடைபெற்றன. அக்கீய சமுதாயத்தில், தச்சரென்றும் கொற்றரென்றும் இப்படிப் பலவகைத் தொழிலாளர்கள் இருந் தார்கள். இவர்கள் தங்கள்ஆயுதங்களுடன், யாருக்கு எந்தப் பொருள் தேவைப்படுகிறதோ அந்தப் பொருளை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று செய்து கொடுத்து வந்தார்கள். பெருவாரியான முறையில் பொருள்கள் தயாரிக்க இவர்கள் கற்றுக் கொள்ள வில்லை; அல்லது விரும்பவில்லை. யாருக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுப்பதிலேயே இவர்கள் திருப்தி யடைந்தார்கள். இதனால் தொழில் போட்டி, வியாபாரப் போட்டி முதலிய எதுவும் அக்கீய சமுதாயத்தில் இடம் பெறவில்லை.
இங்ஙனம் பலவகைத் தொழிலாளர்கள் இருந்த போதிலும், சமுதாயத்திலுள்ள மற்றவர்களுக்கும் ஏதோ ஒருவித தொழில் தெரிந்திருந்தது. சுயமாகத் தொழில் செய்வதை யாரும் கௌரவக் குறைவாகக் கருதவில்லை. கூடியமட்டில், தங்களுடைய சாதாரணத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவரும் விரும்பினர். அரசர் சிலர், தாங்கள் அமர்ந்து கொள்ளும் நாற்காலி, உபயோகிக்கும் மிதியடி இப்படிப்பட்ட வைகளைத் தாங்களே செய்து கொண்டார்களென்று அறிகிறோம்.
அக்கீயர்களுக்கு இரும்பு ஓர் அபூர்வ வஸ்து. வெண்கலத் தைத்தான் அதிகமாக உபயோகித்தார்கள். தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பூமியின்கீழ் ஏராளமாகக் கிடந்த போதிலும், அவற்றைத் தோண்டி எடுக்கவில்லை; எடுக்கத் தெரியவுமில்லை இவர்களுக்கு. அதற்குப் பதிலாக அவற்றை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்துக் கொண்டு உபயோகித்தார்கள். இவர்கள் உபயோகித்த தங்கத்தினாலாய பொருள்கள் பல, இப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இவர்களுடைய யுத்தக் கருவிகள் பலவும் வெண்கலத்தினால் செய்யப்பட்டவையே.
அக்கீயர்களிடையே நாணயப் புழக்கம் இருக்கவில்லை. வெண்கலக் கட்டி, தங்கக்கட்டி, ஏகதேசமாக இரும்புத்துண்டு, இப்படிப்பட்டவைகளையே நாணயமாக உபயோகித்தார்கள். ஆனால் பொருள் பரிவர்த்தனையெல்லாம் பெரும்பாலும் எருதுகள் அல்லது பசுக்கள் மூலமாகவே நடைபெற்றன. அதாவது இன்ன பொருளுக்கு, இவ்வளவு பொருளுக்கு, இத்தனை எருதுகள் அல்லது பசுக்கள் என்று கணக்குச் செய்துகொண்டார்கள்.
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானால், ஆள் அனுப்பித் தெரிவிப்பார்கள். சமீப தூரத்திற்கு இப்படி, தொலைதூரமாயிருந்தது முக்கியமான செய்தியைத் தெரிவிக்க வேண்டு மானால், ஒரு மலையுச்சில் நின்று கொண்டு தீப்பந்தத்தைக் காட்டுவார்கள். இதற்குச் சில சமிக்ஞைகள் உண்டு. அதாவது இன்னபடி காட்டினால் இன்ன அர்த்தம் என்று எல்லோருக்கும் தெரிந்த மாதிரியான ஒருமுறை இருந்தது. தொலை தூரத்திலுள்ளவர்கள், தீப்பந்தத்தின் சமிக்ஞையைச் சுலபமாகப் புரிந்துகொள்வார்கள்.
சாமான் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் கோவேறு கழுதைகள் உபயோகிக்கப்பட்டன; மனிதர்களும் தலைமீது சுமந்து சென்றார்கள். சில சமயங்களில் வண்டிகளும் சென்றன. இந்த வண்டிகளுக்கு நான்கு சக்கரங்கள். ஆனால் வண்டிகள் சுலபமாகச் செல்லக்கூடிய மாதிரி பாதைகள் இல்லை.
அக்கீய சமுதாயத்தில் ஏழை பணக்கார வித்தியாசம் இருந்ததாகத் தெரிகிறது. உணவு, உடை, இருப்பிடம் முதலிய விஷயங்களில் இந்த வித்தியாசம் நன்கு புலப்பட்டது. பொதுவாகப் பணக்காரர்கள், சிறப்பாக அரசர்கள் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். இவர்கள் வசித்த வீடுகள், இரண்டு மூன்று கட்டுகளுடையனவாகவும், குறைந்த பட்சம் இரண்டு மாடிகள் கொண்டனவாகவும் இருந்தன. வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு நாய் கட்டப்பெற்றிருக்கும். வீட்டுக் குடையவர் பெரும் பணக்காரராயிருந்தால், உயிருள்ள நாய்க்குப் பதில், வெள்ளியினாலோ, தங்கத்தினாலோ செய்யப்பெற்ற நாயுருவம் ஒன்று வைக்கப் பெற்றிருக்கும். வீட்டைச் சுற்றிக் கனத்த சுவர் உண்டு. வீட்டுக்கு நடுவில் விசாலமான முற்றம்; அதில் விதவிதமான பழந்தரு மரங்கள்; மத்தியில், தண்ணீரை ஒழுங்காக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் செயற்கை ஊற்று. அதோ மாட்டுத் தொழுவம். இங்கே, தானியக் களஞ்சியம். வீசி வளைய வருவதற்குத் தாழ்வாரங்களென்ன, இடையிடையே சித்திர வேலைப் பாடுகள் நிறைந்த தூண்களென்ன, இவை பலவும் இருந்தன. வீட்டில் அடிக்கடி விருந்துகளும் களியாட்டங்களும் நடைபெறும். விருந்தின்போது பாடர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். பணக் காரர்களுடைய வீடுகளில் இந்தப் பாடகர்களுக்கு அதிகமான மரியாதை கிடைத்து வந்தது.
அக்கீயர்களிடையே அடிமை வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அடிமைகளிற் பெரும்பாலோர் பெண்கள். இவர்கள், வீட்டு வேலைகளுக்கு அமர்த்திக் கொள்ளப்பட்டார்கள். மற்றப் பொருள்களைப் போல் இவர்கள் வாங்கவும் விற்கவும் பட்டார் களென்பதொன்றைத் தவிர, பொதுவாக இவர்கள் கௌரவமாக நடத்தப்பட்டார்களென்றே சொல்ல வேண்டும்.
தெஸ்ஸாலி பிரதேசத்தின் வடபகுதியில் பனி படிந்த சிகரத்தோடு கூடிய ஒலிம்ப்பஸ் மலை யென்றொரு மலை இருக்கிறது. இதுதான், தாங்கள் தொழும் தெய்வங்களின் உறைவிடம் என்று கருதிப் போற்றி வந்தனர் அக்கீயர். இந்தத் தெய்வங்களைத் திருப்தி செய்யும் பொருட்டு அவ்வப்பொழுது பலி கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் நரபலி கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. பின்னர் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. தாங்கள் அன்றாடம் செய்துவரும் காரியங் களுக்கு இந்தத் தெய்வங்களின் துணையை நாடினர். இவை ஒவ் வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சக்தி உண்டென்றும், இந்தச் சக்தியைக் கொண்டு அது அதுவும் தன்தன் கடமையைச் செய்து வருகின்றதென்றும் கருதினர். இந்தத் தெய்வங்கள் பலவற்றிற்கும் மேற்பட்டது, முதன்மையானது ஜூஸ் (வியாழக் கடவுள் என்பர்) என்னும் தெய்வம். இதன் சந்நிதானத்தில் மற்றத் தெய்வங்கள் காத்து நிற்பதாகவும், இது சொன்னபடி கேட்பதாகவும் ஐதிகம். காலா காலத்தில் மழை பெய்விப்பதும், மனிதர் செய்யும் புண்ணிய பாவங் களுக்கேற்றாற்போல் அவர்களுக்குச் சுகதுக்கங்களைக் கொடுப்பதும், இவை போன்ற சில காரியங்களைச் செய்தும் இந்த ஜூஸ் தெய்வத்தின் வேலைகளாகும். இதனை வான்தெய்வம் என்று கூறலாம். இதற்கடுத்தது போஸீடான் என்னும் கடல் தெய்வம். கப்பலோட்டிகளுக்குச் சரியான வழி காட்டுவதும், அவர்களை ஆபத்தினின்று காப்பாற்று வதும் இதன் கடமையாகும். அத்தீனே என்பது பெண் தெய்வம். இவள் ஜூஸின் தலையிருந்து பிறந்தவள். கலைகள் பலவற்றிற்கும் அதிதேவதை இவள். இவள் சகோதரன் அப்போலோ. சூரியன் என்பது பொன்மயமான ஒரு ரதமென்றும், இதனைக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றனவென்றும், இந்த ரதத்தின் மேலிருந்து ஓட்டுகிறவன் அப்போலோவென்றும் சொல்லப்பட்டன. தவிர, இந்த அப்போலோ உலகத்தில் உண்டாகும் வியாதிகளைச் சொஸ்தப்படுத்தினான்; பூமிக்குச் செழுமையை அளித்தான். மனிதர்களிடையே அழகை வளர்த்தான்.
இவைகளுக்குப் பிரதியாக மனிதர்கள், அறுவடை செய்து முடிந்தவுடன், இவனுக்குத் தானியங்கள் முதலியவற்றை நிவேதன மாகப் படைத்தார்கள். ஆரெஸ் என்பது யுத்தக் கடவுள். ஆர்ட் டிமிஸ் என்பது வனதேவதை. இங்ஙனம் பல தெய்வங்களைத் தொழுது வந்தனர் அக்கீயர்கள். இந்தத் தெய்வங்களுக்குத் தனித்தனி கோயில்கள் இருந்தன. இந்தத் தெய்வங்களின் தோற்றம், செயல் முதலிய பலவும், கிரேக்கர்களுடைய அறிவு வளர்ச்சி, நாகரிக முன்னேற்றம் இவைகளுக்குத் தகுந்தாற்போல் பிற்காலத்தில் மாறின. புதிய சில தெய்வங்களும் வழிபாட்டுக் குரியனவாயின. விவரங் களுக்கு இரண்டாவது அனுபந்தத்தைப் பார்க்க.
அக்கீயர்களின் அரசியல் விவகாரங்கள் எப்படி நடைபெற்று வந்தன? ஓரளவு ஜனநாயக முறை இவர்களிடையே நிலவி வந்த தென்று தெரிகிறது. சிறு சிறு கிராமங்கள் பல இருந்தன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனிருந்தான். இவன் பொதுக்காரியங்களில், அதாவது, எல்லோருடைய நன்மை தீமைகள் சம்பந்தப்பட்ட காரியங்களில், கிராமத்தாருடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு அதன்படியே நடந்து வந்தான்.
இந்தக் கிராமத் தலைவர்களுக்கு மேற்பட்டவன் அரசன். ராஜ் யத்திற்குப் பொதுவான ஓர் ஆபத்து ஏற்பட்டு அதைச் சமாளிக்க வேண்டுமானால், இந்த அரசன் சொற்படி கிராமத் தலைவர்கள் நடந்து வந்தார்கள். அரச பதவி, பரம்பரை பாத்திய முடையதாயி ருந்தது. ஆனால் அரசன் ராஜ்ய விவகாரங்களை ஒழுங்காக நடத்திக் கொண்டு வராவிட்டால், பதவியிலிருந்து நீக்கப்பட்டு விடுவான். இவனை, ஒரு ராணுவத் தலைவனென்றே சொல்ல வேண்டும். ராணுவத்திற்கு அதிருப்தி உண்டாகாதவாறு இவன் நடந்து வந்தான். இவனுடைய அரச பதவி நிலைத்திருப்பது, இவன் ராணுவத்தின் ஆதரவைப் பெற்றிருக்கிற அளவைப் பொறுத்திருந்தது. இவன், சர்வாதிகாரங்களுமுடையவனாயிருந்தான். ராஜ்யத்திற்கு நன்மை தரும் சட்டதிட்டங்களைச் செய்வதும், நீதி பரிபாலனம் செய்வதும் இவன் கடமைகளா யிருந்தன. இவன், மதத் தலைவனாகவு மிருந்தான். இவன் கீழ் ஒரு சபை இருந்தது. சில்லரை வழக்குகளை விசாரித்து நியாயம் வழங்குவது இதன் கடமை.
அரசன், ஜனங்களிடமிருந்து வரி வசூலித்ததாகத் தெரிய வில்லை. ஜனங்களே, இஷ்டப்பட்டு அவ்வப்பொழுது இவனுக்குக் காணிக்கை செலுத்தி வந்தார்கள். இது தவிர, இவனுடைய படை வீரர்கள், தரை மார்க்கமாகவோ, கடல் மார்க்கமாகவோ வெளிநாடு களுக்குச் சென்று கொள்ளையடித்து வந்தால், அதில் இவனுக்கு ஒரு பங்கு கிடைத்து வந்தது. இப்படிக் கொள்ளையடிப்பதை அரசன் ஆதரித்தே வந்தான்.
அக்கீயர்கள், எப்பொழுதுமே கொள்ளையடிப்பது, வேட்டை யாடுவது, மற்றவர்கள் மீது படையெடுத்துச் செல்வது, இந்த மாதிரியான செயல்களில் அதிக உற்சாகங் காட்டி வந்தார்கள். ஒரு புறம் இவர்கள் நிலைபெற்ற வாழ்க்கையை நடத்தி வந்த போதிலும். மற்றொரு புறத்தில் இவர்களுக்கு, ஊர் ஊராகச் சுற்றுவதிலும், முன்பின் சென்றிராத இடங்களுக்குச் சென்றுவர வேண்டு மென்பதிலும் அலாதியான ஒரு பிரியம் இருந்து வந்தது. இவை களுக்காகத் தொலைதூரமும் செல்லத் துணிந்தார்கள். எந்த விதமான ஆபத்தையும் சமாளிக்கக்கூடிய தேக பலம், மனோதிடம் எல்லாம் இவர்களிடம் இருந்தன. வேட்டையாடுவதில் கூட சிங்கம், காட்டுப்பன்றி இப்படிப்பட்ட கொடிய மிருகங்களை வேட்டை யாடி வெற்றி காண்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள்.
கொள்ளை, வேட்டை இவைகளுக்காகத் தவிர, வியாபார நிமித்தமும் இவர்கள் தொலைதூரம் சென்று வந்தார்கள். எகிப்துடன் மத்திய தரைக்கடலின் கிழக்குப் பக்கமாகவுள்ள பிரதே சங்களுடன் இவர்கள் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இவர்கள் மூலமாக, வெளிநாடுகளுக்கு கிரீஸுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கீழை நாடுகளிலிருந்து அரிய பொருள்கள் பல கிரீஸில் வந்து குவிந்தன.
2. ட்ரோஜன் யுத்தம்
அக்கீயர்களைப் பற்றின இந்த விவரங்கள் பலவற்றையும், இலியத், ஒடிஸ்ஸே என்ற முற்கூறிய இரண்டு காவியங்களிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். இவை, கற்பனை நிறைந்த இலக்கிய சிருஷ்டிகள் என்பது வாஸ்தவம். ஆனால், இவை புராதன கிரேக்கர் களுடைய நாகரிகத்தின் சரித்திரமாகவும் காட்சியளிக்கின்றன. இவற்றில் வரும் வீர புருஷர்கள், வீரப் பெண்மணிகள் ஆகிய பலரும் உண்மையிலேயே இருந்திருக்க வேண்டுமென்று ஆராய்ச்சி பூர்வ மாக இப்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் காவியங்களின் சிருஷ்டி கர்த்தனென்று கருதப் படுகிறவன் ஹோமர். இப்படி ஒருவன் இருந்தானா வென்பதையே சிலர் சந்தேகிக்கின்றனர். அப்படி இருந்திருந்தாலும், அவன் ஒரு வேளை இந்தக் காவியங்களை இயற்றவில்லை, நாடோடிப் பாடல்கள் பலவற்றை ஒன்றுதொகுத்து ஒரு காவிய உருவத்திற்குக் கொணர்ந்தான் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இதுவும் இல்லை, கி.மு. ஆறாவது நூற்றாண்டில், ஆத்தென்ஸில், அரசாங்கத்தின் உத்தரவுக்கிணங்க, அறிஞர் சிலர் ஒன்றுகூடி, முந்திய நூற்றாண் டுகளில் வழங்கி வந்த காவியங்களிலிருந்து சில சில பாடல்களைப் பொறுக்கியெடுத்து ஒன்றாகத் தொகுத்து, ஹோமரின் பெயரால் இலியத் என்றும் ஒடிஸ்ஸே என்றும் இரண்டு காவியங்களாக இப்பொழுதைய உருவத்தில் வெளியிட்டனர் என்று இன்னும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். இவற்றில் எது சரியென்ற ஆராய்ச்சி இப்பொழுது நமக்குத் தேவையில்லை. ஹோமரைப் பற்றியும் அவன் பெயரால் விளங்கும் காவியங்களைப் பற்றியும் பொதுவாக நிலவு கின்ற சில கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறுவோம்.
கிரீஸின் கிழக்குப் பக்கத்தில் எஜியன் கடலில் கியோஸ் என்றொரு தீவு இருக்கிறது. இந்தத் தீவில்தான் ஹோமர் பிறந்தது; கி.மு. ஒன்பதாவது நூற்றாண்டில், இவன் பிறவிக் குருடன்; ஆனால் இனிய சாரீரம் படைத்தவன். நான்கு தந்திகள் கொண்ட தனது இசைக்கருவியுடன், அருமையாகப்பாடிக் கொண்டு ஊர் ஊராகச் செல்வான்; சென்றவிடமெல்லாம் இவனுக்குச் சிறப்பு. இவன் எப்படி ஓரிடத்தில் வரவேற்கப்பட்டான் என்பதைக் கேளுங்கள்:- “வீட்டுச் சேவகன் இவனைக் கைபிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான். கலைமகள், இவனுடைய கண்களைப் பறித்துக் கொண்டுவிட்டாள்; ஆனால் இனிய குரலைக் கொடுத் திருக்கிறாள். விருந்தினர் நடுவில் இவன் ஒரு வெள்ளி நாற்காலியில் அமர்த்தப் பட்டான். அந்த நாற்காலிக்குப் பின்னாலிருந்த தூணில் இவனு டைய வாத்தியத்தைச் சார்த்திவிட்டு, அது வைக்கப் பட்டிருப்பதை அவனுடைய கைகளைக் கொண்டு தொட்டுக்காட்டினார்கள். இவன் முன்னர் ஒரு மேஜையில் சுவை நிறைந்த ஆகார வகைகள் பரிமாறப்பட்டன. பக்கத்தில் ஒரு கோப்பை மதுவும் வைக்கப் பட்டது.”
இலியத்திலும் ஒடிஸ்ஸேயிலும் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் கி.மு. பன்னிரண்டாவது நூற்றாண்டில் நடைபெற்றன வென்று கருதப்படுகின்றது. ஹெலென் என்ற ஓர் அரசகுமாரியை ஸ்ப்பார்ட்டா ராஜ்யத்து அரசனான மெனெலேயஸ் என்பவன் விவகாஞ் செய்துகொண்டு, இருவரும் சிறிது காலம் சுகமாக வாழ்ந்தார்கள். ஒரு சமயம் ட்ராய் ராஜ்யத்து அரசனுடைய மகன் பாரிஸ் என்பவன் ஸ்ப்பார்ட்டாவுக்கு வந்து, சிறிது காலம் இருந்து விட்டுத் திரும்பிப் போகையில் ஹெலேனைக் கடத்திக் கொண்டு போய்விட்டான். இது காரணமாகக் கிரீஸுக்கும் ட்ராய்க்கும் பெரிய யுத்தம் மூண்டது. கிரேக்கர்கள், பெரும்படை யுடன் திரண்டு சென்று ட்ராய் நகரத்தை முற்றுகையிட்டனர். இவர்களுடைய தலைவனா யிருந்த மெனெலேயஸின் சகோதரனான அகமெம்னான் என்பவன். ஒன்பது வருஷ காலம் முற்றுகை நடைபெற்றது. கிரேக்கர்கள், ட்ராய் நகரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ட்ரோஜன்களும் (ட்ராய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் ட்ரோஜன் என்று அழைக்கப்பட் டார்கள்) விட்டுக்கொடுப்பவராயில்லை. கடைசியில் கிரேக்கர்கள் ஒரு யுக்தி செய்தனர். ஒரு பெரிய மரக்குதிரையைக் கட்டுவித்து அதில் சிலர் ஒளிந்து கொண்டனர். ட்ரோஜன்கள் இந்த மரக் குதிரையின் மர்மத்தைத் தெரிந்து கொள்ளாமல், இதனைத் தங்கள் நகரத்துக் குள்ளேயே இழுத்துக்கொண்டு போயினர். ராத்திரி வந்தது. ட்ரோஜன்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில், மேற்படி மரக் குதிரையிலிருந்து கிரேக்கர்கள் வெளியே வந்து, ட்ரோஜன்களையும் அவர்களுடைய அரசனையும் கொன்று நகரத்தையும் அழித்துவிட்டார்கள். இதுதான் ட்ரோஜன் யுத்தத்தின் வரலாறு. இந்த யுத்தத்தில், கிரேக்கர்களைச் சேர்ந்த அகில்லெஸ் என்ற பெருவீரன், ஹெக்ட்டார் என்ற ட்ரோஜ வீரனைக் கொன்று விடுகிறான். ட்ரோஜன் யுத்தத்தின் ஒரு பகுதியை வருணித்துச் சொல்கிறது இலியத் காவியம். அதாவது கிரேக்கர்கள் ட்ராய் நகரத்தை ஒன்பது வருஷ காலமாக முற்றுகையிட்டுச் சலித்துப் போனதிலிருந்து ஆரம்பமாகி ஹெக்ட்டாரின் மரணத்தோடு முடிகிறது. மரக்குதிரைச் சம்பவத்தைப் பற்றிக் கூறுவது மற்றொரு காவியம். இதற்கு எனீத் என்று பெயர். இதனை இயற்றியவன் வர்ஜில் என்ற ரோமகவி. இது லத்தீன் மொழியில் ஆக்கப் பெற்றுள்ளது.
மேற்படி ட்ரோஜன் யுத்தத்தில் கலந்துகொண்ட கிரேக்க அரசர்களில் ஒருவன் ஒடிஸ்ஸஸ் என்பவன். இவன் மேற்படி யுத்தம் முடிந்தபிறகு, தன்னுடைய ஊராகிய இத்தாக்காவுக்குத் திரும்பி வருகிறான். வருகிற வழியில் இவனுக்கு ஏற்பட்ட கஷ்ட நிஷ்டூரங் களை விளக்குவது ஹோமரின் மற்றொரு காவியமாகிய ஒடிஸ்ஸே. ஒடிஸ்ஸஸ் ஊருக்குத் திரும்பிவர சுமார் பத்து வருஷம் பிடிக்கிறது. இந்தப் பத்து வருஷ காலமும் இவனுடைய மனைவி, பலருடைய தொந்தரவுக்கு ஆளாகிறாள். கடைசியில் ஒடிஸ்ஸஸ் திரும்பி வந்து அவர்களனைவரையும் தண்டித்துவிட்டு தன் மனைவியுடனும் மகனுடனும் சுகமாக வாழ்கிறான்.
ட்ராய் நகரத்திற்கு இலியம் என்ற ஒரு பெயருண்டு. இங்கு நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிக் கூறுவது இலியத் காவியம். ஒடிஸ்ஸஸைப் பற்றிக் கூறுவது ஒடிஸ்ஸே காவியம். ஒவ்வொன்றும் இருபத்து நான்கு புத்தகங்கள் அல்லது பாகங்களுடையது.
3. டோரியர்
வடக்குப் பக்கத்திலிருந்து அக்கீயர்களைத் தொடர்ந்தாற் போல் இயோலியர் என்ன, ஐயோனியர் என்ன, டோரியர் என்ன, இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்து பெலொப்பொனேசியாவில் குடிபுகுந்தனர். இவர்களில் முக்கியமானவர் டோரியர். இவர்கள் குடிபுகத் தொடங்கியது. கி.மு. 1104-ஆம் வருஷமாக இருக்கலா மென்று உத்தேசிக்கப்படுகிறது. இந்த வருஷத்தில், டோரியர் குடிபுகத் தொடங்கினரென்று சொல்வதைக் காட்டிலும், முதன் முதலாகப் படையெடுத்து வந்தனரென்று சொல்வது பொருந்தும். ஏனென்றால், அந்நியர் படையெடுப்பினால் என்னென்ன விபரீதங்கள் நிகழக்கூடுமோ அந்த விபரீதங்கள் பலவும் இவர்களுடைய வருகையின் விளைவாக ஏற்பட்டன. இவர்களைச் சுருக்கமாக, நாகரிக மற்றவர்களென்றே சொல்ல வேண்டும். நாடோடி வாழ்க்கை நடத்தும் நிலையிலே இருந்தார்கள். அக்கீயர்கள் எப்படி வெண் கலத்தை அதிகமாக உபயோகித்தார்களோ அப்படியே இவர்கள். - இந்த டோரியர்கள் - இரும்பை அதிகமாக உபயோகித்தார்கள். இந்த இரும்பு, இவர்களுடைய அழிவு வேலை களுக்கு முக்கிய துணையாயிருந்தது. வெண்கலத்தினால் செய்யப் பெற்ற யுத்தக் கருவிகளைக் காட்டிலும், இரும்பினால் செய்யப் பெற்ற யுத்தக் கருவிகள் அதிக வலுவுடையனவாக இருந்தன; அதிக சேதத்தையும் உண்டு பண்ணின.
பெலொப்பொனேசியாவின் பல பாகங்களிலும் சென்று பரவிய டோரியர்கள் பலாத்காரத்தைக் கையாண்டார்கள்; ஆங்காங்கு ஆண்டு கொண்டிருந்த அக்கீய அரசர் பலரைத் தங்கள் வாளுக்கிரையாக் கினார்கள்; அக்கீயர்கள் போற்றி வளர்த்த நாகரிகச் சின்னங்கள் பல வற்றையும் அழித்தார்கள். மைஸினி நகரம் உள்பட அநேக நகரங்கள் சாம்பற்குவியலாயின. அம்மம்ம! நாகரிகத்தை நிர்மாணஞ் செய்ய எத்தனையோ நூற்றாண்டுகள் பிடிக்கிறது; ஆனால் அதை அழித்து விடுவதற்கோ ஒரு சில வருஷங்களே போதுமானதா யிருக்கிறது!
பெலொப்பொனேசியாவின் பல பாகங்களிலும் சென்று பரவிய டோரியர்களில் ஒரு பிரிவினர், தெற்கே லாஸிடீமோன் என்ற ஒரு கணவாய்ப் பிரதேசத்தைத் தங்கள் நிரந்தர வாசஸ்தலமாகத் தெரிந்தெடுத்துக்கொண்டனர். இதன் மத்தியிலுள்ள ஸ்ப்பார்ட்டா என்ற ஒரு கிராமத் தொகுதி, இவர்களுடைய தலைநகரமாயிற்று. இதுவே பின்னர், ஸ்ப்பார்ட்டா ராஜ்யமென்று வளர்ந்து வலுப் பெற்றது. இதனை ஆறாவது அத்தியாயத்தில் காண்போம்.
டோரியர்கள் படையெடுப்புக்குப் பிறகு அவர்களை எதிர்த்துப் போரிடும் சக்தியில்லாத, ஆனால் அவர்களுக்குப் பணிந்து போக விருப்பமில்லாத அக்கீயர் முதலாய பலரும், பெலொப் பொனே சியாவை விடுத்து, கிரீஸின் மற்ற இடங்களிலும், கிரீஸைச் சூழ்ந்து கொண்டிருக்கிற தீவுகள் பலவற்றிலும், சின்ன ஆசியாவின் கட லோரப் பிரதேசத்திலும் சென்று குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து டோரியர் சிலரும் சென்றனர். குடியேறியவர்களுடன் கலந்து கொண்டனர். இந்தக் குடியேற்றம், இனக்கலப்பு எல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரே வருஷத்தில் நிகழ்ந்துவிட்ட சம்பவங் களல்ல; பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற காரியங்கள். ஒவ்வொரு காலத்தில் குடியேறியவர்கள், ஒவ்வோரிடத்தில் நிலை பெற்று, அங்கிருந்த சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், தங்கள் அரசியல் வாழ்க்கையையும் சமுதாய வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்கள்; ஆனால் தாங்கள் கிரேக்கர்கள் என்பதை மட்டும் மறக்கவில்லை.
எப்படியோ டோரியர்கள் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்ததிலிருந்து சுமார் மூன்று நூற்றாண்டுகள் வரை, பொதுவாகக் கிரீஸின் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போய்விட்டது; அதன் நாகரிகத்தை அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. “அரசியல் ஒழுங்கு என்பது இல்லவே இல்லை. பிரதியொருவனும் தற்காப்பு நிமித்தம் ஆயுதம் தாங்கிச் சென்றான். கொடுமைகள் அதிகரித்தன. விவசாயமும் வியாபாரமும் சீர்குலைந்தன. அடிக்கடி யுத்தங்கள் நடைபெற்று வந்தன. ஜனங்களுடைய வறுமை அதிகமாயிற்று. அமைதியையும் பாதுகாப்பையும் நாடி ஜனங்கள் ஊர் ஊராகச் சென்று கொண்டி ருந்ததனால் வாழ்க்கை நிலையற்ற தாகிவிட்டது. இந்தக் காலத்தை ‘அந்தகார யுகம்’ என்று சரித்திரக்காரர்கள் அழைக்கிறார்கள். எப்படி கி.பி. ஆறாவது நூற்றாண்டிலிருந்து பதினைந்தாவது நூற்றாண்டு வரை ஐரோப்பா இருளடர்ந்த யுகத்தில் அகப்பட்டுக் கொண்டி ருந்ததோ அப்படியே கிரீஸ், கி.மு. பதினோராவது நூற்றாண்டி லிருந்து எட்டாவது நூற்றாண்டு வரை- சுமார் முந்நூறு வருஷ காலம் - அந்தகார யுகத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் கிரேக்க நாகரிகம் அழிந்து போகாத வித்து அது மேற்படி அந்தகார யுகத்தில், சுருங்கிப் போயிருந்ததே தவிர அடியோடு மறைந்து போகவில்லை. இந்தச் சுருக்கம் அதன் பிற்காலப் பெரு மைக்குப் பயன்பட்டது. இஃது இப்படி இருக்கட்டும். அந்தகார யுகத்தை விலக்கிக் கொண்டு கி.மு. எட்டாவது நூற்றாண்டுக்கு வருவோம்.
நகர ராஜ்யங்கள்
1. அமைந்த முறை
எட்டாவது நூற்றாண்டில், டோரியர் முதலாயினோரின் படை யெடுப்புகளினால், உண்டான அதிர்ச்சி ஒருவாறு அடங்கி விட்டது. ஜனங்கள், நிலையான வாழ்க்கையை நடத்தத் துவங்கி விட்டார்கள். இந்த நிலையான வாழ்க்கையின் பரிணாமந்தான் நகர ராஜ்யம்.
கிரீஸின் பூகோள அமைப்பு விசித்திரமானது. சிறுசிறு குன்றுகள்; இவற்றுக்கிடையே பசுமையான கணவாய்கள்; ஏதோ ஒரு பக்கத் தில் மட்டும் கடல் தொடர்பு. இந்தக் கணவாய்கள், பெரும்பாலும் சம தரைகளாகவும், விவசாயத்திற்குத் தகுதியுடையனவாகவும் இருந்தன. இப்படிப்பட்ட இடங் களில்தான் ஜனங்கள் ஸ்திரவாசம் செய்ய முற்பட்டார்கள். ஒரு கணவாய்ப் பிரதேசத்திற்கும் மற்றொரு கணவாய்ப் பிரதேசத்திற்கும் சுலபமான போக்கு வரத்துக்கும், வேறு விதங்களில் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கும் சாத்தியமில்லாம லிருந்தது. மலையரண்கள் குறுக்கே நிற்கின்றனவல்லவா? இதனால் அந்தந்தக் கணவாய்வாசிகளும் சுயேச்சையாக வாழ்ந்து கொண்டி ருந்தார்கள்; தங்கள் சுயேச் சைக்குப் பங்கம் வராமலிருக்க வேண்டு மென்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். சுருக்கமாக ஒவ் வொரு கணவாயினரும் ஒவ்வோர் இனத்தினர் போல் தனித்தனியாக வாழ்ந்துவந்தனர். இப்படித் தனித்தனியாக வாழ்ந்து வந்தபோதிலும், ஒருவரை யொருவர் கொள்ளை யடிப்பதும், ஒருவர் மீதொருவர் படையெடுப்பதும் ஏகதேசமாக நடைபெற்று வந்தன.
மேற்படி சமதரைப் பிரதேசங்களில் ஸ்திரவாசம் செய்யத் தொடங்கிய வர்கள், சிறுசிறு கிராமங்கள் அமைத்துக் கொண் டார்கள். ஒரு சமதரை அல்லது கணவாய் என்றிருந்தால் அதில் ஒன்றுக்கொன்று சமீபமாயுள்ள பல கிராமங்கள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைவனோ அல்லது சில கிராமங் களுக்குச் சேர்ந்து ஒரு தலைவனோ இருந்தான். ஆரம்பத்தில் இந்தக் கிராமங்கள், தனி வாழ்க்கையை நடத்தினவென்றாலும் நாளா வட்டத்தில் ஒரு கணவாயி லுள்ள எல்லாக் கிராமங்களும் சேர்ந்து கூட்டு வாழ்க்கை நடத்துவதில் அநேக அனுகூலங்கள் இருக்கின்றன வென்பதை உணர்ந்தன. இந்தக் கிராமங்கள் யாவும் சேர்ந்து, கணவாயின் காவலன் போலிருக்கும் குன்றின் மீதோ, அல்லது எல்லாக் கிராமங்களுக்கும் மையமாயுள்ள மேட்டுப்பாங்கான ஓரிடத்திலோ, ஒரு பாதுகாப்பு ஸ்தலத்தை அமைத்துக் கொண்டன. ஏறக்குறைய ஒரு கோட்டை மாதிரி. இந்தக் கோட்டையைச் சுற்றி மதிற்சுவர். கோட்டைக்குள், கிராமவாசிகள் அனைவரும் தொழு கின்ற தெய்வத்தின் திருக்கோயிலும், அனைவரையும் பாதுகாக்கின்ற தொழிலை மேற்கொண்ட தலைவன் அல்லது அரசனுடைய அரண்மனையும் இருந்தன. கொள்ளையடிப் பதற்காகவோ, போர் செய்வதற் காகவோ அந்நியர் யாரேனும் வருகின்றனர் என்று தெரிந்தால், அப்பொழுது கிராமவாசிகள் அனைவரும், தங்கள் பெண்டு பிள்ளைகளையும் கால்நடை களையும் பாதுகாப்பின் நிமித்தம் இந்தக் கோட்டைக்குள் அனுப்பி விடுவார்கள். தாங்களும் பகல் நேரத்தில் இங்குவந்து அடைக்கலம் புகுவார்கள். ஆனால் எவ்வளவு காலம் இப்படிப் பயந்துகொண்டு போவதும் வருவது மாயிருப்பது? நாடோடி வாழ்க்கையைக் காட்டிலும் சங்கடமான தல்லவோ? காலக்கிராமத்தில் மேற்படி கோட்டையைச் சுற்றியே தங்கள் வாசஸ்தலங்களை அமைத்துக் கொண்டார்கள். குன்றின் அடிவாரத்தில் புதிய நகரம் அமைந்தது. இதைச் சுற்றி மதிற்சுவரும் எழும்பியது.
இப்படியே நீண்ட காலம் இருக்கவில்லை. கொள்ளைகளும் படை யெடுப்புகளும் குறைந்தன. குன்றின் அடிவாரத்தில் வசித்துக் கொண்டிருந்த சிலர், தங்கள் நிலபுலங்களுக்கு அருகில் வசிக்க முற்பட்டனர். எனவே, குன்றின் மீது கோட்டை, அதன் அடி வாரத்தில் நகரம், கணவாய் முழுவதிலும் சிறு சிறு கிராமங்கள், இப்படியான ஒரு தொகுப்பு நாளாவட்டத்தில் அமைந்தது. இந்தத் தொகுப்புக்குத் தான் நகர ராஜ்யம் என்று பெயர்.
குன்றின் மீதிருந்த கோட்டையில் குலதெய்வத்தின் கோயிலும் அரசனின் அரண்மனையும் இருந்தனவென்று சொன்னோமல்லவா? இவற்றுடன் அரச பரிவாரத்தினருடைய வாசஸ்தலங்களும் சேர்ந்தாற்போல் இருந்தன. அரசன் வசிக்கிற இடமாதலால் இதுவே அரசாங்கத்தின் தலைமை ஸ்தானமாகவும் இருந்தது. இவை யனைத்தையும் சேர்த்து, அதாவது குன்றின்மீது அமைக்கப்பட்ட பிரதேசத்தை போலிஸ் (ஆத்தென்ஸ் நகரத்தைச் சேர்ந்த இந்த இடம் சிறப்பாக அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டது. குன்றின் மேலேயிருக்கும் கோட்டை யென்று அர்த்தம்) என்று அழைத்தனர். குன்றின் அடிவாரத்தில் அமைந்த நகரத்தை அஸ்தி (இதுவே ஆங்கி லத்தில் சிட்டி என்று அழைக்கப்படுகிறது) என்று அழைத்தனர். நாளாவட்டத்தில் இந்த போலிஸ் என்ற வார்த்தையானது, கோட்டைக்குள் வசித்துக்கொண்டிருந்த அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும், அஸ்தி (நகர) வாசிகளும், அரசியல் விவகாரங் களுக்காகவும் வியாபார நிமித்தமாகவும் இந்த அஸ்திக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த கிராமவாசிகளும் அடங்கிய அரசியல் சமுதாயத்திற்குப் பொதுவான பெயராக வழங்கப்பட்டது. அரசியல் என்றும் அரசியல்வாதி என்றும் அர்த்தப்படுகின்ற பாலிட்டிக்ஸ், பாலிட்டிஷன் என்ற ஆங்கிலச்சொற்களும், இவையொட்டிய பிற அரசியல் சொற்களும் இந்த போலிஸ் என்ற வார்த்தையினின்று பிறந்தவையே. இந்த போலிஸைத்தான் ‘சிட்டி ஸ்டேட்’ என்று ஆங்கிலப்படுத்தியிருக்கின்றனர் அறிஞர்கள். அதாவது நகர ராஜ்யம் என்று பொருள்.
நகர ராஜ்யம் என்று சொன்ன மாத்திரத்தில், தற்கால நகரங் களைப் போல ஜனப்பெருக்க முடையவனாகவும், தற்கால ராஜ்யங் களைப்போல விஸ்தீரண முடையன வாகவும் இருக்கும் என்று ஓர் எண்ணம் உண்டாகிறதல்லவா? அப்படி இல்லை. ஏறக்குறைய ஒரு தாலுகா ஒரு ராஜ்யமாக இருந்ததென்று சொல்லலாம். கிரேக்க சரித்திரத்தில் பிரபலமடைந்திருந்த ஆத்தென்ஸ் ராஜ்யத்தின் விஸ்தீரணமெல்லாம் சுமார் ஆயிரம் சதுர மைல்தான்.
ஆக, கி.மு. எட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், கிரீஸ் முழுவதிலும் தனித்தனியான நகர ராஜ்யங்கள் பல காட்சி யளிக்கின்றன. ஆரம்பத்தில் கிரேக்கர்களுக்குள் இருந்த பல பிரிவினைகளும், அதாவது அக்கீயர்களென்றும், ஐயோனியர்க ளென்றும், டோரியர்களென்றும் இருந்த பல பிரிவினைகளும் அற்றுப் போயின. எல்லோரும் கிரேக்கர்கள் என்று உணர்ந்தார்கள். ஆனால் ஆத்தென்ஸ் ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஆத்தீனியர்க ளென்றும், ஸ்ப்பார்ட்டா ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ப்பார்ட்டர் களென்றும் தங்களை அழைத்துக் கொண்டார்கள். அப்படி அழைக் கப்படுவதையே விரும்பினார்கள். நாமும் இவர்களுடைய விருப்பத்தை அனுசரித்து, பொதுவாக வருகிற இடங்களில் கிரேக்கர்களென்றும், அந்தந்த ராஜ்யத்தைப் பற்றி வருகிற இடங்களில் அந்தந்த ராஜ்யத்தின் பெயராலும் இவர்களை இனி அழைப்போம். இந்த நகர ராஜ்யங்கள் பலவென்றாலும் இவற்றுள் நாம் சென்று பார்க்க வேண்டியவை ஆர்கோஸ், கொரிந்தியா மெகாரா, எஜீனா, எப் பிடாரஸ், பியோஷ்யா, தீப்ஸ்போசிஸ், லோக்ரிஸ் முதலியன; நன்றாக அறிந்துகொள்ள வேண்டியவை, ஸ்ப்பார்ட்டா, ஆத்தென்ஸ் ஆகிய இரண்டும். ஏனென்றால் இவ்விரண்டின் சரித்திரமே கிரேக்க சரித்திரம்.
இந்த நகர ராஜ்யங்கள், மேற்கூறியவாறு தனித்தனி அரசர் களுடைய ஆளுகைக்குட்பட்டிருந்தன ஆரம்பத்தில். அதாவது முடியாட்சி நிலவியிருந்தது. ஆனால் நீண்ட காலத்திற்கு இப்படி யிருக்கவில்லை. குறுகிய விஸ்தீரணமும் சுருங்கிய ஜனத்தொகையு முடையவனாயிருந்தபடியால் அரசர்களுக்கும் ஜனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இந்தச் சந்தர்ப்பங்கள், இரு சாராருக்குமிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதில் வேற்றுமையை வளர்த்தன. அரசர்களுடைய குற்றங்குறைகளை ஜனங்கள் அதிகமான உணரத் தலைப்பட்டனர். அரசர்களும், ஜனங்களுக்குத் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை. கடைசியில் அரசர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்; முடியாட்சி முடிந்தது.
பிறகு, இந்த முடியாட்சி முடிவதற்குக் காரணமாயிருந்த அரச பரிவாரத்தினரான பிரபுக்கள், நிலச்சுவான்தார்கள், உயர்குடிப் பிறந்தவர்கள், இப்படிப்பட்டவர்கள் கைக்கு ஆட்சி மாறியது. அதாவது மேன்மக்களாட்சி என்று அழைக்கப்படுகிற பிரபுத்துவ ஆட்சி ஏற்பட்டது. இதனால் சமுதாயத்தின் மேல் வரிசையிலுள்ள ஒருசிலர் மட்டுமே சாதகமடைந்து வந்தனர். சாதாரண ஜனங்கள், உரிமையில்லாமலும் நன்மையடையாமலும் இருந்து வந்தனர்.
சிறிது காலத்துக்குப் பிறகு, சாதாரண ஜனங்களுக்குப் பரிந்து பேசுகிற முறையில் சிலர் தோன்றி, எப்படியோ ஒரு வகையில், அரசாங்கத்தின் சர்வ அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி நடத்தினர். இப்படிச் சிறிது காலம், இவர்களுடைய ஆட்சி அதாவது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.
பின்னர் இந்த நிலைமை மாறி, ஜனங்களே ஆளுந்தொழிலை மேற் கொண்டார்கள்; அதாவது ஜன ஆட்சி ஆரம்பமாயிற்று. மேனாட்டைப் பொறுத்த மட்டில் ஜன ஆட்சிப் பரிசோதனையில் முதன்முதலாக இறங்கியவர்கள் கிரேக்கர்களே. ஜன ஆட்சியைக் குறிக்கும் ‘டெமாக்ரஸி’ என்ற ஆங்கிலச் சொல்லானது, கிரேக்க மொழியின் மாற்றுருவமே.
இந்த ஜன ஆட்சிப் பரிசோதனையில், கிரேக்கர்கள் பரிபூரண வெற்றி யடைந்துவிட்டார்களென்று சொல்ல முடியாது. இந்த ஆட்சியின் விளைவாக இவர்கள் அநேக சங்கடங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். தவிர இந்த ஜன ஆட்சியானது, தொடர்ந் தாற்போல் நீடித்து வந்ததாகவும் தெரிய வில்லை. இடையிடையே, இந்த ஜன ஆட்சியில் உள்ளூர இருக்கின்ற சில குறைகளை உப யோகித்துக்கொண்டு, செல்வத்தினால் செல்வாக்குப் பெற்றிருந்த கட்சியினர், அரசாங்கத்தை நடத்தி வந்திருக்கின்றனர். இருந்தாலும், பொதுவாகப் பார்க்கிற போது, கிரீஸின் அரசியல் வாழ்க்கை ஜன ஆட்சி அடிப்படையைக் கொண்ட தாகவே இருந்து வந்திருக்கிறது.
சிறு சிறு ராஜ்யங்கள்; ஒவ்வொன்றிலும் குறைந்த ஜனத் தொகை. இவையிரண்டுமே, ஜன ஆட்சிப் பரிசோதனையில் கிரேக்கர்கள் துணிந்து இறங்குவதற்குச் சிறந்த அனுகூலங்களா யிருந்தனவென்று சொல்ல வேண்டும். சுருங்கிய இடத்தில் குறை வான பேர் அதிகமான பரிச்சயம் செய்துகொள்ள முடியு மல்லவா? எல்லோரும் சேர்ந்து ராஜ்ய நிருவாகத்தில் பங்கு கொள்வது சாத்தியமாயிருந்தது. அதாவது ஜனங்களெல்லோருமே சேர்ந்து ஆட்சி நடத்தினார்கள். ஜனங்களின் இந்த நேரான ஆட்சிதான் முதன்முதலாகக் கிரீஸில் துவங்கியது.
தங்களைக் தாங்களே ஆண்டு கொள்ளத் தொடங்கியதும் கிரேக்கர்களுக்கு அளவிலா உற்சாகம் பிறந்தது. இப்படி ஆண்டு கொள்வதில் எவ்வளவோ பொறுப்புகள் இருக்கின்றனவென்று சொன்னாலும் அதில் எவ்வளவு இனிமை இருக்கிறது? எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது? கிரேக்கர்கள், தங்கள் சுதந்திரத்தில் எவ்வளவு பெருமை கொண்டிருந்தார்களென்பதை ஏட்டிலே எழுதி முடியாது. அவர்கள், தங்கள் உயிரின் மீது வைத்திருந்த அபிமா னத்தைக் காட்டிலும் தங்கள் ராஜ்யத்தினிடம் கொண்டிருந்த பக்தியானது பன்மடங்கு அதிகமாயிருந்தது. ராஜ்யம் சிறிதாயி ருந்தாலும் அதன் சுதந்திரம் பெரிது என்று கருதினார்கள். இந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்ற, தங்களுடையதென்று சொல்லிக் கொள்ளும் எதனையும் துறந்துவிடத் தயாராயிருந்தார்கள். ஆனால் இந்த ராஜ்யப் பற்றானது, அநேக சந்தர்ப்பங்களில் சர்வ கிரேக்க ஒற்று மைக்குத் தடைக் கல்லாயிருந்து வந்திருக்கிறது. இதுதான் கிரேக்க சரித்திரத்தின் வருந்தத்தக்க அமிசம்.
இவ்வளவு தூரம் கூறக்கேட்ட வாசகர்கள், மேலே சொல்லப் பெற்ற மன்னராட்சி, மேன்மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, மன்பதை ஆட்சி ஆகிய இவை, முறையே எந்தெந்தக் காலத்தில் ஏற் பட்டனவென்று கேட்கலாம். இதற்கு நிர்ணயமான பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு ராஜ்யத்திலும், ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு விதமாக இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்திருக்கிறது. கி.மு. எட்டாவது நூற்றாண்டுக்குப் பிறகு, சுமார் நூற்றைம்பது வருஷ காலம் மேன்மக்களாட்சி; இதற்குப் பிறகு மன்னராட்சி மங்கிவிட்டது. பின்னர் சுமார் நூற்றைம்பது வருஷ காலம் மேன் மக்களாட்சி; இதற்குப் பிறகு சுமார் நூற்றைம்பது வருஷ காலம் சர்வாதிகார ஆட்சி; இதற்கு அடுத்தபடி ஜன ஆட்சி. இப்படித்தான் பொதுப்படையாகச் சொல்ல முடியும். ஆனால், இந்தப் பொது நியதிக்குப் புறம்பாயிருந்தது ஸ்ப்பார்ட்டா மட்டும். அங்கு எப்பொழுதும் மன்னராட்சியே நடைபெற்று வந்தது.
மேற்சொன்ன நான்கு வித ஆட்சிமுறைகளும் பொது வானவை. இவை தவிர, இவற்றிற்குட்பட்ட வேறு பலவித ஆட்சி முறைகளும் கிரீஸில் பரிசோதனைக்குட்பட்டிருக்கின்றன; நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன. இவைகளைப் பற்றி, அரிஸ்ட்டாட்டல், தனது அரச நீதி என்ற நூலில் விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறான்.
மேன்மக்களாட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தான், கிரீஸ், பரந்து விரிந்தது. அதாவது கிரேக்கர்கள் பல இடங்களிலும் சென்று குடியேறினார்கள்; தனித்தனி ராஜ்யங்களை ஸ்தாபித் தார்கள். இதை அடுத்துக் காண்போம்.
2. சில நகர ராஜ்யங்கள்
கிரேக்கர்கள் குடியேறி ஸ்தாபித்த ராஜ்யங்களைச் சென்று காண்பதற்கு முன்னர், கிரீஸுக்குள்ளேயே அமைந்த நகர ராஜ்யங்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டுமென்று மேலே சொன்னோமல்லவா, அவற்றைப் பார்த்துக் கொண்டு வருவோம். வாசகர்களே! கையில் பூகோள படம் இருக்கிறதல்லவா?
முதலில் ஆர்கோஸ், இது பெலொப்பொனேசியாவின் வட கிழக்குப் பகுதியிலிருப்பதைப் பார்க்கலாம். நூறு கண்களைக் கொண்ட ஆர்கஸ் என்பவன் இதனை முதன்முதலில் ஸ்தாபித்தா னென்பது புராண வரலாறு. ஆனால், பெலொப்பொனேசியாவின் மீது படையெடுத்து வந்த டோரியர்களில் ஒரு பிரிவினர், இந்த ராஜ்யத்தை ஸ்தாபித்தனர் என்று சரித்திரக்காரர் கூறுகின்றனர். இங்கு ஏறக்குறைய கி.மு. ஏழாவது நூற்றாண்டுவரை மன்னராட்சி நடைபெற்று வந்தது. இது முடிந்து, பிறகு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் வரை பிரபுத்துவ ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலத்தில்தான் இதன் மீது ஸ்ப்பார்ட்டா, தன் ஆதிக்கத்தைத் திணித்தது. இதனுடைய அரசியல் வாழ்வை இடையிடையே சந்தித்துக் கொண்டு போவோம்.
கிரீஸைப் பொறுத்தமட்டில், அரசாங்கத்தின் உத்திரவாதம் பெற்ற நாணயச் செலாவணி முறையை முதன்முதலாக அனுஷ்டா னத்திற்குக் கொண்டு வந்தது இந்த ஆர்கோஸ்தான். சங்கீதம், சித்திரம், நாடகம் முதலிய துறைகளில் கீர்த்தி வாய்ந்தவர் பலரை ஈன்றெடுத்தது இந்த ஆர்கோஸ்தான். சுமார் இருபதினாயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஒருபெரிய நாடக அரங்கு இங்கு இருந்ததென்றால், நாடகக் கலைக்கு இங்கு எவ்வளவு மதிப்பு இருந்த தென்பது ஒருவாறு புலனாகும்.
ஆர்கோஸுக்கு வடக்கேயுள்ளது கொரிந்த்தியா. ஹோமர் காலத்திலேயே இது செல்வச் சிறப்புடையதாயிருந்தது. கடல் தொடர்பு காரணமாக, வெளிநாடுகளுடன் வியாபாரத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது இதற்கு மிகவும் சுலபமாயிருந்தது. இதனால் இதன் பொருளாதார நிலை எப்பொழுதுமே மேலோங்கி நின்றது. ஆத்தென்ஸுக்கும் இதற்கும் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டு வந்தது. காரணம் வியாபாரப் போட்டிதான்.
கொரிந்த்தியர்கள், விடாமுயற்சியும் துணிச்சலுமுடை யவர்கள். கடலிலே கலஞ்செலுத்திக்கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்; ஆங்காங்கு நிலைபெற்றும் விடுவார்கள். சிஸிலி தீவின் பிரபல ராஜ்யமான ஸைரக்யூஸ் என்ன, கார்ஸாரா (தற்போது இது கார்பூ என்று அழைக்கப்படுகிறது.) தீவு, என்ன இவை பலவும் இவர்களுடைய குடியேற்றத்தினால் வளம் பெற்றன; மேன்மையுற்றன. மேற்குப் பக்கத்திலேயே இவர்கள் அதிகமாகக் கடல் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கும் போல் இங்கு - கொரிந்த்தியாவில் - சிறிது காலம் சர்வாதிகார ஆட்சி நிலவியிருந்தது. இந்த ஆட்சி நடத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவன் பெரியாண்டார் என்பவன். சுமார் நாற்பது வருஷ காலம் இவன் ஆட்சி நடை பெற்றது. இவனுடைய காலத்தில் தொழில்கள் பெருகின; கலைகள் செழித்தன; கிரீஸுக்குள் முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது கெரிந்த்தியா. இவன் - பெரியாண்டர். வரிகளைக் குறைத்து, தொழில் முயற்சிகளுக்கு ஊக்கங் கொடுத்தான். ஜனங்களை, பொதுவேலைகளில் ஈடுபடுத்தி யும், வெளிநாடு களுக்கு அனுப்பி ஆங்காங்குக் குடியேறச் செய்தும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்தான். பொருளாதார சமத்துவம் ஏற்படக்கூடிய வகையில் அநேக சட்டதிட்டங்களை அமுலுக்குக் கொண்டுவந்தான். இதனால் பணக்காரர்களின் பரம விரோதியானான். மெய்க்காவல் படையொன்று எப்பொழுதும் இவனுக்கு இருந்து கொண்டிருந்தது. இவனது கடைசி நாட்கள் மிகவும் துக்ககரமாகக் கழிந்தன. ஒரு மகன் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு விட்டான்; மற்றப் பிள்ளைகள் இறந்து பட்டார்கள். வேறு துக்கம் என்ன வேண்டும்? இவனிடம் பகைமை பாராட்டிய பணக்காரர்கள், இவனைக் கொடுங்கோலனாக வருணித்திருக் கிறார்கள். ஆனால் உண்மையில் இவன் எல்லோருடைய நன்மை யையும் நாடுகிறவனாகவே ஆட்சி புரிந்தான். கிரேக்கர்கள், ஏழு பேரை பரம ஞானிகளென்று போற்றி வந்தார்கள். (ஏழு பேர் யாரென்றால் 1. பெரியாண்டர், 2. தேலீஸ், 3. பையாஸ், 4. ஸோலோன், 5. பிட்டாக்கஸ், 6. கைலோன், 7. கிளியோபூலஸ். எழு பேரல்ல, பதினேழு பேர் என்பது சிலர் கருத்து.) அவர்களில் இவன் ஒரு வனாகக் கருதப்பட்டான். அப்படியானல், இவன் எப்படிப் பட்டவன் என்பதை நாம் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலா மல்லவா?
கொரிந்த்தியாவில் அடிமை வழக்கம் வெகு மும்முரமாக இருந்ததாகத் தெரிகிறது. கி.மு.480-ஆம் வருஷம் இங்கு, உரிமை யுள்ள ஐம்பதினாயிரம் பிரஜைகளும், அறுபதினாயிரம் அடிமை களும் இருந்தார்களென்று ஒரு கணக்குக் கூறுகிறது.
கொரிந்த்தியாவுக்குச் சிறிது வடமேற்கேயுள்ளது மெகாரா: ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனஸ்தாபங் களில் இது நடுவே அகப்பட்டுக் கொண்டு தவித்தது. கி.மு. ஏழாவது, ஆறாவது நூற்றாண்டுகளில் இது மிகவும் உன்னத ஸ்திதியிலிருந்ததாகத் தெரிகிறது. இரண்டு பக்கமும் கடல் தொடர்பு இருந்தபடியால், இதற்குச் சுங்கவரி மூலமாக அதிக வருமானம் கிடைத்தது. வடக்கே பிஸண்ட்டியம் (இதனை பிஸன்ஷியம் என்று உச்சரிப்பர். கிபி. 330-ஆம் வருஷத்திலிருந்து இது கான்ஸ்ட்டாட்டி நோபிள் என்று அழைக்கப்பட்டு வந்தது. பிறகு 1934-ஆம் வருஷத்தி லிருந்து இஸ்த்தாம்பூல் என்று அழைக்கப்பட்டு வருகிறது) மேற்கே சிஸிலி இந்த இடங்களில் இது, பல வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக்கொண்டு அவை மூலமாகத்தான் செல்வ நிலையை உயர்த்திக் கொண்டது.
செல்வம் பெருகிய போதிலும், ஒரு சிலரிடத்திலேயே அது தேங்கி வந்தது. பணமுள்ளவர்கள், மேலும் பணக்காரர்களா னார்கள்; ஏழைகள், இன்னும் ஏழைகளானார்கள். சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. ஏழைகள், தியாஜெனீஸ் என்பவனுடைய தலை மையில் 630-ஆம் வருஷம் ஒரு பெரும் புரட்சி நடத்தினார்கள்; வெற்றியும் பெற்றார்கள். தியாஜெனீஸ், சர்வ அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு, சுமார் ஒரு தலைமுறை வரை ஆண்டான். இவனுக்குப்பிறகு, இங்கு இரண்டு மூன்று தடவை ஏழை - பணக் காரர் கலகங்கள் மாறி மாறி நடைபெற்றன. சுருக்கமாக, வர்க்கப் போராட்டம் என்று இப்பொழுது சொல்லப்படுகிறதல்லவா, இது நடைபெற்றதென்று கூறலாம்.
இந்தக் கலகங்களுக்கு மத்தியில் வாழ்ந்தான் தியோக்னிஸ் என்ற ஒரு கவிஞன். இவனுடைய கவிதைகள் சில இப்பொழுதும் வழக்கில் இருந்து வருகின்றன. இவன் ஜன ஆட்சியைக் கண்டித்துச் சில கவிதைகள் இயற்றி, அதன் விளைவாக, ஜனக்கட்சி அதிகாரத் திற்கு வந்தபோது அதனால் நாடு கடத்தப்பட்டு விட்டான். இவன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்ஊராக அலைந்து திரிந்தான். சொல்லொணா வறுமைக்குட்பட்டான். கடைசியில் ஓர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து, அவனுடைய தயவினால் மெகாரா திரும்பினான். மதுபானத்தில் தன் கவலைகளை மறந்து சிறிது இருந்து விட்டு இறந்து போனான்.
எஜீனா என்பது மெகாராவுக்குத் தென்கிழக்கிலுள்ள ஒரு தீவு. மைஸீனியர்கள் காலத்தில் இது மிகவும் மேலான நிலைமையில் இருந்தது. டோரியர்கள் ஆக்கிரமிப்புக்குட்பட்டதும் இது பெரிய வியாபார ஸ்தலமாயிற்று. தொழிற்சாலைகளும் இங்கு அதிகமாயின. இவைகளில் வேலை செய்ய அடிமைகள் பலர் இறக்குமதி செய்யப் பட்டனர். அடிமை வியாபாரமும் நடைபெற்றது. கி.மு.350-ஆம் வருஷத்தில் இதன் ஜனத்தொகை ஐந்து லட்சமென்றும், இதில் ஏறக்குறைய நான்கு லட்சத்து எழுபதினாயிரம் பேர் அடிமை களென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. என்ன வேடிக்கை!
எப்பிடாரஸ். எஜீனா தீவுக்கு மேற்கேயுள்ளது இது. தெய்வ புருஷனும், வைத்திய சாஸ்திரத்தின் மூல புருஷனுமாகிய ஆஸ்க்ளேப் பியஸ் என்பவன் இங்குதான் பிறந்தான் என்பது கிரேக்கர்களின் நம்பிக்கை. இவனுக்கு இங்கு ஒரு கோயிலும் உண்டு. இந்தக் கோயிற் பூசாரிகள், இவனுடைய முறைகளைப் பின்பற்றி, கிரீஸின் பல பாகங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள். வெகு காலம் வரை இது, கிரீஸின் சுகாதார யாத்திரை ஸ்தலமாக இருந்து வந்தது. இப்பொழுது சுமார் ஐந்நூறு பேர் வசிக்கின்ற ஒரு குக்கிராமமாக இருந்து வருகிறது.
இனி, கிரீஸின் மத்திய பாகத்திற்குச் செல்வோம். இதன் கிழக்குப் பகுதி யிலுள்ளது பியோஷ்யா. இங்குச் சமவெளிகள் அதிகம். இந்தச் சமவெளிகளில் தான் கிரீஸின் வாழ்வு தாழ்வுகளை அவ்வப் பொழுது நிர்ணயித்துக் காட்டி வந்த யுத்தங்கள் பல நடை பெற்றன. ஆனால் இந்த யுத்தங்கள் நடைபெறுவதற்கு முந்தியே, இதன் பெயர் கிரீஸ் முழுவதிலும் நன்கு பரவியிருந்தது. இதற்குக் காரணமா யிருந்தவன் ஹெஸியாட் என்ற கவிஞன். ஹெஸி யாட்டின் பியோஷ்யா என்றே கிரேக்கர்கள் கூறுவார்கள்; ஹோமருக்கு அடுத்த படி இவனைப் போற்றுவார்கள்.
ஹெஸியாட் வாழ்ந்த காலத்தைச் சரியாக நிச்சயித்துச் சொல்ல முடியவில்லை; கி.மு. எட்டாவது நூற்றாண்டில் என்று உத்தேச மாகத்தான் சொல்ல முடிகிறது. இவன் பிறந்தது, சின்ன ஆசியா விலுள்ள ஸைமி என்ற ஊரில்; கவிஞனாக வாழ்ந்தது பியோஷ்யா விலுள்ள அஸ்க்ரா என்ற ஊரில். வறுமை மிக்க ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்; இதனால் இளமை யிலிருந்தே விவசாயிகளின் கஷ்ட நிஷ்டூரங்களை நன்கு உணர்ந் திருந்தான். இந்த உணர்ச்சியானது, இவனது கவிதை உள்ளத்தைத் திறந்து விட்டது. விவசாயிகளைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் பல பாடல்கள் பாடினான். உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்ற உண்மையை வலியுறுத்திக் கூறினான். இவனுடைய பாடல்களில், ஒரு விவசாயி, எப்படிப் பயிர் செய்ய வேண்டுமென்பதுமுதல், எப்படிக் குடும்பத்தை நடத்த வேண்டுமென்பது வரையில், விவசாய வாழ்க்கைக்கு உப யோகமான பல விஷயங்கள் காணப்படுகின்றன. இந்தக் கவிதைத் தொகுதிக்கு, ‘வேலைகளும் நாட்களும்’ என்று பெயர். இது தவிர, ‘தியோகோனி’ என்ற ஒரு காவியத்தையும் இவன் இயற்றினான். இதில், உலகம் உற்பத்தியான விவரம், தெய்வங்கள் தோன்றிய வரலாறு, அந்தத் தெய்வங்களின் வமிசா வளிகள் முதலிய பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
பியோஷ்யாவிலுள்ள முக்கியமான ராஜ்யம் தீப்ஸ். சர்வ கிரீஸுக்கும், தான் தலைமை வகிக்க வேண்டுமென்று இது வெகு பாடுபட்டது; இதற்காகச் சில சமயங்களில் நேர்மையற்ற முறை
களையும் கடைப்பிடித்தது. சிறிது காலம், தலைமையும் வகித்த தென்று சொல்ல வேண்டும். ஆனால் தலைமை வகிக்க முற்பட்ட காலத்திலேயே இதன் சுதந்திர வாழ்வுக்கும் பங்கம் ஏற்பட ஆரம்பித்தது. இதனைப் போகப் போகப் பார்ப்போம்.
தீப்ஸில் போர்வீரர்கள், அரச தந்திரிகள் இப்படிப் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இருந்தாலும், பிண்டார் என்ற ஓர் இசைப் புலவன் வாழ்ந்திருந்துதான் இதற்கு அதிகமான பெருமையை அளித்தது. இவன்- இந்த பிண்டார் - ஒரு நாள் வெளியே சென்றிருந்த பொழுது, வழியில் ஒரு நிலத்தில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டான். அப்பொழுது சில தேனீக்கள் வந்து, இவன் உதடுகளில் அமர்ந்து, தங்களிடமுள்ள தேனைக் கொட்டிவிட்டுச் சென்றன. சிறிது நேரங் கழித்து எழுந்தான். இனிமையான பாடல்கள் வாயிலிருந்து வெளி வந்தன. இவனுடைய பாடல்கள் மிகவும் மதுரமாக இருக்கு மென்பதை வலியுறுத்திச் சொல்வதற்காக எழுந்த கட்டுக்கதையே இது என்பது பலருடைய அபிப்பிராயம்.
இவன் பிறந்தது தீப்ஸில்; இசை பயின்றது ஆத்தென்ஸில். இருபது வயது முடிவதற்குள் பூரண பாண்டித்தியம் பெற்று விட்டான். தீப்ஸுக்குத் திரும்பிவந்து, இசைவாணியென்று போற்றப் பட்ட கொரின்னா என்ற ஒரு ஸ்திரீயுடன் சேர்ந்து மேலும் சிறிது காலம் படித்தான். அப்பொழுது தீப்ஸில் நடைபெற்று வந்த பகிரங்க இசைப்போட்டியில் அந்த ஸ்திரீயோடு ஐந்து தடவை போட்டி யிட்டான்; ஐந்து தடவையும் தோல்வியுற்றான். ஆயினும் இவன் புகழ் வளர்ந்தது; கிரீஸ் முழுவதும் பரவியது. அரசர்களும் பிரபுக்களும் தங்கள் ஆஸ்தானங்களுக்கு இவனை வரவழைத்து உபசரித்தார்கள். ஆனால் இவன் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டி ருக்கவில்லை. ஏறக்குறைய நாற்பத்தைந்தாவது வயதில் தீப்ஸுக்குத் திரும்பி வந்து அங்கேயே சுமார் முப்பத்தைந்து வருஷ காலம் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருந்தான். மரித்தபோது இவனுக்கு எண்பது வயது இருக்கும். இறந்த பிறகு இவனுடைய உருவச்சிலை யொன்றை நிறுவி, இவனிடம் தனக்குள்ள விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டது ஆத்தென்ஸ். இங்ஙனமே, 335-ஆம் வருஷம் தீப்ஸின் மீது படையெடுத்து வந்த மகா அலெக்ஸாந்தர், அதனை அழித்துவிட உத்தரவிட்டபோது, பிண்டார் வசித்துக் கொண்டிருந்த வீட்டை மட்டும் அப்படியே விட்டுவிட வேண்டு மென்று கூறி, இவனிடம் தனக்குள்ள பக்தியைப் புலப்படுத்திக் கொண்டான்.
பியோஷ்யாவுக்கு மேற்கோ போசிஸ்; அதற்கு மேற்கோ லோக்ரிஸ். இவ்விரண்டிற்கும் நடுவே, கிரேக்கரனைவருக்கும் பொதுவான டெல்பி கோயிலும், அதைச் சேர்ந்த பிரதேசமும் இருக்கின்றன. இந்தக் கோயில் நிருவாக சம்பந்தமாக போசியர்களும் லோக்ரியர்களும் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்கள். தவிர, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்தவர் களெல்லோரும், பெரும்பாலும் போசிஸ் பிரதேசத்தைக் கடக்க வேண்டியே இருந்தது. இவைகளினால் அநேக அல்லல்களுக்குட்பட்ட இந்த போசிஸ்.
போசியர்களும் லோக்ரியர்களும் நாகரிகச் சிறப்புடையவர் களென்று சொல்ல முடியாது. ஆனால் நெஞ்சுரமுடையவர்கள்; எதற்கும் எளிதிலே சளைக்காதவர்கள். கடல் தொடர்புகொள்ள இவர்களுக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. இருந் தாலும் இவர்கள், மேற்கே இத்தலி பக்கத்தில் சில குடியேற்ற ராஜ்யங்களை ஸ்தாபித்தார்கள்.
விசால கிரீஸ்
1. குடியேற்றம்
இங்ஙனம் நகர ராஜ்யங்கள் ஏற்பட்டுச் சில ஆண்டுகளாயின. ஒவ்வொரு ராஜ்யத்திலும் ஜனத்தொகை அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. எல்லோருக்கும் வாழ்க்கை வசதிகள் கிடைப்பது அரிதாகி விட்டது. உண்ண உணவும் இருக்க இடமுமாவது வேண்டாமா? இவையிரண்டும் கிடைக்காத போழ்து, இவை இருப்பவர்களுக்கும் இவை இல்லாதவர்களுக்கும் பகைமை யுண்டாகுமல்லவா? இதற்கு இடங்கொடுக்க விரும்பவில்லை கிரேக்க ராஜ்யங்கள். இவற்றில் பெரும்பாலான, புத்திசாலித்தனமாக, தங்களுடைய பிரஜைகளில் பலரை, வெளிநாடுகளிற் சென்று குடியேறும்படி வசதிகள் செய்து கொடுத்தன. துணிகரமுள்ள பலர் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறினார்கள். ஆங்காங்கே கிரேக்க ராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொண்டார்கள்.
இவைகளை, கிரேக்க ராஜ்யங்கள் என்று ஏன் சொல்லுகிறோ மென்றால், குடியேறியவர்கள் குயடியேறியே பிரதேசத்திலுள்ள குடிகளுடன் ரத்தக் கலப்பு முதலியன செய்து கொண்டு விட்டாலும், தங்களுடைய கிரேக்க ஆசாரத்தைக் கைவிடாமல், கிரேக்கர் களாகவே வாழ்ந்து வந்த காரணத்தினால்தான். இவர்கள், தங் களுடைய கிரேக்க பாஷை, மதம், நாகரிகம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனார்களென்று அதிசயமாகச் சொல்வ துண்டு. இவ்வளவென்ன, கிரீஸிலிருந்து புறப்பட்ட ஒவ்வொருவரும் கொஞ்சம் மண்ணையும், வீட்டில் பரம்பரையாக எரிந்துக் கொண் டிருந்த நெருப்பிலிருந்து ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். இப்படிக் கொண்டு சென்ற மண்ணைக் குடியேறிய இடத்தில் தூவினார்கள்; நெருப்பைக் கொண்டு அடுப்பு மூட்டி னார்கள். தாய்நாட்டின் தொடர்பும் மூதாதையர்களின் தொடர்பும் விட்டுப் போகக் கூடாதென்பது இவர்கள் கருத்து. இந்தக் கருத்தைச் செயலில் கொண்டு வந்து காட்டுகின்ற முறையிலேயே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
எப்பொழுதுமே, தாய் நாட்டிலிருக்கிறவர்களைக் காட்டிலும், தாய் நாட்டிலிருந்து வெளியே சென்று குடியேறியிருக்கிறவர் களுக்குத்தான் புதியன வற்றைக் கண்டுபிடித்து அதனை நிலை பெறச் செய்யும் ஆற்றல், துணிகர உணர்ச்சி ஆகிய தன்மைக -ளெல்லாம் ஏற்படுகின்றன; அவர்கள் காட்டும் தேசபக்தி, தாய் நாட்டின் கௌரவத்தை உயர்த்துகிறது; அவர்கள் கொண்டுள்ள மொழிப்பற்று, தாய்மொழியை வளப்படுத்துகிறது. கிரீஸிலிருந்து வெளியே சென்று குடியேறியவர்கள்தான், பெரும்பாலும் கிரேக்கக் கலை மாளிகையை நிர்மாணஞ் செய்திருக்கிறார்கள். கிரேக்க ஞான பொக்கிஷத்தை நிரப்பியிருக் கிறார்கள்; இப்படி இன்னும் எத்தனையோ கைங்கரியங்களைச் செய்திருக் கிறார்கள்.
கி.மு. 700ஆம் வருஷத்திலிருந்து கி.மு. 550ஆம் வருஷம் வரை யுள்ள நூற்றைம்பது வருஷ காலத்தில் இத்தகைய குடியேற்ற ராஜ்யங்கள் பல, இத்தலி என்ன, இத்தலிக்கு மேற்கிலும் தெற்கிலு முள்ள கார்ஸிக்கா, ஸார்டீனியா, சிஸிலி ஆகிய தீவுகளென்ன, ஆப்ரிக்காவின் வட பகுதியென்ன, வடகிழக்கு கருங் கடலோர மென்ன, சின்ன ஆசியாவிற்கு மேற்கிலென்ன, இப்படிப் பல இடங்களில் ஏற்பட்டன. நூற்றுக்கணக்கில் ஏற்பட்ட இந்த ராஜ்யங்கள், பெரும்பாலும் (மத்திய தரைக்)கடல் தொடர்புடையன வாயிருந்தன வென்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தாய் நாட்டுடன் சுலபமாகவும் அதிகமாகவும் தொடர்பு வைத்துக் கொள்ள முடிந்தது. மற்றும் இந்தக் குடியேற்ற ராஜ்யங்களில் பல, சுயேச்சையுடையனவாகவே இருந்தன; இங்குச் சுயேச்சாதிபதிகளே இவர்களைக் கொடுங்கோலர் என்றும் அழைப்பதுண்டு - பெரும் பாலும் ஆண்டு வந்தனர். இவர்களுடைய ஆட்சி தனிக்கதை. சில குடியேற்ற ராஜ்யங்கள், கிரீஸிலுள்ள தங்கள் தாய்ராஜ்யங்களின், அதாவது கிரீஸிலுள்ள நகர ராஜ்யங்களின் ஆதிபத்தியத்திற்குட் பட்டிருந்தன. குடியேற்ற ராஜ்யங்கள் பலவற்றின் அரசியலமைப்பு, சமுதாய ஒழுங்கு எல்லாமுமே மாறிவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது கிரீஸின் நகர ராஜ்யங்கள், கி.மு. ஆறாவது நூற்றாண்டுக்கு முன்னர் இருந்ததைப்போல் அதற்குப்பின்னர் இருக்கவில்லை.
இங்ஙனம் கிரீஸிலுள்ள நகர ராஜ்யங்களில் பெரும்பாலான குடியேற்றப் பிரதேசங்களை ஸ்தாபித்து, அதன் மூலம், நிலைக் குறைவு, ஜனப்பெருக்கம் முதலிய தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளை ஒருவாறு தீர்த்துக் கொண்டன. ஆனால் இரண்டு ராஜ்யங்கள் மட்டும் இந்த முயற்சியில் - குடியேற்ற முயற்சியில் - ஈடுபடவில்லை. ஒன்று, ஸ்ப்பார்ட்டா; மற்றொன்று ஆத்தென்ஸ். இவை யிரண்டும், மேற்படி பிரச்னைகளுக்குப் பரிகாரங் காண, தனித்தனிப் போக்கில் செல்லத் துணிந்தன. இவை யிரண்டுமே, கிரீஸின் முக்கியமான ராஜ்யங்களென்பதை நாம் சொல்ல வேண்டியதில்லையல்லவா?
2. குடியேற்ற ராஜ்யங்கள்
இனி, குடியேற்ற ராஜ்யங்களில் முக்கியமான சிலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம். கிரேக்க நாகரிகத்தைப் பூரண மாகப் பார்ப்பதற்கு இந்தச் சுற்றுப் பிரயாணம் அவசியமாகும். இந்தச் சுற்றுப்பிரயாணத்தின் போது, பிற விஷயங்களில் கவனஞ் செலுத்தாமல் ஆங்காங்கு வாழ்ந்த ஒரு சில பெரியோர்களை மட்டும் அறிமுகஞ் செய்துகொண்டு போவோம். ஏனென்றால், கிரேக்க நாகரிகம் முழுத்தன்மை பெற்றது இவர்களால்தான். தாய்நாட்டிற்கு எட்டினாற் போலிருந்தாலும் அந்தத் தாய்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவர்கள் இவர்களே. அது மட்டுமல்ல உலகத்திற்கே, சாசு வதமாயிருக்கக் கூடிய அநேக பொருள்களை வழங்கியிருக்கின்றனர் இவர்களில் அநேகர்.
பூகோள படத்தைப் பாருங்கள். அட்டிக்காவுக்குச் சிறிது தென்கிழக்கில் சிறு சிறு தீவுகள் இருக்கின்றனவல்லவா, இவற்றுள் ஒன்று சீயோஸ். இந்தத் தீவின் சுமார் எழுநூறு வருஷ வாழ்வில் ஒரு தடவையாவது பெண் சோரமோ, விபசாரமோ நடைபெற்றது கிடையாதாம். தவிர, இந்தத் தீவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட வர்கள் விஷங்குடித்துச் செத்துப்போக வேண்டுமென்று ஒரு சட்டம் அமுலில் இருந்ததாம். எதற்காக இந்தச் சட்டம் என்றால், அறுபது வயதுக்குட்பட்ட எல்லா ஜனங்களுக்கும் போதிய அளவு உணவு கிடைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்கேயாம்.
இந்தச்சட்டத்திற்குப் பயந்துதானோ என்னவோ, இந்தத் தீவில் பிறந்து வளர்ந்த ஸைமனிடீஸ் என்ற கவிஞன் நல்ல வயதுக் காலத்தில் இங்கிருந்து வெளியேறிவிட்டான். ஆத்தென்ஸ், இவனுக்கு நல்வரவு கூறியது. வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்குதான் கழித்தான். இவன் அங்கு வசித்த காலத்தில் கிரீஸுக்கும் பாரசீக சாம்ராஜ்யத்திற்கும் அடிக்கடி யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டி ருந்தன. இந்த யுத்தங்களில் மடிந்த கிரேக்கர்களின் வீரத்தைப் புகழ்ந்து அநேக பாடல்கள் பாடினான். கடைசி காலத்தில் ஸைரக்யூஸ் தீவுக்குச் சென்று அங்குச் சர்வாதிகாரியாக ஆண்டு கொண்டிருந்த ஹைரோன் (ஆண்டது: 478 முதல் 467 வரை) என்பவனுடைய ஆதரவுக்குட்பட்டிருந்தான்.இந்த ஹைரோனுக்கும் தீரோன் என்ற வேறொரு சர்வாதிகாரிக்கும் மனமாற்றம் ஏற்பட்ட போது அதனை அகற்றி இருவரையும் நண்பர்களாக்கினான். இவன் இறந்த பிறகு இவனுக்கு அரச மரியாதைகள் நடைபெற்றன.
ஸைமனிடீஸின் கவிதைகளை எல்லோரும் பாராட்டினர். ஆனால் அதே சமயத்தில் இவனை எல்லோரும் தூற்றவும் செய்தனர். ஏனென்றால் இவன் பணத்திற்காகப் பாடினான். பணத்தைப் பார்த்தால்தான் இவனது கவிதை உள்ளம் மலரும். ஏன் இப்படி என்று கேட்டால் ’மற்றவர்களைப் போல கவிஞர்களும் சாப்பிட வேண்டாமா’ என்று திருப்பிக் கேட்பான். ஆனால் இந்த வழக்கம் பணத் திற்காகக் கவி பாடுகிற வழக்கம் - கிரீஸுக்கு புதிது. இவன்தான் முதன்முதலாக இந்த வழக்கத்தை ஏற்படுத்தியவன். இதனால் ஜனங்கள் இவனை இகழ்ந்து பேசினார்கள்; ‘காசு கிடைக் கிற தென்றால் ஸைமனிடீஸ் சமுத்திரத்தையும் தாண்டுவான்’ என்றெல்லாம் பரிகசித்தார்கள்.
சீயோஸுக்குத் தென்கிழக்கிலுள்ளது டெலோஸ் தீவு. இங்குதான் அப்போலோ கடவுள் பிறந்ததாகக் கிரேக்கர்களின் நம்பிக்கை. இதனால் இங்கு, இந்தப் புனித ஸ்தலத்தில், பிறத்தலும் மரித்தலும் கூடாவென்று தடை செய்திருக்கிறார்கள். பிரசவிக்குந் தறுவாயிலுள்ளவர்களும் இறக்குந் தறுவாயிலுள்ளவர்களும் தீவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள். ஆத்தீனியர்கள் இந்தத் தீவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். வருஷந்தோறும் இங்கு நடைபெற்று வந்த அப்போலோவின் பிறந்த விழாவிற்கு ஆத்தென்ஸிலிருந்து அரசாங்க தூது கோஷ்டியென்று சென்று, விழாவைச் சிறப்பாக நடத்தி வைக்கும். இந்தத் தூது கோஷ்டி திரும்பி வருகிறவரையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்ற வாளிகளின் விஷயத்தில் அந்தத் தண்டனையை நிறைவேற்றக் கூடாதென்று ஒரு சட்டம் அமுலில் இருந்தது. ஸாக்ரட்டீஸ் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு சிறிது காலம்வரை அந்தத் தண்டனை நிறை வேற்றப் படாமலிருந்ததற்குக் காரணம் இதுதான்.
அடுத்தாற்போல் மிலீட்டஸ் நகரத்திற்கு வருவோம். கி.மு. ஆறாவது நூற்றாண்டு வரையில், கிரேக்க உலகத்திற்கே பிரதான பட்டினம் போலிருந்தது இது. இதற்குப் பின்னர்தான் ஆத்தென்ஸுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. பல நாட்டு வியாபாரிகளும் சந்தித்துப் பொருள் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கு ஏற்ற இடமா யிருந்தது மிலீட்டஸ். இந்த நகரத்துச் செல்வர் பலர், தொலைக்குச் சென்று கொடுக்கல் வாங்கல் முதலிய பல தொழில்கள் செய்து வந்தார் களென்றும், சுமார் எண்பது ஊர்களில் இவர்களுடைய வியாபார ஸ்தலங்கள் இருந்தனவென்றும், மிலீட்டஸ் நகர சபைக்குக் கூட இவர்கள் அவ்வப்பொழுது கடன்கொடுத்து உதவினார்களென்றும் தெரிகின்றன.
இந்த மிலீட்டஸ் நகரத்தில்தான், கிரேக்கர் போற்றி வந்த ஞானிகள் எழுவரில் முதல்வனான தேலீஸ் (இவன் காலம் 640-546) பிறந்தான். கணித சாஸ்திரத்தையும் வான சாஸ்திரத்தையும் கிரீஸுக்கு வழங்கியவன் இவனே. 585-ஆம் வருஷம் மே மாதம் இருபத்தெட்டாந் தேதியன்று சூரிய கிரகணம். இதை முன்கூட்டித் தெரிவித்தவன் இந்த தேலீஸ். இவனுடைய சித்தாந்தப்படி எல்லா வற்றிற்கும் ஆதியாயுள்ளது நீரே; இந்த நீரிலிருந்துதான் எல்லாம் தோன்றுகின்றன; அதிலேயே எல்லாம் சென்று முடிவடைகின்றன.
தேலீஸ், தனிமையைப் பெரிதும் விரும்பினான். கணித சாஸ்தி ரத்திலும் வான சாஸ்திரத்திலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது சகஜம். தேலீஸ், மணிக்கணக்கில் வானத்திலுள்ள நட்சத்திரங் களைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருநாள் இப்படிப் பார்த்துக் கொண்டே சென்றபோது ஒரு வாய்க்காலில் விழுந்து விட்டானாம்! இப்படி இவன் தனிமையில் இருந்து ஆராய்ச்சி செய்து வந்தானா யினும், ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு அவ்வப்பொழுது அரசியலிலும் கலந்து கொண்டான். முற்கால கிரேக்க அறிஞர்கள் எல்லோருமே, இங்ஙனம் அவசியம் ஏற்படுகிறபோது அரசியலில் கலந்து கொண்டி ருந்திருக்கிறார்கள். வாழ்க்கையை மொத்தமாகப் பார்க்கி றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும்.
வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் வயிற்றுப் பசி அடங்குமா? ஜீவனம் நடத்த வேண்டுமே? இதை அறியாதவனல்ல தேலீஸ். ஒலிவ மர வித்துக் களிலிருந்து எண்ணெய் எடுத்து அதைப் பக்குவம் செய்து உபயோகித்து வந்தனர்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர் கிரேக்கர். இந்த வித்துக்கள் ஒரு வருஷம் அதிகமாகக் கிடைக்குமென்று முன்னதாகவே தேலீஸ் தனது வான வாஸ்திர அறிவின் மூலம் தெரிந்துகொண்டு, அக்கம் பக்கத்திலுள்ள எண்ணெய் எடுக்கும் இயந்திரங்களையெல்லாம், அவைகளுக்குக் கிராக்கி இல்லாத காலம் பார்த்துக் குறைந்த விலைக்கு வாங்கி, கிராக்கியுள்ள காலத்தில் அவைகளை நல்ல விலைக்கு விற்று அதிக பணஞ் சம்பாதித்தான். எண்ணெய் எடுப்போருக்கு யந்திரங்கள் வேண்டுமல்லவா? தத்துவ ஞானிகள் விரும்பினால் பணக்காரர் களாக முடியும் என்பதற்கு உதாரணமாக, தேலீஸின் இந்தச் செயலை எடுத்துக் காட்டுகிறான் அரிஸ்ட்டாட்டல் தனது அரச நீதி என்ற நூலில். ஆனால் அவர்கள் - தத்துவ ஞானிகள் - உலகியலைப் பொறுத்த மட்டில் வறியவர்களாக இருப்பதையே விரும்புகிறார்கள். தேலீஸ் எத்தனையோ தடவை, அவனுடைய வறுமைக்காகப் பரிகசிக்கப்பட்டான். ஆனால் அவன் அவைகளை லட்சியம் செய்யவில்லை.
சிக்கலான கேள்விகளுக்குச் சுலபமாக விடையளிப்பதில் வல்லவன் தேலீஸ்.
வினா : உலகத்தில் கடினமானது எது?
விடை : உன்னை நீ அறிவது.
வினா : சுலபமானது எது?
விடை : பிறருக்குப் புத்தி சொல்வது.
வினா : எது கடவுள்?
விடை : ஆதியும் அந்தமும் இல்லாதது எதுவோ அதுதான் கடவுள்.
வினா : சீலமுள்ள வாழ்க்கையை நடத்துவது எப்படி?
விடை : பிறரிடத்தில் எதைக் குறையாகக் கூறுகிறோமோ அதை நாம் செய்யாமலிருந்தால் போதும்.
இந்த மிலீட்டஸ் நகரத்தில் ஹிப்போடாமஸ் என்ற ஒரு சிற்பி இருந்தான். இவன், நகர நிர்மாண திட்டம் போட்டுக் கொடுப்பதில் வல்லுநன். ஆத்தென்ஸின் துறைமுகப் பகுதியாகிய பீரேயஸை ஒழுங்குபட அமைப்பதற்கு 446-ஆம் வருஷம் ‘பிளான்’ தயாரித்துக் கொடுத்தான். அரசியலில் நேரடியான அனுபவமில்லாதவன். ஆயினும் ஓர் அரசியல் திட்டம் வகுக்கத் துணிந்தான். இவனைப் பற்றி அரிஸ்ட்டாட்டல் பின்வருமாறு வருணிக்கிறான்: “இவன் ஒரு விநோத மனிதன். தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டு மென்பதற் காக வெறியன் போல நடந்து கொள்வான். நீண்ட மயிர் வளர்த்துக் கொண்டிருந்தான். விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து கொண்டிருந்தான். இதனால் இவன் நிரம்பப் பகட்டுச் செய்து கொள்கிறானென்று எல்லோரும் நினைத்தார்கள். ஆயினும் இவன் விலை மலிவான, ஆனால் உஷ்ணம் கொடுக்கக் கூடிய சாதாரண உடையையே கோடைக் காலத்திலும் குளிர் காலத்திலும் அணிந்து கொண்டிருந்தான். எல்லோரும் தன்னை ஒரு சகலகலா பண்டி தனாகக் கருதவேண்டுமென்று ஆசை கொண்டான்.”
மிலீட்டஸ் நகரத்திற்கு வடக்கே பிரீனே என்றொரு நகரம் உண்டு. ஏழு ஞானிகளில் ஒருவனான பையாஸ் (கி.மு. 570-இல் இவன் பிரபலமடைந் திருந்ததாகத் தெரிகிறது). என்பவன் இங்குதான் பிறந்தான். இதனால் இந்த நகரத்துக்குப் புகழ் ஏற்பட்டது. வாழ்க்கையைப் பற்றி இவன் கூறிய கருத்துக்களில் ஒன்றின் சாரம் வருமாறு: “உலகத்தில் துரதிருஷ்டமான மனிதன் யாரென்றால், துரதிருஷ்டத்தைச் சகித்துக் கொள்ளத் தெரியாதவன்தான். அதிக வயது வரை வாழ்ந்திருப்பதானாலுஞ் சரி, அல்லது சீக்கிரத்திலேயே இறந்து போவதாயிருந் தாலுஞ் சரி, எதற்கும் தயாராயிருக்கும் படியாக மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இளமையிலிருந்து முதுமைக்குச் செல்ல சாதனமா யமைந்துள்ளது ஞானம். ஆதலின் அதை ஜாக்கிரதையாக வைத்துக் காப்பாற்று வாயாக; எல்லா உடைமைகளையும் காட்டிலும் அதுதான் - ஞானந்தான் - மேலான உடைமை.”
பிரீனே நகரத்திற்கு மேற்கே ஸாமோஸ் என்ற தீவு இருக்கிறது. கி.மு. ஆறாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இது மிகவும் பிரபல மடைந்திருந்தது. இந்தக் காலத்தில், இங்கு பாலிக்ராட்டீஸ் (சர்வாதி காரியாக இருந்து ஆண்டது 535 முதல் 515 வரை) என்ற ஒருவன் சர்வாதிகாரியாக இருந்து ஜனங்களுக்கு அங்கே நன்மைகளைச் செய்தான். ஒரு மலையைக்குடைந்து அதில் சுமார் நாலாயிரத்து ஐந்நூறு அடி நீளமுள்ள குழாய் போட்டு அதன் மூலம் ஜனங் களுக்குக் குடிநீர் கிடைக்கும்படி செய்தான். இவன் ஆஸ்தானத்தில் தியோடோரஸ் என்ற ஒருவன் இருந்தான். சகலகலா வல்லவன். இவனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது. வைர வேலை முதல் தச்சு வேலை வரை எல்லாத் தொழில்களும் இவனுக்குத் தெரிந் திருந்தன. மட்டப் பலகை, கடைசல் பிடிக்கிற கருவி முதலிய அநேக தொழிற்சாதனங்களைக் கண்டுபிடித்தவன் இவன்.
ஸாமோஸ் தீவில்தான் மகான் பித்தாகோரஸ் 580-ஆம் வருஷம் பிறந்தான். இதை விடுத்து, இத்தலியிலுள்ள குரோட்டோனாவுக்குச் சென்றுவிட்டான். அங்கு இவனைச் சந்திக்கலாம்.
ஈசாப் கதைகளென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா, அந்த ஈசாப் என்பவன் இந்தத் தீவில்தான் வாழ்ந்தான். இயாட்மோன் என்ற ஒரு கிரேக்கனிடத்தில் அடிமையாயிருந்தான். இவன், எப்படியோ தன் எஜமானனிடத் திலிருந்து விடுதலையடைந்து, பல நாடுகளையும் சுற்றிப் பார்த்தான். இந்தப் பிரயாணத்தின்போது, ஆத்தென்ஸுக்குச் சென்று அங்கு அப்பொழுது பிரபலமாயிருந்த ஸோலோன் என்பவனைச் சந்தித்து அவனிடமிருந்து அநேக விஷயங்களைத் தெரிந்து கொண்டான். இந்த ஸோலோனை, நாம் ஆத்தென்ஸுக்குச் செல்கிறபோது அங்கே சாவகாசமாகச் சந்தித்துக் கொள்வோம். பின்னர் ஈசாப், லிடியா தேசத்து அரசனான கிரீஸஸ் (ஆண்டது 560 முதல் 546 வரை) என்பவனுடைய ஆதரவில் சிறிது காலம் இருந்தான். இந்த அரசன், இவனிடம் ஒரு தொகையைக் கொடுத்து டெல்பி கோயிலில் சேர்க்கும்படி கூறினான். ஆனால் இந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்யவில்லை. இதைக் கண்டு ஆத்திரமடைந்த டெல்பி வாசிகள், இவனை ஒரு மலையிலிருந்து கீழே தள்ளிக் கொன்று விட்டார்கள். இவனைப் பற்றிய இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது. ஆனால் இவன் கதைகள் கிரீஸ் முழுவதிலும் பிரசித்தியடைந்திருந்தன. ஸாக்ரட்டீஸ் இந்தக் கதைகளைச் செய்யுள் வடிவமாக்கினான் என்று ப்ளூட்டார்க் (கி.பி. 46-120) என்ற கிரேக்க சரித்திராசிரியன் கூறுகிறான். பொதுவாகப் பார்க்கிறபோது, ஈசாப் கீழ்நாடுகளில் அதிகமாகச் சுற்றுப் பிரயாணஞ் செய்திருக்கிறானென்று நிச்சயமாகத் தெரிகிறது. (பஞ்ச தந்திரக் கதைகளையும் இவன் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்) இங்கு வழங்கப்பட்டு வந்த கதை களையே இவன் திருப்பிச் சொல்லியிருக்கிறான். சுற்றுப்பிரயாணத்தி லிருந்து திரும்பிவந்த பிறகு, கதைகள் சொல்வதையே இவன் தொழிலாகக் கொண்டிருந்தானென்றும், அதன் மூலமாகவே இவன் பிழைப்பு நடந்து வந்ததென்றும் தெரிகின்றன.
ஸாமோஸ் தீவுக்கு வட கிழக்கில் எபீஸஸ் என்ற ஒரு நகரம் இருக்கிறது. இங்குதான், உலகத்து ஏழு அதிசயங்களுள் ஒன்றெனக் கருதப்படுகின்ற டியானா (ஆர்ட்டிமிஸ்) தேவதையின் கோயில், ஏறக்குறைய 450-ஆம் வருஷத்தில் கட்டப்பெற்றது. இதற்காகவும் இங்கு வசித்துக் கொண்டிருந்த கவிஞர்களென்ன, தத்துவ ஞானி களென்ன, இப்படிப்பட்டவர்களுக்காகவும் இந்த நகரம் பிரசித்தி யடைந்திருந்தது.
ஹிப்போனாக்ஸ் (உத்தேசமாக கி.மு. ஆறாவது நூற்றாண்டில் வாழ்ந்தவன்.) என்ற ஒரு கவிஞன். பெண்களைப் பழித்துப் பாடுவதில் மகா வல்லவன். ஓரிடத்தில் பாடுகிறான்: “ஆண்களுக்குப் பெண் களால் இரண்டு தடவைதான் சந்தோஷம் உண்டாகிறது. ஒன்று அவர்களைக் கல்யாணஞ் செய்து கொள்கிறபோது; மற்றொன்று அவர்களை மயானத்தில் அடக்கம் செய்கிறபோது”
ஹெராக்ளீட்டஸ் உத்தேச காலம்: (540-475) என்பவன் ஒரு தத்துவ ஞானி. பணக்கார குடும்பதிலே பிறந்தவன். ஆனால் பணக் காரர்களைக் கண்டால் அதிகமாகப் பிடிக்காது. இங்ஙனமே ஜனநாயகவாதிகள், பெண்கள், பண்டிதர்கள் ஆகிய இவர்களையும் பிடிக்காது. “பதினாயிரம் பேரைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதன் மேலானவன்” என்று கூறுவான். “அதிகமாகப் படித்துவிட்டால் மட்டும் மனம் பக்குவமடையாது” என்பவது இவன் கருத்து. “எந்த ஒன்று, தானே இயங்குவதாயும், எல்லாவற்றையும் எப்பொழுதும் இயக்குவிப்பதாயும் இருக்கிறதோ அதனை அறிவதுதான் மெய் யறிவு” என்பது இவன் முடிபு. இந்த மெய்யறிவை யடைய இவன் காடுமேடுகளிலெல்லாம் சுற்றித் திரிந்தான்; புல் பூண்டுகளைப் புசித்தான். தான் கண்ட உண்மையினைச் சிறுசிறு சூத்திரங்களாக உலகினிற்கு வழங்கினான்.
ஹெராக்ளீட்டஸின் சித்தாந்தப்படி, எல்லாவற்றிற்கும் மூலமா யிருப்பது அக்கினி. இதிலிருந்துதான் எல்லாம் தோன்றுகின்றன; இதிலேயே எல்லாம் சென்று ஒடுங்கின்றன. இந்தச் சித்தாந்தத்தைப் பல வகையிலும் விளக்கிக் காட்டுகிறான் மேற்படி சூத்திரங்களில்.
ஸாமோஸ் தீவுக்கு வடக்கே கியோஸ் தீவு. இங்குதான் ஹோமர் பிறந்தானென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். அடிமை வியா பாரத்திற்குப் பெயர் போன இடம் இது. கி.மு. ஆறாவது நூற்றாண்டில் இங்கிருந்த அடிமை களெல்லோரும், ட்ரிமாக்கஸ் என்பவனுடைய தலைமையில் ஒன்று கூடி, தங்களை அடிமை கொண்டவர்களுக்கு விரோதமாகக் கலகஞ் செய்தார்கள். இந்தக் கலகத்திற்குப் பிறகு இவர்கள் நிலைமை சிறிது விருத்தி யடைந்தது. ட்ரிமாக்கஸுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்டார்கள் அடிமைகள். இந்தத் தீவில்தான், ஹோமரின் பாடல்களை முறையோடு பாடிவந்த ஒரு கூட்டத்தார் நீண்ட காலம் வரை இருந்தனர்.
கியோஸ் தீவுக்கு வடக்கே லெஸ்போஸ் தீவு. இதில் ஐந்து பட்டணங்கள் இருந்தன. இவற்றுன் முக்கியமானது மிட்டிலீனி என்னும் பட்டணம். வியாபாரச் செழுமை நிறைந்த ஊர். கி.மு. ஏழாவது நூற்றாண்டின் கடைசியில் இங்கு ஒரு புரட்சி நடை பெற்றது. இந்தப் புரட்சியின் காரணமாக பிட்டாக்கஸ் (இவன் உத்தேச காலம்: 650-570) என்பவன் சர்வாதிகாரியானான். மத்திய வகுப்பினரும் ஏழை மக்களும் சேர்ந்தே இவனைச் சர்வாதிகாரி யாக்கினார்கள். இவனுடைய ஆட்சியை எதிர்த்து இரண்டு பேர் போராடினார்கள். இருவரும் பணக்கார குடும்பத்தினர்; கவிஞர்கள், ஒருவன் ஆல்ஸீயஸ்; ஒருத்தி ஸாப்போ. இருவரையும் தேசப் பிரஷ்டம் செய்துவிட்டான் பிட்டாக்கஸ்.
தனி முறையில் அமைந்த ஆல்ஸீயஸின் பாடல்கள் நெருப்பைக் கக்கின; ஜனங்களை உற்சாகப்படுத்தி, புரட்சிக்குத் தூண்டுவனவா யிருந்தன என்பார்கள். இவன் மதுபானப் பிரியன். காதலைப் பற்றியும் சில பாடல்கள் பாடியிருக்கிறான்.
ஸாப்போ! கிரீஸ் முழுவதும் இவளைக் கொண்டாடியது. இவள் காலத்திலேயே ஆத்தீனியப் பேரறிஞனான ஸோலோன், இவள் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டான். ஒருநாள், இவனுடைய மருமகன், ஸாப்போவின் பாடல்களிலொன்றைப் பாடிக்கொண்டி ருந்தான். அதைத் தனக்குக் கற்றுக் கொடுக்குப்படி கூறினான் ஸோலோன். ஏனென்று கேட்டார்கள் அருகிலிருந்தவர்கள். “அதைக் கற்றுக்கொண்டு நான் இறக்க வேண்டும்” என்று கூறினான் ஸோலோன். பிற்காலத்தில் ஸாக்ரட்டீஸும் பிளேட்டோவும் இவளைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். கவிதை யுலகத்தில் ஹோம ருக்கு என்ன ஸ்தானம் உண்டோ அதே ஸ்தானத்தில் ஸாப்போ வையும் வைத்துப் பாராட்டுகிறார்கள் கிரேக்கர்கள். ஆல்ஸீயஸின் பாடல்களும் ஸாப்போவின் பாடல்களும் வெகு காலம் வரை ஜனங்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந் திருந்தன என்பதற்கு அத் தாட்சி என்னவென்றால், கி.பி. 1073-ஆம் வருஷம், இவ்விருவருடைய பாடல்களின் பிரதிகளனைத்தையும் ஒன்று திரட்டிக் கொளுத் தினார்கள் பகிரங்கமாக. கான்ஸ்ட்டாண்டி நோபிளிலும் ரோமா புரியிலுமிருந்த பாதிரிமார்கள்.
ஸாப்போ, உடலழகு வாய்க்கப் பெறாதவள்; ஆனால் உள்ளத் தூய்மை படைத்தவள். சங்கீதம், நடனம் முதலிய நுண்கலைகளில் பெண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டுமென்பதற்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தி வந்தாள். பெண்களுக்கென்று மட்டும் முதலாவது ஏற்பட்ட பள்ளிக்கூடம் இது. இதில் பயின்று வந்த பெண்களை, மாணாக்கிகளே என்று அழைக்கமாட்டாள் ஸாப்போ; தோழிகளே என்றுதான் அழைப்பாள். நிறைந்த அன்பு வேற்றுமை பாராட்டுவதில்லையல்லவா?
இனி கிரீஸின் மேற்குப் பக்கத்திற்கு வருவோம். இங்குப் பல இடங்களில் கிரேக்கர்கள் குடியேறி தனித்தனி ராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொண்டு நல்ல முறையில் வாழ்ந்தார்கள். இத்தலிக்குத் தெற்கே குரோட்டோன் என்ற ஊர் இருக்கிறது, பாருங்கள். இது முந்தி குரோட்டோனா என்று அழைக்கப்பட்டது. 710-ஆம் வருஷம் கிரேக்கர்கள் இங்குக் குடியேறி தனியாக ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டார்களென்று சொல்லப்படுகிறது. ஆரோக்கிய வாசத்திற்கு ஏற்ற இடம் இது. இதனால்தான், 580-ஆம் வருஷம் ஸாமோஸ் தீவில் பிறந்த மகான் பித்தாகோரஸ், தனது ஐம்பத் தோராவது வயதில் - 529-ஆம் வருஷம் - இங்கு வந்து குடியேறினான் போலும்!
கி.மு. ஆறாவது நூற்றாண்டுக்குப் பிறகு கிரீஸில் தோன்றிய அறிஞர் அத்தனை பேரும் இவன் - இந்த பித்தாகோரஸ் - ஏந்திப் பிடித்த அறிவு விளக்கிலிருந்துதான் வெளிச்சம் பெற்றுக் கொண்டனர் என்று சொன்னால், அதுவே இவன் பெருமையைச் சுருக்கமாக எடுத்துச் சொன்னதாகும். உலகம் உருண்டை வடிவமா யிருக்கிறது என்று முதன்முதலாகச் சொன்னவன் இவனே. தத்துவ ஆராய்ச்சிக்கு அடிகோலியவனும் இவனே. இவன் சுமார் முப்பது வருஷ காலம் யாத்திரையில் கழித்தானென்பர். பொனீஷியா, சால்டியா, சிரியா, அரேபியா, இந்தியா, பிரான்ஸ் ஆகிய பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்கு அறிஞர்களைச் சந்தித்து அவர் களிடமிருந்து அநேக அரிய விஷயங்களைக் கற்றுக் கொண்டான். வாழ்க்கையின் முற் பகுதியைக் கற்பதிலும், பிற்பகுதியைக் கற்பிப் பதிலும் செலவழித் தான் என்று இவன் வாழ்க்கையைச் சுருக்கிச் சொல்லி விடலாம்.
பித்தாகோரஸ், குரோட்டோனாவில் ஒரு குருகுலம் ஆரம் பித்து நடத்திவந்தான். இதில் நூற்றுக்கணக்கான மாணாக்கர்களும் மாணாக்கியர்களும் சேர்ந்து படித்தார்கள். மேனாட்டைப் பொறுத்தமட்டில், இருபாலாரும் சேர்ந்து படிப்பதற்கென்றேற் பட்ட முதல் கலாசாலை இதுவேயென்பர் ஆராய்ச்சியாளர். இங்ஙனம் இரு பாலாரும் சேர்ந்து படித்தார்களாயினும், பெண்கள் சில விசேஷப் பயிற்சிகளைப் பெற்றனர். இந்தப் பயிற்சிகள், இவர் களுடைய தாய்மைக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவதற்குத் துணை செய்வனவாயிருந்தன. இதனால்தான், பித்தாகோரஸின் குருகுலத்தில் படித்த பெண்களுக்குக் கிரீஸ் முழுவதிலும் ஒரு கௌரவம் இருந்தது.
பித்தாகோரஸ், தன் குருகுலவாசிகளுக்குச் சில நியமங்களை ஏற்படுத்தி யிருந்தான். குருகுலத்தில் படிக்கிற காலம்வரை அனைவரும் பிரும்மசரிய விரதம் பூண்டவர்களாயிருக்கவேண்டும். புலா லுண்ணுதல் கூடாது. யாருக்கும், செடி, கொடிகள் முதல் மனிதன் ஈறாக உள்ள எந்த ஜீவராசிக்கும், எந்தவிதமான தீங்கும் உண்டு பண்ணுதல் கூடாது. பகட்டாக இல்லாமல் மிகச் சாதாரண முறையிலேயே உடைகள் அணிதல் வேண்டும். பேச்சிலும், செய லிலும் அடக்கமும் நிதானமும் இருத்தல் வேண்டும். அதிகமாகச் சிரிக்கக் கூடாது. சிடுமூஞ்சியாகவும் இருக்கக்கூடாது. ‘கடவுள் பிரமாணமாக’ என்று சொல்லக்கூடாது. இதைச் சொல்லாமலே மற்றவர்கள் நம்பும்படியாக நடந்து கொள்ள வேண்டும். தினந் தோறும் படுக்கைக்குப் போகுமுன், ‘இன்று நான் என்னென்ன குற்றங்கள் செய்தேன், எந்தெந்தக் கடமைகளைச் செய்யத் தவறி விட்டேன், ஏதேனும் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேனா, அப்படி செய்திருந்தால் அவை என்னென்ன’ என்று தனக்குத் தானே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். குருகுலத்தில் சேர்ந்த முதல் ஐந்து வருஷ காலம் பிரதியொரு மாணாக்கனும் மாணாக்கியும் மௌனமாயிருந்து பாடங்களைக் கற்க வேண்டும். அதாவது ஆசிரியருடன் தர்க்கவாதஞ் செய்து கொண்டிராமல், அமைதியாயிருந்து சொல்லிக் கொடுப்பதை மனத்திலே நன்றாக வாங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான நியமங்களை பித்தாகோரஸ், தன் குருகுல வாசிகளுக்கு மட்டும் ஏற்படுத்தவில்லை; தானும் இவைகளைக் காட்டிலும் கடினமான நியமங்களுடன் இருந்தான். இதுதான் இவனிடத்தில் காணப்பட்ட விசேஷம். சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டு வாழ்கிறவர்கள் எப்பொழுதுமே பிறருடைய மரியாதைக்குரியவராகின்றார்கள். எப்பொழுதும் போற்றப்பட்டு வருகிறார்கள். பித்தாகோரஸின் சிஷ்யர்கள், தங்கள் குருநாதனி டத்தில் பரம பக்தி செலுத்திவந்தார்களென்பதில் என்ன ஆச்சரியம்? இவன் சொன்ன வாக்குக்கு மறுவாக்குக் கிடையாது. ‘குருநாதரே சொல்லிவிட்டார்’, ‘குருநாதரின் கட்டளை இது’ என்பன போன்ற பேச்சுக்கள் குருகுலவாசிகளிடத்தில் சர்வ சாதாரணமாக உலவி வந்தன.
பித்தாகோரஸின் தினசரி வாழ்க்கை மாசு மறுவில்லாத, கள்ளங்கபடமற்ற தூய வாழ்க்கையாயிருந்தது. தூய வெண்மை உடையையே அணிவான். ரொட்டி, தேன், காய்கறி வகைகள், இவைகள்தான் இவனது அன்றாட ஆகாரம். இந்த ஆகாரமும் மிதமாகத்தான் இருக்கும். யாரையும் பரிகசிக்க மாட்டான். எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துவான். பிறர் மனம் புண்படும்படி இவன் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வந்ததில்லை யென்பர். சுருக்கமாக, இவன் அறிவின் சிகரமாகவும், ஒழுக்கத்தின் வடிவ மாகவும் இருந்தான். இவன் ஒரு லட்சியவாதி மட்டுமல்ல; பிரத்தியட்ச வாதியுங்கூட.
குரோட்டோனாவுக்குச் சிறிது வடக்கே ஸைபாரிஸ் என்றொரு நகரம் இருந்தது. இது 721-ஆம் வருஷம் தோன்றி 510-ஆம் வருஷம் அழிந்துபட்டது. அபரிமிதமான வியாபாரம் இங்கு நடைபெற்றது. மூன்று லட்சம் பேர் இதில் வசித்துக் கொண்டி ருந்தார்கள். இவர்களிற் பெரும்பாலோர் அடிமைகள். நகரவாசிகள், அதாவது பிரஜைகள் சொற்பமான பேர்தான். இந்தப் பிரஜைகள் நடத்திய சுகபோக வாழ்க்கை, கிரீஸ் முழுவதிலுமே ஒரு பழமொழி யாகி விட்டது. இவர்களுக்கு, எல்லா வேலைகளையும் அடிமைகளே செய்து கொடுத்தார்கள். உழைப்பு என்பது சிறிதுகூட இல்லாமல், பகட்டான உடைகள் அணிந்து, சுவையான ஆகார வகைகளைச் சாப்பிட்டு, சுகமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். தச்சர், கொற்றர் முதலியோர் தங்கள் தொழில்களைச் செய்கிறபோது ஓசையுண்டாகு மல்லவா? அந்த ஓசை இவர்களுக்குத் தலை வேதனை யாயிருந்ததாம். இதற்காக அவர்களை, நகரத்திற்கு வெளியே இருந்து வேலை செய்யுமாறு கட்டளையிட்டிருந்தார்கள். வெயிலினாலும் மழை யினாலும் கஷ்டம் ஏற்படக் கூடாதென்பதற்காக, ஜனப் போக்கு வரத்து மிகுந்த வீதிகளில் விதானங்கள் போடப்பட்டிருந்தன. இவ் வளவு சுகமாகவும நிம்மதியாகவும் வாழ்க்கை நடத்தி வந்த போதி லும், இவர்கள் கலையுலகத்திற்கோ நாகரிகக் களஞ்சியத்திற்கோ விசேஷமான ஒன்றையும் அளித்ததாகத் தெரியவில்லை.
இத்தலியின் தென்கிழக்கு முனையில் லோக்ரி என்ற ஒரு சிறிய நகரம் இருக்கிறது பாருங்கள். மத்திய கிரீஸிலுள்ள லோக்ரிஸ் பிரதேசத்திலிருந்து ஓடிவந்துவிட்ட கீழ்மக்கள் சிலர் சேர்ந்து இந்த நகரத்தை ஸ்தாபித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனாலேயே இது லோக்ரி என்று அழைக்கப்பட்டது. கீழ்மக்களைக் கொண்டி ருந்ததனால் இங்கு ஒழுங்கான சட்டதிட்டங்கள் இருக்கவில்லை. இப்படிச் சிறிது காலம் இருந்து சலிப்புற்றுப் போன இந்த நகர வாசிகள், தங்களுக்கு ஒழுங்கான சட்டதிட்டங்கள் வகுத்துத் தரும்படி, டெல்பி கோயில் பூசாரிகளுக்கு விண்ணப் பித்துக் கொண்டார்கள். இந்த விண்ணப்பத்திற் கிசைய, ஜாலூக்கஸ் என்ற ஓர் அடிமை, 664-ஆம் வருஷம் இதற்குச் சில சட்ட திட்டங்கள் வகுத்துக் கொடுத்தான். கிரீஸிலேயே முதன்முதலாக எழுத்திலே கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்கள் இவையென்றும், இவற்றினை இயற்ற இவனுக்குத் தெய்வ சக்தி துணையாயிருந்த தென்றும் கூறுவர்.
இத்தலியை விடுத்துத் தெற்கே சிஸிலி தீவுக்கு வருவோம். ஏறக்குறைய 700-ஆம் வருஷத்திலிருந்து கிரேக்கர்கள் கூட்டங் கூட்டமாக வந்து இங்குக் குடியேறினர்; குடியேறி ஆங்காங்குச் சிறுசிறு நகர ராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொண்டனர். இவற்றுள் ஸைரக்யூஸ், நாக்ஸோஸ், கட்டானா, மெஸ்ஸானா, லியோண்ட் டினி, ஜிலா முதலிய ராஜ்யங்கள் பிரபலமடைந்திருந்தன.
ஸைரக்யூஸ் செல்வச் சிறப்புக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் பெயர் போனதாயிருந்தது. இங்கு டையோனிஸியஸ் (இவன் வாழ்ந்த காலம்: 430-367) என்ற ஒருவன் முப்பத்தெட்டு வருஷ காலம் (405-367) சர்வாதிகாரியாயிருந்து ஆண்டான். இவன்தான் இந்த ராஜ்யத்தை மேலான நிலைமைக்குக் கொண்டு வந்தவன். இவன் ஆட்சியின்போது பிளேட்டோ இங்கு வந்து சிறிது காலம் தங்கி யிருந்தான். பிளேட்டோவை ஒரு வகையில் ஆதரித்தவனும் இவனே; பின்னர் அவனை அடிமையாக விற்றுவிட்டவனும் இவனே; இந்த ஸைரக்யூஸில்தான், பிரபல கணித சாஸ்திரியும், யந்திரக் கருவிகள் பலவற்றைக் கண்டுபிடித்தவனு மான ஆர்க்கிமிடீஸ் பிறந்து புகழ் பெற்றான். பிளேட்டோ வசித்ததும், ஆர்க்கிமிடீஸ் பிறந்ததும் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கு மேற்படி டையோனிஸியஸ் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், நட்பின் இலக்கணம் இன்னது என்று எடுத்துக்காட்டுவது போல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதைச் சொல்லாமலிருப்பதற்கில்லை.
பித்தியாஸ் என்ற ஒருவன், பித்தாகோரஸின் சிஷ்ய பரம் பரையைச் சேர்ந்தவன். இவன் டையோனிஸியஸுக்கு விரோதமாகக் சூழ்ச்சி செய்தானென்று குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பெற்றான். மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள தான் சித்தமாயிருப்பதாகவும், ஆனால் அதற்கு முன்னர், தன் வீட்டுக்குச் சென்று குடும்ப காரியங்களை ஒழுங்குப்படுத்தி விட்டுவர ஒருநாள் அவகாசம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான். அதுவரை இவனுக்கு ஜாமீனாக இருக்க இவன் நண்பன் டாமன் என்பவன் ஒப்புக்கொண்டான். அப்படித் தன் நண்பன் திரும்பி வராத பட்சத்தில், தான் அவனுக்குப் பதிலாக மரண தண்டனையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான். டையோனிஸியஸ் இதைக் கேட்டு முதலில் பரிகசித்தானாயினும் பின்னர் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டான். கடைசியில் மரண தண்டனையை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது. ஆனால் பித்தியாஸ் வரவில்லை. டாமன், தான் கொடுத்த வாக்கின்படி மரண தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றான். கடைசி நிமிஷத்தில் பித்தியாஸ் ஓடோடியும் வந்து சேர்ந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த டையோ னிஸியஸ் ஆச்சரிய மடைந்தவனாய், பித்தியாஸ் மீது விதித்திருந்த மரண தண்டனையை ரத்து செய்து விட்டான். அது மட்டுமல்ல; தன்னையும் ஒரு நண்பனாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று இருவரையும் கேட்டுக்கொண்டான். இருவர் மூவராயினர்.
கட்டானா ராஜ்யத்திற்கு வருவோம். ஒழுங்கான சட்ட திட்டங்களைப் பெற்றிருந்ததன் காரணமாக இது புகழடைந் திருந்தது. இந்தச் சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவன் அல்லது தொகுத்துக் கொடுத்தவன் காரோன்தாஸ் என்பவன். இவன், உத்தேசமாக 610-ஆம் வருஷம் - அதாவது ஆத்தென்ஸுக்கு அரசியலை வகுத்துக் கொடுத்த ஸோலோனுக்கு ஒரு தலைமுறை முந்தி இருந்தானென்பர். இவன் ஏற்படுத்திக்கொடுத்த சட்ட திட்டங்களை முன் மாதிரியாகக் கொண்டுதான், சிஸிலியிலும் இத்தலியிலுமிருந்த மற்றக் கிரேக்க ராஜ்யங்கள் தங்கள் சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டன. இவன் திட்டப்படி கட்டானா ராஜ்யத்திற்கு ஒரு ஜன சபை இருந்தது. ஜனசபைக் கூட்டத்திற்கு வருகிறவர்கள், ஆயுத பாணிகளாக வரக்கூடாதென்று இவனுடைய திட்டம் ஒன்று கூறியது. ஆனால் இவனே ஒரு சமயம், நினைவில்லாமலோ என்னவோ ஆயுதபாணியாகக் கூட்டத்திற்கு வந்துவிட்டான். ‘நீயே உன் சட்டத்தை மீறி நடக்கலாமா’ என்று சபையின் அங்கத்தினன் ஒருவன் இவனைக் கேட்டான். ‘வாஸ்தவம்; அந்தச் சட்டம் விதிக்கிற தண்டனைக்கு நானே உட்படுகிறேன்’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த ஆயுதத்தினாலேயே தன்னை மாய்த்துக் கொண்டான்.
இத்தலிக்கு அப்பாலும் சென்றனர் கிரேக்கர்கள். ஆப்பிரிக்கா வின் வடபகுதியென்ன, ஸ்பெயின் என்ன, பிரான்ஸ் என்ன, இங்கெல்லாம் குடியேறி, தனித்தனி ராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொண்டனர். ஆக, கி.மு. ஆறாவது நூற்றாண்டின் கடைசியில், கருங்கடலிலிருந்து மத்திய தரைக்கடலின் மேற்குக் கடைசிவரை ஆங்காங்கு நூற்றுக்கணக்கான கிரேக்க ராஜ்யங்கள் செல்வச் செழிப்புடனும் செல்வாக்குடனும் விளங்கிக் கொண்டிருந்தன. அரிஸ்டாட்டல், தன்னுடைய, ‘அரச நீதி’ என்ற நூலை எழுது வதற்கு முன்னர், நூற்றைம்பத்தெட்டு கிரேக்க ராஜ்யங்களின் அரசியலைப்புக்களை ஆராய்ந்தானென்பர். அப்படியானால் குறைந்தபட்சம் நூற்றைம்பத்தெட்டு ராஜ்யங்களில் ஒழுங்கான அரசியலைப்புக்கள் இருந்தனவென்று தெரிகிறதல்லவா?
வெளிநாடுகளில் சென்று குடியேறிய கிரேக்கர்கள் தாய் நாட்டினின்று அடியோடு விலகியிருக்கவில்லை; அதற்கு மாறாகத் தாய்நாட்டுடன் நெருங்கி தொடர்பு கொண்டிருந்தார்கள்; தாங்கள் முன்னேற்றமடைந்ததோடு தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்கள். கிரீஸுக்கு ஏற்பட்ட பெருமையில் ஏறக்குறைய பாதி பாகமேனும் வெளிநாடுகளில் சென்று குடியேறியவர் களுடையதேயாகும். ஓர் ஆசிரியன் கூறுகிறான்; “தொழிலிலும், வியாபாரத் திலும், எண்ணப் போக்கிலும், கிரீஸ் முன்னேற்ற மடைந்தது என்று சொன்னால், அதற்கு ஒவ்வொரு குடியேற்ற ராஜ்யமும் ஒவ்வொரு வகையில் துணை செய்தது. கிரேக்கக் கவிதை உரைநடை, கணிதம், விஞ்ஞானம், நாவன்மை, சரித்திரம் இவை பலவும் கிரீஸின் குடியேற்ற ராஜ்யங்களில்லா விட்டால், கிரேக்க நாகரிகமென்பதே இருந்திருக்க முடியாது. இந்தக் குடியேற்ற ராஜ்யங்களின் மூலமாகத்தான் எகிப்து முதலிய கீழ்நாடுகளின் கலாசாரங்கள் கிரீஸுக்குள் பிரவேசித்தன. அப்படியே கிரேக்க கலாசாரமும், மெதுமெதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பிரவேசித்தது”
வாசகர்களே! குடியேற்ற ராஜ்யங்களை ஒருவாறு - ஆம், ஒருவாறுதான் - சுற்றிப் பார்த்தாகி விட்டது. இனி, கிரேக்கர் அனைவரையும் ஒன்றுபடுத்திய, இரண்டினைப் பற்றித் தெரிந்து கொள்ள முற்படுவோம்.
ஒன்றுபடுத்திய இரண்டு
1. ஒலிம்பிய விளையாட்டு விழா
கிரேக்கர்கள் பல்வேறு ராஜ்யத்தினராகப் பிரிந்திருந்த போதிலும், அனைவரையும், தாங்கள் கிரேக்கர்கள் என்று அவ்வப் பொழுது உணரும்படி செய்து வந்தவை, அனைவரையும் ஒன்று படுத்தி வந்தவை; ஒன்று, ஒலிம்பிய விளையாட்டு விழா; மற்றொன்று, டெல்பி கோயில் வழிபாடு.
பெலொப்பொனேசியாவின் வடமேற்கிலுள்ள ஒலிம்ப்பியா (பெலொப் பொனேசியாவின் வடமேற்கில் ஆல்பேயஸ் என்ற ஒரு சிற்றாறு ஓடுகிறது. இதன் வடகரையில் க்ரோனாஸ் என்ற ஒரு குன்றின் அடிவாரத்திலுள்ள விசாலமான இடத்திற்கு ஒலிம்ப்பியா என்று பெயர். இங்கு ஒலிம்ப்பீயம் என்றும், ஹிரேயம் என்றும், ப்ரெட்டேனீயம் என்றும் அழகிய முக்கியமான கட்டடங்கள் உண்டு. முதலாவது, ஜுஸ் தெய்வத்தின் கோயில்; இரண்டாவது ஹீரா (ஜுஸ் தெய்வத்தின் மனைவி)வின் கோயில்; மூன்றாவது, ஒலிம்ப்பிக் விளையாட்டு களில் வெற்றி பெற்றவர்கள் விருந் துண்ணும் மண்டபம். இந்தக் கட்டடங்கள் இப்போது சிதில மடைந்து கிடக் கின்றன. ஆயினும் சிரத்தையோடு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடத்தைக் காண விழைவோர் ஆத்தென்ஸி லிருந்து ரெயில் மார்க்கமாகப் புறப்பட்டு, மேற்குப் பக்கமாக வந்து, பிர்கோஸ் என்ற ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து சிறிது தூரம் மோட்டாரிலோ வேறு விதமாகவோ செல்ல வேண்டும். (இந்த இடம் இயற்கையழகு நிரம்பியது). இந்த இடத்தில் இந்த விளையாட்டுப் போட்டி, கி.மு. 776-ஆம் வருஷம் தொடங்கி, நான்கு வருஷத்திற் கொருமுறை நடை பெற்று வந்தது. இந்த நான்கு வருஷ காலத்தை ஒலிம்ப்பியட் என்று அழைப்பார்கள். எந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானாலும், இந்த 776-ஆம் வருஷத்திலிருந்து கணக்குப் பண்ணி இத்தனையாவது ஒலிம்ப்பியட்டின் இத்தனையாவது வருஷத்தில் என்று சொல்லு வார்கள். உதாரணமாக 776-ஆம் வருஷத்திலிருந்து 773-ஆம் வருஷம் வரை முதலாவது ஒலிம்ப்பியட்; 772-ஆம் வருஷத்திலிருந்து 769-ஆம் வருஷம் வரை இரண்டாவது ஒலிம்ப்பியட்; இப்படி, இப்படி. 776-ஆம் வருஷத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டுமானால், மூன்றாவது ஒலிம்ப் பியட்டின் மூன்றாவது வருஷம் என்றுதான் சொல்லுவார்கள். அப்படியானால் இந்த விளையாட்டுக்கு, கிரேக்கர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்களென்பது நன்கு புலனா கிறதல்லவா?
இந்த விளையாட்டுப் போட்டியை விளையாட்டு விழா வென்றே சொல்ல வேண்டும். அவ்வளவு புனிதமாகக் கருதினார்கள் கிரேக்கர்கள் இதனை. இந்த விழாவைச் சென்று காண்பதிலே ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி. விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள் வதிலே ஒரு பிரத்தியேகமான பெருமை; போட்டியில் வெற்றி பெற்று விட்டாலோ, கேட்க வேண்டியதில்லை; வெற்றி பெற்ற வருக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்றவரைப் பெற்றெடுத்த ராஜ்யத்திற்கே விசேஷ மதிப்பு.
கிரீஸின் எல்லா ராஜ்யங்களும் இந்த விழாவில் வெகு உற்சாகத்துடன் கலந்து கொண்டன. பெரிய ராஜ்யமென்றும், சிறிய ராஜ்யமென்றும் வித்தியாசம் கிடையாது. ஆனால் கிரேக்கர்களுக்கு மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ளும் உரிமை இருந்தது. அதாவது கிரேக்கரல்லாத அந்நியர், பிரஜா உரிமை இல்லாத அடிமைகள் ஆகியோர் இதில் கலந்துகொள்ள முடியாது. சுருக்க மாக, சுதந்திர கிரேக்கப் பிரஜைகளுக்கு மட்டுமே இந்த விழா.
இந்த விழாவை முன்னிட்டு, கிரீஸ் முழுவதிலும் அமைதி நிலவியிருக்க வேண்டுமென்ற நியதியைக் கண்டிப்பாகக் கடைப் பிடித்து வந்தனர் கிரேக்கர். ஒரு ராஜ்யமும் மற்றொரு ராஜ்யமும் பகைமை கொண்டிருந்தால், தற்காலிகமாக அந்தப் பகைமையை மறந்துவிட்டு, இரண்டு ராஜ்யங்களும் சந்தோஷத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டன. ஒரு ராஜ்யத்திற்காக மற்றொரு ராஜ்யம் விழாவை பகிஷ்கரித்த தென்பது கிடையாது. இங்ஙனமே ஒரு ராஜ்யத்திற்கும் மற்றொரு ராஜ்யத்திற்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தால், இந்த விழாக் காலத்தில் அந்தப் போர் நிறுத்தப்பட்டு விடும்; இரண்டு ராஜ்யங்களும் உற்சாகமாக விழாவில் பங்கெடுத்துக் கொள்ளும்; இரண்டு ராஜ்யத்துப் பிரஜைகளும் போர்க் கள நிகழ்ச்சிகளை மறந்துவிட்டு, கிரேக்கப் பிரஜைகள் என்ற ஹோதாவில் விழாவில் கலந்து கொள்வார்கள். கிரேக்கர்களுக்குப் பகைமை கொள்ளத் தெரிந்திருந்தது போல் அதனைச் சுலபமாக மறக்கவும் தெரிந் திருந்தது.
விழா தொடங்குவதற்குச் சுமார் பதினைந்து நாட்களுக்கு முந்தியிருந்தே ஜனங்கள் ஒலிம்ப்பியாவில் கூட ஆரம்பித்து விடுவார்கள். வெளிநாடுகளிலிருந்து வியாபாரிகள் பலர் தங்கள் சரக்குகளைக் கொண்டு வந்து குவிப்பார்கள். அப்படியே உள்நாட்டு வியாபாரிகளும், தங்கள் பொருள்களுக்கு நல்ல கிராக்கி இருக்கு மென்று கருதிக் கூட்டங் கூட்டமாக வந்து சேர்வார்கள். இங்ஙனம் வேடிக்கை பார்க்கவரும் ஜனங்கள் மட்டுமல்ல, வியாபாரிகள் மட்டுமல்ல, இசைவாணர் களென்ன, நூலாசிரியர் களென்ன, ஓவிய நிபுணர்களென்ன, சமுதாயத்தின் நன்மதிப்பிற்குரிய இவர்கள் பலரும் இங்கே வந்து கூடுவார்கள். இவர்களுடைய திறமை வெளிப் படுவதற்கேற்ற சந்தர்ப்பமாக இருந்தது இந்த விழா.
இந்த விழா, நான்கு வருஷம் முடிந்து ஐந்தாவது வருஷ ஆரம்பத்தில், துவங்கி சில நாட்கள் நடைபெறும். கிரேக்கர்களுக்கு வருஷ ஆரம்பமென்பது ஆடி மாதம். ஆடி மாதத்திலிருந்து அடுத்த ஆனி மாதம் வரை ஒரு வருஷம் கணக்கு. இந்த ஆடி மாதம் கடுமை யான வெயில். ஒலிம்பியாவில் குடிதண்ணீருக்குக் கூட கஷ்டம். விழாவுக்கு வந்தவரிற் சிலர் வெப்பத்தைத் தாங்க முடியாமல் இறந்து போவது வழக்கம் என்று ஒரு சில கிரேக்க ஆசிரியர்கள் எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் இது சரியோ நமக்குத் தெரியாது. ஆனால் கோடை வெயில், புழுதி மண், தண்ணீர்க் கஷ்டம் இவைகளைப் பொருட்படுத் தாமல் திரள் திரளாக ஜனங்கள் வந்து ஒலிம்ப்பியாவில் கூடினார்களென்பது நிச்சயம்.
விழா துவங்கிவிட்டது. முதல் நாள் போட்டியில் கலந்து கொள்ளப் போகிற ஒவ்வொரு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களும் அழகிய உடைகள் அணிந்துகொண்டு எவ்வளவு ஒழுங்குடன் ரதங்களில் ஊர்வலமாக வருகிறார்கள். ஒவ்வொரு வருடைய பார்வையிலும் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது. எல்லோரும் வந்து சேர்ந்ததும் ஜூஸ் தெய்வத்திற்குப் பூசை நடக்கிறது. பூசையில் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள். இது முடிந்ததும், போட்டியில் கலந்து கொள்ள உரிமையுடையவர்கள்தானா, அதாவது கிரேக்கப் பிரஜைகளாவென்று பரிசோதிக்கப்படு கிறார்கள். பின்னர் ஒவ்வொருவரும், தாங்கள் தூய கிரேக்கர்க ளேயென்றும் விளையாட்டு விதிகளை அனுசரிப்பதாகவும் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். தவிர, இவர்கள், போட்டியில் கலந்து கொள்ளத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டிருப்பதாக, அதாவது ஆகார நியமத்துடன் இருந்து வந்திருப்பதாகவும், போதிய பயிற்சி பெற்றிருப்பதாகவும் ருஜுப்படுத்தவேண்டும். இவையெல்லாம் முடிய முதல் நாள் பூராவும் சரியாகிவிடும்.
அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள் போட்டிகள் நடை பெறும். ஓட்டம், தாண்டுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல் இப்படிப் பல வகை விளையாட்டுப் போட்டிகள் ஒன்றன் பின்னொன்றாக நடைபெற்று முடியும். கடைசியில், ரதங்களில் பந்தயம். ஒவ்வொரு ரதத்திற்கும் நான்கு குதிரைகள் பூட்டியிருக்கும். இந்த ரதங்கள் வரிசையாக வந்து நிற்கும். சமிக்ஞை கிடைத்ததும் இவை பறக்கும் பாருங்கள்! மைதானத்தைச் சுற்றி வருகிறபோது, ஜனங்களுடைய உற்சாகம், அவர்கள் செய்யும் ஆரவாரம் எல்லாம் சேர்ந்து சமுத்திரம் பொங்குவது போலிருக்கும். எந்த ரதம் முதலில் நிலைக்கு வந்து சேர்கிறதோ அதற்குப் பரிசு என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
விளையாட்டுகள் யாவும் முடிந்ததும் கடைசி நாள், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப் பெறும். பரிசாவது என்ன? ஒலிவ மரத்து இலைக்கொத்துக்களினாலாய மாலை! இதனைப் பெறுவ தற்காக எத்தனை நாள் கடின உழைப்பு! எவ்வளவு முயற்சி ! ஆனால் இதனைப் பெறுவதன் மூலம் வாழ்க்கையின் லட்சியம் பூர்த்தி யடைந்து விட்டதாகப் பெரும்பாலோரான கிரேக்கர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். பரிசு வழங்கும் தினத்தன்று, முந்தின நாட் களைக் காட்டிலும் அதிகமான ஜனம் கூடியிருக்கும். பரிசுக்குரி யவர்களைப் பார்க்க வேண்டுமென்பதிலே அவ்வளவு ஆவல். விழாவில் சம்பந்தப்பட்ட காரியஸ்தன் ஒருவன் - கட்டியக் காரன் - இன்னார் இன்ன விளையாட்டில் பரிசு பெற்றவர் என்று, அவருடைய பெயர், தகப்பனார் பெயர், ஊரின் பெயர் எல்லாவற்றையும் உரக்கச் சொல்லி, அவரைப் பரிசு பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பான். பரிசு பெறுகிறவன் முன்னே வந்து நிற்கிறபோது, பார்க்கவேண்டுமே கூட்டத்தினரின் உற்சாகத்தை! காது செவிடு படும்படி கரகோஷம் செய்து, தங்கள் சந்தோஷத்தையும் பாராட்டுதலையும் தெரிவிப்பார்கள்.
பரிசு வழங்கும் சடங்குமுடிந்ததும், பரிசு பெற்றவன், ஜுஸ் தெய்வத்திற்குப் பூசை போடுவான். அதில், அவன் ராஜ்யத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள். தங்கள் ராஜ்யத்திற்குப் பெருமை தேடித் தந்தவனல்லவா அவன்? பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எல்லோரும், இசைக்கருவிகளுடன் தோத்திரப் பாடல்களைச் சொல்லிக்கொண்டு கோயிலை வலம் வருவார்கள். வெற்றி வாங்கித் தந்த கடவுளுக்கு நன்றி செலுத்து முகத்தான் இந்தச் சடங்கு நடைபெறும்.
இதற்குப் பிறகு, வெற்றியடைந்தவர்களுக்கு விருந்து மேல் விருந்து. இங்ஙனமே வெற்றி பெற்றவர்கள், தங்கள் நண்பர்களுக்கு விருந்து வைப்பார்கள். இந்த விருந்துகளில் சில நாட்கள் கழியும். இவை தவிர, வெற்றி பெற்ற சிலருடைய உருவச் சிலைகளும் ஒலிம்ப்பியாவில் நிறுவப்பெறும். வெற்றி பெற்ற அனைவருடைய பெயர்களும், நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பெறும். கவிஞர்களுடைய வாழ்த்துப் பாக்களுக்குச் சொல்ல வேண்டுமா? இவற்றோடு ஒலிம்ப்பியாவில் விழா ஒருவாறு முடிவடையும்.
வெற்றி பெற்றவன், தன் ராஜ்யத்திற்குத் திரும்பி வருகிறபோது, அவனுக்கு நடைபெறும் உபசாரங்களென்ன, ஆடம்பரமான வரவேற்புகளென்ன, இவற்றை வருணிக்க இயலாது. வெற்றி யடைந்தவனுக்கு ஊதா வர்ண உடை அணிவித்து, நான்கு குதிரைப் பூட்டிய ரதத்தில் உட்கார வைத்து, ஊர்வலமாக அழைத்து வருவார்கள். ரதத்திற்குப் பின்னால், அவனுடைய உற்றார் உறவினர், ஊரார் ஆகிய அனைவரும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவார்கள். நகர எல்லைச் சுவர் வந்ததும் ஊர்வலம் நின்றுவிடும். ‘இப்படிப்பட்ட வீரனைப் பெற்றெடுத்த நமது நகர ராஜ்யத்திற்குக் காவல் ஏன், மதிற்சுவர் ஏன்’ என்று சொல்லி மேற்படி மதிற்சுவரின் ஒரு சிறுபாகத்தை இடித்து ரதம் செல்வதற்கு வழி செய்வார்கள். இந்த வழியாக ரதம் ஊருக்குள் பிரவேசிக்கும். இஃதொரு சம்பிரதாய மாகவும் சடங்காகவும் நடைபெற்று வந்தது.
ஊருக்கு வந்து சேர்ந்ததும் வெற்றியடைந்தவனுக்கு விருந்துகள் நடைபெறும். அவரவரும், தங்களாலியன்ற வரை பொன்னாலும் வெள்ளியாலும் பரிசுகள் அளிப்பர். ஆயுள் பூராவும் அவனுக்கு மரியாதைகள் நடந்து கொண்டிருக்கும். நாடகங்கள், திருவிழாக்கள் முதலிய நடைபெறுகிறபோது, அவனுக்கு முதல் ஸ்தானம் உண்டு. வரி செலுத்துவதினின்று அவன் விலக்கப்படுவான். அவனுடைய உருவச்சிலையை ராஜ்யத்தின் மையமாக ஓரிடத்தில் நிறுவுவார்கள். எல்லா ராஜ்யங்களும் இப்படி உருவச்சிலையை நிறுவின என்று சொல்ல முடியாது. ஏதோ சில ராஜ்யங்கள்தான் இப்படிச் செய்தன.
ஒலிம்ப்பிய விழாவில் விளையாட்டுப் போட்டி மட்டும் நடை பெறும் என்பதில்லை; கவிஞர்கள், தாங்கள் புனைந்த கவிதைகளை, நாடகாசிரியர்கள், தாங்கள் இயற்றிய நாடகங்களை அரங்கேற்றம் செய்வார்கள்; சரித்திரகா சிரியர்கள், தாங்கள் எழுதிய சரித்திரங்களைப் படித்துக் காட்டுவார்கள்; நாவலர்கள், தங்கள் நாவன்மையைப் புலப்படுத்துவான் வேண்டி அரிய சொற் பொழிவுகளை நிகழ்த்து வார்கள்; ‘சரித்திரத்தின் தந்தை’ என்றழைக்கப்படுகிற ஹெரோ டோட்டஸ், தான் எழுதிய சரித்திரத்தை இங்கே படித்துக் காட்டினா னென்றும், அதைச் சிறு பிள்ளையா யிருந்த துஸிடிடீஸ் கேட்டு அழுதுவிட்டா னென்றும், அவ்வளவு உருக்கமாக அந்தச் சரித்திரம் இருந்ததென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. இந்த துஸிடிடீஸ் தான் பிற்காலத்தில் பிரபல சரித்திராசிரியனென்றும் பெயரும் புகழும் பெற்றான். 431-ஆம் வருஷம் முதல் 404-ஆம் வரை நடைபெற்ற பெலொப்பொனேசிய யுத்தத்தைப் பற்றி இவன் எழுதிய சரித்திரம், இன்றளவும் சிறந்த இலக்கிய விருந்தாக இருந்து வருகிறது. இந்தப் பெலொப் பொனேசிய யுத்தத்தைப் பற்றிப் பின்னர்த் தெரிந்துகொள்வோம்.
கி.மு. 776-ஆம் வருஷம் தொடங்கிய இந்த ஒலிம்ப்பிய விழா கி.பி. 394-ஆம் வருஷம் வரை சுமார் ஆயிரத்திருநூறு வருஷ காலம் தொடர்ந்தாற்போல் நடைபெற்று வந்தது. இதற்குப் பிறகு இது நின்றுவிட்டது. ஒலிம்ப்பியாவில் நான்கு வருஷத்திற்கொரு தடவை நடைபெற்ற இந்த விழாவைத் தவிர, பிரதியொரு நகர ராஜ்யத்திலும் ஒவ்வொரு வருஷமும் விளையாட்டு விழா நடைபெறுவதுண்டு.
கி.பி. 394-ஆம் வருஷம் நின்றுவிட்ட இந்த ஒலிம்ப்பிய விளையாட்டு விழா மீண்டும் 1896-ஆம் வருஷம் ஆத்தென்ஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகு நான்கு வருஷத்திற் கொருமுறை - 1900-ஆம் வருஷம் பாரிஸிலும், 1904-ஆம் வருஷம் அமெரிக்காவிலுள்ள செயிண்ட்லூயிஸ் நகரத்திலும் 1908-ஆம் வருஷம் லண்டனிலும் இப்படி ஒவ்வொரு நகரத்திலும் - தொடர்ந்தாற் போல் நடைபெற்று வருகிறது.
2. டெல்பி வழிபாடு
டெல்பி யென்பது, ஒரு புனிதமான ஸ்தலம்; இயற்கை வளம் நிரம்பியது; போசிஸ் ராஜ்யத்திற்கு மேற்குப் பகுதியிலுள்ளது. இங்கு அப்போலோ தெய்வத்திற்குப் பெரிய கோயிலொன்று உண்டு. எல்லாக் கிரேக்கர்களும் எவ்விதப் பாகுபாடுமின்றி இங்கு வந்து வழி படுவார்கள்; பூசைகள் நடைபெறும்; விழாக்களுக்குக் கேட்பானேன்? ஒலிம்ப்பியாவில் நடைபெற்றது போல் இங்கும் நான்கு வருஷத்திற் கொரு முறை ஒரு பெருவிழா நடைபெறும்.
இந்தப் பெரு விழாவின் போதும், விளையாட்டுப் போட்டி களும், மற்றப் போட்டிகளும் நடைபெறும். வெற்றியடைந்த வருக்குப் பரிசுகள், பரிசு பெற்றவருக்கு விருந்துகள் எல்லாம் உண்டு. இந்தப் பெரு விழாவுக்கு, கிரீஸின் பல பாகங்களிலிருந்தும் லட்சக் கணக்கான ஜனங்கள் வந்துகூடுவார்கள், சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெறும் என்றெல்லாம் நாம் திரும்பவும் சொல்லிக் கொண் டிருக்க வேண்டியதில்லையல்லவா?
மேற்படி விழாவைத் தவிர, வேறொரு வகையிலும் இந்த டெல்பி ஸ்தலம் முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அதுதான் குறி சொல்லல்.
கிரேக்கர்களுக்குக் குறி கேட்பதிலும், அது சொன்னபடி நடப்பதிலும் அதிக நம்பிக்கை. குறி சொல்லும் ஸ்தலங்கள் பல. அவற்றில் குறி சொல்வோர் பலர் இருந்தபோதிலும், அவற்றுள் பிரபலமாயிருந்தது இந்த டெல்பி கோயில்தான்; அவருள் பிரபல மாயிருந்தோர் இந்தக் கோயிற் பூசாரிகள்தான். முக்கிய சந்தர்ப் பங்களில் எல்லோரும் இங்குதான் வந்து குறி கேட்பார்கள். அயல் நாட்டு மன்னர்கள் கூட இங்குக் குறி கேட்டு அதன்படி நடந்து வந்தார்களென்றால், இதன் மாண்பினை நாம் அதிகம் விஸ்தரிக்க வேண்டுமோ? சுருக்கமாக, சர்வ கிரீஸின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தது இந்த டெல்பி கோயில்.
குறி கேட்கிறவர்கள், தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள், விழாக்களைக் காண வந்தவர்கள், இப்படிப் பட்டவர்களிடமிருந்து பலவிதமான காணிக்கைகள் அப்போலோ தெய்வத்திற்குக் கிடைத்தன. அநேகர், கோயிலுக் கென்று நில புலங்களை எழுதி வைத்தனர். நாளாவட்டத்தில் அதிகமான சொத்துக்கள் சேர்ந்துவிட்டன. இவையனைத்தையும் நிருவாகம் செய்ய ஒரு சபை அமைந்தது. இதற்கு ஆம்ப்பிக்கட்டியோனிக் சபை என்று பெயர். சர்வ கிரேக்க சபை இது. கிரேக்கர்கள், பன்னிரண்டு பிரிவினராகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் இனத்தினரும் இரண்டு பிரதிநிதிகள் விகிதம் இந்தச் சபைக்கு அனுப்ப உரிமை பெற்றி ருந்தனர். வருஷத்தில் இரண்டு தடவை இந்தச் சபை கூடும். ஒரு தடவை டெல்பியில்; மற்றொரு தடவை தெர்மாப்பிலே (தெஸ்ஸாலி பிரதேசத்தின் தென்கிழக்கு எல்லையும் லோக்ரிஸ் என்ற பிரதே சத்தின் வடமேற்கு எல்லையும் சந்திக்கிற இடத்தில் உள்ளது.) என்னும் இடத்தில். டெல்பி கோயில் சம்பந்தமாகவுள்ள நிலபுலங்கள், சொத்து சுதந்திரங்கள் ஆகியவற்றை எல்லோரும் சேர்ந்து காப்பாற்ற வேண்டும்; இவைகளுக்காக ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது என்று இப்படிச் சில பொது நியதிகள் இருந்தன. ஆனால் இந்த நியதிகளை மீறிச் சண்டைகள் நடைபெற்றே வந்திருக்கின்றன. இவைகளுக்கு ‘புனித யுத்தங்கள்’ என்று பெயர். புனித ஸ்தலமான டெல்பியை முன்னிட்டு நடைபெற்ற யுத்தங்கள் என்று இதற்கு நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
இந்த ஆம்ப்பிக்டியோனிச் சபை, முதன்முதல் சர்வ கிரேக்க சபையாக அமைந்தது ஏறக்குறைய 600- ஆம் வருஷத்திற்குப் பிறகு. இது கோயிற் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கென்று அமைந்த போதிலும், நாளாவட்டத்தில் அரசியல் கருவியாகவும் உபயோ கிக்கப்பட்டது. எந்த ராஜ்யம், எந்தக் காலம் வரை அரசியலில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்ததோ அந்த ராஜ்யம் அந்தக் காலம் வரை, இந்தச் சபையின் நடவடிக்கைகளில் அதிக பங்கெடுத்துக் கொண்டு முடிந்த மட்டில் தனக்குச் சாதகமாக இந்த நடவடிக்கைகளைத் திருப்பி வந்தது. சில சமயங்களில், கோயில் நிருவாகம் யார் வசத்திலி ருந்ததோ அவர்கள் - அந்த ராஜ்யத்தினர் - இந்தச் சபையைத் தங்கள் சொந்த நலனுக்காக உபயோகித்துக் கொண்டனர். இவ்வள வெல்லாம் சொன்னபோதிலும், இந்தச் சபை துருப்பிடித்த ஒரு பொருளைப் போலவே இருந்தது. இதன் நடவடிக்கைகள் ஏகதேசமாகத்தான் சர்வ கிரீஸின் கவனத்தை ஈர்த்தன.
இந்த ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையின் செல்வாக்கு, அந்தஸ்து, உபயோகம் ஆகியவை எப்படியிருந்தபோதிலும், இது சர்வ கிரேக்கர் களையும் இணைத்து வைக்கின்ற ஒரு ஸ்தாபனமா யிருந்தது. டெல்பி ஸ்தலம் எல்லோருக்கும் பொதுவாயிருந்தது போல் அதை யொட்டிய இந்தச் சபையும் எல்லோருக்கும், ஆம், கிரேக்கரல்லா தாருக்கும் பொதுவானதாய் இருந்தது. கிரேக்கரல்லா தாரும் இதில் சிரத்தை காட்டினர். உலகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட சர்வதேச சபைகள் பலவற்றிற்கும் மூலாதாரமாக இந்த ஆம்பிக்ட்டியோனிக் சபையை எடுத்துக் கூறுவர் அறிஞர்.
ஆக, கிரேக்கர்களனைவரையும் கட்டிப் பிணைத்துக் கொண் டிருந்த கயிறுகள் இரண்டு. ஒன்று, விளையாட்டு; மற்றொன்று மதம்.
இனி ஸ்ப்பார்ட்டாவுக்குள் பிரவேசிப்போம்.
ஸ்ப்பார்ட்டா
1. அதன் தனிப்போக்கு
ஸ்ப்பார்ட்டா ராஜ்யம், ஜனப்பெருக்கம், நிலக்குறைவு முதலிய பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக, மற்றக் கிரேக்க ராஜ்யங்களை எந்த விதத்திலும் பின்பற்றாமல், தனிப்பட்ட ஒரு போக்கிலே செல்லத் துணிந்தது. இதன் விளைவாக அஃது ஒரு ராணுவ சமுதாய மாக மாறியது. அதனுடைய அன்றாட வாழ்க்கையில் எளிமை, ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. இப்பொழுது கூட மேலைநாட்டில், ஸ்ப்பார்ட்ட எளிமை, ஸ்ப்பார்ட்ட ஒழுங்கு என்றெல்லாம் சொல்லப்படுவதைக் கேட்கலாம். ஸ்ப்பார்ட்ட சமுதாயத்தின் இந்த ராணுவக்கட்டுப்பாட்டைக் கண்டு, அப் பொழுதைய மற்றக் கிரேக்கர்கள் பிரமித்துப் போனார்கள். அத னிடத்தில் ஒருவித பயமும் கொண்டார்கள். ஆனால் அதனைப்போல் யாரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.
வாழ்க்கையில் எளிமை, ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இவை யாவும் அறத்தை அடிப் படையாகக் கொண்டிருக்க வேண்டாமா? அன்பை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டாமா? இவையொன்றுமே இல்லாமல், வெறும் ஸ்தூல சக்திகளை மட்டும் துணையாகக் கொண்டு ஒரு ஜாதி முன்னேறப் பார்க்குமானால் ஆரம்பத்தில் அதற்கு வெற்றி கிட்டலாம். ஆனால் கடைசியில்? அதற்கு எவ்வளவு சீக்கிரமாக வெற்றி கிட்டுகிறதோ அவ்வளவு வேகமாக அதனுடைய வீழ்ச்சியும் இருக்கிறது. இந்த உண்மையை, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ப்பார்ட்டா ராஜ்யம் உலகத்திற்கு நிரூபித்துவிட்டு மறைந்து விட்டது. ஐயோ, ஸ்ப்பார்ட்டாவே! யுத்த களங்களில் நீ காட்டிய மகத்தான வீரத்தைக் கவிஞர்கள், தங்களுக்குக் கற்பனா சக்தி இருந்து கொண்டிருக்கிறவரைப் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்காக, எத்தனை பேருடைய துவேஷத்தைச் சம்பாதித்துக் கொண்டாய்? எத்தனை பேருக்கு அடிமைத்தளையைப் பூட்டினாய்? ஸ்ப்பார்ட்டா ராஜ்யத்திலுள்ள அடிமைகள், தங்கள் எஜமானர் களான ஸ்ப்பார்ட்டர்களைப் பச்சையாகத் தின்றுவிடத் தயாராயி ருந்தார்களாம். அதாவது, ஸ்ப்பார்ட்டர்கள் விஷயத்தில் எவ்வளவு துவேஷம் இருந்ததென்பதை எடுத்துக்காட்டுவதற்கு இப்படிச் சொல்வதுண்டு முற்காலத்துக் கிரீஸில். மற்றவர்களுடைய மனிதத் தன்மையை அழித்துவிட்டு, அந்த அழிவின்மீது வாழ முற்பட்ட ஸ்ப்பார்ட்டா, இறுதியில் தானும் வீழ்ந்து கிரீஸின் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டது.
இந்த ஸ்ப்பார்ட்டா எங்கே இருக்கிறது? பெலொப்பொனே சியாவின் தென்பகுதிக்கு வாருங்கள். லாக்கோனியா என்று இதற்குப் பெயர். அழகும் வளமையும் நிறைந்த பிரதேசம். இந்த அழகை அரண்செய்து கொண்டிருக்கிறது டேகேட்டஸ் மலை; வளமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது யுரோட்டாஸ் ஆறு. இங்கு லாஸிடீ மோன் என்ற ஒரு கணவாய்ப் பிரதேசம் இருக்கிறது. இதன் பிரதான பட்டணம்தான் ஸ்ப்பார்ட்டா. இந்தப் பட்டணத்தின் பெயராலேயே, மேற்படி கணவாய்ப் பிரதேசத்தில் அமைந்த ராஜ்யம் அழைக்கப் பெற்றது; அதாவது ஸ்ப்பார்ட்டா ராஜ்யமென்று. (ஸ்ப்பார்ட்டா ராஜ்யமென்பது ஆரம்பத்தில் ஜந்து கிராமங்கள் கொண்டதாகவும் எழுபதினாயிரம் பிரஜைகளுடையதாகவும் இருந்தது. இப்பொழுதோ, ஏறக்குறைய இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நாலாயிரம் பேரைக் கொண்ட ஒரு குக் கிராமமாக இருக்கிறது). இங்ஙனமே, இந்த ஸ்ப்பார்ட்டா ராஜ்யத்துப் பிரஜைகள் லாஸிடீ மோனியர்களென்று அழைக்கப் பட்டார்கள். ஆக, ஸ்ப்பார்ட்டார் களென்றாலும் லாஸிடீமோனியர்களென்றாலும் ஒன்றுதான். (இங்ஙனமே ஸ்ப்பார்ட்டா ராஜ்யமென்றாலும் லாஸிடீமோன் ராஜ்யமென்றாலும் ஒன்றுதான். ஜூஸ் தெய்வத்தின் பிள்ளையாகிய லாஸிடீமோன் என்பவனால் இந்த ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட தென்பர் கிரேக்கர்).
இந்த ஸ்ப்பார்ட்டாவை, வடக்கேயிருந்து வந்த டோரியர்கள் காலக்கிரமத்தில் கைப்பற்றிக் கொண்டு லாக்கோனியா முழுவதிலும் ஆதிக்கஞ் செலுத்தலானார்கள். இங்கு அமைதியாக விவசாய ஜீவனம் நடத்தி வந்த பூர்வ குடிகளை எளிதிலே அடிமை கொண்டார்கள். வந்தவர்கள், இருந்தவர்களை உரிமையற்ற வர்களாகச் செய்துவிட்டு, தங்களுடைய ஆதிக்கம் மேலோங்கி நிற்கும்படியாகச் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு முந்நூறு வருஷம் கழிந்தது. ஸ்ப் பார்ட்டர்கள் - இவர்களை இனி ஸ்ப்பார்ட்டகளென்று அழைப்பது தானே பொருந்தும்? - நன்றாக ஊன்றிக் கொண்டார்கள். இவர்களு டைய செல்வாக்கு வளர்ந்தது. கூடவே இவர்களுடைய மண்ணா சையும் வளர்ந்தது. இதற்குத் தகுந்தாற் போல், ஜனப் பெருக்கம், நிலக்குறைவு முதலிய பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டது.
எனவே அடுத்தாற்போல் மேற்குப் பக்கத்திலிருந்த மெஸ் ஸீனியா (பாலிக்கோன் என்ற ஒருவன் தன் மனைவி மெஸ்ஸீனே என்பவளுடைய ஞாபகாத்தமாக கி.மு. 1500ஆம் வருஷம் இந்த ராஜ்யத்தை ஸ்தாபித்தானென்பர் கிரேக்கர்.) மீது படையெடுத் தார்கள். பாவம், மெஸ்ஸீனியர்கள் ஒரு குற்றமும் செய்தறியா தவர்கள். அவர் களுடைய நாட்டு வளர்ப்பமே, அவர்கள்மீது படையெடுக்கும்படி ஸ்ப்பார்ட்டர்களைத் தூண்டியது. ஒரு நாட்டினுடைய செழுமை, சில சமயங்களில் அதனுடைய அடிமைத் தனத்திற்குக் காரணமாகி விடுகிறது.
படையெடுத்து வந்த ஸ்ப்பார்ட்டர்களுக்குச் சுலபமாகப் பணிந்து விடவில்லை மெஸ்ஸீனியர்கள். 725 ஆம் வருஷத்திலிருந்து 705ஆம் வருஷம் வரை சுமார் இருபது வருஷ காலம் இடைவிடாது எதிர்த்துப் போராடினார்கள். முடிவில் தோல்வியே அடைந்தார்கள். ஸ்ப்பார்ட்டர்கள், மெஸ்ஸீனியா மீது ஆதிக்கங் கொண்டு விட்டார்கள்.
ஆனால் மெஸ்ஸீனியர்கள் சுலபமாக இந்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் சக்திகளனைத்தையும் ஒன்று திரட்டிக் கொண்டு, அடுத்த தலைமுறையில், ஸ்ப்பார்ட்டர்களுக்கு விரோத மாக ஒரு பெரிய புரட்சி செய்தார்கள். 640-ஆம் வருஷத்திலிருந்து 631-ஆம் வருஷம் வரை ஒன்பது வருஷ காலம் இந்தப் புரட்சி நடைபெற்றது. இதனைச் சிறிது கஷ்டப்பட்டே அடுக்கினார்கள் ஸ்ப்பார்ட்டகள். எப்படியும் அடக்கிவிட்டார்கள். ஆனால் இதி லிருந்து ஒரு பாடங்கற்றுக் கொண்டார்கள். இனியும் இந்த மாதிரி யான புரட்சிகள் நடைபெறாதிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
ஸ்ப்பார்ட்டர்களுக்கு அடிமைகளான லாக்கோனியர், மெஸ் ஸீனியர் ஆகிய ஸ்ப்பார்ட்டரல்லாதார் அனைவரும் பொதுவாக ஹெலட்டுகள் (ஹெலூஸ் என்ற ஊரிலிருந்தவர்களைத்தான் முதன் முதலாக அடிமை கொண்டார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். இது முதற் கொண்டு அடிமையானவர்கள் அனைவரையும் ஹெலட்டுகள் என்று அழைக்கலானார்கள்). என்று அழைக்கப்பட்டார்கள். அடி மைகள் என்பதே இதற்கு அர்த்தம். வெற்றிகொண்ட ஸ்ப் பார்ட்டர் களைக் காட்டிலும், வெற்றி கொள்ளப்பட்ட இந்த அடிமைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றுக்கு ஒன்பது விகிதம் அதிகமாயி ருந்தது. இதனால் இவர்கள் எந்தச் சமயத்திலும் தங்களுக்கு விரேதாமாகக் கிளம்பக் கூடுமென்ற பயம் ஸ்ப்பார்ட்டர் களுக்கு ஏற்பட்டது. இதற்கு என்ன வழி? எப்பொழுதும் யுத்தத் தயாரிப்பி லிருக்கின்ற வகையில் தங்களுடைய வாழ்க்கையை மாற்றி யமைத்துக் கொண்டு விட்டார்கள். ஸ்ப்பார்ட்ட சமுதாயம் ராணுவ சமுதாய மாகிறது. இந்த மாற்றத்திற்குக் காரணமாயிருந்தவன் லைக்கர்கஸ். இவன்தான் ஸ்ப்பார்ட்டாவின் புதிய வாழ்வுக்கேற்றபடி சட்ட திட்டங்களை இயற்றிக் கொடுத்தான். ஸ்ப்பார்ட்டாவின் முதல் சட்ட நிர்மாண கர்த்தன் இவன்.
2. முந்தியிருந்த நிலைமை
லைக்கர்கஸின் சட்டதிட்டங்களை அனுஷ்டானத்திற்கு வருவதற்கு முந்தி ஸ்ப்பார்ட்ட சமுதாயம் எப்படியிருந்ததென் பதைப் பற்றிச் சிறிது விசாரிப்போம்.
சமுதாயத்தில் மூன்று வகுப்பினர் இருந்தனர். முதல் அல்லது மேல் வகுப்பினர் ஸ்ப்பார்ட்டர்கள்; அதாவது அசல் டோரியர்கள். இவர்கள் பெரும்பாலும் தலைநகரத்திலேயே வசித்துக் கொண்டி ருந்தார்கள். கிராமாந்தரங் களில் இவர்களுக்குச் சொந்தமாக நில புலங்கள் நிறைய இருந்தன. ஹெலட்டுகளைக் கொண்டு இவற்றைச் சாகுபடி செய்வித்து, இவற்றிலிருந்து கிடைக்கிற வருமானத்தில் சுகஜீவனம் நடத்தி வந்தார்கள். அரசாங்க நிருவாகத்தை நடத்தி வந்தவர்கள் இவர்களே.
இவர்களுக்கு அடுத்தபடியாக மத்திய வகுப்பார் பெரியீஸி என்று இவர்கள் அழைக்கப்பட்டார்கள். சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று அர்த்தம். சொந்தப் பயிர் நடத்தி வந்த கிராமவாசிகள், வியாபாரம், தொழில் முதலியவற்றில் ஈடுபட்டிருந்த நகரவாசிகள் ஆகிய பலரும் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்கள். வரி செலுத்துதல், ராணுவ சேவை இரண்டும் இவர்களுடைய கடமைகள். ஆனால் நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமை இவர்களுக்குக் கிடையாது. அப்படியே ஆளுஞ் சாதியினருடைய விவாகத் தொடர்பு கொள்ளும் உரிமையும் இவர்களுக்கு இல்லை.
கடைசி வகுப்பினர் அல்லது கீழ்வகுப்பினர்தான், சமுதாயத் தில் பெரும்பாலோரான ஹெலட்டுகள். யுத்தக் கைதிகள், ஸ்ப்பார்ட்டர் களால் அடிமை கொள்ளப்பட்ட பழைய குடிகள் ஆகிய பலரும் இவ்வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள். இவர்களிற் பலர் நிலங்களில் உழைத்தார்கள்; சிலர் வீடுகளில் வேலை செய்தார்கள். யுத்த சமயங் களில் தங்கள் எஜமானர்களுக்காக யுத்த சேவை செய்யக் கடமைப் பட்டிருந்தார்கள். யுத்த களங்களில் திறமையாகப் போர் புரிந்தவர் களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால் பிரஜா உரிமை, அதாவது அரசாங்க நிருவாகத்தில் பங்குகொள்ளும் உரிமை பெற்றார் களா என்பது சந்தேகம். எப்படியும் இவர்கள் கேவலம் ஆடுமாடு களைப் போல் நடத்தப்படவில்லையென்று மட்டும் தெரிகிறது. விடுதலை பெறும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தார்களல்லவா? இருந்தாலும் அடிமைகள் என்ற உணர்ச்சி இவர்களுக்கு இருந்து கொண்டிருந்தது. இந்த உணர்ச்சியானது, பிரதிவருஷமும் ஏதோ ஒருவித கலகமாக வெளிப்பட்டு வந்தது.
லாக்கோனியாவின் மொத்த ஜனத்தொகை மூன்று லட்சத்து எழுபத்தாறாயிரம்; இதில் ஆளுங் சாதியினராகிய ஸ்ப்பார்ட்டர்கள், ஆண், பெண், குழந்தைகள் அடங்க முப்பத்திரண்டாயிரம் பேர்; மத்திய வகுப்பினராகிய பெரியீஸிகள் ஒரு லட்சத்து இருபதினா யிரம் பேர்; ஹெலட்டுகள் இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் பேர். இப்படி ஒரு கணக்கு கூறுகிறது. உத்தேசமான கணக்குதான். ஆயினும் இதைக் கொண்டு ஸ்ப்பார்ட்ட சமுதாயத்தின் அமைப்பை ஒருவாறு ஊகித்துக்கொள்ள முடிகிறதல்லவா? சிறுபான்மை யோரிடத்தில் பெரும்பாலான சொத்து சுதந்திரங்கள் இருக்கின்ற நாட்டில், எப்பொழுதும் அமைதிக் குறைவு இருந்து கொண்டுதான் இருக்கும். சிறுபான்மையோர் ஆபத்திலும், பெரும் பான்மையோர் அதிருப்தியிலும் வாழ்ந்து கொண்டிருப்பர்.
இந்த ஆபத்து, அதிருப்தி ஒரு பக்கம் இருந்து கொண்டி ருந்தாலும் ஸ்ப்பார்ட்டா ராஜ்யம், மற்ற கிரேக்க ராஜ்யங்களைப் போல, இசை, சிற்பம் முதலிய நுண்கலைகளில் அதிக சிரத்தை காட்டி வந்தது; நல்ல தேர்ச்சியும் அடைந்திருக்கிறது. பெரும்பாலும் வீரச் சுவையுள்ள பாடல்களிலேயே ஸ்ப்பார்ட்டர்கள் விருப்பங் கொண்டிருந்தார்கள். கூட்டமாகச் சேர்ந்து பாடுதல் என்கிற முறையை, அதாவது கோஷ்டி கானத்தை அதிகமாகக் கையாண்டவர்கள் ஸ்ப்பார்ட்டர்கள்; முதன்முதலாகக் கையாண்வர்க ளென்றும் சொல்லலாம். ஸ்ப்பார்ட்டர்களில் சிறந்த சிற்பிகள் பலர் இருந்தனர். ஒலிம்ப்பிய விளையாட்டில் வெற்றி பெற்றவனுக்கு முதன்முதலாக நிறுவப்பெற்ற உருவச்சிலையைச் செய்துகொடுத்தது ஒரு ஸ்ப் பார்ட்ட சிற்பிதான். இங்ஙனமே பல துறைகளிலும் ஸ்ப்பாட்டர்கள் வளமை பெற்றிருந்தார்கள்.
இந்தத் துறைகள் பலவற்றையும், மெஸ்ஸீனியர்கள் இரண் டாவது தடவை கலகத்திற்குக் கிளம்பினார்களே அதற்கு இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு திடுதிப்பென்று தூர்த்துவிட்டார்கள். போர்த்தன்மை ஒன்றையே பிரதானமாகக் கொண்டார்கள். போர்க்களத்தின் நடுவில் இருக்கிற மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். இவையனைத்திற்கும் காரணமா யிருந்தவனென்று கருதப்படுகிறவன்தான் மேலே சொன்ன லைக்கர்கஸ்.
3. லைக்கர்கஸ்
இந்த லைக்கர்கஸ் யார்? இப்படி ஒருவன் இருந்தானாவென்று சிலர் சந்தேகிக்கின்றனர். அப்படியிருந்தாலும், பரம்பரையாக ஒரு போக்கில் போய்க் கொண்டிருந்த பெரிய ஜன சமுதாயத்தை, அடியோடு வேறு போக்கில் திருப்பிவிடக்கூடிய மாதிரி புதிய சட்டதிட்டங்களை இவன் ஒருவனே இயற்றிக் கொடுத்திருப்பானா? கொடுத்திருக்க முடியுமா? இல்லை, ஸ்ப்பார்ட்டாவிலோ, இதர நாடுகளிலோ பரம்பரையாக அனுசரிக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, ஸ்ப்பார்ட்டாவின் புதிய நிலைமைக்கேற்ப, அவற்றிற்குச் சட்ட உருவம் கொடுத்த கௌரவம் மட்டும்தான் இவனுக்கு உண்டா? இவை யாவும் தெளிவு படாத விஷயங்களாகவே இருக்கின்றன. தவிர, இந்த லைக்கர்கஸ் எந்தக் காலத்தினன் என்பதையும் சரியாக நிச்சயிக்க முடியவில்லை. சாதாரணமாக கி.மு. ஒன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தானென்று சொல்வதுதான் சம்பிரதாயமாக இருந்து வருகிறது. அப்படியானால் கி.மு. ஏழாவது நூற்றாண்டின் பிற் பகுதியில் அமுலுக்கு வந்த சட்ட திட்டங்களுக்கு இவன் ஆசிரியன் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? இருநூற்றைம்பது வருஷங் களுக்குமேல் இவன் வாழ்ந்து கொண்டிருந்தானா? இந்த மாதிரியான கேள்விகள் எழுகின்றன. ஆக, இவன் காலமும் சரியாகத் தெரியவில்லை.
இவனுடைய வயதைப் பற்றியோ இவன் வாழ்ந்த காலத்தைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. இவன் புதிதாகச் சட்டங்களை வகுத்துக்கொடுத்தானா அல்லது பழைய சட்டங்களைத் தொகுத்துக் கொடுத்தானா வென்பதும் நமக்குத் தேவையில்லை. கி.மு. ஏழாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஸ்ப்பார்ட்டாவில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்கள் இவனுடைய பெயரைத் தாங்கி நின்றனவென்பது நிச்சயம். இதை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. பிற்காலத்து அரசியல் பண்டிதர்களான பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டல், ரூஸ்ஸோ ஆகிய பலரும், லைக்கர் கஸின் சட்டதிட்டங்களைப் பற்றித் தங்கள் நூல்களில் இவனைக் கௌரவப்படுத்தி யிருக்கிறார்கள். உரிய இடங்களில் இவனைக் கௌரவப்படுத்தியும் பேசியிருக் கிறார்கள். அப்படியானால் லைக்கர்கஸ் என்ற ஒருவன் இருந்தானென்பதில் இவர்கள் சந்தேகங் கொள்ளவில்லையென்று நிச்சயமாகத் தெரிகிறது. இவர் களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் இவனுடைய உண்மையில் சந்தேகங் கொள்ளாமல் இவனது வாழ்க்கையில் சிறிது கருத்தைச் செலுத்து வோமாக.
லைக்கர்கஸ், அரச குடும்பத்தைச் சேர்ந்தவனென்று தெரிகிறது. ஆனால் அரச பதவிக்கு இவன் ஆசைப்படவில்லை. ஜனங்களுடைய நலத்தையே பெரிதாகக் கருதினான். “கிரேக்க அறிஞனாகிய லைக்கர்கஸ் என்பவன் தனது நாட்டிற்குச் சட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு தனது அரசுரிமையைத் துறந்துவிட்டான்” என்று ரூஸ்ஸோ தனது சமுதாய ஒப்பந்தத்தில் கூறுகிறான். மற்றும், லைக்கர்கஸ், நிதானமும் நேர்மையும் உடையவனென்று தெரிகிறது. இவனுடைய சீர்திருந்த சட்டங்களை, அரச குடும்பத்தினர், அரசாங்க நிருவாகத்தை நடத்தி வந்த அதிகாரிகள் ஆகிய பலரும் அங்கீகரித்துக் கொண்டு விட்டார்கள்.
ஆனால் அல்க்காண்டர் என்ற ஒரு பணக்கார வீட்டு வாலிபன் மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. லைக்கர்கஸ் மீது கோபம் வந்துவிட்டது அவனுக்கு. ஒரு கண்ணைக் குத்திவிட்டான். லைக்கர் கஸ் இதற்காக வருத்தப்படவில்லை. புண்பட்ட கண்ணோடு ஜனங்கள் முன்னிலையில் வந்து நின்றான். இந்த ஒற்றைக் கண் கோலத்தைக் கண்டு ஜனங்கள் வெட்கமடைந்தார்கள். நன்மை செய்தவனுக்கு இப்படித் தீங்கு செய்யலாமா என்று அல்க்காண்டர் மீது கோபங் கொண்டார்கள். அவனை லைக்கர் கஸிடம் ஒப்பு வித்து “உங்களிஷ்டப்படி இவனுக்குத் தண்டனை விதியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். லைக்கர்கஸ், அல்க் காண்டரை, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். அவ னிடம் ஒரு கடுமையான வார்த்தை கூடச் சொல்லவில்லை. வீட்டில் தன்னோடு இருந்து வருமாறு கூறினான். லைக்கர்கஸுடன் நெருங்கிப் பழகும்படியான சந்தர்ப்பம் அல்க்காண்டருக்குக் கிடைத்தது. இவனுடைய அன்பும் நிதானமும் உழைப்பும் அல்க்காண்டரைப் புதிய மனிதனாக்கின. இவனைத் தனது குருநாதனாக ஏற்றுப்போற்றி வந்தான் ஆயுளுள்ளளவும்.
இன்னொரு சமயம் ஒரு தீவிரவாதி, லைக்கர்கஸை அணுகி ‘ஏன் ஐயா பரிபூரண ஜனநாயக அரசியலை அமுலுக்குக் கொண்டு வரக் கூடாது’ என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு லைக்கர் கஸ், நிதானமாக, ‘அப்பனே, முதலில் உன் வீட்டில் அதை அமுலுக்குக் கொண்டுவா; பிறகு நாட்டில் அமுலுக்குக் கொண்டு வரலாம்’ என்றான். இப்படி அந்தத் தீவிரவாதி ஆத்திரப்படுவானேன் என்று வாசகர்களுக்குச் சந்தேகம் உண்டாதல் கூடுமல்லவா? லைக்கர்கஸ் வகுத்த அரசியல் திட்டத்தில், மன்னராட்சி, மேன்மக்களாட்சி, குடியாட்சி, ஆகிய மூன்று அமிசங்களும் கலந்திருந்ததுதான் அந்தத் தீவிரவாதியின் ஆத்திரத்திற்குக் காரணம். இந்த மூன்று அமிசங்களும் கலந்திருந்ததனாலேயே, லைக்கர்கஸின் அரசியல் திட்டம் நீடித்த காலம் நிலைபெற்றிருந்தது என்று முற்காலத்துக் கிரேக்க அறிஞர்கள் பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள்.
4. அரசியலமைப்பு
இந்த மூன்று அம்சங்களும் கலந்த அரசியலமைப்பு எப்படி யிருந்த தென்பதை அறிய, வாசகர்களே, உங்களுக்கு ஆவல் உண்டா கிறதல்லவா? ஸ்ப்பார்ட்டாவில், நீண்ட காலமாகவே, அதாவது லைக்கர்கஸுக்கு முந்தி யிருந்தே மன்னராட்சி முறை இருந்து வந்தது. இதில் ஒரு விநோத மென்னவென்றால், வேறு வேறு பரம்பரையைச் சேர்ந்த இரண்டு அரசர்கள் ஒரே சமயத்தில் ஆண்டு வந்தார்கள். இந்த முறையை அப்படியே நிலைபெறச் செய்தான் லைக்கர்கஸ். இந்த இரண்டு அரசர்களுக்கும் அதிகமான கௌரவம் இருந்ததே தவிர அதிகமான அதிகாரங்கள் இருக்கவில்லை. இவர்கள் மதத் தலைவர்களாகவும் இருந்து வந்தார்கள். திரு விழாக்களில் இவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. யுத்த காலங்களில், படைகளுக்குத் தலைமை வகித்துச் செல்ல இவ்விரு அரசர்களும் கடமைப்பட்டிருந்தார்கள்.
அரசர்களுக்கு அடுத்தப்படியாக ஐந்து அதிகாரிகள் இருந் தார்கள். இவர்களுக்கு எப்ஹோர்கள் என்று பெயர். நிருவாக மேலதி காரிகள் என்று இதற்கு அர்த்தம் சொல்லலாம். மந்திரிகளைப் போன்றவர்கள், மந்திரிகளுக்கு மேலானவர்கள் என்றும் இவர் களைக் கூறல் தகும். இந்த ஐந்து எப்ஹோர்களும், ஆண்டுதோறும் ஸ்ப்பார்ட்டப் பிரஜைகளால் தெரிந்தெடுக்கப் பட்டவர்கள். அரசாங்க அதிகாரங்கள் பூராவும் இவர்கள் கையிலேயே இருந்தன. அரசர்கள் தவறு செய்துவிட்டால் அவர்களை விசாரித்துத் தண்டிக்கின்ற அதிகாரமும் இவர்களுக்கு இருந்தது. யுத்த களத்திற்கு அரசர்கள் சென்றால் கூடவே இரண்டு எப்ஹோர்கள் செல்ல வேண்டுமென்ற கட்டாயமுண்டு. அந்நிய நாடுகளுடன் எத்தகைய தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டு மென்பதை நிர்ணயிப்பது, சட்டங்களுக்கு வியாக்கியானஞ் செய்வது, முக்கியமான வழக்கு களில் தீர்ப்பளிப்பது முதலிய பல அதிகாரங்களும் இந்த ஐவரடங்கிய சபைக்கு இருந்து வந்தது. (இந்த ஐவர் குழுவினைப் பஞ்சாயத்து என்றும் எப்ஹோர்களைப் பஞ்சாயத்தார் என்றும் கூறலாமா?)
இந்த ஐவர் சபைக்கு அடுத்தபடியாக இரண்டு சட்டசபைகள், தற்கால அரசியல் அமைப்புகளில் மேல்சபை கீழ்ச்சபை என்று இரண்டு சபைகள் இருக்கின்றனவல்லவா, இவைபோலவே ஸ்ப்பார்ட்டாவிலும் இருந்தன. மேல்சபைக்கு ஜிரூஷ்யா என்று பெயர். மூத்தோர் சபையென்று அர்த்தம். உண்மையில் இது மூத்தோர் சபைதான். அறுபது வயதுக்கு மேற்பட்டவர் இதில் அங்கத்தினராயிருக்க அருகதையுடையவர். இவர்கள் தெரிந் தெடுக்கப்பட்ட அங்கத்தினார்களாகவே இருந்தார்கள். ஆனால் யாரால் தெரிந்தெடுக்கப் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் மேன்மக்களாகவே, அதாவது நற்குடிப் பிறந்தவராகவே இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்து வந்தது. இதனால் இவர் களைத் தெரிந்தெடுத் தவர்களும் மேன்மக்களாகவே, அதாவது ஆளுஞ் சாதியினர் என்று மேலே சொல்லப்பட்ட ஸ்ப்பார்ட்டர் களாகவே இருந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். இந்த மூத்தோர் சபையில் இரண்டு அரசர்கள் உள்பட மொத்தம் முப்பது அங்கத்தினர்கள் இருந் தார்கள். இவர்கள் ஆயுட்கால அங்கத்தி னர்கள். அரசாங்கத்தின் கொள்கைகளை நிர்ணயிப்பது, புதிய சட்டங்களை நிர்மாணஞ் செய்வது, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்ற வழக்குகளில் விசாரணை செய்து தீர்ப்பளிப்பது முதலிய பல அதிகாரங்கள் இந்த மூத்தோர் சபையிடம் இருந்தன.
இதற்கடுத்தது கீழ்ச்சபை; அதாவது ஜனசபை. அப்பெல்லா என்று இதற்குப் பெயர். முப்பது வயதுக்கு மேற்பட்ட எல்லா ஸ்ப்பார்ட்டப் பிரஜைகளும் இதில் அங்கத்தினர்கள். லாக்கோனி யாவின், அதாவது ஸ்ப்பார்ட்டா ராஜ்யத்தின் மொத்த ஜனத்தொகை ஒரு காலத்தில் உத்தேசமாக மூன்று லட்சத்து எழுபத்தாறாயிரமாக இருந்திருக்கலாமென்று மேலே சொன்னோமல்லவா, இவர்களில் சுமார் எண்ணாயிரம் பேர் - ஆண்கள் மட்டுமே - இதில் அங்கத்தின ராயிருந்தனரென்று ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று இந்த அப்பெல்லா கூடும். அரசாங்கம் எடுத்துக்கொள்ளுகின்ற எந்த ஒரு நடவடிக்கையும், இயற்றுகின்ற எந்த ஒரு சட்டமும் இதன் அங்கீகாரத்தைப் பெற்று, பின்னரே அமுலுக்கு வரவேண்டுமென்பது நியதி. ஆனால் இஃதொரு சம்பிர தாய மாகவே இருந்துவந்தது. அரசாங்கத் தலைவர்கள் சொல்வதற் கெல்லாம் தலையசைக்கின்ற ஒரு பொதுக் கூட்டமாகவே இஃது இருந்து வந்தது.
5. வாழ்க்கையமைப்பு
இனி, லைக்கர்ஸ், ஜனங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு புகுத்தினானென்பதைக் கவனிப்போம். பிரதியொரு ஸ்ப்பார்ட்டனும் சகிப்புத் தன்மையுடைய ஒரு போர் வீரனாக இருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்காக, இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக, குழந்தைப்பருவத்திலிருந்தே கடுமையான முறைகள் விதிக்கப்பட்டன. ஒரு குழந்தை பிறந்தவுடன், அதனைச் சில பெரியோர்கள் கூடிப் பரிசோதனை செய்வார்கள். பலவீனமான குழந்தையா யிருக்கும் பட்சத்தில் டேகேட்டஸ் மலையடிவாரத்தில் கொண்டுபோய் விட்டு விடும்படி சொல்வார்கள். அது குளிரில் அங்கே விறைத்துச் சாக வேண்டியதுதான். பலவீனர்களுக்கு உயிர் வாழ உரிமை கிடையாது ஸ்ப்பார்ட்டாவில். திடசாலியான குழந்தைதான் அதன் தாயார் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். ஏழு வயது வரையில் அதனைப் பராமரித்து வருவாள் அவள். இது விஷயத்தில் ஸ்ப்பார்ட்டத் தாய்மார்கள் மற்றக் கிரேக்கத் தாய்மார் களுக்கு வழிகாட்டிகளாக இருந்தார்களென்றே சொல்ல வேண்டும்.
குழந்தை பராமரிப்பு விஷயத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா விஷயங்களிலும் ஸ்ப்பார்ட்டத் தாய்மார்கள் முற்போக்குடையவர் களாயிருந்தார்கள். வீரச் செயல்கள் புரிவதிலாகட்டும், அரசியல் விவகாரங் களைப் பற்றித் திறம்படப் பேசுவதிலாகட்டும், ஆண் களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களாயில்லை ஸ்ப்பார்ட்டப் பெண்கள். மற்றும் ஸ்ப்பார்ட்டாவில் பெண் மக்களுக்குச் சொத் துரிமை உண்டு. இதனால் அவர்கள் சுதந்திரத்தோடு வாழ முடிந்தது. ஸ்ப்பார்ட்டா ராஜ்யத்தின் மொத்தச் செல்வத்தில் ஏறக்குறைய பாதி, ஸ்திரீகளுடையதாயிருந்ததென்கிறான் ஓர் ஆசிரியன்.
ஏழு வயதானதும், ஆண் குழந்தைகளை அரசாங்கத்தின் வசம் ஒப்புவித்துவிட வேண்டும். பெண் குழந்தைகளை மட்டும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். வீட்டிலே வைத்துக் கொண்டிருந்தாலும், ஆடல் பாடல்களிலும், கடினமான உழைப்பை மேற்கொள்வதிலும் அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டுவது தாய்மாரின் வலிமையில்தான் இருக்கிறதென்பது ஸ்ப்பார்ட்டர் களின் கருத்து. சுருக்கமாகப் பிரதியொரு ஸ்ப்பார்ட்டப் பெண்ணும், பிற்காலத்தில் தனது தாய்மைக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டி ருக்கிற வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாள்.
ஆண்பிள்ளைகள் அரசாங்கத்தின் பராமரிப்புக்குட் பட்டதும், அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த பள்ளிக் கூடங்களில் சேர்க்கப்படுவான். ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் ஏறக் குறைய அறுபது பிள்ளைகளுக்குக் குறையாமல் இருப்பார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு ராணுவ முகாம் என்று சொல்லலாம். ராணுவ முறையிலேயே இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. எல்லோரும் ஒன்றாகவே உண்பார்கள்; ஒரே இடத்திலேயே படுப்பார்கள். துணிச்சல், தைரியம் ஆகிய இப்படிப் பட்ட தன்மைகளெல்லாம் இவர்களுக்கு உண்டாகும்படி பழக்கப் படுத்தப் பட்டார்கள். இதற்காக இவர்களுக்கு மிதமான ஆகாரமே கொடுக்கப்பட்டது. அதிகப்படியாகச் சாப்பிட விரும்பு கிறவர்கள், சுற்றுப்புறத்திலுள்ள வயற்காடுகளிற் சென்று தானியங்களைத் திருடிக்கொண்டு வர வேண்டும். ஆனால் யாரிடமும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. அகப்பட்டுக் கொண்டால் அவமானம் மட்டு மல்ல; தண்டனையும் கிடைக்கும்.
