ரூபாவதி
நாடகங்கள்
Back தமிழ்மொழியின் வரலாறு
(வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள்
இயற்றிய நூற்றொகுதி - இரண்டாம் பகுதி )
- To
THE HONORABLE JUSTICE
SIR S. SUBRAHMANYA AIYAR AVL., K.C.I.E.
THIS DRAMA IS DEDICATED
as a token of respect and esteem
By the Author
--------
உரிமையுரை
எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.
சொல்வளர் மதுரைத் தொன்னகர் மணியே
தோமிலந் தணர்குல விளக்கே
நல்வளஞ் சான்ற சுப்பிரமணிய
நம்பியே நியாயவான் மதியே
கல்விசேர் ரூபா வதியெனு நூலைக்
களிப்புடன் கையுரை கொடுத்து
மொல்வகை யுணர்தந் துட்பொரு ணாடி
யுரிமையிற் கொள்ளுதி யுவந்தே.
INTRODUCTION
Of the time- honoured trifurcation of Tamil Literature into Verse, Music, and the Drama, the last has few or no representatives while the first and the second have many. The positive want of ancient dramatic literature has been accounted for by the lovers of Tamil in various ways, which seem more or less fabulous to those who have any tincture of English education. That the Tamil speaking people have included the histrionic art among the degraded arts of life, fit to be pursued by the wandering nomads, or by the dregs of societies, seems to point to the conclusion that the art in due course of time have degenerated and fallen into disrepute or lacked cultivation at the hands of men of genius. In either case, any attempt I that direction in these days of western culture can not but add to the reputation of one who, with necessary intellectual equipment, energy, and zeal, devotes his nights and days to it.
In Madras, as in the Mofussil, we often come across travelling troops of actors amusing audience with variety of plays based on the three great magazines* of Poetic fiction, Ramayana, Bharatam, and Kandapuranam. They are for the most parts comical, and abound in vulgar conceits and voluptuous songs, gratifying to the vicious, but bearing no literary value.
If any drama has seen the light, that mingles interest with instruction, it is the excellent Manonmaniyam, by the late* lamented professor Sundaram Pillai, M.A., published a few years ago. Eminently classical as it is in diction, metre and matter, it is simply excellent in characterisation and plot evolution, and will do well on the boards.
As a drama, what Manonmaiyam is in verse, Rupavati is in prose. Though it is no praise to say that both are free from the Pigeon-Tamil Which obtains so much even among the Scholars of Southern India, who however imbued with western knowledge and stirred up by Western example from their wonted lethargy to a sense of national literature, only pander to the tastes of low and the vulgar, our new-fledged writers would do well to consult, the choice and chaste direction of these two dramas if they would provide for their earnest readers opportunities of knowing what the classical Tamil is, and what great purpose it can be made to serve. Our Sastriar has in Rupavati pressed into service, whenever necessary, the facilities* of Tamil diction, pure and unmixed, and given the reading public not only an intellectual feat but so vivid portraiture of the ways and manners of princess and people of the age of the literary *Witenagement in Madura that their imagination* cannot but be quickened, exalted, and *ennobled. If he has succeeded in this as I verily believe he has, Rupavati fulfils the mission it was intended to fulfil Into tears of joy for, now appeared before them Sundara and Surupa stripped of their disguise and clad in their usual apparel. Drunk with joy at the sight of their missing son and daughter, they made haste to unite the bands of those who were already united in their hearts; and Surasena, convinced of the cruelty done to Nayavachana, ordered his release and begged his pardon. Then Surasena invited Satguna, Virendra and others to his metropolis and wished that a day should be fixed for the marriage. An astrologer was consulted and the marriage of Ambujakshi, Suchila's daughter, to Sukumara and Kanakamalai to Nayavachana's son Chandramukha, were proposed. Thus three marriages had tobe celebrated. But three is a number of very bad omen, and so they arranged for the celebrations of their marriage on the day, Friday, when happily fell the sixtieth-year ceremony of the laureate of the Pandian Court, Vidhya Sagara, the guru of Sundarananda and his associates. Thus was the objection obviated and the occasion made jubiliant all around.
"O world, thy slippery turns, Fullest foes,
Whose passions and whose plots have broke their sleep
To take the one the other, by some chance,
Some trick not worth on egg, shall grow dear friends,
And inter joke their issues"
Rupavathi, the first fruit of the author is excellent in its own way. It contains magnificent speeches which would repay perusal and the obstacles in it and almost all poetical or have poetry in them.
Rupavathi, the heroine, is the only daughter of Surasena. Endowed by nature with the gifts of body and mind, she falls in love with the only son of Satguna. The parents of the lovers live only for their children, and but for them their life and dominion are trills "light as air". The angelic heroine is a perfect dissembler and is well acquainted with the laws of fashion and etiquette. In Act I, Scene 2, her apparently innocent questions 'will one swoon when he weaps? To continue the narrative, and the skillful way in which she tries to draw out form her companions an unvarnished tale of her lover's character and disposition, and the sound rebuke administered to Kanakamalai for her interference while speaking amply testify to the statement. Further, she is a poetic being and often speaks verses; she appreciates music and loves songs; she exhibits the power of her tongue in the scene in which she brings down Sundarananda to agree to their instance escape; she braves all fatigues and hardships, being supported by the strength of her love; she keeps a steady reserve in the court of Chola to avoid detection. Her part, in this drama reminds us of the charming group of Shakespeare's women such as Julia, Viola, Portia, Rosalind and Imogen who, under force of circumstances assumed the disguise of male attire, What distinguishes Rupavathi most is her learning, intelligence and fidelity in love.
Sundarananda, her lover, is a man of superior intelligence, well-educated, and well-versed in the art of war. He is a Dhirodatta, to use the expression of the Sanskrit dramatistik, and, in the language of Suresena, he is an incarnation of meekness and gentleness, and is a poet as well as a songster. His learning is manifest in his explanation of the name Thiruvappanar and in his reference to Ahapporul ilakkanam (Act III, scene 6). The most remarkable trait in his character, besides his love to God, is his great attachment to his parents, of which he thinkswith pious affection and tearful eyes, when they are doomed to suffer the hardships of exile and when he is himself oppressed by the pangs of love. Another noble trait in him is his gratefulness to his benefactors.
Satguna, his father, is an incarnation of virtue. Full of piety and calm in judgement, he is loved by his subjects as well as by his enemies. His wife, Sundari, is a good match for him in every respect.
Suchila, his dutiful minister, is a subtle psychologist and sees through Surasena. He is convinced that virtue will triumph independent of extraneous aid. His ministerial tact is manifest in the scene where he negotiates peace between Surasena and Virendra.
Surasena, father of the heroine, is rough, rude and ravengold. His conquest has, as his daughter says, made him amibitious and hardened his heart. He would yield to no persuation but force. It was only when his forces failed that he conferred with his minister. The only redeeming point in his character is that he is capable of remorse, and it is probably due to this fact that he is not murdered, though he richly deserved it, for his tyranny.
Jnanadipa is a sage indeed. He is very hospitable to strangers, and his learned love is manifested in the scences where his disciple appears. Unmindful of worldly honours, he rebukes prince and peasant alike for their folly.
Vidya Sagara, the ocean of learning, is the Guru to the Prince and his associates. All rever him for his wisdom, and quote his verses and sign his songs most of all , Ambujakshi a clever songstress. The scene in which he figures before Surasena and thunders forth his highly eulogistic verses commemorating Surasena's late victory followed by his learned interpretation thereof, is comical enough, when viewed in the light of his question, 'Am I to be beaten?'. But this apparent inconsistency illustrates a not uncommon occurrence among human beings, viz., that when fear overtakes a man, his learning quits him and his faculty of argumentation is at a stand.
Chandramukha and Sukamara, are the companions of the Prince to whom they are firmly attached. The former relies upon experience and human effort for success in life while the latter resigns everything to the will of Providence. Hence these two characters represent two great schools of Philosophy.
Imbujakshi and Kanakamalai are the two associates of the Princess. Former, a clever songstress, is shy by nature whereas Kanakamalai is petulmeddlesome. Further, the latter, thogh slightly superstitious, often nails on the head when she has to judge of character.
The Lords appear in three of the scenes; and with Nayavachana, Surasena, they lay their heads together to plot his death. The first Lord is collected in his procedure and preaches against precipitancy in matters moment. The second Lord, rather hasty, is wise on second thoughts, and the third is a ruffian ready for immediate action and thirsting for revenge.
Nayavachana isa man of policy. He always veneers his thoughts,f or Surasena falls out with him, and he cannot be brow-beaten when he sees tyranny prevails. When the Lords are for the assassination of Surasena, criticizes his judgement, and calmly refers the question to the decision of Sudananda, of whose superior intelligence he has a high opinion.
Three DFreams are introduced in this play, two of them by Surasena, Kamalavallai prognosticating evil and the third by the Nurse giving a ray of the reappearance of Rupavati.
The Epilogue is spoken by Sundarananda. In it he discourses on human and human love and rightly points out that domestic life, if rightly led, is better and productive of better results than the life of an ascestic who prefers seclusion and hates mankind.
To conclude, The plot of Rupavati, is so simple and dexterously consistent and characterization so notable and happy, that they comine to give the pleasure of the intellectual feasts given in it. I trust that the entire play wright will continue to amuse and instruct the reading public, year after year,with some fresh creations of his own, and will reclaim the dramatic love which is highly educative in its value but much neglected by the Tamil people.
Coimbatore, March 1902 M.S. PURNALINGAM PILLAI.
--------------------
முகவுரை
சேரநாட்டரசனாகிய சூரசேநவர்மன் சற்குணவழுதி யென்ற பாண்டியராசனைத் திருப்பரங் குன்றத்திற் கருகே நடந்த போரின் கண் வென்று மதுரையம்பதியைத் தனக்கு இராசதானியாக்கிக் கொண்டு பாண்டியனையும் அவன் மனைவியினையும் காட்டில் துரத்திவிட்டு வழுதிமகன் சுந்தராநந்தனை மாத்திரஞ்சிறைச்சாலையிலிட்டு அரசுபுரிந்து வந்தான். இங்ஙன மிருக்கையில் ஒருநாண்மாலை, சுந்தராநந்தன் தான் வெளியிற் போகும் போது தன்னைக் காக்குமாறு நியமிக்கப்பட்ட தன் றோழராகிய சுகுமார சந்திரமுகர்களோடு அரண் மனைக் கடுத்ததோர் பூங்காவனஞ்சென்று தனது பெற்றோர்க்குற்ற கதியினையெண்ணி ஏங்கினான்.
அவ்வமயத்து சேரன் மகளாகிய ரூபாவதி தன்றோழிமாராகிய அம்புஜாட்சி கநகமாலைகளோடு உலாவிச் செல்பவள் சுந்தராநந்தனைக் கண்ணுற்றுக் காதல்கொண்டாள். இங்ஙனஞ் சுந்தராநந்தன்மீது காதல் கொண்ட ரூபாவதி வீட்டிற்கேகித் தன் உள்ளங்கொள்ளை கொண்ட தலைவனை நினைந்து நினைந்து உருகி ஆற்றாது நாடோறும் பூஞ்சோலைக்குச் சென்று தன் காதல னைத் தரிசித்துச் சிறிதுசிறிது ஆறா நிற்பாள். இவ்வாறே சுந்தராநந்தனும் ரூபாவதியின்மீது மெய்ந்நேசமுற்று அயர்வானாயினான்.
இதற்கிடையிற் சற்குணவழுதியும் அவன் மனைவியும் காட்டில் ஒரு வேடனுதவியான் ஞாநதீப முனிவரது ஆசிரமமடைந்து முனிவராக்கினைப்படி அவ்விடம் விட்டுப் புறப்பட்டுச்சோணாடு சென்று, தஞ்சைமாநகரில் வீரேந்திர சோழன் அரண்மனையில் வதிவாராயினார். சூரசேநவர்மனோ வழுதியைத் துரத்தியது முதற் குடிகளிடம் கொடியனெனப் பேர்பெற்று வெறுக்கப் பட்டான். அதுவுமன்றி அவனுக்கு நண்பனாயிருந்த நயவசநனுஞ் சிற்சில கனவான்களோடு வர்மனைத் தொலைக்கும்வழி நாடுவனாயினான்.
மற்றைப்படி ரூபாவதி சுந்தராநந்தன் ஆகிய இவ்விருவருடைய காதலும் உரையாட்டமில்லையாயினும் வளர்பிறை போன் முதிராநின்றது. ஆயினுஞ் சுந்தராநந்தன் மட்டும் இடையிடையில் தனது பெற்றோரை யெண்ணி வருந்துவான். இப்படியிருந்து வருநாளில், தான் காட்டில் துரத்திய சற்குணவழுதியும் அவன் மனைவியும் சோணாட்டிலிருப்பதைத் தன்னொற்றறால் உணர்ந்த சூரசேகவர்மன் 'பாண்டியனுஞ் சோழனுந் தன்மீது படையெடுத்து வருவார்களாயின் தான் சிறையிலிட்டிருக்கும் வழுதிமகன் சுந்தராநந்தனைக் கொன்றுவிடுவது என்று தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டான். இவ்வண்ணம் இவன் தீர்மானித்ததை உணர்ந்த இவன் மகள் ரூபாவதி தன் காதலனாகிய சுந்தராநந்தனுக்குத் தன் தந்தையின் அந்தரங்க எண்ணத்தையும் சுந்தராநந்தன் தன்னை வந்து மறுநாளிரவிற் காணவேண்டு மென்னுந் தன் விருப்பத்தையும் ஒரு கடிதத்தில் வரைந்து பின்னர்த் தான் தனது நாயகனிருக்குஞ் சிறைச்சாலையின் இரகசிய வழிப் பூட்டின் திறவுகோலையெடுத்து அந் நிருபத்தின்கண் வைத்துச் சுருட்டித் தன் தலைவனது சிறைச்சாலைக்குள் எறிந்தாள். அதன் பிறகு சுந்தராநந்தன் கடிதங்கண்டு இவ்வாறு செய்தவள் ரூபாவதியேயென்று தெளிந்து பிற்றைநாளிரவில் வெளியிற் போந்து தன் தலைவியின் ஆணைப்பிரகாரம் அவளைக் காண்பான் விழைந்து நிற்புழி, ரூபாவதி ஆண்வேடம் பூண்டுவந்து தனது அருமைத் தலைவனைச் சந்தித்து அவனோடு வாதாடிக் கடைசியில் அவனை உடன்போக்கிற்கு இணக்கியபின், இருவருஞ் சேர்ந்து மதுரைமா நகரைவிட்டுப் புறப்பட்டு வைகறைப் போழ்தின் ஞாநதீபரது ஆச்சிரமமுற்றுச் சற்றிளைப்பாறிய பின் மீட்டும் புறப்பட்டுச் சோணாடடைந்து சுந்தர சுருடர் என்னும் வேற்றுநாமங்களோடு அவ்விடம் இருப்பாராயினார்.
இது நிற்க. பொழுது புலர்ந்தபின் சிறை காவலாளர் சுந்தராநந்தனைக் காணாது கவலை கூர்ந்து, பிறகு 'அவன் சிறை மதிலேறிக் குதித் தோடினன் ஆதலின் கொல்லப்பட்டான்' என்றொரு பொய்க் கதை கற்பித்து வருமனை நம்புமாறு செய்தனர். அதன்பின் வருமன் அந்தப்புரஞ் சென்று ஆண்டு அரற்றாநிற்கும் கோமள வல்லி செவிலிகளின் மூலமாய்த் தன்மகள் ரூபாவதியைக் காண வில்லை என்பதை உணர்ந்து எங்குந் தேடியும் அகப்படாமையால் 'இந்நாட்டாரே தன்மகளை இரவிலெடுத்துச் சென்று கொலைபுரிந்தனர்' என்று துணிந்து ஊரிலுள்ளாரையெல்லாம் ஒறுக்கப் புகுந்தான். தனது நண்பனாகிய நயவசநன் மீதும் ஐயமுற்று அவனைச் சிறைப்படுத்தினான்.
இவ்வாறு வருமன் செய்யும் அநிதங்களைப் பொறுக்க மாட்டாது சனங்கள் வருந்தா நிற்பச் சின்னாட் கழியலும், சோணாட்டிலிருந்து தந்திர தீரனென்னும் ஒரு தூதுவன் போந்து பாண்டி நாட்டை வழுதியினிடம் ஒப்பிக்குமாறு செப்ப, வருமன் அதற்கிணங்கானாய்ப் போர்வேண்டித் தானும் தனது கருவூர்ப் பதியின்கணுள்ள போர் வீரரை அழைத்துக்கொண்டு மதுரை வருமாறு ஆளனுப்பினான். கருவூர் சென்ற சேவகன் வருமுன் வழுதியுஞ் சோழனும் படையொடு வந்து வைகையாற்றின் வடகரைக்கண் தங்கினர். சுந்தரனும் ஒரு வியூகத்தலைவனாக வந்திருந்தான். அதன் பிறகு கருவூர்ச் சேவகன் வந்து 'அவ்விடத்திற் சேரன் மந்திரி இராசோபாயருக்கும் வழுதி மாமனார் வீரமார்த்தாண்டந் தொண்டைராசருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருத்த விற்படைவீரர் வருதற்கில்லாது போயிற்று' என்றான். இது செவிசாத்திய வருமன் தன் மந்திரியாகிய சுசீலனை விளித்து ஆலோசித்து முடிவிற் சமாதானஞ் செய்யுமாறு தானுஞ் சூசிலனும் மெய் காப்பாளரொடு சோழன் பாசறைக்குச் சென்றார்கள்.
இங்ஙனம் அவர்கள் சென்று சோழன், வழுதி, முதலாயினாரோ டெல்லாம் உடன்படிக்கையுன் நிபந்தனைகளைக் குறித்துப் பேசி முடித்தபின், வழுதியும் வருமனும் தங்களுக்கு நேரிட்ட மக்களிழவென்னும் தௌர்பாக்கியத்தினைப் பற்றி இரங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இதுகாறும் மாறுவேடம் பூண்டு சுந்தரன் சுரூபன் என்று மாறுபெயருங் கொண்டிருந்த சுந்தராநந்தனும் ரூபாவதியும் தத்தமது மாறுவேடம் நீத்து உண்மை யுருவத்தொடு வெளிப்பட்டு முறையே வழுதியையும் வருமனையும் வணங்கி நின்றார்கள்! உடனே ஆண்டுக் குழீஇ யிருந்தோர்களெல்லாம் இக்காட்சியினைக் கண்டு பேரானந்தமுற்று எம் ஆலவாய்ப் பெருமானது அருளை வியந்து துதித்தனர்! அப்பொழுது யாவரும் நண்பராயினார். வருமனும் தனது காணாமற்போன மகளை மீட்டும் பெற்றமையாற் கழிபேருவகைபூத்து அவ்விருவரது மணவினை முடித்தற்குரிய முயற்சிகள் செய்யத் தொடங்கினான். இதனுடன் நாடகம் முடிகின்றது.
முதற்பதிபிற் போலாது இப்பதிப்பிற் பாத்திரங்களின் அயல் புகட்கேற்ற சொல்வழக்கும் நடைவேறுபாடும் சிற்சில திருத்தங்களும் புதிய செய்யுட்களும் அமைக்கப்பட்டடுளவாமாறு யாவருங் கண்டுபோற்றுதற்குரியது. சிற்சில செய்யுட்களிற் பாடபேதங்களுஞ் செய்திருக்கின்றனம். பலவகையினும் இந்நாடகம் எமது நாடகவியலோடு ஒத்தியங்குமாறு காண்க.
இந்த நாடகமானது மன்மத வருடம் ஆடி மாதம் முப்பத்திரண்டாந்தேதி வியாழக்கிழமையன்றிரவு, சென்னை வித்தியாபிமான சங்கத்தார் மூலமாய் அரங்கேற்றப்பட்டது. இதன் கட்குற்றங் குறைகள் இருக்குமாயிற் பேரறிவுடையோர் பிரியத்தோடும் அவையிற்றினைத் திருத்தி எம்மீது கிருபை புரிவாராக.
வி. கோ. சூ.
---------------------------
பாயிரம்
விநாயகர் வணக்கம்
கட்டளைக்கலித்துறை
பொற்புறு ரூபா வதிகாதை தன்னைப் புகழ்மிகுந்த
நற்பய னாடக மாப்பைந் தமிழி னவிலுதற்குச்
சிற்பர வள்ளலெஞ் சிந்தா மணியன சித்திதருங்
கற்பக யானை சரணார விந்தங் கருதுவமே. (1)
சுப்பிரமணியர் வணக்கம்
வஞ்சிவிருத்தம்
உலவுசெ லுயர்திணைக் குரியனைக்
கலவடி யவரருட் கடலினைக்
குலவுற் புலவயிற் குமரனைக்
கலையுணர் புலவனைக் கருதுவாம். (2)
நாமகள் வணக்கம்
கலிவிருத்தம்
கன்னிரூ பாவதி காதை சொற்றிடச்
சொன்னயம் பொருணயந் தோன்று நூல்பல
பன்னுறு புலவர்நாப் பயிலும் பாமயில்
பொன்னடித் தாமரை போற்றி வாழ்குவாம். (3)
நடராசர் வணக்கம்
கலிநிலைத்துறை
உலக மென்னுமொர் நாடக சாலையி னுயிரா
மலகி லாநடர் தங்களை* யதுதிந மாட்டி
யிலகு சூத்திர தாரனா மிறைவனை யெமது
தலைவ னாநட ராசனைத் தாண்மலர் பணிவாம். (4)
--------------------------
நாடக பாத்திரங்கள்
-
1. சற்குணன் : பாண்டியநாட்டுப் பூர்வராசன்.
2. சூரசேநன் : தற்காலத்துப் பாண்டிநாடாளுஞ் சேரன்.
3. வீரேந்திரன் : சேரணாட்டரசன்.
4. சுசீலன் : சூரசேனன் மந்திரி.
5. நயவசநன் : ஒரு கனவான்; சூரசேநனது நண்பன்.
6. சுந்தராநந்தன்: சற்குணன் மகன்; ரூபாவதி காதலன்.
7. சுகுமாரன் : சுந்தராநந்தனது நண்பன்.
8. சந்திரழகன் : நயவசநன் மகன்; சுந்தராநந்தனது நேசன்.
9. வித்தியாசாகரர் : பாண்டியநாட்டில் ஒரு தமிழ்ப்புலவர்.
10. ஞாநதீபர் : பாண்டியநாடடுத்த வனத்தில் ஒரு முனிவர்.
11. ஆன்மநாதர் : ஞானதீபரது சீடர்.
12. தந்திரதீரன் : சோழன் தூதுவன்.
13. முருகன் : மதுரையில் வையாளி வீதி காப்போன்.
14. சுந்தரி : சற்குணவழுதியின் மனைவி.
15. கோமளவல்லி : சூரசேநவர்மன் மனைவி.
16. மூபாவதி : சூரசேநன் மகள்; நாடகத் தலைவி.
17. அம்புஜாட்சி : சுசீலன் மகள்; ரூபாவதியின் தோழி.
18. கநகமாலை : ரூபாவதியின் தோழி;
செவிலி, சேடியர் முதலாயினார்.
கனவான்கள், வேடன், சேவகர், சேவகர் தலைவன், காவலாளர், மெய்காப்பளர் முதலாயினார்.
நாடக நிகழ்விடம்
----------------
பெரும்பான்மை பாண்டி நாட்டுத் தலை நகராகிய மதுரையிலும் அதற்கடுத்த காட்டிலும், சிறுபான்மை சோணாட்டுத் தலைநகராகிய தஞ்சையிலுமாம்.
-----------------------
ரூபாவதி அல்லது காணாமற் போன மகள்
முதற் களம்.
------
இடம்:- ஒரு பூஞ்சோலை
காலம்:- மாலை
பாத்திரம் :- சுந்தராநந்தன்.
சுந்தராநந்தன்: (தனக்குள்) பூக்கள் மலர்ந்து வாசனை வீசாநின்ற இச்சோலையின்கண் யான் வந்து உலாவி மந்தமாயடிக்கின்ற இளந் தென்றற் காற்றின் சுகத்தை யநுபவிப்பதற்கு என் மனம் ஒருப்படுகின்ற தில்லை. -என் செய்வேன்! ஒரு வாரத்திற்கு முனவரையிலுங் களிப்புற்றுச் செருக்கித்திரிந்த எனது ஏழை நெஞ்சமே! யான் சந்தோஷப்படுவதை ஏன் தடுக்கின்றாய்? என்மீது சிறிது கருணை கூர்ந்து என் விசனமெல்லாம் நீங்கும்படி செய்வது நினக் கழகேயன்றோ?
(சுகுமாரனுஞ் சந்திரமுகனும் வருகின்றனர்.)
அந்தோ! பாவி மனமே! நீ துயரப்படுவதுமன்றி என்னையும் ஏன் வருத்துகின்றாய்?
(அவர்கள் பின்னே நிற்கின்றனர்.)
ஆண்டு மயில்க ளாடுவதையும், கிளிகள் பேசிக் குலாவுவதையும், நீ பார்த்தும் உனக்கு இன்பமில்லையோ? -உன்னையே உயிர்த் துணையாய்ப் பெற்ற என்னை நீ இவ்வாறு வருத்துகிற்பது தர்மமாகுமோ?
(பாடுகின்றான்)
என்னுடன் பிறந்து மென்னை யிடர்ப்படுப் பது*ன் றேயோ
வென்னசெய் வான்கொல் பார்ப்ப லென்றுநீ வருத்து வாயோ
வின்னல்செய் மனமே யின்னு மிரக்கம்வந் திலதோ வென்ற
னன்னய நண்ப ரேனு கண்ணியிங் காற்றி டாரோ? (5)
(மௌனம்)
சுகுமாரன்:- ஏ, சுந்தராநந்தா! இஃதென்னை? மிக வியப்பாயிருக்கின்றதே நின் செயல்!
சுந்தராநந்தன்:- என தருமையான சுகுமாரனே! யான் என் செய்வேன்? என்மீது தவறொன்றுமில்லை. என் மனத்துன்பம் நீங்கிற்றில்லை.
சந்திரமுகன்:- நீ யேழுநாளாக இவ்வாறுதான் சொல்லுகின்றாய்!
சுகுமாரன்:- ஆவது ஆயிற்று. நாம் இனி யென் செய்வது? வருத்தமின்றிக் காலங் கழிப்பதன்றோ நலம்?
சுந்தராநந்தன்:- எனது பிரிய நேசர்காள்! என் மனவருத்தம் நாளுக்கு நாள் அதிகப்படுகின்றதே யொழியக் குறைகின்றதில்லை. என்னுடைய ஊக்கமெல்லாம் எங்கேயோ ஓடிவிட்டது. என்னாற் பொறுக்கக் கூடவில்லை.
சந்திரமுகன்:- நீ கல்விகற்றதன் பயன்றானென்னை? எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும், அவற்றையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருப்பதன்றோ மேன்மையானது. எல்லாந் தெரிந்த உனக்கு யான் சொல்லவும் வேண்டுமோ?
சுகுமாரன்:- எல்லாம் வல்ல கடவுள் இன்ப வடிவானவர்; அவர் சகல காரியங்களையும் மனிதரது நன்மைக்காகவே செய்து வருகின்றனர். ஆகையால் அவரது அருளினால் நிகழ்ந்த இச்செயல்களெல்லாம் நமக்கு நன்மையினையே பயக்கும் என்பதை நீ அறியாயோ?
சுந்தராநந்தன்:- அறிவேன், அறிவேன்.
சந்திரமுகன்:- அறிந்திருந்தும் நீ வருந்துவது நேரிதோ? நீயுன் பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பதனாற் பாதகம் என்ன? நீயும் அவர்களும் வெவ்வேறிடங்களி லிருந்தபோதிலும், ஒரே யூரிலே தாமே யிருக்கின்றீர்கள். அரசனும் நாம் நினைக்கிறபடி அவ்வளவு கொடியவனல்ல னென்றுங் கேள்வி. இந்நாட்களில் ஒரு நாட்டரசன் இன்னொருநாட் டரசனை வென்று அவனைச் சிறையிலிடுவது வழக்காறன்றோ?
சுந்தராநந்தன்:- அந்தோ! அந்தோ! நீவிரெல்லாம் இன்று நடந்த சமாசாரஞ் சிறிதுந் தெரியாது இவ்வாறு சொல்லுகின்றீர்களே! ஐயகோ! என்செய்வேன்! என்செய்வேன்! தெய்வமே!
சுகுமாரன்:- வெகு ஆச்சரியமா யிருக்கின்றதே! எங்களுக்குத் தெரியாத செய்தி அப்படி நிகழ்ந்ததென்னை?
சுந்தராநந்தன்:- (பாடுகின்றான்)
புகழ்ந்துநீர் பேசும் புரவலன் றன்னா
னிகழ்ந்த கொடுஞ்செய் ணீனைக்கவொண் ணாதே
நீரறி யீரோ? நேசர்காள்!
எப்படி யுமக்கியான் செப்புவல்? அந்தோ! (6)
தந்தையுந் தாயினையுந் தள்ளவொண்ணாப் பருவத்தே
சிந்தையினிற் சிறிதேனு மிரக்கமிலாத் தீக்குணத்தோன்
கந்தமலர்த் தாள்களிலே காட்டிலுள முள்ளேறிக்
குந்தியொரு பாலேங்கத் துரத்தினான் கொடும்பாவி! (7)
அன்னையெனுஞ் சுந்தரியா ளரியவனத் துற்றனளோ
பன்னரிய பணிமொழியாள் படுத்துயர்வ தெந்தமரத்
தின்னிழலோ வெந்தைபிரிந் தேகியது மெல்லிடமோ
வென்னுடைய வல்வினையோ வித்துயர்ப்பட் டாழ்கின்றேன்! (8)
மந்தகோ கிலர்தினமும் வந்துபயி லும்மினிய
புத்தமுதத் தேமொழியாள் புலிக்கிரையாய் விட்டனளோ
வித்தையெலாங் குடிகொண்ட விப்பிறந்தாம் பிரியமுது
மத்தரெஞ்சற் குணவழுதி யரிவாய்ப்பட் டழிந்தனரோ! (9)
தந்தையே நின்னுடைய தாமரைத்தா ணோவாவோ
சுந்தரியே யென்றாயே சுகநீங்கிச் சுரத்தினிடத்
திந்தவரை வருந் துவதற் கென்னதீங் கிழைத்தனையோ
வெந்தவித மென்னுயிரை யினித்தாங்கி யிருப்பேனோ! (10)
[சுந்தராநந்தன் மூர்ச்சைபோய் விழுகின்றான்.]
இருவரும்:- இஃதென்னை! இஃதென்னை! இஃதென்னை புதுமை!!
[இருவரும் மூர்ச்சை தெளிவிக்கின்றனர்.]
[பூஞ்சோலையின் மற்றொரு சார், ரூபாவதி, கநகமாலை,
அம்புஜாட்சி யிவர்கள் வருகின்றனர்.]
ரூபாவதி:- அம்புஜாட்சி! இங்கே சமீபத்திலே யென்னவோ அழுகைக் குரல் கேட்டதே! அஃதென்னென்று போய்ப் பார்த்துவிட்டு வருவமே?
அம்புஜாட்சி:- ஏன், கநகமாலை! ரூபாவதிதான் பார்க்கலாம் வாவென்று கூப்பிடுகிறாளே! எல்லோருமாய்ப் போய்த்தாம் பாப்பமே?
கநகமாலை:- ஆனாற் சரி. நீங்கள் இரண்டு பேரும் கூப்பிடுகிறபோது நான் மாட்டேன் என்பேனோ, நான் மாட்டேனென்றாலுந்தான் விடுவீர்களோ?
ரூபாவதியும் அம்புஜாட்சியும்:- சரி, போகலாம் வா.
[இவர்கள் போகின்றனர்.]
சுகுமாரன்:- அப்பா! சுந்தராநந்தா! இப்படி என்மேற் சாய்ந்துகொள். ஏ சந்திரமுகா! இப்புறம் வா, சற்றுக் குளிர்ச்சியாய்க் காற்று மேலே யடிக்கட்டும்.
சந்திரமுகன்:- ஏன், சுந்தராநந்தா! உனக்கு உடம்பு என்ன செய்கிறது?
[ரூபாவதி முதலானவர் வருகின்றனர்.]
சுந்தராநந்தன்:- அம்மா! அப்பா! அம்மா!! அப்பா!! கொஞ்சம் பொறுங்கள்.
ரூபாவதி:- இரு, இரு. இங்கேதான், இங்கேதான்.
அம்புஜாட்சி:- அதோ, அந்த மாதவி மரத்தின்கீழ் மூன்றுபேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவன் மடியிற் பேரழகுவாய்ந்த மற்றொருவன் சாய்ந்துகொண்டிருக்கிறான்! பார்.
கநகமாலை:- ஆமாம். நாம் இரைந்து பேசக் கூடாது.
ரூபாவதி:- மெள்ளச் சத்தப்படாமல் நாமிந்த மல்லிகைப் பந்தரிலேயே யொளிந்துக் கொண்டிருந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுபார்ப்போம் - நில், நில். என்னவோ, பேசுகிறார்கள். கேட்போம்.
[இவர்கள் ஒளித்துப் பார்க்கின்றனர்.]
சந்திரமுகன்:- என்னை இது? ஒரு நாளு மில்லாமல் இன்றைக்கு மாத்திரம் இப்படி நீ மூர்ச்சை யடைந்து எங்களை யெல்லாம் வருத்தப்படும்படி வைத்துவிட்டாய்! ஏனப்பா, சுந்தராநந்தா!
சுந்தராநந்தன்:- (சுகுமாரன் மடியை விட்டு விலகிக்கொண்டு) இதைக் குறித்து ஞாபக மூட்டாதே; என்னை யொன்றும் இப்பொழுது கேளாதே. நாம் இனிமேல், சுகுமாரா! இங்கே தாமதஞ் செய்யக் கூடாது.
சுகுமாரன்:- அந்தப் பயல் சிறைக்காப்பாளன் கொஞ்சம் நேரங்கழித்துப் போனால் அதிகமாய்த் தலைகீழாய் விழுகிறான். 'அரசனிடத்தில் தெரியப் படுத்துவேன்' என்கிறான்.
சந்திரமுகன்:- ஆமாம். சீக்கிரமாய்ப் போவோம். வாருங்கள்.
[சுந்தராநந்தன், சுகுமாரன், சந்திரமுகன் இவர்கள் போகின்றனர்.]
ரூபாவதி:- ஏன், கநகமாலை! இந்த மூன்று பேரும் யார்? நீ யிந்த வூரிலேயே இருக்கிறவள் தானே! உன்னாலே, இவர்கள் இன்னார் என்று சொல்லக் கூடுமே!
அம்புஜாட்சி:- என்னைக் கேளேன். நான் சொல்லுகிறேன். அவள் இந்த வூருக்கு வந்து இன்னும் இரண்டு வருஷங்கூட ஆகவில்லை. அவளுக் கிவர்களைப்பற்றி என்ன தெரியப் போகின்றன!
கநகமாலை:- ஏண்டியம்மா! எனக்கும் அவர்களில் ஒருத்தனைத் தெரியும்.
ரூபாவதி:- ஏன் இவ்வளவு பேச்சு? நீங்கள் இரண்டு பேரும் இந்த வூரிலேயே இருக்கிறவர்கள் என்று நினைத்துச் சொன்னேன். இப்போது யார் சொன்னால்தான் என்ன? அம்புஜாட்சி! நீதான் சொல்.
அம்புஜாட்சி:- இல்லை, இல்லை! அவளுக்குத் தெரிந்த மட்டில் அவளே சொல்லட்டும்; அப்புறம் வேண்டுமென்றால் அவளுக்குத் தெரியாதது இருந்தால் நான் சொல்லுகிறேன்.
கநகமாலை:- அதொன்றும் இல்லை. உனக்குத்தான் நன்றாய்த் தெரியுமே! சொல்லேன்.
ரூபாவதி:- சரி, இருக்கட்டும். இவர்கள் யார்? சீக்கிரம் சொல். கேட்போம்.
அம்புஜாட்சி:- அழகாய் ஒரு பிள்ளை இன்னொருத்தன் மடியிலே உட்கார்ந்து சாய்ந்து கொண்டிருந்தானே, அவன் தான் முந்தி இருந்த ராஜா சற்குணவழுதியின் பிள்ளை.
கநகமாலை:- அவனைத்தான் எனக்கும் தெரியும்.
ரூபாவதி:- ஒருத்தி சொல்லுகிறபோது நடுவிலே பேசாதே. உனக்குத் தெரிந்தால் அப்புறம் சொல்.
அம்புஜாட்சி:- அவன் பெயர் சுந்தராநந்தன். வில்வித்தையில் வெகு கெட்டிக் காரனாம், படிப்பில் மிகத் தேர்ந்தவனாம். முன்னிருந்த ராஜாவுக்கு இவன் ஒரே பிள்ளை, ஆகையினாலே மிக அருமையாய்க் கண்ணுக்குக் கண்ணாய் இவனை வளர்த்து வந்தார். இவனை மடியிலே உட்கார்த்திக்கொண் டிருந்தானே அவன் தான் என் தகப்பனாரோடு கூடப் பிறந்த அத்தைப் பிள்ளை. அவன் பெயரை நான் சொல்லப்படாது!
கநகமாலை:- அவனுக்கு வாழ்க்கைப்படப் போகிறாயோ? அது தான் பேர் சொல்ல மாட்டேன் என்கிறாய் போலும்!
ரூபாவதி:- யாருக்கு வாழ்க்கைப்படப் போகிறாள்?
கநகமாலை:- அவளுடைய அத்தை பிள்ளைக்காம். இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. அதற்குள்ளே பேர் சொல்லப்படாது என்கிறாள்!
ரூபாவதி:- ஏண்டி அம்புஜாட்சி! அவையெல்லாம் இருக்கட்டும். நீ அழகாய் ஒருவன் அரசன் மகன் என்று சொன்னாயே அவன் அழுவானேன்?
அம்புஜாட்சி:- எல்லாம் உனக்கே தெரிந்திருக்குமே!
ரூபாவதி:- இல்லை, நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். எனக்கொன்றும் தெரியாது.
அம்புஜாட்சி:- ஆனாற் சரிதான். ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்குமோ வென்று நினைத்தேன். உங்கள் தகப்பனார் இந்தப் பாண்டிய ராஜ்யத்தை ஜெயித்து இந்தத் தேசத்து ராஜாவையும், ராஜா பெண்டாட்டியையும் ஒரு சிறையிலேயும், இந்த ராஜாபிள்ளை, இப்போது பார்த்தோமே, அவனை இன்னொரு சிறையிலேயும் அடைத்து வைத்திருந்தார். அந்த ராஜாவும் ராணியும் இந்த வூரிலேயே இருக்கிறதனாலே கலகங்கள் உண்டாகின்றன வென்று நினைத்து அவர்கள் இரண்டு பெயரையும் இன்றைக் காலைதான் இந்த வூருக்கடுத்த ஒரு காட்டிலே கொண்டுபோய்த் துரத்திவிட்டு வரும்படி உங்கள் தந்தையார் உத்தரவு கொடுத்தாராம். அந்தப்படியே சேவகர்களும் அவர்களை அழைத்துக்கொண்டு துரத்தி விட்டுவரக் காட்டுக்குப்போ யிருக்கிறார்களாம். இந்தச் சமாசாரத்தைக் கேட்டுவிட்டுத்தான் சுந்தராநந்தன் அழுதது. தாயார் தகப்பனார் என்றால் அவனுக்குப் பிராணன்! என்ன செய்வன்?
ரூபாவதி:- ஏண்டி! மூர்ச்சைபோய் விழுந்தானாமே! அவர்கள் பேசிக் கொண்டார்களே! அஃதென்னை! அழுதால் மூர்ச்சை போகுமோ?
கநகமாலை:- தாயார் தகப்பனாரைக் காட்டுத் துஷ்டமிருகங்களுக்கு இரையாகும்படி வயதான காலத்திலே துரத்திவிட்ட சங்கதியைக் காதிலே கேட்டும் மூர்ச்சை போகாதவர் யார்? அப்பேர்ப்பட்டவர் மிகவும் கன்னெஞ்சராய்த் தாம் இருக்கவேண்டும்.
அம்புஜாட்சி:- அந்த சுகுமாரனும், சந்திரமுகனும், பக்கத்திலே இல்லா திருந்தால், சுந்தராநந்தன், அப்பாவி! வருத்தமென்பதை இன்னதென்று அறியாதவன்! வெகு அவஸ்தைப்பட்டுப் போயிருப்பான். சுவாமி, அவர்களைச் சமீபத்தி லிருக்கும்படி செய்தாரே! அதுவன்றோ விசேஷம்!
கநகமாலை:- அதெல்லாம் இருக்கட்டும். அப்போது மாத்திரம் அகமுடையான் பெயரைச் சொல்லப்படா தென்றாயே! இப்போது மாத்திரம் சொல்லலாமோ?
ரூபாவதி:- இன்னும் கல்யாணம் ஆகவில்லையே! சொன்னால் என்ன? குற்றமில்லை.
கநகமாலை:- சந்திரமுகனென்று சொன்னாயே, அவன் யார்?
அம்புஜாட்சி:- அவன் தான் நயவசகர் என்பவருடைய புத்திரன். சுந்தரா நந்தனோடுகூடப் படித்தவன். இவர்களும், எங்கள் அத்தை பிள்ளையும் ஆக மூன்றுபெயரும் வித்தியாசாகரப் புலவரிடம் கல்வி கற்றுக் கொண்டார்களாம்.
ரூபாவதி:- அஃதிருக்கட்டும். சுந்தராநந்தனைப் பற்றி இவ்வூரார் என்ன சொல்லிக் கொள்ளுகிறார்கள்?
கநகமாலை:- சுந்தராநந்தனா? மகாபுத்திசாலி! ஊரார் சொல்லுகிறதென்ன? நன்றாய்த் தெரிந்த விஷயந்தானே!
ரூபாவதி:- அம்புஜாட்சி! கநகமாலை மாத்திரம் என்னவோ இப்படிச் சொல்லுகிறாள். நானும் இரண்டு மூன்று பேரிடத்திலே கேட்டேன்; அவன் என்னவோ வெகு துஷ்டனாம். தான் தான் அரசன் மகன் என்று எண்ணிக்கொண்டு ஊர்மக்களை எல்லாம் பிடித்துக்கொண்டு அடித்து வருத்தப்படுத்துவானாம். இப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளுகிறார்களே!
அம்புஜாட்சி:- சுந்தராநந்தனையுஞ் சொல்லி மற்றைப் பெயரையும் சொல்லுகிறதா? வெகு நன்றாயிருக்கிறது! அவனா துஷ்டனாம்? அப்படிச் சொல்லுகிறவர்கள் நாக்குப் புழுத்துத்தான் போகும். பரம சீவ காருண்ணிய னென்றால் அவனுக்குத்தான் தகும்.
கநகமாலை:- அப்படி இருக்க, அழகு அழகு, யார் சொன்னதோ தெரியவில்லை!
அம்புஜாட்சி:- இந்தப்படி சொன்னால்தான் இப்போது வந்திருக்கிர ராஜா சூரசேநவர்மர் தங்கள் பேரிலே பிரியமாயிருப்பாரென்று நினைத்தார்களோ! அவர்களும் நன்றாய்ச் சொன்னார்கள், ராஜாவும் நன்றாய்க் கேட்டுக்கொண்டார்! வீட்டிலே இருக்கிறபோதே விதிவந்து சூழ்ந்ததுபோல, தெய்வமே என்று இருக்கிறவன் தலையிலே நன்றாய்ப் பழியைப் போட்டார்கள்! சுவாமி இருக்கிறார் எல்லாவற்றிற்கும்! நாம் சொல்லியா ஆகப்போகிறது?
கநகமாலை:- உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடலாமோ? சொல்லுகிறவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்!
அம்புஜாட்சி:- யார் என்ன சொன்னபோதிலும் அவனைப் பற்றி நம்முடைய எண்ணம் என்னவோ மாறப் போகிறதில்லை.
ரூபாவதி:- என்னவோ? அம்மா! ஊரார் சொன்னதைச் சொன்னேன். அவன் நல்லவனாக இருந்தால் எல்லாம் நல்லது தானே!
கநகமாலை:- எனக்குத் தெரிந்தமட்டில் அழகு, புத்தி, சக்தி, குணம் இவற்றிலெல்லாம் அவனுக்குச் சமானமானவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
ரூபாவதி:- சரி, அஃது அப்படி இருக்கட்டும், அம்புஜாட்சி ஏதாவது ஒரு பாட்டுப் பாடு கேட்போம். நன்றாய் மந்தமாருதம் வீசுகிறது. எங்கே! சுகமாய்ப் பாடு, கேட்போம்.
அம்புஜாட்சி:- (பாடுகின்றாள்)
(க) இராகம் - இந்துஸ்தான் காபி. தாளம் - ஆதி.
