அபிநவ கதைகள்
சிறுகதைகள்
Back
அபிநவ கதைகள்
(தி. செல்வகேசவராய முதலியார்)
-
Source:
TAMIL NOVELETTES
அபிநவ கதைகள்
T. CHELVAKESAVAROYA MUDALIAR, M.A.
Pachchaiyappa's College.
THIRD EDITION
MADRAS
PRINTED AT THE S R C K PRESS COMPANY
1921
--------------------
-
உள்ளடக்கம்
1. கற்பலங்காரம்
2. தனபாலன்
3. கோமளம்
4. ஸுப்பையர்
5. கிருஷ்ணன்
6. ஆஷாடபூபதி
1. கற்பலங்காரம்
1
காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத் தோட்டத்தினின்றும் புஷ்ப வாஸனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக் குட்டிகள் துள்ளியோடின. மான் கூட்டங்கள் மிரண்டு மிரண்டு தாவிப் பாய்ந்து கொண்டிருந்தன. எதிரில் ஏரிகரையில் கொக்குகளும், நாரைகளும் மீன்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. ஏரியின்மீது பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கொக்குகளும் நாரைகளும் தின்ற மிகுதியைக் காகங்கள் கூட்டங்கூடி, உனக்கோ எனக்கோ என ஒன்றோடொன்று சண்டையிட்டு, இங்கும் அங்கும் குதித்துப் பொறுக்கிக் கொண்டிருந்தன. கத்தரி முதலான கீழ்ப் பயிரிடுகிற இடங்களில், பள்ளரும் பண்ணையாள்களும் "பிள்ளையாரே வாரீர்" என்றொரு துரவினிடத்தும், "மூங்கிலிலை மேலே தூங்கு பனிநீராம்" என ஒரு குளத்தினிடத்தும், "பாலாடையுஞ் சங்கும் பாலன்பெறக் கண்டேன். தொட்டிலிலே குழந்தை தூங்க கனாக் கண்டேன்" என ஏரிகாலினிடத்தும், அங்கங்கே ஏற்றப்பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் இறைத்திருந்தனர். அரமனை மதிற்சுவர் வாயிலின் ஸமீபத்திலே, ஒரு பங்களாவில், பொக்கிஷசாலை உத்தியோகஸ்தர்கள், கிஸ்திவசூல் சேவகர் சிப்பந்தி செலவு முதலான கணக்குகளை எழுதிக்கொண்டிருந்தனர். வாயில்காவலர் வாள் உருவி உலாவிக் கொண்டிருந்தனர்.
அரமனையின் மேன்மாடியிலே, பஞ்சணை தைத்த நாற்காலி ஒன்று பலகணியின் பக்கத்தில் இடப்பக்கத்தில் ஒரு சிறிய விசிப்பலகையும் வலப்பக்கத்தில் பத்து நாற்காலியும் இருக்கின்றன. விசிப்பலகையின்மேல் புஸ்தகங்களும் வெற்றிலைப்பாக்குத் தட்டும் சுருட்டுப்பெட்டியும் இருக்கின்றன. சுவரில் சில சிநேகிதர் படங்கள் ஒரு பக்கத்திலும், வெளித் தேசங்களில் உள்ள அரிய காட்சிகளை விளக்கும் படங்கள் ஒரு பக்கத்திலும், அரசனுடைய தாய்தந்தையர் முதலானவருடைய படங்கள் ஒரு பக்கத்திலும் தொங்க விட்டிருந்தன. சாய்வு நாற்காலியின் பின்புறத்தில் உயரமாக வலப்பக்கத்தில் ஸரஸ்வதி படமும், இடப்பக்கத்தில் லக்ஷ்மி படமும் கட்டியிருந்தன. அவ்வறையின்மீது சித்திரவேலை செய்த விதானம் தூக்கியிருந்தது.
காலையில் காலக்கடன்களை முடித்துச் சிற்றுண்டி கொண்ட பிறகு, அரசன் சாய்வுநாற்காலியில் இருந்து, ஒரு சுருட்டில் நெருப்புப் பற்றவைத்துக்கொண்டு, ஏதாவது படிக்கலாம் என்று எண்ணுகின்றவன், சுருட்டின் சாம்பலை விரலால் தட்டும்போது, மந்திரியை நினைத்துக்கொண்டான். "நேற்று முகம் வாடியிருந்த மந்திரியை என்னவென்று கேட்க, வீட்டில் சிறிது சஞ்சலம் உண்டு என்றனனே. வேட்டை பார்க்கப்போய் வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டதுபோல், கல்யாணம் பண்ணிக்கொள்ளும்போது கொண்டாட்டமும் பின்பு திண்டாட்டமுமாய், இப்படி ஸம்ஸாரத்தில் ஆழங்காற்பட்டு இல்லற நொண்டி ஆவானேன். இதையெல்லாம் யோசித்தல்லவா ஸம்ஸாரத்தை ஸாகரம் என்கிறார்கள். 'பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு' உழல்வதேன்? என்னைப்போல் ஏகாங்கியாய் இருப்பவர்க்கு ஏதாவது இன்னல் இருக்குமா. காலை யில் எழுந்ததும் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு நல்ல நூல்களை வாசிக்கிறேன். பின்பு நாட்டுக் காரியங்களைப் பார்க்கிறேன். வீட்டுக் காரியங்கள் எனக்கு என்ன இருக்கின்றன? நான் வேட்டையாடி வெகு நாள் ஆகிறது. நாளைக்கு வஸந்தமாளிகைக்குப் போயிருந்து, மறுநாள் அங்குநின்றும் வேட்டையாடப் போதல் வேண்டும். நல்லது, நான் உண்ணுவதும் உறங்குவதும் நாட்டையாள்வதும் வேட்டை யாடுவதுமாய் ஏகாங்கியாகவே இருக்க ............. ......... முன்னோர்கள் இந்த நாட்டை வெகுகாலமாய் வாழையடி வாழையாய் ஆண்டுவந்தனரே. குடிகளும் குறைகூற இடமில்லாமல் இருக்கிறதே. என்னோடு ஸந்ததியற்று அரசியல் அச்சுக்கெட்டுத் தச்சுமாறிவிட்டால், பாவம், குடிகள் என்னசெய்வார்கள்? என்ன நினைப்பார்கள்? 'இந்த அரசன்,பாவி, தன் ஸுகத்தையே பெரிதாக எண்ணி, கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல், நம்மை இப்படி அந்தரத்தில் விட்டுவிட்டான்' என நிந்திப்பாரன்றோ? இத்தனை பேருடைய நன்மையை நாடாமல் என்னொருவனுடைய மனோரதத்தையே நாடுவது தகுதியன்று. எனக்கும் இருபத்திரண்டு பிராயம் ஆகிறது. விவாஹம் செய்துகொள்வதானால் இதுதான் தக்க பருவம். கல்யாணம் செய்துகொள்ளுகிறபட்சத்தில், அவளையே-----காலடி சப்தம் கேட்கிறது."
"யாரங்கே?"
"எம்பேருமானே தேவரீருடைய குடிகளில் பெரியவராய், வயதில் முதியவராய், தங்களைக் காணும் அவாவுடைய நால்வர், வாயிலின்கண் வந்துளர்" என்று துவாரபாலகன் விண்ணப்பித்தான்.அவனைப் பார்த்து அரசன், "அவர்களை அழைத்துவா" என்று சொல்லியனுப்பினான். "இயன்றமட்டில் இந்நாட்டைக் கண்ணும் கருத்துமாய்ப் பரிபாலித்து வருகின்றேன். குறை ஒன்றும் இருக்காதே. ஆனாலும் எல்லாக் குடிகளுடைய மனோபாவத்தையும் அறிய ஒருவனால் ஆகுமா?" என்றாலோசித்து, "அதோ வருகிறார்கள் அவர்களுடைய முகம் கேவலம் குறைகூற வருகின்றவர்போல் தோன்றவில்லை" என யூகித்து, "வாருங்கள், ஐயா வாருங்கள்" என்று சொல்லி உபசரித்தழைத்தான். அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு
பற்பல வாண்டுகள்
வாழிநின் செங்கோல்
வழிவழி வாழ்கவே
என வாழ்த்தின அளவில், அவர்களை நோக்கி அரசன் "எல்லீரும் இவ்விவ் ஆசனங்களில் இனிதிருங்கள். இவ்வருஷம் வெள்ளக்கேடும் வாட்கேடும் இன்றி ஒழுங்காய் மழை பெய்ததே. பயிர் பச்சைகளெல்லாம் நன்றாய்ப் பலித்துள்ளனவா? குடிகளெல்லாம், ஸுகமாய் இருக்கின்றனரா?
அந்தந்த அதிகாரிகள் அனைவரும் பொய் புனைசுருட்டு திருட்டு புரட்டு இல்லாமல் தங்கள் தங்கள் வேலைகளைச் செவ்வையாகச் செய்துவருகின்றார்களா?" என்று கேட்டான். வந்தவர்கள், "எல்லாம் வெகு விமரிசையாகவே நடந்து வருகின்றன. விளைவு வேளாண்மைக்குக் குறைவு இல்லை. தேவரீர் அடியோங்கள்மீது குளிரக் கடாட்சித்திருக்கையில், எங்களுக்கு என்ன குறை இருக்கிறது? ஆனால்-" என்ற அளவில், அரசன்:"அந்தோ! ஆனால் என்னுமளவில் அடி வயிற்றில் இடிவிழுந்ததுபோல் இருக்கிறது.ஏதேனும் குறை இருக்குமாயின் ஒளிக்காமல் உள்ளதை உள்ளபடியே உரையுங்கள். உடனே பரிகாரம் தேடுகிறேன்" என்றான்.
குடிகள்- அடியோங்களைப் பொறுத்த குறை ஒன்றும் இன்று, தேவரீர்க்குக் குறையாவது ஒன்றைக் குடிகள் அனைவரும் குறை கூறி, அதனை நிறைவுபடுத்தும்பொருட்டே எங்களைத் தேவரீர் ஸந்நிதானத்துக்கு அனுப்பினார். உங்களைப் பொறுத்த குறையானால், அது எங்களையும் பொறுத்ததே அன்றோ?
அரசன் -- அதுதான் என்னவோ?
குடிகள் -- தேவரீர் ஏகாங்கியாக இருப்பதே.
அரசன் -- அது குறையாவ தெங்ஙனம்?
குடிகள் -- தாங்கள் ஏகாங்கியாக இருப்பது நாளைக்குத் தங்கட்கும் அபவாதம்:எங்கட்கும் தீராத துக்கம்.
அரசன் -- அதென்ன?
குடிகள் -- தாங்கள் ஏகாங்கியாயிருக்கத் தங்களுக்குப்பின் அரசஸந்ததி அற்றுப்போனால் (அவ்விதம் ஆகலாகாதென்று ப்ரார்த்திக்கிறோம்) நாங்கள் அரசன் இல்லாமல் தங்களைப் பழிப்போம் அல்லவா?
அரசன் -- ஏன், குடியரசு ஏற்படுத்திக்கொள்ளலாமே. அதில் எல்லா ஸ்வதந்தரங்களும் குடிகளுக்கு உண்டாகுமே.
குடிகள் --குடியரசில் அநேக உள் கலகங்கள் உண்டாகும்; உயிர்ச்சேதம் உண்டாகும். குடியரசில்தானும் குடிகள் ஏற்படுத்திய
ஒரு தலைவன் இல்லாமல், தலை தலைக்குப் பெரியதனம் கட்டிக்கொள்ள முடியுமா? அடிக்கடி ராஜாங்கத்தில் இடையூறுகள் உண்டாகும். தேச கார்யங்களும் ஸரிவர நடக்கமாட்டா. 'மயிலாப்பூரி ஏரி உடைத்துக்கொண்டு போகிறது" என்றால், 'வருகிற கமிட்டிக்குப் பார்க்கலாம்' என்பதுதான் குடியரசின் லட்சணம். இது கிடக்கட்டும். தங்களைச் சீக்கிரத்தில் கல்யாண கோலமாய்க் காணவேண்டும் என்பதே எங்கள் மனோரதம்.
அரசன். -- கல்யாணம் என்பது என்ன, கிள்ளுக் கீரையா? ஆயிரங்காலத்துப் பயிரல்லவா? ஓஹோ, 'பேய்கொண்டாலுங் கொள்ளலாம் பெண் கொள்ளலாகாது' என்கின்றனரே.
குடிகள். -- நீர் முற்றுந் துறந்த முனிவர் அல்லவே. காட்டில் வசிக்கும் தபசிகள் தாமும் தவப்பன்னியருடன் கூடியிருக்கின்றனர். குருவிகள்கூட ஆணும் பெண்ணுமாக அல்லவோ கூடுகட்டி வசிக்கின்றன.
அரசன். -- மெய்தான் கற்புடைய மனையாளைக் காண்பது அரிதன்றோ?
குடிகள். -- ஆயினும் அதுபற்றி நல்ல கற்புடைய மாதரை நாடித் தேடி மணஞ்செய்து கொள்ளாமல் விடுகிறதா? 'தாயைத் தண்ணீர்க் கிணற்றண்டையில் பார்த்தால் பெண்ணை அடுப்பங்கரையில் பார்க்கவேண்டுமா? 'தாயைப் பார்த்துத் தாரங்கொள்' என்கின்றனரே.
அரசன். -- எத்தனையோ தாய் தந்தையர் உத்தமர்களாக இருந்தும், அவர்களுடைய மக்கள் அதமர்களாய் இருக்கின்றனரே. இப்படிப்பட்டவர் எத்தனை பேரைத் தினந்தோறும் பிரத்யட்சமாகப் பார்த்துவருகிறோம்?
குடிகள். -- இங்ஙனம் விதண்டா வாதம் செய்தால் முடிவேது. ஒருத்தி பதிவிரதை என்பது அறிந்து கொள்ள எத்தனையோ உபாயங்கள் இருக்கின்றன. அவற்றை அநுசரித்து ஒரு பெண்மணியைத் தேடிக்கொள்ளலாம்.
அரசன். -- ஆமாம், அவ்விதமாகச் சிறந்த கற்புடையவளைத் தேடி அடைவது மிகவும் அருமை. பிள்ளையார் தாரம் தேடிய கதையாகத்தான் முடியும்.
குடிகள். - அந்தக் கவலை உங்கட்கு ஏன்? பல தேசங்களிலும் திரிந்து எவ்விடத்திலாயினும் அருந்ததிபோன்ற ஒருத்தியை நாங்களே தேடிக் கொண்டுவருகிறோம். நீங்கள் கல்யாணம் செய்துகொள்வதாக மாத்ரம் வரங்கொடுத்தால் போதும். மற்றதெல்லாம் எங்கள் பாடு.
அரசன். - யாதொரு கஷ்டமும் இல்லாமல் ஒன்றியாக நாள்கழிக்க விரும்பும் என்னை நீங்கள் இல்லறத் தொழுவில் மாட்டிவைக்கப் பார்க்கிறீர்கள். இது எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயினும் உங்கள் நிமித்தமாக அதற்கு இசைகிறேன். நல்ல பெண்ணைப் பார்க்க நீங்கள் எவரும் தூதுபோகவேண்டாம். நானே ஒருத்தியை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுகிறேன். என் திருமணத்தைக் குறித்துக் கூடிய சீக்ரத்தில் ஊரில் விளம்பரம் பண்ணுகிறேன். தாம்பூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
குடிகள். - உங்களுக்கு மங்கலம் உண்டாக! ஆயுள் பெருகுக! நாங்கள் செலவு பெற்றுக்கொள்ளுகிறோம்.
அவ்வளவிலே அரசன் புரோகிதரை அழைத்து, அடுத்த வாரத்தில் ஒரு முஹூர்த்தநாளை ஏற்படுத்திக்கொண்டு, மந்த்ரியிடத்தில், "வருகிற வாரத்தில் புதன்கிழமை பத்து நாழிகைக்குமேல் நமக்கு விவாஹ மஹோத்ஸவம் என நமது நண்பரான அரசர் பிரபுக்கள் முதலானவர்களுக்குப் பத்ரிகை அனுப்புக. இச்செய்தியை ஊரிலும் விளம்பரப்படுத்தி ஊர் முழுவதும் அலங்காரம் செய்விக்க. புரோகிதருக்குச் சில ஆள்களைத் துணைகூட்டிக் கல்யாணத்துக்கு அவசியமானவைகளை ஆயத்தப்படுத்துக. மற்றும் செய்வன செய்க" என்றுரைத்தான். பின்னும், "நமது குடிகளை அன்று காலையில் எட்டு நாழிகைக்குமேல் அடுத்த குப்பத்தில் கூடியிருக்கும்படி செய்க" என்றான்.
II
அரமணைக்கும் குப்பத்துக்கும் ஒன்றரை நாழிகைதூரம் இருக்கும். அங்கே கிழக்கு மேற்காக ஒரு வீதி உண்டு. அந்த வீதியின் ஒரு கோடியில் நின்று பார்த்தால், மற்றொரு கோடி தெரிவதில்லை. இடையில் மூன்று நான்கு இடத்தில், சில வீடுகள், சதுரக்கல் புதைத்த தெருக்குறடும், பித்தளைப் பூணிட்ட செம்மரத்தூண்கள் நிறுத்திய திண்ணையுமாக இருக்கும். சில வீடுகள் உள்ளடங்கி எதிரில் மாட்டுத்தொழுவம் கட்டியிருக்கும். பல வீடுகள், விழற்கூரை வேய்ந்து, மூங்கில் தூண்கள் வைத்த ஒட்டுத்திண்ணைகளை உடையவைகளாய், ஒரு தூணில் பசுவின் கன்றும் கட்டியிருக்கும். தெற்கு வடக்காக உள்ள மற்றொரு வீதி, பள்ளர் முதலானவர்கள் வசிப்பது. அது வீதியாக ஒழுங்காக இருக்கவில்லை. வழியே போகும்போது, எதிரில் ஒரு சிறு வைக்கோற்போர் இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டு சிறிது தூரம் போனால், வைக்கோலும் மாட்டுச் சாணமும் சாம்பலும் கலந்து கொட்டிய குப்பைமேடு இருக்கும். ஓரிடத்தில் வறட்டிகளை வட்டமாக அடுக்கி, மேலே பனையோலைகளை மூடி, அதன்மேல் நாலு கூடை மண் கொட்டியிருக்கும். மற்றோரிடத்தில் அவரைப் பந்தலும் பாகற்காய் புடலங்காய்ப் பந்தலும் குறுக்கிட்டிருக்கும். ஒரு மரத்தடியில் சில ஸ்திரீகள் தங்கள் பிள்ளைகளுக்குப் பேன் பார்த்துத் தலையை மரச்சீப்பால் வாரிக்கொண்டிருப்பார்கள். சில கிழவிகள், வெற்றிலைப் பாக்குடனே புகையிலையிட்டு மென்றுகொண்டு, நெல் கேழ்வரகு முதலான தான்யங்களை உலரவைத்து, கையில் ஒரு கழியைப் பிடித்துக் காக்கை ஓட்டிக்கொண்டிருப்பர்.
அரசனுக்கு விவாஹமென்று விதித்திருந்த நாள் வந்து விட்டது. கிழக்கு மேற்காக உள்ள வீதியில், வீடுதோறும் மாவிலைத் தோரணங்கள் கட்டி, திண்ணை குறடுகளை மெழுகி மாக்கோலம் இட்டு, தெருவெல்லாம் மேடுபள்ளம் இன்றிப் புல் பூண்டுகளைச் சீவிச்செதுக்கி, அத்தெருவினர் அனைவரும், குளித்து முழுகிக் குழையலிட்டு, ஸலவை வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, வருவார் போவாரை உபசரித்து வார்த்தைசொல்லிக்கொண் டிருந்தனர். மற்ற க்ராமங்களிலிருந்து சிற்சிலராய்க் கூட்டங்கூட்டமாய்க் குடிகள் வந்து சேர்ந்து, திண்ணைகளின் மீதும் மரநிழலினும் கூடியிருந்தனர்.
எல்லோரும், "அரசன் இந்தக் குப்பத்தில் என்ன செய்யப்போகிறானோ? மாமியார் வீட்டு வரிசை ஏதாவது இங்கிருந்து புறப்படப்போகிறதோ? அல்லது, கல்யாணப் பெண் இந்த வழியாக வர, இங்கே அரசனுடையமனுஷர் அவளை எதிர்கொண்டு அழைத்துப் போவார்களோ? அல்லது இந்தக் குப்பத்தை யடுத்த தேவாலயத்தில் அரசன் ஏதாகிலும் பூஜை புனஸ்காரம் நடத்திவிட்டுப் போவானோ என்னவோ ஒன்றும் தெரியவில்லை" என்று பலவிதமாய் ஒருவரோடொருவர் பேசியிருந்தனர்.
இவர்கள் இவ்விதமாகப் பேசியிருக்கையில், மேற்கூறிய இரண்டு தெருவினின்றும் கல்லெறிதலான தூரத்திலே, ஒரு நல்ல தண்ணீர்க் கிணற்றினின்றும், பதினாறு வயதுடைய ஒரு கன்னிகை, மட்குடம் ஒன்று இடுப்பிலும், தோண்டி ஒன்று வலக்கையிலுமாகத் தண்ணீர் மொண்டுகொண்டு போனாள். அவள் தலையை வாரிப் பின்னல் இட்டுக்கொண்டிருந்தாள். கையில் கண்ணாடி வளையல்கள் கலகலவென்று ஒலிசெய்தன. இடையில் ஒரு தோம்பு பாவாடையும் மேலே ஒரு மஞ்சள் சிற்றாடையும் தரித்திருந்தாள். தண்ணீர்ப் பானையைப் பார்த்து இட்டுக்கொண்ட ஒரு குங்குமப்பொட்டு அவள் நெற்றியில் விளக்கம் பெற்றிருந்தது. கிணற்றுக் கப்பால் கூப்பிடு தூரத்தில் உள்ள ஒரு குடிசையை நோக்கி அவள் அவஸரமாகப் போவதைப் பார்த்தால், சீக்ரம் தண்ணீர்ப்பானையை இறக்கிவைத்துப் பழையது சாப்பிட்டுத் தானும் வேடிக்கை பார்க்க வருவதற்கு அவஸரப்படுவதுபோல் இருந்தது. குடிசையின் வெளியில் மறைவாகக் கட்டியிருந்த தட்டியில் இப்பால் பத்தடி தூரத்திலே போகும்போது, இடப்பக்கத்தில் புழுதி பறப்பதைப் பார்த்து, சிறிது தூரத்திலே குதிரைகள் படபடவென்று ஓடிவருகிற குளம்படி ஓசையைக் கேட்டு, அரசன் இந்த வழியாக வருகிறானோ என்று நினைத்து, மெல்ல அடியெடுத்து வைக்கலானாள். இவள் தட்டியை ஸமீபிக்கையில், "குடமேந்திச் செல்லுங் குணவதியே! உன் தகப்பனார் எங்கே? என்கிற சப்தம் அவள் காதில் விழுந்தது.
"வீட்டில் இருக்கிறார்" என்று சொல்லி, குணவதி "ஐயா, அவரை அழைக்கட்டுமா?" என்று கேட்டாள்.
"நானே வருகிறேன். ஐயா பெரியவரே, க்ஷேமந்தானா? எப்படி இருக்கிறீர்?" என்று கேட்டுக்கொண்டே போய், குடிசையின் ஒட்டுத் திண்ணையின் மீது உட்கார்ந்த அரசனைக் கண்டு, அந்தக் கன்னிகையின் தகப்பனான கிழவன், இடக்கையின் விரல்களைக் கண்களின்மேல் விரித்துவைத்து உற்றுப்பார்த்து, "ஐயா மகாராஜாவா!" என்று விதிர்விதிர்த்து, முழங்காலொடு முழங்கால் முட்டக் கைகள் நடுங்கத் தலை தள்ளாடச் சுவரில் சற்றுச் சார்ந்து நிதானமாக நின்றுகொண்டு, "மகாப்பிரபு! அடியேனை வருக என்று கட்டளையிட்டால், தலையால் நடந்து வரமாட்டேனா? இந்தக் குடிசை பண்ணின பாக்யமே பாக்யம். என்ன கார்யம் சொல்லுங்கள். காலாலிட்டதைக் கையாலே செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்" என நாக்குளறி உரைத்தான்.
அரசன். - உம்முடைய பெண்ணை விவாகம் பண்ணிக் கொள்ள விரும்பியிருக்கிறேன்.
கிழவன். - மஹாராஜா, இதென்ன வேடிக்கை! உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு தூரம்? உங்கள் அடிமைக்கும் அடிமையல்லவோ நான். செய்யவேண்டிய கார்யத்தைக் கட்டளையிடுங்கள்.
அரசன். - நான் என்னவோ விளையாட்டாகவந்தேனென்று எண்ணவேண்டாம். என் உள்ளத்தில் உள்ளதைக் கள்ளமின்றி உரைத்தேன். என்ன சொல்லுகிறீர்?
கிழவன். - அடியேனுடைய பெண்பிள்ளையை மஹாராஜாவே கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பினால், இதற்கு யார் தான் தடைசொல்வர்?
உடனே அரசன், "ஏ குணவதீ! இப்படி எதிரில் வந்து நில். உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பி, உன்னுடைய தகப்பனார் ஸம்மதியைக் கேட்டேன். அவரும் ஸம்மதித்துவிட்டார். உன் உள்ளக் கருத்து என்ன?" என்றுகேட்டான்.
ஒன்றும் உரைக்க வகையறியாமல் பிரமைகொண்ட அந்தக் கன்னிகை, தலைகுனிந்து நின்று, "எம்பெருமானே, திருவுள்ளம்" என்று மெல்லெனச் சொல்லினாள்.
அரசன். - எனக்குச் செய்யவேண்டியா உபசாரங்களை என் மனம் உவக்குமாறு செய்வாயா?
குணவதி. - அப்படியே செய்வேன்.
அரசன். - என் சொல் தவறாமல் வணக்கமாக இருப்பாயா?
குணவதி. - இருப்பேன்.
அரசன். - நான் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் பொறுத்திருப்பாயா?
குணவதி. -பொறுத்திருப்பேன்.
இந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டு, தான் கொண்டுவந்த ஆடையாபரணங்களால் அவளை அலங்காரம் செய்து பல்லாக்கில் ஏற்றித் திரையிட்டான்.
இதற்குள் குடிசையின் வெளியில் திரள் திரளாய் வந்து நெருங்கிய குடிகளைப் பார்த்து, "ஓ என் குடிகளே! இந்த குணவதியை மனைவியாகக் கொள்கிறேன். இதோ அரமனைபோய்ச் சேர்ந்ததும் பாணிக்ரஹணம் செய்துகொள்வேன். எல்லாரும் வாருங்கள்" என்றுசொல்லிப் போய்விட்டாள்.
பின்தொடர்தலான குடிகளில் ஒருவன், "கடைசியாக அரசன் வழிக்கு வந்துவிட்டான். இனி நமக்குக் குறை ஒன்றும் இல்லை" என்றான். அதைக் கேட்ட ஒருவன், "இதற்குள் ஆய்விட்டதா. அரசனுக்கு ஸீமந்தமாகிப் பிள்ளை பிறந்த பிறகு அல்லவோ நம்முடைய குறை முடிந்ததாகும்" என்றான். பக்கத்தில் இருந்த ஒருவன், "முதலுக்கே மோசமாக இருந்ததுபோய் அந்தமட்டில் கல்யாணம் கெட்டியாயிற்று. இனிக் குழந்தைக்கு என்ன குறை! அப்புறம் தெய்வ ஸங்கல்பம் எப்படியோ?" என்றான். இன்னொருவன், "எல்லாம் மெய்தான். தேடித்தேடி அந்தத் தாண்டவராயப் பிள்ளையின் பெண்தானா. பெண் என்று கட்டிக்கொண்டால், மாமியார் வீட்டுக்குப் போக, இரண்டு வேளை விருந்துண்ண, மைத்துனருடனே விளையாட, என்னவாகிலும் உண்டா? அந்தப் பெண்ணுக்குக் கீரைமணிப் பதக்கத்துக்குத்தானும் வழியில்லை. அவர்கள் பாவம் அன்றாடம் கைவேலை செய்து பிழைப்பவர்கள். எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள்! எத்தனை ப்ரபுக்கள் இருக்கிறார்கள். இந்த அரசனுடைய நாவசைந்தால் நாடசையாதா? இவன் ஒரு வார்த்தை சொன்னால், நானோ நீயோ என்று எத்தனை பேர் மேல்விழுந்து தங்கள் தங்கள் பெண்ணைக் கொடுக்க வருவார்கள்" என்றான்.
வேறொருவன், "என்ன ஐயா பைத்யமா. நடந்துபோன கார்யத்துக்கு இனி மேல் என்ன செய்யலாம். 'போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்' அல்லவோ?" என்றான். மற்றொருவன் "ப்ராப்தி எப்படியோ அப்படித்தான் முடியும். நாம் வீணாகப் பேசுவதில் என்ன பலன்?" என்றான். "மெய்தான் மெய்தான். அரசனுடைய மனோபாவம் என்னவோ? எவருக்குத் தெரியும்?" என்றான் பின்னொருவன். இதையெல்லாங் கேட்ட ஒரு வயோதிகர், "இப்பொழுது கொண்டதற்குத்தான் என்ன? பெண்களைக் கொள்வதில் அரசர்கள் தங்கள் இனத்திலேயே கொள்ளவேண்டும் என்கிற நியதியில்லை. அல்லாமலும், 'ஆரறிவார் நல்லாள் பிறக்குங் குடி' என்று சொல்லியிருக்கிறது. குலத்தில் என்ன இருக்கிறது? நலமொன்றே வேண்டும். பணம் இருந்து என்ன? குணம் ஒன்று தானே அவசியம். ஏதோ ஸம்ஸாரத்துக்கு யோக்கியமாக இருப்பதுதான் முக்யம்" என்றார். இவ்விதம் அவரவர்கள் பேசிக்கொண்டு போயினர்.
III
கல்யாணம் முடிந்தபின் சில நாள் கழித்து, வஸந்த மண்டபச் சிங்காரத் தோட்டத்துக்குப் பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு அரசன் போனான். அங்கே உல்லாஸமாய்ச் சிங்காரக் காட்சிகளைக் காட்டிக்கொண்டு வருகையில், "குணவதீ! குயிலினம் கூவுவது கேளாய், இனியவுன் வாயில் மழலையே போலும்" என்று அரசன் கூற, குணவதி, "நாதரே! தேவரீர் நாதமே போல, நாதம் செய்யும் ஓதநீர்ச் சங்கம், காணீர் குளத்தின் கரையிலே காணீர்" என்றனள். அரசன், "உன்றன்
இடையே ஒத்த வஞ்சிக்கொடி. சென்று சென்று செடிகளின் மீது, தாவித் தாவிப் படர்வது காணாய்" என்றான். குணவதி, "உங்கள் நேத்திரம் போன்ற பங்கயம், அந்தக் குளத்தில் அரசரே காணீர்" என்றாள். அப்பால் அரசன், "என் கண்ணதனிலுன் பாவைபோல, அக்கமலத்தில் அன்னம் காணாய்" என, குணவதி, "அதோ அந்த மலையின் மீது கவிந்திருக்கும் கார்மேகங்கள், கட்டிலில் தங்களைக் கண்டாற் போலும்" என்றனள். அதன்மேல், "மெய்யே அந்த மேகத்தினிடத்தில், மின்னலேயன்றோ என்னிடம் நீயும்" என்றான் அரசன். அதைக் கேட்டுக் குணவதி, "உங்களோடு வாதாட என்னால் ஆகாது. வாயும் இளைத்தது. காலும் ஓய்ந்தது 'என, அரசன் "ஆனால் கண்ணே வாராய் இந்த மாதவிப் பந்தலில் மரகத மேடையில் இருந்து இளைப்பாறுவோம்" என்றான்.
குணவதி அரசன் தொடையில் தலைவைத்து, "மந்த மாருதம் வீசுகின்றது. உளம் களிகொண்டேன். உரைப்பது அறியேன்" என்றுரைத்துச் சற்றுநேரத்தில் உறங்கி விட்டாள்.
தன் மடியிலே தலைசாய்த்து அயர்ந்துறங்கும் குணவதியைப் பார்த்து அரசன் சிந்திப்பான்: இவள் 'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி' என்பதற்கு உதாரணமாயிருக்கிறாள். என்சொல் தவறாத கற்பினையும் உடையாள். பர்த்தாவுக் கேற்ற பதிவிரதா சிரோமணி. இனி எத்தாலும் இவளோடு கூடிவாழக் குறையில்லை. "கொக்கென்று நினைத்தையோ கொங்கணவா' என்றவளும், 'பொழுது விடியாமலே ஒழிக' என்றவளும், இவளுக்கு இணையாவரோ? நான் பாணிக்ரஹணம் செய்யும்போது இவளுக்கு அருந்ததியைக் காட்டினேனே. நானும் இவளும் முதல் யுகத்தில் பிறந்திருந்தால், வசிட்ட முனிவன் இவளையே அருந்ததிக்குக் காட்டியிருப்பான். இப்படிப்பட்ட கற்பலங்காரி எனக்கு மனைவியாக நான் பூர்வத்தில் எவ்வகைத் தவம் செய்தேனோ. 'ஆன குடிக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்' என்பார்கள்; இவள் வயிற்றில் ஒரு பிள்ளையும் ஒரு பெண்ணும் பிறந்தால் போதும். இந்திரன் பதவியும் என் பதவிக்கு ஈடாகாது. என் வீடு பரமபதமேயாகும். ஆயினும் நவரத்னங்களைத் தானும் கடைச்சல் பிடித்தன்றோ ஆபரணங்களில் அழுத்துவர். இவளுடைய கற்பைக் கடைமுறையாகப் பரிசோதித்து, நல்வகையால் நாடறியச் செய்து, பின் அமைந்த மனத்துடனே இன்புற்றிருப்பேன் -
அசைகிறாள். கண்ணிமை திறக்கின்றாள்.
அரசன். - காற்று இசைவாய் இருக்கிறதோ? நன்றாய்த் தூங்கினையே.
குணவதி. - நாயகரே, ஒரு கனாக்கண்டு விழித்துக்கொண்டேன்.
அரசன். - கனவா கண்டாய்? கண்ட கனவு என்ன?
குணவதி. - நான் ஒரு மல்லிகைக்கொடி வளர்த்து வந்தேன். அதில் முன்னே ஓர் அரும்பு மலர்ந்தது. மறுபடியும் ஒன்று மலர்ந்தது. இரண்டையும் எவரோ என் கண்ணெதிரில் பறித்துக்கொண்டு போயினர். வெகுவாய் வருந்தினேன். மீண்டும் அம்மலர் இரண்டும் என்னிடம் வந்துசேரக் கண்டு களிப்புற்றேன்.
அரசன்.- மலர் இரண்டும் மீண்டும் உன்னிடம் வந்து சேர்ந்தமையால், தீமை ஒன்றும் உண்டாகாது.
இவ்விதம் இரண்டு மாதம் இன்ப நுகர்ந்து வேடிக்கையாகக் காலங்கழித்து வந்தனர். குணவதி கர்ப்பவதி ஆனாள்.
குணவதி கர்ப்பமடைந்த எட்டா மாதம் ஸீமந்தம் ஸம்ப்ரமமாக நடந்தது. பேரூரில் உள்ள குடிகள் அனைவரும் தங்கள் வீட்டிலே ஸீமந்தம் நடப்பது போல் அதிக ஆனந்தம் அடைந்தனர். வயதில் முதிர்ந்த பெரியோர்கள் தாமும், "அரசனுக்கு இனி இரண்டு மாதத்தில் பிறக்கப்போகிற குழந்தை ஆணோ பெண்ணோ?" என்று ஒருவரோடொருவர் பந்தயம் போட்டுக் கொண்டனர். சிலர் ஜோஸ்யரிடம் போய், "அரசனுக்கு ஆண் குழந்தை பிறக்குமா பாருங்கள்" என்று கேட்டார்கள். சிலர், "அரசனுக்கு ஆண் பிள்ளை பிறந்தால் பிள்ளையாருக்கு இருபது தேங்காய் உடைக்கிறேன். ஒரு வீசை கர்ப்பூரம் கொளுத்துகிறேன்" என்று ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டார்கள். சில பெண்பிள்ளைகள் குறி சொல்லுகிறவரிடம் போய், "நம்முடைய அரசி பிள்ளை பெறுவாளா?" என்று குறி கேட்டார்கள். சிலர், "நம்முடைய ப்ரார்த்தனை வீண் போகுமா. ராஜா தர்மராஜா. அவன் பிள்ளையே பெறுவான்" என்பார்கள்.
