ஹரிச்சந்திரா
நாடகங்கள்
Backஹரிச்சந்திரா / நாடகம்
பம்மல் சம்பந்த முதலியார்
Source:
ஹரிச்சந்திரன்
இஃது ப. சம்பந்த முதலியார், பிஏ, பிஎல், அவர்களால் இயற்றப்பட்டது.
முதல் பதிப்பு.
சென்னை. : டௌடன் கம்பெனியாரால் அச்சிடப்பட்டது.
1918. காபிரைட் விலை ரூபா 1
------------------------
இந்த நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்ற தமிழ் புஸ்தகங்கள்:-
"லீலாவதி சுலோசனை", "கள்வர் தலைவன்", இரண்டு நண்பர்கள்",
"மனோஹரன்", சத்ருஜித்", சாரங்கதரன்",
யயாதி", "காலவரிஷி", "வேதாளஉலகம்",
அமலாதித்யன்", மார்க்கண்டேயர்", "ரத்னாவளி",
"பேயல்ல பெண்மணியே", "பொன்விலங்குகள்", மெய்க்காதல்",
"மகபதி", நற்குலதெய்வம்", "விரும்பியவிதமே ",
"காதலர் கண்கள்", வாணீபுர வணிகன்", "புத்த அவதாரம்",
"சிறுத்தொண்டர்", "சிம்ஹளநாதன்", "ரஜபுத்ரவீரன்",
"புஷ்பவல்லி", "விஜயரங்கம்", "பிரஹசனங்கள்",
"முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்", "ஊர்வசியின் சாபம்", "கீதமஞ்சரி", முதலியன.
-----------------------------------------------------------
Dedication
Inscribed to the
beloved memory of my parents
P. Vijayaranga Mudaliar and P. Manickavelu Ammal.
----------
ஸ்ரீக. சுப்பிரமணிய ஐயர், பிஏ, அவர்களின் அன்பளிப்பு.

Preface
Harishchandra is an Indian Ideal. His name is a household word right through the length and breadth of this country. The drama of his story, is probably one of the earliest extant in this Presidency at least. Many versions of the drama have been published hitherto. So, an explanation is necessary, as to why I have added one more,to the already long list.
I published an English version of the drama more than twenty years ago. I venture to think that it has been popular, for a third Edition has been called for. From that time, there have been persistent demands on me, that I should bring out a Tamil version of same. Hence I thought it my duty to supply the demand. Moreover, I find that all the existing versions are too big to be acted within the space of three to four hours. A version of the ever popular drama, which could be acted within that time without being cut, which I thought be welcome to the stage going public.
Persons desirous of staging my version of Harischandra must take my previous permission. I take this opportunity of warning all societies from staging any drama of mine without my formal permission.
I beg to offer a small reward, to any one who proves to me that any person has infringed my copyright in any of my dramas.
Pammal lodge MADRAS The Author 26th August 1918.
-----------------------------------------------------------
நாடக பாத்திரங்கள்
கதை நிகழிடம்:- அயோத்தியிலும் காசியிலும் அடுத்த வனப் பிரதேசத்திலும்.

இடம் - தேவேந்திரன் சபை
தேவேந்திரன் சிம்ஹாசனத்தில் வீற்றிருக்க, மற்ற திக்பாலர்கள் ஜெயந்தன் முதலியவர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர். விஸ்வாமித்திரர்,நாரதர் முதலிய ரிக்ஷிகள் ஒரு பக்கம் வீற்றிருக்கின்றனர். அப்ஸர ஸ்த்ரீகள் சங்கீத கேளிக்கை செய்கின்றனர்.
வாயிற்காப்போன். பராக்!தேவதேவனே!தங்களைப் பார்ப்பதற்காக வசிக்ஷ்ட மஹரிக்ஷி வருகிறார்.
தே. ஆயின் நர்த்தனம் நிற்கட்டும்;ஜெயந்தா,இம் மாதர்கள் மன முவக்கும்படி
பரிசளிப்பாய்.
ஜே. அப்படியே. வசிக்ஷ்டர் வருகிறார்.
தே. (எழுந்திருந்து) வசிக்ஷ்டப் பிரம்மரிக்ஷி வருக!வருக! (விஸ்வாமித்திரர் தவிர
மற்றவர்களெல்லம் எழுந்திருக்கின்றனர். ) வ. (ஆசீர்வதித்து) தேவேந்திரனே,க்ஷேமந்தானோ?
தே. தங்களுடைய கிருபகடாட்சத்தால். வீற்றிருக்கவேண்டும் இவ்வாசனத்தில்.
வ. (உட்கார்ந்து) நீயும் உட்காருவாய். ரிக்ஷிகளே,தேவர்களே, உட்காருவீர்களாக.
தே. மஹரிக்ஷி,இச் சுதர்மையானது தங்கள் பாதச்சுவடு பெற்று நெடுங்காலமாயது.
இதற்குக் காரணம் யாதோ?நான் அறிந்தும் அறியாமலும் ஏதேனும்
தவறிழைத்தேனோ? அங்ஙனம் ஏதேனு மிருப்பின் அடியேனுக்குடனே
அருளவேண்டும்.
வ. தேவேந்திரனே,அங்ஙன மொன்றுமில்லை. ஒரு முக்கியமான காரியமாக
பூலோகம் போகவேண்டி யிருந்தது. அவ்விடம் கொஞ்சம் காலதாமத மாச்சுது.
தே. என்ன முக்கியமான காரியம் என்று வினவலாமோ?
வ. சொல்லத் தடையில்லை. பூவுலகில் அயோத்தியில், அறநெறி வழுவாது அரசு
செலுத்தும் ஹரிச்சந்திரனெனும் எனது அன்புமிகும் சிக்ஷ்யனுக்கு சீக்கிரத்தில்
பூர்வகர்ம வசத்தால் பெருங்கெடுதி நேரிடப்போகிறதென ஞான திருக்ஷ்டியாற்
கண்டவனாய், அதைச் சமனம் செய்யும் பொருட்டும் அவன் மேற்கொண்ட
சத்ய விரதம் அழியாமலிருக்கும் பொருட்டும், ஓர் யாகம் இயற்றவேண்டியதா
யிருந்தது. அதனால்தான் சிலகாலம் அவ்விடம் தங்கவேண்டி வந்தது.
தே. மஹரிக்ஷி,தாங்கள் கூறியதில் சத்யவிரதம் பூண்டான் என்று கூறினீர்கள்.
அது இன்னதென்று அடியேனுக்குத் தெரியவில்லை. சற்று விளங்கச் சொல்ல
வேண்டும்.
வ. கேளாய் தேவேந்திரனே,சத்ய விரதம் என்பது மிகவும் மகத்தான விரதம். அதை
அணுவளவேனும் பங்கமின்றி அனுக்ஷ்டிப்பது சத்யலோக வாசிகளுக்கும்
மிகவும் கடினமென்றால்,கேவலம் மண்ணுலகில் வசிப்பவர்கள் அதை
மேற்கொள்ளல் எவ்வளவு கடினம் என்று நீயே யோசிக்கலாம். சத்ய விரதம்
என்றால் பொய்யாமையைக் கடைப்பிடித்தல், கூறிய வாய்மொழியினின்றும்
அணுவளவும் குன்றாமை;என்ன இடுக்கண் நேரிட்ட போதிலும்,எப்படிப்பட்ட
ஹீனஸ்திதியை அடைவதாயினும், சொல்லிய சொல் தவறாமை. இக் கஷ்டமான
விரதத்தைக் கடைப்பிடித் தொழுகுகிறான் எனது சிக்ஷ்யனான ஹரிச்சந்திரன்.
வி. அந்த விரதத்தினின்றும் தவறமாட்டானோ அந்த ஹரிச்சந்திரன்?
வ. யார் கேட்டது அக் கேள்வி? [திரும்பிப் பார்த்து] ஓ! தாங்களா?வாரீர்
விஸ்வாமித்திரரே!-நான் உம்மைப் பார்க்கவில்லை- அவ் விரதத்தினின்றும்
எனது சிக்ஷ்யன் தவறமாட்டான் என எண்ணுகிறேன்.
வி. தவறினாலோ?
வ. இவ்வீரேழ் புவனங்களும் தத்தம் நிலை தவறும்.
வி. உம்முடைய சிக்ஷ்யனுடைய ஆற்றலில் அவ்வளவு நம்பிக்கை யுண்டா? ஆயின்
அந்த சத்ய விரதத்தினின்றும் அவனைத் தவறும்படிச் செய்கிறேன்,
பார்க்கிறீர்களா?
வ. உம்மால் முடியாதென்று உறுதியாய் நம்புகிறேன்.
வி. என்ன சொன்னீர் வசிக்ஷ்டரே? என்னால் முடியாத காரியம் ஒன்றுளதோ இவ்
வீரேழ் புவனங்களிலும்?அந்த ஹரிச்சந்திரன் தந்தைக்காக வேறு சுவர்க்கம்
உண்டாக்கினவன் நான் என்பதை மறந்தீரோ?அன்று இந்திரம் கரிக்ஷ்யாமி என்று
ஆரம்பித்த நான்,இந்த தேவராஜனது வேண்டுகோளுக் கிணங்கியன்றோ
விடுத்தேன், என்பது ஞாபக மில்லையோ?
வ. நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆயினும் அவைகளை யெல்லாம் செய்ய
ஆற்றலுடையீர்,ஆயினும் ஹரிச்சந்திரனை சத்ய விரதத்தினின்றும் தவறச்
செய்ய உமக்குச் சக்தியில்லையென்றே நம்புகிறேன்.
வி. ஆனால் வசிக்ஷ்டரே,தேவர்கள் சபையறிய இதோ ஒரு வார்த்தை
சொல்லுகிறேன். அந்த உமது பிரிய சிக்ஷ்யனாகிய ஹரிச்சந்திரனை அந்த சத்திய
விரதத்தினின்றும் தவறும்படிச் செய்யாவிட்டால் என் பெயர் விஸ்வாமித்திரனன்று!
இப்பொழுது என்ன சொல்லுகிறீர்?
வ. அப்படிச் செய்ய உம்மால் முடியுமாயின் என் பெயர் வசிக்ஷ்டர் அன்று, என்று
நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
நா. அடடா!என்ன வசிக்ஷ்டரே! விஸ்வாமித்திரரே! இதில் என்ன பிரயோசனம்?
உங்களில் யார் தோற்றபோதிலும் உங்கள் பெயர் மாறிப்போமா என்ன?
ஆகவே, தோற்பவர் இன்னது செய்கிறது என்று எதாவது பந்தயம் கட்டினால்,
உங்களுக்கும் ஒழுங்கா யிருக்கும், பார்ப்பவர்களுக்கும் அழகாயிருக்கும்.
வி. அப்படியே தேவராஜனே ரிக்ஷிகளே! தேவர்களே கேட்பீராக! வசிக்ஷ்டரே
நீரும் கேளும். அந்த ஹரிச்சந்திரனை சத்திய விரதத்தினின்றும் தவறும்படிச்
செய்யாவிட்டால், என் தவத்திற் பாதி அவனுக்கு நான் தாரை வார்த்துக்
கொடுக்கிறேன், இது சத்தியம்!
வ. அது என்னவோ சத்தியம். அப்படித்தான் நடக்கப் போகிறது. - ஆயினும்
தேவராஜனே! ரிக்ஷிகளே! தேவர்களே!என் வார்த்தையையும் கேளும். எனது
சிக்ஷ்யனாகிய ஹரிச்சந்திரன் அந்த சத்திய விரதத்தி னின்றும் தவறுவானாயின்,
கழுதைமீ தேறி,கபால மொன்றைக் கையி லேந்தி, ஊரிடு பிட்சை யுண்டு
உலகத்தை மும்முறை வலம் வருகிறேன்.
வி. சரி!வசிக்ஷ்டரே,எப்பொழுது பூப் பிரதட்சிணத்திற்குப் புறப்படப் போகிறீர்?
வ. உம்முடைய பாதி தவத்தை எனது சிக்ஷ்யன் பெற்றபின், உலகத்தவர் எல்லாம்
அவனது மகிமையை யறியும்படி அவனுடன் உலகத்தைப் பிரதட்சிணம் செய்யப்
புறப் படலாமா என்று யோசிக்கிறேன்.
வி. பார்ப்போம் அதை!
நா. அதிருக்கட்டும் விஸ்வாமித்திரரே,இந்த காலத்திற்குள்ளாக என் சபதத்தை
நிறைவேற்றுகிறேன்,என்று ஒரு கால நிர்ணயம் சொல்லவில்லையே நீர்?
வி. அதற்கென்ன?இன்னும் மானிடவருக்ஷம் ஒன்றிற்குள்ளாக, என்று
வைத்துக்கொள்ளும்.
நா. அதற்குள்ளாக அம் மன்னவனை ஒரு பொய் யுரைக்கும்படிச் செய்துவிடுவீரா?
வி. ஒன்றென்ன, ஆயிரம் கணக்காக-இனி நான் தாமதிக்கலாகாது. இதோ
புறப்படுகிறேன். தேவராஜனே, நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.
வசிக்ஷ்டரே, நான் இங்ஙனம் செய்வது அம் மன்னன்மீது எனக்குக்
கோபத்தினா லல்ல, உம்முடைய கர்வத்தை யடக்கும் பொருட்டே!
[விரைந்து போகிறார். ]
வ. யாருடைய கர்வம் அடங்குகிறதோ! பார்ப்போம்.
முற்கூறு முடிகிறது.
------------------------
முதல் காட்சி
இடம் - விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம்.
விஸ்வாமித்திரர் யோசித்த வண்ணம் வருகிறார்.
சொல்லுதல் யார்க்கும் எளிதாம் சொல்லிய வண்ணம் செய்தல் அரிதாம், என்கிற
பழமொழியின் உண்மையை இத்தனை வயதாகியும் இன்னும் நான் கற்றிலனே! இந்திரன் சபையின் முன்பாக என்ன மூடத்தனமாய் நான் சபதம் செய்துவிட்டேன்!எனது ஜன்மத்வேக்ஷியாகிய வசிக்ஷ்டர் ஆய்ந்தோய்ந்து பாராது அவ்வாறு கூறியிருக்க மாட்டார். அவசரப்பட்டு கூறிவிட்டு பிறகு அல்லற் படுபவன் நானே! உடன்பிறந்த குணம் உயிர் உள்ளளவும் என்பதுபோல், க்ஷத்ரியர்களுக்குரிய முன்கோபம் இன்னும் என்னை விட்டகலவில்லை. என்னதான் பிரம்ம ரிக்ஷியான போதிலும், அந்த சாந்தம்,இன்னும் எனக்கு வரவில்லை. அந்த ஹரிச்சந்திர மன்னவனுடைய அத்யாஸ்சரியமான குணங்களைக் கேட்கக் கேட்க,நான் எடுத்துக் கொண்ட வேலை ஈடேறா தென்றே எண்ணும்படிச் செய்கிறது. ஆயினும் அதைப்பற்றி இப்பொழுது ஏங்கி ஆவதென்ன?ஒரு முறை சபதம் செய்தபின்,பின் வாங்குவதா? நானோ,விஸ்வாமித்திரனோ,பின் வாங்குவது? இதுவரையில் நான் எடுத்துக்கொண்ட வேலையினின்றும்-எப்படிப்பட்ட அசாத்திய மானதாயிருந்த போதிலும்- எதில் பின் வாங்கினேன்? தீர்மானித்த கர்மாவினின்றும் திரும்பினான் கௌசிகன், என்னும் பெயர் எனக்கு வேண்டாம். ஜெயமோ அபஜெயமோ எடுத்த காரியத்தை இடையில் கைவிட்டான் காதிமைந்தன், என்று இவ்வுலகம் என்னை இகழ இடங்கொடேன். இந்த கீர்த்தியாவது எனக்கிருக்கட்டும். -ஆயினும் இப்பொழுது நான் என்ன செய்வது?ஹரிச்சந்திரனை சத்தியம் பிறழச் செய்ய வேண்டும். இது ஸ்வலபமான வேலை யன்று;அவன் தந்தைக்காக இன்னொரு ஸ்வர்க்கத்தை நான் ஏற்படுத்தியதும் இதைவிட சுலபமான காரியமாகும். ஆகவே நன்றா யாராய்ந்தே நான் நடக்க வேண்டிய மார்க்கத்தைத் தீர்மானிக்க வேண்டும்- எங்ஙனமாவது ஒரு அசத்தியமாவது அவன் வாயினின்றும் வரும் மார்க்கத்தை நாடவேண்டும்- இதற்கு என்ன யுக்தி செய்வது?எங்ஙனம் ஆரம்பிப்பது? ஆரம்பம் சரியாயிருந்தால்தான் அந்தத்தில் ஜெயம் கிடைக்கும். -
நாரதர் வருகிறார்.
நா. நமோ நமஹ!விஸ்வாமித்திரரே!என்ன,இங்கா இருக்கின்றீர் இன்னும்?
ஹரிச்சந்திரனிடம் போய் இதற்குள்ளாக உம்முடைய சபதத்தை நிறைவேற்றி
விட்டிருப்பீர் என்றல்லவோ எண்ணினேன் நான்.
வி. நாரதரே,இப்பொழுது பரிஹாசத்திற்குக் காலமல்ல.
நா. ஓஹோ!யோசிப்பதற்குக் காலமோ?ஒரு காரியத்தைக் கடைப்பிடித்தபின்
கைவிடலாகுமோ?சந்தேகத்திற்கிடங் கொடுக்கலாகுமோ? சம்சயாத்மா- வினஸ்யதி,
என்பது உமக்குத் தெரியாதோ? அப்படி உமக்கு சந்தேகமிருந்தால் முயற்சி
செய்வானேன்?முதலிலேயே இது என்னால் முடியாது,என்று வசிக்ஷ்டர்
முன்னிலையிற் கூறிவிட்டு, அவரே வென்றதாக ஒப்புக்- கொள்ளுகிறதுதானே?
வி. என்ன?நாரதரே! நான் யாரென்பதை மறந்து பேசுகிறீரோ? நான்
விஸ்வாமித்திரன்! நானாவது தோற்றதாக ஒப்புக்கொள்ளுவதாவது? அதுவும்
வசிக்ஷ்டர் முன்னிலையில்?நாரதரே,அந்த வார்த்தை தவிர வேறு ஏதாவது பேசும்-
அதிருக்கட்டும் நாரதரே,நீர் இப்படிப்பட்ட விஷயங்களிலெல்லாம் மிக்க
கூர்மையான அறிவுடையவர், ஆகவே அந்த ஹரிச்சந்திரன் ஏதாவது ஒரு பொய்
பேசும்படிச்செய்ய ஏற்றதான மார்க்கம் எது என்பதை எனக்கு எடுத்துறையும்.
நா. அடடா!ஆயிரம் இலக்கமெல்லாம் போய் அரை இலக்கத்திற்கு வந்தாற்
போலிருக்கிறதே!
வி. விளையாட வேண்டாம். விஷயத்திற்கு வாரும்- எனக்கிந்த உபகாரம்
செய்யமாட்டீரா?
நா. உமக்கு நான் உண்மையில் உபகாரம் செய்வதானால் இது கூடாக்காரியம்.
உடனே கைவிடுமிதை என்று உமக்கு உபதேசம் செய்யவேண்டும் நான்.
கேளும் என் வார்த்தையை,அந்த ஹரிச்சந்திரன் வாயினின்றும் அசத்தியம்
வரும்படியாகச் செய்ய முயல்வதைவிட, ஆர்கலியின் அலைகளை அமர்த்திருக்கச்
செய்யலாம். ஆதித்யனை ஆகாய மார்க்கத்தினின்றும் அகன்று போகச்
செய்யலாம்,காலச்சக்கரத்தைக் கையால் பிடித்து நிலை நிறுத்தலாம்,கருதரிய எக்
கர்மத்தையும் செய்து முடிக்கலாம், அம்மன்னவன் வாயினின்றும் அணுவளவு
அசத்தியம் வரச்செய்வது, அசாத்தியத்திலும் அசாத்தியத்தியமாம்.
விவேகியைப்போல் இவ்வேலையை இதனுடன் விட்டுவிடும். கக்ஷ்டமெல்லாம்
பட்டு கடைசியில் முடியாது என்று ஒப்புக் கொள்வதைவிட, அக் கஷ்டமெல்லாம்
இல்லாமலே இப்பொழுதே தோற்றதாக ஏற்றுக்கொள்ளும்.
வி. நானாவது தோற்றதாக ஏற்றுக்கொள்வதாவது? அது முடியாத காரியம். நீர்
உறைத்ததெல்லாம் உண்மையா யிருப்பினும், இனிமுன் வைத்த காலை நான்
பின் வாங்க முடியாது. ஆரம்பித்தபின் அனைத்தும் போவதாயினும் அதை
முடிப்பதென்னும் முயற்சியினின்றும் பின் வாங்குபவன் நான் அல்ல!
நா. ஆம்!ஆம்!நீர் க்ஷத்ரியராகப் பிறந்தீர் என்பதை மறந்தேன். உம்முடன் பிறந்த
குணம் உம்மை விட்டகலுமா என்ன!
வி. நாரதரே,இவ்வளவுதானா நீர் எனக்குச் செய்யத்தக்க உபகாரம்? அம்மன்னன்
வாக்கினின்றும் ஒரு அசத்திய வார்த்தை வரும்படியான மார்க்கம் எனக்கு ஒன்று
எடுத்துறைக்கமாட்டீரா? என் மீது பிரியமிருக்குமாயின் ஏதாவது ஒரு சூழ்ச்சி
செய்யும்.
நா. இதோ பார்க்கிறேன்-ஆம்-ஒரு யோசனை தோற்றுகிறது. அவனது
அரண்மனைக்கேகி, ஓர் யாகம் செய்ய வேண்டும், அதற்குப் பொன்
வேண்டுமென்று கேளும்; தாதாவாகிய அவன் உமது வேண்டுகோளுக் –
கிசைவான்; அவன் இசைந்தவுடன், அவன் இல்லை என்று சொல்லும் படியான
அவ்வளவு பெரும் நிதியைக்கேளும், அப்படி அந்த கஷ்டநிலைக் கவனைக்
கொண்டுவந்த பிறகு, ஏதாவது முயற்சி செய்து அவன் அசத்தியம் புகலும்படிச்
செய்யலாம்- அது முடியுமான காரியமனால். இந்த மார்க்கத்தை உமக்கு நான்
சொன்னபோதிலும்-அதனுடன் இந்த வார்த்தையையும் சொல்லுகிறேன்- உமது
சபதம் இதனால் நிறைவேறாதென்று; ஆகவே முயன்று பார்ப்பதானால் பாரும்.
வி. ஆம்-இது நல்ல சூழ்ச்சிதான்-நாரதரே, இந்த உபகாரத்தை என்றும் மறவேன்,
இனி நீர் விடை பெற்றுக்கொள்ளலாம்.
நா. அப்படியே செய்கிறேன். ஆயினும் நான் கூறியதை மறவாதீர்! இது
கைகூடாத காரியம்! [போகிறார்]
வி. காதி மைந்தன் மனம் வைத்தால் கைகூடாத காரியம் என்று ஒன்றுண்டோ?
நாரதர் கூறியது நல்ல யுக்திதான்-ஆம் ஆம் இதுதான் யோசனை!- பிறகு
இதைக் கொண்டு அவனை என் வலையிற் சிக்கச் செய்து, அவன் வாயினின்றும்
அசத்தியத்தை வரவழைத்து விடலாம். நான் உடனே ஹரிச்சந்திரன் சபைக்
கேகவேண்டும். இனி ஒரு கணமும் விருதாவிற் கழிக்கலாகாது. இந்த நாரதர்
கலஹப் பிரியர்,எனக்கு முன்பாகப்போய் அவ்விடம் ஏதாவது கலகம் செய்தாலும்
செய்வார். நான் தாமதிக்கலாகாது. வசிஷ்டரே!நீர் தீர்த்த யாத்திரை புறப்பட
எல்லாம் சித்தம் செய்யும்! [விரைந்து போகிறார். ]
காட்சி முடிகிறது.
--------------------------------------
இரண்டாம் காட்சி
-அயோத்தியில் சந்திரமதியின் பள்ளியறை. சந்திரமதி சயனத்தின்மீது உறங்குகிறாள்.
அருகில் தேவதாசன் உறங்குகிறான். ஹரிச்சந்திரன் பக்கலில் மெல்ல உலாவிக் கொண்டிருக்கிறான்.
ஹ. எழுப்புவோமா சந்திரமதியை?-அருணோதயந்தான் (*)தவிர, இன்னும்
சூரியோதயமாகக் கால மிருக்கிறது. அயர்ந்து நித்திரை செய்கிறார்கள்
என்னாருயிர்க் காதலியும் அருமை மைந்தனும்; இப்பொழுதே இவர்களை
எழுப்பி நான் கண்ட கனவினை இவர்களுக்குக் கூறி, இவர்களைக் கவலைக்
குட்படுத்துவானேன் நான்? எனக்கு நேரிடும் இன்பத்திலும் துன்பத்திலும் சமபாக
முடையவளாதலால் என் மனைவியிடமிருந்து நான் இதை மறைத்துவைக்க
லாகாது. தானாக விழிக்கும் வரையில் தனியாக நான் பொறுக்கிறேன்.
அதுவரையில் இப் பலகணி யருகில் நின்று பாலசூரியர் உதிப்பதைக் கண்டு
உளம் மகிழ்கிறேன்-- அதோ! இப்பொழுதுதான் உதயகிரியின் உச்சியில்
உதயமாகிறார் எனது வம்சத்திற்கு ஆதி காரணமாகிய ஆதித்ய பகவான்! சூரிய
பகவானே உமது வம்சத்தி லுதித்தோரைச் சூழும் துன்பங்களை யெல்லாம்,
அந்தகார இருளை உமது ஆயிரம் கிரணங்களால் அகற்றுவதுபோல் அகற்ற
வேண்டியது உம்முடைய கடமையாகும். தபோமணி! நமஸ்கரிக்கின்றேன் நாயேன்
உம்பதம்!
[ நமஸ்கரிக்கின்றான். ]
உம்மைக்கண்ட பனிப்போல் எனக்குண்டாம் தீமைகளெல்லாம் பறந்தோடிப்
போமாக!
ச [உறக்கத்தில்] பிராணநாதா பிராணநாதா!
ஹ [அவளருகில் விரைந்து சென்று] என் கண்மணி சந்திரமதி! என்ன சமாசாரம்?
---ஓ! என் காதலியும் ஏதோ கனவு கண்டாற் போலிருக்கிறது!
---கண்ணே! கண்விழி! கண்விழி! கதிரவர் உதயமாயினார்!
[எழுப்புகிறான். ]
ச [கண் விழித்து] நாதா! கனவுதான்! கனவுதான்! கருணாநிதியே கடையோமைக்
காத்து ரட்சிப்பது தம்முடைய கடமையாகும்!
ஹ. கண்மணி, கவலைப்படாதே, நம்மைக் காத்திட கரத்தனிருக்கிறார். உன்
மனதைத் தேற்றிக்கொள். உன் உடல் ஏன் இவ்வாறு நடுக்கமுறுகிறது? நீயும்
கனவு கண்டனையா என்ன? என்ன கனவு? என்னிடம் சொல்.
ச பிராணநாதா! அகோரமான அக் கனவை எப்படி உரைப்பேன்! அதைக் கேட்பதும்
கர்ண கடூரமா யிருக்குமே உமக்கு! அதை நான் *உரைப்பதற்கும் என் நா
எழவில்லையே. அம்மட்டும் அது *நனவா யிராது கனவாயொழிந்ததே!
ஹ. சந்திரமதி, என் காதலியே, வீணான துயரத்திற் குட்பட்டு வெந்துயரிலாழாதே.
நீ கண்ட கனவைச் சொல் என்னிடம். ச. நாதா, ஆதித்யன்போல் தாம் தமது
அழகிய சிம்மாசனத்தில் வீற்றிருந்த பொழுது, கால சர்ப்பமொன்று தம்மைக்
கட்டிப் பிடித்து தம்மை அதினின்றும் கீழே தள்ளியதாகக் கனவு கண்டேன்
முதலில்; பிறகு அதன் உடலால் உம்மை நன்றாய்ச் சுற்றிக்கொள்ள, அதினின்றும்
விடுவித்துக் கொள்ள வகையறியாது பல துயரம்தாம் அனுபவிப்பதைப்
பார்த்ததாகக் கனவு கண்டேன்; கடைசியில் தாம் அக் கடும்பாம்பின் தலையை
நசுக்கிக் கொன்று அதன் கட்டினின்றும் விடுவித்துக் கொண்டதாகக் கனவு
கண்டேன். பிராணநாதா கனவிற்கண்ட பாம்பாயினும், அதைக் குறித்து
எண்ணும்போதெல்லாம் என் நெஞ்சம் பகீர் என்கிறதே.
ஹ. கடைத்தேறும் மார்க்கம் இருக்கிறது போலும்! – உமைபாகா! எல்லாம் உமது
பேரருளாகும்! கடையவர்களாகிய எம்மைக் காப்பது தம்முடைய கடமையன்றோ?
அளவற்ற தமது ஆற்றலுக்குமுன் அற்பர்களாகிய நாங்கள் எவ்வளவு? - தாம்
விட்டதே வழி!
ச. பிராணநாதா! என்ன தாம் யோசித்துக்கொண் டிருக்கிறீர்? இக் கனவு, இனி
உமக்கு நேரிடப்போகிற ஏதாவது கெடுதியைக் குறிக்கிறதென எண்ணுகிறீரா
என்ன?
ஹ. சந்திரமதி, உலகத்தில் நமக்கென்ன நேர்ந்தபோதிலும் உமைகேள்வரது
திருவுளமாகுமது என உறுதியாய் நம்பி யிருத்தல் வேண்டும். அவரன்றி
அகிலத்திலும் ஓர் அணுவும் அசையாது. ஆகவே யாதும் அவர் பாரமென்று
அவரது உள்ளத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டியது நமது கடன் - கண்மணி.
நானும் கண் விழிக்கு முன் கடுங் கனவொன்று கண்டேன். இருவரும் ஏக
காலத்தில் கடுமையாக கனவு கண்டது, நமக்கு நேரிடப் போகிற ஏதோ
கெடுதியைக் குறிக்கிறது போலும். ஆகவே அக் கண்டத்தினின்றும் கடவுள்
கைகொடுத்து நம்மைக் கரையேற்றும்படி பிரார்த்திப்போம்.
ச. பிராணநாதா! தாங்களும் கனவு கண்டீரா? அது இன்னதென்று அடியாள்
அறிய விரும்புகிறேன். நான் கண்டதைப்போல் அத்தனை கோரமானதா
யல்லா திருக்குமாக!
ஹ. அதுவும் கோரமானதே! கனவில் உன்னையன்றி இன்னும் இரண்டு
மனைவியர் எனக்கு இருந்தது போலும் கண்டேன். அவர்களுள் ஒருத்தி
குரூரமான ஓர் ராட்சசனால் என்னிடமிருந்து அபகரிக்கப்பட்டாள். கண்மணி,
நீயும் என்னை விட்டுப் பிரியும்படி நேர்ந்தது; மற்றொருத்தி மாத்திரம் என்னை
விட்டகலாதிருந்தாள். பிறகு நான் எண்ணுதற்குரிய இன்னலிற்பட்டு, கடைசியில்
மறுபடியும் உங்களிருவரையும் பெற்று நற்கதி யடைந்ததாகக் கனவு கண்டேன்.
ச. அந்தோ! பிராணநாதா! இக்கனவு இனி வரப்போகிறதைக் குறிக்கிறதோ?
ஹ. கண்மணி, எனது ராஜ்யத்தையு மிழந்து, உன்னையும் விட்டுப் பிரிந்து, பல
துன்பங்கள் நான் அனுபவிக்க வேண்டி வரும் போலிருக்கிறது; ஆயினும் எனது
சத்ய விரதத்தினின்றும் நான் பிறழேன். முடிவில் பரமேஸ்வரன் கருணையினால்
எனது ராஜ்யத்தையும் உன்னையும் பெறுவேன் என்றெண்ணுகிறேன். என்ன
இடுக்கணுற்றபோதிலும் இறுதியிலாவது இச் சுகத்தை நான் அடைவேனாக
அப் பரமன் அருளால்!
ச. அந்தோ! பிராணநாதா! உமது கனவு உண்மையாய் முடியுமாயின், விவாகமாகிய
பின் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாத நான், உம்மை விட்டு நான் எத்தனை
காலம் பிரிந்திருக்க வேண்டுமோ? உம்மைக் காணாது நான் இவ்வுலகில்
ஒருநாளேனும் உயிர் வாழ்வேனோ?
ஹ. கண்மணி,கவலைப்படாதே,கண்ணீரைத் துடைத்துக்கொள். கனவின்படி
நடந்தேறக் கடவுளின் இச்சையானாலும், கடைசியில் நாமிருவரும் ஒருங்கு
சேர்வோமல்லவா? அதை நினைந்து உன் மனதைத் தேற்றிக்கொள். அன்றியும்
இதில் நாம் முக்கியமாகச் சந்தோஷப்படவேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது.
என்ன கஷ்டத்திற்குட்பட்டபோதிலும், நாம் மேற்கொண்ட சத்ய விரததிற்கு பங்கம்
நேரிடாதல்லவா? பரமேஸ்வரன் நம்மீது அவ்வளவு அருள் புரிவதற்காக அவரது
பாதாரவிந்தத்தை அனுதினமும் நாம் போற்றவேண்டுமல்லவா?
ச. ஆம் ஆம்! பிராணநாதா, அவ்விரதம் நம்மை எப்படியும் ஈடேற்றும்.
தேவ. [கண் விழித்து எழுந்து] அண்ணா, அம்மா, நமஸ்காரம்.
[அவர்கள் பாதத்தில் நமஸ்கரிக்கிறான். ]
இருவரும். [எடுத்துக் கட்டியணைத்து] கண்ணே, எல்லாம் வல்ல கடவுள் என்றும்
உனக்கு இன்னருள் பாலிப்பாராக!
தேவ. அம்மா, என்ன முகம் வாடியிருக்கிறீர்கள்? அண்ணா - தாங்களும் என்ன
ஒருவாறா யிருக்கிறீர்கள்? - நான் அதிகமாகத் தூங்கிவிட்டேனா என்ன?
ச. கண்ணே, தேவதாசா, அப்படி யொன்றுமில்லை - பிராணநாதா, இதில்
எனக்கின்னொரு சந்தோக்ஷம். நாம் கண்ட கனவுகள் நமது மைந்தனுக்கு ஒரு
தீங்கையும் குறிக்காதிருக்கின்றனவே!
ஹ. பரமேஸ்வரன் கருணையினால் அங்ஙன மிருக்குமாக! சந்திரமதி, வா, நமது
காலைக் கடனை முடிப்போம். - இனி நேரிடப்போகிறதோ இல்லையோ, அதைக்
குறித்து இப்பொழுதே நாம் கவலைப்படுவானேன்? வரவேண்டியது வருங்கால்
வரட்டும், என்று நமது வாழ்நாட்களை நற்கர்மங்களில் உபயோகித்து, நம்மையும்
திர்ப்திசெய்து கொண்டு நமது பிரஜைகளுக்கும் திர்ப்தி கொடுக்கவேண்டியது நமது
கடமையாகும். [போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
--------------------
மூன்றாம் காட்சி.
இடம் - அயோத்தியில் ஹரிச்சந்திரனுடைய கொலுமண்டபம். ஹரிச்சந்திரன் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் இருபுடையிலும் இருக்கின்றனர். பரிவாரங்கள் சூழ்ந்து நிற்கின்றனர்.
ஹ. மந்திரி சத்யகீர்த்தி, தயையின்றிச் செங்கோல் நடத்துதல், தரணியின்மீது
கொடுங்கோ லரசு புரிவதாகும். அணிமுடி அணிந்த அரசர்க்கு இன்றியமையா
அருங்குணம் இத்தண்ணளியேயாகும். கருணையில்லா மன்னன்
காதகனேயாவான். ஆகவே, காம்போஜ மன்னனுக்கும் கலிங்கத்தரசனுக்கும்,
அவர்கள் செலுத்தவேண்டிய கப்பத்தில், அவர்கள் தேசங்கள் கருப்பினால்
பீடிக்கப்பட்டிருப்பதைக் கருதி, பாதி க்ஷமித்துவிட்டதாக, இத்தூதர்கள் மூலமாய்ச்
சேதி அனுப்பு.
சத். ஆக்கினைப்படியே சொல்லி யனுப்புகிறேன் - வானின்றிழியும் மழைக்கும்
காலவரம் பொன்றுண்டு, தம்முடைய கருணைக்கு அக்கால- வரையு மில்லை.
ஆகவே, அப்படிப்பட்ட அருட்பெருங்கடலாகிய தமக்கு நேற்றைத்தினம் கண்ட
கனவினால் ஒரு தீங்கும் நேரிடாவண்ணம் தெய்வம் காப்பாற்றுமாக! ஒரு கால்
நேரிடுவதாயினும் பரிதியைக் கண்ட பனிபோல் எளிதில் பறந்தோடிப்போகுமாக!
ஹ. அங்ஙனமே இருக்குமாக! ஆயினும் சத்யகீர்த்தி, எந்த இடுக்கண் வருவதாயினும்
வருக, என்று திடச்சித்தமாய் நாமிருந்து, நல்வழியிலேயே நடப்போமாயின்,
எப்படிப்பட்ட கஷ்டம் நேரிட்டபோதிலும், ஈசன் திருவுளம் அதுபோலும், என்று
அதைப் பொறுமையுடன் பொறுத்திட, ஆற்றல் நம்மை விட்டகலாது.
சத். ஆயினும் அண்ணலே, சத்திய மார்க்கத்தினின்றும் தவறாத, தர்ம சொரூபியராகிய
தம்மைப்போன்றவர்களுக்கு கஷ்டத்தை அனுப்புவாரா கடவுள்?
ஹ. சுக துக்கங்களைக் கடந்த சுத்த ஞானிகளும் பூர்வ கர்ம பலனை
அனுபவித்துத்தான் தீரவேண்டும்.
வாயிற் காப்போன். பாராக்! மன்னர் மன்னனே! விஸ்வாமித்திர முனிவர்
தம்மைக்காண வந்திருக்கிறார், வாயிலில் காத்து நிற்கிறார்.
ஹ. என்ன! விஸ்வாமித்திர மஹரிஷியா? சத்யகீர்த்தி, உடனே சென்று
மஹரிஷியைத்தக்க மரியாதையுடன் அழைத்துவா. [சத்யகீர்த்தி போகிறான். ]
ஒரு மந்திரி. [ஒரு புறமாக] இச்சமயம் விஸ்வாமித்திரர் நமது அரசன் அவையை
அணுகுவானேன்? ஏதேனும் காரியமின்றி வருபவரல்ல கௌசிகர்.
மற்றொரு மந்திரி [ஒரு புறமாக] உம்முடைய மனதில் சந்தேகம் உதிக்காத காலம் எது?
சத்யகீர்த்தி விஸ்வாமித்திரரை அழைத்து வருகிறார்.
ஹ. [அவர் பாதத்தில் நமஸ்கரித்து] விஸ்வாமித்திர மஹரிஷி! அடியேன் ஹரிச்சந்திரன்
நமஸ்கரிக்கின்றேன்.
வி. [ஆசீர்வதிக்கிறார்] திருசங்குவின் மைந்தா! ஹரிச்சந்திரா! எழுந்திரு,
சிரஞ்சீவோபவ! உனக்கு எல்லா மங்களமும் உண்டகுமாக!
ஹ. [எழுந்து அர்க்கியபாத்யாதிகளைக் கொடுத்து] ஸ்வாமின்,மஹரிஷி, இந்த
ஆசனத்தில் எழுந்தருளியிருக்கவேண்டும். இன்றைத்தினம் நான் எழுந்த வேளை
நல்ல வேளை தங்களுடைய சீர்தங்கிய பாதங்களிற் பணிந்து என்னைக்
கிரதார்த்தனாகச் செய்தது; தங்கள் பாததூளிபட்டு இவ்வரண்மனை புனிதமாயிற்று,
இந்நாடு நன்னாடாயிற்று.
வி. ஹரிச்சந்திரா, நீயும் உன்னாடும் க்ஷேமந்தானா?
ஹ. ஸ்வாமின், எம்பெருமான் அருளாலும் தங்களைப் போன்ற தவ
சிரேஷ்டர்களுடைய கடாட்சத்தினாலும் க்ஷேமமாயிருக்கிறோம் – முனிபுங்கவரே,
தாங்கள் இவ்வளவு தூரம் நாயேனை நாடி வந்ததெக்- காரணமோ நவில
வேண்டும். ஆக்கினையை நிறைவேற்ற அடியேன் காத்திருக்கிறேன்.
வி. வேறு விசேஷ மொன்று மில்லை ஹரிச்சந்திரா, நான் ஒரு யாகம் இயற்ற
எண்ணியிருக்கிறேன், அதற்கு உன்னுடைய உதவி கொஞ்சம்
வேண்டியிருக்கிறது. அதற்காகவே இவ்விடம் வந்தேன்.
ஹ. ஸ்வாமி, அதைக் கேள்வியுற்று ஆநந்த பரவசனானேன்! அடியேனை ஒரு
பொருளாக வெண்ணித் தாம் இங்கடைந்தது எனது முன்னோர்கள் செய்த
பூஜாபலனே என்று நினைக்கிறேன். மஹரிஷி, தாம் இயற்ற எண்ணிய
யாகத்திற்கு என்னால் எவ்விதத்தில் உதவி புரியக்கூடும் என்று தெரிவித்தால்,
உடனே என்னாலியன்ற அளவு தம்முடைய ஆக்கினையை சிரசாவஹித்து அதை
ஈடேற்றச் சித்தமா யிருக்கிறேன்.
வி. வேறு உதவி வேண்டியதில்லை. இந்த யாகத்தை ஈடேற்றுவதற்குக் கொஞ்சம்
திரவியம் வேண்டியிருக்கிறது. அதைக்கொடுப்பாயா நீ?
ஹ. தங்களுடைய ஆசீர்வாதத்தால் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்,
அதன்பொருட்டு என் ராஜ்யத்தை விற்கவேண்டி வரினும் அங்ஙனமே செய்யச்
சித்தமாயிருக்கிறேன் மஹரிஷி. தாங்கள் வேண்டிய பொருள் எவ்வளவோ
தமியேனுக் குறைத்திடவேண்டும்.
வி. உனது தேசத்திலுள்ள உயர்ந்த யானை யொன்றின் மீதேறி, வல்லான் ஒருவன்
வலுக்கொண் டெய்யும் மாணிக்கம் செல்லும் உயரமளவு பொன் எனக்கு
வேண்டியிருக்கிறது.
ஹ. ஸ்வாமி, இவ்வளவுதானே? - இதோ கொடுக்கின்றேன். சத்யகீர்த்தி, நம்முடைய
பொக்கசங்களில் ஒன்றைத் திறந்து நமது மஹரிஷி குறித்த பொன்னை அவரிடம்
உடனே ஒப்பிப்பாய்.
வி. [ஒரு புறமாக] என்ன ஆச்சர்யம்! இத்தனை ஐஸ்வர்யம் இவனிடம் இருக்கிறதா?
ஆரம்பத்திலேயே அகப்படுவான் என்று பார்த்ததற்கு அபசகுனமாய் முடிந்ததே.
அதுவும் மனம் கோணாது கொடுக்க இசைந்தான். இவனை வெல்வ தெளிதல்ல –
ஆயினும் பார்ப்போம் - வேறு யுக்தி செய்ய வேண்டும்.
ஹ. மஹரிஷி, மற்றும் தங்கள் கட்டளையை எதிர் பார்த்திருக்கிறேன்.
வி. இப்பொழுது வேறொன்றுமில்லை - ஹரிச்சந்திரா, இந்த பொன்
இப்பொழுதெனக்கு உடனே வேண்டியதில்லை. ஆகவே, இதை உன்னிடமே
வைத்துப்போகிறேன். சீக்கிரத்தில் மறுபடியும் வந்து, எனது ஆஸ்ரமத்திற்கு
எடுத்துப் போகிறேன். தற்காலம், அந்த யாகத்தின் பொருட்டு சில விஷயங்கள்
நான் மேருபர்வதம் சென்று அவ்விடத்திலுள்ள சில மஹரிஷிகளைக் கேட்க
வேண்டியிருக்கிறது.
ஹ. தங்கள் சித்தபடியே.
வி. ஆகவே ஹரிச்சந்திரா, இப்பொழுது நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். [அரசன் எழுந்து பணிய]
சகல மங்களானி பவந்து! [போகும்பொழுது ஒருபுறமாக] ஹரிச்சந்திரா! உன்னை
இவ்வளவு எளிதில் விட்டுவிட்டேன் என்றெண்ணாதே! இனி செய்யவேண்டியதை
இப்பொழுதே நான் தீர்மானித்திருக்கிறேன்; என் கையினின்றும் தப்ப
உன்னாலாகாது! [போகிறார்]
ஹ. சத்யகீர்த்தி,என்ன முகம் ஒருவாறா யிருக்கிறாய்? நீ ஏதோ யோசிப்பது
போலிருக்கிறது.
சத். அண்ணலே, என்னை மன்னிக்கவேண்டும். இந்த விஸ்வாமித்திர மஹரிஷி ஏதோ
கெட்ட எண்ணத்துடன் இவ்விடம் வந்திருக்கிறார் என்று என் மனத்தில்
படுகிறது. இல்லாவிடின் ஓர் யாகம் செய்வதற்காக இத்தனை பொன் அவருக்கு
எதற்காக? அன்றியும் அப்படி வேண்டியதா யிருந்தபோதிலும் அதை
அரைநொடியில் ஸ்ருஷ்டித்துக்கொள்ள அவருக்கு ஆற்றலில்லையா? திரிசங்கு
மஹாராஜாவிற்காக சுவர்க்கமொன்றைச் ஸ்ருஷ்டித்தவருக்கு இந்த
ஸ்வர்ணத்தைச் சிருஷ்டிப்பது ஒரு கடினமோ?
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, மஹரிஷிகளின் மனத்துக்குள்ளிருப்பதை ஆய்ந்தறியப்
பார்ப்பது நமக்கடுத்ததன்று.
வா-கா. பராக்! மன்னர் மன்னவனே! அரண்மனை யெதிரில் தம்முடைய
தேசஸ்தர்களிற் பலர் கூட்டமாய்க்கூடி தம்மிடம் ஏதோ மனு
செய்து கொள்ளவேண்டுமென்று தெரிவித்து நிற்கின்றனர்.
சத். மஹாராஜா அவர்களுக்குச் சிரமம் வேண்டியதில்லை. நான் போய்
என்னவென்று விசாரித்து வருகிறேன்.
ஹ. உடனே சென்று அதை விசாரித்து வா. [சத்யகீர்த்தி போகிறான். ] பிரதான்,
நம்முடைய சைனியத்திலுள்ள மிகுந்த பலசாலியைத் தேர்ந்தெடுத்து,
விஸ்வாமித்திர முனிவர் விரும்பியபடி, அவனைக்கொண்டு கணக்கிட்டு,
அப்பொன்னை ஒரு புறமாகப் பத்திரமாக வைக்கும்படி, நமது பண்டாரத்
தலைவனிடம் நான் சொன்னதாக உத்தரவு செய்.
பி. சித்தப்படி மஹாராஜா. [போகிறான். ]
சத்யகீர்த்தி மறுபடி வருகிறான்.
ஹ. சத்யகீர்த்தி, என்ன அவர்களை விசாரித் தறிந்தாயா? அவர்கள் குறை
என்னவென்று?
சத். அண்ணலே, நமது தேசத் தெல்லையில் வசிக்கும் சிலர், தங்களுடைய பயிர்
பச்சைகளெல்லாம் காட்டு மிருகங்களால் நஷ்டமடைகிறதாக
முறையிடுகின்றனர்; அன்றியும் தாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டு அத் துஷ்ட
மிருகங்களையெல்லாம் அழிக்கவேண்டுமென்றும் வேண்டுகின்றனர்.
ஹ. அங்ஙனமே செய்வோம் உடனே. மன்னுயிரையெல்லாம் தன்னுயிரைப்போல்
பாதுகாப்பது மன்னவன் முதற்கடமையன்றோ? உடனே நமது வேடர்கள்
வில்லியர்களை யெல்லாம் சித்தமாகச் சொல். இவ்விஷயத்தில் தாமதம் என்பது
கூடாது. [போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
--------------------
முதல் காட்சி.
இடம்-அயோத்தியை அடுத்த ஓர் வனம்.
ஹரிச்சந்திரன், சத்யகீர்த்தி, பிரதான். சில வேடர்கள் புடைசூழ வருகின்றனர்.
ஹ. இதனுடன் இன்றைத்தினம் வேட்டையை நிறுத்துவோம். இவ்விடம் தங்குவோம்
இப் பகல் பிரதான், கூடாரத்தை கூடிய சீக்கிரத்தில் அடிக்கச் சொல் ஒருபுறமாக.
அதோ அப்பக்கம் யாரோ மஹரிஷி ஆஸ்ரமம்போல் காண்கிறது. நம்முடைய
பரிவாரங்களெல்லாம் அதனருகிற் சென்று அங்குள்ளவர்களுக்கு இன்னல்
விளைவிக்காதபடி பார்த்துக்கொள்ளும்.
பி. சித்தப்படி மஹாராஜா. [வேடர்களை அழைத்துக்கொண்டு ஒருபுறம் போகிறான். ]
சத். அண்ணலே, இவ்வழகிய பசும்புற் றரைமீது அரை நாழிகை பள்ளிகொண்டு
இளைப்பாறும். காலை முதல் நடத்திய கடும் வேட்டையினால் மிகவும் களைப்புற்
றிருக்கிறீர்கள்.
ஹ. சத்யகீர்த்தி, என் உடம்பு தளர்வெய்தி யிருக்கிறது உண்மையே. ஆயினும்,
வேட்டையில் எனக்குள்ள உற்சாகம் தளரவில்லை. வேட்டையாடயாட
அதிலுள்ள உற்சாகம் அதிகரிக்கிறதே யொழிய குறைகிற தில்லை. – அதுவும் நம்
பிரஜைகளின் நலத்தைக் கோரிச் செய்யும்பொழுது
சத். ஆம், அப்படித்தா னிருக்கவேண்டும். இல்லாவிடின் அக் காட்டுப் பன்றியை
காட்டில் கறடு முறடு பாராமல், அது கொல்லப்படும் வரையில், கடுந்தூரம் பின்
தொடர்ந்து தாம் சென்றதற்கு, வேறு என்ன காரணம் கூறக்கூடும் நான்?
ஹ. ஆம், அப்பன்றி என்னைத் தொலைதூரம் பின்தொடரச் செய்தது; இதுவரையில்
நான் வேட்டையாடிய பன்றிகளைப்போல் அல்லாமல், அத்தனை வேகமும் பலமும்
அதற்கெங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.
சத். அண்ணலே, வேறு ஏதாவது பேசுவோம். அக் கடும் பன்றியைப்பற்றி
நினைத்தாலும் என் மயிர்க்குச் செறிகிறது!
ஹ. சத்யகீர்த்தி, நீயும் மிகவும் களைத்திருக்கிறாய், சயனித்துக்கொள் ஒருபுறமாக –
களைத்த உடம்பிற்கு இளைப்பாறுதல் இன்னமுதம்போல் தேற்றும் ஔஷதமாம்.
சத்யகீர்த்தி, என்ன நகைக்கிறாய்?
சத். அண்ணலே. அரண்மனையில் அம்சதூளிகா மஞ்சத்தின் மீது சயனிக்கும் தாங்கள்
இவ்வற்ப புல் தரையில் சயனிக்கும்படி நேரிட்டதே என்று யோசிக்கிறேன்.
இவ்விரண்டிற்கும் உள்ள தாரதம்யம் தாங்கள் அறிய வேண்டி யிருந்தது போலும்.
ஹ. அப்பா சத்யகீர்த்தி, இதனால் ஏதாவது கஷ்டப்படுகிறேன் என்று எண்ணுகிறாயா
என்ன? அப்படி யொன்றுமில்லை. பஞ்சணைமீது படுப்பதும் பசும்புற் றரைமீது
படுப்பதும் எனக்கு ஒரே சுகத்தைத்தான் கொடுக்கின்றன. சுகமும் துக்கமும் இவ்
வுலகில் வெளிப்பொருள்களா லொன்றுமில்லை; உள்ளுக்குள்ளே யிருக்கும்
உள்ளத்தைப் பொறுத்ததாம். மனமானது பருக்காங்கற்களையும்
பஞ்சணையைப்போல் மிருதுவாக்கும்; பஞ்சணையையும் கற்பாறைகளைப்போல்
கடினமாக்கும். அன்றியும், காலை முதல் கஷ்டப்பட்டு ஜீவித்து, கடும் நிசியில்
கட்டாந் தரையில் படுத்துறங்கும் கூலியாளுடைய சுகம், பட்டு வஸ்திரங்கள்
பரப்பப்பட்ட பஞ்சணைமீது படுத்துறங்கும் கொற்றவனுடைய சுகத்தைப்
பார்க்கிலும் குறைந்த பாடென் றெண்ணாதே! ஒரு விதத்தில் அணிமுடி யணிந்த
அரசன் அதிக கவலையினால் அயர்ந் துறங்குவது கடினம்; உள்ளத்தில்
கவலையின்றி உறங்குவான் நிம்மதியாய் அக் கூலியாள்.
பிரதான் மறுபடி வருகிறான்.
பி. ராஜாதிராஜனே,சிபிரம் சித்தமாய்விட்டது. -கட்டழ குடை இரண்டு கன்னியர்
ஏதோ தங்களைக் காணவேண்டுமென்று விரும்பி,அதோ தூரத்தில்
காத்திருக்கின்றனர்.
சத். அரசர் மிகவும் அலுப்படைந்திருக்கிறார்;ஆகவே அவர்களைப் பார்ப்பதற்கு இது
சமயம் அல்லவென்று சொல்லும்,போம்.
ஹ. அப்படியல்ல,சத்தியகீர்த்தி,அவர்கள் வரட்டும். அவர்கள் என்னைக் காண
வேண்டி நெடுந்தூரமிருந்து வந்திருக்கவேண்டும். என்ன குறையோ
அவர்களுக்கு, அதை விசாரிப்பது நம்முடைய கடமையன்றோ?- பிரதான்,
அவர்களை அழைத்து வா. [பிரதான் போகிறான். ]
சத். கன்னியர் தம்மைக் காணவேண்டி காட்டில் இத்தனை தூரம் என்னமாகக் கடந்து
வந்தார்கள்?இங்கு நீர் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?
[பிரதான் இரண்டு கன்னிகையர்களை அழைத்துக் கொண்டு கன்னிகைகள் அரசனை
வணங்குகிறார்கள்]. கன்னியர்காள், நீங்கள் யாரோ?எவ்விடமிருந்து
வருகிறீர்கள்? காட்டில் இத்தனை தூரம் என்னைக் காணவேண்டிக்
கடந்துவரவேண்டிய காரணமென்ன? என்னிடம் சொல்லக்கூடிய குறை
யேதேனும் இருந்தால் சொல்லுங்கள்.
மு-க மன்னர் மன்னனே! எங்கள் மனத்தில் குறையொன்றுமில்லை மன்னர்
மன்னனாகிய தாங்கள் செங்கோல் நடாத்தும்பொழுது மண்ணுலகில் யாருக்கு
என்ன குறையிருக்கப் போகிறது? நாங்கள் பரத சாஸ்திரம் நன்குணர்ந்த
பாவையர், அதில் எங்களுக்குள்ள சாமர்த்தியத்தை உங்களுக்குக் காண்பித்து
உம்மைச் சந்தோஷிப்பிக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. ஆகவே
அவ்வாறு செய்ய அடியேங்களுக்கு விடையளிக்க வேண்டுமென்று
வேண்டுகிறோம்.
பி. ராஜாதிராஜனே, போஜனம் சித்தமாவதற்கும் கொஞ்சம் காலமாகும்.
ஹ. சரி, ஆனால் உங்கள் இஷ்டப்படியே செய்யலாம்.
[கன்னிகைகள் கர்ணாமிர்தமான ஒரு பாட்டைப்பாடி அபிநயம் பிடிக்கின்றனர். ]
நல்லது நல்லது! மிகவும் நல்லது! இப்படிப்பட்ட கர்ணாமிர்தமான கானத்தை
இதுவரையில் நான் கேட்டதேயில்லை; மிகவும் நன்றாயிருக்கிறது!
[கன்னியர் ஓர் பதம் பாடி நடிக்கின்றனர். ]
சபாஷ்! சபாஷ்! மிகவும் சந்தோஷமாச்சுது! போதும் நிறுத்துங்கள் நீங்கள்
எடுத்துக்கொண்ட கஷ்டத்திற்குத் தமக்கபடி கைம்மாறு செய்ய தத்சமயம்
அசக்தனாயிருக்கிறேன். ஒரு சமயம் நீங்கள் அயோத்திக்கு வரும்படி யிருநதால்
அப்பொழுது உங்கள் வித்தைக்கேற்ற பரிசளிப்பேன். ஆயினும் சத்ய கீர்த்தி,
இவர்களை வெறுங்கையுடன் அனுப்பலாகாது. ஆகவே இவர்களிருவருக்கும்
நம்முடன் கொண்டுவந்திருக்கும் பொன்னில் ஆயிரம் கொடுத்தனுப்புவாய்--
மு-க ராஜாதிராஜனே, பொன்னை விரும்பி நாங்கள் உம்மிடம் வரவில்லை. மற்ற
மனிதர்கள் எமக்களித்த பொன் எம்மிடம் அபரிமிதமாய் இருக்கிறது. கொற்றவன்
கொடுக்கும்படியான பரிசைக் கோரியே, நாங்கள் உம்மை நாடினோம்.
ஹ. அது என்னவோ?
இ-க. உமது பூ சக்ரக்குடையை எமக்குப் பரிசாக அளிக்க வேண்டுகிறோம்.
ஹ. கன்னியர்காள்! நீங்கள் கேட்பது இன்னதென்று நீங்களே நன்றா யறிகிலீர்
போலும். அதைவிட நான் அணியும் முடியினைக் கேட்டிருக்கலாமே!
சக்ரவர்த்தியா யுள்ளவன் தான் அணியும் முடியினையும், தனது சத்ரத்தையும்,
பரிசாகக் கொடுக்கலாகாது. ஆகவே, நீங்கள் கேட்பதைக் கொடுக்க என்னால்
ஏலாது; உங்களுடைய அந்தஸ்திற்குத் தக்கபடியாயும், நான் கொடுக்கக்
கூடியதாயும், ஏதாவது கேளுங்கள்.
மு-க. ஆயின் அயோத்திமன்னா, எங்களுடைய முதல் வேண்டுகோளைத்தான்
மறுத்தீர், இரண்டாவதையாவது மறுக்காதீர். --நாங்கள் கன்னிகைகள், உங்கள்
மீது காதல் கொண்டோம், எங்களைக் கடிமணம் புரியும்.
சத். என்ன! இவர்களுக்கு பயித்தியம் பிடித்திருக்கிறதா?
ஹ. கன்னியர்காள், க்ஷத்திரியர்கள் ஒரு தாரத்திற்குமேல் பல தாரம்
கொள்ளலாமாயினும், நான் ஏகபத்னி விரதம் பூண்டவன், ஆகவே, உங்கள்
வேண்டுகோளுக்கு நான் இசைவது அடாது.
இ-க, அயோத்திமன்னா, இந்த அநீதி மாத்திரம் உமக்கடுக்குமோ? எங்கள்
கானத்தையும நடனத்தையும் கேட்டும் கண்டும் களித்து, எங்களைப் புகழ்ந்து,
நாங்கள் வேண்டுவதைக் கொடுக்காது எங்களை வெறுங்கையுடன் அனுப்புவது
தர்மமா?
ஹ. அதற்கு நான் என்ன செய்வேன்? நீங்கள் கேட்பது நான் கொடுக்கத் தக்கதா
யில்லை. ஆகவே நான் தர்ம வழியில் கொடுக்கக் கூடிய எதையேனும்
தாராளமாய்க் கேளுங்கள், தருகிறேன்.
மு-க. எங்களுக்கு வேறொன்றும் வேண்டாம். கேட்ட இரண்டி லொன்றை
எங்களுக்குக் கொடும். இல்லாவிடின் இவ்விடம் விட்டுப் பெயராது எங்கள்
உயிரை உமது முன்னிலையிலேயே விடுவோம்.
ஹ. பிரதான், இப் பேதைகளை என் முன்னின்றும் அழைத்துச் செல்.
பி. பெண்களே! நீங்களாகப் போகிறீர்களா, என்ன?
இருவரும். அப்படியா சமாசாரம்! அரசனே! எங்களை அடித்தா துறத்தப் பார்க்கிறீர்!
இதற்காக உம்மை என்னபாடு படுத்துகிறோம் பார்ப்பீர் சீக்கிரம்!
பி. மூடுங்கள் வாயை! என்ன அதிகமாய்ப் பேசுகிறீர்கள்! போங்கள்!
[துறத்திக்கொண்டு போகிறான். அவர்கள் ஓலமிட்டுக்கொண்டு போகிறார்கள். ]
ஹ. சத்யகீர்த்தி! இதோபார்! எனது இடதுதோள் துடிக்கிறது! ஏதோ எனக்கு
விரைவில் தீங்கு நேரிடும்போலத் தோற்றுகிறது.
சத். ஈசன் கருணையினால் அங்ஙனம் இல்லாதிருக்குமாக! அண்ணலே, நாம்
இவ்விடம் விட்டுப் போவோம். இங்கு வந்தது முதல் என் மனம்
ஒருவாறாய்த்தான் இருக்கிறது.
ஹ. அப்பா, அதில் என்ன பிரயோஜனம்? நமது விதியை விட்டு விலகிப்போகக்
கூடுமா நம்மால்? உனது நிழலை விட்டு ஓடிப்போக முடியுமோ உன்னால்?
ஆகவே, வருவது எங்கிருந்தாலும் வந்துதான் தீரும்--
விஸ்வாமித்திரர் கன்னியர்கள் பின் தொடர விரைந்து வருகிறார்.
வி. (மிகுந்த கோபத்துடன்) அடே! ஹரிச்சந்திரா! என்ன காரியம் செய்தாய் நீ?
இதுவோ உனக்கடுத்த நீதி! இதுவோ உன் ராஜதர்மம்? இதுவோ நீ செங்கோல்
நடத்தும் முறைமை? அரசன் அன்றொறுத்தால் தெய்வம் நின்றொறுக்கும்
என்பதை மறந்தனையா? தெய்வம் ஒன்றிருக்கிறது என்று, அதற்கு
அஞ்சாவிட்டாலும் நான் ஒருவன் இருக்கிறேன் என்று கொஞ்சமாயினும் உனக்கு
பயமில்லாமற் போச்சுதா?
ஹ. (அவர் பாதத்தில் பணிந்து) தவ சிரேஷ்டரே! தாங்கள் இவ்வாறு கோபித்துக்
கொள்ளும்படியாகத் தமியேன் செய்த குற்றம் இன்னதென்று அறிகிலேன். நான்
செய்த அபராதம் இன்னதென்று திருவாய் மலர்ந்தருள வேண்டும். அதற்குத்
தக்கப் பிராயச் சித்தம் செய்கிறேன்; விரைவிற் கூறும்படி வேண்டுகிறேன்.
வி. அடே! ஹரிச்சந்திரா! இக்கன்னிகைகள் யாரென்று தெரியுமா? எனது
ஆஸ்ரமத்தில் வசிக்கும் பெண்கள் இவர்கள். சற்று முன்பாக உன்னெதிரில்
தாங்கள் கற்ற வித்தைகளைக் காட்ட, அதைக் கண்டு களித்தும், அவர்கள்
கோரும்படியானதைக் கொடேன் என்று கூறியதுண்மைதானா?
ஹ. உத்தமரே, உண்மைதான். ஆயினும், அவர்கள் கேட்டதை தர்மப்படிக் கொடுக்க
நான் அசக்தனா யிருக்கிறேன். ஆகவே, தாங்கள் என்னை
மன்னித்தருளவேண்டும். அவர்கள் அந்தஸ்திற்குத் தக்கபடியும், எனது
தர்மத்திற்குத் தக்கபடியும், நான் அவர்களுக்குக் கொடுக்கத் தக்க எதையாவது
தாம் குறிப்பிட்டால், கொடுக்கச் சித்தமா யிருக்கிறேன். தாங்கள் சற்று கருணை
கூர வேண்டும்.
வி. கோபம் பற்றி எரியும்பொழுது கருணை கூர்வதாவது! இப்படித் தானோ உனது
ராஜ்யத்தை பரிபாலனம் செய்துகொண்டு வந்தாய்! மன்னர்கள்
மன்னனாயிருக்கப்பட்ட நீ, உன்னை நாடி வந்து உனது மனத்தைச்
சந்தோஷிப்பித்த கன்னியர்கள் கேட்கும் வரத்தைக் கொடுக்க
அசக்தனாயிருக்கிறேன் என்கிறாயா? ஏதா யிருந்தபோதிலும், இட்சணம் அவர்கள்
வேண்டுகோளுக்கிணங்குவாய், இல்லாவிட்டால் என் கொடிய
கோபத்திற்காளாவாய்!
ஹ. முனிசிரேஷ்டரே, தாங்கள் வீணில் என்மீது முனியலாகாது; அவர்கள் விரும்பிய
இரண்டையும் கொடுக்க நான் அசக்தனாயிருக்கிறேன். நானோ க்ஷத்ரிய
குலத்துதித்த அரசன், அன்றியும் ஏகபத்னி விரதம் பூண்டவன். ஆகவே என்னை
மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.
வி. அடே! ஹரிச்சந்திரா! என் கட்டளையை மீறப் பார்க்கிறாயா? நான்
யாரென்பதை மறந்து பேசுகிறாயா? உன்னுடைய தந்தையாகிய திரிசங்குவிற்குப்
புதிய சுவர்க்கமொன்றை உண்டுபண்ணிய ஆற்றலுடையவன் நான் என்பது
உனக்கு ஞாபகமில்லையோ? திரிலோகங்களையும் அரை க்ஷணத்தில் பஸ்மீகரப்
படுத்தும்படியான சக்தி யுடயவன் விஸ்வாமித்திரன் என்பதை எண்ணினா
யில்லை போலும்! கோபத்தில் ருத்திரன் குரு விஸ்வாமித்திரன், என்னும்
மொழியைக் கேட்டதில்லையோ நீ? மும்மூர்த்திகளையும் ஏவல் கொள்ளத்தக்க
வன்மையுடைய எனக்குக் கேவலம் நீ எம்மாத்திரம்? நான் பன்முறை கேளேனினி!
இதுவே என் கடைசி வார்த்தை. இவர்கள் வேண்டுகோளுக்கிசைந்து இவர்களை
மணம் புரிகிறாயா? அல்லது எனது கொடிய சாபத்தைப் பெறுகிறாயா?
ஹ. ஸ்வாமி, நான் சத்தியத்தையே விரதமாகப் பூண்டவன், ஏக பத்னி விரதத்தை
எடுத்துக் கொண்டபிறகு மற்றொரு மனைவியைக் கொள்ளல் அசாத்தியமாகும்.
தர்ம வழியினின்றும் தவறி நடப்பதைவிட, தந்தை போல் குரு ஸ்தானத்தி
லிருக்கப்பட்ட தங்களுடைய சாபத்தை வஹிப்பதே எனக்கு மேலாகும்.
வி. ஆனால் ஹரிச்சந்திரா! குரு ஸ்தானத்தி லிருப்பவர்களுடைய கட்டளைப்படி
நடக்க வேண்டியது தர்மமல்லவா?
ஹ. ஆம், அதனால் சத்தியத்தினின்றும் தவறாதிருப்பதானால்.
வி. ஆனால் உன் சத்தியத்தினின்றும் தவறாதபடி நான் ஏதாவது கட்டளை யிட்டால்
அதன்படிச் செய்கிறாயா?
ஹ. அதன்படிச் செய்யச் சித்தமா யிருக்கிறேன்.
வி. ஆனால் நான் சொல்வதைக் கேள் - நான் அரசனா யிருக்கிறோம் என்னும்
கொழுப்பே உன்னை இவ்வாறு என் கட்டளையை அவமதிக்கச் செய்கிறது-
அதை முன்பு அடக்குகிறேன். அடே! ஹரிச்சந்திரா! க்ஷத்தியர்களுக்குள் அநேக
அரசர்கள் அஸ்வமேதம் முதலிய யாகங்கள் இயற்றியபின் தங்களுடைய
ராஜ்யத்தை யெல்லாம் ரிஷிகளுக்கு தானமாகக் கொடுத்திருப்பதைப் பற்றி நீ
கேள்விப்பட்டிருக்கிறா யல்லவா? அதில் அதர்மம் ஒன்றுமில்லையே? அசத்திய
மொன்று மில்லையே?
ஹ. இல்லை ஸ்வாமி.
வி. அப்படி வா-ஆனால் உனது ராஜ்யத்தை யெல்லாம் நான் தானமாகக்
கேட்கிறேன். இப்பொழுது என்ன சொல்கிறாய்? ஹரிச்சந்திரா!
ஹ. ஸ்வாமி, நான் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது? இதோ கொடுக்கிறேன்
பெற்றுக்கொள்ளும்.
வி. என்ன! இப்பொழுதா?
ஹ. ஆம், ஸ்வாமி, இவ்விடத்திலேயே தாரை வார்த்துக் கொடுக்கிறேன். இந்தப்
பேறு எனக்குக் கிட்டவேண்டுமே! இன்னும் பொறுத்தென்றால்,
இவ்வநித்தியமாகிய காயம் அரைநொடியில் மாய்ந்தால் அப்பேறு எனக்குக்
கிட்டாமற் போகுமே! எந்னை . யீன்ற தந்தையாகிய திரிசங்குவிற்கு வேறு
சுவர்க்கத்தை சிருஷ்டித்து தானமாகக் கொடுத்த, தயாபரனாகிய தமக்கு, இவ்வற்ப
ராஜ்யத்தைக் கொடுப்பது ஒரு பெரிதோ? நான் கொடுப்பது கஷ்டமல்ல, தாங்கள்
கேட்பது கஷ்டம்! காலம் கழிந்து, உமது மனம் மாறி நீர் வேண்டாமென்றால்,
இப்பெரும் புண்ணியம் எனக்குக் கிட்டாமற் போகுமே! ஆகவே இந்த க்ஷணமே
பெற்றுக்கொள்ள வேண்டும்.
வி. [ஒருபுறமாக] என்ன ஆச்சரியம்! கொஞ்சமாவது முகம் கோணாது சொல்கிறானே!-
-அப்பா, ஹரிச்சந்திரா, ஏதோ அவசரப்பட்டுக்கொடுத்துவிட்டதாக அப்புறம்
துக்கப்படப்போகிறாய் தானம் கொடுப்பதென்றால் மனமொப்பிக்
கொடுப்பதுதான் தானமாகும். ஆகவே செய்யவேண்டுமெதையும்,
இல்லாவிட்டால் கவலைக் கிடங் கொடுக்கும் பிறகு.
ஹ. ஸ்வாமி, நான் கவலைப்படுவதெல்லாம், எங்கு தாம் யோசித்து, இது
வேண்டாமென்று வெறுக்கிறீரோ என்பதே! பிறகு எங்கு சத்பாத்திரமாகிய
தங்களுக்கு இப்படிப்பட்ட தானத்தைக் கொடுக்கும் புண்ணியம் எனக்குக்
கிட்டாமற் போகிறதோ, என்றே ஏங்குகிறேன்.
வி. [ஒரு புறமாக] என்ன ஆச்சரியம்! நாம் அவனைக் கொடுக்கும்படி வற்புறுத்துவதை
விட்டு, வாங்கிக் கொள்ளும்படி என்னை யன்றோ அவன் வற்புறுத்துகிறான்!--
ஆனால் ஹரிச்சந்திரா, நாளைத்தினம் உனது அரண்மனைக்கு வந்து அனைவரும்
அறிய உன் அரசை தானமாகப் பெறுகிறேன்-- இப்பொழுது நீ விடை பெற்றுக்
கொள்; உன் பரிவாரங்களை அழைத்துக்கொண்டு உடனே ஊர் போய்ச் சேர்.
இங்கு அவர்களிருப்பது தபோதனர்களுக்கெல்லாம் பெரும் இடஞ்சலா யிருக்கிறது.
ஹ. மஹரிஷி, கட்டளைப்படியே! -- இவ் விராஜ்ய பாரமாகிய பெருஞ் சுமையை என்
தோட்களினின்றும் நீக்க இசைந்த உமக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்
போகிறேன்! தாம் மறவாது நாளை அயோத்திக்கு வந்து சேரவேண்டும்.
வி. அப்படியே ஆகட்டும். நீ உடனே புறப்படுவாய். [கன்னியர்களை
அழைத்துக்கொண்டு போகிறார்]
சத். அண்ணலே! நான் கேட்டதெல்லாம் கனவோ? நினைவோ?
ஹ. நினைவுதான்; இன்றே என் ஜன்மம் சபலமாச்சுது. மஹரிஷிக்கு என் தந்தையிட
மிருந்ததைவிட என் மீது பிரீதி அதிகமா யிருக்கிறது போலும்.
சத். நான் அப்படி நினைக்கவில்லை.
ஹ. சத்யகீர்த்தி, அப்படி கூறாதே! இப்பொழுதே இவ் வரசெனும் பெரும் பாரம் என்
தோட்களை விட்டு நீங்கியதுபோல் சந்தோஷப்படுகிறேன். -- சீக்கிரம் நாம்
பரிவாரங்களை அழைத்துக்கொண்டு அயோத்தி போய்ச் சேர்வோம். [போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
------------------
இரண்டாம் காட்சி
இடம்-விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம் விஸ்வாமித்திரர் வருகிறார்.
வி. என்ன ஆச்சரியம்!நான் கண்டது கனவோ என்று நானே சந்தேகிக்கவேண்டி
வருகிறது. சொன்னசொல் தவறலாகாதென்று தனது ராஜ்ய முழுவதையும்
தானமாக, ஒரு காரணமு மின்றி,மனம் கோணாது கொடுக்கும் மன்னவன்
எவன்?இப்படிப்பட்டவன் ஒருவன் இருக்கிறான் என்று சற்று முன்பாக யாராவது
கூறி யிருந்தால், அதை நான் நம்பியிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட
உத்தமனையோ, உண்மை நெறியினின்றும் பிறழச் செய்யப் போகிறேன் நான்!-
ஜெயம் வசிஷ்டர் பால்தான்; நாரதர் கூறிய துண்மைதாம். இவனை அசத்தியம்
புகலச் செய்வதைவிட அப் பரம்பொருளின் ஸ்வரூபத்தை மாற்றுவது இலேசான
காரியம் போலும். -நான் மேற்கொண்ட காரியம் இப்படி யாகுமென்று நான்
எள்ளளவும் எண்ணியவனென்றே! எனது தவத்தில் பாதி கொடுக்கவேண்டி
வருகிறதே என்று நான் வருந்தவில்லை. அந்த வசிஷ்டரிடம் நான் தோல்வி
யடைந்ததாக ஒப்புக்கொள்ளுகிறதா, என்பதே என் மனத்தை வாட்டுகிறது. சீ!
நான் அதைரியப்படலாகாது! இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நான்
நாளைத்தினம் அவனது அரண்மனைக்குப் போனவுடன், அவன் வாக்களித்தபடி
தனது ராஜ்யத்தை தானமாகக் கொடுப்பான். அதைப்பெற்றுக் கொண்டதும் -
ஆம்! அதுதான் யோசனை!-அவனிடம் வைத்து விட்டுப் போன அப் பெரும்
பொருளைக் கொடுக்கும்படியாகக் கேட்கிறேன்! முன்பு கொடுத்ததும் அவனது
ராஜ்யத்தில் உட்பட்டுப் போனபடியால்,வேறு அத்தனை பொருள்
கொடுக்கவேண்டுமென்று வற்புறுத்துகிறேன். அதற்கு என்ன சொல்லுகிறானோ
பார்ப்போம். இதனால் என் வலையில் எப்படியும் சிக்குவான். பிறகு அவன்
வாயினின்றும் எவ்விதமாவது ஒரு அசத்தியத்தை எளிதில் வரவழைத்து விடலாம்.
ஆம்!இந்த யோசனை எனக்கு ஏன் முன்பே தோற்றாமற் போச்சுது?- இனி என்
பக்ஷம் ஜெயம் என்பதற்கையமில்லை!வசிஷ்டரே! இனி நீர் தீர்த்த யாத்திரைக்குப்
புறப்பட லக்னம் பார்க்கவேன்டியதுதான்! [விரைந்து போகிறார். ]
காட்சி முடிகிறது
-------------------------
மூன்றாம் காட்சி
இடம்-அயோத்தியில் ஹரிச்சந்திரன் கொலுமண்டபம்.
ஹரிச்சந்திரன், சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் புடைசூழ ஒரு புறம் நிற்கிறான். விஸ்வாமித்திரர், நட்சத்திரேசன் முதலிய முதலிய சிஷ்யர்களுடன் ஒரு புறம் நிற்கிறார். பரிவாரங்கள் இருமருங்கிலும் நிற்கின்றனர்.
வி. ஹரிச்சந்திரா,அவசரப்பட்டு ஒன்றும் செய்யாதே, ஆய்ந்தோய்ந்து பாராது செய்யும்
எக்கருமமும் இறுதியில் துக்கத்தைத்தான் விளைக்கும். ஆகவே
உனக்கிஷ்டமில்லாவிட்டால் இப்பொழுதே சொல்லிவிடு;நான் வற்புறுத்தவில்லை.
ஹ. ஸ்வாமி,கொடுத்தது கொடுத்ததே! இல்லையென்று வாய் கூசாது எவ்வாறு
கூறுவது?
வி. ஆனால்-மனதில் ஒன்றுமில்லையே உனக்கு?
ஹ. ஸ்வாமி,திரிகரணசுத்தியாய் மனப்பூர்த்தியாகக் கொடுக்கிறேன்,
பெற்றுக்கொள்ளும் தயைசெய்து.
வி. சரி!உன் இஷ்டம்-பிறகு துக்கப்படப்போகிறாய், இப்பொழுதே சொன்னேன்.
ஹ. ஸ்வாமி, இதற்காக நான் துக்கப்படமாட்டேன் என்று உறுதியாய்ச்
சொல்லுகிறேன். - தாங்களும் அதை உறுதியாய் நம்பலாம்.
வி. ஆனால் உன் விதி!-தாரை வார்த்துக்கொடு.
ஹ. இதோ, வாங்கிக்கொள்ளும்-விஸ்வாமித்திர முனிவரே! இதோ, ஆகாயவாணி
பூமிதேவி யறிய எனது அரசனைத்தையும் உமக்கு தானமாகக் கொடுத்தேன்!
கொடுத்தேன்! [தாரை வார்த்துக் கொடுக்கிறான். ] மஹரிஷி,தாங்கள் இந்த அரி
ஆசனத்தின்மீது ஆரோஹணிக்கவேண்டும். இந்த அணிமுடியை அணிந்து
கொள்ளவேண்டும். இச் செங்கோலைப் பெற்றுக் கொள்ளும். இந்த அரச
சின்னங்களை யெல்லாம் இனி ஆண்டு அனுபவியும்; இவையனைத்தும் இனி
உம்முடயவே- மந்திரிப் பிரதானிகளே! மற்றுமுள்ள பிரஜைகளே! இன்றைத்தினம்,
நான் இதுகாறும் ஆண்டு வந்த அயோத்தி அரசை, விஸ்வாமித்திர மஹரிஷிக்குத்
தானமாய்க் கொடுக்க அவரும் பெற்றுக் கொண்டபடியால், இனி அவரே
உங்களுக்கெல்லாம் அரசன், நீங்களெல்லாம் அவரது பிரஜைகளே. எனது
ஆட்சிக்குட்பட்டு அடங்கி நடந்தது போல் அவரது ஆட்சிக்குட்பட்டு அடங்கி
நடந்து சகல வைபவங்களையும் பெற்று சுகமாக நீடூழி காலம் வாழ்வீர்களாக!-
மஹரிஷி,அடியேன் செய்ய வேண்டியது இன்னும் ஏதேனு மிருக்கிறதோ?
வி. இல்லை-இனி நீ நமது சந்நிதானத்தை விட்டு ஏகலாம்.
ஹ. தங்கள் சித்தம் என் பாக்கியம். [நமஸ்கரித்துப் போகப் புறப்படு கிறான். ]
வி. பொறு பொறு!ஹரிச்சந்திரா,உன்னிடம் ஒன்று கூற மறந்தேன்.
ஹ. ஸ்வாமி,கட்டளையைக் காத்து நிற்கிறேன்.
வி. ஹரிச்சந்திரா, நீ எனது ராஜ்யத்தின் எல்லைக்குள் வாழலாகாது. நீ இங்கிருந்தால்,
எனது பிரஜைகளுக்குள் ஏதாவது கலகம் உண்டாயினும் உண்டாகும். ஆகவே
உனது மனைவி மக்களை அழைத்துக்கொண்டு தாமதிக்காமல் எனது ராஜ்யத்தின்
எல்லையை விட்டகன்று போகவேண்டும்.
ஹ. உத்திரவுபடி, உடனே புறப்படுகிறோம் - அடியேன் இனி
விடைபெற்றுக்கொள்ளலாமோ?
வி. செய் அப்படியே - ஆயினும் ஹரிச்சந்திரா, இப்படிவா?
ஹ. வந்தேன்.
வி. அரசர்க்குரிய இந்த ஆடையாபரணங்களெல்லாம் உனக்கேனினி? அவைகளை
யெல்லாம் கழற்றிக்கொடுத்துவிடு. [ஹரிச்சந்திரன் அங்ஙனமே செய்கிறான். ]
உன் மனைவி மக்களுடைய அணி ஆடைகளையும் என்னிடம் ஒப்புவித்து
விடவேண்டும், அவைகளெல்லாம் என்னைச் சேர்ந்தவை.
ஹ. அப்படியே செய்கிறேன்.
வி. அதுதான் சரி, உங்களுடைய தற்கால நிலைமைக்குத் தக்கதான ஆடைகளை என்
பிரதம சிஷ்யனாகிய நக்ஷத்திரேசன் உங்களுக்குக் கொடுப்பான், அதைப்
பெற்றுக்கொண்டு போங்கள்.
ஹ. தங்கள் அனுக்கிரஹப்படி - இனி எனக்கு உத்தரவு தானோ?
வி. ஆம். இனி போகலாம் - அடடா! ஹரிச்சந்திரா! ஹரிச்சந்திரா! இப்படி வா நீ!
மோசம் செய்வதில் நிபுணன் நீ என்பதை இதுவரையில் நினைத்தேனில்லை.
அவசரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை அடியுடன் மறந்தேன். – எனது
யாகத்திற்காக நீ கொடுக்க இசைந்த பொருள் எங்கே?
ஹ. ஸ்வாமி; அந்தப் பொன் எல்லாம் அப்படியே ஜாக்கிரதையாக பொக்கசத்தில்
ஒருபுறமாக வைக்கப்பட்டிருக்கிறது.
வி. பொக்கசத்தில்! யாருடைய பொக்கசத்தில்? எனது பொக்கசத்திலிருப்பது
என்னுடையதாகும், சற்று முன்பாக உன் அரசைஎல்லாம் எனக்கு நீ தானமாக
அளித்தபோழுது, அந்த அரசில் அப்பொக்கசமும் உட்பட்டதன்றோ? பொக்கசம்
உட்பட்டிருந்தால் அதிலுள்ள பொருளும் உட்பட்டதன்றோ? அந்த பொன்
பொருள்* நீங்கலாக என்று கூறினாயில்லையே? ஆகவே ஒரு வஸ்துவை இரண்டு
முறை நீ என்னமாகத்தானங் கொடுக்கலாம்? ஆகவே நீ முன்பு யாகத்திற்காக
எனக்குக் கொடுக்க இசைந்த பொருளை என் முன்பு கொணர்ந்துவை.
வைத்துவிட்டு அப்பால் அடி எடுத்துவை! என்னை இவ்வாறு மோசம்
செய்யலாமென்றா எண்ணினாய்? அடே! ஹரிச்சந்திரா!
ஹ. ஸ்வாமி, இதைப்பற்றி நான் இவ்வாறு யோசிக்கவில்லை.
வி. நீ யோசித்தாலென்ன யோசிக்காவிட்டாலென்ன? எனக்கதனாலாவ-
தொன்றில்லை. நீ அன்றைத்தினம் நான் குறிப்பிட்ட பொன்னை எனக்குக்
கொடுக்க இசைந்தாயா இல்லையா?
ஹ. இசைந்தது உண்மையே.
வி. ஆனால் முன்பு அப்பொருளைக் கொண்டுவந்து கொடுத்து விட்டுப்போ. நீ அதைக்
கொடுக்கவில்லை என்கிறாயா?
ஹ. ஸ்வாமி, என்னுயிருள்ளளவும் அவ்வார்த்தை என் வாயினின்றும் எப்படி வரும்.
வி. ஆனால் கொடு அப்பொருளை.
ஹ. [ஒரு புறமாக] கருணாநிதி! என்னைக் காத்தருளும் - ஸ்வாமி, அடியேன்மீது
கருணைகூர்ந்து ஏதாவது தக்கபடி தவணை கொடுப்பீராயின் அதற்குள் எக்
கஷ்டமாவது பட்டு அப்பொருளைச் சேகரித்து உம்மிடம் ஒப்புவிக்கிறேன்.
வி. உனக்குத் தவணை கொடுத்தென்ன பிரயோஜனம்? தவணைக்குள் எப்படி
அத்தனை பொருள் சேகரிக்கப் போகிறாய்?
ஹ. எந்த கஷ்டமாவது பட்டு சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறேன்.
வி. கையில் காசுமில்லாத நீ,அவ்வளவு பொருளைச் சேகரிப்பதெவ்விதம்? ஒரு
வேளை பிட்சை யெடுக்கலாம் என்று பார்க்கிறாயோ?அப்படிச் செய்வதாயினும்
எனது ராஜ்யத்தின் எல்லைக்குள் செய்யலாகாது. என்னுடைய ராஜ்யத்திலுள்ள
பொருளெல்லாம் எனக்குரித்தானது, ஆகவே என் பொருளைக்கொண்டே என்
கடனை அடைப்பதென்பது அடாது.
ஹ. ஆம் முனிசிரேஷ்டரே, தங்கள் ராஜ்யத்தின் எல்லைக்கு வெளியே போய்
அப்பொருளை எவ்விதமாவது தேடித் தருகிறேன்.
வி. ஆம். அதற்கு ஜாமீன் யார்?
ஹ. என் வார்த்தையே.
வி. ஒன்றுமில்லாத திவாலாகிய உன் வார்த்தையை நம்பி, உன்னை எனது
ராஜ்யத்திற்கு வெளியே அனுப்பிவிட்டால், என் பொன்னை நான் எப்பொழுது
காண்பது?
ஹ. ஸ்வாமி, தாங்கள் அதற்காகக் கொஞ்சமேனும் ஐயமுற வேண்டாம். தங்களுடைய
மனுஷ்யன் யாரையாவது என்னுடன் தாம் அனுப்பிவைத்தால் அவனிடம்
தவணைப்படி அப் பொன்னைக் கொடுத்தனுப்புகிறேன்.
அ. அப்படியே செய்வோம் - ஆயினும் - ஹரிச்சந்திரா, இத்தனை கஷ்டம் எல்லாம் நீ
ஏன் அனுபவிக்கவேண்டும், என்று யோசிக்கிறேன்.
ஹ. ஸ்வாமி, அதற்குப் பார்த்தால் ஆகுமோ? எப்படியும் சொன்ன சொல்லை
நிறைவேற்றவேண்டாமா? அதைப் பார்க்கிலும் சந்தோஷமான வேலை என்ன
இருக்கிறது? ஆகவே அன்பு கூர்ந்து என்னுடன் ஒரு ஆளை அனுப்புங்கள்,
அடியேன் உடனே புறப்பட்டு அந்த வேலையை முடிக்க யத்னம் செய்ய
ஆவலாயிருக்கிறேன்.
வி. சரி! உனக்கு நலம் தரும் மார்க்கத்தைக் கோர உனக்கே விருப்பமில்லாவிடின்,
அதை நான் கூறுவானேன் உன்னிடம்? - யார் அங்கே, நக்ஷத்திரேசா?
ந. ஸ்வாமின்!
வி. இப்படிவா - ஹரிச்சந்திரா, இந்த பிராம்மணனை உன்னுடன் அனுப்புகிறேன்.
என்னிடம் எவ்வளவு பய பக்தியுடன் நடந்து கொள்வாயோ, அப்படியே இவனிடம்
நடந்துகொண்டு, பதினைந்து நாள் தவணைக்குள்ளாக எனக்குச் சேரவேண்டிய
பொன்னை ஒன்றும் குறைவின்றி கொடுத்தனுப்பிவிடு. என்ன சொல்லுகிறாய்?
ஹ. அப்படியே ஸ்வாமி.
வி. ஆனால், இனி காலதாமதம் செய்யாது நீ புறப்படலாம்; உடனே போய் உன்
மனைவி மக்களைத் துரிதப்படுத்து. இதோ என் பிரதம சிஷ்யனாகிய
நட்சத்திரேசனுக்கு உங்களை இப்பதினைந்து நாட்கள் வரையில் காப்பதற்குத்
தக்க புத்திமதிகளைச் சொல்லி அனுப்புகிறேன் உனது பின்னால். இனி நீ விடை
பெற்றுக்கொள்ளலாம்.
ஹ. மகரிஷி. அடியேன் ஹரிச்சந்திரன் நமஸ்கரிக்கின்றேன். எனது கடைசி
வேண்டுகோள் - எல்லாமறிந்த தங்களுக்கு தெரியாததல்ல, ஆயினும் கூறுகிறேன்
மன்னிக்கவும். இந் நாட்டின் பிரஜைகளையெல்லாம் தங்கள் குழந்தைகளைப்
போல் கருணையுடன் காத்தருளவேண்டும் தாம்.
வி. அப்படியே செய்வோம், அஞ்சாதே போ!
ஹ. தன்யனானேன்! விடைபெற்றுக் கொள்ளுகிறேன். [வணங்கி போகிறான்;
சத்தியகீர்த்தி முதலியமந்திரிகள் முதலானோர் அவனைப்பின் தொடரப்
பார்க்கின்றனர். ]
வி. ஓஹோ! சத்தியகீர்த்தி! மந்திரிகள் முதலியோரே! எல்லோரும் வாருங்கள் இப்படி!
நீங்கள் எல்லோரும் ஹரிச்சந்திரனுடன் போய்விட்டால் நான் தன்னந்தனியாக
இங்கு தவிப்பதோ? அவன் பின்னால் நீங்கள் ஒருவனும் போகக்கூடாதென்பது
என்னுடைய ஆக்கினை! அதை மீறி நடக்கப் போகிறீர்கள் பத்திரம்!
சத். ஸ்வாமி, தங்கள் கட்டளைப்படியே; ஆயினும் அவரை இப்பட்டணத்தின் எல்லை
வரையிலாவது வழி விட்டு வரும்படி எம்மீது கருணை கூர்ந்து உத்தரவளிக்க
வேண்டும்.
வி. அப்படியே செய்யுங்கள் போங்கள்! அதற்கப்புறம் ஒரு அடியும் எடுத்து
வைக்கக்கூடாது.
சத். தங்கள் கட்டளைப்படி. [நட்சத்திரேசன் தவிர மற்றெல்லோரும் போகிறார்கள். ]
ந. நிரம்ப சரி!
வி. என்ன அப்படி சொல்லுகிறாய்?
ந. வேறென்ன சொல்வதற்கிருக்கிறது?
வி. உனக்கு நான் கொஞ்சம் கஷ்டம் கொடுக்க வேண்டியிருக்கிறதென்று
நினைக்கிறேன்.
ந. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
வி. என்ன? ஏதாவது ஜெயம் உண்டாகுமென்று நினைக்கிறாயா?
ந. ஜெயத்திற்கு சந்தேகமென்ன? உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்.
வி. ஜெயமுண்டாகுமென்று நீ எண்ணுவதைக் கேட்க மிகவும் சந்தோஷமாயிருக்கிறது.
ந. எண்ணுவதாவது? எனக்கு சந்தேகமேயில்லையே?
வி. எதைப்பற்றி?
ந. ஜெயம் உண்டாகும் வசிஷ்டருக்கென்பதைப்பற்றி!
வி. வசிஷ்டருக்கா!
ந. வேறு யாருக்கென்று நினைத்தீர்? உமக்கு ஜெயமுண்டாகுமென்று உமது
கனவிலும் எண்ணவேண்டாம்.
வி. அது ஏன் அப்படி?
ந. ஹரிச்சந்திரன் குணம் அப்படி.
வி. ஆயினும் - ஏன்* பார்க்கிறேன்.
ந. நானும் - பார்க்கப் போகிறேன்.
வி. வீண்வாதம் ஒருபுறமிருக்கட்டும் - இப்பொழுது ஹரிச்சந்திரனைப் பின்
தொடர்கிறாயா?
ந. அதற்குத் தடையென்ன, அப்பொழுதே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டேனே? –
இதில் அணுவளவும் பிரயோஜனமில்லை என்று நன்றாயறிந்தபோதிலும்.
வி. சரி, காலதாமதம் செய்யாது உடனே புறப்படு. இதுவே என் கட்டளை. அந்த
ஹரிச்சந்திரனையும் அவனது மனைவியையும் மைந்தனையும் கணமும் விடாது
கஷ்டதிற்குள்ளாக்கு அவன் வாயினின்றும் எவ்விதத்திலாவது ஒரு அசத்திய
மொழி வரும்படிச் செய். அவனுக்குக் கொடுக்கிறேனென்று சபதம் செய்த என்
பாதி தவப் பயனை உனக்கு அளிக்கின்றேன்.
ந. ஆமாம், இந்த பாபத்தையெல்லாம் ஆர் பெறுவது?
வி. அதற்கெல்லாம் அஞ்சாதே, நானிருக்கிறேன் - உயிருக்கு ஹானி வரும்படி
மாத்திரம் செய்யாது, அதை விட்டு, வேறு என்ன செய்தபோதிலும் செய், அந்த
பாபத்திற்கு நான் உத்தரவாதம்.
ந. எனக்கொரு சந்தேகம் - கருணாநிதி என்று உம்மை ஹரிச்சந்திரன் அழைத்தானா?
அப்படி அழைத்திருந்தால், ஹரிச்சந்திரன் பொய் பேசிவிட்டான் என்று
வசிஷ்டரிடம் கூறி, பந்தயத்தைத்தாம் ஜெயித்ததாகச் சொல்லும்; நான் அதற்கு
சாட்சி வருகிறேன்!
வி. விளையாடாதே! - கட்டளையிடவேண்டியது என் பாரம், அதை
நிறைவேற்றவேண்டியது உன் பாரம்.
ந. வாஸ்தவம் - நான் உமக்குச் சொல்லவேண்டியதும் என் பாரம்.
வி. என்னவென்று?
ந. நீர் தோல்வியடையப் போகிறீர் என்று.
வி. பாப்போம் அதை! - உன் வேலையைப்பார். இப்பொழுது வீணாகக் காலம்
கழிக்கின்றாய் இங்கே.
ந. அங்கே போய் இன்னும் அதிகமாகக் கழிக்கப்போகிறேனே வீணாக.
வி. சரி, நான் கூறியது ஞாபக மிருக்கட்டும்.
ந. நான் கூறியதும் ஞாபக மிருக்கட்டும் [போகிறான். ]
வி. என்ன எதிர்த்துப் பேசியபோதிலும், நட்சத்திரேசன் தன்னாலியன்ற அளவு
முயன்றே பார்ப்பான்! ஆயினும் இதுவரையில் என் சூழ்ச்சிகளெல்லாம் ஒன்றும்
பலிப்பதாகக் காணோம். முகம் கோணாது தனது ராஜ்ய முழுவதும் தானமாகக்
கொடுத்தவன், எதற்கு அஞ்சப் போகிறான். இனி? ஆயினும் எனது முயற்சியைக்
கைவிடலாகாது. அந்தக் கடனை எப்படி தீர்க்கிறானோ பார்க்கிறேன். அந்த
வசிஷ்டர் முன்னிலையில் நான் தோற்றதாக ஒப்புக்கொள்வதோ? - அதுதவிர
வேறெதையும் செய்யத் துணிவேன்! [போகிறார். ]
காட்சி முடிகிறது.
-----------------
நான்காம் காட்சி.
இடம் - அயோத்தியின் எல்லைப்புறம்.
ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன் அற்ப உடையணிந்து வருகின்றனர். சத்தியகீர்த்தி முதலிய மந்திரிப் பிரதானிகள், நகரமாந்தர், அழுதவண்ணம் பின் தொடர்கின்றனர்.
ஜனங்கள். எம்மிறையே! எம்மிறையே! நாங்கள் இப் பாழும் நாட்டில் இனி இருக்க
மாட்டோம்! இருக்கமாட்டோம்! நாங்களும் உங்களுடன் வந்து விடுகிறோம்!
வந்து விடுகிறோம்!
ஹ. அப்பா, நண்பர்களே, அது நியாயமல்ல! உமதரசனாகிய விஸ்வாமித்திரர்,
உங்களுக்கெல்லாம் இந் நாடெல்லை வரையில் சென்று வழிவிட்டு வரலாமென்று
உத்தரவளித்திருக்கிறார். அந்த கட்டளையை நீங்கள் மீறி நடப்பது தர்மமல்ல.
இதோ, இந்நாட்டெல்லைக்கு வந்துவிட்டோம் - ஆகவே நீங்களெல்லாம்
தயவுசெய்து திரும்பிப் போங்கள் - அப்பா, சத்தியகீர்த்தி, இவர்களையெல்லாம்
அழைத்துச் செல் நீ.
ஜன. அந்தோ! அந்தோ! தாய் தந்தையரைப்போல எம்மைக் காத்து ரட்சித்த உம்மை
விட்டு நாங்கள் எப்படி பிரிந்து போவோம்! எப்படி பிரிந்து போவோம்!
ந. நண்பர்களே, துக்கப்படாதீர்கள், விஸ்வாமித்திரமகரிஷி அரசராயிருந்தவர்.
பிரஜைகளைப் காப்பது அவர் அறியாத விஷயமன்று ஆகவே இனி நீங்கள்
விடைபெற்று கொள்ளுங்கள்.
மூவர்*. [ஹரிச்சந்திரன் பாதம் பணிந்து] அண்ணலே! அண்ணலே! நாங்கள்
விடைப்பெற்றுக் கொள்ளுகிறோம்! உமது திருமுக தரிசனம் இனி எங்களுக்கு
என்று கிட்டுமோ.
ஸ்திரீகள். [சந்திரமதியைப் பணிந்து] தாயே! தாயே! எங்களைக் காப்பாற்றுவார்
யாரினி? எங்களைக் காப்பாற்றுவார் யாரினி? உம்மோடு இந்த ராஜ்ய லட்சுமி
போய் விடுகிறதே! போய் விடுகிறதே!
சிறுவர்கள். அப்பா! தேவதாசா! தேவதாசா! போய் வருகிறாயா! போய் வருகிறாயா!
தே. உம் - வர்ரேன்.
சத். [ஹரிச்சந்திரன் பாதத்தில் வீழ்ந்து கதறியழுது] அண்ணலே! நானும்
உங்களைப்பிரிய நேர்ந்ததே! நேர்ந்ததே! என் பாவிக் கண்களால் உமது பாதார
விந்தைகளை மறுபடி எப்பொழுது பார்க்கப் போகிறேனோ?
ஹ. சத்தியகீர்த்தி, எல்லா முணர்ந்த நீயே இப்படி துக்கப்படலாமோ?
மற்றவர்களுக்கெல்லாம் புத்திமதி கூறி அவர்களைத்தேற்றி அழைத்துச்
செல்லவேண்டியது உன்னைப்போன்ற விவேகியினுடைய கடமையன்றோ?
அப்பா, ஏன் வருந்துகிறாய்? வருவது வந்தே தீரும், அதற்கு வருந்தியாவதேன்?
எழுந்திரு. [கைகொடுத் தெழுப்புகிறான். ] நண்பர்களே, நேரமாகிறது. இனி
எனக்கு விடை கொடுங்கள்! – [கைகூப்பி வணங்கி] இதுவரையிலும் தெரிந்தும்
தெரியாமலும் ஏதேனும் உமக்கு நாங்கள் பிழை செய்திருந்தால் அதற்காக
மன்னிப்பு கேட்கிறோம் - எங்களுக்கு விடை கொடுங்கள்.
ஜன. போய்வாருங்கள்! போய்வாருங்கள்! சீக்கிரம் சுகமாய் வந்து சேர்வீர்களாக –
உம்முடைய ராஜ்யத்திற்கு! [கண்ணீருடன் பிரிகின்றனர். ] என்ன ஹரிச்சந்திரா!
துக்கப்படுகிறாயே; இவ்வளவு துயரமேன் உனக்கு? இந்த ராஜ்யம் உனக்கு
மறுபடியும் வேண்டுமென்றால், ஒரு வார்த்தை சொல், முனிவரிடம் சொல்லி
உனக்குக் கொடுக்கும்படி செய்கிறேன். - இதற்காக இவ்வளவு
துயரப்படுவானேன்?
ஹ. ஸ்வாமி இந்த ராஜ்யத்திற்காக நான் துக்கப்படவில்லை. இது எனக் கினி
என்னத்திற்கு? கொடுத்தது கொடுத்ததே! - இதற்காக நான் துக்கப்படவில்லை.
இத்தனை ஜனங்களும் நமக்காகத் துக்கப்படுகிறார்களே! என்று எண்ணி
வருந்தினேன்; வேறொன்றுமில்லை ஸ்வாமி.
ந. ஆனால் இங்கேயே இருந்துவிடுகிறதுதானே? விஸ்வாமித்திரருக்குத்
தெரியப்போகிறதா? நான் ஒன்றும் அவரிடம் சொல்லவில்லை. – பணத்திற்கு
வேண்டுமென்றால். -
ஹ. ஸ்வாமி! ஸ்வாமி! உங்களை மிகவும் வேண்டிக் கொள்ளுகிறேன். இம்மாதிரியான
வார்த்தைகள் தாங்கள் என்னிடம் கூறாதிருக்க வேண்டும். நான் அசத்தியத்திற்கு
என்றும் ஆளாக மாட்டேன் என்று உறுதியாய் நம்பும்.
ந. ஆனால் உன் இஷ்டம். ஏதோ உன் மனைவி மக்களோடு கஷ்டப்படுகிறாயே
என்று பரிந்து இவ்வார்த்தையைச் சொன்னேன். பிறகு உன் இஷ்டம் –
புறப்படுவோ மினி, காலதாமதமாகிறது.
தேவ. அண்ணா, நாம் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோமா?
ஹ. ஈசனே! ஜகதீசா!
ந. கஷ்டம்! கஷ்டம்! சொன்னால் கேளாவிட்டால் - உன் பாடு! புறப்படுங்கள்.
ச. அயோத்யா தேவியே! நமஸ்கரிக்கிறோம்! விடைபெற்றுக் கொள்ளுகிறோம்! [எல்லோரும் போகிறார்கள். ]
காட்சி முடிகிறது. –
----------
ஐந்தாம் காட்சி.
இடம் - காசியைச் சார்ந்த ஓர் காடு.
ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், நட்சத்திரேசன், வருகிறார்கள்.
ச. பிராணநாதா, நாம் எப்பொழுது காசி நகரம் போய்ச் சேர்வோமோ? என் கால்கள்
சோர்கின்றன. நிற்பதும் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது – இதோ பாரும், நமது
கண்மணி தேவதாசன் பசியால் களைப்புற்று வருந்துகிறான்.
தேவ. ஆம் அண்ணா, எனக்கு மிகவும் பசியாயிருக்கிறது, எனக்கும் அம்மாவுக்கும்
ஏதாவது கொண்டுவந்து கொடுங்கள் புசிக்க.
ஹ. அந்தோ! இந்த கானகத்தில் எனக்கென்ன அகப்படப் போகிறது! -
ந. ஹரிச்சந்திரா, இங்கே வா இப்படி! என்ன செய்துகொண்டிருக்கிறா யங்கே உன்
மனைவி மக்களுடன்? இனி மேல் இந்த கதையெல்லாம் உதவாது. இந்தப்
பதினான்கு நாட்களாக, கறடு முறடு என்றும் பாராமல், காட்டு மிருகங்களையும்
பாராமல், கானகம் கானகமாகக் கடக்கச் செய்தாய், மேரு பர்வதம் போன்ற
மலைகளின் மீதெல்லாம் ஏறச் செய்தாய், அதி தீவரமாய் ஓடும் ஆறுகளை
யெல்லாம் தாண்டச் செய்தாய். இவ்வளவு நான் கஷ்டப்பட்டதின் பலன்,
எள்ளளவும் காணோம். நீ கொடுப்பதாகக் கூறிய பணத்தில் அரை பைசாவையும்
கண்டே னில்லை. இந்த இடத்தைவிட்டு நான் ஒரு அணுவளவும் நகரமாட்டேன்.
எப்படியாவது பணத்தைக் கொண்டுவந்து என் முன்பாக வை, இல்லாவிட்டால்
உன்னால் முடியாது என்று சொல்லிவிடு, நான் உடனே திரும்பிப் போய்
விஸ்வாமித்திரரிடம் அவன் கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறானெனக் கூறி
விடுகிறேன்.
ஹ. வேதியரே, என் மீது கொஞ்சம் இரக்கம் வையும்; நான் குறித்த தவணைக்கு
இன்னும் ஒரு தினம் இருக்கிறது. காட்டில் கொஞ்சதூரம் கடந்து செல்வோமாயின்
காசியை யடைவோம். இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு எங்களுடன் வருவீராகில்,
நாளைத்தினம் முனிவருக்குக் கொடுக்கவேண்டிய பொருளை முற்றிலும் கொடுத்து
விடுகிறேன்.
ந. இதுவரையிலும் உங்கள் பின்னால் அலைந்தது போதாது, இன்னும் கொஞ்சம்
அலையவேண்டுமா? அது முடியவே முடியாது. இவ்விடமிருந்து ஒரு அடியும்
எடுத்து வைக்கமாட்டேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை என் முன்பாக நீ
வைக்குமளவும் இவ்விடம் விட்டுப் பெயரேன்.
தேவ. அம்மா! அண்ணா! என் கால் எல்லாம் கொதிக்கிறது! கொதிக்கிறது!
ச. பிராணநாதா, அதோ நிற்கும் அம்மரத்தின் நிழலில் தாம் போய்த் தங்கலாகாதா
சிறிது பொழுது? இக்கட்டாந் தரை கொதிக்கிறது, சூரிய பகவானும் உச்சியில்
கொளுத்துகிறார், என் கால்களே தாளவில்லையே – நமது குழந்தை -
ஹ. ஸ்வாமி, அதோ அந்த நிழலில் போய்த் தங்கி கொஞ்சம் இளைப்பாறுவோமா?
ந. அதெல்லாம் முடியாது! இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்; இவ்விடம் எனக்கு
சவுக்கியமாகத்தானிருக்கிறது, என்னை இங்கே தனியே விட்டுவிட்டு நீங்கள்
எல்லாம் ஓடிபோகப் பார்க்கிறீர்களா என்ன?
ஹ. ஸ்வாமி, அப்படிப்பட்ட எண்ணம் அடியேனுக் கொன்று மில்லை. இந்த எனது
வேண்டுகோளுக்கு தயைசெய்து இரங்கும். இவள் ஸ்திரீ ஜாதி, இவன் அறியாப்
பாலகன், இவர்களால் இச் சுடுகையும் வெப்பமும் தாங்க முடியவில்லை.
ந. தாங்க முடியாமற்போனா லெனக்கென்ன? நீ மாத்திரம் சொன்ன சொல்
தவறலாகா தென்கிறாயே, இவ்விடம் விட்டுப் பெயரமாட்டேன் என்று நான்
சொன்ன சொல்லை நான் ஏன் தவற வேண்டும் இவர்களுக்காக? என் பணத்தைக்
கொண்டுவந்து எண்ணி வை இப்படி, நான் எழுந்து வருகிறேன்.
தேவ. அம்மா! - அண்ணா! - பசி! பசி! [மூர்ச்சையாகிறான்]
ச. பிராணநாதா! நமது குழந்தை பசியால் மூர்ச்சையானான்! நானும்
மூர்சையாவேன்போ லிருக்கிறது! என்னைச் சற்றே தாங்கும் - தாங்கும்! [ஹரிச்சந்திரன் அவளைத் தாங்க விரைகிறான். ]
ந. ஹரிச்சந்திரா! ஹரிச்சந்திரா! வா இப்படி! வா இப்படி! என் கால் எல்லாம் சுடுகிறது!
சுடுகிறது! தூக்கு! தூக்கு என்னை! -
ஹ. இதோ வந்தேன் ஸ்வாமி! [நட்சத்திரேசனிடம் போகிறான். ]
ந. என்னால் எழுந்திருக்கவும் முடியவில்லை, என்னை அப்படியே தூக்கிக்கொண்டு
போய் அந்த நிழலில் வை. என்ன உன் பெண்சாதி பிள்ளைகளைப்
பார்த்துக்கொண்டு நிற்கிறாயே! அவர்களுக்குத் தெரியும் அவர்களைப்
பாதுகாத்துக்கொள்ள. ஏழை பிராம்மணனாகிய என்னைக் காப்பாற்றுவது தான்
உனது முதற் கடன். [ஹரிச்சந்திரன் நட்சத்திரேசேனைத் தூக்கிக்கொண்டு போய்
மர நிழலில் வைத்துவிட்டு சந்திரமதி இருக்குமிடம் வருகிறான். ]
ஹ. அந்தோ! என் காதலிக்கும் காதலனுக்கும் இக் கதி வாய்க்கவேண்டுமா? [தேவதாசனை எடுத்துத் தோள் மீது சாத்திக்கொண்டு,சந்திரமதி முகத்தில் கற்றேழ தன் மேலாடையால் விசுகிறான். ]
ச. [மூர்ச்சை தெளிந்து] பிராணநாதா! உங்களுக்கு நான் எவ்வளவு கஷ்டம்
கொடுக்கிறேன்! - கொஞ்சம் ஜலம் கொண்டுவர முடியுமா? என் நா உலர்ந்து
போகிறது. - குழந்தையின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்போமாயின்
அவனும் மூர்ச்சை தெளிவான். அவன் முகத்தைப் பாரும் என்ன வெளுத்துக்
காட்டுகிறது!
ந. ஹரிச்சந்திரா! என்ன சல்லாபமாய்ப் பேசிகொண்டிருக்கிறா யங்கே உன்
மனைவியுடன்? வா இப்படி சீக்கிரம்.
ஹ. ஸ்வாமி, இதோ வருகிறேன். - சந்திரமதி, கொஞ்சம் பொறுத்துக்கொள்.
அதோ, அந்த நிழலி னருகிற் செல்வோம் முதலில். பிறகு, இக் கோரமான
கானகத்தில் எங்காவது ஜலம் இருந்தால் கொண்டுவந்து தருகிறேன்.
ச. நாதா! நாதா! நமக்கு இப்படிப்பட்ட கதியும் வாய்க்க வேண்டுமா!
[கண்ணீர் விடுகிறாள். ]
ஹ. கண்மணி, கண்ணீர் விட்டுக் கலங்கிடாதே. நம்மா லாவதென்ன இருக்கிறது
இந்நாநிலத்தில்? யாது மவன் செயலென்று உறுதியாய் நம்பி, என்ன கஷ்டம்
நேர்ந்த போதிலும், நமது நன்மையின் பொருட்டே அவ்வாறு நடத்துகிறார்
பரமேஸ்வரன் என்று, நிச்சயமான புத்தியுடையவர்களா யிருத்தல் வேண்டும் நாம்.
நாம் இதுவரையில் அனுபவித்த கஷ்டங்களெல்லாம் இனிமேல் நமக்கு
நேரவிருக்கிற கஷ்டங்களை அனுபவிப்பதற்கு வழி காட்டுகின்றன வல்லவா?
ஆகவே தைரியத்தைக் கைவிடாதே. நம்மைப் படைத்தவர் அறிவார் எது நமக்கு
நன்மையானதென்று. இக் கஷ்டங்களை யெல்லாம் நாம் அனுபவிப்பது, நாம்
முன் ஜன்மங்களிற் செய்த பாப பரிகாரத்தின் பொருட்டா யிருக்கலாம். அவர்
திருவுளத்தை அறிந்தார் யார்? ஆகவே மெல்ல நடந்து வா. இன்னும் கொஞ்சம்
தூரம் செல்வோமாயின் காசியை யடைவோம். காட்டுத் தீயினின்றும் தப்பினோம்,
கடும் பூதத்தின் கையினின்றும் பிழைத்தோம், கடுவாய் முதலிய மிருகங்களின்
வாயினின்றும் உய்ந்தோம். இக் கஷ்டங்களை யெல்லாம் நீக்கியருளிய ஈசன்,
மற்றவைகளினின்றும் நம்மைக் காத்திட மனம் வையாரா? ஆகவே மனதை
தைரியப்படுத்திக்கொள்.
ந. ஒ! ஹரிச்சந்திரா! இந்த தூரம் நடந்து வருவதற்கு இத்தனை காலமா? நிலவில்
ஒய்யாரமாய் நடப்பதுபோல் நடந்து வருகிறாயே! - வா விரைந்து. - ஹரிச்சந்திரா,
உடனே போய் எனக்குக் குடிக்க ஜலமும், புசிக்க ஏதாவது கனிவர்க்கமும்
கொண்டுவா. பசியால் களைத்துப் போகிறேன். நா வுலர்ந்து போகிறது! சீக்கிரம்!
சீக்கிரம்!
ஹ. ஸ்வாமி, அப்படியே ஆகட்டும், கூடிய சீக்கிரத்தில் வருகிறேன்.
[தேவதாசனைச் சந்திரமதியிடம் கொடுத்துவிட்டு விரைந்து போகிறான். ]
தேவ. [மூர்ச்சை தெளிந்து] அம்மா! - பசி! - பசி!
ச. கண்ணே, தேவதாசா, என் கண்மணியே, கொஞ்சம் பொறு அண்ணா உணவு
கொண்டுவரப் போயிருக்கிறார். சீக்கிரம் வந்து விடுவார் - கண்மணி! உன்
தலைவிதியும் இப்படியிருந்ததா? மன்னர் மன்னனுக்குப் புதல்வனாய்ப் பிறந்தும்,
மண்ணினில் எல்லாச் செல்வங்களையுமிழந்து, காடு மலைகளெல்லாம் கால்
நோகக் கடந்து சென்று, கடும் பசியால் களைப்புற்று, கட்டாந்தரையிற் படுத்துக்
கிடக்கும்படி உன் தலையில் பிரம்மதேவன் வரைந்தானோ? கண்ணே! கண்ணே!
என்பொருட்டு நான் வருந்தவில்லை, பசி பசியென்று பரதேசியைப்போல்
பரிதபிக்கும் பாலன் உன் முகத்தைப் பார்த்து நான் எப்படியடா சகிப்பேன்
பல்கோடி பெயர்களுடைய பசியை ஆற்றும்படியான ஸ்திதியிலிருந்த நாங்கள்,
பாலன் ஒருவனாகிய உன் பசியை ஆற்றுதற்கு அசக்தர்களா யிருக்கிறோமே!
பரமேஸ்வரா! பரமேஸ்வரா! பாரினில் எங்களைப்போன்ற
தௌர்ப்பாக்கியசாலிகளும் இருக்கிறார்களோ?
ந. ஆ! பரமேஸ்வரா! பரமேஸ்வரா! என்னைப் பார்க்கிலும்
தௌர்ப்பாக்கியசாலியாகிய பிராமணனும் இப் பூமண்டலத்தில் இருக்கிறானோ?
அகத்தில் உட்கார்ந்து கொண்டு, அறுசுவை யுண்டியை ஆறுவேளை போஜனம்
செய்து கொண்டு, எல்லோரும் என் தாள் பணிந்து தட்சிணை கொடுக்க அதைப்
பெற்றுக்கொண்டு, சுகமா யிருந்த நான், இந்தப் பாவிகளைப் பின் தொடர்ந்து,
பசியால் வருந்தி, பரதேசியைப்போல் பரிதபிக்கலானேனே! ஒரு கஷ்டமா
படுத்தினார்கள் என்னை? அக்னியாற்றில் அமிழ்த்தப் பார்த்தார்கள், வன
விலங்குகளின் கையிற் சிக்கச் செய்தார்கள், பூதத்தின் வாய்க்கு
இரையாக்கினார்கள். இந்த பதினான்கு தினமும் நான் பட்ட கஷ்டமிருக்கிறதே,
அந்த பகவானுக்குத்தான் தெரியும்! இந்த கஷ்டங்களையெல்லாம் கூட நான்
கவனிக்கமாட்டேன்! ஒரு வேளையாவது நல்ல சாப்பாடு உண்டா? ஒரு சிரார்த்த
போஜனமாவது கிடைத்ததா? பால் பாயசத்துடன் பிரமான்ன* போஜனம் புசித்த
நான், பட்டினியால் வதங்கி வற்றலாயுலர்ந்து, காற்றாய்ப் பறக்கின்றேனே! ஒரு
வேளைக்கு, ஒரு வீசை நெய். இரண்டுபடி பால், மூன்று தூக்குக் கோதுமைக்கு
குறையாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான், காட்டில் உலர்ந்த சருகுகளை
உண்டு கசம்புத் தண்ணீரைக் குடிக்கவேண்டி வந்ததே இந்த பாழும்* பதினான்கு
தினங்களாக, ஒரு சீப்பு வாழைப் பழம், ஒரு அன்னாசிப்பழம், ஒரு பலாப்பழம், ஒரு
பத்து மாம்பழம், எதையாவது என் பாவி கண்களால் கனவிலாவது
கண்டேனில்லையே*! என்ன தௌர்ப்பாக்கியசாலி! என்ன தௌர்ப்பாக்கியசாலி!
இப்படியும் என் தலையில் எழுதிவைப்பானா அந்த ஈஸ்வரன்? - இத்தனை
கஷ்டப்பட்டும் இதனால் ஏதாவது பலன் உண்டா? அதுவும் கிடையாது. இந்தப்
பாழாய்ப்போன ஹரிச்சந்திரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பணத்தை
யென்னமோ நான் பார்க்க போகிறதில்லை.
தேவ. ஏனையா என் அண்ணாவைத் திட்டுகிறார்கள்?
ந. நீ யாரடா என்னைக் கேட்பதற்கு? இவ்வளவு சிறு பயலுக்கு எவ்வளவு பெரிய
வாய்! இன்னொரு வார்த்தைப் பேசினால் உன்னைப் பிய்த்துவிடுவேன்*
தேவ. ஏன். நான் என்ன தப்பிதம் செய்தேனையா?
ச. கண்ணே, பேசாமலிரு. அவருக்குக் கோபம் வரும்படி செய்யாதே. - ஸ்வாமி,
அந்தணரே, எங்கள் மீது உமக்கு ஏன் இரக்கமென்பதில்லாமலிருக்கிறது? இது
வரையில் நாங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்களை யெல்லாம் தாங்கள் நேரிற்
பார்த்து வந்தும், எங்கள் மீது பரிதாபப்பட்டு ஒரு வார்த்தையேனும் பட்சமாய்ப்
பகரவில்லையே, நாங்கள் உமக்கு என்ன பாபமிழைத்தோம்?
ந. என்ன பாப மிழைத்தீர்களா? என்னைப் பட்டினியால் வதைக்கப்
பார்க்கவில்லையா? அக்னியால் கொளுத்தப் பார்க்கவில்லையா? ஆற்றில்
அமிழ்த்தப் பார்க்கவில்லையா? பூதத்திற் கிரையாக்கப் பார்க்கவில்லையா? கடும்
புலிவாயிற் சிக்கச்செய்யவில்லையா? அப்பா! – மூச்சுத் திணறுகிறதெனக்கு,
நீங்களிழைத்த பாபங்களையெல்லாம் சொல்வதென்றால்! -
ச. பிராம்மணோத்தமரே, தாங்கள் அவ்வாறு சொல்லலாகாது. ஆபத்துகள்
நேரிட்டபொழுதெல்லாம், முதலில் தங்களைப் பாதுகாத்த பிறகே, எங்களைப்
பாதுகாக்க நாங்கள் பிரயத்தனப்பட்டது, தங்கள் மனதிற்கு நன்றாய்த் தெரியும். -
[ஹரிச்சந்திரன் கொஞ்சம் கனிவர்க்கத்தையும் தண்ணீரையும் கொண்டு வருகிறான்].
தேவ. அண்ணா! அண்ணா! அந்த பழத்தைக் கொடுங்கள்! பழத்தைக் கொடுங்கள்!
ந. பொறு ஹரிச்சந்திரா! அந்த பழத்தையெல்லாம் முன்பு என்னிடம் வை –
மற்றவர்கள் எல்லோருக்கும் முன்பாக பிராம்மணன் புசித்துப்
பசியாரவேண்டுமென்கிற நீதி உனக்குத் தெரியாதா?
[பழங்களை யெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு விரைவாகத் தின்கிறான். ]
ச. ஸ்வாமி! குழந்தை மிகவும் பசியோடிருக்கிறான் களைத்துப் போகிறான்.
அவன்மீது கருணைகூர்ந்து ஒரு கனி மாத்திரம் அவனுக்கு தயவு பண்ணுங்கள்!
ஸ்வாமி! ஸ்வாமி! -
ந. அதெல்லாம் உதவாது, நான் பசியால் செத்துப் போகிறேன்! என் பசி
பத்திலொருபங்கு கூட தீரவில்லை. அவனுக்கென்ன, யார் வேண்டுமென்றாலும்
உணவு கொடுப்பார்கள்; அநாதையான எனக்கு யார் கொடுப்பார்கள்? இந்தா,
இதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது அதைக் குடித்து களைதீரச் சொல் –
துடுக்குப்பயல்! என்ன பேசினான் முன்பு?
ச. [அதை வாங்கிக்கொண்டு] ஸ்வாமி! இவ்வளவாவது தயவு பண்ணினீரே!
[தேவதாசனுக்கு அதைக் கொடுக்கப் போகிறாள். ]
ந. அடடா! கொண்டுவா இப்படி! கொண்டுவா இப்படி அந்த ஜலத்தை, என்
கைகளைக்கழுவ மறந்து போனேன், கொடு கொடு இப்படி! [அந்த ஜலத்தை
வாங்கிக் தன் கைகளைக் கழுவிக் கொள்ளுகிறான். ]
தேவ. அண்ணா! - என்ன பேராசை பிடித்த பிராம்மணன்!
ச. ஸ்! ஸ்! - கண்ணே! அப்படியெல்லாம் வெளியில் சொல்லாதே!
ந. அப்பா! - இப்பொழுதெல்லாம் சரியாகிவிட்டது - நேரமாகிறது புறப்படுவோம்
வாருங்கள். இருட்டு முன் காசிப்பட்டணம் போய்ச் சேரவேணும். புறப்படுங்கள்!
புறப்படுங்கள்!
ச. ஈசனே! ஜகதீசா! [கண்ணீர் விடுகிறாள். ]
ஹ. பரமேஸ்வரா! பரமேஸ்வரா! எந்த ஜன்மத்தில் என்ன பாபமிழைத்தோம் நாங்கள்
இக்கதியடைவதற்கு? நான் செய்த பாபமே என் மனைவி மக்களைப்
பீடிக்கிறதோ? இருக்கட்டும்! உம்முடைய திருவுளப்படியே நடப்பதெல்லாம்
நடக்கட்டும். இன்னும் எம்மை எக்கோலம் கண்டபோதிலும் உமது
பாதாரவிந்தங்களை விடப்போகிறதில்லை.
ந. இதோபார் ஹரிச்சந்திரா! இவ்வளவு கஷ்டமும் நீ வருவித்துக்கொண்டதே!
இப்பொழுதும் என்ன கெட்டுப் போச்சுது? உன்னால் கொடுக்க முடியாது என்று
ஒரு வார்த்தை சொல், நான் உடனே உங்களை விட்டுப் போய் விடுகிறேன்; உன்
மனைவி மக்களுடன் நீ எங்கேயாவது போய்ச் சுகமாய் வாழலாம். -
ஹ. வேதியரே! தயவுசெய்து இவ்வார்த்தையை என் செவியிற் போடவேண்டாமென்று
தங்களை எத்தனை முறை வேண்டி இருக்கிறேன்! - முற்று முணர்ந்த தாங்கள்
என்னை இப்படி வற்புறுத்துவது தங்களுக்கு அடாது - உடனே புறப்படுவோம் –
வாருங்கள்.
ந. உன்னுடைய நலத்தைக் கோரியே நான் சொன்னேன்; கேளாமற் போனால்
உன்பாடு பழிக்கஞ்சி சொன்னேன், பிறகு அந்த பாபம் உன் தலைமேல்.
மதிதயராஜன் புதல்வியாய்ப் பிறந்து, மன்னர் மன்னனாகிய உன்னை மணந்த
உன் மனைவியின் கதியைப்பார்! உலகனைத்தும் ஒருதனிக் குடைக்கீழ் ஆண்ட
சக்கரவர்த்தியின் ஒரு புத்திரனாய்ப் பிறந்த உன் மைந்தன் கதியை கவனி!
இவர்களா இக்கஷ்டங்களை யெல்லாம் அனுபவிக்கத் தக்கவர்கள்? பிறகு
இவர்களைக் கொன்ற பாபம் உன்னைச் சூழும் நான் சொல்வதைக்கேள் –
வீணாகப் பிடிவாதம் செய்யாதே. வாஸ்தவத்தில் அவ்வளவு பெருந்தொகையை
முனிவருக்குச் செலுத்த உனக்குச் சக்தியில்லை, அதுவும் இன்னும் ஒரு
தினத்திற்குள்ளாக எப்படி செலுத்தப்போகிறாய்? இன்னும் ஏதாவது தவணை
வேண்டியிருந்தால் சொல். -
ஹ. வேதமுணர்ந்த வேதியரே! உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். வீணாக ஏன்
இவ்வாறு வார்த்தை யாடுகிறீர்கள்? என்னுயிருக்குயிராகிய மனைவியும்
மைந்தனும் என் கண் முன்பாக கடும்பசியால் உயிர் துறப்பினும் துறக்கட்டும்!
நான் இதுவரையில் பட்ட கஷ்டத்தைப் பார்க்கிலும், பதினாயிரம் மடங்கு அதிக
கஷ்டம் அனுபவிக்கும்படி நேர்ந்தாலும் நேரட்டும்! நான் கூறிய மொழியினின்றும்
தவறமாட்டேன்! தவணைப்படி முனிவருக்குச் சேரவேண்டிய பொருளை ஈசன்
கருணையினால், கொடுத்தே தீர்ப்பேன். போவோம் வாரும் காசி நகரத்திற்கு –
பெண்ணே சந்திரமதி, கண்ணே தேவதாசா! உங்கள் கஷ்டங்களைப் பாராமல்,
காசிவிஸ்வேசனை சீக்கிரத்தில் தரிசிக்கப் போகிறோம் என்னும் குதூஹலத்துடன்
புறப்படுங்கள் உடனே.
ச. ஆம்; பிராணநாதா, எங்கள் கஷ்டத்தைக் கருதாதீர் என்று மழியா உமது
வாய்மையினைக் காத்திடும் அடியாளைப்பற்றி உமக்குக் கொஞ்சமேனும்
கவலையே வேண்டாம். இதோ புறப்பட்டு விட்டேன்.
தேவ. அண்ணா, என்னைப்பற்றிக்கூட உமக்குக் கவலை வேண்டாம். நானும்
புறப்பட்டு விட்டேன்.
ந. சரி, ஆனால் வாருங்கள். [ஒரு புறமாக] விஸ்வாமித்திரரே இதை எல்லாம்
இங்கிருந்து கேட்டிருப்பீராயின் அப்பொழுதாவது உமக்கு உண்மை விளங்கும்! [எல்லோரும் போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
------------------
முதல் காட்சி
இடம் - காசியில் விஸ்வேஸ்வரர் கோயிலுக் கருகிலுள்ள வீதி. ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், நட்சத்திரேசன், வருகிறார்கள்.
ஹ. சந்திரமதி, தேவதாசா, புண்ய க்ஷேத்திரமாகிய காசிக்கு வந்து விட்டோம்.
அதோ பாருங்கள், விஸ்வநாதருடைய கோயில் கோபுரம் தெரிகிறது, நம்முடைய
கஷ்டங்களினின்றும் நம்மைக் காப்பாற்றி யருளும்படி காசி விஸ்வேசனைத்
தொழுவோம் - காசிவாழ் கண்ணுதலே! எண்ணரிய ஜீவ கோடிகளையும்
படைத்தளித்தழிக்கும் பரமனே! உமது பாதாரவிந்தங்களைப் போற்றுகிறோம்.
அடியேங்களின் மீது அருள் வைத்து எங்கள் கஷ்டங்களைக் களைந்து
கடைத்தேறும்படி கடாட்சித் தருளும். அடியேங்களுக்கு என்ன கெடுதி நேரிட்ட
போதிலும் அறநெறியினின்றும் அணுவளவேனும் தவறாமலிருக்கும்படி
அனுக்கிரஹம் செய்யும்!
ச. மூவர்க்கு முதலே தேவதேவனே! முற் பிறப்பிலும் இப்பிறப்பிலும் அடியேங்கள்
செய்த பாபங்களையெல்லாம் பரிஹரித்து, பாவியேங்கள் மீது பட்சம் வைத்துப்
பாதுகாரும். எனது கணவர் தன் வாய் மொழியினின்றும் தவறா வண்ணம்
கருணை கூரும். எனக்குப் பதிவிரதை யென்கிற பெயர் பழுதடையாதபடி
பாலித்தருளும். தேஜோமயா நந்தனே! ஒன்றும் தெரியாப் பாலனாகிய தேவதாசன்
நாங்கள் செய்த பாபத்திற்காகத் துயருறாவண்ணம் தயைகூரும்.
தேவ. சாமி, என் அண்ணாவையும் அம்மாவையும் - எல்லாக் கஷ்டங்களினின்றும்
காப்பாற்றுங்கள்! இந்த பிராம்மணரிடத்திலிருந்து கூட காப்பாற்றுங்கள்!
ந. பார்த்தாயா, அந்த அதனப்பிரசங்கியை! - இருக்கட்டும்! - ஹரிச்சந்திரா, என்ன
செய்துகொண்டிருக்கிறாய் இங்கே? என் கையினின்றும் எப்படித் தப்பித்துக்
கொண்டோடிப் போய்விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாயா? இதோ
பார், இதுதான் என் கடைசி வார்த்தை! நீ கேட்டுக்கொண்டபடி எவ்வளவோ
கஷ்டப்பட்டு உன் பின்னால் இந்தப் பதினைந்து தினங்களாக ஊணுறக்கமின்றி,
பஞ்சையைப் போல் தொடர்ந்து வந்தேன். இனிமேல் ஒரு அடியும் எடுத்து
வைக்கமாட்டேன். காசி நகரம் வந்தாச்சுது! காசைப் பார்க்கும் மார்க்கம்தான்
காணேன்! சேரவேண்டிய பணத்தை யெல்லாம் சேர்த்துவை உடனே,
இல்லாவிட்டால் இல்லையென்று சொல்லிவிடு. இனி தாமதியேன் நான்.
ஹ. ஸ்வாமி, கொஞ்சம் பொறுங்கள், இன்றைத்தினம் சூரியன் அஸ்தமிக்குமுன் எக்
கஷ்டமாவது பட்டு முனிவர் பொருளைச் சேர்த்துவிடுகிறேன் உம்மிடம். -
சத்தியகீர்த்தி வருகிறான்.
சத். அரசே! அரசே! உம்மைக் காணப்பெற்றேனே!
ஹ. சத்தியகீர்த்தி! எதற்காக இங்கு வந்தாய்? - விஸ்வாமித்திரருடைய
கொலுவைவிட்டு வரலாகாதென்று உனக்கு உறுதியாய்க் கூறியிருந்தேனே!
சத். அரசே, தங்களுடைய கட்டளையை மீறி நடந்ததற்காக என்னை மன்னியும். நீர்
இல்லாத அயோத்தியில் ஒரு நிமிஷம்கூட நிற்பதற்கு என் மனம் பிடிக்கவில்லை.
ஆகவே எப்பொழுது சமயம் வாய்க்குமோ என்று ஏங்கியிருந்து, கடின சித்தமுடைய
அந்த காதி மைந்தரிடமிருந்து விடைபெற்றே, வேகமாய் இங்கு உம்மைப் பின்
தொடர்ந்தேன். வருகிற வழியில் நீங்கள் காசிக்குப் போனதாகக் கேள்விப்பட்டு
இங்கு வந்தேன், உங்களை கண்டேன், என் கவலை யொழிந்தேன்.
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, அம்மட்டும் நீ எங்களை முன்பே வந்து சந்தியாதது நலமே.
முன்பே சந்தித்திருப்பாயாயின் நாங்கள் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம்
நீயும் அனுபவித்திருக்கும்படி நேரிட்டிருக்கும்; அதனின்றும் தப்பினாயே
அம்மட்டும் ஈசனருளால்! -
சத். அரசே பிராம்மணருக்கு கொடுக்கவேண்டிய பணம் செலுத்தியாய்விட்டதா?
ஹ. இல்லை, இன்னும் தீர்க்கவில்லை. ஆயினும் இன்றுபொழுது போவதன் முன் அக்
கடனை எப்படியாவதுதீர்க்கவேண்டும். அங்ஙனம் செய்வதாக
வாக்களித்திருக்கிறேன். ஆகவே அப்படிச் செய்தே தீரவேண்டும், ஆயினும்
இப்பெருந் தொகையை அடையும் மார்க்கம் ஒன்றும் தோன்றாதவனாய்த்
திகைத்து நிற்கிறேன். இத்தொகையை யார் எனக்குக் கடனாகக் கொடுப்பார்கள்?
அப்படிக் கொடுத்தபோதிலும் அதில் என்ன பிரயோஜனம்? முனிவர்
கடனினின்றும் நீங்கி மற்றொருவருக்குக் கடன்பட்டதே யாகுமன்றோ? –
யாசிப்பது க்ஷத்ரிய தர்மமன்று, ஆகவே அதைச் செய்யேன். வேறு நான் என்
செய்வது? - மூவர்க்கு முதலே! முத்திக்கரசே! முனிவர்க்கு நான் பட்டுள்ள
கடனைத் தீர்க்கும் மார்க்கம் ஏதாவதொன்று கடாட்சித்தருளும்! நீரே கதி! நீரே கதி!
ந. ஹரிச்சந்திரா! இப்பொழுதாவது என் வார்த்தையைக் கேள். அந்த ஈஸ்வரனால்
உனக்கு உதவி செய்ய முடியாது. - என்னால் முடியும்.
ஹ. ஸ்வாமி, இக் கடனைத் தீர்க்கும்படியான மார்க்கம் தமக்கேதாவது தோன்றினால்,
தயைசெய்து என்னிடம் கூறுங்கள், உமக்கு மிகவும் புண்யமாம்.
ந. கடனைத்தீர்த்து இக்கஷ்டங்களினின்றும் கடைத்தேறும் மார்க்கம் மிகவும்
சுலபமானதொன் றிருக்கிறது. அப்பொழுதான் கேட்கமாட்டேன் என்றாய்,
இப்பொழுதாவது கேள். -
ஹ. பிராம்மணோத்தமரே, முன்பு கூறியதைத் தாம் மறுபடியும் கூறுவதானால், தயை
செய்து அதைக் கூறாதிரும். அதை நான் கேட்பதும் தர்மமன்று, தாங்கள்
எனக்கதைக் கூறுவதும் தர்மமன்று. அதைவிட, எங்கள் குலத்தில்
முற்பிறந்தோனாகிய சிபி சக்கரவர்த்தி ஒரு புறாவிற்காகச் செய்தபடி, எனது
தேகத்திலுள்ள தசையைத் துண்டம் துண்டமாக்கி விற்றாவது, என் கடனை
தீர்க்கும் மார்க்கத்தைத் தேடுவேன் நான்! -
சத். பிராணநாதா,தாங்கள் அவ்வாறு ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. அதை
விட சுலபமான மார்க்கம் ஒன்று எனக்குத் தோற்றுகிறது. அதை இதுவரையில்
கூறாததற்காக என்னை மன்னிக்க வேண்டும். பதிவிரதையின் முக்கியமான
கடமை என்னவென்றால், தன்பதிக்கு ஏதேனும் கஷ்டம் நேரிடுங்கால், தன்
உயிரையாவது கொடுத்து அவரை அக்கஷ்டத்தினின்றும் விடுவிக்க வேண்டியதே;
புத்திரனுக்கும் அம்மாதிரியாகக் கடமை யுண்டு. ஆகவே என்னையும் தேவதாசனையும் அடிமைகளாக விற்று அப்பணத்தைக் கொண்டு முனிவர்
கடனைத் தீர்த்துவிடும்.
ஹ. என்ன! நான் கனவு காண்கிறேனா என்ன? சந்திரமதி, என்ன சொன்னாய்?
உங்களிருவரையும் விற்பதா? உன்னையும் - தேவதாசனையும் - நான் விற்கவா? –
பரமனே! பரமனே! உமது பாதாரவிந்தங்களை மறவாது பக்தனாய்த் தொழுது வந்ததற்குப் பலன் இதுதானோ? என் மனைவி வாக்கினின்றும் இவ்
வார்த்தையைக் கேட்கும்படி அனுக்கிரஹம் செய்தீரே! பாவி நான் எந்த
ஜன்மத்தில் என்ன பாபமிழைத்தேனோ இக் கதி அனுபவிப்பதற்கு?
[கண்ணீர் விடுகிறான். ]
ச. பிராணநாதா, துக்கப்படாதீர், என்மீது கோபமும் கொள்ளாதீர்; நீரே எனக்கு
எத்தனை முறை சொல்லியிருக்கிறீர்கள், மண்ணுலகில் உற்றார் உறவினர்
மனைவி மக்கள் மற்றெச் செல்வமும் சாஸ்வதமல்ல, சத்யமொன்றே
சாஸ்வதமானது, என்று. நாங்கள் எல்லாம் நடு வழியில் நிற்பவர்களே, வேறு
உலகத்திலும் உம்மை விடாது தொடர்வது அந்த சத்யமொன்றே. ஆகவே
முனிவருக்குத் தாம் கொடுக்க இசைந்த பொருளைக் கொடுத்து, உமது சத்யத்தைக்
காப்பாற்றும் பொருட்டு, எங்களை யெல்லாம் துறப்பதும் தர்மமாகும். தர்ம
சாஸ்திரங்கள் இங்ஙனம் ஒருவன் செய்யலாமென்றும் அனுமதி கொடுக்கின்றன.
அன்றியும் பிராணநாதா, உமது மனைவியாகிய எனக்கும், உமது மைந்தனாகிய
தேவதாசனுக்கும், உமக்கு நேரிட்ட கஷ்டத்தினின்றும் உம்மை அகற்றி, உமது
சத்தியமொழியைக் காப்பாற்றுவதற்கு உதவினோம் என்கிறதைவிட, மேலான
பேறு இவ்வுலகில் வேறு என்ன கிட்டப் போகிறது? பாவிகளாகிய எங்களுக்கு
இந்தப் புண்ணியமாவது கிடைக்கட்டும். எங்கள் கடனை நாங்கள் தீர்க்கிறோம்,
உமது கடனை நீர் தீரும்.
ஹ. சந்திரமதி! சந்திரமதி! அதை நினைக்கவும் என் நெஞ்சம் துணியவில்லையே,
நான் எவ்வாறு மனமொப்பிச் செய்யத் துணிவேன்! பாவி நான்! பாவி நான்!
ச. பிராணநாதா, தாங்கள் இவ்வாறு துயரப்படுதல் நியாயமன்று. இதை விட வேறு
வழியில்லை தம்முடைய சத்யமொழியைக் காப்பதற்கு. ஏன் தாமதிக்கிறீர்கள்?
இதில் அதர்ம மொன்றுமில்லையே. இதை நான் சொல்லவேண்டுமா எல்லா
முணர்ந்த தங்களுக்கு? எங்களுடைய அனுமதி யின்றியே தாங்கள் இதைச்
செய்யலாமே. என்னுடைய தந்தையாகிய மதிதய ராஜன் என்னை உமக்கு அக்னி
சாட்சியாகத் தாரைவார்த்துக் கொடுத்தபொழுதே, உமக்கு அந்த சுதந்தர
முண்டாயிற்றே. அப்படியிருக்க, நானே உங்களை வேண்டும்பொழுது
உமக்கென்ன ஆட்சேபனை? என் வேண்டு கோளுக் கிசைந்து எங்களை
விற்பனை செய்துவிடும் விரைவில், பொழுது போகிறது -
ஹ. அந்தோ! அந்தோ! அநாதரட்சகா! ஆபத்பாந்தவா! அடியேனை இக் கதிக்குக்
கொண்டுவந்து விட்டீரே! மன்னர் மன்னர்கள் அறிய, வேள்வித் தீயின்முன் எக்
கரத்தால் என் மனைவிக்கு மாலையிட்டேனோ, அக் கரத்தினாலேயே, அவளை
அனைவருமறிய அடிமையாக விற்பனை செய்வதோ நான்! பாவிக் கரமே! நீ
என்ன பாபமிழைத்தாய்! என்ன பாபமிழைத்தாய் இச் செய்கை புரிவதற்கு!
ச. பிராணநாதா,அதை வையாதீர்;அது என்னை விற்று, உமது சத்யத்தைக்
காப்பாற்றும்படியான பேருதவி செய்து பெரும் புண்ணியம் சம்பாதிக்கப்
போகிறது! [அக்கரத்திற்கு முத்தமிடுகிறாள். ]
இனி துக்கப்படாதீர்கள், நேரமாகிறது.
தேவ. ஆமாம் அண்ணா, நீங்கள் துக்கப்படாதீர்கள். என்னையும் அம்மாளோடு
விற்று, கடனைக் கொடுத்துவிட்டு இந்த பிராம்மணரை அனுப்பி விடுங்கள்
ஊருக்கு.
ஹ. [அவனைக் கட்டி யணைத்து] பாலா! பாலா! மழலைச்சொல் மாறாத உன் அமுத
வாயினின்றும் இம் மாற்றத்தைக் கேட்கும்படி நேரிட்டதே! எத்தனையோ
தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்து, எத்தனையோ நோன்பியற்றி,
எத்தனையோ தவஞ்செய்து அருமையாகப்பெற்ற உன்னை - அடிமையாக நான்
விற்பதோ? என்னை அடிமையாக வில்லும், என்று உன் அருமை வாயினால் கூறக்
கேட்டும், ஆவி போகாது இருக்கிறேனே பாவி நான்! - பரமனே! பரமனே!
இதையும் உமது கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறீரே! தயை புரிந்து பேரிடி
யொன்றை இப்பாவியின் தலைமீது விழச்செய்து பஸ்மீகரப்படுத்தமாட்டீரா!
[தேம்பி அழுகிறான். ]
ந. ஓஹோ! அப்படித் தப்பித்துக் கொள்ளலாமென்று பார்க்கிறாயோ முனிவர்
கடனைக் கொடாமல்? ஓ! இப்பொழுது தெரிகிறது உன தெண்ணம்! இந்த யுக்தி
செய்யப் போகிறதாக முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? இவ்வளவு
கஷ்டமெல்லாம் பட்டிருக்க மாட்டேனே!
ஹ. பிராம்மணோத்தமரே, என்னை இந்த ஸ்திதியில் கண்டும் மன மொப்பி ஏளனம்
செய்கிறீரே! - இனி உங்களுக்குக் கஷ்டம் கொடுக்கவில்லை, இதோ என் மனைவி
மக்களை விற்று உம்மிடம் செலுத்தவேண்டிய பொருளைச் செலுத்துகிறேன்.
ந. சரி, உன் இஷ்டம் சீக்கிரம் ஆகட்டும், நேரமாகிறது.
ச. ஆம் பிராணநாதா, நேரமாகிறது இனி தாமதியாதீர்.
தேவ. ஆமாம் அண்ணா.
ஹ. தேவதேவனே! உமது திருவுள்ளம் நிறைவேறட்டும்! [ஒரு வைக்கோலை எடுத்து
சந்திரமதியின் தலைமீது வைத்து] வாரணாசிவாசிகளே! கேட்பீர்களாக! ஒருகால்
அயோத்தியில் அரசனாயிருந்த ஹரிச்சந்திரனாகிய நான், வாக்களித்தபடி
மஹரிஷியான விஸ்வாமித்திரருக்குக் கொடுக்கவேண்டிய கடனைத்
தீர்க்கும்பொருட்டு, வேறு வகையில்லாதவனாய், எனது மனைவியாகிய இதோ
நிற்கும் சந்திரமதியையும், மைந்தனாகிய தேவதாசனையும், அடிமைகளாக
விற்கிறேன்; நான் கேட்கும்படியான விலையைக் கொடுக்கத் தக்கவர் யாரேனும்
இவர்களைக் கொள்ளலாம்!
[ஜனங்கள் கும்பலாகக் கூடுகின்றனர். ]
ஒரு மனிதன். இது யாரடா அது! பெண்சாதி பிள்ளையெ விக்கரவே?
இ-ம. அடெடெ! அரிச்சந்திர மஹாராஜாடா! நானு பாத்துகிறேண்டா முன்னே!
மூ-ம. ஏன் இந்த ஸ்திதிக்கு வந்தாரானா?
இ-ம. விஸ்வாமித்திரருக்கு ராஜ்யத்தெ கொடுத்தூட்டாருண்ணு கேள்விப்பட்டெ.
நா. ம. இன்னும் என்னமோ கடன் கொடுக்கணு மிண்ராரே?
இ-ம. அது எனக்குத் தெரியாது.
மு-ம. இதெல்லாம் பொய்யா யிருக்கும்!
இ-ம. ஏண்டாப்பா! சத்யத்தெ காப்பாத்தணும் இண்ணு பெண்சாதி பிள்ளையெ விக்க
துணிஞ்சவரு பொய் பேசுவாரா?
மு-ம. என்னாண்ணாலும் பெண்சாதி பிள்ளயெ விக்கலாமா ஐயா?
இ-ம. அவருக்கு தெரியாத நியாயமா அப்பா?
நா-ம. பாவம்! கொழந்தையெ பாத்தாதான், எனக்கு பரிதாபமா இருக்குது!
ஐ-ம. அந்தம்மாளெ பாத்தா லட்சுமியாட்ட இருக்குது! அவங்களுக்கும் இந்தக்
கதி வந்துதே!
இ-ம. யார் விதி யாரை விட்டதப்பா!
எல்லோரும். பாவம்! பாவம்! காலகண்டையர் வருகிறார்.
கா. என்னாங்காணும் அது கும்பல்? என்னா சமாசாரம்? - ஓய்! நீ யார்?
ஹ. பூஜ்யரே, நான் ஹரிச்சந்திரன், ஒருகால் அயோத்தியையாண்ட
அரசனாயிருந்தவன்; நான் விஸ்வாமித்திர முனிவருக்குக் கொடுக்க இசைந்த
கடனைத் தீர்க்கும் பொருட்டு, என் மனைவி மக்களாகிய இவர்களை அடிமைகளாக
விலை கூறுகிறேன். தாங்கள் தயவுசெய்து -
கா. அப்படியா சமாசாரம்? - உம் - என் ஆத்துக்காரிக்கு ஒரு வேலைக்காரி வேண்டி
யிருக்கு - இந்தப் பய, என் கைகால் பிடிக்க ஒதவுவாம் போலிருக்கு –
அதிருக்கட்டும். அடிமையா நான் வங்கினாகே, என்னா வேலை செய்வா இவா?
ஹ. ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீ, அடிமையாக விற்கப்பட்டால், தர்மப்படி
அவள் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று சாஸ்திரங்கள்
விதித்திருக்கின்றனவோ, அவைகளை யெல்லாம் செய்வாள் - இவனு மப்படியே.
கா. அது கெடக்கட்டும், நீர் என்னா வெலெ கேக்கறீர்?
ஹ. உயர்ந்த யானையொன்றின் மீதேறி, வல்லான் ஒருவன் வலுக்கொண் டெய்யும்
மாணிக்கம் செல்லும் உயரம் அளவு பொன்.
கா. ஐஐயோ! ஏங்காணும், வெளையாடரீரா என்ன? - இவ்வளவு பொன்
என்னிடத்திலெ எங்கே இருக்கு? ஸ்ராத்த தட்சிணையைக் கொண்டு
ஜீவிக்கும்படியான நேக்கு, இத்தனெ பொன் எங்கிருந்து கெடைக்கும்? அப்பப்பா!
இது நமக்குக் கிட்டாது - ஏன் ஐயா, ஏதாவது கொஞ்சம் கொறச்சி பாருமே?
ஹ. அந்தணரே, அரைக் காசும் குறைக்க முடியாது. என்னை மன்னிக்க வேண்டும்.
ஐயா காசிவாசிகளே! இந்த விலையைக் கொடுத்து என் மனைவியையும்
மைந்தனையும் அடிமையாக்கிக் கொள்வார் எவரேனும் உளரோ இவ்விடத்தில்?
ஜனங்கள். இவ்வளவு வெலெ யாரையா கொடுப்பா?
ஹ. இல்லாவிடின் வேறு இடம் போய்ப் பார்க்கிறேன் -
கா. சத்தெ பொறுங்காணும் ஹரிச்சந்திரரே, - என்னா ரொம்ப அவசரமாயிருக்கு?
ஹ. ஆம், எனக்குக் கொஞ்சம் அவசரம்தான். இன்று பொழுது போவதன்முன்
இக்கடனை நான் தீர்க்க வேண்டியிருக்கிறது - ஆகவே -
கா. ஆனாகெ-நான் அந்த பொருளெ கொடுத்து வாங்கி கள்ரே, - ஆனாகே ஒரு
சமாசாரம், உம் பெண்சாதி நான் சொல்ர வேலெ யெல்லாம் செய்வா இண்ணு நீ
உத்தரவாதம் செய்யணும்.
ச. ஸ்வாமி,எனது கணவர் உமக்கு முன்பே கூறியிருக்கின்றனரே. தர்ம விதிப்படி
சாஸ்திரத்திற்கு விரோதமில்லாமல், பதிவிரதையாகிய நான், அடிமையாகக்
கொண்ட உங்கள் கட்டளைகளில், என்னென்ன நிறைவேற்ற நியாயமுண்டோ, அவற்றையெல்லாம் மனம் கோணாது செய்வேன். இதில் உமக்குக்
கொஞ்சமேனும் சந்தேகமே வேண்டாம். என் வார்த்தையை நம்பும்.
கா. சரி ஆனாகே, ஒப்புக் கொள்றேன் - ஹரிச்சந்திரரே, யாரிடத்திலெ இந்த
பணத்தெ கொடுக்கணும்?
ஹ. இதோ இருக்கும் பிராம்மணராகிய நட்சத்திரேசரிடம். - விஸ்வாமித்திர முனிவர்
இவரிடம் அக்கடனைச் செலுத்தும்படி உத்தரவு செய்திருக்கிறார்.
கா. ஐயா, உம்ம பேரென்ன? நட்சத்திரேசரா? - இப்படி வாருங் காணும், உமக்குச்
சேரவேண்டிய பணத்துக்கு வகை சொல்ரேன். [நட்சத்திரேசனை அழைத்துக்
கொண்டுபோய் ஒரு புறமாக அவனுடன் பேசுகிறார். ]
ச. பிராணநாதா. அம்மட்டும் நீர் வாக்களித்தபடி முனிவருக்குச் சேரவேண்டிய
கடனைத் தீர்ப்பதற்கு வழியினைக் கொடுத்தருளினாரே பரமேஸ்வரன்!
ஹ. பரமேஸ்வரா! பரமேஸ்வரா!
ந. [திரும்பி வந்து] சரி, ஹரிச்சந்திரா, அந்தப்பணத்தை என்னிடம் சேர்ப்பதற்கு இந்தப்
பிராம்மணர் ஏற்பாடு செய்துவிட்டார். அதை உன்னிடமிருந்து பெற்றுக்
கொண்டதாக நான் ஒப்புக்கொள்ளுகிறேன். உன் கடன் தீர்ந்தது, அவர் இனி
எனக்கு ஜவாப்தாரி.
கா. ஓய்! ஹரிச்சந்திரரே, கேட்டீரா? இனிமே இவாளெ எம்பின்னாலே அனுப்பும்,
எனக்கு தேச காலமாகுது. சீக்ரமா ஆத்துக்குப் போகணும். ஆத்துக்காரி
காத்திண்டிருப்ப - கொஞ்சம் கோவக்காரி, அதிலேயும் அதிக நேரம் கழிச்சிபோனா
எரிஞ்சி விழுவள்.
ஹ. சந்திரமதி - தேவதாசா - இனி நீங்கள் இந்த அந்தணருடைய அடிமைகள் –
அவர் பின் சென்று, அவர் - வீட்டிலிருந்து அவர் சொன்னபடி நடந்து - அவரிடும்
உணவை உண்டு - ஜகதீசன் கிருபையால் - வாழ்ந்திருங்கள்! -
ச. நாதா, எங்கள் பொருட்டு துக்கப்படாதீர்கள். உங்கள் மனைவியாயும் மைந்தனாயும்
வாய்த்தற்கு, உங்களுக்கு இவ்வளவாவது உபகாரம் செய்யும்படி ஸ்வாமி தயை
கூர்ந்தாரே என்று சந்தோஷப்படுகிறோம். நாதா, நீர் அறியாத நியாயமல்ல,
மனைவியும் மக்களும் மற்றுமுள்ள வாழ்வும், என்றைக் கிருந்தாலும் ஒரு நாள்
உம்மை விட்டுப் பிரிவனவே; என்றைக்கும் உம்மை விட்டுப் பிரியாதது
உம்முடைய சத்தியமே; ஆகவே, என்ன நேர்ந்த போதிலும் அதைக் காப்பாற்றும்.
எங்கள் பொருட்டு துக்கியாதீர் இனி -எங்களுக்கு விடை யருளும், நாங்கள் போய்
வருகிறோம்.
தேவ. ஆமாம் அண்ணா, நீங்கள் சந்தோஷமாயிருங்கள்; நான் அம்மாளுடன்
போகிறேன் இந்த பிராம்மணர் வீட்டுக்கு அவர் சொல்கிறபடி நடக்கிறேன். அந்த
நட்சத்திரேசரைவிட இவர் நல்லவர் அண்ணா. நாங்கள் போய் வரவா?
ஹ. [அவனைக் கட்டியணைத்து] தேவதாசா! தேவதாசா!-அப்பா, இனி உன்னை என்
மைந்தா என்றழைப்பதற்கும் நான் சுதந்தர மற்றவ னானேன்! அருந்தவ மியற்றி
அருமையாய்ப் பெற்ற உன்னை அன்னியர்பால் அடிமையாய் நான் அனுப்பக்
காலம் வந்ததே! இக்கதி யனுபவிப்பதற்கோ பாவி என் வயிற்றிற் பிறந்தாய் நீ?
ச. நாதா! நாதா!
ஹ. [அவளையும் கட்டியணைத்து] சந்திரமதி! சந்திரமதி! இக்கதிக்கு வரவோ
பாவியாகிய என்னை மணந்தாய்? அந்தோ! அந்தோ! அக்னி சாட்சியாய் மணந்த
மனைவியையும் அருமை புதல்வனையும் அடிமையாக விற்றும்--ஆவி
தரித்திருக்கிறேனே! அந்தோ! பரமேஸ்வரா! பரமேஸ்வரா! இவ்வுலகத்திலேயே
இத்துயரம் அனுபவிக்க, பாவி நான் எந்த ஜன்மத்தில் என்ன பெரும்பாவம்
இழைத்தேனோ?--பாவி! பாவி!
ச. நாதா, அப்படி கூறாதீர்கள்--தர்மஸ்வரூபியாகிய நீங்கள் ஒரு பாபமு
மிழைத்திருக்கமாட்டீர்கள், அடியாள் இழைத்த பாபமே உம்மை இவ்வாறு சூழ்ந்தது
போலும்--அந்தணர் காத்திருக்கின்றார், மனதைத் தேற்றிக் கொண்டு எங்களுக்கு
விடையளியும்--கண்ணே! தேவதாசா! உன் தகப்பனார் பாதத்திற்கு நமஸ்காரம்
செய். [இருவரும் ஹரிச்சந்திரன் பாதத்திற்கு நமஸ்காரம் செய்கிறார்கள். ]
நாதா! நாதா! இப்பாத தர்சனம் எங்களுக்கு மறுபடியும் எப்பொழுது கிடைக்குமோ?
எப்பொழுது கிடைக்குமோ? [துக்கிக்கிறாள். ]
தா. என்ன சந்திரமதி? விடை பெத்திண்டு வர்ரதுக்கு எத்தனெ நாழி? நேக்கு
அடிமையானபின் புருஷனின்னும் தகப்பனின்னும் இந்தப் பற்றெல்லாம்
வைத்திண்டிருந்தா முடியுமோ? வாருங்க சீக்கிரம் - என்ன ஹரிச்சந்திரரே,
அனுப்பும் அவர்களைச் சீக்கிரம்.
ஹ. ஸ்வாமி, இதோ அனுப்புகிறேன். கோபித்துக்கொள்ளாதீர்கள்; மன்னியும்
இவர்களை;விவாகமாகியபின் பேதையாகிய இவள் என்னைவிட்டு ஒரு நாளும்
பிரிந்திருந்தவளல்ல. இவனும் பிறந்தது முதல் ஒரு நாளும் என்னை
விட்டிருந்தவனல்ல. ஆகவே, ஏதோ துக்கிக்கிறார்கள்; எனக்கும் துக்க
மேலிடுகிறது - மன்னியுங்கள். - [அவர்கள் கரத்தைப்பற்றி அந்தணரிடம்
அழைத்துப்போய் ஸ்வாமி, இதுவரையில் இவர்கள் என் மனைவி மைந்தனாய்
இருந்தவர்கள் - இனி தங்களுடைய பொருள் – அழைத்துச் செல்லுங்கள் - ஆயினும்
அந்தணரே, அடியேன் விண்ணப்பம் ஒன்று - இக்கதிக்கு வருமுன் இம்மாது,
மதிதயராஜன் புத்திரியாய்ப் பிறந்து, ஹரிச்சந்திரன் மனைவியாய், சகல
ராஜ்யபோகங்களையும் சம்பூர்ணமாய் அனுபவித்து வாழ்ந்தவள், - இப்பாலன்
சக்கரவர்த்தியின் ஏகமகனாய்ப் பிறந்து, தேவர்களுக்குரிய சுகத்திலிருந்தவன்,
கஷ்டம் என்பதைக் கனவிலும் கண்டறியாதவன். ஆகவே இவர்களை அடிமைத்
தொழில் புரியும்படி கட்டளையிடும்பொழுதெல்லாம் கருணை என்பது உமது
மனதில் கொஞ்சம் இருக்கட்டும்.
கா. ஹரிச்சந்திரரே! - இதெல்லாம் நேக்குத் தெரியாதோ? - நீர் சொல்லவேண்டுமோ?
ஹ. ஸ்வாமி, உமக்குத் தெரியாது என்று நான் சொல்லக்கூடுமோ? அந்தணராகிய நீர்
அறியாததன்று இது - ஆயினும் -என் பொருட்டு இவர்கள் இக்கதிக்கு
வந்தபடியால், என்னதான் தடுத்த போதிலும் என் பேதை மனம் கேளேன்
என்கிறது; இதை உமக்குச் சொல்லும் படியாக உந்தியது.
கா. சரிதான்! - ரொம்ப நேரமாச்சு - இனியாவது புறப்படுங்கள், சந்திரமதி, தேவதாசா.
ச. [பணிந்து] நாதா, நான் போய்வருகிறேன்.
தேவ. [பணிந்து] அண்ணா, நான் போய்வருகிறேன்.
ஹ. போய்வாருங்கள்! எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு இரங்கி அருள்வாராக! [காலகண்டையர், சந்திரமதி தேவதாசனை அழைத்துக்கொண்டு போகிறார். ] தேவதேவனே! யாவும் உமது திருவுள்ளப்படியே ஆகுக!
சத். அரசே, வாரும், நாம் சீக்கிரம் இவ்விடத்தை விட்டுப் போவோம் - எங்காவது.
ஹ. ஸ்வாமி, உமக்குச் சேரவேண்டியதெல்லாம் சேர்ந்து விட்டதே; இனி எனக்கு
விடை கொடுக்கிறீரா?
ந. ஆஹா! என்ன ஹரிச்சந்திரா, கடைசியில் இப்படிச் சொல்லிவிட்டாய்? எனக்குச்
சேரவேண்டியதெல்லாம் சேர்ந்துவிட்டதென்றாயே? எங்கே சேர்ந்தது? என் தரகு
எங்கே? அதைக் கொடுப்பதன்முன் உன்னை விட்டுவிட எனக்குப் பயித்தியம்
பிடித்ததென்று நினைக்கிறாயா?
ஹ. ஸ்வாமி, உமக்கு நான் தரகு ஏதேனும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேனா?
ந. ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன? தரகனுக்குச் சேர வேண்டிய தரகைக் கொடுக்க
வேண்டியது தர்மமல்லவா? இது தெரியாதா உனக்கு? உன் பின்னால் இத்தனை
நாளாக நான் எத்தனை கஷ்டப்பட்டு வந்தேன், நீ தான் கண்ணாராப் பார்த்துக்
கொண்டிருந்தாயே.
ஹ. ஸ்வாமி, அது உண்மையே - ஆயினும் இந்த வழக்கம் எனக்குத் தெரியாது.
நீங்கள் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் கொடுக்கத் தடையில்லை.
எவ்வளவு உங்களுக்குத் தரகுக்காகச் சேர வேண்டும்?
சத். என்ன அரசே அப்படிக் கேட்கிறீர்கள்? முன்பு தரகு பேசியிராவிட்டால் நீர்
கொடுக்க வேண்டியதில்லை. அன்றியும் சாதாரணமாகப் பணம்
பெற்றுக்கொள்பவர்களே தரகு கொடுக்கவேண்டும்; ஆகவே விஸ்வாமித்திரர்
கொடுக்கிறார். வீணாக இன்னும் கஷ்டத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்!
இதுவரையிற் பட்டது போதும் - நீர் வாரும்.
ந. ஹரிச்சந்திரா, நீயே உன் வாயால் சற்று முன்பாக, நான் கொடுக்கவேண்டுமென்று
சொன்னால் கொடுக்கத் தடையில்லை என்று சொன்னாயா இல்லையா? நான்
கொடுக்கத் தான் வேண்டுமென்று சொல்லுகிறேன்.
சத். நான் கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறேன்.
ந. அப்படி ஹரிச்சந்திரன் சொல்லிவிடட்டும், நான் போய்விடுகிறேன்.
ஹ. சத்யகீர்த்தி, சற்று முன்பாக நான் அவ்வாறு கூறியது உண்மையே. ஆகவே,
என் வார்த்தைப்படி நான் நடக்கவேண்டியதுதான். சரி - வருவதெல்லாம் வரட்டும்
– ஸ்வாமி, தங்களுக்குத் தரகுக்காக எவ்வளவு சேரவேண்டுமென்கிறீர்?
ந. அதிகமாக எனக்கு வேண்டியதில்லை. நீயோ கஷ்ட திசையிலிருக்கிறாய் –
ஆகவே, ஒரு லட்சம் பொன் கொடுத்து விடு, போதும். அதிக ஆசைகூடாது
அந்தணனாகிய எனக்கு; அது கொடுப்பது உனக்குக் கஷ்டமாயிருந்தால் சொல்,
முனிவருக்குச் சேரவேண்டிய பொன்னிலிருந்து லட்சம் பொன்னைத் தரகுக்காகக்
கழித்துக்கொண்டு, நீ மிகுதியைக் கொடுத்ததாக அவரிடம் கொடுத்து விடுகிறேன்.
அவருக்கென்ன கணக்கா தெரியப்போகிறது? தெரிந்தாலும் இதென்ன அவருக்கு
ஒரு வரவு சிலவா?
ஹ. ஸ்வாமி, அங்ஙனம் செய்யவேண்டாம். அது தர்மமல்ல, பெரும் தவறாகும்.
நான் அந்த லட்சம் பொன்னை உமக்கு வேறாகக் கொடுக்கிறேன்.
சத். அரசே, இதென்ன பேதமை? எங்கிருந்து கொடுக்கப் போகிறீர்? உம்மிடம்
என்ன இருக்கிறது கொடுக்க?
ஹ. சத்யகீர்த்தி, அது ஒரு நியாயமாகாதே! சமுத்திரத்தைக் கடக்க வழிகாட்டிய
தயாநிதி, சிறு கால்வாயைக் கடக்க வழி காட்டுவார் - அப்பா,சத்யகீர்த்தி, என்னை
யாருக்கேனும் அடிமையாக விற்று - இவருக்குச் சேரவேண்டிய
தரகைக்கொடுத்துவிடு. -
சத். அந்தோ! சிவ சிவ! நான் என்ன வார்த்தைகளைக் கேட்கிறேன் - அரசே!
உம்மையா நான் - அடிமையாக
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, என் மனைவி மக்களை விற்றபின் என்னுடலையும் நான் ஏன்
விற்கலாகாது? என்மீது அன்புள்ளவனாயின் ஒரு ஆட்சேபனையும் சொல்லாது,
ஆலஸ்யமின்றி என்னை விற்று, அப் பணத்தை இவ் வந்தணரிடம் கொடு.
சத். அரசே, அப்படி நீர் கட்டாயமாய்க் கொடுக்கவேண்டுமென்றால், தங்கள் ஊழியன்
நானிருக்கிறேன். என்னை அடிமையாக விற்று இப் பணத்தைச் செலுத்திவிடும். –
உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன், இந்த வேண்டுகோளுக்காவது இசையும்.
ஹ. சத்யகீர்த்தி,உனதன்பை மெச்சினேன்-ஆயினும் அப்பா,நீ இப்பொழுது
என்னுடைய ஊழியன் அல்லவே,விஸ்வாமித்திரருடைய ஊழியன் என்பதை
மறவாதே. ஆகவே,என் கடனைத் தீர்க்க உன்னை விற்பது தர்மமல்ல, அப்படி
தர்மமா யிருந்தபோதிலும்,விற்க இந்த கட்டை இருக்கும்பொழுது, உனக்கேன்
நான் கஷ்டம் வைக்க வேண்டும்?சத்யகீர்த்தி,இனி தாமதிக்காதே. தயவு செய்து
என்னை இக் காசி நகரத்திலேயே எவருக்காவது விற்றுவிடு; இக்கடனையும்
தீர்த்துவிடு சீக்கிரம்.
சத். அரசே,உமதிஷ்டப்படி. இனி நான் என்ன சொல்வது?-வாரும் போவோம்.
ஹ. ஸ்வாமி,தாங்கள் தயவுசெய்து இந்த சிரமத்தையும் மேற்கொள்ளல் வேண்டும்-
கூட வாருங்கள் கொஞ்சம். [மூவரும் போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
----
இரண்டாம் காட்சி.
இடம்-காசியில் மற்றொரு வீதி.
ஹரிச்சந்திரன், சத்யகீர்த்தி, நட்சத்திரேசன் வருகிறார்கள்.
சத். அண்ணலே,இக்காசிப்பட்டணத்து வீதிகளையெல்லாம் கடந்தாயிற்று.
உம்மை விலைக்குக் கொள்வார் ஒரு வரும் அகப்படாதது நம்முடைய
துர் அதிர்ஷ்டம் போலும்.
ந. இதோ,இந்த வீதிக்குள் போகவில்லையே நாம்?
சத். ஸ்வாமி,இது கடையர்கள் வாழும் வீதி. இதிற் போவதிற் பிரயோஜனமில்லை.
அன்றியும் பிராம்மணராகிய தாங்கள் இதில் அடியெடுத்து வைக்கவும்
தகாதன்றோ? - ஆகவே வேறு எந்தப் பட்டணத்திற்காவது போய்ப் பார்ப்போம்.
ந. காலொடிய உங்கள் பின்னால் இதுவரையிலும் சுற்றியது போதாதோ? இன்னுமா
சுற்றவேண்டும்?அது முடியவே முடியாதென்னால்;இதை விட்டு நான் ஒரு அடியும்
எடுத்து வைக்கமாட்டேன்;ஹரிச்சந்திரா, உனக்காக நான் கஷ்டப்பட்டது
போதும். பரச்சேரியின் எல்லையில் என் பாதம் பட்டதற்காக நான் பிராயச் சித்தம்
செய்து கொள்ளவேண்டும். -அது போனாற் போகட்டும். உடனே,
இவ்விடத்திலேயே எனக்குச் சேரவேண்டிய லட்சம் பொன்னையும்
கொடுக்கிறாயா? அல்லது-
ஹ. ஸ்வாமி, போதும் நிறுத்துங்கள்,மற்ற வார்த்தைகளையும் இன்னொரு முறை கூறி
என் மனதைப் புண் படுத்தாதீர், அவைகளைக் கேட்கவும் என் மனம்
புண்படுகிறது. - சத்யகீர்த்தி,இவ்விடத்திலேயும் என்னை விலைக்குக் கூறிப்பார்.
சத். அண்ணலே,இது கடையர் வாழும் சேரியாச்சுதே-
ஹ. இருந்தாலென்ன?அப்பா,இக்கட்டை யாருக்கு அடிமைப்பட்டாலுமென்ன?
குறுக்காக ஒன்றும் இனி தயவு செய்து பேசாதே-உன்னை வேண்டிக்
கொள்ளுகிறேன்.
சத். அண்ணலே ஒரு புலையனுக்கு அடிமைப்பட ஒப்புகிறீரா?
ஹ. இந்த அந்தணர் கூறும்படியான வேறு மார்க்கத்தை ஒப்புக் கொள்வதைவிட
இதற்கே உடன்படுகிறேன்.
சத். *அப்படி ஒப்ப என் நா எழவில்லையே! [துக்கிக்கிறான். ]
ஹ. அப்பா,சத்யகீர்த்தி,ஏன் துக்கிக்கிறாய்? இக்கட்டையேறும் கட்டை யாருக்கு
அடிமைப்பட்டாலென்ன? மனமானது, சத்தியத்தை நிலை நிறுத்தி சத்தியத்திற்கு
நாதனாகிய சர்வேஸ்வரனுடைய பாதங்களுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும்,
அவ்வளவே; இனி தாமதியாதே- இந்த உபகாரம் எனக்குச் செய்.
சத். சர்வேஸ்வரன் என்னை மன்னிப்பாராக!-இவ்விடத்தில் வாழும் காசி
நகரவாசிகளே! நான் சொல்வதைக் கேட்பீர்களாக!-அயோத்திக்கு
வேந்தனாயிருந்து, விதியின்கொடுமையால் இக்கதிக்கு வந்த ஹரிச்சந்திரரை,
அவர் அனுமதியின்மீது அடிமையாக விற்கிறேன்; அவர் இந்தப்
பிராம்மணருக்குக்கொடுக்க இசைந்த லட்சம் பொன்ன்னைக் கொடுப்பவர்-எந்த
ஜாதியாயிருந்த போதிலும் - இவரை அடிமையாகக் கொள்ளலாம்.
[கும்பல் சேர்கிறது,பெருங் கூச்சல் உண்டாகிறது. ]
வீரபாஹு வருகிறான்.
வீ. ட்ரேயப்பா! நொம்ப கூச்சலா கீதே!யாரானா செத்துகித்து பூட்டாங்களா என்னா?
ஆண்டே, நீயாராண்டே? மின்னையே எங்க சேரியிலே கொளப்பமாகீது.
நீங்கல்லா வந்து இன்னும் கூச்சல் போட்ரைங்களே! என்னா சங்கீதி?
ச. அண்ணலே,அவனுடன் பேசவும் பேசாதீர். அவனைப் பார்த்தால்
சண்டாளனைப்போல் இருக்கிறது.
ஹ. ஐயா, காசிவாசியாரே, நீர் யாராகவிருந்த போதிலும். என் வரலாற்றைக்
கேளுங்கள். நான், ஹரிச்சந்திரன், ஒருகால் அயோத்திக்கு அரசனாயிருந்தவன்,
இந்தப்பிராம்மணருக்கு நான் செலுத்த வேண்டிய லட்சம் பொன்னுக்காக,
என்னை, என் அனுமதியின்மீது என் தோழனாகிய சத்யகீர்த்தி, அவ்விலைக்கு
அடிமையாக விற்பதாகக் கூறியிருக்கிறார். அத்தொகையைக் கொடுத்து என்னை
அடிமையாகத் தாங்கள் கொள்கிறீர்களா?
வீ. தென்னாடாது?விந்தையாகீது!லச்சம் பொன்னா? ஏம் யப்பா, நீ என்னா எங்க
ஊர்லே என்னமானாலும் வாந்திபேதி கீந்திபேதி வந்து லச்சக்கணக்கா
மனசர்ங்கொ செத்துபூட்ராங்க இண்ணு நெனைச்சிகினையா என்னா?
சுடுகாட்லெ ஒயெக்கிற வெட்டியானுக்கு அம்மாத்தம் பொன்னு எப்படியப்பா
கெடைக்கும்?
சத். அண்ணலே, அவன் வார்த்தையைக் கேட்டீரா? இங்கே இடுகாட்டைக் காத்து
அதன் வரும்படியினால் ஜீவிக்கும் சண்டாளன் இவன். அவனோடு இனி தாம்
வார்த்தையாடுவதும் இழிவாகும்.
ஹ. யாராகவிருந்தாலும் இருக்கட்டும்-ஐயா காசிவாசியே, நான் கேட்ட கேள்விக்குத்
தாங்கள் இன்னும் பதில்*
வீ. ஏயப்பா!வெலெ ரொம்ப ரொம்ப சொல்ரையேப்பா!- ரவெ கொறச்சிகோயப்பா.
ஹ. ஐயா,அது முடியாது.
வீ. ட்ரியப்பா! நொம்ப கண்டிப்பாகீதே!- இக்கட்டும் நானு இம்மாத்தம்
பொன்னு கொடுத்து அடிமெயா வாங்கனா,நீ என்னா என்னா வேலெ
செய்வேயப்பா?
ஹ. தர்மசஸ்திரப்படி அடிமையாகக் கொள்ளப்பட்டவன் தன் எஜமானனுக்கு
என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமோ,அவைகளை யெல்லாம்
செய்யச் சித்தமாயிருக்கிறேன்.
வீ, அந்த சாத்தரம் கீத்தரம் அல்லாம் எனக்கு தெரியாதுயப்பா, நான் கேக்கர
தென்னாண்ணா, எனக்கு பதுலா,சுடுகாட்லெ இந்துகினு, அங்கே வர்ர
பொணங்களெயெல்லா சுடுவையா?
சத், அந்தோ! அந்தோ! ஈஸ்வரா!-
ந. ஹரிச்சந்திரா,உனக்கென்ன பயித்தியமா? இத்தொழிலைச் செய்வதற்கா
உடன்படப்போகிறாய்? அயோத்தியில் அரசர்க்கரசனாய் ஆண்ட ஹரிச்சந்திரன்,
சுடுகாட்டைக் காத்து பிணங்களைச் சுட்டெரிப்பதா? ஹரிச்சந்திரா,
இப்பொழுதாவது என் வார்த்தையைக் கேள்-உனக்குப் பதிலாக நான் பதில்
சொல்லுகிறேன். -அடேய்!இவரால் அந்த வேலை செய்ய முடியாது- உன் பணமும்
வேண்டாம் - உன் ஜோலியும் வேண்டாம்! நீ போய் வா ஹரிச்சந்திரா,
இக்கஷ்டத்தை யனுபவிப்பதைவிட, உன்னால் கொடுக்க சக்தியில்லையென்று
ஒரு வார்த்தை சொல்லிவிடு,நான் போய்விடுகிறேன்.
ஹ. ஸ்வாமி,தாங்கள் கூறவேண்டியதெல்லாம் கூறியாயிற்றா? இன்னும் ஏதாவது
மிகுதி யிருக்கிறதா? இருந்தால் ஒரே விசையாய் எல்லாவற்றையும் கூறிவிடும்.
அடிக்கடி ஏன் சிரமப்படுகிறீர்கள்?-எல்லாம் முடிந்ததா?- ஆயின் தயவு செய்து
நான் கூறுவதைக் கேளுங்கள்- ஐயா, காசிமாநகரத்தின் ஸ்மசானத்தைக்
காத்தருள்பவரே, நீர் குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒப்புக்கொள்ளுகிறேன்.
தயவு செய்து உடனே என்னை வாங்கிக்*
சத். இதென்ன இது? கனவு காண்கிறேனா?
வீ. நொம்பசரி-ஆனா- இந்த பணத்தெ யார்கிட்ட கொடுக்கணும்?
ஹ. ஐயா,இந்தப் பிராம்மணரிடம்.
வீ. ஆனா, ஐயா, பாப்பரையா, யாங்கூட கொஞ்சம் வாங்க, எங்க ஊட்லே
இக்கிது, தர்ரேன்.
ந. சரி,அது ஒன்று செய்யவேண்டுமோ? ஹரிச்சந்திரா, உனக்காக நான் எவ்வளவு
கஷ்டப்பட வேண்டியதாயிருக்கிறது பார். - எட்டிப்போடா ********! தீண்டப்
போகிறாய் என்னை! வீ. ஏன் சாமி,சும்மா,நொம்ப கோவிச்சிகிரைங்க! என்னெ
மாத்திரம் தீண்டக் கூடாது, எம் பணத்தெ மாத்திரம் மூட்டெ கட்டிகினு
தோளுமேலே போட்டுகினு போவலாமோ?வா சாமி,சும்மா. [நட்சத்திரேசனை
அழைத்துக் கொண்டு போகிறான். ]
சத். அண்ணலே!அண்ணலே!இதுவோ உமக்கு அயன் விதித்த விதி!
இக்கதியுலும்மைக் காணும்படி நேர்ந்ததே! நானும் உம்மைக் கரையேற்ற
அசக்தன யிருக்கின்றேனே! பாவியேன்! பாவியேன்!
[அழுகிறான்]
ஹ. அப்பா,சத்யகீர்த்தி ஏன் துக்கப்படுகிறாய்? உன் துக்கத்தை அடக்கிக்கொள்.
என் பொருட்டு உனக்குத் துக்கமென்பதே வேண்டாம். எங்கும் நிறைந்த
பொருள் எண்ணியவாறு இவ்வுலகில் எல்லாம் நடைந்தேறுகிறது. அதன்
பொருட்டு பேதை மாந்தர்களாகிய நாம் பித்தர்களைப்போல் மனத்துயரடைந்து
என்ன பயன்? நம்மைப் படைத்தவர் அறிவார் நம்மைக் காத்திடும் வகையினை.
அவர் நமக்கு விதிக்கும் விதியினைக் குறித்து வெந்துயர்ப்படுவதிற்
பிரயோஜனமில்லை. நமக்கு நன்மை ஏதேனும் நேரிடுங்கால், நாம் புண்ணியம்
செய்தோம், அதன் பொருட்டு இந் நலனை ஜகதீசன் நமக்கனுப்பினார், என்று
சந்தோஷப்படுகிறோமே, அம்மாதிரி, தீமை ஏதேனும் நேரிடுங்கால், நாம் ஏதோ
பாபம் செய்தோம், அப்பாப நிவாரணத்தின்பொருட்டு தீங்கினை அனுப்பினார்
அவர், என்று ஏன் சந்தோஷிக்கலாகாது? க்ஷணத்தில் அழியும் இவ்வுலக
வாழ்வை ஒரு பொருட்டாக எண்ணி, அதை யிழந்தோமே,என்று, அதன்
பொருட்டு துக்கிப்பவன் மூடனாகும். என்றும் ஆழியாதிருப்பது சத்தியம் ஒன்றே.
அதன் ஒளி குறையாது. அதை நான் காத்துவரும் வரையில், நான் துக்கப்பட
நிமித்தியமில்லை. என் பொருட்டு நீயும் துக்கப்பட நிமித்தியமில்லை. -
[வீரபாஹுவும், நட்சத்திரேசனும் மறுபடி வருகிறார்கள். ]
ஹ. ஸ்வாமி, தங்களுக்குச் சேரவேண்டியதெல்லாம் சேர்ந்து விட்டதோ?
ந. ஆம், சேர்ந்து விட்டது - இனி நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். அப்பா, உன்
மனோதிடத்தை மெச்சினேன். நீ காத்திடும் சத்தியம் உன்னை என்றும்
காத்திடுமாக! அப்பா, உன்னை நான் பலவாறு துன்பத்துக் குள்ளாக்கினேன்,
அவற்றையெல்லாம் நீ மறந்து என்னை மன்னிப்பாயாக!
ஹ. ஸ்வாமி, தங்கள்மீது என்ன குற்றம்? எல்லாம் என் ஊழ்வினைப் பயனாகும்!
தங்கள் பாதங்களுக்கு நமஸ்கரிக்கிறேன். விஸ்வாமித்திர முனிவரிடம் அடிமை
ஹரிச்சந்திரன் திக்குநோக்கி தண்டனிட்டு நமஸ்கரித்ததாகச் சொல்லும்.
ந. அப்படியே, அப்பா நான் போய் வருகிறேன். [போகிறான்]
வீ. டேயப்பா, உம்பே ரென்ன சொன்னே?
ஹ. ஹரிச்சந்திரன்.
வீ. தென்னாடா எய்வாகீது? அத்தினி நீளம்பேரு எம் வாய்லெ நொழையலெ –
அந்த பேரெ சொல்லப்போனாகா, அர்சி துண்ரவன், இண்ணு வருது! அப்பொறம்
அந்த பேரெ வைச்சிகினு,சொடலையிலெ வர்ர அர்சி யெல்லாம் நீ
துண்ணுட்டேண்ணா, அப்றம் நான் என்னா செய்யரது?நான் சொல்ரத்தே கேளு-
ஒன்னெ- அரிச்சா, இண்ணு கூப்பிட்ரேன்!
ஹ. எஜாமானனுடைய இஷ்டம்.
வி. நல்ல பேச்சு சொன்னே!-நீ இந்த கம்பிளியையும் கோலெயும் எடுத்துகினு,
நேரா சுடுகாட்டுக்குபோ; அங்கே வீரவாவு இண்ணு எம்பேரெ சென்னெ இண்ணா,
நானிருக்கிற எடத்தெ காட்டுவான் எம்மவன் வீரன்; இந்தப் பொணங்களெ
யெல்லாம் கொளுத்திர வெதம், அவெ உனக்கு கத்து குடுப்பான்-கத்துக்கோ.
நானு ஊட்டுக்குப் போயி கஞ்சி குடிச்சிட்டு வர்ரேன்- நீ பொறப்புடு.
ஹ. அப்படியே.
வீ. டெடெடெ!இது யார்ரா உம் பின்னாலே ஒர்த்தன்?
ஹ. இவர் என் தோழர்.
வீ. தோயென்!தோயென் என்னாடா அடிமெக்கி? நீ என் வேலெயெ செய்யாமெ,கூட
உக்காந்துகினு கதெபேச, ஒரு ஆளுகூட இட்டிகினு போரையோ?அதெல்லாம்
ஒதவாது. இப்பவே அனுப்பிச்சூடு அந்த மவனெ.
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, ஆண்டவன் சொன்னபடி அடிமை கேட்க வேண்டியது-
நீ விடை பெற்றுச்செல்.
சத். அப்பா,வீரபாஹூ-இதோ நான் போய் வருகிறேன்- ஆயினும் இவரை
எப்பொழுதாவது பார்த்துப்போகும் படியாக எனக்கு உத்தரவளிக்கவேணும்.
வீ. ஆ! அப்டி கேளு-எப்பதாச்சிலும் ஓர் மாசத்திலெ ஒருதாட்டி வந்து
பாத்துட்டுப்போ; அடிக்கடி வராதே, பத்திரம்,போ.
சத். அண்ணலே,விடைபெற்றுக் கொள்ளுகிறேன். ஹ. அப்பா,போய்வா.
[சத்யகீர்த்தி போகிறான். ] ஆண்டவரே, அந்த சுடுகாடு எப் பக்கம் இருக்கிறது?
வீ. இப்டி நேரா போயி,பீச்சகைபக்கம் திரும்பனா-கங்கெ கரெ யிக்குது,
அதுக்குகிட்ட தாம்; விசாரிச்சிகினு போ.
ஹ. உத்தரவு. [ஹரிச்சந்திரன் ஒரு பக்கம் போகிறான். ]
வீ. விஸ்வாமித்திர முனிவர் சப்தம் நிறைவேறினாற்போல்தான்! [போகிறான். ]
காட்சி முடிகிறது.
--------
முதல் காட்சி
இடம்-காசிக்கடுத்த ஓர் வனம். கோபாலன், ராமசேஷன், வரதன் முதலிய
பிராம்மணப் பிள்ளைகளுடன் தேவதாசன் தர்ப்பை சமித்து முதலியன சேகரித்துக் கொண்டிருக்கிறான்.
கோ. அடே,வரதா,அந்த சின்னபய தேவதாசனெ பார். தர்ப்பெயெ சரியா வெட்டத்
தெரியலெ; நாம்பள்ளா செய்யரத்தெ பாத்து, தானும் அப்படியே செய்ய பாக்கரா-
முடியலெ ஆனா பாவம்! ரொம்ப சின்ன பயடா!
வ. ஆமாம் பாவம். அவனெ பாத்த நேக்கு பரிதாபமாயிருக்கு. இவ்வளவு சின்ன
பயலெ. அந்த காலகண்ட பிராம்மணன், காட்டுக்கு அனுப்பிச்சாரெ நம்மோடெ!
கல் நெஞ்சுடா அந்த பிராம்மணனுக்கு, இந்த பயலெயும் அவா அம்மாளையும்
என்னா கஷ்டப்படுத்தரான் தெரியுமா நோக்கு? நாம் பக்கத்து ஆத்துலெ
இருந்திண்டு அல்லாம் பாத்திண்டிருக்கெ.
ரா. ஏண்டா அவாளே கஷ்டப்படுத்தக்கூடாது? அவா என்னா பிராம்மணாளோ?
அதல்லாமெ அவா, வெலைக்கி வாங்கின அடிமைதானே? நம்மெப்போலவா?
வ. சேஷா! நேத்து நம்ம வாத்தியார் சொல்லிக் கொடுத்ததெ யெல்லாம் நண்ணா
கத்திண்டிருக்கெ! நாம் வந்து எல்லார் பேர்லேயும் தயவோ டிருக்கணும், என்னா
ஜாதியா யிருந்தாலும் சரி, ஆடுமாடா யிருந்தாலும் சரி, இண்ணு சொன்னாரே,
அத்தெ இதுக்குள்ள மறந்து பூட்டையொ? நீயும் பெரியவனானா, இண்னொரு
கால கண்டப் பிராம்மணனாவெ!
கோ. என்னாடா அது விருதா வார்த்தெ! அந்த சேஷனொடு நோக்கென்னாடா
பேச்சு? வாங்க அல்லாம். சீக்கிரம் இன்னும் கொஞ்சம் தர்ப்பெ அறுத்து,
ஆளுக்கு கொஞ்சமா, அந்த தேவதாசனுக்குக் கொடுப்போம்.
ரா. முட்டாப் பசக! செய்யுங்க நீங்க. நான் கொடுக்க மாட்டேன்.
கோ. உன்னெ யாரும் கொடுக்கவும் சொல்லலெ-நீ கொடுக்கவும் வேண்டாம் போ.
-போன மாசம் காய்ச்சல் வந்த மாதிரி இன்னொரு தரம் நோக்கு காய்ச்ச வரட்டும்-
அப்ப எங்க கிட்ட வந்து தர்ப்பெ கேப்பெ-அப்ப எங்களுக்கு பதில் சொல்ல
தெரியும்.
ரா. இல்லெ இல்லெ இல்லெடா!கோபாலா, எம்பேர்லெ கோவிச்சிக்காதைங்க. - நானு
என்னா சொல்ல வந்தேண்ணா, நம்மெப்போலெ அவனும் கஷ்டப்பட்டா, சீக்கிரம்
தர்ப்பெ கிர்ப்பெ அறுக்க கத்துகவா இண்னு; உங்க பேர்லெ நான் ஒண்ணும்
சொல்லலெடாப்பா.
கோ. சரிதான்,உன் சமாசாரம் எங்களுக்கு நன்னா தெரியும்- ஆனாலும் இப்பவெ ஒரு
வார்த்தெ சொல்ரேன் கேளு- இந்த மாதிரி ஒனக்கு கெட்ட புத்தி மாத்திரம்
வாணாம் -அத்தெ உட்டூடு. [எல்லோரும் தர்ப்பை சேகரிக்கின்றனர். ]
தேவ. [பெருமூச்சுவிட்டு]அம்மா!அம்மா! [கண்ணீர் விடுகிறான். ]
வ. ஐயோ பாவம்!அவங்க அம்மாளெ நெனைச்சிண்டு அழராம் பைய!- அவளுக்கு
எவ்வளவு வருத்தமாயிருக்கும். இந்த சிறு பயலெ காட்டுக்கு அனுப்பனோமே
இண்ணு!
கோ. ஆமாம்,அந்த அம்மாளே பாத்தாதான் நேக்கு ரொம்ப வருத்தமா யிருக்கு. இவன்
அறியாத பய, கஷ்டம் இண்ரது அவ்வளவா தெரியலெ. அந்தம்மா, அந்த
பிராம்மணனிடத்திலெ ராவாப் பகலா, என்னா ஒழைக்கரா, என்னா கஷ்டப்படரா,
தெரியுமா? நான் என்னதான் பாவம் பண்ணாலும், மறுஜன்மத்லெ காலகண்டனா
மாத்திரம் பொறக்கக்கூடாது. -ஒரு ரகஸ்யம் தெரியுமாடா? அந்தம்மா,
அயோத்திக்கு ராஜாவா யிருந்த ஹரிச்சந்திரருடைய ஆத்துக்காரியாம்! இந்த
பயலும் அவா அம்மாளும் என்னா செல்வத்திலெ இருந்திருக்கணும்? அதையாவது
யோசிச்சி அந்த பிராம்மணன் கொஞ்சம் நன்னா நடத்தக்கூடாதா அவாளெ!
பாவம்!
ரா. அல்லாத்தையும் நம்பிவிடராம் இவன்! அவ ஹரிச்சந்திரர் ஆத்துக்காரியா யிருந்தா,
அடிமையா போவானே? அதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்.
கோ. தன் வாக்கைக் காப்பாத்தரத்துக்காக, ஹரிச்சந்திரன் தன் நாடு நகரத்தெ
யெல்லாம் விஸ்வாமித்திரருக்கு தானமாகக் கொடுத்துட்டு, அப்புறம் அவருக்குக்
கொடுக்கவேண்டிய கடனுக்காக, இவாளெ அடிமையா வித்தூட்டார் இண்ராக.
ரா. அதையெல்லாம் நம்பாதெ!அவ்வளவும் பொய்யாயிருக்கும்- அப்படி
செய்யரத்துக்கு ஹரிச்சந்திரன் என்னா மடையனா?
வ. அடா சேஷா!நோக்கு ரொம்ப தெரியும், நீ ரொம்ப புத்திசாலிதான். - நீ ஒறக்கக்
கத்தாதெ, பாவம், அந்த பய கேக்கப் போரான்!- வாடா கோபாலா, அவன் கிட்ட
போவோம். [தேவதாசனிடம் போகிறார்கள். ]
கோ. தேவதாசா,இண்ணைக்கு நீ அறுத்தது போதும். உனக்காக நாங்க கொஞ்சம்
அறுத்திண்டு வந்திருக்கோம், இந்தா வாங்கிக்க. -இதை யெல்லாம் சேத்திண்டு
போனா, அந்த கெழம் கோவிச்சிக்காது-
தேவ. அப்பா,உங்களுக்கெல்லாம் நமஸ்காரம்-ஆயினும் இன்னும் கொஞ்சம் தர்ப்பை
சேகரித்துக் கொள்ளுகிறேன். ஒரு சுமை தூக்கிக்கொண்டு வராவிட்டால்
என்னையும் என் தாயாரையும் அடித்துத் துரத்திவிடுவதாகச் சொன்னார் ஐயர்.
என்னையடித்தாலும் பெரிதல்ல, என் தாயாரை அடிப்பது எனக்கிஷ்டமில்லை.
வ. அப்படி உங்க ரெண்டுபேரையும் ஆத்தெ விட்டு அடிச்சி தொரத்திவிட்டா,
உங்களுக்கு நல்லதுதான்; அந்த கஷ்டமெல்லாம் இல்லாமெ இருப்பைக.
கோ. தேவதாசா,நீ ஒன்றும் பயப்படாதே, உன்னெ பயமுறுத்தறத்துக்கு அப்படி
சொல்லியிருக்கும் அந்தக் கெழம். உங்க அம்மாவை அடிக்காது அது, நாங்க
சொல்ரோம் வா-ரொம்ப நேரமா போச்சு.
தேவ. ஒரு நிமிஷம் பொறுங்கள்-இதோ வந்து விட்டேன். அதோ பாருங்கள்,
அந்தக் குன்றின்பேரில் நல்ல தர்ப்பை இருக்கிறது பச்சென்று,ஓடிப்போய் ஒரு
நொடியில் அதை அறுத்துக்கொண்டு வருகிறேன். அதைப் பார்ப் பாரயின் ஐயர்
சந்தோஷப்பட்ட்டு என் தாயாரை அடிக்காம லிருப்பார். [ஓடுகிறான். ]
கோ. அடடடெ!நில்லு நில்லு!-கேட்காதெ ஓடராம் பாரு! கால் தடுக்கி
விழுந்தா னிண்ணா என்ன செய்யரது?
ரா. புத்தி வரும் அப்போ.
கோ. உனக்கு இவ்வளவு வயசாகியும் இவ்வளவு புத்தி வந்துதே!
தேவ. என்ன பச்சென் றிருக்கிறது!காலையில் இவ்வழி வந்த பொழுது இதை நான்
எப்படிப் பாராது விட்டேன்? [தர்ப்பையை அறுக்கிறான். ] ஐயோ! பாம்பு! பாம்பு!
பாம்பு என்னைக் கடித்து விட்டது! கடித்து விட்டது!- அதோ ஓடுகிறது! ஓடுகிறது
மற்றவர். ஆ! ஆ! எங்கே? எங்கே? [அவனருகில் ஓடுகின்றனர். ]
தேவ. ஐயோ! அம்மா! அம்மா! விஷம் ஏறுகிறதே! ஏறுகிறதே! அண்ணா! அண்ணா!
அம்மா--அப்பா! [மரிக்கிறான். ]
மற்றவர். ஐஐயோ! தேவதாசன் செத்துபூட்டான்! நாம என்னா செய்யரதுடா!
ரா. நாமெல்லாம் ஓடிப்பூடலாம் வாங்கடா! இங்கே இருக்கக் கூடாது.
வ. என்னாடா இது? பாவம்! இந்த பயலெ இங்கெ இப்படியா விட்டுப் போரது?
மற்றவர். நாம வேறெ என்னா செய்யலாம்?
ரா. அடே, நான் சொல்ரத்தெ கேளுங்க. இங்கெ இந்த மாதிரி நிண்ணுகினு பேசிகினு
இருந்தைகளா, அந்த பாம்பு வந்து நம்மெயெல்லாம் கடிச்சூடும். நான் போரென்,
நீங்கல்லா வர்ரைகளா இல்லையா?—பொங்க ஆனால்! [ஓடிப்போகிறான். ]
வ. அடே, கோபாலா, பய செத்துப்பூட்டான். —நாம இங்கெ அழுதுகினு
இருக்கரத்துலெ பிரயோஜனமில்லெ. --இவனெ தூக்கிகினு போக நம்மாலெ
முடியாது. அதுவுமில்லாமெ, பொணத்தெ ஆத்துக்குக் கொண்டு போகக் கூடாது
இண்ணு சாஸ்திரமில்லெ? அத்தொட்டு இந்த கொடிகளாலேயும் எலைகளாலேயும்
இவனெ மறச்சி வைச்சூட்டு, நாம ஆத்துக்குப் போயி, அவா அம்மா கிட்ட நடந்த
சேதியெ சொல்லிடுவோம்.
மற்றவர். அப்படித்தான் செய்வோம்.
வ. பாவம்! அவங்கம்மா கிட்ட போயி எப்படி சொல்ரது இண்ணு இருக்குதுடா
எனக்கு இந்த சமாசாரம் கேட்டா அவளுக்கு எவ்வளவு துக்கமா யிருக்கும்? சின்ன
வயசுடா! புத்திசாலி பய! இப்பகூட என்னா அழகா யிருக்ராம் பார்!
கோ. அவன் தலைவிதி இப்படி இருந்துதாக்கும் அந்தமட்டும் அந்தப்
பிராம்மணன்கிட்ட கஷ்டப்படரத்தெவிட, செத்து சொர்க்கம்பூட்டான் இவன்—
இவனுக்காக நாம வருத்தப்பட வேண்டியதில்லெ--அவா அம்மா கதியெ
நெனைச்சிண்டாதான் நேக்கு துக்கம் வருது!--போலாம் வாங்க! நாழியா போச்சி,--
சீக்கிரம் போவோம்-- [போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
---------------------------------------
இரண்டாம் காட்சி.
இடம்--அதே வனம். இரவு. சந்திரமதி தேடிக்கொண்டு வருகிறாள்.
ச. கண்ணே! கண்ணே! தேவதாசா! எங்கே யிருக்கிறாயடா என் கண்மணி! உன் உடல் எங்கே கிடக்கிறதோ? இப்பேருலகில் என்னிலும் பெரும் பாவி யாரேனுமுண்டோ? என் அருமை மைந்தனைப் பறிகொடுத்ததுமன்றி, அவனதுடலையும் காணாது கதறவேண்டி வந்ததே!--ஈசனே! ஜகதீசா! இந்த அடர்ந்த காட்டில், இக் கருக்கிருட்டில், என் கண்மணியின் உடலை நான் எங்கென்று தேடிக் கண்டுபிடிக்கப்போகிறேன்! ஐயோ! என் மனம் போல் இவ்வாகாயமும் இருண்டிருக்கிறதே! ஒரு நட்சத்திரத்தையும் காணோமே! அந்தோ! அவைகளெல்லாம் பாலனை யிழந்த இப்பாவியைப் பார்ப்பதும் பாபமென்றெண்ணி மறைந்திருக்கின்றனவோ? கருணையில்லாத அப்பிராம்மணன் சூர்யாஸ்தமனத்திற்குமுன் எனக்கு உத்தரவு கொடுத்திருப்பாராயின் என் கண்மணியின் உடலிருக்கு மிடத்தைக் கண்டு பிடித்திருப்பேனே. அந்தோ! என் கண்மணியின் உடலைக் கட்டியழுதாவது என் துயரம் கொஞ்சம் தீர[க்கூடக் கொடுத்த வைக்காத பாவியானேனே!— பிராம்மணப் பிள்ளைகள் குறித்த இடம் இதுதான் என்று நினைக்கிறேன். அதில் சந்தேகமில்லை. --ஆயினும் இங்கே ஒன்றும் என் கண்ணுக்குப் புலப்படவில்லையே--எல்லாம் காடாந்த காரமாயிருக்கிறதே!-- இது என்ன காலில் தட்டுப்படுகிறது? கட்டையா?--அன்று! அன்று! கண்ணே! கண்ணே! தேவதாசா! மைந்தா! மைந்தா! [உடலின்மீது வீழ்ந்து மூர்ச்சையாகி பிறகு சற்று பொறுத்து தெளிந்து] மைந்தா! என் அருமை மகனே! என் கண்மணி! தேவதாசா! தேவதாசா! மடிந்தனையோ? மடிந்தனையோ?-- [தன் மடிமீது அவனுடலை வளர்த்திக்கொண்டு] கண்மணி! இச்சிறு வயதில் நீ இறக்கவேண்டுமென்று உன் தலையில் பிரமன் வரைந்தனனோ? அரசர்க்கரசனாகிய அயோத்தி மன்னன் புதல்வனா யுதித்த நீ, அடிமையாய் விற்கப்பட்டு, கட்செவியினால் கடிக்கப்பட்டு, ஆரும் துணையின்றி அநாதையாய் அருங் கானகத்தில் மடிந்து கிடக்கவேண்டுமென்று, உன் தலையில் எழுதப்பட்டிருந்ததா? கண்ணே! மைந்தா! இது அறியாப் பாலகனாகிய நீ இழைத்த பாபத்தின் பயனன்று, தர்ம சொரூபியாகிய உன் தந்தை யிழைத்த தவறுமன்று! மஹா பாபிஷ்டியாகிய உன் மாதாவான என் உதரத்தில் உதித்த பாபமே உன்னை இவ்வாறு பற்றியது! கண்ணே! தேவதாசா! உன் கனிவாய் திறந்து ஒரு வார்த்தை கூறி, இக்காதகியின் கவலையையெல்லாம் போக்கமாட்டாயா? மைந்தா! மைந்தா! உன் மாதாபடும் துயரத்தைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கலாமா நீ? இக் கடுங் கானகத்தில் நமது தாய் கதறியழுது தவிக்கின்றாளே யென்று உன் மனம் கரையவில்லையா? கண்ணே! கண்ணே! எனக்கு ஒரு வார்த்தை கூறடா! ஒரு உறுதி மொழி சொல்லடா! என்மீது உனக்கு இறக்கமென்பதில்லாமற் போயிற்றா? அல்லது, நம்மை இக்கதியில் கண்டும் உயிருடனிருக்கிற இக் கடின சித்தமுடைய காதகியுடன் பேசுவது பாபமென்றெண்ணி வாளா யிருக்கின்றனையோ? அப்பா, கண்மணி, உனதன்னை யென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் இம்மஹா பாதகிக்கு, மரிக்கவும் சுதந்திரமில்லையே! அயலாருக்கு அடிமைப்பட்ட நான் என திச்சைப்படி உயிர் துறக்கவும் சுதந்தர மற்றவளே! - அநாதரட்சகா! ஆபத்பாந்தவா! பேரிடி யொன்றை இப்பெரும் பாவியின் தலையில் விழச்செய்து இவளை பஸ்மீக்கரப்படுத்துமே இட்சணம்! பாலனைப் பறி கொடுத்த பாபி இப்பாரினில் இருந்தென்ன பலன்? ஜகதீசா! இதுவரையில் எனக்கு நேரிட்ட துன்பங்களை யெல்லாம் எனது கணவர் பொருட்டும் என அருமை மைந்தன் பொருட்டும், பொறுத்து வந்தேன். இனி என் அருமைக் கண்மணி மடிந்தபின், நான் ஆருயிர் தரிப்பானேன்? - ஐயோ! என பாலனைக் கடித்த படு விஷமுடைய பாம்பே, நீ எங்கிருக்கிறாய்? ஒரு பாபமும் அறியாத அவனைக்கொன்ற நீ, மஹா பாபிஷ்டியாகிய என்னையும் கடித்து மரிக்கச் செய்யாயா? அப்படியாவது இத் துயரமெல்லாம் நீங்கி, சுவர்க்கம் போய் என் சுந்தர குமாரனைக்கண்டு கட்டியணைத்து மகிழ்வேனே! - இல்லை! என்னை நீ கடிக்கமாட்டாய் என்று தெரியுமெனக்கு; புண்ணியம் செய்தவர்களே இப்பாழுலகத்தை விட்டு விரைவில் நீங்கி, சுவர்க்கம் புகுவார்கள். என்னைப் போன்ற கொடும்பாபிகள் பல வருடங்கள் இப் பாரினில் உழன்று நரகவேதனையை அனுபவித்துப் பரிதபிக்க வேண்டுமன்றோ? அந்தோ! இவ்வீரேழ் புவனங்களிலும் என்னைப்போன்ற கொண்டும்பாபி எவரேனு முண்டோ? இல்லாவிடின் மதிதயன் புத்திரியாய் மண்ணினி லுதித்து, மன்னர் மன்னனான அயோத்தி அரசன் அருந்துணைவியாய் வாழ்க்கைப்பட்டும், நாடு நகரத்தையெல்லாம் இழந்து, நாயகனிடமிருந்து பிரிக்கப்பட்டு, அடிமையாய் விற்கப்பட்டு, அருமை மைந்தனையும் பறி கொடுத்து, அநாதையாய் அருங் கானகத்தில் அழுந்து நிற்கக் காலம் வாய்த்ததே! அந்தோ! பரமேசா! எந்த ஜன்மத்தில் என்ன பாபமிழைத்தேனோ இக்கதிக்கு வர? - அந்தோ! அந்தோ! அந்த பரமேஸ்வரன் கருணையினால் எனது நாதன் நற்கதியடைந்து, என் அடிமைத்தனத்தை விடுவிக்க ஒருகால் வந்து, என் அருமை மைந்தன் எங்கே, என்று கேட்பாராயின், அவருக்கு நான் என்ன பதில் உரைப்பேனடா கண்மணி! கண்மணி! நீ இறந்து போனாய் என்று என் வாயால் எப்படி அவருக்குச் சொல்லுவேன்? அப்படி நான் சொல்வேனாயின் - அருமை மைந்தன் இறந்து ஆவி தரித்திருக்கிறாள் இப் பாபி, இவளை இனி நாம் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது, என்று தன் ஆவி துறப்பாரே! அதற்கு நான் என் செய்வேன்? என் செய்வேன்? பிராம்மணர் உன்னைக் காட்டிற் கனுப்பினார் என்று கூறுவேனாயின், நீயும் துணையாக ஏன் செல்லவில்லையென்று கேட்பாரே! ஐயோ! இக்கடின சித்தமுடைய பிராம்மணன் அறியாப் பாலனாகிய உன்னை இவ்வருங் கானகத்திற் கனுப்பினரே! அவரை நொந்தென்ன பலன்? இவ்வாறு நீ இறக்க வேண்டுமென்று பிரமன் உன் தலையில் எழுதியிருந்தால் அதை மாற்ற ஆராலாகும்? எல்லாம் வல்ல கடவுளே! இப்படியும் உமது திருவுளம் இருந்ததே! ஏழையென் செய்வேன்? ஏதும் உமதிச்சைப்படியே ஆகுக! - ஆயினும், - ஆயினும், கருணைக் கடலெனப் பெயர் பூண்ட உமக்கு என் அருமைப் பாலகன் மீது மாத்திரம் கருணை யென்பதேன் இல்லாமற் போயிற்று – இனி அழுது பயனென்ன?
[எழுந்திருக்கிறாள். ]
ஆண்டாண்டு தோக*ழுதாலும் அருமைப் புதல்வன் ஆருயிர் பெறப்போகிறானா? அப்படிப் பெறுவதாயின் என் ஆயுளெல்லாம் அழுது கழிப்பேனே! - இவனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை யெல்லாம் சீக்கிரம் செய்துவிட்டு, நான் அந்தணர் வீட்டிற்கு போகவேண்டும். இந்தச் சமயத்திலும் சீக்கிரம் வரும்படி கட்டளை யிட்டாரே! என் பாபம் அது! மைந்தா! மைந்தா! நீ எனக்குச் செய்ய வேண்டிய கர்மத்தை, நான் உனக்குச் செய்ய வேண்டி வந்ததே! கண்ணே வா, உன்னைச் சுடுகாடிற்குச் சுமந்து போகிறேன்! பரமனே! பரமனே! உமது பாதாரவிந்தங்களைப் பற்றியதற்குப் பாவி கண்டபலனிதுதானோ? [தேவதாசனைத் தூக்கிக்கொண்டு அழுதவண்ணம் போகிறாள்]
காட்சி முடிகிறது.
----------
மூன்றாம் காட்சி
இடம் - காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் அதைக்காத்து நிற்கிறான்.
ஹ. நடு ஜாமமாயிற்று - நரமனிதர்கள் ஓசையெல்லாம் அடங்கி விட்டது –
பேய்களின் கொக்கரிப்பும் பிணங்கள் எரியும் சப்தமும் தவிர, வேறொன்றும் என்
காதிற் படவில்லை - ஆகாயமும் என் ஆன்மாவைப்போல் அந்தகாரத்தில்
மூழ்கியிருக்கிறது. - சூரிய வம்சத்தில் மன்னனாயுதித்த நான், சுடுகாட்டைக் காத்து
நிற்கின்றேன், தன்னந்தனியாக - தேவதேவனே, உன் திருவிளையாட்டின்
திறத்தை அறிந்தார் யார்? அழிவிலாப் புகழுடை ஆதித்ய வம்சத்தி லுதித்து,
அயோத்தியை ஒருகால் ஆண்ட ஹரிச்சந்திரன், பிறகு கடையனுக்குக் கடிமையாகி,
கபந்தங்கள் வாழும் ஸ்மசானத்தில் சவங்களைச் சுட்டெரித்துக் காத்து நின்றான்,
என்று கனவிலும் எண்ணப்பட்டிருக்குமோ? அன்றைத்தினம் அயோத்தியில் நான்
கனவிற் கண்டதெல்லாம் நடந்தேறிவிட்டது. - ஆயினும் - இவ்விதம் நேரிடுமென்று
எள்ளளவும் எண்ணினவனல்லவே! அம்மட்டும் பின்னால் வரப்போகிறதைப்
பேதைமாந்தர்கள் முன்னாள் அறியாதபடி பேரருள் புரிந்தனரே, பேயோயாடி
பினாகபாணி! பின்பு வரப்போகிறதை முன்பு அறியாதிருத்தலே மேலாகும்! வருவது
தீமையேயாயின் அதை வராமலிருக்கச் செய்ய வகை யார் அறிவார்? அதுவுமன்றி
அது வரப்போகிறதேயென்று நினைத்து நினைத்து முன்பே அல்லலிற்
படுவோமல்லவா? வருவது நன்மையாயின், அதை முன்பே அறிந்து விடுவதினால்
அது நேரிடுங்கால் அத்தனை சந்தோஷத்தை தராது. ஆகவே, நடப்ப தெல்லாம்
நமது நன்மைக்கே, என்று நாதன் திருவடிகளில் நம்பிக்கையுள்ளவர்களாய், நாம்
சந்தோஷத்திலிருப்பதே நன்மார்க்கமாகும். எந்த ஸ்திதியில் ஈசன் நம்மை
வைத்தபோதிலும், இதைப்பார்க்கிலும் இழிந்த ஸ்திதியில்
வைக்காமலிருக்கின்றாரே, என்று அவரை வாழ்த்த வேண்டும். பாழான எக்கதி
வைத்தபோதிலும், பரிசுத்த ஆத்மாவை யுடையவன், பரமேஸ்வரன் நாம் முன்
ஜன்மங்களிற் செய்த பாபங்கலெல்லாம் பரிஹாரமாகும்படி இதை நமக்
கனுப்பினார், என்று முக மலர்ச்சியோடு முற்றும் பொறுத்து, அவரது பாதார
விந்தங்களைப் போற்றுதல் வேண்டும். அதுதான் நாம் உயர் பதவிக்குச் செல்ல
ஊன்று கோளாகும். அநித்தியமாய் இவ்வுலக வாழ்க்கையில் நமக்குள்ள
ஆசையாம் பற்றினை, அறவே நீக்கிட, இக்கதியே நமக்கு நற்கதியல்லவா?
இக்கதிக்கு நான் வந்திராவிட்டால், இவ் வுண்மைகளை யெல்லாம் இப்பொழுது
நான் அறிந்திருக்க மாட்டேன் அல்லவா? ஆகவே, பூதநாதனே, இந்த ஞானத்தைப்
புகட்டவேண்டி புலையனேற்கு இக்கதி யளித்தீர்! உமது பேரருளை நான்
என்னென்று புகழ்வேன்! பரமனே! பற்றறப் பற்றினேன் உம்பாதம்!
உம்பர்கட்கரசே,ஒழிவற நிறைந்த யோகமே யூற்றையேன் றனக்கு வம்பெனப்
பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே
சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே யெம்பொருட் டுன்னைச் சிக்கெனப்
பிடித்தே னெங்கெழுந் தருள்வ தினியே!-
ஆயினும்-இவையனைத்தும் அறிந்தும்-என் ஆருயிர்க் காதலியையும் அருமை
மைந்தனையும்பற்றி நினைக்கும் போதெல்லாம்,என் மனோதிடமெல்லாம்
எங்கேயோ பறந்தோடிப்போகிறதே!சந்திரமதி!சந்திரமதி!-தேவதாசா! தேவதாசா!-
பாவி என்பொருட்டுப் பாரினில் நீங்கள் அடிமைகளாகி அல்லற்பட
வேண்டியதாயிற்றே! ஈசனே!ஜகதீசா!நானிழைத்த பாபங்களின் பொருட்டு என்னை
உமதிச்சை வந்தபடி தண்டியும்,என்பொருட்டு அவர்களைத் தண்டியாதீர்! எனக்கு
இன்னும் கேடான கதி வரினும் வருக!அவர்கள் பாப மிழைக்காதபடியும் இன்னும்
பரிதபிக்காதபடியும் கடைக்கண்னாற் கடாட்சித் தருளும்! இன்னும் ஒரு கடைசி
வேண்டுகோள்-இக்ககடையவனுக்கு இன்னும் எக்கதி வாய்த்தபோதிலும், இவன்
மேற்கொண்ட சத்ய விரதத்தினின்றும், அணுவளவும் பிறழாதபடி காத்தருளும்!
சந்திரசேகரா! சத்யம் என்பதுநீரேயானால், அவ்வடிவில் உம்மைப் பூசிக்கும்
அடியார்க் கடியனாகிய என்னைக் காப்பது, உமது கடைமையாகும். உமது பதம்
எனது பாரம்,என்னைக் காப்பது உமது பாரம்!பரமதயாளு! பரமதயாளு!
சுடைலையைச் சுற்றி வரவேண்டிய காலமாயிற்று. [புறப்படுகிறான்]
காட்சி முடிகிறது.
--------------
நான்காம் காட்சி
இடம் - காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் அதைக் காத்து நிற்கிறான். அருகில் சத்தியகீர்த்தி நிற்கிறான்.
ஹ. அப்பா, சத்தியகீர்த்தி இதற்குள்ளாக இங்கேன் வந்தாய்? என்னுடைய
கஷ்டத்தைப் பார்த்து நீயும் ஏன் கஷ்டப் படவேண்டும்?
சத். அண்ணலே, நான் என் செய்வேன்? உம்மை விட்டுப் பிரிந்திருக்க என் மனம்
ஒப்பவில்லையே. பிறந்தது முதல் உம்மைவிட்டுப் பிரியாது வாழ்ந்து வந்தேன்
என்பது, நீர் அறியாத விஷயம் அன்றே; நீர் சந்தோஷமா யிருந்த காலத்தில்
உம்மை விட்டுப் பிரியாத நான், நீர் துக்கமனுபவிக்கும்பொழுது உம்மை விட்டுப்
பிரிய என் மனம் ஒப்புமோ? அண்ணலே, என்னை அவ்வளவு கேவலமாக
எண்ணாதீர்!
ஹ. அப்பா, அவ்வாறு நான் எண்ணவே யில்லை. என் பொருட்டு நீயேன்
துக்கபடவேண்டுமென்று கருதியே இவ்வாறு கூறினேன்.
சத். நமக்கு துக்கம் நேரிடுங்கால் நமது ஆப்தர்கள் அதை நம்முடனிருந்து
பகிர்ந்துக் கொள்வதினால் அது குறையும் என்கிறார்களே.
ஹ. ஆம், அது ஒரு விதத்தில் உண்மையே, ஆயினும் அதனுடன் மற்றொரு விஷயமும்
யோசிக்கவேண்டி வருகிறது. நம்முடைய துக்கமானது நமது நண்பர்களையும்
பீடிக்கிறதே என்று கருதுமிடத்து, அத் துக்கம் அதிகரிக்குமே, அதற்கென்
செய்கிறது?
சத். அண்ணலே, அதெப்படி யாயினு மாகுக, உம்மை விட்டுப் பிரிந்திருப்பதென்றால்
என் உள்ளம் பொறுக்க வில்லை - அப்படி இருப்பது எனக்கு அசாத்தியமா
யிருக்கிறது. ஆகவே தாங்கள் என்னை மன்னிக்கவேண் டும் - அதிருக்கட்டும்,
அண்ணலே, இக் கதியினின்றும் தாம் கடையேறுவதற்கு வழியொன்று
மில்லையா? உமது ஆயுளையெல்லாம் இப்படி அடிமையாகத்தான் நீர் கழிக்க
வேண்டுமோ?
ஹ. அப்பா, அதற்கு பதில் அந்த ஈசனைத்தான் கேட்க வேண்டும்;
என்னால் கூறமுடியாது.
சத். அண்ணலே, உமக்குப் பதிலாக நான் உமது எஜமானனிடம் அடிமையாகி
உம்மை நான் விடுவிக்க முடியாதா?
ஹ. அப்பா, சத்தியகீர்த்தி, உன் அருங்குணத்தை மெச்சினேன்; ஆயினும் நீ சொல்வது
ஒருபோதும் கூடாது. அதற்கு நான் இசையேன் என்று உனக்கு நான் எத்தனை
முறை சொல்லி யிருக்கிறேன்? கடல் சூழ்ந்த இவ்வுலகில் ஒவ்வொருவனும் தனது
கர்மாவைத் தானே அனுபவித்துத் தீரவேண்டும். ஆகவே, எனது கர்ம பலன்
இதுபோலும்; இதை நான் அனுபவித்தே கழிக்க வேண்டும். ஆகவே இந்த
ஸ்திதியிலும், நமது கர்மமாகிய கடனைச் சீக்கிரம் கழித்தொழிக்கிறோமே என்று
சந்தோஷப் படுகிறேன்.
சத். அண்ணலே, ஈசன் கருணையினால் இம்மன உறுதி, உம்முடைய மனைவி
மக்களுக்கு மிருந்து, அவர்களுடைய தற்கால ஸ்திதியைப் பொறுத்திடும்படிச்
செய்யுமாக!
ஹ. தேவதேவன் அங்ஙனம் திருவுளம் வைப்பாராக!
ஒரு புறமாக சந்திரமதி, தேவதாசனைத் தூக்கிக்கொண்டு அழுத வண்ணம் வருகிறாள்.
ச. ஹா! கண்மணி! கண்மணி! நான் இறந்து நீ எனக்குச் செய்யவேண்டிய கர்மத்தை நீ
இறந்து நான் உனக்குச் செய்யவேண்டி வந்ததே! விதியே! விதியே! இப்படியும்
எங்களிருவர் தலையில் எழுதி வைத்தாயே!-நேரமாய் விட்டது; இனி
தாமதிக்கலாகாது; கட்டையை அடுக் கி,என் கண்மணியை அதில் வளர்த்தி,நான்
விரைவில் தகனம் செய்யவேண்டும்-சிதறிக்கிடக்கும் இவைகளைக் கொண்டு
சிதையை அடுக்குகிறேன். [அங்ஙனமே செய்கிறாள். ]
என் அருஞ்செல்வமே!உன் அழகிய முகத்தைக் கடைசி முறை உன் தந்தை
பார்ப்பதற்கில்லாமற் போச்சுதே! தெய்வமே!தெய்வமே!-இனி வருந்தியாவதென்?-
அப்பா!கண்மணி! இதோ உன் சிதைக்கும் என் வயிற் றிற்கும் ஒரே கொள்ளியாக
வைக்கிறேனடா! கண்ணே! கண்ணே! [கொள்ளி வைக்கிறாள். ]
ஹ. அப்பா,சத்யகீர்த்தி,-அதோ பார் தூரத்தில் வெளிச் சம் தெரிகிறது!யாரோ சிதை
யடுக்கிக் கொள்ளி வைக் கிறாற் போலிருக்கிறது!-இங்கு சற்றே இரு,நான் போய்
என்னவென்று பார்த்து வருகிறேன்- [சந்திரமதி இருக்குமிடம் போகிறான். ]
ச. [அழுதுகொண்டு]கண்ணே!கண்மணி!கட்டிக்கரும்பே! உன் மதி வதனத்தைப்
பாவி நான் காண்பது இதுவோ கடைசி முறை?மறுபடியும் எந்த ஜன்மத்தில்
இதைக் காணப்போகிறேனோ?-கண்ணே!கண்ணே!
ஹ. [அருகிற் சென்று]ஸ்மசான பூமியில் இச் சமயத்தில் கண் ணீர் விட்டுக்
கலங்கி அழுவது யார்?
ச. [பயந்து]ஈசன் காத்திடுவாராக!-ஐயா,நீர் யார்?
ஹ. நான் இச்சுடுகாட்டைக் காத்திடும் காவலாள்,ஏதோ நீ இறந்த குழந்தையொன்றை
தகனம் செய்ய முயல்வதாகக் காண்கிறேன். இச் சுடுகாட்டில் பிரேதத்தைக்
கொளுத் துமுன் செலுத்தவேண்டிய கட்டணம் எங்கே?
ச. கட்டணமா? கட்டணமென்றால்? அதொன்றும் எனக்குத் தெரியாதே!
ஹ. கட்டணம் என்றால், இச்சுடுகாட்டில் பிரேதத்தைச் சுடுமுன், இச் சுடுகாட்டிற்குச்
சொந்தக்காரனாகிய என் எஜமானனுக்குச் சேரவேண்டிய வரி; அதைச்
செலுத்தாவிட்டால் இவ்விடத்தில் எந்தப் பிரேதத்தையும் சுடக்கூடாது.
ச. ஐயா! நீர் யாராயினுமாகுக, அநாதையான என்னிடம் அந்த வரியைச் செலுத்த
அரைக் காசும் கிடையாது. என்னுடைய ஒரே பாலனைப் பறிகொடுத்த பரதேசி
நான், அவனுடலைத் தகனம் செய்யவேண்டி யிருக்கிறது. நானோ ஒருவருக்கு
அடிமைப்பட்டவள். அடிமையாகிய நான் எங்கிருந்து அந்தக் கட்டணத்தைச்
செலுத்துவேன்! ஐயா, என்மீது தயை புரிந்து அக் கட்டணத்தை மன்னித்து என்
மைந்தனுடலைத் தகனம் செய்ய உத்தரவு கொடுமே? உமக்குப் பெரும்
புண்ணியமாகும்!
ஹ. அம்மா, உன் சமாசாரத்தைக் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் பரிதாபமாகத்-
தானிருக்கிறது. ஆயினும் உனது வேண்டு கோளுக்கிசைய நான் அசக்தனா
யிருக்கிறேன். நான் எனது எஜமானனுடைய கட்டளைப்படி நடக்கவேண்டிய
ஊழியன்; அக்கட்டணத்தை மன்னிக்க எனக்கு உத்தரவு கிடையாது. ஆகவே
அதைக் செலுத்தினாலொழிய நீ உன் மைந்தனை இங்கே தகனம் செய்ய நான்
உத்தரவு கொடுக்கக் கூடாது; ஆகவே அம்மா, நீ என்னை மன்னிக்கவேணும், என்
கடமையை நான் செய்யவேண்டும்; உன் கையில் காசில்லாவிட்டால்,
இப்பிரேதத்தை இங்கு தகனம் செய்யக்கூடாது. வேறே எங்கேயாவது
கொண்டுபோ.
ச. ஐயோ! நான் வேறெ எங்கு கொண்டு போவேன் இந்நடு நிசியில்? அன்றியும்
சிதையின் மீது வைத்ததை மறுபடி எடுக்கலாகுமோ?கொள்ளியும் வைத்தாய்
விட்டதே! இனி நான் சவத்தைத் தீண்டலாகாதே!-ஐயா,கொஞ் சம் தயை
புரியுமே?கொஞ்சம் பச்சாத்தாபப்படுங்கள்! உம்மைக் கையிரந்து
வேண்டுகிறேன்! கொஞ்சம் பொறுங்கள்,தகனமாய் விடும்!
ஹ. அம்மா!அது உதவாது!இதுதான் என் கடைசி வார்த்தை. நீயாக
இப்பிரேதத்தைச் சிதையினின்றும் எடுத்துக்கொண்டு செல்லாவிட்டால் நான்
அதைத் தள்ளவேண்டும். என்ன சொல்லுகிறாய்?-சரி!என் கடைமையை நான்
செய்ய வேண்டும்-மன்னிப்பாய்!
[தன் கோலால் தேவதாசன் உடலை எடுத்துத் தள்ளுகிறான். அது சந்திரமதியின்மடி மீது விழுகிறது. ]
ச. தெய்வமே!தெய்வமே!-மகனே!இப்படியும் இருந் ததா உன் விதி?சுட்டெரிக்கப்
படுமுன் சுடுகாட்டுப் புலையனால் சிதையினின்றும் கீழே தள்ளப்படும்படியாக
என்ன பாபமிழைத்தாயடா கண்மணி நீ!-நீ ஒரு பாபமு மிழைத்திருக்க மாட்டாய்-
இக்கதி உனக்கு வாய்த்தது என் வயிற்றில் நீ பிறந்த கொடுமையாகும்!
ஹ. அந்தோ!பாபம்!பாபம்!-அம்மா,என்ன,எவ்வளவு சொல்லியும் அழுது
கொண்டிருக்கிறாய் இங்கேயே?
ச, இந்தக் கதியில் நான் அழாமல் வேறு என்ன செய்வது? இறந்த என் மைந்தனுக்காக
நான் கொடுக்கத் தக்கது என் கண்ணீரன்றி வேறொன்றும் என்னிடம் இல்லையே!
ஹ. அம்மா,என்னை வெறுக்காதே!நான் என்ன செய்வேன்? உன் கதியை நினைத்து
நான் பச்சாத்தாபப் பட்டபோதி லும்,என் கடைமையை நான்
நிறைவேற்றவேண்டும். எனக் குச் சேரவேண்டிய வாய்க்கரிசியும்
முழந்துண்டையும், நான் மன்னித்துவிடுகிறேன்,என் எஜமானுக்குச் சேர
வேண்டிய கட்டணத்தை மாத்திரம் எப்படியாவது கொடுத்துதான் தீரவேண்டும்.
ச. ஐயா,உமக்கு எத்தனை முறை நான் சொல்லுவேன்? என்னிடம் கால்
துட்டுமில்லையே!
ஹ. காசு கையில் இல்லாவிட்டால் உன்னிடமிருக்கும் பொருள் ஏதாவதென்றை
விற்று அதைக் கொடுக்க வேண்டும்.
ச. ஐயோ!விற்கத்தக்க பொருள் என்னிடம் ஒன்றுமில் லையே!ஒன்றுமில்லையே!
ஹ. பொய் பேசாதே!நான் எதையும் பொறுப்பேன்,பொய் யினை மாத்திரம்
பொறுக்கமாட்டேன்;உன் கழுத்தில் மாங்கல்யம் இருக்கிறதே,அதை விற்று என்
எஜமான னனுக்குச் சேரவேண்டிய பொருளைக் கொடுக்கிறது தானே?
ச. ஆ!ஆ!-தெய்வமே!தெய்வமே!இக் கதிக்கும் என் னைக் கொண்டுவந்தாயோ? நான்
பிறந்தகாலை என்னுடன் பிறந்த என் மாங்கல்யம்,என் கணவர் கண்ணுக்கின்றி
மற்றொருவர் கண்ணுக்கும் புலப்படாதென்று நீ அசரீரி யாய் நின்று கூறின
வார்த்தை பொய்த்துப் போய்,சுடு காட்டில் பிணத்தைச் சுட்டெரிக்கும் சண்டாளப்
புலையன் கண்ணிற்கும் புலப்பட்டதே!
ஹ. ஆ!-ஆ!-
ச. தெய்வமே!உன் வார்த்தையே பொய்த்துப் போவ தானால் உலகத்தினில்
எதுதான் சத்யமாகும்?
ஹ. சந்திரமதி!
ச. ஆ!பிராணநாதா!பிராணநாதா!
ஹ. தேவ-தாசா! [தேவதாசன் உடலின் மீது மூர்ச்சையாகி விழுகிறான். ]
ச. பிராணநாதா! பிராணநாதா! - அந்தோ! பிள்ளையையும் பறிகொடுத்து, இன்று,
நான் புருஷனையும் பரிகொடுப்பதோ! - ஈசனே! ஈசனே! - இல்லை, இல்லை
மூர்ச்சையாயினார் போலும் பிராணநாதர்! பிராணநாதா! - பிராணநாதா!
ஹ. [மூர்ச்சை தெளிந்து] சந்திரமதி! - நமது மைந்தன் - தேவதாசன் - இறந்தானா? –
நான் உயிரோ டிருக்கிறேனோ? கனவு காண்கிறேனோ? - இல்லையே!
இல்லையே! - இது உண்மையே! உண்மையே! கண்ணே தேவதாசா!
[தேவதாசன் உடலை கட்டியணைத்து] இதுவோ உன் விதி! இதுவோ உன் விதி! –
ஈசனே! ஜகதீசா! என்னால் பொறுக்க முடியவில்லையே! இதைக் கண்ணாரக்
கண்டும் ஆவி தரித்திருக்கின்றேனே! என் உள்ளம் வெடியா திருக்கின்றதே!
மைந்தா! மைந்தா! தேவதாசா! நீ மடிந்ததாக என்னால் எண்ணவும்
முடியவில்லையே! - அந்தோ! எனக்கேன் கண்ணீர் வராமலிருக்கிறது? சந்திரமதி!
சந்திரமதி! ஏதாவது பேசு - என்னுடன் -
ச. தெய்வமே! நான் காண்பது மெய்யோ பொய்யோ? கனவோ நினைவோ? –
பிராணநாதா! நீர்தானோ அயோத்தி மன்னனா யிருந்தவர்? என்னை மணந்த
மணாளர்?
ஹ. சந்திரமதி! ஆம் ஆம் அது கிடக்கட்டும்! - தேவதாசன் - நமது மைந்தன், எப்படி
மடிந்தான்? அதை விரைவிற் சொல் எனக்கு? - விரைவிற் சொல் -
ச. நாதா! நான் உமக்கு என்னவென்று சொல்வேன்? எப்படிச் சொல்வேன்?
ஹ. கண்ணே! - சொல் - சொல் - சீக்கிரம் -
ச. என் நா எழவில்லையே! என் நா எழவில்லையே! -
ஹ. கொஞ்சம் மனதை தைரியம் செய்துகொண்டு - சொல்! சொல்!
ச. [அழுதுகொண்டே] இன்று காலை-காலகண்டையர், காட்டிற்குச் சென்று,தர்ப்பை
சேகரித்துக் கொண்டு வரும் படி-கட்டளையிட்டனுப்பினார் தேவதாசனை-
அங்கே கரும் பாம்பொன்று-கண்மணியைக் கடிக்க-மடிந்த தாக உடன்சென்ற
பிராம்மணப் பிள்ளைகள்வந்து சொன் னார்கள்-நான் இதைக் கேட்டதும்-
ஹ. அந்தோ!தேவதாசா!-அயோத்தி மன்னனுக்கு அரும் புதல்வனாய்ப் பிறந்த நீ,
அருங் கானகத்தில் அநாதை யாய் அரவம் தீண்டி இறக்கவேண்டுமென்று, அயனார்
உன் தலையில் வரைந்தாரோ?அப்பா!கண்மணி!அறி யாப்பாலனாகிய நீ செய்த
பாபத்தின் பயனாயிராது இது, பரிசுத்தமான பரிதியின் வம்சத்தி லுதித்து, பாராளும்
மன்னனாய்ப் பிறந்தும்,பறையனுக்கடிமையாகி பரம சண் டாளனாகிச் சுடுகாட்டை
பாதுகாத்து நிற்கும்,கதியை யடைந்த, இம்மஹா பாபியின் மைந்தனாய்ப் பிறந்த
கொடுமை போலும்!கொடுமை போலும்! [தேம்பி அழுகிறான். ]
ச. ஆ!தெய்வமே!நான் என்ன வார்த்தையினைக் கேட்கி றேன்!பிராணநாதா-தாங்கள்-
இக்கதிக்கு எப்படி வந்தீர்கள்?
ஹ. சந்திரமதி-கூறுகிறேன் கேள்-உன்னை விட்டுப் பிரிந்த பின்,
நட்சத்திரேசர், தனக்குத் தரகு சேரவேண்டு மென்று கேட்க,அதைக்கொடுக்க
இசைந்து,வேறொன் றும் வகையில்லாதவனாகி,நான் இச்சுடுகாட்டுத்
தலைவனாகிய வீரபாஹு எனும்-புலையனுக்கு-அடிமைப் பட்டு-அக்கடனையும்
தீர்த்தேன்.
ச. அந்தோ!அந்தோ!பிராணநாதா!இக்கதியும் உமக்கு வாய்க்கவேண்டுமா?
எனக்கு எக்கதி வாய்த்தபோதி லும் நீராவது சுகமாயிருப்பீர் என்றெண்ணி,
பொறுத்து வந்தேனே!
ஹ. சந்திரமதி,நீயும் தேவதாசனும் அடிமைப்பட்டபோதி லும்,எதோ
சுகத்திலிருப்பீர்கள் என்றெண்ணி,நான் என் கதியைக் கருதாது
பொறுத்திருந்தேனே!அதுவும் இதனுடன் போயிற்றே!-ஈசனே!ஈசனே!ஏழையேன்
இனி என் செய்வேன்?என்ன நேர்ந்தபோதிலும் நீரே கதி என்று உம்மைக்
கைப்பற்றியதற்கு,என்னைக் கை விட்டீரே!-நீர் என்னைக் கைவிட்ட போதிலும்
நான் உமது காலை விடமாட்டேன்!-சந்திரமதி,எழுந்திரு- உனது மனதைத்
தேற்றிக்கொள்,நமது மைந்தன் புண் ணியஞ்செய்தவன்,இப்பாழகிய உலகில்
அவனிருந்து கஷ்டப்படுவானேன் என்று,பரமதயாநிதி தன் பாதம் சேர்த்துக்
கொண்டார் அவனை;பாபிகளாகிய நாம்தான் பாரினில் உயிருடன் இருந்து
பரிதபிக்கிறோம். -நாமி ழைத்த பாப பரிஹாரமாக!-நாம் என்ன வருந்தியும் என்ன
பலன்? மடிந்த மைந்தன் மறுபடியும் உயிர் பெறப் போகிறானோ?-நேரமாகிறது.
இனி காலதாம தம் செய்யலாகாது-மடிந்த மைந்தனுடலை எப்படியும் தகனம்
செய்ய வேண்டும். அப்படிச் செய்யுமுன்-என் எஜமானனக்குச் சேரவேண்டிய
கட்டணத்தைச் செலுத் தவேண்டும்.
ச. அந்தோ!நாதா!அதைச் செலுத்த என் கையில் ஒன்று மில்லையே,நீர் அறியீரா?
ஹ. சந்திரமதி,என் கடைமைக்கு விரோதமாக நான் ஒருகா லும் நடக்கமுடியாது.
அதைச் செலுத்தாதபடி தகனம் செய்ய நான் இசைவேனாயின் அது அசத்யமாகு
மன்றோ?ஆகவே அதைச் செலுத்த வகையில்லாவிட் டால்-இவ்வுடலை தகனம்
செய்யலாகாது நாம்.
ச. ஈசனே!ஈசனே!இவ்வுலகில் எங்களைப்போன்ற பாபி களுமிருக்கிறார்களோ?
இறந்த மைந்தனைச் சுட்டெரிக் கவும் கதியின்றிக் கலங்குகிறோமே!-
[அழுகிறாள். ] கடவுளே!நீர் கண் உறங்குகிறீரோ?-அல்லது கருணா நிதியென்று
உமக்குப் பெயர் வைத்தது பொய்த்ததோ?
ஹ. சந்திரமதி,அதைக் கேட்பதற்கு நாம் யார்?அவரை நாம் அவ்வாறு கேட்பதற்கு
நமக்கு சுதந்தரம் கிடை யாது. அவரிச்சைப்படி நமக் கனுப்பி வைக்கும் இன்ப
துன்பங்களை அனுபவிக்கத் தான் நமக்கு சுதந்தர முண்டு. சந்திரமதி, நாம்
வருந்தியாவ தொன்றுமில்லை. ஆகவே வருந்துவானேன்?அன்றியும் அவர்
நமக்களித்த பொருளை அவர் மறுபடியும் எடுத்துக்கொள்ள அவ ருக்குச் சுதந்தர
முண்டல்லவா?உலக வாழ்க்கை யென் பது இத்தன்மையதே;இதன் பொருட்டு
துக்கிப்பது உன்மத்த மாகும். இனி தாமதியாதே;நான் சொல்
வதைக்கேள்; நள்ளிருள் என்று பாராமல்,உடனே புறப் பட்டுப் போய்,உனது
எஜமானனிடமிருந்து இக் கட் டணத்தை வாங்கிவா,அவர் கொடேன் என்று மறுக்க
நியாயமில்லை. அடிமைப்பட்டவன் மரித்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய
சம்ஸ்காரங்களையெல்லாம் எஜமானன் செய்ய வேண்டும்,நியாய சாஸ்திரப்படி-
சீக்கிரம் போய் வா. நானிங்கு-இவ்வுடலை-பாதுகாத் திருக்கிறேன். நீ திரும்பிவரும்
வரையில்.
ச. ஆம் பிராணநாதா,அங்ஙனமேசெய்கிறேன்;எது நேர்ந்த போதிலும் உம்முடைய
கடமைப்படி நீர் நடக்கவேண் டியது நியாயமே. நான் உத்தரவு பெற்றுக்
கொள்கிறேன். -போய் கூடிய சீக்கிரத்தில் வருகிறேன்.
ஹ. சீக்கிரம் போய்வா-ஜகதீசன் உன்னைக் காப்பாறு வாராக!
[சந்திரமதி வணங்கிப் போகிறாள். ]
இதற்காக நான் துக்கிப்பானேன்?அதோ பட்டுப்போன அம்மரம் இருக்கிறதே,
அதற்காக வருந்துகிறேனா? அதோ அம் மண்ணிற்காக வருந்துகிறேனா?
இல்லையே அப்படியிருக்க இக் கட்டைக்காகவும்-இம்மண் ணிற் காகவும்
வருந்துவானேன்?-என்ன பேதமை!-
சத், [ஹரிச்சந்திரனிருக்குமிடம் வந்து]அண்ணலே, என்ன சமா சாரம்?ஏதாவது
விசேஷமுண்டோ?தூரத்திலிருந்த எனக்கு ஏதோ அழுகுரல் கேட்டதுபோ லிருந்தது,
ஆயினும் உம்முடைய உத்தரவின்றி எப்படி நீர் இருக்கு மிடம் போவது,என்று
பொறுத்துப் பார்த்தேன். இத் தனை நாழிகை கழித்தும் நீர் திரும்பி வராதபடியால்
என்ன காரணம் என்று விசாரித்துப் போக வந்தேன். மன்னிக்கவேண்டும்.
ஹ. வேறொன்றும்-முக்கியமான விசேஷமில்லை-தேவதா சன் மடிந்து போனான்-
அவனுடலை-
சத். யார் மடிந்தது?யார் மடிந்தது?
ஹ. தேவதாசன்-அவனுடலைத் தூக்கிக்கொண்டு சந்திரமதி இங்கு வந்தாள்-தகனம்
செய்ய. அதற்காக என் எஜ மானனனுக்குச் சேரவேண்டிய கட்டணத்தை
வேதியரிடமிருந்து வாங்கி வரும்படி அவளை அனுப்பினேன்,அவ் வளவே.
சத். என்ன! உமது மைந்தனா, தேவதாசனா மடிந்தான்?- எப்படி எப்படி?
ஹ. அரவம் ஒன்று தீண்டி.
சத். அண்ணலே!உமது மனம் என்ன கல்லாயிற்றா?கொஞ்ச மேனும் துயரமின்றி இதை
எவ்வாறு என்னிடம் கூறத் துணிந்தீர்?உமது சுபாவமே மாறியதா என்ன?-ஆ!
இதுவோ உடல்?
ஹ. ஆம். -
சத். [தேவதாசன் முகத்தை மூடியிருந்த வஸ்திரத்தை நீக்கி] ஹா! தேவதாசா!தேவதாசா!
[அழுகிறான். ] அப்பா!அருமைப் பாலகா!இப்படியும் அயன் உனக்கு
விதித்தானோ? நீ பிறந்தக்கால்,உன் தந்தைக்குப் பிற் காலம் அயோத்தியை
நெடுநாள் அரசாள்வாய் என்று ஜோஸ்யர்களெல்லாம் அன்று கூறினதெல்லாம்
பொய்த்ததே! பொய்த்ததே!இப் பாழுலகில் நான் இனி நான் எதைத் தான்
நம்புவேன்?கடவுளே கடின சித்தமுடையவரா னால்,கருணை யென்பது எங்கு
கிடைக்கப்போகிறது இவ் வகிலத்தில்?அயோத்தி மன்னன் அருமைப் பாலானாயு
தித்த நீ,அநாதையைப் போல் அருங் கானில் அரவம் தீண்டி மடிந்து கிடக்க
நேர்ந்ததே!-தெய்வமே!தெய் வமே!
ஹ. சத்யகீர்த்தி,வருந்துததொழி. நீ ஏன் துக்கப்படுகிறாய்? யாருக்காக
துக்கப்படுகிறாய்?தேவதாசன் உயிருக்கா கவா?அது இருக்கவேண்டிய இடத்தில்
சவுக்கியமா யிருக்கிறது. இந்த மண்ணுக்காகவா?மண் மண்னோடு போய்ச்
சேருகிறது. எங்களுக்காகவா? நீ துக்கப்படு வதினால் எங்களுக்கேதாவது
பிரயோஜனமுண்டோ அதனால்? உனக்காகவா?நீ என்ன பலன் அடையப்
போகிறாய் இதனால்?-ஆகவே நீ ஏன் வருந்தவேண்டும்?
சத். அண்ணலே,நீர் கூறுவதெல்லாம் உண்மையாயினும்- என் மனம் கேளேன்
என்கிறதே!
ஹ, அதைக் கேட்கும்படிச் செய்ய ஈசனைக் குறித்துப் பிரார்த்தி.
சத். நம்மை இக் கதிக்குக் கொண்டுவந்த ஈசனையா?
ஹ. ஆம்.
சத். அண்ணலே!உமக்கு இம் மனோ உறுதி எங்ஙனம் வந்தது?
ஹ. அவர் கருணையினால்-வா. இவ்வுடலை எடுத்துக் கொண்டு நான் காவல் காத்து
நிற்குமிடம் செல்வோம்.
காட்சி முடிகிறது.
--------------------
முதல் காட்சி.
இடம் - காசியில் ஓர் வீதி. வீரண்ணன், மார்த்தாண்டன், பராந்தகன் வருகிறார்கள்.
வீ. என்னாடா இது ஆச்சரியமா யிருக்குது! ராஜா அரமனையிலெ இருந்து, ராஜா
பிள்ளையெ திருடிகினு பூடரது இண்ணா, அதுவும் நாம்ப இத்தினி பேரு
காவல்காரும் காத்துகினு இருக்கும்போது! நாம்ப எப்படியாவது திருடனெ கண்டு
பிடிக்கணும், இல்லாபோனா நம்ப தலெ பூடும்.
மா. கண்டு பிடிச்சோமிண்ணா ராஜா நம்பளுக்கு பொஹுமானம் கொடுப்பாரு.
ப. ஆமாண்டா, மொதல்லெ கண்டு பிடிக்கணுமே. அவன் என்னமோ சாதாரண
திருடன் அல்லா; ராஜ அரமனைக்குள்ள ஒருத்தருக்கும் தெரியாமெ நொழஞ்சி,
அந்தப்புறத்துக்குப் போயி, ராஜா பிள்ளையெ திருடிகினு போனவன், ரொம்ப
கைதேர்ந்த திருடனா யிருக்கணும். அப்படிப்பட்டவனெ கண்டு பிடிக்கிறது
நம்பளுக்கு லேசான வேலெயல்லா.
வீ. என்னா கஷ்டமானாலும்பட்டு கண்டுபுடிச்சிதான் தீரணும் - இங்கே சும்மா கதெ
பேசிங்கரத்துலெ பிரயோஜனமில்லெ - வாங்க, பட்டணத்தெ சுத்தி தேடி
பார்க்கலாம். திருடன் இதுக்குள்ள பட்டணத்தெ உட்டு வெளியே
போயிருக்கமாட்டான்.
மா. ஏண்டாப்பா, இதெல்லாம் கஷ்டம் என்னாத்துக்கு? எவனாவது ஒரு காட்டாளியெ
புடிச்சி, இவன்தான் திருடன் இண்ணு அவன் தலையிலெ பழியெ போட்டு,
ராஜாகிட்ட இழுத்துகினு போயி உட்டா போச்சி-எங்கண்ணன் ஒருதரம்செய்தா
இந்தமாதிரி-
வீ. போடா மடையா!அதெல்லாம் ஒதவாது,ராஜா சோத்தெ துண்ணுட்டு அவருக்கே
துரோகம் செய் யரதா?-வாங்கடா தேடலாம்.
ப. வாடா சோம்பேறி! அப்படி செய்யரதா இருந்தாலும் ராஜா பிள்ளைக்கு என்ன வழி
சொல்ரது?
வீ. பொறப்படுங்கடா சீக்கிரம்,இப்படி பேசிகினு இருந் தோமின்னா,அந்த திருடன்
பட்டணத்தெவுட்டு போர*த்துக்கு வழி கொடுப்போம். ஏண்டா,வாரைங் களா
இல்லையா?-இல்லாப்போனா நான் மாத்திரம் போயி தேடரேன்-
ப. மா. இல்லெ இல்லெ வர்ரோம் நாங்களும்! [மூவரும் போகிறார்கள். ]
விஸ்வாமித்திரர் ஒருபுறமாக வருகிறார்.
வி. இதனுடன் இப் பிரயத்னத்தை விடலாமா?இன்னும் முயல்வதில் ஏதேனும் பிரயோஜனமுண்டோ?என் னாலான சூழ்ச்சிகளெல்லாம் இதுவரையில் நான் செய்து பார்த்தும்,அவைகளுக்கெல்லாம் இடங் கொடாது தன் சத்யமொழியைக் காப்பாற்றும் பொரு ட்டு,தானமாக ராஜ்ய முழுதையும் கொடுத்து,தன் மனைவி மக்களை அடிமைகளாக விற்று,தானும் ஒரு புலை யனுக் கடிமைப்பட்ட ஹரிச்சந்திரன்,இனி எதன் பொருட்டு அசத்யம் பேசப்போகிறான்?நான் தோற்ற வனே!ஆயினும் எப்படி அப்பதம் என் வாயினின்றும் வருவது என்றே கவலைப்படுகிறேன்-வேறு வழியில்லை! ஆயினும் ஒரு விதத்தில் யோசிக்குமிடத்து இதற்காக நான் வருத்தப்பட வேண்டியதில்லை. வசிஷ்டருக்கும் னக்கும் நேரிட்ட இவ்வாக்கு வாதத்தினால்,நான் இது வரையில் அறியாத சில அரிய விஷயங்களை அறிந்தேன். முக்கியமாக கேவலம் இல்லறத்திலிருக்கும் மனிதனாயி னும்,சத்ய விரதத்தை மேற்கொண்டு அதனின்றும் அணுவளவேனும் பிரியாதவன்,*இப் பூமண்டலத்தில் ஒரு வனிருக்கிறான்,என்பதைக் கண்டறிந்தேன். அதுவும் அப்படிப்பட்ட உத்தமன் யார்?-என் சிஷ்யனாகிய திரிசங்குவின் மைந்தன்!-ஆம்-ஹரிச்சந்திரா,உன் னால் உலக மாந்தர்க்கே ஓர் கீர்த்தி யுண்டாயிருக்கிறது. * உன்னிடமிருந்து பல அரிய விஷயங்களை அறிந்தேன் நான்;என்னை வென்றது நீயே!அந்த வசிஷ்டர் அன்று; இது எனக்கு சந்தோஷமே-ஆயினும் தேவசபையில் நான் வசிஷ்டருக்குத் தோற்றதாக ஒப்புக்கொள்ள வேண்டியதா யிருக்கிரதே என்று யோசிக்கிறேன். இதன் பொருட்டே இதனாலும் பிரயோஜன மில்லையென்று எனக்கு நன்றாய்த் தெரிந்தும்,இன்னும் ஒரு கடைசி பிரயத்தனம் செய்து பார்க்கும்படி என் மனம் உந்துகிற தென்னை. இவ்வளவு தூரம் பிரயத்தனப்பட்டபின் இதை யும் பார்த்து விடுகிறேன். ஹரிச்சந்திரா,இதில் தவறுவா யாயின் வசிஷ்டர் தோற்றவரே,இதிலுன் நீ பிறழாதிருப் பாயாயின்,எனது பாதி தவப்பயனை பெறத்தக்கவனே! என் மாய்கையினால் அரண்மனையில் அந்தப்புரத்தில் உறங்கிக்கொண்டிருந்த இக்காசிராஜன் மகனைக் கவர்ந் து,இறந்ததுபோல் மூர்ச்சையடையச்செய்திருக்கிறேன், -ஹரிச்சந்திரன் பிள்ளை தேவதாசனுக்குச் செய்தது போல். இக்குழந்தையை இங்கே இவ் வீதியின் மத்தியில் வைக்கிறேன்;சந்திரமதி நமது காலகண்டன் வீட்டிற் குப் போகும்பொழுது இவ்வழியாகத்தான் போகவேண் டும். எனது மாய்கையினால் இக்குழந்தையின் முகம் தேவதாசனது முகத்தைப் போல் அவளது கண் ணுக்குத் தோற்றும்படி செய்கிறேன்,அப்பொழுது அதைக் கண்டு அவள் திகைத்து. கையில் எடுத்துப் ர்ப்பாள். சமயம் காவற்காரர்களை இங்கு வரச் செய்து,அவளைக் கைதியாகப் பிடிக்கச் செய்கிறேன். உடனே அவர்கள் சந்திரமதியைக் குழந்தையுடன் கைப் பிடியாகக் காசி மன்னன் எதிராகக் கொண்டு போய் விடு வார்கள். காசி மன்னன் தன் மகனைக் கொன்றதாக எண்ணி,சந்திரமதிக்கு சிரசாக்கினை விதித்து விடுவான். நமது வீரபாஹுவைக்கொண்டு அவ்வாக்கினையை ஹரிச் சந்திரன் நிறைவேற்றும்படி கட்டளையிடச் செய்கிறேன்! -ஆம் ஆம்!அறமொழியினின்றும் அணுவளவும் தவ றாத அந்த ஹரிச்சந்திரன்,அக்கட்டளையை நிறைவேற்று கிறானோ பார்ப்போம்!அதற்கும் சலிக்காதவனாயின், அப்படிப்பட்டவனால் நான் தோற்கடிக்கப்படுவது என க்கு ஒரு அபகீர்த்தியாகாது!-இனி தாமதிக்கலாகாது. சந்திரமதி அதோ வருகிறாள்,இருட்டில்,மெல்ல நடந்து.
[காசிராஜன் குழந்தையைக் கீழே வைத்து விட்டு விஸ்வாமித்திரர் மறைகிறார். ]
எதிர்புறமாக சந்திரமதி வருகிறாள்.
ச. ஆ!என்ன கருக்கிருட்டாய் இருக்கிறது!நான் போக வழியைக் கண்டுபிடிப்பதும்
கஷ்டமாயிருக் கிறது. நான் விரைவில் அந்தணர் வீடு போய்ச் சேர வேண்டும்-
இதென்ன இது?என்னவோ வழியிற் கிடக் கிறதே!-ஐயோ பாபம்!சிறு
பாலன்! இந்நிசியில் இவ் விடத்தில் தனியாக யார் இதை விட்டுவிட்டுப்
போனவர்கள்?-என்ன மின்னல்!-என்ன ஆச்சரியம்!தேவ தாசன் முகம்
போலிருக்கிறதே!- [குழந்தையைக் கையில் எடுக்கிறாள். ]
வீரண்ணன்,மார்த்தாண்டன்,பராந்தகன்,மூவரும் மறுபடி விரைந்து வருகிரார்கள்.
வீ. யார் அங்கே?
மா. திருடன்! திருடன்! அதோ அவன் கையிலே ராஜா கொழந்தெ!
[சந்திரமதியை மூவருமாகப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். ]
வீ. ஆ!திருடா! உன்னைக் கைப்பிடியாக பிடிச்சூட்டோம்! இனி எங்க கையிலேயிருந்து
தப்ப முடியாது!
ப. அடடே! பொம்மனாட்டிடா!
மா. பொம்மனாட்டியா இருந்தா என்னா?ராஜா கொழந்தெயோட கண்டு
பிடிச்சூட்டோமே!-அடடே! கொழந்தே செத்து போயிருக்குதுடா! நம்ப ராஜா
கொழந்தெ செத்து பூட்டுதுடா!
வீ, ஆ!திருடினது மல்லாமெ கொண்ணு பூட்டையா! கொலெ பாதகி! இந்த சின்ன
கொழந்தெயே ஏன் கொண்ணே?உன்னெ ஒரே வெட்டாய் வெட்டி விடட்டுமா?
பொம்மனாட்டியா பொறந்து கொஞ்சமாவது ஈவு எதக்கமில்லாமெ கொழந்தையெ
கொண்ணையே!- பாவி!- ஏன் இத்தெ கொண்ணெ?-வாயெத் தெறக்க மாட்டெ?
ப. இதோ பார்!திருட்டு முழி முழிக்கிறா!பதில் சொல்லத் தெரியாமே! இந்தத்
திருட்டுத்தனமெல்லாம் எங்களுக்கு நண்ணா தெரியும்-வா வா, ராஜாகிட்ட!
கைப்பிடியா புடிச்ச பிற்பாடு இனிமேலெ என்னா?
வீ. அடடே!இந்தப்பாவி நம்ப ராஜா கொழைந்தையெ கொல்லரத்துக்கு முன்னே
கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்காப் பூட்டோம்!-இனிமேலெ அத்தெ பத்தி யோசிச்சி
என்ன பிரயோஜனம்?-வாங்கடா!அப்படியே ராஜாகிட்ட இழுத்துகினு போகலாம்.
மா. ஆமாம்,இப்பவே இழுத்துகினு போவோம்; இல்லாப்போனா இவ்வளவு
அசாத்தியக்காரி, எப்படியாவது தப்பிச்சிகினு போவாப்பா!-முழிக்கராப்பாரு!
கொலெ பாதகி! உம்புள்ளையெ யாரானாலும் இப்படி கொண்ணிருந்தா, என்னா
வருத்தப்பட்டிருப்பே?
ச. ஈசனே-ஜகதீசா!
ப. கொழந்தெ யிண்ணும் பாராமெ,கொண்ணவளுக்கு, சாமி ஒண்ணு! வா
பாதகி!வாயெத் தெறக்காதே!-
ச. நான் கனவு காண்கிறேனா?
மா. ஆமாம்!அல்லாம் கனவுதான்!அங்கே ராஜாகிட்ட போனா, அல்லாம் நெனவா
போவும் வா! [சந்திரமதியை இழுத்துக்கொண்டு போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
---------- ----------
இரண்டாம் காட்சி.
இடம்-காசிராஜன் கொலுமண்டபம். ராஜகேசரி சிம்மாசனத்தில் வீற்றிருக்க, அவரது மந்திரிகளாகிய சுமதி துர்மதி முதலியவர்கள் இருபக்கம் இருக்கின்றனர்.
வீரண்ணன் முதலிய காவலர்களால் சூழப்பட்டு சந்திரமதி அரசன் எதிரில் நிற்கிறாள்.
ரா. ஹே!ஸ்திரீயே!நீ யாரயிருந்த போதிலும் கடைசி முறை கேட்கிறேன். உன்
வாயைத் திறக்கமாட்டாயா? நீ ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டியதிருந்தால்
சொல்; பட்சபாதமின்றி. பொறுமையுடன் நாம் அதைக் கோட்போம். நீ
குற்றவாளியல்லவென்று ரூபிப்பதற்கு ஏதாவது சாட்சியம் இருந்தால் சொல்.
உன்மீது குற்றம் சாட்டும் இவர்கள் கூறியதில் ஏதாவது பொய்யிருந்தால்
எடுத்துரை. தண்டனையினின்றும் நீ தப்புவதற்கு ஏதாவது காரணமாவது
நியாயமாவதிருந்தால் கூறு. இறந்தது என் மகனாயிற்றே என்று,நான் தீர
விசாரியாது தண்டனை விதிக்கமாட்டேன். ஆகவே அஞ்சாது சொல்.
வீ. மஹாராஜா!இந்த பாதகியெ கேக்கரத்துலெ பிரயோஜனமில்லெ. நாங்க
எங்களாலெ ஆனமுட்டும் பயப்படுத்திப் பார்த்தோம்-அடிச்சிப் பார்த்தோம்-
ஒண்ணும் பிரயோஜனமில்லெ-வாயெ தெறக்கமாட்டேண்றா; இவ ஊம வேஷம்
போடரா இண்ணு நினைக்கிறெ.
ரா. மந்திரிகளே,நடந்ததையெல்லாம் கேட்டீர்களே- இவ்வாறு என் குழந்தை
உயிரிழக்க வேண்டுமென்று விஸ்வேசன் திருவுளம் கொண்டார் போலும்-
சு. மஹாராஜா அவர்கள் கொஞ்சம் மனதைத் தைரியம் பண்ணிக் கொள்ள
வேண்டும். இப்பொழுது விசாரிப்பதைவிட, கொஞ்சம் பொறுத்து, நாளைத்தினம்
இவ்விஷயத்தை விசாரிக்கலாம் என்று தோன்றுகிறதெனக்கு.
ரா. வேண்டாம்; நீதி விசாரணையில் தாமசம் என்பது தகாது. என் துக்கத்தை அடக்கிக்
கொண்டேன். இனிமேல் நடத்துவோம். மந்திரிகளே, என்னுடைய ஒரே குழந்தை
இறந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த ஸ்திரீயானவள்
அக்குழந்தையை அதன் மீதிருந்த நகைகளின் பொருட்டுக் கொன்றதாக, நமது
சபையின் முன், குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கிறாள். நமது காவலாளர்கள் அவளுக்கு
விரோதமாகக் கூறிய சாட்சியத்தை யெல்லாம் நீங்கள் கேட்டீர்கள். இவளோ,நாம்
எத்தனை முறை கேட்டபோதிலும், வாயைத் திறந்து ஒன்றும் பதில் கூறாது
நிற்கிறாள். நான் எனது தீர்மானத்தைக் கூறுமுன், உங்களுடைய
அபிப்பிராயங்களை எனக்குத் தெரிவிக்கக் கோருகிறேன். அரசனானவன்
அணுவளவேனும் பட்சபாதமில்லாமல் நீதி செலுத்த வேண்டும் என்பதை நீங்கள்
நன்குணர்ந்திருக்கிறீர்கள். என்னுடய மகனைக் கொன்றதாகக் குற்றஞ்
சாற்றப்பட்டிருக்கிறாள் என்கிற விஷயம், உம்முடைய மனதைக் கொஞ்சமேனும்
நடுநெறியினின்றும் கலைக்க வேண்டாம். உங்களுக்கெது கேவலம் நியாயமாகத்
தோற்றுகிறதோ, அதை எனக்கெடுத்துரையுங்கள்.
து. மஹாராஜா,இவ் விஷயத்தில் சந்தேகத்திற்கே இடமில்லையென்று
தோன்றுகிறதெனக்கு. சாட்சியம் என்னவோ மிகவும் உறுதியா யிருக்கிறது.
கைப்பிடியாகப் பிடிக்கப்பட்டிருக்கிறாள் இக்கொலைக்கஞ்சாப் பாதகி. எனக்குத்
தெரிந்தவரையில்,இப்பாவி,நமது அரண்மனையில் நடுநிசியில் நுழைந்து
ராஜகுமாரனை அபகரித்துச் சென்று,ஆபரணங்களின் நிமித்தம் கொன்றிருக்க
வேன்டுமென்பது தவிர வேறு முடிவிற்கு நாம் வருவதற்கு ஹேதுவில்லை,ஆகவே
தாங்கள் தாமதியாது தண்டனை விதிக்கலாம்.
சுமதி தவிர மற்ற மந்திரிகள். ஆம் ஆம்!அப்படியே செய்யலாம்.
ரா. மந்திரி சுமதி,என்ன நீர் ஒன்றும் பேசாது ஏதோ யோசித்த வண்ணம் இருக்கிறீர்?-
உம்முடைய அபிப்பிராயம் என்ன?
சு. மஹாராஜா,என்னைத் தாங்கள் கொஞ்சம் மன்னிக்க வேண்டும். என்னுடைய மனமானது மிகவும் கலங்கி நிற்கிறது. உருதியாய் ஓர் முடிவிற்கு வருவது கஷ்டமா யிருக்கிறது. ஒருபுறம் நோக்குமிடத்து,இந்த அம்மாள்மீது சாட்சியம் என்னவோ அதிக உறுதியா யிருப்பதுபோல் காண்கிறது. இன்னொருபுறம் நோக்குங்கால், இவர்களுடைய தோற்றம் முதலியவற்றைக் கருதுமிடத்து, இப்படிப்பட்ட கொடிய கொலையை இவர்கள் செய்திருப்பார்களா, என்று சந்தேகிக்க வேண்டியதா-யிருக்கிறது. புத்தி நுட்பமுடைய சில கொடிய கொலைஞர், மேலுக்கு ஒரு பாபமு மறியாதவர்கள்போல் வேஷம் தரிக்கக்கூடும் என்பதை அறிந்துள்ளேன். ஆயினும் முகத்தைக்கொண்டு அகத்தை அறிவதானால்,என்னுடைய கண்கள் என்னை மோசம் செய்யாவிட்டால், இப்பொழுது தமது சந்நிதானத்தில் நிற்கும் இம் மாது, ஏதோ தௌர்ப்பாக்கியத்தால் இக் கஷ்ட திசையயை யடைந்த உத்தம ஸ்திரீயைப்போல் காணப்படுகிறார்களே யொழிய,குழந்தையைக் கொல்லும் கொடிய பாதகியைப்போல் தோற்றப் படவில்லை. இதைவிட்டு, இக்கொலையைச் செய்தார்களா இல்லையா என்று தீர்மானிக்கும் விஷயத்தில்,மஹாராஜாவின் குழந்தை இவர்கள் கையில் இருக்கும்பொழுது கண்டதாக சாட்சிகள் கூறுகிறார்களேயொழிய, இவர்கள் தன் கையால் அக் குழந்தையைக் கொல்லும்பொழுது யாரும் நேராகப் பார்த்ததாகச் சொல்லவில்லை. இவர்கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்று, காவலாளிகள் நம்மை ஊகிக்கும்படி கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் மஹாராஜா அவர்கள் தீர்க்காலோசனை செய்ய வேண்டுமென்பது என்னுடைய பிரார்த்தனை. கொலை முதலிய விஷயங்களில் சுற்றுப்பக்கத்தி லிருக்கப்பட்ட சந்தர்ப்பங்களைக்கொண்டு தீர்மானத்திற்கு வருவது அவ்வளவு உசிதமாகாது. இவர்கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்பதற்கு அநேக ஆட்சேபனைகள் இருக்கின்றன. முதலில் அபலையாகிய இம் மாது, ஒண்டியாக. நடுநிசியில்,அதிக காவலமைந்துள்ள நமது அரண்மனை அந்தப்புரத்தில் ஒருவரும் அறியாதபடி எப்படி நுழைந்திருக்கக்கூடும்? அரண்மனைக்குள் நுழைந்தபொழுதாவது, அதைவிட்டு வெளியே போகும்பொழுதாவது, ஒருவரும் இவர்களைக் கண்டதாக சாட்சியம் சொல்லவில்லை. அந்தப்புர வாயிற் கதவு பூட்டியபடி இருக்கும்பொழுது, ஒரு ஸ்திரீ,எப்படி உள்ளே நுழைந்து ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே போயிருக்கக் கூடும்? மதிலேறிக் குதித்துச் சென்றார்கள் என்று கூறுவது, ஆண் மக்களுக்கே அசாத்தியமான காரியம். இம்மாது குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு குதித்துச் சென்றார்கள் என்று எண்ணுவது, அறிவிற்கு அமைந்ததன்று. மஹாராஜா, இவ் விஷயத்தைப்பற்றி நான் யோசிக்க யோசிக்க, இவ் விஷயம் அத்யாஸ்சர்யமாய்த் தோற்றுகிறது. இவர்கள் மீது சாற்றப்பட்டிருக்கும் குற்றம் என்னவென்றால்,மஹாராஜா அவர்கள் மைந்தன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களை அபகரிக்கும்பொருட்டு, அக்குழந்தையைத் திருடிச் சென்று கொன்றார்கள் என்பதே. ஆபரணங்களைக் கவரவேண்டி இதைச் செய்திருந்தால், குழந்தையைக் கொல்வானேன்? கொல்ல வேண்டிய காரணமில்லையே; ஆபரணங்களைக் கவருமுன் குழந்தையைக் கொன்றிருக்க வேண்டுமென்று யோசிப் போமாயின், கொன்ற குழந்தையை,ஆபரணங்களை அபகரித்தபின், தன்னுடன் அரண்மனைக்கு வெளியே எடுத்துச் செல்ல, இவர்கள் பயித்தியக்காரியா யிருக்கவேண்டும். இருந்த விடத்தில் குழந்தையை விட்டுப் போவதைவிட்டு, கைப்பிடியாய்க் காவலாளிகள் பிடிக்கும் வண்ணம், தன்னுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போவார்களோ? அரண்மனைக்கு வெளியே குழந்தையைக் கொண்டுபோய்,அதன் ஆபரணங்களை அபஹரித் திருக்க வேண்டுமென்று எண்ணுவதானால், ஆபரணங்களைக் கவர்ந்தபின், அக் குழந்தையை,-ஸ்திரீ ஜாதியாகிய இவர்கள்-கொஞ்சமேனும் மனமிரக்க மின்றி கொல்வானேன்?ஸ்திரீகளுடைய சுபாவத்தை நாம் அறிந்த வரையில்,பொறாமை அல்லது கோபம் முதலிய துர்க்குணங்களினால் அதிகமாய் உந்தப்பட்டா லொழிய, எந்த ஸ்திரீயும்,ராட்சசியா யில்லாவிட்டால்,ஒரு குழந்தையைக் கொல்ல மாட்டாள், என்பது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே. அப்படிப்பட்ட கோபமாவது பொறாமையாவது, நமது இளவரசர் விஷயத்தில் இம் மாதுக்கு வரவேண்டிய நிமித்தியமே கிடையாதன்றோ? மஹாராஜாவிடமிருந்து ஏதோ பொருள் பறிக்கவேண்டுமென்று மற்றவர்களால் இம் மாது மஹாராஜாவின் குழந்தையைத் திருடும்படி ஏவப்பட் டிருக்கவேண்டும் என்று எண்ணுவதாயின்,அக் குழந்தையை உயிருடன் ஜாக்கிரதையாக வைத்திருக்கவேண்டியது அவர்களுக்கு அதிக அவசியமாகிறது. இவைகளெல்லா மிருக்கட்டும். நாம் எல்லோரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது. இவர்கள் குழந்தையை எப்படிக் கொன்றார்கள்? பலாத்காரமாய்க் கொன்றிருந்தால் குழந்தையின்மீது ஏதாவது வடு அல்லது குறி யிருக்குமன்றோ? நமது அரண்மனை வயித்தியர்கள் அப்படிப்பட்ட குறி யொன்றுமில்லை யென்று எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்; இந்த ஆச்சர்யத்திற் கென்ன சொல்வது? எந்த விதத்தில் நான் யோசித்துப் பார்த்தாலும் சந்தேகத்தின்மேல் சந்தேகமா யிருக்கிறதே யொழிய, ஒரு தீர்மானத்திற்கு வருவது எனக்குக் கடினமா யிருக்கிறது-
ரா. ஆம் சுமதி,நீர் கூறும்படியான நியாயங்களெல்லாம் ஓர் விதத்தில் நாம்
ஒப்புக்கொள்ள வேண்டியவைகளா யிருக்கின்றன உண்மையே,ஆயினும் மடிந்த
மகவைக் கையில் வைத்துக்கொண் டிருந்தபொழுது இந்த ஸ்திரீ கைப் பிடியாய்ப்
பிடிக்கப்பட்டனள்,என்பது மறுக்கற்பால தன்று;அன்றியும் ஆபரணங்களின்
மூட்டை இவளருகிலிருந்து எடுக்கப்பட்டதாக ரூபிக்கப்படிருக்கிறது. இவ்
விரண்டிற்கும் என்ன சமாதானம் சொல்லுவீர்கள்?
சு. *மஹாராஜா,இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, எனக்கு ஆச்சரியமே
அதிகப் படுகிறதென, முன்பே சமூகத்திற்குத் தெரிவித்திருக்கின்றேன். தாங்கள்
குறிப்பிட்ட ஆட்சேபனைகளுக்குத் தகுந்த பதில் உரைக்க அசக்தனா யிருக்கிறேன்.
ஆயினும் இப்படி நாம் யோசிக்க லாகாதோ? யாரோ சில பாதகர்கள் குழந்தையைக்
கொன்று, தாங்கள் தப்பும் வண்ணம் இவர்கள் கையில் குழந்தையை விட்டு,
ஆபரணங்களையும் இவர்கள் அருகில் வைத்துவிட்டுப் போயிருக்கலாகாதா?
இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டுமென்று நான் உறுதியாய்ச் சொல்ல
வரவில்லை. ஆயினும் இங்ஙனம் நேர்ந்திருக்கலாகாதா என்று யோசிக்கிறேன்.
து. மகாராஜா, அங்ஙனமாயின் இப் பாதகி அவ்வாறு நேர்ந்தது என்று வாய்திறந்து
சொல்வதற் கென்ன தடை? தான் தப்பித்துக்கொள்ள ஏதாவது
மார்க்கமிருக்குமாயின், இவ்வாறு மௌனம் சாதிப்பாளோ? இவள் வாய் திறந்து
பேசாதிருப்பதே, இவள்தான் குற்றவாளியென்று நன்றாய் ருஜுப்படுத்துகிறது.
குற்றவாளிகள், கையும் பிடியுமாய்க் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது, ஒன்றும்
பேசாதபடி அவர்கள் வாயடைத்துப் போவதைப்பற்றி நாம் கேட்டிருக்கிறோம்,
அம்மாதிரியான விஷயங்களில், இது ஒன்றாகும்.
ரா. ஆம், இதுதான் என் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கிறது - ஹே! ஸ்திரீயே நீ
ஏன் மௌனம் சாதிக்கிறாய்? ஏதேனும் சொல்லிக்கொள்ள வேண்டியதிருந்தால்,
அஞ்சாது உடனே சொல். நீ இக் கொடுங்குற்றம் செய்யவில்லையென்று
ருஜுவானால், அது நமக்கு சந்தோஷத்தையே தருவதாகும்.
சு. அம்மணி, தாங்கள் யாரோ தெரியவில்லை. யாராயிருந்த போதிலும் நீர் இக் குற்றம்
செய்திருக்கமாட்டீர் என்று என் மனத்திற்குள் ஏதோ சொல்லுகின்றது – நீர் யார்
என்றாவது தெரிவியும் - எங்கள் மகாராஜாவின் குழந்தையின் உடல் உமதுகையில்
எப்படி வந்தது என்றாவது எமக்கு அறிவியும்.
வீ. ஏ! பாதகி! சொல் பார்ப்போம்?
[சந்திரமதி அவர்கள் எல்லோரையும் விழித்துப் பார்க்கிறாள். ]
ரா. கொலைக்கஞ்சாப் பாதகியே! ஒன்றும் வாய் திறந்து கூறமாட்டாயா? எனது ஏக
புத்திரனைக் கருணையென்பது சிறிதுமின்றிக் கொன்றதுமன்றி, நாம் உன்மீது
தயை கூர்ந்து இவ்வளவு கேட்டும் வாயைத் திறக்கமாட்டேன் என்கிறாயல்லவா? –
இனி நான் தாமதிக்கலாகாது. உனது நடத்தையினாலேயே, நீதான்
குற்றவாளியென்று நன்றாய் ரூபித்துக்கொண்டாய். ஆகவே நான் தர்ம
சாஸ்திரப்படி தண்டனை விதிக்கவேண்டியதே! - ஹே! ஸ்திரீயே! அறியாப்
பாலகனைக் கொன்றதற்காக உன் சிரசை உடலினின்றும் சேதிக்கும்படியாக
தண்டனை விதிக்கிறேன். ஜகதீசன் உன்னை மன்னிப்பாராக! - சேவகர்களே!
உடனே கொலைக்களத்திற்கு இப்பாபியை இழுத்துச்சென்று, ஸ்மாசானக்
காவலாளியிடம், எனது உத்தரவைக்கூறி, இவளது தலையைச் சேதிக்கும்படிச்
சொல்லுங்கள் - நாம் இனி இப் பாதகியை பார்த்தாலும் பாபமாம்!
சு. மகாராஜா, தாங்க தயவுசெய்து கொஞ்சம் பொறுத்தால் -
ரா. நான் பொறுத்தது போதும்! இனி என்னால் பொறுக்க முடியாது. என்
பொறுமைக்கும் ஓர் முடிவு உண்டு. இவள் மௌனமே இவளைக் குற்றவாளி என்று
நன்றாய்த் தெரியப்படுத்துகிறது. சேவகர்களே! இழுத்துச் செல்லுங்கள் உடனே!
[சேவகர்கள் அங்ஙனமே செய்கின்றனர். ] மந்திரிகளே! என் சோகத்தை அடக்க
முடியவில்லை. நான் என் அருமை மைந்தனுக்குச் செய்யவேண்டிய கர்மங்களைச்
செய்யப் போகவேண்டும். இச் சபைகளையலாம்! [எல்லோரும் போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
--------------
மூன்றாம் காட்சி.
இடம் - காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் ஒருபுறமாக காத்து நிற்கிறான். சத்தியகீர்த்தி வருகிறான்.
சத். தேவியவர்கள் வந்து விட்டார்களா?
ஹ. இல்லை.
சத். ஆனால் - இன்னும் தகனம் செய்யவில்லையா?
ஹ. இல்லை.
சத். அண்ணலே, உம்முடைய முகம் மிகவும் வெளுத்துக் காட்டுகிறதே.
ஹ. ஆம், உறக்கமின்றி இரவைக் கழிப்பது கடினமாயிருந்தது.
சத். கஷ்டம்! கஷ்டம்! - ஆயினும் தேவியவர்கள் இதுவரையில் வராததற்குக்
காரணமென்ன? வழியில் என்ன நேர்ந்ததோ? அந்தப் பிராம்மணர் வீட்டை
என்னாலியன்ற அளவு தேடித் பார்த்தேன். எனக் ககப்படாமற் போயிற்று;
ஊரிலுள்ளார் எவரைக் கேட்டபோதிலும் அந்த பிராம்மணர் வீடு
தெரியாதென்கிறார்கள் - நான் என்செய்வது? - அண்ணலே, ஊருக்குள்
போயிருந்ததில் புதுமை யொன்றறிந்தேன். இத்தேசத்து அரசன் மகன்
அரண்மநியிளிருந்தும் களவாடப்பட்டு, கொல்லப்பட்டானாம்; பட்டணமெங்கும்
ஒரே அழுகையாயிருக்கிறது; இக் கொடுஞ் செய்கை செய்தது யாரோ
பெண்பிள்ளை யென்கிறார்கள்; கைப்பிடியாய்ப் பிடிக்கப்பட்டு, அரசன்
சபையின்முன் கொண்டு போகப்பட, அரசன் சிரசாக்கினை விதித்து விட்டாராம்.
ஒரு ஸ்திரீ சிசுஹத்திக்குடன்பட்டாளென்றால் இந்த யுகத்தில், நாம் என்ன
சொல்வது? கலியுகம் வந்துவிட்டதா என்ன இதற்குள்? - என்ன கொடிய பாதகியா
யிருக்கவேண்டும் அந்த ஸ்திரீ? -
வீரபாஹு முகத்தை வஸ்திரத்தினால் மூடிய சந்திரமதியை அழைத்துக்கொண்டு வருகிறான்.
வீ. டேய் அரிச்சா! தென்னாடா இது? நல்ல நாயமா கீதே! ஊர்லே இக்கரவங்கல்லாம்
குய்யோ மொறையோ இண்ணு அய்வராங்க ராசாபுள்ளெ செத்து போச்சி இண்ணு!
நீ என்னாடா இன்னா, இங்கே குந்திகினு, கேளி விலாசமா பேசிகினு கீரே! - நம்ப
ராசா புள்ளெயே கொண்ண கொடும்பாவி தோகீரா பாரு, கையும் புடியுமா
புடிச்சிம்போயி ராசாகிட்ட உட்டூட்டாங்க, நம்ப ராசா, செரசாக்கினெ பண்ணும்படி
உத்தரவு பண்ணிட்டாரு. இந்த மசானத்துக்கு நானு வெட்டியான் ஆனதொட்டு,
அந்த உத்தரவெ நான் தான் நெரவேத்தணும், இண்ணெக்கி என்னாடாணா,
எய்வெடுத்த எங்கப்பா தெவ்ஷம் வந்தது, அத்தொட்டு பொம்மனாட்டியே நானு
கொல்லக்கூடாது. எனக்கு பதுலா இந்த வேலெயெ நீ செய்துடுராயப்பா.
ஹ. ஆண்டவனே! -
வீ. என்னாடா ஆண்டவனுக்கு? - என்னா முய்க்கரே! நீ என் அடுமெ, நான் சொல்ர
வேலெயெல்லாம் செய்யத் தேவலையா? இல்லா போனா, செய்யமாட்டேனிண்ணு
சொல்லிப்புடு - வேறெ யாரையானா பாத்துகிறேன்.
ஹ. ஆண்டவனே - உங்கள் ஆக்கினை - கத்தியைக் கொடுங்கள் -
வீ. அப்படி-இந்தா கத்தி-ஒரே வெட்டாய் வெட்டுப்புடு. பொம்மனாட்டி கிம்மினாட்டி
இண்ணு பாக்காதே- பத்திரம்!மூஞ்செ கிஞ்செ பாக்காதெ-அப்புறம் மனசு
எதங்கிபூடப் போவுது!நான் வர்ரேன். [விரைந்து போகிறான். ]
ஹ. பரமேஸ்வர!-
சத். அண்ணலே!என் கண்களை நான் நம்ப முடியவில்லையே! இதென்ன கனவா?-
நீர் அயோத்தி மன்னன்-ஆய் இருந்தவர்-அற்ப கொலைஞன் வேலை புரிவதோ?-
அந்தோ!அந்தோ!
ஹ. அப்பா,அதைச் செய்யாதிருத்தல்தான் பாபமாகும்!- அதிருக்கட்டும்,இந்த ஸ்திரீ
ஏன் சிசுஹத்திற் குடன் பட்டாள்?-யாரோ நல்ல குலத்திலு தித்தவள்போல்
தோன்றுகிறாள்-
ச. [முகத்தை மூடிய வஸ்திரத்தை நீக்கி] பிராணநாதா! பிராண நாதா!
[ஹரிச்சந்திரன் பாதத்தில் விழுகிறாள். ]
ஹ. ஆ!சந்திரமதி!-
ச. ஆம் ஆம் நாதா!நான்தான்!
ஹ. சந்திரமதி!-தீண்டாதே என்னை!-எழுந்திரு! அகன்று நில்!
ச. நாதா!-நாதா!-அரசன் குழந்தையைக் கொன்ற அப்படிப்பட்ட கொடும் பாதகி- நான்
என்று,நீரும் நம்புகிறீரா?-அதை நினைக்கவும் என் நெஞ்சம் இடங்கொடுக்க
வில்லையே! என் கையால்-எப்படி-அப்பாதகம் இழைத்திருப்பேன்?-நாதா!
உம்முடைய மனைவியாகிய நான்-அவ்வளவு இழிந்தவளாய் விடுவேனோ?- இதை
நீர் நம்புகிறீரா?-ஈசனே!ஈசனே!-என்னால் பொறுக்க முடியவில்லையே!-
[தேம்பி அழுகிறாள். ]
ஹ. சந்திரமதி!-எப்படி இக்கதிக்கு வந்தாய்?-விரைவில் -உண்மையை உரை.
ச. பிராணநாதா!ஆகாயவாணி பூமிதேவி சாட்சியாகவும், அப் பரமேஸ்வரன்
சாட்சியாகவும்,நடந்ததை நடந்தபடி உரைக்கிறேன். நான் சொல்வதில்
அணுவளவேனும் அசத்யம் இருக்குமாயின்,பதிவிரதைகள் செல்லும் பரமபதம்
எனக்குக் கிட்டாது பாழ் நரகில் பல் கோடி நூற்றாண்டு கிடந் துழல்வேனாக!- நாதா,
உம்மை நான் நேற்றிரவு விட்டுப் பிரிந்தபின்,வேதியர் வீட்டிற்கு விரைந்து
சென்றேன். கருக் கிருட்டில் நேர் வழி தெரியாது பல வீதிகளில் அலைந்து
சென்றேன். கடைசியில் ஓர் வீதி வழியாகப் போகும்பொழுது,என் காலில் *ஏதோ
தடைப்பட, என்னவென்று உற்றுப் பார்க்க, ஏதோ குழந்தை உறங்குவது
போலிருந்தது, அதன் முகம் நமது-தேவதாசனது முகத்தை ஒத்திருக்க-என்ன
ஆச்சரியமென்று திகைத்து நின்றேன். அச் சமயம் சில் காவலாளர்கள் ஓடிவந்து
என்னைப் பிடித்துக் கொண்டார்கள்;அதுவரையில் எனக்கு நன்றாய் ஞாபகம்
இருக்கிறது. அதற்கப்புறம் நடந்தது ஏதோ கனவு போலிருக்கிறதே யொழிய,
நனைவாகத் தோற்றப்படவில்லை. பிறகு இத் தேசத்து அரசன்,தன் குழந்தையை
நான் கொன்றதாகவும் அக் குற்றத்திற்காக எனக்கு சிரசாக்கினை விதித்ததாகவும்
கூறினபொழுதுதான் எனக்குப் பூரணமான பிரக்ஞை வந்தது. அதன்மேல் இங்கு
உமதெதிராகக் கொண்டு வரப்பட்டேன். பிராண நாதா, நீர் தெய்வமாகக் கொண்டு
தொழுதுவரும் அந்த சத்யத்தின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், நான்
கூறியதுதான் நான் அறிந்த உண்மை. இதற்கு தெய்வம்தான் சாட்சி. நாதா
-தாமாவது-என் வார்த்தையை-நம்புகிறீரா?
ஹ. சந்திரமதி-நான்-உன்னை நம்புகிறேன்.
ச. அவ்வளவு போதும்! - நான் பாக்கியசாலியே! பாக்கியசாலியே!
ஹ. ஆயினும் - சந்திரமதி - அரசனது ஆக்கினையையும் - என் எஜமானனுடைய
கட்டளையையும், நான் – நிறை வேற்றவேண்டும்.
சத். என்ன! -
ச. பிராணநாதா! அவ்வாறே செய்யும். இப் பாழான உலகத்தில் இனி உயிர் தரிக்க
எனக்கு விருப்ப மில்லை. நான் குற்றவாளி யல்லவென்று நீர் நம்பினதொன்றே
எனக்குப் போதும். நான் இறக்கச் சித்தமா யிருக்கிறேன். அதுவும் உமது
திருக்கரத்தால் இறக்கும்படியான பாக்கியம் கிட்டியதே தேவதேவன்
கருணையினால்! இனி எனக்கு என்ன குறை? சீக்கிரம் உம்முடைய கையால் மடிந்து
சுவர்க்கம் போய் நமது கண்மணியைக் கண்டு சந்தோஷித்து, உமது வரவை
எதிர்பார்த்திருக்கிறேன்.
ஹ. ஈசனே! உமதிச்சைப் பூர்த்தியாகட்டும்! - சந்திரமதி, உனது மனதை ஒருவழிப்
படுத்தி, ஈஸ்வரன் பாதத்தை அடைக்கல மடைந்து, தியானித்து - சித்தமாவாய்.
சத். என்ன இது! அண்ணலே! - இந்நாட்டு அரசன் அநியாயமாய் அந்தகனைப் போல
தீர விசாரியாது இட்ட கட்டளையை நிறைவேற்றி, ஒரு பாபமு மறியாத உமது
உத்தம பத்தினியை உமது கரத்தால் கொல்லவா போகிறீர்? - நீரே சற்றுமுன்பாகக்
கூறினீரே, தேவியவர்கள் கூறியதைத் தாம் நம்புவதாக.
ஹ. ஆம் - ஆயினும் எனது நம்பிக்கை எதற்குதவும்? நான் ஒரு அடிமை,
மஹாராஜாவினுடையவும் எனது எஜமானனுடையவும் கட்டளையை
நிறைவேற்ற வேண்டியது என் கடமையாகும் -
சத். அண்ணலே! உமக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா? அல்லது எனக்குத்தான்
பயித்தியம் பிடித்திருக்கிறதா? நான் காண்பது கனவோ நினைவோ!
பாபமொன்றும் செய்யாத உமது பத்தினியை நீர் கொல்வதா? - உமது கரத்தால்?
ஹ. ஆம் கொல்லத்தான் வேண்டும் - எனது கரத்தால் - சந்திரமதி -
சத். ஐயோ! கொஞ்சம் பொறுமே! கொஞ்சம் பொறுமே!
ஹ. சத்தியகீர்த்தி, உன்னை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன் ஒரு விஷயம் –
எனது கட்டளையை நான் நிறைவேற்றி யாகுமளவும், என்னிடம் இனி ஒரு
வார்த்தையும் பேசாதே! இந்த இடத்தைவிட்டு அகன்று செல் - கொஞ்சம்
தூரத்திலாவது போயிரு.
சத். ஈசன் ஒருவன் இருக்கிறானா இந்த ஜகத்தில்?
[மெல்ல ஒரு புறமாய் போய் நிற்கிறான். ]
ச. பிராணநாதா, நான் சித்தமா யிருக்கிறேன். - தாமதம் செய்யாதீர் இனி.
ஹ. சந்திரமதி - என்மீது உனக்குக் கொஞ்சமேனும் வருத்தம் வேண்டாம். என்
கட்டளைப்படி நடக்கவேண்டியது என் கடமையாம் - ஆகவே -
ச. ஆகவே - நாதா, என்பொருட்டு கொஞ்சமேனும் வருத்தமின்றி, உமது கடமையை
நிறைவேற்றும்படி அடியாள் வேண்டிக் கொள்ளுகிறேன் - என் சிரசு ஒன்றல்ல,
ஆயிரம் இருந்தபோதிலும், அவையனைத்தையும் பலி கொடுத்து உமது
சத்யத்தைக் காப்பாற்றும்படி வேண்டியிருப்பேன்!
ஹ. சந்திரமதி, உன்னிடம் இவ்வளவு அருங்குணம் இருப்பதை இதுவரையில்
முற்றிலும் அறியாதிருந்தது என் தவறாகும். இப்பொழுது அதை முற்றிலும்
அறிகிறேன். ஆயினும் - என் கடமையை நான் நிறைவேற்ற வேண்டும். ஆகவே –
என் ஆருயிர்க் காதலியே! என்னை மன்னிப்பாயாக!
ச. பிராணநாதா! தாங்கள் அவ்வாறு கூறலாகாது. எதற்க்காகத்தாம் எனது
மன்னிப்பைக் கேட்கவேண்டும்? அதை விட்டு எனக்கு நேரிடப்போகிற பெரும்
சுகத்தைத் தாம் அளிப்பதற்காக, நான் உமக்கு என் வந்தனத்தை யல்லவோ
செலுத்தவேண்டும். பிராணநாதா! உமது கரத்தால் எனதுயிர் துறக்க
வேண்டுமென்பதை நான் நினைக்கும்பொழுது என் உள்ளம் பூரிக்கின்றது. உமது
சத்யவிரதத்திற்குக் குறுக்காக வராமல் அதைக் காப்பதில், உமக்கு நான்
உதவினேன் என்பதை நினைக்கும் பொழுது அளவிலா ஆனந்தத்தை
அடைகிறேன். பிராணநாதா, இனி காலதாமதம் செய்யவேண்டாம் பிராணநாதா!
உமது சீர் தங்கிய பாதங்களில் நமஸ்கரித்து விடைபெற்றுக்கொள்ளுகிறேன்.
[பணிகிறாள். ]
பிராணநாதா! பரமேஸ்வரன் கருணையினால் நான் பரலோகஞ் சென்று, அவ்விடம்
உமது வரவை எதிர் பார்த்து நிற்பேன். அவ்விடம் நாம் ஒருங்கு சேர்ந்தபின் –
என்றும் பிரியாதிருப்போ மல்லவா?
ஹ. ஹா! - சந்திரமதி! - சந்திரமதி - சந்திரமதி!
ச. பிராணநாதா! - ஏன் உமக்கு துக்கம் இனி? - ஒரு க்ஷணவேலை - உமது கடமையை
முடித்தவராவீர் - பரமேஸ்வரன் பாதமே கதியென நம்பி - என் தலையை
வணங்கினேன் - பிராணநாதா, நான் போய் வருகிறேன். நான் பரமேஸ்வரன்
கருணையினால் பரமபதத்தில் உம்மை சந்திப்பேனாக!
ஹ. [வாளை யோங்கி] கண்ணுதற் கடவுளே! கருணாநிதி! - யாதும் உனது செயலாம்,
என நம்பி -
விஸ்வாமித்திரர் விரைந்தோடி வருகிறார்.
வி. பொறு! பொறு! ஹரிச்சந்திரா! - நான் காண்பது கனவோ? அயோத்தி மன்னனான
ஹரிச்சந்திரன், தன் சொந்த மனைவியின் கழுத்தை வெட்டக் கையில் வாளேந்தி
நிற்பதா?
ஹ. மகரிஷி! உமது பாதங்களுக்கு நமஸ்காரம்; வீரபாஹுவின் அடிமையான
ஹரிச்சந்திரன், தன் கடமையை நிறைவேற்றுகிறான் - அதனைத் தாங்கள் தடுப்பது
நியாயமன்று; ஆகவே தாங்கள் சற்று தயை செய்து ஒரு புறமாய் ஒதுங்கியிருங்கள்.
தங்களைப்போன்ற மஹரிஷிகள் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பது சரியல்ல –
ஆகவே -
வி. ஹரிச்சந்திரா! நீ இக் கொடுங் கொலையைச் செய்வதில்லையென்று எனக்கு
வாக்களித்தாலன்றி இவ்விடம் விட்டுப் பெயரேன்! ஹரிச்சந்திரா! உனக்கென்ன
பயித்தியம் பிடித்து விட்டதா? அல்லது உன் அறிவு உன்னை விட்டுப் பிரிந்ததோ?
பழுதிலாப் பரிதியின் வம்சத்துதித்த, இக்ஷ்வாகு குலத்திற் பிறந்த, அயோத்தியை
ஆண்ட அரசனாகிய நீ, ஒரு குற்றமுமறியாத பேதையாகிய உன் மனைவியை,
கொடும்பாவியாகிய கொலைஞனைப் போல் கொல்வதா? இந்த தர்மத்தை எங்கு
கற்றாய்? இதுதானோ நீ அறிந்த நீதி? உனது குருவாகிய வசிஷ்டர் உனக்குக்
கற்பித்தது இதுதானோ? ஹரிச்சந்திரா! என் வார்த்தையை முன்பு கேட்கமாட்டேன்
என்றாய், இப்பொழுதாவது கேள். என்னை விட்டுப் பிரிந்தபின் உனக்கும் உன்
மனைவி மக்களுக்கும் நேரிட்ட இடுக்கண்களையெல்லாம் பற்றிக் கேள்விப்
பட்டிருக்கிறேன். உன்னுடைய பிடிவாதமானது உன்னை எந்த ஸ்திதிக்குக்
கொண்டு வந்துவிட்டது என்பதை நீயே பார்க்கிறாய் – இப்பொழுதாவது -
ஹ. முனிசிரேஷ்டரே, குறுக்கே பேசுவதற்காக அடியேனை மன்னிக்கவேண்டும்.
ஆயினும் தாங்கள் இவ்வேலையை நான் விடும்படி எனக்குக் சொல்வதானால்,
அந்த ஸ்ரமத்தைத் தாங்கள் மேற்கொள்ளதிருக்கும்படி வேண்டுகிறேன். முன்பே
அதிக காலதாமதம் செய்துவிட்டேன், இனியும் தாமதிப்பது நியாயமன்று; ஆகவே
தாங்கள் தயை செய்து ஒருபுறம் ஒதுங்கியிரும்.
வி. ஹரிச்சந்திரா! இறந்த உன் மைந்தன்மீதும், இறக்கச் சித்தமாயிருக்கும் உன்
மனைவிமீதும், ஆணையிட்டு உன்னைக் கேட்கும்படி வேண்டுகிறேன்.
இனிமேலாவது பிடிவாதம் செய்யாதே. உன் ஐஸ்வர்யத்தை இழந்தாய் – அரசை
இழந்தாய் - அரசியை இழந்தாய் - அருமை மைந்தனை இழந்தாய் –
எல்லாவற்றையும் இழந்தாய் -
ஹ. முனிபுங்கவரே, எல்லாவற்றையும் நான் இழக்கவில்லை - எனது சத்யம் என்னை
விட்டு அகலவில்லை! - அது இருக்கும் வரையில் உண்மையில் நான் ஒன்றையும்
இழந்தவனன்று!
வி. அப்பா, ஹரிச்சந்திரா! மனைவி, மகன், மற்றெல்லாச் செல்வங்களையும்
இழந்தபின், இந்த ஒரு சத்தியத்தால் உனக்கென்ன பலன்?
ஹ. முனிசிரேஷ்டரே, தாங்கள் என்ன ஒன்றுமறியாதவர் போல் பேசுகின்றீரே?
அல்லது என்னைப் பரிசோதிக்கிறீரா? எனது சத்யம் என்னிடம் இருக்கும் வரையில்
நான் ஒன்றையும் இழந்தவனாகக் கருதமாட்டேன். அந்த சத்யமே நான் பெற்ற
செல்வம்! சத்யமே நான் ஆண்ட அரசு! சத்யமே நான் அனுபவித்த சகல ஐஸ்வர்யம்!
சத்யமே என்னைப் பெற்ற தாய்! சத்யமே என்னையீன்ற தந்தை! சத்யமே நான்
பெற்ற தனயன்! சத்யமே நான் கொண்ட தாரம்! சத்யமே எனது சகல சுற்றம்!
சத்யமே எனக் கிவ் வுலகனைத்தும்! சத்யமே என குலம்! சத்யமே என கோத்திரம்!
சத்யமே என குரு! சத்யமே நான் வணங்கும் தெய்வம்! அந்த சத்யம் என்னை
விட்டகலாதிருக்கும் வரையில் எனக்கு ஒரு குறையு மிருப்பதாக நான்
நினைக்கமாட்டேன்!
வி. அந்த சாத்தியமானது உன்னை எக் கதிக்குக் கொண்டு வந்துவிட்டது பார்!
இனியும் பிடிவாதம் செய்யாதே. இனியாவது என வார்த்தையைக் கேள். எனது
அபாரமான சக்தியை நீ அறியாய், உன் தந்தை நன்றாயறிந்துளர்; அவர் என்னை
நம்பியபடியால் அவருக்காக ஒரு உலகத்தையே சிருஷ்டித்தேன். நீயும் என
வார்த்தையை நம்பி என சொற்படி நட, நீ இழந்ததைஎல்லாம் பெறும்படி
செய்கிறேன். இழந்த உனதரசினைக் கொடுக்கிறேன். இறந்த உன் மைந்தனைப்
பிழைப்பூட்டுகிறேன், உன் மனைவியை இக்கதியினின்றும் காக்கின்றேன் –
ஹரிச்சந்திரா, என்ன சொல்லுகிறாய்?
ஹ. ஸ்வாமி, நான் சொல்லக்கூடியது வேறென்ன இருக்கிறது? அடியேன் பொருட்டு
இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொள்ளச் சித்தமாயிருக்கும் தாங்கள், கொஞ்சம் தயவு
செய்து நான் மேற்கொண்ட சத்யா விரதத்தைக் காத்திடும்படி அனுக்கிரஹம்
செய்யவேண்டுமென்பதே.
வி. இனியும் அந்த சத்ய விரதத்தை விடமாட்டாயா?
ஹ. முனிபுங்கவரே, இவ்விஷயத்தில் என கடைசி வார்த்தையைக் கேட்டருள்வீராக!
ஆசந்திரார்க்கர்கள் தத்தம் நெறியை விட்டகன்றபோதிலும், ஆகாயத்திற்
பிரகாசிக்கும் உடுக்கள் பல பலவென்று உதிர்ந்தபோதிலும், அஷ்ட குலாசலங்கள்
அடியுடன் பரிக்கப்பட்டபோதிலும், வேலைகரை இழந்தாலும், வேதநெறி
பிறழ்ந்தாலும், அரமூவரே என முன்னின்று வேண்டிய போதிலும், என சத்ய
விரதத்தை விடேன்! விடேன்! விடேன்! ஆகவே சற்று ஒதுங்கியிரும் – சந்திரமதி!
சித்தமாயிருக்கிறாயா?
ச. ஆம் பிராண நாதா!
ஹ. [வாளை ஓங்கி] எல்லாம் வல்ல கடவுளே! நான் கொண்ட சத்ய விரதம்
அணுவளவேனும் தவறாதவனாயின் இவ்வாளானது, ஒரே வெட்டாய்,
சந்திரமதியின் கந்தரத்தை-
[பரமசிவன் பார்வதியுடனும், பிரம்ம விஷ்ணுக்களுடனும், இந்திரன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களுடனும் வசிஷ்டர் நாரதர் முதலிய ரிஷிகளுடனும், ஆகாயத்தில் தோற்றுகிறார். தேவதுந்துபி முழங்குகிறது. பூமழை பெய்கிறது. ]
ப. [ஹரிச்சந்திரன் கரத்தைப் பிடித்துத் தடுத்து] பொறு! பொறு! ஹரிச்சந்திரா!
வேண்டாம்! நாம் ஆக்கினை யிடுகிறோம்.
ஹ. ச. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா! அண்ட சராசரங்களையும் ஆக்கி
அளித்து அழிக்கும் அரனே! மூவர் முதலே! முத்திக்கரசே! அனாதரட்சகா!
ஆபத்பாந்தவா! சம்போ! சங்கரா! சத்யமூர்த்தி! சரணம்! சரணம்!
[பன்முறை படிமீது விழுந்து நமஸ்கரிக்கின்றான்]
ப. ஹரிச்சந்திரா! சந்திரமதி! எழுந்திருங்கள் - நீ முன் ஜன்மங்களிற் செய்த
பாபங்களெல்லாம் பரிஹரிக்கப்பட்டன. இதுவரையில் நீங்கள் அனுபவித்த
துன்பங்களையெல்லாம் மறந்து விடுங்கள்! ஹரிச்சந்திரா! உனது சத்ய விரதத்தின்
திறம் இப்படிப்பட்டதென உலகத்தவர் நன்கறியும் பொருட்டே, உன்னை இத்தனை
இடையூறுகளுக்கும் உள்ளாக்கினோம். இனி, உண்மை நெறியினின்றும்
ஓரணுவும் பிறழாத உத்தமனென, உன் பெயர் உலகங்களுள்ளளவும் ஊர்ஜிதமாய்
நிற்கும்! இதுவரையில் அனுபவித்த துக்கங்களை யெல்லாம் மறந்து,
சந்தோஷத்துடன் நெடுநாள் இந் நில உலகத்தையாண்டு, பிறகு, உன் மனைவி
மக்களுடன் நமது பாதத்தை வந்து சேர்வாயாக. - வசிஷ்டரே, உமது சிஷ்யனை
அயோத்திக்கு அழைத்துச் சென்று அந் நாட்டரசனாக அணி முடியினைச் சுட்டும்.
ஹ. பக்தானுகூலா! பரமதயாளு! பரமசிவமே! தாங்கள் அறியாததொன் றுண்டோ?
அடிமையாகிய நான் அணி முடியை மறுபடி அணியலாகுமோ? அன்றியும்
தானமாகக் கொடுத்த அரசைத் தமியேன் மறுபடியும் கொள்வதோ?
வி. ஹரிச்சந்திரா. அதைக் குறித்து உனக்குக் கவலை வேண்டாம். நீ எனக்கு
தானமாகக் கொடுத்த உன் அரசை, உனக்கே மனப் பூர்வமாய், உனது சத்ய
விரதத்தை மெச்சினவனாய், மறுபடியும் தானமாக கொடுக்கிறேன்; இதோ
பெற்றுக்கொள்.
ஹ. ஸ்வாமி மகனை யிழந்து, மனைவியும் குற்றஞ் சாற்றப் பட்டு, மயானத்து
வெட்டியானாகிய எனக்கு அரசு என்னத்திற்கு?
ப. ஹரிச்சந்திரா! உன் கவலை யனைத்தும் ஒழி. உன் மைந்தன் உண்மையில்
இறக்கவில்லை, உன் மனைவியும் குற்றவாளியல்ல. இவையனைத்தும்
விஸ்வாமித்திரர் தனது *** மஹிமையால், வசிஷ்டருடன் அவருக்கு நேர்ந்த ஓர்
சபதத்தின்படி, உனது சத்திய விரதத்தைப் பரிசோதிக்கும் பொருட்டு, செய்த
சூழ்ச்சிகளேயாம். தேவ தாசா! எழுந்திரு.
[தேவதாசன் எழுந்திருக்கிறான்; ஹரிச்சந்திரனும் சந்திரமதியும் அவனைக் கட்டி யணைக்கின்றனர். பூமழை பொழிகின்றது. ]
அன்றியும், வாஸ்தவத்தில் காசி மன்னன் புதல்வனும் கொல்லப் படவில்லை.
அவனும் உறங்கி எழுந்தவன் போல் எழுந்திருப்பான் இதுவரையில். ஆகவே
சந்திரமதியின்மீது ஒரு குற்றமு மில்லையென்று காசிமன்னன் முதலியோர்
அறிவார்; மேலும் நீ பறையனுக்கு அடிமைப்பட்டதாக நினைந்து வருந்த
வேண்டாம். விஸ்வாமித்திரர் வேண்டுகோளுக் கிசைந்து உன்னை அடிமை
கொண்டது யமதர்மராஜனே! சந்திரமதியையும் தேவதாசனையும் அடிமை
கொண்டவர் அக்னிதேவனே!
ய. அ. ஆம் ஆம் ஹரிச்சந்திரா, இதோ எங்களைப் பார்.
ப. அல்லாமலும், நீ காத்து நின்ற இடம், ஸ்மசான பூமியல்ல, யாக பூமியாம்.
விஸ்வாமித்திரர் மாய்கையால் உங்களுக்கெல்லாம் அவ்வாறு தோற்றியது.
இப்பொழுது அது எப்படியிருக்கிறது பார்.
ஹ. கருணாநிதி! எல்லாம் தமது கருணை.
வி. மி. ஹரிச்சந்திரா, எனது சபதத்தின் பொருட்டு, உனக்கும் உன் மனைவி
மக்களுக்கும் நான் இழைத்த பல துன்பங்களையும் மன்னிப்பாய்! உமைகேள்வன்
கூறியபடி உனக்கு ஒரு இழுக்குமில்லை. ஆகவே நான் மீட்டும் உன்னை மெச்சி
தானமாக அளிக்கும் உனதரசினைப் பெற்று சுகமாய் நீடுழி காலம் வாழ்வாயாக!
விஸ்வாமித்திரனாகிய நான் ஒப்புக்கொள்கிறேன், உன்னால் ஜெயிக்கப்பட்டதாக!
நா. அன்றியும் வசிஷ்டராலும் ஜெயிக்கப்பட்டதாக ஒப்புக் கொள்ளவேண்டும்.
வி. ஆம்.
நா. ஆகவே, வாக்களித்தபடி, ஹரிச்சந்திரனுக்கு அரசைக் கொடுப்பதுடன், உமது
தபசில் பாதியையும் கொடுக்க வேண்டும்.
வி. ஆம், அதற்குத் தடையென்ன?
வ. [ஹரிச்சந்திரனைக் கட்டித் தழுவி] பிரிய சிஷ்யனாகிய ஹரிச்சந்திரா! உன்
வாக்கினையும் காப்பாற்றினாய்! என் வாக்கினையும் காப்பாற்றினாய்! உனது
அருங்குணத்தை மெச்சினேன்! நீ எனது பிரிய சிஷ்யனாயிருக்கத் தக்கவனே.
வி. வசிஷ்டரே, ஹரிச்சந்திரன் என் பிரிய சிஷ்யனாகிய திருசங்குவின் பிள்ளை
என்பதை மறவாதீர்.
ப. வசிஷ்டரே, விஸ்வாமித்திரரே, நீங்களிருவரும் ஹரிச்சந்திரனை அயோத்திக்கு
அழைத்துச் சென்று அவனுக்கு முடி சூட்டி வாருங்கள்.
வ. வி. கட்டளைப்படி.
ப. ஹரிச்சந்திரா! எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள். உனக்கு நம்மிடமிருந்து
ஏதாவது வரம் வேண்டியிருந்தால் கேள்.
ஹ. பரம்பரனே! பசுபதி!- இவ்வுலகிலேயே உமது திவ்ய காட்சி கிடைத்த நான்
விரும்பத்தக்கது என்ன இருக்கப் போகிறது? ஆயினும் ஒரு வரம் வேண்டுகிறேன்.
இனியும் எந்த ஜன்மம் வந்த போதிலும் எனது சத்ய விரதம் குன்றாதிருக்கும்படி
அனுக்கிரஹிக்கவேண்டும்.
ப. அங்ஙனமே ஆகுக ஹரிச்சந்திரா!
[தேவதுந்துபி முழங்குகிறது; தேவர்கள் பூமழை பொழிகின்றனர்;
ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், தேவர்களைப் பணிகின்றனர்;
பரமசிவம் தேவர்களுடன் அந்தர்த்யானமாகிறார்.
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது

ஹரிச்சந்திரன்----------அயோத்தி மன்னன்.
சத்யகீர்த்தி------------ஹரிச்சந்திரன் முக்கிய மந்திரி
தேவதாசன்-----------ஹரிச்சந்திரன் புதல்வன்
பரமசிவம்-----------தேவாதிதேவன்
இந்திரன்-------------தேவர்களுக் கரசன்
ஜெயந்தன்------------இந்திரன் புதல்வன்
வசிஷ்டர், விஸ்வாமித்திரர் --------------மஹரிஷிகள்
நாரதர்
நக்ஷத்திரேசன்-----------விஸ்வாமித்திரர் சிஷ்யன்
வீரபாஹு-------------புலையன் வேடம் பூண்ட யமதர்மன்
காலகண்டன்-----------பிராம்மணன் வேடம்பூண்ட அக்னிதேவன்
ராஜகேசரி-----------------காசிமன்னன்
சுமதி ----------காசிமன்னன் மந்திரிகள்
துர்மதி, கோபாலன், வரதன்---------------------பிராமணப்பிள்ளைகள்
ராமசேஷன், வீரண்ணன், மார்த்தாண்டன், பராந்தகன் ---------------காசிமன்னன் காவலாளர்கள்
சந்திரமதி ------ ஹரிச்சந்திரன் மனைவி
திக்பாலர்கள், நகரமாந்தர், காசிவாசிகள், தேவர்கள், பிரதான் மந்திரிகள்,
நடனமாதர்கள், வேடர்கள், வேலையாட்கள் முதலியோர்
கதை நிகழிடம்:- அயோத்தியிலும் காசியிலும் அடுத்த வனப் பிரதேசத்திலும்.
-----------------------------------------------------------
ஹரிச்சந்திரன்
முற்கூறு
தேவேந்திரன் சிம்ஹாசனத்தில் வீற்றிருக்க, மற்ற திக்பாலர்கள் ஜெயந்தன் முதலியவர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர். விஸ்வாமித்திரர்,நாரதர் முதலிய ரிக்ஷிகள் ஒரு பக்கம் வீற்றிருக்கின்றனர். அப்ஸர ஸ்த்ரீகள் சங்கீத கேளிக்கை செய்கின்றனர்.
வாயிற்காப்போன். பராக்!தேவதேவனே!தங்களைப் பார்ப்பதற்காக வசிக்ஷ்ட மஹரிக்ஷி வருகிறார்.
தே. ஆயின் நர்த்தனம் நிற்கட்டும்;ஜெயந்தா,இம் மாதர்கள் மன முவக்கும்படி
பரிசளிப்பாய்.
ஜே. அப்படியே. வசிக்ஷ்டர் வருகிறார்.
தே. (எழுந்திருந்து) வசிக்ஷ்டப் பிரம்மரிக்ஷி வருக!வருக! (விஸ்வாமித்திரர் தவிர
மற்றவர்களெல்லம் எழுந்திருக்கின்றனர். ) வ. (ஆசீர்வதித்து) தேவேந்திரனே,க்ஷேமந்தானோ?
தே. தங்களுடைய கிருபகடாட்சத்தால். வீற்றிருக்கவேண்டும் இவ்வாசனத்தில்.
வ. (உட்கார்ந்து) நீயும் உட்காருவாய். ரிக்ஷிகளே,தேவர்களே, உட்காருவீர்களாக.
தே. மஹரிக்ஷி,இச் சுதர்மையானது தங்கள் பாதச்சுவடு பெற்று நெடுங்காலமாயது.
இதற்குக் காரணம் யாதோ?நான் அறிந்தும் அறியாமலும் ஏதேனும்
தவறிழைத்தேனோ? அங்ஙனம் ஏதேனு மிருப்பின் அடியேனுக்குடனே
அருளவேண்டும்.
வ. தேவேந்திரனே,அங்ஙன மொன்றுமில்லை. ஒரு முக்கியமான காரியமாக
பூலோகம் போகவேண்டி யிருந்தது. அவ்விடம் கொஞ்சம் காலதாமத மாச்சுது.
தே. என்ன முக்கியமான காரியம் என்று வினவலாமோ?
வ. சொல்லத் தடையில்லை. பூவுலகில் அயோத்தியில், அறநெறி வழுவாது அரசு
செலுத்தும் ஹரிச்சந்திரனெனும் எனது அன்புமிகும் சிக்ஷ்யனுக்கு சீக்கிரத்தில்
பூர்வகர்ம வசத்தால் பெருங்கெடுதி நேரிடப்போகிறதென ஞான திருக்ஷ்டியாற்
கண்டவனாய், அதைச் சமனம் செய்யும் பொருட்டும் அவன் மேற்கொண்ட
சத்ய விரதம் அழியாமலிருக்கும் பொருட்டும், ஓர் யாகம் இயற்றவேண்டியதா
யிருந்தது. அதனால்தான் சிலகாலம் அவ்விடம் தங்கவேண்டி வந்தது.
தே. மஹரிக்ஷி,தாங்கள் கூறியதில் சத்யவிரதம் பூண்டான் என்று கூறினீர்கள்.
அது இன்னதென்று அடியேனுக்குத் தெரியவில்லை. சற்று விளங்கச் சொல்ல
வேண்டும்.
வ. கேளாய் தேவேந்திரனே,சத்ய விரதம் என்பது மிகவும் மகத்தான விரதம். அதை
அணுவளவேனும் பங்கமின்றி அனுக்ஷ்டிப்பது சத்யலோக வாசிகளுக்கும்
மிகவும் கடினமென்றால்,கேவலம் மண்ணுலகில் வசிப்பவர்கள் அதை
மேற்கொள்ளல் எவ்வளவு கடினம் என்று நீயே யோசிக்கலாம். சத்ய விரதம்
என்றால் பொய்யாமையைக் கடைப்பிடித்தல், கூறிய வாய்மொழியினின்றும்
அணுவளவும் குன்றாமை;என்ன இடுக்கண் நேரிட்ட போதிலும்,எப்படிப்பட்ட
ஹீனஸ்திதியை அடைவதாயினும், சொல்லிய சொல் தவறாமை. இக் கஷ்டமான
விரதத்தைக் கடைப்பிடித் தொழுகுகிறான் எனது சிக்ஷ்யனான ஹரிச்சந்திரன்.
வி. அந்த விரதத்தினின்றும் தவறமாட்டானோ அந்த ஹரிச்சந்திரன்?
வ. யார் கேட்டது அக் கேள்வி? [திரும்பிப் பார்த்து] ஓ! தாங்களா?வாரீர்
விஸ்வாமித்திரரே!-நான் உம்மைப் பார்க்கவில்லை- அவ் விரதத்தினின்றும்
எனது சிக்ஷ்யன் தவறமாட்டான் என எண்ணுகிறேன்.
வி. தவறினாலோ?
வ. இவ்வீரேழ் புவனங்களும் தத்தம் நிலை தவறும்.
வி. உம்முடைய சிக்ஷ்யனுடைய ஆற்றலில் அவ்வளவு நம்பிக்கை யுண்டா? ஆயின்
அந்த சத்ய விரதத்தினின்றும் அவனைத் தவறும்படிச் செய்கிறேன்,
பார்க்கிறீர்களா?
வ. உம்மால் முடியாதென்று உறுதியாய் நம்புகிறேன்.
வி. என்ன சொன்னீர் வசிக்ஷ்டரே? என்னால் முடியாத காரியம் ஒன்றுளதோ இவ்
வீரேழ் புவனங்களிலும்?அந்த ஹரிச்சந்திரன் தந்தைக்காக வேறு சுவர்க்கம்
உண்டாக்கினவன் நான் என்பதை மறந்தீரோ?அன்று இந்திரம் கரிக்ஷ்யாமி என்று
ஆரம்பித்த நான்,இந்த தேவராஜனது வேண்டுகோளுக் கிணங்கியன்றோ
விடுத்தேன், என்பது ஞாபக மில்லையோ?
வ. நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆயினும் அவைகளை யெல்லாம் செய்ய
ஆற்றலுடையீர்,ஆயினும் ஹரிச்சந்திரனை சத்ய விரதத்தினின்றும் தவறச்
செய்ய உமக்குச் சக்தியில்லையென்றே நம்புகிறேன்.
வி. ஆனால் வசிக்ஷ்டரே,தேவர்கள் சபையறிய இதோ ஒரு வார்த்தை
சொல்லுகிறேன். அந்த உமது பிரிய சிக்ஷ்யனாகிய ஹரிச்சந்திரனை அந்த சத்திய
விரதத்தினின்றும் தவறும்படிச் செய்யாவிட்டால் என் பெயர் விஸ்வாமித்திரனன்று!
இப்பொழுது என்ன சொல்லுகிறீர்?
வ. அப்படிச் செய்ய உம்மால் முடியுமாயின் என் பெயர் வசிக்ஷ்டர் அன்று, என்று
நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
நா. அடடா!என்ன வசிக்ஷ்டரே! விஸ்வாமித்திரரே! இதில் என்ன பிரயோசனம்?
உங்களில் யார் தோற்றபோதிலும் உங்கள் பெயர் மாறிப்போமா என்ன?
ஆகவே, தோற்பவர் இன்னது செய்கிறது என்று எதாவது பந்தயம் கட்டினால்,
உங்களுக்கும் ஒழுங்கா யிருக்கும், பார்ப்பவர்களுக்கும் அழகாயிருக்கும்.
வி. அப்படியே தேவராஜனே ரிக்ஷிகளே! தேவர்களே கேட்பீராக! வசிக்ஷ்டரே
நீரும் கேளும். அந்த ஹரிச்சந்திரனை சத்திய விரதத்தினின்றும் தவறும்படிச்
செய்யாவிட்டால், என் தவத்திற் பாதி அவனுக்கு நான் தாரை வார்த்துக்
கொடுக்கிறேன், இது சத்தியம்!
வ. அது என்னவோ சத்தியம். அப்படித்தான் நடக்கப் போகிறது. - ஆயினும்
தேவராஜனே! ரிக்ஷிகளே! தேவர்களே!என் வார்த்தையையும் கேளும். எனது
சிக்ஷ்யனாகிய ஹரிச்சந்திரன் அந்த சத்திய விரதத்தி னின்றும் தவறுவானாயின்,
கழுதைமீ தேறி,கபால மொன்றைக் கையி லேந்தி, ஊரிடு பிட்சை யுண்டு
உலகத்தை மும்முறை வலம் வருகிறேன்.
வி. சரி!வசிக்ஷ்டரே,எப்பொழுது பூப் பிரதட்சிணத்திற்குப் புறப்படப் போகிறீர்?
வ. உம்முடைய பாதி தவத்தை எனது சிக்ஷ்யன் பெற்றபின், உலகத்தவர் எல்லாம்
அவனது மகிமையை யறியும்படி அவனுடன் உலகத்தைப் பிரதட்சிணம் செய்யப்
புறப் படலாமா என்று யோசிக்கிறேன்.
வி. பார்ப்போம் அதை!
நா. அதிருக்கட்டும் விஸ்வாமித்திரரே,இந்த காலத்திற்குள்ளாக என் சபதத்தை
நிறைவேற்றுகிறேன்,என்று ஒரு கால நிர்ணயம் சொல்லவில்லையே நீர்?
வி. அதற்கென்ன?இன்னும் மானிடவருக்ஷம் ஒன்றிற்குள்ளாக, என்று
வைத்துக்கொள்ளும்.
நா. அதற்குள்ளாக அம் மன்னவனை ஒரு பொய் யுரைக்கும்படிச் செய்துவிடுவீரா?
வி. ஒன்றென்ன, ஆயிரம் கணக்காக-இனி நான் தாமதிக்கலாகாது. இதோ
புறப்படுகிறேன். தேவராஜனே, நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.
வசிக்ஷ்டரே, நான் இங்ஙனம் செய்வது அம் மன்னன்மீது எனக்குக்
கோபத்தினா லல்ல, உம்முடைய கர்வத்தை யடக்கும் பொருட்டே!
[விரைந்து போகிறார். ]
வ. யாருடைய கர்வம் அடங்குகிறதோ! பார்ப்போம்.
முற்கூறு முடிகிறது.
------------------------
முதல் அங்கம்
இடம் - விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம்.
விஸ்வாமித்திரர் யோசித்த வண்ணம் வருகிறார்.
சொல்லுதல் யார்க்கும் எளிதாம் சொல்லிய வண்ணம் செய்தல் அரிதாம், என்கிற
பழமொழியின் உண்மையை இத்தனை வயதாகியும் இன்னும் நான் கற்றிலனே! இந்திரன் சபையின் முன்பாக என்ன மூடத்தனமாய் நான் சபதம் செய்துவிட்டேன்!எனது ஜன்மத்வேக்ஷியாகிய வசிக்ஷ்டர் ஆய்ந்தோய்ந்து பாராது அவ்வாறு கூறியிருக்க மாட்டார். அவசரப்பட்டு கூறிவிட்டு பிறகு அல்லற் படுபவன் நானே! உடன்பிறந்த குணம் உயிர் உள்ளளவும் என்பதுபோல், க்ஷத்ரியர்களுக்குரிய முன்கோபம் இன்னும் என்னை விட்டகலவில்லை. என்னதான் பிரம்ம ரிக்ஷியான போதிலும், அந்த சாந்தம்,இன்னும் எனக்கு வரவில்லை. அந்த ஹரிச்சந்திர மன்னவனுடைய அத்யாஸ்சரியமான குணங்களைக் கேட்கக் கேட்க,நான் எடுத்துக் கொண்ட வேலை ஈடேறா தென்றே எண்ணும்படிச் செய்கிறது. ஆயினும் அதைப்பற்றி இப்பொழுது ஏங்கி ஆவதென்ன?ஒரு முறை சபதம் செய்தபின்,பின் வாங்குவதா? நானோ,விஸ்வாமித்திரனோ,பின் வாங்குவது? இதுவரையில் நான் எடுத்துக்கொண்ட வேலையினின்றும்-எப்படிப்பட்ட அசாத்திய மானதாயிருந்த போதிலும்- எதில் பின் வாங்கினேன்? தீர்மானித்த கர்மாவினின்றும் திரும்பினான் கௌசிகன், என்னும் பெயர் எனக்கு வேண்டாம். ஜெயமோ அபஜெயமோ எடுத்த காரியத்தை இடையில் கைவிட்டான் காதிமைந்தன், என்று இவ்வுலகம் என்னை இகழ இடங்கொடேன். இந்த கீர்த்தியாவது எனக்கிருக்கட்டும். -ஆயினும் இப்பொழுது நான் என்ன செய்வது?ஹரிச்சந்திரனை சத்தியம் பிறழச் செய்ய வேண்டும். இது ஸ்வலபமான வேலை யன்று;அவன் தந்தைக்காக இன்னொரு ஸ்வர்க்கத்தை நான் ஏற்படுத்தியதும் இதைவிட சுலபமான காரியமாகும். ஆகவே நன்றா யாராய்ந்தே நான் நடக்க வேண்டிய மார்க்கத்தைத் தீர்மானிக்க வேண்டும்- எங்ஙனமாவது ஒரு அசத்தியமாவது அவன் வாயினின்றும் வரும் மார்க்கத்தை நாடவேண்டும்- இதற்கு என்ன யுக்தி செய்வது?எங்ஙனம் ஆரம்பிப்பது? ஆரம்பம் சரியாயிருந்தால்தான் அந்தத்தில் ஜெயம் கிடைக்கும். -
நாரதர் வருகிறார்.
நா. நமோ நமஹ!விஸ்வாமித்திரரே!என்ன,இங்கா இருக்கின்றீர் இன்னும்?
ஹரிச்சந்திரனிடம் போய் இதற்குள்ளாக உம்முடைய சபதத்தை நிறைவேற்றி
விட்டிருப்பீர் என்றல்லவோ எண்ணினேன் நான்.
வி. நாரதரே,இப்பொழுது பரிஹாசத்திற்குக் காலமல்ல.
நா. ஓஹோ!யோசிப்பதற்குக் காலமோ?ஒரு காரியத்தைக் கடைப்பிடித்தபின்
கைவிடலாகுமோ?சந்தேகத்திற்கிடங் கொடுக்கலாகுமோ? சம்சயாத்மா- வினஸ்யதி,
என்பது உமக்குத் தெரியாதோ? அப்படி உமக்கு சந்தேகமிருந்தால் முயற்சி
செய்வானேன்?முதலிலேயே இது என்னால் முடியாது,என்று வசிக்ஷ்டர்
முன்னிலையிற் கூறிவிட்டு, அவரே வென்றதாக ஒப்புக்- கொள்ளுகிறதுதானே?
வி. என்ன?நாரதரே! நான் யாரென்பதை மறந்து பேசுகிறீரோ? நான்
விஸ்வாமித்திரன்! நானாவது தோற்றதாக ஒப்புக்கொள்ளுவதாவது? அதுவும்
வசிக்ஷ்டர் முன்னிலையில்?நாரதரே,அந்த வார்த்தை தவிர வேறு ஏதாவது பேசும்-
அதிருக்கட்டும் நாரதரே,நீர் இப்படிப்பட்ட விஷயங்களிலெல்லாம் மிக்க
கூர்மையான அறிவுடையவர், ஆகவே அந்த ஹரிச்சந்திரன் ஏதாவது ஒரு பொய்
பேசும்படிச்செய்ய ஏற்றதான மார்க்கம் எது என்பதை எனக்கு எடுத்துறையும்.
நா. அடடா!ஆயிரம் இலக்கமெல்லாம் போய் அரை இலக்கத்திற்கு வந்தாற்
போலிருக்கிறதே!
வி. விளையாட வேண்டாம். விஷயத்திற்கு வாரும்- எனக்கிந்த உபகாரம்
செய்யமாட்டீரா?
நா. உமக்கு நான் உண்மையில் உபகாரம் செய்வதானால் இது கூடாக்காரியம்.
உடனே கைவிடுமிதை என்று உமக்கு உபதேசம் செய்யவேண்டும் நான்.
கேளும் என் வார்த்தையை,அந்த ஹரிச்சந்திரன் வாயினின்றும் அசத்தியம்
வரும்படியாகச் செய்ய முயல்வதைவிட, ஆர்கலியின் அலைகளை அமர்த்திருக்கச்
செய்யலாம். ஆதித்யனை ஆகாய மார்க்கத்தினின்றும் அகன்று போகச்
செய்யலாம்,காலச்சக்கரத்தைக் கையால் பிடித்து நிலை நிறுத்தலாம்,கருதரிய எக்
கர்மத்தையும் செய்து முடிக்கலாம், அம்மன்னவன் வாயினின்றும் அணுவளவு
அசத்தியம் வரச்செய்வது, அசாத்தியத்திலும் அசாத்தியத்தியமாம்.
விவேகியைப்போல் இவ்வேலையை இதனுடன் விட்டுவிடும். கக்ஷ்டமெல்லாம்
பட்டு கடைசியில் முடியாது என்று ஒப்புக் கொள்வதைவிட, அக் கஷ்டமெல்லாம்
இல்லாமலே இப்பொழுதே தோற்றதாக ஏற்றுக்கொள்ளும்.
வி. நானாவது தோற்றதாக ஏற்றுக்கொள்வதாவது? அது முடியாத காரியம். நீர்
உறைத்ததெல்லாம் உண்மையா யிருப்பினும், இனிமுன் வைத்த காலை நான்
பின் வாங்க முடியாது. ஆரம்பித்தபின் அனைத்தும் போவதாயினும் அதை
முடிப்பதென்னும் முயற்சியினின்றும் பின் வாங்குபவன் நான் அல்ல!
நா. ஆம்!ஆம்!நீர் க்ஷத்ரியராகப் பிறந்தீர் என்பதை மறந்தேன். உம்முடன் பிறந்த
குணம் உம்மை விட்டகலுமா என்ன!
வி. நாரதரே,இவ்வளவுதானா நீர் எனக்குச் செய்யத்தக்க உபகாரம்? அம்மன்னன்
வாக்கினின்றும் ஒரு அசத்திய வார்த்தை வரும்படியான மார்க்கம் எனக்கு ஒன்று
எடுத்துறைக்கமாட்டீரா? என் மீது பிரியமிருக்குமாயின் ஏதாவது ஒரு சூழ்ச்சி
செய்யும்.
நா. இதோ பார்க்கிறேன்-ஆம்-ஒரு யோசனை தோற்றுகிறது. அவனது
அரண்மனைக்கேகி, ஓர் யாகம் செய்ய வேண்டும், அதற்குப் பொன்
வேண்டுமென்று கேளும்; தாதாவாகிய அவன் உமது வேண்டுகோளுக் –
கிசைவான்; அவன் இசைந்தவுடன், அவன் இல்லை என்று சொல்லும் படியான
அவ்வளவு பெரும் நிதியைக்கேளும், அப்படி அந்த கஷ்டநிலைக் கவனைக்
கொண்டுவந்த பிறகு, ஏதாவது முயற்சி செய்து அவன் அசத்தியம் புகலும்படிச்
செய்யலாம்- அது முடியுமான காரியமனால். இந்த மார்க்கத்தை உமக்கு நான்
சொன்னபோதிலும்-அதனுடன் இந்த வார்த்தையையும் சொல்லுகிறேன்- உமது
சபதம் இதனால் நிறைவேறாதென்று; ஆகவே முயன்று பார்ப்பதானால் பாரும்.
வி. ஆம்-இது நல்ல சூழ்ச்சிதான்-நாரதரே, இந்த உபகாரத்தை என்றும் மறவேன்,
இனி நீர் விடை பெற்றுக்கொள்ளலாம்.
நா. அப்படியே செய்கிறேன். ஆயினும் நான் கூறியதை மறவாதீர்! இது
கைகூடாத காரியம்! [போகிறார்]
வி. காதி மைந்தன் மனம் வைத்தால் கைகூடாத காரியம் என்று ஒன்றுண்டோ?
நாரதர் கூறியது நல்ல யுக்திதான்-ஆம் ஆம் இதுதான் யோசனை!- பிறகு
இதைக் கொண்டு அவனை என் வலையிற் சிக்கச் செய்து, அவன் வாயினின்றும்
அசத்தியத்தை வரவழைத்து விடலாம். நான் உடனே ஹரிச்சந்திரன் சபைக்
கேகவேண்டும். இனி ஒரு கணமும் விருதாவிற் கழிக்கலாகாது. இந்த நாரதர்
கலஹப் பிரியர்,எனக்கு முன்பாகப்போய் அவ்விடம் ஏதாவது கலகம் செய்தாலும்
செய்வார். நான் தாமதிக்கலாகாது. வசிஷ்டரே!நீர் தீர்த்த யாத்திரை புறப்பட
எல்லாம் சித்தம் செய்யும்! [விரைந்து போகிறார். ]
காட்சி முடிகிறது.
--------------------------------------
இரண்டாம் காட்சி
-அயோத்தியில் சந்திரமதியின் பள்ளியறை. சந்திரமதி சயனத்தின்மீது உறங்குகிறாள்.
அருகில் தேவதாசன் உறங்குகிறான். ஹரிச்சந்திரன் பக்கலில் மெல்ல உலாவிக் கொண்டிருக்கிறான்.
ஹ. எழுப்புவோமா சந்திரமதியை?-அருணோதயந்தான் (*)தவிர, இன்னும்
சூரியோதயமாகக் கால மிருக்கிறது. அயர்ந்து நித்திரை செய்கிறார்கள்
என்னாருயிர்க் காதலியும் அருமை மைந்தனும்; இப்பொழுதே இவர்களை
எழுப்பி நான் கண்ட கனவினை இவர்களுக்குக் கூறி, இவர்களைக் கவலைக்
குட்படுத்துவானேன் நான்? எனக்கு நேரிடும் இன்பத்திலும் துன்பத்திலும் சமபாக
முடையவளாதலால் என் மனைவியிடமிருந்து நான் இதை மறைத்துவைக்க
லாகாது. தானாக விழிக்கும் வரையில் தனியாக நான் பொறுக்கிறேன்.
அதுவரையில் இப் பலகணி யருகில் நின்று பாலசூரியர் உதிப்பதைக் கண்டு
உளம் மகிழ்கிறேன்-- அதோ! இப்பொழுதுதான் உதயகிரியின் உச்சியில்
உதயமாகிறார் எனது வம்சத்திற்கு ஆதி காரணமாகிய ஆதித்ய பகவான்! சூரிய
பகவானே உமது வம்சத்தி லுதித்தோரைச் சூழும் துன்பங்களை யெல்லாம்,
அந்தகார இருளை உமது ஆயிரம் கிரணங்களால் அகற்றுவதுபோல் அகற்ற
வேண்டியது உம்முடைய கடமையாகும். தபோமணி! நமஸ்கரிக்கின்றேன் நாயேன்
உம்பதம்!
[ நமஸ்கரிக்கின்றான். ]
உம்மைக்கண்ட பனிப்போல் எனக்குண்டாம் தீமைகளெல்லாம் பறந்தோடிப்
போமாக!
ச [உறக்கத்தில்] பிராணநாதா பிராணநாதா!
ஹ [அவளருகில் விரைந்து சென்று] என் கண்மணி சந்திரமதி! என்ன சமாசாரம்?
---ஓ! என் காதலியும் ஏதோ கனவு கண்டாற் போலிருக்கிறது!
---கண்ணே! கண்விழி! கண்விழி! கதிரவர் உதயமாயினார்!
[எழுப்புகிறான். ]
ச [கண் விழித்து] நாதா! கனவுதான்! கனவுதான்! கருணாநிதியே கடையோமைக்
காத்து ரட்சிப்பது தம்முடைய கடமையாகும்!
ஹ. கண்மணி, கவலைப்படாதே, நம்மைக் காத்திட கரத்தனிருக்கிறார். உன்
மனதைத் தேற்றிக்கொள். உன் உடல் ஏன் இவ்வாறு நடுக்கமுறுகிறது? நீயும்
கனவு கண்டனையா என்ன? என்ன கனவு? என்னிடம் சொல்.
ச பிராணநாதா! அகோரமான அக் கனவை எப்படி உரைப்பேன்! அதைக் கேட்பதும்
கர்ண கடூரமா யிருக்குமே உமக்கு! அதை நான் *உரைப்பதற்கும் என் நா
எழவில்லையே. அம்மட்டும் அது *நனவா யிராது கனவாயொழிந்ததே!
ஹ. சந்திரமதி, என் காதலியே, வீணான துயரத்திற் குட்பட்டு வெந்துயரிலாழாதே.
நீ கண்ட கனவைச் சொல் என்னிடம். ச. நாதா, ஆதித்யன்போல் தாம் தமது
அழகிய சிம்மாசனத்தில் வீற்றிருந்த பொழுது, கால சர்ப்பமொன்று தம்மைக்
கட்டிப் பிடித்து தம்மை அதினின்றும் கீழே தள்ளியதாகக் கனவு கண்டேன்
முதலில்; பிறகு அதன் உடலால் உம்மை நன்றாய்ச் சுற்றிக்கொள்ள, அதினின்றும்
விடுவித்துக் கொள்ள வகையறியாது பல துயரம்தாம் அனுபவிப்பதைப்
பார்த்ததாகக் கனவு கண்டேன்; கடைசியில் தாம் அக் கடும்பாம்பின் தலையை
நசுக்கிக் கொன்று அதன் கட்டினின்றும் விடுவித்துக் கொண்டதாகக் கனவு
கண்டேன். பிராணநாதா கனவிற்கண்ட பாம்பாயினும், அதைக் குறித்து
எண்ணும்போதெல்லாம் என் நெஞ்சம் பகீர் என்கிறதே.
ஹ. கடைத்தேறும் மார்க்கம் இருக்கிறது போலும்! – உமைபாகா! எல்லாம் உமது
பேரருளாகும்! கடையவர்களாகிய எம்மைக் காப்பது தம்முடைய கடமையன்றோ?
அளவற்ற தமது ஆற்றலுக்குமுன் அற்பர்களாகிய நாங்கள் எவ்வளவு? - தாம்
விட்டதே வழி!
ச. பிராணநாதா! என்ன தாம் யோசித்துக்கொண் டிருக்கிறீர்? இக் கனவு, இனி
உமக்கு நேரிடப்போகிற ஏதாவது கெடுதியைக் குறிக்கிறதென எண்ணுகிறீரா
என்ன?
ஹ. சந்திரமதி, உலகத்தில் நமக்கென்ன நேர்ந்தபோதிலும் உமைகேள்வரது
திருவுளமாகுமது என உறுதியாய் நம்பி யிருத்தல் வேண்டும். அவரன்றி
அகிலத்திலும் ஓர் அணுவும் அசையாது. ஆகவே யாதும் அவர் பாரமென்று
அவரது உள்ளத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டியது நமது கடன் - கண்மணி.
நானும் கண் விழிக்கு முன் கடுங் கனவொன்று கண்டேன். இருவரும் ஏக
காலத்தில் கடுமையாக கனவு கண்டது, நமக்கு நேரிடப் போகிற ஏதோ
கெடுதியைக் குறிக்கிறது போலும். ஆகவே அக் கண்டத்தினின்றும் கடவுள்
கைகொடுத்து நம்மைக் கரையேற்றும்படி பிரார்த்திப்போம்.
ச. பிராணநாதா! தாங்களும் கனவு கண்டீரா? அது இன்னதென்று அடியாள்
அறிய விரும்புகிறேன். நான் கண்டதைப்போல் அத்தனை கோரமானதா
யல்லா திருக்குமாக!
ஹ. அதுவும் கோரமானதே! கனவில் உன்னையன்றி இன்னும் இரண்டு
மனைவியர் எனக்கு இருந்தது போலும் கண்டேன். அவர்களுள் ஒருத்தி
குரூரமான ஓர் ராட்சசனால் என்னிடமிருந்து அபகரிக்கப்பட்டாள். கண்மணி,
நீயும் என்னை விட்டுப் பிரியும்படி நேர்ந்தது; மற்றொருத்தி மாத்திரம் என்னை
விட்டகலாதிருந்தாள். பிறகு நான் எண்ணுதற்குரிய இன்னலிற்பட்டு, கடைசியில்
மறுபடியும் உங்களிருவரையும் பெற்று நற்கதி யடைந்ததாகக் கனவு கண்டேன்.
ச. அந்தோ! பிராணநாதா! இக்கனவு இனி வரப்போகிறதைக் குறிக்கிறதோ?
ஹ. கண்மணி, எனது ராஜ்யத்தையு மிழந்து, உன்னையும் விட்டுப் பிரிந்து, பல
துன்பங்கள் நான் அனுபவிக்க வேண்டி வரும் போலிருக்கிறது; ஆயினும் எனது
சத்ய விரதத்தினின்றும் நான் பிறழேன். முடிவில் பரமேஸ்வரன் கருணையினால்
எனது ராஜ்யத்தையும் உன்னையும் பெறுவேன் என்றெண்ணுகிறேன். என்ன
இடுக்கணுற்றபோதிலும் இறுதியிலாவது இச் சுகத்தை நான் அடைவேனாக
அப் பரமன் அருளால்!
ச. அந்தோ! பிராணநாதா! உமது கனவு உண்மையாய் முடியுமாயின், விவாகமாகிய
பின் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாத நான், உம்மை விட்டு நான் எத்தனை
காலம் பிரிந்திருக்க வேண்டுமோ? உம்மைக் காணாது நான் இவ்வுலகில்
ஒருநாளேனும் உயிர் வாழ்வேனோ?
ஹ. கண்மணி,கவலைப்படாதே,கண்ணீரைத் துடைத்துக்கொள். கனவின்படி
நடந்தேறக் கடவுளின் இச்சையானாலும், கடைசியில் நாமிருவரும் ஒருங்கு
சேர்வோமல்லவா? அதை நினைந்து உன் மனதைத் தேற்றிக்கொள். அன்றியும்
இதில் நாம் முக்கியமாகச் சந்தோஷப்படவேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது.
என்ன கஷ்டத்திற்குட்பட்டபோதிலும், நாம் மேற்கொண்ட சத்ய விரததிற்கு பங்கம்
நேரிடாதல்லவா? பரமேஸ்வரன் நம்மீது அவ்வளவு அருள் புரிவதற்காக அவரது
பாதாரவிந்தத்தை அனுதினமும் நாம் போற்றவேண்டுமல்லவா?
ச. ஆம் ஆம்! பிராணநாதா, அவ்விரதம் நம்மை எப்படியும் ஈடேற்றும்.
தேவ. [கண் விழித்து எழுந்து] அண்ணா, அம்மா, நமஸ்காரம்.
[அவர்கள் பாதத்தில் நமஸ்கரிக்கிறான். ]
இருவரும். [எடுத்துக் கட்டியணைத்து] கண்ணே, எல்லாம் வல்ல கடவுள் என்றும்
உனக்கு இன்னருள் பாலிப்பாராக!
தேவ. அம்மா, என்ன முகம் வாடியிருக்கிறீர்கள்? அண்ணா - தாங்களும் என்ன
ஒருவாறா யிருக்கிறீர்கள்? - நான் அதிகமாகத் தூங்கிவிட்டேனா என்ன?
ச. கண்ணே, தேவதாசா, அப்படி யொன்றுமில்லை - பிராணநாதா, இதில்
எனக்கின்னொரு சந்தோக்ஷம். நாம் கண்ட கனவுகள் நமது மைந்தனுக்கு ஒரு
தீங்கையும் குறிக்காதிருக்கின்றனவே!
ஹ. பரமேஸ்வரன் கருணையினால் அங்ஙன மிருக்குமாக! சந்திரமதி, வா, நமது
காலைக் கடனை முடிப்போம். - இனி நேரிடப்போகிறதோ இல்லையோ, அதைக்
குறித்து இப்பொழுதே நாம் கவலைப்படுவானேன்? வரவேண்டியது வருங்கால்
வரட்டும், என்று நமது வாழ்நாட்களை நற்கர்மங்களில் உபயோகித்து, நம்மையும்
திர்ப்திசெய்து கொண்டு நமது பிரஜைகளுக்கும் திர்ப்தி கொடுக்கவேண்டியது நமது
கடமையாகும். [போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
--------------------
மூன்றாம் காட்சி.
இடம் - அயோத்தியில் ஹரிச்சந்திரனுடைய கொலுமண்டபம். ஹரிச்சந்திரன் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் இருபுடையிலும் இருக்கின்றனர். பரிவாரங்கள் சூழ்ந்து நிற்கின்றனர்.
ஹ. மந்திரி சத்யகீர்த்தி, தயையின்றிச் செங்கோல் நடத்துதல், தரணியின்மீது
கொடுங்கோ லரசு புரிவதாகும். அணிமுடி அணிந்த அரசர்க்கு இன்றியமையா
அருங்குணம் இத்தண்ணளியேயாகும். கருணையில்லா மன்னன்
காதகனேயாவான். ஆகவே, காம்போஜ மன்னனுக்கும் கலிங்கத்தரசனுக்கும்,
அவர்கள் செலுத்தவேண்டிய கப்பத்தில், அவர்கள் தேசங்கள் கருப்பினால்
பீடிக்கப்பட்டிருப்பதைக் கருதி, பாதி க்ஷமித்துவிட்டதாக, இத்தூதர்கள் மூலமாய்ச்
சேதி அனுப்பு.
சத். ஆக்கினைப்படியே சொல்லி யனுப்புகிறேன் - வானின்றிழியும் மழைக்கும்
காலவரம் பொன்றுண்டு, தம்முடைய கருணைக்கு அக்கால- வரையு மில்லை.
ஆகவே, அப்படிப்பட்ட அருட்பெருங்கடலாகிய தமக்கு நேற்றைத்தினம் கண்ட
கனவினால் ஒரு தீங்கும் நேரிடாவண்ணம் தெய்வம் காப்பாற்றுமாக! ஒரு கால்
நேரிடுவதாயினும் பரிதியைக் கண்ட பனிபோல் எளிதில் பறந்தோடிப்போகுமாக!
ஹ. அங்ஙனமே இருக்குமாக! ஆயினும் சத்யகீர்த்தி, எந்த இடுக்கண் வருவதாயினும்
வருக, என்று திடச்சித்தமாய் நாமிருந்து, நல்வழியிலேயே நடப்போமாயின்,
எப்படிப்பட்ட கஷ்டம் நேரிட்டபோதிலும், ஈசன் திருவுளம் அதுபோலும், என்று
அதைப் பொறுமையுடன் பொறுத்திட, ஆற்றல் நம்மை விட்டகலாது.
சத். ஆயினும் அண்ணலே, சத்திய மார்க்கத்தினின்றும் தவறாத, தர்ம சொரூபியராகிய
தம்மைப்போன்றவர்களுக்கு கஷ்டத்தை அனுப்புவாரா கடவுள்?
ஹ. சுக துக்கங்களைக் கடந்த சுத்த ஞானிகளும் பூர்வ கர்ம பலனை
அனுபவித்துத்தான் தீரவேண்டும்.
வாயிற் காப்போன். பாராக்! மன்னர் மன்னனே! விஸ்வாமித்திர முனிவர்
தம்மைக்காண வந்திருக்கிறார், வாயிலில் காத்து நிற்கிறார்.
ஹ. என்ன! விஸ்வாமித்திர மஹரிஷியா? சத்யகீர்த்தி, உடனே சென்று
மஹரிஷியைத்தக்க மரியாதையுடன் அழைத்துவா. [சத்யகீர்த்தி போகிறான். ]
ஒரு மந்திரி. [ஒரு புறமாக] இச்சமயம் விஸ்வாமித்திரர் நமது அரசன் அவையை
அணுகுவானேன்? ஏதேனும் காரியமின்றி வருபவரல்ல கௌசிகர்.
மற்றொரு மந்திரி [ஒரு புறமாக] உம்முடைய மனதில் சந்தேகம் உதிக்காத காலம் எது?
சத்யகீர்த்தி விஸ்வாமித்திரரை அழைத்து வருகிறார்.
ஹ. [அவர் பாதத்தில் நமஸ்கரித்து] விஸ்வாமித்திர மஹரிஷி! அடியேன் ஹரிச்சந்திரன்
நமஸ்கரிக்கின்றேன்.
வி. [ஆசீர்வதிக்கிறார்] திருசங்குவின் மைந்தா! ஹரிச்சந்திரா! எழுந்திரு,
சிரஞ்சீவோபவ! உனக்கு எல்லா மங்களமும் உண்டகுமாக!
ஹ. [எழுந்து அர்க்கியபாத்யாதிகளைக் கொடுத்து] ஸ்வாமின்,மஹரிஷி, இந்த
ஆசனத்தில் எழுந்தருளியிருக்கவேண்டும். இன்றைத்தினம் நான் எழுந்த வேளை
நல்ல வேளை தங்களுடைய சீர்தங்கிய பாதங்களிற் பணிந்து என்னைக்
கிரதார்த்தனாகச் செய்தது; தங்கள் பாததூளிபட்டு இவ்வரண்மனை புனிதமாயிற்று,
இந்நாடு நன்னாடாயிற்று.
வி. ஹரிச்சந்திரா, நீயும் உன்னாடும் க்ஷேமந்தானா?
ஹ. ஸ்வாமின், எம்பெருமான் அருளாலும் தங்களைப் போன்ற தவ
சிரேஷ்டர்களுடைய கடாட்சத்தினாலும் க்ஷேமமாயிருக்கிறோம் – முனிபுங்கவரே,
தாங்கள் இவ்வளவு தூரம் நாயேனை நாடி வந்ததெக்- காரணமோ நவில
வேண்டும். ஆக்கினையை நிறைவேற்ற அடியேன் காத்திருக்கிறேன்.
வி. வேறு விசேஷ மொன்று மில்லை ஹரிச்சந்திரா, நான் ஒரு யாகம் இயற்ற
எண்ணியிருக்கிறேன், அதற்கு உன்னுடைய உதவி கொஞ்சம்
வேண்டியிருக்கிறது. அதற்காகவே இவ்விடம் வந்தேன்.
ஹ. ஸ்வாமி, அதைக் கேள்வியுற்று ஆநந்த பரவசனானேன்! அடியேனை ஒரு
பொருளாக வெண்ணித் தாம் இங்கடைந்தது எனது முன்னோர்கள் செய்த
பூஜாபலனே என்று நினைக்கிறேன். மஹரிஷி, தாம் இயற்ற எண்ணிய
யாகத்திற்கு என்னால் எவ்விதத்தில் உதவி புரியக்கூடும் என்று தெரிவித்தால்,
உடனே என்னாலியன்ற அளவு தம்முடைய ஆக்கினையை சிரசாவஹித்து அதை
ஈடேற்றச் சித்தமா யிருக்கிறேன்.
வி. வேறு உதவி வேண்டியதில்லை. இந்த யாகத்தை ஈடேற்றுவதற்குக் கொஞ்சம்
திரவியம் வேண்டியிருக்கிறது. அதைக்கொடுப்பாயா நீ?
ஹ. தங்களுடைய ஆசீர்வாதத்தால் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்,
அதன்பொருட்டு என் ராஜ்யத்தை விற்கவேண்டி வரினும் அங்ஙனமே செய்யச்
சித்தமாயிருக்கிறேன் மஹரிஷி. தாங்கள் வேண்டிய பொருள் எவ்வளவோ
தமியேனுக் குறைத்திடவேண்டும்.
வி. உனது தேசத்திலுள்ள உயர்ந்த யானை யொன்றின் மீதேறி, வல்லான் ஒருவன்
வலுக்கொண் டெய்யும் மாணிக்கம் செல்லும் உயரமளவு பொன் எனக்கு
வேண்டியிருக்கிறது.
ஹ. ஸ்வாமி, இவ்வளவுதானே? - இதோ கொடுக்கின்றேன். சத்யகீர்த்தி, நம்முடைய
பொக்கசங்களில் ஒன்றைத் திறந்து நமது மஹரிஷி குறித்த பொன்னை அவரிடம்
உடனே ஒப்பிப்பாய்.
வி. [ஒரு புறமாக] என்ன ஆச்சர்யம்! இத்தனை ஐஸ்வர்யம் இவனிடம் இருக்கிறதா?
ஆரம்பத்திலேயே அகப்படுவான் என்று பார்த்ததற்கு அபசகுனமாய் முடிந்ததே.
அதுவும் மனம் கோணாது கொடுக்க இசைந்தான். இவனை வெல்வ தெளிதல்ல –
ஆயினும் பார்ப்போம் - வேறு யுக்தி செய்ய வேண்டும்.
ஹ. மஹரிஷி, மற்றும் தங்கள் கட்டளையை எதிர் பார்த்திருக்கிறேன்.
வி. இப்பொழுது வேறொன்றுமில்லை - ஹரிச்சந்திரா, இந்த பொன்
இப்பொழுதெனக்கு உடனே வேண்டியதில்லை. ஆகவே, இதை உன்னிடமே
வைத்துப்போகிறேன். சீக்கிரத்தில் மறுபடியும் வந்து, எனது ஆஸ்ரமத்திற்கு
எடுத்துப் போகிறேன். தற்காலம், அந்த யாகத்தின் பொருட்டு சில விஷயங்கள்
நான் மேருபர்வதம் சென்று அவ்விடத்திலுள்ள சில மஹரிஷிகளைக் கேட்க
வேண்டியிருக்கிறது.
ஹ. தங்கள் சித்தபடியே.
வி. ஆகவே ஹரிச்சந்திரா, இப்பொழுது நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். [அரசன் எழுந்து பணிய]
சகல மங்களானி பவந்து! [போகும்பொழுது ஒருபுறமாக] ஹரிச்சந்திரா! உன்னை
இவ்வளவு எளிதில் விட்டுவிட்டேன் என்றெண்ணாதே! இனி செய்யவேண்டியதை
இப்பொழுதே நான் தீர்மானித்திருக்கிறேன்; என் கையினின்றும் தப்ப
உன்னாலாகாது! [போகிறார்]
ஹ. சத்யகீர்த்தி,என்ன முகம் ஒருவாறா யிருக்கிறாய்? நீ ஏதோ யோசிப்பது
போலிருக்கிறது.
சத். அண்ணலே, என்னை மன்னிக்கவேண்டும். இந்த விஸ்வாமித்திர மஹரிஷி ஏதோ
கெட்ட எண்ணத்துடன் இவ்விடம் வந்திருக்கிறார் என்று என் மனத்தில்
படுகிறது. இல்லாவிடின் ஓர் யாகம் செய்வதற்காக இத்தனை பொன் அவருக்கு
எதற்காக? அன்றியும் அப்படி வேண்டியதா யிருந்தபோதிலும் அதை
அரைநொடியில் ஸ்ருஷ்டித்துக்கொள்ள அவருக்கு ஆற்றலில்லையா? திரிசங்கு
மஹாராஜாவிற்காக சுவர்க்கமொன்றைச் ஸ்ருஷ்டித்தவருக்கு இந்த
ஸ்வர்ணத்தைச் சிருஷ்டிப்பது ஒரு கடினமோ?
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, மஹரிஷிகளின் மனத்துக்குள்ளிருப்பதை ஆய்ந்தறியப்
பார்ப்பது நமக்கடுத்ததன்று.
வா-கா. பராக்! மன்னர் மன்னவனே! அரண்மனை யெதிரில் தம்முடைய
தேசஸ்தர்களிற் பலர் கூட்டமாய்க்கூடி தம்மிடம் ஏதோ மனு
செய்து கொள்ளவேண்டுமென்று தெரிவித்து நிற்கின்றனர்.
சத். மஹாராஜா அவர்களுக்குச் சிரமம் வேண்டியதில்லை. நான் போய்
என்னவென்று விசாரித்து வருகிறேன்.
ஹ. உடனே சென்று அதை விசாரித்து வா. [சத்யகீர்த்தி போகிறான். ] பிரதான்,
நம்முடைய சைனியத்திலுள்ள மிகுந்த பலசாலியைத் தேர்ந்தெடுத்து,
விஸ்வாமித்திர முனிவர் விரும்பியபடி, அவனைக்கொண்டு கணக்கிட்டு,
அப்பொன்னை ஒரு புறமாகப் பத்திரமாக வைக்கும்படி, நமது பண்டாரத்
தலைவனிடம் நான் சொன்னதாக உத்தரவு செய்.
பி. சித்தப்படி மஹாராஜா. [போகிறான். ]
சத்யகீர்த்தி மறுபடி வருகிறான்.
ஹ. சத்யகீர்த்தி, என்ன அவர்களை விசாரித் தறிந்தாயா? அவர்கள் குறை
என்னவென்று?
சத். அண்ணலே, நமது தேசத் தெல்லையில் வசிக்கும் சிலர், தங்களுடைய பயிர்
பச்சைகளெல்லாம் காட்டு மிருகங்களால் நஷ்டமடைகிறதாக
முறையிடுகின்றனர்; அன்றியும் தாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டு அத் துஷ்ட
மிருகங்களையெல்லாம் அழிக்கவேண்டுமென்றும் வேண்டுகின்றனர்.
ஹ. அங்ஙனமே செய்வோம் உடனே. மன்னுயிரையெல்லாம் தன்னுயிரைப்போல்
பாதுகாப்பது மன்னவன் முதற்கடமையன்றோ? உடனே நமது வேடர்கள்
வில்லியர்களை யெல்லாம் சித்தமாகச் சொல். இவ்விஷயத்தில் தாமதம் என்பது
கூடாது. [போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
--------------------
இரண்டாம் அங்கம்.
இடம்-அயோத்தியை அடுத்த ஓர் வனம்.
ஹரிச்சந்திரன், சத்யகீர்த்தி, பிரதான். சில வேடர்கள் புடைசூழ வருகின்றனர்.
ஹ. இதனுடன் இன்றைத்தினம் வேட்டையை நிறுத்துவோம். இவ்விடம் தங்குவோம்
இப் பகல் பிரதான், கூடாரத்தை கூடிய சீக்கிரத்தில் அடிக்கச் சொல் ஒருபுறமாக.
அதோ அப்பக்கம் யாரோ மஹரிஷி ஆஸ்ரமம்போல் காண்கிறது. நம்முடைய
பரிவாரங்களெல்லாம் அதனருகிற் சென்று அங்குள்ளவர்களுக்கு இன்னல்
விளைவிக்காதபடி பார்த்துக்கொள்ளும்.
பி. சித்தப்படி மஹாராஜா. [வேடர்களை அழைத்துக்கொண்டு ஒருபுறம் போகிறான். ]
சத். அண்ணலே, இவ்வழகிய பசும்புற் றரைமீது அரை நாழிகை பள்ளிகொண்டு
இளைப்பாறும். காலை முதல் நடத்திய கடும் வேட்டையினால் மிகவும் களைப்புற்
றிருக்கிறீர்கள்.
ஹ. சத்யகீர்த்தி, என் உடம்பு தளர்வெய்தி யிருக்கிறது உண்மையே. ஆயினும்,
வேட்டையில் எனக்குள்ள உற்சாகம் தளரவில்லை. வேட்டையாடயாட
அதிலுள்ள உற்சாகம் அதிகரிக்கிறதே யொழிய குறைகிற தில்லை. – அதுவும் நம்
பிரஜைகளின் நலத்தைக் கோரிச் செய்யும்பொழுது
சத். ஆம், அப்படித்தா னிருக்கவேண்டும். இல்லாவிடின் அக் காட்டுப் பன்றியை
காட்டில் கறடு முறடு பாராமல், அது கொல்லப்படும் வரையில், கடுந்தூரம் பின்
தொடர்ந்து தாம் சென்றதற்கு, வேறு என்ன காரணம் கூறக்கூடும் நான்?
ஹ. ஆம், அப்பன்றி என்னைத் தொலைதூரம் பின்தொடரச் செய்தது; இதுவரையில்
நான் வேட்டையாடிய பன்றிகளைப்போல் அல்லாமல், அத்தனை வேகமும் பலமும்
அதற்கெங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.
சத். அண்ணலே, வேறு ஏதாவது பேசுவோம். அக் கடும் பன்றியைப்பற்றி
நினைத்தாலும் என் மயிர்க்குச் செறிகிறது!
ஹ. சத்யகீர்த்தி, நீயும் மிகவும் களைத்திருக்கிறாய், சயனித்துக்கொள் ஒருபுறமாக –
களைத்த உடம்பிற்கு இளைப்பாறுதல் இன்னமுதம்போல் தேற்றும் ஔஷதமாம்.
சத்யகீர்த்தி, என்ன நகைக்கிறாய்?
சத். அண்ணலே. அரண்மனையில் அம்சதூளிகா மஞ்சத்தின் மீது சயனிக்கும் தாங்கள்
இவ்வற்ப புல் தரையில் சயனிக்கும்படி நேரிட்டதே என்று யோசிக்கிறேன்.
இவ்விரண்டிற்கும் உள்ள தாரதம்யம் தாங்கள் அறிய வேண்டி யிருந்தது போலும்.
ஹ. அப்பா சத்யகீர்த்தி, இதனால் ஏதாவது கஷ்டப்படுகிறேன் என்று எண்ணுகிறாயா
என்ன? அப்படி யொன்றுமில்லை. பஞ்சணைமீது படுப்பதும் பசும்புற் றரைமீது
படுப்பதும் எனக்கு ஒரே சுகத்தைத்தான் கொடுக்கின்றன. சுகமும் துக்கமும் இவ்
வுலகில் வெளிப்பொருள்களா லொன்றுமில்லை; உள்ளுக்குள்ளே யிருக்கும்
உள்ளத்தைப் பொறுத்ததாம். மனமானது பருக்காங்கற்களையும்
பஞ்சணையைப்போல் மிருதுவாக்கும்; பஞ்சணையையும் கற்பாறைகளைப்போல்
கடினமாக்கும். அன்றியும், காலை முதல் கஷ்டப்பட்டு ஜீவித்து, கடும் நிசியில்
கட்டாந் தரையில் படுத்துறங்கும் கூலியாளுடைய சுகம், பட்டு வஸ்திரங்கள்
பரப்பப்பட்ட பஞ்சணைமீது படுத்துறங்கும் கொற்றவனுடைய சுகத்தைப்
பார்க்கிலும் குறைந்த பாடென் றெண்ணாதே! ஒரு விதத்தில் அணிமுடி யணிந்த
அரசன் அதிக கவலையினால் அயர்ந் துறங்குவது கடினம்; உள்ளத்தில்
கவலையின்றி உறங்குவான் நிம்மதியாய் அக் கூலியாள்.
பிரதான் மறுபடி வருகிறான்.
பி. ராஜாதிராஜனே,சிபிரம் சித்தமாய்விட்டது. -கட்டழ குடை இரண்டு கன்னியர்
ஏதோ தங்களைக் காணவேண்டுமென்று விரும்பி,அதோ தூரத்தில்
காத்திருக்கின்றனர்.
சத். அரசர் மிகவும் அலுப்படைந்திருக்கிறார்;ஆகவே அவர்களைப் பார்ப்பதற்கு இது
சமயம் அல்லவென்று சொல்லும்,போம்.
ஹ. அப்படியல்ல,சத்தியகீர்த்தி,அவர்கள் வரட்டும். அவர்கள் என்னைக் காண
வேண்டி நெடுந்தூரமிருந்து வந்திருக்கவேண்டும். என்ன குறையோ
அவர்களுக்கு, அதை விசாரிப்பது நம்முடைய கடமையன்றோ?- பிரதான்,
அவர்களை அழைத்து வா. [பிரதான் போகிறான். ]
சத். கன்னியர் தம்மைக் காணவேண்டி காட்டில் இத்தனை தூரம் என்னமாகக் கடந்து
வந்தார்கள்?இங்கு நீர் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?
[பிரதான் இரண்டு கன்னிகையர்களை அழைத்துக் கொண்டு கன்னிகைகள் அரசனை
வணங்குகிறார்கள்]. கன்னியர்காள், நீங்கள் யாரோ?எவ்விடமிருந்து
வருகிறீர்கள்? காட்டில் இத்தனை தூரம் என்னைக் காணவேண்டிக்
கடந்துவரவேண்டிய காரணமென்ன? என்னிடம் சொல்லக்கூடிய குறை
யேதேனும் இருந்தால் சொல்லுங்கள்.
மு-க மன்னர் மன்னனே! எங்கள் மனத்தில் குறையொன்றுமில்லை மன்னர்
மன்னனாகிய தாங்கள் செங்கோல் நடாத்தும்பொழுது மண்ணுலகில் யாருக்கு
என்ன குறையிருக்கப் போகிறது? நாங்கள் பரத சாஸ்திரம் நன்குணர்ந்த
பாவையர், அதில் எங்களுக்குள்ள சாமர்த்தியத்தை உங்களுக்குக் காண்பித்து
உம்மைச் சந்தோஷிப்பிக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. ஆகவே
அவ்வாறு செய்ய அடியேங்களுக்கு விடையளிக்க வேண்டுமென்று
வேண்டுகிறோம்.
பி. ராஜாதிராஜனே, போஜனம் சித்தமாவதற்கும் கொஞ்சம் காலமாகும்.
ஹ. சரி, ஆனால் உங்கள் இஷ்டப்படியே செய்யலாம்.
[கன்னிகைகள் கர்ணாமிர்தமான ஒரு பாட்டைப்பாடி அபிநயம் பிடிக்கின்றனர். ]
நல்லது நல்லது! மிகவும் நல்லது! இப்படிப்பட்ட கர்ணாமிர்தமான கானத்தை
இதுவரையில் நான் கேட்டதேயில்லை; மிகவும் நன்றாயிருக்கிறது!
[கன்னியர் ஓர் பதம் பாடி நடிக்கின்றனர். ]
சபாஷ்! சபாஷ்! மிகவும் சந்தோஷமாச்சுது! போதும் நிறுத்துங்கள் நீங்கள்
எடுத்துக்கொண்ட கஷ்டத்திற்குத் தமக்கபடி கைம்மாறு செய்ய தத்சமயம்
அசக்தனாயிருக்கிறேன். ஒரு சமயம் நீங்கள் அயோத்திக்கு வரும்படி யிருநதால்
அப்பொழுது உங்கள் வித்தைக்கேற்ற பரிசளிப்பேன். ஆயினும் சத்ய கீர்த்தி,
இவர்களை வெறுங்கையுடன் அனுப்பலாகாது. ஆகவே இவர்களிருவருக்கும்
நம்முடன் கொண்டுவந்திருக்கும் பொன்னில் ஆயிரம் கொடுத்தனுப்புவாய்--
மு-க ராஜாதிராஜனே, பொன்னை விரும்பி நாங்கள் உம்மிடம் வரவில்லை. மற்ற
மனிதர்கள் எமக்களித்த பொன் எம்மிடம் அபரிமிதமாய் இருக்கிறது. கொற்றவன்
கொடுக்கும்படியான பரிசைக் கோரியே, நாங்கள் உம்மை நாடினோம்.
ஹ. அது என்னவோ?
இ-க. உமது பூ சக்ரக்குடையை எமக்குப் பரிசாக அளிக்க வேண்டுகிறோம்.
ஹ. கன்னியர்காள்! நீங்கள் கேட்பது இன்னதென்று நீங்களே நன்றா யறிகிலீர்
போலும். அதைவிட நான் அணியும் முடியினைக் கேட்டிருக்கலாமே!
சக்ரவர்த்தியா யுள்ளவன் தான் அணியும் முடியினையும், தனது சத்ரத்தையும்,
பரிசாகக் கொடுக்கலாகாது. ஆகவே, நீங்கள் கேட்பதைக் கொடுக்க என்னால்
ஏலாது; உங்களுடைய அந்தஸ்திற்குத் தக்கபடியாயும், நான் கொடுக்கக்
கூடியதாயும், ஏதாவது கேளுங்கள்.
மு-க. ஆயின் அயோத்திமன்னா, எங்களுடைய முதல் வேண்டுகோளைத்தான்
மறுத்தீர், இரண்டாவதையாவது மறுக்காதீர். --நாங்கள் கன்னிகைகள், உங்கள்
மீது காதல் கொண்டோம், எங்களைக் கடிமணம் புரியும்.
சத். என்ன! இவர்களுக்கு பயித்தியம் பிடித்திருக்கிறதா?
ஹ. கன்னியர்காள், க்ஷத்திரியர்கள் ஒரு தாரத்திற்குமேல் பல தாரம்
கொள்ளலாமாயினும், நான் ஏகபத்னி விரதம் பூண்டவன், ஆகவே, உங்கள்
வேண்டுகோளுக்கு நான் இசைவது அடாது.
இ-க, அயோத்திமன்னா, இந்த அநீதி மாத்திரம் உமக்கடுக்குமோ? எங்கள்
கானத்தையும நடனத்தையும் கேட்டும் கண்டும் களித்து, எங்களைப் புகழ்ந்து,
நாங்கள் வேண்டுவதைக் கொடுக்காது எங்களை வெறுங்கையுடன் அனுப்புவது
தர்மமா?
ஹ. அதற்கு நான் என்ன செய்வேன்? நீங்கள் கேட்பது நான் கொடுக்கத் தக்கதா
யில்லை. ஆகவே நான் தர்ம வழியில் கொடுக்கக் கூடிய எதையேனும்
தாராளமாய்க் கேளுங்கள், தருகிறேன்.
மு-க. எங்களுக்கு வேறொன்றும் வேண்டாம். கேட்ட இரண்டி லொன்றை
எங்களுக்குக் கொடும். இல்லாவிடின் இவ்விடம் விட்டுப் பெயராது எங்கள்
உயிரை உமது முன்னிலையிலேயே விடுவோம்.
ஹ. பிரதான், இப் பேதைகளை என் முன்னின்றும் அழைத்துச் செல்.
பி. பெண்களே! நீங்களாகப் போகிறீர்களா, என்ன?
இருவரும். அப்படியா சமாசாரம்! அரசனே! எங்களை அடித்தா துறத்தப் பார்க்கிறீர்!
இதற்காக உம்மை என்னபாடு படுத்துகிறோம் பார்ப்பீர் சீக்கிரம்!
பி. மூடுங்கள் வாயை! என்ன அதிகமாய்ப் பேசுகிறீர்கள்! போங்கள்!
[துறத்திக்கொண்டு போகிறான். அவர்கள் ஓலமிட்டுக்கொண்டு போகிறார்கள். ]
ஹ. சத்யகீர்த்தி! இதோபார்! எனது இடதுதோள் துடிக்கிறது! ஏதோ எனக்கு
விரைவில் தீங்கு நேரிடும்போலத் தோற்றுகிறது.
சத். ஈசன் கருணையினால் அங்ஙனம் இல்லாதிருக்குமாக! அண்ணலே, நாம்
இவ்விடம் விட்டுப் போவோம். இங்கு வந்தது முதல் என் மனம்
ஒருவாறாய்த்தான் இருக்கிறது.
ஹ. அப்பா, அதில் என்ன பிரயோஜனம்? நமது விதியை விட்டு விலகிப்போகக்
கூடுமா நம்மால்? உனது நிழலை விட்டு ஓடிப்போக முடியுமோ உன்னால்?
ஆகவே, வருவது எங்கிருந்தாலும் வந்துதான் தீரும்--
விஸ்வாமித்திரர் கன்னியர்கள் பின் தொடர விரைந்து வருகிறார்.
வி. (மிகுந்த கோபத்துடன்) அடே! ஹரிச்சந்திரா! என்ன காரியம் செய்தாய் நீ?
இதுவோ உனக்கடுத்த நீதி! இதுவோ உன் ராஜதர்மம்? இதுவோ நீ செங்கோல்
நடத்தும் முறைமை? அரசன் அன்றொறுத்தால் தெய்வம் நின்றொறுக்கும்
என்பதை மறந்தனையா? தெய்வம் ஒன்றிருக்கிறது என்று, அதற்கு
அஞ்சாவிட்டாலும் நான் ஒருவன் இருக்கிறேன் என்று கொஞ்சமாயினும் உனக்கு
பயமில்லாமற் போச்சுதா?
ஹ. (அவர் பாதத்தில் பணிந்து) தவ சிரேஷ்டரே! தாங்கள் இவ்வாறு கோபித்துக்
கொள்ளும்படியாகத் தமியேன் செய்த குற்றம் இன்னதென்று அறிகிலேன். நான்
செய்த அபராதம் இன்னதென்று திருவாய் மலர்ந்தருள வேண்டும். அதற்குத்
தக்கப் பிராயச் சித்தம் செய்கிறேன்; விரைவிற் கூறும்படி வேண்டுகிறேன்.
வி. அடே! ஹரிச்சந்திரா! இக்கன்னிகைகள் யாரென்று தெரியுமா? எனது
ஆஸ்ரமத்தில் வசிக்கும் பெண்கள் இவர்கள். சற்று முன்பாக உன்னெதிரில்
தாங்கள் கற்ற வித்தைகளைக் காட்ட, அதைக் கண்டு களித்தும், அவர்கள்
கோரும்படியானதைக் கொடேன் என்று கூறியதுண்மைதானா?
ஹ. உத்தமரே, உண்மைதான். ஆயினும், அவர்கள் கேட்டதை தர்மப்படிக் கொடுக்க
நான் அசக்தனா யிருக்கிறேன். ஆகவே, தாங்கள் என்னை
மன்னித்தருளவேண்டும். அவர்கள் அந்தஸ்திற்குத் தக்கபடியும், எனது
தர்மத்திற்குத் தக்கபடியும், நான் அவர்களுக்குக் கொடுக்கத் தக்க எதையாவது
தாம் குறிப்பிட்டால், கொடுக்கச் சித்தமா யிருக்கிறேன். தாங்கள் சற்று கருணை
கூர வேண்டும்.
வி. கோபம் பற்றி எரியும்பொழுது கருணை கூர்வதாவது! இப்படித் தானோ உனது
ராஜ்யத்தை பரிபாலனம் செய்துகொண்டு வந்தாய்! மன்னர்கள்
மன்னனாயிருக்கப்பட்ட நீ, உன்னை நாடி வந்து உனது மனத்தைச்
சந்தோஷிப்பித்த கன்னியர்கள் கேட்கும் வரத்தைக் கொடுக்க
அசக்தனாயிருக்கிறேன் என்கிறாயா? ஏதா யிருந்தபோதிலும், இட்சணம் அவர்கள்
வேண்டுகோளுக்கிணங்குவாய், இல்லாவிட்டால் என் கொடிய
கோபத்திற்காளாவாய்!
ஹ. முனிசிரேஷ்டரே, தாங்கள் வீணில் என்மீது முனியலாகாது; அவர்கள் விரும்பிய
இரண்டையும் கொடுக்க நான் அசக்தனாயிருக்கிறேன். நானோ க்ஷத்ரிய
குலத்துதித்த அரசன், அன்றியும் ஏகபத்னி விரதம் பூண்டவன். ஆகவே என்னை
மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.
வி. அடே! ஹரிச்சந்திரா! என் கட்டளையை மீறப் பார்க்கிறாயா? நான்
யாரென்பதை மறந்து பேசுகிறாயா? உன்னுடைய தந்தையாகிய திரிசங்குவிற்குப்
புதிய சுவர்க்கமொன்றை உண்டுபண்ணிய ஆற்றலுடையவன் நான் என்பது
உனக்கு ஞாபகமில்லையோ? திரிலோகங்களையும் அரை க்ஷணத்தில் பஸ்மீகரப்
படுத்தும்படியான சக்தி யுடயவன் விஸ்வாமித்திரன் என்பதை எண்ணினா
யில்லை போலும்! கோபத்தில் ருத்திரன் குரு விஸ்வாமித்திரன், என்னும்
மொழியைக் கேட்டதில்லையோ நீ? மும்மூர்த்திகளையும் ஏவல் கொள்ளத்தக்க
வன்மையுடைய எனக்குக் கேவலம் நீ எம்மாத்திரம்? நான் பன்முறை கேளேனினி!
இதுவே என் கடைசி வார்த்தை. இவர்கள் வேண்டுகோளுக்கிசைந்து இவர்களை
மணம் புரிகிறாயா? அல்லது எனது கொடிய சாபத்தைப் பெறுகிறாயா?
ஹ. ஸ்வாமி, நான் சத்தியத்தையே விரதமாகப் பூண்டவன், ஏக பத்னி விரதத்தை
எடுத்துக் கொண்டபிறகு மற்றொரு மனைவியைக் கொள்ளல் அசாத்தியமாகும்.
தர்ம வழியினின்றும் தவறி நடப்பதைவிட, தந்தை போல் குரு ஸ்தானத்தி
லிருக்கப்பட்ட தங்களுடைய சாபத்தை வஹிப்பதே எனக்கு மேலாகும்.
வி. ஆனால் ஹரிச்சந்திரா! குரு ஸ்தானத்தி லிருப்பவர்களுடைய கட்டளைப்படி
நடக்க வேண்டியது தர்மமல்லவா?
ஹ. ஆம், அதனால் சத்தியத்தினின்றும் தவறாதிருப்பதானால்.
வி. ஆனால் உன் சத்தியத்தினின்றும் தவறாதபடி நான் ஏதாவது கட்டளை யிட்டால்
அதன்படிச் செய்கிறாயா?
ஹ. அதன்படிச் செய்யச் சித்தமா யிருக்கிறேன்.
வி. ஆனால் நான் சொல்வதைக் கேள் - நான் அரசனா யிருக்கிறோம் என்னும்
கொழுப்பே உன்னை இவ்வாறு என் கட்டளையை அவமதிக்கச் செய்கிறது-
அதை முன்பு அடக்குகிறேன். அடே! ஹரிச்சந்திரா! க்ஷத்தியர்களுக்குள் அநேக
அரசர்கள் அஸ்வமேதம் முதலிய யாகங்கள் இயற்றியபின் தங்களுடைய
ராஜ்யத்தை யெல்லாம் ரிஷிகளுக்கு தானமாகக் கொடுத்திருப்பதைப் பற்றி நீ
கேள்விப்பட்டிருக்கிறா யல்லவா? அதில் அதர்மம் ஒன்றுமில்லையே? அசத்திய
மொன்று மில்லையே?
ஹ. இல்லை ஸ்வாமி.
வி. அப்படி வா-ஆனால் உனது ராஜ்யத்தை யெல்லாம் நான் தானமாகக்
கேட்கிறேன். இப்பொழுது என்ன சொல்கிறாய்? ஹரிச்சந்திரா!
ஹ. ஸ்வாமி, நான் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது? இதோ கொடுக்கிறேன்
பெற்றுக்கொள்ளும்.
வி. என்ன! இப்பொழுதா?
ஹ. ஆம், ஸ்வாமி, இவ்விடத்திலேயே தாரை வார்த்துக் கொடுக்கிறேன். இந்தப்
பேறு எனக்குக் கிட்டவேண்டுமே! இன்னும் பொறுத்தென்றால்,
இவ்வநித்தியமாகிய காயம் அரைநொடியில் மாய்ந்தால் அப்பேறு எனக்குக்
கிட்டாமற் போகுமே! எந்னை . யீன்ற தந்தையாகிய திரிசங்குவிற்கு வேறு
சுவர்க்கத்தை சிருஷ்டித்து தானமாகக் கொடுத்த, தயாபரனாகிய தமக்கு, இவ்வற்ப
ராஜ்யத்தைக் கொடுப்பது ஒரு பெரிதோ? நான் கொடுப்பது கஷ்டமல்ல, தாங்கள்
கேட்பது கஷ்டம்! காலம் கழிந்து, உமது மனம் மாறி நீர் வேண்டாமென்றால்,
இப்பெரும் புண்ணியம் எனக்குக் கிட்டாமற் போகுமே! ஆகவே இந்த க்ஷணமே
பெற்றுக்கொள்ள வேண்டும்.
வி. [ஒருபுறமாக] என்ன ஆச்சரியம்! கொஞ்சமாவது முகம் கோணாது சொல்கிறானே!-
-அப்பா, ஹரிச்சந்திரா, ஏதோ அவசரப்பட்டுக்கொடுத்துவிட்டதாக அப்புறம்
துக்கப்படப்போகிறாய் தானம் கொடுப்பதென்றால் மனமொப்பிக்
கொடுப்பதுதான் தானமாகும். ஆகவே செய்யவேண்டுமெதையும்,
இல்லாவிட்டால் கவலைக் கிடங் கொடுக்கும் பிறகு.
ஹ. ஸ்வாமி, நான் கவலைப்படுவதெல்லாம், எங்கு தாம் யோசித்து, இது
வேண்டாமென்று வெறுக்கிறீரோ என்பதே! பிறகு எங்கு சத்பாத்திரமாகிய
தங்களுக்கு இப்படிப்பட்ட தானத்தைக் கொடுக்கும் புண்ணியம் எனக்குக்
கிட்டாமற் போகிறதோ, என்றே ஏங்குகிறேன்.
வி. [ஒரு புறமாக] என்ன ஆச்சரியம்! நாம் அவனைக் கொடுக்கும்படி வற்புறுத்துவதை
விட்டு, வாங்கிக் கொள்ளும்படி என்னை யன்றோ அவன் வற்புறுத்துகிறான்!--
ஆனால் ஹரிச்சந்திரா, நாளைத்தினம் உனது அரண்மனைக்கு வந்து அனைவரும்
அறிய உன் அரசை தானமாகப் பெறுகிறேன்-- இப்பொழுது நீ விடை பெற்றுக்
கொள்; உன் பரிவாரங்களை அழைத்துக்கொண்டு உடனே ஊர் போய்ச் சேர்.
இங்கு அவர்களிருப்பது தபோதனர்களுக்கெல்லாம் பெரும் இடஞ்சலா யிருக்கிறது.
ஹ. மஹரிஷி, கட்டளைப்படியே! -- இவ் விராஜ்ய பாரமாகிய பெருஞ் சுமையை என்
தோட்களினின்றும் நீக்க இசைந்த உமக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்
போகிறேன்! தாம் மறவாது நாளை அயோத்திக்கு வந்து சேரவேண்டும்.
வி. அப்படியே ஆகட்டும். நீ உடனே புறப்படுவாய். [கன்னியர்களை
அழைத்துக்கொண்டு போகிறார்]
சத். அண்ணலே! நான் கேட்டதெல்லாம் கனவோ? நினைவோ?
ஹ. நினைவுதான்; இன்றே என் ஜன்மம் சபலமாச்சுது. மஹரிஷிக்கு என் தந்தையிட
மிருந்ததைவிட என் மீது பிரீதி அதிகமா யிருக்கிறது போலும்.
சத். நான் அப்படி நினைக்கவில்லை.
ஹ. சத்யகீர்த்தி, அப்படி கூறாதே! இப்பொழுதே இவ் வரசெனும் பெரும் பாரம் என்
தோட்களை விட்டு நீங்கியதுபோல் சந்தோஷப்படுகிறேன். -- சீக்கிரம் நாம்
பரிவாரங்களை அழைத்துக்கொண்டு அயோத்தி போய்ச் சேர்வோம். [போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
------------------
இரண்டாம் காட்சி
இடம்-விஸ்வாமித்திரர் ஆஸ்ரமம் விஸ்வாமித்திரர் வருகிறார்.
வி. என்ன ஆச்சரியம்!நான் கண்டது கனவோ என்று நானே சந்தேகிக்கவேண்டி
வருகிறது. சொன்னசொல் தவறலாகாதென்று தனது ராஜ்ய முழுவதையும்
தானமாக, ஒரு காரணமு மின்றி,மனம் கோணாது கொடுக்கும் மன்னவன்
எவன்?இப்படிப்பட்டவன் ஒருவன் இருக்கிறான் என்று சற்று முன்பாக யாராவது
கூறி யிருந்தால், அதை நான் நம்பியிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட
உத்தமனையோ, உண்மை நெறியினின்றும் பிறழச் செய்யப் போகிறேன் நான்!-
ஜெயம் வசிஷ்டர் பால்தான்; நாரதர் கூறிய துண்மைதாம். இவனை அசத்தியம்
புகலச் செய்வதைவிட அப் பரம்பொருளின் ஸ்வரூபத்தை மாற்றுவது இலேசான
காரியம் போலும். -நான் மேற்கொண்ட காரியம் இப்படி யாகுமென்று நான்
எள்ளளவும் எண்ணியவனென்றே! எனது தவத்தில் பாதி கொடுக்கவேண்டி
வருகிறதே என்று நான் வருந்தவில்லை. அந்த வசிஷ்டரிடம் நான் தோல்வி
யடைந்ததாக ஒப்புக்கொள்ளுகிறதா, என்பதே என் மனத்தை வாட்டுகிறது. சீ!
நான் அதைரியப்படலாகாது! இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நான்
நாளைத்தினம் அவனது அரண்மனைக்குப் போனவுடன், அவன் வாக்களித்தபடி
தனது ராஜ்யத்தை தானமாகக் கொடுப்பான். அதைப்பெற்றுக் கொண்டதும் -
ஆம்! அதுதான் யோசனை!-அவனிடம் வைத்து விட்டுப் போன அப் பெரும்
பொருளைக் கொடுக்கும்படியாகக் கேட்கிறேன்! முன்பு கொடுத்ததும் அவனது
ராஜ்யத்தில் உட்பட்டுப் போனபடியால்,வேறு அத்தனை பொருள்
கொடுக்கவேண்டுமென்று வற்புறுத்துகிறேன். அதற்கு என்ன சொல்லுகிறானோ
பார்ப்போம். இதனால் என் வலையில் எப்படியும் சிக்குவான். பிறகு அவன்
வாயினின்றும் எவ்விதமாவது ஒரு அசத்தியத்தை எளிதில் வரவழைத்து விடலாம்.
ஆம்!இந்த யோசனை எனக்கு ஏன் முன்பே தோற்றாமற் போச்சுது?- இனி என்
பக்ஷம் ஜெயம் என்பதற்கையமில்லை!வசிஷ்டரே! இனி நீர் தீர்த்த யாத்திரைக்குப்
புறப்பட லக்னம் பார்க்கவேன்டியதுதான்! [விரைந்து போகிறார். ]
காட்சி முடிகிறது
-------------------------
மூன்றாம் காட்சி
இடம்-அயோத்தியில் ஹரிச்சந்திரன் கொலுமண்டபம்.
ஹரிச்சந்திரன், சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் புடைசூழ ஒரு புறம் நிற்கிறான். விஸ்வாமித்திரர், நட்சத்திரேசன் முதலிய முதலிய சிஷ்யர்களுடன் ஒரு புறம் நிற்கிறார். பரிவாரங்கள் இருமருங்கிலும் நிற்கின்றனர்.
வி. ஹரிச்சந்திரா,அவசரப்பட்டு ஒன்றும் செய்யாதே, ஆய்ந்தோய்ந்து பாராது செய்யும்
எக்கருமமும் இறுதியில் துக்கத்தைத்தான் விளைக்கும். ஆகவே
உனக்கிஷ்டமில்லாவிட்டால் இப்பொழுதே சொல்லிவிடு;நான் வற்புறுத்தவில்லை.
ஹ. ஸ்வாமி,கொடுத்தது கொடுத்ததே! இல்லையென்று வாய் கூசாது எவ்வாறு
கூறுவது?
வி. ஆனால்-மனதில் ஒன்றுமில்லையே உனக்கு?
ஹ. ஸ்வாமி,திரிகரணசுத்தியாய் மனப்பூர்த்தியாகக் கொடுக்கிறேன்,
பெற்றுக்கொள்ளும் தயைசெய்து.
வி. சரி!உன் இஷ்டம்-பிறகு துக்கப்படப்போகிறாய், இப்பொழுதே சொன்னேன்.
ஹ. ஸ்வாமி, இதற்காக நான் துக்கப்படமாட்டேன் என்று உறுதியாய்ச்
சொல்லுகிறேன். - தாங்களும் அதை உறுதியாய் நம்பலாம்.
வி. ஆனால் உன் விதி!-தாரை வார்த்துக்கொடு.
ஹ. இதோ, வாங்கிக்கொள்ளும்-விஸ்வாமித்திர முனிவரே! இதோ, ஆகாயவாணி
பூமிதேவி யறிய எனது அரசனைத்தையும் உமக்கு தானமாகக் கொடுத்தேன்!
கொடுத்தேன்! [தாரை வார்த்துக் கொடுக்கிறான். ] மஹரிஷி,தாங்கள் இந்த அரி
ஆசனத்தின்மீது ஆரோஹணிக்கவேண்டும். இந்த அணிமுடியை அணிந்து
கொள்ளவேண்டும். இச் செங்கோலைப் பெற்றுக் கொள்ளும். இந்த அரச
சின்னங்களை யெல்லாம் இனி ஆண்டு அனுபவியும்; இவையனைத்தும் இனி
உம்முடயவே- மந்திரிப் பிரதானிகளே! மற்றுமுள்ள பிரஜைகளே! இன்றைத்தினம்,
நான் இதுகாறும் ஆண்டு வந்த அயோத்தி அரசை, விஸ்வாமித்திர மஹரிஷிக்குத்
தானமாய்க் கொடுக்க அவரும் பெற்றுக் கொண்டபடியால், இனி அவரே
உங்களுக்கெல்லாம் அரசன், நீங்களெல்லாம் அவரது பிரஜைகளே. எனது
ஆட்சிக்குட்பட்டு அடங்கி நடந்தது போல் அவரது ஆட்சிக்குட்பட்டு அடங்கி
நடந்து சகல வைபவங்களையும் பெற்று சுகமாக நீடூழி காலம் வாழ்வீர்களாக!-
மஹரிஷி,அடியேன் செய்ய வேண்டியது இன்னும் ஏதேனு மிருக்கிறதோ?
வி. இல்லை-இனி நீ நமது சந்நிதானத்தை விட்டு ஏகலாம்.
ஹ. தங்கள் சித்தம் என் பாக்கியம். [நமஸ்கரித்துப் போகப் புறப்படு கிறான். ]
வி. பொறு பொறு!ஹரிச்சந்திரா,உன்னிடம் ஒன்று கூற மறந்தேன்.
ஹ. ஸ்வாமி,கட்டளையைக் காத்து நிற்கிறேன்.
வி. ஹரிச்சந்திரா, நீ எனது ராஜ்யத்தின் எல்லைக்குள் வாழலாகாது. நீ இங்கிருந்தால்,
எனது பிரஜைகளுக்குள் ஏதாவது கலகம் உண்டாயினும் உண்டாகும். ஆகவே
உனது மனைவி மக்களை அழைத்துக்கொண்டு தாமதிக்காமல் எனது ராஜ்யத்தின்
எல்லையை விட்டகன்று போகவேண்டும்.
ஹ. உத்திரவுபடி, உடனே புறப்படுகிறோம் - அடியேன் இனி
விடைபெற்றுக்கொள்ளலாமோ?
வி. செய் அப்படியே - ஆயினும் ஹரிச்சந்திரா, இப்படிவா?
ஹ. வந்தேன்.
வி. அரசர்க்குரிய இந்த ஆடையாபரணங்களெல்லாம் உனக்கேனினி? அவைகளை
யெல்லாம் கழற்றிக்கொடுத்துவிடு. [ஹரிச்சந்திரன் அங்ஙனமே செய்கிறான். ]
உன் மனைவி மக்களுடைய அணி ஆடைகளையும் என்னிடம் ஒப்புவித்து
விடவேண்டும், அவைகளெல்லாம் என்னைச் சேர்ந்தவை.
ஹ. அப்படியே செய்கிறேன்.
வி. அதுதான் சரி, உங்களுடைய தற்கால நிலைமைக்குத் தக்கதான ஆடைகளை என்
பிரதம சிஷ்யனாகிய நக்ஷத்திரேசன் உங்களுக்குக் கொடுப்பான், அதைப்
பெற்றுக்கொண்டு போங்கள்.
ஹ. தங்கள் அனுக்கிரஹப்படி - இனி எனக்கு உத்தரவு தானோ?
வி. ஆம். இனி போகலாம் - அடடா! ஹரிச்சந்திரா! ஹரிச்சந்திரா! இப்படி வா நீ!
மோசம் செய்வதில் நிபுணன் நீ என்பதை இதுவரையில் நினைத்தேனில்லை.
அவசரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை அடியுடன் மறந்தேன். – எனது
யாகத்திற்காக நீ கொடுக்க இசைந்த பொருள் எங்கே?
ஹ. ஸ்வாமி; அந்தப் பொன் எல்லாம் அப்படியே ஜாக்கிரதையாக பொக்கசத்தில்
ஒருபுறமாக வைக்கப்பட்டிருக்கிறது.
வி. பொக்கசத்தில்! யாருடைய பொக்கசத்தில்? எனது பொக்கசத்திலிருப்பது
என்னுடையதாகும், சற்று முன்பாக உன் அரசைஎல்லாம் எனக்கு நீ தானமாக
அளித்தபோழுது, அந்த அரசில் அப்பொக்கசமும் உட்பட்டதன்றோ? பொக்கசம்
உட்பட்டிருந்தால் அதிலுள்ள பொருளும் உட்பட்டதன்றோ? அந்த பொன்
பொருள்* நீங்கலாக என்று கூறினாயில்லையே? ஆகவே ஒரு வஸ்துவை இரண்டு
முறை நீ என்னமாகத்தானங் கொடுக்கலாம்? ஆகவே நீ முன்பு யாகத்திற்காக
எனக்குக் கொடுக்க இசைந்த பொருளை என் முன்பு கொணர்ந்துவை.
வைத்துவிட்டு அப்பால் அடி எடுத்துவை! என்னை இவ்வாறு மோசம்
செய்யலாமென்றா எண்ணினாய்? அடே! ஹரிச்சந்திரா!
ஹ. ஸ்வாமி, இதைப்பற்றி நான் இவ்வாறு யோசிக்கவில்லை.
வி. நீ யோசித்தாலென்ன யோசிக்காவிட்டாலென்ன? எனக்கதனாலாவ-
தொன்றில்லை. நீ அன்றைத்தினம் நான் குறிப்பிட்ட பொன்னை எனக்குக்
கொடுக்க இசைந்தாயா இல்லையா?
ஹ. இசைந்தது உண்மையே.
வி. ஆனால் முன்பு அப்பொருளைக் கொண்டுவந்து கொடுத்து விட்டுப்போ. நீ அதைக்
கொடுக்கவில்லை என்கிறாயா?
ஹ. ஸ்வாமி, என்னுயிருள்ளளவும் அவ்வார்த்தை என் வாயினின்றும் எப்படி வரும்.
வி. ஆனால் கொடு அப்பொருளை.
ஹ. [ஒரு புறமாக] கருணாநிதி! என்னைக் காத்தருளும் - ஸ்வாமி, அடியேன்மீது
கருணைகூர்ந்து ஏதாவது தக்கபடி தவணை கொடுப்பீராயின் அதற்குள் எக்
கஷ்டமாவது பட்டு அப்பொருளைச் சேகரித்து உம்மிடம் ஒப்புவிக்கிறேன்.
வி. உனக்குத் தவணை கொடுத்தென்ன பிரயோஜனம்? தவணைக்குள் எப்படி
அத்தனை பொருள் சேகரிக்கப் போகிறாய்?
ஹ. எந்த கஷ்டமாவது பட்டு சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறேன்.
வி. கையில் காசுமில்லாத நீ,அவ்வளவு பொருளைச் சேகரிப்பதெவ்விதம்? ஒரு
வேளை பிட்சை யெடுக்கலாம் என்று பார்க்கிறாயோ?அப்படிச் செய்வதாயினும்
எனது ராஜ்யத்தின் எல்லைக்குள் செய்யலாகாது. என்னுடைய ராஜ்யத்திலுள்ள
பொருளெல்லாம் எனக்குரித்தானது, ஆகவே என் பொருளைக்கொண்டே என்
கடனை அடைப்பதென்பது அடாது.
ஹ. ஆம் முனிசிரேஷ்டரே, தங்கள் ராஜ்யத்தின் எல்லைக்கு வெளியே போய்
அப்பொருளை எவ்விதமாவது தேடித் தருகிறேன்.
வி. ஆம். அதற்கு ஜாமீன் யார்?
ஹ. என் வார்த்தையே.
வி. ஒன்றுமில்லாத திவாலாகிய உன் வார்த்தையை நம்பி, உன்னை எனது
ராஜ்யத்திற்கு வெளியே அனுப்பிவிட்டால், என் பொன்னை நான் எப்பொழுது
காண்பது?
ஹ. ஸ்வாமி, தாங்கள் அதற்காகக் கொஞ்சமேனும் ஐயமுற வேண்டாம். தங்களுடைய
மனுஷ்யன் யாரையாவது என்னுடன் தாம் அனுப்பிவைத்தால் அவனிடம்
தவணைப்படி அப் பொன்னைக் கொடுத்தனுப்புகிறேன்.
அ. அப்படியே செய்வோம் - ஆயினும் - ஹரிச்சந்திரா, இத்தனை கஷ்டம் எல்லாம் நீ
ஏன் அனுபவிக்கவேண்டும், என்று யோசிக்கிறேன்.
ஹ. ஸ்வாமி, அதற்குப் பார்த்தால் ஆகுமோ? எப்படியும் சொன்ன சொல்லை
நிறைவேற்றவேண்டாமா? அதைப் பார்க்கிலும் சந்தோஷமான வேலை என்ன
இருக்கிறது? ஆகவே அன்பு கூர்ந்து என்னுடன் ஒரு ஆளை அனுப்புங்கள்,
அடியேன் உடனே புறப்பட்டு அந்த வேலையை முடிக்க யத்னம் செய்ய
ஆவலாயிருக்கிறேன்.
வி. சரி! உனக்கு நலம் தரும் மார்க்கத்தைக் கோர உனக்கே விருப்பமில்லாவிடின்,
அதை நான் கூறுவானேன் உன்னிடம்? - யார் அங்கே, நக்ஷத்திரேசா?
ந. ஸ்வாமின்!
வி. இப்படிவா - ஹரிச்சந்திரா, இந்த பிராம்மணனை உன்னுடன் அனுப்புகிறேன்.
என்னிடம் எவ்வளவு பய பக்தியுடன் நடந்து கொள்வாயோ, அப்படியே இவனிடம்
நடந்துகொண்டு, பதினைந்து நாள் தவணைக்குள்ளாக எனக்குச் சேரவேண்டிய
பொன்னை ஒன்றும் குறைவின்றி கொடுத்தனுப்பிவிடு. என்ன சொல்லுகிறாய்?
ஹ. அப்படியே ஸ்வாமி.
வி. ஆனால், இனி காலதாமதம் செய்யாது நீ புறப்படலாம்; உடனே போய் உன்
மனைவி மக்களைத் துரிதப்படுத்து. இதோ என் பிரதம சிஷ்யனாகிய
நட்சத்திரேசனுக்கு உங்களை இப்பதினைந்து நாட்கள் வரையில் காப்பதற்குத்
தக்க புத்திமதிகளைச் சொல்லி அனுப்புகிறேன் உனது பின்னால். இனி நீ விடை
பெற்றுக்கொள்ளலாம்.
ஹ. மகரிஷி. அடியேன் ஹரிச்சந்திரன் நமஸ்கரிக்கின்றேன். எனது கடைசி
வேண்டுகோள் - எல்லாமறிந்த தங்களுக்கு தெரியாததல்ல, ஆயினும் கூறுகிறேன்
மன்னிக்கவும். இந் நாட்டின் பிரஜைகளையெல்லாம் தங்கள் குழந்தைகளைப்
போல் கருணையுடன் காத்தருளவேண்டும் தாம்.
வி. அப்படியே செய்வோம், அஞ்சாதே போ!
ஹ. தன்யனானேன்! விடைபெற்றுக் கொள்ளுகிறேன். [வணங்கி போகிறான்;
சத்தியகீர்த்தி முதலியமந்திரிகள் முதலானோர் அவனைப்பின் தொடரப்
பார்க்கின்றனர். ]
வி. ஓஹோ! சத்தியகீர்த்தி! மந்திரிகள் முதலியோரே! எல்லோரும் வாருங்கள் இப்படி!
நீங்கள் எல்லோரும் ஹரிச்சந்திரனுடன் போய்விட்டால் நான் தன்னந்தனியாக
இங்கு தவிப்பதோ? அவன் பின்னால் நீங்கள் ஒருவனும் போகக்கூடாதென்பது
என்னுடைய ஆக்கினை! அதை மீறி நடக்கப் போகிறீர்கள் பத்திரம்!
சத். ஸ்வாமி, தங்கள் கட்டளைப்படியே; ஆயினும் அவரை இப்பட்டணத்தின் எல்லை
வரையிலாவது வழி விட்டு வரும்படி எம்மீது கருணை கூர்ந்து உத்தரவளிக்க
வேண்டும்.
வி. அப்படியே செய்யுங்கள் போங்கள்! அதற்கப்புறம் ஒரு அடியும் எடுத்து
வைக்கக்கூடாது.
சத். தங்கள் கட்டளைப்படி. [நட்சத்திரேசன் தவிர மற்றெல்லோரும் போகிறார்கள். ]
ந. நிரம்ப சரி!
வி. என்ன அப்படி சொல்லுகிறாய்?
ந. வேறென்ன சொல்வதற்கிருக்கிறது?
வி. உனக்கு நான் கொஞ்சம் கஷ்டம் கொடுக்க வேண்டியிருக்கிறதென்று
நினைக்கிறேன்.
ந. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
வி. என்ன? ஏதாவது ஜெயம் உண்டாகுமென்று நினைக்கிறாயா?
ந. ஜெயத்திற்கு சந்தேகமென்ன? உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்.
வி. ஜெயமுண்டாகுமென்று நீ எண்ணுவதைக் கேட்க மிகவும் சந்தோஷமாயிருக்கிறது.
ந. எண்ணுவதாவது? எனக்கு சந்தேகமேயில்லையே?
வி. எதைப்பற்றி?
ந. ஜெயம் உண்டாகும் வசிஷ்டருக்கென்பதைப்பற்றி!
வி. வசிஷ்டருக்கா!
ந. வேறு யாருக்கென்று நினைத்தீர்? உமக்கு ஜெயமுண்டாகுமென்று உமது
கனவிலும் எண்ணவேண்டாம்.
வி. அது ஏன் அப்படி?
ந. ஹரிச்சந்திரன் குணம் அப்படி.
வி. ஆயினும் - ஏன்* பார்க்கிறேன்.
ந. நானும் - பார்க்கப் போகிறேன்.
வி. வீண்வாதம் ஒருபுறமிருக்கட்டும் - இப்பொழுது ஹரிச்சந்திரனைப் பின்
தொடர்கிறாயா?
ந. அதற்குத் தடையென்ன, அப்பொழுதே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டேனே? –
இதில் அணுவளவும் பிரயோஜனமில்லை என்று நன்றாயறிந்தபோதிலும்.
வி. சரி, காலதாமதம் செய்யாது உடனே புறப்படு. இதுவே என் கட்டளை. அந்த
ஹரிச்சந்திரனையும் அவனது மனைவியையும் மைந்தனையும் கணமும் விடாது
கஷ்டதிற்குள்ளாக்கு அவன் வாயினின்றும் எவ்விதத்திலாவது ஒரு அசத்திய
மொழி வரும்படிச் செய். அவனுக்குக் கொடுக்கிறேனென்று சபதம் செய்த என்
பாதி தவப் பயனை உனக்கு அளிக்கின்றேன்.
ந. ஆமாம், இந்த பாபத்தையெல்லாம் ஆர் பெறுவது?
வி. அதற்கெல்லாம் அஞ்சாதே, நானிருக்கிறேன் - உயிருக்கு ஹானி வரும்படி
மாத்திரம் செய்யாது, அதை விட்டு, வேறு என்ன செய்தபோதிலும் செய், அந்த
பாபத்திற்கு நான் உத்தரவாதம்.
ந. எனக்கொரு சந்தேகம் - கருணாநிதி என்று உம்மை ஹரிச்சந்திரன் அழைத்தானா?
அப்படி அழைத்திருந்தால், ஹரிச்சந்திரன் பொய் பேசிவிட்டான் என்று
வசிஷ்டரிடம் கூறி, பந்தயத்தைத்தாம் ஜெயித்ததாகச் சொல்லும்; நான் அதற்கு
சாட்சி வருகிறேன்!
வி. விளையாடாதே! - கட்டளையிடவேண்டியது என் பாரம், அதை
நிறைவேற்றவேண்டியது உன் பாரம்.
ந. வாஸ்தவம் - நான் உமக்குச் சொல்லவேண்டியதும் என் பாரம்.
வி. என்னவென்று?
ந. நீர் தோல்வியடையப் போகிறீர் என்று.
வி. பாப்போம் அதை! - உன் வேலையைப்பார். இப்பொழுது வீணாகக் காலம்
கழிக்கின்றாய் இங்கே.
ந. அங்கே போய் இன்னும் அதிகமாகக் கழிக்கப்போகிறேனே வீணாக.
வி. சரி, நான் கூறியது ஞாபக மிருக்கட்டும்.
ந. நான் கூறியதும் ஞாபக மிருக்கட்டும் [போகிறான். ]
வி. என்ன எதிர்த்துப் பேசியபோதிலும், நட்சத்திரேசன் தன்னாலியன்ற அளவு
முயன்றே பார்ப்பான்! ஆயினும் இதுவரையில் என் சூழ்ச்சிகளெல்லாம் ஒன்றும்
பலிப்பதாகக் காணோம். முகம் கோணாது தனது ராஜ்ய முழுவதும் தானமாகக்
கொடுத்தவன், எதற்கு அஞ்சப் போகிறான். இனி? ஆயினும் எனது முயற்சியைக்
கைவிடலாகாது. அந்தக் கடனை எப்படி தீர்க்கிறானோ பார்க்கிறேன். அந்த
வசிஷ்டர் முன்னிலையில் நான் தோற்றதாக ஒப்புக்கொள்வதோ? - அதுதவிர
வேறெதையும் செய்யத் துணிவேன்! [போகிறார். ]
காட்சி முடிகிறது.
-----------------
நான்காம் காட்சி.
இடம் - அயோத்தியின் எல்லைப்புறம்.
ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன் அற்ப உடையணிந்து வருகின்றனர். சத்தியகீர்த்தி முதலிய மந்திரிப் பிரதானிகள், நகரமாந்தர், அழுதவண்ணம் பின் தொடர்கின்றனர்.
ஜனங்கள். எம்மிறையே! எம்மிறையே! நாங்கள் இப் பாழும் நாட்டில் இனி இருக்க
மாட்டோம்! இருக்கமாட்டோம்! நாங்களும் உங்களுடன் வந்து விடுகிறோம்!
வந்து விடுகிறோம்!
ஹ. அப்பா, நண்பர்களே, அது நியாயமல்ல! உமதரசனாகிய விஸ்வாமித்திரர்,
உங்களுக்கெல்லாம் இந் நாடெல்லை வரையில் சென்று வழிவிட்டு வரலாமென்று
உத்தரவளித்திருக்கிறார். அந்த கட்டளையை நீங்கள் மீறி நடப்பது தர்மமல்ல.
இதோ, இந்நாட்டெல்லைக்கு வந்துவிட்டோம் - ஆகவே நீங்களெல்லாம்
தயவுசெய்து திரும்பிப் போங்கள் - அப்பா, சத்தியகீர்த்தி, இவர்களையெல்லாம்
அழைத்துச் செல் நீ.
ஜன. அந்தோ! அந்தோ! தாய் தந்தையரைப்போல எம்மைக் காத்து ரட்சித்த உம்மை
விட்டு நாங்கள் எப்படி பிரிந்து போவோம்! எப்படி பிரிந்து போவோம்!
ந. நண்பர்களே, துக்கப்படாதீர்கள், விஸ்வாமித்திரமகரிஷி அரசராயிருந்தவர்.
பிரஜைகளைப் காப்பது அவர் அறியாத விஷயமன்று ஆகவே இனி நீங்கள்
விடைபெற்று கொள்ளுங்கள்.
மூவர்*. [ஹரிச்சந்திரன் பாதம் பணிந்து] அண்ணலே! அண்ணலே! நாங்கள்
விடைப்பெற்றுக் கொள்ளுகிறோம்! உமது திருமுக தரிசனம் இனி எங்களுக்கு
என்று கிட்டுமோ.
ஸ்திரீகள். [சந்திரமதியைப் பணிந்து] தாயே! தாயே! எங்களைக் காப்பாற்றுவார்
யாரினி? எங்களைக் காப்பாற்றுவார் யாரினி? உம்மோடு இந்த ராஜ்ய லட்சுமி
போய் விடுகிறதே! போய் விடுகிறதே!
சிறுவர்கள். அப்பா! தேவதாசா! தேவதாசா! போய் வருகிறாயா! போய் வருகிறாயா!
தே. உம் - வர்ரேன்.
சத். [ஹரிச்சந்திரன் பாதத்தில் வீழ்ந்து கதறியழுது] அண்ணலே! நானும்
உங்களைப்பிரிய நேர்ந்ததே! நேர்ந்ததே! என் பாவிக் கண்களால் உமது பாதார
விந்தைகளை மறுபடி எப்பொழுது பார்க்கப் போகிறேனோ?
ஹ. சத்தியகீர்த்தி, எல்லா முணர்ந்த நீயே இப்படி துக்கப்படலாமோ?
மற்றவர்களுக்கெல்லாம் புத்திமதி கூறி அவர்களைத்தேற்றி அழைத்துச்
செல்லவேண்டியது உன்னைப்போன்ற விவேகியினுடைய கடமையன்றோ?
அப்பா, ஏன் வருந்துகிறாய்? வருவது வந்தே தீரும், அதற்கு வருந்தியாவதேன்?
எழுந்திரு. [கைகொடுத் தெழுப்புகிறான். ] நண்பர்களே, நேரமாகிறது. இனி
எனக்கு விடை கொடுங்கள்! – [கைகூப்பி வணங்கி] இதுவரையிலும் தெரிந்தும்
தெரியாமலும் ஏதேனும் உமக்கு நாங்கள் பிழை செய்திருந்தால் அதற்காக
மன்னிப்பு கேட்கிறோம் - எங்களுக்கு விடை கொடுங்கள்.
ஜன. போய்வாருங்கள்! போய்வாருங்கள்! சீக்கிரம் சுகமாய் வந்து சேர்வீர்களாக –
உம்முடைய ராஜ்யத்திற்கு! [கண்ணீருடன் பிரிகின்றனர். ] என்ன ஹரிச்சந்திரா!
துக்கப்படுகிறாயே; இவ்வளவு துயரமேன் உனக்கு? இந்த ராஜ்யம் உனக்கு
மறுபடியும் வேண்டுமென்றால், ஒரு வார்த்தை சொல், முனிவரிடம் சொல்லி
உனக்குக் கொடுக்கும்படி செய்கிறேன். - இதற்காக இவ்வளவு
துயரப்படுவானேன்?
ஹ. ஸ்வாமி இந்த ராஜ்யத்திற்காக நான் துக்கப்படவில்லை. இது எனக் கினி
என்னத்திற்கு? கொடுத்தது கொடுத்ததே! - இதற்காக நான் துக்கப்படவில்லை.
இத்தனை ஜனங்களும் நமக்காகத் துக்கப்படுகிறார்களே! என்று எண்ணி
வருந்தினேன்; வேறொன்றுமில்லை ஸ்வாமி.
ந. ஆனால் இங்கேயே இருந்துவிடுகிறதுதானே? விஸ்வாமித்திரருக்குத்
தெரியப்போகிறதா? நான் ஒன்றும் அவரிடம் சொல்லவில்லை. – பணத்திற்கு
வேண்டுமென்றால். -
ஹ. ஸ்வாமி! ஸ்வாமி! உங்களை மிகவும் வேண்டிக் கொள்ளுகிறேன். இம்மாதிரியான
வார்த்தைகள் தாங்கள் என்னிடம் கூறாதிருக்க வேண்டும். நான் அசத்தியத்திற்கு
என்றும் ஆளாக மாட்டேன் என்று உறுதியாய் நம்பும்.
ந. ஆனால் உன் இஷ்டம். ஏதோ உன் மனைவி மக்களோடு கஷ்டப்படுகிறாயே
என்று பரிந்து இவ்வார்த்தையைச் சொன்னேன். பிறகு உன் இஷ்டம் –
புறப்படுவோ மினி, காலதாமதமாகிறது.
தேவ. அண்ணா, நாம் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோமா?
ஹ. ஈசனே! ஜகதீசா!
ந. கஷ்டம்! கஷ்டம்! சொன்னால் கேளாவிட்டால் - உன் பாடு! புறப்படுங்கள்.
ச. அயோத்யா தேவியே! நமஸ்கரிக்கிறோம்! விடைபெற்றுக் கொள்ளுகிறோம்! [எல்லோரும் போகிறார்கள். ]
காட்சி முடிகிறது. –
----------
ஐந்தாம் காட்சி.
இடம் - காசியைச் சார்ந்த ஓர் காடு.
ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், நட்சத்திரேசன், வருகிறார்கள்.
ச. பிராணநாதா, நாம் எப்பொழுது காசி நகரம் போய்ச் சேர்வோமோ? என் கால்கள்
சோர்கின்றன. நிற்பதும் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது – இதோ பாரும், நமது
கண்மணி தேவதாசன் பசியால் களைப்புற்று வருந்துகிறான்.
தேவ. ஆம் அண்ணா, எனக்கு மிகவும் பசியாயிருக்கிறது, எனக்கும் அம்மாவுக்கும்
ஏதாவது கொண்டுவந்து கொடுங்கள் புசிக்க.
ஹ. அந்தோ! இந்த கானகத்தில் எனக்கென்ன அகப்படப் போகிறது! -
ந. ஹரிச்சந்திரா, இங்கே வா இப்படி! என்ன செய்துகொண்டிருக்கிறா யங்கே உன்
மனைவி மக்களுடன்? இனி மேல் இந்த கதையெல்லாம் உதவாது. இந்தப்
பதினான்கு நாட்களாக, கறடு முறடு என்றும் பாராமல், காட்டு மிருகங்களையும்
பாராமல், கானகம் கானகமாகக் கடக்கச் செய்தாய், மேரு பர்வதம் போன்ற
மலைகளின் மீதெல்லாம் ஏறச் செய்தாய், அதி தீவரமாய் ஓடும் ஆறுகளை
யெல்லாம் தாண்டச் செய்தாய். இவ்வளவு நான் கஷ்டப்பட்டதின் பலன்,
எள்ளளவும் காணோம். நீ கொடுப்பதாகக் கூறிய பணத்தில் அரை பைசாவையும்
கண்டே னில்லை. இந்த இடத்தைவிட்டு நான் ஒரு அணுவளவும் நகரமாட்டேன்.
எப்படியாவது பணத்தைக் கொண்டுவந்து என் முன்பாக வை, இல்லாவிட்டால்
உன்னால் முடியாது என்று சொல்லிவிடு, நான் உடனே திரும்பிப் போய்
விஸ்வாமித்திரரிடம் அவன் கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறானெனக் கூறி
விடுகிறேன்.
ஹ. வேதியரே, என் மீது கொஞ்சம் இரக்கம் வையும்; நான் குறித்த தவணைக்கு
இன்னும் ஒரு தினம் இருக்கிறது. காட்டில் கொஞ்சதூரம் கடந்து செல்வோமாயின்
காசியை யடைவோம். இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு எங்களுடன் வருவீராகில்,
நாளைத்தினம் முனிவருக்குக் கொடுக்கவேண்டிய பொருளை முற்றிலும் கொடுத்து
விடுகிறேன்.
ந. இதுவரையிலும் உங்கள் பின்னால் அலைந்தது போதாது, இன்னும் கொஞ்சம்
அலையவேண்டுமா? அது முடியவே முடியாது. இவ்விடமிருந்து ஒரு அடியும்
எடுத்து வைக்கமாட்டேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை என் முன்பாக நீ
வைக்குமளவும் இவ்விடம் விட்டுப் பெயரேன்.
தேவ. அம்மா! அண்ணா! என் கால் எல்லாம் கொதிக்கிறது! கொதிக்கிறது!
ச. பிராணநாதா, அதோ நிற்கும் அம்மரத்தின் நிழலில் தாம் போய்த் தங்கலாகாதா
சிறிது பொழுது? இக்கட்டாந் தரை கொதிக்கிறது, சூரிய பகவானும் உச்சியில்
கொளுத்துகிறார், என் கால்களே தாளவில்லையே – நமது குழந்தை -
ஹ. ஸ்வாமி, அதோ அந்த நிழலில் போய்த் தங்கி கொஞ்சம் இளைப்பாறுவோமா?
ந. அதெல்லாம் முடியாது! இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்; இவ்விடம் எனக்கு
சவுக்கியமாகத்தானிருக்கிறது, என்னை இங்கே தனியே விட்டுவிட்டு நீங்கள்
எல்லாம் ஓடிபோகப் பார்க்கிறீர்களா என்ன?
ஹ. ஸ்வாமி, அப்படிப்பட்ட எண்ணம் அடியேனுக் கொன்று மில்லை. இந்த எனது
வேண்டுகோளுக்கு தயைசெய்து இரங்கும். இவள் ஸ்திரீ ஜாதி, இவன் அறியாப்
பாலகன், இவர்களால் இச் சுடுகையும் வெப்பமும் தாங்க முடியவில்லை.
ந. தாங்க முடியாமற்போனா லெனக்கென்ன? நீ மாத்திரம் சொன்ன சொல்
தவறலாகா தென்கிறாயே, இவ்விடம் விட்டுப் பெயரமாட்டேன் என்று நான்
சொன்ன சொல்லை நான் ஏன் தவற வேண்டும் இவர்களுக்காக? என் பணத்தைக்
கொண்டுவந்து எண்ணி வை இப்படி, நான் எழுந்து வருகிறேன்.
தேவ. அம்மா! - அண்ணா! - பசி! பசி! [மூர்ச்சையாகிறான்]
ச. பிராணநாதா! நமது குழந்தை பசியால் மூர்ச்சையானான்! நானும்
மூர்சையாவேன்போ லிருக்கிறது! என்னைச் சற்றே தாங்கும் - தாங்கும்! [ஹரிச்சந்திரன் அவளைத் தாங்க விரைகிறான். ]
ந. ஹரிச்சந்திரா! ஹரிச்சந்திரா! வா இப்படி! வா இப்படி! என் கால் எல்லாம் சுடுகிறது!
சுடுகிறது! தூக்கு! தூக்கு என்னை! -
ஹ. இதோ வந்தேன் ஸ்வாமி! [நட்சத்திரேசனிடம் போகிறான். ]
ந. என்னால் எழுந்திருக்கவும் முடியவில்லை, என்னை அப்படியே தூக்கிக்கொண்டு
போய் அந்த நிழலில் வை. என்ன உன் பெண்சாதி பிள்ளைகளைப்
பார்த்துக்கொண்டு நிற்கிறாயே! அவர்களுக்குத் தெரியும் அவர்களைப்
பாதுகாத்துக்கொள்ள. ஏழை பிராம்மணனாகிய என்னைக் காப்பாற்றுவது தான்
உனது முதற் கடன். [ஹரிச்சந்திரன் நட்சத்திரேசேனைத் தூக்கிக்கொண்டு போய்
மர நிழலில் வைத்துவிட்டு சந்திரமதி இருக்குமிடம் வருகிறான். ]
ஹ. அந்தோ! என் காதலிக்கும் காதலனுக்கும் இக் கதி வாய்க்கவேண்டுமா? [தேவதாசனை எடுத்துத் தோள் மீது சாத்திக்கொண்டு,சந்திரமதி முகத்தில் கற்றேழ தன் மேலாடையால் விசுகிறான். ]
ச. [மூர்ச்சை தெளிந்து] பிராணநாதா! உங்களுக்கு நான் எவ்வளவு கஷ்டம்
கொடுக்கிறேன்! - கொஞ்சம் ஜலம் கொண்டுவர முடியுமா? என் நா உலர்ந்து
போகிறது. - குழந்தையின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்போமாயின்
அவனும் மூர்ச்சை தெளிவான். அவன் முகத்தைப் பாரும் என்ன வெளுத்துக்
காட்டுகிறது!
ந. ஹரிச்சந்திரா! என்ன சல்லாபமாய்ப் பேசிகொண்டிருக்கிறா யங்கே உன்
மனைவியுடன்? வா இப்படி சீக்கிரம்.
ஹ. ஸ்வாமி, இதோ வருகிறேன். - சந்திரமதி, கொஞ்சம் பொறுத்துக்கொள்.
அதோ, அந்த நிழலி னருகிற் செல்வோம் முதலில். பிறகு, இக் கோரமான
கானகத்தில் எங்காவது ஜலம் இருந்தால் கொண்டுவந்து தருகிறேன்.
ச. நாதா! நாதா! நமக்கு இப்படிப்பட்ட கதியும் வாய்க்க வேண்டுமா!
[கண்ணீர் விடுகிறாள். ]
ஹ. கண்மணி, கண்ணீர் விட்டுக் கலங்கிடாதே. நம்மா லாவதென்ன இருக்கிறது
இந்நாநிலத்தில்? யாது மவன் செயலென்று உறுதியாய் நம்பி, என்ன கஷ்டம்
நேர்ந்த போதிலும், நமது நன்மையின் பொருட்டே அவ்வாறு நடத்துகிறார்
பரமேஸ்வரன் என்று, நிச்சயமான புத்தியுடையவர்களா யிருத்தல் வேண்டும் நாம்.
நாம் இதுவரையில் அனுபவித்த கஷ்டங்களெல்லாம் இனிமேல் நமக்கு
நேரவிருக்கிற கஷ்டங்களை அனுபவிப்பதற்கு வழி காட்டுகின்றன வல்லவா?
ஆகவே தைரியத்தைக் கைவிடாதே. நம்மைப் படைத்தவர் அறிவார் எது நமக்கு
நன்மையானதென்று. இக் கஷ்டங்களை யெல்லாம் நாம் அனுபவிப்பது, நாம்
முன் ஜன்மங்களிற் செய்த பாப பரிகாரத்தின் பொருட்டா யிருக்கலாம். அவர்
திருவுளத்தை அறிந்தார் யார்? ஆகவே மெல்ல நடந்து வா. இன்னும் கொஞ்சம்
தூரம் செல்வோமாயின் காசியை யடைவோம். காட்டுத் தீயினின்றும் தப்பினோம்,
கடும் பூதத்தின் கையினின்றும் பிழைத்தோம், கடுவாய் முதலிய மிருகங்களின்
வாயினின்றும் உய்ந்தோம். இக் கஷ்டங்களை யெல்லாம் நீக்கியருளிய ஈசன்,
மற்றவைகளினின்றும் நம்மைக் காத்திட மனம் வையாரா? ஆகவே மனதை
தைரியப்படுத்திக்கொள்.
ந. ஒ! ஹரிச்சந்திரா! இந்த தூரம் நடந்து வருவதற்கு இத்தனை காலமா? நிலவில்
ஒய்யாரமாய் நடப்பதுபோல் நடந்து வருகிறாயே! - வா விரைந்து. - ஹரிச்சந்திரா,
உடனே போய் எனக்குக் குடிக்க ஜலமும், புசிக்க ஏதாவது கனிவர்க்கமும்
கொண்டுவா. பசியால் களைத்துப் போகிறேன். நா வுலர்ந்து போகிறது! சீக்கிரம்!
சீக்கிரம்!
ஹ. ஸ்வாமி, அப்படியே ஆகட்டும், கூடிய சீக்கிரத்தில் வருகிறேன்.
[தேவதாசனைச் சந்திரமதியிடம் கொடுத்துவிட்டு விரைந்து போகிறான். ]
தேவ. [மூர்ச்சை தெளிந்து] அம்மா! - பசி! - பசி!
ச. கண்ணே, தேவதாசா, என் கண்மணியே, கொஞ்சம் பொறு அண்ணா உணவு
கொண்டுவரப் போயிருக்கிறார். சீக்கிரம் வந்து விடுவார் - கண்மணி! உன்
தலைவிதியும் இப்படியிருந்ததா? மன்னர் மன்னனுக்குப் புதல்வனாய்ப் பிறந்தும்,
மண்ணினில் எல்லாச் செல்வங்களையுமிழந்து, காடு மலைகளெல்லாம் கால்
நோகக் கடந்து சென்று, கடும் பசியால் களைப்புற்று, கட்டாந்தரையிற் படுத்துக்
கிடக்கும்படி உன் தலையில் பிரம்மதேவன் வரைந்தானோ? கண்ணே! கண்ணே!
என்பொருட்டு நான் வருந்தவில்லை, பசி பசியென்று பரதேசியைப்போல்
பரிதபிக்கும் பாலன் உன் முகத்தைப் பார்த்து நான் எப்படியடா சகிப்பேன்
பல்கோடி பெயர்களுடைய பசியை ஆற்றும்படியான ஸ்திதியிலிருந்த நாங்கள்,
பாலன் ஒருவனாகிய உன் பசியை ஆற்றுதற்கு அசக்தர்களா யிருக்கிறோமே!
பரமேஸ்வரா! பரமேஸ்வரா! பாரினில் எங்களைப்போன்ற
தௌர்ப்பாக்கியசாலிகளும் இருக்கிறார்களோ?
ந. ஆ! பரமேஸ்வரா! பரமேஸ்வரா! என்னைப் பார்க்கிலும்
தௌர்ப்பாக்கியசாலியாகிய பிராமணனும் இப் பூமண்டலத்தில் இருக்கிறானோ?
அகத்தில் உட்கார்ந்து கொண்டு, அறுசுவை யுண்டியை ஆறுவேளை போஜனம்
செய்து கொண்டு, எல்லோரும் என் தாள் பணிந்து தட்சிணை கொடுக்க அதைப்
பெற்றுக்கொண்டு, சுகமா யிருந்த நான், இந்தப் பாவிகளைப் பின் தொடர்ந்து,
பசியால் வருந்தி, பரதேசியைப்போல் பரிதபிக்கலானேனே! ஒரு கஷ்டமா
படுத்தினார்கள் என்னை? அக்னியாற்றில் அமிழ்த்தப் பார்த்தார்கள், வன
விலங்குகளின் கையிற் சிக்கச் செய்தார்கள், பூதத்தின் வாய்க்கு
இரையாக்கினார்கள். இந்த பதினான்கு தினமும் நான் பட்ட கஷ்டமிருக்கிறதே,
அந்த பகவானுக்குத்தான் தெரியும்! இந்த கஷ்டங்களையெல்லாம் கூட நான்
கவனிக்கமாட்டேன்! ஒரு வேளையாவது நல்ல சாப்பாடு உண்டா? ஒரு சிரார்த்த
போஜனமாவது கிடைத்ததா? பால் பாயசத்துடன் பிரமான்ன* போஜனம் புசித்த
நான், பட்டினியால் வதங்கி வற்றலாயுலர்ந்து, காற்றாய்ப் பறக்கின்றேனே! ஒரு
வேளைக்கு, ஒரு வீசை நெய். இரண்டுபடி பால், மூன்று தூக்குக் கோதுமைக்கு
குறையாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான், காட்டில் உலர்ந்த சருகுகளை
உண்டு கசம்புத் தண்ணீரைக் குடிக்கவேண்டி வந்ததே இந்த பாழும்* பதினான்கு
தினங்களாக, ஒரு சீப்பு வாழைப் பழம், ஒரு அன்னாசிப்பழம், ஒரு பலாப்பழம், ஒரு
பத்து மாம்பழம், எதையாவது என் பாவி கண்களால் கனவிலாவது
கண்டேனில்லையே*! என்ன தௌர்ப்பாக்கியசாலி! என்ன தௌர்ப்பாக்கியசாலி!
இப்படியும் என் தலையில் எழுதிவைப்பானா அந்த ஈஸ்வரன்? - இத்தனை
கஷ்டப்பட்டும் இதனால் ஏதாவது பலன் உண்டா? அதுவும் கிடையாது. இந்தப்
பாழாய்ப்போன ஹரிச்சந்திரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பணத்தை
யென்னமோ நான் பார்க்க போகிறதில்லை.
தேவ. ஏனையா என் அண்ணாவைத் திட்டுகிறார்கள்?
ந. நீ யாரடா என்னைக் கேட்பதற்கு? இவ்வளவு சிறு பயலுக்கு எவ்வளவு பெரிய
வாய்! இன்னொரு வார்த்தைப் பேசினால் உன்னைப் பிய்த்துவிடுவேன்*
தேவ. ஏன். நான் என்ன தப்பிதம் செய்தேனையா?
ச. கண்ணே, பேசாமலிரு. அவருக்குக் கோபம் வரும்படி செய்யாதே. - ஸ்வாமி,
அந்தணரே, எங்கள் மீது உமக்கு ஏன் இரக்கமென்பதில்லாமலிருக்கிறது? இது
வரையில் நாங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்களை யெல்லாம் தாங்கள் நேரிற்
பார்த்து வந்தும், எங்கள் மீது பரிதாபப்பட்டு ஒரு வார்த்தையேனும் பட்சமாய்ப்
பகரவில்லையே, நாங்கள் உமக்கு என்ன பாபமிழைத்தோம்?
ந. என்ன பாப மிழைத்தீர்களா? என்னைப் பட்டினியால் வதைக்கப்
பார்க்கவில்லையா? அக்னியால் கொளுத்தப் பார்க்கவில்லையா? ஆற்றில்
அமிழ்த்தப் பார்க்கவில்லையா? பூதத்திற் கிரையாக்கப் பார்க்கவில்லையா? கடும்
புலிவாயிற் சிக்கச்செய்யவில்லையா? அப்பா! – மூச்சுத் திணறுகிறதெனக்கு,
நீங்களிழைத்த பாபங்களையெல்லாம் சொல்வதென்றால்! -
ச. பிராம்மணோத்தமரே, தாங்கள் அவ்வாறு சொல்லலாகாது. ஆபத்துகள்
நேரிட்டபொழுதெல்லாம், முதலில் தங்களைப் பாதுகாத்த பிறகே, எங்களைப்
பாதுகாக்க நாங்கள் பிரயத்தனப்பட்டது, தங்கள் மனதிற்கு நன்றாய்த் தெரியும். -
[ஹரிச்சந்திரன் கொஞ்சம் கனிவர்க்கத்தையும் தண்ணீரையும் கொண்டு வருகிறான்].
தேவ. அண்ணா! அண்ணா! அந்த பழத்தைக் கொடுங்கள்! பழத்தைக் கொடுங்கள்!
ந. பொறு ஹரிச்சந்திரா! அந்த பழத்தையெல்லாம் முன்பு என்னிடம் வை –
மற்றவர்கள் எல்லோருக்கும் முன்பாக பிராம்மணன் புசித்துப்
பசியாரவேண்டுமென்கிற நீதி உனக்குத் தெரியாதா?
[பழங்களை யெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு விரைவாகத் தின்கிறான். ]
ச. ஸ்வாமி! குழந்தை மிகவும் பசியோடிருக்கிறான் களைத்துப் போகிறான்.
அவன்மீது கருணைகூர்ந்து ஒரு கனி மாத்திரம் அவனுக்கு தயவு பண்ணுங்கள்!
ஸ்வாமி! ஸ்வாமி! -
ந. அதெல்லாம் உதவாது, நான் பசியால் செத்துப் போகிறேன்! என் பசி
பத்திலொருபங்கு கூட தீரவில்லை. அவனுக்கென்ன, யார் வேண்டுமென்றாலும்
உணவு கொடுப்பார்கள்; அநாதையான எனக்கு யார் கொடுப்பார்கள்? இந்தா,
இதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது அதைக் குடித்து களைதீரச் சொல் –
துடுக்குப்பயல்! என்ன பேசினான் முன்பு?
ச. [அதை வாங்கிக்கொண்டு] ஸ்வாமி! இவ்வளவாவது தயவு பண்ணினீரே!
[தேவதாசனுக்கு அதைக் கொடுக்கப் போகிறாள். ]
ந. அடடா! கொண்டுவா இப்படி! கொண்டுவா இப்படி அந்த ஜலத்தை, என்
கைகளைக்கழுவ மறந்து போனேன், கொடு கொடு இப்படி! [அந்த ஜலத்தை
வாங்கிக் தன் கைகளைக் கழுவிக் கொள்ளுகிறான். ]
தேவ. அண்ணா! - என்ன பேராசை பிடித்த பிராம்மணன்!
ச. ஸ்! ஸ்! - கண்ணே! அப்படியெல்லாம் வெளியில் சொல்லாதே!
ந. அப்பா! - இப்பொழுதெல்லாம் சரியாகிவிட்டது - நேரமாகிறது புறப்படுவோம்
வாருங்கள். இருட்டு முன் காசிப்பட்டணம் போய்ச் சேரவேணும். புறப்படுங்கள்!
புறப்படுங்கள்!
ச. ஈசனே! ஜகதீசா! [கண்ணீர் விடுகிறாள். ]
ஹ. பரமேஸ்வரா! பரமேஸ்வரா! எந்த ஜன்மத்தில் என்ன பாபமிழைத்தோம் நாங்கள்
இக்கதியடைவதற்கு? நான் செய்த பாபமே என் மனைவி மக்களைப்
பீடிக்கிறதோ? இருக்கட்டும்! உம்முடைய திருவுளப்படியே நடப்பதெல்லாம்
நடக்கட்டும். இன்னும் எம்மை எக்கோலம் கண்டபோதிலும் உமது
பாதாரவிந்தங்களை விடப்போகிறதில்லை.
ந. இதோபார் ஹரிச்சந்திரா! இவ்வளவு கஷ்டமும் நீ வருவித்துக்கொண்டதே!
இப்பொழுதும் என்ன கெட்டுப் போச்சுது? உன்னால் கொடுக்க முடியாது என்று
ஒரு வார்த்தை சொல், நான் உடனே உங்களை விட்டுப் போய் விடுகிறேன்; உன்
மனைவி மக்களுடன் நீ எங்கேயாவது போய்ச் சுகமாய் வாழலாம். -
ஹ. வேதியரே! தயவுசெய்து இவ்வார்த்தையை என் செவியிற் போடவேண்டாமென்று
தங்களை எத்தனை முறை வேண்டி இருக்கிறேன்! - முற்று முணர்ந்த தாங்கள்
என்னை இப்படி வற்புறுத்துவது தங்களுக்கு அடாது - உடனே புறப்படுவோம் –
வாருங்கள்.
ந. உன்னுடைய நலத்தைக் கோரியே நான் சொன்னேன்; கேளாமற் போனால்
உன்பாடு பழிக்கஞ்சி சொன்னேன், பிறகு அந்த பாபம் உன் தலைமேல்.
மதிதயராஜன் புதல்வியாய்ப் பிறந்து, மன்னர் மன்னனாகிய உன்னை மணந்த
உன் மனைவியின் கதியைப்பார்! உலகனைத்தும் ஒருதனிக் குடைக்கீழ் ஆண்ட
சக்கரவர்த்தியின் ஒரு புத்திரனாய்ப் பிறந்த உன் மைந்தன் கதியை கவனி!
இவர்களா இக்கஷ்டங்களை யெல்லாம் அனுபவிக்கத் தக்கவர்கள்? பிறகு
இவர்களைக் கொன்ற பாபம் உன்னைச் சூழும் நான் சொல்வதைக்கேள் –
வீணாகப் பிடிவாதம் செய்யாதே. வாஸ்தவத்தில் அவ்வளவு பெருந்தொகையை
முனிவருக்குச் செலுத்த உனக்குச் சக்தியில்லை, அதுவும் இன்னும் ஒரு
தினத்திற்குள்ளாக எப்படி செலுத்தப்போகிறாய்? இன்னும் ஏதாவது தவணை
வேண்டியிருந்தால் சொல். -
ஹ. வேதமுணர்ந்த வேதியரே! உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். வீணாக ஏன்
இவ்வாறு வார்த்தை யாடுகிறீர்கள்? என்னுயிருக்குயிராகிய மனைவியும்
மைந்தனும் என் கண் முன்பாக கடும்பசியால் உயிர் துறப்பினும் துறக்கட்டும்!
நான் இதுவரையில் பட்ட கஷ்டத்தைப் பார்க்கிலும், பதினாயிரம் மடங்கு அதிக
கஷ்டம் அனுபவிக்கும்படி நேர்ந்தாலும் நேரட்டும்! நான் கூறிய மொழியினின்றும்
தவறமாட்டேன்! தவணைப்படி முனிவருக்குச் சேரவேண்டிய பொருளை ஈசன்
கருணையினால், கொடுத்தே தீர்ப்பேன். போவோம் வாரும் காசி நகரத்திற்கு –
பெண்ணே சந்திரமதி, கண்ணே தேவதாசா! உங்கள் கஷ்டங்களைப் பாராமல்,
காசிவிஸ்வேசனை சீக்கிரத்தில் தரிசிக்கப் போகிறோம் என்னும் குதூஹலத்துடன்
புறப்படுங்கள் உடனே.
ச. ஆம்; பிராணநாதா, எங்கள் கஷ்டத்தைக் கருதாதீர் என்று மழியா உமது
வாய்மையினைக் காத்திடும் அடியாளைப்பற்றி உமக்குக் கொஞ்சமேனும்
கவலையே வேண்டாம். இதோ புறப்பட்டு விட்டேன்.
தேவ. அண்ணா, என்னைப்பற்றிக்கூட உமக்குக் கவலை வேண்டாம். நானும்
புறப்பட்டு விட்டேன்.
ந. சரி, ஆனால் வாருங்கள். [ஒரு புறமாக] விஸ்வாமித்திரரே இதை எல்லாம்
இங்கிருந்து கேட்டிருப்பீராயின் அப்பொழுதாவது உமக்கு உண்மை விளங்கும்! [எல்லோரும் போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
------------------
மூன்றாம் அங்கம்
இடம் - காசியில் விஸ்வேஸ்வரர் கோயிலுக் கருகிலுள்ள வீதி. ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், நட்சத்திரேசன், வருகிறார்கள்.
ஹ. சந்திரமதி, தேவதாசா, புண்ய க்ஷேத்திரமாகிய காசிக்கு வந்து விட்டோம்.
அதோ பாருங்கள், விஸ்வநாதருடைய கோயில் கோபுரம் தெரிகிறது, நம்முடைய
கஷ்டங்களினின்றும் நம்மைக் காப்பாற்றி யருளும்படி காசி விஸ்வேசனைத்
தொழுவோம் - காசிவாழ் கண்ணுதலே! எண்ணரிய ஜீவ கோடிகளையும்
படைத்தளித்தழிக்கும் பரமனே! உமது பாதாரவிந்தங்களைப் போற்றுகிறோம்.
அடியேங்களின் மீது அருள் வைத்து எங்கள் கஷ்டங்களைக் களைந்து
கடைத்தேறும்படி கடாட்சித் தருளும். அடியேங்களுக்கு என்ன கெடுதி நேரிட்ட
போதிலும் அறநெறியினின்றும் அணுவளவேனும் தவறாமலிருக்கும்படி
அனுக்கிரஹம் செய்யும்!
ச. மூவர்க்கு முதலே தேவதேவனே! முற் பிறப்பிலும் இப்பிறப்பிலும் அடியேங்கள்
செய்த பாபங்களையெல்லாம் பரிஹரித்து, பாவியேங்கள் மீது பட்சம் வைத்துப்
பாதுகாரும். எனது கணவர் தன் வாய் மொழியினின்றும் தவறா வண்ணம்
கருணை கூரும். எனக்குப் பதிவிரதை யென்கிற பெயர் பழுதடையாதபடி
பாலித்தருளும். தேஜோமயா நந்தனே! ஒன்றும் தெரியாப் பாலனாகிய தேவதாசன்
நாங்கள் செய்த பாபத்திற்காகத் துயருறாவண்ணம் தயைகூரும்.
தேவ. சாமி, என் அண்ணாவையும் அம்மாவையும் - எல்லாக் கஷ்டங்களினின்றும்
காப்பாற்றுங்கள்! இந்த பிராம்மணரிடத்திலிருந்து கூட காப்பாற்றுங்கள்!
ந. பார்த்தாயா, அந்த அதனப்பிரசங்கியை! - இருக்கட்டும்! - ஹரிச்சந்திரா, என்ன
செய்துகொண்டிருக்கிறாய் இங்கே? என் கையினின்றும் எப்படித் தப்பித்துக்
கொண்டோடிப் போய்விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாயா? இதோ
பார், இதுதான் என் கடைசி வார்த்தை! நீ கேட்டுக்கொண்டபடி எவ்வளவோ
கஷ்டப்பட்டு உன் பின்னால் இந்தப் பதினைந்து தினங்களாக ஊணுறக்கமின்றி,
பஞ்சையைப் போல் தொடர்ந்து வந்தேன். இனிமேல் ஒரு அடியும் எடுத்து
வைக்கமாட்டேன். காசி நகரம் வந்தாச்சுது! காசைப் பார்க்கும் மார்க்கம்தான்
காணேன்! சேரவேண்டிய பணத்தை யெல்லாம் சேர்த்துவை உடனே,
இல்லாவிட்டால் இல்லையென்று சொல்லிவிடு. இனி தாமதியேன் நான்.
ஹ. ஸ்வாமி, கொஞ்சம் பொறுங்கள், இன்றைத்தினம் சூரியன் அஸ்தமிக்குமுன் எக்
கஷ்டமாவது பட்டு முனிவர் பொருளைச் சேர்த்துவிடுகிறேன் உம்மிடம். -
சத்தியகீர்த்தி வருகிறான்.
சத். அரசே! அரசே! உம்மைக் காணப்பெற்றேனே!
ஹ. சத்தியகீர்த்தி! எதற்காக இங்கு வந்தாய்? - விஸ்வாமித்திரருடைய
கொலுவைவிட்டு வரலாகாதென்று உனக்கு உறுதியாய்க் கூறியிருந்தேனே!
சத். அரசே, தங்களுடைய கட்டளையை மீறி நடந்ததற்காக என்னை மன்னியும். நீர்
இல்லாத அயோத்தியில் ஒரு நிமிஷம்கூட நிற்பதற்கு என் மனம் பிடிக்கவில்லை.
ஆகவே எப்பொழுது சமயம் வாய்க்குமோ என்று ஏங்கியிருந்து, கடின சித்தமுடைய
அந்த காதி மைந்தரிடமிருந்து விடைபெற்றே, வேகமாய் இங்கு உம்மைப் பின்
தொடர்ந்தேன். வருகிற வழியில் நீங்கள் காசிக்குப் போனதாகக் கேள்விப்பட்டு
இங்கு வந்தேன், உங்களை கண்டேன், என் கவலை யொழிந்தேன்.
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, அம்மட்டும் நீ எங்களை முன்பே வந்து சந்தியாதது நலமே.
முன்பே சந்தித்திருப்பாயாயின் நாங்கள் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம்
நீயும் அனுபவித்திருக்கும்படி நேரிட்டிருக்கும்; அதனின்றும் தப்பினாயே
அம்மட்டும் ஈசனருளால்! -
சத். அரசே பிராம்மணருக்கு கொடுக்கவேண்டிய பணம் செலுத்தியாய்விட்டதா?
ஹ. இல்லை, இன்னும் தீர்க்கவில்லை. ஆயினும் இன்றுபொழுது போவதன் முன் அக்
கடனை எப்படியாவதுதீர்க்கவேண்டும். அங்ஙனம் செய்வதாக
வாக்களித்திருக்கிறேன். ஆகவே அப்படிச் செய்தே தீரவேண்டும், ஆயினும்
இப்பெருந் தொகையை அடையும் மார்க்கம் ஒன்றும் தோன்றாதவனாய்த்
திகைத்து நிற்கிறேன். இத்தொகையை யார் எனக்குக் கடனாகக் கொடுப்பார்கள்?
அப்படிக் கொடுத்தபோதிலும் அதில் என்ன பிரயோஜனம்? முனிவர்
கடனினின்றும் நீங்கி மற்றொருவருக்குக் கடன்பட்டதே யாகுமன்றோ? –
யாசிப்பது க்ஷத்ரிய தர்மமன்று, ஆகவே அதைச் செய்யேன். வேறு நான் என்
செய்வது? - மூவர்க்கு முதலே! முத்திக்கரசே! முனிவர்க்கு நான் பட்டுள்ள
கடனைத் தீர்க்கும் மார்க்கம் ஏதாவதொன்று கடாட்சித்தருளும்! நீரே கதி! நீரே கதி!
ந. ஹரிச்சந்திரா! இப்பொழுதாவது என் வார்த்தையைக் கேள். அந்த ஈஸ்வரனால்
உனக்கு உதவி செய்ய முடியாது. - என்னால் முடியும்.
ஹ. ஸ்வாமி, இக் கடனைத் தீர்க்கும்படியான மார்க்கம் தமக்கேதாவது தோன்றினால்,
தயைசெய்து என்னிடம் கூறுங்கள், உமக்கு மிகவும் புண்யமாம்.
ந. கடனைத்தீர்த்து இக்கஷ்டங்களினின்றும் கடைத்தேறும் மார்க்கம் மிகவும்
சுலபமானதொன் றிருக்கிறது. அப்பொழுதான் கேட்கமாட்டேன் என்றாய்,
இப்பொழுதாவது கேள். -
ஹ. பிராம்மணோத்தமரே, முன்பு கூறியதைத் தாம் மறுபடியும் கூறுவதானால், தயை
செய்து அதைக் கூறாதிரும். அதை நான் கேட்பதும் தர்மமன்று, தாங்கள்
எனக்கதைக் கூறுவதும் தர்மமன்று. அதைவிட, எங்கள் குலத்தில்
முற்பிறந்தோனாகிய சிபி சக்கரவர்த்தி ஒரு புறாவிற்காகச் செய்தபடி, எனது
தேகத்திலுள்ள தசையைத் துண்டம் துண்டமாக்கி விற்றாவது, என் கடனை
தீர்க்கும் மார்க்கத்தைத் தேடுவேன் நான்! -
சத். பிராணநாதா,தாங்கள் அவ்வாறு ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. அதை
விட சுலபமான மார்க்கம் ஒன்று எனக்குத் தோற்றுகிறது. அதை இதுவரையில்
கூறாததற்காக என்னை மன்னிக்க வேண்டும். பதிவிரதையின் முக்கியமான
கடமை என்னவென்றால், தன்பதிக்கு ஏதேனும் கஷ்டம் நேரிடுங்கால், தன்
உயிரையாவது கொடுத்து அவரை அக்கஷ்டத்தினின்றும் விடுவிக்க வேண்டியதே;
புத்திரனுக்கும் அம்மாதிரியாகக் கடமை யுண்டு. ஆகவே என்னையும் தேவதாசனையும் அடிமைகளாக விற்று அப்பணத்தைக் கொண்டு முனிவர்
கடனைத் தீர்த்துவிடும்.
ஹ. என்ன! நான் கனவு காண்கிறேனா என்ன? சந்திரமதி, என்ன சொன்னாய்?
உங்களிருவரையும் விற்பதா? உன்னையும் - தேவதாசனையும் - நான் விற்கவா? –
பரமனே! பரமனே! உமது பாதாரவிந்தங்களை மறவாது பக்தனாய்த் தொழுது வந்ததற்குப் பலன் இதுதானோ? என் மனைவி வாக்கினின்றும் இவ்
வார்த்தையைக் கேட்கும்படி அனுக்கிரஹம் செய்தீரே! பாவி நான் எந்த
ஜன்மத்தில் என்ன பாபமிழைத்தேனோ இக் கதி அனுபவிப்பதற்கு?
[கண்ணீர் விடுகிறான். ]
ச. பிராணநாதா, துக்கப்படாதீர், என்மீது கோபமும் கொள்ளாதீர்; நீரே எனக்கு
எத்தனை முறை சொல்லியிருக்கிறீர்கள், மண்ணுலகில் உற்றார் உறவினர்
மனைவி மக்கள் மற்றெச் செல்வமும் சாஸ்வதமல்ல, சத்யமொன்றே
சாஸ்வதமானது, என்று. நாங்கள் எல்லாம் நடு வழியில் நிற்பவர்களே, வேறு
உலகத்திலும் உம்மை விடாது தொடர்வது அந்த சத்யமொன்றே. ஆகவே
முனிவருக்குத் தாம் கொடுக்க இசைந்த பொருளைக் கொடுத்து, உமது சத்யத்தைக்
காப்பாற்றும் பொருட்டு, எங்களை யெல்லாம் துறப்பதும் தர்மமாகும். தர்ம
சாஸ்திரங்கள் இங்ஙனம் ஒருவன் செய்யலாமென்றும் அனுமதி கொடுக்கின்றன.
அன்றியும் பிராணநாதா, உமது மனைவியாகிய எனக்கும், உமது மைந்தனாகிய
தேவதாசனுக்கும், உமக்கு நேரிட்ட கஷ்டத்தினின்றும் உம்மை அகற்றி, உமது
சத்தியமொழியைக் காப்பாற்றுவதற்கு உதவினோம் என்கிறதைவிட, மேலான
பேறு இவ்வுலகில் வேறு என்ன கிட்டப் போகிறது? பாவிகளாகிய எங்களுக்கு
இந்தப் புண்ணியமாவது கிடைக்கட்டும். எங்கள் கடனை நாங்கள் தீர்க்கிறோம்,
உமது கடனை நீர் தீரும்.
ஹ. சந்திரமதி! சந்திரமதி! அதை நினைக்கவும் என் நெஞ்சம் துணியவில்லையே,
நான் எவ்வாறு மனமொப்பிச் செய்யத் துணிவேன்! பாவி நான்! பாவி நான்!
ச. பிராணநாதா, தாங்கள் இவ்வாறு துயரப்படுதல் நியாயமன்று. இதை விட வேறு
வழியில்லை தம்முடைய சத்யமொழியைக் காப்பதற்கு. ஏன் தாமதிக்கிறீர்கள்?
இதில் அதர்ம மொன்றுமில்லையே. இதை நான் சொல்லவேண்டுமா எல்லா
முணர்ந்த தங்களுக்கு? எங்களுடைய அனுமதி யின்றியே தாங்கள் இதைச்
செய்யலாமே. என்னுடைய தந்தையாகிய மதிதய ராஜன் என்னை உமக்கு அக்னி
சாட்சியாகத் தாரைவார்த்துக் கொடுத்தபொழுதே, உமக்கு அந்த சுதந்தர
முண்டாயிற்றே. அப்படியிருக்க, நானே உங்களை வேண்டும்பொழுது
உமக்கென்ன ஆட்சேபனை? என் வேண்டு கோளுக் கிசைந்து எங்களை
விற்பனை செய்துவிடும் விரைவில், பொழுது போகிறது -
ஹ. அந்தோ! அந்தோ! அநாதரட்சகா! ஆபத்பாந்தவா! அடியேனை இக் கதிக்குக்
கொண்டுவந்து விட்டீரே! மன்னர் மன்னர்கள் அறிய, வேள்வித் தீயின்முன் எக்
கரத்தால் என் மனைவிக்கு மாலையிட்டேனோ, அக் கரத்தினாலேயே, அவளை
அனைவருமறிய அடிமையாக விற்பனை செய்வதோ நான்! பாவிக் கரமே! நீ
என்ன பாபமிழைத்தாய்! என்ன பாபமிழைத்தாய் இச் செய்கை புரிவதற்கு!
ச. பிராணநாதா,அதை வையாதீர்;அது என்னை விற்று, உமது சத்யத்தைக்
காப்பாற்றும்படியான பேருதவி செய்து பெரும் புண்ணியம் சம்பாதிக்கப்
போகிறது! [அக்கரத்திற்கு முத்தமிடுகிறாள். ]
இனி துக்கப்படாதீர்கள், நேரமாகிறது.
தேவ. ஆமாம் அண்ணா, நீங்கள் துக்கப்படாதீர்கள். என்னையும் அம்மாளோடு
விற்று, கடனைக் கொடுத்துவிட்டு இந்த பிராம்மணரை அனுப்பி விடுங்கள்
ஊருக்கு.
ஹ. [அவனைக் கட்டி யணைத்து] பாலா! பாலா! மழலைச்சொல் மாறாத உன் அமுத
வாயினின்றும் இம் மாற்றத்தைக் கேட்கும்படி நேரிட்டதே! எத்தனையோ
தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்து, எத்தனையோ நோன்பியற்றி,
எத்தனையோ தவஞ்செய்து அருமையாகப்பெற்ற உன்னை - அடிமையாக நான்
விற்பதோ? என்னை அடிமையாக வில்லும், என்று உன் அருமை வாயினால் கூறக்
கேட்டும், ஆவி போகாது இருக்கிறேனே பாவி நான்! - பரமனே! பரமனே!
இதையும் உமது கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறீரே! தயை புரிந்து பேரிடி
யொன்றை இப்பாவியின் தலைமீது விழச்செய்து பஸ்மீகரப்படுத்தமாட்டீரா!
[தேம்பி அழுகிறான். ]
ந. ஓஹோ! அப்படித் தப்பித்துக் கொள்ளலாமென்று பார்க்கிறாயோ முனிவர்
கடனைக் கொடாமல்? ஓ! இப்பொழுது தெரிகிறது உன தெண்ணம்! இந்த யுக்தி
செய்யப் போகிறதாக முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? இவ்வளவு
கஷ்டமெல்லாம் பட்டிருக்க மாட்டேனே!
ஹ. பிராம்மணோத்தமரே, என்னை இந்த ஸ்திதியில் கண்டும் மன மொப்பி ஏளனம்
செய்கிறீரே! - இனி உங்களுக்குக் கஷ்டம் கொடுக்கவில்லை, இதோ என் மனைவி
மக்களை விற்று உம்மிடம் செலுத்தவேண்டிய பொருளைச் செலுத்துகிறேன்.
ந. சரி, உன் இஷ்டம் சீக்கிரம் ஆகட்டும், நேரமாகிறது.
ச. ஆம் பிராணநாதா, நேரமாகிறது இனி தாமதியாதீர்.
தேவ. ஆமாம் அண்ணா.
ஹ. தேவதேவனே! உமது திருவுள்ளம் நிறைவேறட்டும்! [ஒரு வைக்கோலை எடுத்து
சந்திரமதியின் தலைமீது வைத்து] வாரணாசிவாசிகளே! கேட்பீர்களாக! ஒருகால்
அயோத்தியில் அரசனாயிருந்த ஹரிச்சந்திரனாகிய நான், வாக்களித்தபடி
மஹரிஷியான விஸ்வாமித்திரருக்குக் கொடுக்கவேண்டிய கடனைத்
தீர்க்கும்பொருட்டு, வேறு வகையில்லாதவனாய், எனது மனைவியாகிய இதோ
நிற்கும் சந்திரமதியையும், மைந்தனாகிய தேவதாசனையும், அடிமைகளாக
விற்கிறேன்; நான் கேட்கும்படியான விலையைக் கொடுக்கத் தக்கவர் யாரேனும்
இவர்களைக் கொள்ளலாம்!
[ஜனங்கள் கும்பலாகக் கூடுகின்றனர். ]
ஒரு மனிதன். இது யாரடா அது! பெண்சாதி பிள்ளையெ விக்கரவே?
இ-ம. அடெடெ! அரிச்சந்திர மஹாராஜாடா! நானு பாத்துகிறேண்டா முன்னே!
மூ-ம. ஏன் இந்த ஸ்திதிக்கு வந்தாரானா?
இ-ம. விஸ்வாமித்திரருக்கு ராஜ்யத்தெ கொடுத்தூட்டாருண்ணு கேள்விப்பட்டெ.
நா. ம. இன்னும் என்னமோ கடன் கொடுக்கணு மிண்ராரே?
இ-ம. அது எனக்குத் தெரியாது.
மு-ம. இதெல்லாம் பொய்யா யிருக்கும்!
இ-ம. ஏண்டாப்பா! சத்யத்தெ காப்பாத்தணும் இண்ணு பெண்சாதி பிள்ளையெ விக்க
துணிஞ்சவரு பொய் பேசுவாரா?
மு-ம. என்னாண்ணாலும் பெண்சாதி பிள்ளயெ விக்கலாமா ஐயா?
இ-ம. அவருக்கு தெரியாத நியாயமா அப்பா?
நா-ம. பாவம்! கொழந்தையெ பாத்தாதான், எனக்கு பரிதாபமா இருக்குது!
ஐ-ம. அந்தம்மாளெ பாத்தா லட்சுமியாட்ட இருக்குது! அவங்களுக்கும் இந்தக்
கதி வந்துதே!
இ-ம. யார் விதி யாரை விட்டதப்பா!
எல்லோரும். பாவம்! பாவம்! காலகண்டையர் வருகிறார்.
கா. என்னாங்காணும் அது கும்பல்? என்னா சமாசாரம்? - ஓய்! நீ யார்?
ஹ. பூஜ்யரே, நான் ஹரிச்சந்திரன், ஒருகால் அயோத்தியையாண்ட
அரசனாயிருந்தவன்; நான் விஸ்வாமித்திர முனிவருக்குக் கொடுக்க இசைந்த
கடனைத் தீர்க்கும் பொருட்டு, என் மனைவி மக்களாகிய இவர்களை அடிமைகளாக
விலை கூறுகிறேன். தாங்கள் தயவுசெய்து -
கா. அப்படியா சமாசாரம்? - உம் - என் ஆத்துக்காரிக்கு ஒரு வேலைக்காரி வேண்டி
யிருக்கு - இந்தப் பய, என் கைகால் பிடிக்க ஒதவுவாம் போலிருக்கு –
அதிருக்கட்டும். அடிமையா நான் வங்கினாகே, என்னா வேலை செய்வா இவா?
ஹ. ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீ, அடிமையாக விற்கப்பட்டால், தர்மப்படி
அவள் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று சாஸ்திரங்கள்
விதித்திருக்கின்றனவோ, அவைகளை யெல்லாம் செய்வாள் - இவனு மப்படியே.
கா. அது கெடக்கட்டும், நீர் என்னா வெலெ கேக்கறீர்?
ஹ. உயர்ந்த யானையொன்றின் மீதேறி, வல்லான் ஒருவன் வலுக்கொண் டெய்யும்
மாணிக்கம் செல்லும் உயரம் அளவு பொன்.
கா. ஐஐயோ! ஏங்காணும், வெளையாடரீரா என்ன? - இவ்வளவு பொன்
என்னிடத்திலெ எங்கே இருக்கு? ஸ்ராத்த தட்சிணையைக் கொண்டு
ஜீவிக்கும்படியான நேக்கு, இத்தனெ பொன் எங்கிருந்து கெடைக்கும்? அப்பப்பா!
இது நமக்குக் கிட்டாது - ஏன் ஐயா, ஏதாவது கொஞ்சம் கொறச்சி பாருமே?
ஹ. அந்தணரே, அரைக் காசும் குறைக்க முடியாது. என்னை மன்னிக்க வேண்டும்.
ஐயா காசிவாசிகளே! இந்த விலையைக் கொடுத்து என் மனைவியையும்
மைந்தனையும் அடிமையாக்கிக் கொள்வார் எவரேனும் உளரோ இவ்விடத்தில்?
ஜனங்கள். இவ்வளவு வெலெ யாரையா கொடுப்பா?
ஹ. இல்லாவிடின் வேறு இடம் போய்ப் பார்க்கிறேன் -
கா. சத்தெ பொறுங்காணும் ஹரிச்சந்திரரே, - என்னா ரொம்ப அவசரமாயிருக்கு?
ஹ. ஆம், எனக்குக் கொஞ்சம் அவசரம்தான். இன்று பொழுது போவதன்முன்
இக்கடனை நான் தீர்க்க வேண்டியிருக்கிறது - ஆகவே -
கா. ஆனாகெ-நான் அந்த பொருளெ கொடுத்து வாங்கி கள்ரே, - ஆனாகே ஒரு
சமாசாரம், உம் பெண்சாதி நான் சொல்ர வேலெ யெல்லாம் செய்வா இண்ணு நீ
உத்தரவாதம் செய்யணும்.
ச. ஸ்வாமி,எனது கணவர் உமக்கு முன்பே கூறியிருக்கின்றனரே. தர்ம விதிப்படி
சாஸ்திரத்திற்கு விரோதமில்லாமல், பதிவிரதையாகிய நான், அடிமையாகக்
கொண்ட உங்கள் கட்டளைகளில், என்னென்ன நிறைவேற்ற நியாயமுண்டோ, அவற்றையெல்லாம் மனம் கோணாது செய்வேன். இதில் உமக்குக்
கொஞ்சமேனும் சந்தேகமே வேண்டாம். என் வார்த்தையை நம்பும்.
கா. சரி ஆனாகே, ஒப்புக் கொள்றேன் - ஹரிச்சந்திரரே, யாரிடத்திலெ இந்த
பணத்தெ கொடுக்கணும்?
ஹ. இதோ இருக்கும் பிராம்மணராகிய நட்சத்திரேசரிடம். - விஸ்வாமித்திர முனிவர்
இவரிடம் அக்கடனைச் செலுத்தும்படி உத்தரவு செய்திருக்கிறார்.
கா. ஐயா, உம்ம பேரென்ன? நட்சத்திரேசரா? - இப்படி வாருங் காணும், உமக்குச்
சேரவேண்டிய பணத்துக்கு வகை சொல்ரேன். [நட்சத்திரேசனை அழைத்துக்
கொண்டுபோய் ஒரு புறமாக அவனுடன் பேசுகிறார். ]
ச. பிராணநாதா. அம்மட்டும் நீர் வாக்களித்தபடி முனிவருக்குச் சேரவேண்டிய
கடனைத் தீர்ப்பதற்கு வழியினைக் கொடுத்தருளினாரே பரமேஸ்வரன்!
ஹ. பரமேஸ்வரா! பரமேஸ்வரா!
ந. [திரும்பி வந்து] சரி, ஹரிச்சந்திரா, அந்தப்பணத்தை என்னிடம் சேர்ப்பதற்கு இந்தப்
பிராம்மணர் ஏற்பாடு செய்துவிட்டார். அதை உன்னிடமிருந்து பெற்றுக்
கொண்டதாக நான் ஒப்புக்கொள்ளுகிறேன். உன் கடன் தீர்ந்தது, அவர் இனி
எனக்கு ஜவாப்தாரி.
கா. ஓய்! ஹரிச்சந்திரரே, கேட்டீரா? இனிமே இவாளெ எம்பின்னாலே அனுப்பும்,
எனக்கு தேச காலமாகுது. சீக்ரமா ஆத்துக்குப் போகணும். ஆத்துக்காரி
காத்திண்டிருப்ப - கொஞ்சம் கோவக்காரி, அதிலேயும் அதிக நேரம் கழிச்சிபோனா
எரிஞ்சி விழுவள்.
ஹ. சந்திரமதி - தேவதாசா - இனி நீங்கள் இந்த அந்தணருடைய அடிமைகள் –
அவர் பின் சென்று, அவர் - வீட்டிலிருந்து அவர் சொன்னபடி நடந்து - அவரிடும்
உணவை உண்டு - ஜகதீசன் கிருபையால் - வாழ்ந்திருங்கள்! -
ச. நாதா, எங்கள் பொருட்டு துக்கப்படாதீர்கள். உங்கள் மனைவியாயும் மைந்தனாயும்
வாய்த்தற்கு, உங்களுக்கு இவ்வளவாவது உபகாரம் செய்யும்படி ஸ்வாமி தயை
கூர்ந்தாரே என்று சந்தோஷப்படுகிறோம். நாதா, நீர் அறியாத நியாயமல்ல,
மனைவியும் மக்களும் மற்றுமுள்ள வாழ்வும், என்றைக் கிருந்தாலும் ஒரு நாள்
உம்மை விட்டுப் பிரிவனவே; என்றைக்கும் உம்மை விட்டுப் பிரியாதது
உம்முடைய சத்தியமே; ஆகவே, என்ன நேர்ந்த போதிலும் அதைக் காப்பாற்றும்.
எங்கள் பொருட்டு துக்கியாதீர் இனி -எங்களுக்கு விடை யருளும், நாங்கள் போய்
வருகிறோம்.
தேவ. ஆமாம் அண்ணா, நீங்கள் சந்தோஷமாயிருங்கள்; நான் அம்மாளுடன்
போகிறேன் இந்த பிராம்மணர் வீட்டுக்கு அவர் சொல்கிறபடி நடக்கிறேன். அந்த
நட்சத்திரேசரைவிட இவர் நல்லவர் அண்ணா. நாங்கள் போய் வரவா?
ஹ. [அவனைக் கட்டியணைத்து] தேவதாசா! தேவதாசா!-அப்பா, இனி உன்னை என்
மைந்தா என்றழைப்பதற்கும் நான் சுதந்தர மற்றவ னானேன்! அருந்தவ மியற்றி
அருமையாய்ப் பெற்ற உன்னை அன்னியர்பால் அடிமையாய் நான் அனுப்பக்
காலம் வந்ததே! இக்கதி யனுபவிப்பதற்கோ பாவி என் வயிற்றிற் பிறந்தாய் நீ?
ச. நாதா! நாதா!
ஹ. [அவளையும் கட்டியணைத்து] சந்திரமதி! சந்திரமதி! இக்கதிக்கு வரவோ
பாவியாகிய என்னை மணந்தாய்? அந்தோ! அந்தோ! அக்னி சாட்சியாய் மணந்த
மனைவியையும் அருமை புதல்வனையும் அடிமையாக விற்றும்--ஆவி
தரித்திருக்கிறேனே! அந்தோ! பரமேஸ்வரா! பரமேஸ்வரா! இவ்வுலகத்திலேயே
இத்துயரம் அனுபவிக்க, பாவி நான் எந்த ஜன்மத்தில் என்ன பெரும்பாவம்
இழைத்தேனோ?--பாவி! பாவி!
ச. நாதா, அப்படி கூறாதீர்கள்--தர்மஸ்வரூபியாகிய நீங்கள் ஒரு பாபமு
மிழைத்திருக்கமாட்டீர்கள், அடியாள் இழைத்த பாபமே உம்மை இவ்வாறு சூழ்ந்தது
போலும்--அந்தணர் காத்திருக்கின்றார், மனதைத் தேற்றிக் கொண்டு எங்களுக்கு
விடையளியும்--கண்ணே! தேவதாசா! உன் தகப்பனார் பாதத்திற்கு நமஸ்காரம்
செய். [இருவரும் ஹரிச்சந்திரன் பாதத்திற்கு நமஸ்காரம் செய்கிறார்கள். ]
நாதா! நாதா! இப்பாத தர்சனம் எங்களுக்கு மறுபடியும் எப்பொழுது கிடைக்குமோ?
எப்பொழுது கிடைக்குமோ? [துக்கிக்கிறாள். ]
தா. என்ன சந்திரமதி? விடை பெத்திண்டு வர்ரதுக்கு எத்தனெ நாழி? நேக்கு
அடிமையானபின் புருஷனின்னும் தகப்பனின்னும் இந்தப் பற்றெல்லாம்
வைத்திண்டிருந்தா முடியுமோ? வாருங்க சீக்கிரம் - என்ன ஹரிச்சந்திரரே,
அனுப்பும் அவர்களைச் சீக்கிரம்.
ஹ. ஸ்வாமி, இதோ அனுப்புகிறேன். கோபித்துக்கொள்ளாதீர்கள்; மன்னியும்
இவர்களை;விவாகமாகியபின் பேதையாகிய இவள் என்னைவிட்டு ஒரு நாளும்
பிரிந்திருந்தவளல்ல. இவனும் பிறந்தது முதல் ஒரு நாளும் என்னை
விட்டிருந்தவனல்ல. ஆகவே, ஏதோ துக்கிக்கிறார்கள்; எனக்கும் துக்க
மேலிடுகிறது - மன்னியுங்கள். - [அவர்கள் கரத்தைப்பற்றி அந்தணரிடம்
அழைத்துப்போய் ஸ்வாமி, இதுவரையில் இவர்கள் என் மனைவி மைந்தனாய்
இருந்தவர்கள் - இனி தங்களுடைய பொருள் – அழைத்துச் செல்லுங்கள் - ஆயினும்
அந்தணரே, அடியேன் விண்ணப்பம் ஒன்று - இக்கதிக்கு வருமுன் இம்மாது,
மதிதயராஜன் புத்திரியாய்ப் பிறந்து, ஹரிச்சந்திரன் மனைவியாய், சகல
ராஜ்யபோகங்களையும் சம்பூர்ணமாய் அனுபவித்து வாழ்ந்தவள், - இப்பாலன்
சக்கரவர்த்தியின் ஏகமகனாய்ப் பிறந்து, தேவர்களுக்குரிய சுகத்திலிருந்தவன்,
கஷ்டம் என்பதைக் கனவிலும் கண்டறியாதவன். ஆகவே இவர்களை அடிமைத்
தொழில் புரியும்படி கட்டளையிடும்பொழுதெல்லாம் கருணை என்பது உமது
மனதில் கொஞ்சம் இருக்கட்டும்.
கா. ஹரிச்சந்திரரே! - இதெல்லாம் நேக்குத் தெரியாதோ? - நீர் சொல்லவேண்டுமோ?
ஹ. ஸ்வாமி, உமக்குத் தெரியாது என்று நான் சொல்லக்கூடுமோ? அந்தணராகிய நீர்
அறியாததன்று இது - ஆயினும் -என் பொருட்டு இவர்கள் இக்கதிக்கு
வந்தபடியால், என்னதான் தடுத்த போதிலும் என் பேதை மனம் கேளேன்
என்கிறது; இதை உமக்குச் சொல்லும் படியாக உந்தியது.
கா. சரிதான்! - ரொம்ப நேரமாச்சு - இனியாவது புறப்படுங்கள், சந்திரமதி, தேவதாசா.
ச. [பணிந்து] நாதா, நான் போய்வருகிறேன்.
தேவ. [பணிந்து] அண்ணா, நான் போய்வருகிறேன்.
ஹ. போய்வாருங்கள்! எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு இரங்கி அருள்வாராக! [காலகண்டையர், சந்திரமதி தேவதாசனை அழைத்துக்கொண்டு போகிறார். ] தேவதேவனே! யாவும் உமது திருவுள்ளப்படியே ஆகுக!
சத். அரசே, வாரும், நாம் சீக்கிரம் இவ்விடத்தை விட்டுப் போவோம் - எங்காவது.
ஹ. ஸ்வாமி, உமக்குச் சேரவேண்டியதெல்லாம் சேர்ந்து விட்டதே; இனி எனக்கு
விடை கொடுக்கிறீரா?
ந. ஆஹா! என்ன ஹரிச்சந்திரா, கடைசியில் இப்படிச் சொல்லிவிட்டாய்? எனக்குச்
சேரவேண்டியதெல்லாம் சேர்ந்துவிட்டதென்றாயே? எங்கே சேர்ந்தது? என் தரகு
எங்கே? அதைக் கொடுப்பதன்முன் உன்னை விட்டுவிட எனக்குப் பயித்தியம்
பிடித்ததென்று நினைக்கிறாயா?
ஹ. ஸ்வாமி, உமக்கு நான் தரகு ஏதேனும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேனா?
ந. ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன? தரகனுக்குச் சேர வேண்டிய தரகைக் கொடுக்க
வேண்டியது தர்மமல்லவா? இது தெரியாதா உனக்கு? உன் பின்னால் இத்தனை
நாளாக நான் எத்தனை கஷ்டப்பட்டு வந்தேன், நீ தான் கண்ணாராப் பார்த்துக்
கொண்டிருந்தாயே.
ஹ. ஸ்வாமி, அது உண்மையே - ஆயினும் இந்த வழக்கம் எனக்குத் தெரியாது.
நீங்கள் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் கொடுக்கத் தடையில்லை.
எவ்வளவு உங்களுக்குத் தரகுக்காகச் சேர வேண்டும்?
சத். என்ன அரசே அப்படிக் கேட்கிறீர்கள்? முன்பு தரகு பேசியிராவிட்டால் நீர்
கொடுக்க வேண்டியதில்லை. அன்றியும் சாதாரணமாகப் பணம்
பெற்றுக்கொள்பவர்களே தரகு கொடுக்கவேண்டும்; ஆகவே விஸ்வாமித்திரர்
கொடுக்கிறார். வீணாக இன்னும் கஷ்டத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்!
இதுவரையிற் பட்டது போதும் - நீர் வாரும்.
ந. ஹரிச்சந்திரா, நீயே உன் வாயால் சற்று முன்பாக, நான் கொடுக்கவேண்டுமென்று
சொன்னால் கொடுக்கத் தடையில்லை என்று சொன்னாயா இல்லையா? நான்
கொடுக்கத் தான் வேண்டுமென்று சொல்லுகிறேன்.
சத். நான் கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறேன்.
ந. அப்படி ஹரிச்சந்திரன் சொல்லிவிடட்டும், நான் போய்விடுகிறேன்.
ஹ. சத்யகீர்த்தி, சற்று முன்பாக நான் அவ்வாறு கூறியது உண்மையே. ஆகவே,
என் வார்த்தைப்படி நான் நடக்கவேண்டியதுதான். சரி - வருவதெல்லாம் வரட்டும்
– ஸ்வாமி, தங்களுக்குத் தரகுக்காக எவ்வளவு சேரவேண்டுமென்கிறீர்?
ந. அதிகமாக எனக்கு வேண்டியதில்லை. நீயோ கஷ்ட திசையிலிருக்கிறாய் –
ஆகவே, ஒரு லட்சம் பொன் கொடுத்து விடு, போதும். அதிக ஆசைகூடாது
அந்தணனாகிய எனக்கு; அது கொடுப்பது உனக்குக் கஷ்டமாயிருந்தால் சொல்,
முனிவருக்குச் சேரவேண்டிய பொன்னிலிருந்து லட்சம் பொன்னைத் தரகுக்காகக்
கழித்துக்கொண்டு, நீ மிகுதியைக் கொடுத்ததாக அவரிடம் கொடுத்து விடுகிறேன்.
அவருக்கென்ன கணக்கா தெரியப்போகிறது? தெரிந்தாலும் இதென்ன அவருக்கு
ஒரு வரவு சிலவா?
ஹ. ஸ்வாமி, அங்ஙனம் செய்யவேண்டாம். அது தர்மமல்ல, பெரும் தவறாகும்.
நான் அந்த லட்சம் பொன்னை உமக்கு வேறாகக் கொடுக்கிறேன்.
சத். அரசே, இதென்ன பேதமை? எங்கிருந்து கொடுக்கப் போகிறீர்? உம்மிடம்
என்ன இருக்கிறது கொடுக்க?
ஹ. சத்யகீர்த்தி, அது ஒரு நியாயமாகாதே! சமுத்திரத்தைக் கடக்க வழிகாட்டிய
தயாநிதி, சிறு கால்வாயைக் கடக்க வழி காட்டுவார் - அப்பா,சத்யகீர்த்தி, என்னை
யாருக்கேனும் அடிமையாக விற்று - இவருக்குச் சேரவேண்டிய
தரகைக்கொடுத்துவிடு. -
சத். அந்தோ! சிவ சிவ! நான் என்ன வார்த்தைகளைக் கேட்கிறேன் - அரசே!
உம்மையா நான் - அடிமையாக
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, என் மனைவி மக்களை விற்றபின் என்னுடலையும் நான் ஏன்
விற்கலாகாது? என்மீது அன்புள்ளவனாயின் ஒரு ஆட்சேபனையும் சொல்லாது,
ஆலஸ்யமின்றி என்னை விற்று, அப் பணத்தை இவ் வந்தணரிடம் கொடு.
சத். அரசே, அப்படி நீர் கட்டாயமாய்க் கொடுக்கவேண்டுமென்றால், தங்கள் ஊழியன்
நானிருக்கிறேன். என்னை அடிமையாக விற்று இப் பணத்தைச் செலுத்திவிடும். –
உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன், இந்த வேண்டுகோளுக்காவது இசையும்.
ஹ. சத்யகீர்த்தி,உனதன்பை மெச்சினேன்-ஆயினும் அப்பா,நீ இப்பொழுது
என்னுடைய ஊழியன் அல்லவே,விஸ்வாமித்திரருடைய ஊழியன் என்பதை
மறவாதே. ஆகவே,என் கடனைத் தீர்க்க உன்னை விற்பது தர்மமல்ல, அப்படி
தர்மமா யிருந்தபோதிலும்,விற்க இந்த கட்டை இருக்கும்பொழுது, உனக்கேன்
நான் கஷ்டம் வைக்க வேண்டும்?சத்யகீர்த்தி,இனி தாமதிக்காதே. தயவு செய்து
என்னை இக் காசி நகரத்திலேயே எவருக்காவது விற்றுவிடு; இக்கடனையும்
தீர்த்துவிடு சீக்கிரம்.
சத். அரசே,உமதிஷ்டப்படி. இனி நான் என்ன சொல்வது?-வாரும் போவோம்.
ஹ. ஸ்வாமி,தாங்கள் தயவுசெய்து இந்த சிரமத்தையும் மேற்கொள்ளல் வேண்டும்-
கூட வாருங்கள் கொஞ்சம். [மூவரும் போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
----
இரண்டாம் காட்சி.
இடம்-காசியில் மற்றொரு வீதி.
ஹரிச்சந்திரன், சத்யகீர்த்தி, நட்சத்திரேசன் வருகிறார்கள்.
சத். அண்ணலே,இக்காசிப்பட்டணத்து வீதிகளையெல்லாம் கடந்தாயிற்று.
உம்மை விலைக்குக் கொள்வார் ஒரு வரும் அகப்படாதது நம்முடைய
துர் அதிர்ஷ்டம் போலும்.
ந. இதோ,இந்த வீதிக்குள் போகவில்லையே நாம்?
சத். ஸ்வாமி,இது கடையர்கள் வாழும் வீதி. இதிற் போவதிற் பிரயோஜனமில்லை.
அன்றியும் பிராம்மணராகிய தாங்கள் இதில் அடியெடுத்து வைக்கவும்
தகாதன்றோ? - ஆகவே வேறு எந்தப் பட்டணத்திற்காவது போய்ப் பார்ப்போம்.
ந. காலொடிய உங்கள் பின்னால் இதுவரையிலும் சுற்றியது போதாதோ? இன்னுமா
சுற்றவேண்டும்?அது முடியவே முடியாதென்னால்;இதை விட்டு நான் ஒரு அடியும்
எடுத்து வைக்கமாட்டேன்;ஹரிச்சந்திரா, உனக்காக நான் கஷ்டப்பட்டது
போதும். பரச்சேரியின் எல்லையில் என் பாதம் பட்டதற்காக நான் பிராயச் சித்தம்
செய்து கொள்ளவேண்டும். -அது போனாற் போகட்டும். உடனே,
இவ்விடத்திலேயே எனக்குச் சேரவேண்டிய லட்சம் பொன்னையும்
கொடுக்கிறாயா? அல்லது-
ஹ. ஸ்வாமி, போதும் நிறுத்துங்கள்,மற்ற வார்த்தைகளையும் இன்னொரு முறை கூறி
என் மனதைப் புண் படுத்தாதீர், அவைகளைக் கேட்கவும் என் மனம்
புண்படுகிறது. - சத்யகீர்த்தி,இவ்விடத்திலேயும் என்னை விலைக்குக் கூறிப்பார்.
சத். அண்ணலே,இது கடையர் வாழும் சேரியாச்சுதே-
ஹ. இருந்தாலென்ன?அப்பா,இக்கட்டை யாருக்கு அடிமைப்பட்டாலுமென்ன?
குறுக்காக ஒன்றும் இனி தயவு செய்து பேசாதே-உன்னை வேண்டிக்
கொள்ளுகிறேன்.
சத். அண்ணலே ஒரு புலையனுக்கு அடிமைப்பட ஒப்புகிறீரா?
ஹ. இந்த அந்தணர் கூறும்படியான வேறு மார்க்கத்தை ஒப்புக் கொள்வதைவிட
இதற்கே உடன்படுகிறேன்.
சத். *அப்படி ஒப்ப என் நா எழவில்லையே! [துக்கிக்கிறான். ]
ஹ. அப்பா,சத்யகீர்த்தி,ஏன் துக்கிக்கிறாய்? இக்கட்டையேறும் கட்டை யாருக்கு
அடிமைப்பட்டாலென்ன? மனமானது, சத்தியத்தை நிலை நிறுத்தி சத்தியத்திற்கு
நாதனாகிய சர்வேஸ்வரனுடைய பாதங்களுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும்,
அவ்வளவே; இனி தாமதியாதே- இந்த உபகாரம் எனக்குச் செய்.
சத். சர்வேஸ்வரன் என்னை மன்னிப்பாராக!-இவ்விடத்தில் வாழும் காசி
நகரவாசிகளே! நான் சொல்வதைக் கேட்பீர்களாக!-அயோத்திக்கு
வேந்தனாயிருந்து, விதியின்கொடுமையால் இக்கதிக்கு வந்த ஹரிச்சந்திரரை,
அவர் அனுமதியின்மீது அடிமையாக விற்கிறேன்; அவர் இந்தப்
பிராம்மணருக்குக்கொடுக்க இசைந்த லட்சம் பொன்ன்னைக் கொடுப்பவர்-எந்த
ஜாதியாயிருந்த போதிலும் - இவரை அடிமையாகக் கொள்ளலாம்.
[கும்பல் சேர்கிறது,பெருங் கூச்சல் உண்டாகிறது. ]
வீரபாஹு வருகிறான்.
வீ. ட்ரேயப்பா! நொம்ப கூச்சலா கீதே!யாரானா செத்துகித்து பூட்டாங்களா என்னா?
ஆண்டே, நீயாராண்டே? மின்னையே எங்க சேரியிலே கொளப்பமாகீது.
நீங்கல்லா வந்து இன்னும் கூச்சல் போட்ரைங்களே! என்னா சங்கீதி?
ச. அண்ணலே,அவனுடன் பேசவும் பேசாதீர். அவனைப் பார்த்தால்
சண்டாளனைப்போல் இருக்கிறது.
ஹ. ஐயா, காசிவாசியாரே, நீர் யாராகவிருந்த போதிலும். என் வரலாற்றைக்
கேளுங்கள். நான், ஹரிச்சந்திரன், ஒருகால் அயோத்திக்கு அரசனாயிருந்தவன்,
இந்தப்பிராம்மணருக்கு நான் செலுத்த வேண்டிய லட்சம் பொன்னுக்காக,
என்னை, என் அனுமதியின்மீது என் தோழனாகிய சத்யகீர்த்தி, அவ்விலைக்கு
அடிமையாக விற்பதாகக் கூறியிருக்கிறார். அத்தொகையைக் கொடுத்து என்னை
அடிமையாகத் தாங்கள் கொள்கிறீர்களா?
வீ. தென்னாடாது?விந்தையாகீது!லச்சம் பொன்னா? ஏம் யப்பா, நீ என்னா எங்க
ஊர்லே என்னமானாலும் வாந்திபேதி கீந்திபேதி வந்து லச்சக்கணக்கா
மனசர்ங்கொ செத்துபூட்ராங்க இண்ணு நெனைச்சிகினையா என்னா?
சுடுகாட்லெ ஒயெக்கிற வெட்டியானுக்கு அம்மாத்தம் பொன்னு எப்படியப்பா
கெடைக்கும்?
சத். அண்ணலே, அவன் வார்த்தையைக் கேட்டீரா? இங்கே இடுகாட்டைக் காத்து
அதன் வரும்படியினால் ஜீவிக்கும் சண்டாளன் இவன். அவனோடு இனி தாம்
வார்த்தையாடுவதும் இழிவாகும்.
ஹ. யாராகவிருந்தாலும் இருக்கட்டும்-ஐயா காசிவாசியே, நான் கேட்ட கேள்விக்குத்
தாங்கள் இன்னும் பதில்*
வீ. ஏயப்பா!வெலெ ரொம்ப ரொம்ப சொல்ரையேப்பா!- ரவெ கொறச்சிகோயப்பா.
ஹ. ஐயா,அது முடியாது.
வீ. ட்ரியப்பா! நொம்ப கண்டிப்பாகீதே!- இக்கட்டும் நானு இம்மாத்தம்
பொன்னு கொடுத்து அடிமெயா வாங்கனா,நீ என்னா என்னா வேலெ
செய்வேயப்பா?
ஹ. தர்மசஸ்திரப்படி அடிமையாகக் கொள்ளப்பட்டவன் தன் எஜமானனுக்கு
என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமோ,அவைகளை யெல்லாம்
செய்யச் சித்தமாயிருக்கிறேன்.
வீ, அந்த சாத்தரம் கீத்தரம் அல்லாம் எனக்கு தெரியாதுயப்பா, நான் கேக்கர
தென்னாண்ணா, எனக்கு பதுலா,சுடுகாட்லெ இந்துகினு, அங்கே வர்ர
பொணங்களெயெல்லா சுடுவையா?
சத், அந்தோ! அந்தோ! ஈஸ்வரா!-
ந. ஹரிச்சந்திரா,உனக்கென்ன பயித்தியமா? இத்தொழிலைச் செய்வதற்கா
உடன்படப்போகிறாய்? அயோத்தியில் அரசர்க்கரசனாய் ஆண்ட ஹரிச்சந்திரன்,
சுடுகாட்டைக் காத்து பிணங்களைச் சுட்டெரிப்பதா? ஹரிச்சந்திரா,
இப்பொழுதாவது என் வார்த்தையைக் கேள்-உனக்குப் பதிலாக நான் பதில்
சொல்லுகிறேன். -அடேய்!இவரால் அந்த வேலை செய்ய முடியாது- உன் பணமும்
வேண்டாம் - உன் ஜோலியும் வேண்டாம்! நீ போய் வா ஹரிச்சந்திரா,
இக்கஷ்டத்தை யனுபவிப்பதைவிட, உன்னால் கொடுக்க சக்தியில்லையென்று
ஒரு வார்த்தை சொல்லிவிடு,நான் போய்விடுகிறேன்.
ஹ. ஸ்வாமி,தாங்கள் கூறவேண்டியதெல்லாம் கூறியாயிற்றா? இன்னும் ஏதாவது
மிகுதி யிருக்கிறதா? இருந்தால் ஒரே விசையாய் எல்லாவற்றையும் கூறிவிடும்.
அடிக்கடி ஏன் சிரமப்படுகிறீர்கள்?-எல்லாம் முடிந்ததா?- ஆயின் தயவு செய்து
நான் கூறுவதைக் கேளுங்கள்- ஐயா, காசிமாநகரத்தின் ஸ்மசானத்தைக்
காத்தருள்பவரே, நீர் குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒப்புக்கொள்ளுகிறேன்.
தயவு செய்து உடனே என்னை வாங்கிக்*
சத். இதென்ன இது? கனவு காண்கிறேனா?
வீ. நொம்பசரி-ஆனா- இந்த பணத்தெ யார்கிட்ட கொடுக்கணும்?
ஹ. ஐயா,இந்தப் பிராம்மணரிடம்.
வீ. ஆனா, ஐயா, பாப்பரையா, யாங்கூட கொஞ்சம் வாங்க, எங்க ஊட்லே
இக்கிது, தர்ரேன்.
ந. சரி,அது ஒன்று செய்யவேண்டுமோ? ஹரிச்சந்திரா, உனக்காக நான் எவ்வளவு
கஷ்டப்பட வேண்டியதாயிருக்கிறது பார். - எட்டிப்போடா ********! தீண்டப்
போகிறாய் என்னை! வீ. ஏன் சாமி,சும்மா,நொம்ப கோவிச்சிகிரைங்க! என்னெ
மாத்திரம் தீண்டக் கூடாது, எம் பணத்தெ மாத்திரம் மூட்டெ கட்டிகினு
தோளுமேலே போட்டுகினு போவலாமோ?வா சாமி,சும்மா. [நட்சத்திரேசனை
அழைத்துக் கொண்டு போகிறான். ]
சத். அண்ணலே!அண்ணலே!இதுவோ உமக்கு அயன் விதித்த விதி!
இக்கதியுலும்மைக் காணும்படி நேர்ந்ததே! நானும் உம்மைக் கரையேற்ற
அசக்தன யிருக்கின்றேனே! பாவியேன்! பாவியேன்!
[அழுகிறான்]
ஹ. அப்பா,சத்யகீர்த்தி ஏன் துக்கப்படுகிறாய்? உன் துக்கத்தை அடக்கிக்கொள்.
என் பொருட்டு உனக்குத் துக்கமென்பதே வேண்டாம். எங்கும் நிறைந்த
பொருள் எண்ணியவாறு இவ்வுலகில் எல்லாம் நடைந்தேறுகிறது. அதன்
பொருட்டு பேதை மாந்தர்களாகிய நாம் பித்தர்களைப்போல் மனத்துயரடைந்து
என்ன பயன்? நம்மைப் படைத்தவர் அறிவார் நம்மைக் காத்திடும் வகையினை.
அவர் நமக்கு விதிக்கும் விதியினைக் குறித்து வெந்துயர்ப்படுவதிற்
பிரயோஜனமில்லை. நமக்கு நன்மை ஏதேனும் நேரிடுங்கால், நாம் புண்ணியம்
செய்தோம், அதன் பொருட்டு இந் நலனை ஜகதீசன் நமக்கனுப்பினார், என்று
சந்தோஷப்படுகிறோமே, அம்மாதிரி, தீமை ஏதேனும் நேரிடுங்கால், நாம் ஏதோ
பாபம் செய்தோம், அப்பாப நிவாரணத்தின்பொருட்டு தீங்கினை அனுப்பினார்
அவர், என்று ஏன் சந்தோஷிக்கலாகாது? க்ஷணத்தில் அழியும் இவ்வுலக
வாழ்வை ஒரு பொருட்டாக எண்ணி, அதை யிழந்தோமே,என்று, அதன்
பொருட்டு துக்கிப்பவன் மூடனாகும். என்றும் ஆழியாதிருப்பது சத்தியம் ஒன்றே.
அதன் ஒளி குறையாது. அதை நான் காத்துவரும் வரையில், நான் துக்கப்பட
நிமித்தியமில்லை. என் பொருட்டு நீயும் துக்கப்பட நிமித்தியமில்லை. -
[வீரபாஹுவும், நட்சத்திரேசனும் மறுபடி வருகிறார்கள். ]
ஹ. ஸ்வாமி, தங்களுக்குச் சேரவேண்டியதெல்லாம் சேர்ந்து விட்டதோ?
ந. ஆம், சேர்ந்து விட்டது - இனி நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். அப்பா, உன்
மனோதிடத்தை மெச்சினேன். நீ காத்திடும் சத்தியம் உன்னை என்றும்
காத்திடுமாக! அப்பா, உன்னை நான் பலவாறு துன்பத்துக் குள்ளாக்கினேன்,
அவற்றையெல்லாம் நீ மறந்து என்னை மன்னிப்பாயாக!
ஹ. ஸ்வாமி, தங்கள்மீது என்ன குற்றம்? எல்லாம் என் ஊழ்வினைப் பயனாகும்!
தங்கள் பாதங்களுக்கு நமஸ்கரிக்கிறேன். விஸ்வாமித்திர முனிவரிடம் அடிமை
ஹரிச்சந்திரன் திக்குநோக்கி தண்டனிட்டு நமஸ்கரித்ததாகச் சொல்லும்.
ந. அப்படியே, அப்பா நான் போய் வருகிறேன். [போகிறான்]
வீ. டேயப்பா, உம்பே ரென்ன சொன்னே?
ஹ. ஹரிச்சந்திரன்.
வீ. தென்னாடா எய்வாகீது? அத்தினி நீளம்பேரு எம் வாய்லெ நொழையலெ –
அந்த பேரெ சொல்லப்போனாகா, அர்சி துண்ரவன், இண்ணு வருது! அப்பொறம்
அந்த பேரெ வைச்சிகினு,சொடலையிலெ வர்ர அர்சி யெல்லாம் நீ
துண்ணுட்டேண்ணா, அப்றம் நான் என்னா செய்யரது?நான் சொல்ரத்தே கேளு-
ஒன்னெ- அரிச்சா, இண்ணு கூப்பிட்ரேன்!
ஹ. எஜாமானனுடைய இஷ்டம்.
வி. நல்ல பேச்சு சொன்னே!-நீ இந்த கம்பிளியையும் கோலெயும் எடுத்துகினு,
நேரா சுடுகாட்டுக்குபோ; அங்கே வீரவாவு இண்ணு எம்பேரெ சென்னெ இண்ணா,
நானிருக்கிற எடத்தெ காட்டுவான் எம்மவன் வீரன்; இந்தப் பொணங்களெ
யெல்லாம் கொளுத்திர வெதம், அவெ உனக்கு கத்து குடுப்பான்-கத்துக்கோ.
நானு ஊட்டுக்குப் போயி கஞ்சி குடிச்சிட்டு வர்ரேன்- நீ பொறப்புடு.
ஹ. அப்படியே.
வீ. டெடெடெ!இது யார்ரா உம் பின்னாலே ஒர்த்தன்?
ஹ. இவர் என் தோழர்.
வீ. தோயென்!தோயென் என்னாடா அடிமெக்கி? நீ என் வேலெயெ செய்யாமெ,கூட
உக்காந்துகினு கதெபேச, ஒரு ஆளுகூட இட்டிகினு போரையோ?அதெல்லாம்
ஒதவாது. இப்பவே அனுப்பிச்சூடு அந்த மவனெ.
ஹ. அப்பா, சத்யகீர்த்தி, ஆண்டவன் சொன்னபடி அடிமை கேட்க வேண்டியது-
நீ விடை பெற்றுச்செல்.
சத். அப்பா,வீரபாஹூ-இதோ நான் போய் வருகிறேன்- ஆயினும் இவரை
எப்பொழுதாவது பார்த்துப்போகும் படியாக எனக்கு உத்தரவளிக்கவேணும்.
வீ. ஆ! அப்டி கேளு-எப்பதாச்சிலும் ஓர் மாசத்திலெ ஒருதாட்டி வந்து
பாத்துட்டுப்போ; அடிக்கடி வராதே, பத்திரம்,போ.
சத். அண்ணலே,விடைபெற்றுக் கொள்ளுகிறேன். ஹ. அப்பா,போய்வா.
[சத்யகீர்த்தி போகிறான். ] ஆண்டவரே, அந்த சுடுகாடு எப் பக்கம் இருக்கிறது?
வீ. இப்டி நேரா போயி,பீச்சகைபக்கம் திரும்பனா-கங்கெ கரெ யிக்குது,
அதுக்குகிட்ட தாம்; விசாரிச்சிகினு போ.
ஹ. உத்தரவு. [ஹரிச்சந்திரன் ஒரு பக்கம் போகிறான். ]
வீ. விஸ்வாமித்திர முனிவர் சப்தம் நிறைவேறினாற்போல்தான்! [போகிறான். ]
காட்சி முடிகிறது.
--------
நான்காம் அங்கம்
இடம்-காசிக்கடுத்த ஓர் வனம். கோபாலன், ராமசேஷன், வரதன் முதலிய
பிராம்மணப் பிள்ளைகளுடன் தேவதாசன் தர்ப்பை சமித்து முதலியன சேகரித்துக் கொண்டிருக்கிறான்.
கோ. அடே,வரதா,அந்த சின்னபய தேவதாசனெ பார். தர்ப்பெயெ சரியா வெட்டத்
தெரியலெ; நாம்பள்ளா செய்யரத்தெ பாத்து, தானும் அப்படியே செய்ய பாக்கரா-
முடியலெ ஆனா பாவம்! ரொம்ப சின்ன பயடா!
வ. ஆமாம் பாவம். அவனெ பாத்த நேக்கு பரிதாபமாயிருக்கு. இவ்வளவு சின்ன
பயலெ. அந்த காலகண்ட பிராம்மணன், காட்டுக்கு அனுப்பிச்சாரெ நம்மோடெ!
கல் நெஞ்சுடா அந்த பிராம்மணனுக்கு, இந்த பயலெயும் அவா அம்மாளையும்
என்னா கஷ்டப்படுத்தரான் தெரியுமா நோக்கு? நாம் பக்கத்து ஆத்துலெ
இருந்திண்டு அல்லாம் பாத்திண்டிருக்கெ.
ரா. ஏண்டா அவாளே கஷ்டப்படுத்தக்கூடாது? அவா என்னா பிராம்மணாளோ?
அதல்லாமெ அவா, வெலைக்கி வாங்கின அடிமைதானே? நம்மெப்போலவா?
வ. சேஷா! நேத்து நம்ம வாத்தியார் சொல்லிக் கொடுத்ததெ யெல்லாம் நண்ணா
கத்திண்டிருக்கெ! நாம் வந்து எல்லார் பேர்லேயும் தயவோ டிருக்கணும், என்னா
ஜாதியா யிருந்தாலும் சரி, ஆடுமாடா யிருந்தாலும் சரி, இண்ணு சொன்னாரே,
அத்தெ இதுக்குள்ள மறந்து பூட்டையொ? நீயும் பெரியவனானா, இண்னொரு
கால கண்டப் பிராம்மணனாவெ!
கோ. என்னாடா அது விருதா வார்த்தெ! அந்த சேஷனொடு நோக்கென்னாடா
பேச்சு? வாங்க அல்லாம். சீக்கிரம் இன்னும் கொஞ்சம் தர்ப்பெ அறுத்து,
ஆளுக்கு கொஞ்சமா, அந்த தேவதாசனுக்குக் கொடுப்போம்.
ரா. முட்டாப் பசக! செய்யுங்க நீங்க. நான் கொடுக்க மாட்டேன்.
கோ. உன்னெ யாரும் கொடுக்கவும் சொல்லலெ-நீ கொடுக்கவும் வேண்டாம் போ.
-போன மாசம் காய்ச்சல் வந்த மாதிரி இன்னொரு தரம் நோக்கு காய்ச்ச வரட்டும்-
அப்ப எங்க கிட்ட வந்து தர்ப்பெ கேப்பெ-அப்ப எங்களுக்கு பதில் சொல்ல
தெரியும்.
ரா. இல்லெ இல்லெ இல்லெடா!கோபாலா, எம்பேர்லெ கோவிச்சிக்காதைங்க. - நானு
என்னா சொல்ல வந்தேண்ணா, நம்மெப்போலெ அவனும் கஷ்டப்பட்டா, சீக்கிரம்
தர்ப்பெ கிர்ப்பெ அறுக்க கத்துகவா இண்னு; உங்க பேர்லெ நான் ஒண்ணும்
சொல்லலெடாப்பா.
கோ. சரிதான்,உன் சமாசாரம் எங்களுக்கு நன்னா தெரியும்- ஆனாலும் இப்பவெ ஒரு
வார்த்தெ சொல்ரேன் கேளு- இந்த மாதிரி ஒனக்கு கெட்ட புத்தி மாத்திரம்
வாணாம் -அத்தெ உட்டூடு. [எல்லோரும் தர்ப்பை சேகரிக்கின்றனர். ]
தேவ. [பெருமூச்சுவிட்டு]அம்மா!அம்மா! [கண்ணீர் விடுகிறான். ]
வ. ஐயோ பாவம்!அவங்க அம்மாளெ நெனைச்சிண்டு அழராம் பைய!- அவளுக்கு
எவ்வளவு வருத்தமாயிருக்கும். இந்த சிறு பயலெ காட்டுக்கு அனுப்பனோமே
இண்ணு!
கோ. ஆமாம்,அந்த அம்மாளே பாத்தாதான் நேக்கு ரொம்ப வருத்தமா யிருக்கு. இவன்
அறியாத பய, கஷ்டம் இண்ரது அவ்வளவா தெரியலெ. அந்தம்மா, அந்த
பிராம்மணனிடத்திலெ ராவாப் பகலா, என்னா ஒழைக்கரா, என்னா கஷ்டப்படரா,
தெரியுமா? நான் என்னதான் பாவம் பண்ணாலும், மறுஜன்மத்லெ காலகண்டனா
மாத்திரம் பொறக்கக்கூடாது. -ஒரு ரகஸ்யம் தெரியுமாடா? அந்தம்மா,
அயோத்திக்கு ராஜாவா யிருந்த ஹரிச்சந்திரருடைய ஆத்துக்காரியாம்! இந்த
பயலும் அவா அம்மாளும் என்னா செல்வத்திலெ இருந்திருக்கணும்? அதையாவது
யோசிச்சி அந்த பிராம்மணன் கொஞ்சம் நன்னா நடத்தக்கூடாதா அவாளெ!
பாவம்!
ரா. அல்லாத்தையும் நம்பிவிடராம் இவன்! அவ ஹரிச்சந்திரர் ஆத்துக்காரியா யிருந்தா,
அடிமையா போவானே? அதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்.
கோ. தன் வாக்கைக் காப்பாத்தரத்துக்காக, ஹரிச்சந்திரன் தன் நாடு நகரத்தெ
யெல்லாம் விஸ்வாமித்திரருக்கு தானமாகக் கொடுத்துட்டு, அப்புறம் அவருக்குக்
கொடுக்கவேண்டிய கடனுக்காக, இவாளெ அடிமையா வித்தூட்டார் இண்ராக.
ரா. அதையெல்லாம் நம்பாதெ!அவ்வளவும் பொய்யாயிருக்கும்- அப்படி
செய்யரத்துக்கு ஹரிச்சந்திரன் என்னா மடையனா?
வ. அடா சேஷா!நோக்கு ரொம்ப தெரியும், நீ ரொம்ப புத்திசாலிதான். - நீ ஒறக்கக்
கத்தாதெ, பாவம், அந்த பய கேக்கப் போரான்!- வாடா கோபாலா, அவன் கிட்ட
போவோம். [தேவதாசனிடம் போகிறார்கள். ]
கோ. தேவதாசா,இண்ணைக்கு நீ அறுத்தது போதும். உனக்காக நாங்க கொஞ்சம்
அறுத்திண்டு வந்திருக்கோம், இந்தா வாங்கிக்க. -இதை யெல்லாம் சேத்திண்டு
போனா, அந்த கெழம் கோவிச்சிக்காது-
தேவ. அப்பா,உங்களுக்கெல்லாம் நமஸ்காரம்-ஆயினும் இன்னும் கொஞ்சம் தர்ப்பை
சேகரித்துக் கொள்ளுகிறேன். ஒரு சுமை தூக்கிக்கொண்டு வராவிட்டால்
என்னையும் என் தாயாரையும் அடித்துத் துரத்திவிடுவதாகச் சொன்னார் ஐயர்.
என்னையடித்தாலும் பெரிதல்ல, என் தாயாரை அடிப்பது எனக்கிஷ்டமில்லை.
வ. அப்படி உங்க ரெண்டுபேரையும் ஆத்தெ விட்டு அடிச்சி தொரத்திவிட்டா,
உங்களுக்கு நல்லதுதான்; அந்த கஷ்டமெல்லாம் இல்லாமெ இருப்பைக.
கோ. தேவதாசா,நீ ஒன்றும் பயப்படாதே, உன்னெ பயமுறுத்தறத்துக்கு அப்படி
சொல்லியிருக்கும் அந்தக் கெழம். உங்க அம்மாவை அடிக்காது அது, நாங்க
சொல்ரோம் வா-ரொம்ப நேரமா போச்சு.
தேவ. ஒரு நிமிஷம் பொறுங்கள்-இதோ வந்து விட்டேன். அதோ பாருங்கள்,
அந்தக் குன்றின்பேரில் நல்ல தர்ப்பை இருக்கிறது பச்சென்று,ஓடிப்போய் ஒரு
நொடியில் அதை அறுத்துக்கொண்டு வருகிறேன். அதைப் பார்ப் பாரயின் ஐயர்
சந்தோஷப்பட்ட்டு என் தாயாரை அடிக்காம லிருப்பார். [ஓடுகிறான். ]
கோ. அடடடெ!நில்லு நில்லு!-கேட்காதெ ஓடராம் பாரு! கால் தடுக்கி
விழுந்தா னிண்ணா என்ன செய்யரது?
ரா. புத்தி வரும் அப்போ.
கோ. உனக்கு இவ்வளவு வயசாகியும் இவ்வளவு புத்தி வந்துதே!
தேவ. என்ன பச்சென் றிருக்கிறது!காலையில் இவ்வழி வந்த பொழுது இதை நான்
எப்படிப் பாராது விட்டேன்? [தர்ப்பையை அறுக்கிறான். ] ஐயோ! பாம்பு! பாம்பு!
பாம்பு என்னைக் கடித்து விட்டது! கடித்து விட்டது!- அதோ ஓடுகிறது! ஓடுகிறது
மற்றவர். ஆ! ஆ! எங்கே? எங்கே? [அவனருகில் ஓடுகின்றனர். ]
தேவ. ஐயோ! அம்மா! அம்மா! விஷம் ஏறுகிறதே! ஏறுகிறதே! அண்ணா! அண்ணா!
அம்மா--அப்பா! [மரிக்கிறான். ]
மற்றவர். ஐஐயோ! தேவதாசன் செத்துபூட்டான்! நாம என்னா செய்யரதுடா!
ரா. நாமெல்லாம் ஓடிப்பூடலாம் வாங்கடா! இங்கே இருக்கக் கூடாது.
வ. என்னாடா இது? பாவம்! இந்த பயலெ இங்கெ இப்படியா விட்டுப் போரது?
மற்றவர். நாம வேறெ என்னா செய்யலாம்?
ரா. அடே, நான் சொல்ரத்தெ கேளுங்க. இங்கெ இந்த மாதிரி நிண்ணுகினு பேசிகினு
இருந்தைகளா, அந்த பாம்பு வந்து நம்மெயெல்லாம் கடிச்சூடும். நான் போரென்,
நீங்கல்லா வர்ரைகளா இல்லையா?—பொங்க ஆனால்! [ஓடிப்போகிறான். ]
வ. அடே, கோபாலா, பய செத்துப்பூட்டான். —நாம இங்கெ அழுதுகினு
இருக்கரத்துலெ பிரயோஜனமில்லெ. --இவனெ தூக்கிகினு போக நம்மாலெ
முடியாது. அதுவுமில்லாமெ, பொணத்தெ ஆத்துக்குக் கொண்டு போகக் கூடாது
இண்ணு சாஸ்திரமில்லெ? அத்தொட்டு இந்த கொடிகளாலேயும் எலைகளாலேயும்
இவனெ மறச்சி வைச்சூட்டு, நாம ஆத்துக்குப் போயி, அவா அம்மா கிட்ட நடந்த
சேதியெ சொல்லிடுவோம்.
மற்றவர். அப்படித்தான் செய்வோம்.
வ. பாவம்! அவங்கம்மா கிட்ட போயி எப்படி சொல்ரது இண்ணு இருக்குதுடா
எனக்கு இந்த சமாசாரம் கேட்டா அவளுக்கு எவ்வளவு துக்கமா யிருக்கும்? சின்ன
வயசுடா! புத்திசாலி பய! இப்பகூட என்னா அழகா யிருக்ராம் பார்!
கோ. அவன் தலைவிதி இப்படி இருந்துதாக்கும் அந்தமட்டும் அந்தப்
பிராம்மணன்கிட்ட கஷ்டப்படரத்தெவிட, செத்து சொர்க்கம்பூட்டான் இவன்—
இவனுக்காக நாம வருத்தப்பட வேண்டியதில்லெ--அவா அம்மா கதியெ
நெனைச்சிண்டாதான் நேக்கு துக்கம் வருது!--போலாம் வாங்க! நாழியா போச்சி,--
சீக்கிரம் போவோம்-- [போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
---------------------------------------
இரண்டாம் காட்சி.
இடம்--அதே வனம். இரவு. சந்திரமதி தேடிக்கொண்டு வருகிறாள்.
ச. கண்ணே! கண்ணே! தேவதாசா! எங்கே யிருக்கிறாயடா என் கண்மணி! உன் உடல் எங்கே கிடக்கிறதோ? இப்பேருலகில் என்னிலும் பெரும் பாவி யாரேனுமுண்டோ? என் அருமை மைந்தனைப் பறிகொடுத்ததுமன்றி, அவனதுடலையும் காணாது கதறவேண்டி வந்ததே!--ஈசனே! ஜகதீசா! இந்த அடர்ந்த காட்டில், இக் கருக்கிருட்டில், என் கண்மணியின் உடலை நான் எங்கென்று தேடிக் கண்டுபிடிக்கப்போகிறேன்! ஐயோ! என் மனம் போல் இவ்வாகாயமும் இருண்டிருக்கிறதே! ஒரு நட்சத்திரத்தையும் காணோமே! அந்தோ! அவைகளெல்லாம் பாலனை யிழந்த இப்பாவியைப் பார்ப்பதும் பாபமென்றெண்ணி மறைந்திருக்கின்றனவோ? கருணையில்லாத அப்பிராம்மணன் சூர்யாஸ்தமனத்திற்குமுன் எனக்கு உத்தரவு கொடுத்திருப்பாராயின் என் கண்மணியின் உடலிருக்கு மிடத்தைக் கண்டு பிடித்திருப்பேனே. அந்தோ! என் கண்மணியின் உடலைக் கட்டியழுதாவது என் துயரம் கொஞ்சம் தீர[க்கூடக் கொடுத்த வைக்காத பாவியானேனே!— பிராம்மணப் பிள்ளைகள் குறித்த இடம் இதுதான் என்று நினைக்கிறேன். அதில் சந்தேகமில்லை. --ஆயினும் இங்கே ஒன்றும் என் கண்ணுக்குப் புலப்படவில்லையே--எல்லாம் காடாந்த காரமாயிருக்கிறதே!-- இது என்ன காலில் தட்டுப்படுகிறது? கட்டையா?--அன்று! அன்று! கண்ணே! கண்ணே! தேவதாசா! மைந்தா! மைந்தா! [உடலின்மீது வீழ்ந்து மூர்ச்சையாகி பிறகு சற்று பொறுத்து தெளிந்து] மைந்தா! என் அருமை மகனே! என் கண்மணி! தேவதாசா! தேவதாசா! மடிந்தனையோ? மடிந்தனையோ?-- [தன் மடிமீது அவனுடலை வளர்த்திக்கொண்டு] கண்மணி! இச்சிறு வயதில் நீ இறக்கவேண்டுமென்று உன் தலையில் பிரமன் வரைந்தனனோ? அரசர்க்கரசனாகிய அயோத்தி மன்னன் புதல்வனா யுதித்த நீ, அடிமையாய் விற்கப்பட்டு, கட்செவியினால் கடிக்கப்பட்டு, ஆரும் துணையின்றி அநாதையாய் அருங் கானகத்தில் மடிந்து கிடக்கவேண்டுமென்று, உன் தலையில் எழுதப்பட்டிருந்ததா? கண்ணே! மைந்தா! இது அறியாப் பாலகனாகிய நீ இழைத்த பாபத்தின் பயனன்று, தர்ம சொரூபியாகிய உன் தந்தை யிழைத்த தவறுமன்று! மஹா பாபிஷ்டியாகிய உன் மாதாவான என் உதரத்தில் உதித்த பாபமே உன்னை இவ்வாறு பற்றியது! கண்ணே! தேவதாசா! உன் கனிவாய் திறந்து ஒரு வார்த்தை கூறி, இக்காதகியின் கவலையையெல்லாம் போக்கமாட்டாயா? மைந்தா! மைந்தா! உன் மாதாபடும் துயரத்தைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கலாமா நீ? இக் கடுங் கானகத்தில் நமது தாய் கதறியழுது தவிக்கின்றாளே யென்று உன் மனம் கரையவில்லையா? கண்ணே! கண்ணே! எனக்கு ஒரு வார்த்தை கூறடா! ஒரு உறுதி மொழி சொல்லடா! என்மீது உனக்கு இறக்கமென்பதில்லாமற் போயிற்றா? அல்லது, நம்மை இக்கதியில் கண்டும் உயிருடனிருக்கிற இக் கடின சித்தமுடைய காதகியுடன் பேசுவது பாபமென்றெண்ணி வாளா யிருக்கின்றனையோ? அப்பா, கண்மணி, உனதன்னை யென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் இம்மஹா பாதகிக்கு, மரிக்கவும் சுதந்திரமில்லையே! அயலாருக்கு அடிமைப்பட்ட நான் என திச்சைப்படி உயிர் துறக்கவும் சுதந்தர மற்றவளே! - அநாதரட்சகா! ஆபத்பாந்தவா! பேரிடி யொன்றை இப்பெரும் பாவியின் தலையில் விழச்செய்து இவளை பஸ்மீக்கரப்படுத்துமே இட்சணம்! பாலனைப் பறி கொடுத்த பாபி இப்பாரினில் இருந்தென்ன பலன்? ஜகதீசா! இதுவரையில் எனக்கு நேரிட்ட துன்பங்களை யெல்லாம் எனது கணவர் பொருட்டும் என அருமை மைந்தன் பொருட்டும், பொறுத்து வந்தேன். இனி என் அருமைக் கண்மணி மடிந்தபின், நான் ஆருயிர் தரிப்பானேன்? - ஐயோ! என பாலனைக் கடித்த படு விஷமுடைய பாம்பே, நீ எங்கிருக்கிறாய்? ஒரு பாபமும் அறியாத அவனைக்கொன்ற நீ, மஹா பாபிஷ்டியாகிய என்னையும் கடித்து மரிக்கச் செய்யாயா? அப்படியாவது இத் துயரமெல்லாம் நீங்கி, சுவர்க்கம் போய் என் சுந்தர குமாரனைக்கண்டு கட்டியணைத்து மகிழ்வேனே! - இல்லை! என்னை நீ கடிக்கமாட்டாய் என்று தெரியுமெனக்கு; புண்ணியம் செய்தவர்களே இப்பாழுலகத்தை விட்டு விரைவில் நீங்கி, சுவர்க்கம் புகுவார்கள். என்னைப் போன்ற கொடும்பாபிகள் பல வருடங்கள் இப் பாரினில் உழன்று நரகவேதனையை அனுபவித்துப் பரிதபிக்க வேண்டுமன்றோ? அந்தோ! இவ்வீரேழ் புவனங்களிலும் என்னைப்போன்ற கொண்டும்பாபி எவரேனு முண்டோ? இல்லாவிடின் மதிதயன் புத்திரியாய் மண்ணினி லுதித்து, மன்னர் மன்னனான அயோத்தி அரசன் அருந்துணைவியாய் வாழ்க்கைப்பட்டும், நாடு நகரத்தையெல்லாம் இழந்து, நாயகனிடமிருந்து பிரிக்கப்பட்டு, அடிமையாய் விற்கப்பட்டு, அருமை மைந்தனையும் பறி கொடுத்து, அநாதையாய் அருங் கானகத்தில் அழுந்து நிற்கக் காலம் வாய்த்ததே! அந்தோ! பரமேசா! எந்த ஜன்மத்தில் என்ன பாபமிழைத்தேனோ இக்கதிக்கு வர? - அந்தோ! அந்தோ! அந்த பரமேஸ்வரன் கருணையினால் எனது நாதன் நற்கதியடைந்து, என் அடிமைத்தனத்தை விடுவிக்க ஒருகால் வந்து, என் அருமை மைந்தன் எங்கே, என்று கேட்பாராயின், அவருக்கு நான் என்ன பதில் உரைப்பேனடா கண்மணி! கண்மணி! நீ இறந்து போனாய் என்று என் வாயால் எப்படி அவருக்குச் சொல்லுவேன்? அப்படி நான் சொல்வேனாயின் - அருமை மைந்தன் இறந்து ஆவி தரித்திருக்கிறாள் இப் பாபி, இவளை இனி நாம் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது, என்று தன் ஆவி துறப்பாரே! அதற்கு நான் என் செய்வேன்? என் செய்வேன்? பிராம்மணர் உன்னைக் காட்டிற் கனுப்பினார் என்று கூறுவேனாயின், நீயும் துணையாக ஏன் செல்லவில்லையென்று கேட்பாரே! ஐயோ! இக்கடின சித்தமுடைய பிராம்மணன் அறியாப் பாலனாகிய உன்னை இவ்வருங் கானகத்திற் கனுப்பினரே! அவரை நொந்தென்ன பலன்? இவ்வாறு நீ இறக்க வேண்டுமென்று பிரமன் உன் தலையில் எழுதியிருந்தால் அதை மாற்ற ஆராலாகும்? எல்லாம் வல்ல கடவுளே! இப்படியும் உமது திருவுளம் இருந்ததே! ஏழையென் செய்வேன்? ஏதும் உமதிச்சைப்படியே ஆகுக! - ஆயினும், - ஆயினும், கருணைக் கடலெனப் பெயர் பூண்ட உமக்கு என் அருமைப் பாலகன் மீது மாத்திரம் கருணை யென்பதேன் இல்லாமற் போயிற்று – இனி அழுது பயனென்ன?
[எழுந்திருக்கிறாள். ]
ஆண்டாண்டு தோக*ழுதாலும் அருமைப் புதல்வன் ஆருயிர் பெறப்போகிறானா? அப்படிப் பெறுவதாயின் என் ஆயுளெல்லாம் அழுது கழிப்பேனே! - இவனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை யெல்லாம் சீக்கிரம் செய்துவிட்டு, நான் அந்தணர் வீட்டிற்கு போகவேண்டும். இந்தச் சமயத்திலும் சீக்கிரம் வரும்படி கட்டளை யிட்டாரே! என் பாபம் அது! மைந்தா! மைந்தா! நீ எனக்குச் செய்ய வேண்டிய கர்மத்தை, நான் உனக்குச் செய்ய வேண்டி வந்ததே! கண்ணே வா, உன்னைச் சுடுகாடிற்குச் சுமந்து போகிறேன்! பரமனே! பரமனே! உமது பாதாரவிந்தங்களைப் பற்றியதற்குப் பாவி கண்டபலனிதுதானோ? [தேவதாசனைத் தூக்கிக்கொண்டு அழுதவண்ணம் போகிறாள்]
காட்சி முடிகிறது.
----------
மூன்றாம் காட்சி
இடம் - காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் அதைக்காத்து நிற்கிறான்.
ஹ. நடு ஜாமமாயிற்று - நரமனிதர்கள் ஓசையெல்லாம் அடங்கி விட்டது –
பேய்களின் கொக்கரிப்பும் பிணங்கள் எரியும் சப்தமும் தவிர, வேறொன்றும் என்
காதிற் படவில்லை - ஆகாயமும் என் ஆன்மாவைப்போல் அந்தகாரத்தில்
மூழ்கியிருக்கிறது. - சூரிய வம்சத்தில் மன்னனாயுதித்த நான், சுடுகாட்டைக் காத்து
நிற்கின்றேன், தன்னந்தனியாக - தேவதேவனே, உன் திருவிளையாட்டின்
திறத்தை அறிந்தார் யார்? அழிவிலாப் புகழுடை ஆதித்ய வம்சத்தி லுதித்து,
அயோத்தியை ஒருகால் ஆண்ட ஹரிச்சந்திரன், பிறகு கடையனுக்குக் கடிமையாகி,
கபந்தங்கள் வாழும் ஸ்மசானத்தில் சவங்களைச் சுட்டெரித்துக் காத்து நின்றான்,
என்று கனவிலும் எண்ணப்பட்டிருக்குமோ? அன்றைத்தினம் அயோத்தியில் நான்
கனவிற் கண்டதெல்லாம் நடந்தேறிவிட்டது. - ஆயினும் - இவ்விதம் நேரிடுமென்று
எள்ளளவும் எண்ணினவனல்லவே! அம்மட்டும் பின்னால் வரப்போகிறதைப்
பேதைமாந்தர்கள் முன்னாள் அறியாதபடி பேரருள் புரிந்தனரே, பேயோயாடி
பினாகபாணி! பின்பு வரப்போகிறதை முன்பு அறியாதிருத்தலே மேலாகும்! வருவது
தீமையேயாயின் அதை வராமலிருக்கச் செய்ய வகை யார் அறிவார்? அதுவுமன்றி
அது வரப்போகிறதேயென்று நினைத்து நினைத்து முன்பே அல்லலிற்
படுவோமல்லவா? வருவது நன்மையாயின், அதை முன்பே அறிந்து விடுவதினால்
அது நேரிடுங்கால் அத்தனை சந்தோஷத்தை தராது. ஆகவே, நடப்ப தெல்லாம்
நமது நன்மைக்கே, என்று நாதன் திருவடிகளில் நம்பிக்கையுள்ளவர்களாய், நாம்
சந்தோஷத்திலிருப்பதே நன்மார்க்கமாகும். எந்த ஸ்திதியில் ஈசன் நம்மை
வைத்தபோதிலும், இதைப்பார்க்கிலும் இழிந்த ஸ்திதியில்
வைக்காமலிருக்கின்றாரே, என்று அவரை வாழ்த்த வேண்டும். பாழான எக்கதி
வைத்தபோதிலும், பரிசுத்த ஆத்மாவை யுடையவன், பரமேஸ்வரன் நாம் முன்
ஜன்மங்களிற் செய்த பாபங்கலெல்லாம் பரிஹாரமாகும்படி இதை நமக்
கனுப்பினார், என்று முக மலர்ச்சியோடு முற்றும் பொறுத்து, அவரது பாதார
விந்தங்களைப் போற்றுதல் வேண்டும். அதுதான் நாம் உயர் பதவிக்குச் செல்ல
ஊன்று கோளாகும். அநித்தியமாய் இவ்வுலக வாழ்க்கையில் நமக்குள்ள
ஆசையாம் பற்றினை, அறவே நீக்கிட, இக்கதியே நமக்கு நற்கதியல்லவா?
இக்கதிக்கு நான் வந்திராவிட்டால், இவ் வுண்மைகளை யெல்லாம் இப்பொழுது
நான் அறிந்திருக்க மாட்டேன் அல்லவா? ஆகவே, பூதநாதனே, இந்த ஞானத்தைப்
புகட்டவேண்டி புலையனேற்கு இக்கதி யளித்தீர்! உமது பேரருளை நான்
என்னென்று புகழ்வேன்! பரமனே! பற்றறப் பற்றினேன் உம்பாதம்!
உம்பர்கட்கரசே,ஒழிவற நிறைந்த யோகமே யூற்றையேன் றனக்கு வம்பெனப்
பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே
சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே யெம்பொருட் டுன்னைச் சிக்கெனப்
பிடித்தே னெங்கெழுந் தருள்வ தினியே!-
ஆயினும்-இவையனைத்தும் அறிந்தும்-என் ஆருயிர்க் காதலியையும் அருமை
மைந்தனையும்பற்றி நினைக்கும் போதெல்லாம்,என் மனோதிடமெல்லாம்
எங்கேயோ பறந்தோடிப்போகிறதே!சந்திரமதி!சந்திரமதி!-தேவதாசா! தேவதாசா!-
பாவி என்பொருட்டுப் பாரினில் நீங்கள் அடிமைகளாகி அல்லற்பட
வேண்டியதாயிற்றே! ஈசனே!ஜகதீசா!நானிழைத்த பாபங்களின் பொருட்டு என்னை
உமதிச்சை வந்தபடி தண்டியும்,என்பொருட்டு அவர்களைத் தண்டியாதீர்! எனக்கு
இன்னும் கேடான கதி வரினும் வருக!அவர்கள் பாப மிழைக்காதபடியும் இன்னும்
பரிதபிக்காதபடியும் கடைக்கண்னாற் கடாட்சித் தருளும்! இன்னும் ஒரு கடைசி
வேண்டுகோள்-இக்ககடையவனுக்கு இன்னும் எக்கதி வாய்த்தபோதிலும், இவன்
மேற்கொண்ட சத்ய விரதத்தினின்றும், அணுவளவும் பிறழாதபடி காத்தருளும்!
சந்திரசேகரா! சத்யம் என்பதுநீரேயானால், அவ்வடிவில் உம்மைப் பூசிக்கும்
அடியார்க் கடியனாகிய என்னைக் காப்பது, உமது கடைமையாகும். உமது பதம்
எனது பாரம்,என்னைக் காப்பது உமது பாரம்!பரமதயாளு! பரமதயாளு!
சுடைலையைச் சுற்றி வரவேண்டிய காலமாயிற்று. [புறப்படுகிறான்]
காட்சி முடிகிறது.
--------------
நான்காம் காட்சி
இடம் - காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் அதைக் காத்து நிற்கிறான். அருகில் சத்தியகீர்த்தி நிற்கிறான்.
ஹ. அப்பா, சத்தியகீர்த்தி இதற்குள்ளாக இங்கேன் வந்தாய்? என்னுடைய
கஷ்டத்தைப் பார்த்து நீயும் ஏன் கஷ்டப் படவேண்டும்?
சத். அண்ணலே, நான் என் செய்வேன்? உம்மை விட்டுப் பிரிந்திருக்க என் மனம்
ஒப்பவில்லையே. பிறந்தது முதல் உம்மைவிட்டுப் பிரியாது வாழ்ந்து வந்தேன்
என்பது, நீர் அறியாத விஷயம் அன்றே; நீர் சந்தோஷமா யிருந்த காலத்தில்
உம்மை விட்டுப் பிரியாத நான், நீர் துக்கமனுபவிக்கும்பொழுது உம்மை விட்டுப்
பிரிய என் மனம் ஒப்புமோ? அண்ணலே, என்னை அவ்வளவு கேவலமாக
எண்ணாதீர்!
ஹ. அப்பா, அவ்வாறு நான் எண்ணவே யில்லை. என் பொருட்டு நீயேன்
துக்கபடவேண்டுமென்று கருதியே இவ்வாறு கூறினேன்.
சத். நமக்கு துக்கம் நேரிடுங்கால் நமது ஆப்தர்கள் அதை நம்முடனிருந்து
பகிர்ந்துக் கொள்வதினால் அது குறையும் என்கிறார்களே.
ஹ. ஆம், அது ஒரு விதத்தில் உண்மையே, ஆயினும் அதனுடன் மற்றொரு விஷயமும்
யோசிக்கவேண்டி வருகிறது. நம்முடைய துக்கமானது நமது நண்பர்களையும்
பீடிக்கிறதே என்று கருதுமிடத்து, அத் துக்கம் அதிகரிக்குமே, அதற்கென்
செய்கிறது?
சத். அண்ணலே, அதெப்படி யாயினு மாகுக, உம்மை விட்டுப் பிரிந்திருப்பதென்றால்
என் உள்ளம் பொறுக்க வில்லை - அப்படி இருப்பது எனக்கு அசாத்தியமா
யிருக்கிறது. ஆகவே தாங்கள் என்னை மன்னிக்கவேண் டும் - அதிருக்கட்டும்,
அண்ணலே, இக் கதியினின்றும் தாம் கடையேறுவதற்கு வழியொன்று
மில்லையா? உமது ஆயுளையெல்லாம் இப்படி அடிமையாகத்தான் நீர் கழிக்க
வேண்டுமோ?
ஹ. அப்பா, அதற்கு பதில் அந்த ஈசனைத்தான் கேட்க வேண்டும்;
என்னால் கூறமுடியாது.
சத். அண்ணலே, உமக்குப் பதிலாக நான் உமது எஜமானனிடம் அடிமையாகி
உம்மை நான் விடுவிக்க முடியாதா?
ஹ. அப்பா, சத்தியகீர்த்தி, உன் அருங்குணத்தை மெச்சினேன்; ஆயினும் நீ சொல்வது
ஒருபோதும் கூடாது. அதற்கு நான் இசையேன் என்று உனக்கு நான் எத்தனை
முறை சொல்லி யிருக்கிறேன்? கடல் சூழ்ந்த இவ்வுலகில் ஒவ்வொருவனும் தனது
கர்மாவைத் தானே அனுபவித்துத் தீரவேண்டும். ஆகவே, எனது கர்ம பலன்
இதுபோலும்; இதை நான் அனுபவித்தே கழிக்க வேண்டும். ஆகவே இந்த
ஸ்திதியிலும், நமது கர்மமாகிய கடனைச் சீக்கிரம் கழித்தொழிக்கிறோமே என்று
சந்தோஷப் படுகிறேன்.
சத். அண்ணலே, ஈசன் கருணையினால் இம்மன உறுதி, உம்முடைய மனைவி
மக்களுக்கு மிருந்து, அவர்களுடைய தற்கால ஸ்திதியைப் பொறுத்திடும்படிச்
செய்யுமாக!
ஹ. தேவதேவன் அங்ஙனம் திருவுளம் வைப்பாராக!
ஒரு புறமாக சந்திரமதி, தேவதாசனைத் தூக்கிக்கொண்டு அழுத வண்ணம் வருகிறாள்.
ச. ஹா! கண்மணி! கண்மணி! நான் இறந்து நீ எனக்குச் செய்யவேண்டிய கர்மத்தை நீ
இறந்து நான் உனக்குச் செய்யவேண்டி வந்ததே! விதியே! விதியே! இப்படியும்
எங்களிருவர் தலையில் எழுதி வைத்தாயே!-நேரமாய் விட்டது; இனி
தாமதிக்கலாகாது; கட்டையை அடுக் கி,என் கண்மணியை அதில் வளர்த்தி,நான்
விரைவில் தகனம் செய்யவேண்டும்-சிதறிக்கிடக்கும் இவைகளைக் கொண்டு
சிதையை அடுக்குகிறேன். [அங்ஙனமே செய்கிறாள். ]
என் அருஞ்செல்வமே!உன் அழகிய முகத்தைக் கடைசி முறை உன் தந்தை
பார்ப்பதற்கில்லாமற் போச்சுதே! தெய்வமே!தெய்வமே!-இனி வருந்தியாவதென்?-
அப்பா!கண்மணி! இதோ உன் சிதைக்கும் என் வயிற் றிற்கும் ஒரே கொள்ளியாக
வைக்கிறேனடா! கண்ணே! கண்ணே! [கொள்ளி வைக்கிறாள். ]
ஹ. அப்பா,சத்யகீர்த்தி,-அதோ பார் தூரத்தில் வெளிச் சம் தெரிகிறது!யாரோ சிதை
யடுக்கிக் கொள்ளி வைக் கிறாற் போலிருக்கிறது!-இங்கு சற்றே இரு,நான் போய்
என்னவென்று பார்த்து வருகிறேன்- [சந்திரமதி இருக்குமிடம் போகிறான். ]
ச. [அழுதுகொண்டு]கண்ணே!கண்மணி!கட்டிக்கரும்பே! உன் மதி வதனத்தைப்
பாவி நான் காண்பது இதுவோ கடைசி முறை?மறுபடியும் எந்த ஜன்மத்தில்
இதைக் காணப்போகிறேனோ?-கண்ணே!கண்ணே!
ஹ. [அருகிற் சென்று]ஸ்மசான பூமியில் இச் சமயத்தில் கண் ணீர் விட்டுக்
கலங்கி அழுவது யார்?
ச. [பயந்து]ஈசன் காத்திடுவாராக!-ஐயா,நீர் யார்?
ஹ. நான் இச்சுடுகாட்டைக் காத்திடும் காவலாள்,ஏதோ நீ இறந்த குழந்தையொன்றை
தகனம் செய்ய முயல்வதாகக் காண்கிறேன். இச் சுடுகாட்டில் பிரேதத்தைக்
கொளுத் துமுன் செலுத்தவேண்டிய கட்டணம் எங்கே?
ச. கட்டணமா? கட்டணமென்றால்? அதொன்றும் எனக்குத் தெரியாதே!
ஹ. கட்டணம் என்றால், இச்சுடுகாட்டில் பிரேதத்தைச் சுடுமுன், இச் சுடுகாட்டிற்குச்
சொந்தக்காரனாகிய என் எஜமானனுக்குச் சேரவேண்டிய வரி; அதைச்
செலுத்தாவிட்டால் இவ்விடத்தில் எந்தப் பிரேதத்தையும் சுடக்கூடாது.
ச. ஐயா! நீர் யாராயினுமாகுக, அநாதையான என்னிடம் அந்த வரியைச் செலுத்த
அரைக் காசும் கிடையாது. என்னுடைய ஒரே பாலனைப் பறிகொடுத்த பரதேசி
நான், அவனுடலைத் தகனம் செய்யவேண்டி யிருக்கிறது. நானோ ஒருவருக்கு
அடிமைப்பட்டவள். அடிமையாகிய நான் எங்கிருந்து அந்தக் கட்டணத்தைச்
செலுத்துவேன்! ஐயா, என்மீது தயை புரிந்து அக் கட்டணத்தை மன்னித்து என்
மைந்தனுடலைத் தகனம் செய்ய உத்தரவு கொடுமே? உமக்குப் பெரும்
புண்ணியமாகும்!
ஹ. அம்மா, உன் சமாசாரத்தைக் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் பரிதாபமாகத்-
தானிருக்கிறது. ஆயினும் உனது வேண்டு கோளுக்கிசைய நான் அசக்தனா
யிருக்கிறேன். நான் எனது எஜமானனுடைய கட்டளைப்படி நடக்கவேண்டிய
ஊழியன்; அக்கட்டணத்தை மன்னிக்க எனக்கு உத்தரவு கிடையாது. ஆகவே
அதைக் செலுத்தினாலொழிய நீ உன் மைந்தனை இங்கே தகனம் செய்ய நான்
உத்தரவு கொடுக்கக் கூடாது; ஆகவே அம்மா, நீ என்னை மன்னிக்கவேணும், என்
கடமையை நான் செய்யவேண்டும்; உன் கையில் காசில்லாவிட்டால்,
இப்பிரேதத்தை இங்கு தகனம் செய்யக்கூடாது. வேறே எங்கேயாவது
கொண்டுபோ.
ச. ஐயோ! நான் வேறெ எங்கு கொண்டு போவேன் இந்நடு நிசியில்? அன்றியும்
சிதையின் மீது வைத்ததை மறுபடி எடுக்கலாகுமோ?கொள்ளியும் வைத்தாய்
விட்டதே! இனி நான் சவத்தைத் தீண்டலாகாதே!-ஐயா,கொஞ் சம் தயை
புரியுமே?கொஞ்சம் பச்சாத்தாபப்படுங்கள்! உம்மைக் கையிரந்து
வேண்டுகிறேன்! கொஞ்சம் பொறுங்கள்,தகனமாய் விடும்!
ஹ. அம்மா!அது உதவாது!இதுதான் என் கடைசி வார்த்தை. நீயாக
இப்பிரேதத்தைச் சிதையினின்றும் எடுத்துக்கொண்டு செல்லாவிட்டால் நான்
அதைத் தள்ளவேண்டும். என்ன சொல்லுகிறாய்?-சரி!என் கடைமையை நான்
செய்ய வேண்டும்-மன்னிப்பாய்!
[தன் கோலால் தேவதாசன் உடலை எடுத்துத் தள்ளுகிறான். அது சந்திரமதியின்மடி மீது விழுகிறது. ]
ச. தெய்வமே!தெய்வமே!-மகனே!இப்படியும் இருந் ததா உன் விதி?சுட்டெரிக்கப்
படுமுன் சுடுகாட்டுப் புலையனால் சிதையினின்றும் கீழே தள்ளப்படும்படியாக
என்ன பாபமிழைத்தாயடா கண்மணி நீ!-நீ ஒரு பாபமு மிழைத்திருக்க மாட்டாய்-
இக்கதி உனக்கு வாய்த்தது என் வயிற்றில் நீ பிறந்த கொடுமையாகும்!
ஹ. அந்தோ!பாபம்!பாபம்!-அம்மா,என்ன,எவ்வளவு சொல்லியும் அழுது
கொண்டிருக்கிறாய் இங்கேயே?
ச, இந்தக் கதியில் நான் அழாமல் வேறு என்ன செய்வது? இறந்த என் மைந்தனுக்காக
நான் கொடுக்கத் தக்கது என் கண்ணீரன்றி வேறொன்றும் என்னிடம் இல்லையே!
ஹ. அம்மா,என்னை வெறுக்காதே!நான் என்ன செய்வேன்? உன் கதியை நினைத்து
நான் பச்சாத்தாபப் பட்டபோதி லும்,என் கடைமையை நான்
நிறைவேற்றவேண்டும். எனக் குச் சேரவேண்டிய வாய்க்கரிசியும்
முழந்துண்டையும், நான் மன்னித்துவிடுகிறேன்,என் எஜமானுக்குச் சேர
வேண்டிய கட்டணத்தை மாத்திரம் எப்படியாவது கொடுத்துதான் தீரவேண்டும்.
ச. ஐயா,உமக்கு எத்தனை முறை நான் சொல்லுவேன்? என்னிடம் கால்
துட்டுமில்லையே!
ஹ. காசு கையில் இல்லாவிட்டால் உன்னிடமிருக்கும் பொருள் ஏதாவதென்றை
விற்று அதைக் கொடுக்க வேண்டும்.
ச. ஐயோ!விற்கத்தக்க பொருள் என்னிடம் ஒன்றுமில் லையே!ஒன்றுமில்லையே!
ஹ. பொய் பேசாதே!நான் எதையும் பொறுப்பேன்,பொய் யினை மாத்திரம்
பொறுக்கமாட்டேன்;உன் கழுத்தில் மாங்கல்யம் இருக்கிறதே,அதை விற்று என்
எஜமான னனுக்குச் சேரவேண்டிய பொருளைக் கொடுக்கிறது தானே?
ச. ஆ!ஆ!-தெய்வமே!தெய்வமே!இக் கதிக்கும் என் னைக் கொண்டுவந்தாயோ? நான்
பிறந்தகாலை என்னுடன் பிறந்த என் மாங்கல்யம்,என் கணவர் கண்ணுக்கின்றி
மற்றொருவர் கண்ணுக்கும் புலப்படாதென்று நீ அசரீரி யாய் நின்று கூறின
வார்த்தை பொய்த்துப் போய்,சுடு காட்டில் பிணத்தைச் சுட்டெரிக்கும் சண்டாளப்
புலையன் கண்ணிற்கும் புலப்பட்டதே!
ஹ. ஆ!-ஆ!-
ச. தெய்வமே!உன் வார்த்தையே பொய்த்துப் போவ தானால் உலகத்தினில்
எதுதான் சத்யமாகும்?
ஹ. சந்திரமதி!
ச. ஆ!பிராணநாதா!பிராணநாதா!
ஹ. தேவ-தாசா! [தேவதாசன் உடலின் மீது மூர்ச்சையாகி விழுகிறான். ]
ச. பிராணநாதா! பிராணநாதா! - அந்தோ! பிள்ளையையும் பறிகொடுத்து, இன்று,
நான் புருஷனையும் பரிகொடுப்பதோ! - ஈசனே! ஈசனே! - இல்லை, இல்லை
மூர்ச்சையாயினார் போலும் பிராணநாதர்! பிராணநாதா! - பிராணநாதா!
ஹ. [மூர்ச்சை தெளிந்து] சந்திரமதி! - நமது மைந்தன் - தேவதாசன் - இறந்தானா? –
நான் உயிரோ டிருக்கிறேனோ? கனவு காண்கிறேனோ? - இல்லையே!
இல்லையே! - இது உண்மையே! உண்மையே! கண்ணே தேவதாசா!
[தேவதாசன் உடலை கட்டியணைத்து] இதுவோ உன் விதி! இதுவோ உன் விதி! –
ஈசனே! ஜகதீசா! என்னால் பொறுக்க முடியவில்லையே! இதைக் கண்ணாரக்
கண்டும் ஆவி தரித்திருக்கின்றேனே! என் உள்ளம் வெடியா திருக்கின்றதே!
மைந்தா! மைந்தா! தேவதாசா! நீ மடிந்ததாக என்னால் எண்ணவும்
முடியவில்லையே! - அந்தோ! எனக்கேன் கண்ணீர் வராமலிருக்கிறது? சந்திரமதி!
சந்திரமதி! ஏதாவது பேசு - என்னுடன் -
ச. தெய்வமே! நான் காண்பது மெய்யோ பொய்யோ? கனவோ நினைவோ? –
பிராணநாதா! நீர்தானோ அயோத்தி மன்னனா யிருந்தவர்? என்னை மணந்த
மணாளர்?
ஹ. சந்திரமதி! ஆம் ஆம் அது கிடக்கட்டும்! - தேவதாசன் - நமது மைந்தன், எப்படி
மடிந்தான்? அதை விரைவிற் சொல் எனக்கு? - விரைவிற் சொல் -
ச. நாதா! நான் உமக்கு என்னவென்று சொல்வேன்? எப்படிச் சொல்வேன்?
ஹ. கண்ணே! - சொல் - சொல் - சீக்கிரம் -
ச. என் நா எழவில்லையே! என் நா எழவில்லையே! -
ஹ. கொஞ்சம் மனதை தைரியம் செய்துகொண்டு - சொல்! சொல்!
ச. [அழுதுகொண்டே] இன்று காலை-காலகண்டையர், காட்டிற்குச் சென்று,தர்ப்பை
சேகரித்துக் கொண்டு வரும் படி-கட்டளையிட்டனுப்பினார் தேவதாசனை-
அங்கே கரும் பாம்பொன்று-கண்மணியைக் கடிக்க-மடிந்த தாக உடன்சென்ற
பிராம்மணப் பிள்ளைகள்வந்து சொன் னார்கள்-நான் இதைக் கேட்டதும்-
ஹ. அந்தோ!தேவதாசா!-அயோத்தி மன்னனுக்கு அரும் புதல்வனாய்ப் பிறந்த நீ,
அருங் கானகத்தில் அநாதை யாய் அரவம் தீண்டி இறக்கவேண்டுமென்று, அயனார்
உன் தலையில் வரைந்தாரோ?அப்பா!கண்மணி!அறி யாப்பாலனாகிய நீ செய்த
பாபத்தின் பயனாயிராது இது, பரிசுத்தமான பரிதியின் வம்சத்தி லுதித்து, பாராளும்
மன்னனாய்ப் பிறந்தும்,பறையனுக்கடிமையாகி பரம சண் டாளனாகிச் சுடுகாட்டை
பாதுகாத்து நிற்கும்,கதியை யடைந்த, இம்மஹா பாபியின் மைந்தனாய்ப் பிறந்த
கொடுமை போலும்!கொடுமை போலும்! [தேம்பி அழுகிறான். ]
ச. ஆ!தெய்வமே!நான் என்ன வார்த்தையினைக் கேட்கி றேன்!பிராணநாதா-தாங்கள்-
இக்கதிக்கு எப்படி வந்தீர்கள்?
ஹ. சந்திரமதி-கூறுகிறேன் கேள்-உன்னை விட்டுப் பிரிந்த பின்,
நட்சத்திரேசர், தனக்குத் தரகு சேரவேண்டு மென்று கேட்க,அதைக்கொடுக்க
இசைந்து,வேறொன் றும் வகையில்லாதவனாகி,நான் இச்சுடுகாட்டுத்
தலைவனாகிய வீரபாஹு எனும்-புலையனுக்கு-அடிமைப் பட்டு-அக்கடனையும்
தீர்த்தேன்.
ச. அந்தோ!அந்தோ!பிராணநாதா!இக்கதியும் உமக்கு வாய்க்கவேண்டுமா?
எனக்கு எக்கதி வாய்த்தபோதி லும் நீராவது சுகமாயிருப்பீர் என்றெண்ணி,
பொறுத்து வந்தேனே!
ஹ. சந்திரமதி,நீயும் தேவதாசனும் அடிமைப்பட்டபோதி லும்,எதோ
சுகத்திலிருப்பீர்கள் என்றெண்ணி,நான் என் கதியைக் கருதாது
பொறுத்திருந்தேனே!அதுவும் இதனுடன் போயிற்றே!-ஈசனே!ஈசனே!ஏழையேன்
இனி என் செய்வேன்?என்ன நேர்ந்தபோதிலும் நீரே கதி என்று உம்மைக்
கைப்பற்றியதற்கு,என்னைக் கை விட்டீரே!-நீர் என்னைக் கைவிட்ட போதிலும்
நான் உமது காலை விடமாட்டேன்!-சந்திரமதி,எழுந்திரு- உனது மனதைத்
தேற்றிக்கொள்,நமது மைந்தன் புண் ணியஞ்செய்தவன்,இப்பாழகிய உலகில்
அவனிருந்து கஷ்டப்படுவானேன் என்று,பரமதயாநிதி தன் பாதம் சேர்த்துக்
கொண்டார் அவனை;பாபிகளாகிய நாம்தான் பாரினில் உயிருடன் இருந்து
பரிதபிக்கிறோம். -நாமி ழைத்த பாப பரிஹாரமாக!-நாம் என்ன வருந்தியும் என்ன
பலன்? மடிந்த மைந்தன் மறுபடியும் உயிர் பெறப் போகிறானோ?-நேரமாகிறது.
இனி காலதாம தம் செய்யலாகாது-மடிந்த மைந்தனுடலை எப்படியும் தகனம்
செய்ய வேண்டும். அப்படிச் செய்யுமுன்-என் எஜமானனக்குச் சேரவேண்டிய
கட்டணத்தைச் செலுத் தவேண்டும்.
ச. அந்தோ!நாதா!அதைச் செலுத்த என் கையில் ஒன்று மில்லையே,நீர் அறியீரா?
ஹ. சந்திரமதி,என் கடைமைக்கு விரோதமாக நான் ஒருகா லும் நடக்கமுடியாது.
அதைச் செலுத்தாதபடி தகனம் செய்ய நான் இசைவேனாயின் அது அசத்யமாகு
மன்றோ?ஆகவே அதைச் செலுத்த வகையில்லாவிட் டால்-இவ்வுடலை தகனம்
செய்யலாகாது நாம்.
ச. ஈசனே!ஈசனே!இவ்வுலகில் எங்களைப்போன்ற பாபி களுமிருக்கிறார்களோ?
இறந்த மைந்தனைச் சுட்டெரிக் கவும் கதியின்றிக் கலங்குகிறோமே!-
[அழுகிறாள். ] கடவுளே!நீர் கண் உறங்குகிறீரோ?-அல்லது கருணா நிதியென்று
உமக்குப் பெயர் வைத்தது பொய்த்ததோ?
ஹ. சந்திரமதி,அதைக் கேட்பதற்கு நாம் யார்?அவரை நாம் அவ்வாறு கேட்பதற்கு
நமக்கு சுதந்தரம் கிடை யாது. அவரிச்சைப்படி நமக் கனுப்பி வைக்கும் இன்ப
துன்பங்களை அனுபவிக்கத் தான் நமக்கு சுதந்தர முண்டு. சந்திரமதி, நாம்
வருந்தியாவ தொன்றுமில்லை. ஆகவே வருந்துவானேன்?அன்றியும் அவர்
நமக்களித்த பொருளை அவர் மறுபடியும் எடுத்துக்கொள்ள அவ ருக்குச் சுதந்தர
முண்டல்லவா?உலக வாழ்க்கை யென் பது இத்தன்மையதே;இதன் பொருட்டு
துக்கிப்பது உன்மத்த மாகும். இனி தாமதியாதே;நான் சொல்
வதைக்கேள்; நள்ளிருள் என்று பாராமல்,உடனே புறப் பட்டுப் போய்,உனது
எஜமானனிடமிருந்து இக் கட் டணத்தை வாங்கிவா,அவர் கொடேன் என்று மறுக்க
நியாயமில்லை. அடிமைப்பட்டவன் மரித்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய
சம்ஸ்காரங்களையெல்லாம் எஜமானன் செய்ய வேண்டும்,நியாய சாஸ்திரப்படி-
சீக்கிரம் போய் வா. நானிங்கு-இவ்வுடலை-பாதுகாத் திருக்கிறேன். நீ திரும்பிவரும்
வரையில்.
ச. ஆம் பிராணநாதா,அங்ஙனமேசெய்கிறேன்;எது நேர்ந்த போதிலும் உம்முடைய
கடமைப்படி நீர் நடக்கவேண் டியது நியாயமே. நான் உத்தரவு பெற்றுக்
கொள்கிறேன். -போய் கூடிய சீக்கிரத்தில் வருகிறேன்.
ஹ. சீக்கிரம் போய்வா-ஜகதீசன் உன்னைக் காப்பாறு வாராக!
[சந்திரமதி வணங்கிப் போகிறாள். ]
இதற்காக நான் துக்கிப்பானேன்?அதோ பட்டுப்போன அம்மரம் இருக்கிறதே,
அதற்காக வருந்துகிறேனா? அதோ அம் மண்ணிற்காக வருந்துகிறேனா?
இல்லையே அப்படியிருக்க இக் கட்டைக்காகவும்-இம்மண் ணிற் காகவும்
வருந்துவானேன்?-என்ன பேதமை!-
சத், [ஹரிச்சந்திரனிருக்குமிடம் வந்து]அண்ணலே, என்ன சமா சாரம்?ஏதாவது
விசேஷமுண்டோ?தூரத்திலிருந்த எனக்கு ஏதோ அழுகுரல் கேட்டதுபோ லிருந்தது,
ஆயினும் உம்முடைய உத்தரவின்றி எப்படி நீர் இருக்கு மிடம் போவது,என்று
பொறுத்துப் பார்த்தேன். இத் தனை நாழிகை கழித்தும் நீர் திரும்பி வராதபடியால்
என்ன காரணம் என்று விசாரித்துப் போக வந்தேன். மன்னிக்கவேண்டும்.
ஹ. வேறொன்றும்-முக்கியமான விசேஷமில்லை-தேவதா சன் மடிந்து போனான்-
அவனுடலை-
சத். யார் மடிந்தது?யார் மடிந்தது?
ஹ. தேவதாசன்-அவனுடலைத் தூக்கிக்கொண்டு சந்திரமதி இங்கு வந்தாள்-தகனம்
செய்ய. அதற்காக என் எஜ மானனனுக்குச் சேரவேண்டிய கட்டணத்தை
வேதியரிடமிருந்து வாங்கி வரும்படி அவளை அனுப்பினேன்,அவ் வளவே.
சத். என்ன! உமது மைந்தனா, தேவதாசனா மடிந்தான்?- எப்படி எப்படி?
ஹ. அரவம் ஒன்று தீண்டி.
சத். அண்ணலே!உமது மனம் என்ன கல்லாயிற்றா?கொஞ்ச மேனும் துயரமின்றி இதை
எவ்வாறு என்னிடம் கூறத் துணிந்தீர்?உமது சுபாவமே மாறியதா என்ன?-ஆ!
இதுவோ உடல்?
ஹ. ஆம். -
சத். [தேவதாசன் முகத்தை மூடியிருந்த வஸ்திரத்தை நீக்கி] ஹா! தேவதாசா!தேவதாசா!
[அழுகிறான். ] அப்பா!அருமைப் பாலகா!இப்படியும் அயன் உனக்கு
விதித்தானோ? நீ பிறந்தக்கால்,உன் தந்தைக்குப் பிற் காலம் அயோத்தியை
நெடுநாள் அரசாள்வாய் என்று ஜோஸ்யர்களெல்லாம் அன்று கூறினதெல்லாம்
பொய்த்ததே! பொய்த்ததே!இப் பாழுலகில் நான் இனி நான் எதைத் தான்
நம்புவேன்?கடவுளே கடின சித்தமுடையவரா னால்,கருணை யென்பது எங்கு
கிடைக்கப்போகிறது இவ் வகிலத்தில்?அயோத்தி மன்னன் அருமைப் பாலானாயு
தித்த நீ,அநாதையைப் போல் அருங் கானில் அரவம் தீண்டி மடிந்து கிடக்க
நேர்ந்ததே!-தெய்வமே!தெய் வமே!
ஹ. சத்யகீர்த்தி,வருந்துததொழி. நீ ஏன் துக்கப்படுகிறாய்? யாருக்காக
துக்கப்படுகிறாய்?தேவதாசன் உயிருக்கா கவா?அது இருக்கவேண்டிய இடத்தில்
சவுக்கியமா யிருக்கிறது. இந்த மண்ணுக்காகவா?மண் மண்னோடு போய்ச்
சேருகிறது. எங்களுக்காகவா? நீ துக்கப்படு வதினால் எங்களுக்கேதாவது
பிரயோஜனமுண்டோ அதனால்? உனக்காகவா?நீ என்ன பலன் அடையப்
போகிறாய் இதனால்?-ஆகவே நீ ஏன் வருந்தவேண்டும்?
சத். அண்ணலே,நீர் கூறுவதெல்லாம் உண்மையாயினும்- என் மனம் கேளேன்
என்கிறதே!
ஹ, அதைக் கேட்கும்படிச் செய்ய ஈசனைக் குறித்துப் பிரார்த்தி.
சத். நம்மை இக் கதிக்குக் கொண்டுவந்த ஈசனையா?
ஹ. ஆம்.
சத். அண்ணலே!உமக்கு இம் மனோ உறுதி எங்ஙனம் வந்தது?
ஹ. அவர் கருணையினால்-வா. இவ்வுடலை எடுத்துக் கொண்டு நான் காவல் காத்து
நிற்குமிடம் செல்வோம்.
காட்சி முடிகிறது.
--------------------
ஐந்தாம் அங்கம்
இடம் - காசியில் ஓர் வீதி. வீரண்ணன், மார்த்தாண்டன், பராந்தகன் வருகிறார்கள்.
வீ. என்னாடா இது ஆச்சரியமா யிருக்குது! ராஜா அரமனையிலெ இருந்து, ராஜா
பிள்ளையெ திருடிகினு பூடரது இண்ணா, அதுவும் நாம்ப இத்தினி பேரு
காவல்காரும் காத்துகினு இருக்கும்போது! நாம்ப எப்படியாவது திருடனெ கண்டு
பிடிக்கணும், இல்லாபோனா நம்ப தலெ பூடும்.
மா. கண்டு பிடிச்சோமிண்ணா ராஜா நம்பளுக்கு பொஹுமானம் கொடுப்பாரு.
ப. ஆமாண்டா, மொதல்லெ கண்டு பிடிக்கணுமே. அவன் என்னமோ சாதாரண
திருடன் அல்லா; ராஜ அரமனைக்குள்ள ஒருத்தருக்கும் தெரியாமெ நொழஞ்சி,
அந்தப்புறத்துக்குப் போயி, ராஜா பிள்ளையெ திருடிகினு போனவன், ரொம்ப
கைதேர்ந்த திருடனா யிருக்கணும். அப்படிப்பட்டவனெ கண்டு பிடிக்கிறது
நம்பளுக்கு லேசான வேலெயல்லா.
வீ. என்னா கஷ்டமானாலும்பட்டு கண்டுபுடிச்சிதான் தீரணும் - இங்கே சும்மா கதெ
பேசிங்கரத்துலெ பிரயோஜனமில்லெ - வாங்க, பட்டணத்தெ சுத்தி தேடி
பார்க்கலாம். திருடன் இதுக்குள்ள பட்டணத்தெ உட்டு வெளியே
போயிருக்கமாட்டான்.
மா. ஏண்டாப்பா, இதெல்லாம் கஷ்டம் என்னாத்துக்கு? எவனாவது ஒரு காட்டாளியெ
புடிச்சி, இவன்தான் திருடன் இண்ணு அவன் தலையிலெ பழியெ போட்டு,
ராஜாகிட்ட இழுத்துகினு போயி உட்டா போச்சி-எங்கண்ணன் ஒருதரம்செய்தா
இந்தமாதிரி-
வீ. போடா மடையா!அதெல்லாம் ஒதவாது,ராஜா சோத்தெ துண்ணுட்டு அவருக்கே
துரோகம் செய் யரதா?-வாங்கடா தேடலாம்.
ப. வாடா சோம்பேறி! அப்படி செய்யரதா இருந்தாலும் ராஜா பிள்ளைக்கு என்ன வழி
சொல்ரது?
வீ. பொறப்படுங்கடா சீக்கிரம்,இப்படி பேசிகினு இருந் தோமின்னா,அந்த திருடன்
பட்டணத்தெவுட்டு போர*த்துக்கு வழி கொடுப்போம். ஏண்டா,வாரைங் களா
இல்லையா?-இல்லாப்போனா நான் மாத்திரம் போயி தேடரேன்-
ப. மா. இல்லெ இல்லெ வர்ரோம் நாங்களும்! [மூவரும் போகிறார்கள். ]
விஸ்வாமித்திரர் ஒருபுறமாக வருகிறார்.
வி. இதனுடன் இப் பிரயத்னத்தை விடலாமா?இன்னும் முயல்வதில் ஏதேனும் பிரயோஜனமுண்டோ?என் னாலான சூழ்ச்சிகளெல்லாம் இதுவரையில் நான் செய்து பார்த்தும்,அவைகளுக்கெல்லாம் இடங் கொடாது தன் சத்யமொழியைக் காப்பாற்றும் பொரு ட்டு,தானமாக ராஜ்ய முழுதையும் கொடுத்து,தன் மனைவி மக்களை அடிமைகளாக விற்று,தானும் ஒரு புலை யனுக் கடிமைப்பட்ட ஹரிச்சந்திரன்,இனி எதன் பொருட்டு அசத்யம் பேசப்போகிறான்?நான் தோற்ற வனே!ஆயினும் எப்படி அப்பதம் என் வாயினின்றும் வருவது என்றே கவலைப்படுகிறேன்-வேறு வழியில்லை! ஆயினும் ஒரு விதத்தில் யோசிக்குமிடத்து இதற்காக நான் வருத்தப்பட வேண்டியதில்லை. வசிஷ்டருக்கும் னக்கும் நேரிட்ட இவ்வாக்கு வாதத்தினால்,நான் இது வரையில் அறியாத சில அரிய விஷயங்களை அறிந்தேன். முக்கியமாக கேவலம் இல்லறத்திலிருக்கும் மனிதனாயி னும்,சத்ய விரதத்தை மேற்கொண்டு அதனின்றும் அணுவளவேனும் பிரியாதவன்,*இப் பூமண்டலத்தில் ஒரு வனிருக்கிறான்,என்பதைக் கண்டறிந்தேன். அதுவும் அப்படிப்பட்ட உத்தமன் யார்?-என் சிஷ்யனாகிய திரிசங்குவின் மைந்தன்!-ஆம்-ஹரிச்சந்திரா,உன் னால் உலக மாந்தர்க்கே ஓர் கீர்த்தி யுண்டாயிருக்கிறது. * உன்னிடமிருந்து பல அரிய விஷயங்களை அறிந்தேன் நான்;என்னை வென்றது நீயே!அந்த வசிஷ்டர் அன்று; இது எனக்கு சந்தோஷமே-ஆயினும் தேவசபையில் நான் வசிஷ்டருக்குத் தோற்றதாக ஒப்புக்கொள்ள வேண்டியதா யிருக்கிரதே என்று யோசிக்கிறேன். இதன் பொருட்டே இதனாலும் பிரயோஜன மில்லையென்று எனக்கு நன்றாய்த் தெரிந்தும்,இன்னும் ஒரு கடைசி பிரயத்தனம் செய்து பார்க்கும்படி என் மனம் உந்துகிற தென்னை. இவ்வளவு தூரம் பிரயத்தனப்பட்டபின் இதை யும் பார்த்து விடுகிறேன். ஹரிச்சந்திரா,இதில் தவறுவா யாயின் வசிஷ்டர் தோற்றவரே,இதிலுன் நீ பிறழாதிருப் பாயாயின்,எனது பாதி தவப்பயனை பெறத்தக்கவனே! என் மாய்கையினால் அரண்மனையில் அந்தப்புரத்தில் உறங்கிக்கொண்டிருந்த இக்காசிராஜன் மகனைக் கவர்ந் து,இறந்ததுபோல் மூர்ச்சையடையச்செய்திருக்கிறேன், -ஹரிச்சந்திரன் பிள்ளை தேவதாசனுக்குச் செய்தது போல். இக்குழந்தையை இங்கே இவ் வீதியின் மத்தியில் வைக்கிறேன்;சந்திரமதி நமது காலகண்டன் வீட்டிற் குப் போகும்பொழுது இவ்வழியாகத்தான் போகவேண் டும். எனது மாய்கையினால் இக்குழந்தையின் முகம் தேவதாசனது முகத்தைப் போல் அவளது கண் ணுக்குத் தோற்றும்படி செய்கிறேன்,அப்பொழுது அதைக் கண்டு அவள் திகைத்து. கையில் எடுத்துப் ர்ப்பாள். சமயம் காவற்காரர்களை இங்கு வரச் செய்து,அவளைக் கைதியாகப் பிடிக்கச் செய்கிறேன். உடனே அவர்கள் சந்திரமதியைக் குழந்தையுடன் கைப் பிடியாகக் காசி மன்னன் எதிராகக் கொண்டு போய் விடு வார்கள். காசி மன்னன் தன் மகனைக் கொன்றதாக எண்ணி,சந்திரமதிக்கு சிரசாக்கினை விதித்து விடுவான். நமது வீரபாஹுவைக்கொண்டு அவ்வாக்கினையை ஹரிச் சந்திரன் நிறைவேற்றும்படி கட்டளையிடச் செய்கிறேன்! -ஆம் ஆம்!அறமொழியினின்றும் அணுவளவும் தவ றாத அந்த ஹரிச்சந்திரன்,அக்கட்டளையை நிறைவேற்று கிறானோ பார்ப்போம்!அதற்கும் சலிக்காதவனாயின், அப்படிப்பட்டவனால் நான் தோற்கடிக்கப்படுவது என க்கு ஒரு அபகீர்த்தியாகாது!-இனி தாமதிக்கலாகாது. சந்திரமதி அதோ வருகிறாள்,இருட்டில்,மெல்ல நடந்து.
[காசிராஜன் குழந்தையைக் கீழே வைத்து விட்டு விஸ்வாமித்திரர் மறைகிறார். ]
எதிர்புறமாக சந்திரமதி வருகிறாள்.
ச. ஆ!என்ன கருக்கிருட்டாய் இருக்கிறது!நான் போக வழியைக் கண்டுபிடிப்பதும்
கஷ்டமாயிருக் கிறது. நான் விரைவில் அந்தணர் வீடு போய்ச் சேர வேண்டும்-
இதென்ன இது?என்னவோ வழியிற் கிடக் கிறதே!-ஐயோ பாபம்!சிறு
பாலன்! இந்நிசியில் இவ் விடத்தில் தனியாக யார் இதை விட்டுவிட்டுப்
போனவர்கள்?-என்ன மின்னல்!-என்ன ஆச்சரியம்!தேவ தாசன் முகம்
போலிருக்கிறதே!- [குழந்தையைக் கையில் எடுக்கிறாள். ]
வீரண்ணன்,மார்த்தாண்டன்,பராந்தகன்,மூவரும் மறுபடி விரைந்து வருகிரார்கள்.
வீ. யார் அங்கே?
மா. திருடன்! திருடன்! அதோ அவன் கையிலே ராஜா கொழந்தெ!
[சந்திரமதியை மூவருமாகப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். ]
வீ. ஆ!திருடா! உன்னைக் கைப்பிடியாக பிடிச்சூட்டோம்! இனி எங்க கையிலேயிருந்து
தப்ப முடியாது!
ப. அடடே! பொம்மனாட்டிடா!
மா. பொம்மனாட்டியா இருந்தா என்னா?ராஜா கொழந்தெயோட கண்டு
பிடிச்சூட்டோமே!-அடடே! கொழந்தே செத்து போயிருக்குதுடா! நம்ப ராஜா
கொழந்தெ செத்து பூட்டுதுடா!
வீ, ஆ!திருடினது மல்லாமெ கொண்ணு பூட்டையா! கொலெ பாதகி! இந்த சின்ன
கொழந்தெயே ஏன் கொண்ணே?உன்னெ ஒரே வெட்டாய் வெட்டி விடட்டுமா?
பொம்மனாட்டியா பொறந்து கொஞ்சமாவது ஈவு எதக்கமில்லாமெ கொழந்தையெ
கொண்ணையே!- பாவி!- ஏன் இத்தெ கொண்ணெ?-வாயெத் தெறக்க மாட்டெ?
ப. இதோ பார்!திருட்டு முழி முழிக்கிறா!பதில் சொல்லத் தெரியாமே! இந்தத்
திருட்டுத்தனமெல்லாம் எங்களுக்கு நண்ணா தெரியும்-வா வா, ராஜாகிட்ட!
கைப்பிடியா புடிச்ச பிற்பாடு இனிமேலெ என்னா?
வீ. அடடே!இந்தப்பாவி நம்ப ராஜா கொழைந்தையெ கொல்லரத்துக்கு முன்னே
கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்காப் பூட்டோம்!-இனிமேலெ அத்தெ பத்தி யோசிச்சி
என்ன பிரயோஜனம்?-வாங்கடா!அப்படியே ராஜாகிட்ட இழுத்துகினு போகலாம்.
மா. ஆமாம்,இப்பவே இழுத்துகினு போவோம்; இல்லாப்போனா இவ்வளவு
அசாத்தியக்காரி, எப்படியாவது தப்பிச்சிகினு போவாப்பா!-முழிக்கராப்பாரு!
கொலெ பாதகி! உம்புள்ளையெ யாரானாலும் இப்படி கொண்ணிருந்தா, என்னா
வருத்தப்பட்டிருப்பே?
ச. ஈசனே-ஜகதீசா!
ப. கொழந்தெ யிண்ணும் பாராமெ,கொண்ணவளுக்கு, சாமி ஒண்ணு! வா
பாதகி!வாயெத் தெறக்காதே!-
ச. நான் கனவு காண்கிறேனா?
மா. ஆமாம்!அல்லாம் கனவுதான்!அங்கே ராஜாகிட்ட போனா, அல்லாம் நெனவா
போவும் வா! [சந்திரமதியை இழுத்துக்கொண்டு போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
---------- ----------
இரண்டாம் காட்சி.
இடம்-காசிராஜன் கொலுமண்டபம். ராஜகேசரி சிம்மாசனத்தில் வீற்றிருக்க, அவரது மந்திரிகளாகிய சுமதி துர்மதி முதலியவர்கள் இருபக்கம் இருக்கின்றனர்.
வீரண்ணன் முதலிய காவலர்களால் சூழப்பட்டு சந்திரமதி அரசன் எதிரில் நிற்கிறாள்.
ரா. ஹே!ஸ்திரீயே!நீ யாரயிருந்த போதிலும் கடைசி முறை கேட்கிறேன். உன்
வாயைத் திறக்கமாட்டாயா? நீ ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டியதிருந்தால்
சொல்; பட்சபாதமின்றி. பொறுமையுடன் நாம் அதைக் கோட்போம். நீ
குற்றவாளியல்லவென்று ரூபிப்பதற்கு ஏதாவது சாட்சியம் இருந்தால் சொல்.
உன்மீது குற்றம் சாட்டும் இவர்கள் கூறியதில் ஏதாவது பொய்யிருந்தால்
எடுத்துரை. தண்டனையினின்றும் நீ தப்புவதற்கு ஏதாவது காரணமாவது
நியாயமாவதிருந்தால் கூறு. இறந்தது என் மகனாயிற்றே என்று,நான் தீர
விசாரியாது தண்டனை விதிக்கமாட்டேன். ஆகவே அஞ்சாது சொல்.
வீ. மஹாராஜா!இந்த பாதகியெ கேக்கரத்துலெ பிரயோஜனமில்லெ. நாங்க
எங்களாலெ ஆனமுட்டும் பயப்படுத்திப் பார்த்தோம்-அடிச்சிப் பார்த்தோம்-
ஒண்ணும் பிரயோஜனமில்லெ-வாயெ தெறக்கமாட்டேண்றா; இவ ஊம வேஷம்
போடரா இண்ணு நினைக்கிறெ.
ரா. மந்திரிகளே,நடந்ததையெல்லாம் கேட்டீர்களே- இவ்வாறு என் குழந்தை
உயிரிழக்க வேண்டுமென்று விஸ்வேசன் திருவுளம் கொண்டார் போலும்-
சு. மஹாராஜா அவர்கள் கொஞ்சம் மனதைத் தைரியம் பண்ணிக் கொள்ள
வேண்டும். இப்பொழுது விசாரிப்பதைவிட, கொஞ்சம் பொறுத்து, நாளைத்தினம்
இவ்விஷயத்தை விசாரிக்கலாம் என்று தோன்றுகிறதெனக்கு.
ரா. வேண்டாம்; நீதி விசாரணையில் தாமசம் என்பது தகாது. என் துக்கத்தை அடக்கிக்
கொண்டேன். இனிமேல் நடத்துவோம். மந்திரிகளே, என்னுடைய ஒரே குழந்தை
இறந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த ஸ்திரீயானவள்
அக்குழந்தையை அதன் மீதிருந்த நகைகளின் பொருட்டுக் கொன்றதாக, நமது
சபையின் முன், குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கிறாள். நமது காவலாளர்கள் அவளுக்கு
விரோதமாகக் கூறிய சாட்சியத்தை யெல்லாம் நீங்கள் கேட்டீர்கள். இவளோ,நாம்
எத்தனை முறை கேட்டபோதிலும், வாயைத் திறந்து ஒன்றும் பதில் கூறாது
நிற்கிறாள். நான் எனது தீர்மானத்தைக் கூறுமுன், உங்களுடைய
அபிப்பிராயங்களை எனக்குத் தெரிவிக்கக் கோருகிறேன். அரசனானவன்
அணுவளவேனும் பட்சபாதமில்லாமல் நீதி செலுத்த வேண்டும் என்பதை நீங்கள்
நன்குணர்ந்திருக்கிறீர்கள். என்னுடய மகனைக் கொன்றதாகக் குற்றஞ்
சாற்றப்பட்டிருக்கிறாள் என்கிற விஷயம், உம்முடைய மனதைக் கொஞ்சமேனும்
நடுநெறியினின்றும் கலைக்க வேண்டாம். உங்களுக்கெது கேவலம் நியாயமாகத்
தோற்றுகிறதோ, அதை எனக்கெடுத்துரையுங்கள்.
து. மஹாராஜா,இவ் விஷயத்தில் சந்தேகத்திற்கே இடமில்லையென்று
தோன்றுகிறதெனக்கு. சாட்சியம் என்னவோ மிகவும் உறுதியா யிருக்கிறது.
கைப்பிடியாகப் பிடிக்கப்பட்டிருக்கிறாள் இக்கொலைக்கஞ்சாப் பாதகி. எனக்குத்
தெரிந்தவரையில்,இப்பாவி,நமது அரண்மனையில் நடுநிசியில் நுழைந்து
ராஜகுமாரனை அபகரித்துச் சென்று,ஆபரணங்களின் நிமித்தம் கொன்றிருக்க
வேன்டுமென்பது தவிர வேறு முடிவிற்கு நாம் வருவதற்கு ஹேதுவில்லை,ஆகவே
தாங்கள் தாமதியாது தண்டனை விதிக்கலாம்.
சுமதி தவிர மற்ற மந்திரிகள். ஆம் ஆம்!அப்படியே செய்யலாம்.
ரா. மந்திரி சுமதி,என்ன நீர் ஒன்றும் பேசாது ஏதோ யோசித்த வண்ணம் இருக்கிறீர்?-
உம்முடைய அபிப்பிராயம் என்ன?
சு. மஹாராஜா,என்னைத் தாங்கள் கொஞ்சம் மன்னிக்க வேண்டும். என்னுடைய மனமானது மிகவும் கலங்கி நிற்கிறது. உருதியாய் ஓர் முடிவிற்கு வருவது கஷ்டமா யிருக்கிறது. ஒருபுறம் நோக்குமிடத்து,இந்த அம்மாள்மீது சாட்சியம் என்னவோ அதிக உறுதியா யிருப்பதுபோல் காண்கிறது. இன்னொருபுறம் நோக்குங்கால், இவர்களுடைய தோற்றம் முதலியவற்றைக் கருதுமிடத்து, இப்படிப்பட்ட கொடிய கொலையை இவர்கள் செய்திருப்பார்களா, என்று சந்தேகிக்க வேண்டியதா-யிருக்கிறது. புத்தி நுட்பமுடைய சில கொடிய கொலைஞர், மேலுக்கு ஒரு பாபமு மறியாதவர்கள்போல் வேஷம் தரிக்கக்கூடும் என்பதை அறிந்துள்ளேன். ஆயினும் முகத்தைக்கொண்டு அகத்தை அறிவதானால்,என்னுடைய கண்கள் என்னை மோசம் செய்யாவிட்டால், இப்பொழுது தமது சந்நிதானத்தில் நிற்கும் இம் மாது, ஏதோ தௌர்ப்பாக்கியத்தால் இக் கஷ்ட திசையயை யடைந்த உத்தம ஸ்திரீயைப்போல் காணப்படுகிறார்களே யொழிய,குழந்தையைக் கொல்லும் கொடிய பாதகியைப்போல் தோற்றப் படவில்லை. இதைவிட்டு, இக்கொலையைச் செய்தார்களா இல்லையா என்று தீர்மானிக்கும் விஷயத்தில்,மஹாராஜாவின் குழந்தை இவர்கள் கையில் இருக்கும்பொழுது கண்டதாக சாட்சிகள் கூறுகிறார்களேயொழிய, இவர்கள் தன் கையால் அக் குழந்தையைக் கொல்லும்பொழுது யாரும் நேராகப் பார்த்ததாகச் சொல்லவில்லை. இவர்கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்று, காவலாளிகள் நம்மை ஊகிக்கும்படி கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் மஹாராஜா அவர்கள் தீர்க்காலோசனை செய்ய வேண்டுமென்பது என்னுடைய பிரார்த்தனை. கொலை முதலிய விஷயங்களில் சுற்றுப்பக்கத்தி லிருக்கப்பட்ட சந்தர்ப்பங்களைக்கொண்டு தீர்மானத்திற்கு வருவது அவ்வளவு உசிதமாகாது. இவர்கள்தான் கொன்றிருக்க வேண்டுமென்பதற்கு அநேக ஆட்சேபனைகள் இருக்கின்றன. முதலில் அபலையாகிய இம் மாது, ஒண்டியாக. நடுநிசியில்,அதிக காவலமைந்துள்ள நமது அரண்மனை அந்தப்புரத்தில் ஒருவரும் அறியாதபடி எப்படி நுழைந்திருக்கக்கூடும்? அரண்மனைக்குள் நுழைந்தபொழுதாவது, அதைவிட்டு வெளியே போகும்பொழுதாவது, ஒருவரும் இவர்களைக் கண்டதாக சாட்சியம் சொல்லவில்லை. அந்தப்புர வாயிற் கதவு பூட்டியபடி இருக்கும்பொழுது, ஒரு ஸ்திரீ,எப்படி உள்ளே நுழைந்து ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே போயிருக்கக் கூடும்? மதிலேறிக் குதித்துச் சென்றார்கள் என்று கூறுவது, ஆண் மக்களுக்கே அசாத்தியமான காரியம். இம்மாது குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு குதித்துச் சென்றார்கள் என்று எண்ணுவது, அறிவிற்கு அமைந்ததன்று. மஹாராஜா, இவ் விஷயத்தைப்பற்றி நான் யோசிக்க யோசிக்க, இவ் விஷயம் அத்யாஸ்சர்யமாய்த் தோற்றுகிறது. இவர்கள் மீது சாற்றப்பட்டிருக்கும் குற்றம் என்னவென்றால்,மஹாராஜா அவர்கள் மைந்தன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களை அபகரிக்கும்பொருட்டு, அக்குழந்தையைத் திருடிச் சென்று கொன்றார்கள் என்பதே. ஆபரணங்களைக் கவரவேண்டி இதைச் செய்திருந்தால், குழந்தையைக் கொல்வானேன்? கொல்ல வேண்டிய காரணமில்லையே; ஆபரணங்களைக் கவருமுன் குழந்தையைக் கொன்றிருக்க வேண்டுமென்று யோசிப் போமாயின், கொன்ற குழந்தையை,ஆபரணங்களை அபகரித்தபின், தன்னுடன் அரண்மனைக்கு வெளியே எடுத்துச் செல்ல, இவர்கள் பயித்தியக்காரியா யிருக்கவேண்டும். இருந்த விடத்தில் குழந்தையை விட்டுப் போவதைவிட்டு, கைப்பிடியாய்க் காவலாளிகள் பிடிக்கும் வண்ணம், தன்னுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போவார்களோ? அரண்மனைக்கு வெளியே குழந்தையைக் கொண்டுபோய்,அதன் ஆபரணங்களை அபஹரித் திருக்க வேண்டுமென்று எண்ணுவதானால், ஆபரணங்களைக் கவர்ந்தபின், அக் குழந்தையை,-ஸ்திரீ ஜாதியாகிய இவர்கள்-கொஞ்சமேனும் மனமிரக்க மின்றி கொல்வானேன்?ஸ்திரீகளுடைய சுபாவத்தை நாம் அறிந்த வரையில்,பொறாமை அல்லது கோபம் முதலிய துர்க்குணங்களினால் அதிகமாய் உந்தப்பட்டா லொழிய, எந்த ஸ்திரீயும்,ராட்சசியா யில்லாவிட்டால்,ஒரு குழந்தையைக் கொல்ல மாட்டாள், என்பது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே. அப்படிப்பட்ட கோபமாவது பொறாமையாவது, நமது இளவரசர் விஷயத்தில் இம் மாதுக்கு வரவேண்டிய நிமித்தியமே கிடையாதன்றோ? மஹாராஜாவிடமிருந்து ஏதோ பொருள் பறிக்கவேண்டுமென்று மற்றவர்களால் இம் மாது மஹாராஜாவின் குழந்தையைத் திருடும்படி ஏவப்பட் டிருக்கவேண்டும் என்று எண்ணுவதாயின்,அக் குழந்தையை உயிருடன் ஜாக்கிரதையாக வைத்திருக்கவேண்டியது அவர்களுக்கு அதிக அவசியமாகிறது. இவைகளெல்லா மிருக்கட்டும். நாம் எல்லோரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது. இவர்கள் குழந்தையை எப்படிக் கொன்றார்கள்? பலாத்காரமாய்க் கொன்றிருந்தால் குழந்தையின்மீது ஏதாவது வடு அல்லது குறி யிருக்குமன்றோ? நமது அரண்மனை வயித்தியர்கள் அப்படிப்பட்ட குறி யொன்றுமில்லை யென்று எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்; இந்த ஆச்சர்யத்திற் கென்ன சொல்வது? எந்த விதத்தில் நான் யோசித்துப் பார்த்தாலும் சந்தேகத்தின்மேல் சந்தேகமா யிருக்கிறதே யொழிய, ஒரு தீர்மானத்திற்கு வருவது எனக்குக் கடினமா யிருக்கிறது-
ரா. ஆம் சுமதி,நீர் கூறும்படியான நியாயங்களெல்லாம் ஓர் விதத்தில் நாம்
ஒப்புக்கொள்ள வேண்டியவைகளா யிருக்கின்றன உண்மையே,ஆயினும் மடிந்த
மகவைக் கையில் வைத்துக்கொண் டிருந்தபொழுது இந்த ஸ்திரீ கைப் பிடியாய்ப்
பிடிக்கப்பட்டனள்,என்பது மறுக்கற்பால தன்று;அன்றியும் ஆபரணங்களின்
மூட்டை இவளருகிலிருந்து எடுக்கப்பட்டதாக ரூபிக்கப்படிருக்கிறது. இவ்
விரண்டிற்கும் என்ன சமாதானம் சொல்லுவீர்கள்?
சு. *மஹாராஜா,இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, எனக்கு ஆச்சரியமே
அதிகப் படுகிறதென, முன்பே சமூகத்திற்குத் தெரிவித்திருக்கின்றேன். தாங்கள்
குறிப்பிட்ட ஆட்சேபனைகளுக்குத் தகுந்த பதில் உரைக்க அசக்தனா யிருக்கிறேன்.
ஆயினும் இப்படி நாம் யோசிக்க லாகாதோ? யாரோ சில பாதகர்கள் குழந்தையைக்
கொன்று, தாங்கள் தப்பும் வண்ணம் இவர்கள் கையில் குழந்தையை விட்டு,
ஆபரணங்களையும் இவர்கள் அருகில் வைத்துவிட்டுப் போயிருக்கலாகாதா?
இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டுமென்று நான் உறுதியாய்ச் சொல்ல
வரவில்லை. ஆயினும் இங்ஙனம் நேர்ந்திருக்கலாகாதா என்று யோசிக்கிறேன்.
து. மகாராஜா, அங்ஙனமாயின் இப் பாதகி அவ்வாறு நேர்ந்தது என்று வாய்திறந்து
சொல்வதற் கென்ன தடை? தான் தப்பித்துக்கொள்ள ஏதாவது
மார்க்கமிருக்குமாயின், இவ்வாறு மௌனம் சாதிப்பாளோ? இவள் வாய் திறந்து
பேசாதிருப்பதே, இவள்தான் குற்றவாளியென்று நன்றாய் ருஜுப்படுத்துகிறது.
குற்றவாளிகள், கையும் பிடியுமாய்க் கண்டு பிடிக்கப்பட்ட பொழுது, ஒன்றும்
பேசாதபடி அவர்கள் வாயடைத்துப் போவதைப்பற்றி நாம் கேட்டிருக்கிறோம்,
அம்மாதிரியான விஷயங்களில், இது ஒன்றாகும்.
ரா. ஆம், இதுதான் என் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கிறது - ஹே! ஸ்திரீயே நீ
ஏன் மௌனம் சாதிக்கிறாய்? ஏதேனும் சொல்லிக்கொள்ள வேண்டியதிருந்தால்,
அஞ்சாது உடனே சொல். நீ இக் கொடுங்குற்றம் செய்யவில்லையென்று
ருஜுவானால், அது நமக்கு சந்தோஷத்தையே தருவதாகும்.
சு. அம்மணி, தாங்கள் யாரோ தெரியவில்லை. யாராயிருந்த போதிலும் நீர் இக் குற்றம்
செய்திருக்கமாட்டீர் என்று என் மனத்திற்குள் ஏதோ சொல்லுகின்றது – நீர் யார்
என்றாவது தெரிவியும் - எங்கள் மகாராஜாவின் குழந்தையின் உடல் உமதுகையில்
எப்படி வந்தது என்றாவது எமக்கு அறிவியும்.
வீ. ஏ! பாதகி! சொல் பார்ப்போம்?
[சந்திரமதி அவர்கள் எல்லோரையும் விழித்துப் பார்க்கிறாள். ]
ரா. கொலைக்கஞ்சாப் பாதகியே! ஒன்றும் வாய் திறந்து கூறமாட்டாயா? எனது ஏக
புத்திரனைக் கருணையென்பது சிறிதுமின்றிக் கொன்றதுமன்றி, நாம் உன்மீது
தயை கூர்ந்து இவ்வளவு கேட்டும் வாயைத் திறக்கமாட்டேன் என்கிறாயல்லவா? –
இனி நான் தாமதிக்கலாகாது. உனது நடத்தையினாலேயே, நீதான்
குற்றவாளியென்று நன்றாய் ரூபித்துக்கொண்டாய். ஆகவே நான் தர்ம
சாஸ்திரப்படி தண்டனை விதிக்கவேண்டியதே! - ஹே! ஸ்திரீயே! அறியாப்
பாலகனைக் கொன்றதற்காக உன் சிரசை உடலினின்றும் சேதிக்கும்படியாக
தண்டனை விதிக்கிறேன். ஜகதீசன் உன்னை மன்னிப்பாராக! - சேவகர்களே!
உடனே கொலைக்களத்திற்கு இப்பாபியை இழுத்துச்சென்று, ஸ்மாசானக்
காவலாளியிடம், எனது உத்தரவைக்கூறி, இவளது தலையைச் சேதிக்கும்படிச்
சொல்லுங்கள் - நாம் இனி இப் பாதகியை பார்த்தாலும் பாபமாம்!
சு. மகாராஜா, தாங்க தயவுசெய்து கொஞ்சம் பொறுத்தால் -
ரா. நான் பொறுத்தது போதும்! இனி என்னால் பொறுக்க முடியாது. என்
பொறுமைக்கும் ஓர் முடிவு உண்டு. இவள் மௌனமே இவளைக் குற்றவாளி என்று
நன்றாய்த் தெரியப்படுத்துகிறது. சேவகர்களே! இழுத்துச் செல்லுங்கள் உடனே!
[சேவகர்கள் அங்ஙனமே செய்கின்றனர். ] மந்திரிகளே! என் சோகத்தை அடக்க
முடியவில்லை. நான் என் அருமை மைந்தனுக்குச் செய்யவேண்டிய கர்மங்களைச்
செய்யப் போகவேண்டும். இச் சபைகளையலாம்! [எல்லோரும் போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.
--------------
மூன்றாம் காட்சி.
இடம் - காசியில் சுடுகாடு. ஹரிச்சந்திரன் ஒருபுறமாக காத்து நிற்கிறான். சத்தியகீர்த்தி வருகிறான்.
சத். தேவியவர்கள் வந்து விட்டார்களா?
ஹ. இல்லை.
சத். ஆனால் - இன்னும் தகனம் செய்யவில்லையா?
ஹ. இல்லை.
சத். அண்ணலே, உம்முடைய முகம் மிகவும் வெளுத்துக் காட்டுகிறதே.
ஹ. ஆம், உறக்கமின்றி இரவைக் கழிப்பது கடினமாயிருந்தது.
சத். கஷ்டம்! கஷ்டம்! - ஆயினும் தேவியவர்கள் இதுவரையில் வராததற்குக்
காரணமென்ன? வழியில் என்ன நேர்ந்ததோ? அந்தப் பிராம்மணர் வீட்டை
என்னாலியன்ற அளவு தேடித் பார்த்தேன். எனக் ககப்படாமற் போயிற்று;
ஊரிலுள்ளார் எவரைக் கேட்டபோதிலும் அந்த பிராம்மணர் வீடு
தெரியாதென்கிறார்கள் - நான் என்செய்வது? - அண்ணலே, ஊருக்குள்
போயிருந்ததில் புதுமை யொன்றறிந்தேன். இத்தேசத்து அரசன் மகன்
அரண்மநியிளிருந்தும் களவாடப்பட்டு, கொல்லப்பட்டானாம்; பட்டணமெங்கும்
ஒரே அழுகையாயிருக்கிறது; இக் கொடுஞ் செய்கை செய்தது யாரோ
பெண்பிள்ளை யென்கிறார்கள்; கைப்பிடியாய்ப் பிடிக்கப்பட்டு, அரசன்
சபையின்முன் கொண்டு போகப்பட, அரசன் சிரசாக்கினை விதித்து விட்டாராம்.
ஒரு ஸ்திரீ சிசுஹத்திக்குடன்பட்டாளென்றால் இந்த யுகத்தில், நாம் என்ன
சொல்வது? கலியுகம் வந்துவிட்டதா என்ன இதற்குள்? - என்ன கொடிய பாதகியா
யிருக்கவேண்டும் அந்த ஸ்திரீ? -
வீரபாஹு முகத்தை வஸ்திரத்தினால் மூடிய சந்திரமதியை அழைத்துக்கொண்டு வருகிறான்.
வீ. டேய் அரிச்சா! தென்னாடா இது? நல்ல நாயமா கீதே! ஊர்லே இக்கரவங்கல்லாம்
குய்யோ மொறையோ இண்ணு அய்வராங்க ராசாபுள்ளெ செத்து போச்சி இண்ணு!
நீ என்னாடா இன்னா, இங்கே குந்திகினு, கேளி விலாசமா பேசிகினு கீரே! - நம்ப
ராசா புள்ளெயே கொண்ண கொடும்பாவி தோகீரா பாரு, கையும் புடியுமா
புடிச்சிம்போயி ராசாகிட்ட உட்டூட்டாங்க, நம்ப ராசா, செரசாக்கினெ பண்ணும்படி
உத்தரவு பண்ணிட்டாரு. இந்த மசானத்துக்கு நானு வெட்டியான் ஆனதொட்டு,
அந்த உத்தரவெ நான் தான் நெரவேத்தணும், இண்ணெக்கி என்னாடாணா,
எய்வெடுத்த எங்கப்பா தெவ்ஷம் வந்தது, அத்தொட்டு பொம்மனாட்டியே நானு
கொல்லக்கூடாது. எனக்கு பதுலா இந்த வேலெயெ நீ செய்துடுராயப்பா.
ஹ. ஆண்டவனே! -
வீ. என்னாடா ஆண்டவனுக்கு? - என்னா முய்க்கரே! நீ என் அடுமெ, நான் சொல்ர
வேலெயெல்லாம் செய்யத் தேவலையா? இல்லா போனா, செய்யமாட்டேனிண்ணு
சொல்லிப்புடு - வேறெ யாரையானா பாத்துகிறேன்.
ஹ. ஆண்டவனே - உங்கள் ஆக்கினை - கத்தியைக் கொடுங்கள் -
வீ. அப்படி-இந்தா கத்தி-ஒரே வெட்டாய் வெட்டுப்புடு. பொம்மனாட்டி கிம்மினாட்டி
இண்ணு பாக்காதே- பத்திரம்!மூஞ்செ கிஞ்செ பாக்காதெ-அப்புறம் மனசு
எதங்கிபூடப் போவுது!நான் வர்ரேன். [விரைந்து போகிறான். ]
ஹ. பரமேஸ்வர!-
சத். அண்ணலே!என் கண்களை நான் நம்ப முடியவில்லையே! இதென்ன கனவா?-
நீர் அயோத்தி மன்னன்-ஆய் இருந்தவர்-அற்ப கொலைஞன் வேலை புரிவதோ?-
அந்தோ!அந்தோ!
ஹ. அப்பா,அதைச் செய்யாதிருத்தல்தான் பாபமாகும்!- அதிருக்கட்டும்,இந்த ஸ்திரீ
ஏன் சிசுஹத்திற் குடன் பட்டாள்?-யாரோ நல்ல குலத்திலு தித்தவள்போல்
தோன்றுகிறாள்-
ச. [முகத்தை மூடிய வஸ்திரத்தை நீக்கி] பிராணநாதா! பிராண நாதா!
[ஹரிச்சந்திரன் பாதத்தில் விழுகிறாள். ]
ஹ. ஆ!சந்திரமதி!-
ச. ஆம் ஆம் நாதா!நான்தான்!
ஹ. சந்திரமதி!-தீண்டாதே என்னை!-எழுந்திரு! அகன்று நில்!
ச. நாதா!-நாதா!-அரசன் குழந்தையைக் கொன்ற அப்படிப்பட்ட கொடும் பாதகி- நான்
என்று,நீரும் நம்புகிறீரா?-அதை நினைக்கவும் என் நெஞ்சம் இடங்கொடுக்க
வில்லையே! என் கையால்-எப்படி-அப்பாதகம் இழைத்திருப்பேன்?-நாதா!
உம்முடைய மனைவியாகிய நான்-அவ்வளவு இழிந்தவளாய் விடுவேனோ?- இதை
நீர் நம்புகிறீரா?-ஈசனே!ஈசனே!-என்னால் பொறுக்க முடியவில்லையே!-
[தேம்பி அழுகிறாள். ]
ஹ. சந்திரமதி!-எப்படி இக்கதிக்கு வந்தாய்?-விரைவில் -உண்மையை உரை.
ச. பிராணநாதா!ஆகாயவாணி பூமிதேவி சாட்சியாகவும், அப் பரமேஸ்வரன்
சாட்சியாகவும்,நடந்ததை நடந்தபடி உரைக்கிறேன். நான் சொல்வதில்
அணுவளவேனும் அசத்யம் இருக்குமாயின்,பதிவிரதைகள் செல்லும் பரமபதம்
எனக்குக் கிட்டாது பாழ் நரகில் பல் கோடி நூற்றாண்டு கிடந் துழல்வேனாக!- நாதா,
உம்மை நான் நேற்றிரவு விட்டுப் பிரிந்தபின்,வேதியர் வீட்டிற்கு விரைந்து
சென்றேன். கருக் கிருட்டில் நேர் வழி தெரியாது பல வீதிகளில் அலைந்து
சென்றேன். கடைசியில் ஓர் வீதி வழியாகப் போகும்பொழுது,என் காலில் *ஏதோ
தடைப்பட, என்னவென்று உற்றுப் பார்க்க, ஏதோ குழந்தை உறங்குவது
போலிருந்தது, அதன் முகம் நமது-தேவதாசனது முகத்தை ஒத்திருக்க-என்ன
ஆச்சரியமென்று திகைத்து நின்றேன். அச் சமயம் சில் காவலாளர்கள் ஓடிவந்து
என்னைப் பிடித்துக் கொண்டார்கள்;அதுவரையில் எனக்கு நன்றாய் ஞாபகம்
இருக்கிறது. அதற்கப்புறம் நடந்தது ஏதோ கனவு போலிருக்கிறதே யொழிய,
நனைவாகத் தோற்றப்படவில்லை. பிறகு இத் தேசத்து அரசன்,தன் குழந்தையை
நான் கொன்றதாகவும் அக் குற்றத்திற்காக எனக்கு சிரசாக்கினை விதித்ததாகவும்
கூறினபொழுதுதான் எனக்குப் பூரணமான பிரக்ஞை வந்தது. அதன்மேல் இங்கு
உமதெதிராகக் கொண்டு வரப்பட்டேன். பிராண நாதா, நீர் தெய்வமாகக் கொண்டு
தொழுதுவரும் அந்த சத்யத்தின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், நான்
கூறியதுதான் நான் அறிந்த உண்மை. இதற்கு தெய்வம்தான் சாட்சி. நாதா
-தாமாவது-என் வார்த்தையை-நம்புகிறீரா?
ஹ. சந்திரமதி-நான்-உன்னை நம்புகிறேன்.
ச. அவ்வளவு போதும்! - நான் பாக்கியசாலியே! பாக்கியசாலியே!
ஹ. ஆயினும் - சந்திரமதி - அரசனது ஆக்கினையையும் - என் எஜமானனுடைய
கட்டளையையும், நான் – நிறை வேற்றவேண்டும்.
சத். என்ன! -
ச. பிராணநாதா! அவ்வாறே செய்யும். இப் பாழான உலகத்தில் இனி உயிர் தரிக்க
எனக்கு விருப்ப மில்லை. நான் குற்றவாளி யல்லவென்று நீர் நம்பினதொன்றே
எனக்குப் போதும். நான் இறக்கச் சித்தமா யிருக்கிறேன். அதுவும் உமது
திருக்கரத்தால் இறக்கும்படியான பாக்கியம் கிட்டியதே தேவதேவன்
கருணையினால்! இனி எனக்கு என்ன குறை? சீக்கிரம் உம்முடைய கையால் மடிந்து
சுவர்க்கம் போய் நமது கண்மணியைக் கண்டு சந்தோஷித்து, உமது வரவை
எதிர்பார்த்திருக்கிறேன்.
ஹ. ஈசனே! உமதிச்சைப் பூர்த்தியாகட்டும்! - சந்திரமதி, உனது மனதை ஒருவழிப்
படுத்தி, ஈஸ்வரன் பாதத்தை அடைக்கல மடைந்து, தியானித்து - சித்தமாவாய்.
சத். என்ன இது! அண்ணலே! - இந்நாட்டு அரசன் அநியாயமாய் அந்தகனைப் போல
தீர விசாரியாது இட்ட கட்டளையை நிறைவேற்றி, ஒரு பாபமு மறியாத உமது
உத்தம பத்தினியை உமது கரத்தால் கொல்லவா போகிறீர்? - நீரே சற்றுமுன்பாகக்
கூறினீரே, தேவியவர்கள் கூறியதைத் தாம் நம்புவதாக.
ஹ. ஆம் - ஆயினும் எனது நம்பிக்கை எதற்குதவும்? நான் ஒரு அடிமை,
மஹாராஜாவினுடையவும் எனது எஜமானனுடையவும் கட்டளையை
நிறைவேற்ற வேண்டியது என் கடமையாகும் -
சத். அண்ணலே! உமக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா? அல்லது எனக்குத்தான்
பயித்தியம் பிடித்திருக்கிறதா? நான் காண்பது கனவோ நினைவோ!
பாபமொன்றும் செய்யாத உமது பத்தினியை நீர் கொல்வதா? - உமது கரத்தால்?
ஹ. ஆம் கொல்லத்தான் வேண்டும் - எனது கரத்தால் - சந்திரமதி -
சத். ஐயோ! கொஞ்சம் பொறுமே! கொஞ்சம் பொறுமே!
ஹ. சத்தியகீர்த்தி, உன்னை நான் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன் ஒரு விஷயம் –
எனது கட்டளையை நான் நிறைவேற்றி யாகுமளவும், என்னிடம் இனி ஒரு
வார்த்தையும் பேசாதே! இந்த இடத்தைவிட்டு அகன்று செல் - கொஞ்சம்
தூரத்திலாவது போயிரு.
சத். ஈசன் ஒருவன் இருக்கிறானா இந்த ஜகத்தில்?
[மெல்ல ஒரு புறமாய் போய் நிற்கிறான். ]
ச. பிராணநாதா, நான் சித்தமா யிருக்கிறேன். - தாமதம் செய்யாதீர் இனி.
ஹ. சந்திரமதி - என்மீது உனக்குக் கொஞ்சமேனும் வருத்தம் வேண்டாம். என்
கட்டளைப்படி நடக்கவேண்டியது என் கடமையாம் - ஆகவே -
ச. ஆகவே - நாதா, என்பொருட்டு கொஞ்சமேனும் வருத்தமின்றி, உமது கடமையை
நிறைவேற்றும்படி அடியாள் வேண்டிக் கொள்ளுகிறேன் - என் சிரசு ஒன்றல்ல,
ஆயிரம் இருந்தபோதிலும், அவையனைத்தையும் பலி கொடுத்து உமது
சத்யத்தைக் காப்பாற்றும்படி வேண்டியிருப்பேன்!
ஹ. சந்திரமதி, உன்னிடம் இவ்வளவு அருங்குணம் இருப்பதை இதுவரையில்
முற்றிலும் அறியாதிருந்தது என் தவறாகும். இப்பொழுது அதை முற்றிலும்
அறிகிறேன். ஆயினும் - என் கடமையை நான் நிறைவேற்ற வேண்டும். ஆகவே –
என் ஆருயிர்க் காதலியே! என்னை மன்னிப்பாயாக!
ச. பிராணநாதா! தாங்கள் அவ்வாறு கூறலாகாது. எதற்க்காகத்தாம் எனது
மன்னிப்பைக் கேட்கவேண்டும்? அதை விட்டு எனக்கு நேரிடப்போகிற பெரும்
சுகத்தைத் தாம் அளிப்பதற்காக, நான் உமக்கு என் வந்தனத்தை யல்லவோ
செலுத்தவேண்டும். பிராணநாதா! உமது கரத்தால் எனதுயிர் துறக்க
வேண்டுமென்பதை நான் நினைக்கும்பொழுது என் உள்ளம் பூரிக்கின்றது. உமது
சத்யவிரதத்திற்குக் குறுக்காக வராமல் அதைக் காப்பதில், உமக்கு நான்
உதவினேன் என்பதை நினைக்கும் பொழுது அளவிலா ஆனந்தத்தை
அடைகிறேன். பிராணநாதா, இனி காலதாமதம் செய்யவேண்டாம் பிராணநாதா!
உமது சீர் தங்கிய பாதங்களில் நமஸ்கரித்து விடைபெற்றுக்கொள்ளுகிறேன்.
[பணிகிறாள். ]
பிராணநாதா! பரமேஸ்வரன் கருணையினால் நான் பரலோகஞ் சென்று, அவ்விடம்
உமது வரவை எதிர் பார்த்து நிற்பேன். அவ்விடம் நாம் ஒருங்கு சேர்ந்தபின் –
என்றும் பிரியாதிருப்போ மல்லவா?
ஹ. ஹா! - சந்திரமதி! - சந்திரமதி - சந்திரமதி!
ச. பிராணநாதா! - ஏன் உமக்கு துக்கம் இனி? - ஒரு க்ஷணவேலை - உமது கடமையை
முடித்தவராவீர் - பரமேஸ்வரன் பாதமே கதியென நம்பி - என் தலையை
வணங்கினேன் - பிராணநாதா, நான் போய் வருகிறேன். நான் பரமேஸ்வரன்
கருணையினால் பரமபதத்தில் உம்மை சந்திப்பேனாக!
ஹ. [வாளை யோங்கி] கண்ணுதற் கடவுளே! கருணாநிதி! - யாதும் உனது செயலாம்,
என நம்பி -
விஸ்வாமித்திரர் விரைந்தோடி வருகிறார்.
வி. பொறு! பொறு! ஹரிச்சந்திரா! - நான் காண்பது கனவோ? அயோத்தி மன்னனான
ஹரிச்சந்திரன், தன் சொந்த மனைவியின் கழுத்தை வெட்டக் கையில் வாளேந்தி
நிற்பதா?
ஹ. மகரிஷி! உமது பாதங்களுக்கு நமஸ்காரம்; வீரபாஹுவின் அடிமையான
ஹரிச்சந்திரன், தன் கடமையை நிறைவேற்றுகிறான் - அதனைத் தாங்கள் தடுப்பது
நியாயமன்று; ஆகவே தாங்கள் சற்று தயை செய்து ஒரு புறமாய் ஒதுங்கியிருங்கள்.
தங்களைப்போன்ற மஹரிஷிகள் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பது சரியல்ல –
ஆகவே -
வி. ஹரிச்சந்திரா! நீ இக் கொடுங் கொலையைச் செய்வதில்லையென்று எனக்கு
வாக்களித்தாலன்றி இவ்விடம் விட்டுப் பெயரேன்! ஹரிச்சந்திரா! உனக்கென்ன
பயித்தியம் பிடித்து விட்டதா? அல்லது உன் அறிவு உன்னை விட்டுப் பிரிந்ததோ?
பழுதிலாப் பரிதியின் வம்சத்துதித்த, இக்ஷ்வாகு குலத்திற் பிறந்த, அயோத்தியை
ஆண்ட அரசனாகிய நீ, ஒரு குற்றமுமறியாத பேதையாகிய உன் மனைவியை,
கொடும்பாவியாகிய கொலைஞனைப் போல் கொல்வதா? இந்த தர்மத்தை எங்கு
கற்றாய்? இதுதானோ நீ அறிந்த நீதி? உனது குருவாகிய வசிஷ்டர் உனக்குக்
கற்பித்தது இதுதானோ? ஹரிச்சந்திரா! என் வார்த்தையை முன்பு கேட்கமாட்டேன்
என்றாய், இப்பொழுதாவது கேள். என்னை விட்டுப் பிரிந்தபின் உனக்கும் உன்
மனைவி மக்களுக்கும் நேரிட்ட இடுக்கண்களையெல்லாம் பற்றிக் கேள்விப்
பட்டிருக்கிறேன். உன்னுடைய பிடிவாதமானது உன்னை எந்த ஸ்திதிக்குக்
கொண்டு வந்துவிட்டது என்பதை நீயே பார்க்கிறாய் – இப்பொழுதாவது -
ஹ. முனிசிரேஷ்டரே, குறுக்கே பேசுவதற்காக அடியேனை மன்னிக்கவேண்டும்.
ஆயினும் தாங்கள் இவ்வேலையை நான் விடும்படி எனக்குக் சொல்வதானால்,
அந்த ஸ்ரமத்தைத் தாங்கள் மேற்கொள்ளதிருக்கும்படி வேண்டுகிறேன். முன்பே
அதிக காலதாமதம் செய்துவிட்டேன், இனியும் தாமதிப்பது நியாயமன்று; ஆகவே
தாங்கள் தயை செய்து ஒருபுறம் ஒதுங்கியிரும்.
வி. ஹரிச்சந்திரா! இறந்த உன் மைந்தன்மீதும், இறக்கச் சித்தமாயிருக்கும் உன்
மனைவிமீதும், ஆணையிட்டு உன்னைக் கேட்கும்படி வேண்டுகிறேன்.
இனிமேலாவது பிடிவாதம் செய்யாதே. உன் ஐஸ்வர்யத்தை இழந்தாய் – அரசை
இழந்தாய் - அரசியை இழந்தாய் - அருமை மைந்தனை இழந்தாய் –
எல்லாவற்றையும் இழந்தாய் -
ஹ. முனிபுங்கவரே, எல்லாவற்றையும் நான் இழக்கவில்லை - எனது சத்யம் என்னை
விட்டு அகலவில்லை! - அது இருக்கும் வரையில் உண்மையில் நான் ஒன்றையும்
இழந்தவனன்று!
வி. அப்பா, ஹரிச்சந்திரா! மனைவி, மகன், மற்றெல்லாச் செல்வங்களையும்
இழந்தபின், இந்த ஒரு சத்தியத்தால் உனக்கென்ன பலன்?
ஹ. முனிசிரேஷ்டரே, தாங்கள் என்ன ஒன்றுமறியாதவர் போல் பேசுகின்றீரே?
அல்லது என்னைப் பரிசோதிக்கிறீரா? எனது சத்யம் என்னிடம் இருக்கும் வரையில்
நான் ஒன்றையும் இழந்தவனாகக் கருதமாட்டேன். அந்த சத்யமே நான் பெற்ற
செல்வம்! சத்யமே நான் ஆண்ட அரசு! சத்யமே நான் அனுபவித்த சகல ஐஸ்வர்யம்!
சத்யமே என்னைப் பெற்ற தாய்! சத்யமே என்னையீன்ற தந்தை! சத்யமே நான்
பெற்ற தனயன்! சத்யமே நான் கொண்ட தாரம்! சத்யமே எனது சகல சுற்றம்!
சத்யமே எனக் கிவ் வுலகனைத்தும்! சத்யமே என குலம்! சத்யமே என கோத்திரம்!
சத்யமே என குரு! சத்யமே நான் வணங்கும் தெய்வம்! அந்த சத்யம் என்னை
விட்டகலாதிருக்கும் வரையில் எனக்கு ஒரு குறையு மிருப்பதாக நான்
நினைக்கமாட்டேன்!
வி. அந்த சாத்தியமானது உன்னை எக் கதிக்குக் கொண்டு வந்துவிட்டது பார்!
இனியும் பிடிவாதம் செய்யாதே. இனியாவது என வார்த்தையைக் கேள். எனது
அபாரமான சக்தியை நீ அறியாய், உன் தந்தை நன்றாயறிந்துளர்; அவர் என்னை
நம்பியபடியால் அவருக்காக ஒரு உலகத்தையே சிருஷ்டித்தேன். நீயும் என
வார்த்தையை நம்பி என சொற்படி நட, நீ இழந்ததைஎல்லாம் பெறும்படி
செய்கிறேன். இழந்த உனதரசினைக் கொடுக்கிறேன். இறந்த உன் மைந்தனைப்
பிழைப்பூட்டுகிறேன், உன் மனைவியை இக்கதியினின்றும் காக்கின்றேன் –
ஹரிச்சந்திரா, என்ன சொல்லுகிறாய்?
ஹ. ஸ்வாமி, நான் சொல்லக்கூடியது வேறென்ன இருக்கிறது? அடியேன் பொருட்டு
இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொள்ளச் சித்தமாயிருக்கும் தாங்கள், கொஞ்சம் தயவு
செய்து நான் மேற்கொண்ட சத்யா விரதத்தைக் காத்திடும்படி அனுக்கிரஹம்
செய்யவேண்டுமென்பதே.
வி. இனியும் அந்த சத்ய விரதத்தை விடமாட்டாயா?
ஹ. முனிபுங்கவரே, இவ்விஷயத்தில் என கடைசி வார்த்தையைக் கேட்டருள்வீராக!
ஆசந்திரார்க்கர்கள் தத்தம் நெறியை விட்டகன்றபோதிலும், ஆகாயத்திற்
பிரகாசிக்கும் உடுக்கள் பல பலவென்று உதிர்ந்தபோதிலும், அஷ்ட குலாசலங்கள்
அடியுடன் பரிக்கப்பட்டபோதிலும், வேலைகரை இழந்தாலும், வேதநெறி
பிறழ்ந்தாலும், அரமூவரே என முன்னின்று வேண்டிய போதிலும், என சத்ய
விரதத்தை விடேன்! விடேன்! விடேன்! ஆகவே சற்று ஒதுங்கியிரும் – சந்திரமதி!
சித்தமாயிருக்கிறாயா?
ச. ஆம் பிராண நாதா!
ஹ. [வாளை ஓங்கி] எல்லாம் வல்ல கடவுளே! நான் கொண்ட சத்ய விரதம்
அணுவளவேனும் தவறாதவனாயின் இவ்வாளானது, ஒரே வெட்டாய்,
சந்திரமதியின் கந்தரத்தை-
[பரமசிவன் பார்வதியுடனும், பிரம்ம விஷ்ணுக்களுடனும், இந்திரன் முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களுடனும் வசிஷ்டர் நாரதர் முதலிய ரிஷிகளுடனும், ஆகாயத்தில் தோற்றுகிறார். தேவதுந்துபி முழங்குகிறது. பூமழை பெய்கிறது. ]
ப. [ஹரிச்சந்திரன் கரத்தைப் பிடித்துத் தடுத்து] பொறு! பொறு! ஹரிச்சந்திரா!
வேண்டாம்! நாம் ஆக்கினை யிடுகிறோம்.
ஹ. ச. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகா! அண்ட சராசரங்களையும் ஆக்கி
அளித்து அழிக்கும் அரனே! மூவர் முதலே! முத்திக்கரசே! அனாதரட்சகா!
ஆபத்பாந்தவா! சம்போ! சங்கரா! சத்யமூர்த்தி! சரணம்! சரணம்!
[பன்முறை படிமீது விழுந்து நமஸ்கரிக்கின்றான்]
ப. ஹரிச்சந்திரா! சந்திரமதி! எழுந்திருங்கள் - நீ முன் ஜன்மங்களிற் செய்த
பாபங்களெல்லாம் பரிஹரிக்கப்பட்டன. இதுவரையில் நீங்கள் அனுபவித்த
துன்பங்களையெல்லாம் மறந்து விடுங்கள்! ஹரிச்சந்திரா! உனது சத்ய விரதத்தின்
திறம் இப்படிப்பட்டதென உலகத்தவர் நன்கறியும் பொருட்டே, உன்னை இத்தனை
இடையூறுகளுக்கும் உள்ளாக்கினோம். இனி, உண்மை நெறியினின்றும்
ஓரணுவும் பிறழாத உத்தமனென, உன் பெயர் உலகங்களுள்ளளவும் ஊர்ஜிதமாய்
நிற்கும்! இதுவரையில் அனுபவித்த துக்கங்களை யெல்லாம் மறந்து,
சந்தோஷத்துடன் நெடுநாள் இந் நில உலகத்தையாண்டு, பிறகு, உன் மனைவி
மக்களுடன் நமது பாதத்தை வந்து சேர்வாயாக. - வசிஷ்டரே, உமது சிஷ்யனை
அயோத்திக்கு அழைத்துச் சென்று அந் நாட்டரசனாக அணி முடியினைச் சுட்டும்.
ஹ. பக்தானுகூலா! பரமதயாளு! பரமசிவமே! தாங்கள் அறியாததொன் றுண்டோ?
அடிமையாகிய நான் அணி முடியை மறுபடி அணியலாகுமோ? அன்றியும்
தானமாகக் கொடுத்த அரசைத் தமியேன் மறுபடியும் கொள்வதோ?
வி. ஹரிச்சந்திரா. அதைக் குறித்து உனக்குக் கவலை வேண்டாம். நீ எனக்கு
தானமாகக் கொடுத்த உன் அரசை, உனக்கே மனப் பூர்வமாய், உனது சத்ய
விரதத்தை மெச்சினவனாய், மறுபடியும் தானமாக கொடுக்கிறேன்; இதோ
பெற்றுக்கொள்.
ஹ. ஸ்வாமி மகனை யிழந்து, மனைவியும் குற்றஞ் சாற்றப் பட்டு, மயானத்து
வெட்டியானாகிய எனக்கு அரசு என்னத்திற்கு?
ப. ஹரிச்சந்திரா! உன் கவலை யனைத்தும் ஒழி. உன் மைந்தன் உண்மையில்
இறக்கவில்லை, உன் மனைவியும் குற்றவாளியல்ல. இவையனைத்தும்
விஸ்வாமித்திரர் தனது *** மஹிமையால், வசிஷ்டருடன் அவருக்கு நேர்ந்த ஓர்
சபதத்தின்படி, உனது சத்திய விரதத்தைப் பரிசோதிக்கும் பொருட்டு, செய்த
சூழ்ச்சிகளேயாம். தேவ தாசா! எழுந்திரு.
[தேவதாசன் எழுந்திருக்கிறான்; ஹரிச்சந்திரனும் சந்திரமதியும் அவனைக் கட்டி யணைக்கின்றனர். பூமழை பொழிகின்றது. ]
அன்றியும், வாஸ்தவத்தில் காசி மன்னன் புதல்வனும் கொல்லப் படவில்லை.
அவனும் உறங்கி எழுந்தவன் போல் எழுந்திருப்பான் இதுவரையில். ஆகவே
சந்திரமதியின்மீது ஒரு குற்றமு மில்லையென்று காசிமன்னன் முதலியோர்
அறிவார்; மேலும் நீ பறையனுக்கு அடிமைப்பட்டதாக நினைந்து வருந்த
வேண்டாம். விஸ்வாமித்திரர் வேண்டுகோளுக் கிசைந்து உன்னை அடிமை
கொண்டது யமதர்மராஜனே! சந்திரமதியையும் தேவதாசனையும் அடிமை
கொண்டவர் அக்னிதேவனே!
ய. அ. ஆம் ஆம் ஹரிச்சந்திரா, இதோ எங்களைப் பார்.
ப. அல்லாமலும், நீ காத்து நின்ற இடம், ஸ்மசான பூமியல்ல, யாக பூமியாம்.
விஸ்வாமித்திரர் மாய்கையால் உங்களுக்கெல்லாம் அவ்வாறு தோற்றியது.
இப்பொழுது அது எப்படியிருக்கிறது பார்.
ஹ. கருணாநிதி! எல்லாம் தமது கருணை.
வி. மி. ஹரிச்சந்திரா, எனது சபதத்தின் பொருட்டு, உனக்கும் உன் மனைவி
மக்களுக்கும் நான் இழைத்த பல துன்பங்களையும் மன்னிப்பாய்! உமைகேள்வன்
கூறியபடி உனக்கு ஒரு இழுக்குமில்லை. ஆகவே நான் மீட்டும் உன்னை மெச்சி
தானமாக அளிக்கும் உனதரசினைப் பெற்று சுகமாய் நீடுழி காலம் வாழ்வாயாக!
விஸ்வாமித்திரனாகிய நான் ஒப்புக்கொள்கிறேன், உன்னால் ஜெயிக்கப்பட்டதாக!
நா. அன்றியும் வசிஷ்டராலும் ஜெயிக்கப்பட்டதாக ஒப்புக் கொள்ளவேண்டும்.
வி. ஆம்.
நா. ஆகவே, வாக்களித்தபடி, ஹரிச்சந்திரனுக்கு அரசைக் கொடுப்பதுடன், உமது
தபசில் பாதியையும் கொடுக்க வேண்டும்.
வி. ஆம், அதற்குத் தடையென்ன?
வ. [ஹரிச்சந்திரனைக் கட்டித் தழுவி] பிரிய சிஷ்யனாகிய ஹரிச்சந்திரா! உன்
வாக்கினையும் காப்பாற்றினாய்! என் வாக்கினையும் காப்பாற்றினாய்! உனது
அருங்குணத்தை மெச்சினேன்! நீ எனது பிரிய சிஷ்யனாயிருக்கத் தக்கவனே.
வி. வசிஷ்டரே, ஹரிச்சந்திரன் என் பிரிய சிஷ்யனாகிய திருசங்குவின் பிள்ளை
என்பதை மறவாதீர்.
ப. வசிஷ்டரே, விஸ்வாமித்திரரே, நீங்களிருவரும் ஹரிச்சந்திரனை அயோத்திக்கு
அழைத்துச் சென்று அவனுக்கு முடி சூட்டி வாருங்கள்.
வ. வி. கட்டளைப்படி.
ப. ஹரிச்சந்திரா! எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொள். உனக்கு நம்மிடமிருந்து
ஏதாவது வரம் வேண்டியிருந்தால் கேள்.
ஹ. பரம்பரனே! பசுபதி!- இவ்வுலகிலேயே உமது திவ்ய காட்சி கிடைத்த நான்
விரும்பத்தக்கது என்ன இருக்கப் போகிறது? ஆயினும் ஒரு வரம் வேண்டுகிறேன்.
இனியும் எந்த ஜன்மம் வந்த போதிலும் எனது சத்ய விரதம் குன்றாதிருக்கும்படி
அனுக்கிரஹிக்கவேண்டும்.
ப. அங்ஙனமே ஆகுக ஹரிச்சந்திரா!
[தேவதுந்துபி முழங்குகிறது; தேவர்கள் பூமழை பொழிகின்றனர்;
ஹரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், தேவர்களைப் பணிகின்றனர்;
பரமசிவம் தேவர்களுடன் அந்தர்த்யானமாகிறார்.
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது
கருத்துகள்
கருத்துரையிடுக