மெல்லிசைப் பாடல்கள்
கவிதைகள்
Backஅருணா செல்லத்துரையின்
மெல்லிசைப் பாடல்கள்
வானொலி / தொலைக்கட்சியில்
ஒலி, ஒளிபரப்பாகியவை
+++++++++++++++++++++
அருணா செல்லத்துரையின்
மெல்லிசைப் பாடல்கள்
எழுதியவர்:
அருணா செல்லத்துரை
AVA
+++++++++++++++++++++
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்
முதற் பதிப்பு: டிசம்பர் -1994
(c) அருணா செல்லத்துரை
Printed by: Page Setters,
17, Hultsdorp Street, Colombo-12
+++++++++++++++++++++
BIBLIOGRAPHICAL DATA
Title of the book : 'Aruna Sellathurai' yin Mellisai paadalkal
language : Tamil
Written by : Aruna Sellathurai
Copyright of : Author
Published by : AVA
First Edition : December 1994
Number of Pages : 22
Number of Copies : 500
Printed at : Page Setters, Colombo-12
Subject : Light Songs
Price : Rs. 25.00
+++++++++++++++++++++
உடம்பினுள் உதிரமாய்
உள்ளத்துள் உரமாய்
உள்நின்று ஊக்குவுக்கும்
என் தந்தை
கதிரவேலு அருணாசலத்திற்கும்
என் அன்பு அன்னை
அன்னம்மாவிற்கும்
பத்தாம்பளையான
வற்றாப்பளை உறையும்
பெத்தாச்சி
கண்ணகை அம்மனுக்கும்
காணிக்கையாகும் என் படைப்புகள்
அருணா செல்லத்துரை
ஆசிரியரின் ஏனைய பங்களிப்புகள்
1. "வீடு" - தொலைக்காட்சி நாடகமும்/ வானொலி நாடகங்களும்
2. "வேழம்படுத்த வீராங்கனை" - முல்லை மோடிவட்டக்களரி நாட்டுக்கூத்து/ ஒளிப்பேழை
3. "ஒலித்தென்றல்" - மெல்லிசைப்பாடல்கள் ஒலிப்பேழை
+++++++++++++++++++++
முத்தமிழ் முருகன் .....
முருகா... முருகா... முருகா...
முத்தமிழ் முருகனுக்கு மூன்று தலம்
முத்தலம் சென்றுவந்தால் நீங்கும் பயம்.
(முத்தமிழ்)
ஆனைமுகன் தம்பி ஆறுமுகன் - அவன்
ஆணவம் அறுக்க வேலுடன் அமரும்
சன்னதி முருகன் சந்நிதி நின்றால்
சபலம் நீக்குவான் சன்னதியான்.
(முத்தமிழ்)
கூர்வேல்கொண்டு குறைகளை தீர்க்க
குடிகொண்ட வேலவன் நல்லூரில்
குமரனைக் கும்பிட்டுக் குறைகளை சொன்னால்
குறைகளை களைவான் நல்லூரான்.
(முத்தமிழ்)
வள்ளிக்குறமாதின் உளம்நிறைவேலன்
வாழ்ந்து வரும் தலம் கதிர்காமம்
வேதனைதீர்க்க வேலனை வேண்டினால்
வேலுடன் வருவான் கதிர்காமன்.
(முத்தமிழ்)
பாடியவர்: வி. முத்தழகு
இசையமைப்பு: எம். எஸ். செல்வராஜா
வானொலி/தொலைக்காட்சி
8. 11. 80
+++++++++++++++++++++
திருநீற்றுமலை ......
திருநீற்று மலையிருக்கு - கதிர்காமத்தில்
திருநீற்று மலையிருக்கு
திருநீற்று மலையிருக்கு தெரியுமா - அந்த
திருநீற்றின் சுகமுனக்கு புரியுமா - தெரியுமா
(திருநீற்று)
மாணிக்க கங்கையிலே நீராடி
திருமுருகன் கோவிலையே வலம் வந்து
நெற்றியிலே பூசு மலைநீற்றை - திரு
நீற்றினிலே உன்குறைகள் தீரும், தீரும்.
(திருநீற்று)
கங்கையின் அருகினிலே கதிரமலை - அங்கே
வள்ளியின் அருகினிலே வடிவேலன்
நீராடி விடிகாலை மலையேறு - உன்
போராடும் வாழ்வினிலே வரும் பேறு.