அரசனும், "ஆணாய்ப் பிறந்தால் நலம். குடிகளுடைய எண்ணம் நிறைவேறும். பெண்ணாய்ப் பிறந்தாலும் நம்மால் ஆவதென்ன? நாம் ஒன்று எண்ணினால் தெய்வம் ஒன்று எண்ணுகிறது உண்டு. இதெல்லாம் வீணெண்ணம்" என்று எண்ணியிருந்தான். பத்து மாதம் பூர்த்தியாயிற்று. ப்ரஸவகாலம் ஸமீபித்துவிட்டது. ஒருநாள் அரசன் தன்னுடைய அறையிலிருந்து சுருட்டுப் பிடித்துக்கொண்டே ஒரு அபிநவ கதையை வாசித்திருந்தான். இருக்கும்போது, "அடா சேவகா, உள்ளே அந்தப் புரத்தில் ஏதோ அரவம் கேட்கிறது. அதென்னவென்று அறிந்துவா" என்றனுப்பி, "குணவதி கருப்ப வேதனை படுகிறாளோ" என்று நினைத்திருக்கையில், சேவகன் ஓடி வந்து, "அரசியார் இடுப்புநோய் படுகிறார்கள்" என்று சொன்னான். அதைக் கேட்டதும் அரசன், "மருத்துவச்சி மருத்துவர் முதலானவர்கள் வந்திருக்கிறார்களா? என்று கேட்டான். சேவகன், "மஹாப்ரபு, எல்லாம் ஸித்தமாக இருக்கிறது" என்றான்.
சற்று நேரம் பொறுத்து, "அடா, இப்பொழுது ஸந்தடி ஒன்றும் கேட்கவில்லை. சீக்கிரம் போய் என்ன ஸங்கதியென்று அறிந்துவா. வந்தாயா - " என்றான். சேவகன் ஓடிப்போய் ஓடி வந்து "ஸ்வாமீ, அரசியார் கருவுயிர்த்தனர்" என்று சொன்னான்.
அரசன், "அப்படியா? இப்பொழுது ஸூர்யோ தயமாய் ஒரு நாழிகை ஆகிறது. இன்றைக் கென்ன, வெள்ளிக்கிழமை அல்லவா. ஆண்பிள்ளைய, பெண்பிள்ளையா தெரியுமா?" என்றுகேட்க, சேவகன் "பெண்பிள்ளை ஸ்வாமீ" என்றான். அரசன், "இப்படி வா, இந்த மணிவடத்தைப் பெற்றுக்கொள். ஸந்தோஷச் செய்தி சொன்னதற்கு வெகுமானம் இது. சீக்கிரம் போய்ப் புரோகிதரை அழைத்துவா" என்று அவனை அனுப்பினான்.
அபிநவ கதையைப் பக்கத்தில் வைத்துவிட்டு அரசன் எண்ணுவானாயினா. "பிள்ளையாகப் பிறவாமல் போயிற்றே. குடிகளுடைய எண்ணம் ஈடேறியிருக்குமே. இதற்கு நாம் என்ன செய்யலாம்? கடவுள் திருவுள்ளம் எவருக்குத் தெரியும்? இனிமேல் பிள்ளை பிறந்தால் ஆகாதா? பட்டங்கட்டிக் கொள்ளப் பிள்ளையில்லாத தேசங்களில் பெண்மணிகளும் பட்டங் கட்டிக்கொண்டு அரசாட்சி செய்யவில்லையா? முதற்பேறு பெண்ணாகப் பிறப்பது மங்கலகரம் என்றும், அதிர்ஷ்டத்துக்கு ஹேது என்றும் சொல்வார்கள். மேலும் 'பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்பார்கள். பெண்களே எப்போதும் தாய் தந்தையரிடத்தில் தளராத அன்புடையவர்கள். 'புத்ர சதகுணம் புத்ரி'. சாஸ்த்ராப்யாஸம் செய்வித்துச் செவ்வையாக வளர்த்தால், சில பெண்கள் ஆண்களைக்காட்டிலும் அதிநிபுண ஸாமர்த்யர்களாக இருப்பதைக் கண்டும் கேட்டும் இருக்கிறோமே. இங்க்லண்டில் அரசு செய்த எலிஜபெத் ஸாமான்யமானவளா? தனது தேசத்தை மஹா ஸாமர்த்யத்துடன் எவ்வளவு பத்ரமாய்ப் பரிபாலித்துவந்தாள். ஆசியாவின் வட மேற்கில் பால்மைராவில் ஏகசக்ராதிபத்யம் பண்ணியிருந்த ஜீநோபியா என்பவள், அநேக அரசருடைய வீரதீர பராக்ரம மெல்லாம் ஒருங்கே அமையப்பெற்று ராஜ்ய தந்த்ரங்களில் இணையற்றவளாய் ஜயசீலையாய் ராஜரத்னமாக விளங்கவில்லையா? இது கிடக்கட்டும். இவளூம் இன்று வெள்ளிக்கிழமை ஸூர்யோதயத்துக் கப்புறம் சந்த்ரோதயமானாற்போல் தோன்றினாள். லக்ஷ்மியின் அம்சமாக இருப்பாள் என்பதில் என்ன தடை. இதோ புரோகிதர் வருகிறார்."
புரோகிதர் வந்தவுடனே, "ஐயா, புரோகிதரே, இங்கே என்ன விசேஷம்!" என்று அரசன் கேட்க, புரோகிதர், "மஹாராஜா, தீர்க்காயுஷ்யமஸ்து. குழந்தை பிறந்ததென்று பக்ஷி பேசுகின்றது" என்று சொல்லி, "என்ன குழந்தை?" என்று கேட்பதற்குள், "பெண் குழந்தை துரையே" என்றும் சொன்னார். அரசன், "ஸரி, குழந்தைக்கு ஜாதகம் குறித்து வாரும்" என்றான். புரோகிதரும், "மஹாப்ரபு, அப்படியே செய்து வருகிறேன்" என்று சொல்லிச் செலவுபெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அப்பால் அரசன், மந்த்ரியை அழைத்து, "நமக்கு ஒரு புத்ரி பிறந்தாள். இவ்வருஷம் குடிகளுக்கு இறைதவிர்க்க்க்க. தேவாலயங்களையும் தரும சத்திரங்களையும் புதுப்பிக்க. ஏழைகளுக்கு உண்டியும் உடையும் உதவுக. நமது ஸமஸ்தான வித்வான்களுக்குச் சால்வையும் பொருளும் தருக" எனக் கட்டளையிட்டான்.
நற்றாயும் செவிலித்தாயரும் தாலாட்டிச் சீராட்டி வளர்ப்புக் குழந்தையும், செங்கீரையாடியும், சப்பாணி கொட்டியும், மாதா பிதாக்கள் மனங்களிப்ப முத்தந்தந்தும், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தது. வா என்றால் தத்தித் தடுமாறி நடந்து வரும் தளர் நடைப் பருவம் அடைந்தது. இதையெல்லாம் கண்ட அரச தம்பதிகள் ஆநந்த பரவச மாயினர்.
IV
"கல்யாணமாகி மூன்று வருஷம் ஆகிறது. எந்த விதத்திலாகிலும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கலாம் என்றால், இவளிடத்தில் ஒரு குற்றத்தையும் காண்பது அரிதாக இருக்கின்றது. ஆனாலும், நான் எண்ணியிருப்பதைச் செய்யாமல் விடேன். வேறு விதமாக ஒரு குற்றமும் காண முடியாமையால், இனி இவளைப் பலவாறு இன்னல்படுத்திப் பார்ப்பேன். அதற்கும் மனங்கலங்காமல் முன்போலவே என்னிடம் அமைதியாய் அன்புடையவளாக இருப்பின், அதுவே போதும். அப்போதுதான் எனக்கு த்ருப்தி உண்டாகும்" என்று ஒரு நாள் சிந்தித்துக்கொண்டு, உண்ணப்போகாமல் ஒரு கட்டிலின்மேல் அரசன் படுத்துக்கொண்டிருந்தான்.
ஆட்கள் அவனை அழைக்க அஞ்சினர். அதன்மேல் அரசியே அரசனை அடைந்து, "அன்ன பானீயங்கள் எல்லாம் ஆயத்தமாக இருக்கின்றன. ஸ்நாநம் செய்ய எழுந்திருக்கலாமே. பொழுதாகின்றதே. என்ன முகம் ஏதோ வாட்டமுற்றிருப்பதாகத் தோன்றுகிறதே" என்றாள். "என்ன போ, நம்முடைய குழந்தை மனோன்மணிக்கு இரண்டு வயது ஆகிறது. இன்னும் குடிகளுடைய வெறுப்பு அடங்கவில்லை. எந்நேரமும் 'கொண்டதே ஓர் ஏழைப் பெண். அவள் வயிற்றில் பிறந்ததும் ஒரு பெண்பிள்ளை' என முணுமுணுப்பதும் முறுமுறுப்பதுமாய் இருக்கின்றனராம். என்ன கலகம் செய்வார்களோ என்று அஞ்சுகிறேன்" என்ற அரசன் வார்த்தையைக் கேட்டு, குணவதி, "தாங்கள், கௌரவத்துக்கும் தேச நன்மைக்கும் பங்கம் வராதபடி, அடியாளை என்ன செய்ய வேண்டினாலும் செய்துகொள்ளுங்கள். அரசபதவி அடியாளுக்கு அடுக்குமா? என் செய்வேன்" என்று சாந்தமாகவே பேசினாள். அதைக் கேட்ட அரசன், "பாவம், நீ என்ன செய்வாய்? என்னைத்தான் நான் பழித்துக்கொள்ளவேண்டும். எவரை நோவேன்? இருக்கிற நோக்கத்தைப் பார்த்தால், ஒன்று குழந்தைக்காகிலும் ஒரு வழி தேடவேண்டும். அல்லது உன்னையாகிலும் பிரித்தல் வேண்டும். வேறு பரிகாரம் இல்லை" என்று சொன்னான். குணவதியும், "மெய்தான்" என்றாள். அரசன் தனக்குள்ளே, "அடடா இதற்கும் இவள் மனம் சலிக்கவில்லை. முகம் வாடுகின்றாளுமில்லை. பாவம், வயிறு நிறைந்த கர்ப்பிணி. இவளுடைய கற்பு எதற்கும் கலங்காமல் கல்போல் உறுதியாக இருக்கிறது" என்று நினைத்துக் கொண்டே அமுதுசெய்யப்போனான்.
ஒருவாரம் கழிந்தபிறகு, ஒருநாள் மாலையில் அந்தப் புரத்தில் தொட்டிலில் உறங்கியிருந்த குழந்தைக்குச் சாந்திட்டு மையிட்டு, அரசி தானும் கூந்தலை முடித்துக் கொண்டையிட்டு அலங்காரம் செய்துகொண்டிருந்தாள். அப்போது ராஜஸேவகன், ஸந்தடி பண்ணாமல் அந்தப்புரம் சென்றடைந்து, "அம்மா, அரசியாரே! அடியேன் ராஜஸேவகன். ரா - ராஜா தங்களிடம் ஒரு வே - வே - வேலையாக அனுப்பினார்" என்று வாய் குளறினான்.
குணவதி. - ராஜாவா! என்ன என்ன?
ஸேவகன். - மற்றொன்றுமில்லை. அம்மணி கு - குழந்தே -
குணவதி. - குழந்தே, என்ன? குழந்தையை எடுத்துவரச் சொன்னாரா? உனக்கென்ன தெத்துவாயா?
ஸேவகன். - இல்லையம்மா, இதோ சொல்லுகிறேன். ராஜா வந்து, கு - குழந்தையெ?
குணவதி. - குழந்தையை அப்புறம் என்ன? என்ன ஐயா, ராஜகார்யமாக வந்திருக்கிறாய்; பயப்படாதே. எனையா அப்படிப் பேய்விழி விழிக்கிறாய்?"
ஸேவகன். - இல்லையம்மா, வந்து ராஜா வானவர் குழந்தையெ, - அப்புறம் வந்து.
குணவதி. - (நகைத்துக் கொண்டே) எப்புறம் வந்து? என்ன ஐயா இவ்வளவு தாமஸமா? அப்புறம் ராஜா கோபிக்கப்போகிறார்.
ஸேவகன். - ராஜா குழந்தையைக் கொண்டுபோய் - "
குணவதி தனக்குள்ளே, "ஐயோ, ஐயோ, இவன் முகம் குனிந்து நிற்கிறான். அப்புறம் பேசமாட்டாமல் மரம்போல நிற்கிறான். குழந்தையைக் கொண்டுபோய் என்ன செய்யச் சொன்னாரோ எம்பெருமான்? ஒன்றும் தெரியவில்லையே" என்று சிந்தித்து, " அம்மவோ, குழந்தாய்! என் கண்மணி! சிரோமணி! சிந்தாமணி! மனோன்மணியே!" (எடுத்து மார்போடணைத்து) "உன் தலையில் என்ன புள்ளி போட்டிருக்கிறதோ? ஐயோ! என்ன செய்வேன்? 'குழந்தைக்கு ஏதாகிலும் ஒரு வழி தேடவேண்டும்' என்று, அன்று சொல்லினா னல்லவா? என்ன வழி தேடுவாரோ? ஒருவேளை குழந்தையைக் கொல்லும்படி விதித்தாரோ?" என்று பதைபதைத்தாள். மறுபடியும், "இவனா உள்ளதை உரைக்காமல் பேசமுடியாமல் நாக்குத் தடுமாறித் தத்தளிக்கிறான்.
என்ன செய்வேன்? அப்பா, சேவகா, இந்தா! குழந்தை தூங்குகிறது. அதை எழுப்பாமல் மெல்ல எடுத்துக்கொண்டு போ. கொண்டுபோ - ஐயோ என்னமாய்க் கொடுப்பேன். என் கண்ணே (முத்தம்), என் ரத்னமே, மாணிக்கமே (முத்தம்), - இந்தா இரு - இன்னொருதரம் பார்க்கட்டும். அப்பா, அரசர் கட்டளையிட்டாலொழிய இந்தப் பச்சைப் பிள்ளையை நாய் நரியின் வாயில் வைக்காதே. பத்ரம். அப்பா, பத்ரம். காக்கை கழுகு ஏதாகிலும் குத்தப்போகிறது' என்று அலறினாள்.
ஸேவகன், "அதிக ஜாக்ரதையுடன் எடுத்துக்கொண்டு போகிறேன் அம்மா" என்று விடைபெற்றுக்கொண்டு, "ஐயோ பாவம். பெற்ற மனம் எவ்விதமாய்ப் பற்றியெரிகிறதோ. ஆனாலும் இந்த அரசன் மஹாமர்க்கடமுஷ்டி. மனம் போனதே போக்கா! சீச்சீ, சுத்த பித்தன். சொ சொ, அவள் மனம் எப்படித் துடிக்கிறதோ? நாம் என்ன செய்யலாம். இவனுடைய ஆக்கினை சுக்கிரீவாக்கினைதானே. ராஜாக்கினைக்கு எதிராக்கினை ஏது? நாம் தடுத்துப் பேச முடியுமா?" என்றெண்ணிக்கொண்டு, அரசன் கொடுத்த கடிதத்துடனே அரமனைத் தோட்டத்தில் ஒரு புதரின் மறைவிலிருந்த நுழை வாயிலின் வழியாக இரவில் இருட்டிலே எவர்க்கும் தெரியாமல் போய்விட்டான்.
இரண்டாவது பிறந்த ஆண்பிள்ளையையும் அவளை விட்டுப் பிரித்து முன்போலவே செய்வித்தான். அவள் அதற்கும் ஈடுகொடுத்துப் பொறுத்துக்கொண்டிருந்தாள். ஆஹா! அவள் பொறுமையே பொறுமை என்னவாவது வெறுத்துக் கொண்டாளா? இல்லை. கணவனையாவது பழித்தாளா? அதுவும் இல்லை. தெய்வத்தை யானாலும் தூஷித்தாளா? அது தானும் இல்லை. தன் விதியையாவது நொந்துகொண்டாளா? எதுவும் இல்லை. எல்லாம் எம்பெருமான் அருள் என்றே இருந்தாள்.
V
இதையெல்லாம் கண்ட அரசன், "இன்னும் உறுதியாக ஓர் முறை பரீக்ஷித்துவிடுகிறேன். அதற்கும் சலிப்பாள் என்று எண்ணவில்லை, பார்ப்போம்" என நினைத்து, குணவதியை அழைத்து, "நம்முடைய குழந்தைகள்தான் - அது கிடக்கட்டும். போன ஜுரத்தைப் புளியிட்டழைப்பானேன். இனி ஆகவேண்டிய கார்யத்தை யல்லவோ யோசிக்க வேண்டும்" என்றான்.
குணவதியும் "ஆம், மெய்தான்" என்றாள்.
அரசன். - என்ன செய்வேன்? என்னென்று சொல்வேன்? குடிகள் இன்னும் கறுவிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
குணவதி. - அருமை மக்களைத்தானும் குடிகளுக்காகப் பறிகொடுத்தேன். இனி அதிலும் அருமையானது உங்களை விட வேறு எனக்கு என்ன இருக்கிறது? உங்கள் மனம் நிம்மதியாய் த்ருப்தி அடைந்திருக்க என்ன வேண்டுமானாலும் அப்படியே செய்ய ஸித்தமாக இருக்கிறேன்.
அரசன். - நீ தாழ்வான குலத்தாள் ஆதலால், எனக்கு இப்படிப்பட்ட அபவாதம்; வராத சொட்டெல்லாம் வருகிறது.
குணவதி. - இழிகுலத்தில் பிறந்தது என் குற்றம் அல்லவே. அதற்கு நான் என்ன செய்வேன்? அதை ஒழிக்க ஓர் உபாயமும் எனக்குத் தோன்றவில்லையே, பிராணநாதரே! தாங்கள் என்ன மனோபாவத்துடன் என்னைப் பெண்டாகக் கொண்டீர்களோ? அதுவும் விளங்கவில்லை. தாங்கள் கட்டளையிடுகிறதுபோல் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அரசன். - கட்டளை என்ன இருக்கிறது? நீ பிறந்தகம் தேடிக்கொண்டு போகவேண்டும்.
குணவதி. - தங்கள் திருவுள்ளம்.
அரசன். - உன்னுடைய சீதனப் பொருள்களை யெல்லாம் எடுத்துக்கொள்.
குணவதி. - கெட்டேன். நான் என்ன சீதனம் கொண்டு வந்தேன். நீங்கள் கொண்டுவந்த உடையை உடுத்துத் தானே என்னைக் கொண்டுவந்தீர்.
அரசன். - ஆனால் நான் கொடுத்த ஆடையாபரணங்களை யெல்லாம் களைந்து வைத்துவிடு.
குணவதி. - ஆபரணங்களை யெல்லாம் இதோ வைத்து விடுகிறேன். மேலாடைகளையும் இதோ வைத்தேன். தேவரீர்க்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்த இந்த மாம்ஸச் சுமையைத் துகிலுரிகோலமாய் அனுப்பினாலும் எனக்கு ஸம்மதமே. ஆயினும் அடியேன் தங்களிடம் வருகையில் கன்னிகையாக வந்தேன். மீண்டும் கன்னிகையாக மீள்வதில்லையே. ஆனதுபற்றி ஒரு கந்தலான புடவை மாத்ரம் கொடுத்தருளினால், மானபங்கம் இன்றி அதைச் சுற்றிக்கொண்டு போகிறேன்.
அந்த வேண்டுகோளுக் கிசைத்து அரசன் கொடுத்த ஒரு பழம் புடவையைத் தரித்துக்கொண்டு வந்த குணவதியைப் பார்த்து, அவளுடைய தகப்பன், "இதென்ன கோலம் அம்மா, குணவதி! என்ன ஸங்கதி? ஏன் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருக்கிறாய்? செய்திகளையெல்லாம் நான் அறிய விவரமாய்ச் சொல். அழாதே" என்று கேட்க, குணவதியும், "அப்பா, விசேஷம் ஒன்றும் இல்லை. நான் இழிந்த குலத்தில் பிறந்தவளென்று ஊரினர் யாவரும் கறுவுகின்றார்களாம். அவர்கள் ஏதாவது கலகம் பண்ணினால் நாட்டுக்கு அநர்த்தம் வரப்போகிற தென்று ராஜா அவர்கள் அடியேனைப் பிறந்தகமே போய்ச் சேரும்படி கட்டளையிட்டார். குழந்தைகள் ஸங்கதிதான் உங்களுக்குத் தெரியுமே. குழந்தைகள் போனதும் பெரிதல்ல. அவருடைய அன்புக்குப் பாத்ரமாக இருப்பதே போதுமென்று இருந்தேன். அதையும் இழக்கலாயிற்றே என்பதுதான் துக்கமாயிருக்கின்றது. வேறொன்றும் இல்லை" என்றுரைத்தாள்.
கிழவன். - அதிலும் அரசர்கள் மோந்துகொள்வதுபோல் கடித்துக்கொள்ளுகிறவர்கள். அரசனும் அரவும் நெரும்பும் ஸரி என்பார்கள். ராஜாக்களுக்கெல்லாம் முன்னாலோசனை கிடையாது. மனதில் நினைத்ததைச் செய்துவிட்டால்,பின் அதனால் யாருக்கு நஷ்டம் வருவதானாலும், தங்களுக்குக் கஷ்டம் வருவதானாலும், அதெல்லாம் அவர்களுக்குப் பெரிதல்ல. அவர்கள் இட்டதே சட்டம்.
குணவதி. - இவர் அப்படிப்பட்டவரும் அல்லர். ஏதோ என்னுடைய கெட்ட காலமே இதற்குக் காரணமாக இருக்கும். க்ரஹசாரம் யாரையும் விடுகிறதில்லை.
அப்போது அந்தக் கிழவன், "இந்தப் பாவி இப்படிச் செய்தாலும் செய்வானென்றே உன்னுடைய பழைய வஸ்த்ரங்களையெல்லாம் பெட்டியில் பத்ரமாய் வைத்திருக்கிறேன். அவைகளை எடுத்துக் கட்டிக்கொள் என்றான்.
குணவதியும் அப்படியே செய்தாள். பின்பு கிழவன், "இங்கேதான் உனக்கு என்ன குறைவு? பகவான் ஏதோ அரைவயிறு கால் வயிறானாலும் படியளக்கிறான். நான் ஒன்றும் இல்லாத தரித்ரனாய்ப் போய்விடவில்லை. நீ இங்கே இருப்பது எனக்கும் இந்தத் தள்ளாத காலத்தில் உதவியாக இருக்கும்" என்று ஆறுதல் தேறுதல் சொல்லினான். குணவதியும், "மெய்தான் பொழுதாகிறது. சாவியைத் தாருங்கள். தண்ணீர் கொண்டு வரவேண்டும். சமையல் செய்யவேண்டுமே. விதியை வெல்ல எவரால் ஆகும்? கடவுளுடைய திருவுள்ளத்தின்படி ஆகிறது" என்று சொல்லிச் சோறு சமைக்கப் போனாள். அன்று முதல் பழையபடி வீட்டு வேலைகளை க்ரமமாகச் செய்து கொண்டு தன் பிதாவுக்குச் செய்யலான உபசாரங்களைக் குறைவறச் செய்துகொண்டிருந்தாள்.
VI
பேரூருக்குப் பதின்காத தூரத்திலே, பேரூரரசனுக்கு நண்பனான அரசன் ஒருவன், சிற்றூரிலே இருந்து அரசாண்டு வந்தான். ஒருநாள் காலையில் அவனிடம் ஒரு தூதன் ஒருவன் சென்று, "எங்கள் பேரூரரசன் கொடுத்தனுப்பிய திருமுகம் இது. இதில் கண்டுள்ளபடி தயவுசெய்ய வேண்டுமென்று எங்கள் ராஜா பிரார்த்திக்கிறார்" என்றான். குணபூஷணன் என்னும் அவ்வரசன், "உங்கள் நகரம் மூன்றுநாள் பிரயாணந்தானே. இடையில் எப்படியும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நாங்கள் வந்து சேருகிறோம். உங்கள் அரசருக்கு எங்கள் வந்தனம் சொல்லுக" என்று சொன்ன அளவில், தூதனும் மீண்டு அரசனிடம் அடைந்து அச்செய்தியை அறிவித்தான்.
இதற்கு முன்னரே ஒருநாள் பேரூர்க் குடிகளில் சிலர், அரமணையடைந்து அரசனை வணங்கி,"ஐயா, மஹாராஜாவே! பல வருஷங்களுக்கு முன்னே தாங்கள் விவாஹம் செய்து கொண்ட காலத்தில் நாங்கள் என்னென்னவெல்லாம் எண்ணியிருந்தோம். அந்த எண்ணமெல்லாம் வீணாகி மறுபடியும் ஏக்கம் கொண்டோம்" என்றார்கள்.
அரசன். - என்ன செய்யலாம். எல்லாம் ஐயனுடைய செயல்.
குடிகள். - குழந்தைகளை இத்தனை காலமாக எவ்விதம் மறந்திருக்கின்றீர்களோ? 'தொடர்ந்த மும்மல முருக்கி வெம்பவக்கடல் தொலையக், கடந்துள்ளோர்களும் கடப்பரோ மக்கண்மேற் காதல்?' இந்தப் புத்ர ரத்னங்களின் கதி இன்னதென்பதும் எவர்க்கும் தெரிந்தபாடில்லை.
அரசன். - அவரவர்கள் வந்த கூத்தை ஆடித்தானே தீர்க்க வேண்டும்.
குடிகள். - குணவதியம்மாளுடைய ஸங்கதி எங்களுக்குத் தீராத துக்கத்தைத் தருகிறது.
அரசன். - என்ன செய்வேன். அதற்காகத்தான் முன்னே உங்களைப் பெண்பார்க்கிற விஷயத்தில் தலையிட்டுக்கொள்ள வேண்டாமென்று நான் சொன்னேன். பழியோ பாவமோ, பாரம் என் தலையில் இறங்கிவிட்டது.
குடிகள். - நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கவேண்டிய கார்யத்தை யல்லவா நாடவேண்டும்.
அரசன். - நடக்கிற கார்யம் என்ன? முன்பின் பாராமல் மதிமோசம் போகும் பற்பல சிறுவர்போல் கெட்டொழிந்தேன். இது அறிவின்மையின் பயனாயிற்று. ஆகவே குணவதியைப் பிறந்தகமே போக்கினேன். மறுமணம் செய்து கொள்ளப் போகிறேன்.
குடிகள். - கடைசியில் கார்யம் இப்படியா திரும்பிவிட்டது. ஸ்வாமி, கோபிக்கவேண்டாம். 'பின்னற்காரி வந்தாலும் கொண்டைக்காரி ஆவாளா" என்பர் உலகத்தார்.
அரசன். - அந்தக் கதையெல்லாம் என்னிடத்தில் படித்துக் காட்டுவதில் பயனில்லை. அந்த ஏட்டைத் தள்ளி விடுங்கள்.
குடிகள். - இனி எதிர்மொழி ஏது? தங்கள் சித்தம். நீடுழி வாழ்க! செலவு பெற்றுக்கொள்கிறோம்.
அப்பால், சிற்றுருக்குத் தூதனைப் போக்கிய பிறகு, மந்த்ரியை அழைத்து, அரசன், "இன்றைக்கு ஐந்தாவது நாள் எனக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கும் என்று ப்ரஸித்தப்படுத்துக. சிற்றூரரசனுடைய புதல்வியைப் பாணிக்ரஹணம் செய்யப்போகிறேன். நண்பர் முதலானவர்க்கும் செய்தி தெரிவிக்க" என்றான். அப்போது மந்த்ரி, "ஸ்வாமி, அங்ஙனமே செய்கிறேன். ஒரு விண்ணப்பம் - நமது நாட்டில் கல்வி கேள்விகள் உள்ள சில பெரியோர்கள் இது கார்யத்தை வெறுக்கின்றனர்" என்ற அளவிலே, அரசன்: " சில நாளுக்கு முன் அவர்கள் என்னிடம் வந்தனர். என் முன்னிலையில் அவர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டனர். இது பெருத்த விஷயம். உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட நம்மால் ஆகுமா?" என்
வீட்டுக் கார்யத்தில் என் அநுகூலத்தையும் ஸௌகர்யத்தையும் அநுஸரித்தே என் மநோரதப்படி நான் நடப்பேன். நல்லது நீ செலவு பெற்றுக்கொள்க" என்று சொல்லி மந்த்ரியை அனுப்பிவிட்டான்.
பிறகு ஆள்களை அனுப்பிக் குணவதியை அழைத்து, "வாராய், குணவதி! நம்முடைய நகரத்தில் அதிக ஆரவாரமாயிருப்பதன் காரணம் அறிவாயே" என்று கேட்டான்.
குணவதி. - ஒருவாறு அறிவேன்.
அரசன். - நம்முடைய அரமணையில் கல்யாண கார்யத்தைத் தலைமையாக இருந்து நடத்தத்தக்க பெண்கள் எவரும் இல்லாமையால், நீ இங்கே இருந்துகொண்டு செய்வன செய்தல் வேண்டும்.குணவதியும் அதற்கிசைந்து அரமணையில் தங்கியிருந்தாள்.
கல்யாணத்துக்கென்று குறித்த நாளில், திருமணப் பந்தலில், அவரவர்களுக்கென்று அமைத்த ஆசனங்களில் அரசனுடைய நட்பரசரும் ப்ரபுக்களும் ப்ரதானிகளும் எல்லாரும் நிறைந்திருந்தனர். குடிகளில் முதன்மையானவர்கள் அனைவரும் ஒருபால் வந்து கூடியிருந்தனர். ஒரு பக்கம் திரைச்சீலைகளின் பின்னால் அரசியர் முதலான பெண்மணிகள் வந்திருந்தனர். வாழையும் கமுகும் கட்டி மல்லிகை முல்லை முதலான மாலைகள் தொங்கவிட்டுப் பனிநீர் தெளித்து அலங்கரித்த மணப்பந்தலானது அதிக அழகாய்க் கண்களைக் கவரும் காட்சியாக இருந்தது. ஒரு பக்கம் கர்னாம்ருதமாய் வாத்யக்காரர்கள் வாத்யம் வாசித்துக்கொண்டிருந்தனர். கல்யாணச் சடங்குகளை நடத்துவதற்குரிய புரோகிதர்கள் முஹூர்த்த வேளையை எதிர்பார்த்திருந்தனர்.
இவ்விதமான மஹா வைபவம் பொருந்திய கல்யாண மண்டபத்திலே, குணவதி ஒருத்திமாத்ரம், தாஸாநு தாஸையாய்ப் பழம்புடவை உடுத்து, அங்கங்கே உலாவி பெண்டிரை உபசரித்தும், விருந்து முதலானவற்றிற்கு அவசியமானவைகளை அமைக்கும்படி உத்தரவளித்தும், மணமகள் வரவை எதிர்பார்த்தும் இருந்தாள். அதைக் கண்டு, குடிகளில் தலைமைவாய்ந்த ஒருவர் அரசனை நோக்கி, "ஐயனே, ஒரு விண்ணப்பம்:- இந்தக் கார்யங்களை யெல்லாம் இவ்வளவு திறத்துடன் நடத்துகின்ற நம்முடைய குணவதியம்மாள் நல்ல ஆடையாபரணங்களை அணிந்துகொள்ளும்படி தேவரீர் அருள் செய்ய வேண்டும். பாவம்: அந்த அம்மாள் மனம் இப்போது எங்ஙனம் உள்ளே நைந்து உருகுகிறதோ" என்று அந்தரங்கமாகச் சொல்லினர். அதற்கு
அரசன், "இன்னும் சற்று நேரம் பொறுத்தல் வேண்டும்" என்று ஸமாதானம் சொல்லி விட்டு, குணவதியை அழைத்து, "எல்லாரும் வந்து சேர்ந்து விட்டார்கள்; கல்யாணச் சடங்குகள் முடிந்தவுடனே விருந்து நடக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. அதோ வருகிறாரே அரசர், தெரிகிறதா? அவருடன் வருகின்ற மங்கையைக் கண்டனையா? அவள்தான் மணமகள்" என்றுரைத்தான். "இதோ போய் எதிர்கொள்கிறேன்" என்று சொல்லிப் போகின்ற குணவதியானவள், "இவளைக் காணக் காண என் மனம் உருகாநின்றது. இவள் பின்னாலே வருகின்றவன் இவளுடைய ஸஹோதரன்போலும். அட! இதென்ன அதிசயம்? இவனைக் கண்டதும் எனக்கு மார்பு கடுத்துப் பால் சுரகின்றது" என்றெண்ணி, "வாராய் அம்மா, மணமகளே!" என்று உபசரித்து, ஆலாத்தியெடுத்து த்ருஷ்டி பரிகாரமானவைகளைச் செய்தாள். பின் மணமகளையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டுபோய் ஆசனத்தில் இருத்தினாள்.
மணமகளை எதிர்கொள்ளும் ஸங்கீத கோஷத்தில், குடிகளுள் சிலர் பலவிதமாக வார்த்தை சொல்லிக்கொண்டனர். ஒருவர்: "ஐயோ, பாவம், சக்களத்தியைக் கண்டும் குணவதி சலிக்கின்றாளா? இவளன்றோ உத்தமி! ஐயா" என்றனர். "மெய்தான், இந்த அரசன் வேளைக்கொரு குணம் உடையவனாய் இருக்கிறானே. என்ன செய்யலாம்" என்றார் அண்டையில் இருந்த ஒருவர். எதிரில் ஒரு சிறுவர், "ஆனாலும் என்ன? இந்தப் பெண்ணே அரசனுக்குப் பெண்டாய் இருக்கத்தக்கவள்" என்று சொல்ல, இன்னொருவர் "ஆமாம், எப்படியும் ராஜ கன்னிகை; பூர்ண சந்திரன் உதயமானாற்போல் இருக்கிறாள்" என்னும் அளவில், மற்றொருவர் "அது கிடக்கட்டும் ஐயா, குணவதி என்றால் இவளுக்கே தகும்; அவள் முகத்தைப் பாரும். ஏதாவது துக்கக்குறி உண்டா. ஸூர்யோதயத்தில் மலர்ந்த செந்தாமரை போன்று அவள்முகம் விளங்குவதைப் பாரும். ப்ரபஞ்ச முழுவதும் ப்ரதக்ஷிணம் பண்ணிவந்தாலும் இப்படிப்பட்ட ஸுகுணம் உடையவர்கள் கிடைப்பது அருமையினும் அருமை" என்று வியந்தனர். அதைக் கேட்டிருந்தவர், "எங்காகிலும் உண்டா தன் புருஷன் மனம் போனபடியே போகிறவள் அல்லவோ பெண்.
இந்த அரசனுக்கு இப்பொழுது தெரியாது. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் அல்லவா? இந்த இரண்டாவது மனைவி எப்படிப்பட்டவளோ? நாம் எப்படிச் சொல்லலாம். என்னவென்றாலும் குணவதி ஆகமாட்டாள் என்று உறுதியாய்ச் சொல்லமாட்டுவேன். இரும், இரும். அரசன் குணவதிக்காகத் திரும்புகிறான். என்ன செய்யப் போகிறானோ பார்ப்போம்" என்றனர். எல்லாரும் அரசனையும் குணவதியையும் கண்ட கண் இமைகொட்டாமல் பார்த்திருந்தனர்.
வாத்ய கோஷத்தைக் கையமர்த்தி நிறுத்தி, அரசன் குணவதியைப் பார்த்து, உரத்த குரலுடன், "ஏ குணவதி, மணமகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான். உடனே குணவதி, "பெருமானே, என்னென்றுரைப்பேன். அவளைப் பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும். அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அன்பு பெருகாநின்றது. அவள் முகமே போல மனமும் நிர்மலமாக இருக்கும் என நினையா நின்றேன். இவள் உமக்குப் பெறாப்பேறு என்றே தோன்றுகின்றது. ஒரு விண்ணப்பம். இவள் முதல் மனைவியைப் போன்றவ ளல்லள்: இன்னல் இடைஞ்சல் ஒன்றும் அறியாதவள்: பெருவாழ்வாய் வாழ்ந்தவள். இவளை மனம் நோகச் செய்யா திருப்பீர்கள் என்று ப்ரார்த்திக்கிறேன். பாவம்: இளந்தையாய் இருக்கிறாள்" என்றுரைத்தாள்.
அவ்வார்த்தை கேட்ட அரசன். ஆநந்தக் கண்ணீர் சொரிந்து, "குணவதி! என்னை இத்தனை வருஷமாக நீ என்னவென்று நினைத்தாயோ? ராக்ஷஸன் படுத்தாத பாடெல்லாம் உன்னைப் படுத்தினேன். குடிகளும் என்னைக் கொடியனென்றே தூஷித்திருப்பர். பொன்னையும் புடமிட்டறியவேண்டும் அல்லவா? நம்முடைய க்ஷேமத்தை நினைத்தே உன்னை இப்படியெல்லாம் நடத்தினேன். உன்னைக் கற்பலங்காரம் என்று தெளிந்தேன்" என்றுரைத்து, குணவதியை இறுகத் தழுவிக் கொண்டான்.
பின்னரும்: "இதோ, உன் துயரையெல்லாம் ஒரு விநாடியில் போக்கிவிடுகிறேன். மணமகள் என்று வந்தவள் நமது ஸீமந்த புத்ரி. அண்டையில் இருப்பவன் நமது குலக்கொழுந்து" என்றான். இதைக்கேட்ட குணவதி ஓடி, "என் மக்களே" என்று இறுகத் தழுவி, "என் கண்மணிகளே" என்று அவர்கள் முகத்தில் முத்தம் பொறித்தாள். அரசனும் குணவதியை ஆடையாபரணங்களால் அலங்கரித்துக்கொண்டு வருக என்றனுப்பினான். மந்த்ரியை அழைத்து ஆண்மக்களுக்குரிய அரிய ஆடைகளைத் தருவித்து, குணவதியின் தகப்பனைப் பார்த்து, "மாமனாரே, என்னை க்ஷமிக்கவேண்டும். இந்த ஆடைகளை அணிந்துகொள்ளும் அரமனையில் ஆரோக்யமாய் இரும்" என்று வேண்டினான். "குடிகளே, உங்களுக்கு வந்தனம். இனி என்னைக் குறைகூற இடமில்லை" என்றான்.