பல்லவி
நாயகனே வருவாய் - இவ்வேளையில்
சரணங்கள்
சிந்தை தினந்தொறும் நொந்து வருந்தினேன்
சுந்தர மதிவதனா இவ்வேளையில் (நாயக)
மன்மத பாணங்கள் மார்பினிற் பாய்ந்தன
நன்மனஞ் செய்தருவாய் இவ்வேளையில் (நாயக)
இத்தனை கூறியு மிளகில தோநெஞ்ச
மொத்தநல் லாமனத்தான் இவ்வேளையில் (நாயக)
சன்மார்க்கர் வித்தியா சாகரர் தம்பதஞ்
சொன்மேலுந் தாமதமா இவ்வேளையில் (நாயக)
ரூபாவதி:- சமயத்துக் கேற்ற பாட்டும் பாட்டுக்கேற்ற குரலும் இராகமும் தாளமும் எல்லாம் நன்றாயிருக்கின்றன.
கநகமாலை:- அவளுக்குப் பாடுகிறதற்குக் கேட்பானேன்? ஜன்மாந்தரத்திலே புண்ணியம் பண்ணி இருக்கின்றாள்! அது தான் தெய்வம் நல்ல குரலாய்க் கொடுத்திருக்கிறது!
அம்புஜாட்சி:- இன்றைக்கு என்று என்னவோ கொஞ்சம் தொண்டை கட்டிக் கொண்டிருக்கிறது, அல்லாமற்போனால் இன்னும் சற்று நன்றாய்ப் பாடி இருக்கலாம்.
ரூபாவதி:- பாட்டுப்பாடுகிறவர்களெல்லாரும் அஃது என்னையோ தெரியவில்லை, தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும் சரி இல்லாமற் போனாலும் சரி, இப்படித்தான் சொல்லுகிறார்கள்.
கநகமாலை:- அது அவர்களுக்கு வழக்கமாய்ப் போய்விட்டது. அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்?
அம்புஜாட்சி:- சரி. நாம் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால், நமக்கு நாழிகையாக வில்லை? அஸ்தமித்துப் போயிற்று. அகத்திற்குப் போக வேண்டாமா?
கநகமாலை:- ஆமாம், சூரியன் அப்போதே மலைவாயிலே விழுந்து விட்டானே. சீ, சீ, இனிமேல் இருக்கப்படாது. அம்மா, எங்களப்பா கோபித்துக் கொள்வார்.
ரூபாவதி:- ஆம், எனக்கும் நேரமாய்விட்டது.
[யாவரும் போகின்றனர்.]
-------------------
இடம்:- காடு
காலம்:- நண்பகல்
பாத்திரங்கள்:- சற்குணன், சுந்தரி
சற்குணன்:- இன்னும் கொஞ்சந்தூரம் போனால் ஒரு வேலமர மிருக்கின்றது, அதன் நிழலில் தங்குவோம். சிறிது விரைவாய் வா, ஐயோ! உன் பாதங்கள் தரையை மிதித்தறியாவே! உனக்கு வெய்யிலென்பதே தெரியாதே! என் செய்வேன்! இதுவும் என் தலைவிதியோ? ஆ! தெய்வமே!
சுந்தரி:- தெய்வந்தான் என்னசெய்யும்? நாம்தாம் என்ன செய்வோம்? கொஞ்சத் தூரத்திற் கப்பால் வேலமரம் ஒன்று இருக்கிறதென்றீர்களே! அஃதெப்படி உங்களுக்குத் தெரியும்?
சற்குணன்:_ அந்தோ! உன்னைக் கைப்பிடித்த இந்தப்பாவி அரசனாயிருந்த காலத்திற் பலதரம் இதே காட்டில் வேட்டையாட வந்திருக்கின்றான்!
சுந்தர்:- வெய்யிலோ அகோரமாய்க் கொளுத்துகின்றது! இப்படியே அழுது கொண்டு போவோமானால் உடம்பு களைத்துப் போய்விடும். அப்புறம் நடக்கமுடியாது.
சற்குணன்:- ஐயோ! என்கண்ணே! உனக்கு இருக்கிற அறிவு எனக்கில்லையே! என் செய்வேன்!
சுந்தரி:- நம்மைப் பிரமா அவஸ்தைப்பட வேண்டுமென்றே நினைத்து முதலில் இராஜ்ய பரிபாலனத்தை யெல்லாம் கொடுத்து இப்போது அவற்றை யெல்லாம் பிடுங்கிக் கொண்டு துஷ்ட மிருகங்களுக்கு இரையாகும்படி படைத்துவிட்டான்! காடோ மகா கடோரமா யிருக்கிறது! வெய்யிலோ இன்றைக்கு என்று மகோக்கிரமா யிருக்கிறது! தினமும் இருந்த தைரியமும் இன்று சோதனை செய்ததுபோலக் கை விட்டுப் போய்விட்டது! பூர்வ ஜன்மத்தில் நாம் என்ன பாவம் செய்தோமோ அவற்றின் பயனை எல்லாம் இப்போது அனுபவிக்கும்படி நேரிட்டு விட்டது! வளப்பமுள்ள நாட்டை இழந்தோம்! வெகு நேர்த்தியான மதுரை நகரை இழந்தோம்! அலங்காரமான அரண்மனையை இழந்தோம்! உடையை இழந்தோம்! பொருளை இழந்தோம்! மீனாட்சி சுந்தரேசுவரர் தரிசனத்தை இழந்தோம்! 'சுந்தரேசுவரர்' என்ற உடனே ஞாபகம் வருகிறது. எல்லாப் பாக்கியத்திலும் மேலான நம்முடைய அருமைச் சுந்தரா நந்தனையும் இழந்தோம்! இழந்தோம்!! தெய்வமே! தெய்வமே!! சுந்தராநந்தா! சுந்தராநந்தா!! உன்னை இழந்தபிறகும் உயிர் தரிப்பேனோ?
[சுந்தரி மூர்ச்சைபோய் வீழ்கின்றனள்.]
சற்குணன்:- ஐயோ! என்ன செய்வேன்! நீ சிறிது தைரியமா யிருக்கிறாயே என்று நினைத்தேன். நீயு மிவ்வாறு மூர்ச்சை போய்விட்டாயே! இவ்வனாந்தரத்திற் கொஞ்சம் ஜலம், மயக்கம் திரும்பும்படி உன் முகத்தில் தெளிக்கலாம் என்றாலும் ஜலமில்லையே! எங்கேயாவது சுற்றிப் பார்த்துக்கொண்டு வருவோம் என்றாலும் உன்னைத் தனியாய் விட்டுவிட்டுப் போனாற் புலியடித்துக்கொண்டு போய் விட்டா லென்செய்வேன்! கடைநாளில், நாடு, நகர் எல்லாவற்றையும் துறந்தேன்! அரும்புதல்வனை யிழந்து, புத்திரசோக முற்றேன்! கடைசியில் என் உயிர்த் துணைவியாகிய சுந்தரியையும் இழக்க வேண்டுமோ! வேண்டுமோ!! சுந்தரீ! சுந்தரீ!! என்னை இப்படி ஏகாங்கியாய் விட்டுப் பிரிதல் நியாயமோ?
கலையெலாங் கற்றமாதே போதியோ கடிய நெஞ்சேன்
தலைவியை யிழந்த பின்னுஞ் சாகிலே னிருக்கின்றேனே! (11)
(மௌனம்) 'ஐயா' என்ற சப்தம் கேட்டேன். ஆ! யாரோ பார்ப்பேன்.
[ஒரு வேடன் வருகின்றான்.]
வேடன்:- ஏன் ஐயா! இப்படி யளுகிறிய? உங்களுக்கு - ஆகாகாகா! யாரோ அம்மா! என்ன மயக்கமோ? இதோ தண்ணியிருக்குது. தெளியுங்க முகத்திலே.
[வழுதியார் தண்ணீர் தெளிக்கின்றார்.]
சற்குணன்:- கொஞ்சம் அம்மாவுக்கு வெய்யில் மறைவாய் நில் அப்பா!
[வேடன் அவ்வாறு நிற்றலும், வழுதியார் தூக்கிமேலே சாய்த்துக் கொள்கின்றார்; சுந்தரி மூர்ச்சை தெளிகின்றாள்.]
சுந்தரி:- ஹா! ஹு!
சற்குணன்:- என் பிராண நாயகியே! எனக்கு தைரியஞ் சொன்னாயே! நீ இவ்வாறு மூர்ச்சைபோய் என்னைத் துன்பப்படுத்துதல் சரியாகுமோ? நீ யப்படியே உயிர் துறந்திருப்பையாயின் யான்தான் பிழைப்பேனோ? இவையெல்லாம் எம்பெருமான் விளையாடே யல்லவோ? "அவனின்றி யோரணுவும் அசையாது" என்ற பெரியோர் வசனம் பொய்த்துப் போகுமோ? என்முத்தே! என்மீது சாய்ந்து கொண்டு சற்று இளைப்பாறுவாய்!
வேடன்:- ஐயா! இங்கே புலிகரடி முதலிய பிராணிகள் சுத்தித்திரியுமே இங்கே யிருக்கக் கூடாதே-
சற்குணன்:- நாங்கள் சாகவேண்டியதும் கடவுளுக்கு இஷ்டமானால் அதுவும் நடந்தே தீரும். அதற்காக நாம் பயப்படுவதேன்?
சுந்தரி:- அப்படியில்லை. நாம் நம்மாலான முயற்சிகளைச் செய்தால் நடக்கிறபடி நடக்கட்டும். கடவுள் நம்முடைய செயல்கள் மூலமாகவேதான் நமக்கு நன்மை யினையுந் தீமையினையும் விளைக்கின்றார். ஆகையால் நாம் ஒன்றுஞ் செய்யாதிருந்தால் நமக்கு நன்மை விளைவதெப்படி?
சற்குணன்:- எனதருமைத் தலைவியே! நீ சொல்வன வெல்லாம் நியாயந்தாம். நாம் இப்பொழுது தங்கி யிருப்பதற்கு இடம் எங்கே?
வேடன்:- ஐயா! நீங்க அதுக்கு யோசனை செய்யவேண்டாம். இதுக்கருகாலே இரண்டு நாளியவளித் தூரத்திலே ஒரு சாமியார் சாவடியிருக்குது. இப்போ உங்களைக் கூட்டிப் போய் அந்தச் சாமியார் மடத்திலே விட்டுப்போட்டு அப்புறம் வீட்டுக்குப் போறேன்.
சற்குணன்:- அந்தச் சாமியார் பெயரென்ன?
வேடன்:- அது எனக்குத் தெரியாது சாமி. அவர் சாவடி மாத்திரந் தெரியும். வருகிறதிண்டா வாங்க.
சற்குணன்:- கொஞ்சம் பொறுத்துக்கொள், அப்பா! வருகிறோம்:- ஏன், புறப்படுவமா?
சுந்தரி:- இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் அப்பா! அந்தச் சாவடி?
வேடன்:- இதோ! கிட்டத்திலே தான் அம்மா!
சுந்தரி:- ஆனாற் சரி.
சற்குணன்:- மெல்ல! மெல்ல! என் கையைப் பிடித்துக்கொள்.
வேடன்:- நான் முன்னுக்குப் போறேன். பின்னுக்கு நீங்க மெதுவா வாங்க.
[யாவரும் போகின்றனர்.]
-------------
இடம்:= காட்டில் முனிவராச்சிரமம்
காலம்:- மாலை
பாத்திரங்கள்:- ஞானதீபர், ஆன்மநாதர்
ஞானதீபர்:- அப்பா! ஆத்மநாதா! செய்யவேண்டிய காரியத்தையெல்லாஞ் செய்து விட்டாயா? சிவஞாநபோத சூத்திரங்களை நேற்றுச் சிரவணம் பண்ணினாயே! இன்றைக்கு அவற்றை எல்லாம் மனனம் பண்ணிவிட்டாயா? மேற் போகலாமா?
ஆன்மநாதர்:- ஆக்ஞாப்பிரகாரம், சகல காரியங்களையுஞ் சம்பூர்ணப்படுத்தி விட்டேன். சிரவணம் பண்ணின சூத்திரங்களிற் சில மனத்தில் அவநாஹப்படவில்லை. ஆகையால் அவை முழுவதையும் மனனம் பண்ணத் தடைப்பட்டது. ஆகையா லென்னை க்ஷமித்து என்மீது மீட்டுங் கிருபை கூரவேண்டும்.
ஞாநதீபர்:- அந்தப் பிரகாரமே, உனக்கு மறுபடியும் மனத்திற் படும்படி சொல்லுகின்றேன். இதற்கு முன்னே ஶ்ரீஹரநந்த சிவாசாரியர் பழுக்கப் பழுக்க நெருப்பிலே காய்ந்த இருப்பு முக்காலியிலே வீற்றிருந்து திருவாய் மலர்ந்தருளிய சிவபரத்வ நிரூபணகலோக பஞ்சகம் படனமாயிற்றா?
ஆன்மநாதர்:- திருவுளப் பிரகாரம், படனமாயிற்று. கட்டளையளித்தாற் சொல்லுகின்றேன்.
[சற்குணன், சுந்தரி, வேடன் இவர்கள் விளிக்கின்றனர்.]
ஞாநதீபர்:- அதிருக்கட்டும். யாரோ வாசலில்வந்து 'சாமீ! சாமீ!' என்று கூப்பிடுகிறது போலத் தோன்றுகின்றது. அதென்னவென்று போய்ப்பார்த்து வா.
[ஆன்மநாதர் வெளியே போய் வருகின்றார்.]
ஆன்மநாதர்:- யாரோ இருவர், ஸ்திரீபுமான்கள், வெய்யிலாற் களைத்தவர்,செவ்விய மேனியர், சிறந்த நோக்கினர், வாடிய முகத்தினர், அழுத கண்ணினர், வந்துளர். அவர்கள் சமீபத்தில் ஒரு வேடனும் நிற்கின்றான்.
ஞானதீபர்:- அவ்விருவரும் ஒருவேளை நமது ஆசிரமத்தில் தங்கலாம் என்று வந்தார்கள் போலும்! நீபோய் அவர்களை யிங்கே யிட்டுக்கொண்டு வந்து விட்டுவிட்டு அவர்களுக்கு ஏதேனும் போஜனத்திற்கு ஏற்பாடு செய்.
ஆன்மநாதர்:- அப்படியே செய்கின்றேன்.
[போகின்றார்.]
(வேடனொழிய மற்ற யாவரும் வருகின்றனர்.)
[சற்குணனுஞ் சுந்தரியும் ஒருங்கே முனிவரை வணங்குகின்றனர்.]
ஞாநதீபர்:- தீர்க்காயுஷ்மான் பவ!- தீர்க்க சுமங்கலீபவ!-நீங்களிருவரும் ராஜ லக்ஷணங்களோடு கூடினவர்களா யிருக்கின்றீர்களே! உங்களுக்கு இந்தக் கதி சம்பவிப்பானேன்?
சற்குணன்:- சுவாமிகாள்! அடியேன் பாண்டிய தேசத் தரசனாவேன். ஆலாசியக்ஷேத்திர வாசியா யிருந்தேன். சற்குணப் பெயரினேன். இவள் எளியேனது பாரியை யாவாள். சுந்தரிப் பெயரினாள். தொண்டை நாட்டரசன் வீரமார்த்தாண்டனுடைய மகள். சேர தேசாதிபதி சூரசேனவர்மனாற் செயிக்கப்பட்டு இவ்வாரணியத்திற்குத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகும்படி துரத்தப்பட்டோம். வழியிலொரு வேடனைச் சந்தித்தோம். அவனது உதவியால் தேவரீரது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம்.
ஞாநதீபர்:- இச்செய்தி உமது மாமனாராகிய தொண்டை நாட்டரசனுக்குத் தெரியாதோ?
சற்குணன்:- தெரியாது. வெட்கம்பற்றி அவரிடம் உதவி கேட்கவில்லை. யானே போர்க்களம் சென்று யுத்தத்திற் றொலைவுண்டேன்.
ஞாநதீபர்:- இப்போது இக்கதி அதனினும் வெட்கக் கேடாயிற்றே! இப்படியிருக்கலாமா?
சற்குணன்:- ஆம். என் செய்வது?
ஞாநதீபர்:- இப்போது உமக்கு தொண்டை நாட்டிற்குப் போய் வதிய இஷ்டமா? அல்லது சோழ நாட்டிற்குப் போய் வதிய இஷ்டமா? எனக்குத் தற்காலத்தில் ராஜரீகஞ்செய்து வருகின்ற வீரேந்திர சோழனைத் தெரியும்.
சற்குணன்:- தேவரீரது இஷ்ட மெப்படியோ அப்படியே நடக்கக் காத்திருக்கின்றேன்.
ஞாநதீபர்:- ஆனால் உங்களிருவரையும் சோழ நாட்டிற்கு அனுப்புவதா யுத்தேசித்திருக்கிறேன். அந்தப் பிரகாரமே செய்வீர்களென்று நம்புகின்றேன்.
சற்குணன்:- ஆ, அப்படியே யாகட்டும்.
ஞாநதீபர்:- அப்பா! ஆத்மநாதா!
ஆன்மநாதர்:- இதோ! வந்துவிட்டேன்.
[ஆன்மநாதர் வருகின்றார்.]
ஞாநதீபர்:- இவர்களிருவரும் தங்கியிருப்பதற்கு வசதியான ஓரிடம் பார்த்து இவர்களுக்குக் கொடு. இவர்களுக்குப் போஜன முதலானவைகளும் செய்து வை.
ஆன்மநாதர்:- ஆக்ஞாப் பிரகாரம் செய்கிறேன்.
சற்குணன்:- ஏ, பிராணசுந்தரி! சாக்ஷாத் மீனாட்சி சுந்தரேசுவரர் கிருபை நம்பேரிற் பரிபூரணமா யிருக்கின்ற தென்பதற்குச் சந்தேகமேயில்லை. பார்! நம்முடைய ஜன்மாந்தர பாவத்தினால் யாம் அனுபவிக்கும்படி நேரிட்ட துன்பங்களை யெல்லாம் நீக்குவதற்குப் பரமபதியாகிய சிவபெருமானார், நீ மூர்ச்சைபோய் விழுந்தபோது ஒரு வேடனைக் கொணர்ந்து விட்டார்! பிறகு தங்குவதற்கு மிகவும் வசதியான ஒரு முனிபுங்கவருடைய ஆசிரமத்தைக் கொணர்ந்து விட்டார்! நாம் இத்தனை நாளாக இராஜ்ய பரிபாலநம் பண்ணியும் இந்த முனிசிரேஷ்டர் இதுவரைக்கும் இந்த வனத்தில் இருப்பது நமக்குத் தெரியாதிருந்ததே! இந்த ஞானதீபருடைய ஆசிர்வாதமும் நமக்குக் கிடைக்கும்படியும் அந்தச் சந்திரசேகரரே செய்திருக்கின்றார். திருவருட் கற்பக தெய்வசிகாமணி (பாடுகின்றான்.
என்னேநின் கருணை! என்னேநின் கருணை!
தன்னேரில் பொருளே! தாதாயென் னிறையே! (12)
சுந்தரி:- அதற்கும் ஐயமுண்டோ? கடம்பவநேசர் கருணையினார் சகலமும்
நன்மையாய் மாறக் கடவன. முனிவருடைய கருணை யென்னே!
[யாவரும் போகின்றனர்.]
--------------
இடம்:- பாண்டியவரண்மனை
காலம்:- காலை
பாத்திரங்கள்:- சூரசேநன், சுசீலன்
சூரசேநன்:- நாம் இந்தப் பாண்டிய நாட்டைக் கவர்ந்து நாம் மதுரையம்பதியை நமது ராசதானி யாக்கிக்கொண்டு நாம் நவரத்தினங்களா லிழைக்கப்பெற்ற பொற்பீடத்தின்மீது வீற்றிருந்து நாம் அரசு புரிவது இத்தேசத்தார் யாவர்க்கும் சந்தோஷந்தானே? ஏன்? சுசீலரே?
சுசீலன்:- தாங்கள் சற்குண பாண்டியனை வென்ற மகாவீரர்! தங்கள் இராஜ ரீகத்துக்குக் குறை சொல்லுவாரு முளரோ? இந்நகருளார் யாவரும் தாங்கள் இந்த மதுராபுரியையே தலைநகராக்கிக் கொண்டோ மென்று பறையறைவித்த அற்றைநாள் அடைந்த ஆனந்தத்திற் கோரளவு முண்டோ?
சூரசேநன்:- என்ன! இன்னும் பாண்டியனையும் அவன் மனைவியையுங் காட்டில் துரத்திவிட்டுவரும்படி போன சேவகர்கள் வரவில்லை!
சுசீலன்:- சேவகர்கள் வருகிற சமயந்தான். இதோ வந்து விடுவார்கள்.
சூரசேநன்:- நாம் அவர்களைக் காட்டில் துரத்திவிட்டு வரும்படி உத்தரவு கொடுத்த சமாசாரம் ஊராருக்குத் தெரியுமோ?
சுசீலன்:- தெரியும்போலத்தான் தோன்றுகின்றது.
சூரசேநன்:- அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கக் கூடும்?
சுசீலன்:- எப்படித் தெரிந்ததோ? நமக்கென்ன? பயமா? அஃதொன்று மில்லையே.
சூரசேநன்:- நாம் பயத்திற்காகக் கேட்கவில்லை. தெரியக்கூடிய வழி யெப்படியோவென்று தெரிந்துகொள்ளத் தாம் கேட்டோம்.
சுசீலன்:- ஜனங்கள்; ஏழைக்குடிகள்! அவர்கள் மேலும் நல்லவர்கள்.
சூரசேநன்:- சரி, அதற்கென்ன இப்போது? நயவசநரெங்கே இதுவரையிலுங் காணோம்.
சுசீலன்:- இதோ வந்துவிட்டாரே! பாருங்கள்.
[நயவசநன் வருகின்றார்.]
சூரசேநன்:- ஓ! நயவசநரே! உமக்கு வயது நூறு! நாங்கள் நினைக்கவும் நீரும் வந்தீரே!
நயவசநன்:- மகாராஜா அவர்கள் சமூகத்திற்கு அடியேன் வந்தனம்.
சூரசேநன்:- நிரம்ப சந்தோஷம். இப்படியுட்காரும்.
நயவசநன்:- ஆக்ஞைப்படியே!
சூரசேநன்:- நாம் தோற்கடித்தோமே, அந்தப் பாண்டியன் அவன் புத்திரன். அவன் பேரென்ன? சுந்தராநந்தன், ஆம் சுந்தராநந்தன். அவனுக்குத் தோழராகவும் வெளியிலே போகும்போது காவலாளராகவும், இரண்டுபேரை நியமித்தோமே, அவர்களில் ஒருத்தன் உமது குமாரன் - மற்றொருவன் - சுசீலர்வகையோ? சரிதான், சரிதான். என்னத்திற்காகக் கேட்டேனென்றால் தெரியாதவர்களாயிருந்தால் ஒரு வேளை அவனுக்கு உடன்பாடாயிருந்து ஏதேனும் விபரீதஞ் செய்யக்கூடும்; அதற்காகத்தான்.
நயவசநன்:- (தனக்குள்) எவ்வளவு நயவஞ்சகன்! கபடன்! சூதுக்காரன்! கொலைஞன்!
சுசீலன்:- நாம் யாவற்றிலுங் கவனமாயிருப்பது நியாயந்தானே?
சூரசேநன்:- ஏன் ஐயா - சுசீலரே! உம்முடைய வகை மனுஷன் பெயரென்ன?
சுசீலன்:- எவனைச் சொல்லுகின்றீர்கள்?
சூரசேநன்:- அவன்தான் சிறைச்சாலையிலே கிடக்கின்றானே! அவன் தோழன்.
சுசீலன்:- என்னுடைய தமக்கை பிள்ளைதான்; அவன் பெயர் சுகுமாரன்.
சூரசேநன்:- இந்த ஊரிலே நல்ல தமிழ் வித்துவான்கள் இருக்கின்றார்களா?
சுசீலன்:- ஏன் அதற்கென்ன? சமஸ்தான சூரியும் மகா வித்துவானுமாகிய வித்தியாசாகரப் புலவர் இருக்கின்றார்.
சூரசேநன்:- நாம் பாண்டியனோடு புரிந்த யுத்தத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிக் கவிபாடும்படி அவர்க்கு உத்தரவு கொடுக்கவேண்டும். அப்படியல்லாவிட்டால் நம்முடைய கருவூர்ச் சமஸ்தான வித்வான் வண்ணக் களஞ்சியப் புலவருக்கு உத்தரவு கொடுப்போம்.
சுசீலன்:- ஆகட்டும். அந்தப்படியே வித்தியாசாகரப் புலவரிடந் தங்களுடைய உத்தரவினைத் தெரிவிக்கின்றேன்.
[சேவகன் வருகின்றான்.]
சேவகன்:- மகாராசா அவுக சமூகத்திலே கும்பிட்றேன்.
சூரசேநன்:- அடே! சேவகா! ஏன் இவ்வளவு தாமதம்?
சேவகன்:- மகாராசா! அவுகளைக்கூட்டி வெகு தொலைபோய், வந்தவளி தெரியாமே, நடுக்காட்டிலே, வெய்யில் கொளுத்தக் கொளுத்தக் கொண்டு விட்டிட்டு வந்தேன். அதுதான் நேரமாயிறிச்சு.
சூரசேநன்:- நேற்றே போனாயேடா?
சேவகன்:- ஆமாம் மகாராசா! நான் திரும்பி வாரையிலே இருட்டிப் போயிறிச்சு. அதுதான் இப்ப வந்தென். இல்லாட்டி அப்பவே வந்திருப்பேன்.
சூரசேநன்:- நீ அவர்களைக் காட்டிலே துரத்திவிட்டு வருகிறபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? உள்ளதைச் சொல்லவேண்டும். இல்லாவிடில் உன் தலையை இந்த வாளினால் துண்டித்துப் போடுவேன்.
[வாளையோச்சுகின்றான்.]
சேவகன்:- மகாராசாவே! நான் அவுகளைக் காட்டிலே விட்டவுடனே அவுக கோஒண்டு வாய்விட்டுக் கத்னாக. அந்த வேளையிலே புலி கரடி வந்து திரியும்போலத் தோணிச்சு. காடோ வெகு பயம்மாயிருந்திச்சு. ஆகையினாலே, எங்கே புலி என்னையும் அடிச்சுக்கிட்டு போயிருமோ எண்டு பயந்து நான் என்னாலே முடிஞ்சமட்டும் வெகு வேகமா ஓடியாந்திட்டேன்.
சூரசேநன்:- அவர்கள் என்னடா பேசிக்கொண்டார்கள் என்று கேட்டால் இவற்றையெல்லாம் உன்னை யார் சொல்லச் சொன்னார்கள்? ஏண்டா? அவர்கள் பேசிக்கொண்டதைச் சொல்லுகின்றாயா என்ன இப்போது?
சேவகன்:- மகாராசாவே! நீங்கள் என்னைக் கொண்டாலுஞ் சரி விட்டாலுஞ் சரி. நான் உள்ளதைத்தான் சொல்றேன். பொய் சொல்லல்லை. அவுக விம்மி விம்மியளுதாகளே யொளிய வேறே எதுவும் பேசல்லை.
சூரசேநன்:- நிஜந்தானா?
சேவகன்:- ஆமாம். மகாராசா! நிசந்தான்.
சுசீலன்:- மகாராஜா அவர்களுக்கன்றோ நான் சொல்லுவது?
சூரசேநன்:- என்ன சொல்லுகிறீர்? சுசீலரே! சொல்லும், கேட்போம்.
சுசீலன்:- அவர்கள் நடுக்காட்டிற் போன உடனே அவர்களுக்கு அழத்தோன்றுமே தவிர வேறொன்றும் பேசத் தோன்றாது. அவர்கள் தாங்கள் அடைந்த துன்பங்களை நினைக்கும்போதெல்லாம் தங்களைஅறியாமலே அழுவார்கள். அழுது, ஆறி யோய்ந்த பிறகு தான் எதாவது பேசுகிறதற்கும், யோசனை செய்வதற்கும் தோன்றும்; அதற்கு முன்னே வேறொன்றும் முடியாது. இந்த விஷயங்களை யெல்லாம் கொஞ்சம் உளநூற் பயிற்சியுடையவர்கள் எளிதிலுணர்வார்கள். மேலும் தங்களுக்கு இம்மாதிரியான தௌர்ப் பாக்கியங்களை அநுபவிக்கும்படி நேரிடவும் இல்லை. ஆகையினால் தான் தங்களுக்கு இது புதிதாகத் தோன்றுகின்றது.
சூரசேநன்:- நமக்கேன் இந்தமாதிரியான கஷ்டங்களெல்லாம் வரும்? நாம்தாம் எப்போதும் எவன் யுத்தத்திற்கு வந்தபோதிலும் சன்னத்தமா யிருக்கிறோமே! நமக்கென்ன?
சுசீலன்:- தங்களுக்கேதாவது வருமென்று சொல்லவில்லை. தாங்கள் இதையநுபவித்தே யறிவீர்களென்று தான் சொன்னேன்.
சூரசேநன்:-ஆம் சுசீலரே! நாம் அனுபவித்ததே இல்லை.
சுசீலன்:- நான் இந்த விஷயத்தைச் சொன்னது எதற்காக வென்றால் நம்முடைய சேவகன் சொல்லுகின்றன வெல்லாம் வாஸ்தவமே\ என்று காட்டும் பொருட்டுத் தான். மேலுமிவன் பொய் சொல்லுகிறவன் அல்லன்.
சூரசேநன்:- அடே! சேவகா! போடா சரிதான்.
[சேவகன் போகின்றான்.]
சூரசேநன்:- சுசீலரே! நம்முடைய எண்ணஞ்சரியாய் முடிந்து விட்டதன்றோ? இனி நாம் போகலாமா? என்ன? நயவசகரே! மௌனமாயிருக்கின்றீர்!
நயவசகன்:- சகலமும் சரி. (தனக்குள்) மகாராஜா அவர்கள் செய்யுங் காரியங்களுக்குக் கேட்பானேன்!
[யாவரும் போகின்றனர்.]
-----------------------------------------------------------
இடம்:--நயவசநன் வீடு
காலம்:--பிற்பகல்
பாத்திரங்கள்:-- நயவசநரும், சில கனவான்களும்
முதற்கனவான்:-- ஏன்! ஐயா! நயவசநரே! நாம் இது வரையிலும் இந்தச் சூரசேனனை நீதிமானா யிருப்பானென்று எண்ணி இருந்ததற்கு நேர்விரோதமாக நம்முடைய பூர்வ ராஜா சற்குண வழுதியையும், அவர் மனைவி சுந்தரியாரையும் சிறைச்சாலையில் தான் அடைத்திருக்கிறான் என்று நினைத்தோம். இன்றைக்கு நான் விசாரித்த போது வேறுவிதமாக மந்திரி சுசீலர் வீட்டு வேலைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்; அதைக்கேட்டு என்னுடைய வேலைக்காரன் இன்று என்னிடஞ் சொன்னான். அஃது என்ன நிஜமாயிருக்குமா?
இரண்டாங்கனவான்:-- என்ன ஐயா! நீர் என்னவோ சொல்லுகிறீர்? நாம் நாளைக்கே தகுந்த ஏற்பாடுகள் செய்து இந்த மகாபாவியை ஊரைவிட்டுத் துரத்திவிட்டு வழுதியாரைக் கூப்பிடுவோம். நீர்மாத்திரந் தைரியமாயிரும். ஒரு கை பார்ப்போம்!
நயவசநன்:-- ஆம். அவையெல்லா மிருக்கட்டும். நீர் உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்தமாதிரி கண்டபடி பேசுவதிற் பிரயோசனமில்லை. சூரசேநனோ, போர் வீரரோடு இப்போதிங்கிருக்கின்றான். அந்தப்போர் வீரர்களை வேறு எங்கேயாவது அனுப்புவதற்குத் தகுந்த யுக்திகள் செய்து அவர்கள் போன பிறகு நீங்கள் கலகமோ கிலகமோ ஏதோசெய்து ராஜாவை--தீர்த்து விட்டீர்களானால் அப்புறம் எல்லாம் சரியாய்ப்போம். ( பாடுகின்றான்)
'இராம னாளினெ னிராவணா னாளினென்?
நந்தம் பாட்டைச் சிந்தித் திருப்போம்'
என்று கருதுவோ ரொன்றினு முதவார்,
அரச னல்லனேற் பரசி யொழுகலாம்;
அன்றித் தீயனேற் பொன்றுத னலமாம்-- (13)
சுத்த வீரர் சுயாய மெண்ணவர்
தத்த நாட்டின் தனிநல காடுபு
மொத்து போரின் முனைந் துயான் கையிற்கொண்
டெத்தி றம்புக ழேய்ந்துவீழ் கின்றனர்! (14)
மூன்றாங்கனவான்:-- போம், ஐயா! போம். கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து அஃது உருகி அப்புறம் கொக்குப் பிடிக்கிற திருக்கட்டும்! நீங்கள் மாத்திரம் பேசாதிருங்கள் நான் தைரியமாய் ராஜா வீதியிற் பவனிவரும் போது இவ்வீட்டியினாற் குத்திப்--போடுகிறேன். அப்புறம் மேல் நடக்கிறதைப் பார்த்துக்கொள்வோம். என்னை வேண்டுமென்றாற் கொல்லுவாரகள். நான் போனாற் போகின்றேன்! நாடுகாப்பின் பொருட்டு ஒருவன் மட்டிற் சாதல் நலமன்றோ?
முதற்கனவான்:-- எல்லாவற்றிற்கும் நாம் அவசரப்படக்கூடாது. நயவசகர் கூறுவதையும் கேட்டு நன்றாய் ஆலோசனை பண்ணி அப்புறம் நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். பதறாத காரியம் சிதறாது!--ஆமாம். பார்த்து்க்கொள்ளும்.
இரண்டாங்கனவான்:-- அவருடைய தாத்பரியம் என்னவென்றால், தாமசஞ் செய்வோமானால் ஒருவேளை அரசனுக்குத் தெரிந்து அவன் மிகவும் சாக்கிரதை யாயிருந்து விடுவானாகில் நாம் நினைத்த எண்ணம் நிறைவேறாது போய்விடுமே என்பதுதான். வேறொன்றுமில்லை.
முதற்கனவான்:-- இவ்வளவும் அரசனுக்குத் தெரிந்தால் தானே காரியம் நிறைவேறாது போகும்?
இரண்டாங்கனவான்:-- என்னவோ? யார் யாரை நம்பலாம்? எவன் எப்படியோ? அரசனுடைய பிரீதி சம்பாதிக்கிறதற்காக எந்த வஞ்சகனாவது இந்த யோசனையைப்போய் அந்தப் பாதகனிடம் சொல்லி வைக்கட்டும். அதைவிட வேறு வினை வேண்டாம். நமக்குத்தான்கேடென்று நினைக்க வேண்டாம். நயவசநருக்குங் கெடுதல்; ஊர் முழுவதுஞ் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கிப் போடுவான்.
நயவசகன்:-- ஆமாம். அதற்காக இப்போது என்ன செய்யவேண்டு மென்கிறீர்?
மூன்றாங்கனவான்:-- அதுதான் நான் அப்போதே பிடித்துச் சொல்லுகின்றேனே! அவனைச்சாய்க்க நானாயிற்று என்றேனே!
நயவசநன்:-- எல்லாவற்றிற்கும் நானொன்று சொல்லுகின்றேன். கேளுங்கள். இன்றைக்கு இந்தச் சமாசாரத்தை, உங்களுடைய யோசனையை, நம்முடைய இளவரசன் சுந்தரநந்தனுக்கு என்னுடைய குமாரன் சந்திரமுகன் மூலமாகச் சொல்லியனுப்புவோம். சகலத்திற்கும் அவன் என்ன சொல்லுகிறானோ அதையுங் கேட்டு நடப்போம். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் இப்படிச் செய்யச் சம்மதந்தானா?
யாவரும்:-- பரமசம்மதம். அப்படியே செய்வோம்.
நயவசநன்(எழுநது) ஆனால் என்குமாரன் சந்திரமுகனிடஞ் சொல்லி யனுப்பிச் சுந்தரநந்தனுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு யான் நாளைக்குச் சொல்லுகிறேன். இது விஷயம் இரகசியமாயிருக்கட்டும் வெளியேறிவிடப் போகிறது. பத்திரம்! பத்திரம்!!
யாவரும்:-- அந்தப்படியே மிகவுஞ் சாக்கிரதையா யிருக்கிறோம். அதைப் பற்றி நீங்கள் யோசிக்கவே வேண்டாம்.
[ யாவரும் போகின்றனர்]
முதலங்கம் முற்றிற்று
----------------------
அங்கம் - 2
முதற்களம்
இடம்:- முற்கூறிய பூஞ்சோலை
காலம்:- மாலை
பாத்திரம்:- ரூபாவதி
ரூபாவதி:- (தனக்குள்) மலர் கொய்யப்போன அம்புஜாட்சியுங் கநகமாலையும் இவ்வளவு நேரமாகியும் ஏன் வரவில்லை?
(பாடுகின்றாள்)
* "மின்னிகரா மாதே விரைச்சார் துடன்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்க ணின்றருணீ--தன்னிகராஞ்
செந்தீ வரமலருஞ் செங்கார்தட் போதுடனே
யிந்தீ வரங்கொணர்தும் யாம்" (15)
என்று கூறிய தங்கள் வார்த்தையை மறந்து விட்டீர்களோ?-
(மௌனம்) அவ்விடத்தில் ஒரு மயில் கலாபம் விரித்து ஆடுகின்றது. அதைப் போய்ப் பார்ப்பேன்; அதற்குள் இவர்களும் வரட்டும்.
[எழுந்து சிறிதுதூரம் உலவுகின்றாள்.]
இஃதென்ன புதுமை! இவ்விடத்தை மிதித்த உடனே என்னுடைய தேகம் புளகிக்கின்றதே! அந்தோ! இது வன்றோ சுந்தராநந்தன் நேற்று இருந்த இடம்? இங்குத் தானே அவன் மூர்ச்சை போய் விழுந்தது? - என்னுடைய தகப்பனாரும் இத்துணைக் கொடியரோ? - அவனுடைய உருவம் என் கண்ணுக்கு எதிரே நிற்கிறது போலத் தோன்றுகின்றதே! ஓ! சுந்தராநந்தனே! நேற்று உன்னைத் தரிசித்தது முதல் உன்னைப் பரிசிப்பது எந்நாளோ எந்நாளோ என்று ஏங்கி ஏங்கி வருந்துகின்றேன்! நேற்றிராமுழுதும் தூக்கமென்பது சிறிதும் வரவில்லை! எழுந்து நிலாமுற்றத்தில் உலாவினேன்! ஐயோ! கொஞ்சமேனும் கருணை யென்பதில்லாமற் சந்திரன் தனது நிலவு நெய் பெய்து எனது காமாக்கிநியை வளர்த்துத் துன்பப்படுத்தினான்! என்ன செய்வேன்? மீட்டும் படுத்துக் கொள்வேன்! எழுந்திருப்பேன்! உலாவுவேன்! இந்தப்படி நேற்றிரவைக் கழித்தேன். இன்று என்ன செய்வேனோ? - என்னுடைய ஆசைக் கண்ணான் சுந்தராநந்தன் ஒருவேளை இன்றைக்கும் வருவானோ? வந்தால் யான் அவனை இன்னொரு தரமாவது தரிசனம் பண்ணி யாறுவேன்!
----------
* தண்டியலங்காரவுரை
(பாடுகின்றாள்)
தோகைமா மயில்கா ளென்னைச் சுந்தரா நந்தன் வந்தாற்
கோகியல் நாள்க நங்காள் கூவுமின் தயவு செய்தே. (16)
----(மௌனம்)
என்னுடைய தோழிமார் ஒருவேளை இதைக் கேட்டுக்கொண்டு வருவார்களோ? ஐயோ! என்னுடைய இந்தச் செயல்களெல்லாம் என் தகப்பனாருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வேன்! நான் கெடுவதே யன்றி என்னுடைய அருமைச் சுந்தரநந்தனுக்கும் கேடு விளையுமே! அம்ம! ஓ! கொடுமை! கொடுமை!
---- அதோ அம்புஜாட்சி வருகின்றாள். இனிமேல் நான் இதைக் குறித்து பேசப்படாது
----
[ அம்புஜாட்சி வருகின்றாள்.]
அம்புஜாட்சி! ஏன் இவ்வளவு தாமதம்?
அம்புஜாட்சி:-- என்னவோ? அம்மா! கநகமாலையும் நானும் இரண்டு பேருமாய்ப் போனோம். அவளை யெங்கேயோ காணேன். இதுவரைக்கும் வருவள் வருவளென்று காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் வரவில்லை. ஒருவேளை எனக்கு முந்தியே இங்கே வந்துவிட்டாளோ என்று நினைத்து வந்தேன். அவள் இங்கே வந்தாளோ?
[கநகமாலை வருகின்றாள்]
ரூபாவதி:-- நீ அப்படித் திரும்பிப்பார் யாரென்று!
அம்புஜாட்சி:-- என்னடி அம்மா! காகமாலை! இதுவரைக்கும் எங்கே போயிருந்தாய்? உனக்காக எவ்வளவு நாழிகை காத்துக்கொண்டிருக்கிறது? ரூபாவதி தனியாயிருக்கிறாளே என்று வந்துவிட்டேன்.ஏதாவது என் பேரிலே கோபமோடி அம்மா?
கநகமாலை:-- இதற்குக் கோபமென்ன கோபம்? நீ என்ன பெரிய தலை போகிற காரியஞ் செய்துவிட்டாய், அதற்கு நான் உன்னைக் கோபித்துக்கொள்ள? என்னவோ இப்படியே போனேன். அங்கே யோரிடத்தில் இரண்டு மான்கள் துள்ளி விளையாடின. அந்த வேடிக்கையைப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டேன். அதுதான் கொஞ்சம் தாமதமாய்விட்டது. நம்முடைய ரூபாவதியை வெகுநாழிகை காக்கும்படி வைத்துவிட்டோமே என்று வருத்தப்படுகிறேன்.
ரூபாவதி:-- இந்த அற்ப காரியத்திற்காக நீ வருத்தப்படுவானேன்? நானும் இங்கே ஒரு மயில் அழகாய்த் தோகை விரித்தாடிற்று. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அம்புஜாட்சி:-- ஏன் ரூபாவதி! நான் ஒன்று கேட்கிறேன்--கோபித்துக் கொள்ளாதிருந்தாற் சொல்லுகிறேன்.
ரூபாவதி:-- கோபித்துக் கொள்ளுகிறதென்ன? சொல்லடி சொல்.
அம்புஜாட்சி:- அப்படி யொன்றுமில்லை. வேடிக்கையாய்த்தான் கேட்போ மென்று நினைத்தேன்.
ரூபாவதி:- அதைத்தான் இன்னதென்று சொல்லு, கேட்போம். சீக்கிரம் சொல்லு.
கநகமாலை:- அவள் எப்பொழுதும் இப்படித்தான் கொஞ்சம் வீண்பிலுக் கெல்லாம் பண்ணுவாள்.
அம்புஜாட்சி:- அப்படி எத்தனை நாள் அம்மா உன்னிடத்தில்நான் பிலுக்குப் பண்ணி யிருக்கிறேன்?
ரூபாவதி:- வெகு! நன்றாயிருக்கிறது அஃதென்னை? நீயும் ஆரம்பித்து விட்டாய்! அவள்தான் சொன்னாற் சொல்லட்டுமே! அவளுக்கு உன்னைச் சொல்ல உரிமையில்லையா என்ன?
அம்புஜாட்சி:- சொன்னாற் சொல்லுகிறாள். அதற்கொன்றுமில்லை. நான் சொல்லவந்த தென்னவென்று கேட்டால் உன் முகம் என்னவோ கொஞ்சம் வாட்டம் அடைந்தது போலக் காணப்படுகின்றதே; அஃது எதனாலே என்று கேட்கத்தான் வாயெடுத்தேன். அதற்குள்ளே கநகமாலை நான் பிலுக்குப் பண்ணுவதாக நினைத்துக் கொண்டாள்.
ரூபாவதி:- அதுதான் அவள் விளையாட்டாய்ச் சொன்னாள்; நீயேன் அதை மறுபடியும் மறுபடியும் தூண்டிச் சொல்லுகிறாய்? என்னவோ விட்டு வேறே யேதாவது பேசு.
கநகமாலை:- அம்புஜாட்சி! நான் உன்னைத் தெரியாதே சொல்லிவிட்டேன் அம்மா! இவ்வளவு தூரஞ் சொல்லுவாயென்று தெரிந்திருந்தால் நான் பேசியிருக்கவே மாட்டேன்.