மற்றும் இளைஞர்கள், எல்லாவித கஷ்ட நிஷ்டூரங்களுக்கும் ஈடு கொடுக்கும்படியாகப் பயிற்சி செய்யப்பட்டார்கள். வெளியில் எங்குப் போனாலும் வெறுங் காலுடனேயே போக வேண்டும்; மிதியடி போட்டுக் கொள்ளக் கூடாது. கோடைக் காலத்திற்கும் குளிர் காலத் திற்கும் ஒரே உடைதான். கோரைப் புற்களைப் பரப்பிக்கொண்டு அதன்மேல்தான் படுக்கவேண்டும். எப்பொழுதும் பிரவாகம்போல் ஓடிக்கொண்டிருக்கும் யுரோட்டாஸ் நதியில் எதிர்த்து நீந்தப் பழக வேண்டும். குத்துச்சண்டை, மல்யுத்தம், நீண்ட தூர ஓட்டம் முதலிய விளையாட்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தப் பள்ளிக்கூடங்களில் கல்விப் பயிற்சிக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படவில்லை. ஏதோ அற்பசொற்பமாக எழுதவும் படிக்கவும் கணக்குப் போடவும் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள் இளைஞர்கள். எல்லாவற்றையும் மனப்பாடஞ் செய்ய வேண்டு மென்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். தன்னுடைய சட்ட திட்டங்களை எல்லாப் பிரஜைகளும் மனப்பாடமாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமென்றே லைக்கர்கஸ் விரும்பினான். மற்றும் இளைஞர்கள், சாமர்த்தியமாகப் பேசினால் அதற்காக அவர்களை யாரும் பாராட்டப்பட மாட்டார்கள். மற்றக் கிரேக்க ராஜ்யங்களில் நாவன்மைக்கு அதிகமான ஆதரவு இருந்தது; நாவலர்கள் பெரிதும் கௌரவிக்கப்பட்டார்கள். ஆனால் ஸ்ப் பார்ட்டாவில் இதற்கு நேர் விரோதம். அழகான பேச்சைக் காட்டி லும் நிதானமான செயலிலேதான் பெருமை கண்டார்கள் ஸ்ப் பார்ட்டார்கள். இவர்களின் சுருக்கமான, விஷயத்தோடு ஒட்டிய பேச்சுமுறை பிற்காலத்தில் ஒரு பழமொழியாகி விட்டது.
பதினெட்டு வயதுவரை இங்ஙனமே இளைஞர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் முப்பது வயதுவரை சுயேச்சையாக வாழ்க் கையை நடத்துமாறு செய்யப்பட்டார்கள். இந்தக்காலத்தில் இவர் களுடைய ஆகாரத்தை இவர்களே தேடிக் கொள்ள வேண்டும். அவசியமானால் திருடியும் சாப்பிடலாம். அகப்பட்டுக் கொண்டால் மட்டும் கசையடி. பெரியோர்களுடன் பழகுவதற்கு இந்தக் காலத்தில் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டன.
முப்பது வயதுக்குமேல் ஆண்களும் இருபது வயதுக்குமேல் பெண்களும் விவாகஞ் செய்துகொள்ளலாம். குடும்ப வாழ்க்கையில் ஒருவன் ஒருத்தியோடு வாழ வேண்டுமென்கிற நியதி அவ்வளவு கண்டிப்பாக அனுஷ்டிக்கப்பட வில்லையென்று தெரிகிறது; நல்ல சந்ததிகள் உற்பத்தியாக வேண்டு மென்பதற்காக, ஒரு புருஷன், தன் மனைவியை வேறொரு புருஷனிடம் விட்டுவைப்பதில் தவறொன்று மில்லை யென்றே ஸ்ப்பார்ட்டர்கள் கருதி வந்தார்கள்.
ஸ்ப்பார்ட்டாவின் விசேஷமான அமிசம் பொது உணவுச் சாலை, முப்பது வயதுக்குமேல் அறுபது வயதுக்குட்பட்ட ஆண்கள் அனைவரும் இதில்தான் தினந்தோறும் உணவு உட் கொள்ள வேண்டும். பிரஜா உரிமையுடைய ஸ்ப்பார்ட்டர்களுக்கு மட்டுமே இந்த கட்டாய விதி. சாப்பிடுகின்ற ஒவ்வொருவரும், குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட ஓர் அளவு தானியங் களைத் தங்கள் பங்காக இதற்குக் கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறுகின்ற வர்களின் பிரஜா உரிமை ரத்து செய்யப்பட்டு விடும்.
சாப்பாடு மிகவும் எளிய முறையிலேயே இருந்தது. வியஞ்சன வகைகள் இல்லையென்றே சொல்லலாம். தேவைக்காகச் சாப்பிட வேண்டுமே தவிர சுவைக்காகச் சாப்பிடுவதென்பது கூடாதென்ற நியமத்தைக் கண்டிப்பாக அனுசரித்து வந்தனர் ஸ்ப்பார்ட்டர்கள்; தவிர மிதமாகவும் புசித்து வந்தார்கள். தொந்தி பருத்தவர்களைக் காண்பதரிது ஸ்ப்பார்ட்டாவில். அப்படி ஏகதேசமாக ஓரிருவர் இருந்தால் அவர்களை அரசாங்கம் கண்டித்தது; சில சமயங்களில் தேசப் பிரஷ்டமும் செய்தது.
ஸ்ப்பார்ட்டர்கள் மதுபானத்தை அறவே வெறுத்து வந்தார்கள். இதனால் உண்டாகிற தீமைகளை இளைஞர்கள் பிரத்தியட்சமாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக, ஹெலட்டுகளை நன்றாகக் குடிக்கச் செய்து மதி மயங்கிக் கிடக்கும்படி செய்வார்கள். நாமும் இப்படித் தான் பிரக்ஞையற்று விழுந்து கிடக்க வேண்டியிருக்குமென்பதை இளைஞர்கள் நன்கு உணர்ந்துகொண்டு அதன் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்கள்.
உண்டியைப் போலவே, உடை, இருப்பிடம் முதலிய எல்லா வற்றிலும் எளிமையைக் கடைப்பிடித்தார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். வாழ்க்கையில் சுகத்தை மட்டுமே தேடிக் கொண்டு சென்றால் அது சோம்பேறித்தனத்திலே கொண்டு போய்விடும். சோம்பேறி வாழ்க்கை நோய்வாய்ப்பட்ட வாழ்க்கையல்லவா? நோய்வாய்ப்படுவதும், அதற்காக மருந்து சாப்பிடுவதும் எவ்வளவு கேவலம்? இத்தகைய கருத்துக்கள் ஸ்ப்பார்ட்டர்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதி பலித்துக் கொண்டிருந்தன.
அதிகமானப் பணஞ்சம்பாதிப்பது, ஆஸ்தி சேர்ப்பது ஆகிய இவை போன்றவனவெல்லாம் ஸ்ப்பார்ட்டாவில் முடியாது. ஏழை களென்றும் பணக்காரர்களென்றும் இருந்தார்கள்; ஆனால் இவர் களுக்கிடையே அதிகமான வித்தியாசம் இருக்கவில்லை. அப்படி யிருந்த சொற்ப வித்தியாசமும் வெளிப்படையாக இருக்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரிதான் உடுத்தார்கள்; புசித்தார்கள்; வாழ்க் கையை நோக்கினார்கள். அதாவது என்ன? ஒவ்வொரு ஸ்ப்பார்ட்ட னும் ஒரு போர் வீரனாயிருந்தான். போர்த்தொழிலைத் தவிர மற்றத் தொழில்களைக் கேவலமென்று கருதினான். ஸ்ப்பார்ட்டாவில் விவ சாயத்தைப் போலவே, வியாபாரத்தையும் ஸ்ப்பார்ட்டரல்லாதாரே செய்து வந்தார்கள். இந்த வியாபாரமும் அப்படிப் பிரமாதமாக இல்லை; ஏதோ அற்ப சொற்பமாக நடந்து வந்தது.
வியாபாரத் துறையிலே ஈடுபடாத காரணத்தினால், ஸ்ப் பார்ட்டர்களுக்கு வெளிநாட்டாருடன் அதிக தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது. அப்படித் தொடர்பு கொள்வது அனாவ சியம் என்று எண்ணி வந்ததால், அவர்கள் அந்தக் காரியத்தை விரை விலே முடித்துக்கொண்டு திரும்பிப் போய்விட வேண்டும். அப்படியே ஸ்ப்பார்ட்டர்களில் யாரேனும் வெளிநாடுகளுக்குப் போக விரும் பினால், அரசாங்கத்தின் முன் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும். இந்த விதிகள் கண்டிப்பாக அனுஷ்டிக்கப்பட்டன.
இத்தகைய கண்டிப்பு, எளிமை முதலிய எல்லாமிருந்தும், ஸ்ப்பார்ட்டர்களிடத்தில், பணத்திற்கும் புகழுக்கும் எளிதிலே வசப்பட்டு விடுதல், நன்றி மறத்தல், பழி வாங்குதல் முதலிய சிறிய தன்மைகள் நிறைந்திருந்தன. லஞ்சம் வாங்கின அரசாங்க அதிகாரி களையும் துரோகம் செய்த போர்வீரர்களையும் அடிக்கடி ஸ்ப் பார்ட்ட சரித்திரத்தில் சந்திக்கிறோம்.
ஸ்ப்பார்ட்டர்கள், போர்த் தன்மையைப் போற்றி வளர்த்தது போல மனிதத் தன்மையைப் போற்றி வளர்த்திருப்பார்களானால் கிரேக்க சரித்திரத்தின் போக்கு வேறுவிதமாகத் திரும்பியிருக்கும்.
6. பெலொப்பொனேசிய சமஷ்டி
போர்த்தன்மைக்குப் பெருமை கொடுத்து, அதனைப் பேணி வந்த ஸ்ப்பார்ட்டா, தலைசிறந்த காலாட்படை யொன்றை வைத்துக் கொண்டிருந்ததில் என்ன ஆச்சரியம்? இந்தக் காலாட்படையை முன்மாதிரியாகக் கொண்டு, மற்றக் கிரேக்க ராஜ்யங்கள், தங்கள் காலாட்படையை அமைத்துக்கொள்ளப் பார்த்தன; சில அமைத்தும் கொண்டன. ஆனால் ஸ்ப்பார்ட்ட காலாட்படைக்கு ஈடாக எது வும் வர முடியவில்லை. ஸ்ப்பார்ட்ட வீரர்கள் கையாண்ட போர்த் தந்திரங் களையும், யுத்த களத்தில் அவர்கள் அணிவகுத்து நின்ற மாதிரியையும் கண்டு மற்றக் கிரேக்கர்கள் மலைத்தே போனார்கள்.
இந்தப் படைபலத்தைக் கொண்டு, ஸ்ப்பார்ட்டா, பெலொப் பொனேசியாவி லுள்ள ராஜ்யங்களின் மீது தனது செல்வாக்கைத் திணிக்க முன்வந்தது. இதை முன்னிட்டு, உத்தேசமாக 560-ஆம் வருஷத்திலிருந்து 550-ஆம் வருஷத்திற்குள், தனக்கு வடக்கேயுள்ள டேஜியா என்ற ராஜ்யத்தின்மீதும், பிறகு ஒரு பத்து வருஷங் கழித்து, அதற்கு வடக்கேயுள்ள ஆர்கோஸ் ராஜ்யத்தின் மீதும் முறையே போர் தொடுத்தது; இறுதியில் வெற்றி கண்டது. ஆனால் இந்த ராஜ்யங்களைத் தனது ஆக்கிரமிப்புக்குட்படுத்திக் கொள்ளவில்லை. பொதுவாகவே ஸ்ப்பார்ட்டா, மெஸ்ஸீனியாவை ஆக்கிரமித்துக் கொண்டபிறகு, ஆக்கிரமிப்பு ஆசையைச் சிறிது குறைத்துக் கொண்டு விட்டதென்றே சொல்ல வேண்டும். ஏதோ சில்லரையாகச் சில ராஜ்யங்களை, அதுவும் தன்னைச் சுற்றியிருந்த சில ராஜ்யங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு நின்றுவிட்டது. இதற்குப் பதிலாக, மற்ற ராஜ்யங்களின் மீது தனது செல்வாக்கைத் திணிக்க ஆசை கொண்டது. ஆக்கிரமிப்பு என்றாலென்ன, அரசியல் செல்வாக்கைத் திணித்தல் என்றாலென்ன, இரண்டும் ஒன்றுதான்.
ஆர்கோஸ் மீது வெற்றிகொண்ட பிறகு அதாவது கி.மு. ஆறாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், ஸ்ப்பார்ட்டாவின் செல்வாக்கு, பெலொப் பொனேசியாவில், ஏன் கிரீஸ் முழுவதிலும் மிகவும் ஓங்கி உயர்ந்திருந்தது. அவ்வப்பொழுது சில ராஜ்யங்கள் இதனுடைய உதவியை நாடின. இந்தச் செல்வாக்கு சுமார் இருநூறு வருஷ காலம் வரை, நிச்சயமாக 380-ஆம் வருஷம் வரை ஒருவாறு நிலைபெற்றிருந்ததென்று சொல்ல வேண்டும்.
தனக்கு ஏற்பட்ட இந்தச் செல்வாக்கைச் சிதறவிடாமல் ஒரு முகப்படுத்தி வைத்துக் கொண்டது ஸ்ப்பார்ட்டா. இதுதான் இதனு டைய சமத்காரம். பெலொப்பொனேசியாவிலுள்ள ராஜ்யங்கள் பல வற்றையும் கொண்ட ஒரு சமஷ்டியை ஸ்தாபித்தது. இதற்கு பொலொப்பொனேசியாவுக்கு சமஷ்டி என்று பெணர். சிறிது காலத் திற்குப் பிறகு, பெலொப்பொனேசியாவுக்கு வெளியே இருந்த ஓரிண்டு ராஜ்யங்களும் இதில் சேர்ந்து கொண்டன. உதாரணமாக, இந்தச் சமஷ்டி தோன்றிய சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர், ஆத்தென்ஸ் ராஜ்யம் இதில் சேர்ந்துகொண்டது; இல்லை; இல்லை சேர்ந்து கொள்ளும்படியான நிர்ப்பந்தத்திற்குட்பட்டது, மற்றும் இந்தச் சமஷ்டியில், கொரிந்த்தியாவும், மெகாராவும் சேர்ந்து கொண்டன. கொரிந்த்தியா, ஸ்ப்பார்ட்டாவுக்கு அடுத்தபடி இதில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அக்கீயாகவும் ஆர்கோஸும் இதில் சேராமல் ஒதுங்கியிருந்தன.
இந்தச் சமஷ்டி, எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டதென்பது நிச்சயமாகத் தெரியவில்லை; உத்தேசமாக 550ஆம் வருஷம் இருக் கலாமென்று ஊகிக்கப் படுகிறது.
இந்தச் சமஷ்டிக்கு ஸ்ப்பார்ட்டாவே தலைமை வகித்த தென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதன் கூட்டங்கள் ஸ்ப்பார்ட்டாவிலேயே நடைபெற்றன. அந்நிய நாடுகள் சம்பந்தமாக இஃது அனுசரிக்க வேண்டிய கொள்கைகளைப்பற்றித் தீர்மானிக்கிற பொறுப்பு, ஸ்ப்பார்ட்டாவின் கீழ்ச் சபையாகிய அப்பெல்லாவுக்கே விடப்பட்டிருந்தது.
இப்படிப் பல வகையிலும், தன்னுடைய முக்கியத்துவத்தை யும் முதன்மையையும் ஊர்ஜிதம் செய்துகொண்ட போதிலும், ஸ்ப் பார்ட்டா, சமஷ்டியைச் சேர்ந்த ராஜ்யங்களின் தனி உரிமையைப் பகிரங்கமாக அலட்சியம் செய்யவில்லை. கூடிய மட்டில் அவற்றைக் கௌரவமாகவே நடத்திவந்தது. அவற்றின் ஆட்சி முறையிலும், மற்ற உள்நாட்டு விவகாரங்களிலும் நேரடியாகத் தலையிடவில்லை. ஆனால் ஒவ்வொரு ராஜ்யத்திலும், தனக்குச் சாதகமான ஒருசிலர் ஆட்சியென்று அழைக்கப்படுகிற பணக்காரர் ஆட்சிநிலை பெறு வதற்கும் நடைபெறுவதற்கும், தன்னுடைய செல்வாக்கு அனைத்தை யும் உபயோகப்படுத்தி வந்தது. மற்றும், ஜனஆட்சிக்குச் சாதகமான எண்ணங்களும் சக்திகளும் எங்கும் வளரவொட்டாதபடி தடை செய்தும் வந்தது.
ஸ்ப்பார்ட்டா, எப்பொழுதுமே, எங்குமே, ஒருசிலர் ஆட்சியை ஆதரித்து வந்தது. இதற்கு எதிராக, ஆத்தென்ஸ் எங்கணும் எஞ் ஞான்றும், ஜன ஆட்சிக்கு ஊக்கம் அளித்து வந்தது. அடுத்த நூற்றாண்டில், இவ்விரு ராஜ்யங்களுக்கும் ஏற்பட்ட பலத்த பிணக்குக்கு, இந்தக் கொள்கை வேற்றுமையே முக்கியக் காரணம்.
அடுத்து, ஆத்தென்ஸுக்கு விரைவோம்.
ஆத்தென்ஸ்
1. அட்டிக்காவின் ஆதி சரித்திரம்
பெலொப்பொனேசியாவுக்குச் சற்று வடமேற்கிலுள்ளது அட்டிக்கா. இதுவும் ஒரு தீபகற்பம். இதனையும் பெலொப்பொ னேசியாவையும் இணைத்து வைப்பது கொரிந்த்திய பூசந்தி. இந்தப் பூசந்திக்குத் தென்கிழக்கில் எப்படி ஸ்ப்பார்ட்டா ராஜ்யம் ஸ்திரப் பட்டும் செல்வாக்கடைந்தும் வந்ததோ அதைப்போல், அதே காலத்தில், அதற்குப் போட்டியாக, வடமேற்கில் ஆத்தென்ஸ் ராஜ்யம், அட்டிக் காவின் பிரதான பட்டினம் ஆத்தென்ஸ். இங்கு அமைந்த ராஜ்யத்தின் பெயராலேயே அட்டிக்கா முழுவதும் அழைக்கப்பட்டது. அதாவது ஆத்தென்ஸ் ராஜ்யமென்று.
அட்டிக்கா, வறண்ட பூமி; பயிர்த்தொழிலுக்குப் பிரயோஜன மில்லாத இடம். ஆனால் சுத்தமான காற்றோட்டத்தின் காரணமாக வாசத்திற்குத் தகுதியுடைய தாயிருந்தது. ஆங்காங்கு நகரங்கள் பல தோன்றின. இந்த நகரங்களில் சுறுசுறுப்பும் விடாமுயற்சியுமுடைய ஜனங்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். டோரியர்கள் படை யெடுப்புக் காரணமாக அட்டிக்காவில் வந்து குடியேறிய ஐயோனியர் களுக்கும் இவர்களுக்கும் ரத்தக் கலப்பு ஏற்பட்டது. புதுக்குடியின ரென்றும் பழங்குடியினரென்றும் வித்தியாசமில்லாமல் ஒரே இனத்தினராகி விட்டார்கள் சிறிது காலத்திற்குள். எல்லோரும் ஒரு நாட்டு மக்கள் என்ற உணர்ச்சி இவர்களிடத்தில் ஓங்கி நின்றது. இவர்கள் நான்கு ஜாதியினராகப் பிரிந்திருந் தார்கள். ஒவ்வொரு ஜாதியினரும், தனித்தனிப் பரம்பரையைச் சேர்ந்தவர் களென்று சொல்லிக் கொண்டார்கள். தனித்தனிக் கடவுளைத் தொழுதார்கள். தனித்தனித் தலைவனுக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். இந்த நான்கு ஜாதிகளுக் குள்ளும் மொத்தம் முந்நூற்றறுபது உட்பிரிவுகள் இருந்தன.
ஆத்தென்ஸ் ராஜ்யத்தின் சரித்திரம் கி.மு. ஏழாவது நூற் றாண்டின் இடைக்காலத்திலிருந்துதான் ஒருவாறு துவக்கம் பெறுகிறது. இதற்கு முன்னர் இங்கு மன்னர் பலர் ஆண்டதாகவும், இவர்களும் குடிமக்களும் பரஸ்பரம் விசுவாசமுடையவர்களா யிருந்தார்களென்றும் தெரிகின்றன. ஓரிரண்டு அரசர்களைப் பற்றி மட்டும் கூறுவோம்.
உத்தேசமாக கி.மு. 1250-ஆம் வருஷம் தீஸூஸ் என்ற ஓர் அரசன் ஆண்டுகொண்டிருந்தான். சுத்த வீரன். இவன் காலத்தில் அட்டிக்கா வில் பன்னிரண்டு கிராமங்கள் இருந்தன. இந்தப் பன்னிரண்டு கிராமங் களையும் இவன் ஒன்று சேர்த்து ஆத்தென்ஸின் ஆளுகைக் குட்படுத்தினான். உண்மையில் ஆத்தென்ஸ் ராஜ்யத்தை ஸ்தாபித் தவன் இவனே என்று சொல்ல வேண்டும். இங்ஙனம் ஒரு ராஜ்யத்தின் பிரஜைகளாகச் சேர்ந்த அனைவரும் ஆத்தீனியர்கள் என்று அழைக்கப் பட்டது இவன் காலத்திலிருந்துதான்.
மேற்படி பன்னிரண்டு கிராமவாசிகளும் ஆத்தென்ஸின் ஆளுகைக்குட் பட்டதைப் பற்றி ஒரு கதையுண்டு. இங்ஙனம் ஆத் தென்ஸின் ஆளுகைக்குட்பட வேண்டுமென்று யோசனை சொல்லப் பட்டபோது இவர்கள் சிறிது தயங்கினார்கள். அப்பொழுது தீஸூஸ் கூறினான். “நீங்கள் இப்படிச் செய்வீர் களானால், எனக்கென்று விசேஷ உரிமைகள் எதுவும் வேண்டிய தில்லை. என்னைப் போலவே நீங்கள் ஒவ்வொருவரும் அரசராயிருக்கலாம். சட்டங்கள் சரியான படி அமுலில் இருக்கின்றனவா வென்று பார்ப்பதும் யுத்தம் நேரிட்டால் சேனைகளுக்குத் தலைமை பூண்டு நடத்துவதும், ஆகிய இவ்விரண்டு மட்டும் என் கடமைகளாயிருக்கும்” இந்த வாசகங் களைக் கேட்ட ஜனங்கள் பரம சந்தோஷ மடைந்தார்கள். இவனுக்குத் தலைவணங்கினார்கள். இவனிடத்தில் பக்தியும் மரியாதையும் செலுத்தினார்கள். இவன் ஆத்தென்ஸ் ராஜ்யத்தின் எல்லையை, ஆங்காங்கு எல்லைக் கற்கள் நாட்டி நிர்ணயம் செய்தான்; கொள்ளை, கொலை முதலியவற்றை அடக்கினான். ஜனங்கள் நிர்ப்பயமாக வாழத்தலைப்பட்டார்கள். அந்நியர்களை வரவழைத்து ஆத் தென்ஸில் குடியேறும்படி செய்தான். சுருக்கமாக ஆத்தென்ஸின் பிற்காலப் பெருமைக்கு அடிகோலியவன் இவன் என்று துணிந்து கூறலாம். ஆத்தீனியர்கள் இவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்டதில் என்ன ஆச்சரியம்?
இன்னோர் அரசன்; கோட்ரஸ் என்று பெயர். இவன் ஆண்ட காலத்தில் ஸ்ப்பார்ட்டர்களும் வேறு சிலரும் ஒன்றுகூடிக் கொண்டு ஆத்தென்ஸ்மீது படையெடுத்து வந்தார்கள். இப்படிப் படை யெடுத்து வந்தது 1068-ஆம் வருஷமென்று சொல்லப்படுகிறது. (ஸ்ப்பார்ட்டர்கள் படையெடுத்து வந்ததாகச் சொல்லப்படும் இந்த கி.மு. 1068-ஆம் வருஷமும், தீஸூஸ் அரசன் அட்டிக்காவாசிகளை ஆத்தினியர்களாக ஒன்றுபடுத்தின. கி.மு. 1250-ஆம் வருஷமும், இவை போன்ற இன்னும் சில வருஷங்களும், ஊகத்தினால் சொல்லப் படுகின்றவையே. இந்தச் சம்பவங்களே புராண வரலாறுகள் என்று கருதப்படுகின்றபோது, இவற்றின் காலத்தை எப்படி நிர்ணயித்துச் சொல்ல முடியும்? அப்படி இந்தச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கு மானால், கி.மு. ஏழாவது நூற்றாண்டுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டுமென்றுதான் பொதுவாகச் சொல்ல முடியும்) ஆத்தீனி யர்கள் மீது தங்களுக்கு வெற்றி கிட்டுமா என்று குறி கேட்டார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். கோட்ரஸ் மன்னனைக் கொல்லாதிருப்பீர் களானால் வெற்றி கிட்டும், என்று பதில் கிடைத்தது. இதற்குத் தயாராயிருந்தார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். கோட்ரஸின் உயிர் பெரிதா என்ன? ஆத்தென்ஸை அடிமை கொள்வதுதானே பெரிது?
கோட்ரஸ் மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தது. ஆத்தென்ஸ் ராஜ்யத்தைக் காப்பாற்றவும் அதற்காகத் தான் பலியாகவும் தீர்மானித்தான். ஒரு விறகு வெட்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு ஸ்ப்பார்ட்டர்கள் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கி சென்றான். வழியில், தான் எதிர்பார்த்தபடி இரண்டு ஸ்பார்ட்டப் போர் வீரர்களைச் சந்தித்தான். ஒருவனை வேண்டு மென்றே கொன்றான்; உடனே மற்றொருவனால் கொல்லப்பட்டு விட்டான். ஸ்ப்பார்ட்டர்களுக்கு இந்தச் செய்தி எட்டியது. தங்களுக்கு இனி வெற்றி கிட்டாது என்று எண்ணித் திரும்பிப் போய்விட்டார்கள். ஆத்தென்ஸ் காப்பாற்றப்பட்டது.
ஆத்தீனியர்கள், கோட்ரஸின் இந்த மகிமை நிறைந்த தியாகத்தை மறக்கவேயில்லை. கோட்ரஸிற்குப் பிறகு அரசனாக இருக்கத் தகுதி யுடையவர்கள், அரசனென்று அழைக்கப்படுவதற்குரியவர்கள், வேறொருவரும் கிடையாது. வேறொருவரும் இருக்க முடியாது என்று தீர்மானித்தார்கள். இதன் பிரகாரம், கோட்ரஸுக்குப் பிறகு வந்தவர் களை ஆர்க்கோன்கள் என்று அழைத்தார்கள்.
ஆரம்பத்தில் இந்த ஆர்க்கோன்களுடைய பதவி காலம் ஆயுள் பரியந்த மென்றிருந்தது. பின்னர் (752-ஆம் வருஷத்திலிருந்து) பத்து வருஷமென்றும் அதற்குப் பின்னர் (683-ஆம் வருஷத்திலிருந்து) ஒரே வருஷமென்றும் குறைக்கப் பட்டுவிட்டது. மற்றும் இந்த 683-ஆம் வருஷத்திலிருந்து, ஒருவருக்குப் பதில் ஒன்பது பேர் சமயத் தில் இந்த ஆர்க்கோன் பதவியை வகிப்பதென்ற நியதி ஏற்பட்டது. அதாவது ஓர் ஆர்க்கோன் ஆண்டது போய் ஒன்பது ஆர்க்கோன்கள் ஆண்டார்கள். ஒருவன் வருஷாதிபதியாக இருந்தான். அதாவது இவன் பெயராலேயே இவன் நியமனமான ஒரு வருஷம் பூராவும் அழைக்கப்பட்டது. இன்னொருவன் படைத் தலைவனாயிருந்தான். வேறொருவன் மதத்தலைவனா யிருந்தான். பூசை போடுவது, பலியிடு வது முதலியவை இவனுடைய வேலைகள். இவனை அரசனென்று சம்பிரதாயமாக அழைத்தனர். மற்ற ஆறு பேர் சட்ட வியாக்கியான கர்த்தர்களாக இருந்தார்கள்.
இந்த ஒன்பது பேரும் ஆண்டார்களென்று சொல்வது வெறும் சம்பிரதாயம். உண்மையில் அரசாங்கத்தை நடத்தி வந்தது ஒரு சபை. இதனை பூலி என்பர். அக்ரோபோலிஸுக்குப் பக்கத்திலுள்ள அரியோபாகஸ் (செவ்வாய்க் கடவுளின் குன்று என்பது இதன் பொருள்). குன்றின் மீதுகூடி விவகாரங்களை நடத்தி வந்ததால் அதற்கு அரியோபகஸ் சபையென்றும் பெயர் வழங்கி வந்தது. ஆத்தென்ஸில் மன்னராட்சி தொடங்கிய காலத்திலிருந்து இந்தச் சபை இருந்து வந்ததாகத் தெரிகிறது. அரசர்களுடைய அதிகாரங்கள் குறையக் குறைய இதனுடைய அதிகாரங்கள் அதிகமாகிக்கொண்டு வந்தன. இதனைத் தற்கால வழக்கில் பிரபுக்கள் சபையென்று கூறலாம். பணக்காரர்கள், நிலப்பிரபுக்கள் ஆகிய இப்படிப்பட்ட வர்களே இதில் அங்கத்தினராயிருந்தார்கள். ஆர்க்கோன்களை நியமனம் செய்கிற அதிகாரம் இந்தச் சபையினிடமே இருந்தது. ஆர்க்கோன் களாயிருந்தவர்கள், அதாவது மாஜி ஆர்க்கோன்கள் இதில் அங்கத்தினராயிருக்க உரிமை பெற்றிருந்தார்கள்.
இங்கே ஒரு வார்த்தை. ஆதி ஆத்தென்ஸில் - ஆத்தென்ஸ் மட்டுமென்ன கிரீஸ் முழுமையிலும்தான் - பெரும்பற்றான நிலபுலங்களையுடைய பணக்காரர் களுக்கே சமுதாயத்தில் முதல் ஸ்தானம் இருந்து வந்தது. ஆத்தென்ஸில் இவர்களுக்கு யூப்பாட்ரிட் டுகள் என்று பெயர். யூப்பாட்ரிட் என்ற இந்த வார்த்தைக்கு உயர் குடிப் பிறந்தோன் என்று பொருள். உயர்குடிப் பிறப்பிற்கும் செல்வத் திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக இதனால் தெரிகிறது. இந்த யூப்பாட்ரிட்டுகளே மேல் வகுப்பினராகக் கருதப்பட்டார்கள். அர சாங்க அதிகாரங்கள் யாவும் இவர்களிடத்திலேயே தங்கி நின்றன. சுமார் ஐந்து நூற்றாண்டுகள் கி.மு. ஆறாவது நூற்றாண்டு வரை இந்த நிலைமையே இருந்தது.
இந்த யூப்பாட்ரிட்டுகள் அதிகாரம் வகித்திருந்த காலத்தில், ஜனசமுதாய மானது, யூப்பாட்ரிட்டுகளைத் தவிர்த்து, அரசியல் விவகாரங்களுக்காக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குதிரைகளைச் சொந்தமாக வைத்துக் கொண்டிருந்தது, அது காரணமாகக் குதிரைப்படையில் சேர்ந்துழைக்கக் கூடியவர்கள் முதற்பிரிவினர். ஒரு ஜதை எருதுகளையும் சில போர்க் கருவிகளை யும் சொந்தமாகக் கொண்டிருந்தவர்கள் இரண்டாவது பிரிவினர். கூலிக்குப் படையில் சேர்ந்தவர்கள் மூன்றாவது பிரிவினர். இம் மூன்று பிரிவினருள் முதல் இரண்டு பிரிவினர் மட்டுமே பிரஜை களாகக் கருதப்பட்டனர். இவ்விரு பிரிவினரிலும், முதற் பிரிவினர் மட்டுமே ஆர்க்கோன்களாகவோ, நீதிபதிகளா கவோ, புரோகிதர் களாகவோ இருக்கத் தகுதியுடையவர்கள். இந்த மூன்று பிரி வினருக்கு மேற்பட்டவர்களே யூப்பாட்ரிட்டுகள். இவர்களையும் சேர்த்துக் கொண்டால் ஆத்தீனிய ஜன சமுதாயம், அரசியல் விவகாரங்களுக்காக நான்கு பிரிவுகளாகப் பிரிந்திருந்ததென்று சொல்லலாம்.
அரசியல் விவகாரங்களில் இருந்ததைப் போல், பொருளாதார விஷயங் களிலும், அதாவது அதிகமாகப் பணம் படைத்தவர்கள் யார், குறைவாகப் பணம் படைத்தவர்கள் யார் என்று பாகுபடுத்திப் பார்க்கிறபோது, மூன்று பிரிவினர் இருந்தனர். முதற் பிரிவினர்தான் மேலே சொன்ன யூப்பாட்ரிட்டுகள். இவர்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே வசித்துக்கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இரண்டாவது பிரிவினர், தொழில் திறமை வாய்ந்தவர், வியாபாரிகள் முதலியோர். மூன்றாவது பிரிவினர், நிலத்திலே கூலிக்கு உழைப்பவர்கள், அற்ப சொற்பமாக நிலம் வைத்துக் கொண்டி ருப்பவர் முதலியோர். இந்தப் பிரிவினைகளை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும் இது நிற்க.
அரசாங்கத்தை நடத்தி வந்தவர்கள் பணக்காரப் பிரபுக்களா யிருந்த படியால் இவர்கள், தங்களுக்கு அனுகூலமாகவே சட்ட திட்டங்கள் இயற்றி அமுல் நடத்தி வந்தார்கள். மற்றவர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. இந்தப் பிரபுக்கள், தங்கள் நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தார்கள். விவசாயிகள், குத்தகைய ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருக்கிற வரையில் சரி, தவறினால், அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் விற்று விடலாமென்று ஒரு சட்டம் இருந்தது. அற்ப சொற்பமாக நிலங்கள் வைத்துக்கொண்டு சொந்தப் பயிர் செய்து கொண்டிருந்தவர் களுடைய நிலைமையும் மோசமாயிருந்தது. இவர்கள், பணக்காரர் களிடம் அடிக்கடி கடன் வாங்க வேண்டிய அவசியத்திற்குட்பட்டி ருந்தார்கள். ஆனால் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்கச் சாத்திய மில்லாமற் போய்விடும். அப்பொழுது, கடன் கொடுத்த இந்தப் பணக்காரர்கள், மேற்படி கடன்பட்ட விவசாயிகள் நிலத்தில் ஒரு கல்லை நட்டு அதில், கடன் தொகை இவ்வளவு, இன்னாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை எழுதி வைப்பார்கள். கடன்பட்டவர்களை அவமானப்படுத்துகிற முறை இது! இப்படி அவமானப்படுத்துவதோடு, கடுமையான வட்டியும் வாங்குவார்கள். சில சமயங்களில் இந்த விவசாயிகள், தங்கள் குழந்தைகளில் ஓரிரண்டை அடிமைகளாக விற்று, வட்டி செலுத்துவார்கள். எவ்வளவு வட்டிதான் செலுத்துவது? எவ்வளவு காலந்தான் இந்தக் கொடுமை யைச் சகித்துக் கொண்டிருப்பது? கடன் கொடுத்தவர்களுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு, பிழைப்பு நிமித்தம் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டார்கள். சென்றவர்கள் போக இருந்தவர்களிடடையே அதிருப்தி அதிகரித்துக்கொண்டு வந்தது.
பார்த்தார்கள் பிரபுக்கள். இந்த அதிருப்தியை வளரவிட்டுக் கொண்டு போனால் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தார்கள். தாங்கள் அமுல் நடத்தி வரும் சட்டங்களை ஒழுங்குபடுத்தி வெளி யிட்டு விட்டால், விவசாயிகளின் அதிருப்தி குறையும், தங்கள் மீது எடுத்துக் கொள்ளப் பெறும் நடவடிக்கைகள் யாவும் சட்டபூர்வ மானவையே யென்பதை அவர்கள் உணர்ந்து சும்மாளயிருப்பார் களென்று கருதினார்கள். அதாவது தாங்கள் செய்கிற காரியங் களைச் சட்டத்தின் மூலம் நியாயப்படுத்திக்காட்ட வேண்டு மென்பதே இந்தப் பணக்காரர்களின் நோக்கம்.
இதற்காக, இந்தச் சட்டத் தொகுப்பு வேலையைச் செய்வதற் காக, ட்ராக்கோ (இவன் ஆர்க்கோன்களில் ஒருவனா யிருந்தா னென்பர்) என்பவனை நியமித்தார்கள். இவன் அப்படியே தொகுத்து வெளியிட்டான். இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தது, உத்தேசமாக 620-ஆம் வருஷமென்பர்.
ட்ராக்கோவின் சட்டப்படி, பரம்பரைப் பிரபுக்களல்லா தவர்கள், அதாவது நிலத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு வருமானத்தை யுடையவர்கள் ஆர்க்கோன்களாக நியமனம் பெறுவதற்கு உரிய ராயினர். இன்னும் இதுபோன்ற சில சலுகைகள் பிரபுக்களல்லாத மற்றவர்களுக்குக் காட்டப்பட்டன. ஆனால் இந்தச் சலுகை களினால், சமுதாயத்தின் கீழ்ப்படியிலிருந்தவர்களுடைய நிலைமை எந்த விதத்திலும் உயரவில்லை. அவர்களுடைய கஷ்ட நிஷ்டூரங்கள் அதிகப்பட்டுக் கொண்டுதான் வந்தன. ட்ராக்கோ மட்டும் மறக்கப் படவில்லை. எதற்காக? அவன் இயற்றிய சட்டங்களுக்காக அல்ல; அந்தச் சட்டங்களில் அவன் விதித்திருக்கிற தண்டனைகளுக்காக, கடுமையான சட்டங்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிற பொழுது, ட்ராக்கோவின் பெயரைச் சம்பந்தப்படுத்திச் சொல்வது இப் பொழுதும் சட்ட உலகத்தில் சர்வ சாதாரணம்.
கி.மு. ஏழாவது நூற்றாண்டின் கடைசியில் ஆத்தென்ஸ் ராஜ்யம் இருந்த நிலைமையை ப்ளூட்டார்க் என்ற கிரேக்க சரித்தி ராசிரியன் பின்வருமாறு வருணிக்கிறான். “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையே வித்தியாசம் மிகவும் அதிகமாயிருந்தது. இதனால் ராஜ்யம் ஆபத்தான நிலைமையில் இருந்தது. சுயேச்சாதி கார சக்தியினாலல்லாது வேறு விதமாக, ராஜ்யத்தைக் குழப்பத்தி லிருந்து விடுதலை செய்ய முடியாது போலிருந்தது.” பணக்காரர்கள், கொடுத்தக் கடனைத் திருப்பிப் பெற முடியாமல் திகைத்தார்கள்; ஏழைகளோ விவசாய நிலங்களை எல்லோருக்கும் கிடைக்கும் படியாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்று கூக்குரலிட்டார்கள். புரட்சிப் பேச்சுக்கள் வலுத்தன. இந்தப் பேச்சுக்களுக்கு மத்தியில் கி.மு. ஆறாவது நூற்றாண்டு பிறந்தது.
2. சீர்திருத்தங்கள் செய்த ஸோலோன்
ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்படுகிறபோது, அதனைச் சமாளிக்க ஒரு மகாபுருஷன் தோன்றுகிறான். எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. கி.மு. ஏழாவது நூற்றாண்டும் ஆறாவது நூற்றாண்டும் சந்திக்கிற காலத்தில் ஆத் தென்ஸுக்கு ஒரு மகாபுருஷன் தேவையாயிருந்தது. ஸோலோன்!
கிரேக்கர்கள் போற்றி வந்த ஏழு ஞானிகளில் ஒருவன் இந்த ஸோலோன். மகா மோதாவி. கவிதை உள்ளம் படைத்தவன்; கூடவே கர்மவீரன். தனது இனிய மொழிகளினாலும் நிதானமான நட வடிக்கைகளினாலும், ஆத்தீனிய சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பை அடக்கினான்; பணக்காரர்களையும் ஏழைகளை யும் சமரசப்படுத்தி வைத்தான். இவை தவிர, ஆத்தென்ஸின் சமுதாய, பொருளாதார, அரசியல் அமைப்புக்களின் அநேக மாற்றங் களைச் செய்தான். இவை ஆத்தென்ஸின் சுதந்திர வாழ்க்கைக்கு அரண் செய்வன வாயிருந்தன; நீண்ட காலமும் நிலைபெற்றிருந்தன.
ஸோலோன் பரம்பரையான பிரபு வமிசத்தைச் சேர்ந்தவன். இவன் தகப்பன் தரும சிந்தனையுடையவன். இதன் விளைவாகத் தனது ஆஸ்தியில் பெரும் பாகத்தை இழந்துவிட்டான்; ஸோலோன், பரம்பரைச் சொத்தை நம்பி கொண்டிராமல் வியாபாரத் துறையில் இறங்கினான். பல இடங்களுக்குச் செல்லவும், பலரோடு பழகவும் இவனுக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. தான் சொன்னபடியே நடந்து வந்தான். நேர்மையுடையவன் என்று எல்லோரும் இவனிடம் மதிப்பு வைத்தார்கள்; நம்பிக்கை கொண்டார்கள்.
594-ஆம் வருஷம். ஸோலோனுக்கு நாற்பத்து நான்கு அல்லது நாற்பத்தைந்து வயது இருக்கும். ஆர்க்கோன் பதவிக்கு இவனைத் தெரிந்தெடுக்கப் போவதாகவும் அதற்குச் சம்மதப்பட வேண்டு மென்றும் ஆத்தென்ஸிலுள்ள மத்திய வகுப்பினர் கூறினர். ஆர்க் கோன் பதவியை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்ல, சர்வா திகாரி யாயிருந்து, சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிற கொந்தளிப்பை அடக்க வேண்டுமென்றும், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அதன்மூலம், ராஜ்யத்தின் சாசுவதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பணக்கார வகுப்பினரும், ஸோலோன் நியமனத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்; தங்களுடைய நலனுக்குப் பங்கம் விளைவிக்க மாட்டானென்ற நம்பிக்கை யுடன்தான்.
இங்ஙனம் எல்லோருடைய சம்மதத்தின் பேரிலும் ஆர்க்கோன் பதவியை ஏற்றுக்கொண்டான் ஸோலோன். இருபத்திரண்டு வருஷ காலம் 572-ஆம் வருஷம் வரை - இந்தப் பதவியில், இந்தப் பதவிக்குக் கௌரவமுண்டாகும் படியாக அமர்ந்திருந்தான். பதவியிலிருந்து விலகிக் கொள்கிறபோது இவனுக்கு வயது அறுபத்தாறு. எல் லோரும் திருப்தியுடன் இவனைப் பதவியில் அமர்த்தினார்கள். ஆனால் எல்லோருடைய அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டான் பதவியிலிருந்து விலகுகிற போது. இதனால் எல்லோருடைய நன்மையையும் நாடினான், எல்லோருக்கும் நியாயமாக நடந்து கொண்டான் என்று புலனானகிறதல்லவா?
ஸோலோன் செய்த சீர்திருத்தங்கள் யாவை? கடனுக்காக அடிமை கொள்ளும் வழக்கத்தை அடியோடு ஒழித்தான்; இந்த வழக்கப்படி அடிமைப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்வித்தனர்; அடிமைகளாக விற்கப்பட்டுப் போனவர்களை மீட்டான்; விவசாயி கள் பட்டிருந்த கடன்களை ரத்து செய்தான். இவை யெல்லாம் விவ சாயிகளுக்குச் சாதகமான சீர்திருத்தங்கள். ஆனால், நிலங்கள் எல் லோருக்கும் கிடைக்கும்படியாகப் பங்கிடப்பட வேண்டுமென்று விவசாயிகள் கோரினார்களே அதற்கு இவன் இணங்கவில்லை.
இங்ஙனம் கடன் தொந்தரவினின்றும் அடிமைத்தளையி னின்றும் விடுதலையடைந்து விவசாயிகள் எல்லோருக்கும் வேலை கிடைக்குமா? எல்லோரும் விவசாயத்தை நம்பிக் கொண்டிருக்க முடியுமா? எனவே தொழில் வளர்ச்சிக்கும் வியாபாரப் பெருக்கத் திற்கும் ஏற்பாடுகள் செய்தான் ஸோலோன். நாணயமாற்று விகிதத்தை ஒழுங்குபடுத்தினான். ஆத்தென்ஸின் வெளிநாட்டு வியாபாரம் விருத்தியடைந்தது. உள்நாட்டுத் தொழில்கள் செழிக்க வேண்டு மென்பதற்காக, தொழில்கள் தெரிந்த அந்நியர்கள் ஆத்தென்ஸிஸ் வந்து குடியேறி நிரந்தரமாகத் தங்கள் தொழிலை நடத்திக்கொண்டு வருவார்களானால் அவர்களுக்கு ஆத்தீனியப் பிரஜா உரிமை அளிக்கப்படுமென்று ஒரு சட்ட மியற்றினான்.
இன்னும், ஆத்தென்ஸின் அரசியல் அமைப்பை மாற்றுகின்ற வகையில் புதிய திட்டமொன்றை அமுலுக்குக் கொண்டு வந்தான். இந்தப் புதிய திட்டம் அமுலுக்கு வருமுன்பு, ட்ரோக்காவின் சட்டங் களில் பலவற்றை ரத்து செய்தான்; அரசியல் காரணங்களுக்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தவர்கள், தேவப் பிரஷ்டம் செய்யப் பட்டிருந்தவர்கள் ஆகிய பலருக்கும் விடுதலையளித்தான். இன்னும் சட்டத்தின் முன்னர் எல்லா ஆத்தீனியப் பிரஜைகளும் சமமானவர் களே; ஏழை பணக்காரர் வித்தியாசம் கிடையாது என்பதை எல் லோரும் நன்கு தெரிந்து கொள்ளும்படிப் பிரகடனம் செய்தான்.
ஸோலோனின் புதிய திட்டம், சமுதாயப் பிரிவினையைப் பொறுத்த மட்டில், பழைய பிரிவினைகளை ஒரு சில மாற்றங் களுடன் அப்படியே ஏற்றுக்கொண்டதென்று சொல்ல வேண்டும். உதாரணமாக அட்டிக்காவாசிகள், நான்கு ஜாதியினரையும் முந் நூற்றறுபது உட்பிரிவினராகவும் பிரிக்கப்பட்டிருந் தார்களல்லவா, இந்தப் பிரிவினைகளை அப்படியே வைத்துக் கொண்டான். தவிர, அரசியல் விவகாரங்களுக்காக, யூப்பாட்ரிட்டுகளை முதன்மையான வராகக் கொண்ட நான்கு பிரிவினைகளை அப்படியே ஏற்றுக் கொண்டான். ஆனால் இந்த நான்கு பிரிவினைகள், அவரவருடைய செல்வ நிலைமை, வருமானம் இவைகளை யனுசரித்து, சிறிது திருத்தி யமைக்கப்பெற்றன. வருஷத்தில் ஐந்நூறு படி தானியத்தை வருமானமாகவுடையவர்கள் முதல் வகுப்பினர்; முந்நூறு படிக்கு மேல் ஐந்நூறு படிவரை வருமானமுடையவர்கள் இரண்டாவது வகுப்பினர்; இருநூறு படிக்குமேல் முந்நூறு படிவரை வருமான முடையவர்கள் மூன்றாவது வகுப்பினர். மற்றவர்கள், அதாவது மற்றக் கிரேக்கப் பிரஜைகள் நான்காவது வகுப்பினர். (ஓர் அளவுக்குத்தான் தானிய வருமானத்தைச் சொன்னதே தவிர, தானிய வருமானமே இருக்க வேண்டுமென்பது கட்டாயமல்ல. இதற்குச் சமதையான வருமானமுடையவராயிருக்க வேண்டுமென்பதே தாத்பரியம்). இந்த வருமான விகிதத்திற்குத் தகுந்தபடி இவர்கள் செலுத்த வேண்டிய வரி, அனுபவிக்கக்கூடிய உரிமை முதலியன நிர்ணயிக்கப்பட்டன. வரி செலுத்தத் தவறியவர்கள் பதவி வகிக்கத் தகுதியுடையவர் களல்லர் என்ற விதி கண்டிப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. நான்கா வது வகுப்பினர் மட்டும் வரி செலுத்துவதினின்று விலக்கப்பட்டிருந் தார்கள். ஆனால் அவர்கள் எந்த விதமான பதவிக்கும் அபேட்சகர் களாக நிற்க முடியாது. அபேட்சகர்களாக நிற்க முடியாவிட்டாலும், அபேட்சகர்களைத் தெரிந்தெடுக்கிற உரிமை அவர்களுக்கு இருந்தது. அதாவது, முதல் மூன்று வகுப்பினரிலும் முதல் வகுப்பினர் மட்டுமே ஆர்க்கோன்களாகவும் அரியோபாகஸ் சபை அங்கத்தினர்களாகவும் நியமனம் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள். இரண்டாவது வகுப்பினரும் மூன்றாவது வகுப்பினரும் இதர பதவிகளில் நியமனம் பெறலாம்.
மற்றும் முதல் வகுப்பினர், படைத் தலைவர்களாயிருக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். இரண்டாவது வகுப்பினர் குதிரைப் படை யிலும், மூன்றாவது வகுப்பினர் காலாட் படையிலும், நான்காவது வகுப்பினர் சாதாரண போர் வீரர்களாகவும் சேர்ந்து சேவை செய்யத் தகுதியுள்ளவர்களென்று கருதப் பட்டார்கள். ஏனென்றால், இரண்டாவது வகுப்பினர் சொந்தமாகக் குதிரைகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே மூன்றாவது வகுப்பினர் சொந்த மாக ஆயுதங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்விரண்டும் இல்லாதவர்கள் தான் நான்காவது வகுப்பினர்; சாதாரண போர் வீரர்களாகத் தெரிந் தெடுக்கப்பட்டார்கள்.
ஸோலோனின் திட்டத்தின் கீழ் அரியோபாகஸ் சபை இருந்தது. ஆனால் இதன் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுவிட்டன. சட்ட திட்டங்களுக்காகவும், மதத்திற்கும் ஊறு நேரிடா வண்ணம் பாது காப்பது என்பது போன்ற சில சம்பிரதாய அதிகாரங்கள் மட்டும் இதற்கு இருந்தன.
இந்த அரியோபாகஸ் சபைக்கு அடுத்தபடி நானூறு பேர் கொண்டு ஒரு சபையைச் சிருஷ்டித்தான் ஸோலோன். ஆத்தீனியர் களில் நான்கு ஜாதியினர் உண்டல்லவா, ஒவ்வொரு ஜாதியினரும் நூறு நூறு பேரை இதற்கு அங்கத்தினர்களாகத் தெரிந்தெடுத் தார்கள். இந்தச் சபையைப் பற்றி அதிகமான விவகாரங்கள் தெரிய வில்லை. ஜனசபை முன்னர் என்னென்ன பிரச்சனைகளைக் கொண்டு வரலாமென்பதை முன்கூட்டி ஆலோசித்து, அவைகளை ஒழுங்கு படுத்தி வைத்தது இந்தச் சபை என்று மட்டும் தெரிகிறது.
இதற்கடுத்தது மேலே சொன்ன ஜனசபை. இதனை எக்ளேஷியர் என்பர் வருஷந்தோறும் ஆர்க்கோன்களைத் தெரிந் தெடுக்கிற அதிகாரம் அரியோபாகஸ் சபைக்கு இருந்ததல்லவா, அந்த அதிகாரம் இப்பொழுது இந்தச் சபைக்கு மாற்றப்பட்டது. ஆனால் முதல் வகுப்பினரிலிருந்துதான், அதாவது ஐந்நூறு படி வருமானமுடையவர் களிலிருந்துதான் தெரிந்தெடுக்கலாம். ஆர்க் கோன்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ இந்தச் சபைக்கு அதிகாரமுண்டு.
இப்பொழுது குறிப்பிட்ட சில வழக்குகளில், நீதிபதிகளுக்கு உதவியாக ஜூரிகளை நியமிக்கும் வழக்கம் இருப்பதுபோல ஆத்தென்ஸிலும் முந்தி இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே ஜூரிகளாக அமர்ந்தார்கள். ஆனால் ஸோலோன், ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி முப்பது வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆத்தீனியப் பிரஜைகளும் ஜூரிகளாக அமர்ந்து நீதி வழங்குவதற்குரியர் என்று திட்டமிட்டான்.
இங்ஙனம் ஆட்சி முறையில் ஜனங்களை அதிகமாகக் கலந்து கொள்ளும்படி செய்ததோடு, பிற துறைகளிலும் அநேக சீர்திருத் தங்களைச் செய்தான். சோம்பேறி வாழ்க்கையை நடத்துகிறவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட்டார்கள். தன் மகனுக்கு ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொடாத ஒரு தகப்பன், அந்த மகனிடமிருந்து எந்தவிதமான உதவியையும் தன் கடைசி காலத்தில் எதிர்பார்க்க உரியவனல்லன் என்று ஒரு விதி செய்தான். விபசாரத் தொழிலைச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குட்படுத்தி, அந்தத் தொழில் நடத்து கிறவர்களுக்கு வரி விதித்தான். விபசார வாழ்க்கை நடத்துகிறவர்கள், ஜனசபையில் வந்து பேசக்கூடாதென்று உத்தரவு போட்டான். கோயில்கள், நீதி ஸ்தலங்கள் முதலிய பொது இடங்களில், இறந்து போனவர்களைப் பற்றியோ இருக்கின்றவர்களைப் பற்றியோ தூஷணையாகப் பேசுவது குற்றமென்றான். ஆடம்பரமான முறையில் சடங்குகளைச் செய்யக்கூடாதென்றான். இங்ஙனமே ஆடையாப ரணங்களிலும் ஆடம்பரம் கூடாதென்றான். ராஜ்யத்திற்கு விரோத மான சூழ்ச்சிகள் நடைபெற்றால், அப்பொழுது ஒரு நட வடிக்கையும் எடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கினாற் போல் இருப்பவர்கள் பிரஜா உரிமையை இழக்கக் கடவர் என்று ஆணை யிட்டான். யுத்தத்தில் மரித்துப் போனவர்களுடைய பிள்ளை களைப் போஷிப்பதும், அவர்களுக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதும் அரசாங்கத்தின் கடமைகளென்று வலியுறுத்தினான். இப்படிப் பலவகைச் சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டுவந்தான்.
“உலகத்தில் சமத்துவம் நிலைபெற்றுவிட்டால் யுத்தமே வராது” என்று முழங்கியவன் ஸோலோன். இந்தச் சமத்துவத்தைக் குறிக்கோளாகக் கொண்டே இவன், அரசியல் திட்டத்தைத் திருத்தி யமைத்தான். ஆனால் ஏற்கனவே கூறியபடி, எல்லோருடைய நன்மையையும் உத்தேசித்து இவன் செய்த சீர்திருத்தங்கள் எல் லோருக்கும் அதிருப்தியை உண்டு பண்ணின. இவனுடைய நெருங்கிய நண்பன், அனார்க்கார்ஸிஸ் என்னும் மகான், இவனுடைய புதிய அரசியல் திட்டத்தைக் கண்டு நகைத்தான். “ஸோலோனின் அரசியல மைப்பில், அறிஞர்கள் நியாயத்தை எடுத்துப்பேசுவார்கள்; அறிவிலி கள் தீர்ப்புச் சொல்வார்கள்; ஜனங்களுக்கு ஒழுங்காக நியாயம் கிடைக்காது” என்று கூறினான். சாதாரண ஜனங்கள், தங்களுக்கு இன்னும் அதிகமான உரிமைகள் கிடைக்க வில்லையே என்று கூக்குரலிட்டார்கள். பணக்காரர்கள், நிலப்பிரபுக்கள் முதலியோர், தங்களை, சாதாரண ஜனங்களோடு சம அந்தஸ்தில் வைத்துவிட்ட தற்காக வருத்தப்பட்டார்கள். சிலர் - இவர்கள் நடுத்தர வகுப்பினர் போலும்! இவனை, ஆயுள்வரை ஆர்க்கோனாக இருக்குமாறு, அதாவது சாசுவதமான சர்வாதிகாரி யாயிருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். மறுத்துவிட்டான் இவன். தன்மீது குறை கூறியவர் களுக்காக இரங்கினான்; ஆனால் தன் செயலுக்கு இரங்கவில்லை.
இவன் இயற்றிக் கொடுத்த சட்டங்கள், இவனுக்குப் பிறகு சுமார் ஐந்து நூற்றாண்டுகள் வரை காலத்திற்கேற்ற சிற்சில மாறுதல் களுடன் அமுலில் இருந்தன. தான் வகுத்த சட்டங்களைப் பத்து வருஷ காலம் வரை மாற்றுவதில்லையென்று அரசாங்க அதிகாரி களிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு, ஸோலோன், ஆர்க் கோன் பதவியிலிருந்து விலகி, வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டான்.
3. சர்வாதிகார ஆட்சி
ஸோலோன் சென்றபிறகு, ஆத்தீனிய அரசியலில் ஒரே கலவரம், கட்சிச் சண்டைகள்; அராஜகம் தலைதூக்கி நின்றது. இதனால், இரண்டு தடவை - உத்தேசமாக 589-ஆம் வருஷமும் 584-ஆம் வருஷமும் - ஆர்க்கோன்களைக் கூடத் தெரிந்தெடுக்க முடிய வில்லை. இதிலிருந்து இந்த அராஜக நிலைமை, சற்று காலம் தொடர்ந்தாற்போல் இருந்ததென்று தெரிகிறது.
ஆத்தென்ஸின் அரசியலில் அப்பொழுது மூன்று கட்சிகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒன்று, நிலப்பிரபுக்களின் கட்சி; பணக்காரர் கட்சியென்றும் சொல்லலாம். இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அட்டிக்காவின் உட்பகுதியில், சமதரையாயுள்ள பிரதேசங்களில் பெரும்பற்றான நிலபுலங்களைச் சொந்தமாக வைத்துக் கொண்டு, அவற்றிலிருந்து கிடைக்கிற வருமானத்தினால் சுகஜீவனம் நடத்தி வந்தார்கள். அரசியலில் ஒருசிலர் ஆட்சி முறையே - மேன்மக்களாட்சி முறையே - சிறந்ததென்று அதனைப் போற்றி வந்தார்கள். இவர்களுக்கு ஸோலோன் செய்த சீர்திருத்தங் கள் பிடிக்கவில்லை. அவன்மீது குறைகூறிக் கொண்டும் அவனைப் பழித்துக் கொண்டுமிருந்தார்கள்.
மற்றொன்று, நிதானக்கட்சி. இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், கடலோரமாயுள்ள பிரதேசங்களில் வசிக்கின்ற வியாபாரிகள், சுய மாகத் தொழில் செய்கிறவர்கள், அற்பசொற்பமாக நிலங்கள் வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் முதலியோர். இவர்களை நடுத்தர வகுப்பின ரென்றும் சொல்லலாம். இவர்கள், ஸோலோன் செய்த சீர்திருத் தங்களை ஆதரித்துக் கொண்டும் அவனை வாழ்த்திக் கொண்டு மிருந்தனர்.
இன்னொன்று, தீவிரக் கட்சி. இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், மலைப் பிராந்தியங்களிலும் மேட்டுப் பாங்கான இடங்களிலும் வாழ்கின்ற சாதாரண ஜனங்கள்; பெரும்பாலும் ஏழைகள். இவர்கள் ஸோலோனைப் பற்றி அதிகமாகப் பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால், விவசாயத்திற்குத் தகுதியுடைய நிலங்கள், எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கக் கூடிய மாதிரி பகிர்ந்துகொடுக்கப்பட வேண்டுமென்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர்.
இந்த மூன்று கட்சியினரும், அரசாங்க அதிகாரத்தைக் கைப் பற்றிக் கொள்ளப் போட்டியிட்டனர். இவர்களுக்குள் அடிக்கடி பூசல்கள் நிகழ்ந்தன. ஆக, ஸோலோன் வகுத்த அரசியல் திட்டம் ஒழுங்காக இயங்காமல் ஸ்தம்பித்துக் கிடந்தது.
இத்தருணத்தில், மூன்றாவது கட்சியின் தலைவனாக, அதாவது, சாதாரண ஜனங்களின் நலனை நாடுவதே தனது வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் கிளம்பினான். இவன் பெயர் பீசிஸ்ட்ராட்டஸ். (இவன் ஸோலோனின் உறவினன். எனவே, பணக்கார வகுப்பைச் சேர்ந்தவனென்பதைச் சொல்லத் தேவை யில்லை. ஸோலோனிடத்தில் தனக்கு நிறைய பக்தி இருப்பதாகக் காட்டிக் கொண்டான். மற்றும் இவன், ஒலிம்பிய விளையாட்டுகளில் பரிசுகள் பல பெற்றவன்; சிறிது தாராள சிந்தையுமுடையவன். இவை காரணமாக, சாதாரண ஜனங்களுக்கு இவனிடத்தில் ஒரு பிரமை இருந்தது. இந்தப் பிரமையைத் தனது முன்னேற்றத்திற்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டான்).
560-ஆம் வருஷம் ஒரு நாள் உடம்பில் சில காயங்களுடன் ஜனசபை முன்னர் வந்து நின்றான் பீசிஸ்ட்ராட்டஸ். பொது ஜனங்களுக்காகத் தான் பரிந்து பேசுவதைத் தனது சத்துருக்கள் விரும்பவில்லை யென்றும், தன்னைக் கொன்றுவிடப் பார்த்தார் களென்றும், ஆனால் தான் சில காயங்களுடன் தப்பித்துக் கொண்டு வந்துவிட்டதாகவும் கூறினான். சபையினர் இவனது வார்த்தைகளை நம்பினர்; (வெளிநாடுகளிலிருந்து அப்பொழுது ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்துவிட்ட ஸோலோன் மட்டும் நம்பவில்லை; நம்ப வேண்டாமென்று சபையினருக்கு எச்சரிக்கை செய்தான். சபையினர் கேட்கவில்லை. இதற்குப் பிறகு இவன் - ஸோலோன் - அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி, கவிதைகளை இயற்றிக் கொண்டி ருப்பதில் மிகுதிக் காலத்தையும் கழித்தான். இவன் இறந்தது 558ஆம் வருஷம்) ஏற்கனவே இவன் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி, சபையிலிருந்த இவனுடைய நண்பன் ஒருவன், ‘பீசிஸ்ட்ராட் டஸுக்கு ஐம்பது பேர் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை வைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டு’மென்று தீர்மானம் கொண்டுவந்தான். சபையினர் அங்கீகரித்தனர் இது போதுமல்லவா? ஐம்பது பேரை நானூறு பேராக அதிகப்படுத்திக் கொண்டான் சிறிது காலத்திற்குள், தந்திரசாலியான பீசிஸ்ட்ராட்டஸ். தனக் கென்று சொந்தமாக ஒரு படை அமைந்துவிட்டது. இனி யாருடைய தயவும் தேவையில்லையல்லவா? அக்ரோபாலிஸைக் கைப்பற்றிக் கொண்டான். அதிகார பீடத்தில் அமர்ந்தான். இவனை எதிர்க்கக் கூடிய தைரியம் அப்பொழுது யாருக்கும் உண்டாகவில்லை.
ஆனால் சுமார் நான்கு வருஷங்கள் கழித்து, நிலப்பிரபுக்களும் வியாபாhரிகளும் ஒன்று சேர்ந்து, இவனைப் பதவியிலிருந்து அப் புறப்படுத்தி விட்டனர். இதற்காக இவன் மனச்சோர்வடைய வில்லை. எப்படியாவது மீண்டும் பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்று தீர்மானித்தான். பதவிப் பித்து யாரையும் லேசில் விடுவதில்லையே? இதற்காக இவன் செய்த சூழ்ச்சி ஒரு கட்டுக்கதை போலிருக்கிறது.
முன்னதாகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்துக் கொண்டான். 550-ஆம் வருஷம், அதாவது இவன் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஆறாவது வருஷம், ஒருநாள் ஆத்தென்ஸில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. திரளான ஜனங்கள் கூடியிருந்தார்கள். ஊர்வலங்கள் ஒன்றன்பின்னொன்றாக வந்து கொண்டிருந்தன. இவற்றின் நடுவே, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு ரதம் வந்தது. அதில் ஓர் அழகியப் பெண் கம்பீரமாக அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தால் கிரேக்கர்களின் கலைத் தெய்வமாகிய அத்தீனே மாதிரி இருந்தது. கூடவே கட்டியங்காரர் சிலர், ‘ஓ ஆத்தென்ஸ் வாசிகளே! பீசிஸ்ட்ராட்டஸுக்கு நல்வரவு கூறுங்கள். அத்தீனே தேவதையின் விசுவாசத்தைப் பெற்றிருக்கிற அவன், அவளாலேயே இப்பொழுது அக்ரோபோலிஸுக்கு அழைத்துக் கொண்டு வரப்படுகிறான்’ என்று கட்டியங் கூறிக் கொண்டு வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்தாற்போல் பீசிஸ்ட்ராட்டஸ் தனது பரிவாரத்தினருடன் வந்து கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஜனங்கள் திகைத்துப் போனார்கள். உண்மையிலே அத்தீனே தேவதைதான் வந்திருப்பதாக நம்பிவிட்டார்கள்; கீழே விழுந்து விழுந்து கும் பிட்டார்கள். பீசிஸ்ட்ராட்டஸை எதிர்க்கவோ தடுக்கவே யாருக்குத் தைரியம் வரும்? நேரே அக்ரோபோலிஸுக்குச் சென்று அதிகார பீடத்தில் அமர்ந்தான்.
சிறிது காலத்திற்குப் பின்னர்தான், ஏறக்குறைய ஒரு வருஷத் திற்குள், பீசிஸ்ட்ராட்டஸை அழைத்துக்கொண்டு வந்தது அத்தீனே தேவதையல்ல, இவனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட யாரோ ஒரு பெண் என்று ஜனங்களுக்குத் தெரிந்தது. பழையபடி இவனை அதிகார பதவியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். எனவே ஆத்தென்ஸி னின்று வெளியேறி மாஸிடோனியா பக்கம் சென்று அங்குச் சுமார் பத்து வருஷ காலம் தங்கி, மீண்டும் ஆத்தென்ஸுக்கு அருகில் வந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்து வந்தான்.
540-ஆம் வருஷம் ஒரு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு ஆத்தென்ஸை நோக்கி வந்தான். ஆத்தீனியர்கள் இவனை எதிர்த்து நின்றார்கள். என்ன பயன்? தோல்வியே கிட்டியது. பீசிஸ்ட்ராட்டஸ் முன்போல் அக்ரோபோலிஸைக் கைப்பற்றிக் கொண்டு 527-ஆம் வருஷம் வரையில் சுமார் பதின்மூன்று வருஷ காலம் எவ்வித எதிர்ப்புமில்லாமல் சர்வாதிகாரியாக ஆண்டான்.
சர்வாதிகாரியென்று சொன்னால் கொடுங்கோலன் என்று அர்த்தமல்ல. கிரேக்க சரித்திரத்தில் இத்தகைய சர்வாதிகாரிகள் பலரைச் சந்திக்கிறோம். இவர்களெல்லோரையும் கொடுங்கோலர்கள் என்று சொல்லிவிட முடியாது. யாரோ ஒரு சிலர் ஜனங்களுக்கு இம்சை உண்டாகிற வகையில் கொடுங் கோலாட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் ஜனரட்சகர்களாகவே இருந்திருக் கிறார்கள். சர்வ அதிகாரங்களையும் தங்கள் ஒருவரிடத்திலேயே தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் என்ற அர்த்தத்திலேயே இவர்கள் சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்; ஜனங் களைக் கொடுமைப்படுத்துகிறவர்கள் என்ற அர்த்தத்திலல்ல. இதற்கு மாறாக இவர்கள் காலத்தில்தான் ஜனங்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டாகியிருக்கின்றன.
பீசிஸ்ட்ராட்டஸ் ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டு மென்ற நோக்கத்துடன்தான் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டானென்று தெரிகிறது. இவனுடைய லட்சியம் உயர்ந்த தென்பதில் சந்தேகமில்லை. அதனையடைய இவன் கையாண்ட முறைகள், அந்த லட்சியத்திற்கு மாறுபட்டவனாயிருந்தன; இவனுடைய புகழில் கறையை உண்டுபண்ணிவிட்டன.
இவனுடைய ஆட்சியை, பிற்காலத்தில் அரிஸ்டாட்டல் கூடப் புகழ்ந்து பேசுகிறான். “பீசிஸ்ட்ராட்டஸ் ஆட்சி, ஒரு கொடுங் கோலனுடைய ஆட்சியாயிருக்கவில்லை; ஒரு ராஜதந்திரி யினுடைய ஆட்சியாயிருந்தது” என்பது அரிஸ்ட்டாட்டலின் வாக்கு.
பீசிஸ்ட்ராட்டஸ், காலத்தை அனுசரித்துக் காரியங்கள் செய்தான். தன்னை முந்தி எதிர்த்தவர்களைக் கடுமையாக நடத்த வில்லை. அவர்களைத் தன் அன்புக்கு வசப்படுத்தினான். அன்புக்கு வசப்படாதவர்களைத் தேசப்பிரஷ்டம் செய்தான்; அவர்களுடைய நிலபுலங்களை ஏழைஎளியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். கடற்படையையும் தரைப்படையையும் ஒழுங்குப்படுத்தி அமைத்தான். பொதுவாக, ஸோலோன் விலகிய பிறகு கட்சிச் சண்டைகளினால் அவலமுற்றிருந்த ராஜ்யத்தில் அமைதியை உண்டுபண்ணினான்.
பீசிஸ்ட்ராட்டஸ், புத்திசாலித்தனமாக, ஸோலோனின் அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யவில்லை. அரியோபாகஸ் சபை, நானூற்றுவர் சபை, ஜனசபை ஆகிய யாவும் தங்கள் கடமை களைச் செய்துவந்தன. ஆனால் இந்தச் சபைகளில் பீசிஸ்ட்ராட்டஸின் வாக்குக்கு நல்ல மதிப்பிருந்தது. அதாவது இவன் சொன்னவற்றையும் செய்தவற்றையும் அப்படியே அங்கீகரித்தன.
பீசிஸ்ட்ராட்டஸ், நிலமில்லாத விவசாயிகளுக்கு நிலம் கிடைக்குமாறு செய்தான்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுப்பித்தான். இவன் முயற்சியால் ஆத்தென்ஸ் நகரத்தில் அழகிய கோயில்களென்ன, ராஜ்யம் நெடுகிலும் பாதைகளென்ன, இந்தப் பாதைகளில் ஆங்காங்கு மைல் கற்களென்ன, தேவையான இடங்களில் நீர்த்தேக்கங்களென்ன, இப்படிப் பல வகையான பொதுஜன சௌகரி யங்கள் ஏற்பட்டன. இந்தக் காரியங்களைச் செய்யப் பணம் வேண்டு மல்லவா, இதற்காக விவசாய வருமானத்தின் மீது வரிவித்தான். புதிய அளவிலும் முறையிலும் நாணயங்களை அச்சிட்டு வழங்கினான். மற்ற ராஜ்யங்களுடன் வியாபார உடன் படிக்கைகள் செய்துகொண்டு அவற்றின் மூலம் ஆத்தென்ஸின் உள்நாட்டு வியாபாரத்தையும் வெளிநாட்டு வியாபாரத்தையும் விருத்தி செய்தான்.
இவைகளனைத்தையும் விட பீசிஸ்ட்ராட்டஸ் செய்த பெரிய காரியம் என்னவென்றால், கிரேக்க மகாகாவியங்களான இலியத் தையும் ஒடிஸ்ஸேயையும் இறவாத புகழுடையனவாகச் செய்ததே யாகும். அதுகாறும் இவ்விரண்டு காவியங்களும் வாய்ப்பாட மாகவே சொல்லப்பட்டு வந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லிக் கொண்டு வந்தனர். எது சரியென்பது தெரியாமலிருந்தது. இதற்காக அறிஞர் குழு ஒன்றினை நியமித்தான் பீசிஸ்ட்ராட்டஸ். இக்குழுவினர், சரியான பாடத்தை நிர்ணயித்து அதனை எழுத்து உருவத்திலே கொணர்ந்தனர். இவர்கள் அமைத்த அமைப்பிலேயே மேற்படி இரண்டு காவியங்களையும் இன்று பார்க்கிறோம்; படித்து அனுபவிக்கிறோம். இதைச் செய்ததன் மூலம் ஹோமரைச் சிரஞ்சீவி யாக்கினான் பீசிஸ்ட்ராட்டஸ். (ஹோமரின் காவியங்களை ஒழுங்குபடுத்தி எழுத்திலே கொணர்ந்த பெருமை யில் ஸோலோனுக்கும் பங்கு உண்டு என்று சிலர் கூறுவர்.)
இன்னும் இவன் காலத்தின் கவிஞர்கள், சிற்பிகள், நாடகா சிரியர்கள் முதலிய பலரும் ஆத்தென்ஸில் வந்து குடி யமர்ந்தார்கள். இவர்களனைவரையும் இவன் ஆதரித்தான். இவர்கள் உதவி கொண்டு நல்ல நூல்களைச் சேகரித்தான். இவன் அரண்மனையில் சிறந்த புத்தக சாலையொன்றிருந்தது.
4. ஜன ஆட்சியின் ஆரம்பம்
பீசிஸ்ட்ராட்டஸின் ஆட்சி 527-ஆம் வருஷத்தில் முடிவுற்றது. இவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டு பிள்ளைகளில், மூத்த வனான ஹிப்பியாஸ் என்பவன் சர்வாதிகாரியானான். சிறிது காலம் தகப்பனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடந்தான். இவனுக்கு ஹிப்பார்க்கஸ் என்ற ஓர் இளைய சகோதரன் இருந்தான்; மகா கவி; அநேகருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டான்; இதன் விளைவாகக் கொலையுண்டான். சகோதரன் கொலையுண்டதற்குப் பிறகு ஹிப்பியாஸ் மாறிவிட்டான். ஜனங்களைப் பலவிதமாகத் துன்புறுத்தி வரலானான். இவனை வீழ்த்த சூழ்ச்சிகள் நடை பெற்றன. இந்தச் சூழ்ச்சிகளுக்கு, பீசிஸ்ட்ராட்டஸ் காலத்தில் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு ஆத்தென்ஸ் ராஜ்யத்திற்கு வெளியே வசித்துக் கொண்டிருந்தவர்களும், ஆத்தென்ஸ் ராஜ்யத்தை எப்படியாவது தங்களுக்கு அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டு மென்று ஆவல் கொண்டிருந்த ஸ்ப்பார்ட்டர்களும் உடந்தையா யிருந்தார்கள். கடைசியில், ஸ்ப்பார்ட்டர்களின் ஆவல் நிறை வேறவில்லையானாலும், ஹிப்பியாஸை வீழ்த்த வேண்டுமென்ற சூழ்ச்சி வெற்றி பெற்றது. அவன் ஆத்தென்ஸிலிருந்து வெளியேற்றப் பட்டான். அவனுடைய ஸ்தானத்தில், சூழ்ச்சிக்காரர்களின் தலைவ னாயிருந்த கிளைஸ்த்தனீஸ் என்பவன் 507-ஆம் வருஷம் அமர்ந்து கொண்டான்.
கிளைஸ்த்தனீஸ், சர்வாதிகாரியென்று அழைக்கப்பட்டான். ஆனால் உண்மையில் இவன் ஒரு ஜனநாயகவாதி. ஆத்தென்ஸின் அரசியலமைப்பை, ஜனநாயக அரசியலமைப்பாக மாற்றிய பெருமை இவனைச் சேர்ந்ததே. அத்தீனியர்களுக்குள் நான்கு ஜாதி களும், முந்நூற்றறுபது உட்பிரிவினைகளும் இருந்தனவல்லவா, இந்தப் பிரிவினைகளை நீக்கிவிட்டான். இதற்குப் பதில் ஆத்தென்ஸ் ராஜ்யத்தைச் சிறுசிறு பிரதேசங்களாக, அதாவது சிறுசிறு ஜில்லாக்கள் அல்லது தாலூகாக்கள் மாதிரி பிரித்தான். ஒவ்வொரு பிரதேசத்திற்கும் டெமே என்று பெயர். இதுகாறும் இன்ன ஜாதியைச் சேர்ந்த இன்னார் என்று சொல்லிக் கொண்டவர்கள், இனி இன்ன டெமேயைச் சேர்ந்த இன்னார் என்று சொல்லிக் கொள்ளும் படி செய்தான் இந்தப் பிரதேசங்களில் வசித்துக் கொண்டிருந்த ஜனங்களைப் பத்து குலத்தினராகப் பிரித்தான். இந்த ஒவ்வொரு குலத்திலும், மேலே மூன்று கட்சிகள் இருந்தனவென்று கூறினோ மல்லவா, அதாவது நிலப்பிரபுக்களின் கட்சி, வியாபாரிகள் சுயமாகத் தொழில் செய்வோர் முதலியோரடங்கிய கட்சி, சாதாரண ஜனங்களைக் கொண்ட கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் அடங்கி யிருக்க வேண்டுமென்ற நியதியை ஏற்படுத்தினான். இதன்படி ஒவ்வொரு குலத்தினரும் பல பிரதேசங்களில் - டெமேக்களில் -வசிக்கின்றவர்களாயினர். இந்தப் பிரிவினைகள் சிறிது சிக்கலாகவே இருந்தன. ஆயினும் ஒரே இடத்தில் வசிக்கின்றவர்கள் என்பதைக் கொண்டோ, ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கொண்டோ எந்த ஒரு வகுப்பினரும் அரசியலில் ஆதிக்கம் பெற்றுவிடக் கூடா தென்பதற்காகவே இந்த ஏற்பாட்டைச் செய்தான். ஆயினும் இந்த ஏற்பாட்டின் விளைவாகப் பிற்காலத்தில் நகரவாசிகளுக்கே அரசியலில் அதிகமான ஆதிக்கம் ஏற்பட்டது; கிராமவாசி களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை.
ஸோலோன், நானூறு பேர் கொண்ட ஒரு சபையைச் சிருஷ்டித் தானல்லவா, அதனை ஐந்நூறு பேர் கொண்ட சபையாக விரிவுபடுத்தினான் கிளைஸ்த்தனீஸ். ஒவ்வொரு குலத்தினரும் ஐம்பது பேர் விகிதம் பத்து குலத்தினரும் மொத்தம் ஐந்நூறு பேரைப் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுத்து இந்தச் சபைக்கு அனுப்பினர். இந்த ஒவ்வொரு குலத்தினரும் பல டெமேக்களில் வசித்துக் கொண்டிருப்பார்களல்லவா, ஒவ்வொரு டெமேக்கும் இத்தனை இத்தனை பிரதிநிதிகள் என்றும், ஆக இந்தப் பிரதிநிதி களத்தனை பேரும் சேர்ந்து ஒரு குலத்தினருக்கு ஐம்பது பேர் விகிதம் இருக்க வேண்டுமென்றும் நிர்ணயம் செய்யப்பட்டன. மற்றும் இந்த ஒவ்வொரு குலத்தினருக்கும், வருஷவாரி ஒரு ராணுவத் தலைவனைத் தெரிந்தெடுக்கும் உரிமைஅளிக்கப்பட்டது. ஆக மொத்தம் பத்து ராணுவத் தலைவர்கள் இருந்தார்கள். இந்தப் பத்து ராணுவத் தலைவர்களும் யுத்த ஆர்க்கோனுக்கு உதவியாயிருக்குமாறு செய்யப் பட்டனர்.
ஐந்நூறு பேர் கொண்ட மேற்சொன்ன சபையானது, ஜனசபை யின் நிருவாக சபை மாதிரியாக்கப்பட்டது. அரசாங்க நிருவாகம் இதன் கையிலேயே இருந்ததென்று சொல்லலாம். இதன் அங்கத்தினர் வருஷந்தோறும் தெரிந் தெடுக்கப்பட்டனர். தேர்தல், சீட்டுக் குலுக்கிப் போடுவதன் மூலம் நடைபெற்றது. முப்பது வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு பிரஜையும் அங்கத்தினராகத் தெரிந்தெடுக்கப் படலாம். ஆனால் இரண்டு தடவைக்கு மேல் யாரும் அங்கத்தினரா யிருக்க முடியாது.
இந்த ஐந்நூறு பேரும் சேர்ந்து அரசாங்கத்தை நடத்த முடியாதல்லவா? இதற்காக இந்தச் சபையானது, ஐம்பது பேர் கொண்ட பத்து கமிட்டிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு கமிட்டியும், வருஷத்தில் முப்பத்தாறு நாட்களுக்கு, சபையினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து வந்தது. அதாவது அரசாங்க நிருவாகம், ஐந்து வாரத்திற்கொருமுறை ஐம்பது பேர் கையிலிருந்து அல்லது வாரத்திற் கொருமுறை பத்து பேர் கையிலிருந்து மாறி மாறி வந்துகொண்டிருந்தது. அரசாங்க நிருவாகத்தில் நேரடியான அனுபவம் பெறுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
கிளைத்தனீஸ் திட்டத்தின்கீழ், ஜனசபையின் அங்கத்தினர் எண்ணிக்கை ஒன்றுக்கு இரண்டு மடங்காகியது. அந்தந்த டெமேயில் நிரந்தரமாக வசிக்கின்றவர், ஏற்கனவே வசித்துக் கொண்டிருந்தவர் களின் சந்ததியினர் ஆகிய பலரும் இப்பொழுது பிரஜா உரிமை பெற்று ஜனசபையின் அங்கத்தினர் களானார்கள். கிளைஸ்த்தனீஸ் காலத்தில் சுமார் முப்பதினாயிரம் பேர் ஜனசபையில் அங்கத்தினர்களாயிருந்தார் களென்று தெரிகிறது. இந்த முப்பதினாயிரம் பேரும் - ஜூரிகளாக நியமிக்கப்படுவதற்கு உரியராயினர்.
யாரேனும் ராஜ்யத்திற்கு விரோதமாகக் கட்சி சேர்கிறார்கள் அல்லது சூழ்ச்சி செய்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டால் அல்லது யாராலேனும் நாட்டிற்கு ஆபத்துண்டாகுமென்று தெரிந்தால் அவர்களை நாட்டினின்று அப்புறப்படுத்திவிட ஜன சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. சபையின் ஒரு கூட்டத்தில் குறைந்தபட்சம் ஆறாயிரம் பேர் ஆஜராயிருந்து, அவர்களில் பெரும் பான்மையோர், ரகசிய ஓட்டின் மூலம் ஒருவனை ஆபத் தானவன் என்று தீர்மானித்தால் அவனைப் பத்து வருஷத்திற்குத் தேசப் பிரஷ்டம் செய்து விடலாம். இப்படித் தீர்மானிப்பதற்குக் கருவியாயிருப்பது பானையோட்டுச் சல்லி. இதுதான் ஓட்டுச் சீட்டு. ஒவ்வொருவரும் ஒரு துண்டு பானையோட்டை எடுத்து அதில், நாடு கடத்தப்பட வேண்டுமென்று தங்களால் கருதப்படுகின்ற ஒருவனுடைய பெயரை ரகசியமாக எழுதி, சபையில் வைக்கப் பட்டிருக்கும் குறுகிய கழுத்துடைய ஒரு பெரிய பாத்திரத்தில் போடுவார்கள்.
பிறகு இந்தப் பாத்திரத்திலுள்ள சல்லிகளைப் பரிசீலனை செய்து பார்க்கிறபோது எவனுடைய பெயர் பெரும்பான்மையான சல்லிகளில் எழுதப்பட்டிருக்கிறதோ அவனைத் தேசப் பிரஷ்டம் செய்யவேண்டுமென்று சபை விரும்புவதாகக் கொள்ளப்படும். அவன், பத்து நாட்களுக்குள் அட்டிக்கா எல்லையைவிட்டு வெளியே சென்று விட வேண்டும். ஊரை விட்டுச் சென்றுவிட்டாலும் அவனுடைய சொத்து பற்றுக்களுக்குத் தீங்கு உண்டாகாது. வேறு வகையில் அவன் அவமானப்படுத்தப்படமாட்டன். (இந்த ஓட்டுச் சல்லியின் மூலம் நாடு கடத்தப்படுவதற்கு ஆஸ்ட்ரஸிஸம் என்று பெயர். ஆஸ்ட்ரக்கா என்ற கிரேக்க வார்த்தைக்குப் பானையோடு என்று அர்த்தம்)
ஜனசபைக்கு இந்த விசேஷ அதிகாரம் இருந்தபோதிலும் அது வெகு ஜாக்கிரதையாகவே இதனை உபயோகித்து வந்தது என்று சொல்ல வேண்டும். இந்த அதிகாரம் சுமார் தொண்ணூறு வருஷம் அமுலில் இருந்தது. பிறகு ரத்தாகிவிட்டது. இந்தத் தொண்ணூறு வருஷ காலத்தில் பத்து பேரே பிரஷ்டம் செய்யப்பட்டனர்.
கிளைஸ்த்தனீஸ், இங்ஙனம் ஆத்தீனிய அரசியலில் ஜனநாயக அமிசங்கள் பலவற்றைப் புகுத்தினானென்று சொன்னாலும், பழைய முறைகள் சிலவற்றை - பிரபுத்துவ ஆட்சி, மேன்மக்களாட்சி என்று அழைக்கப் பெறும் ஆட்சி முறைகளின் அமிசங்கள் சிலவற்றை அப்படியே இருத்திக் கொண்டான். பழைய மாதிரியே அரியோ பாகஸ் சபை இருந்தது. வருமான விகிதப்படி பிரிக்கப்பட்ட நான்கு வகுப்பினரில் முதல் மூன்று வகுப்பினரிலிருந்துதான் அரசாங்க அதிகாரிகள் நியமிக்கப் பெற்றனர்; முதல் வகுப்பினர் மட்டுமே ஆர்க்கோன் பதவிக்கு உரியவராயிருந்தனர்.
பொதுவாகப் பார்க்கிறபோது, கிளைஸ்த்தனீஸ்தான், அதிக மான ஜனங்களுக்கு அதிகமான அரசியல் சுதந்திரம் வழங்கியவன்; ஆத்தென்ஸ் அரசாங்கத்தை ஜனநாயக திசையில் நேர்முகமாகத் திருப்பி வைத்தவன். அரசாங்கம், நம்முடைய அரசாங்கம், அதன் குறை நிறைகள் நமது குறை நிறைகள் என்பன போன்ற எண்ணங்கள் ஜனங்களுக்கு ஏற்பட்டது இவன் காலத்தி லிருந்துதான். இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டதனாலேயே, இவன் காலத்திற்குப் பிறகு ஆத்தீனியர்கள், எந்தத் துறையிலும் பொறுப்பு உணர்ச்சியுடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள ஆரம்பித் தார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாயமைந்தார்களென்பதில் என்ன ஆச்சரியம்? எந்த ஜாதியினர் எந்த நிமிஷத்தில், தங்களுடைய ஒற்றுமைக்கும் அதிகாரத்திற்கும் ஆவலுக்கும் அடையாளமாகத் தங்களுடைய அரசாங்கம் இருக்கிறதென்று உணர்கிறார்களோ அந்த ஜாதியினர் அந்த நிமிஷத்தில் முன்னேற்றப் பாதையில் காலடி எடுத்து வைத்தவர்களாகிறார்கள்.
கிரேக்கர்களின் சில பண்புகள்
1. கலையுணர்ச்சி
விசால கிரீஸ் உள்பட கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றையும் ஒருவாறு சுற்றிப் பார்த்துக் கொண்டு கி.மு. ஐந்தாவது நூற்றாண்டுக்கு வந்துவிட்டோம். இந்த நூற்றாண்டு, கிரேக்க சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான நூற்றாண்டென்று சொல்லவேண்டும். கிரீஸின் வாழ்வுச் சூரியன், உச்சத்திற்குச் சென்றது இந்த நூற்றாண்டில்தான்; அஸ்தமிக்க ஆரம்பித்ததும் இந்த நூற்றாண்டில் தான். கிரேக்கர்கள் ஆதிக்கம் பெற்றதும், தங்கள் பிற்கால அடிமை வாழ்க்கைக்கு அடிகோலிக் கொண்டதும் இந்த நூற்றாண்டில்தான். மகா மேதை யர்கள் தோன்றி வான்புகழ் கொண்டதும், அவர்களை நாடு கடத்தியோ, வேறு பல இம்சைக்களுக்குட்படுத்தியோ வேடிக்கை கண்டதும் இந்த நூற்றாண்டில்தான். இவைகளை யெல்லாம் பிந்திய அத்தியா யங்களில் ஆங்காங்கே காண்போம். இந்த அத்தியாயத்தில், ஐந்தாவது நூற்றாண்டுத் தொடக்கத்தின் போது, சர்வ கிரேக்கர்களும் பொதுவாகக் கொண்டிருந்த சில நம்பிக்கைகள், அவர்கள் அனுஷ் டித்து வந்த சில பழக்க வழக்கங்கள், அவர்களிடையே நிலவி வந்த சில கருத்துக்கள் முதலியவற்றைத் தெரிந்துகொள்ள முற்படுவோம். இப்படித் தெரிந்து கொண்டால் பிந்திய அத்தியாயங்களில் கூறப் பெறும் பல சம்பவங் களையும் எளிதிலே புரிந்து கொள்ளலாம்; கடைசி அத்தியாயத்தில், கிரீஸின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் படிக்கிற போது, நமக்கு அதிக அதிர்ச்சி ஏற்படாது.
கிரேக்கர்களனைவரையும் ஒன்றுபடுத்தியவை இரண்டு. ஒன்று விளையாட்டு, மற்றொன்று மதம் என்பதை ஐந்தாவது அத்தியா யத்தில் சுருக்கமாகச் சொன்னோம். இவையிரண்டுமே முக்கிய மானவை. இதனாலேயே இவற்றிற்குத் தனி அத்தியாய அந்தஸ்து கொடுத்தோம். இவ்விரண்டையும் தவிர வேறு சிலவும் இந்த ஒற்றுமைக்கு உறுதுணையாயிருந்தன. இவற்றுள் ஒன்று பாஷை.
கிரேக்கர்களனைவரும் ஒரே பாஷையையே - கிரேக்க பாஷையையே பேசினார்கள். இடத்திற்கும் இடம் பேசுகின்ற மாதிரி வேறாக இருந்தது. அவ்வளவுதான். மொழிப்பற்று என்பது எல் லோருக்கும் ஒரே அளவினதாக இருந்தது. தாய்மொழியைப் போற்றி வளர்ப்பதில் எல்லோரும் ஒரேவிதமான சிரத்தையுடையவர்களாக இருந்தார்கள். எண்ணங்களைத் தெளிவுபட விளக்குவதற்கான ஒரு கருவியே பாஷை. இந்தக் கருவியைப் பண்படுத்திப் பயன்படுத்து வதில், ராஜ்யம், குலம், கோத்திரம் முதலிய எந்தவிதமான வித்தி யாசங்களும் பாராட்டாமல் எல்லோரும் ஒத்துழைத்தார்கள். புலமைக்கு எங்கணும் மதிப்பு இருந்தது. ஹோமர், எல்லோராலும் கௌரவிக்கப் பெற்ற கவிமணியாக விளங்கினான்.
பொதுவாக, கிரேக்கர்கள் கவிதையிலே வாழ்ந்தார்களென்று சொன்னால் அது மிகையாகாது. “கவிதையானது, அவர்களுடைய கல்விமுறைக்கு அடிப்படையாயிருந்தது; அவர்களுடைய அனுஷ் டானத்திற்கு வழிகாட்டி யாகவும் அந்த அனுஷ்டானத்தின் வியாக்கி யானமாகவும் இருந்தது; அவர் களுடைய கற்பனைக்கு ஊக்க மளித்து வந்தது. ஏதேனும் ஒரு கொள்கையை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமானால், பழைய கவிதையொன்றை மேற்கோளாக எடுத்துக்காட்டுவார்கள். யாருக்கேனும் நல்ல புத்தி சொல்ல வேண்டுமானால் கவிதை வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, உற்சாகம் பெறும் பொருட்டு, எச்சரிக்கையுடனிருக்க உதாரணத் திற்காக, எல்லோரும் சிறு வயதிலிருந்தே கவிதைக் கடலில் மூழ்கி மூழ்கி எழுந்தார்கள். இலியத், ஒடிஸ்ஸே போன்ற தேசீய காவியங் களிடம் அதிக பக்தி செலுத்தினார்கள். வீட்டு விஷயத்தி லாகட்டும், ராஜ்ய விவகாரத்திலாகட்டும், ஏதேனும் ஒரு முடிவுக்கு வரவேண்டு மானால் அந்தக் காவியங்களிலிருந்து ஆதாரம் தேடினார்கள்.”
கவிதைக்குச் சமதையாக சங்கீதமும் கிரேக்கர்களுடைய வாழ்க்கையின் பிரதான அமிசமாயிருந்தது. இளமையிலிருந்தே இன்னிசைப் பயிற்சி அனைவருக்கும் அளிக்கப்பட்டது. ஊதுகுழல், யாழ் போன்றதொரு நரம்புக் கருவி முதலியவைகளில் நன்கு வாசிக்கத் தெரிந்திருந்தது பெரும்பாலோருக்கு. கோஷ்டி கோஷ்டி யாகச் சேர்ந்து பாட்டிசைப்ப தென்பது கிரேக்கர்களுக்குச் சர்வ சாதாரண விஷயமாயிருந்தது. சங்கீதத்தையே தொழிலாகக் கொண்டு அநேகர் ஜீவித்து வந்தனர். சங்கீதக் கச்சேரிகள் நடைபெற்றன. ஒரு கச்சேரிக்கு இவ்வளவு தொகை என்று முன்கூட்டி நிர்ணயிக்கப் பட்டு, அதன் பிரகாரம், கச்சேரி செய்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனைப் பேணுவதில் எல்லாக் கிரேக்கர்களும் ஒரு மனப்பான்மையுடையவர்களாயி ருந்தார்கள். அவர் களுடைய, உடை, நடை, பேச்சு எல்லாவற்றிலும் அழகே பிரதானமாயிருந்தது. அடுக்களையில் கூட அழகான பாத்திரங்களையே உபயோகித்தார்கள். சித்திரங்களினால் அழகு படுத்தப் பெறாத பாத்திரங்களைப் பார்ப்பதே அரிதென்று சொல்லலாம்.
அழகைப் பெரிதாகக் கொண்டாடினார்க ளென்றால் வெறும் அழகை மட்டுமல்ல, சூட்சும அழகையும், அதாவது ஆத்மாவின் அழகையும் சேர்த்தே கொண்டாடினார்கள். ஸ்தூல அழகென்றும், சூட்சும அழகென்றும் வேறு வேறாக அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. இரண்டும் சேர்ந்தால்தான் அழகாகிறது என்பது அவர்கள் கருத்தாயிருந்தது. ஒருவன் உடலழகு வாய்ந்த வனாயிருக்கலாம். ஆனால் அவன் உள்ளம் விகாரமுடையதாயி ருக்கும் பட்சத்தில் அவனை எப்படி அழகென்று சொல்ல முடியும்? அழகும் அறமும் ஒன்றே. ஒருவன் அழகாக வாழ்க்கையை நடத்துகிறா னென்று சொன்னால், அவன் அற வழியில் வாழ்க்கையை நடத்துகிறானென்று அர்த்தம். அழகு வேறே, நல்லது வேறேயல்ல. அழகாயிருப்பது எதுவோ அது நல்லதாக இருக்க வேண்டும். அப்படியே நல்லது எதுவோ அஃது அழகாக இருக்க வேண்டும். கண்ணுக்கு விருந்தளிப்பது மட்டும் அழகல்ல; செவிக்கு உணவளிப்பது மட்டும் இனிமையல்ல; இதயத்தை அசைத்துக் கொடுப்பது எதுவோ, ஆதமாவை உயர்த்திக் கொடுப்பது எதுவோ, அதுதான் அழகு; அதுதான் இனிமை. இம் மாதிரியான கருத்துக்களே கிரேக்கர்களிடையே நிலவியிருந்தன. கிரீஸில் நாடகக் கலையும் சித்திரக் கலையும் செழுமையுற்றிருந்தன என்பதில் என்ன ஆச்சரியம்?
அழகையும் அறத்தையும் மட்டுமல்ல, எதனையுமே வேறு படுத்திப் பாராமல், அனுபவிக்கவும் பார்த்தார்கள் கிரேக்கர்கள். ராஜ்யத்தோடு தனி மனிதன், லட்சியத்தோடு நடைமுறை, புற வாழ்க்கையோடு அக வாழ்க்கை, இப்படிப் பலவற்றையும் ஒன்று படுத்தியே கண்டார்கள்.
எதனையும் மொத்தமாகக் கண்டதோடல்லாமல், எதனையும் பூரணமாக அனுபவிக்கவும் செய்தார்கள் கிரேக்கர்கள். நாடகமா, திருவிழாவா, விளையாட்டுப் பந்தயமா, எதையும் கண்ணையும் கருத்தையும் செலுத்தியே அனுபவித்தார்கள். அப்படியே எதனைச் செய்யத் துவங்கிய போதிலும் அதனைச் செவ்வனே செய்து முடித்தார்கள்.
எந்த ஓர் எண்ணத்தையும் அல்லது எந்த ஓர் உணர்ச்சியையும் உருவப்படுத்திக் காட்டுவதில் கிரேக்கர்கள் மிகவும் கெட்டிக்காரர் களாயிருந்தார்கள். அவர்கள் தீட்டிய ஓவியங்கள், சமைத்த உருவச் சிலைகள் ஆகியவற்றைப் பார்த்தால் இந்த உண்மை புலனாகும். ஏறக்குறைய எல்லோருக்கும் சித்திரம் வரைவதில் ஓரளவு ஆற்றல் இருந்தது; கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் பற்றுதல் இருந்தது. சுருக்கமாக, கிரேக்கர்கள் கலை உணர்ச்சி நிரம்பியவர்களாகவும், நல்ல ரசிகர்களாகவும், அப்படியே பிறரை ரசிக்கச் செய்கிறவர் களாகவும் இருந்தார்கள்.
2. மத நம்பிக்கைகள்
கிரேக்கர்கள், கடவுள் நம்பிக்கையில் அப்படியே தோய்ந் திருந்தார்களென்று சொல்லலாம். தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள், சிறந்த மனிதராகவோ, நல்ல பிரஜையாகவோ இருக்க முடியா தென்பது அவர்கள் கருத்தாயிருந்தது. இந்தத் தெய்வ நம்பிக்கை யானது ஒன்றே தெய்வமென்பதாக இராமல், பல தெய்வ வழி பாடாகப் பரவி நின்றது. எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான தெய்வம், எல்லோருடைய வணக்கத்திற்குமுரிய தெய்வம், ஜூஸ் என்பதை எல்லோரும் அங்கீகரித்து அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருந்தார்களாயினும், ஊர்த்தெய்வமென்றும், குலதெய்வமென்றும், குடும்ப தெய்மென்றும் இப்படிப் பல தெய்வங்களையும் வழிபட்டு வந்தார்கள். உதாரணமாக, ஆத்தீனியர்கள் அத்தீனேயையும், ஸாமோஸ்வாசிகள் ஹீராவையும் (ஜூஸின் மனைவி) எபீஸஸ் வாசிகள் ஆர்ட்டிமிஸையும், இங்ஙனம் ஒவ்வொரு நகரத்தினரும் ஒவ்வொரு தெய்வத்தை நகர தெய்வமாகக் கொண்டாடி வந்தார்கள். இயற்கைச் சக்திகள், மனித சக்திகள், மனித சுபாவங்கள், பல்வகைத் தொழில்கள், செல்வம் செழுமை முதலியன, இவை பலவும் தெய்வங் களாகக் கருதப்பட்டுப் போற்றப்பட்டு வந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், எத்தனை மனிதர்கள் இருந்தார்களோ அத்தனை தெய்வங்கள் இருந்தன. இவை தவிர, ராட்சதர்கள், மோகினிகள், பேய் பிசாசுகள் முதலியனவும், மந்திரமும், குறி முதலியனவும் ஜனங்களுடைய நம்பிக்கையில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு புராணம் உண்டு. ஒவ்வொன்றையும் எப்படி எப்படி வழிபட வேண்டுமென்பதற்கு விதிகள் வகுக்கப் பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் உற்சவாதிகள் விமரிசையாக நடைபெற்றுவந்தன. இந்த உற்சவங்களின்போது, வீதி புறப்பா டென்ன, இன்னிசைக் கச்சேரிகளென்ன, நாடகங்க ளென்ன, எல்லாம் நடைபெற்றன; சில சமயங்களில் கடவுள் பிரசாதமென்று சொல்லி அநேகருக்கு உணவும் வழங்கப்பட்டது.
கிரேக்கர்களுடைய தெய்வ நம்பிக்கையை உருவப்படுத்திக் காட்டுவது போல், கிரீஸ் ஆங்காங்கே அழகான கோயில்கள் காட்சி யளித்தன. இந்தக் கோயில்கள், தெய்வங்களை வழிபடும் இடங் களாக மட்டும் இல்லை, சிற்பக் கலையைச் சேர்த்துக் காட்டும் சித்திரச் சாலைகளாகவும் இருந்தனவென்று கூறலாம். என்ன அழகான தெய்வ உருவங்கள்! சுவர்கள் முதலியவற்றில்தான் என்ன விசித்திரமான வேலைப்பாடுகள்! சுருக்கமாக, கிரீஸின் சிற்பக்கலை, அதன் கோயில்களில் வாழ்ந்ததென்று சொல்லலாம்.
இந்தக் கோயில்கள்தான் எவ்வளவு சுத்தமாக வைக்கப் பட்டிருந்தன! கோயிலுக்கு முன்புறம் ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது தொட்டியில் நல்ல நீர் வைக்கப்பட்டிருக்கும். கோயி லுக்குள் நுழைவோர் முதலில் இந்த ஜலத்தை எடுத்து, கை கால்களைச் சுத்தஞ் செய்துகொண்டுதான் உள்ளே செல்வர். தெய்வ உருவத்திற்கு முன்னர், விளக்கு ஒன்று எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். மற்ற இடங்களில் தீபங்கள் பிரகாசித்துக் கொண் டிருக்கும். கோயில்கள், பெரும்பாலும் கிழக்கு நோக்கியே கட்டப் பெற்றிருந்தன. அவற்றுள் வெளிச்சம் குறைவில்லாமல் இருந்தது. தெய்வ உருவத்திற்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் யாவும் காலந் தவறாமல் சாங்கோபாங்கமாக நடைபெறும். பக்தர்கள், வாய் விட்டுப் பாசுரம் பாடிக்கொண்டோ, மனத்துக் குள்ளேயோ ஸ்தோத்திரம் செய்துகொண்டோ, அவரவருக்குகந்த முறையில் தொழுது நிற்பர். விசேஷ காலங்களில் ஜனக்கூட்டம் அதிகமா யிருக்கும்.
கோயில்களில் பூசை செய்யப் பூசாரிகள் இருந்தனர். குறிப் பிட்ட ஒரு வகுப்பினர்தான் பூசாரிகளாக இருக்க வேண்டுமென்ற நிர்ணயம் கிடையாது. பூசை செய்யத் தெரிந்த யாரும் இந்த வேலைக்கு நியமிக்கப்பட்டனர். சில கோயில்களில், இந்தப் பூசாரி உத்தி யோகம், ஏலத்திற்கு விடப்பட்டது. யார் அதிகமான தொகை கட்டு கிறார்களோ அவர்களுக்கே இந்த உத்தியோகம் அளிக்கப்பட்டது. இந்தப் பூசாரிகள், பக்தர்களிடமிருந்து ஒரு தொகையை வசூலித்து வந்தார்கள்.
கோயில்களுக்குப் பலவித வருவாய்கள் இருந்தன. ரொக்கம், நகைகள், துணிமணிகள், இப்படிப் பலவிதமான காணிக்கைகள் ஒழுங்காகக் கிடைத்துக் கொண்டிருந்தன. சிலர், தங்கள் நில புலங் களை எழுதி வைத்தார்கள். இன்னும் சிலர், தங்கள் நில புலங்களி லிருந்து கிடைக்கிற வருமானத்தைக் கொடுத்துவந்தனர். இப்படித் தனிப்பட்டவர்களிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்த வரு மானத்தைத் தவிர, யுத்தத்தின் மூலமாகவும் ஓரளவு வருமானம் வந்துகொண்டிருந்தது. போர்க்களத்தில் வெற்றிகொண்ட கட்சி யினர், தங்களுக்குக் கிடைத்த வெற்றிப் பொருள்களில் ஒரு பகுதியை, கோயில்களுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர். இங்ஙனம் பலவகை வருவாய்களுடைய கோயில்களின் நிருவாகம் அரசாங் கத்தின் வசத்திலேயே இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அவ்வப்பொழுது கோயிற் கணக்குகளைத் தணிக்கை செய்து வந்தனர்.
கோயிலின் புனிதத் தன்மை வெகு கண்டிப்பாகக் காப்பாற்றப் பட்டு வந்தது. இந்தக் காப்பாற்றும் விஷயத்தில் கோயில் அதிகாரிகள் பூரண உரிமை பெற்றிருந்தார்கள். அரசாங்கமும் இந்த உரிமையை மதித்து நடந்து வந்தது. கோயிலுக்குள் யாரேனும் வந்து தஞ்சம் புகுந்து கொண்டுவிட்டால், அவர் எவ்வளவு பெரிய குற்றஞ் செய்த வராயிருந்தபோதிலும், அவரைச் சிறை செய்யவோ, வேறுவித இம்சைகளுக்குட்படுத்தவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. தேசத் துரோகம் போன்ற பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு, அதற்குரிய தண்டனையிலிருந்து தப்ப வேறு வழியின்றி, கடைசி சமயத்தில் கோயிலுக்குள் சென்று அடைக்கலம் புகுந்து கொண்ட வரைக் கூட, அவரை எப்படியேனும் கோயிலிருந்து வெளியே வரச்செய்து, பிறகே சிறைப்படுத்தவோ, வேறு தண்டனைகளுக் குட்படுத்தவோ செய்வர்.
கிரேக்கர்கள், தெய்வங்களை, மனித உருவத்தோடும், மனித சுபாவங்களோடும் கூடியனவாகக் கருதி வழிபட்டத்தோடல்லாமல், சில பிராணிகளையும் வழிபட்டனர். எருது, பசு, பன்றி முதலியன, தெய்வத்தன்மை வாய்ந்தனவென்று போற்றப்பட்டன. பன்றி வர்க்கத்தில் கரும் பன்றி விசேஷமான கௌரவம் பெற்றது. இந்தப் பிராணிகள், பலிக்குரியனவாகக் கொள்ளப்பட்டன. இவை தவிர, சர்ப்ப வழிபாடும் நடைபெற்றது. கோயில்களில் வசிக்கும் பாம்பு களுக்கு அவ்வப்பொழுது பூசை போட்டு வந்தனர். ஆத்தென்ஸி லுள்ள அத்தீனே தேவதையின் கோயிலில் வசித்துக் கொண்டிருந்த ஒரு சர்ப்பத்துக்கு மாதந்தோறும் தேனடையொன்று நிவேதனம் செய்யப்பட்டு வந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. வீட்டில் ஒரு சர்ப்பம் வந்துவிட்டால், அதிலும் சிவப்பு சர்ப்பமாயிருந்து விட்டால், தெய்வமே வீடேறி வந்துவிட்டதாகக் கருதிப் பிரார்த் தனை முதலியன செய்வார்கள்; நாக சர்ப்பமாயிருந்தால், அது வந்து போன இடத்தில் ஒரு சிறிய கோயிலையே எழுப்பிவிடுவார்கள்.
மதமானது, கிரேக்கர்களுடைய தினசரி வாழ்க்கையில் கலந்திருந்தது. மதம் வேறு, வாழ்க்கை வேறு என்று அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை. தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, சமுதாய வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும், மத அடிப்படையின்மீது வைத்தே பார்த்தார்கள். அரசாங்கம், சமயச் சார்புடையதாயிருந்தது. மதத்தைப் போற்றிக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையென்று கருதப்பட்டது. அரசாங்கத்தின் தலைவன், மதத்தின் தலைவனாகக் கௌரவிக்கப்பட்டான். தெய்வ நிந்தனை, அரசாங்கத்தின் தண்டனையைப் பெறுதற்குரிய குற்ற மாகக் கருதப்பட்டது. தனி மனிதன், தனது அன்றாட அலுவல்களை எப்படி மதத்தை மையமாகக் கொண்டு செய்து வந்தானோ, அரசாங்கமும் அப்படியே, தனது காரியங்களைச் சமய நோக் குடனேயே செய்து வந்தது. இரண்டு பேர், தனிப்பட்ட ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியிருந்தால், தெய்வத்தின் பெயரால் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். அது போலவே, ஒரு ராஜ்யமும் மற்றொரு ராஜ்யமும் உடன்படிக்கை செய்துகொள்கிற போது, இரண்டு ராஜ்யங்களும் தெய்வத்தின் பெயரால் பிரமாணம் எடுத்துக் கொள்ளும். அரசாங்கம், ஒரு காரியத்தைத் துவங்குகிற போதும், சமுதாயப் பொதுவில் ஒரு காரியம் துவங்குகிறபோதும், தெய்வத்திற்கு வந்தனை வழிபாடுகள் நடைபெறும். ஜனசபை கூடுகிறதா, முதலில் பிரார்த்தனை; பூசை. அப்படியே யுத்த களத்தை நோக்கி ஒரு படை புறப்படுகிறதா, முதலில் பிரார்த்தனை; பூசை. இப்படி எந்த ஒரு காரியமும், தெய்வத்தின் திருவருளைப் பெற்ற பின்னரே ஆரம்பிக்கப்படும்.
பிரதியொரு கிரேக்கனும், தனது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெய்வத்தோடு உறவு கொண்ட வனாகவே இருந்தானென்று சொல்லலாம். வெளியிலே ஒருவன் புறப்படுகிறான். வழியில், முச்சந்தி அல்லத நாற்சந்தி இப்படி ஏதேனும் ஓரிடத்தில் வழவழப்பான ஒரு கல்லைக் காண்கிறான். அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா போகமாட்டான், தன்னோடு ஒரு குப்பியில் கொண்டு வந்திருக்கும் ஒலிவ எண்ணெயில் சிறிது அதன்மீது ஊற்றுவான்; முழந்தாளிட்டுப் பணிவான். அப்படியே கோயில்கள் வழியாகச் செல்கிறபோதும், கோயில்களுக்குள் நுழைந்துவர அவகாசமில்லாவிட்டால் வெளியே நின்று சிறிது நேர மாகவது பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் மேலே வழி நடப்பான். தெய்வ வடிவமாகத் தான் கருதும் எதனைப் பார்த்தாலும் அதனை வணங்கவோ வாழ்த்தவோ தவறமாட்டான் எந்த ஒரு கிரேக்கனும்.
கிரேக்கர் ஒவ்வொருவருடைய வீட்டிலும் சமையல் கட்டின் ஒரு பக்கத்தில் எப்பொழுதும் அக்கினி இருந்து கொண்டிருக்கும். இதனை அணையவிடக் கூடாதென்பது ஐதிகம். வீட்டிலுள்ளோர் அனைவரும் தினந்தோறும் இதற்கு வழிபாடு செய்வர். தாங்கள் உண்பது எதுவாயிருந்தாலும் இதற்கு நிவேதனம் செய்த பின்னரே உண்பர். ஒவ்வொரு தடவை உணவின்போதும் இப்படிச் செய்வர். மதுபானஞ் செய்வதாயிருந்தால் கூட, முதலில் இரண்டு மூன்று சொட்டு மதுவை, கீழே தரையில் விட்டுவிட்டு, பிறகுதான் அருந்துவார். தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு அர்ப்பணஞ் செய்துவிட்டுப் பிறகு அருந்துவதாக அர்த்தம். (இப்பொழுது கூட கிரீஸில் இந்த வழக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.)
வீட்டிற்கோர் அக்கினி இருந்ததுபோல், ஒவ்வொரு நகரத் திற்கும் பொதுவான அக்கினியொன்று இருந்தது. இது, நகரப் பொது மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டது. நகரத்தார் என்ற முறையில் ஒன்று கூடுகிறபோது, அனைவரும் இந்த அக்கினியை வணங்குவர். நகர தெய்வத்திற்குப் பூசை முதலியன நடபெறுகிற காலத்தில், நகரத்தினர் அனைவரும் இந்த அக்கினி முன்னர் இருந்து விருந்துண்பர்.
தொடர்ச்சி விட்டுப் போகாமல் தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்பட்டு வருகிற இந்த அக்கினியைப் போற்றுவதன் மூலம், தங்கள் மூதாதையர்களை வழிபடுவதாகவும், அப்படியே இனி உண்டாகப் போகும் தங்கள் பிற்கால சந்ததியினரை வாழ்த்து வதாகவும் கருதினர் கிரேக்கர்.
பொதுவாகவே கிரேக்கர்களுக்குக் குடும்பப் பற்று மிக அதிகம். குடும்பப் பொறுப்பை நிறைவேற்றுவதிலும், அதன் புனிதத் தன்மையைப் காப்பாற்றுவதிலும் அதிக சிரத்தை காட்டினர். குடும்பம் என்பது, புருஷனும் மனைவியும் அல்லது அவர்களோடு இரண்டு மூன்று குழந்தைகளும் சேர்ந்த ஒரு சேர்க்கை மட்டுமல்ல, ஜீவிய தசையிலுள்ள பாட்டன் பாட்டி, பேரன் பேத்திகள் இவர் களனைவரும் ஒன்றுகூடிக் குலவுகின்ற ஓர் இடம் அல்லது அதற் கேற்ற ஒரு சூழ்நிலை மட்டுமல்ல, ரத்த பாசத்தினாலும் அக்கினி வளர்ப்பினாலும் இறந்து போன மூதாதையர்களையும், வருங்கால சந்ததியினரையும் இணைத்து வைக்கும் புனிதமான ஓர் ஐக்கிய ஸ்தாபனமென்றே கருதினர். குடும்பத்தின் கௌரவத்திற்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் எல்லோருக்கும் கவலை இருந்தது. குடும்பத்தின் எஜமான ஸ்தானத்தில் இருந்தான் தந்தை. அவன் சொற்படியே எல்லோரும் நடந்து வந்தனர். சாதாரணமாக, ஒருவர், தன் பெயரைச் சொல்லிக் கொள்கிறபோது, இன்னார் மகன் இன்னார் என்றுதான் சொல்லிக் கொள்வர்.
வெளிநாடுகளில் சென்று குடியேறிய கிரேக்கர்கள், தாங்கள் எந்த நகரத்திலிருந்து புறப்பட்டார்களோ அந்த நகரத்தில், பொது வாக வளர்க்கப்பட்டு வந்த அக்கினியிலிருந்து சிறிது எடுத்துச் சென்றனர். அக்கினியை மட்டுமல்ல, கொஞ்சம் மண்ணையும் எடுத்துச் சென்றனர்; சென்ற, இடத்தில், இந்த அக்கினியை மேலும் வளர்த்து, தங்கள் இல்லங்களுக்கென்றும், தாங்கள் ஸ்தாபித்துக் கொள்ளப் போகிற நகரத்திற்கென்றும் பகிர்ந்து கொண்டனர்; இங்ஙனமே, மண்ணையும், குடியேறுகிற இடத்தில் தூவினர். இவ் விரண்டு செயல்களின் மூலம், தங்கள் மூதாதையர்களின் தொடர்பும், தங்கள் தாய்நாட்டின் தொடர்பும் தங்களுக்கு இருந்து கொண்டி ருப்பதாக நம்பினர்.
ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால், அந்தக் காரியத்தை நடத்திக் கொடுக்கிற தெய்வமாகக் கருதப்படுகிற தெய்வத்திற்கு, முன்கூட்டிப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள்; அந்தக் காரியம் முடிந்த பிறகு, அந்தத் தெய்வத்தைப் போற்றிப் புகழ்வார்கள். எதற்கும் பிரார்த்தனைதான்! எதற்கும் பூசைதான்! கப்பலேறித் தொலைக்குப் புறப்படுகிறாயா, சமுத்திர தெய்வத்தை வேண்டிக் கொள்; பருவ மழை பெய்யவில்லையா, மழை தெய்வத்திற்குப் பூசை போடு; ஏதேனும் ஒருதொழில் தொடங்க வேண்டுமா, அந்த தொழிலுக்குரிய தெய்வத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொள். இப்படிச் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது.
இன்னும், குடும்பத்திலோ, ராஜ்யத்திலோ ஏதேனும் ஒரு துர்ச்சம்பவம் நேரிட்டுவிட்டால், அந்தச் துர்ச்சம்பவத்திற்குக் காரணமான தெய்வம் கோபித்துக் கொண்டுவிட்டதனாலேயே இப்படி ஏற்பட்டதென்று கருதி, அந்தத் தெய்வத்தைச் சாந்தப் படுத்துகின்ற முறையில், அதற்குப் பூசை முதலியன செய்வார்கள். மற்றும், நோய், பயம், ஆபத்து முதலியவற்றினின்று தங்களைப் பாது காத்துக் கொள்ளும் பொருட்டு ரட்சை கட்டிக் கொள்வார்கள். இந்த ரட்சா பந்தனத்தில், பாமரர்கள் என்று சொல்லப்படுகிற சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல, படிப்பிலும் பதவியிலும் உயர்ந் திருக்கிறவர்கள்கூட நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆத் தென்ஸுக்குப் பிரகாச மயமான ஒரு வாழ்வை யளித்தவனும், பதினான்காவது அத்தியாயத்தில் முதன்முதலாக நம்மால் சந்திக்கப் படப் போகிறவனுமான பெரிக்ளீஸ், மரணப்படுக்கையில் இருந்த காலத்தில், அவனுடைய கழுத்தில், ஒரு ரட்சையைக் கட்டினார்க ளென்று சொல்லப்படுகிறது. (இப்பொழுதுகூட, இந்த ரட்சை கட்டிக் கொள்ளும் வழக்கம் கிரீஸில் கிராம ஜனங்களிடையே சர்வ சாதாரணமாக இருந்து வருவதைக் காணலாம்.)
குறிகேட்டலில் கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. ஏதேனும் ஒரு காரியம் ஆக வேண்டுமா, அந்தக் காரியத்தைத் தொடங் கலாமா, தொடங்கினால் நன்றாக முடியுமா என்பன போன்ற வற்றிற்குக் குறி கேட்பார்கள். குறி சொன்னபடியே நடப் பார்கள். சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல, அரசாங்கங்கள் கூட குறிகேட்டு அதன்படி நடந்து வந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் குறி சொல்வோர் இருந்தனர். இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலான குறி சொல்லும் பீடம் டெல்பியே என்ற நம்பிக்கை எல்லாக் கிரேக்கர்களுக்கும் இருந்தது.
கிரேக்கர்களுடைய வாழ்க்கையில் சடங்குகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பிறப்பு, விவாகம், மரணம் எல்லாவற்றிற்கும் சடங்கு கள்தான். இந்தச் சடங்குகள், வீட்டில் அக்கினி இருக்கு மல்லவா, அதற்கு எதிரிலேயே நடைபெற்றன. இவற்றை எப்படி எப்படிச் செய்ய வேண்டுமென்பதற்கு அநேக விதிகள் இருந்தன. இந்த விதிகள் பரம்பரையாக வந்தவை. இதனால், இவை, ஏறக்குறைய எல்லோருக் கும் தெரிந்திருந்தன. அநேகமாக ஒரு குடும்பத் திலுள்ள ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்தச் சடங்குகளை நடத்துவார்கள். ஆனால், சில சடங்குகள், பெண்கள் மட்டும் செய்யக்கூடியவை என்று இருந்தன. இவற்றில் ஆண்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். சடங்குகளின் போது உற்றார் உறவினர் அனைவரும் அழைக்கப் பட்டு ஒன்று கூடுவார்கள். விருந்துகள் முதலியன நடைபெறும். உறவினரின் ஒற்றுமையை அவ்வப்பொழுது உறுதி செய்து வந்தன இந்தச் சடங்குகள் என்று சொல்லலாம்.
சடங்குகளைப் போலவே பண்டிகைகளும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் ஒவ் வொரு குடும்பத்தினரும் அதிக ஊக்கங்காட்டினர். பெரும் பாலான பண்டிகைகள், விவசாயப் பொருள்களின் உற்பத்தி பெருக வேண்டு மென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டெ ழுந்தவை. இந்தப் பண்டிகைகள், விவசாயப் பண்டிகைகளென்று பொதுவாக அழைக்கப்பட்ட போதிலும், இவைகளை, விவசாயிகள் மட்டுமல்ல, விவசாயத்தினால் நன்மையடைகிற இதரர்களும் கொண்டாடினர். இவற்றை எல்லோரும் கொண்டாடுகின்ற தேசீயப் பண்டிகை களென்றே சொல்ல வேண்டும். இந்தப் பண்டிகைகளின் போது, காலந் தவறாது மழை பொழிய வேண்டும்; நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்று பலவிதமாகப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அறுவடைக்குப் பின்னர் கொண்டாடப்படுகிற பண்டிகைகளின் போது, நல்ல மகசூல் கிடைத்ததற்காக மகிழ்ச்சி தெரிவிக்கின்ற முறையில் தெய்வங்களுக்கு வந்தனை வழிபாடு செய்வார்கள்.
3. பொது நம்பிக்கைகள்
ஏழு. கிரேக்கர்களுக்கு மிகவும் புனிதமான எண் இது. ஞானிகள் எழுவர், ஞாயிறு தொடங்கி சனி வரை கிரகங்கள் ஏழு. இந்தக் கிரகங்களையொட்டி வாரத்தில் நாட்கள் ஏழு. உலகத்தி லுள்ள அதிசயங்கள் ஏழு, வானுலகங்கள் ஏழு, நரகத்திற்குச் செல்லும் வாயில்கள் கூட ஏழு. இப்படி முக்கியமான எல்லா வற்றையும் ஏழாகக் கண்டு களித்தார்கள் (“தேவன், தாம் செய்த தம்முடைய கிரியையே ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். தேவன், தாம் கிருஷ்டித்து உண்டு பண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு அதில் ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார்” என்ற கிறிஸ்துவ வேத வாசகம் இங்குக் கவனிக்கத் தக்கது - ஆதியாகமம்: அதி: 2.)
சோதிடத்தில் அபார நம்பிக்கை கிரேக்கர்களுக்கு. மனிதர் களுடைய விதி கதிகளை கிரங்கள்தான் நிர்ணயிக்கின்றனவென்று நம்பி, அந்தக் கிரகங்களுக்கு அவ்வப்பொழுது பிரீதி செய்து வந்தார்கள். தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல, ராஜ்யங்கள்கூட, கிரகங்களின் தயவை எதிர்பார்த்து நின்றன; அவைகளுக்குக் கோப முண்டாகாதவாறு அவ்வப்பொழுது பூசை முதலியன செய்து வந்தன.
சூரிய கிரகணத்தன்றோ, சந்திர கிரகணத்தன்றோ, எந்த ஒரு முக்கியமான காரியத்தையும், தொடங்கக் கூடாதென்பது கிரேக் கர்களின் நம்பிக்கை. யுத்த காலங்களில் கூட இந்த நம்பிக்கையைக் கைவிட மாட்டார்கள். யுத்த களத்திற்கு ஒரு படை புறப்படத் தயாராயிருக்கும். இந்தப் படை செல்லவேண்டியது அவசியமாகவும் இருக்கும். சென்றால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால் புறப்படுகிற நாளில் கிரகணம் ஏற்பட்டுவிட்டால், புறப் படத் தயாராயிருந்த படை நின்றுவிடும். அப்படியே யுத்த களத்தி லிருந்து பின்வாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமையில் ஒரு படை இருக்கும். பின்வாங்கிக் கொண்டுவிட்டதால், தனக்கு அழிவு ஏற்படாதென்பதையும் அந்தப் படை தெரிந்து கொண்டிருக்கும். ஆயினும் பின்வாங்கத் தயக்கம். ஏன்? கிரகணம் குறுக்கிட்டு விட்டது! இதனால் அழிந்துபடுமே தவிர, கிரகண நம்பிக்கையை மீறி, பின்வாங்கத் துணியாது அந்தப் படை. இந்த மாதிரியான சம்பவங்கள் பல கிரேக்க சரித்திரத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
“நாள் செய்வதை நல்லவர்கள் செய்யமாட்டார்கள்” என்று ஒரு வசனமுண்டு. இந்த வசனத்தை எழுத்துப் பிசகாமல் அனுஷ் டித்து வந்தார்கள் கிரேக்கர்கள். எதற்கும் நாள் நட்சத்திரம் முதலியன பார்ப்பார்கள். விவசாயிகள், நல்லநாள் பார்த்துத்தான் விதை விதைப்பார்கள்; அறுவடை செய்வார்கள். தொழிலாளர் களும் இப்படியே நல்ல நாள் பார்த்துத்தான் எதையும் செய்வார்கள். கரி நாட்கள் என்று சொல்கிறோமில்லையா, இந்த மாதிரியான நாட்களில் யாருமே சுபகாரியம் எதுவும் செய்யமாட்டார்கள். நல்ல காரியம் எதனையும் தொடங்கமாட்டார்கள். ஜனசபை கூடுதல் முதலிய முக்கியமான ராஜாங்க காரியங்களும் நடைபெற மாட்டா. இந்த நாட்களை துரதிருஷ்டமான நாட் களென்றே கூறுவர். இந்த நாட்களில் எந்தக் காரியம் தொடங்கினாலும் அது நன்கு நிறை வேறாது என்பதில் திடநம்பிக்கை கொண்டிருந்தனர்.
நாள் பார்ப்பது போலவே சகுனமும் பார்ப்பார்கள். வெளியே புறப்படுகிறபோது, ஒரு பூனை குறுக்கே சென்றாலோ அல்லது யாராவது தும்மினாலோ அல்லது கால் இடறினாலோ பயணத்தை நிறுத்தி விடுவார்கள். குறுக்கே சென்ற பூனையைத் தாண்டி வேறு யாரேனும் சென்றதற்கப்புறம் அல்லது மூன்று கற்களை வீதிக்குக் குறுக்காகப் போட்டுவிட்டு, பிறகே புறப்படுவார்கள்; அல்லது சிறிது நேரம் இருந்துவிட்டுப் புறப்படுவார்கள்.
கனவு கண்டால் அது நிச்சயம் பலிக்கும் என்பது, கிரேக்கர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளில் ஒன்று. இன்ன கனவுக்கு இன்ன பலன் என்று சொல்லக் கூடியவர் சிலர் இருந்தனர். இவர்கள் இப்படிப் பலன் சொல்லியே பிழைத்து வந்தார்கள்.
சாபத்திற்குப் பயந்தவர்கள் கிரேக்கர்கள். யாராவது கோபித்துக் கொண்டு சாபமிட்டுவிட்டால், அந்தச் சாபத்தினால் தங்கள் வாழ்க்கையே பாழ்பட்டு விடுமென்றும் நம்பினார்கள். இதனால் பிச்சைக்காரர்கள் உள்பட யாரையும் துச்சமாகப் பேசமாட்டார்கள். கூடிய மட்டில் மரியாதைக் குறைவில்லாமல் நடத்துவார்கள்.
சாபத்திற்குப் பயந்தது போலவே, பில்லி, சூனியம் முதலியவை களுக்கும் பயந்தார்கள் கிரேக்கர்கள். சூனியவித்தையில் வல்லவர்க ளென்று சிலர் இருந்தனர். இவர்களிடத்தில் வசிய மருந்துகளும் இருந்தன. ஆணையோ பெண்ணையோ மலடாக்கிவிடக் கூடிய மருந்துகளையும் இவர்கள் வைத்திருந்தார்கள். இவர்களிடத்தில் சாதாரண ஜனங்களுக்கு ஒருவித பயம் இருந்ததது. இந்தப் பயத்தை ஆதாரமாகக் கொண்டே இவர்கள் பிழைப்பு நடத்திவந்தார்கள்.
யாராவது ஒருவர் நோயாகப் படுத்துக் கொண்டுவிட்டால், அவரை ஏதோ அந்நிய வஸ்து ஒன்று பற்றிக் கொண்டுவிட்ட தென்று கருதி வந்தார்கள் கிரேக்கர்கள். அப்படியே பைத்தியம் பிடித்தவர் களையும் கருதி வந்தார்கள். இதனால் அவர்கள் அருகில் செல்லவும் அஞ்சுவார்கள். அந்த அந்நிய வஸ்து தங்களையும் பற்றிக் கொண்டு விடுமோ என்ற பயம். சில வியாதிகள் சிறிய சிறிய புழுக்கள் போன்ற வசைகளிலிருந்துதான் உண்டாகின்றன வென்ற தற்கால வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்களல்லவா, இந்தப் புழுக்கள் போன்றவை களைத்தான் அந்நிய வஸ்துக்கள் என்று கிரேக்கர்கள் கூறி வந்தார்கள் போலும். இந்த அந்நிய வஸ்துக்களை ‘குட்டிப் பேய்கள்’ என்றே அழைத்தார்கள் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.
நோயாளிகளிடம் செல்கிறவர்களுக்கு அவர்களுக்குச் சிகிச்சை செய்கிறவர்களும், உடனே ஸ்நானம் செய்து தங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டு விசாரித்துவிட்டு வந்தவர்களும், நீராடி விட்டுத் தான் தங்கள் வீட்டிற்குள் நுழைவார்கள்.
பொதுவாகவே கிரேக்கர்கள், மிகவும் சுத்தமாயிருப்பார்கள். தினந்தோறும் குளிக்கத் தவறமாட்டார்கள். தாங்கள் சுத்தமா யிருப்பது மட்டுமின்றி, வசிக்கின்ற வீடுகள், புழுங்குகின்ற பொது இடங்கள் முதலியனவும் சுத்தமாக இருக்கப் பார்ப்பார்கள். சுத்தத்தை அனுஷ்டிக்கிற விஷயத்தில் சிறிது கூட சோம்பல் காட்ட மாட்டார்கள்.
சுத்தமாயிருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமாக இருந்து வரவும் பார்ப்பார்கள். நோய்வாய்ப்படுவதைக் கேவலமாகவே கருதினார்கள். அமாவாசை தோறும் ஒலிவ எண்ணெயை தலை யிலும் உடம்பிலும் தேய்த்துக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். இதனால் உடல்நலத்தோடு பளபளப்பான மேனி யுடையவர் களாகவும் இருந்தார்கள்.
ஈமச் சடங்குகளைப் பற்றிச் சில வார்த்தைகள். உயிர் போன பிறகு, உடலை நீராட்டி நல்ல வஸ்திரங்களாலும், நறுமலர்களாலும் அலங்காரம் செய்வார்கள். பிணத்தின் வாயில் ஓர் ஓபோல் (சுமார் ஒன்றரையணா பெறுமான ஒரு நாணயம்) வைக்கப்படும். எதற்காக? பிதிருலோகத்திற்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டுமாம். கடக்க, படகுக் கூலி வேண்டுமல்லவா? அதற்காகவே இந்தப் பணம். சாதாரணமாகவே கிரேக்கர்கள் வெளியே புறப்படுகிறபோது சில்லரை தேவையிருக்குமானால், அந்தச் சில்லரையை வாயில் அடக்கிக் கொண்டு செல்வது வழக்கம். இந்த வழக்கத்தை யொட்டியே பிணத்தின் வாயில் மேலே சொன்னபடி ஓர் ஓபோல் வைக்கப்படும். இப்படி இரண்டு நாட்கள் பிணத்தை வாசனை போட்டு வைத்திருப்பார்கள். இநத இரண்டு நாட்களிலும் உற்றார் உறவினர் வந்து துக்கம் விசாரித்து விட்டுப் போவார்கள். எல்லோரும் கறுப்பு உடையை அணிந்து கொண்டிருப்பார்கள். இது துக்கத்தின் அறிகுறி. மூன்றாவது நாள், பாடைகட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். பெண்கள், தலைவிரி கோலமாக மாரடித்துக் கொண்டும் அழுது கொண்டும் பின்தொடர்வார்கள். கூலிக்கு மாரடிக்கிறவர்களும் இருந்தார்கள். மயானத்தில் உடலை வைத்து விட்டு எரிந்த பிறகு அஸ்தியில் கொஞ்சம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிப் புதைப்பார்கள். எரிப்பதுதான் கிரீஸில் பெரும் பாலும் வழக்கமாயிருந்தது. மயானம், நகர எல்லைச் சுவர்களுக்கு வெளியே இருந்தது.
இறந்து போனவர்களுக்குத் தாகம் எடுக்குமல்லவா, அதற்காக அஸ்தி புதைக்கப்பட்ட இடத்தின் மீது சிறிது மதுவை ஊற்று வார்கள். ஆகாரத்திற்காகச் சில பிராணிகளும் பலி கொடுக்கப்படும். மலர்மாலை போட்டுத் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துக் கொள்ளுவார்கள். பிறகு, வீட்டில் உறவினர் அனைவருக்கும் விருந்து நடைபெறும். இறந்து போனவர்களைப் பற்றி யாரும் தூஷணை யாகப் பேசமாட்டார்கள்; பேசக்கூடாதென்பது கண்டிப்பாக அனுசரிக்கப்படும்.
4. ஒருநாள் வாழ்க்கை
கிரேக்கர்களின் தினசரி வாழ்க்கை எப்படி நடைபெற்று வந்தது என்பதைப் பற்றி விசாரிக்கப் புகுகிறபோது, ஆத்தீனியர் களுடைய வாழ்க்கையைப் பற்றின விவரங்களே அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஆத்தீனியர்கள் நடத்தி வந்த வாழ்க்கை யைப் போலவே, ஏறக்குறைய மற்ற எல்லாக் கிரேக்கர்களும் நடத்தி வந்தார்களென்று சொல்லலாம். இதனாலேயே ஆத்தீனியர்கள் நடத்திவந்த வாழ்க்கையை வருணித்துவிட்டு, கிரேக்கர்களின் வாழ்க்கையை வருணித்து விட்டதாகச் சரித்திராசிரியர்கள் திருப்தி யடைகிறார்கள். இப்படித் திருப்தி யடைவது உண்மைக்கு விரோத மாகவுமில்லை.
ஆத்தீனியர்களின் தினசரி வாழ்க்கை எப்படி நடைபெற்று வந்தது? அதிக ஏழையும் அதிக பணக்காரனுமில்லாத நடுத்தர நிலை மையிலுள்ள ஓர் ஆத்தீனியனை எடுத்துக் கொள்வோம். காலையில் சூரியோதயமாவதற்கு முந்தி எழுந்திருப்பான். நித்தியக் கடன்களை முடித்துக் கொண்டு, காலை ஆகாரமாக ரொட்டியும் மதுவும் சிறிது உட்கொள்ளுவான். பிறகு கூடியமட்டில் நல்ல விதமாக உடை யணிந்து கொண்டு, கையில் ஒரு தடியுடன் வெளியே புறப்படுவான். ஓரிரண்டு அடிமைகள் பின்தொடர்வர். நடக்கிற போது, கை கால் களை ஆட்டி அசைத்துக் கொண்டு வேகமாகவும் நடக்கமாட்டான். அப்படி நடப்பது கௌரவக் குறைவு. அப்படி நடப்பவரை எல் லோரும் ஏளனஞ் செய்வர். எனவே நிதான மாகவும் கம்பீரமாகவும் நடப்பான். முதலில், பந்துக்களின் வீட்டுக்கோ நண்பர் களின் வீட்டுக்கோ சென்று nக்ஷமம் விசாரிப்பான். பிறகு நாவிதன் கடைக்குச் சென்று தலைமயிரையும் தாடி மீசையையும் சரிப் படுத்திக் கொள்வான். இப்பொழுது ‘தலை மயிர் வெட்டும் இடம்’ என்று சொல்கிறோமில்லையா, இந்த மாதிரியான இடங்கள் - ஸலூன்கள் - ஆத்தென்ஸில் ஆங்காங்கே இருந்தன. மற்றும் கிரேக்கர்கள் எல்லோரும் தாடி மீசை வைத்துக் கொண்டி ருந்தார்கள். மகா அலெக்ஸாந்தருக்குப் பிறகுதான் க்ஷவரம் செய்து கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. அது வரையில், தலை மயிரையும் தாடி மீசையையும் ஒழுங்குபடுத்தி விடுவதென்பது ஒரு தொழி லாகவே நடைபெற்று வந்தது. இதற்கென்று அதிக நேரத்தைச் செலவ ழிக்கவும் தயங்கவில்லை கிரேக்கர்கள்.
‘ஸலூன்’களில் சில சமயம் அதிக நேரம் காக்க வேண்டியிருந் தாலும் இருக்கும். அப்பொழுது நண்பர்கள் பலர் ஒன்று கூடி, பரஸ்பரம் க்ஷமலாபங் களைப் பற்றி விசாரித்துக் கொள்வார்கள். ஊர் விவகாரங்களைப் பற்றிப் பேசுவார்கள். ‘ஸலூன்கள்’ பேச்சு மடங்களாக இருந்தனவென்று கூறலாம். இங்குத் தொழில் நடத்து கிறவர்கள், வாடிக்கைக்காரர்களின் மயிரை ஒழுங்குப்படுத்தி விடுவதோடு அவர்களை அழகுபடுத்தியும் விடுவார்கள். பிறகு ஒரு கண்ணாடியைக் கொடுத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளும்படி செய்வார்கள். பொதுவாகவே கிரேக்கர் கள், ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’ என்று சொல்வார்களே, அப்படி இருப்பார்கள்.
‘ஸலூனை’ விட்ட நமது ஆத்தீனிய நண்பன் நேரே சந்தைச் சதுக்கத்திற்கு, அதாவது மார்க்கெட்டுக்குச் செல்வான். இதற்கு ‘அகோரா’ என்று பெயர். இங்கு, வீட்டிற்கு வேண்டிய சாமான் களை வாங்கி, தன்னோடு வந்த அடிமையிடம் கொடுத்தனுப்பி விடுவான். பிறகு ரொக்க லோவாதேவி ஏதேனும் இருந்தால் அதைக் கவனிப்பான். இதற்குள் நண்பகலாகி விடும். லேசாக ஆகாரம் எடுத்துக்கொள்வான். இந்த ஆகாரத்தை, அநேகர், கூடவே கொண்டு வந்திருப்பர். ஆகாரத்திற்காக வீட்டுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தை மேற்கொள்ள விரும்பாதவரே இப்படிச் செய்வர். கொண்டு வந்த ஆகாரத்தை, அங்கேயே அகோராவிலேயே எங்காவது ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவான். பிறகு அங்கேயே சிறிது நேரம் சிறு துயில் கொள்வான். கிரேக்கர்கள் எல்லோருக்குமே பகல் நேரத்தில் இப்படி ஓய்வு கொள்கிற பழக்கம் உண்டு.
கிரீஸின் முக்கியமான எல்லா நகரங்களிலும் தேகப் பயிற்சிக் கென்று பொதுச்சாலைகள் பல இருந்தன. இப்படிப்பட்ட பயிற்சி சாலையொன்றுக்கு, நமது ஆத்தீனிய நண்பன், சிறு துயில் விடுத்த பிறகு சென்று தேகாப்பியாசம் செய்வான். கசரத்து செய்வோர் சய்வர்; நவீன விளையாட்டுகளென்று கருதப்படுகின்ற உதை பந்தாட்டமென்ன, ஹாக்கி என்ன, டென்னிஸ் என்ன, இப்படிப் பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் ஈடுபடுவர். சிறு பிள்ளைகள், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளிலும், கொஞ்சம் வயதான வர்கள் சொக்கட்டான் முதலிய விளையாட்டு களிலும் ஈடுபட்டி ருப்பர். பணம் படைத்தவர்கள், குதிரைச் சவாரி செய்வர். இங்ஙனம் அவரவருடைய வயது முதலிய தகுதிகளுக்குத் தகுந்தபடி பலவித விளையாட்டுகள் ஏற்படுத்தப் பெற்றிருந்தன. கசரத்து முதலிய கடினமான தேகப்பயிற்சி செய்வோர், பெரும்பாலும் எவ்வித ஆடையும் இல்லாமலே செய்வர்.
தேகப்பயிற்சி முடிந்தது. பிறகு நமது ஆத்தீனிய சகோதரன் வீட்டுக்குவந்து, ஓர் அடிமையைக் கொண்டு அதன் உடம்பு பூராவுக்குமே ஒலிவ எண்ணெயைத் தேய்க்கச் செய்வான். இங்ஙனம் எண்ணெய் தேய்த்த அடிமையை, சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த எண்ணெயை, அதற்கென்றுள்ள ஒரு சிறு கருவியினால் வழித் தெடுத்து விடுவான். பின்னர் தண்ணீரில் ஸ்நானம். வெந்நீர் ஸ்நானம் கிடையாது. வெந்நீரில் ஸ்நானம் செய்கிற பழக்கம் நான்காவது நூற்றாண்டுத் தொடக்கத்தில்தான் ஏற்பட்டது. ஆனால், இதை, நரம்புத் தளர்ச்சி உண்டுபண்ணிவிடுகிறதென்று சொல்லி, வயதான வர்கள் கண்டித்தே வந்தார்கள்.
ஸ்நானத்திற்குப் பிறகு சாப்பாடு. இதுதான் சரியானது அல்லது பலமான சாப்பாடு என்று சொல்லவேண்டும். அநேகமாக இந்தச் சாப்பாட்டை இருட்டுவதற்கு முந்தியே முடித்துக் கொள் வான் நமது ஆத்தீனிய சகோதரன். தனித்திருந்து சாப்பிடுவதைக் காட்டிலும், ஓரிரண்டு விருந்தாளிகளுடன் சாப்பிடுவதில்தான் அவனுக்குத திருப்தி. ஆத்தென்ஸிலேயே, பொதுவாக, ஒருவருக் கொருவர் கலந்து பழகுகிற தன்மை அதிகமாயிருந்தது; விருந்துக்கு அழைப்பதும் விருந்துக்குச் செல்வதும் சகஜமாயிருந்தன.
சாப்பிடுவதற்கென்று தனியான அறையொன்று இருக்கும். இங்கு உயரமான சார்மணைகள் போடப்பட்டிருக்கும். ஒவ் வொருவரும் ஒவ்வொரு சார்மணையில் சாய்ந்த வண்ணம் இருந்து சாப்பிடுவர். விருந்தாளிகள் வந்ததும், வீட்டிலிருக்கும் அடிமைகள், அவர்களுடைய மிதியடிகளைக் கழற்றி வைத்து விட்டு, கால்களைக் கழுவிவிடுவர். பிறகு ஒவ்வொருவருக்கும், தலையில் அணிந்து கொள்ள மலர்மாலை வழங்கப்படும். இதற்குப் பின்னர், ஒவ் வோருவர் முன்னிலையிலும், வட்டமாகவோ சதுரமாகவோ உள்ள ஒரு சிறிய மேஜை போடப்பட்டு அதன்மீது அன்று சமைத்துத் தயா ராயுள்ள ஆகார வகைகள் கொண்டு வந்து வைக்கப்படும். ஆகார வகைகளில் வெள்ளைப்பூண்டு அதிகமாக உபயோகிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. கறிகாய், மீன், முட்டை ஆகியவை முக்கிய ஆகாரப் பொருள்களாயிருந்தன. ஆகாராதிகளைக் கையினாலேயே எடுத்துச் சாப்பிடுவர்.
சாப்பாடு முடிந்தது. அடிமைகள் வந்து, ஆகாராதிகள் வைக்கப்பட்டிருந்த மேஜைகளை அப்புறப்படுத்திவிட்டு, இடத்தை சுத்தஞ் செய்து விடுவர். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்சண வகை களென்ன, பழ வகைகளென்ன, இவை கொண்டு வரப்பட்டு அனை வருக்கும் வழங்கப்படும். பேசிக்கொண்டே இவைகளை மெது மெதுவாகத் தின்பர். பின்னர் எல்லோருக்கும் மது வழங்கப் படும். இதனைத் தண்ணீரில் கலந்தே அருந்துவர். அதிகமான விருந்தாளி கள் கூடிவிட்டால் அப்பொழுது, நள்ளிரவு வரையில் கூட களி யாட்டயர்வர். சங்கீதமென்ன, நடனமென்ன, இடையிடையே தமாஷ் பேச்சுக்களென்ன, எல்லாம் நடைபெறும்.
ஆத்தீனியர்களெல்லோருடைய தினசரி வாழ்க்கையும் இதே பிரகாரம் நடைபெற்று வந்ததென்று நாம் சொல்லவில்லை; வேலை செய்து ஜீவனம் நடத்தவேண்டிய அவசியமில் லாதவர்களுடைய வாழ்க்கையே இப்படி நடைபெற்றுவந்ததென்று சொல்கிறோம். இதுவும் ஒரே விதமாக நடைபெற முடியாதல்லவா? சில நாட்களில், ஜனசபைக் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டி யிருக்கும்; அல்லது நீதி ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்; அல்லது வேறு அலுவல்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். இவைகளில்லாத நாட்களையே மேற்கண்ட விதமாகக் கழித்தனர் என்றே நாம் கொள்ளவேண்டும்.
ஓய்வுகொள்ளாமல் உழைத்த ஆத்தீனியர்களும் பலர் இருந்தனர். தொழில் நடத்தியவர்களென்ன, விவசாயத்தை ஜீவனோ பாயமாகக் கொண்டிருந்தவர் களென்ன, அரசாங்க ஊழியர்க ளென்ன, ராணுவத்தைச் சேர்ந்தவர்களென்ன, இப்படிப்பட்டவர் களெல்லோரும், தினசரி மார்க்கெட்டுக்குச் செல்வதும், தேகப் பயிற்சி செய்வதும், விருந்துண்பதுமாயிருக்கு முடியுமா? அவரவருக் குள்ள பொறுப்புக்களைக் கவனிக்கவே அவரவருக்கும் பொழுது சரியாயிருக்கும்.
பொதுவாக ஒன்று சொல்லலாம். ஆத்தீனியர்கள் யாவருமே, ஏன், எல்லாக் கிரேக்கர்களுமே, திறந்தவெளி வாழ்க்கையை அதிக மாக விரும்பினார்கள். வீட்டிலேயே அடைபட்டுக்கிடப்பதை விரும்பவில்லை; வெறுக்கவும் செய்தார் களென்று சொல்லலாம். இதனால் வீட்டு விவகாரங்களைக் கவனியாதவர்கள் என்பதில்லை. ஏற்கனவே சொன்னபடி, குடும்பப்பற்று மிகவுடையவர்கள். இதற்குக் கிணற்றுத் தவளையாக இருப்பார்கள் என்று அர்த்தமில்லை. வீட்டு விவகாரங்களையும் நாட்டு விவகாரங்களையும் இரண்டு கண்கள் போல் கொண்டிருந்தார்கள்.
ஆத்தென்ஸில் பெரும்பாலும் வீடுகள், காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கக் கூடிய மாதிரியாக எளிய முறையில் கட்டப் பெற்றிருந்தன. வீட்டுக்கு நடுவில் முற்றம்; சுற்றி நான்கு பக்கங் களிலும் தாழ்வாரம்; சமையலறையென்றும், சாப்பாட்டு அறை யென்றும், படுக்கை அறையென்றும் தனித்தனியாக இருந்தன. சமையல் சாப்பாட்டு நேரம் போக, மிகுதிப் பொழுதை முற்றத்திலும், தாழ்வாரத்திலுமே கழிப்பர். சிறப்பாக, பெண்கள், நூல் நூற்றல், தையல் வேலை முதலியவைகளை இங்கேயே செய்வர். நிலவு நாட்களில் முற்றத்திலேயே இருந்து சாப்பிடுவர். தெருப் பக்கத்தி லிருந்து வீட்டைப் பார்த்தால் பகட்டாகத் தெரியாது. உள்ளே செல்வதற்கான வாயில் ஒன்றுதான் இருக்கும். வேறு ஜன்னல்கள் கூட இரா. வீடுகள், பெரும்பாலும் பச்சைச் செங்கல்களாலேயே கட்டப் பெற்றிருக்கும். தரையும் மண் தரைதான். வீட்டில் தட்டுமுட்டுச் சாமான்கள் அதிகமாக இருக்கமாட்டா. இருக்கப்பட்ட சொற்ப சாமான்கள் எளிய தோற்றமுடையனவாகவும் ஆனால் அழகுடை யனவாகவும் உபயோகமுள்ளனவாகவும் இருக்கும். பொதுவாக, கிரேக்கர் களுடைய வாழ்க்கையில் எளிமை, அழகு, இனிமை, உபயோகம் ஆகிய நான்கும் கலந்திருந்தன என்று சொல்லலாம்.
சாதாரணமாக ஆத்தீனியர்கள், அதிக உயரமும் அதிக குள்ளமும் அதே பிரகாரம் அதிக ஒல்லியும் அதிக பருமனும் இல்லாமல் இருப்பார்கள். கட்டுமஸ்தான சரீரமுடையவர்களா யிருப்பதில் பெருமை காண்பார்கள். தொந்தி பருத்தவர்களைக் கண்டு பரிகசிப்பார்கள். வயோதிகர்களைப் பார்த்தால் முகத்தில் இளமை தட்டும்; தலைமயிர் அநேகமாக நரைத்திராது. அப்படி நரைத்துப் போனாலும் சாயம் போட்டுக் கொள்வார்கள். ஆணுக்கா கட்டும் பெண்ணுக்கா கட்டும், தலைமயிர் பெரும்பாலும் கருமையா யிருக்கும். கூந்தல் வளர்தைலங் களும் பலவித வாசனைகளும் உப யோகத்திலிருந்தனவாகத் தெரிகிறது.
பணக்கார குடும்பத்து ஸ்திரீகள், நிலைக்கண்ணாடி முன்னர் நின்று கொண்டு அலங்காரம் செய்து கொள்வார்கள்; இதற்காக அதிக நேரமும் செலவழிப் பார்கள். சீப்புகள், கொண்டை ஊசிகள், முகத்தில் பூசிக்கொள்ளும் பவுடர்கள் முதலிய பலவும் உபயோகிக் கப்பட்டன. இரண்டு கன்னங்களுக்கும் உதடு களுக்கும் லேசான சிவப்பு வர்ணம் தீட்டிக் கொள்வார்கள். கண்களுக்கு மையிட்டுக் கொள்வார்கள். தேகத்தில் வியர்வை உண்டாகாமலிருப்பதற்காக ஒருவித எண்ணெயை லேசாகப் பூசிக் கொள்வார்கள்.
ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் கம்பள ஆடையையே உடுத்துவார்கள். இந்த ஆடையும் எளிய முறையில் அமைந்திருக்கும். சதுரம் சதுரமாயுள்ள இரண்டு துண்டுகளை இணைத்து உடம்பு பூராவும் மறைத் திருக்கும்படியாக உடுத்திக் கொள்வார்கள். ஏறக் குறைய எல்லாக் கிரேக்கர்களும் இதே மாதிரி உடுத்தி வந்தார் களாயினும், உடுத்துகின்ற முறையில் சிலசில வித்தியாசங்கள் இருந்தன. இந்த வித்தியாசத்தைக் கொண்டு இவர் இன்ன ராஜ்யத்தினர் என்று சொல்லிவிடலாம். குளிர் காலத்தில், அவசியமானால், அந்த உடைக்கு மேலே ஒரு போர்வையை உத்தரீயம் மாதிரி போர்த்திக் கொள் வார்கள். அதனைப் போர்த்திக் கொள்வதே ஓர் அழகாயிருக்கும்.
சாதாரண குடும்பத்து ஸ்திரீகள் குறைந்தபட்சம் ஓரிரண்டு நகைகளை யாவது அணிந்து கொள்வார்கள். பணக்கார குடும்பத்து ஸ்திரீகளுக்குக் கேட்க வேண்டியதில்லை. தோடு, சங்கிலி, வளையல், மாட்டல், இப்படிப் பல தினுசு நகைகளை, அவரவருடைய அந்தஸ் துக்கேற்றபடி அணிவார்கள். ஆண்கள், கைவிரல்களில் மோதிரங்கள் அணிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கையிலே பிடித்துச் செல்லும் தடிக்கு வெள்ளியிலோ தங்கத்திலோ பூண் போட்டிருக்கும்.
கிரீஸின் எல்லா ராஜ்யங்களிலும், எல்லாப் பிரதான பட்டணங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவதுண்டாயினும், ஆத்தென்ஸில் இவை சிறிது அதிகமென்று சொல்ல வேண்டும். வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாட்களும் ஏதேனும் ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
நாள், கிழமை முதலியவைகளைக் குறிப்பிட்டுக் காட்டும் பஞ்சாங்கம், கிரீஸிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை; ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் எல்லா ராஜ்யத்துப் பஞ்சாங்கங்களும், வருஷ மென்பது பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது. ஏறக்குறைய முந்நூற்றறுபத்தைந்து நாட்களையுடையது என்ற அடிப் படையின் மீதே கணிக்கப்பட்டன. ஆத்தென்ஸைப் பொறுத்த மட்டில் புது வருஷம் ஆடி மாதம் (ஜூலை - ஆகஸ்ட்) ஆரம்பித்தது. இதற்கு முந்தியே அறுவடை ளெல்லாம் முடிந்துவிடும். புதிய தானியங்கள் வந்து குவிந்திருக்கும். நிறைந்த உள்ளத்துடனும், குதூகலத்துடனும் வருஷப் பிறப்பைக் கொண்டாடுவார்கள். ஆண்டான் - அடிமை வித்தியாசமில்லாமல், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து விருந் துண்பார்கள். திருவிழாக்களும் நடைபெறும். இதற்குப் பிறகு ஒவ் வொரு மாதத்திலும் திருவிழாதான். ஆடிப்பூரம், மாசிமகம், தைப் பூசம் என்று சொல்லப்படுகிறதில்லையா, அந்த மாதிரியென்று சொல்லலாம். இவற்றுள் ஒன்பதாவது மாதத்தில் - பங்குனி மாதத்தில் - விசேஷமான திருவிழாக்கள் கொண்டாடப் பெறும். வெளியூர்களிலிருந்து ஜனங்கள் வந்து திரளாகக் கூடுவார்கள். அவரவரும், தங்கள் தங்கள் அலுவல்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு, விழாக்களில் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். நீதி ஸ்தலங்கள் முதற்கொண்டு அரசாங்கக் காரியாலயங்கள் யாவும் மூடப்பட்டுவிடும். விழாக்களில் கலந்து கொள்ளும் பொருட்டு சிறைக் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள்.
ஆடி மாதம் புது வருஷம் தொடங்குகிறதென்று சொன்னோ மல்லவா, நான்கு வருஷத்திற்கொரு தடவை வரும் இந்த ஆடி மாதம் வெகுவிசேஷம். ஒலிம்ப்பிய விழா மாதிரி விளையாட்டுப் பந்தயங்க ளென்ன, தர்க்கங்களென்ன, இதர போட்டிகளென்ன எல்லாம் நடைபெறும். இப்படி ஆத்தென்ஸில் மட்டுமல்ல, முக்கியமான சில ஊர்களிலும் நடைபெறும்.
பொதுவாக ஆத்தீனியர்கள், எப்பொழுதும் உற்சாகத்துட னிருப்பார்கள்; சம்பாஷணைப் பிரியர்கள்; சிநேகஞ் செய்து கொள்வதில் சாமர்த்தியசாலிகள்; தரும சிந்தனைகளையுடைய வர்கள். பொதுநலத்திற்கென்று, தங்களிட முள்ளதை, பணமோ உழைப்போ எதுவாயினும், தயங்காமலும் முணுமுணுக் காமலும் கொடுப்பார்கள். இதற்குக் காரணம் இவர்களிடத்தில் குடி கொண்டிருந்த பொதுமை உணர்ச்சிதான். தெய்வபக்தி வேறே, தேசபக்தி வேறே என்று இவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை; இரண்டும் ஒன்றேயென்று உணர்ந்தார்கள். இந்த உணர்ச்சிப்படி நடந்தும் வந்தார்கள். எல்லோரும் இப்படியிருந்தார்களென்று சொல்ல முடியாதாயினும், பெரும்பாலோர் இப்படியிருந்தார்க ளென்று நிச்சயமாகச் சொல்லலாம். இதனால்தான், மகத்தான பாரசீக சாம்ராஜ்யத்தை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இவர்களுக்கு உண்டாயிற்று. அடுத்த அத்தியாத்தில் இதைக் காண்போம்.
பாரசீகத்தின் முதல் படையெடுப்பு
1. மாரத்தான் போர் (கி.மு.490)
கி.மு. 510-ஆம் வருஷம். பாரசீக ஏகாதிபத்தியம் எவ்வளவு உன்னத ஸ்திதியிலிருந்தது! இந்தியாவின் வடமேற்குப் பகுதி, ஆப்கனிஸ்தானம், துருக்கிஸ்தானம், மெஸொபொட்டேமியா, அரேபியாவின் வடக்குப் பகுதி, எகிப்து, ஸைப்ரஸ், பாலஸ்தீனம், சிரியா, சின்ன ஆசியா, எஜீயன் கடலுக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள பிரதேசங்கள், கிரீஸின் வடக்கிலுள்ள திரேஸ், மாஸிடோனியா ஆகிய நாடுகள் பலவும் இதன் ஆதீனத்திற்குட்பட்டிருந்தன. விஸ்தீரணமான இந்த ஏகாதிபத்தியம் இருபது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு சிற்றரசன் ஆண்டு கொண்டிருந்தான். இந்தச் சிற்றரசர்களனை வருக்கும் பேரரசனாயிருந்தவன், (மேற்படி 510-ஆம் வருஷத்தில்) டேரியஸ் (தாரயோஷ் என்று அழைப்பர் இவனை) அகில பாரசீகத் துக்கும் சக்ரவர்த்தி; ஸூஸா என்னும் தலைநகரத்தில் ஆடம்பரமாகக் கொலுவமர்ந்து லட்சக்கணக்கான பிரஜைகளை ஆண்டு வந்தான்.
சின்ன ஆசியாவின் பல பகுதிகளிலும் கிரேக்கர்கள் குடியேறி அநேக ராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொண்டார்களென்பது வாசகர் களுக்கு ஞாபக மிருக்கும். இவர்கள் ஆத்தென்ஸ் ராஜ்யத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்; அதனைத் தங்கள் தாய் நாடாகக் கருதி, கூடியமட்டும் அதற்கு அனுசரணையாகவே நடந்து வந்தார்கள்.
சின்ன ஆசியாவின் ஒரு பகுதிக்கு லிடியா என்று பெயர். இது புராதன சரித்திரப் பெருமையுடையது. பொன்கொழிக்கும் நாடு என்று இதனைக் கூறுவர். இதனால்தான் கிரேக்கர்களில், பொன்னாசை பிடித்தவர்களே பெரும்பாலோராக இங்கு வந்து குடியேறினார்கள் போலும். இந்த நாட்டின் ஒருபகுதியாயிருந்த பிரிஜியா பிரதேசத்தில் தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று வரம் பெற்று, அதன் விளைவாகத் தன் பெண்ணே பொன்னாகிவிட்ட தைக் கண்டு பரிதவித்த மைதாஸ் (இவன் ஆண்டது ஏறக்குறைய கி.மு. 715-ஆம் வருஷமென்பர்.) என்ற மன்னன் ஆண்டான் என்பர். இந்த லிடியா, பிரிஜியா முதலிய பிரதேசங்கள் உள்ளிட்ட சின்ன ஆசியா, பாரசீக ஏகாதிபத்தியத்தின் இருபது மாகாணங்களில் ஒரு மாகாணமாயிருந்தது. இதனை, ஏற்கனவே கூறியது போல், ஒரு சிற்றரசன் பாரசீக சக்ரவர்த்தியின் பிரதிநிதியா யிருந்து ஆண்டு வந்தான். இவன் தலைநகரம் ஸார்டிஸ். சின்ன ஆசியா, பாரசீக ஆதிபத்தியத்திற்குட்பட்டிருந்தது என்றால், இங்குள்ள கிரேக்க ராஜ்யங்கள் பலவும் அந்த ஆதிபத்தியத்துக்குட்பட்டிருந்தன வென்பதே அர்த்தம். இப்படி உள்பட்டது கி.மு. 547-ஆம் வருஷம்.
டேரியஸ் மன்னனுடைய ஆளுகைக்குப் பெரும்பாலான ராஜ்யங்கள் உட்பட்டுவிட்டன. ஆனால் ஒன்றுமட்டும் உட்பட வில்லை. அதுதான் கிரீஸ். “ஆத்தீனியர்களா? அவர்கள் யார்” என்று கேட்டானாம் டேரியஸ். இப்படிக் கேட்டது அலட்சியத்தினாலா? அறியாமையினாலா? யாருக்குத் தெரியும்? எப்படியோ சிறிய கிரீஸுக்கும் பெரிய பாரசீகத்திற்கும் பகைமை மூண்டுவிட்டது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஊகந்தான். ஆனால் கிரீஸுக்கும் பாரசீகத்திற்கும் மறைமுகமான ஒரு போட்டி இருந்து வந்தது. அதுதான் வியாபாரப் போட்டி. மறைமுகமான இந்தப் போட்டி பகிரங்கமான பகைமையாக முற்றியது என்றால் அதில் ஆச்சரியமில்லை. இதற்கேற்றாற் போல் இரண்டொரு சம்பவங்களும் நடைபெற்றன.
ஆத்தென்ஸ் ராஜ்யத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட ஹிப்பியாஸ், 506-ஆம் வருஷம் ஸார்டிஸ் நகரம் போந்து, அங் கிருந்த பாரசீக அரசப் பிரதிநிதியிடம் சரண் புகுந்தான்; தான் மீண்டும் ஆத்தென்ஸ் ராஜ்யத்தின் அதிகார பீடத்தை அடைய விரும்புவதாக வும், அதற்கு உதவி செய்தால், அட்டிக்கா முழுவதையும் பாரசீக ஆதிபத்தியத்திற்கு உட்படுத்தித் தருவதாகவும் கூறினான். என்ன கேவலம்! அதிகார ஆசை அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை!
சுமார் அரை நூற்றாண்டாகப் பாரசீக ஆதிக்கத்திற்குட்பட் டிருந்த சின்ன ஆசியாவிலுள்ள கிரேக்க ராஜ்யங்கள் பலவும், ஏறக் குறைய 500-ஆம் வருஷத்தில் அந்த ஆதிக்கத்தினின்று விடுதலை பெற்று, பழைய மாதிரி சுதந்திர வாழ்வு நடத்தத் தீர்மானித்தன; இதற்குக் கிரீஸிலுள்ள ராஜ்யங்களின் உதவியை எதிர்பார்த்தன. மிலீட்டஸ் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்ட்டோகோராஸ் என்பவன், முதலில் ஸ்ப்பார்ட்டா சென்று அதன் உதவியை நாடினான். கிடைக்க வில்லை. பின்னர் ஆத்தென்ஸுக்கு வந்தான். அஃது இருபது கப்பல் களை அனுப்பித் தந்தது. அதற்குப் பாரசீகர்கள் மீது ஓரளவு ஆத்திரமும் இருந்தது. ஹிப்பியாஸுக்கு அடைக்கலம் கொடுத்திருந் தானல்லவா ஸார்டிஸ் நகரத்திலிருந்து பாரசீக அரசப் பிரதிநிதி? ஆத்தென்ஸைப் போலவே, அதற்கு வடகிழக்கில், யூபியா தீவிலுள்ள எரீட்ரியா என்ற ஒருசிறு ராஜ்யமும் ஐந்து கப்பல்களை உதவியது.
மிலீட்டஸ் நகரத்தின் தலைமையில் சின்ன ஆசியக் கிரேக்கர்கள் புரட்சிக்குக் கிளம்பிவிட்டார்களே தவிர, அதனைத் திறம்பட நடத்தி வெற்றிக்குக் கொண்டுவரத் தெரியவில்லை. இவர்களுக்குள் பரஸ்பர மனஸ்தாபங்கள் ஏற்பட்டுவிட்டன; துரோகச் செயல்கள் வேறே. இந்த நிலைமையில் 494-ஆம் வருஷம் கிரேக்கர்களின் கடற்படையும் பாரசீகர்களின் கடற்படையும் எஜீயன் கடலின் ஒரு பகுதியில் சந்தித்தன. பாரசீகர்கள் வெற்றி கொண்டார்களென்பதைச் சொல்ல வும் வேண்டுமோ? இந்த வெற்றி வெறியில், புரட்சிக்குத் தலைமை வகித்த மிலீட்டஸ் நகரத்தை அழித்துவிட்டார்கள். பழைய மாதிரி சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்களில் பாரசீக ஆதிக்கம் ஏற்பட்டு விட்டது.
தன் ஆதிக்கத்திற்கு விரோதமாக நடைபெற்ற புரட்சிக்கு உதவி செய்த ஆத்தென்ஸ் மீது கோபங்கொண்டான் டேரியஸ்; கிரீஸ் முழுவதையும் தன் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டு விடத் தீர்மானித்தான். இந்தத் தீர்மானப்படி நடப்பதற்கு முன்னர், கிரீஸிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் தூதர்களை அனுப்பி, தனது ஆதிக்கத்தை அங்கீரிக்குமாறும், அப்படி அங்கீகரித்துக் கொண்டதற்கு அடையாளமாக மண்ணும் தண்ணீரும் தரவேண்டுமென்றும் கேட்டான். இப்படிக் கேட்பது அந்தக் காலத்துப் பாரசீக சம்பிர தாயம். கேட்டபடி தண்ணீரும் மண்ணும் தந்தன சில கிரேக்க ராஜ் யங்கள். ஆனால் ஸ்ப்பார்ட்டா, ஆத்தென்ஸ் போன்ற சில முக்கிய மான ராஜ்யங்கள் மறுத்துவிட்டன; ஆத்திரமுமடைந்தன. இந்த ஆத்திரத்தில் வெளிநாட்டுத் தூதர்களை மரியாதையாக நடத்த வேண்டு மென்பதைக்கூட மறந்துவிட்டன. ஸ்ப்பார்ட்டா, வந்த பாரசீக தூதர்களை ஆழமான ஒரு கிணற்றிலே தள்ளி அதிலிருந்து தேவையான மட்டும் மண்ணும் தண்ணீரும் எடுத்துக் கொள்ளு மாறு கூறியது. ஆத்தென்ஸோ, வந்தவர்களை, குற்றவாளிகளின் யம லோகம் என்று கருதப்பட்ட ஒரு படுகுழியிலே கொண்டுபோய்த் தள்ளிவிட்டது. இனியும் சும்மாயிருப்பானா டேரியஸ்?
491-ஆம் வருஷம் பாரசீகப் பெரும் படையொன்று புறப் பட்டது கிரீஸை நோக்கி. இரண்டு லட்சம் போர்வீரர்களுடன் அறு நூறு கப்பல்கள் (கிரேக்க சரித்திராசிரியன் ஹெரோடோட்டஸ் கொடுத்திருக்கிற கணக்கு இது. ஆனால் இது மிகைப்படக் கூறிய தாகுமென்று தற்கால சரித்திராசிரியர் சிலர் கருதுகின்றனர்.) எஜீயன் கடலில் ஊர்ந்து வந்த போது, அந்தக் கடலே கலங்கிவிட்டது என்று சொல்லலாம். இந்தப் பெரும்படையானது, வழியிலிருந்த சிறுசிறு தீவு ராஜ்யங்களைப் பாரசீக ஆதிக்கத்திற்குட் படுத்திவிட்டு, கடைசி யில் யூபியா தீவில் உள்ள ஒரு துறைமுகத்தை வந்தடைந்தது. இங்கி ருந்து இந்தப் படையின் ஒரு பகுதி பிரிந்து சென்று எரீட்ரியாவை முற்றுகையிட்டது. புரட்சிக்கு ஐந்து கப்பல்கள் உதவியது எரீட்ரியா வல்லவா? இதனை முதலில் பணியச் செய்ய வேண்டு மென்று முனைந்தார்கள் பாரசீகர்கள். எரீட்ரியா, ஆத்தென்ஸின் உதவியை நாடியது. ஆத்தென்ஸும் எரீட்ரியாவுக்கு உதவியாக ஒரு சிறு படையை அனுப்பியது. இந்த உதவிப்படை, எரீட்ரியா போய்ச் சேருவதற்கு முன்பே, பாரசீகப் படையின் மற்றொரு பகுதியானது, யூபியாவைக் கடந்து வந்து அட்டிக்காவின் வடகிழக்கிலுள்ள மாரத்தான் (இந்த மைதானத்தின் நீளம் வட கிழக்கிலிருந்து தென் மேற்காக சுமார் ஆறு மைல்; அகலம் சராசரி இரண்டு மைல்) மைதானத்தில் முகாம்போட்டுக் கொண்டுவிட்டது. ஆத்தீனியப் படை மேற்கொண்டு செல்ல முடியவிவில்லை. இந்த இடத்தில் - மாரத்தான் மைதானத்தில் - பாரசீகர்களை முகாம் போடச்செய்தது யாரென்று நினைக்கிறீர்கள்? துரோகி ஹிப்பி யாஸ்தான்! இவன் தான் பாரசீகப் படைகளுக்கு வழிகாட்டிக் கொண்டு வந்தான்.
ஆத்தீனியர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எரீட்ரியா, அது கிடைக்காமையினால், சிறிது காலம் தனித்து நின்று வீரத்துடன் போர் புரிந்தது? ஆயினும் என்ன பிரயோஜனம்? துரோகம் தலை காட்டி விட்டது. எரீட்ரியா பணிந்தது; இல்லை, விழுந்தது. யுத்தத்தில் உயிர் தப்பிய எரீட்ரியர்கள், விலங்கிடப் பெற்று அடிமை களாக விற்கப்படுவதற்கு அனுப்பப்பட்டார்கள் பாரசீகத்திற்கு.
எரீட்ரியா, ஆத்தென்ஸின் உதவியை நாடியதல்லவா. உடனே ஆத்தென்ஸ், ஸ்ப்பார்ட்டாவின் உதவியைக் கோரியது. இதற்காக, பிலிப்பிடீஸ் என்ற ஓர் ஆளை அனுப்பி, அவன் மூலம் நிலைமையின் நெருக்கடியை உணர்த்தியது. ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டா வுக்கும் ஏறக்குறைய நூற்று நாற்பது மைல் தூரம். இதை நாற்பத் தெட்டு மணி நேரத்தில் கடந்தான் பிலிப்பிடீஸ். உள்ள நிலைமையை விவரமாகத் தெரிவித்தான். இவன் சென்று தெரிவித்தபோது, ஸ்ப்பார்ட்டாவில் ஒரு திருவிழா; பௌர்ணமிக்கு ஐந்தாறு நாள் முந்தி. பௌர்ணமி கழித்துத்தான் யுத்தத்திற்குப் புறப்பட முடியு மென்றும், அதற்கு முந்தி புறப்பட்டால் தோல்விதான் கிடைக்கு மென்றும் ஸ்ப்பார்ட்டர்கள் சொல்லியனுப்பிவிட்டார்கள். ஆனால் பௌர்ணமிக்கு முன்னாடியே, ஆத்தீனியர்கள் பாரசீகர்களை யுத்த களத்திலே சந்திக்க வேண்டி வந்துவிட்டது.
பாரசீகர்கள் மாரத்தான் மைதானத்தில் முகாம் போட்டுக் கொண்டு விட்டார்களென்ற செய்தி தெரிந்ததும் கிரீஸ் முழுவதிலும் ஒரே அல்லோல கல்லோலம். மகத்தான பாரசீக சேனை இதுவரை எங்கும் தோல்வியடைந் ததில்லை. அதன் முன்னேற்றத்தை யாரும் தடுத்ததில்லை. உடைந்த கண்ணாடித் துண்டுகள் போன்றிருக்கின்ற கிரீஸ், என்ன செய்யப் போகின்றது? சுதந்திரத்தோடு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறதா? அல்லது அடிமைத்தனத்திலே இறந்து விடப் போகிறதா? இந்த மாதிரியான கேள்விகளே கிரீஸ் எங்கணும் கேட்கப்பட்டன. ஆனால் அகில கிரீஸின் அதிருஷ்ட வசமாக, அந்த அகில கிரீஸின் மானத்தைக் காப்பாற்ற ஆத்தென்ஸ், முனைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஆத்தென்ஸ், ஸ்ப்பார்ட்டாவைப் போல் சகுனம் சரியாயில்லையென்று சொல்லி சும்மாயிருந்தாலோ, அல்லது அதைரியத்தினால் செயலாற்றும் சக்தியை இழந்து விட்டிருந்தாலோ, கிரேக்க சரித்திரத்தின் போக்கே வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். ஆத்தென்ஸ் வாழ்க!
பாரசீகப் படையின் ஒரு பகுதி எரீட்ரியா பக்கம் சென்றிருந்த தல்லவா? அது திரும்பி வருவதற்கு முன்னர், மாரத்தான் மைதானத்தில் முகாம் போட்டுக் கொண்டிருக்கிற மற்றொரு பகுதிப் படையைச் சந்தித்து ஒரு முடிவு கண்டுவிடுவதென்று தீர்மானித் தார்கள் ஆத்தீனியர்கள், மில்ட்டியாடீஸ் என்ற ஒரு படைத் தலைவனுடைய யோசனையின் பேரில். அப்படியே ஆத்தீனியப் படையொன்று மாரத் தானை நோக்கிச் சென்றது. அட்டிக்காவுக்கு வடக்கே பிளாட்டீயா என்றொரு சிறு ராஜ்யம் இருக்கிறது பாருங்கள். இதுமட்டும், தனது பிரஜைகளிற் பெரும்பாலோரைத் திரட்டி, ஆத்தீனியர்களுக்கு உதவியாக யுத்த களத்திற்கு அனுப்பியது.
490-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம், மாரத்தான் மைதா னத்தில் கிரேக்கப் படைகளும் - இதனை ஆத்தினியப் படைகள் என்று தான் சொல்ல வேண்டும் - பாரசீகப்படைகளும் சந்தித்தன. கிரேக்கர்கள் சுமார் பதினாயிரம் பேர் (இருபதினாயிரம் பேர் என்பது கிரேக்க சரித்திராசியர்களுடைய கணக்கு) பாரசீகர் களோ சுமார் லட்சம் பேர். பாரசீகர்கள் தனித்தனியாக இருந்து போர் புரிவதில் வல்லவர்கள். கிரேக்கர்களோ ஒற்றுமையாயிருந்து யுத்தஞ் செய்வதில் சாமர்த்தியசாலிகள். இறுதியில் இவர்களுடைய ஒற்றுமையே வென்றது. படைத்தலைமை வகிப்பதிலும் இவர்கள் ஒற்றுமை காட்டினார்கள். ஆத்தென்ஸ் ராஜ்யத்துப் பிரஜைகள், பத்து குலத்தினராகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு படைத்தலைவனைத் தெரிந்தெடுக்கிற உரிமை இருந்த தல்லவா, இதன் பிரகாரம், யுத்தம் நடைபெறுகிற காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவன் பிரதான படைத்தலைவனா யிருக்க வேண்டுமென்ற நியதி இருந்து வந்தது. மாரத்தான் யுத்தத்தில், ஒரு நாள், அரிஸ்ட்டைடீஸ் (உத்தேச காலம் 530-467) என்பவன், பிரதான படைத்தலைவனாயிருக்க வேண்டிய முறை வந்தது. இவன் தன்னுடைய இந்த உரிமையை, முன்சொன்ன மில்ட்டியாடீஸுக்கு விட்டுக் கொடுத்தான், யுத்த தந்திரம் ஒரேமாதிரியான முறையில் இருக்க வேண்டுமென்பதற்காக, மில்ட்டியாடீஸின் திறமையான தலைமையின் கீழ், சிறு எண்ணிக்கையினரான கிரேக்கர்கள், பெரிய எண்ணிக்கையினரான பாரசீகர்கள் மீது வெற்றி கொண்டார்கள். கிரேக்க சரித்திராசிரியர்கள் கணக்குப்படி, இந்த யுத்தத்தில் ஆறா யிரத்து நானூறு பாரசீகப் போர் வீரர்கள் மடிந்தார்கள்; கிரேக்கர் களிலோ நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்தான்.
யுத்தம் முடிந்தபிறகு ஸ்ப்பார்ட்டர்கள் வந்து சேர்ந்தார்கள்; தாமதித்து வந்ததற்காக வருத்தந் தெரிவித்துக்கொண்டார்கள். தனிப்பட நின்று போர் புரிந்து வெற்றிகண்ட அத்தீனியர்களை வாயார புகழ்ந்தார்கள்.
மாரத்தானில் அடைந்த தோல்வியினால் பாரசீகர்கள் உடைந்து போக வில்லை. எரிட்ரியா பக்கம் சென்றிருந்த படையானது திரும்பி வந்து, தெற்குப் பக்கத்திலிருந்து ஆத்தென்ஸைத் தாக்க ஆரம்பித்தது. இதற்குத் துணைசெய்ய ஆத்தென்ஸில் சில துரோகிகளும் இருந்தார் கள். ஆனால் நல்ல சமயத்தில் மாரத்தான் சென்றிருந்த படையானது வெற்றி முழக்கஞ் செய்துகொண்டு திரும்பி வந்து, பாரசீகப் படைக்கு முன்னே அணிவகுத்து நின்றது. ஒன்றும் செய்ய முடி யாமல் திரும்பிவிட்டார்கள் பாரசீகர்கள்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற யுத்தங்களில் மாரத்தான் யுத்தம் ஒன்று. நம்பமுடியாத ஒரு வெற்றி கிரேக்கர்களுக்குக் கிடைத் ததல்லவா? மற்றும் பாரசீகச் சேனையை யாரும் தோற்கடிக்க முடியாதென்றிருந்த ஒரு பிரமையும் போய்விட்டதல்லவா? இந்த யுத்தத்திலிருந்து ஆத்தென்ஸுக்கு ஒரு தனி மதிப்பு ஏற்பட்டது; அதன் முக்கியத்துவத்தை எல்லாக் கிரேக்க ராஜ்யங்களும் அங்கீ கரித்துக் கொண்டன; அதன் வளர்பிறை வாழ்வு ஆரம்பித்தது. இந்த விகிதாசாரத்திற்குப் பாரசீக சாம்ராஜ்யத்தின் தேய்பிறை வாழ்வு ஆரம்பித்து விட்டது.
மறுபடியும் பாரசீகம்
1. ஆத்தென்ஸின் கடலாதிக்க முயற்சி
பாரசீகர்கள் தோல்வியடைந்து திரும்பிப் போய்விட்டார்கள். வாஸ்தவம். ஆனால் மறுபடியும் வரமாட்டார்களென்பது என்ன நிச்சயம்? இப்படிக் கேட்டார்கள் ஆத்தென்ஸில் பலர். இவர் களுக்குத் தலைவனாயிருந்தவன் தெமிஸ்ட்டோ க்ளீஸ் என்ற ஒருவன். மாரத்தான் யுத்தத்தில் வீரத்துடன் போர்புரிந்து புகழ் பெற்றிருந்தான். ஆத்தென்ஸ் நகர மக்களிடையே இவனுக்கு அதிக மான செல்வாக்கு இருந்தது. பாரசீகர்கள் மீண்டும் படையெடுத்து வந்தால், அவர்களை எதிர்த்து நிற்க, ஆத்தீனியர்கள், தங்கள் கப்பற்படையை அதிகரித்துக் கொள்வது அவசியமாகுமென்று இவன் வற்புறுத்தி வந்தான். இதற்கு ஆதாரமாக, பாரசீகர்கள் ஏற்கனவே கப்பற்படை பலத்தைக் கொண்டுதான் சுலபமாகக் கிரீஸை அணுகி னார்களென்பதை எடுத்துக்காட்டினான். இவன் கட்சிக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.
இவனை எதிர்த்து நின்றவன் ஏற்கனவே கூறப்பெற்ற அரிஸ்ட்டைடீஸ். இவனுக்கும் மாரத்தான் புகழ் இருந்தது. ஆத்தென்ஸ், தனது தரைப்படை பலத்தை மட்டும் விருத்தி செய்து கொண்டால் போதுமென்றும், கப்பற்படை பலத்தை விருத்தி செய்துகொள்ளப் பார்ப்பது ஆபத்திலே சிக்கிக் கொள்வதாகு மென்றும் இவன் கூறினான். இதற்கு ஆதாரமாக, தரைப்போரில் - மாரத்தானில் - பாரசீகர்கள் முறியடிக்கப்பட்டதை எடுத்துக் காட்டினான். ஆனால் இவன் கட்சிக்கு அதிகமான ஆதரவு கிடைக்க வில்லை. கடைசியில் இவன், தெமிஸ்ட்டோக்ளீஸினுடைய கட்சிச் செல்வாக்குக் காரணமாக, முந்திக் கூறிய வண்ணம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டான். இவனுடைய நேர்மையும் தெமிஸ்ட்டோக் ளீஸின் திறமையும் ஒன்று சேர்ந்திருந்தால் கிரீஸின் இந்தக் காலத்துச் சரித்திரமே வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் அது வேறு விஷயம்.
தெமிஸ்ட்டோக்ளீஸின் கட்சிச் செல்வாக்குக் காரணமாகத் தேசப் பிரஷ்டம் செய்யப் பெற்ற மற்றொருவனைப் பற்றியும் இங்குக் குறிப்பிடுதல் அவசியமாகும். இவன் தான் ஜாந்திப்பஸ்; பிற் காலத்தில் கிரீஸ் பெரும்புகழ் படைத்ததற்குக் காரணமாயிருந்த பெரிக்ளீஸின் தந்தை. இவன், அரிஸ்ட்டைடீஸ் பிரஷ்டம் செய்யப் பட்டதற்கு இரண்டு வருஷங்களுக்கு முந்தியே - 484-ஆம் வருஷம் - பிரஷ்டம் செய்யப்பட்டுவிட்டான்.