(திருநீற்று)
பாடியவர்: எம். சத்தியமூர்த்தி
இசையமைப்பு: ஷெல்ரன் பிரேமரட்ண
வானொலி/ஒலிப்பேழை.
+++++++++++++++++++++
கதிரமலைக்காற்றே .......
கதிரமலைக் காற்றே கந்தனிடம் சொல்லாயோ
வள்ளி வடிவேலன் வள்ளி மணவாளன்
வஞ்சியை மறந்தானோ வஞ்சியை மறந்தானோ
(கதிரைமலைக் காற்றே ...)
மாணிக்க கங்கையிலே காணிக்கையே
உனைக்காண உனைக்காண உனைக்காண
மாவிளக்கேற்றினேன் மங்கையெனக்கருளாயோ
மங்கையெனக்கருளாயோ
(கதிரைமலைக் காற்றே ...)
எத்தனை படிகளய்யா ஏறிவந்தேன்
உனைக்காண உனைக்காண உனைக்காண
அத்தனை படிகளும் கந்தன் புகழ் பாடுதையா
கந்தன் புகழ் பாடுதையா
(கதிரைமலைக் காற்றே ...)
பாடியவர்: ராணி பெர்னாண்டோ
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
தொலைக்காட்சி/ஒலிப்பேழை
+++++++++++++++++++++
திருக்கேதீஸ்வரம் வாருங்கள்
திருக்கேதீஸ்வரம் வாருங்கள் - உங்கள்
தீராத குறைகளை சொல்லுங்கள்
சிவனோடு மனம் விட்டுப் பேசுங்கள்
சீரோடு வாழ்வீர்கள் நம்புங்கள்.
(திருக்கேதீஸ்வரம்)
சிவனுக்கு ராத்திரி விழியுங்கள்
சீரான வாழ்வுதர வேண்டுங்கள்
சிவலிங்க தரிசனம் காணுங்கள்
சிந்தை கலங்கித் தெளியுங்கள்
(திருக்கேதீஸ்வரம்)
பாலாவி நீராடிப் பாடுங்கள்
பாவங்கள் பறந்தோடும் பாருங்கள்
கௌரிக்கு மலர் கொண்டு தூவுங்கள்
மாங்கல்யப் பிச்சை தரக் கேளுங்கள்
(திருக்கேதீஸ்வரம்)
இசையமைத்துப் பாடியவர்: எஸ். சிவானந்தராஜா
வானொலி
+++++++++++++++++++++
பத்தாம்பளை வற்றாப்பளை .......
கற்பூரம் எரியும் கண்குடத்துள்ளே
கண்கள் ஆயிரம் ஒளிவிடக் கண்டேன்
கண்ணகை அம்மன் கருணையினாலே
நோய்நொடி நீங்கி வாழவும் கண்டேன்.
(கற்பூரம்)
செடில் குத்தி நெடில் பிடித்து
ஆடிய காவடி மாதம் பணிந்தது
வேப்பிலையாளை வேண்டிய பெண்கள்
பால்செம்பு ஏந்திப்பாடவும் கண்டேன்
(கற்பூரம்)
உப்பு நீரில் விளக்கெரித்து
ஊர் முழுதும் திரண்டிருந்து
பத்தாம் பளையான வற்றாப்பளையினிலே
பறையோடு பொங்கல் பொங்கவும் கண்டேன்.
(கற்பூரம்)
+++++++++++++++++++++
மயூராபதி அம்மன் பெருமை
மயூராபதிக்கு வந்திட்டால்
மனதுக்கு நிம்மதி கிடைத்திடுமே
பத்திரகாளியை பணிந்திட்டால் - அவள்
பாவங்கள் நீக்கி அருள்புரிவாள்.
(மயூரா)
அம்மன் அருளின் வடிவம்மா
அவளுக்கு நாம்தான் அடிமையம்மா
இவளின் பெருமைக்கு நிகரில்லை
இதுதான் கருணையின் கண்களம்மா
(மயூரா)
கண்களின் கருணையைப் பெற்றிட
காலையும் மாலையும் பக்தர்குழாம்
காட்சியைக் கண்டிட வேண்டிடுவார்
கண்டதும் கண்ணீர் சொரிந்திடுவார்
(மயூரா)
+++++++++++++++++++++
தந்தைக்கு வேதம் சொன்னவர்
முருகா ... முருகா ... முருகா ...