ரூபாவதி:- சரி, நீங்கள்தாம் வாதிப் பிரதிவாதிகளாம். நான் நியாயஞ் சொல்வேனாம். எங்கே இரண்டு பேரும் உங்கள் வழக்கைச் சொல்லுங்கள். கேட்டுத் தீர்மானம் சொல்லுவோம்.
அம்புஜாட்சி:- என்னடியம்மா! நீ கேலிபண்ணுகிறாயே யொழிய நான் கேட்டதை விட்டுவிட்டாயே.
ரூபாவதி:_ நீ அப்படி என்ன கேட்டாய்? எனக்கொன்றும் ஞாபகம் இல்லையே!
அம்புஜாட்சி:- ஞாபகமில்லையா? சரிதான். நீ எங்களுக்கெல்லாம் சொல்லுவையே அம்மா!
ரூபாவதி:- நீ கேட்டதே யின்னதென்று தெரிந்தாலன்றோ நான் சொல்லக் கூடும் அம்மா! என்பேரிற் கோபித்துக் கொள்வதிற் பயனில்லை.
அம்புஜாட்சி:- ஆனாற் சொல்லுகிறேன். இன்னொருதரம்; கவனமாய்க்கேளு. உன் முகத்தில் தினமும் இருக்கிற சந்தோஷக்களையை இன்றைக்கு என்னவோ காணோம்! அதன் காரணமென்ன? சொல்லு.
ரூபாவதி:- அதன் காரணமா? - (மௌனம்)
கநகமாலை:- என்ன யோசிக்கிறாய்? சொல்லு.
அம்புஜாட்சி:- என்ன இது! அழுகிறாயா? என்ன? ஏன் அம்மா! நாங்கள் இருவரும் உன் பக்கத்தில் உனக்குத் துணையா யிருக்கிறபோது நீ யழவேண்டிய காரணமென்ன? உன்னை நாங்கள் யாரும் என்னவாவது சொன்னோமா? அல்லாமற் போனால் நாங்கள் இவ்வளவு நாழிகையா யுன்னைத் தனியாய் விட்டுவிட்டுப் போய் விட்டோ மென்று விசனப்படுகிறாயா? அதுவுமல்லாவிட்டால் எவையாவது மிருகங்களைக் கண்டு நீ பயந்திருக்கலாம் என்று சொல்ல எதுவுமில்லையே. எனது அருமைத் தலைவியே! ரூபாவதி! நீ இவ்வாறு வருத்தப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போமோ? உன் மனத்திலிருக்கிற துன்பத்தை நீ யெங்களிடத்திற் சொல்லத் தகாதோ?
ரூபாவதி:- எனக்கு அதைச் சொல்ல நாவெழவில்லை. (மௌனம்)
[கண்ணீர் வடிக்கிறாள்.]
அம்புஜாட்சி:- அடி! கநகமாலை! நம் ரூபாவதி மெய்யாகவேயழுகின்றாள். நீ மற்றைத் தோழிமாரையும் கூப்பிடுகிறாயா? [இரங்கிப் பாடுகின்றாள்.]
கரும்பிழி சாறொக்குங் களிமோரு யோடு
முருந்தினை மானு முறுவலும் பூத்து
வருந்தா திருந்தவ ளின்றோ வருந்தி
யிருந்தா ளிறந்தவா காணீரே யெழிலுடை யீர்வந்து காணீரே.(17)
பண்களி கூர்ந்தனி பாடுங் குழவினன்
வின்கொ ளமுதமு மேவு மதரத்த
ணன்பு கொளவரு நந்தம்ரூ பாவதி
கண்க ளிருந்தனை காணீரே காரிகை யீர்வந்து காணீரே. (18)
கநகமாலை:- அம்புஜாட்சி! இந்தச் சோலையிலே ஒரு வனதேவதை யுண்டென்று சொல்லக் கேட்டிருக்கிறோமே. எங்கே அதுதான் ஒரு வேளை யிவள் தனியாயிருக்கும் போது வந்து பயமுறுத்திவிட்டுப் போயிற்றோ? என்னவோ?
அம்புஜாட்சி:- எனக்கு அப்படி யிருக்குமென்று தோன்றவில்லை. அப்படியாயின் இப்படிச் சொல்லமாட்டாள். - எல்லாவற்றிற்கும், ஏன் ரூபாவதி! உள்ள காரணத்தை எங்களுக்கு வெளியிடக் கூடாதா? நாங்கள் உன் தோழிகளல்லமோ?
[சுந்தராநந்தன் வருகின்றான்.]
ரூபாவதி:- (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) அஃது ஒன்றும் அவ்வளவு விசேஷமில்லை. நாம் போகவேண்டாமா? நமக்கு நேரமாகவில்லையா?
கநகமாலை:-- தினமும் வருகிறார்களே, அநதப் பிள்ளைகள் இன்றைக்கும் ஒருவேளை வந்தாலும் வருவார்கள். சற்றே இருந்து வேண்டுமென்றாற் பார்த்துவிட்டுப் போவோம். ஏதாவது விசனப்பட்டுப் பேசுவார்கள்.கேட்போம்.
ரூபாவதி:-- அவர்களைப் பார்வை என்ன? கொம்பு முளைத்திருக்கிறதோ?
அம்புஜாட்சி:-- கநகமாலைதான் சொல்லுகிறாளே. இருந்துதான் பார்த்துவிட்டுப்போவமே. என்னவோ? எளியன் சுந்தராநந்தன்! அவனை நினைக்கிறபோதெல்லாம் எனக்கு விசனமாயிருக்கிறது. அவன் தலையிலே பிரமா இப்படிக் கஷ்டப்படும்படி எழுதிவிட்டான்!
ரூபாவதி:-- (விசனத்தை அடக்கிக்கொண்டு) நேற்று அழுது மூர்ச்சைபோய் விழுந்தானே! அவனா?
கநகமாலை:-- ஆமாம்! அவன்தான்! அழகாய் இன்னொருத்தன் மடியிலே சாய்ந்து கொண்டிருந்தவன்!
ரூபாவதி:-- ஏண்டி! கநகமாலை! நீ இப்போது சொன்னாயே இந்தச் சுந்தராநந்தன், அமபுஜாட்சி அத்தை பிள்ளை சுகுமாரன், இவர்கள் இரண்டு பேர்களிலும் யார் அதிக அழகுடாயவர்?
கநகமாலை:-- சுந்தராநந்தன் தான். சொல்லுகிறதற்குக் கேட்பானேன்?
[சுகுமாரன் வருகின்றான்.]
[அவனும் சுந்தராநந்தன் இருக்குமிடம் வந்து ஒளிந்து நிற்கின்றான்.]
சுந்தராநந்தன்:--(மறைவில்) கொஞ்சம் பேசாதிரு!
ரூபாவதி:-- அரசன் மகன் என்று சொல்லுகிறாயோ?
கநகமாலை:-- எனக்கென்னடி அம்மா! முந்தி ராஜாபிள்ளையா யிருந்தால் இப்போதென்ன அதற்கு?
ரூபாவதி:-- (தனக்குள்) என்னே உலகியல்! அரசிழந்தாரை யவமதித்தல் நன்றாயிருந்தது! செல்வஞ் சிறப்போ செம்மை சிறப்போ? (வெளியாய்) அப்புறம், அமபுஜாட்சி சண்டைக்கு வரப்போகிறாள்! சுகுமாரனுக்குச் சுந்தராநந்தனுடைய அழகில்லை என்று சொல்லுகிறாயே!
கநகமாலை:-- ஏதம்மா! நீயே சண்டையிழுத்து விடுவாய்போருக்கிறதே!
அம்புஜாட்சி:-- என்ன! ரூபாவதி! இப்படிக் கேலி பண்ணுகிறாய்!
ரூபாவதி:-- சரி, இவையெல்லா மிருக்கட்டும். கநகமாலை! நான் ஒன்று கேட்கிறேன். சொல்லுவையா?
கநகமாலை:-- என்ன? கேளு! சொல்லக்கூடியதாயிருந்தால் சொல்லுகின்றேன்.
ரூபாவதி:-- அம்புஜாட்சிதான் அவள் அத்தைபிள்ளை சுகுமாரனுக்கு வாழ்க்கைப்படப் போகின்றாள். நீ யாருக்கு வாழ்க்கைப்படப் போகின்றாய்? சுந்தராநந்தன்தான் அழகாயிருக்கின்றானே1 நீ ஏன் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது?
அம்புஜாட்சி:- அப்படிச் சொல்லப்போனால், ரூபாவதி! உனக்கும் அவனுக்குந்தான் ஈடு சரியாயிருக்கிறது. உன்னுடைய அழகுக்கு ஏற்றவன்தான் அவனும்! அவனுடைய அழகுக்கு ஏற்றவள்தான் நீயும்!
ரூபாவதி:- (முகஞ்சிவந்து) கநகமாலையும் என்ன? அழகிற்குறைந்தவளோ? அவளும் அவனுக்கு ஏற்றவள்தான்! ஒருவேளை அவன் இப்போது சிறைச்சாலையி லிருக்கிறானே என்று எண்ணுவாளோ என்னவோ?
கநகமாலை:- அவை யெல்லாம் வீண் பேச்சு. ரூபாவதி! உனக்கு இஷ்டமிருந்தால் நீ அவனுக்கு வாழ்க்கைப்படு.
ரூபாவதி:- சரி. அம்புஜாட்சி! கநகமாலைகூட வீண் பேச்சு என்று சொல்லுகின்றாள்! நேரமாகிறது. வீட்டிற்குப் போகவேண்டும்.
அம்புஜாட்சி:- ரூபாவதி! நீ ஒரு பாட்டுப் பாடு.
கநகமாலை:- எங்கே ரூபாவதி! பாடு.
ரூபாவதி:- (பாடுகின்றாள்)
பெருமான்வந் தானென்று பேசுவாய் கிளியே
பீரு மொழிந்திடப் பேசுவாய் கிளியே
மருமலர் வீசிடப் பேசுவாய் கிளியே
வந்தது தென்றலும் பேசுவாய் கிளியே (19)
போதன்வந் தானென்று பேசுவாய் கிளியே
புன்கண்மை தானென்று பேசுவாய் கிளியே
நாதன்வந் தானென்று பேசுவாய் கிளியே
நாமு மகிழ்ந்திடப் பேசுவாய் கிளியே. (20)
மழகளி றோடிட வரகுவாய் மயிலே
மாட்டினன் வந்தானென் றாடுவாய் மயிலே
யழகினன் வந்தானென் றாடுவாய் மயிலே
யானந்தம் வந்ததென் றாடுவாய் மயிலே. (21)
வள்ளலும் வந்தானென் றாடுவாய் மயிலே
மதன்வாதை நீங்கிற்றென் றாடுவாய் மயிலே
விள்ள மலர்மண மாடுவாய் மயிலே
வீசும் பொழிலகத் தாடுவாய் மயிலே. (22)
தலைவன்வந் தானென்று கூவுவாய் குயிலே
தன்னை மறந்திடக் கூவுவாய் குயிலே
கலைஞன்வந் தானென்று கூவுவாய் குயிலே
களிமிகுந் தாடிடக் கூவுவாய் குயிலே. (23)
இறைவன்வந் தானென்று கூவுவாய் குயிலே
யென்னை யணைந்திடக் கூவுவாய் குயிலே
சிறையினை நீங்கியே கூவுவாய் குயிலே
சேர மனத்தெண்ணிக் கூவுவாய் குயிலே. (24)
அம்புஜாட்சி:- பாட்டு வெகு சுகமா யிருக்கிறது.
கநகமாலை:- இன்றைக்கு நாம் வந்து வெகு நாழிகையாய் விட்டது. ஆகையினாலே நாம் சீக்கிரம் போகவேண்டும் அம்மா!
ரூபாவதி:-சரி. ஏன் அம்புஜம்! போவமே!
அம்புஜாட்சி:- குறைப்பெயராய்க் கூப்பிட்டாயானா லுனக்குக் குறைப்பிள்ளைதான் பிறக்கும்! பார்த்துக்கொள்.
ரூபாவதி:- அப்படியே பிறந்தாலும் ஒன்றுதானே யப்படிப்பிறக்கும். போகட்டும். மற்றைப் பிள்ளைகளாவது நன்றாய்ப் பிறக்குமே யல்லவோ? அது போதும்.
அம்புஜாட்சி:- ஏன்? தாமதம் என்ன? போகலாமே.
ரூபாவதி:- தாமதமொன்றுமில்லை. போகலாம். அம்புஜாட்சி நீ இன்றிரவு மாத்திரம் எங்கள் அரண்மனையில் என்னோடு தங்கியிருந்து விடியற்காலம் நீயுன் வீட்டிற்குப் போகலாமே.
அம்புஜாட்சி:- அப்படியானால் நானிப்போது வீட்டிற்குப் போய் என் தகப்பனாரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு வந்துவிடுகிறேன்.
[ரூபாவதி, அம்புஜாட்சி, கநகமாலை போகின்றனர்.]
சுகுமாரன்:- (வெளிவந்து) நீ வந்து வெகு நாழிகையாய்விட்டதோ! ஏன் சுந்தராநந்தா! இப்போது பேசிக்கொண் டிருந்தார்களே, இந்த மூன்று பெண்களும் இன்னர் என்பது உனக்குத் தெரியுமோ?
சுந்தராநந்தன்:- மந்திரி சுசீலர் பெண் ஒருத்தி; அவள்தான் உன் மாமா பெண். அது நிச்சயமாய்த் தெரிகின்றது. மற்றையிரண்டு பேரும் யாரோ? நன்றாய்த் தெரியவில்லை.
சுகுமாரன்:- என்னுடைய மாமா பெண் பெயர் அம்புஜாட்சி.- மற்ற இரண்டு பேர்களிலும் அதிக அழகுள்ளவளா யிருந்தாளே அவள் தான் உன்னை யிக்கோலமாக்கிய சூரசேநன் புதல்வி. அவளுக்கு அவளுடைய அழகுக்குத் தக்கபடி 'ரூபாவதி' யென்று பெயரிட்டிருக்கிறார்கள். மற்றவள் 'கநகமாலை' யென்னும் பெயருடையவள். அதைத் தவிர வேறொன்று மவளைப்பற்றி எனக்குத் தெரியாது.
சுந்தராநந்தன்:- என்ன! சந்திரமுகன் இன்று இதுவரையிலும் வரவில்லை. ஏதாவது அவன் வீட்டில் இன்றைக்கு விசேஷமுண்டோ? அவன் ஒருநாளும் இவ்வளவு தாமதம் செய்யமாட்டானே!
சுகுமாரன்:- அதற்கென்ன இப்போது? அவன் மெள்ளத்தான் வரட்டுமே!
சுந்தராநந்தன்:- அதைப்பற்றி யொன்றுமில்லை. அவன் சீக்கிரம் வருகிறவனே என்று சொன்னேன்.
சுகுமாரன்:- ஓ! சுந்தராநந்தா! நீ யின்று மாலைப்பொழுதை யெவ்வாறு கழித்தாய்? ஏதேனும் படித்தாயோ?
சுந்தராநந்தன்:- படித்திலேன். ஆயினும் எம் ஆலவாய்ப்பெருமானை வாயாரப் பாடி துதித்தேன். அதுவே யென் மனத்திற் சிறிது அமைதி விளைத்தது. அதைத் தவிர்த்து வேறொன்றுஞ் செய்திலேன்.
சுகுமாரன்:- நீ பாடித் துதித்ததை நான் கேட்கலாமோ? கேட்கலாமெனின் அதைச் சொல்.
சுந்தராநந்தன்:-(பாடுகின்றான்)
செம்மை யுள்ள சிதாநந்த னேயுன்ற
னன்மை யான நவிலருந் தன்மையிற்
கிம்மை யில்லடி யேமிச் சிறையினி
லம்ம வோவென் றரற்றுத லாகுமோ? (25)
வைய மேத்துறு மாமது ராபுரித்
துய்ய னேமதி சூடிய சுந்தரா
செய்ய நின்னருட் செப்பருந் தன்மையிற்
கைய கோவென் றலறுத னீதியோ? (26)
ஆனேறினி தேறீயெளை யாளும்மது ரேசா
தேனெயெனுஞ் சொல்லாளுமை சேரும்மிடப் பாகா
கானேய்குழற் கங்காதர நின்பேரரு ளிற்கே
யானேயெனக் கோட்டத்திலி ணைந்தேயெழ லாமோ? (27)
சம்போ சாம்பசிவா சக மெல்லாம் படைத்தவனே
வம்பார் பூம்பொழில்சூழ் மது ராபுரி வாழ்பவனே
யம்பா வுக்குடலி லொரு பாதி யளித்தவனே
யெம்பா னீயிரக்க மினி யேனும் புரிந்தருளே. (28)
மூவா முன்னவனே முதலாகிய முக்கணனே
கோவே கோமளனே குளிர் சந்திர சேகரனே
நாவாற் பாடுகின்றே நல முள்ள மதுரையனே
தேவா நீகருணை சிறி தேனும் புரிந்தருளே. (29)
சுகுமாரன்:-ஓ! சுந்தராநந்தா! நீ பாடிய பாட்டுக்கள் மிகவும் நன்றயிருக்கின்றன. இவை யெல்லாம் பூர்வஜன்ம புண்ணியம்!
சுந்தராநந்தன்:-(கண்ணீர் ததும்ப) ஜன்மாந்தரத்தில் யான் புண்ணியமுஞ் செய்தேனோ? அப்பா! சுகுமாரா! நீ யறியாது கூறுகின்றாய்! யான் பூர்வஜன்மத்திற் புண்ணியஞ் செய்திருப்பேனாயின் இப்போது ஏன் இந்தவிதத் துன்பமெல்லாம் அநுபவிக்கவேண்டும்? இவை யெல்லாம் என்னுடைய ஜன்மாந்தர பாவத்தினாலேயா மென்பது தோன்றுகின்றது.
சுகுமாரன்:- சரி. இந்த எண்ணத்திற்கு, இப்பொழுது இடங் கொடுத்தோமோ நேற்றைப்போல ஏதேனும் விபரீதம் விளைக்கும். அப்புறம் மிக்க துன்பம் வரும். ஆகையால் வேறு விஷயத்தைக் குறித்துப் பேசுவோம்.
சுந்தராநந்தன்:- இன்றைக்கு ஏதாவது விசேஷம் இருக்கத்தான் வேண்டும். இல்லாவிடிற் சந்திரமுகன் இவ்வளவு தாமதம் செய்ய மாட்டான்.
சுகுமாரன்:- அவனும் வருகிற சமயந்தானே! வந்துவிடுவான். இது கிடக்கட்டும். அது மூன்று பெண்களும் பேசிக் கொண்டதிலிருந்து ஒன்று படுகின்றது.
சுந்தராநந்தன்:- அஃதென்னை? எனக்கொன்றும் தோன்றவில்லையே! எங்கே? அஃது இன்னதென்று சொல்லு. கேட்போம்.
சுகுமாரன்:- அதுவா? சொல்லுகின்றேன் கேள். அரசன் புத்திரி ரூபாவதிக்கு உன் பேரிற் கொஞ்சம் பிரியமிருக்கிறது என்பது காணப் படுகின்றது.
சுந்தராநந்தன்:- அஃதெப்படிக் கண்டாய்? வெகு நன்றாயிருக்கின்றதே!
சுகுமாரன்:- அவர்கள் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையிலிருந்து நான் அநுமானித்துக் கொண்டேன்.
சுந்தராநந்தன்:- அப்படியானால் எனக்கேன் தோன்றவில்லை?
சுகுமாரன்:- அஃதென்னையோ? யானறியேன். என் மனத்தில் தோன்றினதைச் சொன்னேன். அதைத்தவிர வேறில்லை.
சுந்தராநந்தன்:- ஆயின் அமையும். ஒவ்வொருவருந் தமது மனத்தில் தமக்கு வேண்டியனவற்றை யெல்லாம் நினைத்துக் கொள்ளலாம். – ஆயினும் எனக்குத் தோன்றுகிற மட்டில் அந்த மூன்று பெண்களும் நாம் நேற்றைப் பேசிக் கொண்டிருந்த சங்கதிகளை யொளித்துக் கேட்டிருப்பார்களோ வென்பது தோன்றுகின்றது. ஏனென்றால் என்னைக்குறித்த ரூபாவதி 'நேற்று மூர்ச்சை போய் விழுந்தானே, அவனா?' என்று கேட்டாள்.
சுகுமாரன்:- ஆனால் வெகு நல்லதாயிற்றே!
சுந்தராநந்தன்:- அஃதெப்படி யப்பா?
சுகுமாரன்:- உன் பேரில் இரக்கங்கொண்டு ஒரு வேளை தன் தகப்பனாரைக் கேட்டு உன்னைச் சிறைச்சாலையி னின்றும் விட்டுவிடச் சொல்லக் கூடும். அதனாலேதான் நல்லதென்றேன்.
சுந்தராநந்தன்:- அப்படித்தான் அவள் செய்வாலென்பதென்னை? ஒரு வேளை யென்னுடய சங்கதிகளை யெல்லாந் தன் தகப்பனாரிடஞ் சொல்லி யென்னை யின்னும் அதிகமான துன்பங்களுக்கு ஏன்
உட்படுத்த மாட்டாள்? அப்படிச் செய்தாலும் செய்யக் கூடுமே?
சுகுமாரன்:- நான் அவளைப்பற்றிக் கேள்விப்பட்ட மட்டில் அவள் நல்லவளே என்பது தோன்றுகின்றது. ஆகையால் நீ நினைக்கிறபடி அவள் செய்யமாட்டாள் என்பதற்கு ஆக்ஷேபமே யில்லை.
சுந்தராநந்தன்:- அப்படியானால் என் ஆலவாய்த் தேவனை யான் பாடித் துதித்தது பலித்துவிட்டதென்று சொல்லலாம். அப்பா! அதோ! அங்கே வருகின்றான் சந்திரமுகன்.
[சந்திரமுகன் வருகின்றான்.]
சுகுமாரன்:- எங்கே?
சந்திரமுகன்:- வந்தனம் சுந்தராநந்தா!
சுகுமாரன்:- ஏன், சந்திரமுகா! உன்னை எவ்வளவு காலம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போ மென்று நினைத்தாய்?
சந்திரமுகன்:- நான் உன் வீட்டிற்போய் உன்னைத் தேடினேன். அவ்விடத்திலே நீ யில்லாமையால் இங்கே தான் வந்திருப்பா யென்று நினைத்து வந்தேன். அதுதான் நாழிகையாய்விட்டது. அக்குற்றத்தைப் பொறுப்பீர்களென்று நினைக்கின்றேன். மேலும் நான் தாமதித்து வந்ததற்கு வேறு காரணமும் உண்டு. அஃதென்னென்றால்: என்னுடைய தந்தையார் என்னை யழைத்து இரகசிய சமாசார மொன்று சொல்லி, அதைப்பற்றி உன்னிடத்தில் தெரிவிக்கும்படி ஆணையிட்டனுப்பினார்.
சுந்தராநந்தன்:- அஃதென்ன அப்படி யிரகசியமான சமாசாரம்?
சுகுமாரன்:- ஓ! சுந்தராநந்தா! நீ யெண்ணியபடி, சந்திரமுகனும் ஏதோ விசேஷ சமாசாரம் கொண்டுவந் திருக்கின்றானே!
சுந்தராநந்தன்:- அப்படி யல்லாவிட்டால் அவன் காலகரணம் செய்யக் காரணமில்லையே! சரி சந்திரமுகா! சமாசார மின்னதென்று சொல். கேட்போம்.
சந்திரமுகன்:- இன்று என்னுடைய வீட்டில் இரண்டு மூன்று கனவான்கள் வந்து என்னுடைய தந்தையாரொடு சிலவற்றைக் குறித்துப் பேசினார்கள். அவை யென்னவென்றால், உன்னை இச்சூரசேநன் சிறையிலடைத்திருப்பதும், உன் பெற்றோரை வல்லியம் பலதிரிவனத்துத் துரத்தியதும், நியாயமல்ல வென்பதும் இவ்வித அநியாயத்தை நிறுத்துவதற்குத் தக்க யுக்திகள் யாவையோ அவற்றின் நாடி முயற்சி செய்யவேண்டு மென்பதுவேயாம். இது விஷயத்தில் உன் யோசனை யென்னவென்று என் தந்தையார் கேட்டுவரும்படி என்னிடஞ் சொன்னார்.
சுந்தராநந்தன்:- அக் கனவான்கள் எண்ணிய யோசனைகளெல்லாம் நல்லனவேயாம். ஆயினும் சூரசேநன் என்னையும் என் பெற்றோரையும் கொலைக்களம் படாது விட்டிருத்தலே பேருதவியாம். ஆகவே யித்தன்மையான உபகாரிக்கு விரோதமாக ஏதேனுஞ் செய்ய முயலுதல் செய்ந்நன்றி கோறலாம்.
* "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று" (30)
என்று திருவள்ளுவர் கூறியிருத்தலைப் பலமுறையும் நமது ஆசிரியர் வித்தியாசாகரப் புலவர் எடுத்துரைத் திருக்கின்றனரே! அஃதுணர்ந்திருந்தும் நீ யிவ்வாறு கூறுதல் நீதியாகுமோ?
------------
* திருக்குறள்
சுகுமாரன்:- அப்பா! சுந்தராநந்தா! நீ கூறுவது மிகவும் நன்று! நன்று! இந்த மகாவஞ்சகன் சூரசேநன் விஷயத்தில் நீதியென்பதே பார்த்த லொண்ணாது. திருவள்ளுவனார் கூறுவனவெல்லாம் நல்லொழுக்க முடையவர்கட்கேயாம். தீயொழுக்க முடையவர்கட்கு நீதியேது? நியாயமேது? தருமமேது?
சுந்தராநந்தன்:- ஓ, சுகுமாரா! நான் சொல்லியதை மறந்துவிட்டு நீ யிவ்வாறு கூறலாமோ? சூரசேநன் தருமசிந்தை யுடையவன் என்பதற்கு ஆக்ஷேபமுமுண்டோ? என்னைக் கொல்லாது விட்டிருப்பதே அவனுடைய நல்ல மனத்திற்குத் தக்கசான்று பகரும்.
சுகுமாரன்:- கொல்லுவது பாவம், ஆகவே கொல்லாமை பாவமில்லையே
யன்றி அது புண்ணியமாகுமோ? இங்ஙனங் கொல்லா திருத்தலோடு ஒருவன் எதைக் கொல்லாதிருக்கின்றானோ அதற்கு உதவியும் நன்மையுஞ் செய்வானானால் அது புண்ணியம். மற்றைப்படி கொல்லா திருத்தல் ஒருநாளும் புண்ணிய மாகாது.
சுந்தராநந்தன்:- ஓ, சுகுமாரா! இன்னுங் கேட்பாய்! என்னைக் கொல்லா திருத்தலேயன்றி யென்னைச் சிறைச்சாலையி னின்றும் வெளியே போயுலாவுதற்கும் எனது அருமை நண்பர்களாகிய உங்களுடன் பேசிக் களிப்பதற்கும் உத்தரவு கொடுத்திருத்தல் உனக்குத் தெரியாதோ?
சந்திரமுகன்:- (தனக்குள்) நடுவில் நாமொன்றுஞ் சொல்லக்கூடாது.
சுகுமாரன்:- இன்னொருவிஷய முனக்குத் தெரியாதே! இந்தக் கொலைஞன் உன்னைச் சிறைச்சாலையிலே யிடவேண்டுமென்றும், வெளியேபோக விடக்கூடாதென்றும், சொல்லித்தான் முதல்முதலில் உத்தரவு செய்தானாம். பிறகு என்னுடைய மாமனார் சுசீலர் அரசனை நோக்கி நீர் அப்படிச் செய்வீரானால் ஜனங்கள் உம்மைக் கொடியவரென்று நினைக்கக்கூடும் என்று சொன்னதைக் கேட்டபிற்பாடு தான் இப்படிக் கட்டளை யிட்டானாம்.
சுந்தராநந்தன்:- இருக்கட்டும். எல்லாவற்றிற்கும் சந்திரமுகனை முற்றிலுங் கேட்போம். ஏன் சந்திரமுகா! அரசன் கொடுமையை நிறுத்துவதற்கு அக் கனவான்கள் ஏதேனும் யுக்தி செய்திருக்க்கின்றார்களாமே?
சந்திரமுகன்:- ஆம். அப்படித்தான் சொன்னார். அஃதென்னென்றால்: ஒரு கனவான் அரசன் வீதியில் உலாவரும்போது அவனைக் குத்திப் போடுவதாகச் சொன்னாராம். மற்றைக் கனவான்களும், அது சரியென்று அநுமோதித்தார்களாம். ஆனால், என் தந்தையார் மாத்திரம் பதறக்கூடாதென்றும், இதைக்குறித்து இன்னும் யோசனை செய்யவேண்டு மென்றும் சொன்னாராம். இதை யொருவர் ஒத்துக்கொண்டாராம். மற்றை யிருவரும் ஒத்துக்கொள்ள வில்லையாம். அதன்பேரில் இதைக்குறித்து உன்னிடத்தில் தெரியப்
படுத்தி, இதற்கு நீ யென்ன சொல்லுகின்றாயோ அதன்படி நடப்பதாக எல்லோரும் தீர்மானித்தார்களாம். அவ்வளவுதான். நீ யென்ன சொல்லச் சொல்லுகின்றாயோ அதை யென் தந்தையாரிடஞ் சொல்லுகின்றேன்.
சுந்தராநந்தன்:- ஏதப்பா! மிக விந்தையா யிருக்கின்றதே! ஒன்றும் பயன்படும் யுக்தியாய்க் காணப்பட வில்லையே! இதைக் குறித்துச் சொல்லுவதற்கு எனக் கொன்றுந் தோன்றவில்லை. ஆகையால் உன் தந்தையார் நயவசநரிடம் என் வந்தனங்களைச் சொல்லி அவர் இஷ்டம் எப்படியோ அப்படியே நடக்கும்படி சொன்னேன் என்று சொல்லு, சந்திரமுகா!
சுகுமாரன்:- சரி. அப்புறம் சந்திரமுகா! உனக்குத் தெரியாதேயொரு சங்கதி! நேற்றுச் சுந்தராநந்தன் மூர்ச்சைபோய் விழுந்தது முதல் நாம் பேசிக்கொண்ட சமாசாரமெல்லா வற்றையும் அரசன் புத்திரி ரூபாவதி, என் மாமா பெண் அம்புஜாட்சி, கநகமாலை யிந்த மூன்று பேரும் ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். நாம் அதைப் பார்க்கவில்லை. இன்றைக்கு நானும் சுந்தராநந்தனும் அவர்கள் பேசிக் கொண்டதை யொளித்திருந்து கேட்டோம். அதுதான் எங்களுக்குத் தெரியும்.
சந்திரமுகன்:- அப்படியா! அதெப்படிக் கேட்பார்களப்பா! ஆச்சரியமா யிருக்கின்றதே!
சுகுமாரன்:- அதென்னவோ! தெரியாதப்பா! வேடிக்கைதான்!
சுந்தராநந்தன்:- ஏன் சந்திரமுகா! அவர்கள் கேட்டதனாலே ஏதாவது கெடுதல் வருமோ? நான் அரசனைக் கொஞ்சம் வருத்தத்தினால் வைதேனே!
சுகுமாரன்:- நான்தான் சொன்னேனே! நல்லதே யொழியக்கெடுதலில்லை. ரூபாவதிதான் அதிக இரக்கமுள்ளவளே!
சந்திரமுகன்;- ஆமாம்! எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. அவள் அழகுக்கெல்லையும் அன்புக்காகரமுமாவளே!
சுந்தராநந்தன்:- அப்படியாயின் நல்லதுதான். நீங்கள் சொல்லுகிறதும், நான் சொல்லுகிறது மெல்லாம் இனிமேல் தெரியும்.
சுகுமாரன்:- இது நூற்றிலொருபேச்சு! பார்ப்பமே!
[யாவரும் போகின்றனர்.]
------------------------
இடம்:- இராசபுத்திரியின் கன்னிமாடம்
காலம்:- நள்ளிரவு
பாத்திரம்:- ரூபாவதி
[அம்புஜாட்சி யொருபுறம் துயில்புரிகின்றாள்.]
ரூபாவதி:- (தனக்குள்) அழகும் இன்பமும் அன்பும் நிறைந்தசுந்தராநந்தனே!
சுந்தராநந்தனே! இக்குணங்கள் உன்னிடத்தில் இருப்பதை அறிந்து தானோ உன்னை யுன்பெற்றோர்கள் 'சுந்தராநந்தன்' என்று அழைத்தார்கள்? ஐயோ! உன்னுடைய மலர்ந்தவதனத்தையும் மதுர வசனத்தையுங் கண்டுங் கேட்டும் ஆனந்தப்படுவது என்றைக்கோ என்றைக்கோ என்று நான் உன்னை நினைத்து ஏங்குவதை நீயறியாயோ? என் தகப்பனார் உன்னை சிறையிலிட்டிருப்பதனால் வருந்துகின்றாயோ? என் தகப்பனார் கொடியவராயிருத்தல் பற்றி நானுங் கொடியவளா யிருப்பேனென்று எண்ணுவாயோ? அந்தோ! அரசமரத்தைப் பிடித்த சனியன் அதன்கண் அமர்ந்த பிள்ளையாரையும் பிடித்ததாமென்று உலகோர் கூறும் வசனம்போல அவர் கொடுமை என்னிடத்தும் இருக்குமென்று சந்தேகிப்பாயோ? உன்னை முதல்முதலிற் கண்டதுதொட்டு என்மனம் என்னிடத்திலேயே யிராமல் உன் முகாரவிந்தத்தையே பார்த்துத் தன்னையும் என்னையும் மறந்து மயங்கி நிற்கின்றது கண்டிலையோ? அச்சோ! சுந்தரனே! ஆனந்தனே! சுந்தராநந்தனே! உன் முகமதியின் அமிர்தத்தை யுண்டு உயிர் தரிப்ப தெந்நாளோ?---
(மௌனம்)
ஓ! சகோரங்களே! நீவிரெல்லாம் சந்திர கிரணங்களை களிப்புடனுண்டு செருக்கித் திரிகின்றீர்களே! உமக்குள் என்னைப்போல் ஆற்றாது ஏங்கியிரங்குவா ரில்லையோ? அம்மவோ! மன்மதன் குயிற்காள மூதுகின்றானே! இனி யெங்ஙனமோடி யொளிப்பேன்? இந்தப்பாவி மன்மதன் உருவிலியாயிருக்கும் போதே அரிவையர்களை இப்பாடு படுத்துகின்றானே! உருவோடு கூடியிருப்பானாயின் என்போலியர் பிழைத்தலுங் கூடுமோ? அப்பவோ! இன்று மாலை என்னுயிர் நிலையாகிய சுந்தராநந்த மூர்த்தியைத் தரிசிக்கும் எண்ணத்தோடு போயினேனே! அப்படிப் போயும் எனதருமைத் தலைவனை மறுபடியுங் காண்டற்கில்லாது போயிற்றே! போயிற்றே!! இனியென்ன செய்வேன்? எவ்விதமாறுவேன்? நான் பூங்காவனத்திலிருந்தபோது என்னுடைய தோழியரேனும் இன்னுஞ் சிறிது அதிக நேரங் கழித்து வந்தாரில்லையே!-(மௌனம்) ஓ!மாதவி மரமே! நீ செய்த புண்ணியம் நான் செய்திலனே! நீயுன் னடியில் என் பிரியநாயகனை வைத்திருந்தனையே! நான் அவனை யிப்போது காணப் பெறுவேனே அவனை என்தலையில் வைத்துக் கொண்டன்றோ களிக்கூத்தாடுவேன்!-(மௌனம்) ஓ! கண்காள்! நீவிரேனுமொரு முறை யெனது தலைவனைத் தரிசித்தீர்! செவிகாள்! நீவிர் ஒருதரம் அவன் பேசக் கேட்டீர்! ஆதலின் நீவிர் பாக்கியவான்களே யாவீர்! உங்கள் பாக்கியம் எனது மற்றைப் பொறிகளுக்குங் கிடைக்க வில்லையே! அவை நும்மாட்டுப் போறாமையாற் புழுங்கி யேங்குகின்றனவே! யானே யிவ்வாறு வருந்தா நிற்க, அவற்றை ஆற்றுவார் யாவர்? ஐயவோ! கருணையில்லாக்காமனும் இருள் யானை முன்னேலித் தென்றலுந் தேரேறிப் போர்க்களத்துப் புக்கனனே!
என்றனது காதலனே யிவ்விடத்து வாராயோ
மன்றவே யென்றுயர மாற்றாயோ-குன்றனைய
தோளுடைய கோமகனே சுந்தரா நந்தவெழிற்
காளையே யென்னிலைமை கண்டு. (31)
மாரன் மலர்க்கணை மார்பினிற் பாய்ந்து மயங்கியிந்த
நேர முனையே நினைந்துநொந் தேனென்ற ளீளனக
பாரம் பொறுத்தில னென்செவ்வ லென்பாற் பரிவினோடும்
பூரண வன்புறு சுந்தரா கந்தப் புரவலனே. (32)
அம்புஜாட்சி:- (கண் விழித்துக்கொண்டு) என்ன? அம்மா! ரூபாவதி! நீயங்கே நிலா முற்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?
ரூபாவதி:- அம்புஜாட்சி! நீ யென்ன படுத்துக்கொண்டவுடனே யுறங்கி விட்டனையே! எனக்கு இதுவரைக்குந் தூக்கமே வரவில்லை. நான் தூக்கம் வருகிறதற்காக எவ்வளவோ முயன்று பார்த்தும் வரவில்லை.
அஃதிருக்கட்டும்.
(அம்புஜாட்சி யெழுகின்றாள்.)
அம்புஜாட்சி! அதோ பார்த்தாயா? வைகை யாற்றின் கண் வெள்ளம் போகின்றது!
அம்புஜாட்சி:- ஆமாம். நாம் பொழுதுவிடிந்ததும் புதுப்புனலாடக் கனக மாலையையுங் கூட்டிக்கொண்டு மற்றைத் தோழிமாரோடும் போவோம்.
ரூபாவதி:- புதுப்புனலாடுத லிருக்கட்டும். மற்றைப்படி நீயந்த நதியைப் பார்! சந்திர கிரணங்கள் தண்ணீரிற் படுவதனாலே அது பள பளவென்று மின்னுகின்றது! எங்கே! அம்புஜாட்சி நீ வித்தியாசாகரப் புலவர் செய்தனவென்று சில யாற்றுவரிப் பாட்டுக்கள் பாடுவாயே! அவற்றிலொன்றுபாடு. கேட்போம்.
அம்புஜாட்சி:- (பாடுகின்றாள்)
மாற்றுவரி
இன்ப வனப்பு மிகவுடையா னினிது செங்கோ லதுகோச்சத்
துன்ப மொழித லுண்டுகொலோ சொல்வாய் வாழி வையையே
துன்ப மொழித லுண்டுகொலோ சொல்லா தொழித றுடியிடையா
யன்பி லாமை யென்றன்றோ வறிவேன் வாழி வையையே. (33)
ரூபாவதி! நீயும் ஏதாவது வேறு வரிப்பாட்டுப்பாடு.
ரூபாவதி:- (பாடுகின்றாள்)
முரிவரி
ஒழுகுறு நிணமுடைய வொருதனி வேலவனு
முழுமதி யுறழ்முகனு முகமலர் வுடனுறையப்
பழுதறு தமிழ்மொழியா லழுதனை புவியுமெனை
யெழிலுறு மினியவனே யெவளிடர் செய்தனையே. (34)
சாயல்வரி
சோலை தன்னிற் றுளியுற் றேங்கி
மாலை வருந்திச் சென்றா னொருவன்
மாலை வருந்திச் சென்றா னவனென்
மாறு மனம்விட் டகல்வா னல்லன். (35)
நிலைவரி
வனப்புடையா னின்புடையான் வழுதியர்தங் கோமான்
மனத்திலினிலே நோய்வினைத்தான் மாரனோ காணீர்
மாரனோ நாணீர் வனமதுரை யிற்றென்றற்
றேரினையே நீங்கித் திரிகின்ற காவலனே. (36)
அந்தோ! படுக்கையறையைவிட்டுவந்து வெகுநேரமாய் விட்டதே! அம்புஜாட்சி! செவிலித்தாய் வந்து நம்படுக்கை வேறுவிதமாயிருப்பதைப் பார்த்தால் என்ன சொல்வாளோ? இனியிவ்விடத்திலிருக்கப் படாது.
[இருவரும் போகின்றனர்.]
-------------------
இடம்:- சிறைச்சாலை
காலம்:- நள்ளிரவு
பாத்திரம்:- சுந்தராநந்தன்
சுந்தராநந்தன்:- என்னுடைய தந்தையுந் தாயும் இந்நேரம் எங்கிருக்கிறார்களோ? இப்போதிரவாயிற்றே! இரவில் தீயவிலங்குகள் வனத்திலுலாவுமே! அவற்றினின்றும் அவர்கள் எவ்வாறு தப்பினரோ? அவர்கள் உயிரோடிருந்தாலன்றோ சகலமும் இனிமையாய் முடியும்? இல்லையாயின் இன்பமென்பதேது? வாழ்க்கையென்பதேது?
(மௌனம்) இன்று நயவசநர் தமது புத்திரன் சந்திரமுகன் மூலமாய்ச்சொல்லி யனுப்பிய விஷயம் மிகப்பயங்கரமா யிருக்கின்றதே! நயவசகர் வெருநாளை யநுபவமுள்ளவராதலின் அவ்விஷயத்தில் அவரது இஷ்டப்படியே அவர்செய்யட்டும்! யான் இந்தக் காரியங்களிலெல்லாந் தலையிடுதல் மதியீனமேயாம். – எல்லாவற்றிற்கும் நாளைப் பூஞ்சோலைக்கண்- 'பூஞ்சோலை' யென்றவுடன் என்மனம் பூரிக்கின்றதே! உடல்சிலிர்க்கின்றதே! ஆ! ரூபாவதி! ரூபாவதி! உன்னைப் பார்த்ததுமுதல் யான், புதுமையானதோர் மனோவிகாரத்தை யடைந்தேன்! அதையென்னென்று எடுத்துரைப்பேன்? நீ அழகினுக்கு எல்லையாயுள்ளனை யென்பதுபற்றி 'ரூபாவதி' என்று நினக்குப் பெயரிட்டார்கள்போலும்! ஓ! நல்லெழில் பெற்ற நங்கை நாயகமே! அறிவு நிறை ஒர்ப்புக் கடைப்பிடியென்று சிறப்பித்துச் சொல்லப்படும் ஆடவர் குணம் நான்கும் புனலோடுவழிப் புற்சாய்ந்தாற்போல நின்னைக்கண்டவுடன்! சாய்ந்துவிட்டன! நின்னைக் காண்டலும் காமுற்றேன்! அது முதல் யான் நின்னையின்றியமையாதவ னாயினேன்! அங்ஙனம் உன்னையின்றியமையாது நின்றவேட்கையானது எனது எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய் நாண்வழிக்காசுபோலவும், நீர் வழி மிதவைபோலவும் என்னை யிழாநின்றது! நீயும் என்மீது காதல் கொண்டிருக்கின்றா யென்று நம்புவதற்குச் சிறிது இடமுளது. ஆயினும் அதனை யான் எவ்வாறு நிச்சயமாய் நம்புவனோ? நீ யுன் பாங்கிமாருடன் பேசிக்கொண்டதிலிருந்தும் உனக்கு என்மீதிற் சிறிது இயற்கை யன்புளதென்று கண்டு கொண்டேன். அதுபற்றி யான் உன்னிடத்தில் எவ்வாறு காதல் கூறுவேன்? ஐயோ! யான் உன்னை யென்னுயிர்த் துணையாய்ப் பெற நினைப்பது முடவன் கொம்புத்தேனை யிச்சித்து அதனை யவன்பெற நினைப்பது போலும்! உன் தந்தையோ என்னை எப்பொழுது கொலைக்களம் படுக்கலா மென்று யோசியா நிற்கின்றான்! யானோ உன்னைக் கைப்பிடித்து எனது தலைவியாய்க் கொள்வது எப்படியோ என்று யோசியா நிற்கின்றேன்! யான் உன்னையெனது பிராண நாயகியாய்ப் பெறவேண்டு மென்றாற் சுந்தரமூர்த்திநாயனார் பரவை நாச்சியாரைப் பெற்றது போலத் தான் பெற வேண்டும்! வேறு வகையில்லை. தெய்வந்தா னுதவிசெய்ய வேண்டும் இவ்விஷயத்தில்.