-----------------------------------------------------------
2. தனபாலன்
I
யூரொப்பிலிருந்து ஆப்ரிகாவைச் சுற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வருவதும் போவதுமான கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்கு முன்னே, இந்தியாவுக்கும் யூரோப்புக்கும் நடந்திருந்த வர்த்தகமெல்லாம் நிலவழியாகவே நடந்துவந்தது. அக்காலத்தில் அவ்வழியில் இடையிடையில் சில உள்நாட்டுப் பட்டணங்களும் சில துறைமுகப் பட்டினங்களும் செல்வம் பெருகிச் செழித்தோங்கியிருந்தன. இடலிதேசத்தில் பாட்யுவா என்கிற பட்டணமும் வெனிஸ் என்கிற பட்டினமும்
இப்படிப்பட்டவை. உள்நாட்டுப் பட்டணமான பாட்யுவாவில் காசிப்பட்டும் காஸ்மீர் சால்வையும் ஸரிகை வஸ்திரங்களும் ஸல்லாவகைகளும் அணிவடங்களும் அணிகலங்களும் காடுபடுதிரவியங்களும் மலைபடுதிரவியங்களும் விலை ஸரஸமாக விற்பனைசெய்யும் வ்யாபாரிகள் அநேகர் நிலைத்திருந்தனர். அவர்களில் ஸாதாரணமானவர்கள் லக்ஷாதிபதிகள். லக்ஷாதிபதிகளும் கோடீசுவரர்களும் அங்கே நிலைத்திருந்ததனால், துறைமுகப் பட்டினமான வெனிஸ்தானும் அந்தப் பட்டணத்துக்கு இணையாகாமல் இளைப்பதாயிற்று.
அந்தப் பட்டணத்தில் தனபாலன் என்று பெயர்பெற்ற ஒரு ஸாவகாரி இருந்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் ஆறாகப் பெருகியது. கோடீசுவரரென்று கொடிபிடித்தவர்களெல்லாம் அவனுக்குத் தாழ்ந்தவர்களே. அவன் ஆற்றுப் பாலத்தின் அருகில் அரமனைபோல் அழகிய மாளிகை கட்டி அதில் குடியிருந்தான். பாட்யுவா என்கிற பெயர் தெரியாதவர் இடலியில் சிலர் இருப்பினும் இருப்பர்; தனபாலன் என்கிற பெயர் தெரியாதவர் ஒருவரும் இரார். அவனுடைய செல்வத்தைக் கோடானுகோடியென்று ஒரு பரியாயமாகச் சொல்லலாமேயன்றி, அதன் அளவை அறதியாகக் கணக்கிட்டுச் சொல்வது அவனுக்கே அஸாத்யம். யூரொப்பில் எந்த அரசனுடைய வாழ்க்கையும் அவன் வாழ்க்கைக்கு ஸமானம் ஆகாது. பல சிற்றரசர்களுடைய உரிமைகளையெல்லாம் ஒருசேர விலைக்கு வாங்க விரும்பினாலும் அவ்விதமே செய்யக்கூடிய அவனுடைய ஸம்பத்தைக் குபேரஸம்பத் தென்றாலும் உபமானபங்கம் உண்டாகும்.
தேசாந்தர ப்ரயாணமாக அங்கே வருகின்ற கனவான்களும் தனவான்களும் காசுமாற்றுவதில் கிடைத்தலான வட்டமெல்லாம் அவனுடைய கந்தாயமே. துரைத்தனத்தாருக்குப் புதிய கட்டடங்களைக் கட்டித்தருதல் பழைய கட்டடங்களைப் புதுக்கித்தருதல், தண்டுக்குரிய தளவாடங்களை ஸர்பரா செய்தல், முதலியவெல்லாம் அவனுடைய குத்தகையே. தர்மபரிபாலன ஸபைகளில் அவன் தர்மகர்த்தனாக இல்லாத ஸபை அங்கே ஒன்றும் இல்லை.
ஸந்ததியில்லாதவர் அநேகர், தாங்கள் கருதிய தர்மங்களை நடத்துதற்குரிய தர்மகர்த்தனாக அவனையே தங்கள் மரணசாஸனத்தில் குறித்து வந்தனர். நிராதரவான தங்கள் பெண்டிர் பிள்ளைகளுக்குத் தங்கள் ஆஸ்தியைக் கொண்டு செய்யத்தக்கவைகளைச் செய்யும்படி அநேகர் தங்கள் மரணசாஸனத்தில் அவனையே இயற்றுதற்கர்த்தாவாக நியமித்து வந்தனர். எல்லாவற்றையும் ஈடுகொடுத்து நிர்வகிப்பது கஷ்டமாகையால், சிலவற்றை அவன் வேண்டாமென்று மறுத்தாலும், அவரவர்கள் அவனை பலவந்தப்படுத்தி இணங்கு விப்பார்கள். பொருளும் புகழும் ஓங்கிய அவன் வாழ்க்கையானது, தனலக்ஷ்மியும் கீர்த்தி லக்ஷ்மியும் இருக்க வேறிடமின்றி அவனை இருப்பிடமாகக் கொண்டதுபோல் தோன்றியது.
இல்லாரை இகமுதலாகிய இழிகுணம் அவனிடம் இல்லை. கருணனைப்போல் பொருள் கொடுக்கும் கொடைமடம் அவனிடம் இல்லை. பாத்ரம் அறிந்தவிடத்து அவன் வருணனைப் போல் கொடுப்பான். ப்ரதிஷ்டைக்காகப் பொருள் சிறிதும் கொடுக்க மாட்டான். உறவினரில் நொந்த குடிகளுக்கு உபகாரச் சம்பளம் கொடுத்துவருவான். அவசியமான பொது நன்மைகளுக்கு அள்ளியள்ளிப் பொருளைக் கொடுப்பான். சித்ரகுப்தன் கணக்கு மயிரிழை புரண்டாலும் புரளும்: அவனுடைய கொடுக்கல் வாங்கல் கணக்கு இம்மியளவும் தவறி யிராது. வர்த்தக ஸூக்ஷ்மங்களில் மற்ற வ்யாபாரிகள் அவனிடத்தில் பாடம்படிக்கத்தக்க வல்லமையுள்ளவன். அஷ்டாவதானி சதாவதானிகளெல்லாம் கார்யாகார்யங்களில் அவனுடைய ஸஹச்ராவதானத்தைக் கண்டு தலைசாய்ந்து வெட்கமடைவர். வேலையில் தவறுதலான வேலையாட்களிடம் ஓரொரு சமயம் காட்டும் சினக்குறிப்பன்றி அவன் சினங்கொள்ளுதல் எங்கும் இல்லை. உலுத்தரைக் கண்டு பொறாமையன்றிச் செல்வரைக்கண்டு பொறாமை என்றும் இல்லை. சுருக்கமாகச் சொல்லுமிடத்தில், அவன் ஸத்யத்தில் அரிச்சந்திரன் சாந்தத்தில் தர்மராஜன் என்பதும் போதும்.
குன்றிமணியிடத்திலும் கொஞ்சம் கறுப்பு உண்டாயிருப்பது போல், தனபாலனிடத்திலும் ஒரு தோஷம் உண்டாயிருந்தது. பகவானுடைய கடாக்ஷமின்றி நாம் கடைத்தேற மாட்டோம் என்கிற எண்ணம் அவன் மனதில் உதிப்பதே யில்லை. "அவனருள் அற்றால் அனைவரும் அற்றார்: அவனருள் உற்றால் அனைவரும் உற்றார்" என்று எவராயினும் சொன்னால், அவன் அதற்கு எதிர்த்தட்டாக "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" என்று சொல்வான். "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்பதைக் கேட்டால், "வருந்தினால் வராததில்லை" என்பதை நினைத்துக்கொள்வான். அதிர்ஷ்டம் என்கிற வார்த்தையை அகராதியில் கண்டாலும் அழித்து விடுவான். முயற்சி என்கிற வார்த்தையை எங்கே கண்டாலும் அதனடியில் கோடிழுத்துவைப்பான். சும்மா கிடைக்கிற பிதுரார்ஜிதத்தைக் கண்டு மகிழ்வது எல்லாருக்கும் இயல்பு. வருந்திக் கிடைக்கிற ஸ்வயார்ஜிதத்தைக் கண்டு மகிழ்வதே அவனுக்கு வழக்கம். "ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு" என்பதே அவனுடைய வேதப்ரமாணம். தெய்வத்தை இகழ்வதில்லையாயினும், அளவில்லாத தன் செல்வத்துக்குக் காரணம் தன் முயற்சியேயன்றி வேறில்லையென்றே அவன் நம்பியிருந்தான். "பெருமையும் சிறுமையும் தான்றர வருமே" என்பது அவன் கொள்கை.
இவ்விதம் நடந்துவருகையில், அவனுக்கு இறங்குபடியான காலம் கிட்டியிருப்பதாகப் புலப்பட்டது. வழியில் பெரிய பெரிய ப்ரதானிகளைக் கண்டாலும் லக்ஷ்யம் பண்ணாத ப்ரபுக்கள், அவனைக் கண்டால் குனிந்து கும்பிடுகின்றவர்கள், சில நாளாக அவனைக் கண்டவிடத்தில் வேறு பராக்காகப் போவார்போல் போவாராயினர். முன்னே வழிவிட்டு விலகிச் செல்பவரெல்லாம், இப்போது அவனை ஏறிட்டுப் பாராமல், தங்கள் பாட்டிலே நேராகச் செல்வாராயினர். பரிபாலனம் செய்யும்படி இவன்வசம் விட்டிருந்த தர்மங்களுக்கு உரியவர்கள் சிலர் அவ்வுரிமையை மீட்டுக்கொண்டனர். சிலர் தர்மபரிபாலன வரவு செலவு கணக்குகளைக் கேட்கவும், கேட்கும்போது தருமபரிபாலன சட்டவிதிகளையும் கடமைகளையும் சுட்டிப்பேசவும் தொடங்கினர். அவனைத் தேடிவருபவர் தொகை நாளுக்கு நாள் குறைந்து வந்தது. உபகாரச் சம்பளம் பெறுவோர் தவிர வேறெவரும் அவனிடம் வருவது அபூர்வமாயிற்று. தான் சிலரைத் தழுவப்போனாலும் அவர்கள் அதற்கிடங் கொடாமல் நழுவிப்போவதைக் கண்டான். இவ்வேறுபாட்டின் காரணம் இன்னதென்று அவனுக்குப் புலப்படவில்லை; எல்லாம் அதிசயமாகவே இருந்தது.
பட்டணவாசிகள் தேவாலய பொக்கிஷ பரிபாலனத்தின் பொருட்டு ஒவ்வொரு வருஷமும் ஓரதிகாரியைத் தேர்ந்தெடுத்து நியமிப்பார்கள். அவ்வதிகாரம் தன்னை விட்டுத் தப்பிப்போகாதென்று தனபாலன் உறுதியாக நம்பியிருக்கையில், அநாமதேயமான வர்த்தகன் ஒருவன் அவ்வதிகாரத்தைப் பெற்றான். அதனால் மனச்சலிப்படைந்து தன்னுடைய கார்யா கார்யங்களை ஸாவகாசமாக ஆராய்ந்துபார்த்தான். "என்னை நாடிவருவதும் எனக்குக் கௌரவம் செய்வதும் போய், எல்லாரும் ப்ரத்யக்ஷத்தில் என்னைப் பழிக்கின்றார்கள். நான் எவரையாகிலும் ஏமாற்றியிருக்கிறேனா? அவரவர்க்குச் சேர வேண்டிய தொகைகளை உரிய காலத்தில் ஒப்படைத்தே வருகிறேன். வ்யாபாரத்திலும் தர்மபரிபாலனத்திலும் எவ்வித மோசமும் நேரிட்டிருப்பதாக எனக்குப் புலப்படவில்லையே. பின்னை இந்த வேறுபாடு எவ்விதம் உண்டாயிற்று?" என்று சிந்தாகுலம் அடைந்தான்
II
"இந்த ஸாவகாரிக்கு இந்த மஹதைச்வர்யம் எங்கிருந்து கிடைத்தது. பாவி இவன் அக்ரமமாகவே பொருள் தேடினான்" என்று ஒரு வதந்தி அங்கங்கே பரவுதலாயிற்று. "இவன் கள்ளக்காசுகளைச் செய்து செல்வத்தைப் பெருக்கினான். பொன் வெள்ளி ஸரிகைவேலையில் இவன் நிபுணனல்லவா! கள்ளக்காசு செய்வது இவனுக்குக் கடினமான வித்தையா? ஐயோ, இவனுடைய அந்யாயத்தால் எத்தனை குடித்தனம் குட்டிச்சுவராகுமோ" என்று அங்கங்கே அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் குடிகள் பேசுதலாயினர்.
பொழுதுபோகும்படி வேடிக்கையாக வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன்,-"தனபாலன் என்ன பைத்தியக்காரனா, தன் ஸாமர்த்யத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டுச் சும்மா இருக்க? அவன் பக்காத் திருடன் ஐயா" என்றான்.
பக்கத்திலிருந்தவன். - எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? அவஸரப்பட்டுப் பேசலாமா? இத்தனை காலமாக எவராவது அவனைப்பற்றி அவதூறாகப் பேசினதுண்டா? அவனை நான் ஸத்யஸந்தன் என்றே எண்ணியிருக்கிறேன்.
முதல்பேசினவன். - அவனை அரிச்சந்திரன் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். இதோ இந்த ரூபாவைப் பாரும்.
மற்றவன் (அதைத் தட்டிப்பார்த்து) - இதற்கென்ன? சப்தம் ஸரியாகத்தான் இருக்கிறது.
முதல்வன். - பரிசோதித்துப் பார்க்கிறவரையில் நானும் அதை நல்ல ரூபாவென்று நினைத்திருந்தேன். இது அந்த ஸாவகாரியிடத்திலிருந்து வந்த ரூபாதான். வேண்டுமானால் உம்முடைய உரைகல்லில் உரைத்துப்பாரும். பார்த்த பிறகானால் என் வார்த்தையை நம்புவீர்.
அப்படியே இருவருமாகப் பரிசோதித்துப் பார்க்கையில், அது கள்ளரூபா என்பதும் அதில் கால்பங்கு செம்பு கலந்திருக்கிறது என்பதும் தெளிவாயிற்று.
இங்ஙனம் இந்த மோசத்தைக் கண்டறிந்தவன் தனபாலனுடைய மாளிகைக்கு ஸமீபத்தி லிருப்பவன். அவன் வெகு நாணயமான வர்த்தகன்; மடிமாங்காய் போட்டுத் தலைவெட்டுகிறவன் அல்லன்; தன்னிலும் மேலான வர்த்தகன் சில அஸந்தர்ப்பங்களால் சீரழிவதைக் கண்டால், ஸந்தோஷப்படாமல், மிகவும் இரக்கம்கொண்டு தன்னாலான உதவியெல்லாம் செய்பவன். தர்மபாலன் என்று அவனுக்குப் பெயர் வழங்கியிருந்தது. தனபாலனிடத்தில் லாவாதேவி உள்ளவனாகையால், தனபாலனுடைய குணவிசேஷம் அவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. "இந்தத் தனபாலன் இத்தனை காலமாய் ஸத்யம் தவறாமல் ஸரியாக நடந்துவந்தவன் இப்பொழுது மோசக்காரன் ஆய்விடுவானா? நான் நம்ப மாட்டேன். நாம் உரைகல்லில் உரைத்துப்பார்த்த ரூபா எவ்விதமாக அவனிடத்தில் வந்ததோ? கள்ளம் பாராமல் ஒருவன்மேல் கள்ளம் நினைக்கலாமா?
ப்ரத்யக்ஷத்தில் பரிக்ஷித்துப் பார்க்காமல் தனபாலனை மோசக்காரனென்று நான் கொள்ளமாட்டேன்" என்றாலோசித்து, ஓர் உபாயம் பண்ணினான்.
உடனே தர்மபாலன், தன் வீட்டை அடைந்து, பெட்டியைத் திறந்து ஆயிரம் ரூபா எடுத்து ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொண்டு, தனபாலனிடம் போனான். போய், "ஐயா, தனபாலரே, முன்பின் பாராமல் நான் ஒரு வ்யாபாரத்தில் தலையிட்டுக்கொண்டேன். நஷ்டம் வந்தால் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் பரதேசம் போய்விட வேண்டும். ஆபத்துக் குதவியாக இந்த முடிப்பை எவரும் அறியாதபடி தங்களிடத்தில் வைத்துப் போகலாமென்று வந்தேன். இதில் ஆயிரம் ரூபா இருக்கிறது. உங்களை நான் அறிவேன். என்னை நீங்கள் நன்றாய் அறிவீர்கள். இது உங்களிடத்தி லிருப்பது என் பெட்டியில் இருப்பதைப் பார்க்கிலும் பதின்மடங்கு பத்ர மல்லவா? என்று சொல்லிப் பையைக் கொடுத்தான். தன்னைத் தேடி வருவார்
எவரும் இல்லாத காலம் ஆகையால், தனபாலன் அதிசயமடைந்து, பையை வாங்கிப் பெட்டியில் வைத்துப் பூட்டினான். தர்மபாலன் விடைபெற்று, "அவரவர்கள் சொல்லித்திரிகிற அபவாதமெல்லாம் பொய்ப்படும். என் கொள்கையே மெய்ப்படும்"
என்றெண்ணிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினான்.
சிலநாள் சென்றபிறகு, தர்மபாலன் ஒருநாள் திடும் ப்ர வேசமாய்ச் சென்று, தனபாலனிடம் "ஐயா, வெளியில் போய்விட்டீர்களோ என்னவோ என்று பயந்தேன். தாங்கள் வீட்டிலிருப்பது வெகு ஸந்தோஷம். அவஸரமாக ஒரு தண்டற்காரன் வந்திருக்கிறான். தயவுசெய்து தங்களிடம் வைத்த முடிப்பைத் தரவேண்டு. ச்ரமத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்" என்றான். தனபாலன் "இதற்கு இத்தனை முகவுரை வேண்டுமா? என் முடிப்பைக் கொடும் என்றால் கொடுத்து விடமாட்டேனா?" என்று சொல்லி, எதிரிலிருந்த பெட்டியைத் திறந்து, ஓர் உள்ளறையை இழுத்து, "இதோ அன்று உங்கள் எதிரில் வைத்தது, வைத்தபடியே இருக்கிறது. பையை எடுத்துக் கொள்ளும். என்னால் ஆகவேண்டிய ஸஹாயம் எதுவானாலும் செய்யக் காத்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்" என்று சொல்லி விடைகொடுத்தான்.
பையை எடுத்துக்கொண்டு போய், தர்மபாலன் பணத்தை எண்ணி, ரூபா ஆயிரமும் மேனி வேறுபடாமல் ஸரியாயிருக்கக் கண்டு, அவைகளை ஒவ்வொன்றாகத் தட்டிப் பார்க்கத் தொடங்கினான். கொஞ்சநேரத்தில் ஒரு ரூபாவின் சத்தம் வேறுபட்டது.
ஸந்தேகத்துக்கு இடமுண்டாகி, "நான் கொடுத்தபோது எல்லாம் ஸரியாகவே இருந்தன, ஆயினும் ஏதோ கைப்பிசகாக இருத்தல் கூடும்" என்று நினைத்து, மற்றவைகளைத் தட்டிக்கொண்டு போகையில், மறுபடியும் ஒன்று சப்தம் மாறுபட்டது.
ஸந்தேகம் அதிகரித்தது. பின்னும் சிலவற்றைத் தட்டிப்பார்க்கையில், எல்லாவற்றையுமே உரைத்துப் பரீக்ஷிக்க வேண்டும் என்கிற துணிவு உண்டாயிற்று. அவ்விதம் பரீக்ஷித்துப் பார்த்தவிடத்தில், நூறு கள்ளரூபா கலந்திருக்கக் கண்டான்.
தர்மபாலன் மனங்கலங்கி, மறுபடியும் ஸாவகாரியிடம் போய், "ஐயா, உம்மிடம் வைத்த முடிப்பில் நூறு ரூபா வேறுபட்டிருக்கிறது. இதோ பாருங்கள்" என்று காட்டினான்.
தனபாலன். - வேறுபாடோ இல்லையோ, நான் என்ன கண்டேன்? உம்முடைய பையை நான் அவிழ்த்துப் பார்க்க வில்லை. வைத்தது வைத்தபடியே பை பெட்டியில் இருந்தது.
தர்மபாலன். - ஐயா, இத்தனை காலமாக உங்களிடத்தில் எத்தனை விவகாரமாக வந்திருக்கிறேன். எப்பொழுதாவது குறைகூறின துண்டா? இதில் ஏதோ பிசகு நடந்திருக்கிறது.
தனபாலன். - இந்த அல்பத்துக்கு ஆசைப்பட்டு மோசம் பண்ணுவேனா? என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா உனக்கு? யோசனையில்லாமல் பேசுகிறாயே, போ போ.
தர்மபாலன். - ஐயா, கோபம் சண்டாளம். நான் என்ன முழுமூடனா? ப்ரத்யக்ஷமான ஸாக்ஷியில்லாமல் தங்களெதிரில் இப்படிக்கென்று வாய்திறந்து பேசுவேனா? எவ்விதத்திலோ மோசம் நடந்திருக்கிறது. நானாகிலும் மோசம் செய்திருக்க வேண்டும். நீராவது மோசம் செய்திருக்கவெண்டும். நானும் நாணயமான வர்த்தகனென்று பெயர் வைத்திருப்பவன் நீரோ
பெரிய ஸாவகாரி. இந்த விஷயம் சிக்கறுதல் வேண்டும். நான் நியாயஸ்தலத்தில் முறைப்பாடு செய்ய உத்தேசிக்கிறேன்.
தனபாலன். - புண்யத்துக்குக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்ப்பதுபோல், பத்ரமாய் உன் பணத்தை வைத்திருந்து கொடுத்ததற்கு என் தலையில் சொட்டுவைக்க வந்தாய். போ போ. தாமஸம் பண்ணாமல் இப்படியே போய் ந்யாயாதிபதியிடத்தில் முறையிட்டுக்கொள். போ. இங்கே நிற்க வேண்டாம்.
அங்கிருந்து தர்மபாலன் நேராக ந்யாயாதிபதியிடம் போய் நடந்த செய்தியை நடந்தபடியே சொல்லிக் கொண்டான்.
ந்யாயாதிபதி தனபாலனை அழைத்து, "ஐயா தனபாலரே, தர்மபாலருடைய பணமுடிப்பை நீர் வைத்திருந்து கொடுத்ததில் ஏதோ பிசகு நடந்திருப்பதாய் அவர் முறையிட்டிருக்கிறார். உம்முடைய ப்ரதிவாதம் என்ன?" என்று கேட்டார்.
தனபாலன். - ஐயா, தர்மபாலர் ஆயிரம் ரூபா என்று சொல்லி என்னிடம் கொடுத்த முடிப்பை அவரெதிரிலே என் பெட்டியின் உள்ளறையில் வைத்துப் பூட்டினேன். ரூபாவை நாண் எண்ணிப் பார்க்கவுமில்லை; தட்டிப் பார்க்கவு மில்லை. அவர் சிலநாள் கழித்துவந்து கேட்டபோது, அவரெதிரிலே பெட்டியைத் திறந்து, வைத்தது வைத்தபடியே இருந்த பையை எடுத்துக் கொடுத்தேன் கொஞ்சநேரம் சென்ற பின் அவர் திரும்பிவந்து 'இதில் ஏதோ பிசகு நடந்திருக்கிறது' என்றார்.
'ந்யாயாதிபதியிடத்தில் முறையிட்டுக் கொள்ளும்' என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
ந்யாயாதிபதி. - உங்கள்மீது குற்றம் ஒன்றும் இல்லையென்று ஸத்யம் பண்ணுகிறீரா?
தனபாலன். - ஆ ஹா! பண்ணுகிறேன்.
உடனே எதிரில் கொண்டுவந்து வைத்த வேத புஸ்தகத்தைக் கையிலெடுத்து, ஸாவகாரி, "நமது வேதத்தின்மேல் ஆணை. நான் ஒரு பாவமும் அறியேன்" என்று ஸத்யம் பண்ணினான்.
அதைக் கண்டு ந்யாயாதிபதி ப்ரதிவாதிமேல் குற்றம் இல்லையென்று தீர்மானம் பண்ணிவிட்டார்.
"பெரிய யோக்யன் மஹா ஸத்யவான் என்று நாம் எண்ணியிருந்த தனபாலன், அடட! மோசம் பண்ணின தல்லாமலும், பொய்ஸத்யமும் பண்ணத் துணிந்தானல்லவா" என்று மனம் கிடுகிடுத்துத் திடுக்கிட்டுத் தர்மபாலன் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
இந்த முறைப்பாடு இவ்விதம் முடிந்ததைக் கண்டு, சிலர், "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியாதா? பலநாள் திருடன் ஒருநாள் அகப்படாமல் போகான். இவனுக்கு யோக காலம் இன்னும் முடிவாக வில்லை" என்று எண்ணினர்.
சிலர், "தனபாலன் நெடுநாளாகப் புரட்டு செய்து வருகிறான். மஹா சுசீலனான தர்மபாலன் இவன்மேல் வழக்குத் தொடுத்ததே இதற்கு ப்ரத்யக்ஷ ப்ரமாணம். இந்த வழக்கிலே பொய்ஸத்யம் செய்து தப்பினான். கிடக்கட்டும், எங்கே போகிறான்" என்று பேசிக் கொண்டனர்.
III
கொத்தவால்களும் ஊர்க்காவலாளிகளும் ஸாவகாரியின் திருட்டுப் புரட்டுகளை எவ்விதத்திலும் கண்டுபிடிக்க வேண்டுமென்று கங்கணங் கட்டிக்கொண்டனர். இடலி தேசத்தவர் மஹாபாயமெல்லாம் அறிந்தவர்கள்: அவர்கள் கொத்தவால்களும் ஊர்க்காவலாளிகளும் திருட்டுப் புரட்டுகளைக் கண்டுபிடிப்பதில் வெகு ஸாமர்த்யமான தந்த்ரோபாய முடையவர்க ளாகையால், அவர்களில் சிலர் வேறுதேசத்து வர்த்தகர்போல் மாறுவேஷம் பூண்டு தனபாலனிடம் சென்றனர்.
எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி குறிப்பிட்ட ரூபாக்களையும் ஸவரன்களையும் ஒரு பையில் கட்டி முடிந்து தனபாலன் கையில் கொடுத்து, "ஐயா, நாங்கள் வடதேசத்திலிருந்து வர்த்தக நிமித்தமாக வந்தவர்கள். ஐங்காத தூரத்துக்கப்பால் ஓரூரில் ஒரு வேலை இருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டு நாலைந்து நாளில் திரும்பி வருவோம். அது வரையில் இந்தப் பணமுடிப்பைக் கொடுத்துவைக்கத்தக்க இடம் தெரியாமல் அலையும்போது, உங்கள் நினைவு வந்தது. இதை வைத்திருந்து, நாங்கள் வந்து கேட்கும்போது கொடுக்கவேண்டு மென்று ப்ரார்த்திக்கிறோம்" என்று அதிக விநயமாக வேண்டிக் கொண்டார்கள். சிலநாள் கழித்து முன்போலவே மாறு வேஷத்தோடு வந்து, முடிப்பை வாங்கிக்கொண்டுபோய்த் தங்கள் அதிகாரிகளின் எதிரிலே காவலாளிகள் பணத்தைப் பரீக்ஷித்தார்கள். முடிப்பில் முக்கால் பங்கு கள்ளக்காசு கலந்திருப்பது தெரியவந்தது. 'கண்ணால் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி?' தர்மபாலன் தொடுத்த வழக்கில் ஸாவகாரி செய்தது பொய்ஸத்யம் என்பதற்கு வேறு சாக்ஷி வேண்டுமா?
அடுத்த நாள் கொத்தவால்கள் ஸாவகாரியைத் தூக்குந் தள்ளுமாகக் கொண்டுபோய்க் காவலில் வைத்துவிட்டு, அவன் மாளிகையில் சோதனை பண்ணினார்கள். காசு அடிப்பதற்கு அவசியமான கருவிகள் பெட்டிகளின் அடியறைகளில் உள்ளறைகளுள் வைத்திருந்தன. கள்ளக்காசில் கலப்பதற்குச் செம்பு முதலிய ஸாமான்களும் கூடவே வைத்திருந்தன. வெவ்வேறு அறைகளில் வெவ்வேறு பெட்டிகளில் கள்ளக்காசுகள் வைத்திருந்தன.
இந்த ஸங்கதி வெளிவந்தவுடனே, கையுங் கட்டாரியுமாக அநேகர் பேராரவாரம் செய்து புறப்பட்டனர். 'கெட்டால் பெரிய வெட்டரிவாள்' 'கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை' என்பது பொய்யாகுமா? பலபேர் "பார்த்தீர்களா, இந்த ஸாவகாரி இவ்விதமான புரட்டு செய்துகொண்டு இத்தனை காலமாக அரசமாளிகை கட்டி ஆடம்பரத்துடன் வாழ்ந்தானே. இந்த்ரஜாலம் மஹேந்த்ர ஜாலமெல்லாம் இவன் ஜாலத்துக்கு நிகராகுமா? எல்லாருடைய கண்ணிலும் மண்ணைத்தூவி என்ன வேலை
செய்துவந்தான்! அடட! இந்த நகரத்தின் பஞ்சாயத்தில் ஒருவனாகி இந்த யோக்யன் நியாய பரிபாலனங்கூட நடத்திவந்தா னல்லவா! ந்யாயம் என்பது ஏழைகளுக்கு மாத்ரமேயோ? குற்றம்செய்தால் தனவான்களுக்கு ந்யாயவிசாரணை இல்லையா? இப்படிப்பட்ட சண்டாளனை என்ன செய்தால் தீரும்?" என்று முழங்கினார்கள்.
இக்கலிபலியைக் கண்ட நீதிபதிகள் தனபாலனுடைய குற்ற விசாரணையை விரைந்து நடத்தலானார்கள். அவனை ந்யாயஸ்தலத்தில் நிறுத்திக் கொத்தவால்கள் அவனுடைய குற்றத்தை விவரித்து அதற்குண்டான ஸாக்ஷியும் காட்டினார்கள்.
எல்லாம் அவனுக்கு விரோதமாக இருந்ததனால், அவன் ப்ரதிவாதம் பண்ணாமல் மௌனமாக இருந்தான். அன்றைக்கு ஐந்தாவது நாள் காலையலை் சந்தைவெளியில் எட்டு மணிக்கு அவனைத் தூக்கிலே போடுவதென்று தீர்மானம் ஆயிற்று.அவன் தேவத்யானம்பண்ணி ஆத்மரக்ஷணை பெறும்பொருட்டாக இடையில் நான்குநாள் விட்டுவைத்தார்கள்.
தீர்மானம் ஆனவுடனே, அவனைச் சிறைச்சாலையில் கைகால்களை நீட்ட முடியாது நான்கடி சதுரமான ஓர் இடுக்கறையில் விட்டுக் கதவைப் பூட்டிவைத்தார்கள். ஆக்கத்துக்கு ஊக்கம் துணைக்காரணமாயினும் முதற்காரணமாகிய தெய்வாநுகூலம் இல்லாமல் ஊக்கம் மாத்ரமே ஒருவனை ஈடேற்றுமா என்கிற எண்ணம் அவன் மனதில் உதித்தது. திக்கற் றவர்களுக்குத் துணை தெய்வமே என்கிற நம்பிக்கை பிறந்தது. சாகிற காலத்தில் சங்கரா என்பதுபோல், அவன் அந்த்ய காலத்தில் ஆராமையடைந்து பகவத்யானம் பண்ணியிருந்தான்.
மஹா பதிவிரதையான அவன் பெண்டாட்டியையும் ஏக புத்ரியான பெண்ணையும் ஓர் அறையில் இருக்கவிட்டு, காவலாளிகள், மாளிகையின் மற்ற அறைகளைப் பூட்டிவிட்டு, ஸாவகாரியின் ஸொத்துக்கள் எல்லாவற்றையும் மறியல்செய்தனர். அந்த மாளிகையில் உள்ள தட்டுமுட்டு ஸாமான்கள் எந்த அரமனையில் கிடைக்கும்!
தீரமானம் ஆன நாலாநாள், ஸாவகாரியின் கணக்கப் பிள்ளை, ஸாவகாரி மனைவியிடத்தில் ஒரு ஸங்கதி தெரிவிக்கும்படி மெத்தைப் படிக்கட்டில் ஏறியிருந்தவன், கால் இடறித் தலைகீழாகச் சாய்ந்து உருண்டுபோய்க் கீழேவிழுந்து கழுத்து முறிந்து மரணமடைந்தான். அவன் மனைவி நெடு நாளாய்த் துர்ப்பலையாக இருந்தவள், கணவன் இறந்ததைக் கேட்ட மாத்ரத்தில், புண்ணின்மேல் பூச்சியும் கடித்தவாறாகக் கலக்கம் அடைந்து, தானும் சீக்ரத்தில் மரணமடைவது நிச்சயமென்று கண்டு, அன்றிரவு பின்மாலை வேளையின் தன பாலனுடைய மனைவியை அழைத்துவரும்படி அண்டையிலிருந்தவர்களை வேண்டினாள். தனபாலன் மனைவி வந்தவுடனே, அருகிலிருந்தவர்களை அப்புறம் போகச்சொல்லி, "அம்மா, நான் பேசி முடிகிறவரையில் குறுக்கிட்டுப் பேசவேண்டாம். உங்கள் புருஷன் நிரபராதி. என் புருஷனே குற்றவாளி. என் புருஷன் முன்னமே செய்துள்ள பாதகங்களோடு கொலைப்பாதகமும் சேர்ந்து, அவனுடைய ஆத்மா அதோகதி அடையாதபடி, நீங்கள் உடனேபோய் இது செய்தியை நியாயாதிபதியிடத்தில் தெரிவியுங்கள். உம்முடைய புருஷன்....... " என்று அப்புறம் பேசமுடியாமல் கண்ணை மூடிக்கொண்டாள். கைகால்களெல்லாம் சில்லிட்டன.
இனி தன் பர்த்தாவின் தலை தப்பும் என்கிற உறுதியோடு, தனபாலன் மனைவி, ஓட்டமும் நடையுமாக ந்யாயத் தலைவரிடம் சென்று, தங்கள் கணக்கப்பிள்ளையின் மனைவி மரணத்தறுவாயில் வாய்விட்டுரைத்த ரகஸ்யத்தை வெளியிட்டாள்.
ந்யாயத்தலைவர்:-- (தலையை அசைத்துக்கொண்டே) இந்த ரகஸ்யத்தைச் சொன்னவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா?
தனபாலன் மனைவி:-- எடுத்த ஸங்கதியை முடிவாகச் செல்வதற்குள் அவள் பிராணன் போய்விட்டது.
ந்யாயத்தலைவர்:----அவள் கணவன் எங்கே இருக்கிறான்? தனபாலன் மனைவி:---- அவனும் நேற்றைப் பகல் துர்மரணம் அடைந்தான்.
ந்யாயத்தலைவர்---- உங்கள் கணக்கன் மனைவி உம்மோடு இந்த ஸங்கதியைச் சொல்லும்போது கூடேயிருந்த ஸாக்ஷிகள் எவராயினும் உண்டா?
தனபாலன் மனைவி:----இல்லை. என்னைப் பார்த்ததும் பக்கத்தி லிருநதவர்களை வெளியில் அனுப்பி விட்டாள்.
ந்யாயத்தலைவர்:---- அப்படியானால், அவள் தெரிவித்த ரகஸ்யத்தால் உங்களுக்கு ஒன்றும் நன்மை யில்லை. நாங்கள் சட்டத்தின்படி நடத்தக்கடவோம்.
இதைக் கேட்டதும், தனபாலன் மனைவி அடியற்ற மரம் போல் கீழே விழுந்துவிட்டாள். அதைக்கண்டு நியாயத் தலைவர்,
அவளை ஓர் உத்தியோகஸ்தருடைய வீட்டுக்குக் கொண்டுபோய் சைத்யோபசாரம் பண்ணிக் கொண்டிருக்கும்படி சில ஆட்களை ஏவினார். அதற்குள் ஏழரைமணி ஆயிற்று.
தூக்குப்போடுகிற இடத்தில் சுற்றிலும் திரையிட்டிருந்தது.திரையின் வெளியிலே ஒரு மேஜையும் அதன் பக்கத்தில் சில நாற்காலிகளும் போட்டிருந்தன. மேஜையின் மேல் தூக்கு விளம்பரம் முதலிய காகிதங்கள் வைத்திருந்தன. கொலைக்கள அதிகாரிகள் வந்து கூடினமாத்ரத்தில், சிறைக் கவலர் குற்றவாளியை விலங்குங்கையுமாக அழைத்துவந்து எதிரில் நிறுத்தினர்.
