அலை தந்த ஆறுதல்
நாடகங்கள்
Backஅலை தந்த ஆறுதல்
(சி)றுகதைகள் - நாடகங்கள்
சி. பாலசுப்பிரமணியன்
Source:
அலை தந்த ஆறுதல்
சி. பாலசுப்பிரமணியன்
முதற் பதிப்பு : டிசம்பா , 1991
விலை : ரூ. 12-00
(ரூபாய் பனிரண்டு
விற்பனை உரிமை :
பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை. சென்னை -600108.
அச்சிட்டோர் : மாருதி பிரஸ், 173, பீட்டர்ஸ் ரோடு,
சென்னை -600 014.
--------------
முன்னுரை
அவ்வப்போது வானொலியில் என்னுடைய சிறுகதைகளும் நாடகங்களும் ஒலிபரப்பாயின. இவ்வாறு வானொலி நிலையத்தினர் வாய்ப்புத் தந்த காரணத்தினால் தான், அத் துறைகளில் தொடர்ந்து பயிற்சி இல்லாத நான் சிறுகதைகளையும் நாடகங்களையும் படைக்க முடிந்தது. எனவே முதற்கண் இந்நூல் எழுதுவதற்குத் தோன்றாத் துணையாயிருந்துள்ள வானொலி நிலைய நண்பர்களுக்கு நன்றி.
இத் தொகுப்பில் சிறுகதைகள் ஆறும், நாடகங்கள் நான்கும் இடம் பெற்றுள்ளன. படைப்பிலக்கியத்துறையில் அதிகப் பயிற்சி பெறாத நான், இத் துறையிலும் படைப்பு களை வெளிக்கொணர முடியும் என்று நண்பர்கள் தந்த ஊக்கத்தினால் சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதி னேன். இவற்றைப் படிப்பவர் பயன்பாட்டில் நான் நடை போட்டிருக்கிறேன் என்று உறுதியாக உணர்வர்.
சிறுகதைகளையும் நாடகங்களையும் பொழுதுபோக்கிற்கென எழுதுவதைவிடச் சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு, மேன்மைக்கு, உயர்விற்கு எழுதுவது மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. எனவே 'கன்னி' முயற்சியாக அமைந்துள்ள என்னுடைய முயற்சியினைத் தமிழ்கூறு நல்லுலகம் வரவேற்கும் என நம்புகின்றேன்.
சி.பா.
----
* சிறுகதை, நாடங்களாதலின் கதை மாந்தர்களின் பேச்சு நடையிலேயே உரையாடல்களைத் தந்துள்ளேன்.
-------------
பொருளடக்கம்
சிறுகதைகள் | நாடகங்கள் |
1. குறள் பேச்சு | 1. (நகர) னகார, ணகார மயக்கம் |
2. நன்னனும் நங்கையும் | 2. ஏன் முடியாது? |
3. அலை தந்த ஆறுதல் | 3. உயிருக்குத் துணை |
4. நிர்வாக நிர்மலா | 4. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் |
5. நீர்க்கம்பி | |
6. விளம்பரம் வேண்டா வீராசாமி |
அலை தந்த ஆறுதல் - சிறுகதைகள்
1. குறள் பேச்சு
பேச்சாளரைவிடக் கேட்பாளர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் என்ற வாழ்வியல் சித்தாந்தத்தை நன்கு அறிந்தவர் மேடை மென்குாலோன். பேசுகின்ற கால அளவு குறைவாக இருந்தாலும், அதை எப்படிப் பேச வேண்டும் என்பதற்காக மிகுதியான நாட்கள் எடுத்துக் கொள்வார். பேச்சின் ஒவ்வொரு தலைப்பும், 'பெண் தலையிலே சூடிக்கொள்ளும் பூப் போன்றது!' கரும்புச் சக்கையிலும் கணக்கற்ற எரிசக்தி-யுண்டென்று உணர்த்திய அறிவியல் நுட்பரைப்போல, பழைய புத்தகக் கடைக்காரர்கூட ஏற்க மறுக்கும், வாசகரோடு வாழ்க்கைப் படாத கதைகளையும் கவிதைகளையும் எப்படியோ படித்து அவற்றை யுலகறியச் செய்வதில் இவர் ஓர்
அறுகால் பறவை.
அந்தப் பேச்சரங்கக்காரர்கள், நடப்பியல் நாடக உத்திகளை நன்கு கற்றவர்கள். அவ்வரங்கமே, அந்தியங் காடியில் பறவை ஒலிகளின் ஒன்றியம்போல் விளங்கும். பேருந்து நிலையத்திற்கும், ஒப்பனையும் ஒப்பந்தமும் இல்லா உலகியல் நிகழ்வைத் திரையில் கலையாக்கி நிழலாடச் செய்யும் சொகுசுக் காட்சியரங்கிற்கும், காற்றைப் போல் விரைவாகச் சென்றாலும் பாதையை விட்டு விலகாத புகைவண்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்திருந்தது. “நாம் எங்கே இருக்கிறோம்? ஏன் இங்கு வந்தோம்" என்று தெரியாத பாங்கற் கூட்டத்தின் எண்ணிக்கையை உயர்த்துவதில் உயர்ந்தவர்கள். அப்படிப் பட்டவர்கள் அழைப்புவிடுத்தால், தகுதியையும் திறமையையும் ஏன்? இன்னும் எத்தனை 'மை' கள் உண்டோ அத்தனையையும் பார்த்துத்தான் 'தொலைபேசிக்குரல் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று பொருள்.
நீர் நிலைக்கு மேலே மிதக்கின்ற பனிக்கட்டி, நீர் நிலைக்குக் கீழே அதிக ஆழம் அமிழ்ந்திருக்கும் அதுபோல மேடை மென்குரலோன் அச்சாணி. அன்னதோர் சொல் முத்துதிர்த்தார் என்றால் அஃது கேட்பவர்களின் மனதாழம் வரை சென்று மீளும் மீனெறி தூண்டில் போன்றது.
குறள் பேச்சு குரல் கொடுக்கும் நாள், ஓர் ஞாயிற்றுக் கிழமை! ஆம் உலகின் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தை ஓய்வு நாள் என்ற கயிற்றால் ஒருமைப் படுத்தும் நாள் அதுதானே. நேரம்... இராகுகாலம் விடை பெற்றுக்கொண்டு கோடு கூடு மதியத்தைக் கூவியழைத் திடும் நேரம்... ஞாயிற்றுக் கிழமை இவருக்குப் பேச்சு இருந்தால் என்ன, - இல்லாவிட்டால் என்ன, இவருடைய இணை நலம், ஆம்! மனைவியை அவர் அப்படித்தான் அழைப்பார்! வானத்து விண்மீன் தொலைவு உறவினர் வீடுகளுக்கு மகிழுந்தில் சென்று விடுவார், மகளுக்குப் பாதுகாவலன் தேரும் நோக்கால் ..... பிள்ளைகளுக்கும் இவருக்கும் உளவியல் இடைவெளி குறைவு. ஆனால் இயற்பியல் இடைவெளி மிகுதி! வேறுவேறு துறையில் கற்று வரவு செலவில் ஒருவழிப் பாதையுடையவர்கள். மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று வாயாரச் சொன்ன தெய்வ ஆண்டாள் பெயர் தாங்கிய உடன்பிறந்தவள், புக்ககம் செல்லத் தங்களால் இயன்ற அணிலு தவியைச் செய்யவேண்டும் என்ற நினைப்பு இல்லாதவர்கள்... ஆனால் மைத்துன மைத்துனியர்களின் நலத்தில் முறையான அப்பழுக்கற்ற அக்கறை காட்டும் இடம்மாறிய வேர்கள்...பாசம் என்றால் இவர்களுக்குக் கொள்ளை விருப்பம்... ஆனால் அது, இவர்களை வழுக்காமல் பார்த்துக்கொள்வதில் வல்லுநர்கள்.
அரண்மனை போன்ற அந்த வீடு அவருடைய உழைப்பில் உருவானது என்றாலும் அவருக்கென்று ஒதுக்கப் பட்ட இடம் ஓர் அறை தான்! அதிலும் ஒரு நிறைவுண்டு...
பதவி, பட்டம், பணம் மேலிடத்துச் செல்வாக்கு ஆகிய இவற்றை வங்கியில் மாற்றாத வரைலோலையாகத் தான் கொண்டிருப்பாரேயன்றித் தனிம உதவிக்காகத் தகையாளர்களிடம் கூடச் செல்வதில்லை.
நேரம் காட்டி, எதற்கும் அஞ்சாதே அஞ்சாதே என்பதுபட அஞ்சுமுறை ஒலித்தது. தன்புற முகம், ஏனையோருக்கு நகைமுகமாகிவிடக் கூடாதேயென்று கீரைகடைந்த மத்துப் போன்ற தன் தலையைச் சமன் செய்து சீர் தூக்கினார். நடத்துநருக்குத் தன்னால் மனச் சோர்வு வருதல் கூடாதென்று உரிய சில்லறையை உட்பையில் போட்டுக் கொண்டு, இரண்டு கைப் பைகளுடன், காய்கறி வாங்கத்தான் புறப்பட்டார்.
ஐந்து நிறுத்தத் தொலைவுள்ள இடத்தினைப் பேருந்து நகர்ந்து நகர்ந்து இருபத்தைந்து மணித்துளிகளில் அடைந்கது. நடந்திருந்தால் கால்களுக்குப் பயிற்சியாயிருந்திருக்கும். காரணம் பேருந்தல்ல... நகரை வலமாக வருபவர்கள், விரைவாகச் செல்ல முடியாத ஊர்திகள், தன்னைக் கடந்து உந்து செல்லக் கூடாது என்ற தனிமச் சிந்தனை கொண்டவர்களை யெல்லாம் தாண்டியல்லவா ஓட்டுநர் செல்ல வேண்டியுள்ளது... கண்களுக்கு நேராகத் தெரியும் குறளை விட்டுவிட்டு உந்து செல்லும் வேகத்திலும் அதன் இருகரைகளிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், ஆதரவற்ற அனாதைகட்கு ஆடையாகச் செல்லும் வாய்ப்பில்லாத ஆலைத் துணிகள் தாங்கிய செய்தித் தோரணங்கள் இவையே பயணம் செய்வோர் பவரின் பார்வையில் பட்டன. கண்ணுக் கணிகலமாகக் கண்ணாடியணிந்த சிலர், மனத்துக் கணிகலமாக எதையாவது கொள்ள வேண்டாமா?
புற்றீசல் போல் நிற்கும் பயணிகள் இருந்தாலும், இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் புண் சொற் கணைகளை அள்ளி வீசாமல் இறங்கினர். இறங்கும் பொழுதே, 'வரவேற்புல சாப்பாட்டுக்கு ஏழரையாகுமே! என்னமோ குறள் பேச்சுன்னு போட்டிருக்கே... அதைக் கொஞ்சம் கேட்டுத்தான் வைப்போமே...நேரமும் போனாப்பல இருக்கும்... போன்ற முல்லுரைகள் அவர் உள்ளத்தில் தொடுகோடுபோல் தொட்டுச் சென்றனவே தவிர தைக்கவில்லை.
பேச்சரங்கத்திற்கு நடைபாதை நளினங்களை யெல்லாம் நயமாகச் சுவைத்த வண்ணம், படிகள் ஏறி மேலே சென்றார். அவ்வரங்கத்தின் நெற்றிப் பொட்டாய்த் திகழ்ந்த மணிகாட்டி ஐந்து ஐம்பதைக் காட்டியது. கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், "வாங்க, பேச்சுத் துணைக்கு ஓராள் வந்தீங்க... ஆறாகப் போவது ...பேச்சாளரையுங் காணும் .... அமைப்பாளர்களையுங் காணும்" என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில் வாசலில் இனிய இசையொலிக்கும் உந்து வண்டி நின்றது ..."சே! சே! மணி ஆறாவப் போவுது...ஓராசாமியக்கூடக் காணோம்"...என்று சொல்லிக் கொண்டு மிடுக்கான மனிதர் ஒருவர் வந்தார்...“ஏன்யா காப்பாளரே! பேச்சாளர் வந்தாச்சுதா? ஆளைவேற முன்ன பின்னெ பாத்தது இல்லே...என்னமோ தொலைபேசியில் பேசறப்ப மட்டும் ஏதோதான் தான் முன்னாடி வர்ர ஆளுமாதிரிப் பேசுனாரே! பேச்சோட சரி...” என்று முடித்தார்... காப்பாளர், "ஐயா... நானும் சோடா வாங்கியாரப் போயிட்டேன்... ஆறாகப் போவுது யாரும் பேச்சாளர் வண்டீல வந்தாப்ல தெரியலியே!” என்றார்.
உடனே, கடிதோச்சி மெல்ல எறிவதைப் போல ஒரு பொருளுள்ள பார்வையை வீசிவிட்டு "அடியேன் கலை முதல்வன், பேச்சாளன்” என்ற சொற்களைக் கூறிய அளவில் அந்த மிடுக்கர், தன் முகத்தைச் சரிசெய்து கொள்ள ஏழை பட்ட பாட்டைப் பெற்றார். அருந்த பருக ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். “நன்றி”யென்று மட்டும் சொல்லிவிட்டு “நான் இங்கே வந்தது பேச மட்டுமே! முன்னமேயே வந்தவர்களையும் அழைப்பிதழில் அச்சிட்ட நேரத்தையும் மதிக்க வேண்டுவது நம் கடமை! எனவே நிகழ்ச்சியைத் தொடங்குங்கள்!” என்றார் கலை.
வரவேற்புரையென்ற பெயரில், பள்ளி மாணவன் தேர்வுப் பொதுக் கட்டுரையில் தோன்றியதை யெல்லாம் எழுதுவதைப் போல் அந்த மிடுக்கு மனிதரும், “குறள் பேச்சென்றால் எந்தக் குறளைப் பற்றிப் பேசப் போகிறார்... நான் பெரிய பெரிய மனிதர்களிடம் எல்லாம் இந்தக் குறளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் குறளைக் கேட்டிருக்கிறேன் என்று தன் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போனார். அரங்கமும் களைகட்டத் தொடங்கியது... இரண்டு வகையான பேச்சுக்களைக் கலை முதல்வனால் காண முடிந்தது. ஒன்று! வரவேற்பாளர் ஒலி வாங்கியின் முன்பாகப் பேசியது... மற்றொன்று, அரங்கிலுள்ளோர் தங்களுக்குள் பேசிக் கொண்டது. திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் செல்லும் நேரம் எடுத்துக் கொண்ட வரவேற்பாளர் ஒரு வகையாகத் தன் பொழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கலை முதல்வன்! வரவேற்பாளர் பேசிய பேச்சு ''குறளைப் பேச்சு... நான் பேசப் போவது குறள் பேச்சு” என்றார். அரங்கில் கைதட்டல் ஒலி வெளியில் பெய்யும் மழை யொலியையும் விஞ்சியது. “வானமிழ்தத்தை விடச் சொல்லமிழ்தம் சுவைக்க வந்த சுறுசுறுப்பிகளே!” என்று அவையடக்கம் கூறியதில் உள்ள நகைச்கவை அமுதத் தைப் பருகியவர்கள் பேச்சினைத் தொடர்ந்து கேட்க ஆர்வலராய் இருந்தனர்.
"குறள் அளவால் சிறியது; ஆயின் பொருள் தருவதில் பெரியது. வடிவால் வாமனம்; பயனால் திருவிக்கிரமம்'' என மின் வெட்டினைப் போல் பளிச்பளிச்சென்று ஒளிச் சொற்களை வீசியதும் மக்கள் வாயை மூடிக் காதுகளைத் திறந்தனர்." அந்தக் குறள் போல் சுருக்கமாகப் பேசி விளக்கமான வாழ்க்கைத் தத்துவம் தந்த பெரியோர் களைப் பற்றித் தான் பேசலாம் என்று நினைத்துள்ளேன்” என்றார். "பிறவிக்கடலை நீந்துகிறோமோ இல்லையோ கவலைக் கடலை நீந்தத் தெரிய வேண்டும்; மனச்சாலையைக் கடக்க வரலாறு கற்பித்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஒரு மனிதர் கூறினார். அவர் உங்கள் மனதில் முன்னமேயே பதிந்த பெரியவர்களில் ஒருவர் இல்லை. -“குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுக் கொலை புரிந்ததாகச் சொல்லப்பட்டு தூக்கிலிடப் பட்டவர் சொன்ன இறுதி வார்த்தைதான் அது - குற்றவாளிகளின் வாழ்க்கை நமக்குத் தேவை இல்லை...மனமடங்கக் கல்லாமல் அவர்களைத் தீங்கு செய்யத் தூண்டிய மனத்தை நாம் அடக்கக் கற்றால், மரணம் இல்லாப் பெரு வாழ்வு, அதாவது புகழுடன் வாழலாம். அவர்கள் செய்த செயலால் அல்ல; ஆனால் சொல்லிச் சென்ற செய்தியால் பெரியவர்கள் அவர்கள்.
“பிச்சையெடுப்பவனை விட, அந்த நிலைக்கு வர முடியாமல் போலிப் பெருமைக்காகப் பிச்சை போடுகிறார் களே அவர்கள் தான் இழிந்தவர்” என்று சொல்லி ஒருவர் இறந்து பட்டார்! அவருடைய அந்தக் குறுகிய பேச்சு; குறட்பேச்சு சமுதாயத்தைப் பற்றிய ஒரு சரியான திறனாய்வு இல்லையா?
“தெருவிலே வீடில்லாததால் திரிகின்ற எங்களைப் பரத்தையென்றால், வீட்டிற்குள்ளேயே வளைய வருகின்ற சில மனமாறிகள் மட்டும் வேறு போர்வைகளைப் போர்த்துவதால் கற்பாளிகளா என்று தங்களுக்காகவே வழக்குரைத்த விலை நலப் பெண்டிரின் வாதத்தைச் சிந்திக்கவேண்டும். தற்கொலை செய்து கொண்டு கடிதம் எழுதிய ஒவ்வொருவரின் எழுத்தும் வடிவம் இல்லாக் கவிதை. முன்னேற முடியாதவனின் முணுமுணுப்புகள்: ஒழுங்காக வாழத்தெரியாமல் காட்டாற்று வெள்ளம்போல் விரைந்து தன்னையும் அழித்துக்கொண்டு சமுதாயத் திற்கும் சுமையாக இருந்தவர்களின் துன்ப நினைவுகள். நமக்குத் தேவை...ஏளனம் செய்ய அல்ல... தடம் புரளாமல் வாழ! ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் ஒன்றுகூடத் தெரியாமல் இருப்பது பிழையில்லை... இவருடைய வாழ்க்கையைப் பார்... குறளுக்கு விளக்கமாக இருக்கிறார்... என்ற குறளோடு ஒப்பிட்டுப் பேசப்படும் பேச்சுத்தான் குறள் பேச்சு... ஒன்று கூறுவேன். ஏமாற்றப் பட்டவனைவிட ஏமாற்றியவன் தான் பெருந்துன்பத் திற்குள்ளாகிறான். அது பனிக்கட்டியில் மறைந்த வெப்பத்தைப்போல. எனவே தன்னலத்தின் அடிப்படை யிலாவது பிறரை நாம் வஞ்சிப்பதோ பிழைப்பதோ தவறு... இதுவே குறள் பேர்சு'' என்று பேசி முடித்ததற்கும் வாசலில் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது.
வேறு எதனையும் பொருட்படுத்தாமல் படிகளில் இறங்கிப் பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அங்கே அவர் மனைவி மிகுந்த புன்முறுவலுடன் மகிழுந்தை வைத்துக் கொண்டு காத்திருந்தார். "மழைக்காக ஒதுங்கி வண்டியில் இருந்தவாறே உங்கள் பேச்சைக் கேட்டேன்... ஆழமான உணர்வுகள். இன்னொரு செய்தி! உங்களுக்கு வரவேற்புரை சொன்னாரே அவர்தான் நம் சம்மந்தி ஆகப் போகிறார். அது அவருக்கு தெரியாது... அவர் மனைவியும் நானும் இப்போதுதான் பேசி முடித்தோம்... நாங்கள் பேசியதும் குறள் பேச்சுத் தானே?” என்று வினவினாள்.
துன்பக் கடலில் மூழ்கி, வாழ்க்கைப் புயலில் சிக்கி, சூழல் வலையில் அகப்பட்டதால் உணர்வுகளைச் சுருக்கிய கலை முதல்வன், மனைவியின் வலம்புரி வாசகங்கேட்டு மகிழவும் இல்லை; மாற்றுரைக்கவும் இல்லை “எனக்குப் பேருந்துப் பயணம்தான் பழக்கப்பட்டது. பல்வேறு கதைக் கருத்துக்களை உள்ளடக்கி இடைவெளியில்லா நாடகத்தை மனித நடிப்பால் வெளிக்கொணரும் இயங்கு சக்தியின் ஆற்றலை நான் ஒரு கருவியாக இருந்து மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமானால், என் போக்கிலேயே என்னை விட்டுவிடு” என்று கூறினார் கலை முதல்வன்.