எனக்கொரு ஆசை உன்புகழ் பாட
ஏழு சுரங்களுள் உன் இசைபாட - முருகா
(எனக்கொரு)
தமிழுக்கு மூதவை ஔவை - நீ
அவளுக்கு சொன்னவை கவிதை
தந்தைக்கு வேதன் சொன்னதை
தரணிக்கு பாடிட என் ஆசை.
(எனக்கொரு)
அருணகிரி சொன்னதமிழ் அமுதம்
அமுத தமிழுக்கு நான் சரணம்
திருப்புகள் எனும் திருவமுதம்
சொல்லும் ஓம் எனும் அருளமுதம்.
(எனக்கொரு)
+++++++++++++++++++++
ஆடிடுவோம் ஊஞ்சல்
தெந்தனத் தெனா தெனா தெந்தனானே
தெனனா தெந்தனா தெந்தனானே
(தெந்)
அளவான கயிறாலே அழகான ஊஞ்சல்கட்டி
அனைமுகக்கடவுளையும் அருள்புரிய வேண்டி
ஆறுமுகக் கந்தனையும் அன்புடனே நினைந்து
ஆடிடுவோம் ஊஞ்சல் ஆனந்தமாக
(அளவான)
கோணமாமலை வாழும் கோணேசர் பெருமான்
மன்னாரம் பதியுறையும் கேதீஸ்வரத்தான்
முத்தாடுகரைபதியும் முன்னேஸ் வரத்தானே
முன்னின்று காக்க ஈஸ்வரனே வருவாய்
(அளவான)
கதிர்காமம் தனில் வாழும் கந்தக்கடவுளே
கதிரான சன்னதிவாழ் மயிலேறுமுருகா
நல்லையம் பதியுறை நல்முருகா வருவாய்
நல்வாழ்வு தன்னை வேண்டி ஆடுகின்றோம்
(அளவான)
தெந்தனத் தெனா தெனா தெந்தனானே
தெனனா தெந்தனா தெந்தனானே
+++++++++++++++++++++
முத்துத்தமிழ்
எட்டி எட்டி அடிவைக்கும் என் செல்வமகளே - உன்
சுட்டித்தனமெல்லாம் என்ன மகளே
கட்டிக் கரும்பான முத்துத் தமிழாலே
எத்தனை சொல்வேன் எத்தனை சொல்வேன்
(எட்டி எட்டி ....)
ஓர் அடி தன்னில் தமிழ் மகள் சொன்ன
ஓர் நெறி இங்கு கொள்ள வா
ஈர் அடி தன்னில் வள்ளுவன் தந்த
குறள் வழி இங்கு வாழ வா
மூவடி தன்னில் மூவுலகளந்த
மூத்தவன் கதை மெள்ளவா
நாலடி தன்னில் நாலடி தந்த
நல்லெண்ணம் அதைக் கொள்ள வா
(எட்டி எட்டி ....)
பஞ்சவடி தன்னில் ஜானகி நடந்த
அந்தக் கதை இங்கு சொல்ல வா
ஆறடி கூந்தல் அள்ளி முடிந்த
ஆனந்தக் கதை மெல்ல வா
ஏழடி பிறப்பு என்றவன் சொன்ன
கீதை வழி வாழ வா
எட்டடி லக்ஷ்மி இன்பத் தமிழ்போல்
என்றென்றும் நீ வாழ வா
(எட்டி எட்டி ....)
இசையமைப்பு : எம்.எஸ். செல்வராஜா
பாடியவர் : இரா. நீதிராஜசர்மா / சத்தியமூர்த்தி
தொலைக்காட்சி: ஒலிப்பேழை / வானொலி
+++++++++++++++++++++
தம்பிதங்கையே பாதம்பணிவோம்
அன்புத்தம்பி அன்புத்தங்கை
ஆடிப்பாடி விளையாடுங்கள்
அன்னை தந்தை தெய்வமென்று
சொல்லிப் பாடுங்கள்
அன்புத்தம்பி.....
பாலூட்டி தாலாட்டி வளர்த்தாள் உன் அன்னை
பாராட்டி சீராட்டி வளர்த்தார் உன் தந்தை
பாராள வந்தீர் ஏராளம் உண்டு
அன்போடு வாழ்வோம் பண்போடு உயர்வோம்
பாதம் பணிவோம் பாதம் பணிவோம்
அன்புத்தம்பி.....
எண்ணோடு எழுத்தூட்டி பண்பாட வைத்தார்
எழுத்தாணிதான் பிடித்து அறிவூட்டி நின்றார்
எண்ணோடு எழுத்தும் கண்ணே ஆகும்
ஈரேழு பிறப்பும் இறைவன் ஆவான்
பாதம் பணிவோம் பாதம் பணிவோம்
அன்புத்தம்பி.....