மாரத்தானுக்கு முந்தியிருந்தே, தெமிஸ்ட்டோக்ளீஸ், ஆத்தென்ஸின் கடலாதிக்கத்திற்கு, அடிகோலிக் கொண்டு வந்தான். 493-ஆம் வருஷம், அதாவது மாரத்தான் போருக்கு மூன்று வருஷங் களுக்கு முன்னர் இவன் ஆத்தென்ஸின் ஆர்க்கோனாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். அந்த வருஷமே, ஆத்தென்ஸின் கடலோரப் பகுதியாகிய பீரேயஸ் என்னுமிடத்தில் ஒரு புதிய துறைமுகத்தைக் கட்ட ஏற்பாடு செய்தான். அரசியலிலேயாகட்டும், வியாபாரத்தி லேயாகட்டும், ஆத்தென்ஸ், முற்போக்கான ஒரு நிலைமையில் இருக்க வேண்டுமானால், அது, தனது கப்பல் பலத்தை விருத்தி செய்து கொள்வது இன்றியமையாததாகு மென்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கு ஆவன செய்தான் இவன். இந்த விஷயத்தில் இவன் தீர்க்க திருஷ்டியுடன் நடந்து கொண்டானென்று சொல்ல வேண்டும்.
இங்ஙனம் இவன் தீர்க்கதிருஷ்டியுடன் நடந்து கொண்டது சரியென்று சொல்வதுபோல, 487-ஆம் வருஷம் ஒரு சம்பவம் நடை பெற்றது. எஜீனா தீவு இருக்கிறது பாருங்கள். அதற்கும் ஆத்தென் ஸுக்கும் பரம்பரையாகவே பகைமை இருந்து வந்தது. மாரத்தான் யுத்தத்திற்கு முந்தி டோரியஸ் மன்னன், தன் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக மண்ணும் தண்ணீரும் தருமாறு எல்லாக் கிரேக்க ராஜ்யங்களையும் கேட்டானல்லவா, அப் பொழுது, இந்த எஜீனா ராஜ்யம், அவன் கேட்டபடி கொடுத்தது; அதாவது பாரசீக ஆதிக்கத்தை ஒப்புக்கொண்டது. தன் மீதுள்ள பரம்பரை விரோதத்தினாலேயே இப்படிச் செய்ததென்று கருதியது ஆத்தென்ஸ். மேற்படி செயல் இதற்குப் பிடிக்கவில்லை. இதனால், தனக்கு ஆபத்துண்டாகுமென்று உணர்ந்தது. இதைத் தடுக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. என்ன? எஜீனாவை, பாரசீகர்களுக்கு ஆதரவு தராதிருக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டுமென்று ஸ்ப்பார்ட்டா வைக் கேட்டுக் கொள்வது. ஸ்ப்பார்ட்டாவை ஏன் கேட்டுக் கொள்ள வேண்டுமென்றால், பெலொப்பொனேசிய சமஸ்டியில் எஜீனா சேர்ந்திருந்தது. இந்த ஸ்தாபனத்தில் தலைமைப் பதவியில் இருந்த தல்லவா ஸ்ப்பார்ட்டா?
ஆத்தென்ஸின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ப்பார்ட்டாவின் அரசனாகிய கிளியோமெனீஸ் என்பவன், எஜீனாவுக்குச் சென்று, பாரசீகத்திற்கு ஆதரவா யிருந்த கட்சியின் முக்கியஸ்தர்களில் பத்து பேரைக் கைது செய்து ஆத்தென்ஸிடம் பிணையாளிகளாக ஒப் படைத்துவிட்டான். இப்படிச் செய்தது எஜீனாவின் கையைக் கட்டிப்போட்டது போலாகிவிட்டது. பாரசீகர்களுக்கு, அதனால் எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை. ஆத்தீனியர்களுக்கு விரோத மாகவும் நடந்துகொள்ள முடியவில்லை.
மாரத்தான் போர் நடைபெற்று முடிந்தது. பிணையாளி களாக வைத்துக் கொண்டிருக்கும் தனது பிரஜைகள் பதின் மரையும் விடுவித்துத் தருமாறு ஸ்ப்பார்ட்டாவின் மூலம் ஆத்தென்ஸைக் கேட்டது எஜீனா. ஆனால் ஆத்தென்ஸ், விடுவிக்க மறுத்துவிட்டது. எனவே, மேலே குறிப்பிட்டபடி, 487-ஆம் வருஷம் எஜீனா, ஆத் தென்ஸ் மீது யுத்தம் தொடுத்தது. முதலில் ஆத்தென்ஸுக்கு ஓரளவு வெற்றி கிடைத்ததே யெனினும் கடைசியில் தோல்வியே ஏற்பட்டது. இதனிடமிருந்த சொற்ப கடற்படையும் நாசமாயிற்று. ஆனால் இதற்கும் எஜீனாவுக்கும் இடையே நிலவி வந்த பகைமை உணர்ச்சி நாசமாகவில்லை. இதற்குப் பிறகு சுமார் நாலைந்து வருஷங்கள் வரை, இரு ராஜ்யங்களும், பரஸ்பரம் ஒன்றின் கடலோரப் பிரதேசங் களில் மற்றொன்று கொள்ளை யடிப்பதாகிற வேலையில் ஈடுபட்டு வந்தன.
இந்தக் கொள்ளைகளை நிறுத்தவேண்டியது ஆத்தென்ஸுக்கு அவசியமாகி விட்டது. தவிர, எஜீனாவைத் தலையெடுக்க வொட்டாமல் செய்துவிடவேண்டு மென்ற ஆசையும் அதற்கு இருந்தது. கட லாதிக்கம் இருந்தால்தானே இவையிரண்டும் சாத்தியம்? இதனை ஆத்தீனியர்களுக்கு வற்புறுத்தி வந்தான் தெமிஸ்ட் டோக்ளீஸ்.
இதற்குத் தகுந்தாற்போல் இந்தச் சமயத்தில் - ஏறக்குறைய 482-ஆம் வருஷம் - அதிருஷ்டவசமாக ஆத்தென்ஸுக்கு நிறைய பணம் கிடைத்தது. அட்டிக்காவுக்குத் தென் பகுதியிலுள்ள லாரியம் என்ற இடத்தில் வெள்ளிச் சுரங்கங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டு அவற்றி லிருந்து ஆத்தீனியர்களுக்கு ஏராளமான வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது. அதிகப்படியாகக் கிடைத்து வந்த இந்த வரு வாயில் ஒரு பாகத்தை, புதிய கப்பல்கள் கட்டுவதற்கு ஒதுக்கி வைக்கு மாறு ஜனசபையைக் கேட்டான் தெமிஸ்ட் டோக்ளீஸ். இவன் கேட்ட படியே ஜனசபை அனுமதித்தது. உடனே சுமார் நூறு கப்பல்களுக்கு மேல் கட்டப்பெற்றன; பீரேயஸ் துறைமுகத்திலும் யுத்தத்திற்கான சில முஸ்தீப்புகள் செய்யப்பட்டன. இவை பூரணமாக முடிவதற்குள் பாரசீகர்கள் திரும்பவும் படை யெடுத்து வந்துவிட்டார்கள்.
ஆத்தென்ஸ் இங்ஙனம் முஸ்தீப்புகள் செய்து கொண்டிருக்க, ஸ்ப்பார்ட்டா என்ன செய்துகொண்டிருந்தது? மண்ணும் தண்ணீரும் கோரி வந்த பாரசீக தூதர்களைக் கிணற்றிலே தள்ளிக் கொன்று விட்டதல்லவா, அதற்குப் பிறகு, ஏற்பட்ட சில துர் நிமித்தங்களைக் கண்டு மருண்டு விட்டது; தன் செயலுக்குப் பெரிதும் வருந்தியது. இரண்டு ஸ்ப்பார்ட்டர்களைத் தெரிந் தெடுத்துப் பாரசீக மன்னன் சந்நிதானத்திற்கனுப்பி, அந்த மன்னன் விதிக்கும் தண்டனையை அவர்கள் அனுபவிக்குமாறு செய்வதுதான் தகுதியென்று கருதியது. அப்படியே பணக்காரப் பெரியார்களான இருவர் சென்று பாரசீக மன்னனிடம் சரணடைந்தனர். கொலையுண்ட தூதர்களுக்குப் பதில் தாங்கள் கொலையுண்ணத் தயாராயிருப்ப தாகக் கூறினார்கள். ஆனால் அந்த மன்னன் - அப் பொழுது ஆண்டுகொண்டிருந்த ஜெர்க்ஸஸ் மன்னன் - ஸ்ப்பார்ட் டர்கள் செய்தது போல் செய்ய வில்லை. “சர்வ தேசதர்மத்திற்கு விரோதமாக ஸ்ப்பார்ட்டர்கள் நடந்துகொண்டதைப் போல் நானும் நடந்துகொண்டால் என் கௌரவம் என்னாகும்” என்று சொல்லி, வந்த இரு ஸ்ப்பார்ட்டர் களையும் திருப்பி அனுப்பி விட்டான்!
2. நேர்மையுள்ள அரிஸ்ட்டைடீஸ்
மாரத்தானில் கிரேக்கர்களுக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தவன் மில்ட்டியாடீஸ் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக இவனை எல் லோரும் புகழ்ந்து பேசினார்கள். இந்தப் புகழ்ச்சியிலே இவன் தன்னை இழந்துவிட்டான்; கர்வங்கொண்டான். எழுபது கப்பல்கள் கொண்ட ஒரு கப்பற்படையைத் தயாரித்துத் தன் தலைமையில் ஒப்புவிக்குமாறு ஆத்தீனிய ஜனசபையின் அனுமதி கோரினான். அனுமதி கிடைத்தது. இந்தக் கப்பற்படையுடன், அட்டிக்காவுக்குத் தெற்கிலுள்ள பாரோஸ் என்ற ஒரு தீவுக்குச் சென்றான். இந்தத் தீவினர், பாரசீகர்களுக்கு உதவியாயிருந்தார்கள். பெரிய தவறல்ல? இதற்குப் பரிகாரமாக ஒரு தொகை செலுத்தவேண்டுமென்றும், அப்படிச் செலுத்தா விட்டால் தீவினர் அனை வரையும் கொலை செய்துவிடுவதாகவும் பயமுறுத்தினான் மில்ட்டி யாடீஸ். இது விஷயமறிந்த ஆத்தீனிய ஜனசபை இவனைத் திரும்ப வரவழைத்துக் கொண்டது. இவனுடைய அடாத செயலுக்காக இவனுக்கு அபராதம் விதித்தது. இதைச் செலுத்துவதற்கு முன்னரே இவன் இறந்து விட்டான். இவனுக்காக இவன் மகன் அபராதஞ் செலுத்தினான்.
மாரத்தான் போர்க்களத்தில் மில்ட்டியாடீஸுக்கு விட்டுக் கொடுத்த அரிஸ்ட்டைடீஸ், கிரேக்க சரித்திரவானில் தோன்றிய பிரகாசமான நட்சத்திரங்களுள் ஒருவன். நேர்மையின் அவதார மென்று இவனைச் சொல்லலாம். நேர்மையுள்ள அரிஸ்ட்டைடீஸ் என்றே இவன் அழைக்கப் பட்டான். மாரத்தான் போர்க்களத்தில் பாரசீகர்கள் விட்டுப்போன பொருள் களனைத்திற்கும் இவன் பாது காவலனாக நியமிக்கப்பட்டான். அப்பொழுது இவன், தனது உப யோகத்திற்கென்று ஒரு பொருளையாவது தொடவேண்டுமே, மற்றவர்களை உபயோகிக்க விட வேண்டுமே, கிடையவே கிடையாது. நிரம்பக் கண்டிப்பாக இருந்தான். எந்த விஷயத்திலும் நியாயமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொண்டான். அரசாங்க ஊழல்களை அவ்வப் பொழுது வெளிப்படுத்தி அவைகளுக்குப் பரிகாரங் கண்டான்.
நேர்மையாக நடந்துகொள்கிறவர்களுக்கு அதிகமான விரோதிகள் ஏற்பட்டு விடுகிறார்களல்லவா? ஆத்தென்ஸ் ஜனசபை யானது, தன்னுடைய விசேஷ அதிகாரத்தைக் கொண்டு இவனைத் தேசப்பிரஷ்டம் செய்துவிட்டது. இது சம்பந்தமான ஜனசபையில் ரகசிய ஓட்டெடுக்கப்படுகிறபோது, எழுதத் தெரியாதவனும், இவனை முன்பின் அறியாதவனுமான ஓர் அங்கத்தினன், ஓட்டுச் சீட்டாகிய ஓர் ஓட்டுச் சலியில் இவன் பெயரை எழுதித் தருமாறு இவனையே வந்து கேட்டான். “அரிஸ்ட்டைடீஸ் உனக்கு என்ன தீங்கிழைத் தான்? அவனைப் பிரஷ்டம் செய்ய வேண்டுமென்று ஏன் ஓட்டுப் போடுகிறாய்?” என்று இவன் கேட்டதற்கு, “அவன் எனக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. ஆனால் அவனை நேர்மையுள்ளவன் என்று சொல்கிறார்களே, அதைக் கேட்டு கேட்டு எனக்குச் சலித்துப் போய்விட்டது. அதனால்தான் அவனைப் பிரஷ்டம் செய்ய வேண்டு மென்று ஓட்டுப் போடவிரும்புகிறேன்” என்று அந்த அங்கத்தினன் பதில் கூறினான். அவன் கேட்டபடி தன் பெயரை எழுதிக் கொடுத்தான் அரிஸ்ட்டைடீஸ்!
இங்ஙனம் இவன் பிரஷ்டம் செய்யப்பட்டது மாரத்தான் போருக்குப் பிறகு, ஏறக்குறைய எட்டு வருஷங் கழித்துத்தான் - 482-ஆம் வருஷம். இதற்கிடையில் 489-ஆம் வருஷம் ஓர் ஆர்க் கோனாகத் தெரிந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவியைத் திறம்பட வகித்தானென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இங்ஙனம் இவன் தீர்க்க திருஷ்டியுடன் நடந்துகொண்டது சரியென்று சொல்வது போல, 487-ஆம் வருஷம் ஒரு சம்பவம் நடை பெற்றது. எஜீனா தீவு இருக்கிறது பாருங்கள். அதற்கும் ஆத் தென்ஸுக்கும் பரம்பரையாகவே பகைமை இருந்து வந்தது. மாரத் தான் யுத்தத்திற்கு முந்தி டேரியஸ் மன்னன், தன் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக மண்ணும் தண்ணீரும் தருமாறு எல்லாக் கிரேக்க ராஜ்யங்களையும் கேட்டானல்லவா, அப்பொழுது, இந்த எஜீனா ராஜ்யம், அவன் கேட்டபடி கொடுத்தது; அதாவது பாரசீக ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டது. தன் மீதுள்ள பரம்பரை விரோதத்தினாலேயே இப்படிச் செய்ததென்று கருதியது ஆத்தென்ஸ். மேற்படி செயல் இதற்குப் பிடிக்கவில்லை. இதனால், தனக்கு ஆபத் துண்டாகுமென்று உணர்ந்தது. இதைத் தடுக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. என்ன? எஜீனாவை, பாரசீகர்களுக்கு ஆதரவு தராதிருக்கு மாறு கட்டாயப்படுத்த வேண்டுமென்று ஸ்ப்பார்ட்டாவைக் கேட்டுக்கொள்வது. ஸ்ப்பார்ட்டாவை ஏன் கேட்டுக்கொள்ள வேண்டுமென்றால், பெலொப்பொனேசிய சமஷ்டியில் எஜீனா சேர்ந்திருந்தது. இந்த ஸ்தாபனத்தின் தலைமைப் பதவியில் இருந்ததல்லவா ஸ்ப்பார்ட்டா?
ஆத்தென்ஸின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ப்பார்ட்டாவின் அரசனாகிய கிளியோமெனீஸ் (ஆண்டது 520 முதல் 490 வரை) என்பவன், எஜீனாவுக்குச் சென்று, பாரசீகத்திற்கு ஆதரவாயிருந்த கட்சியின் முக்கியஸ்தர்களில் பத்து பேரைக் கைதுசெய்து ஆத் தென்ஸிடம் பிணையாளிகளாக ஒப்படைத்து விட்டான். இப்படிச் செய்தது எஜீனாவின் கையைக் கட்டிப்போட்டது போலாகி விட்டது. பாரசீகர்களுக்கு, அதனால் எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை. ஆத்தீனியர்களுக்கு விரோதமாகவும் நடந்து கொள்ள முடியவில்லை.
மாரத்தான் போர் நடைபெற்று முடிந்தது. பிணையாளிக ளாக வைத்துக் கொண்டிருக்கும் தனது பிரஜைகளின் பதின் மரையும் விடுவித்துத் தருமாறு ஸ்ப்பார்ட்டாவின் மூலம் ஆத் தென்ஸைக் கேட்டது எஜீனா. ஆனால் ஆத்தென்ஸ், விடுவிக்க மறுத்துவிட்டது. எனவே, மேலே குறிப்பிட்டபடி 487-ஆம் வருஷம் எஜீனா, ஆத்தென்ஸ் மீது யுத்தம் தொடுத்தது. முதலில் ஆத் தென்ஸுக்கு ஓரளவு வெற்றி கிடைத்ததேயெனினும் கடைசியில் தோல்வியே ஏற்பட்டது. இதனிடமிருந்த சொற்ப கடற்படையும் நாசமாயிற்று. ஆனால் இதற்கும் எஜீனாவுக்கும் இடையே நிலவி வந்த பகைமை உணர்ச்சி நாசமாகவில்லை. இதற்கு பிறகு சுமார் நாலைந்து வருஷங்கள் வரை, இரு ராஜ்யங்களும், பரஸ்பரம் ஒன்றின் கடலோரப் பிரதேசங்களில் மற்றொன்று கொள்ளையடிப்பதாகிய வேலையில் ஈடுபட்டு வந்தன.
இந்தக் கொள்கைகளை நிறுத்தவேண்டியது ஆத்தென்ஸுக்கு அவசியமாகி விட்டது. தவிர, எஜீனாவைத் தலையெடுக்கவொட் டாமல் செய்துவிடவேண்டு மென்ற ஆசையும் அதற்கு இருந்தது. கடலாதிக்கம் இருந்தால்தானே இவை யிரண்டும் சாத்தியம்? இதனை ஆத்தீனியர்களுக்கு வற்புறுத்தி வந்தான் தெமிஸ்ட் டோக்ளீஸ்.
இதற்குத் தகுந்தாற்போல் இந்தச் சமயத்தில் - ஏறக்குறைய 482-ஆம் வருஷம் - அதிருஷ்டவசமாக ஆத்தென்ஸுக்கு நிறைய பணம் கிடைத்தது. அட்டிக்காவுக்குத் தென்பகுதியிலுள்ள லாரியம் என்ற இடத்தில் வெள்ளிச் சுரங்கங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டு அவற்றிலிருந்து ஆத்தீனியர்களுக்கு ஏராளமான வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது. அதிகப்படியாக கிடைத்து வந்த இந்த வருவாயில் ஒரு பாதக்ததை, புதிய கப்பல்கள் கட்டுவதற்கு ஒதுக்கி வைக்குமாறு ஜனசபையைக் கேட்டான் தெமிஸ்ட்டோக்ளீஸ். இவன் கேட்ட படியே ஜனசபை அனுமதித்தது. உடனே சுமார் நூறு கப்பல்களுக்கு மேல்கட்டப் பெற்றன; பீரேயஸ் துறைமுகத்திலும் யுத்தத்திற்கான சில முஸ்தீப்புகள் செய்யப்பட்டன. இவை பூரணமாக முடிவதற்குள் பாரசீகர்கள் திரும்பவும் படையெடுத்து வந்துவிட்டார்கள்.
ஆத்தென்ஸ் இங்ஙனம் முஸ்தீப்புகள் செய்து கொண்டிருக்க, ஸ்ப்பார்ட்டா என்ன செய்து கொண்டிருந்தது? மண்ணும் தண்ணீரும் கோரி வந்த பாரசீக தூதர்களைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டதல்லவா, அதற்குப் பிறகு, ஏற்பட்ட சில துர் நிமித்தங்களைக் கண்டு மருண்டுவிட்டது; தன் செயலுக்குப் பெரிதும் வருந்தியது. இரண்டு ஸ்ப்பார்ட்டர்களைத் தெரிந்தெடுத்து பாரசீக மன்னன் சந்நிதானத்திற்கனுப்பி, அந்த மன்னன் விதிக்கும் தண்டனையை அவர்கள் அனுபவிக்குமாறு செய்வதுதான் தகுதி யென்று கருதியது. அப்படியே பணக்காரப் பெரியார்களான இருவர் சென்று பாரசீக மன்னனிடம் சரணடைந்தனர். கொலையுண்ட தூர்களுக்குப் பதில் தாங்கள் கொலையுண்ணத் தயாராயிருப்ப தாகக் கூறினார்கள். ஆனால் அந்த மன்னன் - அப்பொழுது - ஆண்டு கொண்டிருந்த ஜெர்க்ஸஸ் (ஆண்டது 485 முதல் 465 வரை. இது கிரேக்கர்களிட்ட பெயர். பாரசீக மொழியில் க்ஷயார்ஷா என்று அழைப்பர்.) மன்னன் - ஸ்ப்பார்ட்டர்கள் செய்தது போல் செய்ய வில்லை. “சர்வதேச தர்மத்திற்கு விரோதமாக ஸ்ப்பார்ட்டர்கள் நடந்து கொண்டதைப் போல் நானும் நடந்து கொண்டால் என் கௌரவம் என்னாகும்.” என்று சொல்லி வந்த இரு ஸ்ப்பார்ட்டர் களையும் அனுப்பிவிட்டான்!
3. பாரசீகப் பெருஞ்சேனையின் புறப்பாடு
மாரத்தான் தோல்விக்குப் பிறகு பாரசீகர்கள் சும்மாயிருக்க வில்லை. மீண்டும் கிரீஸ் மீது படையெடுத்து வர ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தார்கள். தங்கள் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பல இடங்களிலிருந்தும் நீண்டகால யுத்தத்திற்குத் தேவையான அநேக பொருள்களைச் சேகரித்து வந்தார்கள். இந்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில், 485-ஆம் வருஷம் டேரியஸ் மன்னன் இறந்துவிட்டான். இவனுக்குப் பிறகு இவனுடைய மகன் முதலாவது ஜெர்க்ஸஸ் என்பவன் பட்டத்திற்கு வந்தான். இவன், தன் தகப்பனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கிரீஸின் மீது படையெடுப்பதற்கான ஏற்பாடுகளை வெகு உற்சாகத்துடன் செய்துவந்தான். சுமார் நான்கு வருஷங்கள் பிடித்தன இந்த ஏற்பாடுகள் யாவும் ஒருவாறு முடிவு பெறுவதற்கு.
கடைசியில் 481-ஆம் வருஷம் ஜெர்க்ஸஸ் மன்னன் தலைமை யில், பெரும் படையொன்று புறப்பட்டது பாரசீகத்தி லிருந்து. 1,207 கப்பல்கள்; 26,41,000 போர்வீரர்கள்; இந்தப் போர்வீரர்களின் எண் ணிக்கைக்குச் சமதையான தொழிலாளர், கூலிகள், வியாபாரிகள் முதலியோர். இது ஹெரோடோட்டஸ் கூறும் கணக்கு. இந்தப் படை யில் பல நாட்டினரும் பல சமூகத்தினரும் அடங்கியிருந்தார்கள். இந்தியர் சிலரும் சேர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பெரும்படையுடன் ஜெர்க்ஸஸ் மன்னன் ஸார்டிஸ் நகரம் வந்து முகாம் போட்டான்.
பாரசீகர்களின் வருகை அவ்வப்பொழுது கிரேக்கர்களுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிந்துகொண்டிருந்தது. ஒரு சமயம் மூன்று கிரேக்க ஒற்றர்கள், பாரசீகர் களுடைய முகாமில் கண்டுபிடிக்கப் பட்டு விட்டார்கள். இவர்களைச் சிரத்சேதஞ் செய்துவிடும்படி படைத்தலைவர்களில் ஒருவன் உத்தரவு செய்தான். ஆனால் இதை யறிந்த ஜெர்க்ஸஸ் மன்னன், மேற்படி உத்தரவை ரத்து செய்துவிட்டு, அந்த மூன்று ஒற்றர்களையும், முகாம் முழுவதையும் பார்வையிடச் செய்தான். அப்படிப் பார்த்தால் அவர்களே தன்னுடைய படை பலத்தை அறிந்து கொள்வார்கள், நேரே கிரேக்கர்களுக்குப் போய்ச் சொல்லுவார்கள், கிரேக்கர்களும் இதைக் கேட்டுப் பயந்து போய் சமாதானத்திற்கு வருவார்கள் என்று இப்படியெல்லாம் கருதினான் ஜெர்க்ஸஸ். இவன் மேற்படி ஒற்றர்களைக் கொல்லாமல் விட்டது தயையினாலன்று. அஃதொரு யுத்த தந்திரம்.
4. கிரேக்க ஐக்கிய எதிர்ப்பு முன்னணி
பாரசீகப் பெருஞ்சேனையை எதிர்த்து நிற்க வேண்டியது அவசியமல்லவா? இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றின் மகா நாடொன்று பூசந்தியில் கூட்டப் பெற்றது. கூட்டியது யார்? ஆத்தென்ஸும் ஸ்ப்பார்ட்டாவுந்தான். ஏனென்றால் இவையிரண்டுமே பாரசீகத்தின் கோபத்துக்கு இலக் காகியிருந்தன. இவையிரண்டையும் அடக்கிவிட்டால் மற்றக் கிரேக்க ராஜ்யங்கள் தாமாகவே அடங்கிவிடுமென்று அது கருதியது. இதனை ஆத்தென்ஸும் ஸ்ப்பார்ட்டாவும் நன்கு உணர்ந்திருந்தன. இதனாலேயே இவையிரண்டும் முன்னணியில் நின்று எதிர்ப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தன; மற்றக் கிரேக்க ராஜ்யங் களையும் சேர்த்து ஒரு மகாநாடு கூட்டின.
481-ஆம் வருஷம் ஸ்ப்பார்ட்டாவின் தலைமையில் கூடிய இந்த மகாநாடு, கிரேக்க சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான திருப்பம். பாரசீகத்தை எதிர்த்து நிற்கின்ற முறையில் அகில கிரீஸையும் ஒன்று படுத்தியது இந்த மகாநாடுதானே? கிரேக்கர் அனைவரும் ஒன்று பட்டிருக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிது காலமாகவே இருந்து வந்தது. இப்பொழுது அந்த எண்ணத்தை நிறைவேற்றி வைத்தது இந்த மகாநாடு.
ஆனால் ஓரளவுக்குத்தான் இந்த எண்ணம் நிறைவேறிய தென்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த மகாநாட்டுக்கு முப்பத்தோரு ராஜ்யங்கள் மட்டுமே பிரதிநிதிகளை அனுப்பி யிருந்தன. வட கிரீஸைச் சேர்ந்த தெஸ்ஸாஸி என்ன, அக்கீயா என்ன, மத்திய கிரீஸிலுள்ள பியோஷ்யா என்ன, லோக்ரிஸ் என்ன, தெற்கே பெலொப்பொனேசிய தீபகற்பத்தைச் சேர்ந்த சில ராஜ்யங்களென்ன, இப்படி அநேக ராஜ்யங்கள் கலந்து கொள்ளவில்லை. (சுமார் ஐம்பது வருஷங்களுக்குப் பிந்தி, பெலொப்பொனேசிய யுத்தம் என்ற பெயரால் ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஒரு பெரிய போர் மூண்டதற்குப் பெரும்பாலும் இந்த ராஜ்யங்கள் காரணமாயிருந்தன வென்பதை வாசகர்கள் நினைவிலிருந்திக் கொள்வார்களானால் பத்தொன்பதாவது அத்தியாத்தில் சொல்லப் பெறும் நிகழ்ச்சி களைப் படிப்பதற்குச் சுலபமாயிருக்கும்). ஆத்தென்ஸ் மீது சில வற்றிற்குப் பொறாமை; ஸ்ப்பார்ட்டா மீது சிலவற்றிற்குப் பகைமை. பரஸ்பர சந்தேகங்கள் வேறே. சில ராஜ்யங்கள், தங்களுக்குத் தலைமைப் பதவி கொடுக்க வேண்டுமென்றும், அப்படிச் கொடுத்தால்தான் எல்லோருடனும் சேர முடியுமென்றும் நிபந்தனைகள் விதித்தன. தங்களுடைய முக்கியத்துவம் போய்விடுமோ என்று அஞ்சின போலும் இவை!
கடைசியில் 481-ஆம் வருஷம் - இந்த முப்பத்தோரு ராஜ்யங் களும் பாரசீகருக்கு விரோதமாக ஒரு கூட்டுச் சேர்ந்தன. (இந்தக் கூட்டிலிருந்து கி.மு.461-ஆம் வருஷம் ஆத்தென்ஸ் விலகிக் கொண்டு விட்டது. பதினைந்தாவது அத்தியாயத்தைப் பார்க்க.) தற்கால பாஷையில் நேசக்கட்சி என்று இதனைக் கூறலாம். இந்த ஐக்கிய எதிர்ப்பு முன்னணிக்குத் தலைமை வகிப்பது யார்? ஸ்ப்பார்ட்டாவே தலைமை வகிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. தரைப் படையைப் பொறுத்தமட்டில் ஸ்ப்பார்ட்டாதான் தலைமை வகிக்க வேண்டுமென்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டனர். கடற்படை விஷயத்தில் சில அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்பட்டன. ஏனென்றால், கடற்படையைத் திறம்பட நடத்துகின்ற ஆற்றல், எண்ணிக்கை, பலம், இவையெல்லாம் ஆத்தென்ஸுக்குத் தான் இருந்தன. இதனை எல்லோரும் அறிந்திருந்தனர். அங்கீ கரித்தும் கொண்டனர். ஆனால் இவர்களில் சிலருக்கு ஆத்தென்ஸ் மீது ஒருவித பொறாமை இருந்தது. இவர்கள், ஆத்தென்ஸின் தலைமைக்கு எந்த விதத்திலும் இணங்க முடியாதென்று பிடிவாதஞ் செய்தனர். ஆத்தென்ஸும், தேசத்தின் பொதுநலனை முன்னிட்டு, தன் உரிமையை விட்டுக் கொடுக்கச் சம்மதித்தது. அதாவது, ஸ்ப்பார்ட்டாவுக்கு முதல் ஸ்தானம் கொடுத்துவிட்டு, தான் இரண்டாவது ஸ்தானத்திலிருக்க ஒப்புக்கொண்டது. சர்வ கிரேக்க தரைப்படைப் பகுதிக்கு லியோனி தாஸ் (ஆண்டது 491 முதல் 480 வரை) என்ற ஸ்ப்பார்ட்ட அரசனும், கடற்படைப் பகுதிக்கு யூரிபி யாடீஸ் என்ற ஒரு ஸ்ப்பார்ட்ட வீரனும் முறையே பிரதம சேனாதி பதிகளாக நியமிக்கப்பட்டார்கள்.
மற்றும் இந்த மகாநாடு, பொதுச் சத்துருவின் வருகையைக் காரணமாகக் காட்டி, இதுகாறும் ஒன்றுக்கொன்று பிணக்குக் கொண்டிருந்த ராஜ்யங்களைச் சேர்த்துவைக்க முயற்சி எடுத்துக் கொண்டது; இதில் சிறிது வெற்றியும் பெற்றது. உதாரணமாக எஜீனாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் பரஸ்பர பகைமை இருந்த தல்லவா, அந்தப் பகைமையை மறந்துவிட்டு இரண்டும் ஒன்று சேர்ந்து கொண்டன; கிரீஸின் சுதந்திரத்தைக் காப்பாற்றக் கை கோத்துக் கொண்டு முன்வந்து நின்றன. எஜீனாவின் இந்தச் செய் கைக்காக, அதற்குச் சன்மானங் கிடைக்காமலில்லை.
எல்லா ராஜ்யங்களும் சேர்ந்து இப்படிப் பொதுவாகச் சில ஏற்பாடுகளைச் செய்துகொண்டனவென்றாலும், ஒவ்வொரு ராஜ்யமும், தனித்தனியாகத் தன்னாலியன்ற முஸ்தீப்புகளைச் செய்து கொண்டு வந்தது. சிறப்பாக ஆத்தென்ஸ், மிகவும் சுறுசுறுப்புக் காட்டியது; தான் முந்தி பிரஷ்டம் செய்து விட்டிருந்த பிரபல தலைவர்களான ஜாந்திப்பஸையும் அரிஸ்ட்டைடீஸையும் திருப்பி வரவழைத்து. (480-ஆம் வருஷம்). இப்படி வரவழைத்ததோடு மட்டு மல்ல, அவர்களிடத்தில் ராணுவப் பொறுப்பை ஒப்புவித்து அவர்களைச் சேனாதிபதிகளாகவும் நியமித்தது.
5. தெர்மாப்பிலே போர் (கி.மு. 480)
480-ஆம் வருஷம் மத்தியில் ஜெர்க்ஸஸ் மன்னன், தனது பெருஞ் சேனையுடன் ஹெல்லெஸ்ப்பாண்ட் (இதுவே இப்பொழுது டார்டனெல்ஸ் என்று அழைக்கப்படுகிறது) ஜலசந்திக்கு வந்து சேர்ந்தான். இந்த ஜலசந்தியைக் கடக்க வேண்டுமல்லவா? இதற்காக ஒரு பாலம் கட்டுவித்தான். ஜலசந்தியின் குறுக்கே இரட்டை வரிசை யில் சிறு சிறு கப்பல்களை நிறுத்தி வைத்து, அவைகளைப் பலகை களின் மூலம் இணைத்து ஒரு பாதைபோல் ஆக்கிவிட்டான். தற்காலிகமாக நிர்மாணிக்கப் பெற்ற இந்தப் பாலம், பூர்விகர் களுடைய தொழில் நுட்பத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று சொல்ல வேண்டும். இந்தப் பாலத்தின் மூலமாகவே பாரசீகச் சேனை முழுவதும் ஜலசந்தியைக் கடந்தது. இதற்கு இரவு பகல் இடை விடாமல் ஏழு நாட்களாயின. இவ்வளவுக்கும் இந்தப் பாலம் தாக்குப் பிடித்தது. ஓர் ஆபத்துக்கூட ஏற்படவில்லை.
ஜலசந்தியைக் கடந்த பாரசீகப் படையானது திரேஸ், மாஸி டோனியா ஆகிய இந்தப் பிரதேசங்களின் வழியாக தெஸ்ஸாலி பிரதேசத்தின் தென்பகுதிக்கு வந்துசேர்ந்தது. தரைப்படையின் நிலைமை இப்படியிருக்க, கடற்படையானது எஜீயன் கடலின் வட கரையோரமாக வந்து யூபியாவிற்கு வடக்குப் பக்கத்திலுள்ள ஆர்ட்டிமீஷியம் என்னும் இடத்தையடைந்தது.
பார்த்தார்கள் கிரேக்கர்கள்; பாரசீகர்களின் வருகையை முன் கூட்டியே தடுத்து நிறுத்தவேண்டிய அவசியத்தை உணர்ந் தார்கள். எந்த இடத்தில் தடுத்து நிறுத்துவது? ஒன்று, வடக்கு நோக்கிச் சென்று தெர்மாப்பிலே கணவாயில் தடுத்து நிறுத்தலாம்; அல்லது கொரிந்த்திய பூசந்தி வரையில் சத்துருக்களை வரவிட்டு, பிறகு அங்கே தடுத்து நிறுத்தலாம். பெலொப்பொனேசியர்களுக்கு, தெர் மாப்பிலே அவ்வளவு தூரம் செல்ல மனசில்லை; பூசந்திக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலா மென்பதே நோக்கம். ஆனால் ஆத்தீனியர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. பூசந்திவரை வரவிட்டால், பூசந்திக்கு வடக்கேயுள்ள ஆத்தென்ஸ் முதலிய எல்லா ராஜ்யங்களுக்கும் ஆபத் தென்றும், தவிர, வடக்கேயுள்ள சில ராஜ்யங்கள் சத்துருக்கள் பக்கம் சேர்ந்துவிட்டால் தங்களுடைய நிலைமை பலவீனப்பட்டுப் போகு மென்றும் இவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
கடைசியில் தெர்மாப்பிலே கணவாயண்டை பாரசீகர்களைத் தடுத்து நிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பொலொப்பொனேசியர்கள் அரை மனத்துடன் தான் ஒப்புக் கொண் டார்கள். ஆனால் ஒரு சிறு படையை மட்டுந்தான் தாங்கள் உடனடியாக அனுப்ப முடியுமென்றும், பின்னால் பெரும் படையை அனுப்புவதாகவும் தெரிவித்தார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? அப்போலோ தெய்வத்திற்குத் திருவிழா! மாரத்தான் யுத்தத்திற்கு என்ன சாக்கு சொல்லப்பட்டதோ அதே சாக்குதான் இப்பொழுதும்!
கடைசியில் கிரேக்க ஐக்கிய முன்னணியின் சார்பாக லியோனி தாஸ் தலைமையில் சிறு தரைப்படை தெர்மாப்பிலே கணவாய்க்குச் சென்றது. இங்ஙனமே யூரிபியாடீஸ் தலைமையில் கடற்படை யொனறு ஆர்ட்டிமீஷியத் திற்குச் சென்றது.
தெர்மாப்பிலேக்குச் சென்ற படையானது, சுமார் பதினாயிரம் பேர் கொண்ட சிறு படையே. இதில் முந்நூறு பேரே ஸ்ப்பார்ட் டர்கள்; மற்றவர்கள் பிற ராஜ்யத்தினர். லட்சக்கணக்கிலே வந்து கொண்டிருக்கும் பாரசீகப் படைக்கு முன் இந்தச் சிறுபடை எம் மாத்திரம்? ஆயினும் லியோனிதாஸ், தெர்மாப்பிலே கணவாயைத் தைரியமாகக் காத்துநின்றான். ஆர்ட்டிமீஷியத்தில் வெற்றி கொள் கிறவரை, பாரசீகக் கடற்படை மீது வெற்றி கொள்கிறவரை, பார சீகர்களின் இந்தத் தரைப்படையைத் தடுத்துநிறுத்திக் காலங்கடத்த வேண்டுமென்பதே கிரேக்கர்களின் ஏற்பாடு. கடல் யுத்தத்தில் நிச்சய மாக வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருந்தார்கள் பொதுவாக கிரேக்கர்கள்; குறிப்பாக ஆத்தீனியர்கள்.
பாரசீகப் படையின் எண்ணிக்கை பலத்தைக் கண்டு லியோனி தாஸ் படையைச் சேர்ந்த சிலர் பயந்து போனார்கள். திரும்பிப் போய் விடலாமென்று லியோனிதாஸுக்கு யோசனை கூறினார்கள். ஆனால் இவன் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டான். “யார் வேண்டுமானாலும் திரும்பிப் போகட்டும். நானும் என்னோடு வந்திருக்கிற முந்நூறு ஸ்ப்பார்ட்டர்களும் கடைசி வரை இந்தக் கணவாயைக் காத்து நிற்போம்.” என்று வீர முழக்கம் செய்தான். இதைக் கேட்டு, பயந்திருந்தவர்கள் சிறிது தைரியமடைந்தார்கள்.
தெர்மாப்பிலே கணவாய், நெருக்கமான ஒரு நுழைவாயில் மாதிரி. ‘உஷ்ணமான நுழைவாயில்’ என்று இதனை அழைப்பர். அதாவது கஷ்டப்பட்டுக் கடக்க வேண்டிய இடம் என்று அர்த்தம். இந்த இடத்தில் பாரசீகப் பெரும்படையும் கிரேக்கச் சிறுபடையும் 480-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் சந்தித்தன. இரவு பகல் இரண்டு நாள் இடையறாப் போர் நடைபெற்றது. கிரேக்கர்கள் வீரத்துடன் போர் புரிந்தார்களென்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆயினும் என்ன? மூன்றாவது நாள் துரோகம் தலைகாட்டிவிட்டது. கணவாயைச் சேர்ந்தாற்போல் வேறொரு மலை வழி இருந்தது. இந்த வழியாகவும் கணவாயைக் கடக்கக் கூடும். மறைமுகமாக இருந்த இந்த வழி, பாரசீகர்களுக்கு முதல் இரண்டு நாள் தெரியாமலிருந்தது. ஆனால் மூன்றாவது நாள், சில கிரேக்கர்கள் - ஆம் சில துரோகிகள்- இந்த வழியைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள். காட்டிக் கொடுத்த தோடு மட்டுமல்ல, பாரசீகப் படையின் ஒரு பகுதியை வழிகாட்டி அழைத்தும் வந்தார்கள். எவ்வளவு கேவலம்! இங்ஙனம் அழைத்து வரப்பட்ட படையானது, கிரேக்கப் படைக்குப் பின் பக்கம் வந்து அதனை வளைத்துக் கொண்டு விட்டது. முன்னேயும் சத்துருக்கள்! பின்னேயும் சத்துருக்கள்! நடுவிலே துரோகம்! என்ன செய்வான் லியோனிதாஸ்? எப்படிப்பட்டவனுக்கும் நிலைகலங்கிப் போகு மல்லவா? ஆனால் லியோனிதாஸ் அசாதாரண வீரன். சிறிதுகூட மனங்கலங் காமல் நின்ற நிலையிலேயே இருந்தான். புறமுதுகு காட்டிக் கொண்டு செல்ல மறுத்துவிட்டான். இவனோடு முந்நூறு ஸ்ப்பார்ட்டர்களும், எழுநூறு தெஸ்ப்பியர்களும் (தெஸ்பி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்) இருந்தார்கள். இந்த ஆயிரம் பேருக்கு, இரண்டு பக்கத்திலும் நெருக்கிக் கொண்டு வந்த பாரசீகர்களுக்கும் கோர யுத்தம் நடைபெற்றது. இந்தக் கோர யுத்தத்தின் வெள்ளத்தில் நாம் ஏன் நீந்திச் செல்ல வேண்டும்? கிரேக்கர்கள் கடைசி ஆயுதம் இருக்கிறவரை, இல்லை, இல்லை, கடைசி மூச்சு இருக்கிறவரை யுத்தஞ் செய்தார்களென்று சுருக்கமாகச் சொல்லி முடிப்போம். இரண்டு பேர் தவிர கிரேக்கர்கள் அத்தனை பேரும் வீர சொர்க்கத்தை நாடிச் சென்றனர். அந்த இருவரில் ஒருவன், அடுத்தாற் போல் நடைபெற்ற மற்றொரு யுத்தத்தில் உயிரிழந்தான்; இன்னொருவன், வெட்கத் தினால் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துபோனான்.
மாரத்தானில், போர்க்களத்தில் மடிந்தவர்கள் அந்தப் போர்க் களத்திலேயே புதைக்கப்பட்டார்கள்; அங்கேயே அவர்களுக்கு ஒரு ஞாபகச் சின்னம் நிறுவப் பட்டது. அதுபோலவே தெர்மாப்பிலேயும் செய்யப்பட்டது. லியோனிதாஸ் வீழ்ந்த இடத்தில் சலவைக் கல்லினால் ஒரு சிங்க உருவம் செதுக்கி வைக்கப்பட்டது. மற்ற வீரர் களுக்கு ஞாபக ஸ்தம்பங்கள் எழுப்பப்பெற்றன. ஸ்ப்பார்ட்டர் களுக்கென்று எழுப்பப்பெற்ற ஞாபகச் சின்னத்தில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பபட்டிருந்தன. “செல் அந்நியனே, சென்று சொல்லாஸிடீமோனியர் களுக்கு, அவர்களுடைய கட்டளைப் படி நாங்கள் விழுந்து கிடக்கிறோமென்று.”
உலகத்தில் எத்தனையோ யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒருசில தான் வீரத்தின் காட்சிசாலைகளாக இருக்கின்றன. அந்த ஒரு சிலவற்றுள் தெர்மாப்பிலே யுத்தம் ஒன்று. இதனால்தான் இது சரித்திரத்தில் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஸைமனிடீஸ் என்ற கவிஞனைப் பற்றி முந்திக் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா, அவன், இந்த யுத்தத்தில் வீழ்ந்துபட்ட ஸ்ப்பார்ட்டர்களைப் புகழ்ந்து பின்வருமாறு பாடுகிறான். “அவர்கள் அதிருஷ்ட சாலிகள். அவர்களுக்கு நற்கதி கிடைத்தது. அவர்களுடைய கல்லறை ஒரு பலிபீடம். அவர்களுக்காக யாரும் அழவில்லை. அதற்குப் பதிலாக எல்லோருடைய நினைவிலும் அவர்கள் இருக்கிறார்கள். அவர் களுக்காக யாரும் இரங்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்களை எல்லோரும் புகழ்கிறார்கள். அவர்களுடைய சவத்தை மூடிக்கொண் டிருக்கும் ஆடையானது காலத்தினால் நைந்து போகாது. ஏனென் றால் அவர்கள் வீரர்கள். அவர்களுடைய சவக்குழி யானது, ஹெல்லா ஸின் புகழை தன் துணையாக அழைத்து வைத்துக் கொண்டிருக் கிறது. வீரத்திற்கும் அழியாத புகழுக்கும் ஒரு பெரிய ஞாபகச் சின்னத்தை ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிற லியோனிதாஸே இதற்குச் சாட்சி.’
6. ஸாலாமிஸ் போர் (கி.மு. 480)
இனி ஆர்ட்டிமீஷியத்திற்குச் செல்வோம். இங்கு அனுப்பப் பெற்ற கிரேக்கக் கடற்படையில் மொத்தம் முந்நூற்று முப்பத்து மூன்று கப்பல்கள் இருந்தன. இவற்றுள் ஸ்ப்பார்ட்டாவின் காணிக்கை பத்து கப்பல்கள் மட்டுந்தான். ஆத்தென்ஸோ, தெமிஸ்ட்டோக்ளீ ஸின் தலைமையில் இருநூறு கப்பல்களை உதவியிருந்தது. ஆயினும் இவன். தெமிஸ்ட்டோக்ளீஸ் - யூரியாடீஸின் பிரதம சேனாதிபத் தியத்தை ஏற்றுக் கொண்டு, அவன் கீழ் ஆத்தீனியப் பகுதிக்கு மட்டும் தலைவனாயிருக்கச் சம்மதித்தான்.
ஆர்ட்டிமீஷியத்தில் கடற்போரும் தெர்மாப்பிலே தரைப் போரும் ஏறக்குறைய ஒரே சமயத்தில்தான் நடைபெற்றன. ஆர்ட்டிமீ ஷியத்திலும் மூன்று நாள் வரை சண்டை நடைபெற்றது. இந்த மூன்று நாட்களிலும் வெற்றி தோல்வி யாருக்கென்று நிச்சய மாகத் தெரியவில்லை. ஆனால் மூன்றாவது நாளன்று, கிரேக்கர்கள், யுத்தத்தை நிறுத்திக்கொண்டு பின்னடைய வேண்டியவர்களா னார்கள். ஏனென்றால், தெர்மாப்பிலேயைக் காத்து நின்ற படை தோல்வி யடைந்துவிட்டதென்றும், பாரசீகர்கள் தெற்கே ஆத் தென்ஸை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்களென்றும் இவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே, எஞ்சிய கடற்படை யுடன் தெற்கு நோக்கினார்கள், ஸாலாமிஸ் விரிகுடாவுக்கு வேகமாக வந்து சேர்ந்தார்கள்.
ஆர்ட்டிமீஷியத்திலிருந்து திரும்பி வந்ததும் ஆத்தீனியர்கள் என்ன கண்டார்கள்? பெலொப்பொனேசியர்கள், கொரிந்த்திய பூசந்திக்குக் குறுக்கே ஒரு பெரிய சுவர் எழுப்பிக் கொண்டி ருப்பதைக் கண்டார்கள். அப்போலோ திருவிழா முடிந்ததும், பார சீகர்களை எதிர்த்துப் போராட, பெரும்படையொன்றை அனுப்பித் தருவதாக அவர்கள் முன்பு வாக்குக் கொடுத்திருந்தார் களல்லவா, அதன்படி அவர்கள் அனுப்பவில்லை. அதற்குள், தெர் மாப்பி லேயில் தோல்வி ஏற்பட்ட செய்தி அவர்களுக்கு எட்டியது. எனவே, தற்காப்புக்காக, தங்கள் படையைக் கொரிந்த்திய பூசந்தியண்டைக் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு, மேற்கொண்டு சத்துருக்கள் வரவொட்டாமல் தடுக்க, குறுக்கே ஒரு சுவர் போட்டுக் கொண்டி ருந்தார்கள். இதனால் பெலொப்பொனேசிய தீபகற்பத்திற்கு வடக்கேயுள்ள அட்டிக்கா முதலிய ராஜ்யங்களுக்கு எவ்வித பாது காப்புமில்லாமல் போய் விட்டது. இதனைச் சடுதியில் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் ஆத்தீனியர்கள்.
பாரசீகர்களோ முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆத்தென்ஸில் ஒரே பரபரப்பு. பாரசீகர்களின் கோபமனைத்தும் திரண்டு தங்களைத் தாக்கும் என்பது ஆத்தென்ஸ் வாசிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே தெமிஸ்டோக்ளீஸும், அவனுடைய சகாக்களும் சேர்ந்து நன்கு ஆலோசித்து நகரத்தைக் காலி செய்து விடத் தீர்மானித்தார்கள். அவரவரும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டு மென்று அரசாங்க உத்தரவு ஒன்று பிறந்தது. சிலர் எஜீனா தீவுக்குச் சென்றார்கள்; இன்னும் சிலர் ஸாலாமிஸ் தீவுக்குப் போனார்கள்; வேறு சிலர் ஆத்தீனிய கடற்படையில் சேர்ந்து கொண்டார்கள். இங்ஙனம் காலி செய்யப்பட்டபோது ஆத்தென்ஸ் இருந்த நிலை மையை, ப்ளூட்டார்க் என்ற சரித்திராசிரியன் மிக உருக்கமாக வருணிக்கிறான். பெற்ற தாயும் பிறந்த நன்னாடும் ஒன்றல்லவா? யாருக்குத்தான் மனம் வரும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த இடத்தை விட்டுப் பிரிய? பிரியாமல் இருந்துவிடலாம் அதே இடத்தில். ஆனால் அடிமை வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஆத்தீனியர்கள் தயாராக இல்லை. பகுத்தறிவு படைத்த மனிதர்கள் மட்டுமல்ல, வாயில்லாத பிராணிகள் கூட அடிமை வலையில் வீழ மறுத்துவிட்டன. ஆத்தென்ஸில், வீட்டிலே வளர்ந்த நாய் பூனைகள், தங்கள் எஜமானர்களைப் பின்பற்றிச் செல்ல முயன்றன. படைத் தலைமை பூண்டிருந்த ஜாந்திப்பஸ் - இவன் பெரீக்ளீஸின் தந்தையென்பதை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய தில்லையல்லவா? ஸாலாமிஸை நோக்கிக் கப்பலேறிவிட்டான். இவன் வளர்த்து வந்த நாய், இவனோடு செல்ல விரும்பியது. ஆனால் கப்பலில் இடமில்லை. எனவே அது, கப்பலுக்குப் பக்கத்திலேயே நீந்திச் சென்று ஸாலாமிஸ் தீவை அடைந்தது; அங்குச் சென்றதும் களைப்பு மிகுதியால் உயிர் நீத்தது.
இங்ஙனம் காலி செய்யப் பெற்ற ஆத்தென்ஸ் நகரத்திற்குள் ஜெர்க்ஸஸ் மன்னன் 480-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதி னேழாந் தேதி வெற்றிக் கோலத்துடன் பிரவேசித்தான். தன் ஆத்திரம் தீர நகரத்தைச் சூறைக்குவிட்டான்; முக்கியமான இடங்களைச் சுட்டெரிக்கச் செய்தான்.
ஆத்தென்ஸ் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள், ஸாலாமிஸ் விரிகுடாவில் தங்கியிருந்த கிரேக்கக் கடற்படைத் தலைவர்கள். இவர்களை - தெமிஸ்ட்டோக்ளீஸ் ஒருவனைத் தவிர மற்றவர்களை - அச்சம் ஆட்டம் கொண்டுவிட்டது. உடனே ஒரு சபை கூட்டினார்கள். அடுத்து எடுத்துக்கொள்ள வேண்டிய நட வடிக்கை என்ன? கொரிந்த்திய பூசந்திக்குப் பின்வாங்கிக் கொண்டு விடுவதென்று பெரும்பான்மையோர் தீர்மானித்தனர். ஆனால் தெமிஸ்ட் டோக்ளீஸ் இதனை விரும்பவில்லை. இப்படிப் பின் வாங்கிச் செல்வதானால், எஜீனா, ஸாலாமிஸ் முதலிய தீவுகளைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகுமல்லவா? எனவே மேற்படி தீர் மானத்தை ரத்து செய்ய முயன்றான். மறுபடியும் ஆலோசனை சபை கூடியது. தெமிஸ்ட்டோக்ளீஸுக்கும் மற்றத் தளபதிகளில் சிலருக்கும் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. கடைசியில் தெமிஸ்ட்டோ க்ளீஸ், “கடற்படையில் ஏறக்குறைய பாதி ஆத்ளதென்ஸினுடையது. பூ சந்திக்குப் பின்வாங்கிச் செல்வதாயிருந்தால் நாங்கள் - ஆத்தீனியர் களாகிய நாங்கள் - கூட வரமுடியாது. கிரீஸைத் துறந்துவிட்டு வேறெங்காவது மேற்குப் பக்கம் புதியதொரு நாட்டிற்குச் சென்று குடியேறி விடுகிறோம்” என்று பயமுறுத்தினான். இவனுடைய பய முறுத்தல் பலன் கொடுத்தது. ஸாலாமிஸ் விரிகுடாவிலேயே தங்கி, பாரசீகக் கடற்படையை எதிர்த்து நிற்பதென்று முடிவு செய்யப் பட்டது.
இவர்கள் தங்கியிருந்தால் மட்டுமென்ன? பாரசீகர்கள் சண்டை செய்ய முன்வரவேண்டுமே? அவர்களும் யோசிப்பார் களல்லவா? யோசிக்கவே செய்தார்கள். ஆனால் அவர்களைச் சண்டைக்கிழுத்துவிடக் கூடிய ஒரு தந்திரத்தைக் கையாண்டான் தெமிஸ்ட்டோக்ளீஸ். கிரேக்கர்கள் பின்வாங்கிச் செல்லத் தயாரா யிருக்கிறார்களென்றும், ஆதலின் உடனே அவர்களைச் சூழ்ந்து கொள்ளுமாறும் ஒரு பொய்த் தூது விடுத்தான் பாரசீகர்களுக்கு. அவர்களும் இதனை நம்பி கிரேக்கக் கடற்படையைச் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள். கோழைத் தனத்தினால் பீடிக்கப்பட்டிருந் தவர்களும், தெமிஸ்ட்டோக்ளீஸின் பயமுறுத்தல் களுக்குக் கட்டுப் பட்டிருந்தவர்களுமான கிரேக்க தளபதிகள் சண்டை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்டுவிட்டார்கள். இந்த நிர்ப்பந்தத் திற்கு நிமித்தமாக இருந்தவன் அரிஸ்டைடீஸ். கிரேக்கர்களின் அதிருஷ்டவசமாக இந்தச் சமயத்தில் தெமிஸட்டோக்ளீஸுக்குப் பக்கபலமாக வந்து சேர்ந்து கொண்டான் இவன்.
480-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இருபத்து மூன்றாம் தேதி, ஸாலாமிஸ் விரிகுடாவில், ஆயிரத்திருநூறு கப்பல்களைக் கொண்ட பாரசீகக் கடற்படையும், முந்நூற்று எண்பத்தைந்து கப்பல் களை மட்டுமே கொண்டிருந்த கிரேக்கப் படையும் சந்தித்தன. போர் துவங்கியது. அட்டிக்காவின் தென் பகுதியிலுள்ள எகெலியஸ் மலை மீது தனியாக ஒரு சிங்காதனம் அமைக்கச் செய்து அதன்மீது அமர்ந்துகொண்டு, தனது படையினரின் போர்த் திறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெர்க்ஸஸ் மன்னன். ஆயினும் என்ன? பாரசீகப்படை படுதோல்வி யடைந்தது. கிரேக்க சரித்திராசிரியர்கள் கணக்குப்படி, பாரசீர்களுக்கு இருநூறு கப்பல்கள் நஷ்டம்; கிரேக் கர்களுக்கு நாற்பது கப்பல்கள்தான் சேதம். இந்த யுத்தத்தில் எஜீனா தீவைச் சேர்ந்தவர்கள் தீரத்துடன் போர் புரிந்தார்களை என்பதைக் குறிப்பிடுதல் அவசியமாகும். இருந்தாலும் கிரேக்கர்களின் வெற்றிக்குக் காரணமாயிருந்தவர்கள் ஆத்தீனியர்களே; வெற்றி வாங்கிக் கொடுத்தவன் தெமிஸ்ட்டோக்ளீஸே.
7. ஸாலாமிஸ் போருக்குப்பிறகு
தன் கண் முன்னாலேயே தனது கடற்படை தோல்வியுற்ற பிறகு, ஜெர்க்ஸஸ் மன்னனுக்கு அட்டிக்காவில் இருப்புக் கொள்ள வில்லை. பின்வாங்கிச் சென்றுவிட நிச்சயித்தான். இதற்கனுகூல மாயிருக்கும்பொருட்டு, தனது கடற்படையை ஹெல்லெஸ்ப் பாண்ட் ஜலசந்தியண்டை போய் நின்று கொண்டிருக்குமாறு உத்தர விட்டான். அப்படியே அந்தப் படையும் அங்கே விரைந்து சென்றது. பின்னர், தனது தரைப்படையை - மூன்று லட்சம் துருப்புக்களை - தன்னுடைய முக்கிய சேனாதிபதிகளில் ஒருவனாகிய மார்தோனியஸ் என்பவன் வசம் ஒப்புவித்துவிட்டு, தான் மட்டும் ஒரு படையுடன் தரைமார்க்கமாக, அதாவது தெஸ்ஸாலி, திரேஸ் முதலிய பிர தேசங்கள் வழியாக ஹெல்லெஸ்ப் பாண்ட் ஜலசந்தியை யடைந்து, அங்கு ஏற்கனவே அனுப்பப் பெற்றிருந்த கடற்படையின் துணை கொண்டு அதனைக் கடந்து, நேரேஸார்டிஸ் நகரம் போய்ச் சேர்ந்தான். அறுபதினாயிரம் பேர் கொண்ட ஒரு மெய்க்காப்புப் படை இவனை ஜலசந்திவரை கொண்டுவிட்டு விட்டு, திரும்ப மார்தோனியஸ் படையுடன் வந்து சேர்ந்துகொண்டதென்றும், ஜலசந்தியை யடைய நாற்பத்தைந்து நாட்கள் பிடித்தனவென்றும், ஸார்டிஸ் நகரம்போய்ச் சேருவதற்குள் வழியில் நோயினாலும் சோர்வினாலும் பலர் மாண்டனர் என்றும் கூறுவர் கிரேக்க சரித்திராசிரியர்.
வெற்றி கொண்ட கிரேக்கக் கடற்படையானது ஜலசந்தியை நோக்கித் துரிதமாகச் சென்று கொண்டிருந்த பாரசீகக் கடற் படையைத் துரத்திக்கொண்டு சென்றது. ஜலசந்தி வரை சென்று பாரசீகர்களுக்கு மறுபடியும் ஒரு பாடங் கற்பிக்க வேண்டுமென்று தெமிஸ்ட்டோக்ளீஸ் விரும்பினான். ஆனால் அவ்வளவு தூரம் செல்ல பெலொப்பொனேசியர்கள் ஒருப்படவில்லை. எனவே சிறிது தூரம் வரை சென்று திரும்பிவிட்டது. தான்தான் கிரேக்கர்களைத் துரத்திச் செல்ல வேண்டாமென்று தடுத்துவிட்டதாக, தெமிஸ்ட் டோக்ளீஸ், பழைய மாதிரி ஜெர்க்ஸஸ் மன்னனுக்கு ஒரு பொய்த் தூது விடுத்தான். என்ன நோக்கத்துடன் இப்படிச் செய்தானோ தெரியாது. ஆனால் இவனுடைய பிற்கால வாழ்க்கையைப் பார்க்கிற போது இவன் நன்னோக்கத்துடன் இப்படிச் செய்தானாவென்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
அட்டிக்காவிலிருந்து பின்வாங்கிக் கொண்டு செல்லவிருந்த பாரசீகர்களின் தரைப்படையையும், பூசந்தியில் லியோனிதாஸின் சகோதரனான கிளியோம் ப்ரோட்டஸ் என்பவனுடைய தலைமை யில் முகாம் செய்திருந்த பெலொப் பொனேசியப் படையானது துரத்திச் செல்ல வேண்டுமென்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 480-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாந் தேதி நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. புறப்படுந் தறுவாயில் சூரிய கிரகணம்! சகுனத் தடையென்று சொல்லி, புறப்படுவதை நிறுத்திக் கொண்டு விட்டான் கிளியோம் ப்ரோட்டஸ்! ஆக, கிரேக்கர்கள், ஸாலாமிஸில் கிடைத்த வெற்றியிலிருந்து அதிகமான அனுகூலங்களைப் பெறத் தவறி விட்டார்களென்றே சொல்ல வேண்டும்.
இருந்தாலும் வெற்றிவிழா கொண்டினார்கள். சாதாரணமாக ஒரு யுத்தம் வெற்றிகரமாக முடிந்ததும், வெற்றிக்குக் காரணமாயிருந் தவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதும், தெய்வங்களுக்குப் பூசை போடுவதும், யுத்தத்தில் கிடைத்த பொருள்களைத் தக்கார்க்குத் தக்கபடி பங்கிட்டுக் கொடுப்பதும் கிரேக்கர்களின் வழக்கம். இதற் காக ஒரு சபை கூட்டுவார்கள். இந்த வழக்கத்தை அனுசரித்து, கிரேக்க தளபதிகளின் சபையொன்று கூடியது. வீரத்துடன் போர்புரிந்த ராஜ்யங் களுள் எஜீனாவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது! ஆத் தென்ஸுக்கு இரண்டாவது பரிசு! திறமையுடன் தலைமை தாங்கிய சேனாதிபதிகளுள் யாருக்கு முதல் பரிசு வழங்குவதென்பதை நிர்ணயிக்க ஓட்டெடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கு முதல் பரிசும், தெமிஸ்டோக்ளீஸுக்கு இரண்டாவது பரிசும் வழங்கப் பட வேண்டுமென்று ஓட்டுப் போட்டனர்! இதனால் யாருக்கும் முதல் பரிசு கிடைக்கவில்லை. முதல் பரிசு இல்லையாதலினால் தெமிஸ்ட்டோக்ளீஸுக்கு இரண்டாவது பரிசும் இல்லாமற் போய் விட்டது.
ஸாலாமிஸ் வெற்றியானது, கிரேக்கர்களுக்கு என்றுமில்லாத ஓர் ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் உண்டுபண்ணியது. அந்தக் காலத்து இலக்கிய சிருஷ்டிகளில் இவையிரண்டும் பிரதி பலித்துக் காட்டின. பாரசீகர் களுடைய தோல்வியும் கிரேக்கர் களுடைய வெற்றியும், கவிஞர்களுடையவும் ஓவியர்களுடையவும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தக் கூடிய தூண்டு கருவிகளா யமைந்தன.
ஸாலாமிஸ் போர் முடிந்ததும், வெளியிடங்களுக்குச் சென் றிருந்த ஆத்தீனியர்கள் திரும்பவும் ஆத்தென்ஸுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்து சேர்ந்ததும், அழிக்கப்பட்டுவிட்டிருந்த நகரத்தைப் புனர் நிர்மாணஞ்செய்யத் துவங்கினார்கள். ஆனால் இந்த வேலையைத் தொடர்ந்து செய்து முடிப்பதற்குள், மறுபடியும் நகரத்தைக் காலி செய்ய வேண்டிவந்தது. ஆத்தீனியர்களைப் போலவே பெலொப்பெ னேசியர்களும் திரும்பிச் சென்று, முந்தி பூசந்திக்குக் குறுக்கே சுவர் போடத் துவங்கினார்களல்லவா, அந்த வேலையைப் பூர்த்தி செய்ய முற்பட்டார்கள்.
8. பாரசீகர்களின் படுதோல்வி
ஜெர்க்ஸஸ் மன்னன் பின்வாங்கிச் சென்றதும், மார்தோனியஸ், தன் தலைமை ஸ்தானத்தை அட்டிக்காவிலிருந்து வடக்கே தெஸ் ஸாலிக்கு மாற்றிக்கொண்டு, அங்கிருந்த வண்ணம் அடுத்த படை யெடுப்புக்கு ஆயத்தங்கள் செய்து வந்தான். நயத்தையும் பயத்தையும் மாறி மாறிக் கையாண்டு, அக்கம் பக்கத்திலுள்ள ராஜ்யத்தினரைத் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டுவந்தான்.
இங்ஙனம் ஒரு பக்கம் யுத்த முஸ்தீப்புகள் செய்து கொண்டே மற்றொரு பக்கத்தில் கிரேக்கர்களுக்குள் வேற்றுமையை உண்டு பண்ணும் முயற்சியில் முனைந்தான் மார்தோனியஸ். ஆத்தென் ஸுக்கு மட்டும் தனியாக ஒரு தூது கோஷ்டியை அனுப்பி, பாரசீகத் துடன் சமரசமாகப் போகுமாறும், அப்படிப் போனால், பாரசீக அரசாங்கத்தின் செலவில் ஆத்தென்ஸை புனர் நிர்மாணஞ் செய்து தருவதாகவும் தெரிவித்தான். ஆனால் கிரீஸின் அதிருஷ்டவசமாக, ஆத்தீனியர்கள் இவனுடைய சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். “சூரியன் இப்பொழுது போகிற போக்கில் போய்க் கொண்டிருக்கிறவரை, ஜெர்க்ஸஸ் மன்னனுடன் சமரசம் செய்து கொள்ளத் தயாராயில்லை”யென்று தூது கோஷ்டியிடம் பதில் தெரிவித்தார்கள்.
இப்படித் தெரிவித்துவிட்டு, உடனே ஸ்ப்பார்ட்டாவுக்கு ஆள் அனுப்பி, உதவிக்கு வருமாறு அழைத்தார்கள். ஸ்ப்பார்ட்டர்களோ வழக்கம்போல் சிறிது தயங்கினார்கள்; தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்று கருதினார்கள். இதைக் கண்டு ஆத்தீனியர்களுக்கு ஆத்திரம் பொங்கியது. நியாயந்தானே? இந்தச் சமயத்தில் சுயநலம் பாராட்டுவது, அகில கிரீஸையும் சாசுவத அடிமைத்தனத்திற்குட்படுத்த உதவி செய்வதாகுமென்றும், பார சீகத்தின் பக்கம் ஆத்தென்ஸ் சேர்ந்து கொண்டுவிட்டால் பெலொப் பொனேசியாவின் கதி என்னாகுமென்பதை யோசித்துப் பார்க்கு மாறும் தெரிவித்தார்கள். இதற்குப் பின்னரே ஸ்ப்பார்ட்டர்கள் உதவிக்கு வர இசைந்தார்கள்.
ஸ்ப்பார்ட்டர்களென்ன, இதர பெலொப்பொனேசியர்களென்ன, ஆத்தீனியர் களென்ன, இவர்கள் பலரும் சேர்ந்த ஓர் ஐக்கியக் கிரேக்கப் படைதிரண்டது. சுமார் ஒரு லட்சத்துப் பதினாயிரம் பேர் கொண்ட இந்தப் படைக்குப் பாஸேனியஸ் (இவன் கிளியோம்ப் ரோட்டஸின் மகன். லியோனிதாஸ் அரசனுடைய சிறு குழந்தைக்குப் பதில் ரீஜெண்ட்டாக இருந்து ஸ்ப்பார்ட்டாவில் சிறிது காலம் ஆண்டவன்) என்ற ஸ்ப்பார்ட்ட அரச பரம்பரையினன் பிரதம சேனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். இந்த மொத்தப் படையில் ஆத்தீனியர்கள் மட்டும் சுமார் எண்ணாயிரம் பேர் இருந்தனர். இவர்களுக்குச் சேனாதிபதியாக இருந்தவன் அரிஸ்ட்டைடீஸ்.
தன் சூழ்ச்சி பலிக்காமற் போகவே ஆத்திரமடைந்தான் மார் தோனியஸ். கடைசி பட்சம், பயமுறுத்தியாவது பார்ப்போமென்று கருதி, தன் படையின் ஒரு பகுதியுடன், ஆத்தென்ஸை நோக்கி வந்து அதனை ஆக்கிரமித்துக் கொண்டான். இவன் வருகையை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஆத்தீனியர்கள், முந்திய மாதிரி, நகரத்தைக் காலி செய்து கொண்டு ஸாலாமிஸ் தீவுக்குப் போய் விட்டார்கள். மார்தோனியஸ், விடாப்பிடியாக அங்கும் ஒரு சமரஸ தூது விடுத்தான். சமரஸமா? உடனடியாக நிராகரித்துவிட்டார்கள் ஆத்தீனியர்கள்.
இங்கே ஒரு சிறிய சம்பவம்; ஆனால் முக்கியமான சம்பவம். மேற்படி சமரஸப் பிரேரணையைப் பற்றி ஆலோசிக்க, ஐந்நூறு பேரடங்கிய பூலியென்ற மேல்சபை கூடியிருந்தது. அதில் ஒரு பிரதிநிதி, பணிந்து போகலாமே என்கிற தோரணையில் பேசினான். தெரியாத்தனமாக இப்படிப் பேசியிருக்காம். அவனுக்கு என்ன கதி நேர்ந்ததென்று நினைக்கிறீர்கள்? உடனேயே, அங்கேயே, அவனைக் கொன்றுவிட்டார்கள். பெண்மக்கள் கூட்டமொன்று ஊர்வல மாகத் திரண்டு அவன் வசித்திருந்த வீட்டிற்குச் சென்று, அவனுடைய மனைவி மக்களைக் கல்லாலடித்துக் கொன்று விட்டது. பிறந்த பூமியை விட்டுப் பிரிந்து வந்திருந் தாலும், படைத்த நிதியனைத்தும் போய்விட்டிருந்தாலும், தெய்வங்களின் திருக் கோயில்கள் பலவும் பாழ்பட்டுக் கிடந்தாலும், பிறருக்குப் பணிந்து வாழ்தல் கூடாதென்ற ஆத்தீனியர்களின் மனோநிலைமையை நன்கு பிரதிபலித்துக் காட்டுவதாயிருக்கிறது இந்தச் சம்பவம்.
இனி என்ன செய்வான் மார்தோனியஸ்? ஆத்தென்ஸ் நகரத்தில், ஜெர்க்ஸஸ் மன்னனுடைய ஆக்கிரமிப்பின்போது அழிந்துபட்டது போக, எஞ்சியிருந்த அற்ப சொற்பமானவற்றை, தன் ஆத்திரம் தீர அழித்துவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்று பியோஷ்யாவிலுள்ள பிளாட்டீயா என்னுமிடத்தில் யுத்த சந்நத்த னாக நின்றான்.
இவனை நோக்கி முன்சொன்ன கிரேக்கப்படையும் சென்றது. பிளாட்டீயாவுக்குச் சமீபத்திலுள்ள ஒரு மைதானத்தில், 479-ஆம் வருஷம் மாதம் இருபத்தேழாந் தேதி இரு தரப்புப் படைகளும் சந்தித்தன. கடுமையான போர் நடைபெற்றதென்று சுருக்கமாகச் சொல்லி முடிப்போம். கிரேக்க சரித்திரா சிரியர்கள் கணக்குப் படி பாரசீகர்கள் ஆயிரக்கணக்கில் மடிந்து போனார்கள்; கிரேக்கர் களோ நூற்றுக்கணக்கில்தான். தவிர இந்த யுத்தத்தில் மார்தோனியஸ் கொல்லப்பட்டுவிட்டான். ஏராளமான பொருள்களை யுத்த களத்திலேயே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள் பாரசீகர்கள். கிரீஸை அடிமை கொள்ள வேண்டுமென்று அவர்கள் கொண்டிருந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது இந்தப் பிளாட்டீயா யுத்தம்.
ஸாலாமிஸ் தோல்விக்குப் பிறகு, சின்ன ஆசியக் கிரேக்கர்கள் மீது தங்களுக்கிருந்த ஆதிக்கம் எங்கே போய்விடப் போகிறதோ என்ற கவலை ஏற்பட்டுவிட்டது பாரசீகர்களுக்கு. உண்மையில் அந்தச் சின்ன ஆசியக் கிரேக்கர்களும் விடுதலை பெறத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதற்காக, ஸாலாமிஸ் போர் முடிந்ததும் ஹெல்லெஸ்ப்பாண்ட் ஜலசந்தியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்த தங்கள் கடற்படையின் ஒரு பகுதியைப் பிரித்து ஸாமோஸ் தீவில் கொண்டு போய் நிறுத்தி வைத்திருந்தனர் பாரசீகர். இதே சமயத்தில், கிரேக்கக் கடற்படையின் ஒரு பகுதி, டெலோஸ் தீவில் இருந்து கொண்டிருந்தது. இதற்குத் தலைவனா யிருந்தவன் லியோட்டிசியாஸ் என்ற ஸ்ப்பார்ட்ட அரசன். இவனிடம் ஒரு நாள் ஸாமோஸ் தீவிலிருந்து மூன்று பேர் ரகசியமாக வந்து, பாரசீகக் கடற்படையை உடனே வந்து தாக்குமாறும், அப்படித் தாக்குகிற சமயம் பார்த்து, சின்ன ஆசியக் கிரேக்கர் பலரும் கலகத்திற்குக் கிளம்பத் தயாராயிருக்கிறார்களென்றும் கூறினார்கள். இதன் பிரகாரம் மேற்படி கிரேக்கப்படைத் தலைவனும் ஸாமோஸ் தீவுக்குச் சென்று மிக்காலி என்னுமிடத்தில் பாரசீகக் கடற்படையைத் தாக்கினான். கடலிலும் தரையிலுமாக யுத்தம் நடைபெற்றது. பிளாட்டியா யுத்தம் என்றைய தினம் நடை பெற்றதோ அதே தினத்தில் 479-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் இருபத்தேழாந் தேதி - இந்த மிக்காலி யுத்தமும் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. பாரசீகர்கள் தோல்வியடைந்து ஹெல்லெஸ்ப் பாண்டுக்குப் பின்வாங்கிக் கொண்டு சென்றார்கள். இதே சமயத்தில், ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி, சின்ன ஆசியக் கிரேக்கர்களும் கலகத்திற்குள் கிளம்பி, பாரசீக ஆதிக்கத்தினின்று தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.
விடுவித்துக் கொண்டதோடு மட்டுமல்ல, கிரேக்கர்களுடன் சேர்ந்து பாரசீகர்களைத் துரத்திச் சென்றார்கள். பாரசீகர்களோ, ஜலசந்திக் கரையிலுள்ள ஸெஸ்ட்டோஸ் என்னும் நகரத்தை யடைந்து அங்கே தற்காப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். கிரேக்கர்கள் சும்மா விடவில்லை. ஸெஸ்ட் டோஸ் நகரத்தை முற்றுகையிட்டார்கள். இதற்கிடையே கிரேக்கர் களுக்குள் அபிப்பிராய வேற்றுமை ஏற்பட்டது. ஸ்ப்பார்ட்டர்கள், முற்றுகையைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. அடைந்த வெற்றி போதுமென்ற மனப்பான்மை கொண்டுவிடார்கள். பெலொப்பொனேசியாவுக்குத் திரும்பிவிடத் தீர்மானித்தார்கள்; அப்படியே திரும்பியும் விட்டார்கள். ஆத்தீனியர்கள் மட்டும், சின்ன ஆசியக் கிரேக்கர்களின் துணைகொண்டு முற்றுகையைத் தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்றார்கள். ஸெஸ்ட்டோஸ் நகரம் இவர்கள் வசமாயிற்று. பாரசீகர்கள், பிஸண்ட்டியம் நகரத்தை நோக்கி ஓட்டமெடுத்தார்கள். இதற்குப்பிறகு அவர்கள் ஏகாதி பத்தியக் கண்கொண்டு கிரீஸைத் திரும்பிப் பார்க்கவில்லை.
இரண்டாவது பகுதி
பகற்பொழுதினிலே
எது மேன்மையானதோ, எது நியாயமானதோ அதையே செய்யுங்கள். அப்படிச் செய்வதனால் புகழ் கிட்டாவிட்டாலும் போகட்டும். எப்பொழுதுமே மேலான செயல்களைச் சாதாரண ஜனங்கள் பாராட்டமாட்டார்கள்.
பேச்சைக் காட்டிலும் செயல்களைக் கொண்டுதான் ஒருவனை நிதானிக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலோர் நன்றாய்ப் பேசுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய செயல்கள் நேர் விரோதமாயிருக்கின்றன.
உங்களுடைய தேக வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறவர்களைக் காட்டிலும் உங்களுடைய ஆத்ம வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறவர்களை அதிகமாகப் போற்றுங்கள்.
- கிரேக்க அறிஞர்கள்
உயர்ந்து நின்ற ஆத்தென்ஸ்
1. ஏகாதிபத்திய சாதனங்கள்
ஸெஸ்ட்டோஸ் சம்பவம் ஆத்தென்ஸின் மதிப்பை அதிகப் படுத்திக் கொடுத்தது. அதன் திறமையிலும் தலைமையிலும் சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. ஆத்தீனிய ஏகாதிபத்தியக் கட்டடம் எழும்புவதற்கு இந்த ஸெஸ்ட் டோஸ் சம்பவமே மூலகாரணமாயிருந்தது என்று சொல்ல வேண்டும். ஆத்தென்ஸின் அதிருஷ்டவசமாக இந்த ஏகாதிபத்தியக் கட்டத்தை மேலும் மேலும் நிர்மாணஞ் செய்துகொண்டு போக அதனிடம் அநேக வசதிகள் இருந்தன.
முதலாவது, கடலாதிக்கம். ஏகாதிபத்திய வாழ்வுக்குக் கட லாதிக்கம் இன்றியமையாததென்ற உண்மையைக் கண்டு பிடித்த வர்கள் பிற்காலத்து ஏகாதிபத்தியவாதிகளே யென்று வாசகர்கள் எண்ண வேண்டாம். கிறிஸ்து சகத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முன்னேயே இந்த உண்மையை அறிந்து இதற்காவன செய்து வைத்தான் தெமிஸ்ட்டோக்ளீஸ். ஆத்தீனிய ஏகாதிபத்தியக் கூட்டம் இவன் எண்ணத்தில் தான் முதன்முதலாக எழும்பியது.
இரண்டாவது, இந்த ஏகாதிபத்தியக் கட்டடத்தை அழகாக நிர்மாணஞ் செய்துகொண்டு போக அவ்வப்பொழுது திறமையான தலைவர்கள் தோன்றிக் கொண்டு வந்தார்கள். தனிப்பட்ட மனிதர்கள் என்ற ஹோதாவில் இவர்களிடம் அநேக குற்றங்குறைகள் இருக் கலாம். ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் என்ற ஹோதாவில் இவர்கள் திறமைசாலிகளாகவே இருந்தார்கள்.
இந்த இரண்டு முக்கியமான வசதிகளுடையவர்களாயி ருந்ததைத் தவிர, பொதுவாக ஆத்தீனியர்களுக்கு, விடாமுயற்சி, நம்பிக்கை குன்றாதிருத்தல், நிதானந் தவறாமை, வருவன அறிந்து வினையாற்றல், அஞ்சாமை முதலிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருக்க வேண்டிய தன்மைகள் பலவும் இருந்தன. இந்தத் தன்மை களிலிருந்து எப்பொழுது மாறுபடத் தொடங்கினார்களோ அப் பொழுதே இவர்களுடைய ஏகாதிபத்தியக் கட்டடம் சரிய ஆரம் பித்தது. அந்தக் காட்சியையும் துக்கக் கண்ணீருடன் பின்னர்ப் பார்க்கப் போகிறோமில்லையா?
2. தவறிவிட்ட ஸ்ப்பார்ட்டா
நியாயமான ஸ்ப்பார்ட்டாதான் ஓர் ஏகாதிபத்தியமாகப் பரிணமித்திருக்க வேண்டும். ஆத்தென்ஸைக் காட்டிலும் அதற்குத் தான் அதிகமான தகுதிகள் இருந்தன; சந்தர்ப்பங்களும் கிடைத்தன. ஆனால் அந்தத் தகுதிகளையோ சந்தர்ப்பங்களையோ அஃது உபயோகித்துக் கொள்ளவில்லை. சாதாரணமாக, முன்னேற்றத்தில் அக்கரையுள்ள ஒரு ஜாதி, புதிய சந்தர்ப்பங்களைச் சிருஷ்டித்துக் கொள்ளுமென்று சொல்லுவார்கள். ஆனால் ஸ்ப்பார்ட்டா, கிடைத்த சந்தர்ப்பங்களைக் கூட இழந்துவிட்டது.
பாரசீகப் படையெடுப்புக்கு முந்தியிருந்தே, ஸ்ப்பார்ட்டா, முதல் மரியாதை பெற்று வந்தது. அதன் வார்த்தைகளுக்கு ஆத் தென்ஸ் உள்பட ஏறக்குறைய எல்லா ராஜ்யங்களும் கட்டுப்பட்டு நடந்துவந்தன. பாரசீகப் போராட்ட காலத்திலும் அதுவே தலைமை வகித்து வந்தது. ஓர் ஏகாதிபத்தியமாக விஸ்தரித்துக் கொள்வதற்கு இதைக் காட்டிலும் வேறென்ன சாதனம் வேண்டும்? வேறென்ன சந்தர்ப்பம் கிடைக்கும்? ஆனால் ஸ்ப்பார்ட்டா தவறிவிட்டது. பாரசீகப் போருக்குப் பிறகு, அதுகாறும் வகித்து வந்த முதல் ஸ்தானத்தைக் கூட இழந்துவிட்டது. இதற்குக் காரணம் என்ன?
ஸ்ப்பார்ட்டா எப்பொழுதுமே சுயநலமுடையது. தான் மட்டும் வாழ வேண்டுமென்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர்கள், பிறரால் சுலபமாக ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். பாரசீகப் போராட் டங்களில், ஸ்ப்பார்ட்டா எப்படி எப்படி நடந்து கொண்டதென்பதை வாசகர்கள் நன்கு அறிவார்களல்லவா? எதிலும் ஒரு தயக்கம்; யாரிடத்திலும் ஒரு சந்தேகம். குறிப்பாக அதி மேதாவிகளைக் கண்டு அதிக சந்தேகம்; முன்னேற்றமென்றால், மலைப்பு; இருந்த இடத் திலேயே இருப்பதில் திருப்தி; பழமையில் பெருமை. இவை யெல்லாம் ஸ்ப்பார்ட்டாவின் விசேஷ தன்மைகள். ஏகாதி பத்திய வாழ்வுக்கு இடமேது? தவிர, ஸ்ப்பார்ட்டாவுக்கு இன்னொரு சாமர்த்தியமும் இருந்தது. என்னவென்றால், கிரேக்க ராஜ்யங்களை ஐக்கியப்படுத்தித் தன்னால் கொண்டு செலுத்த முடியாவிட்டாலும், வேறெந்த ராஜ்யமேனும் அந்த முயற்சியில் ஈடுபடுமானால் அதைத் தடைசெய்கிற சாமர்த்தியம் அதற்கு இருந்தது!
ஆத்தென்ஸையும் ஸ்ப்பார்ட்டாவையும் ஒப்பிட்டு ஓர் அறிஞன் பின்வருமாறு கூறுகிறான்: “ஸ்ப்பார்ட்டா கண்டிப்பான ராணுவ அமைப்பு என்னும் தளையைப் பூட்டிக்கொண்டிருந்தது. கற்பனைத்திறனென்பது அதற்கு அணுவளவும் இல்லை. கிரேக்க சமுதாயத்தின் முன்னர்த் தோன்றி கொண்டுவந்த விஸ்தீரணமான உலகத்தை அது சந்தேகத்துடன் பார்த்தது. போர்க்களத்தில், அகில கிரீஸுக்கும் தலைமை வகிக்க அது விரும்பியது; ஆனால் ஏகாதி பத்திய விஸ்தரிப்பினால் ஏற்படக்கூடிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள அது பின் வாங்கியது. ஸ்ப்பார்ட்டா, பழமைக்குப் பிரதி நிதியாகவும், ஒரு சிலர் அனுபவித்து வந்த சலுகைகளுக்குப் பிரதி நிதியாகவும் இருந்தது. ஆத்தென்ஸ், வருங் காலத்துக்குப் பிரதிநிதி யாகவும், பலருடைய உரிமைகளுக்குப் பிரதிநிதியாகவும் இருந்தது. கிரீஸ், இரண்டு கட்சிகளாகப் பிரிந்துவிட்டது. ஒன்று - ஸ்ப்பார்ட்டா - பரம்பரைப் பழக்க வழக்கங்களுக்கும், ஒரு வரம்புக்குட்பட்ட சலுகைகளுக்கும் அரண் போலிருந்தது; மற்றொன்று - ஆத்தென்ஸ் - முன்னேற்றத்திற்கும் ஜன உரிமைக்கும் பிரதிநிதியாயிருந்தது. சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நடைபெற்ற போராட்டத்தில் - அதாவது பாரசீகர்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் - எழுந்த ஒற்றுமையானது பின்னர் வலுத்த போட்டியாக மாறி சுமார் ஒரு நூற்றாண்டு வரை நடைபெற்றது. இதன் விளைவாக, புராதன உலகத்தின் மீது தாங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை இழந்துவிட்டார்கள் கிரேக்கர்கள்.”
3. சின்ன ஆசிய ராஜ்யங்களின் விடுதலை
மார்தோனியஸ் மரணம், மிக்காலி தோல்வி, இவ்விரண்டும், ஸார்டிஸ் நகரத்தில் முகாம் செய்திருந்த ஜெர்க்ஸஸ் மன்னனை நிலைகலங்கச் செய்துவிட்டன. இனி அங்கிருப்பதில் என்ன பிரயோஜனம்? நேரே ஸூஸா நகரம் போய்ச் சேர்ந்தான். சேர்ந்து, அரச போகத்தில் தன் கவலைகளை மறந்து விட்டிருந்தான்.
மிக்காலி யுத்த காலத்தில் சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்கள் பல பாரசீக ஆதிக்கத்தினின்று விடுதலை பெற்றன வென்றாலும், இன்னும் அநேக ராஜ்யங்கள் அந்த ஆதிக்கத்துக்குட்பட்டே இருந்தன. அகில கிரீஸின் நன்மையை முன்னிட்டு இவைகளை விடுதலை பெறச் செய்வது அவசியமாயிருந்தது. இது விஷயத்தில் ஸ்ப் பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இருக்கவில்லை. எப்பொழுதும் போல் ஸ்ப்பார்ட்டாவின் தலைமை யில் இந்த விடுதலை கைங்கரியத்தைச் செய்ய முன் வந்தது ஆத் தென்ஸ். இதனோடு சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்களும் சேர்ந்து கொண்டன. உடனே ஐக்கியக் கிரேக்கக் கடற்படையொன்று தயாராயிற்று. பிளாட்டீயாவில் வெற்றி கண்டு அதனால் புகழ் கொண்டிருந்த பாஸேனியஸ், இதன் பிரதம தளபதியாக நியமிக்கப் பெற்றான். அரிஸ்ட்டைடீஸும், மில்ட்டியாஸின் மகன் ஸைமன் என்பவனும், ஆத்தீனியப் பகுதிக்கு மட்டும் தளபதியாயிருந்தார்கள்.
இந்தக் கூட்டுக் கடற்படையானது முதலில் (478-ஆம் வருஷம்) ஸைப்ரஸ் தீவுக்குச் சென்று அதன் பெரும்பகுதியைப் பாரசீக ஆதிக்கத்தினின்று விடுவித்தது. இதற்குப் பிறகு (477-ஆம் வருஷம்) பிஸண்ட்டியம் நகரம் சென்று அதனையும் மேற்படி ஆதிக்கத் தினின்று விடுதலை செய்தது.
4. பாஸேனியஸ் துரோகம்
பிஸண்ட்டியம் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டதிலிருந்து பாஸேனியஸின் போக்கு அடியோடு மாறிவிட்டது. ஏற்கனவே, பிளாட்டீயாவில் வெற்றி ஏற்பட்டது. தன்னால்தான் என்று இவன் எண்ணிக் கொண்டிருந்தான். இப்பொழுது சொல்லவேண்டுமா? தன்னால் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமென்று இறுமாப்புக் கொண்டுவிட்டான். அகில கிரீஸையும் கட்டியாள வேண்டுமென்ற ஆசை பிறந்தது. இதை நிறைவேற்றக் கொள்ள, பாரசீக மன்னன் தயவை நாடினான். இழிவு! இழிவு!! அந்த மன்னனுக்கு ரகசியமாக ஒரு கடிதம் எழுதியனுப்பினான். அதில், அவனுடைய மகளை, தான் விவாகம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அதற்குச் சம்மதித்தால், கிரீஸ் முழுவதையும் ஜெயித்து அவனிடத்தில் ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான்.
ஜெர்க்ஸஸ் மன்னன், இந்தக் கடிதத்தைப் பார்த்து எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பான் என்பதை நாம் சொல்ல வேண்டிய தில்லை. உடனே அன்பான முறையில் பதில் அனுப்பினான். அதில் கிரீஸை வெற்றி கொள்ள, பணமும் படையும் எவ்வளவு தேவை யானாலும் உதவத் தயார் என்று கண்டிருந்தான். மகளை மணஞ் செய்துகொடுப்பது பற்றி ஒன்றுஞ் சொல்லவில்லை. இருந் தாலும், இந்தப் பதில், பாஸேனியஸுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. பாரசீக மன்னனின் பிரதிநிதி போலவே நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டான். பகட்டான உடைகளென்ன, சுவை மிக்க உண்டி வகைகளென்ன, சுற்றிப் பரிவாரங்களென்ன, எல்லாம் பாரசீக மயமாகிவிட்டன. இவனுடைய இந்த விபரீத மாற்றத்தைக் கண்டு, கூட இருந்த அரிஸ்ட்டைடீஸ், இவனுக்குச் சில நல்ல வார்த்தைகள் சொல்ல முயன்றான். “அரிஸ்ட்டைடீஸா, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்க இப்பொழுது எனக்கு அவகாசமில்லை” யென்று முகத்திலடித்தாற் போல் பதில் சொல்லி அனுப்பிவிட்டான் பாஸேனியஸ்.
இதற்குள் இவனைப் பற்றின சகல தகவல்களும் ஸ்ப்பார்ட்டா அரசாங்கத் திற்கு எட்டிவிட்டன. திருப்பி வரவழைக்கப்பட்டான்; விசாரணை நடைபெற்றது. ஆனால் இவன் பாரசீக மன்னனுடன் ரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டிருந் தானென்ற குற்றம் ருஜுவாகவில்லை. சிலருக்குத் தீங்கிழைத்தான் என்ற குற்றத்திற்காக மட்டும் தண்டனை விதிக்கப்பட்டான். இதனால் இவன் திரும்பவும் தளபதியாக அனுப்பப்படவில்லை.
ஆனால் பாஸேனியஸ், தன் சொந்த ஹோதாவில் மீண்டும் பிஸண்ட்டியம் சென்று அதனையும் ஸெஸ்ட்டோஸ் நகரத்தையும் கைப்பற்றிக் கொண்டான். ஆத்தீனியர்களோ அவர்களுடைய சகாக்களோ சும்மாயிருப்பார்களா? ஸைமன் தலைமையில் ஒரு படையை அனுப்பி மேற்படி இரண்டு இடங்களிலிருந்தும் இவனை விரட்டி விட்டார்கள். இவனும் விடாமல் வேறோரிடத்திற்குச் சென்று பழையபடி சூழ்ச்சி செய்யத் துவக்கினான். இதையறிந்து ஸ்ப்பார்ட்டா அரசாங்கம், இவனை உடனே திரும்பி வருமாறு உத்தரவிட்டது. உத்தரவுக்கிணங்க ஊர் சென்றான்; அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விடுதலை பெற்றுக்கொண்டு விடலாமென்ற நம்பிக்கையோடுதான் சென்றான்.
ஆனால் இவன் எண்ணப்படி நடக்கவில்லை. பாரசீகத்துடன் ரகசியத் தொடர்பு கொண்டிருந்தானென்ற குற்றத்தோடு, அரசாங் கத்துக்கு விரோதமாக ஹெலட்டுகளைக் கிளப்பிவிட்ட குற்றமும் இவன் மீது சாட்டப்பட்டது. இவனும் தன் குற்றங்களை மறைக்கப் பெரிதும் முயன்றான். பலிக்கவில்லை. தன்னைக் காவலில் வைத் திருந்த இடத்திலிருந்து தப்பிச்சென்று அத்தீனே தேவதையின் கோயிலுக்குப் பக்கத்திலிருந்த ஒரு சிறு கட்டத்திற்குள் ஒளிந்து கொண்டான். அரசாங்கம் சும்மாவிடுமா? கட்டடத்தின் நுழை வாயிலைச் சுவரெழுப்பி அடைத்துவிட்டது. சுவரெழுப்ப முதன் முதலாகக் கல் வைத்தது பாஸேனியஸின் தாயார்! தேசத்து ரோகத்தைத் தாயன்பு கூட மன்னிக்கவில்லை பார்த்தீர்களா? கட்டடத்திற்குள்ளேயே பட்டினி கிடந்து மாண்டான் பாஸேனியஸ் 469-ஆம் வருஷம்.
பாஸேனியஸ் ஒருவன்தான் இப்படி ஸ்ப்பார்ட்டாவின் கௌரவத்திற்கு ஹானி உண்டு பண்ணக்கூடிய விதமாக நடந்து கொண்டான் என்று நினைக் காதீர்கள். மிக்காலி யுத்தத் தலைவ னாகிய லியோட்டிசிடாஸ், பாரசீகர்களுக்கு உதவி செய்த தெஸ்ஸாலி பிரதேசத்தினரைத் தண்டிக்க 470-ஆம் வருஷம் அனுப்பப்பட்டான். ஆனால் அந்தப் பிரதேசத்தினரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒன்றுஞ் செய்யாமலிருந்து விட்டான். இது தெரிந்தது ஸ்ப்பார்ட்டா அரசாங்கத் திற்கு. வரவழைத்து விசாரித்தது. குற்றம் ருஜுவாகியது. மரண தண்டனை விதித்தது. ஆனால் அவன் தப்பியோடி, டேஜீயா என்னும் ஊரிலுள்ள அத்தீனே கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டான். சிறிது காலத்திற்குள் இறந்து போனானென்பர்.
பாஸேனியஸ் அகம்பாவத்துடன் நடக்கத் தொடங்கியதி லிருந்தே, ஸ்ப்பார்ட்டாவின் தலைமையில் சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்களுக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. பகிரங்கமாகவே அதன் தலைமையை நிராகரித்து விட்டன. அதற்குப் பதில் ஆத் தென்ஸின் தலைமையைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டன. ஸ்ப்பார்ட்டாவும், தன் தலைமைப் பதவியை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளப் பெருமுயற்சி எதுவும் செய்யவில்லை. பின்பு எஜீயன் கடலில் நடைபெற்ற போர்களில் கலந்து கொள்ளவுமில்லை. பெலோப்பொ னேசியாவோடு தன் அதிக்கத்தை வரம்பு கட்டிக் கொண்டுவிட்டது. அந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள் வதற்குக்கூட அது சில சமயங்களில் போராட வேண்டியிருந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பாரசீகப் போராட்டத்தின் விளைவாக, ஸ்ப்பார்ட்டாவின் செல்வாக்கு மங்கியது; அந்தஸ்து குறைந்தது. அதற்கு எதிராக, ஆத்தென்ஸின் செல்வாக்கு விரிந்தது; அந்தஸ்து உயர்ந்தது.
ஏகாதிபத்தியம் உருவாகிறது
1. டெலோஸ் சமஷ்டிக் கூட்டு (கி.மு. 478 - 77)
பாஸேனியஸுக்குப் பிறகு அரிஸ்ட்டைடீஸ், ஐக்கிய கிரேக்கக் கடற்படையின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டான். ஏற்றுக் கொண்டதும், பாரசீக ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றிருந்த சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றையும் ஆத்தென்ஸ் தலைமையில் ஒரு கூட்டாகச் சேர்த்தான். பாரசீகர்கள் மீண்டும் படை யெடுத்து வருவார்களோ என்ற பயம் இந்த ராஜ்யங்களுக்கு இருந்து கொண்டிருந்தது. அப்படிப் படையெடுத்து வந்தால் தாங்கள் தனித் தனியாக இருந்து சமாளிக்க முடியாதென்றே கவலையும் கொண்டி ருந்தன. இவ்விரு காரணங்களும் இவைகளை ஒன்று சேருமாறு தூண்டின. இவைகளை ஒன்று சேர்ப்பதும் அரிஸ்ட் டைடீஸுக்குச் சுலபமா யிருந்தது.
அரிஸ்ட்டைடீஸின் முயற்சியால் ஏற்பட்ட இந்தக் கூட்டுக்கு டெலோஸ் சமஷ்டிக் கூட்டு (இனிவரும் பக்கங்களில் இந்த சமஷ்டிக் கூட்டு ஸ்தாபனத்தை சமஷ்டி என்று ஒரே சொல்லில் சொல்லிக் கொண்டு போகிறோம்). என்று பெயர். இந்தக் கூட்டங்கள் டேலோஸ் தீவிலுள்ள அப்போலோ தெய்வத்தின் கோயிலில் நடைபெற்றன. இதன் கஜானாவும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தக் காரணங் களினாலேயே இது டெலோஸ் சமஷ்டிக் கூட்டு என்று அழைக்கப் பட்டது.
இந்தக் கூட்டு ஸ்தாபனத்தின் நோக்கங்களைப் பின்வருமாறு வகுத்துக் கூறலாம்:
1. பாரசீக ஆதிக்கத்திலிருந்து எற்கனவே விடுதலையடைந் திருக்கிற ராஜ்யங்களை, மீண்டும் அந்த ஆதிக்கத்துக்குட் பட்டு விடாதபடி பாதுகாத்தல்.
2. பாரசீக ஆதிக்கத்திலிருந்து இன்னமும் விடுதலையடையா திருக்கிற ராஜ்யங்களை விடுவித்து அவைகளுக்குப் பாது காப்பு அளித்தல்.
3. பாரசீகப் படையெடுப்புகளினால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங் களுக்குப் பதிலாக அந்தப் பாரசீகப் பிரதேசங்களுக்குக் கஷ்ட நஷ்டங்களை உண்டு பண்ணுதல்; அதாவது பழிக்குப் பழி வாங்குதல். இதுதான் வெளிப்படையான நோக்கமாயிருந்த தென்று துஸிடிடீஸ் என்ற சரித்திராசிரியன் கூறுகிறான்.
இந்த நோக்கங்கள் நிறைவேற, படையும் பணமும் தேவை யல்லவா? இதற்காகப் பின்வரும் ஏற்பாடு செய்யப்பட்டது:
1. சொந்தமாகக் கடற்படை வைத்துக் கொண்டிருக்கும் பெரிய பணக்கார ராஜ்யங்கள், உதாரணமாக, நாக்ஸோஸ், ஸாமோஸ், கியோஸ், லெஸ்போஸ், தாஸோஸ் முதலியவை, (இவை எஜீயன் கடலிலுள்ள தீவுகள்) ஸ்தாபனப் பொதுவுக்கு, ஸ்தாபனத்தின் தேவையை அனுசரித்து, சில சில யுத்தக் கப்பல்களை அவற்றின் சகல முஸ்தீப்புகளுடனும் கொடுக்க வேண்டும்.
2. சொந்தத்தில் கடற்படையில்லாத சிறிய ஏழ்மையான ராஜ்யங்கள், யுத்தக் கப்பல்களுக்குப் பதில், வருஷந்தோறும், ஒரு தொகையை ஸ்தாபனப் பொதுவுக்குச் செலுத்திக் கொண்டு வர வேண்டும். இதற்குப் போரோஸ் (இதனைக் கப்பம் அல்லது திறைப் பணம் என்றும் கூறலாம்.) என்று பெயர், அதாவது மகமை என்று அர்த்தம். இந்த மகமைத் தொகை மொத்தம் நானூற்று அறுபது டாலெண்ட்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆக, ஆரம்பத்திலிருந்தே இந்த ஸ்தாபனத்தில் இரு வகையான அங்கத்தினர் - ராஜ்யங்கள் இருந்தனவென்று தெரிகிறது. முதல் வகை, கப்பல்களாகக் கொடுத்தவை, இவை எண்ணிக்கையில் சிலவே. இரண்டாவது வகை, கப்பல்களுக்குப் பதில் வருஷவாரி ஒரு தொகையை மகமையாகச் செலுத்தி வந்தவை. இவைதான் எண் ணிக்கையில் பெரும்பாலானவை. இவை ஒவ்வொன்றும் எவ்வளவு எவ்வளவு தொகை செலுத்துவது? இதை நிர்ணயிக்க வேண்டு மல்லவா? இதற்காக இவை ஒவ்வொன்றினுடைய - இந்த ஒவ்வொரு ராஜ்யத்தினுடைய - செல்வ நிலையென்ன, கொடுக்குஞ் சக்தி எவ்வளவு? முதலியவைகளுக்கு ஒரு மதிப்பு எடுக்கப்பட்டது. இந்த மதிப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ராஜ்யமும் செலுத்த வேண்டிய தொகை - மகமை - இவ்வளவென்று நிர்ண யிக்கப்பட்டது. இந்த மகமையின் மொத்தந்தான் மேலே சொன்ன நானூற்று அறுபது டாலெண்டுகள். (அதிக மதிப்புடைய ஒரு கிரேக்க நாணயம். இந்த நான்னூற்று அறுபது டாலெண்ட்டுகளும், தற் போதைய இந்திய நாணய மதிப்பின்படி ஏறக்குறைய பதினாறரை லட்ச ரூபாய்க்கு மேலாகிறது).
இங்ஙனம் எடுக்கப்பட்ட மதிப்புக்கோ, நிர்ணயிக்கப்பட்ட மகமை விகிதத்திற்கோ, கணிக்கப்பட்ட மொத்தத் தொகைக்கோ யாரும் மறுப்புக் கூறவில்லை; முணுமுணுக்கக்கூட இல்லை. ஏனென்றால் இவைகளை யெல்லாம் செய்தவன் அரிஸ்ட்டைடீஸ். இவனுடைய நேர்மையில் அவ்வளவு நம்பிக்கை! எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.
அரிஸ்ட்டைடீஸ் எடுத்த மதிப்பும், கணித்த மொத்த மகமைத் தொகையும், சுமார் நாற்பது வருஷங்கள் வரை எவ்வித மாற்றமு மடையாமல் அப்படியே அமுலில் இருந்து வந்தன. ஆனால் ஒவ் வொரு ராஜ்யமும் செலுத்தி வந்த தொகை மட்டும் நான்கு வருஷத் திற்கு கொருமுறை பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. ஏனென்றால் புதிய அங்கத்தினர்களே சேர்ந்துகொண்டு வருவார் களல்லவா? இதற்குத் தகுந்தாற் போல் அங்கத்தினர்கள் செலுத்திவரும் தொகை யையும் திருத்தியமைக்க வேண்டுமல்லவா? இதற்காகவே இந்தப் பரிசீலனை ஏற்பாடு.
சமஷ்டியில் அங்கத்தினர்களாகச் சேர்ந்த எல்லோரும் - எல்லா ராஜ்யங்களும் - சம சுதந்திரமும் சம அந்தஸ்துமுடையவர் களாக இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஓட்டு உண்டு. இருந்தாலும் ஆத்தென்ஸுக்குத் தான் அதிக செல்வாக்கு. அதற்குத் தான் அதிகமான ஓட்டுபலம் இருந்தது. சமஷ்டியின் கூட்டங் களுக்கு அதுவே தலைமை வகித்தது. சமஷ்டிக்குச் சேர வேண்டிய மகமைத் தொகையை வசூலிப்பதற்காகப் பத்து உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்தப் பதின்மரும் ஆத்தீனியர்களே. இவர்கள் ஹெல்லெனோட்டேமியி என்று அழைக்கப்பட்டார்கள். சமஷ்டியின் கஜானாவுக்குப் பாதுகாப்பாளர்களாக இருந்தவர் களும் இவர்களே. சமஷ்டியின் கடற்படைக்குத் தலைமை வகித்த வர்கள் ஆத்தீனிய தளபதிகள்தான். பொதுவாக, ஆத்தென்ஸின் நிருவாகத் திற்குட்பட்டே சமஷ்டியின் சகல விவகாரங்களும் நடை பெற்றன.
2. ஆத்தென்ஸுக்கு அரண் அமைத்தல்
இங்ஙனம் எஜீயன் கடலில் கிழக்குப் பக்கத்தில் அரிஸ்ட் டைடீஸ், ஆத்தென்ஸின் ஏகாதிபத்தியக் கூட்டத்திற்கு அடிமைத் தளமாக இந்த டெலோஸ் சமஸ்டியை அமைத்துக் கொண்டிருக்க, அதே சமயம் இவனுடைய அரசியல் எதிரியான தெமிஸ்ட் டோக்ளீஸ் ஆத்தென்ஸுக்கு அரண் அமைத்துக் கொண்டிருந்தான். அங்குச் சென்று சிறிது பார்ப்போம்.
பிளாட்டீயா யுத்தம் வெற்றிகரமாக நடந்த பிறகு, ஸாலாமிஸ் முதலிய இடங்களுக்குச் சென்றிருந்த ஆத்தீனியர்கள், தங்கள் நகரத்திற்குத் திரும்பவும் வந்து சேர்ந்தார்கள். வந்து சேர்ந்ததும், பாழ்பட்டுக் கிடக்கிற நகரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிராமல், புனர்நிர்மாண வேலையில் ஈடுபட்டார்கள். ஆனால் அதற்கு முன்னதாக, நகரத்தைப் பந்தோபஸ்து செய்து கொள்ள வேண்டியது அவசியமென்று அபிப்பிராயப்பட்டான் தெமிஸ்ட்டோக்ளீஸ். இவனுக்கு அப்பொழுது நல்ல செல்வாக்கு. இவன் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டார்கள் ஜனங்கள். ஏற்கனவே நகரத்தைச் சுற்றிப் பழைய சுவர் ஒன்று இருந்தது. அது மிகவும் சிதலமாகிக் கிடந்தது. அதை அகற்றிவிட்டு, அதற்குப் பதில் நகரத்தை இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து, அதைச் சுற்றிப் பெரிய மதிற் சுவரொன்று எழுப்புவதென்று திட்டம் போட்டு அதன்படி வேலையையும் துவங்கச் செய்துவிட்டான் தெமிஸ்ட்டோக்ளீஸ்.
ஸ்ப்பார்ட்டாவுக்கு இது தெரிந்தது. ஆத்தென்ஸ் இப்படித் தன்னைப் பாதுகாப்புச் செய்து கொள்வது அதற்குப் பிடிக்க வில்லை. காரணம் பொறாமை தான். சுவர் எழுப்பக் கூடாதென்று ஆட்சே பித்து ஒரு தூது கோஷ்டியை அனுப்பியது ஆத்தென்ஸ்&க்கு. நியாயாமாக, ஆத்தென்ஸைக் கட்டுப்படுத்த ஸ்ப்பார்ட்டாவுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. அப்படியே ஆத்தென்ஸும் ஸ்ப் பார்ட்டாவின் ஆட்சேபத்திற்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டி ருக்கவில்லை. ஆனால் தெமிஸ்ட்டோக்ளீஸ் ஒரு சிறந்த ராஜதந்திரி. ஸ்ப்பாட்டாவுடன் அனாவசியமான பகைமை வேண்டாமே யென்று கருதினான். எனவே, ஸ்ப்பார்ட்டாவின் ஆட்சே பத்திற் கெல்லாம் சமாதானம் சொல்ல, ஆத்தீனியத் தூதுகோஷ்டி யொன்று வருகிறதென்று கூறி ஸ்ப்பார்ட்டத் தூதுகோஷ்டியைத் திருப்பி அனுப்பிவிட்டான்.
அனுப்பிவிட்டு, சுவர் வேலையைத் துரிதமாக நடத்தும்படி ஏவினான். தானும் இவனும் இரண்டு சகாக்களும் சேர்ந்த ஒரு தூதுகோஷ்டி ஸ்ப்பார்ட்டாவுக்குச் செல்வதென்றும், ஆனால் தான் மட்டும் முந்திச் செல்வதாகவும், மற்ற இருவரும் பிந்தி சுவர் வேலை முடியுந் தறுவாயில் வரட்டுமென்றும் ஏற்பாடு செய்துகொண்டு, அப்படியே, தான் மட்டும் முன்னதாகச் சென்றான். ஸ்ப்பார்ட்டர் களுக்கு இவனிடத்தில் ஒரு தனி மதிப்பு இருந்தது. இவன் வந்ததும், தங்கள் ஆட்சேபத்திற்குச் சமாதானம் கூறுமாறு கேட்டார்கள். தனது மற்ற இரண்டு சகாக்களும் பிந்தி வந்து கொண்டிருப்பதாக வும், அவர்கள் வந்து சேர்ந்த பிறகு விஸ்தாரமாகச் சொல்வ தாகவும் கூறினான். காலங்கடத்த வேண்டுமென்பதே இவன் நோக்கம். ஸ்ப்பார்ட்டர்களும் இவன் பேச்சை நம்பி, மற்ற இருவர் வருகைக் காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே ஆத்தென்ஸில் சுவர் வேகமாக எழும்பிக் கொண்டி ருந்தது. ஸ்ப்பார்ட்டர்களுக்கு இது தெரியாமலிருக்குமா? உண்மை யென்ன வென்று கேட்டார்கள். “இது வீண் வதந்தி. வேண்டு மானால் ஆத்தென்ஸுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பி உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றான் தெமிஸ்ட் டோக்ளீஸ். அப்படியே ஒரு தூதுகோஷ்டியை மறுபடியும் ஆத்தென்ஸுக்கு அனுப்பி னார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். இந்தத் தூது கோஷ்டி புறப்பட்டுச் சென்ற பிறகு, ஆத்தென்ஸிலிருந்து தெமிஸ்ட் டோக்ளீஸின் மற்ற இரண்டு சகாக்களும் ஸ்ப்பார்ட்டா வந்து சேர்ந்தார்கள். சுவர் வேலை ஏறக்குறைய பூர்த்தியடைந்து விட்ட தென்று தெமிஸ்ட் டோக்ளீஸிடம் ரகசியமாகத் தெரிவித்தார்கள்.
இனி ஸ்ப்பார்ட்டர்களுக்குப் பகிரங்கமாகச் சொல்லிவிடலா மல்லவா சுவர் வேலை முடிந்துவிட்டதென்று? ஆனால் இதைக் கேட்டு ஆத்திரங்கொண்டு, தன்னையும் தன் இரு சகாக்களையும் ஆத்தென்ஸுக்குத் திரும்பிப் போகவிடாமல் செய்துவிட்டால் என்ன செய்வது? இதற்காக ஒரு யுத்தி செய்தான் தெமிஸ்ட் டோக்ளீஸ். தானும் தன் சகாக்களும் nக்ஷமமாக ஆத்தென்ஸ் வந்து சேருகிற வரையில், ஸ்ப்பார்ட்டாவிலிருந்து வந்திருக்கிற தூது கோஷ்டியினரைப் பிணையாளியாக வைத்திருக்குமாறு ஆத்தென் ஸுக்கு ரகசியமாக தெரிவித்தான். இதற்குப்பிறகு, விஷயத்தைப் பகிரங்கப்படுத்தினான். தன்னைப் பாதுகாப்புச் செய்து கொள்ள ஆத்தென்ஸுக்குப் பரிபூரண உரிமையுண் டென்றும், அதைத் தடுக்க ஸ்ப்பார்ட்டாவுக்கு எவ்விதத்திலும் அதிகாரங்கிடையா தென்றும் தைரியமாக எடுத்துச் சொன்னான். கேட்டார்கள் ஸ்ப் பார்ட்டர்கள் இதனை. என்ன செய்ய முடியும்? அவர்கள் முகம் சிவந்தது. அவ்வளவுதான். தெமிஸ்ட்டோக்ளீஸும் தன் சகாக் களுடன் பத்திரமாக ஆத்தென்ஸ் வந்து சேர்ந்தான்.
இந்த மதிற்சுவரைக் கட்டி முடிப்பதில் ஆத்தீனியர்கள் எவ்வளவு உற்சாகங்காட்டினார்கள்! எவ்வளவு சீக்கிரத்தில் வேலை முடிந்தது! இரவைப் பகலாக்கிக் கொண்டார்கள். பெண்கள், ஆண்கள் போல உழைத்தார்கள். துள்ளியோடும் சிறுவர்களும் தள்ளாடும் கிழவர்களும், தங்கள் தங்கள் சக்திக்கியன்ற அளவு ஒரு சிறு கல்லையோ, ஒரு சிறு ஆயுதத்தையோ உரிய இடங்களில் கொண்டு சேர்ப்பித்தார்கள். அநேகர், உருக்குலைந்து கிடந்த தங்கள் வீடு வாசல்களிலிருந்து உருவாயுள்ள பொருள்களை ஒன்று சேர்த்து, தங்கள் சொந்தத்திற்கு வேண்டுமேயென்ற எண்ணம் சிறிது மில்லாமல் இந்தத் திருப்பணிக்கு உதவினார்கள்.
இங்ஙனம் நகரத்திற்கு அரண் அமைத்ததோடு நிற்கவில்லை தெமிஸ்ட்டோக்ளீஸ். துறைமுகப் பகுதியாகிய பீரேயஸையும் பந்தோபஸ்து செய்யத் தீர்மானித்தான். ஆத்தென்ஸுக்குச் சுமார் ஐந்து மைல் தொலைவிலுள்ளது இந்தப் பீரேயஸ். ஏற்கனவே அவன் ஆர்க்கோனாயிருந்த காலத்தில் அதன் அபிவிருத்திக்கு ஏற்பாடு செய்தானல்லவா. இப்பொழுது அதனை வளைத்து ஒரு சுவர் எழுப்பினான். கருங்கல்லும் இரும்பும் ஈயமும் கலந்து கட்டப் பெற்ற இந்தச்சுவர், நகரத்துச் சுவரைக் காட்டிலும் வலுவுடையதா யிருந்தது. இதன் நீளம் ஏழு மைல்; உயரம் முப்பது அடி. இரட்டை வரிசையில் வண்டிகள் செல்லக்கூடிய அளவு அகலமுடைய தாயிருந்தது மேல்தளம். இந்த அரண் அமைக்கிற வேலைகள் முடிய ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் (478 - 477) பிடித்தன.
3. வேறு சில ஏற்பாடுகள்
ஆத்தென்ஸின் நகர்ப்பகுதியையும் துறைமுகப்பகுதியையும் பந்தோபஸ்து செய்ததோடு நிற்கவில்லை தெமிஸ்ட்டோக்ளீஸ்; அதன் உள்நாட்டுத் தொழில்கள் சிறக்கவும், வெளிநாட்டு வியா பாரம் பெருகவும் அநேக ஏற்பாடு செய்தான். இவையிரண்டும் ஏகாதிபத்திய வாழ்வுக்கு இன்றியமையாதனவல்லவோ?
தெமிஸ்ட்டோக்ளீஸ் காட்டிய ஆதரவின் பேரில் அந்நியர் பலர் ஆத்தென்ஸில் குடியேறி, தொழில்கள் பல செய்தார்கள்; இப்படிக் குடியேறிய அந்நியர் சுமார் பதினாயிரம் பேர் இருக்கக் கூடும். இவர்கள் மெட்டிக்குகள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்குப் பிரஜா உரிமை கிடையாது. ஆனால் பிரஜைகள் செலுத்திவந்த வரிகளைச் செலுத்தக் கடமைப்பட்டிருந்தார்கள். இவை தவிர, சில விசேஷ வரிகளும் செலுத்தி வந்தார்கள். உதாரண மாக, யுத்த காலங்களில், சொத்து வரியென்று சொல்லி, கூடுதலான ஒரு தொகை இவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. தவிர, அந் நியர்களான இவர்களைப் பாதுகாப்பு வரும் பொறுப்பை அர சாங்கம் ஏற்றுக் கொண்டதல்லவா, இதற்காகப் பாதுகாப்பு வரி யென்று ஒரு தொகையை இவர்கள் கொடுத்து வந்தார்கள். பொது வாக இவர் களிடமிருந்து அரசாங்கத்திற்கு அதிகமான பணம் கிடைத்துக் கொண்டிருந்தது.
இது தவிர, தெமிஸ்ட்டோக்ளீஸ், ஆத்தீனியக் கப்பற் படைக்கு வருஷந்தோறும் இருபது கப்பல்கள் விகிதம் புதிது புதிதாகச் சேர்த்துக்கொண்டு வர வேண்டுமென்று ஒரு நிர்ணயம் செய்தான். இதற்குப் பணக்காரர்கள் எந்தெந்த வகையில் உதவி செய்துவர வேண்டுமென்பதற்கு ஒரு திட்டம் வகுத்து அதை அமுலுக்குக் கொண்டுவரச் செய்தான். கடலாதிக்கமும் வியாபாரப் பெருக்கமுமே இவனது முக்கிய நோக்கங்களாயிருந்தன.
4. இருந்தும் இறந்த தெமிஸ்ட்டோக்ளீஸ்
இங்ஙனம் ஆத்தென்ஸீன் பெருவாழ்வுக்குப் பல வகையிலும் பாடுபட்ட தெமிஸ்ட்டோக்ளீஸ், கடைசியில் என்னவானான்? பாரசீக மன்னனிடம் அடைக்கலம்! அவனுடைய தயவிலே வாழ்வு!! வாசகர்களே, திகைக்கிறீர்களா? ஆனால் உண்மை இது.
நற்குடிப்பிறப்பு, ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பின்பலம் இவ்விரண்டும் ஓர் அரசியல்வாதியின் முன்னேற்றத்திற்கு இன்றிய மையாத சாதனங்களாயிருந்தன முற்காலத்துக் கிரீஸில். ஆனால் இவ்விரண்டு சாதனங்களுமின்றி, தன் சொந்தத் திறமை யினால் முன்னுக்கு வந்தவன் தெமிஸ்ட்டோக்ளீஸ். இந்தத் திறமையின் அளவுக்கு, சீலமோ நேர்மையோ இவனிடம் இல்லை. எனவே, திறமை கழிந்ததும் ஜனங்களுடைய மதிப்பிலிருந்து இறங்கிவிட்டான். அதாவது இவனுடைய சேவை தேவையாயிருக்கிற வரையில் ஜனங்கள் இவனை உபயோகித்துக் கொண்டார்கள்; பிறகு ஒதுக்கி விட்டார்கள். ஆத்தென்ஸின் புனர் நிர்மாண வேலைகள் ஒருவாறு முடிவடைந்தன. அதன் சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருந்த ஆபத்து விலகி விட்டது. தெமிஸ்ட்டோக்ளீஸின் செல்வாக்கும் குறைய ஆரம் பித்தது. ஸ்ப்பார்ட்டாவும் இவன் வீழ்ச்சிக்குத் துணை செய்ய முன் வந்தது.
தெமிஸ்ட்டோக்ளீஸ் மகா கர்வி; சொல்லம்பு தொடுத்துப் பிறர் மனத்தைப் புண்படுத்துவதில் வல்லவன். இதனால் பலருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டான். மற்றும், தற்புகழ்ச்சி செய்து கொள்வதில் சிறிது கூட சலிப்படைய மாட்டான். தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஆர்ட்டிமிஸ் தேவதைக்கு ஒரு கோயில் சமைத்து அதில் தன் உருவத்தையும் பிரதிஷ்டை செய்து கொண்டான். இதன் மூலம் அநேகருடைய வெறுப்புக்கு ஆளானான். தவிர, பல பேரிடமிருந்து பல சமயங்களில் இவன் லஞ்சம் வாங்கியிருக் கிறானென்று புகார்கள் கிளம்பின. இந்தப் புகார்களை ஊர்ஜிதம் செய்வதுபோல், இவன், தன்னிடம் பெரும்பணம் இருப்பதாகப் பல வகையிலும் புலப்படுத்திக் கொண்டான். (ஆர்க்கோனாகத் தெரிந் தெடுக்கப்படுவதற்கு முன்னர் இவனிடம் இருந்த ஆஸ்தியெல்லாம் சுமார் மூன்று டாலெண்டுகள் பெறுமானவையே. தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டபிறகு இவன் வீடு பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் போனதுபோக இருந்தது ரொக்கமாக நூறு டாலெண்டுகள். இந்தத் தொகை அரசாங்கப் பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டது.) ஜனங்கள் இவனுடைய நேர்மையில் அவநம்பிக்கை கொண்டார்கள்.
கடைசியில் 471-ஆம் வருஷம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு விட்டான் இவன். இதற்கு உடனடியான காரணம், நேரடியான காரணம் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஜாந்திப்பஸும், அரிஸ்டைடீஸும், அப்பொழுது பிரபலமடைந்து கொண்டு வந்த மில்ட்டியாடீஸ் மகன் ஸைமனும் சேர்ந்து இவன் பிரஷ்டம் செய்யப்படுவதற்கு உடந்தையாயிருந்தார்களென்று கூறப்படுகிறது. முந்தி ஜாந்திப்பஸும் அரிஸ்ட்டைடீஸும் பிரஷ்டம் செய்யப்படுவதற்கு இவன் - தெமிஸ்ட்டோக்ளீஸ் - உடந்தையா யிருந்தான். அப்பொழுது இவன் செய்த வினை இப்பொழுது இவனைச் சுட்டது.
ஆத்தென்ஸிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டதும், தெமிஸ்ட் டோக்ளீஸ், ஆர்கோஸ் ராஜ்யத்திற்குச் சென்று தங்கினான். அங்கு இவன் இருப்பது ஸ்ப்பார்ட்டாவுக்குப் பிடிக்கவில்லை. இவனிடத்தில் எவ்வளவுக்கெவ்வளவு மதிப்பு வைத்திருந்ததோ அவ்வளவுக் கவ்வளவு இப்பொழுது துவேஷம் பாராட்டியது. ஆத்தென்ஸுக்கு மதிற்சுவர் எழுப்பிய விஷயத்தில் அதனை ஏமாற்றி விட்ட வனல்லவா இவன்? தவிர, தனக்கு விரோதமாக ஏதேனும் சூழ்ச்சி செய்வானோ என்ற பயமும் அதற்கு இருந்தது. இதற்குத் தகுந்தாற் போல் பாஸேனியஸ் இறந்தபிறகு அவனுடைய தஸ்தாவேஜு களைப் பரிசோதனை செய்கையில், அவன் செய்த சூழ்ச்சிகளுக்கு இவன் உடந்தையாயிருந் தானென்பதற்குச் சில ருஜுக்கள் அகப் பட்டன. உண்மையிலேயே இவன் உடந்தையா யிருந்தானா வென்பதை சந்தேகிக்கக் கூடிய விஷயமே. ஆனால், ஸ்ப்பார்ட்டா, இவன்மீது பழி தீர்த்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டது. இவன் மீது தேசத் துரோகக் குற்றஞ்சாட்டியது. இவனைக் கைதியாக்கி விசாரித்துத் தண்டிக்குமாறு கூறி ஆத்தென்ஸுக்கு ஆள் விடுத்தது. ஆத்தென்ஸும் இதற்கு உடன்பட்டது; இவனைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி, ஸ்ப்பார்ட்டாவின் ஆட்களோடு தன்னுடைய ஆட்கள் சிலரையும் அனுப்பியது. ஆனால் தெமிஸ்ட் டோக்ளீஸ், இவர்கள் வருகையை முன்னதாகவே அறிந்து, ஆர்கோஸை விட்டு ஓடி விட்டான்.
பல இடங்களிலும் சுற்றியலைந்து கடைசியில் 464-ஆம் வருஷம் பாரசீக மன்னனிடம் போய் தஞ்சம் புகுந்தான். அப் பொழுது பாரசீக அரச பீடத்தில் அமர்ந்திருந்தவன் அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் என்பவன்; ஜெர்க்ஸஸ் மன்னனுடைய மகன். (ஜெர்க் கஸஸ் மன்னன் 464ஆம் வருஷம் இறந்துவிட்டான். அடுத்த வருஷத்தில் அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் மன்னன் பட்டத்திற்கு வந்தான். ஜெர்க் கஸஸ் மன்னன் இறந்துவிட்டானென்று தெரிந்த பிறகே, தெமிஸ்ட் டோக்ளீஸ் ஸூரா நரகம் போகத் துணிவு கொண்டான். இவனை மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரித்தான். இவனுக்குச் சகல மரி யாதைகளும் செய்வித்தான். பரம வைரியாக இருந்தவன் பணிந்து (உண்மை யிலேயே தெமிஸ்ட்டோக்ளீஸ், பாரசீக சம்பிரதாயப்படி, பூமியில் தேகம் பூராவும் படியும்படியாகப் பணிந்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது). விட்டால் அவனிடம் பரிவு காட்டி உப யோகித்துக் கொள்ள ஓர் அரசன் முயலுவானாகில் அதில் ஆச்சரிய மொன்றுமில்லையே. கிரீஸை, பாரசீக ஆதிக்கத்திற்குட் படுத்திக் கொடுக்கிற விஷயத்தில், தெமிஸ்ட்டோக்ளீஸ், அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் அரசனுக்கு உண்மையிலேயே உபயோகமாயிருந் தானோ, அப்படி இருந்தால் எந்த அளவுக்கு என்ற விவரங்கள் சரி யாகத் தெரியவில்லை. ஆனால் அந்த அரசனுடைய ஆசைக்கு அவ்வப்பொழுது தூபம் போட்டுக் கொண்டு வந்தானென்றும், அதன் விளைவாக அவனது ஆதரவு இவனுக்கு நிறையக் கிடைத்துக் கொண்டிருந்ததென்றும் நிச்சயமாகத் தெரிகின்றன.
அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் அரசனுடன் மனங்கலந்து பழக வேண்டுமென் பதற்காக தெமிஸ்ட்டோக்ளீஸ் பாரசீக பாஷையைக் கற்றுக் கொண்டான். மற்றப் பாரசீகர்களைப் போலவே அந்தப் பாஷையில் ஸ்பஷ்டமாகப் பேசவும் பழகிக் கொண்டான். அரசனு டைய அபிமானமும் வரவர அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. சின்ன ஆசியாவிலுள்ள மாக்னீஷியா (உண்மையிலேயே தெமிஸ்ட் டோக்ளீஸ், பாரசீக சம்பிரதாயப்படி, பூமியில் தேகம் பூராவும் படியும் படியாகப் பணிந்தான் என்று ஒரு வரலாறு கூறுகிறது.) என்ற ஒரு பிரதேசத்திற்கு இவனை அதிபதியாக்கினான். இவ னுடைய அன்றாடச் செலவு வகைகளுக்காக, மேற்படி மாக்னீஷியா வோடு வேறு இரண்டு பிரதேசங்களின் வருமானமும் இவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் படி ஏற்பாடு செய்தான்.
இந்த வருமானத்தைக் கொண்டு இவன் சுமார் பத்து வருஷ காலம் சுகமாகக் காலங்கடத்திவிட்டு கடைசியில் மாக்னீஷி யாவிலேயே 449-ஆம் வருஷம் தனது அறுபத்தைந்தாவது வயதில் இறந்து போனான். இறந்த பிறகு மாக்னீஷியர்கள், இவனை ஒரு வீரனாகப் போற்றி, நகரத்திற்கு மத்தியில் இவனுக்கு ஓர் உருவச்சிலை நிறுவி கௌரவித்தார்கள்.
தான் இறந்தபிறகு தன்னுடைய எலும்புகள் ஆத்தென்ஸ் மண்ணில் புதைக்கப்பட வேண்டுமென்று தெமிஸ்ட்டோக்ளீஸ் விரும்பினானென்று தெரிகிறது. அதன்படியே இவனுடைய உறவினர், இவனது எலும்புகளை ஆத்தென்ஸுக்கு எடுத்துக் கொண்டு போய் அங்கே புதைத்தார்கள். இதை ரகசியமாகச் செய்ய வேண்டியிருந்தது. ஏனென்றால் தேசத்திற்கு விரோதமாக நடந்து கொண்டவர் களுடைய எலும்புகள் கூட ஆத்தென்ஸ் மண்ணில் இடம் பெறுதல் கூடாதென்று ஒரு சட்டம் ஆத்தென்ஸில் அமுலில் இருந்துவந்தது.
5. இறந்தும் இருந்த அரிஸ்ட்டைடீஸ்
தெமிஸ்ட்டோக்ளீஸ், நாட்டுக்குப் புறத்தியான பிறகு, ஜாந்திப்பஸோ, அரிஸ்ட்டைடீஸோ, ஆத்தென்ஸின் அரசியல் வாழ்வில் முன்புபோல் அதிக பங்கெடுத்துக் கொள்ளவில்லை யென்று தெரிகிறது. குறிப்பாக, ஜாந்திப்பஸின் கடைசி காலம் எப்படிக் கழிந்தது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அரிஸ்ட்டைடீஸ் மட்டும் சிறிது காலம் வரை, ஆத்தென்ஸின் அரசியல் விவகாரங்கள் நேர்மையுடன் நடைபெற்றுக் கொண்டு வரு வதற்கு ஓரளவு துணையாயிருந்தானென்று தெரிகிறது. எப்படியும் இவன், தனது கடைசி மூச்சு இருக்கிறவரை ஆத்தென்ஸின் நலனுக் காகப் பாடுபட்டு வந்தானென்பதும், ஆத்தீனியர்களின் நன்மதிப் பிலே வாழ்ந்து வந்தானென்பதும் நிச்சயம். இவன், எங்கே, எப்படி, எப்பொழுது இறந்துபோனான் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஒரு சமயம் இவன் ஆத்தென்ஸ் காரியமாக வடக்கே கருங்கடல் பக்கம் அனுப்பப்பட்டதாகவும், அங்கேயே இறந்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. வெறும் ஊகந்தான். இவன் இறந்துபோனது, உத்தேசமாக 468 அல்லது 467-ஆம் வருஷமாக இருக்கலாமென்று கருதப்படுகிறது.
அரிஸ்ட்டைடீஸ், பிரதம ஆர்க்கோன் பதவியை (489-488) வகித்தான்; போர்கள் பல நடத்தி வெற்றி கண்டான். பெருஞ் செல்வத்தோடு நெருங்கி உறவாடினான் பல தடவைகளில். ஆனால் இறக்கிறபோது இவனிடத்தில் ஒரு சிறு தொகைகூட இருக்க வில்லை. இவனது ஈமச்சடங்குகள் அரசாங்கச் செலவிலேயே நடை பெற்றன. இவனுடைய குடும்பத்தையும் அரசாங்கமே சிறிது காலம் வரை போஷித்து வந்தது. வறுமையிலே வாழ்வு கண்டவன் அரிஸ்ட் டைடீஸ். இவனுடைய நேர்மையைக் குறித்துப் பிற்காலத்து அறிஞர் பலர் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். ப்ளூட்டார்க் என்ற சரித்திரா சிரியன் கூறுகிறான்:- “அரிஸ்ட்டைடீஸ் எப்பொழுதும் பதவியி லிருந்து கொண்டு இருந்ததில்லை; ஆனால் பதவிக்கு எப் பொழுதும் உதவியாயிருந்து கொண்டிருந்தான். இவனுடைய வீடு, சீலம், ஞானம், ஒழுங்கு இவைகளைக் கற்பிக்கும் ஒரு பொது ஜன பாட சாலையாக இருந்தது. சீலத்துடன் வாழவேண்டுமென்று விருப்பங் கொண்ட ஆத்தீனிய இளைஞர் பலர் இவனை ஒரு தெய்வ மாகக் கருதி இவனிடம் ஆலாசனை கேட்டு வந்தார்கள். அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்தான். அவர்கள் கூறுவனவற்றைப் பொறுமையுடன் கேட்டான்; தெளிந்த முறையில் அவர்களுக்குப் போதனை செய்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டினான். பிற்காலத்தில் பெரும்புகழ் படைத்த ஸைமன், இவனுடைய போதனைகளைக் கேட்டு முன்னுக்கு வந்தவனே.”
ஏகாதிபத்தியம் வளர்கிறது
1. மண்ணாசையும் பொன்னாசையும்
ஆத்தென்ஸ் தலைமையில் ஸ்தாபிதமான டெலோஸ் சமஷ்டி, ஆத்தீனிய ஏகாதிபத்தியமாக வளர்ந்த காட்சியை இனிக் காண்போம். கிரேக்க ராஜ்யங்கள் மீது படிந்திருந்த பாரசீக ஆதிக்கத்தை அடி யோடு அகற்றிவிட வேண்டுமென்பதற்காக வல்லவோ இந்த ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்டது? இதற்கிணங்க, பாரசீகத்தை எதிர்த்துப் போரை நடத்தும் பொறுப்பு, ஸைமன் வசம் ஒப்புவிக்கப்பட்டது. பாஸேனியஸை பிஸண்ட்டியத்திலிருந்தும் ஸெஸட்டோஸி லிருந்தும் விரட்டியவனல்லவா இவன்.
இவன், சமஷ்டியின் சார்பாக ஒரு படையுடன் 476-ஆம் வருஷம் புறப்பட்டான். ஸ்ட்ரைமோன் நதியின் முகத்துவாரத்தி லுள்ள இயோன் என்ன, ஹெப்ரூஸ் நதியின் முகத்துவாரத்திலுள்ள டோரிஸ்க்கஸ் என்ன, கற்பாறைகள் நிறைந்த ஸ்க்கைரஸ் தீவு என்ன, இன்னும் திரேஸிலுள்ள சிறுசிறு நகரங்களென்ன, இப்படிப் பாரசீக ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த அநேக பிரதேசங் களை ஒன்றன்பின் னொன்றாக வெற்றி கொண்டான்.
வெற்றி கொண்டானென்று ஒரு வாக்கியத்தில் சுருக்கமாக இங்கே சொல்லிவிட்டோம். ஆனால் அவ்வளவு சுலபமாக மேற்படி பிரதேசங்கள் இவனுக்குப் பணிந்துவிடவில்லை. பெரும்பாலானவை, முடிந்தவரை எதிர்த்துப் பார்த்தன. இயோன் நகரம் முற்றுகையிடப் பெற்றபோது, அதனைப் பாதுகாத்து வந்த போகெஸ் என்ற பாரசீகப் படைத்தலைவன், கடைசிவரை பணியவே இல்லை. அவனைப் பணிய வைக்க, ஸைமன் எவ்வளவோ முயற்சி செய்தான். அவன் பணிய மறுத்து வெகு தீரத்துடன் எதிர்த்து நின்றான். ஆனால் எவ்வளவு காலம்? அவன் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருள்கள் யாவும் தீர்ந்துவிட்டன. பணிவதா, மடிவதா என்ற கேள்வி பிறந்தது. பணிந்து விட்டால், சுதந்திரத்தைப் பறி கொடுத்துவிட்டதாகும்; தவிர, எஜமானத் துரோகமுமாகும். எனவே மடிந்துபோகத் தீர்மானித்தான். தான் மட்டுமா? இல்லை, இல்லை; பெண்டு பிள்ளைகள் சகிதம். தன்னிடமிருந்து பொன்னையும் பொருளையும் சேகரித்தான். மதிற்சுவர் மீது ஏறி நின்றுகொண்டு அனைத்தையும் ஸ்ட்ரைமோன் நதியில் வீசியெறிந்தான். பிறகு ஒரு பெருந்தீ மூட்டச் செய்தான். தனது பெண்டு பிள்ளைகளையும் பணியாட்களையும் ஒருவர் பின்னொருவராகக் கொன்று அதில் தூக்கியெறிந்தான். கடைசியில், தானும் அந்தத் தீயில் குதித்துவிட்டான். ஜெர்க்ஸஸ் மன்னன், இவனு டைய வீரத்தைப் பாராட்டினான்; ஆனால் இவன் மரணத்திற்காகத் துக்கித்தான்.
473ஆம் வருஷம் ஸ்க்கைரஸ் தீவின் மீது கொண்ட வெற்றி தான், ஸைமனுக்கு அதிகமான புகழை வாங்கிக்கொடுத்தது. இந்தத் தீவினரை அடிமைப்படுத்திவிட்டதனாலோ, ஆத்தென்ஸிலிருந்து பலரை இங்குக் கொண்டு வந்து குடியேற்றி, இதனை ஆத்தென்ஸ் ராஜ்யத்தோடு சேர்த்துவிட்டதனாலோ இந்தப் புகழ் ஏற்படவில்லை. தீஸூஸ் என்ற அரசன் அட்டிக்காவை ஒன்றுபடுத்தி ஆண்டதாக ஒரு வரலாறு உண்டல்லவா, அந்த அரசனுடைய எலும்புகள் மேற்படி தீவில் புதைக்கப்பட்டிருந்தன. அவற்றை இவன் கண்டு பிடித்து ஆத்தென்ஸுக்கு ஆடம்பரமாகக் கொண்டு வந்து சேர்ப்பித்தான். ஆத்தீனியர்களுடைய மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா? ஒரு கோயில் சமைத்து அதில் வந்த எலும்புகளைப் புதைத்தார்கள்; தீஸூஸ் மன்னனுடைய ஞாபகார்த்தமாக ஆண்டு தோறும் ஒருவிழா கொண்டாட ஏற்பாடு செய்தார்கள். ஆத்தீனியர்கள் அடைந்த மகிழ்ச்சியில் ஸைமனின் புகழ் வளர்ந்தது.
இங்ஙனம் எஜீயன் கடலிலும், அதன் கரையோரங்களிலும் இருந்த தீவுகளென்ன, சிறுசிறு ராஜ்யங்களென்ன, இவை பலவும் பாரசீக ஆதிக்கத் தினின்று விடுவிக்கப் பெற்றன. இவை விடுதலை பெற்றதற்குக் காரணமா யிருந்தது எது? டெலோஸ் சமஷ்டிதானே? எனவே, இதுகாறும் இதில் அங்கத் தினராகச் சேராதிருந்த ராஜ்யங் கள், இப்பொழுது சேர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டன. அப்படிச் சேர மறுத்த ராஜ்யங்களும், ஏற்கனவே சேர்ந்திருந்து, இப் பொழுது ஏதோ ஒரு காரணத்திற்காக விலகிக் கொள்ள விரும்பிய ராஜ்யங்களும் சமஷ்டியின் விரோதிகளாகக் கருதப்பட்டன. இங் ஙனம் கருதியது, ஆத்தென்ஸ்தான் என்பதைச் சொல்ல வேண்டுமோ? அதனுடைய கருத்துதான், சமஸ்டியின் கருத்தாக வெளிப்பட்டது.
சமஷ்டியில், ஒவ்வொரு ராஜ்யமாகச் சேர்ந்துகொண்டு வந்தது. யூபியா தீவிலுள்ள பல ராஜ்யங்களும் சேர்ந்து கொண்டன. ஆனால் தெற்குப் பக்கத்திலுள்ள காரிஸ்ட்டஸ் ராஜ்யம் மட்டும் சேரவில்லை. அஃதெப்படிச் சேராமலிருக்கலாம்? உடனே அதன்மீது போர் தொடுக்கப்பட்டது. பலவந்தமாகச் சமஷ்டியில் 472-ஆம் வருஷம் சேர்க்கப்பட்டது. இதற்குப் பிறகு சுமார் மூன்று வருஷங் கழித்து ஏறக்குறைய 469-ஆம் வருஷம் - சமஷ்டியின் முதல்வகை அங்கத்தின ராயிருந்து வந்த நாக்ஸோஸ் தீவு சமஷ்டியிலிருந்து விலகிக் கொண்டது. அஃதெப்படி விலகலாம்? விலகிக் கொள்ள அதற்கு உரிமையேது? எனவே அதன்மீதும் யுத்தம் தொடுக்கப் பட்டது. அதுவும் அடங்கிப்போய் சமஷ்டியில் அங்கத்தினரா யிருந்து வர இசைந்தது.
இங்ஙனம் இவை பலவந்தமாகச் சேர்க்கப்பட்டது மட்டு மல்ல, இவற்றின் சுதந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. விலகி நின்ற தற்கும், விலக விரும்பியதற்கும் தண்டனை! சொந்தமாகக் கப்பல்கள் வைத்துக் கொள்ள இவை அனுமதிக்கப்படவில்லை. சமஸ்டிக்கு மகமைத் தொகை மட்டும் ஒழுங்காகச் செலுத்தி வருமாறு செய்யப் பட்டன. சமஸ்டிக் கூட்டங்களில் இவைகளுக் கிருந்த ஓட்டுரிமை யும் ரத்து செய்யப்பட்டது. உண்மையில் இவை யிரண்டும் ஆத்தென் ஸின் ஆதிக்கத்திற்குட்பட்ட ராஜ்யங்களாயின.
இந்த நடவடிக்கைகளுக்குப்பிறகு, ஸைமன், தன் கவனத்தை எஜீயன் கடலின் தெற்குப் பக்கம் செலுத்தினான். ஏனெனில், ரோட்ஸ் தீவு என்ன, ஸைப்ரஸ் தீவு என்ன, சின்ன ஆசியாவின் தென் மேற்கிலுள்ள காரியா என்ன, லைஷியா என்ன, ஆகிய இந்தப் பகுதி களில் பாரசீக ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த சிறுசிறு ராஜ்யங்கள் பலவற்றையும் அந்த ஆதிக்கத்தினின்று விடுவித்து, சமஷ்டியில் சேர்க்கவேண்டியது அவசியமாயிருந்தது. தவிர, ஜெர்க்ஸஸ் மன்னன், பாம்ப்ளியா பிரதேசத்திலுள்ள யூரிமெடான் நதியண்டை, சுமார் முந்நூற்றைம்பது கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை யையும், ஒருதரைப் படையையும் சேகரித்து வைத்திருந்தான். கிரீஸின் மீது ஆதிக்கங் கொள்ள வேண்டுமென்ற ஆசை அவனை இன்னும் விடவில்லை. இந்தத் தகவலும் ஸைமனுக்குத் தெரிந்தது போலும். எனவே, சுமார் இருநூறு கப்பல்களைக் கொண்ட ஒரு கடற் படையுனும், ஒரு பெருந்தரைப்படையுடனும் சென்றான். யூரி மெடான் நதியண்டை, கடற்போரும் தரைப்போரும் - 468-ஆம் வருஷம் நடைபெற்றன. ஒரே நாளில் நடைபெற்ற இவ்விரண்டு போர்களிலும் ஸைமன் வெற்றி பெற்றான். பாரசீகக் கடற்படையில் சுமார் இருநூறு கப்பல்கள் அழிந்தன. போர்க்களத்தில் பல அரிய பொருள்களை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது பாரசீகத் தரைப் படை. இந்தப் பொருள்களை அப்படியே ஆத்தென்ஸுக்குக் கொண்டு சேர்ப்பித்தான் ஸைமன். இவை, பின்னர் நகர அபிவிருத்திக்கு உப யோகப்படுத்தப் பெற்றன. இவற்றைச் சொந்த நலத்திற்கு உபயோகப் படுத்திக் கொள்ளாமல் பொதுநலத்திற்கு உபயோகப்படுத்தியதன் காரணமாக, ஆத்தென்ஸ் மகாஜனங்கள், இவனை முன்னைக் காட்டிலும் அதிகமாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
யூரிமெடான் வெற்றி மூலமாக, காரியா முதலிய பிர தேசங் களைப் பாரசீக ஆதிக்கத்தினின்று விடுவித்தான்ஸைமன். இப்படி விடுவித்ததோடு மட்டுமல்ல, இவற்றைக் கட்டாயப்படுத்தி டெலோஸ் சமஷ்டியில் அங்கத்தினராகச் சேர்ப்பித் தான். புதிய அங்கத்தினர்கள் சேர்ந்ததனால் சமஷ்டி வலுப்பெற்றதென்று சொல்லலாம். ஆனால் பெயரளவுக்குத்தான். உண்மையில் வலுப் பெற்றது ஆத்தென்ஸே. அது, தன்னுடைய ஏகாதிபத்திய எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ளக்கூடிய ஒரு சக்தியை, ஏன்? ஒரு துணிச் சலையுங்கூட பெற்றது. ஏற்கனவே, காரிஸ்ட்டஸையும் நாக்ஸோ ஸையும் அடிமைப்படுத்திய தன் மூலம் அதனுடைய மண்ணாசை ஒருவாறு புலனாயிற்று. மண்ணாசைக்கு அடுத்தது பொன்னாசை தானே?
சமஷ்டி அங்கத்தினர்களில் முதல்வகையைச் சேர்ந்த தாஸோஸ் தீவு ராஜ்யம், செல்வச் செழுமையுடையதாயிருந்தது. இதற்குக் காரணம் திரேஸ் பிரதேசத்தின் பெரும்பற்றான வியாபாரம் அதன் வசத்திலிருந்ததுதான். இந்த வியாபாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்று ஆசை கொண்டது ஆத்தென்ஸ். இதற்குத் தகுந் தாற்போல், ஒரு தங்கச் சுரங்கத்தைப் பற்றி ஆத்தென்ஸுக்கும், தாஸோஸுக்கும் தகராறு ஏற்பட்டது. தாஸோஸ்வாசிகள் கலகத் திற்குக் கிளம்பினார்கள். இதையே காரணமாக வைத்துக் கொண்டு ஸைமன், 465-ஆம் வருஷம் - தாஸோஸ் மீது படையெடுத்தான்; அதன் கடற்படையை முறியடித்து, போக்குவரத்து வழிகளையும் அடைத்துவிட்டான். ஆயினும் தாஸோஸ்வாசிகள் பணியவில்லை. சுமார் மூன்று வருஷகாலம் முற்றுகையை எதிர்த்து நின்றார்கள். இந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களும் செய்த தியாகங் களும் அளவிறந்தன. பெரிய பெரிய போர்க்கருவிகளை, ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்கு இழுத்துச் செல்ல, கயிறுகள் இல்லை; எல்லாம் அறுந்துவிட்டன. பெண்கள் அத்தனை பேரும், தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கயிறாகத் திரித்துக் கொடுத்தார்கள்! ஆனால் எவ்வளவு காலம் இப்படித் தாக்குப்பிடிக்க முடியும்? உண விற்கு ஜனங்கள் மடிந்து வந்தார்கள். பார்த்தான் ஹெகெட் டோரிடீஸ் என்ற ஒருவன். தன் கழுத்தைச் சுற்றித் தூக்குக் கயிறு ஒன்றைக் கட்டிக்கொண்டான். ஏனென்றால், ஆத்தீனியர் களோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்று யார் முதன்முதலாகக் கூறுகிறார்களோ அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதென்று தாஸோஸ் வாசிகள் ஒரு சட்டம் பிறப்பித்திருந்தார்கள். தானே இந்தச் சட்டத்திற்குப் பலியாவதென்று தீர்மானித்தான் ஹெகெட் டோரிடீஸ். தனது ராஜ்யம் அடியோடு அழிந்துபோவதை இவன் விரும்பவில்லை. ஜனசபையின் முன்னர் ஆஜராகி “என்னைத் தூக்கிலிட்டுவிடுங்கள்; ராஜ்யம் காப்பாற்றப் படட்டும்” என்று உருக்கமாகக் கூறினான். அதாவது, “இனியும் எதிர்த்து நிற்பதில் பயனில்லை; பணிந்து விடுங்கள்” என்பதே இவன் கூறியதன் கருத்து. ஜனசபை, இவனை மரிக்கவில்லை; பணிந்து விடத் தீர்மானித்தது. அப்படியே 463-ஆம் வருஷம் தாஸோஸ் பணிந்தது. ஆத்தென்ஸ் விதித்த நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டது. நிபந்தனைகள் என்ன? அரண்களையெல்லாம் இடித்துத் தரைமட்ட மாக்கிவிட வேண்டும்; கப்பல்களனைத்தையும் ஒப்புக் கொடுத்து விட வேண்டும்; தங்கச் சுரங்கம் சம்பந்தமான உரிமைகளையும், பொதுவாக மற்ற உரிமைகளயும் விட்டுக் கொடுத்துவிட வேண்டும்; யுத்த நஷ்ட ஈடாக ஒரு தொகை கொடுக்க வேண்டும்; சமஷ்டிக்கு வருஷந்தோறும் ஒரு தொகையை மகமையாகச் செலுத்தி வர வேண்டும். சுருக்கமாக, தாஸோஸ் அடிமையாகிவிட்டது.
சமஷ்டி ஏற்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, கப்பல்களாக உதவிவந்த சில ராஜ்யங்கள், கப்பல்களுக்குப் பதில் வருஷந்தோறும் ஒரு தொகையைக் கொடுத்து வர ஆரம்பித்தன. அதாவது முதல்வகை அங்கத்தினராயிருந்து வந்த ராஜ்யங்கள், இரண்டாவது வகை அங்கத்தினராக மாறிக் கொண்டன. இங்ஙனம் மாறிக் கொண்ட தனால், சமஷ்டியின் கடற்படை நிருவாகத்தில் இவை தலையிட முடிய வில்லை. ஆனால் இவற்றின் சுதந்திரமும் அந்தஸ்தும் எவ்விதத் திலும் பாதிக்கப்படவில்லை. உண்மையில், ஆத்தென்ஸ், இந்த இரண்டாவது வகை அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகப்பட வேண்டு மென்றே விரும்பியது. அப்பொழுதுதானே சமஷ்டியின் கப்பற் படையை, தன்னிஷ்டப்படி நடத்த முடியும்? சமஷ்டியின் கடற்படை யென்பது அத்தீனியக் கடற்படையாக இருந்தால்தானே அதற்கு அனுகூலம்? எனவே, இரண்டாவது வகை ராஜ்யங் களின் எண்ணிக்கை, மேலும் மேலும் அதிகப்பட்டுக் கொண்டு வருவதற்கு ஆதரவு காட்டி வந்தது. முதல்வகை ராஜ்யங்களாக எஞ்சி நின்றவை, லெஸ்போஸ், கியோஸ், ஸாமோஸ் ஆகிய மூன்று மட்டுமே. ஆனால் இவையும் நாளாவட்டத்தில் ஆத்தென்ஸோடு ஐக்கியமாகிவிட்டன.
காரிஸ்ட்டஸ், நாக்ஸோஸ், தாஸோஸ் ஆகிய ராஜ்யங்கள் அடிமைப் படுத்தப்பட்ட பிறகு, அவை மூன்றாவது வகை அங்கத்தி னர்களாகக் கருதப் பட்டன. இவை செலுத்தி வந்த மகமைத் தொகை, கப்பல்களுக்குப் பதில் என்று கொள்ளப்படாமல், வெறுங் கப்பமாகவே கொள்ளப்பட்டது. இந்தக் கப்பத் தொகையோடு இவை, தங்கள் காலாட்படையின் ஒரு பகுதியையும், யுத்தம் ஏற்படு கிறபோது, சமஷ்டிக்கு உதவவேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப் பட்டது.
இரண்டாவது வகை ராஜ்யங்கள், கப்பல்களுக்குப் பதில் மகமைத் தொகையை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டு வந்தால் மட்டும் போதாது, யுத்தம் ஏற்படுகிறபோது ராணுவ உதவியும் செய்ய வேண்டுமென்று ஒரு நிபந்தனையை ஏற்படுத்தியது ஆத்தென்ஸ். இதற்கு அநேக ராஜ்யங்கள் இரண்டாவது வகை ராஜ்யங்கள் - சம்மதிக்கவில்லை. கலகத்திற்கு கிளம்பின. இதைத்தான் ஆத்தென்ஸும் விரும்பியது. உடனே பலாத்காரத்தைப் பிரயோகித்து அனைத்தை யும் பணியச் செய்தது. பணிந்த யாவும் மூன்றாவது வகை ராஜ்யங் களாக்கப் பட்டன.
ஆக, இருவகை அங்கத்தினர்களோடு தோன்றிய டெலோஸ் சமஷ்டி, சுமார் இருபது, இருபத்திரண்டு வருஷங்களுக்குப் பிறகு மூன்றுவகை அங்கத்தினர் களைக் கொண்டதாகியது. கப்பல்களாக உதவி வந்த ராஜ்யங்கள் முதல் வகை. இவைதான் மேலே சொன்ன லெஸ்போஸ், கியோஸ், ஸாமோஸ் ஆகியவை. கப்பல்களுக்குப் பதில், மகமைத் தொகை செலுத்தி வந்த ராஜ்யங்கள் இரண்டாவது வகை. இவை சுமார் ஐம்பதுக்கு மேலிருக்கலாம். கப்பம் அல்லது திறைப் பணம் கொடுத்து வந்த ராஜ்யங்கள் மூன்றாவது வகை. இவை சுமார் இருநூற்றுக்கு மேற்பட்டிருந்தன.
இந்த மூன்றாவது வகை ராஜ்யம் ஒவ்வொன்றுடனும், ஆத்தென்ஸ், தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அதனதன் அரசியலமைப்பையும் நிர்ணயித்துக் கொடுத்தது. இப்படி நிர்ணயித்துக் கொடுத்த அரசியலமைப்பு எல்லா ராஜ்யங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வில்லை. ஆயினும், பெரும்பாலும் ஜன ஆட்சி முறையைத் தழுவியதாகவே இருந்தது. பொதுவாக இவற்றை ஜன ஆட்சிப் பாதையிலேயே கொண்டு செலுத்தியது ஆத்தென்ஸ். தனக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டி ருக்கிறவரை, எந்த ராஜ்யத்தின் உள்நாட்டு விவகாரத்திலும் தலை யிடவில்லை. ஆனால் ஒவ்வொரு ராஜ்யத்திலும், பாதுகாவலாக, ஆத்தீனியச் சிறுபடையொன்று இருந்தது; ஆத்தீனிய உத்தியோகஸ் தர்களும் இருந்தார்கள். பெரும்பாலான ராஜ்யங்களுக்கு முக்கிய மான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை; ஆத்தென்ஸே இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டது.
இவற்றிலிருந்து புலனாவதென்ன? இந்த மூன்றாவது வகை ராஜ்யங்கள், பெயரளவுக்குச் சமஷ்டியில் சேர்க்கப்பட்டன வென்றா லும், உண்மையில் இவை ஆத்தென்ஸின் ஆதிக்கத்துக்குட் பட்ட வையாகவே இருந்தன என்பதேயாம். ஆத்தென்ஸ், இந்த ராஜ்யங் களை எப்படித் தன் கட்டுப்பாட்டுக்குட்படுத்தி வைத்துக் கொண்டி ருந்ததென்பதற்கு ஓர் உதாரணம். ஒவ்வொரு ராஜ்யத் துடனும் தனித்தனியாக ஆத்தென்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டதென்று மேலே சொன்னோமல்லவா, இதன் பிரகாரம், யூபியா தீவிலுள்ள கால்ஸிஸ் என்ற ஒரு சிறு ராஜ்யத்துடனும் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்திலுள்ள ஒரு ஷரத்து, வயது வந்த எல்லா கால்ஸிஸ்வாசிகளும் ஒரு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அப்படி எடுத்துக் கொள்ளாதவர்களின் ஓட்டுரிமை ரத்து செய்யப்படுமென்றும் கூறியது. விசுவாசப் பிரமாணம் வருமாறு:
“நான் சொல்லாலோ, செயலாலோ, எந்த வழியாலும், எந்த விதத்தாலும் ஆத்தீனியர்களுக்கு விரோதமாகக் கலகஞ் செய்ய மாட்டேன்; கலகத்திற்குத் துணையாகவும் இருக்கமாட்டேன். யாராவது கலகஞ் செய்தால் உடனே ஆத்தீனியர்களுக்குத் தெரி விப்பேன். ஆத்தீனியர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய மாதிரி அவர் களுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டுவருவேன். என்னால் முடிந்த மட்டில் அவர்களிடம் உண்மையாகவே நடந்து கொள்வேன். ஆத் தீனியர்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால், அப்பொழுது ஆத்தீனியர்களுக்கு உதவியா யிருப்பேன்; அவர்கள் இடும் கட்டளை களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்.”
ஆத்தென்ஸின் ஆதினத்திற்குட்பட்ட ராஜ்யங்களின் எண்ணிக்கை அதிகப்பட அதிகப்பட, சமஷ்டியின் கூட்டங்கள் முன் போல் ஒழுங்காகக் கூடுவது அரிதாகிவிட்டது. ஆத்தென்ஸும் இதில் சிரத்தை கொள்ளவில்லை. அசிரத்தை யுடனிருப்பதுதான் அதற்கு அனுகூலமாயிருந்தது. தன்னிஷ்டப்படி எந்தக் காரியத்தைச் செய்தாலும், அது சமஷ்டியினுடைய சம்மதத்தின் பேரிலேயே செய்ததாகக் கருதப்படுமென்ற நிலைமை ஏற்பட்டுவிட்ட பிறகு, சமஷ்டியைக் கலந்தாலோசிப்பது என்கிற சம்பிரதாயத்தை ஏன் கடைப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்? எனவே, 454-ஆம் வருஷம், டெலோஸிலிருந்த சமஷ்டியின் கஜானா, ஆத்தென்ஸுக்கு மாற்றப்பட்டது. இதனோடு டெலோஸ் சமஷ்டியின் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அதனுடைய ஸ்தானத்தில் ஆத்தீனிய ஏகாதிபத்தியம் தோன்றியது. ஆத்தீனியர்கள் ‘எங்கள் ஏகாதி பத்தியம்’ என்று பங்கிரங்கமாகவும் பெருமையுடனும் சொல்லத் தொடங்கினார்கள்.
இந்த ஏகாதிபத்தியத்தில் ஏற்கனவே சொன்னபடி சுமார் இருநூற்றறுபதுக்கு மேற்பட்ட சிறிதும் பெரிதுமான ராஜ்யங்கள் அடங்கியிருந்தன. எஜீயன் கடலிலுள்ள தீவுகளென்ன, இதன் வடக்கு, கிழக்கு, மேற்குக் கரைகளிலுள்ள பிரதேசங்களென்ன, இவை பலவும் இந்த ஏகாதிபத்தியற்குட்பட்டிருந்தன.
443-ஆம் வருஷத்திற்குப் பிறகு, இந்த ஏகாதிபத்தியம், பூகோள அமைப்பை அனுசரித்து, 1. திரேஸ் பகுதி, 2. ஹெல்லெஸ்ப்பாண்ட் பகுதி, 3. ஐயோனியா அல்லது சின்ன ஆசியப் பகுதி, 4. காரியா பகுதி, 5. எஜீனா, யூபியா முதலிய தீவுகளடங்கிய பகுதி என்று ஐந்து பகுதி களாக அல்லது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
ஆக, கி.மு. ஐந்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில், சாதாரண ஒரு சிறு ராஜ்யமாக இருந்த ஆத்தென்ஸ், இடைவிடாது முயற்சி செய்தும், கிடைத்த சந்தப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டும் முன்னுக்கு வந்து, மேற்படி நூற்றாண்டின் இடைக் காலத்தில், ஏறக்குறைய 450-ஆம் வருஷம் ஒரு பெரிய ஏகாதி பத்தியமாகக் காட்சியளித்தது.
2. ஸைமன்
ஆத்தென்ஸ், ஓர் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெறுவதற்குக் காரணமா யிருந்த முக்கியஸ்தர்களுள் மூவரைச் சிறப்பாகக் குறிப் பிடுதல் வேண்டும். ஒருவன் தெமிஸ்ட்டோக்ளீஸ்; மற்றொருவன் அரிஸ்ட்டைடீஸ்; இன்னொருவன் ஸைமன். இவர்களில் தெமிஸ்ட் டோக்ளீஸ் (471-ஆம் வருஷம்) நாடு கடத்தப்பட்டு விட்டான்; அரிஸ்ட்டைடீஸ் (467-ஆம் வருஷம்) இறந்து போய்விட்டான். இவ்விருவருக்கும் பிறகு, ஸைமனே, ஆத்தென்ஸின் அரசியலில் சர்வாதிக்கம் வகித்திருந்தான். ஆனால் சிறிது காலந்தான். இவனும் முந்திய இருவரைப்போல் பிரஷ்டம் செய்யப்பட்டான், என்றாலும் நான்கு ஆண்டுகள் கழித்து, அரிஸ்ட்டைடீஸைப்போல் திரும்ப வரவழைக்கப்பட்டான். இவனுடைய வாழ்க்கைப் போக்கைச் சிறிது கவனிப்போம்.
ஸைமன், மில்ட்டியாடீஸின் மகன் என்பதையும், தனது தகப் பனாருக்காக அபராதஞ் செலுத்தித் தன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டா னென்பதையும், வாசகர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டுவ தில்லை யல்லவா? இவன், இளமையில் ஒழுங்கான வாழ்க்கையை நடத்திய வனல்லன் என்றும், குடிப் பழக்கமும் சிறிது இருந்ததென்றும், பொதுவாக நாகரிகத்துடன் நடந்து கொள்ளத் தெரியாதவனாயிருந்தானென்றும், ப்ளுட்டார்க் என்ற சரித்திராசிரியன் கூறுகிறான். இஃதெப்படி இருந்தபோதிலும் இவன், சிறுவயதில் அரிஸ்ட்டைடீஸுடன் தொடர்பு கொண்டான். இந்தத் தொடர்புக்குப் பிறகு அடியோடு மாறிவிட்டான். இவ் விரண்டும் நிச்சயம். இவனிடத்தில், ஒரு படைத்தலைவனுக்கு வேண்டிய தன்மைகள் பல இருப்பதைக் கண்டுகொண்டு, அந்தத் தன்மைகளை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற நன்னோக்கத்துடன், அரிஸ்ட்டைட்டீஸ் இவனை ஆத்தென்ஸின் அரசியல் வாழ்வுக்கு அறிமுகப்படுத்திவைத்தான். அறிமுகப்படுத்தி வைத்தது வீண் போகவில்லை. இவனும், அரிஸ்ட்டைட்டீஸின் அரசியல் வாரிசு போலவே நடந்து வந்தான். இவனுடைய ராணுவ வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் அப்படித்தான் அமைந்தன. டெலோஸ் சமஷ்டியின் ஆரம்பத்தில் சிறிது காலம் வரை 476-ஆம் வருஷம் வரை - அரிஸ்ட்டைடீஸ் பிரதம தளபதியாயிருந்தான். அப்பொழுது இவன், மற்றவர்களைப் போல் ஓர் உதவிப்படைத் தலைவனாக இருந்தான். இந்தத் தோரணையில்தான் இவன் பாஸேனியஸ்மீது படை யெடுத்துச் சென்று அவனை பிஸண்ட்டியத் திலிருந்தும் ஸெஸ்ட்டோஸி லிருந்தும் விரட்டினான். அரிஸ்ட் டைட்டீஸுக்குப் பிறகு இவனே பிரதம தளபதியானான். 476-ஆம் வருஷம் முதல் 462-ஆம் வருஷம் வரை சுமார் பதினைந்து வருஷ காலம் தொடர்ந்தாற்போல் இந்தப் பதவியைத் திறம்பட வகித்து வந்தான். இங்ஙனமே ஆத்தென்ஸின் அரசியலிலும், அரிஸ்ட் டைட்டீஸுக்குப் பிறகு இவனுடைய செல்வாக்கே மேலோங்கி நின்றது.
சமஷ்டியின் சார்பாகப் போர்கள் பல நடத்தி வெற்றிகள் பல கண்டதன் விளைவாக இவனுக்கு இந்தச் செல்வாக்கு ஏற்பட்ட தென்பது வாஸ்தவம். ஆனால் இது வெறும் அரசியல் செல்வாக்கு. தனி மனிதன் என்ற முறையில் இவனிடத்தில் சில நல்ல பண்புகள் இருந்தன. உயர்குடியில் பிறந்தவனா யிருந்தபோதிலும், நிறைந்த செல்வம் படைத்தவனாயிருந்த போதிலும், ஏழை எளியவர்களுக்கு இரங்கினான்; அவர்களோடு கலந்து பழகினான். இரங்கியதோடு மட்டுமல்ல, அந்த இரக்கத்தை ஈகையாகச் செயலில் கொண்டுவந்து காட்டினான். ஓர் ஆசிரியன் கூறுகிறான்.
“ஸைமன் பணந்திரட்டினான். எதற்காக? அதை உபயோகப் படுத்து வதற்காகத்தான். ஜனங்களுடைய அன்பையும் மதிப்பையும் பெறுவதற்கே அதை உபயோகித்தான்… இவன், தனது சொந்தத் தோட்டந்துறவுகளைப் பொதுஜனங்களுக்குத் திறந்துவிட்டி ருந்தான்; அங்கு உற்பத்தியாகும் காய்கனிகளைப் பறித்துத் தின்னவும் அனுமதித்திருந்தான். இவனுடைய ஆகார வகைகளோ மிகவும் எளிய முறையில் அமைந்திருந்தன… இவன், வெளியில் செல்லப் புறப் பட்டால் கூட சில பணியாட்களை அழைத்துக் கொண்டு போவான். அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒருசிறு தொகையைக் கொடுத்து வைத்து, வறுமையினால் வாடியிருப்பவர்களுக்கு உதவுமாறு கூறு வான்; ஆடையில்லாதவர்களுக்கு ஆடை வழங்கச் செய்வான். மற்றும், பணமின்றி இறந்துபோனவர்களை, தன் சொந்தச் செல விலேயே புதைக்கச் செய்வான். . . இவையெல்லாவற்றிற்கும் மேலாக, இவன் கைகள், லஞ்சமோ, வேறு சன்மானமோ வாங்கிக் கறைப்பட வில்லை. ஏகாதிபத்தியத்திற்கு எது நன்மையென்று தனக்குத் தோன்றுகிறதோ அதையே சொன்னான்; அதையே செய்தான்.”
இவனிடத்தில் அபிமானங் கொண்ட ஓர் ஆசிரியனுடைய வார்த்தைகளா யிருக்கலாம் இவை. எப்படியிருந்தபோதிலும், யூரி மெடான் வெற்றிக்குப் பிறகு ஆத்தீனியர்களுடைய மதிப்பை இவன் அதிகமாகப் பெற்றிருந்தான் என்பது நிச்சயம். இந்த மதிப்பானது ஐந்தாறு வருஷங்கள் கழித்து எதிர்ப்பாக மாறிவிட்டது. இந்த எதிர்ப்பு எப்படி ஏற்பட்டதென்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஆத்தென்ஸின். அரசியல் கட்சிப் போக்குகளைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வது அவசியமாகும்.
3. ஆத்தென்ஸில் கட்சிகள்
ஆரம்பத்திலிருந்தே ஆத்தென்ஸில், உயர்குடிப் பிறந்தவர்கள், பணக்காரர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள்தான் அரசியலில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொண்டார்கள். (ஏறக்குறைய எல்லா ராஜ்யங்களிலும் இப்படித்தானிருந்ததென்பதை இங்கு வாசகர் களுக்கு மறுபடியும் நினைவுபடுத்த வேண்டியதில்லையல்லவா?) இவர்களிடந்தான் அதிகார பலம் தங்கியிருந்தது. இவர்கள், சமு தாயத்தில் சிறுபான்மையோராக இந்தனர். இருந்தும், பெரும் பான்மையோரான ஜனங்களை அடக்கியாண்டு வந்தனர். எவ்வளவு காலம் அடக்கியாள முடியும்? ஆறாவது நூற்றாண்டின் தொடக்கத் தில் இவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பும் போலிருந்தது. இதனைச் சமாளிக்க, சில சட்டத்திட்டங்கள் இயற்றப்பட்டு, சாதாரண ஜனங்களுக்குச் சில சலுகைகள் காட்டப்பட்டன. இந்தச் சலுகைகள் நாளாவட்டத்தில் உரிமைகளாக வளர்ந்தன. வளர்த்தவர்கள், உரிமையற்றிருந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களல்லர்; பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அரிஸ்ட்டைடீஸ் என்ன இவர் களெல்லோரும் இத்தகையவர் களேயல்லவோ?
இங்ஙனம் பணக்காரர்களில் ஒரு சிலர், ஜன உரிமைக்குச் சாதகமாயிருந்த போதிலும், பெரும்பாலோர் இதை - ஜனங்கள் உரிமை பெறுவதை - விரும்பாமலே இருந்தனர். ஆனால் இவர் களுடைய விருப்போ வெறுப்போ செல்லுபடியாக வில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தார்கள். ஒற்றுமையா யிருந்து ஜனசக்தியை எதிர்க்கவும் இவர்களால் முடியவில்லை. ஏனென்றால், இவர்களுக்குள்ளேயே குடும்பப் பிணக்குகள், ஜாதிப் பூசல்கள் முதலியன எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தன.
பாரசீக யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்த காலத்தில், சாதாரண ஜனங்கள். அரசியல் நிருவாகத்தில், தங்களுக்கு அதிகமான பங்கு வேண்டுமென்று கோரினார்கள். இந்தக் கோரிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமா யிருந்தது. ஏனென்றால் இவர் களுடைய ஒத்துழைப்பில்லாமல் யுத்தத்தை எப்படித் தொடர்ந்து நடத்த முடியும்? உண்மையில், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும், யுத்தத்தில் அதிகமாகக் கலந்து கொள்ளுகிறவர்களும், அதை இறுதி யான வெற்றிக்குக் கொணர்கிறவர்களும் சாதாரண ஜனங்கள்தானே? இந்த நியதியையொட்டி மாரத்தான் போருக்குப் பிறகு, ஆத்தென் ஸின் அரசியலமைப்பில் ஜனங்களுக்குச் சாதகமான சில சீர்திருத்தங் கள் செய்யப் பட்டன.
தவிர, ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுகிறபோது, அந்த ஆபத்தை எதிர்த்துச்சமாளிப்பதில் யார் அதிகமான திறமை காட்டுகிறார்களோ, அவர்களே ஜனங்களால் அதிகமாகக் கொண்டாடப் படுகிறார்கள். அவர்களுக்கு அதிகார பதவியும் கிடைக்கிறது. அவர் களுடைய பூர்வோத்திரங்களைப் பற்றி யாரும் கவலைப்படு வதில்லை. ஸாலாமிஸ் போரில் கிரேக்கர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தவன் தெமிஸ்ட்டோக்ளீஸ். இதனால் அவனுக்கு அபார செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. இந்த செல்வாக்கைத் துணையாக வைத்துக் கொண்டுதான் அவன், பிளாட்டீயா யுத்தத்திற்குப் பிறகு, ஆத்தென்ஸை வெகு துரிதமாக பந்தோபஸ்து செய்தான். இவ்வள வெல்லாம் செய்தாலும், அவன் உயர்குடிப் பிறந்தவனல்லன். அவன் தகப்பன் ஒரு கிரேக்கன்தான். ஆனால் அவன் தாயார் ஓர் அந்நிய ஸ்திரீ. இதனால் அவனுக்குச் சமூகத்தில் ஒரு வித அந்தஸ்தும் கிடையாது. இத்தகைய சமூக அந்தஸ்தில்லாத ஒருவன், அரசியலில் ஆதிக்கம் வகித்ததும், ஜனங்களிடத்தில் செல்வாக்குப் பெற்றதும், பணக்காரர் களுக்குப் பிடிக்காமலே இருந்தது. தங்களுக்குள்ளே ஒற்றுமையில்லாத காரணத்தினால்தான் அவனும் அவனைப் போன்ற சிலரும் அரசியலில் சுலபமாகச் செல்வாக்குப் பெற முடிகிற தென்று கருதினார்கள். எனவே, பழைய மாதிரி, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், ஜனங்களுடைய உரிமை உணர்ச்சியை மேலோங்க விடாமல் செய்யவும் தங்களுக்குள்ளிருந்த பொறாமைகள், பூசல்கள் முதலியவற்றையெல்லாம் மறந்து ஒன்று பட்டார்கள். ஸைமனுடைய குடும்பத்திற்கும், அவனுக்கு மனைவியாக வாய்த்தவளுடைய குடும்பத்திற்கும் பரம்பரையாகப் பகைமை இருந்துவந்தது. விவாகத்தின் மூலம் இரு குடும்பங்களும் ஒற்றுமை யாயின. இங்ஙனமே ஸைமனின் சகோதரி, மனமாற்றங்கொண்டி ருந்த வேறொரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு விவாகஞ் செய்து கொடுக்கப்பட்டாள். இப்படிக் கொள்வினை, கொடுப்பனை மூலமாக, பிணங்கியிருந்த பணக்கார குடும்பங்கள் பலவும் ஒன்றாயின. பணக்காரர் கட்சி என்ற ஒரு கட்சி உருவாகியது. இந்தக் கட்சியின் அடிப்படையான கொள்கை, நல்ல பரம்பரையைச் சேர்ந்தவர்களும் பணக்காரர்களுமான ஒருசிலரே ஆட்சியை நடத்தவேண்டுமென்பது; அதாவது ஒரு சிலர் ஆட்சியே நடத்த வேண்டுமென்பது. இதனால்தான் இவர்கள், ஒருசிலர் ஆட்சிக் கட்சியினர் என்று அழைக்கப்பட்டனர். தற்கால அரசியல் பாஷையில் இவர்களை ‘கன்ஸர்வேட்டிவ் கட்சியினர்’ என்று ஒருவாறு அழைக்கலாம். அதாவது, இருந்ததே இருக்கட்டும் என்ற கொள்கையினர்.
ஒருசிலர் ஆட்சிக் கட்சியினருக்கு எதிராக ஜனக்கட்சியும் வலுத்து வந்தது. சிறப்பாக, பாரசீகப் படையெடுப்பைப் பற்றிய பயம் விலக விலக, டெலோஸ் சமஷ்டியின் மூலம் ஆத்தென்ஸின் எல்லை யும் செல்வாக்கும் பரவப் பரவ, இந்த ஜனக்கட்சிக்கு அதிகமான செல்வாக்கு ஏற்பட்டது. தற்கால பாஷையில் இதனை ‘ஜனநாயகக் கட்சி’ என்று அழைக்கலாம்.
இந்த இரண்டு கட்சிகளும், தற்கால அரசியல் கட்சிகளைப் போல், தலைவர், உபதலைவர்கள், கொறடாக்கள் முதலியோரைக் கொண்ட கட்டுக்கோப்பான கட்சிகளாக இருந்தனவோ என்னவோ தெரியவில்லை.
இந்த இரு கட்சியினரில், முந்தியவர், அரசாங்க ஆதிக்கம் தங் களிடத்திலேயே இருக்க வேண்டுமென்று மன்றாடினர். பிந்தியவர், அந்த ஆதிக்கம், தங்களுக்கே வரவேண்டுமென்று போராடினர். போட்டிகள், எதிர்ப்புகள், சூழ்ச்சிகள் இவற்றிற்குக் கேட்பானேன்?
4. ஸைமனின் வீழ்ச்சி
ஸைமன், ஜனங்களிடத்தில் அன்பு செலுத்தினான்; அவர் களுக்குப் பல சலுகைகள் காட்டினான். ஆனால் அவர்களுக்கு அரசியலில் அதிகமான உரிமைகள் வழங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சுருக்கமாக, இவன் ஜனநாயகவாதியல்ல; பணக்கார குடும்பத்தில் பிறந்த தோஷமோ என்னவோ? இதனால் அப்பொழுது பொங்கி வந்து கொண்டிருந்த ஜனநாயகப் பெருக்கில் இவனால் நீராட முடியவில்லை; தான் அதுகாறும் அரசியலில் ஆதிக்கம் வகித்து வந்ததைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
ஜனக்கட்சியிலிருந்து இவனுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அப் பொழுது அந்தக் கட்சியில் செல்வாக்குப் பெற்று வந்தவர் இருவர். ஒருவன் எபியால்ட்டீஸ்; மற்றொருவன் ஜாந்திப்பஸின் மகனான பெரிக்ளீஸ். முன்னவன், ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவன்; நேர்மை மிகவுடையவன். பணக்காரர்கள், இவனுடைய நேர்மைக்காக இவனிடம் அச்சங் கொண்டிருந்தார்கள்; இவனை வெறுக்கவும் செய்தார்கள். பின்னவன், தனது நாவன்மையினால் புகழ் படைத் திருந்தான். இவ்விருவரும் சேர்ந்து, தாஸோஸ் முற்றுகையின் போது, ஸைமன் சரியாக நடந்துகொள்ளவில்லையென்றும், தாஸோஸுக்கு ஆதரவு அளித்துவந்த மாஸிடோனியா பிரதேசத்தை இவன் தாக்கி யிருக்க வேண்டுமென்றும், ஆனால் அப்பொழுது அந்தப் பிர தேசத்தை ஆண்டுகொண்டிருந்த அலெக்ஸாந்தர் (மகா அலெக் சாந்தரல்ல) மன்னனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தாக்காமல் விட்டுவிட்டானென்றும் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் இது ருஜுவாகவில்லை. இதனால் இவனை வீழ்த்த முடியவில்லை என்றாலும் வீழ்த்தச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸப்பார்ட்டா, இந்தச் சந்தர்ப்பத்தை அளித்தது.
ஸ்ப்பார்ட்டாவில் 464-ஆம் வருஷம் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ஸ்ப்பார்ட்டா நகரம் பூராவும் அழிந்துவிட்டது. ஐந்து வீடுகள் மட்டுமே மிஞ்சி நின்றன. ஆயிரக்கணக்கான பேர் உயிர் துறந்தனர். இதுதான் தாங்கள் விடுதலை பெறுவதற்குச் சமயமென்று ஹெலட்டுகள் கலகத்திற்குக் கிளம்பினார்கள் இவர்களோடு பெரியீஸ்கள் என்ற மத்திய வகுப்பினரிற் சிலரும் சேர்ந்து கொண்டனர். மெஸ்ஸீனியா பூராவும் இந்தக் கலகம் பரவியது. ஆரம்பத்தில் கலகக்காரர்களுக்குச் சில வெற்றிகள் கிடைத்தன. முந்நூறு ஸ்ப்பார்ட்டர்களைக் கொல்வித்தார்கள். ஆனால் ஸ்ப்பார்ட்டர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. கலகக்காரர்களைத் துரத்திச் சென்றார்கள். மெஸ்ஸீனியாவிலுள்ள இஸ்த்மஸ் என்ற ஓரிடத்தில் இரு தரப் பினருக்கும் சந்திப்பு ஏற்பட்டது. கலகக்காரர்கள் முதுகு காட்டிக் கொண்டு ஓடிப்போனார்கள். ஓடிப்போய் இத்தோமி என்ற இடத்தி லிருந்து இவர்களை அப்புறப்படுத்த ஸ்ப்பார்ட்டர்கள், சுமார் இரண்டு வருஷ காலம் வெகுவாக முயன்றார்கள். முடியவில்லை. முற்றுகையிட்டு வெற்றி காண்பதில் ஆத்தீனியர்கள் தான் கெட்டிக் காரர்கள்; ஸ்ப்பார்ட்டார்களுக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது.
எனவே 462-ஆம் வருஷம் ஆத்தென்ஸின் உதவியை நாடினார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். ஆத்தீனிய ஜனசபையில் இதைப் பற்றி வாதம் நடைபெற்றது. தாஸோஸுக்கும் ஆத்தென்ஸுக்கும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தாஸோஸுக்கு உதவியனுப்ப முன்வந்தது ஸ்ப்பார்ட்டா. ஆனால் முடியவில்லை. மற்றும் அந்தச் சமயம் பார்த்து, அட்டிக்காவையும் தாக்க முயன்றது. அதுவும் பலிக்கவில்லை. இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, ஸ்ப் பார்ட்டாவுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாதென்று கூறினர் ஜனக்கட்சியினர்.
ஆனால் ஸைமன், நிதானமாகவும் ஆனால் அழுத்தமாகவும், ஸ்ப்பார்ட்டாவுக்கு உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னான். ஸ்ப்பார்ட்டாவும் ஆத்தென்ஸும், கிரீஸின் இரண்டு கால் களென்றும், ஸ்ப்பார்ட்டா விழுந்துவிட்டால் கால் நொண்டியாகிவிடுமென்றும், ஸ்ப்பார்ட்டாவும் ஆத்தென்ஸும் கிரீஸ் என்னும் வண்டியை இழுத்துச் செல்லும் இரண்டு காளைகள் என்றும், தன்னுடைய சகாவான ஸ்ப்பார்ட்டாவை ஆத்தென்ஸ் இழந்து விடக்கூடாதென்றும், இப்படிப் பல உதாரணங்கள் மூலம் ஜனசபையின் மனத்தை ஸ்ப்பார்ட்டா பக்கம் திருப்பினான். ஜன சபையும் இவனுடைய அபிப்பிராயத்திற்கு இணங்கியது. இவனுடைய தலைமையிலேயே, நாலாயிரம் பேர் கொண்ட ஒரு காலாட் படையை ஸ்ப்பார்ட்டாவின் உதவிக்கு அனுப்பச் சம்மதித்தது. இந்தச் சம்பவத்தினால் ஸைமனுடைய செல்வாக்கு இன்னும் குறையாமலே இருந்து வந்ததென்பது நன்கு புலனாகும். இவனும் மேற்சொன்ன காலாட்படையுடன் 462-ஆம் வருஷம் இத்தோமியை நோக்கிச் சென்றான்.
சென்று என்ன பயன்? இத்தோமியைக் கைப்பற்றவோ, ஹெலட்டுகளைப் பணியச் செய்யவோ இவனால் முடியவில்லை. இவனிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்பட்டதோ அது நிறைவேறா மற் போகவே, ஸ்ப்பார்ட்டா, இவன்மீது சந்தேகங்கொண்டு, எவ்வித காரணமும் சொல்லாமல், நிர்த்தாட்சண்யமாக இவனை, இவன் கொண்டு சென்ற படையுடன் திருப்பியனுப்பிவிட்டது.
ஸ்ப்பார்ட்டாவுக்கு எவ்வித உரிமையும் செய்யக்கூடாதென்று ஜனக்கட்சியினர் கூறியது சரியாகிவிட்டது. தவிர, ஸைமன், ஸ்ப் பார்ட்டாவுக்குச் சென்றிருந்த சமயம், எபியால்ட்டீஸும் பெரிக் ளீஸும், ஜனசபையில் தங்களுக்கிருந்த செல்வாக்கைக் கொண்டு, ஆத்தென்ஸின் அரசியலமைப்பில் சில முற்போக்கான சீர்திருத்தங் களைச் செய்வித்து, அமுலுக்கும் கொண்டு வரச்செய்து விட்டனர். இவை ஸைமனுக்குப் பிடிக்கவில்லை. ஸ்ப்பார்ட்டாவி லிருந்து திரும்பி வந்ததும், இவற்றை எதிர்த்துப் பேசினான். இவன் செல் வாக்கு குன்றியது. இதற்கெதிராக, எபியால்ட்டீஸ், பெரிக்ளீஸ், இவ்விருவருடைய செல்வாக்கு மேலும் அதிகரித்தது. இந்தச் செல் வாக்கைக் கொண்டு ஸைமனை 461-ஆம் வருஷம் தேசப் பிரஷ்டம் செய்வித்தார்கள்.
