கெடிலக்கரை நாகரிகம்
வரலாறு
Backகெடிலக்கரை நாகரிகம் பேராசிரியர்
புலவர் சுந்தர சண்முகனார்
மெய்யப்பன்
தமிழாய்வகம்
53, புதுத்தெரு, சிதம்பரம் - 608001
முதல் பதிப்பு : டிசம்பர், 2001
திருவள்ளுவர் ஆண்டு: 2032
உரிமை : ஆசிரியர்க்கு
விலை : ரூ. 135.00
மெய்யப்பன் தமிழாய்வக வெளியீட்டு எண்: 52
பதிப்பாசிரியர்
முனைவர் ச. மெய்யப்பன்
டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.
தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர். பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.
பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.
தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள் பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர்.
'வள்ளுவம்' இதழின் சிறப்பாசிரியர்.
பத்து நூல்களின் ஆசிரியர்.
இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.
கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
9, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை - 600 017.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்துர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
தி. நகர் : 4357832
மதுரை : 622853
கோயமுத்தூர் : 397155
திருச்சி : 706450
* * *
அச்சிட்டோர் சக்தி பிராசஸ், சென்னை - 81. 5956006, 5950331
சுந்தர சண்முகனார்
1922 – 1997
கெடில நதி நாகரிகம்
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்
உலகின் சிறந்த நாகரிகங்கள் ஆற்றோரங்களிலே தோன்றியுள்ளன. ஆற்றின் வெள்ளப்பெருக்கு நிலத்தை வளப்படுத்துவதோடு மனிதகுல நாகரிகத்தையும் வளப்படுத்தியுள்ளது. ஆற்றோரம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும் மருதநிலமாகும். மருத நிலத்து மக்கள் நிலம் திருத்தி, பயிர் வளர்ப்பதோடு பண்பாட்டையும் வளர்த்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை.
அறிஞர் அண்ணா அவர்கள் 'ஆற்றோரம்' எனும் தலைப்பில் நாகரிக வளர்ச்சி பற்றி ஒரு பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை 'ஆற்றங்கரையில்' எனும் நூலில் தமிழ் நாகரிகம் வளர்ந்து செழித்த கதையை வரைந்துள்ளார்.
நைல் நதி நாகரிகம், தேம்ஸ் நதி நாகரிகம் என அயல் நாடுகளில் நாகரிகம் ஆற்றோடு இணைத்துப் பேசப்படுகின்றது. இந்தியாவின் வடபகுதி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம், கங்கைச் சமவெளி நாகரிகம் என ஆற்றின் பேரால் அழைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் திருநெல்வேலியும், வைகைக் கரையில் மதுரையும், காவிரிக் கரையில் உறையூர், திருச்சி, திருவரங்கம் ஆகியனவும் பாலாற்றங்கரையில் காஞ்சியும் ஆறுகள் வளர்த்த பண்ணைகளாகச் செழித்துள்ளன. இந்நகரங்களின் தோற்றமும், எழுச்சியும், வளர்ச்சியும் ஆறுகளின் கொடையே. கெடில நதி வளர்த்த நாகரிகத்தைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. ஆற்றின் தொடக்கம் முதல் அது கடலில் கலக்கும் வரை, பாய்ந்து வந்த பகுதிகளில் உள்ள ஊரும், நகரும், நாடும் பற்றிய செய்திகள் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நிலயியலும், மக்கள் இயல்பும், வரலாற்றுச் செய்திகளும் வகுத்தும் தொகுத்தும் வரையப்பட்டுள்ளன. இன்றைய விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கெடில ஆறு வளர்த்த நதி நாகரிகம் பற்றி, மிகச் சிறந்ததொரு ஆவணமாக இவ்வாய்வு நூல் திகழ்கிறது.
ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஆற்றோரத்தில் பயணம் செய்து அரிய செய்திகளைத் திரட்டித் தந்துள்ளார். ஆசிரியர், வரலாற்று அறிஞர், சமூகவியல் ஆய்வாளர் ஆதலால் தமிழ்ச் சமூகத்தின் நாகரிக, பண்பாட்டுக் கூறுகளைத் திட்ப நுட்பத்துடன் விளக்குகிறார். நுண்ணறிவும், நூலறிவும் மிக்க ஆசிரியர் தாம் நேரில் சென்று பார்த்த செய்திகளையும் வழிவழியாக வழங்கிவரும் செவிவழிச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். ஊர்களின் பேர்களை மட்டுமே கூறாமல், அந்த ஊர்கள் வளர்ந்த கதைகளையும் கதைகதையாய்ச் சொல்லுகிறார். நகரங்களின் பெயர்ப் பட்டியலாக இல்லாமல் நகரங்கள் வளர்த்த நாகரிகங்களையும் அடையாளம் காட்டுகிறார்.
நூலாசிரியர் பன்னூல் பயிற்சி மிக்கவர். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர். அரிய ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை எழுதிப் பேரும் புகழும், பரிசும் பெற்றவர்.
மிகச் செவ்விய திட்டத்துடன் ஆற்றோரத்தில் நீண்ட நெடிய பயணம் செய்து, பல ஆண்டுகள் உழைத்து, கெடில நதி நாகரிகத்தின் தனிச்சிறப்புக்களைத் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
ஆசிரியர் படைத்த ஒவ்வொரு நூலும் வளர்தமிழுக்கு வளம் சேர்க்கும் அரிய ஆய்வு நூலாக அமைந்துள்ளதை அறிஞர் உலகம் தொடர்ந்து போற்றி வருகிறது.