(மௌனம்)
[பாடுகின்றான்]
(2) இராகம் - செஞ்சுருட்டி. தாளம் - ஆதி
பல்லவி
உன்னையே னாயகி யாயுற லாகுமோ
உத்தம மானரூ பாவதித் தையலே
சரணங்கள்
பன்னரு நின்னலப் பரவையி லேகளி
துன்னி யிருந்தியான் துளைதலும் கூடுமோ (உன்னை)
ஆனந்த வல்லியே யன்புட னேநின் கண்
மானெந்த நாளினில் வரவுமென் மாமதி (உன்னை)
சுந்தரநாரியே தூயநி னானன
சந்திர காந்தியி லென்மன மலரவே (உன்னை)
கரந்தனை யானுநின் கையினைப் பற்றியே
மாந்தளிர் மேனியாய் மகிழ்வதெக் காலமோ (உன்னை) (36)
ஓ! ஈண்டுள்ள பொருள்கள் யாவும் நீயாய்ப் பரிணமித்துத் தோன்றுகின்றனவே! இதோ நின் கொண்டலைத் தண்டலையை வென்ற பூங்கூந்தல் தோன்றுகின்றது! அதோநின் கூன்பிறைநுதலும், குழிழை நிகர் துண்டமும் தோன்றுகின்றன! ஆண்டு அவள் கூர்மை தருவேலை வாளை வண்டை மகரத்தை நிகர் மையெழுது விழிகள் காணப் படுகின்றனவே!
(பாடுகின்றாள்)
திணைநிலைவரி
புண்கொண்ட வேலினுயிர் போக்குவா னுன்றந்தை
கண்கொண்ட வேலினுயிர் போக்குவை மன்னியும்
பண்கொண்ட சொல்லுடையாய் பார வளகத்தா
வெண்கொண்ட நொய்ய விடைவிழவல் கண்டாய்! (37)
ஈண்டு மாதுளம்பூவை வென்று வாகான கொவ்வைப் பழத்தினை
வெளுக்கவே வைத்த தன்னிதழ் காட்டி யென் மாதுளங் கவரா
நின்றாள்! முந்தையு முருந்தினையு முனிகின்ற நின்மூரல் இவ்
வெளியினிற் காண்பதென்னே! குயிற்றீரளை யோட்டிய நின்
கோமளமொழி *யீதோ என்செவியிற் படாநின்றதே! அந்தோ!
இவை யெல்லாம் பொய்த்தோற்றங்களாமே! என்செய்வேன்? உடல் வெதும்புகின்றதே! ஐயோ! சற்று வெளியேறித் தண்மதியின் குளிர்ச்சியையும், நறுந்தென்றற் குளிர்ச்சியையும் அநுபவிக்கலாமென்றாற் கதவடைத்துத் தாழிட்டிருக்கின்றதே! எங்ஙனம் எனது வெம்மை யாறுவேன்?-(மௌனம்)
[பாடுகின்றான்.]
மந்தாகை மானே வனப்பே வடிவெடுத்து
வந்தவொரு ரூபா வதியேநின் - சந்தமுறு
பொன்மேனி கண்டு புதியவிறும் பூதுகொண்டேன்
நன்மாணு நெஞ்சக் கடுங்காம - னென்மீது
வெய்ய மலர்க்கணைகள் விட்டென்னைக் காயவொட்டா
துய்யும் வழியே துரை. (38)
பூமக ளேமலர் வீட்டினை நீத்திவண் போந்தனைய
மாமக ளேவளச் சேரநா டாளும் வருமர்தங்கள்
கோமக ளேநின் னெழிலுறா வத்தைக் குறித்துநைந்தேன்
பாமக ளேயென்று பத்தப் பெறுவலுன் பாணிகளே. (39)
[ஆண்டுப்பறந்துபோந்த சகோரத்தை நோக்கி]
முகமில்வரி
வாரல் சகோரமே வாரலை யென்மாடம்
வாரல் சகோரமே வாரலை யென்மாடம்
வார முடையாட்கென் மைய லுரைத்திலையால்
வாரல் சகோரமே வாரலை யென்மாடம். (40)
யான் இவ்வாறே யேங்கிப் புலம்பிக்கொண்டிருப்பேனாயின் காவலாளர் விழித்துக்கொண்டு என்னை வைவார்களே! என் செய்வேன்? இதுவுமென் தலைவிதியோ! தெய்வமே! இதற்கு முன் யான் சிறைச்சாலை-யிலிருப்பதை ஒரு பொருட்டா யெண்ணிலேன்; என்னைப் பெற்றோரது பிரிவையே நினைத்து வாடினேன். இப்பொழுதோ, சிறைச்சாலை சிறைச்சாலையேயாய்விட்டது! பெற்றோர் பிரிவேயன்றி அரசன் மகள் ரூபாவதியின் ஆசையும் என்னை வருத்துகின்றதுவே!-(மௌனம்) ஓ! ஏதோ சப்தம் கேட்கின்றதே! காவலாளர் துயிலொழிந்தார்களோ? இனிமேல் இங்கே யிருப்பது தகுதியன்று.
[சுந்தராநந்தன் போகின்றான்.]
இரண்டாம் அங்கம் முற்றிற்று.
--------------------------------------------
அங்கம் - 3
முதற்களம்
இடம்:- பாண்டியனரண்மனை
காலம்:- காலை
பாத்திரங்கள்:- சூரசேநனும்,சுசீலனும்
சூரசேநன்:- சுசீலரே! நாம் அன்று பேசிக்கொண்டதற்கு நேர்விரோதமாக இன்றைக்கு ஒன்று கேள்விப்பட்டோம். அது முதல் என்னவோ எமது மனம் வருத்தப்படுகின்றது.
சுசீலன்:- அப்படி மகாராஜா அவர்கள் வருத்தப்படும்படியான விஷயமெதுவும் சம்பவித்ததாகத் தோன்றவில்லையே!
சூரசேநன்:- நாம் காட்டில் துரத்திய அவ்விருவரும் புலி முதலிய மிருகங் கட்கு இரையாய் விடுவரே யல்லாமற் பிழைக்க மாட்டாரென்றன்றோ நினைத்தோம்? அப்படியிருக்க, இன்று நம்முடைய ஒற்றர் வந்து அவர்கள் இருவரும் சோழநாட்டி லிருப்பதாகச் சொல்லுகின்றார்கள்! அவர்கள் எப்படிப் போயிருக்கக் கூடுமோ? தெரியவில்லை. இந்த விஷயம் காதிற் பட்டது முதல் எமக்குக் கவற்சி பெரிதாயிற்று. சுசீலரே! இதற்கு என்ன செய்யலாம்? நன்றாய் ஆராய்ந்து சொல்லுமின்!
சுசீலன்:- மகாராஜா அவர்கள் இவ்வற்ப விஷயங்களுக் கெல்லாம் கவற்சி யடைவானேன்? தாங்கள் யாருக்கு அஞ்சவேண்டும்? எதற்குப் பயப்படவேண்டும்? சற்குணவழுதியும் சுந்தரியாரும் பிழைத்துத் தாம் இருக்கின்றார்களோ எனபதே முதல் முதலிற் சந்தேகம். அப்படியே யவர்கள் பிழைத்திருந்தால் தான் என்ன? அன்றியவர்கள் சோழநாட்டில் வீரேந்திர சோழ னுதவிபெற்றால்தான் என்ன? நமக்கு பயமா? நாம் எப்போழுதும் பயப்பட வேண்டுவதே யில்லை.
சேவகன்:- (அரண்மனை வாயிலிலிருந்து) ஓய்! நீர் யார்?
புலவர்:- நாம்தான் மகாவித்துவான் வித்தியாசாகரப் புலவர். அரசன்மீது கவிபாடிப் போந்துனம். இதனை யிறைவனிடந் தெரித்தி.
சேவகன்:- ஏ! புலவர்! ராசாவுக்கு தெரியப்படுத்தினா நமக்கு என்னா கொடுப்பிய?
புலவர்:- எமக்கு மன்னவர் பெருமான் மகிழ்சிறந்து அளியா நிற்கும் பரிசில் நான்கிலொன்றீகுதும். பெறுதி!
சேவகன்:- ஏ! புலவர்! அதென்ன? பெறுதி! பகுதி! விகுதி! அதெல்லாம் இங்கே நம்மிடத்திலே இலக்கணம் படிக்காதேயும்! சொல்லும் நேரே! எவ்வளவு கொடுப்பீர்?
புலவர்:- அதுதான் நாலிலொன்று தருவோம் என்று அப்பொழுதே சொன்னோமே! தெரியவில்லையா?
சேவகன்:-சரி. புலவர்! மோசம் செய்யக்கூடாது. பார்த்துக்கொள்ளும். பத்திரம்!
[சேவகன் உள்ளே போகின்றான்.]
புலவர்:- சரிதான், போ. (தனக்குள்) எந்தப் பெரிய மனுஷன் வீட்டிலும்
இந்த மாதிரி சிற்சில சேவக நாய்களிருந்து கொண்டு எம்போலியரைக் காண்டலுங் குரைத்து வெள்ளென்று மேலேவிழத் தலைப் படுகின்றன!
(பாடுகின்றார்)
வேலை யின்றிப்பல் வீதி தொறுந்திரி
சீவ முள்ளவிச் சேவகர் காவல்செய்
வேலை பெற்றுழி மேன்மைபெற் றோமெனாச்
சால வுந்தம தன்மை திரிதலென்? (41)
ஓ! இவ்வரசன் என்னவோ! மகா காவல் வைத்திருக்கின்றான்! முன்னிருந்த வள்ளல் சற்குணவழுதி யாம் எப்பொழுதும் தாராளமாய் அரண்மனைக்குட் போகலாம் என்று உத்தரவு செய்திருந்தான்!--இவனுக்கு நம்மை யின்னுந் தெரியாதே! தெரிந்தால் இவனும் அவ்வாறு உத்தரவு செய்யக்கூடும்.
சேவகன்:- மகாராசா அவகளுக்கு ஆயிரங்கோடி வந்தனம்.
சூரசேநன்:- அடா! சேவகா! என்ன சங்கதி? சீக்கிரமாய்ச் சொல்லடா.
சேவகன்:- மகாராசா அவகளிடத்தில் யாரோ மகா வித்துவானாம், வித்தியாசாகரப் புலவராம். அவர் வந்திருக்கிறார். இது விஷயம் சமூகத்திற்குத் தெரியப்படுத்தினேன்.
சுசீலன்:- ஏ! சேவகா! நீபோய் அவரை உள்ளே வரச்சொல்.
[சேவகன் வெளியே போகின்றான்.]
தாங்கள் இதைக்குறித்து ஒன்றும் இப்பொழுது யோசனை செய்ய வேண்டுவதே யில்லை. அப்புறம் வேண்டுமென்றாற் பேசிக் கொள்ளலாம்.
சேவகன்:- ஏ! புலவர்! போம்! வரச்சொல்லி மகாராசா உத்தரவு செய்திட்டார். சொன்னத மறந்திடாதேயும்! பத்திரம்!
[புலவர் உள்ளே போகின்றார்.]
புலவர்:- சுகபோக சுகுண மன்மதரூப மகாராஜ சூரசேந வர்மர் சமூகத்திற்கு அடியேம் ககன மூதண்டவேதண்ட பிரமாண்ட மெங்கணும் கனபுகழ் படைத்த வுரவேம் இமயமுத லீழம்வரை யிவர்க்கு நிகரெவருமிலை யென்று சொலப்பெற்ற தகையேம் கவிமறக்குஞ்சரங் கல்விக் களஞ்சியம் ஆதல்பற்றி வித்தியாசாகரப் புலவரெனு
மேலான வயிறான முடையராவேம் வந்தனந் தந்தனம் துந்தனம் பெற்றேகவே!
சூரசேநன்::- ஏ! புலவரே! என்ன மடமடவென்று உம்பாட்டிற்கு அடித்துக் கொண்டு போகிறீரே!
புலவர்:- என்ன! மகாராஜா அவர்கள் உத்தரவு தெரியவில்லையே! எமது பாட்டிற்காக எம்மையடிக்கிறதா? தெரியாது வந்துவிட்டேன்! மகாராஜாவே! பொறுத்தருள வேண்டும்! பொறுத்தருளவேண்டும்!
(நடுங்குகின்றார்)
சுசீலன்:- ஓய்! கத்தாதேயும்! சும்மா இரும்!- இவர் நல்லவித்துவான்! சமூகத்திலே பேசியது தெரியவில்லை. அதனாலேதான் இப்படிப் பேசினார்! வேறொன்று மில்லை.
சூரசேநன்:- எங்கே நாம் பாண்டியனோடு செய்த யுத்தத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிப் பாடிய கவியைச் சொல்லச் சொல்லும் சுசீலரே! கேட்போம்.
சுசீலன்:- ஏ! புலவரே! பதறாமல், பயப்படாமல், தைரியமாய் வேகமாய்ச் சொல்லாமல், நிறுத்திச் சொல்லும், நீ மகாராஜா அவர்கள் பேரிற் செய்த கவியை.
புலவர்:- கொஞ்சம் கண் பார்த்துக் கொள்ளவேண்டும்!
சுசீலன்:- அவையெல்லாம் யோசியாதேயும்! கநகாபிஷேகம் செய்யச் சொல்லுகின்றேன். கவியைச் சொல்லும்.
புலவர்:- பள பளா! மிகவியந்தனம்!
சுசீலன்:- இதுதானே எமக்குக் கோபம் வருகின்றது! சொல்லுமென்றால் உடனே சொல்ல வேண்டாமா?
புலவர்:- இதோ சொல்லுகின்றாம். கேண்மின். (பாடுகின்றார்)
திருச்சிற்றம்பலம்
நிம்பமலர் மாலையை மிலைச்சசற்
குணவழுதி நிகரற்ற பாண்டிராச
னின்மகிமை யோராது மதிகெட் டெதிர்ப்பவ
வனியிடத்தி னிற்றொலையவே
தும்பைமலர் வேய்ந்துயுத் தஞ்செய்து வென்றார்
தோடமுடன் வாகை மலருஞ்
சூடுகத் பாணர்நா டொறும்வந்து பாடிடத்
தோகையர்கள் வாழ்த்தெடுப்பச்
சம்பகம் கமழ்குழலி ஞர்யோக முறுமினிய
சந்தவடி வுள்ள சதுரா
சகமெலாந் தனதாளுகைக்குட் படுத்திய
தனக்குவமை யெவருமில்லாய்
வம்புறும் பெண்ணைய ந்தார்ச்சூர சேநனெனு
மகராசு மகிபந்தான்
வரையாம மீந்துபொருண் மிடிதீர்த்து நீடூழி
மாட்சியுடன் வாழியவரோ. 42
திருச்சிற்றம்பலம்
சுசீலன்:- வித்தியாசாகரப் புலவரே! கவி வெகு நன்றாயிருக்கின்றது! எங்கே! கொஞ்சம் அர்த்தஞ் சொல்லும். கேட்போம்.
சூரசேநன்:- (தனக்குள்) அறியாது செய்துவிட்டோம். இவ்விடத்திலேயே வைத்திருந்து காரியத்தைப் பார்த்திருக்கவேண்டும். மிஞ்சிப்போயிற்று. இனிமேல் என்னசெய்கிறது? வருவது வந்து தானே தீரும்!
புலவர்:- வேப்பம் பூமாலையை யணிந்த சற்குணவழுதி நின்னுடைய மகிமையை அறியாது புத்தி கெட்டுப்போய் நின்னை யெதிர்த்த மாத்திரத்தில் அவன் ஒரு நிமிடத்திற்றானே தோற்றுப் போகும்படி தும்பைப் பூமாலை யணிந்து போர் புரிந்து அவனை வென்று வாகை மாலை தரித்துப் பாணர்பாடத் தோகையர் வாழ்த்தச் சண்பகப் பூவாசனை பொருந்திய கூந்தலையுடைய மாதர்களது போகநல மனுபவித்துப் பிரகாசிக்கின்ற அழகான ரூபமுள்ள நற்குணமுடையவனே! பூலோக முழுவதுந் தன்னுடைய சக்கிராதிபத்தியத்திற்குக் கீழ்ப்படுத்தித் தனக்குச் சமானமானவ ரெவருமில்லாதவனே! மணநிறைந்த பனம்பூ மாலையைத் தரித்த சூரசேந வர்மன் என்ற திவ்ய திருநாமத்தையுடைய மகாராஜ பூபதியே! எனக்கு அளவற்ற திரவியத்தைக் கொடுத்து எனது தரித்திரந் தரித்திராவண்ணஞ் செய்து நீ நெடுங்காலம் சிறப்புடனே வாழ்வாயாக வென்பதாம் யாம் பாடிய செய்யுளின் பொருள்.
சூரசேநன்:- சுசீலரே! கவி வெகு நன்றாயிருக்கின்றதே! அர்த்தஞ் சொல்லிய பிற்பாடன்றோ தெரிகின்றது. புலவரே! நீர் கேட்டுக் கொண்ட பிரகாரம் உம்முடைய தரித்திரம் நீங்கும்படி பதினாயிரம் வராகன் உமக்குக் கொடுக்குமாறு உத்தரவு செய்திருக்கின்றோம். பெற்றுக் கொள்ளும். போம்.
புலவர்:- மிகவு வந்தனம். ஆயினும் நாம் புரிசைவாயில் காவலனுக்கு எமது பேற்றிற் காற்பங்கு தருதுமெனச் சொல்லியிருக்கின்றோம். அதனையுஞ் சேர்த்துக் கொடுக்கிய ஆணையிடின் மிகவும் நலமுடைத்தாமல்.அல்லாக்கால் அப்பேதை மகன் எம்மை யதிகமான அரந்தைக்கு ஆளாக்குவான்காண்.
சுசீலன்:- போய் வாரும்! அப்படியே செய்யச் சொல்வோம்.
[புலவர் போகின்றார்.]
தாங்களென்ன இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? அப்படியே யிருந்தாலுந்தான் என்ன? எப்பொழுதும் யாம் யுத்த சங்கத்தராகவே யிருக்கின்றோமே! நமக்கென்ன?
சூரசேநன்:- நமக்கொன்று மில்லை. யாயினும் எம்முடைய மனம் என்னவோ சாந்தப்படவில்லை. யாம் ஆதியிலேயே சாக்கிரதையா யிருந்திருக்க வேண்டும்.
[சேவகன் வருகின்றான்]
சேவகன்:- மந்திரியவகளைக் கூட்டிப்போகும்படி அவக வீட்டிலேருந்து ஆள் வந்திருக்கிறான்.
சூரசேநன்:- ஏன்! சுசீலரே! உமது வீட்டிலேதேனும் நீர் செய்யவேண்டிய காரியமுண்டோ? நீர் போகவேண்டியது அவசியந் தானோ?
சுசீலன்:- ஆம். போக வேண்டும்.
சூரசேநன்:- ஆனாற் போய்வாரும்.
[சுசீலன் போகின்றான்.]
(தனக்குள்) சோழன் வீரேந்திர னென்பவன் அதிகமான சேநாபல முடையவனோ? இந்தச் சற்குணவழுதியின் பேச்சைக் கேட்டு நம்மீது படையெடுத்து வருவானோ? நாம் ஆதியாரம்பமுதல் இதுவரை செய்தனவெல்லாம் பிசகேயாம். இன்னுங் கொஞ்சம் யோசனை செய்யாமற் போனோம். இவ்வளவு மதிகேடரா யிருப்போமென்று எண்ணவே யில்லை. எமது மனம் ஒருநாளும் இவ்வாறு பதறினதில்லையே! இவ்வாறு பதறுவதைப் பார்த்தால் ஏதோ கேடு வரும்போலத் தோன்றுகின்றதே!-
(மௌனம்)
இருக்கட்டும். பாதகமில்லை. அப்படியே வீரேந்திர சோழன் சற்குணவழுதிக்காகப் படையெடுத்து வருவானாயின், நாம் வழுதிமகன் சிறையிலிருப்பவனைத் தொலைத்துப் போடுவோம். அப்புறம் மேல் நடக்கப் போகிறதைப் பார்த்துக் கொள்வோம். காலமதிகமாயிற்று. இனி நாம் போக வேண்டும்.
[சூரசேநன் போகின்றான்.]
------------------
இடம்:- கன்னிமாடம்
காலம்:- நள்ளிரவு
பாத்திரம்:- ரூபாவதி
ரூபாவதி:-(தனக்குள்) ஐயோ! இன்று என் தகப்பனார் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டது முதல் என் மனஞ் சகிக்கவில்லையே!- என் தகப்பனார் செயல்களுக்கு வீரேந்திர சோழனும் படை யெடுப்பான். இன்னொரு சோழனும் படையெடுப்பான்.-
(மௌனம்)
* "முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும்" (43)
என்றவள் வாக்கியம் பொய்த்துப்போகுமோ?-இவற்றை யெல்லாங் கொஞ்சங்கூட யோசியாமல் என் தகப்பனார் கொடுமையின் மேற் கொடுமையாய்ச் செய்ய நினைப்பது மடமையினும் மடமையாம். அந்தோ! இவரதறியாமைக்கென்ன செய்வேன்? – முன் செய்த கொடு வினைக்கே யூர்முழுதும் அலர் தூற்றுகின்றதே!
-----------
* கொன்றை வேந்தன்
அப்படியிருக்க இவர் மறுபடியும் அத்தன்மையான செயல் செய்ய யோசித்தல் தாஞ்சாக மருந்து குடித்தல்போலும்!- ஊரார் பழிப்பதை யிவர் கேட்டு மிராரோ?- கேட்டிருந்தால் இப்படி யோசனை செய்வானேன்? - அவர்க்கு இவ் வூரார் பழிப்பது தெரியாமல் தானிருக்க வேண்டும்!- ஐயோ! இதைக்குறித்து என் தகப்பனாருக்கு எவ்வாறுதெரிவிப்பேன்?- எனது தாயின்மூலமாய்த் தெரிவிக்கலாம் என்றாலும் சரிப்படாதே. அவள் என்தகப்பனார் சொல்வதை யெல்லாம் மறுத்துரையாமற் சரி சரி என்று கூறுபவளாவளே!- எவரிடஞ்சொல்லி யென்தகப்பனாருக்குத் தெரிவிப்பேன்?- அவ்வாறு அவருக்குத் தெரிவிப்பது முடியாதுபோயின் என்னசெய்வேன்!- ஓ! சுந்தராநந்தனே! என்னுயிர்த் தலைவனே!- பாண்டியர் குலதிலகனே! பைந்தமிழ் வல்ல பரமசாதுவே! உனக்கு என்மீது பரிபூரண நேசமிருக்கிறதென்பதை யுணர்ந்து கொண் டேன்! ஆகையால் உன்னை மணந்து சுகிப்பது எந்நாளாவது கூடும் என்று எண்ணி யிதுவரைக்குங் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருந்தேன்!- இனி யான் பிழைத்திரேன்! பிழைத்திரேன்!- உன்னுயிர்க்குக் கேடு சூழ்கின்ற என் தகப்பனாரைத் துறப்பேன்! இன்று முதல் யான் அவர்க்கு மகளல்லேன்!
+ "கொடுங்கோன் மன்னர் வாழு நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே" (44)
------
+ நறுந்தொகை
என்ற பாண்டியன் வாய்மொழியைத் தூய்மொழியாய்க் கொண்டேன். ஓ! எனது பிராணசுந்தராநந்தனே! நீ பிழைத்திருந்தா லன்றோ யானும் பிழைப்பேன்? உன்னையன்றி, யான் பிழைத்திருத்தல் முயற்கொம்பு பெறுதல் போலும். ஆதலின் என் தகப்பனார் இனிச்செய்யப்போகும் கொடுந்தொழிற்கு நீ யிரையாகாது உன்னைத் தப்புவித்தற்குரிய உபாயமொன்றுசெய்வேன்:- ஐயோ! இக்கொலைப் பாதகத்தை உனக்கு எவ்வாறு தெரிவிப்பேன்? யாரிடஞ் சொல்லியனுப்புவேன்?--நீ யிருக்குஞ் சிறைச் சாலையினின்றும்
வெளியேபோவதற்கு ஓர் இரகசியவழி யுண்டென்று கேள்விப்பட்டு அவ்வழியை யடைத்துநிற்குங் கதவினைத்திறப்பதற்குரிய திறவுகோலையும் என்தகப்பனார் படுக்கையறையிலிருந்து எடுத்துக் கொண்டேன். அந்தோ! இத்திறவுகோலை யுனக்கு அனுப்புவ தெப்படியோ?--என் தகப்பனார் செய்ய நினைத்திருக்கும் பாதகச் செயலைப் பற்றி ஒரு கடிதத்தில் என் கையெழுத்தின்றி யெழுதி அக்கடிதத்தோடு இத்திறவுகோலையுஞ் சேர்த்து நின் சிறைச்சாலைக்குட் போடு வேன்--ஐயோ! காவலாளர் கடிதத்தைப் பார்த்துவிட்டா லென்ன செய்வேன்?-- அவர்களுக்குத் தெரியாதிருக்கவேண்டுமே!-- அப்படியே காவலாளர் பாராதிருந்து எனதருமை நாயகன் மாத்திரம் கடிதங்கண்டுதிறவுகோற் பெற்று என்னைக்காமியாய்த் தவிக்கும்படி யிங்கேயே விட்டு விட்டு அவ்வழியாகப் போய்விட்டா லென்ன செய்வேன்?--நான் இவ்வளவு வருந்தியும் என் எண்ணம் முடியாது போகுமே! -- ஆகையால் யானும் உடன்போகும் எண்ணத்தையும்பற்றி ஒருவாறு அக்கடிதத்திற்குறிப்பாய் எழுதுவேன்! - அந்தோ! அவ்வாறு யான் கூடமாய்க்குறித்தது இன்னது தான் என்று அவனுணரானாயின்என்செய்வேன்? உயிர்துறக்கவே வேண்டும்! ஆகையால் அவன் என்னை வந்துகாணும்படி எழுதுவேன். இனி யொருகணமேனும் தாமதியேன்! இப்பொழுதே கடிதமெழுதுவேன்! (ரூபாவதி எழுந்துபோய் எழுது கருவிகள் முதலியன கொண்டு வருகின்றாள்.) ஐயோ! நான் இதுவரைக்கும் ஆடவரெவர்க்கும் கடிதம் எழுதிலேனே! ஆகையால் அவர்க்கு எழுதும் ஒழுங்கும் இன்னதென வுணர்ந்திலேனே! என்ன செய்வேன்?—
(கடிதம் வரைகின்றாள்.)
சீ! இது சரியாயில்லை; வேறு கடிதந்தான் எழுதவேண்டும். (கடிதத்தைக் கிழித்தெறிகின்றாள்.) வேறு கடிதம் வரைகின்றாள், சீ! இதென்ன? இதிலுந் தவறு விழுந்துவிட்டதே! என்ன செய்கிறது
(மீட்டுங்கிழிக்கின்றாள்; இன்னொரு கடிதம் வரைகின்றாள்)
இது கொஞ்சம் சரியாயிருக்கின்றது. இதைத் தான் அனுப்பவேண்டும்.--திறவுகோல் எங்கே? காணேன்! ஓகோ! எழுதுகருவிக ளெடுக்கப்போனவிடத்தில் வைத்துவிட்டேன் போலும்.
(ரூபாவதி எழுந்துபோய்த் திறவுகோலை யெடுத்துக்கொண்டு வருகின்றாள்.) இத்திறவுகோலை யிந்தக் கடிதத்தின் கண் வைத்துத் திறவுகோலிருப்பது தெரியாமற் சுருட்டி எனது காதலனிருக்குஞ் சிறைச்சாலையின் சாளரத்தின் வழியாய் எறிந்துவிட்டு வருவேன்.
[ரூபாவதி போகின்றாள்]
---------------------------------
இடம்:- சிறைச்சாலை
காலம்:- நள்ளிரவு
பாத்திரம்:- சுந்தராநந்தன்
சுந்தராநந்தன்:(தனக்குள்)-இன்று என்னவோ? தூக்கமென்பது சிறிதேனும் வரவில்லை. உடம்போ விதிர்விதிர்க்கின்றது! மனமோ சஞ்சலப்படுகின்றது! என்னுடைய தாய்தந்தைய ரிருவரும் சோழநாட்டிற் சௌக்கியமாயிருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டும் என்மனஞ் சந்தோஷப்படாம லிருப்பதேனோ?-ஐயோ! ரூபாவதி! நீயேயிதற்குக் காரணம்!-உன்னையே யுயிர்க்காதலியாய் பெற்று உள்ளம் பூரிப்பதும் உண்டோ?-
(மௌனம்)
ஏதோ என்னவோ? உயரத்திலிருந்து விழுந்த சப்பம் கேட்டதே! இரும்புவிழுந்த சப்தம்போலத் தோன்றிற்றே! இந்த நள்ளிரவில் இவ்விடத்தில் அத்தன்மையான சப்தங் கேட்கக் காரணமில்லையே! எல்லாவற்றிற்கும் என்னவென்று எழுந்துபோய்ப் பார்ப்பேன்-
(எழுந்து போய்ப் பார்க்கின்றான்.)
இந்தச் சாளரத்தின் சமீபத்திற்றான் சப்தம் கேட்டது. ஓ! அதோ என்னவோ? வட்டமாய்க் கிடக்கின்றதே! என்ன? கடிதச்சுருளோ? ஆம்.- அதனோடு ஒரு திறவுகோலு மிருக்கின்றதே ஈதென்னை ஆச்சரியம்!- இதை யென்னென்று விளக்கேற்றிப் பார்ப்பேன்.-
(விளக்கேற்றிப் பார்க்கின்றான்)
சிவ பெருமானே! இதுவும் நின் திருவிளையாட்டோ? நின்னருட் பெருமையை யென்னென்றுரைப்பேன்! ஓகோ! யாரோ கடிதமெழுதி யிருக்கின்றார்கள்? இவ்விடத்திலேயே யிருந்து கடிதத்தைப் படிப்பேன். அவ்விடம்போனாற் காவலாளர் வெளிச்ச முணர்ந்து விழித்துக்கொள்வார்கள்.
(கடிதம் படிக்கின்றான்)
"எனது பிரியமுள்ள சுந்தராநந்தா!
உன் நிலைமை பரிதாபமா யிருக்கின்றது.- உன்னோடு அநுதாபப்படுகின்றேன்.-இவ்வரசன் உனக்கு எமனாய் வந்திருக்கின்றான்.- சாக்கிரதையாயிரு. - இவ்விடத்தி லிருந்தால் நீ பிழைக்கமாட்டாய். சீக்கிரமாய் இந்தக் கடிதத்தோடிருக்கும் திறவுகோலின் உதவியினால் நீ இரகசிய வழியாய் ஓடிப்போய் விடு. நாளை யிரவு புறப்பட்டு ஓடிவிடச் சன்னத்தனாயிரு.- உன் அந்தரங்க நேசர்களும் இதை அறியப்படாது.- நீ யென்னைக் காண விரும்பினால் நாளை யிரவு இரகசிய வழியாய் வந்து என்னைப் பார்த்துப் பேசலாம்.-கடிதம் பத்திரம்.-
இப்படிக்கு,
உன் பிரியமுள்ள
நன்மைநாடி."
கடிதம் முழுவதும் படித்துவிட்டேன்.-இப்பொழுது தான் இந்தக் கடிதச்சுருள் விழுந்தது.-இந்தக் கடிதம் படித்தது முதல் மனங் கவலைப்படுகின்றதே!-உடல் வியர்க்கின்றதே!-என்ன செய்வேன்? இதை யெவர் எழுதியிருக்கக் கூடும்? என்னுடைய நண்பர்களில் எவரேனும் எழுதி யிருக்கலாமோ?- இல்லை, அப்படி யானால் "உன் அந்தரங்க நேசர்களும் இதை யறியப் படாது" என்று எழுதார்களே! மேலும் அவர்கள் இன்று பூஞ்சோலைக்கு வந்திருந்தார்களே. அப்போது இந்த மாதிரி ஏதாவதிருந்தால் அவர்கள் என்னிடம் குறிப்பாயாவது சொல்லுவார்களே! இன்னுமவர்கள் இந் நள்ளிரவில் வெளியேற மாட்டார்களே! இஃது இரகசியமாயு மிருக்கின்றதே! பின்னை யார்தாம் எழுதியிருக்கக் கூடும்?-சில நாளைக்குமுன் சந்திரமுகன் சில கனவான்கள் தன் வீட்டிற்கு வந்து ஏதோ பேசிக்கொண்டதாகச் சொன்னானே! அந்தக் கனவான்களி லெவரேனு மெழுதி யிருப்பாரோ?-இராது. ஏனென்றால் அரசனது படுக்கை யறையிலுள்ள இத்திறவுகோல் அவர்கள் கைக்குப் போகிறது அசாத்தியம். ஒருவேளை இந்தச் சமாசாரத்தைச் சுசீலர் உணர்ந்து கடிதத்தில் எழுதித் தம்முடைய வேலையாளரிடம் கொடுத்து இச்சாளரத்தின் வழி எறியச் சொல்லி இருப்பாரோ?-அப்படியுந் தோன்றவில்லை. எழுத்தைப் பார்த்தால் யாரோ எழுத்துத் திருந்தாதவர் எழுதியது போலத் தோன்றுகின்றது. மேலும் அவர் கடமை தவறாக் கல்விமானாதலின் எவ்வரசனுக்கும் விரோதமாய் எதுவுஞ் செய்யார். ஒருவேளை சுசீலர் மகள் அம்புஜாட்சி, ரூபாவதியின் மூலமாய்த் தெரிந்து கொண்டு எழுதி யிருப்பாளோ?-அதுவுமிராது. அவள் இந்த பாதிராத்திரியில் வெளியிலே வரவும் மாட்டாள். அவளுக்கு இத்திறவுகோல் எப்படிக் கிடைத்திருக்கும்? மேலும் சுசீலர் வீடு வெகு தூரத்திலன்றோ உள்ளது? இச் சிறைச்சாலை அரசனது அரண்மனையைச் சார்ந்த தாயிற்றே! மேலுங் காவலோடிருக்கின்றதே! இந் நேரம்ஆசாரவாசல் அடைத்திருக்குமே! ஆகையால் வெளியிலிருப்பவர்கள் இதைப் போட்டிருக்க முடியாது. அரண்மனையைச் சேர்ந்தவர் யாரோதாம் இந்தக் காரியஞ் செய்திருக்க வேண்டும். அரண்மனையைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் என்மீது இரக்கமுற்று இவ்வளவு இரகசி மாய்க் கடிதமெழுதி, எவரும் போகிறதற்கு முடியாத அரசன் சயநக்கிருகத்திலிருந்து திறவுகோலு மெடுத்து எறிந்து இத்தன்மையான உதவிசெய்யத் தகுந்தவரில்லையே.
-(மௌனம்)
ஓகோ! என்னருமைத் தலைவி ரூபாவதி யெழுதினாள் போலும்! இந்த இரகசிய சமாசாரம் அவளுக்குத் தெரியக் காரணமு முண்டு. எழுத்தைப் பார்த்தாலும் மகளிரெழுத்தாகவே காணப்படுகின்றது. ஏ! ரூபாவதி! உன் இரக்கத்தை யென்னென்று சொல்லுவேன்? ஆம், நீ தான் இந்தத் திறவுகோலை யெடுக்கக்கூடும். ஆ! இந்த நள்ளிரவில் இவ்விடம் எவ்வாறு வந்தனையோ? இதுவரையும் விழித்திருந்தாயோ? ஏழையேன் மீதும் உனக்கு இவ்வளவு அன்புளதோ? உளதெனிற் பிழைத்தேன்! ஈடேறினேன்! தன்யனாயினேன்! உன்னன் புடைய எனக்கு இனிமேல் என்ன குறையோ? என் தலைவி யெழுதிய கடிதத்தை மீட்டும் படித்துக்களிகூர்வேன்.
( கடிதத்தை மீட்டும் படிக்கின்றேன்.)
ஐயோ! என்னுடைய நன்மைநாடி யென்று கையெழுத்திட்டநாயகியே! 'நன்மைநாடி' யென்றபெயர் உனக்கே தரும்! என்மீதுள்ள காதலினால் தன் தகப்பனாரையும் யமனெனக் கூறுகின்ற உத்தமியே! உன்னை நாளை யான் நேரிற்காண்பேன். கண்டு என் துன்பமெல்லாஞ் சொல்லி யா றுவேன்.- ஆகா! நின் லௌகீக விஷய ஞானத்தின் முதிர்ச்சியை யென்னென்று சொல்லுவேன்! மாதர்கட்குரிய மென்மைத் தன்மை வழுவாது, ஆண் மக்களுக்குரிய முறைப்படி யெழுதிய மோகன முத்தே! நீ சொல்லிய படியே இந்தக் கடிதத்தைப்பத்திரமாய் வைப்பேன். ஆ! அதோ அங்கே பேச்சுக்குரற் கேட்கின்றதே! இதோ விளக்கை யவிப்பேன்! (விளக்கவிக்கின்றான்) இனி யிவ்விடத்தி லிருக்கப்படாது..
[ சுந்தராநந்தன் போகின்றான்.]
-------------------
இடம்:-- இராசமகிஷியி னந்தப்புரம்
காலம்:-- பிற்பகல்
பாத்திரங்கள்:-- சூரசேநன், ரூபாவதி
சூரசேனன்:-- குழந்தாய்! ரூபாவதி என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? இந்த ஊருனக் கெப்படி யிருக்கிறது? அழகாயிருக்கிறதா?
ரூபாவதி:-- ஏன்? இந்தவூருக் கென்னகுறைவு? நன்றாய்த் தானிருக்கிறது. நம்முடைய கருவூரைப் பார்க்கிலும் இது மிக அழகாய்த்தா னிருக்கின்றது. அரண்மனையும், அரண்மனையைச் சுற்றிப் பூஞ்சோலையும், பூஞ்சோலைக்குப் பக்கத்தில் வையையாறும் வெகு நேர்த்தியான காட்சிகளாய்த்தா மிருக்கின்றன. இந்த மீனாட்சிதேவி கோயிலொன்றேபோதுமே நன் கருவூரைவிட இவ்வூர் மேலானதென்று சொல்லுகிறதற்கு.
சூரசேநன்:-- ஆனாலுனக்கு இவ்விடத்திலேயே யிருக்கிறதற்கு இஷ்டம் போலும்!
ரூபாவதி:-- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்! யாருக்கும் அழகாயிருக்கிற வூரிலே யிருப்பதற்கு இஷ்டமாய்த் தானிருக்கும்.
சூரசேநன்:-- (முகஞ் சிவந்து) நீங்கள் சொல்லுகிறது வெகு நன்றாயிருக்கின்றதே! காதல் கொள்ளுகிறதற்கு யிதற்கு மென்ன சம்பந்தம்? காதல் கொள்ளுமிடத்துக் குணமும் கல்வியுங் குற்றமிலா அறிவும் அன்பும் ஆகிய இவற்றோடு அழகும் இருந்தாற் பயனே யல்லாமல் வெற்று அழகுமாத்திர மிருந்தாற் பயனில்லை.
[ கோமளவல்லியும் கநகமாலையும் வருகின்றனர்.]
சூரசேநன்:--சரி, உன் தாயார் உன் தோழிகளு ளொருத்தியோடு அதோவருகின்றாள். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு. நான் பட்டி மண்டபத்திற்குப் போய்விட்டு வருகின்றேன்.
[ சூரசேநன் போகின்றான்.]
கநகமாலை:--ரூபாவதி! நீ நேற்றைக்கும் இன்றைக்கும் புதுப்புனலாட வரவில்லையே! அது எவ்வளவோ வேடிக்கையும் விநோதமுமா யிருந்ததே!
ரூபாவதி:-- நீங்கள் யார் யார் போனீர்கள்?
கோமளவல்லி:- ஏன், ரூபாவதி! அதென்ன? நீ யென்னவோ ஒருவகையா யிருக்கிறாயே! உனக்கு உடம்பு என்ன? அம்மா!
ரூபாவதி:-- எனக்கு உடம்பு ஒன்றுமில்லையே! கநகமாலையை வேண்டுமென்றாலுங் கேளுங்கள். நேற்றுக்கூட நான் கநகமாலை, அம்புஜாட்சி யெல்லோரும் பூஞ்சோலைக்குப் போய்விட்டு வந்தோமே!
கநகமாலை:-- ஆமாமாம். எனக்குத் தெரியும். ரூபாவதிக்கென்ன! உடம்பெல்லாம் சரியாய்த்தானே இருக்கிறாள்.
கோமளவல்லி:-- சரியாய்த்தான் இருக்கிறாள். இருந்தாலும் நாம் எவ்வளவுக் கெவ்வளவு சாக்கிரதையா யிருக்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது தானே!
ரூபாவதி:-- கநகமாலை! அம்புஜாட்சி யெங்கே வரக்காணேன்?
கநகமாலை:--நான் அவள் அகத்திற்குப் போய்விட்டுத் தான் வந்தேன். அவள் என்னவோ? தன் அத்தையகத்திற்குப் போயிருக்கிறாளாம். அவளுடைய தாயார் சொன்னார். ஆகையால் ஒருவேளை அதிக நாழிகையாகுமோ என்று நினைத்துக் காத்துக்கொண்டிராமல் நான் முந்தி வந்துவிட்டேன். அவள் இன்றைக்கு வருவளோ என்னவோ? அதுவுஞ் சந்தேகம்.
கோமளவல்லி:-- அவளுடைய அத்தை யார்?
ரூபாவதி:- அவள்தான் மந்திரி சுசீலர் தமக்கை சுதர்மை.
கோமளவல்லி:- அதென்ன? சுதர்மையம்மா யிங்கே நம் அரண்மனைக்கு
ஒரு நாட்கூட வரவில்லை. நாமும் இங்கு வந்து ஏறக்குறைய இரண்டு மாசமாயினவே?
கநகமாலை:- சுதர்மையினுடைய அகமுடையான் இறந்து போய் இன்னும் வருஷமாகவில்லை. வருஷமாகிறதற்கு முன் கைம்பெண்களெல்லாம் வெளியில் வரக்கூடாது என்பது எங்களுக்குள் ஓர் ஏற்பாடு. ஆகையினாலே தான் வரவில்லை போலிருக்கிறது. இல்லாமற்போனால் ஒரு நிமிஷமாவது வராதிருக்க மாட்டாள்.
ரூபாவதி:- ஏன், கநகமாலை! அம்புஜாட்சிக்கு அவளுடைய அத்தை வீட்டிலென்ன வேலை? உனக்கு எதாவது தெரியுமா?
கநகமாலை:- அதென்னவோ? அம்மா! எனக்கு தெரியாது.
[அம்புஜாட்சி வருகின்றாள்]
கோமளவல்லி:- அதோ அம்புஜாட்சியும் வந்துவிட்டாள். அவள் வரக் காணேன் வரக்காணேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே!
[செவிலி வருகின்றாள்]
செவிலி:- என்ன? அம்மா! ரூபாவதி! இப்படி யுட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? சாப்பிடவேண்டாமா? சீக்கிரமாய் எழுந்திருந்து வா.
கோமளவல்லி:- ஆமாமாம். நானும் உன்னைக் கூப்பிடவந்தவள் மறந்து விட்டேன்.
கநகமாலை:- அப்போது முதல் இன்னும் சாப்பிடாமலா உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? நீ சாப்பிட்டாயிருக்கு மென்றன்றோ நினைத்தேன்! நன்றாய் இதுவரையிலும் உட்கார்ந்து கொண்டிருந்தாய், எழுந்திரு! எழுந்திரு! சீக்கிரமாய்ப் போய்ச் சாப்பிட்டு விட்டுவா.
அம்புஜாட்சி:- சீக்கிரம் வந்தாயானால் இன்றைக்குப் பூஞ்சோலைக்குப் போய்விட்டு வரலாம்.
கோமளவல்லி:- இல்லை, இல்லை. இன்றைக்கு அவள் வரமாட்டாள். அவளுக்கு உடம்பு செவ்வையில்லை.
ரூபாவதி:- நீங்கள் எல்லாவற்றிற்கும் இங்கேதானே யிருங்கள். நான் போய்ச் சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டு வருகின்றேன்.
[ரூபாவதி கோமளவல்லி செவிலியிவர்கள் போகின்றனர்.]
கநகமாலை:- என்னடி! அம்புஜாட்சி உனக்குத் தெரியுமா ஒரு சங்கதி?
நம்முடைய ராஜா சற்குணவழுதியும் ராணி சுந்தரியும் சோழ ராஜ்யத்திலே இருக்கிறார்களாமே!
அம்புஜாட்சி:- ஆமாம். என் காதிலும் அப்படித்தான் பட்டது. ரூபாவதி வருகிறமட்டும் சங்கீத விலாசத்திற்குப்போய் வருவோம்.
[யாவரும் போகின்றனர்.]
இடம்:- நகர்புறத்து ஒரு வெளியிடம்
காலம்:- நள்ளிரவு
பாத்திரம்:- சுந்தராநந்தன்
சுந்தராநந்தன்:- (தனக்குள்) கடிதமெழுதிய காதலி, ஏனோ இன்னும் வரவில்லை? ஒருவேளை தான் எழுதியதை மறந்து விட்டாளோ? சீ! அப்படி ஒருநாளும் இருக்கவே மாட்டாள்.