ஸைமன், நாட்டுக்குப் புறத்தியான சில மாதங்களுக்குள் எபியால்ட்டீஸ் கொலை செய்யப்பட்டுவிட்டான். இவன்மீது வெறுப்புக் கொண்டிருந்த பணக்காரர் சிலருடைய தூண்டுதலின் பேரில் பியோஷ்யாவைச் சேர்ந்த அரிஸ்ட்டோடிக்கஸ் என்ற ஒருவன், இவனைக் கொன்றானென்பர். எப்படியோ, இந்தக் கொலைக்குப் பிறகு, பணத்தையும் பரம்பரையையும் பின்புலமாகக் கொண்டு அரசியலில் ஆதிக்கம் வகித்து வந்தவர்களுடைய, அதாவது ஒரு சிலருடைய ஆட்சியே நடைபெற வேண்டுமென்ற கொள்கையினருடைய செல்வாக்கு மங்கிப்போய்விட்டது. திரும்பவும் இவர்கள் அதிகாரபீடத்தில் அமர்வது அசாத்தியமாகி விட்டது. ஜனக்கட்சியின் செல்வாக்கு ஓங்கிநின்றது. பெரிக்ளீஸ், இதன் தலைவனானான்.
உரமூட்டிய இருவர்
1. எபியால்ட்டீஸின் சேவை
பல திருப்பங்களைக் கடந்து முற்போக்கடையும் ஒரு நாடு தான் சிரஞ்சீவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் திருப்பங்கள், பெரும்பாலும் அந்த நாட்டின் சரித்திரத்தில் இடம் பெற்று விடுகின்றன; ஆனால் இந்தத் திருப்பங்களுக்குக் காரணமா யிருந்தவர்களில் பெரும்பாலோர் இடம் பெறுவதில்லை. ஒரு சிலருக்குத்தான் இந்தப் பாக்கியம் கிட்டுகிறது. பெரும் பாலோர், அகாலத்தில் மறைந்துபோய் விடுகிறார்கள்; அல்லது மறக்கப்பட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட அபாக்கியசாலிகளுள் ஒருவன் எபியால்ட்டீஸ்.
“கொலை செய்யப்படுகிற வரையில் இவன்தான் ஜனக் கட்சியின் தலைவனாயிருந்தான். பெரிக்ளீஸ் இவனுக்குக் கீழ்ப்பட்ட வனாகவே இருந்தான். (ஜனசபையில்) மெஸ்ஸீனியப் பிரச்னை வாதத்திற்கு வந்தபோது, இவன்தான் (ஸ்ப்பார்ட்டாவின் உதவிக்குச் செல்லக் கூடாதென்று) எதிர்க்கட்சி பேசியவன், பெரிக்ளீஸ் அல்ல. (ஒழுங்கீனத்திற்காக) அரியோபாகஸ் அங்கத்தினர்கள் மீது வழக்குகள் தொடுத்து நடத்தியவன் இவனே. இதன் விளைவாக, அரியோபாகஸ் சபையையே கண்டித்தான். இந்த அரியோபாகஸ் சபைக்கு இருந்த சில விசேஷ அதிகாரங்களை ரத்து செய்துவிட்டு சட்டங்களை இயற்றியவனும் இவனே; பெரிக்ளீஸ் அல்ல.” உண்மையில் ஆத் தென்ஸ் பரிபூரண ஜனநாயக பாதையில் திரும்பு வதற்கு இவனே முதற்காரணமாயிருந்தவன். ஆயினும் இவன் விஷயத்தில் சரித்திரம் மௌனம் சாதிக்கிறது. பிற்காலத்தவருக்கு இவன் மங்கலான ஒரு நட்சத்திரம் போலவே புலப்படுகிறான். இவனுக்குப் பிறகு பெரிக்ளீஸ் அடைந்த கீர்த்தியின் பிரகாசம் இவனை எப்படி மங்கச் செய்து விட்டது.
இவன் தந்தையின் பெயர் ஸோபோனிடீஸ் என்றும், இவன் மிக ஏழையாயிருந்தபோதிலும், மிக நேர்மையுடையவனாயிருந்தா னென்றும், தனது அரசியல்விரோதிகளை எதிர்ப்பதில் கொஞ்சங் கூட தயை தாட்சண்யம் பாராதவனென்றும், இப்படிப்பட்ட சில விவரங்களே இவனைப் பற்றித் தெரிகின்றன.
2. பெரிக்ளீஸின் வாழ்க்கை
எபியால்ட்டீஸ் கொலையுண்ட பின்னரே, பெரிக்ளீஸ் ஜனக் கட்சியின் தலைவனானன். அப்பொழுது இவனுக்குச்சுமார் முப்பது வயது இருக்கும். இதற்குப்பிறகு சுமார் முப்பது வருஷ காலம் ஆத்தென்ஸின் அரசியலில் இவனுடைய சர்வாதிக்கமே மேலோங்கி நின்றது. இந்த முப்பது வருஷ காலத்தில், மூன்று தலைமுறைகள் சேர்ந்து சாதிக்கக்கூடிய காரியங்களைக் காட்டிலும் அதிகமாக ஆத்தென்ஸ் சாதித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவன் வாழ்ந்த காலத்தையும் அதற்கு முந்தியும் பிந்தியும் சேர்த்து மொத்தம் சுமார் எண்பது வருஷ காலத்தை ‘பெரிக்ளீய யுகம்’ என்று சரித்திராசிரியர்கள் அழைப்பார்கள். கிரேக்க சரித்திரத்தின் ‘தங்கமான காலம்’ என்று அழைக்கப்படுவது இந்த யுகத்தைத்தான்.
இந்த யுகத்தில், கிரீஸின் லௌகிக வாழ்க்கையிலாகட்டும், பாரமார்த்திக வாழ்க்கையிலாகட்டும் இவனுடைய ஆதிக்கத்தின் சாயல் படிந்திருந்தது. அப்பொழுது விகாசமடைந்துவந்த கிரேக்க நாகரிகத்தின் பல்வேறு அமிசங்களும் இவனிடம் குடிகொண்டி ருந்தன. கிரீஸ் தோற்றுவித்த பெரியோர் பலருள்ளும் இவன் ஒருவனே முழு மனிதனாக விளங்கினான் என்னும் கருத்துப்பட ஓர் ஆசிரியன் கூறுகிறான். கிரேக்கர்களில் பெரும்பாலோர் இவனைத் தெய்வப்பிறவியென்று போற்றி வந்ததில் ஆச்சரியமென்ன இருக்கிறது?
நற்குடிப் பிறப்பு, நல்லொழுக்கம், பரந்த அறிவு, இவை யாவும் ஒருங்கே அமையப் பெற்றவன் பெரிக்ளீஸ். இவன் தந்தைதான், ஸாலாமிஸ் போரில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட, மிக்காலி யுத்தத்தில் கடற்படைப் பகுதிக்குத் தலைமை தாங்கிய ஜாந்திப்பஸ்; தாயார் அகரிஸ்ட்டே. இவள் கிளைஸ்த்தனீ புஸின் மருமகள். பெரிக்ளீஸின் தோற்றம், பேச்சு, குரல் எல்லாவற்றிலும் பீசிஸ்ட் ராட்டஸை ஒத்திருந்தானென்பர் இவனை நேரில் கண்டறிந்தோர். இவன் எந்த வருஷம் பிறந்தானென்பது நிர்ணயமாகத் தெரிய வில்லை. ஆனால் மாரத்தான் யுத்தத்தின் போது இவனுக்கு மூன்று வயது என்பர்.
இவன் இளமையில் கற்க வேண்டிய கலைகள் பலவற்றையும் ஒழுங்காகக் கற்றான். அப்பொழுது ஆத்தென்ஸின் சிறந்த இசைப் புலவனென்று பெயரெடுத் திருந்த டேமன் என்பவனிடம் இசை பயின்றான். ஜீனோ (உத்தேச காலம்: 488 - 420) என்ற தத்துவ ஞானியின் உபதேசங்களை இவன் அடிக்கடி செவிமடுத்து வந்தா னென்று தெரிகிறது. ஆனால் இவன் உள்ளத்தை அசைத்துக் கொடுத்தவன், அந்த உள்ளத்தின் மீது ஆதிக்கங் கொண்டவன் அனக் ஸாகோரஸ் என்ற ஞானி.
அனக்ஸாகோரஸுடன் நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்ததன் விளைவாக, அவனிடம் பயின்றதன் பயனாக, பெரிக்ளீஸ், எதைப் பற்றியும் சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். தனது ஆசிரியனைப் போலவே, சாதாரண ஜனங்கள் மத சம்பந்தமாகக் கொண்டிருந்த நம்பிக்கைகள் முதலியவைகளுக்கெல்லாம் அப்பாற் பட்டவனாயிருந்தான். இப்படிப்பட்ட சுய சிந்தனையாளர்களை, அறிவுக்கண்கொண்டு எதையும் பார்க்கவேண்டுமென்று கூறிய வர்களை, ஜனங்கள் வெறுத்து வந்தார்கள். ஆனால் பெரிக்ளீஸ், இந்த வெறுப்புக்கும் அப்பாற்பட்டவனாயிருந்தான். ஜனங்கள் இவனிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்தபடியால், இவன் பார்வையிலே ஒருவித ஆழம், சொல்லிலும் செயலிலும் ஒருவித நிதானம் முதலியன இருந்தன. சுருக்கமாக அரச ஞானியென்று சொல்லலாம் போலிருந்தது இவனது நடக்கை. இதற்கு ஒரு சிறு உதாரணத்தை மட்டும் இங்குத் தரவிரும்புகிறோம். ஒருசமயம், பகிரங்கமான ஓரிடத்தில் இவன் அரசாங்க அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது யாரோ ஒருவன் - இவனது ஆட்சி முறையை விரும்பாதவன் போலும் - இவனைக் கண்டபடி தூஷித்துக் கொண்டேயிருந்தான். பொழுது சாய்ந்தது. பெரிக்ளீஸ், வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான். கூடவே அந்த இழிஞனும் தொடர்ந்தான். தூஷணையை அப் பொழுது விடவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பெரிக்ளீஸ், தன் வேலையாள் ஒருவனைக் கூப்பிட்டு, “இவன் வீட்டுக்குச் செல்ல வெளிச்சம் வேண்டும். ஆதலின் ஒரு தீவட்டி எடுத்துக் கொண்டு போ” என்று கட்டளையிட்டான்.
பரம்பரைப் பெருமையுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த வனாயிருந்த போதிலும், பெரிக்ளீஸ் ஆடம்பரமில்லாமலும் சிக்கன மாகவுமே வாழ்ந்து வந்தான். சாதாரண ஜனங்களின் நன்மைக்கும் உரிமைக்குமே பாடுபட்டான். ஆனால் அவர்கள் மத்தியில் அடிக்கடி வந்து புழங்கமாட்டான். சிறிது ஒதுங்கினாற் போலவே இருப்பான். ஆட்சி நடத்துவோர், பொதுஜனங்கள் கண்ணில் அடிக்கடி பட்டுக் கொண்டிருந்தால், அந்த ஆட்சியின்மீது அவர்கள் கொண்டுள்ள மதிப்புக்குப் பங்கம் ஏற்படுதல் கூடுமென்பது இவன் கொள்கை போலும். சந்தை கூடும் சதுக்கத்திற்குப் போகும் பாதை, ஜனசபைக்குச் செல்லும் பாதை ஆகிய இவ்விரண்டு பாதைகள் மட்டுமே இவன் நடையை அறியும். சடங்குகள், விருந்துகள், நாடகங்கள் முதலிய வற்றில் அதிகமாகக் கலந்து கொள்ள மாட்டான். ஒரே ஒரு சமயம், இவனது நெருங்கிய உறவினன் ஒருவனுடைய வீட்டில் விவாகம் நடைபெற்றது. அதற்குச் சென்று, சிறிது நேரம் இருந்து திரும்பி விட்டான்.
பெரிக்ளீஸ், ஒரு சிறந்த நாவலன். இந்த விஷயத்தில், இவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இவன் காலத்தில் இல்லையென்றே கூறுவர். தன்னிடத்தில் விரோத மனப்பான்மை கொண்டிருக்கிற பெருங் கூடத்தைக் கூட, பேச்சினால், தனக்குச் சாதகமாயிருக்கிற கூட்ட மாகச் செய்து கொண்டுவிடுவான். ஜனங்களை வசீகரிக்கும் சக்தி, இவன் உதட்டில் வாசஞ் செய்து கொண்டிருந்ததென்று ஓர் அறிஞன் கூறுகிறான். இவன் பேச்சு, சாதாரண ஜனங்களுக்கு மட்டுமல்ல, அறிஞர்களுக்கும் நல்விருந்தாக இருக்கும். இவன் சிந்தனையில் தெளிவு இருந்தது; அதனால் பேச்சிலும் தெளிவு இருந்தது. விஷயங்களைக் கோவையாகச் சொல்லிக்கொண்டு போவதிலும், உணர்ச்சிப் பெருக்கில் தன்னை இழந்துவிடாமல் அறிவோடு ஒட்டிப் பேசுவதிலும் இவனுக்கு நிகர் இவனேதான். இவன் பேச்சு, மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் இருக்குமென்று அரிஸ்ட்டோபனீஸ் என்ற நாடகா சிரியன் குறிப்பிடுகிறான். மழை பொழிவது போலவும், இருக்கு மென்று நாம் சேர்த்துக் கூறலாம். இவன், பேசச் செல்வதற்கு முன்னர், என்ன பேசவேண்டுமென்பதைத் தயாரித்துக் கொண்டு செல்வான். பேச நின்றதும், தன் வாயிலிருந்து பொருத்தமில்லாத வார்த்தைகள் வரக்கூடாதென்று பிரார்த்தனை செய்து கொள்வான். தவிர, அடிக்கடியும் பேசமாட்டான். எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசமாட்டான். முக்கியமான விஷயத்தைப் பற்றித்தான், அவசிய மிருந்தால்தான் பேசுவான். இதனால் இவனு டைய பேச்சை, ஜனங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.
இவனுடைய நாவன்மைக்கு அடுத்தபடியாக இவனது நேர்மையைக் குறிப்பிட வேண்டும். தன் சொந்த நலனுக்காக, இவன் பொதுப் பணத்தைக் கையாண்டதே கிடையாது. தெமிஸ்ட் டோக்ளீஸ், அரசியல் துறையில் ஏழையாக இறங்கினான்; பணக்காரனாகக் கரை யேறினான். பெரிக்ளீஸோ, அரசியல் வாழ்வில் பிரவேசித்தபோது எவ்வளவு பிதிரார்ஜித சொத்துடையவனாக இருந்தானோ அவ் வளவுதான் கடைசிவரையில் உடையவனாயிருந்தான். இந்த விஷயத்தில் இவனை அரிஸ்ட்டைடீஸுக்கு அடுத்தபடியாக சொல்ல வேண்டும். ஆனால் பொதுநலத்திற்காக என்று சொல்லி, பொதுப் பணத்தைத் தாராளமாகச் செலவழித்தான். துர்வினியோகப் படுத்தினான் என்று இவனுடைய அரசியல் விரோதிகள் இவன்மீது குற்றஞ்சாட்டினர். இதனால் இவனுக்குக் கடைசியில் சில சங்கடங் களும் ஏற்பட்டன.
நாவன்மையும் நேர்மையும் ஒருங்கே பெற்றிருந்தமையால் தான் இவன், அரசியலில் பிரவேசித்துச் செல்வாக்குப் பெற்றுக் கொண்ட சிறிது காலங்கழித்து, ஜனங்களிடத்தில் காணப்பெறும் குற்றங் குறைகளைத் தைரியமாக எடுத்துச் சொன்னான்; அவர்க ளுடைய விருப்பு வெறுப்புக்களைப் பொருட்படுத்தவே யில்லை. இவனை எதிர்க்கவும் அஞ்சினர், அரசியலில் இவனுக்கு மாறு பட்டோர்.
ஆத்தென்ஸின் அரசியலில், வருஷந்தோறும் பத்து படைத் தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்ற ஒரு நியதி இருந்த தல்லவா, இதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு படைத்தலைவனே பெரிக்ளீஸ். இதுதான் இவன் வகித்த உயர்பதவி. ஆனால் இவன் திரும்பத் திரும்ப இந்தப் பதவிக்குத் தெரிந்தெடுக்கப்பட்hன். 443-ஆம் வருஷத்திலிருந்து 429-ஆம் வருஷம் வரை தொடர்ந்தாற் போல் இந்தப் பதவியை வகித்துவந்தான். இதனால் இந்த பதவிக்கே ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டுவிட்டது; ஏற்படுத்திக் கொடுத்தான் இவன். ராணுவ நிருவாகத்தில் மட்டுமல்ல. மற்ற அரசாங்க விவகாரங் களிலும் இவனுடைய ஆதிக்கமே மேலோங்கி நின்றது. சர்வாதிகாரி போல் ஆண்டான். இப்படிச் சொல்வதைக் காட்டிலும், ஜனநாயகக் குதிரைக்குச் சர்வாதிகாரக் கடிவாளம் பூட்டி ஓட்டினான் என்று சொல்வது முற்றிலும் பொருத்தமாக இருக்கும். இதனால்தான் இவனுடைய ஆதிக்க காலத்தில், ஆத்தென்ஸ், ஜனநாயக ஆட்சியின் கீழ் அடையக்கூடிய சாதகங்களையும் அடைந்துவந்தது. ஜனநாயக சக்தியின் விறுவிறுப்பும், சர்வாதிகார சக்தியின் கட்டுப்பாடும் கைகுலுக்கின இவன் காலத்தில். ஆத்தென்ஸ், ஒன்றா, இரண்டா, பல துறைகளில் முன்னேற்ற மடைந்தது. இந்த முன்னேற்றத்தைக் கண்டு உலகமே பிரமித்து நின்றது.
சுருக்கமாக, கிரேக்க நாகரிகம், வளர்பிறைச் சந்திரனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் தேய்பிறை தொடங்கிவிடுமோ என்று பயப்படும்படியாக இருந்தது இந்த வளர்பிறையின் பிரகாசம். ஆம்; தேய்பிறை தொடங்கியே விட்டது, ஸாக்ரட்டீஸ் மரணத்திலிருந்து. இந்தத் தேய்வு, பின்னர் ஏற்படப் போகிறதென்று சூசகமாகக் காட்டுவது போலிருந்தது. வளர்ச்சியின் ஆரம்பம். இந்த ஆரம்பத்திற்கு, அதாவது பெரிக்ளீஸின் ஆதிக்க ஆரம்பத்திற்கு இப்பொழுது வருவோம்.
சில்லரைப் பூசல்களும் சமரஸமும்
1. யுத்தத்திற்கு முதல் மணி
ஸைமனையும் அவன் படையையும் ஸ்ப்பார்ட்டா திருப்பி யனுப்பி விட்டதல்லவா, அஃது ஆத்தென்ஸுக்கு அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணியது. உடனே, இருபது வருஷங்களுக்கு முந்தி 481-ஆம் வருஷம் - பாரசீகப் படையெடுப்பைச் சமாளிக்க வேண்டி, ஸ்ப்பார்ட்டாவுடன் சேர்ந்து கொண்டிருந்த கூட்டிலிருந்து 461-ஆம் வருஷம் விலகிக்கொண்டுவிட்டது. விலகிக்கொண்ட தோடு மட்டு மல்லாமல், இதே வருஷத்தில் ஸ்ப்பார்ட்டாவின் பரம விரோதிக ளான ஆர்க்கோஸுடனும் தெஸ்ஸாலியுடனும் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டது. பெலொப்பொனெசிய யுத்தத்திற்கு முதல் மணி அடிக்கப்பெற்றது.
ஆத்தென்ஸுக்கும் கொரிந்த்தியாவுக்கும் எப்பொழுதுமே வியாபாரப் போட்டி இருந்து வந்ததல்லவா, இந்தப் போட்டியைச் சமாளிக்க வேண்டி, லோக்ரிஸ் பிரதேசத்தின் தென்மேற்குப் பகுதி யிலுள்ள நவ்ப்பாக்ட்டஸ் என்ற ஊரை, ஆத்தென்ஸ் கைப்பற்றிக் கொண்டு அதனை ஒரு கடற்படைத் தளமாக்கியது. இதன் மூலம், கொரிந்த்திய வளைகுடாவின் முகத்துவாரப்பகுதி முழுவதும் இதன் செல்வாக்குக்குட்பட்டதாகிவிட்டது. இது கொரிந்த்தியாவுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. ஏனென்றால், மேற்குப் பக்கத்தில் இது செய்து வந்த வியாபாரத்தை ஆத்தென்ஸ், இப்பொழுது தடை செய்துவிடக் கூடுமல்லவா?
இப்படியிருக்கையில், கொரிந்தியாவுக்கும், மெகாராவுக்கும் எல்லைப்புறத் தகராறு ஏற்பட்டது. இரண்டும் பெலொப் பொனேசிய சமஷ்டியின் அங்கத்தினர் களாயிருந்த போதிலும், சுமுகமாக இந்த மனஸ்தாபத்தைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. கொரிந்த்தி யாவோ வலுவுள்ள ராஜ்யம். எனவே, மெகாரா, மேற்படி பெலொப் பொனேசிய சமஷ்டியிலிருந்து விலகிக்கொண்டு, ஆத்தென்ஸின் பாதுகாப்பை நாடியது. ஆத்தென்ஸும் மிக மகிழ்ச்சியுடன் பாது காப்பளிக்க முன்வந்தது. 459-ஆம் வருஷம் மெகாராவுடன் சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டது.
செய்துகொண்டதும், முதற்காரியமாக, மெகாரா நகரப் பகுதிக்கும், சுமார் ஒரு மைல் தொலைவிலிருந்த அதன் துறைமுகப் பகுதியாகிய நிஸீயா என்னுமிடத்திற்கும் இடையே இரட்டை வரிசையில் நீண்ட சுவர்கள் எழுப்பி, இரண்டையும் ஓர் அரணுக் குட்பட்ட பிரதேசமாக இணைத்து, இங்குத் தன் படையொன்றைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. இதே பிரகாரம் மெகாராவின் மேற்குப் பக்கத்திலுள்ள பாகீ என்னும் துறைமுகப்பட்டினத்தை தனது கடற்படை தளமாக்கிக் கொண்டது. இப்படியெல்லாம் பந்தோபஸ்து செய்ததன் நோக்க மென்னவென்றால், பெலொப் பொனேசியாவிலிருந்து யாரேனும் ஆத்தென்ஸ் மீது படையெடுத்து வருவார்களானால் அவர்கள் மெகாராவை, வழியாக உபயோகிக்கக் கூடாதென்பதற்குத்தான். சுருக்கமாக, ஆத்தென்ஸ், மெகாராவை முன்னணிப் பாதுகாப்பு ஸ்தலமாக உபயோகித்துக் கொண்டது.
இதே சமயத்தில், ஆத்தென்ஸ், வேறொரு பக்கம் தன் கவனத்தைச் செலுத்த வேண்டியதாக ஏற்பட்டது. எகிப்து, 525-ஆம் வருஷத்தி லிருந்து, பாரசீக ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. இந்த ஆதிக்கத்தை எதிர்த்து 462-ஆம் வருஷம் அங்கு ஒரு கலகம் கிளம்பியது. இதற்குத் தலைவன், இனாரோஸ் என்ற லிபியா தேசத்து அரசன். இவனுக்கு ஆரம்பத்தில் சில வெற்றிகள் கிடைத்தன. ஆயினும், கடலாதிக்கம் பெற்ற ஒரு ராஜ்யத்தின் துணை தனக்கு அவசியம் தேவை யென்றும், அது கிடைக்காவிட்டால், தான் இறுதியில் தோல்வியடைவது நிச்சய மென்றும் இவன் உணர்ந்தான். எனவே ஆத்தென்ஸின் உதவியைக் கோரினான். பாரசீகத்திற்கு ஒரு நல்ல பாடங்கற்பிக்க, இதைவிட வேறு நல்ல தருணம் எங்கே வாய்க்கப்போகிறதென்று, ஆத்தென்ஸ் உதவி செய்ய முன்வந்தது. இதற்குத் தகுந்தாற்போல், ஸைப்ரஸ் தீவுக்கருகில் சுமார் இருநூறு கப்பல்களைக் கொண்ட ஆத்தீனியக் கடற்படையொன்று தங்கியிருந்தது. இந்தக் கடற்படை சுமார் ஐம்பதினாயிரம் துருப்புகளுடன் 460-ஆம் வருஷம் இனாரோஸின் உதவிக்குச் சென்றது. சென்று அடுத்த வருஷம் மெம்ப்பீஸ் என்ற நகரத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஆயினும் பாரசீகப் படையை முறியடிக்க முடியவில்லை. அது, மேற்படி மெம்ப்பிஸ் நகரத்தின் ஒரு பகுதியிலுள்ள வெண்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தது. அந்தக் கோட்டையை முற்றுகையிட்டன ஆத்தீனியப் படையும் இனாரோஸ் படையும் சேர்ந்து. சுமார் இரண்டு வருஷ காலத்திற்கு அதிகமாக இந்த முற்றுகை நடைபெற்றது. இது நடைபெற்றுக் கொண்டிருக்கட்டும். மெகாரா பக்கம் சென்று பார்ப்போம்.
ஆத்தென்ஸ், மெகாராவில் பந்தோபஸ்து செய்துகொண்டு வந்ததல்லவா, அதைக் கண்டு பெலொப்பொனேசியாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ப்பார்ட்டா, இத்தோமி முற்றுகையில் ஈடுபட்டி ருந்ததால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்துக்கொள்ள முடிய வில்லை. கொரிந்த்தியா சும்மாயிருக்குமா? ஆத்தென்ஸ் மீது யுத்தந் தொடுத்தது கொரிந்த்தியாவுடன் எஜீனோ சேர்ந்து கொண்டது. எஜனோ, ஆத்தென்ஸின் பரம்பரை வியாதியென்பதும், ஆனால் இடையில் பாரசீகத்திற்கு விரோதமாக ஏற்பட்ட கூட்டில் ஆத்தென்ஸுடன் கலந்து கொண்டிருந்ததென்பதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். தற்காலிகமாக ஏற்பட்ட இந்தக் கூட்டுறவைப் புறக்கணித்துவிட்டு, எஜீனா, கொரிந்த்தியாவுடன் சேர்ந்து கொண்டது. இப்படிச் சேர்ந்துகொண்டது தற்காப்பு நிமித்தமாகத் தான். ஏனென்றால், கொரிந்த்தியா, கிரிஸீன் மேற்குப் பக்கத்தில் அதிக வியாபாரஞ் செய்து வந்தது போல, எஜீனா, கிழக்குப் பக்கத்தில் அதிக வியாபாரஞ் செய்து வந்தது. இந்த யுத்தத்தில், கொரிந்த்தியா தோல்வியடைந்து விடுமானால், ஸாரோனிக் வளைகுடா (எஜீனா, ஸாலாமிஸ் ஆகிய தீவுகள் உள்ள ஜல பாகம்) முழுவதிலும் ஆத் தென்ஸின் ஆதிக்கம் ஓங்கி நிற்கும். அது, தன்னு டைய வியா பாரத்தைப் பாதிக்கும் என்று அஞ்சியது. இதனால்தான், அதாவது, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான், எஜீனா, கொரிந்த்தியா வுடன் சேர்ந்து கொண்டது. இவைகளோடு வேறு சில பெலொப் பொனேசிய ராஜ்யங்களும் சேர்ந்து கொண்டன. இவற்றிற்கும் ஆத்தென்ஸுக்கும் யுத்தம் மூண்டது. ஆரம்பத்தில் கடலிலும் தரையிலுமாகச் சில்லரைச் சண்டைகள் சில நடை பெற்றன. கடைசி யில் 458-ஆம் வருஷம் எஜீனாவுக்கருகில் ஒரு பெரிய கடற்போர் நடைபெற்றது. இதில் ஆத்தென்ஸ் வெற்றி யடைந்தது. பெலொப் பொனேசியக் கப்பல்கள் எழுபதுக்கும் மேல் சேதமடைந்தன.
வெற்றி கொண்ட ஆத்தென்ஸ், எஜீனாவில் ஒரு பெரும் படையைக் கொண்டுவந்து இறக்கி, நகரத்தை முற்றுகையிட்டது. இந்த முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கொரிந்த்தியா, மெகாராவின் மீது படை யெடுத்தது. ஆத்தென்ஸின் கவனத்தை மெகாராவின் பக்கம் திருப்பிவிட்டால் எஜீனா முற்றுகையை அது கலைத்துவிடுமென்று எண்ணியே இப்படிச் செய்தது. தவிர, இந்தச் சமயம் ஆத்தீனிய சைன்னியத்தில் ஒரு பெரும்பகுதி எகிப்துக்குச் சென்றிருந்ததல்லவா, இதனால் ஆத்தென்ஸின் படைபலம் மிகவும் குறைந்து போயிருக்குமென்றும், மெகாராவில் தான் சுலபமாக வெற்றி காண முடியு மென்றும் கொரிந்த்தியா கருதியது. ஆனால் இது கனவாகவே ஆகிவிட்டது. ஆத்தென்ஸுக்கு அப்பொழுது ஏற்பட்டிருந்த புதிய சக்தியை இது சரியாகத் தெரிந்து கொள்ள வில்லை.
மெகாராவின் மீது கொரிந்த்தியா படையெடுத்திருக்கிற தென்று கேள்வியுற்றதும், ஆத்தென்ஸ், ராணுவப்பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இளைஞர்கள், ராணுவ சேவை முடிந்து விலகி யிருந்த கிழவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்களைக் கொண்ட ஒரு விசேஷப் படையைத் திரட்டி மைரோனிடீஸ் என்பவனுடைய தலைமையில் மெகாராவுக்கு அனுப்பியது. இந்தக் கலப்புப் படையைக்கூட எதிர்த்து நிற்க முடியவில்லை கொரிந்த்தியப் படையினால். பின்வாங்கிக் கொண்டு விட்டது. ஊர் சென்றதும், ஜனங்கள், ‘இந்தச் சாதாரணப் படையைக் கூடவா எதிர்த்து நிற்க முடியவில்லை’ என்று ஏளனம் செய்தார்கள். இந்த அவமானத்தைச் சகிக்க முடியாமல், கொரிந்த்தியப் படையானது மீண்டும் ஆவேசத் துடன் சென்று ஆத்தீனியப் படையைச் சந்தித்தது. என்ன பயன்? தோல்விதான் கிடைத்தது. தோல்வி மட்டுமல்ல, படையின் ஒரு பகுதி, தனியாக ஓரிடத்தில் அகப்பட்டுக் கொண்டு அப்படியே ஆத்தீனியப் படையினால் அழிக்கப்பட்டுவிட்டது.
இந்த வெற்றிகளினால் ஆத்தென்ஸ் அதிக சந்தோஷம் பட்டு விடவில்லை. தனக்கு எப்பொழுதும் ஆபத்து உண்டென்பதை உணர்ந்திருந்தது. சிறப்பாக, ஸ்ப்பார்ட்டா, அதன் முழு பலத்துடன், தன்னை வந்து தாக்கக்கூடுமென்பதை நன்கு தெரிந்து கொண்டி ருந்தது. எனவே, தற்காப்புக்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்யத் தொடங்கியது. நகர்ப் பகுதியும் துறைமுகப் பகுதியாகிய பீரேயஸும் தனித்தனி அரண்களுக்குட்பட்டிருந்தனவல்லவா, இப்படித் தனித்தனியாக இருப்பது ஆபத்தென்பதை இப்பொழுது ஆத்தென்ஸ் உணர்ந்தது. சத்துருக்கள் படையெடுத்துவரின், அவர்கள் இரண்டு இடங்களுக்கும் நடுவில் வந்திருந்து கொண்டு, இரண்டுக் கும் தொடர்பில்லாமல் செய்துவிட முடியு மல்லவா? எனவே இரண்டு இடங்களையும் இணைத்து, ஓர் அரணுக்குட்பட்ட பிரதேசமாக இருக்கும்படிக்கு இரட்டை வரிசையில் நீண்ட சுவர்கள் எழுப்பப் பெற்றன. இந்த சுவர்வேலை, இரண்டு வருஷ காலம்- 458 முதல் 456-ஆம் வருஷம் வரை நடைபெற்றது. ஏற்கனவே மெகாராவில் பெற்றிருந்தது அனுகூலமாயிருந்தது ஆத்தென்ஸுக்கு. ஆயினும் இதற்காக எவ்வளவு பொருட் செலவு? எத்தனை பேருடைய உழைப்பு? பணக்காரக் கட்சியின் எதிர்ப்பு வேறே. ஆனால் பெரிக் ளீஸும் அவனது ஜனக்கட்சியினரும் இவைகளையெல்லாம் பொருட்படுத்தவில்லை. சுதந்திரத்துடன் வாழ விரும்புகிற ஒரு நாடு எப்பொழுதும் விழிப்புடனிருக்க வேண்டுமென்பதை நன்கு உணர்ந் திருந்தார்கள்.
ஆத்தென்ஸ் இங்ஙனம் அதிவேகமாக வலுப்பெற்று வருவதை ஸ்ப்பார்ட்டா எப்படிச் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஏதேனும் நடவடிக்கை எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தது. இத் தோமியில் ஹெலட்டுகள் இன்னமும் எதிர்ப்புக்காட்டி வந்தார்க ளாயினும், அவ்வளவு மும்முரமாக இல்லை. எனவே, ஆத்தென்ஸ் பக்கம் கவனஞ் செலுத்துவது இப்பொழுது அதற்குச் சாத்தியமா யிருந்தது.
வடக்கேயுள்ள தெஸ்ஸாலி, ஆத்தென்ஸ் பக்கம் சேர்ந்து கொண்டதனால், பியோஷ்யாவை அதற்கு - ஆத்தென்ஸுக்கு - விரோதமாகக் கிளப்பிவிட முனைந்தது ஸ்ப்பார்ட்டா. இந்த பியோஷ்யாவிலுள்ள சில்லரை ராஜ்யங்கள் பலவற்றையும் ஒரு கூட்டாக அமைத்து, இந்தக் கூட்டுக்குத் தலைமை வகித்திருந்தது தீப்ஸ் என்ற ஒரு சிறு ராஜ்யம், சுமார் முப்பது வருஷங்களுக்கு முந்தி, ஆனால் பாரசீகப் படையெடுப்பின் போது இந்தத் தீப்ஸ், பாரசீ கர்களுக்குப் பெருந்துணையாயிருந்தது. இதனால் பியோஷ்யாவில் இது வகித்திருந்த தலைமை ஸ்தானத்தை இழந்துவிட்டது. ஸ்ப்பார்ட்டாவும் ஆத்தென்ஸும் இதனைக் கேவலமாகக் கருதி நடத்தி வந்தன. ஆனால் இப்பொழுது இதே தீப்ஸுக்கு முக்கியத் துவம் கொடுத்து, பழைய மாதிரி பியோஷ்யாவுக்குத் தலைமை வகிக்கச் செய்து, அதன் மூலம் ஆத்தென்ஸுக்கு தொந்தரவு கொடுக்கத் தீர்மானித்தது ஸ்ப்பார்ட்டா. பியோஷ்யாவுக்குச் செல்ல, அதாவது படையனுப்ப, ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமே, அந்தக் காரணமும் இதற்குக் கிடைத்தது.
பியோஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் டோரிஸ் என்ற ஒரு சிறு ராஜ்யம் இருக்கிறது பாருங்கள். இதுதான் டோரியர்களின் பூர்விக வாசஸ்தலம். இங்கிருந்து வந்தவர்கள்தான் பெலொப் பொனேசியாவின் பல பாகங்களிலும் குடியேறினார்கள். இதனால் ஸ்ப்பார்ட்டர்கள், இதனை - டோரிஸை - தங்கள் தாய்நாடு போல கருதி இதனிடம் பக்தி செலுத்திவந்தார்கள்.
டோரிஸுக்கு மேற்கில் போசிஸ் என்ற மற்றொரு ராஜ்யம் இருக்கிறது பாருங்கள். இது, டோரிஸ் மீது படையெடுத்தது. இதனை எதிர்த்து நிற்கக் கூடிய சக்தியுடையதாக இல்லை டோரிஸ். எனவே ஸ்ப்பார்ட்டாவின் உதவியைக் கோரியது. இப்படிப்பட்ட ஒரு கோரிக்கையைத்தானே ஸ்ப்பார்ட்டா எதிர்பார்த்துக் கொண்டி ருந்தது? உடனே, பதினோராயித்தைந்நூறு பேர்கொண்ட ஒரு படையை - 457-ஆம் வருஷம் கொரிந்த்திய வளைகுடா மார்க்கமாக பியோஷ்யாவுக்கு அனுப்பியது. இந்தப்படையும் டோரிஸை அடைந்து, போசிஸ் படையை வெகு சுலபமாக விரட்டிவிட்டது.
ஆனால் இது வந்த நோக்கம் வேறல்லவா? முந்தி மாதிரி தீப்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் தலைமை ஏற்றுக் கொள்ளும்படி மற்ற பியோஷ்ய ராஜ்யங்களைக் கட்டாயப் படுத்தியது. இந்த ராஜ்யங்களில், ஸ்ப்பார்ட்டாவுக்குச் சாதகமா யிருக்கக்கூடிய மாதிரியான சர்வாதிகார அரசாங்கங்களை நிறுவியது. தீப்ஸையும் நன்றாக பந்தோபஸ்து செய்து கொடுத்தது. இவ்வளவையும் செய்துவிட்டு, ஸ்ப்பார்ட்டாவுக்குத் தரைமார்க்க மாகத் திரும்பும் உத்தேசத்துடன் பியோஷ்யாவின் தெற்குப் பக்கம் வந்து கொண்டிருந்தது.
ஸ்ப்பார்ட்டாவின் இந்த நடவடிக்கைகளை அறிந்து ஆத் தென்ஸ் கோபங்கொண்டது. அப்பொழுது ஆத்தென்ஸில் நகர்ப் பகுதியையும் துறைமுகப் பகுதியையும் இணைத்து நீண்ட சுவர்கள் எழுப்பும் வேலை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தச் சுவரெழுப்பும் வேலை, பணக்காரக் கட்சியினருக்குப் பிடிக்க வில்லை யென்று ஏற்கனவே சொல்லியிருக் கிறோமல்லவா? இந்தச் சுவர் வேலையையும் நிறுத்தி, ஜனநாயக அரசாங்கத்தையும் கவிழ்த்து விட வேண்டுமென்ற நோக்கத்துடன் இவர்கள் - இந்தப் பணக்காரக் கட்சியினர் சிலர் - பியோஷ்யாவில் தங்கியிருக்கும் ஸ்ப்பார்ட்டப் படைத்தலைவர்களுடன் ரகசியமாகச் சூழ்ச்சி செய்து கொண்டிருக் கிறார்களென்றும், மேற்படி ஸ்ப்பார்ட்டப் படையானது பெலொப் பொனேசியாவுக்குத் திரும்பிச் செல்லுகையில் ஆத்தென்ஸை ஒரு பார்வை பார்த்தாலும் பார்க்கக் கூடுமென்றும், இப்படிப் பல வதந்திகள் வேறே பெரிக்ளீஸின் காதில் விழுந்தன. இனிச் சும்மா யிருக்கலாமா?
சுமார் பதினாலாயிரம் பேர்கொண்ட ஒரு பெரும்படை பியோஷ்யாவை நோக்கிச் சென்றது. இந்தப்படையில், ஆத்தென் ஸுக்குக் கட்டுப்பட்ட சில ராஜ்யங்களின் படைகளும் சேர்ந்திருந்தன. தெஸ்ஸாலியிலிருந்து குதிரைப்படையொன்று வந்து கலந்து கொண்டது. இந்த ஆத்தீனியக் கூட்டுப் படையும் ஸ்ப்பார்ட்டப் படையும் பியோஷ்யாவின் தெற்கெல்லையிலிருக்கும் டானக்ரா என்னுமிடத்துக்கருகில் 457-ஆம் வருஷம் மே அல்லது ஜூன் மாதம் சந்தித்தன; போர் தொடங்கியது.
தொடக்கத்திற்கு முன்னர், ஆத்தீனியர்கள் பக்கம் திடீ ரென்று ஒருவன் தோன்றினான்; அவர்களுடன் சேர்ந்து போர் புரிய அனுமதி கோரினான். யார் இவன்? தேசப்பிரஷ்டம் செய்யப் பட்டிருந்த ஸைமன்! தேசப் பிரஷ்டத்தினால் இவனுடைய தேச பக்திக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதல்லவா? இந்தக் களங்கத்தை அகற்றிக் கொள்ள வேண்டுமென்பதே இவன் நோக்கம். இதற்காகவே அனுமதி கோரினான். ஆனால், ஆத்தீனியப் படைத்தலைவர்கள் இவனுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். இதற்காக இவன் சிறிதுகூட மனவருத்தங் கொள்ளாமல், தனது நண்பர்கள் சிலரை - சுமார் நூறு பேரை - போரில் கலந்துகொள்ளச் செய்தான். இவனுடைய இந்தத் தன்னலமற்ற செயலானது, பிரஷ்ட காலம் முடியு முந்தியே இவன் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வரவழைக்கப் படுவதற்கு அடிகோலியது. இதைப் பின்னர்க் காண்போம்.
டானக்ரா போர் மும்முரமாக நடைபெற்றது. இரு தரப்பிலும் பலத்த சேதம். ஸைமனுடைய நண்பர்கள் அத்தனை பேரும் போர்க் களத்தில் வீர மரணமெய்தினர். ஆத்தீனியர்களுக்குத் தோல்வி ஏற்பட்டது. இவர்கள் பக்கம் சேர்ந்திருந்த தெஸ்ஸாலி குதிரைப் படைவீரர், போர் நடுவில் இவர்களைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போயினர். இதுதான் இவர்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம்.
ஸ்ப்பார்ட்டர்கள் வெற்றி யடைந்தவர்களாயினும் அதனை நிச்சயமான வெற்றியென்று சொல்ல முடியாது. இதனால் ஆத் தென்ஸ் பக்கம் பார்வையைச் செலுத்த அவர்களுக்குத் தைரியம் உண்டாகவில்லை. நேரே பெலொப் பொனேசியா போய்ச் சேர்ந் தார்கள். போகிறவழியில் மெகாராவில் சில சேதங்களை உண்டு பண்ணிவிட்டுப் போனார்கள்.
ஆத்தென்ஸ், தோல்வியினால் சோர்வடையவில்லை; அதற்கு மாறாக அதிக உற்சாகங் கொண்டது. டானக்ரா யுத்தம் நடைபெற்ற இரண்டு மாதங்கழித்து மைரோனிடீஸ் தலைமையில் ஒரு பெரும் படையை பியோஷ்யா நோக்கியனுப்பியது. இந்தப் படையானது, டானக்ராவுக்குச் சமீபத்திலுள்ள ஈனோப்பிட்டா என்னுமிடத்தில் பியோஷ்யப் படையைத் தாக்கி முறியடித்தது. தீப்ஸைத் தவிர, பியோஷ்யா முழுவதும் ஆத்தென்ஸுக்கு அடிபணிந்தது. போலீஸும் லோக்ரிஸும் ஆத்தென்ஸின் ஆதினத்திற்குட்பட்டன.
பியோஷ்ய ராஜ்யங்கள் பலவற்றிலும் ஸ்ப்பார்ட்டாவின் ஆதரவு பெற்று, பணக்காரக் கட்சியினருடைய அரசாங்கங்கள் அமைந்திருந்தனவல்லவா, அவையனைத்தையும் கலைத்துவிட்டு அவைகளுக்குப் பதில் ஜனநாயக அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. லோக்ரிஸில் மட்டும் இதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் பலாத் காரத்தை உபயோகித்து இந்த எதிர்ப்பை அடக்கிவிட்டது. ஆத் தென்ஸ் லோக்ரிஸ் வாசிகள், ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் நன்னடக்கையுள்ள வர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக, பணக்காரக் கட்சியைச் சேர்ந்த சிலரைப் பிணையாளிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது சிறிது காலம்வரை.
வடக்குப் பக்கத்தில் ஏற்பட்ட இந்த வெற்றிகளின் எதிரொலி தெற்குப் பக்கத்திலும் கேட்டது. ஆத்தென்ஸினால் முற்றுகையிடப் பெற்றிருந்த எஜீனா, சுமார் இரண்டு வருஷ காலம் தாக்குப் பிடித்துப் பார்த்தது. முடியவில்லை, பணிந்துவிட்டது. தனது கடற்படையை ஆத்தென்ஸ் வசம் ஒப்புக் கொடுத்தது, ஆத்தென்ஸுக்குக் கப்பங்கட்டிக் கொண்டுவர இசைந்தது. டெலோஸ் சமஷ்டியில் மூன் றாவது வகை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த எஜீனாவும், இதே மாதிரி முந்தி அடக்கி ஒடுக்கப்பட்ட தாஸோ ஸுந்தான், ஆத்தென்ஸின் ஆதினத்திற்குட்பட்டிருந்த ராஜ்யங்களில் மிகவும் பணக்கார ராஜ்யங்கள், இவை ஒவ்வொன்றும் வருஷந் தோறும் முப்பது டாலெண்ட்டுகள் விகிதம் கப்பஞ் செலுத்தி வந்தன. இவ்வளவு அதிகமான தொகையை வேறெந்த ராஜ்யமும் செலுத்தியதாகத் தெரியவில்லை. எப்படியோ ஆத்தென்ஸின் கண்களை உறுத்திக் கொண்டிருந்த, அதன் ஆசைகளைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்த எஜீனா, 456-ஆம் வருஷம், ஆத்தென்ஸின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட ஒரு ராஜ்யமாகிவிட்டது. இதனோடு கூட, ஆர்கோஸுக்குக் கிழக்கிலுள்ள டிரீஜென் என்ற துறைமுகப் பட்டினமும் ஆத்தென்ஸ் வசமாயிற்று.
மேற்சொன்ன வெற்றிகளுக்கு மாற்றுப்போல், எகிப்தில் ஆத்தென்ஸுக்கு மகத்தான ஒரு தோல்வி ஏற்பட்டது. அங்கு ஒரு படைசென்று வெண்கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டி ருந் ததல்லவா, இதை யறிந்த பாரசீக மன்னன் - அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் - ஆத்தென்ஸ் மீது படையெடுக்குமாறு ஸ்ப்பார்ட்டா வைப் பணங் கொடுத்துத் தூண்டினான். ஸ்ப்பார்ட்டா பணத்தை வாங்கிக் கொண்டது; படையெடுக்க முன்வரவில்லை. பார்த்தான் பாரசீக மன்னன். மெகாபிஸஸ் என்ற ஒருவனுடைய தலைமையில் ஒரு படையை எகிப்துக்கு அனுப்பினான். இந்தப் படையும், இதற்குத் துணையாக வந்த பொனீஷியக் கடற்படையும் சேர்ந்து வெண் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த ஆத்தீனியப் படையை 450-ஆம் வருஷம் முறியடித்து முற்றுகையிடப் பெற்றி ருந்த பாரசீகர்களை விடுவித்தது. முறியடிக்கப் பெற்ற ஆத்தீனியப் படை, புரோஸோபிட்டிஸ் என்னும் நைல் நதித்தீவு ஒன்றில் போய் அடைக்கலம் புகுந்தது. இங்கேயே சுமார் ஒன்றரை வருஷம் அடைபட்டுக் கிடந்து, கடைசியில் பாரசீகப் படையினால் அழிக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலரே உயிர் தப்பி ஊர் திரும்பினர். இதனை யறியாமல், முதலிற் சென்ற படைக்கு உதவி செய்ய வேண்டு மென்ற நோக்கத்துடன் 454-ஆம் வருஷம் ஐம்பது கப்பல்களடங்கிய ஆத்தீனியக் கடற்படையொன்று சென்றது. ஆனால் இது நைல் நதியின் முகத்துவாரத்திலேயே நாசமாக்கப்பட்டு விட்டது. கலகத்தைக் கிளப்பிய இனாரோஸ், பாரசீகர்களின் கையில் அகப் பட்டுக் கொண்டு உயிர் துறந்தான். இங்ஙனம் எகிப்துக்கு உதவி செய்யப்போய், பெரிய தோல்வியை யடைந்தது ஆத்தென்ஸ். இதில் சேதமடைந்த உயிரும் பொருளும் மிக அதிகம். ஆனால் இதற்காக ஆத்தென்ஸ் சளைக்கவில்லை. தனது ஏகாதிபத்திய விஸ்தரிப்பு முயற்சியில் முன்னைக்காட்டிலும் அதிக உறுதியையும் ஊக்கத் தையும் காட்டியது. டெலோஸ் சமஷ்டியின் கஜானாவை, டெலோஸிலிருந்து ஆத்தென்ஸுக்கு மாற்றிக்கொண்டது இந்த வருஷத்தில்தான் - 454-ஆம் வருஷம் - என்பதை இங்கு ஞாபகப் படுத்திக் கொள்வது நலம்.
எகிப்தில் ஆத்தென்ஸுக்குத் தோல்வி ஏற்பட்ட இதே வருஷம் 454-ஆம் வருஷம் - இத்தோமியில் முற்றுகையிடப் பெற்றிருந்த ஹெலட்டுகள், கடைசியாகப் பணிந்துவிட்டார்கள். பெலொப் பொனேசியாவுக்குத் திரும்ப வருவதில்லையானால், எவ்வித தீங்கும் செய்யாமல் வெளியேற்றி விடுவதாக அவர்களுக்குக் கூறினார்கள் ஸ்ப்பார்ட்டர்கள். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டு, தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பெலொப்பொனேசியாவை விட்டு வெளியேறி விட்டார்கள். இவர்களை ஆத்தென்ஸ் - எந்த ஆத்தென்ஸ் எட்டு வருஷங்களுக்கு முந்தி இவர்களை ஒடுக்க ஸ்ப்பார்ட்டாவுக்குத் துணையாகச் சென்றதோ அதே ஆத்தென்ஸ் - நல்வரவேற்று, ஏற்கனவே தான் சுவாதீனப்படுத்தி வைத்துக் கொண்டிருந்த நவ்ப்பாக்ட்டஸ் என்னும் ஊரில் கொண்டு வந்து குடியேற்றுவித்தது. இதன் மூலம், தன்னுடைய ராணுவத்திற்கு ஆள் பலம் சேர்த்துக்கொண்டது.
எஜீனா வீழ்ச்சிக்குப் பிறகு, டால்மிடீஸ் என்ற தளபதியின் தலைமையில் ஓர் ஆத்தீனியக் கடற்படை, கொரிந்த்திய வளை குடாவுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள சில ஊர்களை நாசப்படுத்தியது; கொரிந்த்தியாவின் முக்கிய வியாபார ஸ்தலமாகிய கால்லிஸ் என்ற ஊரைக் கைப்பற்றிக் கொண்டது. கொரிந்த்தியாவின் மேற்குப் பக்க வியாபாரத்தைத் தடுத்து அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் சில முயற்சிகள் செய்யப்பட்டன. பெரிக்ளீஸே ஒரு படையுடன் 453-ஆம் வருஷம் அக்கர்னேனியா பக்கம் சென்று ஈனியாடி என்ற நகரத்தைக் கைப்பற்ற முயன்றான். ஆனால் இந்த முயற்சிகளினால் அதிக பலன் ஏற்படவில்லை. என்றாலும் அக்கீயா விலுள்ள சில ராஜ்யங்கள் ஆத்தென்ஸின் ஆதிக்கத்துக்குட்பட்டன.
இப்படிப் பல இடங்களிலும் தனக்கு ஏற்பட்ட ஆதிக் கத்தை ஒரு முகப்படுத்தி ஊர்ஜிதம் செய்து கொள்வது ஆத்தென்ஸுக்கு அவசியமாயிருந்தது. இதற்கு ஓரளவு அவகாசம் வேண்டுமல்லவா? இந்த அவகாசமும் இதற்குக் கிடைத்தது. பெரிக்ளீஸ், கொரிந்த்திய வளைகுடாப் பக்கம் படையெடுத்துச் சென்றபிறகு, ஏன், டெலோஸ் சமஷ்டியின் கஜானா ஆத்தென்ஸுக்கு மாற்றப் பட்ட காலத்தி லிருந்தே, சுமார் மூன்று வருஷம் வரை - 454-ஆம் வருஷத்திலிருந்து 451-ஆம் வருஷம் வரை ஆத்தென்ஸோ ஸ்ப்பார்ட்டாவோ எந்த விதமான போர் முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இந்த இடைக் காலத்தில் பெரிக்ளீஸ், ஆத்தென்ஸின் அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்தான். இவற்றின் விவரங்களை பதினேழாவது அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.
இன்னும் இந்த இடைக்காலத்தில், ஆத்தென்ஸின் ஆதினத் திற்குட்பட்ட ராஜ்யங்கள் செலுத்தி வந்த கப்பத் தொகையை அதிகப்படுத்தினான் பெரிக்ளீஸ். இதுகாறும் நடைபெற்ற யுத்தங்களினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுபடுத்த வேண்டியே, இப்படிக் கப்பத் தொகையை அதிகப்படுத்தி வசூலிக்க நேரிட்டது என்றாலும், இது, பிந்தி ஆத்தென்ஸ்மீது ஏற்பட்ட வெறுப்புக்குக் காரணமாயிருந்தது.
2. சமரஸ ஒப்பந்தங்கள்
டானக்ரா யுத்தம் முடிந்தவுடனேயே, தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டிருந்த ஸைமன், ஆத்தென்ஸுக்குத் திருப்பி வர வழைக்கப்பட்டான். அந்த யுத்தத்தில் அவன் தன்னலமற்ற முறையில் நடந்து கொண்டதன் பயனே இது. அவனை முந்தி பிரஷ்டம் செய்வித்த பெரிக்ளீஸே, இப்பொழுது அவனைத் திருப்பி வர வழைக்க வேண்டுமென்று ஜனசபையில் ஒரு பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தான். பிரஷ்ட காலம், அதாவது பத்து வருஷம் முடிவதற்கு முந்தியே திருப்பி வரவழைக்கப்பட்டாலும் ஸைமன், அந்தப் பத்து வருஷம் முடிந்த பிறகுதான் 451-ஆம் வருஷத்திலிருந்தான், ஆத்தென்ஸின் அரசியலில் அதிரடியாகக் கலந்து கொண்டானென்று தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், பெரிக்ளீஸும், ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸம் செய்துகொள்ள விழைந்தான். இதற்கு ஸைமனுடைய சேவை மிகவும் தேவையா யிருந்தது.
ஸைமனுடைய முயற்சியின் பேரில் ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் 451-ஆம் வருஷம் ஐந்து வருஷ சமரஸ ஒப்பந்த மொன்று ஏற்பட்டது. அதாவது கிரீஸின் உள்நாட்டுச் சண்டை இன்னும் சில வருஷங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதே வருஷத்தில் ஆத்தென்ஸுக்கும் ஆர்கோஸுக்கும் ஏற்பட் டிருந்த சிநேக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதில் ஸ்ப்பார்ட்டா வுக்கும் ஆர்கோஸுக்கும் முப்பது வருஷ காலத்திற்குச் சமாதான ஒப்பந்தமொன்று ஏற்பட்டது.
ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸம் செய்து கொண்ட பிறகு, ஆத் தென்ஸ், பாரசிகத்தின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்த முனைந்தது; எகிப்தில் தனக்கேற்பட்ட தோல்விக்குப் பரிகாரந் தேட முயன்றது.
சுமார் இருபத்தைந்து வருஷங்களுக்கு முந்தி, பாஸேனியல், ஸைப்ரஸ் தீவின் பெரும்பகுதியைப் பாரசீக ஆதிக்கத்தினின்று விடு வித்தானென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். அங்கு மீண்டும் பாரசீக ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமென்று அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் மன்னன் கருதினான். இதற்காக எகிப்தில் வெற்றி கொண்ட படையை அங்கு, ஸைப்ரஸ் தீவுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டான்.
அதனை எதிர்த்துப் போராடும் பொருட்டு, ஸைமன் தலை மையில் இருநூறு கப்பல்களடங்கிய ஒரு கடற்படையை ஆத் தென்ஸ் அனுப்பியது. இந்தப் படை ஸைப்ரஸ் தீவுக்குச் சென்று கிட்டியம் என்ற ஊரை முற்றுகையிட்டது. முற்றுகை வெற்றிகரமாக முற்றுப் பெறுவதற்குள் 450-ஆம் வருஷம் ஸைமன் இறந்துபோய் விட்டான்.
சுமார் முப்பது வருஷ காலம் பாரசீகர்களை எதிர்த்துப் போராடி வெற்றிகள் பல கண்டு, அவற்றின் விளைவாக ஆத்தீனிய ஏகாதிபத்தியத்தின் எல்லையைத் துரிதமாக விரிவுபடுத்தி ஒரு பெருஞ்சக்தியை ஆத்தென்ஸ் இழந்துவிட்டது. இவன் இறந்தபிறகு, ஆத்தீனியப் படையை, ஸைப்ரஸ் தீவின் கிழக்குப் பக்கத்திலுள்ள ஸாலாமிஸ் என்ற இடத்தில் பாரசீகப்படையைக் கடலிலும் தரையிலுமாகத் தாக்கி வெற்றி கண்டது. ஆனால் என்ன? மேலும் தொடர்ந்து போர் நடத்த மனமில்லாமல் ஊர் திரும்பி விட்டது.
ஸைமன் போன பிறகு ஆத்தென்ஸுக்கும் பாரசீகத்துடன் தொடர்ந்து போர் நடத்திக் கொண்டிருப்பதில் ஊக்கம் குன்றி விட்டது. அதற்கு மாறாக, பாரசீகத்துடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பமே மேலோங்கி நின்றது. ஏனென்றால் உள்நாட்டு நிலைமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வெளி நாட்டுப் பகைமை தடையாயிருக்ககூடாதென்று, பெரிக்ளீஸ் உள்பட ஆத்தீனிய ராஜ தந்திரிகளைக் கருதினார்கள். அப்படியே ஆத் தென்ஸுக்கும் பாரசீகத்துக்கும் 448-ஆம் வருஷம் சமாதானம் ஏற்பட்டது. இதற்கு ‘கால்லியாஸ் சமாதானம்’ அல்லது ‘ஸைமன் சமாதானம்’ என்று பெயர்.
கால்லியாஸ் என்பவன், ஸைமனுடைய சகோதரியின் கணவன் பெரும் பணக்காரன். இவன்தான் ஸூஸோ நகரம் சென்று பாரசீக மன்னனுடன் சமரஸம் பேசினான். இதனாலேயே, ‘கால்லியாஸ் சமாதானம்’ என்று அழைக்கப்பட்டது. ஸைமன் இறந்துபோன வுடனே இந்தச் சமாதானம் ஏற்பட்டதால் ‘ஸைமன் சமாதானம்’ என்றும் அழைக்கப்பட்டது. எந்தப் பெயரிட்டு அழைக்கப்பட்ட போதிலும், சம்பிரதாயமான ஒரு சமாதான ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டதா இல்லையாவென்பது விசதமாகத் தெரியவில்லை. ஆயினும், ஸைமன் காலமானவுடனேயே, சென்ற சுமார் ஐம்பது வருஷ காலமாகப் பாரசீகத்திற்கும் கிரீஸுக்கும் நடைபெற்று வந்த போராட்டம் நின்று சமாதானம் ஏற்பட்டதென்பது நிச்சயம்.
இந்தச் சமாதானத்தின்படி எஜீயன் கடலிலுள்ள தீவுகளிலும், சின்ன ஆசியாவின் கடலோரப் பிரதேசங்களிலும், தான் எவ்வித பாத்தியதையும் கொண்டாடுவதில்லையென்று பாரசீகம் ஒப்புக் கொண்டது. இதே பிரகாரம், ஆத்தென்ஸும், ஸைப்ரஸ் தீவையும் எகிப்தையும் பாரசீக ஆதிக்கத்துக்கே விட்டுக்கொடுக்கச் சம்ம தித்தது. இப்படி விட்டுக்கொடுக்கிற முறையில் இரண்டு நாடுகளுக்கு மிடையே சமாதானம் ஏற்பட்டதேயானாலும், இது நிரந்தர சமா தானமாக இருக்கவில்லையென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு நிலைமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற் காகவே பாரசீகத்துடன் சமாதானம் செய்து கொண்டது ஆத் தென்ஸ். ஆனால் அது நினைத்தது போல் உள்நாட்டு நிலைமைகள் ஒழுங்குபடவில்லை; அதற்கு மாறாக, அஃது அவசியம் தலையிட வேண்டிய சம்பவங்கள் பல ஒன்றன்பின்னொன்றாக நடைபெற்றன. இப்படித் தலையிட்டதன் விளைவாக அதன் ஆதிக்கத்திற்கே ஊறு உண்டாயிற்று. ஒவ்வொன்றாக விசாரிப்போம்.
போசிஸ் பிரதேசத்தில் டெல்பி கோயில் இருக்கிறதல்லவா, இதன் நிருவாகம், நீண்ட காலமாக வாதப் பிரதிவாதத்திற்குரிய பிரச்னையாக இருந்து வந்தது. போசியர்கள், தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்தக் கோயில் இருக்கிறபடியால் இதன் நிருவாகம் தங்களிடத்திலேயே இருக்க வேண்டுமென்று கட்சி பேசி வந்தார்கள். ஆனால் மற்றக் கிரேக்கர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. டெல்பி கோயில் அகில கிரீஸுக்கும் பொதுவானபடியால் இது, பொது நிருவாகத்திற்கே உட்பட்டிருக்க வேண்டுமென்று கூறி வந்தார்கள். 448-ஆம் வருஷம், இந்தக் கோயில், போசியர்கள் வசம் இருந்தது. இவர்களை அப்புறப்படுத்திவிட ஸ்ப்பார்ட்டா ஒரு படையை அனுப்பியது. அப்படியே இந்தப் படை சென்று போசியர் களை மேற்படி கோயிலினின்று அப்புறப்படுத்திவிட்டது; ஊர் திரும்பியும் விட்டது. உடனே ஆத்தீனியப் படையொன்று பெரிக்ளீஸ் தலைமையில் சென்று, மேற்படி கோயிலை மீண்டும் போசியர்கள் வசம் ஒப்புவித்துவிட்டு வந்தது. ஏனென்றால் ஆத்தென்ஸின் ஆதிக்கத்திற்குட் பட்டிருக்கிற பிரதேசமல்லவா போசிஸ்?
பியோஷ்யாவில் தீப்ஸ் உள்பட பெரும்பாலான ராஜ்யங்களில் ஆத்தென்ஸின் ஆதரவு பெற்ற ஜனநாயக அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப் பட்டிருந்தனவல்லவா, இவற்றுள் தீப்ஸின் அரசாங்கம் முறைகேடான முறையில் நடந்து ஜனங்களுடைய அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டது. இதனால் இஃது ஏற்பட்ட சொற்ப காலத்திற்குள்ளேயே இதற்கு விரோதமாக ஒரு கலகம் கிளம்பியது. தவிர, பியோஷ்ய ராஜ்யங்களில் ஜனநாயக அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முந்தி, ஸ்ப்பார்ட்டாவின் ஆதரவில் சர்வாதி காரிகள் போலிருந்து அரசாங்கத்தை நடத்தி வந்த பணக்காரர்கள், பிரபுக்கள் முதலியோர், ஜனநாயக அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப் பட்ட பிறகு அந்தந்த இடங்களிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டு விட்டனர். இவர்களெல்லோருக்கும் தீப்ஸ்தான் அடைக்கல ஸ்தானமாயிருந்தது. இவர்கள், ஆத்தென்ஸுக்கு விரோதமாகத் தீவிரப் பிரச்சாரஞ் செய்து வந்தார்கள்; இன்னும் தீப்ஸில் ஜனநாயக அரசாங்கத்திற்கு விரோதமான கலகம் பியோஷ்யாவின் வடமேற்கி லுள்ள பிரதேசங்களில் வெகு விரைவாகப் பரவியது. ஓர்க்கோ மெனஸ் என்ன, கெரொனீயா என்ன, இப்படிச் சில முக்கியமான நகரங்கள், பிரஷ்டம் செய்யப்பட்டிருந்த பணக்கார கோஷ்டியைச் சேர்ந்தவர் வசமாயின.
ஆத்தென்ஸுக்கு இது விஷயம் தெரிந்தது. இதனை ஒரு குட்டிக் கலகமாக கருதி, பெரிய குடும்பத்து இளைஞர்களை அதிகமாகக் கொண்ட, ஏறக்குறைய ஆயிரம் பேரடங்கிய ஒரு சிறிய படையை டால்மிடீஸ் தலைமையில் அனுப்பியது. இந்தக் கலகத்தை லேசாகக் கருவிடக் கூடாதென்றும், இதனை அடக்க, தீவிர நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவேண்டுமென்றும், பெரீக்ளீஸ் எவ்வளவோ எச்சரிக்கை செய்து பார்த்தான். ஆனால் ஜனசபை கேட்கவில்லை. ஒரு சிறு படையை மட்டும் அனுப்பினால் போது மென்று கருதி அப்படியே அனுப்புவித்தது.
டால்மிடீஸ் சென்று கெரொனீயாவைக் கைப்பற்றிக் கொண்டான்; அங்கே ஒருசிறு படையை நிறுவினான். ஓர்க்கோ மெனஸைக் கைப்பற்ற முயற்சி செய்யவில்லை. ஊர் திரும்ப ஆரம்பித்துவிட்டான். திரும்புகையில் கோரோனீயா (கெரொனீய வேறு, கோரோனீயா வேறு) என்ற இடத்தில், ஓர்க்கேமெனஸைக் கைப்பற்றிக் கொண்டிருந்தவர்களும், மற்ற இடங்களிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டிருந்தவர்களும் ஒரு படையாகத் திரண்டு வந்து 447-ஆம் வருஷம் எதிர்த்தார்கள். ஆத்தீனியப் படை தோல்வி யடைந்தது. டால்மிடீஸ் இறந்துபட்டான். ஆத்தீனியப் படை யினரிற் பலர் கைதிகளாயினர். இவர்களை மீட்டுக் கொள்ள வேண்டி பியோஷ்யாவில், தான் செலுத்திக் கொண்டு வந்த ஆதிக்கத்தை விட்டுக் கொடுத்துவிட்டது ஆத்தென்ஸ். பியோஷ்யா போய் விட்டதோ; லோக்ரிஸும் போசிஸும் ஆத்தென்ஸின் தொடர்பி லிருந்து விலகிக் கொண்டுவிட்டன. டெல்பி கோயில் விஷயத்தில் ஆத்தென்ஸ், தனக்குச் சாதகமாயிருந்ததென்பதைக் கூட மறந்து விட்டது போசிஸ்.
மத்திய கிரீஸில் எழுந்த இந்த எழுச்சியானது, ஆத்தென்ஸின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த மற்றப் பிரதேசங்களுக்கும் வெகுகாலமாகப் பரவியது. சுமார் முப்பது வருஷ காலமாக ஆத் தென்ஸுடன் நல்லுறவு பூண்டிருந்த யூபியா, 446-ஆம் வருஷம் அதற்கு விரோதமாகக் கலகக்கொடி தூக்கி விட்டது. இந்தக் கலகத்தை அடக்க, பெரிக்ளீஸ் ஒரு பெரும்படை திரட்டிக் கொண்டு சென்றான்.
ஆனால் அதே சமயம் தெற்கே மெகாராவும் கலகத்திற்குக் கிளம்பிவிட்டது. மெகாரா நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆத்தீனியக் காவற்படை, இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது. பாகீ, நிஸியா என்ற இரு துறைமுகப் பட்டினங்களிலிருந்த ஆத்தீனியக் காவற்படைகள் மட்டும் அந்த இடங்களை விடாப் பிடியாக பிடித்துவைத்துக் கொண்டிருந்தன.
இந்த மெகாரா கலகத்தை அடக்க, ஆத்தென்ஸிலிருந்து ஒரு சிறு படை அண்டோஸிடீஸ் என்பவனுடைய தலைமையில் மெகா ராவை நோக்கி வந்தது. இந்தச் செய்தி கேட்ட பெரிக்ளீஸ், தன் படையுடன் யூபியாவிலிருந்து திரும்பி வந்துவிட்டான். வந்து அண்டோஸிடீஸ் படையுடன் சேர்ந்து கொள்வதற்கு முன்னர், ஸ்ப்பார்ட்டப் படையொன்று பிளீஸ்ட்டோனாக்ஸ் என்ற அரச னுடைய தலைமையில் வந்து, அண்டோஸிடீஸ் படையை வழி மறித்துவிட்டது. ஆனால் அண்டோஸிடீஸ் படையானது, வேறு வழியாக அட்டிக்காவுக்குத் திரும்பிவிட்டது. ஸ்ப்பார்ட்டப் படையும், மெகாராவைக் கடந்து வந்து அட்டிக்காவின் கீழ் எல்லையிலுள்ள எலியூஸிஸ் என்ற ஊரை அடைந்தது. அதற்கு மேல் செல்லவில்லை. என்ன காரணத்தினாலோ ஊர் திரும்பிவிட்டது. இந்தப் படையின் தலைவனும், இவனைச் சேர்ந்தவர்களும் பெரிக்ளீ ஸிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆத்தென்ஸ்மீது படை யெடுத்துச் செல்லாமல் திரும்பிவிட்டனர் என்று குற்றஞ் சாட்டப்பட்டு, அரச பதவியிலிருந்தும் தேசத்திலிருந்தும் முறையே அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஸ்ப்பார்ட்டப் படை திரும்பிவிட்டது, பெரிக்ளீஸுக்கு மிகவும் அனுகூலமாயிற்று. யூபியா மீது இப்பொழுது முழுக் கவனத்தையும் செலுத்தலாமல்லவா? அப்படியே செலுத்தினான். யூபியா அடக்கி ஒடுக்கப்பட்டது. கலகஞ் செய்தவர்கள் தேசப் பிரஷ்டம் செய்யப் பட்டார்கள். அவர்களுடைய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆத்தீனியர்கள் சிலரைக் கொண்டு வந்து குடி யேற்றி, அவர்களுக்கு மேற்படி நிலங்கள் வழங்கப்பட்டன. சுருக்கமாக, யூபியா, ஆத் தென்ஸுக்குக் கட்டுப்பட்ட ஒரு ராஜ்யமாயிற்று.
யூபியாவை அடக்கி விட்டாலும், அதனைப் பின்பற்றி, தன் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் மற்றப் பிரதேசங்களும் எங்கே கலகத் திற்குப் கிளம்பி விடுமோ என்று ஆத்தென்ஸ் கவலை கொண்டது. இதனால் இந்தப் பிரதேசங்கள் செலுத்தி வந்த கப்பத் தொகையை ஒரு விகிதாசாரப்படி 446-ஆம் வருஷத்திலிருந்து குறைத்து வசூலிப் பதன் மூலம், இந்தப் பிரதேசங்களில் அதிருப்தியை வளர விடாமல் தடுக்கமென்பது இதன் நோக்கம். ஆனால் சிறிது காலத் திற்குத்தான் இந்த அதிருப்தியைத் தடுக்க முடிந்தது.
தவிர, ஆத்தென்ஸும் ஸ்ப்பார்ட்டாவும் செய்து கொண்ட ஐந்து வருஷ ஒப்பந்தம் இந்த 446-ஆம் வருஷத்தில் முடிவுபெற்றது. இது முடியுந்தறுவாயில்தான், மெகாரா எழுச்சியின் போது ஸ்ப்பார்ட்டப் படையானது எலியூஸிஸ் வரையில் துணிச்சலாக வந்தது. இந்த ஒப்பந்தக் கால முடிவு ஆத்தென்ஸின் கவலையை அதிகரிக்கச் செய்தது. ஸ்ப்பார்ட்டாவுடன் எப்படியாவது சமாதானம் செய்துகொண்டுவிடத் தீர்மானித்தது. அப்படியே ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் 446-ஆம் வருஷம் முப்பது வருஷ காலத்திற்கு ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. உண்மையில் இது சமாதான ஒப்பந்தமல்ல; யுத்த நிறுத்த ஒப்பந்தமே.
இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளாவன: 1. பெலொப் பொனேசியப் பிரதேசங்கள் மீது, அதாவது அக்கீயா, மெகாராவின் இரு துறைமுகப் பட்டினங்களாகிய பாகீ, நிஸீயா, இன்னும் ட்ரீஜென் ஆகிய பிரதேசங்கள் மீது ஆத்தென்ஸுக்கு ஆதிக்கம் இருந்துவந்ததல்லவா, அந்த ஆதிக்கத்தை அது விட்டுக் கொடுக்க வேண்டும். (ஏற்கனவே, மெகாரா, ஆத்தென்ஸின் கைவிட்டுப் போய் விட்டதென்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்) 2. மற்றபடி இப்பொழுது ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் முறையே உட்பட்டு என்னென்ன பிரதேசங்கள் இருக்கின்றனவோ அவை அப்படி அப்படியே உட்பட்டிருக்க வேண்டும். 3. ராஜ்யத்தின் நேச நாட்டை, மற்றொரு ராஜ்யம் தன்னுடைய நேச நாடாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 4. இரண்டு ராஜ்யங்களுடனும் சேராமல் தனித்திருக்கும் நாடுகள், அவைகளிஷ்டப்பட்டால், இஷ்டப் பட்ட ராஜ்யத்துடன், அதாவது ஆத்தென்ஸுடனோ ஸ்ப்பார்ட் டாவுடனோ சேர்ந்துகொள்ளலாம். 5. இரண்டு ராஜ்யங்களுக்கும் - ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் - தகராறுகள் ஏற்பட்டால் அவற்றை மத்தியஸ்தத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆத்தென்ஸின் ஏகாதிபத்திய முன்னேற்றத்தில், இந்த ஒப்பந்தம் ஒருபடி இறக்கமென்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், கிரீஸின் தரைப்பக்கமாகத் தன்னுடைய ஏகாதிபத்தியத்தை விஸ்தரித்துக் கொண்டு போகவேண்டுமென்று ஆத்தென்ஸ் செய்து வந்த முயற்சிகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டதல்லவா இந்த ஒப்பந்தம்? அகில கிரீஸையும் ஆத்தீனிய ஏகாதிபத்தியமாகச் செய்துவிட வேண்டுமென்று ஆசை கொண்டது ஆத்தென்ஸ். அந்த ஆசையை அளவுபடுத்திவிட்டது இந்த ஒப்பந்தம். இதற்குப் பிறகு ஆத்தென்ஸ், தன் சக்தியனைத்தையும் கடலாதிக்கத்தை வலுப் படுத்திக் கொள்வதிலேயே செலவழிக்கத் தீர்மானித்தது.
ஆத்தென்ஸ் - ஒரு காட்சி சாலை
1. பெரிக்ளீஸின் அரச தந்திரம்
1. பார்க்கப் போனால், ஆத்தென்ஸின் தரைப்பக்க ஏகாதி பத்தியம் நீண்ட காலம் நிலைபெற்றிருக்கவில்லை; ஈனோப்பிட்டா யுத்தத்திலிருந்து கோரோனியா யுத்தம் வரை கணக்குச் செய்து பார்த்தால், எல்லாம் பத்து வருஷ வாழ்வுதான். ஆயினும் இந்த வாழ்வு போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்கள் ஆத்தீனியர்கள். ஒருவித சோர்வு அவர்களை ஆட்கொண்டது. இந்தச் சோர்வு, எந்த நிமிஷத்திலும் தன்மீது வெறுப்பாகத் திரும்பக்கூடுமென்று தெரிந்துகொண்டான் மதியூகியான பெரிக்ளீஸ். எனவே இந்தச் சோர்வை அகற்றி உற்சாகத்தை உண்டு பண்ண அரும்பாடு பட்டான். ஒருபடி இறக்கமென்பது, இரண்டு படி ஏற்றத்திற் காகவே என்று ஜனங்கள் அதி சீக்கிரத்தில் உணர்ந்து கொள்ளும்படி செய்தான். இந்தக் காலத்தில் இவனுடைய அரச தந்திரம் பூரணப் பொலிவுடன் பிரகாசித்தது.
ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குட்பட்டிருக்கும் எஜீயன் கடலி லுள்ள தீவுகள் முதலிய வெளியிடங்கள் பலவற்றிற்கும், ஏழைகள் வேலையில்லாதவர் களுக்குமான ஆத்தீனியர் பலரை அனுப்பி ஆங்காங்குக் குடியேறும்படி செய்தான் பெரிக்ளீஸ். இவர்களுக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்பட்டன. இவர்களுடைய ஜீவனத் திற்கு வழிதேடிக் கொடுக்கப்பட்டது. இவர்கள் ‘கிளெரூக்கியர்’ என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது தளை தளையாகப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களையுடையவர்கள் என்று அர்த்தம். இம் மாதிரியான குடியேற்றங்கள், கிளைஸ்த்தனீஸ் காலத்திலிருந்து அவ்வபொழுது நடைபெற்று வந்திருக்கிறதாயினும், பெரிக்ளீஸ், இதனை ஏகாதிபத்திய விஸ்தரிப்பு முறைகளில் ஒன்றாகக் கையாண்டான். 447-ஆம் வருஷத்திலிருந்து 445-ஆம் வருஷம் வரை சுமார் இரண்டு இரண்டரை வருஷ காலத்தில், எஜீயன் கடலிலுள்ள நாக்ஸோஸ், ஆண்ட்ரோஸ், இம்ப்ரோஸ், லெம்னோஸ் முதலிய தீவுகளிலும் திரேஸ் மாகாணத்தைச் சேர்ந்த கெர்ஸொ னிஸஸ் (இது தற்போது காலிபோலி தீபகற்பம் என்று அழைக்கப்படுகிறது) முதலிய பிரதேசங்களிலும், யூபியாவைச் சேர்ந்த சில இடங்களிலும் ஆத்தீனியர் பலர் சென்று குடியேறினார்கள். 443-ஆம் வருஷம் இத்தலியின் கிழக்குப் பக்கத்திலுள்ள தூரி (அழிந்துபோன ஸைபாரிஸுக்கு அருகிலேயே இந்த நகரம் தோற்றுவிக்கப் பட்டது) என்னுமிடத்தில் ஒரு குடியேற்ற நகரம் ஸ்தாபிக்கப்பட்டது. இப்படியே 436-ஆம் வருஷம் ஸ்ட்ரைமோன் நதிக்கரையில் ஆம்ப்பி போலிஸ் (அழிந்துபோன ஸைபாரிஸுக்கு அருகிலேயே இந்த நகரம் தோற்றுவிக்கப்பட்டது.) என்னுமிடத்தில் மற்றொரு குடியேற்றம் நகரம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விரண்டும் குறிப்பிடத் தக்கவை. இவை போல் இன்னும் பல குடியேற்ற நகரங்கள் ஏற்பட்டன.
இங்ஙனம் குடியேற்றப் பிரதேசங்களை ஆங்காங்கு ஸ்தா பித்ததன் மூலம், ஆத்தென்ஸில் பிழைப்பற்றிருந்த பலருக்குப் பிழைக்க வழி தேடிக்கொடுத்தான் பெரிக்ளீஸ். இதனால் ஆத்தென்ஸில் அதிகப்படியாக இருந்த ஜனத்தொகை குறைந்தது. தவிர, இந்தக் குடியேற்ற பிரதேசங்கள், வெளிக்காவல் ஸ்தலங்கள் போலிருந்து, ஆத்தீனிய ஏகாதிபத்தியத்திற்கு எவ்வித பழுதும் ஏற்படாவண்ணம் பாதுகாத்துவர வேண்டுமென்பது இவன் நோக்கம். ஆனால் இவன் எதிர்பாத்தபடி நடைபெறவில்லை. இந்தக் குடியேற்றப் பிரதேசங்களை ஆத்தென்ஸுக்கு விரோதிகளாயின பின்னொரு காலத்தில், தவிர ஆத்தென்ஸில் அதிகப்படியா யிருந்தவர்களையும் உபயோக மற்றிருந்தவர்களையும் அப்புறப்படுத்தி விட்டதனால், தனக்கு எதிப்பு இல்லாமலிருக்கும், தன்னிஷ்டப்படி காரியங்களைச் செய்து கொண்டு போகலாம் என்று எண்ணினான். ஆனால் இவன் எண்ணம் ஈடேறவில்லை. இவனுக்கு எதிப்பு கிளம்பவே செய்தது.
பாரசீகப் போராட்டத்தின்போது வெற்றி கிடைக்க வேண்டு மென்று செய்துகொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற் காகவும், மேற்படி யுத்தத்தின் விளைவாகப் பாழ்பட்டுப்போன புனித ஸ்தலங்களையெல்லாம் புதுப்பிக்கும் பொருட்டும், எஜீயன் கடலில் அவ்வப்பொழுது நடைபெற்று வந்த கடற்கொள்ளைகளை நிறுத்த வேண்டியும், பொதுவாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாமென்பதைப் பற்றியும், இவை போல இன்னும் பல பொதுவான பிரச்னைகளைப் பற்றியும் கலந்தாலோசிப்பதற்காக, சர்வ கிரேக்க மகாநாடொன்றை ஆத்தென்ஸில் கூட்ட ஏற்பாடு செய்தான் பெரிக்ளீஸ். 448-ஆம் வருஷம் இருபது தூதர்கள் மூலம் எல்லாக் கிரேக்க ராஜ்யங்களுக்கும் அழைப்பு அனுப்பினான். அழைப்பை ஏற்றுக்கொள்ள ஸ்ப்பார்ட்டா மறுத்துவிட்டது. ஏற்றுக்கொண்டால், ஆத்தென்ஸின் முதன்மையையும், முக்கியத் துவத்தையும் அங்கீகரித்துக் கொண்டது போலாகுமல்லவா? கடைசியில் இந்த மகாநாடு கூடவேயில்லை.
இப்படி ஒன்று கூட்டுதல் அசாத்தியமென்று தெரிந்ததும், பெரிக்ளீஸ், ஆத்தென்ஸைப் பொறுத்தமட்டில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்தான். பாரசீகப் போரில் வெற்றி வாங்கிக்கொடுத்த தெய்வங்களுக்கு அழகான கோயில்கள் கட்டி அங்கு அவைகளை மகிழ்ந்திருக்கச் செய்வதும் ஆத்தென்ஸின் தலை யாய கடமையென்று கருதினான். இந்தக் கடமையை ஒழுங்காகச் செய்வதிலேதான் ஆத்தென்ஸின் பெருமை இருக்கிற தென்று நம்பினான். எனவே, திறமையான சிற்பிகளைக் கொண்டு அத்தீனே தேவதைக்கு அழகான கோயிலொன்று கட்டுவித்தான். இதற்கு ‘பார்த்தெனான்’ என்று பெயர். இது கட்டி முடிக்க ஒன்பது வருஷம் (447-438) பிடித்தது. இங்கு அத்தீனே தேவதையைப் பிரதிஷ்டை செய்வித்தான். பொன்னாலும், தந்தத்தாலும், அழகு படுத்தப் பெற்ற இந்தக் கம்பீர உருவத்தைச் சிருஷ்டி செய்தவன் பிடியஸ் (உத்தேச காலம் : 490 - 432) என்ற சிற்ப நிபுணன். பார்த்தெனானைப்போல் பல கோயில்கள் பல இடங்களில் நிர்மாணஞ் செய்யப்பட்டன. இன்னும் அழகான கட்டடங்கள் பல எழுந்தன. அவைகளைப் பற்றி இங்கு விஸ்தரித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். அதுதான் ‘ஓடியம்’ என்ற சங்கீத மண்டபம். அக்ரோபோலிஸுக்குத் தென்மேற்குப் பக்கத்தில் கட்டப் பெற்ற இந்த மண்டபத்தின் சிகரம். குவிந்த வடிவுடைய கும்பத்தைப் போலிருந்தது. பெரிக்ளீஸின் தலையும் இப்படித் தானிருந்தது என்று பெரிக்ளீஸுக்கு வேண்டா தவர் பரிகசித்தனர். இந்த மண்டபத்தில் அடிக்கடி சங்கீதக் கச்சேரிகள், சங்கீதப் போட்டிகள், நாடக ஒத்திகைகள் முதலியன நடைபெற்றன.
பொதுவாக, பெரிக்ளீஸ், ஆத்தென்ஸைப் பல வகையிலும் அழகுபடுத்தி வந்தான். இதற்காக அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து தாராளமாகப் பணஞ் செலவழித்து வந்தான். எதிர்ப்பு ஏற்பட்டது. எதிர்ப்புக்குத் தலைமை வகித்தவன் துஸிடிடீஸ்; (இவன் வேறு, சரித்திராசிரியனான துஸிடிடீஸ் வேறு) ஸைமனின் மருமகப் பிள்ளை. ஜனசபையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
யுத்தம் ஏற்பட்டால் அப்பொழுதைய தேவைக்காகப் பொக்கிஷப் பணத்தை மிச்சப்படுத்தி வைக்கவேண்டியதை விட்டு விட்டு, இப்படிக் கோயில்களுக் கென்றும் கட்டடங்களுக்கென்றும் செலவு செய்வது ஊதாரித்தனமாகுமென்றும், தவிர டெலோஸ் சமஷ்டி அங்கத்தினர்கள் செலுத்திவரும் கப்பத்தொகையும் ஆத்தென்ஸ் பொக்கிஷத்தில் சேர்ந்திருக்கிறதென்றும், அந்தக் கப்பத் தொகையை, கப்பஞ் செலுத்துகிறவர்களுடைய நலனுக்காகச் செலவழிக்க வேண்டுமேயன்றி, ஆத்தென்ஸின் நலனுக்காக மட்டும் செலவழிக்கக்கூடாதென்றும், அப்படிச் செலவழிப்பது நியாய விரோதமென்றும், ஆத்தென்ஸுக்குக் கண்ணியக் குறைவென்றும் கட்சியாடினான்துஸிடிடீஸ்.
ஆனால் பெரிக்ளீஸ், சமஷ்டி அங்கத்தினர்களுக்குப் பலவகை யிலும் ஆத்தென்ஸ் பாதுகாப்பளித்து வருகிறதென்றும், அதற்குப் பிரதியாகவே அவர்களிடமிருந்து ஒரு தொகையைக் கப்பமாகப் பெறுகிறதென்றும், இந்தக் கப்பத் தொகையைத் தனக்கிஷ்ட மானபடி செலவழித்துக் கொள்ள ஆத்தென்ஸுக்குப் பரிபூரண உரிமையுண்டென்றும் எதிர்க்கட்சி பேசினான்.
இப்படி இரு கட்சி வாதங்களையும் கேட்ட ஜனசபை, முதலில் சிறிது தடுமாற்றமடைந்ததாயினும், பின்னர் துஸிடிடீஸுக்கே ஆதரவு கொடுக்கும் போலிருந்தது. ஓட்டெடுக்கும் சமயம். பார்த்தான் பெரிக்ளீஸ், சபையினரைத் தன்னிஷ்டத்திற்குத் திருப்பக்கூடிய சக்தி தன்னிடம் இருக்கிறதென்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதென்று உணர்ந்து கொண்டான். எழுந்து நின்றான். “இந்தக் கோயில்கள் முதலியன கட்டுவதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல் போனால் போகிறது. என் சொந்தப் பணத்திலிருந்து செல வழிக்கிறேன்; இதற்கடையாளமாக அங்குள்ள சாஸனங்கள் என் பெயரைத் தாங்கிக் கொண்டிருக் கட்டும்” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினான். சபையில் ஒரே பிரமிப்பு; மௌனம். சிறிது நேரங்கழித்து, “பெரிக்ளீஸ் இஷ்டப் படியே எல்லாம் நடக்கட்டும்; எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கட்டும்” என்று சபையோர் ஒருமுகமாகக் கூறினார்கள். பெரிக்ளீஸின் பெருந்தன்மையைப் பார்த்துச் சந்தோஷமடைந்து இப்படிக் கூறினார்களோ அல்லது அழகிய கட்டடங்களை எழுப்பி அதன் காரணமாக ஏற்படக்கூடிய புகழ், பெரிக்ளீஸை மட்டும் சார்ந்ததாயிருக்கக்கூடாது, தங்களுக்கும் அதில் பங்கிருக்க வேண்டு மென்பதற்காக, இப்படிக் கூறினார்களோ, என்ன காரணமோ நமக்குத் தெரியாது. ஆக, பெரிக்ளீஸின் கட்சி வெற்றியடைந்தது. துஸிடிடீஸ் தோல்வியடைந்தான். தோல்வியின் விளைவு என்ன? 443-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் தேசப்பிரஷ்டம் செய்யப் பட்டான். பெரிக்ளீஸை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சி அடங்கியது. அழகும் உபயோகமு மான கட்டட வேலைகள் பல தொடங்கப் பட்டிருந்தனவல்லவா, அவை தொடர்ந்து நடைபெற்றன.
2. பெரிக்ளீஸின் தொடர்ந்த ஆட்சி
துஸிடிடீஸ் பிரஷ்டிம் செய்யப்பட்ட பிறகு, பெரிக்ளீஸ், ஒரு சர்வாதிகாரி போலிருந்து சுமார் பதினைந்து வருஷ காலம் ஆத் தென்ஸின் அரசியலை நடத்தி வந்தான். சர்வாதிகாரி போலி ருந்து ஆட்சி நடத்தினானேயொழிய சர்வாதி காரியாயிருந்து ஆட்சி நடத்த வில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இவனுடைய ஆட்சி, ஜன சம்மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் பதினைந்து தடவை, அதாவது பிரதியொரு வருஷமும் இவன் பத்துப் படைத்தலைவர்களில் ஒருவனாக பிரதம படைத்தலைவனாக - தெரிந்தெடுக்கப்பட்டான். ஆத்தீனியர்கள் இவனிடம் வைத்திருந்த நம்பிக்கையும் மதிப்பும் இதிலிருந்து நன்கு புலனாகின்றன.
பிரதம படைத்தலைவனாயிருக்க, தான் தகுதியுடையவன் என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதுபோல், இவன் ஆத்தென்ஸின் படைபலத்தை மிகவும் விருத்தி செய்தான். விருத்தி செய்ததோடு மட்டுமல்ல, அஃது எப்பொழுதும் விழிப்புடனிருக்கும்படி செய்து வந்தான். இவன் காலத்தில் ஆத்தென்ஸிஸை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சல் யாருக்கும் உண்டாகவில்லை. ஆனால் ஒரே ஓரிடத்தி லிருந்து மட்டும் எதிர்ப்பு தோன்றியது. அதை முதலிலேயே கூறிவிட விரும்புகிறோம்.
440-ஆம் வருஷம், அதாவது முப்பது வருஷ ஒப்பந்தம் நிறைவேறி ஐந்து வருஷங் கழித்து, ஸாமோஸ் தீவுக்கும் மிலீட்டஸ் ராஜ்யத்திற்கும் பிரீனே என்ற ஒரு நகரத்தைச் சுவாதீனப்படுத்திக் கொள்ளும் விஷயமாகத் தகராறு ஏற்பட்டது. இரண்டு டெலோஸ் சமஷ்டியின் அங்கத்தினர்கள். மிலீட்டஸ், ஆத்தென்ஸின் உதவியை நாடியது. ஸாமோஸ், பாரசீகத்தின் உதவியை நாடியது. எனவே, பெரிக்ளீஸே, நேரில் சுமார் அறுபது கப்பல்கள் கொண்ட ஒரு கடற் படையுடன் சென்றான். ஸாமோஸ் தீவை முற்றுகையிட்டான். ஆனால் பாரசீக கடற்படை யொன்று, தன்னைத் தாக்க வருவதாகக் கேள்வியுற்று, முற்றுகையைத் தளர்த்திக் கொண்டு பின்வாங்கி நின்றான். ஆத்தென்ஸிலிருந்து மேலும் மேலும் கப்பல்கள் வந்து கொண்டிருந்தன. சுமார் இருநூறு கப்பல்கள் வரை சேர்ந்ததும், ஸாமோஸ் தீவை மீண்டும் முற்றுகையிட்டான். ஒன்பது மாத காலம் முற்றுகை நடைபெற்றது. கடைசியில் 439-ஆம் வருஷம் ஸாமோஸ் பணிந்தது. அதன் மதிற்சுவர்கள் தரைமட்டமாக்கப்பட்டன. யுத்த நஷ்ட ஈடாக ஒரு தொகை ஆயிரத்தைந்நூறு டாலெண்டுட்டுகள் - அதனிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இந்தச் சமயம், பிஸண்ட் டியமும் ஆத்தென்ஸுக்கு விரோதமாகத் தலைதூக்கப் பார்த்தது. ஆனால் ஸாமோஸுக்கு நேர்ந்த கதியைக் கண்டு அடங்கிவிட்டது. தலைதூக்கி முயன்றதற்குத் தண்டனையாக, அது செலுத்திவந்த கப்பத் தொகை அதிகப்படுத்தப்பட்டது.
ஆத்தென்ஸின் படைபலத்தை விருத்தி செய்ததோடு மட்டு மல்ல, அதன் பிற துறைகளையும் செழுமையுறச் செய்தான் பெரிக்ளீஸ். ஜனங்களுடைய அகவாழ்விலும் புறவாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பிரதியோர் ஆத்தீனியனும், தான் ஆத்தீனிய ஏகாதிபத்தியத்தின் பிரஜையாயிருப்பது குறித்துப் பெருமை கொண்டான். அறிவைத் துலக்கம் பெறச் செய்வதிலா கட்டும், அரசியலை எல்லோருக்கும் பயனுண்டாகும் படியாக நடத்திக் காட்டு வதிலாகட்டும். இப்படிச் சகமார்க்கங்களிலும், மற்றவர்களுக்கு வழி காட்டியா யிருக்க வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டி ருந்தான் ஒவ்வோர் ஆத்தீனியனும். பெரிக்ளீய யுகத்தின் நண்பகற் காலமென்று சொல்ல வேண்டும் இந்தப் பதினைந்து வருஷ காலத்தை. இந்தக் காலத்தில் எஸ்க்கிலஸ், (525-456), ஸோபோக்ளீஸ் (உத்தேசகாலம் : 496 - 405), யூரிப்பிடீஸ் (உத்தேசகாலம் : 482 - 407) முதலிய கவிஞர்களென்ன, அனக்ஸா கோரஸ், ஜீனோ, புரோட்டோ கோராஸ் (உத்தேசகாலம் 481 - 411), ஸாக்ரட்டீஸ் முதலிய தத்துவ ஞானிகளென்ன, மீட்டன் முதலிய சாஸ்திரிகளென்ன, பிடியஸ் முதலிய சிற்ப நிபுணர்களென்ன, இப்படி ஒருவரா, இருவரா, பலர் ஆத்தென்ஸில் வாழ்ந்தார்கள்; ஆத்தென்ஸின் புகழைப் பல திக்கு களிலும் பரப்பினார்கள். இவர்கள் தவிர, ஹெல்லாசின் பிற இடங் களில் வாழ்ந்து வந்த பெரியார்கள்தான் எத்தனை பேர்? சரித்திரத் தின் தந்தையான ஹெரோடோட்டஸ் என்ன, வைத்திய நிபுணனான ஹிப்போக் கிராட்டீஸ் என்ன, (உத்தேச காலம் 460 - 378) கவிஞனான பிண்டார் என்ன, இவர்களெல்லோரும் இக்காலத்தவரே, சுருக்க மாக, ஆத்தென்ஸ் இந்தக் காலத்தில், அறிவுக்கு விருந்தளிக்கிற, உள்ளத்திற்கு உவகையூட்டுகிற, லௌகிக வாழ்க்கைக்கு வெளிச்சங் கொடுக்கிற, பாரமார்த்திக வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற ஒரு பொருட்காட்சி சாலையாக இருந்தது. இத்தகைய பொருட்காட்சி சாலையைப் பார்க்க வேண்டுமென்று, வாசகர்களே, ஆசைப்படுகிறீர் களல்லவா? அப்படியானால் வாருங்கள். விரைவாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவோம்.
அரசியலமைப்பும் சமுதாய நிலையும்
1. நேர்முகமான ஜன ஆட்சி
முதலில் ஆத்தென்ஸின் அரசியலமைப்பைப் பார்ப்போம். இது ஜனநாயக அரசியலமைப்பு என்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. இதனை ஸ்தாபித்தவன் கிளைஸ்த்தனீஸ். இவன் காலத்தில் இஃது எப்படி இருந்ததென்பதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக் கிறோம். இதனைப் பின்னர் அரிஸ்ட்டைடீஸும், எபியால்ட் டிஸும், பெரிக்ளீஸும் முறையே விரிவுபடுத்தினார்கள். இப்படி விரிவுபடுத்தப்பட்ட பிறகு பெரிக்ளீஸ் ஆட்சியின் உச்சிக் காலத்தில் எப்படி இருந்ததென்பதையே இங்குக் கூற விரும்புகிறோம். இப்படிக் கூறுகிறபோது கூறியது கூறல் என்னும் குற்றம் குறுக்கிட்டாலும் அதை வாசகர்கள் பொருட்படுத்தாதிருப்பார்களாக. அவர்களுக்கு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டுமென்பதுதான் நமது நோக்கம்.
இப்பொழுது உலகத்துப் பெரும்பாலான நாடுகளில் ஓட்டு ரிமையுடைய பிரஜைகள், மூன்று வருஷத்திற்கொரு தடவையோ, ஐந்து வருஷத்திற்கொரு தடவையோ நடைபெறும் தேர்தலில் தங்களுக்கிஷ்டப்பட்ட அபேட்சகர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்கிறார்கள். இப்படித் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள், நாட்டுக்குத் தேவையான சட்ட திட்டங்களை இயற்று கிறார்கள். இவர்களிற் சிலர், இந்தச் சட்டதிட்டங்களை அமுல் நடத்துகிறார்கள்; அரசாங்கத்தை நிருவாகஞ் செய்கிறார்கள். பிரதி நிதிகளைத் தெரிந்தெடுப்பதோடு ஓட்டர்களின் கடமை முடிந்து விடுகிறது. தங்களுக்காகத் தங்கள் பிரதிநிதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களென்பதை, வேண்டுமானால் பத்திரிகைகள், பிரசங்கங்கள் முதலியவற்றின் மூலமாகக் கவனித்துக் கொண்டி ருக்கலாம். இதுவும் அவரவருடைய அக்கரையையும் அவகாசத்தை யும் பொறுத்தது. இதனையே ஜனப்பிரதிநிதித்துவ ஆட்சியென்று சொல்கிறோம்.
ஆனால் ஆத்தென்ஸில் இப்படியில்லை; நாட்டுக்குகந்த சட்ட திட்டங்களைச் செய்வதில் ஜனங்கள் நேரடியாகக் கலந்து கொண்டார்கள். அரசாங்கத்தின் அன்றாட நிருவாகத்தில் பங்கு கொள்ளும் உரிமையும் சந்தர்ப்பமும் ஜனங்களுக்கு இருந்தன. இதுவே ஜனங்களின் நேர்முகமான ஆட்சியெனப்படுவது. ஆத்தென் ஸின் செல்வாக்குக்குட்பட்ட பெரும்பாலான கிரேக்க ராஜ்யங்களில் இத்தகைய ஆட்சியே நடைபெற்று வந்தது. குறுகிய எல்லையும் சுருங்கிய ஜனத்தொகையுமுடைய ராஜ்யங்களிலேயே இது சாத்தியம். இதனால் நன்மைகளைப் போல் தீமைகளும் உண்டு. ஆனால் இந்த ஆராய்ச்சிகளெல்லாம் இங்கு நமக்குத் தேவை யில்லை.
சட்ட நிர்மாணஞ் செய்வதிலும் அரசாங்க நிருவாகத்திலும் ஜனங்கள் நேரடியாக கலந்துகொண்டார்களென்று சொன்னால் எல்லா ஜனங்களுமல்ல; தகுதியுடையவர்கள்தான். இது கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம். தகுதியுடையவர்கள் யார்? கிரேக்கப் பெற்றோர் களுக்குப் பிறந்த, இருபது வயது பூர்த்தியான கிரேக்க ஆண்பிள்ளைகள். இவர்களுக்குத்தான் ஓட்டுரிமை உண்டு. இவர்கள் தான் பூரணப் பிரஜைகள். இப்படிப்பட்டவர்கள்தான் அரசியலில் நேரடியாகக் கலந்து கொள்ளும் தகுதி பெற்றிருந்தார்கள். உதாரணமாக, ஆத் தென்ஸ் ராஜ்யத்தின் மொத்த ஜனத் தொகை உத்தேசமாக 3,15,000; இதில் 43,000 பேர்தான் ஓட்டுரிமையுடைவர்களாகவும் அது காரண மாக அரசியலில் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்களாகவும் இருந்தார்கள். பெண்கள், அடிமைகள், வியாபார நிமித்தமாகவோ தொழில் நிமித்தமாகவோ ஆத்தென்ஸில் வந்து குடியேறி வசிக்கும் அந்நியர்கள், இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இவர்கள் பூரணப் பிரஜைகளுமல்லர். எனவே ஆத்தென்ஸ் ராஜ்யத் தின் மொத்த ஜனத்தொகையில் ஏறக்குறைய ஏழில் ஒரு பங்கினரான ஜனங்களே அரசியலில் கலந்து கொள்ளும் தகுதியுடையவர் களாயிருந்தார்கள். இங்ஙனம் தகுதி யுடைய எல்லோருக்கும் சட்ட நிர்மாணஞ் செய்யும் விஷயத்திலாகட்டும், அரசாங்கத்தை நிருவாகஞ் செய்யும் விஷயத்திலாகட்டும் சம உரிமைகளும் சம சந்தர்ப் பங்களும் இருந்தன. இவர்களுள் எவ்வித ஏற்றத்தாழ்வுகளோ, வேறு வித்தியாசங்களோ காட்டப்படவில்லை. இதனால்தான் ஆத்தென் ஸின் ஜன அரசியல், ஓர் அமிசத்தில் பார்த்தால் குறுகியதாகவும், மற்றோர் அமிசத்தில் பார்த்தால் நிறைவுடையதாகவும் இருக்கிற தென்று அறிஞர்கள் கூறுவார்கள். அரசியலில் கலந்து கொள்ளும் உரிமை ஒரு சிலருக்கே அளிக்கப்பட்டிருக்கிற தென்ற வகையில் குறுகியதாகவும், அப்படி அளிக்கப்பட்டிருந்தவர்கள் அரசியலில் கலந்துகொள்ள சம சந்தர்ப்பங்கள் பெற்றிருந்தார்கள் என்ற வகையில் நிறைவுடைய தாகவும் இருந்ததென்பதே இதற்கு அர்த்தம்.
இந்த அரசியலமைப்பின் அடிப்படையான ஸ்தாபனம் ஜன சபை (அதாவது ஓட்டுரிமையுடைய ஜனங்களின் சபை இதனைப் பிரஜாசபை என்று அழைத்தலே பொருந்தும். தற்காலத்தில் எல் லோருக்கும் புரிந்த பாஷையில் அஸெம்பிளி அல்லது கீழ்ச்சபை என்று கூறலாம்.) எக்ளேஷியா என்று இதற்குப் பெயர். ஓட்டுரிமை படைத்திருந்த அனைவரும் இதில் அங்கத்தினரா யிருக்கும் உரிமை பெற்றிருந்தார்கள். இப்படி உரிமை பெற்றிருந்த போதிலும், இவர்கள் சபையின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆஜராக வேண்டு மென்பது கட்டாயமில்லை. அது முடியவும் முடியா தல்லவா? சாதாரணமாக ஒவ்வொரு கூட்டத்திலும் ஐயாயிரம் பேருக்குக் குறையாமல் ஆஜராயிருந்தார்களென்று தெரிகிறது. புதிதாக ஒருவருக்குப் பிரஜா உரிமை அளித்தல், வேண்டாதவரைத் தேசப் பிரஷ்டம் செய்வித்தல் இவை போன்ற சில முக்கியமான பிரச்னை களைப் பற்றி முடிவு தெரிவிக்க வேண்டியிருக்கிறபோது, குறைந்த பட்சம் ஆறாயிரம் பேர் ஆஜராயிருக்க வேண்டுமென்ற ஒரு நியதி இருந்தது.
அரசாங்கத்தின் சகலவித நிருவாக அதிகாரங்களும் இந்தச் சபையினிடமிருந்தே பிறந்தவனென்று பொதுப்படையாகச் சொல்லலாம். பிற நாடுகள் மீது சண்டை தொடுத்தல் அல்லது பிற நாடுகளுடன் சமாதானஞ் செய்து கொள்ளல், அந்நிய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்புதல், அல்லது அந்நிய நாட்டுத் தூதர்களை வரவேற்றல், வெளி நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அங்கீ கரித்தல், ராஜாங்க மதத்தைப் பரிபாலித்தல், இப்படிப்பட்ட அநேக விஷயங்களை இந்தச் சபை கவனித்து வந்தது. அரசாங்கத்தின் பிரதியோர் இலாகாவும் இதன் நுணுக்கமான பரிசீலனைக்குட் பட்டிருந்தது. படைத் தலைவர்களின் போர்முக நடவடிக்கைகள் இதன்கூரிய பார்வைக்குட்பட்டிருந்தன. இன்னும் இந்தச் சபை, நாட்டுக்கு நன்மை புரிந்தவரைச் சன்மானித்தது; தீமை செய்தவரைத் தண்டித்தது; தக்கார்க்குப் பிரஜா உரிமை அறித்தது; தகவிலார்க்கு அதை மறுத்தது; இப்படி அநேக பொறுப்புக்கள் இதற்கு இருந்தன.
இந்த ஜனசபை ஒன்பது நாட்களுக்கு ஒருமுறைகூடியது. அதாவது வருஷத்தில் நாற்பது தடவை இதன் கூட்டங்கள் நடை பெற்றன. இவை சாதாரணக் கூட்டங்கள். இவை தவிர, அவசியமும் அவசரமுமான பிரச்னைகளைப் பற்றித் தீர்மானிக்க வேண்டி நேரிட்டால் அவ்வப்பொழுது விசேஷக் கூட்டங்களும் நடைபெறு வதுண்டு.
அதோ, அரியோபாகஸ் குன்று மேற்கிலுள்ள சில குன்றின் சரிவில் ஒரு மைதானம் இருக்கிறது பாருங்கள்; அதற்கு நிக்ஸ் என்று பெயர். அந்த இடத்தில் தான் சாதாரண ஜனசபை கூடும். திறந்த வெளியில், பிறை வடிவமாகப் போடப்பட்டிருக்கும் கல் பெஞ்சு களின் மீது அங்கத்தினர்கள் அமர்ந்திருப்பார்கள். பிறைக்கு மத்தியி லுள்ள கற்பாறை மேடை மீது கூட்டத்தின் தலைவர்கள் வீற்றி ருப்பார்கள். அதிகாலையிலேயே கூட்டம் துவங்கிவிடும். சிறு தூறல் விழுந்தாலும், பூமியதிர்ச்சி ஏற்பட்டாலும், புயற்காற்றடித்தாலும், கிரகணம் பிடித்தாலும், அபசகுனமென்று சொல்லி உடனே கூட்டத்தைத் தள்ளி வைத்து விடுவார்கள்; மேலும் தொடர்ந்து நடத்தமாட்டார்கள். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முந்தி ஜூஸ் தெய்வத்திற்குப் பூசை நடைபெறும். கருப்புப் பன்றியொன்று பலி கொடுக்கப்படும். பின்னர் தலைவர்கள் ஆசனத்தில் அமர்வார்கள். கட்டியக்காரன் மாதிரி ஒருவன் எழுந்து கூட்டம் துவங்கிவிட்ட தென்று அறிவிப்பான். இதற்கப்புறந்தான், பேச்சு, வாதப்பிரதி வாதங்கள் எல்லாம் நடைபெறும். பேசுகிறவர்களுக்கென்று, தனி யாக உயர்ந்ததொரு மேடை இருந்தது. அதில் நின்று கொண்டுதான் அவர்கள் பேசவேண்டும். பேச முன் வருகிறவர்கள், வயதுக் கிரமத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அப்படி முன்வரு கிறவர்கள், சொந்த நிலமில்லாதவர்களென்றோ, சட்ட ரீதியாக விவாகஞ் செய்து கொள்ளாதவர் களென்றோ, தாய் தந்தையரைப் பேணாதவரென்றோ, நன்னெறி கடைப்பிடிக் காதவ ரென்றோ, ராணுவ சேவையைப் பொறுத்த கடமையைச் செய்யாதவ ரென்றோ, போர்க்களத்தில் கேடயத்தைக் கைவிட்டவரென்றோ, அரசாங்கத் திற்குச் செலுத்த வேண்டிய வரி முதலியவைகளைச் செலுத்தாத வரென்றோ ருஜுப்பிக்கப்பட்டுவிட்டால் அவர்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் இவ்வளவு நேரந்தான் பேச வேண்டுமென்ற நியதி இருந்தது.
சபையில் பேசுவதென்பது சுலபமல்ல. பேசிப் பேசிப் பழக்கம் பெற்றவர்கள் கூட சில சமயங்களில் சிரமப்பட்டுப் போவதுண்டு. வார்த்தைகளைத் தவறாக உச்சரித்துவிட்டால், சபையினர் கொல் லென்று சிரித்து விடுவார்கள்; விஷயத்தை யொட்டிப் பேசாமற் போனால், ஓவென்றும், உஸ்ஸென்றும் சத்தம் போடுவார்கள்; பேசுவதும் பொருத்தமாகவும் பிடித்தமாகவும் இருந்தால் பேஷ் பேஷ் என்று சொல்வார்கள்; கைத் தட்டுவார்கள்; சீழ்க்கை (சீட்டி) அடிப்பார்கள்; பொருத்தமாகவும் பிடித்தமாகவும் இல்லா விட்டால் ஒரே இரைச்சல்தான்; பேசுகின்றவர் மேடையி லிருந்து இறங்கிவிட வேண்டியதுதான். பொதுவாக, நாவன்மை படைத்திருந் தவர்களுக்கு ஜனசபையில் அதிக மதிப்பு இருந்தது. அவர்களால் எந்தக் காரியத்தையும் சுலபமாகச் சாதித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இதுவே பிற்காலத்தல் தீமையாகவும் வளர்ந்தது. மற்றத் தகுதிகள் எதுவும் இல்லாவிட்டாலும், நாவன்மை யொன்றை மட்டும் கொண்டு, பலர் ஜனசபையில் மட்டுமல்ல; சமுதாயத்தில் கூட செல்வாக்குப் பெற்றுவிட்டார்கள். இவர்களால் தீமையே விளைந்தது. இது நிற்க.
சபையில் குறிப்பிட்ட ஒரு பிரச்னை சம்பந்தமான வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பின்னர் அதன்மீது ஒட்டெடுக்கப்படும். சாதகமாயுள்ளவர்களையும் பாதகமாயுள்ளவர்களையும் முறையே கைதூக்கச் சொல்லி அதன் மூலமாக மேற்படி பிரச்னையை அங்கீ கரிக்கவோ நிராகரிக்கவோ செய்வார்கள். யாரேனும் குறிப்பிட்ட ஓர் அங்கத்தினரைப் பாதிக்கிற பிரச்னையாயிருந்தால், அப்பொழுது ரகசியமாக, அதாவது ஒருவர் ஓட்டுப்போடுவது மற்றொருவருக்குத் தெரியாமல் ஓட்டெடுக்கப்படும்.
எக்ளேஷியாவுக்கு அடுத்தது பூலியென்ற மேல் சபை. (இதனை செனெட் அல்லது கவுன்சில் என்று கூறலாம்). மேல் சபையென்று சொல்வது ஓரளவுக்குத்தான் பொருந்தும். உண்மையில் இஃது எக்ளேஷியாவின் நிருவாக சபையாக இருந்தது. எக்ளேஷியாவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய சட்ட திட்டங்களையும், ஆலோசிக்கப் பட வேண்டிய பிற விஷயங்களையும் இது தயாரித்துக் கொடுத்தது; இன்ன விஷயத்தைப் பற்றி இப்படி முடிவு செய்யலாமென்று அதற்கு ஆலோசனை கூறியது; அதன் சார்பாக அரசாங்கத்தின் நிருவாக காரியங்களைக் கவனித்து வந்தது. எனவே, இந்த பூலி சபை, ஒரே சமயத்தில் ஆலோசனை சபையாகவும் காரிய சபையாகவும் இருந்தது. அரசாங்கத்தின் வரவு இனங்களுக்கு வழிதேடுதல், செலவு இனங்களைத் தணிக்கை செய்தல், ராணுவத்தை எப்பொழுதும் விழிப்புடனிருக்கச் செய்தல், ஆதீனப் பட்டிருக்கும் ராஜ்யங்களின் கப்பத் தொகையை அவ்வப்பொழுது நிர்ணயித்தல், அந்நிய நாடு களுடன் செய்து கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள் முதலியவற்றைத் தயாரித்தல், இப்படி அநேக காரியங்கள் இதன் அதிகாரத்துக்குட் பட்டிருந்தன.
ஆத்தென்ஸ் ராஜ்யம் பல பகுதிகளாக (டெமேக்களாக)ப் பிரிக்கப்பட்டிருந்த தல்லவா? அப்படியே ஆத்தீனியர்கள் பத்துக் குலத்தினராகவும் பிரிக்கப்பட்டிருந் தார்களல்லவா? முதலில் ஒவ்வொரு பகுதியும், அதனதன் விஸ்தீரணத்திற்குத் தகுந்தபடி, ஓட்டுரிமையுடையவர்களில் (ஓட்டர்களின் ஜாபிதா ஒன்று ஆத்தென்ஸில் இருந்து வந்ததென்பது குறிப்பிடத்தக்கது.) முப்பது வயதுக்கு மேற்பட்ட சிலரை பூலி சபையைப் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுத்தது. இப்படித் தெரிந்தெடுக்கப்பட்டவர்களிலிருந்து சீட்டுக்குலுக்கிப் போட்டு, ஒவ்வொரு குலத்தினருக்கும் ஐம்பது ஐம்பது பிரதிநிதிகள் விகிதம் மொத்தம் ஐந்நூறு பேர் தெரிந் தெடுக்கப்பட்டார்கள். இப்படித் தெரிந்தெடுக்கப்பட்டவுடன் இவர்கள் பூலி சபை அங்கத்தினராக அங்கீகரிக்கப்பட்டுவிடவில்லை. பழைய பூலி சபையானது இவர்களுடைய சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை முதலியவைகளைப் பற்றி நன்கு பரிசீலனை செய்து பார்த்து, தகுதியுடையவர்கள்தான் என்று அங்கீகாரம் கொடுத்த பின்னரே, இவர்களுடைய அங்கத்தினர் பதவி ஊர்ஜிதமடைந்தது. தகுதியற்றவர் கண்டிப்பாக நிராகரிக்கப் பட்டனர்.
இங்ஙனம் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தினரின் பதவி காலம் ஒரு வருஷந்தான். ஆனால் ஒரு தடவை அங்கம் வகித்தவர் மறுதடவை அங்கம் வகிப்பது அசாத்தியமாயிருந்தது. ஏனென்றால், உரிமையும் தகுதியுமுடைய எல்லாப் பிரஜைகளும் இந்தப் பூலி சபையில் அங்கம் வகித்து முடிந்த பின்னர்தான், ஏற்கனவே ஒரு தடவை அங்கத்தினராயிருந்தவர், மற்றொரு தேர்தலுக்கு அபேட்சக ராக நிற்க வேண்டுமென்ற ஏற்பாடு இருந்தது. இதனால் ஒவ்வொரு வருக்கும் அவரவருடைய ஆயுட்காலத்தில் ஒரு தடவைதான் இந்தப் பூலி சபையில் அங்கத்தினராயிருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது; ஆனால் இந்தச் சந்தர்ப்பம் நிச்சயமாகக் கிடைத்தது; ஒருவர் தவறாமல் எல்லோருக்கும் கிடைத்தது.
ஆத்தென்ஸில் முக்கியமான இடம் சந்தை கூடும் சதுக்கம். அகோரா என்று பெயர். இதன் தெற்குப் பக்கத்திலுள்ள ஒரு பெரிய மண்டபத்தில் தான் பூலி சபையின் கூட்டங்கள் நடைபெறும். கூட்ட நடவடிக்கைகளைக் கவனிக்கப் பொதுஜனங்கள், பார்வை யாளர்களாக அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த ஐந்நூறு பேரும் அடிக்கடி ஒன்றுகூடி அரசாங்க நிரு வாகத்தை நடத்திக் கொண்டிருக்க முடியாதல்லவா? இதற்காக என்ன செய்தார்களென்றால், ஒரு வருஷத்தை முப்பத்தாறு நாட்கள் கொண்ட பத்து மாதங்களாகப் பிரித்தார்கள். இந்த மாதத்திலும் பத்து குலத்தினரில் எந்தக் குலத்து ஐம்பதின்மர் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது சீட்டுப் போட்டுப் பார்த்தே நிர்ணயிக்கப்பட்டது. இப்படி நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துகிற ஐம்பது பேரும், பிரிட்டேனியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்; பிரசிடெண்டுகள் என்று அர்த்தம். இவர்கள், நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துகிற வரையில், அதாவது முப்பத்தாறு நாட்கள் வரையில் அரசாங்கச் செலவிலேயே சாப் பிட்டு வந்தார்கள். (ஐம்பது பேர் சேர்ந்து முப்பத்தாறு நாட்கள் ஒரே தொடர்ச்சியாக நிருவாகத்தை நடத்துவது சிரம சாத்தியமா யிருந்தது. இதற்காக முப்பத்தாறு நாட்கள் ஐந்து வாரங்களாகப் பிரித்து, ஒவ்வொரு வாரத்திலும் பத்து பத்து பேர் விகிதம் நிருவாகம் செய்வதென்று ஏற்பாடு செய்யப்பட்டது.)
தினந்தோறும் காலையில் இந்த நிருவாகக்கமிட்டி அங்கத் தினர்கள் ஒன்றுகூடி, அன்றைய கூட்டத்தின் தலைவராகவும், அன்று பூலி சபை கூடுவதாயிருந்தால் அதன் தலைவராகவும் தங்களிலேயே ஒருவரைச் சீட்டுக் குலுக்கிப் போடுவதன்மூலம் தெரிந்தெடுத் தார்கள். பூலி சபையைக் கூட்டுவதும், அது கவனிக்க வேண்டிய விஷயங்களைத் தயாரிப்பதும் இவர்கள் பொறுப்புக்களாயிருந்தன.
பூலி சபையின் பிரதியோர் அங்கத்தினரும், அங்கத்தினரா வதற்கு முன்னர், தகுதியுடையவர்தானா என்று எப்படிப் பரிசீலனை செய்யப்பட்டனரோ, அப்படியே அங்கத்தினர் பதவிக் காலம் முடிந்ததும், அந்தப் பதவியை ஒழுங்காக வகித்து வந்தனரா வென்று பரிசீலனை செய்யப்பட்டனர். இவர்கள் அங்கத்தினராயிருந்த ஒரு வருஷ காலத்தில், ராணுவ சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். தவிர, இவர்கள் கூட்டத்தில் ஆஜராயிருந்த ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு ட்ராக்மா விகிதம் (ஏறக்குறைய ஒன்பது அணா பெறு மான ஒரு நாணயம்). ஊதியமாகப் பெற்றனர்.
பூலி சபைக்கு அடுத்தது அரியோபாகஸ் சபை. முன்கூட்டி ஆலோசித்துச் செய்யப்பட்ட கொலை முதலிய சில வகைக் குற்றங்களை விசாரணை செய்வது, புனிதமான ஒலிவ மரங்களைப் பாதுகாத்து வருவது, இப்படிப்பட்ட சில பொறுப்புக்களே இதற்கு இருந்தன. அதிகாரங்கள் யாவும் குறைக்கப்பட்டு, பெயரளவுக்கு இந்தச் சபை இருந்து வந்தது. மாஜி ஆர்க்கோன்கள், தங்கள் ஆயுட் காலம் வரை இதன் அங்கத்தினராயிருந்து வந்தார்கள்.
ஆர்க்கோன்கள் எப்பொழுதும் போல் ஒன்பது பேராகவே இருந்தனர். சில தரத்தினர்தான் இந்தப் பதவி வகிக்கத் தகுதியுடை யவர் என்று முந்தி ஏற்பாடு இருந்ததல்லவா, அது ரத்து செய்யப் பட்டு விட்டது. ஓட்டுரிமையுடைய எல்லாப் பிரஜைகளும் இதற்கு அபேட்சகராக நிற்கலாம். சீட்டுக் குலுக்கிப் போட்டு இவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் இதன்மூலம் தகுதி யற்றவரும் வந்துவிடக் கூடுமல்லவா, இதற்காகச் சில நிபந்தனைகள் ஏற்படுத்தி யிருந்தார்கள். ஆர்க்கோனாகச் சில சீட்டுவிழப் பெற்றவர், வாழ்க்கையில் ஒழுங்கும் ஒழுக்கமும் உடையவரா, ராணுவ சேவை செய்திருக் கிறாரா, வரி பாக்கி யில்லாதவரா, இவருடைய தகுதியை யாரும் ஆட்சேபிக்கவில்லையா, இப்படிப் பல பரிசோதனைகள் செய்யப் பட்டன. இவற்றில் தேர்ச்சிப் பெற்றவரே, தமது கடமையை ஒழுங் காகச் செய்வதாகப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ஆர்க்கோன் பதவியில் அமர்ந்தனர். இவர்களுடைய உத்தியோக காலத்தில் இவர்கள் செய்த காரியங்கள் யாவும் பிறகு தணிக்கை செய்யப் பட்டன. இந்தத் தணிக்கையில் தேர்ச்சியடைந்தவர்தான் அரியோ பாகஸ் சபையில் அங்கத்தினராயிருக்கும் தகுதி பெற்றனர். இந்த ஒன்பது ஆர்க்கோன்களும் மத சம்பந்தமான விழாக்களில் தலைமை வகித்தல் போன்ற சில சம்பிரதாய அதிகாரங்களையே செலுத்தி வந்தார்கள். இப்படிச் சம்பிரதாய அதிகாரிகளாயிருந்தபோதிலும், இவர்களுக்கு ஒரு தொகை சம்பளமாக அளிக்கப்பட்டு வந்தது.
2. ராணுவ நிருவாகம்
படைத் தலைவர்களென்று பதின்மர் இருந்தனர். (இவர்கள் ஸ்ட்ராட்டெகாய் என்று அழைக்கப்பட்டார்கள்). ராணுவ நிருவாகம் பூராவும் இவர்கள் வசத்திலேயே இருந்தது. இவர்கள் பிரதி வருஷமும் ஜனசபையினால் தெரிந்தெடுக்கப் பட்டார்கள். இவர்களைத் தெரிந்தெடுக்கிற விஷயத்தில் சீட்டுக் குலுக்கிப் போடும் முறை அனுஷ்டிக்கப்படவில்லை; பகிரங்கமான தேர்தலே நடைபெற்றது. ஏனென்றால், திறமைசாலிகளையே தெரிந்தெடுக்க வேண்டியதா யிருந்தது. இங்ஙனம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேர்தல் நடைபெற்ற போதிலும், கூடியமட்டில் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒவ்வொருவரைத் தெரிந்தெடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இது கட்டாய விதியாக அனுசரிக்கப்படவில்லை.
ஒரு வருஷம் படைத்தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டவர் மறுவருஷம் தெரிந்தெடுக்கப்படக் கூடாதென்ற நிர்ப்பந்தமில்லை. ஒருவரையே பிரதி வருஷமும் தொடர்ந்தாற்போல் தெரிந் தெடுக் கலாம். ஆனால் ஒவ்வொரு வருஷமும் தேர்தல் நடைபெற்றுத் தானாக வேண்டும். பெரிக்ளீஸ் மட்டுமல்ல, இன்னும் அநேகர் இங்ஙனம் தொடர்ந்தாற்போல் ஒவ்வொரு வருஷமும் படைத் தலை வராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். பிற்காலத்தில் பிரபல சேனாதிபதியாக விளங்கிய போஷியோன் (402-317) என்பவன் நாற்பத்தைந்து தடவை திரும்பத் திரும்ப, படைத்தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறான்.
படைத்தலைவர்களுக்கிருந்த மதிப்பு மிக அதிகம். ஆனால் இதற்குத் தகுந்த பொறுப்பும் இருந்தது. இவர்கள் போர்க்களத்தில் படைகளை நடத்திச் செல்லும் சேனாதிபதிகளாக மட்டும் இல்லை; ராணுவச் செலவை நிர்ணயிக்கிறவர் களாகவும், அந்நிய நாடுகளுடன் சமரஸம் பேசுகிறவர்களாகவும், ஆத்தென்ஸுக்கு வெளிநாடு களிலிருந்து ஒழுங்காக உணவு தானியங்கள் கிடைத்துக் கொண்டி ருப்பதற்கு ஏற்பாடு செய்கிறவர்களாகவும், இப்படிப் பல திறப் பட்ட பொறுப்புக்களுடையவர்களாகவும் இருந்தனர். இந்தப் பொறுப்புக்கள் வரவர அதிகப்பட்டே வந்தன. அரசாங்கத்தின் சகல வரவு அதிகப்பட்டே வந்தன. அரசாங்கத்தின் சகல வரவு செலவு களும் இவர்களுடைய மேற்பார்வைக் குட்பட்டன. ராணுவ அதிகாரத்தோடு அரசியல் அதிகாரமும் இவர்கள் கைக்கு வந்தது. இவர்களில் பிரதம படைத்தலைவனாயிருக்கப்பட்டவன், ஒரு ராஜதந்திரியாகவும் இருந்துவிட்டால் கேட்கவேண்டியதில்லை. அரசாங்க யந்திரத்தை இயக்கும் அச்சாணிபோல் இருந்தான். பெரிக்ளீஸ் இத்தகைய வன்தானே?
இங்ஙனம் சர்வ அதிகாரங்களையும் இந்தப் படைத் தலைவர்கள் படைத்திருந்த போதிலும் இவர்கள் ஜனசபையின் அதிகாரத்திற்குட்பட்ட வர்களாகவே இருந்தனர். அவசியம் என்று கருதுகிறபோது, இவர்களை வருஷ உத்தியோக காலம் முடிந்ததும் இவர்களின் சகல நடவடிக்கைகளையும் தணிக்கை செய்யவும், ஜனசபைக்கு அதிகாரமிருந்தது. ஆனால் ஜனசபை விஷயத்தில் இவர்களுக்கு ஒரு தனி உரிமை இருந்தது. அது தான் அந்தச் சபையின் விசேஷக் கூட்டங்களைக் கூட்டுவிக்கிற உரிமை. இந்த விசேஷக் கூட்டங்களில் இவர்கள் கொண்டு வந்த பிரச்னைகள் மட்டுமே ஆலோசிக்கப்பட்டன.
படைத்தலைவர்கள் ஒரு தொகையைச் சம்பளமாகப் பெற்றனர் என்று தெரிகிறது. ஆனால் இந்தத் தொகை இவர் களுடைய உழைப்புக்கோ பொறுப்புக்கோ போதுமானதென்று சொல்ல முடியாது.
3. நீதி ஸ்தலங்கள்
ஆத்தென்ஸின் நீதி ஸ்தலங்களைப் பொது ஜன கோர்ட்டுகள் என்று சொல்ல வேண்டும் (இவற்றிற்குப் பொதுவாக ஹெலீயா என்று பெயர். திறந்த வெளியில் இவற்றின் நடவடிக்கைகள் நடைபெற்றன. ஹெலியோஸ் என்ற கிரேக்க வார்த்தையினடியாகப் பிறந்தது ஹெலியா. ஹெலியோஸ் என்றால் சூரியன் என்று அர்த்தம்). எபியால்ட்டீஸும் பெரிக்ளீஸும் சேர்ந்து செய்த சீர்திருத்தங்களுள் முக்கியமானது, நீதி வழங்கும் விஷயத்தில் அரியோபாகஸ் சபைக்கும் ஆர்க்கோன்களுக்கும் இருந்த அநேக அதிகாரங்களை இந்தப் பொதுஜன நீதி ஸ்தலங்களுக்கு மாற்றிக் கொடுத்ததுதான். முப்பது வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆத்தீனியப் பிரஜைகளும் இந்த நீதி ஸ்தலங்களில் ஒரு வருஷ காலம் பதவி வகிக்கும் உரிமை பெற்றிருந்தனர். எப்படி?
பிரஜைகளின் ஜாபிதா, அதாவது ஓட்டர்களின் ஜாபிதா ஒன்று இருந்ததல்லவா, இதிலிருந்து பிரதியொரு வருஷமும் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆறாயிரம் பேர் தெரிந்தெடுக்கப்பட்டனர். (இப்படித் தெரிந்தெடுக்கப் பட்ட இவர்கள் டிக்காஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது ஜூரிகள் என்று கூறலாம்). சீட்டுக் குலுக்கிப் போட்டுத்தான் இந்த ஆறாயிரம் பேரும் பத்துக் குழு வினராகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் ஐந்நூறு பேர். மொத்தம் ஐயாயிரம் ஆகிறதல்லவா? மிகுதி ஆயிரம் பேரும், காலில் விழுந்த ஸ்தானங்களைப் பூர்த்தி செய்வதற்கென்றும், மற்ற அவசரத் தேவைகளுக் கென்றும் அதிகப்படியாக இருந்தனர். (இந்தக் குழுக் களுக்கு டிக்காஸ்ட்டெரிகள் என்று பெயர். இவை கூடி விசாரணை நடத்தும் இடமும் இதே பெயரால் அழைக்கப்பட்டது). இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீட்டு (டிக்கெட்) அளிக்கப்பட்டது. இந்தச் சீட்டில், பெயர், ஊர், குழு முதலிய விவரங்கள் அடங்கி யிருந்தன. இதை இவர்களுடைய நியமனப் பத்திரங்கள் என்று சொல்லாம். (பூலி சபை அங்கத்தினர்கள், அந்தச் சபையில் அங்கத்தி னராயுள்ள காலம் வரை, நீதிபதிகளாக இருப்பதினின்று விலக்கப் பட்டிருந்தார்கள்).
நியமனப் பத்திரம் பெற்ற நீதிபதிகளின் உத்தியோக காலம் ஒரு வருஷம். அந்த ஒரு வருஷ காலமும் உத்தியோகம் பார்த்துத் தானாக வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. ஆனால் உத்தி யோகம் பார்க்கிற ஒவ்வொரு தினத்திற்கும் இரண்டு ஓபோல்கள் விகிதம் ஊதியம் பெற்றனர். (பின்னர் இதுமூன்று ஓபோல்களாக அதிகப் படுத்தப் பெற்றது). இதனால் ஒவ்வொரு குழுவிலிருந்தும் இருநூறு பேருக்குக் குறையாமல் முந்நூறு பேருக்கும் அதிகப்படி யாகாமல், வழக்குகளை விசாரிக்க ஆஜராயினர். எந்த வழக்கு எந்தக் குழுவினர் முன் விசாரிக்கப்பட வேண்டுமென்பது அன்றாடம் காலையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் யார் முன்னர் எந்த வழக்கு விசாரணைக்கு வருமென்பது முன் கூட்டித் தெரியாது. நீதி ஸ்தலங்களில் லஞ்சம் முதலிய தீமைகள் இடம் பெறுதல் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஒரு வழக்கை, இத்தனை பேர் சேர்ந்துதான் விசாரிக்க வேண்டுமென்ற நிர்ணயம் கிடையாது. வழக்குகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்திருந்தது விசாரணை நடத்துகிற நீதிபதிகளின் எண்ணிக்கை. முக்கியமான வழக்குகள் பெரும்பாலும் ஆத்தென்ஸிலேயே விசாரிக்கப்பட்டன. இவை தவிர, ஆங்காங்கு ஏற்படக்கூடிய சில்லரை வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல, முப்பது நீதிபதிகள் அடங்கிய ஒரு கோஷ்டி அவ்வப்பொழுது சுற்றுப்பிரயாணஞ் செய்து வந்தது. ஜனங்கள், வழக்குகள் நிமித்தம் ஆத்தென்ஸுக்கு வந்து சிரமப்படக் கூடாதென்பதற்காகவே இந்தப் பிரயாணக் கோர்ட்டுகள் இருந்தன.
தேசத்திற்கு விரோதமாகவோ, மதத்திற்கு விரோதமாகவோ யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது அரசாங்கம் வழக்குத் தொடராது; தனிப்பட்ட நபர்கள் யார் வேண்டுமானாலும் யார் மீதும் வழக்குத்தொடரலாம் என்ற வழக்கு இருந்தது. இதனால் மனச்சாட்சியற்ற சிலர் தோன்றி, தங்களுக்கு வேண்டாதவர் மீதோ, பணக்காரர் மீதோ பொய் வழக்குத் தொடுத்து, அல்லது தொடுப்ப தாகப் பயமுறுத்திப் பணஞ் சம்பாதிக்க முயன்றனர்.
நீதி ஸ்தலங்களில், வாதியே, தன் கட்சியை எடுத்துச் சொல்லலாமென்ற ஏற்பாடு இருந்தது. இப்படிச் சொல்ல முடியா தவர்கள், சட்ட ஞானம் பெற்றவர்களையோ நன்றாகப் பேசக் கூடியவர்களையோ அமர்த்தி இவர்களைக் கொண்டு வழக்குகள் நடத்தினர். இப்படி அமர்த்திக் கொள்ளப்பட்டவர்கள் சட்டத்தை யொட்டிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தங் களுடைய கட்சிக்காரர், நாட்டிற்குச் செய்துள்ள சேவை, அவருடைய பெருமை, இதே மாதிரி, எதிர்க்கட்சிக்காரர் செய்யாத சேவை, அவருடைய குறைகள், இவைகளைப் பற்றியெல்லாம், நீதிபதிகளின் உணர்ச்சிகளைக் கிளப்பக்கூடிய விதத்தில் பேசு வார்கள். பொது வாகவே இந்த நீதி ஸ்தலங்களின் நடவடிக்கைகள் உணர்ச்சி மிகுந்த வர்களுக்கு மிகவும் ருசிகரமாயிருக்கும்.
இந்த நீதி ஸ்தலங்களின் முன்னர் எல்லாவிதமான வழக்கு களும் விசாரணைக்கு வந்தன. சிவில் வழக்குகளென்றும் கிரிமினல் வழக்குகளென்றும் வித்தியாசம் கிடையாது. முக்கியமான கொலை வழக்குகள் மட்டும் அரியோபாகஸ் சபையின் விசாரணைக்கு அனுப்பப்பட்டன. இவை - மேற்சொன்ன நீதி ஸ்தலங்கள் - கூறும் தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது. அபராதம், கசையடி, சூடு போடுதல், ஓட்டுரிமை ரத்து, சொத்துப் பறிமுதல், தேசப்பிரஷ்டம், மரணம் இப்படி அந்தந்தக் குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகள் விதிக்கப்பட்டன. தண்டனை விதிப்பதற்கு முன், குற்றஞ்சாட்டியவர், சாட்டப் பெற்றவர், இரு தரப்பினரையும், என்ன தண்டனை விதிக் கலாமென்று நீதிபதிகள் கேட்பார்கள். அவர்கள் கூறுவதைக் கூடிய மட்டும் அனுசரித்துத் தண்டனை விதிக்கப்பெறும்.
4. அரசாங்க நிருவாகம்
அரசாங்கமென்பது ஒரு பெரிய யந்திரமல்லவா? அதை இயக்க நூற்றுக்கணக்கான நிரந்தர உத்தியோகஸ்தர்கள், மேல திகாரிகள் ஆகியோர் இருந்தார்கள். ஆத்தென்ஸில், மொத்தம் சுமார் ஆயிரத்து நானூறுபேர் இருந்தார்களென்று தெரிகிறது. இவர்கள் தவிர, ஊர்க்காவலுக்கென்றும் துறைமுகக் காவலுக்கென்றும் ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தனர். (இவர்களைத் தற்கால பாஷையில் போலீஸ்காரர் என்று அழைக்கலாமா?) இன்னும் விற் படை வீரரென்று ஆயிரத்திருநூறு பேரும், குதிரைப்படை வீர ரென்று ஆயிரத்திருநூறு பேரும் இருந்தனர். தலைப்படையினரும் கடற்படையினரும் வேறு இருந்தனர். இவர்களெல்லோருக்கும் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கப் பட்டு வந்தது.
அரசாங்கப் பொக்கிஷத்திற்கு எப்படிப் பணம் வந்து கொண்டிருந்தது? பலவித வரிகளின் மூலம். ஏற்றுமதி இறக்குமதி வரி, சுங்கவரி, ஆத்தென்ஸில் வசிக்கும் அந்நியர் மீது தலைவரி, விபசாரத் தொழில் நடத்துவோர்மீது வரி, விற்பனை வரி, இப்படிப் பல வரிகள் விதிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில தொழில்களை நடத்துவதாயிருந்தாலும் சில பொருள்களை வைத்துக் கொண்டி ருப்பதாயிருந்தாலும் அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும். இதற்கு ஒரு தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதாவது ‘லைசென்ஸ்’ கட்டணங்கள் உண்டு. வெள்ளி முதலிய உலோகப் பொருள்கள் தோண்டி யெடுக்கப் பெறும் சுரங்கங்களி லிருந்து ஒரு தொகை, அரசாங்கத்திற்கு வருமானமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. சமஷ்டி அங்கத்தினர் ராஜ்யங்கள் செலுத்தி வந்த கப்பத்தொகை வேறு வந்து கொண்டிருந்தது. இந்தக் கப்பத்தொகை, முற்கூறிய வரிகள், இவைகளின் மூலம் அரசாங்கத்திற்கு வருஷந் தோறும் ஏறக்குறைய ஆயிரம் டாலெண்ட்டுகள் வருமானமாகக் கிடைத்துக் கொண்டிருந்த தென்று ஒரு கணக்கு கூறுகிறது. இந்தக் கிரமமான வருமானத்தைத் தவிர, அவசரத் தேவைகளின்போது, அதாவது யுத்தம் முதலியன ஏற்பட்டுவிட்டால் அவற்றின் செலவு களை ஈடுபடுத்த விசேஷ வரிகளும் விதிக்கப்பட்டன.
இனி, விவசாயம், தொழில், வியாபாரம், இப்படி ஒவ் வொன்றையும் மேற்போக்காகக் கவனித்துக் கொண்டு செல்வோம்.
5. விவசாயம்
ஆத்தென்ஸ் ராஜ்யத்தில், விவசாயத்திற்குத் தகுதியுள்ள நிலப் பகுதி மிகக்குறைவு. அதுவும் வளம் மிக்கதல்ல. ஆனால் ஆத்தீனிய விவசாயிகள், அதாவது கிராமவாசிகள் விடாமுயற்சி யுடையவர்கள்; உழைப்பிலே இன்பங் காணும் ஆற்றல் பெற்றவர்கள். மழை நீரை வீணாக்காமல் ஆங்காங்குத் தேக்கங்கள் கட்டியும், இந்தத் தேக்கங் களிலிருந்து சிறு சிறு கால்வாய்கள் வெட்டியும், இப்படிப் பாசன வசதிகள் பலவற்றை ஏற்படுத்திக் கொண்டிருந் தார்கள். இப்பொழுது ரசாயன உரங்கள் என்று நாம் சொல்கிறோமில்லையா, இந்த மாதிரியான உர வகைகளை பெரிக்ளீஸ் காலத்து விவசாயிகள் உப யோகித்து வந்தார்களென்று தெரிகிறது. இவர்கள் பட்ட பாட்டிற்குக் கிடைத்த பலன் கொஞ்சமாகவே இருந்தது. ராஜ்யத்தின் மொத்த ஜனத்தொகையில், நாலில் ஒரு பங்கினருக்குத்தான் போது மான அளவு உணவு தானியங்கள் கிடைத்தன. மற்றவற்றிற்குப் பிற நாடுகளையே எதிர்பார்க்க வேண்டியிருந்தது. ஆத்தென்ஸ், ஓர் ஏகாதிபத்தியமாக விரிந்ததற்கு இஃதொரு முக்கியமான காரணம். தான் வாழ வேண்டி, அது, தன்னை விரிவுபடுத்திகொள்ள வேண்டிய அவசியத்திற்குட்பட்டது.
மே மாதக் கடைசியில் அறுவடை நடைபெறும். அறு வடைக்குப் பிறகு, விவசாயிகள் ஒரு பெரிய விழாக் கொண்டா டுவார்கள். தமிழ் நாட்டுப் பொங்கல் திருவிழாப்போல் என்று இதனைச் சொல்லலாம்.
ஆத்தென்ஸ் ராஜ்யமெங்கு நோக்கினும் ஒலிவ மரங்கள்! திராட்சைக் கொடிகள்! தானிய உற்பத்திக் குறைவை நிறைவு செய் வது போலிருந்தன இவை. திராட்சை ரசமும் ஒலிவ எண்ணெயும், ஆத்தென்ஸின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். இவைகளை ஏற்றுமதி செய்து, இவைகளுக்குப் பதிலாகத் தேவை யான உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்து கொள்வார்கள்.
ஒலிவ மரம், நட்ட பதினாறு வருஷங் கழித்துப் பலன் கொடுக்கத் துவங்கும். நாற்பது வயதான மரத்தை முதிர்ந்த மர மென்று சொல்வார்கள். இந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழம், பழத்திற்குள் கொட்டையிலிருந்து எண்ணெய் எல்லாம் உபயோகப் படுத்தப்பட்டன. ஒலிவ எண்ணெயை, சாப்பாட்டுக்கும், தலையில் தேய்த்துக் கொள்வதற்கும், விளக்கு எரிப்பதற்கும், அடுப்பெரிப்ப தற்கும் உபயோகப்படுத்தினார்கள் கிரேக்கர்கள். ஒலிவ மரத்திற்கு அடுத்தபடியாக அத்தி மரங்கள் அதிகமாக உற்பத்தியாயின. அத்திப் பழம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாதென்று கண்டிப் பான ஓர் உத்தரவு இருந்தது. ஏனென்றால் இந்தப் பழந்தான், கிரேக் கர்களின் ஆகார வகைகளில் முக்கியமான, சத்துள்ள பொருளா யிருந்தது.
ஆடு மாடுகள், குதிரைகள், பன்றிகள், தேனீக்கள் முதலியவை போற்றி வளர்க்கப்பட்டன. பன்றி இறைச்சியில் கிரேக்கர்களுக்கு வெகு பிரியம். இவர்கள் சர்க்கரைக்குப் பதில் தேனையே பெரிதும் உபயோகித்து வந்தார்கள்.
6. தொழில்கள்
ஆத்தென்ஸ் ராஜ்யத்தில் பல வகைத் தொழில்கள் நடை பெற்று வந்தன. சுரங்கங்களிலிருந்து வெள்ளி, ஈயம் முதலிய பொருள் களைத் தோண்டி எடுப்பதில் பலர் ஈடுபட்டிருந்தனர். லாரியம் என்ற இடத்திலுள்ள வெள்ளிச் சுரங்கத்திலிருந்து அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. தெமிஸ்ட்டோக்ளீஸ், இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு, ஆத் தென்ஸின் கடற்படையை வலுப்படுத்தினான் என்பது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கும். இந்தச் சுரங்கத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து குத்தகைக்கு விட்டிருந்தது அரசாங்கம். குத்தகை எடுத்து, அதன் மூலம் பெரும் பணம் சேகரித்தவர் பலர் இருந்தனர் ஆத்தென்ஸில். இந்தச் சுரங்கத்தில் சுமார் இருபதினாயிரம் அடிமைகள் தினம் பத்து மணி நேர விகிதம் வேலை செய்தார்களென்றும், இதிலிருந்து கிடைத்த வெள்ளியைக் கொண்டே, ஆத்தென்ஸில் புழக்கத்தி லிருந்த நாணய வகைகள் தயாரிக்கப்பட்டனவென்றும் தெரிகின்றன.
மண்ஜாடிகள், பீங்கான் சாமான்கள் முதலியவற்றைத் தயாரிப்பதில் ஆத்தீனியர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இவை களின் மீது அழகான சித்திரங்கள் வரைவார்கள். இந்தச் சித்திரங்கள் பெரும்பாலும் இவர்களுடைய அன்றாட வாழ்க்கையைக் குறிப்பன வாகவே இருக்கும். இவற்றில் சில இப்பொழுதும் பூமியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, காட்சி சாலைகளில், பார்ப்பவர் கண் களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
கப்பல் கட்டுவது, தோல் பதனிடுவது, மிதியடி தயாரிப்பது, இப்படி ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தொழிற்சாலைகள் இருந்தன. தச்சுப் பட்டடை, கருமாரப் பட்டடை முதலியன ஆங்காங்கு ஓசை செய்து கொண்டிருந்தன. இந்தப் பட்டடைகளின் சொந்தக்காரர்கள், தொழிலாளர்கள் பலரைக் கூலிக்கமர்த்திக் கொண்டு வேலை வாங்கினார்கள். ஸாக்ரடீஸ்ஸின் அன்பைப் பெற்றிருந்த ஸெபாலஸ் என்பவன், (பிளேட்டோவின் அரசியல் முதற் புத் தகத்தைப் பார்க்க) போர் வீரர்களுக்குக் கவசங்கள் செய்து கொடுக்கும் தொழிற்சாலை யொன்றை நடத்திக் கொண்டிருந்தான். இந்தத் தொழிற்சாலையில் நூற்றிருபது தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். பெரிக் ளீஸுக்கே சொந்தமாக ஒரு தொழிற் சாலை இருந்ததாகத் தெரிகிறது. தொழிற்சாலைகளில் எஜமானர்கள் தனியாக இருந்து, தொழி லாளர்களை வேலை வாங்கமாட்டார்கள்; அவர்களும் தொழிலாளர் களோடு தொழிலாளர்களாய் இருந்து வேலை செய்வார்கள் தொழிற்சாலைகளைப் பொறுத்தமட்டில், முதலாளி - தொழிலாளி வித்தியாசங்கள் அதிகமிருந்ததாகத் தெரியவில்லை. வேலை செய்கிறவர் களுக்குத் தினம் இத்தனை மணி நேரந்தான் வேலை செய்ய வேண்டுமென்ற நிர்ணயம் கிடையாது. சூரியோதயம் முதல் சூரியா ஸ்தமனம் வரை வேலை செய்யவேண்டுமென்பது தான் கணக்கு. வாரத்தில் ஒரு நாள் விடுமுறையென்பதும் கிடையாது. ஆனால் விழாக்கள், மதச்சடங்குகள் முதலியன நடைபெறுவதையொட்டி, வருஷத்தில் அறுபது நாட்கள், எந்தத் தொழிற் சாலையிலும் வேலை நடைபெறாது; அவை மூடப்பட்டிருக்கும்.
நூற்றல், நெய்தல், ஆடைகள் தயாரித்தல் இவை பலவும் வீட்டுத் தொழில்களாகவே நடைபெற்றன. பெண்கள் இந்தத் தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கைராட்டினம் அல்லது கைத்தறி, ஏதேனும் ஒன்று நிச்சயமாக இருக்கும். தவிர, ஆடைகளில் பூவேலை செய்வதில் ஆத்தீனியப் பெண்கள் மிகவும் சாமர்த்தியசாலி களாயிருந்தார்கள். இவர்கள் தயாரித்த உடைகள் வெளியில் விற்ப னைக்கும் அனுப்பட்டன.
ஆத்தென்ஸின் உள்நாட்டு வியாபாரத்தைக் காட்டிலும் வெளிநாட்டு வியாபாரந்தான் அதிகம். உலகத்து மற்ற இடங்களில் கிடைக்காத பொருள்கள் பலவும் ஆத்தென்ஸ் மார்க்கெட்டில் கிடைக்குமென்று ஒரு கிரேக்க ஆசிரியன் பெருமையோடு கூறிக் கொள்கிறான். எகிப்திலிருந்து கண்ணாடிச் சாமான்களும், அரேபி யாவிலிருந்து வாசனைத் தைலங்கள் முதலியனவும், எத்தியோப்பி யாவிலிருந்து தந்தச் சாமான்களும், இப்படிப் பல இடங்களிலிருந்து பல பொருள்களும் ஆத்தென்ஸில் வந்து குவிந்தன. இந்தச் சாமான் வகைகளைக் கொண்டு ஆத்தீனியர்களில், நகரவாசிகளயுள்ளவர்கள் ஓரளவு போக வாழ்க்கையை நடத்தி வந்தார்களென்று சொல்ல வேண்டியிருக்கிறது.
சரியான போக்கு வரவு வசதிகளின்மையால், உள்நாட்டு வியாபாரம் அதிகமாக விருத்தியடையவில்லை. ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சாமான்களை எடுத்துச்செல்ல எருதுகளும், கோவேறு கழுதைகளுமே பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டன. சில்லரை வியாபாரிகள், தங்கள் தலையிலேயே சுமந்து சென்றார்கள். திருவிழாக்களின்போது பெரிய சந்தைகள் கூடும். இந்தச் சந்தைகளில் பல இடத்துச் சாமான்களும் வந்து குவியும். ஆத்தென்ஸின் மார்க் கெட்டு (இதன் பெயர் அகோரா என்பது வாசகர்களுக்கு ஞாபக மிருக்கும்) நிரந்தரமாயுள்ள ஒரு சந்தையென்று சொல்லலாம். இங்கு எப்பொழுதும் சந்தடிதான். வியாபாரிகள், தங்கள் சரக்குகளைக் கூவி விற்பார்கள். கறார் விலை கிடையாது. கொஞ்சம் பேரம் பண்ணித்தான் சாமான்களை வாங்க வேண்டும். இந்த மார்க்கெட்டு தவிர, வீதிகளில் வியாபாரிகள் சரக்குகளைக் கொண்டு வந்து விற்பார்கள்; ஆங்காங்குத் தனிக்கடைகளும் இருந்தன.
ஆத்தென்ஸில் லேவாதேவித் தொழில் நடத்துவோர் சிலர் இருந்தனர். இவர்கள் பெட்டியடிக்காரர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் வியாபாரிகளுக்கும், பணத் தேவையுடைய மற்றவர்களுக்கும், அடகின் மீதோ, வெண்ணிலை யாகவோ கடன் கொடுத்தார்கள்; அப்படியே வியாபாரிகளும் தனிப்பட்டவர்களும் தங்களிடம் மிகுதியாயுள்ள பணத்தை அவ்வப்பொழுது இவர்களிடம் ஜமால் செய்து வைத்தார்கள். இந்த ஜமால் பணத்திற்கு லேவாதேவிக்காரர்கள் கொடுத்த வட்டி குறை வாக இருந்தது; அப்படியே, கொடுத்த கடனுக்கு லேவாதேவிக் காரர்கள் வாங்கிய வட்டி அதிகமாக இருந்தது. வட்டி விகிதங்கள், கொடுத்தக் கடனைப் பொறுத்தும் வாங்கின ஆசாமியைப் பொறுத்தும் வித்தியாசப்பட்டன. தற்காலக் கணக்குப்படி, நூறு ரூபாய்க்கு மாதமொன்றுக்கு ஒன்றேகால் ரூபாயிலிருந்து இரண்டரை ரூபாய் வரை வட்டி வாங்கப் பெற்றதாகத் தெரிகிறது.
தனிப்பட்ட லேவாதேவிக்காரர்கள் தவிர, கோயில்களும், தங்களிடம் உபரியாயுள்ள பணத்தைச் சொற்ப வட்டிக்குக் கடனாகக் கொடுத்து வாங்கின. அநேகமாக ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு பாங்கியாக இருந்தது. இந்தக் கோயில் பாங்கிகளில், டெல்பியில் இருந்ததுதான் மிகப் பெரிது. இதனைச் சர்வகிரேக்க பாங்கியென்று சொல்லலாம்.
ஆத்தென்ஸில், கடிதப் போக்குவரவுகள் யாவும் ஆட்கள் மூலமாகவே நடைபெற்றன. முக்கியமும் அவசரமுமான செய்திகளா யிருந்தால், ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றுக்கு தீப்பந்தங்கள் மூலம் சமிக்ஞைகள் செய்து செய்திகளைத் தெரிவிப்பார்கள்; அப் படியே தெரிந்து கொள்வார்கள். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத் திற்குச் செல்ல பாதைகள் இருந்தாலும் அவை ஒழுங்காக இல்லை. வெயிற் காலத்தில் ஒரே புழுதி; மழைக் காலத்தில் ஒரே சகதி. இந்தப் பாதைகள் நெடுக ஆங்காங்குச் சத்திரங்கள் இருந்தன. பிரயாணிகள் இராக் காலங்களில் இங்குத் தங்கிச் செல்வார்கள்.
7. மக்களின் வாழ்க்கை
ஆத்தென்ஸில் பல திறப்பட்ட மக்கள் வசித்துக் கொண்டி ருந்தார்கள். இவர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம். முதலாவது ஆத்தீனியப் பிரஜைகள்; இரண்டாவது தொழில் நிமித்த மாகவும் வியாபார நிமித்தமாகவும் ஆத்தென்ஸில் வந்து குடியேறிய அந்நியர்கள்; மூன்றாவது அடிமைத்தனத்தி லிருந்து விடுதலை பெற்றவர்கள்; நான்காவது அடிமைகள்.
ஆத்தீனியப் பிரஜைகளுக்குள், ஏழை பணக்காரரென்ற பொருளாதார வித்தியாசம், குலம், கோத்திரம் இவைகளை யொட்டின பரம்பரை வித்தியாசம், இவை போன்ற சில வித்தியாசங்கள் இருந்தபோதிலும், இந்த வித்தியாசங்கள் இவர்களுடைய அரசியல் உரிமைகளுக்குத் தடையாயிருக்கவில்லை. முந்தி, அதாவது பெரிக்ளீஸ் காலத்திற்கு முந்தி, இவை தடையாயிருந்தன. ஆனால் பெரிக்ளீஸ் காலத்தில் இந்தத் தடைகள் யாவும் அகற்றப்பட்டு விட்டன. பிரஜாவுரிமையுடைய ஆத்தீனியர்கள் அனைவரும், அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளலாம், மற்ற அரசியல் உரிமைகளை அனுபவிக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. திறமையும் தகுதி யுடையவர்களுக்குச் சந்தர்ப்ப வாயில்கள் தாராளமாகத் திறந்து விடப்பட்டன. ஆனால் கிரேக்கர்களாயுள்ள ஆத்தீனியப் பிரஜை களுக்கு மட்டுந்தான்; மற்றவர்களுக்கு இல்லை. இதனால் கிரேக்கர் - கிரேக்கரல்லாதார், பிரஜைகள் - பிரஜைக ளல்லாதார் என்பன போன்ற உணர்ச்சிகள் அவ்வப்பொழுது தலை தூக்கிக் காட்டின. என்றாலும் இவை, வகுப்புப் பூசல்களாகவோ, வர்க்கப் போராட்டங் களாகவோ வெளிக்கிளம்ப வில்லை. பொதுவாகவே ஆத்தீனியர்கள், சமுதாயத்தில் அடிக்கடி சலசலப்புகள் ஏற்படா வண்ணம் கூடிய மட்டும் வளைந்தும் நெளிந்தும் கொடுத்துக் கொண்டு போனார்கள்.
மேலே சொன்ன மாதிரி ஆத்தீனியர்களுக்குள் எத்தனையோ வித வேற்றுமைகள் - புதிய பணக்காரர், பரம்பரை பணக்காரர் என்பன போன்ற வேற்றுமைகள் கூட - இருந்தபோதிலும், இவர் களனைவருக்குமே பொதுவாக, தாங்கள் ஆளும் வர்க்கத்தினர் என்ற உணர்ச்சி இருந்து வந்தது. தாங்களல்லாத பிறரைச் சிறிது அலட்சியப் பார்வையுடனேயே பார்த்தார்கள். மற்றவர்களுடன் உறவாடுவதில் கூட இந்த அலட்சிய மனப்பான்மையே மேலோங்கி நின்றது. மற்றும் தாங்கள் ஆளும் வர்க்கத்தினராயிருப்பதால், தங்களிடத்திலேயே நாகரிகம், கலை முதலிய யாவும் தங்கியிருப்ப தாகக் கருதிக் கொண்டு விட்டார்கள். சுருக்கமாக, ஆளும் வர்க்கத் தினர் என்ற அகந்தை, ஏறக்குறைய எல்லா ஆத்தீனியர்களுக்கும் இருந்து வந்தது.
தவிர, ஆத்தீனியர்களில் பெரும்பாலோருக்கு, சிறப்பாக நகர வாசிகளா யுள்ளவர்களுக்கும் பணக்கார பரம்பரையைச் சேர்ந்தவர் களுக்கும், உழைத்துப் பிழைப்பதோ, பிழைப்புக்காக உழைப்பதோ கௌரவக்குறைவு என்ற எண்ணம் இருந்து வந்தது. சங்கீதம் சொல்லிக் கொடுப்பது, சிற்பத் தொழில், இப்படிப் பட்டவற்றைக் கூட கேவலம் என்று கருதினார்கள். வியாபாரத்தை எப்படிக் கருதிவந்தார்களென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ‘வியாபாரம் என்பது என்ன? பொருள்களை உற்பத்தி செய்வதல்லவே? குறை வான விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு விற்பதுதானே? அதாவது பெரும்பாலோரைச் செல வழிக்கச் செய்து அதன்மூலம் சிறு பாலோர் பணந்திரட்டுவதற்குச் சாதன மாயிருப்பதுதானே வியாபாரம்? கௌரவமுள்ள ஒரு பிரஜை இந்த இழிதொழிலில் இறங்கலாமா? ஒரு சுதந்திர புருஷனுக்கு - கிரேக்கப் பிரஜைக்கு - பொருளாதார சம்பந்தமான பொறுப்புக்கள் ஒன்றுமே இருக்கக்கூடாது. தன்னுடைய அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு, ஏன்? தன்னுடைய சொந்த சொத்து பற்றுக்களைக் காப்பாற்றிக் கொடுப்பதற்குக் கூட அடிமை களையோ பிறரையோ அவன் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதில் தவறு ஒன்று மில்லை. இங்ஙனம் பொருளாதாரத் தொல்லைகளிலிருந்து விடு பட்டிருந்தால்தான், அவன், அரசியலிலோ, யுத்தத்திலோ, இலக் கியத்திலோ, தத்துவ ஆராய்ச்சியிலோ தாராள மாகப் பிரவேசிக்க முடியும். பொருளாதாரக் கவலைகளிலிருந்து ஓய்வு பெற்றிருக் கிறவர்களால்தான் கலையோ, இலக்கியமோ, நாகரிகமோ வளர்ச்சி யடைகிறது. இந்த மாதிரியான எண்ணப் போக்கே ஆத்தென்ஸ் நகரவாசிகளுக்கும், பணக்காரர்களுக்கும் இருந்து வந்ததென்பதில் என்ன ஆச்சரியம்?
தொழில் காரணமாகவோ, வியாபாரத்தை உத்தேசித்தோ அந்நியர் பலர் ஆத்தென்ஸில் வந்து குடியேறினார்களென்று முந்திச் சொன்னோமல்லவா, இவர்களே ஆத்தென்ஸின் தொழில் வளத் திற்கும், வியாபாரப் பெருக்கத்திற்கும் முக்கிய காரணர்களா யிருந்தார்கள். சுரங்கத் தொழில் ஒன்று தவிர மற்றத் தொழில்களின் பெரும்பகுதி இவர்கள் வசத்திலேயே இருந்தது. மொத்தமாகவும் சில்லரையாகவும் இவர்கள் வியாபாரஞ் செய்து வந்தார்கள். வியாபாரத் தரகர்கள், தொழில் கண்டிராக்ட்டர்கள், வர்த்தக சாலை நிருவாகிகள், கட்டட வேலைக்காரர் இப்படிப்பட்டவர்களிற் பெரும்பாலோர் இவர்களாகவே இருந்தனர். இங்ஙனம் பொருளா தாரத் துறையில் இவர்கள் செல்வாக்குடையவர்களாயிருந்தும், ஏற்கனவே கூறப்பட்டதுபோல் இவர்களுக்குப் பிரஜா உரிமை அளிக்கப்பட வில்லை. அரசியலில் இவர்கள் நேரடியாகப் பங் கெடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும் இவர்கள், மற்றப் பிரஜைகளைப் போல் வரி செலுத்தி வந்தார்கள்; தலைவரி கூட செலுத்திவந்தார்கள். ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கு மொத்தமாக ஒரு தொகை அவ்வப்பொழுது இவர்களிடமிருந்து வசூலிக்கப் பட்டது. ராணுவத்தில் சேவை செய்ய விரும்பினால் அதற்கு அனுமதி யளிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் சொந்தமாக நிலங்கள் வைத்துக் கொள்ளவோ, பிரஜா உரிமையுடைய ஆத்தீனியக் குடும்பத்தில் விவாகஞ் செய்துகொள்ளவோ, ஆத்தீனியர்களுடைய மத ஸ்தாபனங்களில் சேர்ந்து கொள்ளவோ, ஆத்தென்ஸ் கோர்ட்டு களில் தங்களுடைய வழக்குகளை விசாரிக்க வேண்டுமென்று நேர்முகமாகக் கோரவே அனுமதிக்கப்படவில்லை. இந்த நிர்ப்பந்தங் களைத் தவிர்த்துப் பொதுவாக இவர்கள் மற்றப் பிரஜைகளைப் போல் பரிபாலிக்கப்பட்டு வந்தார்கள். இவர்களுடைய சொத்து சுதந்திரங்களுக்கு ஆபத்தேற்படா வண்ணம் அரசாங்கம் பாது காத்து வந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆத்தென்ஸில், அந்நியர்கள், அரசியல் சுதந்திரமுடையவர்களாக வாழ்ந்து வந்தார்கள். அரசியல் சுதந்தரத்திற்கு இவர்கள் ஆசைப்பட் டிருக்கலாம். ஆனால் அஃது இல்லையேயென்று இவர்கள் வருத்தப் பட்டு, அந்த வருத்தத்தை வெளிப் படுத்திக் கொண்டதாகத் தெரிய வில்லை. அதற்கு மாறாக, இவர்கள் ஆத்தென்ஸைப் பெரிதும் நேசித்தார்கள்; அதற்குப் பெருமைத் தேடித் தருவதில் பெருமை யடைந்தார்கள். நாம் கூறுகின்ற காலத்தில் சுமார் 28,500 அந்நியர்கள் ஆத்தென்ஸ் ராஜ்யத்தில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆத்தென்ஸில், ஏன்? கிரீஸ் முழுவதிலுமே அடிமை கொள்ளும் வழக்கம் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. கிரேக்கர்களைக் கிரேக்கர்கள் அடிமை கொள்வதென்பதுதான் அவ்வளவாக ஆதரிக்கப்படவில்லையே தவிர, கிரேக்கரல்லாதாரை அடிமை கொள்வதில் கிரேக்கர்களில் யாருக்கும் ஆட்சேபமிருக்கவில்லை சங்கோஜமுமிருக்கவில்லை. எல்லோரும் இந்த வழக்கத்தை அங்கீ கரித்து அனுஷ்டித்து வந்தார்கள். யுத்தத்தில் பிடிப்பட்டவர்கள், அநாதைகள், குற்றஞ்செய்து தண்டனையடைந்தவர்கள், இப்படிப் பட்டவர்கள் சுலபமாக, அடிமை கொள்ளப்பட்டார்கள். சாதாரண மாகவே கிரேக்கர்களுக்கு, கிரேக்கரல்லாத அந்நியர் அனைவரையும் அடிமைகளாகக் கருதும் மனப்பான்மை இருந்து வந்தது. கிரேக்க ஜாதி ஒன்றுதான் ஆளப்பிறந்த ஜாதி, மற்றவர் அனைவரும் அடிமை களாயிருக்கவே தகுதியுடையவர் என்ற எண்ணம், கிரேக்கர்களுக்கு எப்படியோ ஏற்பட்டுவிட்டது. இதைக் கிரேக்க அறிஞர் பலரும் அங்கீகரித்து வந்திருக்கிறார்கள். இதனுடைய நியாய அநியாயத் தைப் பற்றி இங்கு நாம் ஆராய வேண்டுவதில்லை. அது நமது கடமையுமன்று, இந்த நூலைப் பொறுத்தமட்டில்.
ஆத்தென்ஸ் ராஜ்யத்தில், ஆண் பெண் அடங்கலுமாகச் சுமார் ஒரு லட்சத்துப் பதினையாயிரம் அடிமைகள் வசித்துக் கொண்டிருந்தார்களென்று தெரிகிறது; அதாவது, மொத்த ஜனத் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினருக்கு அதிகமான பேர் அடிமைகள். இந்த அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சகஜ மான பழக்கமாயிருந்து வந்தது. ஆத்தென்ஸ் நகரத்திலேயே அடிமைச் சந்தையொன்றிருந்ததாக அறிகிறோம். அடிமைகளை, நூறு, ஆயிரம் கணக்கில் மொத்தமாக வாங்கி, மொத்தமாகவோ, சில்லரையாகவோ கூலி வேலைக்கு விட்டு, அதன்மூலம் பணஞ் சம்பாதித்தவர் பலர். ஓர் அடிமையின் விலை, வயது, தேகபலம் இவைகளைப் பொறுத்து அரை மினாவிலிருந்து பத்து மினா (ஏறக்குறைய முப்பத்தைந்து ரூபாயிலிருந்து ஏழு நூறு ரூபாய் வரை. நூறு ட்ராக்மா கொண்டது ஒரு மினா.) வரை இருந்தது. வீட்டு வேலைகளுக்கென்று அடிமைகள், பெரும்பாலும் பெண்ணடிமை கள் உபயோகிக்கப்பட்டார்கள். பரம ஏழையென்று சொல்லத்தக்க ஆத்தீனியர்கள்கூட குறைந்தது ஒன்று அல்லது இரண்டு அடிமை களையாவது வீட்டு வேலைக்கென்று வைத்துக் கொண்டிருந்தனர். பணக்காரர்கள் வீட்டில் சாதாரணமாக ஐம்பது அடிமைகளுக்கு அதிகமாக இருப்பார்கள். சமுதாயத்தில் ஒருவனுக் கேற்பட்டிருந்த அந்தஸ்து, அவனிடத்தில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை யைப் பொறுத்திருந்ததென்று கூடச் சொல்லலாம். அடிமைகள், பொதுவாக உயிருள்ள சொத்துக்களாகக் கருதப்பட்டார்கள்.
மற்றக் கிரேக்க ராஜ்யங்களைக் காட்டிலும் ஆத்தென்ஸ் ராஜ்யத்தில் அடிமைகள் கூடியவரை அன்புடனேயே நடத்தப் பட்டனர் என்று சொல்லவேண்டும். அடிமைகொண்ட எஜமானர்கள், தங்கள் அடிமைகளில் நோய் வாய்ப்பட்டவர்களையும் வயதான வர்களையும் புறக்கணித்து விடாமல் கடைசி காலம் வரை போஷித்து வந்தார்கள்; விசுவாசத்துடன் நடந்துகொண்ட அடிமை களை, தங்கள் குடும்பத்தினராகவே கருதி நடத்தி வந்தார்கள்; உணவு, உடை முதலிய விஷயங்களில்கூட அவர்களைப் பாரபட்ச மாக நடத்தவில்லை. தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, அரசாங்கம் கூட அடிமைகள் விஷயத்தில் ஓரளவு சலுகை காட்டி வந்தது; எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை, நகரக் காவல்களாகவும், குமாஸ்தாக்களாகவும், இப்படிப்பல வகையிலும் அமர்த்திக் கொண்டது.
அடிமைகள் ஒழுங்காக நடந்து கொள்கிறவரை சரி, ஒழுங்கு தவறி விட்டாலோ, சாட்டையடி; வேறு பல இம்சைகள். ஒரு கிரேக்கன், அடிமையை அடித்து விட்டால், அந்த அடிமை, திருப்பி அந்தக் கிரேக்கனை அடிக்கக் கூடாது. அடிமையை உயிர் போகாமல் என்ன இம்சைகள் வேண்டுமானாலும் செய்யலாம் ஒரு கிரேக்கன். இந்த இம்சைகளைப் பொறுக்க முடியாவிட்டால், அந்த அடிமையும் எங்கேனும் ஒரு கோயிலுக்குப் போய்விடலாம். இப்படி ஓடிப்போன அடிமையை எஜமானன், வந்த விலைக்கு விற்றுவிட வேண்டும். இந்த மாதிரியான சில ஏற்பாடுகள் இருந்தன.
அடிமை கொள்ளப்பட்டவர்களனைவருமே ஆயுள் பரியந்தம் அடிமைத் தனத்தில் உழன்று கொண்டிருந்தார்களென்று சொல்ல முடியாது. இடையிலே எஜமானர்களுக்கு ஒரு தொகையை நஷ்ட ஈடாகக் கொடுத்து விடுதலை பெற்றுக் கொண்டனர் சிலர்; உற்றார், உறவினர் உதவிய பணத்தினால் மீண்டவர் சிலர்; அடிமை கொண்ட ஆண்டையர்களின் கருணையினால் சுதந்திர புருஷர்க ளானவர் சிலர். யுத்தத்திற்கு ஆள் தேவையிருக்கிறபோது, அரசாங்கமே சிலரை, உரிய எஜமானர்களுக்கு நஷ்ட் ஈடு கொடுத்து விடுவித்தது. இப்படிப் பலவகை யாலும் விடுதலை யடைந்தவர்கள் அடிமை களைக் காட்டிலும் சிறிது கௌரவமாக நடத்தப் பட்டார்கள். இவர்கள், தொழில், வியாபாரம் முதலியவை களில் ஈடுபாடு நாளா வட்டத்தில் முன்னுக்கு வந்தார்கள். இவர்களிற் பெரும்பாலோர் கண்காணிப்பு வேலைக்கு, அதாவது தொழிற் சாலை முதலிய வற்றில் மேஸ்திரிகளாக நியமிக்கப்பட்டார்கள். அடிமைகளை வேலை வாங்க அடிமைகளுக்குத்தானே நன்கு தெரியும்?
இனி, பெண்கள் நிலைமையைப் பற்றிச் சிறிது கவனிப்போம். ஹோமர் யுகத்துப் பெண்களின் நிலைமைக்கும், பெரிக்ளீஸ் யுகத்துப் பெண்களின் நிலைமைக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருந்தன. ஹோமர் கூறும் காலத்தில், ஆண்களுக்குச் சமதையாகப் பெண்கள், சமுதாய வாழ்விலும், அரசியல் வாழ்விலும் பூரண பங்கெடுத்துக் கொண்டார்கள். பெரிக்ளீஸ் காலத்தில் அப்படி யில்லை. பெண்கள் கௌரவிக்கப்பட்டார்கள்; ஆனால் வீட்டுக் குள்ளேதான். குடும்பத்தைச் சரிவர நடத்திச் செல்வதுதான் இவர் களுடைய முக்கிய பொறுப்பு. குடும்பத்திற்கு வெளியே இவர்களுக்கு எவ்வித கடமையும் இல்லை. புருஷனுக்கு மனைவி, குழந்தை களுக்குத் தாய், வீட்டுக்கு எஜமானி, இந்த மாதிரியாகவே கருதப் பட்டார்கள் பெண்கள்.
இவர்களுக்குச் சில நிர்ப்பந்தங்களும் இருந்தன. அனாவசிய மாக வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது. பந்துக்களைப் பார்க்கப் போகலாம்; திருவிழாக்களுக்குச் செல்லலாம்; இந்தத் திருவிழாக்களை முன்னிட்டு நடைபெறும் கூத்துக்களுக்கும் ஏகலாம். இப்படிச் செல்கிற போது முகமூடியணிந்து செல்ல வேண்டும்; தக்க துணையுடனும் செல்ல வேண்டும். வீட்டிலிருக்கிற போதுகூட, தெருப்பக்கமுள்ள ஜன்னலில் வந்து நிற்கக்கூடாது. வீட்டின் பின்பாகம் பெண்களின் வாசத்திற்கென்று விடப்பட்டி ருந்தது. இங்குதான் இவர்கள் பொழுதின் பெரும் பாகத்தைக் கழிக்க வேண்டும். அந்நிய புருஷர்களின் கண்களில் அனாவசியமாகப் படக்கூடாது.
பெண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இல்லற வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இவர்களுடைய செல்வாக்கே மேலோங்கி நின்றது; ஆண்கள், இந்தச் செல்வாக்குக் குட்பட்டவர்களாகவே இருந்தார்கள்.
இதுகாறும், ஆத்தென்ஸின் அரசியல் அமைப்பு, சமுதாய நிலை இவைகளைப் பற்றி ஒருவாறு தெரிந்து கொண்டோம். இனி ஆத்தென்ஸில் வாழ்ந்த பெரியோர்களைச் சந்திக்க வேண்டும். . . இருங்கள்… அதோ யுத்தக் குமுறல் கேட்கிறது. அஃதென்னவென்று பார்த்து வருவோம்.
யுத்தக் குமுறல்
1. அடிப்படையான காரணங்கள்
ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் முப்பது வருஷ சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்ததல்லவா, இது மத்தியில் முறிந்து போய்விட்டது. இது முறிந்து ஓசைதான், முந்தின அத்தியாயத்தில் நமக்கு யுத்தக் குமுறலாகக் கேட்டது.
மேற்படி ஒப்பந்தம் 446-ஆம் வருஷம் நிறைவேறியதென்பது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கும். இதற்குப் பிறகு பதினைந்து வருஷ காலம் வரை இரண்டு ராஜ்யங்களிலும், ஏன்? கிரீஸ் முழுவதிலும், ஸாமோஸ் கலகம் போன்ற ஓரிரண்டு கலகங்களைத் தவிர, பொது வாக அமைதி நிலவியிருந்ததென்றே சொல்ல வேண்டும். இந்த அமைதியை, ஆத்தென்ஸ், தான் முன்னேறுவதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொண்டது; பல துறைகளிலும் முன்னேறியது. இதனைச் சென்ற அத்தியாயத்தில் ஒருவாறு கண்டோமல்லவா? தன்னுடைய இந்தத் துரிதமான முன்னேற்றத் தைக் கண்டு, ஏற்கனவே கூறியதுபோல், சிறிது அகந்தையும் கொண்டு விட்டது ஆத்தென்ஸ்.
ஸ்ப்பார்ட்டா, இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் எப் பொழுதும்போல் இருந்த நிலையிலேயே இருந்து கொண்டிருந்தது; எளிய வாழ்வென்றும், சர்வாதிகார ஆட்சியென்றும், இப்படிப் பழைய கனவுகளைக் கண்டு கொண்டிருந்தது. ஆனால், ஆத் தென்ஸின் முன்னேற்றத்தைக் கண்டு, அதன் பொறாமைக் கண்கள் மட்டும் சிவந்துகொண்டு வந்தன. இந்தப் பொறாமை யென்பது கிரீஸுக்கே ஒரு சாபக்கேடு. கிரேக்கப் பிரமுகர்களுக்குள் பொறாமை; கிரேக்க ராஜ்யங்களுக்குள் பொறாமை. கிரீஸ் பொசுங்கிப் போனதே இந்தப் பொறாமைத் தீயில்தான் என்று சொல்ல வேண்டும். அகந்தையும் பொறாமையும் சந்திக்கிற இடம் போர்க்களந்தானே? 431-ஆம் வருஷம் ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் மகத் தான போர் மூண்டுவிட்டது. இடைவிட்டு இடைவிட்டு இருபத் தேழு வருஷ காலம் - 431-ஆம் வருஷத்திலிருந்து 404-ஆம் வருஷம் வரை - நடைபெற்ற இந்தப் போரை பெலொப்பொனேசிய யுத்த மென்று அழைப்பார்கள். இந்த யுத்தத்தில் அகில கிரீஸும் ஈடுபட்டது; பாழாகவும் போயிற்று.
யுத்தத்திற்கு முதலில் சங்கு ஊதியவன் பெரிக்ளீஸ்தான். இதனால், ஆத்தென்ஸை வாழ வைத்தவனும் இவனே, வீழ வைத்தவனும் இவனே என்பர் சரித்திராசிரியர். யுத்தம் ஏற்படுவதற்கு மூன்று நான்கு வருஷங்களுக்கு முந்தியிருந்தே, ஸ்ப்பார்ட்டாவுக்குப் பொறாமை ஏற்பட்டு வளர்ந்து வருவதையும், இந்தப் பொறாமை எந்தச் சமயத்திலும் யுத்த மேகமாக உறுத்தெழக்கூடுமென்றும் இவன் தெரிந்து கொண்டிருந்தான். ‘பெலொப் பொனேசியா பக்கம் யுத்த மேகங்கள் திரண்டுகொண்டிருக்கின்றன’ என்று ஒரு சமயம் இவன் பகிரங்கமாகக் கூறினான். இந்தக் காலத்தில் இவன் “சமாதானத் திற்காக உழைத்துக் கொண்டே யுத்தத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தான்.”
இந்தப் பெலொப்பொனேசிய யுத்தத்தைப் பற்றி துஸிடிடீஸ் என்ற கிரேக்க சரித்திராசிரியன் விஸ்தாரமாக ஒரு நூல் எழுதி யிருக்கிறான். ஒலிம்ப்பிய விழாவில் ஹெரோடோட்டஸ் என்பவன், தான் எழுதி வைத்திருந்த சரித்திரத்தைப் படித்தபோது, அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டவன் இவன் என்பது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கும். இவன் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவன்; போர்த் தந்திரங்கள் யாவும் நன்கு அறிந்தவன்; படைத் தலைவனாகவும் சேவை செய்தான். இவன் பெலொப்பொனேசிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தினசரிக் குறிப்புகள் எடுத்து வந்தானென்று சொல்லப்படுகிறது. ஓர் ஆத்தீனியப் பிரஜை யாயிருந்தும் இவன் கூடிய மட்டில் நடுநிலைமையுடனேயே இந்தச் சரித்திரத்தை எழுதியிருக்கிறான். ஹெரோடோட்டஸை, சரித் திரத்தின் தந்தையென்று சொன்னபோதிலும், இவன்தான் சரித் திரத்தை, அதற்குரிய லட்சணத்தோடு முதன்முதலாக எழுதியவன் என்பதே மேனாட்டு அறிஞர் பலருடைய அபிப்பிராயம். இவன் எழுதிய சரித்திரந்தான், பிற்காலத்தில் எழுந்த பல சரித்திர நூல் களுக்கு முன்மாதிரியாயிருந்தது.
பெலொப்பொனேசிய யுத்தத்திற்கு அடிப்படையான காரணங்கள் இரண்டு எனக் கூறலாம். ஒன்று, இன உணர்ச்சி, மற்றொன்று, வியாபார ஆதிக்கப் போட்டி.
1. கிரேக்கர்களுக்குள், ஸ்ப்பார்ட்டர்கள், டோரியப் பிரிவினர்; ஆத்தீனியர்கள், ஐயோனியப் பிரிவினர். இதை நாம் வாசகர்களுக்கு ஞாபகப்படுத்தத் தேவை யில்லை. இந்த இருவருடைய நோக்கு நிலை, வாழ்க்கைப் போக்கு முதலிய பலவும் ஆதியிலிருந்தே வேறாக இருந்தன. வேற்றினத்தினராகவே ஒருவரை யொருவர் கருதி வந்தார்கள். தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டு மென்பதிலும் அதனை மேன்மைப்படுத்த வேண்டுமென்பதிலும் இருவரும் முனைந்து நின்றார்கள்; தங்கள் சக்திகளனைத்தையும் செல வழித்தார்கள். பரஸ்பர வெறுப்பு உணர்ச்சியும் போட்டி எண்ணமும் இருவருக்கும் இருந்து கொண்டிருந்தன. இந்த வெறுப்பு, போட்டி முதலியன காலக்கிரமத்தில் திரண்டு, முதிர்ந்து, கடைசியில் பெலொப்பொனேசியப் பெரும் போராக வெடித்தது.
இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றக்கூடும். பாரசீகப் போராட்டத்தின்போது, இந்த இருவரும், அதாவது ஸ்ப்பார்ட்டர்களும் ஆத்தீனியர்களும் ஒற்றுமைப்பட்டிருந் தார்களே, அஃதெப்படியென்று கேட்கலாம். அது மனமார ஏற்பட்ட ஒற்றுமையல்ல; பொதுச்சத்துருவை எதிர்த்துநிற்க, தற் காலிகமாக ஏற்பட்ட ஒற்றுமைதான். அப்படி ஒற்றுமைப்பட்டி ருந்த காலத்தில் கூட இருவருக்குமிடையே, மேற்சொன்ன வெறுப்பு உணர்ச்சி, போட்டி எண்ணம் முதலியன அடிக்கடி தலை நீட்டியதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்களல்லவா?
2. ஸ்ப்பார்ட்டா, தரைப் பக்கமாகத் தன் ஆதிக்கத்தை விஸ்தரிக்க முயன்று, அதில் ஓரளவு ஆசாபங்கம் அடைந்திருக்கிற ராஜ்யம். ஆனால் ஆத்தென்ஸோ அப்படியில்லை. கடற்பக்கமாகத் தன் ஆதிக்கத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. அதில் முழு வெற்றியும் அடைந்து வந்தது. முயற்சியில் தோல்வி அடைந்தவர்கள் முயற்சியில் வெற்றியடைந்தவர்களைக் கண்டு ஆத்திரப்படுவது சாதாரண மனித சுபாவந்தானே? ஸ்ப்பார்ட்டாவுக்கு இந்த ஆத்திரம் இருந்து கொண்டிருந்தது. தவிர, ஆத்தென்ஸும், தன் கடலா திக்கத்திற்குக் குறுக்காக நிற்கிறவர்களையும், வியாபாரத்திற்குப் போட்டியாக வருகிறவர்களையும் கண்டு அசூயை கொண்டது; அவர்களை அடக்குவதிலேயே முனைந்து நின்றது. ஆத்தென்ஸுக்கு அடுத்த படியாக வியாபாரத் துறையில் முன்னேற்றமடைந்திருந்தது, பெலொப்பொனேசிய தீபகற்பத்தின் வடபாகத்தி லுள்ள கொரிந்த்தியா. இதனைத் தகைய வேண்டுமென்பதற்குத்தான், பெரிக்ளீஸ், கொரிந்த்திய வளைகுடாவில் நவ்ப்பாக்ட்டஸ் என்ற துறைமுகப் பட்டணத்தை ஸ்தாபித்தான். இதனை ஸ்தாபித்த பொழுதே பெலொப்பொனேசிய யுத்தத்திற்கு விதை விதைத்து விட்டான். கொரிந்த்தியா பாதிக்கப்பட்டால், ஸ்ப்பார்ட்டா சும்மா இருக்க முடியுமா? ஏனென்றால் பெலொப்பொனேசியாவில் ஸ்ப்பார்ட்டா தானே தலைமை ஸ்தானத்தில் இருந்து வந்தது?
2. பொதுப்படையான காரணங்கள்
இந்த அடிப்படையான காரணங்களைத் தவிர்த்து பொதுப் படையான காரணங்களும் சில இருந்தன. அவை என்னென்ன என்பதை வரிசைக் கிரமமாகச் சிறிது விசாரிப்போம்.