ஆசிரியர் சுந்தர சண்முகனார் 'தமிழ்ப் புதுவை'க்குப் புகழ் சேர்க்கும் புலவர்; அறிஞர் போற்றும் அறிஞர். தமது நூல்களால் காலத்தை வென்று வாழும் பேராசிரியர். ஆராய்ச்சி மதுகையால் இறவாப்புகழ் பெற்ற ஏந்தல்.
இது ஒரு ஆற்றின் கதையல்ல. ஒரு சமூகத்தின் கதை, ஒரு இனத்தின் கதை, ஒரு நாகரிகத்தின் கதை. ஆற்றங்கரை நாகரிகத்தை அறிவோம், ஆராய்வோம். வளர்வோம்.
முன்னுரை
கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பழகிய யான், கெடிலக்கரை நாடு பற்றிப் பல்லாண்டுகள் நேரில் பார்த்துப் பட்டறிந்த செய்திகளையும் நூல்களில் படித்தறிந்த செய்திகளையும் தக்கார்வாய்க் கேட்டறிந்த செய்திகளையும் திரட்டி, தேவையான இடங்களில் எனக்குத் தோன்றிய சில ஆராய்ச்சி முடிபுகளையும் இணைத்து, ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் பெயரில் ஒரு பெரிய, புதிய ஆராய்ச்சித் தொகுப்பு நூல் வடிவில் தருகிறேன். உலகில் எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் முதலியனவாக எத்தனையோ வகை நாகரிகங்கள் பேசப்படுகின்றன. அவையெல்லாம் பழங்காலத்தில் இருந்து மறைந்துபோனவை. அவற்றினும் வேறுபட்டது கெடிலக்கரை நாகரிகம்.
கெடிலக்கரை நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை நாகரிகம் படிப்படியாய் வளர்ந்து முதிர்ந்து நின்று நிலைத்து நிறைவு பெற்றுள்ளநிலை இந்நூலில் பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. ‘கெடிலக்கரை நாகரிகம்’ இன்னது என்னும் செய்தி இந்நூலின் இறுதிப் பகுதியில் முடிவுரையாய்த் தரப்பட்டிருப்பினும், இந்நூல் முழுவதிலும் உள்ள செய்திகள் கெடிலக்கரை நாகரிகத்தின் விளக்கங்களேயாம். கெடிலக்கரை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிந்து கொண்டாலே, ‘கெடிலக்கரை நாகரிகம் இத்தகையது’ என்ற முடிவு தானே கிடைத்து விடுமன்றோ?
இந் நூலில், கெடிலக்கரை நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள உதவும் தொல்பொருள்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள். கலைகள், பழக்க வழக்கப் பண்பாடுகள், வரலாற்றுக் குறிப்புகள் முதலிய உறுதுணைகள் போதிய அளவு எடுத்துக்காட்டி விளக்கப் பெற்றுள்ளன. இவற்றின் தொகுப்பே இந்நூல் எனவும் கூறலாம். வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலந்தொட்டு இன்றுவரையிலும் நிகழ்ந்த பல்வேறு செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
எகிப்திய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் போன்ற நாகரிகங்களைப் பற்றிக் கேட்டும் படித்தும் பழகியவர்கள், கெடிலக்கரை நாகரிகம் என்றதும். ‘இந்த நாகரிகம் எங்கே, எப்போது, யாரால் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது?’ என வினவக்கூடும். மண்ணுக்குள் புதையுண்டு மறைந்துபோன நாகரிகங்களை யல்லவா அகழ்ந்து காணவேண்டும்?
நாகரிகம் என்ற சொல்லுக்கு ‘மறைந்து போனது’ அல்லது ‘அகழ்ந்து கண்டுபிடிக்க வேண்டியது’ என்பதாக எந்த அகராதியிலும் பொருள் இல்லையே. மேலும், எல்லா நாகரிகங்களுமே மண்ணுக்குள் புதைந்து மறைந்து அகழ்ந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இல்லையே! பழைய நாகரிகங்கள் பல மறையாமல், மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்றே கெடிலக்கரை நாகரிகம்.
மண்ணுள் மறைந்துபோன இடங்களின் நாகரிகங்களை வெளிப்படுத்தி உலகிற்கு விளம்பரப்படுத்துவது போலவே, மண்ணுள் மறையாது வளர்ச்சி பெற்றிருந்தும், பல்வேறு சூழ்நிலைகளால் வெளியுலகிற்குத் தெரியாதபடி மறைந்திருக்கும் இடங்களின் நாகரிகங்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டுவது இன்றியமையாக் கடனாகும். அவ்வாறு உலகினர்க்கு அறிமுகம் செய்தற்கு உரிய நாகரிகங்களுள் கெடிலக்கரை நாகரிகமும் ஒன்று.
உலகினர் ஒருபுறம் இருக்க, இந்தியர்களும்-குறிப்பாகத் தமிழருள் பலரும் இன்னும் கெடிலக்கரை பற்றி அறியாதவராயுள்ளனர். இந்த நூல், சிறப்பாகக் கெடிலக்கரை நாகரிகத்தைத் தமிழர் அனைவர்க்கும் அறிவிப்பதோடு இதன் வாயிலாக, பொதுவாகத் தமிழர் நாகரிகத்தை இந்தியர்க்கும் உலகினர்க்கும் அறிவிக்க முயல்கிறது. கெடிலக்கரை நாகரிகம் பொதுவாகத் தமிழர் நாகரிகத்திற்கு மையமாய் உள்ளது எனலாம்.
வெளியுலகத்தைப் பற்றி அறிய விரும்பும் தமிழ் மக்கள், தங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்நூலும் துணைபுரியும்.