(ரூபாவதி ஆண்வேடம்பூண்டு பின்னே வந்து நிற்கின்றாள்.)
இல்லாமற் போனால் அவள்கடித மெழுதின சங்கதி பிறருக்குத் தெரிந்து அதனால் வரத்தடைப்பட்டதோ?-- ஓ! ரூபாவதி! என்னை யோடிவிடும்படி யெழுதினாயே!
(பாடுகின்றான்)
(3) இராகம் - நாதநாமக்கிரியை, தாளம் - ஆதி
பல்லவி
கோமள மாதேயா னோடலோ நலங்கூறாய்.
அநுபல்லவி
வாமமார் தையலே நன்மாணினை மானும் (கோமள)
சரணங்கள்
நேயமார் மாதேயா னோடவீதிய தாமோ
தூயபைந் தோகையே ரூபாவதியே யென் (கோமள)
வாருநற் கூந்தல்யா னோடன் மாட்சிமை யோசொல்
சீருறு செல்வியே ரூபாவதியே யென் (கோமள)
யான் ஓடி யொளித்தால் உன்னைப் பிரியவேண்டுமே! உன்னைப் பிரிய வேண்டுமே! உன்னைப் பிரிந்த பிறகும் பிழைத்திருப்பேனோ? நின்னைப் பிரிந்து காணுதலின்றி ஆற்றாது உயிர் துறப்பதைக் காட்டினும், நின்னைப் பூஞ்சோலைக் கண்ணாவது தினமும் கண்டு ஆற்றி உன் தந்தையார் வாளிற்கு இரையாவது மேலானதேயாம். ஆதலால் இனியொரு கணமேலுந் தாமதியாமல் மறுபடியும் சிறைச்
சாலைக்கே போவேன்.
[ரூபாவதி முன்னே வருகின்றாள்]
ரூபாவதி:- என் ஆசைக் காதலனே! சற்று நின்று என்மீது கருணை புரிவாய்!
சுந்தராநந்தன்:- பூவுலகிற் போந்ததொரு புத்தமுதே! எனனுயிர் காக்க வந்த இளங்குயிலே! ரூபாவதி! இதோ நின்றேன்! நின்றேன்!
ரூபாவதி:- யான் வந்து உனக்காக நிற்கும்போது, நீயேன் மறுபடியும் சிறைச்சாலைக்குப் போகவேண்டும்? உன்னை நேரிற்கண்டு பேசுதற்கில்லாமல் இதுவரைக்கும் யான் அடைந்த வருத்தமனைத்தும் உன்னிடத்திலேயே சொல்லத் தகும். இதைக் குறித்து யான் என் தோழி யரிடத்தும் பேசவில்லை.
சுந்தராநந்தன்:- அறிவு நிரம்பிய ஆருயிர்க் காதலி! என்னைக் கண்டு பேசுவதற்கு நீ வரும்போது யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற ஐயப்பாட்டினால் ஆண் வேடம் பூண்டு இவ்விடம் வந்தாயோ?
ரூபாவதி:- எனது பிராணேசுவரா! யான் இவ்வேஷம் பூண்டதற்குக் காரணம் நீ யினிமேலுணர்வாய். நின்னை முதல் முதலிற் பூஞ்சோலையிற் கண்டேன்! வேட்கை யுற்றேன்! அது முதல் நின்னை யிடை விடாது சிந்தியா நின்றேன்! உடம்பு வாடி மெலிகின்றேன்! ஒவ்வோரிரவும் ஒவ்வொரு யுகமாய்த் தோன்றுகின்றது! யான் நின்மீது காதல்கொண்டதைப் பிறரிடம் வெளிப்படுத்தாமல் என் மனத்திலேயே வைத்துப் புழுங்கினேன்! யான் என் தோழியரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே உன் நினைவு வந்துவிடும். உடனே வாய் குழறும்! உடல் வியர்க்கும்! பிறகு அவர்களை யனுப்பிவிட்டு வாய் விட்டுப் புலம்பி யுருகுவேன்! விளையாட்டை யெல்லாம் மறப்பேன்! மயங்குவேன்! செயலற்றிருப்பேன்! எழுவேன்! ஏங்குவேன்! எங்ஙனம் பிழைப்பலென்பேன்!
சுந்தராநந்தன்:- ஏ! பிராணேசுவரீ! ஒருநாள் நீ என் தோழிமாரொடு பூஞ்சோலையில் எளியேன் நிலமையைக் குறித்து இரக்கமுற்றுப் பேசிக் கொண்டிருந்தாய். அதை நான் ஒளிந்து நின்று கேட்டேன். அப்போது உனக்கு என்மீது அன்புளது என்று உணர்ந்தேன்! உணர்ந்த அந்த நிமிடத்திலேயே நின்மீது காதல்கொண்டு நினைத்து நினைத்து உருகி வெதும்பி வாடிக் கலக்கமுற்றேன்! உடனே சிறைச்சாலைக்குச் சென்றேன்! அவ்விடத்து எங்கே பார்த்தாலும் நின்னுருவத்தையே கண்டேன்! அந்தோ! இஃது உருவெளியாகிய பொய்த் தோற்றமாயிற்றே என்று ஏக்கமுற்று நைந்தேன்! இவ்வாறு உன்மீதுள்ள இனியநேசம் நாளுக்குநாள் அதிகரித்து என்னை அதி மோக சாகரத்துள் ஆழ்த்திவிட்டது! என்செயவல்லேன்? செய்திறனறியாது கையற்றுப் புள்ளொடும் மாவொடும் புலம்பினேன்!
ரூபாவதி:- எனது பிரிய நேசனே! இனிமேல் நாம் இருவரும் ஒருவரை யொருவர் பிரிந்திருந்து புலம்பாதிருப்பதற்கேற்ற உபாயங்களை நாடவேண்டும்.
சுந்தராநந்தன்:- என்னுயிர்த்துணைவி! ரூபாவதி! யானோ சிறைச்சாலைக்கண் இருக்கின்றேன்! நீயோ அரசன் மாளிகையிற் கன்னிமாடத்திலிருக் கின்றாய்! நீயும் நானும் பிரியாது ஒருமித்து வாழ்வது எப்படியோ?
ரூபாவதி:--
* "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும்
பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே"
என்று பெரியோர் சொல்லுவது நினக்குத் தெரியாததோ? ஆகையால் நாம் கூடி வாழ்தற்கு நீதக்க உபாயமறிந்து செய்யவேண்டும்.
------------
* இறையனாரகப்பொருளுரை
சுந்தராநந்தன்:--ஞானமே யுருவென நண்ணிய நாயகீ! நீ சொல்லியன வெல்லாம் உண்மையேயாம்.ஆயினும் யாம் என்ன செய்வது? நீயும் நானும் இரவிற் கூடிப் பகலிற் பிரிந்து வாழ்ந்திருந்தால் என்ன?
ரூபாவதிட-- இன்றிரவு பிழைத்திருக்கும் நீ. நாளையிரவு இவ்விட மிருப்பை யாயிற் பிழைத்திருக்க மாட்டாயென்பது நிச்சயம். ஆகையால் நீ உனக்குத் தோன்றியபடி செய்க.
சுந்தராநந்தன்:--யான் இவ்விடமிருப்பேனேற் பிழைக்கமாட்டேன் என்பது நிச்சயமென்றாயே! அஃதெப்படி யுனக்குத் தெரியும்?
ரூபாவதி:--ஐயோ! நினக்கு என் தகப்பனாருடைய கொடிய அவ்வெண்ணத்தை வெளியிட்டுரைக்கவும் வேண்டுமோ? என் தகப்பனார் நின்பெற்றோர் சோழநாட்டி லிருப்பது கேட்டு, சோழன் உதவி பெற்றுப் படையெடுத்துத் தம்மீது நின்தகப்பனார் வந்தால் நின்னைக் கொலைக்களம் படுப்பதாக ஆலோசனை செய்திருப்பதை என்தாயிடம் சொன்னார். அஃது என் காதில் உருக்கைக் காய்ச்சி யூற்றியதுபோலிருந்தது! உடனே நினக்குக் கூடமாய்க் குறிப்பிக்கப் பட்டது.
சுந்தரானந்தன்:-- ஐயோ! ரூபாவதி! இதுவரை யுன்னை யன்புடன் வளர்த்து வந்த தந்தைக்குக் கேடு சூழ்வது உனக்கு அழகாகுமோ?
ரூபாவதி:-- கொலைப்பாதகத் தகப்பனாரோ டிருப்பதைக் காட்டிலும் இறந்தொழிதல் மேலானதேயாம். அப்படியிருக்க—
சுந்தராநந்தன்:-- அப்படியாயின் யான் இவ்விடத்தைவிட்டு ஓடி யொளிப்பேனேல் நீ யென்னைச் சேர்த லெப்படிக் கூடும்?
ரூபாவதி:-- ஐயோ! எனதருமைத் தலைவனே! நீ கூறுவது என்னை ஆச்சரியம்! கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கலை வாருமுளரோ? யான் ஆண்வேடம் பூண்டு வந்ததன்பயனை யறியாயோ?
சுந்தராநந்தன்:-- ஓ! நின்னெண்ண முணர்ந்தேன். நீ கூறுவது மேலான உபாயமேயாயினும், நீ யென்னோடு கூட நடக்கமாட்டுவாயோ? மேலும் நிழலும் நீரும் இல்லாத அழலை வெங்காட்டிற் போவதை
யெவ்வாறு பொறுப்பாயோ?
ரூபாவதி:- என் பெருமானே! எத்தன்மையான வெக்கானமானாலும் நின்னொடு வரவே அஃது இனியதாய் மாறிவிடும். நீயில்லாதவிடம் தென்றல்வீசும் தேவமாளிகையாயினும் அஃது எனக்குக் காடேயாம்! நீயிருக்குமிடம் தீப்பொறி பறக்கும் வனமேயாயினும் அதுவே யெனக்கு மிகவும் ரமணீயமான மலர் மாளிகையாம்!
சுந்தராநந்தன்:- என் காதற்கிள்ளையே! ரூபாவதி! நீயும் நானும் இந்த மாதிரி ஓடிப்போவது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. நம்முடைய தமிழ் அகப்பொரு ளிலக்கணங்களில் தலைவி தலைவனுடன் தாய் தந்தையரை விட்டுவிட்டுப் போய்விடுதல் நியாயமென்று சொல்லப்பட்டிருந்தாலும் என்மனம் அதை ஒப்பவில்லை.
ரூபாவதி:- ஐயோ! என்னுயிர்த் தலைவனே! நீ இவ்விட மிருப்பையாயின் நீயுமென்னைக் காணப்போகின்றதில்லை! நீ என் தகப்பனார் வாளிற்கு இரையாய்விடுவாய்! இது காதிற்பட்ட நின்பெற்றோரும் மனம் புழுங்கி யிறப்பார்கள்! யானும் உயிர்துறப்பேன்! இவ்வளவு துன்பங்களுக்கும் நீயே மூலகாரணனாவாய்!
சுந்தராநந்தன்:- அன்புரு வெடுத்த வாருயிர்த் தலைவியே! நீ சொல்லுவன வெல்லா முணர்ந்தேன். அவையும் நியாயமேயாம். இத்தருணத்திற் செய்வது இன்னதென்று தோன்ற வில்லையே! தெய்வமே! என்செய்வேன்? சோமசுந்தரமூர்த்தியே! இவ்வாறு எனதருமைக் காதலி ரூபாவதியின் மூலமாய் என்னைத் தூண்டுவதும் நின்னருட் செயலே யன்றோ?
ரூபாவதி:- அதற்குமோர் ஐயமுண்டோ?-ஐயோ! பிராணசுந்தரா! நேரமாகின்றதே! சிறிது போதிற்கு முன் உடன்போக நினைத்த மனத்தை மாற்றிவிட்டாயே! தெய்வமே! இது நினக்கு ஏற்குமோ?
சுந்தராநந்தன்:- ஏ பிராணேசுவரீ! நீ மனவருத்தப்படுதல் ஒழிவாயாக. இதோ யான் நின்னுடன் போக ஒருப்பட்டேன்! புறப்பட்டேன்! வருவாயாக. ஓ சொக்கலிங்க வள்ளலே! அங்கயற்கணம்மையே! எம்மைக் காத்தருளுவீர்!
(பாடுகின்றான்)
இன்பமே யியற்கை யுருவமாக் கொண்ட
வீசனே சோமசுந் தரனே
யன்பொரு வடிவாப் போந்துள வென்ற
னாருயிர்த் தலைவியும் யானுந்
துன்பமொன் றெலு முற்றிடா தெமக்குத்
துணைவனா யிருத்தலுன் கடன்காண்
மன்பர ஞான வள்ளலே மகிழ்ந்து
மதுரையில் வாழ்பர சிவமே. (46)
சுந்தரபாண் டியனாவெங் குலத்துட் டோன்றிச்
சொக்கலிங்கப் பெருமானே யெனையாட் கொண்ட
விந்தையினை யாதலினா லிந்த நாளு
மேவியெமக் குறுதுணையாய் வருதல் வேண்டும்
நந்துதவழ் பேசற்கஞ்ச வாவிச் சூழ
னன்கமர்ந்த நாயகனே நந்தங் கோவே
சிந்திக்கத் தித்திக்குந் தேனே வேதச்
செம்பொருளே மெய்ஞ்ஞான தேவ தேவே. (47)
(4) இராகம்-பூரிகல்யாணி. தாளம்- சாப்பு
பல்லவி
காமனே சுந்தரேச வள்ளலே-காத்தருள்வாய்
அனுபல்லவி
சேமமார் மதுரைவாழ் சிவபரஞ் சோதியே
யாமுமிவ் வனஞ்செல யெமக்குநீ துணை செய்வாய். (வா)
சரணம்
நித்தநின் மலர்ப்பாதம் பத்தியாய்ப் பணிகின்றேம்
அத்தனே யெம்மீது சித்தமி ரங்கிடுவாய்
சுந்தரா நந்தன்யானுந் சந்தரூ பாவதியும்
அந்தமில் லாவுன்னைச் சந்தத மும்பணிவோம்
காத்தி யாஅதி காம தகனனே
நாத்தி யெமதுயிர் காத்தி யிவேளை
கால ஹரணனே காக்க விதுவேநற்
கால முணர்குதி காது வளையிலை
கால்கண் மறைமலர் காட்டு மாதுமை
காதல வெதுமை நீ (வாமனே)
ரூபாவதி :-- என்னருமைத் தாயே! கோமளவல்லீ! தந்தையே! செவிலித்தாயே!
எனாது மாடமே! யான் உங்களை யெல்லாம் விட்டுப் போகின்றேன்.
மறுபடியும் உங்களைக் காண்பது எந்நாளோ?
சுந்தராநந்தன்:--(பாடுகின்றான்)
மேகமே நீவிலகாய் மேலான சந்திரன்றோ
னோகையொடு தன்னுடைய வொளியினால் வழிகாட்ட (48)
பட்சமுடன் மேகமே பறந்தொருபக் கம்போவாய்
நட்சத் திரங்கடம நல்லொளித்தீ பங்காட்ட (49)
காஞ்சியிடை பார்க்கின்ற கன்னிகைரூ பாவதிநின்
பூஞ்சோலை யிதுகண்டாய் பொற்புடைய மாதரசே! (50)
பூஞ்சோலைக் கண்ணமரும் புள்ளினமே போகின்றே
மாஞ்சோலைக் கண்ணமரு மானினமே போகின்றேம். (51)
வையையே போகின்றே மதுரையே போகின்றேந்
துய்யனே மீனாட்சி சுந்தரனே போகின்றேம் (52)
என்னருமை நேசர்கா ளென்றும்மைக் காண்பேமோ
துன்னிரவி னும்மிடத்துச் சொல்லாது போகின்றேம் (53)
தென்றலே போகின்றேந் திங்களே போகின்றேம்
மன்றிலே போகின்றே மரும்புறவே போகின்றேம். (54)
கூகையே குழறாதே கொடியவனம் போகின்றேங்
கோகமே கேகயமே கோகிலமே போகின்றேம். (55)
இராப்பாடிப் புள்ளேயா மின்பமுறப் பாடாயோ
விராய்ப்போக மனமுண்டேல் வேகமாய் வாராயோ? (56)
விண்ணிடத்துச் செல்கின்ற மேன்மையுறு சாதகமே
மண்ணடக்கு மெங்களுக்குச் சாதகமாய் வாராயோ? (57)
ரூபாவதி:-- (பாடுகின்றாள்)
என்னுடைய தோழியரே யென்றும்மைக் காண்பேனோ
வென்னுடைய கிள்ளையே யெனைத்தேடித் திகைப்பாயோ?
ஆவலோடென் பாங்கியரோ டனுதினமும் விளையாடும்
வாவியே யென்றனில வந்திகையே போகின்றேன். (59)
மாறாகக் கூவுகின்ற மாங்குயிலே போகின்றேன்
மாறாக வாடுகின்ற மாமயிலே போகின்றேன். (60)
சுந்தரா னந்தனோடுஞ் சுகமாக வாழ்ந்திருப்பே
னந்தவனஞ் சூழ்மதுரை நாயகியே போகின்றேன். (61)
அங்கயற்க ணம்மையே யன்புடைய தலைவனொடு
மங்களமாய் நான்றினமும் வாழவே யருள்புரிவாய். (62)
இருவரும்:-- மதுரை நகரே! யாங்கள் போகின்றேம்! நீ வாழ்வாயாக.
[இருவரும் போகின்றனர்]
--------------
இடம்:-- முனிவராச்சிரமம்
காலம்:-- வைகறை
பாத்திரம்:-- ஞாநதீபர்
ஞாநதீபர்:-- (கடவுளைத் துதித்துப் பாடுகின்றார்)
அதுலநித் யாநந்த ஜயனாத பவரகித
சுகுணநிர் மலசுசீ லப்ரபாவ
அத்புத சலக்ஷண மநோஹர சுகந்தமய
ப்ரம்மாதி தேவலந் திதசித்பத
மதுரம்ருது வசாகவி *காப்ரசங் கப்ரிய
மகாமேரு கைலாஸ சைலாஸந
மங்களா கரபரம சுத்தசாத் குண்யசிவ
மகிபால குருஸ்ரேஷ்ட வரபாகிமாம். (63)
[ஆன்மநாதர் வருகின்றார்.]
ஆன்மநாதர்:- அடியேன் ஆத்மநாதன் நமஸ்காரம்.
ஞாநதீபர்:- அப்பா! ஆத்மநாதா! நீ சீக்கிரமாய்ப் போய் ஸ்நானஞ் செய்து விட்டுவா. இன்றைக்கு சுதினமா யிருக்கின்றது. ஆகையினாலே உனக்குக் குருகீதாபடநம் ஆரம்பிக்கலாமென்று ஆலோசனை பண்ணியிருக்கின்றேன். தாமஸம் பண்ணாமல் வந்துசேரு. ராகுகாலத்திற்கு முன்னே தொடங்கவேண்டும்.
ஆன்மநாதர்:- ஆகட்டும். இதோ ஸ்நாநம் பண்ணிவிட்டு வந்துவிடுகிறேன்.
(தனக்குள்) குருகீதை நல்ல கிரந்தம்!
[ஆன்மநாதர் போகின்றார்]
[ஆசிரமவாசலற் சுந்தராநந்தனும் ரூபாவதியும் வருகின்றனர்.]
சுந்தராநந்தன்:- யார் ஐயா போகிறவர்? இங்கே யிப்படிக் கொஞ்சந் திரும்ப வேண்டும்.
ஆன்மநாதர்:- நம்மைப் போகிறபோது கூப்பிடுகிறவன் யார்? - என்ன சமாசாரம்? ஐயா! நீங்களிரண்டு பேரும் யார்? எங்கே வந்தீர்கள்? உங்களுக் கென்ன வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள். நான் போக வேண்டும்.
சுந்தராநந்தன்:- ஐயா! நாங்கள் இருவரும் மதுராபுரியி லிருப்பவர், எங்களுடைய பழைய ராஜாவைத் துரத்திவிட்டு, இப்போது சூரசேநவர்மன் என்ற சேரராஜா வந்திருக்கின்றான். அவன் செய்யுங் கொடுமையினைப் பொறுக்க முடியாமல் இரவில் ஒருவருக்குந் தெரியாமல் நாங்களிரண்டுபேரும் ஓடி வந்துவிட்டோம். இராத்திரி முழுவதும் கண்விழித்துத் தூங்காமல் வழிநடந்ததனால் மிகவும் களைத்திருக்கின்றோம். நாங்கள் இருவரும் படுத்து இளைப்பாறுவதற்குச் சற்று இடங்கொடுப்பீரேல், அதிக நன்றியுள்ளவர்களா யிருப்போம்.
ஆன்மநாதர்:- ஆனாற் சரி. கொஞ்சமிருங்கள். இதோ வருகின்றேன்.
[ஆன்மநாதர் உட்செல்லுகின்றனர்.]
சுந்தராநந்தன்:- என் கண்ணே! ரூபாவதி! உன் தகப்பனாரைக் குறித்து இப்படி யான் சொல்லியதற்கு வருத்தப்படுகின்றாயோ?
ரூபாவதி:- எனது நாயகனே! நீயென்ன வார்த்தை சொன்ன போதிலும் அவையெல்லாம் எனக்கு மதுர வசனமேயாம். ஆகையால் இதற்கு நான் வருந்துவானேன்?
சுந்தராநந்தன்:- இவ்வளவு அறிவுள்ள உன்னையே நான் என்னுயிர்த் துணைவியாய்ப் பெறுவதற்கு என்ன புண்ணியஞ் செய்தேனோ?
ரூபாவதி:- சரி, அஃதிருக்கட்டும். இப்போது என் பெயரென்னவென்று கேட்டால் நான என்ன பெயர் சொல்லலாம்?
சுந்தராநந்தன்:- ஏதாவது 'சுரூபன்' என்று சொல். என்பெயர் கேட்டால் நானுமேதாவது 'சுந்தரன்' என்று சொல்லுகின்றேன்.
[ஆன்மநாதர் திரும்பிவருகின்றார்.]
ஆன்மநாதர்:- நீங்களிரண்டுபேரும் உள்ளே வரலாமென்று ஆசாரியரவர்களுடைய உத்தரவாயிருக்கின்றது. வாருங்கள்.
[எல்லோரும் உட்செல்லுகின்றனர்; இருவரும் வணங்குகின்றனர்.]
ஞாநதீபர்:- தீர்காயுஷ் மான்பவ! உங்களைப் பற்றிய சமாசாரமெல்லாம் நம்முடைய சிஷ்யன் மூலமாய்த் தெரிந்துகொண்டோம் - மற்றைப்படி உங்களுடைய நாமதேயங்க ளென்ன?
சுந்தராநந்தன்:- என்பெயர் சுந்தரன்; அவன் பெயர் சுரூபன்.
ஞாநதீபர்:- சரி, உங்களுடைய நாமதேயங்களும் அழகாகவே யிருக்கின்றன! இதற்கு முன்னே உங்களுடைய ராஜாவும் ராஜ்ஞியும் நம்முடைய ஆசிரமத்தில் ஏகராத்திரந் தங்கி மறுநாட் சோளதேசத்திற்கு நம்முடைய அநுமதிப் பிரகாரம் போனார்கள். அவர்களைத் துரத்திய பிற்பாடும் இந்தச் சூரசேநவர்மனுடைய கடோரம் குறைய
வில்லையா?
சுந்தரன்:- சுவாமிகாள்! அவன் செய்யும் அநீதங்களைக் குறித்துயான் சொல்லுவது அவ்வளவு சரியானதன்று. ஏனென்றால் யான் பூர்வ ராஜாவிற்கு வேண்டியவன். இப்போது என்னுடன் வந்திருக்கிற சுரூபனோ தற்காலத்துள்ள சூரசேந வர்மனுக்கு வேண்டியவன்.அவனிடம் வேண்டு மென்றாற் கேளுங்கள்.
சுரூபன்:- சுவாமிகளே! எங்கள் ராஜா சூரசேநவர்மர் எவ்வளவோ நியாயமாய் எங்கள் சேரதேசத்தில் அரசாண்டுவந்தார். அப்படி யிருந்தவர் பாண்டியதேசத்தைச் செயித்தவுடனே குணம் மாறி அநியாயஞ் செய்யத் தொடங்கிவிட்டார். முதல் முதலில் முந்தியிருந்த ராஜா சற்குணனையும் அவன் மனைவியையும் சிறைச்சாலையிலே யிட்டார். அப்புறம் அந்தராஜா சற்குணன் மகனை அவனுடைய தாயார் தகப்பானாரோடு வையாமல் வேறு சிறைச்சாலையில் வைத்தார்! பிறகு சற்குணனையும் அவன் மனைவியையும் காட்டில் துரத்திவிட்டார். அதன் பிற்பாடு அவன் மகன் சிறைச்சாலையி லிருப்பவனையுங் கொல்லத் தலைப்பட்டார்!
ஞாநதீபர்:- ஆகா கா கா! மகாபாபம்! பரமசண்டாளன்! பதிதன்!-
(மௌனம்) இவற்றிற் கெல்லாம் நாம் என்ன பண்ணலாம்? சகலமும் சிவாக்ஞை!-அந்தப்பாதகனைப் பற்றி யொன்றும் நாம் இனிமேற் பேசவேண்டாம்--சரி. இருக்கட்டும். நீங்கள் இருவரும் இப்படி நித்திரை கூட இல்லாமல் ராத்திரி காலத்திலே யொருவருக்குந் தெரியாமல் ஓடி வருவானேன்?
சுந்தரன்:-- பொழுது விடிந்தால் எங்க ளிருவரையும் கொல்லப்போகிறதாக அரசன் சொல்லிய சங்கதி யெங்கள் காதிற்பட்டது. உடனே யாங்கள் ஒருவரொடுஞ் சொல்லாமற் புறப்பட்டு வந்துவிட்டோம். நீங்களே யெங்களுக்கு அடைக்கலம். ஆகையால் எங்களைக் காத்து ரக்ஷிப்பது தங்ளைப் பொறுத்தது.
ஞாநதீபர்:--அதற்கு நீங்கள் யோசனை செய்யவேண்டுவதில்லை. நம்முடைய சிஷ்யன் ஆத்மநாதன் வந்ததும் உங்கள் இரண்டுபேரையும் சோளதேசத்தி லிருக்கும் உங்கள் ராஜா சற்குண பாண்டியனிடமே யனுப்புகின்றோம். பயப்படா திருங்கள்!
சகுபன்:-- கருணாநிதியாகிய தங்களைச் சரணமடைந்த பிற்பாடும் எங்களுக்குப் பயமுண்டாகுமோ?
ஞாநதீபர்:--அவையெல்லாம் சரிதாம். நீங்கள் நேற்றிராத்திரி யெல்லாம் நித்திரையில்லாமல் வழி நடந்ததனாலேயுங்களுக்கு அலுப்பாயிருக்கக் கூடும். ஆகையால் நீங்களிரண்டுபேரும் நம்மோடு வாருங்கள். உங்களுக்கு ஒரு விடுதியிடந் தருகின்றோம். அவ்விடத்தில் நன்றாய் அலுப்பாற நித்திரை செய்யுங்கள். இன்று சாயங்காலமே உங்களிருவரையும் சோளராஜ்யத்திற்கு அனுப்புவோம்.
இருவரும்:-- இதோ வருகின்றோம்.
[யாவரும் போகின்றனர்]
மூன்றாம் அங்கம் முற்றிற்று
அங்கம்-4
முதற்களம்
இடம்:-- பாண்டினரண்மனை
காலம்:-- காலை
பாத்திரம்:-- சூரசேநன்
சூரசேநன்:-- (தனக்குள்) நாம் இனிமேல் தாமசமென்பதே செய்யக்கூடாது. வீரேந்திரசோழன் நம்முடைய தேசத்தின் மீது படையெடுத்து வருவதற்காகத் தக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றானென்று கேள்விப்பட்ட பிறகும் நாம் ஒன்றும் செய்யாதிருப்பது சரியானதன்று. நாமும் தக்க ஏற்பாடுகள் செய்வதற்கு இப்பொழுதே தொடங்க வேண்டும். நாம் நினைத்தது போலவே அவனும் படையெடுத்து வரப்போகின்றான். ஆகையால் நாமும் நம்முடைய அந்தரங்க எண்ணத்தை இன்றைக்கே நிறைவேற்றிவிடவேண்டும். அப்புறம் மேல் நடக்கப்போகிறதைப் பார்த்துக் கொள்வோம்.
[சேவகன் வருகின்றான்]
சேவகன்:--மகாராசா! சிறைகாவக்காரர்கள் இரண்டுபேர் வாசலிலே வந்திருக்கிறாக.
சூரசேநன்:-- அவர்களை யிங்கே வரச்சொல்.
சேவகன்:-- மகராசா! அப்படியே.
[சேவகன் போகின்றான்]
சூரசேநன்:-- நாம் அவர்களுக்காக்ச் சொல்லியனுப்ப வேண்டுமென்று எண்ணவும் அவர்களும் வந்து விட்டார்களே!!
[காவலாளர் வருகின்றனர்.]
இப்படி, சமீபத்தில் வாருங்கள். என்ன சமாசாரம்? சொல்லுங்கள்.
முதற்காவலாளன்:-- மகாராசாவே! நடந்த சங்கதியை நாங்க என்னாண்டு சொல்வோம்! எங்க காவலிலிருந்த ராசாமகன் சுந்தராநந்தன் நேற்றிராவிலே சிறையிலுள்ள மதிலேறி உடம்பெல்லாம் காயப் படுத்திக்கிட்டு வெளியே ஓடினான். குதிச்ச வுடனே காதிலே சத்தங்கேட்டிச்சு. உடனே நாங்க வெளியே வந்துபார்த்தா இந்தப் பய ஓடினான்! உடனே நாங்களும் அவனைத்தொடர்ந்து கிட்டே ஓடினோம். அவனோட நாங்களோடக் கடைசியிலே அவனை வெகுதொலைபோய்ப் பிடிச்சோம். உடனே அவன்கையிலே என்னவோ வொண்ணுவச்சுக்கிட்டு இதோ நிக்கிறானே இவனைக் காயப் படுத்திப் போட்டான்! உடனே எங்களுக்கும் அவனுக்கும் சண்டைநடந்திச்சு. அந்தச் சண்டையிலே நாங்க அவனைக்கொண்டு போட்டோம். அதுக்காக மகாராசா! எங்களை மன்னிக்க வேணும்.
(பாதங்களில் விழுகின்றனன்.)
சூரசேநன்:--அடே! எழுந்திரு! அவனை யோடிப்போக விட்டு விட்டுவந்து பொய்யெல்லாம் பேசுகின்றாயா?
இரண்டாங்காவலாளன்:-- இல்லை,இல்லை.மகராசா! நாங்க பொய்பேசவில்லை. நீங்க வேணுமிண்டாலும் வந்து அந்தப் பய ஏறிவிளுந்த மதிலைப் பாருங்க. அவன் உடம்பிலே காயப்பட்டு ரத்தம் சிந்தினது கூடத் தெரியும்! மகராசா!
சூரசேநன்:-- நிஜந்தானா?
(முதற்காவலன் எழுகின்றான்.)
முதற்காவலாளன்:-- ஆமாம் நிசந்தான். மகராசா! நாங்க அவன் தலையைக் கூடக் கொண்டாந்திருப்போம்.
சூரசேநன்:-- சீ, சீ! அது கூடாது.
இரண்டாங்காவலாளன்:-- அதுதான், மகராசா! நாங்க எங்கே ஊராருக்குத் தெரிஞ்சிட்டா என்னவாவது கலகங் கிலக முண்டாகுமோண்டு பயந்து அங்ஙனே தானே குளிவெட்டிப் புதைச்சுப் போட்டம்! தோண்டித் தலையைக் கொண்டாரச் சொன்னாக் கொண்டுக்கிட்டுவாரம்.மகராசா!
சூரசேநன்:-- அவையெல்லாமிருக்கட்டும். அடே! இந்தச் சங்கதி யூராருக்குத் தெரியாதே?
இருவரும்:-- தெரியவே தெரியாது, மகராசா!
சூரசேநன்:-- சரிதான். நீங்கள் இருவரும் இப்போது போங்கள். இதைக் குறித்து நாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம். மந்திரி சுசீலர் வருகிற சமயமாயிற்று.
(சிறைக்காவலாளர் போகின்றனர்.)
(தனக்குள்) இப்போது இவர்கள் செய்தது நமக்கு நல்லதாய்த்தான் தோன்றுகின்றது. ஆனாலும் இஃது ஊராருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்கிறது?(மௌனம்) ஜனங்கள் ஏற்கனவே நம்மைக் 'கொடியன்' 'கொடியன்' என்று சொல்லுவதாகக் கேள்விப்படு கின்றோம். இப்போது இந்தச் சங்கதியும் அவர்கள் காதில் படுமானால் இதற்கென்ன செய்யலாம். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போலாயிற்றே!--(மௌனம்) நேற்றிரவு நாம் கண்டகனவை நினைக்கும்போது உடம்பு நடுங்குகின்றதே! வீரேந்திரசோழன் நம்மைக்காலில் விலங்கிட்டுச் சற்குணவழுதியின் முன் நிறுத்தி யிருப்பதாகக் கண்டோமே! அப்படியும் நேரிடக்கூடுமோ?--
[செவிலி வருகின்றாள்.]
செவிலி:-- (அழுதுகொண்டு) மகாராஜா! நமது குமாரி ரூபாவதியைக் காணோம்.
சூரசேநன்:--(பிரமித்து) ஆ! என்ன!
[கோமள வல்லி வருகின்றாள்.]
கோமளவல்லி:--(அழுதுகொண்டு) ஐயோ! ரூபாவதி! நேற்றிராத்திரி நான் கண்டகனா நிஜமாய்விட்டதே! என்னருமை மகளே! நீ யெவ்விடம் போனாய்? உன்னைக்காணாமல் ஒரு நிமிஷமாவது என் உயிர் நிற்குமோ?— ஆ! தெய்வமே! இப்படிச் செய்வது உனக்குத்தகுமோ?--- மீனாட்சீபரதேவதே! உன்சந்நிதாநத்தில் இப்படி நடப்பது முண்டோ? எனக்கொரே மகளாயிருந்த ரூபாவதி! உன்னை நேற்றிராத்திரி யொரு பெரியபூதம் தூக்கிக்கொண்டு போவதாகக் கனாக் கண்டேனே! ஓ! அப்படியே! தான் ஒருவேளை நடந்துவிட்டதோ?
(மௌனம்)
(இரங்கிப் பாடுகின்றாள்)
பொன்னனைய வெழின்மாதே புகழூரு பாவதியென்
புதல்வீ சேர
மன்னவன்தன் காதல்வயின் முளைத்திட்டு மகிழ்பூத்து
மணம் பரப்பிக்
கன்னன்மொழிச் சாறொழுகுங் கவினுடைய கனியேயென்
கண்போல் வாளே
யென்னருமை மகளாய நினையிழந்தும் யான்தனியே
யிருப்ப தேயோ! (64)
திங்களெனு முகத்தாளே தெவிட்டாத தெள்ளமுதே
தேன்போல் வாளே
சங்கமெனுங் களத்தாளே நீலமெனுங் கோலவிழித்
தையால் செய்ய
தங்கமெனும் புரத்தாளே காந்தளெனுங்கரத்தாளே
தகைசேர் மானே
செங்குமுத விதழுறுரூ பாவதியே யெவ்விடத்துச்
சென்றாய் சென்றாய்? (65)
செவிலி:-- ஐயோ! உடம்பு சௌக்கிய மில்லாமையினாலே நேற்று நீ பூஞ்சோலைக்குக் கூடப் போகவில்லையே!--ரூபாவதீ! ரூபாவதீ! எங்கே போனாய்?-- ஓ! உன் படுக்கையறை நீ யில்லாமையால் வெறிச் சென்று போய் விட்டதே!--
சூரசேநன்:-- வீண் கூக்குரற் போடாதீர்கள்! நன்றாய்த் தேடினீர்களா!
கோமளவல்லி:-- தேடியும் காணோம். ஐயோ! தெய்வமே! இந்த மாதிரி நாங்கள் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டும் உனக்கு இரக்கமில்லையோ?-மீனாட்சி சுந்தரேசுவரா! உன்னை ஒருநாட் கூடத் தவறாமல் தரிசனம் பண்ணினதன் பலன் இதுதானோ! இது தானோ!!- ஐயோ! அவளுடைய தோழிகளைக் கூட்டிவரப் போன ஆளும் வரவில்லையே! (இரங்கிப் பாடுகின்றாள்.)
எத்தனையோ தவம்புரிந்து மியம்பரும்பன்
னோன்புகல்உன் னெடுத்தும்பெற்ற
வுத்தமிரூ பாவதியோ யொருமொழியு
முறையாதெங் கொளித்திட்டாயோ? (66)
அஞ்சுகமே கிஞ்சுகமே யன்புறுரூ
பாவதியே யருளி லார்போவ்
வஞ்சகமே நீபுரிந்து அறைந்துநின்று வருத்தவெமை
மனங்கொண் டாயோ? (67)
[சூரசேநன் போகின்றான்.]
செவிலி:- தாயே! நாம் இப்படிப் புலம்புவதிற் பிரயோசனமில்லை. எல்லாவற்றிற்கும் அம்புஜாட்சியும் கநகமாலையும் வரட்டும். அவர்களிடம் விசாரிப்போம். அதுவரையிற் சற்று விசனப்படாம லிருக்கவேண்டும்.
கோமளவல்லி:- ஐயோ! நீ யென் விசனத்தைக் கொஞ்சம் கூட அறியாமற் சொல்லுகின்றாயே! நேற்றிராத்திரி ஒரு சாமமட்டும் என்னோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் படுக்கை யறைக்குப் போனாள். அவ்வளவுதான். அதன் பிற்பாடு இப்பொழுதுதான் நீ சொல்லியபின் பார்த்தேன். அவளைக் காணேன்! என்ன செய்வேன்! என்ன செய்வேன்!!
[அம்புஜாட்சியும் கநகமாலையும் வருகின்றனர்.]
செவிலி:- அதோ அம்புஜாட்சியுங் கநகமாலையும் வந்துவிட்டார்கள். இப்பொழுது அழவேண்டாம். கொஞ்சம் பேசாதிருந்தால் நல்லது.
அம்புஜாட்சி:- என்னை வரும்படி சொல்லி யனுப்பினீர்களாமே! என்னத்திற்கு அவ்வளவு அவசரம்? என்ன காரியம் இப்போது? - என்னவோ போலிருக்கிறீர்களே!
கநகமாலை:- ரூபாவதி யெங்கே காணோம்? உடம்பு சௌக்கியமா யிருக்கின்றாளோ இல்லையோ?
கோமளவல்லி:- ஐயோ உங்களுக்கொன்றுந் தெரியாதோ?
செவிலி:- தாயே! கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஏண்டி! அம்மா! அம்புஜாட்சி! உனக்கு என்னவாவது ரூபாவதியைப் பற்றித் தெரியுமா? நேற்றிராத்திரி யிருந்தவளை யின்று பொழுது விடிந்து பார்த்தாற் காணோமே!
அம்புஜாட்சி:- இதென்ன! ஆச்சரியமாயிருக்கின்றதே!
கோமளவல்லி:- ஓ! ரூபாவதி! உன்னை மறுபடியும் காண்பேனோ!
கநகமாலை:- (அழுது பெருமூச்செறிந்துகொண்டு) அம்புஜாட்சி! இது என்ன! கனவிலுங் காணாத சமாசாரமா யிருக்கிறதே!
அம்புஜாட்சி:- (பெருமூச்செறிந்து) ரூபாவதி! ரூபாவதி! யாங்கள் உன்னோடு பேசிக்கொண்டு அனுபவித்த பாக்கியம் இவ்வளவு தானோ! இவ்வளவு தானோ!!
[இரங்கிப் பாடுகின்றாள்)
உமையவடன் னருளாலே யுதித்திடுரூ பாவதியே
யிமையவரு மறியாத வின்னமுதே யெழிலுடனே
சுமையுமினி தோருருவாய்க் கலந்தசுவைக் கரும்பேநீ
யெமையலவந் திருக்கும்வண மியற்றுதனால் நேரேயோ? (68)
கநகமாலை:- (இரங்கிப் பாடுகின்றாள்.)
அன்புகுடி கொண்டவளே யானந்தப் பூங்குயிலே?
யின்புறுரூ பாவதியே யெவ்விடத்துச் சென்றாயோ? (69)
கன்னிகைரூ பாவதியே காமன்வென்றிக் கொடியேயெ
மின்னலிரிந் தேகிடுவா னெம்மெதிர்நீ தோன்றாயோ? (70)
உருக்கியிட்ட பொற்கொடியே யொண்ணுதல்ரூ பாவதிநீ
யிருக்குமிடஞ் சற்றேனு மெமக்குரைக்கக் கூடாதோ? (71)
கோட்டையினைச் சுற்றிநின்ற கோதறுபூங் காவனமே
வாட்டடங்க ணான்மீட்டும் வந்திடுத லுண்டுகொலோ? (72)
கோமளவல்லி:- (இரங்கிப் பாடுகின்றாள்.)
தாயாகு மென்னிடத்துன் றண்குமுத வாய்திறந்து
வேயார்தோட் பெண்மயிலே வேண்டுமொழி பேசாது
தீயாரி னெங்கொளித்தாய் சீறடிக ணோவுமா
வேயேயிஃதென்னைகொலோ வென்மகளே! என் மகளே!! (73)
என்னினிய பெண்ணமுதே யெங்கொளிந்தா யெங்கொளிந்தாய்
துன்னு மெழிற்றோகாய் சொல்வா யொருமொழியே. (74)
ஐயோ மறந்தனையோ! ஐயோ பறந்தனையோ!
ஐயோ துறந்தனையோ! ஐயோ விறந்தனையோ! (75)
[சூரசேநன் வருகின்றான்.]
சூரசேநன்:- நீங்கள் சற்று அழாதிருங்கள். பதற வேண்டாம். நான் இப்பொழுதே சேவகர்களை நாலாபக்கமும் அனுப்பித் தேடச் சொன்னேன். மந்திரி சுசீலருக்கும் ஆளனுப்பியிருக்கின்றேன். அதுவரைக்குங் கூக்குரற் போடாதிருங்கள்.
[யாவரும் போகின்றனர்.]
---------------------------
இடம்:- நயவசநன்வீடு
காலம்:- பிற்பகல்
பாத்திரங்கள்:- நயவசநன், சிலகனவான்கள்
முதற்கனவான்:- ஏன்? ஐயா! நயவசநரே! இந்த சூரசேநவர்மன் என்ன இப்படிக் கெட்ட தொழில்கள் எல்லாஞ் செய்ய ஆரம்பித்துவிட்டான்? அவன் செய்கிற தொன்றும் நன்றாயிருக்கவில்லையே!
நயவசநன்:- ஆமாம்! என்னசெய்கிறது! நாளுக்குநாள் அவன் கொடுமை யதிகப்படுகின்றதே யொழியக் குறைகிறதைக் காணோம்!
இரண்டாங்கனவான்:- இப்பொழுது மாத்திரம் எல்லாரும் "என்ன செய்கிறது என்ன செய்கிறது!" என்று சொல்லுங்கள். அப்பொழுதே நான் சொன்னபடி கேட்டிருந்தால் எல்லாஞ்சரியாய்ப் போயிருக்கும்!
மூன்றாங்கனவான்:- எல்லாருமாய்ச் சேர்ந்து காரியத்தைக் கெடுத்தீர்கள்! இப்பொழுது கிடந்து ஒருவரை யொருவர் பார்த்து விழியுங்கள்!
முதற்கனவான்:- எல்லாஞ் சுந்தராநந்தனைக் கேட்டுச் செய்யலாமென்று நயவசநர் சொன்னபோது, நீங்கள் தாமே சரி சரியென்று ஒத்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டு இப்போது பேசவந்தீர்களே! இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் அப்பொழுதே சொல்லுகிறது தானே!
இரண்டாங்கனவான்:- சுந்தராநந்தனைக் கேட்டதிலே யென்ன பிசகு? அவன் தான் நயவசநர் தம்மிஷ்டப்படி செய்யட்டுமென்று சொல்லிவிட்டானே! அவன் பேரிலே தவறொன்றுமில்லை.
மூன்றாங்கனவான்:- எல்லாம் இந்த நயவசநராலேயே வந்தன. அப்போதே என் எண்ணப்படி விட்டிருந்தால் இப்படி யெல்லாம் அநியாயம் ஏன் நடக்கும்?
முதற்கனவான்:- அப்படியென்ன ஐயா அநியாயம் நடந்துவிட்டது?