1. ஸ்ப்பார்ட்டா, ஒரு சிலர் ஆட்சி முறையின் பிரதிநிதி. கிரீஸின் பல இடங்களிலும் மேற்படி ஆட்சி முறையை ஸ்தாபிக்க அரும்பாடுபட்டது. ஆத்தென்ஸோ, ஜன ஆட்சி முறையின் பிரதிநிதி. ஜனங்களுடைய ஆட்சியே எங்கணும் நடைபெற வேண்டுமென்ப தற்காக அல்லும் பகலும் உழைத்தது; அநேக போராட்டங்களையும் நடத்தியது. இங்ஙனம் நேர்மாறான அரசியல் லட்சியங்களையுடைய இரண்டு ராஜ்யங்களும் எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்? என்றைக்கேனும் ஒருநாள் யுத்த மைதானத்தில் சந்தித்துத்தானேயாக வேண்டும்?
2. ஆத்தென்ஸ், ஜன ஆட்சிமுறையின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டே ஓர் ஏகாதிபத்தியமாக விரிந்து வந்தது. இப்படி ஏகாதிபத்தியமாக விரிகிறபோது, அநேக ராஜ்யங்களின் சுதந் திரத்தைப் பறிமுதல் செய்துவிட்டது. பொதுவாக, கிரேக்கர்கள் சுதந்திரப் பிரியர்கள்; பிறருடைய ஆதிக்கத்துக்குட்பட்டிருப்பதை, அந்தப் பிறர் கிரேக்கர்களாயிருந்த போதிலும்கூட அறவே வெறுக்கிறவர்கள். ஒருவன் சீல புருஷனாயிருந்து நல்வாழ்வு நடத்த வேண்டுமானால் அவன் எந்த ராஜ்யத்தின் பிரஜையாயிருக்கிறானோ அந்த ராஜ்யம் பரிபூரண சுதந்திர ராஜ்யமாயிருக்க வேண்டு மென்பதே பிரதியொரு கிரேக்கனுடைய கொள்கையும் நம்பிக்கை யும். இந்தக் கொள்கைக்கும் நம்பிக்கைக்கும் விரோத மாகவே ஆத்தீனிய ஏகாதிபத்தியம் விரிவடைந்து வந்தது. இதன் ஆதிக்கத் துக்குட் பட்டிருந்த ராஜ்யங்கள், விடுதலையடைய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தன.
3. மேலே சொன்னபடி, ஆத்தென்ஸ், தனது ஏகாதிபத்திய யாத்திரையின்போது, சுதந்திர தேவதையை வாயால் வழுத்திக் கொண்டும், அதே சமயத்தில் அதிகார சக்தியைக் கையால் தொழுது கொண்டும் சென்றது. இப்படிச் சொல்லொன்றாகவும் செயல் வேறாகவும் இருந்ததனால் இதன்மீது அவநம்பிக்கையும் அரு வருப்பும் ஏற்பட்டன. தவிர, இது, தன் ஆதிக்கத்தை ஆட்சேபித்த வர்களைப் பலாத்காரத்தினால் அடக்கி வந்தது. இதன் ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த ராஜ்யங்கள் இதனிடம் அச்சமே கொண்டிருந்தன. எந்த ராஜ்யமும், விரும்பி இதற்கு ஆட்பட்டிருக்கவில்லை. சுருக்க மாக, ஆத்தீனிய ஏகாதிபத்தியம், சுதந்திர ராஜ்யங்கள் பலவற்றின் சேர்க்கையாகத் தொடங்கி, பலாத்கார சக்தியினால் நிர்மாணிக்கப் பட்ட ஒரு கட்டடமாக வளர்ந்து வந்தது. இதனை பெரிக்ளீஸின் சம காலத்தவனான கிளியோன் என்ற ஓர் அரசியல்வாதி. ஆத் தென்ஸின் ஜன சபையில் பின்வரும் வாசகத்தினால் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிறான்.
“உங்களுடைய ஏகாதிபத்தியம், விருப்பமில்லாத பிரஜை களின்மீது திணிக்கப்படும் கொடுங்கோலாதிக்கமாகவே இருக்கிறது. உங்களுக்கு ஆட்பட்டிருக்க விரும்பாத அந்தப் பிரஜைகள், உங்களுக்கு விரோதமாக எப்பொழுதும் சூழ்ச்சி செய்து கொண்டி ருக்கிறார்கள். நீங்கள் காட்டும் அன்புக்குப் பிரதியாக அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கவில்லை; நீங்கள் எஜமானர்கள் என்பதற்காகக் கீழ்ப்பட்டு நடக்கிறார்கள். உங்களிடம் அவர்களுக்கு அன்பு இல்லை. பலாத்காரத்தினால் அவர்களை அடக்கி ஆண்டு வருகிறீர்கள்.”
இங்ஙனம் ஆட்பட்டிருந்த ராஜ்யங்களிற் சிலவும் ஆட் படுத்தப்படுவோமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த ராஜ்யங்களிற் சிலவும், ஆத்தென்ஸின் ஏகாதிபத்தியப் போக்கைத் தடுத்து நிறுத்துமாறு ஸ்ப்பார்ட்டாவை வேண்டிக் கொண்டன. இதற்குத் தகுந்தாற்போல, ஸ்ப்பார்ட்டாவும், கிரேக்கர்களின் சுதந்திரத்திற் காகவே தான் பாடுபட்டு வருவதாகவும், சுதந்திரமிழந்து நிற்கும் ராஜ்யங்களுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுப்பது தனது கடமை யென்றும் சொல்லிக் கொண்டு, ஆத்தென்ஸ் மீது போர் தொடுக்கக் கச்சை கட்டிக் கொண்டது.
4. ஆத்தென்ஸ், தன் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் ராஜ்யங் களிடமிருந்து பெற்ற திறைப் பணத்தைக் கொண்டு, தன்னை அழகுபடுத்திக் கொண்டது; தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. இதற்கு ஆத்தென்ஸிலேயே எதிர்ப்பு ஏற்பட்டது. பெரிக்ளீஸ் தனது சாமர்த்தியத்தினால், இந்த எதிர்ப்பைச் சமாளித்து விட்டான். இவை யெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால் இந்த எதிர்ப்பு ஆத்தென்ஸோடு நின்றுவிடவில்லை. அதன் ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த எல்லா ராஜ்யங்களிலும் எதிரொலி கொடுத்தது. எங் களுடைய அழிவின்மீது ஆதிக்கம் பெறுதல் எங்ஙனம் பொருந்தும் என்று இவை - இந்த ராஜ்யங்கள் – முணு முணுத்தன. ஆத்தென்ஸின் உயர்ந்த மதிற்சுவர்கள், அழகான கோயில்கள் முதலிய பலவற்றைக் கண்டு, இவை அதிசயிக்கவில்லை; அதிருப்தியே கொண்டன. ஆத்தென்ஸ் மீது விரோத மனப்பான்மை வளர்ந்தது. இந்த விரோத மனப் பான்மை, ஆத்தென்ஸை வீழ்த்த ஸ்ப்பார்ட்டாவுக்குக் கிடைத்த ஓர் அருமையான கருவியல்லவா?
5.இவையெல்லாவற்றிற்கும் மேலாக, துஸிடிடீஸ் என்ற சரித்திராசிரி யனுடைய கருத்துப்படி, ஆத்தென்ஸிலும் பெலொப் பொனேசியாவிலுமிருந்த இளைஞர்கள், யுத்தம், யுத்தம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். அனுபவமில்லாத இவர்களுடைய உற்சாகமானது, பெலொப்பொனேசிய யுத்தத்தை மூட்டிவிட்டது.
3. உடனடியான காரணங்கள்
மேற்சொன்னவை பொதுப்படையான காரணங்கள். யுத்த நிலைமையை உண்டுபண்ணுவதற்கு இவை போதுமானவையா யிருந்தன. ஆனால் யுத்தம் மூளுவதற்கு உடனடியான சில காரணங்கள் வேண்டுமல்லவா? இந்தக் காரணங்களும் ஏற்பட்டன. அவை என்னவென்று கவனிப்போம்.
பூகோள படத்தைப் பாருங்கள். வடமேற்கில் கார்ஸைரா தீவு இருக்கிறதல்லவா, இது கொரிந்த்தியாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு குடியேற்ற நாடு; ஆனால் மேற்குப் பக்கத்தில் நடைபெற்று வந்த வியாபாரத்தில் கொரிந்த்தியாவுக்குப் போட்டியாக இருந்தது. இந்தப் போட்டியை ஒழிக்க, கொரிந்த்தியா வெகு பிரயத்தனப்பட்டு வந்தது. இஃது இப்படியிருக்கையில், கார்ஸைரா, தனது வியா பாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டி, வடக்கே இல்லீரியா மாகாணத்தைச் சேர்ந்த எப்பிடாம்னஸ் என்ற துறைமுகப் பட்டினத்தை, தனது செல்வாக்குட்பட்ட குடியேற்ற நாடக வைத்துக் கொண்டிருந்தது. இந்த எப்பிடாம்னஸில், ஜனக்கட்சி யென்றும் பணக்காரக் கட்சியென்றும் இரண்டு கட்சிகள் தோன்றி ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் ஜனக்கட்சி யானது, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, பணக்காரக் கட்சியை ஊரைவிட்டு விரட்டிவிட்டது. விரட்டப் பட்ட பணக்காரக் கட்சி, அக்கம் பக்கத்திலுள்ள பிரதேசத் தினருடன் சேர்ந்துகொண்டு எப்பிடாம்னஸுக்குப் பலவிதமாகத் தொந்தரவு கொடுத்துவந்தது. எனவே, எப்பிடாம்னஸ், அதாவது அதிகார பதவியிலிருந்த ஜனக் கட்சி, கார்ஸைராவின் உதவியை நாடியது; தனக்கும் பணக்காரக் கட்சிக்கும் சமரஸம் செய்து வைக்குமாறு கோரியது. ஆனால் கார்ஸைரா இதில் தலையிட முடியாதென்று கூறிவிட்டது. எனவே, எப்பிடாம்னஸ், கொரிந்த் தியாவுக்கு விண்ணப்பம் செய்து கொண்டது. கொரிந்த்தியாவும், கார்ஸைராவின் வியாபாரப் போட்டியை ஒழிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததென்று கருதி அதன் மீது - கார்ஸைராவின் மீது - போர் தொடுத்தது; இரண்டுக்கும் நடைபெற்ற கடற்போரில் கொரிந்த்தியா தோல்வியுற்றது. வெற்றி கொண்ட கார்ஸைரா, எப்பிடாம்னஸை தன் சுவாதீனப்படுத்திக் கொண்டது. இவையெல்லாம் நடை பெற்றது 435-ஆம் வருஷம்.
இதற்குப் பிறகு கொரிந்த்தியா சும்மாயிருக்கவில்லை. கார் ஸைரா மீது படையெடுத்து வெற்றி காண பெரிய பிரயத்தனங்கள் செய்துகொண்டிருந்தது. சுமார் இரண்டு வருஷ காலமாக நடை பெற்று வரும் இந்த யுத்த ஏற்பாடுகளைக் கண்ட கார்ஸைரா, இனி தான் கைகட்டிக் கொண்டிருக்க முடியாதென்று தீர்மானித்தது. இதுகாறும் எந்தப் பெரிய ராஜ்யத்துடனும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்ததைப் போல் இனியும் இருந்தால் தனக்கு நிச்சயம் அழிவுதான் ஏற்படுமென்று கண்டுகொண்டது. எனவே ஆத்தென்ஸுடன் சேர்ந்துகொள்ளத் தீர்மானித்தது. அப்படியே ஆத்தென்ஸுக்கு, தன்னை அதன் கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு தூதுகோஷ்டி மூலம் விண்ணப்பம் செய்து கொண்டது. இதை யறிந்த கொரிந்த்தியாவும் ஆத்தென்ஸுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பியது. இருதரப்பினருடைய வாதங் களையும் சாவதான மாகக் கேட்ட ஆத்தென்ஸ், முப்பது வருஷ சமாதான ஒப்பந்தத்திற்குப் பங்கம் ஏற்படாமல், கார்ஸைராவுக்குப் பாதுகாப்பளிக்க நிச்சயித்தது; ஒரு சிறு கடற்படையையும் அதன் உதவிக்கு அனுப்பியது. இது தனக்கு விரோதமாக எடுத்துக் கொள்ளப்பட்ட நடவடிக்கையென்றே கொரிந்த்தியா கருதியது.
ஆனால் இதற்காக, அது கார்ஸைரா மீது யுத்தந் தொடுக்க வேண்டுமென்று செய்து வந்த ஏற்பாடுகளை நிறுத்தவில்லை; 433-ஆம் வருஷம் பெரிய கடற்படையுடன் கார்ஸைராவை நோக்கிச் சென்றது. ஸைபோட்டா என்ற ஒரு சிறு தீவுக்கருவில் கார்ஸை ராவின் கடற்படையைச் சந்தித்தது. அதனைத் தோல்வியுறச் செய்தது. ஆனால் அது கார்ஸைரா கடற்படை - அடியோடு அழிந்து போகவில்லை. அழியவிடாமல் அதனைக் காப்பாற்றியது, உதவிக்குச் சென்ற ஆத்தீனியக் கடற்படை. இதனால் கொரிந்தியக் கடற்படை பூரண வெற்றி கொண்டாட முடியவில்லை.
இஃது இப்படியிருக்கட்டும். மறுபடியும் பூகோள படத்தைப் பாருங்கள். எஜீயன் கடலுக்கு வடக்கே மூன்று விரல்களை நீட்டிக் கொண்டிருப்பது போல் ஒரு தீபகற்பம் இருக்கிறது. இதற்கு கால்ஸிடீஸி தீபகற்பம் என்று பெயர். இதன் மேற்குப் பக்கத்தில் பொட்டிடீயா என்ற ஓர் ஊர் இருக்கிறது. இதுவும் கொரிந்த்தி யாவின் குடியேற்றப் பிரதேசம். கொரிந்த்திய அதிகாரிகள் இங்குப் பிரதி வருஷமும் அனுப்பப்பட்டு வந்தனர். ஆனால் இது - பொட்டி டீயா - ஆத்தென்ஸுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டு வந்தது. இந்தக் கப்பத் தொகையை வர வர அதிகப்படுத்திக் கொண்டு வந்தது ஆத்தென்ஸ். இதனால் பொட்டிடீ யாவுக்கு ஆத்தென்ஸிடம் உள்ளூர அதிருப்தி இருந்து கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில் மாஸிடோனியாவுக்கு பெர்டிக்காஸ் (இவன் ஆண்டது 454-ஆம் வருஷம் முதல் 413-ஆம் வருஷம் வரை) என்பவன் அரசனாயிருந்தான். இவன் ஆத்தென்ஸ் மீது பகைமை கொண்டிருந்தான். ஸைபோட்டோ போர் நிகழ்ந்ததும், இவன் ஆத்தென்ஸுக்கு விரோதமாகப் பொட்டிடீயாவைத் தூண்டி விட்டான். ஏற்கனவே, ஆத்தென்ஸ் மீது அதிருப்தி கொண்டிருந்த பொட்டீடியா அதற்கு விரோதமாகக் கிளம்பத் தயாராயிருந்தது.
ஆத்தென்ஸுக்கு இது தெரிந்துவிட்டது. உடனே கொரிந்த்திய அதிகாரிகளைத் திருப்பி அனுப்பி விட வேண்டுமென்றும், தெற்குப் பக்கத்திலுள்ள மதிற் சுவரை இடித்துத் தரையோடு தரையாக்கிவிட வேண்டுமென்றும், பிணையாளிகளாகக் சிலரைத் தன்னிடம் ஒப்படைத்து வைக்க வேண்டுமென்றும் கொட்டிடீயாவுக்குத் தாக்கீது விடுத்தது. இதற்குப் பொட்டிடீயா இணங்கவில்லை. ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கலகக்கொடி தூக்கிவிட்டது. இதற்குத் துணையாக வடக்கேயுள்ள சில ராஜ்யங்களும் சேர்ந்து கொண்டன. இந்தக் கலகத்தை அடக்க ஆத்தென்ஸ் ஒரு பெரும் படையை அனுப்பியது. கொரிந்த்தியாவும் பொட்டிடீயாவுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பியது. பொட்டிடீயாவுக்கு அருகில் 432-ஆம் வருஷம் இருதரப்புப் படைகளும் கைகலந்தன. ஆத் தென்ஸுக்கே வெற்றி கிடைத்ததென்று சொல்ல வேண்டும். ஆனால் பொட்டிடீயா பணியவில்லை. எனவே ஆத்தென்ஸ், அதனைத் தரைப்பக்கமாகவும் கடற்பக்கமாகவும் முற்றுகையிட்டது. சுமார் இரண்டு வருஷ காலம் இந்த முற்றுகை நடைபெற்றது.
இந்த முற்றுகையின்போது, ஆத்தீனியக் காலாட்படையில் சேர்ந்து பணியாற்றிய இருவரைப்பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுதல் அவசியமாகும். ஒருவன் மகான் ஸாக்ரட்டீஸ்; மற்றொருவன் அவனுடைய சிஷ்யனான ஆல்ஸிபியாடீஸ். ஸாக்ரட்டீஸுக்கு அப் பொழுது சுமார் நாற்பது வயது இருக்கும். “ஆத்தீனியப் படை யிலேயே ஸாக்ரட்டீஸைப்போல், போராட் டத்தின் சகலவிதமான கஷ்டங்களையும் அனுபவித்தவர் வேறு யாரும் கிடையாதென்று சொல்ல வேண்டும். பசியா, தாகமா, குளிரா எல்லாம் இவனுக்குச் சகஜமா யிருந்தன. போர் நடைபெற்ற இடம் பனிப்பிரதேசம். போர் வீரர்களெல்லோரும் நன்றாகப் போர்த்திக் கொண்டு, தங்கள் தங்கள் இடங்களிலேயே இருப்பார்கள்; வெளியே வர அஞ்சு வார்கள். ஆனால் ஸாக்ரட்டீஸோ மெல்லிய ஆடை யுடன், காலில் மிதியடி கூட இல்லாமல் வெளியே வந்து உலாவுவான்; போர் வீரர்களை உற்சாகப்படுத்துவான். ஒரு சமயம், ஆல்ஸி பியாடீஸ், காயமடைந்து கீழே விழுந்து விட்டான். அப்பொழுது சத்துருக்கள் அவனைச் சிறைப்படுத்தி விடாதபடிக்கும், அவனுடைய ஆயுதங் களைக் கைப்பற்றிக் கொள்ளாதபடிக்கும் பாதுகாத்து நின்றான் ஸாக்ரட்டீஸ்.” அப்படிக் காத்து நின்றதோடு மட்டு மல்லாமல், தனக்குக்கிடைக்க வேண்டிய வீரப் பரிசை ஆல்ஸி பியாடீஸுக்கே வாங்கிக் கொடுத்தான். அஞ்சாமைக்கும் தியாகத்திற்கும் மன அமைதிக்கும் இலக்கண புருஷனாயிருந்தான் ஸாக்ரட்டீஸ். ஆல்ஸிபியாடீஸைப் பிறகு சந்திப்போம். இவனுக்கு இந்தப் போராட்டத்தின் போது சுமார் இருபது வயது இருக்கும்.
சுமார் பதினான்கு வருஷங்களுக்கு முந்தி தனது காவற் படையை அழித்துவிட்டதற்காக மெகாராவின் மீது வஞ்சந் தீர்த்துக் கொள்ள, சமயம் பார்த்துக் கொண்டிருந்தது ஆத்தென்ஸ். ஸைபோட்டோ போரில், கொரிந்த்தியாவுக்கு உதவி செய்தது மெகாரா. இதையே காரணமாக வைத்துக் கொண்டு பொட்டிடீயா முற்றுகை தொடங்கியதும், - 432-ஆம் வருஷம் - தனது ஏகாதிபத்திய எல்லைக்குள் எந்த இடத்திலும் மெகாரியர்கள் வியாபாரஞ் செய்யக்கூடாதென்றும், இந்த உத்தரவை மீறி ஆத்தென்ஸில் காலடி எடுத்துவைக்கிற மெகாரியர்கள் மரண தண்டனைக்குட்படுவார் களென்றும் தடையுத்தரவு பிறப்பித்தது. இப்படி மெகாராவின் வியாபாரத்திற்குத் தடை விதித்ததன் மூலம், அதனை அடக்கி ஒடுக்கிவிட்டது ஆத்தென்ஸ். இப்படிச் செய்து விட்டதேயென்று மெகாராவும் கொரிந்தியாவும் ஸ்ப்பார்ட்டாவிடம் விண்ணப் பித்துக் கொண்டன.
மேற்சொன்ன சம்பவங்கள் பலவும், ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கு மிடையே இருந்த பகைமையை முற்றச் செய்தன. ஸ்ப்பார்ட்டா, தனது பெலொப்பொனேசிய சகாக்களைக் கூட்டி என்ன செய்யலாமென்பதைப் பற்றி ஆலோசித்தது. இந்தக் கூட்டத்தில், முப்பது வருஷ சமாதான ஒப்பந்தத்தை மீறி ஆத் தென்ஸ் நடந்து வந்திருக்கிறதென்று அதன் மீது குற்றஞ்சாட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன்மீது உடனடியாக யுத்தந் தொடுக்க ஸ்ப்பார்ட்டா விரும்பவில்லை. சிறிது தயங்கியது. பெலொப்பொனேசிய சமஷ்டியின் மற்ற அங்கத்தினர் ராஜ் யங்களோ யுத்தத்திற்குத் துடித்துக் கொண்டிருந்தன. சிறப்பாக கொரிந்த்தியாவுக்கு அதிக ஆத்திரம். ஆனால் பெலொப்பொனேசிய சமஷ்டி அங்கத்தினரில் பெரும்பாலோர் அங்கீகரித்ததால் தான், அந்தச் சமஷ்டியின் பெயரால் யுத்தந்தொடுக்கலாமென்று ஒரு விதி இருந்தது. எனவே, மேற்படி சமஷ்டியின் கூட்டம் இரண்டாவது தடவை கூட்டப்பட்டது. இதற்கிடையில், ஸ்ப்பார்டா, டெல்பி கோயிலுக்குச் சில தூதர்களை அனுப்பி ‘யுத்தந் தொடுத்தால் அனுகூலம் ஏற்படுமா’ என்று குறிகேட்கச் செய்தது. ‘முழு பலத் தோடு யுத்தந் தொடங்கினால் வெற்றி கிடைக்கலா’மென்று இதற்குப் பதில் கிடைத்தது. வேறென்ன நல்ல சகுனம் வேண்டும்? ஆத்தென்ஸ்மீது யுத்தந்தொடுப்பதென்று மேற்படி இரண்டாவது கூட்டத்தில் பெரும்பான்மையோரால் தீர்மானிக்கப்பட்டது.
இப்படித் தீர்மானித்த பிறகு, சுமார் ஒரு வருஷ காலம் வரை யுத்த ஆயுத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கிடையில், குறிப்பாகக் காலங் கடத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், ஸ்ப்பார்ட்டா, பெலொப்பொனேசிய சமஷ்டியின் சார்பாக, சில கோரிக்கைகளைக் கிளத்தி ஆத்தென்ஸுக்கு ஒரு தூது கோஷ்டி மூலம் தாக்கீது விடுத்தது. இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் யுத்தம் தொடங்கப்படுமென்றும் அறிவித்தது. கோரிக்கைகளாவன:
1. ஆத்தென்ஸ், பெராக்ளீஸின் வமிசத்தினரைத் தேசப் பிரஷ்டம் செய்துவிட வேண்டும். பெரிக்ளீஸை பிரஷ்டம் செய்து விடவேண்டுமென்று நேரடியாகக் கேட்பதற்குப் பதில் இப்படி மறைமுகமாகக் கேட்டது.
2. ஆத்தென்ஸ், பொட்டிடீயா முற்றுகையைக் கலைத்து விட்டுத் தன் துருப்புக்களைத் திரும்ப வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஆத்தீனிய ஏகாதிபத்தியத்துக்குட்படுத்தப்பெற்ற எஜீனாவுக்கு, பழைய மாதிரி பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும்.
4. மெகாராவுக்கு விரோதமாக விதிக்கப்பட்ட வியாபாரத் தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
5. தன்னுடைய ஏகாதிபத்தியத்தைக் கலைத்துவிட வேண்டும். அதாவது, ஆத்தீனிய ஏகாதிபத்தியத்திற்குட்பட்டிருக்கும் எல்லா ராஜ்யங்களுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும்.
பெரிக்ளீஸ், இந்த கோரிக்கைகளுக்காக இணங்க மறுத்து விட்டான். ஆனால் ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் உள்ளத் தகராறுகளை, ஒரு மத்தியஸ்த சபை நியமித்து அதன்மூலம் தீர்த்துக் கொள்ளலாமென்று தெரிவித்தான். ஸ்ப்பார்ட்டா இதற்கு உடன்படவில்லை. இனி என்ன? யுத்தந்தான்.
யுத்தம் துவங்குவதற்கு முந்தி ஒரு சிறு சம்பவம் நடந்தது. பியோஷ்யாவிலுள்ள தீப்ஸ் ராஜ்யம், சர்வாதிகார ஆட்சிக்குத் தாயகமாயிருந்து வந்ததென்பதையும், அப்படியே ஆத்தென்ஸுக்கு விரோதமாக இருந்து வந்ததென்பதையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதற்கு மாறாக பிளாட்டீயா, எப்பொழுதும் ஆத்தென்ஸுக்கு உடன்பட்டதாயிருந்து வந்தது. இது தீப்ஸுக்குப் பிடிக்கவில்லை. நீண்ட காலமாக இவ்விரண்டும் பிணக்குற்ற நிலையிலேயே இருந்துவந்தன. ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டா வுக்கும் யுத்தம் மூளுவது நிச்சயமென்று தெரிந்ததும், தீப்ஸ், தன்னுடைய சத்துருவான பிளாட்டீயாவைத் திடீரென்று தாக்கித் தன்வசப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது. இதற்குப் பிளாட்டீயா விலேயே சில துரோகிகள் உடந்தையாயிருந்தார்கள். இவர்களுடைய ஆதரவின் பேரில் 431-ஆம் வருஷம் மார்ச் மாதம் ஒருநாள் இரவு, முந்நூறு தீபர்களடங்கிய சிறு படையொன்று பிளாட்டீயாவுக்குள் ரகசியமாக நுழைந்து நகரத்தின் மத்தியிலுள்ள சந்தை கூடும் சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தச் சிறு படையைத் தொடர்ந்து பெரும் படையொன்று தீப்ஸிலிருந்து வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீப்ஸுக்கும் பிளாட்டீயாவுக்கும் எட்டு மைல் தூரந்தானானாலும், அன்று நல்ல மழை பெய்த படியால், குறித்த நேரப்படி அந்தப் பெரும்படை வந்து சேரவில்லை.
தீபர்கள் இப்படித் திடீரென்று இரவில் வந்து நகரத்தின் சந்தைச் சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதையறிந்த பிளாட்டீயர்கள் முதலில் சிறிது கலக்கமடைந்தார்கள். பின்னர், சொற்பமான பேரே வந்திருக்கின்றனர் என்று தெரிந்ததும், தைரியங் கொண்டு, நகரத்தின் நுழைவாயில்களையெல்லாம் நன்கு அடைக்கச் செய்துவிட்டு, அவர்களை - சந்தைச் சதுக்கத்தில் கூடி யிருந்தவர்களை - திடீரென்று தாக்கினார்கள். ஏன் வந்தோ மென்றாகி விட்டது தீபர்களுக்கு. வந்த முந்நூறு பேரில் தப்பிச் சென்றவர், இறந்துபோனவர் போக, நூற்றெண்பது பேர் சிறைப் பட்டனர். தீப்ஸிலிருந்து சிறிது தாமதித்து வந்த பெரும்படை யானது. பிளாட்டீயா நகரத்தின் மதிற்சுவர்களுக்கு வெளியே வந்து சேர்ந்ததும், உள்ளே நிகழ்ந்த சம்பவத்தைக் கேட்டு, வெளியேயிருந்த பிளாட்டீயர் சிலரைக் கைது செய்து தன்னிடம் வைத்துக் கொண்டது. பிளாட்டீயர்கள் இதை ஆட்சேபித்தார்கள். தீபர்கள், இதற்குப் பதில், உள்ளே சிறைப்படுத்தி வைத்திருக்கும் நூற் றெண்பது பேருக்கு விடுதலையளிப்பதாக வாக்களித்ததால், தாங்கள் வெளியே சிறைப்படுத்தி வைத்திருப்பவர்களையே விடுதலை செய்துவிட்டு, ஊருக்குத் திரும்பிப் போய்விடுவதாகக் கூறினார்கள். பிளாட்டீ யர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். தீபர்களும், சிறைப்படுத்தி வைத்திருந்த பிளாட்டீயர்களை விடுதலை செய்துவிட்டு ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். இவர்கள் திரும்பிப் போன பிறகு மேற்படி நூற்றெண்பது தீபர்களையும் கொன்றுவிட்டார்கள் பிளாட்டீயர்கள். வாக்கு மீறி நடந்ததாகப் பிளாட்டீயர்கள் மீது தீபர்கள் குற்றஞ் சாட்டினார்கள்; பிளாட்டீயர்களே அப்படித் தாங்கள் ஒன்றும் வாக்குக் கொடுக்க வில்லையென்று சாதித்தார்கள். யார் கூற்று உண்மையோ தெரியாது.
பிளாட்டீயாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை ஒன்றன்பின் னொன்றாக அறிந்து வந்த ஆத்தீனியர்கள் ஆத்திரமடைந்து, அட்டிக்காவிலுள்ள எல்லா பியோஷ்யர்களையும் கைது செய்து விட்டார்கள். தவிர, சிறைப்படுத்தப் பெற்றிருக்கும் நூற்றெண்பது தீபர்களையும் தாங்கள் மறு தகவல் தெரிவிக்கிற வரை ஒன்றுஞ் செய்யவேண்டாமென்று பிளாட்டீயாவுக்கு ஒரு தூதன் மூலம் சொல்லியனுப்பினார்கள். ஆனால் இந்தத் தூதன் போய்ச் சேரு வதற்குள், மேற்படி நூற்றெண்பது பேரும் ஏற்கனவே கூறியபடி கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆத்தீனியர்களுக்கு இது வருத்தந்தான். ஆயினும் இனி என்ன செய்வது? தீபர்கள் மறுபடியும் பிளாட்டீ யாவைத் தாக்கினாலும் தாக்கக்கூடுமென்று கருதி, அங்கு, ஆத்தீனியத் துணைப்படையொன்றை அனுப்பிவைத்தார்கள். மற்றும் பிளாட்டீயாவில் போர் செய்யத் தகுதியில்லாதிருந்த பிளாட்டீயர்களனை வரையும் ஆத்தென்ஸுக்கு வரவழைத்துக் கொண்டு விட்டார்கள். யுத்தம் நேரிட்டால், அனாவசியமான உயிர்ச் சேதமுண்டாகாமலிருக்க வேண்டு மென்பதற்குத்தான் இந்த முன்னேற்பாடு.
ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்குமிடையே சமரஸம் ஏற்படக் கூடிய மாதிரி எங்கேனும் மயிரிழை நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருக்குமானால் அந்த நம்பிக்கையையும் அற்றுபடி செய்து விட்டது இந்தப் பிளாட்டீயா சம்பவம். முப்பது வருஷ சமாதான ஒப்பந்தம் இறுதியாக முறிந்து போய், இனி யுத்தத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. பெலொப்பொ னேசியப் பெரும்போர்!
பெலொப்பொனேசிய யுத்தம்
(முதற்பகுதி கி. மு. 431 - 421)
1. கட்சி பலம்
பெலொப்பொனேசிய யுத்த சர்வ கிரேக்க யுத்தம். கிரீஸி லுள்ள ஏறக்குறைய எல்லா ராஜ்யங்களும் இதில் ஈடுபட்டன; அல்லது இழுத்து விடப்பட்டன. ஸ்ப்பார்ட்டாவை ஆதரிக்கின்ற கட்சி யென்றும் ஆத்தென்ஸை ஆதரிக்கிற கட்சியென்றும் இரண்டு கட்சிகளாக, அகில கிரீஸும் பிரிந்து, இரட்டைத் தலை நாகம்போல உறுத்தெழுந்தது. எந்தெந்தராஜ்யங்கள் எந்தெந்தக் கட்சியில் சேர்ந்து கொண்டனவென்பதைப் பார்ப்போம்.
ஸ்ப்பார்ட்டா கட்சி
ஆர்கோஸ், அக்கீயா, இவ்விரண்டும் தவிர, பொலப் பொனேசிய தீபகற்பத்திலுள்ள மற்ற ராஜ்யங்கள்; வடக்கே இட்டோலியாத் தவிர்த்து, பியோஷ்யா, போசிஸ், லோக்ரிஸ் முதலியவை; மேற்கே அம்ப்ரேஷ்யா, அனக்ட்ரோரியம், லியூக்காஸ் முதலியவை. ஆக கிரீஸின் தெற்கு, மேற்கு, வடக்கிலுள்ள ஏறக் குறைய எல்லா ராஜ்யங்களும் ஸ்ப்பார்ட்டா பக்கம் சேர்ந்து கொண்டன. இவை தவிர, மேற்கே சிஸிலி தீவிலுள்ள ஸைரக்யூஸ் என்ற முக்கியமான ராஜ்யமும் ஸ்ப்பார்ட்டாவுக்கு உதவியாயிருந்தது.
ஆத்தென்ஸ் கட்சி
மேற்கே கொரிந்த்திய வளைகுடாவிலுள்ள நவ்ப்பாக்ட்டஸ்; வடமேற்கே கார்ஸைரா, அக்கர்னேனியா ஜாக்கிந்த்தஸ் முதலியவை; வடக்கே பிளாட்டீயா; வடகிழக்கே திரேஸ் மாகாணத்திலும் ஹெல்லெஸ்ப் பாண்ட் பிரதேசத்திலும் கடலோரமாகவுள்ள ராஜ்யங்கள்; கிழக்கே சின்ன ஆசியாவின் கடலோரமாகவுள்ள ராஜ்யங்கள்; எஜீயன் கடலிலுள்ள மெலோஸ், தேரா என்ற தீவுகளைத் தவிர மற்றத் தீவுகள். ஆக ஆத்தீனிய ஏகாதிபத்தியத்திற் குட்பட்டிருந்த சகல ராஜ்யங்களும் ஆத்தென்ஸ் கட்சியில் சேர்ந்து கொண்டன. ஆத்தீனிய ஏகாதிபத்தியம் கிரீஸின் கிழக்குப் பக்கத்தில் மட்டுமே விரிந்தும் அதிகமான செல்வாக்குப் பெற்றும் இருந்த தென்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
இவ்விரண்டிலும் ஸ்ப்பார்ட்டாவே வலுப்பெற்ற கட்சி யென்று சொல்ல வேண்டும். பலமான ராஜ்யங்கள் அதற்குத் துணை யாக இருந்தன. அதன் தரைப்படை, திறமை வாய்ந்ததாயிருந்தது. ஆத்தென்ஸுக்குக் கடற்படை பலம் இருந்தது வாஸ்தவம். பெரிக் ளீஸின் திறமையான தலைமை வேறு இருந்தது. என்றாலும், அதற்குத் துணையாகச் சேர்ந்திருந்த ராஜ்யங்கள், அதன் ஆதீனத் திற்குட்பட்டிருந்த காரணத்தினால், அதனிடம் அதிருப்தி கொண்டி ருந்தன. இந்த அதிருப்தியே அதனை அரித்துவிட்டது.
இருபத்தேழு வருஷ காலம் நடைபெற்ற இந்த பெலொப் பொனேசிய யுத்தத்தை, 431-ஆம் வருஷத்திலிருந்து 421-ஆம் வருஷம் வரை முதற் பகுதியென்றும், 421-ஆம் வருஷத்திலிருந்து 415-ஆம் வருஷம் வரை இரண்டாவது பகுதியென்றும், 415-ஆம் வருஷத்தி லிருந்து 404-ஆம் வருஷம் வரை மூன்றாவது பகுதியென்றும் இப்படி மூன்று பகுதிகளாகப் பிரிப்பர் சரித்திராசிரியர். இந்த மூன்று பகுதிகளிலும் நடைபெற்ற சம்பங்வங்களை விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டு போதல் அசாத்தியம். அது தேவையுமில்லை. போரை வருணிப்பதால் இன்பம் உண்டாகாது; நன்மையும் கிடையாது. எனவே முக்கியமானவற்றை மட்டும் சுருக்கமாகச் சொல்லிக் கொண்டு போவோம்.
2. பரஸ்பர நாச வேலைகள்
பிளாட்டீயா சம்பவம் நடைபெற்றுச் சில வாரங்களாயின. 431-ஆம் வருஷம் மே மாதக் கடைசி. அட்டிக்காவில் அறுவடை காலம். இதுதான் தருணமென்று ஸ்ப்பார்ட்டாவின் அரசனாகிய ஆர்க்கிடாமஸ் என்பவன், பெலொப்பொனேசியப் பெரும்படை யொன்றுடன் ஆத்தென்ஸ் ராஜ்யத்தின் மீது போர் தொடுக்கப் புறப்பட்டான். புறப்பட்டுச் சென்று அட்டிக்காவின் எல்லையை யடைந்ததும், கடைசி முறையாகச் சமாதானத்திற்கு முயன்று பார்ப்போம் என்ற நோக்கத்துடன் ஆத்தென்ஸுக்கு ஒரு தூதனை அனுப்பி, சமரஸமாகப் போய்விடுமாறு கூறினான். ஆனால் பெரிக்ளீஸ், இந்தத் தூதனை வரவேற்கவே மறுத்துவிட்டான். சூரியாஸ்தமனத்திற்குள் அட்டிக்காவின் எல்லையைவிட்டு அகன்று விட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிட்டான். அந்தத் தூதன் - அவன் பெயர் மெலிஸிப்பஸ் எல்லையை வந்தடைந்ததும், “இன்றிலிருந்து கிரேக்கர்களுக்கு மகத்தான தீங்குகள் உண்டாகும்” என்று சாபமிடுவது போல் கூறினான். இது முற்றிலும் உண்மை யாகவே முடிந்தது.
தனது சமரஸ முயற்சி பலிக்காமல் போகவே, ஆர்க்கிடாமஸ் தன் படையுடன் அட்டிக்காவுக்குள் பிரவேசித்து, செழித்துக் கொழுத்திருந்த பயிர்களை எல்லாம் நாசமாக்கினான். ஆத்தீனி யர்கள், தங்கள் நில புலங்களைப் பாதுகாக்க முன்வருவார்க ளென்றும், அப்படி வந்தால் அவர்களைச் சுலபமாகத் தோற்கடித்து விடலாமென்றும் இவன் கருதினான். ஆனால் பெரிக்ளீஸுக்கு, பெலொப்பொனேசியப் படையைத் தரையிலே சந்திக்க விருப்ப மில்லை. அப்படிச் சந்தித்தால் நிச்சயம் தோல்வியே உண்டாகு மென்பதை இவன் நன்கு உணர்ந்திருந்தான். பெலொப்பொனே சியர்கள் தரைப் போரில் வல்லவர்களன்றோ?
எனவே, அட்டிக்காவிலுள்ள அனைவரையும் ஆத்தென்ஸுக்கு வந்துவிடுமாறு உத்தரவிட்டான். அப்படியே அட்டிக்காவில் ஆங்காங்கு வசித்துக் கொண்டிருந்த பலரும், தாங்கள் உழுது பயிரிட்டு வந்த நிலபுலங்களையெல்லாம் அப்படி அப்படியே விட்டுவிட்டு, தூக்க முடிந்த சாமான்களை மட்டும் தூக்கிக் கொண்டு ஆத்தென்ஸ் வந்து சேர்ந்தனர். ஆத்தென்ஸில் ஒரே ஜன நெருக்கம். திறந்தவெளிகளில் கூடாரங்கள் அடித்துக்கொண்டு வசித்தவர் பலர்; கோயில்களென்ன, பொதுஜன மண்டபங்க ளென்ன, இப்படிப் பொது இடங்கள் பலவற்றிலும் ஜனங்கள் நிரம் பியிருந்தனர். ஆத்தென்ஸ் நகர்ப் பகுதியிலிருந்து பீரேயஸ் துறை முகப் பகுதி வரை எங்கும் ஒரே ஜனக்கூட்டந்தான்.
இங்ஙனம் ஆத்தென்ஸில் கூடியிருந்த ஜனங்கள், கண்ணுக் கெட்டிய தூரத்தில் தங்கள் பயிர் பச்சைகள் சத்துருக்களினால் நாசமாக்கப்படுவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்கள்; உடனே அவர்கள் மீது படையெடுத்துச் செல்ல வேண்டுமென்று துடித் தார்கள். ஆனால் பெரிக்ளீஸ் இதற்கு இடங்கொடுக்க வில்லை. ஆர்க்கிடாமஸ், சுமார் ஆறு வார காலம் வரை அட்டிக்காவில் தங்கி, அநேக நாச வேலைகளைச் செய்துவிட்டு பெலொப்பொ னேசியா வுக்குத் திரும்பிவிட்டான்.
ஆர்க்கிடாமஸ், தரைப்பக்கமாகப் படையெடுத்து வந்ததற்குப் பதிலாக, பெரிக்ளீஸ், கடற்பக்கமாகப் பெலொப்பொனேசியாவைத் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தான். இதற்காகச் சுமார் நூறு கப்பல்களை அனுப்பினான். இந்தக் கடற்படை, பெலொப்பொனே சியாவின் கடலோரப் பிரதேசங்களில் நாசத்தை உண்டுபண்ணி வந்தது. இதனோடு பெரிக்ளீஸ் திருப்தியடையவில்லை. ஆத் தென்ஸின் கண்களை உறுத்திக் கொண்டிருந்த எஜீனா தீவு எந்த நிமிஷத்திலும் தனக்கு விரோதமாகக் கூடுமென்று கருதி, அந்தத் தீவினரை - அவர்கள் டோரியர்கள் - அப்படியே அப்புறப் படுத்தி விட்டு, அங்கு ஆத்தீனியர் பலரை அனுப்பிக் குடியேறச் செய்தான்; அந்தத் தீவு, அட்டிக்காவின் ஒரு பகுதியாகச் சேர்க்கப் பட்டு விட்டது. எஜீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஸ்ப்பார்ட்டா அடைக்கலம் கொடுத்து, லாக்கோனியாவுக்கு வடக்கே தைரியேட்டிஸ் என்ற இடத்தில் கொண்டு போய்க் குடியேற்றுவித்தது. ஸ்ப்பார்ட்டாவினால் விரட்டப்பட்ட மெஸ்ஸீ னியர்களை, ஆத்தென்ஸ், முந்தி நவ்ப்பாக்ட்டஸ் என்ற இடத்தில் குடியேறச் செய்ததல்லவா, அதற்குப் பிரதி இது.
இங்ஙனம் பிரதி வருஷமும் ஆத்தீனியக் கடற்படை, பெலொப்பொனேசியாவின் கடலோரப் பிரதேசங்களைத் தாக்கியது; அப்படியே பெலொப்பொனேசியத் தரைப்படை, அட்டிக்காவுக்குள் புகுந்து அழித்தது. இப்படிச் சுமார் ஏழு வருஷ காலம் பரஸ்பர நாசவேலைகள் நடைபெற்றன. இந்த ஏழு வருஷ காலமும் மெகாரா ராஜ்யம் ஆத்தென்ஸின் கோபத்திற்கு விடாமல் ஆளாகிவந்தது. ஒவ்வொரு வருஷமும் இதனைப் பாழ்படுத்தி வந்தன ஆத்தீனியப் படைகள்.
3. பெரிக்ளீஸின் மரணம்
பெலொப்பொனேசியப் படைகளினால் தங்கள் பயிர் பச்சைகள் அழிக்கப்படுகின்றனவே என்பதற்காக ஆத்தீனியர்கள் மனச்சோர்வு அடையவில்லை; அதற்கு மாறாக யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்பதில் உறுதி கொண்டனர். அப்படித் தொடர்ந்து நடத்துவதற்குப் பணம் வேண்டுமல்லவா? பொட்டிடீயாவில் முற்றுகை நடைபெற்றுக் கொண்டு வந்த தென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இந்த முற்றுகை, அடுத்த வருஷம் அதாவது - 430-ஆம் வருஷம் - ஆத்தென்ஸுக்குச் சாதகமாகவே முடிந்தது; பொட்டிடீயா பணிந்துவிட்டது என்றாலும் இதனால் ஆத்தென்ஸுக்கு எவ்வளவு பண நஷ்டம்? சுமார் இரண்டாயிரம் டாலெண்ட்டுகள் வரை செலவழிந்து விட்டது. தவிர ஆத்தென்ஸை அழகு படுத்தும் வேலைகள் நடைபெற்று வந்தனவல்லவா, இதற்காக ஏராளமான பணம் விரயமாகிவிட்டது. பெலொப்பொனேசிய யுத்தம் தொடங்கிய முதல் வருஷம், கஜானாவில் மொத்தம் ஆறாயிரம் டாலெண்டுட்டுகளே இருந்தன. எனவே, இதிலிருந்து ஆயிரம் டாலெண்ட்டுகளைத் தனியாக ஒதுக்கி வைத்து, யுத்தத்தில் ஒரு நெருக்கடி ஏற்பட்டால், அப்பொழுதுதான் இதனை எடுத்துச் செலவழிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள் ஆத்தீனியர்கள். இது தவிர, கப்பற்படைக்குப் பிரதி வருஷமும் நூறு நூறு புதிய கப்பல்களைச் சேர்த்துக் கொண்டு வருவதென்றும் ஏற்பாடு செய்தார்கள். ஆத்தீனியர்களுடைய இந்த உறுதிக்குக் காரணமா யிருந்தவன் பெரிக்ளீஸ் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆயினும் அரசாங்க பொக்கிஷத்திலுள்ள பணத்தை அனாவசிய மான விஷயங்களில் செலவழித்துவிட்டான் என்பதற்காக இவன்மீது அதிருப்தி இருந்து கொண்டே யிருந்தது. ஏற்கனவே துஸிடிடீஸ் என்பவன் இதனை வெளிப்படுத்தி யிருந்தானல்லவா? இஃதிருக் கட்டும்.
ஒரு போராட்டம் முடிந்ததும் அதில் இறந்துபட்டவர்களின் எலும்புகளைப் பகிரங்கமாக அடக்கம் செய்வதும் அப்பொழுது அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதும் ஆத்தீனியர்களுடைய சம்பிரதாயம். இதனை அனுசரித்து பெலொப்பொனேசியப் படையெடுப்புக் காரணமாக வீர மரணம் எய்தியவர்களின் எலும்புகள் பகிரங்கமாகப் புதைக்கப்பட்டன; அவர்களைப் பாராட்டு முகத்தான், பெரிக்ளீஸ் ஆத்தென்ஸின் போக்கை விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினான். இந்தச் சொற்பொழிவு, உலகத்துச் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாக இன்றளவும் மதிக்கப்பட்டு வருகிறது.
முதல் வருஷத்தைப் போலவே இரண்டாவது வருஷமும் - 430-ஆம் வருஷம் ஆர்க்கிடாமஸ், அட்டிக்காவைத் தாக்கி அல்லற்குட் படுத்தினான். ஆனால் இதைக்காட்டிலும் பெரிய அல்லல் ஆத்தென்ஸுக்கு இந்த வருஷம் ஏற்பட்டுவிட்டது. அதுதான் கொடிய பிளேக். இந்த நோய் எத்தியோப்பியாவி லிருந்து பரவி வந்ததென்று சொல்கிறார்கள். எப்படியோ இது ஜனநெருக்கமுள்ள ஆத்தென்ஸில் வந்து புகுந்து சண்டதாண்டவம் செய்தது. சுமார் நான்கு வருஷம் வரை இந்தத் தாண்டவம் நடைபெற்றதேயாயினும், முதல் வருஷத்தில் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாயிருந்தது. ஆத்தென்ஸின் மொத்த ஜனத்தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு குறைந்து போய்விட்டது.
ஆத்தென்ஸுக்குள்ளே தங்கள் உற்றார் உறவினர் இறந்து படுவதையும், ஆத்தென்ஸுக்கு வெளியே தங்கள் நிலபுலங்கள் யாவும் பெலொப்பொனேசியப் படையினால் நாசமாக்கப் படுவதையும் பார்த்த ஆத்தீனியர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள். இந்த ஆத்திரத்தில் ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸம் செய்துகொண்டு விட முயற்சி செய்தார்கள். ஆனால் ஸ்ப்பார்ட்டா சமரஸத்திற்கு வர மறுத்துவிட்டது. எனவே இவர்களுடைய ஆத்திரம் பன்மடங்கு அதிகரித்தது. இந்த ஆத்திரத்தை பெரிக்ளீஸ் மீது திருப்பினார்கள். இவனைப் பிரதம சேனாதிபதி பதவியிலிருந்து தற்காலிகமாக விலக்கி, பொதுப் பணத்தைக் கையாடினதாகக் குற்றஞ்சாட்டி விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள். இவனை விசாரிப்பதற்குக் கூடிய நீதிபதிகள் எத்தனை பேர்? 1501 பேர்! கடைசியில் ஐந்து டாலெண்ட்டுகளைக் கையாண்டிருக்கிறானென்று குற்றஞ்சாட்டி ஐம்பது டாலெண்ட்டுகள் அபராதம் செலுத்த வேண்டுமென்று 430-ஆம் வருஷம் ஜூலை மாதம் தீர்ப்புக் கூறினார்கள். இவனும் அபராதத்தைச் செலுத்திவிட்டான். ஜனங்களுடைய ஆத்திரம் ஒருவாறு அடங்கியது. அடங்கியதும் இவனையே திரும்பவும் பிரதம படைத்தலைவனாக தெரிந்தெடுத்தார்கள். இவன் இன்றிய மையாதவனாக இருந்தான். இவனுடைய வீரம், உறுதி, நிதானம், அரச தந்திரம் யாவும் அப்பொழுது ஆத்தென்ஸுக்குத் தேவையா யிருந்தன.
ஆனால் இதற்குப் பிறகு இவன் அதிக காலம் இருக்கவில்லை. ஒரு வருஷ காலந்தான் ஆத்தென்ஸின் அரசியலில் ஆதிக்கம் பெற்றி ருந்தான். இந்த ஒரு வருஷ காலத்தையும் மனவேதனையுடனேயே கழித்தான். பிளேக் நோயில் இவனுடைய இரண்டு பிள்ளைகளும் இறந்து விட்டனர். இவனால் ஆதரிக்கப் பெற்றுக் கௌரவிக்கப் பெற்றும் வந்த இவனுடைய சிறந்த நண்பர்கள், சிற்ப நிபுணனான பிடியஸ் என்ன, தத்துவஞானியான அனக்ஸாகோரஸ் என்ன, இப்படிப்பட்டவர்கள்மீது இவனுடைய விரோதிகள் பழி சுமத்தினார்கள். அவர்களை அந்தப் பழியினின்று தப்புவிக்க இவன் எவ்வளவோ முயன்றான். முடியவில்லை. இவனால் காதலிக்கப்பட்டு வந்த அஸ்ப்பேஷியா என்பவள், கேவலமான நிந்தைக்குட்படுத்தப் பட்டாள். அவளை அந்த நிந்தையினின்று விடுவிக்க இவன் - பெரிக்ளீஸ் - கண்ணீரை ஆறாகப் பெருக்கினான்; தண்டனை பெறுவதினின்று அவளைத் தப்புவித்தான். கடையில் அவளுக்குப் பிறந்த மகனை, இவனுடைய சொந்த மகனாக அங்கீகரிக்கப்பதாக ஜனசபை ஓர் உத்தரவு பிறப்பித்தது. இவனுடைய மகத்தான சேவைக்கு ஆத்தென்ஸ் காட்டிய நன்றி இஃதொன்றுதான். இவன் மரணத் தறுவாயில், “என்னுடைய எந்த ஒரு செயல் காரணமாகவும் யாரும் துக்கப்பட்டதில்லை” என்று கூறினதாகச் சொல்வர். இவனுடைய மனிதத் தன்மையை எடுத்துக்காட்டுவதாயிருந்தது இந்த வாசகம். இவன் பெலொப்பொனேசிய யுத்தத்தின் மூன்றாவது வருஷம் - 429-ஆம் வருஷம் இறந்து போனான். ஆத்தென்ஸுக்குத் துரதிருஷ்டம் ஆரம்பித்து விட்டது.
4. பல இடங்களில் போர்
பெரிக்ளீஸ் இறந்துபோன வருஷம் 429-ஆம் வருஷம் - தீபர் களுடைய தூண்டுதலின் பேரில், ஆர்க்கிடாமஸ், பிளாட்டீயாவை முற்றுகையிட்டான். ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட்பட்டிருந்த தல்லவா இந்தப் பிளாட்டியா? ஆத்தென்ஸின் உதவி கிடைக்கு மென்று எதிர்பார்த்து முற்றுகையைத் தாங்கி நின்றார்கள் பிளாட்டீ யர்கள். ஆனால் ஆத்தென்ஸ் எவ்வித உதவியும் செய்யவில்லை; ஒதுங்கி நின்றது. ஆர்க்கிடாமஸ், நகரத்தைச் சுற்றி இரட்டைச் சுவர்கள் எழுப்பி, எவ்விதப் போக்குவரத்தும் இல்லாமற் செய்து விட்டான். சுமார் இரண்டு வருஷ காலம் இந்த முற்றுகை நடை பெற்றது. எவ்வளவு காலந்தான் தாக்குப் பிடிப்பர் பிளாட்டீயர்கள்? முற்றுகையின் ஆரம்பத்தில் நானூறு பிளாட்டீயர்களும், எண்பது ஆத்தீனியர்களும், இவர்களுக்குச் சமையல் முதலியன செய்துபோட நூற்றுப்பத்து ஸ்திரீகளும் நகரத்துக்குள் இருந்தனர். இவர்கள்தான் முற்றுகையைத் தாங்கி நின்றவர்கள். முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர்களிற் சிலர் மடிந்தனர்; சிலர் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். கடைசியில் இருநூறு பிளாட்டீயர்களும் இருபத்தைந்து ஆத்தீனி யர்களும் எஞ்சி நின்றார்கள். இவர்கள் 427-ஆம் வருஷம் கோடைக் காலத்தில் சரணடைந்தனர். பெயரளவுக்கு இவர்கள் விசாரிக்கப் பட்டு அத்தனை பேரும் கொலை செய்யப்பட்டு விட்டனர். பிளாட்டீயா நகரம் தரையோடு தரையாக்கப்பட்டு விட்டது. இவ்வளவுக்கும் காரணமாயிருந்தவர்கள் தீபர்கள்தான்.
வட மேற்கேயுள்ள அக்கர்னேனியா பிரதேசம் ஆத்தென்ஸ் கட்சியைச் சேர்ந்திருந்ததல்லவா, இதனைத் தாக்கி அந்தக் கட்சி யிலிருந்து விடுதலை செய்ய ஸ்ப்பார்ட்டா, ஒரு தரைப் படையையும் கப்பற் படையையும் அனுப்பியது. தரைப்படையை அக்கர்னேனி யர்களே எதிர்த்து நின்று முறியடித்து விட்டார்கள். கப்பற் படையைச் சமாளிக்க வேண்டுமே? நவ்ப்பாக்ட்டஸ் துறைமுகப் பிரதேசத்தில், காவலுக்கென்று, போர்மியோ என்பவனுடைய தலைமையில் ஓர் ஆத்தீனியக் கப்பற்படை தங்கியிருந்தது. இவன் - இந்தப் போர்மியோ - தன்னுடைய சாமர்த்தியத்தினால், எண்ணிக் கையில் அதிகமாயிருந்த ஸ்ப்பார்ட்டக் கப்பற் படையை வெகு சுலபமாக முறியடித்துவிட்டான். ஸ்ப்பார்ட்டர்கள், ஆத்தீனியர் களுடைய கடலாதிக்கத்தை அங்கீகரிப்பதுபோல் பின்வாங்கிக் கொண்டனர்.
யுத்தத்தின் நான்காவது வருஷம், அதாவது 428-ஆம் வருஷம் எஜீயன் கடலின் கிழக்குப் பக்கத்திலுள்ள லெஸ்போஸ் தீவு, ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கலகத்திற்குக் கிளம்பிவிட்டது. தன்னுடைய ஏகாதிபத்தியத்திற்குட் பட்டிருந்த ராஜ்யங்களில், லெஸ்போஸ் தீவை மிகவும் கௌரவமாகவே நடத்திவந்தது ஆத்தென்ஸ். இந்தத் தீவின் தலைநரகம் மிட்டிலீனி என்பது. ஆத்தென்ஸ், பெலொப்பொனேசிய யுத்தத்தினாலும், பிளேக் நோயினாலும் சோர்வுற்றிருக்கிறதென்று கருதி, அதனுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற இதுதான் தருணமென்று கருதி மிட்டீலீனியர்கள் முதன்முதலாகக் கலகத்திற்குக் கிளம்பினார்கள். தீவின் இதர நகரத்தினரும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். மெத்திம்னா என்ற ஒரே ஓர் ஊர் மட்டும் ஒதுங்கியிருந்தது.
கலகத்திற்குக் கிளம்பிய மிட்டிலீனியர்கள், ஸ்ப்பார்ட்டாவின் உதவியை நாடினார்கள். ஆனால் குறித்த காலத்தில் இந்த உதவி வந்து சேரவில்லை. ஆத்தென்ஸோ, பாக்கெஸ் என்பவனுடைய தலைமை யில் ஒரு பெரும் படையை அனுப்பி, மிட்டிலீனி நகரத்தை முற்றுகை யிடச் செய்தது. சுமார் இரண்டு வருஷ காலம் இந்த முற்றுகை நடைபெற்றது. இரண்டாவது வருஷத் தொடக்கத்தில் ஸாலீத்தஸ் என்பவன் மிட்டிலீனி நகரத்திற்கு ரகசியமாக வந்து, ஸ்ப்பார்ட்டக் கடற்படையொன்று வந்து கொண்டிருப்பதாகவும், முற்றுகை யினால் தளர்ந்துபோக வேண்டாமென்றும், மிட்டிலீனி யர்களுக்கு உற்சாகமூட்டி வந்தான். உண்மையில், ஆல்ஸிடாஸ் என்பவனுடைய தலைமையில் ஸ்ப்பார்ட்டக் கப்பற்படையொன்று உதவிக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் மேலே சொன்னபடி குறித்த காலத்தில் வந்து சேரவில்லை. உதவியை எதிர்பார்த்து எதிர்பார்த்து உற்சாகமிழந்துவிட்ட மிட்டிலீனியர்கள் கடைசியில் 427-ஆம் வருஷம் சரணாகதி யடைந்துவிட்டார்கள். இவர்கள் சரணடைந்த ஒரு வாரங்கழித்துத்தான் ஸ்ப்பார்ட்டக் கடற்படை வந்தது. ஆனால் மிட்டிலீனி நகரம் விழுந்து விட்டதென்று அறிந்து வேகமாகத் திரும்பிவிட்டது.
சரணடைந்த மிட்டிலீனியர்களில் முக்கியமான தலைவர் களையும் ஸ்ப்பார்ட்ட ஸாலீத்தஸையும் சிறைப்படுத்தி ஆத் தென்ஸுக்கு அனுப்பினான் பாக்கெஸ். இவர்களை என்ன செய்வது? மிட்டிலீனியர்களுக்கு என்ன தண்டனை விதிப்பது? இவை பற்றி ஜனசபை ஆலோசித்தது. அப்பொழுது ஜனசபையில் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தவன் கிளியோன் என்பவன். இவனைப் பற்றிப் பின்னர் பேசுவோம். இவன், ஆத்தென்ஸ், மகத்தான பெலொப்பொனேசியப் போரில் ஈடுபட்டிருக்கிற காலத்தில், அப்படி ஈடுபட்டதனால் அதிக கஷ்டநஷ்டங்களை அனுபவித்து வருகிறதென்பதை நன்கு தெரிந்திருந்தும், மிட்டிலீ னியர்கள், கலகத்திற்குக் கிளம்புவது பெரிய துரோகமாகுமென்றும், இதற்குத் தக்க தண்டனை, அவர்களை - மிட்டிலீனியர்களை - அடியோடு நாசஞ்செய்து விடுவதுதானென்று கூறினான். ஜன சபையும், மிட்டிலீனிமீது கொண்டிருந்த ஆத்திரத்தில், இவன் கூறியதை ஏற்றுக்கொண்டு மிட்டிலீனியிலுள்ள வயதுவந்த ஆண்பிள்ளைகள் அத்தனை பேரையும் கொலை செய்து விடுமாறும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்துமாறும் பாக்கெஸுக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தாங்கிக் கொண்டு கப்பலொன்றும் புறப்பட்டுவிட்டது.
பின்னர் ஜனசபையினர் நிதானமாக ஆலோசித்துப் பார்த்தனர். ஒரு ஜன சமூகத்தை அடியோடு அழித்து விடுவது சரியா என்ற கேள்வி இவர்கள் உள்ளத்தே எழுந்தது. மேற்படி உத்தரவைப் பற்றிப் புனராலோசனை செய்ய, ஜனசபையின் விசேஷக் கூட்டம் மறுநாள் கூடியது. கிளியோன், தன் கட்சியைக் காரசாரமாக எடுத்துச் சொன்னான். இவனுக்கு எதிராக டியோடோட்டஸ் என்பவன் மிட்டிலீனியர்களுக்கு இந்தக் கொடிய தண்டனையை விதிப்பது ஆத்தென்ஸுக்கே கெடுதல் என்று வாதஞ் செய்தான். கடைசியில் இவன் சொன்னதையே ஜனசபையினர் ஏற்றுக்கொண்டு நேற்றுப் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து மறு உத்தரவு ஒன்று பிறப்பித்து மற்றொரு கப்பலை அனுப்பினர். முதல் உத்தரவு கிடைத்து, அதன்படி தண்டனையை நிறைவேற்றத் தயாராயி ருந்தான் பாக்கெஸ். ஆனால் மிட்டிலீனியர்களுடைய அதிருஷ்ட வசமாக, இரண்டாவது உத்தரவு நல்ல தருணத்தில் போய்ச் சேர்ந்தது. தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மிட்டிலீனியர்கள் தப்பி னார்கள். ஆனால் சிறைப்பட்டு ஆத்தென்ஸுக்கு வந்திருந்த மிட்டி லீனியக் கலகத் தலைவர்களும் - இவர்களும் சுமார் முப்பது பேர் - ஸ்ப்பார்ட்டஸாலீத்தஸும் மரணதண்டனைக்குட்படுத்தப் பெற்றார்கள். மிட்டிலீனியின் கடற்படை, ஆத்தீனியக் கடற் படையுடன் ஐக்கியப்படுத்தப்பட்டது. அதன் மதிற்சுவர்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆத்தீனியர்கள் பலர் அங்கு அனுப்பப் பெற்று, அவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
யுத்தத்தின் ஐந்தாவது வருஷம் - 427-ஆம் வருஷம் - கார் ஸைரா தீவில் ஒரு பெரிய கலகம் நிகழ்ந்தது. ஆத்தென்ஸ் கட்சியில் சேர்ந்திருந்த இந்தத் தீவில் ஜனக்கட்சியினர், அரசியலில் ஆதிக்கம் பெற்று வந்தனர்; அவர்களுக்கு விரோதமாகப் பணக்காரர் கட்சியினர் இருந்தனர். கிரீஸிலுள்ள ஒவ்வொரு ராஜ்யத்திலும் இப்படி இரண்டு கட்சிகள் இருந்து கொண்டிருந்தன வென் பதையும், பெரும்பாலும் இந்தப் பணக்காரக் கட்சியினர் ஸ்ப்பார்ட் டாவுக்கு ஆதரவாயிருந்து வந்தனரென்பதையும் நாம் வாசகர் களுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை யல்லவா? கார்ஸைராவின் பணக்காரக் கட்சியினர்மேற்படி 427-ஆம் வருஷம் கொரிந்த்தி யாவின் தூண்டுதல் பேரில் ஜனக்கட்சியினருக்கு விரோத மாகக் கலகத்திற்குக் கிளம்பினர். சுமார் இரண்டு வருஷ காலம் இந்தக் கலகம் நீடித்து நடைபெற்றது. இறுதியில் 425-ஆம் வருஷம் பணக்காரக் கட்சியினர், அடியோடு நாசமாக்கப்பட்டு விட்டனர். கிரீஸில் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டைகளுள் இது மிகவும் கோரமானது. ஒரு ராஜ்யத்திற்குள்ளேயே கட்சிப் பிரதி கட்சி களுக்குள் சண்டை ஏற்படுமானால் அஃது எவ்வளவு கொடுமை வாய்ந்ததாயிருக்கிற தென்பதை இந்தக் கார்ஸைரா கலகம் நன்கு நிரூபித்துக் காட்டியது.
கார்ஸைரா கலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ஆத்தென்ஸ், யுத்தத்தில் தற்காத்துக்கொள்ளும் முறையைக் கைவிட்டுவிட்டு, எதிர்ப்பு முறையைக் கையாளத் தீர்மானித்தது. அதாவது சத்துருக்கள் படையெடுத்து வருகிறபோது மட்டும் அதனைத் தாங்கி நிற்பதென்பதை விடுத்து, தானே வலிய சத்து ருக்களைத் தாக்கத் தீர்மானித்தது. இதற்குக் காரணமாயிருந்தவன் டெமாஸ்த்தனீஸ் (இதே பெயருடன் ஆத்தென்ஸில், பிரசித்த நாவலன் ஒருவன் பிற்காலத்தில் வாழ்ந்து வந்தான். முப்பதாவது அத்தியாயத்தைப் பார்க்க) என்பவன். இவன் கார்ஸைரா தீவுக்குத் தெற்கே, லியூக்காஸ் என்ற தீவு இருக்கிறது பாருங்கள், இது, ஸ்ப்பார்ட்டா கட்சியில் சேர்ந்திருந்ததல்லவா, இதனை வெற்றி கொள்ள வேண்டுமென்று டெமாஸ்த்தனீஸ், ஒரு கடற்படையுடன் 426-ஆம் வருஷம் பெலொப்பொனேசியாவைச் சுற்றிக்கொண்டு சென்றான்; லியூக்காஸ் தீவைத் தாக்கினான். ஆனால் இதன் முடிவு தெரிவதற்குள், இட்டோலியா பிரதேசத்தை - இது நடுநிலைமை வகித்ததென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும் - தாக்க வேண்டு மென்ற எண்ணம் பிறந்தது; எனவே ஒரு சிறு தரைப்படையுடன் அங்குச் சென்றான். இகிடியம் என்ற இடத்தில் இட்டோலியர் களுக்கும் ஆத்தீனியர்களுக்கும் சண்டை நடைபெற்றது. பின்னவர் தோல்வியடைந்தனர். டெமாஸ்த்தனீஸ் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதற்கு மாறாக, நவ்ப்பாக்ட்டஸிலும் வடக்கே சில இடங் களிலும், ஸ்ப்பார்ட்டர்களை எதிர்த்து நின்று ஆத்தென்ஸுக்கு வெற்றிவாங்கிக் கொடுத்தான்; சில பிரதேசங்களை ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குட்படுத்தினான்.
மேற்கே இத்தலியின் தென்பாகத்தில் ஆத்தென்ஸின் செல்வாக்குக்குட் பட்டிருந்த சில ராஜ்யங்களும் இருந்தன. இவைகளுக்குள் எப்பொழுதும் பிணக்குதான். இந்தக் கதையைப் பின்னர்க் கவனிப்போம். பெலொப்பொனேசிய யுத்தம் தொடங்கிய பிறகு ஸ்ப்பார்ட்டாவுக்குட்பட்ட ராஜ்யங்கள், அதற்குத் தானியங் கள் முதலியன அனுப்பி உதவி செய்துவந்தன. இந்த உதவியைத் தடுத்துவிடவும், ஸ்ப்பார்ட்டாவுக்குட்பட்ட ராஜ்யங்களுக்கு ஒரு நல்ல பாடங் கற்பிக்கவும் விரும்பியது ஆத்தென்ஸ். இதற்காக, யுத்தத்தின் ஏழாவது வருஷம் - 428-ஆம் வருஷம் நாற்பது கப்பல் களடங்கிய ஒரு கடற்படையை, யூரிமெடான், ஸோபோக்ளீஸ் என்ற இருவருடைய தலைமையில் சிஸிலி தீவுப்பக்கம் அனுப்பியது. இந்தப் படையுடன் மேற்சொன்ன டெமாஸ்த்தனீஸும் அனுப்பப் பட்டான். இந்தப் படை, பெலொப்பொனேசியாவைச் சுற்றிக் கொண்டு மேற்கே பைலோஸ் என்ற துறைமுகத்தை நண்ணுங் காலையில் பெரிய புயற்காற்றெடுத்துவிட்டது. எனவே படையானது துறைமுகத்திலேயே தங்கும்படி நேரிட்டது. அப்பொழுது டெமாஸ் தனீஸ், ‘இந்தத் துறைமுகத்தை நன்றாகப் பந்தோபஸ்து செய்து கொண்டு விட்டோமானால் இங்கிருந்து, நாற்பத்தாறு மைல் தொலைவிலேயுள்ள ஸ்ப்பார்ட்டாவைத் தாக்குவது சுலபமா யிருக்கும்; மெஸ்ஸீனியர்களும் நமக்கு உதவி செய்வார்கள்’ என்று படைத்தலைவர்களுக்கு யோசனை கூறினான். அவர்கள் இதற்கு இசையவில்லை. ஆனால் புயற்காற்றும் ஓயவில்லை. படையினர் சும்மாயிருந்து கொண்டிருந்தனர். அப்படிச் சும்மாயிருந்த காலத்தில் அவர்களே துறைமுகத்தைக் கோட்டை கொத்தளங்களுடன் ஒரு வகையாகப் பந்தோபஸ்து செய்தார்கள். புயற்காற்று சிறிது தணிந்தது. படையும் மேற்கொண்டு கார்ஸைரா பக்கம் நகர்ந்தது. டெமாஸ்த்தனீஸ் மட்டும் இங்கு ஐந்து கப்பல்களுடன் தங்கி யிருந்தான்.
இந்தச் செய்தி ஸ்ப்பார்ட்டாவுக்குத் தெரிந்தது. உடனே ஒரு கப்பற்படையை அனுப்பியது. இந்தப் படையானது, மேற்படி பைலோஸ் துறைமுகத்தைச் சேர்ந்தாற் போலிருக்கிற ஸ்ப்பாக் ட்டீரியா என்னும் சிறிய தீவில் சென்று முகாம் செய்துகொண்டு, அங்கிருந்து மெடாஸ்த்தனீஸ் படையைத் தாக்கியது. இரண்டாவது நாள், வடக்கே ஜாக்கிந்த்தஸ் தீவில் தங்கியிருந்த ஐம்பது கப்பல்கள் கொண்ட ஆத்தீனியக் கடற்படையொன்று தோன்றி ஸ்ப்பார்ட்டக் கடற்படையைத் தாக்கித் தோல்வியுறச் செய்து விட்டு ஸ்ப்பாக்ட்டீரியா தீவை முற்றுகையிட்டது. இந்தத் தீவில் ஸ்ப்பார்ட்டப் படை வீரர்கள் அப்படியே அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள். இவர்களை விடுதலை செய்வது எப்படி? வேறு வழி யின்றி, சமாதானம் பேச விரும்புவதாக ஆத்தென்ஸுக்குத் தூது விடுத்தது ஸ்ப்பார்ட்டா. ஆத்தென்ஸ் ஜனசபையில் அப்பொழுது கிளியோனுக்கு நல்ல செல்வாக்கு இருந்ததல்லவா, இவன் ஸ்ப்பார்ட் டாவுடன் சமாதானமாகப் போக விரும்ப வில்லை. இதனால் சில கடுமையான நிபந்தனைகள் விதித்தான். இவைகளை ஏற்க மறுத்து விட்டது ஸ்ப்பார்ட்டா.
ஸ்ப்பாக்ட்டீரியா முற்றுகை தொடர்ந்து நடைபெற்றது. எவ்வளவு காலம்? முற்றுகை நீடிக்குமானால் ஆத்தீனியக் கடற்படைக்கு ஆபத்து என்பதை உணர்ந்தனர் ஜன சபையினர். கிளியோனையே திருப்பிக் கொண்டனர். முன்னமேயே சமாதானத் திற்கு இணங்கியிருக்க வேண்டுமென்று அவன் மீது குறை கூறினர். நாவன்மை படைத்த கிளியோன், பத்து படைத் தலைவர்கள் உண்டல்லவா, அவர்கள்மீது குறை கூறினான். ‘அவர்கள் மனிதர் களாயிருக்கும் பட்சத்தில் ஸ்ப்பாக்ட்டீரியாவுக்குச் சென்று அங்குள்ள ஸ்ப்பார்ட்டர்களைச் சிறைப்படுத்தி வருவார்கள்; நானாயிருந்தால் அப்படித்தான் செய்வேன், என்று ஏளனமாகப் பேசினான், படைத்தலைவர்களில் பதின்மரில் ஒருவன் நிக்கியாஸ் என்பவன். இவன், ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸமாகப் போகவேண்டு மென்ற கட்சியைச் சேர்ந்தவன்; அதன் தலைவன். இவனை மனத்தில் வைத்துக் கொண்டுதான் கிளியோன் மேற்கண்ட விதமாகப் பேசினான். தன்னைத்தான் அப்படிச் சுட்டிப் பேசுகிறான் என்பதை அறிந்துகொண்ட நிக்கியாஸ், உடனே எழுந்து, ‘அப்படியே செய்யலாம்; தேவையான படைகளுடன் ஸ்ப்பாக்ட்டீரி யாவுக்குச் சென்று முற்றுகையை வெற்றிகரமாக முடித்து, அங்குள்ள ஸ்ப்பார்ட்டர்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரலாம்; படைத் தலைவர்கள் சார்பாக இதைக் கூறுகிறேன்’ என்றான். ஜனசபை யினரும் இவனை ஆதரித்தனர். கிளியோனும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ‘இன்னும் இருபது நாட் களுக்குள் ஸ்ப்பாக்ட் டீரியாவிலுள்ள ஸ்ப்பார்ட்டர்களை உயிரோடு சிறைப்படுத்திக் கொண்டு வருகிறேன்; அல்லது அவர்களை அங்கேயே கொன்று வருகிறேன்’ என்று சபதஞ் செய்துவிட்டுப் புறப்பட்டான். டெமாஸ்த்தனீஸின் யுத்த தந்திரத்தைத் துணையாகப் பெற்று, இவன் மேற்கூறிய வண்ணமே செய்து முடித்தான். ஸ்ப்பாக்ட் டீரியாவில் எதிர்த்து நின்ற ஸ்ப்பார்ட்டப் படையினரில் இறந்தவர்கள் போக, உயிரோடிருந்த 292 பேரை அப்படியே சிறைப்படுத்தி ஆத்தென்ஸுக்குக் கொண்டு வந்தான். இதற்குப் பிறகு, அட்டிக்காவின் மீது வருஷவாரி நடபெற்று வந்த பெலொப் பொனேசியப் படையெடுப்பு நின்றுவிட்டது. ஏனென்றால், ஆத்தென்ஸிலுள்ள ஸ்ப்பார்ட்டக் கைதிகளின் உயிருக்கு மோசம் வருமல்லவா?
ஸ்ப்பாக்ட்டீரியா வெற்றி, ஆத்தென்ஸுக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. பைலோஸ் துறைமுகத்தை நன்கு அரண் செய்து அங்கு மெஸ்ஸீனியர்களைக் கொண்ட ஒரு காவற்படையை நிரந்தரமாக நிறுவியது. இதைத் தொடர்ந்து பைலோஸுக்குச் சிறிது தெற்கேயுள்ள மெத்தோன் என்ற துறைமுகத்தையும், அடுத்த வருஷம், 424-ஆம் வருஷம் பெலொப்பொனேசிய தீபகற்பத் திற்குத் தெற்கேயுள்ள ஸைத்தீரா என்ற தீவையும் கைப்பற்றி, இந்த இடங்களிலும் நிரந்தரமான காவற்படைகளை நிறுவியது. இங்ஙனம் காவற்படைகளை ஏற்படுத்திக் கொண்டு வந்ததோடல்லாமல், பெலொப்பொனேசியாவின் கடலோரப் பிரதேசங்களைத் திடீர் திடீரென்று தாக்கி நாசத்தையும் உண்டு பண்ணி வந்தது. இவைகளைத் தடுக்க ஸ்ப்பார்ட்டாவினால் முடியவில்லை. இதனால் சிறிது அதைரியமும் அடைந்தது. உள்நாட்டிலேயே கலகம் கிளம்பி விடுமோ என்ற கவலையும் கொண்டது.
இஃது இப்படி இருக்கட்டும். இந்தக் காலத்தில் ஆத்தென்ஸின் அரசியல் நிலைமை எப்படி இருந்ததென்பதைச் சிறிது கவனிப்போம்.
5. ஆத்தென்ஸின் அரசியல் நிலைமை
பெரிக்ளீஸ் போன பிறகு ஆத்தென்ஸ், கட்டுவிட்ட கயிறு மாதிரியாகிவிட்டது. அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நிதானமாகவும் நேர்மையுடனும் அரசியல் யந்திரத்தை, செலுத்தக் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. நல் பரம்பரை, நுண்ணிய அறிவு, பரந்த அனுபவம் இவைகளில் எதுவும் இல்லாமலேயே யாரும், எத் தரத்தினரும் அரசியலில் ஆதிக்கம் பெற்று விடலாமென்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஜன ஆட்சியல்லவா? எல்லா வகையிலும் சாமானி யமாயுள்ள பலர் அரசியல் ஏணியில் சுலபமாக ஏறி அதிகார சிகரத்தையடைந்தனர். சிறப்பாகத் தொழில் துறையில் ஈடுபட்டிருந்த பலர் ஜன சபையில் செல்வாக்குப் பெற்றனர். உதாரணமாக மேலே சொன்ன கிளியோன் ஒரு தோல் வியாபாரி. பின்னாடி நாம் சந்திக்கப் போகிற ஹைப்பர்போலஸ் என்பவன் விளக்குகள் செய்து கொடுத்து வந்தவன்.
இன்னும் பொது ஜனங்களே ஏதோ ஒரு வகையில் சந்தோஷப் படுத்திக் கொண்டு அவர்களுடைய கவனத்தின் முன்னணியிலே இருந்து வருகிறவர் களுக்கும் ஜனசபையில் செல்வாக்கு இருந்தது. இந்த வகையைச் சேர்ந்தவன் தான் முந்திச் சொல்லப் பெற்ற நிக்கியாஸ் என்பவன். இவன் ஓர் அடிமை வியாபாரி. நிறையப் பணம் சம்பாதித்தான். பணக்காரக்கட்சிக்கு ஒரு முக்கிய தூண் போலி ருந்தான். இவன், தான் சம்பாதித்த பணத்தை, அதிகார வர்க்கத்தின் தயவைப் பெறுவதற்காகத் தாராளமாகச் செலவழித்தான். அதிகார வர்க்கத்தின் தயவு மட்டுமென்ன, தெய்வங்களின் தயவைக் கூட சம்பாதித்துக் கொண்டுவிட்டான். பாமர ஜனங்கள் இவனிடம் அதிக மரியதை காட்டி வந்தனர் என்றால் அதில் என்ன ஆச்சரிய மிருக்கிறது? இவன் யுத்த தந்திரங்களை நன்கு அறிந்தவன் என்று பெயரெடுத்தவன். ஆனால் இவனுடைய யுத்த அறிவெல்லாம் ஏட்டளவில்தான். இதனாலேயே யுத்த தந்திரங்களை ஒருவாறு அறிந்த டெமாஸ்த்தனீஸைத் துணைவனாக ஆக்கிக் கொண்டு அவனை ஊக்கியும் ஆதரித்தும் வந்தான். உத்தியோகப் பொறுப்பு எதுவும் கொடாமலேயே அவனை, சிஸிலி தீவுப் பக்கம் சென்ற கடற்படையுடன் அனுப்பியது இவனே. இவன், இந்த நீக்கியாஸ் - ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸமாகப் போக வேண்டுமென்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்திக்கொண்டு வந்தான்.
இவனுக்கும் கிளியோனுக்கும் எப்பொழுதும் போட்டி. ஏனென்றால் கிளியோன் ஜனக்கட்சித் தலைவன்; பணக்காரக் கட்சியைச் சந்தப்பம் வாய்த்தபோதெல்லாம் தாக்கி வந்தான். ஆயினும் இவன் ஓர் ஏகாதிபத்தியவாதி; ஆத்தீனிய ஏகாதிபத்தியத் திற்குட்பட்டிருக்கும் ராஜ்யங்களை அடக்கியாள வேண்டுமென்ற கொள்கையுடையவன். இதனால்தான், மிட்டிலீனியர்களுக்கு ஒரு நல்ல பாடங்கற்பிக்க வேண்டுமென்று ஜன சபையில் வற்புறுத் தினான். தவிர இவன், பெரிக்ளீஸுக்குப் பின்னர், தானே இந்த ஏகாதிபத்தியத்திற்கு அதிநாயகனாயிருந்து ஆள வேண்டுமென்ற ஆசையும் கொண்டவன். இந்த ஆசை காரணமாகவே, ஸ்ப்பார்ட் டாவுடன் இணங்கிப் போக இவன் விரும்பவில்லை; யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற கட்சியை வலியுறுத்திக் கொண்டு வந்தான்.
ஆனால் பெரிக்ளீஸுக்குப் பிற்காலத்தில் வந்த இந்த அரசியல் வாதிகளை ஒருவிதத்தில் பாராட்டவே வேண்டும். ஏனென்றால், இவர்கள் சுயமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள். இவர்களிற் பெரும்பாலோரைப் பதவி மோகங் கொண்டவர் களென்றோ, சுயநலத்திற்காகத் தேசத்தைக் காட்டிக் கொடுத்தவர் களென்றோ, கட்சிப் பற்றுக் காரணமாக நடுநிலைமையிலிருந்து விலகி விட்டவர்க ளென்றோ சொல்ல முடியாது. “பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயலா”ற்றும் திறனற் றவர்களென்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இப்படித் திறனற்றவர்களா யிருந்ததினால் தானே ஆத்தீனிய ஏகாதிபத்தியம், பெரிக்ளீஸ் இறந்துபோன ஒரு முக்கால் நூற்றாண்டுக்குள் கரைந்து போய்விட்டது? அந்தப் பழியை இவர்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
6. தரைப்பக்க ஆதிக்கத்திற்கு மீண்டும் ஆத்தென்ஸின் முயற்சி
இனி பெலொப்பொனேசிய யுத்தத்திற்கு திரும்புவோம். யுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறதென்றால் அதற்காகப் பணச் செலவும் அதிகப்பட்டுக் கொண்டுவருமல்லவா? யுத்தத்தின் ஆறாவது வருஷத்திலிலேயே இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது ஆத்தென்ஸுக்கு. மேற்படி வருஷம் - 426-ஆம் வருஷம் சொற்ப வட்டி போட்டுத் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லி, கோயிற் பணங்களையெல்லாம் எடுத்து உபயோகித்துக் கொள்ள ஆரம்பித்தது. ஆனால் இது போதவில்லை. அடுத்த வருஷம் - 425-ஆம் வருஷம் - தனது ஆதிக்கத்திற்குட்பட்ட ராஜ்யங்களிடமிருந்து அவை இதுகாறும் செலுத்திவந்த கப்பத் தொகையை ஏறக்குறைய மும்மடங்காக அதிகப்படுத்தி வசூலிக்கத் தொடங்கியது. (இங்ஙனம் அதிகப்படுத்தி வசூலிக்கப் பெற்ற தொகை, 1,400 டாலெண்ட்டுகள் என்று ஒரு கணக்கு கூறுகிறது.) இப்படி ஒரு பக்கம் கப்பத் தொகையை அதிகப்படுத்திவிட்டு அதே வருஷம் மற்றொரு பக்கம், ஆத்தென்ஸில் நீதிபதிகளாக அலுவல் பார்ப்பவர்களுக்கு இரண்டு ஓபோல்கள் விகிதம் படிச்செலவாகக் கொடுக்கப்பெற வேண்டுமென்று பெரிக்ளீஸ் நிர்ணயித்திருந் தானல்லவா, இதனை மூன்று ஓபோல்களாக அதிகப்படுத்தி விட்டது. கப்பங்கொடுத்து வந்த ராஜ்யங்கள் இதைச் சகித்துக் கொண்டிருக்குமா? அவைகளின் அதிருப்தி மேலும் வளர்ந்தது. இவைகளுக் கெல்லாம் காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நீடித்து நடத்த வேண்டுமென்பதில் முனைந்து நின்ற மேற்படி கிளியோன் முதலிய அரசியல்வாதிகள்தான்.
யுத்தத்தின் எட்டாவது வருஷம் - 424ஆம் வருஷம் - ஆத்தென்ஸ், ஸைத்தீரா தீவைக் கைப்பற்றிக் கொண்டு பெலொப் பொனேசியக் கடலோரப் பிரதேசங்களைச் சூறையாடி வந்த தல்லவா, இதன் தொடர்ச்சியாகத் தைரியேட்டிஸ் என்ற ஊரைத் தாக்கி நாசப்படுத்தியது. ஸ்ப்பார்ட்டாவினால் அங்குக் குடியேற்றப் பெற்றிருந்த எஜீனியர்களனைவரையும் கொன்று, எஜீனியப் பூண்டே இல்லாமற் செய்துவிட்ட ஒரு மகிழ்ச்சியையடைந்தது. பிறர் அழிவின்மீது ஆதிக்கம் பெறப் பார்க்கிறவர்கள் காலக் கிரமத்தில் அழிந்துபடு கிறார்கள் என்ற காலங் கடந்த உண்மையை ஆத்தென்ஸ் அப்பொழுது அறிந்து கொள்ளவில்லை.
இங்ஙனம் பெலொப்பொனேசிய தீபகற்பத்தில் சில வெற்றிகளைக் கண்டு விட்டதனால் ஆத்தென்ஸ், தனக்குக் கிட்டாது என்று முந்திக் கைவிட்டுவிட்ட தரைப்பக்க ஆதிக்கத்தை மீண்டும் ஏன் பெறலாகாது என்ற கேள்வியைத் தானே கேட்டுக் கொண்டு, அந்த முயற்சியில் துணிந்து இறங்கியும் விட்டது. எப்படியும் இந்த முயற்சிக்கு ஸ்ப்பார்ட்டா தடையாயிருக்க முடியாது; ஏனென்றால், ஸ்ப்பாக்ட்டீரியாவிலிருந்து கொண்டு வரப்பெற்ற ஸ்ப்பார்ட்டக் கைதிகள் தான் தன் வசமிருக்கிறார்களேயென்று கருதியது. ஆனால் இது கருதியது போல் நடைபெறவில்லை.
மேற்படி முயற்சியின் முதற்படியாக, மெகாராவைக் கைப் பற்றிக் கொள்ளத் தீர்மானித்தது ஆத்தென்ஸ். ஏற்கனவே இதன்மீது பிரதி வருஷமும் கண்ணோட்டம் செலுத்தி வந்திருப்பதால் இதனைக் கைப்பற்றிக் கொள்வது சுபலமாயிருக்குமென்று எண்ணியது. இதற்குத் தகுந்தாற்போல் மெகாராவிலும் கட்சிச் சண்டைகள் வலுத்திருந்தன. எனவே தனக்குச் சாதகமாயுள்ள கட்சியினருடன் ரகசியமாக ஓர் ஏற்பாடு செய்துகொண்டு 424-ஆம் வருஷம் மெகாராவின் மீது படையெடுத்தது. இந்தப் படை யெடுப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள், டெமாஸ்த்தனீஸும் ஹிப்போக் கிராட்டீஸ் என்பவனும் அனுபவமுள்ள சேனாதிபதிகள்தான்; ஆனால் தம் வலியையும் மாற்றார் வலியையும் அறியாதவர்கள். இவர்கள் மெகராவின் கிழக்குப் பக்கத்திலுள்ள நிஸீயா என்னும் துறைமுகப் பட்டினத்தை மட்டும் கைப்பற்றிக் கொண்டார்கள். மேற்கொண்டு வெற்றி காண இவர்களால் முடியவில்லை. அதற்குள், பிராஸிடாஸ் என்பவனுடைய தலைமையில் ஒரு ஸ்ப்பார்ட்டப் படை வந்து, இவர்களுடைய முற்போக்கைத் தகைந்துவிட்டது. நிஸீயாவைச் சுவாதீனப் படுத்திக் கொண்டதோடு ஆத்தென்ஸ் திருப்தியடைய வேண்டியதாயிற்று.
பிராஸிடாஸைப் பற்றி இங்கே ஒரு வார்த்தை. இவன் ஸ்ப்பார்ட்டர்களிலே தப்பிப் பிறந்தவன். ஸ்ப்பார்ட்டர்களிடம் பொதுவாகக் காணப் பெறாத சுறுசுறுப்பு, புதுமையிலே ஆவல், நாவன்மை முதலிய யாவும் இவனிடம் நிரம்பியிருந்தன. அரசியல் காரணமாக இவன் யாரிடமும் துவேஷங் கொண்டது கிடையாது. அரசியல் விவகாரங்களில் நேர்மையுடனும் நிதானமாகவும் நடந்து கொண்டான். சொன்ன சொல் தவறமாட்டான். இனிய சுபாவத் தினன். கிரீஸ் முழுவதிலும் இவனுக்கு அபார செல்வாக்கு இருந்தது.
மெகாராவில் நிஸீயாவைக் கைப்பற்றிக் கொண்டதின் மூலம் ஓரளவு வெற்றி கண்டுவிட்ட ஆத்தென்ஸ், பியோஷ்யாவின் மீதுதன் பார்வையைத் திருப்பியது. பியோஷ்யா, ஆத்தென்ஸுக்கு எப் பொழுதும் விரோதியல்லவா? இங்கு, பியோஷ்யாவில் பணக்காரக் கட்சியினருடைய அரசியல் ஆதிக்கம் நிலவி வந்தது. ஜனக் கட்சியினர் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். பியோஷ் யாவின் மீது படையெடுத்தால், அங்குள்ள ஜனக்கட்சியினர், தனக்குச்சாதக மாயிருந்து வெற்றி வாங்கிக் கொடுப்பர் என்று ஆத்தென்ஸ் நினைத்து, அதற்கேற்றபடி படையெடுப்புத் திட்டம் வகுத்தது. டெமாஸ்த்தனீஸ் தலைமையில் ஒரு படை, பியோஷ்யா வின் மேற்குப் பக்கமாகச் சென்று தாக்குவது; ஹிப்போக் கிராட்டீஸ் தலைமையில் மற்றொரு படை கிழக்குப் பக்கமாகச் சென்று தாக்குவது; பியோஷ்யாவின் வட மேற்கெல்லைப் புறத்தில் இருக்கும் கெரோனீயா என்ற ஊரை ஜனக்கட்சியினர் சுவாதீனப் படுத்திக் கொள்வது; இப்படி மூன்று பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் தாக்க வேண்டுமென்பதே திட்டம். ஆனால் இந்தத் திட்டப்படி காரியங்கள் நடைபெறவில்லை. ஏனென்றால் இதன் சகல விவரங்களும் பியோஷ்யர்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. அவர்கள் ஆத்தீனியப் படையை வரவேற்கத் தயாரா யிருந்தார்கள். டெமாஸ்த்தனீஸ், தன் படையுடன், குறிப்பிட்ட இடத்தில், ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முந்தியே வந்து இறங்கிய போது அவனை பியோஷ்யப் படையொன்று எதிர்த்து நின்றது. எனவே அவன் பின்வாங்கிக் கொண்டுவிட்டான்.
ஹிப்போக்கிராட்டீஸ், ஒன்பதினாயிரம் பேர் கொண்ட ஒரு காலாட்படையுடன் டேலியம் என்ற இடத்தில் வந்திறங்கினான். எதிர்பார்த்தபடி இவனுக்கு எவ்வித சகாயமும் கிடைக்கவில்லை. ஜனக்கட்சியினர், புரட்சி செய்து கெரோனீயாவை ஆக்கிரமித்துக் கொள்வார்களென்பது நடைபெறவில்லை. கடைசியில், ஹிப்போக் கிராட்டீஸ், டேலியத்திலுள்ள அப்போலோ தெய்வத்தின் கோயிலைப் பந்தோபஸ்து செய்துவிட்டு, தன் படையுடன் ஆத்தென்ஸை நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தான். வருகிற வழியில், டேலியத்திற் கருகிலேயே, பியோஷ்யச் சேனையொன்று வந்து இவனைத் தாக்கியது. இந்தச் சண்டையில், ஆத்தீனியப்படை படு தோல்வி யடைந்தது. ஹிப்போக்கிராட்டீஸ் மடிந்து போனான். ஆத்தென்ஸுக்கு இது பெரிய அதிர்ச்சியாயிருந்தது. அதன் படை வலிமைக்குச் சிறிது ஊனம் உண்டாயிற்று.
இந்த டேலியம் போரில் கலந்து கொண்ட ஆத்தீனியப்படை வீரர்களுள் ஒருவன் ஸாக்ரட்டீஸ். தோல்வியுற்று, ஆத்தென்ஸுக்குப் பின்வாங்கிய காலத்தில் இவன் காட்டிய மனோ உறுதி, நிதானம் முதலியவற்றை வியந்து பாராட்டாதவர்கள் யார்?
டேலியம் யுத்தத்தினால், ஆத்தென்ஸ் சோர்வுகொண்டுவிட வில்லை. தரைப்பக்கமாக ஏகாதிபத்திய விஸ்தரிப்பு முயற்சியில் மீண்டும் துணிந்து இறங்கியது; இறங்க வேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டது. ஆனால் முந்திய மாதிரி தோல்வியே கிடைத்தது. அந்தத் தோல்வியிலிருந்து அது மீளவே இல்லை.
மாஸிடோனிய மன்னனாகிய பெர்டிக்காஸ் என்பவனுக்கும் ஆத்தென்ஸுக்கும், பொட்டிடீயா யுத்தத்திலிருந்து நேர்மையில்லை யென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். ஸ்ப்பாக்ட்டீரியாவில், ஆத்தென்ஸுக்கு வெற்றியேற்பட்டது, இவனுக்குப் பெரிய கவலை யாயிருந்தது. ஏனென்றால், தனக்கு அடுத்தாற் போலிருக்கும் திரேஸ் மாகாணத்தில் ஏற்கனவே ஆத்தென்ஸுக்கு இருந்து வருகிற செல்வாக்கு இன்னும் அதிகப்பட்டு விடுமோ, அதனால் தனக்குப் பாதகம் ஏற்படுமோ என்று அஞ்சினான். இதற்காக ஸ்ப்பார்ட் டாவின் உதவியை நாடினான். இவனோடு கால்ஸிடீஸியின் ஒரு பகுதியியும் சேர்ந்து கொண்டது. ஆத்தென்ஸை எந்த விதத்தி லேனும் நெருக்க வேண்டுமென்ற நோக்கத்துடனிருக்கும் ஸ்ப்பார்ட் டாவுக்கு இதைக் காட்டிலும் வேறென்ன நல்ல சந்தப்பம் வேண்டும்? பிராஸிடாஸின் தலைமையில் ஒரு பெலொப்பொனேசியப் படையைத் திரேஸ் மாகாணத்திற்கு அனுப்பியது. இப்படித் திரேஸ் மாகாணத்திற்குச் செல்கிற வழியில்தான், பிராஸிடஸ், மெகாராவில் தங்கி, மெகாரா நகரம் ஆத்தென்ஸின் கைக்கு விழாதபடி தடுத்தான். ஆத்தென்ஸ், நிஸீயா துறைமுகத்துடன் திருப்தியடைய வேண்டிய தாயிற்று.
பிராஸிடாஸ், திரேஸ் மாகாணத்தையடைந்து ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குட்பட்டிருந்த சிறு சிறு ராஜ்யங்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டு, கடைசியில், ஆத்தென்ஸினால் முக்கிய மாகக் கருதப்பட்டு வந்த ஆம்ப்பிபோலிஸ் நகரத்தையடைந்தான். இந்த நகரமோ போதிய பாதுகாப்பில்லாமலிருந்தது. இதனால் சுலபமாக பிராஸிடாஸ் வசப்பட்டுவிட்டது. திரேஸ் பகுதியில், ஆத்தென்ஸின் நலன்களைப் பாதுகாப்பதற்கென்று படைத் தலைவர் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில், கடற் படைப் பகுதிக்குப் பொறுப்பாயிருந்தவன் துஸிடிடீஸ்; பெலொப் பொனேசிய யுத்தத்தைப் பற்றி விரிவான சரித்திரம் எழுதிய சமயத்தில் (424 -ஆம் வருஷம்) தாஸோஸ் தீவுக்குச் சமீபத்தில் இவன், தன் கடற்படையுடன் தங்கியிருந்தான். ஆம்ப்போலிஸின் உதவிக்கு வருமுன்னரேயே அது பிராஸிடாஸ் வசப்பட்டு விட்டது. இனி என்ன செய்வது? மேற்கொண்டு, இயோன் என்ற நகரமும் அவன் வசப்பட்டு விடாதபடி பார்த்துக் கொண்டான். ஆனாலும் என்ன? இவன் - துஸிடிடீஸ் - ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்ததும், தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டான் என்று இவன் மீது குற்றஞ் சாட்டி இவனைத் தேசப் பிரஷ்டம் செய்துவிட்டது ஆத்தீனிய ஜனசபை. இதற்குத் தூண்டுகோலாயிருந்தவன் கிளியோன் என்பர். யார் தூண்டுதலா யிருந்தாலும், இவனுடைய தேசப்பிரஷ்டம், சரித்திர உலகத்திற்குப் பெரிய நன்மையாக முடிந்தது. பிரஷ்டம் செய்யப்பட்டிருந்த இந்தக் காலத்தில்தான் இவன், பெலொப் பொனேசிய யுத்தத்தைப் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பங்களைப் பெற்றான்.
ஆம்ப்பிபோலிஸ் வீழ்ச்சியினால் ஆத்தென்ஸ், நிலைகலங்கிப் போய்விட்டது. திரேஸ் பகுதியிலுள்ள மற்ற ராஜ்யங்களும் எங்குத் தன் கைவிட்டுப் போய்விடுமோவென்று அச்சமுங் கொண்டது. ஏனென்றால் பிராஸிடாஸ், பலாத்கார முறைகளைக் கையாளாமல் நயமான முறைகளையே கையாண்டு ஒவ்வொரு ராஜ்யமாகச் சுவாதீனப்படுத்திக் கொண்டு வந்தான். இது பெரிய ஆபத்தல்லவோ ஏகாதிபத்திய ஆத்தென்ஸுக்கு?
7. சமாதான ஒப்பந்தம்
யுத்தத்தின் ஒன்பதாவது வருஷம். பிராஸிடாஸின் வெற்றிப் போக்கை ஆத்தென்ஸ் தடை செய்யவில்லை; தடை செய்ய முடிய வில்லை. எனவே ஸ்ப்பார்ட்டாவுடன் சமாதானஞ் செய்து கொள்ள வேண்டுமென்பதில் நாட்டங் கொண்டது. ஸ்ப்பார்ட்டாவும் சமாதானத்தை விரும்பியது. ஆனால் ஆத்தென்ஸ், சமாதானத்திற்கு விழைந்தது, மேலும் தனக்கு நஷ்டமேற்படாமலிருக்க வேண்டு மென்பதற்காக, ஸ்ப்பார்ட்டாவோ, பிராஸிடாஸின் செல்வாக்கை ஓங்கவிடக் கூடாதென்பதற்காகவும், ஸ்ப்பாக்ட்டீரியாவில் கைதி யான ஸ்ப்பார்ட்டர்களை விடுதலை செய்துகொண்டுவிட வேண்டு மென்பதற்காகவும் சமாதானத்தை விரும்பியது. நோக்கம் எது வாயிருந்தாலும், ஆத்தென்ஸும் ஸ்ப்பார்ட்டாவும் சண்டையை நிறுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்தன. எனவே 423-ஆம் வருஷம் மார்ச் மாதம், ஒரு வருஷத் திற்குத் தற்காலிகமாக ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. சாசுவதமான ஒரு சமாதானத்தைச் செய்து கொள் வதற்கு அனுகூலமாயிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்தத் தற்காலிக ஒப்பந்தம். இந்த ஒப்பந்தப்படி கிரீஸின் ஏறக்குறைய எல்லாப் பாகங்களிலும் சண்டை நின்றது. ஆனால் திரேஸ் பகுதியில் மட்டும் நிற்கவில்லை. தொடர்ந்து நடைபெற்றது. இதற்குக் காரணம் என்ன?
மேற்படி யுத்த நிறுத்த ஒப்பந்தம் நிறைவேறிய இரண்டு நாள் கழித்து கால்ஸிடீஸி தீபகற்பத்திலுள்ள ஸ்க்கியோன் என்ற நகரம், ஆத்தென்ஸின் ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டு பிராஸிடாஸ் பக்கம் போய் சேர்ந்து கொண்டது. ஆத்தென்ஸுக்கு இது மிகவும் ஆத்திரமாயிருந்தது. ஸ்க்கியோனைத் தொடர்ந்து கொண்டே என்ற நகரமும் பிராஸிடாஸ் வசப்பட்டது. இனிச் சும்மாயிருக்க முடியுமா ஆத்தென்ஸ்? நிக்கியாஸ், நிக்கோஸ்ட்ரரட்டஸ் ஆகிய இரு வருடைய தலைமையில் ஒரு கடற்படை சென்று முதலில் மெண்டேயைக் கைப்பற்றிக் கொண்டு பிறகு ஸ்க்கியோனை முற்றுகையிட்டது. அப்பொழுது பிராஸிடாஸ் அங்கு இல்லை; மாஸிடோனியா பக்கம் சென்றிருந்தான்.
ஸக்கியோன் முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு வருஷ கால வரையறை முடிந்து விட்டது. அதாவத யுத்தம் தொடங்கி ஒன்பது வருஷம் முடிந்து பத்தாவது வருஷம் ஆரம்பித்துவிட்டது. ஆத்தென்ஸின் யுத்தத் துடிப்பு அதிகமாகியது. கிளியோன், ஒரு பெரும் படையுடன் திரேஸை நோக்கிச் சென்றான். இந்தப் படையில் ஒருவன் ஸாக்ரட்டீஸ். அங்குப் பிராஸிடாஸும் யுத்தத்திற்குத் தயாரா யிருந்தான். இரு தரப்புப் படைகளும் 422-ஆம் வருஷம் ஆம்ப்பி போலிஸுக்கு அருகில் சந்தித்தன. மும்முரமான போர் நடை பெற்றது. கடைசியில் ஆத்தீனியப் படைக்குப் படுதோல்வி. பலத்த சேதம். கிளியோன் மடிந்து போனான். பிராஸிடாஸ் படைக்கு உயிர்ச்சேதம் அவ்வளவாயில்லை. ஆனால் பிராஸிடாஸே யுத்த களத்தில் காயமுண்டு இறந்து போனான்.
இந்தத் தோல்வி ஆத்தென்ஸை மனமுடையச் செய்துவிட்டது. அதன் யுத்தத் துடிப்பும் அடங்கிப் போனது. ஸ்ப்பார்ட்டாவும் சமாதானம் செய்து கொள்ள விழைந்தது. எனவே சமரஸப் பேச்சுக்கள் தொடங்கின. இதன் விளைவாக, ஐம்பது வருஷ காலம் அமுலில் இருக்கக்கூடிய ஒரு சமாதான உடன்படிக்கை தயாரிக்கப் பட்டது. இப்படிச் சமாதானம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமா யிருந்தவன் நிக்கியாஸ். இதனால் இந்த உடன்படிக்கைக்கு நிக்கியாஸ் சமாதான உடன்படிக்கை என்று பெயர் வழங்கலாயிற்று. 421-ஆம் வருஷம் மார்ச் மாதம் ஆத்தென்ஸும் ஸ்ப்பார்ட்டாவும் இந்த உடன் படிக்கையை ஏற்றுக்கொண்டன. இதன் முக்கிய ஷரத்துக்கள் வருமாறு:
1. யுத்தத்தின் போது ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்ட பைலோஸ், ஸைத்தீரா, மெத்தோன், யூபியாவுக்கு அருகிலுள்ள அட்டாண்ட்டா தெஸ்ஸாலியி லுள்ள டேலியோன் முதலிய பிரதே சங்களை, ஆத்தென்ஸ் திருப்பி ஸ்ப்பார்ட்டாவுக்கே கொடுத்துவிட வேண்டும். ஆனால் அக்கர்னேனியாவி லுள்ள ஸோல்லியமும், அனக்ட்டோரியமும், மெகராவின் துறைமுக மாகிய நிஸீயாவும் ஆத்தென்ஸ் வசத்திலேயே இருக்கும்.
2. ஸ்ப்பார்ட்டாவின் சார்பாக திரேஸ் பகுதியில் பிராஸி டாஸினால் கைப்பற்றிக் கொள்ளப்பட்ட ஆம்ப்பிபோலிஸ் உள்பட எல்லாப் பிரதேசங்களும், திரும்ப ஆத்தென்ஸ் வசம் ஒப்பு விக்கப்பட வேண்டும். இந்தப் பிரதேசங்களி லிருந்து ஆத்தென்ஸ், முந்தி அரிஸ்டைடீஸ் நிர்ணயித்தபடி கப்பத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம்.
3. பியோஷ்யா, தன் எல்லைப் புறத்திலுள்ள பானக்ட்டம் என்ற ஊரை ஆத்தென்ஸ் வசம் ஒப்புவித்துவிட வேண்டும்.
4. முதலில் ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குட்பட்டிருந்தது. பிறகு அதற்கு விரோதமாகக் கிளம்பி, மறுபடியும் அதனால் கைப்பற்றிக் கொள்ளப்பட்ட நகரங்களை, ஆத்தென்ஸ், அதன் இஷ்டப்படிக்கு நடத்தலாம்.
5. இரு தரப்பினரும், தாங்கள் பிடித்து வைத்துக் கொண்டி ருக்கும் யுத்தக் கைதிகளை உடனே விட்டுவிடவேண்டும்.
இந்த உடன்படிக்கையினால், சிறிது காலத்திற்கு யுத்தம் நின்றது. அவ்வளவுதான். சமாதானம் உண்டாகவில்லை. ஏன் என்ற கேள்விக்குப் பிந்திய அத்தியாத்தில் விடை காண்போம். இதற் கிடையே, பெரிக்ளீஸ் காலத்தில் வாழ்ந்திருந்த சில பெரியோர்களை தரிசிக்காமல் பதினாறாவது அத்தியாயத்தி லிருந்து வந்து விட்டோ மல்லவா, அவர்களைத் தரிசிக்கச் செல்வோம்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
1. புதுமலர்ச்சி இயக்கம்
பழைய நம்பிக்கைகள், பழைய கோட்பாடுகள் இவை பலவும் பரிசோதனைக்குள்ளாயின பெரிக்ளீய யுகத்தில். இவற்றின் மீது ஜனங்களுக் கிருந்த பிடிப்பு தளர்ந்து வந்தது. எதையும் அறிவுக்கண் கொண்டு பார்க்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அமானுஷ்ய சக்திகளென்று சொல்லப்படுவன வெல்லாம் மனித சக்திகளுக்கு மீறியவையல்ல என்ற எண்ணம் பரவியது. சுருக்கமாகப் பழமைக்கும் புதுமைக்கும் பிணக்கு!
இந்தப் பிணக்கு, சமுதாயத்தின் மேற்பரப்புக்கு அதிகமாக வரவில்லை; உள்ளூரத்தான் சிந்தனையளவிலே குமுறிக் கொண்டி ருந்தது. இந்தப் பிணக்கினால் சாதாரண ஜனங்களுடைய அன்றாட வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. என்றும் போல் அவர்களுடைய வாழ்க்கை பழைய ரீதியிலேயே நடைபெற்று வந்தது. ஆனால் சில சமயங்களில் இந்தப் பிணக்கு, சமுதாயத்தின் மேற் பரப்பிலும் தோன்றாமலில்லை. அப்படித் தோன்றியபோது, அறிவுக் கண் கொண்டு பார்க்க வேண்டுமென்ற ஆவலையும், மனித சக்தி களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் தூண்டிவிட்ட அறிஞர்கள், ஒன்று தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டார் கள்; அல்லது மரண தண்டனைக்குள்ளானார்கள். இந்தப் பிணக்கிலே பலியானவன்தான் ஸாக்ரட்டீஸ்!
தவிர, பெரிக்ளீய ஆத்தென்ஸுக்குக் கடல் தொடர்பு அதிக மிருந்தபடியால், வெளிநாட்டார் பலர் ஆத்தென்ஸுக்கு வந்து போகவும், ஆத்தீனியர் பலர் வெளி நாடுகளுக்குச் சென்று வரவும் ஏது உண்டாயிற்று. இதனால் பொருள் பரிவர்த்தனை மட்டுமல்ல, எண்ணப் பரிவர்த்தனையும் நடைபெற்றது. இந்தப் பரிவர்த்த னையின் விளைவாகவும், மேற்சொன்ன பிணக்கிலே பலியான பெரியோர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாகவும், புதிய புதிய அறிவுத் துறைகளைக் காண வேண்டுமென்ற விருப்பம் வளர்ந்தது. ஆத்தீனியர் களிடையே, சிறப்பாக இளைஞர்களிடையே, இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய ஒரு சில அறிஞர்கள் தோன்றினார்கள். இவர்கள்தான் ஸோபிஸ்ட்டுகள். இவர்கள் பல கலை வல்லுநர்கள். வான சாஸ்திரமா, கணிதமா, பூகோளமா, சரித்திரமா, தத்துவ ஞானமா எல்லாம் இவர்களுக்குத் தெரியும். தவிர, ஜனசபைக் கூட்டங்களிலும் நீதிமன்றங்களிலும் அழகாகப் பேசக்கூடியவர்கள் அரசியலில் அதிக செல்வாக்கைப் பெற்று வந்தார்களல்லவா, இதனால் நாவலர்களாக வேண்டுமென்ற ஆசை இளைஞர் களிடையே எழுந்தது. இந்த ஆசையையும் நிறைவேற்றி வைத்தார்கள் இந்த ஸோபிஸ்ட்டுகள். அலங்காரமாகவும் சாதுரியமாகவும் பேசுதல் என்பது ஒரு கலையாகப் போற்றி வளர்க்கப்பட்டது இவர்களால்.
இந்த ஸோபிஸ்ட்டுகள் ஊர் ஊராகச் சென்று அறிவைப் புகட்டி வந்தார்கள். (நமது நாட்டிலும் இத்தகையவர்கள் இருக் கிறார்கள். இவர்கள், சரகர் என்றும் வித்தியா வர்த்தகர் என்றும் அழைக்கப்பட்டார்கள்) இவர்களை, ‘நடைப்பள்ளிக் கூடங்கள்’ என்று அழைப்பின் பொருந்தும். இவர்கள், தங்கள் உழைப்புக்கு ஒரு தொகையை ஊதியமாகப் பெற்றுவந்தார்கள். இதனால் இவர்களுக்குப் பிற்காலத்தில் - பிளேட்டோ காலத்திலிருந்து - ஒரு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. தவிர, இவர்களில் ஒரு சிலர், தங்களுடைய வாக்குவன்மையைச் சில சமயங்களில் துஷ்பிரயோகஞ் செய்தார்கள். தங்களுடைய பேச்சுச்சாமர்த்தி யத்தினால் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் திரித்துக் காட்டினார்கள். இவர்களுடைய இந்தச் சாமர்த்தியச் சாயல் இவர்களிடம் பயின்ற இளைஞர்கள் மீதும் படிந்தது. இளைஞர்களைக் கெடுத்து வருகிறார்கள் என்ற பழியும் இவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தக் கெட்ட பெயர் வாங்கியவர் ஒரு சிலர்தான். இவர்களில் பலர் பேரறிவு படைத்தவர் களாயிருந் திருக்கிறார்கள்; புதிய தத்துவங்களைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கிய உபகாரிகளா யிருந்திருக்கிறார்கள்.
பெரிக்ளீய யுகத்தை, சுருக்கமாக, புது மலர்ச்சி யுகம் என்று சொல்லலாம். ஒரு துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் இந்த மலர்ச்சி காணப் படுகிறது. ஆனால் குறிப்பாக, நாடகம், சிற்பம், தத்துவ ஞானம் ஆகிய இந்த மூன்று துறைகளும் இந்த மலர்ச்சி யினால் அதிக பிரகாசமடைந்தன. தவிர, இந்தப் புது மலர்ச்சி இயக்கம், ஆத்தென்ஸோடு வரம்பு கட்டிக் கொள்ளவில்லை; கிரேக்கர்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கெல்லாம் இது பரவி நின்றது. பார்க்கப் போனால், இந்த இயக்கத்திற்குக் காரணமா யிருந்தவர்களில் பெரும்பாலோர் ஆத்தென்ஸ் வாசிகளல்லா தவரே.2. சிருஷ்டி கர்த்தர்கள்
இந்தப் புது மலர்ச்சி சிருஷ்டி கர்த்தர்கள் அத்தனை பேரையும் நம்மால் பார்க்க இயலாது. முக்கியமான ஒரு சிலரை மட்டும் கண்டு வருவோம். நல்லாரைக் காண்பதுவும் நன்றே யன்றோ? அனக்ஸா கோரஸ் 500-428: இவன் சின்ன ஆசியாவிலுள்ள கிளாஸோமெனீ என்ற ஊரில் பிறந்தவன். இருபதாவது வயதில் ஆத்தென்ஸுக்கு வந்து வானசாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டான். இந்த ஆராய்ச்சியிலேயே இவன் ஆயுள் முழுவதும் செலவழிந்தது. இதற்காகத் தன் பிதிரார்ஜித சொத்துக்களையும் துறந்துவிட்டான். வானமே தன் உறையுள் என்று இவன் சொல்வது வழக்கம். இவன், சூரியன், சந்திரன், வாயு ஆகிய அனைத்தையும் இயற்கைக் கண்கொண்டு பார்த்தான்; இவை யாவும் தெய்வ சக்திகளல்ல, இயற்கையின் பரிணாமங்களேயென்று சாதித்தான். உதாரணமாக, கல்லும் கனலும் சேர்ந்ததே சூரியன் என்றான். தவிர, புல்லாகிப் பூடாகிக் கடைசியில் மனிதனாகிறான் என்ற பரிணாம வாதத்திற்கு வித்திட்டவன் இவன். மற்றும் இவன், இயற்கைப் பொருள்கள் யாவும் அணுத்திரள்களாலாயவை; இந்தப் பொருள்களை மகத்தான ஓர் அறிவுச் சக்தி இயக்குவிக்கின்றது என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தான். இதனால் இவனை ஓர் அணுவாதியென்பர். இவனைப் போன்ற வேறு சில அணுவாதிகளும் கிரீஸில் இருந்தனர். இயற்கையைப் பற்றி இவன் எழுதிய நூலை இவன் காலத்து அறிஞர்கள் பெரிதும் பாராட்டினர். இவனிடம் பக்தி விசுவாசம் வைத்துப் பயின்றவர் மூவர். ஒருவன் பெரிக்ளீஸ்; மற் றொருவன் யூரிப்பிடீஸ் என்ற பிரபல நாடகாசிரியன்; இன்னொருவன் ஸாக்ரட்டீஸ். இம்மூவரில் பெரிக்ளீஸின் தொடர்பு இவனுக்குக் கடைசியில் ஆபத்தாக முடிந்தது. எப்படியென்றால், பெரிக்ளீஸின் அரசியல் விரோதிகள், அவனுடைய செல்வாக்கைக் குலைக்க வேண்டி, அவனைக் குற்றஞ்சாட்டி விசாரணைக்குக் கொண்டு வந்ததோடல் லாமல், அவனுடைய மதிப்புக்கும் அபி மானத்திற்கு முரியவர்கள் மீதும் குற்றஞ்சாட்டி விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள். அனக்ஸாகோரஸ், தெய்வ நிந்தனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான். இவனுக்காகப் பெரிக்ளீஸ் மிகவும் பயந்து பேசினான். பயனில்லை. கடைசியில் மரண தண்டனை விதிக்கப்பட்டான். ஆனால் இவன் தண்டனையை அனுபவிக்கவில்லை. பெரிக்ளீஸினுடைய உதவியின் பேரில் தப்பி யோடிவிட்டான். ஹெல்லெஸ்ப் பாண்ட்டிலுள்ள லாம் ப்ஸாக்கஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கேயே மிகுதி நாட்களையும் கழித்தான். எழுபத்து மூன்றாவது வயதில் இறந்து போனான். இவன் கடைசி கால கோரிக்கையைக் கேட்டால், வாசகர்களே, நீங்கள் சிரிப்பீர்கள். தான் இறந்த நாளன்று, தனது ஞாபகர்த்தமாகப் பள்ளிக்கக்கூடத்துப் பிள்ளைகளுக்கு விடுமுறையளிக்க வேண்டு மென்பதே அந்தக் கோரிக்கை!
எம்ப்பிடோக்ளீஸ் 490-430: இவன், சிஸிலி, தீவிலுள்ள அக்ரிஜெண்ட்டம் என்ற ஊரில், குதிரைப்பந்தயத்திலே அதிகமாக ஈடுபட்டிருந்த ஒரு பணக்காரக்குடும்பத்திலே பிறந்தவன். ஆனால் தத்துவ ஆராய்ச்சியிலே ஈடுபட்டுவிட்டான். இவனையும் ஓர் அணுவாதி, பரிணாமவாதி யென்பர். உலகத்துப் பொருள்கள் யாவும் மண், தீ, நீர், காற்று என்ற நாற்பெரும் பூதங்களினாலானவை. இந்த நான்கும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகச் சேர்ந்திருக் கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு பொருள்கள் வளர்ச்சி பெறு கின்றன . நான்கும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போகிறபோது பொருள்கள் அழிந்து படுகின்றன என்பது இவன் கொள்கை. மகான் பித்தாகோரஸைப் போல் மறுபிறவியிலே பெரு நம்பிக்கை கொண்டவன் இவன். முற்பிறவிகளில், தான் “சிறுவனாகவும், சிறுமியாகவும், பூக்கின்ற செடியாகவும், பறக்கின்ற பறவையாகவும், நீத்துகின்ற மீனாகவும் இருந்ததாகக் கூறிவந்தான். இந்த மறுபிறவி நம்பிக்கை காரணமாக இவன் புலாலுண்ணுதலைக் கண்டித்து வந்தான். இப்பிறவியில் நமக்கு ஆகாரமாக உபயோகிக்கப்படுகின்ற ஜீவ ஜெந்துக்கள், முந்திய பிறவிகளில் மனிதர்களாகவும் இருந் திருக்கலாமல்லவா? இவைகளைக் கொன்று தின்பது, மனிதர் களைக் கொன்று தின்பது போலாகுமல்லவா? இதுவே இவன் வாதம். “மனிதர்களெல்லோரும் ஒரு காலத்தில் தேவர்களாயி ருந்தார்கள். பின்னர் அவர்களுடைய தீவினை காரணமாக மனித நிலைக்கு இழிந்து விட்டார்கள்” என்பது இவன் நம்பிக்கை. தானும் ஒரு காலத்தில் தேவ புருஷனாகவே இருந்ததாகச் சொல்லிக் கொண்டான். “ஐயோ, என்ன கேவலம்! பேரானந்த நிலையை விட்டு இந்த மானிடர்கள் மத்தியில் வந்து உலவும் படியான கதி எனக்கு ஏற்பட்டு விட்டதே” என்று இவன் அடிக்கடி விசனிப்பான். தான் ஒரு தெய்வப் பிறவி யென்பதை உலகினர் அறிய வேண்டு மென்ப தற்காக, பொன்னாலாய மிதியடியை உபயோகித்தான்; ஊதா நிற உடையை அணிந்தான்; தலையில் மலர் மாலை சூட்டிக் கொண்டான். தன்னிடம் தெய்வ சக்தி உண்டென்றும், மந்திரங் களினாலேயே அநேக வியாதிகளைக் குணப்படுத்த முடியுமென்றும் கூறி வந்தான். அப்படியே அநேகருடைய நோய்களைக் குணப் படுத்தியும் விட்டான் இவன், இறந்து போனதாகக் கைவிடப்பட்ட ஒரு ஸ்தீரியை உயிர்ப்பித்ததாகவும் சொல்வர். பாமர ஜனங்கள் இவனை ஒரு தெய்வமாகவே கொண்டாடினார்கள். தனது தெய்வப் பிறவியை ஊர்ஜிதம் செய்துகாட்டவேண்டி சிஸிலி தீவிலுள்ள எட்னா எரிமலை வாயிலுக்குள் குதித்து, தன் ஆயுளை முடித்துக் கொண்டதாக ஒரு வரலாறு கூறுகிறது. ஆனால் இதனை ஒரு கட்டுக்கதை யென்றே பிற்காலத்தவர் கருதுகின்றனர். இவன் ஒரு தெய்வப் பிறவி யென்பதைப் பற்றி இவனுடைய சம காலத்தவர் என்ன கருத்துக் கொண்டிருந்தனரோ நமக்குத் தெரியாது. ஆனால் இவனுடைய பல கலைப்புலமையை எல்லாரும் வியந்து பாராட்டினர். இவன் தத்துவ ஆராய்ச்சியாளன் மட்டுமல்ல; வைத்திய சாஸ்திரியுங்கூட. வியாதியஸ்தர்களுடைய மனோதத் துவத்தை அறிந்து, அதற்குத் தக்கபடி சிகிச்சை முறைகளைச் சொல்லும் ஆற்றல் படைத்தவன். மற்றும் இவன் ஒரு சிறந்த கவிஞன்; நாவலன்; இஞ்சினீர்; ராஜதந்திரி. தான் பிறந்த அக்ரிஜெண்ட்டம் என்னும் ஊரில், ஜன ஆட்சியை நிலைநாட்ட, புரட்சி நடத்தி, வெற்றி கொண்டு, அந்த வெற்றியின் பலனை, அதாவது அதிகார பதவியை மறுத்துவிட்டான்.
ஹிப்போக்கிராட்டீஸ் 460-378: எஜீயன் கடலின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள கோஸ் என்னும் தீவில் பிறந்த பிரபல வைத்திய நிபுணன். நோய்கள் வருவதும் போவதும் எல்லாம் தெய்வச் செயல் என்றிருந்த கொள்கையை அடியோடு அகற்றியவன். வைத்திய சாஸ்திரத்தை விஞ்ஞானக் கண்கொண்டு பார்த்தான். தவிர, மருந்து கொடுத்து வியாதிகளைக் போக்குவதில் அதிக நம்பிக்கை யில்லாதவன்; இயற்கை வைத்தியத்தில் அதிக நம்பிக்கை யுடையவன். இந்த இயற்கை முறையை அனுசரித்து ஆயிரக்கணக்கான வியாதி யஸ்தர்களைக் குணப்படுத்தினான். மாஸிடோனிய மன்னனாகிய பெர்டிக்காஸ், பாரசீக மன்னனாகிய முதலாவது அர்ட்டாக் ஜெர்க்ஸஸ், இப்படி அநேக அரசர்கள் இவனிடம் சிகிச்சை பெற்றனர் என்றால் இவனுடைய திறமைக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது என்பது நன்கு புலனாகும். ஆத்தென்ஸில் பிளேக் நோய் பரவத் தொடங்கிய காலை, இவனுடைய உதவி நாடப்பட்டது. இவன் காலத்திற்கு முந்தி, வைத்தியர்கள், வீடுதோறும் அல்லது ஊர்தோறும் சென்று வியாதியஸ்தர் களுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள். ஆனால் இவன் காலத்திலிருந்து, வைத்தியர்கள் ஓரிடத்திலேயே நிரந்தரமாகத் தங்கி, தங்களிடம் வரும் வியாதி யஸ்தர்களுக்குச் சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். மற்றும் இவன் காலத்தில், அநேக ஸ்திரீ வைத்தியர்களும் இருந்ததாகத் தெரிகிறது. இவர்களிற் சிலர், வைத்திய நூல்களும் எழுதி யிருக்கிறார்கள்.
வைத்தியத் தொழிலுக்கு ஒருமதிப்பு ஏற்படுத்திக் கொடுத்தான் ஹிப்போக்கிராட்டீஸ். இந்த மதிப்பை, வைத்தியர்கள் எந்நாளும் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்பது இவன் விருப்பம். இதற்காகச் சில புத்திமதிகளைக் கூறுகிறான். வைத்தியர்கள் எப்பொழுதும் சுத்தமான ஆடை தரித்திருக்க வேண்டும்; மன அமைதியுடைவர்களாயிருக்க வேண்டும். வியாதியஸ்தர்களுக்கு நம்பிக்கை யுண்டாகும்படி நடந்து கொள்ள வேண்டும். மற்றும் “வைத்தியனே! உன் விஷயத்திலேயே நீ ஜாக்கிரதையாயிரு. எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு மட்டும் பேசு. ஒரு நோயாளியின் அறைக்குச் சென்றதும், நீ உட்காருகிற விதம், உடைகளைச் சரிப்படுத்திக் கொள்கிறமாதிரி, சுருக்கமாகவும் ஆனால் கண்டிப் பாகவும் பேசுவது, அக்கம் பக்கத்தில் இரைச்சல் கூடாதென்று கூறுவது, என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்வது, ஆகிய இந்த மாதிரியான விஷயங்களில் சர்வ ஜாக்கிரதையுடனிரு. நோயாளிகள் கொடுக்கிற கட்டண விஷயத்தில் அதிக கண்டிப்புக் காட்டாதே. அவர்களுடைய பண நிலைமையை நன்றாக ஆலோசித்துப் பார். சில சமயங்களில் இலவசமாகச் சிகிச்சை செய்ய வேண்டி வந்தால் அதற்காகத் தயங்காதே. கிரேக்கரல்லாதாரா யிருந்தால் கூட அவர்களுக்கு உன்னால் முடிந்தவரை உதவி செய்.”
மற்றும், வைத்தியத் தொழிலில் பிரவேசிக்கின்ற பிரதியொரு நபரும் ஒரு பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இவன் கூறிப் போந்தான். இந்தப் பிரமாணத்தின் ஒரு பகுதியை வாசகர்கள் அவசியம் கவனிக்க வேண்டும். “யார் வீட்டில் நான் நுழைந்த போதிலும் அங்கு நோயாளிக்கு உதவி செய்யவே நுழைவேன். நோயாளிகள் ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும், சுதந்திரப் பிரஜையாயிருந்தாலும் அடிமையாயிருந்தாலும், அவர்களுடைய தேகத்தைத் தவறாக உபயோகிக்க மாட்டான். நோயாளிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பரம ரகசியமாக வைத்துக் கொள்வேன்; யாருக்கும் வெளியிட மாட்டேன்”
பிடியஸ் 490-432: சிற்பக் கலையின் தந்தையென்று இவனைச் சொல்லலாம். ஆத்தென்ஸை கலைக்கோயிலாகச் செய்தவன் இவன். ஒலிம்ப்பியாவில், ஜூஸ் தெய்வத்தின் உருவச் சிலையை நிர்மாணஞ் செய்தான். தங்கத்தினாலும், தந்தத்தினாலும் செய்யப்பெற்ற இந்தப் பெரிய உருவச்சிலையானது இன்றளவும், உலகத்து ஏழு அதிசயங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த உருவத்தைப் பார்த்த ஓர் அறிஞன் பிரமித்துப் போய் பின்வருமாறு பேசுகிறான்:-
“மனக்கவலை, துரதிருஷ்டம், துக்கம் இவைகளை வாழ்க்கை பூராவும் அனுபவித்து, இவை காரணமாக இரவிலே தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிற ஒருவன், இந்தச் சிலை முன்னர் சென்று நிற்பானாயின், தன் கவலை முதலியனவற்றை உடனே மறந்து விடுவான்.”
இத்தகைய அற்புதச் சிருஷ்டியைச் செய்த இவன், கடைசி காலத்தை வறுமையிலும் வேதனையிலும் கழிக்க வேண்டிய தாயிற்று. இதற்குக் காரணம் பெரிக்ளீஸின் சிறந்த நண்பனா யிருந்தான். ஆத்தென்ஸில் அத்தீனே தேவதையின் உருவச் சிலையைச் சமைத்தா னல்லவா, அதற்காக இவனிடம் ஓரளவு பொன்னும் தந்தமும் ஒப்படைக்கப் பட்டிருந்தன. இவற்றில் ஒரு பகுதியைக் களவாடி விட்டானென்று, பெரிக்ளீஸின் விரோதிகள், இவன்மீது குற்றஞ் சாட்டினார்கள். இவன்மீது குற்றஞ்சாட்டி பெரிக்ளீஸை அவமானப் படுத்த வேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். கடைசியில் குற்றத்தை ருஜுப்படுத்தி இவனைத் தேசப் பிரஷ்டம் செய்து விட்டார்கள். இவனுடனிருந்து ஒத்துழைத்த சிற்ப நிபுணர் பலர். இவரில் குறிப்பிடத்தக்கவர் இக்ட்டிஸ், கால்லிக்கிராட்டீஸ் முதலியோர்.
டேமன்: இவன் ஓர் இசைப் புலவன். இவனைப் பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவன் பெரிக்ளீஸுக்குச் சங்கீதம் பயிலுவித்த தோடல்லாமல், அரசியல் சம்பந்தமான யோசனைகளையும் அவ்வப்பொழுது சொல்லிக் கொடுத்து வந்தான். இவனுடைய சொல்லுக்கும் அனக்ஸாகோரஸின் சொல்லுக்கும் பெரிக்ளீஸ் மிகவும் கட்டுப்பட்டிருந்தானென்பர். எப்படியோ, பெரிக்ளீஸின் நெருங்கிய தொடர்பு இவனைத் தேசப் பிரஷ்டத்திலே கொண்டு விடுத்தது.
டெமாக்கிரீட்டஸ் 460-370: திரேஸ் மாகாணத்தின் தென்பகுதியிலுள்ள அப்டீரா என்னும் ஊரில் பிறந்தவன். செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவன் தந்தை, இவனுக்கு ஏராளமான ஆஸ்தி வைத்துவிட்டுப் போனான். ஆனால் இவன் அஃதனைத்தையும் ஊர் சுற்றிப் பார்ப்பதிலே செலவழித்து விட்டான். இந்தியாவுக்குக் கூட வந்துவிட்டுப் போனதாகத் தெரிகிறது. இந்தச் சுற்றுப் பிரயாணத்தினால் இவன் கண்ட உண்மையைப் பின்வரும் ஒரே வாக்கியத்தில் தெரிவிக்கிறான். “அறிவும் சீலமுமுடைய ஒருவனுக்கு உலகமெல்லாம் சொந்த நாடுதான்.” யாத்திரையை முடித்துக் கொண்டு வந்ததும், தத்துவ ஆராய்ச்சியிலே ஈடுபட்டு, வாழ்க்கை பூராவும் அதிலேயே செலவழித்தான். பரமாணுக்கள் பலவற்றின் சேர்க்கையினாலேயே உலகத்திலுள்ள சகலமும் உற்பத்தியா கின்றன என்பது இவன் முடிவு. இதனை ஒரு தனித் துவமாக நிலைநாட்டினான்; இதனால் இவனை ‘அணுவாக்கத்தின் தந்தை, என்பர். வேறு பல துறைகளிலும் ஆராய்ச்சி நடத்திச் சில புதிய கருத்துக்களை வெளியிட்டான். கணிதம், பௌதிகம், வான சாஸ்திரம், பூகோளம், உடற்கூறு சாஸ்திரம், மனோ தத்துவ சாஸ்திரம், வைத்தியம், சங்கீதம், சிற்பம் இப்படிப் பல சாஸ்திரங்கள் சம்பந்தமாக இவன் வெளியிட்ட நூல்கள் அனேகம். இவனை ‘அறிஞன்’ என்று ஒரே வார்த்தையில் அழைத்தனர் இவன் சமகாலத்தவர். இத்தகைய பேரறிவு படைத்த வனாயிருந்தும் இவன் மிகவும் அடக்கமும் நிதானமுமுடைய வனாயிருந்தான். எளிய வாழ்க்கையிலேதான் இன்பங் கண்டான். இவன் தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருந்தான். (சிலர் நூற்றொன்பது வயது வரை வாழ்ந்திருந்தானென்பர்.) “ இவ்வளவு காலம் நீ சுக ஜீவியாயிருந்ததன் ரகசியமென்ன” என்று இவனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன், கடைசி காலத்தில் இவனைக் கேட்டபோது, “நான் தினந்தோறும் எண்ணெய் ஸ்நானம் செய்து வந்ததேன்: ஆகாரத்தில் தேனைச் சேர்த்துக்கொண்டு வந்தேன்;” என்று கூறினான். இவன் வாக்கி லிருந்து பிறந்த சில வாசகங்கள்:
“சந்தோஷமென்பது புறத்திலே இல்லை; அகத்திலே தான் இருக்கிறது”.
“செல்வத்தைக் காட்டினாலும் சான்றாண்மையே சிறப்பு டைத்து.”
“அறிவைக் காட்டிலும் வேறு சக்தியோ, செல்வமோ கிடையாது.”
“நல்ல காரியங்களை, மனப்பூர்வமாகச் செய்ய வேண்டுமே தவிர, யாருடைய கட்டாயத்திற்காகவும் செய்யக்கூடாது. அப்படியே பலனை எதிர்பார்த்தும் செய்யக்கூடாது, நல்லதைச் செய்தால் நல்லது என்பதற்காகவே செய்ய வேண்டும்.”
ஸாக்ரட்டீஸ் 470-399: ஆத்தென்ஸில் சிற்பத் தொழில் செய்து கொண்டிருந்த ஸோப்ரோனிஸ்க்கஸ் என்பவனுடைய மகன்; தந்தையைப் போலவே இவனும் சிறிது காலம் மேற்படி தொழிலில் ஈடுபட்டிருந்தான். நல்ல திடகாத்திர முடையவன். ஆத்தீனியக் காலாட்படையில் சேர்ந்து, அநேக போர் முகங்களில் சேவை செய்தான். உடலைப் போலவே உள்ளத்தையும் பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். எத்தகைய சூழ்நிலையும் இவன் உடலையோ உள்ளத்தையோ பாதிக்கவில்லை. மிகவும் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். கோடைக் காலமோ, குளிர் காலமோ எப்பொழுதும் ஒற்றையாடைதான். மிதியடியில்லாமல் வெறுங்காலுடன் நடப்பதில்தான் இவனுக்கு அதிக பிரியம். ஆத்தென்ஸின் சந்தை கூடும் சதுக்கத்திற்கு இவன் அடிக்கடி செல்வ துண்டு. அங்கே கடைசியில் பலவகைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்குமல்லவா, அவை களைப் பார்த்து, ‘எனக்கு வேண்டாத பொருள்கள் இங்கே எவ்வளவு இருக்கின்றன’ என்று ஆச்சரியப்படுவான். வறுமையிலே செம்மை கண்டவன் இவன்.
இவன் எந்த ஒரு தத்துவத்தையும் கண்டுபிடித்து அதை நிலை நாட்டப் பாடுபடவில்லை. அதற்கு மாறாக, எங்கே நல்லது இருக் கிறது என்பதைக் கண்டுபிடிப்பதிலேயே இவன் காலமெல்லாம் செலவழிந்தது. இதனைக் கண்டுபிடிப்பதற்காக, இவன் காட்டுக்கோ மலைக்கோ ஓடவில்லை. சந்தடி நிறைந்த சந்தைக் கூட்டங் களுக்குத்தான் சென்றான். அங்கு வருவோர் போவோர் எல் லோருடனும் கலந்து பேசுவான். ஜனங்கள், பொதுவாக கொண்டி ருக்கிற நம்பிக்கைகள், அனுசரிக்கிற பழக்க வழக்கங்கள் முதலிய வற்றைப் பற்றி ஒவ்வொருவரையும் கேள்விகள் கேட்பான். அவர்கள் சொல்கிற பதிலைக் கொண்டே அவர்களுடைய அறிவு விளக்கைத் தூண்டிவிடுவான். அப்படித் தூண்டி விடுகிறபோது தான் ஒன்று மறியாதவன் என்றே சொல்லிக் கொள்வான். இவனுடைய சம்பாஷணையில் ஈடுபட்டனர் பலர். சிறப்பாக இளைஞர்கள், வண்டினம் போல் இவனை மொய்த்துக் கொண்டனர். இப்படி இவனை விசுவாசித்து வந்ததோடல்லாமல் இவர்கள், சமுதாயத்தின் முன்னணியில் அப்பொழுது இருந்து வந்த ஒவ்வொரு பிரச்னையைப் பற்றியும் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கினர். பழைய சம்பிரதாயங்களில் ஊறிப் போயிருந்தவர் களுக்கு இது பிடிக்க வில்லை. இளைஞர்களைக் கெடுத்து வருவதாகவும், மதவிரோதி யென்றும் இவன் மீது குற்றஞ்சாட்டி, இவனை விசாரணைக்குக் கொண்டு வரச் செய்தனர். அந்தக் காலத்து நீதி முறைப்படி விசாரணை நடைபெற்றது. மரண தண்டனை விதிக்கப்பட்டான். தண்டனை நிறைவேற்றப்படு வதற்கு முன்னர் சிறையிலே சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தான். அப்பொழுது சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விடுமாறு, இவனுடைய உற்ற நண்பர் சிலர் யோசனை கூறினர். இதற்கு இணங்குவானா சத்தியாத்மா ஸாக்ரட்டீஸ்? மறுத்துவிட்டான். தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய சமயம் வந்தது. ஒரு கிண்ணம் நிறைய விஷத்தைக் கொடுத்தனர். அப்படியே குடித்துவிட்டான். கொஞ்சங் கூட முகம் சிணுங்காமல். கண் மூடியது. மூச்சு நின்றது. சிந்தனை உலகத்துச் சிரஞ்சீவிகளில் ஒருவனாக வாழத் தொடங்கிவிட்டான் அதுமுதல்.
புரோட்டோகோராஸ் 481-411: ஹிப்போக்கிராட்டீஸ் பிறந்த அப்டீரா நகரத்தில்தான் இவன் பிறந்தான். ஹோபிஸ்ட்டு களுக்குள்ளே அதிகமாகப் புகழ் பெற்றிருந்தவன் இவன். கல்வி கேள்விகளில் சிறந்தவன். அறநெறியைக் கடைப்பிடித்தவன். பிறருடைய திறமையைப் பாராட்டுவான். வாதங்களில் கலந்து கொள்கிறபோது, சிறிது கூட நிதானந்தவறிப் பேசமாட்டான். கோபமும் வராது. எல்லோரையும் முந்திக்கொண்டு தான்பேச வேண்டுமென்று ஆவலும் கொள்ள மாட்டான். ஸாக்ரட்டீஸ் இவனிடத்தில் மதிப்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இவன் - புரோட்டோகோரஸ் - தன்னிடம் பயிலவரும் மாணாக்களிட மிருந்து அதிக கட்டணம் வசூலித்து வந்தானென்று சிலர் குறை யாகச் சொல்வர். ஆனால் இவன் அதிக தொகை வாங்குவது நியாய மென்றே சாதித்து வந்தான். இவனைப் போலவே, கார்ஜியஸி என்ற மற்றொரு பிரபல ஸோபிஸ்ட்டும் அதிக பணம் வாங்கி வந்தான்.
கடவுளுண்மையைப் பற்றி நிச்சயமான நம்பிக்கை யில்லா தவன் புரோட்டோகோராஸ். ஒரு சமயம் இவன் ஆத்தென்ஸுக்கு வந்து யூரிப்பிடீஸ் என்ற பிரபல நாடகாசிரியன் வீட்டில் தங்கியிருந்தபோது, ஆத்தீனியப் பிரமுகர் சிலர் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பின்வருமாறு கூறினான்: “கடவுளர்கள் இருக்கி றார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. அப்படியிருந்தால், அவர்கள் எப்படி இருப்பார்களென்பதும் எனக்குத் தெரியாது. இவற்றைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியாதபடி பல விஷயங்கள் நம்மைத் தடுக்கின்றன. கடவுளுண்மையைப் பற்றின இந்த விஷயமோ தெளிவற்றிருக்கிறது. மனிதனுடைய வாழ்நாளோ மிகச்சுருக்கம்”.
புரோட்டோகோராஸ் இப்படிச் சொல்லிவிட்டானென்று தெரிந்ததும் ஆத்தென்ஸில் ஒரே பரபரப்பு. ஜனசபை உடனே கூடி இவன்மீது தேசப்பிரஷ்ட உத்தரவு பிறப்பித்தது. இவனுடைய நூல்களனைத்தையும் பறிமுதல் செய்து சந்தைச் சதுக்கத்தில் பகிரங்கமாகக் கொளுத்திவிட ஏற்பாடு செய்தது. தேசப்பிரஷ்டஉத்தரவு பெற்ற புரோட்டோகோராஸ், சிஸிலி தீவுக்கு ஓடிவிட்டான். ஆனால் வழியில் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக ஒரு வரலாறு கூறுகிறது.
ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், முதன்முதலாக, பாஷைக்கு இலக்கணம் கண்டவன் புரோட்டோகோராஸ்தான். மொழி ஆராய்ச்சிக்கு அடிகோலியவன் இவனே. இன்னும் பொதுவாக இலக்கியத்திற்கு அதிக சேவை செய்திருக்கிறான்.
கார்ஜியஸ் 483-380: சிஸிலி தீவிலுள்ள லியோண்ட்டினி என்னும் ஊரைச் சேர்நத்வன். சாதுரியமாகப் பேசுவதில் வல்லவன். கிரேக்கர்களுக்குள் சண்டை கூடாதென்பதை வலியுறுத்தி 408ஆம் வருஷம் நடைபெற்ற ஒலிம்ப்பிய விழாவில் நீண்டதொரு சொற்பொழிவாற்றினான். அங்குக் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவன் பேச்சிலே சொக்கிப் போயினர். வசன கவிதையென்று சொல்வார்களே அந்த மாதிரிதான் இருக்கும் இவன் பேச்சு. இவனிடம் பேச்சுப் பயிற்சி பெற்றவர் பலர். இவன் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தான். கடைசி நாட்கள் வரை ஒரு சிறுவனைப் போலவே உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருந்தானென்பர்.
ஹிப்பியாஸ்: பெலொப்பொனேசியாவின் மேற்குப் பகுதி யிலுள்ள எலிஸ் நகரத்தைச் சேர்ந்த பிரபல ஸோபிஸ்ட். ஹெல்லாஸ் பூராவும் இவன் புகழ் பரவியிருந்தது. இவனை, ஒரு சர்வகலா சாலையென்று அழைப்பர். இவனுக்குத் தெரியாத வித்தையில்லை; தெரியாத தொழிலுமில்லை. தனது ஆடைகளைக் கூட தானே நெய்து கொண்டான்.
இன்னும் ப்ராடிக்கஸ் என்ன, ஆண்ட்டிபோன் என்ன, ஸாக்ரட்டீஸுடன் எதிர்வாதஞ் செய்த திராஸிமாக்கஸ் என்ன, இவர்கள் போல் இன்னும் பல ஸோபாபிஸ்ட்டுகள், தங்கள் அறிவி னாலும் வாக்குவன்மையினாலும் பொருளும் புகழும் பெற்றி ருந்தார்கள்.
எஸ்க்கிலஸ் 525-456: அட்டிக்காவில் பிறந்த ஒரு கவிஞன்; பிரபல நாடகாசிரியன். துன்பியல் நாடகத்தின் சிருஷ்டி கர்த்தன் என்பர் இவனை. ஆத்தென்ஸில் பிரதி வருஷமும் நடைபெற்ற வந்த நாடகப் போட்டியில் பதின்மூன்று தடவை இவன் முதற்பரிசு பெற்றிருக்கிறான். இவனுடைய நாடகங்களை ஜனங்கள் பெரிதும் விரும்பிப் போற்றினர். இவன் மொத்தம் எழுபது நாடகங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. (சிலர் தொண்ணூறு என்கின்றனர்.) இவற்றில் ஏழு மட்டுமே இப்பொழுது காணக் கிடைக்கின்றன.
எஸ்க்கிலஸ், பிரபல நாடகாசிரியன் மட்டுமல்ல; சிறந்த போர் வீரனுங்கூட. இவனும் இவன் சகோதரனும் சேர்ந்து மாரத்தான் யுத்தத்தில் காட்டிய வீரம் ஜனங்களுடைய நினைவில் என்றும் இருக்க வேண்டுமென்பதற்காக ஆத்தென்ஸ் அரசாங்கத்தார் ஓர் ஓவியம் வரையச் செய்தனர். மாரத்தானைத் தவிர, ஸாலாமிஸ் என்ன, பிளாட்டீயா என்ன, இப்படிச் சில போர்களிலும் இவன் கலந்து கொண்டான். சிஸிலி தீவில் இவன் பெரிதும் கௌரவிக்கப் பட்டான்; அங்கேதான் இறந்தும் போனான்.
ஸோப்போக்ளீஸ் 496-405: ஆத்தென்ஸில் பிறந்தவன். இவன் தந்தை கத்திகள் செய்து கொடுக்கும் தொழில் நடத்தி வந்தான். பாரசீக யுத்தத்தின்போதும் பெலொப்பொனேசிய யுத்தத்தின் போதும் இவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. இதனால் மகனுக்கு நிறையச் சொத்து சேர்த்து வைத்தான். ஸோப்போக் ளீஸுக்கு என்ன குறை? பத்தோடு, அறிவு, அழகு, திட சரீரம் எல்லாம் சேர்ந் திருந்தன. மல் யுத்தத்தில் இவனுக்கு எவ்வளவு தேர்ச்சி இருந்ததோ அவ்வளவு தேர்ச்சி சங்கீதத்திலும் இருந்தது. பந்தாடுவதில் வல்லவனாயிருந்ததுபோல் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரனாயிருந்தான். பெரிக்ளீஸ், இவனிடம் அதிக அன்பு காட்டி வந்தான். அரசாங்க உயர் பதவிகள் பல அளித்து இவனைக் கௌரவித்தான். இந்தப் பதவிகளை இவன் பொறுப்புடன் வகித்து ஜனங்களின் நன்மதிப்பைப் பெற்றான். எல்லோருடனும் சரள மாகப் பழகுவான். நகைச்சுவை ததும்பப் பேசுவான். இவனுக்குப் பொன்னாசையும் பெண்ணாசையும் சிறிது உண்டென்பர். இவன் மொத்தம் நூற்றுப்பதின்மூன்று நாடகங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் ஏழு மட்டுமே இப்பொழுது எஞ்சி நிற்கின்றன. சிறந்த நாடகங்கள் எழுதியதற்காக இருபது தடவை இவன் முதற் பரிசு பெற்றிருக்கின்றான். முதல் தடவை இருபத்தைந் தாவது வயதில், கடைசி தடவை எண்பத்தைந்தாவது வயதில், இவன் நாடகாசிரியன் மட்டுமல்ல; நடிகனுங்கூட.
யூரிப்பிடீஸ் 482-407: ஜெர்க்ஸஸ் மன்னன் படையெடுத்து வந்தபோது ஆத்தென்ஸிலுள்ளவர்கள் ஸாலாமிஸ் தீவுக்கு வந்து அடைக்கலம் புகுந்துகொண்டார்களல்லவா, அப்பொழுது, அதே தீவில் இவன் பிறந்தான். இந்தத் தீவில்தான் இவன், தன் வாழ்க்கை யின் பிற்பகுதியைக் கழித்தான். இவன் ஸாக்ரட்டீஸுடனும், புரோக்டோகோராஸுடனும் நெருங்கிப் பழகிவந்தான். இந்தப் பழக்கத்தினாலேயோ என்னவோ, இவன் எதனையும் அறிவுக்கண் கொண்டு நோக்கினான். இவன் மொத்தம் எழுபத் தைந்து நாடகங் கள் எழுதினானென்பர். இவற்றுள் பதினெட்டு தான் இப்பொழுது கிடைத்திருக்கின்றன. தனது நாடகங்கள் மூலம், இவன் மதத்தைப் பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் அப்பொழுது நிலவிவந்த கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் வன்மை யாகவும் ஆனால் நகைச்சுவைப் படவும் கண்டித்து வந்தான். மனிதனை மனிதன் சுரண்டுதல், பெண்ணை ஆண் அடக்கியாளல், இப்படிப்பட்ட சில வற்றையும் பலமாகத் தாக்கி வந்தான். இதனால் இவன் இளைஞர் களால் நேசிக்கவும் முதியவர்களால் துவேஷிக்கவும் பட்டான். முதியவர்கள் கையிலேயே அப்பொழுது அதிகாரம் இருந்தபடியால் மத விரோதியென்று சொல்லி ஒரு வழக்கும், பண சம்பந்தமாக ஒரு வழக்கும் இவன்மீது தொடரச் செய்தனர். அப்பொழுது இவனுக்கு ஏறக்குறைய எழுபது வயது இருக்கும். இரண்டு வழக்குகளும் தோல்வியடைந்தன. இவன் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டு விட்டான். என்றாலும் ஆத்தென்ஸில், இவன்மீது வெறுப்பு வளர்ந்தது. இவன் மனைவியே இவனை வெறுக்கத் தலைப்பட்டாள். வேறென்ன தொல்லை வேண்டும்? எங்கே செல்வதென்று யோசித்துக் கொண்டிருந் தான். அப் பொழுது மாஸிடோனியாவை ஆண்டுகொண்டிருந்த ஆர்க்கிலோ யஸ் என்ற அரசன், அதன் ஆஸ்தானத்தில் வந்திருக்கும் படி இவனுக்கு அழைப்பு அனுப்பியிருந்தான். இதனை உடனே ஏற்றுக்கொண்டு மாஸிடோனியாவுக்குச் சென்றான். சென்று அங்கே இரண்டொரு நாடகங்களை எழுதினான். எழுபத்தைந்தா வது வயதில் இறந்து போனான்.
அரிஸ்ட்டோபனீஸ் 448-380: இவன் எஜீனா தீவில், நிலச் சொத்தும் குணச் சிறப்பும் மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன். பெலொப்பொனேசிய யுத்த ஆரம்பத்தில் தன் வீடு வாசல்களை விட்டுவிட்டு ஆத்தென்ஸில் வந்து வசிக்கத் தொடங்கினான். இந்த யுத்தத்தில் கிரேக்கரை கிரேக்கர் வெறுப்பதையும் கொல்வதையும் கண்டு இவன் மனம் வெதும்பினான். கிரேக்கர்களனைவரும் ஒற்றுமையாயிருக்க வேண்டும், சமாதானமாக வாழ வேண்டு மென்று தனது நாடகங்கள் மூலம் பிரசாரம் செய்து வந்தான். ஆனால் இவன் அப்பொழுது பரவி வந்த நவீன எண்ணப் போக் குக்குப் பரம விரோதி; ஜன ஆட்சிக்குங்கூட; இவ் விரண்டையும் பற்றித் தனது நாடகங்களில் பரிகாசமாகப் பேசியிருக்கிறான். பெரிக்ளீஸ், ஸாக்ரட்டீஸ், யூரிப்பிடீஸ் முதலிய பலரும் இவனுடைய பரிகாசத் திற்குட்பட்டனர். இவன் எழுதிய நாடகங்கள் மொத்தம் நாற்பத் திரண்டு. இவற்றில் பதினோரு நாடகங்களே இப்பொழுது அகப்பட்டிருக்கின்றன.
ஹெரோடோட்டஸ் 484-410: கிரேக்க சரித்திராசிரி யர்களில் ஒருவன் ஹெரோடோட்டஸ்; மற்றொருவன் துஸிடிடீஸ். பிந்திய வனை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். முந்தியவனான ஹெரோடோட்டஸ், சின்ன ஆசியாவிலுள்ள ஹாலிகார்னஸ்ஸஸ் என்னும் ஊரில் பிறந்தவன். இவனுடைய குடும்பத்தினரிற் சிலர், அரசாங்கத்திற்கு விரோதமான சூழ்ச்சிகள் சம்பந்தப்பட்டிருந்ததன் காரணமாக, இவன் ஏறக்குறைய முப்பத்திரண்டாவது வயதில் நாடு கடத்தப் பட்டான். இவனை நாடு கடத்தியது சரித்திர உலகிற்குப் பெரிய உபகாரமாயிற்று. யாத்திரை செய்யப் புறப்பட்டான். கிழக்கே சின்ன ஆசியா முதல் மேற்கே எகிப்து வரை பல இடங்களையும் சுற்றிப் பார்த்தான். பார்த்தான் என்றால் மேலெழுந்த வாரியாக அல்ல; ஒவ்வொன்றைப் பற்றியும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டு மென்ற ஆவலுடன் பார்த்தான். சுமார் பதினைந்து வருஷ காலம் இப்படிச் சுற்றிப் பார்த்து விட்டுக் கடைசியில் ஆத்தென்ஸுக்கு வந்து அங்கேயே நிரந்தர வாசம் செய்யத் தொடங்கினான். தான் கண்டது, பிறரிடமிருந்து கேட்டது, தனக்கு முந்தி அறிஞர்கள் எழுதி வைத்துப் போயிருந்தது எல்லாவற்றையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு ஒரு சரித்திரம் எழுதினான். எகிப்து, சின்ன ஆசியா, கிரீஸ் இவற்றின் வரலாறுகளை, ஆதிகாலத்திலிருந்து கிரீஸ் - பாரசீக யுத்தம் வரை அதாவது ஸெஸ்ட்டோஸ் முற்றுகை வரை இதில் குறிப்பிட்டி ருக்கிறான். இவன், தான் எழுதியதை அவ்வப் பொழுது, பொது ஜனங்களின் மத்தியில் உரக்கப் படித்துக்காட்டி வந்ததாகவும், ஜனங்கள் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் தாங்கள் மகிழ்ச்சிக் கறிகுறியாக இவனுக்கு ஒரு தொகை சன்மானமாக வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றன.
ஹெரோடோட்டஸுக்கு முந்தியும் பிந்தியும் கிரீஸில் அநேக சரித்திராசிரியர்கள் தோன்றி மறைந்தார்கள். ஆனால் இவர்களில் ஹெரோடோட்டஸின் பெயரும் துஸிடிடீஸின் பெயரும்தான் நிலைத்து நிற்கின்றன. இவர்கள் எழுதி வைத்துப் போயிருக்கிற சரித்திர நூல்களைக் கொண்டு, கி.மு. ஆறாவது, ஐந்தாவது நூற்றாண்டு கிரீஸை நாம் ஒருவாறு தெரிந்து கொள்ள முடிகிறது.
இதுகாறும் பெரிக்ளீய யுகத்தில் வாழ்ந்த ஒரு சில பெரியோர் களை மட்டும்தான் தரிசித்தோம். தரிசிக்கத்தான் முடிந்ததேயொழிய வெளியிட்ட அரிய கருத்துக்களைக் கேட்க முடியவில்லை. அதற்கு இங்கே அவகாசம் ஏது? நிக்கியாஸ் சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஆத்தென்ஸிலும் ஸ்ப்பார்ட்டாவிலும் என்ன நடந்த தென்பதைப் பார்க்கச் செல்ல வேண்டாமா?
பெலொப்பொனேசிய யுத்தம்
(இரண்டாவது பகுதி கி.மு. 421-415)
1. பெலொப்பொனேசிய சமஷ்டிக்கு முடிவு
நிக்கியாஸ் உடன்படிக்கையை ஸ்ப்பார்ட்டா ஒப்புக் கொண்டு விட்டது வாஸ்தவம். ஆனால் அதில் கண்டிருக்கிற ஷரத்துக்களை நிறைவேற்ற அதனால் முடியவில்லை. அதன் கட்சியைச் சேர்ந்த முக்கிய மான சில ராஜ்யங்கள் உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளவோ, வடக்கே ஆம்ப்பிபோலிஸ் நகரத்தில் ஸ்ப்பார்ட்டப் படைகளுக்குத் தலைவனாக பிராஸிடாஸுக்குப் பிறகு நியமிக்கப் பட்டவன் வசம் ஒப்புக்கொடுக்க மறுத்துவிட்டான். இங்கே பெலொப்பொனே சியாவில் எலிஸ் ராஜ்யமும், மாண்ட்டினீயா என்ற ஒரு சிறு நகர ராஜ்யமும், தங்களுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்குமுள்ள சொந்த மனஸ்தாபம் காரணமாக உடன்படிக்கையை நிராகரித்தன. கொரிந்தியா, அக்கர்னேனியாவிலுள்ள ஸோல்லியமும் அனக்ட் டோரியமும் ஆத்தென்ஸ் வசம் இருக்க வேண்டு மென்று உடன் படிக்கையில் கண்டிருப்பதை ஆட்சேபித்தது. இப்படியே நிஸீயா துறைமுக விஷயத்தில் மெகாராவும், பானக்ட்டம் விஷயத்தில் பியோஷ்யாவும் ஆட்சேபங்கள் கிளப்பின. ஸ்ப்பார்ட்டாவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிற ராஜ்யங்களில் இந்த மூன்றுந்தான் - கொரிந்த்தியா, மெகாரா, பியோஷ்யா ஆகிய முன்றுந்தான் பலமும் செல்வாக்கும் உள்ளவை. இவற்றை மீறிக் கொண்டு உடன்படிக்கை யின் ஷரத்துக்களை நிறைவேற்றக் கூடிய நிலைமையில் ஸ்ப்பார்ட்டா இல்லை. ஸ்ப்பார்ட்டாவின் இந்த நிலையைக் கண்டு ஆத்தென்ஸும், ஷரத்துக்களில் தான் நிறைவேற்ற வேண்டிய அமிசங்களை நிறைவேற்ற மறுத்துவிட்டது. குழந்தை என்னமோ பிறந்தது, ஆனால் வாய் திறக்கவில்லை என்கிற மாதிரியான நிலைமை ஏற்பட்டது, நிக்கியாஸ் உடன்படிக்கையைப் பொறுத்த மட்டில்.
ஸ்ப்பார்ட்டாவுக்கோ, ஆத்தென்ஸுடன் எப்படியாவது இணங்கிப் போய்விடவேண்டுமென்ற ஆவல். ஏனென்றால் ஸ்ப்பாக்ட்டீரியாவில் சிறைப் பட்டவர்கள் இன்னமும் ஆத்தென்ஸி லேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்து கொள்ள வேண்டியது அவசியம். தவிர, ஸ்ப்பார்ட்டாவுக் கும் ஆர்கோஸுக்கும் 451-ஆம் வருஷம் ஏற்பட்டிருந்த முப்பது வருஷ சிநேக ஒப்பந்தம் இந்த வருஷம் 421-ஆம் வருஷம் காலா வாதியாகிறது. இதனை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள மறுத்து விட்டது ஆர்கோஸ்.
இந்த ஆர்கோஸ், பெலொப்பொனேசிய யுத்தத்தில் எந்தக் கட்சிப் பக்கமும் சேராமல் ஒதுங்கியிருந்ததென்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இப்படி ஒதுங்கியிருந்த காலத்தில் இது தன் கடல் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தது. இதற்கும் ஸ்ப்பார்ட் டாவுக்கும் எப்பொழுதுமே உள்ளுர ஆதிக்கப் போட்டி உண்டு. பெலொப்பொனேசிய சமஷ்டியில் ஸ்ப்பார்ட்டா ஆதிக்கம் பெற்றிருப்பதை இது விரும்பியது கிடையாது. சமயம் வந்தால், தான் அந்த ஆதிக்கத்தை அடைய வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தது. இதனால் இதன் பட்சமெல்லாம் ஸ்ப்பார்ட்டாவின் விரோதிகள் யாரோ அவர்கள் பக்கமே இருந்து வந்தது. இதன் அரசியல் போக்கு முதலியனவெல்லாம் ஆத்தென்ஸின் சார்பு பற்றியே நின்றது. 461-ஆம் வருஷம் ஆத்தென்ஸுடன் ஏற்படுத்திக் கொண்ட சிநேகத் தொடர்பை அறுத்துக் கொண்டுவிட வேண்டு மென்ற ஏற்பாட்டின் பேரில்தான் ஸ்ப்பார்ட்டா இதனுடன் 451-ஆம் வருஷம் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாக இன்னும் பத்து வருஷ காலம் இருக்கிறதே யென்ற தைரியத்திலேயே 431-ஆம் வருஷம் பெலொப்பொனேசிய யுத்தத்தில் ஆத்தென்ஸுக்கு விரோதமாக இறங்கியது ஸ்ப்பார்ட்டா. இப்பொழுது - 421- ஆம் வருஷம் - இந்த ஒப்பந்தம் காலாவாதியாக விட்டதனாலும், இதனைப் புதுப்பிக்க ஆர்கோஸ் மறுத்துவிட்ட தனாலுமே, ஆத்தென்ஸுடன் சமாதானமாகப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஸ்ப்பார்ட்டாவுக்கு.
எனவே நிக்கியாஸ் உடன்படிக்கை நிறைவேறிய மூன்றாவது மாதம் - 421-ஆம் வருஷம் மே மாதம் - ஆத்தென்ஸுடன் தனியாக ஒரு தற்காப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆத்தென்ஸோ, ஸ்ப்பார்ட்டாவோ, வேறொரு ராஜ்யத்தினால் தாக்கப்பட்டால் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ள வேண்டும்; ஒன்றை யொன்று கலந்து கொள்ளாமல் அந்த ராஜ்யத்துடன் சமாதானம் செய்து கொள்ளக் கூடாது; ஸ்ப்பார்ட்டாவில் ஹெலட்டுகள் கலகத்திற்குக் கிளம்பினால் அப்பொழுது ஆத்தென்ஸ் உதவிக்கு வரவேண்டும்; இவைதான் ஒப்பந்தத்தின சாரமான நிபந்தனைகள். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, ஏறக்குறைய 550-ஆம் வருஷம் ஸ்தாபிதமாக பெலொப்பொனேசிய சமஷ்டி இறுதியாகக் கலைந்து போய்விட்டது. பெலொப்பொனேசிய ராஜ்யங்களிடையே இருந்த கட்டுப்பாடு அடியோடு குலைந்து போய்விட்டது.
ஸ்ப்பார்ட்டா இப்படி, ஆத்தென்ஸுடன் தனியே ஒப்பந்தம் செய்து கொண்டது, நிக்கியாஸ் உடன்படிக்கையை எதிர்த்து வந்த ராஜ்யங்களின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாகக் கிளப்பிவிட்டது. கொரிந்த்தியா, மாண்ட்டினியா, எலிஸ், வடக்கேயுள்ள கால்ஸீடி ஸீயின் ஒரு பகுதி ஆகிய யாவும் ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாக ஆர்கோஸுடன் சேர்ந்து கொண்டன.
2. ஆத்தென்ஸுக்கு ஏகாதிபத்திய வெறி முற்றுகிறது
நிக்கியாஸ் உடன்படிக்கை நிறைவேறிய சிறிது காலம்வரை, ஆத்தென்ஸின் அரசியலில், நிக்கியாஸ் கட்சிக்கு, அதாவது ஸ்ப்பார்ட்டாவுடன் சமாதானமாகப் போகவேண்டுமென்ற பணக்காரக் கட்சிக்குச் செல்வாக்கு இருந்து வந்தது. உடன்படிக் கையின் ஷரத்துக்களை ஆத்தென்ஸினாலோ ஸ்ப்பார்ட்டா வினாலோ அமுலுக்குக் கொண்டுவர முடியவில்லையென்ற நிலை ஏற்பட்டதும், 420-ஆம் வருஷம், இந்தக் கட்சியின் செல்வாக்கு ஒடுங்கிவிட்டது. ஸ்ப்பாட்டாவைப் பார்த்துப் போர்முழக்கம் செய்து கொண்டிருந்த ஜனக் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. இந்தக் கட்சிக்குத் தலைவனாயிருந்தவன் விளக்கு வியாபாரியான ஹைப்பர் போலஸ். இவன் நிக்கியாஸின் செல்வாக்கைக் குலைக்க அரும் பாடுபட்டான். இவனைத் தவிர, இன்னொருவனும் இந்தக் காலத்தில் ஜனக்கட்சியின் தலைவனாகத் தோன்றினான். இவன்தான் ஆல்ஸி பியாடீஸ்; பொட்டிடீயாவிலும் டேலியத்திலும் ஸாக்ரட் டீஸுடன் சேர்ந்து போர் செய்தவன்; அவனுடைய அன்பைப் பெற்றவன்; ஆத்தென்ஸின் நன்மையை நாடுவதாகச் சொல்லி அதற்கு அதிகமான தீங்கை உண்டு பண்ணிய புண்ணிய புருஷர் களிலே ஒருவன்!
ஆல்ஸிபியாடீஸ், தாய்வழியில் பெரிக்ளீஸின் உறவினன்; அவனிடமே இளமையில் வளர்ந்தான்; அரசியல் பயிற்சி பெற்றான்; அவனைப் போலவே ஆதிக்கம் வகிக்க வேண்டுமென்ற ஆசை கொண்டான்; அரசியலில் புகுந்தான். இவனுடைய ஆசைக்குத் தகுந்தபடி இவனிடம் பரம்பரைச் செல்வம் இருந்தது; அழகு இருந்தது; அறிவு இருந்தது; ஆண் பெண் இருபாலாரையும் வசீகரிக்கிற சக்தியும் இருந்தது; ஆனால் கூடவே அகம்பாவமும் இருந்தது. நேர்மையும் நிதானமும் இவனை விட்டு ஒதுங்கியிருந்தன. ஒழுக்கமென்பதைச் சிறிது கூட அறியாதவன். உண்மையில் இவனுக்கு ஜனஆட்சியில் நம்பிக்கை கிடையாது; ஆனால் தன்னலத்தைக் கருதி, சமுதாயத்தில் செல்வாக்குப் பெறுவதற்காக, அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, ஜனக்கட்சியில் சேர்ந்து கொண்டான். 420-ஆம் வருஷம் படைத்தலைவர் பதின்மரில் ஒருவனாகத் தெரிந்தெடுக்கப் பெற்றான். உடனே ஆத்தென்ஸை சமாதானப் போக்கியிலிருந்து யுத்தப் போக்குக்குத் திருப்பி விட்டான்.
ஆல்ஸிபியாடீஸின் தூண்டுதலின் பேரில் 420-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஆத்தென்ஸ், ஆர்கோஸுடனும் அதன் கூட்டாளி களான எஸுடனும், மாண்ட்டினீயாவுடனும் நூறு வருஷத்திற்கு ஒரு சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டது. உண்மையில் ஸ்ப்பார்ட் டாவுக்கு விரோதமாக ஏற்பட்ட கூட்டே இது. இந்தக் கூட்டை இன்னும் பலப்படுத்த வேண்டிய, ஆல்ஸிபியாடீஸ், ஒரு சிறு படை யுடன் பெலொப்பொனேசியாவுக்குச் சென்றான். சென்று, ஓரிரண்டு ராஜ்யங்களை ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாகத் தூண்டிவிடப் பார்த்தான் முடியவில்லை.
இப்படியிருக்கையில் ஸ்ப்பார்ட்டாவின் நேச ராஜ்யமாகிய எப்பிடாரஸ், ஏதோ தெய்வத்திற்குச் செலுத்த வேண்டிய காணிக்கை யைச் சரிவரச் செலுத்தவில்லையென்று காரணங்காட்டி அதன்மீது படையெடுத்தது ஆர்கோஸ். ஆல்ஸிபியாடீஸுக்கு இது நல்ல சந்தர்ப்பம். ஆர்கோஸை உற்சாகப்படுத்தினான்; அதற்கு ஆதரவும் கொடுத்தான். இதையறிந்த ஸ்ப்பார்ட்டா சும்மா யிருக்குமா? எப்பிடாரஸைப் பாதுகாக்க ஒரு படையை அனுப்பியது. இந்தப் படை சிறிது தூரம் சென்றதும், ஒரு திருவிழா ஆரம்பித்து விட்டது. இந்தத் திருவிழாவின்போது போர் செய்யக் கூடா தென்பது டோரி யர்களின் நியதி. இதனால் இந்தப் படையானது மேற்கொண்டு செல்லாமல் திரும்பி விட்டது. ஆனால் ஆர்கோஸ், இந்த நியதியை ஏதோ ஒரு சாக்குச் சொல்லி மீறி, எப்பிடாரஸைத் தாக்கிச் சேத முண்டு பண்ணியது.
இஃது இப்படியிருக்க, ஆத்தென்ஸில் படைத்தலைவன் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தடவை அதாவது 419-ஆம் வருஷம், ஆல்ஸிபியாடீஸ் தெரிந்தெடுக்கப்பட்டதோடு நிக்கியாஸும் தெரிந்தெடுக்கப்பட்டான். இவனுடைய முயற்சியின் பேரில், மாண்ட்டீனியாவில் ஒரு சமாதான மகாநாடு கூடியது. இந்த மகாநாட்டிற்கு ஆர்கோஸ் அழைக்கப்பட்டு, எப்பிடாரஸ் போரை நிறுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டது. ஆனால் அது சம்மதிக்க வில்லை. சமாதான மகாநாடும் கலைந்துவிட்டது. இதற்குப் பிறகு ஆர்கோஸ், இரண்டாந் தடவையாக எப்பிடாரஸ் மீது படை யெடுத்து நாசமுண்டு பண்ணியது. இதையறிந்த ஸ்ப்பார்ட்டா, ஆத்திரங்கொண்டு ஒரு பெரும் படையை ஆர்கோஸுக்கு விரோத மாக அனுப்பியது. ஆனால் இந்தப் படை சிறிது தூரம் முன் னோக்கிச் சென்று பழைய மாதிரி திரும்பிவிட்டது. சகுனத் தடை காரணம்!
எப்பிடாரஸ் கடல் தொடர்புடையதாதலின், கடல் மார்க்க மாக இதற்கு ஸ்ப்பார்ட்டாவின் உதவி கிடைத்து விடாதபடி வெகு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தது ஆத்தென்ஸ். ஸ்ப்பார்ட்டப் படை ஆர்கோஸை நோக்கி வருகிறதென்று தெரிந்ததும் ஆல்ஸிபி யாடீஸ் தலைமையில் ஆயிரம் பேர்கொண்ட ஓர் ஆத்தீனியக் காலாட் படை ஸாரோனிக் வளைகுடாவைக் கடந்து வந்தது. ஸ்ப்பார்ட்டப் படை திரும்பிப் போய்விடவே இதுவும் திரும்பி விட்டது. சில மாதங்கள் கழித்து, முந்நூறு பேர்கொண்ட ஒரு ஸ்ப்பார்ட்டப் படை, ஆத்தென்ஸின் கண்காணிப்பையும் மீறி, கடல் மார்க்கமாக எப்பிடாரஸை அடைந்தது. இதைக் கண்ட ஆர்கோஸ், ஆத்தென்ஸ் மீது ஆத்திரங் கொண்டது. தன் மீது காட்டப்பட்ட இந்த ஆத்திரத்தை, ஆத்தென்ஸ், ஸ்ப்பார்ட்டா மீது திருப்பியது. நிக்கியாஸ் உடன்படிக்கையை ஸ்ப்பார்ட்டா மீறி விட்டதென்று அதன் மீது குற்றஞ்சாட்டியது.
இங்ஙனம் ஸ்ப்பார்ட்டா மீது குற்றஞ்சாட்டி அதனைப் போருக் கிழுக்க, ஆத்தென்ஸின் அரசியல்வாதிகள் சிலர் முனைந்து நின்றார்களாயினும்,பொது ஜனங்கள் யுத்தத்தை விரும்பவில்லை. 418-ஆம் வருஷம் நடைபெற்ற படைத் தலைவர் தேர்தலில் இது விளங்கியது. இந்தத் தேர்தலில் ஆல்ஸிபியாடீஸ் தெரிந்தெடுக்கப் படவில்லை; நிக்கியாஸ் தெரிந்தெடுக்கப்பட்டான். இவன் தெரிந்தெடுக்கப்பட்டதனாலேயே ஆத்தென்ஸின் யுத்தப் போக்கு தணிந்து விட்டதென்பது அர்த்தமில்லை. சிறிது தடைப்பட்டது. அதுவும் தற்காலிகமாகத் தான். ஆர்கோஸ் முதலிய ராஜ்யங்களுடன் அது சமீபத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் அப்படியேதான் அமுலில் இருந்து வந்தது.
அங்கே ஆர்கோஸோ, எப்பிடாரஸைத் திருப்பித் திருப்பித் தாக்கி வந்தது. எவ்வளவு காலந்தான் ஸ்ப்பார்ட்டா இதனைச் சகித்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு பெரும்படை திரட்டி அஜிஸ் மன்னன் தலைமையில் ஆர்கோஸை நோக்கி அனுப்பியது. இதனை எதிர்த்துப் போராட ஆர்கோஸும் தன் படையுடன் தயாராய் நின்றது. இதற்கு உதவியாக, பியோஷ்யா, கொரிந்த்தியா, மெகாரா, எலிஸ், மாண்ட்டினீயா முதலிய ராஜ்யங்கள் தத்தம் படைகளை அனுப்பின. ஆத்தென்ஸும் லாக்கெஸ், நிக்கோஸ்ட்ராட்டஸ் என்ற இருவருடைய தலைமையில் ஒரு படையை அனுப்பியது. இந்தப் படையோடு ஆல்ஸிபியாடீஸ் ஒரு தூதனாக அனுப்பப்பட்டான். ஆர்கோஸுக்கு இவ்வளவு பக்கபலம் சேர்ந்த போதிலும், சேர்ந்த ராஜ்யங்களுக்குள்ளேயே மன ஒற்றுமை இல்லாமலிருந்தது. சேர்ந்த சிறிது காலத்திற்குள் பிளவு ஏற்பட்டு, எலிஸ், யுத்தத்தில் கலந்து கொள்ள மறுத்துப் பின்வாங்கிக் கொண்டு விட்டது.
இந்த நிலைமையில் ஆர்கோஸும், ஸ்ப்பார்ட்டாவும் தத்தம் நேசக் கட்சிப் படைகளுடன் மாண்ட்டினீயாவுக்கருகில் 418-ஆம் வருஷம் சந்தித்தன. கடும்போர் நடைபெற்றது. ஆர்கோஸ் கட்சிக்குப் பெருந்தோல்வி. ஆத்தீனிய தளபதிகளான லாக்கெஸும் நிக்கோஸ்ட் ராட்டஸும் இறந்துபட்டனர். ஸ்ப்பார்ட்டா, இந்தப் போரில் அடைந்த வெற்றியின் விளைவாக, நிக்கியாஸ் உடன் படிக்கைக்கு முந்தியும் பிந்தியும் இழந்து விட்டிருந்த மதிப்பை மீண்டும் பெற்றது; அதன் குனிந்த தலை சிறிது நிமிர்ந்தது.
மாண்ட்டினீயா யுத்தத்திலிருந்து ஸ்ப்பார்ட்டாவின் கை ஓங்கி வருவதைக் கண்ட ஆர்கோஸ், ஆத்தென்ஸுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, அதனுடன் ஸ்ப்பார்ட்டாவுடன் சேர்ந்து கொண்டது. ஆர்கோஸ் மட்டு மென்ன, மாண்ட்டினீயா, எலீஸ் முதலிய ராஜ்யங்களும் இப்படிச் செய்தன. ஆனால் இந்தக் கூட்டுறவுகள் நிலைத்து நிற்கவில்லை; அடிக்கடி மாறி வந்தன. பொதுவாகவே இந்தக் காலத்தில், பெலொப்பொனேசிய ராஜயங்களின் முறைகள் நீர்க்குமிழி போல் இருந்தன.
மாண்ட்டினீயாவில் ஸ்ப்பார்ட்டாவுக்கு ஏற்பட்ட வெற்றியைக் கண்டு, ஆத்தென்ஸ் பரபரப்படைந்தது. ஆர்கோஸுக்குப் போதிய உதவி அனுப்பி யிருந்தால் இது நிகழ்ந்திராதல்லவா? இதற்குக் காரணமாயிருந்தவன் நிக்கியாஸ் என்று சொல்லி, இவனை நாடு கடத்திவிட ஏற்பாடு செய்தான், யுத்த வெறி கொண்டிருந்த ஜனக் கட்சியின் சார்பாக, ஹைப்பர்போலஸ். இவனுடைய நோக்கம், தனக்குப் போட்டியாக ஜனக்கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த ஆல்ஸிபியாடீஸையும் நிக்கியாஸுடன் அப்புறப்படுத்தி விட வேண்டுமென்பது. இதை முன்னதாகவே அறிந்துகொண்டான் தந்திரசாலியான ஆல்ஸிபியாடீஸ். கட்சி மாறிவிட்டான், நிக்கி யாஸுடன் சேர்ந்து கொண்டான்.
இதன்விளைவாக ஹைப்பர்போலஸே 417-ஆம் வருஷம் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டுவிட்டான். இவன்தான், இந்தத் தேசப்பிரஷ்ட சட்டத்திற்குக் கடைசி பலி! இவனுக்குப் பிறகு, இந்தச் சட்டம் ஏட்டளவோடு நின்றுவிட்டது. பிரஷ்டம் செய்யப் பட்டதும் இவன் ஸாமோஸ் தீவுக்குச் சென்று வசிக்கத் தொடங்கினான். 411-ஆம் வருஷம் அங்கு ஜனக்கட்சிக்கு விரோத மாகப் பணக்காரக் கட்சி யினர் நடத்திய ஒரு புரட்சியில் கொலை யுண்டான். கெடுவான் கேடு நினைப்பான் என்பது இவன் விஷயத்தில் எவ்வளவு உண்மையாயிருந்தது!
ஸ்ப்பார்ட்டா அடைந்த வெற்றியினால் ஆத்தென்ஸில் ஏற்பட்ட பரபரப்பானது, அதன் ஏகாதிபத்திய வெறியைக் கிளறி விட்டது. இதற்குத் தகுந்தாற்போல், ஹைப்பர்போலஸ் போன பிறகு, யுத்த தேவதையின் பூசாரியான ஆல்ஸ்பியாடீஸ் பழைய மாதிரி செல்வாக்குப் பெற்றுக் கொண்டு விட்டான். இவனுடைய ஏற்பாட்டின் பேரில் ஆத்தென்ஸ், எஜீயன் கடலில் தென்கோடி யிலுள்ள மெலோஸ் தீவின் மீது படையெடுத்தது. இந்தத் தீவில் டோரியர்கள் குடியேறிச் சுமார் ஏழுநூறு வருஷ காலமாக அமைதியாகவும் சுதந்திரத்துடனும் வாழ்ந்து வந்தார்கள். பொலெப் பொனேசிய யுத்தத்தில் இவர்கள் எந்தப் பக்கமும் சேர்ந்து கொள்ள வில்லை. தன்னுடைய ஆதிபத்தியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஆத்தென்ஸ், இவர்களுக்குக் கூறிவந்தது. ஆனால் இவர்கள் தனிப் பட வாழ்ந்து கொண்டிருப்பதிலேயே பிரியங் காட்டினார்கள். தாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை; இதனால் தங்களுக்கு யாரும் தீங்கு செய்யப்பட மாட்டார்கள் என்று கருதிவந்தார்கள். தங்களுடைய நன்னடத்தையிலே இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் ஏகாதிபத்திய வெறிபிடித்தவர்கள், நன்ன டத்தைக்கு எங்கே மதிப்புக் கொடுக்கிறார்கள்?
416-ஆம் வருஷம் ஆத்தீனியப் படையொன்று மெலோஸ் தீவைச் சூழ்ந்துகொண்டது. தீவினர் சிறிது காலம் போராடிப் பார்த்தார்கள். முடியவில்லை. பிறகு தாங்கள் நிரபராதிகளென்றும் தங்களால் யாருக்கும் எவ்விதமான தீமையும் ஏற்படவில்லை யென்றும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார்கள். பயனில்லை. ‘எங்களுக்கு அடிமைப்பட்டு விடுங்கள்; இல்லாவிட்டால் அழித்து விடுவோம்’ என்று கூறுகிற மாதிரியாக இருந்தது ஆத்தென்ஸின் தோரணை. வேறு வழியேது? பணிந்துவிட்டார்கள். பணிந் தவர்களின் கதி என்னவாயிற்றென்று நினைக் கிறீர்கள்? வயது வந்த எல்லா ஆண் பிள்ளைகளும் கொல்லப்பட்டு விட்டார்கள்; பெண் களும் குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டார்கள். இவர் களுக்குப் பதில் ஐந்நூறு ஆத்தீனியர்கள் அங்குக் குடியேற்றப் பட்டார்கள். என்ன அநியாயம்! ஆனால் இதற்குக் கைமேல் பலன் கிடைத்துவிட்டது ஆத்தென்ஸுக்கு, சிஸிலி தீவில்.
செருக்கினால் சறுக்கல்
1. சிஸிலியில் போர்
கிரேக்கர்கள் பல இடங்களிலும் குடியேறியதைப் போல் மேற்கே இத்தலி பக்கமும் சென்று குடியேறினார்களென்று முந்திச் சொன்னோமல்லவா இப்படி குடியேறிவர்களுள் டோரியர் பெரும் பான்மையோராகவும், ஐயோனியர் சிறுபான்மையோரா கவும் இருந்தனர். இதே பிரகாரம் டோரியர்கள் ஸ்தாபித்ததுக் கொண்ட ராஜ்யங்கள் அதிக எண்ணிக்கையுடையனவாகவும், எண்ணிக் கைக்குத் தகுந்தபடி பலமுடையனவாகவும், ஐயோனி யர்கள் ஸ்தாபித்துக் கொண்ட ராஜ்யங்கள் எண்ணிக்கையில் குறைந்தன வாகவும் பலவீனமாகவும் இருந்தன. இவ்விருவகை ராஜ்யங்களுக் குள்ளும் அடிக்கடி சில்லரைச் சண்டைகள் நடை பெற்று வந்தன. இன வேற்றுமை தான் காரணம்.
டோரியர்கள் ஸ்தாபித்து ராஜ்யங்களுள் சக்தி வாய்ந்தது சிஸிலி தீவின் தென்கிழக்கிலுள்ள ஸைரக்யூஸ். கி.மு. எட்டாவது நூற்றாண்டில், ஏறக்குறைய 734-ஆம் வருஷம், கொரிந்த்தியாவி லிருந்து ஆர்க்கியாஸ் என்பவனுடைய தலைமையில் வந்த டோரியர்கள் இதனை ஸ்தாபித்தார்கள். இதனால் கொரிந்த்தியா வுக்கும் ஸைரக் யூஸீக்கும் எப்பொழுதும் தாய்க்கும் மகளுக்கும் உள்ள தொடர்பு இருந்து வந்தது. (இந்த ஸைரக்யூஸ் ஸ்தாபிக்கப் பட்ட அதே 734-ஆம் வருஷத்தில்தான், கொரிந்தியாவிலிருந்து வேறு சில டோரியர்கள் கார்ஸைரா தீவுக்குச் சென்று குடி யேறினார்கள்.)