"பொழுதாயிற்று. நீ ஏதாகிலும் சொல்ல விரும்பினால், தாமஸ மில்லாமல் சொல்லலாம்" என்று அதிகாரிகள் சொன்ன வார்த்தையைக் கேட்டு, தனபாலன் "நான் நிரபராதி. 'நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை.' மனதறிய நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. என் கர்மம் என்னை இப்படி ஆட்டிவைக்கிறது. எவரையும் நொந்துகொள்ளாமல் மனவமைதியோடு பகவத்யானம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். இனி நீங்கள் செய்வது செய்க" என்று சொல்லிக் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கூப்பி நின்றான். கொலையாளிகள் அவனைத் தூக்குமரத்தில் ஏற்றி, தூக்கிலிடுகிற கயிற்றை அவன் கழுத்தில் மாட்டப்போனார்கள். "ஊரையடித்து உலையில் போட்டுவந்த பாவி செத்தான். சண்டாளன் செத்தான்" என்ற ஜனங்கள் இரைந்து கொண்டிருந்தார்கள்.
IV
அப்போது ஒரு சேவகன் குதிரையின்மீது காற்றாய்ப் பறந்து வருவதைக் கண்டு, ஜனங்கள் இருபுறமாக ஒதுங்கி வழிவிட்டார்கள். என்ன அவஸரமான நிருபம் கொண்டு வருகிறானோ என்று அதிகாரிகள் இமைகொட்டாமல் பார்த்திருந்தனர். ஸேவகன் மேஜையின் எதிரிலே குதிரையை நிறுத்தி, கையில் கொண்டுவந்த காகிதத்தை அதிகாரிகையில் கொடுத்து, கொலையாளியைப் பார்த்துக் கையமர்த்தினான். காகிதத்தைப் பார்த்தவுடனே, தனபாலனை இறக்கிச் சிறைச் சாலைக்குக் கொண்டுபோகும்படி உத்தரவளித்து, அதிகாரிகள் அவ்விடம்விட்டு அப்புறப்பட்டார்கள்.
மர்மத்தை அறியாத ஜனங்கள், "இதென்ன மாயம்! இதுவெல்லாம் கனவா நனவா? தொலைந்தான் என்றிருந்தோமே. மறுபடியும் கழுதையை இறக்கி எங்கே கொண்டுபோகிறார்கள்? அவனுடைய சிநேகிதர்கள் இந்த ந்யாயாதிபதிகளுக்கு ஏதாவத பரிதானம் கொடுப்பதாக எழுதியனுப்பினார்களோ? கடைசியாகக் கார்யம் இப்படி முடிந்ததே. நம்முடைய பட்டணம் நல்ல பட்டணம்! பணம் இருந்தால் போதும்; என்ன அக்ரமம் செய்தாலும் ஏனென்று கேட்பார் இல்லை. நன்றாக இருக்கிறது நம்முடைய ந்யாய பரிபாலனம்" என்று பலவிதமாக நிந்தித்துக்கொண்டு போனார்கள்.
தாங்கள் செய்த பாதகங்களை அந்த்யகாலத்தில் ஒரு மதாசாரியனிடம் ரகஸ்யமாக வெளியிட்டால், அந்த மதாசாரியன் அவைகளுக்குப் பரிகாரம்பண்ணிப் பாவ நிவாரணம் உண்டாக்குவான் என்பது கிறிஸ்தவர்களுடைய கொள்கை. இதன் பொருட்டு ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒவ்வொரு மதாசாரியனை நியமித்திருப்பார்கள். அன்று காலையில், அவ்வித மதாசாரியன், சிறைச்சாலைத் தலைவனை அடைந்து, "ஐயா, இங்கே காய்ச்சலாகப் படுத்திருந்த ஒரு குற்றவாளி நேற்றிரவில் இறந்துபோனான். இறக்கு முன்னே அவன் என்னிடத்தில் தான் கள்ளக்காசு செய்கிற ஆள்களில் ஒருவன் என்றும், தனபாலனுடைய கணக்கப்பிள்ளை அவ்வாள்களுக்குத் தலைவன் என்றும், அந்தக் கணக்கப்பிள்ளை தனபாலனுடைய பெட்டிகளைக் கள்ளச்சாவி போட்டுத் திறந்து நல்ல ரூபாக்களையும் ஸவரன்களையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காசுகளைக் கலந்து பைகளைப் பழைய படியே கட்டிவைப்பதும், அந்த வேலைக்குரிய கருவிகளை அவன் தன் வீட்டில் வைக்காமல் தனபாலனுடைய பெட்டிகளில் அடியறைகளில் வைப்பதும் வழக்கம் என்றும், தன்னோடு உடந்தையாய் வேலை செய்வோர் இன்னார் என்றும், வேலைசெய்யும் இடம் இன்னதென்றும், எல்லா ஸங்கதிகளையும் வெளியிட்டு, பாவநிவாரணம் பண்ணும்படி வேண்டினான்" என்று விவரித்தான்.
சிறைச்சாலைத் தலைவன் உடனே அந்த ஸங்கதியைச் சுருக்கமாக எழுதி, எழுதிய காகிதத்தை ஒரு ஸேவகன் கையில் கொடுத்து, "வாயுவேகம் மனோவேகமாகக் குதிரையேறிப்போய் இந்தக் காகிதத்தைக் கொலைக்கள அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்" என்று உத்தரவு செய்து, ஊர்க்காவலாளிகளை ரகஸ்யமாக அனுப்பிக் கள்ளக்காசு செய்கின்ற ஆள்களைப் பிடிப்பித்துவிட்டான்.
அன்று மாலையே அவர்களை ந்யாயஸ்தலத்தில் விசாரணை செய்தபோது, அந்த ஆள்களில் ஒருவன் தனக்குச் சேர வேண்டிய க்ரமமான பாகம் பெறாமையாலே, தன் கூட்டாளிகளின் மர்மத்தை வெளிப்படுத்திவிட்டான். மதாசாரியன் சொன்னதும் இந்த ஆள் சொன்னதும் ஒத்திருந்தமையால், தனபாலன் நிரபராதி என்பது நியாயத்தலைவருக்குத் தெளிவாயிற்று.
தனபாலன்மீது வீணாக உண்டான அபவாதத்துக்குப் பரிகாரம் பகிரங்கமாகச் செய்யவேண்டுமென்று ஆலோசித்து, ந்யாயத்தலைவர், பட்டணத்திலுள்ள முக்கியமான கனதனவான்களெல்லாம் ந்யாயமண்டபத்தில் மறுநாள் வந்து கூடுகவென்று அறிக்கைசெய்தனர். எல்லாரும் வந்து கூடினவளவில், தனபாலனைச் சிறைச்சாலையினின்றும் அழைப்பித்து, ந்யாயத்தலைவர் தமது பீடத்திலிருந்து இறங்கிவந்து தனபாலனைக் கைபிடித்து அழைத்துப்போய்த் தமது பீடத்தின் பக்கத்தில் ஸமானமாக இருக்கச்செய்தார். பின்பு ந்யாயத்தலைவர், சிறைச்சாலையில் காய்ச்சலால் இறந்துபோன குற்றவாளியின் வாக்குமூலத்தை வாசித்தார். தனபாலன் நிரபராதி என்பதற்கு ஆதாரமான எல்லா அம்சங்களையும் விளக்கினார்.
எல்லாரும் ஆநந்தமடைந்து ஸங்கீத வாத்யகோஷத்துடன் தனபாலனை அழைத்துக்கொண்டுபோய் அவன் மாளிகையில் விட்டனர். மறியல் செய்த பொருள்களை ந்யாய உத்யோகஸ்தர் அவனிடம் ஒப்படைத்தனர்.
-----------------------------------------------------------
3. கோமளம்
தமிழ்நாடு முற்காலத்தில் சேரமண்டிலமென்றும் பாண்டி மண்டிலமென்றும் சோழமண்டிலமென்றும் மூன்று பிரிவினையுடையது. திருவாங்கூர் மலையாளம் கொச்சி குடகு கோயமுத்தூர் முதலியவை சேரமண்டலத்தைச் சேர்ந்தவை.
மதுரையும் திருநெல்வேலியும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தவை. திருவேங்கடம் முதல் திரிசிரபுரம் வரையில் சோழமண்டிலம் பரவியிருந்தது. காவிரியாறு கடலொடு கலக்கின்ற சங்கமுகத் துறையில் காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழராஜர்களுக்குத் தலைநகராயிருந்தது.
அந்தப் பட்டினம் ஆற்றங்கரையில் கிழக்கு மேற்காய் ஐந்து மைல் தூரமும் தெற்கு வடக்காய் நான்கு மைல் தூரமும் பரவியிருந்தது. அந்தப் பட்டினத்தை இங்கே வர்ணித்துப் பொழுதுபோக்குவதில் பலனில்லை. வேண்டின பேர்கள் சிலப்பதிகாரம் என்கிற காவ்யத்தில் படித்துக்கொள்ளலாம். அங்கே அரமனைக்கு அருகில் ஒரு கன்னிகாமாடமும் அதைச் சேர்ந்த ஒரு பூங்காவனமும் உண்டு.
பூங்காவனத்தில் ஒருபக்கம் சந்தனமரமும் சண்பக மரமும் தேமாமரமும் தீம்பலாமரமும் குராமரமும் மராமரமும் கோங்குமரமும் வேங்கைமரமும் தழைத்திருக்கும். ஒருபக்கம் கஸ்தூரி நந்தியாவட்டை சாமந்தி மல்லிகை இருவாட்சி முதலிய பூஞ்செடிகள் மலர்ந்திருக்கும். இடையிடையில் ஸம்பங்கி குருக்கத்தி மாதவிமுல்லை முதலான கொடிகள் படர்ந்த நடைக்காவணங்கள் நறுமணம் வீசி நன்னிழல் செய்திருக்கும். வனத்தின் இடையில் பெரிய தடாகம் ஒன்று உண்டு. அதன் இடையில் தாமரைக்கொடிகளும் அல்லிக்கொடிகளும் பின்னிப் பிணைந்திருக்கும். நாற்புறத்திலும் இறங்குதுறைகள் கட்டி, கரையில் அங்கங்கே ஸலவைக்கல்லால் திண்ணைகள் அமைத்து, திண்ணைகளைச் சுற்றறிலும் துளஸி, நிலஸம்பங்கி, ரோஜா முதலியன வைத்து, அந்தத் தடாகம் அதிக ரமணீயமாக இருக்கும்.
பூங்காவனத்தில் மாங்குயில் தீங்குரலாகப் பாடியிருந்தன. மயில் கூட்டங்கள் மரக்கிளைகளில் ஏறியிருந்தன. கிளிகள் பழங்களைக் கொந்தியும் இறகைக் கோதியும் கொஞ்சிக் குலாவியிருந்தன. நாகணவாய்கள் நாதம் செய்திருந்தன. மீன்குத்திகள் தடாகத்தினின்றும், மீன்களைக் கவ்வியெடுத்துப் பறந்துபோயின. சில இடங்களில் மான்கள் மேய்ந்திருந்தன. சில இடங்களில் மான்கள் மிரண்டோடின.
ஒருநாள் மாலைநேரம் நாலுமணிக்குமேல் அந்தப் பூங்காவனத்தில் ராஜகுமாரி ஒரு பூம்பந்தலை நோக்கிக் தன்னந்தனியே போய்க்கொண்டிருந்தாள். இடையில் கட்டியிருந்த பாவாடையும் மேலே போட்டிருந்த பூவாடையும் காற்றில் அலைந்திருந்தன. கோதிமுடித்த கூந்தலில் ஒரு ரோஜாமலர் செருகியிருந்தது. நெற்றியில் சிந்தூரத்திலகம் இட்டிருந்தது. காதில் வைரக் கம்மல் விளங்கியிருந்தது. அவளுக்கு வயது பதினெட்டிருக்கும். அவள் புஷ்பங்களின் அழகைக் கண்ணால் காணாமலும் பறவைகளின் பாட்டைக் காதால் கேட்காமலும் அப்படியிப்படித் திரும்பாமலும் அடிமேல் அடிவைத்துப் போகிறாள். ஒரு கவலை அவள் மனதைக் கவர்ந்திருக்கின்றது.
நடந்துபோன சில செய்திகள் ஒன்றின்பின் ஒன்றாய் நினைவில் புறப்படுகின்றன.: -- என் தம்பிமார்கள் எங்குற்றனரோ, என்னாயினரோ? அவர்களைக் கைக்கொண்டு போனவர் எவரேயோ? எங்களைப் பெற்ற தாய் இறந்துபோய் எட்டு வருஷங்கள் ஆய்விட்டன. அவள் இறந்து ஆறுமாதம் ஆவதற்குள் தந்தை பராக்ரம சோழர் இந்த மோகனாங்கியை மணஞ் செய்துகொண்டார். ஏனாதி புதல்வரான பாலசிங்கரோடு ஆசிரியரிடம் கல்விகற்றும் இனிது விளையாடியும் சில வருஷங்கள் ஸந்தோஷமாகக் கழிந்துபோயின. வயதேற ஏற பாலசிங்கருக்கும் எனக்கும் நேசம் ஏறிவந்தது. இப்பொழுது நாங்கள் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் இருவரும் மணம்புரிந்துகொள்வ தென்று மனம் ஒன்றியிருக்கிறோம். இந்த மோகனாங்கி தன் ஸகோதரன் மகன் மட்டி ஸாம்ப்ராணியான மடையனிடத்தில் என்னைத் தொலைக்கப் பார்க்கிறாள். தன்னுடைய தாதிகளால் நயவஞ்சகமாக என் ரகஸ்யத்தைத் தெரிந்துகொண்டு ராஜாவிடத்தில் கோள்சொல்லி அவர் மனதைக் கலைத்திருக்கிறாள். கைக்கெட்டினதை வாய்க்கெட்டாதபடி செய்வாளே. என்செய்வேன்.
இவ்விதமான கவலையோடு இவள் செல்லும்போது,பூம்பந்தலில் கொடிகளின் மறைவில் நின்று அவள் வரவை ஒருவன் எதிர்பார்த்திருக்கிறான். அவன் தலையில் ஸரிகை முண்டாசு கட்டியிருக்கிறான். இடையில் ஸலவைவேஷ்டி தரித்து உடலில் சொக்காயணிந்து அதன்மேல் பட்டு வல்லவாட்டுப் போட்டிருக்கிறான். நெற்றியில் சந்தனப்பொட்டு வட்டமாய்ச் சிறிதாய் இட்டிருக்கிறது. காதில் வைர வொட்டுக் கடுக்கன் விளங்கியிருக்கிறது. மீசை கருக்கிட்டிருக்கிறது. வயது இருபதிருக்கும். அவனுக்கும் ஒரு கவலை உண்டாயிருந்தது.
"பராக்ரமரிடம் ஏனாதியாக இருந்த என் தந்தை அரசனிமித்தம் அமர்க்களத்தில் ஆருயிர் விட்டான். அப்போது கர்ப்பமாக இருந்த என் தாய் என்னைப் பெற்றுவைத்துச் சில நாளில் இறந்துபோனாள். பராக்ரமர் பாலசிங்கன் என்று பெயரிட்டு என்னைச் சீருஞ் சிறப்புமாய் வளர்த்துவந்தார். நானும் ராஜகுமாரியான கோமளத்துடன் ஓராசிரியரிடம் கல்வி கற்றும் விளையாடியும் இளமைப் பருவத்தை இனிது கழித்தேன். பின்பு பல கலைகளில் பயின்றுவந்ததனால் புலவர்கள் என்னை நன்கு மதிக்கின்றார்கள். எனக்கும் கோமளத்துக்கும் உள்ள நேசம் இப்பொழுது எங்களுக்கு உயிர்நிலையாய் வளர்ந்திருக்கிறது. என்னை யின்றி அவள் உயிர்தரியாள்.: அவளையின்றி நான் உயிர்தரியேன். நாங்கள் காந்தர்வ வழக்கத்தை அநுஸரித்திருக்கிறோம். ராணி வார்த்தையைக் கேட்டு ராஜன் என்னைச் சோழமண்டிலம் விட்டுப் புறம் போகவென்று கட்டளை யிட்டிருக்கிறான். ஐயோ, கோமளம்! உன்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருப்பேன்" என்று பாலசிங்கன் பூம்பந்தரில் பரிதபித்திருந்தான்.
"உன்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருப்பேன்" என்றதைக் கேட்டுவந்த கோமளம் "என்னைப் பிரிவானேன்? இதோ வருகின்றேனே" என்று புன்சிரிப்போடு எதிரில் வந்தாள். பால சிங்கன் ராஜநிருபத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தான். கோமளம் அதைப் பார்த்தவளவில் மெய்ம்மறந்து அவன் மார்பில் சாய்ந்தாள். பாலசிங்கன் ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றினான்.
கோமளம். -- ஐயோ, அந்தப் பாவி இப்படிப்பட்ட சதி செய்வாளென்று நான் நினைக்கவில்லையே.
பாலசிங்கன். -- இனி என்ன செய்வது. நான் போகவே வேண்டும்.
கோமளம். -- நீங்கள் ஏதாவது வேலையாக ஒருநாழிகை நேரம் வெளியில் போயிருந்தால், அந்த ஒரு நாழிகை எனக்கு ஓர் ஊழிகாலம்போல் இருக்குமே; உங்களை வேறு தேசம் போகவிட்டு எப்படி ஆற்றியிருப்பேன்?
பாலசிங்கன். -- நீ கண்ணீர்விட்டுக் கதறினால், கண்ணே! என் கட்டாண்மை கரைகின்றது. உன்னிடம் எனக்குள்ள அன்பு கடுகளவும் குறையாது. இலங்கைத்தீவில் யாழ்ப்பாணத்தில் என் தந்தைக்கு நண்பர் சேனாதிராயர் என்பவர் ஒரு வர்த்தகர் இருக்கிறார். அவரிடம் போகிறேன். இங்கிருந்து கப்பலேறி வருகின்ற வர்த்தகர் மூலமாக அவருடைய விலாஸமிட்டுக் கடிதம் எழுது. உன் கடிதங்களின் வார்த்தைகளை ஆரமிர்தாகப் பருகியிருப்பேன்.
கோமளம். --உங்களோடு இல்லறம் நடத்த எண்ணியிருந்தேன். அதற்கு அந்தப் பாவி இடையூறு தேடினாள். அப வாதத்துக்கும் அஞ்சாமல் உடன்போக்காக உங்களோடு வந்துவிடுவேன். என் தந்தை உங்களை இடர்ப்படுப்பா ரென்றஞ்சுகிறேன். என் தந்தையை இணங்குவித்து உங்களை மீண்டும் பெறுதல் கூடுமென்றே நான் உயிர்தரித்திருத்தல் வேண்டும்.
பாலசிங்கன். -- நாம் எத்தனை நேரம் பேசியிருந்தாலும் நமக்குச் சலிக்காது. உன்னைப் பார்க்கிற பாவனையாக ராணி ராஜாவை அழைத்துக்கொண்டு இங்கே வந்தாலும் வருவாள். நான் போய் வருகிறேன். திக்கற்ற நமக்குத் தெய்வமே துணை.
கோமளம்.--சற்றிரும். இந்த வைரக்கல் மோதிரம் என் தாயார் எனக்குக் கொடுத்தது. என்னுயிர் என்னிடம் இருக்கிறவரையில் இந்த மோதிரத்தை நீங்கள் அணிந்து கொண்டிருக்கவேண்டும்.
பாலசிங்கன்.--இதோ, அணிந்துகொண்டேன். இதை நீ தான் என் கையிலிருந்து எப்பொழுதாவது கழற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கடகங்களை நீ அணிந்துகொள்.
கோமளம்.--அணிந்துகொண்டேன். மறுபடியும் எப்போது ஸந்திப்போமோ? ஐயோ, தெய்வமே ---
தூரத்தில் அரசனும் அரசியும் உல்லாஸமாய்ப் பேசி வருவதைக் கண்டு, பாலசிங்கன் செடிகளில் மறைந்து பாறிப் போய்விட்டான்.
II
யாழ்ப்பாணத்தில் சேனாதிராயருடைய மளிகைக்கு வருதலான வெவ்வேறு தேசத்து வர்த்தகர்களில் சில விடர்கள் பாலசிங்கனுக்கு அறிமுகமாயினர். வேலையில்லாத வேளைகளில் அவர்கள் அந்த மளிகையில் கூடி வேடிக்கையாக வார்த்தை சொல்லிக்கொண்டிருப்பர். ஒருநாள் அங்ஙனம் பொழுதுபோக்கி யிருக்கையில், பொதுவாகப் பெண்களைப்பற்றி ஸம்பாஷணை நடந்தது. அவனவன் தன் தன் தேசத்துப் பெண்டிருடைய குண விசேஷங்களைப் புகழ்ந்து பேசினான்: தன்தன் காதலியின் குண விசேஷங்களையும் புகழ்ந்து பேசினான்.
அப்போது பாலசிங்கனும் "என்காதலியான கோமளம் அறிவில் சிறந்தவள்: அழகில் இணையில்லாதவள்: கல்லைப் போல் கலங்காத கற்புடையவள்; அவளைக் கண்ணகியென்றே சொல்லலாம்" என்று தன் காதலியைப் புகழ்ந்து பேசினான்.
அதைக் கேட்டுப் பொறாமையடைந்த தென்னாட்டுத் தமிழன் ஒருவன் தேவராயன் என்பவன் "எங்கள் பாண்டிநாட்டுப் பெண்டிரைக் காட்டிலும் சோழநாட்டுப் பெண்டிருக்குள்ள உயர்வு என்ன? உம்முடைய காதலி உத்தமியென்பதை நான் உறுதியாக நம்பமாட்டேன்" என்றான்.விளையாட்டாகப் பேசியிருந்தது கடைசியில் வினையாக முடிந்தது.
தேவராயன். --ஐயா, உங்கள் பட்டினத்துக்குப்போய் நான் உமது காதலியின் காதலைக் கவர்ந்து வருகிறேன், பாரும். என் எண்ணம் ஈடேறாவிட்டால், உமக்கு ஆயிரம் பொன் கொடுக்கக்கடவேன். அவளுடைய கற்பைக் கலக்கி அவள் கையிலுள்ள கடகங்களையும் பெற்று வருவேனாகில், நீர் உமது கையில் அணிந்திருக்கும் கணையாழியை எனக்குக் கொடுத்துவிடுதல் வேண்டும். உமக்கு உடன்பாடுதானா?
பாலசிங்கன்.--ஆஹா. ஆக்ஷேபனை இல்லை. அது செய்யத் தவறினால் நீர் வாள் கையேந்தி என்னோடு வலிய சமர் செய்தல் வேண்டும். அதில் நம்மிருவரில் ஒருவர் சாவதே ஸரி.இருவரும் ஸாக்ஷிகளை ஏற்படுத்தி மேற்கண்ட உறுதிகளைக் காட்டி உடன்படிக்கைப் பத்திரம் எழுதிக்கொண்டனர்.
உடனே தேவராயன் புறப்பட்டுக் கப்பலேறி வந்து காவிரிப்பூம் பட்டினத்தில் இறங்கினான். வாயில் காப்போரிடம் வர்த்தகனென்று சொல்லிப்போய், ராஜகுமாரியைக் கண்டான். கண்டதும், "அம்மா, உமது உயிர்க்காதலரான பாலசிங்கருக்கு நான் நண்பன்" என்றுசொன்னான். அதைக் கேட்ட கோமளம் தேவராயனை ஓராசனத்தில் இருக்கச் செய்து, பாலசிங்கனுடைய செய்திகளை உசாவினாள். அப்போது தேவராயன் பாலசிங்கன்மீது இல்லதும் பொல்லதும் சில கற்பித்துக்கூறி, கோமளத்தின்மீது மோகங்காட்டிச் சில ஸரஸ வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். அவ்வளவிலே கோமளம் அருவருப்படைந்து முகங்கறுத்தாள்.
அதுகண்ட தேவராயன், "உமது கற்பின் திண்மையை ஆராய்ந்தறியும் பொருட்டே நான் இங்குற்றேன். உமது காதலர் உள்ளிட்ட நண்பர் நாங்கள் சிலர், சில அருங்கலம் வாங்கி இலங்கை யரசனுக்கு அளிக்க எண்ணினோம். அதன் பொருட்டு நாகைக்கு வந்தேன். உமது காதலர் வேண்டு கோளால் இங்கு வந்தேன். நாளைக்குப் புறப்பட்டுத் திரும்ப வேண்டும். பட்டினத்தில் உள்ள வேலையைப் போய்ப் பார்க்க வேண்டும். நான் வாங்கின அருங்கலங்களை ஒரு மரப்பெட்டியில் பூட்டிவைத்திருக்கிறேன். அதை இன்றிரவு மாத்திரம் இங்கே வைத்திருந்து கொடுக்கவேண்டும். ஆள்கள் மூலமாய் அனுப்புகிறேன்" என்றான். தன் நாயகனும் உள்ளிட்ட கருமம் என்றதனால் கோமளம் அதுசெய்ய அங்கீகரித்தாள்.
தேவராயன் ராஜகுமாரியிடத்தில் விடைபெற்றுப்போய் ஒரு மரப்பெட்டியின் உள்ளே புகுந்துகொண்டு, தன் ஆட்களை அழைத்து, "உள்ளிருந்தபடியே மூடவும் திறக்கவும் இந்தப் பெட்டியில் தாளிட்டிருக்கிறேன். நீங்கள் இந்தப் பெட்டியைக் கொண்டுபோய் ராஜகுமாரியின் அறையில் வைத்து வாருங்கள். நாளை விடியற்காலத்தில் மறுபடியும் அங்குற்று இந்தப் பெட்டியை இங்கே கொண்டுவருதல் வேண்டும்" என்று கட்டளையிட்டான். ஆட்கள் பெட்டியைக்கொண்டுபோய் ராஜகுமாரியின் அறையில் இறக்கிவிட்டு வந்தனர்.
நள்ளிரவில் கோமளம் மெய்ம்மறந்து உறங்கியிருக்கையில், ஆளரவம் காட்டாமல் தேவராயன் மெல்லெனப் பெட்டியைத் திறந்துகொண்டு வெளிப்பட்டான். பள்ளியறையின் அடையாளங்களை நன்றாகக் குறித்துக்கொண்டான்; அவள் கையிலிருந்த கடகங்களைக் கழற்றிக்கொண்டு, அவள் உடலைச் சற்றுநேரம் உற்றுப்பார்த்திருந்தான். அவள் புரளும் போது வயிற்றின் மீது மூடியிருந்த வஸ்திரம் விலகி ஒரு மச்சம் புலப்பட்டது. "இவளுடைய காதலனிடத்தில் நான் செய்துகொண்ட சூளுறவை முடித்துக்கொள்வதற்கு இதைக் காட்டிலும் வேறு ஸாக்ஷி வேண்டா" என்று ஸந்தோஷ மடைந்து முன்போலவே பெட்டியில் புகுந்து தாளிட்டுக் கொண்டான். விடியற்காலத்தில் ஆள்கள் வந்து பெட்டியைக் கொண்டுபோய் இறக்கிவிட்டனர். உடனே தேவராயன் புறப்பட்டுக் கப்பலேறி யாழ்ப்பாணம் போனான். மறுநாள் தேவராயன் சேனாதிராயருடைய மளிகைக்குப்போய், பாலசிங்கனைப்பார்த்து, "ஐயா, போன வேலையை முடித்துவந்தேன்" என்றான்.
பாலசிங்கன். --என்ன ஸங்கதி?
தேவராயன். --உமது நாயகியின் பள்ளியறையை விவரிக்கிறேன், கேளும்.
பாலசிங்கன். --அவ்வறையை நீர் உள்ளே போய்ப் பார்த்தீர் என்பது என்ன நிச்சயம்? எவராகிலும் சொல்லக் கேட்டிருக்கலாமே.
தேவராயன்.--ராஜகுமாரியின் பள்ளியறையை எதிரில் உள்ளதுபோல் விவரித்தான்: விவரித்தவுடனே, "ஏனையா, மோதிரத்தைக் கழற்றுமே" என்றான்.
பாலசிங்கன்.--நீர் சொன்ன அடையாளமெல்லாம் அக்கம்பக்கம் அறிந்ததுதானே. வீணாக விளையாட்ட வார்த்தை பேசுகிறீர்.
தேவராயன்.--விளையாட்டு வார்த்தையா? ஏன் இன்னும் பொறுப்பான அடையாளமும் கொண்டுவந்திருக்கிறேன். இதோ பாரும்! இது அவள் கையிலிந்த கடகந்தானா? ஏன் அப்படிப் பதைக்கிறீர்? கழற்றும் மோதிரத்தை (என்று நகைத்தான்.)
பாலசிங்கன்.--எதோ, அதை இப்படிக் காட்டும். நான் கொடுத்துவந்த கடகந்தானா பார்ப்போம்.
தேவராயன். --அதை அவள் கழற்றிக்கொடத்த ஒயிலை என்ன சொல்வேன். எதிரில் இப்பொழுதுதான் மந்தஹாஸம் செய்வதாகக் காண்கிறாள்.
பாலசிங்கன்.--புளுகு கற்றாலும் பொருந்தவே புளுக வேண்டும். என்னிடம் சேர்க்கும்படி உம்மிடம் கழற்றிக் கொடுத்தாளா?
தேவராயன்.--இதோ உமக்கு அவள் கொடுத்த கடிதம். அதில் அவ்வண்ணம் எழுதியிருந்தால், இந்தக் கடகத்தை நீரே எடுத்துக்கொள்ளலாம்.
பாலசிங்கன், கடிதத்தைப் பிரித்துப் பார்த்து, "ஓ இல்லை இல்லை. நான் உடன்படிக்கையின்படியே நடப்பேன்: தவற மாட்டேன். இதோ மோதிரம்:" என்று மோதிரத்தைக் கழற்றிக்கொடுத்தான்.
பாலசிங்கன்.- என்ன ஸங்கதி?
தேவராயன்.- உமது நாயகியின் பள்ளியறையை விவரிக்கிறேன், கேளும்.
பாலசிங்கன்.- அவ்வறையை நீர் உள்ளே போய்ப் பார்த்தீர் என்பது என்ன நிச்சயம்? எவராகிலும் சொல்லக் கேட்டிருக்கலாமே.
தேவராயன்.- ராஜகுமாரியின் பள்ளியறையை எதிரில் உள்ளதுபோல் விவரித்தான்: விவரித்தவுடனே, "ஏனையா, மோதிரத்தைக் கழற்றுமே" என்றான்.
பாலசிங்கன்.- நீர் சொன்ன அடையாளமெல்லாம் அக்கம்பக்கம் அறிந்ததுதானே. வீணாக விளையாட்டு வார்த்தை பேசுகிறீர்.
தேவராயன்.- விளையாட்டு வார்த்தையா? ஏன் இன்னும் பொறுப்பான அடையாளமும் கொண்டுவந்திருக்கிறேன். இதோ பாரும்! இது அவள் கையிலிருந்த கடகந்தானா? ஏன் அப்படிப் பதைக்கிறீர்? கழற்றும் மோதிரத்தை(என்று நகைத்தான்.)
பாலசிங்கன்.- எதோ, அதை இப்படிக் காட்டும். நான் கொடுத்துவந்த கடகந்தானா பார்ப்போம்.
தேவராயன்.- அதை அவள் கழற்றிக் கொடுத்த ஒயிலை என்ன சொல்வேன். எதிரில் இப்பொழுதுதான் மந்தஉறாஸம் செய்வதாகக் காண்கிறாள்.
பாலசிங்கன்.- புளுகு கற்றாலும் பொருந்தவே புளுகவேண்டும். என்னிடம் சேர்க்கும்படி உம்மிடம் கழற்றிக்கொடுத்தாளா?
தேவராயன்.- இதோ உமக்கு அவள் கொடுத்த கடிதம். அதில் அவ்வண்ணம் எழுதியிருந்தால், இந்தக் கடகத்தை நீரே எடுத்துக்கொள்ளலாம்.
பாலசிங்கன், கடிதத்தைப் பிரித்துப் பார்த்து,"ஓ இல்லை இல்லை. நான் உடன்படிக்கையின்படியே நடப்பேன்: தவற மாட்டேன். இதோ மோதிரம்:" என்று மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தான்.
கோபமும் மானமும் துக்கமு் மாறி மாறி அவனை வருத்திக்கொண்டிருந்தன. "ஐயோ, 'ரூபவதி பார்யா சத்ரு' என்பது மெய்யாயிற்றே. அவளுக்கு முகம் சந்த்ரபிம்பம் அகம் பாம்பின் விஷம் என்றறியாமற் போனேனே" என்று துயரப்பட்டான்.
அப்பால் கடுங்கோபங்கொண்டு, எல்லப்பன் என மேல் விலாஸமிட்டு ஒரு கடிதம் எழுதினான். எல்லப்பன், பூங்காவனத்து ஆள்களின் தலைவன். பாலசிங்கனிடம் விசுவாசம் உள்ளவன். அக்கடிதத்தில், கோமளம் பழிக்கஞ்சாத பாவியென்றும் அதற்குள்ள ஸாக்ஷிகள் இன்னவை யென்றும் எழுதி, "இலங்கைக்குக் கப்பலேற்றி அனுப்புவதாகச் சொல்லி, நாகைக்கு அழைத்துவருவதாகப் பாவனைகாட்டி, அவளை வழியில் கொலைசெய்துவிடுக" என்று வேண்டிக்கொண்டான்.
அந்தக் கடிதத்தோடுகூடவே கோமளத்துக்கும் நயவஞ்சகமான மற்றொரு கடிதம் அனுப்பினான். பிரிந்து வந்து நெடு நாள் ஆனதனால் அவளைக் காணும் அவா மேலிட்டிருக்கிறதென்றும், எல்லப்பனுடன் நாகைக்கு வந்தால் தன்னை ஸந்திக்கலா மென்றும் அக்கடிதத்தில் எழுதியிருந்தான்.
நாயகனே நினைவாக இருப்பவளாதலால், கடிதம் பெற்ற அன்றிரவே கோமளம் புறப்பட்டாள். எல்லப்பன் படுகொலை செய்யத் துணியாமல், தாங்கள் செல்லும் பயணத்தின் கருத்தை வழியிடையில் வெளியிட்டான். அதைக் கேட்டவளவில் அவளுக்கு ஆறாததுயரம் உண்யாயிற்று.
எல்லப்பன் "அம்மா, இதில் ஏதோ வஞ்சனை நடந்திருக்கிறது. உண்மை வெளிப்படுகிற வரையில் அவஸரப்பட்டு ஒன்றும் செய்யலாகாது. பொறுத்தார் பூமியாள்வார்" என்று வற்புறுத்தினான்.
கோமளம் "நல்லது, பொறுக்கக்கூடிய வரையில் பொறுக்கிறேன். பொறுக்கக் கூடாவிட்டால் உயிர் விடுகிறேன். இனி அரமனைக்கு வரவே மாட்டேன்" என்றாள்.
எல்லப்பன் "நீ இந்தக் கோலத்துடன் தனிவழியாகப் போதல் தகாது. சிலநாள் அஞ்ஞாதவாஸம் பண்ணவேண்டும். ஆண்பிள்ளை வேஷம் தரித்துக் கொண்டால் அச்ச மின்றிப் போகலாம்" என்று ஆலோசனை சொல்லி, ஆண் வேஷத்துக்குரிய உடைகளையும் சவதரித்துக் கொடுத்தான்.கொடுக்கும்போது, ஒரு மருந்துக்குப்பியும் அவள் கையில் கொடுத்து, "அம்மா, இது அமிர்த ஸஞ்சீவி என்னும் மஹௌஷதம். பலவிதமான வ்யாதிகளுக்குப் பரிஹாரமாவது: உனக்கு உதவும்படி ராணி என்னிடம் கொடுத்தது. வழியில் எந்த வ்யாதி கண்டாலும் இதில் கொஞ்சம் உண்டிடுக" என்று சொல்லிப் போய்விட்டான்.
சில ஜீவஜந்துக்களுக்குக் கொடுத்துப் பரீட்சை பார்க்க வேண்டு மென்று, ராணி சிறிது பாஷாணம் கொடுக்கும்படி அரமனை வைத்யனை வேண்டியிருந்தாள். இவளுடைய துர்க்குணத்தை அறிந்தவனாகையால், வைத்யன், பாஷாணமென்று சொல்லி, ஒருமருந்தைக் குப்பியிலிட்டு அவளிடம் கொடுத்தான். பாஷாணமென்றே நினைத்து அவள் அந்தக் குப்பியை எல்லப்பனிடம் கொடுத்தாள். எல்லப்பன் இப்போது கோமளத்திடம் கொடுத்தது இதுவே. அந்த மருந்தை உட்கொண்டவர், இரண்டு மூன்று நாழிகை மெய்ம்மறந்து கிடந்து, பின்பு முன்னிலும் உடலுரம் பெற்று எழுவார்கள்.