பாடியவர்: ஜே. எம். சகாயம் பெர்னாண்டோ
இசையமைப்பு: எம்.எஸ்.செல்வராஜா
தொலைக்காட்சி
+++++++++++++++++++++
வாழ்வின் தத்துவம்
ஒன்று இரண்டு மூன்று
நாலு ஐந்து ஆறு
ஏழு எட்டு ஒன்பது
ஒன்பதும் ஒன்றும் பத்து
(ஒன்று .....)
ஒன்றும் இரண்டும் மூன்று
இரண்டும் மூன்றும் ஐந்து
மூன்றும் நாலும் ஏழு
நாலும் ஆறும் பத்து
பத்தும் வந்திடும் வாழ்வினிலே
(ஒன்று .....)
பத்தில் ஐந்து போனால் ஐந்து
ஐந்தில் மூன்று போனால் இரண்டு
இரண்டில் ஒன்று போனால் ஒன்று
ஒன்றில் ஒன்று போனால் பூஜ்யம்
இதுதான் வாழ்வின் தத்துவம்
(ஒன்று .....)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: நிலாமதி பிச்சையப்பா
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
வெள்ளி நிலாவே .......
வானில் உலாவரும் வெள்ளி நிலாவே
தண்ணொளி தந்திடும் பிள்ளை நிலாவே
(வானில்)
கவிஞர்கள் கண்டால் தேவதை ஆவாய்
கானத்தில் எல்லாம் சுரங்களுமானாய்
காவியம் பாடிடும் வேதருக்கெல்லாம்
காதலியாகி பாரினில் நின்றாய்
(வானில்)
சிவனவன் தலையில் சூடிடும் நிலாவே
சிந்திடும் தென்றலில் குளிர்தருநிலாவே
பாரினில் வாழும் பெண்களுக்கெல்லாம்
உவமையில் நின்று பொருள்தருநிலாவே
(வானில்)
+++++++++++++++++++++
வசந்தம் வந்ததே ......
இளவேனில் கால மேகம்
வானில் வரையும் கோலங்கள்
ஊர்வலம் போகும் மேகங்கள் யாவும்
இசையினில் சேரும் ஸ்வரங்கள் பாடும்
எந்தன் இசையும் சேர்ந்தே ஒலிக்கும்
(இளவேனில்.....)
தூறல் போடும் வானம்
தென்றல் பாடும் கானம்
வானில் போகும் மின்னலே
வந்து போகும் வானவில்
வசந்தம் வந்தே இதமும் சேர்க்கும்
(இளவேனில்.....)
புல்லின் நுனியில் பனியும்
புணர்ந்து பசுமை சேர்க்கும்
மழையில் நனையும் மண்மகள்
முல்லைபோல மணக்கின்றாள்
வசந்தம் வந்தே இதமும் சேர்க்கும்
(இளவேனில்.....)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: தங்கராஜா தங்கரத்தினம்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
நாளெல்லாம் இசைபாடும் மலைமகள்
சலசலக்கும் ஓசையினிலே
சங்கீத சுரங்கள் பிறக்குது
சந்தங்கள் இனிமை சேர்க்குது
சரி.. கம.. பத.. நிசநி.. தநிப.. மதம.. கமத..
இளந்தென்றல் காற்று இவையோடு மோதி
இதமான சுதி சேர்க்கும்
(சல சலக்கும்.....)
மலையினில் பிறந்த மகள் அலையோடு சேர்வத்யற்கு
கல்யாணப் பெண்போலே கரையோடு உரசி இவள்
பாய்ந்தோடிச் செல்லுகின்றாள் பாய்ந்தோடிச் செல்லுகின்றாள்
பசுஞ்சோலையெங்கும் பாராமல் அன்பை பொழிகிறாள் - மலைமகள்
(சல சலக்கும்.....)
அழகிய அருவியக்கா அசைந்தாடும் ஓசையினிலே
நாலும் தெரிந்துவிடும் நாணம் எனைவாட்டும்
நாளெல்லாம் இசைபாடும் நாளெல்லாம் இசைபாடும்
வயலெங்கும் வசந்தம் தந்தாலே இன்பம் தருகிறாள் - மலைமகள்
(சல சலக்கும்.....)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: டவீனா சிறீனிவாசன்
தொலைக்காட்சி
+++++++++++++++++++++
குளிராதோ மழை வந்தால் .....