இந்த ஸைரக்யூஸி சரித்திரம் தனி சரித்திரம். இதைப்பற்றி ஏற்கனவே நாம் சிறிது கூறியிருக்கிறோம். இது சர்வாதிகார ஆட்சிக்குப் பெயர் போனது. ஆனால் இந்த ஆட்சியினால் அதிக முன்னேற்றத்தையும் அடைந்தது. செல்வச் செழுமையிலும் கலை வளத்திலும் ஆத்தென்ஸுக்கு அடுத்தபடியாக இதனைக் கூறுவர். இது செல்வாக்குப் பெற்றிருந்தது கொரிந்தியாவுக்குப் பெரிய சாதகமாயிருந்தது. ஸைரக்யூஸைப் போலவே சிஸிலி தீவிலிருந்த இன்னும் பல டோரிய ராஜ்யங்கள் கொரிந்த்தியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு, அதன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்து கொடுத்தன.
ஆத்தென்ஸுக்கும் கொரிந்த்தியாவுக்கும் எப்பொழுதுமே வியபாரப் போட்டி உண்டல்லவா? பெலொப்பொனேசிய யுத்தத்தின் அடிப்படையான காரணங்களுள் இந்த வியாபாரப் போட்டியும் ஒன்று என்பதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்தப் போட்டியைச் சமாளிக்க, இத்தலி பக்கம் சில புதிய பிரதேசங்களைக் காண்பதும், அங்கு ஐயோனியர்கள் ஸ்தாபித்துக் கொண்டுள்ள ராஜ்யங்களின் விசுவாசத்தைப் பெறுவதும், ஆத்தென்ஸுக்கு அவசிய மாயிருந்தன. தெமிஸ்ட்டோக்ளீஸ், இதை நன்கு உணர்ந்திருந்தான்; இதற்கான ஒரு திட்டமும் வகுத்தான். திட்டத்தை நிறைவேற்று வதற்குமுன் அவன் கதி வேறுவிதமாக மாறிவிட்டது.
தெமிஸ்ட்டோக்ளீஸ் வகுத்த திட்டத்தை நிறைவேற்றி வைத்தான் பெரிக்ளீஸ். இத்தலியின் கிழக்குப் பக்கத்தில் தூரி என்னும் பெயரால் ஒரு நகர ராஜ்யம் 443-ஆம் வருஷம் காணப் பட்டதல்லவா, இதைக் காண பெரிக்ளீஸுக்கு முக்கியத் துணைவ னாயிருந்தவன் லாம்ப்போன் என்பவன். நகரத்தை எப்படி நிர்மாணஞ் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொடுத்தவன் ஹிப்போடாமஸ் என்பவன். இவ்வளவெல்லாம் முன் யோசனையுடன் ஏற்பாடு செய்தும், இந்தத் தூரி ராஜ்யம், சிறிது காலத்திற்குள் ஆத்தென்ஸுக்கு நேர் விரோதமாகிவிட்டது. டோரியர்களுடைய ஆதிக்கம் இங்கே வலுத்துவிட்டது.
ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் ஏற்பட்டிருந்த முப்பது வருஷ சமாதான ஒப்பந்தம் முடியுந்தறுவாயில், மகத்தான தொரு யுத்தம் மூளப் போகிறதென்பதை முன்கூட்டியறிந்து, இரண்டு ராஜ்யங்களும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்தனவல்லவா, இந்தக் காலத்தில், ஸ்ப்பார்ட்டா, சிஸிலி தீவிலுள்ள டோரிய ராஜ்யங்களின் ஆதரவை நாடியது. ஆனால் அவைகளிட மிருந்து அதிக ஆதரவு கிடைக்கவில்லை. அவை தங்கள் சொந்த விவகாரங்களில் ஈடுபட்டிருந்தன. ஸ்ப்பார்ட்டா இப்படி ஆதரவு தேடுகிறது என்பதையறிந்த ஆத்தென்ஸ். இத்தலி பக்கமுள்ள ஐயோனிய ராஜ்யங்களுடன் இன்னும் நெருக்கமான உறவு கொண்டு அதன் மூலம் அவைகளின் உதவியைப் பெற வேண்டு மென்று தீர்மானித்தது. இதன் பிரகாரம் 433-ஆம் வருஷம், இத்தலியின் தென்மேற்குக் கோடியிலுள்ள ரேகியம் என்ற ராஜ்யத் துடனும், சிஸிலி தீவின் கிழக்குப் பக்கத்திலுள்ள லியோண்ட்டினி என்ற ராஜயத்துடனும் ஆத்தென்ஸ் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஏட்டளவோடுதான் நின்றது.
பெலொப்பொனேசிய யுத்தம் துவங்கியது. இதன் எதிரொலி, குடியேற்ற ராஜ்யங்களில் கேளாமலிருக்குமா? சிஸிலி தீவிலுள்ள டோரிய ராஜ்யங்களுக்குத் தலைமை வகித்த ஸைரக்யூஸ், ஐயோனிய ராஜ்யங்களை ஆதிக்கங் கொள்ளப் பார்த்தது. ஐயோனிய ராஜ்யங்களின் சுதந்திர வாழ்வு முற்றுப் பெற்றுவிடும் போலிருந்தது. எனவே, 427-ஆம் வருஷம் லியோண்ட்டினி ராஜ்யம், ரேகியம் முதலிய மற்ற ஐயோனிய ராஜ்யங்களின் சம்மதித்தின் பேரில், ஆத்தென்ஸுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பி அதன் உதவியை நாடியது. இந்தத் தூது கோஷ்டிக்குத் தலைமை வகித்தவன், ஏற்கனவே சொல்லப் பெற்ற கார்ஜியஸ் என்ற பிரபல ஸோபிஸ்ட். இவனுடைய வாக்கு வன்மையில் மயங்கி விட்டது ஆத்தீனிய ஜனசபை; லியோண்ட்டினிக்கு உதவியனுப்பத் தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தவன் ஹைப்பர்போலஸ் தான். ஆத்தீனிய ஏகாதிபத்தியம் மேற்குப் பக்கத்திலும் செல்வாக்குப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் அதிக ஊக்கம் காட்டி வந்தான் இவன். இந்தத் தீர்மானப் படி, லாக்கெஸ் என்பவனுடைய தலைமையில் ஒரு படை அனுப்பப் பட்டது. ஆனால் இந்தப் படை ஒன்றையும் சாதிக்கவில்லை. லாக்கெஸின் ஒழுங்கீனந்தான் இதற்குக் காரணம்.
425-ஆம் வருஷம் யூரிமெடோன், ஸோட்போக்ளீஸ் என்ற இருவருடைய தலைமையில் மறுபடியும் ஒரு படை அனுப்பப் பட்டது. இந்தப் படைதான் புயற்காற்று காரணமாக பைலோஸ் துறைமுகத்தில் தங்க நேரிட்டது. டெமாஸ்த்தனீஸ் தலைமையில் ஒரு சிறு படையை இந்தத் துறைமுகத்தில் விட்டுவிட்டு, மேற்படி படையானது, கார்ஸைரா சென்று அங்குப் பணக்காரக் கட்சிக்கும் ஜனக்கட்சிக்கும் ஏற்பட்டிருந்த கலகத்தை ஒருவாறு ஒடுக்கிவிட்டு நேரே சிஸிலி தீவுக்குச் சென்றது. இது செல்வதற்குள் சிஸிலி தீவின் அரசியல் நிலைமை மாறிவிட்டது. ஸைரக்யூஸினுடைய முயற்சியின் பேரில், ஜீலா என்ற இடத்தில் சிஸிலியிலுள்ள எல்லா ராஜ்யங் களின் மகாநாடொன்று 424-ஆம் வருஷம் கூடியது. இதில், சிஸிலியிலுள்ள ராஜ்யங்கள் யாவும் தங்களுக்குள் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்றும், சிஸிலியரல்லாத கிரேக்கர் களை அந்நியர் களாகக் கருதி அவர்களுடைய தலையீட்டை அனுமதிக்கக் கூடா தென்றும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதனால் லியோண்ட்டினி யின் உதவிக்குச் சென்ற ஆத்தீனியப்படைத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. இந்தப் படையைத் திருப்பி அனுப்பிவிடவும், லியோண்ட்டினியைத் தனது ஆதிக்கத்திற்குட் படுத்தவும் ஸைரக்யூஸ் செய்த சூழ்ச்சியே இந்த ஜீலா மகாநாடு என்று பின்னர்த் தெரிந்தது. இதன்படியே 423-ஆம் வருஷம் லியோண்ட் டினி, ஸைரக்யூஸின் ஆசைக்கு இரையாகி விட்டது.
சிஸிலி தீவின் மேற்குப் பக்கத்தில், ஸெகெஸ்ட்டா என்ற ஒரு சிறு ராஜ்யம். இதற்கும் இதன் தெற்கேயுள்ள ஸெலினஸ் என்ற ராஜ் யத்திற்கும் சண்டை மூண்டது. ஸெனினஸ் பக்கம் ஸைரக்யூஸ் சேர்ந்து கொண்டது. பலத்த கையல்லவா? எனவே, 416-ஆம் வருஷம் ஸெகெஸ்ட்டா, ஆத்தென்ஸின் படையுதவி கோரியது; படைச் செலவுகளைத்தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியது.
உதவிசெய்ய உடனே ஒப்புக் கொள்ளவில்லை ஆத்தென்ஸ். ஸெகெஸ்ட்டாவின் பொருள் நிலையை அறிந்து வர ஒரு தூது கோஷ்டியை அனுப்பியது. இந்தத் தூது கோஷ்டிக்கு ஸெகெஸ்ட் டாவில் எவ்வளவு உபசரணை! எத்தனை விருந்துகள்! விருந்துகளில் தங்கத் தட்டுகள்! வெள்ளிப் பாத்திரங்கள்! எல்லாம் ஏமாற்று வித்தை! ஒரு சில பாத்திரங்களே, பல விருந்துகளிலும் மாறி மாறி உயோகிக்கப் பட்டன! இங்ஙனமே அரசாங்க பொக்கிஷத்திலும் கோயில்களிலும் உள்ள பொருள்கள் மிகைப்படுத்திக் காட்டப் பட்டன! இவைகளை யெல்லாம் உண்மையென நம்பினர் தூதினர்! இந்த நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்தும் பொருட்டு, ஸெகெஸ்ட்டியர், தூதினரிடம், அறுபது கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படைக்கு ஒரு மாதச் செலவு அறுபது டாலெண்ட்டுகளாகுமென்று கணக்குச் செய்து, இந்தத் தொகையை முன் பணமாகக் கொடுத்தனர்; கொடுத்து, அறுபது கப்பல்களை உடனே அனுப்பச் செய்யுமாறு வேண்டிக் கொண்டனர்.
தூதினர், இந்த வேண்டுகோளுடன் அறுபது டாலெண்ட்டு களுடனும் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்தனர். வந்து தாங்கள் கண்டதை, இல்லை, இல்லை தங்களுக்குக் காட்டப்பட்டதை அப்படியே கூறினர். இவர்கள் கூறியதைக் கேட்டு, ஜனக்கட்சியினர், சிறப்பாக அக்கட்சியிலுள்ள இளைஞர்கள் ஒரே உற்சாகங் கொண்டனர். ‘உடனே சிஸிலிக்கு’ என்ற கூக்குரலைக் கிளப்பினர். ஜனசபை கூடியது. ஆல்ஸிபியாடீஸ்தான் இருக்கிறானே, ஆத்தென்ஸ், தனது ஏகாதிபத்தியக் காலை மேற்குப் பக்கத்தில் நன்றாக ஊன்றிக் கொள்ள இதுதான் தருணமென்று ஆவேசத் துடன் பேசினான். இவனை எதிர்த்து நிதானவாதியான நிக்கியாஸ், இப்பொழுது சிஸிலிக்குப் படையனுப்புவதனால் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங் களைச் சாவதானமாக எடுத்துக் கூறினான். மெலோஸ் வெற்றியிலே இறுமாந்திருந்த ஜனசபை இவன் கூறியதைக் கேட்கவில்லை. ஆல்ஸிபியாடீஸ் சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஸெகெஸ்ட் டாவுக்கு உதவியனுப்பத் தீர்மானித்தது. சிஸிலியின் உள்நாட்டு நிலைமை ஸைரக்யூஸின் சக்தி முதலியவைகளைப் பற்றிச் சரியான படி தெரிந்து கொள்ளாமலே ஜனசபையானது, இப்படித் தீர்மானித்துவிட்டது. தீர்மானித்ததோடல்லாமல் ஸெகெஸ்ட்டா கேட்ட உதவியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகவும் உதவியனுப்ப நிச்சயித்தது. இன்னும் வேடிக்கை யென்னவென்றால், இந்தப் படையனுப்புக்கு விரோதமாயிருந்த நிக்கியாஸை, படைத்தலைவர் மூவரில் ஒருவனாக நியமித்தது. மற்ற இருவரில் ஒருவன் லமாக்கஸ் என்பவன்; இன் னொருவன் ஆல்ஸிபியாடீஸ். இந்த மூவருடைய தலைமையில் படை புறப்படுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. புறப்படும் நாளும் (416-ஆம் வருஷம் மே மாதம்) குறிக்கப்பட்டுவிட்டது. இந்த நாளுக்கு முந்தி ஒரு துர்ச் சம்பவம் நடைபெற்றது.
ஆத்தென்ஸ் நகரத்திலுள்ள கோயில்களிலும் வீடுகளிலும் முன்பக்கம் ஒரு கற்கம்பம் இருக்கும். இதில் மனிதத் தலை செதுக்கப் பட்டிருக்கும் இதற்கு ஹெர்மெஸ் என்று பெயர். இதனை ஒரு தெய்வமாக வழிபடுவார்கள் கிரேக்கர்கள். இது, முன்வாயிலில் இருப்பது நல்லது என்பது அவர்கள் நம்பிக்கை. இந்தக் கற் சிலைகளில் பெரும்பாலான, ஒரு நாளிரவு மூளியாக்கப்பட்டு விட்டன. என்ன அபசகுனம்! யார் செய்திருக்கக்கூடும் இந்த அநியாயத்தை? ஆல்ஸிபி யாடீஸ் செய்திருப்பானோ? ஜன ஆட்சிக்கு விரோதியல்லவா? இவன்? இப்படி இவனுடைய எதிரிகள் சந்தேகித்தனர்.
இதையறிந்த ஆல்ஸிபியாடீஸ், இது விஷயமாகத் தான் விசாரணைக் குட்படத் தயாராயிருப்பதாகக் கூறினான். ஆனால் இவனுடைய எதிரிகள் விசாரணையைத் தள்ளி வைத்துக் கொள்ளலா மென்றும், உடனே படை புறப்படட்டும் என்றும் கூறினார்கள். படையும், குறித்த நாளில் புறப்பட்டது. மொத்தம் முப்பதினாயிரம் பேரைக் கொண்ட இந்தப் படை கார்ஸைரா வழியாக இத்தலியின் தென் மேற்குக் கோடியிலுள்ள ரேகியம் என்ற ராஜ்யத்தை அடைந்தது. 433-ஆம் வருஷத்துச் சிநேக ஒப்பந்தத்தை அனுசரித்து இதன் ஒத்துழைப்பை எதிர்பார்த்தார்கள் ஆத்தீனியப் படைத்தலைவர்கள். ஆனால் இது, முடியாதென்கிற மாதிரியாகச் சும்மாயிருந்துவிட்டது.
இதற்குப் பிறகு ஸெகெஸ்ட்டாவின் பொருள் பலத்தை எதிர்பார்த்தனர். ஆனால் அதனிடம் அதிகமான பொருள் எதுவும் இல்லையென்றும், முந்தி வந்த தூதினர் ஏமாற்றப்பட்டனரென்றும் தெரிய வந்தன. இனி என்ன செய்வது, எந்தவிதமான நடவடிக்கை எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றிப் படைத் தலைவர்களுக்குள் ஆலோசனை நடைபெற்றது. இவர்கள் ஆத்தென்ஸிலிருந்து புறப்படுகிறபோது எந்தவிதமான குறிக்கோளுடனும் புறப்பட வில்லை. எந்தவிதமான திட்டமும் இவர்களுக்கு இல்லை. இதனால் நட்டாற்றிலே வந்து நிற்பது போன்ற ஒரு நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.
படைத்தலைவர்கள் பலவிதமாக ஆலோசித்துப் பார்த்துக் கடைசியில் சிஸிலியிலுள்ள பல ராஜ்யங்களுடைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு பிறகு ஸைரக்யூஸைத் தாக்குவது என்கிற ஆல்ஸிபியாடீஸின் யோசனையை ஏற்றுக்கொண்டனர். இதன் பிரகாரம் நாக்ஸோஸ், கட்டானா என்ற இரண்டு நகர ராஜ்யங் களின் ஒத்துழைப்பையும் பெற்றனர்.
இந்த நிலைமையில், முந்தித் தள்ளி வைக்கப்பட்ட ஆல்ஸிபி யாடீஸைப் பற்றிய விசாரணையைத் துவங்கப் போவதாகவும், உடனே அவன் புறப்பட்டு வரவேண்டுமென்றும் சொல்லி, ஒரு தாக்கீதுடன் ஆத்தென்ஸிலிருந்து தனிக் கப்பலொன்று வந்தது. ஆல்ஸிபியாடீஸும் ஆட்சேபஞ் சொல்லாமல் புறப்பட்டான். வழியில் தூரி என்னுமிடத்தை யடைந்ததும் அங்கிருந்து எப் படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டான். எங்கே? நேரே ஸ்ப்பார்ட்டாவுக்கு! இவன் தப்பி போன செய்தி ஆத்தென்ஸுக்குத் தெரிந்தது. இவனில்லாமல் விசாரணை நடைபெற்றது. விசாரணை யின் முடிவு இவனுக்கு மரண தண்டனை. இவனுடைய சொத்து சுதந்திரங்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆல்ஸிபியாடீஸ் சென்றதும், நிக்கியாஸ், ஸைரக்யூஸைத் தாக்குவதற் கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான். சில மாதங்கள் கழிந்தன. பின்னர் ஸைரக்யூஸ் படையினருக்குக் கட்டானா பக்கம் போக்குக் காட்டிவிட்டு, தனது கப்பற் படை யுடன் ஸைரக்யூஸ் துறைமுகத்திற்குள் பிரவேசித்து, அங்கு ஓரிடத்தில் முகாம் போட்டுக்கொண்டுவிட்டான். கட்டானா பக்கம் சென்றிருந்த ஸைரக்யூஸ் படை இதையறிந்து திரும்பிவந்து ஆத்தீனியப் படையைத் தாக்கியது. ஆனால் ஆத்தீனியப்படையை அப்புறப் படுத்த முடியவில்லை. நிக்கியாஸுக்கு முதல் வெற்றி! ஆனால் நிக்கியாஸ் இந்த வெற்றியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், குளிர்காலம் வந்துவிட்டதென்று சொல்லிக் கொண்டு தன் படையுடன் கட்டானாவுக்குத் திரும்பிச் சென்று விட்டான்.
குளிர்காலத்தில் ஆத்தீனியர்களும் ஸைரக்யூஸியர்களும் தங்கள் தங்கள் கட்சிக்கு உதவி தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஸைரக்யூஸ், கொரிந்த்தி யாவுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் தூதர் களை அனுப்பி உதவியனுப்புமாறு கேட்டது. ஸ்ப்பார்ட்டா வுக்கு இந்தத் தூதர்கள் வந்தபோது அங்கே ஆல்ஸிபியாடீஸ் இருந்தான். இவன் ஸைரக்யூஸின் வேண்டுகோளை ஆதரித்துப் பேசினான்! தவிர, ஆத்தீனியப்படைத் தலைவர்கள் ஸைரக்யூஸைக் கைப்பற்று வதற்காகப் போட்டிருந்த திட்டங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, உடனே ஸைரக்யூஸுக்கு ஒரு படையை அனுப்ப வேண்டுமென்றும், இந்தப் படைக்குச் சிறந்த ஒரு ஸ்ப்பார்ட்டாப் போர் வீரனே தலைமை வகிக்க வேண்டுமென்றும், இப்படி ஸைரக்யூஸைக் காப்பாற்றுவதோடு அதே சமயத்தில் ஆத்தென்ஸை யும் தாக்க வேண்டுமென்றும், இதற்கு முதற்படியாக அட்டிக்காவின் வடபாகத் திலுள்ள டெஸேலியா என்ற ஊரைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்றும், இப்படிப் பல யோசனைகளைச் சொல்லிக் கொடுத்தான். மற்றும் ஆத்தென்ஸின் ஜன ஆட்சி முறையைப் பலபட தாக்கிப் பேசினான். சுருக்கமாக ஆத்தென்ஸைப் பலவழியிலும் காட்டிக் கொடுத்தான்.
இவன் ஸ்ப்பார்ட்டாவுக்கு வந்ததும் அதன் வாழ்க்கைப் போக்கையே மாற்றிக் கொண்டுவிட்டான். உணவிலும் உடையிலும் ஆடம்பரத்தை நீக்கிவிட்டு, அசல் ஸ்ப்பார்ட்டனைப் போலவே எளிய முறையைக் கடைப்பிடித்தான். ஸ்ப்பார்ட்டாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டான். ஆனால் பெண்ணாசையை மட்டும் இவனால் விடமுடியவில்லை. இது காரணமாக அப்பொழுது ஸ்ப்பார்ட்டாவில் ஆண்டுகொண்டி ருந்த அஜிஸ் மன்னனுடைய கோபத்திற்கும் பின்னர் ஆளானான். இவன் கதை இப்படி இருக்கட்டும்.
ஸைரக்யூஸின் வேண்டுகோள், ஆல்ஸிபியாடீஸின் யோசனை, இவ்விரண்டையும் அனுசரித்து, ஸ்ப்பார்ட்டா, ஜிலிப்பஸ் என்ப வனுடைய கொரிந்த்தியாவும் தலைமையில் ஒரு படையை ஸைரக்யூஸ் பக்கம் அனுப்பியது. ஒரு கடற் படையை அனுப்பியது. ஆனால் ஜிலிப்பஸ் போய்ச் சேருவதற்கு முந்தியே, 414-ஆம் வருஷம் மத்தியில் நிக்கியாஸ், ஸைரக்யூஸை முற்றுகையிடத் தொடங்கி விட்டான். தொடங்கியதும் துறைமுகத்தைச் சேர்ந்த இடங்களை பந்தோபஸ்து செய்தான். ஸைரக்யூஸியரும் எதிர் பந்தோபஸ்து செய்தனர். பந்தோபஸ்து வேலைகளில் ஈடுபட்டிருக்கிற போது இரு தரப்பினருக்கும் அடிக்கடி சண்டைகள் நடைபெற்றன. இந்தச் சண்டை களொன்றில் லமாக்கஸ் கொல்லப்பட்டு விட்டான். நிக்கியாஸ் மட்டும் தனியனானான். இவனும் நோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும் ஆத்தீனியப் படைக்கே வெற்றி கிடைக்கும் போலிருந்தது. ஸைரக்யூஸியரும் தளர்ந்து போய் சரணடையச் சித்தமாயினர்.
இத்தருணத்தில் கொரிந்த்தியக் கடற்படையும், ஜிலிப்பஸ் தலைமையில் ஸ்ப்பார்ட்டப் படையும் வந்து சேர்ந்தன. நிக்கியாஸ், ஸைரக்யூஸைச் சுற்றிச் சரியானபடி பந்தோபஸ்து செய்திருந்தானா யினும், வடக்குப் பக்கத்தில் சிறிது அஜாக்கிரதையாயிருந்து விட்டான். இந்தப் பக்கத்தின் வழியாக ஜிலிப்பஸ், நகரத்திற்குள் நுழைந்தான்; ஸைரக்யூஸ் படைக்கும், தானே தலைமை வகித்து அதற்கு உற்சாக மூட்டினான். இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு நகரத்தைச் சுற்றிச் சுவர்களும் மாற்றுச் சுவர்களுமாக எழுப்பினர்.
உள்ள நிலைமையை விளக்கியும், முற்றுகையைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண வேண்டுமானால் இன்னும் அதிகமான படைகள் வேண்டு மென்பதை வற்புறுத்தியும், தனக்கு உடல் நல மில்லையாதலின் தலைமைப் பொறுப்பினின்று தன்னை விலக்கி விட வேண்டுமென்று கேட்டுக் கொண்டும், நிக்கியாஸ், ஆத்தீனிய ஜன சபைக்கு ஒரு கடிதம் அனுப்பினான். ஜன சபையோ, இவனிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்ததன் காரணமாக இவனைத் தலைமைப் பொறுப்பினின்று விலக்காமல், இவனுக்குத் துணைத் தலைவர் களாக டெமாஸ்த்தனீஸையும் யூரிமெடோனையும் நியமித்து இவர்களுடன் எழுபத்து மூன்று கப்பல்கள் கொண்ட ஒரு படையையும் அனுப்பியது.
இந்தத் துணைப்படை வந்து சேர்வதற்கு முந்தியே ஜிலிப்பஸ், ஆத்தீனியர்களுடைய பாதுகாப்பு ஸ்தலங்களைத் தாக்கி அங்கிருந்த தானியங்கள், யுத்த தளவாடங்கள் முதலியவற்றுடன் அப்படியே கைப்பற்றிக் கொண்டான்; ஒருசிறு கடற்போரும் நடத்தி வெற்றி கண்டான்.
ஆத்தீனியத் துணைப்படை வந்ததும், டெமாஸ்த்தனீஸ், ஸைரக்யூஸியர் கட்டியிருந்த ஒரு பந்தோபஸ்து ஸ்தலத்தைத் தாக்கித் தோல்வியடைந்தான். இதில் இரண்டாயிரம் போர் வீரரையும் இழந்தான். இதனாலும், இது போன்ற இன்னும் சில தோல்வி களாலும் ஆத்தீனியர் பக்கம் பெரிய சோர்வு ஏற்பட்டு விட்டது. எஞ்சிய படைகளுடன் கட்டானாவுக்குப் பின்வாங்கிக் கொண்டு விடவேண்டுமென்று தீர்மானித்தார்கள், ஆத்தீனியப் படைத் தலைவர்கள். அப்படியே பின்வாங்கத் துவங்குகையில் - 413-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் இருபத்தேழாந் தேதி - சந்திர கிரகணம் ஏற்பட்டுவிட்டது. அபசகுனமல்லவா? பின்வாங்குவது தள்ளிப் போடப்பட்டது. வந்தது ஆபத்து. ஜிலிப்பஸ், தன்படையைக் குறுக்கே கொண்டு வந்து நிறுத்தி, ஆத்தீனியப் படை பின்வாங்கிக் கொண்டு செல்ல முடியாதபடி தடுத்துவிட்டான். இந்தக் குறுக்குப் படையை மீறிச்செல்ல வேண்டி இரு தரப்பினருக்கும் இரண்டு தடவை கடற்போர் நடைபெற்றது. இரண்டிலும் ஆத்தீனியர் தோல்வியடைந்தனர். யூரிமெடோன் கொல்லப்பட்டுவிட்டான். பின்னர் தரை வழியாகப் பின்வாங்கிச் செல்ல முயன்றனர் ஆத்தீனியர். ஆனால் வழியில் இவர்களை ஸைரக்யூஸியர் சூழ்ந்து கொண்டு விட்டனர். இனியென்ன? டெமாஸ்த்தனீஸும், நிக்கியாஸும் சரணடைந்தனர். ஜிலிப்பஸ் எவ்வளவு சொல்லியும் கேளாமல் ஸைரக்யூஸியர் இவ்விருவரையும் கொலை செய்து விட்டனர். தப்பிச் சென்றவர்கள் போக சரணடைந்த சுமார் ஏழாயிரம் பேரைக் கைது செய்து ஒரு மலையடிவாரத்திலுள்ள சந்து பொந்துகளில் அடைத்து வைத்தனர். இரவிலே கடுங்குளிர்; பகலிலே கடும் வெய்யில்; போதிய ஆகாரமுமில்லை. இவை காரணமாகப் பலர் இறந்து போயினர். பிழைத்தவரில் பெரும்பாலோர் அடிமைகளாகப் விற்கப்பட்டனர்.
2. பேராசை பெருநஷ்டம்
இந்தச் சிஸிலி தீவுப் போராட்டத்தில் ஆத்தென்ஸ், சிறந்த போர் வீரர்களையும் திறமையான மாலுமிகளையும் ஆயிரக் கணக்கில் பலிகொடுத்தது, சுமார் நூற்றைம்பது கப்பல்கள் வரை பறி கொடுத்தது; பொருள் நஷ்டத்திற்கோ சொல்லத் தேவையில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக, ஸைரக்யூஸ் கடைத் தெருக்களில், ஆத்தீனியர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார் களென்று சொன்னால் அதைக் காட்டினாலும் வேறு என்ன அவமானம் வேண்டும்?
ஏகாதிபத்திய வெறி முற்றிப் போயிருந்ததனாலேயே ஆத்தென்ஸ், இந்தச் சிஸிலி தீவு விவகாரத்தில் தலையிட்டது; அதன் பலனையும் உடனே கண்டது. தங்கள் படையின் தோல்வியை ஆத்தீனியர்கள் முதலில் நம்பவேயில்லை. ‘ஆத்தீனியப் படையாவது, தோல்வியடைவதாவது’ என்றுதான் இறுமாப்புடன் பேசினர். ஒரு நாள் 413-ஆம் வருஷக் கடைசியில் ஒருநாள் - பீரேயஸ் துறைமுகப் பகுதியில் வசித்துக் கொண்டிருந்த ஒரு நாவிதன், நகர்ப் பகுதிக்கு வந்து, ‘சிஸிலி தீவுக்குச் சென்ற ஆத்தீனியப்படை அடியோடு நாசமாய்ப் போய்விட்டது’ என்று கடல் வழியே வந்த சில அந்நியர் சொல்லக் கேட்டதாகத் தெரிவித்தான். பொய் வதந்தியைக் கிளப்பி விடுகிறானென்று சொல்லி அவனைப் பலவித இம்சைகளுக்குட் படுத்தினர் நகரவாசிகள். பின்னர் சிஸிலி தீவிலிருந்து தப்பியவர், ஒருவர் பின்னொருவராகத் திரும்பி வரவே, அவர்கள் மூலம், தோல்வியடைந்தது வாஸ்தவம் என்று தெரிந்து கொண்டனர்; மனம் நொந்தனர். படையனுப்ப ஏற்பாடு செய்தவர்களை நினைத்து ஆத்திரப்பட்டனர். யார்மீது ஆத்திரப்பட்டென்ன? பேராசை பெரு நஷ்டத்தைத்தானே உண்டு பண்ணும்?
இந்த நஷ்டத்தோடு வேறு பல கஷ்டங்களும் உண்டாயின ஆத்தென்ஸுக்கு. ஆல்ஸிபியாடீஸின் யோசனைக்கிணங்க, நிக்கியாஸ் உடன்படிக்கையை ஆத்தென்ஸ் பல தடவை மீறி நடந்து வந்திருக் கிறதென்று காரணங்காட்டி, ஸ்ப்பார்ட்டா, 413-ஆம் வருஷம் மத்தியில் டெஸேலியாவைக் கைப்பற்றிக்கொண்டது. சுற்றுமுற்றும் ஸ்ப்பார்ட்டப் படைகள் காவல் நின்றன. இதனால் வடக்கே யூபியா தீவிலிருந்து தரை வழியாக ஆத்தென்ஸுக்கு உணவுப் பொருள்கள் வந்துகொண்டிருந்தது தடைப்பட்டுவிட்டது. அட்டிக்காவின் பல பகுதிகளிலும் அற்ப சொற்பமாக நடைபெற்று வந்த விவசாயத் தொழில் ஸ்தம்பித்துப் போய்விட்டது. லாரியம் வெள்ளிச் சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெரும்
பாலோர், தங்கள் அடிமைத் தளையை அறுத்துக்கொண்டு, இந்த டெஸேலி யாவில் வந்து அடைக்கலம் புகுந்து கொண்டார் கள். இந்தச் சுரங்கங்களிலிருந்து அரசாங்கத்திற்குக் கிடைத்து வந்த வருமானம் நின்றுவிட்டது.
இப்படி ஒன்றன் மேலொன்றாகப் பல சங்கடங்கள் ஏற்பட்ட தனால் ஆத்தென்ஸ் முதலில் சிறிது சோர்வடைந்தது. ஆனால் வெகு சீக்கிரத்தில் சுதாரித்துக் கொண்டு விட்டது. தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தனக்கு ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட் டிருப்பதை மட்டும் நன்கு உணர்ந்தது. இந்த நெருக்கடியைக் கடக்க வேண்டுமென்ற உறுதியுடன் அரசாங்க நிருவாக விஷயத்திலும், அரசாங்க வருமான வகையிலும் சில சீர்திருத்தங்களைச் செய்தது.
இதுகாறும், அரசாங்க நிர்வாகம் ஐந்நூறு பேர் கொண்ட பூலி சபை வசமிருந்ததல்லவா, அது மாற்றப்பட்டு, பத்து பேர் கொண்ட புரோபூலி என்ற ஒரு சிறுசபையிடம் ஒப்படைக்கப் பட்டது. அதாவது ஜன ஆட்சியனாது ஒருசிலர் ஆட்சியாக மாறியது. நெருக்கடியான சமயங்களில் துரிதமாகக் காரியங்கள் நடைபெற வேண்டுமென்பதற்காக இந்த ஏற்பாடு. மற்றும், தனது ஏகாதி பத்தியத்திற்குட்பட்ட ராஜ்யங்களிடமிருந்து இதுகாறும் கப்பல் வசூலித்துக் கொண்டிருந்ததல்லவா, அதனை வேண்டா மென்று சொல்லி நிறுத்தி விட்டது. அதற்குப் பதிலாக, ஏகாதிபத் தியத்திற்குள் எந்தத் துறைமுகத்திலிருந்து எந்தத் துறைமுகத்திற்குச் சரக்குகள் ஏற்றுமதியானாலும், இறக்குமதியானலும், நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் வரி செலுத்த வேண்டுமென்று ஏற்பாடு செய்தது. மற்றத் துறைமுகங்களைப்போல் பீரேயஸ் துறைமுகத்திலும் இந்த வரி வசூலிக்கப்பட வேண்டுமென்று நிர்ணயித்தது. இதனால், தனது வருமானம் அதிகமாவதோடு, கப்பஞ் செலுத்தி வந்த ராஜ்யங்களில், கப்பஞ் செலுத்தி வந்ததன் காரணமாக நிலவி வந்த அதிருப்தியும் குறையுமென்று எதிர்பார்த்தது. இன்னும் மற்ற துறைமுகங்களைப் போல் பீரேயஸ் துறைமுகத்திலும் ஏற்றுமதி இறக்குமதி வரி வசூலிக்கப்படுமானால் ஏகாதிபத்தியத்திற்குட்பட்ட ராஜ்யங்கள், தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லையென்பதை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு தன்னிடம் அபிமானத்துடன் நடந்து கொள்ளு மென்று கருதியது. ஆனால் இவையெல்லாம், ஆத்தென்ஸ் எதிர் பார்த்ததற்கும் கருதியதற்கும் நேர் விரோதமாக, ஆகாயத்திலே கட்டப் பெற்ற கோட்டைகளாயின. அதன் வீழ்ச்சி வெகு தொலைவி லில்லையென்று கருதும்படியாகச் சில சம்பவங்கள் நடைபெற்றன.
பெலொப்பொனேசிய யுத்தம்
(மூன்றாவது பகுதி கி.மு. 415-404)
1. ஆத்தென்ஸில் ஆட்சி மாற்றம்
சிஸிலியில் ஆத்தென்ஸ் அடைந்த அவமானம் ஹெல்லாஸ் முழுவதிலும் வெகு வேகமாகப் பரவிவிட்டது. அதன் ஆதிக்கத்தில் பிரமை கொண்டிருக்கும் ராஜ்யங்கள், அதன் பலவீனத்தை ஒருவாறு அறிந்து கொண்டன. இனி அதனைத் தலையெடுக்க வொட்டாத படி செய்துவிட வேண்டுமென்று கங்கணங் கட்டிக் கொண்டன. அதற்கு விரோதமாகக் கிளம்பின. ஸ்ப்பார்ட்டாவுக்கு இது நல்ல சமய மல்லவா? கலகத்திற்குக் கிளம்பிய ராஜ்யங்களுக்கு ஆதரவு கொடுத்தது.
இந்தச் சமயத்தில் பாரசீக ராஜ்யமும் ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கிளம்பியது. சின்ன ஆசியப் பிரதேசங்களை ஆத்தென்ஸின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துப் பழைய தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருவதற்கு, ஆத்தென்ஸ் பலவீனப் பட்டிருக்கிற, கிரேக்க ராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று பிணக் குற்றிருக்க இந்தத் தருணத்தைக் காட்டிலும் வேறு தருணம் தனக்கு எங்கே வாய்க்கப் போகிறதென்று கருதி, ஆத்தென்ஸுக்கு விரோத மான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது. இந்தக் காலத்தில் பாரசீகத்தை ஆண்ட மன்னன் இரண்டாவது டேரியஸ் (ஆண்டது 424 முதல் 405 வரை) என்பவன். இவன், சின்ன ஆசியாவின் மேற்குப் பகுதியிலும், வடக்கே ஹெல்லெஸ்ப் பாண்ட்டைச் சேர்ந்த பிரிஜியா பிரதேசத்திலுமுள்ள ராஜ்யங்கள், நீண்டகாலமாக அதாவது அந்த ராஜ்யங்கள் ஆத்தென்ஸின் ஆதிக்கத்திற்குட்பட ஆரம்பித்ததிலிருந்து ஏறக்குறைய 479-ஆம் வருஷத்திலிருந்து- தனக்குக் கப்பஞ் செலுத்தாமலிருந்து வந்திருக்கின்றது என்றும், ஆதலின் அவற்றினிடமிருந்து அந்தப் பாக்கி பூராவையும் நாளது வரை வசூலித்து அனுப்புமாறும் மேற்படி பிரதேசங்களில், தன்னுடைய அதிகாரப் பிரதிநிதிகளாக முறையே இருந்து வந்த டிஸ்ஸா பெர்னீஸ் (ஸார்டிஸைத் தலைநகராகக் கொண்டிருந்த சின்ன ஆசியப் பிரதேசத்தின் அதிகாரி) என்பவனுக்கும் பார்ன பாஸஸ் (பிரிஜியா பிரதேசத்தின் அதிகாரி) என்பவனுக்கும் உத்தரவு பிறப்பித்தான். ஆனால் இவ்விருக்கும் மேற்படி நிலுவைகளை வசூலிக்கப் போதிய தைரியமில்லை. இதற்காக ஸ்ப்பார்ட்டாவின் துணையை நாடினார்கள். ஸ்ப்பார்ட்டாவும் தன் சகோதர கிரேக்க ராஜ்யத்திற்கு -ஆத்தென்ஸுக்கு - விரோதமாக, அந்நிய பாரசீக ராஜ்யத்திற்கு உதவி செய்ய முன்வந்தது. இந்த வெட்கக்கேடான காரியத்திற்கு உடந்தையாயிருந்தவன் ஆல்ஸிபியாடீஸ்!
412-ஆம் வருஷம் கியோஸ் என்ன, அதன் கிழக்குப் பக்கத்தில் சின்ன ஆசியாவைச் சேர்ந்த எரீத்ரே என்ன, மிலீட்டஸ் என்ன, இப்படி ஒன்றன் பின்னொன்றாகப் பல ராஜ்யங்கள், ஆத்தென்ஸின் ஆதிக்கத்தி லிருந்து விடுதலை பெறும் பொருட்டுக் கலகத்திற்குக் கிளம்பின. ஸ்ப்பார்ட்டாவும் பாரசீகமும் இவைகளுக்கு ஆதரவு அளித்தன. ஆத்தென்ஸ், இந்தப் பலமுக எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி, முந்தி ஆயிரம் டாலெண்ட்டுகளை, யுத்தத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்படுகிறபோது உபயோகமாகுமென்ற உத்தேசத்துடன் ஒதுக்கி வைத்திருந்ததல்லவா, அதனை எடுத்துச் செலவழிக்கத் தீர்மானித்தது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு கடற்படையைத் தயாரித்து, கலகம் செய்த பிரதேசங்களுக்கு அனுப்பியது. இந்தப் படை, ஸாமோஸ் தீவை, தனது தலைமை ஸ்தானமாக வைத்துக்கொண்டு, கலகப் பிரதேசங்களைத் தாக்கிக் சில நஷ்டங்களை உண்டு பண்ணியது. ஸாமோஸ் தீவு ஒன்றுதான், இந்தப் பகுதியில், ஏறக்குறைய யுத்தம் பூராவும் ஆத்தென்ஸிடம் விசுவாசத்துடன் இருந்து வந்தது.
மிலீட்டஸ், கலகத்திற்குக் கிளம்பியதை ஆதாரமாகக் கொண்டு ஆத்தென்ஸுக்கு விரோதமாக ஸ்ப்பார்ட்டாவும் பாரசீகமும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதற்கு ‘மிலீட்டஸ் ஒப்பந்தம், என்று பெயர். இந்த ஒப்பந்தத்தில், சின்ன ஆசியப் பிரதேசத்தில் 479-ஆம் வருஷத்திலிருந்து ஆத்தென்ஸின் ஆதீனத்திற் குட்பட்டிருக்கும் எல்லா ராஜ்யங்களும் பாரசீகத்தையே சேர்ந்தவையென்பதை ஸ்ப்பார்ட்டா ஒப்புக்கொள்கிறதென்றும், இந்த ராஜ்யங்களிட மிருந்து ஆத்தென்ஸ் கப்பல் வசூலித்துக் கொண்டிருந்ததைத் தடுத்து நிறுத்த, பாரசீகத்திற்கு ஸ்ப்பார்ட்டா உதவி செய்ய வேண்டுமென்றும், பாரசீகமும் ஸ்ப்பார்ட்டாவும் சேர்ந்துகொண்டு, ஆத்தென்ஸுக்கு விரோதமாக யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் காணப்பட்டன. இதற்குப் பிறகு, ஸ்ப்பார்ட்டாவுக்கும் பாரசீகத் திற்கும் அதன் சகாக்களுக்கும் ஆகிற யுத்தச் செலவுகளை, தான் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதும் பாரசீகம்.
இந்த ஒப்பந்தங்களை முன்னிட்டு ஆல்ஸிபியாடீஸ் மிலீட்டஸில் முகாம் செய்துகொண்டிருந்தான். இவனுக்குச் செல்வாக்கு குறைந்து
கொண்டு வந்தது. அஜிஸ் மன்னனுடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டு விட்டதன் காரணமாக, இவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தது. பெலொப்பொனேசிய முகாமிலிருந்து தப்பிச் சென்று, பாரசீகப் பிரதிநிதியான டிஸ்ஸா பெர்னீஸுடன் சேர்ந்து கொண்டான். ஆத்தென்ஸுக்கு மறுபடியும் போய்ச் சேர வேண்டுமென்று இவனுக்கு ஆசை. அங்கே ஜனக்கட்சி அதிகாரத்தி லிருக்கிற வரை இவன் அங்குப் போக முடியாது. எனவே அந்தக் கட்சியை வீழ்த்தி பணக்காரக் கட்சியை அதிகாரத்திலிருக்கச் செய்ய, சூழ்ச்சிகள் பல செய்தான். இவற்றில் ஓரளவு வெற்றியும் பெற்றான்.
ஆத்தென்ஸில், பணக்காரக்கட்சியினர் எப்பொழுதுமே யுத்தத்திற்கு விரோதமாயிருந்து வந்தனர் என்பது வாசகர்களுக்குத் தெரியும். சிஸிலி தோல்விக்குப் பிறகு இவர்கள் சிறிது செல்வாக்குப் பெற்றனர் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் 411-ஆம் வருஷம், முதலில் ஜனக்கட்சிக்கு விரோதமாக ஒரு புரட்சி நடத்தி, வெற்றி யடைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். கைப்பற்றிக் கொண்டதும் முதற்காரியமாக, ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸம் பேச தூதுவிட்டனர். ஆனால் ஸ்ப்பார்ட்டா சமரஸத்திற்கு வரவில்லை. இவர்கள் இங்ஙனம் ஒரு பக்கம் ஸ்ப்பார்ட்டாவுடன் சமரஸம் பேசிக்கொண்டு மற்றொரு பக்கம் ஆத்தென்ஸில் ஒருவித பயங்கர ஆட்சி நடத்தினர். ஜனக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் பலரைக் கொலை செய்தனர். அரசாங்க நிருவாகத்தைத் தற்காலிகமாக நடத்தினர். நிரந்தரமான ஓர் அரசியல் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அதற்குள் இவர்களுடைய ஆட்சியே முடிந்து விட்டது. எப்படியென்று பார்ப்போம்.
இந்தப் பணக்காரக் கட்சியினர், புரட்சி நடத்தி வெற்றி பெற்ற தற்குக் காரணம் அப்பொழுது ஆத்தென்ஸில் ஜனக் கட்சியைச் சேர்ந்தவர் பெரும் பாலோராக இல்லாமலிருந்ததுதான். ஜனக்கட்சியைச் சேர்ந்தவர் யார்? போர் வீரர்கள், கப்பல் படையைச் சேர்ந்த மாலுமிகள் முதலாயினோர். இவர்கள் ஸாமோஸ் தீவுக்குச் சென்றிருந்தனர். ஆத்தென்ஸுக்கு விரோதமாக, கியோஸ் முதலிய ராஜ்யங்களில் எழுந்த கலகங்களை அடக்க ஆத்தீனியப் படையொன்று சென்றதென்றும், இந்தப் படை ஸாமோஸ் தீவைத் தலைமை ஸ்தானமாகக் கொண்டி ருந்ததென்றும் ஏற்கனவே சொல்லியிருக்கிறோ மல்லவா? தாங்கள், ஆத்தென்ஸைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிற போது, தங்களுக்கு விரேதமாகப் பணக்காரக் கட்சியினர் அங்குப் புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது இவர்களுக்கு ஆத்திரமாயிருந்தது; இந்தச் சமயத்தில் ஸாமோஸ் தீவிலும், பணக்காரக் கட்சியினர் புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர். இந்த முயற்சியின் போதுதான், ஆத்தென்ஸிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டிருந்த ஹைப்பர் போலஸ் செய்யப்பட்டான். ஆனால் இவர்களுடைய - ஸாமோஸ் பணக்காரக் கட்சியினருடைய புரட்சி முயற்சி பலிக்க வில்லை. அங்குள்ள ஜனக்கட்சியினரும் ஆத்தென்ஸிலிருந்து வந்திருந்த போர் வீரர் முதலியவர் அடங்கிய ஜனக்கட்சியினரும் ஒன்றுசேர்ந்து கொண்டதுதான் இதற்குக் காரணம்.
ஒன்று சேர்ந்த இந்த ஜனக்கட்சியினர், ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாகத் தொடர்ந்து போரை நடத்துவதென்றும், ஆத் தென்ஸில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ள பணக்காரக் கட்சியை வீழ்த்திவிடுவதென்றும் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்; யுத்த முஸ்தீப்புகளையும் செய்தனர். படைத் தலைவர்களையும் நியமித்தனர். இவர்களிலே ஒருவன் ஆல்ஸிபியாடீஸ்!
ஆல்ஸிபியாடீஸ், டிஸ்ஸாபெர்னீஸுடன் போய்ச் சேர்ந்து கொண்டானல்லவா, அவனை - அந்தப் பாரசீக அதிகாரியை - ஸ்ப்பார்ட்டா பக்கத்திலிருந்து ஆத்தென்ஸ் பக்கம் திருப்ப முயன்றான். முடியவில்லை. ஸாமாஸ் தீவிலேயே பணக்காரக் கட்சியைப் புரட்சிக்குத் தூண்டிவிட்டான். அதுவும் பலிக்கவில்லை. கடைசியில் ஜனக்கட்சியுடன் சேர்ந்துகொண்டான். ஜனக்கட்சி யினரும், பணக்காரக் கட்சியினரை வீழ்த்திவிட வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் இவனிடம் பொறுப்பை ஒப்புவித்தனர்.
ஸாமோஸ் தீவில் ஜனக்கட்சியினர் யுத்த முஸ்தீப்புகள் செய்து வருவதையறிந்த ஆத்தென்ஸில் அதிகாரத்திலிருந்த பணக்காரக் கட்சியினர், ஸ்ப்பார்ட்டாவின் உதவியை எதிர்பார்த்து நின்றனர். ஸ்ப்பார்ட்டப் படையை ஆத்தென்ஸுக்குள் நுழைய விடுவதற்கான ஏற்பாடுகளையும் மறைமுகமாகச் செய்தனர். என்ன கேவலம்! இந்தத் துரோகச் செயல், இவர்களுக்குள்ளேயே சிலருக்குச் சகிக்கவில்லை; புரட்சி செய்தனர். அதிகாரத்திலிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்; அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். பணக்காரக் கட்சியின் ஆட்சி நான்குமாத வாழ்வோடு முற்றுப் பெற்றுவிட்டது. இந்த ஆட்சி நடத்தியவரில் பலரும் தப்பியோடி விட்டனர்.
இங்ஙனம் பணக்காரக் கட்சிக்கு விரோதமாக எதிர் புரட்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களும் பணக்காரக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் நிதானவாதிகள். அதாவது ஸ்ப்பார்ட்டாவுக்குப் பணிய மறுத்தவர்கள்; ஜனக்கட்சியினரோடு இணங்கிப் போக விரும்பியவர்கள். இவர்களுக்குத் தலைவனாயிருந் தவன் தெராமெனீஸ் என்பவன், இவன் முந்தி பணக்காரக் கட்சியின் நான்கு மாத ஆட்சி காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட நானூற்றுவர் சபையைக் கலைத்துவிட்டு, அதற்குப் பதில் ஐயாயிரம் பேர் கொண்ட ஒரு சபை அமைவதற்கு ஏற்பாடுகள் செய்தான். இதன் மூலம் ஜனக் கட்சியின் அமிசமும் ஒருசிலர் ஆட்சி அமிசமும் சேர்ந்த ஒரு கலப்பு ஆட்சிமுறை நிறுவப்பெற்றது. நிதானப் போக்குடைய ஜன ஆட்சி முறையென்பர் அரசியல் அறிஞர் இதனை. துஸிடி டீஸும், அரிஸ்ட்டாட்டலும், இந்த கலப்பு ஆட்சியை வெகுவாகச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. முந்திய ஆட்சியைப்போல், சில மாதகால வாழ்வோடு முடிந்துவிட்டது. இந்த ஆட்சிக் காலத்தில், ஜனக் கட்சியின் செல்வாக்கு சிறிது ஒடுங்கியே இருந்ததென்று சொல்ல வேண்டும்.
ஸாமோஸ் தீவில் தங்கியிருந்த ஆத்தீனியக் கடற்படை சும்மாயிருக்க வில்லை. ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கிளம்பிய ராஜ்யங்களை ஒன்றன் பின்னொன்றாக அடக்கி ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டது. வடக்கே ஹெல்லெஸ்ப்பாண்ட்டில் ஆத்தென்ஸின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த சிஜிக்கஸ் என்ற ஒரு சிறு ராஜ்யம்411-ஆம் வருஷம் கலகத்திற்குக் கிளம்பியது. இதனை ஒடுக்கச் சென்றது ஆத்தீனியக் கடற்படை. ஒடுக்கியும் விட்டது. இப்படி ஒடுக்கப்பட்ட சிஜிக்கஸைக் காப்பாற்ற முன்வந்தது ஸ்ப்பார்ட்டா. இதன் விளைவாக ஆத்தீனியக் கடற்படைக்கும் ஸ்ப்பார்ட்டக் கடற்படைக்கும் 410-ஆம் வருஷம், மேற்படி சிஜிக்கஸிலேயே ஒரு யுத்தம் நடை பெற்றது. ஸ்ப்பார்ட்டக் கடற்படை அடியோடு நாசமாகி விட்டது. ஆத்தீனியப் படையின் வெற்றியானது ஆத்தென்ஸில் ஒடுங்கியிருந்த ஜனக்கட்சியை மெதுமெதுவாகத் தலைதூக்கச் செய்தது. சிறிது காலத்திற்குள் இந்தக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. தெராமெனீஸின் கலப்பு ஆட்சி மாறி பழைய ஜன ஆட்சி ஸ்தாபித மாயிற்று.
ஜனக்கட்சிக்கு அப்பொழுது தலைவர்களாயிருந்தவர்களுடன் ஒருவன் கிளியோபோன் என்பவன். இவன், கிளியோன் ஹைப்பர் போலஸ் இவர்களைப் போல் தொழில் செய்யும் வர்க்கத்தைச் சேர்ந்தவன். யாழ் போன்றதோர் இசைக் கருவியைச் செய்து கொடுக்கும் தொழிலை நடத்திவந்தான். அவ்விருவரையும் போல் ஏகாதிபத்தியப் பல்லவியைப் பாடிப்பாடி ஜனக்கட்சியைப் பழைய படித் தலைதூக்கச் செய்தான்; அதில் செல்வாக்கும் பெற்றான்.
சிஜிக்கஸில் ஏற்பட்ட தோல்வியினால் ஸ்ப்பார்ட்டா மிகவும் தளர்ச்சி யடைந்து ஆத்தென்ஸிடம் சமரஸம் கோரியது. ஆத்தென்ஸோ இதற்குக் காரணமாயிருந்தவன் கிளியோபோன் தான். இவனுடைய முயற்சியின் பேரில் ஆத்தென்ஸின் எதிர்ப்புச் சக்தி வரவர அதிகப்பட்டு வந்தது; பண நிலைமையும் ஒழுங்குபட்டு வந்தது. இதற்குத் தகுந்தாற்போல் ஆத்தீனியக் கடற்படைக்கும் வெற்றி மேல் வெற்றி கிடைத்து வந்தது. தாஸோஸ் என்ன, ஸெலிம்பிரியா என்ன, சால்ஸிடோன் என்ன, பிஸண்ட்டியம் என்ன, இவை யாவும் பழையபடி ஆத்தீனிய ஆதிக்கத்துக்குட்படுத்தப் பட்டன. பிஸண்ட்டியம் வசப்பட்டதால், பாஸ்போரஸ் ஜலசந்தி வழியாக வடக்கேயிருந்து ஆத்தென்ஸுக்கு உணவுப் பொருள்கள் ஒழுங்காகக் கிடைப்பதற்கு ஏதுவுண்டாயிற்று. இந்த வெற்றிகளை யெல்லாம் வாங்கிக் கொடுத்தவன் ஆல்ஸிபியாடீஸே. மேற்படி பிரதேசங்களைத் தவிர, தெற்கே ஆண்ட்ரோஸ் தீவு முதலிய சில பிரதேசங்களையும் பழையபடி ஆத்தென்ஸின் ஆதிக்கத்துக்குட் படுத்தினான் இவன். 410-ஆம் வருஷத்திலிருந்து 407-ஆம் வருஷம் வரை நடைபெற்ற சம்பவங்கள் இவை.
இங்ஙனம் ஆத்தென்ஸ் அநேக இடங்களில் பழையபடி தனது ஆதிக்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு வந்ததாயினும் சில இடங்களை இழந்தும் விட்டது. நிஸீயா துறைமுகத்தை, மெகாரா கைப்பற்றிக் கொண்டது. பைலோஸ் துறைமுகம் ஸ்ப்பார்ட்டா வசம் போய்ச் சேர்ந்தது. ஆனால் ஆத்தென்ஸ் இந்த நஷ்டத்தைப் பொருட்படுத்த வில்லை.
ஜனக்கட்சி அரசாங்கத்தின் அழைப்புக்கிணங்க ஆல்ஸிபி யாடீஸ், 407-ஆம் வருஷம், அதாவது பிரஷ்டம் செய்யப்பட்ட எட்டாவது வருஷம், ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்து சேர்ந்தான். ஜனங்கள் இவனை அதி உற்சாகத்துடன் வரவேற்றார்கள். இவனுடைய துரோகத்தை மறந்துவிட்டுப் போர்த் திறமையைப் போற்றினார்கள். பறிமுதல் செய்யப்பட்டிருந்த இவனுடைய சொத்து முதலிய யாவும் இவனுக்குத் திருப்பிக் கொடுக்கப் பட்டன. பிரதம படைத்தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான சகல அதிகாரங்களும் இவனுக்கு அளிக்கப்பட்டன. இந்த அதிகாரங்களுடன், புரட்சி செய்த ராஜ்யங்களைத் திரும்பவும் ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குக் கொண்டு வரும் பொருட்டு ஸாமோஸ் தீவை நோக்கிச் சென்றான். இவனுடன் நூறு கப்பல்கள் கொண்ட ஒரு பெரும்படை சென்றது.
இந்தப் படையின் பெரும்பகுதியை நோட்டியம் என்ற துறைமுகத்தில், தன்னுடன் உதவிப் படைத் தலைவனாக வந்த அண்ட்டியோக்கஸ் என்பவன் தலைமையில் இருக்கச் செய்து, எவ்விதத்திலும் போரில் தலையிட்டுக் கொள்ளக்கூடாதென்று கண்டிப்பான உத்தரவிட்டு, ஒரு சிறுபடையுடன் போஸீயா என்ற இடத்திற்குச் சென்றான் ஆல்ஸிபியாடீஸ். இவன் சென்றது, தனது படைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டியிருந்த சம்பளத்திற்கு எங்ஙனமாவது பணம் திரட்டிக் கொண்டுவர வேண்டுமென்பதற்குத் தான். ஆனால் இதுவே இவனுக்கு வினையாகி விட்டது.
நோட்டியம் துறைமுகத்திற்குச் சமீபத்தில் ஸ்ப்பார்ட்டக் கடற்படை யொன்று லைஸாந்தர் என்பவனுடைய தலைமையில் தங்கியிருந்தது. அண்ட்டியோக்கஸ் தனக்கிடப் பெற்ற உத்தரவை மீறி, புகழுக்கு ஆசைப்பட்டோ, என்னவோ, மேற்படி கடற் படையைச் சண்டைக்கிழுத்தான். லைஸாந்தர் சும்மா விடுவானோ? கடும்போர் நடைபெற்றது. ஆத்தீனியப் படைக்குத் தோல்வி. அண்ட்டியோக்கஸ் கொல்லப்பட்டு விட்டான்.
இந்தச் செய்தி ஆத்தென்ஸுக்கு எட்டியது. ஆல்ஸிபியாடீஸ் எப்படி அண்ட்டியோக்கஸ் வசம் படைப் பொறுப்பை ஒப்புவித்து விட்டுப் போகலாமென்ற கேள்வி பிறந்தது. இவன்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. தெரிந்ததும், ஹெல்லெஸ்ப்பாண்டைச் சேர்ந்த கெர்ஸொனிஸஸ் பிரதேசத்தில் ஏற்கனவே தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஓரிடத்திற்குச் சென்று விட்டான்.
ஆல்ஸிபியாடீஸுக்குப் பதில் கோனோன் என்பவன் படைத் தலைவனாக நியமிக்கப்பட்டான். இப்படியே ஸ்ப்பார்ட்டப் படைக்கும் லைஸாந்தருக்குப் பதில் கால்லிக்ராட்டிடாஸ் என்பவன் நியமிக்கப்பட்டான். இவ்விரு தரப்புப் படைகளுக்கும் மிட்டிலீனிக் கருகில் ஒரு கடற்போர் நடைபெற்றது. கோனோன் தோல்வி யுற்றான். இச்செய்தி கேட்டதும் ஆத்தென்ஸில் ஒரே பரபரப்பு. அதன் கப்பற்படை பலம் மிகவும் குறைந்து விட்டது. இந்தக் குறையைப் பூர்த்தி செய்ய வேண்டிய புதிய கப்பல்கள் வெகு துரிதமாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காகக் கோயில் உண்டி களிலிருந்த பணங்கள் கூட எடுத்துக்கொள்ளப்பட்டன. ஏகாதிபத் தியத்தைக் காப்பாற்ற எல்லாவித தியாகங்களுக்கும் சித்தமாயி ருந்தார்கள் ஆத்தீனியர்கள். இதுகாறும் பிரஜா உரிமையின்றியிருந்த அந்நியர் களும் அடிமைகளும் பிரஜா உரிமை அளிக்கப் பெற்ற ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
இப்படி அவசரம் அவரமாகத் தயாரித்து அனுப்பப்பட்ட ஆத்தீனியப் படைக்கும், கால்லிக்ராட்டிடாஸ் தலைமையிலிருந்த ஸ்ப்பார்ட்டப் படைக்கும் லெஸ்போஸ் தீவுக்கும் தென் கிழக்கிலுள்ள அர்ஜினூஸி தீவுத் தொகுதியண்டை ஒரு கடல் யுத்தம் 406-ஆம் வருஷம் நடைபெற்றது. ஸ்ப்பார்ட்டப் படை தோல்வி யுற்றது. அதன் எழுபது கப்பல்கள் நாசமாயின. கால்லிக்ராட்டிடாஸ் மடிந்து போனான்.
ஆத்தீனியப்படை வெற்றியடைந்த தென்றாலும் அதன் இருபத்தைந்து கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. இவற்றி லிருந்த மாலுமிகள் முதலாயினோரை மீட்கவும், இறந்து போனவர் களைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு வரவும், தெராமெனீஸ் திராஸிபூலஸ் ஆகிய இருவர் தலைமையில் நாற்பத்தேழு கப்பல்கள் அனுப்பப்பட்டன. ஆனால் திடீரென்று ஒரு புயற்காற்றெடுத்தது. இதனால் நிவாரண வேலை தடைப்பட்டு விட்டது. மேற்சொன்ன இரண்டு படைத் தலைவர்களும் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்களென்று சொல்லி, விசாரணைக்காக ஆத்தென் ஸுக்கு வரவழைக்கப்பட்டார்கள். ஜனசபை முன்னர் விசாரணை நடை பெற்றது. கடைசியில் அர்ஜினூஸி போரில் தலைமை வகித்த தளபதிகள் எட்டுப் பேருமே குற்றவாளிகளென்று தீர்ப்பளிக்கப் பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை உடனே ஆறுபேர் விஷயத்தில் நிறைவேற்றப்பட்டும் விட்டது. மற்ற இருவர் விசாரணைக்கே வரவில்லை. சிறிது காலங்கழித்து ஜன சபை தன்னுடைய இந்தச் செயலுக்கு மிகவும் வருந்தியது. மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று யாரார் வற்புறுத்திப் பேசினார்களோ அவர்களெல்லோரையும் மரண தண்டனைக் குட்படுத்தி விட்டது! இந்த அர்ஜினூஸி போரில் தோல்வி ஏற்பட்டதனால் மனமுடைந்து போன ஸ்ப்பார்ட்டா, மறுபடியும் ஆத்தென்ஸிடம் சமாதானம் கோரியது. ஆனால் ஆத்தென்ஸ் நிரா கரித்துவிட்டது. இப்பொழுதும் கிளியோபோன்தான் காரணம். இந்தக் கோரிக்கைக்கு ஆத்தென்ஸ் இணங்கியிருந்தால் கிரீஸின் சரித்திரப் போக்கே வேறுவிதமாக மாறியிருக்கும் ஆனால்? ஒரு தேசத்தினுடைய சரித்திரத்தில் எத்தனையோ ஆனால் கட்டங் களைச் சந்திக்கிறோமல்லவா?
சமாதான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதனால், ஸ்ப்பார்ட்டா, மறுபடியும் ஒரு கடற்படையைத் தயாரித்து, இதற்குப் பெயரளவில் ஒரு தலைவனை நியமித்துவிட்டு, ஆனால் உண்மையில் இதனை நடத்திச் செல்லும் பொறுப்பை முந்திய மந்திரி லைஸாந்தர் ஒப்புவித்தது. ஏனென்றால் ஸ்ப்பார்ட்டச் சட்டப்படி ஒருமுறை கடற்படைக்குத் தலைமை வகித்தவன் மறுமுறை தலைமை வகிக்ககூடாது. லைஸாந்தர் பல இடங்களைச் சுற்றிக் கொண்டு கடைசியில் ஹெல்லெஸ்ப்பாண்டைப் போய டைந்து, அங்கு லாம்ப்ஸாக்கஸ் என்னும் ஊரைக் கைப்பற்றி அதில் முகாம் போட்டுக் கொண்டான்.
இதையறிந்த ஆத்தென்ஸுக்கு, ஹெல்லெஸ்ப்பாண்ட் வழியாகத் தனக்கு உணவுப் பொருள்கள் வருவது எங்கே தடைப் பட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. உடனே நூற் றெண்பது கப்பல்கள் கொண்ட ஒரு கப்பற்படையை அங்கு அனுப்பியது. இந்தப் படையை நடத்திச் செல்ல நியமிக்கப் பட்டவர்கள் போதிய யுத்த அனுபவமில்லாதவர்கள். அனுபவம் நிறைந்தவர்கள், அர்ஜினூஸி யுத்தத்தின் விளைவாக மரணத்திற்குட் படுத்தப்பட்டுவிட்டார்களே? இதனுடைய பலனை உடனே கண்டது ஆத்தென்ஸ். ஆத்தீனியக் கடற்படை, மேற்சொன்ன லாம்ப்ஸாக்கஸுக்கருகிலுள்ள ஈகோஸ்ப்பொட்டாமி என்ற இடத்தில் சென்று முகாம் போட்டுக் கொண்டது. இது மிகவும் ஆபத்தான இடம். அப்பொழுது கெர்ஸொனிஸஸ் பிரதேசத்தில் தங்கியிருந்த ஆல்ஸிபியாடீஸ், இதை யறிந்ததும் தானே வலிய வந்து இந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து எதிரிலுள்ள ஸெஸ்ட்டோஸ் துறைமுகத்திற்குச் சென்றுவிடுமாறு கூறினான். ஆனால் ஆத்தீனியப் படைத் தலைவர்கள் இவனுடைய யோசனையை, இவன், படைத் தலைமையில் இல்லை என்று காரணங்காட்டி நிராகரித்து விட்டார்கள்.
405-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் முதல் தேதி அதாவது ஆத்தீனியப் படை சென்று முகாம் செய்துகொண்ட ஐந்தாவது நாள், இந்தப் படையைச் சேர்ந்தவர்கள், கப்பல்களை விட்டுவிட்டு, சாப்பாட்டுக்காகக் கரைக்குச் சென்றிருந்த சமயம் பார்த்து, ஸ்ப்பார்ட்டக் கடற்படை, திடீரென்று தோன்றி ஆத்தீனியக் கப்பல்களில் பெரும்பாலானவற்றை அப்படியே கைப்பற்றிக் கொண்டது. கோனோன் தலைமையில் சில கப்பல்கள் மட்டும் தப்பிச் சென்றன. இந்தக் கோனோன், ஸைப்ரஸ் தீவுக்குச் சென்று அங்கு அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த ஈவாகோரஸ் என்ற மன்னனிடம் தஞ்சம் புகுந்துகொண்டான். இங்கு லைஸாந்தருக்குச் சண்டையில்லாமலேயே பெரிய வெற்றி கிடைத்து விட்டது. ஆத்தீனியர்களிற் பலர் சிறைப்பட்டனர். இவர்களில் மூவாயிரம் பேர், லைஸாந்தர் உத்தரவின் பேரில் கொலையும் செய்யப்பட்டு விட்டனர்.
லைஸாந்தர், ஆல்ஸிபியாடீஸையும் அகப்படுத்திக் கொன்று விடுமாறு ஆணை பிறப்பித்தான். இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஆல்ஸிபியாடீஸ், பிரிஜியா பிரதேசத்திற்கு ஓடி அங்குப் பாரசீக அரசப் பிரதிநிதியாக இருந்த பார்னபாஸிடம் தஞ்சம் புகுந்து, அவனுடைய ஆதரவில் தங்கியிருந்தான். ஆனால் சிறிது காலங்கழித்து, லைஸாந்தரின் உத்தரவுக் கிணங்க, பார்னபாஸஸ் இவனை 404-ஆம் வருஷம் கொலை செய்துவிட்டான். இவன், ஸாக்ரட்டிஸின் அன்பைப் பெற்றிருந்தானே தவிர, அவன் காட்டிய நன்னெறியைப் பின்பற்றவில்லை. இதனால் பரிதாபகரமான முடி வெய்தினான் நாற்பத்தாறாவது வயதில்.
2. ஆத்தென்ஸ் பணிந்து விட்டது
ஈகோஸ்பொட்டாமி தோல்வியைக் கேள்வியுற்றதும் ஆத்தென்ஸில் ஒருவர் முகத்தில் கூட ஈயாடவில்லை. அன்று இரவு ஒருவர் கூடத் தூங்கவில்லை. மிட்டிலீனியர்களுக்கும் மெலோஸ் வாசிகளுக்கும் இழைத்த கொடுமைகள், ஒவ்வொருவர் அகக்கண் முன்பும் வந்து நின்றன. தங்களுக்கும் அந்தக் கதி நேருமோ என்று அஞ்சினார்கள். கடற்படை யென்னவோ அடியோடு அழிந்து விட்டது. இனி அதைப் புனர்நிர்மாணம் செய்ய முடியாது. ஆகவே தற்காப்பு முயற்சியில் இறங்கினர்.
லைஸாந்தர், ஈகோஸ்பொட்டாமி வெற்றிற்குப் பிறகு, தனது கடற்படையுடன் அங்கிருந்து புறப்பட்டு, ஹெல்லெஸ்ப்பாண்ட், திரேஸ் முதலிய பிரதேசங்களிலும், எஜீயன் கடலிலும், ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குட்பட்டிருந்த ராஜ்யங்களை ஒன்றன் பின்னொன்றாக ஸ்ப்பார்ட்டாவின் ஆதீனத்திற்குட் படுத்திவிட்டு, நேரே எஜீனா தீவுக்கு வந்து முகாம் செய்து கொண்டு, பீரேயஸ் துறைமுகத்திற்கு ஒன்றுஞ்சொல்ல விடாத படி தடுத்துவிட்டான். இவனுக்கு ஆத்தென்ஸைத் தாக்கி அழித்து விட வேண்டுமென்று உத்சேத மில்லை. அதனைத் தானாகப் பணியச் செய்ய வேண்டுமென்றே விரும்பினான். இந்த நோக்கத்துடன், தான் வந்த வழியில் ஆங்காங்குக் குடியேறியிருந்த ஆத்தீனியர்களைக் கூட்டங் கூட்டமாக ஆத்தென்ஸுக்கு அவ்வப் பொழுது அனுப்பிக்கொண்டு வந்தான். ஆத்தென்ஸின் ஜனத் தொகை பெருகி அதனால் பஞ்சம், பிணி முதலியன உண்டாகட்டும் என்பதே இவன் எண்ணம்.
இவன் இப்படிக் கடற்படையைக் கொண்டு பீரேயஸ் துறைமுகத்தைத் தடுத்து நிற்கையில், ஸ்ப்பார்ட்டாவிலிருந்து ஒரு தரைப்படை வந்து ஆத்தென்ஸ் நகரத்தை முற்றுகையிட்டது. மூன்று மாத காலம் வரை வீரத்துடன் எதிர்த்து நின்றார்கள் ஆத்தீனியர்கள். முடியவில்லை. பஞ்சமும் பிணியும் மக்களை இரை கொண்டன. வீதிகளில் செத்தவர்களும் சாகின்றவர்களும் அதிகப்பட்டு வந்தார்கள். சரணடைவதைத் தவிர வழியில்லை யென்ற நிலைமை ஏற்பட்டது. கடைசியில் சரணைடைந்து விட்டது ஆத்தென்ஸ்.
ஸ்ப்பார்ட்டா, விரும்பியிருந்தால் ஆத்தென்ஸை அடியோடு அழித்துப் போட்டு, அதன் மக்களை அடிமைகளாக விற்று விட்டி ருக்கலாம். அதன் சகாக்களான தீப்ஸ், கொரிந்த்தியா முதலிய ராஜ்யங்கள் அப்படித்தான் விரும்பின. ஆனால் ஸ்ப்பார்ட்டா அப்படிச் செய்யவில்லை; மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டது. ஆத்தென்ஸின் தனித்துவத்தை அழிக்க மனங் கொள்ளவில்லை. ‘நகரத்தையும் பீரேயஸ் துறைமுகத்தையும் சுற்றிக் கட்டப் பெற்றி ருக்கும் நீண்ட சுவர்களை இடித்துத் தரை மட்டமாக்கிவிட வேண்டும்; மற்ற ராஜ்யங்களின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தைத் துறந்து விட வேண்டும்; அட்டிக்காவுடன் தன் ஆதிக்கத்தை வரம்பு கட்டிக் கொள்ள வேண்டும்; பிரஷ்டம் செய்யப்பட்டவர்கள னைவரும் திரும்பி வர அனுமதி அளிக்கப் பெற வேண்டும்; ஸ்ப்பார்ட்டாவின் நேச ராஜ்யமாயிருந்து அதன் தலைமையைப் பின்பற்ற வேண்டும்’ இப்படிச் சில நிபந்தனைகளை விதித்தது ஸ்ப்பார்ட்டா. ஆத்தென்ஸும் வேறு வழியின்றி இந்த நிபந்தனை களுக்கு உடன்பட்டது. 404-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் லைஸாந்தர் வெற்றிக் கோலத்துடன் பீரேயஸ் துறைமுகத்திற்குள் பிரவேசித்தான். நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றச் செய்தான். முதன் முதலில் நீண்ட சுவர்களை இடிக்கும் வேலை துவங்கப்பட்டது. வெற்றி கொண்டவர்களும் வெற்றி கொள்ளப்
பட்ட ஆத்தீனி யர்களும் சேர்ந்து ‘விடுதலை விடுதலை’ என்ற கோஷத்திற்கு மத்தியில் இந்தச் சுவர்களை இடித்து வீழ்த்தினர். சுவர்களும் மற்ற அரண்களும் ஒன்றன் பின்னொன்றாக வீழ்ந்தன. இவற்றோடு ஆத்தென்ஸின் சுமுhர் எழுபத்தைந்து வருஷத்து ஏகாதிபத்திய வாழ்வும் வீழ்ந்துபட்டது. இந்த வீழ்ச்சியோடு பெலொப்பொனேசிய யுத்த ஓசையும் அடங்கியது. 431-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் இந்தப் போர் துவங்கியதென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். சரியாக இருபத்தேழு வருஷம் கழித்து 404-ஆம் வருஷம் அதே ஏப்ரல் மாதம் இந்தப் போர் நின்றது.
3. பெரிக்ளீய யுகத்தின் அஸ்தமனம்
சரண் நிபந்தனைகளில் ஒன்றன் பிரகாரம், நாட்டுக்குப் புறத்தியாயிருந்த பலரும் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் பணக்காரக் கட்சியைக் சேர்ந்த தீவிரவாதிகள்; ஸ்ப்பார்ட்டாவுடன் இணங்கிப் போக வேண்டு மென்று ஆதியிலிருந்து சொல்லிக் கொண்டு வந்தவர்கள். திரும்பி வந்ததும் இவர்களுக்கு லைஸாந்தரின் ஆதரவு இருந்ததில் என்ன ஆச்சரியம்? இந்த ஆதரவின் கீழ் இவர்கள் ஆத்தென்ஸின் அரசியலில் ஆதிக்கம் பெற்றனர். இவர்களில் முக்கியமானவன் கிரிட்டியாஸ் என்பவன். ஆல்ஸிபியாடீஸைப் போல் இவனும் ஸாக்ரட்டீஸின் அன்பைப் பெற்றிருந்தான். சிறந்த நாவலன்; கவிஞன்; தத்துவஞானி கூட. ஆனால் ஜன ஆட்சிக்கு பரம விரோதி. இந்த விரோதம் இவனை நேர்மையற்ற முறையிலும் கடுமையாகவும் நடந்து கொள்ளும்படிச் செய்தது. ஜன ஆட்சியைக் கலைத்துவிட்டு பணக்கார ஆட்சியை நிலைநாட்ட இவனுக்குத் துணை புரிந்தான் தெராமெனீஸ். இதற்கு முதற்படியாக ஜனக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் பலர் சிறையிடப்பட்டார்கள்.
பிறகு நடைமுறையில் இருந்து வரும் அரசியலை மாற்றி யமைக்க வேண்டுமென்றும், இதற்கான சட்ட திட்டங்களைத் தயாரிக்க வேண்டுமென்றும், புதிய சட்ட திட்டங்களைத் தயாரிக்கப்படுகிற வரையில், இந்த முப்பதின்மரே அரசாங்க நிருவாகத்தை நடத்தி வரவேண்டுமென்றும் ஜனசபையில் ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணை கொண்டு வரப்படுகிற பொழுது லைஸாந்தர் ஆஜரா யிருந்தான். அவனுக்குப் பயந்தே ஜனசபை மேற்படி பிரேரணைக்கு அங்கீகாரம் அளித்தது. முப்பதின்மரும் நியமிக்கப்பட்டு அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டனர். இவருள் கிரிட்டியாஸும் தெராமெனீஸும் முக்கியமானவர்கள்.
இவர்கள் - இந்த முப்பதின்மர் - தங்களுக்கிட்ட பணியைச் செய்யாமல், அதிகாரத்தையெல்லாம் மெதுமெதுவாகத் தங்களிடம் தேக்கிவைத்துக் கொண்டார்கள். ஸ்ப்பார்ட்டக் காவல் படை யொன்றையும் வரவழைத்துக் கொண்டார்கள். இப்படி அதிகார பலத்தையும் படை பலத்தையும் பெற்றுக் கொண்டு, முதலில், சிறைப் பட்டிருந்த ஜனக்கட்சியினரையும், தங்களுக்குப் பிடித்த மில்லாத வேறு பலரையும் கொலை செய்துவிட்டார்கள். இப்படிக் கொலை யுண்டவர்கள் சுமார் ஆயிரத்தைந்நூறு பேருக்கு மேலிருக்கும். இவர்கள் தவிர ஜனக்கட்சியைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேரை நாடு கடத்தி விட்டார்கள். தப்பிச் சென்றவரும் பலர். அநேகருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பேச்சுரிமை, போதிக்கும் உரிமை, கூட்டங்கூடும் உரிமை முதலிய ஜீவாதார உரிமைகள் பலவும் ஒடுக்கப்பட்டன. கிரிட்டியாஸ், தனது மதிப்பிற்குரிய ஸாக்ரட்டீஸைக் கூட, நாலு பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு பேசக்கூடா தென்று தடைசெய்தான். ஆனால் ஸாக்ரட்டீஸ் இதைப் பொருட்படுத்தவில்லை. இந்த முப்பதின்மருடைய அதிகாரத்திற்குக் கட்டுப்படாதவனாகவே நடந்து வந்தான். ஒரு சமயம், ஜனக் கட்சியைச் சேர்ந்த லியோன் என்ற ஒருவனைக் கைது செய்து கொண்டு வருமாறு ஸாக்ரட்டீஸுக்கும் இன்னும் நால்வருக்கும் உத்தரவிட்டார்கள் மேற்படி முப்பதின்மர். ஆனால் ஸாக்ரட்டீஸ் இந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்துவிட்டான். மற்ற நால்வர் மட்டும் சென்று லியோனைக் கைது செய்து கொண்டு வந்தார்கள். அவனும் கொலையுண்டான்.
சிறிது காலத்திற்குள் இந்த முப்பதின்மருக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. தெராமெனீஸ் எப்பொழுதுமே நிதானவாதியல்லவா? இவனுக்குக் கிரிட்டியாஸின் தீவிரப்போக்கு சிறப்பாக ஸ்ப் பார்ட்டக் காவற்படையை வரவழைத்துக் கொண்டது சிறிதுகூடப் பிடிக்கவில்லை. இதனால் இவ்விருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு முற்றி வளர்ந்தன. கடைசியில் கிரிட்டியாஸ், இவனைக் கைது செய்து பூலி சபை முனனர் சம்பிரதாயமான ஒரு விசாரணைக் குட்படுத்தினான். தெராமெனீஸ், மிகுந்த சாமர்த்தியத்துடன் எதிர்வழக்காடினான். பூலி சபை இவனுடைய வாதத்தில் ஈடுபட்டு விழும் போலிருந்தது. உடனே கிரிட்டியாஸ், முப்பதின்மர் குழுவின் விசேஷ அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு, இவனுக்கு மரண தண்டனை விதித்துவிட்டான். மரண தண்டனை பெற்றவர்களை விஷங் கொடுத்துக் கொல்வது ஆத்தென்ஸில் அப்பொழுது வழக்கம். இதன் பிரகாரம் தெராமெனீஸ் விஷங்கொடுக்கப் பெற்றான். இதற்குப் பிறகு, கிரிட்டியாஸ், எதிர்ப்பார் தடுப்பார் யாருமின்றி தன்னிஷ்டப்படி அதிகார அட்டகாசம் செய்து வந்தான். ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்த அட்டகாசமும் ஓய்ந்து விட்டது.
முப்பதின்மருடைய கொடுங்கோலாட்சியினால் நாடு கடத்தப்பட்ட ஜனக்கட்சியினர், கொரிந்த்தியா, மெகாரா, தீப்ஸ் ராஜ்யங்களுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர். இந்த மூன்று ராஜ்யங்களும் ஆத்தென்ஸுக்கு விரோதிகளாயிருந்த போதிலும், இப்பொழுது ஸ்ப்பார்ட்டாவின் மீது இவைகளுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், பெலொப்பொனேசிய யுத்தத்தின் முடிவில் ஸ்ப்பார்ட்டா இவைகளை அலட்சியம் செய்துவிட்டுத் தன்னிச்சையாக நடந்து கொண்டது. தவிர, லைஸாந்தரின் பக்க பலத்தைக் கொண்டு, முப்பதின்மர் செய்து வந்த அட்டூழியங்களை இவை களினால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. இந்தக் காரணங் களினால் ஸ்ப்பார்ட்டாவின் மீது வெறுப்புக் கொண்டு, ஆத்தென் ஸிலிருந்து வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தன; முப்பதின் மருடைய கொடுங்கோலாதிக்கத்திலிருந்து ஆத்தென்ஸை விடுவிக்க அவர்களுக்கு ஆதரவும் அளித்தன.
வடக்கே தீப்ஸில் தஞ்சம் புகுந்திருந்த ஜனக் கட்சியினர், திராஸிபூலஸ், அனைட்டஸ் ஆகிய இருவர் தலைமையில் ஒரு படையைத் திரட்டிக் கொண்டு அட்டிக்காவுக்குள் 404-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பிரவேசித்து பைலி என்ற கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்களை எதிர்க்க முப்பதின் மருடைய படையொன்று சென்றது. இரண்டு முறை போர் நடைபெற்றது. இரண்டிலும் ஜனக்கட்சிப் படையே வெற்றியடைந்தது. இதற்குப் பிறகு இந்தப் படை முன்னோக்கி வந்து பீரேயஸ் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இந்த முப்பதின்மருடைய படையைச் சந்தித்து முறியடித்தது. இதில் கிரிட்டியாஸ் கொல்லப்பட்டு விட்டான். கடைசியில், முப்பதின்மருடைய ஆட்சி முடிந்தது. திரும்பவும் 403-ஆம் வருஷம் ஜன ஆட்சி ஸ்தாபிதமாயிற்று. ஆத்தென்ஸ், கொடுங்கோன்மையிலிருந்தும், போர்த்தொல்லைகளி லிருந்தும் விடுதலை பெற்றது. இந்த விடுதலைக்குக் காரணமா யிருந்தவன் திராஸிபூலஸ். இவனுடைய தலைமையில் ஜனசபை, மிகவும் நிதானமாக, கண்ணியமாகக் காரியங்களைச் செய்தது. முப்பதின்மர் ஆட்சி ஏற்படுவதற்குக் காரணமா யிருந்தவர்களில் முக்கியமானவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மன்னிப்பளித்து, சட்ட திட்டங்களைத் திருத்தியமைக்க, சட்ட நிபுணர்களை நியமித்தது. முப்பதின்மருடைய ஆட்சிக்கு, ஸ்ப்பார்ட்டா நூறு டாலெண்ட்டுகள் கடன் கொடுத்திருந்தது. அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டது.
இந்த ஜன ஆட்சி, ஸ்தாபிதமான நான்காவது வருஷம் 399-ஆம் வருஷம் - ஒரே ஒரு குற்றத்தைச் செய்தது. ஆனால் அது மன்னிக்க முடியாத குற்றம். அதுதான் மகான் ஸாக்ரட்டீஸை மரண தண்டனைக்குட்படுத்தியது. இவன்மீது குற்றஞ் சுமத்தியவன் மேலே சொன்ன அனைட்டஸ். ஜனக் கட்சியைச் சேர்ந்தவன்தான்; எதிரி களி னிடத்திலும், கருணை காட்டும் சுபாவமுடையவன் தான். ஆனால் ஸாக்ரட்டீஸ் விஷயத்தில் மட்டும் இவன் நெஞ்சிரக்க மில்லாதவனாகவே நடந்துகொண்டான். தன் மகனைத் துர்ப் போதனைகள் போதித்துக் கெடுத்துவிட்டானென்று ஸாக்ரட்டீஸ் மீது ஆத்திரம் இவனுக்கு. மெலேட்டஸ், லைக்கோன் என்ற இருவரைக் கொண்டு, இளைஞர்களைத் தீய பழக்கங்களுக் குட்படுத்துகிறவனென்றும், மத விரோதியென்றும் இவன்மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடரச் செய்தான். வழக்கும் நடை பெற்றது. ஸாக்ரட்டீஸ் குற்றவாளி! மரணதண்டனை பெற்றான். விஷமருந்தினான்.
ஸாக்ரட்டீஸை இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டதற்கு, ஆத்தீனியர்கள் பிறகு பெரிதும் வருந்தினார்கள். அவன்மீது குற்றஞ் சாட்டியவர்களை மரணத்திற்குட்படுத்தினார்கள்.
ஸாக்ரட்டீஸின் மரணத்தோடு, பெரிக்ளீய யுகம் அஸ்தமித்து விட்டதென்று சொல்ல வேண்டும். இந்த அஸ்தமன காலத்தில் ஆத்தீனிய சமுதாய வாழ்க்கையின் அடிப்படைகள் யாவும் தகர்ந்து கிடந்தன. ஸ்ப்பார்ட்டப் படைகள் அடிக்கடி சூறையாடி வந்ததன் விளைவாக அட்டிக்காவின் விவசாய நிலங்களெல்லாம் பாழ்பட்டு விட்டன. ஒலிவ மரங்கள் எரிந்து போயின. கடற்படை இல்லா தொழிந்தது. வெளியிடங்களிலிருந்து உணவுப் பொருள்கள் வந்து கொண்டிருந்தது நின்றுவிட்டது. அரசாங்க கஜானா காலியாகக் கிடந்தது. தனிப்பட்டவர்களிடமிருந்து பணம் பூராவும் யுத்த வரியாகக் கரைந்துவிட்டது. உரிமை பெற்ற குடிமக்களில் நூற்றுக்கு அறுபது பேர் விகிதம் மாண்டு போயினர். பொதுவாக ஆத் தென்ஸுக்குப் பாரசீக யுத்தத்தினால் ஏற்பட்ட சேதத்தைக் காட்டிலும் பெலொப்பொனேசிய யுத்தத்தினால் ஏற்பட்ட சேதம் அதிக மாயிருந்தது.
4. பிளேட்டோ
பெலொப்பொனேசிய யுத்தமானது, ஓர் ஆசிரியன் கூறுகிற மாதிரி, ஆத்தீனிய சமுதாயத்தின் ஆத்மாவிலேயே அகற்ற முடியாத ஒரு வடுவை உண்டுபண்ணிவிட்டது. இந்த வடு, நாளாவட்டத்தில் புரைப்புண்ணாகி, அதன் தனித்துவத்தை மட்டுமல்ல, கிரீஸின் தனித்துவத்தையே அழித்துவிட்டது. இதைப் பற்றிப் பின்னர் விசாரிப்போம்.
இதில் ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயமென்ன வென்றால், இந்தப் பெலொப்பொனேசிய யுத்தத்தின் பொழுதாகட்டும், இதற்கு முந்தி நடைபெற்ற பாரசீக பெரும் போர்க்காலத்திலாகட்டும், ஆத் தென்ஸின், ஏன், கிரீஸின் அறிவு ஊற்று வற்றிப் போகாமலி ருந்ததுதான். வற்றிப் போகாமலிருந்ததோடு மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையினருக்கும் பருகிப் பயனடையக் கூடிய வகையில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பெருக்கு எத்தனை கிளை நதிகளாகப் பிரிந்திருந்தது? தத்துவ ஞானமா, இலக்கியமா, கலையா, இப்படிப் பல வகைக் கிளை நதிகள் வேக மாக ஓடிக் கொண்டிருந்தன. இவற்றுடன், வேறுபல இடங்களி லிருந்து சில உப நதிகளும் வந்து சேராமலில்லை. இஃதிருக்கட்டும்.
மேற்படி அறிவு நீர்ப்பெருக்கினை ஆங்காங்கு அகலப் படுத்திக் கொடுத்தவர் பலர்; ஆழஞ்செய்து கொடுத்தவரும் பலர். இவர்களைத்தான் ஞானிகளென்றும மேதைகளென்றும், கலைஞர்களென்றும் இன்றளவும் நாகரிக உலகம் போற்றி வருகிறது. இவருள் ஒரு சிலரை, ஆம், முக்கியமான ஒரு சிலரை, ஏற்கனவே வாசகர்கள் முந்தின அத்தியாத்தில் பரிச்சயம் செய்து கொண்டி ருக்கிறார்கள்; இனியும் சிலர் உரிய இடங்களில் பரிச்சயமாதல் கூடும். இங்கு ஒருவனைப் பற்றி மட்டும், மகா மேதையான ஒருவனைப் பற்றி மட்டும் வாசகர்களுக்குச் சிறிது பரிச்சயம் செய்து வைக்க விரும்புகிறோம்.
இந்த மகாமேதைதான் பிளோட்டோ. மகான் ஸாக்ரட்டீஸை எப்பொழுதும் ஓர் இளைஞர் கூட்டம் சூழ்ந்து கொண்டிருந்த தென்று முன்னே சொன்னோ மல்லவா, அந்த இளைஞர்களிலே ஒருவன். அவனுடைய முக்கிய சீடனாக இருந்து பெருமை யடைந்தவன். அப்படியே பேரறிஞனாகிய ஒருவனைச் சீடனாகப் பெற்றுப் புகழ் கொண்டவன். இவன் பெரிக்ளீய யுகத்தின் பிரசார மயமான காலத்தில் வாழ்ந்தவனல்லன். ஆனால் அந்த யுகம் அஸ்தமித்த பிறகு அறிவு நட்சத்திரமாகப் பிரகாசித்தவன். இதனால் தான் இந்த அத்தியாயத்தில், பெரிக்ளீய யுகம் அஸ்தமித்து விட்ட தென்று சொல்கிற இந்த அத்தியாயத்தில் இவனை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கத் துணிந்தோம்.
பிளேட்டோ, ஆத்தென்ஸில் பரம்பரைப் பெருமையும் ஓரளவு செல்வமுடைய ஒரு குடும்பத்தில் 427-ஆம் வருஷம் பிறந்தவன். அது பெலொப்பொனேசிய யுத்தம் ஆரம்பித்த நான்காவது வருஷம். பெரிக்ளீஸ் இறந்து இரண்டாவது வருஷம். இவனுடைய தகப்பன் அரிஸ்ட்டோன், தாயார் பெரிக்ட்டியோன். அந்தக் காலத்துப் பணக்கார குடும்பத்து இளைஞர்கள் பயில வேண்டிய முறைப்படி, இசை, கணிதம், கவிதை, நாவன்மை முதலிய துறைகளில் நன்கு பயின்றான். ஓவியம் தீட்டுவதில் இவனுக்கு நல்ல திறமையிருந்ததாகத் தெரிகிறது. இளமையி லிருந்தே நல்ல தேகக் கட்டுடையவனாயிருந்ததால், யுத்தப் பயிற்சியும் பெற்றான். மூன்று தடவை யுத்த களத்திற்குச் சென்று சேவை செய்தான்; ஒரு தடவை, வீரங் காட்டியதற்காகப் பரிசும் பெற்றான்.
அந்தக் காலத்தில், வாழ்க்கை வசதியுடைய இளைஞர்கள், அரசியலில் பிரவேசித்துப் பெயரும் புகழும் பெற வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தான். பிளேட்டோவுக்கும் இந்த ஆசை இருந்தது. ஆனால் இருபதாவது வயதில், இவனுக்கு ஸாக்ரட்டீஸின் தொடர்பு ஏற்பட்டது. மந்திர சக்தியினால் கட்டுண்டவன்போல் அவனைப் பின் தொடரலானான். அவனுடைய சம்பாஷணைகளில் பெரிதும் ஈடுபட்டான்.
பிளேட்டோவின் இருபத்து மூன்றாவது வயதில் பெலொப் பொனேசிய யுத்தம் முடிந்து, ஆத்தென்ஸில் முப்பதின்மர் ஆட்சி ஏற்பட்டது. இந்த ஆட்சியினரால் நன்மை உண்டாகுமென்று பிளாட்டோ எதிர்பார்த்தான். ஆனால் அதற்கு மாறாக அநேக தீமை களே உண்டாயின. சிறப்பாக, ஸாக்ரட்டீஸை இவர்கள் நடத்தியது, இவனுக்கு அரசியல் வாழ்க்கையிலேயே ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிட்டது. அதே சமயத்தில் இந்த முப்பதின்மருடைய அதிகாரத்திற்கு ஸாக்ரட்டீஸ் தலைவணங்க மறுத்தது, அவ னிடத்தில் இவனுக்கிருந்த பக்தியை அதிகரிக்கச் செய்தது.
சிறிது காலங் கழித்து முப்பதின்மர் ஆட்சி முடிந்தது; பழைய மாதிரி ஜன ஆட்சி ஏற்பட்டது ஆத்தென்ஸில். இந்த ஆட்சிக் காலத்தில், ஸாக்ரட்டீஸ் அநியாயமாக மரண தண்டனை விதிக்கப் பட்டு, விஷமருந்தி இறந்து போனான். இது பிளேட்டோவின் மனத்தை அடியோடு மாற்றிவிட்டது. ஏன், இவனுடைய வாழ்க் கைப் போக்கையே மாற்றிவிட்டதென்று சொல்ல வேண்டும். அரசியல் வாழ்க்கையை அடியோடு துறந்து விட்டான். அப் பொழுது இவனுக்கு வயது இருபத்தெட்டு.
ஸாக்ரட்டீஸ் மரணத்திற்குப் பிறகு, ஆத்தென்ஸ், ஒரு பாலை வனமாகவே புலப்பட்டது பிளோட்டோவின் அகக் கண்களுக்கு. அங்கிருக்கவே இவனுக்குப் பிடிக்கவில்லை. யாத்திரை புறப்பட்டு விட்டான். கிரீஸிலேயே அநேக ராஜ்யங்களைச் சுற்றிப் பார்த்தான்; எகிப்துக்குச் சென்றான்; சிஸிலி தீவில் சிறிது காலம் வாசஞ் செய்தான். யாத்திரையின் போது ஆங்காங்கு அறிஞர் பலரைச் சந்தித்தான்; புதிதாக அநேக விஷயங்களைக் கற்றுக் கொண்டான். சில விஷயங்களைத் தெளிவுப்படுத்திக் கொண்டான்.
இவன் சிஸிலி தீவுக்குச் சென்றபோது, அந்தத் தீவின் முக்கியமான ராஜ்யமாயிருந்தது ஸைரக்யூஸ். இந்த ராஜ்யத்தை அப்பொழுது முதலாவதாக டையோனிஸியஸ் என்பவன் சர்வாதி காரியாக இருந்து ஆண்டுவந்தான். பிளேட்டோ, ஸைரக்யூஸ் சென்று சர்வதிகாரியின் உறவினனான டியோன் என்பவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாக டையோனிஸியஸின் நட்பையும் பெற்றான். சர்வாதிகார ஆட்சியினால் ஏற்படக்கூடிய தீமைகளை மெதுமெதுவாக அந்த டையோனிஸியஸுக்கு எடுத்துச் சொல்லி வந்தான். இதன் மூலமாக அவனை நல்ல வழியில் திருப்பப் பார்த்தான். ஆனால் இவனையே - அவன் - டையோனிஸியஸ் - நாடு திரும்பிச் செல்லும்படி செய்துவிட்டான்.
ஏறக்குறைய தனது நாற்பதாவது வயதில் பிளேட்டோ ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்து நண்பர்கள் சிலரின் உதவி கொண்டு, நகர்ப்புறத்தே, கலைக் கழகமொன்று ஸ்தாபித்தான். இளைஞர்கள் நல்வழிப்படுத்தி அவர்களை நல்ல பிரஜைகளாகச் செய்யவேண்டு மென்பதே இவன் நோக்கமாயிருந்தது. இந்த நோக்கத்துடனேயே மேற்படி கலா நிலையத்தைத் துவக்கினான். இதனை ‘அக்காடெமி’ என்று அழைப்பர். கணிதமும் தத்துவமும் இங்கு முக்கிய பாடங் களாகப் போதிக்கப்பட்டன. இதில் சேர்ந்து பயின்ற மாணாக்கர்களுக்குச் சம்பளம் கிடையாது. ஆனால் மாணாக்கர்களிற் பெரும் பாலோர் பணக்கார குடும்பத்துப் பிள்ளைகளாயிருந்தபடியால் அவர்களுடைய பெற்றோர்கள் அவ்வப்பொழுது, கழகத்திற்கு நன்கொடைகள் அளித்துவந்தார்கள். இன்னுஞ் சில பணக்காரர்கள், தங்கள் ஆஸ்தி முழுவதையும் இந்தக் கழகத்திற்கு உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார்கள. இந்தக் கழகத்தில் பயின்ற மாணாக்கரிற் சிலர், தங்கள் உடையிலும் நடையிலும், தாங்கள் படித்தவர்கள் என்று புலப்படுத்திக் கொண்ட தாகத் தெரிகிறது. மற்றும் இந்தக் கழகத்தில், பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, ஆண்களைப்போல எல்லாவித பயிற்சிகளும் அளிக்கப் பட்டார்களென்று தெரிகிறது. தவிர, இந்தக் கழகத்தில் தான் முதன் முதலாக அகராதி தயாரிக்கப்பட்டதாகவும் கூறுவர். சுமார் நாற்பது வருஷ காலம், அதாவது தன் ஆயுள் பரியந்தம், இந்தக் கழகத்தைத் திறம்படி நடத்தி வந்தான் பிளேட்டோ.
ஆனால் இந்த நாற்பது வருஷமும் இவன் தொடர்ந்தாற்போல ஆத்தென்ஸில் இருக்கவில்லை. ஏனென்றால், ஸைரக்யூஸில் இவன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு இவனை ஆத்தென்ஸில் இருக்க விடவில்லை. இரண்டு தடவை அங்குச் சென்று வரவேண்டியதாக ஏற்பட்டது.
368-ஆம் வருஷம். பிளேட்டோவுக்குச் சுமார் அறுபது வயது. ஸைரக்யூஸில்அப்பொழுது, முதலாவது டையோனிஸியஸின் மகனான இரண்டாவது டையோனிஸியஸ், தனது இருபத் தெட்டாவது வயதில் பட்டத்திற்கு வந்தான். இவனுடைய உறவி னனான டியோன், இவனுக்கு, நீதி வழுவாமல் அரசு புரிவது எப்படி என்பதைப் பற்றிச் சில போதனைகள் செய்துவந்தான். ஆனால் அவன் கேட்கிறவனாயில்லை. பிளேட்டோவின் புகழ் அப்பொழுது எங்கும் வெகுவாகப் பரவியிருந்தது. தவிர, டியோனுக்குப் பரிச்சய மாகியும் இருந்தவனல்லவா? எனவே அவனை வரவழைத்து இரண்டாவது டையோனிஸிஸீக்கு புத்தி புகட்டத் தீர்மா னித்தான். இவன் அழைப்புக்கிணங்க, பிளேட்டோவும் ஸைரக்யூஸ் சென்றான். சென்று என்ன? டையோனிஸியஸ் இவன் உப தேசங்களை ஏற்க மறுத்ததுமல்லாமல், டியோன் மீதே சந்தேகங் கொண்டுவிட்டான். அவனைத் தேசப் பிரஷ்டமும் செய்து விட்டான். இனி அங் கிருப்பது ஆபத்தென்று உணர்ந்தான் பிளேட்டோ சென்ற இரண்டாவது வருஷமே திரும்பி விட்டான் ஆத்தென்ஸுக்கு.
ஆத்தென்ஸுக்குத் திரும்பி வந்துவிட்டபோதிலும் பிளேட்டோ, இரண்டாவது டையோனிஸியஸுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய வற்புறுத் தலுக்கிணங்க மறுபடியும் 362-ஆம் வருஷம் ஏறக்குறைய தனது அறுபத்தைந்தாம் வயதில் ஸைரக்யூஸுக்குச் சென்றான். சென்றதும், நாடு கடத்தப்பட்டிருந்த டியோனுடைய சொத்துக்களை டையோ னிஸியஸ் பறிமுதல் செய்துவிட்டிருப்பதை அறிந்தான். இது, தான் எதிர்பார்த்ததற்கு விரோதமாயிருந்தது. டையோனிஸியஸை நல் வழிப்படுத்த முடியாதென்று உணர்ந்தான். தவிர, சிஸிலி தீவு முழுவதிலும் அப்பொழுது ஒரே குழப்பமாயிருந்தது. இனி அங்கிருத்தல் தகாதென்று தீர்மானித்து 360-ஆம் வருஷம் ஆத்தென்ஸுக்குத் திரும்பிவிட்டான்.
திரும்பி வந்த பிறகு ஆத்தென்ஸை விட்டு வெளியே செல்ல வில்லை. கழகத்தை மென்மேலும் விருத்தி செய்து கொண்டு போவதிலேயே தன் கவனமனைத்தையும் செலுத்தினான். இந்தக் காலத்தில் இவனிடம் நெருங்கிப் பழகியும் சிரத்தையுடன் பயின்றும் வந்த மாணாக்கரிற் சிலர் பிற்காலத்தில் பேரறிஞர்களாக விளங்கி னார்கள். இவருள் ஒருவர்தான் மகா அலெக்ஸாந்தரின் ஆசிரியனான அரிஸ்ட்டாட்டல்.
அறிவுத் துறையிலே நீராடிக் கொண்டிருக்கிறவர்களுக்கு அடிக்கடி ஏதேனும் நோய் வந்து அல்லற் படுத்துவதுண்டு. ஆனால் இந்த நியதிக்கு விலக்காயிருந்தான் பிளேட்டோ. கடைசி காலம் வரை, உடல்நலம் குன்றாமல் ஆரோக்கியத்துடனிருந்தான்; ஆசிரியனாயிருந்து அரும் பணியாற்றி வந்தான். 347-ஆம் வருஷம் ஏறக்குறைய எண்பதாவது வயதில் உயிர் நீத்தான்.
பிளேட்டோ, ஒரு போதகாசிரியன் மட்டுமல்ல; நூலா சிரியனுங்கூட. உரைநடையில் வல்லவன். சிறிதும் பெரிதுமான சுமார் நாற்பது நூல்கள் இவன் பெயரைத் தாங்கிக் கொண்டிருக் கின்றன. இவற்றுள் ஓரண்டைத் தவிர மற்றவை யாவும் சம்பாஷணை வடிவத்திலிருக்கின்றன. இந்தச் சம்பாஷணைகளில் பிரதான புருஷனாக விளங்குகிறவன் ஸாக்ரட்டீஸ். அவனை மையமாக வைத்தே இவன், ஞான மாளிகைகளை நிர்மாணம் செய்தான். தனது ஆசானிடத்தில் இவனுக்கிருந்த பக்திதான் என்னே? ஸாக்ரட்டீஸ், அவ்வப்பொழுது சொல்லிவந்ததை இவன் கூடவே இருந்து குறிப்பெடுத்துக் கொண்டானோ, அல்லது அவனுடைய வாக்கு மூலமாகத் தன்னுடைய கருத்துக்களை வெளியிடுகிறானோ என்பதைச் சரியாக நிச்சயிக்க முடியவில்லை. எப்படியிருந்த போதிலும், இருவருக்குமுள்ள ஞான சம்பந்தமானது, இரண்டாகப் பிரித்துக் காட்ட முடியாத தன்மையதாய் இருக்கிறது.
பிளேட்டோவின் சிருஷ்டிகளுக்கு மகுடம் போன்றது அரசியல் என்னும் நூல். எக்காலத்தவரும் எந்நிலையிலுள்ளவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இது. தனி மனிதனாகட்டும், ராஜ்யமாகட்டும், நீதியையே லட்சியமாகக் கொள்ள வேண்டும், நீதியைக் கடைப்பிடிப்பதனாலுண்டாகிற இன்பந்தான் உண்மை யான இன்பம், ஆள்வது ஒரு கலை, இந்தக் கலையில் பயின்றவர் களே ஆளுந்தொழிலை மேற்கொள்ள வேண்டும். அவர்கள், தன்னல மற்றவர்களாயிருக்க வேண்டும், ஆட்சி முறைகளில் எத்தனை வகை யுண்டு, ஒவ்வொன்றிலும் ஏற்படக்கூடிய சாதக பாதங்களென்ன, இவை போன்ற நுணுக்கமான பல விஷயங்கள் இந்நூலில் ஆராயப் படுகின்றன
பதினாயிரவர் நடைப்பயணம்
1. பாரசீகத்தை நோக்கி கிரேக்கப்படை போதல்
பெலொப்பொனேசிய யுத்தத்தைக் கிரீஸின் தற்கொலை என்று வருணிப்பார்கள் சரித்திராசிரியர்கள். இதற்குப்பிறகு நடை பெற்ற சம்பவங்கள், அதனுடைய மரண வேதனைகளைக் குறிப்பன வாகவே இருந்தன. இந்த வேதனையைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர், கிரேக்க சரித்திரத்திற்கு நேர் முகமாகச் சம்பந்தப்படாத ஆனால் கிரேக்கர்களிடத்தில் அதுகாறும் இருந்துவந்த ஒரு பிரமையைப் போக்கிய ஒரு சம்பவத்தைக் கூற முற்படுகிறோம். கிரேக்க சரித்திரப் பாதையில் இந்தச் சம்பவம் ஒரு சுமைதாங்கி மாதிரி.
பாரசீகத்தில் இரண்டாவது டேரியஸ் என்ற மன்னன் 405-ஆம் வருஷம் இறந்துவிட்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகன், இரண்டாவது அர்ட்டாக் ஜெர்க்கஸஸ் என்ற பட்டப் பெயருடன் 404-ஆம் வருஷம் சிங்காதனம் ஏறினான். இவனுக்குப் போட்டியாக, இவனுடைய இளைய சகோரனும், அப்பொழுது சின்ன ஆசியாவின் பகுதிக்கு 407-ஆம் வருஷத்திலிருந்து அரசப் பிரதிநிதியாயிருந்து வருகிறவனுமான ஸைரஸ் என்பவன் அரசுரிமை கோரினான். இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது. ஸைரஸ், தன் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள ஸ்ப்பார்ட்டாவின் உதவியை நாடினான். பாரசீகத்தின் உதவியை ஸ்ப்பார்ட்டா பெற்றிருந்ததால், அதற்குப் பிரதி உதவியையே இப்பொழுது ஸைரஸ் கேட்டான். தவிர, கிரேக்கர்களின் போர்த் திறமையில் இவனுக்கு அதிகமான நம்பிக்கையிருந்தது. இதற்குத் தகுந்தாற் போல், அப்பொழுது பெலொப் பொனேசிய யுத்தம் முடிந்து விட்டி ருந்தபடியால், போரில் வல்ல, போர் செய்வதைத் தவிர வேறொன் றையும் அதிகமாக அறியாத கிரேக்கர் பலர் வேலையில்லாம லிருந்தனர்; சரியான ஊதியங் கொடுப்பவருக்குத் தங்கள் உழைப்பைக் கொடுக்கச் சித்தமா யிருந்தனர். இப்படிப்பட்டவர் களடங்கிய ஒரு பெரும்படையைத் திரட்டினான் ஸைரஸ். ஸ்ப்பார்ட்டாவும், ஏழுநூறு பேர்கொண்ட ஒரு சிறு காலட் படையை ரகசியமாக உதவியது. சுமார் பதின் மூன்றாயிரம் பேர் கொண்ட இந்தப் படைக்கு, கிளியார்க்கஸ் என்ற பிரஷ்டம் செய்யப்பட்ட ஒரு ஸ்ப்பார்ட்டனைத் தலைவனாக நியமித்தான். இந்தப் படையில் ஜெனோபன் என்ற ஒருவனும் சேர்ந்து கொண்டான். இவன் ஓர் ஆத்தீனியன்; ஸாக்ரட்டீஸின் சீடன், போர் அனுபவம் பெற வேண்டுமென்பதற்காக இந்தப் படையில் சேர்ந்து கொண்டான்.
சேர வேண்டிய இடம், செய்ய வேண்டிய போர் முதலி யவைகளைப் பற்றின விவரங்கள் இந்தப் படையினருக்கு முதலில் தெரிவிக்கப்படவில்லை; கிளியார்க்ஸுக்கு மட்டும் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஏனென்றால், தொலைதூரம் செல்ல இப்படையினர் விரும்பமாட்டார்களென்பது ஸைரஸுக்குத் தெரியும். சின்ன ஆசியாவின் தெற்கிலுள்ள ஒரு கலகத்தை அடக்குவதற்கு அழைத்துச் செல்லப்படுவதாகப் படையினர் கருதியிருந்தனர். 401-ஆம் வருஷம் மார்ச் மாதம் இந்தப் படை ஸார்டிஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. சிறிது தூரம் சென்ற பிறகுதான் இவர்களுக்கு, சேர வேண்டிய இடம் பாபிலோனியா என்றும், செய்ய வேண்டிய போர் பாரசீக மன்னனை எதிர்த்து என்றும் கூறப்பட்டன. என்ன செய்வர் படை யினர்? திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இருந்தனர்; கலகஞ் செய்தனர். ஸைரஸ், இவர்களுக்கு நிறையச் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி யளித்ததின் பேரில், மேலே செல்ல உடன்பட்டனர்.
கடைசியில் ஸைரஸ் படை யூப்ரெட்டீஸ் நதியும் டைக்ரிஸ் நதியும் கூடுகிற இடத்திற்கு முந்தி, யூப்ரெட்டீஸ் நதியின் மேற்குக் கரையிலுள்ள குனாக்ஸா என்ற இடத்தை அடைந்து, அங்கு சுமார் நான்கு லட்சம் பேர் கொண்ட அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் படையைச் சந்தித்தது. 401-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கடும்போர் நடை பெற்றது. கிரேக்கர்கள் காட்டிய வீரத்தின் பயனாக ஸைரஸ் பக்கம் வெற்றி கிட்டும் போலிருந்தது; ஏன்? வெற்றி கிட்டியது என்றுகூடச் சொல்லலாம். ஆனால் கடைசி சமயத்தில் ஸைரஸ், அர்ட்டாக் ஜெர்ஸஸை தன் கையாலே கொலை செய்ய வேண்டுமென்று தன் உயிரை இழந்தான். இதனால் இவனுடைய படைகள் சிதறுண்டு போயின. அர்ட்டாக் ஜெர்க்ஸஸ் வெற்றிக்கொடி நாட்டி விட்டான்.
2. கிரேக்கப்படை திரும்புதல்
கிரேக்கப்படையினரின் கதியென்ன? சரணைடைய மறுத்து விட்டனர். இவர்களுடன் போர் செய்ய அர்ட்டாக் ஜெர்க்ஸஸுக்கு மனமில்லை. இவர்கள் எப்படியாவது, தனது நாட்டிலிருந்து வெளி யேறினால் போதுமென்று நினைத்துவிட்டான். திக்குத்திசை தெரியாமல் திரிந்து, அன்ன ஆகாரமில்லாமல் சாகட்டும் என்று இவர்களைச் சும்மா விட்டுவிட்டான்.
கிரேக்கர்கள், தங்கள் தாய் நாடு திரும்ப ஆவல் கொண்டனர்; வந்தவழியே மீள இவர்கள் விரும்பவில்லை. எனவே வடக்கே நோக்கிப் புறப்பட்டனர். முன்பின் தெரிய வழி. பார்த்திராத இடங்கள். இவைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கையில், கிளியார்க்கஸும் அவனுடைய நான்கு படைத்தலைவர் களும் வஞ்சிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமாயிருந்தவன் ஏற்கனவே சொல்லப் பெற்ற டிஸ்ஸாபெர்னீஸ் என்ற பாரசீக மன்னனின் அதிகாரப் பிரதிநிதி. இவன்தான் இவர்களுக்கு முதலில் மீளும் வழியைக் காட்டிக் கொடுத்தவன்!
தலைவர்களை இழந்த படையினர் கதிகலங்கிப் போயி ருந்தனர். இந்தச் சமயத்தில் இவர்களை வழிநடத்திச் செல்ல, முந்திச் சொன்ன ஜெனோபன் முன்வந்தான். இவனைத் தலைவனாகத் தெரிந்தெடுத்தனர். இவனுடைய தலைமையில் மேலும் சென்று கொண்டிருக்கையில், டிஸ்ஸாபெர்னீஸ் படையினர் இவர்களைத் துரத்திக் கொண்டு வந்தனர். நல்ல வேளையாக அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் மெதுவாகப் பாரசீக ராஜ்யத்தின் எல்லையைக் கடந்துவிட்டனர். அங்கிருந்து மேலே வடக்குப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கையில் மலைஜாதியினரின் தொந்தரவுகளுக்குட்பட்டனர். இவற்றிலிருந்தும் இன்னும் பலவித சங்கடங்களிலிருந்தும் மீண்டு இரண்டாயிரம் மைல் தூரம் நடந்து வந்த பிறகு கடைசியில் 400- ஆம் வருஷம் பிப்ரவரி மாதம், அதாவது புறப்பட்ட ஐந்து மாதங்கழித்து, கருங்கடலில் தென்கரையிலுள்ள ட்ரேப்பீஸஸ் (ட்ரெபிஜாண்ட் ) என்ற ஊரை அடைந்தனர்; இனி அச்சமில்லை யென்று உணர்ந்தனர்.
குனாக்ஸாவைவிட்டு இவர்கள் புறப்பட்டபோது மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் இருந்தனர். ட்ரேப்பீஸஸ் நகரத்தை யடைந்த போது எண்ணாயிரத்து நூறு பேரே இருந்தனர். இங்கிருந்து கடல் வழியாகவும் தரைவழியாகவும் மெதுமெதுவாக பிஸண்ட்டியம் நகரம் வந்து சேர்ந்தனர். இதற்குப் பிறகு இவர்கள் கலைந்து போயிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் திரேஸ் பிரதேசத்தில் ஓர் அரசனுடைய சேவையில் அமர்ந்தனர். ஆனால் அவன் முதலில் பேசியபடி சரியாகச் சம்பளம் கொடாமல் இவர்களை ஏமாற்றிவிட்டான். இதன் பின்னர், அடுத்த வருஷம் 399-ஆம் வருஷம் - ஸ்ப்பார்ட்டப் படையில் சேர்ந்து - கொண்டு, அப்பொழுது இவர்கள் ஆறாயிரம் பேராகக் குறைந்துவிட்டனர், பாரசீகத்திற்கு விரோதமாகப் போர் புரிந்தனர்.
இவர்கள் பாரசீகத்திற்குச் சென்று திரும்பி வந்த வரலாற்றை, பதினாயிரவர் நடைப்பயணமென்று வருணித்து ஜெனோபன் மிக உருக்கமாக ஒரு நூல் எழுதியிருக்கிறான். இதற்கு ‘அனபாஸிஸ்’ என்று பெயர். கிரேக்கர்களின் விடாமுயற்சி, சகிப்புத்தன்மை முதலிய மேலான தன்மைகள் பலவும் இதில் நன்கு புலனாகின்றன.
ஜெனோபன், தான் மீட்டுவந்த படையினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, ஆத்தென்ஸ் வந்து சேர்ந்தான். தன் குருநாதனாகிய ஸாக்ரட்டீஸ் அநியாயமாக மரணத்திற்குட்படுத்தப் பட்டதையறிந்து பெரிதும் வருந்தினான். ஆத்தென்ஸ் மீது இவனுக்கு ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது. இதனால் அதை விடுத்து, ஸ்ப்பார்ட்டா மன்னனாகிய அஜிஸிலேயஸ் (உத்தேச காலம்: 444-361) என்பவன் சேவையில் அமர்ந்து பாரசீகத்திற்கு விரோதமாகப் போர் புரிந்தான். போரிலிருந்து அஜிஸிலேயஸுடன் திரும்பி வந்தான். இதற்கிடையில், ஆத்தென்ஸ், பாரசீகத்துடன் சேர்ந்து கொண்டு ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாகப் போர் தொடுத்தது. ஜெனோபன் அஜிஸிலேயஸை விட்டுப்பிரியாமல் அவனுடைய நண்பனாகவும் பக்தனாகவும் இருந்தான். இதனால் ஆத்தென்ஸ் இவனை - ஜெனோபனை - நாடு கடத்தி இவன் சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டது. இவனோ ஸ்ப்பார்ட்டாவுக்கே தன் சேவையை அளித்து வந்தான். இவனுடைய சேவைகளைப் பாராட்டும் முகத்தான், ஸ்ப்பார்ட்டா, இவனுக்கு ஒலிம்ப்பியாவுக் கருகிலுள்ள ஸ்க்கைல்லஸ் என்ற இடத்தில் ஒரு மாளிகையையும், சுக ஜீவனம் நடத்துவதற்கான பிற வசதிகளையும் அளித்தது. இங்கே சுமார் இருபது வருடம் 370-ஆம் வருஷம் வரை நிம்மதியாகக் காலங் கழித்தான். இந்தக் காலத்தில் சில அருமையான நூல்கள் எழுதினான். இந்த நூல்களின் மூலமாகத்தான் இவன் இன்றளவும் அறிஞர் களுடைய நினைவில் இருந்து வருகிறான். 370-ஆம் வருஷத்திற்குப் பிறகு, இவன்மீது விதித்திருந்த பிரஷ்ட உத்தரவை ஆத்தென்ஸ் ரத்து செய்துவிட்டது. இதனால் இவன் ஆத்தென்ஸுக்குத் திரும்பி வருவது சாத்தியமாயிருந்தது. அங்கேயே இவன் கடைசி நாட்கள் கழிந்தன. கொரிந்த்தியாவில் 355-ஆம் வருஷம் இவன் இறந்து போனான் என்பர்.
ஒரு சில ஆயிரம் கிரேக்கர்கள், ஒழுங்கானதொரு படை யினராகச் சேர்ந்து, அதுவரை எந்தக் கிரேக்கப்படையும் சென்றிராத வழியில் பாரசீக ஏகாதிபத்தியத்தின் தலைநகரத்திற்குச் சமீபம் வரை சென்று அங்கு, மிகப்பெரிய பாரசீகச் சேனையை எதிர்த்துப் போர் புரிந்துவிட்டு, கூடியமட்டில் அதிக சேதமில்லாமல் திரும்பிவந்து சேர்ந்தது, ஹெல்லாஸ் முழுவதிலும் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது. பாரசீக ஏகாதிபத்தியத்தைப் பற்றி அதுவரை இருந்து வந்த மலைப்பு அடியோடு அகன்றது. பாரசீக ஏகாதிபத்தியத்தை ஏன் வெற்றி கொள்ளக்கூடாதென்ற கேள்வியும் பிறந்தது. அஜிஸிலேயஸ் இந்தக் கேள்விக்கு விடை காணத் துணிந்தான். துணிந்தானே தவிர, சரியான வெற்றிக் காணவில்லை. மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, மகா அலெக்ஸாந்தருக்குத் தான் இந்தப் பேறு கிடைத்தது.
மூன்றாவது பகுதி
அந்தி நேரத்திலே
உலகத்தின் அபிப்பிராயத்தை அனுசரித்துக் கொண்டு உலகத்தின் மத்தியில் வாழ்வது சுலபம். அப்படியே நம்மிஷ்டத்திற்குத் தனியே இருப்பது சுலபம். ஆனால் எவனொருவன், ஜன சந்தடியின் மத்தியில், தனது தனிமையில் இனிமையைக் காண்கிறானோ அவன்தான் உண்மையில் பெரியவன்.
மனச்சாட்சியை அசுத்தமாக வைத்துக் கொண்டிருந்து அது காரணமாகப் பிறரால் முகஸ்துதி செய்யப்படுவதைக் காட்டிலும், மனச்சாட்சியைச் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்து அது காரண மாகப் பிறரால் கண்டிக்கப்படுவதே நல்லது.
யாராவது ஒருவன் உனக்கு உபகாரம் செய்தானா அதை எல்லோரிடமும் சொல். நீ யாருக்காவது உபகாரம் செய்திருக்கிறாயா அதை யாரிடமும் சொல்லாதே.
- கிரேக்க அறிஞர்கள்
ஸ்ப்பார்ட்டாவின் சுயநலம்
1. ஏகாதிபத்திய வழியில்
பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு ஸ்ப்பார்ட்டாவின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. ஆத்தென்ஸ் வகித்து வந்த கட லாதிக் கத்தை அது வகிக்கத் தொடங்கியது. அதுகாறும் ஆத்தீனிய ஏகாதி பத்தியத்திற்குட்பட்டிருந்த ராஜ்யங்கள், தங்களுக்கு இனி விடுதலை கிடைக்கப் போகிறதென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தன. ஏனென்றால், பெலொப்பொனேசிய யுத்தம் நெடுகிலும், ஆத்தென்ஸுக்குக் கட்டுப்பட்டிருக்கிற ராஜ்யங்களை விடுதலை செய்யப் போவதாகவல்லவோ ஸ்ப்பார்ட்டா சொல்லிக் கொண்டு வந்தது? ஆனால் விடுதலை பெறுவதற்குப் பதில் அவை ஸ்ப் பார்ட்டாவின் ஆதிக்கத்திற்குட்பட்டன. ஆத்தென்ஸின் ஆதிக்கமே சிறந்ததாயிருந்ததென்று அவை கருதும்படியாக இருந்தது ஸ்ப்பார்ட்டாவின் ஆதிக்கம். அவ்வளவு கடுமை. அதன் பரம்பரை, அரசியல் அமைப்பு முதலிய எதுவும் ஏகாதிபத்திய வாழ்வுக்கு ஏற்றவையல்ல. இனிமை, நிதானம் இப்படிச் சில குணச்சிறப்புக்கள் ஏகாதிபத்திய வாழ்வுக்கு இன்றியமையாதவை. இவையொன்றுமே ஸ்ப்பார்ட்டாவுக்குக் கிடையாது. இதை உணர்ந்து, அது சொல்லிக் கொண்டிருந்தபடி செய்திருக்க வேண்டும். அதாவது எல்லா ராஜ்யங்களையும் சுதந்திரம் பெறச் செய்து, அதன் மூலமாகக் கிரீஸில் ஒற்றுமையை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால்அதற்குப் பதில், லைஸாந்தருடைய தூண்டுதலின் பேரில் ஆத்தென்ஸ் சென்ற ஏகாதிபத்திய வழியே சென்றது. ஒரு தலைமுறைக்குள் இடறி விழுந்து விட்டது.
ஆத்தென்ஸையும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த ராஜ்யங் களையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்துவிட்டது ஸ்ப் பார்ட்டா. இப்படிக் கொண்டு வந்து விட்டதற்கடையாளமாக, அவைகளிடமிருந்து, ஆத்தென்ஸிடமிருந்து கூட, கப்பமாக ஒரு தொகையை வசூலித்தது. இந்தத் தொகை, ஆத்தென்ஸ் வசூலித்து வந்த தொகையைக் காட்டிலும் ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு அதிகமாகவே இருந்தது. தவிர, ஒவ்வொரு ராஜ்யத்திலும் தனது பிரதிநிதியாக ஓர் அதிகாரியை நியமித்து அவனுக்குத் துணையாக ஒரு படையையும் அனுப்பியது. இந்த அதிகாரிக்கு ‘ஹார்மோஸ்ட்’ என்று பெயர்; தற்கால கவர்னரைப்போல். இந்த அதிகாரிக்குக் கட்டுப்பட்ட பதின்மரைக் கொண்ட ஒரு சபை, அரசாங்கத்தை நடத்திவர நியமிக்கப்பட்டது. இந்தச் சபைக்கு ‘டீக்கார்க்கி’ என்று பெயர். இதில் பதவி வகித்த பத்து பேரும் அந்தந்த ராஜ்யத்துப் பணக்காரக் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருந்தார்கள். ஸ்ப்பார்ட்ட கவர்னர்கள், ஆளும் தொழிலில் அனுபவமில்லாதவர்கள். டீக்கார்க்கி சபையினர் சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்கள். இவ்விரு வரும் சேர்ந்து நடத்திய ஆட்சியில் கொடுமையையும் துன்பத்தை யும் தவிர வேறென்ன காணமுடியும்? விடுதலையை எதிர்பார்த்து நின்ற ராஜ்யங்கள், அதிகமான நிர்ப்பந்தங்களுக்குட் பட்டன; பழைய ஆத்தீனிய ஆதிக்கத்தைக் காட்டிலும் புதிய ஸ்ப்பார்ட்ட ஆதிக்கத்தை அதிகமாக வெறுக்கத் தொடங்கின.
ஸ்ப்பார்ட்டாவின் உள்நாட்டு நிலைமையோ அடியோடு மாறிவிட்டது. பெலொப்பொனேசிய யுத்தத்தில் வெற்றியடைந்ததன் காரணமாக, அதிகார வர்க்கத்தினரை ஒருவிதச் செருக்கு ஆட் கொண்டது. ஆதிக்கத்திற்குட்பட்ட ராஜ்யங்களிலிருந்து கப்பத் தொகையாக நிறையப் பணம் வரத் தொடங்கியது. இது தவிர, வெற்றி கொள்ளப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏராளமான பொருள்கள் வந்து குவிந்தன. ஸ்ப்பார்ட்டாவில் இவையெல்லாம் சேர்ந்து எளிமை, நிதானம், ஒழுக்கம் ஆகிய ஸ்ப்பார்ட்டப் பண்பு களை அகற்றிவிட்டன. பொதுமை உணர்ச்சி குன்றியது; அதற்குப் பதில் தனி நல உணர்ச்சி வளர்ந்தது. ஒருசிலர், பெரும் பணக்காரர் களாயினர்; பெரும்பாலோர் பரம ஏழைகளாவர். பொதுவில் வந்து உணவு கொள்கிறவர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய பங்கைச் செலுத்த முடியாமல், பிரஜா உரிமை இழந்தவர்கள், ஹெலட்டுகள் ஆகியோர், எந்த நிமிஷத்திலும் ஆளும் வர்க்கத்தினருக்கு விரோத மாகக் கிளம்பக் கூடிய நிலைமையில் இருந்தனர். இங்ஙனம் பெலொப்பொனேசிய யுத்தத்தின் விளைவாக, உள்நாட்டினரின் அதிருப்தியையும் வெளி நாட்டினரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டது ஸ்ப்பார்ட்டா. ஆனால் இந்த வெறுப்பையும் அதிருப்தி யையும் போக்குவதற்கான முயற்சி ஒன்றையும் அது செய்யவில்லை அதற்கு மாறாக ஏகாதிபத்தியப் பாதையிலேயே செல்லத் துணிந்தது.
சின்ன ஆசியாவிலுள்ள கிரேக்க ராஜ்யங்கள் பலவும் பாரசீக ஆதிக்கத்திற்குட்பட்டவையென்று முந்தி ஸ்ப்பார்ட்டா ஒப்புக் கொண்டிருந்த போதிலும், பிந்தி இவை, ஸ்ப்பார்ட்டாவின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தன என்று சொல்ல வேண்டும். எப்படியென்றால், சின்ன ஆசியாவின் பெரும் பகுதிக்கு, 407-ஆம் வருஷத்திலிருந்து அரசப் பிரதிநிதியாக ஸார்டிஸ் நகரத்தில் இருந்து வந்த ஸைரஸ், தன் தகப்பன் டேரியஸ் மன்னன் மரணப் படுக்கை யிலிருக்கிறானென்று அறிந்து, அவன் அருகில் இருக்கும் பொருட்டு 405-ஆம் வருஷம் ஸூஸா நகரம் சென்றான். அப்பொழுது தனது அதிகாரப் பொறுப்பனைத்தையும் லைஸாந்தர் வசம் ஒப்புவித்து விட்டுச் சென்றான். லைஸாந்தருடைய ஏற்பாட்டின் பேரில் ஸ்ப்பார்ட்டா ஹார்மோஸ்ட்டுகள் இந்த ராஜ்யங்களை ஆண்டு வந்தார்கள்.
ஸைரஸ், ஸூஸா நகரத்தை யடைந்த பிறகு டேரியஸ் இறந்து விட்டான். எனவே தன் தமையனான அர்ட்டாக் ஜெர்க்ஸஸீக்குப் போட்டியாகப் பட்டத்திற்கு வர முயன்றான். முடியவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தது. ஸார்டிஸ் நகரம் திரும்பி விட்டான். திரும்பிவந்து, படை திரட்டிக் கொண்டு, மேலே சொன்னபடி 401-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பாரசீகத்தை நோக்கிச் சென்றான். இவன் சென்ற பிறகு சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்கள் பலவும், பாரசீக ஆதிக்கத்திலிருந்து அடியோடு விடுதலை பெற்றுக் கொண்டன.
ஸைரஸ், குனாக்ஸா யுத்தத்தில் மடிந்து விட்டான். அவனுக்குப் பிறகு, சின்ன ஆசியப் பகுதியின் அரசப் பிரதிநிதியாக ஏற்கனவே சொல்லப் பெற்ற டிஸ்ஸாபெர்னீஸ் நியமிக்கப்பட்டான். இவன், இரண்டாவது அர்ட்டாக்ஜெர்க்ஸஸ் மன்னன் பட்டத்திற்கு வருவதற்குத் துணை செய்தான். இதற்குச் சன்மானம் போலவே மேற்படி பதவி இவனுக்கு அளிக்கப்பட்டது. பதவி ஏற்றுக் கொண்டதும், சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்களை, பாரசீக ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முனைந்தான். இந்த ராஜ்யங்கள் ஸ்ப்பார்ட்டாவின் உதவியை நாடின. ஸ்ப்பார்ட்டாவும் உதவி செய்ய முன்வந்தது; பாரசீகத்துடன் செய்து கொண்டிருக்கிற ஒப்பந் தத்திற்கு முரணாகுமே என்று கருதித் தயங்கவில்லை. ஏற்கனவே ஸைரஸுக்கு உதவிப் படையனுப்பியதன் மூலம் அந்த ஒப்பந்தத்தை முறித்து விட்டிருக்கிறதல்லவா? தவிர, பதினாயிரவர் நடை பயணத்திற்குப் பிறகு பாரசீகத்தைப் பற்றி ஒருவித அலட்சியப் புத்தியும் ஸ்ப்பார்ட்டாவுக்கு ஏற்பட்டிருந்தது. இந்தக் காரணங் களினால் டிஸ்ஸாபெர்னீஸுக்கு விரோதமாக 400-ஆம் வருஷம் சின்ன ஆசியா பக்கம் தீப்ரான் என்பவனுடைய தலைமையில் ஒரு படையை அனுப்பியது. இவனால் ஒன்றும் பயனில்லை. எனவே இவனுக்குப் பதில் அடுத்த வருஷம் டெர்ஸில்லிடாஸ் என்பவனை அனுப்பியது. இவன் சில சில்லரைப் போராட்டங்களை நடத்தி, சிற்சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறானே தவிர அதிகமாக ஒன்றையும் சாதிக்கவில்லை.
இப்படியிருக்கையில், முந்திச் சொல்லப் பெற்ற அஜிஸி லேயஸ் என்பவன், லைஸாந்தருடைய ஆதரவின் பேரில் ஸ்ப்பார்ட் டாவின் அரச பீடத்தில் 398-ஆம் வருஷம் அமர்ந்தான். பாரசீகத்தின் மீது வெற்றிகண்டு புகழ்கொள்ள வேண்டுமென்ற ஆசை இவனுக்கு நிறைய இருந்தது. எனவே, சின்ன ஆசியா பக்கம் ஒரு பெரும் படையுடன் 396-ஆம் வருஷம் சென்றான். சென்று சிறிது காலம் வரை இவனால் பிரமாதமாக ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. பின்னர் 395-ஆம் வருஷம் ஸார்டிஸ் நகரத்திற்கருகில் டிஸ்ஸா பெர்னீஸ் படையைச் சந்தித்து முறியடித்தான். இதனுடன் டிஸ்ஸா பெர்னீஸின் வாழ்வும் முடிந்துவிட்டது.
டிஸ்ஸாபெர்னீஸை முறியடித்து விட்டதனால் உற்சாகங் கொண்ட அஜிஸிலேயஸ், பார்னபாஸஸ் என்ற மற்றொரு பாரசீக அதிகாரப் பிரதிநிதியின் ஆளுகைக்குட்பட்டிருந்த பிரிஜியா பிரதேசத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்தலானான். அந்தப் பிரதேசம் முழுவதும் சூறையாடப்பட்டது. பார்னபாஸஸ் வசித்துக் கொண்டிருந்த இடத்திற்குச் சமீபத்தில் வந்து, தோட்டந் துரவுகளில் முகாம் செய்துகொண்டன ஸ்ப்பார்ட்டப் படைகள். இதற்குப் பிறகு ஒரு ருசிகரமான சம்பவம் நடைபெற்றது. இது காரணமாக அஜிஸிலேயஸ், பிரிஜியா பிரதேசத்தைஆக்கிரமித்துக் கொள்ளா மல் திரும்பி விட்டான். ருசிகரமான சப்மவம் என்னவென்று பார்ப்போம்.
அஜிஸிலேயஸ் மன்னனும் பார்னபாஸஸும் ஒரு தோட்டத்தில் கூடி சந்தி பேசுவதென்று ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நேரத்திற்குச் சிறிது முந்தியே அஜிஸிலேயஸ் வந்துவிட்டான். வந்து கீழே புல்தரையில் அமர்ந்திருந்தான். சிறிது நேரங் கழித்துப் பார்னபாஸஸின் பணியாட்கள் வந்து, அவனுக்கு முன்னால் விலையுயர்ந்த ஜமக்காளங்களைப் பரப்பினர். ஏன்? தங்கள் எஜமானான பார்னாபாஸஸ் வந்து உட்காருவதற்காக. பார்ன பாஸஸ் வந்தான். ஜமக்காளத்தின் மீது உட்காரவில்லை. அஜிஸி லேயல் அரசன் பக்கத்தில் வெறும் புல்தரையில் வந்து அமர்ந்து கொண்டான். இருவரும் கை குலுக்கினர். பிறகு பேசலுற்றனர்:-
பார்னபாஸஸ் : ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நான் ஸ்ப்பார்ட்டாவின் பக்கமே இருந்தேன்; அது வெற்றி பெறுவதற்கு உதவி செய்தேன். டிஸ்ஸா பெர்னீஸைப் போல் அதற்கு நான் துரோகஞ் செய்யவில்லை. இவை யனைத்திற்கும் பிரதியாக எனக்குக் கிடைத்தது என்ன? எனது பிரதேசத்திலேயே எனக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. நீங்கள் விட்டுப்போனதைத்தான் நான் எடுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. என்னுடைய தோட்டந் துரவுகள், வாசஸ்தலங்கள் எல்லாவற்றையும் நீங்கள் நாசமாக்கிவிட்டீர்கள். அல்லது எரித்து விட்டீர்கள். இது நியாயமா? இதுதான் நன்றியா?
அஜிஸிலேயஸ்: (நீண்ட நேரம் மௌனமாயிருந்து விட்டுப் பிறகு) பாரசீக மன்னனுக்கு விரோதமாக நான் போர் தொடுத் திருக்கிறேன். ஆகையால் அந்த மன்னனுடைய ஆளுகைக்குட்பட்ட எல்லா பிரதேசங்களையுமே சத்துரு நாடாகக் கருதவேண்டி யிருக்கிறது. தாங்கள் அந்த மன்னனுக்கு விசுவாசமாயிருப்பதை விடுத்து, ஸ்ப்பார்ட்டாவுடன் நேசமாயிருப்பதாக ஒப்புக் கொள்ளுங்கள்.
பார்னபாஸஸ்: பாரசீக மன்னன் வேறோர் அதிகாரியை இங்கே அனுப்பி அவன் கீழ் என்னை இருக்குமாறு செய்தால். அப்பொழுது உங்கள் நண்பனாக உங்கள் கட்சியில் சேர்ந்தவனாக இருப்பதற்குத் தயார். ஆனால் இப்பொழுதோ அந்த அரசனின் பிரதிநிதியாக, அவனுடைய படைத்தலைவனாக இருக்கிறேன். ஆகவே, என் முழு பலத்தைக் கொண்டு உங்களை எதிர்த்துப் பேராடுவேன்.
இந்தக் கண்ணியமான, தன்மதிப்பு உணர்ச்சி நிறைந்த பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் அஜிஸிலேயஸ். “உடனே உங்கள் பிரதேசத்தை விட்டுச் சென்று விடுகிறேன். இனி உங்கள் எல்லைக்குள் வரமாட்டேன்” என்று கூறினான். பரஸ்பர உபசாரங் கள் நடைபெற்றன. பார்னபாஸஸ் தன் அரண்மனைக்குச் சென்று விட்டான். அஜிஸிலேயஸும் பிரிஜியாவினின்று விலகிக் கொண்டான்.
முந்தி ஈகோஸ்பொட்டாமியிலிருந்து தப்பிச் சென்று ஸைப்ரஸ் தீவில் தஞ்சம் புகுந்து கொண்டானல்லவா கோனோன். இவன் பின்னர், பாரசீகத்தின் ஆதரவுக்குட்பட்டான். இவனும் பார்னபாஸஸும் சேர்ந்து பாரசீகத்தின் கடற்படை பலத்தைப் பெருக்கி வந்தனர். இதை எதிர்த்து நிற்க வேண்டி, ஸ்ப்பார்ட்டாவும் தன் கடற்படை பலத்தை அதிகரித்துக் கொள்ளத் தீர்மானித்தது. அஜிஸிலேயஸ் மன்னனிடமே இந்தப் பொறுப்பை ஒப்புவித்தது. இவன் அப்படியே கடற்படையை ஒழுங்குபட அமைத்து, அதற்குத் தலைவனாக தனது மைத்துனன் பெய்ஸாந்தரை நியமித்தான். இது பெரிய தவறாக முடிந்தது. கடற்படைப்பொறுப்பை பெய் ஸாந்தர் வசம் ஒப்புவித்துவிட்டு, சின்ன ஆசியாவின் மற்றப் பகுதி களில் வெற்றி காணத்திட்டமிட்டிருந்தான் அஜிஸிலேயஸ். ஆனால் அதற்குள் கிரீஸுக்குத் திரும்பிச் செல்லவேண்டியதாகி விட்டது. ஏன் என்று பின்னர் விசாரிப்போம்.
இதற்கிடையே பெய்ஸாந்தரின் கடற்படையும் பாரசீகக் கடற்படையும், கோஸ் தீவிற்கு மேற்கிலுள்ள நீடஸ் தீபகற் பத்தருகில் 394-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் சந்திக்கும்படி நேரிட்டது. சண்டையும் மூண்டது. ஸ்ப்பார்ட்டக் கடற்படைக்குத் தோல்வி. பெய்ஸாந்தர் கொல்லப்பட்டுவிட்டான். இதனுடைய ஸ்ப்பார்ட் டாவின் கடலாதிக்கம் மின்னல் வாழ்வாக முடிந்து விட்டது. சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்கள் ஸ்ப்பார்ட்டாவுக் கிருந்த ஆதிக்கமும் போய்விட்டது. அந்த ராஜ்யங்களில் பல, தங்கள் மீது திணிக்கப்பட்டிருந்த ஸ்ப்பார்ட்டக் காவற் படைகளை அப்புறப்படுத்தி விட்டன.
அஜிஸிலேயஸ் மன்னன், சின்ன ஆசியப் பகுதிகளில் வெற்றி யடைந்து வருவதைக் கண்டு பாரசீகம் சும்மாயிருக்கவில்லை. ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாக உள்நாட்டுச் சண்டையைக் கிளப்பிவிட ஏற்பாடு செய்தது. இதற்குத் தகுந்தாற்போல், ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாக உணர்ச்சி, பெலொப்பொனேசிய யுத்தத்தில் அதன் கட்சியைச் சேர்ந்திருந்த ராஜ்யங்களிடையே வளர்ந்து வந்தது. ஸ்ப்பார்ட்டா, தங்களைச் சரியாக நடத்தவில்லை யென்ற குறை இந்த ராஜ்யங்களுக்கு இருந்து வந்ததென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். பெலொப்பொனேசிய யுத்தம் முடிந்த பிறகு, அதன் வெற்றியின் பலன்களை, வெற்றிக்குக் காரணமாக இருந்த எல்லா ராஜ்யங்களுக்கும் பகிர்ந்து கொடாமல், தானே அனுபவிக்கத் தீர்மானித்து ஸ்ப்பார்ட்டா; கூட அந்த ராஜ்யங்களை அலட்சியமும் செய்து வந்தது. அதனுடைய ஆதிக்கத்திற்குச் சமீப காலத்தில் உட்பட்ட ராஜ்யங்களின் வெறுப்பு வேறே அதிகரித்து வந்தது. இவையெல்லாம் சேர்ந்திருந்ததனால் ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாக ஒரு கட்சியைக் கிளப்புவது பாரசீகத்திற்குச் சுலபமாக இருந்தது. முதன்முதலில் கிளம்பியது தீப்ஸ்.
2. விரோதம் வளர்கிறது
வடக்கே போசிஸ், லோக்ரிஸ் என்ற இரண்டு ராஜ்யங்களைப் பற்றி வாசகர்களுக்கு ஞாபகமிருக்குமல்லவா? இவையிரண்டுக்கும் எல்லைப்புறத் தகராறு ஏற்பட்டது. போசிஸ் ஸ்ப்பார்ட்டாவின் உதவியையும், லோக்ரிஸ், தீப்ஸின் உதவியையும் முறையே நாடின. இதனால் ஸ்ப்பார்ட்டா, தீப்ஸின் மீது படையெடுக்கத் தீர்மானித்தது. தீப்ஸோ, ஆத்தென்ஸ் மீது தனக்கிருந்த பழைய பகைமையை மறந்து, அஃது இழந்துவிட்ட ஏகாதிபத்தியத்தை மீண்டும் பெறுவதற்குத் துணைசெய்வதாக வாக்குக் கொடுத்து, அதன் உதவியை நாடியது. ஆத்தென்ஸும் இதற்கு உடன்பட்டது. இந்தச் சமயத்தில், ஹெல்லெஸ்ப்பாண்ட் பக்கம் சென்றிருந்த லைஸாந்தர், ஸ்ப்பார்ட்ட அரசாங்கததின் உத்தரவுப்படி, பியோஷ் யாவின் மீது படையெடுத்து வந்தான். ஆத்தென்ஸ் படை, தீப்ஸ் படைக்கு உதவியாகச் செல்வதற்கு முன்பே இவன் தீப்ஸ் படையைச் சந்தித்துப் போர்தொடுத்தான். கண்டது என்ன? தோல்வி. போர்க்களத்திலேயே கொலை செய்யப்பட்டும் விட்டான் (395-ஆம் வருஷம்). இவன் மரணம், ஸ்ப்பார்ட்டாவுக்குப் பெரிய நஷ்டம். அதனை ஓர் ஏகாதிபத்தியமாகச் செய்தவன் இவனல்லவோ?
தீப்ஸ் வெற்றியடைந்ததனால், ஸ்ப்பார்ட்டாவுக்கு எதிர்ப்பு வளர்ந்தது. தீப்ஸும் ஆத்தென்ஸும் சேர்ந்து கொண்டதற்குப் பிறகு, கொரிந்த்தியா என்ன, ஆர்கோஸ் என்ன, யூபியா என்ன, அக்கர் னேனியா என்ன, இப்படிப் பல முக்கியமான ராஜ்யங்கள், ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து கொண்டன. இந்த எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியே அஜிஸிலேயஸ் சின்ன ஆசியா விலிருந்து திரும்பி வரவழைக்கப்பட்டான்.
இவன் வந்து சேருவதற்கு முந்தியே ஸ்ப்பார்ட்டாவின் படைகளும் அதற்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து கொண்டிருந்த மேலே சொன்ன ராஜ்யங்களின் படைகளும் 394-ஆம் வருஷம் ஜூலை மாதம் கொரிந்த்திய பூசந்தியில் சந்தித்துப் போரிட்டன. ஸ்ப்பார்ட்டாவுக்கு வெற்றி கிடைத்தது; ஆனால் பெயரளவில்தான்.
அஜிஸிலேயஸ் மன்னனும் தெஸ்ஸாலி வழியாக வெகு வேகத்துடன் வந்து கொண்டிருந்தான். இவன் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மேற்படி கூட்டு ராஜ்யங்கள் தீர்மானித்தன. இதற்குத் தீப்ஸ்தான் காப்புக் கட்டிக் கொண்டது. அப்படியே கோரோனீயா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியும் விட்டது. இதை யறிந்த ஸ்ப்பார்ட்டா, அஜிஸிலேயஸ் அரசனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பியது. இரு தரப்பு படைகளும் 394-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம், அதாவது நீடஸ் கடற்போர் நடைபெற்ற ஒரு வாரத்திற்குள், மேற்படிகோரோனீயா என்ற இடத்திற்குச் சமீபத்தில், பலத்த யுத்தம் நடைபெற்றது. அஜிஸிலேயஸுக்கு, அதாவது ஸ்ப்பார்ட்டா பக்கம் வெற்றியே கிடைத்தது. ஆனால் முந்திப் போலவே பெயரளவுக்குத்தான். ஏனென்றால் இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேற்படி கூட்டு ராஜ்யங்களின் கட்டுப்பாட்டை உடைத்திருக்க வேண்டுமல்லவா அஜிஸிலேயஸ் மன்னன்? அதை அவன் செய்யவில்லை. தன்னைத் தடுத்து நிறுத்தியப் படையைத் தோல்வியுறச் செய்து விட்டானேயானாலும் அதனைக் கிழித்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியவில்லை. அவனால் கோரோனீயா பிரதேசத்தைக் காலி செய்துவிட்டு வேறு வழியாக ஸ்ப்பார்ட்டா வந்து சேர்ந்தான்.
ஆனால் ஸ்ப்பார்ட்டாவோ, தனக்கு வெற்றி கிடைத்ததையே முக்கியமாக எண்ணிக்கொண்டு, பெலொப்பொனேசியாவுக்கு வெளியே, தான் சமீப காலமாகச் செலுத்திக் கொண்டு வரும் ஆதிக்கத்தை இன்னும் நன்றாக ஊர்ஜிதம் செய்துகொள்ளத் தீவிரமாக முயற்சி செய்யத் தொடங்கியது. அதற்கு விரோதமாக ஒன்றுசேர்ந்திருந்த ராஜ்யங்களோ, இந்த முயற்சியைத் தடுத்து நின்றன; அதனை - ஸ்ப்பார்ட்டாவை - பெலொப்பொனேசியாவுக்கு வெளியே தலைநீட்டவொட்டாத படி அரண்கள் அமைத்தும் காவற்படைகள் நிறுத்தியும் தடைசெய்தன. ஸ்ப்பார்ட்டா, பெலொப் பொனேசியாவுக்குள்ளேயே சிறைப்பட்ட மாதிரியான நிலைமையில் இருக்க வேண்டியதாயிற்று. ஸ்ப்பார்ட்டா முயற்சி செய்தும், அதற்கு விரோதமான ராஜ்யங்கள் தடை செய்ததும், இப்படிச் சில்லரைச் சண்டைகளாகச் சுமார் எட்டு வருஷ காலம் நடைபெற்றன. இந்தச் சண்டைகளைப் பொதுவாகக் ‘கொரிந்த் தியச் சண்டை’ என்று அழைப்பர், சண்டையின் பெரும்பகுதி கொரிந்த்திய பூசந்திப் பிரதேசத்தில் நடைபெற்ற காரணத்தினால்.
ஸ்ப்பார்ட்டா, பெலொப்பொனேசியாவுக்குள் சிறைப்பட்ட மாதிரி இருக்க வேண்டிய நிலைமைக்கு வந்ததும், இதுதான் தனக்கு நல்ல சந்தர்ப்பம் என்று கருதி, ஆத்தென்ஸ், முந்தி லைஸாந்தர் உத்தரவுப்படி இடித்து வீழ்த்திய நீண்ட சுவர்களைப் பழையபடி கட்டிக் கொள்ளத் தீர்மானித்தது. கட்டக்கூடாதென்று ஸ்ப்பார்ட்டா இப்பொழுது தடுக்க முடியாதல்லவா? தவிர, எஜீயன் கடலிலும் சின்ன ஆசியாவின் கடலோரப் பகுதியிலும் உள்ள ராஜ்யங்களுடன் பழைய மாதிரி சிநேகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முனைந்தது. இப்படிச் சுவர்கள் கட்டப்பெறுவதற்கும், சிநேகத் தொடர்புகள் ஏற்படுவதற்கும் காரணமா யிருந்தவன் யாரென்று நினைக்கிறீர்கள்? பார்னபாஸஸுடன் சேர்ந்துகொண்டு நீடஸ் கடற்போரில் ஸ்ப்பார்ட்டாவை வெற்றி கண்ட ஆத்தீனிய தளபதி கோனோன்தான். பெலொப்பொனேசிய யுத்த முடிவில் சரணடைவதற்கு முந்தி, ஆத்தென்ஸ் எந்த நிலைமையிலிருந்ததோ அந்த நிலைமையில் அதனை மறுபடியும் காணவேண்டுமென்ற ஆவல் இவனுக்கு இருந்து வந்தது. அதனை ஒருவாறு இப்பொழுது பூர்த்தி செய்து கொண்டான். இந்தச் சுவர் வேலையில் ஆத்தீனியர் களுக்குத் துணை செய்தவர்கள் பியோஷ்யர்கள். பத்து வருஷத்திற்கு முந்தி ஆத்தென்ஸைத் தரைமட்டமாக்கிவிட வேண்டுமென்று ஆவேச மாகப் பேசியவர்கள் இவர்கள்தான். தவிர, இந்தச் சுவர் கட்டி முடிப்பதற்காக ஆத்தென்ஸ், கோனோன் மூலமாகப் பாரசீகத்தின் பொருளுதவியைப் பெற்றுக்கொண்டது. இவற்றினையெல்லாம் நோக்கும் பொழுது, இந்தக் காலத்து கிரீஸின் அரசியல் நிலைமை எவ்வளவு முரண்பாடுடையதாக இருந்ததென்பது நன்கு புலனாகும். இன்றைக்கு ஒரு கட்சியிலிருந்தாரை நாளைக்கு அதே கட்சியில் இருப்பரென்று எண்ண திடமில்லாமலிருந்தது. நீண்ட சுவர்கள் கட்ட முடிந்தது. ஆத்தென்ஸில் எவ்வளவு குதூகலம்! பழைய வாழ்வு மீண்டும் வந்துவிட்டதாக ஜனங்கள் உற்சாகமடைந்தார்கள். ஆம்; பழைய மாதிரி சுயேச்சை வாழ்வு அதற்கு ஏற்பட்டது. அதற்காக, அந்த வாழ்வு பெற, ஆத்தீனியர்கள் அரும்பாடுபட்டார்கள். ஆனால் இந்த அரும்பாடு, சுமார் ஐம்பது வருஷ காலத்திற்கு மேல் பலன் கொடுக்கவில்லை. இதனைப் பார்ப்போம் பின்னர்.
ஆத்தென்ஸ் இப்படித் தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகையில், கொரிந்த்திய பூசந்தியை வலுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டு மென்பதற்காக கொரிந்த்தியாவும் ஆர்கோஸும் ஒரு சமஷ்டியாகச் சேர்ந்து கொண்டன. இங்ஙனமே, எஜீயன் கடலிலுள்ள தீவு ராஜ்யங்கள் சிலவும் ஒரு சமஷ்டியாகச் சேர்ந்து கொண்டன. இந்தச் சமஷ்டிகளின் அடிப்படையான நோக்கம் ஒன்றே. அதுவே ஸ்ப்பார்ட்டாவை ஓங்கவிடாமற் செய்வது.
ஸ்ப்பார்ட்டா பார்த்தது; தனக்கு விரோதமாக ஒன்று சேர்ந்திருக்கும் ராஜ்யங்கள், பாரசீகத்தின் உதவியினால்தான் வலுப் பெற்று வருகின்றன என்ற முடிவுக்கு வந்தது; பாரசீகத்தை எதிர்த்து நிற்பதில் பயனில்லை யென்பதையும் கண்டது. எனவே அதனுடன் சமாதானமாகப் போய்விடத் தீர்மானித்து, அண்ட்டால்ஸிடாஸ் என்பவனை; சின்ன ஆசியா பகுதியில் பாரசீகத்தின் அதிகாரப் பிரதிநிதியாயிருந்த டிரிபாஸஸ் என்பவனிடம், 392-ஆம் வருஷம் சந்தி பேச அனுப்பியது. இதையறிந்த ஆத்தென்ஸும் அதன் நேச ராஜ்யங்களும், ஸ்ப்பார்ட்டாவின் சமரஸ முயற்சியைப் பலிக்க விடாமற் செய்ய கோனோனும் இன்னும் சிலரும் சேர்ந்த ஒரு தூது கோஷ்டியை மேற்படி டிரிபாஸஸிடம் அனுப்பியது. டிரிபாஸஸ், ஸ்ப்பார்ட்டாவுக்குச் சாதகமாக இருந்தான். இதனால் கோனோனைச் சிறைப்படுத்திவிட்டான். இதற்குப் பிறகு இவனைப் பற்றிய விவரம் ஒன்றும் தெரியவில்லை. சிறையிலேயே இறந்து விட்டானென்பர். இன்னுஞ் சிலர், ஸுஸா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே கொலை செய்யப்பட்டுவிட்டானென்பர். எப்படியோ, ஆத்தென்ஸைப் பெருவாழ்வு வாழக் காணவேண்டு மென்று ஆவல் கொண்டிருந்தவர்களிலே ஒருவனான கோனோன் 392-ஆம் வருஷம் இவ்வுலக வாழ்வினின்று மறைந்து விட்டான்.
கடைசியில் அண்ட்டால் ஸிடாஸின் சமரச முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் இதற்கு நாலைந்து வருஷங்கள் பிடித்தன. இந்த நாலைந்து வருஷ காலத்தில் ஏற்கனவே சொன்னபடி சில்லரைச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆத்தென்ஸ், வடக்கே ஹெல்லெஸ்ப்பாண்ட் பிரதேசத்திலிருந்த ராஜ்யங்களைப் பழைய படி தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வர திராஸிபூலஸ் தலைமையில், 389-ஆம் வருஷம் ஒரு கடற்படையை அனுப்பியது. இந்தத் திராஸிபூலஸ்தான், ஆத்தென்ஸின் 403-ஆம் வருஷம், ஜனநாயக ஆட்சியை மறுபடியும் ஸ்தாபித்த தலைவர்களில் ஒருவன் என்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும் . (இவன் வடக்கே சென்று தாஸோஸ், ஸாமோத்ரேஸ், பிஸ்ட்டியும், சால்ஸிடோன், லெஸ்போஸ் முதலிய பிரதேசங்களை ஆத்தென்ஸின் செல்வாக் குட்படுத்தினான். சின்ன ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பாம்பிலியாவுக்குச் சென்றபோது அங்கே 388-ஆம் வருஷம் கொல்லப்பட்டு விட்டான். கோனோன் மரித்த நான்காவது வருஷமே திராஸிபூலஸும் மறைந்து போனது ஆத்தென்ஸுக்குப் பெரு நஷ்டம். அதற்குப் பெருமை தேடித் தர முனைந்தார்களல்லவா இருவரும்?
மேலே சொன்னபடி அண்ட்டால்ஸிடாஸின் முயற்சி காரண மாகப் பாரசீகம் சமரஸத்திற்கு வர இசைந்தது. இதற்காகச் சில நிபந்தனைகளையும் விதித்தது.
1. சின்ன ஆசியாவில் கடலோரமாகவுள்ள எல்லா ராஜ்யங் களும், ஸைப்ரஸ் முதலிய சில தீவுகளும் பாரசீக மன்னனுக்குச் சொந்தமாகிவிட வேண்டும்.
2. மற்றக் கிரேக்க ராஜ்யங்கள் சுதந்திரமாயிருக்கலாம்.
3. ஆனால் எஜீயன் கடலிலுள்ள லெம்னோஸ், இம்ப்ரோஸ், ஸ்க்கைரஸ் ஆகிய மூன்று தீவுகள் மட்டும் ஆத்தென்ஸுக்குட் பட்டவை யாயிருக்க வேண்டும்.
4. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத ராஜ்யங்கள், பாரசீகத்திற்கு மட்டுமல்ல, நிபந்தனைகள் ஏற்றுக்கொண்ட ராஜ்யங்களுக்கும் விரோதிகளாகக் கருதப்பட்டு அவற்றின் மீது யுத்தம் தொடுக்கப் பெறும்.
இந்த நிபந்தனைகளை எல்லா ராஜ்யங்களும் ஒப்புக் கொண்டன. யுத்தத்தினால் மிகவும் சலித்துப் போயிருந்த ஆத்தென்ஸும் வேறு வழியில்லாமல் சிறிது முணுமுணுப்புடன் ஒப்புக் கொண்டது. ஒப்புக் கொண்டதற் கடையாளமாக எல்லா ராஜ்யங்களும் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ஸ்ப்பார்ட்டாவில் 386-ஆம் வருஷம் ஒன்று கூடி நிபந்தனைகளில் கையெழுத் திட்டன. பியோஷ்யாவிலுள்ள எல்லா ராஜ்யங்களின் சார்பாகவும் தீப்ஸ் கையெழுத்திட விரும்பியது. பியோஷ்யா முழுவதும் தனது ஆதிக்கத்திற்குட் பட்டிருக்கிறதென்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கம். ஆனால் ஸ்ப்பார்ட்டா இதற்கு இடங்கொடுக்கவில்லை. எல்லா ராஜ்யங் களுக்கும் சுய நிர்ணய உரிமை அளிக்கப்பட்டிருக்கிறபடியால் அந்தந்த ராஜ்யமும் அதனதன் சார்பாகவே கையெழுத்திட வேண்டுமென்று வற்புறுத் தியது. தீப்ஸும் ஒன்றும் சொல்ல இயலாமல் தனக்காக மட்டும் கையெழுத்திட்டது.
இந்தச் சமரஸ நிபந்தனைகளுக்கு அல்லது சமாதான ஒப்பந் தத்திற்கு ‘அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தம்’ அல்லது ‘பாரசீக அரசனின் ஒப்பந்தம்’ என்று பெயர். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக சுமார் நூறு வருஷங்களுக்கு முந்தி, அவரது மாரத்தான் யுத்தத்திற்கு பிறகு, ஆத்தென்ஸின் பெருமுயற்சியினால் பாரசீகத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்கள் பலவும் மீண்டும் - நூறு வருஷங் கழித்து - பாரசீகத்தின் தளைக்கு உட் பட்டன. இதற்குக் காரணமாயிருந்தது ஸ்ப்பார்ட்டா. இதுதான், அண்ட்டால் ஸிடாஸை முதன்முதலாக சமரஸம் பேச 392-ஆம் வருஷம் அனுப்பியபோது, மேலே சொன்ன நிபந்தனைகளைக் கிளத்தியது. இந்த நிபந்தனைகளை மறுக்கவேண்டியே, ஆத்தென்ஸும் அதன் நேச ராஜ்யங்களும் கோனோன் முதலிய வர்களை அனுப்பின. ஆனால் பாரசீகம், ஸ்ப்பார்ட்டா கிளத்திய நிபந்தனைகள் தனக்குச் சாதகமாக இருந்தபடியால் அவற்றிற்கு இணங்கியது. ஆக, ஸ்ப்பார்ட்டா சுயநலங்காரணமாக, தன் சகோதர கிரேக்க ராஜ்யங்களைப் பாரசீகத்திற்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. இதனால் கிரீஸின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டது.
சுயநலத்தின் விளைவு
1. கூட்டுகளைக் கலைத்தல்
அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்த தோடு ஸ்ப்பார்ட்டா திருப்தியடையவில்லை. அதனை அமுலுக்குக் கொண்டு வருகிற பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டது. ஒப்பந்தத்தை அமுலுக்குக் கொண்டுவருவதாவது என்ன? தனக்கு விரோதமாக மற்ற ராஜ்யங்களை ஒன்று சேரவிடாமற் செய்வதுதான். கிரேக்க ராஜ்யங்கள் ஒன்று சேராமலிருப்பது பாரசீகத்திற்கும் அனுகூலந்தானே? இதனால் அது, ஸ்ப்பார்ட்டாவுக்குப் பரிபூரண ஆதரவு அளித்தது. ஸ்ப்பார்ட்டாவோ, அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தின் இரண்டாவது ஷரத்துப்படி ஒவ்வொரு ராஜ்யத் திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்ற காரணத்தைக் காட்டி, அப்பொழுது கிரீஸின் பல பாகங்களிலும் இருந்துவந்த ராஜ்யக் கூட்டுகளைக் கலைத்துவிட்டு, ஆங்காங்குத் தன் ஆதிக்கத்தை ஸ்தாபித்துக் கொள்ள முனைந்தது. சுயநலம், சகோதர உணர்ச் சியைக் கூட மழுங்கச் செய்துவிடுகிறது! ஸ்ப்பார்ட்டாவின் இந்தச் சுயநலப் போக்கை விரிவுப்படுத்திக் கொடுத்தவன் அஜிஸிலேயஸ் மன்னன்.
அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தம் நிறைவேறியதும் முதன் முதலாக, ஸ்ப்பார்ட்டா கொரிந்த்தியாவும் ஆர்கோஸும் ஒரு சமஷ்டியாகச் சேர்ந்திருந்த தல்லவா, அந்தச் சமஷ்டியைக் கலைத்து விட்டது. கொரிந்த்தியாவில் தனக்குச் சாதகமாயுள்ள ஓர் அர சாங்கத்தை நிறுவியது. இதற்குப் பிறகு கொரிந்த்தியாவா கட்டும், ஆர்கோஸா கட்டும் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன.
பிறகு, 385-ஆம் வருஷம் தனக்கு வடக்கே ஆர்க்கேடியாவி லுள்ள மாண்ட்டீனியா என்ற சிறு ராஜ்யத்தின் மீது பாய்ந்தது. அதற்கு உத்தரவு பிறப்பித்தது. அது சிறிது தயங்கவே, அங்கு ஒரு படையை அனுப்பி, அரண்களை அழித்துவிட்டு, அதன் ஜனங் களைப் பிரித்து, நாலைந்து கிராமங்களில் குடியேறும்படிச் செய்தது.
வடக்கே கால்ஸிடீஸி தீபகற்பம் இருக்கிறதல்லவா, இங்குள்ள சிறிய சிறிய ராஜ்யங்கள் பல ஒலிந்த்தஸ் என்ற ராஜ்யத்தின் தலைமையில் சமஷ்டியாகச் சேர்ந்து கொண்டிருந்தன. இந்தச் சமஷ்டியைக் கலைத்து விட ஸ்ப்பார்ட்டா முதல் தடவையாக ஒரு படையையும், இரண்டாந் தடவையாக மற்றொரு படையையும் அனுப்பியது. சுமார் நான்கு வருஷ காலம் போராடி, கடைசியில் 379ஆம் வருஷம் சமஷ்டியைக் கலைத்துவிட்டது. ஒலிந்த்தஸ் ராஜ்யமும் சரணடைந்தது. அதுவும், மற்ற ராஜ்யங்களும் பின்னர் ஸ்ப்பார்ட்டாவின் செல்வாக்குக்குட்பட்டன.
கால்ஸிடீஸி பக்கம் இரண்டாந் தடவையாகச் சென்ற ஸ்ப்பார்ட்டாப் படையானது, வழியில் தீப்ஸில் முகாம் செய்யும் படி நேரிட்டது. தீப்ஸில் அப்பொழுது லியோண்ட்டியாடீஸ் என்பவனைத் தலைவனாகக் கொண்ட பணக்காரக் கட்சிக்கும், இஸ்மேனியாஸ் என்பவனைத் தலைவனாகக் கொண்ட ஜனக் கட்சிக்கும் பலத்த பிணக்கு இருந்தது. இரண்டும் சம வலுப் பெற்றிருந்தன. லியோண்ட்டியாடீஸ், ஸ்ப்பார்ட்டப் படைத் தலைவனான பிபீபிடாஸ் என்பவனை அணுகி, அதிகார பீடத்தில் தன்னுடைய கட்சி அமர்வதற்குத் துணைசெய்தால், தீப்ஸின் முக்கிய அரணாகிய காட்மீயா என்பதை அவன் கைப்பற்றிக் கொள்வதற்குத் தான் துணை செய்வதாகக் கூறினான். ஸ்ப்பார்ட்டா வுக்கும் தீப்ஸுக்கும் அப்பொழுது பகிரங்கமாக எவ்வித சண்டை யுமில்லை. ஆயினும் பீபிடாஸ் இதற்கு ஒப்புக்கொண்டான். 382-ஆம் வருஷம் நல்ல கோடைக் காலத்தில் ஒருநாள் காட்மீயா கோட்டையில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று ஸ்திரீகள் தினம். நண்பகல் வேளையில் நகரத்தில் ஜனசந்தடி குறைவாயிருந்த சமயம் பார்த்து லியோண்ட்டியாடீஸ் வழிகாட்ட, பீபிடாஸ் தன் படை யினரிற் சிலருடன் காட்மீயா கோட்டைக்குள் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். இதையறிந்த நகர ஜனங்கள் ஒரே ஆத்திர மடைந்தனர். ஆயினும் முக்கியமான கோட்டை கை விட்டுப் போன பிறகு என்ன செய்வது? லியோண்ட்டியாடீஸ், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஸ்ப்பார்ட்டாவுக்குச் சாதகமான சர்வாதி கார ஆட்சி ஸ்தாபிதமாயிற்று. ஜனக்கட்சித் தலைவனான இஸ் மேனியாஸ், சிறைப்படுத்தப்பெற்று அங்கே கொலை செய்யப் பட்டுவிட்டான். அந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் முந்நூறு பேர் தப்பியோடி ஆத்தென்ஸில் அடைக்கலம் புகுந்து கொண்டனர். ஆத்தென்ஸில் முப்பதின்மருடைய கொடுங் கோலாட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தபோது அதனிடமிருந்து தப்பிச் சென்ற திராஸிபூஸ் முதலிய ஜனக்கட்சியினர் பலருக்குதீப்ஸ் தஞ்சம் கொடுத்த தல்லவா, அதற்கு நன்றி காட்டுவது போலவே இப் பொழுது தீப்ஸின் ஜனக் கட்சியினருக்கு ஆத்தென்ஸ் அடைக்கலம் அளித்தது.
ஸ்ப்பார்ட்டா, தீப்ஸில் தனக்குச் சாதகமான ஆட்சியை ஸ்தாபித்த தோடு திருப்தியடையவில்லை. பியோஷ்யாவிலுள்ள மற்ற நகர ராஜ்யங்களிலும் தனது செல்வாக்குக்குட்பட்ட ஆட்சியை ஸ்தாபித்தது. குறிப்பாக எந்த பிளாட்டீயாவை சுமார் நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முந்தி தீப்ஸ் வசம் ஒப்புவித்து அதனை அழிக்குமாறு செய்ததோ அதே பிளாட்டியாவை இப் பொழுது புனர்நிர்மாணம் செய்து அங்குத் தனக்குச் சாதகமாயுள்ள ஓர் அரசாங்கத்தை நிறுவியது. தீப்ஸை அவமானப்படுத்த வேண்டு மென்பதற்காகவே இப்படிச் செய்தது.
அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தம் நிறைவேறியதிலிருந்தே தீப்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் பரஸ்பரம் மனக் கசப்பிருந்து வந்தது. ஏனென்றால் மேற்படி ஒப்பந்தத்தில் பியோஷ்ய ராஜ்யங் களின் சார்பாக, தீப்ஸ் கையெழுத்திட விரும்பியது. இதை ஸ்ப்பார்ட்டா விரும்பவில்லை. மத்திய கிரீஸில் தன்னுடைய ஆதிக்கம் எங்கே ஓங்கிவிடுமோ என்று அஞ்சியது. இதனாலேயே, தீப்ஸ், தீப்ஸுக்காகவே கையெழுத்திட வேண்டுமென்று வற்புறுத் தியது. தீப்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவின்மீது ஆத்திரம். அதனுடைய விருப்பத்தை நிறைவேற்றாமற் செய்துவிட்டதல்லவா? ஆக, அடிப்படையில் பார்க்கப் போனால், இரண்டும் சுயநலத்திலேயே நாட்டமுடையனவாயிருந்தன.
2. கட்டுக்கதை போன்ற நிகழ்ச்சி
ஆத்தென்ஸில் அடைக்கலம் புகுந்து கொண்டிருந்த தீபர்கள், தங்கள் நாட்டைச் சர்வாதிகார ஆட்சியினின்று விடுவிக்கத் துடித்துக் கொண்டிருந்தனர். இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர். இந்தச் சூழ்ச்சியை இவர்கள் நிறைவேற்றி யதைப் பார்த்தால் ஒரு கட்டுக் கதை போலவே இருக்கிறது.
சூழ்ச்சியைத் தொடங்கியவர்களில் முதன்மையானவன் பெலொப்பிடாஸ் என்பவன். நற்குடிப் பிறப்பினன். நிறைந்த செல்வ முடையவன்; சுத்த வீரன்; மாசற்ற தேச பக்தன். இவனுடைய சூழ்ச்சிக்குத் தீப்ஸிலேயே வசித்துக் கொண்டிருந்த இருவர் உடந்தை யாயிருந்தனர். ஒருவன் காரோன் என்பவன்; தீப்ஸில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தவன். மற்றொருவன் பில்லிடாஸ் என்பவன்; அரசாங்கத்துப் பிரதம அதிகாரிகளுக்குக் காரியதரிசி. இவ்விருவர் தவிர, எப்பாமினோண்டாஸ் என்பவனும் பேருதவியாயிருந்தான். இந்த எப்பாமினோண்டாஸ் நன்னெறியைக் கடைப்பிடித்தவன்; நிதானஸ்தன்; சிறந்த வீரன். இவன் யுத்தத்தை வெறுத்தானாயினும், ஒரு நாடு, தன் சுதந்திரத்தைக் கறைபடாமல் காப்பாற்றிக் கொண் டிருக்க வேண்டுமானால், அந்த நாட்டு மக்கள் போர்க் கருவிகளைத் துருப்பிடியாமல் வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கொள்கையினன்; பியோஷ்யா முழுவதிலும் இவனுக்கு அபரிமித மான செல்வாக்கு இருந்தது.
379-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் நல்ல குளிர் காலம். பெலொப்பிடேஸும் அவனுடன் வேறு ஆறு பேரும் ஆத்தென்ஸி லிருந்து புறப்பட்டனர்; வேடுவர் மாதிரி வேடந் தரித்துக் கொண்டு, தீப்ஸ் நகரத்தின் எல்லையை யடைந்தனர். ஒருநாள் பூராவும் அங்கேயே ஒளிந்திருந்து, மறுநாள் மாலை, நிலங்களில் வேலை செய்துவிட்டுத் திரும்பிச் செல்லும் விவசாயிகளோடு விவசாயிகளாக நகருக்குள் சென்று, ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின் படி காரோன் வீட்டில் மறுநாள் மாலைவரை ரகசியமாகத் தங்கினார்கள். வேறு நாற்பது போர் அங்கேயிருந்தார்கள். மறுநாள் மாலை, பில்லிடாஸ் வீட்டில் தீப்ஸ் அரசாங்கத்துப் பிரதம அதிகாரிகள் இருவருக்கு விருந்து. விருந்தின்போது தீப்ஸிலுள்ள அழகிய ஸ்திரீகள் சிலரை அறிமுகப்படுத்தி வைப்பதாக அந்த இரு பிரதம அதிகாரிகளுக்கும் பில்லிடாஸ் சொல்லியிருந்தான். விருந்து, அதைத் தொடர்ந்து களியாட்டங்கள் எல்லாம் நடைபெற்றன. சொன்னபடி ஸ்திரீகள் முதல் முகமூடியணிந்து கொண்டு வந்தார்கள். அவர்கள் வேறு யாருமில்லை. பெலொப்பிடாஸின் நண்பர்கள்தான். ஸ்திரீ வேஷம் தரித்துக் கொண்டு வந்தார்கள். வந்ததும் குடி மயக்கத்திலிருந்த பிரதம அதிகாரிகளைத் தீர்த்து விட்டார்கள். லியோண்ட்டியாடீஸ் ஒருவன் பாக்கியிருந்தான். அவன் விருந்துக்கு வரவில்லை. அவனை முடித்து விட வேண்டுமே? எனவே பெலொப்பிடாஸ், தனது சகாக்கள் சிலருடன் அவன் வீட்டிற்குச் சென்றான். அப்பொழுது அவன் இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சாவகாசமாக உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் அவன் மனைவி நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். பெலொப்பிடாஸ், தன் துணைவயர்களுடன் உள்ளே நுழைந்ததும், லியோண்ட்டி யாடீஸுக்கு விஷயம் புரிந்துவிட்டது. உடனே அருகிலிருந்து வாளை எடுத்துக் கொண்டு, அதனால் வந்தவரில் ஒருவனை கீழே வீழ்த்தினான். பிறகு அவனுக்கும் பெலொப்பிடாஸுக்கும் கைகலந்த சண்டை நடை பெற்றது. கடைசியில் லியோண்ட்டியாடீஸ் கொலை யுண்டான்.
இதற்குப் பின்னர் பெலொப்பிடாஸ் நேரே சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு அடைபட்டிருந்தவர்களை விடுதலை செய்தான்; எல்லோருக்கும் ஆயுதங்களை வழங்கச்செய்தான். இந்த இடத்தில் எப்பாமினோண்டாஸும் தனது சகாக்களுடன் வந்துசேர்ந்து கொண்டான்.
காட்மீயா கோட்டைக்குள்ளிருந்த ஸ்ப்பார்ட்ட ஹார் மோஸ்ட்டுகளுக்கு, இரவு நேரமானபடியால் விஷயம் ஒன்றும் விளங்கவில்லை. நகரத்தில் ஏதோ கலவரம் நடக்கிறதென்று மட்டும் தெரிந்து கொண்டு, பிளாட்டீயா முதலிய சமீப இடங்களிலிருந்து ஸ்ப்பார்ட்டப் படைகளை உடனே உதவிக்கு வருமாறு சொல்லி யனுப்பினார்கள். பொழுது விடிந்தது. ஜனங்கள், நடந்ததையறிந்து பெரிதும் மகிழ்ச்சி யடைந்தார்கள். பெலொப்பிடாஸை; தங்கள் ரட்சகன் என்று கொண்டாடினார்கள். அவனையும் காரோனையும் பியோஷ்யா முழுவதிற்கும் அதிகாரிகளாக நியமித்து அவர்களிடம் அரசாங்க நிருவாகத்தை ஒப்புவித்தார்கள். இதற்குள், ஆத்தென்ஸில் தங்கி யிருந்த மற்ற தீபர்கள், சில ஆத்தீனியப் போர் வீரர்களுடன் இரண்டு ஆத்தீனியப் படைத் தலைவர்களுடன் வந்து சேர்ந்தார்கள். எல்லாம் முன்னேற்பாடு. பெலொப்பிடாஸ், இந்தப் படையைக் கொண்டு காட்மீயா கோட்டையிலிருந்த ஹார்மோஸ்ட்டுகளின் கோரிக்கைக் கிணங்க பிளாட்டீயா முதலிய இடங்களிலிருந்து வந்து கொண்டி ருந்த ஸ்ப்பார்ட்டப் படைகளை விரட்டியடித்தான். காட்மீயா கோட்டையைக் கைப்பற்றிக் கொள்ளச் சென்றான். ஆனால் அதற்குள் அங்கிருந்த ஹார்மோஸ்ட்டுகள் பயந்துபோய், தங்களையும் தங்கள் துருப்புகளையும், ஸ்ப்பார்ட்டாவுக்குத் திரும்பிச்செல்ல அனுமதித்தால், கோட்டையை அப்படியே ஒப்புக் கொடுத்து விடுவதாகத் தெரிவித்தார்கள். பெலொப்பிடாஸ் இதற்குச் சம்மதித்தான். காட்மீயா பெலொப்பிடாஸ் வசமாயது. 379-ஆம் வருஷம். தீப்ஸும் ஸ்ப்பார்ட்டாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை யடைந்தது.
3. ஸ்ப்பார்ட்டா மீது குற்றச்சாட்டு
தீப்ஸ் கைவிட்டுப்போனது, ஸ்ப்பார்ட்டாவுக்கு மிகவும் வருத்தம். காட்மீயா கோட்டையை விட்டுவிட்டு வந்த ஹார் மோஸ்ட்டுகளின் மீது ஆத்திரங் கொண்டது. இந்த ஆத்திரத்தில் அவர்களில் இருவரைக் கொலைக் கூடத்திற்கு அனுப்பிவிட்டது; மற்றொருவனை அபராதம் செலுத்துமாறு செய்து நாட்டினின்று விரட்டிவிட்டது. இதனோடு அதன் ஆத்திரம் அடங்கவிடவில்லை. காட்மியா கோட்டை பெலொப்பிடாஸ் வசப்பட்ட தருணத்தில், ஆத்தென்ஸிலிருந்து சென்ற தீபர்களுடன், சில ஆத்தீனியப் போர்வீரர்களும் இரண்டு ஆத்தீனியப் படைத்தலைவர்களும் உதவிக்காகச் சென்றார்களல்லவா? இவர்கள் எப்படி உதவிக்கு அனுப்பலாமென்று ஆத்தென்ஸைக் கேட்டது. ஆத்தென்ஸோ, இந்தச் சமயத்தில் ஸ்ப்பார்ட்டாவை விரோதித்துக் கொள்ள விரும்ப வில்லை. எனவே, அதனைச் சாந்தப்படுத்தும் பொருட்டு, படைத் தலைவர்களில் ஒருவனை மரண தண்டனைக்குட் படுத்தியது. மற்றொருவன் தப்பியோடிவிட்டான்
ஆத்தென்ஸிடமிருந்து இந்தப் பரிகாரத்தைப் பெற்றுக் கொண்டதும், ஸ்ப்பார்ட்டா, கிளியோம்ப்ரோட்டஸ் என்பவனுடைய தலைமையில் தீப்ஸை நோக்கி ஒரு படையை அனுப்பியது. இவன் சிறிது தூரம் சென்றான்; சில சேதங்களை விளைவித்தான். அவ்வளவுதான். மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில், தன் படையின் பெரும் பகுதியை தெஸ்ப்பி என்ற இடத்தில் ஸ்ப்போட்ரியாஸ் என்பவனுடைய தலைமையில் விட்டு விட்டு ஸ்ப்பார்ட்டாவுக்குத் திரும்பிவிட்டான். இந்த ஸப்போட்ரி யோஸோ சாதாரண பேர்வழி. முந்தி பீபிடாஸ், காட்மீயாவை எளிதில் கைப்பற்றிக் கொண்டது போல் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து சுலபமாகப் புகழ் பெற ஆசை கொண்டான். ஆத்தென்ஸின் துறைமுகப் பகுதியாகிய பீரேயஸ் சரியான பாதுகாப்பில்லை யென்று கேள்வியுற்று, தெஸ்ப்பி யிலிருந்து புறப்பட்டு இரவோடு இரவாகச் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டுவிடத் தீர்மா னித்தான். அப்படியே ஒரு சிறுபடையுடன் சென்றான். ஆனால் சிறிது தூரம் சென்றதும் பொழுது விடிந்து விட்டது. மேற்கொண்டு போக முடியாமல் திரும்பி விட்டான். திரும்புகிற வழியில் சில சேதங்களை விளை வித்துத் திருப்தியடைந்தான்.
ஸ்ப்போட்ரியாஸின் இந்தச் செய்கை, அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தை மீறினதாகுமென்றும், இதற்குச் சமாதானம் கூறும் படிக்கும் ஸ்ப்பார்ட்டாவைக் கேட்டது ஆத்தென்ஸ். ஆனால் ஸ்ப்பார்ட்டாவோ, இவனை விசாரிப்பது போல் விசாரித்து விட்டுக் கடைசியில் விடுதலை செய்துவிட்டது. இதற்கு அஜிஸிலேயஸின் செல்வாக்கே காரணம்.
ஸ்ப்போட்ரியாஸின் விடுதலை, ஆத்தென்ஸுக்கு ஆச்ச ரியத்தை உண்டு பண்ணியது. அவனுடைய செயலை அங்கீகரித்த மாதிரியல்லவோ ஆயிற்று இந்த விடுதலை? அதாவது ஸ்ப்பார்ட் டாவே, அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்ட தாக ஆயிற்று. இனி, அதன் நல்லெண்ணத்தில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே ஆத்தென்ஸ், யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத்துவங்கியது. புதிய கப்பல்கள் பல கட்டப் பெற்றன. பீரேயஸ் துறைமுகம் பந்தோ பஸ்து செய்யப்பட்டது. இப்படித் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டதோடு, ஸ்ப்பார்ட்டாவுக்கும் தீப்ஸுக்கும் நடை பெற்று வரும் போராட்டத்தில், தான் சிறிது காலமாக நடுநிலைமையா யிருந்து வருவதுபோல் இனியும் இராமல் தீப்ஸுடன் பகிரங்க மாகத் தொடர்புகொண்டு அதற்கு உதவி செய்ய தீர்மானித்தது ஆத்தென்ஸ்.