நாம் பிற நாடுகளைப் பற்றி நம் மொழியில் நூல் எழுதுவது போலவே, பிற நாட்டினரும் நம் நாட்டைப் பற்றித் தம் மொழிகளில் நூல் எழுதுகின்றனர். இத்தகைய நூல்களை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் காணலாம். நம் நாட்டைப்பற்றிப் பிரெஞ்சு மொழியில் எழுதப்பெற்றுள்ள மிகப் பெரிய ஒரு நூலின் மேலட்டையில், ‘இந்நூல் 28 படங்களுடன் கூடியது’ என்னும் அறிவிப்பை அண்மையில் கண்டு வியப்புற்றேன். அதனினும் சிறியதான இந்நூலில் ஐம்பத்தொரு (51) விளக்கப் படங்கள் சேர்த்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலானவற்றைக் கெடிலக்கரைப் பகுதிகட்கு நானே நண்பர்களுடன் நேரிற் சென்று பார்த்து எடுத்து வந்தேன். ஒன்பது படங்கள் மட்டும் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டு நிறுவனத்தால் அளிக்கப் பெற்றவை: அப்படங்களின் கீழே உதவி குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிக்காக அந் நிறுவனத்திற்கு நான் மிக்க நன்றி செலுத்துகிறேன்.
படம் எடுப்பதற்காகக் கெடிலக்கரைப் பகுதிகட்குச் சென்று வந்த நாள்கள் மகிழ்ச்சியான நாள்கள் - மறக்க முடியாத நாள்கள். சேந்தமங்கலம் கோயில்-கோட்டை போன்ற சில இடங்களை விட்டுப் பிரிந்து வர மனமே வரவில்லை. கெடிலக்கரையில் பார்த்தற்குரிய பகுதிகள் பல உள. நேரில் செல்லாதவர்கள் இந்நூல் வாயிலாகவாவது அறிந்து மகிழலாம்.
தமிழ் நூல்கள் பலவற்றை நோக்க இந்நூல் ஓரளவு பெரியதாகவே வளர்ந்துவிட்டது. ஆனால், ஐரோப்பிய மொழி நூல்கள் பலவற்றை நோக்க இந்நூல் சிறியதே. தரத்துடன் அளவாலும் பெரியனவாயுள்ள நூல்களையே மேலைநாட்டினர் மதிப்பர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். மிகச் சிறியதை ஒரு நூலாக அவர்கள் மதிப்பதில்லையாம். அதற்கேற்பவே, பிரெஞ்சு மொழி நூல்கள் மிகப் பெரியனவாயிருப்பதைக் காண்கிறேன். இந் நிலைமை, மேலைநாட்டினரின் படிக்கும் ஆர்வத்தையும் ஆற்றலையும் அறிவிக்கிறது. நம்மவர் பலர் இவ்வளவு பெரிய நூல்களைக் கண்டதும் வேர்த்து விறுவிறுத்துப் பெருமூச் செறிகின்றனர். இது நம்மவர்க்குப் படிக்கும் ஆர்வமும் ஆற்றலும் மிகவும் குறைவு என்பதை அறிவிக்கிறது. இந்த இரங்கத்தக்க எளியநிலை இனி மாறவேண்டும்.
வழக்குச் சொற்களையும்ம கலந்து ஓரளவு எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். குறிப்பிட்ட ஒரு கொள்கையை வற்புறுத்துவதற்காகவும் தெளிவுபடுத்துவதற்காகவும். சில விடங்களில், முன்பு தெரிவித்த கருத்தையே மீண்டும் தெரிவித்திருக்கிறேன். உரிய இடங்களில் தக்க முறையில் படவிளக்கமும் செய்துள்ளேன். இந்நூல் இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பெற்றால், ‘கெடிலக்கரை நாகரிகம் என்னும் சிறப்புப் பெயர் வாயிலாக, பொதுவாகத் ‘தமிழர் நாகரிகம்’ வெளியுலகிற்கு விளக்கமாகும்.
யான் சென்ற விடங்களிலெல்லாம் கருத்துகள் வழங்கிய அன்பர்கட்கும், படங்கள் எடுத்து உருவாக்க உதவிய நண்பர்கட்கும். இதனை நன்முறையில் வெளியிட்டுள்ள மெய்யப்பன் தமிழாய்வகத்திற்கும் நன்றி செலுத்துகிறேன்.
அரிய ஆய்வு நூல்கள் வெளியிடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சிறந்த நூல்களை வெளிக்கொணரும் பேராசிரியர் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்.
சுந்தர சண்முகன்
தென்னார்க்காடு மாவட்டம்
கெடிலக் கரை
உள்ளுறை
1. ஆறும் நாகரிகமும்
2. ஆறுகளின் தோற்றமும் நீளமும்
3. கெடிலத்தின் தோற்றம்
4. கெடிலத்தின் பயணமும் துணைகளும்
5. வரலாறு கண்ட திசைமாற்றம்
6. கெடிலம் கலக்குமிடம்
7. கெடிலம் - பெயரும் காரணமும்
8. கெடிலத்தின் தொன்மை
9. இலக்கியத்தில் கெடிலம்
10. கெடில நாடு
11. கெடிலநாட்டு வரலாறு
12. கெடிலக்கரை அரசுகள்
13. கெடில நாட்டுப் பெருமக்கள்
14. கெடிலக்கரை இலக்கியங்கள்
15. கெடில நாட்டுக் கல்வெட்டுகள்
16. கெடில நாட்டு வளங்கள்
17. பக்கத்து வீட்டுப் பணக்காரி
18. பாசனமும் பயிரும்-அணைக்கட்டுகள்
19. போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்
20. கூடலூர்த் துறைமுகம்
21. தொழில்-வாணிகம்
22. கெடிலக்கரை ஊர்கள்
23. மக்களும் வாழ்க்கை முறையும்
24. கல்வி-கலைத்துறை
25. கெடிலக்கரை நாகரிகம்
மேற்கோள் நூல்கள்
கெடிலக்கரை நாகரிகம்
1. ஆறும் நாகரிகமும்
‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது ஒளவை மொழி. உலகில் உள்ள ஊர்கள் எல்லாம் ஆற்றங்கரையிலேதான் உள்ளனவா? அல்ல. மற்ற ஊர்களிலும் ஆற்றங்கரை ஊர்கள் பல்வகை வாய்ப்புகள் மிகப்பெற்றவை என்பது கருத்து.
உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவற்றுள் நீரும் உணவும் முதன்மையானவை. நீர் இன்றி உணவுப்பொருள் இல்லை. எனவே, நீர் தாழ்ந்த நிலப் பகுதியிலே பண்டை மக்கள் நிலையாக உறைவிடம் அமைத்துத் தங்கலானார்கள். வானம் பார்த்த மண் பூமியினும் குளங்குட்டைகள் நிறைந்த பகுதி மேலானது. அதனினும், ஊற்றுக் கேணிகளும் ஏரிகளும் மிக்க பகுதிகள் முறையே மேலானவை. அவற்றினும், ஆற்றங்கரைப் பகுதிகள் மிகவும் மேலானவை. ஆற்றங்கரைப் பகுதிகளிலேயே, நெல் போன்ற உயர் பொருள்கள் விளையும் நன்செய் வயல்கள் உருவாகிப் பரந்து கிடக்கும். இந்த வயல் சார்ந்த பகுதிக்கே ‘மருதநிலம்’ என்பது பெயர்.
காடு சார்ந்த முல்லைநிலக் கொல்லைகளைவிட, மலை சார்ந்த குறிஞ்சிநிலப் புனங்களைவிட, கடல் சார்ந்த நெய்தல் நிலக் கானலைவிட, ஆற்றங்கரை சார்ந்த மருதநில நன்செய் வயல்களே மிக்க விலைமதிப் புடையவை. இதன் காரணம் அனைவருக்கும் விளங்கும்.
எனவேதான், ஆற்றங்கரைகளில் மக்கள் உறைவிடங்களை அமைத்துக் கொண்டனர். ஆங்கே நிலம் பெறமுடியாதவர்கள், வேறு இடங்களில் உறைவிடம் அமைத்துக்கொண்டு அவ்வம் மண்ணில் விளைந்தனவற்றை உண்டு வாழ்ந்து வந்தனர். வேறிடத்து மக்களினும், ஆற்றங்கரை மக்களே வாழ்க்கை வசதியிலும், கல்வி - கலைத்துறையிலும், நாகரிகத்திலும் மிக்குச் சிறந்திருந்தனர் என்பது வரலாறு கண்ட உண்மை.
மக்கள் வாழும் குடியிருப்புக்களை, தமிழில் ஊர், புரம், பேட்டை, பாளையம், பாக்கம், பட்டினம், பதி, நகர், சேரி, பூண்டி , அகரம், குடி, குறிச்சி, வேலி, பாடி, குப்பம், சாவடி, பட்டு, பட்டி, கோட்டம், கோட்டை , கிராமம், வலசு, மங்கலம், கோயில், பள்ளி, கரை, துறை, மலை, கானல், காடு, குளம், ஏரி, தோப்பு, நாடு, குடிசை, சத்திரம், சமுத்திரம் முதலிய பெயர்களால் நாம் அழைக்கிறோம். இதனை,
[1]“பாக்கம், பட்டினம், பதி, நகர், சும்மை,
பூக்கம், சேரி, புரம், முட்டம், பூண்டி,
அகரம், குடியே, குறிச்சி, கோசரம்,
அகலுள், நொச்சி, இருக்கை, வேலி,
குப்பம், பாடி, குறும்பு, பாழி,
சிறுகுடி, தண்ணடை, உறையுள், எயிலொடு,
வாழ்க்கை, உட்படுத்து இருபத் தேழும்
நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே"
“பட்டும், நொச்சியும், பள்ளியும் சிற்றூர்”
முதலிய திவாகர நூற்பாக்களாலும், உலக வழக்குப் பெயர்களாலும் அறியலாம்.