III
ஆண்வேஷம் தரித்து மருந்துக்குப்பியை மடியில் வைத்துக்கொண்டு, கோமளம் வழிநடக்கத் தொடங்கினாள். நாகையை அடைந்தால் நாயகனைக் காணலாகும் என்றெண்ணிச் செல்பவள், வழி தெரியாமல் வேறு வழியே போனாள். அந்தவழி மாலை வேளையில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டது.காட்டில் போகும்போது வயிறு பசித்தது: நாவரண்டது. சோர்வடைந்து, நடக்க முடியாமல், இருக்க இடந் தேடினாள். ஒரு குடிசை எதிர்ப்பட்டது. உள்ளே எவராகிலும் இருந்தால் உணவு கிடைக்கும் என்றெண்ணிக் குடிசையினுள்ளே புகுந்தாள். உள்ளே ஒருவரும் இல்லை. ஒரு மூலையில் ஒரு பானையில் கொஞ்சம் பழஞ்சோறும் ஒரு சட்டியில் கொஞ்சம் இலைக்கறியும் இருந்தது. ஆபத்துக்குப் பாபமில்லை என்று நினைத்துச் சோற்றையும் இலைக்கறியையும் எடுத்து ஒரு மரத்தட்டில் இட்டுக்கொண்டு உண்ணத் தொடங்கினாள்.
அப்போது வயோதிகன் ஒருவனும் வாலிபர் இருவரும் அக்குடிசையை அடைந்தனர். குடிசையினுள்ளே முற்படச் சென்ற வயோதிகன், அங்கே ஆண்மகனொருவன் ஆஹாரம் பண்ணிக்கொண் டிருப்பதைக் கண்டு, திடுக்கிட்டுப் பின்னடைந்து, "பிள்ளைகளே, சற்றுப் பொறுங்கள். உள்ளே வர வேண்டாம். நாம் மீதியாக வைத்த ஆஹாரத்தை யாரோ ஒருவன் உண்கிறான். அவன் தேவனோ மனிதனோ கந்தர்வனோ தெரியவில்லை" என்றான்.
மனிதர் அரவத்தைக் கேட்டவுடனே கோமளம் வெளியில் வந்து, "ஐயா, எனக்கு ஒரு தீங்கும் செய்ய நினைக்க வேண்டா. பசி பொறுக்க முடியாமையால், எவரிடத்தாயினும் பணங்கொடுத்தே அன்னம் அருந்த எண்ணிவந்தேன். குடிசையில் இருந்ததை உண்டதற்காக இதோ பணம் கொடுக்கிறேன்; பெற்றுக்கொள்ளுங்கள். இந்த ஸமயம் நீங்கள் வராவிட்டாலும் பணத்தை இங்கே வந்தனபூர்வமாக வைத்த விட்டே போவேன்" என்று புன்னகை செய்தாள்.
அவர்கள் மூவரும் ஒரு குரலாய், "நாங்கள் பணம் வாங்க மாட்டோம்" என்றார்கள்.
கோமளம்.--என்மேல் கோபங்கொள்ள வேண்டா. பசி பொறுக்காமல் செய்த குற்றத்தை மன்னிக்கவேண்டும். குற்றத்துக்கு அஞ்சியிருந்தால், இந்நேரம் என்னுயிர் என்னை விட்டு நீங்கியிருக்கும்.
வயோதிகன்.--ஐயோ, அப்படிப்பட்ட ஸமயத்தில் எங்கள் ஆஹாரம் உனக்கு உதவியானது எங்களுக்கு அதிக ஸந்தோஷமே. நீ யார்? உன் பெயர் என்ன? எங்கே போக வேண்டும்?
கோமளம்.--என் பெயர் ஸுந்தரன். உறவினரொருவர் யாழ்ப்பாணம் போயிருக்கிறார். அவரைப் பார்க்க நாகையில் கப்பலேறிப் போகவேண்டும்.
வயோதிகன்.--அப்பா, ஸுந்தரா, காட்டில் வஸிப்பதால் எங்களைக் கொடிய வேடர் என் றெண்ணவேண்டா. பொழுது போய்விட்து. நீ இங்கே தங்கியிருந்து இளைப்பாறி ஸாவகாசமாய்ப் போகலாம். பிள்ளைகளே, இந்த ஸுந்தரனுக்கு உணவிட்டு உபசரியுங்கள்.
பிள்ளைகள் இருவரும் இனிய வார்த்தைகள் பேசி ஸுந்தரனை உள்ளே அழைத்துப்போயினர். ஸுந்தரனைக் கண்டு பேசிய அளவில் அவர்களுக்கு ஸஹோதரவாஞ்சை உண்டாயிற்று. அவர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த மாம்ஸத்தை ஸுந்தரன் அதிமாதுர்யமாகத் திருத்திச் சமைத்து அவர்களுக்கு ஆநந்தம் உண்டாக்கினான்.
முகமலர்ச்சியோடு கூடியிருந்தாலும், ஸுந்தரனுடைய மனதில் ஏதோ கவலை குடிகொண்டிருப்பதாக அவர்கள் அநுமானித்துக் கொண்டனர். அடக்கம் முதலிய அரிய குணங்களைக் கண்டு ஸுந்தரனிடம் அவர்களுக்கு அன்பு உண்டா யிற்று. கோமளமும் "என் காதலர் என் மனதைக் கவர்ந்திராவிட்டால், நான் இங்கேதானே இவ்விளங்குமரருடனே என் காலத்தைக் கழித்திருப்பேன்" என்று நினைத்தாள். ஆயாஸம் தீர்கிறவரையில் அவர்களோடு தங்கியிருக்க ஸம்மதித்தாள்.
மறுநாள் இளங்குமரர் இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர். அசக்தியால் ஸுந்தரன் அவர்களோடு போகவில்லை. வழிமுழுதும் அவர்கள் ஸுந்தரனுடைய குண விசேஷங்களையே புகழ்ந்துகொண்டு போயினர். அவர்கள் போனபிறகு, கோமளம், மடியிலிருந்த மருந்தை உட்கொண்டாள். உட்கொண்ட கொஞ்சநேரத்தில் பிணம்போல் மெய்ம்மறந்து உறங்கிவிட்டாள்.
வேட்டையாடி வந்தவர்கள், ஸுந்தரன் எழாமலும் அசையாமலும் ஸ்மரணையின்றி இருப்பதைக் கண்டு, "ஐயோ, இறந்துவிட்டானே. எங்கிருந்து வந்தானோ? எவனோ தெரிய வில்லையே. என்ன செய்வது? இப்படிப்பட்டவனை இந்தக் காட்டிலே இனிக் காணப்போகிறோமா?" என்றழுது, ஸுந்தரனைக் கொண்டுபோய் வெளியான இடத்தில் ஒரு மர நிழலில் ஒரு பாறையின்மேல் வளர்த்தி, மேலே தழைகளையும் கண்ணிகளையும் மூடிவைத்து, அதிக துக்கத்துடன் குடிசைக்குத் திரும்பினார்கள்.
அங்ஙனம் அவர்கள் திரும்பின பிறகு, கொஞ்ச நேரத்தில் கோமளம் நித்திரை தெளிந்து, மேலே மூடியிருந்த தழைகளையும் கண்ணிகளையும் உதறியெழுந்து, "குடிசையில் இருந்த நான் இங்கு எப்பொழுது வந்தேன்? எப்படி வந்தேன்? என்மீது தழைகள் மூடியிருந்த காரணம் என்ன? அந்த வயோதிகனும் இளங்குமரரும் இன்னும் வரவில்லையோ" இதெல்லாம் கனவோ நனவோ! ஒன்றும் விளங்கவில்லையே" என்று சுற்றி வளைத்துப் பார்த்தாள். குடிசைக்குப் போகிற வழியும் தெரியவில்லை. செய்வது இன்னதென்பது ஒன்றும் தோன்றவில்லை. நினைவெல்லாம் நாயகனிடம் சென்றதால். அணிந்திருந்த ஆண்வேஷத்துடன சென்று அவனைக் காண்பதான ஆசை மேலிட்டு, நாகை நோக்கிப் போவதென்று புறப்பட்டாள்.
IV
கோமளத்தைக் கொன்றுவிட்டதாக எல்லப்பன் எழுதிய கடிதத்தைப் பார்த்தமாத்திரத்தில், பாலசிங்கன், "ஐயோ, எனக்கு அவளிடம் இருந்த அன்பு என்ன? அவளுக்கு என்னிடம் இருந்த அன்பு என்ன? எல்லாம் இப்படி முடிந்ததல்லவா. இனி நான் உயிரோடிருந்து பெறுதலான இன்பம் என்ன இருக்கிறது?" என்று துக்கமடைந்தான்.
அந்த ஸமயத்தில், பராக்ரமசோழனோடு யுத்தம் செய்யுமாறு இலங்கையரசனுடைய சேனை புறப்பட்டது. பாலசிங்கன் "இந்தச் சேனையோடு போய், சோழன் சேனையோடு கலந்துகொண்டு அவன் சார்பிலே நின்று யுத்தத்தில் மடிந்து போவது ஒன்று; இன்றேல் ராஜகட்டளையை மீறித் திரும்பிய நிமித்தம் சோழனால் கொலையுண்பது ஒன்று. இவ்விரண்டில் ஒன்றே செய்யத்தகுவது" என்று உறுதிசெய்துகொண்டு, இலங்கை யரசனுடைய சேனையோடு வந்தான்.
கோமளம் காட்டில் அலைந்து திரியும்போது, இலங்கைச் சேனை அந்தக் காட்டிலே வந்து சேர்ந்தது. கோமளம் சிறைப் பட்டாள்.
ஆண்வேஷத்திலிருந்த அவளுடைய ஒழுக்கத்தையும் தைர்யத்தையும் கண்டு, சேனாதிபதியான பாகுபலி அவளைத் தன் ஸேவகத்தில் அமர்த்திக்கொண்டான்.காட்டையடைந்த இலங்கைச் சேனையோடு போர் புரியும் பொருட்டுச் சோழன்சேனையும் அக்காட்டில் நுழையும் போது, குடிசையிலிருந்த வயோதிகனும் இளங்குமரர் இருவரும் சோழன் சேனையில் சேர்ந்துகொண்டார்கள். பாலசிங்கன் இலங்கைச் சேனையை விட்டு, புதர்களின் மூலமாய் மறைந்துவந்து, சோழன் சேனையில் சேர்ந்துகொண்டான். இந்நால்வரும் வந்து சேராவிட்டால், சோழன் தோல்வியடைந்து கொலையுண்டிருக்கவேண்டும்.இலங்கைச் சேனை தோல்வியடைந்த அளவிலே, சோழனுடைய படைவீரர் பகைவருடைய படைத்தலைவன் முதலானவர்களைச் சிறைபிடித்து வந்து சோழினதிரில் நிறுத்தினர். படைத்தலைவனோடு கோமளமாகிய ஸுந்தரனும் வந்து நிற்பது அவசியமாயிற்று. குடிசையிலிருந்த வயோதிகனும், இளங்குமரர் இருவரும், அவர்களோடு பாலசிங்கனும், அரசனுக்கு அபாயமான ஸமயத்தில் செய்த மஹோபகாரத்தின் நிமித்தமாக, அவர்களையும் சில ப்ரதானிகள் அழைத்துவந்து அரசனெதிரில் நிறுத்தினர். எல்லப்பனும் அரசனெதிரில் இருந்தான். பாலசிங்கன், "நானே என்னை இன்னானென்று வெளியிட்டு மரணதண்டனை அடையவேண்டும்" என்று ஆயத்தமாக இருந்தான்.
குடியானவன்போல் மாறுவேஷம் பூண்டிருந்த பாலசிங்கனை இன்னானென்று கோமளம் அறிந்துகொண்டாள். ஆண் வேஷத்தில் இருந்தமையால் அவளை இன்னாளென்று பால சிங்கன் அறியவில்லை. இலங்கைச் சேனையோடு வந்து சிறைப்பட்ட தேவராயனைக் கோமளம் இன்னானென்று தெரிந்து கொண்டாள். தனது துன்பத்துக்குக் காரணமானவன் அவனேயென்பது அவளுக்குத் தெரியாது. தன் கணையாழி அவன் கையில் இருப்பதைக் கண்டு அவளக்கு அதிசயம் உண்டாயிற்று. கோமளத்துக்கு ஆண்வேஷத்துக்குரிய உடைகளைச் சவதரித்துக் கொடுத்தவனாகையால், எல்லப்பன் மாத்திரம் அவளைத் தெரிந்துகொண்டான்.
வயோதிகனும் இளங்குமரர் இருவரும் "இவன் ஸுந்தரனை ஒத்திருக்கிறான். அவனேதான், வேறல்லன். இறந்து போனான் என்றெண்ணினோமே: மீண்டும் உயிர்பெற் றெழுந் தானோ! ஸுந்தரனேயாயின் இவன் நம்மைக் கண்டு கொள்ளாமல் இருப்பானா? இதென்ன அதிசயம்!" என்று தங்களில் ஒருவரோடொருவர் பேசியிருந்தனர்.
இன்னொன்று சொன்னால் தன்னை மன்னித்து விடவார்களென்று அஞ்சி, பாலசிங்கன், வாய்திறவாமல், தனக்கு எப்போது அரசன் மரணதண்டனை விதிப்பானென்று எதிர்பார்த்திருந்தான். இவ்வாறிருக்கையில், பகைவர் படைத்தலைவனான பாகு பலி, சோழனைப் பார்த்து, "மஹா ராஜனே, சிறை பிடித்தவர்களை ஈடுகொடுத்து மீட்கவிடாமல் நீங்கள் எங்களைக் கொலை செய்தாலும் செய்வீர். ஆதலால் இறப்பதற்கு நான் துணிந்திருக்கிறேன். ஆயினும் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ளுகிறேன்" என்று சொல்லி, ஸுந்தரனை இழுத்து எதிரில் விட்டு, இவன் இந்த நாட்டில் இருப்பவன். எங்கள் சேனையில் சிறைப்பட்டு இரண்டு மூன்று நாளாய் இந்த யுத்த ஸமயத்தில் என்னிடம் எடுபிடியாளாக இருந்தவன். உண்மையும் உள்ளன்பும் உள்ளவன். கடப்பாடறிந்து கருமம் நடத்துகின்றவன்.
பகைவனிடம் பணிவிடை செய்திருந்தது தவிர, உங்கள் நாட்டினருக்கு ஒரு தீங்கும் செய்தவனல்லன். ஈடு கொடுத்து இவனை மாத்ரம் மீட்டுவிட எனக்க விருப்பம் உண்ட. இவனக்குமாத்ரம் ப்ராணபிக்ஷை கொடுக்கவேண்டும்" என்று ப்ரார்த்தித்தான்.
மாறுவேஷத்திலிருந்த கோமளத்தைத் தன் மகளென்று அறியாமல் பராக்ரமசோழன் "இவனை இதற்று முன் பார்த்திருக்கிறேன். பார்த்த இடமும் ஸமயமும் நினைவில்லை. இவனைப் பார்க்கப் பார்க்க எனக்கு அன்பு மேலிடுகின்றது" என்றெண்ணிக்கொண்டே, "அப்பா, உன் உயிரைக் கொடுத்தேன். இன்னும் வேறு விருப்பம் இரந்தால், சொல்லிக்கொள். இந்தப் பாகுபலியின் உயிரை வேண்டினாலும் கொடுக்கிறேன்" என்ற சொன்னான்.
உடனே கோமளம், அரசனுக்க வந்தன பூர்வமாக நமஸ்காரம் பண்ணி எழுந்து, க்ஷணநேரம் மௌனமாக இருந்தாள். எல்லாரும் அவள் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்திருந்தார்கள்.
அப்போது பாகுபலி "அப்பா, எனக்காக ப்ராணபிக்ஷை கேட்க வேண்டாம். இனி உயிரோடிருக்க எனக்கு விருப்பம் இல்லை" என்றான்.
கோமளம் "ஐயா, வேறு கார்யம் இருக்கிறது" என்றாள். அதைக் கேட்டு பாகுபலி அதிசயங்கொண்டு அசைவற்றிருந்தான்.
கோமளம், "மஹாராஜா!" என்று விளித்து, தேவராயனைக் காட்டி, "கையிலிருக்கும் கணையாழியை அவர் எவ்விடத்தில் எங்ஙனம் பெற்றார் என்பதை அறிவிப்பதே அடியேன் விரும்புகின்ற வரம்" என்றாள்.
அரசன் "ஏட, அம்மோதிரம் உனக்கு எங்கே கிடைத்தது? எங்ஙனம் கிடைத்தது? உள்ளதை உரைக்காவிட்டால் உன்னை வதைத்துவிடுவேன்" என்றான்.
அவ்வளவில் தேவராயன் முதலிலிருந்து முடிவு வரையில் நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட்டான்.
அதைக் கேட்ட பாலசிங்கன், "ஐயோ கோமளம்! என் உயிரே, என்அரசியே, என் நாயகியே, ஓ கோமளம் கோமளம், உன்னை இனி எப்போது காண்பேன். நான் பாவி, யான் சண்டாளன்" என்று கதறியழுது, அரசனெதிரில் விழுந்து "படுவான், இந்தப் பாவியின் சதிவஞ்சனையால் மோசம் போனேன். எல்லப்பனுக்குக் கடிதம் எழுதிக் கற்பரசியான கோமளத்தைக் கொல்வித்தேன். நான் பாவி, இனி க்ஷணநேரமும் உயிரோடிருக்கலாகாது. என்னைக் கொலை செய்வதே தகுதி. என்னைச் சித்ரவதை செய்வதானாலும், எனக்கு ஸம்மதமே" என்று அலறினான்.
கோமளம் முண்டாசை எடுத்தெறிந்து சொக்காயைக் கழற்றிவிட்டாள். எல்லாரும் ஆநந்தக் கண்ணீர் சொரிந்தனர். கண்கெட்டவன் மீண்டும் கண் பெற்றதுபோல், பாலசிங்கன் பரவச மாகிநின்றான். அவனை அரசனும் மருகனாக அங்கீகரித்தான்.
அதுவே தக்க ஸமயமென்று, குடிசையிலிருந்து வந்த வயோதிகன், இளங்குமரர் இருவரையும் இட்டுககொண்டு அரசனெதிரில் வந்துநின்று, "மஹாராஜா, அடியேன் நெடுநாள் முன்னர்த் தங்கள் ஸேவையிலிருந்த வீரப்பன். விச்வா ஸகாதகனென்று வீணில் பழிசுமத்தி என்னை நீக்கிவிட்டீர்கள். அதனால் வஞ்சந்தீர்க்கக் கருதி எவர்க்கும் தெரியாமல் உங்கள் குமாரர்கள் இருவரையும் கொண்டுபோய்க் காட்டில்வைத்து என் பிள்ளைகள்போல் வளர்த்திருந்தேன். இவர் மூத்தபிள்ளை பாரந்தகர்: இவர் இளையபிள்ளை விக்ரமர்" என்று சொல்லி, அவர்களை அரசன் கையில் ஒப்பித்தான்.நிதியைக் கண்ட நித்யதரித்ரனைப் போல், அரசன் ஆநந்தமடைந்து, வீரப்பனைத் தழுவிக்கொண்டான்.
-----------------------------------------------------------
4. ஸுப்பையர்
I
கிழக்கில் பெத்துநாய்க்கன் பேட்டைக்கும், மேற்கில் வேப்பேரிக்கும், வடக்கில் உப்பளத்துக்கும், தெற்கில் பூந்தமல்லி சாலைக்கும் இடையில், சென்னைக்கு நடுநாயகமாய் ஒரு பூங்காவனம் உண்டு. ஸாதாரண ஜனங்கள் அதை ராணி தோட்டம் விக்டோரியா தோட்டம் சிங்காரத் தோட்டம் என்றும், இங்க்லிஷ் படித்தவர்கள் பீபில்ஸ் பார்க் என்றும் வழங்குவர். சில இடங்களில செய்குன்றுகளும் சில இடங்களில் தாமரைத் தடாகங்களும் சில இடங்களில் தீவுகளும் சில இடங்களில் பர்யாயத்தீவுகளும் அமைத்து, இடைவெளிகளில் பலதேசத்திலிருந்து கொண்டுவந்த பலவித மரங்களை வளர்த்து, நகரபரிபாலன ஸபையார் இந்தத்தோட்டத்தை மிகவும் ரமணீயமாக வைத்திருக்கின்றனர்.
தோட்டம் ஸுமார் ஒரு மைல் நீளமும் கால்மைல் அகலமும் உள்ளதாயினும், உள்ளே குறுக்கு நெடுக்காய் வளைய வளையப் போட்டிருக்கிற பாதைகள் நாலைந்து மைல் நீளம் இருக்கும். பாதைகள் நீங்கலான இடம், எங்கே பார்த்தாலும், அறுகம்புல் பச்சென்ற படர்ந்திருக்கும். பாதைகளின் இரு பக்கங்களிலும் கமுகமரங்களும் காட்டுவாழை மரங்களும் புன்கமரங்களும் பூவரசமரங்களும் வெய்யிலின் வெப்பம் தெரியாதபடி நிழல்கொடுத்து நிற்கும். புல்வெளிகளின் இடையிலே வட்டமாகவும் முக்கோணமாகவும் நாற்கோணமாகவும் பலகோணமாகவும் பாத்திகள் அமைத்து, பலவர்ணமான புஷ்பங்களைப் புஷ்பிக்கும் பலவித செடிகள் வைத்திருக்கும். சில இடங்களில் சிறிய மேடைகள் அமைத்து, அவைகளின் மீது சிறியனவும் பெரியனவுமான பல புஷ்பத் தொட்டிகள் அடுக்கடுக்காகவும் வரிசை வரிசையாகவும் வைத்திருக்கும். இந்தப் புஷ்பப் பாத்திகளுக்கும், மேடைகளுக்கும்,பாதைகளிலிருந்து இரண்டு முழம் மூன்று முழம் அகலமுள்ள கிளைவழிகள் அமைத்திருக்கும். அவைகளின் ஓரங்களில் சீமைக் கரிசிலாங்கண்ணி கருநொச்சி முதலானவைகள் அடர்த்தியாக வைத்துத் திட்டமாகக் கத்தரித்திருக்கும். சில இடங்களில் க்ரோட்டன் கொறுக்கச்சி மூங்கில் முதலியன புதர்போல் வளர்ந்திருக்கும். காலை மாலைகளில் வருவார் போவார் உட்கார்ந்து காற்றுவாங்கவும், காட்சிகளைக் கண்டு களிக்கவும், அங்கங்கே மரநிழலில் இருப்புப் பீடங்களும் விசிப்பலகைகளும் இட்டிருக்கும்.
இரண்டு மூன்றிடங்களில் பெரிய பெரிய கூண்டுகள் கட்டி, அவைகளில் புறாக்களும் கிளிகளும் மயில்லளும் சிறிதும் பெரிதுமான பலவித பக்ஷிகளும் விட்டிருக்கும். ஓரிடத்தில் சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் வேலியிட்டு உள்ளே மான் கூட்டங்கள் விட்டிருக்கம். ஒரிடத்தில் ஒரு நீர் நிலையில் மதலை விட்டிருக்கும். ஓரிடத்தில் யானை கட்டியிருக்கும்.
இந்தத் தோட்டத்தின் வடபாதியின் மத்தியில், நான்கு பர்லாங்க் சுற்றளவுள்ள இடம், சுற்றிலும் துத்தநாகத் தகடுகளால் ஓராள் எட்டிப்பார்க்க முடியாத உயரமுள்ள அடைப்பு அடைத்திருக்கிறது. அதினுள்ளே மூன்று பக்கம் ஸுமார் இருபதடி அகலமுள்ள நீர்க்கால் ஒன்று உண்டு. அந்த நீர்க்காலில் சில பால்யர்கள் சிறு படகுகளில் ஏறித் தாங்களே துடுப்புப் பிடித்துப் படகைத் தள்ளிக்கொண்டுபோவர். இந்த அடைப்பிடத்தின் உள்ளே போவோர் வாயிலில் உள்ள ஆளிடம் ஓரணா கொடுத்துப் போகவேண்டும். மேல்பாதியில் அங்கங்கே பெரிய பெரிய இரும்பு போன்கள் அமைத்திருக்கின்றன. ஒன்றில் சிங்கம் இருக்கும்:
ஒன்றில் புலிகள் இருக்கும்: ஒன்றில் சிவிங்கி இருக்கும். நீர்க்காலின் அப்பால் ஒரு மேடையில் பலஜாதிக் குரங்குகள் கடிடியிருக்கும். வேடிக்கை பார்க்க வருவர் அவைகளுக்க வேர்க்கடலை பட்டாணி வாழைப்பழம் முதலானவைகளை வாங்கிவந்து கொடுப்பார்கள்.
தோட்டத்தின் தென்பாதியில் ஓரிடத்தில், ஒருகாணி விஸ்தாரமுள்ள இடத்தில், தேக்குவரிச்சல்களாலும் சட்டங்களாலும் பந்தலிட்டு, உள்ளே பெரிய தொட்டிகளில் மடல் மட லான இலைகளுள்ள சில மலைப்பூடுகளைத் தினம் இருமுறை மும்முறை ஜலம் விட்டு வளர்த்து, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள். பெர்னெரியென்னும் இவ்விடத்தில் வெய்யிற்காலத்தில் மாலைவேளையில் பீடங்களில் உட்கார்ந்து சிலர் ஜதை ஜதையாய்ப் பேசியிருப்பார்கள். சிலர் வர்த்தமானபத்ரிகை கதைப்புத்தகம் முதலியவைகளைப்படித்திருப்பார்கள். உள்ளே போனால் பொழுதுபோகிற வரையில் அதைவிட்டு வெளியில் வருவதற்கு மனம் ஒப்பாது. அங்கே இருக்கிற வரையில் பெங்களூரில் இருப்பதுபோலவும் வெலிங்க்ட்டனில் இருப்பதுபோலவும் வெய்யிலின் வெப்பம் தெரியாமலிருக்கும்.
அவ்விடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பான்ட் ஸ்ட்டான்ட் என்கிற வாத்தமேடை விமானம்போல் கட்டியிருக்கிறது. மேடையைச் சுற்றிச் சிலகஜ தூரம் வெளியிடம் விட்டுச் சுற்றிலும் பாதை அமைத்திருக்கிறது. பாதை ஓரடி உயரமாய் ஸமமாக இருக்கிறத. பாதையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலியிட்டிருக்கிறது. உள்ளே போவதற்கு நான்கிடங்களில் ஆறடி அகலமுள்ள வழிகள் விட்டிருக்கின்றன. அந்த வழிகளின் மீது வளைவாகக் கம்பிகள் பின்னியிருக்கும். அவைகளின்மேல் ரங்கூன்மல்லி ஸம்பங்கி காக்கணம் முதலிய கொடிகள் பந்தலிட்டதுபோல் படர்ந்திருக்கம். வேலியைச் சுற்றிலும் பெரிய பாதை உண்டு.
வாரத்தில் ஒரு நாள் இந்த வாத்யமேடையில் ராணுவ வீரர்கள் பான்ட் வாசிப்பார்கள். அந்தக் கீதவாத்யத்தைக் கேட்டு மகிழும்படி, இங்க்லிஷ்காரரும் சுதேசிகளும் வந்து கூடியிருப்பார்கள். இங்க்லிஷ் சிறுவர்கள் அந்த வாத்யத்துக் கேற்றவாறு கூத்தாடி ஸந்தோஷிப்பார்கள். அங்கே எரிகிற விளக்குகளின் ஜோதியாலும், ஜனங்களின் உடை விசேடங்களாலும் குளிர்ச்சியாக வீசும் காற்றினாலும், அந்த ஸமயத்தில் அவ்விடம் அதிரம்யமாக இருக்கும்.
தோட்டத்தின் தென்பாதியில் ஓரிடத்தில், ஒருகாணி விஸ்தாரமுள்ள இடத்தில், தேக்குவரிச்சல்களாலும் சட்டங்களாலும் பந்தலிட்டு, உள்ளே பெரிய தொட்டிகளில் மடல் மடலான இலைகளுள்ள சில மலைப்பூடுகளைத் தினம் இருமுறை மும்முறை ஜலம் விட்டு வளர்த்து, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள். பெர்னெரியென்னும் இவ்விடத்தில் வெய்யிற்காலத்தில் மாலைவேளையில் பீடங்களில் உட்கார்ந்து சிலர் ஜதை ஜதையாய்ப் பேசியிருப்பார்கள். சிலர் வர்த்தமானபத்ரிகை, கதைப்புத்தகம் முதலியவைகளைப் படித்திருப்பார்கள். உள்ளே போனால் பொழுதுபோகிற வரையில் அதைவிட்டு வெளியில் வருவதற்கு மனம் ஒப்பாது. அங்கே இருக்கிற வரையில் பெங்களூரில் இருப்பதுபோலவும் வெலிங்க்டனில் இருப்பதுபோலவும் வெய்யிலின் வெப்பம் தெரியாமலிருக்கும்.அவ்விடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பான்ட் ஸ்டாண்ட் என்கிற வாத்யமேடை விமானம்போல் கட்டியிருக்கிறது.
மேடையைச் சுற்றிச் சிலகஜ தூரம் வெளியிடம் விட்டுச் சுற்றிலும் பாதை அமைத்திருக்கிறது. பாதை ஓரடி உயரமாய் ஸமமாக இருக்கிறது. பாதையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலியிட்டிருக்கிறது. உள்ளே போவதற்கு நான்கிடங்களில் ஆறடி அகலமுள்ள வழிகள் விட்டிருக்கின்றன. அந்த வழிகளின் மீது வளைவாகக் கம்பிகள் பின்னியிருக்கும். அவைகளின்மேல் ரங்கூன்மல்லி, ஸம்பங்கி, காக்கணம் முதலிய செடிகள் பந்தலிட்டதுபோல் படர்ந்திருக்கும். வேலியைச் சுற்றிலும் பெரிய பாதை உண்டு.
வாரத்தில் ஒரு நாள் இந்த வாத்யமேடையில் ராணுவ வீரர்கள் பான்ட்* வாசிப்பார்கள். அந்தக் கீதவாத்யத்தைக் கேட்டு மகிழும்படி இங்க்லிஷ்காரரும் சுதேசிகளும் வந்து கூடியிருப்பார்கள். இங்க்லிஷ் சிறுவர்கள் அந்த வாத்யத்துக்கேற்றவாறு கூத்தாடி ஸந்தோஷிப்பார்கள். அங்கே எரிகிற விளக்குகளின் ஜோதியாலும், ஜனங்களின் உடை விசேடங்களாலும், குளிர்ச்சியாக வீசும் காற்றினாலும், அந்த ஸமயத்தில் அவ்விடம் அதிரம்யமாக இருக்கும்.முப்பததைந்து வருஷங்களுக்கு முன்னே இந்தத் தோட்டம் இப்பொழுதிருப்பதைவிட மிகவும் இனிமையாக இருந்தது.
அப்போது நகரசபா மண்டபம் அங்கே இல்லை. மூர் மார்க்கெட் அதற்கப்பால் ஏற்பட்டது. முனிஸிபல் ஆபீஸ் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தோட்டத்தை மேல்பார்வை செய்கிற உத்யோகஸ்தனுக்காக கட்டியிருக்கிற சிறிய மாளிகை தவிர வேறே ஒரு கட்டடமும் இல்லை. எவ்விடமும் பாயில்லாமலே இருக்கவும் படுக்கவும் ஏற்றபடி இந்தத்தோட்டம் சுத்தமாக இருந்தது.
எவ்விதமான துக்கமுள்ளவர்களுக்கும் இந்தத் தோட்டம் துக்கத்தை நீக்கி ஸந்தோஷத்தைக் கொடுக்கும் அமிர்த ஸ்ஞ்சீவிபோல் இருந்தது. தனிகரான மணவாளரும் மணவாட்டிகளும் தீவுகளில் தனியிடங்களில் கூச்சமில்லாமல் உல்லாஸமாய்ப் பேசியிருப்பார். கிழம் பழங்கள் விசிப்பலகைகளில் உட்கார்ந்த்து தங்கள் பூர்வோத்தங்களைச் சொல்லி ஸ்ந்தோஷிப்பார்கள். இங்கிலிஷ் படிக்கும் பாலர்கள் பல வாதங்கள் செய்து உலாவித்திரிவர். நாட்டுப்புறங்களிலிருந்து வருகின்றவர்கள் காட்டு மிருகங்களைப் பார்த்து அதிசயிப்பர். மிட்டாய் தினுஸுகளை வாங்கிவந்து இந்தத்தோட்டத்தில் தடாகக்கரையில் இருந்து உண்டு இன்பமடைவர். ஞாயிற்றுக் கிழமை முதலிய ஒழிவு நாள்களில் உபாத்யாயர்களும் உத்யோகஸ்தர்களும் வந்து அங்கங்கே உட்கார்ந்தும் உலாவியும் வேடிக்கை பார்த்தும் ஸந்தோஷமடைந்து திரும்புவர்.
--------------
II
தாது வருஷத்திலும் அதற்கு முன்னும் சென்னை ராஜ்யத்தில் மழையில்லாமல் ஜனங்கள் பட்டபாடு இப்படிப்பட்டதென்று இப்போது அனேகர் அறியார். அந்த க்ஷாமத்தின் கொடுமை அடங்கினபிறகு, சென்னையில் உள்ள சில இங்க்லிஷ் கனவான்களும் சில சுதேசனவான்களும் சில பெரிய உத்யோகஸ்தர்களும் கூடி ஆலோசித்து, டிஸெம்பர்மாத முடிவில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறந்த பெரு நாளைக் கொண்டாடுகிற காலத்தில், துரைத்தன உத்யோகசாலைகளிலும் பெரிய வர்த்தகசாலைகளிலும் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் விடுமுறை காலமாகையால், அப்போது ஜனங்களின் விநோதத்தின் பொருட்டாக ராணிதோட்டத்தில் ஒர சந்தை கூட்டுவ தென்று ஏற்பாடு செய்தார்கள். உரிய ஏற்பாடுகளெல்லாம் அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு கம்மிட்டியால் நடைபெற்று வந்தன.
வெளியூர்களிலிருந்து வருகிற உத்யோகஸ்தர்கள் தங்கள் மனைவிமக்களுடனே காட்டுமிருகங்களைப் பகலில் போய்ப் பார்ப்பது தவிர, தோட்டத்தின் வடபாதியில் விசேஷமான வேடிக்கை ஒன்றும் இராது. பல ஜனங்கள் வருவதும் போவதுமாயிருப்பார்கள். தென்பாதிதான் சந்தைகூடுகிற இடம். வாத்ய மேடையாகிய பான்ட ஸ்ட்டான்டைடச் சூழ்ந்துள்ள பாதையைச் சுற்றிலும் வட்டமாகப் பந்தலிட்டு மூங்கில்களாலும் ஓலைகளாலும் அடைப்படைத்திருக்கும். அங்கே சந்தைக்கடை வைப்பவர்களுடைய வேண்டுகோளுக் கேற்றபடி பந்தல் தனித்தனி விடுதிகளாகப் பிரித்திருக்கும். சிலர் மிட்டாய் விற்பார்கள்.
சிலர் ரொட்டி பிஸ்கட் பன் கேக்ஸோடா லெமொனேட் வெற்றிலைப்பாக்கு முதலியவைகளை விற்பார்கள். சிலர் அருமையான சீமை ஸாமான்களையும் நாட்டு ஸாமான்களையும் விற்பார்கள். சிலர் ஸாமான்களுக்கு எண்கள் இட்டு, அவைகளுக்கேற்ற டிக்கெட்டுகள் போட்டு, டிக்கெட்டுகளை ஒரு பெட்டியிலிட்டு "உங்கள் அதிஷ்டத்தைப் பாருங்கள்" "உங்கள் அதிஷ்டத்தைப் பாருங்கள்" என்று கூவியிருப்பார்கள். விருப்பமுள்ளவர் பணங்கொடுத்து அந்தப் பெட்டியில் கையைவிட்டு ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தால், கடைக்காரர் அந்த டிக்கெட்டில் கண்டிருக்கிற எண்ணுக்குரிய ஸாமானை எடுத்துக்கொடுப்பர்.