இரண்டாங்கனவான்:- நம்முடைய சற்குண வழுதிக்காகச் சோழன் வீரேந்திரன் படையெடுத்து வரப்போகின்றா னென்பது கேட்டு இந்தச் சூரசேநன் நம்முடைய சுந்தராநந்தனைக் கொன்று விடுவதாகத் தீர்மானித்து விட்டானாம். இதைவிட அநியாயமும் கொடுமையும் வேறென்ன வேண்டும்?
நயவசனன்:- ஐயோ! கனவான்களே! நடந்த கொடுமை அவ்வளவுதான் என்று நினையாதீர்கள். அதற்கு மேலும் நடந்து விட்டது! நடந்து விட்டது! நம்முடைய சுந்தராநந்தனை-
மூன்றாங்கனவான்:- என்ன? என்ன? நம்முடைய இளவரசன் சுந்தரா நந்தனுக் கென்ன?
நயவசநன்:--ஐயோ! உமக்கு யான் எப்படிச் சொல்லுவேன்.
இரண்டாங்கனவான்:-- பாதகமில்லை. சொல்லுஞ் சொல்லும். சீக்கிரம்!
நயவசநன்:-- ஐயா! இந்தப் பாவி சூரசேநன் நம்முடைய சுந்தராநந்தனை நேற்றி ராத்திரிக் கொன்று விட்டான்! கொன்றுவிட்டான்!!
மூன்றாங்கனவான்:-- அப்படியா செய்தான்? இனிமேல் ஒரு நிமிஷமாவது தாமதியேன்! இதோ! பாருங்கள்! அந்தப் பாதகனை நான் கொன்று விடுகின்றேன்! உங்கள் பேச்சை யினிக் கேட்கவே மாட்டேன்! இந்தச் சூரசேநவர்மனைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!
[மூன்றாங்கனவான் போகின்றான்]
நயவசநன்:-- இப்படி யெல்லாந் தோன்றினபடிக் குதிப்பீர்க ளென்று தானே யான் உங்களிடஞ் சொல்லக் கொஞ்சம் யோசித்தேன்!
முதற்கனவான்:-- இவர்க ளெப்போது மிப்படித்தானே! ஆழ்ந்து யோசனை பண்ணுகிறதில்லை. ஹா! ஹு! என்று குதிக்கத்தான் தெரியும்.
இரண்டாங்கனவான்:-- சரிதான். உங்கள் பேச்சைக்கேட்டால் எல்லாக் காரியமும் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும். நீங்களிரண்டுபேரும் இப்படியே பேசிக்கொண்டிருங்கள்! இந்தச் சமாசாரத்தைக் கேட்டது முதல் எனக்கு இங்கே இருக்கத் தோன்றவில்லை! யானும் போகின்றேன்.
[இரண்டாங்கனவானும் போகின்றான்]
முதற்கனவான்:-- இதென்ன? இவர்களிப்படி யாரம்பித்து விட்டார்கள்!
ஏனையா? நயவசகரே!
நயவசநன்:-- ஆமாம். அதற்கு நாமென்ன செய்யக்கூடும்? நானோ சூரசேநவர்மனுக்கு வேண்டியவன். ஆகையால் நானிந்த விஷயங்களில்தலையிடுகின்ற சங்கதி யரசனுக்குத் தெரியாதிருக்க வேண்டுமே என்று ஏக்கங்கொண்டிருக்கிறேன்.
முதற்கனவான்:--(தனக்குட் பாடுகின்றான்.)
நன்றே நும துசெயல்! நன்றே நுமது மொழி!
பொன்றுதலே மேலாமிப் புல்லுரைகள் பேசலினும்! (76)
இவர்கள் தங்கள் எண்ணத்தைச் செய்து முடித்தாற் சரிதான். மற்றைப்படி தவறிவிட்டா லென்ன செய்கிறது?
நயவசநன்:-- படுகிறார்கள் அவஸ்தை! நமக்கென்ன? நம்முடைய யோசனையைத் தான் கேட்கமாட்டோ மென்று போய்விட்டார்களே! அதைக் குறித்து நாம் ஏன் கவலைப்படவேண்டும்? (பாடுகின்றான்)
ஒற்றுமை யின்றெனி னுற்ற செய்தொழில்
குற்றமாய் முடிந்திடுங் குறையு மாயிடும்
பற்றிமேற் கொண்டன பாறிப் போயிடு
மெற்றுநீர்த் திரையுலா முலகி னென்பவே. (77)
[மூன்றாங்கனவான் மீட்டும் வருகின்றான்.]
முதற்கனவான்:-- ஏன்? ஐயா! போனீரே! என்ன சங்கதி? திரும்பி வந்தீர்!
மூன்றாங்கனவான்:-- ஓ! நயவசநரே! ஓடிவாரும்! எழுந்திரும்! குதிப்போம்!வாரும்!
நயவசநன்:-- ஏன்? உம்முடையகாரியம் முடிந்துவிட்டதோ ? என்ன?
மூன்றாங்கனவான்:-- இல்லை , இல்லை. வேறுசமாசாரம்.
முதற்கனவான்:-- வேறே யென்ன சமாசாரம்? என்ன?
மூன்றாங்கனவான்:-- நாம் செய்யாத போதிலும் சுவாமி சுந்தரேசுவரராவது செய்வாரேயன்றோ? அவருக்குங் கூடவா கண்களில்லாமற் போய்விடும்! ஹும் இவ்வளவும் வேண்டு மந்தக் கொலைப் பாதகனுக்கு!
நயவசநன்:-- என்ன ? சோழன் படையெடுத்து வந்து விட்டானோ ?
மூன்றாங்கனவான்:-- அதுவுமில்லை. வேறுசங்கதி. எழுந்திரும்! களிக்கூத்தாடும்! அப்புறஞ் சொல்லுகின்றேன்.
முதற்கனவான்:- என்ன சங்கதி? சொல்லுமே!
மூன்றாங்கனவான்:-- அரசன் மகள் ரூபாவதியைக் காணவில்லையாம். ஏதோ பூதம் தூக்கிக்கொண்டு போய் விட்டதாம்! அவ்வளவுதான் சமாசாரம்.
நயவசநன்:-- ஈதென்னை? வேடிக்கையாயிருக்கின்றதே! நிஜந்தானா?
முதற்கனவான்:-- இப்படி யெல்லாம் அநியாயஞ் செய்தால் தெய்வந்தான் பொறுக்குமோ? (பாடுகின்றான்)
மங்கை பாகனார் மாமதி வேணிய
ரெங் கணும்விழி யேய்ந்த விறைவனார்
பொங்கு றும்மநி யாயத்தைப் போக்கிலார்
தங்கி நிர்பர்கொல்? தண்ணருளில்லர்கொல்? (78)
மூன்றாங்கனவான்:-- அதுதான் தெய்வமும் பொறுக்கவில்லை!
நயவசநன்:-- அப்படியாயின், நான் அரண்மனைக்குப் போய்த் தெரிந்துகொண்டு வருகின்றேன்.
முதற்கனவான்:-- சரி, இப்போதெனக்கும் போகவேண்டும்.
மூன்றாங்கனவான்:-- நானும் வருகின்றேன். இரும். போகலாம்.
நயவசநன்:-- நீங்கள் எல்லோரும் இன்றை யிரவு வாருங்கள். எல்லாம் பேசுவோம். நான் போய்ச் சகல சங்கதிகளையும் பற்றி விசாரித்துக் கொண்டு வந்துவிடுகின்றேன்.
மற்றையிருவரும்:-- சரி. அப்படியே செய்வோம்.
[யாவரும் போகின்றனர்.]
--------------
இடம்:- பாண்டியனரண்மனை
காலம்:- பிற்பகல்
பாத்திரங்கள்:- சூரசேநன், சுசீலன்
சுசீலன்:- அஃதொன்றும் நாம் பதறக் கூடாது. கொஞ்சம் அமைதியோடிருக்க வேண்டும்.
சூரசேநன்:- இஃதென்னை? நம்பக்கூடாததா யிருக்கின்றதே! இராத்திரிப் படுகையறையி லிருந்தவளைப் பொழுது விடிந்து பார்த்தாற்காணோ மென்றால் எவ்வளவு ஆச்சரியமா யிருக்கின்றது! யாரைக் கேட்டாலும் "ஆ அப்படியா?" என்று சொல்லுகின்றார்களே யொழிய வேறென்றுஞ் சொல்லுகின்றார்களல்லர். ஏன்? சுசீலரே இதற்கென்ன செய்யலாம்? - இந்தவூரார் விஷயத்தில் நியாயமென்பதே பார்க்கப் படாது. இருக்கட்டும், எல்லாவற்றிற்குஞ் சொல்லுகின்றோம் அவர்களுக்கு!
சுசீலன்:- தேடிகொண்டு வரப்போன சேவர்கள் வரட்டுமே! எல்லாச் சங்கதியுந் தாமே தெரியும். பதறுவானேன்?
சூரசேநன் - ஓ! சுசீலரே! எமக்குத் தோன்றுகிற மட்டில், இந்த ஊரிலே தான் யாராவது இராத்திரியில் அவன் தூங்கும்போது அவளைத் தூக்கிகொண்டு போய் எங்கேயாவது கொன்று புதைத்து விட்டார்களோ என்று சந்தேகமா யிருக்கின்றது. இது மாத்திர முண்மை யென்று தெரிந்தால், தெரிந்த அந்த விநாடியிலேயே ஊர் முழுவதையும் அக்கினி பகவானுக்கிரையாக்கி விடுவோம்.
சுசீலன்:- தாங்கள் சந்தேகப்படுகிறபடியே சில கொலைகாரப் பயல்கள் இந்த காரியஞ் செய்திருந்தாலும் அரசராயிருக்கிற தங்களுக்கு ஊர் முழுவதையும் பொசுக்கிவிடுவது அழகன்றே! தாங்கள் குற்றவாளிளகைத் தாமே தண்டிக்க வேண்டும்.
சூரசேநன்:- எமக்குக் கொடுங்கோள் மன்னன் என்று பேர் வந்தபோதிலும் பாதகமில்லை. அவர்களைக் கொல்லாமல் விடமாட்டோம். சந்தேகப்பட்வர்களை மாத்திரஞ் சித்திரவதை செய்வோம்.
(நயவசந்நன் வருகின்றான்.)
சுசீலன்:- அதோ நயவசநர் வருகின்றார்.
சூரசேநன்:- ஏ! சேவகா!
நயவசநன்:- மகாராஜா அவர்களுக்கு அடியேன் நயவசநன் வந்தனம்.
சேகவன்:- மகராசா!சித்தம்.
சூரசேநன்:- இந்த நயவசநப் பயலைப் பிடித்து அடித்துக் கட்டி விலங்கிட்டுச் சிறைச்சாலையிலே யிடு. நயவசநனாம்! இவன் நயவஞ்சகன்!
சேவகன்:-நயவசநரையா?
சூரசேநன்:-ஆம்! இந்த நயவஞ்சகப் பயலைத்தான்!
[நயவசநனை உதைக்கின்றான்]
சுசீலன்:-(தனக்குள்) இஃதென்ன? விநோதமா யிருக்கின்றதே!
நயவசகன்:-அப்படி மகாராஜா அவர்களுக்கு விரோதமாக அடியேன் ஒன்றுஞ் செய்யவில்லையே! அப்படி யிருக்க என்னை வீணே தண்டிப்பானேன்?
குரசேநன்:-என்னடா! சேவகா! சும்மா நிற்கின்றாய்! இவன் இப்படித்தான் பேசுவான். நீ உன் காரியத்தைப் பாரடா.
[சேவகனை யுதைக்கின்றான்]
சேவகன்:-இதோ! உத்தரவுப்படி செய்கிறேன் மகராசா!
[நயவசநனை அடித்து விலங்கிடுகின்றான்]
நயவசகன்:-ஐயோ! அடியேன் ஒரு பாவமும் அறியேனே!
சுசீலன்:-ஈதென்ன! நிஜந்தானா? நான் இதுவரையிலும் விளையாட்டிற் காயினுஞ் செய்கிறீர்க னென்றன்றே நினைத்தேன்! என்ன? இப்படி இவ்விடத்திலேயே விபரீதஞ் செய்ய ஆரம்பித்தல் சரியானதாகத் தோன்றவில்லையே!
சூரசேநன்:-ஓ! சுசீலரே! தாங்கள் இந்த விஷயங்களிலெல்லாம் தலையிடாமலிருக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். கொண்டுபோ சிறைச்சாலைக்கு.அப்புறம் இதைக் குறித்து விசாரித்துக் கொள்வோம்.
சுசீலன்:-(தனக்குள்) அரசனுக்குப் பெண்ணைக் காணாமையாற் பைத்தியம் பிடித்துவிட்டது போலும். இப்பொழுதே யிப்படியிருந்தால் அப்புறம் சேவகர்கள் வந்து காணோமென்று சொல்லிவிட்டால் அப்போது அரசனுடைய குணம் எப்படியிருக்குமோ? ஈசனே! இதுவுமுன் லீலா விசேஷமோ?
குரசேகரன்:-சீக்கிரங் கொண்டுபோ. தாமதஞ் செய்யாதே! [நயவசநனைச் சேவகன் சிறைக்குக் கொண்டுபோகின்றான்.] கேட்டீரா? சுசீலரே! உமக்கொன்றுந் தெரியாதே இந்தப் பயலுடைய வஞ்சகங்களெல்லாம்! தினந்தோறும் தன்னுடைய வீட்டில் இரண்டு மூன்று கனவான்களோடு தானு மிருந்து கொண்டு நம்மைக் கொலைசெய்வதற்கு புத்திகளெல்லாம் யோசிக்கின்றானாம். இரண்டு மூன்று நாளாய்க் கேள்விப்பட்டோம். அஃது இன்று காலமேதான் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. அதுமுதல் இவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். இவனே ஒருவேளை என்மகனைத் தூக்கிக் கொண்டுபோய்க் கொலை செய்திருப்பான்!
சுசீலன்:-அப்படியிருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
[சேவகன் வருகின்றான்.]
சேவகன்:-- மகாராசா! புத்தி.
சூரசேநன்:-- என்ன ?அவனைக் கொண்டுபோய்ச் சிறையிலடைத்து விட்டாயா?
சேவகன்:-- ஆமாம்.மகாராசா! சிறைக்காவலரிடம் ஒப்பிச்சுட்டு வந்தேன். மகாராசா! தேடிக்கிட்டு வரப்போன சேவகங்க வந்திருக்கிறாக. இது விசயஞ் சமுகத்திலே தெரியப்படுத்தினேன்.
சூரசேநன்:-- எல்லாரையு முன்னே வரச் சொல்லாமல் அவர்களில் முக்கியமானவனை மாத்திரம் வரச்சொல், போ.
சேவகன்:--சித்தம்.
[சேவகன் போகின்றான்.]
சுசீலன்:--அவன் வரட்டும். இதோ கேட்போம்.
[சேவகர் தலைவன் வருகின்றான்]
சேவகர் தலைவன்:-- மாகாராசா அவகளுக்கு அடியேன் அநேகங்கோடி தெண்டம்.
சூரசேநன்:-- என்ன! சொல்லு, சீக்கிரம்.
சேவகர் தலைவன்:-- மகாராசா! நாங்க எட்டுப்பேர் தேடப் புறப்பட்டோம். மூலைக்கொருவராகப் போனோம். நாங்க எல்லாரும் இப்பத்தான் வந்து கூடினோம்.
சூரசேநன்:-- என்னடா! சொல்லு. போனசங்கதி யென்னாயிற்று!
சேவகர் தலைவன்:-- மகாராசா! நாங்கள் போய்த் தேடிப் பாத்ததில் அகப்பட வில்லை. விசாரித்த இடங்களிலுந் தெரியாது தெரியாது என்கிறாக.
சூரசேநன்:-- நன்றாய்த்தேடினீர்களா?
சேவகர் தலைவன்:-- ஆமாம். நல்லாத் தேடினோம். மகராசா!
சூரசேநன்:-- சரி, நீ போ--[ சேவகர் தலைவன் போகின்றான்.]
(தனக்குள்) இருக்கட்டும். சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து அடித்துக் கேட்டால் உண்மை தானே வெளிப்படுகின்றது.--சுசீலரே! கேட்டீரா சமாசாரத்தை?
சுசீலன்:-- ஆமாம், கேட்டேன்.--எல்லாவற்றிற்கும் நம்முடைய சேர ராஜ்யத்திற்கும் ஓராளை யனுப்பி அங்கும் விசாரித்தாலென்ன?
சூரசேநன்:-- அதுதான் அவளைக் காணோமென்ற சமாசாரங் கேட்டவுடன் அனுப்பி-யிருக்கின்றேனே!
சுசீலன்:-- ஆனாற் சரிதான்.
சூரசேநன்:-- உள்ளே அந்தப்புரத்திலே இவர்கள் தேடப்போனது முதல் ஆவலாயிருக்கின்றார்கள். அவர்களுக்கு யாம் போய் மனவருத்தப் படாதிருக்கும்படி ஆறுதல் சொல்லிவிட்டு வருகின்றேம்.
சுசீலன்:-- ஆனால் யானும் கிருகத்திற்குப் போய் வருகின்றேன்.
சூரசேநன்:-- சரி. [சூரசேநன் போகின்றான்.]
சுசீலன்:-- (தனக்குள்) யான் இச்சூரசேநனிடத்தில் மந்திரியா யிருப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கவே கூடாது! சற்குணவழுதியாரிடத்திலே மந்திரியா யிருந்தபிறகும் வேறொருவனிடம் அமைச்சனாயிருப்பது சரியன்றுதான். ஆயினும் ஜனங்களுடைய நன்மையினைக் கருதியும், இவன் றானே வந்து என்னை வேண்டிக் கொண்டமையினைக் கருதியுமே யான் இயைந்தது. அஃது அப்படியிருக்க, இவன் வந்து சின்னாள்வரை யென் சொற்படியேகேட்டு நடந்துவந்தான். அப்பொழுது எல்லாம் செவ்வையாய் நடந்துவந்தன. இப்பொழுதோ எதுவும் தனக்குத் தோன்றியபடி செய்கின்றானே யன்றி ஒன்றிலும் என்னுடைய சொற்படி கேட்டு நடக்கின்றானல்லன். அநியாயங்களோ ஒன்றன்மேலொன்றாய் நடக்கின்றன! நம்முடைய வழுதிமகன் சுந்தராநந்தனைத் தானே கொன்றுவிட்டுச் சுவரேறிக் குதித்து ஓடுகையில் நிகழ்ந்த சச்சரவிற் கொலையுண்டா னென்று பொய்க்யினும் பறையறைவித்தான். விசாரணையென்பது ஒன்று மில்லாமல் தனக்கு யார்மீதேனும் அற்ப சந்தேகமிருக்குமாயின் அவர்களைக் கொன்று விடுகின்றான்! இவ்வருமன் செய்வனவெல்லாம் நியாய விருத்தமேயாம். யான் இவனுக்கு மந்திரியாயிருத்தலே பெருந்தவறு! ஆயினும் என் செய்வது?
(பாடுகின்றான்)
மேற்கொண்ட தொழிலொன்று வெறுக்கத்தக்கதாத லைப்பின்
பாற்கண்டு கடமையினைப் பாதியில் விடலாமோ? (79)
கரிசடைய னானாலுங் காசினியைக் காவல்செயு
மரசனுக்குப் பிறிதுசெய லம்மம்ம தீதன்றோ? (80)
யான் எப்பொழுது ஒன்று செய்வதாக ஒத்துக் கொண்டேனோ அப்பொழுதே முதல் யான் அதனைச் செய்யக் கடமைப்பட்டவனாகின்றேன்! ஆகவே யான் மதில் தவறினாலுங் கடமையில் தவறலாகாது. ஆதலின் இவ்வரசனுக்கு உறுதி பயப்பவற்றையே செய்யப்புகுவேன்!
[சுசீலன் போகின்றான்.]
----------------
இடம்:-- சோழவரண்மனை
காலம் :-- பிற்பகல்
பாத்திரங்கள்:-- சுந்தரன், சுரூபன்
சுந்தரன்:-- எனது சுரூபத்தையலே! நாமும் இத்தஞ்சைமாபுரிக்கு வந்து ஏறக்குறைய மூன்றுவார மாய்விட்டன. என்னுடைய, தாய் தந்தையரால் நாம் இன்னரென்று கண்டு கொள்ளவும் கூடவில்லை. பார்த்தனையா?—
சுரூபன்:- எனது சுந்தரக்குரிசிலே! நாம் இவ்வாறு எத்தனைநாள் ஒளித்துக் கொண்டிருப்பது? அவர்கள் நம்மை யின்னரெனத் தெளியுமுன்னர் நாமே வெளிப்படுதல் நல்லதன்றோ?
சுந்தரன்:- எனது மகிழ்கூர் மடந்தையே! சற்றே பொறுத்துக்கொள். நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளுங் காலம் இஃதன்று. எதுவுஞ் சமயம் அறிந்து செய்யவேண்டும்! மற்றைப்படி நீ சேரநாடு, பாண்டி நாடு, சோழநாடு ஆகிய இந்த மூன்று தமிழ் நாடுகளையும் ஒருவாறு பார்த்திருக்கின்றாயே! இந்த மூன்று நாடுகளுக்குள்ளே எது மிகச் சிறந்தது? சொல். கேட்போம்.
சுரூபன்:- ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விஷயத்தில் உயர்வாய்த்தான் இருக்கின்றது. கல்வி செல்வங்களிலும் அழகிலும் பாண்டி நாடும், நற்குண நற்செய்கைகளிற் சேர நாடும், நிலவள நீர் வளங்களிலும் தெய்வ பக்தியிலுஞ் சோழநாடும் சிறந்து விளங்குகின்றன.
[சற்குணனுஞ் சுந்தரியும் வருகின்றனர்.]
சுந்தரன்:- சமூகத்தில் அடியேன் சுந்தரன் நமஸ்காரம்.
சரூபன்:- அடியேன் சுரூபனும் நமஸ்காரம்.
சற்குணன்:- ஓ! சுந்தரரே! என்ன? ஏதாவது விசேஷமுண்டோ? ராஜா வீரேந்திரர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்?
சுந்தரன்:- அப்படியொன்று மதிக விசேஷமில்லை. வீரேந்திர சோழ மகா ராஜா அவர்கள் தங்களை யழைத்து வரும்படி சொன்னார்.வேறொன்றுமில்லை. ஏதோ நமது மதுராபுரிக்குத் தூதனுப்ப வேண்டுமாம்.
சற்குணன்:- அதுதானே! வேறொன்றுமில்லையே?
சுந்தரி:- ஏ! பிராணேசா! நேற்றைக்குச் சோமவாரம் என்று நாம் பஞ்சநாத க்ஷேத்திரஞ் சென்று அவ்விடத்திற் கண்ட காட்சியை யென்னென்று சொல்வேன்?
சற்குணன்:- எனது பிரியசுந்தரி! நம்முடைய ஆலாசிய க்ஷேத்திரத்துப் பிராமணர்களிற் பெரும்பாலார் ஸ்மார்த்தர்களே யொழியச் சைவர்களல்லர். அவர்கள் நம்முடைய சுந்தரேசரது ஆலயஞ்சென்று தரினஞ்செய்தபோதிலும் ஆண்டுள்ள சிவபெருமானோடு அபேதமாய்க் கலந்தருளிய நாயன்மார் அறுபத்து மூவரையும் வணங்குகின்றார்களல்லர். ஆனால் இவ்விடத்திலோ அந்தணாளரிலநேகேர் சைவரேயாவார். இவர்கள் யாவரும் ஏகலிங்க சிவார்ச்சனஞ் செய்யும் மகாம்பவர்கள்! இத்தகைய பெரியோரைக் காணுதற்கு நாம் என்ன புண்ணியஞ் செய்தோமோ? பார்! ஈங்குள்ள வேதியர்கள் நாடோறும் நடராஜ சந்நிதியில், தாங்களுந் தங்கள் மாணாக்கர்களும் சிவபெருமான் நடித்துக் காட்டியருளிய அஷ்டோத்தரசத தாண்டவங்களையுஞ் செய்து வருகின்றார்கள், இவர்களது சிவபக்தி யிவ்வள வினதென்று யாவரா னுரைக்கற்பாலது? இவர்கள் செய்யும் பாவனைகளைக் காணிற் கல்லுங் கரைந்துருகுமன்றோ?
சுந்தரி:-- ஆம். சந்தேகமில்லை. எங்கே! சுந்தரரே! நம் சொக்கலிங்கேசர்மீதுநம்மூர் வித்தியாசாகரப் புலவர் செய்த பாட்டில் ஏதாவது உமக்குத் தெரிந்தாற் சொல்லும். கேட்போம். நீரும் அவரிடம் கல்வி கற்றுக்கொண்டதாகச் சொன்னீரே!
சுந்தரன்:-- ஆகுக அப்படியே. இதோ சொல்லுகின்றேன் கேளுங்கள்.
(பாடுகின்றான்)
(6) இராகம்-மோகனம், தாளம்-ஆதி
பல்லவி
அரனருள் நாடி யாடுவாய் பாடி
அநுபல்லவி
அருமையாய் யிலகுமெந்த மறிவேநீ யன்புடனே (அரனருள்)
சரணங்கள்
கூடலம் பதியுட் கோமள மதியைச்
சூடிய சொக்கலிங்க சுந்தரமூர்த்தியெங்கள் (அரனருள்)
மலபரி பாகம் வந்ததுயோகம்
நலமுறச் செய்திடுவாய் நஞ்சொல்நீ கேட்டிடுவாய் (அரனருள்)
சத்தியகிரியைச் சார்விளரச் சேரி
வித்தியா சாகரர்க்கு வித்தக சற்குருவாம் (அரனருள்)
சற்குணன்:-- வித்தியாசாகரர் வாக்கே வாக்கு! ஆகா! எவ்வளவு நன்றாயிருக்கின்றது!
சுரூபன்:-- இதேபாட்டை யான் பலமுறை தங்கள் குமாரன் சுந்தரா நந்தனிடம் கேட்டிருக்கின்றேன்.
சுந்தரி:-- ஓ! சுந்தராநந்தா! எனது அருமை மகனே! உன்னை மறுபடியும்காணக் கிடைக்குமோ?
சற்ருணன்:-- சரி. அஃது அப்படியிருக்கட்டும். நம் சுந்தராநந்தனுடைய குரலும் இந்தச் சுந்தரருடைய குரலும் ஏற்க்குறைய ஒரே மாதிரியாயிருக்கின்றன1 கவனித்தாயா?
சுந்தரன்:-- அரசர் வீரேந்திரர் தங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்!
சற்குணன்:-- ஆமாமாம். வெகுநேரமாய்விட்டது. யான் அவரிடம் போய்ப் பேசிவிட்டுச் சீக்கிரமாய் வந்து விடுகின்றேன்.
சுந்தரி:-- ஆனால் நானும் அந்தப்புரத்திற்குப் போகின்றேன்.
சற்குணன்:-- சரி.
[ சற்குணனுஞ் சுந்தரியும் போகின்றனர்.]
சுரூபன்:-- எனது இன்பமே! இறைவனே! நீ யுன்பகற்பொழுதை யெல்லாஞ் சோழன் அவைக்களத்தே கழிக்கின்றாயே யன்றி கண்டு யானிருக்கும் விடுதிக்கு விசேடமாய் வருகின்றாயல்லை!
சுந்தரன்:- என் அன்பே! அமுதே! ஆருயிரே! நீ யென்மீது கோபிக்கப் படாது. ஏனென்றால், அரசவைக்கு நீயோ விசேடமாய்ப் போகின்றதில்லை. யானும் போகாதிருப்பேனாயின் நம்மை இன்னர் என்று அவர்கள் கண்டுகொள்ளக் கூடும். அது பற்றியன்றே யான் அவ்விடத்தில் அதிகமாய் ஊடாடுவது (முத்தமிடுகின்றான்.)
சுருபன்:- எனது சுந்தரத்தோன்றலே! நீ யுரைத்தது சரிதான். மற்றைப்படி நேற்று நாமிருவரும் நின் பெற்றோர்களோடு திருவையாற்றிற்குச் சென்றபோழ்து அங்கே போந்திருந்த ஒரு பரத்தையினை நீ சற்றே யுற்று நோக்கினாய். அப்பொழுதே நின்மனம் அவள்பாற் சென்றதென்றறிந்து கொண்டேன்!
(தன்மேலிருந்த தலைவன் கையைத் தள்ளுகின்றாள்,)
சுந்தரன்:- என் கண்ணே! காதற்கிழத்தி! ரூபாவதி!
சுருபன்:- ஆமாம், சரிதான். அவள்தான் நினக்கேற்ற காதற்குமரி! யான் கிழத்திதான்!
சுந்தரன்:- என் காதற்கொடியே! அப்படி நினையாதே!--
சுருபன்:- நன்று, நின்கருத்து இன்னதென்று வெளிப்பட்டது! ஆமாம் நான் கொடியேன் தான்! அவன் நல்லன் தான்!
சுந்தரன்:- என் காதற்கிளியே! நீ என்னோடு இத்தனை நாட் பழகியிருந்தும் இவ்வாறு கூறுதல் நினக்கு ஏற்புடைத்தாகுமோ?-
சுருபன்:- ஏன்? அங்ஙனங் கூறுதல் உண்மையாயிருந்தால் ஏற்புடைத் தாகாமலென்ன? பார்! உன்மனத்தில் நிகழ்வதை நீ சொல்லுஞ் சொற்களே வெளிப்படுத்துகின்றன! "என் காதற்கிளியே" என்கிறாயே! யான் உன் காதற்கு இளிக்கின்றேன் என்பது பற்றியோ நீயவ்வாறு கூறினை?
சுந்தரன்:- என் அற்புத் தலைவியே! நீ இன்னும் இங்ஙனங் கூறுவையேல் ஆற்றேன்!-
(முத்தமிடச் சுருபன் தடுக்கினறான்.)
சுருபன்:- இதுகாறும் நீ யென்னைக் "காதற்கிழத்தி" "காதற்கொடியே" "காதற் கிளியே" என்று நீ காதல்கொண்டவளாகவாயினும் அழைத்தனை! இப்பொழுது உனக்கு என்மீதுள்ள அன்பு திரிந்து விகாரப்பட்டதோ? என்னை "அற்புத்லைவி" என்றனையோ!
சுந்தரன்:- (பாடுகின்றான்)
* "குற்றமே தெரிவார்குறு மாமுனி
சொற்ற பாவினு மோர்குறை சொல்வரால்" (அக)
என்றதுபோல; யான் எது சொன்னாலும் அதற்கெல்லாம் விபரீதப்
பொருள் படுத்துகின்றனையே! (பாடுகின்றான்)
உள்ளந் திரிந்திலே னுத்தமச்செம் பொற்கொடியே
யுள்ள படியே யுரைக்கின்றே னுன்னையன்றிக்
கள்ளம் பயின் றுபிற காரிகைமார் தம்மையின்க்
கொள்ளுங்கொ னீமகிழ்ந்து கொண்டுறையு மென்மனனே?
----------
* கந்தபுராணம்
என்னுயிர்த்துணைவீ! நீயே என்னைத் தள்ளுவையேல் எனது முறைப்பாட்டினை இனி யார்பாலுரைப்பேன்? எங்ஙனம் ஆற்றுகிற்பேன்? எனதருமைத்தலைவியே! என்மீது கருணைபுரிவாய்!
(வணங்குகின்றான்)
சுரூபன்:-- எனது ஆனந்த முகிலே! உன்னையுந் தள்ளுவலோ?
(இருவருந் தழுவி முத்தமிடுகின்றனர்.)
சுந்தரன்:-- எனது அழகிய மயிலே! நீ என்னை நோக்கிஆடும் பொருட்டன்றே என்னை 'ஆனந்த முகிலே' என்று அழைத்தனை?
சுரூபன்:-- எனது ரசிக சுந்தரனே! எனது பாக்கியமன்றோ உன்னை யான் என் தலைவனா யடையப் பெற்றது!
சுந்தரன்:-- நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நேரிதன்றே! என்னை அரசர் வீரேந்திர சோழர் தேடுகிற்பாரே!
சுரூபன்:-- அப்படியானால் நாம் போவோம்
[யாவரும் போகின்றனர்.]
------------------
காலம்:--காலை
பாத்திரங்கள்:--சூரசேநன், சுசீலன்
சூரசேநன்:-- எஃது எப்படியிருந்தாலுஞ் சரி. "இந்த நயவஞ்சகப் பயலை சிறைச்சாலையிலிருந்து விட்டுவிட வேண்டும்" என்கிற பேச்சை மாத்திரம் எடாதீர். அவன் இதுவரைக்குஞ் செய்துகொண்டு வந்திருக்கிற சமாசாரமெல்லாம் மகா ராஜத் துரோகமேயாம் என்பதற்குச் சந்தேகமே யில்லை.
சுசீலன்:-- மகா ராஜா அவரகளிடத்திலிருக்கும் ஒற்றன் முன்பு நயவசகரிட மிருந்தவன். அவர் அவனைத் துர்நடத்தையுள்ளவனென்று வேலையினின்றும் தள்ளிவிட்டார். அதுபற்றி அவர் பேரில் அவனுக்குக் கொஞ்சம் குரோத புத்தியுண்டு. ஆகையால் தாங்கள் அவன் சொல்லியதை நிஜமென்று நம்பி யிவ்வாறு செய்தது உசிதமெனத் தோன்றவில்லை.
சூரசேநன்:-- உசிதமோ உசிதமில்லையோ? அந்த நயவசகன் பேரில் எமக்கு வெகு நாளாய்ச் சந்தேகமுண்டு. அவன் பேசும்போதெல்லாம் மனத்திலொன்றும் வெளியிலொன்றுமாய்ப பேசுவான்.
(பாடுகின்றான்.)
* "கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு"
என்பது நீவி ரறியாததன்று. இஃது இப்படி யிருக்கட்டும். பாரும் சுசீலரே! இப்போது உமக்காகத் தாமே சும்மா இருக்கின்றோம். இல்லாவிட்டால் ஊர் முழுவதும் அப்பொழுதே தொம்ஸம் பண்ணி விடுவோம். நீர் ஒரு மாதம் பார்க்கலாம் என்று கேட்டுக் கொண்ட தவணைக்கு இன்னும் ஆறே நாள் தாமே யிருக்கின்றன.
பார்த்துக் கொள்வோம். அதற்குள்ளே என் மகள் ரூபாவதியைப்பற்றி ஒன்றுந் தெரியாதிருக்குமாயின் அப்புறம் எமதிஷ்டப் படியே தான் செய்வோம். நீர் அப்பொழுது ஒன்றுஞ் சொல்லக் கூடாது. அடே சேவகா! என்ன செய்தி?
-------
* திருக்குறள்
[ சேவகன் வருகின்றான்.]
சேவகன்:-- மகாராசா! நம்முடைய யரமனை வாசலிற் சோள நாட்டிலிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான். அவன் பெயர் தந்திரதீரனாம்.
சூரசேநன்:-- தூதேன்? சுசீலரே!-- இருக்கட்டும். சேவகா நீ போய் அவனை வரச்சொல்.
[ சேவகன் போகின்றான்.]
சுசீலரே! பார்த்தீரா? எல்லாம் நினைத்தபடியே முடிகின்றன. சோழன் வீரேந்திரன் படையெடுத்து வருவான் என்று நாம் எண்ணியதற்கேற்ப ஒரு தூதனும் வந்திருக்கின்றான்!
தந்திரதீரன்:--
வாழ்க! வாழ்க! சேரமன்னவ!
கடல்புடை சூழ்ந்த காசினியதனு
ளென்னாட் டினுமிக நன்னா டெனப்பெறூஉஞ்
சோணாட் டிறைவன் றூய குணத்தினன்
பூணார் மேனியன் புண்ணியச் செல்வ
னரைசர்க் கரைச னளவிலா வெற்றிபெற்
றுரை செயற் கரிய வுயர்வர கையினான்
பாரேந் துறூஉம் பாந்தன் வேந்தன்
சீரேந்து கவ்விச் சிறப்பு நிலத்தவன்
வீரேந் திரனெனும் மேதக வுடையோன்
விடுத்த தூதன்யா னாவேன்.--
சூரசேநன்:-- அடுத்துநீ வந்த லறுல லென்னையோ? (84)
தந்திரதீரன்:--
பன்னருஞ் சற்குண பாண்டிய னாட்டை
யின்னாப் போர்செய் திறைவனைக் காட்டிற்
துரத்தி விட்டுத் தோமுறக் கவர்ந்தனை
அதனா னெங்கோன் கதனுற விஞ்சிப்
பாண்டியற்காக வீண்டுப் படைகொடு
வருவான்.நாட்டினை மாண்புற விடுதியேன்
மருமலர்த் தாரினோன் மனம்பொறுத் தருளும்.
சூரசேநன்:- அல்லாவிட்டால்?
தந்திரதீரன்:- பொல்லாப் போருறும்.
சூரசேநன்:- அவ்வளவுதானே! அன்றி வேறுண்டோ! 85
தந்திரதீரன்:-
ஆம், அவ்வளவுதான். ஆயினும் போரில்
வெல்லுநர் யாரோ வெந்நதுகாட்டிச் காட்டிச்
செல்லுநர் யாரோ? தெரிந்தில தரசனே! 86
சூரசேநன்:-
சரிதான். தந்திர தீர நீசென்
றுரையாய் சேரர்கு லோத்தமன் போர்க்குச்
சன்னத்த னாகவே தானுள னென்றே. 87
தந்திரதீரன்:- தந்திர தீரன் தந்தேன் வந்தனம். 88
[தந்திர தீரன் போகின்றான்.]
சூரசேநன்: கேட்டீரோ சுசீலரே! முற்றிலும்? ஆதிமுதற்கொண்டு நாம் சொல்லவில்லையா? -சரி. நாம் இனிமேல் ஒருநிமிஷமேனுந் தாமதஞ்செய்தல் கூடாது. ஏ! சேவகா!
[சேவகன் வருகின்றான்.]
சேவகன்:- மகாராசா!
சூரசேநன்:- நீ சென்று நம்முடைய சேனைத் தலைவனிடம் "சோழன் நாம் அடித்துத் துரத்திய பாண்டியற்காகப் படையெடுத்து வஞ்சிமாலை சூடிவருகின்றானாம். ஆதலிற் போர் வீரரோடு இன்றுமுதல் எந்த நிமிஷத்திலும் ஆயத்தமா யிருக்கவேண்டும்." என்பது மகாராஜா அவர்கள் உத்தரவு என்று சொல்லிவிட்டுவா. (சேவகன் போகின்றான்)
ஏ! சேவகா!
சேவகன்:- (திரும்பி) மகாராசா!
சூரசேநன்:- நம்முடைய சேரநாட்டிற்கும் இந்தக்ஷணமே ஓராளனுப்பி ஆங்குள்ள போர்வீரரையுங் கூடிய சீக்கிரத்தில் வர வழைக்கும்படுயும் யாம் உத்தரவு செய்தனமென்று சேனைத் தலைவனிடஞ் சொல்.
சேவகன்:- ஆணை! சேவகன் போகின்றான்
சுசீலன்:- நம்முடைய கருவூரிலிருந்து போர்வீரர் வந்து சேருவதற்கு எத்தனைநாட் செல்லுமோ?
சூரசேநன்:- இந்தத் தந்திரதீரன் போய்ச் சோழனிடம் தெரிவித்து அதன் பிறகு அவன் தன்னுடைய சேனைத்தலைவனுக்கு உத்தரவு செய்து அதன்மேல் அவன் போர்வீரரை ஆயத்தப்படுத்திப் படையெடுத்து வருவதற்குள் இவர்கள் வாராமற்போகிறார்களா? மேலும் தஞ்சைக்குக் கருவூர் சமீபமன்றா?
சுசீலன்:- ஆம், சமீபந்தான் ஆனாலும் ஒருவேளை நம்முடைய கருவூர்ப் போர்வீரர் வருகிறதற்குமுன் சோழன் படையொடு வந்துவிட்டா லென்ன செய்கிறது? அதையும் நாம் யோசிக்கவேண்டும்.
சூரசேநன்:- நீர் சொல்லுவது சரிதான். ஆனால் இவர்கள் வருகிறதற்குமுன் அவன் வரக்கூடுமோ?
சுசீலன்:- ஏன் வரக்கூடாது? என்னவோ? யார்கண்டார்கள்? எல்லாவற்றிற்கும் நம்முடைய வெளிநாட்டொற்றர்களை விசாரித்தீர்களோ?
சூரசேநன்:- இதோவிசாரிப்போம்.
சுசீலன்:- சகலத்திற்கும் நான் கிருகத்திற்குப்போய் வெகு சீக்கிரத்தில் திரும்பி விடுகிறேன். அதற்குள் தாங்களும் ஒற்றர்களை யழைத்து விசாரியுங்கள்.
சூரசேநன்:- ஆம், அப்படியே செய்வோம்.
[யாவரும் போகின்றனர்.]
--------------------
இடம்:-சோழனரண்மனை
காலம்: பிற்பகல்
பாத்திரங்கள்: வீரேந்திரன், சற்குணன்.
வீரேந்திரன்: ஓ! சற்குணவழுதியாரே! கேட்டீர்களோ ஒரு சமாசாரம்?
சற்குணன்: ஏன்ன? தெரியாதே!
வீரேந்திரன்: உங்களுடைய குமாரன் சுந்தராந்தனைச் சூரசேநன் கொன்று விட்டபிறகு அவனுடைய மகளை ஏதோ பூதமோ பேயோ அடித்துக்கொண்டு போய்விட்டதாம்.....
சற்குணன்: இப்பொழுது சூரசேநன் மகனைப் பூதங்கொண்டு போனாலென்ன? பேய்கொண்டு போனாலென்ன? நம்முடைய குமாரன் சுந்தராநந்தன் போன பிறகு நமக்கு இராஜ்யாதிகாரமும் வேண்டுமோ?
வீரேந்திரன்; இல்லை, இல்லை. தாங்கள் அப்படிச் சொல்லவே கூடாது. அந்தப்பயல் சூரசேநன் செய்த அநியாயங்களுக்;கெல்லாம் நம்முடைய பஞ்சந்தேசரே தண்டிக்கின்றார். பாருங்கள் தெய்வத்திற்குக்கூட அவனுடைய கொடுமை பொறுக்கமுடியவில்லை! ஆகையினாலேதான் சூரசேநன் தன்பெண்ணை யிழந்தான்.
சற்குணன்: நாம் அவன்மீது படையெடுத்துச் செல்லப்போகின்றோ மென்பதை உணர்ந்தபிற்பாடுதான் அவன் எனது மகன் சுந்தராநந்தனைக் கொல்லுதற்கு யோசனை செய்தானாம். இதுசமாசாரம் சேரநாட்டிலேயே பிறந்து வளர்ந்து சூரசேநனுக்கு வேண்டியவனாயிருந்து இப்போது இவ்விடத்தில்வந்து அடைக்கலம் புகுந்திருக்கின்ற சுருபன் என்பவனைக் கேட்டால் தெரியும்.
வீரேந்திரன்:-- என்னவோ? நாம் நம்முடைய ஒற்றர்கள் சொல்லியதைக் கேட்டதில் உம்முடைய புத்திரன் சுந்தராநந்தன் ஒருநாளிராத் திரிச் சிறைச்சாலையினின்றும் மதிலேறிக் குதித்து ஓடினனென்றும், உடனே காவலாளர் துயிலொழிந்து கூட ஓடிப் பிடித்தன ரென்றும், அப்போது உமது மகனுக்கும் அவர்களுக்கும் நேர்ந்தசச்சரவில் சுந்தராநந்தன் கொல்லப்பட்டனரென்றும் சூரசேநன் நகர் முழுதும் பறையறைந்து சாற்றினானென்பது தெரிகின்றது. ஆனால் ஜனங்கள் இதை நம்பவில்லையாம்.
சற்குணன்:-- சுந்தராநந்தனைப்பற்றித் தெரிந்தவர்கள் சூரசேநன் சொல்லுங் கதைகளையெல்லாம் பொய்யென்று விடுப்பார்களே யொழிய ஒரு நாளும் நிஜமென்று நம்பமாட்டார்கள்.
[ சுந்தரன் வருகின்றான்.]
சுந்தரன்:-- உபயமகாராஜா அவர்களுக்க்கும் அடியேன் சுந்தரன் வந்தனம்,
வீரேந்திரன்:-- சுந்தரரே! ஏதாவது விசேஷமுண்டோ?
சுந்தரன்:-- நம்முடைய பாண்டி நாட்டிற்குத் தூதுசென்ற தந்திரதீரரைத் திரும்பி வரும்போது சூரசேநனுடைய ஆட்கள் அடித்து மிகவுந் துன்பப்படுத்தி விட்டார்களாம். இது சங்கதி ஒரு சேவகன் முன்னே சீக்கிரமாயோடிவந்து தந்திரதீரர் சொல்லச் சொன்னா ரென்று கூறினான். தந்திர தீரர் பின்னே வருகின்றாராம்.