இப் பெயர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக ‘ஊர்’ என்னும் பெயரே உலக வழக்கில் தலைமை தாங்குகிறது. நாம் புதியவர் ஒருவரைக் கண்டால், “உங்கள் ஊர் எந்த ஊர்?” என்று கேட்கிறோமே தவிர, ‘உங்கள் பட்டி எந்தப் பட்டி?’ என்றோ; ‘உங்கள் பாக்கம் எந்தப் பாக்கம்?’ என்றோ கேட்பதில்லை. கதை சொல்பவர்கள் கூட, ‘ஒரே ஓர் ஊரிலே’ என்று தொடங்குகிறார்களே யொழிய, ‘ஒரே ஒரு குப்பத்தில்’ என்றோ , ‘ஒரே ஒரு புரத்தில்’ என்றோ தொடங்குவதில்லை. ஓர் இடத்தைக் குறிப்பிடுவதானாலும், ‘மன்னார்குடி என்னும் ஊரிலே’ என்று குறிப்பிடுகிறார்களே யன்றி, ‘மன்னார்குடி என்னும் சேரியிலே’ என்றோ, ‘மன்னார்குடி என்னும் பாளையத்திலே’ என்றோ குறிப்பிடுவதில்லை. எனவே, ‘ஊர்’ என்னும் பெயர், மக்கள் குடியிருப்புக்களின் பொதுப் பெயர் என்பது புலனாகும், முற்கூறிய திவாகர நூற்பாவிலும்,
“பாக்கம், பட்டினம்.... இருபத் தேழும்
நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே”
என, பாக்கம், பட்டினம் முதலிய இருபத்தேழும் ‘ஊர்’ என்னும் பொதுப் பெயராலேயே சுட்டப்பட்டுள்ளமை காண்க
இவ்வாறு, முல்லை நிலத்துக் குடியிருப்பாகிய பாடி, குறிஞ்சி நிலக் குடியிருப்பாகிய குறிச்சி, நெய்தல் நிலக் குடியிருப்பாகிய பட்டினம் முதலிய எல்லா - நிலத்துக் குடியிருப்புக்களையும் குறிக்கப் பயன்படும் ‘ஊர்’ என்னும் இப் பொதுப் பெயர், பண்டைக் காலத்தில், ஆற்றங் கரையை அடுத்த - நன்செய் வயல்கள் நிறைந்த மருத நிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன், ‘ஊர்’ என்றால் ஆற்றங்கரை வயல் வளம்மிக்க மருதநிலக் குடியிருப்பு என்றுதான் பொருள் ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பிய - பொருளதிகார - அகத்திணையியலிலுள்ள,
[2]“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென் மொழிப்"
என்னும் நூற்பாவின் உரை விளக்கத்தில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள,
“முல்லைக்கு நீர்: கான்யாறு (காட்டாறு); ஊர்: பாடியும் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு நீர்: அருவியும் கனையும்; ஊர்: சிறுகுடியும் குறிச்சியும். மருதத்திற்கு நீர்: யாற்று நீரும் மனைக் கிணறும் பொய்கையும்; ஊர்: ஊர்கள் என்பனவேயாம். நெய்தற்கு நீர்; மணற் கிணறும் உவர்க் குழியும்; ஊர்: பட்டினமும் பாக்கமும். பாலைக்கு நீர்: அறுநீர்க் கூவலும் சுனையும்; ஊர் : பறந்தலை.”
என்னும் உரைப்பகுதி நன்கு வலியுறுத்தும். மற்ற நிலத்துக் குடியிருப்புகளுக்கெல்லாம் தனித்தனிப் பெயர்கள் குறித்துள்ள ஆசிரியர், மருதநிலத்துக் குடியிருப்புக்கு மட்டும் ‘ஊர்கள் என்பனவேயாம்’ என ‘ஊர்’ என்னும் பெயரையே குறிப்பிட் டுள்ளமை காண்க. மற்றும், ஊரைக் கொண்டுள்ள மருத நிலத்திற்கே ‘ஆற்றுநீர்’ உரியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளமையும் ஈண்டு இணைத்து நோக்கற்பாலது. இதனை, நாற்கவிராசநம்பி இயற்றிய ‘அகப் பொருள் விளக்கம்’ என்னும் நூலில் உள்ள,
[3]இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்....
பெருகிய சிறப்பின் பேரூர் மூதூர்
யாறு மனைக்கிணறு இலஞ்சி....
வருபுனள லாடல் மருதக் கருப்பொருளே" என்னும் நூற்பாவும், மற்றும் பல்வேறு இலக்கிய ஆட்சிகளும் மேலும் உறுதி செய்யும்.
ஆறும் ஊறும் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டறியவே இவ்வளவு வழி கடந்துவர வேண்டியிருந்தது. நாம் மேற்கொண்ட இந்தச் சிறிய ஆராய்ச்சியிலிருந்து, பழங்கால மக்கள் ஆற்றங்கரைப் பகுதியையே மிகவும் நாடினர் என்பதும், ஆற்றங்கரைக் குடியிருப்புகளே ஊர்கள் என அழைக்கப்பட்டன என்பதும், நாளடைவில் ஒரு நிலத்துக் குடியிருப்பைக் குறிக்கும் பெயர்கள் மற்ற நிலத்துக் குடியிருப்புகளையும் மாறிக் குறிக்கலாயின என்பதும் தெள்ளிதின் விளங்கும். மற்றும் இவ்வாராய்ச்சியிலிருந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத குறிப்பாவது, ஆற்றங்கரை ஊர்களே வாழ்க்கைக்கு வசதியான உறையுள்களாகும் என்னும் கருத்து. இதனை, திவாகர நிகண்டில் உள்ள,
[4] “பூக்கம், கொடிக்காடு, பூரியம்,உறையுள்,
பாக்கம். அருப்பம், அகலுள். பதியே.
கோட்டம், வசதி, தாவளம், நியமம்,
வாழ்க்கை, தண்ணட, மருதநிலத்து ஊர்ப்பெயர்"
என்னும் நூற்பா தெளிவாகத் தெரிவிக்கிறது. ஆற்றங்கரை வயல் வளம் மிக்க மருதநிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கும். மேலுள்ள பெயர்களுள் உறையுள், வசதி, வாழ்க்கை என்னும் பெயர்கள் ஈண்டு விதந்து குறிப்பிடத்தக்கன. இம்மூன்று பெயர்களும் மருதநிலத்து ஊர்களே உறைவதற்கு ஏற்றவை - வசதியானவை - தங்கிவாழ்தற்கு உரியவை என்னும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன வன்றோ? கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு? ஆற்றங்கரை ஊர்களின் வாழ்க்கை வசதிச் சிறப்பை, இலக்கிய இலக்கணங்களிலிருந்து சான்று காட்டித்தானா மெய்ப்பித்தாக வேண்டும்? இந்தக் காலத்து மக்கள் நேரிலே வாழ்ந்து பார்த்தே தெரிந்து கொண்டிருக்கிறார்களே! இந்தக் காலத்தில் என்றென்ன - அந்தக் காலத்திலும் - எந்தக் காலத்திலும், வசதியான ஆற்றங்கரை வாழ்க்கையிலிருந்தே, கலை - கல்வி - நாகரிக வளர்ச்சிகள் தோன்றின . தோன்றும் என்னும் கொள்கைக்கு அடிப்படையிடவே இத்தனை சான்றுகள் பயன்படுத்தப்பட்டன.