மழைவா வெயில்போ மழைவா வெயில்போ
மழைவா வெயில்போ மழைவா வெயில்போ
படகினிலே போனமச்சான் பாய்விரிக்க மழைவா
படகினிலே போனமச்சான் பாய்விரிக்க மழைவா
(மழைவா.....)
கடலுக்குப் போன மச்சான்
கடும் மழைக்கு வந்திடுவார்
கொந்தளிக்கும் என்னுள்ளம்
குளிராதோ மழை வந்தால்
(மழைவா.....)
பொழுது மேலே கிளம்பி
பூமி இந்த சூடு சுட்டால்
கடலினிலே வலை வீசும்
கைகள் என்ன பாடுபடும்
(மழைவா.....)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: ராணி ஜோசப்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
என் நினைவுகள் பறந்தோடுது
குழை மறைவினிலே சில பறவைகள்
சிற கோதுது
குழல் நடுவிலே கோதிய விரல்களை
மனம் தேடுது
(குழை)
வயல் நடுவிலே அளை நீரிலே
கயல் ஓடுது
இதழ் நடுவிலே ஊறிய தேனிலே
சுவை போகுது
(குழை)
குளிர் நிலவிலே பலநினைவுகள்
அலை மோதுது
அவர் நினைவிலே என் நினைவுகள்
பறந்தோடுது
(குழை)
இசையமைப்பு : மோகன் - ரங்கன்
பாடியவர்: ஜெயதேவி விக்னேஸ்வரன்
வானொலி
+++++++++++++++++++++
வாட்டும் மனசே நீ வாய்திறந்து சொல்லாயோ
ஆட்காட்டி கத்துகுது ஆளரவம் கேட்டு
காட்டுக்குறைக்கு விடிவெள்ளி வருகுது
வீட்டுக் கதவுக்கு வெளியிலை பூட்டு
பூட்டிய கதவு வாட்டுது என் மனசை
(ஆட்காட்டி.....)
சாளரத்தின் ஊடே வந்து விழும் வான் நிலவே
ஆரணங்கு வாடுவதை சொல்லாயோ போய் நீயும்
ஆளரவம் கேட்டு ஆட்காட்டி கத்துகுது
ஆதாரம் ஏதுமின்றி ஆரணங்கு ஏங்குதே
(ஆட்காட்டி.....)
பெத்தபிள்ளை வாடுவதை பெற்றோர் அறியாரா
அத்தசாமப் பூசைகள் அவர்களறியாரா
பூட்ட மறந்து விட்டார் பூவை என் மனசை
வாட்டும் மனசே நீ வாய்திறந்து சொல்லாயோ
(ஆட்காட்டி.....)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: ராணி ஜோசப்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
அழியாத நினைவினிக்கும் ......
இந்த பனிக்கும் இனிவாற கூதலுக்கும்
அந்தப் பனிக்கும் அழியாத நினைவினிக்கும்
சொல்லத் தெரியாது சொல்லிப் புரியாது
சொந்தம் பழிக்கும் அதுவும் இனிக்கும்
(இந்தப் பனி)
கண்கள் வெளுக்கும் கருமை ஓடும்
கைகள் நடுங்கும் வளையல் களரும்
வளையல் நொருங்க நடந்த கதைகள்
மூடா இமைக்கும் சொல்லத் தெரியா
(இந்தப் பனி)
நடுங்கும் உடலும் இரவில் விழிக்கும்
நெஞ்சம் துடித்து நினைவில் பறக்கும்
அஞ்சும் விழிக்கு மிஞ்சும் உறக்கம்
வஞ்சம் தெரியா உதடும் துடிக்கும்
(இந்தப் பனி)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: கே. கமலெஸ்வரி
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
குழல் போர்த்த என்நினைவு ........
முகில் போர்த்த வெண்ணிலவு வானில் வருகுது
குழல் போர்த்த என் நிலவு நினைவில் வருகுது
(முகில்)
நிலவு வந்து நினைவு தந்து மறைந்து போகுது
நினைவு தந்த நனவுகளை எண்ணி வாடுது
வசந்த காலம் வந்ததென தூறல் போடுது
வந்த தூக்கம் என்னைவிட்டு பறந்து ஓடுது
(முகில்)
முழுநிலவில் விண்மீன்கள் துள்ளி ஆடுது
இருகண்கள் இமை மூட மறந்து பாடுது
முகில் போர்த்த நிலவே நீ தூது சென்றிடு
குழல் போர்த்த நிலவே நீ கோபம் மறந்திடு
(முகில்)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்: எஸ்.வி.ஆர். கணபதிப்பிள்ளை
வானொலி
+++++++++++++++++++++
எல்லோரும் சமமாக வாழ்ந்துடவே .....