வீரேந்திரன்:-- எமது தந்திர தீரரையா சூரசேநப்பதர் ஆள் விட்டடித்தது? கேட்டீர்களோ சற்குணவழுதியாரே! இந்தக்கயவன் எமது தூதனை யடிக்கும் நிந்தை மட்டும் பொறுப்பேமா? இதோ, இந்த நிமிஷத்திலேயே போர் வீரரைப் படையெடுப்புக்கு ஆயத்தப்படுத்தும்படி சேனைத் தலைவனுக்கு சொல்லியனுப்புகின்றேம்.
சற்குணன்:-- எல்லாவற்றிற்குந் தூதுசென்ற தந்திரதீரரும் வரட்டுமே! வந்த பிறகு தூதிற்குச் சூரசேநன் உத்தரமென்ன சொன்னானோ அதையுங் கேட்ட பிற்பாடு சேனைத்தலைவனுக்கு உத்தரவுகொடுக்கலாமே?
வீரேந்திரன்:-- இவன் தூதனை யடித்த போதே யிவனுடைய நீதி யெல்லாம் வெட்டவெளிச்சமாய் விட்டனவே! இந்த வஞ்சகன் நியாயமென்ற வூரிலேயே குடியிருந்தறியாதவன் போலும்! இவன் தூதிற்கு உத்தரமென்ன சொல்லி யிருக்கப் போகின்றான்? இவன் என்ன சொல்லி யனுப்பி யிருந்தபோதிலும், நம்முடைய தந்திரதீரரை
யடித்ததனாற் படையெடுத்துச் சென்று அவனோடு போர்புரிந்தே தீர்ப்பேம்.
[தந்திரதீரன் வருகின்றான்.]
சுந்தரன்:-- அதோ! தந்திரதீரரும் வந்துவிட்டார்!
வீரேந்திரன்:-- தந்திரதீரரே! என்ன சங்கதி? உம்மை ஆள் விட்டடித்த சூரசேநன் உயிரோடிருக்கிறமட்டும் சும்மா இருப்போமா?
தந்திரதீரன்:-- அவன்றான் இவர்களை ஏவினானோ அல்லது இவர்கள் திருடர்களேயோ? தெரியவில்லை. அடியேன் அடிபட்டது என்னவோ உண்மை!
சுந்தரன்:-- உம்மையடித்த அந்தக் கயவர்கள் பேச்சினின்றும் அவர்கள் சேர நாட்டாரோ அல்லது பாண்டியநாட்டாரோ என்று தீர்மானித் திருக்கலாமே?
தந்திரதீரன்:-- அஃதென்னையோ? அவர்கள் பேச்சை யான்நன்றாய்க் கவனித்திலேன்.
வீரேந்திரன்:-- சரி. இருக்கட்டும். அநதப்பயல் சூரசேநன் தூதிற்கு என்னவுத்தரங் கொடுத்தான்?
தந்திரதீரன்:-- சூரசேநன் தான் பாண்டிய நாட்டை விடுவதில்லையென்றும், யுத்தத்திற்கு சன்னத்தனென்றும் உத்தரஞ் சொல்லி விடுத்தான். அவ்வளவுதான். வேறொன்றும் அவன் சொல்லவில்லை.
சற்குணன்:-- தந்திரதீரரே! நீவிர் சென்று தூதுரைத்தபோது சூரசேநனொடு கூட இருந்தவர் யாவர்.
தந்திரதீரர்:-- யாரோ? மந்திரி போலும்! நான் தூதுரைத்தபோது அவர் ஒன்றும் பேசவில்லை.
சுந்தரன்:-- யார்? சுசீலரோ?
சற்குணன்:-- ஆமாம்.சுசீலர்தாம்.
வீரேந்திரன்:-- உங்களிடத்தில் மந்திரியா யிருந்தவர் தாமே?
சற்குணன்:-- ஆமாம். அவர்தாம்.
வீரேந்திரன்:-- சுந்தரரே! நீர்போய் நமது சேனைத் தலைவனிடம் போர்வீரரை ஆயத்தப் படுத்திக்கொண்டு மதுரைமாநகரை நோக்கி வஞ்சி மாலை சூடி வஞ்சக வஞ்சியானொடு வஞ்சிப்போர் செய்வதற்கு இப்பொழுதே புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று சொல்லும். நீரும் கூடவே இருந்து சேனைத்தலைவற்குப் படைவகுப்பதில் உதவிசெய்யும். நீருமொரு வியூகத் தலைவராயிருந்து சேனையை நடத்தும். சீக்கிரம். தாமதஞ் செய்யாதீர்.
[சுந்தரன் போகின்றான்.]
வீரேந்திரன்:-- ஏன்? சற்குண வழுதியாரே! நாமும் புறப்பட்டுப் போவதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டாமா?
சற்குணன்:-- ஆம். செய்யவேண்டும்.
[யாவரும் போகின்றனர்.]
நான்காம் அங்கம் முற்றிற்று.
அங்கம்-5
முதற்களம்
இடம்: பாண்டியனரண்மனை
காலம்: காலை
பாத்திரங்கள்: சூரசேநன், சுசீலன்.
சூரசேகரன்: சுசீலரே! சந்தேகமேன்? நாமனுப்பிய சேவகன் கருவூர்சென்றுஅவ்விடத்தில் நம்முடைய மந்திரி இராசோபாயரிடம் ஓலை கொடுத்துப் போர்க்கு வேண்டியன வெல்லாம் முடித்துக்கொண்டு, போர் வீரரைச் சமரேசன் என்னும் நம்முடை சேரசேனைத் தலைவன் அழைத்துக்கொண்டு மதுரை வரவேண்டுமென்றுசொல்லி, ஏற்படுத்திவிட்டு வருவதற் கையமில்லை.
சுசீலன்: நம் சேவகனால் ஒரு தடையுமில்லை. அவன்போ் மந்திரி இராஜோ பாயரிடம் திருமுகங் கொடுத்துச் சமரேசன் தலைவனாகச் சேனை வந்து சேருவதற்குத் தடையில்லை. ஆனால் என்னுடைய கருத்தெல்லாம் காலதாமதமின்றி வந்துசேரவேண்டுமே யென்பதுதான்.
சூரசேநன்: அதற்கும் ஐயமுண்டோ? இதோ வந்துவிடும். பார்த்துக் கொண்டிரும்.
சுசீலன்: வந்தால் நலந்தான். இதுநிற்க. சோழன் தூதுவன் தந்திரதீரனைத் திரும்பிப்போகும்போது நம் கருவூராட்கள் வழியில் அடித்துத் துன்பப்படுத்தி விட்டார்களாம். அவர்கள் அப்படிச் செய்தார்களென்று கேட்டதுமுதல் என்மனம் வருத்தப்படுகின்றது. தூதுவனை யடித்தல் மகாபாவமென்று நீதிநூல்கள் முறையிடுகின்றன. அவ்வாறிருக்க அவர்கள் செய்தது சுத்த அநியாயமேயாம். ஆகையால் அதை விசாரித்துத் தண்டிக்க வேண்டுவது தங்களுடைய தவறாக் கடமையாம்.
சூரசேநன்: ஆம். அப்படித்தான் நாமும் கேள்விப்பட்டு விசாரித்துக்கொண்டு வருகின்றோம். அடித்தபயல்கள் இன்னாரென்று இன்னுந் தெரியவில்லை. தெரிந்தபிற்பாடு அவர்களுக்குத் தக்கபடி தண்டனை விதிப்போம்.
சுசீலன்: மேலும் தாங்கள் தந்திரதீரனை ஆட்கள் விட்டடித்ததாக ஊர் முழுவதும் பேசிக்கொள்ளுகிறார்கள். ஆகையால் அவர்கள் அவ்வெண்ணத்தை யொழிக்கும்படியாகத் தாங்கள் தூதர் தந்திர தீரரையடித்த பயல்களைக் கண்டுபிடித்துக் காட்டிக் கொடுப்பவருக்கு வெகுமதி கொடுக்கப்படும் என்று பறையறைவிக்க வேண்டும். இதுகேட்டுச் சனங்கள் தங்கண்மீதுள்ள தவறெண்ணத்தை நீக்கிவிடுவார்கள்.
சூரசேநன்: அப்படியே செய்துவிடுவோம். அதற்கொன்றும் ஆக்ஷேபமில்லை.மற்றைப்படி கருவூருக்கு நம்முடைய மந்திரி இராசோபாயரிடஞ் சென்ற சேவகன் என்ன இதுவரையினும் வரக்காணோம்? ஏன்?சுசீலரே!
சுசீலன்: என்னகாரணமோ? தெரியவில்லை--சரி. இருக்கட்டும். அந்தச்சேவகன்போய் எத்தனை நாளாயின?
சூரசேநன்: அவன் சோழன் தூதுவன் வந்துபோன அன்றைக்கு அதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றான்.
சுசீலன்: ஞாயிற்றுக்கிழமை மாலை நல்ல ராகுகாலமாயிற்றே? அப்பொழுதாஅனுப்பினீர்கள்?
சூரசேநன்: ஆம் என்ன செய்கிறது? காலதாமதஞ் செய்யக்கூடாதென்பதுபற்றி உடனே அப்பொழுதே அனுப்பினோம். அதனாலென்ன?
சுசீலன்: அதனாலொன்றுமில்லை. ஆயினும் பெரியோர்கள் கைகூடா தென்பது பற்றி அக்காலங்களில் ஒன்றுஞ் செய்யக்கூடா தென்பார்கள்.அதுதான். வேறொன்றுமில்லை.
சூரசேநன்: சரிதான். அவன்போய் இன்றைக்கு ஐந்தாவது நாளாயிற்றே! ஏன் இன்னும் வரவில்லை?
(சேவகன் வருகின்றான்)
சேவகன்: மகாராசா! அவர்களுக்கு அடியேன் சேவகன் தெண்டம். நம்முடைய வையாளி வீதி ஆசாரவாசக் காப்பான் வந்து வெளியே நிக்கிறான்.
சூரசேநன்: அடே! அவனை இப்பொழுதே இவ்விடம் வரச்சொல்.
(சேவகன் போகின்றான்.)
ஏன்? சுசீலரே! ஒருநாளும் வாராத வையாளிவீதி ஆசாரவாசற் காப்போன் முருகன் தன் காவற்றொழிலைவிட்டு இன்று இவ்விடம் வந்திருப்பது ஏதாவது புதிய செய்தி சொல்லுதற்குப் போலும்!
(முருகன் வருகிறான்)
முருகன்: அடியேன் முருகன் மகாராசா அவக சமுகத்திலே தெண்டம்.
சூரசேநன்: ஏ! முருகா! என்ன விசேஷம்?
முருகன்: மகாராசா! இன்னிக்குக் கோளி கூவையிலே யொரு சமாசாரம்கேட்டபிறகு காவலைக்கூட விட்டிட்டில்லே இங்கே சமுகத்லே தெரியப்படுத்தணுமிண்டு ஓடியாந்தேன்.
சூரசேநன்: அப்படி யென்ன அவசரமான சமாசாரம்? எங்கே? சொல்லுகேட்போம்.
முருகன்: மகாராசா! தஞ்சாவூர் வீரேந்திர சோள ராசாவும் முன் சிற்கந்த மலையிலே தங்களோடு நடந்த சண்டையிலே தோத்துப்போன நம்ம சற்குணவளுதியும் படையெடுத்துக்கிட்டு வந்து இந்த வூருக்குக் காதவளித்தூரத்திலே தங்கியிருக்காகளாம். இன்னிக்குப் பொளுதுமறையும் வேளைக்குள்ளே இங்ஙனே வந்திடுவார்களாம். பலத்த சேனையோடுவந்திருக்காகளாம். மகாராசா! இவைகளையெல்லாம் பாத்துக் கிட்டிருந்த பக்கத்தூர்க் குடியானவன் ஒருத்தன் மேல் மூச்சுக் கின்மூச்சு வாங்கிக்கிட்டு வெகு அவசரமாய் ஓடியாந்து சொல்லிட்டுப்போனான். இதுகேட்டது முதல் என்காலுக அங்ஙனே தரிக்கலே மகாராசா! அதுதான் இங்ஙனே யெசமான்களிடத்திலே சொல்லீட்டுப் போலாமிண்டு வந்தேன்.
சுசீலன்: சரிதான். முன்னொரு காலத்துக் காடு வெட்டிய சோழ மகாராஜா வந்து தங்கியிருந்த சோழன் வந்தான் என்னும் கிராமத்திற்குச் சமீபத்திலே இவர்கள் வந்து தங்கியிருக்கின்றார்கள் போலும்!
முருகன்: ஆமாம் அப்படித்தான் சொன்னான், மகாராசா!
சூரசேநன்: ஹூம் (பெருமூச்செறிந்து கொண்டு) சரிதான். முருகா. நீபோ.
[முருகன் போகின்றான்.]
கேட்டீரோ சுசீலரே! சமாசாரத்தை? சகலமும் நமக்குக் கெடுதலாகவே நடந்து வருகின்றன. பார்த்தீரா? கருவூர் போன சேவகனோ இன்னும் வரவில்லை. பாண்டியனும் சோழனுமோ படையெடுத்து வந்து விட்டார்களாம்!! இதற்கென்ன செய்யலாம்?
சுசீலன்: கருவூருக்குப்போன சேவகனும் வருகிற சமயந்தான். பதறாதிருங்கள். வந்துவிடுவான். இதுகிடக்கட்டும். நம்முடைய சேனைகளெல்லாம் இப்போது ஆயத்தமா யிருக்கின்றனவே யல்லவா?
சூரசேநன்: ஆம் அது மூன்று நாளைக்கு முன்னேயே ஆயத்தமாயிருக்கின்றது. ஆயினும் அதுகொண்டு நாம் யுத்தந்தொடங்குவது சரியன்று. அப்படியன்றிப் போர்செய்யத் தொடங்கினோமோ தோல்வியடைவது நிச்சயம். முன் சற்குணவழுதியுடன் திருப்பரங் குன்றத்தருகே நாம் புரிந்தபோரில் வெகுகஷ்டத்தின் மேலன்றோ நாம் வெற்றிபெற்றது? அதுவுங் கருவூர்ச்சேனையுஞ் சேர்ந்திருந்தபோதன்றோ? அப்படியிருக்க நாம் கருவூரிலிருந்து சேனை வருமுன் யுத்த மாரம்பிப்பது யுத்தமன்று. அஃது இப்பொழுதே வருமாயின் இந்த நிமிஷத்திலேயே போர் தொடங்குவோம். அதற்குத் தடையொன்றுமில்லை.
சுசீலன்: போர் என்னவோ வந்துவிட்டது. நாம் இனிமேற் சும்மா இருக்கக்கூடாது. ஆகையால் நகர் முழுவதுஞ் சனங்களறியும்படி பறையறைய உத்தரவு செய்யவேண்டும். எதிரிகளுக்கு நாம் பயந்தவர்களாகக் காட்டிக்கொள்ளல் கூடாது. ஆகையாற் போர்முரசமமுன் அரண்மனை வாயிலில் முழங்கட்டும். இதற்கிடையில் கருவூர்ப்படை வருமாயின், பகைவர் எதிர்சென்று காஞ்சிமாலை சூடிப்போர் செய்வோம். அஃதல்லாமற் பகைஞர்கள் நமது கோட்டையை வளைந்துகொண்டு உழிஞைமாலை சூடிப்போர் செய்வார்களாயின் நாம் அதற்கேற்பக் கோட்டையைக் காத்துக்கொண்டு நொச்சிமாலை சூடிப் போர் செய்வோம்.
[சேவகன் வருகின்றான்.]
சூரசேநன்:-- சரி, என்னடா சங்கதி?
சேவகன்:-- மகராசா! நம்ம கருவூருக்குப் போயிருந்த சேவகன் வந்திட்டான்.
சூரசேநன்:-- போய் உடனே வரச்சொல்.
[சேவகன் போகின்றான்]
சுசீலரே! கருவூர்ச் சேவகனும் வந்துவிட்டான்! கட்டாயமாய் நம்முடைய சேனை வந்திருக்கும்! இனிமேல் நாமொன்றற்கும் பயப்படவேண்டுவதேயில்லை! சோழன் வீரேந்திரன் சேநாபலத்தையும் சமர்க்களத்தில் ஒருவாறு அறிவோம்!
[ கருவூர் சென்ற சேவகன் வருகின்றான்.]
சேவகன்:-- மகராசா! அடியேன் தெண்டம்.
சூரசேநன்:-- அடே! என்ன சங்கதி? சீக்கிரமாய்ச் சொல்.
சுசீலன்:-- (தனக்குள்) ஓகோ! சேவகன் முகக்குறியைப் பார்க்குங்கால் ஏதோ தீங்கு நேரிட்டிருக்கும்போலத் தோன்றுகின்றதே! எல்லாவற்றிற்குங் கேட்போம்.
சேவகன்:-- மகராசா! கருவூர்ச் சமாசாரத்தை யென்னெண்டு சொல்லட்டும்?
சூரசேநன்:-- என்ன? என்ன? கருவூரிலென்ன? --
சேவகன்:-- மகராசா! முன்னிருந்த சற்குணவதியின் மாமன் வீரமார்த்தாண்டத் தொண்டை ராசா தரங்க பாண்டி நாட்டைச் செயிச்சுக்க வந்துக்கிட்டு வளுதியாரைக் காட்டிலே துரத்தீட்டிய எண்டு கேட்டு நம்மசேர நாட்டின் மேலே படையெடுத்துக் கிட்டுவந்து இப்பொளுது யுத்தம் மொம்மரமா அங்ஙனே நடக்குது. ஆகையினாலே சேனை யனுப்பறது அசாத்தியமிண்டு மந்திரி இராசோபாயர் சொல்லீட்டாக. இன்னார் செயிச்சாக எண்டு இன்னுந் தெரியல்லை.இரண்டு பக்கத்திலேயும் பலபேர் மாண்டுபோனாக. எல்லாத்துக்கும் சமாசாரம் நாளைக்கு வருமிண்டு சொன்னாரு.
சூரசேநன்:-- அவ்வளவுதானே! இன்னும் ஏதாவதுண்டோ?
சேவகன்:-- அம்பிட்டுத்தான். மகராசா!
சூரசேநன்:-- சரிதான். நீ போ.
[சேவகன் போகின்றான்.]
என்ன? சுசீலரே! நாம் இப்படியெல்லாம் வருமென்று கனவிலும் நானைக்கவில்லை. எமக்கு இம்மதுரைக்கு வந்தபிறகு நேரிட்ட மனவருத்தத்திற்கோ அளவில்லை! இவற்றையெல்லாம் பார்க்கும்போது கடவுள் இல்லையென்றே சொல்லிவிடலாம். பாரும்! நாம் மதுரை வந்தபிறகு நம் சொக்கேசருக்கு எவ்வளவோ அருச்சனைகளும் அபிஷேகங்களும் செய்து கணக்கற்ற காணிகள் திருக்கோயில் உபயோகத்திற்கு அளித்திருக்கிறோம். அப்படியிருந்தும் நம் சோமசுந்திர மூர்த்திக்கு எம்மீது கருணை பிறக்கவில்லை.
சுசீலன்: தனக்குள் ஒருவனுக்கு அந்தரங்கத்திற் பக்தியில்லாவிட்டாற் பகிரங்கத்தில் எவ்வளவு செய்தபோதிலும் அவை யொருநாளும் பயன் படாவாம்!
(பாடுகிறான்.)
வெளியுற வுலகினில் வேடங் கொண்டனை
யளிநிறை கடலெனு மமல னார்பதத்
துளியுயர் பத்தியொன் றுறாத புன்மகன்
றெளியறி விலன்பெருந் தீய னென்பவே.
(அரசனை நோக்கி) என்ன செய்கிறது மற்றைப்படி இப்போது யுத்தந் தொடங்குவமா? என்ன?
சூரசேநன்: அதுதான் அப்பொழுதே சொன்னமே!
சுசீலன்: அப்போ தென்னவோ குறிப்பாய்க் கூறினீர்கள். தற்காலத்தில் இன்னது செய்வோமென்று தீர்மானமாய்ச் சொல்லுங்கள். பகைஞரோ வந்துவிட்டார். நாம் இனிமேற் சும்மா இருப்பது சரியன்று.
சூரசேநன்: என்ன? ஐயா! சுசீலரே! முந்திப் பரங்கிரிச் சண்டையில் நாமொரு பக்கமும் சற்குணவழுதி யொருபக்கமுமாகப் போர்செய்தோம். இப்போதோ நாமொரு பக்கமும் சற்குணவழுதி வீரேந்திரன் வீரமார்த்தாண்டன் ஆகியஇம்மூவரும் ஒருபக்கமுமா யிருத்தலினாற் சமர்செய்வது சரியன்றென்பது தோன்றுகின்றது. அப்படியன்றிச் சமர்புரிந்தோமோ நாம் தொலைவுண்டு போவதற்குத் தடயொன்றுமில்லை.
சுசீலன்: ஆகையால் இப்போது தங்களுக்கு அவர்களோடு சமாதானமாய்ப் போவதற்குச் சம்மதம் போலும்.
சூரசேநன்: ஆம். பின்னை யென்ன செய்கிறது?
சுசீலன்: அவையெல்லாம் சரியே. அவர்கள் சமாதானத்திற்கு இணங்கு கின்றார்களோ அல்லரோ? இவ்வளவுதூரம் படையெடுத்து வந்துவிட்டு யுத்தமில்லாமற் சும்மா போகிறதா என்ற ஆலோசனையினாலும், வழுதிமகன் சுந்தராநந்தன் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கு மெண்ணத்தினாலும், சமாதானத்திற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டால் நாமென்ன செய்கிறது? இதையும் யோசிக்க வேண்டாமா? சமாதான மென்றாலும் அதுவுமுடனே ஆகக்கூடியதா? என்ன? அதிலு மெத்தனையோ விஷயங்களெல்லாங் கவனிக்கப்பட வேண்டும். முன்னமே தூதன் வந்தபோதென்றால், இரு திறத்துக்கும் நேராகப் போயிருக்கும். இப்போதே அவர்கள் கை உயர்வும் நமது கை தாழ்வுமாயிருக்கின்றதே! மேலும் அப்படியே சமாதானஞ் செய்து கொள்வதற்கு அவர்களு மிணங்கினாலும், உடன்படிக்கையின் நிபந்தனைகள் நம்முடைய மனதிற்குப் பொருந்தக் கூடியனவாயு மிருக்கவேண்டும்! அவ்வாறில்லையாயின் என்செய வல்லேம்?
சூரசேநன்:-ஓ! சுசீலரே! நீர் என்ன செய்வீரோ? அஃது எமக்குத் தெரியாது. எப்படியாவது ஏறக்குறைய நம் மனத்திற்கேற்கும்படி உடன்படிக்கை செய்துவிட வேண்டியது நுமது தவறாக் கடன்பாடேயாம்.
சுசீலன்:-அப்படியாயின் இப்பொழுது எனக்கு உத்தரவு கொடுங்கள். போய் அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்கிறேன்.
சூரசேநன்:-கட்டாயமாய் உடன்படிக்கைதான் செய்யவேண்டும்.
சுசீலன்:-சரி,சரி.(தனக்குள்)எப்போதும் இந்தச் சூரசேநன் இப்படித்தான் கெஞ்சினால் மிஞ்சுகிறதும் மிஞ்சினால் கெஞ்சுகிறதும் வழக்கம். இவனை நம்பினால் நாசமடைவதற்குச் சந்தேகமில்லை! நாம் ஒருவருக்குந் துரோகஞ் செய்யவேண்டாம்! சகலத்திற்குங் கடவுள் ஒருவரிருக்கின்றார்!
[சுசீலன் போகின்றான்.]
சூரசேநன்:-நாமும் அந்தப்புரத்திற்குப் போவோம்.
[சூரசேநன் போகின்றான்.]
-----------------------
இடம்:-அரசினந்தப்புரம்
காலம்:-மாலை
பாத்திரங்கள்:-கோமளவல்லி, செவிலி
கோமளவல்லி:- நாம் கருவூரைவிட்டு வந்ததுமுதல் நமக்குத் துன்பங்கள் ஒன்றன்மே லொன்றாய் வந்துகொண்டிருக்கின்றன! நம்முடைய ராஜரோ இவ்வூராரிடங் கொடியவரெனப் பட்டம் பெற்றுக் கொண்டார். பிறகு நமக்கு நம்முடைய செல்வமகள் ரூபாவதியை யிழக்குந் தௌர்ப்பாக்கியஞ் சம்பவித்தது! போதாக்குறைக்கு யுத்தமும் வந்திருக்கிறது! இஃது எப்படி முடியுமோ? தெரியவில்லை-தெய்வமே! எங்களை இப்படித் துன்பத்திற்கு ஆளாக்குவது சரியோ?
செவிலி:-அம்மையே! கொஞ்சமிருங்கள். ஏதோ தாரையினொலியும் காளத்தினோசையுங் கேட்கின்றனவே! எதிரிகளினுடைய சேனைகளெல்லாம் வையையாற்றின் வட கரையிலே வந்து தங்கி யிருக்கின்றனவோ!
கோமளவல்லி: ஐயோ! என்ன செய்வோம்? தெய்வமே! எங்கள்மீது உனக்கு இரக்க மில்லையோ?
செவிலி: தாயே! நாம் இப்படிப் புலம்புவது நியாயமில்லை. மேலும் தாங்கள் அரசன் தேவியாரா யிருநதுகொண்டு இந்தமாதிரி பயப்படக் கூடாது. எல்லாவற்றிற்கும் சுவாமி யொருவர் இருக்கின்றார். சரி ஈதிப்படி யிருக்கட்டும். இன்னொரு சங்கதி சொல்லுகின்றேன். கேளுங்கள். நான் நேற்றிராத்திரி யொருகனவு கண்டேன். எப்போதும் நம்முடைய ரூபாவதியின் ஞாபகமா யிருக்கிறதனாலேதானோ என்னவோ? தெரியவில்லை. அவள் என்னிடம் வந்து "நீ ஏன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் வருத்தத்தையெல்லா மொழித்துவிடு. நான் நாளைக்குத் திரும்பி வந்து விடுகின்றேன்" என்று சொல்லிவிட்டுப் போனாள்! உடனே விழித்துக் கொண்டேன். என் மனமும் ஏதோ கொஞ்சம் ஆறுதலடைந் திருந்தது.
கோமளவல்லி: ஐயோ! நீ செய்த பாக்கியம். நான் செய்யவில்லையே. உன் கனவில் வந்து பேசுகின்றவள் பெற்றவளாகிய என்னிடம் ஒரு நாளாவது கனவிலேனும் வந்தாளல்லளே! நான் என்ன பாவஞ் செய்தேனோ? அவள் என்னைக் கனவிலுங் காணமாட்டேன் என்கின்றாள்!
( சூரசேநன் வருகின்றான்.)
செவிலி: அதோ! மகாராஜா அவர்கள் வருகிறார். நாமொன்றும் இப்பொழுது பேசப்படாது. தாயே! நான் போகின்றேன்.
(செவிலி போகின்றாள்)
சூரசேநன்: அடி! பிராணவல்லி. பகைவருடைய சேனையோ வந்து விட்டது. நாம் இன்றுகாலை சுசீலரோடு சொல்லி யுத்தமொன்று மில்லாமற் சமாதானமாய்ப் போவதற்குத் தக்க ஏற்பாடுகள் என்னவோ அவற்றைச் செய்யும்படி திட்டம் பண்ணி யிருக்கின்றோம்.
கோமளவல்லி: ஏ! பிராணவர்மா! எல்லாஞ் சரியே. ஆயினும் நாமே வலியப் போய்ச் சமாதானம் பேசுவதென்றால் அது சுத்த வீரர்க்கு அழகாகுமோ?
சூரசேநன்: அரசர்க்குரிய நால்வித உபாயங்களில் இது முதலாவதாகிய சாமோபாயமன்றோ?
கோமளவல்லி: அப்படியானாற் சரிதான். அஸ்தமித்துப் போயிற்று. ஆகையினாலே நான்போய் நம்முடைய அரண்மனைக் குல தேவதையைப் பூஜித்து வருகின்றேன். சற்றேயிருங்கள்.
(கோமளவல்லி போகின்றாள்.)
சூரசேநன்: இவ்வளவு இடையூறுகளையும் நாம் அனுபவிக்கவே வேண்டும் என்ற எண்ணத்தோடு தானோ நம்மைக் கடவுள் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வழுதியை வெல்லுமாறு தூண்டினார்? குடிகளிடம் கொடியரெனும் பெயர் பெற்றோம்! ஓ! அதுமட்டோ? குடிகளுமெம்மைக் கொல்லத் தலைப்படுகின்றார்கள்! இந்த நாட்டார் யாவர்க்கும் நாம் அரசாள்வதில் விருப்பமில்லைபோலும்! இந்நாட்டுள் எவ்விடந் திரும்பினாலும் எமக்குப் பகைவர்கள் காணப்படுகின்றார்களே யொழிய நண்பர் ஒருவரையாவதுகாணோம்! இவ்வாறு நம்மேற்பிரியமில்லாக் குடிகள் வாழும் நாட்டைப் படை கொண்டு அடக்கி ஆள்வதிற் பயன்றான் என்னையோ?
(மெளனம்) பரம்பரையாயுள்ள சேர நாட்டையும் இழந்து விடுவேமோ? போரினாற் பெற்ற பாண்டி நாட்டை இழத்தல் திண்ணமேயாம். அந்தோ! என்ன எண்ண மெண்ணுகின்றேம்!-
(மெளனம்) ஏ! வர்மா! இத்தனை துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டாவது நீ உயிர் வாழவேண்டுகின்றாயோ? உன்னை நேசிப்பார் ஒருவரும் இல்லையே! உனக்கு அரசாட்சியும் வேண்டுமோ?-
(மெளனம்) இதற்கு முன் எனது அருமை மகள் ரூபாவதியை இழந்து விட்டேன்!-ஓ! ரூபாவதீ! உன்னை யிழந்தபிறகும் நான் அரசு புரிய இச்சிப்பது என்ன அறிவின் மைகாண்! அது கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டத் துணிந்ததுபோ லாகுமன்றோ? எனக்கோ உன்னைத் தவிர்த்து வேறு சந்ததிகளில்லை. நீ கணாமற் போனது முதல் எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை! ஐயோ! இவ்வூர்ப் பேய்ச் சனங்களுக்கு உன்னைப் பலிகொடுத்த கொடும்பாதகனேனும்வாழவேண்டுமோ! (மெளனம்)எனது பாதகச் செயல்களோ கணக்கற்றன! நன்னடக்கையே வடிவெடுத்து வந்தாற் போன்ற சற்குணவழுதியையும், அழகு நிறைந்த அவரது மனைவியையும் சிறையிலிட்டுக் காட்டிற்றுரத்தினோம்! சிவபிரான் அவர்களை அவ்விடத்துங் கருணைபுரிந்து காத்தருளினார் !-இன்னும் வழுதிமகன் சுந்தாரகர்தனை,ஒருபாவமுமறியாதவனை, கலையெலாமுணர்ந்த கட்டழகுடையவனை, சாந்தமே யுருவமாயிருந்தவனைச் சிறைச்சாலையிலிட்டு வருத்திக் கொன்றுவிட்டோம்! ஓ! கொலைப்பாதகச் சூரசேநா! நீ உயிர்துறந்து விண்ணோடு புக்கு ஆங்குள்ள சுந்தரா நந்தனிடம் பொறுக்கும்படி கேட்டுக்கொள்ளுதலே தகுதி!-
(மெளனம்)
ஐயோ! தெய்வமே! மகளையிழந்து, உணவையொழித்து, மானமழிந்து, கொலைகள்புரிந்து, வீரமிழந்து, பகைவர்கள் பாதத்தில் விழுந்து, அவரோடு சமாதானமாகி மனமொவ்வாத நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை செய்துகொண்டு உயிர்வாழ்ந்திருத்தலைக் காட்டினும், தற்கொலைசெய்து கோடல் நல்லதன்றோ?-
(மௌனம்.) நான்செய்தகொடுஞ் செயல்களுக்குப் பிராணனை விடுவதே மேலானது. இனி யொருக்ஷணமேனும் தாமதியேன். இதோ இந்தவாளின்மீது பாய்ந்து உயிர்விடுவேன்.
(வாளை நேர்நிறுவுகின்றான்.) சிவபெருமானே! சோமசுந்தர மூர்த்தியே! சொக்கலிங்கவள்ளலே! நீயே யெனக்கும் கதி! இதோ நின்பாதாரவிந்தங்களை வந்து கடிதிற் சேருவேன்! என்னைக்
கருணைக் கண்ணாற் பார்த்து ஆண்டருளுவாய்! (இறைவனைப் பாடுகின்றான்.)
*" ஒருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றியெங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின்பாதம் பொற்றி தமியனேன் றனிமை தீர்த்தே" (90)
"தீர்ந்தவன் பாய வன்பர்க் கவரினு மன்ப போற்றி
பேர்ந்துமென் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி
யார்ந்தநின் பாத நாயேற் கருளிட வேண்டும் போற்றி. (91)
--------------
* திருவாசகம்
(கோமளவல்லி வருகின்றாள்.)
கோமளவல்லி: ஐயோ! பிராணநாதா! இஃதென்னை விபரீதம்! விபரீதம்! என்னை இவ்வாறு தமியளாய் விட்டு விட்டு நீ உயிர்துறத்தல் நியாயமேயோ?
(கோமளவல்லி சூரசேநன் பாதங்களில் விழுந்து பிடித்துக் கொள்ளுகின்றாள்.)
சூரசேநன்: ஓ! இஃதென்னை புதுமை! சிவபெருமானே அடியேன் நின்னுடைய பாதநிழலைச் சேருதற்கும் நினக்குப் பிரிய மில்லையோ? என்ன செய்வேன். தெய்வமே.
கோமளவல்லி: எனது பிராணேசனே! நான் சொல்லுகின்றதைக் கொஞ்சங் கவனமாய்க்கேட்பாய். எல்லாவற்றிற்கும் நாளைவரைக்கும் பொறுத்துக்கொள்வாய். அதற்குட் சுசீலரும் வந்துவிடுவார். எதிரிகள் சமாதானத்திற்கு இணங்கவிட்டாற் சரிதான். அப்படி இல்லையாயின் இவ்விடத்தில் வாளிற்பாய்ந்து உயிர் விடுவதைக் காட்டிலும் போர்க்களஞ்சென்று சாவது மேன்மையாம். ஆகையால் என்னருமை நாயகனே! நீ என்னை வேண்டியாவது நாளை வரைக்கும் பொறுத்துக்கொள்வாயாக.
சூரசேநன்: ஏ! பிராணவல்லி. நீ கூறுவதும் நியாயமேயாம். என்ன செய்வேம்?
கோமளவல்லி: ஏ! பிரியநாயகா! எல்லாவற்றிற்கும் நாம் இவ்விடத்தில் இருக்கவேண்டாம். போவோம். வருவாயாக.
சூரசேநன்: விடு, விடு. வருகின்றேம்.
(யாவரும் போகின்றனர்)
---------------
இடம்:-சோழன் பாசறை
காலம்:-காலை
பாத்திரங்கள்:- சுந்தரன், சுரூபன்
சுந்தரன்:-என தருமைத் தலைவியே! நாமும் நமது மதுரை மாநகர் வந்து சேர்ந்தோம்! இதோ பார்! இப்பக்கம் வையைநதி யோடாநின்றது. அப்பக்கம் காணப்படுவது திருவாப்பனூராம். எமது கருணையங் கடலாகிய சிவபெருமானார் அடியார்க ளுய்யும்பொருட்டுத் திருக்கோலங் கொண்டெழுந்தருளும் பெற்றியராதலின் சோழாந்தகப் பாண்டியன் பொருட்டு அவ்விடத்து ஆப்புவடிவமாய் அமர்ந்து காட்சி கொடுத்தருளினர்! அம்மான்மியம் பற்றியன்றே அஃது ஆப்பனூரென்னும் பெயர்த் தாயிற்று. நாம் மீட்டும் நமது சுந்தரேசப் பெருமானைத் தரிசிக்கும் பாக்கிய மடைந்தோம்! ஆயினும இனிமேல் வரும் போரிற்கு நீ யஞ்சுகின்றாயோ?
சுருபன்:-எனது பிரிய சுந்தரா! யான் நின்னை அடைந்த பிறகும் போர்க்குப் பயப்படுவேனோ? ஒருவேளை என் தந்தையார் யுத்தகளத்தில் இறக்கும்படி நேரிடுமாயின் வருந்துகிற்பேன் என்றெண்ணினையோ? அப்படி வருத்தப்படும் தன்மையை யுடையவனாயின் யான் நின்னுடன் போக ஒருப்பட்டிரேனே! நீ ஒன்றுக்கும் யோசிக்க வேண்டுவதில்லை. கடவுள் செய்கிறபடி செய்யட்டும்!
சுந்தரன்:-சரி. அப்படியாயின் நாம் நம்முடைய நண்பர்களை மீண்டும் காணலாம். எனது ஆசிரியர் வித்தியாசாகரப் புலவர் என் செய்கின்றாரோ?
சுருபன்:-ஏது? ஆசிரியர் ஞாபகம் அகத்தை விட்டகலாது போலும்.
சுந்தரன்:-(பாடுகின்றான்)
தலைமேல் விறகுடையான் றக்க படியா
விலைதா னடைந்தவுடன் வீழ்த்திப்போ மாறு
கலையாய்ந்த வாசானைக் கற்றபின்கை விட்டுப்
புலையார் பொதுமகள் போற் போகார்க்குய் வுண்டுகொலோ? (92)
ஆசாற் பணியவெள்கு மன்பிலாப் போலிகளுந்
தேசார் குருபாதஞ் சிந்தியாத் தீயர்களும்
கூசார் புறன்கூறுங் குண்டுணிப்பேய் மாக்களும்
பேசாத மூங்கையராய்ப் பீடழிந்து மாய்வரந்தோ! (93)
ஆசான் றனைமறந்த வன்பிலாப் புன்மகன்றான்
மாசார் படிற்றொழுக்க மாயா தகனவனோ?
மாசார் படிற்றொழுக்க மாபா தகனவனைக்
கூசாது கூற்றங் குறுகுமெனற் கையமின்றே! (94)
ஆதலின் என்னுயிர் போலுந் தேசிகரை மறத்தலியலுமோ? மற்று எனது பிரிய நேசர்களாகிய சுகுமாரனுஞ் சந்திரமுகனும் என் செய்கின்றார்களோ? அவர்களுக்கு விவாகமும் நடந்துவிட்டனவோ?
சுரூபன்: அநேகமாய் அம்புஜாட்சிக்கும் கநகமாலைக்கும் கல்யாணம் நடந்திருக்குமென்று நினைக்கின்றேன்! இஃதிருக்கட்டும் எனது ஆனந்தத் தலைவனே! யான் என் தோழியரோடு பண்டு விளையாடுவது அப்பூஞ்சோலை தானே!
சுந்தரன்: ஆமாம். அதுதான் நாமிருவரும் கண்டு காதல் கொண்ட பூஞ்சோலை! பார்! அஃது நீ இல்லாமையினால் இலக்குமிஇல்லா இல்லத்தினையுஞ் சான்றோரில்லாச் சபொயினையும் மதியமில்லா வானத்தினையும், நாயகனில்லா நங்கையினையும் போலாநின்றது!
சுரூபன்: சரி. அஃதிருக்கட்டும். எனது சுந்தர வள்ளலே! நீ உனது கான ரசத்தினால் என்னை ஆனந்தப்படுத்திச் சுந்தராநந்தன் என்று நினக்கிட்ட பெயர் சாலுமென்று காட்டுவாயாக.
சுந்தரன்: ஆ! அப்படியே என் பெயரெனக்குச் சாலுமென்பதை நிலை நிறுத்திக் கொள்கிறேன்! கேட்பாயாக.
(பாடுகின்றான்)
சதாசிவ பராபரா தயாநிதே மகாகுரோ
சிதானவா சுகாகரா திவாகரப் ரகாசனே
யுதாரமா குணாத்மனே யுகாரரூ பியே நினைச்
சதாமனத் திருத்துதுஞ் சபாபதி யுமேசனே 95
மார்பினு காவினு மாண்பறி யார்த மனைக்கிழத்தி
மார்தமை வைத்து வருத்துநர் தம்மை மதிக்கிலே
மேர்கிள ரில்லா டனக்கிணை யென்றுத னின்னுடலி
னேர்பெறப் பாதி யளித்தானை நித்த நினைக்குதுமே. 96
வானோங்கும் பொழில்புடைசூழ் மாமதுரைத் தேவை
வளரெழில்சேர் சொக்கேச வள்ளலைநம் மரசைக்
கூகினாங்கும் பிறைமுடித்த பிஞ்ஞகனை மனமே
கூடிநிதம் பாடியினி தாடுகநீ வாராய். 97
நறைமுடிக்கார்க் குழலுமைசேர் நம்பனைச்செம் பொருளை
நஞ்சுண்டு தேவருயிர் நல்கமுதை யடியார்
குறைமுடிக்குங் கோமானைக் குருமணியை மனமே
கூடிநிதம் பாடியினி தாடுகநீ வாராய். 98
நலவிமல நாதனைத்தன் னன்பருளத் தாடு
நடராசப் பெருமானை நண்ணுமுயிர்க் குயிரைக்
குலவிமறை கலவிநனி யுறைபொருளை மனமே
கூடிநிதம் பாடியினி தாடுகநீ வாராய். 99
(சேவகன் வருகின்றான்.)
அடே சேவகா என்ன செய்தி?
சேவகன்: ஐயா! சேரராசன் மந்திரி சுசீலர் வந்திருக்கிறார்.
சுரூபன்: அப்படியா! அவர் வந்திருக்கிறாரா? சரிதான் நாம் அரசனிடம்தெரியப்படுத்துகின்றோம். நீபோ.
[சேவகன் போகின்றான்.]
சுந்தரன்: சரி, நீ உள்ளே போய்விடு. நான் மாத்திர மிவ்விடமிருக்கின்றேன். அரசர்கள் வருகிற சமயமாயிற்று.
[சுரூபன் போகின்றான்.]
இன்னுஞ் சிறிது நேரத்திற் கெல்லாம் சமர் தொடங்கவேண்டும். அப்படியிருக்கச் சுசீலர் இப்போது இவ்விடம் வந்ததன் காரணம் என்னோ? ஒருவேளை வர்மனுக்குத் தெரியாமல் எந்தை சற்குண வழுதியாரைக் காண வந்தனரோ? தெரியவில்லை. எல்லாம் அரசன் வந்த பின்றைச் சுசீலர் சொல்லும்போது கேட்போம்.
[வீரேந்திரன் வருகின்றான்.]
மகாராஜா அவர்களுக்கு அடியேன் சுந்தரன் வந்தனம்.
வீரேந்திரன்: சுந்தரரே! என்ன சமாசாரம்? உம்முடைய நண்பர் சுரூபரெங்கே? காணோம்.
சுந்தரன்: ஏன்? இதுவரை அவர் இங்கேயே யிருந்துவிட்டு இப்பழுதுதானே அந்தப் பக்கமாக வந்தார்!
வீரேந்திரன்: சரி. மற்றைப்படி நம்முடைய படைகளெல்லாம் அணிவகுக்கப் பட்டிருக்கின்றனவா?
சுந்தரன்: ஓ! அவை யெல்லாம் ஒழுங்காய்த்தாம் இருக்கின்றன. அதற்கொன்றுஞ் சந்தேகமில்லை. இது நிற்க. சேரன் மந்திரி சுசீலர் ஏதோ காரியமாய் வெளியில் வந்திருப்பதாகச் சேவகன் சொன்னான்.
வீரேந்திரன்: என்ன! நிஜந்தானா?
சுந்தரன்: ஆம். நிஜந்தான். மகாராஜா!
வீரேந்திரன்: அப்படியாயின் நமது சற்குணவழுதியா ரெங்கே? இன்னும் இங்கே வரவில்லையோ?
[சற்குணன் வருகின்றான்.]
சுந்தரன்: ஏன்! அதோ அவர்களும் வந்து விட்டார்களே?
வீரேந்திரன்: வந்தனம் வழுதியாரே! வாருங்கள். இப்படி வீற்றிருங்கள். கேட்டீர்களோ ஒரு விசேஷம்?
சற்குணன்: வந்தனம். வந்தனம். அப்படி யென்ன விசேஷம்? தெரியாதே.ஏன் சுந்தரரே! நிற்கின்றீர்? இப்படி யுட்காருமே?
சுந்தரன்: அதற்கென்ன? பாதகமில்லை. நான் இதோ இப்படி யுட்காருகின்றேன்
வீரேந்திரன்: சேரன் மந்திரி சுசீலனென்பவன் ஏதோகாரியமாய் வந்திருக்கின்றானாம்!
சற்குணன்: ஆ! அப்படியா? ஆனால் அவரை யுள்ளே வரச்சொல்லி என்ன சமாசாரமென்று கேட்கலாமே?