ஆத்தென்ஸ் தலைதூக்குகிறது
1. இரண்டாவது ஆத்தீனிய சமஷ்டி
நீடஸ் கடற்போரில் ஸ்ப்பார்ட்டா தோல்வியுற்ற பிறகு, கோனோன், திராஸிபூலஸ் ஆகிய இருவருடைய முயற்சியின் பேரில், ஆத்தென்ஸ், எஜீயன் கடலிலும் ஆசியாவின் கடலோரப் பகுதி யிலும், வடக்கே திரேஸ் பிரதேசத்திலும் உள்ள ராஜ்யங்கள் பல வற்றுடன் பழைய மாதிரி சிநேகத் தெடர்பு கொள்ள ஆரம்பித்தது. இதன் விளைவாகப் பெலொப்பொனேசியப் போரின் முடிவில் மிகவும் குறைந்து போயிருந்த அதன் செல்வாக்கு சிறிதுசிறிதாக அதிகரித்து கொண்டு வரலாயிற்று. இப்படியிருக்கையில் அண்ட் டால்ஸிடாஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் இரண் டாவது ஷரத்துப்படி, அதாவது அந்தந்த ராஜ்யமும் தனித்தனியாகச் சுதந்திரத்துடன் இருக்கவேண்டுமென்ற ஷரத்துப்படி, ஆத்தென்ஸ் மேற்சொன்ன ராஜ்யங்களுடன் கொண்டிருந்த தொடர்பை ரத்து செய்து கொள்ளும்படி நேரிட்டது. ஆனால் ரத்து செய்துகொண்ட சீக்கிரத்திலேயே பிற்கால ஆசிரியன் ஒருவன் கூறுகிற மாதிரி ஒப்பந்தத்தில் மை உலர்ந்ததும் உலராததுமாயிருக்கையிலே, கியோஸ் என்ன, மிட்டிலீனி என்ன, பிஸண்ட்டியம் என்ன, இப்படி ஒன்றன் பின்னொன்றாகப் பல ராஜ்யங்களுடன் முந்தி மாதிரி சிநேகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுவந்தது. சக்தி வாய்ந்த ஒரு சுதந்திர ராஜ்யமாக ஆத்தென்ஸை எல்லோரும் மறுபடியும் மதிக்கத் தலைப் பட்டனர். அதனுடைய உள்நாட்டு நிலைமை மிகவும் அமைதி யுற்றிருந்தது. கடல் வியாபாரப் பெருக்கத்தினால் ஜனங் களிடையே பணப்புழக்கம் அதிகரித்து வந்தது. கலைத்துறையில் புதிய அமிசங்கள் பல காணப்பெற்றன. பொதுவாக, இந்தக் காலத்து ஆத்தென்ஸ், பெரிக்ளீய யுகத்தைப் போல் அவ்வளவு பிரகாசமா யில்லா விட்டாலும், அக்கம் பக்கத்து ராஜ்யங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது மிகவும் மேன்மையுற்றிருந்ததென்றே சொல்ல வேண்டும்.
அப்படியானால் கிரேக்க ராஜ்யங்கள் பலவற்றையும் ஒரு சமஷ்டியாக இணைத்த, அந்தச் சமஷ்டிக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஏன் ஆத்தென்ஸ் முன்வரக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியை எழுப்பியவன் ஐஸோக் ராட்டீஸ் என்னும் ஆத்தீனிய அறிஞன். இவன் 380-ஆம் வருஷம் பிரசுரம் வெளியிட்டு, அதில் மேற்படி சமஷ்டிக்குத் தலைமை வகிக்க, ஆத்தென்ஸுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றனவென்று எடுத்துக்
காட்டினான். சர்வ கிரேக்க ஐக்கியத்தை நாட்டமாகக் கொண்ட ஓர் இயக்கம் ஆத்தென்ஸில் தோன்றி வளர்ந்துவந்தது. அந்த ஐக்கியத்திற்கு ஆத்தென்ஸ்தான் தலைமை வகிக்கப் போகிற தென்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலைமையில்தான் ஸ்ப்போட்ரியாஸ் பீரேயஸ் துறை முகத்தைக் கைப்பற்றிக்கொள்ளத் துணிந்து, ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்குமிடையே மறுபடியும் பகைமையை உண்டு பண்ணிவிட்டான். ஆத்தென்ஸில் வளர்ந்து வந்த சர்வ கிரேக்க இயக்கத்திற்கு உரம் போட்டது போலாயிற்று இவனது அசட்டுச் செய்கை.
ஆத்தென்ஸ், ஏற்கனவே சொன்னதுபோல், தன்னை யுத்தத் திற்குத் தயார்ப்படுத்திக் கொண்டது. கூடவே, ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமாக ஒரு கூட்டுச் சேர்க்கவும் ஆரம்பித்தது. இந்தக் கூட்டுக்குத் தான் இரண்டாவது ஆத்தீனிய சமஷ்டியென்று பெயர். ஸ்ப் பார்ட்டாவின் அதிகாரக் கொடுமை களின்று கிரேக்க ராஜ்யங்களை விடுவித்து, அவற்றின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொடுப்பதே; அந்தச் சுதந்திரத்தை அனுமதியுடன் அனுபவிக்கச் செய்வதே இந்தச் சமஷ்டியின் நோக்கமென்று பிரகடனம் செய்யப்பட்டது. சின்ன ஆசியப் பகுதியிலுள்ள கிரேக்க ராஜ்யங்கள், பாரசீகத்தின் ஆதினத் திற்குட் பட்டவையென்ற காரணத்தினால், இதில் சேருமாறு அழைக் கப்படவில்லை. அதாவது, பாரசீகத்திற்கு விரோதமில்லாமலும் அண்ட்டால்ஸிடால் ஒப்பந்தத்தை மீறாத முறையிலும் இதனை ஸ்தாபிக்க முயன்றது ஆத்தென்ஸ்.
ஆத்தென்ஸ், இந்த சமஷ்டியைத் தோற்றுவிக்கிற விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்தது. முந்தி டெலோஸ் சமஷ்டியை ஏற்படுத்தி, அது காரணமாக, மற்ற ராஜ்யங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டதுபோல் இப்பொழுது சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏகாதிபத்திய வீக்கத்தினால் உண்டாகிய தீமைகளை ஒருவாறு உணர்ந்திருந்தது. எனவே, அந்தத் தீமைகள் புகாத வகையில் இந்தப் புதிய சமஷ்யை அமைத்தது. ஆனாலுமென்ன? பழைய ஏகாதிபத்திய நினைவு அதனை விட்டகலவில்லை.
ஆத்தென்ஸும், சமஷ்டியில் சேர்ந்துள்ள ராஜ்யங்களும் ஒரே மாதிரியான அந்தஸ்துடையவையென்ற அடிப்படையின் மீதே சமஷ்டியின் திட்டங்கள் வகுக்கப்பட்டன. சமஷ்டியைச் சேர்ந்துள்ள எந்த ராஜ்யத்தின் எந்த விஷயத்திலும் எந்தக் காரணத்தை முன் னிட்டும் ஆத்தென்ஸ் தலையிடக்கூடாது. ஆத்தீனியர் களைக் கொண்டு குடியேற்றுவித்திருக்கிற பிரதேசங்கள் மீது இதுகாறும் ஆத்தென்ஸ் அதிகாரம் செலுத்தி வந்ததல்லவா, அந்த அதிகாரத்தை அது ரத்து செய்து கொண்டுவிட வேண்டும். சமஷ்டியில் சேர்ந் துள்ள ராஜ்யங்களில், ஆத்தீனிய அரசாங்கமோ, ஆத்தீனியப் பிரஜைகளோ, எந்த விதமான சொத்து பத்தையும் கொண்டாடக் கூடாது.
சமஷ்டி, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஆத் தென்ஸ் மட்டும் ஒரு பகுதி; மற்ற அங்கத்தினர் ராஜ்யங்கள் யாவும் சேர்ந்து ஒரு பகுதி. இந்த இரண்டாவது பகுதியினருக்கென்று தனியாக ஒரு சபை இருந்தது. தற்கால பாஷையில் ‘காங்கிரஸ்’ (கிரேக்கபாஷையில், ‘ஸைனீட்ரியோன்’ என்பர்.) என்று இதனைக் கூறலாம். இதன் தலைமை ஸ்தானம் ஆத்தென்ஸ். அதாவது ஆத்தென்ஸில்தான் இந்தக் காங்கிரஸ் கூட வேண்டும். ஆனால் இதில் ஆத்தென்ஸின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளக்கூடாது.
காங்கிரஸ் நிறைவேற்றுகிற தீர்மானங்களை ஆத்தீனிய ஜன சபைக்கும், அப்படியே ஆத்தீனிய ஜனசபை நிறைவேற்றுகிற தீர்மானங்களை காங்கிரஸுக்கும் முறையே அனுப்பவேண்டும். இந்தத் தீர்மானங்களை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ காங்கிரஸுக்கும் ஜனசபைக்கும் முறையே உரிமையுண்டு. ஆனால் இரண்டு சபைகளினால் அங்கீகரிக்கப்படுகிற தீர்மானங்கள்தான் அமுலுக்கு வரும். ஆனால் காங்கிரஸுக்குச் சில விசேஷ அதிகாரங் கள் அளிக்கப்பட் டிருந்தன. உதாரணமாக, சமஷ்டிக்குத் துரோகம் விளைவித்தவர்கள்; ஆத்தீனியர்கள் உள்பட யாராயிருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொள்கிற அதிகாரம் காங்கிரஸுக்கு உண்டு.
சமஷ்டிக்கென்று தனியாக ஒரு நிதி ஏற்படுத்தப் பெற்று அதற்கு எல்லா அங்கத்தினர்களும் ஒரு தொகை செலுத்த வேண்டு மென்று நிர்ணயிக்கப்பட்டது. முந்தி டெலோஸ சமஷ்டியின் பொக்கிஷத்திற்கு, அதன் அங்கத்தினர்கள் செலுத்தி வந்தது, கப்பம் (போரோஸ்) என்ற பெயரால் அழைக்கப்பட்டதல்லவா, அதனை இப்பொழுது மாற்றி ‘நன்கொடை’ அல்லது ‘உதவித் தொகை’ யென்று அழைக்கப்பட்டது. பெயரிலே கூட அந்தஸ்து வித்தியாசம் இருக்கக் கூடாதென்று ஆத்தென்ஸ் கருதியது போலும். மேற்படி நிதியை நிருவாகம் செய்கிற பொறுப்பும், யுத்தம் நேரிட்டால் தலைமை தாங்கும் பொறுப்பும் ஆத்தென்ஸ் வசம் ஒப்புவிக்கப் பட்டது.
இங்ஙனம் அமைக்கப் பெற்ற இந்தச் சமஷ்டியில், அது காறும் ஆத்தென்ஸோடு மட்டும் தனியுறவு பூண்டிருந்த கியோஸ், மிட்டி லீனி, பிஸண்ட்டியம் முதலிய ராஜ்யங்களும், யூபியாயிலுள்ள பல ராஜ்யங்களும், தீப்ஸும், திரேஸ் பகுதியிலும் தெஸ்ஸாலி பகுதியிலும் உள்ள அநேக ராஜ்யங்களும், ஆக, சுமார் எழுபது ராஜ்யங்கள் வரை ஒன்றன் பின்னொன்றாகச் சேர்ந்துகொண்டன.
2. ஆத்தென்ஸ் - ஸ்ப்பார்ட்டா சமரஸம்
ஆனால் இந்த சமஷ்டி நீண்ட காலம் வாழவில்லை. ஆத் தென்ஸ், இதன் கொள்கைகளுக்கு விரோதமாகச் சில ராஜ்யங்களின் உரிமையில் தலையிடத் தொடங்கியது. தவிர, ஸ்ப்பார்ட்டாவின் மீதுள்ள வெறுப்பை அடிப்படையாகக் கொண்டல்லவோ இந்தச் சமஷ்டி தோற்றுவிக்கப்பட்டது? அந்த வெறுப்பை அதிகமாக வளர்க்க விடுவது தனக்கே கெடுதல் என்பதை ஆத்தென்ஸ் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டது. தவிர, துவேஷத்தை அடிப்படை யாகக் கொண்ட எந்த ஒரு ஸ்தாபனமோ இயக்கமோ, நீடித்திருக்க முடியாது: நிரந்தரமான நன்மையைச் செய்யவும் முடியாதல்லவா? எனவே, இந்தச் சமஷ்டி, தோன்றிய சில ஆண்டுகளுக்குள்ளேயே நாடி தளர்ந்து விழுந்து விட்டது.
இந்தச் சமஷ்டி ஆரம்பிக்கப்பட்டவுடனே, அதாவது 377-ஆம் வருஷம், இதற்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் போர் துவங்கியச் சுமார் ஆறு வருஷகாலம் நடைபெற்றது. இந்தக் காலத்தில், ஸ்ப்பார்ட்டா, தீப்ஸின் மீது திரும்பத் திரும்பப் படையெடுத்துத் தோல்வியுற்று வந்தது. தீப்ஸும், வெகு சாமர்த்தியமாக இந்தப் படையெடுப்புக் களைச் சமாளித்துக் கொண்டு வந்தது. இப்படிச் சமாளிக்க, இதற்கு மிகவும் உதவியாயிருந்தது ஆத்தென்ஸ். தீப்ஸுக்கு உதவி செய்து வந்ததோடு ஆத்தென்ஸ், ஸ்ப்பார்ட்டாவுடன் சில கடற்போர்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் கண்டது. ஆனால் இந்தப் போர் களினால் ஆத்தென்ஸுக்கு அபரிமிதமான செலவு ஏற்பட்டு, அதனைச் சரிகட்டிக் கொண்டு போகமுடியாத சங்கடம் ஏற்பட்டது. பண உதவி செய்யுமாறு தீப்ஸைக் கேட்டுப் பார்த்தது. ஆனால் தீப்ஸோ கண்டிப்பாக மறுத்துவிட்டது. இப்படி மறுத்துவிட்டு, அது -தீப்ஸ் - பியோஷ்யாவில் தன் செல்வாக்கைப் பரப்பவும், பழையபடி தன் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டிக் கொள்ளவும் தீவிர நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு வந்தது; அவற்றில் வெற்றியும் கண்டு வந்தது. ஆத்தென்ஸுக்கு இது பொறுக்கவில்லை. தீப்ஸ் மீது கோபமும் பொறாமையும் கொண்டது. ஸ்ப்பார்ட் டாவுடன் சமரஸ மாகப் போவதுதான் உசிதமென்று கருதி அதனுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கியது. 374-ஆம் வருஷம் சமரமும் ஏற்பட்டது. ஆனால் ஏற்பட்ட சீக்கிரத்திலேயே முறிந்தும் போய்விட்டது. ஆத்தென்ஸுக்கும் ஸ்ப்பார்ட்டாவுக்கும் மீண்டும் சில்லரையாகச் சில சண்டைகள் ஆரம்பித்துவிட்டன.
அங்கு தீப்ஸோ, பியோஷ்டியாவோடு தன் ஆதிக்கத்தை வரம்புகட்டிக் கொள்ளாமல், ஆத்தென்ஸுடன் நல்லுறவு பூண்டிருந்த போசிஸ் மீது படை யெடுத்தது; பிளாட்டீயாவையும் தெஸ்ப்பியை யும் ஆக்கிரமித்துக் கொண்டது.
இதைக் கண்டு தீப்ஸ் மீது ஆத்தென்ஸ் கொண்டிருந்த ஆத்திரம் அதிகரித்தது. ஸ்ப்பார்ட்டாவுடன் எப்படியாகிலும் சமாதானமாகப் போய்விட வேண்டுமென்று ஆவல் கொண்டது. ஸ்ப்பார்ட்டாவுக்கும் இதே மாதிரி ஆவலிருந்தது. சமாதான முயற்சிகள் ஆரம்பமாயின.
371-ஆம் வருஷம் ஸ்ப்பார்ட்டாவில் ஒரு சமாதான மகாநாடு கூடியது. தீப்ஸ் உள்பட எல்லாக் கிரேக்க ராஜ்யங்களும் இதற்குப் பிரதி நிதிகளை அனுப்பின. தொலைதூரத்திலுள்ள சிஸிலியி லிருந்தும், மாஸிடோனியா விலிருந்தும், ஏன் பாரசீகத்திலிருந்து கூட, பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். உலக சரித்திரத்திலேயே முதன் முதலாகக் கூடிய மிகவும் பிரதிநிதித்துவம் வாய்ந்த சர்வதேச மகாநாடு என்று இதனைக் கூறலாம். இந்த மகாநாட்டில் ஒரு சமாதான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கால்லியாஸ் சமாதான ஒப்பந்தம் என்று பெயர். கால்லியாஸ் என்பவன் ஆத்தீனியப் பிரதிநிதிகளில் ஒருவன்; சமாதானத்திற்காகப் பெரிதும் முயன்றவன். இவன் பெயராலேயே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம், முந்திய அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தைப் போல, கிரேக்க ராஜ்யங்கள் பலவும் தனி உரிமையுடையவை என்பதை அங்கீகரித்துக்கொண்டது. இதன் விளைவாக ஆத் தென்ஸோ, ஸ்ப்பார்ட்டாவோ மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாதபடி செய்யப்பட்டது. ஸ்ப்பார்ட்டாவும், தான் ஆங்காங்கு நிறுத்தியிருந்த ஹார்மோஸ்ட்டுகளையும், மற்றக் காவற்படைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை அமுலுக்குக் கொண்டுவரும் பொறுப்பு அந்தந்த ராஜ்யத்திற்கே விடப்பட்டது. இனியும் போர்கள் நிகழாமலிருக்க, எல்லா ராஜ்யங்களும் தங்கள் தங்கள் ஆயுத பலத்தைக் குறைத்துக்கொள்ள ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இதனால் இந்த ஒப்பந்தத்தை, ஒருவகையில் ஆயுதப்பரிகரண ஒப்பந்தமென்றும் கூறலாம்.
ஒப்பந்தம் கையெழுத்தாகிற சமயத்தில், ஸ்ப்பார்ட்டாவுக்கும் தீப்ஸுக்கும் தகராறு ஏற்பட்டுவிட்டது. அந்தந்த ராஜ்யமும் அதனதன் சார்பாக மட்டுமே கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையை மீறி, தீப்ஸின் பிரதிநிதியாக வந்திருந்த எப்பாமி னோண்டாஸ், பியோஷ்யாவிலுள்ள எல்லா ராஜ்யங்களின் சார்பாகவும் கையெழுத்திட்டான். ஸ்ப்பார்ட்டாவின் பிரதிநிதி யாகிய அஜிஸிலேயஸ் இதை ஆட்சேபித்து அந்தக் கையெழுத்தை அழித்து விட்டான். ஒப்பந்தத்திலிருந்து, அதாவது ஒப்பந்தத்தினால் ஏற்படக் கூடிய சாதகங்களிலிருந்து தீப்ஸ் விக்கப்பட்டுவிட்டது. தீப்ஸும், ஒப்பந்தம் தன்னைக் கட்டுப்படுத்தாதென்பதை உணர்ந்தும், ஸ்ப்பார்ட்டாவினால் தான் தாக்கப்படுதல் கூடுமென்பதை அறிந்தும், தன்னை, போருக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டது.
தீப்ஸின் மின்னல் வாழ்வு
1. பெலொப்பொனேசிய வெற்றிகள்
கால்லியாஸ் ஒப்பந்தம் மூன்றாவது வாரம் முடிவதற்குள், ஸ்ப்பார்ட்டா, கிளியோம்ப்ரோட்டஸ் தலைமையின் கீழ் ஏற்கனவே போசிஸ் பகுதியில் தங்கியிருந்த சுமார் பதினாயிரம் பேர் அடங்கிய ஒரு படைக்கு, பியோஷ்யாவைத் தாக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்தப் படையும், சுமார் ஏழாயிரம் பேர் கொண்ட ஒரு பியோஷ்யப் படையும், லியூக்ட்ரா என்ற இடத்தில் சந்தித்தன. மும்முரமான போர் நடைபெற்றது. பியோஷ்யப் படையின் பிரதம தளகர்த்தர் களில் ஒருவனாயிருந்த எப்பாமினோண்டாஸ், தான் ஒரு ஞானி மட்டுமல்ல, ஒரு ராஜதந்திரி மட்டுமல்ல, ஒரு வீரனுங் கூட என்பதை இந்தப் போர் முகத்தில் நிரூபித்துக் காட்டினான். கடைசியில் வெற்றி யும் கண்டான். கிளியோம் ப்ரோட்டஸ் கொல்லப்பட்டு விட்டான். அவனுடனிருந்த ஏழு நூறு ஸ்ப்பார்ட்டப் படை வீரர்களில் நானூறு பேருக்கு மேல் மடிந்து போயினர். ஸ்ப்பார்ட்டா, தோல்வியை ஒப்புக் கொண்டு எஞ்சியிருந்ததன் படையைத் திரும்ப வர வழைத்துக் கொண்டுவிட்டது.
ஸ்ப்பார்ட்டா தோல்வியுற்றது ஆச்சரியமல்ல; இந்தத் தோல்வியைச் சகித்துக் கொண்டதே அதுதான் ஆச்சரியம். ஸ்ப்பார்ட்டர்கள் எப்பொழுதுமே, போரில் புறமுதுகு காட்டி வந்தவர் களை ஏளனம் செய்வார்கள்; பல விதங்களில் அவமானப் படுத்து வார்கள். தாடியில் ஒரு பக்கத்தைச் சிரைக்கச் செய்து மற்றொரு பக்கத்தை அப்படியே விட்டுவைக்கச் செய்வார்கள். பல வர்ணங் களுடைய கந்தல் துணிகளை ஒன்றுகூட்டித் தைத்து உடுக்குமாறு செய்வார்கள். அவர்களுக்கு எந்த விதமான உத்தி யோகமும் கொடுக்க மாட்டார்கள். அவர்களில் யாரையாவது ஒரு ஸ்ப் பார்ட்டப் பெண் விவகாஞ் செய்து கொண்டால், அந்தப் பெண்ணின் கதி அதோகதிதான். ஆனால் லியூக்ட்ரா யுத்தத்தி லிருந்து தப்பிப் பிழைத்து வந்த அனைவரையும் இப்படிப்பட்ட அவமானங்களுக்குட்படுத்த முடியாதல்லவா? அப்படி அவமானப் படுத்துவது ஸ்ப்பார்ட்ட சமூகத்திற்குப் பெரிய அபசாரத்தைச் செய்வதாகும். எனவே, மேற்படி தோல்வியை மிகவும் கம்பீரமாக, ஆண்டகையுடன் சகித்துக் கொண்டார்கள். எப்படி என்பதைக் கேளுங்கள்.
ஸ்ப்பார்ட்டாவில் ஒரு திருவிழாவில் அதையொட்டிய களி யாட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் தான் லியூக்ட்ரோ தோல்விச் செய்தி கிடைத்தது. எப்ஹோர்கள், இதை உடனே எல்லோருக்கும் பகிரங்கப்படுத்தாமல் போர்க் களத்தில் மடிந்து போனவருடைய நெருங்கிய உறவினருக்கு மட்டும் ரகசிய மாக அறிவித்து, அவர்கள், சிறப்பாகப் பெண்மக்கள் இந்தத் துக்கத்தை மௌனமாகச் சகித்துக்கொள்ள வேண்டுமென்றும், உரக்க அழக்கூடாதென்றும் உத்தரவிட்டனர்; விழாவையும் களி யாட்டங்களையும் நிறுத்தாமல் நடக்குமாறு அனுமதித்தனர். மறுநாள், இறந்து போனவர்களுடைய உற்றார் உறவினர் பலரும், தங்கள் துக்கத்தைச் சிறிதுகூட காட்டிக் கொள்ளாமல், சிரித்த முகத்துடன் தங்கள் அலுவல்களைக் கவனித்துக் கொண்டி ருந்தனர். இதற்கு நேர்மாறாக உயிரோடிருக்கிறவர்களுடைய உறவினர்கள், ஏதோ துக்கங் கொண்டாடுகிறவர்கள் மாதிரி நடந்து கொண்டனர். ஸ்ப்பார்ட்டர்களின் மன உறுதியையும் கட்டுப் பாட்டையும் என்னவென்று கூறுவது?
ஆனால் இந்த உறுதியும் கட்டுப்பாடும் ஸ்ப்பார்ட்டாவைக் கைதூக்கிக் கொடுக்கவில்லை. மேற்படி லியூக்ட்ரா யுத்தத்தின் முழுவிவரங்கள் தெரிந்தவுடன், பெலொப்பொனேசியா வெங்கணும், ஸ்ப்பார்ட்டாவுக்கு விரோதமான உணர்ச்சி வலுத்தது. ஜன ஆட்சிக்குச் சாதகமான இயக்கங்கள் தோன்றின. ஆங்காங்கு கலகங்கள்; பணக்காரர்களுடைய உயிருக்கும் பொருளுக்கும் ஆபத்து; பெலொப்பொனேசியா முழுவதும் ஒரே குழப்பத்தில் அழுந்திவிடும் போலிருந்தது.
இந்தக் குழப்பத்திலிருந்து ஒரு தெளிவு காணவேண்டுமென்று சொல்லி, ஆனால் உண்மையில் தன்னலத்தை முன்னிட்டு, ஆத் தென்ஸ், லியூக்ட்ராவின் தோல்வி தெரிந்த சிறிது காலத்திற்குள் ஒரு சமாதான மகாநாட்டைக் கூட்டியது. இந்த மகாநாடு ஆத்தென் ஸிலேயே நடைபெற்றது. அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தை ஊர்ஜிதம் செய்து, கிரேக்க ராஜ்யங்களின் தனி யுரிமையைப் பாதுகாக்க பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டுமென்று தீர்மானித்தது. இந்த மகாநாட்டைக் கூட்டுவதன் மூலம் பெலொப் னேசியாவில் ஸ்ப்பார்ட்டா வகித்து வந்த தலைமைப் பதவியையும் மேற்படி அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிற விஷயத்தில் அது வகித்து வந்த பொறுப்பையும் தான் கைப்பற்றிக் கொண்டு விடலாமென்று பார்த்தது ஆத்தென்ஸ். ஆனால் அந்த எண்ணம் பூர்த்தியாக நிறைவேறவில்லை.
மேற்படி மகாநாட்டின் முதல் விளைவாக, 385-ஆம் வருஷம் ஸ்ப்பார்ட்டா வினால் கலைந்து போகுமாறு செய்யப்பட்ட மாண்ட்டினீயர்கள், திரும்பவும் ஒன்று சேர்ந்து தங்கள் நகரத்தைப் புனர் நிர்மாணம் செய்து கொண்டார்கள்.
இதற்குப் பிறகு ஆர்க்கேடியாவிலுள்ள சில்லரை ராஜ்யங்கள் பலவும் ஒன்றுசேர்ந்து ஒரு சமஷ்டி அமைத்துக்கொண்டன. இங்ஙனம் ஆர்க்கேடியர்கள் ஒன்றுபடுவதை ஸ்ப்பார்ட்டா விரும்ப வில்லை; இந்த ஆர்க்கேடிய சமஷ்டியைக் கலைத்துவிட முயன்றது; மாண்ட்டினீயாவை நோக்கி ஒரு படையையும் அனுப்பியது. ஆர்க்கேடியர்கள், ஆத்தென்ஸின் உதவியை நாடினார்கள். ஆனால் அது மறுத்துவிட்டது. எனவே, தீப்ஸின் உதவியைக் கோரினார்கள்.
இந்தக் கோரிக்கைக்கு இணங்க, தீப்ஸ், எப்பாயினோண்டாஸ் தலைமையில் ஒரு பெரும்படையை ஆர்க்கேடியாவுக்கு அனுப்பியது. ஸ்ப்பார்ட்டாவின் படையெடுப்புக்களின்று இதுகாறும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு வந்த தீப்ஸ், இப்பொழுது ஸ்ப்பார்ட்டாவின் மீதே படையெடுக்கக் கூடிய சக்தியைப் பெற்றுவிட்டது. ஸ்ப்பார்ட் டாவின் சக்திக் குறைவையும் இது நன்கு புலப்படுத்துகிறதல்லவா?
தீப்ஸ் படை, ஆர்க்கேடியாவை நோக்கி வருகிறதென்று தெரிந்ததும், ஸ்ப்பார்ட்டப் படை பின்வாங்கிக் கொண்டுவிட்டது. ஆர்க்கேடியா வந்து சேர்ந்ததும், தீப்ஸ் தனது படைத்தலைவனான எப்பாமினோண்டாஸ், தான் வந்த காரியம் நிறைவேறிவிட்ட தென்று தெரிந்து, திரும்பிச் செல்ல உத்தேசித்துக் கொண்டிருந்தான். ஆனால் ஸ்ப்பார்ட்டாவைத் தாக்கி அதற்கு ஒரு நல்ல பாடங் கற்பித்து விட்டுச் செல்லுமாறு ஆர்க்கேடியர்கள் அவனை வேண்டிக் கொண்டார்கள். எப்பாமினோண்டாஸும், இத்தகைய சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது என்று கருதி, ஸ்ப்பார்ட்டாவைத் தாக்கத் தீர்மானித்தான். அப்படியே அதன்மீது படையெடுத்துச் சென்றான். ஆனால் ஸ்ப்பார்ட்டா வரை சென்று திரும்பி விட்டான்; அதனைக் கைப்பற்ற முடியவில்லை. அதற்குப் பதில் லாக்கோனியா பூரா வையும் சூறையாடி விட்டு ஆர்க்கேடியாவுக்குத் திரும்பினான்.
திரும்பியதும் ஆர்க்கேடிய சமஷ்டியை ஒழுங்குபடுத்திக் கொடுப்பதில் கவனஞ் செலுத்தினான். மெகாலோபோலிஸ் (பெரிய நகரம் என்று பொருள்) என்ற பெயரால் ஒரு புதிய நகரத்தை 369-ஆம் வருஷம் ஸ்தாபித்து, அதைச் சமஷ்டியின் தலைநகரமாக் கினான். அதனைச்சுற்றி ஆறுமைல் நீளமுள்ள மதிற்சுவர்கள் எழுப்பச் செய்தான்.
பின்னர், எப்பாமினோண்டாஸ், ஸ்ப்பார்ட்டாவுக்கு அடிமைப் பட்டிருந்த மெஸ்ஸீனியர்களுக்குச் சுதந்திர வாழ்வு அளிக்கத் தீர்மானித்தான். எனவே, 369-ஆம் வருஷம் மெஸ்ஸீனியா மீது படையெடுத்துச் சென்றான். இதன் பயனாக மெஸ்ஸீனியர்கள் விடுதலை பெற்றார்கள். மெஸ்ஸீனே என்ற பெயரால் ஒரு புதிய நகரம் ஸ்தாபிக்கப்பட்டது. அடிமைப்பட்ட காரணத்தினால் பல இடங்களிலும் கலைந்து போயிருந்த மெஸ்ஸீனியர்கள் திரும்பவும் தங்கள் சுயராஜ்யத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
தீப்ஸ் இப்படிப் பெலொப்பொனேசியாவில் செல்வாக்குப் பெற்று வருவத ஆத்தென்ஸினால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. இதற்குத் தகுந்தாற்போல் ஸ்ப்பார்ட்டாவும், தனது ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பிரதேசத்தில் பாதிக்குமேல் கைவிட்டுப் போனதையும், தனக்கு வடக்கே சக்தி வாய்ந்த ஒரு சமஷ்டி ஏற்பட்டு வளர்ந்து வருவதையும் கண்டு அஞ்சிப் போய் ஆத்தென்ஸின முகத்தைப் பார்த்தது. உடனே ஆத்தென்ஸ், எப்பாமினோண்டாஸ் தீப்ஸுக்குத் திரும்பிச் செல்லவொட்டாதபடி தடுக்க ஸ்ப்பார்ட்டா வுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பியது. இந்தக் கூட்டுப் படை யினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்பாமி னோண்டாஸ் தீப்ஸுக்குச் சென்றுவிட்டான். ஆனால் அதே வருஷம் இரண்டாந் தடவையாகப் பெலொப்பொனேசியா மீது படையெடுத்து வந்தான்; விசேஷமான வெற்றியொன்றையும் காணவில்லை. இதனால் இவன்மீது தீப்ஸில் சிறிது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி காரணமாக இவன் அடுத்த வருஷம் பியோஷ்யாவின் பிரதம அதிகாரிகளில் ஒருவனாகத் தெரிந்தெடுக்கப்படவில்லை.
2. வடக்குப் பக்கம்
அதே வருஷம் - 369-ஆம் வருஷம் - தீப்ஸ் வடக்கே தெஸ்ஸாலி பக்கமும் தன் கவனத்தைச் செலுத்த வேண்டியதாயிற்று. இங்கே பேரீ என்ற ஒரு சிறு ராஜ்யம் உண்டு. இதன் அரசன் அலெக்ஸாந்தர் என்பவன், தெஸ்ஸாலியிலுள்ள மற்ற ராஜ்யங்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர முயன்றான். இவனுக்கு விரோதமாக தீப்ஸ், பெலொப்பிடாஸ் தலைமையில் ஒரு படையை அனுப்பியது. பெலொப்பிடாஸ், அந்த ராஜ்யங்கள் அலெக்ஸாந்தரின் ஆதிக்கத்தி லிருந்து விடுவித்து தீப்ஸின் செல்வாக்குட்படுத்தினான்.
இதற்குப்பிறகு, 368-ஆம் வருஷம் பெலொப்பிடாஸ், மாஸி டோனியா பக்கம் திரும்பினான். அப்பொழுது மாஸிடோனியாவில் ஒரே குழப்பம். அதன் அரசனாயிருந்த அமிண்ட்டாஸ் இறந்துபோய் அவன் மூத்த மகன் அலெக்ஸாந்தர் என்பவன் பட்டத்திற்கு வந்து சுமார் ஒரு வருஷமாயிருந்தது. ஆனால் டாலமி என்ற ஒரு பிரபு அவனுக்கு விரோதமாகக் கிளம்பி அவனைக் கொலை செய்து விட்டு, ரீஜெண்ட்டாக ஆண்டு கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் ஆத்தீனியக் கடற்படை யொன்று இப்பிக்ராட்டீஸ் என்பவனுடைய தலைமையில் மாஸிடோனியாவின் கடலோரமாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. முந்தி பெலொப்பொனேசிய யுத்தத்தில் ஆம்ப்பி போலிஸை இழந்து விட்டிருந்ததல்லவா ஆத்தென்ஸ், அதனை மீண்டும் பெறுவதற்காக மாஸிடோனியாவின் உதவியை நாடவே மேற்படி அங்கு இருந்தது. அமிண்ட்டாஸின் மனைவி, அதாவது கொல்லப்பட்டுவிட்ட அலெக்ஸாந்தரின் தாயார், பெர்டிக்காஸ், பிலிப் என்ற தன் இரண்டு சிறு பிள்ளைகளுடன் ஆத்தீனியப் படைத்தலைவனின் பாதுகாப்பை நாடினாள். இதையறிந்த பெலோப்பிடாஸ், ரீஜெண்ட்டான டாலமியைக் கட்டாயப்படுத்தி தீப்ஸுடன் விசுவாச ஒப்பந்தம் செய்துகொள்ளச் செய்தான்; பிணை யாட்களாக உயர்குடும்பத்தைச் சேர்ந்த முப்பது இளைஞர்களை அனுப்புமாறும் செய்வித்தான். இங்ஙனம் அனுப்பப் பெற்ற இளைஞர்களில் ஒருவன், மேற்சொன்ன பிலிப். இவனைப் பிந்திய அத்தியாயத்தில் சாவகாசமாகச் சந்திப்போம்.
பெலொப்பிடாஸ், டாலமியுடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு, தெஸ்ஸாலி வழியாகத் திரும்பும்போது, முந்திச் சொன்ன பேரீ ராஜ்யத்தில் அலெக்ஸாந்தர் மன்னனைச் சந்திக்கும்படி நேரிட்டது. அலெக்ஸாந்தருக்கு அப்பொழுது ஆத்தென்ஸின் பக்க பலமாக இருந்தது. இந்தப் பலத்தை நம்பி அவன், தன்னை வந்து சந்தித்த பெலோப்பிடாஸை சிறைப்படுத்திவிட்டான். இது தெரிந்து, தீப்ஸிலிருந்து ஒரு சிறு படையை பேரீயை நோக்கிச் சென்றது. இதில் எப்பாமினோண்டாஸ் சாதாரண ஒரு போர் வீரனாயிருந் தான். தீப்ஸ் படை, அலெக்ஸாந்தருக்கு உதவி செய்ய வந்திருந்த ஆத்தீனியக் கடற்படையைச் சந்தித்துப் போர் புரிந்தது; சமாளிக்க முடியவில்லை; பின்வாங்கும் படியாயிற்று. போர் வீரர்கள் கலக்க மடைந்து, எப்பாமினோண்டாஸை படைத் தலைமையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்கள். அவனும் இணங்கி, போர் வீரர்களை ஒழுங்காகத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பித்தான். இந்த வீரச் செயலுக்குப் பரிசு போல், பழையபடி பியோஷ்யாவின் பிரதம அதிகாரிகளில் ஒருவனாகத் தெரிந் தெடுக்கப்பட்டான். தெரிந்தெடுக்கப்பட்டதும், ஒரு படையுடன் தெஸ்ஸாலி பக்கம் 367-ஆம் வருஷம் சென்று பெலொப்பிடாஸை சிறைமீட்டு வந்தான்.
பெலொப்பிடாஸும் எப்பாமினோண்டாஸீம் சேர்ந்து வடக்கிலும் தெற்கிலுமாகப் பல ராஜ்யங்களை தீப்ஸின் செல் வாக்குட்படுத்தினார்கள். அதன் சக்தி அதிகரித்தது; புகழ் வளர்ந்தது. கிரேக்க ராஜ்யங்களுள், ஸ்ப்பார்ட்டாவுக்கே மேலான அந்தஸ்து உண்டென்று மதித்து வந்தது பாரசீகம் இதுகாறும். அதற்குப் பதில், தானே முக்கியமான ராஜ்யமாக இனி மதிக்கப்பட வேண்டுமென்று கருதியது தீப்ஸ். இதற்காக பெலொப்பிடாஸ் தலைமையில் ஒரு தூதுகோஷ்டியைப் பாரசீகத்திற்கு அனுப்பியது. பாரசீகமும், தீப்ஸின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் ஓர் அறிக்கை பிறப்பித்தது.
ஆனால் இந்த அறிக்கையை மற்ற ராஜ்யங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன; தீப்ஸுக்குப் போட்டியாக ஸ்ப்பார்ட் டாவுக்கு உதவி செய்யவும் முன்வந்தன. இதற்குத் தகுந்தாற் போல் ஆர்க்கேடியாவில் அப்பொழுது தீப்ஸுக்கு விரோதமான இயக்கம் வலுத்து வந்தது. ஆர்க்கேடியா உருப்பெறுவதற்கு, முந்தி தீப்ஸ்தான் காரணமாயிருந்தது. ஆனால் அதே ஆர்க்கேடியா இப்பொழுது தீப்ஸை எதிரிட்டுக் கொண்டுவிட்டது. கிரேக்க ராஜ்யங்களின் உறவு பகைகள் திரைப்படக் காட்சிபோல் அவ்வளவு சீக்கிரமாக மாறின இந்தக் காலத்தில்!
ஆர்க்கேடியாவை அடக்க வேண்டி எப்பாமினேண்டாஸ், மூன்றாவது முறையாக பெலொப்பொனேசியா மீது 366-ஆம் வருஷம் படையெடுத்துச் சென்றான். ஆனால் பயனொன்றும் விளையவில்லை. தீப்ஸுக்கும் ஆர்க்கேடியாவுக்குமிருந்த பிணக்கு முற்றியது; அவ்வளவுதான்.
ஆத்தென்ஸ், தீப்ஸின் செல்வாக்கைக் குலைக்க வேண்டுமென் பதில் சிறிது காலமாகவே முனைந்திருந்தது; இப்பொழுது ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆர்க்கேடியாவுக்கும் உதவியாக நிற்க முன் வந்தது. எஜீயன் கடலிலும் வடக்கே ஹெல்லெஸ்ப்பாண்ட் ஜலசந்திப் பக்கத்திலும் தன் ஆதிக்கத்தை ஊன்றிக் கொண்டு வந்தது.
பார்த்தான் எப்பாமினோண்டாஸ். ஆத்தென்ஸின் கடலா திக்கத்தை ஒழிக்கத் தீர்மானித்தான். நூறு கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படையுடன் 364-ஆம் வருஷம் வடக்கே ஹெல்லெஸ்ப்பாண்ட் பக்கம் சென்று ஆத்தென்ஸுடன் நேசப்பான்மை பூண்டிருந்த கடலோர ராஜ்யங்களை அதற்கு விரோதமாகக் கிளப்பிவிட்டான். அப்படியே சில ராஜ்யங்கள் கலகத்திற்குக் கிளம்பின! தீப்ஸின் ஆதிக்கத்திற்கும் சில ராஜயங்கள் உட்படச் சம்மதித்தன. இப்படி ஆரம்பத்தில் எப்பாமினோண்டாஸுக்குச் சில வெற்றிகள் கிட்டினவாயினும், இந்த வெற்றிகளைக் கொண்டு கடலாதிக்கம் பெறக் கூடிய சக்தியும் வசதியும் தீப்ஸுக்கு இருக்கவில்லை. தவிர, இந்தச் சமயத்தில் அது, தன் கவனத்தை தெஸ்ஸாலி பக்கம் செலுத்த வேண்டியதாயிருந்தது. எனவே, கடலாதிக்கம் பெற வேண்டுமென்ற அதன் முதல் முயற்சியே அதனுடைய கடைசி முயற்சியாகவும் முற்றுப் பெற்றுவிட்டது. ஆத்தென்ஸும், எப்பாமினேண்டாஸின் தூண்டுதல் பேரில் தனக்கு விரோதமாகக் கிளம்பிய ராஜ்யங்களை அடுத்த வருஷமே அடக்கிவிட்டது.
எப்பாமினோண்டாஸ், வடக்கே கடற்படையுடன் சென்றிருக் கையில், பேரி ராஜ்யத்து அலெக்ஸாந்தர் ஆத்தென்ஸினுடைய ஆதரவின் பேரில், தெஸ்ஸாலியிலுள்ள மற்ற ராஜ்யங்களைத் தன் சர்வாதிகாரத்தின் கீழ்கொண்டு வர முயன்று வருவதையறிந்து, பெலோப்பிடாஸ், அவனுக்கு விரோதமாக ஒரு படையுடன் தெஸ்ஸாலி நோக்கிச் சென்றான். தீப்ஸிலிருந்து இவன் புறப்பட்ட தினத்தன்று - 364-ஆம் வருஷம் ஜூலை மாதம் பதின்மூன்றாந்தேதி -சூரிய கிரகணம். கெட்ட சகுனமல்லவா? ஆயினும் இதைப் பொருட் படுத்தாமல் பெலொப்பிடாஸ் புறப்பட்டான். பேரீக்ச்ப் சமீபத்தில் கடுமையான போர் நடைபெற்றது. தீபர்களுக்கு வெற்றி கிட்டும் சமயம். பெலோப்பிடாஸ், எதிரியாகிய அலெக்ஸாந்தரை நேரில் பார்த்துவிட்டான். அவனைத் தன் கையாலேயே கொன்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆத்திரத்தில் அவன் மீது வேகமாகப் பாய்ந்தான்; ஆனால் அலெக்ஸாந்தரின் மெய்க்காப் பாளர்களால் கொல்லப்பட்டு விட்டான். பெலொப்பிடாஸ் இறந்துவிட்டாலும் தீபர்கள் வெறி கொண்டவர்கள் போல் அலெக் ஸாந்தரின் படைமீது பாய்ந்து அதனை முறியடித்துவிட்டார்கள். அடுத்த வருஷம், தீப்ஸிலிருந்து மற்றொரு படை புறப்பட்டுச் சென்று அலெக்ஸாந் தரைப் பணிய வைத்தது. அவனும் தீப்ஸின் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்க ஒப்புக்கொண்டான். ஆனால் சிறிது காலத்திற்குப் பின் அவனுடைய சத்துருக்குள் அவனைக் கொன்று விட்டார்கள்.
3. மின்னொளி குன்றுதல்
பெலொப்பிடாஸ், சூரிய கிரகணத்தன்று தெஸ்ஸாலியை நோக்கிப் புறப்பட்டதிலிருந்தே தீப்ஸுக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டதென்று செல்லவேண்டும். இதற்குத் தகுந்தாற் போல் அதனுடைய புத்தியும் கெட்டு வந்தது. தீப்ஸுக்கு வட மேற்கில் ஆர்க்கோமேனஸ் என்ற ஒரு சிறுராஜ்யம் உண்டு. இதற்கும் தீப்ஸுக்கும் நீண்ட காலப் பகைமை. இந்தப் பகைமையை ஒருவாறு தீர்த்துக்கொண்டு விடத் தீர்மானித்தது. தீப்ஸ் எப்பாமினோண் டாஸ் வடக்கே கடற்படையுடன் சென்றிருந்த சமயம் பார்த்து, தனக்கு விரோதமான ஒரு புரட்சிக்கு அஃது - ஆர்க்கோமேனஸ் - உடந்தை யாயிருந்தது என்ற ஓர் அற்ப காரணத்தைக் காட்டி அதன் மீது ஆர்க்கோமேனஸ் மீது - 364- ஆம் வருஷம் படையெடுத்து அதனைத் தரையோடு தரையாக அழித்துவிட்டது; ஆண்களனை வரையும் கொன்றுவிட்டது; பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்றுவிட்டது. இதைக் கேட்டு கிரீஸ் முழுவதும் குலை நடுங்கிப் போயிற்று. தீப்ஸ்மீது ஒரே வெறுப்பு ஏற்பட்டது. அதனுடைய அழிவை முன்கூட்டி அறிவிப்பதுபோல இருந்தது இந்த அக்கிரமச் செயல்.
உண்மையில் தீப்ஸின் அழிவுக்கு ஆரம்பச் சடங்கு பெலொப் பொனேசியாவில் துவங்கிவிட்டது. அங்கு ஆர்க்கேடியாவில் தீப்ஸுக்கு விரோதமான உணர்ச்சி மேலும் மேலும் வளர்ந்து வந்தது. ஆர்க்கேடிய சமஷ்டிக்குள்ளேயே கட்சிப் பிரதி கட்சிகள் தோன்றி ஒன்றோடொன்று பூசலிட்டுக் கொண்டும் குழப்பம் விளைவித்துக் கொண்டுமிருந்தன. இந்தப் பூசல்களுக்கு ஆத்தென்ஸும் ஸ்ப்பார்ட் டாவும் முறையே தூபம் போட்டுக் கொண்டு வந்தன. ஸ்ப்பார்ட்டா, பழைய மாதிரி, ஆர்க்கேடியாவில் ஆதிக்கம் பெறும் போலிருந்தது. இப்படி ஸ்ப்பார்ட்டா ஆதிக்கம் பெறுவது தீப்ஸுக்கு ஆபத் தல்லவா? எனவே, இதைத் தடுக்கவும், ஆர்க்கேடியாவில் ஏற்பட்டி ருந்த குழப்பத்தை அடக்கவும் எப்பாமினோண்டாஸ், நான்காவது தடவையாக 362-ஆம் வருஷம் ஒரு பெரும்படையுடன் தீப்ஸி லிருந்து புறப்பட்டு வந்தான்.
முதலில் ஸ்ப்பார்ட்டாவைத் திடீரென்று தாக்கி அதனைக் கைப்பற்றிக் கொள்ள முயன்றான். முடியவில்லை. மாண்ட்டினீ யாவையும் இப்படியே திடீரென்று கைப்பற்றிக் கொள்ள முயன்று ஆசாபங்கடைந்தான். கடைசியில் மாண்ட்டினீயாவிலேயே 362-ஆம் வருஷம் பெலொப்பொனேசியக் கூட்டுப் படைகளைச் சந்திக்கும் படியாயிற்று. கடும்போர் நடைபெற்றது. தீப்ஸ் படைக்கு வெற்றி கிடைக்கும் போலிருந்தது. ஆனால் நல்ல தருணத்தில் எப்பாமி னோண்டாஸ் கொல்லப்பட்டு விட்டான். இது தெரிந்து தீப்ஸ் படை கதி கலங்கிப் போய்விட்டது. அதனுடைய வெற்றி, தோல்வி யாக மாறிவிட்டது. எப்பாமினோண்டாஸும், உயிர்போகுந் தறுவாயில், இனி யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பயனில்லை யென்றும், சமாதானமாகப் போய்விடுமாறும் கூறினான்.
இவனுடைய மரணம் தீப்ஸுக்குப் பெரிய துரதிருஷ்டம். அதனை மேலான நிலைக்குக் கொண்டுவர இவன் பாடுபட்டான். ஆனால் இவனுக்குப் பின்னர் அது கீழான நிலைக்கே போய் விட்டது. காரணம், அதனுடைய குறுகிய மனப்பான்மை; அங்குச் சரியான தலைவர்கள் தோன்றாமை. தீப்ஸுக்கு ஏற்பட்டிருந்த சொற்பகாலப் பெரு வாழ்வெல்லாம் இரண்டு பேருடைய முயற்சியின் விளைவே. அந்த இரண்டு பேரும் பெலோப்பிடாஸும் - எப்பாமினோண்டாஸும் ஒருவர் பின்னொருவராக மறைந்து போனதும், அதுவும் - தீப்ஸும் சிறிது காலத்திற்குள் சிறுமையுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது.
எப்பாமினோண்டாஸின் கடைசி விருப்பப்படி சமாதானம் ஏற்பட்டது. யுத்தத்திற்கு முந்தியிருந்த நிலைமையிலேயே எல்லா ராஜ்யங்களும் இருக்க வேண்டுமென்று ஒப்புக் கொள்ளப்பட்டது. மெஸ்ஸீனியா, மெகாலோபோலிஸ், இவற்றின் தனியுரிமையை எல்லா ராஜ்யங்களும் அங்கீகரித்துக் கொண்டன. ஆனால் ஸ்ப்பார்ட்டா மட்டும் இந்தச் சமாதானத்திற்கு ஒப்புக் கொள்ள வில்லை. என்றாலும் அதன் மறுப்பைக் கேட்பவருமில்லை.
ஏனென்றால், இந்தச் சமயத்தில் ஸ்ப்பார்ட்டாவின் நிலைமை மிகவும் பரிதவிக்கத் தக்கதாயிருந்தது. சமீபத்தில் சில ஆண்டுகள் வரை, பாரசீகத்தினாலும் மற்றக் கிரேக்க ராஜ்யங்களினாலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த அது, தற்போது பொருள் பலமற்று, ஆள் பலத்தில் குறைந்து உதிர் சருகுபோல் கிடந்தது. ஆனால் ஆள் குறைவைக் காட்டிலும் பொருள் குறைவுதான் அதனைப் பெரிதும் வருத்தியது. எனவே, கூலிக்கும் படை உதவ முன்வந்தது.
அப்பொழுது எகிப்தில், பாரசீக ஆதிக்கத்திற்கு விரோதமான ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் புரட்சிக்கு உதவி செய்ய, அஜிஸிலேயஸ் மன்னன், சுமார் ஆயிரம் பேர் கொண்ட ஒரு காலாட்படையுடன் எகிப்துக்குச் சென்றான்; ஓரளவு வெற்றியும் கிடைத்தது. பிரதியாகப் பணமும் பெற்றுக் கொண்டான். ஸ்ப்பார்ட் டாவுக்குத் திரும்பும் வழியில் 361-ஆம் வருஷம் - எண்பத்து மூன்றாவது வயதில் இறந்து போனான். ஸ்ப்பார்ட்டாவின் வாழ்வு, தாழ்வு இரண்டையும் கண்டவன் இந்த அஜிஸிலேயஸ் மன்னன்.
மறுபடியும் சிஸிலி மீது
1. முதலாவது டையோனிஸியஸ்
இப்பொழுது மேற்குப் பக்கமாகச் சிறிது திரும்புவோம். ஸைரக்யூஸ்தான் நம் கண்முன்னே வந்து நிற்கிறது. 413-ஆம் வருஷம் ஆத்தென்ஸ் மீது வெற்றி கண்டதல்லவா இது? இதற்குப் பிறகு இங்கு ஒரே உற்சாகம். வெற்றி வாங்கிக் கொடுத்ததற்குச் சன்மானம் போல், ஜனங்கள், அரசாங்க நிருவாகத்தில் அதிக பங்கு வேண்டுமென்று கேட்டார்கள். நியாந்தானே? ஸைரக்யூஸ், சர்வாதிகார ஆட்சிக்குப் பெயர் போனதென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும் இந்த ஆட்சி 466-ஆம் வருஷத்தில் முற்றுப் பெற்றுவிட்டது. இதற்குப் பிறகு, நிதானப் போக்குடைய அதாவது ஜனங்களுக்கு ஓரளவு உரிமைகள் மட்டும் வழங்கிய ஜன ஆட்சி நடைபெற்று வந்தது. ஒரு சிலர் ஆட்சியைச் சிறிது விரிவுபடுத்திப் பார்த்தால் அதுவே இந்த நிதானப் போக்குடைய ஜன ஆட்சியாகப் புலப்படும்.
இப்பொழுது 413-ஆம் வருஷம் மேற்சொன்ன வெற்றிக்குப் பிறகு ஜனங்களுடைய உரிமை ஆவல் பூர்த்தியாகிற வகையில் அங்குப் பூரண ஜன ஆட்சி அமைந்தது. ஒரு வேடிக்கை பாருங்கள். இங்கு ஸைரக்யூஸில், வெற்றியானது, தீவிர ஜன ஆட்சியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கு நேர்மாறாக அங்கு ஆத்தென்ஸில், தோல்வியானது, ஜன ஆட்சியை அகற்றிவிட்டு, ஒரு சிலர் ஆட்சியை ஸ்தாபித்துக் கொடுத்தது. ஒரு நாடு அடைகிற வெற்றி தோல்விகள், அதனுடைய அரசியல் அமைப்பை எப்படி எப்படி மாற்றி விடு கின்றன பார்த்தீர்களா? இஃது இருக்கட்டும்.
ஆத்தென்ஸினால் ஏற்படக்கூடிய ஆபத்து அகன்றுவிட்டது. இனி சிஸிலி தீவிலுள்ள சில்லரை ராஜ்யங்கள் யாவும் பலவும் ஒன்று பட்டு, சுதந்திர இன்பத்தை அமைதியாக நுகர்ந்து கொண்டிருக்கலா மல்லவா? ஆனால் அதுதான் இல்லை. பழையபடி பூசல்கள் கிளம்பி விட்டன. முந்தி, ஆத்தென்ஸ் படை யெடுத்து வருவதற்குக் காரணமா யிருந்த ஸெகெஸ்ட்டாவும் ஸெலினஸுமே இப்பொழுது திரும்பவும் சண்டையிட்டுக் கொண்டன. ஸெலினஸ், ஸெகெஸ்ட்டாவை நெருக்கியது. ஸெகெஸ்ட்டாவோ முந்தி மாதிரி ஆத்தென்ஸின் உதவியைப் பெற முடியாதென்று தெரிந்து வேறு வழியின்றி கார்த்தேஜின் உதவியை நாடியது. கார்த்தே ஜோ, ஆத்தென்ஸின் கடலாதிக்கத்திற்கு அஞ்சி, சென்ற சுமார் எழுபது வருஷ காலமாகக் கிரேக்க ராஜ்யங்கள் மீது கண்ணோட்டம் செலுத்தாமல் சிறிது ஒதுங்கினாற் போலவே இருந்தது. இப்பொழுது ஆத்தென்ஸின பலம் ஒடுங்கிவிட்டதை யறிந்து ஹெலினஸின் கோரிக்கைக்கு உடனே இணங்கியது. ஹான்னிபல் (இவன் ஹமீல்காரின் பேரன்) என்பவனுடைய தலைமையில் சுமார் ஒரு லட்சம் பேர் கொண்ட பெரும்படையொன்றை 409-ஆம் வருஷம் சிஸிலியை நோக்கி அனுப்பியது. இவன் - ஹான்னிபல் - முதலிய ஸெலினஸை, ஒன்பது நாள் முற்றுகைக்குப் பிறகு, கைப்பற்றிக் கொண்டான். கைப்பற்றிக் கொண்டதும், அகப்பட்டவர்களை யெல்லாம் கொன்று தீர்த்தான். நகரெங்கும் ஒரே கொலை மயந்தான். சுமார் இரண்டரை நூற் றாண்டுகளுக்கு மேலாகச் சுதந்திர வாழ்க்கையை நடத்திவந்த இந்த ஸெலினஸ், கடைசியில் அந்நியர்களாகிய கார்த்தஜீனியர் களின் கொடுமைக்கு முதல் பலியாகியது.
சில நாட்களுக்குப் பிறகு ஸெலினஸுக்குக் கிழக்குப் பக்கத்தி லுள்ள ஹிமேரா என்ற நகரத்தையும் கைப்பற்றிக் கொண்டு அழித்தான் ஹான்னிபல். தனது பாட்டன் ஹமீல்காரின் ஆத்மா சாந்தியடையும் பொருட்டுச் சுமார் மூவாயிரம் பேரை இங்குப் பலி கொடுத்தான். இந்த நகரத்தை அழிவினின்று காப்பாற்ற முன்வந்தது ஸைரக்யூஸ். ஆனால் முடியவில்லை. ஹான்னிபல் இந்த வெற்றிகளில் திருப்தி கொண்டு திரும்பிவிட்டான் கார்த்தேஜுக்கு.
ஆனால் சிஸிலி ஆசை அவனை விடவில்லை. மூன்று வருஷங் கழித்து, 406-ஆம் வருஷம் திரும்பவும் சிஸிலி தீவை நோக்கி வந்து அக்ரகோஸ் என்ற நகரத்தை முற்றுகையிட்டான். அவனை எதிர்க்க ஸைரக்யூஸீம் மறற் ராஜ்யங்களுடன் படை திரட்டிக் கொண்டு வந்தன. படைத் தலைமை பூண்டவன் டாப்னீயஸ் என்ற ஸைரக் யூஸியன். இவனால் விசேஷமாக ஒன்றுஞ் சாதிக்க முடிய வில்லை. அக்ரகோஸ் நகரத்தைச் சத்துருக்கள் கைப்பற்றிக் கொள்வதற்கு முன்னர், அங்கிருந்த ஜனங்களில் பெரும்பாலோரை பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டான். அவ்வளவுதான். நகர மென்வோ கார்த் தஜீனியர்கள் வசப்பட்டுவிட்டது; அடியோடு அழிக்கவும் பட்டது.
தங்களுடைய படைத்தலைவர்களின் திறமையின்மை யினாலோ அல்லது துரோகச் செயலினாலோதான் இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்க வேண்டுமென்று ஸைரக்யூஸியர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தை வளர்த்துக் கொடுத்தான் டையோனிஸியஸ் என்பவன். முதலாவது டையோனிஸியஸ் என்பர் இவனை. இவன் படைத்தலைவர்களனைவரையும் விலக்கிவிட்டு, புதிதாக ஒரு படைத்தலைமைக் குழுவை அமைக்க வேண்டுமென்றும், அதில் தானும் ஒருவனாக இருப்பதாகவும், ஜனசபையில் ஒரு பிரேரணை கொண்டுவந்து அதை நிறைவேற்றச் செய்தான். இதற்குப் பிறகு தன் னொருவனிடத்திலேயே படைத்தலைமைக்குரிய அதிகாரங்கள் பூராவும் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று ஒரு பிரேரணை கொண்டுவந்து அதனையும் நிறைவேற்றச் செய்தான். இங்ஙனம் படிப்படியாக அதிகாரங்களைத் தன் வசப்படுத்திக்கொண்டு கடைசியில் 405-ஆம் வருஷம், ஸைரக்யூஸின் சர்வாதிகாரியானான். முந்தி ஆத்தென்ஸில பீசிஸ்ட்ராட்டஸ் எப்படிப் பலவித தந்திரங் களைக் கையாண்டு இறுதியில் சர்வாதிகாரியானானோ அப்படியே இவனும் சர்வாதிகாரியானான் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
சர்வாதிகாரியானதும் இவனுக்கும் - இந்த முதலாவது டையோனியஸுக்கும் கார்த்தஜீனியர்களுக்கும் ஜீலா என்ற நகரத் திற்கருகில் கடும்போர் நடைபெற்றது. கார்த்தஜீனியர்களை வெற்றி கொள்ள முடியவில்லை இவனால். அதே சமயத்தில் தனது சர்வாதி காரப் பதவியை இழந்துவிடவும் விரும்பவில்லை. இவன். எனவே கார்த்தஜீனியர்களுடன் சமாதானமாகப் போய்விடத் தீர்மானித் தான். சிஸிலி தீவின் தெற்கிலும் மேற்கிலுமுள்ள சில பிரதேசங்களை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கச் சம்மதித்தான். இதற்குப் பிரதியாக அவர்களும், ஸைரக்யூஸுக்கும் அதைச் சுற்றி யுள்ள சில பிரதேசங் களுக்கும் இவன் சர்வாதிகாரியாயிருக்கச் சம்மதித்தார்கள்.
இதற்குப் பிறகு டையோனிஸியஸ், தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டும் வலுப்படுத்திக் கொள்ளும் பொருட்டும், ஸைரக்யூஸ் நகரத்திற்கருகில் ஓர்ட்டிகியா என்ற இடத்தில் பெரியதொரு கோட்டை கட்டினான்; அதனையே தனது வாசஸ்தலமாக அமைத்துக் கொண்டான். தன்னைச் சுற்றி ஒரு காவற் சேனையும் வைத்துக் கொண்டான். மெதுமெதுவாக அக்கம் பக்கத்திலுள்ள பிரதேசங்கள் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தான். தனக்கு வேண்டாதவர்களுடைய பூஸ்திதிகளை யெல்லாம் பறிமுதல் செய்து, தனக்கு வேண்டியவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் அடிமைகளாக்கி ஆடுமாடுகள் போல் விற்றுவிட்டான். இன்னும் ஸைரக் யூஸைச் சுற்றி பலத்த அரண் எழுப்பி அதற்குள் போர்க் கருவிகள் பல வற்றைச் சேமித்து வைத்தான். கடற்படையும் தரைப் படையும் தயாராயின.
இப்படிப் பலவிதங்களிலும் பந்தோபஸ்து செய்து கொண்டு, டையோனிஸியஸ், கார்த்தஜீனியர்கள் மீது யுத்தந் தொடுத்தான். 397-ஆம் வருஷம் முதல் 392-ஆம் வருஷம் வரை ஐந்து வருஷ காலம் விட்டுவிட்டு யுத்தம் நடைபெற்றது; மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டன. கடைசியில் சமாதானம் ஏறபட்டது. சிஸிலியின் மேற்கில் ஒரு பகுதியை மட்டும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு, மற்றவற்றை டையோனிஸியஸின் ஆதீக்கத்திற்கே விட்டு விட்டு, கார்த்தஜீனியர்கள் அகன்றுவிட்டார்கள்.
இனி டையோனிஸியஸ், தன் அதிகார பலத்தைக் காட்டாம லிருப்பானா? பல இடங்களிலும் தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். புதிது புதிதாக அநேக குடியேற்றப் பிரதேசங்களை ஸ்தாபித்தான். மத்திய தரைக்கடல் பூராவிலும் இவன் ஆதிக்கம் சென்றது. இந்த ஆதிக்கத்தைக் கண்டு பலர் அஞ்சவும் செய்தனர்.
ஆனால் கார்த்தஜீனியர்கள் இவனைச் சும்மா விடவில்லை. 383-ஆம் வருஷமும் 368-ஆம் வருஷமும் இரண்டு தடவை இவன் மீது போர்தொடுத் தார்கள். இரண்டு போர்களிலும் இரு தரப் பினரும் முந்தி மாதிரி வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறிப் பெற்றார்கள். முடிவாக டையோனிஸியஸினன் கார்த்தஜீனியர் களை, சிஸிலியின் மேற்குப் பகுதியிலிருந்து விரட்ட முடியவில்லை. அடுத்த வருஷத்தில் 367-ஆம் வருஷத்தில் இவன் ஆயுளும் முடிந்து விட்டது. மொத்தம் இவனுடைய சர்வாதிகாரம் நிலவியது முப்பத் தெட்டு வருஷம்.
பொதுவாக டையோனிஸியஸை ஒரு கொடுங்கோல னென்றே சொல்லவேண்டும். ஆனால் இவன் கலையுணர்ச்சி கட்டடங்கள் பல எழுப்பி ஆனந்தங் கொண்டான். ஓய்வு நேரங்களில் கவிதைகள் இயற்றியும் நாடகங்கள் எழுதியும் அக மகிழ்ந்தான். அறிஞர் பலரைத் தன் ஆஸ்தானத்திற்கு வரவழைத்து அவர்களோடு சல்லாபஞ் செய்வதில் பெருமை கண்டான். இப்படி இவன் ஆஸ்தானத்திற்கு வந்த அறிஞர்களில் ஒருவன் பிளேட்டோ. முதன் முறையாக, பிளேட்டோ ஸைரக்யூஸுக்கு வந்தது இவன் காலத்தில் தான்.
2. இரண்டாவது டையோனிஸியஸ்
டையோனிஸியஸுக்குப் பிறகு அவன் மகன் பட்டத்திற்கு வந்தான். அப்பொழுது இவனுக்கு வயது ஏறக்குறைய முப்பது . அவனை இரண்டாவது டையோனிஸியஸ் என்று அழைப்பர். சுகபோகத்தில் வளர்ந்து விட்டவன். யுத்தப் பயிற்சியும் இல்லை. அதிகார கடிவாளத்தை இவனால் எப்படிப் பிடித்துக் கொண்டி ருக்க முடியும்? சீக்கிரத்தில் கைநழுவவிட்டான். ஒரு வகையில் இவன் - இந்த இரண்டாவது டையோனிஸியஸ் - தன் தந்தையைப் பின்பற்றினான். அதுதான் அறிஞர்களுடன் வைத்துக் கொண்டி ருந்த தொடர்பு. இவனுக்கு முக்கிய மந்திரியாயிருந்தவன், இவனு டைய நெருங்கிய உறவினனும், ஏற்கனவே முதலாவது டையோனி யஸுக்கு மந்திரியாயிருந்தவனுமான டியோன் என்பவன். இவன் பிளேட்டோவிற்கு மிகவும் வேண்டியவன்; அவனுடைய பெருமையை அறிந்தவன். அவனைக் கொண்டு, இளைய டையோனிஸியஸுக்கு, நல்லாட்சி நடத்துவதெப்படி என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அவனை - பிளேட்டோவை - ஸைரக் யூஸுக்கு இரண்டாவது முறையாக வரவழைத்தான். ஆனால் பிளேட்டோவின் உபதேசங்கள் டையோனிஸியஸுக்குப் பிடிக்கவில்லை. கொடுங்கோன்மை யிலேயே இவன் மனம் ஈடு பட்டது. டியோன் மீதும் இவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனவே, பிளேட்டோவை அவன் ஊருக்கு - ஆத்தென்ஸுக்கு அனுப்பிவிட்டு, டியோனையும் தேசப்பிரஷ்டம் செய்துவிட்டான்.
டியோனுக்கு இது மன உறுத்தலாயிருந்தது. சில வருஷங்கள் கழித்து, 357-ஆம் வருஷம் ஒரு படையுடன் ஸைரக்யூஸுக்குத் திரும்பி வந்து, ஓர்ட்டிகியா கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டையும் இவன் வசப்பட்டது. இரண்டாவது டையோனி ஸியஸ், இத்தலியின் தென்பகுதியிலுள்ள லோக்ரி என்ற இடத் திற்குத் தப்பியோடிவிட்டான். டியோன், சர்வாதிகார முறையை ஒழித்து விட்டுச் சுதந்திர ஆட்சியை ஸ்தாபிக்கப் போகிறானென்று எல் லோரும் எதிர்பார்த்தார்கள். அதற்குப் பதில் இவனே சர்வாதி காரியாகிவிட்டான். ஜனங்களுக்கு இவன் மீதுவெறுப்பு ஏற்பட்டது. கடைசியில் 353-ஆம் வருஷம் கொலை செய்யப்பட்டுவிட்டான்.
இவனுக்குப் பிறகு, சுயநலவாதிகள் சிலர், ஒருவருக்குப் பின் னொருவராக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஜனங்களுக்கு இம்சையை உண்டுபண்ணி வந்தனர். கடைசியில் இரண்டாவது டையோனிஸியஸ் லோக்ரியிலிருந்து திரும்பி வந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு முன்னைக் காட்டிலும் அதிக கடுமையாக அதிகாரஞ் செலுத்த ஆரம்பித்தான். இந்தச் சமயத்தில், கார்த்த ஜீனியர்கள் வேறே, சிஸிலியின் மீது படையெடுத்து வந்தார்கள். ஸைரக்யூஸியர்கள் என்ன செய்வார்கள்? தங்களைக் காப்பாற்றும் படி தங்கள் முந்தையோர் நாடாகிய கொரிந்த்தியாவுக்கு விண்ணப் பித்துக் கொண்டார்கள்.
கொரிந்த்தியாவும், டிமோலியான் என்பவனுடைய தலைமை யில் 344-ஆம் வருஷம் ஒரு படையை அனுப்பியது. சிறிது போராட் டத்திற்குப் பிறகு ஸைரக்யூஸ் இவன் வசமாகியது. இரண்டாவது டையோனிஸியஸீம் சரணாகதி யடைந்தான். சரணாகதியடைந்த அவனை, அவனது வேண்டுகோளுக்கிணங்க கொரிந்த்தியாவுக்கு அனுப்பிவிட்டான் டிமோலியான். அங்குப் பலருடைய பரிகாசப் பொருளாகச் சில வருஷ காலம் இருந்து கடைசியில் 330-ஆம் வருஷம் மரித்துப் போனான் டையோனிஸியஸ்.
டிமோலியான் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதன். அதிகார ஆசையற்றவன். ஜனங்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டு மென் பதில் நாட்டமுடையவன். ஸைரக்யூஸைக் கைப்பற்றிக் கொண்ட பிறகுதான் இவனுடைய நல்ல தன்மைகள் வெளியாயின. முதல் முதலாக, படையெடுத்து வந்திருந்த கார்த்தஜீனியர்களை விரட்டி யடித்தான். முதலாவது டையோனிஸியஸ் ஓர்ட்டிகியாவில் கட்டி யிருந்த அரண்களையெல்லாம் அழித்துப் போட்டான். ஆங்காங்கு நிலவிவந்த சர்வாதிகார ஆட்சியை ஒழித்து விட்டு, பழையபடி நிதானப் போக் குடைய ஜன ஆட்சியை ஸ்தாபித்தான். கார்த் தஜீனியப் போர்களினால் குடி வளம் குன்றிப் போயிருந்தது. இதற்காக, கிரீஸிலிருந்து பலரை வரவழைத்துக் குடியேறச் செய்தான். சுருக்கமாக ஜனங்கள் சீரான வாழ்க்கையை நடத்து வதற்கான பல காரியங்களைச் செய்து வந்தான்.
இப்படி இவன் செய்து கொண்டிருக்கையில் கார்த்த ஜீனியர்கள் 339-ஆம் வருஷம் இவன்மீது போர்தொடுத்தார்கள். சுமார் எழு பதினாயிரம் பேர் கொண்ட பெரும்படை.ஆனால் இந்தப் படையை டிமோலியான், ஸெலினஸ் பிரதேசத்தில் ஓடும் கிரிமிஸஸ் நதியின் கரையில் எதிர்த்துச் சுலபமாக வெற்றி கொண்டுவிட்டான். இந்தப் போரில் கார்த்தஜீனியர்கள் அடைந்த தோல்வியானது சரித்திரப் பிரசித்தி பெற்றதென்று கூறுவார்கள். அவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டுவிட்டன கார்த்த ஜீனியர்களுக்கு இந்தத் தோல்வியினால்.
டிமோலியான், தான் கொண்ட கருமத்தை முடித்துவிட்டு அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொண்டான். இவன், நிம்மதியான வாழ்க்கையை நடத்துவதற்கான சில வசதிகளைச் செய்துகொடுத்து ஸைரக்யூஸிய அரசாங்கம். ஜனங்களும் இவனிடம் மிகவும் மரியாதை காட்டி வந்தார்கள். முக்கியமான பிரச்னை களைப் பற்றி இவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்பார்கள். கடைசி காலத்தில் இவனுடைய கண்பார்வை மங்கிவிட்டது. அப்பொழுது கூட இவன், அரசாங்கம் வேண்டுகிற பொழுது தனது ஆலோசனை களைச் சொல்லத் தயங்கியதே கிடையாது. ஜனசபைக்கு இவனைக் கைபிடித்து அழைத்து வருவார்கள். அப்பொழுது சபையில் என்ன ஆரவாரம்! என்ன உற்சாகமான வரவேற்பு இவனுக்கு! 337-ஆம் வருஷம் இவன் காலமாகி விட்டான். இவனுடைய ஞாபகார்த்த மாக ஆண்டுதோறும் ஒரு திருவிழா நடைபெறச் செய்தும் சில கட்டடங்களை எழுப்பியும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள் ஸைரக்யூஸியர்கள்.
டிமோலியானுக்குப் பிறகு, சிறிது காலம்வரை - சுமார் இருபது வருஷம் - ஸைரக்யூஸிலும் அதைச் சுற்றியிருந்த பிரதேசங்களிலும் அமைதி நிலவியிருந்தது. பின்னர் - ? பழையபடி பூசல்கள்தான்! கார்த்தஜீனியர்கள் படையெடுப்புக்கள்தான்!
சிஸிலி தீவில்தான் இப்படியென்றால், இத்தலியின் தென் பகுதியில் கிரேக்கர்கள் வசித்து வந்த பிரதேசங்களிலும் சண்டைகள் கிளம்பிவிட்டன. இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமற் போனதால், இத்தலியின் பூர்வீகக் குடிகளிடம் இவர்களுக்கு இருந்த வந்த செல்வாக்கு சிறிது சிறிதாகக் குன்றி வந்தது. அவர்களால் அடிக்கடி தாக்கவும் பட்டார்கள். தெற்கு இத்தலியில் கிரேக்கர்களின் பிரதான பட்டினமாயிருந்தது. டாரெண்ட்டம் என்பது, ஸ்ப்பார்ட்டாவின் குடியேற்றப் பிரதேசம் இது. மேற்சொன்ன பூர்வீகக் குடிகளின் உபத் திரவம் பொறுக்க முடியாமல், தன் தாய்நாடாகிய ஸ்ப்பார்ட்டா வின் உதவியைக் கோரியது, இந்த டாரெண்ட்டம். ஸ்ப்பார்ட்டா வின் அரசனான ஆர்க்கிடாமஸ் என்பவன், ஒரு படையுடன் எதிர்த்துப் போராடினான். ஆனால் 338-ஆம் வருஷம் மாண்டூரியா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மாண்டு போனான். எனவே மேற்குப் பகுதியிலுள்ள மொலோஷ்யாவின் அதிபதியும், அடுத்த அத்தியாத்தில் நாம் சந்திக்கப் போகிற மகா அலொக்ஸாந்தரின் தாய்மாமனுமான அலெக்ஸாந்தரின் உதவியை நாடியது டாரெண்ட்டம். இவனும் வந்து சில வெற்றிகள் கண்டான். பிந்தி, பெரியதோர் ஏகாதிபத்தியமாக வளரப்போகிற ரோம ராஜ்யம், அப்பொழுது ஒரு சிறிய குடியரசாயிருந்தது. அலெக் ஸாந்தரின் வெற்றிகளில் அது மயக்கங்கொண்டது; அவனுடன் ஒரு சமாதான ஒப்பந்தமும் செய்துகொண்டது. இந்த வரலாறுக ளெல்லாம் இங்கு நமக்குத் தேவையில்லை. முடிவாக, இத்தலியின் கடலோரப் பகுதி யும், சிஸிலி தீவும், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குள், ரோம ராஜ்யத்திற்குட்பட்ட பிரதேசங்களாகி விட்டன. இந்தப் பிரதேசங் களில் கிரீஸின் அதிகாரச் செல்வாக்கு, எப்பொழுது குன்றி விட்டதோ அப்பொழுதே இவற்றினைப் பற்றி சரித்திர ருசியும் நமக்குக் குறைந்துவிட்டதல்லவா இந்த நூலைப் பொறுத்த மட்டில்?
மாஸிடோனிய ஏகாதிபத்தியம்
1. ஆளப்பிறந்த பிலிப்
இனி, கிரிஸுக்கு வருவோம். கிரேக்க ராஜ்யங்களுள் முதல் ஸ்தானம் வகிக்க வேண்டுமென்பதற்காக முதலில் ஸ்ப்பார்ட்டாவும் ஆத்தென்ஸும் பிறகு தீப்ஸும் முறையே போட்டி போட்டன. இந்தப் போட்டிகளின் கடைசி கோடு என்று சொல்லலாம் மாண்ட்டினீயா போரை. மாண்ட்டினீயா போருக்குப் பிறகு, ஏற்கனவே சொன்னது போல் தீப்ஸ், ஒடுங்கி விட்டது. ஆத்தென்ஸ் மட்டும், சிறிது தலை தூக்கிக் கொண்டிருந்தது. ஆனால் பழைய ஏகாதி பத்தியச் செல்வாக்கோ, சக்தியோ அதற்கு இப்பொழுது இல்லை. அந்தச் செல்வாக்கையும் சக்தியையும் மீண்டும் பெற வேண்டுமென்ற ஆசையென்னவோ அதற்கு நிறைய இருந்தது; சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராத இடத்தி லிருந்து அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது; அதனுடைய ஆசையும் நிராசையாகி விட்டது. பொதுவாகவே, இந்தக் காலத்துக் கிரீஸ், வருஷக் கணக்கில் நடைபெற்று வந்த உள்நாட்டுச் சண்டைகளின் விளைவாக, பொருள் வளத்திலும் ஆள் பலத்திலும் குன்றிப்போய் மிகவும் சோர்வுற்றிருந்தது; துணிச்சலும் தீரமும் நிறைந்த அந்நியர் யார் வரினும் அவருக்குச் சுலபமாக இரையாகிவிடக்கூடிய நிலைமையிலிருந்தது.
கிரீஸுக்கு வட பாகத்திலுள்ள மாஸிடோனியா, (தற் போதைய கிரீஸின் வடபகுதியும், யூகோஸ்லேவியாவின் தென்பகுதியும், பல்கேரியாவின் மேற்குப் பகுதியும் சேர்ந்ததே முந்திய மாஸி டோனியாவாக இருந்தது). வாசர்களுக்கு பரிச்சயமில்லாத பிரதேச மன்று. முந்திய பக்கங்களில் இதனைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருப்பார்கள். இங்கு வசித்த ஜனங்கள் கிரேக்கர்கள் தானென்றாலும் மற்றக் கிரேக்கர்களைப் போல் அவ்வளவு நாகரிக மில்லாத வர்கள். இவர்கள் பேச்சும் கொச்சையாகவே இருக்கும். மற்றக் கிரேக்கர்கள் இவர்களை அதிகமாக மதிப்பதில்லை. ‘வடக் கத்தியார்தானே’ என்று அலட்சியப்படுத்திப் பேசுவார்கள். ஆனால் இவர்களிடத்தில் ஒருவித கட்டுப்பாடு இருந்தது. தங்களை, இன்ன ராஜ்யத்தினர் அல்லது இன்ன பிரதேசத்தினர் என்று பிரித்துச் சொல்லிக்கொள்ள மாட்டார்கள்; ஓர் இனத்தின ரென்றே மாஸிடோனியர்களென்றே சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் நீண்ட காலமாக, மன்னராட்சிக்குட்பட்ட பிரஜை களாகவே வாழ்ந்து வந்தார்கள்.
போர்த் தந்திரங்களையோ பிற பண்பாடுகளையோ அதிக மாக அறியாத மாஸிடோனியர்களை, தான் எதிர்த்துநிற்க வேண்டி வருமென்றோ, அல்லது அவர்கள் கிரீஸ் முழுவதிலும் ஆதிக்கங் கொள்வார்களென்றோ ஆத்தென்ஸ் சிறிது கூட எதிர்பார்க்க வில்லை. கிழக்குப் பக்கத்தில், சின்ன ஆசியாவென்று பிற் காலத்தவரால் அழைக்கப்பட்ட காரியா என்ற ராஜ்யம் பிரபலமா யிருந்துவந்தது. அதனால் ஏதேனும் ஆபத்து ஏற்படக்கூடுமோ வென்று சிறிது அஞ்சிக் கொண்டிருந்தது. ஆனால் அஃது எதிர்பார்த்தற்கு நேர் விரோதமாக, அந்த ராஜ்யம் அடங்கிக் கிடந்தது. அடங்கி கிடந்த ராஜ்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டி வந்துவிட்டது. எல்லாம் ஒருதலைமுறைக்குள்.
நாகரிகப் பின்னணியில் தங்கியிருந்த மாஸிடோனியாவை முன்னணிக்குக் கொண்டுவந்து நிறுத்தியவன் பிலிப் என்னும் அரசன். முந்தி, பெலொப்பிடாஸ், தீப்ஸுக்குச் சில இளைஞர்களைப் பிணையாளிகளாக அழைத்துச் சென்றானல்லவா, அந்த இளைஞர் களிலே ஒருவனாகச் சென்ற பிலிப்தான் இவன். இவன், ஆளும் உரிமையோடு பிறக்கவில்லையென்றே சொல்லவேண்டும். ஆனால் ‘நாம் ஆளப்பிறந்திருக்கிறோம்’ என்ற எண்ணத்துடனேயே வளர்ந்து வந்தான். ஆளுங் கலையில் பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சந்தர்ப்பமும் தீப்ஸ் வாசகத்தின் போது இவனுக்குக் கிடைத்தது.
தீப்ஸுக்குச் சென்றபோது இவனுக்குப் பதினைந்து வயது. மூன்று வருஷம். அங்குத் தங்கியிருந்தான். இந்த மூன்று வருஷத் திற்குள், கிரேக்க மொழியில் தெளிவாகப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டான். போர்க்களத்திலும் அரச சபையிலும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டான். சுருக்கமாக, அரச பதவியைத் திறம்பட வகிப்பதற்கான தகுதிகளனைத்தையும் பெற்றுக் கொண்டான்.
பதினெட்டாவது வயதில் மாஸிடோனியாவுக்குத் திரும்பி வந்தான் பிலிப். அப்பொழுது அங்கு அரச பீடத்தில் கொலுவ மர்ந்திருந்தவன், இவனுடைய சகோதரனான பெர்டிக்காஸ் என்பவன். பெர்டிக்காஸ், இவனை மாஸிடோனி யாவின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக நியமித்து அனுப்பினான். இவனும் அங்குச் சென்று தீப்ஸில், தான் கண்ட மாதிரி ஒரு ராருணுவத்தை அமைக்க ஆரம்பித்தான்.
பெர்டிக்காஸ், 359-ஆம் வருஷம், இல்லீரியா என்ற மலை ஜாதியினரோடு நடத்திய ஒரு போரில் கொலையுண்டான். இவனுக்குப் பிறகு அரசபீடத்தை அடைய ஐவர் போட்டியிட்டனர். இந்த ஐவரில் ஒருவன் ஆர்கீயஸ் என்பவன். இவனுக்கு ஆதரவு அளித்தது ஆத்தென்ஸ். நியாயமாகப் பார்த்தால், பட்டத்திற் குரியவன் பெர்டிக்காஸின் மகன் அமிண்ட்டாஸ் என்பவன்தான். ஆனால்அவன் சிறுபிள்ளை. ராஜ்யமெங்கணும் ஒரே குழப்பமா யிருந்தது. நாற்புறமும் சத்துருக்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். பார்த்தான் பிலிப். சிறு பிள்ளை அமிண்ட்டாஸின் சிற்றப் பனல்லவா? எனவே அவன் பிரதிநிதியாயிருந்து, தானே ஆளுகையை நடத்திவரத் தீர்மானித்தான். அப்பொழுது இவனுக்கு இருபத்து மூன்று வயது.
பிலிப், ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், அரச பதவிக்குப் போட்டி போட்டவர்களையும் தனக்கு விரோதமாகவோ சத்துருக்களுக்கு உடந்தையாக வோ இருந்தவர்களையும் சாம, தான, பேத, தண்ட உபாயங்களினால் ஒருவர் பின்னொருவராகத் தொலைத்துவிட்டான். ஆத்தென்ஸின ஆதரவு பெற்றிருந்த ஆர்கீயஸ் மட்டும் பாக்கியிருந்தான். இவனுக்கு ஏன் ஆதரவு அளித்தது ஆத்தென்ஸ்?
பெலொப்பொனேசியப் போரின் முற்பகுதியில் இழந்துவிட்ட ஆம்ப்பிபோலிஸ் நகரத்தைத் திரும்பவும் தன் வசப்படுத்திக் கொள்ள ஆத்தென்ஸ் பலதடவை முயன்று வந்தது. ஆனால் 362-ஆம் வருஷத்திலிருந்து அதனை அதனுடைய ஜனங்களின் வேண்டுகோளுக்கிணங்க, பெர்டிக்காஸ், தனது ஆக்கிரமிப்புக்குட் படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். பெர்டிக்காஸ் இறந்து போனதற்குப் பிறகு, மாஸிடோனியாவின் அரச பீடத்தில் தனக்குச் சாதகமாயிருக்கக்கூடிய ஒருவன் அமர்வதற்கு உதவி செய்தால், அவன் அதற்குப் பிரதியாக மேற்படி நகரத்தைத் திருப்பித் தனக்குக் கொடுத்துவிடுவானென்று ஆத்தென்ஸ் கருதியது. இந்தக் கருத்துட னேயே, ஆர்கீயஸின் அரசுரிமைக்கு ஆதரவு அளித்தது. இதற்கு முந்தியும், இதே கருத்துடன் மாஸிடோனிய அரசியல் விவகா ரங்களில் ஆத்தென்ஸ் தலையிட்டு வந்திருக்கிறது. நிற்க.
பிலிப் பெரிய ராஜதந்திரி. ஆம்ப்பிபோலிஸ் நகரத்தின்மீது தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுப்பதாகச் சொல்லி அங்குப் பெர்டிக்காஸினால் வைக்கப்பட்டிருந்த காவற்படையைத் திருப்பி வரவழைத்துக் கொண்டான். இவன் மூலம் ஆத்தென்ஸை முதலில் நல்லதனப்படுத்திக் கொண்டான். அதுவும் ஆர்கீயஸுக்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்திக் கொண்டது. பிறகு பிலிப், ஆர்கீயஸைப் போரில் சந்தித்து முறியடித்தான்; கொன்றும் விட்டான். இங்ஙனம் தனக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் செய்து கொண்டான்.
போதிய பணமில்லாமல் ஒரு நாட்டை ஆளமுடியாது என்பதை நன்கு உணர்ந்தவன் பிலிப். எனவே இந்த பலத்தை விருத்தி செய்துகொள்ள முனைந்தான். மாஸிடோனியாவின் கிழக்கில் பாங்கீயஸ் மலை என்றொரு மலையுண்டு. இதில் தங்கச் சுரங்கங்கள் அதிகம். இந்த மலைப்பகுதியைத் தன் நிருவாகத்திற்குட் படுத்திக் கொள்ளத் தீர்மானித்தான். ஆனால் இதற்கு முன்னர், மேற்படி மலைப் பகுதிக்குச் செல்லும் வழியில், அதன் தெற்கே யிருக்கின்ற ஆம்ப்பிபோலிஸ் நகரத்தைச் சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. இந்த ஆம்ப்பிபோலிஸ் நகரத்திலிருந்து முந்தி இவன் படைகளைத் திருப்பி வரவழைத்துக் கொண்டபோது, இவனுக்கும் ஆத்தென்ஸுக்கும் ஏற்பட்டிருந்த ஒப்பந்தமென்னவென்றால், ஆம்ப்பிபோலிஸ் நகரத்தை இவன் ஆத்தென்ஸுக்குத் திருப்பித் கொடுத்துவிட வேண்டும்; இதற்குப் பிரதியாக மாஸிடோனியாவின் கிழக்குப் பக்கத்திலுள்ள பைத்னா என்ற ஊரை ஆத்தென்ஸ் இவனுக்குக் கொடுத்துவிட வேண்டு மென்பதாகும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைக் காற்றிலே பறக்கவிட்டு விட்டான். பிலிப். 357-ஆம் வருஷம் ஆம்ப்பி போலிஸை ஆக்கிர மித்துக் கொண்டான். ஆக்கிரமித்துக் கொண்டதும், பாங்கீயஸ் மலைப்பிரதேசத்தைச் சீர்படுத்தி பந்தோ பஸ்து செய்தான். இதற்குப் பிலிப்பி என்று பெயர் கொடுத்தான். இங்குள்ள தங்கச் சுரங்கங் களிலிருந்து வருஷந்தோறும் ஆயிரம் டாலெண்ட்டுகள் விகிதம் வருமானம் கிடைக்கும்படியாக ஏற்பாடு செய்தான்.
ஆம்ப்பிபோலிஸுக்குப் பிறகு, பைத்னா என்ன, பொட்டிடீயா என்ன, இப்படி ஒன்றன்பின்னொன்றாகத் தன் வசப்படுத்திக் கொண்டான் பிலிப். 356-ஆம் வருஷம். இதே சமயத்தில் தன்னுடைய விரோதிகள் ஒன்றுசேர்ந்து கொள்ளாதபடி அவர்களைப் பலவித உபாயங்களினால் கலைத்து வந்தான். எதிர்த்து நிற்க வேண்டிய இடத்தில் எதிர்த்து நிற்பான்; பணிந்து போக வேண்டிய இடத்தில் பணிந்து போவான்; லஞ்சம் கொடுக்க வேண்டிய இடத்தில் லஞ்சம் கொடுப்பான். தன் காரியம் வெற்றி பெறவேண்டுமென்பதே இவன் குறிக்கோள். இவனைப் பற்றின ஒரு கதையுண்டு. தன் பிரதானிகளில் ஒருவனைப் பார்த்து இவன், ஒரு மரக்கோட்டையைச் சுட்டிக்காட்டி அதனை அடைய முடியுமாவென்று கேட்டான். அவன், ‘முடியாது’ என்று பதில் கூறினான். ஏன் முடியாது? தங்கத்தைச் சுமந்து செல்லும் ஒரு கழுதையினால் கூட அதனை அடைய முடியாதா என்ன? என்றான் பிலிப். இதிலிருந்து இவன் உள்ளக் கிடக்கை ஒருவாறு புலனாகும்.
2. அரசனாதலும் ஆக்கிரமிப்புகளும்
மேற்சொன்ன வெற்றிகளுக்குப் பிறகு, பிலிப் தனது அரசப்பிரதி நிதி வேஷத்தைக் கலைத்துவிட்டான். அதாவது, யாருக்குப் பிரதிநிதியாக இதுகாறும் ஆண்டு வந்தானோ, அந்த அமிண்ட் டாஸை அப்புறப்படுத்திவிட்டு, தானே அரசனானான்; தான் ஆளப்பிறந்தவன் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.
தன் பதவியை ஸ்திரப்படுத்திக் கொண்டதும், முதன் முதலில் படை பலத்தை விருத்தி செய்தான் பிலிப். உலகத்திலேயே மிகச் சிறந்த ராணுவமென்று அந்தக் காலத்தவர் பயந்து சொல்லக்கூடிய மாதிரி மாஸிடோனியா ராணுவம் அமைந்தது. பிறகு ராஜ்யத்தை ஒழுங்கான நிருவாகத்திற்குட்படுத்தினான்; ஜனங்களுக்கு ஒற்றுமை உணர்ச்சியை ஊட்டினான். பின்னர் ராஜ்ய விஸ்தீரண முயற்சியில் இறங்கினான்.
கால்ஸிடீஸி பகுதியிலும், திரேஸ் பகுதியிலும் ஆத்தென்ஸின் ஆதீனத்திற்குட்பட்டிருந்தபிரதேசங்களை ஒன்றன்பின்னொன்றாகத் தன் வசப்டுத்திக் கொண்டு வந்தான். இந்த ஆக்கிர மிப்புகளைத் தகைந்து கொள்ளவில்லை. ஆம்ப்பிபோலிஸ் விஷயத்தில், கொடுத்த வாக்கை மீறி பிலிப் நடந்து கொண்டதற்குப் பிறகு அவன் மீது சிறிது வெறுப்புக் காட்டியதே தவிர, பொதுவாக மாஸிடோனியா விஷயத்தில் அதற்கிருந்த அலட்சிய மனப்பான்மை அதனை விட்டு நீங்கவில்லை; ஏதோ ஏகதேசமாகச் சில படைகளை அனுப்பி பிலிப்பின் ஆக்கிரமிப்பு முயற்சிகளைத் தகைய முயன்றது அவ்வளவுதான்.
ஆனால் ஆத்தென்ஸ் மீதும் குறை சொல்லிப் பயனில்லை. அது வேறு பக்கம் தன் கவனத்தைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந் தத்திற்குட்பட்டது. இரண்டாவது சமஷ்டி ஏற்பட்டுச் சிறிது காலமான பிறகு, சமஷ்டியில் சேர்ந்திருந்த ராஜ்யங்கள் மீது ஆத்தென்ஸ், மெதுமெதுவாகத் தன் ஆதிக்கத்தைத் திணிக்க ஆரம்பித்தது. அதனுடைய ஏகாதிபத்திய வாசனை அதனை விட்டகலவில்லை. ஸாமோஸ் தீவில் ஆத்தீனியர்களிற் சிலரைக் கொண்டு போய்க் குடியேற்றுவித்தது. இது பலருக்குப் பிடிக்க வில்லை. மற்ற ராஜ்யங்களும் இப்படியே குடியேற்றப் பிரதேசங்க ளாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினர். தவிர, இந்த ராஜ்யங் களுக்கு அவ்வப்பொழுது அனுப்பப்பட்டு வந்த ஆத்தீனிய தளபதிகள், தங்களுடைய துருப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத் திற்காக, ஜனங்களிடமிருந்து அந்தந்த ராஜ்யத்து ஜனங்களிட மிருந்து - அதிக பணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். இதனால் ஏற்பட்டு வந்த அதிருப்தியையும் வளர்த்துக் கொடுக்க, ஏறக்குறைய ஒவ்வொரு ராஜ்யத்திலும் ஆத்தென்ஸுக்கு விரோதமான பணக்காரக் கட்சி யொன்று இருந்து வந்தது.
3. காரியா ராஜ்யம்
இஃது இப்படியிருக்க, கிழக்கே காரியா ராஜ்யத்தை இந்தக் காலத்தில் ஆண்டு வந்தவன் மௌஸோலஸ் என்னும் அரசன். இவன், எஜீயன் கடலில் ஆதிக்கம் பெற விழைந்தான். இதற்காக, தனது தலைநகரத்தை ஹாலிகார்னஸ்ஸஸ் என்ற கடலோரப் பட்டினத் திற்கு மாற்றிக் கொண்டு, அங்கு இரண்டு பெரிய துறைமுகங்களைக் கட்டினான. பிறகு, ஆத்தீனிய சமஷ்டியில் சேர்ந்திருந்த ரோட்ஸ், கோஸ், கியோஸ் ஆகிய தீவுகளை ஆத்தென்ஸுக்கு விரோதமாகத் தூண்டிவிட்டான். அவையும், பிஸண்ட்டியமும் ஒன்று சேர்ந்து கொண்டு கலகத்திற்குக் கிளம்பின. இவைகளின் மீது ஆத்தென்ஸ் போர் துவங்கியது. இதனைச் ‘சமுதாயப் போர்’ என்று சிலர் அழைப்பர். சரியாகப் சொல்லப் போனால் இதனை, நேசக் கட்சி யினருக்குள்ளே நடைபெற்ற யுத்தம் என்று அழைக்கவேண்டும்.
ஏறக்குறைய இரண்டு வருஷ காலம் - 357-ஆம் வருஷ முதல் 355-ஆம் வருஷம் வரை - இந்த யுத்தம் நடைறபெற்றது. மேற் கொண்டு நடத்த முடியவில்லை ஆத்தென்ஸினால். தனது படைகளைத் திருப்பி வரவழைத்துக்கொண்டுவிட்டது. கலகஞ் செய்த ராஜ்யங் களுடன் சமரஸம் பேசி, அவைகளின் தனி உரிமையை அங்கீ கரித்துக் கொண்டது. அந்த ராஜ்யங்களைப் பின்பற்ற ஸெஸ்போஸ் தீவும், மேற்கே கார்ஸைரா தீவும் முறையே ஆத்தென்ஸின் ஆதிக்கத்திலிருந்து அகன்று கொண்டன. இந்தச் சமுதாயப் போரின் விளைவாக, எஜீயன் கடலில் ஆத்தென் ஸுக்கிருந்த செல்வாக்கின் பெரும் பகுதி குன்றிப் போய்விட்டது.
ஆத்தென்ஸ் இப்படி எஜீயன் கடலிலிருந்து பின்வாங்க நேரிட்டது. தனக்குப பெரிய வெற்றியென்று கருதினான் மௌ ஸோலஸ். ரோட்ஸ் தீவையும், கோஸ் தீவையும் 353-ஆம் வருஷம் ஆக்கிரமித்துக் கொண்டான். ரோட்ஸ் தீவு, இந்த ஆக்கிரமிப் பினின்று தன்னைக் காப்பாற்றும்படி ஆத்தென்ஸுக்கு விண்ணப் பித்துக் கொண்டது. ஆனால் ஆத்தென்ஸ் இதற்குச் செவி கொடுக்க வில்லை.
மௌஸோலஸ், இந்த வெற்றிகளைத் தொடர்ந்து அனுபவிக்க அதிக காலம் இருக்கவில்லை. 353-ஆம் வருஷமே இறந்து போனான். அவன் மனைவி ஆர்ட்டிமிஷியா என்பவள் பட்டத்திற்கு வந்தாள். சுமார் இருபது வருஷத்திற்குப் பிறகு, மௌஸோலஸ் வமிசத்தினரின் ஆட்சி முற்றுப் பெற்றது. காரியா ராஜ்யமும் மகா அலெக்ஸாந்தரின் ஆதிக்கத்திற்குட்பட்டுவிட்டது. ஆனால் மௌஸோலஸும் ஆர்ட்டிமிஷியாவும் சேர்ந்து ஹாலிகார் னஸஸ்ஸில் கட்டி வைத்துப் போன சமாதிக் கட்டடம் மட்டும் உலகத்து அதிசயங்களுள் ஒன்றாக இன்றளவும் புகழப்பட்டு வருகிறது.
4. மூன்றாவது புனித யுத்தம்
நேசக் கட்சியினருக்குள் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் டெல்பி கோயில் சம்பந்தமாக மத்திய கிரீஸில் மற்றொரு யுத்தம் துவங்கிவிட்டது. இதனை ‘மூன்றாவது புனித யுத்தம்’ என்று கூறுவர். இதற்கு முந்தி இரண்டு தடவை இதே மாதிரி புதின யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த மூன்றாவது புனித யுத்தம், கிரீஸின் பெரும் பகுதியை மாஸிடோனிய ஆதிக்கத்திற் குட்படுத்தி விட்டது. எப்படியென்று சிறிது விசாரிப்போம்.
டெல்பி கோயில் நிருவாகத்திற்குப் பொறுப்பாளியான ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறோ மல்லவா? இந்தச் சபையானது பிரஸ்தாப சமயத்தில் தீப்ஸின் செல்வாக்குட்பட்டிருந்தது. தீப்ஸுக்கும் போசிஸ் ராஜ்யத்திற்கும் எப்பொழுதுமே பகைமையுண்டல்லவா? மாண்ட்டினீயா போருக்குப் பிறகு, தீப்ஸினுடைய செல்வாக்கிலிருந்து போசிஸ் விலகிக் கொண்டுவிட்டது. இது தீப்ஸுக்கு ஆத்திரம். இந்த ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமே? என்ன காரணத்தைக் கற்பித்துக் கொண்டதோ தெரியவில்லை. ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையைத் தூண்டிவிட்டு, போசிஸ்வாசி களான பிரபலஸ்தர் சிலருக்கு அபராதம் விதிக்கச் செய்தது. அவர்கள் செலுத்த மறுத்துவிட்டனர். உடனே, மேற்படி சபையானது, டெல்பி ஸ்தலத்திற்கு அபசாரஞ் செய்தவர்களுக்கு என்ன அபராதம் விதிக்கப்படுமோ அந்த அபராதத்தை மேற்படி போசியர்களுக்கு விதித்தது; அதாவது அவர்களுடைய நிலபுலங் களைப் பறிமுதல் செய்து, அப்போலோ தெய்வத்திற்குச் சமர்ப்பித்து விட்டது. அவர்கள் - அந்தப் போசியர்கள் - தங்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டனர். போசிஸ் அரசாங்கமும் இந்த அக்கிரமத்தை எதிர்த்து நிற்க உறுதி கொண்டது. இதே சமயத்தில், டெல்பி கோயிலின் நிருவாக சம்பந்தமாகத் தனக்கும் அதாவது போசியர்களுக்கும் - டெல்பி பிரதேசவாசிகளுக்கும் நீண்ட காலமாக ஒரு வழக்கை இப்பொழுது திரும்பவும், அதே நிருவாக பாத்தியதை உண்டென்று சொல்லிக் கொண்டு முன்வந்தது. உடனே பெரும் படையும் திரட்டியது. பிலோமீலஸ் என்பவனும் ஓனோமார்க்கஸ் என்பவனும் பிரதான படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
பிலோமீலஸ் கெட்டிக்காரன். ஆம்ப்பிக்ட்டியோனிக் சபை, போசிஸ் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்பதை எதிர்பார்த்து முன்னதாகவே டெல்பிகோயிலை, 356-ஆம் வருஷம் தன்வசம் சுவாதீனப்படுத்திக் கொண்டான். இந்தக் கோயிலின் நிருவாகம் இனி சர்வ கிரேக்கர்களின் சார்பாக ஒழுங்காக நடத்தப் பட்டு வருமென்று உறுதிகூறி எல்லாக் கிரேக்க ராஜ்யங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை விடுத்து அதன்மூலம் தனது செயலுக்கு ஆதரவு தேடிக்கொள்ள முயன்றான். ஸ்ப்பார்ட்டாவும் ஆத்தென்ஸும் இவனுக்குப் பெயரளவில் ஆதரவு காட்டின. தீப்ஸோ, வடக்கிலுள்ள சில ராஜ்யங்களின் துணை சேர்த்துக் கொண்டு, ஆம்ப்பிக் ட்டியோனிக் சபையின் பெயரால் இவனுக்குப் பெயரளவில் ஆதரவு காட்டின. தீப்ஸோ, வடக்கிலுள்ள சில ராஜ்யங்களின் துணை சேர்த்துக் கொண்டு, ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையின் பெயரால் இவனுக்கு விரோதமாகக் கிளம்பியது. மூன்றாவது புனித யுத்தத்தின் துவக்கம்!
தீப்ஸின் தலைமையில் அமைந்த இந்த ஆம்ப்பிக்ட்டியோனிக் கூட்டுப்படையை எப்படி எதிர்த்து நிற்பது? போதிய படை வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். ஸ்ப்பார்ட்டாவும், ஆத்தென் ஸும் ஆதரவு காட்டினவே தவிர, பொருளுதவியோ, படை உதவியோ செய்ய முன்வரவில்லை. பார்த்தான் பிலோமீலஸ். டெல்பி கோயிற் பணத்தை ஓரளவு உபயோகித்து ஒரு படை திரட்டிக் கொண்டு ஆம்ப்பிக்ட்டியோனிக் கூட்டுப் படையை எதிர்த்துப் போராடி ஒரு சிறு வெற்றி கண்டான். ஆனால் மேற்படி கூட்டுப் படை இவனைத் திரும்பவும் நியோன் என்ற இடத்தில் 354-ஆம் வருஷம் சந்தித்துப் போராடி வெற்றி கொண்டுவிட்டது. இவனும் இந்தப் போரில் இறந்து பட்டான். இவனுக்குப் பிறகு ஓனோமார்க் கஸ் பிரதம படைத் தலைவனாயினான். இவன் டெல்பி கோயிற் பணத்தைச் சிறிது கூட மனங்கூசாமல் தாராளமாகக் கையாண்டு ஒரு பெரும் படை திரட்டினான். தீப்ஸைப் போலவே, லோக்ரிஸும் தெஸ்ஸாலியும், போலிஸுக்கு ஆகாதவை. இந்த இரண்டு பிரதேசங்களிலும் வெற்றிமேல் வெற்றி கண்டான். தெஸ்ஸாலியி லுள்ள ராஜ்யங்கள் ஒரு சமஷ்டியில் ஒரு பிளவை யுண்டு பண்ணினான். பணத்திற்கு வசப்படாதவருமுண்டோ? ஆனால் ஓனோமார்க்கஸின் இந்த மித்திரபேதச் செயலானது, போசிஸின் அழிவுக்கு அடிகோலிவிட்டது. தெஸ்ஸாலியிலுள்ள ஒரு பகுதி யினர், போசிஸுக்கு விரோதமாகப் பிலிப் மன்னனின் உதவியை நாடினர். தெற்குப் பக்கத்தில் ஆதிக்கம் பெற இதைக் காட்டிலும் வேறென்ன சந்தர்ப்பம் வாய்க்கப் போகிறது பிலிப்புக்கு?
தெஸ்ஸாலியின் மீது படையெடுத்து வந்தான் பிலிப் 353-ஆம் வருஷம். ஆனால் ஓனோமார்க்கஸ், இரண்டு போர்களில் அவனைச் சந்தித்துத் தோற்கடித்துத் திருப்பியனுப்பி விட்டான். இதனால் போசிஸின் மதிப்பு உயர்ந்தது. தீப்ஸுக்குப் பதிலாக இது சர்வ கிரேக்க ஆதிக்கம் பெறக்கூடுமோ என்று கூடச் சிலர் கருதினர். ஆனால் இதனுடைய படை பலம், வெறும் பண பலத்தை மட்டும் அஸ்திவாரமாகக் கொண்டிருந்தது. அந்தப் பண பலம் கரையக் கரைய, அதாவது டெல்பி கோயிலின் பணம் குறையக் குறைய, அதன் படை பலமும் குன்றிவிட்டது. இந்தப் பலவீனத்தை உணர்ந்த பிலிப் மன்னன் அடுத்த வருஷம் 352-ஆம் வருஷம் தெஸ்ஸாலியின் மீது மறுபடியும் படையெடுத்து வந்தான். கடுமை யான போர் நடைபெற்றது. இதில் ஓனோமார்க்கஸ் விழுந்து பட்டான். இவனோடு போசிஸின் வாழ்வும் முற்றுப் பெற்றுவிட்ட தென்று சொல்ல வேண்டும். தெஸ்ஸாலியின்பெரும்பகுதி பிலிப்பின் வசமாயது. மேற்கொண்டு வெற்றிகான முயன்றான் பிலிப். ஆனால் ஆத்தீனியக் கடற்படையொன்று விரைந்து சென்று, தெர்மாப்பிலே கணவாய்க்குத் தெற்கே வரவொட்டாமற் செய்துவிட்டது.
ஆனால் பிலிப் என்னவோ வெற்றிக் கனவுகள் கண்டு கொண்டு தான் வந்தான். தனது கடற்படையை விருத்தி செய்தான். இந்தப் படையைக் கொண்டு, ஆத்தென்ஸின் கடல் வியாபா ரத்திற்குச் சேத முண்டு பண்ணினான். மேலும், ஆத்தென்ஸின் அரசியல் செல்வாக்குட் பட்டிருந்த லெம்னோஸ் என்ன, இம்ப்ரோஸ் என்ன, யூபியா என்ன, இப்படிச் சில பிரதேசங்களைத் தாக்கி வந்தான். தவிர, திரேஸ் பக்கம், தன் ஆதிக்கத்தை விஸ்தரித்துக் கொள்ள முனைந்தான்.
தன் தலைமீது ஆபத்து வந்துமுட்டுவதை உணர ஆரம்பித்தது இப்பொழுது ஆத்தென்ஸ். உணர்த்தியவன் டெமாஸ்த்தனீஸ் (இவன் உத்தேச காலம் 384 - 322) என்பவன். இவன் சிறந்த நாவலன்; இளமையில் மிகுந்த பிரயானசப்பட்டு நாவன்மை பெற்றான். இவனுடைய சொற்பொழிவுகள் இன்றளவும் பேச்சுக் கலைக்குச் சிறந்த உதாரணங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. தற்கால பாஷையில் இவனை ஆத்தென்ஸின் பிரபல வக்கீல்களுள் ஒருவன் என்று சொல்லலாம்.
ஆத்தென்ஸில் இந்தக் காலத்தில் இரண்டு விதமான அபிப்பிராய முடையவர்கள் இருந்தார்கள். இவர்களை இரண்டு கட்சியினர் என்று கூடக் கூறலாம். ஒருசாரர், வயதிலே முதிர்ந்த வர்கள்; பணம் படைத்து அதனால் சுக வாழ்வு நடத்தி வந்தவர்கள்; சமாதானத்தையே நாடினார்கள். அதாவது ஆத்தென்ஸ் அனாவ சியமாக எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொள்ளக் கூடா தென்ற கருத்துடையவர்கள்; ஆத்தென்ஸ், இனி ஏகாதிபத்திய ஆசையை விட்டுவிட வேண்டுமென்றும், இருக்கப்பட்டதைக் கொண்டு திருப்தியடைந்து அதனை நிலப்படுத்திக் கொள்ள, எந்த அளவுக்கு யுத்த முஸ்தீப்புடன் இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் இருந்தால் போதுமென்று வலியுறுத்தி வந்தார்கள். இன்னொரு சாரார், வாலிப மிடுக்குடையவர்கள்; உழைப்பிலே பெருமை கண்டவர்கள்; அந்த உழைப்பினால் முன்னுக்கு வந்தவர்கள். ஆத்தென்ஸைப் பழைய ஏகாதிபத்திய அந்தஸ்திலே கொண்டு வைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடையவர்கள்; யுத்தத் துடிப்புடன் இருந்தார்கள்.
முந்திய சார்பினருள் முக்கியஸ்தராயிருந்தவர் இருவர். ஒருவன் யூபுலஸ்; இன்னொருவன் போஷியோன், பிலிப், தெர்மாப்பி லேக்குத் தெற்கே வரவில்லையென்றால், அதற்கு யூபுலஸ் முன் கூட்டிப் படை அனுப்பித் தடை செய்ததுதான் காரணம். அரசாங்கப் பொக்கி ஷத்தின் ஒரு பகுதியை இவன் நிருவாகஞ் செய்து வந்தான். இதில் இவன் காட்டிய கண்டிப்பும் நேர்மையும் இவனுடைய மதிப்பை உணர்த்திக்கொடுத்தன. இவனைப் போலவே, போஷியோனும் நேர்மையுடையவன். இவனுடைய நேர்மை சில சமயங்களில் நிதானத்தைக்கூட இழந்துவிட்டதென்று சொல்ல லாம். நாற்பத் தைந்து தடவை இவன் திரும்பத் திரும்ப பிரதம படைத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான், திறமைக்காக வல்ல; நேர்மைக்காக.
பிந்திய சார்பினருள் ஒருவன் டெமாஸ்த்தனீஸ். யூபுலஸைப் போலவே, போஷியானைப் போலவோ சொல்ல முடியாது. ஆனால் தனது நாவன்மை மூலமாக ஜனங்களிடத்தில் ஒருவித செல்வாக்குப் பெற்றிருந்தான். இவன் பிலிப்பினால் ஆத்தென்ஸுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை எடுத்துக்காட்டி 351-ஆம் வருஷம் ஜனசபையில் நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினான். இந்தச் சொற் பொழிவில், ‘பிலிப் நமக்குப் பரம விரோதி. நமது செயலற்ற தன்மை யினால்தான் அவன் எஜீயன் கடலின் வடபகுதியிலும், திரேஸ் பிரதேசத்திலும் வெற்றி மேல் வெற்றி கண்டு வருகிறான். இதனைத் தடுக்க எஜீயன் கடலில் வட பகுதியில் ஆங்காங்கு நமது துருப்புக் களைக் கொண்டு நிறுத்த வேண்டும். இதற்காக உடனே ஒரு படை திரட்ட வேண்டும். இந்தப் படைக்காகும் செலவு வகையில் பணக் காரர்கள் பங்குகொள்ள வேண்டும்’ என்று ஆத்தென்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கூறினான். ஆனால் ஆத்தென்ஸ் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வில்லை; சும்மா இருந்துவிட்டது. டெமாஸ்த்தனீஸ் என்னவோ பிலிப்பின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை, தனது பேச்சினால் திரும்பத் திரும்பத் தாக்கி வந்தான். காரசாரமான இந்தப் பேச்சுகளை அனைத்தும் திரண்டு ‘பிலிப்பிக்ஸ்’ என்ற பெயர் பெற்று, படிப்பவர்களுக்கு இன்றளவும் உணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருக் கின்றன.
ஏற்கனவே சொன்னபடி திரேஸ் பிரதேசத்தில் பிலிப், தனது ஆதிக்கத்தைப் பரப்ப முனைந்து, அங்குள்ள ராஜ்யங்களிடையே மித்திரபேதத்தை உண்டுபண்ணிவந்தான். கால்ஸிடீஸி பகுதியி லுள்ள ஒலிந்த்தஸ் ராஜ்யம், ஆத்தென்ஸின் உதவியை நாடியது. டெமாஸ்த்தனீஸ், உதவியனுப்புமாறு ஜன சபையில் மூன்று தடவை நீண்ட நீண்ட பிரசங்கங்கள் செய்தான். அரை மனத்துடன் ஒரு சிறுபடை அனுப்பப்பட்டது. ஆனால் இந்த உதவி செல்வதற்கு முன்னர், பிலிப்பின் மித்திரபேத முயற்சிகள் வெற்றி பெற்றுவிட்டன. கால்ஸிடீஸி பகுதியிலுள்ள ராஜ்யங்கள் ஒன்றன்பின்னொன்றாக பிலிப்புக்கு அடிபணிந்தன. (348-ஆம் வருஷம்). ஆத்தென்ஸின் உதவிகோரிய ஒலிந்த்தஸ் ராஜ்யத்தை அடியோடு நாசமாக்கி விட்டான் பிலிப். இதே சமயத்தில் யூபியாவிலும் ஆத்தென்ஸுக்கு விரோதமாக ஒரு கலகம் தூண்டிவிடப்பட்டது. இதனையடக்க, போஷியோன் ஒரு படையுடன் சென்றான். வெற்றி கண்டதற்கு மேல் வேறொன்றும் இவனால் செய்ய முடியவில்லை. யூபியாவும் சிறிது காலத்திற்குள் பிலிப்பின் வசமாயது.
யூபியா போனது ஆத்தென்ஸுக்குக் கையொடிந்தது போலா யிற்று. பணச்சுருக்கம் மனச்சோர்வு எல்லாம் அதற்கு ஏற்பட்டு விட்டன. தவிர, பிலிப்புக்கு விரோதமாக ஒரு கட்சி திரட்ட பெலொப்பொனேசியாவுக்கு ஒரு கோஷ்டியை அனுப்பியிருந்தது. அதுவும் வெறுங்கையுடன் திரும்ப வந்துவிட்டது. எனவே பிலிப்புடன் சமதானமாகப்போவதைத் தவிர வேறு வழியில்லை.
மற்றும், வடக்கே போசிஸுக்கும் தீப்ஸுக்குமிடையே தொடங்கிய போராட்டம் முற்றப் பெறாமல் சிறுகச் சிறுக நடை பெற்று வந்தது. போசியர்கள், டெல்பி கோயில் பணத்தையெல்லாம் கரைத்துவிட்டு, தங்களுக்குள்ளேயும் சண்டை போட்டுக் கொண்டி ருந்தார்கள். இந்த நிலைமையிலும் தீப்ஸினால் இவர்களைப் பணிய வைக்க முடியவில்லை. எனவே அது - தீப்ஸ் பிலிப்பை இந்த விவ காரத்தில் தலையிட்டு, ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையின் பாது காவலாக இருந்து, வேண்டுவன செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதற்கிணங்கி, பிலிப்பும் தெற்கு நோக்கிப் படையெடுத்து வருவதாக ஒரு வதந்தி பரவியது.
இதுகேட்டு, போசிஸ் ஆத்தென்ஸின் உதவியையும், ஸ்ப்பார்ட் டாவின் உதவியையும் நாடியது; அட்டிக்காவின் நுழைவாயில் போன்ற தெர்மாப்பிலே கணவாயை முன் ஜாக்கிரதையாக ஆக்கிரமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அப்படியே ஆத்தென்ஸும், ஸ்ப்பார்ட்டாவும் ஒரு படையை அனுப்பின. ஆனால் அந்தக் கணவாய், அப்பொழுது போசிஸில் அதிகாரத் திலிருந்தவர்களுடன் மாறுபட்டிருந்த ஒருவனுடைய வசத்திற்குட் பட்டிருந்தது. அவன், மேற்படி ஆத்தென்ஸ் ஸ்ப்பார்ட்டப் படைகளுக்கு இடங்கொடுக்க மறுத்துவிட்டான். இதனால் அவன் பிலிப்பின் கையாளோ என்று சந்தேகங்கொண்டு விட்டது ஆத்தென்ஸ்! அப்படி இருந்து, மேற்படி கணவாயைப் பிலிப்புக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் தனக்கு ஆபத்தாயிற்றே என்று அஞ்சியது. எனவே அவன் - பிலிப் - படையெடுத்து வருவதற்கு முந்தி அவனுடன் சமாதானமாகப் போய்விடுவதே உசிதமென்று தீர்மானித்தது. சமாதானம் பேச பிலோக்ராட்டீஸ் தலைமையில் பதின்மரடங்கிய ஒரு தூது கோஷ்டியை மாஸிடோனியாவின் தலை நகரான பெல்லாவுக்கு அனுப்பியது. பிலிப்பைப் பரம வைரியாகக் கருதிப் பேசிவந்த டெமாஸ்த்தனீஸ், இந்தச் சமாதான தூது கோஷ்டி யில் ஒருவனாயிருந்தான் என்று சொன்னால் வாசகர் களுக்கு ஆச்சரியமாயிருக்கும். ஆனால் அவனுக்கு கூட, ஆத்தென்ஸின் அப்பொழுதைய நிலைமையில், பிலிப்புடன் சமாதானமாகப் போவதுதான் நல்லதென்று தோன்றிவிட்டது.
தூதுகோஷ்டியின் சமரஸ முயற்சிகள் வெற்றிபெற்றன. பிலிப் மன்னனுக்கும் ஆத்தென்ஸுக்கும் 346-ஆம் வருஷம் மார்ச் மாதம் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. ‘பிலோக்ராட்டீஸ் ஒப்பந்தம்’ என்று இதற்குப் பெயர். இதன்படி, உள்ள நிலைமை அப்படியே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அதாவது பிலிப்பின் வசம் இருக்கிற பிர தேசங்களை அவனைச் சார்ந்தனவென்றும், அப்படியே ஆத்தென்ஸ் வசம் இருக்கிற பிரதேசங்கள் அதனைச் சார்ந்தன வென்றும் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்திலிருந்து போசிஸ் விலக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஆத்தென்ஸும் சம் மதித்தது. காரணம் பிலிப்பின்மீது வைத்த நம்பிக்கைத்தான்.
பிலிப், போசிஸை ஒன்றுஞ்செய்யாமல் விட்டுவிடுவா னென்றும், தீப்ஸைத்தான் தாக்குவானென்றும் ஆத்தென்ஸ் கருதியது. ஆனால் ஏமாற்றத்தையே கண்டது. பிலிப், பெரிய ராஜதந்திரியல்லவா? அவன், தீப்ஸின் வேண்டுகோளுக்கிணங்குவதாகச் சொல்லிக் கொண்டு, போசிஸ்மீது படையெடுத்தான். முக்கியமான நகரங்களை நாச மாக்கினான். ஜனங்களைச் சிறுசிறு கிராமங்களில் சென்று குடி யேறும்படி செய்தான். போசியர்களை ஒன்று சேரவிடக் கூடாதென்பது இவன் நோக்கம். தவிர, போசியர்கள், டெல்பி கோயில் பணத்தை எடுத்துக் கையாண்டு வந்தார்களல்லவா, அதற்கு ஈடாக வருஷந் தோறும் அறுபது டாலெண்ட்டுகள் விகிதம் அவர்கள் அபராத காணிக்கை செலுத்தி வரவேடுமென்று கட்டளையிட்டான். போசிஸின் பல பாகங்களிலும் மாஸிடோனிய காவற் படைகளைக் கொண்டு நிறுத்தினான். ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையிலிருந்து போசியர்கள் விலக்கப்பட்டு, அவர்களுடைய இரண்டு ஓட்டுகளும் மாஸ்டோனி யாவுக்கு மாற்றப்பட்டன.
போசிஸின் வேண்டுக்கோளுக்கிணங்கி, தெர்மாப்பிலே கணவாய்க்கு உதவிப் படையனுப்பிய ஸ்ப்பார்ட்டாவுக்கும் இதே கதி ஏற்பட்டது. இரண்டு பிரதிநிதிகளை அனுப்பும் உரிமை அதற்கு இல்லையென்று சொல்லப்பட்டது.
கிரேக்கர்களால் அந்நியனென்றும் அநாகரிக ஜாதியைச் சேர்ந்தவனென்றும் சிறிது காலத்திற்கு முன்பு அலட்சியம் செய்யப் பட்டு வந்த பிலிப் மன்னன், கிரேக்கர்களுக்கு மட்டுமே உரித்தா யிருந்த ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையின் முக்கியஸ்தனாகவும் டெல்பி கோயிலின் ரட்சகனாகவுமாகி விட்டான். அதன் சார்பில் நடை பெற்ற திருவிழாக்களில் தலைமை வகிக்கத் தொடங்கினான். சர்வகிரீஸும் அவனை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தது.
பிலிப், பெரிய ராஜதந்திரியானபடியால், கிரேக்கர்களை விரோதித்துக் கொண்டு அவர்கள்மீது தன் ஆதிக்கத்தைத் திணிக்க விரும்பவில்லை. சமாதான முறைகளைக் கையாள்வதன் விளைவாக, அவர்கள், தன்னை அதி நாயகனாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று அவன் திட்டம் போட்டிருந்தான். சிறப்பாக, ஆத்தென்ஸின் நல்லெண்ணத்தையும் நட்பையும் அவன் பெரிதும் விரும்பினான். எதற்காக? அதனுடைய கலைச் செல்வத்திற்காகவா? இல்லை, இல்லை. பாரசீகத்தின் மீது படையெடுத்து வெற்றிகாண வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. அதற்கு ஆத் தென்ஸின் கடற்படை உதவியாயிருக்குமே என்பதற்காகத்தான்!
ஆனால் ஆத்தென்ஸிலோ, பிலிப்புக்கு விரோதமான கட்சி நாளுக்குநாள் வலுத்து வந்தது. பிலிப், பிலோக்ராட்டீஸ் ஒப்பந்தத் தின் மூலமாகத் தங்களை ஏமாற்றிவிட்டதாக, ஆத்தீனி யர்கள் கருதி ஆத்திரங் கொண்டார்கள். இந்த ஆத்திரத்தில் பிலோக்ராட்டீஸை நாடு கடத்திவிட்டார்கள். பிலிப்பை ஆதரித்துப் பேசிய பலர் மீது பலவிதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவை யனைத்திற்கும் காரணமாயிருந்தவன் டெமாஸ்த்தனீஸ் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
பிலோக்ராட்டீஸ் ஒப்பந்தம் நிறைவேறிய 346-ஆம் வருஷத்தி லிருந்து 340-ஆம் வருஷம் வரை, ஏறக்குறைய ஆறு வருஷ காலம் ஆத்தென்ஸும், மாஸிடோனியாவும் பெயரளவுக்குச் சமாதானமாக இருந்தன. ஆனால் இந்தக் காலத்தில், ஒன்றையொன்று தாக்க பலமான ஏற்பாடுகள் செய்து வந்தன.
ஆத்தென்ஸ், தனது கோட்டை கொத்தளங்களைப் பழுது பார்த்து பந்தோபஸ்து செய்து வந்தது. தவிர, பிலிப்புக்கு விரோத மாக, மெகாரா என்ன, கொரிந்த்தியா என்ன, அக்கர்னேனியா என்ன, யூபியா என்ன, இப்படி கிரீஸின் பல பாகங்களிலுமுள்ள பல ராஜ்யங் களையும் தன்னோடு அணைத்துக் கொண்டு வந்தது. தீப்ஸைக் கூட இந்தக் கூட்டு வட்டத்தில் இழுத்துக் கொண்டது. இப்படிப் பிலிப்புக்கு விரோதமாக ஒரு கூட்டு சேர்க்க, டெமாஸ்த்தனீஸ் பெரிதும் உழைத்தான். ஆத்தென்ஸ், மாஸி டோனிய எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஸ்தானமாயமைந்தது.
5. சர்வ கிரேக்க ஆதிக்கம்
அங்கு பிலிப்போ, பிலோக்ராட்டீஸ் ஒப்பந்தம் நிறைவேறின சிறிது காலத்திற்குள்ளாகவே, கிரீஸை, நயமான முறைகளைக் கையாண்டு தன்வசப்படுத்திக்கொள்ள முடியாதென்று தெரிந்து கொண்டான்; எனவே, பலாத்கார முறைகளைக் கையாண்டு தன் வசப்படுத்திக்கொள்ள முடியாதென்று தெரிந்துகொண்டான்; எனவே, பலாத்கார முறைகளைக் கையாளத் துணிந்தான. இப்படிக் கையாண்டு, தெஸ்ஸாலியின் விட்டுப்போன பிரதேசங்களிலும் திரேஸிலும், தன் ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டான். இதே பிரகாரம் தெற்கே பெலொப்பொனேசியாவிலும் சில ராஜ்யங்களை, அவற்றை ஸ்ப்பார்ட்டாவின் ஆக்கிரமிப்பினின்று பாதுகாப்பதாகச் சொல்லி, தன் செல்வாக்குட்படுத்திக் கொண்டான். பின்னர், 342-ஆம் வருஷம் திரேஸின் தெற்கே வால்போல் நீண்டுள்ள கெர்ஸொனிஸஸ் மீது படையெடுத்துச் சென்றான். கருங்கடல் பக்கத்திலிருந்து ஆத்தென்ஸுக்கு நீண்டகாலமாகச் சென்ற கொண்டிருந்த உணவுப் பொருள்களைத் தடுத்துவிட வேண்டு மென்பது இவன் நோக்கம். ஆத்தென்ஸுக்கு இது தெரிந்தது. உடனே கெர்ஸொனிஸஸைப் பாதுகாக்க ஒரு படையை அனுப்பியது. தவிர, டெமாஸ்த்தனீஸே நேரில் இந்தப் பகுதிக்கு வந்து பிலிப்புக்கு விரோதமாகப் பிரச்சாரஞ் செய்தான். இதன் விளைவாக, மாஸிடோனிய ஆதிக்கத்தைப் பெயரளவுக்கு ஏற்றுக் கொண் டிருந்த பெரிந்த்தஸ் பிஸண்ட்டியம் முதலிய சில பிரதேசங்கள், அந்த ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டு ஆத்தென்ஸுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டன. பிலிப்புக்கு ஆத்திரம் உண்டாகாம லிருக்குமா? 340-ஆம் வருஷம் பெரிந்த்தஸை முற்றுகையிட்டான். ஆனால் வெற்றி காண முடியாதென்று தெரிந்தும், திடீரென்று இதனை விட்டுவிட்டு பிஸண்ட்டியம் சென்று அதனை முற்றுகை யிட்டான். ஆனால் அங்கும் வெற்றி காண முடியவில்லை. கௌர மாகப் பின்வாங்கிக் கொண்டு விட்டான் கொண்டு விட்டான். இதற்கு டெமாஸ்த் தனீஸ்தான் காரணம். அவனுக்குத் தங்கள் வந்தனத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்தனர் ஆத்தீனியர்கள். ஆனால் பிலிப்புக்கு ஆத்தென்ஸ் மீது படையெடுத்து அதன் மீது வெற்றி கொண்டா லொழிய தனது சர்வ கிரேக்க ஆதிக்க ஆசை பூர்த்தி யாகாதென்பது நன்கு தெரிந்திருந்தது.
இந்தச் சமயத்தில் டெல்பி கோயிற் சொத்து விஷயமாக ஒரு வழக்கு ஏற்பட்டது. இது, பிலிப்பின் சர்வ கிரேக்க ஆதிக்க ஆசையை நிறைவைற்றி வைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாயமைந்தது. லோக்ரிஸ் பிரதேசத்தில் ஆம்ப்பிஸ்ஸா என்பது ஒரு சிறு நகரம். இந்த நகரவாசிகள், அப்போலோ தெய்வத்திற்கென்று விடப்பட்டிருந்த நிலத்தில் அத்துமீறிப் பயிரிட்டு வந்ததாக இவர்கள் மீது குற்றஞ் சாட்டி இவர்களுக்குத் தண்டனை விதித்தது ஆம்ப்பிக்ட்டி யோனிக் சபை. தண்டனை விதித்ததேயாயினும் அதனை நிறைவேற்ற அதற்குச் சக்தியில்லை. பிலிப்பை உதவிக்கு அழைத்தது. பிலிப் இதற்கு உடனே ஒப்புக்கொண்டு ஒரு பெரும்படையுடன் தெர்மாப் பிலே கணவாயைக் கடந்த வந்து, நேரே தெற்கு நோக்கி ஆம்பிஸ்ஸா நகரத்திற்குச் செல்லாமல், போசிஸிலுள்ள இலீட்டியா என்ற பாழ்பட்ட ஒரு நகரத்திற்குச் சென்று அங்கு முகாம் போட்டுக் கொண்டான். இதனால் இவன், ஆம்ப்பிக்டியோனிக் சபையின் வேண்டுகோளை மட்டும் நிறைவேற்றுவதற்காக வரவில்லையென்று தெரிகிறது. இலீட்டியா நகரத்தை பந்தோபஸ்து செய்துகொண்டு, அங்கிருந்து ஆத்தென்ஸ்மீது, தான் படையெடுக்க உத்தேசித்திருப்ப தாகவும், அதற்குத் துணையாக இருக்க வேண்டுமென்றும் தீப்ஸுக்கு ஒரு தாக்கீது விடுத்தான். தீப்ஸின் நோக்கத்தை அறிய வேண்டு மென்பதே இவன் நோக்கம். உண்மையில், ஆத்தென்ஸ் மீது படையெடுக்க வேண்டுமென்றே உத்தேசம் இவனுக்கு இருந்த தாகத் தெரியவில்லை. இலீட்டீயா நகரத்தில் பிலிப் முகாம் செய்திருக்கிறா னென்பதை அறிந்து பரபரப்படைந்த ஆத்தென்ஸும், தீப்ஸை, தனக்குத் துணையாயிருக்குமாறு கேட்டுக்கொண்டது. தீப்ஸ், சிறிது ஆலோசித்துவிட்டு, கடைசியில் ஆத்தென்ஸ் பக்கம் சேர்ந்து பிலிப்பை எதிர்த்து நிற்கத் துணிந்தது; இதற்குத் தக்க பலனையும் உடனே அனுபவித்துவிட்டது.
சுமார் முப்பதினாயிரம் பேர் கொண்ட பிலிப்பின் படையும், ஏறக்குறைய அதே முப்பதினாயிரம் பேரடங்கிய ஆத்தென்ஸ் - தீப்ஸ் கூட்டுப்படையும் 338-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பியோஷ்யா விலுள்ள கெரோனீய என்ற இடத்தில் சந்தித்தன. தீப்ஸ், தனது ‘புனித ஜதைப் படை’யைப் போர்க்களத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. இந்தப் படையைப் பற்றி வாசகர்கள் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்பாமினோண்டாஸும், பேலொப்பிடாஸும் அதிகாரத்தி லிருந்த காலத்தில், உயர் குடும்பத்து இளைஞர்களாக முந்நூறு பேரைப் பொறுக்கியெடுத்த அவர்களுக்கு யுத்தப் பயிற்சியளித்தனர்; அவர்களைத் துணிந்த வீரர்களாக்கினர். இந்த முந்நூறு வீர இளைஞர்களும், நூற்றைம்பது ஜதையினராகப் பிரிக்கப்பட்டனர். இந்த நூற்றைம்பது ஜதையினரும் மற்றச் சாதாரண தரைப்பட வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில், அவர்களுக்கு முன், அணி வகுத்து நிற்க வேண்டும். ஜதையினரில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக் கூடாது. ஒன்றாகவே போர் செய்ய nண்டும். வீழ நேரிடினும் ஒன்றாகவே விழ வேண்டும். இந்த முந்நூறு பேரையும் சேர்த்துச் சுருக்கமாக, துணிவுப் படையென்று கூறலாம். கடுமையான போர் களில் மட்டுந்தான் இந்தத் துணிவுப் படை கொண்டு வந்து நிறுத்தப் படும். கெரொனீயாவில் இந்தத் துணிவுப் படை வந்து நின்றது.
ஆத்தென்ஸ் படையில், இதுகாறும் பிலிப்புக்கு விரோத மாகச் சொற்போர் நடத்தி வந்த டெமாஸ்த்தனீஸும், இவனைப் போல் வேறு பல பிரபலஸ்தர்களும் சாதாரண போர் வீரர்களாகச் சேர்ந்திருந்தனர். டெமாஸ்த்தனீஸுக்கு அப்பொழுது நாற்பத்தேழு வயது என்றால், அவன் தனது நாட்டின் சுதந்திரத்திற்கு ஊறு ஏற்படக் கூடாதென்பதில் எவ்வளவு தீவிரமுடையவனாயிருந்தான் என்பது தெரிகிறது. சர்வ கிரீஸின் சுதந்திரத்திற்கல்லவா இப்பொழுது ஆபத்தேற்பட்டிருக்கிறது.
விஸ்தரித்துக் கொண்டு போவானேன்? கெரொனீயா போர், பிலிப்புக்கு வெற்றியாக முடிந்தது. அவனுடைய படையின் அதாவது மாஸிடோனியப் படையின் ஒரு பகுதிக்குத் தலைமை வகித்த அவனுடைய மகன், அப்பொழுது பதினெட்டு வயதே அடைந்திருந்த (மகா) அலெக்ஸாந்தர், தீப்ஸின் துணிவுப் படையைத் துணிந்து தாக்கி, முந்நூறு பேரையும் ஒருவரைக் கூட உயிர் தப்ப விடாமல் முடித்து விட்டான். இதன் மூலம் தீபர்களுடைய வீரத்தின் வேரையே அறுத்துவிட்டானென்று சொல்ல வேண்டும். ஆத்தீனியர்களிலோ, டெமாஸ்த்தனீஸ் முதலியவர்கள், தப்பிப் பிழைத்தோமென்று போர்க்களத்தி லிருந்து ஓடிவிட்டனர்.
கெரொனீயா போர், கிரேக்க சரித்திரத்தில் ஒரு திருப்பம். இந்தப் போரின் விளைவாகக் கிரீஸில் அந்நியர் ஆதிக்கம் குடி கொண்டது. கிரீஸை ஒற்றுமைப்படுத்தி வைப்பதாகச் சொல்லி, அதற்கு மாஸிடோனியத் தளையைப் பூட்டிவிட முனைந்தான் பிலிப். கிரீஸின் சுதந்திர வாழ்வும் முற்றப் பெறும் நிலைமைக்கு வந்துவிட்டது. இஃதிருக்கட்டும்.
வெற்றி கொண்ட பிலிப், தோல்வியடைந்தவர்கள் விஷயத்தில் பாரபட்சமாக நடந்துகொண்டான். கடைசி சமயத்தில் தன்னைக் கைவிட்டுவிட்ட தீப்ஸ்மீது தன் ஆத்திரத்தையெல்லாம் காட்டினான். போர்க்களத்தில் சிறைப்பட்ட தீபர்களை அடிமைகளாக விற்று விடும்படி செய்தான்; தனக்கு எதிராக நின்ற கட்சித் தலைவர்களிற் சிலரைச் சிரச்சேதமும்; சிலரைத் தேசப் பிரஷ்டமும் செய்து விட்டான்; தனக்கு அடங்கி நடக்கக்கூடிய ஒரு சிலரை அதிகார பீடத்தில் அமர்த்தினான்; காட்மீயா கோட்டையில் மாஸி டோனியா காவற்படை யொன்றையும் நிறுவினான்.
ஆத்தென்ஸ் விஷயத்திலோ இப்படி நடந்து கொள்ளவில்லை பிலிப். போர்க்களத்தில் சிறைப்பட்டவர்களை விடுதலை செய்து விட்டான். அதன் அரசாங்க அமைப்பிலோ, அதன் செல்வாக்குக் குட்பட்டிருந்த ஸாமோஸ், லெம்னோஸ் முதலிய சில தீவுகளின் விஷயத்திலோ தலையிடவில்லை. கெர்ஸொனிஸஸை மட்டும் தன் சுவாதீனத்தில் இருத்திக் கொண்டான். இவையனைத்திற்கும் சேர்ந்தாற்போல் ஒரு நிபந்தனை விதித்தான். அதுதான், சர்வ கிரிஸுக்கும் தன்னை அதிநாயகனாக ஏற்றுக்கொள்ள வேண்டு மென்பது. கடுமையான நிபந்தனைகளை எதிர்பார்த்த ஆத்தென்ஸ், இந்த நிபந்தனைக்கு உடனே இணங்கியது.
ஆத்தென்ஸை, தலைவணங்கச் செய்தபின் பிலிப், பெலொப் பொனேசியாவுக்குச் சென்று, அங்குள்ள ராஜ்யங்களை, தன் ஆதீனத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஸ்ப்பார்ட்டா மட்டும் மறுத்துவிட்டது. பிலிப், அதனைத் தாக்கி நாசமாக்காமல், அதன் அதிகாரத்திற்குட்பட்டிருந்த பிரதேசங் களை ஆக்கிரமித்து ஆர்கோஸ் முதலிய ராஜ்யங்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டான். சுருக்கமாக, ஸ்ப்பார்ட்டாவின் அதிகார எல்லையைச் சுருக்கி விட்டான்.
பின்னர், பிலிப், கொரிந்த்தியாவில் சர்வ கிரேக்க மகா நாடொன்றை, தன் தலைமையில் 338-ஆம் வருஷக் கடைசியில் கூட்டினான். ஸ்ப்பார்ட்டாவைத் தவிர்த்து, கிரீஸிலுள்ள எல்லா ராஜ்யங்களும், தங்கள் தங்கள் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இதற்குப் பிரதிநிதிகளை அனுப்பின. இந்த ராஜ்யத்தையும் சேர்ந்த ஒரு ஸ்தாபனம் தோற்றுவிக்கப்பட்டது. இதனை ‘கொரிந்த்திய காங்கிரஸ்’ என்று அழைப்பர். இந்த ஸ்தாபனத்திற்கும் பிலிப்புக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி, ஸ்தாபனத்தில் சேர்ந் துள்ள ராஜ்யங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் பட்டது. எல்லா ராஜ்யங்களுக்கும் கடலில் கலஞ் செலுத்தும் உரிமை அளிக் கப்பட்டது. ஒரு ராஜ்யத்திற்கும் விரோதமாக மற்றொரு ராஜ்யம் சூழ்ச்சி செய்யக்கூடாதென்றும் எல்லா ராஜ்யங்களும் சமாதானத் துடன் வாழ வேண்டுமென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டன. இந்த ஷரத்துக்களின் மூலம் பிலிப், தான் ஏகாதிபத்தியவாதியல்ல வென்றும் கிரீஸை ஒற்றுமைப்படுத்துவதே தனது நோக்கமென்றும் காட்டிக் கொண்டான். முதலில் கிரேக்கர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு பிறகு, அவர்கள் அறிந்து கொள்ளாத விதமாக அவர்கள் மீது தன் ஆதிக்கத்தைத் திணிக்க வேண்டுமென்பதே இவன் திட்டம்.
மேற்படி கொரிந்த்திய காங்கிரஸின் அடுத்த வருஷ - 337-ஆம் வருஷ கூட்டத்தில், மாஸிடோனியாவும் இந்தக் காங்கிரஸ் ஸ்தாபனமும் ஒன்றுசேர்ந்து பிலிப்பின் தலைமையில், பாரசீகத்தின் மீது படையெடுப்பதென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மெதுவாகத் தன்னுடைய தலைமையைக் கிரேக்க ராஜ்யங்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்து கொண்டான் பிலிப் இந்தத் தீர்மானத்தின் மூலம். அப்படி ஏற்றுக்கொள்ளச் செய்ததோடு அவை, அந்த ஆதிக்கத்தை உணராதிருக்கும் பொருட்டும், இந்த ஆதிக்கத் திலிருந்து விடுதலை பெற முயற்சி எடுத்துக் கொள்ளு முன்பும், அவற்றின் கவனத்தை வேறு பக்கம் திருப்பவே, பாரசீகப் படை யெடுப்பு பிரேரணையைக் கிளத்தினான். ஆனால் அந்த ராஜ்யங்கள், பிலிப்பின் உண்மை நோக்கத்தைத் தெரிந்து கொண்டனவோ இல்லையோ, சுமார் நூற்றைம்பது வருஷங்களுக்கு முந்தி கிரீஸின் மீது படையெடுத்துவந்த பாரசீகத்தைப் பழி வாங்க இப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்ததேயென்று சந்தோஷங் கொண்டன; மேற்படி படையெடுப்புக்குப் பணமும் படையும் உதவுவதாக ஒப்புக் கொண்டன. தவிர ஆசியாவின் பொருள் வளம், கிரேக்க ராஜ்யங் களின் ஆசையைக் கிளறிவிட்டது.
அடுத்த வருஷம் 336-ஆம் வருஷம் - பாரசீகப் படை யெடுப்புக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாஸிடோனிய முன்னணிப் படையொன்றும் ஹெல்லெஸ்ப் பாண்ட் ஜல சந்தியைக் கடந்து சென்றுவிட்டது. பிலிப்பும் புறப்படுவதாக இருந்தான். புறப்படுவதற்கு முந்தி, தன் மகளுக்கு விவாகம் செய்துவைத்து விட்டுப் போக நிச்சயித்தான். மண வினைக்கான ஏற்பாடுகள் யாவும் நடைபெற்றன. விவாகத்திற்குக் கிரேக்க ராஜ்யங்கள், பிரதிநிதிகளையும் பரிசுகளையும் அனுப்பி யிருந்தன. விவாகச் சடங்கை முன்னிட்டு ஓர் ஊர்வலம் நடை பெற்றது. இந்த ஊர்வலத்தின்போது பாஸேனியஸ் என்ற ஒருவன், பிலிப்பைக் கொலை செய்துவிட்டான். பிலிப்புக்கும் அவன் முதல் மனைவி ஒலிம்ப்பியாஸ் என்பவளுக்கும்- இவள்தான் மகா அலெக்ஸாந்தரின் தாயார் - சிறிது காலமாக மனஸ்தாபம் இருந்து வந்தது. அவளுடைய சூழ்ச்சியினால்தான் இந்தக் கொலை நடை பெற்றதென்று கூறுவர். எப்படியோ, நாகரிகமற்ற நிலையிலிருந்த மாஸிடோனியாவை ஒருதலை முறைக்குள் நாகரிகமுள்ள கிரேக்கர் களும் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டும், அவனுக்கு ஏகாதிபத்திய பாதையைச் செப்பனிட்டுக் கொடுத்துவிட்டு, தனது நாற்பத் தாறாவது வயதில் - 336-ஆம் வருஷம் - மறைந்துவிட்டான் பிலிப்.
மகா அலெக்ஸாந்தர்
1. பிறந்ததும் பயின்றதும்
பிலிப்புக்குப் பிறகு அலெக்ஸாந்தர்; உலக சரித்திரத்தில், மகா பட்டம் பெற்ற பேரரசர்களுள் முதன்மையானவன். இவன் பிறந்த நாளன்று, ஒன்றன் பின்னொன்றாக மூன்று நற்செய்திகள் பிலிப்புக்குக் கிடைத்தன ஒன்று, இல்லீரியர் மீது தொடுத்திருந்த போரில் அவன் படைகள் வெற்றி கண்டது; மற்றொன்று, ஒலிம்ப்பிய விளை யாட்டில் அவனுடைய குதிரை ஜெயித்தது; இன்னொன்று, அலெக்ஸாந்தர் பிறந்தது. இந்த மூன்று சந்தோஷச் செய்திகளையும் கேட்ட பிலிப், உடனே மண்டியிட்டு “கடவுளே ஒன்றன் மேலொன் றாகச் சந்தோஷச் செய்திகளை அனுப்பி வருகிறாயே; நான் நிதானந் தவறாமலிருக்க ஒரு துக்கச் செய்தி யையும் கூடவே அனுப்பு” என்று பிரார்த்தித்தானாம். அலெக்ஸாந்தர் பிறந்தது இரவு நேரம். அதே சமயத்தில் சின்ன ஆசியாவில் எபீஸஸ் என்னும் ஊரிலிருந்த ஆர்ட்டிமிஸ் தேவதையின் கோயில் எரிந்து கொண்டிருந்தது. (உலகத்து ஏழு அதிசயங்களுள் ஒன்றெனக் கருதப்பட்ட இந்த ஆர்ட்டிமிஸ் கோயில் எரிந்து கொண்டிருந்ததென்றால், தானே எரிந்து கொண்டிருந்ததென்று அர்த்தமல்ல. ஹீரோஸ்ட்ராட்டஸ் என்ற ஒரு பைத்தியக்காரன், இதற்கு நெருப்பு வைத்துவிட்டான் என்பதே வரலாறு. அலெக்ஸாந்தர் பிறந்ததும் இந்தக் கோயில் எரிந்ததும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன என்பதே இங்கு தாத்பரியம். அக்கீயர்களால் வன தேவதையாகக் கொண்டாடப் பெற்ற இந்த ஆர்ட்டிமிஸ் பிற்காலத்தில் தாய்மைக்கு இறைவியாகக் கொண்டாடப் பெற்றான்.)
அலெக்ஸாந்தரை, தன்னினும் சான்றோனாகக் காண விழைந் தான் பிலிப். இதற்காகத் தக்கோரிடத்தில் இவன் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்தான். அந்தக் காலத்தில் - அந்தக் காலத்தில் மட்டு மென்ன எந்தக் காலத்திலுந்தான் - பேரறிஞனென்று போற்றப்பட்டு வந்தவன் அரிஸ்ட்டாட்டல்; பிளேட்டோவின் சீடன். அவனிடத் தில் பிலிப்புக்கு அபாரமதிப்பு. எழுதுகிறான் அவனுக்கு ஒரு கடிதத்தில்:-
“எனக்கு ஒரு மகனுண்டு என்பது தங்களுக்குத் தெரியு மல்லவா? எல்லாத் தெய்வங்களுக்கும் இந்தச் சமயத்தில் என் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் என்று கேட்கிறீர் களா? அவன் - எனக்கு மகன் - பிறந்ததற்காகவல்ல; தாங்கள் பிறந்திருக்கிற யுகத்திலேயே அவனும் பிறந்திருக்கிறானே என்பதற் காக. அவனுக்குக் கல்வியறிவு அளிக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களாயின், அவனுடைய தந்தையாகிய நானும், அவன் ஆளப்போகும் ராஜ்யமும் பெருமைப்படக் கூடிய விதமாக அவன் இருப்பானென்ற நம்பிக்கை எனக்கு உண்டாகும்.”
அலெக்ஸாந்தர், பதின்மூன்றாவது வயது முதல் பத்தொன்ப தாவது வயது வரை சுமார் ஆறு வருஷ காலம் அரிஸ்ட்டாட் டலிடம் கல்வி பயின்றான். பல துறைகளிலும் அறிவு பெற வேண்டு மென்ற ஆவல் இருந்தது அலெக்ஸாந்தருக்கு. இந்த ஆவலைப் பூர்த்தி செய்து வைக்கக்கூடிய ஆற்றல் இருந்தது அரிஸ்ட் டாட்டலுக்கு. ஆசானுக்கும் மாணாக்கனுக்கும் மனங்கலந்த உறவு ஏற்பட்டத்தில் என்ன ஆச்சரியம்? அலெக்ஸாந்தர் தனது கடைசி நாட்கள் வரை, அரிஸ்ட்டாட்டலின் பலமுக ஆராய்ச்சிகளுக்குப் பல வகையிலும் உதவி செய்து வந்தான். அரிஸ்ட்டாட்டலும் இந்த நன்றியை மறக்கவில்லை.
ஆசியப் படையெடுப்பின் போது, அலெக்ஸாந்தர், தன்னுடன் பலதுறை அறிஞர்களையும் அழைத்துச் சென்றான். பகல் நேரங் களில் பிரயாணஞ் செய்ததனாலோ, போர் செய்ததனாலோ ஏற்படக்கூடிய அலுப்பைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இரவு நேரங்களில் மேற்படி அறிஞர்களுடன் சம்பாஷணை செய்வான். ப்ளூட்டார்க் கூறுவது போல, அறிவை அதிகரித்துக் கொள்ள வேண்டுமென்ற இவனுடைய ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இலியத் மகா காவியத்தினிடம் இவனுக்குத் தனிப்பெரும் மோகம். இந்த மோகத்தை உண்டு பண்ணியவன் அரிஸ்ட்டாட்டல்தான். அரிஸ்ட்டாட்டல் எழுதிய விளக்க உரை யோடு கூடிய மேற்படி காவியத்தின் பிரதியொன்றை இவன், போருக்குச் செல்கின்ற காலத்தும் கூடவே எடுத்துச்செல்வான். இரவில் படுக்கிறபோது தலையணையின் கீழ் அந்தப் பிரதியை வைத்துக் கொள்வான். இந்தக் காவியத்தின் பெரும் பகுதி இவனுக்கு மனப்பாடமாயிருந்தது.
மற்றச் சாஸ்திரங்களைப் போல், தத்துவ சாஸ்திரத்திலும் விசேஷப் பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறு, தன்மகனுக்குக் கூறி யிருந்தான் பிலிப். “மகனே எத்தனையோ தவறான காரியங்களைச் செய்துவிட்டு, பிறகு அவைகளுக்காக வருத்தப்பட்டிருக்கிறேன் நான். நீ அந்த மாதிரியான காரியங்களைச் செய்யாமலிருக்க வேண்டு மென்பதற்காகவே, தத்துவ சாஸ்திரத்தின் மீது விசேஷ கவனஞ் செலுத்துமாறு கூறுகிறேன்” என்று பிலிப், தன் மகனுக்கு அறிவுறுத் தியிருந்தான். அலெக்ஸாந்தரும், இந்தத் துறையில் விசேஷப் பயிற்சி பெற்றான். ஆனால் இந்தப் பயிற்சி, இவனுடைய வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உபயோகப்பட்ட தென்பது வேறு கேள்வி.
பரம்பரை வாசனையை யொட்டி, அலெக்ஸாந்தர் இளமை யிலிருந்தே முரட்டுச் சுபாவமுடையவனாயிருந்தான். ஆபத்து என்பது இவனுக்குத் தெரியாத வார்த்தை. மற்றவர்கள் சாதிக்க முடியாது என்று கைவிட்டு விட்ட காரியத்தைச் சாதிக்க முற்படு வான் ஒரு சமயம், பூஸேபாலஸ் (இந்தக் குதிரையை அலெக்ஸாந்தர் மிகவும் பாரட்டி வந்தானென்று தெரிகிறது. இந்தியாவின் மீது இவன் படையெடுத்து வந்து போரஸ் மன்னன் மீது வெற்றி கண்டதும் இந்தக் குதிரை இறந்துவிட்டது. போர் நடைபெற்ற இடத்திற்குச் சமீபத்தில், இதன் பெயரால் ஒரு புதிய நகரத்தைத் தோற்றுவித்தான் அலெக்ஸாந்தர்.) என்ற ஒரு பெரிய குதிரையை பிலிப்பின் முன்னர் கொண்டு வந்து நிறுத்தினர் அவனுடைய பரிவாரத்தனர். அவனுடைய முரட்டுத்தனத்தைப் பார்த்த பிலிப், அதனை விடுமாறு உத்தரவிட்டான். “இருங்கள், இருங்கள்; அதனை நான் வழிக்குக் கொண்டு வருகிறேன்.” என்றான். அப்பொழுது பத்து அல்லது பன்னிரண்டு வயதே அடைந்திருந்த அலெக்ஸாந்தர். இதுவரை, சூரியன் பக்கம் அதன் பின்புறம் இருக்கும்படியாக நிறுத்தியிருந்தனர். அது, தன்னோடு ஒட்டி வரும் நிழலைக் கண்டு மருண்டு, உதைத்துக் கொண்டும், கனைத்தும் கொண்டும், நின்ற இடத்தில் நில்லாமலிருந்தது. இந்தச் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டான் அலெக்ஸாந்தர். சூரியன் பக்கம் முகம் இருக்கும்படி குதிரையைத் திருப்பி நிறுத்தி, அதனைத் தட்டிக் கொடுத்து, அதன் மீது ஆரோகணித்துக் கொண்டான். குதிரையும், கடிவாளத்திற்குக் கட்டுப்பட்டது. வேகமாகச் சிறிது தூரம் சென்று, திரும்பி வந்து, தந்தை முன்னர் நின்றான் மகன். பிலிப் ஆனந்தக் கண்ணீர் சொரிய, “மகனே, நான் விட்டுப் போகிற ராஜ்யம் உனக்குப் பற்றாது. இதைக் காட்டிலும் விசாலமானதொரு ராஜ்யத்தை உனக்கென்று தேடிக்கொள்” என்றான்.
இங்ஙனமே, வேட்டை, விளையாட்டு எல்லாவற்றிலுமே ஒரு தனித் துணிச்சல் காட்டினான் அலெக்ஸாந்தர். பறக்கும் பறவை களையோ, நாற்கால் பாய்ச்சலில் ஓடும் பிராணிகளையோ சுலபமாக அம்பினால் வீழ்த்தி விடுவான். வேகமாகச் சென்று கொண்டிருக்கும் குதிரை பூட்டிய ரதத்திலிருந்து இறங்குவான். அப்படியே அதன் மீது ஏறுவான். ஒரு சமயம், ஓர் அடர்ந்த காட்டுக்குள் தனியனாக நடந்து சென்று கொண்டிருந்தான். சிங்கமொன்று எதிர்ப்பட்டது. அதற்கும் இவனுக்கும் மல்யுத்தம். கடைசியில் இவனுக்கே வெற்றி கிடைத்தது.
கடினமான உழைப்பிலே அலெக்ஸாந்தருக்குத் தனியான இன்பம். ஓய்வென்பதை அறியான். ஓய்வு கொள்ள வேண்டுமென்று கூறுவோரைக் கடிந்து கொள்வான். அதிக நேரம் தூங்குவோரைக் கண்டால் இவனுக்குப் பிடிக்காது. தானே சிறிது அதிகமாகத் தூங்கிவிட்டால் ‘தூங்கி, நேரத்தை வீணாக்கி விட்டேனே’ யென்று தன்னையே நொந்துகொள்வான். தூக்கத்தில் எப்படி சிக்கனங் காட்டினானோ அப்படியே ஆகாரத்திலும் சிக்கனங் காட்டினான். எளிய உணவை உட்கொள்ளுவான். ‘தாடி மீசை இருப்பது ஆபத்து; சத்துருக்களிடம் சுலபமாக அகப்பட்டுக் கொள்ள அவை துணை செய்கின்றன’ என்று சொல்லி, அவற்றை வளர்க்கும் வழக்கத்தை ஒழித்துவிட்டான்.
சிறு வயதிலிருந்தே அலெக்ஸாந்தருக்கு, தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் இருந்து வந்தது. ஒரு சமயம் இவனது நண்பர்கள், ‘ஒலிம்ப்பிய கால்நடைப் போட்டியில் நீ ஏன் சேரக் கூடாது’ என்று கேட்டார்கள். ‘போட்டியிடுகிறவர்கள் அரசர் களாயிருக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்தப் போட்டியில் கலந்து கொள்வேன்’ என்று இவன் பதில் கூறினான்.
எதிலும் தான் முன் நிற்க வேண்டும், தான் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணமே மிகுந்திருந்தது அலெக்ஸாந்தருக்கு. இதற்காக, எந்தவிதமான ஆபத்தையும் துச்சமாகக் கருதுவான்; மெய்மறந்து அந்தக் காரியத்தில் ஈடுபடுவான். போர் முனையில் தான் ஒரு படைத்தலைவன் என்பதையும், அரசிளங் குமரன் என்பதையும் மறந்து, சாதாரண ஒரு போர் வீரனைப் போல் உற்சாகத்துடன் போர் புரிவான். சத்துருக்களை எப்படியாவது நாசஞ் செய்துவிட வேண்டு மென்ற ஒரே நினைவுதான் இவனுக்கு இருக்கும். கெரொனீயா போரில், தீப்ஸின் துணிவுப் படையினை நிர்மூலமாக்க முதன்முதல் துணிந்தவன். அப்படியே நிர்மூலமாக்கியவன் இவனே யல்லவா? ஒரு சமயத்தில், தன் நண்பர்களிடம் குறையாகச் சொல்லிக் கொண்டானாம்: “நாம் தயாராவதற்குள், தகப்பனார் எல்லா வற்றையும் செய்து முடித்துவிடுவார் போலிருக்கிறது. நீங்களோ, நானோ பெரியதும் முக்கியமானதுமான காரியத்தைச் சாதிக்க இடம் கொடுக்கமாட்டார் போலிருக்கிறது”.
இளமையிலேயே அலெக்ஸாந்தருக்குப் பாரசீகத்தின் மீது ஒரு கண் விழுந்துவிட்டதாகத் தெரிகிறது. பிலிப் மன்னன், பிஸண்ட் டியம் பக்கம் படையெடுத்துச் சென்றிருந்த காலத்தில், - அப் பொழுது அலெக்ஸாந்தருக்குப் பதினாறு வயதுதான் - பாரசீகத்தி லிருந்து வந்திருந்த தூதர்களை வரவேற்று உபசரிக்கும் பொறுப்பு இவனுக்கு ஏற்பட்டது. அப்பொழுது அவர்களைப் பார்த்து “உங்களுடைய அரசர் எப்படிப்பட்டவர்? சத்துருக்களை எப்படி நடத்துவார்? பாரசீகம் வலுப்பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? பணமா? படையா? இப்படிச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டான். அவர்கள் சொல்வதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டான். இவனைச் சிறுபிள்ளையென்று கருதி வந்த அவர்கள் சொல்வதை யெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டான். இவனைச் சிறு பிள்ளையென்று கருதி வந்த அவர்கள். இவன் பேசுந் தோரணையையும், நடந்து கொள்ளும் இல்லை. மாதிரியையும் பார்த்துத் திகைப் படைந்து போனார்கள். இங்ஙனமே பிற நாட்டு மன்னர்களைப் பற்றியும், அவர்கள் ஆளும் முறையைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆவல் கொண்டான் அலெக்ஸாந்தர்; அறிந்து கொண்டும் வந்தான்.
2. அரசபீடத்தில் அமர்தல்
பிலிப் மன்னன் 336-ஆம் வருஷம் கொலை செய்யப்பட்டு விட்டானல்லவா, அதைக் கேள்வியுற்றதும், அவனுடைய ஆதிக்கத் துக்குப் பயந்து கிடந்த ராஜ்யங்கள் பலவும் ஒரே குதூகலம் கொண்டன. சிறப்பாக ஆத்தென்ஸில் இந்தக் குதூகலம் மிகுந்து காணப்பட்டது. டெமாஸ்த்தனீஸுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, கங்கு கரையின்றிப் பொங்கியது. பிலிப்பின் மரணச் செய்தி எட்டியதும், இவன், ஒரு வாரத்திற்கு முன் தனது மகள் இறந்து போனதைக்கூற மறந்துவிட்டு, சந்தோஷங் கொண்டாட ஆரம்பித்தான்! ஆடம் பரமான உடையணிந்து கொண்டு, தலையில் பூச்சூட்டிக் கொண்டும், ஜன சபை முன்னர்த் தோன்றி, பிலிப்பின் மரணத்திற்காக மகிழ் வதாகவும், இதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாட வேண்டு மென்றும், கொலை செய்த பாஸேனியஸுக்கு வெற்றி மாலை யொன்று அனுப்ப வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தான்! இதில் வேடிக்கை யென்ன வென்றால், இந்தத் தீர்மானம் நிறைவேறியதற்குச் சில வேளைகளுக்கு முன்புதான், யாரேனும் பிலிப்பின் உயிருக்கு உலை வைத்துவிட்டு ஆத்தென்ஸில் வந்து தஞ்சம் புகுந்துகொள்வார்களானால், அவர்களை நியாய விசாரணைக்குட்படுத்தித் தண்டிக்க வேண்டுமென்று, அதே ஜனசபையில் ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது!
இப்படி மகிழ்ச்சி கொண்டாடியதோடல்லாமல், மேற்படி ராஜ்யங்கள், மாஸிடோனிய ஆதிக்கத்தை உதறித் தள்ளி விட முயன்றன. கிழக்கே திரேஸிலும், மேற்கே இல்லீரியாவிலும், இன்னும் பல இடங்களிலும் கலகங்கள் தோன்றின. மத்திய கிரீஸிலும், பெலொப்பொனேசியாவிலுமுள்ள சில ராஜ்யங்கள் மாஸிடோனியாவுடன் வைத்துக் கொண்டிருந்த நல்லுறவை ரத்து செய்து கொண்டுவிட்டன. இவைகளெல்லாம் போக, மாஸிடோனி யாவிலேயே அரச பீடத்தை நாடிப் பலர் போட்டியிட்டனர். இவர்களை ஆதரிக்கப் பல கட்சிகள் தோன்றி ராஜ்யத்தின் அமைதியை குலைத்துக் கொண்டிருந்தன.
எப்படிப்பட்டவரையும் கதிகலங்கச் செய்யக்கூடிய இந்த நிலைமையில் அலெக்ஸாந்தர் பட்டத்திற்கு வந்தான். அப்பொழுது இவனுக்கு வயது இருபதுதான். ஆனால், பிலிப் தயாரித்து வைத்துப் போயிருந்த ராணுவம், இவனிடம் பரம விசுவாசம் காட்டியது. இதனைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்டான் அலெக்ஸாந்தர். மனத்திண்மையுடன் அரச பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினான்.
முதன்முதல், தனக்குப் போட்டியாக அரச பீடத்தை நாடி வந்த அனைவரையும் உயிர் முடித்து விட்டான். இதன்மூலம், தனது அரச பதவியை ஸ்திரப்படுத்திக் கொண்டான். பின்னர், தன் தந்தை, கிரேக்க ராஜ்யங்கள் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு, 336-ஆம் வருஷம் - அரச பதவியை ஏற்றுக்கொண்ட அதே வருஷம் - ஒரு பெரும் படையுடன் தெற்கு நோக்கினான். ஏதுமறியாத இளம்பிள்ளையென்று இவனை ஏளன முறையில் கருதிவந்த ராஜ்யங்கள், இப்பொழுது, பருந்துபோல் இவன் பறந்து வருவதைக் கேள்வியுற்றுப் பயந்து போயின; இவனுக்குத் தலைவணங்கத் காத்து நின்றன. தீப்ஸ் என்ன, ஆத்தென்ஸ் என்ன, ஒன்றன்பின்னொன்றாகத் தங்களுடைய விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டன; சகல மரியாதை களையும் இவனுக்குச் செலுத்தியது. ஆம்ப்பிக்ட்டியோனிக் சபை, பிலிப்பின் ஸ்தானத்தில் இவனை ஏற்றுக்கொண்டு, அதற்குரிய கௌரவங் களை வழங்கியது. ஸ்ப்பார்ட்டாவைத் தவிர்த்து, முன்போல் கொரிந்த்திய காங்கிரஸ், கொரிந்த்தியாவில் கூடி, இவனிடம் தனக் குள்ள விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டது; அகில கிரீஸின் பிரதம படைத்தலைவனாக பிலிப்புக்குப் பதில் இவனை அங்கீகரித்துக் கொண்டது; ஆசியாவின் மீது படையெடுத்துச் செல்ல இவனுக்குப் பணமும் படையும் உதவுவதாக வாக்களித்தது. இவனும், மேற்படி காங்கிரஸின் சேர்ந்துள்ள ராஜ்யங்களின் தனி உரிமையை அங்கீ கரித்து ஒரு பிரகடனம் வெளியிட்டான். இங்ஙனம் சொற்ப காலத் திற்குள், ஏறக்குறைய கிரீஸ் முழுவதையும், தனக்கு இணங்கி யிருக்கு மாறு செய்துவிட்டு, தனது தலைநகரமாகிய பெல்லாவுக்குத் திரும்பிச் சென்று, உள்நாட்டில் அமைதி நிலவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.
திரேஸிலும் இல்லீரியாவிலும் கலகங்கள் தோன்றியிருந்தன வென்று மேலே சொன்னோமல்லவா, இவற்றை அடக்கி ஒடுக்க அடுத்த வருஷம் (335-ஆம் வருஷம்) ஒரு படையுடன் சென்றான் அலெக்ஸாந்தர். இவ்விரு பகுதிகளிலும் மாஸிடோனிய ஆதிக்கம் நிலைநாட்டப் பெற்றது.
திரேஸ் பகுதிக்கு இவன் சென்றிருந்த காலத்தில், அங்கே இவன் இறந்துவிட்டானென்று ஒரு வதந்தி கிளம்பியது. ஆத்தென்ஸ் முதலிய ராஜ்யங்கள் இதனை நம்பின.
டெமாஸ்த்தனீஸ் ஆரம்பித்துவிட்டான், சுதந்திரப் போர் முழக்கம் என்று சொல்லிக்கொண்டு, அலெக்ஸாந்தருக்கு விரோத மான பிரச்சாரத்தை. இதற்காக, பாரசீகத்திலிருந்து பொருளுதவி பெற்றுக்கொள்ளவும் இவன் தயங்கவில்லை. ஆத்தென்ஸினுடைய தூண்டுதலின் பேரில், தீப்ஸும், அலெக்ஸாந் தருக்கு விரோதமாகக் கிளம்பியது; அலெக்ஸாந்தரினால் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மாஸிடோனியப் படையதிகாரிகளைக் கொலை செய்துவிட்டது; மாஸிடோனியக் காவற்படை தங்கியிருந்த காட்மீயா கோட்டையை முற்றுகையிட்டது. இங்ஙனம் தீப்ஸைத் தூண்டிவிட்டதோடல்லாமல் அதற்கு ஆயுத உதவியும் அனுப்பியது ஆத்தென்ஸ். இதனோடும் சும்மாயிருக்கவில்லை.
மாஸிடோனியாவுக்கு விரோதமாக ஒரு கூட்டு சேரும்படி எல்லாக் கிரேக்க ராஜ்யங்களுக்கும், பாரசீகத்திற்கும் கூட ஒரு கோரிக்கை விடுத்தது. இவ்வளவும் வெறும் வதந்தியை நம்பி!
இல்லீரியா பக்கத்தில் கலக ஒடுக்க வேலையில் ஈடுபட்டிருந்த அலெக்ஸாந்தர், இவையனைத்தையும் கேள்வியுற்று ஆத்திரங் கொண்டான்; உடனே ஒரு படையுடன் 335-ஆம் வருஷம் - தீப்ஸை நோக்கிப் புறப்பட்டான். புறப்பட்ட பதினான்காவது நாள் தீப்ஸின் நகர வாயிலில் வந்து நின்றான். எவ்வளவு வேகமாக வந்திருக்க வேண்டும்? தீபர்கள், இவன் படைக்கு எளிதில் தலை வணங்கிவிட வில்லை. நகரத்தைப் பாதுகாக்கும் முறையில் வீரத்துடன் போரிட் டார்கள். ஆயினும் என்ன? ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டனர்; முப்பதினாயிரம் பேர் சிறைப்பட்டனர்.
கலகக் கொடி தூக்கிய தீப்ஸுக்கு என்ன தண்டனை விதிக்கலாமென்று, அதன் நீண்ட கால விரோதிகளான போசிஸ் வாசிகளையும் ஓர்க்கோமெனஸ் வாசிகளையும் கேட்டான் அலெக் ஸாந்தர். அவர்கள், தீப்ஸைத் தரையோடு தரையாக நாசமாக்கி விட வேண்டு மென்றும், மாஸிடோனியக் காவற்படை தங்கியிருப்ப தற்குக் காட்மீயா கோட்டையை மட்டும் விட்டு வைக்கலா மென்றும், அலெக்ஸாந்தரிடம் விசுவாசமாக நடந்துகொண்ட ஒரு சிலரை விடுத்து, உயிர் தப்பியுள்ள குழந்தைகள், பெண்கள் அடங் கலுமான மற்ற எல்லாத் தீபர்களையும், அடிமைகளாக விற்றுவிட வேண்டு மென்றும் தீர்ப்புக் கூறினார்கள்.
அலெக்ஸாந்தரும் இந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் படிக்கும், ஆனால் பிண்டார் என்ற கவிஞன் வசித்துக் கொண்டிருந்த வீட்டை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட வேண்டுமென்றும உத்தரவு கொடுத்தான். கவிஞர்களை அமரர்களென்று சொல்வார்கள். அவர்கள் மிதித்த மண்ணும் வசித்த வீடும் கூட அமர வாழ்வு பெற்றனவாகி விடுகின்றன!
தீப்ஸை இப்படி அழிக்க உத்தரவிட்டதற்காக, பிற்காலத்தில் அலெக்ஸாந்தர் பெரிதும் வருந்தினதாகச் சொல்லப்படுகிறது. தீப்ஸ் வாசியென்று சொல்லிக் கொண்டு யார் வந்து என்ன கோரினாலும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்து வந்தானென்று கூறுவர்.
தீப்ஸைத் தூண்டிவிட்டது ஆத்தென்ஸேயானாலும் அதன் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளவில்லை அலெக்ஸாந்தர்; ஏன், கருணையுடன் நடந்து கொண்டானென்றே சொல்ல வேண்டும். பிலிப்பும் இப்படித்தானல்லவா? முதலில் மாஸிடோ னியாவுக்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து வந்த கட்சியின் தலைவர்களாகிய டெமாஸ்த்தனீஸ் முதலியவர்களைத் தன் வசம் ஒப்புக்கொடுத்து விடுமாறு கேட்டான் அலெக்ஸாந்தர். ஆனால் பின்னர் இதை வற்புறுத்தவில்லை. ஒரே ஒரு தலைவனை மட்டும் நாடு கடத்திவிடச் செய்து திருப்தியடைந்தான். ஆத்தென்ஸின் நன்மதிப்பைப் பெறவே இவன் தனது கடைசி காலம் வரையில் முயன்று வந்தான். தீப்ஸின் அழிவுக்குப்பிறகு ஆத்தென்ஸும் மற்ற ராஜ்யங்களும் இவனுக்கு எதிர்ப்புக் காட்டுவதை நிறுத்திக் கொண்டன; பழையபடி தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டன. ஸ்ப்பார்ட்டா மட்டும் முந்திய மாதிரி ஒதுங்கியே நின்றது.
3. ஆசியப் படையெடுப்பு
இங்ஙனம் கிரீஸ் பூராவையும் ஒருவிதமாகத் தனது ஆதிக்கத் திற்கு இணங்கியிருக்கும்படி செய்துவிட்டு அலெக்ஸாந்தர், சிறு வயதிலிருந்து தான் கனவு கண்டு வந்த ஆசியப் படையெடுப்பின் மீது கவனஞ்செலுத்தத் தொடங்கினான். தன் வலியையும் மாற்றான் வலியையும் நன்கு அறிந்து கொண்டிருந்தான் இவன். குறைந்த பட்சம் பத்து லட்சம் பேர் கொண்டு படையைப் பாரசீகத்தினால் திரட்ட முடியும் என்பது இவனுக்குத் தெரியும். இவனிடத்திலோ, முப்பதினாயிரம் பேர் கொண்ட காலாட்படையும் ஐயாயிரம் பேர் கொண்ட குதிரைப்படையுமே இருந்தன. தவிர, கிரேக்க ராஜ்யங்கள் பல இவனிடம் விசுவாசம் தெரிவித்துக் கொண்ட போதிலும், ஏறக்குறைய பாதி ராஜ்யங்கள் இவனுடைய மரணத்தையே விரும்பின; எதிர்பார்த்துக் கொண்டுமிருந்தன. இவனுக்கு இது நன்றாகத் தெரிந்தும் இருந்தது. இருந்தாலும் அவன் மனச்சோர்வு கொள்ளவில்லை; துணிவே கொண்டான். உலகம் யாவும் தனது குடை நிழலில் வந்துவிட வேண்டுமென்ற ஆவலொன்றே இவனை ஆட்கொண்டிருந்தது. உலகம் யாவுமென்றால் பாரசீக ஏகாதி பத்திய மென்பதே இவன் நினைப்பு. (அப்பொழுதைய பாரசீக ஏகாதிபத்தியம் வடக்கே ஹெல்லெஸ்ப்பாண்ட் ஜலசந்தியிலிருந்து தெற்கே சிந்து நதி வரையில் மேற்கே எகிப்திலிருந்து கிழக்கே மத்திய ஆசியா வரையில் ஏறக்குறைய ஆசியாவின் பெரும்பகுதியைக் கவிந்து கொண்டிருந்தது. இதனாலேயே அலெக்ஸாந்தரின் பார சீகப் படையெடுப்பு ஆசியப் படையெடுப்பு என்றும் அழைக்கப் படுகிறது.)
தான் இல்லாத காலத்தில் மாஸிடோனியாவைப் பாதுகாத்து வரவும், கிரீஸின்மீது ஒருகண் வைத்துக் கொண்டிருக்கவும் ஆண்ட்டிபேட்டர் என்பவனை நியமித்தது. அவனிடம் பன்னி ரண்டாயிரும் பேர் கொண்ட ஒரு படையை ஒப்புவித்துவிட்டு, அலெக்ஸாந்தர், மேலே சொன்ன படையுடன் - முப்பதினாயிரம் கொண்ட காலாட்படையும் ஐயாயிரம் பேர் கொண்ட குதிரைப் படையும் - 334-ஆம் வருஷம் பாரசீகத்தை நோக்கிப் புறப்பட்டான். இதற்குப் பிறகு இவன் பதினோரு வருஷம் காலம் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் மாஸிடோனி யாவுக்குத் திரும்பவே யில்லை.
அழிப்பதையும் அடிமை கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு படையின் தலைவனாக மட்டும் அலெக்ஸாந்தர் சென்றானென்று சொல்ல முடியாது. அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆவலுடைய அறிஞர் கோஷ்டியொன்றின் தலை வனாகவும் சென்றான். சென்ற இடங்களில், அரசர்களையும் படைத் தலைவர்களையும் சந்திப்பதிலே மட்டும் இவன் திருப்தி காண வில்லை; லௌகிக அறிஞர்களையும் பாரமார்த்திக ஞானி களையும் சந்திப்பதிலும் அவர்களோடு அளவளாவுவதிலும் மகிழ்ச்சி கண்டான். மற்றும் இவன், மாஸிடோனிய அரசனாக மட்டும் செல்லவில்லை; கிரேக்க நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் சென்றான். போன இடங்களில் அந்த நாகரிகத்தைப் பரப்பினான். அதே சமயத்தில் மற்ற நாகரிகங்களின் சிறப்பான அமிசங்களையும் ஏற்றுக் கொண்டான். பாரசீகத்தில் தங்கியிருந்த பொழுது, இவனுடைய நடை, உடை, முதலிய பலவற்றிலும் கிரேக்க நாகரி கமும் பாரசீக நாகரிகமும் கலந்தே காணப்பெற்றன. இன்னும் இவன், வெற்றி கொண்ட பிரதேசங்களில், தன்னுடைய ஆதிக்கத்தை மட்டும் திணித்துவிட்டுத் திரும்பி வர விரும்பவில்லை; ஆங்காங்கு ஒழுங் கான ஆட்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வர விரும்பினான். ஆகவே இவன், ஒரு தளகர்த் தனாகவும், அறிஞர் குழுவின் தலைவனாகவும், அரச தந்திரியாகவும், இறுதியாக மேனாட்டையும் கீழ்நாட்டையும் சந்தி செய்து வைக்கிற தூதனாகவும் சென்றானென்று சொல்ல வேண்டும்.
அலெக்ஸாந்தருடைய சிறிய கடற்படையும், பெரிய தரைப் படையும் இதர விமான படைகளும் சென்றன. அறிஞர்களிலே, விஞ்ஞான சாஸ்திரிகளென்ன, பூகோள சாஸ்திரிகளென்ன, தாவர சாஸ்திரிகளென்ன, இப்படிப் பல வகையினரும் சென்றனர். வெற்றிப் புகழ் பாட கவிஞர்கள், அன்றாட அலுவல்களைக் குறிக்க சரித்திராசிரியர்கள் (இவர்களிலே முக்கியமானவன் காலிஸ்த்தனீஸ் என்பவன். இவன் அரிஸ்ட்டாட்டலின் நெருங்கிய உறவினன். அலெக்ஸாந்தர், பாரசீகத்தில் தங்கியிருந்தபொழுது, தன்னை எல்லோரும் கீழே விழுந்து வணங்க வேண்டுமென்றும் உத்தர விட்டான். இதற்குக் காலிஸ்த்தனீஸ் சம்மதிக்கவில்லை. இதனால் அலெக்ஸாந்தரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டான். கடைசியில் அலெக்ஸாந்தருடைய உயிருக்கு உலை வைக்கும் முயற்சியில் சந்தேகப்பட்டு, அதன் பயனாக சிறிது காலம் சிறை வாசம் செய்தான்; அங்கேயே இறந்துபோனான்). கண்ட காட்சிகளை வரைய ஓவியர்கள், இங்ஙனம் பல துறை வல்லுநரும் சென்றனர். ஒரு சமுதாயமே திரண்டு சென்றது என்று சொல்லலாம். போர்க் கடவுளும் ஞான தேவதையும் சேர்ந்துகொண்டு அலெக் ஸாந்தரைப் பின் தொடர்ந்தனர் என்றும் கூறலாம். அலெக் ஸாந்தரின் போர்முக நடவடிக்கைகளில் கடுமையும் கருணையும் சேர்ந்தே காட்சி யளித்தன.
இப்படிப் பல ஏற்பாடுகளுடன் புறப்பட்ட அலெக்ஸாந்தர், ஹெல்லெஸ்ப்பாண்ட் ஜல சந்தியைக் கடந்து, நேரே ட்ராய் நகரம் சென்றான். அங்கு எழுந்தருளியுள்ள அத்தீனே தேவதைக்குப் பலிகள் கொடுத்தான்; ட்ரோஜன் யுத்தத்து வீரனாகிய அக்கி லெஸின் சமாதிக்கு மலரிட்டுப் பூசை செய்தான்; தனக்கு அந்த அக்கி லெஸைப் போல் வெற்றிகள் கிடைக்க வேண்டுமென்று பிரார்த் தனை செய்து கொண்டான். தான் அக்கிலெஸின் வழித் தோன்றல் என்பது, சிறு வயதிலிருந்தே இவனது திட நம்பிக்கை யாயிருந்து வந்தது. இந்த நம்பிக்கையை இவன் எப்பொழுதும் கைவிட்டவன் அல்லன். வந்தனை வழிபாடுகள் செய்துகொண்டு ட்ராய் நகரத்தை விடுத்து, கிழக்குப் பக்கமாகத் தனது வெற்றி யாத்திரையைத் தொடங்கினான் அலெக்ஸாந்தர்.
அலெக்ஸாந்தர் படையெடுத்து வருவதை முன்னதாகவே தெரிந்துகொண்ட அப்பொழுதைய பாரசீக மன்னன் மூன்றாவது டேரியஸ், (ஆண்டது 336 முதல் 331 வரை) இந்தப் படையை, சின்ன ஆசியாவின் வடக்கெல்லையிலேயே வழிமறித்து புறமுதுகிடச் செய்யத் தீர்மானித்தான். இந்தத் தீர்மானத்திற்கிணங்க, கிரானிக்கஸ் நதிக்கரையில் பாரசீகப் படையொன்று வந்து நின்று கொண் டிருந்தது.
ட்ராய் நகரத்திலிருந்து கிழக்கு நோக்கிய அலெக்ஸாந்தர், 334-ஆம் வருஷம் மே அல்லது ஜூன் மாதம் மேற்படி பாரசீகப் படையைச் சந்தித்தான். கடும் போர் நடைபெற்றது. போர் மும் முரத்தில் ஒரு பாரசீக வீரன் அலெக்ஸாந்தரை எப்படியோ அணுகி அவனது உயிரை முடிக்கத் துணிந்து வாளைத் தூக்கினான். தூக்கிய கையைத் துணிந்து விட்டான் அலெக்ஸாந்தரின் அருகிருந்த கிளீட்டஸ் என்பவன். ‘அலெக்ஸாந்தர் ஒரு தெய்வப் பிறவி, அதனால்தான் தப்பிப் பிழைத்தான்’ என்று சிலர் அப்பொழுது கூறினர். எப்படியோ யுத்தத்தின் இறுதியில் அலெக்ஸாந்தருக்கு வெற்றி கிட்டியது, ஆம்; ஆசியப் படையெடுப்பில் முதல் வெற்றி!
போர்க்களத்தில், தங்கம், வெள்ளி, பித்தளை முதலியவை களினாலாய பல பொருள்களை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள் பாரசீகர்கள். இவைகளின் ஒரு பகுதியைக் கொண்டு, போர்க் களத்தில் எத்தனை கிரேக்க வீரர்கள் மடிந்து போனார்களோ அத்தனை பேருக்கும் பித்தளை உருவச்சிலைகள் தயாரிக்கச் செய் தான் அலெக்ஸாந்தர்; மற்ற வீரர்களுக்கு ஏராளமாகச் சன் மானங்கள் வழங்கினான். ஆத்தீனியர்களுக்கு முந்நூறு கவசங்கள் பரிசாக அளித்தான். ஆத்தீனியர்களிடத்தில் இவனுக்கு எப் பொழுதுமே தனி மதிப்பு இருந்ததல்லவா? தன் தாய்க்கு, தங்கக் கிண்ணங்களென்ன, வெள்ளித் தட்டுகளென்ன, இப்படிப் பல வற்றைக் காணிக்கையாக அனுப்பினான். போர் வெறியில் கூட, பெற்ற தாயை மறக்கவில்லை அலெக்ஸாந்தர்!
கிரானிக்கஸ் போர் முடிந்ததும் அலெக்ஸாந்தர், தெற்கே, வடக்கே, மீண்டும் தெற்கே, இப்படிச் சின்ன ஆசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வெற்றிக் கொடி நாட்டினான். ஆங்காங்கு, மாஸிடோனிய ஆதிக்கத்துக்குட்பட்ட ஜனநாயக அரசாங்கங்களை ஸ்தாபித்துக் கொடுத்தான். பின்னர், இஸ்ஸஸ் (மத்தியதரைக் கடலின் கிழக்குக் கோடியிலுள்ளது.) என்ற கடற்கரைப் பட் டினத்தை யடைந்தான். இங்கு, டேரியஸ் மன்னனே ஆறு லட்சம் பேர் கொண்ட ஒரு பெரும் படையுடன் இவனை எதிர்த்து நிற்கக் காத்துக் கொண்டிருந்தான். 333-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரு படைகளும் சந்தித்தன. பாரசீகர் தோல்வியுற்றனர். டேரியஸ் மன்னன் போர்க்களத்திலிருந்து தப்பியோடி விட்டான்.
பாரசீகர்கள், வழக்கம்போல் ஏராளமான பொருள்களைப் போர்க்களத்தில் விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். விட்டுப்போன பொருள்களில் ஒரு தங்கக் கலசம் அகப்பட்டது. அதனை அலெக் ஸாந்தரிடம் கொண்டுவந்து காட்டினார்கள் கிரேக்க வீரர் சிலர். அதன் அமைப்பையும் அழகையும் பார்த்து மகிழ்ந்த அலெக் ஸாந்தர், ‘இதில் வைக்கத் தகுந்த அரிய பொருள் எது?’ என்று அருகிருந்த தன் நண்பர்களைக் கேட்டான். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகப் பதில் கூறினர். எல்லாவற்றிற்கும் தலை யசைத்து விட்டுக் கடைசியில், ‘இதில் இலியத் காவியம் ஒன்றுதான் வைக்கத் தகுந்தது’ என்று கூறினான் அலெக்ஸாந்தர்.