இப்படிப்பட்ட லாட்டெரி கடைகள் அநேகம் இருக்கும். அக்கடைகளில் டிக்கெட் பெட்டியிடம் நிற்பவர்களும் ஸாமான்களை எடுத்துக் கொடுப்பவர்களும் அழகிய இங்க்லீஷ் ஸ்த்ரீகள். ஒரு விடுதி கமிட்டியார் கூடுகிற இடம். பொழுதுபோனதும் வாத்ய மேடையைச் சுற்றி ஏற்றியிருக்கிற மின்சார விளக்குகள் பலசந்திரர்கள் ஏககாலத்தில் ஸமீபத்திலிருந்து ப்ரகாசிப்பது போல் அதிக ஆநந்தத்தைக் கொடுக்கும். அப்போது இடையிடையில் வாத்யகோஷம் உண்டாகும். உள்ளே ப்ரவேசிப்பதற்கு நாலு பக்கத்திலும் வழி விட்டிருக்கும். உள்ளே போவோர் ஒவ்வொருவரும் நாலணா கொடுக்கவேண்டும். ஜனங்கள் அதிக்கிரமித்து நடவாதபடி, அங்கே போலீஸ் ஜவான்கள் சிலர் நின்றிருப்பர்.வளைவான இந்த அடைப்பிடத்தில் சந்தைக்கடைகளில் ஸாமான்கள் வாங்க வருவோர் மிகச் சிலரே. பல ஜாதி ஆண்களும் பெண்களும் கூடுகிற இடமென்று தெரிந்திருப்பதால், ஆடையாபரணங்களால் உண்டாகும் ஒப்பனையழகைக் கண்டு மகிழும்படி வருகின்றவர்கள் பலர். மனித ஸ்ருஷ்டியில் அரிய ஆடையாபரணங்கள் இன்றியே ஸ்வயம்ப்ரகாசமாக விளங்கும் இயற்கையழகைக் கண்டு மகிழும்படி வருகின்றவர்கள் பலர். உடைகளின் பாங்கையும் அவைகளைத் தரிக்கும் பாங்கையும் கண்டறிய வருகின்ற பாலர் சிலர். ஆபரணங்களின் விதங்களைக் கண்டறிந்து அவைகளில் விசேஷமான விதமாய் ஆபரணம் செய்தணிய விரும்பிவருகின்ற ஸ்த்ரீகள் அநேகர். நெடுநாளாய்க் காணப்பெறாதவர்களைக் கண்டு ஸலாம்போடும்படி வருவார் சிலர். ஒரு நோக்கமும் இன்றி உல்லாஸமாய் உலாவும்படி வருவார் பலர். வயிறு பசித்தாலும் பொருட்டு செய்யாமல், சற்றுநேரம் கழித்துப் போகலாமென்றே ஆலச்யம் பண்ணிக்கொண்டு அவ்விடத்தில் சுற்றி வருவார் தொகை மணிக்குமணி அதிகரித்திருக்கும். காஷாயம் தரித்தவர்களும் சீக்கிரம் அவ்விடத்தை விட்ட நீங்கார்கள்.
இங்ஙனம் சந்தை கூடுகின்ற காலத்தில், ஸமீபத்தில் வெளியிடங்களில் கூத்துக்கொட்டாய்களும், நாடகசாலைகளும், மல்லர் தங்கள் திறத்தைக் காட்டுமிடங்களும், அங்கங்கே வகுத்திருக்கும். அப்ராக்ருதமான ஸ்ருஷ்டி விசேஷங்களில் சிலவற்றைச் சேகரித்துக் காட்டுகிற பந்தல்களும் சில வகுத்திருக்கும்.
கீழ்ப்பாதியில் சிலம்பம் பயின்றவர்களுக்குப் பரிசளிக்கும்படி இப்போது கட்டியிருக்கும் ஆத்லெடிக் அஸோஸியேஷன் என்கிற மண்டபமும் அடைப்பும் அப்போதில்லை. அங்கே சுற்றிலும் கால்கள் நாட்டி வடங்கள் கட்டியிருக்கும். உள்ளே குதிரைப் பந்தயம், ரேக்லா பந்தயம், ஓட்டப் பந்தயம் முதலானவை நடக்கும். கையில் தண்ணீர்க்குடங்களை வைத்துக்கொண்டு ஓடுகின்றவர்களில் விழுவாரைக் கண்டும், கழுத்துவரையில் கோணிப்பைகளைக் கட்டிக்கொண்டு தத்தித் தொத்திக் குதித்தோடுகின்றவர்களில் தப்பி விழுவாரைக் கண்டும் ஜனங்கள் கொல்லென்று சிரிப்பார்கள். அவ்விடத்தில் உள்ளூற ஜனங்கள் நெருங்காதபடி ஸார்ஜெண்டுகள் குதிரைகளை வளையவளையவிட்டு ஜனங்களை வெருட்டியிருப்பார்கள். ஜனங்களைச் சில இடங்களில் போலீஸ் ஜவான்கள் அதட்டியிருப்பார்கள். சில இடங்களில், அந்த ஜவான்களை
ஸமயம்பார்த்து ஜனங்கள் நெருக்கித் தள்ளிவிடுவார்கள். உயரமில்லாதவர்களில் சிலர் வண்டிகளின்மேலிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் மரக்கிளைகளில் வாலில்லாத வாநரம்போல் தொத்தியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.
குஜிலியில் அந்த ஸமயம் வேலையில்லாமல், இந்த ஜனத்திரளில் தங்கள் வேலையின் திறத்தைக் காட்டும் பெரிய மனிதர்கள் சிலருக்கு அந்தக் காலம் நல்ல கந்தாயம். ஜேபியிலுள்ள நோட்டுகளும் மடியிலுள்ள காசுகளும் மேலேயுள்ள அங்கவஸ்திரங்களும் ஸ்திரீகளின் கண்டமாலைகளும் இவர்களைக் கண்டால் மாயமாய்ப் போய்விடும்.. கோழி திருடிக் கூடவிருந்து குலாவுவதுபோல், இவர்கள் மிகவும் பரிதபித்து, "படவாவைப் பிடி பிடி" "அதோ ஓடுகிறான் கழுதை அடி அடி" என்று கூவிப் போக்குக் காட்டுவார்கள்.
நாலைந்து நாள்கள் வரையில் இந்தப்ரகாரம் சிங்காரத் தோட்டம் திமில குமிலமாக இருக்கும். கடைசி நாள் இரவில் பத்துமணிக்குமேல் பாணவேடிக்கை நடத்துவார்கள். அதில் அபூர்வமான சில அதிசயங்களைக் கண்டு ஜனங்கள் ஆனந்தமடைவார்கள். அதனோடு சந்தை முடிவுபெறும்.
III
1886 - ம் வருஷத்து டிஸெம்பர் மாதத்துக்கு ஸரியான பார்த்திப வருஷத்து மார்கழிமாஸத்தில் இவ்விதம் சந்தை கூடி இரண்டு மூன்று நாள்கள் வரையில் எல்லா வேடிக்கைகளும் வழக்கம்போல் ஒழுங்காக நடந்துவந்தன. நாலாநாள் மாலை ஏழுமணிக்கு, சந்தைக் கடைகளின் அடைப்பிலிருந்து ஓவென்ற அழுகுரல் புறப்பட்டது. சுற்றடைப்பில் ஐந்தாறிடங்களில் ஏககாலத்தில் நெருப்புப்பற்றி எரிதலாயிற்று. நிமிஷநேரத்தில் மேலுங்கீழும் இடமும் வலமுமாக நெருப்புப் பலபக்கங்களிலும் பரவத் தொடங்கியது.
வாயில்களின் ஸமீபத்தில் இருந்தவர்களில் எச்சரிக்கையாக ஓடிப்போனவர்கள் பிழைத்தார்கள். தீப்பற்றிவராத இடங்களில் மூங்கில்களை உடைத்தும் ஓலைகளைப் பிய்த்தும் அடைப்புகளில் வழிசெய்துகொண்டு ஓடின பாலர்களும் பலசாலிகளும் சிலர் பிழைத்தார்கள். நிமிஷநேரத்தில் வாயில்களினிடத்தில் ஜனங்கள் முன்பின்பாராமல் நெருங்கியதால், நசுங்குண்டிறந்தவர் சிலர், மிதியுண்டிறந்தவர் சிலர். அடைப்புத் தட்டிகளை உடைத்துக்கொண்டு போனவர்களில் ஓலைகளாலும் மூங்கில்களாலும் கீறுண்டு இரத்தம் வடிந்துகொண்டு போயினர் சிலர். ஜனநெருக்கத்தால் கையொடிந்தும் காலொடிந்தும் "அப்பாடா" "அம்மாடி" என்று ஓலமிட்டும் நொண்டியும் போயினர் சிலர். சில நேரத்தில் அங்கும் தீ நெருங்கி விட்டது: வாயில்களிடத்தும் தீ நெருங்கிவிட்டது. "ஐயோ, குழந்தை எங்கே" என்பாரும், "அப்பா எங்கே" என்பாரும், "அம்மா எங்கே" என்பாரும், "அத்தான் எங்கே" என்பாரும், "ஐயோ தீ நெருங்கிவிட்டதே. என்ன செய்யலாம்" என்பாரும், "ஐயோ வெப்பம் பொறுக்கமுடியவில்லையே" என்பாருமாய் உள்ளே அகப்பட்டவர்கள் தத்தளித்திருந்தார்கள். பத்துநிமிஷநேரத்தில் பந்தல்களெல்லாம் தரையோடு தரையாய்விட்டன. தலைமயிரும் மீசையும் தாடியும் பற்றி யெரிந்து முகங்கரிந்தோடினார் சிலர். உடைகளையெல்லாம் கழற்றியெறிந்து நிர்வாணமாய் ஓடித் தப்பினார் சிலர். மற்றவர்களில் ஸ்மரணையில்லாமல் குற்றுயிராய்க் கிடைத்தவர் சிலரே. மாண்டவர்கள் பலநூறு என்று கணக்கு ஏற்பட்டது.
சென்னை, எந்தத் தெருவிலே பார்த்தாலும், அரைமணி நேரத்தில் அல்லோலகல்லோலமா யிருந்தது. "ஐயோ என் மகனைக் கண்டீரா" என்றழுதனர் தாய்மார்கள். "ஐயோ, எங்கள் வீட்டுக்காரர் எங்கே" என்றழுதனர் பெண்டிர்கள். "தம்பியைத் தேடிப்பார்" என்று அண்ணன்மார்களை அனுப்புவர் சிலர். "மருமகன் இன்னும் வரவில்லையே" என்று தெருத் தெருவாய் அலைந்தனர் சிலர். "ஐயோ, சொன்ன பேச்சைக் கேளாமல் போனானே. என்னவானானோ" என்று அலைந்தார் பலர்.
"அண்டைவீட்டுக்காரப் பாவி பலாத்காரமாக இழுத்துக்கொண்டு போனான். அவனையும் காணோம் இவனையும் காணோம்" என்று புலம்பினார் பலர். "எவனோ சிநேகிதன் வெள்ளையுஞ் சள்ளையுமாக வந்து வலித்துக்கொண்டபோனானே. என் மகன் கொச்சை. செத்தானோ பிழைத்தானோ" என்று அலறினார் பலர்.
பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களும், அண்ணனைப் பறிகொடுத்தவர்களும், தம்பியைப் பறிகொடுத்தவர்களும், பெண்களைப் பறிகொடுத்தவர்களும், பெண்டிரைப் பறிகொடுத்தவர்களும், வாயிலடித்துக்கொண்டும், மார்பிலடித்துக்கொண்டும், கையைப் பிசைந்துகொண்டும், வயிற்றைப் பிசைந்து கொண்டும், 'ஐயோ' என்றும் 'அப்பா' என்றும் 'அம்மா' என்றும் 'கண்ணே' என்றும் புலம்பிக்கொண்டும், சிங்காரத் தோட்டத்துக்குப் போனார்கள்.
இதற்குள் போலீஸார் தீயை அவித்து, பிணங்களை வேறிடத்தில் வரிசையாக வளர்த்தி, குற்றுயிரோடிருந்தவர்களை ஜெனரல் ஆஸ்பத்ரிக்குக் கொண்டுபோயினர். சிற்சில அடையாளக் குறிப்புகளால் என் பிள்ளை என் தம்பி என் மாமன் என் மைத்துனர் என்று சில பிணங்களைச் சிலர் வண்டிகளில் கொண்டுபோயினர். அடையாளப் பிசகால் மாறின பிணங்கள் பல. பரிஷ்காரமாய் இன்னாரின்னாரென்று தெரியாத பிணங்களைப் போலீஸார் கொண்டுபோய்ப் புதைத்து விட்டார்கள்.
பிணங்களைக் கொண்டுபோக வந்தவர்களுள் முத்யாலு பேட்டையிலிருந்து வந்தவர்களில் வயோதிகரான வைதிக ப்ராமணர் இருவர்,- அப்பாசாஸ்த்திரி, கோபாலையர் என்பவர்கள். அப்பாசாஸ்த்ரி ராமசாமிவீதியில் இருப்பவர். கோபாலையர் பவழக்காரத் தெருவில் இருப்பவர். இவர்களுடைய குமாரர்கள் இருவரும் பால்யஸ்நேஹிதர்கள். ஒழிந்த வேளைகளில் அவர்கள் இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் போய் அவரவர் கேட்ட வர்த்தமானங்களைப் பேசியிருப்பர். எந்த உத்ஸவத்துக்கும் எந்த வேடிக்கைக்கும் அவர்கள் ஜதையாகவே போவார்கள். கோபாலையருடைய குமாரன் பெயர் நாகஸ்வாமியையர். அப்பாசாஸ்த்ரி குமாரன் பெயர் ஸுப்பையர். பிணங்களின் இடையில் தேடிப் பார்க்கையில் கோபாலையருடைய குமாரன் கிடைத்தான். கோபாலையர் அவனை ஒர வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டுபோய் தஹன ஸம்ஸ்காரங்களைச் செய்து முடித்தார்.
அப்பாசாஸ்த்ரி பாவம் "ப்ரேதந்தானும் கிடைக்க வில்லையே! ஐயோ, என் குமாரனுக்கு இப்படிப்பட்ட துர்மரணம் நேரிட்டதே.
நான் மஹா ொபி. எனக்கு அவன் பிதுர்க் கர்மம் செய்வதுபோய், அவனக்குரிய கர்மங்களை நானே செய்யும்படி நெரிட்டதே. என்ன செய்வேன்" என்று துக்கித்து, தஹன ஸம்ஸ்காரம் சஞ்சயனம் நீங்கலாக மற்றச் சடங்குகளையெல்லாம் நடத்தி, "பகவத் ஸங்கல்பம் இப்படியானால் நம்மால் ஆவது என்ன? அவன் கொடுத்த பிள்ளையை அவன் கொண்டுபோய்விட்டால் அதற்குத் துக்கப்பட்டு ஆவது என்ன? " என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, ஆத்மார்த்தமான கார்யங்களைச் செய்து காலங்கழிப்பதென்று தீர்மானம் பண்ணிக்கொண்டார்.
அவருடைய மருகி, காமாக்ஷியம்மாள், இருபது பிராயமுள்ளவள், மாங்கல்யத்தையும் பூஷணங்களையும் களைந்து, சிரமுண்டிதம் பண்ணி, தாம்பூல முதலானவைகளைத் தள்ளிவிட்டு, விதவை வேஷங்கொண்டு, புருஷனை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய தாய் "ஐயோ, ஸ்தல யாத்திரை செய்தும், உபவாசமிருந்தும், ப்ரார்த்தனை பண்ணியும் பலகாலம் புத்ரபாக்கிய மில்லாமல் கடைசியில் பகவத் ப்ரஸாதமாகப் பெற்ற என் அருமை மகள் இந்தக்கோலம் ஆயினாளே. நான் பூர்வத்தில் என்ன பாபம் செய்தேனோ. இவள் இறந்துபோனாலும் பெரிதல்லவே. இவளை அமங்கலியாக வைத்து எவ்விதம் பார்த்துக்கொண்டிருப்பேன். பகவானே" என்று துக்கித்தாள்.
காமாக்ஷியம்மாள் இரவில் நித்ரை பிடியாமல் துக்கித் திருப்பாள். இடையிடையில் சற்றயர்ந்து தூங்கும்போது புருஷனோடு குலாவியிருப்பதாகப் கனவுகண்டு விழித்து, அவனை நினைத்து நினைத்து அழுதகண்ணும் சிந்தியமூக்குமாக இருப்பாள். அவளுடைய தாயும் அதைக் கண்டு தானும் அழுவாள்: சில ஸமயங்களில் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தேற்றிக்கொண்டிருப்பாள். இந்தப்ரகாரம் இருபது நாள்கள் கழிந்தன. சங்க்ராந்தியும் வந்து போய்விட்டது.
IV
இருபத்தோராநாள் இரவில் பதினொன்றரை மணிக்குத் தெருக்கதவு தட்டுகிற சப்தம் கேட்டது. அப்பாசாஸ்திரி க்ருஷ்ணஸ்வாமி கோவிலில் கீதாகாலக்ஷேபம் கேட்கப் போயிருந்தார். அவருடைய பத்தினி சமையலறையில் படுத்து மகனை நினைத்துத் துக்கித்திருந்து தூங்கிவிட்டாள். சம்பந்தியம்மாளும் அவளுடைய பெண்ணும் அப்போதுதான் கண்ணுறக்கங் கொண்டனர். அவர்கள் கூடத்து வீட்டில் கதவடைத்துப் படுத்திருந்தனர். கதவு தட்டிய சப்தத்தைக் கேட்டுக் காமாக்ஷியம்மாள் திடுக்கிட்டு விழித்தாள். காலக்ஷேபத்துக்குப் போயிருந்த மாமனார் திரும்பிவந்து விட்டாரோ என்று நினைத்து எழுவதற்குள், மறுபடியும் கதவை உரமாகத் தட்டுகிற சப்தம் கேட்டது. மாமனார் அவ்வளவு கெட்டியாகக் கதவைத் தட்டுகிற வழக்கம்
இல்லையே என்று நிதானிப்பதற்குள், "அடி காமு, கதவைத் திறவடி" என்று தன் புருஷன் குரலாகக் கேட்டது. இதற்குள் அவளுடைய தாயும் விழித்துக்கொண்டு, "யாரது?" என்று கூப்பிட்டாள். மாமியார் குரலாக இருக்கவே, "நான்தான் ஸுப்பு: கதவைத் திறக்கச் சொல்லுமே" என்கிற வார்த்தைகள் கேட்டன.
இதைக் கேட்ட காமாக்ஷியம்மாளும் அவள் தாயும், இடி விழுந்ததுபோல் நடுங்கி, ஒருவரை யொருவர் கட்டிக்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தனர். மறுபடியும் "அம்மா கதவைத் திறவடி" "அப்பா கதவைத்திறவுமே" என்கிற சப்தம் கேட்டது.
மாமியார் கொஞ்சம் மனதைத் திடப்படத்திக் கொண்டு, "அப்பா, எங்கள் வாழ்வு போய் இருபதுநாள் ஆய் விட்டது. எங்களைவிட்டுப் போக எப்படி மனந்துணிந்தாயோ? எந்த லோகத்துக்குப் போனாயோ என்று ஏங்கி துக்கப் பட்டிருக்கிறோம்.
இந்த நேரத்தில் தானா வந்து எங்களைப் பரிசோதிக்கிறது?" என்று அழுதாள். "இதென்ன வேடிக்கை! உமக்குப் பைத்யம் பிடித்திருக்கிறதா? அப்பா எங்கே? அம்மா எங்க? காமு எங்கே?" என்று கூவுகிற சப்தம் கேட்டது. யாரும் வாய் திறக்கவில்லை.
ஒரு நிமிஷநேரத்தில் அண்டை வீடுகளிலும் எதிர்வீட்டிலும் கதவு தட்டுகிற சப்தம் கேட்டத. அவ்வவ்வீட்டுக்காரர்கள் "யாரது?" என்று கேட்பதற்கு, வெளியிலிருந்து "நான் தான் ஸுப்பன்" என்று ஸுப்பையர் குரலாகக் கேட்கவே, அவரவர்கள் "ஐயோ, துர்மரணமாகச் செத்ததனால் அவனுடைய ஆவேசம் வீடு தெரியாமல் வந்து அலைகிறது" என்று பயந்தார்கள். எவரும் கதவைத் திறக்கவில்லை.
அந்த ஸமயத்தில் ஒரு புரோகிதர் தம்புசெட்டி வீதியில் பார்த்தசாரதி செட்டியாருடைய குமாரனுக்கு நிஷேத முஹூர்த்தம் நடத்திவைத்துப் புதுவேஷ்டியும் தக்ஷிணையுமாக வந்துகொண்டிருந்தார். தூரத்தில் எதிரில் யாரோ வருகிறார் என்று கண்டு, புரோகிதர் தக்ஷிணை இடுப்பில் ஸரியாக வைத்துச் செருகியிருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார். தாம்பூலம், பழம், தேங்காய் முதலியவைகளை வைத்துக் கட்டியிருந்தமூட்டையை அக்குளில் கெட்டியாக இடுக்கிக் கொண்டார். அவசரப்படாமல் அடியடியாய் மெதுவாய்ப் போகையில், இரண்டு மூன்று வீட்டுக்கப்பால் எதிரில் வருகிறவர் ஸுப்பையர் ஜாடையாக இருக்கவே, புரோஹிதர் பயந்து நடுங்கி நிர்ஜீவனானார். ஸமீபித்து எதிரில் வந்த கொண்டிருந்தவர், "ஓய் குப்பாசாஸ்த்ரி! மூட்டை பலமாயிருக்கிறதே! எங்கிருந்து வருகிறீர்?" என்றதைக் கேட்டு, புரோஹிதர் மூர்ச்சையாய்க் குப்புறவிழுந்தார்.
ஒரு நிமிஷத்தில் தெருக்கோடியிலிருந்து வடக்குநோக்கி இருவர் வந்தகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நாராயணசாமி ஐயர் என்பவர். சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையில் ஹைஸ்கூலில் இங்க்லிஷ் ஆசிரியர்: பி.ஏ. பட்டம் பெற்றவர். மற்றவர் க்ருஷ்ணையர் என்பவர்: பழைய யூ-ஸி-எஸ். பரீக்ஷையில் தேறி அக்கௌன்டன்ட் ஜெனரல் ஆபிஸில் ஐம்பது ரூபா சம்பளமுள்ள ஒரு லேககர். இவர்கள் ஒரு ஸ்நேஹிதர் பிள்ளையின் கல்யாண ஸம்பந்தமான பாட்டுக் கச்சேரிக்குப் போயிருந்து திரும்பிவந்தனர். அவர்களில் நாராயணஸ்வாமி ஐயர், யமனை எதிரில் கண்டாலும் "நீ புதிய யமனா, பழைய யமனா?" என்று கேட்கத்தகுந்த வன்னெஞ்சு படைத்தவர். க்ருஷ்ணையரோ, ஆர்க்காட்டில் சண்டை என்றால் அடுப்பங்கரையில் பதுங்குகின்றவர். இவர்கள் இருவரும் எதிரில் வருகிறவரைக் கண்டார்கள். வருகிறவர் ஸுப்பையர் ஜாடையாக இருக்கவே, க்ருஷ்ணையர் நாராயணஸ்வாமி ஐயரைச் சேர்த்துக் கட்டிக்கொண்டார். அதனால் நாராயணர் சீக்கிரம் நடக்க முடியாமல் எதிரில் வருகிறவரை நின்று உற்றுப்பார்த்தார். எதிரில் வந்தவரும் உற்றுப் பார்த்து, "ஸார், எங்கே போய் வருகிறீர்கள்? கூடே வருகிறவர் க்ருஷ்ணையர் அல்லவா?"
அவ்வளவிலே க்ருஷ்ணையர் கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டார். நாராயணர் எதிரில் நின்றவரைத் தோளின்மீது கையால் தட்டிப்பார்த்தார்: சதையும் சரீரமுமாய் நெற்றியில் சந்தனப்பொட்டும் மேலே சரிகை வேஷ்டியும் கீழே கம்பிவேஷ்டியும் காதில் முத்துக் கடுக்கனுமாய் இருட்டில் கருமை தெரியாமல் பல்லை வெளுக்கக் காட்டி நின்றதைக் கண்டார்.
ஒரு விநாடி நேரம் யோசனைபண்ணி, சமாளித்துக்கொண்டு, "நாங்கள் ஒரு பாட்டுக்கச்சேரிக்குப் போய் வருகிறோம். சில நாளாக நீர் இல்லையே; எங்கே போயிருந்தீர்? எப்பொழுது வந்தீர்" என்று கேட்டார்.
ஸுப்பையர் "இப்போதுதான் வந்தேன். நான்வெளியில் போய் இருபது நாள் ஆகிறது. வர்த்தக கார்யமாய்ப் போயிருந்தேன்" என்றார்.
நாராயணஸ்வாமி ஐயர் "இப்போதுதான் வந்தேன் என்கிறீர். வீட்டைக் கடந்து வந்துவிட்டீரே. இந்த நேரத்தில் எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.
இவர்கள் பேசியிருந்தது க்ருஷ்ணையருக்கு ஒன்றும் தெரியாது. அவர் பிரமைபிடித்து நாராயணரோடு ஒரே சரீரமாய் ஒட்டியிருந்தார்.
ஸுப்பையர் -- "நானும் நாகஸ்வாமியும் பார்க்கில் வேடிக்கை பார்க்க புறப்பட்டுப் போனோம். வழியில் ராமசாமி செட்டி என்கிற வர்த்தகனைக் கண்டேன். அவன் சேலத்துக்குப் போய் இருநூறு டின் நெய் வாங்கிவரும்படி அவஸரமாகப் பணங்கொடுத்தான். ஆத்தில் சங்கதி தெரிவிக்கும்படி நாகஸ்வாமியிடம் சொல்லிவிட்டு, உடனே ரெயிலேறிப் போய்விட்டேன். எங்கள் ஆத்திலும் அண்டையயலிலும் என்ன அஸந்தர்ப்பமோ தெரியவில்லை. ஆத்தில் மாமி மாத்ரம் குரல் கொடுத்தாள்; கதவைத் திறக்கவில்லை. அண்டையசலில் எந்த ஆத்திலே கதவைத் தட்டினாலும் எவரும் கதவைத் திறக்கவில்லை. நாகஸ்வாமியைத் தேடிக்கொண்டு போகிறேன்" என்றார்.
இதையெல்லாம் நிதானமாகக் கேட்ட நாராயணஸ்வாமி ஐயர், தம்முடைய ஆலோசனையில் பட்டது ஸரியென்று ஸந்தோஷங்கொண்டு, "நாகஸ்வாமி வீட்டுக்குக் காலையில் போகலாம். வாரும்" என்று நகர்ந்தார். க்ருஷ்ணையரைத் தட்டிக் கொடுத்தும் அவர் கொஞ்சம் தெளிவடைந்தாரேயன்றி, அடியோடு அவருடைய பயம் இன்னும் ஒழியவில்லை.
வழியில் அப்போதுதான் புரோஹிதர் மூர்ச்சை தெளிந்து எழுந்தார். மூவர் வருகிறதைக் கண்டு அவருக்குக் கொஞ்சம் தைர்யம் வந்தது. ஸுப்பையரும் கூடவருகிற ஜாடை யைக் கண்டு எழுந்திருக்கமாட்டாமல் சும்மா இருந்தார். ஸுப்பையருக்கக் கொஞ்சம் இங்கிலிஷ் தெரியுமாகையால், அவர் இங்க்லிஷில் நாராயணஸ்வாமி ஐயரிடம் புரோஹிதர் தன்னைக்கண்டு பயந்திருப்பதைத் தெரிவித்தார்.
நாராயணஸ்வாமி ஐயர் அந்த மர்மத்தைத் தெரிந்து கொண்டு,ஸுப்பையரைப் பின்னால் நிறுத்தி, "என் ஸ்வாமி, அல்பஸங்கைக்குப் போயிருக்கிறீரோ? அடுத்த ஆத்தில் வாசலில் உள்ள குழாயில் ஜலஸ்பர்சம் பண்ணிக்கொண்டு வாருமே. எல்லாரும் ஒன்றாய்ப் போகலாம்" என்றார்.
புரோஹிதர் "நாராயணஸ்வாமி ஐயரா? இரும், இதோ வருகிறேன் " என்ற குழாயிடம் போய்க் கைகால் அலம்பிக் கொண்டு, கொஞ்சம் பயந்தெளிந்து, எப்படியாவது நாராயண ஸ்வாமி ஐயருடைய துணையால் வீடுபோய்ச் சேரலாமென்று ஓரடி முன்னாகவே போனார்.
எல்லாரையும் நான்காவது வீட்டுத் திண்ணையிலே உட்காரவைத்து, "சற்றிரும் நானும் அல்பஸங்கைக்குப் போக வேண்டும்" என்று சொல்லி நாராயணர் அப்பாசாஸ்த்ரி வீட்டுக்குப் போனார். அந்தக் குறிப்பை ஸுப்பையர் தெரிந்து கொண்டார்.
புரோஹிதரும் க்ருஷ்ணையரும் கண்ணை மூடிக்கொண்டு திண்ணையில் சாய்ந்தார்கள். அப்பாசாஸ்த்ரி ஐந்து நிமிஷத்துக்கு முன்னே வந்து கதவை அதிக ப்ரயாசத்தோடு திறக்கும்படி செய்து, நடந்த ஸங்கதியைக் கேட்டு துக்கமடைந்து திண்ணையில் உட்கார்ந்தார். அவர் மனைவியும் சம்பந்தியும் அவரை உள்ளே வந்துவிடும்படி உள்ளிருந்தபடியேநிர்ப்பந்தம் பண்ணியிருந்தார்கள்.
நாராயணஸ்வாமி ஐயர் குறட்டின்மேல் ஏறுவதைக்கண்டு, இன்னாரென்ற கேட்டறிந்து, "நீர் இந்த நேரம் இங்கே வந்த அவஸரம் என்ன?" என்று கேட்டார்.
நாராயணர் "சாஸ்த்ரிகளே! ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். உங்கள் குமாரன் வெளியூருக்குப் போயிருந்தார். நாகஸ்வாமியிடத்தில் சொல்லியனுப்பிய செய்தி நமக்குத் தெரியாமல் போய்விட்டது. பயப்படாமல் இரும். இதோ அவரை அழைத்துவரகிறேன்" என்றெழுந்து போனார். அதைக் கேட்டிருந்த ஸ்த்ரீகள் அதிசயமாக எட்டிப் பார்த்திருந்தார்கள்.
அப்பாசாஸ்த்ரி நாராயணஸ்வாமி ஐயரைப் பின்தொடர்ந்துபோனார். இவர்களைக் கண்டு ஸுப்பையர் "அப்பா, எங்கே போயிருந்தீர்? கதவைத் தட்டினேன், தட்டினேன். எவரும் கதவைத் திறக்கவில்லை. அம்மா எங்கே? காமு எங்கெ? மாமி ஒரு குரல் கொடுத்து அப்புறம் பேசாமல் கதவு திறவாமல் இருந்துவிட்டார்கள்" என்றார்.
அப்பா சாஸ்த்ரி, "ஸுப்பு" என்று தழுவிக்கொண்டு, "என்ன கார்யம் செய்தாய்? போனவன் ஒரு ஸ்ரீமுகம் எழுதக் கூடாதா?
காமுவைப் பார்த்து எப்படி ஸஹிப்பாய்?" என்று வீட்டுக்காகத் திரும்பினார். குப்பா சாஸ்த்ரியும் க்ருஷ்ணையரும் பயங்கரமான கனவுகண்டு விழித்தவர்கள்போல் ஒரு பக்கமுமாக ஓடிவந்து, ஸுப்பையரைத் தழுவிக்கொண்டு முகமெல்லாம் முத்தங்கொடுத்தார்கள். மாமியார் மனமடங்காத மகிழ்ச்சி அடைந்தாள். அதுவரையில் காய்ச்சல் கண்டவர் போல் ஓய்ந்திருந்த க்ருஷ்ணையர், காமாக்ஷி மொட்டந்தலையோடு புருஷனைத் தழுவி முத்தமிடுவதைக் கண்டு உள்ளுக்குள்ளே நகைத்துக்கொண்டார். குப்பாசாஸ்த்ரி இடுப்பிலிருந்த தக்ஷிணை ரூபா இருக்கிறதா என்று தடவிப்பார்த்து, பொடிடப்பியை எடுத்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக்கொண்டு, "அம்மா காமு, நீ தீர்க்க ஸுமங்கலியாய் இருக்க வேண்டும்" என்று ஆசீர்வதித்தார்.
கொஞ்சநேரத்தில் இந்த ஸங்கதி தெரிந்து தெருவிலுள்ளவர்களெல்லாம் திரள் திரளாக வந்து ஸுப்பையரைக் கண்டு ஸந்தோஷப்பட்டார்கள். இதற்குள் ஸுப்பையருடைய மாமியார், காமாக்ஷியம்மாளுக்க எல்லா பூஷணங்களையம் அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டாள்.
மறுநாள் காலையில் அப்பாசாஸ்த்ரி பந்துஜனங்களையும் இஷ்டமித்ரர்களையும் அழைத்துவந்த விருந்திட்டார். சிறு பிள்ளைகளெல்லாம் காமாக்ஷியம்மாளைப்பார்த்த, "திருப்பதிக்குப் போய் முடிகொடுத்த வந்தாயா" என்று பரிஹாஸம் செய்தனர். ஸுப்பையர் அடிக்கடி கோபாலையரிடம் போய் ஆறுதல் சொல்லித் தேற்றி வருவார்.
-----------------------------
5. கிருஷ்ணன்
பெங்களூரில் ராமசாமி முதலியார் என்பவர் ஒருவர் வர்த்தகம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு மாணிக்கம் மரகதவல்லி என்றிரண்டு பெண்பிள்ளைகளும், கிருஷ்ணன் கோவிந்தன் என்றிரண்டு ஆண்பிள்ளைகளும் உண்டு. மரகதவல்லி நால்வரிலும் இளையவள்; நான்கு வயதானவள்.
ஆண்பிள்ளைகள் இருவரும், சென்னையில் தங்கள் அத்தையம்மாளுடைய வீட்டில் இருந்துகொண்டு, ஒரு பாடசாலையில் படித்துவந்தார்கள். ஒருமுறை அவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கிடைத்தது. கிடைக்கவே, பெங்களூரில் தங்கள் தாய் தந்தையரைப் பார்க்கும் பொருட்டுப் புகைவண்டியேறிச் சென்றார்கள்.
அன்னையும் பிதாவும் அவர்களைக் கண்டவளவில், அதிக பரிவுடனே அன்னம் படைத்து, சென்னையில் அத்தையம்மாள் முதலானவர்களுடைய ஸுக யோகக்ஷேமங்களை விசாரித்தறிந்து மிகவும் ஸந்தோஷமடைந்தார்கள். சிறுவர்களும் அண்டையயல் வீட்டுப் பிள்ளைகளுடனே வேடிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஆறுநாள்கள் கழிந்தன.
ஆறாவது நாள் சாயரக்ஷையில் இவர்களைப் பார்த்து, ராமசாமி முதலியார், "கிருஷ்ணா, கோவிந்தா, நாளைப்பகல் பன்னிரண்டு மணி வண்டிக்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். திங்கட்கிழமை நீங்கள் பாடசாலைக்குப் போகவேண்டுமல்லவா? நினைவிருக்கட்டும்" என்று சொன்னார்.
உடனே மூத்தவனாகிய கிருஷ்ணன், "ஆமாம்" என்று சொல்லிக் கதவை ஒஞ்சரித்துக்கொண்டு உள்ளேபோய், "இதென்னடா இழவு" என்றான்.
கோவிந்தன்.- நாளைக்குத் திருவேங்கடம் நாராயணசாமி என்பவர்களோடு பந்தாடலாமென்று நினைத்திருந்தோமே, ஐயோ, பழுத்துப்போச்சே.
கிருஷ்ணன்.- அடெ தம்பி, எல்லாரும் ஸரியாகக் கணக்குப் பார்த்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனப்பிவிடுகிறார்களா? நம்முடைய வீட்டில்தான் பெரிய தொல்லை.
கோவிந்தன். - என்ன அண்ணா? நாளையோடு நமக்கு விடுமுறை ஸரியாய்ப் போகிறதே. நாளைப் பன்னிரண்டு மணி வண்டிக்குப் போகவேண்டுமென்று நாயனா சொல்லிக்கொண்டு தானே இருந்தார். உனக்கு நினைவில்லையா?
கிருஷ்ணன்.- ஆமாம். ஆனாலென்ன? இன்னும் இரண்டு மூன்று நளைக்கு இங்கேதானே இருக்கச்சொன்னால் ஆகாதோ, முழுகிப் போச்சுதோ?
கோவிந்தன்.- இன்னும் இரண்டுநாள் இங்கிருக்கும்படி கேட்பதனால் என்ன பிரயோசனம்? எப்படியானாலும் நாம் போகவேண்டியவர்கள்தானே. சற்று முன்னதாகவே போய் விடலாமே.
கிருஷ்ணன்.- போடாபோ (என்று சொல்லிக்கொண்டே கதவைப் படிய மூடிவிட்டு ரகஸ்யமாய்) அடே நாம் இன்னொருநாள் இங்கே யிருக்க உபாயம் ஒன்று பண்ணப் போகிறேன்.
கோவிந்தன்.- எதோ சொல்லு பார்க்கலாம்.
கிருஷ்ணன்.- பதினொன்றடித்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கம்மென்று மெதுவாய்ப் போய்க் கடியாரத்தை நிறுத்தி விடுகிறேன். அப்புறம் நேரமாய்விட்டால் "ஐயோ! மணி தெரியாமல்போச்சே" என்று சொன்னால், தகப்பனார் நம்மை என்ன செய்யப்போகிறார்?
கோவிந்தன்.- ஆமாம் அண்ணா, அது மெய்யாகுமா?
கிருஷ்ணன்.- ஏன் ஆகாது? கடியாரம் போகாவிட்டால் பன்னிரண்டு அடிக்கிற வேளை நமக்கு எப்படித் தெரியும்?
கோவிந்தன்.- அதன் பேரென்ன? அதுமாத்திரம் பொய்யாகாதோ? பெருமோசமா யிருக்கிறதே. கடியாரத்தின் சோலிக்குப் போவது ஸரியல்ல.