வீரேந்திரன்: ஏ, சேவகா!
(சேவகன் வருகின்றான்)
சேவகன்: மகாராசா! ஆணை!
வீரேந்திரன்: நீபோய் வெளியில் வந்திருக்கும் சேரன் மந்திரி சுசீலரை யுள்ளே வரச்சொல்.
(சேவகன் போகின்றான்.)
சற்குணன்: அவர் முன் நம்மிடத்து இருந்தவராகையினாலே யொருவேளை நம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருப்பார். சகலமுங் கேட்டால் தாமே தெரிகின்றன.
(சுசீலன் வருகின்றான்.)
சுசீலன்: அடியேன் சேரன் மந்திரி சுசீலன் உபய மகாராஜா அவர்களுக்கும் வந்தனம்.
சற்குணன்: சுசீலரே! இப்படி யுட்காரும். என்ன சமாசாரம் சௌக்கியமா யிருக்கின்றீரா? ஊர்முழுதும் இனிது வாழ்கின்றதா?
சுசீலன்: ஆம். நம் சுந்தரேசர் கிருபையினால் அடியேன் சௌக்கியமாய்த் தானிருக்கின்றேன். மற்றைப்படி யான் வேறு இராஜகாரியமாய் வந்திருக்கின்றேன்.
வீரேந்திரன்: மந்திரியாரே! நீர் வந்த ராஜகாரியமென்ன? சீக்கிரஞ் சொல்லும். நாம் போர் தொடங்கவேண்டும்.
சுசீலன்: அடியேன் தாங்களும் சேரனும் பொருதாற் பலர் மாளவேண்டுமே யென்னும் நோக்கத்தோடு வெகு கஷ்டத்துடன் சேரராஜன் சூரசேநனைத் தங்களுடன் சமாதானமாய்ப் போகும்படி இணக்கியிருக்கிறேன். ஒருவேளை தாங்களு மெளியேன்மீது கருணைகூர்ந்து சமர் நிறுத்தி எல்லாருஞ் சேர்ந்து ஓருடன்படிக்கை செய்து கோடல் கூடாதா என்னும் எண்ணத்தோடு அடியேன் இவ்விடம் வந்தேன்.
வீரேந்திரன்: என்ன? ஐயா! வழுதியாரே! சுசீலர் சொல்லுகிறதைக் கேட்டீர்களோ?
சற்குணன்: அப்படியாயின் சுசீலரே! நாம் தந்திரதீரரைத் தூதனுப்பியபோது சேரன் இரங்கி யிருக்கலாமே!
வீரேந்திரன்: அதுவுமன்றி நந் தந்திரதீரரைச் சேரன் தன் ஆள்விட்டடித்தது நீதியாகுமோ?
சுசீலன்: இவ்வாறு தந்திரதீரரை யாரோ சிற்சில கயவர்கள் இடைவழியில் அடித்துவிட்டார்கள் என்பதை எங்கோன் சூரசேநன் உணர்ந்து நகர்முழுதும் அவர்களைக் கண்டுபிடித்துத் தருபவர்கட்கு வெகுமதி கொடுப்பதாகப் பறையறைவித் திருக்கின்றான்.
சற்குணன்: அப்படியாயின் சரிதான்.
சுந்தரன்: எல்லாவற்றிற்கும் உம்முடைய அரசன் சூரசேநனை இவ்விடம் அழைத்துக்கொண்டு வம்மின்!
வூரேந்திரன்: ஆமாம். சுந்தரரே! நன்றாய்ச் சொன்னீர்! சரிதான், சுசீலரே! தாங்கள் சென்று சேரனை அழைத்து வந்து உடன்படிக்கை செய்துகொண்டு போகலாம்.
சுசீலன்: ஆனால் அடியேன் போய்வருகின்றேன்.
சற்குணன்: சரி, சரி. போய்வாரும்.
[சுசீலன் போகின்றான்.]
சூரேந்திரன்: ஏன்? வழுதியாரே. இப்பழுது இங்கே வந்துபோன சுசீலரென்பவர் நிஜமாகவே சமாதானம் பேசவந்தவரோ அல்லது நாம் என்ன செய்கிறோம் என்று வேவுபார்க்க வந்தவரோ? தங்களுக்கு இதைக் குறித்து ஏதாவது தெரியுமோ?
சற்குணன்: இல்லை, இல்லை. அப்படி வேவுபார்க்கவந்தவரா யிருக்கமாட்டார்.
வீரேந்திரன்: இல்லாவிட்டால் நல்லதுதான். எமக்கென்னவோ ஆச்சரியமா யிருக்கின்றது. இதுவரையிலும் நாம் போர்தொடங்குந் தருண மட்டும் சமர்செய்யச் சன்னத்தனாயிருந்தவன் இப்போது உடன்படிக்கைக்கு வருவதை யோசித்துப் பார்க்குமிடத்து ஏதாவது எதிர்பாராத செய்தி நிகழ்ந்து தானிருக்கவேண்டு மென்பது தோன்றுகின்றது.
சுந்தரன்: மகாராஜா அவர்கள் எனக்குக் கொஞ்சம் உத்தரவு கொடுக்கவேண்டும். யான் நம்முடைய சேனைத்தலைவனிடம் போகவேண்டும்.
வீரேந்திரன்: சரி சீக்கிரமாக வந்துசேரும். வர்மனோடு நாம் உடன்படிக்கை செய்கையில் நீரும் இருக்கவேண்டும்.
[சுந்தரன் போகின்றான்.]
ஓ! வழுதியாரே! தாங்கள் கவனித்துப்பார்த்திருக்கிறீர்களோ நம் சுந்ததரைப்பற்றி! மகாபுத்திமானா யிருக்கிறார். இராஜ தந்திரங்களும் போர்செய்யு முறைகளும் வெகுநன்றாகத் தெரிந்தவர் போலக் காணப்படுகிறார். மேலும் மிகவும்கல்வி கற்றிருக்கிறார். இவ்வளவு இளமைப் பருவத்திலே இவர் போலுங் கல்விமான் யானெங்குங் கண்டதில்லை!
சற்குணன்: யான் முன்னொருமுறை தஞ்சையிலிருந்தபோது அவரொடு சம்பாஷித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் பேசியதினின்றும் அவர் அரசாட்சி முறையிலும் நீதி நூல்களிலும் இசை நூலிலும் விசேஷப் பயிற்சி யுள்ளவரென்று தெரிந்து கொண்டேன்.
வீரேந்திரன்: இன்னும் அவருடைய தோழர் சுரூபரென்பவர் மிகுதியாய்ப் பேசுகிறதில்லை. அப்படியே அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவர் பேச்சினும் மதுரமானது வேறொன்றுமில்லை!
சற்குணன்: ஆம். அவர் இனிய குரலுள்ளவர். மிக மென்மைத் தன்மையும் அழகுமுடையவர். அதிகமாய் யாவரோடும் ஊடாடிப் பேசுகிற வருமல்லர். நானும் இரண்டொரு முறை கவனித்திருக்கிறேன். மற்றைப்படி நம்முடைய படைகளையும் பார்த்துக்கொண்டு வருவோம் வாருங்கள்.
(யாவரும் போகின்றனர்)
----------------------
இடம்: மதுரைமாநகரிலொரு வீதி.
காலம்: காலை
பாத்திரங்கள்: வித்தியாசாகரப் புலவர், சில கனவான்கள்
முதற்கனவான்: ஓய்! புலவரே!. மந்திரி சுசீலர் நம் வழுதியாரோடு வர்மன் பொருட்டுச் சமாதானம் பேசப்போயிருக்கிறாராமே! அதென்ன மெய்தானா?
புலவர்: மெய்யோ! பொய்யோ! அதனை யாம் அறிந்திலேம். இது நிற்க. யாமொணன்று செய்யவுன்னினேம். அஃதென்னை யென்பிரேற் கூறுதும். (பாடுகின்றார்.)
அருவுருவ மானபர மானந்தத் தனிக்கடவுண்
மறுவலுறு மெழில்வையை மணியாற்றின் வடகரைக்கண்
வருமனொடு சமர்புரிய வந்தவிரு பெருவேந்தர்
கருமமுற் றுகவென்றி பெறுகவெனக் கவிசெய்வான், 100
மனங்கொண்டு பல்விதமாம் வாழ்த்துசெய்யுண் மிகவியற்றிக்
கனங்கொண்டு சிறப்புற்றுக் கழறருபட்டம்பெறீஇ
யினங்கொண்டு நன்மணியி னினங்கொண்டு களிப்புடனே
தினங்கண்டு தனங்கொண்டு சீர்மேன்மைத் தனங்கொண்டு 101
முதற்கனவான்: ஓய்! ஓய்! புலவரே! போதும்! போதும்! போதும்! நிறுத்தும்! நிறுத்தும்!
புலவர்: என்ன என்ன! அப்படிச்செய்தாலென்ன?
இரண்டாங்கனவான்: நன்று! நன்று! நுமது வெள்ளறிவு இன்னதென்று பொள்ளெனப் புலப்பட்டதே!
புலவர் : ஏயே! (பாடுகின்றார்.)
கற்றுணர்ந்த நல்ல கவிவாணனென்றனக்குக்
குற்றங்கற் பித்த குணமிலியிச்- சிற்றறிவை
யெவ்வயினீ கற்றா யெவர்கொலுப தேசித்தார்
செவ்வியிலாப் புன்மையினாய் செல். 102
இரண்டாங் கனவான்: சரிதான்! புலவருக்குப் பித்தம் அதிகமாய் விட்டது போலும்! அதுதான் வாய்க்குவந்தபடி யெல்லாம் பிதஎற்றுகின்றார்.
புலவர்: எனையா!
இரண்டாங்கனவான்: ஆமாம் உம்மைத்தாம்!
புலவர்: யானே பிதற்றினேன்கொலோ? அன்றி நீவிர் பிதற்றினீர் கொலோ? நன்னராலோசித்துக் கூறுதிர்.
இரண்டாங்கனவான்: ஓய்? புலவீர்! இதுகாறும் தும்பைப்புல்லாய்ப் புலவரென்று கருதியிருந்தேன். இப்பொழுது நீவிர் பெருவாய்ப் புலவராயினீரே!
புலவர்: கேட்டீர்! கேட்டிர்! அவர்கிளத்தலை.
இரண்டாங்கனவான்: ஓய்! உமக்குக் கிழத்தலையா? எமக்குக் கிழத்தலையா?
முதற்கனவான்: அதுமட்டுமா? அவர் பணவாசைகொண்ட பிணம்!
புலவர்: யாவர்?
இரண்டாங்கணவான்: நீர்தாம்!
புலவர்: நீவிர் வாளா திருத்திர். யாம் உம்மோடு பேசுகின்றிலேம்.
இரண்டாங்கனவான்: ஆமாம்! சரியாய்ச் சொன்னீர். "பணவாசை கொண்ட பிணம்" நும்வாய்க்குச் சர்க்கரையிடவேண்டும்.
புலவர்: வெற்றுரை! வெற்றுரை!!
இரண்டாங்கனவான்: வெற்றுரையா! கேளும் யான் சொல்லுகின்றேன். நீர்முன் சற்குணவழுதியார் அரசரா யிருக்குங்காலத்து அவர் வாயில் வித்வானாயிருந்து அவர் மீது புகழ்ச்சிக்கவி பாடினீர்! இதுவரைக்கும் வருமனைப் புகழ்ந்தீர்! இப்பொழுதோ சோழனையும் வழுதியையும் புகழவெண்ணினீர்!. இவ்வளவும் அந்தப் பணப் பேராசையினாலோ அன்றோ?
புலவர்: ஓகோ! யாம் முன்னர் வன்மனைப்பாடிய கவியுட் புகழ்ந்தன மெனக் கருதினீரோ! அது வசைக்கவியென்பது மறியீரோ? மங்கல முதன்மொழியல்லாத "நிம்பம்" என்னுஞ் சொல்லைப் பிரயோகித்ததனால் மங்கலப் பொருத்த மின்மையும் சிறப்பில் சொல்லாதலின் சொற் பொருத்தமின்மையும் ஒற்று உட்பட நான்கெழுத்தாதலின் எழுத்துப்பொருத்த மின்மையும், இன்னும் பிறபொருத்த மின்மையும் நீவிர் உணர்கிலிரோ? அன்றியும் "நிமிடத்தினிற்றொலைய" என்பதனை "நிமிடத்தில் நின் தொலைய" என்று பிரித்து அவன் என்பதனையெழுவாயாக்கி உறும் என்ற பயனிலையொடு முடித்து வேறுபொருள் கண்டிலீரோ?
முதற்கனவான்: நீர் சொன்ன கவியிலே முதற்சொல் வழுதிக்கு அடைமொழியா யிருப்பதனாலே இவ்வமங்கலம் வழுதியைப் பற்றாதோ?
இரண்டாங்கனவான்: இப்பொழுது நாம் கேட்டால் இந்தமாதிரியும் வருமனுக்கு வேண்டியவன் யாருங்கேட்டால் அது வழுதியைச் சேருமென்றும் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் கூறித்திரியும் புலவர் பெருமானல்லரோ? இதைக் கருதியன்றே சோழனுங் கம்பரை நோக்கிப்,
"போற்றினும் போற்றுவர் பொருள்கொ டாவிடிற்
றூற்றினுந் றூற்றுவர் சொன்ன சொற்களை
மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே" 103
என்றுசொல்லியது.
(மூன்றாங்கனவான் வருகின்றான்)
மூன்றாங்கனவான்: ஓய்! புலவரே உமக்கொரு சமாசாரம் தெரியாதே!
புலவர்: என்ன? என்ன?
முதற்கனவான்: அவர் சொன்னதற்குச் சமாதானஞ் சொல்லாமற் புதுச் சமாசாரம் விசாரிக்கப் புகுந்தீரே!
இரண்டாங்கனவான்: சொல்லத்தெரிந்தால் உடனே சொல்லமாட்டாரோ! சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!
புலவர்: அவையெல்லாம் நம் வயிற் பொருந்தா. சற்றேபொறுத்திர். இவர் சொல்வதைச் செவிக் கொண்டபின்றை நுமக்குச் சமாதானம் சொல்லுகின்றாம்.
மூன்றாங்கனவான்: இப்பொழுதுதான்பார்த்தேன். மந்திரி சுசீலரும் இந்த வஞ்சகவர்மனும் சில மெய்காப்பாளருடன் சோழன் பாசறைக்குப் போகிறார்கள். ஏதோ சமாதானம் பேசுகிறதற்காம்!
புலவர்: கேட்டிரோ அவர் கூற்றினை? யாம் அவ்வருமன்மீது இவ்வசைக் கவிபாடிய ஞான்று தொட்டு அவன் எய்திய இடுக்கண்களும் இப் போழ்தத்து அவன் நம் வழுதியார் தாட்டுணையில் வீழ்ந்து சமாதானம் பேசி உயிர் தப்பிப் பிழைக்க எண்ணுதலுமே அவ்வசை சூரசேநனையே பற்றியதென்பதற்குத் தக்க சான்று பகரும். அஃதன்றியும் வழுதியார்மாட்டு எமக்குள அன்பு அளவிட்டுரைக் கற்பான்மையதன்று. எமது மாணாக்கருட் சிறந்தவனாய சுந்தரா நந்தன்றனக்கு என் மீதிருந்த அன்பையும் எனக்கு அவன் மேலிருந்த ஆதரத்தையும் பற்றி நும்மிடத் துரைப்பம தென்னே! அந்தோ! இத்தகைய மாணாக்கனைக் கொலைக்களம் படுத்த வருமன் தலைக் கண் உருமுறாதோ?
முதற்கனவான்: சரி. இவரிப்படித்தான் என்னவாவது சளசள வென்று பேசிக்கொண்டிருப்பார்!
இரண்டாங்கனவான்: ஆமாம். நாமும் வையை யாற்றின் தென்கரைக் கண் ஒளிந்திருந்து வர்மன் சமாதானம் செய்துகொண்டு வரும்பொழுது பார்ப்போம். வாரும்.
முதற்கனவான்: இரும், இரும். என்ன போர்முரசம் முழங்குகின்றதோ? சரிதான். யுத்தம் தொடங்கப் போகிறார்கள் போலும்.
மூன்றாங் கனவான்: போம், ஐயா! போம். யுத்தமாவது நடக்கவாவது! இவன் போய் வழுதியார் காலிலே வீழ்ந்து 'ஐயா அப்பா' என்று கெஞ்சப் போகிறான்! அவர் இரக்கப்பட்டு இவன் குற்றத்தை மறப்பாரே யன்றிப் போர் புரியார்!
புலவர்: யாமிதைக் குறித்து இப்பொழுது பேசிக்கொண் டிருத்தலெவன்கொல்? போகுதும். வம்மின்.
(யாவரும் போகின்றனர்.)
-----------------
இடம்: சோழன்பாசறை
காலம்: காலை
பாத்திரங்கள்: சற்குணன், வீரேந்திரன்
வீரேந்திரன்: ஏன்? வழுதியாரே! படைகளையெல்லாம் நன்றாய்ச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தீர்களா? போர்வீரர்கள் யாவரும் யுத்த சந்நத்தரா யிருக்கிறார்களா?
சற்குணன்: நன்றாய்த்தான் பார்த்தேன். தார்ப்படை தூசிப்படை முதலிய யாவும் போர்தொடங்க நம்முடைய கட்டளையினைத் தாம் எதிர்பார்த்துக்கொண்டு நிற்கின்றன.
(சேவகன் வருகின்றான்.)
வீரேந்திரன்: அடே! சேவகா! அந்தச் சுசீலனும் சூரசேநனும் வந்திருக்கிறார்களோ?
சேவகன்: ஆமாம். மகாராறசா!
வீரேந்திரன்: ஆனால் நீ சென்று அவர்களை வரும்படி சொல்லு.
(சேவகன் போகின்றான்.)
(சுசீலன், சூரசேநன், மெய்காப்பாளர் இவர்கள் வருகின்றனர்.)
சூரசேநன்: வந்தனம், வந்தனம். தாங்கள் இப்படி வந்து வீற்றிருந்தருள
லாமே.
சூரசேநன்: இல்லை. இப்படி யுட்காருகிறோம்.
வீரேந்திரன்: அவ்விடத்து இஷடம் எப்படியோ அப்படியே!
சற்குணன்: ஏன் நிற்கிறீர்கள்? இப்படியுட்காருங்கள்.
சுசீலன்: அதற்கென்ன? உட்காருகிறோம்.
வீரேந்திரன்: எங்கே நம்முடைய சுந்தரர்? இன்னும் வரக்காணோம்.
சற்குணன்: இதோ வந்துவிடுவார். அவர் ஒருநாளும் காலதாமதஞ் செய்ய மாட்டார். ஒருவேளை தம்முடைய ஆன்மநேசராகிய சுரூபரையுங் கூட்டிக்கொண்டு வருவார்.
வீரேந்திரன்: இது நிற்க. யாம் தங்களுடைய மந்திரியார் சுசீலர் மூலமாய்த் தாங்களும் யாமும் சாமோபாயத்தை நாடி நடத்தல் நலமென்பது பற்றித் தங்களுக்கு எம்முடன் சமாதானமாய்ப் போவதற்கு இஷ்டந்தான் என்பதை யுணர்ந்து கொண்டோம். அஃது எமக்கும் இஷ்டமேயா மாயினும் எமது வழுதியார் இஷ்டம் எப்படியோ? அவருக்குத் துணைவலியாய்ப் போந்தாம்.
சுசீலன்: இதற்குமுன் என்ன வித்தியாசங்கள் நடந்திருந்த போதிலும் அவற்றையெல்லாம் மறந்துவிடவேண்டும். மற்றைப்படி நாமெல்லாம் இன்று நட்பாளராயினோ மென்று எண்ணிக்கொள்ள வேண்டும். இவை தாம் யான் சொல்ல விரும்பினவை.
சூரசேநன்: ஆம். அந்தப்படியே செய்வதற்குத் தடை யொன்றுமில்லை.
சற்குணன்: அவையெல்லாம் சரிதாம். சுசீலர் சொல்வது எமக்கும் உடன்பாடேயாம். (பாடுகின்றான்.)
சந்தன நறுமரந் தன்னை வீழ்த்திய
வுந் துவாட் படையிற்கு முதவு நன்மணஞ்
சிந்தையி னிதைநன்கு தெளிகி லாரம்ம
தந்தம நலமும் போய்ச் சாத லென்கொலோ? 104
வீரேந்திரன்: அப்படியாயின் யாம் உடன்படிக்கையின் நிபந்தனைகள் இன்னின்னவெனத் தீர்த்துக்கொண்டு பொழுது போக்கின்றி எழுதத் தொடங்கவேண்டியது தான்.
சுசீலன்: ஆம், அப்படி இன்னின்ன வெனத் தீர்க்கவேண்டிய நிபந்தனைகள்என்ன இருக்கப்போகின்றன?
சற்குணன்: எமது நாட்டை எம்மிடம் ஒப்பித்துவிட்டு அவர் தம்முடைய சேரநாட்டிற்குப் போகவேண்டியதுதான். மற்றைப்படி வேறென்ன?
சூரசேநன்: ஆம், ாம் வழுதியார் நாட்டை அவரிடமே யொப்பித்து விடுகின்றோம். அதற்கு ஆக்ஷேப மொன்றுமில்லை. பிறகு எமது சேர நாட்டை யாம் பெறுவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் நீவிர் செய்ய வேண்டும்.
வீரேந்திரன்: அதற்கின்ன? நீர் உமது நாட்டைப் பெறுதற்குத் தடையென்ன?
சுசீலன்: ஐயோ! அது தெரியாதோ தங்களுக்கு? நமது வழுதியாருடைய மாமனார் வீரமார்த்தாண்டத் தொண்டைராஜர் சேரநாட்டின்மீது படையெடுத்துச்சென்று கருவூரில் இப்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது!
சற்குணன்:- இஃதென்னை? ஆச்சரியமாய் இருக்கின்றதே! நாம் முன்பு பரங்கிரிப் போர்க்கு அவரிடம் உதவிகேளா மைபற்றியும், பிறகு தம் நகராகிய காஞ்சிக்குப் போகாது தஞ்சைக்குப் போனமை பற்றியும் உண்டாகிய கோபத்தினா லெம்மிடந் தெரிவியாது தாமே படையெடுத்துச் சென்றிருக்கிறார் போலும்! இதுவும் ஒரு விநோதமே. மற்றைப்படி கடம்பவனப் பெருமான் கருணையினால் மீட்டும் இராஜயாதிகாரம் பெற்றேன்! பெற்றும் பயனென்ன? ஓ! என்னருமைச் சுந்தராநந்தனே! இனி இந்நாட்டினை ஆள்பவர் யாவர்? நீயும் உயிர்விடுத்தாயே!
(கண்ணீர் சொரிகின்றான்.)
சூரசேநன்: ஓ! வழுதியாரே! எளியேன் எவ்வளவோ தவஞ்செய்து புத்திர பாக்கிய மின்றி வருந்துங் காலத்து மகாதேவனருளால் ஒரு மகளுதித்தனள்! அவளையும் இழக்குந் தௌர்ப்பாக்கியம் சம்பவித்தது! இனி அவளை இழந்த பிறகு எனக்கு அரசாள விருப்பமில்லை. ஆகையால் நீரே அந்தச் சேரநாட்டையுங் கைக்கொள்ளும்.
(பெருமூச்செறிகின்றான்)
(சுந்தராநந்தனும் ரூபாவதியும் தங்கள் மாறுவேடம் நீங்கி வருகின்றனர்.)
சுந்தராநந்தன்: எனது அருமைத் தந்தையாரே! தங்கள் குமாரன் அடியேன் சுந்தராநந்தன் நமஸ்காரம்!
(வணங்குகின்றான்.)
ரூபாவதி: எனது பிரியமுள்ள தகப்பனாரே! தங்கள் புதல்வி ரூபாவதி தெண்டனிடுகின்றேன்! (வணங்குகின்றாள்)
சற்குணன்: (கண்ணீர்சொரிந்து) அப்பா! எனதருமை மகனே! சுந்தராநந்தா! மதிகுலந்தழைக்க வந்த மாணிக்கமே! இன்னுமுளையோ! இன்றுதான் உன்னைப் பெற்றெடுத்தேன்! (தழுவி முத்தமிடுகின்றான்.)
சூரசேநன்: (கண்ணீர் சொரிந்து) அம்மா! என்கண்ணே! ரூபாவதீ! என் குலம் விளங்கவந்த கோதிலாமணியே! நீ இன்னும் உயிரோடிருக்கிறாயோ? நீ இதுவரையிலும் எங்கிருந்தாயோ?
(தழுவி முத்தமிடுகின்றான்)
சற்குணன்: சோமசுந்தரேசப்பெருமானே! எளியேம் மீதும் நின்னுடைய அருணோக்க மிருந்தவாறு என்னே! என்னே!!
(இறைவனைத்துதித்துப் பாடுகின்றான்)
*"தொண்ட வுழவ ராரத் தந்த
வண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
வருந்தவர்க் கருளு மாதி வாழ்க
---------------
* திருவாசகம்
வச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நீச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க
வெய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க” (105)
சூரசேநன்:-காணாமற் போன எனது அருமை மகனைப்பெற்றேன்! இனி மேல் என்னெனக்கு அரியதேயோ! சந்திரசேகரருக்கு எம்மீதுகருணை பிறந்தது இன்று தானோ?
(இறைவனைத்துதித்துப் பாடுகின்றான்)
* “ஆடக மதுரை வரசே போற்றி
கூட வியங்குங் குருமணி போற்றி
தென்றில்லை மன்றினு ளாடி போற்றி
யின்றெனக் காரமு தானாய் போற்றி” (106)
-----------
* திருவாசகம்
வீரேந்திரன்:-நம்முடைய நாட்டிற் சுந்தரராயும், சுரூபராயும் இருந்தவர்கள் இவர்தாமோ? ஆச்சரியம்! ஆச்சரியம்!! ஏன்? வழுதியாரே! உமது மகனுடைய அடையாளம் உமக்குந் தெரியாமலா போயிற்று? ஆனாற் சுரூபரைப் பார்க்கும்போ தெல்லாம் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
சுசீலன்:-பரமசிவாக்ஞை இப்படி யெல்லாம் முடியவேண்டும் என்று இருக்கும்போது, யார் என்ன செய்தாலும் முடியுமோ?
சூரசேநன்:-என் கண்மணியே! ரூபாவதி! நீ சற்குணவழுதியார் மகன் சுந்தரர் எந்தன் மீது காதல்கொண்டு உடன்போயினையோ? இனி ஒரு கணமேனும் தாழேன்! ஓ! சுசீலரே! நீர் இப்பொழுதே சென்று மணமுரசஞ் சாற்றச் சொல்லுவீர்! நன்முகூர்த்தம் பார்த்து நம் பெண்மணி ரூபாவதிக்குஞ் சுந்தராநந்தனுக்கும் விவாகம் நடத்தி விடுவோம்! ஏன்? தாங்களெல்லோரும் அரண்மனைக்கு எழுந்தருளலாமே! பகவான் சிவபெருமானுடைய கடாட்சத்தாற் சகலமும் இனிமையாய் முடிந்தன!
[சுசீலன் போகின்றான்.]
சற்குணன்:-ஆ! அப்படியா! இதோ புறப்பட்டோம்.
வீரேந்திரன்:-தாங்கள் முன்னர்ப்போங்கள். இதோ யாமும், சேனைத்தலைவர் முதலாயினார்க்கு மணமுரச மார்க்கும்படி உத்தரவு செய்துவிட்டு வருகின்றோம்.
சூரசேநன்:-இல்லை, இல்லை. யாராவது சேவகர் மூலமாய்ச் சொல்லி யனுப்பிக் கொள்ளலாம். வாருங்கள் போகலாம்.
(கைதொட்டீர்கின்றான்)
சற்குணன்: நம் அந்தப்புறத்திற்குப்போய் ஆங்குள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு செல்வோமே!
சூரசேநன்: அவர்களை அழைத்து வருவதற்கு எமது பட்டமகிஷியைப் பரிவாரங்களோடு வாத்திய கோஷங்களுடன் அனுப்புகின்றோம். நீங்கள் வாருங்கள்.
வீரேந்திரன்: ஆனாற்சரி. வாருள்கள். வழுதியாரே போகலாம்.நீங்களிருவரும் சம்பந்திகளாய் விட்டீர்கள். இனிமேல் உங்களுக்கு ஒரு குறையுமில்லை.
[யாவரும் போகின்றனர்.]
---------------
இடம்: பாண்டியனரண்மனை
காலம்: முற்பகல்
பாத்திரங்கள்: கோமளவல்லி, செவிலி
கோமளவல்லி: சமாதானஞ் செய்துகொண்டு வரப்போன தலைவரும் சுசீலரும் யாது காரணத்தினாலோ இதுவரையிலும் வரவில்லை. ஏதேனும் விபரீதம் விளைந்து விட்டதோ?
செவிலி: அம்மையே! தாங்க ளெண்ணுகிறபடி அவ்வாறொன்றும் நடந்திருக்க மாட்டாது என்று எண்ணுகிறேன். ஏனெனில் அரசர்களா யிருபபவர்கள் அத்தன்மையான வஞ்சகப்போர் ஒன்றும் மிலேச்சர்களைப் போலச் செய்யவே மாட்டார்கள். ஆகையால் தாயே!இதைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்.
[சுசீலன் வருகின்றான்.]
சுசீலன்: அடியேன் மந்திரி சுசீலன் அரசியாரவர்கட்கு வந்தனம்.
கோமளவல்லி: ஏன்? சுசீலரே! போனகாரியம் என்னாயிற்று? எல்லாஞ் செவ்வையாய் முடிந்தனவோ? எங்கே மகாராஜா அவர்கள்? இன்னும் வரக்காணோம்?
சுசீலன்: தாயே! எல்லாம் நம் மதுரேசர் கிருபையினாலே இனிமையாய் முடிந்துவிட்டன! காணாமற்போன மகள் நமது ரூபாவதியும் வருகின்றாள்!
கோமளவல்லி: கண்ணீர் சொரிந்து,கொண்டு, ஓ! ரூபாவதி! இன்று தான் நீ என்வயிற்றிற் பிறந்தாய்! மீனாட்சீ! உன்னை வேண்டிக்கொண்ட தன் பயனை யடைந்தேன். நீதான் இந்தக் கலியுகத்தில் உண்மையான தேவதை. உன்னை நம்பினோர்க்குக் குறையு முண்டாமோ?>
செவிலி: எனது கண்மணி ரூபாவதி இதுவரையில் எங்கிருந்தாள்? ஏன்? சுசீலரவர்களே!
[ரூபாவதியையும், சுந்தராதந்தனையும் சூரசேநன் பிடித்துக்கொண்டு வாராநிற்பச் சற்குணனும் வீரேந்திரனும் வருகின்றனர்.]
சுசீலன்:-அதோ நமது மகாராஜா அவர்களும் வழுதியாரும், சோழ ராஜாவும் வருகிறார்கள்! நீங்களிருவரும் சற்று உள்ளே போங்கள்.
[கோமளவல்லியுஞ் செவிலியும் போகின்றனர்.]
சூரசேநன்:-தாங்களெல்லாரும் இப்படி வீற்றிருந் தருளுங்கள்.-அப்பா! எனது கண்ணே! சுந்தராநந்தா! இப்படி வா.
(முத்தமிடுகின்றான்)
ஓ! சுசீலரே! நீர் இவ்விடமிருந்து இவர்கள் அனைவரும் தங்குவதற் கேற்ற வசதியான இடம் அமைப்பீராக. நாம் எனது கண்டெடுத்த நிசேஷபம்போலும் பெண்மணி ரூபாவதியையும் எமது அழகொரு வடிவமாய் அமைந்து நின்ற அருமை மருகன்சுந்தராநந்தனையும் இட்டுக்கொண்டு அந்தப்புரஞ் சென்று அவ்விடத்திலுள்ள எமது தலைவி முதலாயினாரும் இவ்விருவரது காட்சியினாற் போதரும் ஆனந்தத்தை யனுபவிக்குமாறு செய்து வருகின்றோம். இதற்குட் சேவகா!
[சேவகன் வருகின்றான்.]
சேவகன்:-மகராசா! ஆணை!
சூரசேநன்:-நீ சென்று சிறையிலுள்ள நயவசநகரைச் சீக்கிரமாய் இங்கழைத்து வா. போ. தாமதஞ் செய்யாதே!
[சேவகன் போகின்றான்.]
[சூரசேநனும், சுந்தராநந்தனும், ரூபாவதியும் போகின்றனர்.]
வீரேந்திரன்:-வழுதியாரே! நாம் படையெடுத்து வரும்போது என்ன எண்ணத்தோடு வந்தோம்! அஃது எப்படி முடிந்தது! பார்த்தீர்களா! இதுவன்றோ சிவபெருமான் செயலென்பது!
சற்குணன்:-நம் அழகீசரது அருட்பிரேரகம் அவ்வாறிருக்கும்போது
*”படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றி” மாயும் மனிதர்
செயலென்னே!
சுசீலன்:-இவை யெல்லாம் நம் ஆலாசியநாதர் ஆனந்தம்பூத் தயராநிற்குந்
திருவருள் விளையாடல்களே யல்லவோ!
---------
* நாலடியார்
சற்குணன்:-ஆம். அதற்குமோ ரையமுண்டோ?
[சூரசேநன் வருகின்றான்]
சூரசேநன்:-தமிழ் வேந்தர்காள்! அடியேன் இதுகாறுந் தங்கள் இருவரையுந் தனியே இவ்விட மிருத்தி விட்டுச் சென்ற பிழையைப் பொறுத் தருளுவீர்!
வீரேந்திரன்:-அதனாலொன்றும் பாதகமில்லை. வீற்றிருந்தருளுங்கள்.
[நயவசநன் வருகின்றான்.]
நயவநன்:-ராஜ சமுகத்தில் அடியேன் நயவசநன் வந்தனம்!
சூரசேநன்:-எமது பிரிய நேசராகிய நயவசநரே! எளியேம் உண்மையை விசாரியாது நுமக்கிழைத்த பெருந் தீங்கினைக் குறித்து மிகவும் விசனப்படுகின்றோம். ஆதலினெம் பிழையைப் பொறுத்தருளுவீ ரென்று நம்புகிறோம்.
(நயவசநனை வணங்குகின்றான்.)
நயவசநன்:-இவையனைத்தும் பழவினையின் பயனேயாம்! ஆதலின் அவற்றிற்காக நாம் மனவருத்த முறுவதன்னையோ! இறைவனே! கருவூர் காவலா! எழுந்தருளுவாய்! நின்மீது தவறொன்றுமில்லை!
(அரசனெழுகின்றான்! நயவசநன் வீற்றிருக்கின்றான்.)
வீரேந்திரன்:- ஏன் தாமதஞ் செய்யவேண்டும்? சோதிடம் வல்லாரை விளித்து ஒரு நல்ல சுப முகூர்த்தம் வைத்து மணவினையைக்கூடிய சீக்கிரத்தில் முடித்துவிடுவோமே?
சூரசேநன்:-ஆ! அப்படியே செய்வோம்! ஏன்? சுசீலரே! உம்முடைய குமாரி அம்புஜாட்சியின் விவாகத்தையும் இதனோடு சேர்த்து நடத்தி விட்டா லென்னை?
சுசீலன்:- ஆம்! அதற்கென்ன? அவ்விட்த்து இஷ்டப்படியே செய்துவிடுவோம். அது விஷயத்தில் எனக்கு ஆச்ஷேப மொன்றுமில்லை. மற்றைப்படி நமது நயவசநர் குமாரன் சந்திரமுகனுடைய விவாகத்தையுஞ் சேர்ந்து நடத்திவிடலாமோ என்று நினைத்தேன். ஆனாற் சமுகத்தின் எண்ணம் எப்படியோ!
சற்குணன்:-ஏன்? அதையுஞ் சேர்த்தே செய்துவிடலாம். அதைக்குறித்து ஒரு யோசனையுமில்லை. 'எங்கே எதிலும் மூன்று சேர்ந்து நடத்த லாகாது என்பார்களே யென்று நாம் நினைக்கப் போகிறோமோ?' என்று அவ்விடத்தில் ஏதேனும் யோசனையுண்டோ?
சூரசேநன்:-அஃதொன்றுமில்லை! அஃதொன்றுமில்லை!! நம்முடைய சமஸ்தானத்து வித்துவான் வித்தியாசாகரப் புலவருடைய சஷ்டியப்த பூர்த்தியும் இப்பொழுது தான் வருகிறதாம். அதற்கன்னை? அதையுஞ் சேர்த்து இவற்றுடன் நடத்திவிட்டாற் போகிறது. சேவகா!
[சேவகன் வருகிறான்.]
சேவகன்:-மகராசா! உத்தரவு!
சூரசேநன்:-நீ போய் நயவசநர் குமாரன் சந்திரமுகனையும், மந்திரியார் மருகன் சுகுமாரனையும் அழைத்துக்கொண்டு வா.
[சேவகன் போகின்றான்.]
ஓ!சுசீலரே! நீர் சென்று நமது சமஸ்தானத்துக் குருமூர்த்தி ஜோசியரைக் கேட்டு ஒரு நன் முகூர்த்தம் வைத்துக்கொண்டு விரைவாய் வாரும்!
சுசீலன்:- ஆகுக, அப்படியே! (சுசீலன் போகின்றான்.)
(சேவகன் வருகின்றான்.)
சேவகன்:- இதோ அவர்களும் வந்துவிட்டார்கள்!
(சேவகன் போகின்றான்)
(சுகுமாரனுஞ் சந்திரமுகனும் வருகின்றனர்.)
சுகுமாரன்:- ராஜசந்நிதியில் அடியேன் சுகுமாரன் வந்தனம்.
வீரேந்திரன்:- இப்படி வாருங்கள் சமீபத்தில்.
சூரசேனன்:-வாருங்கள்!-சேவகா!
(சேவகன் வருகின்றான்.)
சேவகன்:- மகாராசா!
சூரசேனன்:- நீ நம் அந்தப்புறஞ் சென்று, நமது மகளையும் மருகனையுஞ் சீக்கிரம் இங்கு அழைத்துவா!
(சேவகன் போகின்றான்.)
சற்குணன்:- வையை யாற்றின் வடகரையில் நமது பாசறைக்கு ஆளனுப்பி யாயிற்றா?
சூரசேனன்:- ஓ!அப்பொழுதே எமது தலைவியும் பரிவாரங்களுஞ் சென்றிருக்கிறார்கள். இதற்குள் வந்திருப்பார்கள்.
(சுந்தராநந்தனுஞ் சுகுமாரனுஞ் சந்திரமுகனும் பேசிக்கொள்ளா நிற்ப ரூபாவதி தன் றோழிமாரொடு பேசுகின்றாள்.)
சற்குணன்:- என்ன? சுசீலரே! என்றைக்கு முகூர்த்தம் வைத்தார்?
சுசீலன்:- இன்றைக்கு எட்டாநாட் குருவாரம் மகா வித்துவான் வித்தியாசாகரப் புலவருடைய சஷ்டியப்தபூர்த்தி வருதலின் அதற்கும் ஏற்ப அன்றைக்கு மிதுனலக்கினத்தில் வைத்திருக்கிறார்! அன்றைக்குச் சகலமும் நன்றாயிருக்கின்றன வென்று சொன்னார்.
சூரசேனன்:- சரி. அதே முகூர்த்தம் மற்றைய மூன்று விவாகங்களுக்கும் பொருந்துகிறதோ? அதைக் கேட்டீரா?
சுசீலன்:- ஆம். அஃது அந்த மூன்றுக்கும் பொருந்துகிறது என்று தான் சொன்னார்.
சூரசேநன்: ஆனால் நமது குமாரி ரூபாவதியின் விவாகத்தொடு மந்திரி சுசீலர் புத்திரி அம்புஜாட்சியின் விவாகமும் நயவசநர் குமாரன் சந்திர முகன் விவாகமும் புலவர் சஷ்டியப்தமும் நடத்தப்படும். வழுதியாரே! தங்களுடைய மாமனார் வீரமார்த்தாண்டத் தொண்டை ராஜருக்கு நிருபம் எழுதிக் கூடியசீக்கிரத்தில் அவரை வரவழையுங்கள். நாமும் எமது மந்திரியார் இராஜோபாயரை வரவழைக்கிறோம். சரி. வெகுநேரமாயிற்று. நாம் இனிச் சென்று சற்று இளைப்பாறுவோம். வாருங்கள்.
சற்குணன்: சரி. போகலாம்.
(இறைவனைத் துதித்துப் பாடுகின்றான்)
உளமென்னு மாலயத் துன்னைவைத் துப்பணியு
%nbsp; முத்தமப் பத்தராவார்
தளர்கின்ற காலத்தி லூன்றுகோ லாகியவர்
%nbsp; தம்மைப் புரந் துமவர்தம்
வளரன்பு விதைகொண்மன வயலதனு ணல்லின்ப
%nbsp; மழைபொழியு லெழிலியாகி
யொளிர்சச்சி தாநந்த மூர்த்தியே யெவ்வண்ண
%nbsp; முனதருளை வாழ்த்துகேனே. 107
*வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி
யூனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே. 108
-------
*திருவாசகம்
(யாவரும் போகின்றனர்.)
ஐந்தாம் அங்கம் முற்றிற்று.
சுந்தராநந்தன்: எங்கணும் வியாபியாகி இன்பமும் இரக்கமுமுடைய எல்லாம் வல்ல ஈசனது அருள்பெற்றுக் கல்வி கற்றுப் பொருளுற்றுச் சீர்த்திவாய்ந்து இணக்கமுள்ள மனைவியை யடைந்து நன்மகவுச் செல்வம் பொருந்தித் தற்காலத்துப் பிறர்நன்மை நாடி வாழுதலே மாந்தரியல்பாம். ஆதலின் இயற்கை விரோதமாகிய நெறியினிற் செல்லுதலொழிந்து, இயற்கை யொழுங்கின் முறை வழுவாது ஒழுகுவோமாக. பிறர்பொருளை வெஃகுதலும் பிறர்க்குக் கேடு சூழ்தலுந் தனக்கே துன்பந் தருதலைக் கண்கூடாகக் கண்டனமாதலின் அவற்றினின்றுந் தவிர்வேமாக. மணவினையின் மூலமாயுள்ளது மெய்யன்பேயாம். ஆதலின் அதனைக் கேவலம் உடற் கூட்டமாக எண்ணுகின்ற மாந்தர்மதி யென்னே! உளத்தோடு உளஞ் சென்று ஒன்றலே காதல்! அதுவே மெய்யன்பு அதுவே உண்மை நேசம்! இல்வாழ்க்கையே நல்லொழுக்கங் கற்பிக்கும் உத்தமக் கல்லூரியாம். ஆகவே அகிலத்திலுள்ள ஆன்மகோடிகளை வெறுத்துத் துறவறம் பூண்டுஉடல்வற்றி மெய்ந்நிலை தவறி வாழிநர் போலாது, அன்பினாற் கட்டுண்டு இல்லறம் பூண்டு மனித சமூகத்தில் இருந்து பிறர்க்குப் பயன்பட்டு வாழ்வேமாக.
(வாழ்த்துப்பாடுகின்றான்.)
என்னையாளு மாமதுரை மீச னருளாற் பொய்த்தலின்றி
யென்று மெழிலி செறிந்துமழை யினிதிற் பொழிக வாடவர்தாங்
கன்னற் சாற்றைப் பாகுதனைக் கண்டை வென்ற மொழியுடனே
கழற வரிய வழகுடைய கற்புக் கரசா மாதர்தமோ
டின்னல் சிறிது மெய்தாம லெனது பிரானை மனநிறுவி
யில்ல தத்தி னியல்வழுவா திருந்தெஞ் ஞான்று மின்புறுக
நன்னர் மகிப ரரசாள்க ஞானந் தழைத்து விளங்கியிந்த
ஞாலத் துள்ளார் யாவருமே நன்மை யடைந்து வாழியவே 109
(போகின்றான்)
ரூபாவதி நாடகம் முற்றிற்று.
- பரதவாக்கியம்
நேரிசை வெண்பா
இன்னமிழ்துங் கைப்ப வினிக்குந் தமிழ்மொழியும்
பொன்னுமருள் புந்திப் புலவோரு- மன்னியெற்குச்
செந்தமிழ்கற் பித்தகலைச் செஞ்சொற் சபாபதியுஞ்
சந்ததமும் வாழியவே தாம். (110)
வாழ்த்து
கலிவிருத்தம்
கந்த ராநந்த வள்ளற்குச் சோபன
மந்த வாணகை மாதுரூ பாவதி
யெந்த நாளினு மெய்துக சோபன
நந்த நாடக நண்ணுக சோபனம். (111)
திருச்சிற்றம்பலம்
கருத்துகள்
கருத்துரையிடுக