எகிப்திய நைல் ஆற்றங்கரையிலும், மெசபட்டோமியாவின் (இராக்) யூப்ரடீசு, டைக்ரீசு என்னும் ஈராற்றங்கரைகளிலும் (மெசபட்டோமியா என்பதற்கு, இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட இடம் என்பது பொருள்), இந்தியத் துணைக் கண்டத்தின் சிந்து ஆற்றங்கரை வெளியிலும் மாபெரும் வரலாற்றுப் புகழ்படைத்த நாகரிகங்கள் தோன்றியிருந்தமை உலகறிந்த உண்மையன்றோ? உலகின் பெரு நகரங்கள் பல ஆற்றங்கரைகளில் அமைந்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.
பிரிட்டிசுப் பேரரசின் முதல் பெரிய நகரும் தலைநகருமாகிய இலண்டன் நகரம், ‘தேம்சு’ (Thames) என்னும் ஆற்றின் கரையில்தானே உள்ளது! அதே பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாயிருந்ததும், பிரிட்டிழ்சு இந்தியாவின் முதல் தலைநகராய்த் திகழ்ந்ததும், இப்போது இந்தியப் பேரரசின் முதல் பெரிய நகருமாய் விளங்குவதுமாகிய கல்கத்தா நகரம், ‘ஃஊக்ளி’ (Hooghly) என்னும் ஆற்றின் கரையில்தானே அமைந்துள்ளது! ஆற்றல் அனைத்தும் படைத்துள்ள அமெரிக்கப் பேரரசின் முதல் தலைநகராயிருந்ததும் முதல் பெரிய நகராயிருப்பதுமாகிய நியூயார்க் நகரம் ‘பாசேயிக்’ (Passaic) என்னும் ஆற்றின் கரையில்தானே உள்ளது! இவை மட்டுமா? ‘சாங்காய்’ (சைனா), ‘ராட்டர் டாம்’ (ஃஆலந்து), ‘ஃஆம்பர்கு’ (செர்மனி), ‘நியூ ஆர்லியன்சு’ (லுய்சியானா), ‘போனசு அயர்சு’ (அர்சென்டினா) முதலிய பெரு நகரங்கள் பலவும் ஆற்றங்கரைகளில்தானே அமைந்து திகழ்கின்றன!
சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரும் புகாரும் காவிரியாற்றங் கரையிலும், பாண்டியரின் தலைநகராய் விளங்கிய மதுரை வைகையாற்றங் கரையிலும் அமைந்திருப்பதும் ஈண்டு ஒப்பிட்டு எண்ணற்பாலது.
மேற்கூறிய கல்கத்தா, இலண்டன், நியூயார்க் முதலிய உலகப் புகழ்பெற்ற மாபெரு நகரங்கள் ஆற்றங்கரைகளில் அமைந் திருக்கும் ஒன்றினோடு அவற்றின் பெருமை நின்று விடவில்லை. அவை, மிகப் பெரிய ஆற்றங்கரைத் துறைமுகங்களும் உடையவை. இந்தியா பிற நாடுகளுடன் புரியும் வாணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு, ஆற்றங்கரையில் அமைந்துள்ள கல்கத்தா துறைமுகத்தின் வாயிலாகத்தான் நடக்கிறதாம். இலண்டன், நியூயார்க் முதலிய துறைமுகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
தெய்வத் தன்மை
இவ்வாறு உழவு, வாணிகம், போக்குவரவு, குடிநீர் முதலிய பலமுனைத் திட்டங்களுக்குப் பயன்படுவதாலேயே ஆற்றங்கரைகளில் நகரங்கள் தோன்றி நாகரிகங்களை உருவாக்கின. ஆறுகள் தம் வளங்களால் மக்களை வளர்ப்பதனாலேயே, அவற்றைத் தெய்வத் தாயாக மதித்துப் போற்றி மக்கள் வழிபடுகின்றனர். கங்கையம்மா காவிரித் தாயே என்றெல்லாம் நம் மக்கள் அன்னையென அழைத்து வழிபட, ஆப்பிரிக்க ‘நைல்’ ஆற்றங்கரை மக்களோ, “எங்கள் அப்பன் நீலன்’ என்பதாக ஆற்றை அப்பன் என அழைத்துப் போற்றுகின்றனராம்.
தமக்கு வேண்டிய வளங்களை வள்ளலென வற்றாது வாரி வழங்கும் ஆறுகளைத் தெய்வத்தன்மை உடையனவாக மதித்த மக்கள், அவ்வாறுகளிலே நீராடுவதிலும் அவற்றின் கரைகளிலே திருக்கோயில் எடுத்து இறை வழிபாடு செய்வதிலும் பேரின்பம் கண்டதோடு, அச் செயல்களைப் பெரிய அறமாகவும் கருதினர். [5]‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்று ஒளவைப் பிராட்டி அருளிய அமிழ்த மொழியின் அருமை இப்போது புலனாகுமே!
இந்த அடிப்படையில் வைத்து நோக்குங்கால், தமிழகத்தில் - திருமுனைப்பாடி நாட்டில் ஒடும் ‘கெடிலம் ஆற்றின் பங்கும் மிகவும் விதந்து குறிப்பிடத்தக்கது.
ஆறும் அறத்தாறும்
‘ஆறு’ என்னும் சொல்லுக்கு உரிய பொருள்களை ஆராயின், தமிழ் மக்கள் ஆற்றின் பெருமையை எந்த அளவு உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும். ஆறு’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு, நதி, அறம், வழி, அறவழி, சமயம், பயன், பக்கம், இயல்பு, விதம், உபாயம், 6 என்னும் எண் முதலிய பொருள்களும்; ‘ஆறு (தல்) என்னும் வினைச் சொல்லுக்கு, தணிதல், மனநிறைவு பெறுதல், சூடு நீங்குதல், புண் காய்ந்து ஆறுதல், அடங்குதல், அமைதி பெறல் முதலிய பொருள்களும்; ‘ஆ(ற்)று (தல்) என்னும் பிறவினைச் சொல்லுக்கு, வலிமை பெறல், முடியக் கூடியதாதல், போதுமானதாதல், உய்தல், நடத்துதல், செலுத்துதல், வழிகாட்டுதல், தேடுதல், உதவி செய்தல், கூட்டுதல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்குதல், சுமத்தல், பசி பிணி முதலியன தணித்தல், தேற்றுதல், சூடு குறைத்தல், ஈரம் போக்குதல், முறுக்கு ஆற்றுதல் முதலிய பொருள்களும்; ஆறு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த ‘ஆற்றல்’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு, வலிமை, மிகுதி, முயற்சி, உறுதி, ஆண்மை, பொறை, ஞானம், வாய்மை, வெற்றி முதலிய பொருள்களும் உள்ளமை காண்க.
மேலே கூறியுள்ள பொருள்கள் யாவும் ‘ஆறு’ என்னும் சொல்லை வேராகக்கொண்டு எழுந்தவையே. இவ்வளவு பொருள்களையும் ‘ஆறு’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிடுவதற்குத் தமிழ் மக்கள் எவ்வாறு கற்றுக் கொண்டிருப்பார்களெனில், ஓடுகின்ற ஆற்றைப் (நதியை) பார்த்துத்தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
ஆறு என்னும் சொல்லுக்குரிய எல்லாப் பொருள்களையும் நல்வழி, தணிவு என்னும் இருபிரிவுக்குள் ஏறக்குறைய அடக்கிவிடலாம். ஆறானது நேராக ஒழுங்காக இடையறாது நல்வழியில் ஓடிக் கொண்டிருப்பதையும், அது தன் குளிர்ச்சியால் வெப்பத்தைத் தணித்தும் நீர் தந்து நீர் வேட்கையைத் தணித்தும், உணவுப் பொருள் விளைத்துப் பசி வறுமை ஆகியவற்றைத் தணித்துச் செல்வம் பெருக்கி உயிர்களைத் தாங்கிக் காத்தும் உடல் உடை முதலியவற்றைத் தூய்மை செய்வதற்குத் துணை புரிந்தும் போக்குவரவுக்குரிய வழிப்பாதையாகியும் தேவைக்கு மேற்பட்டு ஊரை அழிக்கக்கூடிய நிலையில் மிகுதியாகப் பெய்த மழைநீரைத் தன்னிடத்தே வாங்கிக் கொண்டு ஊருக்கும் வயல்களுக்கும் வடிகாலாகி ஊரையும் மக்களையும் கேட்டிலிருந்து விடுவித்தும் இன்னும் பல்வேறு வகைகளிலும் உதவிசெய்து கொண்டிருப்பதையும் கண்ட தமிழ் மக்கள், நல்வழியையும் நற்செயல்களையும் ஒழுங்குமுறையையும் உள்ளத் தணிவையும் ‘ஆறு’ என்னும் அழகிய அருமை அன்புப் பெயராலேயே அழைக்கலாயினர்.
‘ஆறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் ஆராயுங்கால், மற்றொரு செய்தி புலனாகிறது. பழங்கால மக்கள் போக்கு வரவுக்கு முதல் முதலில் ஆறுகளைத்தான் பயன்படுத்தினர், என்பதுதான் அந்தச் செய்தி.
ஆறுகளில் நிரம்பத் தண்ணீர் ஓடுகின்ற காலங்களில் மட்டுந்தானே படகு, தெப்பம் முதலியவற்றின் துணை கொண்டு போக்குவரவு செய்ய முடியும்? நிரம்பத் தண்ணீர் ஓடாத காலங்களிலும், மழை பெய்யும்போது தவிர மற்ற நேரத்தில் தண்ணீரே இல்லாத ஆறுகளிலும் எப்படிப் போக்குவரவு செய்ய முடியும்? மற்றும், ஆறுகள் இல்லாத பகுதிகளில் எவ்வாறு போக்குவரவு செய்தனர்?