தெந்தன தெனா தெனதெனா தெந்தனானே
தெந்தனா தெந்தனா தெந்தனா தெந்தனானே
நல் வாழ்வு நாம் வாழ நல்லருள் வேண்டும்
நல்லருள் வேண்டியே நாம் பாட வேண்டும்
(தெந்தன .....)
வரப்புயர நெல் மணிகள் குவிந்திடவே வேண்டும்
வழமுடனே வாழ்வில் உயர்ந்திடவே வேண்டும்
(தெந்தன .....)
பாடுபடும் தொழிலாளி உயர்ந்திடவே வேண்டும்
பண்புடனே பார் போற்ற வாழ்ந்திடவும் வேண்டும்
(தெந்தன .....)
எல்லோரும் சமமாக வாழ்ந்திடவே வேண்டும்
நாடுயர நாம் தினமும் பாடுபட வேண்டும்
(தெந்தன .....)
இசையமைப்பு: எம்.எஸ். செல்வராஜா
பாடியவர்கள்: எஸ். கணேஸ்வரன், கே. விஜயரத்தினம்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
சொன்னதை கிளி சொல்லும்
சொன்னதை கிளி சொல்லும்
சொல்லாததை கிளி சொல்லாது
சொன்னதை உலகம் சொல்லாது
சொன்னதை உலகம் சொல்லும்
(சொன்னதை)
நல்லதை மானிடர் செய்வார்
செய்ததை மனிதர் சொல்லார்
நல்லதை செய்தவர் வாழ்வார்
செய்ததை சொல்லாதவர் மாள்வார்
(சொன்னதை)
நல்லதும் தீயதும் நமக்குள் ஆயிரம்
ஆயிரம் இருந்தும் ஆனது செய்யார்
பாரினில் இருந்து நமக்கென்னலாபம்
மானிடராவது நம் உயர்கடமை
(சொன்னதை)
+++++++++++++++++++++
அமைதிக்குத் தூது விடுவோமே .....
விண்ணில் மனிதன் பறக்கின்றான்
விந்தை பலவும் புரிகின்றான்
பறக்கத் தெரிந்த மனிதனுக்கு
இறப்பைத் தடுக்கத் தெரியவில்லை
(விண்ணில்)
செய்மதி விதம் விதம் செய்துள்ளான்
தன் மதி இழந்து தவிக்கின்றான்
உயிரை அணுவினால் அழிக்கின்றான்
உயிரூட்ட முடியாமல் நிற்கின்றான்
(விண்ணில்)
விஞ்ஞானம் வளருது மேற்கினிலே
அஞ்ஞானம் போவது அழிவினிலே
அமைதிக்குத் தூது விடுவோமா
ஆண்டவன் பாதம் பணிவோமே
(விண்ணில்)
இசையமைப்பு: எம். எஸ், செல்வராஜா
பாடியவர்: எஸ். குலசேகரம்
தொலைக்காட்சி / ஒலிப்பேழை
+++++++++++++++++++++
1970 தொடக்கம் பல நூற்றுக்கணக்கான பாடல்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிப்பதிவு செய்ததின் மூலமும்,
1976ல் உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் அரங்கேற்றம் நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திறாக தயாரித்து ஒலிபரப்பியமையாலும்,
தொலைக்காட்சியில் "உதயகீதம்" மெல்லிசைக் கலைஞர் அறிமுக நிகழ்ச்சியை தொகுத்தளித்ததின் பலனாகவும்,
ரூபாவாஹினியில் "ஒளித்தென்றல்" நிகழ்ச்சி மூலம் 56 மெல்லிசைப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியாகத் தயாரித்து நெறியாள்கை செய்ததின் பலனாகவும்,
ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடே இந்த மெல்லிசைப் பாடல்களாகும்
இத்தொகுப்பில் உள்ள மெல்லிசைப் பாடல்கள் அனைத்தும் வானொலி, தொலைக்காட்சி போன்ற தொடர்புச்சாதனங்களின் மூலம் இசை வடிவமாக்குவதற்கு எழுதப்பட்டவையாகும்.
***
கருத்துகள்
கருத்துரையிடுக