கிருஷ்ணன்.- போடா முட்டாள். வேறென்ன செய்கிறதாம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா? நிற்கவும் ஆசை; ஒன்றுஞ் செய்யக்கூடாதென்றால், காரியம் எப்படியாகும்? கடியாரத்தில் ஆடுகிற குண்டை அசையாமல் ஒருநாழி இரண்டுநாழி நிறுத்திவைத்தால், ஆருக்கென்ன நஷ்டம்? கடியாரத்துக்குத்தான் என்ன சேதம்? நீ அவ்வளவு யோக்கியனானால் பேசாமல் இரு. செய்யவேண்டியதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். எப்படியும் உனக்கு லாபந்தானே.
கோவிந்தன் தன்னால் கூடியமட்டும் சொல்லியும் கிருஷ்ணன் அவன் சொல்லைக் கேட்கவில்லை. இப்படிப் பேசிக் கொண்டே இருவரும் உறங்கிவிட்டார்கள்.
அன்று அர்த்தராத்திரியில் மரகதவல்லிக்குக் காய்ச்சல் கண்டது. உடனே வைத்யரை வரவழைத்துப் பார்த்தபோது, அவர் "இது பிரமாதமான ஜன்னி. ஆயினும் பெரிதல்ல. இந்த மருந்தை அதிக ஜாக்ரதையாக இரண்டுமணிக் கொரமுறை ஒவ்வொரு சிட்டிகை ப்ரமாணமாகக் கொடுத்து வாருங்கள். ஏதாகிலும் அபாயமான குறிகள் கண்டால் ஓராளை அனுப்புங்கள். நாளைப் பகல் பன்னிரண்டு மணி வரையிலும் வீட்டில் இருப்பேன். ;பயப்படவேண்டாம்" என்று சொல்லிப் பத்ய பரிகாரங்களையும் தெரிவித்துப்போனார்.
காலையில் தூங்கி யெழுந்ததும், வீட்டிலுள்ள யாவரும் துக்கமாக இருக்கக் கண்ட கிருஷ்ணனும் கோவிந்தனும், தங்கள் தங்கை ஜன்னி கண்டு தவிக்கிறாள் என்றறிந்து, அதிக வருத்தப்பட்டார்கள். ஒன்பதுமணிக்கு அவர்களுடைய தாயார் சற்று நிம்மதியாக இருக்கவே, இந்தச் சிறுவர்கள் புழைக்கடைத் தோட்டத்தில் போய் விளையாடிக்கொண்டிருந்தனர். தாயார் குழந்தையின் ;பக்கத்திலிருந்து இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.சற்று நேரம் கழிந்த பிறகு முதலியார் பிள்ளைகளைக் கூவி, "தயாராக இருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
உடனே கிருஷ்ணன், "இல்லை நாயனா. இன்னும் மணியாகவில்லையே. இப்போதுதான் கடியாரத்தைப் பார்த்தேன்: பதினொன்றேகால் ஆயிற்று" என்று சொன்னான்.
முதலியார், "ஆனால் இன்னும் கொஞ்சநேரம் விளையாடியிருங்கள். பத்ரம், மணியை மறக்கப் போகிறீர்கள்" என்றார். என்று சொல்லிக் கொஞ்சதூரம் போனவுடனே, கிருஷ்ணன், 'அந்தமட்டில் தப்பித்துக் கொண்டோம்' என்றான்.
கோவிந்தன்.-எனக்குத் திக்கு திக்கென் றிருக்கிறது. கைகடியாரத்தை எடுத்துப் பார்த்திருந்தால் உண்மை வெளியாயிருக்குமே.
கிருஷ்ணன்.-அடபோடா பயங்கொள்ளி, பனங்காட்டு நரி சலசலப்புக் கஞ்சுமா. கைகடியாரத்தைப் பார்த்தால்தான் என்ன? பெரிய கடிகாரம் நின்றுபோய் விட்டதென்று தானே நினைத்துக்கொள்வார். எப்படியும் இந்நேரம் பன்னிரண்டு மணி ஆகியிருக்கும். இனிமேல் வண்டி வண்டிதான்.
இவர்கள் இப்படியிருக்கையில், மரகதவல்லியின் பக்கத்தில் இருந்த தாயார் மாணிக்கத்தை அங்கே உட்காரவைத்துத் தமது புருஷனிடம் ஓடிவந்து, "குழந்தைக்கு ஸ்வாஸம் குறைந்து வருகிறது. கை, நெருப்புப் பறக்கிறது. உடனே வைத்தியருக்கு ஆளனுப்புங்கள்" என்று சொன்னார். உடனே வீட்டு வேலைக்காரியை வைத்தியரிடம் அனுப்பினார்கள். உடனே கோவிந்தனை அழைத்துக்கொண்டுவந்து, கிருஷ்ணன், "நாயனா, எங்களுக்குப் புறப்பட மணி ஆயிற்றா?" என்று கேட்டான்.
அவர், "இந்நேரம் மணி ஆயிருக்கும்" என்று சொல்லிக் கொண்டே, தமது மடியிலிருந்த கைகடியாரத்தை எடுத்துப் பார்த்து, "அடடா, இந்நேரம் வண்டி போயிருக்கும். பன்னிரண்டரை ஆய்விட்டதே" என்று சொன்னார்.
அப்போது அவர் பெண்டாட்டி "உங்களுடைய கைகடியாரம் சீக்கிரம் போகிறதா? பெரிய கடியாரம் இன்னும் பன்னிரண்டு அடிக்கவில்லையே" என்று சொல்ல, கிருஷ்ணனும் "ஆமாம், இன்னும் பன்னிரண்டு அடிக்கவில்லை" என்று சொன்னான்.
அப்பால் போய்ப் பெரிய கடியாரத்தைப் பார்க்க், அது நின்றிருப்பது தெரியவந்தது. அதுகேட்ட முதலியார், "ஐயையோ! ஒரு முக்யமான வேலையாகப் பன்னிரண்டுமணி வண்டிக்கு ஒருவரைப் போய்க் கண்டுபேச உத்தேசித்திருந்தேன்; என்ன செய்வேன்" என்று வருத்தப்பட்டார்.
தாயானவள் "ஐயையோ! வைத்யர் இந்நேரம் வெளியில் போயிருப்பாரே. அடியம்மா, மரகதவல்லி! குழந்தாய்! என்ன செய்வேன்" என்று கையை முறித்துக்கொண்டு குழந்தையிடம் ஓடினாள்.
அதுகண்ட கிருஷ்ணன், "அம்மா, பயப்படாதே. நான் ஒரே ஓட்டமாக ஓடி வைத்யரை இட்டுக்கொண்டு வருகிறேன்." என்று ஓடினான். கோவிந்தனும் அவன் பின்னே ஓடினான்.
இருவரும் ஒரே மூச்சாக ஓடி, வைத்யர் வீட்டுக் கதவைத் தட்டி "வைத்யர் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். உள்ளேயிருந்த வைத்யருடைய மனைவி, "பன்னிரண்டேகால் மணிக்குப் புறப்பட்டு வெளியில் வழக்கம்போல் போய்விட்டார்" என்று சொன்னார்.
கிருஷ்ணன், "அவர் யாருடைய வீட்டுக்குப் போயிருக்கிறார் தெரியுமா அம்மா?" என்று கேட்டான்.
அப்போது ஒரு சிறு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த வைத்யருடைய மனைவி, "முதலில் இன்னார் வீட்டுக்குப் போயிருப்பார் என்பது ஸரியாய்த் தெரியாது. இப்படி வந்து சற்றுநேரம் இருப்பாயானால் எனக்குத் தெரிந்தமட்டில் சொல்லுகிறேன்" என்றார்.
இதைக் கேட்டதும் உகிர்ச்சுற்றின்மேல் உலக்கை விழுந்ததுபோல் சிறிது நேரங் காத்திருந்தனர். அப்பொழுது மேலே சொன்ன சிறு பெண்ணானவள் தங்கள் வீட்டின் அண்டையில் வசிக்கும் ஓர் ஏழைக் கைம்பெண்ணின் மகளென்ற அறிந்தனர். அந்தப் பெண், வைத்யர் பெண்டாட்டியைப் பார்த்து, "ஆனால் அந்த வேலை எனக்குக் கிடைக்கும் என்கிற எண்ணம் இல்லையா? அம்மணி!" என்றாள்.
வைத்யர் பெண்டாட்டி, "ஐயோ பாவம், உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என்ன செய்வேன்? நீ சொன்னதுபோல் ஸரியாகப் பன்னிரண்டு மணிக்கு வந்திருந்தால் அந்த வேலை உனக்கே கிடைத்திருக்கும். உனக்காக வெகுதூரம் பரிவாகப் பேசினேன். பன்னிரண்டேகால் வரையிலுங் கூடப்பார்த்தோம். அப்படிக் காத்திருக்கும்போது இன்னொரு பெண் வந்தாள். அவளைப் பேசி அந்த வேலையில் வைத்துவிட்டோம். சொன்னது சொன்னபடியே அந்தந்த வேளைக்கு அந்தந்த வேலையைச் செய்யாதவர்கள் எனக்கு ஸரிப்படுவதில்லை. நீ அந்த வேளைக்கு ஏன் வரவில்லை?" என்றார்.
அந்தப் பெண் " அம்மா, நான் முன்னதாகவே வந்தேன்.வரும்போது ராமசாமி முதலியார் வீட்டில் மணி என்ன வென்று கேட்டேன். அங்கிருந்த ஆள் கடியாரம் பார்த்து "பதினொன்றேகால் ஆயிற்று" என்று சொன்னான். அதன் மேல், நான் ஸரியான வேளைக்குப் போகலாமென்று, முன்னம் பின்னமாகக் கொஞ்சநேரம் உலாவிக்கொண்டிருந்து வந்தேன். ஐயோ அரைமணி நேரத்துக்குமேல் ஆய்விட்ட தென்றும், கிடைக்கலான வேலை அதனால் கிடைக்காமற்போயிற்றே என்றும், என் மனம் துடிக்கின்றது. ஐயோ! என்னுடைய தாய் இதைக் கேட்டால் கனவருத்தம் அடைவாளே, என்ன செய்வேன்" என்று சோகித்தாள்.
வைத்யர் பெண்டாட்டி, "இது உன்னால் வந்த தப்பிதமும் அல்ல. நல்லது, அந்தப் பிள்ளைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லி அனுப்பிவிட்டு வரும்போது, கிருஷ்ணன், "ஐயோ! கோவிந்தா, உன் பேச்சைக் கௌாமற் போனேனே. நான் செய்த சூதினால் எத்தனை துன்பங்கள் உண்டாகின்றன பார். இத்தனை கார்யங்களும் இந்தப் பன்னிரண்டு மணிக்கென்றே ஏற்பட்டிருக்குமா!" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
வைத்யருடைய மனைவி, மூவர் நால்வருடைய பேர்களைச் சொல்லி, அவர்களுடைய வீடுகளுக்குப் போய் வைத்யரைக் கண்டுபிடிக்கும்படி அடையாளக் குறிப்புகளைச் சொல்லியனுப்பினார். ஸகோதரரிருவரும் ஆலஸ்யம் பண்ணாமல் அங்கங்கே அலைந்து திரிந்து வைத்யரைக் கண்டு வண்டியை நிறுத்தி, ஸங்கதியைச் சொல்லி, வைத்யரை இட்டுக்கொண்டு போனார்கள். வைத்யரும் குழந்தையை நாடிபிடித்துப் பார்த்து வெளியில் வந்து, "ஐயோ பாவம்! சிறு குழந்தை, மிஞ்சிப்போய் விட்டது. இனி மனுஷப்ரயத்தனத்தால் ஆவது ஒன்றும் இல்லை. கெட்ட குறிகள் தொடங்கிவிட்டன, நோய்க்கு மருந்து; விதிக்கு மருந்தேது" என்று சொல்லிப் போய்விட்டார்.
அன்றிரவெல்லாம் கிருஷ்ணனுக்கு உறக்கமே இல்லை. அவனுடைய எண்ணம் ஸித்தியாயிற்று. இரண்டொருநாள் பள்ளிக்கூடம் போகத் தடை உண்டாயிற்று. மெய்தான். அதனால் உண்டான நஷ்டம் எவ்வளவு. கடியாரம் டிக் டிக் என்றடிக்கும் பிரதிசப்தமும் அவனுடைய இருதயத்தைத் துடிக்கச் செய்தது. அதைப் பொறுக்கமாட்டாமல் கதவைத் திறந்துகொண்டுபோய், மரகதவல்லி படுத்திருந்த அறையின் வெளியில் ஒரு தூணின்மேல் சார்ந்துகொண்டு, அவ்வறையின் கதவினுடைய த்வாரங்களில் தெரியும் விளக்கொளியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனைப் பழிக்கின்றதாய்த் தோன்றும் கடியாரந்தவிர, அந்த வீட்டில் வேறொன்றின் சப்தமும் அவனுக்குக் கேட்கவில்லை. அதன் சப்தமானது, ஸர்வேசுவரன்தவிர வேறெவருடைய கண்ணோக்கமும் செல்லாத ஸமயத்தில், தான் அந்தக் கடியாரத்தின் குண்டை நிறுத்தின செய்தியை அந்தக் கடியாரம் எல்லாரும் அறிய உரக்கச் சொல்வதுபோல் தோன்றிற்று. இப்படித் தன் தகப்பனை மோசம்பண்ணத் தலைப்பட்ட இத்தனைபேர்க்கு இத்தனை இடைஞ்சல்களை உண்டாக்கினான்.
"இந்த அறையில் எல்லாரும் நிசப்தமாயிருக்கிறார்களே. ஒருவேளை குழந்தை தூங்குகிறதோ" என்று பாவில் குழல்போல மனந்தடுமாறி, அந்த அறையின் கதவைப் பார்த்த வண்ணமாக நின்றுகொண்டிரந்தான். மணியும் அடித்து அடங்கிவிட்டது. ஒர சப்தமும் இல்லை; எங்கும் சில்லென்றிருந்தது. கொஞ்சநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு தகப்பனார் வெளியில்வந்தார்.
உடனே கிருஷ்ணன், மெல்லென எதிரில் சென்று, "நாயனா! தங்கைக்கு உடம்பு எப்படி யிருக்கிறது?" என்று கேட்டான். தகப்பனார் "உடம்பு ஸரியாயிருக்கிறது. அவள் இங்கில்லை. ஸரியாய்ப் பன்னிரண்டு மணிக்கப் பரலோக ப்ராப்தியானாள்" என்று சொன்னார்.
கிருஷ்ணன், ஒரு க்ஷணநேரம் நிதானித்தான். "ஐயோ; நாயனா! ஐயோ, நானே அவளுக்குச் சத்ராதியாக இருந்தேன்; நானே அவளைக் கொன்றேன்" என்று விம்மியழுது, நடந்த யாவற்றையும் சொல்லினான்.
அவனுடைய துக்கம் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தங்களாலானமட்டும், பெற்றோர் இருவரும் அவனைத் தேற்றினார்கள். அந்தத் துக்கம் அவனுக்குக் கொஞ்சத்தில் தெளியவில்லை.பன்னிரண்டு அடிக்கிறதைக் கேட்கும்போதெல்லாம் அவனுக்கு பக்கென்று வயிறு பற்றி யெரியும்.
-----------------
6. ஆஷாடபூதி
I
சென்னையில் ஜெனரல் ஹாஸ்பிடலிலிருந்து வண்ணாரப் பேட்டைக்குப் போகும் தங்கசாலை வீதியும் கடற்கரையிலிருந்து ஆனைகெவுனிக்குப் போகும் கொத்தவால்சாவடி வீதியும் கலக்கிற நாற்சந்தியில் உள்ள அடிபட்ட பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்கே கால் பர்லாங்க் தூரத்தில் ஒரு சிறிய சந்து உண்டு. அந்தச் சந்து கோமுட்டி வர்த்தகர்கள் வசிப்பது. சந்தின் கீழண்டை வாடையில் வடகோடி வீடு ஒன்றுண்டு: அது ரங்கையசெட்டியார் என்னும் ஜவளிவர்த்தகருடைய பிதுரார்ஜிதம். வீட்டின் வாயில் வடக்கு நோக்கியது. அந்த மாடிவீட்டின் படிக்கட்டு, தெருநடையை யடுத்த சரக்காரில் தேக்கமரத்தால் அமைத்திருக்கும். மேன்மாடியில் இருபதடி நீளமுள்ள ஒருகூடமும் கூடத்தின் வடக்கிலும் தெற்கிலும் பன்னிரண்டடி நீளமுள்ள ஒவ்வோரறையும் உண்டு. கீழ்க்கட்டின் மேல்புறத்தில் முன்பக்கம் புருவாதி விசாலமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
அதற்கப்பால் வெந்நீரடுப்புள்ள ஒரு ஸ்நான அறையும், கடைசியில் சமையலறையும் இருக்கும். சமையலறையின் கிழக்கில் உள்ளது உக்கிராணவறை. முன்னறை செட்டியாருடைய வரவு செலவு கணக்குகள் எழுதும் ஆபீஸ். முன்னறைக்கும் உக்கிராணத்துக்கும் இடையில் உள்ள கூடம் திருவாதானத்துக்கு உரிய இடம்: ததியாராதனத்துக்கு உரிய இடமும் அதுவே. அது எப்போதும் திரையிட்டிருக்கும்.
ரங்கைய செட்டியாருடைய கணக்குகளெல்லாம் தெலுங்கு லிபியில் எழுதியிருக்கும். அவருடைய கணக்கப்பிள்ளைகள் இங்க்லீஷில் வர்தகத்துக்குரிய சில வார்த்தைகளை அறிந்து கொள்வதான அவ்வளவு பயிற்சியே உள்ளவர்கள். செட்டியார் யாதொரு பரீக்ஷையிலும் தேறாதவராயினும், விவகாரங்களை நடத்துவதற்கு வேண்டிய அளவு இங்க்லீஷ் பயிற்சியும், எடுத்த புத்தகத்தைப் படித்தறியக்கூடிய தெலுங்கு விற்பத்தியும், பகவத்காலக்ஷேபங் கேட்டறிதற்குரிய தமிழ்ப் பழக்கமும் உள்ளவர்.
யாரிடத்திலும் இனியவார்த்தை பேசுவதின்றி எப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்திலும் கர்ணகடூரமான வார்த்தையைப் பேசுவது அவரிடம் கிடையாது. அவருடைய நாக்குநயமே அவருடைய வர்த்தகஸித்திக்கு முக்யகாரணம். கொஞ்சலாபம் கிடைத்தாலும் போதுமென்றிருப்பவ ராகையால், "வ்யாபாரம் த்ரோஹசிந்தனம்" என்கிற மூதுரை அவருக்கடுக்காது. ஏழைகளிடத்தில் இரக்கமும் பொதுஜன நன்மையில் நாட்டமும் பெற்றிருந்ததோடு அவர் பகவத் கைங்கர்யங்களையும் பாகவத கைங்கர்யங்களையும் இயன்றமட்டில் லோபமின்றிச் செய்து வருபவர். இத்தனையோடு ஸ்நேஹத்துக்கும் அவர் பாத்ரமானவரே.
ஒருநாள் அவர் வெளி வேலைகளைப் பார்த்துக் கொண்டு திரும்பி ஸூர்யாஸ்தமன காலத்தில் கோச் விட்டிறங்கி, மேல் மாடியில் முன்னறையில் உடுப்புக் களைந்து, கூடத்தில் வைத்திருந்த செம்புஜலங் கொண்டு முகம் கைகால்களைக் கழுவி ஈரத்தை ஒற்றியெடுத்துவிட்டு, மடி தரித்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே அவருடைய பிள்ளை கொண்டுவந்த டீயைப் பருகினார். அவ்வளவிலே பெரிய கணக்கப்பிள்ளை முனிஸிபல் ஆபிஸிலிருந்து வந்த ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து அடுத்த மேஜையின்மேல் வைத்து, அன்றளவில் வேறு தபால் ஒன்றும் வரவில்லையென்று சொல்லிக்கொண்டே கீழ்க்கட்டில் ஆபீஸுக்குப் போய்விட்டார்.
முனிஸிபல் ஆபீஸிலிருந்துவந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார். இரண்டாமுறை மூன்றாமுறையும் அக்கடிதத்தை நிதானமாகப் படித்துப் பார்த்தார். கூடத்தில் உலாவினார்: சரக்காரில் உலாவினார். சற்றுநேரம் நாற்காலியில் இருந்தார்.
மீண்டும் எழுந்து உலாவினார். பல விதத்தில் சிந்தித்தார். ஒரு முடிவுக்கும் வரக்கூடாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து எண்ணமிட்டிருந்தார். பெரிய கடியாரம் டங் டங் என்று ஏழுமணி அடித்தது. எவரோ காலில் பாதரக்ஷையோடு படிக்கட்டின் மீது எறிவருகிற அரவம் கேட்டது. "யார் அது" என்று செட்டியார் கேட்டார். "ஏன் செட்டியாரே" என்று ஒருவர் வந்தார்.
வந்தவரை உபசரித்து நாற்காலியில் உட்காரச் சொல்லி, பெரிய கணக்கப்பிள்ளையை அழைத்து, "நேற்று நம்முடைய சரக்கறைக்கு வந்த சீட்டி பேல்கள் நூற்றுக்காக முதலியாருக்கு ப்ரத்யேகமாகச் சேரவேண்டியதைச் சேர்த்துவிடு" என்றவடனே, கணக்கப்பிள்ளை தனது கோட்டின் உள் பையில் வைத்திருந்த நோட்டின் கற்றையில் இரண்டு பத்து ரூபா நோட்டும் ஓர் ஐந்து ரூபா நோட்டும் எடுத்துக் கொடுத்து ஓரணாதலை யொட்டிய ஒரு ரசீது பாரத்தில் தொகையைக் குறித்துக் கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
அந்தத் தொகையை வந்த முதலியார் தாளிட்டு முடியும் உள்ளரைச் சொக்காயின் பையில் போட்டுப் பையை ஸந்தடி பண்ணாமல் தோவத்தியின் உள்ளே செருகி பத்ரப்படுத்திக் கொண்ட பிறகு, செட்டியாரைப் பார்த்து "என்ன செய்தி? இயற்கையாக உள்ள மகமலர்ச்சி இன்று உங்களிடம் தோன்றவில்லை: மனத்தில் ஏதோ சிந்தாகுலம் உற்றிருப்ப உங்கள் முகம் குறித்துக் காட்டுகின்றது. ஊரிலிருந்து ஏதாவது கடிதம் வந்ததோ? வீட்டில் எல்லாரும் ஸௌக்யமாக இருக்கிறார்களே" என்று கேட்ட அளவில், செட்டியார் "வேறு விசேஷம் இல்லை" என்று சொல்லி, முனிஸிபல் ஆபீஸ் கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்.
முதலியார் தத்தித் தொத்தி அந்தக் கடிதத்தில் கண்டுள்ள முக்ய ஸங்கதியை இன்னதென்று ஒருவாறு தெரிந்து கொண்டு அதை முன்போல் மேஜையின்மேல் வைத்துவிட்டு, "கால தவணை நிரம்ப இருக்கிறத. நீங்கள் லவலேசமும் அதைர்யம் அடையவேண்டா. இரண்டு மூன்று நாளில் இதற்குப் பரிகாரம் தேடலாம். ஸந்தோஷமாய் இருங்கள்" என்று சொல்லி எழுந்தார். செட்டியார் "என் மனநோய்க்கு மருந்தாய்ப் பகவானே உங்களை என்னிடம் அனுப்பினாரோ! செய்வது
இன்னதென்று தோன்றாமல் நிர்ஜீவனாய் விட்டேன். உங்கள் வார்த்தை எனக்குக் குற்றுயிரைத்தந்தது. இனி உங்களை நம்பியிருக்கிறேன். பகவத் கடாக்ஷம் எப்படியிருக்கிறதோ பார்ப்போம்" என்றார். முதலியார் "பகவத் கடாக்ஷம் பூரணமாயிருக்கிறது. நீங்கள் ஒன்றும் கவலையடைய வேண்டா" என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.
II
கொத்தவால் சாவடி வீதியும் ஆக்ரா பாங்கிக்கு மேற்கில் உள்ள ஆர்மினியன் வீதியும் கலக்கிற இடத்தில் மேல்பால் உள்ள பெரிய கட்டடம் ஓர் இங்க்லிஷ் வர்த்தகசாலை. வர்த்தகசாலைக் குரியவர்கள் சொந்தத்தில் கப்பல்கள் வைத்துச் சீமை ஸாமான்களை வருவித்து மொத்த ஒப்பந்தமாக வர்த்தகம் செய்வதோடு, சென்னை ராஜ்யத்திலும் ஸிமென்ட், சுண்ணாம்பு, நூனூற்றல், வஸ்திரம் நெய்தல், தோல் பதனிடுதல் முதலான பலவித தொழிற்சாலைகளையும் வைத்து நடத்தி அனேக ஏழை ஜனங்களுக்கு ஜீவனமளித்துத் தாங்களும் நல்ல லாபம் அடைகின்றவர்கள். இந்த வர்த்தகசாலையில் மேற்படி முதலியார் முதலில் இரண்டு வராகன் சம்பளத்துக்கு எடுபிடியாளாகப் பில்லை சேவகம் செய்திருந்தவர், மேலதிகாரிகளுக்குக் கூழைக் கும்பிடுபோட்டு அவர்களுடைய தயவாலே ஜவளி டிபார்ட்மென்டில் ஒரு ஸாதாரண தரகிரியாகி மாதம் பத்து வராகன் சம்பளம் பெற்றுவந்தார். சம்பளமன்றி, பேல் ஒன்றுக்கு வர்த்தகரிடம் கால்ரூபா தரகு ப்ரத்யேகமாய் வாங்கிக் கொள்வதான மாமூலைத் தானே உண்டாக்கிக்கொண்டார். மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது அந்தந்த வர்த்தகரிடம் உரிய மாமூலைப் பெற்றுக்கொண்டு போவார். இதனால் ஸராஸரியில் அவருக்கு மாதாமாதம் இருநூற்றைம்பது ரூபாவுக்குக் குறையாத வருமானம் தனியாக ஏற்பட்டது.
வர்த்தகரிடத்தில் இவர் காட்டும் ஸாமர்த்தியத்தைக் கண்டு மெச்சி, வர்த்தக சாலையின் முதல் கூட்டாளி, இவரை ஒருவருஷகாலம் தான் லீவில் போகும்போது தன்னோடு அழைத்துப்போய்ச் சீமையில் பழக்கப்படுத்தி வைத்தால், இவர் நல்ல நிலைமைக்கு வரக்கூடுமென்று நினைத்து, இவரை அழைத்தார். இவர் கப்பல் யாத்ரையின் அபாயத்தை நோக்கி அதற்கு இணங்க வில்லை. தரகிரி வேலை கிடைத்த பிறகு ஒற்றை மாட்டுப் பெட்டிவண்டி யொன்று வைத்துக்கொண்டு வருவதும் போவதுமா யிருந்தார். இவருடைய வருமானம் தரகோடு போவதில்லை. பேல்களில் சற்றுப் பழுதான பீஸ்களை விலைகுறைத்து வாங்கி அறிமுகமானவர்களுக்குக் கடைவிலைக்குக் குறைவாக விற்றுவிடுவார். அதிகம் பழுதானவைகளைப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உபயோகித்துக்கொள்வார். அவருடைய வீட்டிலுள்ள அங்கவஸ்திரங்களை வரிசைக் கிரமமாகக் கட்டிவந்தால் மூன்று வருஷகாலத்திலும் ஒரு சுற்ற முடிவு பெறாது. மாதிரித்துண்டு சீலைகளை அப்போதப்போது தைத்து வீட்டில் பெண்டிரும் பிள்ளைகளும் துப்பட்டியாக உபயோகிப்பர். வீட்டுச் செலவெல்லாம் சம்பளத் தொகைக்குள் அடங்கவேண்டும். பண்டி செலவு, வைத்யன் செலவு முதலியனவும் அதற்குள்ளே அடங்கவேண்டும். இதனால் கந்தசாமி முதலியாரிடம் நூறு அயிரமாகி, ஆயிரம் பலவாயிரமாகப் பணம் வளர்ந்துவந்தது. யாராகிலும் வட்டிக்குக் கடன் கேட்டால் அறிமுகமானவர்களிடத்தில் வாங்கித் தருவதாகப் போக்குக் காட்டி, அப்படி வாங்கித் தருகிற தாக்ஷண்யத்துக்காக அவரால் பெறுதலான இதர நன்மை கொஞ்சமேயாயினும் அதைப் பெறாமல் விடமாட்டார்.
வர்த்தகர் சிலர் கையிலிருக்கிற முதற்பணம் பல சரக்குகளில் இறைந்துகிடந்தால், அப்படிப்பட்ட ஸமயங்களில் வட்டிக்குப் பணம் வாங்கி முதலாக வைத்து லாபம் ஸம்பாதிப்பது ஸஹஜம். இவருக்குத் தரகு கொடுக்கிற கோமுட்டிகள் இவரிடமே சில ஸமயங்களில் ஆயிரமாயிரமாகக் கடன் வாங்குவர். இவ்விதம் கொடுக்கிற கடன் பத்திரங்களில் ஒன்றாவது முதலியார் பேரில் இன்றி, எல்லாம் மூன்றாவது வீட்டில் உள்ள தங்கவேலு முதலியார் என்பவர் பேரிலே பதிவுசெய்திருக்கும். சிநேகிதருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்வது தங்கவேலு முதலியாரிடம் பெற்றுவந்த உபகாரமெல்லாம் அவஸரகாலங்களில் வட்டியில்லாமல் நூறு இருநூறு கடன் வாங்கிக்கொள்வதும் எங்கேயாகிலும் போகவேண்டுமானால் அவருடைய வண்டியில் செலவில்லாமல் போய்வருவது மாகிய அவ்வளவே.
இருபதினாயிரத்துக்குக் குறையாமல் தங்கவேலு முதலியார்மீது இடைவிடாமல் கடன் பத்திரங்கள் ஏற்பட்டிருக்கும். இவர் நல்ல ஸத்யவான் என்பது கந்தசாமி முதலியாருக்கு உறுதிப் பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களெல்லாம் ஸமீபத்திலே அநேகம் உண்டு. இவர்களுடைய சிநேகம் முற்ற முற்றத் தங்கவேலு முதலியாரிடம் தாக்ஷண்யம் குறைந்து லோபகுணம் சிறிய சிறிய தசாம்ச பின்னமாக வளர்ந்துவந்தது. உடன் பிறந்தவர்களுக்கு ஏதாகிலும் சீரிடுவதானால், கந்தசாமி முதலியார், "ஓய்! அதிக ஓட்டம் ஓடாதே; அடக்கிப்பிடி; இவர்களெல்லாம் நம்முடைய கையிலுள்ளதைக் கொஞ்சங் கொஞ்சமாய் உறிந்துகொண்டு போகிறவர்களே யன்றி, நமக்கு இவர்களால் பின்பு கொஞ்சமும் நன்மை கிடைக்குமென்று எண்ணவேண்டா"
என்று எச்சரிக்கைசெய்து, கேட்டதொகைக்குக் குறைவாகவே கடன் கொடப்பார். தங்கவேலு முதலியாருக்கு முன்னமே அர்த்த சாஸ்த்திரத்தில் கொஞ்சம் பயிற்சியுண்டு. அதன்மேல் கந்தசாமி முதலியாருடைய புத்திமதிகள் சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல் இருக்கும். அப்போதப்போது நடக்கிற ஸாதாரண ஸம்பாஷணங்களால் தங்கவேலு முதலியாருக்குச் சாய்காலுள்ள இடங்கள் இன்னவை இன்னவை யென்பது கந்தசாமி முதலியாருக்கு நன்றாகத் தெரியுமாதலால், செட்டியார் வீட்டிலிருந்து வந்த மறுநாள் காலையில், தங்கவேலு முதலியார் காலக்கடன் கழிக்கச் செல்லும்போது கந்தசாமிமுதலியாரும் உடன்றொடர்ந்து, பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகையில், பல சிநேகிதர்களுடைய க்ஷேமங்களை விசாரித்தார். விசாரிக்கும்போது இடையிலே "ஓய், ரத்தினசெட்டியார் எப்படியிருக்கிறார்?" என்று கேட்டார், "அவர் முன்னே வெறுமையான லேககராய் இருந்தவர், இப்பொழுது முனிஸிபல் ப்ரெஸிடென்டின் தயா பக்ஷத்தால் ஜெனரல் டிபார்ட்மென்டின் மானேஜராக இருக்கிறார்.
மாதச் சம்பளம் நூற்றைம்பது. புத்ரபாக்யத்துக்கும் குறைவில்லை" என்று தங்கவேலு முதலியார் உரைத்தார். அதைக்கேட்டுக் கந்தசாமி முதலியார் "அப்படியா, நிரம்ப ஸந்தோஷம். என்னுடைய ஸந்தேகம் நிவர்த்தியாயிற்று. என் எண்ணம் பலிக்கு மென்றே உறுதி ஏற்படுகிறது" என்றார். அதன்மேல் தங்கவேலு முதலியார் "என்ன ஸங்கதி, என்ன ஸங்கதி? அவரால் உனக்காக வேண்டிய நன்மை என்ன இருக்கிறதூ நாம் இருப்பது முனிஸிபல் அத்தைக் கடந்த சைதாபேட்டை தாலூகா வல்லவோ! அவருடைய ஞாபகம் வரவேண்டிய காரணம் என்ன? உத்யோக ஸம்பந்தமாக உனக்காவது உன்னுடைய கோமுட்டி சிநேகிதர்களில் எவருக்காவது புதிய வரி ஏதாவது ஏற்பட்டதா? என்ன ஸங்கதி?" என்று கேட்டார்.
கந்தசாமிமுதலியார் "நான் பத்துவராகன் ஸம்பாதிப்பவன். எனக்குப் புதிய வரி என்ன இருக்கிறது? எனக்குத் தெரிந்த கோமுட்டிகளெல்லாம் பலத்த வியாபாரிகளாயிருக்க, அவர்களுக்கு ஏற்படக்கூடிய வரி முதலான விஷயங்கள் என் காதுவரையில் ஏன் எட்டப்போகின்றன? நெற்றுமாலையில் நம்முடைய நண்பர் ரங்கைய செட்டியாரைக் காணும்படி நேரிட்டது" என்றவளவில், தங்கவேலு முதலியார் "ஓஹோ தண்டலுக்காகப் போயிருந்தாயோ?" என்று பரிஹாஸமாகக் கேட்டார்.
கந்தசாமி முதலியார் நகைத்துக் கொண்டே "ஒரு கார்யமாகப் போயிருந்தேன். செட்டியார் முகக்குறிப்பால் அவருக்கு ஏதோ மனக்கவலை உண்டாயிருப்பதாகத் தெரிந்துகொண்டு, அவரை அதன் காரணம் என்னவென்று உசாவினேன். அவர் முனிஸிபல் ஆபீஸிலிருந்து வந்து மேஜையின்மேல் கிடந்த ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினார்." என்றவளவில், தங்கவேலுமுதலியார் "அந்தக் கடிதத்தில் மனக்கவலை யடைவதற்கான விஷயம் என்ன? என்று கேட்டார். அதற்கு விடையாகக் கந்தசாமி முதலியார் பின்வருமாறு விரித்துரைத்தார்.
கொத்தவால் சாவடியின் கிழக்கிலும் மேற்கிலும் சிறிது தூரம் வரையில் வீதி விசாலமாக இல்லாமையால், கட்டை வண்டிகள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்வதும், அவஸரமாகப் போகவேண்டிய உத்யோகஸ்தர்களுடைய குதிரை வண்டிகள் தடைப்பட்டு ஆலஸ்யமடைவதும், குதிரைகள் மிரண்ட ஆபத்து நேரிடுவதுமாக இருப்பதால், வீதியை விசாலமாக்கக் கருதி முனிஸிபல் ஸபையார் "வீதியின் இருபுறத்திலுமுள்ள வீடுகளில் முன்பிதுங்கலாக உள்ளவைகளை வேண்டிய அளவு மதிப்பிட்ட வாங்கி அவ்வளவாக இடித்தெடுத்து விடவேண்டும்; மதிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்ட வீட்டுக் குரியவர்கள் தங்கள் வீடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வ" தென்று தீர்மானம் பண்ணி, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும்படி ப்ரெஸிடென்டுக்கு ஸர்வாதிகாரமும் கொடுத்துவிட்டனர். இந்த ஸங்கதியைப் பற்றிய தாக்கீது, மேற்கில் அடிபட்ட பிள்ளையார் கோயில் வரையிலும் கிழக்கில் பழைய மார்க்கெட் (இப்பொழுது லோன் ஸ்க்வேர் என்று வழங்கு மிடம்) வரையிலும் எல்லா வீட்டுக்காரர்களுக்கும் மண்டிக்காரர்களுக்கும் ஒவ்வொரு பிரதியனுப்பிவிட்L, ப்ரெஸிடென்ட் அந்தந்த அளவின்படி மதிப்பு ஜாபிதா தயார் செய்யும்படி இரண்டு முனிஸிபல் ஓவர்ஸீயர்களை நியமித்தார். இப்பொழுதுதான் அந்த ஓவர்ஸீயர்கள் அளவெடுத்து வருகின்றனர். இதைப்பற்றிய தாக்கீதே ரங்கைய செட்டியார் எனக்குக் காண்பித்தது. செட்டியாருடைய வீட்டிற்குக் கிழக்கில் சில வீடுகள் உள்ளடங்கியிருக்கிற அளவாக இடித்தாலும், செட்டியார் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஆபீஸ் அறையும் அதன்மீதுள்ள மாடியறையும் மேல்புறத்திலுள்ள புருவாதியும் பரிஷ்காரமாய்ப் போய்விடும். வீடு அதிக நீள மில்லாமையால், இப்போது ஸம்ஸார கார்யங்களுக்கு ஒரவிதத்தில் போதுமான வீடு, இடித்த பிறகு எவ்விதத்திலும் அவருடைய வாஸத்துக்க யோக்யமாகாது. வர்த்தகர்களுக்கு வசதியான வேறிடம் அந்தப் பக்கத்தில் எளிதில் கிடைக்காதே. அதனால்தான் செட்டியார் அதைர்யமடைந்து ஏக்குற்றிருக்கிறார். நான் கொஞ்சம் தைர்யம் சொல்லிவந்தேன்.
தங்கவேலு முதலியார். -ஆமாம். நாலுபேருக்குள்ளது செட்டியாருக்கும். மற்றவர்களும் இதற்கு ஈடுபட்டுத்தானே தீரவேண்டும். இதற்கு எவர்தான் என்ன பரிகாரம் செய்வது இயலும்? நீ அவருக்கு எவ்விதத்தில் தைர்யம் கொடுத்து வந்தாய்?
கந்தசாமி முதலியார்.- நான் உன்னைப்பற்றியும் யாதொரு ப்ரஸ்தாபமும் செய்யவில்லை. உன்னுடைய ஒருசாலை மாணாக்கரான செட்டியாரால் கூடுமானால் இதற்குப் பரிகாரம் தேட முடியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தைர்யம் கொடுத்ததே தவிர வேறில்லை.
தங்கவேலு முதலியார்.- ஸரி. உனக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா? நாம் சென்ற வருஷம் செட்டியார் வீட்டில் ஒர விசேஷத்துக்குப் போயிருந்தபோது, நான் பேச்சுப் பராக்கில் வீட்டையும் வீடு இருக்கிற இடத்தையும் ஒருசிறிதும் கவனிக்கக் காரணமில்லாமல் போய்விட்டது. நீ அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவதனால் உனக்கு ஏதாவது பரிகாரம் தோன்றுகிறதா?
கந்தசாமி முதலியார்.- நீ கேட்ட பிறகு இதைப்பற்றிச் சிந்திக்கையில் ஒரு பரிகாரம் என் மனத்தில் தோன்றுகிறது.
தங்கவேலு முதலியார்.- நேரமாகிறது. அதை விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லிக்கொண்டு வா.
கந்தசாமி முதலியார்.- முதலாவது செட்டியார் வீட்டுக்கெதிரில் வீதி அதிகம் அகலக்குறைவு இல்லை. செட்டியார் வீட்டுக்குக் கிழக்கில் உள்ள பத்துப் பன்னிரண்டு வீடுகள் ஏழெட்டடி உள்ளடங்கியே யிருக்கின்றன. செட்டியார் வீடுதான் முனிஸிபல் அதிகாரிகள் எடுத்திருக்கிற அளவின் கடைசி யெல்லை.
தங்கவேலு முதலியார்.- ஸரி, நீ எடுத்துக்காட்டிய ஷரத்துகள் போதுமானவை. ஒருகை நெட்டிப்பார்க்கலாம். இன்னும் காலதவணை எவ்வளவு இருக்கிறது?
கந்தசாமி முதலியார்.- ஒருமாதத்துக்கு அதிகம் இருக்கிறது. மதிப்பு ஜாபிதாவே இதற்குள் தயாராகமாட்டாது.
தங்கவேலு முதலியார்.- மெய்தான், ஆனாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் தாமஸம் செய்வது கூட்து. சில நாள் கழித்துப் போனால் "எல்லாம் உத்தரவாய் விட்டது. இனி எங்களால் ஆவது ஒன்று மில்லை" யென்று கீழ் உத்யோகஸ்தர்கள் கையை விரித்துவிடுவது ஸஹஜம். ரத்தினசெட்டியார் இப்பொழுது வேப்பேரியில் மூக்காத்தாள் கோயில் தெருவுக் கருகில் சொந்தவீடு வாங்கிக்கொண்டு அதில் குடியிருக்கிறார். மாலை வேளையில் உனக்குத் தண்டல் வேலை ஸரியாக இருக்கும். காலையில் நான் போஜனம் பண்ணிக்கொண்டு அவரைப் பார்த்து விட்டு அப்பால் ஆபீஸ் வேளைக்கு ஸரியாகப் போவது கஷ்டம். மேலும் காலையில் நான் போகிற ஸமயம் அவரும் புறப்படுகிற ஸமயமாக இருக்கும். ஸாவகாசமாகப் பேச நேரம் இருக்காது. உன் வண்டிக்கு எப்போது ஒழிவு கிடைக்கும்? நான் ஆபீஸிலிருந்து மாலையில் ஐந்தரை மணிக்குப் புறப்பட்டால், வேப்பேரிக்குப் போய்ச் செட்டியாரோடு கலந்துபேசி வீடுவந்து சேர இரவு ஒன்பது மணியாகும். இன்று புதன் கிழமையாகையால் இன்று மாலையே இந்த விவகாரத்துக்குரிய காலம். ஆகையால் வண்டிக்காரனுக்குத் திட்டம்பண்ணி மாலை ஐந்து மணிக்கே வண்டியை எங்களாபீஸுக்கு அனுப்பிவிடு.
கந்தசாமி முதலியார்.- ஆஹா அப்படியே செய்கிறேன்; இன்று மாலையில் நான் ரெயில் வண்டியேறி வீடுவந்து சேர்கிறேன். இந்தப்ரகாரம் முடிவு செய்துகொண்டு அவரவர் உண்டுடுத்து ஆபீஸுக்குப் போய்விட்டனர்.
தங்கவேலு முதலியார் ரத்தினசெட்டியாரிடம் பேசிவந்த விஷயங்களை அன்றிரவே அறிந்துகொண்டு மறுநாள் மாலையில் கந்தசாமி முதலியார் ஆபீஸிலிருந்து ரங்கைய செட்டியார் வீட்டுக்கு நேராகப் போனார்.அப்போது மேன்மாடியில் வர்த்தக ஸம்பந்தமான சிலகடிதங்களுக்கு இன்ன இன்ன விதமாக விடையெழுதுவதென்று தம்முடைய கணக்கப் பிள்ளைக்குத் திட்டம் செய்திருந்த செட்டியார், கணக்கப்பிள்ளையைக் கீழே அனுப்பிவிட்டு, "வாருங்கள் முதலியாரே, இப்படி உட்காருங்கள். ஆபீஸிலிருந்து நேராய் வந்தீர்களோ? நீங்கள் வழக்கமாக வருகிற வேளைக்கு நெடுநேரம் முன்னதாகவே இன்று வந்தமையால், எனக்குக் கொஞ்சம் தைர்யம் உண்டாகிறது" என்றார்.
கந்தசாமி முதலியார்.- பகவத்கடாக்ஷம் பூர்ணமாக இருக்கிறதென்று முந்தைநாளே சொல்லிக்கொண்டேனே. நல்லமனமும் எண்ணமும் உள்ள உங்களக்கு என்ன கெடுதி வரும்? நம்முடைய சிநேகிதர் என் வீட்டுக்கு மூன்றாவது வீட்டுக்காரர்
தங்கவேலு முதலியாரை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?
செட்டியார்.- உங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் அவரில்லாமல் வார்த்தையாடியதே கிடையாது. உங்களிடம் வாங்கிய கடனெல்லாம் அவர்பேரில் பத்திரம் செய்திருக்க, அவரை நான் அறிவேனா என்று கேட்பானேன்? அவரைப்பற்றி இப்பொழுது ப்ரஸ்தாபித்த காரணம் என்ன?
கந்தசாமி முதலியார்.- அவருக்கு ஒருசாலை மாணாக்கரான பேரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் ஒருவர் முனிஸிபல் ஆபீஸில் ப்ரெஸிடென்டுக்கு வேண்டியவராய் பொது டிபார்ட்மென்டுக்கு மானேஜராயிருக்கிறார். நேற்றுமாலையில்தங்கவேலு முதலியார் அவரிடம் போய்வந்தார். உங்கள் கார்யம் ப்ரதிகூலமாகாதபடி இயன்றவரையில் பலங்கட்டி வந்திருக்கிறார்.செட்டியார்.- ஆமாம், இது பலபேரை பாதிக்கிற விஷயமாக இருக்கையில் நமக்கு மாத்ரம் அநுகூலம் எப்படி உண்டாகும்? நமக்கு அநுகூலமானால் அது தெய்வாதீனமென்றே எண்ணவேண்டும். என்னமோ வரதராசப்பெருமாளை நம்பியிருக்கிறேன். அவர்தான் என் குடும்பத்தை ரக்ஷிக்கவேண்டும்.
கந்தசாமி முதலியார்.- இனி நீங்கள் எவ்வளவும் இந்த விஷயத்தில் வ்யாகுலம் கொள்ளவேண்டா. வேறு வேலை கொஞ்சம் இருக்கிறது; அதைப் பார்த்துக்கொண்டு போக வேண்டும். ஆகையால் நான் செலவு பெற்றுக் கொள்ளுகிறேன். ஏதாவது விசேஷ செய்தி தெரிய வந்தால் உடனே வந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.கந்தசாமி முதலியார் அப்பால் இரண்டு செட்டிமாரிடத்தில் தண்டவேண்டிய தரகைத் தண்டிக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தார்.
III
லோன் ஸ்க்வேரிலிருந்து அடிபட்ட பிள்ளையார் கோயில் வரையில் அங்கங்கே வீதியின் அகலத்தையும் வீடுகளில் இடிக்க வேண்டிய பாகங்களின் அளவையும் காட்டிய ஒரு படத்தையும், கட்டிக்கொடுக்கவேண்டிய நஷ்டங்களை விவரித்துக் காட்டும் ஒரு மதிப்பு ஜாபிதாவையும் தயார்செய்து, அவைகளை ஓவர்ஸீயர்கள் ப்ரெஸிடென்டின் பார்வைக்கு அனுப்பினார்கள்.
ப்ரெஸிடென்ட் அவைகளைப் பார்வையிட்டுக் கைநாட்டு செய்து மானேஜரிடம் அனுப்பினார். மானேஜர் அது ஸம்பந்தமான தஸ்தாவேஜுகளை வைத்தக்கொண்டு ஊன் றிப் பார்க்கையில், மதிப்பு ஜாபிதாவில் ஏற்பட்டிருக்கிற தொகை ஸபையார் முடிவு செய்த தொகைக்கு எழுபதினாயிரம் அதிகப்படுதலால் அந்த அதிகப்படி தொகையை நிர்வகிப்பதற்குப் பண்டு போதாதென்றும், அடிபட்ட பிள்ளையார் கோயிலுக்கு இப்பால் காலேயரைக்கால் பர்லாங்க் வரையில் வீதி போதுமான விசாலகுள்ளதே யென்றும் ப்ரெஸிடென்டக்கு எடுத்துக் காட்டினார். ப்ரெஸிடென்ட் எல்லாவற்றையும் ஆலோசித்து, அடிபட்ட பிள்ளையார் கோவிலிலிருந்து காலேயரைக்கால் பர்லாங்க் தூரத்துக்கு இப்பால் தொடங்கி வேலையை நடத்துவதென்று ஓவர்ஸீயர்களுக்குத் தாக்கீது செய்தார். இதனால் ரங்கைய செட்டியாருடைய வீடுமாத்திரமேயன்றி வேறு இரண்டு மூன்று வர்த்தகர்களுடைய வீடுகளும் இந்த ஆபத்தினின்று விடுதலையாயின. ரத்தினிசட்டியாரும் தங்கவேலு முதலியார் நாடிவந்த விவகாரம் அனுகூலமாகி விட்டதென்று அவருக்கு ரஹஸ்யமாகவும் குறிப்பாகவும் ஒர கடிதம் எழுதினார்.தினம் ஒரு முறையாவது தங்கவேலு முதலியாரிடம் போய்ப் பொழுதுபோக்காகப் பல விஷயங்களைப் பேசிவரும் கந்தசாமி முதலியாருக்கு இந்த ரஹஸ்ய ஸங்கதி தெரிந்த அன்று மாலையே அவர் செட்டியாரிடம்போய் அதை ரஹஸ்யமாகத் தெரிவித்தார். செட்டியார் தம்முடைய வீடு ப்ரமாதமான ஆபத்திலிருந்து தப்பினதற்காக அடைந்தமகிழ்ச்சிக்கு அளவில்லை.
பெரிய தோட்டமும் பங்களாவும் தம்மனைவிக்குச் சீதனமாகக் கிடைத்திருந்தாலும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி உண்டாகாது. சற்று நேரம் வேடிக்கையாகப் பேசியிருந்து "இப்படிப்பட்ட மஹோபகாரம் பண்ணின நம்முடைய சிநேகிதருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்" என்றார். கந்தசாமி முதலியார் " அவர் அவ்விதம் கைம்மாறு கருதி ஒருநன்மை செய்பவரல்லர். அவர் ஒருபோக்கு" என்றார். "இருந்தாலும் என்மனம் என்னைத் தொளைக்குமே. நான் என்ன செய்வேன்" என்று சொல்லி, செட்டியார் கந்தசாமி முதலியாருடைய செவியில் சிலவார்த்தைகளை அதிரஹஸ்யமாக உரைத்து, "இனி என் விருப்பத்தை நிறைவேற்றுவது
உம்முடைய பொறுப்பு. எச்சரிக்கையாக விசாரித்துக் கொண் டிருக்கவேண்டும்." என்று வற்புறுத்தினார். கந்தசாமி முதலியார் "நல்லது, அப்படியே ஆகட்டும்" என்றுகூறி விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்.
உடனே கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரிடம் போய் "ரங்கைய செட்டியாருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை.
ஓய், உன்னை அவர் மஹோபகாரியாகக் கொண்டாடினார். அவரடைந்த மகிழ்ச்சியை நேரில் கண்டால், நீ அவர் பொருட்டாக எடுத்துக்கொண்ட சிரமம் சிரமமாகத் தோன்றாது. உனக்குக் கனகாபிஷேகம் செய்தாலும் தீரா தென்று அவர் மனம் அவ்வளவு உருகிவிட்டது. நல்ல உத்தமராகையால் என் நிமித்தமாக நீ அவருக்குச் செய்த உபகாரம் எனக்கு அதிக ஸந்தோஷத்தைத் தருகிறது" என்று பல உபசாரவார்த்தைகள் சொல்லிப் போய்விட்டார்.
தரகிரி வேலை கிடைத்தவுடனே கந்தசாமி முதலியார் தம் தம்பியோடு பாரிகத்துப் பண்ணிக் கொண்டார். அவருக்கு முறைப்பேறாக இரண்டு அண்பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உண்டு. கதை நிகழ்ந்த காலத்தில் இவருடைய மூன்றாவது இளம் பிள்ளையும் நான்காவது இளம் பெண்ணும் அதிபால்யமானவர்கள். முன்பின் பாத்திய மில்லாத ஒரு பிள்ளைக்கு இரண்டாம் பேறான பெண்ணைக் கொடுத்து, மூத்த குமாரனுக்கு அந்த மாப்பிள்ளையின் தங்கையைக் கொண்டார். தன்னுடைய தம்பிமாரில் ஒருவருக்குக் கந்தசாமி முதலியாருடைய பெண்ணைக் கொள்ளவேண்டுமென்கிற உள்ளெண்ணம் தங்கவேலு முதலியாருக்கு உண்டாயிருப்பதைக் குறிப்பால் அறிந்தம், அந்த எண்ணம் முற்றுவதற்கு முன்னே கந்தசாமி முதலியார் மூத்த பெண்ணின் விவாஹத்தைத் தங்கவேலு முதலியாருடைய உதவியைக்கொண்டே முடித்துவிட்டார். தங்கவேலு முதலியார் பாடசாலையில் கல்விகற்கும் போது படிப்பதற்கென்று ஓரறை கடிக்கூலிக்க வைத்திருந்த வீட்டுக்காரர் ஆண்திக் கில்லாதவ ராகையால், அவருடைய வாக்கு ஸகாயத்தால் அந்தக் கல்யாணம் எளிதில் முடிந்தது. சம்பந்திகள் அதிகம் பணமுடையவர்களாயினம் பூஷணரூபமாகவாவது வீடுவாயில் ரூபமாகவாவது அதிக செலவில்லாமலே உபாயமாகக் கல்யாணத்தை முடித்துவிட்டனர்.
தங்கவேலு முதலியாருக்குப் பல தம்பிமார்களும் தங்கைமார்களும் உண்டு. தம்பிமார்களைப் படிப்பிக்கவம் தங்கைமார்களைக் கல்யாணஞ்செய்து கொடுக்கவும் அடிக்கடி செலவுகள் நேரிட்டு வந்தமையால் அவர் கடன் படாமல் காலங்கழித்ததே அதிசயம். ப்ராவிடென்ட் பண்டில் சேர்மான மாகியிருந்த பணமன்றி அவரிடம் கையிருப்பாக ஒன்றுமில்லை. தம்பிமார் தங்கைமார் போக, இவர்மட்டில் ஐந்தாறு பிள்ளையும் பெண்ணும் பெற்றவராகையால், யாதொரு ஸௌகர்யமமின்றி ஸாதாரணமான உடையு முண்டியுமாகவே காலங் கழித்துவந்தார். வரவுக்க மிஞ்சின செலவு செய்வது எப்பொழுதும் இல்லாமையால் கௌரவமாகவே ஜீவனம் பண்ணிவந்தார். கொஞ்சம் நிலம்பலம் ஏற்படுத்திக்கொள்ள எண்ணமிருந்தாலும், அதை நிறைவேற்ற யாதொரு வழியும் தோன்றாமலே, சம்பளம் உயரும்போது பார்த்துக் கொள்ளலாமென்று நினைத்திருந்தார்.
வியாசர்பாடி யேரியின் ஸமீபத்தில் ஒரே சதுரமான ஒரு நிலம் ஏறக்குறையப் பதினெட்டு ஏகர் விஸ்தீரண முள்ளது. அத பத்துவருஷகாலம் சென்னை ரெயில்வே கம்பனியார் வசத்திலிருந்தது. கட்டடங்கள் கட்டுவதற்கு வேண்டிய கல்சூளை வேலைகளெல்லாம் நிறைவேறிய பின் சிலகாலம் கேள்வி முறையில்லாமல் நாகதாளிபுதர்கள் சூழ்ந்து வேலங்காடாகி ஸமீபத்திலுள்ளவர்கள் காலக்கடன் கழிப்பதற்கு வசதியாக இருந்தது.
பெரிய உத்தியோகம் பண்ணி உபகாரச் சம்பளம் பெற்றிருந்த பெரிய மனிதர் ஒருவர், முன்னே அந்த வேலங்காட்டைக் கத்தகையாக எடுத்து வேலமரங்களை வெட்டிக் கட்டை தொட்டிக் காரர்களுக்கு விற்றுப் பணமாக்கிக் கொண்டார். குத்தகைக்கும் வேலையாள்களுக்கும் காவலாள்களுக்கும் செலவானது போக மீதி பணத்தைக் கொண்டே அந்தச் சதுரத்தை ஏலத்திலெடுக்க விரும்பி, டெப்யுட்டி கலெக்ட்டருடைய உதவியால் நிலத்தை ஏலத்துக்குக் கொண்டவந்தார். அடுத்த குக்ராமங்களில் தமக்குப் போட்டியாக அதிகதொகை கொடுத்து ஏலத்தில் எவர் எடுக்கப்போகிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கையில், ஏல விளம்பரம் ப்ரஸித்தமா** தினம் காலக்கடன் கழிக்கிற இடமாகையால் இந்த நிலமை மேல் நெடுநாளாகத் தங்கவேலு முதலியாருக்கு நேர்மை உண்டு. அது கந்தசாமி முதலியார் அறியாத தல்ல.
இந்த நிலம் ஏலத்துக்கு வருமென்று முன்னரே குற**லறிந்திருந்த தங்கவேலு முதலியார், வெளியூரில் துரைத்தன வைத்யராக இருந்த தம்மடைய மூத்த மைத்துனருக்காவது தெரிவித்து அந்த நிலத்தை அவர் பெறும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, அவருக்கு அவசரமான கடிதமொன்று எழுதினார். அவர் எவ்வளவானாலும் பின்வாங்க வேண்டாமென்று அவசரத்தந்தி அனுப்பினார். இரண்டாம் பேருக்குத் தெரியாமல் அதை வாங்கித் தங்கவேலு முதலியார் ஜேபியில் வைத்துக்கொண்டார்.
IV
ஏலவிளம்பரத்தைப் பார்த்தவுடனே கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரைத் தேடிக்கொண்டுபோய் விளம்பரத்தைக் காட்டி, "ஓய், ஓய், நிலம் பலம் தேடவேண்டு மென்கிற எண்ணம் உனக்குச் சிலகாலமாக உண்டல்லவா? அந்த வேலங்காட்டின்மேல் உனக்கு நோக்க முண்டென்பதையும் நான் குறிப்பினால் அறிந்திருக்கிறேன். இது நல்ல ஸமயம். அந்த வேலங்காடு முன்னே ஊரார் வசத்திலிருந்தபோது நெல் மிக நன்றாய் விளைந்திருந்த நன்செய்யென்று கிழங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது உனக்குத் தெரியாத விஷயமா? என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டார்.
தங்கவேலு முதலியார்.- மெய்தான். நேற்றே இதைப்பற்றிப் புரைசல் வந்தது. அந்தப் பெரிய மனிதன் உள்ளுக்குள்ளே பெரிய கைகளைப் பிடித்து அநுகூலப்படுத்தி வைத்திருக்கிறானே. நம்மால் என்ன ஆகும்?
கந்தசாமி முதலியார்.- சில்லரை தேவதைகளைப் பிடித்துப் பூஜைபோட்டால் எவ்விதமான கார்யமும் எளிதில் முடியும். பில்கலெக்டர் அவனுடைய சேவகன் கணக்கப்பிள்ளை முதலானவர்களுக்கு ஒவ்வொரு ஸ்வர்னபுஷ்பம் ஸமர்ப்பித்** நம்முடைய எண்ணம் பலிக்கிறது பார்.
தங்கவேலு முதலியார்.- அதுவும் உண்மைதான். உன்னை நம்பாமல் என்னிடம் கையிருப்பு என்ன இருக்கிறது? இந்த வாரத்துக்குக் கையில் ரொக்கத்தொகை வேண்டுமே. கடன் வாங்க நேரமும் இல்லை. கிடைத்தாலும் சீக்ரத்தில் அதைத் தீர்க்க வழியும் இல்லை. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படுதலான அவ்வளவே நான் கொள்ளும் ஆசை.
கந்தசாமி முதலியார்.- பணத்தைப் பற்றி உனக்கேன் கவலை? ரொக்கத்தொகையை நிர்வாகிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏலத்தில் நமக்கு அநுகூலமானால் தரத்துக்கேற்றபடி பப்பாதியாக நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது என் உத்தேசம். உனக்குக் கிடைத்தபோது உரிய தொகையைக் கொடு. அதைப்பற்றி ஒன்றும் யோசிக்கவேண்டாம். நான் முன்னின்றால் போட்டி மிகும். எனக்கு ஸமயத்தில் மன மொப்பாமல் விட்டுவிடுவேன். இன்றைக்கு லீவு கொடுக்கும்படி உங்கள் மானேஜருக்குக் கடிதம் எழுதிவிடு. ஏல ஸம்பந்தமான ஆஸாமிகள் வேளைக்கு முன்னதாகவே வந்து விடுவார்கள். இந்த ஸமயம் நாற்பதைம்பதுக்குப் பின் வாங்கக்கூடாது. உடனே போய் டெப்யுட்டி கலெக்ட்டராபீஸில் உத்யோகமாயிருக்கிற கணக்கப்பிள்ளை நம் வீட்டுக் கருகிலிருப்பவரைக் கண்டு ஓர் உறையில் ஒருநோட்டைப் போட்டு அவர் கையில் ஸமர்ப்பித்து விடு. மற்றச் சில்லரை தேவதைகளுக்கு அவசியமானதையும் அவர் மூலமாகவே சேர்த்து விடு. நான் ஆபீஸில் மூன்று மணிக்கே லீவு பெற்றுக் கொண்டு, வேடிக்கை பார்க்க வருபவன்போல் ரொக்கத்தோடு வந்திருக்கிறேன். நீ முன்னின்று ஒருகை பார்க்கவேண்டும்.
தங்கவேலு முதலியார்.- லீவு கடிதம் எழுதி நிற்பது முன்னதாகவே ஸந்தேகத்துக் கிடமுண்டாக்கும். நாலரை மணிக்குத்தானே ஏலம் ஆரம்ப மாகப்போகிறது. ஆபீஸிக்குப்போய் மூன்று மணி வண்டியில் வந்து உடுப்புக்களைந்து தாஹசாந்தி செய்துகொண்டு நாலுமணிக்கு நிலத்தண்டை போகிறேன்.தங்கவேலு முதலியார் தமது மைத்துனர் கொடுத்த தந்தியை அடியோடு மறந்தே விட்டார்.
நிலத்தை ஏலத்துக்குக் கொண்டுவருவதற்கான வழிகளையெல்லாந் தேடிய பெரிய மனிதர் அந்த நிலத்தண்டை ஏலம் போடுகிற காலத்தில் வரவில்லை. அக்கம்பக்கத்திலுள்ள கேவலமான குடியானவர்களோடும் உத்யோகஸ்தர்களோடும் ஸரிவரிசையாக நின்று போட்டி போடுவது தம்முடைய அந்தஸ்துக்குக் குறைவென்று கொண்டு, தம்முடைய சிற்றப்பன் பிள்ளையாகிய சக்ரபாணி முதலியாரை அனுப்பினார். அவர் மாதம் இருபது ரூபா சம்பளம் வாங்கி ஒரு ஸாதாரணமான உத்யோகத்தில் அமர்ந்திருந்தவர். தமையனான பெரியமனிதருக்குக் காரியஸ்தராகப் பலவீட்டுக் கார்யங்களை நடத்தி வருபவராயினம், அவர் தைர்யம் போதாதவர். மஹா மந்தமும் கோழைத் தனமும் உள்ளவர்.
ஊரார் நூறுபேர் வரையில் வந்துகூடியிருந்தார்கள். ஸரியாக நாலரைமணிக்கு வந்து ஏலங்கூறுகின்றவர் தம்முடைய வேலையை ஆரம்பித்தார். ஏல விளம்பரத்தைப் படிக்கச்செய்து, இந்த நிலம் ஐந்நூறு ரூபா என்று ஆரம்பஞ்செய்தார்.
சக்ரபாணி முதலியார் அறுநூறு என்றார். குடியானவர்களில் ஒருவர் அறுநூற்றிருபத்தைந்து என்றார். ரெயில்வே வேலைக் கூடத்தில் கூலிவேலை செய்பவன் ஒருவன் அறுநூற்றைம்பது என்றான். ரெயில்வே வேலைக்கூடத்தைச் சேர்ந்த ஆபீஸில் இருபத்தைந்து ரூபா சம்பளக்காரனாகிய லேககன் ஒருவன் அறுநூற்றெண்பது என்றான். வெற்றிலைத்தோட்டக்காரர்களில் ஒருவன் எழுநூறு என்றான். ஊர் மிராசுதாரரில் ஒருவர் எண்ணூறு என்று போட்டிக்கு வந்தார். எண்ணூறு எண்ணூறு என்ற கூவிக்கொண்டிருக்கையில், அடுத்த க்ராமத்தில் பங்குகாரன் ஒருவன் எண்ணூற்றைம்பது என்றான். சக்ரபாணி முதலியார் "எண்ணூறு தொளாயிரத்துக்குமேல் எடுக்கக்கூடிய பெரியமனிதன் இந்த ஊரில் எவன் இருக்கிறான்? ஆயிரத்துக்குமேல் ஓடாதே யென்று தமையனார் சொல்லிவைத்திருக்கிறார்.
இங்கே போட்டியோ பலமாயிருக்கிறது. ஆயிரத்துக்குமேல் ஓடினால் அவருடைய கோபத்துக்கு இலக்காக என்னாலாகுமா? என்னசெய்வேன்?" என்று யோசித்திருக்கையில், தங்கவேலு முதலியார் தொளாயிரம் என்றார். உடனே சக்ரபாணி முதலியார் ஆயிரமென்றார். தங்கவேலு முதலியார் சக்ரபாணி முதலியாருடைய முகம் வாடுவதைக்கண்டு ஒரேநெட்டாக ஆயிரத்திருநூறு என்று தூக்கிவிட்டார்.
ஏலம் போடுவோன் "ஆயிரத்திருநூறு ஆயிரத்திருநூறு ஒருதரம் இரண்டு தரம்" என்று கூவி, இரண்டு மூன்று விநாடியளவு இருமியிருந்து, போட்டிபோடச் சிலர் தூரத்தில் யோசிக்கிற குறிப்பைக் கண்டு, "மூன்றுதரம்" என்றான். உடனே ஒருவர் குரலும் கிளம்பாமையைக் கண்ட, "தங்கவேலு முதலியார் ஆயிரத்திருநூறு" என்றான். உடன் வந்த உத்யோகஸ்தர்கள் உரிய தஸ்தாவேஜுகளில் பதிவுசெய்து கொண்டு தங்கவேலு முதலியாருடைய கையெழுத்தையும் வாங்கிக்கொண்டனர். கந்தசாமி முதலியார் ஒருவருமறியாதபடி பன்னிரண்டு நூறு ரூபா நோட்டைத் தங்கவேலு முதலியாருடைய சொக்கா ஜேபியில் விட்டு அதின்மேல் கண்ணாயிருந்தார். அதைக் குறிப்பாக அறிந்த தங்கவேலு முதலியார் நோட்டுகளை யெடுத்து எண்ணிக்கொடுத்து உரிய தஸ்தாவேஜுகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.
அன்றிரவே கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரிடம் அதிக மனமகிழ்ச்சியுடனே போய் "ஓய், நல்ல ஸமயம் பார்த்து நெட்டினாய். அதற்காகத்தான் நான் உன்னை முன்னே தள்ளினேன்." என்றார்.
தங்கவேலு முதலியார்.- இருக்கிற நோக்கத்தைக் கண்டு கொண்டேன். சக்ரபாணி அதற்குமேல் ஏறுவதாகத் தோன்றவில்லை. சில்லரை சில்லரையாக ஏற்றினால் எவனாவது குறுக்கிட்டுக்கொண்டே யிருப்பான். ஒரேயடியாய் இருநூறு தூக்கி விடவே அநேகர் ப்ரமித்து நின்றார்கள். அந்தக் குறிப்பைத் தெரிந்துகொண்ட ஏலக்காரன் நமக்கு அநுகூலமாய்க் கார்யத்தை முடித்துவிட்டான்.
கந்தசாமி முதலியார்.- அந்த நிலம் வானவாரிதானே, ஏரிப்பாய்ச்சலு மில்லையே. அதற்கு யார் இன்னும் அதிக தொகை கொடுப்பார்கள்.
தங்கவேலு முதலியார்.- ஓய் உனக்கு ஸங்கதி தெரியாது. மேலண்டையில் மேடான பாகத்தை மனைமனையாகப் பிரித்து மனை ஐம்பதுரூபா விழுக்காடு ஒருகாணியை விற்றுவிட்டால் நாம் போட்ட தொகை வந்துவிடும். மீதி அவ்வளவும் லாபந்தானே.
கந்தசாமி முதலியார்.- அந்த யோசனை என் புத்தியில் படவில்லை. இப்பொழுது ஒன்றும் அவஸரம் இல்லை. போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். இனி தாமஸ மில்லாமல் நிலத்தைச் சீட்டுப் பண்ணிக்கொள்ள வேண்டும்.
தங்கவேலு முதலியார்.- ஸரிதான். எனக்கு அறுநூறு ரூபா சேர்மான மானபிறகல்லவா பாதிக்கு ஸ்வாதீனம் ஏற்படப் போகிறது. சீக்ரத்தில் அந்தத் தொகை எவ்விதம் கிடைக்கப்போகிறது. ஆகையால் சீட்டுப்பண்ணவேண்டிய ஏற்பாடுகளை உன்பேரிலேயே செய்துகொள். அதுதான்நியாயம்.கந்தசாமி முதலியார்.- என் பணம் இருபதினாயிரத்துக் கதிகம் உன்பேரால் கடன்பத்திரம் எழுதிச் செட்டிமார்களுக்குக் கொடுத்திருக்கும்போது, இந்த ஆறுநூறு ரூபாவுக்கா நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. என் உடம்பு இருக்கிற நிதானம்
உனக்குத் தெரியாதா? நான் திடீரென்று கண்ணைமூடிக் கொள்கிற பக்ஷத்தில், நீ வேண்டுமானால் யாதொரு கஷ்டமின்றி இருபதினாயிரம் தேடிக்கொள்ளலாமே. என் பிள்ளைகளை அப்படி த்ரோஹம் செய்பவனல்ல நீ யென்பத எனக்குத் தெரியாதா? இந்த நிலம் உன்பேரிலேதான் சீட்டாக வேண்டும்.
தங்கவேலு முதியார்.- உன் இஷ்டப்படி செய். சீட்டுசெய்வதற்க வேண்டிய கட்டணத்தைக் கட்டின பிறகு காலதவணைப்படி சீட்டு வந்து சேர்ந்தது. சீட்டைத் தங்கவேலு முதலியார் கந்தசாமி முதலியாரிடங் கொடுத்தார்.
கந்தசாமி முதலியார் மறுநாள் மாலையில் ரங்கையசெட்டியாரிடம் போய்ச் சீட்டைக் காட்டி "உங்கள் அபீஷ்டத்தின்படி செய்து முடித்தேன். நீங்கள் அன்று ரஹஸ்யமாய் உரைத்த வார்த்தை நிறைவேறிவிட்டது." என்றார். உடனே செட்டியார் படுக்கையறையில் ப்ரவேசித்த இரும்புபெட்டியைத் திறந்து ஆயிரம் ரூபா நோட் ஒன்றும் நூறுரூபா நோட் இரண்டும்
எடுத்துவந்து கந்தசாமி முதலியாரிடம் ஸந்தோஷத்தோடு கொடுத்து "இப்போதுதான் என் மனத்துக்கு நிம்மதி உண்டாயிற்று" என்றார்.
மறுநாள் காலையில் கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரிடம் போய், "என் பெரிய பிள்ளை இந்த ஸங்கதியை அறிந்திருக்க வேண்டுமே யென்று நேற்றுச் சீட்டை வீட்டுக்குக் கொண்டுபோனேன். சீட்டு உன்னிடத்திலேயே இருக்கட்டும். உனக்குப் பணம் உண்டானபோது நிலத்தில் இஷ்டமான பாதியைப் பங்கிட்டுக் கொள்ளலாம்" என்று சொல்லிச் சீட்டை அவர்கையில் கொடுத்தார்.
கந்தசாமி முதலியார் அப்பால் கொஞ்சகாலத்தில் இவ்வுலகை விட்டு நீங்கினார். அவர் எந்த லோகத்துக்கப் போனார் என்கிற செய்தி இன்னும் தெரியவில்லை.
அவருடைய மூத்தகுமாரன் ஒவ்வொரு போக்கைச் சாக்கிட்டுக்கொண்டு தினம் ஒருமுறை தங்கவேலு முதலியாரைக் கண்டு வந்தவன், ஒருநாள் ஹிதமாகப் பேசியிருந்து "என் தகப்பனார் நிலச்சீட்டு உங்கள்பேரி லிருப்பதைக் காலமறிந்து கேட்டால் கொடுத்து விடுவீர் என்று சொல்லியிருந்தார். அது விஷயத்தில் மனஸ்தாபத்துக்கு இடமுண்டாவதாக இருந்தால், அது உங்களிடமே இருக்கட்டும். நிலத்தின் பலனை நாங்கள் அனுபவித்த வருகிறோம். நாகதாளி புதர்கள் எடுக்கும்படி நோட்டிஸ் வந்திருக்கிறது. நிலத்தின் அத்துமுதலானவைகளை அறிந்து புதர்களை எடுக்கவேண்டும்" என்றான். உடனே தங்கவேலு முதலியார் "இதைப்பற்றி நினைவே இல்லாமலிருந்தேன். இல்லாவிட்டால் முன்னமே கொடுத்துவிட்டிருப்பேன்" என்று சொல்லி, உள்ளே போய்ச் சீட்டைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டார். அந்த நிலத்தின்மேல் வைத்திருந்த ஆசையையும் அதனோடு விட்டுவிட்டார்.
Printed at the S.P.C.K. Press, Vepery, Madras-B.15909.
கருத்துகள்
கருத்துரையிடுக