மறு நாள் காலையில் தொடர்ந்து பார்வையாளர்கள் “கேட்க முடியாமற் போயிற்றே!” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர். உடல் காட்ட முடியாமல் குரல்வழித் தங்களைத் தொலைபேசி மூலம் அறிமுகம் செய்துகொண்ட அறிவர்களும் பிறமொழிச் சொற்களில் தாங்கள் வர இயலாமற் போன தற்காக வருந்தினர்.
"இந்தக் குறள் பேச்சு என் தனிப்பட்ட ஒருவனின் பேச்சல்ல; வாழ்ச்கையில் மிகுதியாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து சோர்ந்து போன மன நலக் குறை யாளர்களின் அரங்கேறாத பேச்சுத்தான் அது'' என்று இவர் பேசியதைப் பத்திரிகையில் படித்துவிட்டு பாராட்டுத் தெரிவிக்கவந்ததையும் பொருட் படுத்தாமல், ஊருக்கு அப்பால் தனியாகக் குடிசை யொன்றில் ஊனமுற்ற தன் தம்பிக்காகத் தள்ளாத வயதிலும் அவனுக்காக வாழ்கிறாரே தந்தையார்; அவரைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். "பணம் மகிழ்ச்சியைத் தந்து விடாது; மனம் தான் அதைத்தர வேண்டும்” என்ற உண்மைப் பொருளை உபதேசித்த உத்தமரைக் காணப் புறப்பட்டார்.
குறட்பேச்சு ஒரு வெற்றுச் சொற்களால் ஆன காகித மாலையல்ல; மனிதனின் பட்டறிவைக் கோர்வையாக்கிய தஞ்சாவூர்க் கதம்பம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே விளங்கும்.
------------
2. நன்னனும் நங்கையும்
நன்னன் என்ற அந்த மன்னனுக்குச் சொந்தமான ஓர் அரண்மனைத் தோட்டம் இருந்தது அந்தத் தோட்டம் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆற்றின் கரையிலே அழகாக அமைந்திருந்தது. அந்தத் தோட்டத் தில் வகை வகையான மரங்கள்! மாமரங்கள், பலா மரங்கள், வாழைமரங்கள், கொய்யாமரங்கள் முதலிய கனி தரும் மரங்கள் அந்தத் தோட்டத்தில் நிறைந் திருந்தன! வானை முட்டி வளர்ந்திருந்த தென்னை மரங்களும், கமுகு மரங்களும் கண்ணிற்கு நல்ல காட்சி வழங்கின! அந்தத் தோட்டம் பச்சைப் பசேலென்று பசுமையாகத் தெரிந்தது. ஆற்றங்கரையில் அமைந் திருந்ததால் நல்ல வளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. அத்தந்த மரங்கள் கனி கொடுக்கும் பொழுதும் மரங்களில் நல்ல காய்ப்புக் கண்டு கொத்துக் கொத்தாகப் பழங்கள் பழுத்துத் தொங்கின. பலாப்பழங்கள் வேரிலும், அடிமரத்திலும், கிளைகளிலும் பழுத்து நிறைந்து அந்தக் தோட்டத்திற்கே நல்ல மணத்தைத் தந்துகொண் டிருந்தன! வாழைக்குலைகள் நிலம் நோக்கிக் கிடந்தன.
கொய்யா மரங்களில் அணில்கள் பழங்களைக் கொத்தித் தின்று இங்கு மங்கும் ஓடிக்கொண்டிருந்தன! ஆக அந்தத் தோட்டத்தைக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும். ஆனால் அந்தத் தோட்டத்தினுள் யாரும் செல்ல முடியாது. தோட்டத்தைச் சுற்றிலும் நன்றாக வேலி போடப்பட்டு காவற்காரர்கள் பகலும் இரவும் காத்து வந்தார்கள். அரசன் நன்னன் எப்பொழுதாவது வருவான். வந்து தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வான். அரசாங்க அலுவல்களிலிருந்து விடுதலை பெற்ற உணர்வு தோன்றும், அவனுக்கு அந்தத் தோட்டத்திற்கு வந்து விட்டால்! எனவே அவன் அந்தத் தோட்டத்தைப் பெரிதும் விரும்பிவந்தான். அதிலும் மாமரங்கள் அவனுடைய காவல் மரங்கள்! அவற்றின் மேல் அவன் தன் உயிரையே வைத்திருந்தான்!
அந்த ஊர்ப்பெண்கள் நாள்தோறும் ஆற்றங் கரைக்குப் போவார்கள், இடுப்பில் குடம் ஏந்திக்கொண்டு அழகு நடை போட்டுக்கொண்டு போவார்கள்! நேரம் போவதுகூடத் தெரியாமல் நீச்சலடித்து விளையாடுவார் கள். அவர்களின் செந்தாமரைக் கண்கள் நன்கு சிவக்கும் வரையிலும் குளிப்பார்கள். ஆசைதீரக் குளிக்கவேண்டும் என்று நினைத்து மகிழ்ச்சியோடு குளிக்க வருவார்கள். ஆனால் குளித்து முடித்து வீட்டிற்குத் தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும்பொழுது அவர்கள் ஆசை தீர்ந்திருக்காது. நாளைக்கு எப்பொழுது வருவோம் வந்து மகிழ்ச்சியுடன் நீராடுவோம் என்பதிலேயே இருக்கும்!
ஒரு நாள்!
நல்ல இளவேனிற் காலம்! பங்குனி மாதத்திலே இலையையுதிர்த்துவிட்ட மரங்கள் எல்லாம் மீண்டும் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. தவழ்ந்து வந்த காற்றில் மலர்களின் மணம் மிதந்து வந்தது. ஆற்றில் 'சலசல' வென நீர் தெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றை நோக்கி எழிலி மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு - வயது பன்னிரண்டு இருக்கும். நல்ல களை பொருத்திய முகம்; ஆழ்ந்து அகன்ற கரிய நீலக் கண்கள், குமிழ் மூக்கு, கரும் பாம்பென நீண்ட சடை, அவள் செல்வக்குடியில் பிறந்தவள், அவள் பெற்றோர்களுக்கு அவள் ஒரே பெண் தான்! தவங்கிடந்து பிறந்த ஒரே ஒரு செல்வ மகள் அவள்! இன்று வீட்டை விட்டுப் புறப்படவே நாழிகையாகி விட்டது அவளுக்கு. எனவே அவள் தோழிகள் இதற்கு முன்னரே ஆற்றங் கரைக்குப் போய்விட்டிருப்பார்கள். எனவே அவள் பரபரப்போடு நடந்தாள்! ஆற்றங்கரையை நெருங்க நெருங்க அவள் வேகம் மிகுதிப்பட்டது! அவளைத் தூரத்தே கண்டுவிட்டதும் ஆற்றில் மகிழ்ச்சியோடு குளித்துக்கொண்டிருந்த அவள் தோழிகள் ஆரவாரத் தோடு வரவேற்றார்கள். அந்தத் தோழியர் கூட்டத்தின் தலைமை எழிலுக்குத்தான்! எழிலி இல்லாவிட்டால் அந்தத் தோழியர் கூட்டத்தில் நிறைவு ஏற்படாது. எனவே எழிலியை அவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த தில் ஒன்றும் வியப்பில்லை!
எழிலி ஆற்றில் அவர்களோடு அமிழ்ந்து அமிழ்ந்து குதித்தாள். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் கரை எங்கும் எதிரொலித்தது!
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு எழலாம் என்று எழுந்தாள் எழிலி. அப்பொழுது ஆற்றங்கரை ஓரத்திலிருந்த அரசன் நன்னனுக்குச் சொந்தமானத் தோப்பிலிருந்து ஒரு மாங்காய் அவளுக் கருகில் 'தொப்பென்று விழுந்தது. மாங்காய் என்றால் எழிலுக்குக் கொள்ளை ஆசை! எனவே எதையும் யோசி யாமல் உடனே கடித்துத் தின்னத் தொடங்கிவிட்டாள்.
'அடியே, எழிலி! என்ன வேலை செய்தாய்” என்று அவள் தோழிகள் கத்தியதுகூட அவள் செவியில் விழவில்லை. ஆனால் வலுவான முரட்டுக்கரம் ஒன்று அவள் கையைப் பற்றியபொழுதுதான் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அரசனின் தோட்டத்துக் காவற்காரர்கள் பலர் சரையில் நிற்பதையும் அவர்களில் யமகிங்கரனான ஒருவன் தன் கையைப்பற்றியிருப்பதையும் கண்டாள். இதுவரை மகிழ்ச்சியோடு அவளோடு ஆற்றில் குளித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த தோழிகள் எல்லாம் பயத்தால் 'வெடவெட' வென்று நடுங்கி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை-யெல்லாம் அதட்டி மிரட்டிவிட்டுக் காவல்சாரன் எழிலியைட் பற்றி அரசன் நன்னனிடம் அழைத்துச் சென்று விட்டான். இதுவரை பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த தோழிகள் ஊர்நோக்கி ஓடினார்கள், எழிலியின் பெற்றோர்களிடம் இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு!
மறு நாள் அவை கூடியது. அரசனோ கொடுஞ்சீற்றத் துடன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அமைச்சர், சேனைத்தலைவர், நகரமாந்தர் முதலியோர் அவரவர்களுக் குரிய இடங்களில் அமர்ந்திருந்தனர். எழிலியின் பெற்றோர்கள் அடச்க வொடுக்சமாக ஒரு பக்கமாக, என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் நடுங்கி நின்றனர். எழிலியின் மேல் குற்றம் சாட்டட்பட்டது. அரசன் உயிருச்கும் மேலாக மதித்து வரும் கால்பரமான மாமரத்தின் காயினைத் தின்றுவிட்ட குற்றம் எழிலியினுடையது. குற்றத்திற்குத் தூக்குத்தண்டனை வழங்கினான் கொடுங் கோலனான நன்னன்.
தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுதனர் பெற்றோர். அவையே வியப்பில் ஆழ்ந்தது, அடுத்த நிமிடம் எழிலிக் காக இரங்கத் தொடங்கியது. அதைத்தவிர வேறு என்ன செய்துவிட முடியும் அவர்களால்! நன்னன் கொடுங் கோன்மைதான் நாடு அறிந்ததாயிற்றே!
ஓர் எளிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று கேட்பதற்கு அவையில் கூடியிருந்த எவருக்கும் துணிவில்லை, திராணியில்லை!
எழிலியின் பெற்றோர் எண்பத்தோரு யானைகளைத் தண்ட த்திற்குரிய பொருள்களாகக் கொடுக்கமுன் வந்தார்கள். எழிலியை எப்படியாவது உயிர்த்-தண்டனை யிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று துடித்தார்கள். ஆனால் அரசன் மறுத்துவிட்டான்.
அடுத்து எழிலியின் எடைக்கு எடை பொன்பாவை செய்து தருவதாகச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் இவ்வாறு குற்றஞ்செய்தவர்கள் எடைக்கு எடை பொன்னைத் தண்டமாகத் தந்தால் அவர்களை விடுதலை செய்துவிடுவார்கள்.
இதனையும் அரசன் நன்னன் மறுத்து விட்டான் அவன் தான் என்றோ இரக்கத்தைத் துறந்த அரக்கனாகி விட்டானே!
எனவே யாராலும் எழிலியைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது. கொடுங் கோன்மையின் கோரக் கரங்கள் அவள் உயிரைப் பறித்துக்கொண்டன!
இந்தக் கொடுஞ்செயலைக்கேள்வியற்றனர் சோழர் கள். அவர்கள் நீதிக்குப் பெயர் போனவர்கள். எனவே, அடாது இழிசெயல் செய்த நன்னன் நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று, அந்த மாமரங்களை வெட்டி வீழ்த்தி அவனையும் இறுதியில் அழித்தனர்.
இந்த நிகழச்சியினைப் பரணர் என்ற பழம்பெரும் புலவர் குறுந்தொகை என்ற சங்கத் தமிழ் நூலில் பாட்டாகப் பாடியுள்ளார்!
இதிலிருந்து பிஞ்சு நெஞ்சை அஞ்சாது கொன்ற நன்னன் இறுதியில் அழிந்து பட்டான் என்பது தெரிய வருகிறதல்லவா? அன்பும் அருளும் தாம் என்றும் வாழும்!
-
“மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே''
-- குறுந்தொகை : 73
3. அலை தந்த ஆறுதல்
மாலை மணி ஐந்தடித்தது. 'தேனைத் தொட்டுக்க; தண்ணியத் தொட்டுக்க' என்று பழகும் அலுவலக நட்புக் கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன். வாழ்க்கை நாட கத்தின் ஒரு வேடம் மாறி அடுத்த வேடம் தொடங்கியது. ஒருவர் அவசரம் அவசரமாக வந்தார். “சார்! பையை மறந்துப்புட்டீங்களே”யென்று பரிவோடு தந்துவிட்டுப் பதினைந்து ரூபாய் கடன் என்ற பேரில் வாங்கிக் கொண்டு போய்விட்டார். கடவுளின் தரிசனத்திற்காக ஏங்கும் மக்களைவிட, வாடகை வீடு பிடிப்போரும், ஏதாவது ஒரு வேலைக்கு ஏங்குவோரும் தான் அதிகம். அவர்களைப் போலவே நான் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குரிய பேருந்திற்காகப் பரிதாபமாகக் காத்திருந்தேன். பஸ் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். கவலையில்லை! ஆனால் அதற்குள் வாகனங்களின் ஒலிகள், “வாழ்க!'' “ஒழிக" கோஷங்கள், “ஐயர்! சாமி 'தருமம் போடுங்க'' என்று சொல்லி என்னைக் சடையெழு வள்ளல்களில் ஒருவனாக்கப் பிச்சைக்காரர்கள் எடுக்கும் முயற்சி. பார்த்து விட்ட பாவத்திற்காக, எப்போதோ நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த உதவிக்காகச் சிலருடைய செயற்கை “ஹி! ஹி''க்கள், தெருப்பாடகர்களின் உள்ளம் நிறைந்த ஆனால் வயிறு ஒட்டிய பாடல்கள் எல்லாம் என்னைச் சிந்தனையளவில் காபி ஓட்டல் மிக்சரை நினைவு படுத்தின. “நாட்டில் ஒழுக்கம் இல்லை; அறம் இல்லை; நியாயம் போய்விட்டது” என்று நான் கேட்காத போதே என்னிடம் பேசிய ஒரு பெரியவர், பேருந்து வந்ததும் என்னைத் தன் முழங்கை ஆயுதத்தால் ஒரு தள்ளுத் தள்ளி விட்டு நாலைந்து பேரைச் செருப்புக்காலால் மிதித்து விட்டு, ஓர இடம் ஒன்று பார்த்து அமர்ந்து கொண்டார். விதி என்னை அவர் பக்கத்திலேயே அமரச் செய்தது. வரதட்சிணை,தீண்டாமை, வேலையில்லாத் திண்டாட்டம், மதமாற்றம் எல்லாவற்றையும் குளத்தில் அழுக்குத் துணி அலசுவது போல் அலசினார். அவர் அடுத்த 'ஸ்டாப்பில்' இறங்க வேண்டுமேயென்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்மீது கடவுளுக்குக் கூடக் கோபம்! என் ‘பிரிஃப்கேஸ்' ஒரு சின்ன “மெடிக்கல் ஷாப்' ஆனதால் கண்ணிமை நொடியில் ஒரு மாத்திரையை விழுங்கினேன். நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களைவிட அதனை விழுங்குவது எளிமையாகத்தான் இருந்தது.
என்னை விட்டு என்றுமே பிரியாத என் கவலை களாகிய நண்பர்களின் துணையால் நான் இறங்கும் இடத்தில் பத்திரமாக இறங்கினேன். மாடு ஒன்று அரசியல் போஸ்டர் ஒன்றைச் சுவைத்துக் கொண் டிருந்தது. அதற்குக் கூட சினிமாவை விட அரசியலே அதிகம் பிடித்திருக்கின்றது. சின்னஞ்சிறு குழந்தைகள்கூட அரசியலை அக்குவேறு, ஆணி வேறாகப் பிய்ப்பதன் காரணத்தை அப்போதுதான் அறிந்து கொண்டேன். அறிவியல் மேதை ஆர்க்கமிடீஸ் மன நிலையில் இருந்த போது காய்கறிகளை வாங்கிவிட்டேன். வீட்டில் சிறுத் தொண்டர் பட்டபாடு பட்டேன்.
ஒவ்வொரு டவுன்பஸ் பிரயாணத்திற்குப் பிறகும் மனிதன் மறுபிறவி எடுக்கிறான் என்றார் புதுக்கவிதைப் புலவர். 'பேருந்துப் பயணமானார்' வீட்டில் உள்ளவர் களுக்கு எங்கே விளங்கப் போகிறது? தக்காளி என்ன விலை? ஏன் இவ்வளவு? பழம்பாதி, காய்பாதி வாங்கக் கூடாதா? கத்தரிக்காய் சொத்தை! வெண்டைக்காய் விறகு!" என்று வீட்டு நிதிமந்திரி மனைவி, குறை கூறி என் மீது அடுக்கிய குற்றங்களை அள்ளிவீசி என்னை ஒரு 'முப்புரம்' ஆக்கிவிட்டார். நாட்டு நடப்புத் தெரியாமல் எப்போதோ நண்பர் ஒருவர் சொன்ன விலையை மனத்தில் கொண்டு ஏதோ சொல்லிவிட்டேன். அவ்வளவு தான்! பூத்தொடுத்தாற்போல் பொய் சொல்லும் கலை வராத எனக்கு உண்மை பேசத் துணிவில்லை . அரிச்சந்திரன் உண்மை பேசிய காரணம் இப்போது புரிந்தது. என்னைத் தண்டிப்பதில் மகாத்மா காந்தி வழியைக் கடைப்பிடிப்பவள் என் மனைவி. உண்ணாவிரதம் இருந்தாள். பேச மறுத்தாள். என் குலக் கொழுந்துகள் எட்போதுமே எனக்கு எதிர்க்கட்சி தான். நான் தனித்து விடப்பட்டேன். சிக்மண்ட்ஃபிராய்டு கூறியதைட்போல் மனத்தைக் குழந்தை நிலைக்கு ஆக்கிக் கொண்டேன். என்னை விடப் பெரியவர்கள், போட்டோ வில் தான் இருக்கிறார்கள். நான் குழாய்த் தண்ணீர் குடித்தபோதே உலக வாழ்வை நீத்தவர்கள் அவர்கள்.
என்னை உருவாக்கிய பெருமகனாரின் சிரித்த முக நிழற் படத்தைக் கண்டேன். ஒரு பளிச்! மனித உறவுகள் யாவும் பணத்தின் வலிமையில் தான் சுழல்கின்றன என்பதனையும் புரிந்து கொண்டேன்.
தொலைபேசி ஓயாமல் மணி அடித்து அடித்து என்னைக் கூவியவண்ணம் இருந்தது. பரிந்துரைகள், அழைப்புகள், மிரட்டல்கள், போதாக்குறைக்கு வாசலில் பார்வையாளர்கள். சே! என்ன போலி வாழ்க்கை!
அலுவல் காரணமாகத் திருப்பதி செல்வதாகக் கூறி ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன், நடைபாதை நளினங்கள், சோகங்கள், தவிப்புகள், காண்டவங்கள் எல்லாவற்றையும் தரிசித்துக் கொண்டே சென்றேன். புகழ் பெறாத ரூசோக்கள், பாரதிகள், டிக்கன்ஸ்கள் உலவினார்கள். எத்தனையோ கோரக் காட்சிகளைக் கண்டபிறகும் கூட நான் புத்தனாக வில்லை. ஏன்? அவர் உள்ளம் தெளிந்த நீரோடை. என் உள்ளம் ஒரு பாதாள சாக்கடையாயிற்றே!
நடைமெலிந்து உலகின் இரண்டாவது கடற்கரை யாகிய மெரினாவுக்கு வந்து சேர்ந்தேன். பொங்கிவரும் பெரு நிலவு, கடலில் குளித்துக் குளித்து எழுந்து கொண் டிருந்தது. அது எழுவதைத்தான் அலைகள் கைகொட்டி ஆரவாரித்தன.
அலையின் நேர்முகப் பேட்டிக்குத் தவங்கிடந்தேன். கயமையின் வேடங்கள், மனித விலங்குகளின் பேயாட்டங் கள், காசு கொடுத்துப் பார்க்க வேண்டாத 'ஏப்படத் திரைக்காட்சிகள் எல்லாம் இருபத்தோராவது நூற்றாண்டின் வருகைக்கு வரவேற்பிதழ் வாசித்தளிப்பது போல் இருந்தன, கடற்கரையிலே! நேரம் சென்றது.
நானும் கடலும் மட்டும் இருப்பதாக நினைத்து அலைகள் என்னிடத்து வந்தன. ஒரு சில மனிதர்களின் நிழலைக் கண்டதும் விருட்டென்று விலகின. காவல்துறை அலுவலர்கள் தங்கள் கடமையைச் செய்ய வந்தார்கள்.' என்னைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.
அதற்குள் மெரீனா என்னிடம் “இந்த மனிதர்கள் என்னைத் திறந்த வெளித் திருமண மண்டபமாகப் பயன் படுத்தட்டும். ஆனால் என்னை அசுத்தப்படுத்தாமல் இருக்கலாமல்லவா!'' என்றது.
மனிதர்கள் என்றதும் அலைகள் "மனிதர்களே! எங்கே அவர்கள் எங்களைத் தூர்த்து விடுவார்களோ என்றுதானே நாங்கள் விழித்துக்கொண்டே இருக்கிறோம்' என்றன.
“உங்கள் தலைவியின் கணவன் வந்துவிட்டானா?" என்று “யாரணங்குற்றனை கடலே" எனத் தொடங்கும் குறுத்தொகைப் பாடலைக் கருத்தில் கொண்டு கேட்டேன்.
அதற்கு அலைகள் “நாங்கள் அயரமாட்டோம். சோர்ந்துபோய் நிலத்தின் பக்கம் வரமாட்டோம். ஏன்? நாங்கள் போட்ட பிச்சைதானே அது! விரும்பினால் ஆட் கொண்டு விடுவோம். எங்கள் அச்சம் எல்லாம் மனிதனைவிட அவன் மூளைக்குத்தான்! ஆனால் அவனுக்குத் துணிவுதான் இல்லை. கடலில் ஒன்றை யொன்று விழுங்கும் முதலைகள், சுறாக்கள், திமிங்கிலங் கள், நண்டுகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் தங்கள் பூசல்களை வீட்டோடு வைத்துக் கொள்கின்றன. வாழ்ந்தாலும் கடல்! வீழ்ந்தாலும் கடல்!! உங்களைப் போல் அவை தற்கொலை செய்துக்கொள்வதில்லை. அதற்கு உரிமையும் கொடிபிடித்துக் கேட்பதில்லை" என்று பௌர்ணமி ஆதலால் சற்றுப் பேரிரைச்சலுடன் கூறின.
'தேவர்களுக்கு அமுதம் அளித்த பெருமை உங்களுக்கு உண்டே ! என்மனம் ஆறு தல் பெற ஒருவழி சொல்லக் கூடாதா?'' என்று பணிந்து கேட்டேன்.'
அப்போது ஓர் அலை, தரையிலிருந்து மேலே துள்ளிக் குதித்து அன்னக்கூட்டத்தைப் போல் வெள்ளிய நுரையுடன் கீதே விழுந்து மீண்டும் கடலுக்குள் சென்றது. புரிந்தது! “தேவர்களைத் தண்டிக்கத்தான், அமுதம்! மனிதனுக்கு ஆறுதலையும் அமைதியும் கொடுக்கத்தான் மரணம்! நம்மையறிந்து நாம் எப்படி நாம் பிறப்ப தில்லையோ, அப்படியே நம்மையறிந்து மாளக்கூடாது!" என்பதைத்தான் அது எனக்கு உணர்த்துவதாகப்பட்டது.
நூல்களும், அனுபவமும் ஆராய்ச்சியும் உணர்த்தாத உண்மையை அந்த அலை எனக்குப் புரியவைத்து விட்டது. சிக்கல்களைக் கண்டு ஓடுபவன் கோழை. கவலையும் நோயும் நெருக்கடியும் தான் அவனை ஒரு வீரனாக்கும். அதனால்தான் 'மெஸ்மர்' சாதிக்காததை ‘சிக்மண்ட்ஃ பிராய்டு' சாதித்தார்.
கடைசியாக ஓரலை என்னருகே வந்து ஏதோ சொல்வதுபோல் தோன்றியது. “மனிதனே! உங்கள் நிலத்தில் இருக்கும் பெரிய மலையின் உயரத்தைவிட எங்கள் பணிவின் ஆழம் அதிகம் அந்த மலைதான் பொடி யாகிக் கரையில் மண்ணாக உன் போன்ற மனிதர்கள் பலரால் மிதிக்கப்படுவதைப் பார்க்கிறாயே! உன்மனத்தின் ஆழம் கடல் ஆழத்தைவிட மிகுதி. அதில் நேய வலையை வளர்ப்பாயாக! போ! மனிதப் பிறவி அன்புக்குரியது. சேர்ந்து வாழக் கற்றுக்கொடு! குடும்பம் அவனுக்குத்தான் உண்டு!” என்று கூறுவதுபோல் தோன்றியது.
பொழுது விடியத் தொடங்கியது. மனத்தில் இருந்த இருளும் சிறிது சிறிதாக அகன்றது. ஓஸோனின் பின்னணியில் அறிவுக் கடலாம் பல்கலைக் கழகத்தைப் பார்த்து அயர்ந்து போனேன். தன் மூளையின் விரைவால் தன்னையே அழித்துக்கொள்ளும் மனிதனின் நடமாட்டம் தொடங்கியது. அந்த மனி தக்கடலில் நானும் ஒரு திவலைதானே! விருட்டென்று எழுந்தேன். வீடு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். வீடு வந்தது. வாழ்க்கை ஒரு மாறுதலைத் தந்தது.
கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் பேராசிரியரின் படம் “அலை தந்த ஆறுதல் எப்படி? மனிதனைக் கேட்டிருந் தால் மாளவே செய்திருப்பான். அலை தந்த வாழ்வுதான் உன் வாழ்வு!” என்று கூறுவது போல் தோன்றியது எனக்கு. எனவேதான் நெய்தற் பாடல்கள் என்னை நெகிழச் செய்கின்றன.
மீண்டும் தொலை பேசி! பார்வையாளர்கள்! ஹிஹிக் கள். ஆனால் மனம் தளரவில்லை. இப்போதெல்லாம் மனத்தில் அசாதாரணமான உறுதி தென்படுகிறது.
-----------
4. நிர்வாக நிர்மலா
அப்போது மணி ஆறு! சாவி கொடுக்கப்பட்ட கடியாரம் சினப்பாளோ என்று நினைக்காமல், சேவலைப் போல் குரல் கொடுத்துத் தன் கடமையைச் செய்துவிட்டு அமைதியாக 'டிக் டிக்' என்ற ஒலியுடன் ஓடிக்கொண் டிருந்தது. அதற்குள் விடிந்துவிட்டதா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு, “இன்று நான் எந்தச் சூழ்நிலை யிலும் கோபப்பட மாட்டேன்; எவரையும் புண்படுத்த மாட்டேன்; எக்காரணம் கொண்டும் யாரிடமும் சீறி விழ மாட்டேன்" என்ற பிரார்த்தனையோடு எழுந்தாள். ஆம்! நிர்வாகத்தில் பெரும் பொறுப்பு வகிக்கும் அவளைப் போன்றவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய உறுதிமொழி தான் அது.
'உண்மை கெமிக்கல் கம்பெனி'யின் நிர்வாக மேலாளராகப் பொறுப்பேற்ற நிர்மலா ஒரு 'கெமிஸ்ட்ரி' பட்டதாரி. ஆராய்ச்சியாளரும் கூட; இளம் வயதிலேயே டி.எஸ்சி. பட்டம் பெற்றவள். அவளுடைய அழகையும் அறிவையும் ஆற்றலையும் எண்ணித்தான் உரிமையாளர் உலக நாதன் அப்பதவியினை அவளுக்கு அளித்தார். ஐ.ஏ.எஸ்.. ஐ பி எஸ்... போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்பதை அறிந்து உரிமையாளரே தேடிச் சென்று நிர்மலாவைக் கண்டு அப் பதவியைத் தந்தார். இந்த முடிவினால் வரும் உட்பகையை, நிர்மலாவே எதிர்த்துப் போராடி வெல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவர். நிர்மலா ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தாள்,
வீட்டில் நிர்மலா இருக்கும் தனியறையில் விசுவாமித்திர முனிவர் கைக்குழந்தையுடன் இருக்கும் மேனகையைப் பார்க்க மறுக்கும் காட்சி விளக்கப் படம் ஒன்றும் சாகுந்தல நாடகக் காட்சிப் படம் ஒன்றும் பாரதியார் படமும் மாட்டப்பட்டிருந்தன. இம் மூன்று படங்களும் அவள் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவையே!
பணிவோடு, பணிப்பெண் கொண்டுவந்த 'காபி'யைப் பருகிக்கொண்டே பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னைப்பற்றி அவதூறாக வந்திருந்த செய்திகளையெல்லாம் பார்த்துச் சிரித்துவிட்டுக் “கயமை யின் கற்பனை"யென்று தனக்குள் கூறிக் கொண்டபோது டெலிபோன் மணியடித்தது. ரிசீவரை எடுத்து அமைதி யாக “ஹலோ!” என்று கனிவாகப் பேசி, மேலும் *வேண்டாம் இன்ஸ்பெக்டர்! என் பெண்மையை எப்படி நான் கட்டிக் காக்கின்றேனோ. அதேபோல் பதவியையும் கம்பெனியின் மானத்தையும் காப்பேன்!” என்று சொல்லிப் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள். வெளியே சற்று நேரத்திற்கெல்லாம் “நிர்வாக நிர்மலா ஒழிக! ஆரவல்லி தர்பார் நடத்தும் ஆணவம் பிடித்த நிர்மலா ஒழிக! மோதாதே! மோதாதே! மோதினால் நீ தூளாவாய்!" போன்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு கம்பெனியின் பணியாட்கள் வீட்டு வாசலில் நின்றனர்.
'எலிப்பகை நாகம் உயிர்ப்பக்கெடும்' என்னும் திருவள்ளுவர் வாக்கு அவளுக்கு அத்துப்படி. படித்தபோது பல்கலைக்கழகப் பேச்சாளர்' ஆயிற்றே! தன் வீட்டுச் சுவருக்கு மேல் நின்று கொண்டு பேசத் தொடங்கினாள். அழுகிய முட்டையொன்று மேலே விழுந்தது. சில கற்கள் வேறு எறியப்பட்டன. தான் சிலம் பாட்டத்தில் பெற்ற பயிற்சியால் அதனையெல்லாம் தடுத்தாள். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுப் பேசினாள்.
“தோழர்களே! தோழியர்களே! நிர்வாக மேலாளர் அறை ஏர்கண்டிஷன் செய்யப்படவில்லை; பல லட்சக்கணக்கான மதிப்புள்ள எந்திரங்களின் பாதுகாப்புக் காகச் செய்யப்பட்ட அறையில் நான் இருக்கிறேன். ஐந்தாறு டெலிபோனின் நோக்கம் வியாபார மும் பொதுத் தொடர்பும் தான்; நிர்மலா வேறு' நிர்வாக மேலாளர் வேறு! இதைப் புரிந்து கொள்ளுங்கள். இங்குக் குரலெழுப்பிய எல்லோருடைய பெயரும் பதிவேட்டில் இருக்கிறது. எல்லோருக்கும் பணிப் பாதுகாப்பு உத்தரவு போட்டாயிற்று; ஓவர்டைம்' போனஸ் எல்லாம் தயார்! நான் வந்தவுடன் மேற்கொண்ட முதல் பணியாயிற்றே அது! உங்களில் ஒருத்தி நான்! ' என்று அர்த்தத்துடன் பேசினாள். கண்களில் நீர் துளித்தன. உடனே “எங்கம்மா நிர்மலா என்றென்றும் வாழம்மா!'' என்று கூறிக் கொண்டே தொழிலாளிகள் கலைந்தனர். "ஒரு பெரிய கலவரத்தைச் சாமர்த்திய மாகத் தவிர்த்து விட்டீர்கள்'' என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டுப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர் இன்பவல்லி!
வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அறையில் உள்ள பாரதியாரின் படத்தின் கீழே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினாள். “குழந்தாய் எழுந்திரு! என் கனவு நனவாயிற்று! நீ ஆற்ற வேண்டிய கடமை 'பல இருக்கிறது!'' என்று பாரதி கூறியதுபோல் தோன்றிற்று. கண்ணீர் முத்துக்களைக் காந்தள் விரல்களால் துடைத்துக் கொண்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு காலை 9-15 மணிக்கு அலுவலகம் சென்றாள். உலக நடப்புக் காட்சி யினை அகக்கண், புறக்கண் இரண்டையும் திறந்துகொண்டு பல வகை உணர்வுகளுக்கும் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்டு எவ்வித ஆரவாரமு-மில்லாமல் தன் இருப்பிடத் திற்குச் சென்றமர்ந்தாள். மணி காலை 10-15 ஆயிற்று.
ஆபோகிராகக் கீர்த்தனையை முணுமுணுத்துக் கொண்டு உதவி மேலாளர் மேக நாதன் தன் 'சீட்'டிற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தக் கம்பெனி முதலாளியின் மாப்பிள்ளை என்ற மிடுக்கும் இருந்தது. “மிஸ்டர் மேக நாதன்!" என்றாள் நிர்மலா. “யெஸ்! இதோ கையெழுத்துப் போட்டு வருகிறேன்!'' என்றார் மேகநாதன். “அது விஷயமாகத்தான்!'' என்று அழைத்து “அரை நாள் கேஷுவல் லீவு கொடுத்து விடுங்கள்! மற்றவர்களைக் கண்காணிக்கும் நீங்களே தாமதமாக வந்தால் எப்படி?" என்று கன்னத்தில் அறைந்தாற் போல் சொல்லிவிட்டாள். “இது என் கம்பெனி! நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். இங்கு என் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம். வீணாகத் தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்காதே” என்று சீறினார் மேகநாதன். ''அது உங்கள் வீட்டில்! நீங்கள் நிர்வாக மேலாளரின் கோவார்டினேட்! அவரை மீறிப் பேசிய தற் காக உங்களைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளேன். ஐ யாம் கர்ட்டி பஸ்; பட் அட் தி சேம் டைம் ஃபேர்ம் (I am courteous but at the same time firm) என்று சொல்லி விட்டுத் தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.
'எக்ஸ்ப்ளோசிவ்ஸ் எலக்ட்ரிக் கெமிஸ்ட்! ஒருவர் ஒரு அப்ளிகேஷன் எழுதிக்கொண்டு அதை ஃபார்வட்'' (forward} செய்யும்படியாக மிடுக்குடன் கேட்டார். தன்னை விட்டால் அந்த 'செக்ஷன்' பார்க்க ஆள் இல்லை என்ற இறுமாப்பு. அவரிடம் இருந்தது. “அப்ளிகேஷன் ஃபார்வர்டு செய்யப்பட்டது. ஆனால் 'எக்ஸ்ப்ளோசிவ் செக்ஷனில்' பணிபுரியும் இவருக்குச் சிந்தனை வேறிடத் தில் செல்லுமாதலால் அவர் உடன் பணிநீக்கம் செய்யப் படுகிறார். அவருக்கு அவ்வேலை வேறு கம்பெனி யில் கிடைக்கும் ஓராண்டுவரை முழுச் சம்பளமும் அளிக்கப்படுகிறது" என்று எழுதிவிட்டு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் நிர்வாகத்தில் இன்றியமையாதவர் இல்லை." என்று பொறி தட்டியதைப் போல் கூறி அனுபவம் மிக்க 'அசிஸ்டெண்ட்' அறிவுடை நம்பியை வேலைக்கமர்த்தினாள்.
தாங்கள் அதிகாரம் செய்வதற்கும் ஆணையிடு வதற்குமே உரியவர்கள் என்றும், தங்கள் வேலைகளையே மற்றவர்களை விட்டுச் செய்யச் சொல்லும் ஒட்டுண்ணி அலுவலர்கள் தவறு செய்தால் தண்டனை கொடுக்கத் தயங்கியதில்லை; நிர்வாகத்தின் தலைவி எல்லோருக்கும் நல்லவளாக இருக்க முடியாது; இருக்கக்கூடாது என்பதை நடைமுறையில் கடைப்பிடித்தாள் நிர்மலா.
கூடியவரையில் . தன் அறையில் தானே தனித் திருப்பாள் அவள். ஒருசில வார்த்தைகள் தான் பேசுவாள். 'டிஸ்கஷன், டிஸ்கஷன்' என்று சொல்லிப் பல அலுவலர்களை அழைத்து அரட்டையடிக்க மாட்டாள். நின்று கொண்டே பேசுபவர்கள். சும்மா பார்க்கவந்தேன் என்பவர்கள், அடிக்கடி அலுத்துக் கொள்பவர்களையெல்லாம் விரட்டியடித்து விடுவாள்.
இருபதாம் நூற்றாண்டின் விசுவாமித்திரன் ஒருவனின் உடற்பசிக்கு இரையான நாட்டியப் பெண்மணியின் மகளான நிர்மலா ஆணினத்தைப் பழி வாங்க மட்டும் நினைக்கவில்லை. சோடியமும் குளோரி னும் சேரும்போது உண்டாகும் சோடியம் குளோரைடுக்கு சோடியத்தின் குணமும் கிடையாது; குளோரினின் குணமும் கிடையாது. அதுபோல இரண்டு உயிர்களின் சங்கமத்தில் மூன்றாவது உயிர் தோன்றும்போது அதற்கு முன்னைய உயிர்களின் குணம் வாய்க்காது என்பதற் காகவே அவருக்கு டி. எஸ்சி, (D.Sc.,) பட்டம் வழங்கப் பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்த விஸ்வா மித்திரன் தன் கம்பெனியின் முதலாளி என்பதை மட்டும் அறிகிறாள். ஏனென்றால் உண்மையென்ற ஊற்று நீர் ஊசிக் கண் போன்ற இடைவெளிகளின் வழியாகவும் கசியத்தானே செய்யும்! ஆனால் அவள் சொல்லவில்லை.
ஆராய்ச்சியின்போது காதலன் என்ற போர்வையில் ஒரு காமுகன் வந்தான். தன்னிடமிருந்து செய்திகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டினானேயன்றி தூய்மையான காதல் அவனிடம் இல்லை . அதனையும் ஒப்புக் கொண்டான். தான் நடந்துகொண்ட முறைக்காக வருந்தினான். வாழ்க்கையின் குறுக்குச் சாலைகளை உணர்ந்தவன் பல படிகள் ஏறி உயர்ந்துவிட்டான். நிர்மலாவிற்குமுன் அவன் ஓர் ஊர்க்குருவியே! எனவே தான் தற்கால துஷ்யந்தனைப் போல மறந்தவன் போல் நடித்து எங்கோ வாழ்கிறான். அவனுக்கே தன்னை யளித்து விட்ட நிர்மலாவால் வேறு ஒருவரை நினைக்கக் கூட முடியவில்லை. வெறுப்பு ஏற்பட்டு என்றோ தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் அவள். பாரதியின் பாடல்களைப் படித்து மனவலிமை பெற்றுப் புதுமைப் பெண்ணாய்ப் பொலிவோடு காட்சியளிக் கின்றாள். சமுதாயத்திற்கு அவள் ஒரு பச்சை விளக்கு. சிறுமை கண்டு பொங்கும் அந்த நிர்வாக நிர்மலா ஒரு நிஜம். பல நிழல்கள் அவளிடம் நெருங்க முடிய வில்லை . ஏனெனில் அவள் ஒரு மஞ்சள்பாஸ்பரம். கடவுள் நிர்வாகத்தின் கருத்துள்ள அறிவு ஜீவி நிர்மலா என்பதை மறுக்கமுடியாது. அவளுக்கு என்றுமே ஏறாற்றம் இல்லை; எதிர்பார்ப்புகள் இல்லாததால்!
---------------
5. நீர்க்கம்பி
மழையென்றால் எனக்குத் தமிழைப் போல் உயிர். ஏன்? அதிலும் 'ழ'கரம் இருக்கிறதே என்பது மட்டும் காரண மில்லை... நான் என் வீட்டுத்தோட்டத்திலே வைத் திருக்கும் மரம், செடி, கொடிகள் வளர்வதற்கு அடிப் படையாக இருப்பதால்... நான் பழகும் மனிதர்கள் மனிதர்களாக இல்லை... ஆனால் மரங்கள் மரங்களாகவே இருக்கின்றன. இலை, கிளை, பூ, கனி ஆகிய இவற்றின் மீது துளிகள் பட்டாலும் வேர்வழி வரும் நீரையே அவை ஏற்று முறைமையாக வாழ்கின்றன. ஆனால் மனிதனுக்கு இதுமாறாக உள்ளதே! வாய் வழிப் பருகும் பழக்கத்தைக் கொண்டு மழை நீரையே உட்கொள்ள முடியாத உடல் நிலையைப்பெறுகின்றான். நான் அப்படியில்லை... மழை யில் நனைவதை ஓர் இலக்கிய நுகர்ச்சியாகக் கருதுகிறேன்.
சிறுவயதில் ஒருமுறை தந்தையார் கடிதம் எழுதிக் கொடுத்துக் "தபால் பெட்டியில் சேர்த்து விடு!” என்றார். முகத்தில் சினம் தெரிந்தது. விலாசம் உள்ள பக்கம் மடிந் திருக்கும்படிச் செய்து சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். கண்ணை மூடிக்கொண்டு பேருந்து வண்டியின் ஓட்டு நராக என்னைக் கற்பனை செய்து ஒலி யெழுப்பிக்கொண்டே ஓடியபோது, மழை என்னை விட்டுவைக்கவில்லை. கல்லூரி விரிவுரையாளரின் பேச்சைப் போல் தொடர்ந்து பெய்தது. பழங்காலத்தமிழிலக் கியங்கள் சிலவற்றைக் கடல் கொண்டதைப்போலக் கடிதத்தின் எழுத்துக்கள் சிலவற்றை மழைகொண்டது. கவலைப்படாமல் பெட்டியில் போட்டுவிட்டேன். ஒரு சீட்டெடுத்தால் சோதிடக்காரன் கிளிக்கு ஒரு நெல் கொடுப்பான். ஆனால் செய்த செயல் எதையும், தந்தை பாராட்டியதே இல்லை... ஆனால் உள்ளத்தில் அன்பு இருக்கும்... சில நாட்களுக்கு பிறகு என்னை ஆரத்தழுவிக் கொண்டார். “ஏதோ கோபத்தில் ஒருவரைக்கண்டபடித் திட்டி எழுதிவிட்டேன்...பிறகுதான் தெரிந்தது தவறு என்று... நல்லவேளை எழுத்துக்கள் தண்ணீர்ப்பட்டு அழிந்து போச்சுதுன்னு எழுதியிருக்கார்... நான் பொழச் சேன்'' என்றார். நான்மழையை நினைத்துக் கொண்டேன் அதற்காக நன்றிக் கவிதைகூடப் பாடியிருக்கிறேன்.
மனப்பக்குவம் வரப்பெறாத நிலையில் இளங்கன்று பயமறியாது' என்பதற்கிணங்க என்னோடு உடன் பயிலும் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவ நண்பன் ஒருவனுக்கு உதவித்தொகை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு கல்வி நிலையப் பொறுப்பாளரின் விட்டிற்குச் சென்றேன்.
மலைபடுகடாம் என்ற இலக்கியத்தின் தலைவன் வீட்டிற்குப் போகும் வழி எவ்வளவு அரிதோ, அதைவிட அரிது அவர் முகவரியைக்கொண்டு அவர் வீட்டைக் காண்பது...ஃபிளாஷ் போட்டோ எடுக்கும் புகைப்படக் காரரின் காமிராவைப்போல் மின்னல் பளிச்சிட்டது. பயிற்சியில்லாத பக்கத்து வீட்டுக்காரரின் மிருதங்க வாசிப்பைப்போல இடி கடுமையாக இடித்தது. 70 எம்.எம் சினிமாவில் பெய்யும் மழையைப்போல் அப்படியே மழை பெய்தது....ஒருவேறுபாடு...மழை திரையில் பெய்வதாகத் தெரிந்தாலும் திரையில் ஈரம் இருக்காது... ஆனால் இந்த அசல் மழை எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லார் மீதும் பெய்தது.
எனக்கென்னவோ சலவை சோப் விளம்பரங்கள் தான் என் நினைவுக்கு வந்தன. 'இருட்டறை யில் உள்ள தடா உலகம்' என்பதைப் புரிந்து கொண்டேன். திரியழல் விளக்கு எரியும் வீட்டிற்குள் நுழைந்தேன். அது அடையா வாயிலாக இருப்பதைக்கண்டு, நான் தேடிய கொள்கைச் சான்றோர் வீடு அதுதான் என்று உணர்ந்தேன். மெல்லிய குரலில் யாரையோ கடிந்து கொண்டிருந்தார். “அலு வலகத் தொடர்பான பணி அலுவலகத்தில் தான், இவ்வாறு வீட்டிற்கெல்லாம் வந்து தொல்லைப் படுத்துவதும் தொல்லைக்குட்படுவதும் தவறு!" என்று கடுகு தாளிப்பைப் போல் பொரிந்தார். என்னை அடையாளம் கண்டு “நீ எங்கே இங்கு வந்தாய்?" என்று தந்தையுணர்வோடு கேட்டார். “பொய்ம்மையும் வாய்மையிடத்த அல்லவா? மாடுமேய்க்கும் கண்ணனைப் பார்க்க வந்தேன்; வழி தவறிவிட்டேன் என்றேன்!” “மழைக்கு ஒதுங்க வந்தாயா?'' என்று சொல்லிவிட்டு “அவன் எனக்கே வழிகாட்டி! அவன் ஊதிய குழல் கேட்டுத்தான் இந்த வானம் மழையைப் பெய்திருக்கிறது.” என்று கனிவான குரலில் பேசினார், ஒப்பனை செய்து கொண்ட நடிகை செயற்கையழகுடன் திரைப்பட இயக்குநர்முன் காட்சித் தொடக்கத்திற்குத் தான் தயார் என்பதுபோல மின்சாரக்குழல் விளக்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்தது. “அகஇருளைப் போக்கும் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?'' என்று சொல்லித் தலைகீழாக யோகாசனம் செய்யும் மனிதனைப்போல. வித்தைக்காரரைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தது.
ஒரு நல்ல நண்பனின் எதிர்காலம், என் அணுகு முறையால் பாழாகாமல் இருக்கக் காரணக்குறியாகிய மழை எனக்கு உதவிய மாண்பை நினைத்து நினைத்து வியக்காமல் இருக்க முடியாது. என் வீட்டுப்பக்கமோ, பள்ளிப்பக்க மோ ஒரு தூறல் கூட இல்லை. எனக்காகவே அவர் வீட்டுப் பக்கம் பெய்தது போல் இருந்தது. அலுவலகத்தத்துவம் புரிந்தது.
இத்தகைய அருளுள்ளம் கொண்ட மழையைப் போய், பேய் மழை என்று சொல்கிறார்களே என்பதற்காக நான் வருத்தப்பட்டதுண்டு.
என்னைப் பொறுத்தவரையில் மழை ஓரு குழந்தை தான்! இன்னும் சொல் ப்போனால் எடுப்பார் கைப்பிள்ளை. இல்லை யென்றால் மனிதனைப்போலச் சார்ந்த தன் வண்ணமாகுமா? சுற்றினமாகிய சாக்கடை யுடன் சேர்ந்து நலிகிறது. புனிதமான காவிரியில் பெய்கின்றபோது அதற்கு இளமையையும் அழகையும் ஊட்டுவதோடு தானும் பெருமை பெறுகின்றது. அது மட்டுமா? “விண்ணையும் மண்ணையும் இணைக்கும் நீர்க்கம்பி:” என்று சொன்னார் என் புதுக்கவிதை நண்பர். யாராவது திருடிக்கொண்டு போய்விடப்போகிறார்கள்?" என்றேன். “இல்லை அது ஒரு பொதுவுடைமைக்கம்பி! எவரும் நுகரலாமேயன்றி உரிமை கொண்டாட இயலாது; அதற்கு இடமும் தராது!'' என்றார். ''கவியே! நீ வாழ்க!" என்றேன்.
சுண்ணாம்புச் சுவர்களில் கூடப் பாசம் பெருக்கும் இந்த மழையை! ஒரு காப்பியக் கவிஞன் "மாமழை" என்றானே! அவன் பெருமையே பெருமை! கலையென்ற பெயரில் கறுப்புக் காட்சிகளை வெண்மையாக்கும் காசி தப் புலிக் காட்சிகளை வெண்மையாக்கும் காகிதப்பு லிக்கயவர் சிலர் 'விலைப்டைப்பு விளம்பரச் சுவரொட்டிகளைக் கிழித்துக் குப்பையாக்கிக் காற்றுத் தூதன் கொண்டு தொட்டியில் எறிகின்றதே அதை நினைத்தால் நெஞ்சம் நிறைவாகும். சட்டத்தின் சந்து பொந்துகளையும் மனிதனின் தனிமக்குறைபாடுகளையும் அறிந்து தங்கள் கருத்தை முற்றுவிக்கும் இருள் மனிதர்களுக்கு, சவுக்கடி கொடுக்கும் இயற்கைச் சட்ட ஒழுங்குக் காவலன் இந்த மழைதான்!
“தாத்தா மழை!” யென்றாள் பெண் வயிற்றுப் பேர்த்தி!” சாளரத்தில் சாரலைக் காணோமே!” யென்று நினைத்தேன். எங்கம்மா எங்கெ மழை?” என்று கனிவோடு கேட்டேன்!” “இங்க தாத்தா! இந்த சிலேட்டுல!” என்று சொல்லிக்கொண்டு அந்த நான்கு வயதுக் குழந்தை கையிலுள்ள சிலேட்டைப் பிடித்துக் கொண்டு தத்தித் தளிர் நடையிட்டு வந்தது. அப்போது வானொலியில் “ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி”யென்ற பாடலைக் குயிலின் குரல் ஒத்த பெண்மணி பாடிக்-கொண்டிருப்பதைக் கேட்டேன்! குழந்தைக்குக்கூட மழை ஓவியமாக எவ்வளவு எளிதாக வந்து விடுகிறது? வியந்தேன்...
இசை மழை, அன்பு மழை, கவிமழை ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் திளைத்ததால் கற்பனை' உணர்வுச் சிறகுகள் கொண்டு நெடுநேரம் கவிதை வானில் பறந்துவிட்டு இலக்கிய உலகிலிருந்து இட்லி உலகத்திற்கு வந்தேன்.
--------------
6. விளம்பரம் வேண்டா வீராசாமி
அன்று வெள்ளிக்கிழமை! விஜிடபிள் பிரியாணிக்காக வெங்காயத்தை வேகமாக 'கட்' பண்ணிக் கொண் டிருந்தார் வீராசாமி! கத்திமுனையில் காய்கறிகளைப் ‘பவர்கட்டாயிருந்தாலும் பட்பட் என்று வெட்டித்தள்ளி விடுவார் அவர். அவர் உடம்பிலிருந்து வரும் வியர்வையை மட்டும் விஞ்ஞான முறைப்படிக் காய்ச்சினால் ஒரு தனி மனிதனின் முகம், கை கால்களைக் கழுவப் போதுமானது! ஏன் உள்ள அழுக்கும் போகும்.
ஒரு தம்பி, 'கட்டுக்கடா, கட்டுக்கடா, கட்டுக் கடகடா' துறையில் பேட்ஸ்மெனாக இருக்கிறான். அதிக மாக ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் 'சிக்சர்' 'செஞ்சுரி'யென்ற கணக்கெல்லாம் கிடையாது. 'அவுட்' ஆகாமல் மட்டும் பார்த்துக் கொள்வான்! அதில் கெட்டிக்காரன்.
இன்னொரு தம்பி, 'கட்பீஸ்'களைக் காட்சிப் பொருளாக்கிக் கண்ணைக் கவரும்வண்ண பொம்மை களின் மானம் காக்கும் மாவீரனாகப் பணியாற்றி வருகிறான்.
மூன்றாமவன் ஒரு கட்சித் தொண்டன்! எந்தக் கட்சிக்காரர் கூப்பிடுகிறாரோ, யார் கைமேல் காசு கொடுக்கிறாரோ கார்லும் ஆட்டோவிலும் காபி-டிபன், மரியாதையோடு அழைத்துச் செல்கிறாரோ அவருக்குச் சேவை செய்யும் சிந்தனையாளன். பளளிக்கூடம் போகா விட்டாலும் எதிரிலுள்ளவர்களை அர்ச்சுனன் என நினைத்துத் தத்துவங்களையும் வசனங்களையும் கோடை மழைபோலக் கொட்டும் கண்ணன் அவன்.
இவர்களை ஒன்றாகச் சேர்த்து போட்டோ பிடித்துப் பேட்டி கண்டு எட்டுக் 'காலம்' போட வேண்டிய பொறுப்பு என்னுடையது! அதிலும் முக்கிய பதவி வகிக்கும் மக்கள் பிரதி நிதி ஒருவரை நேருக்கு நேர் சந்தித்து, கேள்விக்கணைகளைத் தொடுப்பதை விட்டு விட்டு இதைச் செய்ய வேண்டும் என்ற சுக்ரீவ ஆக்ஞை மேலிடத்திலிருந்து... அப்பம் தின்னவோ அலால் குழி என்னவோ!
பத்திரிகையாளன் ஒருவன் வந்திருக்கிறேன் என்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாயிருந்தார் வீராசாமி! என்னைப்பற்றி ஒரு டி. சி. போடாவிட்டால் ஒரு பிட்டாவது போடுங்கள்... அதையும் முதல் அல்லது கடைசிப் பக்கத்தில் போடுங்கள். முடிந்தால் ஞாயிற்றுக் கிழமை போடுங்கள்...என்று சிங்கப்பல்லையும் தங்கப்பல்லையும் காட்டும் ஊர்ப் பிரமுகர்களில் சிலர் எப்படி நாணிக் கோணுகிறார்கள் எங்களிடம்... 'ஹேண்ட் அவுட்'களையும்... பிக்ஸர்சை' யும் அவர்களாகவே கொண்டுவந்து கொடுத்துவிட்டு நாங்க ளாகப் போட்டது போல் பாவனை பண்ணுவார்கள்... அவர்கள் எங்கே? இவர் எங்கே? எனக்குள் சிரித்துக் கொண்டேன்! போதவில்லையென்றுகூட நினைத்தேன்... அவருக்கா எனக்கா புரியவில்லை .
வெளியே இருந்தவாறே ஸ்டோர் ரூமை ஒருமுறை நோட்டம் விட்டேன். பறங்கிக்காய்ப் பாறைகள்... வாழைக்காய் வௌவால்கள்...பொடிபோடும் மூக்குகளை நினைவுபடுத்தும் குடமிளகாய்கள்... கல்யாண வீட்டில் கால்கடுக்க நின்ற களைப்புத் தீரக் கிடந்த நிலையில் ஓய்வெடுக்கும் வாலிப வாழைத்தண்டுகள்...கோஸ் மலைகள்... வெளியே முட்களைத் தாக்கிய பலாப் பிஞ்சுகள்...சுவரில் காலண்டர் மற்றும் பத்திரிகைகளி லிருந்து கத்தரித்து ஒட்டப்பட்ட சினிமாப் படங்கள், சாமி படங்கள்... இப்படிப்பட்ட சூழலில்தான் 'விவேக வீராசாமி' என்று அழைக்கப்படும் அந்த வீரர் தென் பட்டார். முகத்தில் தெளிவு இருந்தது.
முதலாளி முகுந்தன் அந்தத் தேனீக்கு முழுச் சுதந்திரமும் கொடுத்திருந்தார். அவர் ஒரு 'கிளவர் காபிடலிஸ்ட்.' 'மார்க்கெட்' சாமான்கள் வாங்கும் முழுப் பொறுப்பு இந்த மைசூர்ப்பாகு இதய மனிதனைச் சார்ந்தது தான்! வீட்டை மறந்த துறந்த வாழ்வைத் தொடங்காத வாடிக்கையாளர்களின் பண்டிகை நாட்கள், கோயில் திருவிழாக்கள், அரசியல் மாநாடுகள். ஆகிய வற்றிற்கேற்ப மெனுக்களை மாற்றியும் திருத்தியும் அமைக்கின்ற முழு அதிகாரம் மாஸ்டருக்கு இருப்பது போல் இந்த மேதைக்கும் உண்டு. மோதியது இல்லை. ஆனால் முழித்தது இல்லை. தண்ணீரில் இருக்கும் மீனுக்குத் தாகம் தெரியாது என்பார்கள். அதுபோல லட்டுக்குரிய திராட்சையையும் முந்திரிப்-பருப்யையும் சட்டினிக்குள்ள பொட்டுக்கடலையையும் தேங்காயையும் மிக்சருக்குள்ள மல்லாட்டையையும் பார்த்துப் பார்த்துச் சலித்தவராதலால் அவற்றையெல்லாம் மனத்தாலும் தொடாத மாவிரதன். சபலம் என்பதே சத்தேகத்துக்குக் கூடக் கிடையாது.
நான் உள்ளே நுழைந்தவுடன் அவர், "வெளியே *போரிடை'ப் பாத்தீங்களா?" என்றார். முதலாளியின் அனு மதியோடு வந்திருப்பதற்கு அடையாளமாக' டோக்கனை'க் காண்பித்தேன். பஜ்ஜி வில்லைபோடும் பலகையில் சிறிது உட்காரச் சொன்னார். சிறிது நேரத்தில் கனிவான காபி வத்தது. ஒங்களுக்கு சீட்டு விழுந்திருக்கு என்று மெல்ல ஆரம்பித்தேன்.... "பாத்திரச் சீட்டா ஏலச் சீட்டா, குலுக்குச் சீட்டா” என்று உலுக்கிப் பின் "எந்தசி சீட்டும். விளுகாட்டியும் பரவாயில்லே இருக்கற சீட்டு கிளியாம பார்த்துகிட்டா போதும்” என்று புன்னகை புரிந்தார். இவ்லீங்க) பரிசுச்சீட்டு...பத்து லட்சம் விழுந்திருக்கு!” என்றேன், முகத்தில் எந்த விதமான உணர்ச்சி வேறுபாடும் இல்லை. "நான் வாங்கற தில்லீங்க!” என்றார். "வீட்ல சொன்னாங்க!” என்றேன். "அப்ப அது அவங்க சமாசாரம்” என்று பட்டுக் கரித்தாற் போல் சொன்னார். ஒங்களுக்கு என்றேன். "பணம் ஆளப்பிரிக்கும். ஏன் கொல்லக்கூடச் செய்யும்... தேவைக்கு மேல, சொலபமா வர்ற பணம் எனக்கு வாணாம்... அதுக்காக நாம் மத்தவங்களை குத்தம் சொல்லலே... குந்த குச்சும் திங்க சோறும் உடுக்க மொழத் துணியும் போதுங்க... மேல்செலவுக்கு மொதலாளி' சம்பளந் தர்ராறா... அப்பப்ப அஞ்சு பத்து அதிகப்பத்தும் தருவாரு... அத நான் ரோஜு வேலைக்கு போயி அடச்சுப் புடுவேன்”...என்றார். "அப்ப இந்தப் பணம்!"னு இழுத்தேன்..."கையால கூடத் தொடமாட்டேன்!” என்றார் இரும்பு இதயங்கொண்ட அந்தக் கரும்பு மனிதர். 'ஒங்களை போட்டா எடுக்கணும். போஸ் கொடுங்க'ன்னு சொன்னேன்...."நம்பளை அனாவசியமா பெரிய மனுசன் ஆக்காதீங்க! அப்பறம் தூக்கம் வராது; நிம்மதி இருக்காது; பகை வந்திரும்... ராமாயணத்தில் வர்ற சத்ருக்கனன் மாதிரி இருக்கணும்னு நேத்து ஒரு பெரியவர் சொன்னாரு கூட்டத்ல... அப்படியே இருக்க லாம்னு ஒரு ஆசைங்க..." என்று சற்று ஆணித்தரமாகவே சொன்னார். 'வேண்டாமை அன்ன விழச் செல்பம் அவரிடம் இருப்பதைக் கண்டேன். உலகம் பழித்ததை ஒழித்துவிட்ட இவர் அல்லவோ துறவி கொள்கையில் என்ன பிடிப்பு? 'இந்தக் காலத்திலும் இப்படியொரு பட்டினத்தாரா." என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அதோடு விட்டேனா? அதுதான் இல்லை. "உங்கள் மனைவி அந்தஸ்து உயர்ந்துவிட்டதால் இந்த வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினால் என்ன செய்வீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன்.
"மாட்டாள்...என்னை நன்றாக அறிந்தவள் அவள். என் தகுதி, திறமை, விருப்பத்துக்கு எத்த வேலை... இதில் தலையிட்டால் என் சுதந்திரம் பறிபோனதாகவே நினைப்பேன்...செய்யும் தொழில்தான் தெய்வம்!” என்று சொன்னார். என்னையும் அறியாமல் நான் நிருபர் என்பதையும் மறந்து என் கண்கள் நீரைப் பெருக்கின. பேட்டியைத் தொடர்ந்பேன், “ஒரு வேளை, இந்தப் பணத்தை எந்தக் காரியங்களுக்குச் செலவு செய்யலாம் என்று உங்கள் மனைவி உங்களை யோசனை கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.... அப்போது என்ன சொல் வீர்கள்" என்றேன். "என்போன்ற தொழிலாளர்கள் குடியிருக்க சின்னச் சின்ன சிமண்ட் பூசாத காறை வீடுகள் கட்டலாம் என்பேன்... அவர்கள் உடல் நலமும் உள்ள நலமும் பாதிக்காத வகையில் பல நல்ல பெரியவர்களின் பழக்கத்தை உண்டாக்குவேன். அனாதைப் பிணங்களின் அடக்கம், ஏழைக் குழந்தைகளின் படிப்பு...இதுங்களுக் காகச் செலவு செய்யச் சொல் வேன் என்றார். ஆளிடம் செய்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். ,பி ஏ.' என்றார். 'ஹைடென்ஷ்ன் கரண்ட்டில்' கை வைத்தது போல் ஆனேன்....பி.ஏ. படித்தும்...' என்று இழுத்தேன் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சதிகாரக் கும்பலின் சாகசமும் விதியும் என் வாழ்க்கையோடு விளையாடி என்மீது குற்றம் சுமத்தி என்னைச் சிறைப் பறவையாக்கிச் சிறகை ஒடித்துவிட்டது. ஏழாண்டுக் காலம் தனிமையில் தவித்தேன். எந்த உறவும் எட்டிப் பார்க்கவில்லை. விடுதலை பெற்றேன். வயிற்றுக் கவலை யைப் போக்க வேலை தேடித்தேடி அலைந்தேன்... உண்மையைச் சொன்னேன்... உதட்டளவில் வாய் முத்துக்களை உதிர்த்த பூச்சு உலக புண்ணியர்கள் வழிகாட்டவில்லை. சோர்ந்தா போனேன். இல்லவே இல்லை, செய்யாத தவறுக்காகச் சிறையில் அடைந்த தண்டனையின்போது காய்கறி வெட்டச் சொல்லிக் கொடுத்த புண்ணியவானின் புத்திமதி ஞாபகத்திற்கு வந்தது.
இந்த முதலாளியிடம் ஒன்றையும் ஒளிக்காமல் வேலை கேட்டேன். "குறையில்லாத மனிதன் யார்?” என்று சொல்லி வேலை போட்டுக் கொடுத்தார். "உங்கள் திருமணம் என்றேன். "சிவப்பு விளக்குப் பகுதிக்காக விலை பேசப்பட்டபோது தப்பியோடிக் கிணற்றை நாசப்படுத்த முயற்சி செய்த பெண்ணையும் கிணற்றையும் உத்தே சித்துச் செய்து கொண்ட நீண்ட நாள் ஒப்பந்தம்” என்றார் சிரித்தவாறே! “உங்கள் தம்பிகளைப்பற்றி ஒரு வார்த்தை ” என்று கேட்டேன். முதலாமவன் யதார்த்த வாதி வெகுஜன விரோதத்தைச் சம்பாதித்தவன். இரண்டாமவன் ஒரு புனுக்குப்பூனை. மூன்றாமவன் சரியான கோயபல்ஸ். பிழைத்துக்கொள்வான்” என்று கூறி முடித்தார். பேட்டி கொடுத்த எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அவருடைய கைகள் கத்தரிக்காயை எடுத்து இட்லி சாம்பாருக்கு நறுக்கத் தொடங்கின. வாய், "நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சன நீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே!" என்ற தாயுமானவரின் அடிகளை முணுமுணுத்தது. எல்லா இடங்களிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள். பகட்டு வேஷம், பதவி, படாடோபம். என்ற மேகங்கள் அவர்களை மறைக்கின்றன.
“எந்த ரோ மகானுபாவுலு அந்த ரீகி வந்தனம்'' என்ற தியாக பிரும்மத்தின் கீர்த்தனைதான் எவ்வளவு உண்மை! தத்துவ மொழி என்பது என் உள்ளத்தில் பளிச்சிட்டது.
------------------
நாடகங்கள்
1. (நகர) னகார, ணகார மயக்கம்
உறுப்பினர்கள்
15 வயது பையன், 26 வயதுக்காரர், பேராசிரியர்
காட்சி-1
15 வயதுப் பையன் : (சிரிக்கிறான்) ஹஹ்ஹ...ஹா!
25 வயதுக்காரர் : ஏய் அரப்படிச்ச மூஞ்சூறு! என்னத்த பார்த்து பிசாசாட்டுஞ் சிரிக்கிறே?
15 வயது : ஐயா எழுதினதப்பாத்து, சிரிக்காம அழவாச் சொல்றீங்க!
25 வயது : அப்படி என்ன எழுதிப்புட்டோம்? அத தப்புன்னு சொல்ற அளவுக்கு ஒங்ககிட்டே என்ன மேதாவிலாசம் இருக்குது? கொஞ்சங்கூட மரியாத
இல்லாம் ........சே;சே!
15 வயது : வயசாய்ப் போச்சுதுன்னா மரியாத கொடுக்க வேணும்! உண்மைதான்! ஒத்துக்கறேன்... ஆனாக்க வயசுக்காக மட்டும் மரியாத எதிர்பாக்றது சரி யில்லே! வயசுக்குத் தகுந்த புத்தியும்கூட இருக்கணும்....
25 வயது : அப்ப எனக்கு புத்தியில்லேங்கறே! காலம் அப்படி இருக்கு...சரி! விஷயத்த சொல்லிப்புட்டு சிரிச்சுத் தொலை...இல்லேன்னாக்க எவனாவது ஏதாவது ஒரு மாதிரின்னு நெனச்சுக்கப் போறான்.
15 வயது : இங்க வாங்க!
(25 வயதுக்காரர் வயிற்றைத் தடவுகிறார்).
25 வயது : ஏது! வரவர சேட்டை அதிகமாவுதே!
15 வயது : இல்லே! காலைல பணம்பழம் சாப்புட்டதா எழுதியிருந்தீங்க... அதான் வயித்ல தனியா சத்தங் கேட்குதான்னு தட்டிப் பார்த்தேன்......
25 வயது : ஐயய்யே! ஏம்ப்பா ! கிராமாந்தரத்ல இருந்து கிட்டுப் பணம்பழம் தெரியாது! 'நீ' ல்லாம் இருந்து என்ன ப்ரயோஜனம்?
15 வயது ! சின்னவங்க சொல்லி நீங்க என்னிக்கு ஒத்துக் கிட்டீங்க! இதோ வந்துகிட்டிருக்காரே, படிச்ச பெரியவர் அவரு சொன்னா ஒத்துக்குவீங்களா?
25 வயது : எவ்வளவு படிச்சவரு!... அவரு சொன்னாக்க சரி!
(தமிழ்ப் பேராசிரியர் வருகிறார்)
25 வயது, 15 வயது இருவரும் : ஐயா! வணக்கங்க...! பேராசிரியர் பெரியவர் : வாங்க! வாங்க. நான் அப்பவே கவனிச்சுகிட்டுத்தான் இருந்தேன்...ஒங்களுக்குள்ள
ஏதோ படிப்பு சம்பந்தமா சந்தேகம்...சரிதானே?
15 வயது : ரொம்ப கரெக்டுங்க...
25 வயது : குதிக்காதே' நானே அவருகிட்ட சொல்றேன் ... கம்முனு கெட! 15 வயது : வளவளன்னு பேசாம அவர் கைல கொடுங்க..
25 வயது : (சற்று அடக்கமும் வெட்கமும் கலந்து) : இங்க பாருங்கய்யா...இதுலே எ ழுதி இருக்கறது தப்புங்களா?...
பேரா : (எழுதியதைக் கையில் வாங்கிப் புன்முறுவல் பூக்கிறார்) : நீங்க நெனச்சு எழுதினது பனம்பழந் தான்...ஆனாக்க பணம்பழம்னு எழுதினாக்க : அர்த்தம் வேறயாப் போயிரும்...காசச் சாப் புட்டதா அர்த்தம்...சொல்லிப் பாருங்களேன் பழக்கத்ல சரியா வந்துப்புடும்....
25 வயது : சொல்லுங்கய்யா! தெரிஞ்சுக்கறோம்......
பேரா : பனம்பழம்......
25 வயது : பனம்பழம்........ பேரா : நீங்க சொல்லுங்க தம்பி...
15 வயது : பனம்பழம்...
பேரா : பாத்தீங்களா; சொல்றப்போ ரெண்டு பேருமே சரியாச் சொல்றீங்க எழுதறப்ப வித்தியாசம் வருது .... நம்ப தமிழ்ல 'ன' இருக்குது, 'ந' இருக்குது. இதுங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி எழுதி பழக்கப்படுத்திக்கிட்டா செரமமே இருக்காது....
25 வயது : எப்பிடீங்க!....எப்பிடீங்க...!
பேரா : இந்த அளவுக்கு உற்சாகம் இருந்தாக்க அதுவே போதும்!
25 வயது : (15 வயதுப் பையனை நோக்கி) : நல்பா கேட்டுக்க...மோட்டு வளையப் பாக்கற மாதிரி முளிக்காதே அப்புறம்...
15 வயது : (சற்று கிண்ட லுடன்) சரீங்க... உத்தரவு!
பேரா : "நண்பன்"ங்கற வார்த்தை கேள்விப்பட்டிருக்கீங்களா?
25 வயது : ஓஹோ! இந்த சினேகிதகாரன்னு சொல்ற மாதிரி வார்த்தைங்களா...டிராமா, சினிமால கூட வருமே....
15 வயது : ஐயா எனக்கும் தெரியுங்க...
பேரா : இந்த வார்த்தைல மூணு வகை னா' வும் இருக்குது
25 வயது : அப்பிடிங்களா?
15 வயது : ஒரேடியா வாய பொளக்காதீங்க...விஷயத்த கவனிங்க.....
பேரா : ஒருத்தரை ஒருத்தர் கேலி பண்ணிகிட்டே இருக்கக்கூடாது...கவனமாக் கேக்கணும்... மொதல்ல சொன்னதை மனசுல வச்சுக்குங்க... இப்ப சில வார்த்தைங்க சொல்லப் போறேன்.... கேளுங்க...எழுதியும் காட்றேன்... (பொதுவாக)
நண்டு, நஞ்சை, நடவு, நத்தை; மண்ணு. பொன்னு, கனவு, நனவு.
இருவர் : நண்டு, நஞ்சை, நடவு, நத்தை, மண்ணு பொன்னு , கனவு, நனவு....
பேரா : இதோ பாத்தீங்களா! எழுதியிருக்கிறேன்...
25 வயது : பள்ளிக்கூடத்லே இருக்ற மாதிரியே தோணு
பேரா : இப்ப நான் சொன்னதில் என்ன தெரிஞ்சுகிட்டீங்க ... தம்பி நீங்க சொல்லுங்க...யோசனை பண்ணிச் சொல்லுங்க!
15 வயது : (தயக்கத்துடன் அதாவதுங்கய்யா... நண்டு, நஞ்சை, நத்தை, நாணல், நாத்தங்கால்... இப்படி வர்ர வார்த்தைங்கள்ள 'மூணு 'னா' ல இந்த ‘நத்தை' 'நா’வைத் தான் மொதல்ல எழுதணும்! அப்படித்தாங்களே...
பேரா : பரவாயில்லையே! சொன்னவுடனே புரிஞ்சு கிட்டீங்களே! விடாமப் படிங்க... நெறைய சந்தர்ப்பம் இருக்குது...
25 வயது : இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தைங்கதாங்க...வெவரமாச் சொன்னாத் தான வௌங்குதுங்க.... இன்னமே இந்த நத்தை ’நா'வையே மொதல்ல போட்டு எழுதுவோம்....
பேரா : இப்ப அந்த மாதிரி நத்தை 'நா'ல ஆரம்பிக்கிற செல வார்த்தைங்களைச் சொல்லுங்க (25 வயதுக் காரரை நோக்கி).
25 வயது : சொல்றேனுங்க! நன்னாரி, நடப்பு, நரி, நான்' நாடி, நாளு...
பேரா : ப்ரமாதம் போங்க... இப்ப இந்த * நண்பன்'ங்கற வார்த்தைல நத்தை ' நா'வுக்கப்பரம் வருது 'ண', அத மூணு சுழி “ணா”ன்னு சொல்வாங்க. ஒண்ணு அலை மில்லே! - உத்துப் பார்த்தீங்கன்னாக்க மூணு தடவை சுழிச்சிருக்கும் (செய்தே காட்டுகிறார்). இது எப்பவும் எடைல தான் வரும்... கொஞ்ச எடங்கள்ள தான் கடைசீல வரும்... ஆனா இந்தக் கடைசீல இருக்குதே ரெண்டு சுழி’னா' அது எடைலயும் வரும்... கடைசீலயும் வரும்
25 வயது : அடாடாடா! எப்பிடிப் புட்டு புட்டு கொழுந்த புள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றீங்க!...
பேரா : இன்னொரு சங்கதி! இப்ப இந்த ரெண்டு சுழி, மூணு சுழி 'ன'வும், 'ணா'வும் ஒரே வார்த்தைல வந்தாக்க பெரியவருக்குச் சின்னவர் எடம் விட்ரு வாரு...
15 வயது : எப்பிடிங்க?
பேரா : அண்ணன், கண்ணன், திண்ணன்...
25 வயது : ஆமுங்க! ஆமுங்க! அண்ண னுக்குத் தம்பி எடம் விடுதுங்க....எழுத்துங்க கூட மரியாதை தெரிஞ்சு வச்சிருக்கு...
பேரா : இப்ப பாருங்க இதுங்களை கவனிக்கணும்.... ஆனி, ஆணி மனம், மணம் பனி, பணி பனை, பணை இதுங்களுக்கு வித்யாசம் சொல்லுங்க பார்ப்போம். நீங்க தான் சொல்லுங்களேன். (25 வயதுக்காரரை நோக்கி).
25 வயது : ஆனி ஒரு மாசம். ஆணி செவுத்ல அடிகிறது. 'மனம்'னா மனசுன்னு சொல்வாங்க...பனின்னாக்க கைகாலை நடுக்குமே அது தெரியுமே! அடுத்தது தெரியாது...பனைன்னா நொங்கு வெட்டுவோமே அந்த மரந்தானே...பணைக்கு தெரியாது'
பேரா : தம்பீ! நீங்க சொல்லுங்க... ஐயா சொல்லாதது ஒங்களுக்குத் தெரியுமா?
15 வயது : மணம்னா வாசனைங்க!... பணைன்னா தெரியாதுங்க...
பேரா : பணைன்னா மூங்கில்னு அர்த்தம்...
இருவரும் : இப்ப தெரிஞ்சு போச்சு!
பேரா : தெரிஞ்சு இருக்கணும்!...போயிரக்கூடாது... இந்த மாதரி சின்னச் சின்ன வார்த்தைங்களா எடுத்து ரெண்டு சுழி போட்டா என்ன அர்த்தம்... மூணு சுழி போட்டா என்ன அர்த்தம்னு அத்துபடி செய்துக்கணும்... இப்ப நீங்களே இந்த மாதிரி வார்த்தைங்க சொல்லுங்க!
15 வயது : நான் சொல்லட்டுங்களா?
பேரா : சொல்லுங்களேன்!
15 வயது : அண்ணி , அன்னி
காணம், கானம்.
பேரா : அண்ணின்னு சொன்னாக்க அண்ணன் சம்சாரம்!... அன்னின்னு சொன்னா?
15 வயது : ரொம்ப காலத்துக்கு முன்னாடி தமிழ்நாட்ல இருந்த ராஜாவாம்!
பேரா : பலே! பலே! ரொம்ப ஞாபகசக்தி தான் இன்னும் செல வார்த்தைங்க தர்ரேன்... மனசுல வச்சு நிதானமா சொல்லி அர்த்தம் புரிஞ்சு எழுதினா நாளாவட்டத்தில் கொழப்பமே வராது...
25 வயது : சரீங்கய்யா !
பேரா : நான் சொல்லச் சொல்ல சொல்லணும்...
இருவரும் : சரிங்க!
பேரா : நான், நாண்...
இருவரும் : நான், நாண்.
பேரா : கனை, சணை ...
இருவரும் : கனை, கணை.
பேரா : சரி! நாம புலி, சிங்கங்களையே - கூட்டுல அடச்சுப்புடறோம்... இந்த எழுத்துங்களை மனசுல நிறுத்த முடிடாதா! பயமே கூடாது! பயிற்சி வேணும்! பழக்கம் வேணும்! எங்க நான் சொன்னதையெல்லாம் சுருக்கமாச் சொல்லுங்க தம்பி .
15 வயது : வார்த்தைச்கு மொதல்ல எப்பவும் நத்தைல வர்ர 'நா'வைத்தான் போடணும்... அது பெரும் பாலும் எடைலயும் கடைசீலயும் வராது.
25 வயது : மேல் நான் சொல்லட்டுங்களா? பேரா : தாராளமா!
25 வயது : ஒரே வார்த்தைல ரெண்டு சுழி, மூணு சுழி வந்தாக்க மொதல்ல அண்ணனுக்கு மரியாத! அப்புறம் தம்பிக்கு!
பேரா : சின்ன சின்ன வார்த்தைங்களா எடுத்துக்கிட்டு ரெண்டு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்... மூணு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்னு கண்டுபுடிச்சு சொல்லியும் எழுதியும் பழகணும்!
25 வயது : இதுக்கு முன்னால ஒரே பயமா இருந்துச்சுங்க! கொஞ்சங் கொஞ்சமா புரியராப்ல இருக்குது... ரொம்ப சந்தோஷங்கய்யா.
15 வயது : எங்களுக்காக இவ்வளவு நேரம் செலவழிச் சத்துக்கு நன்றிங்க...
பேரா : இது என் கடமை. ஒங்க அன்புக்கு ரொம்ப சந்தோஷம்! வர்ரேன்! முயற்சிய விட்ரக் கூடாது.
25 வயது : மறக்க மாட்டோம்.
15 வயது : மாட்டோம்!
------------
2. ஏன் முடியாது?
உறுப்பினர்கள்
ஆச்சிமுத்து - சோம்பேறி, வீண்பொழுது போக்குபவர்
கந்தன் வாத்தியார் - ஆசிரியர்
காளி - முதியோர் கல்வி பயில்பவர்
மணிமேகலை மனவேதனை போகச் சேர்ந்தவர்
செவப்பாயி - முழு ஆர்வமும் விவசாய முன்னேற்றத்திற்கும் பையனின்
நலனுக்கும் பயில்பவர்
காட்சி-1
ஆச்சிமுத்து : இந்தா புள்ளே சேப்பாயி! அட ஒன்னத் தாம் புள்ளே !
செவப்பாயி : இந்தாய்யா ஒனக்கு எதுனாச்சும் இருக்கு தா நானு எம்புட்டு வெரசா போயிகிட்டு இருக்குறேன். சும்மா லவுடு ஸ்பீக்கர் மாதிரி அலர்றியே!
ஆச்சி : ஓஹோ! இந்த பட்டணத்து வாத்தியாரு கந்தன் நடத்துறாரே ரவை பளளிக்கூடம் அதுக்குத்தான் இம்புட்டு வேகமா போறியா?
செவப் : பின்னே! ஒன்னை மாதிரி வம்படிச்சு பொளுதை வீணாக்க சொல்றியா?
ஆச்சி : ஊம் . கண்ணு கெட்டப்றம் சூரியனை கும்பிட்டு என்ன பிரயோசனம்?
செவப் : கண்ணு கெட்டிச்சுன்னு ஆரு சொன்னா ஒனக்கு? ஆச்சி : நீ ஒண்ணு! என்னமோ பாடம் எளுதலேன்னு சொல்லி வாத்தியாரு முதுகுபட்டைய எடுத்துப் புடுவேன்னு சின்னபுள்ளையா இருக்கறப்போ சொன்னாரு.... அன்னைக்கு புடிச ஓட்டந்தான்... பள்ளிக்கூடத்து பக்கமே தலைவைக்கிலியே!
செவப் : சரியான பயந்தாங்கொள்ளி... பெத்தவங்களுக்கு ஒத்தவங்க படிச்சவங்க... கோளி முதிச்சு குஞ்சு மொடம் ஆயிடுமா? வாத்தியாரு அடிச்சாக்க நீ . செத்துருவியோ! கொடுத்து வைக்கிணுமே!
ஆச்சி : இன்னமே நானு படிச்சு, தேறி, எங்க உத்தி யோவத்துக்கு போவப் போறேன்? ஏதோ வயவாக் காட்டுக்குப் போயி பயிரு பச்சைய பாத்துகிட்டு காலத்தை தள்ளிப் புலாமுன்னு பாக்குறேன்... அத்தோட சிலேட்டையும் புத்தவத்தையும் சின்ன புள்ளை மாதிரி எடுத்துகிட்டு போயிட்டா பாக்குற நாலு பயலுவ என்னிய பாத்தா சிரிக்க மாட்டான்? செவப் : இப்ப ஒன்னிய தலைல வச்சிகிட்டா கூத்தாடு றாங்க?... இந்த பாரு...படிப்புக்கு மட்டும் வயசு கெடையாது... சாவுற வரைக்கும் படிக்கலாம்... வாத்தியாரு சொன்னாரு. நீ வேணுமுன்னா ஒரு நாளைக்கி வா...பாத்துகிட்டே இரு! இஸ்டம்னா படி... இல்லாங்காட்டி வுடு... ஆச்சி: நம்மை போட்டு வதைக்காதே! இன்னைக்கு ஆடு புலி வெளையாட வாரதா சொல்லிப் புட்டேன்...இன்னொரு நாளு வர்ரேம் புள்ளே...
செவப் : ஒன்னோட பேசினதுலெ இன்னும் நேர மாயிருச்சு...எனக்கு ஒரு பாடம் போச்சுது - நான் வர்ரேன்... (ஓடுகிறான்)
----------
காட்சி-2
(மானூர் நாட்டாமைக்காரர் வீட்டில் முதியோர் கல்வி வகுப்பு நடைபெறுகிறது கந்தன் வாத்தியார் பாடம் நடத்துகிறார்)
நேரம் இரவு 7.10
கந்தன் : இந்தப் பூச்சியோட பேரு என்ன? சொல்லுங் கம்மா காளி! |
காளி : புகையான்...
கந் : சரியா சொல்லிப்புட்டீங்களே!....
காளி : என்னங்க நாங்க எங்க வயல்ல பாத்துகிட்டே இருக்குறோமே.....
கந் : இதை பாத்து எழுதுங்க... (புகையான் என்று எழுதிய அட்டையைக் காட்டுகிறார்)
காளி : பு...கை...யா...ன்
கந் : அம்புட்டு தாங்க...
காளி : நானு வூட்டுலேயே எளுதிப் பாத்தேங்க... மவங் கூட எளுதிக் காட்டுறான்... ஐயா...கைய வலிக்குது கொஞ்ச நேரங்களிச்சு எளுதறேங்க
கந் : ஒங்களை யாரு என்ன சொல்லப் போவுறாங்க.... ஏம்மா மணிமேகலை...
மணிமேகலை : என்ன வாத்தியாரய்யா?
கந் : நேத்தே கடியாரம் பாத்து மணி சொல்ல கத்து கொடுத்தேன்...எங்கெ...இப்ப மணி சொல்லுங்க பாக்கலாம்...(ஆறு ஐம்பது அட்டையைக் காட்டுகிறார்)
மணி : வந்துங்கய்யா...சின்ன முள்ளு ஆறுக்கும் ஏளுக்கும் நடுவாந்தரத்லெ இருக்குது...பெரிய முள்ளுபத்துல இருக்குது... ஆ... நீங்க சொன்னது நெனப்ல இருக்குது... ரெண்டு நம்பருக்கு நடுவாந்தரமா சின்ன முள்ளு இருந்தா முந்துன நம்பருதான் மணி பெரிய முள்ளு எதிலெ நிக்குதோ அத்தோட அஞ்சால பெருக்கோணம்...மணிங்கய்யா.... ஆறு அம்பதுங்கய்யா...
கந் : அம்புட்டுதான்... அம்புட்டேதான் ...
மணி : எம் மாமியாவூட்லெ...எனக்கு நேரம் பாக்கத் தெரியாதுங்கற விசியத்த வச்சுகிட்டு புலி ஆட்டை பாக்கறாப்லவே பாத்துகிட்டிருப்பாங்க...சொல்லி மட்டும் குடுக்க மாட்டாங்க...கூடப் பொறந்த பொறப்பு மாதிரி சொன்னீங்க... கோடிக் கும்புடு...
காளி : அது சரி...கம்பங்கொல்லையாரு சம்சாரம் செவப் பாயிய இன்னங் காங்கிலேயே
மணி : நீ முன்ன போ. நாம் பின்னால வாரேன்னு சொல்லிச்சு... தாக்கலும் சொல்லலியே...
காளி : நீ ஒரு பக்கட்டு... அது பொம்பளைக்கு பொம்பளை - ஆம்பளைக்கி ஆம்பிளை... தகிரியம் ரொம்ப ரொம்ப சாஸ்தி...(செவப்பாயி வருவதைப் பார்த்து) அடடே! வா புள்ளே! ஒன்னிய பத்தி தான் பேச்சு - நூறுவயசு...
செவப் : ஐயா! வாத்தியாரய்யா! வர்ர வளீல இந்த அசட்டு ஆச்சிமுத்து கிட்ட பேசி கிட்டிருக்கும்படி யாயிருச்சு ..கோவிக்காதிங்கய்யா.... நீங்க அனுமதி கொடுத்தீங்கனாக்க காளியம்மா கிட்டே பேசறேன்.....
கந் : நீங்க என்ன செவாந்தெரியாதவங்களா... உங்களுக்கு போயி நாஞ் சொல்லுறதா? நாலு சொல்லிக் கொடுக்கமட்டும் வரல்லீங்க...ஒங்களைப் போல இருக்கற வங்க கிட்டேருந்து நானும் தெரிஞ்சுகிடத் தான் வந்தேங்க...
காளி : என்னது? என்னது? எங்க கிட்டேருந்து நீங்க தெரிஞ்சுகிதுவா... நல்லா சொன்னீங்க...
கந் : நெசமாலுந்தான்... ஒங்க கிட்ட போயி பொய்யி என்னத்துக்குங்க?
செவப் : ஐயா இந்த வகுப்புக்கு வர்ரப்போ வூட்ல இருக்குற மாதிரிதான் தோணுதுங்கய்யா...ஒங்க பளாட அன்பு இருக்குதுங்களே அது காங்க பெங்களை இம்புட்டு தொலவு வரவளைக்கிதுங்க.....
கந் : இந்த பாருங்கம்மா செவப்பாயி நல்லா கவனிச்சுடுங்க... கல்விக்கு அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை , பிரியம் ரொம்ப ரொம்ப முக்கியம்...
நீங்க இந்த முதியோர் கல்வில ஒங்க வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் வேணு மிங்கறதைத் தான் படிக் கிறீங்க ..இந்த விசயத்தல வெறுப்புக்கு காரணமே
இங்லீங்க...
மணி : வாத்யாருய்யா...முன்ன வந்து வூட்டுக்காரரு வந்த ஒடனே வாயிக்கு வந்தபடியெல்லாம் திட்டு வாரு... அடிப்பாரு...விதியேன்னு அளுவேன்... ஆனாக்க இப்ப..நீங்க சொல்லிக்குடுத்தாபல யோசனை பண்ணினேன் ..குடிக்கிறது தப்புன்னு நீங்க சொன்ன கதைங்களையெல்லாம் சொல்லு வேன்...புத்தியில படற மாதிரி சொன்னேன்... கொஞ்சம் கொறஞ்சிருக்குது ..அத்தோட மட்டும் இல்லீக ..சைகலு கத்துகிட்டு சந்தைக்கி போயிட் வர்ராரு. நீங்க நல்லா கேளுங்க சொல்றேன். காட்டு மிருகங் களை வேட்டையாடுன ஒருத்தரு ரொம்ப நாளு கழிச்சு புத்தி தெளிஞ்சு படிச்சு ராமாயணமே எழுதினாரு .. அவர் பேரு வால்மீகி...மாடு மேசீசு கிட்டிருந்த பையன் நெறய படிச்சு பெரிய பெரிய சமாசாரங்களை சொல்லியிருக்காரு... அவர் பேரு திருமூலர்னு பேரு... இன்னும் காளிதாசர்... சொல்லிகிட்டே போகலாம்.
செவப் : அதனாலெ ஒரு வெடா மொயற்சியோட படிச்சா மேதையாயிப் புடலாம்னு சொல்லுங்க... மொயல ஆம செயிச்ச கத மாதிரி இல்லீங்களா?
கர் : ஆமாம்! அதுல என்ன சந்தேகம் விடாமுயற்சிதான் வேணும்...மனசு வச்சுப்புட்டா ஏன் முடியாது? எல்லாம் முடியும்...
மணி : புட்டுவச்சுப் புட்டீங்க... செல பேருக்கு ஒடம்பு வளைய மாட்டேங்குது நொண்டிச் சாக்கு எதுனாச்சும் சொல்லி வம்படிக்கறாங்க ..ஊரு கதைபேசறாங்க... இங்க எம்புட்டு நல்லாபொழுது போவுது தெரியுங்களா?....
கந் : மனுசாளுங்கவோட சொபாவமே அதுதான்... நல்ல படியா நயமா பேசி... அவங்க சுகதுக்கத்து லெ அக்கறை காட்டி பேசி அழைச்சுகிட்டு வர்ரதுலெ தான் சாமர்த்தியம்...இப்ப ஆரம்பத்து லெ இங்க எல்லாரும் தானாக்கவா வந்தாங்க....
செவப் : நாங்கூட மொகல்ல பயந்தேங்க ஆனா ஆவன்னால தான் தொடங்கப் போறீங்கன்னு நெனச்சேன்... ஆனா இங்க ரொம்ப சுருக்கமா தேவையானத சொல்றீங்க.... அறஞ்செய விரும்பு .. நாய் வீட்டைக் காக்கும்... இதெல்லாந்தான் ஒங்களுக்குத் தெரியுமே...ஸிங்க பாஸ்பேட்டை 2 சதவிகிதம் எடுத்து 98 சதவிகிதம்
தண்ணீல கலந்து எலிங்களை ஒழிக்கணும்... எலச்சுருட்டுப் புழு வந்தாக்க என்ன செய்ய வேணும்...இதுங்க போன்ற விஷயங்களைப் படிச்சு தெரிஞ்சுக்க தானெ இந்த முதியோர் கல்வித் திட்டமே...
கங்:
காளி : நான் கை தெளிப்பானை கண்டேனா வெசைத் தெளிப்பான கண்டேனா... மணிச்சத்து, தழைசி சத்து, சாம்பல் சத்து இதுங்களை எப்படி கலந்து போடறதுங்கறத நீங்க இந்த பள்ளிக்கோடத்ல சொன்ன பெறகு தானெ ஒரு மாதிரியா வெளங் குச்சு ....
மணி : நீங்க சொன்ன மாதிரி படிச்சுப்புட்டா சீக்கிரமா எளுத்துங்க புரியுது...
கந் : எப்படி சொல்லுங்க பார்க்கலாம்.....
மணி : காகா பாத்திருக்கோம்...படத்துக்குக் கீழே எழுதியிருக்குது... அப்புரம் ''பூ'... தெரியுது... அதாவது ரெண்டெழுத்து மூனெளுத்து வார்த்தை சேக்கறது அந்த வார்த்தைங்களும் நமக்கு பளக்கப் பட்டாப்ல இருந்தாக்க கத்துக் கிடலாம்... சரிதானுங்களா ஐயா?
கந் : ரொம்ப சரி...ஏம்மா செவப்பாயி! அந்த மாதிரி நீங்களா தெரிஞ்சுகிட்ட விசயஞ் சொல்லுங்க....
செவப் : தக்காளி பழம், ஆனைக்கொம்பன் ஈ, பொன்னி, கோ ரெண்டு பயத்தங்காய்...
காளி : ஐயா முன்ன ஒரு நாளு பயிருக்கு பாதுகாப்பு இல்லீன்னா பாழுன்னு ஒரு பெரியவரு சொன்னா ருன்னு சொன்னீங்களே...எம்மவன் விதியேன்னு படிச்சுகிட்டிருந்தான் ... முதுகிலெரெண்டு வச்சேன். அந்த சரியான சமாச்சாரம் ஞாவுகத்துக்கு வரல்லே... ஆனாக்க பைய பைய வந்துப்புடும்...
மணி : ஆமாங் காளியக்கா...எனக்கது தெரியும்... திருக்குறள்- "ஏரினும் நன்றாம் எருவிடுதல்”....
செவப் : கட்டபின் நீரிலும் நன்று அதன் காப்பு... எப்பிடி....
கந் : எப்படியோ இந்தக் கவ்வித் திட்டத்தோட சாரம் - - சத்த புரிஞ்சு கிட்டீங்க... அந்த வரைக்கும் எனக்கு ஜெயிப்புதான்... (காட்சி முடிவு)
-------------
காட்சி-3
செவப்பாயியின் வீடு... காலை 6 மணி....
செவப் : (பெருக்கிக் கொண்டே பாடுகிறாள்) தலைவாரிப் பூச்சூட்டி உன்னைப்... பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை...மலைவாழை யல்லவோ கல்வி...கடிகாரம் ஓடுமுன் ஓடு...
(மணிமேகலை வருகிறாள்)
மணி : என்ன செவப்பாயி... பாட்டும் கூத்தும் சோக்கா இருக்குதே...
செவப் : இருக்காதா பின்னே !... நாம் படிக்கறத பாத்து எம் மவன் கருக்கல்லயே எந்திரிச்சு கம்மாய்க்கு குளிக்க போயிட்டான்... அத்தோட அவங்கப்பாரு படிச்சு என்னடா செய்யப் போறேன்னு பொலம்பி கிட்டேயிருந்தவரு...சவுளி கடை மளிய கடைல போயி குந்துடான்னு சொன்னவரு...படீடான்னு சொல்லுறாரே...
மணி : எல்லாம் ஒன்னோட சாமார்த்தியந்தான் ... இத்தினி பேருல நீதான் வெரசா படிக்க கத்து கிடடே ...
செவப் : நீ புருசனை திருத்த கத்து கிட்டியே...
மணி : அது சரி... நீயா எப்படி சேத்து படிக்கறே?
செவப் , கா வை எடுத்துக்க, அக்கா, காகா, வருதா... பொறவு தேங்கா மாங்கா... இப்படி பளகணும்....
மணி : இப்ப பாரு ..பம்பு, பாம்பு பல்லு...பாலு இப்பிடி கூட சேக்கலாமில்லை ..
செவப் : அம்புட்டுதான்...இன்னோன்னு சொல்றேங் கேளு... நாட்டு நடப்பு, ஊருக்கு நல்லது, பயறு பச்சை... இந்த மாதிரி ரேடியோல கேக்கற வார்த்தை , அப்பரம் “ இருக்கறது வுட்டுப் பறக்கறது புடிக்காதே", "கொட்டி கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காவாது''. இது மாதிரி பளமொளிங் களை நெனப்பு வச்சுகிட்டு அதுங்க இருக்கற புத்தகங்களை படிச்சாக்க...வெரசா எளுத கத்துக் கிடலாம்.....
ஆச்சி : ஒங்கூட நேத்து அந்தப்பள்ளிகூடத்துக்கே வந்திருக்கலாம்... ஆடுபுலியாடி கையில இருந்த காசெல்லாம் போச்சுது... அடிக்க வேறவர்ரானுவ.. பந்தயம் வச்சு ஏவப்பட்ட தோப்பு...
செவப் : இந்த மொரட்டுத்தனம்... சூதாட்றபுத்தி, பட படப்பு...எல்லாம் போயி ஊத்துத் தண்ணி மாதிரி புத்தி தெளிவா இருக்கும் ..ஒளுங்கா சேரு...
ஆச்சி : எங்கிட்ட காசு கீசு கெடையாது...பொஸ்த்தகம் எல்லாம் வாங்க முடியாது...மேக்கொண்டு... இத்தினி வயசுக்கப்புறம் படிக்கப் போனா வெக்கமா இருக்குது... நாலு பேருக்கு முன்னால வாத்தியாரு சொன்னத திரும்பச் சொல்லாட்டி திட்டுவாரு... முட்டிபோடச் சொல்வாரு... முன்னமே தான் சொல்லியிருக்கேனுல்ல... செவப் : நீ பொழுது விடிஞ்சு தூங்கறப்போ ... நாலு பேரு பேசுவாங்களே... அப்ப வெக்கம் எங்க போவுது... கண்ட கண்ட நேரத்ல கண்ட கண்டத ஊதறத நிறுத்து... நீ ஒண்ணும் காசு கொடுக்க வாணாம்... பொஸ்த்த கம்... பலபம் ... செலேட்டு... ஒண்ணுமேவாங்கவாணாம்...பேசாம வந்து குந்திக்கிட்டிரு.... ஒனக்கே புரியும்...
ஆச்சி : இப்பவே போவோம்...
மணி : ஏ, கொதி அர்.சி...பொளுது சாஞ்சு...ரேடியோல மாநிலச் செய்தி முடியுது பாரு அப்பத்தான்... வந்து சேரு... இப்ப போயி பிஎச்.சி. பத்துசதம் கடைல வாங்கி களத்து மேட்ல ஐயா இருப்பாரு அவரு சொல்றபடி தெளி...
செவப் : பாத்தியா மணிமேகலை...வெவசாயம் சம்பந்தப் பட்ட விசயங்களை தெரிஞ்சுகிடத்தான் நான் இந்த முதியோர் கல்வீல சேர்ந்தேன்...இதுக்கு முன்னால ஒத்தரோட மொகத்த பாத்து மூஞ்சிய பாத்து இதுல என்ன எளுதியிருக்கு அதுல என்ன எளுதியிருக்குதுன்னு கெஞ்சி கூத்தாடி கேக்க வேணும்...இப்ப நம்ம கந்த வாத்தியார் கிட்டெ எப்ப வேணுமுன்னாலும் கேக்கலாம்... நாமகூட படிச்சுகிட்டும் வாரோம்...... -
மணி : எனக்கு இப்ப வந்து மண்வளப் பரிசோதனை, பயிர்ப் பாதுகாப்பு, ஊடுபயிர் மொறை, நெலத்தடித் தண்ணிய எப்பிடி கண்டு புடிக்கறது... இதுகளப் பத்தி தெரிஞ்சுகிட ரொம்ப ஆசையா இருக்குது... நம்ப நாட்டாமைகிட்ட சொன்ன ஒடனேயே அவரு விவசாய ஆபீசருக்கு எழுதி பல தகவலுங்களை வரவளைச்சிருக்காரு... நம்ப கந்த வாத்தியாரு அலுப்பு பார்க்காம பொறுமையா
வௌக்கி சொல்லப் போவறாராம்...
செவப் : இதுலேருந்து முதியோர் கல்வித் திட்டத்ல கால நேரம், மணியடிக்கறது, வேலை நிறுத்தம், விடுமுறை நாள்... இதெல்லாங் கெடையாதுன்னு தெரியுதா... அதனால நாம வூடு வூடாப் யோயி நம்ப சனங்க கிட்ட விசியங்களை எடுத்து சொல்லி அவங்களையும் படிக்க வச்சு உளுறவன் கணக்கு பாத்தா ஒளக்குக்கு மேல மிஞ்சும்னு மெய்ப்பிச்சுப் புடுவோம்.
மணி : ஆக கல்விக்கு வயசில்ல...சரிதானே,
செவப் : அதுலயும் முதியோர் கல்விக்கு முக்கியமா இல்லே .... அதுக்காவ... தள்ளாத வயசுல படிக்கணும்னு அருத்தம் இல்லே... மணி : ஏன் முடியாது...கட்டாயம் முடியும். சரிதான் னு இப்ப நல்லாப் புரியுது...
-------------
3. உயிருக்குத் துணை
உறுப்பினர்கள் :
செங்கமலம்- கிராமாந்திரச் சூழலில் வாழும் குடும்பத் தலைவி கணவனை
அடக்கியாளபவள். 38 வயது.
சிங்காரி - செங்கமலம், முத்துக்காளையின் மகள் வயது 20.
நாட்டாண்மை- ஊருக்குப் பெரியவர். மரியாதைக் குரியவர். 50 வயது.
முத்துக்காளை- செங்கமலத்தின் கணவன். சொந்த புத்தி இல்லாதவன். 43 வயது.
பன்னாரி - முதியோர் கல்வித்திட்ட அலுவலர்; இளைஞர். திட்டம் வெற்றி
பெறப் பாடுபடுபவர் வயது 25.
காட்சி-1
(நடுவம் கிராமத்தில் பெரிய ஆலமரத்தை யொட்டிய ஓர் ஓட்டுக் கட்டிட வீடு. வீட்டு வாசலில் கோழி தானியத்தைக் கொத்திக் கொண்டிருக்கிறது.
வாசலில் ..)
பன் : ஐயா!... ஐயா!...
செங் : யாரது?
பன் : நாந்தாங்க பன்னாரி...
செங் : பன்னாரியா? யாருன்னு தெரியலியே! என்ன விஷியம்?
பன் : முத்துக்காளை அவுங்க இருக்காங்களா?
செங் : ஏண்டா! என்னமோ பேரு வச்சவன் மாதிரில்ல மண்டைல அடிச்சாப்ல சொல்றே...எலேய்! ஒளுங்கா ஓடிரு...இல்லே தோலெ உரிச்சு உப்புக் கண்டம் போட்டுப்புடுவேன்... ஆம்மாம்!
சிங் ; என்னம்மா நீ! அவரு யாரோ எவரோ! இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறியே! ஒனக்கே நல்லா இருக்குதா?...நீ நடந்துக்கிட்ட மொறை சரியா யில்லே !
செங் : ஏண்டி! எனக்கே புத்தி சொல்றியா? ஒனக்கு அம்புட்டு தூரம் துணிச்சலா? போடி உள்ளே! வயசு வந்த பொண்ணு வாயக் காட்டாதடி...யாருகிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும்... பெரிய வங்களுக்கு புத்தி சொல்றத இன்னையோட வுட்டுப்புடு . ஒன்னச் சொல்லி குத்தமில்லே! எந்தலைவிதி!
சிங்: ஒனக்த, அந்தப் படைச்ச கடவுள் தான் பொறுமையையும் நிதானத்தையும் கொடுக்கணும்... அது, இந்தப் பெறவில வரும்னு எனக்குத் தோணலை... சரி! சரி! நான் உள்ளே போய்த் தொலைக்கிறேன் ...நீ மொதல்ல கத்தறத நிறுத்து!
செங் : வாயக்கொறடி வாயாடி! உள்ளபோயும் என்ன பேச்சு? யேய் முண்டாசு கட்டினாப்புல முடி வச்சு கிட்டு, தெருக்கூத்துல இருக்றாப்ல படுதாவக் கட்டு கிட்டு நிக்ற பெரிய மனுசா!...கருமம்! போய்யா... இன்னமே இங்க நின்னுகிட்டேயிருந்தே மரியாதை கெட்டுப்போயிடும் ஆமாம்! ஜாக்ரதை! வெட்டி மடவாய்ல வச்சுப் புடுவேன்! இந்த செங்கமலத்தப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது...
(முத்துக்காளை வந்து கொண்டே)
முத் : என்ன செங்கமலம்? யாரு பய? ஏன் இங்க வந்து குத்துக்கல்லு மாதிரி நிக்கறான்...எதுக்கு வந்தானாம்? அவனுக்கு ஏதாவது போதாத காலமா?
செங் : ஒன்னியத்தான் தேடி வந்திருக்கானாம்... இந்தப் பயலுவளையெல்லாம் நம்பாதே மச்சான்! முன்ன ஒருபய இப்பிடித்தான் வந்தான்.. வூட்டுக்குள்ள போய் திரும்பறத்துக்குள்ள நம்ப கோளிக்குஞ்சு ரெண்டைக்காணோம்...ஜாக்ரதை! கண்ட பயலுவ கிட்டல்லாம் வாய் கிளிய பேசித் தொலைக்காதே!
பன் (தனக்குள்) : போயும் போயும் கோளிக்குஞ்சுதான் திருடணுமா? (முத்துக் காளையை நோக்கி) ஐயா! நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டா இப்பிடியெல்லாம் பேச மாட்டீங்க...
முத் : நீ யாரா இருந்தா என்னய்யா! தொறக்காதே வாயை!
செங் : மூணாவது வூட்லதானெ நாட்டாமை இருக்காரே! அவுருகிட்ட இளுத்துக்கிட்டு போய் வுடு...பெரிய மனுஷன்... வெவரந் தெரிஞ்சவரு... இவுனுவகளுக் கெல்லாம் புரியராப்லசொல்லுவாரு... நமக்கெதுக்கு ஊர்ப் பொல்லாப்பு...
முத் : ஆமாம் புள்ளை ! நமக்கு எடுத்த ஒடனே ஆத்திரந் தானெ வருது... அவரு படிச்சவரு...நெதானமா பேசுவாரு .. நாமதான் ரெண்டெளுத்து படிக்காம போய்த் தொலஞ்சுப் புட்டோம்....
செங் : - சரி! சரி! வளத்தாம சீக்கரமா பேசிப்புட்டு வேசுமா வா! ஒனக்கு நின்னாக்க நின்ன எடம் .. போனாக்க போன எடம்...ஒனக்குக் களுத்த நீட்டுன நாள்ளேருந்து எனக்கு ஒபத்திரவந்தான்!
முத் : வந்தர்ரேன் புள்ளே...உள்ளெஎலப்புள்ளி நோய்க்கு மருந்து வச்சிருக்கேன்... கிராமசேவக்கு எப்பிடியோ தெளிக்கச் சொன்னாங்க ..மறந்து தொலஞ்சுப் புட்டேன்... இந்தக் கொதிகஞ்சி சிங்காரி கிட்ட கொடுத்து படிக்கச் சொல்லி பக்குவமா தெளி! நான் வந்தர்ரேன்.... நடய்யா !
பன் : இதோ வந்து கிட்டே இருக்கேன்...
முத் : ஓடுனே! மூஞ்சி மொகரைய பேத்துருவேன்...
பன் : (தனக்குள்) இவரப் பார்த்தாலே பாவமாயிருக்குது ...எம் மூஞ்சிய பேக்கறாராம்!
பன் : (முத்துக்காளையை நோக்கி) நாந்தான் ஒங்க பின்னாடியே வந்துகிட்டே இருக்கேனே! அப்பரம் என்ன ?
------------
காட்சி-2
செட் அதேதான்.
(நாட்டாமைக்காரர் வீடு முத்துக்காளையின் வீட்டிலிருந்து மூணாவது வீடு... நல்ல மாடிக் கட்டிடம்... வாசலில் கயிற்றுக் கட்டிலில் 50 வயது மதிக்கத்தக்க நாட்டாமை முகத்தில் அமைதி, அடக்கம், எளிமையுடன் மேலே ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு ஒரு பேப்பரைப் படித்துக் கொண்டிருக்கிறார்).
முத் : ஐயா!
நாட் : என்ன முத்துக்காளை! ஏது இவ்வளவு தூரம்... .காரியம் இல்லாம வரமாட்டியே! அடடே பக்கத்ல பன்னாரித்தம்பியா? வாய்யா! வா! உட்காரு...எப்ப வந்தே !
பன் : காலைலதான் வந்தேங்கய்யா! ஒங்களைப் பாத்ததுல ரொம்ப சந்தோஷமுங்க....
முத் : என்னங்க! நாட்டாமை! கோளியும் ஆடுந் திருடுற பசங்களையெல்லாம் வாங்க போங்கன்னுகிட்டு.... மரத்துல கட்டிவச்சு பட்டைய எடுக்கச் சொல்றத வுட்டுப்புட்டு...
நாட் : யாரு எவருன்னு தெரிஞ்சுக்காம இப்பிடியெல்லாம் பேசாதீங்க! ஏதோ நம்ப கிராமத்துக்கு நல்லது செய்ய வந்த ஆளைப்போயி வாய் புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடாது. தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வச்சுக்காதீங்க...முத்துக் காளைக்கு வெவரம் போதாது...அவரு ஒரு வெகுளி! மனசுல ஒண்ணுமே கெடையாது.
பன் : சமூகப் பணி செய்யுறவங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் ரொம்ப சாதாரணமுங்க... -- எனக்குக் கோபமோ.. வருத்சமோ கெடையாதுங்க சியாக
... நல்ல வேளை ஒங்க வூட்டுக்காவது கூட்டி யாந்தாரே! அந்தவரைக்கும் நல்லது...
முத் : நாட்டாமே! கேக்குறேனேன்னு தப்பா எடுக்கா தீங்க! இந்த எளவெட்டப் பசங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? சும்மா புத்தகப் புளுங்க. ஒண்ணு சொல்லிப்புட்டு ஒம்பது செஞ்சதா எளுதிக்கு வாங்க.. ஏதோ கேக்கவும் பேசவும் நல்லா இருக்கும்! நடைமொறைக்கு ஒத்து வராப்ல இருக்கும்னு எனக்குத் தெரியலை.... நீங்க சொல்றதுக்குக் கட்டுப் 'படறேன்! அம்புட்டுத்தான்!
நாட் : முத்துக்காளை! கார்த்திய மாசத்து பொரிமாதிரி பொரிஞ்சுகிட்டே போவக் கூடாது... நீங்களுந்தான் மாடு வளக்கிறீங்க.. தொண்டை அடைப்பான் நோயி மாட்டுக்கு வர்ரதை எப்பிடிக் கண்டு பிடிக்கறதுன்னு ஒங்களுக்குத் தெரியுமா? இல்லெ டெல்லி எருமையோட வளப்புப் பத்திதான் தெரியுமா? அட, மொறைதான் தெரியுமா?
மாத்துப்பயிர்.
முத் : இவுருக்கு அதப்பத்தியெல்லாந் தெரியுமுங்களாக்கும் ...நீங்க அதையெல்லாம் நம்புறீங்களாக்கும்...
நாட் : இந்த பாருங்க முத்துக்காளை! இந்தக் கிராமத்ல இத்தினி வூடுங்க இருந்தாலும் ஒங்க வூட்டத்தான் நான் தேர்ந்தெடுத்து ஆபீசருக்கு எழுதியிருந்தேன் அதைப் புரிஞ்சுக்சாம்....காரணம் இல்லாம ஒத்தரு ஒங்கவூட்டுக்கு வருவாரா? எல்லாம் ஒங்க நன்மைக் குத்தான்.
------------
காட்சி-3
(முத்துக்காளையின் வீடு)
செங் : தம்பி பன்னாரி! நீ நல்லா இருக்கணும்...ஒன்னிய சரியாப் புரிஞ்சுக்காம கன்னா பின்னான்னு பேசிப்புட்டேன்...மனசுல வச்சுக்காதே...நீ மன்னிச் சிட்டதா சொன்னாத்தான் மனசு சரியாவும்.
பன் : என்னங்க! நீங்க எவவளவு பெரியவங்க... நீங்க போயி எங்கிட்ட இப்பிடி-யெல்லாம் பேசுறீங்க... கோபம் உள்ள எடத்துல கொணம் இருக்குதுங் களே !
முத் : நாங்கூட நெனக்கலை...இம்புட்டு கொறஞ்ச நாளுக்குள்ள எனக்கு எளுத்துக்கூட்டி படிக்க வருமுன்னு...முன்னையெல்லாம் ரயில்ல போறப்ப எந்தப் பொட்டீல ஏறப்போனாலும் ரிஜர்வ் பொட்டிம்பான்... நீங்க அந்த வார்த்தைங்களை அர்த்தம் ஆவுறாப்ல சொன்னதுக்கப்பரந்தான் ஒரு தெம்பும் துணிச்சலும் வந்துச்சு.. என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவந்தான்!
பன் : இப்ப நீங்க அனுபவத்தில பேசறீங்க... அதனால ஒங்க கிட்ட இப்ப சொன்னாக்க வௌங்கிக்கு வீங்கன்னு நெனைக்கறதோட நீங்களே நாலு பேருக்கும் வௌக்குவீங்க இல்லையா?
செங் : தம்பி! நல்லதை யாரு சொன்னாலும் கேட்டுக் குடணும்னு இப்பல்ல தெரியுது! ஒரு கடுதாசி வந்தா அத்தப் படிக்க மத்தவங்க தயவை தேடணும்... அவுங்க நேரம் பாத்து...போவணும்... கடிதாசியப் படிக்கிற அளவுக்கு வெரசா சொல்லிக் குடுத்துப்-புட்டீங்க தம்பி...ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.
பன் : இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா? படிப்புக்கு வயசு கெடையாதுன்னு! படிப்பு இருந்தா மத்ததுங்கள்ளாம் தானே வரும். கத்துக்கிடணும்னு ஆசை இருந்தாப் போதும்... கத்துக்கிடலாம்...
முத் : என்னங்க பன்னாரி! நானே மொதல்ல மெரண்டேன்... நம்பளையும் இந்தச் சின்னப் பசங்களை வெரட்றா மாதிரி வெரட்டி ' அ'னா, 'ஆ' வன்னா லேருந்து தான் தொடங்குவீங்கன்னு நெனச்சேன்... இந்தப் பொடியங்கிட்ட போய் படிக்கறதான்னு வெக்கப்படக்கூடச் செய்தேன்....நீங்க எங்க மனக நோகாம எவ்வளவு விஷயங்களை சொல்லிக் குடுக்குறீங்க....
பன் : இந்த மாதிரியெல்லாஞ் சொல்லி எனக்கு மண்ட கனம் வாராப்ல செய்யாதீங்க... எங்களுக்கு குடுத்த பயிற்சியிலே இன்னும் பத்துல ஒரு பங்குகூட நாஞ் சொல்லலியே! எப்பிடியோ முதியோர் கல்வியோட நோக்கத்தை புரிஞ்சுகிட்டீங்க! மகிழ்ச்சி!
செங் : மெய்யாச சொல்றேங்க... மண்வளப் பரிசோதனை யப்பத்தி நீங்க வௌக்கமாச் சொன்னப்பரந்தான் புரிஞ்சுது...
பன் : ஒங்களுக்கெல்லாம் ஜப்பானிய சாகுபடி மொறை தெரியுமில்லியா...
செங் : ஆமாம்... கொஞ்ச காலத்துக்கு முன்னே அதப்பத்தி பிரமாதமாச் சொன்னாங்க... சும்மா சொல்ல லாமா! நல்ல வௌச்சல்
பன் : அப்படிப்பட்ட அந்த ஜப்பான்ல படிக்காதவங்களே கெடையாது! அதனாலதான் அந்த நாடு எல்லா வகையிலேயும் முன்னேறியிருக்குது...
முத் : அதாவது படிப்புச்கும் வருமானத்துக்கும் கனக்ஷன் இருக்குதுங்கிறீங்க! சரிதானுங்களா?
பன் : ஆமாங்க...சரியாச் சொல்லிப்புட்டீங்களே!
முத் : கேக்குறேனேன்னு கோவிக்கப்படாது.......எத்தினியோ மேல் நாடுங்கள்ள கூடத்தான் படிச்சவங்க நெறைய பேர் இருக்காங்க...அங்கயும் கொலை, கொள்ளைன்னு குத்தங்க இருக்கத்தானெ செய்யுது...
பன் : ரொம்ப நல்ல கேள்வி! படிப்புன்னாக்க எழுதப் படிக்கத் தெரியறது மட்டுமில்லே! அடுத்தவங்களுக்கு முடிஞ்ச வரைல நல்லது செய்யறது தான் படிப்போட நோக்கம்! நல்ல பாரம்பரியம் உள்ள நம்ப நாட்ல எல்லாரும் படிச்சவங்களா இருந்துப்புட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பத் திரிக்கும் வேலையே பெரும்பாலும் இருக்காது...
எனக்கு இதுல முழு நம்பிக்கை இருக்குது...
செங் : சரிதாங்க தம்பி! முந்தில்லாம் நாஞ் சொல்றதைத் தான் மத்தவங்க கேக்கணும்...கேக்குலீன்னா வாய்ல வந்தபடி திட்றதுன்னு செய்துகிட்டிருந்தேன். ஒரு வாட்டி நாட்டாமை கூட கண்டிச்சாரு .. எனக்கே தெரியுது...படிப்புக்கு ஒரு தனி மருவாதை இருக்கத் தான் செய்யுது...
------------
காட்சி - 4
(நாட்டாமைக்காரர் வீட்டில்)
நாட் : என்ன பன்னாரி! சத்திய சோதனை எப்பிடி? பன் ! அண்ணல் காந்தியோட அருளும் ஒங்க ஆசியும் இருக்கதாலெ எல்லாம் நல்லபடியாவே போய்க் கிட்டிருக்குங்கய்யா!
நாட் : இந்த வூர்லயே இந்த முத்துக்காளை வூட்டைத்கான் பேய் வீடுன்னு சொல்லு வாங்க... அதுலயும் இந்த செங்கமலம், அந்த முத்துக் சாளைய படுத்தற பாடு! அப்பப்பா! தாங்காது... அவ சொல்றத கேட்டுக் கிட்டு இந்தப் பய தக்கா புக்கான்னு ததிக்கிற குதி இருக்கே. அப்பாடி! அவுங்க வூட்டை சரி பண்ணினா இந்த வூரையே சரி பண்ணின மாதிரி.... அந்தப் புண்ணியம் ஒங்களைத்தான் சேரும்...
பன் : எல்லாம் பெரியவங்களோட நல்லெண்ணந்தார் காரணம். ஐயா ஒங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? ஒங்களுக்குத் தெரியாம இருக்காது... செங்கமலத் தம்மாளே இப்ப கோர்ட்ல இருக்குற தங்களோட கேசையெல்லாம் வாபஸ் வாங்கப் போறாங்க.... புல்டோஸரை வரவழைச்சு மோட்டாங்காட்டு நெலத்தை சரி பண்ணி பயிர் பண்ணப் போறாங் களாம்... ஃபில்ட்டர் பாயிண்ட் வேற போடப் போறாங்களாம்....
நாட் : ஆமாம்! முத்துக்காளைகூட வந்து சொல்லிப் புட்டுப் போனாப்ல... நீங்க வந்து இவ்வளவு செய்தது கூடப் போதாது...அந்தப் பொண்ணு சிங்காரிய அவுங்க படுத்துற-பாடுதான் சொல்லி முடியாது...பொண்ணை வெளீல பழக விடாம வூட்டுக்குள்ளாறயே பூட்டி வச்சிருந்தா நல்லா வளக்கறதா நெனச்சுக், கிட்டிருக்காங்க...அத மாத்தணும்..இது எவ் வளவு பெரிய முட்டாத்தனம்! நாஞ் சொன்னாக்க அவ்வளவு எடுபடாது! எல்லாம் மொரடு...!
பன் : ஆண், பெண் பழக்கத்த பத்தி நம் நாட்ல இருக்கற எண்ணத்த காலத்துக்கு ஏத்தாப்ல மாத்தறது அவ்வளவு சொலயமில்லே! படிச்சதா நெனச்சுகிட்டு இருக்கற செல் பேருங்க கிட்ட கூட இன்னும் இந்தப் பழைய நெனப்புதானெ இருக்குங் கய்யா !
நாட் : தம்பி! என்னைப் பொறுத்த வரைல கிராமங்கள்ள, முக்கியமா இந்தக் கல்யாணம், புள்ளைப்பேறு, புள்ளை வளர்ப்பு, வரவு செலவ, நாலு பேரு கிட்ட எப்பிடிப் பேசறது ஆக இந்த மாதிரி விஷயங்களுக் காவது ஒங்களை மாதிரி ஆளுங்க இங்கெயே தங்கி அவங்களோட கலந்து வாழ்ந்து சொல்லிக் கொடுத்தா ப்ரச்சனைங்க கொறையும்னு நெனைக் கிறேன்...
பன் : நீங்க சொல்றது ரொம்ப சரிங்கய்யா. சட்டமோ, அதிகாரமோ மக்களைத் திருத்தாது...கல்விதான் அதைச் செய்யமுடியும்.
----------
காட்சி-5
(முத்துக்காளையின் வீட்டில்)
செங் : ஏண்டி! ஒனக்கு அம்புட்டு ஆய்ப் போச்சுதா? இந்த வெடுவெட்டிப்பய மொட்டையனத்தான் கட்டிக்கு வேன்னா சொல்றே! அது இந்தக் கட்டை இருக்குற வரைக்கும் நடக்காது...சொல்லேன்யா! வாயில என்ன கொளுக்கட்டையா? ஒன்னோட வேற பெரிய ரோதனையாப் போச்சுது... முத் : ஆமாம் புள்ளே சிங்காரி ஒங்கம்மா சொல்லிப் புட்டாள்ள! பொறவு பேச்சென்ன? அவ சொல் றாப்ல நடந்துக்க!
சிங் : என்னப்பா நீங்க! சின்னப் புள்ளேலேருந்து “அவந்தான்டி ஒம்மச்சான்னு" நீங்க அம்புட்டுப் பேருந்தானெ சேந்துசொன்னீங்க...இப்பப் போயி மனசை மாத்திக்கச் சொல்றீங்க. இது நியாயமா? என்னால அம்மா சொல்லுறதைக் கேக்க முடியாது ... முடியாது... என்ன ஆனாலும் சரி!
செங் : நியாய அநியாயத்தைப் பேசற அளவுக்கு ஒனக்கு வயது பத்தாது...பெரியவங்க சொல்றதைக் கேளு ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன் ...(அந்தச் சமயம் பன்னாரி வர அவரைப் பார்த்து) வாங்க தம்பி! நீங்க வயசுல சின்னவரா இருந்தாலும் வெவரந் தெரிஞ்சவரு! இவளுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்க தம்பி! பெண் புத்தி, பின் புத்தின்னு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்குறா! கருவேப்ல கொத்து மாதரி ஒரே பொணணுங்க!
பன் : ஒங்க சொந்த விஷயங்கள்ள கலந்துக்கற அளவுக்கு என்னை மதிக்கறதைப் பத்தி நான் பெருமைப் படறேன்...கொஞ்சம் கவனமாக் கேளுங்க ..
செங் : சொல்லுங்க தம்பி!
பன் : நீங்க சொல்றதுக்கு முன்னாலே எனக்கு எல்லாம் தெரியும். ஒங்க பொண்ணு மாமரத்துக் கேணில விளுந்து தற்கொலை செஞ்சுக்க பாத்திச்சு! நல்ல காலமா நாட்டாமை தடுத்துச் சமாதானம் செஞ்சுப்புட்டாரு...
முத் : அடப்பாவி பய புள்ளே !
பன் : நானும் மொட்டையனங்கறவரைப் பத்தி விசாரிச்சேன். அவங்கப்பா வுட்டுப்புட்டுப் போன ஒரு ஏக்கர் நெலத்தை பத்து ஏக்கரா பெருக்கி யிருக்காரு... வயது வந்தோர் கல்வித் திட்டதல சேந்து படிச்சு புதிய புதய மொறைகளை விவசாயத்ல பயன் படுத்துறாரு! தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பச்சத்து பத்தி அனுபவபூர்வமா பல பேருக்குச் சொல்றாரு! போதுமா?
முத் : எந்தப் பயிருக்கு எதை வூடுபயிரா போடலாம்னு வேற தெரிஞ்சு வச்சிருக்கான்... பல பல வகையில் பாத்தா அவன் நல்லவந்தான் புள்ளே. தந்தங்கச்சு கல்யாணத்துக்கப்-புரந்தான் தங்கல்யாணம்னு வேற சொன்னான். அதையும் நல்ல எடத்ல கட்டிக் குடுத்துப்புட்டான்... நல்ல குடும்பப் பொறுப்புள்ள பயதான்...
பன் : ஜன நாயக நாட்ல அவங்கவங்க விரும்பினவங்களைக் கல்யாணம் செய்துக்க உரிமை இல்லேன்னாக்க என்ன ப்ரயோஜனம் தோல்வியினாலயும் வெறுப்புனாலயும் தற்கொலை பண்ணிக்கிட்டா யாருக்கு நஷ்டம்? நாட்டுக்குத்தானெ! இளைஞர் களோட சதவீதம் கொறையாதா?