போர்க்களத்திலிருந்து டேரியஸ் மன்னன் தப்பியோடிவிட்ட பிறகு அவனுடைய தாயாரும், மனைவி மக்களும் கிரேக்கர்களிடம் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் உண்டாகாதவாறு செய்து, அவர்களைக் கண்ணியமாகவும் மிக்க மரியாதையுடனும் நடத்துமாறு செய்தான் அலெக்ஸாந்தர்.
அவர்களை மீட்டுக்கொள்ள ஆலல்கொண்ட டேரியஸ் மன்னன், யூப்ரெட்டீஸ் நதிக்கு மேற்குப் பக்கத்திலுள்ள ஆசியப் பிரதேசம் பூராவையும் அலெக்ஸாந்தருக்குக் கொடுத்து விடு வதாகவும், அது தவிர பதினாயிரம் டாலெண்டுகள் ரொக்கம் கொடுப்பதாகவும், மற்றும் தன் பெண்ணையே விவாகம் செய்து தருவதாகவும் சொல்லியனுப்பினான். இதற்கு அலெக்ஸாந்தர், தனக்கு ராஜ்யமோ பணமோ தேவையில்லை யென்றும், எப்பொழுது டேரியஸ் தோல்வியடைந்து விட்டானோ அப்பொழுதே அவனுடைய ராஜ்யம் முழுவதும் தனக்குச் சொந்த மாகிவிட்ட தென்றும், அவனுடைய மகளை மணஞ் செய்துகொள்வது தனது விருப்பத் தைப் பொறுத்திருக்கிறதென்றும், தன்னிடமிருந்து ஏதேனும் சலுகை பெற விரும்பினால் அவன் நேரே வந்து கேட்கலா மென்றும் பதில் கூறியனுப்பினான்.
இஸ்ஸஸ் போருக்குப் பிறகு அலெக்ஸாந்தர் எகிப்து பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். எகிப்துக்குச் செல்லும் வழியில் டைர் என்பது ஒரு சிறிய தீவு. இங்கு, பாரசீகத்தின் ஆதரவில் ஒரு பொனீஷ்யக் கப்பற்படை தங்கியிருந்தது. இதனை வெற்றி கொள்ள வேண்டியது அவசியமெனக் கருதினான் அலெக்ஸாந்தர். எனவே தீவை முற்றுகையிட்டான். முடிந்தவரையில் எதிர்த்து நின்றனர் டைர் வாசிகள். கடைசியில் 332-ஆம் வருஷம் ஜூலை மாதம் பணிந்துவிட்டனர். எதிர்த்து நின்றனரேயென்றே ஆத்திரம் அலெக்ஸாந்தருக்கு. இதன் விளைவு என்ன? எண்ணாயிரம் கொலை யுண்டனர்; முப்பதினாயிரம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
டைருக்குப் பிறகு ஜெருசலேம். எதிர்ப்புக் காட்டாமல் பணிந்து விட்டது. அடுத்தது காஜா நகரம். பலமாக எதிர்த்து நின்றது. பயனென்ன? ஆண் மக்களெல்லோரும் கொலையுண்டனர். பெண்மக்கள் கற்பிழந்தனர். இங்ஙனம் வீரத்தையும் கற்பையும் அழித்துவிட்ட பிறகு, காஜா நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான் அலெக்ஸாந்தர்.
பின்னர் எகிப்துக்குள் பிரவேசித்தான். பாரசீகத் தளை யிலிருந்து தங்களை விடுவிக்க வந்த வீரன் என்று இவனை வர வேற்றனர் எகிப்தியர். இவனும், அவர்கள் போற்றிவந்த தெய்வங் களுக்கு உரிய முறையில் வந்தனை வழிபாடுகள் செய்து, அவர் களுடைய நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொண்டான். ஆக்கிரமிப் பாளர்கள் அனுசரிக்கிற ஒரு தந்திரம் இது. கடைசியில் அவர் களுடையஅரசனாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். முடிசூட்டு வைபவம் எகிப்திய சம்பிரதாயப்படி நடைபெற்றது. இப்படிச் சுலபமாக எகிப்தின் மீது ஆதிக்கங் கொண்டு விட்டான் அலெக் ஸாந்தர். இவன் பெயரால் நைல் நதியின் ஒரு முகத் துவாரத்தில் புதிய நகரமொன்று 331-ஆம் வருஷம் நிர்மாணஞ் செய்யப்பட்டது. அதுதான் இப்பொழுது பிரபல துறைமுகப் பட்டினமாக விளங்கும் அலெக்ஸாந்திரியா.
எகிப்திலிருந்து திரும்பி ஆசியா பக்கம் வந்து, பாரசீக சாம் ராஜ்யத்தின் தலைநகராகிய ஸூஸா நகரம் நோக்கி சென்றான் அலெக்ஸாந்தர். வழியில் காகமேலா (மோசூல் நகரத்திற்குப் பதி னெட்டு மைல் வட கிழக்கிலுள்ளது) என்ற இடத்தில், இஸ்ஸல் போர்க்களத்திலிருந்து தப்பியோடிய டேரியஸ், மறுபடியும் ஒரு பெரும்படை திரட்டிக் கொண்டு இவனை எதிர்த்தான்.
இங்கே ஒரு சிறிய விஷயம் இரண்டு படைகளும் - அலெக் ஸாந்தரின் படையும் டேரியஸ் படையும் - முறையே முகாம் செய்து கொண்டிருந்தன. இரவு நேரம் அலெக்ஸாந்தரின் தளகர்த்தர்களில் ஒருவன் ‘இரவு நேரத்தில் பாரசீகர்களை விரட்டியடிப்பது மிகவும் சுலபம். ஆகையால் இப்பொழுதே போர்தொடுக்கலாம்’ என்று யோசனை கூறினான். இரவு நேரத்திலா? என்ன கேவலம்? இருட்டு நேரத்தில் திருட்டுத்தனமாக வெற்றி சம்பாதிக்க நான் ஒரு பொழுதும் சம்மதிக்க மாட்டேன்; பகல் நேரத்திலேயே டேரியஸ் மீது போர் தொடுத்து வெற்றி காண்பேன்; நிச்சயம் வெற்றி காண்பேன், என்று பதிலளித்தான் அலெக்ஸாந்தர். வீர வாசகம்!
331-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி, போர் கடுமையாக நடைபெற்றது. டேரியஸ், முந்திப் போலவே போர்க் களத்திலிருந்து தப்பியோடி விட்டான்; பாரசீக படையும் கலவர மடைந்து சென்றது. இப்படிப் பின்னடைந்து சென்ற படையை, அலெக்ஸாந்தர், தென்கிழக்கே அறுபத்திரண்டு மைல் தொலை விலுள்ள அர்பேலா என்ற நகரம் வரை துரத்திச் சென்றான். அர் பேலாவில் இவனுக்குப் பொன்னும் பொருளும் நிறையக் கிடைத்தன.
பாரசீக ஏகாதிபத்தியத்தின் இரண்டு கண்கள் போன்றவை பாபிலோன் நகரமும் ஸூஸா நகரமும். இவ்விரண்டு இடங்களிலும் கடுமையான எதிர்ப்பு இருக்குமென்று எதிர்பார்த்தான் அலெக் ஸாந்தர். ஆனால் இதற்கு நேர்மாறாக இவற்றின் அதிகாரிகள் இவனுக்கு நல்வரவு கூறி, கோட்டைச் சாவிகளை இவன் வசம் ஒப்புக் கொடுத்தார்கள். 331-ஆம் வருஷக் கடைசியில் இந்த இரண்டு நகரங்களும் அலெக்ஸாந்தர் வசமாயின. ஸூஸா நகரத்தில் மட்டும் தற்கால மதிப்பின்படி சுமார் பதினைந்து கோடி ரூபாய் பெறுமான பொருள்களை இவனுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இங்ஙனமே, ஸூஸா நகரத்திற்குத் தெற்கேயுள்ள பெர்ஸிபோலிஸ் என்ற நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான் அலெக்ஸாந்தர். இங்குதான் பாரசீக மன்னனுடைய பொக்கிஷம் இருந்தது. ஸூஸா நகரத்தில் கிடைத்த பொருள்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான பொருள்கள் இங்கு இருந்தன. இவை யாவும் அலெக் ஸாந்தரின் கைக்கு வந்தன.
பெரிஸ்போலிஸ் நகரத்தை யடைவதற்கு முந்தி, இடை வழி யில், மிகவும் கேவல நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான கிரேக்கர் களைக் கண்டான். இவர்கள் பாரசீகர்களால் சிறைப்படுத்தப் பெற்ற வர்கள். இவர்களில் கால் போனவர் சிலர்; கை போனவர் சிலர்; கண் போனவர் சிலர்; இவர்களுடைய பரிதாப நிலையைக் கண்டதும், அலெக்ஸாந்தருக்குக் கண்களில் நீர் பெருகியது. இவர்களனை வருக்கும் ஆறுதல் மொழிகள் கூறினான். கிரீஸுக்குத் திருப்பி யனுப்பி வைப்பதாகவும் அங்கு நிம்மதியான வாழ்க்கையை நடத்த, போதிய ஏற்பாடுகள் செய்து கொடுப்பதாகவும் இவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தான்; கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றவும் செய்தான்.
காகமேலா போர்க்களத்திலிருந்து தப்பிச் சென்ற டேரியஸை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்தான் அலெக்ஸாந்தர். அவனோ, வடக்கே எக்பட்டானா என்ற ஊரைத் தனது தலைமை ஸ்தானமாகக் கொண்டு ஒரு படை திரட்ட முயன்று வந்தான். அலெக்ஸாந்தர், எக்பட்டானாவைத் தன் வசப்படுத்திக் கொண்டான். டேரியஸ், எக்பட்டானாவை விட்டு தாம்கான் என்ற ஊருக்கு ஓடினான். அங்கும் துரத்திச் சென்றான் அலெக்ஸாந்தர். ஆனால் இவன் வருகைக்கு முன்பு டேரியஸ், அவனது தளபதிகளில் ஒருவனாலேயே 330-ஆம் வருஷம் ஜூலை மாதம் குத்திக் கொல்லப் பட்டுவிட்டான். அலெக்ஸாந்தருக்கு முன்னர் தலை வணங்கும் படியான நிலைமை அவனுக்கு ஏற்படவில்லை. அலெக்ஸாந்தரும், அவன் இறந்துபோன பிறகு அவனிருப்பிடத்தையடைந்து, அவனைப் பார்க்க முடிந்தது. தனது மேலங்கியைக் கழற்றி அவன் சடலத்தை மூடினான். சடலத்தை பெர்ஸிபோலிஸுக்கு அனுப்பி அங்கு அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்வித்தான்.
டேரியஸ் மரணத்திற்குப் பிறகு பாரசீக சாம்ராஜ்யம் பூராவும் அலெக்ஸாந்தரின் ஆதிக்கத்திற்குட்பட்டு விட்டதென்றே சொல்ல வேண்டும். ஆனால் இதனொடு திருப்தியடையவில்லை இவன். மேலும் மேலும் வெற்றிகள் காணவே விழைந்தான். இந்த விழைவு ஒரு வெறி மாதிரியாகவே ஆகிவிட்டது இவனுக்கு. இதற்குத் தகுந்தாற்போல் இவனுடைய சுபாவமும் மாறிவந்தது.
எக்பட்டானாவை விட்ட அலெக்ஸாந்தர், தற்போதைய துருக்கிஸ்தானம் என்ன, ஆப்கானிஸ்தானம் என்ன, இப்படி ஒன்றன் பின்னொன்றாகப் பல பிரதேசங்களை வெற்றி கொண்டு வந்தான். 328-ஆம் வருஷம் ஸாமர்க்கண்ட் என்ற ஊரில் முகாம் செய்திருந்த போது இவன் ஒரு விருந்து நடத்தினான். அப்பொழுது இவன் உள்பட எல்லோரும் நன்றாகக் குடித்து விட்டிருந்தனர். இவனுடைய வெற்றிகளைக் குறித்துப் பலர் புகழ்ந்து பேசினர். அனால் கிளீட்டஸ் என்பவன், கிரானிக்கஸ் யுத்தத்தில் இவனைக் காப்பாற்றியவன் - எழுந்து அலெக்ஸாந்தருக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தவர்கள் மாஸிடோனியர்களே யென்றும், தானே அவனுடைய உயிரைக் காப்பாற்றிக் கொடுத்திருப்பதாகவும், ஆதலின் அவன் - அலெக் ஸாந்தர் தன்முனைப்புக் கொள்ள வேண்டா மென்றும் இப்படிச் சுடசுடச் சொல்லத் தொடங்கினான். குடி வெறியிலிருந்த அலெக் ஸாந்தர், இதைக் கேட்டு ஆத்திரங் கொண்டான். கூட இருந்தவர் கள், கிளிட்டஸை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆனால் அவன், அவர்களை மீறிக் கொண்டு வந்து பழையபடி அலெக்ஸாந்தர் மீது சொல்லம்புகள் தொடுத்தான். அலெக்ஸாந்தர் இனியும் பொறுப் பானா? சமீபத்திலிருந்த ஈட்டியொன்றை எடுத்து அவன் மீது வீசியெறிந்தான். அவனும் உடனே உயிரிழந்தான்.
கிளீட்டஸ் இறந்துபோனானென்று தெரிந்ததும் அலெக்ஸாந் தருக்குச் சுயநினைவு வந்தது. தன் செயலுக்குப் பெரிதும் வருந் தினான். மூன்று நாட்கள் அன்ன ஆகாரமில்லாமல் தன் அறை யிலேயே அடைபட்டுக் கிடந்தான். தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றான். ஆனால் இது பலிக்கவில்லை. இப்படியே வெற்றிப் பித்தம் அதிகரிக்க அதிகரிக்க, இவன், தன் நெருங்கிய நண்பர்கள் சிலரை ஒருவர் பின்னொருவராக இழந்து வந்தான்; தன் ஆசான் அரிஸ்ட்டாட்டலின் நட்பைக்கூட இழந்து விட்டானென்றால் அதிகம் சொல்லத் தேவையில்லை.
அலெக்ஸாந்தர், ஆப்கனிஸ்தானத்தில் தங்கியிருந்தபொழுது, இந்தியா மீது படையெடுக்கத் திட்டம் போட்டான். இதற்குத் தகுந்தாற்போல், அப்பொழுது பஞ்ச நதிகள் (ஜீலம், சீனாப், ரவி, பீயாஸ், ஸட்லெஜ் ஆகிய இவையே ஐந்து நதிகள்) பாயும் பிரதேசத் திலுள்ள சிற்றரசர்கள் பரஸ்பரம் பூசலிட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களுள் ஒருவனான அம்பி என்பவன் - சிந்து நதிக்கும் ஜீலம் நதிக்கும் மத்தியிலுள்ள தட்ச சீல ராஜ்யத்தின் அரசன் - ஆப்கனிஸ் தானம் போந்து, அலெக்ஸாந்தரின் ஆதிக்கத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இந்தியா மீது படையெடுத்து வந்தால் மற்ற அரசர்களும் பணிந்து விடுவார்களென்றும் கூறி இவனை அழைத் தானாம். இந்த அம்பி அரசனுக்கும், ஜீலம் நதிக்கும் சீனாப் நதிக்கும் இடைப்பட்ட நாட்டின் அரசனாகிய போரஸ் என்பவனுக்கும் பகைமை இருந்து வந்ததாகவும், போரஸை வீழ்த்தவே, அம்பி அலெக்ஸாந்தரின் உதவியை நாடியதாகவும் சொல்லப்படுகின்றன. எப்படியோ அலெக்ஸாந்தர், 327-ஆம் வருஷம் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் பிரவேசித்தான். அம்பி அரசனைப் பின் பற்றி மற்றச் சிற்றரசர் பலரும் இவனுக்கு அடிபணிந்தனர்; இவனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் போரஸ் மன்னன் மட்டும் தலைகுனிய மறுத்துவிட்டான். இது காரணமாக, அலெக்ஸாந்தருக்கும் போரஸுக்கும் 326-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஜீலம் நதிக்கரையில் பெரும்போர் நடைபெற்றது. இந்தப் போரில் போரஸ் காட்டிய வீரம் கவிஞர்களின் வருணனைக்குரியது. அவனுடைய யானைப்படை கிரேக்கர்களைத் திகைக்கச் செய்து விட்டது. ஆயினும் என்ன? இறுதியில் அலெக்ஸாந்தருக்கே வெற்றி கிடைத்தது. போரஸ் மன்னன் பல காயங்களுடன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து கிடந்த நிலையில் கிரேக்கர்களால் சிறைப்படுத்தப் பெற்றான். சிறைப்பட்ட அவனை அலெக்ஸாந்தர் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினர் படைவீரர். அவனுடைய வீரத்தைப் பாரட்டினான் அலெக்ஸாந்தர். பின்னர் ‘உன்னை எப்படி நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்? என்று கேட்டான், ‘அரசனைப் போல் நடத்து’ என்றான் போரஸ் மிடுக்காக. ‘என்னுடைய நன்மையை முன்னிட்டேனும் நானும் அப்படித்தான் செய்வேன். ஆனால் உன் பொருட்டு ஏதேனும் ஒரு வரம் கேள்’ என்றான் அலக்ஸாந்தர் மீண்டும், ‘அரசனாக நடத்து’ என்று சொன்னனே அதிலேயே எல்லாம் அடங்கியிருக்கின்றனவே என்றான் போரஸ்.
அலெக்ஸாந்தர், போரஸை மிகவும் கண்ணியமாக நடத் தினான். அவனுடைய ராஜ்யத்தை அவனுக்குத் திருப்பிக் கொடுத்த தோடு, இன்னும் சில பிரதேசங்களையும் அதனோடு சேர்த்துக் கொள்ளுமாறு செய்தான். ஆனால் அதே சமயத்தில், தன்னுடைய ஆதிக்கத்திற்குட்பட்டிருக்குமாறும் செய்து கொண்டான். தன்னுடைய ஆதிக்கத்திற்கறிகுறியாக, போரஸுடன் போர் நடத்திய இடத்திற்குச் சமீபத்தில், ஜீலம் நதியின் இரு கரையிலும் இரண்டு நகரங்களை நிர்மாணம் செய்வித்தான். ஒன்று பூஸேபாலா; மற்றொன்று நிஸியா.போரஸை வெற்றி கொண்டபிறகு அலெக்ஸாந்தர், கிழக்குப் பக்கமாகச் சென்று பீயாஸ் நதியையடைந்தான். கங்கை நதி பாயும் சமவெளிப் பிரதேசத்தை அடிமைப்படுத்த வேண்டுமென்பது இவன் உத்தேசம். இந்த உத்தேசத்துடன், சீனாப், ரவி ஆகிய ஆறுகளைக் கடந்து, பீயாஸ் நதிக்கரையையடைந்தான். அடைந்து, இந்த நதியைக் கடக்க முற்பட்டதும் இவனுடைய படை வீரர்கள் மேற்கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்; ஊர் திரும்ப ஆவல் கொண்டனர். எனவே அலெக்ஸாந்தர், வேறு வழியின்றி தனது வெற்றி யாத்திரையை முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பீயாஸ் நதிக்கரையில், தனது யாத்திரையின் எல்லையைக் குறிப்ப தற்கான அடையாளங்களை ஏற்படுத்திவிட்டு ஊர் திரும்பினான்.
திரும்பி ஜீலம் நதி வழியாகச் சிந்து நதிக்கு வந்து பிறகு அதன்மூலமாக அரபிக் கடலையடைந்தான். வழியில் இவனுக்குப் பல எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. அனைத்தையும் மிக்க தைரியத் துடன் அடக்கினான்; ஆங்காங்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி னான். சிந்து நதியின் முகத்துவாரத்தை 325-ஆம் வருஷம் அடைந்தும், தனது படைகளை மூன்று பகுதிகளாப் பிரித்து, ஒன்றை, நியார்க்கஸ் என்பவன் தலைமையில் பாரசீக வளை குடாவுக்கு அனுப்பினான்; மற்றொன்றை ஆப்கனிஸ்தானத்தின் தென்பகுதியில் தோன்றிய கலகத்தை அடக்குவதற்காகச் செல்லு மாறு ஏற்பாடு செய்தான்; தான் இன்னொரு பகுதிக்குத் தலைமை பூண்டு பலுசிஸ்தானம் மூலமாகப் பாரசீகம் நோக்கினான். வழியில் இவன் ஒரு கொடிய பாலை வனத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கு இவனுக்கு ஏற்பட்ட கஷ்டநஷ்டங்கள் சொல்லுந்தரமல்ல. அனைத்தையும் சமாளித்துக் கொண்டு கடைசியில் 324-ஆம் வருஷம் ஸூஸா நகரம் போய்ச் சேர்ந்தான். அங்குப் போய்ச் சேர் வதற்கு முந்தியே, மற்ற இரு பகுதிப் படைகளும் இவனுடன் வந்து கலந்து கொண்டுவிட்டன.
ஸூஸா நகரம் போந்ததும், அலெக்ஸாந்தர், தான் இல்லாத காலத்தில் தனது பிரதிநிதிகளிற் சிலர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை யறிந்து, அவர்களுக்கு உரிய தண்டனையை விதித்தான். பின்னர், தனது ராணுவத்தைச் சீர்திருத்தியமைத்தான். கிரேக்க ரல்லாதார் பலரையும் இந்த ராணுவத்தில் சேர்த்துக் கொண்டான். இது மாஸிடோனியப் படைவீரர்களுக்குப் பிடிக்க வில்லை. தவிர, இவர்களிற் பலர் தாய்நாடு செல்ல ஆவல் கொண்ட னர். எல்லாம் சேர்ந்து, எக்பட்டானா ஊருக்கருகில் ஒரு கலகமாக வெடித்தது. அலெக்ஸாந்தர் அங்குச் சென்று இதனை வெகு சமார்த்தியமாக அடக்கினான். கலகம் செய்தவர்கள் இவனிடம் விசுவாசம் தெரிவித்துக் கொண்டனர். இதனால் தனக்குப் படை பலம் அதிகமாயிருக்கிற தென்று எண்ணிக்கொண்டு, அரேபியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய எல்லா நாடுகளையும் தனது குடை நிழலில் கொண்டு வர வேண்டுமென்று ஆசை கொண்டான் அலெக்ஸாந்தர். இதற்கான முஸ்தீப்புகளையும் செய்யத் தொடங்கினான்.
இதற்கிடையில், இவனுடையை நெருங்கிய நண்பனும் சிறந்த தளகர்த்தனுமான ஹெபீஸ்ட்டியோன் என்பவன் நோயாயிருந்து இறந்துவிட்டான். ஐயோ, அளப்பரிய துக்கம் இவனை ஆட் கொண்டது. அலெக்ஸாந்தரின் ஒரு பகுதி ஹெபீட்டியோன் என்று சொல்வதுண்டு. இருவரும், பாசறையிலாகட்டும், போர்க்களத்திலா கட்டும், ஒன்றாகவே இருந்தார்கள்; உண்பதும் உறங்குவதும் கூட ஒன்றாகத்தான். ஹெபீஸ்ட்டியோன் இறந்து விட்டானென்றதும், பாதி அலெக்ஸாந்தரும் இறந்து விட்டானென்றே சொல்ல வேண்டும். அவனுடைய சவத்தின் மீது புரண்டு புரண்டு அழுதான். தலைமயிரை வெட்டிக் கொண்டான்; நாட்கணக்கில் உணவு கொள்ளவில்லை. ஹெபீஸ்ட்டியோனுக்குச் சிகிச்சை செய்துவந்த வைத்தியனை சரியானபடி கவனிக்கவில்லையென்று சொல்லி, சிரத் சேதம் செய்துவிடுமாறு உத்தரவிட்டான். கடைசியில் ஹெபீஸ்ட் டியோ னுடைய சவத்தை பாபிலோனில் ஏராளமான பொருட்கள் செலவில் அடக்கம் செய்வித்தான்.
ஹெபீஸ்ட்டியோனின் மரணம், சென்ற பத்து வருஷ கால மாக இடைவிடாமல் போர் செய்து வந்தது, எல்லாம் சேர்ந்து அலெக்ஸாந்தரின் உடலையும் உள்ளத்தையும் பெரிதும் பாதித்து விட்டன. வரவர குடிப்பழக்கமும் அதிகமாகிவந்தது. இந்த நிலை மையில் அரேபியா முதலிய நாடுகளின் மீது படையெடுப்பதன் சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க பாபிலோனுக்குச் சென்றான். சென்ற இடத்தில் குடிமிகுதியில் நல்ல ஜுரம் வந்து விட்டது. பத்து நாள் அவஸ்தைப் பட்டான். கடைசியில் பதினோ ராவது நாள், 323-ஆம் வருஷம் ஜூன் மாதம் பதின்மூன்றாந் தேதி, முப்பத்து மூன்றாவது வயதில் இறந்து போனான்.
4. சாதித்த காரியங்கள்
அலெக்ஸாந்தர், ஆளும் உரிமை பெற்ற பிறகு வாழ்ந்திருந்த தெல்லாம் பன்னிரண்டு வருஷ காலந்தான். இந்தச் சொற்ப காலத்திற்குள் அவன் மகத்தான காரியங்களைச் சாதித்துவிட்டான். ஆசியாவின் பெரும் பகுதியை ஆட்படுத்தியதொன்று போதாதா? பிற்காலத்தில் அவனை மகாஅலெக்ஸாந்தர் என அழைத்தன ரென்றால் அதில் வியப்பொன்றுமில்லை.
அலெக்ஸாந்தரையோ, அவன் சாதித்த காரியங்களையோ யார் எப்படி வேண்டுமானாலும் அலசிப்பார்க்கலாம். ஆனால் கால வெள்ளத்திலே, அவனை அமிழ்த்திவிடவோ அவன் செயல்களைக் கரைத்துவிடவோ யாராலும் முடியாது. உலக சரித்திரத்தை எழுத முற்படும் எந்த ஓர் ஆசியரியனுக்கேனும், அலெக்ஸாந்தரை மறைத்து விட்டு எழுதக்கூடிய துணிச்சல் உண்டாகுமா? காலத்தின் மீது கோடிட்டவர்களில் ஒருவனல்லனோ அவன்?
அலெக்ஸாந்தர், பெரிய எண்ணங்களையே எண்ணினான்; பெரிய திட்டங்களையே வகுத்தான்; பெரிய காரியங்களைச் சாதிக்கவே துணிவு கொண்டான். அவன், சிறியதை அறியான்; சிறுமையையும் அறியான், பகை யரசர்களை அவன் பெருந் தன்மையுடன் நடத்தியதன் ரகசியம் இதுதான். துண்டு துண்டு ராஜ்யங்களடங்கிய கிரீஸுக்குப் பதில், உலகனைத்தையும் ஆட் படுத்திக் கொண்டிருக்கிற கிரேக்க ஏகாதிபத்தியத்தை அவன் காண விழைந்ததன் காரணமும் இதுதான். அவன் சென்ற வழிகள் சில சமயங்களில் சரியில்லையென்றாலும், பொதுவாக அவன் கொண்ட குறிக்கோள் உலக நோக்குடையதாக இருந்தது. அவன், கிரீஸின் ஒற்றுமையை நாடினான்; அது போலவே சர்வதேச ஒற்றுமையையும் நாடினான். ஆனால் எல்லாம் தன்னுடைய ஆதிக்கத்துக்குட் பட்டிருக்க வேண்டுமென்ற ஒரு கட்டுப்பாட்டை யும் விதித்தான். இதனால்தான் அவன் இறந்தவுடனேயே அவன் கண்ட ஏகாதி பத்தியம் உடைந்து போய்விட்டது. இறந்து போகுந் தறுவாயில் அவனை ‘உங்களுக்குப் பிறகு ஏகாதிபத்தியம் யாருக்கு?’ என்று அருகிருந்தவர்கள் கேட்டார்கள். ‘பலசாலிக்கு’ என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மூச்சை விட்டு விட்டான். அவனுக்குப் பிறகு ஆதிக்கம் பெற்றவர்கள் அனைவரும் ஏறக் குறைய ஒரே மாதிரியான செல்வாக்குடையவர்கள். இவர்களில் ஒவ் வொரு வரும் தங்களுக்கே பரிபூரண ஆதிக்கம் இருக்க வேண்டு மென்று விழைந்தார்கள். போட்டிகளும் பூசல்களும் ஏற்பட்டன. ஏகாதி பத்தியம் உடைந்து போய்விட்டது.
அலெக்ஸாந்தர் நடத்திய போர்கள். ஆனால் ஒரு போரி லாவது அவன், சத்துருக்களுக்குத் தன் முதுகைக் காட்டியதே யில்லை. அவன் அழித்த நகரங்கள் பல; ஆக்கிய நகரங்களும் பல. சுமார் எழுபது நகரங்கள் அவனால் நிர்மாணஞ் செய்யப்பட்டன என்று ஒரு கணக்கு கூறுகிறது. இப்படிப் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட நகரங்களில் பதினெட்டு நகரங்கள், அவனுடைய பெயரை, அதாவது அலெக்ஸாந்திரியா என்ற பெயரைத் தாங்கி நின்றன. (இவற்றில் ஓரிரண்டைத் தவிர மற்றவை இப்பொழுது உருமாறிப் பெயரும் மாறிவிட்டன.)
கிரேக்கர்களைத் தவிர்த்த மற்றவர் அனைவரும் அநாகரிகர், அடிமைகளாயிருப்பதற்கே தகுதியுடையவர் என்கிற மாதிரி, அரிஸ்ட்டாட்டில் கருதியும் கூறியும் வந்தான். பொதுவாகத் கிரேக்கர்களெல்லோருக்குமே இந்த அபிப்பிராயம் இருந்து வந்தது. ஆனால் இந்த அபிப்பிராயம் தவறு என்பதை, அலெக்ஸாந்தர், ஆசியப் படையெடுப்பின்போது நன்கு அறிந்துகொண்டான். தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட பலரும் நாகரிகச் சிறப்புடையவர் களாயிருப்பதையும், கிரேக்கர்களைக் காட்டிலும் திறம்பட ஆட்சி நடத்துவதையும் பார்த்து வியப்புற்றான். இவர்களிடமிருந்து கிரேக்கர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக் கின்றன என்பதையும் உணர்ந்தான். இத்தகையவர்களைத் தன் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும்படி செய்வது எப்படி? அதிகார பலத்தை மட்டுமா, அரசியல் செல்வாக்கை மட்டுமா உபயோகித்து ஆதிக்கத்தைத் திணிக்கலாம். ஆனால் இந்த ஆதிக்கம் நிலைத் திராது. அலெக்ஸாந்தருக்கோ, தன்னுடைய ஆதிக்கம், தன் வழிவந்த கிரேக்கர்களுடைய ஆதிக்கம், நீடித்து நிலைபெற்றிருக்க வேண்டு மென்று ஆசை. இதற்காகத் துணிந்து சில புதிய முறைகளைக் கையாண்டான்.
முதலாவது, தன்னால் வெற்றிக்கொள்ளப்பட்டவர்கள், தன்னை அந்நியனாகக் கருதாதபடி தான் நடந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். அப்படியே தானும் அவர்களை எல்லாவிதங் களிலும் கிரேக்கர்களுக்குச் சமதையாக, கிரேக்கர் களைப் போலவே நடத்த உறுதிக்கொண்டான். சுருக்கமாக, கிரேக்கர் - கிரேக் கரல்லாதார் வேற்றுமையை நீக்க வேண்டும், இருவரையும் ஒற்றுமைப் படுத்தி வைக்க வேண்டும், இந்த ஒற்றுமையின் மீது தன் ஆதிக்க முத்திரையை இடவேண்டும் என்பதே அவன் நோக்கமாயிருந்தது.
இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக அலெக்ஸாந்தர், பார சீகத்தில் தங்கியிருந்தபோது, பாரசீகப் பெருமக்களைப் போலவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். பாரசீக சம்பிரதாயப் படி அரசவையில் ஆடம்பரமாகக் கொலுவீற்றிருந்து ‘தர்பார்’ நடத்தினான். கிரேக்கரிற் சிலருக்கு இது பிடிக்கவில்லை. விரோதங் காட்டினர். ஆனால் அலெக்ஸாந்தர் அவர்களை அடக்கி விட்டான்.
இன்னும், மணவினையின் மூலம், கிரேக்கர் - கிரேக்கரல்லா தார் ஒற்றுமையை உண்டு பண்ண முனைந்தான் அலெக்ஸாந்தர். இதற்குத் தானே வழி காட்ட முன்வந்தான். ஏற்கனவே அவன் இந்தியா நோக்கிப் படையெடுத்துச் சென்ற வழியில் பாக்ட்ரியா தேசத்து அரசிளங்குமரியான ரோக்ஸானா என்பவளை 327-ஆம் வருஷம் விவகாம் செய்து கொண்டிருந்தான். இந்தியாவிலிருந்து திரும்பி வந்தபிறகு, ஸூஸா நகரத்தில் பாரசீகத்து அரசிளங் குமரிகளில் இருவரை 324-ஆம் வருஷம் மணந்து கொண்டான். அவனைப் பின்பற்றிப் படைத் தலைவர்களும் போர் வீரர்களும், பாரசீகப் பெண்களையும் இதர இனப் பெண்களையும் விவாகஞ் செய்து கொண்டனர். இப்படி விவாகம் செய்துகொண்ட படைத் தலைவர்களுக்கு ஒரு தொகையைச் சன்மானமாகக் கொடுத்தான்; போர்வீரர்களுக்கு, அவர்கள் பட்டிருந்த கடனைத் தீர்த்தான். கலப்பு மணத்துக்கு மேலும் மேலும் உற்சாகமளிக்க வேண்டுமென்பதே அவன் விருப்பமாயிருந்தது.
தவிர, அலெக்ஸாந்தர், தன்னுடைய ராணுவத்தில் கிரேக்க ரல்லாதார் பலரைப் பதிவு கொள்ளச் செய்தான்; அவர்களுக்குக் கிரேக்க முறையில் பயிற்சி யளித்துச் சிறந்த போர் வீரர்களாக் கினான். அவர்களை எல்லாவிதங்களிலும் கிரேக்கப் போர்வீரர் களுக்குச் சமதையாக நடத்தினான். இதன்மூலம் அவனுடைய ராணுவம், கிரேக்கர் - கிரேக்கரல்லாதார் அடங்கிய ஒரு கலப்பு ராணுவமாக அமைந்தது. ஆனால் அவனைப் பின்தொடர்ந்து வந்த மாஸிடோனியர்களுக்கு இது பிடிக்கவில்லை; இதனால்தான் எக்பட் டானாவுக்கருகில் ஒன்றுகூடிக் கலகஞ் செய்தனர். அதனை அலெக் ஸாந்தர் அடக்கிவிட்டானென்பதை ஏற்கனவே சொல்லி யிருக்கிறோ மல்லவா?
மற்றும், அலெக்ஸாந்தர், தான் படையெடுத்துச் சென்ற ஆசிய நாடுகளிலிருந்து பலரை கிரீஸுக்கு அனுப்பி, அங்கு அவர்கள் நிரந்தர வாசம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தான். அப்படியே, தான் வெற்றிகொண்ட நாடுகளில் கிரேக்கர் பலரைக் குடிபுகச் செய்தான். இப்படிச் செய்ததன் விளைவாக கிரேக்க கலாச்சாரங்கள் ஆசியாவில் புக ஆரம்பித்தன; ஆசிய நாகரிகம் கிரீஸில் பரவத் தொடங்கியது; ஐரோப்பாவும் ஆசியாவும் ஒன்றை யொன்று அறிந்துகொள்ள ஏதுவுண்டாயிற்று; வியாபாரப் போக்கு வரவு என்ன; கலை பரிவர்த்தனை என்ன, இப்படியெல்லாம் நடைபெறச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
அலெக்ஸாந்தர், தனது போராட்டமயமான வாழ்க்கையில், அவ்வப்பொழுது சிறிது சாந்தியைக் கண்டான். அவனுடைய வீரம், ஓரளவு ஈரங்கலந்த வீரமாகவே இருந்தது. தான் அடைந்த, அடையப்போகிற வெற்றிகளைப் பற்றிச் சிந்திக்கிறபோது, இடையிடையே ஹோமரைப் பற்றியும் சிந்தித்தான். பொதுவாகப் பெண்ணுலகத்திற்கு மரியாதை காட்டினான். இவைகளுக்கெல்லாம் காரணமாயிருந்தது எது? அரிஸ்ட்டாட்டலிடமிருந்து அவன் பெற்ற பயிற்சி யென்றே செல்ல வேண்டும்.
5. அரிஸ்ட்டாட்டல்
அரிஸ்ட்டாட்டல், திரேஸ் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஸ்ட்டாகிரா என்னும் ஊரில் 384-ஆம் வருஷம் பிறந்தான். இவனுடைய தகப்பன் மாஸிடோனிய மன்னனாகிய இரண்டாவது அமிண்ட்டாஸின் (ஆண்டது 393 முதல் 369 வரை) சமஸ்தான வைத்தியனாயிருந்தான். தன் மகனுக்குச் சிறு வயதிலேயே, உடற்கூறுகளைப் பற்றிய அறிவைப் புகட்டினான். அரிஸ்ட்டாட் டலுக்கும் இளமைலியிருந்தே, எதையும் நுணுகி ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்ற ஆவலும், அந்த ஆவலைப் பூர்த்தி செய்யக்கூடிய பொறுமையும் இருந்தன.
அப்பொழுது ஆத்தென்ஸில் பிளேட்டோவின் தலைமையில் நடைபெற்று வந்த கழகத்திற்கு நல்ல பெயர் இருந்து வந்தது. இந்தக் கழகத்திற்கு, அரிஸ்ட்டாட்டல், பதினேழாவது வயதில் அனுப்பப் பெற்றான். சுமார் இருபது வருஷ காலம் அங்குப் பயின்றான்; ஆராய்ச்சிகள் பல நடத்தினான். பயின்று வந்த காலத்தில், பயின்று வந்த அத்தனை பேருள்ளும் இவன் ஒருவன், பிளேட்டோ அவ்வப் பொழுது செய்து வந்த போதனைகளை இடைவிடாமல் கவனித்து மனத்தில் வாங்கிக் கொண்டான். இதனால் பிளேட்டோவின் விசேஷ அன்பைப் பெற்றான்.
பிளேட்டோ, 347-ஆம் வருஷம் விண்ணுலகெய்தினான். இதற்குப் பிறகு அரிஸ்ட்டாட்டல் கழகத்தினின்று விலகிக் கொண்டான். விலகி தன்னோடு கழகத்தில் பயின்று வந்த ஹெர்மையாஸ் என்ப வனிடன் போய்ச் சேர்ந்தான். இந்த ஹெர்மை யாஸ், அடிமையா யிருந்தவன்; தனது சொந்த முயற்சியினால் சின்ன ஆசியாவின் வடபாகத்திலுள்ள அட்டார்னேயஸ் என்ற பிரதே சத்திற்குச் சர்வாதிகாரியாகி அதனை ஆண்டுவந்தான். அவனிடம் சென்று அவனுடைய ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்றான் அரிஸ்ட் டாட்டல். அவனும் இவனிடம் விசுவாசம் வைத்து தன் மகளை இவனுக்கு விவாகஞ் செய்து கொடுத்தான். அவள் பெயர் பித்தியாஸ்.
அரிஸ்ட்டாட்டல், ஹெர்மையாஸின் பராமரிப்பில், அஸ்ஸல் என்ற ஊரில், பிளேட்டோவின் கழகம் மாதிரி ஒரு சிறு பயிற்சிச் சாலையை ஸ்தாபித்து அதன் மூலம் பிளேட்டோவின் போத னைகளைப் பரப்ப முயன்று வந்தான். இத்தருணத்தில், ஹெர்மை யாஸ், பாரசீகர் சிலரால் கொலை செய்யப்பட்டு விட்டான். அவனுடைய ஆதரவு போய்விட்டது அரிஸ்ட்டாட்டலுக்கு. எனவே அருகிருந்த லெஸ்போஸ் தீவுக்குச் சென்று அங்குச் சிறிது காலம் வசித்தான். அப்பொழுது கடல்வாழ் பிராணிகளைப் பற்றிப் பலமுக ஆராய்ச்சிகள் செய்துவந்தான். இந்த ஆராய்ச்சிகளுக்கு மத்தியில் இவனே துக்கக் கடலில் முழுகும் படியாற்று. இவன் மனைவி ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டு இறந்து போனாள். இதனால் அதிக சோகத்தையடைந்தான். தான் இறந்துபோன பிறகு, தன்னுடைய எலும்புகளை அவள் பக்கத்தில் அடக்கம் செய்து விடு மாறு தன் நண்பர்களைக் கேட்டுக் கொண்டானென்று சொன்னால் அவளி டத்தில் இவன் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்க வேண்டு மென்பது ஒருவாறு புலனாகும்.
லெஸ்போஸ் தீவிலிருக்கையில் இவனை, பிலிப் மன்னன், மாஸிடோனியாவுக்கு வருமாறு அழைத்தான். அப்படியே இவன் 342-ஆம் வருஷம் பெல்லா நகரம் போந்து அலெக்ஸாந்தரின் ஆசிரியனாயமர்ந்து சுமார் ஆறு வருஷ காலம், அவனுக்குப் பலவித பயிற்சிகள் அளித்து வந்தான். இந்த ஆறுவருஷ காலத்தில், முதல் நான்கு வருஷங்கள் தொடர்ந்தாற் போலவும், பிந்தி இரண்டு வருஷங்கள் ஏக தேசமாகவும் பயிற்சி அளித்து வந்தானென்று தெரிகிறது. எப்படியோ அரிஸ்ட்டாட்டலுக்கும் அலெக்ஸாந்த ருக்கும் ஆறு ஆண்டுகள் ஆசான் - மாணாக்கன் உறவு இருந்து வந்தது.
அரிஸ்ட்டாட்டலுக்கு எப்பொழுதுமே ஆத்தென்ஸிடத்தில் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அங்குச் சென்று தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டுமென்ற ஆவல் இவனுக்கு இருந்து வந்தது. எனவே, அலெக்ஸாந்தர் அரச பதவியில் அமர்ந்த அடுத்த வருஷம் -335-ஆம் வருஷம் - ஆத்தென்ஸ் போந்து அங்கு, பிளாட்டோவின் கழகம் மாதிரி ஒரு கழகத்தை ஸ்தாபித்து நடத்தி வந்தான். இதற்கு ‘லைஸீயம்’ என்று பெயர். இங்குக் காலை வேளைகளில், ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டிருக்கிற குறிப்பிட்ட சில மாணாக்கர் களுக்கு வகுப்புக்கள் நடத்தி வந்தான்; மாலை நேரங்களில் அறம், அரசியல் முதலியவை பற்றி, எல்லோரும் வந்து கேட்டுக் கிரகிக்கக் கூடிய மாதிரி சொற் பொழிவுகளை நிகழ்த்தி வந்தான். கழகத்தில் சிறந்த புத்ககசாலையும் பொருட்காட்சி சாலையும், மிருகக்காட்சி சாலையும் கூட இருந்தனவென்று தெரிகிறது.
பொருள் வசதி அதிகமில்லாத, ஆனால் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டுமென்னும் ஆவலுடைய இளைஞர் பலர் இந்தக் கழகத்தில் சேர்ந்து பயின்று வந்தனர். அரிஸ்ட்டாட்டலும் அப்படிப் பட்டவர்களை அதிக அன்புடன் நடத்தினான். கழத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வந்தது.
ஆத்தென்ஸில், அலெக்ஸாந்தருக்கு விரோதமான ஒரு கட்சி இருந்த தென்பது வாசகர்களுக்குத் தெரியும். அரிஸ்ட்டாட்டலோ, அலெக்ஸாந்தரை ஆதரித்து வந்தான். இதனால் இவனுக்கு, கழக ஆரம்பத்திலிருந்தே ஒருவித எதிர்ப்பு இருந்துவந்தது. தவிர, அலெக்ஸாந்தரின் பிரதிநிதியாக இருந்து கிரீஸை ஆண்டு வந்த ஆண்ட்டிபேட்டரும் அரிஸ்ட்டாட்டலும் நெருங்கிய நண்பர்கள். தான் இறந்தபிறகு, தன் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய காரியஸ்தனாக ஆண்ட்டிபேட்டரையே நியமித்திருந்தான் அரிஸ்ட்டாட்டல்.
அலெக்ஸாந்தர் இறந்துபோனதும், அவனுடைய ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட முனைந்தது ஆத்தென்ஸ்; ஆண்ட்டி பேட்டர் மீது யுத்தமும் தொடுத்தது. இனி ஆத்தென்ஸில் வசிப்பது ஆபத் தென்று உணர்ந்தான் அரிஸ்ட்டாட்டல். எனவே, யூபியா, தீவிலுள்ள கால்ஸில் என்ற ஊருக்கு ஓடிவிட்டான். அங்குச் சென்ற சிறிது காலத்திற்குள் 322-ஆம் வருஷம், அதாவது அலெக்ஸாந்தர் இறந்த அடுத்த வருஷம் - இறந்து போனான்.
அரிஸ்ட்டாட்டல் இயற்றிய நூல்களில் ஒரு சிலவே, காலத்தைக் கடந்து வந்து இப்பொழுது அறிஞர்களுக்கு விருந் தளித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் அரசநீதி என்ற நூல் இங்குக் குறிப்பிடத்தக்கது. இதில் அரிஸ்ட்டாட்டல், பலவித ஆட்சி முறை களைப் பற்றியும், பல ராஜ்யங்களில் நடைபெற்று வந்த ஆட்சி முறைகளைப் பற்றியும் அலசி ஆராய்ந்திருக்கிறான். இப்படி ஆராய்கிறபோது, தன் ஆசிரியனான பிளேட்டோவின் கருத்துக்களில் பலவற்றை மறுத்துமிருக்கிறான். இதனால் இவனை குருபக்தி யில்லாதவனென்று சொல்ல முடியாது. அதற்கு மாறாக, தனது குருநாதனிடத்தில் விசேஷபக்தி வைத்திருந்ததனால்தான், அவனுடைய போதனைகளை நன்றாக ஜீரணித்துக் கொண்டிருந் ததனால்தான், அவனுடைய அபிப்பிராயங்களைத் துணிந்து தாக்குகி றானென்று சொல்ல வேண்டும்.
அலெக்ஸாந்தரும் அரிஸ்ட்டாட்டலும் இறந்து போனபிறகு, கிரேக்க சரித்திரத்தின் சுவை குறைந்து போய்விடுகிறது. உண்மையில், கிரீஸ் வாழ்ந்த வரலாறும் முற்றுப் பெற்றுவிடுகிறது. ஆயினும் அலெக்ஸாந்தரின் மரணத்திற்குப் பிறகு என்னவாயிற்றென்பதைச் சுருக்கமாகச் தெரிந்து கொள்வோம்.
6. அலெக்ஸாந்தருக்குப் பிறகு
அலெக்ஸாந்தர் மரித்த பிறகு, அவனுடைய ஏகாதிபத்தி யத்தை ஐந்து பேர் பங்கு போட்டுக் கொண்டனர். ஐவருள் ஒருவன் ஆண்ட்டிபேட்டர். மாஸிடோனியா உட்பட கிரீஸ் முழுவதும் இவனுக்குக் கிடைத்தது. ஏற்கனவே இவன் அலெக்ஸாந்தரின் பிரதிநிதியாயிருந்து கிரீஸில் ஆதிக்கஞ் செலுத்தி வந்தவனல்லவா?
அலெக்ஸாந்தரின் மரணத்தைப் பெரிதும் விரும்பிக் கொண் டிருந்த கிரேக்க ராஜ்யங்கள் பல, அவன் இறந்து விட்டானென்று தெரிந்ததும் பெரிதும் மகிழ்ச்சியடைந்தன. ஆத்தென்ஸில் கேட்க வேண்டுமா? மாஸிடோனிய ஆதிக்கத்துக்கு விரோதமாயிருந்த கட்சியினர், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதாகவும், தங்களுடைய வீரத்தினாலேயே அவனை ஒழித்து விட்டதாகவும் கருதி சந்தோஷங் கொண்டாடினார்கள். தவிர, அலெக்ஸாந்தர் மீதிருந்த வெறுப்பை வளர்ப்பதற்கு ஒரு காரணமும் அகப்பட்டது இவர்களுக்கு இப்பொழுது. அஃதென்னவென்றால், அலெக்ஸாந்தர் படையெடுப்பிலிருந்து திரும்பி 324-ஆம் வருஷம் ஸூஸா நகரம் போந்ததும், கிரேக்க ராஜ்யங்கள் யாவும் தங்களால் பிரஷ்டம் செய்யப்பட்டிருந்த அனைவரையும் திருப்பி வர வழைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு தாக்கீது பிறப்பித்தான். இது சில ராஜ்யங்களுக்குப் பிடிக்கவில்லை; குறிப்பாக, ஆத் தென்ஸுக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. தாக்கீதை நிறைவேற்றத் தயங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் அலெக்ஸாந்தரின் மரணச் செய்தி கேட்டதும், அந்தத் தாக்கீதை ஒரு காரணமாகக் காட்டி அவன் மீதிருந்த வெறுப்பை வளர்த்தனர் மாஸிடோனிய ஆதிக்கத்துக்கு விரோதமாயிருந்த கட்சியினர்.
மாஸிடோனிய ஆதிக்கத்தை உதறித்தள்ளி விட்டு, சுதந்திரக் கொடியை நாட்ட, தக்க தருணம் வந்துவிட்டதென்று கருதி, ஆத் தென்ஸ் கலகத்திற்குக் கிளம்பியது. மறுபடியும் டெமாஸ்த்தனீஸ்!
இவன் சிறிது காலமாக, கலகம் கிளம்புவதற்கு முந்திச் சுமார் இரண்டு வருஷ காலமாகச் செல்வாக்கிழந்திருந்தான். அரசாங் கத்தின் பொறுப்பில் தற்காலிகமாக இருந்து வந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை இவன் எடுத்துக் கொண்டுவிட்டானென்று குற்றஞ் சாட்டப்பட்டு, விசாரணைக்குப் பிறகு அபராதம் விதிக்கப்பட்டான். இவனால் அபராதத்தைச் செலுத்த முடியவில்லை. எனவே சிறை யிடப் பெற்றான். ஆனால் உடனே தப்பியோடி, சுமார் ஒன்பது மாத காலம், பெலொப்பொனேசியாவுக்கு வடகிழக்கிலுள்ள ட்ரீஜென் என்ற துறைமுகப் பட்டினத்தில் வசித்துக் கொண்டிருந்தான்.
கலகக் கொடி தூக்கியதும், ஆத்தென்ஸ், இவன் குற்றத்தை மன்னித்து இவனைத் திருப்பி வரவழைத்தது. வரவழைத்து, மாஸி டோனிய ஆதிக்கத்திற்கு விரோதமாக ஒரு கட்சி திரட்டும்படி பெலொப்பொனேசியாவுக்கு அனுப்பியது. அதில் இவன் ஓரளவு வெற்றியும் பெற்றான்.
இப்படி ஆத்தென்ஸ் ஒரு கட்சி சேர்த்துக் கொண்டு, ஆண்ட்டி பேட்டரை எதிர்த்துப் போராட ஒரு படையை வடக்கு நோக்கி அனுப்பியது. மாஸிடோனியப் படையும், இந்த ஆத்தீனியக் கூட்டுப் படையும் தெஸ்ஸாலியிலுள்ள கிரான்னன் என்ற இடத்தில் 322-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் சந்தித்தன. முடிவு என்ன? சரண டைவதைத் தவிர வேறு வழியில்லையென்ற நிலைமை ஏற்பட்டது ஆத்தென்ஸுக்கு.
பிலிப்பைப் போலவோ அலெக்ஸாந்தரைப் போலவோ ஆண்ட்டிபேட்டர், ஆத்தென்ஸ் விஷயத்தில் கருணைகாட்ட விரும்ப வில்லை. அட்டிக்கா மீது நேரடியாகப் படையெடுத்து வராமலிருக்க மட்டும் ஒப்புக் கொண்டான். ஆனால் தான் கூறும் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினான். நிபந்தனைகள் என்னென்ன? ஆத்தென்ஸ், யுத்தச் செலவுகளைக் கொடுத்துவிட வேண்டும்; மாஸிடோனிய காவற்படையொன்று ஆத்தென்ஸில் நிறுவப்படும்; வயது வந்த எல்லோருக்கும் ஓட்டு ரிமையுண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆட்சி முறையை ரத்து செய்துவிட்டு, அதனுடைய ஸ்தானத்தில், தற்கால இந்திய நாணய மதிப்பின்படி குறைந்த பட்சம் சுமார் ஆயிரத்திரு நூற்றிருபது ரூபாய் பெறுமான சொத்துடையவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமையுண்டு என்பதை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை, அதாவது ஜன ஆட்சிக்குப் பதில் ஒரு சிலர் ஆட்சியை நிறுவ வேண்டும்; மாஸிடோனிய ஆதிக்கத்திற்கு விரோதமாயிருந்த கட்சியின் தலைவர் களான டெமாஸ்த்தனீஸ் முதலியவர்களைச் சரணடையும் படி செய்ய வேண்டும்; இப்படிச் சில நிபந்தனைகளை விதித்தான் ஆண்ட்டிப்பேட்டர். ஆத்தென்ஸ் என்ன செய்ய முடியும்? தலை வணங்கி ஒப்புக்கொண்டது.
நிபந்தனைகளின் விவரம் தெரிந்ததும் டெமாஸ்த்தனீஸ், ஆத்தென்ஸிலிருந்து ஓடிப்போய் எஜீனா தீவுக்குத் தெற்கே கலௌரியா என்ற தீவிலுள்ள ஒரு கோயிலில் ஒளிந்து கொண்டான். ஆண்ட்டிபேட்டரின் ஆட்கள், தன்னைப் பிடிக்க வருவதாக அறிந்ததும், தன்னோடு கொண்டு போயிருந்த விஷத்தை அருந்தி அங்கேயே இறந்து போனான். இறந்தது 322-ஆம் வருஷம் அக்கோடபர் மாதம் பன்னிரண்டாந் தேதி. இதே வருஷத்தில்தான் அரிஸ்ட்டாட்டலும் இறந்துபோனானென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும. இதற்கு மூன்றாவது வருஷம் 319-ஆம் வருஷம் - ஆண்ட்டிபேட்டரும் இறந்து போனன்.
இதற்குப்பிறகு கிரீஸில் ஒரே குழப்பம். அதிகார பதவிகளுக்குப் போட்டியென்ன, கட்சிச் சண்டைகளென்ன, இவைகளினால் வரவர பலவீனமடைந்து கடைசியில் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்குப் பிறகு கி.மு. 146-ஆம் வருஷம், ரோம ஏகாதிபத்தியத்தின் ஒரு மாகாண மாகிவிட்டது. கிரேக்க ஏகாதி பத்தியச் சூரியன், மெது மெதுவாக ஒளி மங்கிக் கொண்டு வந்து கடையில் ரோம ஏகாதிபத்திய மென்னும் மலை வாயிலில் விழுந்துவிட்டது.
ஒளி மங்குகிறது
1. நான்காவது நூற்றாண்டு
கிரேக்க இதிகாசத்தின் காலை வேளை, பகற்பொழுது, அந்தி நேரம், இம்மூன்றையும் ஒருவாறு கண்டுவிட்டோம். இந்த அந்தி நேரத்தில்தான் கிரீஸின் சுதந்திரம் பறிமுதலாகிவிட்டது. இதற்குக் காரணங்கள் யாவை? சுதந்திரம் போன பிறகு கிரீஸின் தனித்தவமும் நாகரிகமும் என்ன நிலைமையைடைந்தன? இவைகளைச் சுருக்க மாக இந்தக் கடைசி அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம். பெற்ற சுதந்திரத்தைப் பறிகொடுத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள விழைவோருக்கு இவைகளைத் தெரிந்து கொள்வது சிறந்த ஒரு படிப்பினையாயிருக்கும்.
பெலொப்பொனேசிய யுத்தம் எப்பொழுது ஆரம்பித்ததோ அப்பொழுதே கிரீஸின் வீழ்ச்சியும் ஆரம்பித்துவிட்டதென்று சொல்ல வேண்டும். இதனால்தான் அந்த யுத்தத்தை ‘கிரீஸின் தற்கொலை’ என்று கூறினோம். மாரத்தான் மைதானத்திலும், தெர் மாப்பிலே கணவாயிலும் கிரேக்கர்கள், பாரசீகர்களை எதிர்த்து நின்று வெற்றி கண்டார்களென்று சொன்னால் அதற்கு முதற் காரணம், அவர்கள் ஒற்றுமைப் பட்டிருந்ததுதான். இது தவிர, சுதந்திரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றும், அந்தச் சுதந் திரத்திற்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்கிற விஷயத்தில் அவர்கள் கொண்டிருந்த சிரத்தையும் போற்றத்தக்கனவாயிருந்தன. அவர்களு டைய தினசரி வாழ்க்கை, ஆடம்பரமற்றிருந்த இயற்கை யோடியை யந்து நடைபெற்று வந்தது. இதனால் எந்தவிதமான இன்னலையும் சுலபமாகச் சமாளித்துவிடும் சக்தியைப் பெற்றிருந்தார்கள். பொது நலத்திற்குச் சுயநலத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். பொதுநலத்திற்கு விரோதமாக யாரேனும் ஏதேனும் செய்வார் களானால் மனிதத் தன்மைக்குப் புறத்தியானவர்களென்று கருதப் பட்டு அப்படியே நடத்தவும் பட்டார்கள். பொது நலத்தை நாடு வதன் மூலம் உண்மையான புகழை அடைய வேண்டு மென்பதில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆவலிருந்தது. இத்தகைய பண்பு களெல்லாம் பாரசீகர்கள்மீது அவர்கள் கொண்ட வெற்றிக்குக் காரணங்களாயிருந்தன.
பாரசீகப் போர்களுக்குப் பிறகு சுமார் அறுபது வருஷ காலம் வரை, கிரேக்கர்களிடத்தில் இந்தப் பண்புகள் குன்றாமலிருந்தன; தாங்கள் அடைந்த வெற்றியினாலுண்டான மகிழ்ச்சியில் இவற்றைக் கரைத்துக் கொண்டு விடவில்லை. அதற்குப் பதிலாக முன்னைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடனும் உறுதியுடனும் ஆக்க வேலை களில் ஈடுபட்டார்கள். ஹெல்லாஸ் பூரண சோபையுடன் பிர காசித்தது. பெரிக்ளீய யுகத்தின் உச்சநிலை!
உச்ச நிலையிலிருக்கிற பொழுதுதான் மனிதன் அடக்கத்துட னிருக்க வேண்டும்; நிதானந் தவறாமலிருக்க வேண்டும். ஒரு ராஜ்யத் திற்கும் இது பொருந்தும். கிரீஸ், உச்சநிலையையடைந்து விட்டோ மென்று இறுமாப்புக் கொண்டுவிட்டது. அதன் நகர ராஜ்யங்களுக் குள்ளிருந்த ஒற்றுமை குலைந்தது. ஆபத்துக் காலத்தில் ஒற்றுமை யுடனிருப்பது சுலபம். ஆபத்து நீங்கி அமைதி ஏற்பட்டிருக்கிற காலத்தில் ஒற்றுமையுடனிருப்பதுதான் கடினம். இந்தக் கடினமான சாதனையில் கிரீஸ் தவறிவிட்டது. ராஜ்யங்களுக்குள் பரஸ்பரம் பெறாமையும் பகைமையும் வளர்ந்தன. பெபொலப்பொனேசியப் பெரும் போர்!
இந்தப் போர்; கிரீஸை உள்ளூர அரித்துவிட்டது. அதனுடைய ஆத்மாவின் அடிப்படையைத் தகர்த்துவிட்டது. இல்லாவிட்டால், மகான் ஸாக்ரட்டீஸ் மரண தண்டனை பெற்றிருப்பானா? இப்படி உட்புறம் அரிக்கப்பட்டிருந்தனால்தான், அதனை வெளியார் வந்து சுலபமாகத் தாக்க முடிந்தது. மாஸிடோனிய ஆதிக்கம்!
பெலொப்பொனேசிய யுத்தம் முடிந்ததும், நகர ராஜ்யங்கள் பலவும், சிறப்பாக ஸ்ப்பார்ட்டா, ஆத்தென்ஸ், தீப்ஸ் ஆகிய மூன்று ராஜ்யங்களும், தங்களைச் சுதாரித்துக் கொள்ள அரும்பாடுபட்டன. ஸ்ப்பார்ட்டா, கடலாதிக்கம் பெற முனைந்தது. ஆத்தென்ஸ், டெலோஸ் சமஷ்டி மாதிரி மற்றொரு சமஷ்டியமைத்து, பழையபடி ஏகாதி பத்தியச் செல்வாக்குப் பெறப் பார்த்தது. தீப்ஸ், ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் போட்டியாகத் தலைதூக்க முயன்றது. ஆனால் எல்லாம், முந்தி தீப்ஸீக்குச் சொன்னதுபோல், மின்னல் வாழ் வாகவே முடிந்தது. இந்த மின்னல் வாழ்வு நடத்திய காலத்தில், மேற் படி மூன்று ராஜ்யங்களின் பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற பல துறைகளும் சிறிது சோபையைக் கொடுத்தன. உதாரணமாக, ஆத்தென்ஸ், பாழ்பட்டுப் போன நிலங்களையெல்லாம் பண்படுத்தி அதிகமான விளைவைக் காண முயன்றது. இந்தக் காலத்தில், விவ சாய சம்பந்தமாகப் பலவித நூல்கள் வெளியாயின. புதிய தொழில்கள் பல ஏற்பட்டன. வெளிநாட்டு வியாபாரத்தில் சிறிது சுறுசுறுப்பு காணப்பட்டன. கலைத் துறையிலும் இலக்கியத் துறையிலும் புதிய சிருஷ்டிகள் சில தோன்றின. சுருக்கமாக, ஆத்தென்ஸின் பெலொப் பொனேசிய யுத்தத்திற்குப பிந்திய வாழ்வு, பெரிக்ளீய யுகத்து வாழ் வைப்போல் அவ்வளவு ஒளி பொருந்தியதாக இல்லாவிட்டாலும், அக்கம் பக்கத்து ராஜ்யங்கள் நடத்திவந்த வாழ்வைக் காட்டிலும் சிறிது பிரகாசமாகவே இருந்தது (இதைப் பற்றி ஏற்கனவே குறிப் பிட்டிருக்கிறோம்.)
என்றாலும் இந்தப் பிரகாசம், மேலே சொன்னது போல் மின்னற் பிரகாசமாகவே முடிந்துவிட்டது. இதனால் கிரீஸின் இறக்கம் நிற்க வில்லை. படிப்படியாக இழிந்து கொண்டுதான் வந்தது. யுத்தத்தைக் காட்டிலும் யுத்தத்தின் பின் விளைவுகள்தான் கொடுமையானவை என்று சொல்வார்கள். அதிலும் உள்நாட்டு யுத்தமாயிருந்தாலும் கேட்க வேண்டியதில்லை. நிரந்தரமான ஊனங்களை உண்டுபண்ணி விடுகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு உறுதுணையா யிருந்த சக்தி களெல்லாம் உருக்குலைந்து போகின்றன. பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு கிரீஸ், என்னதான் தன்னைச் சுதாரித்துக் கொள்ள முயன்றாலும், அந்த யுத்தத்தின் பின் விளைவுகள் அதனை ஓங்கவிடவில்லை. அந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட வேற்றுமை உணர்ச்சியானது, புரைப்புண் மாதிரி இருந்து, மெதுமெதுவாகப் பரவி, கடைசியில் அதன் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மகான் ஸாக்ரட்டிஸ் மரணத்திற்குப் பிறகு கிரீஸின் புற வாழ்க்கையில் பசுமை குன்றிக் கொண்டு வந்தது; அக வாழ்க்கையில் மாசுபடிந்து வந்தது. பாரசீக யுத்த காலத்தில் அதனிடத்தில் குடி கொண்டிருந்த பண்புகள் பலவும் பெலொப்பொனேசிய யுத்தத் திற்குப் பிறகு ஒவ்வொன்றாக அதனிடமிருந்து அகன்று கொண்டு வந்தது. ஐந்தாவது நூற்றாண்டு கிரீஸுக்கும் நான்காவது நூற்றாண்டு கிரீஸுக்கும் எவ்வளவு வித்தியாசம்! தெளிவாகச் சொல்லப்போனால், ஸாக்ரட்டீஸ் கொலையுண்ட பிற கிரீஸுக்கு முதுமை வந்தெய்தி விட்டது.
இந்த முதுமைப் பருவத்தின் முற்பகுதியில், அதாவது ஸாக் ரட்டீஸ் மரணத்திலிருந்து அலெக்ஸாந்தர் மரணம் வரையுள்ள காலத்தில், கிரீஸின் புறவாழ்க்கை எப்படிப் பசுமை குன்றியதாகிக் கொண்டு வந்ததென்பதையும், அக வாழ்க்கை என்னென்ன மாசுக் கள் படிந்ததாகிக் கொண்டு வந்ததென்பதையும் சிறிது பார்ப்போம்.
கிரீஸில் அடர்த்தியான காடுகள் ஆங்காங்கு இருந்தன. இந்தக் காடுகளிலிருந்த மரங்களைக் கொண்டுதான் கப்பல்கள் செய்து வந்தார்கள் கிரேக்கர்கள். கிரீஸில் எப்பொழுதுமே கப்பல்கட்டுந் தொழில் மிகவும் சிறப்புற்றிருந்தது. கடலில் கலஞ் செலுத்தும் ஆற்றல் பெற்றிருந்தமையால்தான், கிரேக்கர்கள், தொலைக்குச் செல்லச் சிறிதும் தயங்கவில்லை; கடற்போர்களில் வெற்றி கண்டார்கள்; கடல் வியாபாரத்திலும் மேன்மையுற்றார்கள். இருந்தாலும், தாங்கள் நடத்திய கடற்போர்களில் அநேக கப்பல்களை இழந்து வந்தார்கள். இவைகளுக்குப் பதிலாக அவ்வப்பொழுது புதிய புதிய கப்பல்கள் அதிகப்படியாகக் கட்டப் பெற்று வந்தன.
இங்ஙனம் கப்பல்கள் கட்டுவதற்குத் தவிர, பாரசீகப் போர் களின் போதும் பெலொப்பொனேசிய யுத்தத்தின் போதும் நாச மாக்கப்பட்டு வந்த நகரங்களைப் புனர் நிர்மாணம் செய்வதற்குக் காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வெட்டி உபயோகித்து வந்தார்கள். வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரங்களை உற்பத்தி செய்யவில்லை. யுத்தத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிற பொழுது இதனை எங்கே கவனிக்க முடியும்? எப்படியோ, பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு, கிரீஸின் காட்டுவளம் குன்றியது. அடுத்த நூற்றாண்டில் - மூன்றாவது நூற்றாண்டில் - தங்களுக்குத் தேவையான மரங்களுக்கு வெளிநாடுகளை எதிர் பார்க்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்களென்றால், நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. காடுகள் அழிந்தால் மழை பொழிவது குறைந்து விடுகிறது. ஆகவே, பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு நீர் வளம் சுருங்கிக் கொண்டு வந்தது.
கிரீஸில் ஆங்காங்குச் சிறு குன்றுகளும், அவைகளுக்கிடை யிடைய கணவாய்களும் இருந்தனவென்பதும், இந்தக் கணவாய் களின் பெரும்பகுதியே வாசத்திற்கும் விவசாயத்திற்கும் உபயோ கிக்கப்பட்டு வந்ததென்பதும் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும். குன்றுகளில் நெடிய மரங்கள் வளர்ந்திருந்தன. இந்த மரங்கள், குன்றுகளின் மீது படிந்து கிடக்கும் மண்ணை, எவ்வளவு மழை பொழிந்தாலும், சரியவிடாமல் தடுத்து நின்றன. ஆனால் மேலே சொன்ன உபயோகங்களுக்காக இவை - இந்த மரங்கள் - அவ்வப் பொழுது வெட்டப்பட்டு வந்தன. மலைப்பாங்கான இடங்களில் சிறிது அதிகமாக மழை பொழி வதுண்டல்லவா? இந்த மழை காரணமாக காலக்கிரமத்தில் மேற்படி சில குன்றுகளிலிருந்த மண்ணெல்லாம் சரிந்துசரிந்து வந்து, சமதரைப் பிரதேசங்களில் மேடிடத் தொடங்கின. நான்காவது நூற்றாண்டில் இந்த மலைகள், சதையற்ற உடல்போல் இருந்தன. மண்மேடிட்டுப் போன இடங்களில் என்ன சாகுபடி செய்ய முடியும்? ஜனங்கள் யுத்தத்தில் ஈடுபட்டுவிட்டபடியால் இந்த நிலங்களைச் சாகுபடிக்குத் தகுதி யுடையதாகச் செய்ய முடியவில்லை. ஆகவே, பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப பிறகு, நீர்வளம் சுருங்கத் தொடங்கியது போல் நிலவளமும் குன்ற ஆரம்பித்தது.
மற்றும், பெலொப்பொனேசிய யுத்தத்தின் பொழுது, சத்து ருக்கள், ஒருவரையொருவர் நாசஞ் செய்வதென்ற முறையில் பயிர் பச்சைகளெல்லாம் தீயிட்டுப் பொசுக்கப்பட்டன. இப்படிப் பொசுக்கப்படுவது தெரிந்ததும் பயிர்த்தொழிலில் ஈடுபட்டிருந்த பலரும், உயிருக்குப் பயந்து தங்கள் நிலபுலங்களையெல்லாம் விட்டுவிட்டு நகரங்களில் வந்து தஞ்சம் புகுந்தார்கள். சாதாரணமாக ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பொழுது, எங்கு ஆபத்தில்லையோ, எங்கு அதிகமான பாதுகாப்புக் கிடைக்கிறதோ, அங்குதான் ஜனங்கள் வந்து ஒன்று சேருவார்கள். பெலொப் பொனேசிய யுத்தத்தின்பொழுது இப்படித்தான் நடைபெற்றது. அந்த யுத்தத்தின் ஆரம்பத்தில், அட்டிக்காவாசி களனைவரும் ஆத்தென்ஸுக்குள் வந்து சேர்ந்து விடுமாறு பெரிக்ளீஸ் உத்தர விட்டானல்லவா, இது, மாற்றான் வலியையறிந்து செய்த ஒரு ராஜதந்திர காரியம். இப்படிச் செய்து அந்தச் சந்தர்ப்பத்திற்குச் சரி. இதனால் சத்துருக்கள் கையில் அதிக ஜனங்கள் அகப்படாமல் தப்பினார்களென்பது வாஸ்தவம். ஆனால் பிற்காலத்தில், ராஜ் யத்தின் சுபிட்சம் குன்றத் தொடங்கியதற்கு இதுவே ஒரு காரணமாய் அமைந்தது. உழுவாரின்றி நிலங்களெல்லாம் பாழ்பட்டுப் போயின. அட்டிக்காவின் நிலவளம் இப்படித்தான் குன்றிப்போயிற்று. இங்ஙனம் ஏறக்குறைய எல்லா ராஜ்யங்களிலும் விவசாயத் தொழில் ஸ்தம்பித்துப் போய்விட்டது.
ஆத்தென்ஸ் ராஜ்யத்தைப் பொறுத்தமட்டில் இன்னொரு விஷயம். ஆத்தீனியர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணை யாயிருந்து வந்த ஒலிவ மரங்களென்ன, திராட்சைக் கொடி களென்ன இவையெல்லாம் பெலொப்பொனேசிய யுத்தத்தின் பொழுது ஸ்ப்பார்ட்டர்களால் அழிக்கப்பட்டு விட்டன. இவற்றைப் பயிர் செய்து வந்தவர்களிற் பெரும்பான்மையோர், யுத்தத்திலோ, ஆத் தென்ஸில் ஏற்பட்ட பிளேக்கிலோ மடிந்து போயினர். புதிய தலை முறையினருக்கோ இவற்றைத் திரும்பவும் பயிர் செய்து பலன் காணக்கூடிய பொறுமையில்லை. ஒலிவ மரம் வளர்ந்து பலன் தர நாற்பது வருஷங்களுக்கு மேலாகுமல்லவா, அதுவரையில் வாழ்க் கையை நடத்துவதெப்படியென்ற கேள்வி எழுந்தது. வேறு ஜீவனோபாயத்தை மேற்கொள்ளத் துணிந்தார்கள். ஒலிவ மரங் களிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த வருவாய் ஆத்தென்ஸ் ராஜ்யத்தின் பொருளாதார வாழ்க்கைக்கு ஜீவநாடிபோல் இருந்தது. பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு இந்த நாடி தளர்ந்து போயிற்று. ஆத்தென்ஸ், இரண்டாவது சமஷ்டியமைத்து அதன் மூலமாக மறுபடியும் தலைதூக்க முயன்றும் முடியாமற் போன தற்கு இஃதொரு முக்கிய காரணம்.
யுத்தத்தின்பொழுது நிலபுலங்களையெல்லாம் விட்டுவிட்டு நகரங்களில் வந்து தஞ்சம் புகுந்தவர்களிற் சிலர், யுத்தம் முடிந்த பிறகு திரும்பவும் தங்கள் நிலபுலங்களுக்கே சென்றார்கள்; சிலர் நகரங்களிலேயே தங்கிவிட்டார்கள். நிலபுலங்களுக்குச் சென்றவர்கள், பழைய மாதிரி சுபிட்சமாக இருக்க முடியவில்லை. ஏனென்றால், நிலங்களெல்லாம் வருஷக்கணக்கில் பாழ்பட்டுக் கிடந்தன. இவற்றைப் பண்படுத்த வேண்டும். பண்படுத்திப் பயிரிட்டால்தானே போதிய பலன் காண முடியும்? மற்றும், புதிதாக வீடு வாசல்களை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும், விவசாய சாதனங் கள் பலவும் தேவையாயிருந்தன. இவையனைத்திற்கும் பணம் வேண்டுமல்லவா? எனவே நகரங்களில் வசித்துக் கொண்டிருந்த பணக்காரர்களிடம், தங்கள் நிலங்களை ஈடுகாட்டிக் கடன் வாங் கினார்கள். கடன் கொடுப்பதற்கும் அநேகர் தயாராயிருந்தனர். யுத்த கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக் கிறவர்கள் எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் உண்டு. பெலொப் பொனேசிய யுத்தத்தின்பொழுது, இத்தகைய பணக்காரர்கள் பலர் கிரீஸில் தோன்றியிருந்தனர். இப்படிப்பட்டவர்களிடம் கடன் வாங்கின விவசாயிகள், வருஷ வரி கிடைக்கும் மகசூலில், சிறிது சிறிதாக மிச்சப்படுத்திக் கடனைத் தீர்த்துவிடலாமென்று உத் தேசித்தார்கள். இந்த உத்தேசத்துடன் தான் கடன் வாங்கினார்கள். ஆனால் இது நடக்கிற காரியமாயில்லை. அசலோடு வட்டியும் சேர்ந்து விஷம்போல் ஏறிக்கொண்டு வந்தது. நாளா வட்டத்தில் பெரும்பாலான நிலங்கள், கடன் கொடுத்தவர்களுக்கே சொந்தமாகி விட்டன. விவசாயிகள், வாரத்திற்கோ, குத்தகைக்கோ இந்த நிலங்களைப் பயிரிட்டு, ஒரு பகுதியை நிலச் சொந்தக்காரர்களுக்குக் கொடுத்துவிட்டு மற்றொரு பகுதியைக் கொண்டு ஏதோ ஒரு வகையாக ஜீவனம் நடத்தி வந்தார்கள்.
நகரங்களிலேயே தங்கிவிட்டவர்கள், பயிர்த்தொழிலில் பழைய படி ஈடுபடமனமில்லாமல், தங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங் களை வந்த விலைக்கு விற்றுவிட்டார்கள். யாருக்கு? மேலே சொன்ன பணக்காரர்களுக்குத் தான். வாங்கின பணக்காரர்கள் தங்களிட முள்ள அடிமைகளைக்கொண்டு இந்த நிலங்களைப் பண்படுத்திப் பலன் காண முன்வந்தார்கள். இவர்களெல்லோரும் நகரவாசிகள்; நாகரிக வாழ்க்கையில் அப்படியே தோய்ந்து கிடந்தவர்கள். இப்படிப் பட்டவர்கள், நிலத்தின் மீது கருத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட காலத்தில்தான், மேலே சொன்னதுபோல் விவசாய சம்பந்தமான நூல்கள் பல வெளியாயின.
இந்தப் பணக்காரர்களுக்கு நிலங்களை விற்றுவிட்டவர் களுடைய நோக்கமென்னவென்றால், விற்ற பணத்தை வைத்துக் கொண்டு, நகரங்களிலேயே சுயமாக ஏதேனும் ஒரு சிறுதொழில் நடத்தி ஜீவிக்கலாம் என்பதுதான். ஆனால் இந்த நோக்கம் சரிவர நிறைவேறவில்லை. எப்படியென்றால், ஆங்காங்குச் சிறுசிறு தொழிற் சாலைகளை வைத்து நடத்தி வந்த தொழில் முதலாளிகளுடன் இவர்களால் போட்டிபோட முடியவில்லை. குடிசைத் தொழில் களென்று இப்பொழுது சொல்கிறோமே, இந்த மாதிரியான தொழில்களைத்தான் இவர்களால் நடத்திவர முடிந்தது. இவர்கள் தயாரித்த பொருள்களுக்கு நல்ல விற்பனையும் இல்லை. அப்படி விற்றாலும் குறைந்த விலைக்குத்தான் விற்பனை செய்ய வேண்டி யிருந்தது. இதிலிருந்து கிடைத்த ஊதியம், அன்றாட வாழ்க்கை நடத்துவதற்குப் பற்றவில்லை. நிலத்தை விற்று ரொக்கமாக வைத்துக் கொண்டிருந்த பணத்தில், தொழிலிலே போட்டதுபோக, மிகுதியா யிருந்தது மெதுமெதுவாகக் கரைந்துவிட்டது. இனி வாழ்க்கைக்கு? தொழிற்சாலைகளில் கூலிக்கமர்ந்து வேலை செய்ய முன்வந்தார்கள்.
ஆனால் இந்தத் தொழிற்சாலைகளோ, மேலே சொன்னபடி சிறுசிறு தொழிற்சாலைகள். ஒரு குடும்பத்தினர் மட்டும் சேர்ந்து வேலை செய்கின்ற தொழிற்சாலைகளாகவோ ஒரு சில அடிமை களை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தப்படுகின்ற தொழிற்சாலை களாகவோ இருந்தன. விவசாயத்திலும் தொழில் முயற்சியிலும் அடிமைகளை உபயோகப்படுத்துவதென்பது, முந்தின நூற்றாண் டைக் காட்டிலும் நான்காவது நூற்றாண்டில் சிறிது அதிகமாகவே இருந்தது. எனவே இந்தத் தொழிற்சாலைகளில் கூலிக்கு வேலை யகப்படுவதென்பது அரிதாகிவிட்டது. தொழில் நுட்பம் மிகத் தெரிந்த ஒரு சிலருக்கு மட்டும் ஏகதேசமாக வேலை கிடைத்தது.
ஆத்தென்ஸைப் பொறுத்தமட்டில், பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு புதிய தொழிற்சாலைகள் சில ஏற்பட்டன வென்பது வாஸ்தவம். இவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் காரணமாக, ஆத்தென்ஸின் வெளிநாட்டு வியாபாரத்தில் சிறிது சுறுசுறுப்பு காணப்பட்டதென்பதும் உண்மை. தொழில் நுட்பம் தெரிந்த தொழிலாளிகளுக்குச் சிறிது கிராக்கி இருந்ததென்பதும் நிஜம். இப்படித் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் யார்? நகரவாசிகளா யிருந்து, பரம்பரையாகத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர் களுக்கு எப்பொழுதுமே கிராக்கி இருந்து கொண்டு தானிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டமென்பது இவர்களைப் பொறுத்த மட்டில் இல்லாமலிருந்ததென்று நிச்சயமாகச் சொல்லலாம். ஆனால் பரம்பரை கிராம விவசாயிகளாயிருந்து, யுத்தங் காரணமாக நகரத்துப் புதிய தொழிலாளிகளாக மாறினவர்கள் பாடுதான் திண்டாட்டமாகி விட்டது. நிலத்துக்கு நிலமும் போய் தொழிலும் அகப்படாமல் தவிர்த்தார்கள். கிரீஸ் எங்கணுமே இந்த நிலைமை இருந்தது. போதாக்குறைக்கு, யுத்தத்திற்குப் பிறகு விலைவாசிகள் உயர்ந்து விட்டன; வாழ்க்கைச் செலவுகள் அதிகமாயின; வருவாய் சுருங்கிக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள், வரவையும் செலவையும் சரிக்கட்டிக் கொண்டு போக முடியாமல் கஷ்டப்பட்டார்கள்.
இவையனைத்தினுடைய விளைவாக என்ன நிலைமை ஏற்பட்டதென்றால், பெருவாரியான நிலங்கள் ஒரு சிலருக்குச் சொந்தமாயின. இந்த ஒரு சிலரிலும், பெரும்பாலோர் நகரவாசி களாகவே இருந்து காலங்கழித்து வந்தனர். கிராம வாழ்க்கைக்கு மதிப்புக் குறைந்தது. நகர வாழ்க்கைக்கு ஒரு சிறப்பு ஏற்பட்டது. கிராமங்களைக் காட்டிலும் நகரங்களின் ஜனத்தொகை அதிகப் பட்டு வந்தது. விவசாயப் பொருள்களின் உற்பத்தி வரவரக் குறைந்தது. இதனால் முன்னைக் காட்டிலும் அதிகமாக உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டி வந்து விட்டது. நகரங்களில் சிறுசிறு தொழில்கள் பெருகின. இவைகளி லிருந்து தயாரான செய்பொருள்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பெற்றனவென்றாலும், இவை, உணவுப் பொருள்களின் இறக்குமதியைச் சரிக் கட்டிக் கொண்டு போக முடியவில்லை. ஆனால் இந்த ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் அதிகமாயினர். ரொக்க லேவாதேவி சுறுசுறுப்பாக நடைபெற்றது.
ஆத்தென்ஸ் ராஜ்யத்தில், யுத்தத்தின்போது ஒருவாறு மூடப் பட்டுக் கிடந்த லாரியம் வெள்ளிச் சுரங்கங்கள் யுத்தத்திற்குப் பிறகு திறக்கப்பட்டன. அடிமைகள் ஆயிரக்கணக்கில் இந்தச் சுரங்கங் களில் இறக்கப்பட்டார்கள். இவர்கள் கொட்டிய வியர்வை, சிந்திய ரத்தம் இவற்றின் விளைவாக ஏராளமான வெள்ளி வெளிக் கொணரப் பட்டது. சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்களும், அடிமை களை ஒப்பந்தத்திற்கு அமர்த்தி வேலை வாங்கினவர்களும் பெரும் பணக்காரர்களாயினர். இந்தச் சுரங்கங்களின் மூலமாக, அரசாங் கத்திற்குப் பழைய மாதிரி ஓரளவு வருமானம் கிடைத்துக் கொண்டி ருந்தது.
பணம், உபயோகமுள்ள ஒரு கருவி. இந்த அளவுக்குதான் அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். இதற்கு மேற்பட்ட மதிப்பைக் கொடுத்துப் போற்றினால், அது மனிதனைச் சீரழித்துவிடுகிறது. சீரழிந்த மனிதர்களைக் கொண்ட ராஜ்யம் எப்படிச் சீருடன் இருக்க முடியும்? அழிய வேண்டியதுதான். பெலொப்பெனேசிய யுத்தத்திற்குப் பிறகு கிரீஸில் இந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டது. பணத்திற்கு முக்கியத்துவம் உண்டாகி அதனை எப்படியாகிலும் அடைய வேண்டுமென்பதே லட்சியமாகி விட்டது. அதிலும் சீக்கிரமாகவும் சுலபமாகவும் அடைய வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. இந்த ஆவல், ஜனங்களைச் சீர்கெட்ட வழிகளில் இழுத்துச் சென்ற தென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
தினசரி வாழ்க்கையைச் சிரமமில்லாமல் நடத்திக் கொண்டு வந்தவர்கள், அதில் திருப்தியடையாமல் மேலும் பணஞ் சம்பாதிக்க வேண்டுமென்று விழைந்தார்கள். பணம் படைத்தவர்களோ, இன்னும் பெரிய பணக்காரர்களாக வேண்டுமென்று விரும்பி னார்கள். ஆக, இந்தப் பண ஆசையென்பது, தொற்றுநோய் மாதிரி எல்லோரிடத் திலும் பரவியது. பணத்தைக் குறியாகக் கொள்ளாத மனிதர்களோ, தொழில்களோ இல்லையென்று சொல்லலாம். இன்று எவ்வளவு சம்பாதிக்கலாம், நாளை எவ்வளவு சம்பா திக்கலாம் என்பதுதான் எல்லோருடைய சம்பாஷைணையிலும் முக்கிய விஷயமாயிருந்தது; மற்ற விஷயங்கள் இரண்டாம் பட்சமாகவே கொள்ளப்பட்டன. சீலம் செல்வாக்கிழந்து கிடந்தது. சீல புருஷர்கள் எள்ளி நகையாடப் பட்டார்கள். வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் பணத்தைச் சம்பாதிப்பதெப்படி என்ற கேள்வியைப் பலரும் கேட்கத் தலைப்பட்டனர்.
பணத்திற்கு என்றுமில்லாத ஒரு மதிப்பு! அறிவா திறமையா, எதுவும், பணத்தைக் கொண்டுதான் கணிக்கப்பட்டது. முந்தி யெல்லாம், பிறருக்காகக் கட்சியாடுகிறவர்கள், ஆசிரியர்கள், நாடகம், ஓவியம் முதலிய துறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களெல்லோரும், தங்களுடைய திறமையைப் பண மதிப்புப் போட்டுப் பார்க்கக் கூடாதென்றும், பணத்திற்காக அவை களை விக்கிரயஞ் செய்வது கௌரவக் குறைவென்றும் கருதி வந்தார்கள். இப்பொழுதோ அந்த எண்ணம் மாறிவிட்டது. அதிக விலை கொடுப்பவர்களுக்குத் தங்கள் திறமையை விற்கச் சிறிதுகூடக் கூசினார்களில்லை. பணத்தைக் கொடுத்தால் எதையும் வாங்கலாம், எதையும் அடையலாமென்ற நிலைமை ஏற்பட்டது! பணமுள்ளவர் கள்தான் பெரிய மனிதர்கள்! அவர்களுக்குத்தான் சமுதாயத்தில் மரியாதை கிடைத்து வந்தது. இந்த மரியாதையைப் பெறும் பொருட்டு, வெகு துரிதமாகப் பணஞ் சம்பாதிக்க முனைந்தார்கள்.
இப்படிச் சம்பாதித்தவர்கள் - இந்தப் புதிய பணக்காரர்கள் -தலை கால் தெரியாமல் பணத்தைச் செலவழித்தார்கள். எளிமையும் இனிமையும் கலந்த வாழ்க்கை யென்பது பழைய காலச் செய்தியாகி விட்டது. ஆடம்பரமும் பகட்டும் நிறைந்த வாழ்க்கையே நாகரிக வாழ்க்கையாகி விட்டது. பெரிய பெரிய வீடுகளைக் கட்டி, அந்த வீடுகளைப் பலவித வர்ண வேலைப்பாடுகளினால் அலங்காரஞ் செய்வித்துப் பெருமை கண்டார்கள். வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த ஆடையாபரணங்களை அணியச் செய்து பார்த்து அகமகிழ்ந்தார்கள். அவ்வப்பொழுது பெரிய பெரிய விருந்துகள் நடத்தினார்கள். பிரபல சிற்பிகளைக் கொண்டு தங்கள் உருவங்களை அமைக்கச் செய்து வீடுகளில் வைத்துக் கொண்டார்கள். பிரசித்தமடைந்த கவிஞர்களைக் கொண்டு தங்கள் புகழைப் பாடச் செய்தார்கள். சுருக்கமாக, ஒவ்வொரு பணக்காரருடைய வீடும், உயிருள்ளதும் உயிரற்றதுமான பொருள்கள் பல நிறைந்த ஒரு காட்சிசாலையாக இருந்ததென்று சொல்லலாம்.
ஆனால் ஒரு விஷயம். இங்ஙனம் ஆடம்பர வாழ்க்கையை நடத்தி அநேகர் பணத்தை இழந்தும்விட்டார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் இவர்களிடம் பணம் குவிந்ததோ அவ்வளவு சீக்கிரத்தில் அந்தப் பணம் கரைந்துவிட்டது. இதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? பணத்தைக் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறவர் களுக்குத் தான் அதன் அருமை தெரியும்; அதனைக் காப்பாற்றவும் அவர்களால் முடியும். அப்படிக்கின்றி சுலபமாகச் சம்பாதிக்கிறவர்கள் சுலபமாக இழந்து விட வேண்டியதுதானே?
பணப்பித்து எல்லோரையும் பிடித்து ஆட்டுவிக்கின்ற நிலையில், அரசியல் துறை எப்படிப் பரிசுத்தமாக இருக்க முடியும்? அரசியல் ஒரு வியாபாரமாகவே கருதப்பட்டது. அரசியலில் பணச் செல் வாக்கு மேலோங்கி நின்றது. அதில் ஆதிக்கம் பெற்றவர்கள், அந்த ஆதிக்கத்தைத் தங்கள் சொந்த நலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளச் சிறிதும் கூச்சப்படவில்லை. இதனால் அரசாங்கத்திற்கு அடிக்கடி பணமுடை ஏற்பட்டது; பொதுநலம் பாதிக்கப்பட்டது.
பணமும் பணக்காரர்களும் இங்ஙனம் செல்வாக்குப் பெற்று நின்றது ஒருபக்கத்துக் காட்சிதான். மற்றொரு பக்கத்தில், அதாவது சமுதாயத்தின் அடி வரிசையில் வறுமை யென்னவோ குமுறிக் கொண்டேயிருந்தது. வறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. திருவிழாக் களின்போது கடவுட் பிரசாதமென்று சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு கவளச் சோற் றுக்குக் கோயில்கள் முன்னிலையில் கூடிநின்றவர் பலராயினர். நீதி ஸ்தலங்களில் ஜூரிகளாக அமர்வோருக்கு ஒரு சிறுதொகை கொடுக் கப்பட்டு வந்ததல்லவா, அந்தச் சிறுதொகையை எதிர்பார்த்து, ஜூரிகளில் ஒருவராக அமர நமக்குச் சீட்டு விழாதாவென்று ஏங்கி நின்றவரும் பலராயினர். ஆத்தென்ஸில் மட்டும் வியாபாரியென்றோ தொழிலாளி யென்றோ, போர்ச் சேவகனென்றோ, இப்படி எந்த ஒரு வருக்கத்திலும் சேராத ஆனால் ஏழை அல்லது எவ்வித ஆதரவும் இல்லாதவன் என்று மட்டும் சொல்லப்படக் கூடிய நிலைமையில் ஆயிரக்கணக்கான பேர் இருந்தனர். இவர்களுடைய எண்ணிக்கை வருஷத்திற்கு வருஷம் அதிகரித்துக் கொண்டு வந்தது. உதாரணமாக 431-ஆம் வருஷத்தில், அதாவது பெலொப்பொனேசிய யுத்தத் துவக்கத்தின்போது ஆத்தென்ஸில் பிரஜைகளென்று அழைக்கப் படுதற்குரியராயிருந்தவர் 43,000 பேரல்லவா? இவருள் சுமார் 20,000 பேர் வரை ஏழைகள் என்று சொல்லப்படக்கூடிய நிலைமையில் இருந்தனர். அடுத்த நூற்றாண்டின் பிற்பகுதியில், உத்தேசமாக 315-ஆம் வருஷத்தில், பிரஜைகளின் எண்ணிக்கை 21,000; ஏழை களின் எண்ணிக்கையோ 12,000. ஏறக்குறைய நூற்றுக்கு ஐம்பத் தேழு விகிதம் ஏழைகள்!
இந்த ஏழை மக்களிற் பலர், எங்கேனும் ஏதேனும் பிழைப்பு அகப்படுமா வென்று முன்பின் தெரியாத ஊர்களுக்குத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் துணிந்து சென்றனர். பசி வந்திடப் பத்தும் பறந்து போமல்லவா? தங்கள் நாட்டுப் பகைவர்கள், தங்கள் நாட்டுக்கு விரோதமாகத் திரட்டிய கூலிப்படைகளில் சேர்ந்து கொண்டன! பாரசீக சிங்காதனத்துக்குப் போட்டியிட்ட ஸைரஸ் மன்னனுக்கு உதவி செய்ய எப்பொழுதுமே ஒரு கிரேக்கக் கூலிப்படை சென்றதோ, அஜிஸிலேயஸ் மன்னன் எப்பொழுது ஸ்ப்பார்ட்டக் கூலிப்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு எகிப்துக்குச் சென்றானோ, அப் பொழுதே கிரீஸின் கௌரவம் குலைந்து போய்விட்டது; அதன் வாழ்வும் தாழ்வுறத் தொடங்கியது.
வயிற்றுப் பிழைப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் சரி, உள்நாட்டிலிருந்தவர்கள்? ஏற்பதிகழ்ச்சி யென்பதை மறந்து வீதி தோறும் பிச்சையெடுக்கலானார்கள். சுதந்திர நாட்டினர்தான்! சுதந்திரப் பிரஜைகள்தான்! ஆனால் அந்தச் சுதந்திரமானது, வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடிக் கொடுக்கவில்லை; பிச்சையெடுக்கும்படி விட் டிருக்கிறது. அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தென்ன? போயென்ன? ஏட்டுச்சுரைக்காய்தான். இதை நன்கு உணர்ந் தார்கள் ஜனங்கள்.
சமுதாயத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையே இருந்த பிளவு வரவர அகன்றுகொண்டு வந்தது. பணக்காரர்கள், பணம் படைத்திருக்கிற கர்வத்தினால், பணமில்லாதவர்களை அலட்சியப் படுத்திவந்தார்கள். தங்களிடத்தில் நிரம்பிக் கிடந்த கீழான ஆசைகளை நாகரிகமாக மூடிக்காட்ட அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இதற்கு உறுதுணையாயிருந்தது அவர்கள் கற்றிருந்த கல்வி. தங்கள் கல்வியறிவைக்கொண்டு, தங்கள் நடக்கைக்கு நியாயமும் கற்பித்துக் காட்டினார்கள்; மற்றும், ஏழைகள், அறியா மையில் மூழ்கிக் கிடக்கிறவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர் களிடத்தில், அவர்கள் அடைந்ருக்கும் பக்குவத் திற்குத் தக்கபடி, அதாவது நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டுமென்று வேறே சாதித்து வந்தார்கள்.
ஏழைகளோ, பணம் படைத்திருக்கிறவர்களெல்லோரும் நியாயமற்ற முறையில் அந்தப் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களென்று எண்ணத் தலைப்பட்டுவிட்டார்கள்; அவர்களிடத்தில் வெறுப்பும் கொண்டார்கள். மற்றும் நம்முடைய உழைப்பின் மீதுதான் அவர்கள் - அந்தப் பணக்காரர்கள் நிம்மதி யாகவும் சுகபோகத்துடனும் வாழ்க்கையை நடத்துகிறார்கள், அவர்கள் வாழ நாம் ஏன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று முணு முணுக்கவும் செய்தார்கள்.
இந்த முணுமுணுப்பானது, நாளாவட்டத்தில் பணக் காரர்களுக்கு விரோதமான கலகங்களாகப் பல இடங்களில் கிளம்பின. பெலொப்பொனேசிய யுத்தம் முடிந்து சுமார் முப்பது வருஷங்களுக்குப் பிறகு மிட்டிலீனியில் ஒரு கலகம் எழுந்தது. கடன் வாங்கியிருந்த ஏழைகள், ஒன்றுதிரண்டு கடன் கொடுத்திருந்த பணக்காரர்களை ஒரேயடியாகக் கொலை செய்து விட்டார்கள்; பசிக் கொடுமையைத் தாங்க முடியாமல் ஆத்திரத்தில் இப்படிச் செய்துவிட்டதாகப் பின்னர் சமாதானம் வேறு கூறினார்கள். ஆர்கோஸிலும் இப்படிப் பணக்காரக் கட்சியினருக்கு விரோதமாக ஒரு கலகம் கிளம்பிச் சுமார் ஆயிரத்திருநூறு பேரைப் பலி கொண்டது. இன்னும் இவை மாதிரி பல இடங்களில் கலகங்கள் உண்டாகி, உள்ளவர் இல்லாதவர் வேற்றுமையை அகலப்படுத்தி வந்தன. இந்த அவலத்தில்தான் பிலிப் மன்னன், தன் ஆதிக்கக் காலடியை ஊன்றிக் கொண்டான். ஊன்றிக் கொள்வது அவனுக்குச் சுலபமாக இருந்தது. உட்புறத்தில் வேற்றுமை களினால் அழுகியிருக்கிற ஒரு நாட்டைத்தான் வெளிச்சக்திகள் சுலபமாக ஆக்கிரமித்துக் கொண்டு விடுகின்றனவென்பது காலங் கடந்த உண்மை.
பெலொப்பொனேசிய யுத்தத்திற்குப் பிறகு ஜனங்களிடத்தில் பொதுநல உணர்ச்சி குன்றியது; தன்னல உணர்ச்சி வளர்ந்தது; வளர்ந்து, வாழ்க்கையின் பல துறைகளிலும் படிந்தது. முந்தியிருந்த குடும்பப் பொறுப்பு, குடும்பக் கட்டுப்பாடு முதலியனவெல்லாம் காற்றாய்ப் பறந்தன. தான் மட்டும் சுகமாக வாழ வேண்டும், சந் தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும் பாலோரிடத்தில் மேலோங்கி நின்றது. இதனால் விவகாரத்திற் கேற் பட்டிருந்த ஒரு புனிதத் தன்மை மங்கிவிட்டது. ஒருவன் ஒருத்தி யோடு வாழ்தலென்பது, காலத்திற் கொவ்வாத நியதியாகக் கருதப் பட்டது. அதற்கு மாறாக, ஒருவன் தனக்கிஷ்ட மானபோது, இஷ்ட மான ஸ்திரீயுடன் தொடர்பு கொள்ளலாமென்றேற்பட்டது. இப்படித் தொடர்பு வைத்துக் கொள்வதில் எவ்வித கௌரவக் குறைவுமில்லை யென்று எல்லோரும் சர்வ சாதாணமாகக் கருதினர். படித்தவர்களென்று புகழ் பெற்றவர்கள் கூட இப்படி நடந்து வந்தனர். விலை மாதருக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டதில் என்ன ஆச்சரியம்?
இல்லறத்தின் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாமல் இல்லறத்தின் சுகங்களை மட்டும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் எப்பொழுது ஏற்பட்டதோ அப்பொழுதே பிரஜா வுற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் தோன்றி விட்டது. வமிச விருத்திக்காகவோ, சொத்து சுதந்திரங்களை அனுப விக்கவோ ஓரிரண்டு குழந்தைகள் மட்டும் இருந்தால் போதுமென்ற மனப்பான்மையே அனைவரிடத்திலும் குடிகொண்டது. பலர், சந்தான மற்றிருப்பதையே சிறப்பாகக் கருதினர்; இதற்கான சில முறைகளையும் கையாண்டனர்.
இதன் விளைவு என்ன? ஜனத்தொகை வரவரச் சுருங்கிக் கொண்டு வந்தது. உதாரணமாக, பெலொப்பொனேசிய யுத்தம் தொடங்கிய 431-ஆம் வருஷத்தில் ஆத்தென்ஸில் கிரேக்கப் பிரஜை களின் எண்ணிக்கை 43,000 ஆக இருந்தது, ஏறக்குறைய 315-ஆம் வருஷத்தில் 21,000 ஆகக் குறைந்துவிட்டது. ராஜ்யத்தின் ஆள் பலத்தில் பாதி போய்விட்டது.
ஸ்ப்பார்ட்டாவில் இன்னும் மோசம். அங்கு, முப்பது வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் - ஆண் மக்கள் - ஏறத்தாழ 480-ஆம் வருஷத்தில் 8,000 பேருக்கு மேலிருந்தனர். ஆனால் அடுத்த நூற்றாண்டில், உத்தேசமாக 370-ஆம் வருஷத்தில் 700 பேர்தான் இருந்தனர். இப்படி ஒவ்வொரு ராஜ்யத்திலும் பிரஜைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது.
ஒரு ராஜ்யத்துப் பிரஜைகளின் எண்ணிக்கை எவ்வளவுக் கெவ்வளவு குறைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அந்த ராஜ்யத்தின் தற்காத்துக் கொள்ளுஞ் சக்தியும் குறைகிறது. பிரஜைகளல்லாத மற்றவர்கள் எத்தனை பேர் இருந்தால் தான் என்ன? அவர்களின் எண்ணிக்கை, கூடுவதனால் ராஜ்யத்திற்கு அதிக சாதகம் உண்டா காது; குறைவதனால் அதிக பாதகமும் உண்டாகாது. பிரஜா உரிமை படைத்தவர்கள்தான், ராஜ்யத்திற்கு நலந்தரும் கடமைகளைச் செய்துகொண்டு போகக்கூடியவர்கள். இவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருமானால், ராஜ்யத்தின் சுதந்தி ரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடுகிறது; சமுதாயத்தின் கட்டுக்கோப்பு தளர்ந்து போய் விடுகிறது. இப்படிப்பட்ட நிலைமையே, கிரீஸில் நான்காவது நூற்றாண்டில் ஏற்பட்டது.
எந்தச் சமுதாயத்தில், தன்னலத்திற்குப் பரநலம் அடிமையாகி விடுகிறதோ, அந்தச் சமுதாயத்தில் பொதுமை உணர்ச்சி குன்றி ஒருமை உணர்ச்சி அல்லது தன்மை உணர்ச்சி வளர்கிறது. சமுதாயப் பொதுவைக் காட்டிலும், தனி மனிதனே முக்கியத்துவம் பெறுகிறான்; சமுதாய வாழ்வைக் காட்டிலும் தனி மனிதனுடைய வாழ்வே முக்கியத் துவம் பெற்றதாகிறது. இந்த நிலையில் தோன்றுகின்ற கலை, இலக்கியம் முதலியன, சமுதாயம் வளர வேண்டும், அந்த வாழ்வு நல் வாழ்வாயிருக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொள்ளாமல், தனிப்பட்ட மனிதர்களைத் திருப்தி செய்ய வேண்டு மென்பதையே நோக்கமாகக் கொண்டு விடுகின்றன. கலை நிபுணர் களென்றும், இலக்கியக் கர்த்தர்களென்றும் சொல்லிக் கொள்வோர், சமுதாயப் பொதுவின் பிரதிநிதிகளாயிராமல், அந்தச் சமுதாயத்தின் உணர்ச்சி களைப் பிரதிபலித்துக்காட்டாமல், செல்வமோ செல்வாக்கோ படைத்த ஒரு சிலருடைய ஆசாபாசங்களின், இன்ப துன்பங்களின் எதிரொலியாய் இருந்துகொண்டிருப்பதிலே மகிழ்ச்சியடைகிறார்கள். நான்காது நூற்றாண்டில் தோன்றிய, அதிலும் அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கலை, இலக்கியம் முதலிய வற்றில் பெரும் பாலான, மேலே சொன்ன தன்மைகளைப் பிரதிபலித்துக் கொண்டி ருந்தன. எப்படியென்று பார்ப்போம்.
மகான் ஸாக்ரட்டீஸ் மரணத்தை ஓர் எல்லைக் கோடாக வைத்துக் கொண்டு பார்க்கிற பொழுது, அதற்கு முந்தி வரை, சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் தெய்விக சம்பந்தமுடையனவாயிருந்தன. தெய்வ உருவங்களைச் சமைத்தல், கோயில்களை நிர்மாணஞ் செய்தல் போன்ற காரியங்களிலேயே சிற்பிகள், ஓவியர் முதலாயினோர், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அதற்குப் பிறகு, அதாவது நான்காவது நூற்றாண்டில், மேற்படி கலைகள் சாதாரண மனித நிலைக்கு இறங்கிவிட்டன. சிற்பிகளும் ஓவியர்களும், தனிப்பட்ட மனிதர்களுடைய, அதிலும் பணம் படைத்தவர்களுடைய வீடுகளை விரிவுபடுத்துவதிலும் அழகு படுத்து வதிலும், அப்படியே தனி மனிதர்களுடைய உருவங்களைச் சமைப்பதிலும், தங்கள் திறமைகளைச் செலவழித்தார்கள். எங்கே அதிகமாகப் பணங் கிடைக்கிறதோ அங்கே இவர்களுடைய கலைத்திறன் அதிகமாகப் புலப்பட்டது. பணத்திற்காகக் கலையென்கிறபோது, கலையின் லட்சணங்களும் மாறிவிடுகின்றன. பணத்தைக் கொடுக்கிறவர் களுடைய ருசிக்குத் தகுந்தபடியான கலையைச் சமைக்க வேண்டி யிருக்கிறது?
ஐந்தாவது நூற்றாண்டில், அமங்கல முடிவைக் கொண்ட நாடகங்களே செல்வாக்குப் பெற்றிருந்தன. நான்காவது நூற் றாண்டில், மங்கல முடிவைக் கொண்ட நாடகங்களையே ஜனங்கள் பெரிதும் விரும்பினார்கள். இதனால் ஜனங்கள், துன்பத்தைச் சகிக்கத் தயாராயில்லையென்பதும், இன்பத்தை அனுபவிக்க விழைந்தார்க ளென்பதும் ஒருவாறு புலனாகின்றன. இந்த மங்கல முடிவைக் கொண்ட நாடகங்களும், பெரும்பாலும் தனி மனிதனு டைய வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டின. இவற்றின் சம் பாஷணைகளும் அந்தந்தப் பாத்திரங்களுக் கேற்றனவா யில்லாமல், நாவலர்கள் பேசுகின்ற மாதிரி இருந்தன. இந்தக் காலத்தில், நாவன்மை படைத்த ஸோபிஸ்ட்டுகளின் செல்வாக்கு நாடக மேடைகளிலும் ஆதிக்கங் கொண்டிருந்ததென்று சொல்வது மிகையாகாது.
மற்றும் இந்தக் காலத்தில், கவிதைகளுக்குப் பதில் வசனத்திற்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டது. இலக்கிய கர்த்தர்கள், தங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்ளையும் உரைநடை மூலமாகவே வெளியிட்டுத் திருப்தி கண்டார்கள். பள்ளிக்கூடங்களில் முந்தி ஹோமரின் காவியங்கள மனப்பாடஞ் செய்விக்கப்பட்டன; இப்பொழுதோ நன்றாகப் பேசக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இசைப் போட்டிகள் நடைபெற்றது போய் பேச்சுப் போட்டிகள் நடை பெற்றன. கவிஞர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்; உரைநடை ஆசிரியர்கள் போற்றப்பட்டார்கள். நான்காவது நூற்றாண்டின் பிரபல வசன நூலாசிரியனான பிளேட்டோ, தனது அரசியல் (அரசியல், பத்தாவது புத்தகம்) என்னும் நூலில், கவிஞர்களை ஒழுங்கானதொரு ராஜ்யத்தில் அனுமதிக்ககூடாதென்று சொல்கிறா னென்றால், அவன், தன் காலத்தில் நிலவி வந்த கருத்தினையே பிரஸ்தாபிக்கிறா னென்று நாம் கொள்ளலாம்.
புதிதாக வெளிவந்த நூல்களில் பெரும்பாலான பெரிய மனிதர் களென்று கருதப்பட்ட சென்ற காலத்தவருடையவும் நிகழ்காலத் தவருடையவும் ஜீவிய சரிதங்களாயிருந்தன. இன்னும், நாவன்மையை வளர்த்துக் கொள்வதற்குத் துணை செய்கின்ற நூல்களும், தத்துவ ஞான சம்பந்தமான நூல்களும் வெளியாயின.
இன்னும் நான்காவது நூற்றாண்டில், ஸோபிஸ்ட்டுக ளினுடைய பிரசாரத்தின் பயனாகவோ என்னவோ, படித்தவர்க ளென்று அழைக்கப் பட்டவர்களிடையே மதப்பற்று குறைந்து கொண்டு வந்தது. மதத்தின் பெயரால் ஏற்பட்டிருந்த சில வாழ்க்கை நியதிகளை, அனாவசியமான தளைகளென்று கருதி உதறித் தள்ளி கொண்டு வந்தார்கள். பணம் படைத்தவர்களோ, பணத்தைச் செலவழித்துத் தெய்வங்களைத் திருப்தி செய்யப் பார்த்தார்கள்; தெய்வ பக்தியுடையவர்களாகக் காட்டிக் கொண்டார்கள். இதன் மூலம், தங்களுடைய ஒழுக்கவீனங்களையும் சுயநல எண்ணங் களையும் மறைத்துக் கொண்டார்கள். பாமர ஜனங்களென்று அழைக்கப்பட்டவர்களோ, பழைய நம்பிக்கைகளில் அப்படியே மூழ்கிக் கிடந்தார்கள். புராணக் கதைகள் முதலியவற்றை எழுத்துப் பிசகாமல் நம்பினார்கள். பொதுவாக, சமுதாயத்தின் பல சாராரி டையிலும், தன்னம்பிக்கை குன்றிக் கொண்டு வந்தது; ஒழுக்கம் ஒளிந்து வாழ்ந்தது; ஆழ்ந்த சிந்தனை, தீர்க்க திருஷ்டி இரண்டும் மங்கிக் கொண்டு வந்தன. இத்தகைய சூழ்நிலையில் சுதந்திரம் எப்படிக் குடிகொண்டிருக்கும்? விடைபெற்றுக் கொண்டு விட்டது, நான்காவது நூற்றாண்டின் பிற்பகுதியில்.
2. ஹெல்லெனீய யுகம்
மகா அலெக்ஸாந்தரின் மரணத்தோடு கிரீஸின் சுதந்திரமும் முற்றுப் பெற்றுவிட்டது. ஏன்? அவன் மரணத்திற்குச் சரியாகப் பதினைந்து வருஷங் களுக்கு முந்தியே 338-ஆம் வருஷத்தில் கெரொனீயா போர்க்களத்திலேயே, கிரீஸின் சுதந்திரம் முற்றுப் பெறும் நிலைமையை யடைந்துவிட்டது. இதற்குப் பிறகு, அது கிரீஸ் - படிப்படியாகத் தன் தனித்துவத்திலிருந்து இழிந்துவந்து, கடைசியில் ரோம ஏகாதிபத்தியத்திற்குள் ஒடுங்கிவிட்டது. எப்படி மெதுமெதுவாக, போராடிப் பேராடித் தனித்தியங்கும் நிலையை யடைந்ததோ அப்படியே மெதுமெதுவாக, போராடிப் பேராடி அந்த நிலையினின்று இறங்கியது. இப்படி இறங்கிவந்து ரோம ஏகாதிபத்தியத்திற்குள் ஐக்கியமாவதற்குச் சுமார் ஒன்றே முக்கால் நூற்றாண்டு பிடித்தது. மகா அலெக்ஸாந்தர் மரித்தது 323-ஆம் வருஷம். கிரீஸ், ரோம ஏகாதிபத்தியத்தின் ஒரு மாகாணமாகியது 146-ஆம் வருஷம். நூற்றெழுபத்தைந்து வருஷங்களுக்கு மேலாக வில்லையா? இப்படிக் கிரீஸ், ரோம ஏகாதிபத்தியத்தின் ஒரு மகாணமாகியபோது அதன் பெயர் கூட மாற்றப்பட்டு விட்டது; அக்கீயா என்ற பெயராலேயே திரும்பவும் அழைக்கப்பட்டது. சுதந்திரம் போனால் உருவமும் குலைந்து பெயரும் மாறிவிடுகிறது.
பிலிப் மன்னன் காட்டிப்போந்த வழியைப் பின்பற்றி அலெக் ஸாந்தர், கிரீஸிலுள்ள நகர ராஜ்யங்களனைத்தையும் ஒன்றுசேர்த்து வைத்தான். ஆனால் அவற்றின் சுதந்திரத்தை வெகு நாசூக்காகப் பறிமுதல் செய்துவிட்டான். அவன் காலத்தில் கானல் நீர்போன்ற ஒற்றுமையைப் பெற்றது கிரீஸ். ஆனால் ஊற்றுநீர் போன்ற சுதந் திரத்தை இழந்துவிட்டது. அதுகாறும் கிரேக்கர்கள், தங்களுக்குள் எவ்வளவு பகைமையும் பொறாமையும் இருந்த போதிலும், தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் பேறு பெற்றிருந்தார்கள்; அலெக்ஸாந்தர் காலத்தில் அந்தப் பேற்றை இழந்து விட்டார்கள். சுதந்திரக் குடியரசுகளாக தலைநிமிர்ந்து வாழ்ந்து வந்த நகர ராஜ்யங்கள், முடியரசைத் தலைகுனிந்து ஏற்றுக் கொண்டன. அப்பொழுதிருந்து, அதாவது அலெக்ஸாந்தர் காலத்தி லிருந்து கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டின் கடைசியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி வரை, ஐரோப்பாவில் முடியரசே ஆக்கம் பெற்றிருந்தது. ஐரோப்பாவைப் பொறுத்த மட்டில், மன்னர்கள், தெய்வத் தன்மை படைத்தவர்கள் என்ற கொள்கைக்குப் புத்துயிர் கொடுத்தவன் அலெக்ஸாந்தர் என்று சொல்லலாம்.
அலெக்ஸாந்தர், பாரசீகத்தின் மீது படையெடுத்துச் சென்ற தன் அடிப்படையான நோக்கம் என்ன? முந்தின நூற்றாண்டில், பாரசீகம், கிரீஸ் மீது படையெடுத்து வந்ததல்லவா, அதற்காக அதனைப் பழிவாங்க வேண்டு மென்பதுதான். இந்த நோக்கம் பிலிப் மன்ன னுக்கும் இருந்ததென்பது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கும். ஆனால் அவன் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்பே எதிர்பாராத விதமாக இறந்துவிட்டான். அலெக்ஸாந்தர் இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டான். பாரசீகத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டு, அங்குக் கிரேக்க ஆதிக்கத்தை நிறுவினான்; பகை தீர்த்துக் கொண்டான். ஆனால் அதே சமயத்தில் கிரீஸின் சுதந்திரத்திற்கும் முடிவு கட்டிவிட்டான். எப்படியோ பாரசீகத்தின் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கிரீஸ், தன் சுதந்திரத்தையே போக்கடித்துக் கொண்டுவிட்டது. யார் பழி வாங்க முற்படுகிறார்களோ அவர்களே இறுதியில் பழிவாங்கப்படுகிறார்கள். பகைமை பகைமையே வளர்த்துக் கடைசியில், தான் பிறந்த இடத்தையே அழித்துவிடுகிறது.
அலெக்ஸாந்தர், கிரீஸின் எல்லையை விஸ்தரித்தான்; அதன் புகழைப் பரப்பினான்; வாஸ்தவம். ஆனால் அதன் ஒடுக்கத்திற்கும் அவனே காரணமா யிருந்தான். அலெக்ஸாந்தரைப் பற்றின பாரபட்ச மற்ற தீர்ப்பு இதுதான். இஃதொரு புறமிருக்கட்டும்.
அலெக்ஸாந்தரின் காலத்தோடு கிரீஸின் சுதந்திரம் முற்றுப் பெற்றுவிட்டதாயினும் அதன் நாகரிகம் முற்றுப் பெறவில்லை. அதற்கு மாறாக அவனுடைய மரணத்திற்குப் பிறகு அது - கிரேக்க நாகரிகம் - ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங் களிலும் விரிந்து பரந்தது; மெருகிட்ட மேனி போல் பிரகாசிக்கவும் செய்தது. சுதந்திரத்தை இழந்துவிட்ட பிறகுகூட, கிரீஸின் தனித் துவம், மேலே சென்ன சுமார் நூற்றெழுபத்தைந்து வருஷ காலம் வரை அழிந்து படாமலிருந்ததற்கு, அதனுடைய நாகரிகத்தின் அழியாத்தன்மைதான் காரணம். அழியாத வித்தல்லவோ அது?
கிரீஸை, தன்னுடைய அரசியல் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்ட ரோமாபுரி கூட, அதனுடைய நாகரிகத்தின், அதாவது கிரேக்க நாகரிகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டதென்று சொன்னால், அந்த நாகரிகத்தின் செழுமையை என்னவென்று சொல்வது? உண்மையில் கிரேக்க நாகரிகம் ரோமாபுரியில் புகுந்து ஓரளவு ஆதிக்கம் பெற்ற பிறகுதான், கிரீஸை, ரோமாபுரி, தன் அரசியல் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டது. ரோமர்கள் கிரேக்கர்களின் அறிவிலே எப்படி ஈடுபட்டார்களென்பதற்கு ஒரு சிறிய உதார ணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
155ஆம் வருஷம்; அதாவது, கிரீஸ் ரோம ஏகாதிபத்தியத்தின் ஒரு மாகாணமாவதற்கு ஒன்பது வருஷங்களுக்கு முந்தி, பியோஷ்யா பிரதேசத்திலுள்ள ஓரோப்பஸ் என்ற ஊரை ஆத்தென்ஸ் அழித்து விட்டதென்று சொல்லி, அதற்கு ஐந்நூறு டாலெண்ட்டுகள் அபராதம் விதித்தது ரோம அரசாங்கம். இந்த அபராதத்தை ரத்து செய்து விடுமாறு விண்ணப்பித்துக் கொள்ள, ஆத்தென்ஸிலிருந்து மூன்று பேரடங்கிய ஒரு தூது கோஷ்டி ரோமாபுரிக்குச் சென்றது. இந்த மூன்று பேரும் சிறந்த தத்துவ சாஸ்திரிகள். இவர்களில் ஒருவன் கார்னீயாடீஸ் (இவனுடைய உத்தேச காலம் 214-129. இவன் ஆத்தென்ஸில் மூன்றாவது அக்காடமி என்று அழைக்கப் பெற்ற புதிய கல்விக் கழகமொன்றை ஸ்துhபித்து நடத்திப் புகழ் பெற்றான். இவன் கடைசி காலத்தில் பார்வையிழந்து கஷ்டப்பட்டான்). இம்மூவரும், ரோமாபுரிக்குச் சென்றதும், அங்கிருந்த இளைஞர்கள், இவர்களுடைய வாக்கு வன்மையிலும் அறிவு விசேஷத்திலும் ஈடுபட்டார்கள். சிறப்பாக, கார்னீயாடீஸ் என்பவனிடத்தில் அதிகம் ஈடுபட்டார்கள். இவனை, அறிவே உருவெடுத்து வந்தவனென்றும் தன்னுடைய உபதேசங் களினால் கேட்பவர்களுடைய மன மாசுக் களையெல்லாம் அகற்றக்கூடிய வனென்றும் போற்றிப்புகழ்ந்தார்கள். தங்களுடைய சர்வத்தையும் துறந்துவிட்டு இவனுடைய சிஷ்யர் களாகிவிடத் துணிவு கொண்டார்கள். இப்படி இளைஞர்கள் மட்டுமல்ல; ரோமாபுரியிலிருந்த பெரிய மனிதர்களெல்லோருமே இவனுடைய பிரசங்கங்களைச் செவிமடுக்கத் திரண்டு சென்றார்கள். இவனது பிரசங்கங்கள், லத்தீன் பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு, புத்தக வடிவில் எல்லோர் கையிலும் திகழ்ந்தன. பெரிய குடும்பத்துப் பிள்ளைகள், கிரேக்க காவியங்களையும் மற்ற இலக்கியங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டுமென்று ஆவல் கொண்டார்கள். இங்ஙனம் ரோமாபுரி முழுவதும், இந்த மூன்று கிரேக்க அறிஞர் களுடைய திறமையிலே, இவர்கள் மூலமாகக் கிரேக்க நாகரிகத்தின் பெருமையிலே ஈடுபட்டு நின்ற போதிலும், ஒருவன் மட்டும், இப்படி ஈடுபடுதல் கூடாதென்றும், இதனால் பிற்காலத்தில் ஆபத்து ஏற்படக்கூடுமென்றும் எச்சரிக்கை செய்து வந்தான். இவன்தான் காட்டோ (இவனை மூத்த காட்டோ என்று அழைப்பர். இவன் உத்தேச காலம் : 234-149) என்பவன். இவன், ஜனங்கள் எப்பொழுது நுண்கலைகளில் ஈடுபடத் தொடங்கி விடுகிறார்களோ அப்பொழுதே அவர்களுடைய புயவலியும் படையூக்கமும் குன்றி விடுகின்றன வென்றும், நாளாவட்டத்தில் அவர்கள், செயலைத் துறந்து விட்டு பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவதில் மகிழ்ச்சியடைவார் களென்றும் கூறினான். இவன் கூறியது, ரோமர்களைப் பொறுத்த மட்டில் சிறிது காலந் தாழ்த்துப்பலித்தது. ஆனால் கிரேக்கர்களைப் பொறுத்தமட்டில் உடனே பலித்தது.
இஃது இருக்கட்டும். மேற்சொன்ன மூவரடங்கிய தூது கோஷ்டி வந்ததன் நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறியதென்று தெரிந்து கொள்ள வாசகர்கள் ஆவல் கொள்ளலாம். அபராதத் தொகை, ஐந்நூறு டாலெண்ட்டுகளிலிருந்து நூறு டாலெண்டு களுக்குக் குறைக்கப்பட்டது.
ரோமாபுரி மட்டுமா, பிரான்ஸ் என்ன, எகிப்து என்ன, மத்திய ஆசியப் பிரதேசங்களென்ன, இப்படிப் பல நாடுகளிலும் கிரேக்க நாகரிகம் புகுந்து படிந்தது. ஆனால் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக அல்ல. ஆசியா கண்டத்திலும் ஆப்ரிக்கா கண்டத் திலும் மேலெழுந்தவாரியாகத்தான் படிந்தது; உள்ளூரச் சென்று பதியவில்லை; சாசுவதமாக நிலைகொள்ளவுமில்லை. அந்த இரண்டு கண்டங்களின் சிறப்பாக ஆசியா கண்டத்தின் பரம்பரை நாகரிகத் தையும் அரசியல் சமுதாய வாழ்க்கையும் சிறிது அசைத்துக் கொடுத்ததே தவிர, அவைகளை அடியோடு மாற்றி, தன்வசப்படுத்திக் கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக, அவற்றின் நாகரிகம் முதலியவற்றோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டது.
ஐரோப்பா கண்டத்தைப் பொறுத்தமட்டில், கிரேக்க நாகரிகம் ஓரளவு ஆதிக்கம் கொண்டதென்றே சொல்ல வேண்டும். கி.மு. ஏழாவது நூற்றாண்டில் கிரேக்கர் பலர், சிஸிலி தீவிலும், இத்தலியின் தென்பகுதிகளிலும் பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதிகளிலும் சென்று குடியேறி அநேக குடியேற்றப் பிரதேசங்களை ஸ்தாபித்தார்களல்லவா, அப்பொழுதே இந்த ஆதிக்கத்திற்கு அடி கோலப்பட்டதென்பதை வாசகர்கள் மறந்துவிடக்கூடாது. காலக் கிராமத்தில் இந்தக் கிரேக்க நாகரிகம், இத்தலியின் பூர்வ குடி களிடத்திலும், ஐரோப்பாவின் மற்றப் பகுதிகளில் வசித்த ஜனங்களிடத் திலும் சென்று பரவி அவர்களைப் பல வழிகளிலும் சீர்திருத்தியது. அவர்களும், தங்களுடைய அரசியல் ஸ்தாபனங்களையும் சமுதாய ஸ்தாபனங்களையும் பெரும்பாலும் கிரேக்க மாதிரியிலேயே அமைத்துக் கொண்டார்கள். பொதுவாக, ஐரோப்பா, கிரேக்க நாரிகத்தைப் பின்பற்றியே முன்னேற்ற மடைந்தது.
இங்ஙனம் ஐரோப்பாவை முன்னேற்றுவித்த கிரேக்க நாகரிகம், அந்த ஐரோப்பாவில் கூடத் தனித்து நிற்கவில்லை; ரோம நாகரிக மாகவே பரிணமித்தது. ரோம சாம்ராஜ்யம் வலுப்பெற வலுப்பெற கிரேக்கக் நாகரிகத்தின் தனிப்பட்ட தன்மை குன்றிக் கொண்டு வந்து, கடைசியில் ரோம நாகரிகமாகவே உருப்பெற்றது.
ஆக, கிரேக்க நாகரிகம் எங்குச் சென்று பரவிய போதிலும், தன்னுடைய தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டு நீடித்து வாழவில்லை; வேறொன்றோடு கலந்தோ, அல்லது வேறொன்றோடு உருக்கொண்டேதான் வாழ்ந்தது. இப்படி வேறொன்றோடு கலந்த தனாலும் வேறொன்றாக உருக்கொண்டதினாலும் அதனுடைய பெருமை குன்றிவிடவில்லை. ஆயினும், அதனுடைய தனித்தன்மை குன்றிப்போய் இறுதியாக மறைந்துவிட்டதென்பதை யாரே மறுக்க முடியும்? இவ்வாறு அது தனது தனித்துவத்தை இழந்துவிட்டதற்குக் காரணம் என்ன?
சுதந்திரமான ஒரு சூழ்நிலையிலிருந்துதான் நாகரிகம் பிறக்கிறது. அப்படிப் பிறக்கிற நாகரிகம் வளர்ச்சியடைவதற்கும், நீடித்து வாழ்வதற்கும், அந்தச் சுதந்திரச் சூழ்நிலை எப்பொழுதும் இருந்து கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. எந்தக் கணத்தில் அந்தச் சுதந்தரச் சூழ்நிலை சூனியமாகிவிடு கிறதோ அந்தக் கணத்திலேயே நாகரிகமானது, தன் பசுமையை இழந்துவிடுகிறது; உலர ஆரம்பிக்கிறது. சிறிது காலம் வரையில், அதாவது நன்றாக உலர்ந்து பட்டுப்போகிற வரையில், அதாவது நன்றாக உலர்ந்து பட்டுப்போகிற வரையில் - அதிலிருந்து, அந்த நாகரிகத்திலிருந்து - பூவும் பிஞ்சுமாகச் சில உண்டாகலாம். ஆனால் அவை விரை விலேயே கருகிவிடும். மற்றும், சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டிராத அந்த நாகரிகம், தனித்து வாழ முடிவதில்லை; ஏதோ ஒன்றுடன் ஒட்டிக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது; அல்லது அதனுடைய வித்து நல்ல வித்தாக, அழுகிப் போகாத வித்தாக இருக்கும் பட்சத்தில், அதாவது அதனுடைய சென்ற கால சிருஷ் டிகள் - கலை, இலக்கியம் முதலியன அமரத் தன்மையுடையன வாயிருக்கும் பட்சத்தில் - அதிலிருந்து வேறொன்று வேறொரு நாகரிகம் - உற்பத்தியாகிறது. முந்தின சிருஷ்டிகளின் வழித் தோன்றல்களாகப் பல புதிய சிருஷ்டிகள், கலை, இலக்கியம் முதலிய துறைகளில் உண்டாகின்றன. ஆக, அசலாயிருந்த நாகரிகம் - தனது அசல் தன்மையை இழந்து விடுகிறது. இது பொது நியதி.
அலெக்ஸாந்தருக்கு முந்தி வரையில், கிரீஸ் சுதந்திரத்துடனி ருந்தது. அதனால் அதன் நாகரிகம், வளம் பொருந்தியதாகவும் வலிமையுடையதாகவும் இருந்தது. அது சென்று பரவிய இடங்களில் சிறப்புப் பெற்றது. அலெக்ஸாந்தருக்குப் பிறகு கிரீஸ் சுதந்திரத்தை இழந்துவிட்டது. எனவே அது, வளங்குன்றி வலிமையற்றதாகி விட்டது. சுதந்திரத்தின் பின் பலமில்லாத ஒரு ஒரு நாகரிகம், எவ்வளவு புராதனப் பெருமையுடையதாயிருந்த போதிலும், வேரற்ற மரம் போன்றதுதான். கிரேக்க நாகரிக வித்து நல்ல வித்தாயிருந்த படியால், அழுகிப் போகாத வித்தாயிருந்தபடியால், அலெக்ஸாந் தருக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் வரையில், தன்வசமிழந்த மனிதனைப்போல் சிறிது பரபரப்புக் காட்டிவிட்டுப் பிறகு வேறொரு நாகரிகமாகப் பரிணமித்தது.
தவிர, கிரீஸ், சுதந்திரமாயிருந்த காலத்தில், அதனுடைய நாகரிகம் ஐரோப்பா கண்டத்திலேயே அதிகமாகப் பரவியது; ஆசியாவிலும் எகிப்திலும் அவ்வளவாகப் பரவவில்லை. தனிப் பட்ட ஒரு சிலர் போய் வந்து கொண்டிருந்ததன். பயனாகச் சில தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இந்தத் தொடர்புகளும் ஒரு தலைப் பட்சமாகவே இருந்தவென்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தக் காலத்தில், கிரீஸ், நாகரிகத் துறையைப் பொறுத்தமட்டில் ஆசியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் பெற்றுக்கொண்டது அதிகம்; அவைகளுக்குக் கொடுத்தது கொஞ்சம்; மிகக் கொஞ்சம். அலெக் ஸாந்தருக்குப் பின்னர்தான். அதாவது, கிரீஸ் சுதந்திரத்தை இழந்து விட்ட நிலையில்தான், அதனுடைய நாகரிகம், ஆசியாவிலும் எகிப் திலும் தீவிரமாகப் பரவியது; அதுவும் படைபலத்தின் துணை கொண்டு.
எனவே, முந்திய நிலையிலிருந்து அதாவது சுதந்திரச் சூழ்நிலை யிலிருந்து பரவியதன் விளைவாக ஐரோப்பாவில் அது - கிரேக்க நாகரிகம் - வேறொரு நாகரிகமாக - ரோம நாகரிகமாக - உருக் கொண்ட போதிலும் மறைந்தேனும் உயிர்வாழ்ந்து கொண்டி ருந்தது. பிந்தி, சுதந்திர அடிப்படையற்றுப்போன நிலையிலிருந்து பரவியதன் காரணமாக, ஆசியாவிலும் எகிப்திலும், மேற் பரப்பளவில் சில அசைவுகளை உண்டுபண்ணியதோடு நின்றுவிட்டது. தன் வசமிழந்த ஒரு மனிதன், எப்படிச் சில சமங்களில், தன் பழைய நினைவுகளி லிருந்து பேசுகிறானோ, அப்படிப் பேசுவதும் எப்படிப் படபடப்புடன் கூடியதாயிருக்கிறதோ, அப்படிப் பேசி முடிந்தபிறகு அவன் முன்னைக் காட்டிலும் எப்படி அதிகமான சோர்வை யடைந்து விடுகிறானோ அப்படிப் போல, அலெக்ஸாந்தருக்குப் பிற்காலத்தில், கிரேக்க நாகரிகம், ஆசியாவிலும் எகிப்திலும் பரபரப்புக் காட்டியது. இந்தப் பரபரப்பினால் சிறிது பிரசாசமும் ஏற்பட்டது. இந்தப் பிரகாசத்தில் மயங்கி நின்றவரும் உண்டு. ஹெல்லாஸ் என்றால் என்ன பிரமை! ஹெல்லெனீயர்களிடத்தில் என்ன மோகம்! புதிய யுகம் பிறந்து விட்டதாக என்ன பூரிப்பு! அலெக்ஸாந்தருக்குப் பிந்திய இந்தக் காலத்திற்கு ‘ஹெல்லெனீய யுகம்’ என்றே பெயர் கொடுத் திருக்கிறார்கள் சரித்திராசிரியர்கள்.
இந்த ஹெல்லெனீய யுகத்தில் காணப்பட்ட சில தோற்றங் களையும் மாற்றங்களையும் இங்குச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறோம்.
உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தமட்டில், கிரீஸ், ஒரே குழப்பமாயிருந்தது. கிரேக்கர்களுக்குள்ளேயே பரஸ்பர பொறா மையும் பகைமையும் முற்றிக் கொண்டு வந்தன. தான்றோன்றித் தலைவர் பலர் தோன்றி அதிகார பீடத்தைக் கைப்பற்றிக் கொள்வ தற்குப் போட்டி போட்டார்கள். சுருக்கமாக, இந்தக் காலத்தில், கிரீஸில் பலாத்கார சக்தி செல்வாக்குப் பெற்று நின்றது.
ஆனால் வெளிநாடுகளிலோ, கிரீஸ் என்றால் ஒரே உற்சாகம்! கிரீஸிலிருந்து வந்த எதற்கும் ஒரு மதிப்பு! இந்த உற்சாகமும் மதிப்பும், ஏற்கனவே சொன்னபடி ஆசியாவிலும் எகிப்திலும்தான் மிகுதியாகக் காணப்பட்டன. எந்த ஆத்தென்ஸை நல்லதனப் படுத்திக் கொண்டு அதன் மூலமாகக் கிரீஸின் படை பலத்தையும் கலை வளத்தையும் கீழ்நாட்டில் புகுத்த வேண்டுமென்று பிலிப் மன்னனும் அலெக்ஸாந்தரும் முறையே முயன்றார்களோ அந்த ஆத்தென்ஸ் இப்பொழுது க்ஷீணித்துக்கொண்டு வந்தது. மேற்குப் பக்கத்திலிருந்த கிரேக்கக் குடியேற்றப் பிரதேசங்கள் சீரழிந்து கொண்டு வந்தன. ஆனால் கீழ்நாட்டிலும் எகிப்திலும் கிரேக்கர்கள் குடியேறியிருந்த பிரதேசங்கள், லௌகிக சித்திகளிலும் கலைத் துறைகளிலும் மேலோங்கி நின்றன.
ஆத்தென்ஸில் ஆத்தீனியர்கள் அந்நியர்கள் போலிருந்தார்கள். ஆனால் அந்நியர்களோ ஆத்தென்ஸில் வந்து தங்கி சுகமாக வாழ்ந்துவிட்டுப் போனார்கள். போகிறபோது, ஆத்தென்ஸில் பொருட் செல்வத்தையும் கலைச் செல்வத்தையும் எடுத்துக் கொண்டு போனார்கள். உரிமையிழந்தவர்கள் உடைமைகளையும் இழந்து விடுகிறார்களென்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
அலெக்ஸாந்தர் கீழ்நாட்டை நோக்கிப் படையெடுத்துச் சென்றதன் விளைவாகக் கிரீஸுக்கும் கீழ்நாடுகளுக்கும் வியாபாரப் போக்குவரவு முன்னைக் காட்டிலும் அதிகமாகியது; அந்நிய நாட்டுப் பொருள்கள் கிரீஸில் ஏராளமாக வந்து குவிந்தன. இவைகளை மொத்த மாக வாங்கிச் சில்லரையாக விற்போரின் எண்ணிக்கையும் பெருகியது. பணப்புழக்கமும் சரளமாயிருந்தது. இதனால் ஏழை ஜனங்களின் வாழ்க்கைத் தரம் சிறிது உயர்ந்த தென்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த உயர்வு நீடித்திருக்கவில்லை.
உலக விவகாரங்களை ஓரளவு அறிந்து கொண்டிருந்த பிரதி யொரு கிரேக்கனும், தன்னை ஓர் உலகப் பிரஜையாகக் கருதிக் கொண்டிருந்தான். கிரீஸை விட்டு வெளியே எங்கு வேண்டுமானாலும் செல்ல அவனுக்கு வாய்ப்புக்களும் வசதிகளும் இருந்தன. எந்தப் பொருள் வேண்டுமானாலும் அஃது அவனுக்கு அவனிருக்கு மிடத்திலேயே கிடைத்துக் கொண்டிருந்தது. இவையே, அவன் தன்னை உலகப் பிரஜையாகக் கருதிக் கொண்டிருந்ததற்கு ஆதாரங் களாயிருந்தன. ஆனால் இவை, சரியான, போதுமான ஆதாரங் களில்லையென்பதை அவன் தெரிந்துகொள்ளவில்லை. சொந்த நாட்டுப் பிரஜையென்ற எண்ணத்திலிருந்து தான் உலகப் பிரஜை யென்ற எண்ணம் வளர வேண்டும். அதுதான் நியாயமான வளர்ச்சி. அப்படி வளர்வதற்குத்தான் அர்த்தமுண்டு; பெருமையுமண்டு. தாய்நாட்டின் மீது பற்றுக் கொள்ளாதவன் உலகத்தினிடம் எப்படிப் பற்றுக் கொள்ள முடியும்? அஸ்திவாரமில்லாமல் கட்டடம் எழும்ப முடியுமா? ஹெல்லெனீய யுகத்துக் கிரேக்கன், தாய்நாட்டுப் பிரஜை யென்ற நிலையிலிருந்து இறங்கி விட்டிருந்தான். ஏனென்றால், அவனுடைய தாய்நாடு - கிரீஸ் - சுதந்திரத்தை இழந்து விட்டிருந்தது. இதனால்தான், தன்னை உலகப் பிரஜையென்று கருதிக்கொண்டு மகிழ்ந்திருந்தான். சொந்த வீடில்லாத சிலர் எல்லா வீடுகளும் தங்களுக்குச் சொந்தமென்று சொல்லிக் கொள்வதில்லையா, அது போல்தான் ஹெல்லெனீய யுகத்துக் கிரேக்கன், உலகப் பிரஜை யென்கின்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தான்.
சுதந்திரமில்லாமற் போனால் ஜனங்கள், எந்த ஒரு விஷயத் திலும் பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்கிறார்கள். எதனையும் ஆழ்ந்து அனுபவிக்கக்கூடிய சக்தி அவர்களிடம் குறைந்து விடுகிறது. சுயமாகச் சிந்திக்கவோ செய்யவோ அவர்களால் முடிவதில்லை. இந்த மாதிரியான தன்மைகள் ஹெல்லெனீய யுகத்துக் கிரேக்கர் களிடத்தில் அதிகமாகக் காணப்பட்டன.
வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் மூலமாக, உலகத்தின் பல பாகங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல், அறிஞர் களிடையே முன்னைக் காட்டிலும் அதிகமாகிக் கொண்டு வந்தது. எதனையும் விஞ்ஞான ரீதியாகப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டார்கள். ஆனால் சாதாரண ஜனங்களென்னவோ, பழைய பழக்கவழக்கங்களிலே! பழைய நம்பிக்கைகளிலே எப்பொழுதும் போல தோய்ந்து தான் கிடந்தார்கள்.
வெளிநாடுகளுக்கு, அதிகமாகக் கீழ் நாடுகளுக்கு, அறிவும் திறமையும் படைத்த கிரேக்கர் பலர் சென்றனர். அங்கு நன்கு வரவேற்கப்பட்டு ஆதரவும் பெற்றனர். அரசவைகளில் ஆஸ்தானி கர்களாக அமர்ந்திருந்தவர்களும் உண்டு. இத்தகையவர்களிலே ஒருவன்தான் மெகாஸ்த்தனீஸ் என்பவன். இவன், இந்தியாவிலே பாடலிபுத்திரத்தை (தற்போதைய பாட்னாவை)த் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்த சந்திரகுப்த மௌரியனுடைய அரசவைக்கு, ஸெல்யூக்கஸ் என்ற சிற்றரசனுடைய தூதனாக வந்து 302-ஆம் வருஷம் முதல் 298-ஆம் வருஷம் வரை நான்கு வருஷ காலம் தங்கியிருந்து போனான்; இந்தியாவைப் பற்றி ஒரு நூலும் எழுதி யிருக்கிறான். இதில் ஒரு சில பகுதிகள் மட்டும் இப்பொழுது கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கிரேக்கர் பலர் வந்து, சிற்பிகளாகவும், வணிகர்களாகவும், போர்ச் சேவகர்களாகவும் இருந்ததாகத் தெரிகிறது. இங்ஙனம் இவர்கள் சென்ற இடங்களில் சிறப்புப் பெற்ற போதிலும், இவர்களுடைய அறிவுக்காகவும் திறமைக்காகவும் சிறப்பிக்கப்பட்டார்களே தவிர, அந்த அறிவையும் திறமையையும் உபயோகித்துக்கொள்ள வேண்டு மென்பதற்காக ஆதரிக்கப்பட்டார்களேயொழிய சுதந்திர நாட்டிலிருந்து சுதந்திரப் பிரஜைகளாக வந்திருக்கிறார்களென்பதற்காக அல்ல. மெகாஸ்த்தனீஸ் கூட, ஸெல்க்யூக்கஸின் பிரதிநிதியாக வரவில்லையென்பது குறிப் பிடத்தக்கது. தவிர, இவர்கள், பழமையின் பிரதிநிதிகளாக வரவேற்கப் பட்டார்களே தவிர, புதுமையின் சிருஷ்டி கர்த்தர்களாக வரவேற்கப் படவில்லை. மற்றும் இவர்கள் பலர் சொந்த நாட்டில் கௌரவ மாகப் பிழைப்பதற்கு மார்க்கமில்லாமற் போனதனா லேயோ, தங்களிடத்திலேயுள்ள சக்திகளை வெளிப்படுத்தப் போதிய சந்தர்ப்பம் பெறாத காரணத்தினாலேயோ, ஏதோ ஒரு முகாந்திரத்தை வைத்துக் கொண்டு புதிய இடங்களைப் பார்த்துவிட்டுத்தான் வருவோமே யென்ற எண்ணம் ஏற்பட்டதனாலேயோ வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள்; மேலான தொரு லட்சியத்தை நோக்கியல்ல.
சுதந்திர சக்திக்குத்தான் சிருஷ்டிக்கிற சக்தியுண்டு. அந்தச் சக்தி குன்றிப் போனால், சிருஷ்டிக்கிற சக்தியும் குன்றிப் போய்விடுகிறது. ஒரு நாடு சுதந்திரமாயிருக்கிறபோது, அந்த நாட்டுப் பல்வகைக் கலைகளென்ன, பல்வகை இலக்கியங்களென்ன, எல்லாம் செழித்துக் கொழுத்து வளரும்; எளிமை, அழகு, இனிமை இம்மூன்றும் அவற்றில் செறிந்து கிடக்கும். சுதந்திரமற்ற நிலையில் உண்டாகிற கலைச் சிருஷ்டிகளிலோ, இலக்கியச் சிருஷ்டிகளிலோ இந்தத் தன்மைகளைக் காண முடியாது. செயற்கையான அமைப்பு, அந்த அமைப்பில் கருத்தை யழிக்கும் பகட்டு, இவை போல்வனவே விரவி நிற்கும். கிரீஸின் சிருஷ்டிகளில், இந்த மாறுபாடுகளை நன்கு காணலாம். அலெக்ஸாந்தருக்கு முந்தி வரை அங்குத் தோன்றிய அதிமேதைகள் தான் எத்தனைபேர்? அவர்களுடைய சிருஷ்டிகளில் தான் என்ன ஜீவசக்தி? எண்ணிக்கையளவிலே பார்த்தால்கூட, அவற்றின் வளத்தினைக் கண்டு நாம் பிரமிப்படைந்து போக வேண்டியிருக்கிறது. ஒரே நூற்றாண்டில், அதாவது ஐந்தாவது நூற்றாண்டில் - பெரிக்ளீய யுகம் என்பது இந்த நூற்றாண்டிலேதான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்- ஆத்தென்ஸில் மட்டும் சுமார் இரண்டாயிரம் நாடகங்களும், நாலாயிரத்துக்குமேல் ஐயாயிரம் வரை சில்லரைப் பாடல்கள், வசன நூல்கள் முதலியனவும் சிருஷ்டியாயின; சிற்பம் முதலிய மற்றக் கலைகளோ மெத்த மெத்த வளர்ந்தன. சுருக்கமாக ஐந்தாவது நூற்றாண்டு ஆததென்ஸ், கலைமகளின் கொலு பீடமா யிருந்ததென்பதை நாம் திரும்பவும் சொல்லத் தேவையில்லை. ஆத்தென்ஸைப் போலவே கிரீஸின் மற்ற ராஜ்யங்களிலும் கலை சிருஷ்டிகளின் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. அலெக்ஸாந்தருக்குப் பிந்தி, இந்தச் சிருஷ்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது; இவற்றின் வளமையும் குன்றிவிட்டது. பழைய நூல்களுக்கு உரை காண்பது, அவற்றைப் பரிசீலனை செய்து பதிப்பிப்பது, மொழி ஆராய்ச்சி செய்வது, இப்படிப்பட்ட வேலைகளிலேயே அறிஞர்கள் அதிகமாக ஈடுபட்டார்கள்; இந்த முறையில் லட்சக்கணக்கான நூல்கள் இந்தக் காலத்தில் வெளியாயின.
புதிய நூல்கள் எழுதினவர்களும், தங்கள் புலமையைப் புலப் படுத்த வேண்டுமென்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு எழுதினார்கள். சிற்பம் முதலிய கலைகளில் பகட்டே அதிக மாயிருந்தது. சிலசில இடங்களில் மட்டும் சித்திர வேலைப்பாடுகள், உண்மையை ஓரளவு உணர்த்துவனவா யிருந்தன.
மற்றும் இந்த ஹெல்லெனீய யுகத்தில்தான் பெரிய பெரிய நூல் நிலையங்கள் (லைப்ரெரிகள்) பல இடங்களிலும் ஏற்பட்டன. இவற்றுள், அலெக்ஸாந்திரியா நகரத்தில் ஏற்பட்ட நூல் நிலையம் மிகப் பெரியதாயிருந்தது; முக்கியமானதாகவும் கருதப்பட்டது. இதில், சுமார் ஐந்து லட்சத்து முப்பதினாயிரம் சுவடிகளுக்குமேல் இருந்ததாகத் தெரிகிறது. பெரிக்ளீய யுகத்தில், ஆத்தென்ஸ் எப்படி ஒரு கலைக் களஞ்சியமாக விளங்கியதோ அப்படியே ஹெல்லெனீய யுகத்தில் அலெக்ஸாந்திரியா விளங்கியது. அறிஞர் பலர் இங்குத் தங்கி ஆராய்ச்சிகள் பல நடத்தினர்; பழைய நூல்கள் பலவற்றைப் புதிய பதிப்புகளாக வெளிக் கொணர்ந்தனர்.
இந்த நூல் நிலையத்தின் முதல் தலைவனாயிருந்த ஜீனோ டோட்டஸ்1 என்பவன்தான், இலியத், ஒடிஸ்ஸே ஆகிய இரண்டு காவியங்களின் ஆராய்ச்சிப் பதிப்பொன்றை முதன் முதலாக வெளியிட்டான். இவனைப் போலவே இவனுக்குப் பின்னர், இந்நூல் நிலையத்தின் பிரதம அதிபர்களாகப் பணியாற்றிய அரிஸ்ட்டோ பனீஸ்2 என்ன, அரிஸ்ட்டார்க்கஸ்3 என்ன, கால்லிமாக்கஸ்4 என்ன, இராட்டோஸ்த்தனீஸ்5 என்ன இப்படிப் பலர், மேற்சொன்ன மாதிரி பழைய நூல்களைப் பதிப்பிக்கும் தொண்டைச் செய்து வந்தார்கள்.
இப்படியெல்லாம் கூறியதனால், ஹெல்லெனீய யுகத்தில் அதி மேதைகளே தோன்றவில்லை, புதிய சிருஷ்டிகளே உண்டாக வில்லையென்று வாசகர்கள் எண்ணிவிடக்கூடாது. அதிமேதைகள் தோன்றினார்கள்; ஆனால் அவர்களின் எண்ணிக்கைதான் குறைவு. அப்படியே புதிய சிருஷ்டிகள் உண்டாகிக் கொண்டு வந்தன; அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வந்தது; ஆனால் அவற்றின் தரம்தான் குறைவாயிருந்தது. யூக்ளிட்6 என்ன, ஆர்க்கிமிடீஸ் என்ன, இப்படிச் சிலர் இந்தக் காலத்து அதிமேதை களாக விளங்கினார்கள். கணித சாஸ்திரம் சம்பந்தமாக இவர்கள் கண்டுபிடித்தவைகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
பொதுவாக, ஹெல்லெனீய யுகத்தில், கிரேக்க நாகரிகம் அகலமானது; ஆனால் ஆழங் குறைந்தது.
கிரீஸே! அருங்கலைச் செல்வியே! உனது பல துறைப் பெரு வாழ்வினை நோக்கி பிரமித்து நின்றவரும் நிற்கின்றவருமான அறிஞர் எத்தனை பேர்? அங்ஙனமே நீ சிறுமையுற்றதனை உன்னிக் கண்ணீர் வடித்தவரும், வடிக்கின்றவருமான கவிஞர் எத்தனை பேர்? உனது வாழ்விலும் தாழ்விலும் நீ எல்லோருடைய நன்றிக் குரிய வளாக இருந்தாய். இப்பொழுதும் இருக்கின்றாய். இந்த நன்றியிலே நீ எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பாய்.
அனுபந்தம் 1
முக்கிய நிகழ்ச்சிகள்
குறிப்பு : இங்குக் கூறப்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் யாவும் கி.மு.வில் நடை பெற்றவையே. குறிப்பிடப் பெற்றுள்ள வருஷங்களில் பல, உத்தேச மானவையே.
1457 - பெர்ஸூஸ் அரசன் மைஸீனி நகரத்தை நிர்மாணஞ் செய்தது.
1300 - 1100 - வீரயுகம். கிரேக்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு கூட்டத்தார், தெஸ்ஸாலி யிலிருந்து பெலொப்பொனேசியாவுக்கு வந்து குடியேறினர்.
1283 - பெலொப்ஸ் என்ற அரச குமாரன் எலிஸ் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தது.
1250 - அட்டிக்காவில் தீஸூஸ் அரசன்ஆண்டது. அக்கீயர்கள் ஆளுந் தொழிலை மேற்கொண்ட hர்கள்.
1200 - 1180 - ட்ரோஜன் யுத்தம்
1104 - டோரியர்கள் பெலொப்பொனேசியாவில் குடி புகுதல்
1068 - ஸ்ப்பார்ட்டர்கள், ஆத்தென்ஸ்மீது படை யெடுத்தல்.
900 - 800 - ஹோமர் பிறந்தது; இலியத், ஒடிஸ்ஸே ஆகிய இரண்டு காவியங்களும் சிருஷ்டியானது.
800 - 650 - கிரீஸின் பல ராஜ்யங்களிலும் சர்வாதிகார ஆட்சி.
800 - ஹெலியாட் என்ற கவிஞன் தோன்றியது.
776 - ஒலிம்ப்பிய விழாத் தொடக்கம்.
734 - ஸைரக்யூஸ் ராஜ்ய ஸ்தாபிதம்.
721 - ஸைபாரிஸ் நகரம் தோன்றியது.
700 - 550 - குடியேற்ற ராஜ்யங்கள் பல தோன்றின.
683 - ஆத்தென்ஸில் ஒன்பது ஆர்க்கோன்கள் பதவி வகிப்பதென்ற நியதி.
640 - 570 - மிட்டிலீனியில் பிட்டாக்கஸின் சர்வாதிகாராட்சி.
620 - - ஆத்தென்ஸில் ட்ராக்கோவின் சட்டம் அமுலுக்கு வந்தது.
600 - ஆம்ப்பிக்ட்டியோனிக் சபையின் தோற்றம்.
594 - 572 - ஆத்தென்ஸில் ஸோலோன் அதிகார பதவி வகித்தது.
585, மே, 28 - சூரிய கிரகணம்.
580 - பித்தாகோரஸ் பிறந்தது.
560 - ஆத்தென்ஸில் பீசிஸ்ட்ராட்டஸின் ஆட்சி தொடங்குதல்.
556 - ஆத்தென்ஸிலிருந்து பீசிஸ்ட்ராட்டஸ் பிரஷ்டம் செய்யப்படுதல்.
550 - பீசிஸ்ட்ராட்டஸ் மறுபடியும் பதவியேற்றல். பெலொப் பொனேசிய சமஷ்டி ஸ்தாபிதம்.
547 - சின்ன ஆசியக் கிரேக்க ராஜ்யங்கள் பாரசீக ஆதிக்கத்துக் குட்பட்டது.
540 - 527 - பீசிஸ்ட்ராட்டஸ், திரும்பவும் பதவியைக் கைப்பற்றிக் கொண்டு தொடர்ந்து வகித்தல்.
535 - 515 - ஸாமோஸ் தீவில், பாலிக்ராட்டீஸ் சர்வாதிகாரியாக ஆண்டது.
510 - ஸைபாரிஸ் நகரம் அழிந்தது.
493 - தெமிஸ்ட்டோக்ளீஸ், ஆத்தென்ஸை பந்தோபஸ்து செய்தல்.
491 - 480 - ஸ்ப்பார்ட்டாவில் முதலாவது லியோனிதாஸின் ஆட்சி.
482 - ஆத்தென்ஸுக்கு லாரியம் சுரங்கத்திலிருந்து பணம் கிடைத்தல்.
481 - பாரசீக சாம்பராஜ்யத்தை எதிர்த்து நிற்க ஸ்ப்பார்ட்டாவும் ஆத் தென்ஸும் ஒரு கூட்டாகச் சேர்தல்; தவிர, இதே நோக்கத்திற்காக முப்பத்தோரு கிரேக்க ராஜ்யங்கள் ஒன்று சேர்தல்.
480 ஆக. - தெர்மாப்பிலே போர்; லியோனிதாஸ் தலைமையில் கிரேக்கர்கள் வீர மரண மெய்தியது.
செப். - ஸாலாமிஸ் போர்.
ஆர்ட்டிமீஷியத்தில் போர்.
479,ஆக.27 - பிளாட்டீயா போர்; மிக்காலி போர்.
478 - 477 - டெலோஸ் சமஷ்டி.
478 - 467 - ஸைரக்யூஸில் ஹைரோன் என்பவன் சர்வாதிகாரியாக ஆண்டது.
476 - 473 - ஸைமன், ஆத்தெஸின் சார்பாக திரேஸ் பகுதியிலுள்ள அநேக பிரதேசங்களை வெற்றி கொண்டது.
471 - தெமிஸ்ட்டோக்ளீஸ் நாடு கடத்தப்படுதல்.
470 - நாக்ஸோல் தீவில் கலகமும் அதன் ஒடுக்கமும்; ஸாக்ரட்டீஸ் பிறந்தது.
469 - துரோகங் காரணமாக பாஸேனியஸ் மரணம்.
468 - யூரிமெடான் போர்.
467 - நேர்மைக்குப் பெயர்போன அரிஸ்ட்டைடீஸ் மரணம்.
465 - தாஸோஸில் கலகம்.
464 - ஸ்ப்பார்ட்டாவில் பூகம்பம். மெஸ்ஸீனியாவில் ஹெலட்டுகளின் கலகம். இத்தோமி முற்றுகை.
462 - ஸைமன், மெஸ்ஸீனியாவுக்குப் படை கொண்டு செல்லல்.
461 - ஸைமன் பிரஷ்டம் செய்யப்படுதல்.
பாரசீகத்தை எதிர்த்து நிற்பதற்காக ஸ்ப்பார்ட்டா வுக்கும் ஆத்தென் ஸுக்கும் ஏற்பட்டிருந்த கூட்டு ரத்தாகிவிட்டது.
460 - ஆத்தென்ஸ், எகிப்துக்கு ஒரு படையனுப்புதல்.
ஆத்தென்ஸுக்கும் ஆர்கோஸுக்கும் சிநேக ஒப்பந்தம்.
459 - இத்தோமியை ஸ்ப்பார்ட்டர்கள் கைப்பற்றல்.
மெஸ்ஸீனியர்கள் நவ்ப்பாக்ட்டஸில் குடியேற்றப் படுதல்.
ஆத்தென்ஸுக்கும் மெகாராவுக்கும் சிநேக ஒப்பந்தம்.
மெகாரவில் நீண்ட சுவர்கள் எழும்புதல்.
458 - 456 - ஆத்தென்ஸில் நீண்ட சுவர்கள் எழுப்பப்படுதல்.
457 - டானக்ரா யுத்தம்.
ஈனோபிட்டா யுத்தம்.
ஆத்தென்ஸ், எஜீனாவை வெற்றிகொள்ளல்.
456 - 454 - எகிப்துக்குச் சென்ற ஆத்தீனியப் படையின் தோல்வியும் அதன் நாசமும்.
454 - டெலோஸ் சமஷ்டியின் கஜானா ஆத்தென்ஸுக்கு மாற்றப்படுதல்.
இத்தோமி முற்றுகையில் ஹெலட்டுகள் பணிதல்; இவர்களை ஆத் தென்ஸ், நவ்ப்பாக்ட்டஸில் குடியேற்றுவித்தது.
45`1 - ஸ்ப்பாட்டாவுக்கும் ஆர்கோஸுக்கும் முப்பது வருஷ ஒப்பந்தம்.
450 - எவீஸஸில் ஆர்ட்டிமிஸ் தேவதையின் கோயில் கட்டப் பெற்றது.
ஸைமனின் மரணம்.
448 - ஆத்தென்ஸுக்கும் பாரசீகத்திற்கும் ஏற்பட்ட கால்லியாஸ் ஒப்பந்தம்.
சர்வ கிரேக்க மகாநாடொன்று கூட்ட பெரிக் ளீஸின் முயற்சி.
447 - கோரோனீயா யுத்தம்.
யூபியாவில் கலகமும் அதன் ஒடுக்கமும்.
மெகாரா, ஆத்தென்ஸின் கைவிட்டுப் போதல்.
446 - ஸ்ப்பார்ட்டாவுக்கும் ஆத்தென்ஸுக்கும் முப்பது வருஷ சமாதான ஒப்பந்தம்.
ஆத்தென்ஸின் துறைமுகப் பகுதியாகிய பீரேய ஸுக்கு ஹிப் போடாமஸ் என்பவன் பிளான் தயாரித்துக் கொடுத்தது.
443 - தூரி நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
440 - ஸாமோஸில் கலகம்.
439 - ஸாமோஸ் பணிதல்.
436 - ஆம்ப்பிபோலிஸ் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
433 - இத்தலி பக்கத்திலுள்ள ரேகியம், லியோண்ட்டினி ஆகிய ராஜ்யங்களுடன் ஆத்தென்ஸ் சிநேக ஒப்பந்தம் செய்து கொள்ளல்.
432 - மெகாரியர்களுக்கு விரோதமாக ஆத்தென்ஸ் ஒரு பிரகடனம் வெளியிடுதல்.
பொட்டிடீயோ யுத்தம்.
431 - பொலொப்பொனேசிய யுத்த ஆரம்பம்.
430 - ஆத்தென்ஸில் பிளேக்.
பொட்டிடீயா பணிதல்.
430 - 367 - ஸைரக்யூஸி முதலவாது டையோனிஸியஸின் காலம்.
429 - பெரிக்ளீஸ் மரணம்.
428 - ஆத்தென்ஸுக்கு விரோதமாக மிட்டிலீனியர்களின் கலகம்.
சிஸிலி தீவுக்கு ஆத்தீனியக் கடற்படை செல்லுதல்.
427 - கார்ஸைராவில் உள்நாட்டுக் கலகம்.
மிட்டிலீனியர்கள் சரணடைதல்.
பிளேட்டோவின் பிறப்பு.
426 - ஆத்தென்ஸ், யுத்தச் செலவுகளைச் சமாளிக்க கோயிற் பணங்களை உபயோகிக்கத் தீர்மானித்தது.
425 - கார்ஸைரா கலகம் ஓடுங்கியது.
ஆத்தென்ஸ், தனது ஆதிக்கத்துக்குட்பட்ட ராஜ்யங்களிடமிருந்து அதிகப்படியாகக் கப்பத் தொகையை வசூலிக்கத் தொடங்கியது.
424 - சரித்திராசிரியனான துஸிடிடீஸின் தேசப் பிரஷ்டம்.
ஆத்தென்ஸ், சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, அங்குத் தனது காவற்படைகளை நிறுவியது.
தைரியேட்டிஸில் எஜீனியர்களின் நாசம்,
ஆத்தென்ஸ், மெகாராவைத் தாக்கி,
நிஸீயா துறைமுகத்தைக் கைப்பற்றிக்கொண்டது.
டேலியம் யுத்தம்.
423 - லியோண்ட்டினி ராஜ்யம், ஸைரக்யூஸின் ஆதிக்கத்துக்குட்படுதல்.
422 - ஆம்ப்பிபோலிஸ் யுத்தம்.
நிக்கியாஸ் சமாதான உடன்படிக்கை.
421 - பெலொப்பொனேசிய சமஷ்டி கலைந்து விட்டது.
420 - ஆத்தென்ஸும் ஆர்கோஸும் கூட்டாகச் சேர்தல்.
418 - மாண்ட்டினீயா போர்.
417 - ஹைப்பர்போலஸ் தேசப்பிரஷ்டம் செய்யப் படுதல்.
416 - ஆத்தென்ஸ், மெலோஸ் தீவைக் கொடிய முறையில் பணியச் செய்தல்.
சிஸிலி தீவைச் சேர்ந்த ஸெகெஸ்ட்டா ராஜ்யம் ஆத்தென்ஸின் உதவி நாடல்.
413 - சிஸிலிக்குச் சென்ற ஆத்தீனியப் படை நாசமாதல்.
412 - கியோஸ், எரீத்ரே, மிலீட்டஸ் முதலிய ராஜ்யங்கள் ஆத்தென்ஸுக்கு விரோதமாகக் கிளம்புதல்.
411 - ஆத்தென்ஸில் ஒரு சிலரின் பயங்கர ஆட்சி சிஜிக்கஸ் ராஜ்யம், ஆத்தென்ஸுக்கு விரோத மாகக் கிளம்புதல்.
410 - ஆத்தென்ஸில் பழையபடி ஜன ஆட்சி ஸ்தாபிதம்.
சிஜிக்கஸ் போர். இதில் ஸ்ப்பார்ட்டக் கடற்படை நாசமாதல்.
406 - அர்ஜினூஸி போர்; ஸ்ப்பார்ட்டப் படைக்குத் தோல்வி.
405 - ஈகோஸ்ப்பொட்டாமி போர்; ஆத்தென்ஸுக்குத் தோல்வி.
404 - பெலொப்பொனேசிய யுத்தத்தின் முடிவு; ஆத்தென்ஸ் பணிதல்.
ஆத்தென்ஸில் முப்பதின்மர் கொடுங்கோலாட்சி.
401 - குனாக்ஸா யுத்தம்.
399 - ஸாக்ரட்டீஸ் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுதல்.
395 - 387 - கொரிந்த்தியச் சண்டை.
394 - நீடஸ் கடற்போர்.
கோரோனீயா தரைப்போர்
388 - திராஸிபூலஸ் மரணம்.
386 - அண்ட்டால்ஸிடாஸ் ஒப்பந்தம்.
385 - மாண்ட்டினீயாவை ஸ்ப்பார்ட்டா அழித்தல்.
384 - அரிஸ்ட்டாட்டல் பிறந்தது.
382 - தீப்ஸில் காட்மீயா கோட்டையை ஸ்ப்பார்ட்டப் படை கைப்பற்றிக் கொள்ளல்.
379 - ஸ்ப்பார்ட்டா, ஒலிந்த்தஸ் சமஷ்டியைக் கலைத்து விடல்.
- தீப்ஸில் ஜனக்கட்சிக்கு வெற்றி.
377 - இரண்டாவது ஆத்தீனிய சமஷ்டியின் ஸ்தாபிதம்.
376 - 371 - தீப்ஸ் செல்வாக்குப் பெறுதல்.
371 - கால்லியாஸ் சமாதானம்.
லியூக்ட்ரா யுத்தம்.
370 - மாண்ட்டினீயாவின் புனர்நிர்மாணம்.
ஆர்க்கேடியா மீது தீப்ஸ் படையெடுப்பு.
369 - தீப்ஸில் எப்பாமினோண்டாஸின் அதிகாரம்; இவனால் பெலொப்பொ னேசியாவில் மெகாலோபோலிஸ் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது; மெஸ்ஸீனியர்கள் சுதந்திர வாழ்வு பெற்றனர்.
369 - 368 - தெஸ்ஸாலியிலும் மாஸிடோனியாவிலும் தீப்ஸ் செல்வாக்குப் பெறுதல்.
368 - ஸைரக்யூஸில் இரண்டாவது டையோனி ஸியஸின் சர்வாதிகாரம் தொடங்குதல்.
359 - பிலிப் மன்னன், மாஸிடோனிய அரச பீடத்தில் அமர்தல்.
357 - 355 - சமுதாயப் போர்.
356 - பிலிப் அரசன், இல்லீரியர் மீது வெற்றி காணல்.
மகா அலெக்ஸாந்தரின் பிறப்பு.
347 - பிளேட்டோவின் மரணம்.
346 - பிலோக்ராட்டீஸ் ஒப்பந்தம்.
338 - கெரொனீயா போர்; பிலிப்புக்கு வெற்றி. கொரிந்த்திய காங்கிரஸ் கூடுதல்.
336 - பிலிப் மன்னனின் கொலை; மகா அலெக்ஸாந்தர் சிங்காதனத்தில் அமர்தல்.
335 - அலெக்ஸாந்தர், கிரீஸின் பல பாகங்களில் வெற்றி காணல்.
334 - அலெக்ஸாந்தரின் பாரசீகப் படையெடுப்பு; கிரானிக் கஸ் போர்.
333 - இஸ்ஸஸ் போர்.
332 - அலெக்ஸாந்திரியா நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
காகமேலா போர்.
330 - ஸைரக்யூஸின் சர்வாதிகாரியாயிருந்த இரண்டாவது டையோனிஸியஸ் மரணம்.
326 - அலெக்ஸாந்தர் போரஸ் மீது வெற்றி கொள்ளல்.
325 - அலெக்ஸாந்தர் பாரசீகம் திரும்புதல்.
324 - எக்பட்டானாவில் கலகம்; அலெக்ஸாந்தர் அதை ஒடுக்குதல்.
அலெக்ஸாந்தரின் நெருங்கிய நண்பனான எபீஸ்ட்டி யோனின் மரணம்.
323 - அலெக்ஸாந்தர் மரணம்.
322 - அரிஸ்ட்டாட்டலின் மரணம்.
146 - கிரீஸ் ரோம ஏகாதிபத்தியத்திற்குட்பட்டது.
அனுபந்தம் 2
கிரேக்கர்கள் கொண்டாடிய முக்கிய தெய்வங்கள் சில
அத்தீனே (ஹவாநநே) - ஞானதேவதை, சரஸ்வதி என்னலாம்.
அப்போலோ (ஹயீடிடடடி) - சூரியக் கடவுள். இசை, கவிதை, வைத்தியம் முதலியவை களுக்கும் இவனே வழிபடு தெய்வமாகக் கருதப்பட்டான்.
அப்ரோடைட் (ஹயீhசடினவைந) - காதலுக்கும் அழகுக்கும் அதிதேவதை. ரதி என்னலாம்.
ஆரெஸ் (ஹசநள) - யுத்தக் கடவுள். செவ்வாய் என்னலாம்.
ஆர்ட்டிமிஸ் (ஹசவநஅளை) - பெண் தெய்வம்; டியானா என்றும் அழைப்பர், வனதேவதை, சந்திரன் என்னலாம்.
ஆஸ்க்ளேப்பியஸ் - அப்போலோவின் மகன்; தேவ வைத்தியன்.
(ஹநரளஉரடயயீரைள)
இயோலஸ் (ஹநடிடரள) - வாயுக் கடவுள்.
குபிட் (ஊரயீனை) - காதற் கடவுள். மன்மதன் என்னலாம்.
குரோனஸ் (ஊசடிரேள) - சனி என்னலாம்.
டியோனிஸஸ் (னுiடிலேளரள) - மதுபானத்திற்கும் களியாட்டத்திற்கு முரிய கடவுள் என்பர்.
டெமிட்டர் (னுநஅநவநச) - விவசாயத்தின் அதிதேவதை.
போஸிடான் (ஞடிளநனைடிn) - கடல் தெய்வம்; சமுத்திரராஜன். வருணன் என்னலாம். நெப்டியூன் என்றும் கூறுவர்.
ப்ளூட்டோ (ஞடரவடி) - பிதிருலோகத்தின் இறைவன். யமன். என்னலாம்.
ஹீரா (ழநசய) - வானநாட்டரசி. விவாக காலத்தில் வழி பட வேண்டிய தேவதை.
ஹெர்மெஸ் (ழநசஅநள) - தேவதூதன் பிரயாணம் செய்யும் போது, வழிபட வேண்டிய கடவுள், புதன் என்னலாம்.
ஹெஸ்டியா (ழநளவயை) - அக்கினி தேவதை.
ஜுஸ் (ஷ்நரள) - தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம். வான் கடவுள். வியாழக்கடவுள் (பிருகஸ்பதி) என்னலாம்.
ஹாடெஸ் (ழயனநள) - நரகலோகம்.
எல்ஸியன் பீல்ட்ஸ்
(நுடலளயைn குநைடனள) - சொர்க்க பூமி.
அனுபந்தம் 3
கிரேக்கர்களின் பன்னிரண்டு மாதங்கள்
கிரேக்க மாதம் அதற்குச் இங்கிலீஷ் மாதம் சரியான தமிழ் மாதம்
1. Hecatombaion - ஆடி - ஜூலை - ஆகஸ்ட்
2. Metageinion - ஆவணி - ஆகஸ்ட் - செப்டம்பர்
3. Boedromion - புரட்டாசி - செப்டம்பர் - அக்டோபர்
4. Pyanepsion - ஐப்பசி - அக்டோபர் - நவம்பர்
5. Maimakterion - கார்த்திகை - நவம்பர் - டிசம்பர்
6. Poseideon - மார்கழி - டிசம்பர் - ஜனவரி
7. Gamelion - தை - ஜனவரி - பிப்ரவரி
8. Anthesterion - மாசி - பிப்ரவரி - மார்ச்
9. Elaphebolion - பங்குனி - மார்ச் - ஏப்ரல்
10. Munychion - சித்திரை - ஏப்ரல் - மே
11. Thargelion - வைகாசி - மே - ஜூன்
12. Skirophorion - ஆனி - ஜூன் - ஜூலை
குறிப்பு : ஐந்தாவது மாதத்தில் திருவிழா எதுவும் நடைபெறாது.
அனுபந்தம் 4
கிரேக்க நாணய விகிதங்கள்
8 செப்பு நாணயங்கள் கொண்டது - 1 ஓபோல் (வெள்ளி நாணயம்)
6 ஓபோல்கள் நாணயங்கள் கொண்டது - 1 ட்ராக்மா (வெள்ளி நாணயம்)
20 ட்ராக்மா நாணயங்கள் கொண்டது - 1 ஸ்டேட்டர் ( தங்க நாணயம்)
100 ட்ராக்மா நாணயங்கள் கொண்டது - 1 மினா (தங்க நாணயம்)
60 மினா நாணயங்கள் கொண்டது - 1 டாலெண்ட் (தங்க நாணயம்)
குறிப்பு : தற்கால இந்திய நாணய மதிப்பின் படி ஓர் ஓபோல் என்பது ஏறக் குறைய ஒன்றரையணாவுக்கு மேல் என்று சொல்லலாம். ஒரு மினாவின் மதிப்பு சுமார் அறுபது ரூபாய்க்குள்ளாகிறது. ஆனால் இது காலத்திற் கேற்ற வாறு முப்பத்தைந்து ரூபாயிலிருந்து எழுநூறு ரூபாய் வரை இறங்கியும் ஏறியும்வந்தது.
அனுபந்தம் 5
இன்றைய கிரீஸ்
பூகோள அமைப்பு: சிறியதொரு நிலப்பரப்பையும், சிதறிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான தீவுகளையும் கொண்ட ஒரு தொகுப்பே கிரீஸ். ஐரோப்பாவின் தென்கிழக்குக் கோடியிலுள்ளது. இதனை ஒரு தீபகற்பமென்று சொல்லலாம். நிலப்பரப்புக்குள் நுழைந்து பார்ப்பது போல் மூன்று பக்கங்களிலும் வளைகுடாக்கள் பல இருக்கின்றன. இதனால் ஜனங்களுக்குக் கடல் தொடர்பு கொள்ள அதிகமான வசதிகள் உண்டு. உட்பிரதேசத்தில் சிறுசிறு மலைகளும் இடையிடையே கணவாய்களும் காணப்படுகின்றன.
எல்லைகள்: வடக்கே அல்பேனியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா; கிழக்கே துருக்கியும் எஜீயன் கடலும்; தெற்கே லிபியன் கடல்; மேற்கே ஐயோனியன் கடல்.
விஸ்தீரணம் : நிலப்பரப்பு -66, 125 சதுர கிலோ மீட்டர்: (41,328 சதுர மைல்); தீவுகள் - 15,566 சதுர கிலோ மீட்டர் : (9,854 சதுர மைல்); மொத்தம் - 81,691 சதுர கிலோ மீட்டர் : (51,182 சதுர மைல்).
ஜனத்தொகை : உத்தேசமாக 73 1/2 லட்சம்.
முக்கிய பிரிவினைகள் : மாஸிடோனியா, திரேஸ், எப்பிரஸ், தெஸ்ஸாலி, மேற்குக் கிரீஸ், மொரீயா என்று அழைக்கப்படுகிற பெலொப் பொனேசியா, எஜீயன் கடல் தீவுத்தொகுதி, மேற்குத் தீவுத் தொகுதி, தெற்குத் தீவுத் தொகுதி, கிழக்குத் தீவுத் தொகுதி என்று இப்படிப் பல மாகாணங் களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தீவுகளில் மிகப் பெரியது கிரீட். இது காண்டியா என்றும் அழைக்கப்படுகிறது. கிரேக்க நாகரிகத்தின் தாயகம் என்று இதனைக் கூற வேண்டும். இதன் விஸ்தீரணம்- 4,800 சதுர கிலோ மீட்டர் : (3,000 சதுர மைல்) ஜனத்தொகை : உத்தேசமாக 3 3/4 லட்சம். மற்ற முக்கிய தீவுகள்: தாஸோஸ், மெலோஸ், ஜாண்ட்டே, ஸெபஸ்லேனியா, கார்பியு.
தலைநகரம் : ஆத்தென்ஸ், ஜனத்தொகை : உத்தேசமாக 5 லட்சம்.
மற்ற முக்கிய நகரங்கள் : பீரேயஸ் (4,10,630); ஸாலோனிக்கா (4,17,994); கிரீட் தீவின் தலைநகரமான காண்டியா (39,000); லெஸ் போஸ் தீவைச் சேர்ந்த மீட்டிலீனி (32,000); கியோஸ் தீவின் முக்கிய நகரமாகிய கியோஸ் (27,000).
முக்கிய விளைபொருள்கள் : மொத்த ஜனங்களில் பாதி பேருக்கு மேல் விவசாயத்திலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். ஆயினும் இது - விவசாயம் - அதிக பலனைக் கொடுக்கிறதென்று சொல்ல முடியாது. விளைபொருள்களில் புகையிலையை முக்கியமானதாகச் சொல்ல வேண்டும். இது வெளி நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர, ஒலிவ மரத்திலிருந்து கிடைக்கிற பழங்கள், எண்ணெய் முதலியனவும், எலுமிச்சை, மாதுளை போன்ற பழ வகைகளும் ஏராளமாக விளைவிக்கப்படுகின்றன. இரும்பு, காரீயம் போன்ற சுரங்கப் பொருள்களும் ஓரளவு கிடைக்கின்றன. கண்ணாடிச் சாமான்கள், சிமெண்ட், சில மருந்து வகைகள், தினுசு தினுசான ஜமக்காளங்கள், மிதியடிகள் முதலியன செய்பொருள்களாக வெளி நாடுகளுக்குச் செல்லுகின்றன. கிரீஸில் தயாரிக்கப்படும் மிதியடிகளுக்கு ஐரோப்பாவில் அதிக கிராக்கியுண்டு.
போக்கு வரவு முதலியன : 1950-ஆம் வருஷத்தில் சுமார் 4,240 கிலோ மீட்டர் (2,650 மைல்) நீளமுள்ள ரெயில் பாதைகள் இருந்தன. பெலொப்பொனேசியா (மொரீயா)வுக்கும் கிரீஸுக்கும், அதாவது கிரீஸின் தொடர்ந்த நிலப்பரப்புக்கு மத்தியில் கொரிந்த்திய வாய்க் கால் என்ற ஒரு வாய்க்கால் ஓடுகிறது. இது சுமார் ஐந்தரை கிலோ மீட்டர் (3 1/2 மைல்) நீளமுள்ளது. சிறு சிறு கப்பல்கள் இதில் செல்லுகின்றன.
கல்வி வசதி முதலியன : ஏழு வயது முதல் பன்னிரண்டு வயது வரையுள்ள சிறுவர் சிறுமியர்க்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி போதிக்கப்படுகிறது. இதற்காகும் தொகை அரசாங்க பொக்கிஷத்திலிருந்தே செலவழிக்கப்படுகிறது. ஆத்தென்ஸில் ஒன்றும் ஸாலோனிக்காவில் மற்றொன்றுமாக மொத்தம் இரண்டு சர்வகலாசாலைகள் இருக்கின்றன. இவற்றுள் ஆத்தென்ஸ் சர்வ கலாசாலைக்குச் சிறிது பிரசித்தியுண்டு. ஆத்தென்ஸில் மொத்தம் பன்னிரண்டு தினசரிப் பத்திரிகைகள் நடைபெறுகின்றன.
தற்போது கிரேக்கர்கள் பேசும் பாஷை பழைய கிரேக்க பாஷையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதாயினும், அநேக அமிசங்களில் அதிகமான மாறுதலையடைந்திருக்கிறது. தற் போதைய கிரேக்க பாஷையை ரோமெய்க் என்று அழைக்கிறார்கள். இதில் எழுதுவது ஒரு மாதிரியாகவும் பேசுவது வேறொரு மாதிரி யாகவும் இருக்கிறது. அதாவது பேசுகிற பாஷை வேறு, எழுதுகிற பாஷை வேறு என்று சொல்லலாம். எழுதுகிற பாஷை ஏறக்குறைய பழைய கிரேக்க பாஷையை, அதாவது ஆதிகாலத்தில் கிரேக்கர்கள் பேசி வந்ததை அனுசரித்ததாயிருக்கிறது. அதில் ஓரளவு பரிச்சய முடையவர்கள், தற்கால கிரேக்க நூல்களையும் பத்திரிகைகளையும் சுலபமாகப் படித்து நன்றாகச் சுவைக்க முடியும்.
அரசியல் : கி.பி.395-ஆம் வருஷம், ரோம ஏகாதிபத்தியம், கிழக்குப் பகுதியென்றும் மேற்குப் பகதியென்றும் இரண்டு பகுதி களாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதிக்கு பிஸண்ட் டைன் ஏகாதிபத்தியமென்று பெயர். இதன் தலைநகரம் பிஸண்ட்டியம். இதனாலேயே இந்தப் பெயர் வந்தது. பிஸண்ட்டியம் என்பதுதான் பின்னர் கான்ஸ்ட்டாண்டிநோபிள் என்று அழைக்கப்பட்டு இப்பொழுது இஸ்த்தாம்பூல் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
மேற்படி 395-ஆம் வருஷத்திலிருந்து பதினைந்தாவது நூற் றாண்டின் இடைக்காலம் வரை - இடையில் ஓர் ஐம்பத்தைந்து வருஷ காலம் விட்டுவிட்டு- பிஸண்ட்டைன் ஏகாதிபத்தியத்தின் ஒரு மாகாணமாயிருந்தது கிரீஸ். இதற்குப் பிறகு துருக்கியின் ஆதீனத் திற்குட்பட்டது. சுமார் முந்நூறு வருஷ காலம் இப்படியிருந்தது. ஆனால் இந்த ஆதீனத்தை எதிர்த்து அவ்வப்பொழுது சில சில கிளர்ச்சிகள் கிரீஸில் நடைபெற்று வந்தன. இந்தக் கிளர்ச்சிகளை ஓங்கவிடாமல் செய்துவந்தது துருக்கி. ஆனால் எவ்வளவு காலம் இப்படி ஓங்க விடாமல் செய்து கொண்டிருக்க முடியும்? 1821-ஆம் வருஷம் நடை பெற்ற ஒரு புரட்சியானது கிரீஸின் சுதந்திரப் பாதையைத் திறந்து விட்டது. கடைசியில் 1830-ஆம் வருஷம் பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளின் முயற்சியினாலும் ஆதரவினாலும் கிரீஸின் சுதந்திரத்தை அங்கீகரித்துக் கொள்ளும் படியான நிர்ப்பந்தத் திற்குட்பட்டது துருக்கி. அது முதற்கொண்டு 1830-ஆம் வருஷம் முதற்கொண்டு - கிரீஸ் ஒரு சுதந்திர நாடாக இருந்து வருகிறது.
1830-ஆம் வருஷத்திலிருந்து 1924-ஆம் வருஷம் வரை மன்னர்களே வரிசைக் கிரமமாக ஆண்டு வந்தார்கள். பின்னர் குடியரசு ஏற்பட்டது. இந்தக் குடியரசு நிலைக்கவில்லை. 13.4.1924-ல் ஏற்பட்ட இந்தக் குடியரசு 10.10.1935 முடிவு பெற்றுவிட்டது. எல்லாம் பத்து வருஷ வாழ்வுதான். இந்தப் பத்து வருஷ காலத்திலும் கட்சிச் சண்டைகள் மலிந்திருந்தன; ஜனங்களுக்கு நிம்மதி உண்டாக வில்லை. பின்னர், மேற்படி, 1935-ஆம் வருஷத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பொழுது 1950-ஆம் வருஷத்திலிருந்து - அரசபீடத்தில் இரண்டாவது பால் மன்னன். இவன் மனைவியின் பெயர் ப்ரெடெரிக்கா. அரச தம்பதிகள், ஜனங்களிடத்தில் அதிக செல்வாக்குடையவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டுப் போயினர்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது (1939-1945) முதலில் இத்தலியும் பிறகு ஜெர்மனியும் முறையே கிரீஸின்மீது படையெடுத்து அதனை ஆக்கிரமித்துக் கொண்டன. சுமார் மூன்று வருஷ காலம் -1941-ஆம் வருஷத்திலிருந்து 1944-ஆம் வருஷம் வரை- இந்த ஆக்கிரமிப்பு நீடித்திருந்தது. பின்னர் 1944-ஆம் வருஷம் அக்டோபர் மாதக் கடைசியில், தன்னுடைய சொந்த முயற்சி யினாலும், பிரிட்டன், அமெரிக்கா முதலிய வல்லரசுகளின் துணை கொண்டும் இந்த ஆக்கிரமிப்பினின்று விடுதலை பெற்று பழைய படி சுதந்திர நிலையடைந்தது கிரீஸ்.
கிரீஸ் ஆக்கிரமிப்புக்குட்பட்டது, விடுதலை பெற்றது என்று சொன்னால், கிரீஸையும் அதனைச் சேர்ந்த தீவுகளையும் சேர்த்துச் சொன்னதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக