ஒரு ஈயின் ஆசை
சிறுகதைகள்
Backஒரு ஈயின் ஆசை
(சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள்)
நாரா நாச்சியப்பன்.
Source:
ஒரு ஈயின் ஆசை (சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள்)
நாரா நாச்சியப்பன்
அன்னை நாகம்மை பதிப்பகம்
/141 கந்தசாமி நகர், பாலவாக்கம், சென்னை - 600041
முதற்பதிப்பு : டிசம்பர் 1992
விலை ரூ.8.00
அச்சிட்டோர் :
கவின்கலை அச்சகம், கந்தசாமிநகர் பாலவாக்கம், சென்னை - 600041.
-----------
பதிப்புரை
பாவலர் நாரா நாச்சியப்பன் இதுவரை சிறுவர் களுக்காக எழுதியுள்ள கதைகள் ஏராளம். இந் நூலில் எட்டுக் கதைகள் உள்ளன.
எட்டும் எட்டு விதமான சுவை யுள்ளவை. எல்லாம் சிறுவர்களுக் கென்றே எளிமையாக எழுதப் பெற்றவை. சுவையான இந்தக் கதை நூலைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியருக்குக் காணிக்கை யாக்கு கின்றோம்.
- பதிப்பாசிரியர்
அன்னை நாகம்மை பதிப்பகம்
------------
பொருளடக்கம்
1. நன்றியின் உருவம் | 5. அறிவாளி ஏழையானால் அவன் பைத்தியக்காரன் |
2. போட்டிக்கு வந்த காற்றண்ணன் | 6. ஒரு சயின் ஆசை |
3. குதிக்கும் இருப்புச் சட்டி | 7. கடற்கரை மலையம்மன் |
4. பச்சைக் கிளி பவழம் | 8. சிங்கத்தின் அச்சம் |
ஒரு ஈயின் ஆசை
1. நன்றியின் உருவம்
முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான் ; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து வந்தான் , அந்த நாயும் அவனிடம் மிகுந்த அன்பு வைத்திருந் தது. அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்றது. அவனுக்குப் பல சிறு வேலைகள் செய்து உதவி புரிந்து வந்தது.
ஒரு நாள் தேவநாதன் வாணிக வேலையாக வெளியூர் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றான். வழக்கம் போல அவன் நாயும் கூடவே சென்றது.
போகும் வழியில் களைப்பாறுவதற்காக நன்றாகப் புல் வளர்ந்திருந்த ஓர் இடத்தில் தேவநாதன் படுத் தான். படுத்தவன் அப்படியே தூங்கிப் போய்விட் டான். அந்த நாயும் அவன் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.
திடீரென்று புகைநாற்றம் மூக்கைத் துளைத்தது. நாய் கண்விழித்துப் பார்த்தது. மிக அருகாமையில் காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.
நாய் தேவநாதன் ஆடையைப் பற்றி இழுத்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேவநாதன் கண் விழிக்கவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் நாய் திகைத்தது. சிறிது தூரத்தில் ஒரு குளம் இருப்பது தெரிந்தது. அதைக் கண்டவுடன் நாய் பாய்ந்தோடிச் சென்றது. அந்தக் குளத்திற்குள் இறங்கியது. உடல் முழுவதும் நனையும்படி தண்ணீ ரில் மூழ்கியது. பிறகு எழுந்து தேவநாதன் படுத்திருக்குமிடத்திற்கு ஓடி வந்தது. அவன் அருகில் இருந்த புல் தரையில் புரண்டது. இவ்வாறு குளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து வந்து அவன் படுத்திருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த புல் தரை முழுவதையும் ஈரமாக்கிக் கொண்டே யிருந்தது.
நேரம் ஆக ஆக அது குளத்திற்குப் போகும் வழியில் இருந்த மரங்களிலும் தீப்பற்றிக் கொண்டது. அப்போதும் நாய் நெருப்பினூடே புகுந்து பாய்ந் தோடியது. தண்ணீரைத் தன் உடலில் நனைத்துக் கொண்டு ஓடிவந்து, புல்தரையை ஈரமாக்கியது. இடைவிடாமல் அது தன் வேலையைச் செய்து கொண்டே இருந்தது.
காட்டில் எரியும் நெருப்பு. தன் தலைவனை நெருங்கவிடாமல் செய்வதில் அது கண்ணும் கருத்து மாக இருந்தது. தன் உடலில் உயிருள்ள வரையில் அது தன் கடமையை விடாமல் செய்தது.
நெடுநேரம் கழித்துத் தேவநாதன் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தான்.
தன்னைச் சுற்றிலும் இருந்த காடு முழுவதும் எரிந்து சாம்பலாய்ப் போயிருந்த காட்சியைக் கண்டான். அதே சமயம் தான் தீயில் வெந்து சாகாமல் இருப்பதைக் கண்டு வியந்தான். தன்னைச் சுற்றிலும் இருந்த இடம் முழுவதும் ஈரம் மாறாமல்
இருப்பதையும், புற்கள் பசுமையாகத் தளதளவென்று தலை நிமிர்ந்து நிற்பதையும் கண்டு பெரு வியப் படைந்தான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்குத் தன் நாயின் நினைப்பு வந்தது.
சுற்று முற்றும் அவன் தன் நாயைத் தேடிக் கொண்டு சென்றான். நெருப்புச் சாம்பலின் ஊடே அதன் காலடித் தடம் கண்டு பின்பற்றிச் சென்றான். குளத்தின் கரையில் தன் அருமை நாய் சுருண்டு கிடப்பதைக் கண்டான். நெருங்கிச் சென்று பார்த்த போது, அதன் உடல் முழுவதும் நனைந்திருப்பதை யும். ஆங்காங்கே தீச்சுட்டுப் புண்கள் நிறைந்திருப்ப தையும் கண்டான்.
அவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த நாய் தன்னுயிரைக் கொடுத்திருக்கிற தென்ற உண்மையை அவன் புரிந்து கொண்டபோது. அவன் உள்ளத்தில் எழுந்த வேதனை இவ்வளவென்று சொல்ல முடியாது. உயிரைக் கொடுத்துத் தன்னைக் காத்த அந்த நாயின் நன்றியைத் தேவநாதனால் மறக்க முடிய வில்லை.
--------------
2. போட்டிக்கு வந்த காற்றண்ணன்
"நான் தான் வல்லவன்" என்றான் காற்றண்ணன்.
"இல்லை. நான் தான் வல்லவன்!'' என்றான் கதிரவன்.
"மெய்ப்பிக்கிறாயா? என்றான் காற்றண்ணன்.
"முதலில் நீ வல்லவன் என்பதைக் காட்டு. பிறகு நான் என் வல்லமையைக் காட்டுகிறேன் என்றான் கதிரவன். "சரி அதோ , பூமியில் பார்! தெருவில் கைத்தடி ஊன்றி நடந்து செல்லுகிறானே கிழவன் , அவனிடம் நம் வல்லமையைக் காட்டலாம் என்றான் காற்றண்ணன்.
''போயும் போயும் தள்ளாடி நடக்கும் கிழவனிட மா நம் கைவரிசையைக் காட்ட வேண்டும்?' என்று தகைத்தான் கதிரவன்.
"வீண் பிதற்றல் வேண்டாம். கூறுவதைக் கவனித்துக் கொள். அந்தக் கிழவன் அணிந்திருக் கிறானே மேல் சட்டை , அதை அவன் உடலிலிருந்து பறித் தெறிய வேண்டும். என் ஆற்றலை நான் காட்டு
கிறேன். உன் ஆற்றலை நீ காட்டுவாயா?' என்று கேட்டான் காற்றண்ணன்.
சரி என்று சவாலை ஏற்றுக் கொண்டான் கதிரவன்.
காற்றண்ணன் தன் வல்லமையைக் காட்டத் தொடங்கினான்.
ஊய் ஊய் என்று, காற்று வீசத் தொடங்கியது. தெருவில் கைத்தடி ஊன்றித் தள்ளாடி நடந்து செல்லும் கிழவனின் மேல் சட்டையைத் தன் ஊங்காரப் பாய்ச்சலால் கழற்றி எறிய முயன்றான் காற்றண்ணன்.
கிழவனுக்கு மூச்சுப் பொறுக்கவில்லை. கைத் தடியைக் கீழே போட்டான். தெருவோரத்தே இருந்த ஒரு ஒதுப்புறமான இடத்தில் போய் முடங்கிக் கொண்டான். தன் மேல் சட்டையை இழந்துவிடாமல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
காற்று மேலும் வேகமாக வீசியது. கிழவன் குளிர் தாங்கமுடியாமல் தன் கைகளை உடலில் பதித்து மூடிக் கொண்டான்.
காற்று வேகம் மிக மிக , அவன் கையின் அழுத்தம் மிகுந்தது. சட்டையை இழுத்து இழுத்துப் போர்த்துக் கொண்டபடி அவன் தன் உடலோடு அணைத்துக் கொண்டான்.
ஒரு மணி நேரம் ஊய் ஊய் என்று ஊதிய காற்று ஓய்ந்தது. கதிரவனிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.
"நான் தோற்றுவிட்டேன். நீ உன் வல்லமை யைக் காட்டு'' என்றான் காற்றண்ணன்.
அதுவரையில் மேகங்களுக்குப் பின்னே ஒளிந் திருந்த கதிரவன் வெளியில் வந்தான்.
கிழவன் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி னான். நேராக அந்தக் கிழவன் மீது தன் கதிர்களை வீசினான்.
சிரித்த முகத்தோடு தன் ஒளிக் கதிர்களை அவன் கிழவன் மீது செலுத்தினான்.
கிழவனின் குளிர் அகன்றது. வெயில் ஏற ஏறப் புழுக்கம் மிகுந்தது. முதலில் முடங்கியிருந்த கைகளை அகற்றியவன். சிறிது நேரத்தில் வேர்க்கத் தொடங்கி யதும் மேல் சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் போட் டான். மேலும் வெப்பம் மிகவே உள் சட்டையையும் கழற்றிப் போட்டான். வியர்வையைத் துடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
காற்றண்ணன் கதிரவன் முன் தலை குனிந் தான். அண்ணலே நீதான் வென்றாய் என்று பாராட்டினான்.
"உன் வெற்றியின் இரகசியம் என்ன?'' என்று கேட்டான்.
"வன்முறையும் தாக்குதலும் வெறுப்பை உண் டாக்கும். அன்பும் அரவணைப்பும் ஆதரவைப் பெருக் கும். என் அன்புக்கைகளின் தழுவல் எனக்கு வெற்றி தேடித்தந்தது என்றான் கதிரவன்.
அவன் வெற்றிக் கதிர்கள் உலகெங்கும் பாவிக் கொண்டிருந்தன.
-------------------
3. குதிக்கும் இருப்புச் சட்டி
பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள்.
நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலை யும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும் வரும் வழக்குகள் மிகக் குறைவாகவே இருந்தன.
அரசன் அரண்மனையில் நிறைய ஆட்களை வேலைக்கு வைத்திருந்தான். அரசி மலர்க்கொடி ஒவ்வொரு புது ஆளைச் சேர்க்கும் போதும், தேவை யில்லாதபோது எதற்காக ஆள் சேர்க்க வேண்டும் என்று கேட்பாள்.
"வேலைக்கு ஆட்கள் நிறைய இருந்தால் நமக்கு வசதி தானே என்று கூறுவான் அரசன்.
"அரசே! அது தவறு. தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருந்தால், வேலை சரியாக நடக்காது'' என்று கூறுவாள் அரசி மலர்க்கொடி.
"இந்த ஆள் நமது அமைச்சரின் உறவுக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே'' என்று வேலைக்குச் சேர்த்துக் கொள்வான்.
இப்படி யார் வந்து வேலை கேட்டாலும், தகுதி பார்க்காமலும். திறமையை நோக்காமலும் பலரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். இதனால்
அரண்மனையில் வேலைகள் சரிவர நடக்கவில்லை.
ஒருநாள், அரண்மனைப் பெட்டகத்தில் இருந்த பொன் நாணயங்கள் காணாமல் போய்விட்டன. முதல் நாள் இருப்பு வைத்துப் போன நாணயங்கள் மறுநாள் காலையில் காணாமற் போனது கண்டு நிதி அதிகாரி கலங்கிப் போனார்.
இது வெளியில் தெரிந்தால் பூவேந்தன் ஆட்சிக்கே கெட்ட பெயர் உண்டாகிவிடும், என்று நிதியதிகாரி அரசனிடம் வந்து பொன் நாணயங்கள் காணமல் போன செய்தியை மிகக் கமுக்கமாகக் கூறினார்.
யாரோ கள்ளச்சாவி போட்டுப் பெட்டகத்தைத் திறந்திருக்கிறார்கள். உறுதியாக அரண்மனையில் உள்ள யாரோதான் திருடியிருக்கிறார்கள் என்று தோன்றியது. வெளியில் இருந்து யாரும் திருடர்கள் வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் யார் மீதும் ஐயுறுவதற்குத் தோன்ற வில்லை. அரண்மனையில் வேலை செய்யும் அனை வருமே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் உறவினர்களே எல்லா வேலையிலும் இருந்தார்கள்.
அதனால் யார் மீது குற்றம் சொன்னாலும் அது சரியாக இருக்காது.
இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே இருந்தது.
அரசன் பூவேந்தன் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
அப்போது முதலமைசர் அரசனிடம் வந்தார்.
"அரசே! நம் நாட்டின் எல்லையில் தங்க வயல் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே அறிவாளன் என்று ஒரு குடியானவன் இருக்கிறான். பக்கத்து நாடுகளில் நடக்கும் பல திருட்டுக்களை அவன் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறான். அவனை அழைத்து வந்தால் நாம் இந்தத் திருடனைக் கண்டு பிடித்து விடலாம்'' என்று கூறினார்.
பூவேந்தன் இரண்டு காவல் வீரர்களை அழைத் தார். தங்க வயலுக்குச் சென்று அறிவாளன் என்ற அந்தக் குடியானவனை உடனே அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.
காவல் வீரர்கள் தங்க வயலுக்குச் சென்றார்கள். குடியானவனிடம் மன்னர் அழைத்துவரச் சொன்ன செய்தியைக் கூறினார்கள்.
நடந்த செய்திகளை அறிவாளன் அந்தக் காவல் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தன் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துக் கொண் டான். காவல் வீரர்கள் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ஏறிக் கொண்டான். அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.
அறிவாளன் ஒரு ஏழைக் குடியானவன் தான். ஆகையால் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அரசருக்கு அவன் மீது நல்ல நம்பிக்கை உண்டாயிற்று.
அய்யா அறிவாளரே! பொன்னி நாட்டில், அதுவும் அரண்மனையில் ஒரு திருட்டு நடந்திருப்பது பெரிய அவமானமாய் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் உயர் குலத்தைச் சேர்ந்த வர்கள். பொய்யான குற்றச்சாட்டைக் கூறினால் அது அவர்கள் பிறந்த குலத்துக்கே அவமானமாகும். ஆகையால், இதில் நீங்கள் உண்மையான குற்றவாளி யைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். வெறும் அய்யத் தில் ஒருவரைக் குற்றம் சாட்டக்கூடாது, என்று மன்னர் விளக்கமாகக் கூறினார்.
"அரசே! நல்லவர்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது என்ற தங்கள் உயர்ந்த நோக்கத்தைப் பாராட்டுகிறேன். இவ்வளவு உயர்ந்த பண்புள்ள அரசரின் அரண்மனையில் திருட நினைத்த ஒரு கயவனும் நம் நாட்டில் இருக்கிறானே என்று
நினைத்து வேதனைப்படுகிறேன்!'' என்று கூறிய குடியானவன், அரசரைப் பார்த்து, "அரசே! மந்திர வித்தையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா!'' என்று கேட்டான்.
"மந்திரங்களில் எனக்குச் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. மந்திரம் மாயம் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை '' என்று கூறினான் அரசன் பூவேந்தன்.
"அதுதான் தவறு. அரசே! இப்பொழுது மாய மந்திரத்தின் மூலமாகவே நான் இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கப் போகிறேன். நான் கண்டு பிடிக்கா விட்டால், தாங்கள் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் கண்டு பிடித்துக் கொடுத்தால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்? என்று கேட்டான், அறிவாளன்.
'' அய்யா அறிவாளரே, நீங்கள் இந்தத் திருடனைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் குத்தகைக்கு உழும் நிலம் அத்தனையும் சொந்தமாக்கிப் பட்டா எழுதிக் கொடுக்கிறேன்" என்றான் பூவேந்தன்.
"மிக்க நன்றி அரசே! மிக்க நன்றி. உங்கள் அரண்மனை வேலையாட்கள் அனைவரையும் வரச் சொல்லுங்கள். எனக்கு ஓர் அறை ஒதுக்கிக் கொடுங்கள். அந்த அறையின் மத்தியில் நான் கொண்டுவந்திருக்கும் இந்த மந்திர இருப்புச் சட்டியைத் தலை கீழாக வைப்பேன். ஒவ்வொருவரும் இருப்புச்சட்டியின் மீது தம் உங்ளங்கையை வைத்து அழுத்த வேண்டும். நல்லவர்கள் கைப்படும்போது இருப்புச்சட்டி அசையாது. திருடியவர் கை பட்டவுடன் கூச்சலிட்டுக்கொண்டு குதித்தெழுந்து நிமிர்ந்துவிடும். இந்த மந்திர இருப்புச் சட்டியை இமயமலையிலிருந்து வந்த ஒரு தவ முனிவர் என்னிடம் கொடுத்துச் சென்றார். இதன் மூலம் நான் முப்பது திருட்டுக் களைக் கண்டு பிடித்திருக்கிறேன் என்று சொன் னான். அறிவாளன் சொன்ன இந்தச் செய்தி அரண் மனை முழுவதும் பரவிவிட்டது.
அரண்மனையில் வேலை பார்த்த வேலை யாட்கள் அறுபது பேரும் அறைவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அறையின் மத்தியில் ஒரு மேசையின் மீது இருப்புச் சட்டி தலைகுப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அறைச் சன்னல்கள் அனைத்தும் மூடி இருட்டாக்கப்பட்டது. கதவு திறக்கும் போது மட்டுமே உள்ளே மங்கலான வெளிச்சம் தெரிந்தது.
வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக அறைக்குள் சென்று வந்தார்கள்.
இருப்புச் சட்டி போடப் போகும் கூச்சலை எதிர் பார்த்துக்கொண்டு எல்லோரும் ஆவலோடு காத்திருந் தார்கள்.
ஒவ்வொருவராக அறைக்குள் போய் உள்ளங் கையால் இருப்புச் சட்டியைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்கள். இப்படி அறுபது பேரும் போய் வந்துவிட்டார்கள். இருப்புச் சட்டி கூச்சல் போடவும் இல்லை. எழுந்து குதிக்கவும் இல்லை. நிமிர்ந்து நிற்கவும் இல்லை.
அரசன் பூவேந்தனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அறிவாளன் என்ற இந்தக் குடியானவன் புரட்டுக்காரன் என்று முடிவு செய்தான்.
"மாயமாவது மந்திரமாவது? எல்லாம் பித்தலாட்டம்'' என்று கூச்சலிட்டான்.
அறிவாளன் , அரசன் எதிரில் வந்தான்.
"அவசரப்படாதீர்கள் அரசே! இதோ ஒரு நொடி யில் திருடன் அகப்படப்போகிறான். பாருங்கள்!'' என்றான்.
அறுபது வேலையாட்களையும் மீண்டும் வரிசை யாக நிற்கச் சொன்னான்.
"எல்லோரும் இருப்புச் சட்டியைத் தொட்டீர்கள் அல்லவா? கையை நீட்டுங்கள்'' என்றான்.
எல்லோரும் கையை நீட்டினார்கள். அறிவாளன் ஒவ்வொருவர் கையாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.
வரிசையில் நின்ற ஒருவரைப் பிடித்து இழுத் தான். அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினான்.
''அரசே! இவர் இருப்புச் சட்டியைத் தொடா மலே வந்திருக்கிறார். அதனால் தான் இருப்புச்சட்டி குதிக்கவில்லை; கூச்சல் போடவில்லை'' என்றான்.
"இந்தக் குடியானவன் பொய் சொல்கிறான். நான் தொட்டேன்'' என்றான் அந்த ஆள்.
'சரி , மறுபடி தொடு பார்க்கலாம்'' என்றான் அறிவாளன்.
அவன் தயங்கினான். பிறகு உண்மையை ஒப்புக் கொண்டான்.
அரசன் பூவேந்தனுக்கு இருப்புச் சட்டி குதிப்ப தைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.
திருடியதாக ஒப்புக் கொண்ட ஆளை இருப்புச் சட்டியைப் போய்த் தொடும்படி ஆணையிட்டான்.
அவன் இருப்புச் சட்டி என்ன தண்டனை கொடுக்குமோ என்று பயந்தான். 'வேண்டாம் அரசே, நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். அதைத் தொட வேண்டாம் என்று வேண்டிக் கொண்டான்.
''அறிவாளரே. இவன் இருப்புச் சட்டியைத் தொடவில்லை என்பதை எப்படிக் கண்டு பிடித் தீர்கள்?'' என்று பூவேந்தன் ஆர்வத்தோடு கேட்டான்.
"அரசே! தங்களைப் போலவே எனக்கும் மாய மந்திரத்தில் நம்பிக்கை கிடையாது. இது நான் செய்த தந்திரமே!
இருப்புச் சட்டியின் அடிப்புறத்தில் கரியைப் பூசி வைத்தேன். அதன் மீது, உள்ளங்கையை வைத் தவர்கள் கையில் கரி பிடித்திருந்தது.
இந்த ஆள் மட்டும் பயந்து கொண்டு இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால் இவர் கையில் கரி படியவில்லை. எனவே, இவர் தான் திருடர் என்று முடிவு செய்தேன்'' என்றான்.
திருடியவனிடமிருந்து பணம் திரும்பப் பெறப் பட்டது. அவனுக்குச் சிறைத் தண்டனை கொடுத் தார் அரசர். வாக்களித்தபடி அறிவாளனுக்கு அவன் குத்தகைக்கு உழுத நிலம் முழுவதையும் விலை கொடுத்து வாங்கி உரிமையாக்கிக் கொடுத்தார்.
அறிவாளிகள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள்.
----------------
4. பச்சைக்கிளி பவழம்
கண்ணப்பன் தொலைவில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார்.
அந்த ஊரின் பெயர் ஆலங்காடு. பெயர்தான் காடு என்று உள்ளது. உண்மையில் அந்த ஊர் ஒரு பெரிய நகரம்.
தான் சென்ற வேலை முடிந்து ஊர்த் தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, "அய்யா வாங்க! அய்யா வாங்க என்று யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். யாரையும் ஆட்களைக் காணவில்லை.
மறுபடி திரும்பி நடந்தார்.
”அய்யா வாங்க ! அய்யா வாங்க” என்று ஒரு மழலைக் கீச்சுக் குரல் கேட்டது.
கேட்ட திசையை உற்றுப் பார்த்தார்.
ஆம், அவரை அழைத்தது ஒரு பச்சைக் கிளி.
ஒரு கடையில் தொங்கிய கூட்டுக்குள் இருந்த பச்சைக் கிளி தான் அப்படி அழைத்தது.
கண்ணப்பர் அந்தக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையில், பச்சைக் கிளி, மைனா, சிட்டுக் குருவி , மயில், புறா, கொக்கு போன்ற பறவைகளும், மான், முயல், நாய், பூனை, ஆடு, வெள்ளெலி போன்ற சிறு விலங்குகளும் விற்பனை செய்யும் கடை யாக இருப்பதைக் கண்டார்.
கடைக்காரர் "அய்யா அந்தக் கிளி உங்களுக்கு வேண்டுமா? நூறு ரூபாய்தான் ! மிக மலிவான விலை. வாங்கிக் கொண்டு செல்லுங்கள்'' என்றார்.
கண்ணப்பர் மகள் இன்பவல்லி ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறு பெண்.
அவளுக்கு அன்றைய மறுநாள் பிறந்தநாள்.
பிறந்தநாள் பரிசாக இந்தப் பேசும் கிளியைத் தன் மகள் இன்பவல்லிக்குக் கொடுக்க முடிவு செய்தார் கண்ணப்பர்.
கடைக்காரனுடன் பேரம் பேசி எழுபது ரூபாய்க்கு அந்தப் பேசும் கிளியை வாங்கிக் கொண்டார்.
அந்தக் கிளியை எப்படி வளர்க்க வேண்டும் எந்த எந்தப் பொருள்கள் கொடுக்க வேண்டும். நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அட்டை ஒன்றையும் கடைக்காரர் கொடுத்தார்.
கண்ணப்பர் வாங்கிவந்த அன்று கிளியைத் தன் அறையிலேயே வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் குளித்து முடித்து. உணவு உண்ணும் முன் இன்பவல்லி தன் அப்பாவை வந்து பார்த்தாள்.
"அப்பா! இன்று என் பிறந்த நாள். வாழ்த்துங்கள்'' என்று கூறி அவருடைய காலடிகளில் விழுந்து வணங்கினாள் இன்பவல்லி.
ஒவ்வொரு பிறந்த நாளிலும் தன் செல்ல மகளுக்கு நல்வாழ்த்துக் கூறுவதோடு ஒரு சிறு பரிசும் கொடுப்பது கண்ணப்பருடைய வழக்கம்.
சென்ற ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு தங்கச் சங்கிலி கொடுத்தார்.
இன்று, தன் அன்பு மகளை வாழ்த்தி அவளுக்கு மிகவும் விருப்பமான பச்சைக் கிளியைப் பரிசாகக் கொடுத்தார்.
இன்பவல்லிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அன்புப் பரிசான அந்தப் பச்சைக் கிளியின் பட்டுடலைத் தடவித் தடவித் தன் அன்பை வெளிப் படுத்தினாள்.
ஏற்கெனவே பேசத் தெரிந்த பச்சைக் கிளிக்கு மேலும் பல சொற்களைப் பேசப் பழகிக் கொடுத்தாள்.
அந்தக் கிளி மிக அறிவுள்ள கிளி. ஒரு தடவை சொன்னால் போதும், அதே சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லும். அழகாகச் சொல்லும்.
வீட்டில் உள்ள பூனை மியா மியா என்று கத்தினால் கிளியும் மியா என்று கத்தும். நாய் குரைப்பது போல் குரைக்கும். பசுவைப் போல் அம்மா என்று கத்தும். காக்கையைப் போல் காகா என்று கத்தும். வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் சொற் களையும் அப்படி அப்படியே திருப்பிச் சொல்லும்.
இவ்வளவு அழகாகப் பேசும் கிளியைத் தன் உடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் காட்ட வேண்டும் என்று நினைத்தாள் இன்பவல்லி.
இன்பவல்லி அறிவுள்ள பெண்ணாய் இருந்தாள். அப்பாவுக்குச் செல்லப் பெண்ணாக இருந்தாள். ஆனால் அம்மா சொல்லும் எந்த வேலையும் செய்ய மாட்டாள்.
ஒரு நாள் அம்மா அவளை அழைத்து, ”இன்பவல்லி பக்கத்துக் கடையில் போய் கால் கிலோ பருப்பு வாங்கிக் கொண்டு வா'' என்றாள்.
”போ அம்மா , உன்னோடு பெரிய தொல்லை' என்று கூறிவிட்டு அறையில் போய்க் கதை படித்துக் கொண்டிருந்தாள்.
மற்நொரு நாள். ''இன்பவல்லி , அத்தை வீட்டில் போய் இந்தப் பலகாரங்களைக் கொடுத்துவிட்டுவா என்றாள்.
அத்தை வீடு , அதே தெருவில் மூன்றாவது வீடு தான்.
இன்பவல்லி போக மறுத்துவிட்டாள்.
"எனக்கு நேரமில்லை அம்மா' என்று கூறி விட்டு விளையாடப் போய்விட்டாள்.
இன்னொரு நாள் அம்மா அவளைக் கூப்பிட்டு, "கண்ணே இன்பவல்லி, கடைக்குப் போய் இரண்டு தேங்காய் வாங்கி வா' என்றாள்.
"போம்மா? உனக்கு வேறு வேலையில்லை என்று கூறிவிட்டு நாய்க்குட்டியுடன் விளையாடப் போய்விட்டாள்.
இதை எல்லாம் அந்தப் பச்சைக் கிளி பார்த்துக் கொண்டிருந்தது அவள் சொல்லிய சொற்களையும் நினைப்பு வைத்திருந்தது.
அன்று ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பச்சைக் கிளியைத் தூக்கிக் கொண்டு சென்றாள் இன்பவல்லி.
தன் தோழிகளிடம் நான் சொன்னேனே. எங்கள் வீட்டில் ஒரு அதிசயக் கிளி இருக்கிறதென்று. அது இதுதான்'' என்று காண்பித்தாள்.
மாணவ மாணவியர் சூழ்ந்து கூடி நின்றார்கள்.
இன்பவல்லி தன் பச்சைக் கிளிக்கு "பேவழம்! என்று பெயர் வைத்திருந்தாள்.
”பவழம்! இதோ பார் இவள் தான் மீனா. மீனா அக்கா நலமா?” என்று கேள் பார்க்கலாம்'' என்று கூறினாள்.
மாணவ மாணவிகள் பச்சைக் கிளி பேசுவதைப் பார்க்க ஆவலோடு நின்றார்கள்.
பச்சைக் கிளி பேசியது.
ஆனால், "மீனா அக்கா நலமா?'' என்று கேட்கவில்லை.
”உன்னோடு பெரிய தொல்லை'' என்று கூறியது.
"இன்பவல்லி , உன் பச்சைக் கிளி ஏறுக்கு மாறாகப் பேசுகிறதோ என்று கேட்டாள் மீனா.
இல்லை இது நல்ல கிளி. சொன்னதை அழகாகச் சொல்லும்.
"பவழம் வள்ளியக்காவுக்கு வணக்கம் சொல்லு பார்க்கலாம்'' என்றாள் இன்பவல்லி.
பச்சைக் கிளி தலையை ஆட்டிக் கொண்டு வாயைத் திறந்து, "எனக்கு நேரம் இல்லையம்மா” என்றது.
சூழ்ந்திருந்த மாணவர்கள் கொல்லென்று சிரித் தார்கள். இன்பவல்லி கோபத்தை அடக்கிக் கொண்டாள்.
”பவளம் என் கண்ணல்ல , கன்றுக்குட்டி போல் அம்மா கத்து பார்க்கலாம்” என்றாள்.
'போம்மா உனக்கு வேறு வேலையில்லை” என்றது பச்சைக் கிளி. தோழிப் பெண்கள் சிரித்தார்கள்.
அவர்கள் சிரிக்கச் சிரிக்க இன்பவல்லிக்கு, அழுகை அழுகையாக வந்தது.
"இந்தக் கிளி என்னை அவமானப்படுத்தி விட்டது. இது பொல்லாத கிளி, குரங்குக் கிளி'' என்று கத்தினாள்.
அப்போது அங்கு நின்ற மீனா சொன்னாள். "இன்பவல்லி, கோபப்படாதோ பவழம் தவறாக ஒன்றும் பேசவில்லை. வீட்டில் உன் அம்மாவை நீ எதிர்த்துப் பேசிய சொற்களையே அது திருப்பிச் சொல்லியிருக்கிறது.
அது அறிவுள்ள கிளி. நீ அம்மாவிடம் அன்பு கொண்டிருப்பது உண்மையானால் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதை உனக்கு உணர்த்துவதற்காகவே, நீ அம்மாவிடம் மறுத்துச் சொன்ன சொற்களைப் பேசியிருக்கிறது.
நீ அம்மாவிடம் அன்பாகப் பேசு. அவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்.
பச்சைக் கிளியும் நல்ல சொற்களைப் பேசும் என்று கூறினாள்.
இன்பவல்லி மீனா சொன்னதை ஒப்புக் கொண்டாள்.
"இனிமேல் நான் அம்மாவுக்கு உதவியாக இருப்பேன் என்று கூறினாள். உடனே பச்சைக் கிளி, நன்றி வணக்கம் என்று கூறியது.
மாணவர்கள் எல்லோரும் பச்சைக் கிளியைப் பாராட்டினார்கள்.
-----------------
5. அறிவாளி ஏழையானால் அவன் பைத்தியக்காரன்
அதர்வண நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்நாட்டைப் பேய்நாகன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பேய்நாகன் ஆட்சியில் நாளொரு கொலை யும் பொழுதொரு கொள்ளையும் என்று துன்பங்கள் மக்களை ஆட்கொண்டன.
கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் கட்டவிழ்த்துவிட்டது போல் ஒவ்வொரு நாளும் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.
அரசாங்க அதிகாரிகளோ , நீதிமுறையில்லாமல் மக்களிடம் பணம் வசூல் செய்வதும், தர மறுப்பவர் களைச் சிறையில் அடைப்பதுமாக , கொடுமையாக நடந்து வந்தார்கள்.
நீதி கேட்டு வரும் மக்களை அரசன் நடத்திய விதமோ மிகக் கேவலமாக இருந்தது.
நீதி கேட்டு அரசனுடைய அத்தாணி மண்டபத் துக்கு வருவோரிடம் நீ என்ன சாதி என்று கேட்பான் அரசன்.
மேல் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு செய்து, தீர்ப்பு வரி என்று நிறையப் பணம் பிடுங்கிக் கொள்வான்.
கீழ்ச் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்கு அங்கு நீதியே கிடைக்காது. சிறையும், கசையடியும், மற்ற தண்டனைகளும் தான் மிஞ்சும்.
இப்படிப்பட்ட பேய் நாகனை, அவனுடய அரச சபையில் இருந்த புலவர்கள், மனுநீதி தவறாமல் அரசாளுகிறான் என்று பாராட்டிப் பாடுவார்கள்.
இந்த மனு நீதியின் கொடுமையை அந்த அதர்வண நாட்டு மக்கள் நிறையவே அனுபவித்தார்கள்.
அரசாட்சியின் கொடுமை தாங்காமல் நாட்டை விட்டு அகதிகளாய் ஓடிப் போனவர்கள் வேறு நாடு களில் நன்றாக வாழ்ந்தார்கள்.
சொந்த நாடு என்று அங்கேயே இருந்தவர்கள் பெருந் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இருந் தார்கள்.
மக்களைக் கொள்ளையடிக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டுமே அங்கே தாய் நாட்டுப் பற்று உள்ளவர்களாய் இருந்தார்கள்.
நீதி கேட்டவர்கள் நாட்டுத் துரோகிகள் என்று பழிக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட அதர்வண நாட்டின் மீது பக்கத்து நாடான கஞ்சபுரி அரசன் ஒரு முறை படையெடுத்து வந்தான்.
ஒற்றர்கள் மூலம் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன் படை எடுத்து வரும் செய்தி யறிந்தான் பேய் நாகன்,
உடனே தன் அமைச்சர்களையும் தளபதிகளை யும் அழைத்தான்.
கஞ்சபுரி அரசனை மூன்று நாட்களுக்குள் துரத்தி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அனை வரையும் என் வாளால் கொன்று போடுவேன் என்றான்.
அமைச்சர்கள் அஞ்சினர். படைத் தலைவர்கள் பயந்தனர்.
கஞ்சபுரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். அத்துடன் போர்த்தந்திரங்கள் அறிந்தவன். நிறைய ஆயுதங்கள் அவனிடம் உள்ளன. அவன் சுற்றிலும் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக அடிமைப் படுத்தி வருகிறான்.
அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட அரசர்களை, அவன் மன்னித்து விடுவான். நிறைய கப்பப் பணம் வாங்கிக் கொண்டு, போரிடாமல் திரும்பிப் போய்விடுவான். எதிர்த்துப் போரிட்ட நாட்டை, அடிமைப் படுத்தி, அரசர்களையும் அமைச்சர்களையும் கழுவில் ஏற்றிக் கொல்வான். மக்களைக் கொள்ளையிட்டுப் பொருள்களை வாரி எடுத்துக் கொண்டு போய்விடுவான்.
அவனுடன் சமாதானமாகப் போவது நல்லது என்று ஓர் அமைச்சர் கூறினார்.
அந்த நொடியிலேயே அவருடைய தலையைச் சீவி எறிந்தான் பேய்நாகன்.
இதைக் கண்டு மற்ற அமைச்சர்கள் பயந்து விட்டனர். படைத்தலைவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர்.
தங்கள் அரசன் கையில் சாவதா எதிரி அரசன் கையில் சாவதா என்று அவர்களுக்குப் புரியவில்லை.
கஞ்சபுரிப் படைகள் நெருங்கிவிட்டன. கோட்டை யைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
அவனை மூன்று நாட்களுக்குள் முறியடித்து விரட்டிவிட வேண்டும் என்று கட்டளையிட்ட பேய் நாகன், கோட்டைக்குள் இருந்த ஒரு இரகசிய அறைக்குள் தன் குடும்பத்துடன் ஓடி ஒளிந்து கொண்டான்.
கோட்டைக்குள் இருந்தவர்கள், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தனர்.
கோட்டை வாசலில் காவல் பார்க்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய தந்தையார் வயது முதிர்ந்த ஒரு கிழவர்.
தன் மகன் மூலம் நாட்டுக்கு வந்த ஆபத்தை அறிந்த அவர், "மகனே! எதிரியை முறியடிக்க என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. என்னைத் தலைமை அமைச்சரிடம் கூட்டிக் கொண்டு போ என்றார்.
அவ்வாறே அந்த வீரன் அவரைத் தலைமை அமைச்சரிடம் அழைத்துச் சென்றான்.
அமைச்சர் அவர்களே, உங்களுக்கு நான் உதவி செய்யலாமா?'' என்று கேட்டார் கிழவர்.
"ஆஆ" என்று சிரித்தார் தலைமை அமைச்சர்.
”புல் தடுக்கினாலும் விழுந்துவிடக் கூடிய கிழவன் நீ. நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா? வேடிக்கைதான்' என்று அலட்சியமாகப் பேசினார் தலைமை அமைச்சர்.
அருகில் இருந்த அமைச்சர் , "கிழவர் உடலில் வலு இருக்காது. மூளையில் ஏதாவது திட்டம் இருக்கலாம். கேட்டுத்தான் பார்ப்போமே!'' என்றார்.
"எனக்கு நம்பிக்கையில்லை. நமக்கெல்லாம் இல்லாத மூளையா இந்தக் கிழவனிடம் இருக்கப் போகிறது'' என்றார் முதலமைச்சர்.
"எதற்கும் கேட்டுப் பார்ப்போம். சரியான வழி சொல்லாவிட்டால், இப்போதே இந்தக் கிழவனை இந்திரலோகத்துக்கு அனுப்பிவிடலாம் என்றார் படைத் தளபதி.
சரி , உன் திட்டம் என்ன சொல். உன் திட்டம் சரியில்லை என்றால் இப்போதே தலையைச் சீவி விடுவேன்'' என்றார் தலைமை அமைச்சர்.
" அமைச்சரே, எனக்கு நிறைய ஆட்கள் கொடுங்கள். ஒரு சுரங்கப்பாதை அமைக்கிறேன். சுரங்கப் பாதைக் கதவின் சாவியை என்னிடம் கொடுங்கள். சுரங்கம் அமைத்த பிறகு என்னைக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிடுங்கள். நான் சுரங்கப்பாதை வழியாக எதிரிப் படைகளை உள்ளே வரச் சொல்கிறேன். அப்போது ஒருவர் பின் ஒருவராக நுழையும் எதிரி வீரர்களை நம் வீரர்கள் வெட்டி வீழ்த்தட்டும் என்றார் அந்தக் கிழவர்.
இது நல்ல சூழ்ச்சி என்று அமைச்சர்களும் படைத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
கிழவர் ஆட்களை வைத்துச் சிறிய சுரங்கப் பாதை ஒன்றை அமைத்தார். சுரங்கக் கதவைப் பூட்டி அதன் சாவியைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டார். அவர் திட்டப்படியே கிழவரைக் கோட்டைக்கு வெளியே தள்ளி விட்டார்கள்.
வெளியில் வந்து விழுந்த கிழவரைக் கஞ்சபுரி வீரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
"என்னை உங்கள் அரசரிடம் அழைத்துச் செல்லுங்கள்'' என்று கிழவர் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே அவர்கள் பஞ்சமுகனிடம் அவரை அழைத்துச் சென்றார்கள்.
"ஏய் கிழவா ' நீ யார்? உன்னை ஏன் அவர்கள் வெளியே தள்ளி விட்டார்கள்?' என்று கஞ்சபுரி மன்னன் பஞ்சமுகன் கேட்டான்.
" அரசே , நான் ஒரு தவறும் செய்யவில்லை. நாட்டுப் பற்றின் காரணமாக சில நல்ல கருத்துக் களைச் சொன்னேன். கஞ்புரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். எதிர்த்து நின்று தோற்பதைவிட சமாதானமாகப் போய்விடலாம். பொருள்கள் நாசமா காமல், உயிர்கள் வீணாகக் கொல்லப்படாமல் காப் பாற்றி விடலாம். நம்மால் வெற்றிபெற முடியாத போது, சமாதானமாகப் போவது நல்லது என்று சொன்னேன். அவர்கள் என்னைத் துரோகி என்று பிடித்துத் தள்ளிவிட்டார்கள்' என்று சொன்னார் கிழவர்.
சரி, இப்போது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டான் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன்.
"அரசே. ஆட்சி செய்பவர்களின் மூடத்தனத்தினால் நாட்டு மக்கள் வீணாக அழிவதையோ கொள்ளை யடிக்கப்படுவதையோ நான் விரும்ப வில்லை.
நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன். புதிதாக ஒரு இரகசியச் சுரங்கம் அமைத்திருக் கிறார்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கிறது. நீங்கள் பொது மக்கள் வீடுகளில் சூறையிடுவதில்லை என்று எனக்கு வாக்குக் கொடுங்கள். நான் சுரங்கப் பாதையின் சாவியைத் தருகிறேன்.
அதன் வழியாகச் சென்று அரசரையும் அமைச்சர் களையும் அதிகாரிகளையும் கைது செய்து விடுங்கள். ஆட்சி எவ்வித போராட்டமும் இல்லாமல் உங்கள் கைக்கு வந்து விடும்' என்றான் கிழவன்.
"கிழவா , சுரங்கப் பாதை எங்கே இருக்கிறது?''
"அரசே , நான் இப்போதே தங்களை அழைத் துச்சென்று சுரங்கப் பாதையைத் திறந்து விடுகிறேன். எனக்கு வாக்குக் கொடுங்கள்'' என்றான் கிழவன்.
“சரி, சரி நீ சுரங்கப் பாதை இருக்கும் இடத் திற்கு எங்களை அழைத்துக் கொண்டு செல்'' என்றான் பஞ்சமுகன்.
கிழவன் அழைத்துச் சென்றான். சுரங்கப் பாதையைத் திறந்து விட்டான். அந்தச் சிறிய சுரங்கப் பாதையினுள் முதலில் பஞ்சமுகன் சென்றான். அவனைத் தொடர்ந்து படைத் தளபதிகள் சென் றார்கள். தொடர்ந்து படைவீரர்கள் சென்றார்கள். ஒருவர் பின் ஒருவராகச் சென்று, சுரங்கப் பாதையை விட்டு வெளியில் வந்தவுடன், அங்கு தயாராகக் காத்திருந்த அதர்வண நாட்டு வீரர்கள் அவர்களை இழுத்துப் போட்டு வெட்டிக் கொன்று விட்டார்கள். இவ்வாறு கஞ்சபுரி நாட்டு வீரர்கள் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று வெட்டுப்பட்டு இறந்தார்கள்.
கிழவனின் தந்திரத்தால் கஞ்சபுரி அரசனும் அரசனுடைய படை வீரர்களும் ஒருவர்கூட மிஞ்சா மல் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
அதர்வண நாட்டில் பேய்நாகன் ஆட்சி நீடித்தது.
மறுநாள் கிழவன் அரசவைக்கு வந்தான்.
அரசன் பேய்நாகன் வெற்றி தேடித்தந்த அமைச் சர்களுக்கும், படைவீரர்களுக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தான்.
தலைமை அமைச்சர் கிழவன் மண்டபத்திற்குள் நுழைவதைப் பார்த்தார்.
அவர் தான் தான் எதிரிகளை முறியடித்ததாகக் கூறி மன்னன் பேய் நாகனிடம் பெரிய பரிசுகளை வாங்கிக் கொண்டிருந்தார்.
கிழவன் வந்தால் தன் சூழ்ச்சி தெரிந்து விடும் என்று அஞ்சினார்.
இரண்டு காவல் வீரர்களை அழைத்தார்.
"அந்தக் கிழவனை இழுத்துச் சென்று அடித்துக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிட்டு வாருங்கள்'' என்று ஆணையிட்டார்.
அவ்வாறே அந்தக் காவல் வீரர்கள் அவரைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள், கோட்டைக்கு வெளியே கொண்டு சென்றார்கள். உடல் முழுவதும் காயம் ஏற்படுபடி நையப் புடைத்தார்கள்.
ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றார்கள். கிழவர் மயக்கம் அடைந்துவிட்டார்.
மயக்கம் தெளிந்து அவர் கண் விழித்துப் பார்த்த போது, அந்த வழியாகச் செல்லும் மக்களைப் பார்த்து ,
"எதிரிகளைக் கொல்ல நான் தான் வழி செய் தேன். என்னை அடித்துப் போட்டுவிட்டார்கள். நான் தான் இந்த நாட்டைக் காப்பாற்றினேன்” என்று கூவினார்.
கிழவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மக்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்.
இந்தப் பைத்தியக்காரக் கிழவன் நாட்டைக் காப்பாற்றினானாம். நல்ல வேடிக்கை! என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சென்றனர்.
"ஏழை அறிவாளியாக இருப்பதே பைத்தியக் காரத்தனம்!'' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார் கிழவர்.
தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமைக்கே வித்தாகும்.
-------------
6. ஒரு ஈயின் ஆசை
தங்கநிறமான களிமண்ணில் அமுத நீரை ஊற்றிப் பிசைந்தார். களிக் களியாய் வந்தவுடன் சின்னச் சின்ன உருவங்களாக கையினால் உருட்டி னார். கண், காது, மூக்கு, தலை, வாய், கை, கால் எல்லாம் செய்தவுடன் அந்த உருவத்தை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு, படைப்பு மந்திரத்தைச் சொல்லி வாயினால் ஊதினார்.
உடனே அந்த உருவம், காற்று மண்டலத்தின் வழியாகப் பூவுலகத்துக்கு வந்து, யாராவது ஒரு பெண் வயிற்றில் கருவாக உட்கார்ந்துவிடும்,
இப்படி ஒவ் வொரு விநாடியும் ஓராயிரம் களிமண் பொம்மையைச் செய்து கொண்டேயிருந்தார்.
அப்போது அவர் மூக்கின் மேல் ஒரு ஈ பறந்து வந்து உட்கார்ந்தது. இடது கையால் அதை விரட்டி னார். அது பறந்து போய் அவர் தோளிலே போய் உட்கார்ந்தது..
களிமண் பிடித்த வலது கையால் தோளிலே தட்டினார். அது தொடைக்குப் பறந்தது.
மிகக் கவனமாக கையால் பிடித்து முகத்துக்கு நேரே கொண்டு வந்து, 'ஏ சின்ன ஈயே, ஏன் என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறாய்?' என்று கேட்டார்.
“கடவுளே, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்டது ஈ. என்ன வேண்டும்? சொல் எனக்கு நிறைய வேலை யிருக்கிறது. இன்று பொழுது சாய்வதற்குள் இரண்டு கோடி உயிர்களைப் படைத் தாக வேண்டும் என்று பரபரப்பாய்ப் பேசினார் பிரம்மா.
"தேவா, பல உயிர்களுக்கு நீங்கள் வால் வைத்துப்படைத் திருக்கிறீர்கள். ஈக்களாகிய எங்க ளுக்கு மட்டும் வால் இல்லை. எங்களுக்கு ஓர் அழகான வால் மட்டும் கொடுத்து விடுங்கள். நான் போய் விடுகிறேன்'' என்றது ஈ.
“சின்னஞ் சிறிய கால்களை வைத்துக் கொண்டே , உலகில் பெரிய பெரிய நோய்களைப் பரப்புகின்றாய் நீ. வாலும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். நான் படைக்கிற உயிர்கள் எல்லாம் வேக வேகமாக மறைந்து போய்விடும். என்று வருத்தப்பட்டார் பிரம்மா.
"கடவுளே நீங்கள் கொடுக்கும் வாலை நான் பத்திரமாக மேற்புறம் தூக்கி வைத்துக் கொள்கிறேன். தயவு செய்து எனக்கு வால் கொடுங்கள்' என்று கேட்டது ஈ.
"எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உன் இனத்தைப் படைக்கத் தொடங்கும் பொழுதே உன் பாட்டாதி பாட்டன் கேட்டிருக்க வேண்டும். இப்போது இடைக்காலத்தில் நீ கேட்டால் எப்படிச் சேர்க்க முடியும். என்னால் முடியாது போ' என்று விரட்டி னார் பிரம்மா.
கடவுளே, என் பாட்டாதி பாட்டனுக்கு அறி வில்லை. வால் உள்ள விலங்குகள் எல்லாம் என்ன அழகாய் இருக்கின்றன. அதுபோல் ஈக்களாகிய நாங் களும் அழகாக இருக்க விரும்புகிறோம். தயவு செய்யுங்கள் கடவுளே.
"எங்களுக்கு வால் கொடுங்கள்” என்று ரீங்காரம் இட்டுக் கொண்டே பிரமதேவனைச் சுற்றி வந்து மீண்டும் அவரது உள்ளங்கையில் வந்து உட்கார்ந்தது.
"ஈயே தொந்தரவு செய்யாமல் போய் விடு. இடை நடுவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஒரு முறை படைத்தது படைத்ததுதான் என்றார் பிரம்மா.
”கடவுளே! நீங்களே பொய் சொல்லலாமா? கோடி ஆண்டுகளுக்கு முன்னால், குரங்குகளைப் படைக்கும் போது, வால் இல்லாமல் தான் படைத்தீர்கள். இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் குரங்கு களுக்கு வால் கொடுத்தீர்கள். அதுபோல் ஈக்களுக்கும் கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள்? என்று கேட்டது ஈ. இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரி யும், நீ பிறந்து ஐந்து நாள் கூட ஆகவில்லை.
உனக்கு எப்படி இந்தப் பழைய செய்தி எல்லாம் தெரிய வந்தது? என்று வியப்புடன் கேட்டார் பிரம்மா.
நேற்று எங்கள் ஈக்காட்டுக்கு நாரத முனிவர் வந்தார். நாங்கள் நல்ல வரவேற்புக் கொடுத்தோம். மணம் உள்ள மலர் மாலைகளால் அவருடைய தோள் களை அலங்கரித்தோம். எங்கள் குறையையும் சொன் னோம். அவர்தான் தங்களிடம். எங்களின் வேண்டு கோளைச் சொல்லும்படி கூறினார். உடனே ஈக்களின் அரசனாகிய நான் புறப்பட்டு வந்தேன். ஓஓ! இது நாரதன் குறும்பா? இதோ பார் ! ஈயே இலட்சம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகளுக்கு புதிதாக வால் கொடுத்தது உண்மைதான்.
எப்படித் தெரியுமா? குரங்குகளின் அரசன் என்னை வந்து வால் கொடுக்கும்படி கேட்டான். வால் உள்ள உயிர் வகைகளில் யாராவது, தங்களுக்கு வால் வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வாலை நறுக்கி உனக்கு ஒட்ட வைக்கிறேன் என்று சொன்னேன். உடனே குரங்கரசன் ஓடிச் சென்று அப்போது பூவுலகை ஆண்டு கொண்டிருந்த மா மன்னன் மனுவை அழைத்து வந்தான். மனு தனக்கு வால் இருப்பது தொல்லையாக இருக்கிறது என்றும், அதைக் குரங்குகளுக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்வதாகவும் கூறினான். மனுவின் ஒப்பு தலின் பேரில் மனிதர்களின் வால்களை வெட்டிக் குரங்குகளுக்கு வைத்தது உண்மை.
அதுபோல் நீயும் ஏதாவது வால் உள்ள விலங்கு களைக் கூட்டிக் கொண்டு வந்து, அவை தம் வாலை உனக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டால், நான் அந்த வாலை எடுத்து உன் இனத்திற்கு ஒட்டிவைக்கிறேன். போ , ஏதாவது வால் உள்ள உயிர் இனத்தின் தலை வனைக் கூட்டிக் கொண்டுவா என்றார் பிரம்மா. ஈ பறந் தோடியது, பிரம்மா அமைதிப் பெரு மூச்சு விட்டார்.
போன ஈ திரும்ப வரவே வராது என்று அவருக்குத் தெரியும். அதனால் அமைதியாகத் தம் படைப் புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டார்.
ஆனால் பூவுலகுக்கு வந்த ஈ சும்மா இருக்க வில்லை. உலகத்தைச் சுற்றத் தொடங்கியது. காடு மலை ஆறு வயல் கடல் என்று எல்லா இடங்களுக்கும் சென்றது. ஆங்காங்கே உள்ள , வால் உள்ள உயிர்களைப் பார்த்துப் பேசியது.
முதலில் அது ஓர் ஆற்றுக்குச் சென்றது. அங்கே தன் அரசியுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த மீன் அரசனைச் சந்தித்தது.
"மீனே, உன் அழகான வாலை எனக்குத் தருகிறாயா? எனக்கு வால் வேண்டும் என்று ஆசை யாக இருக்கிறது. கடவுள் உன் ஒப்புதலைக் கேட்டு வரச் சென்னார் என்றது.
"ஈயே, நீ நினைப்பது போல் என் வால் அழகுக் காக இல்லை. வால் இருந்தால் தான் என்னால் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் திரும்ப முடியும். இல்லா விட்டால் பெரிய அவதியாகி விடும். ஆகையால் என் வாலைக் கேட்காதே. வேறு யாரையாவது போய்ப் பார்” என்றது மீன் அரசன்.
ஈ சோர்வடையவில்லை. நேராக ஒரு காட்டை நோக்கிப் பறந்தது.
காட்டில் ஒரு மரத்தில் இருந்த மரங்கொத்தியைப் பார்த்தது ஈ.
மரங்கொத்தி, மரங்கொத்தி! உன் அழகான வாலை எனக்குத் தருவாயா? நீ ஒப்புக் கொண்டால் உன் அழகான வாலை எனக்கு ஒட்டி வைப்பதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்' என்றது.
அந்த மரங்கொத்தி ஈயைப் பார்த்தது. "என் வாலை நான் என்ன அழகுக்காகவா வைத்திருக் கிறேன். நீ இப்போது பார்” என்று கூறி மரத்தைக் கொத்தத் தொடங்கியது.
அது தன் வாலை மரத்தின் மீது சாய்ந்துக் கொண்டு தன் முழு உடலையும் வளைத்துக் கொண்டு தன் மூக்கால் மரத்தில் வலிமையாகக் கொத்தியது. ஒவ்வொரு முறை மரத்தைக் கொத்தும் போதும், வாலை நன்றாக ஊன்றிக் கொண்டு, உடலை வளைத்து முழுசக்தியையும் பயன் படுத்தியது. ஒவ்வொரு கொத்துக் கொத்தும் போதும் மரத்தூள்கள் சிதறிவிழுந்தன. மரத்தில் துளை உண்டாக்கியது.
மரங்கொத்திக்கு வால் எவ்வளவு பயன்படுகிறது என்பதை ஈ நேரில் பார்த்தது. மரங்கொத்தி மரங் கொத்தி என்னை மன்னித்துக்கொள். நான் வேறு யாரிடமாவது போய் வால் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்தது.
போகும் வழியில் ஒரு புதர் மறைவில் மான் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் சிறிய வாலைப் பார்த்ததும் ஈ அந்த மானை நோக்கிச் சென்றது.
”மானே மானே உன் அழகான சின்ன வாலை எனக்குத் தருவாயா? நீ தா ஒப்புக்கொண்டால் கடவுள் அதைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறாய்? என்று அன்போடு கேட்டது.
"என் வாலைக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வேன்? வால் இல்லாவிட்டால் என் குட்டியைப் பறி கொடுக்க நேரிடுமே” என்று கூறியது மான்.
”உன் வாலுக்கும் குட்டிக்கும் என்ன தொடர்பு? என்று வியப்புடன் கேட்டது.
"ஓநாய்கள் எங்களுக்குப் பகை. அவற்றின் வாயில் அகப்பட்டால் நாங்கள் தப்ப முடியாது. ஆகையால், விரட்டி வரும் ஓநாயிடமிருந்து தப்ப நாங்கள் தலை தெறிக்க ஓடுவோம். ஒடும் போது ஓநாயின் கண்ணில் படாமல் ஏதாவது புதருக்குள் நான் பதுங்கிக் கொள்வேன். வெளியிலிருந்து பார்த் தால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது.
ஆனால் நான் எங்கேயிருக்கிறேன் என்பது என் குட்டிக்கு மட்டும் தெரிய வேண்டும். புதருக்குள் மறைந்திருக்கும் நான் என் வாலை ஆட்டுவேன். அதைக் கண்டு என் குட்டி நான் எங்கே இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளும். உடனே அதுவும் ஒளிந்து மறைந்து ஓடி வந்து என்னோடு சேர்ந்து கொள்ளும்' என்று விளக்கமாகக் கூறியது மான்.
வால் இல்லா விட்டால் மான் எவ்வளவு துன்பப் படும் என்று ஈ புரிந்து கொண்டது. மேலும் அதை வற் புறுத்திக் கேட்கக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பியது.
காட்டு வழியில் ஒரு நரி போய்க் கொண்டிருந் தது. அந்த வால் மாதிரி ஒரு சின்ன வால் இருந்தால், எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணியது ஈ. உடனே அது நரியை நோக்கிப் பறந்தது.
"நரி யண்ணா , நரியண்ணா. கடவுளிடம் நான் ஒரு வால் கேட்டேன். நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் வாலை எடுத்துச் சின்ன வால் ஆக்கி எனக் குத் தருவதாகக் கடவுள் சொன்னார். உங்கள் வா லைத் தந்து உதவுங்கள் அண்ணா. வால் இல்லாமலே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் அழகான வாலை எனக்குத் தந்து உதவி செய்யுங்கள் அண்ணா ' என்று கேட்டது.
நரி அதை உற்று நேக்கியது. நான் வாலை அழகுக்காக வைத்துக் கொள்ள வில்லை. வால் இல்லாவிட்டால் எனக்குச் சாவு தான் மிஞ்சும். போ போ பேசாமல் போ' என்று விரட்டியது நரி.
அது எப்படி அண்ணா ? வால் எப்படி உங்கள் உயிரைக் காப்பற்றுகிறது?' என்று கேட்டது ஈ.
'வேட்டை நாய்கள் எங்களைத் துரத்துகிற போது' நாங்கள் வேகமாக ஓடுவோம்.
நாங்கள் எந்தப்பக்கமாக ஒடுகிறோமோ அதற்கு வேறு பக்கமாக எங்கள் வாலைத் திருப்பி வைத்துக் கொள்ளுவோம். வால் திரும்பியுள்ள பக்கத்தைப் பார்த்து நாய்கள் எங்களைப் பின்பற்றி வருவதாக எண்ணிக் கொண்டு வேறு திசையில் விரட்டிக் கொண்டு ஓடும். நாங்கள் தப்பித்து கொள்வோம்.
வால் இல்லாவிட்டால் வேட்டை நாய்கள் நேராக வந்து எங்களைக் கவ்விப்பிடித்துத் தின்று விடும்.'
நரியிடம் வால் கிடைக்காது என்று தெரிந்து கொண்டது ஈ.
அதற்குக் கோபம் கோபமாக வந்தது. பிரம்மா வேண்டும் என்றே தன்னை அலைய வைத்திருக் கிறார் என்று தோன்றியது.
யாரும் வாலைத் தர ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தே தன்னை விரட்டியடித் திருக்கிறார். அவரைச் சும்மா விடக்கூடாது என்று நினைத்தது ஈ.
நேராகப் பறந்து சென்று பிரம்மாவின் முக்கின் மேல் உட்கார்ந்தது. மூக்கைத் தட்டியவுடன் பறத்து சென்று நெற்றியில் உட்கார்ந்தது. அவர் நெற்றியில் கைவைத்த போது அது பறந்து போய் முதுகில் உட்கார்ந்தது. முதுகுப்பக்கம் கையைக் கொண்டு சென்ற போது தலையில் உட்கார்ந்தது.
விரட்டி விரட்டி அலுத்துப்போன பிரம்மா, என்ன இது தொல்லையாக இருக்கிறது. இந்த இடத்தை விட்டுப் போகிறாயா இல்லையா?' என்று கேட்டார்.
எனக்கு வால் வேண்டும். வால் தருகிறவரையில் சும்மா இருக்க மாட்டேன். கடவுளே என்னை எங்கெங்கோ சுற்ற வைத்தீர்கள். யார் யாரையோ கெஞ்ச வைத்தீர்கள், நானும் சுற்றாத இடமில்லை, பார்க்காத உயிர் இனங்கள் இல்லை. எல்லா விலங்கு களுக்கும் வால் தேவையாம், யாரும் தங்கள் வாலை இழக்க விரும்ப வில்லை. அப்படிப் பயனுள்ள வாலை எனக்கும் தரவேண்டும். வால் தருகிற வரையில் உங்களைச் சுற்றிச்சுற்றி வருவேன்.
வால் இல்லாமல் உலகத்திற்குத் திரும்ப மாட் டேன் என்று சாதித்தது ஈ.
பிரம்மா மலைத்துப் போனார். இந்த ஈயிட மிருந்து எப்படித் தப்புவது என்று சிந்தித்தார்.
அப்போது அவர் பார்வை கீழ் நோக்கித் திரும்பியது.
கீழே பூவுலகில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பசுமாடு புல்மேய்ந்து கொண்டிருந்தது.
உடனே பிரம்மாவுக்கு ஓர் எண்ணம் பளிச் சிட்டது.
”ஏ ஈயே! எல்லாரிடமும் கேட்டாய். பசுவிடம் கேட்டாயா?' என்று கேட்டார். 'இல்லை ' என்றது ஈ.
”பார்த்தாயார்? யார் கொடுக்கக் கூடியவர்களோ, அவர்களை விட்டுவிட்டு யார் யாரிடமோ கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாய்.
இப்போது நீ நேரே பசுவிடம் போ. அதன் வாலைக் கொடுக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டு வா” என்றார் பிரம்மா.
ஈ சொன்னது: ”கடவுளே, இப்போதே நேரே போகிறேன். பசுவிடம் கேட்கிறேன். அது கொடுக்க ஒப்புக் கொண்டால் சரி. இல்லாவிட்டாலும் நான் திரும்பி வருவேன். எனக்கு வால் கொடுக்கும் வரையில் உங்களை வேலை பார்க்க விடமாட்டேன்.
இப்படிச் சொல்லிவிட்டு நேரே பூவுலகிற்குத் தாவிப் பறந்து வந்தது.
இங்கே மலையடிவாரத்தில், பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த புல்லை ஒரு பசு அமைதியாகக் மேய்ந்து கொண்டிருந்தது.
அதன் முதுகில் வந்து ஈ உட்கார்ந்தது.
'பசுவே, பசுவே! உன் வாலை எனக்குத் தருவாயா?' என்று கேட்டது.
பசு காதில் விழாதது போல் புல்லைக் கடித்துக் கொண்டிருந்தது.
பேசுவே, பசுவே! என்னைக் கடவுள் அனுப்பி னார். நீ ஒப்புக் கொண்டால், உன் வாலை எனக்கு ஒட்டித் தருவதாகக் கூறியிருக்கிறார். தயவு செய்து உன் வாலை எனக்குத் தா. நானும் என் பரம்பரையும் உனக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.''
பசு பதில் கூறவில்லை. தன் வாலைத் தூக்கி முதுகில் உட்கார்ந்திருந்த ஈயின் மேல் ஒரு போடுப் போட்டது.
அவ்வளவுதான். அடிபட்ட ஈ பொத்தென்று சுருண்டு தரையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது.
பிரம்மா கீழே குனிந்து பார்த்தார்.
உனக்கு வேண்டியது இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் நீ வாலைப்பற்றிப் பேசமாட்டாய் என்று தன் மனத்துக்குள் கூறிக் கொண்டார்.
அவர் கை தங்க நிறமான களி மண்ணைப் பிசைந்து கொண்டிருந்தது.
-------------
7. கடற்கரை மலையம்மன்
அவர்கள் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் குடிசை , கட்டுமரக் கொம்பு களைச் சேர்த்துக் கட்டப் பெற்றிருந்தது. வைக் கோலால் கூரை வேயப்பெற்று, மூங்கில் சப்பைகளால் குறுக்குத் தட்டிகள் கட்டப் பெற்றிருந்தது. இந் நாளிலும் அன்னாம் நாட்டுப்புறங்களில் இப்படிப்பட்ட பல குடிசைகளைக் காணலாம்.
அந்தக்குடிசைக்குப் பின்னால் சிறு மரக்காடு சூழ்ந்த ஒரு வெளி நிலம் இருந்தது. அந்த வெளி நிலத்தின் கோடியில் ஒரு சிறிய ஓடை ஓடிக் கொண்டி ருந்தது. அந்த ஓடையில், பருவத்திற் கேற்றபடி நீர் தெளிவாகவோ, கலங்கலாகவோ ஓடிக் கொண்டிருக் கும், அது என்றும் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த படியாலும், காட்டுவண்டல் சேர்ந்தபடியாலும், அந்தக் குன்று வெளிச் செம்மண்தரை முழுவதும் வளமுள்ள பூமியாயிருந்தது. அங்கு தாரோ, யாம், முதலிய கிழங்கு வகைகள் செழிப்பாக வளர்ந்தன.
அவர்கள் வீட்டின் அருகில் இரண்டு மூன்று பண்படுத்தப்பட்ட நெல் வயல்கள் இருந்தன. அவற் றையும் அந்தச் சிற்றோடை வளப்படுத்தியது. இந்த நிலங்களும், ஒரு வாழைத் தோட்டமும், வட்டமான உச்சியையுடைய மாமரம் ஒன்றும், அவர்கள் வளர்த்து வந்த கோழிகளும் வாத்துக்களும், அந்த உழவர் குடும்பத்தினர் வாழ்க்கை நடத்துவதற்கு உதவியாக இருந்தன. அந்த உழவன் அந்தக் காட்டுப் புறத்தில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தன் திறமையால் ஒரு மீன் பிடிக்கும் கூடையைச் செய்தான். அதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏராளமான மீனகளைப் பிடித்து வந்தான்.
இப்படியான எளிய வாழ்க்கையில் எவ்விதமான குறைவுமின்றி அந்த உழவனும் அவன் மனைவியும் பல நாட்களைக் கடத்தி வந்தார்கள்.
அவர்களுக்கு ஒரு மகனும், அவன் பிறந்த இரண் டாண்டு கழித்து ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இரண்டு குழந்தைகளும் இலையுதிர் காலத்திலேயே அந்தக் காலத்தின் பருவம் முழுத்தன்மையோடு விளங்குகிற மையக் கட்டத்திலேயே பிறந்தார்கள்.
காட்டுப் புறத்தின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வந்தார்கள். அவர்கள் சில சமயம் தங்கள் தந்தையுடன் மலையடிவாரத் திற்கோ கடலுக்கோ செல்லுவார்கள். அப்போதெல் லாம் அந்தக் கடல் தங்கள் வாழ்க்கையில் விளை யாடப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது.
அந்தப் பையனுக்கு ஏழு வயதும் பெண்ணுக்கு ஐந்து வயதும் ஆகியது. பிஞ்சுக் குழந்தைகளாயிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தாயாரின் அன்றாட வேலைகளில் உதவி செய்ய ஆவலுடன் முன் வந்தார் கள். பெரும்பாலும் அந்த வெளி நிலத்திற்குச் சென்று காய்ந்த சுப்பிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
ஒருநாள் வழக்கம் போல் அவர்கள் சுப்பல் பொறுக்கச் சென்றார்கள். அன்று அந்தப் பையன் தன் கையில் ஒரு காட்டரிவாளை ஏந்திக்கொண்டு சென்றான். அந்தக் காட்டரிவாளின் கைப்பிடி நீண்ட மூங்கில் மரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவன் தன் எதிரில் தென்பட்ட சிறு மரங்களிலிருந்த கொம்பு குச்சிகளை அந்தக் காட்டரிவாளால் சிவுக் சிவுக் கென்று வெட்டித் தள்ளினான்.
இவ்வாறு குச்சி வெட்டிக் கொண்டிருந்த அவன் அதை நிறுத்திவிட்டுத் தன் தங்கையின் எதிரில் சென்று நின்று போர் வீரன் வாள் வீசுவது போல் தன் அரிவாளை வீசிக் காண்பித்தான். அவன் சுழற்றச் சுழற்ற அந்தக் காட்டரிவாள், மின்னி மின்னிப் பாய்ந்தது.
தரையில் பனி படிந்திருந்து ஈரமாகியிருந்ததால் அவன் கால் வழுவியதோ , கத்தியின் பளுத் தாங்காமல் அவன் கை தளர்ந்ததோ தெரியவில்லை, நாடகங் காட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் பிஞ்சுக் கைகளிலிருந்து அரிவாள் நழுவிப் பறந்தது.
அடுத்த கணம் அந்தச் சிறுமி தலையில் அடிபட்டு , இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தாள். அவள் இறந்து போய் விட்டதாகப் பயந்து விளையாட்டுக்குக் கத்தி வீசிய அந்தச் சிறுவன் காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டான்.
அவன் தங்கைக்குப் பட்ட காயம் பெரியதாயிருந்த போதிலும், உயிருக்குக் கேடு உண்டாகவில்லை. அந்தக் காட்டின் அருகாமையில் வசித்த ஒரு கிழவியின் கண்ணில் அந்தச் சிறுமி தட்டுப்பட்டாள். அந்தக் கிழவி மந்திர வைத்தியம் தெரிந்தவளாகையால் அவள் விரைவில் அந்த வெட்டுக் காயத்தை ஆந்றிவிட்டாள்.
அந்தப்பெண்ணின் பெந்றோர்கள் ஒருநாள் கோ யிலுக்குப் போயிருந்தபோது, அங்கிருந்த பிட்சு ஒரு வரிடம் தங்கள் பெண்ணின் எதிர்காலம் பற்றிச் சோதி டம் கேட்டார்கள். அவருடைய வாக்கு நல்வாக்காக இருந்தது. அத்தோடு அவள் என்றும் புகழுடம் போடு இருப்பாள் என்றும் மலையும் கடலும் உள்ள வரை மக்கள் நினைவில் அவள் இருந்து வரும்படியான பேற்றை அடைவாள் என்றும் அவர் கூறினார்.
அந்தப் பெண்ணின் காயம் குணமடைந்த சமயம் மழை காலம் துவங்கியது. அவள் அடிக்கடி தன் அண் ணனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு அவன் மேல் கோபமேயில்லை. அவன் ஓடி விட்டானே என்று வருத்தமே கொண்டாள். உள்ள படியே அவன் இல்லாமல் வீடு வெறிச்சோடிப்போயிருந்தது. அவன் பெற்றோரும் தங்கள் ஈமப் பிரார்த் தனை செய்ய மகன் இல்லையே என்று வருந்தினார்கள்.
கடல் பக்கத்திலேயே இருந்தது. அவன் தன் விளையாட்டினால் நேர்ந்த வினையை எண்ணி மனம் வருந்தி அந்தக் கடலில் விழுந்து தன் முடிவைத்தேடி கொண்டானா? அல்லது காட்டிடையே வனவிலங்கு களிடம் சிக்கி மடிந்தானா? ஒன்றும் தெரியவில்லை.
நாட்களும் மாதங்களும் ஆண்டுகளுமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்தக் குடும்பத்தினர் ஓடிப்போன தங்கள் மகனைப்பற்றி ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. ஓயாமல் உழைத்துக் கொண் டிருந்த அந்தப் பெற்றோர்கள். தங்கள் மகனை மீண் டும் காண்போம் என்ற நம்பிக்கையின்றியே வாழ்ந்து வந்தார்கள். கடைசியில் தங்கள் பெண்ணுக்குப் பதி னாறு வயதாகும் போது, ஒருவர் பின் ஒருவராகக் கண்ணை மூடி விட்டார்கள். அவர்களுடைய ஈமச் செலவுகளுக்காக அந்தப் பெண் தன் வீட்டை விற்று விட்டாள். பிறகு ஒரு பணக்கார வீட்டில போய் வேலை பார்த்துத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள்.
ஓடிப்போன அவளுடைய அண்ணன் எப்படியோ ஒரு பெரிய துணி வியாபாரியாகி விட்டான். அவன் உயர்தரமான பட்டுத் துணிகள் வாங்கி வந்து வியாபா ரம் செய்வதற்காக பல முறைகள் சீனாவுக்குப் போய் வந்து பெரும் புகழ்பெற்ற வணிகனாகி விட்டான்.
அவன் தன் சொந்த ஊரான கான்ஹோவாப் பக்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு குடித்தனமாக வாழ வேண்டுமென்று விரும்பினான்.
கான்ஹோவாவுக்கு அவன் வந்திருந்த போது, எளிய நிலையிலிருந்த நல்ல குணமுள்ள ஓர் அநாதைப் பெண் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக் கப்பட்டாள். அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். முதலில் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி யாகவே நடந்து வந்தது. மணமாகி ஓராண்டானபின் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், அவர்களுடைய இன்ப வாழ்வு, பாவம் குறுகியதாகிவிட்டது.
ஒரு நாள் மாலையில் அழுது கொண்டிருந்த தன் பிள்ளையைத் தொட்டியிலிட்டுத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டு, அந்தப் பெண் குளிக்கச் சென்றாள். ஒரு பெரிய செப்புப் பாத்திரத்தில், தண்ணீரூற்றி மான்கெட் என்கிற பழத்தின் தோலைப் போட்டு ஊற வைத்திருந்தாள். அந்தத் தண்ணீரில் தலை தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் கருகருவென்று அழகாகவும் இருக்கும்.
அத்தப் பழத்தோல் ஊறிய தண்ணீரைத் தலை யில் ஊற்றித் தேய்ப்பதற்காக, அவள் தன் கூந்தலை அவிழ்த்து விட்டாள். அப்பொழுது அவளுடைய கூந்தலுக்கிடையில் மண்டையோட்டில் ஓரிடத்தில் வெள் ளையான ஓரு கோடு தென்பட்டது. அது ஒரு வெட்டுக் காயம் போலவேயிருந்தது.
இதைக் கவனித்த அவள் கணவன் , அந்த வெட்டுக் காயம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டான். அவள் சொன்னாள். அதைக் கேட்டு அவன் திடுக்கிட் டான். காட்டுக்குக் குச்சிவெட்டச் சென்ற போது, தான் கத்தி வீசியபோது, தலையில் அடிபட்டு வீழ்ந்த தன் தங்கை இறந்துவிட்டதாக அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் இறக்கவில்லை. ஆனால், அவளையே தான் மனைவியாகக் கொண்டு விட்டதை எண்ணி மனங்கலங்கினான்.
அவன் ஒரு கொலைகாரனல்ல என்றால், முறை கெட்டவன் - தன் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுத் தவன் என்றாகிவிட்டது.
விதி செய்த இந்தக் கொடுமையை அவனால் தாங்கமுடியவில்லை. அங்கிருந்து ஓடிவிடுவதென்று முடிவு செய்தான். தன் மனைவியும் மகனும், நன்றாக வாழ்வதற்கு வேண்டிய பொருள் வசதிகளை முதலில் அவன் செய்துவைத்தான். பிறகு பட்டுத் துணி கொள் முதல் செய்ய தூர தேசம் ஒன்றிற்குப் புறப்படுவதாகப் போக்குக் காட்டி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான். அவன் கப்பலேறிச் சென்றதை அந்தக் குன்றின் உச்சியில் ஏறி நின்று அவன் மனைவி கவனித்துக் கொண்டு நின்றாள். அலைகடலுக்கு மேலே , சந்திரனின் பொன்னிறமான கதிர்கள் எழுப்பிய அந்த ஒளித்தகடுளின் ஊடே அந்தக் கப்பல் அடி வானத்தில் மறையும் வரை அவள் பார்த்துக் கொண்டே நின்றாள்.
முன்பின் தெரியாமல் தன்னை மணம்புரிந்து கொண்டு பிரிந்து சென்ற அந்தக் கணவனைப் பற்றி எந்தச் செய்தியும் அவள் அறியாமலே காலம் கழிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தன் குழந்தையுடன் கடற்கரையில் உள்ள மேடு அல்லது பாறையின் உச்சியில் ஏறி நிற்பாள். கடலின் அடி வானத்தை நோக்கி , அங்கு ஏதாவது கப்பல் தோன் றாதா , அதில் தன் கணவன் திரும்பிவர மாட்டானா என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருப்பாள். காலை யில் ஏறினால் , மாலையில் பகலவன் மறைந்த பிறகு தான் அவள் அந்த இடத்தை விட்டு அகலுவாள்.
அவள் தன் குழந்தையைத் தாலாட்டியபடியே மனமுருகி வேண்டிக் கொள்கின்ற கீதம் காற்றில் அலைப்புண்டு கடலலைகளின் மேல் மிதந்து வரும்.
-
ஆராரோ ஆரிரரோ
ஆரரிரோ ஆராரோ!
சீராரும் கண்மணியே என்
செல்வத் திருமகனே!
அன்புடனே நேசித்த
அன்னையையும் பிள்ளையையும்
துன்பமுற்றே ஏங்கவிட்டுத்
தொலை தூரம் போனாரே!
பட்டுத் துணியெடுக்க
பாய்மரத்தில் செல்லுவதாய்
விட்டுப் பிரிந்தாரேன்
வீட்டுக்குத் திரும்பவில்லை?
என்னை மறந்தாரோ?
இல்லை சினந்தாரோ?
உன்னை மறந்தாரோ?
ஊரை மறந்தாரோ?
இளவேனில் காற்றெல்லாம்
என் கண்ணில் நீர் பெருக்கி
உளம் நோகச் செய்கிறதே!
உம் நினைப்பால் வாடுகிறேன்!
கோடையனற் காற்றெல்லாம்
கொண்டுவரும் கண்ணீரீல்
ஆடவரே உம்பிரிவும்
அதிர்ச்சியை யுண்டாக்குதையா!
காலமெல்லாம் காத்திருந்தோம்
கண்மணியும் நானுமிங்கே
மாலையிட்டும் மறந்தீரோ?
மகன் பெற்றும் மறந்தீரோ?
கடைசியில் தேவ தேவனான இறைவனுக்கு அவள் மேல் இரக்கம் பிறந்தது. அவளுடைய பொறு மையை நிலையாக்குவதற்காக அவர் அவளையும் அவள் குழந்தையையும் ஒரு சிலையாக மாற்றிவிட் டார்!
அதுமுதல் அந்த மலைப்பக்கமாக கடல் வழியே வடதிசை நோக்கிச் செல்லும் படகுக்காரர்கள், அவளை ஒரு சிறு தெய்வமாகப் பாவித்து இந்தப் பழம் பாடலைப் பாடி வேண்டுதல் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.
-
ஏலேலோ அயில்சா!
ஏலேலோ அயிலசா
ஏங்கி நிற்கும் மலையம்மா
ஏலேலோ அயிலசா!
எங்கள் நலம் காப்பவளே
ஏலேலோ அயிலசா!
தென்திசையின் காற்றுதனைத்
தேவதையே நீ சொல்லி
உன் கணவன் போன வட
திசைப்புறமே ஓட்டுவிக்க
எங்கள் பாய் மரத்தினிலே
இசைந்தடிக்கச் செய்திடுவாய்
எங்கள் மன வேண்டுதலுக்கு
இசைந்திடுவாய் மலையம்மா!
ஏலேலோ அயிலசா!
ஏலேலோ அயிலசா!
8. சிங்கத்தின் அச்சம்
அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை.
வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. அவற்றைத் தேடிப் பிடிப்பது முடியாது போல் இருந்தது.
பசி தாங்க முடியாமல் சினத்துடன். இரை தேடிச் சென்று கொண்டிருந்தது சிங்கம்.
கடைசியில் திடுதிப்பென்று ஒரு நரி எதிரில் வந்து அகப்பட்டுக் கொண்டது.
சிங்கம் அதன் மீது பாயத் தயாராக இருந்தது.
நரி குள்ள நரி. நல்ல தந்திரமுள்ள நரி. தெரியாத் தனமாக சிங்கத்தின் எதிரில் வந்துவிட்டது. ஆனால் அதன் மூளை உடனே வேலை செய்தது.
சிங்கத்தை ஏமாற்ற முடிவு செய்தது.
'ஏ சிங்கமே! நான் யார் தெரியுமா? நான் இந்தக் காட்டின் அரசன். என்ன துணிச்சல் இருந்தால் என் எதிரில் வருவாய்?'' என்று வலுவான குரலில் கேட்டது.
''ஏ அற்ப நரியே! உனக்கு என்ன பைத்தியமா? இந்தக் காட்டின் அரசன் நான் தான் என்பதை யறிய மாட்டாயா? உன்னை நீயே அரசன் என்று கூறிக் கொள்ளுகிறாயே! உனக்கு அறிவு இருக்கிறதா? என்று சிங்கம் கேட்டது.
''ஏ மூடச்சிங்கமே! நான் சொல்லுவதை நீ நம்ப வில்லையா? சரி என்னோடு வா. இந்தக் காட்டு விலங்குகள் என்னைக் கண்டு பயத்து ஓடுவதை நீயே உன் கண்ணால் பார்க்கலாம் என்றது நரி.
”சரி அதையும் தான் பார்ப்போமோ” என்று கூறிச் சிங்கம் நரியுடன் புறப்பட்டது.
இரண்டும் சேர்ந்து காட்டைச் சுற்றின. சிங்கத் தைக் கண்டு பயந்து எதிர்ப்பட்ட விலங்குகள் ஓடி ஒளிந்தன.
அந்த மூடச் சிங்கம் எல்லா விலங்குகளும் நரியைப் பார்த்துப் பயந்து ஓடுவதாக நினைத்துக் கொண்டது. நரியிடமிருந்து தானும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடி ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டது.
நரி வெற்றி நடை போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றது.
----------------000------------
கருத்துகள்
கருத்துரையிடுக