செங் : நாட்டுக்கு எப்பிடிங்க தம்பி நஷ்டம்?
பன் : பெண்ணு கோ ஆணுக்கோ அரசாங்கம் செலவு பண்ணின பணம் போனதுதானே! பொதுவா கிராமாந்தரப் பக்கந்தான் தற்கொலைங்க அதிகமா நடக்கறதாச் சொல்றாங்க! மனசுல தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளந்துப் புட்டா இது மாதிரி தற்கொலைங்களைக் கொஞ்ச கொஞ்சமா நிறுத்தலாம். கல்வி ஒண்ணுதான் இதைச் செய்ய முடியும்....
முத் : ஏந்தம்பி எல்லாரும் முதியோர் கல்வின்னு சொல்றாங்க நீங்க என்னமோ வயது வந்தோர் சல்வின்னு சொல்றீங்களே!
பன் : 15 வயசுலேருந்து 35 வயதுள்ளவங்களுக்குள்ள திட்டந்தானெ இது!
முத் : இப்பப் புரியுதுய்யா ! நல்லாவே புரியுது!
செங் : அது என்னமோ தம்பி! எங்க வூட்ல ஒரு பையனாவே வளந்துப்புட்டே! 'நீ வந்தப்புரந்தான் எங்க வூரே களை கட்டுச்சு! வயசுல சின்னவனா இருந்தாலும் ஒனக்கு மூளை சாஸ்தி! ஒன்னோட இந்த முதியோர் கல்வித் திட்டத்துக்கு எங்களோட தோட்டத்து வூட்டையே கொடுத்துப்புடறோம்.
(நாட்டாயை வருகிறார்).
நாட் : நான் வர்ரது பூஜைவேளை கரடி மாதிரி இருக்குமோ?
செங் : ஐயய்யே! எங்க தெய்வம் நீங்க...இல்லேன்னா இந்தத் துக்குரி ஊர் செணத்தல்லே நாற அடிச் சிருப்பா ...
காட் : புள்ளைய கோவிச்சுக்காதீங்க! சீக்கிரமா கல்யாணத்துக்குத் தேதிய வச்சுப்புடுங்க...
பன் : கல்யாணப் பத்திரிகையை அவசியம் அனுப்புங்க... நான் வர மொயற்சி பண்றேன்...
முத் : உசுருக்குக் தொனை கல்விதான்னு சொல்லி எங்க கண்ணைத் தொறந்த நீங்க ஊருக்குப் போறேன்னு சொல்றீங்களே!
பன் : முதியோர் கல்வியோட அர்த்தத்த புரிஞ்சு கிட்டீங்க! இந்த வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்த என்னோட சினேகிதங்க வருவாங்க...மத்த கிராமங்களுக்கும் நாம் போக வேண்டாமா?
செங் : அவசியம் போகணும் தம்பி! என்னை மாதிரி இருக்ற அரை வேக்காடுங்களை-யெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? போய்ட்டு வாங்க! ஆனாக்க எங்களை மறந்துப்புடாதீங்க! (கண்களில் நீர் பல்க.)
பன் : அடடே! அழுவாதீங்க! பழகினவங்கனை மறக்க முடியுமா?
யாவரும் : (கண்ணில் வரும் நீரைத் துடைத்துக்கொண்டே)
போய்ட்டு வாங்க! நீங்க நல்ல இருக்கணும்!
பன் : நாட்டாமைய்யா! எனக்காகக் கொடுத்த பரிசுப் பொருளுங்களை கிராமத்து ஜனங்களுக்கே கொடுத்துப் புடறேன்! நாம இந்தியர்களாகவும் இருக்கணும்! இந்தியப் பொருள்களையே வாங்கணும்! கல்வி கூட இந்திய மயமாக்கப் படணும்! அதுக்கு நாம பாடுபடணும்...ஒங்க எல்லாருடைய ஒத்துழைப்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி வணக்கம். போய்ட்டு வர்றேன்...
யாவரும் : வாங்க! வணக்கம்!
-----------------
4. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்
உறுப்பினர்கள்
பின்ன ணிக்குரல் (ஆசிரியர் குரல்)
தந்தை மகன் ஆண்குரல் 1 2 3 4
பெண்-1 2 3
கமலா
இரும்பொறை பையன்
காட்சி-1
(“நல்ல மனைவி நல்ல பிள்ளை ” என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சினிமாப் பாடலின் முதல் இரண்டு அடிகள்)
பின் : ஓ... நல்ல மனைவி! மனித வாழ்வில் எத்தனை நலங்களைப் பெற்றுவிட முடியும்! ஆனால், ஒரு நல்ல மனைவியைப் பெற்றவனுடைய வாழ்வு தான் உண்மையான பொன்னுலகம்! கண்கூடான சொர்க்கம்! நிம்மதி என்ற இனிமையான சொல் எத்தனையோ ஆயிரம் பக்கங்களையுடைய அகராதியில் ஒரு பக்கத்தில், ஓரிடத்தில் நிம்மதியாக, நித்திரை செய்கிறது. மனித வாழ்வில் எத்தனையோ ஆயிரம் பேர் மத்தியில் எங்கோ ஒருவரிடம் தான் அது விழித்துக்கொண்டிருக்கிறது.
(“எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?”
டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல்-இசைத் தட்டு - ஓரிரண்டு அடிகள்- பின்னணியில். பின்னர் பாட்டு தேய்கிறது)
பின் : கோடானுகோடி செல்வம் படைத்தவன் வாழ்வில் நிம்மதி இருப்பதாக நினைப்பது கனவு! குவியலோ குவியல் என்று புகழைக் குவித்தவன் வாழ்வில் அது இருக்கிறது என்பது வெறும் பேச்சு! பட்டமும் பதவியும் ஒருங்கே பெற்றவன் வாழ்வில் நிம்மதி குடிகொண்டிருக்கிறது என்பது கானல். ஆனால் நல்ல மனைவினயப் பெற்ற எவன் வாழ்விலும் நிம்மதி நிரந்தர கீதம் பாடிக்கொண்டிருக்கிறது.
(நல்ல மனைவி- நல்ல குடும்பம் பாட்டு)- (இசைத் தட்டு )
பின் : “மனைக்கு விளக்கம் மடவார்” என்பதைப் பழம் பாட்டு ஒன்றும் கூறுகின்றது.
பெண் : 'மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை ஆகா இதைவிட ஒரு படி மேலே நின்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்.
பெண் : “இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ள தென் இல்லவள் மாணாக் கடை''
பின் : ஒரு திருமண நிகழ்ச்சியில் தந்தையும் வெளியூரிலிருந்து வந்த நான்கு பிள்ளைகளும் குடும்பத் துடன்கூட நேரிடுகிறது. அப்போது
தந் : ராஜா!
மகன் : ஏம்பா ?
தந் : உனக்குத் தவறு- இழைச்சிட்டேன்டா!
மகன் : நீங்களா? எனக்கா? என்னப்பா சொல்றீங்க?
தங் : உன் கூடப்பிறந்த மூன்று சகோதரர்களுக்கும் ஏதோ ஒரு வழி பண்ணினேன். அவனுங்களும் எப்படியோ முன்னுக்கு வந்துட்டானுங்க! பெரியவன் பெரிய பிஸினஸ் மேனா ஆயிட்டான். சுந்தரம் வட்டிக்குப் பணம் கொடுத்து வீடு வாசலுமா இருக்கான். ராமுவை எம்.ஏ., படிக்க வைச்சேன். உன்னைத்தான்
மகன் : அப்பா மூன்று பேருக்கும் நீங்க என்னென்னவோ கொடுத்தீங்கப்பா. ஆனால், எனக்கு நீங்க புதையல் எடுத்துக் கொடுத்திருக்கீங்கப்பா.
தந் : புதையல்னா ?
மகன் : 'ஆமாம்பா. ஒரு நல்ல மனைவியைத் தேடிக் கலியாணம் பண்ணி வைக்கிறீங்களே- அது போதும்பா. எ குட் வைய்ப் ஈஸ் எ கிரேட் ட்ரெஷர் ஆப் ஹஸ்பென்ட்.
தன் : ஆமாம்! ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு பிள்ளையிடம் நிம்மதியா இருக்க ஆசைப்பட்டேன் - ஆனால், முதல் மூன்று மருமகளுங்களிடத்திலே கிடைத்த பதில்?....
(காட்சி மாற்றம்-இசை)
பெண்-1 : நாங்க இந்த வருஷம் லீவு எடுத்துக்கிட்டு காஷ்மீர் போகணும், கெடுக்கிறதுக்கு நீங்க வந்து சேராதீங்க?
பெண்-2 : ஏன் ? உங்களுக்கு வேறே பிள்ளை வீடே இல்லையா?
பெண்-3 : இவரு பி.எச்டி, பட்டத்துக்கான தீசீஸ் எழுதிக்கிட்டு இருக்கிறாரு இந்த நேரம் பார்த்துத் தான் நீங்க வந்து தொல்லை கொடுக்கணுமாக்கும்?
(இசை) மகன் : என்னப்பா யோசிக்கிறீங்க? மூன்று மருமகளுங்க கிட்டே இருந்து கிடைத்த பதில்களை நினைச்சுப் பாக்கறீங்களாப்ப ? ஏம்பா! நாங்க அவங்களை யெல்லாம்விட வசதிக் குறைவானவங்க என்கிறதுக் காகத்தானே என் மனைவியை நீங்க கேட்கலை?
(குரல் கொடுத்து) கமலா...கமலா... கம : என்னங்க அத்தான்?
மகன் : அப்பா கூப்பிட்டாரு! (தாமதம்)
கம : என்னங்க மாமா?
தக : கமலா, உடம்பு சரியில்லை ஓய்வெடுக்கலாம்னு...
கம : எங்க ஊருக்கு வாங்க மாமா... நல்ல இயற்கைவளம்! நாங்க குடிக்கிற கூழைக் குடிங்க.
தந் : சந்தோஷம் மகளே! சந்தோஷம். நான் என் ராஜாவுக்குப் புதையலைத்தான் தேடிக் கொடுத் திருக்கேன்.
(இசை)
பெண் : பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
பின் : பெண்கள் தாம் எப்திய கண வனை வழிபடுபவ ராயின், தேவர்கள் வாழும் உலகின்கண் அவர் களால் பெருஞ் சிறப்பினைப் பெறுவர்.
பெண் : பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
பின் : வாழ்க்கையில் நல்ல மனைவி பெற்று விட்டாலே மானம் என்கிற தமிழ்க் கருவூலம் தன்னால் வந்தடையும். மனிதர்களில் பலர் எப்படியும் வாழலாம் என்ற குறிக்கோளையுடையவர்கள். சிலர் தாம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோளைப் பொன்னாயுதமாகப் பெற்றிருக்கிறார்கள்.
கவரிமான் ஜாதி வாழ்க்கைதான் கன்னித் தமிழ் வாழ்க்கை. இதைத்தான் நாம் குறளோவியத்தில் சிறப்பான எண்ணமாகக் காணுகின்றோம்.
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்"
உலகில் எந்தக் கவிஞனும் சொல்லாத தன்மான வரிகள் இவை.
(போர்முரசம், வீரர்கள் கூக்குரல்கள்)
ஆண்-1 : வெற்றி! வெற்றி! கணைக்கால் இரும்பொறை வீழ்ந்தான்.
ஆண்-2 : சேரன் பணிந்தான்! விற் கொடி வீழ்ந்தது.
ஆண்-1 : இறுமாப்பு படைத்த இருப் பொறை, செம்மாப்பு படைத்த செங்கணாரிடம் சரணடைந்தான்!
(இசை)
இரும் : (கலகலத்த சிரிப்பொலி) ஆ...சிறையிலடைத்து விட்டார்களாம் சிறையில்! இந்தக் கணைக்கால் இரும்பொறையைத்தானே - சிறையில் அடைக்க முடிந்தது! பொறையன் வீரத்தையேவா சிறையில் அடைத்துவிட்டார்கள்? செங்கணான் சூழ்ச்சியில் வென்று விட்டான்! இந்த வீழ்ச்சி ஒரு வீழ்ச்சி யாகுமா? இந்த வெற்றிதான் ஒரு வெற்றியாகுமா?
கு. 1 : டேய், பார்த்தாயாடா! கூண்டில் அடைப்பட்டும் சிங்கம் கர்ஜிக்கிறதை!
கு. 2 : நகத்தை நறுக்கியும் கூர் மழுங்கலைன்னு ஐயா கூப்பாடு போடறாரு! '
கு. 3 : அப்படியெல்லாம் சொல்லாதடா! நம்ம இரும்பொறை மானஸ்தன். வீரத்தை நியாயத்தில் வைத்துப் பார்க்கிறாரு! போர்க்களத்திலே வந்த பிறகு ரத்தம் சிந்தறது தப்புன்னு பேசற கதை தான்!
கு.2 : இதுலே என்னடா, மானஸ்தன் வந்து வாழுது! பொல்லாத மானஸ்தன்.
(இசை)
இரும் ! தண்ணீர், தண்ணீர்! நாவு வறண்டுவிட்டது! தண்ணீர் கொடுங்கள்.
கு.1 : பார்த்தாயடா! மானஸ்தன் தண்ணீர் கேட்கறார்!
கு.3 : இந்தாங்க! அரைக்குவளைத் தண்ணீர்!
இரும் : வேண்டாம்; சோழநாட்டுச் சிறையில் காவிரி நீர் குடிப்பதைவிட, இந்தச் சேரன் மானத்தோடு மாள்வதே நலம். எடுத்துச் செல்லுங்கள்.
கு.2 : மானத்தைப் பார்த்தியாடா! அடம் பிடிக்குது.
(சிறு சலசலப்பு)
கு.1: காவிரிச் செல்வர்- கழுமலப்போரில் கணைக்கால் இரும்பொறையை வெற்றிகண்ட காவலர்-எழுபது கோயில்களை எடுத்த ஏந்தல் சோழ மாமன்னர் செங்கணான் வருகிறார், பராக்! பராக்!
(இசை)
பின் : சோழன் செங்கணான், சிறையில் அடைபட்ட கணைக்கால் இரும்பொறையைக் காணுகின்றான். மானத்தோடு உயிர்நீத்த நிலையை ஓர் ஓலையில் எழுதி வைத்துவிட்டு மாண்ட நிலை தண்ணீருக்கு உரியது மட்டுமல்ல; அது கண்ணீருக்கும் உரியது தான்! நடந்ததைக் கேள்விப்பட்ட செங்கணான் தம் வாயால் அந்தக் குறளைச் சொல்லுகிறான்.
செங் : “மயிர்நீப்கின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" கணைக்கால் இரும்பொறை மானத்தின் இலக்கியம் இல்லை; இலக்கணம் தான்!
(இசை )
பின் : இல்வாழ்க்கைக்குத் தேவையானது முதலில் மனைவி! அடுத்தது மானம்! மூன்றாவது வரவுக்கு ஏற்ற செலவு! என்னதான் அபரிமிதமான வருவாய் வந்த போதிலும், அதற்கேற்பச் செலவு செய்து வாழ்க்கையைச் செப்பனிட மறந்தால்
அச்சாணி முறிந்து அடியோடு குடைசாய நேரிடும். ஏதோ சிறுகச் சிறுக ஆகும் செலவை நோக்கி, இது தானே இதுதானே என்று நாம் ஏனோ தானோ என்றிருந்துவிடக்கூடாது. அதுவே சுமையாகி நம் வாழ்வின் அச்சாணியை முறித்துவிடும். குறளாசானும் இதனை மெல்லிதான ஒரு கருத்தில் இழையோட்டிக் காட்டுகிறார். மயிலிறகு போன்ற அழகை வைத்து அங்கே ஆபத்தையும் காட்டுகிறார்.
பெண் : “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சாலமிகுத்துப் பெயின்'' மயிற்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுதி யாக ஏற்றினால் அம்மயிற்பீலி ஏற்றிய சகடமும் அச்சும் முறியும்.
(இசை)
(தமுக்கு ஓசை)
கு.4 : என்னப்பா இது... அமீனா புகுந்துவிட்டான்.
கு.5: என்னிக்கோ ஆமை புருந்துவிட்டது. இன்னிக்கு அமீனா புகுந்துவிட்டான்.
கு.4: ஆமை புகுந்துவிட்டதாவது?—
கு.5: வரவுக்கு மீறிய செலவு செய்யற பண்புதான் ஆமைக்குச் சமானம்னு சொன்னேன்.
கு.4: ஓகோ! ஆமாம். ஏதோ ஆயிரம் ரூபாய் சம்பாதனை- அப்பா சேர்த்து வைத்த சொத்து சுகம் இருக்குன்னு தலைகால் தெரியாமல் ஆடினான். இப்போ அமீனா மிஞ்சின ஒரு வீட்டையும் ஏலத் துக்குக் கொண்டுவந்துட்டான்! துரை காய்கறி
பதார்த்தம் வாங்கி வரப்பக்கூட டாக்ஸிதான்!
கு.1: பிறத்தியார் மெச்சிக்க வாழற எவனுடைய கதையும் அமீனா கிளைமாக்ஸ்லே தான் முடியும். வரவுக்கு ஏத்த செலவு இருக்கணும்; விரலுக்கேத்த வீக்கம் இருக்கணும்.
(இசை)
பெண்.4 : டீ...பங்கஜம்! பார்த்தியோ , அந்த அலமு பண்ண ஆர்ப்பாட்டத்துக்குக் கைமேல பலன்!
பெண்-5: வேண்டியது தான்! தெருவிலே ஒரு புடவைக் காரன் போகக்கூடாது. தவணைமுறை என்று சொல்லிட்டா போதும். ரகத்துக்கு ஒரு சேலை தான்! நிறத்துக்கு ஒரு ஜாக்கெட்டு தான்.
பெண்-4 : சொந்த நகை போய் கவரிங்காச்சு. இப்போது அதுவும் போயாச்சு. சம்பாதிக்கிறது காப்பணம்; செலவழிக்கிறது முக்காப்பணம்னா இந்தக் கதிதான்.
பெண்-5 : பஞ்சு தானேன்னு அளவுக்கு மீறி வண்டியிலே ஏத்தினா, இரும்பால ஆன அச்சாணியும் முறியத் தானே செய்யும்!
பெண்-4 : நறுக்குன்னு சொன்னாலும் நல்லாச் சொன் னேடி!
(இருவரும் சிரித்தல்)
ஒரு பையன் : (பாடம் படிக்கிறான்)
- “ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”
பெண்-5 : கேட்டாயா என் பையன் படிச்சதை! பெரிய வங்களானப்புறம் இந்தச் சிக்கனபுத்தி தானா வராதுன்னுதான் நாலாங் கிளாசிலேயே இந்தப் பாட்டைப் படிக்கச் சொல்லிடராங்க.
பெண் : "ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை”
பின் : அவரவர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிருப்பினும் போகின்ற நெறியளவு அதைக் காட்டிலும் அதிகமாகா தாயின் அதனால் கேடில்லை.
பின் : உண்மையான மகிழ்ச்சி என்பது உள்ளத்தில் நமக்குள்ளே முதலில் ஏற்படுவதாகும். அதை அடைய நல்ல மனைவி, மான உணர்ச்சி, சிக்கன அறிவு முதலியன துணைபுரிகின்றன. இதைத்தான் திருவள்ளுவர்,
பெண் :
- "மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை''
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்''
"ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகா அகலாக் கடை'"
இல்வாழ்வானுக்கு இன்ப வாழ்வு வேண்டும். இன்ப வாழ்வு உண்மையான வாழ்வாதல் வேண்டும்; போலி வாழ்வாகக் கூடாது. அதற்கென வையத்துள் வாழ்வாங்கு வாழ வள்ளுவர் பெருமான் வகுத்துச் சென்ற நெறிகளே இவைகள்.
--------------
ஆசிரியர்: சி.பாலசுப்பிரமணியன்
தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்த ச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபு மும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங் கள். பைந்தமிழ் வளர்க் கும் பச்சையப்பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ.ஆனர்சு. அங்கு முதல் வகுப்பில் தேறிய முதல்வர், 'குறுந்தொகை பற்றிய ஆய்வுரைக்கு 1963-ல் எம்.லிட்., பட்டமும், சேர நாட்டு செந்தமிழ் இலக்கியங்கள்' பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள், நல்ல நடை கொண்ட இந்த நாகரீகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாள - ராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னால் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர், தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாவார்.
முப்பது நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருத் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணி கலன், சங்க இலக்கியம் சில் பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். 'சங்ககால மகளிர் நிலை' பற்றிய ஆராய்ச்சி. "இலக்கிய அணிகள்' என்ற நூல் தமிழக அரசின் இரண் டாயிரம் உரூபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் 'வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள் : புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற்புலவர் (தமிழ் நாடு நல்வழி நிலையம்) சங்க நூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்) –
பெருந்தகை மு.வ.வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!
சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுபகு!
--மா.செ.
------------
கருத்துகள்
கருத்துரையிடுக