இங்கே ‘போக்குவரவு’ என்னும் தொடர் தண்ணீரிலே தெப்பத்தின் துணைகொண்டு போய்வரும் பயணத்தை மட்டும் குறிக்கவில்லை; காலால் நடந்து சென்று வருவதையும் குறிக்கிறது. தண்ணீர் உள்ளபோது தெப்பத்தைப் பயன்படுத்தியும், தண்ணீர் இல்லாத போதும் தண்ணீர் இல்லாத ஆறுகளிலும் காலாலேயே நடந்தும் போய் வந்தனர். ஏனெனில், இந்தக் காலத்தைப் போல் அந்தக் காலத்தில் செப்பனிடப்பட்ட பாதைகளே இருந்திருக்க முடியாது. மழைக் காலத்தில் மழைநீர் ஓடியோடி இயற்கையாக உண்டாக்கிய ஆற்றுப் பாதைகள் மட்டுமே அந்தக் காலத்தில் இருந்திருக்கக்கூடும். கல்லும் முள்ளும் புல்லும் புதரும் மரஞ்செடி கொடிகளும் நிறைந்த மற்ற தரைப் பகுதியில் நடப்பதை விட, மழைநீர் ஓடியோடி உண்டாக்கிய இயற்கையான பாதையில் நடப்பதே வசதியானது. அந்த இயற்கைப் பாதை, மேடு பள்ளமின்றிச் சமமட்டமாகவும் மென்மையாகவும் தூய்மையாகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன. எனவே, அத்தகைய ஆற்றுப் பாதைகளை அக்கால மக்கள் நடப்பதற்குப் பயன் படுத்திக் கொண்டனர். இயற்கை உண்டாக்கிக் கற்றுக்கொடுத்த அந்தப் பாதைகளைப் பார்த்துப் பார்த்துத்தான், பின்னர் மக்கள், வேறிடங்களில் அவை போலவே செயற்கையாகப் பாதைகள் அமைத்துக் கொண்டனர். அந்தச் செயற்கைப் பாதைகளையும் ‘ஆறு’ என்ற பெயராலேயே அழைத்தனர்.
இந்தக் கருத்துக்கு ஆதாரம் வேண்டுமென்றால் என் சொந்தப் பட்டறிவிலிருந்தே (அனுபவத்திலிருந்தே) சொல்ல முடியும். நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனா யிருந்தபோது இதைப் பட்டறிந்துள்ளேன். மயிலம் மலைப் பாங்கான ஊர். அந்த ஊரைச் சுற்றியுள்ள வெற்றிடங்களிலும் தோப்புக்களிலும் நடப்பது தொல்லை. தரை கல்லும் முள்ளும் நிறைந்து மேடுபள்ளமாக இருக்கும். புதியவர்கள் கால் வைக்க முடியாது. அப்பகுதிகளில் மழை நீர் ஓடியோடி இயற்கையாக ஏற்பட்டுள்ள பாதைகள் மட்டும் மென்மையாகவும் வெண்மையாகவும் அழகாகவும் சமமாகவும் நடப்பதற்கு வசதியாக இருக்கும். இன்னும் இதுபோன்ற இயற்கைப் பாதைகளைப் பல ஊர்க் காட்டு மேடுகளிலும் கண்டுள்ளேன்.
இந்தக் காலத்திலேயே இன்னும் பல ஊர்களில் ஒழுங்கான பாதைகள் இல்லாத நிலையில், அந்தக் காலத்து மக்கள் எவ்வாறு ஒழுங்கான பாதைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும்? இயற்கையாய் ஏற்பட்ட ஆற்றுப் பாதைகளைத்தானே பயன்படுத்தியிருக்க முடியும்? ஆம்.
இயற்கையான ஆற்றுப் பாதை மற்ற தரைப் பகுதிகளைப் போல் இல்லாமல், ஒழுங்காகவும் தூய்மையாகவும் உதவியாகவும் இருந்ததால், நன் மக்கள் புரியும் ஒழுங்கான - தூய்மையான - உதவியான அறச் செயல்களையும் ‘ஆறு’ என்னும் பெயராலேயே மக்கள் அழைத்தனர். நதி, நல்வழி, அறச்செயல் முதலியவை, ‘ஆறு’ என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடப்படுவதிலுள்ள உண்மை இதுவாகத்தான் இருக்கக் கூடும்.
மக்கள் மட்டுமா? இலக்கியப் புலவர்கள் எல்லாரும், நதியின் பெயராகிய ‘ஆறு’ என்னும் அழகு தமிழ்ச் சொல்லால் நல்வழியினையும் நல்லறத்தினையும் குறிப்பிடலாயினர். திருவள்ளுவப் பெருந்தகையார்,
‘அறத்து ஆறு இதுவென வேண்டா’ 37
‘ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை’ 43
‘அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்’ 46
‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா’ 48
‘அறிவறிந்து ஆற்றின் அடங்கப்பெறின்’ 123
‘அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து’ 130
‘ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன்’ 161
‘அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்’ 176
நல் ஆறு எனினும் கொளல் தீது’ 222
‘நல் ஆற்றான் நாடி அருளாள்க’ 242
‘நல் ஆறு எனப்படுவது யாதெனின்’ 324
‘தான் வேண்டும் ஆற்றான் வரும்’ 367
‘பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு’ 465
‘ஆற்றின் வருந்தா வருத்தம்’ 468
‘ஆற்றின் அளவறிந்து ஈக’ 477
‘ஆகுஆறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகுஆறு அகலாக் கடை’ 487
‘ஆற்றின் நிலை தளர்ந்தற்றே’ 716
‘ஆற்றின் அளவறிந்து கற்க’ 725
‘அழிவினவை நீக்கி ஆறு உய்த்து’ 787
‘நன்றெய்தி வாழ்வதோர் ஆறு’ 932
‘நெடிது உய்க்கும் ஆறு’ 943
என்றெல்லாம் எடுத்தாண்டிருப்பது காண்க. உலகப் பேரிலக்கிய மாகிய திருக்குறளிலிருந்து சான்று காட்டினாலே போதும் என்றாலும், பெரும்புலவர் கம்பர், ஓரிடத்தில் ஒரே பாட்டில் ஒரே அடியில் நதி, நல்லறவழி என்னும் பொருள்களில் ஆறு என்னும் சொல்லை எடுத்தாண்டு விளையாடியிருப்பதை இங்கே குறிப்பிடாமல் விடமுடியவில்லை.
[6]“அவ் ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே
எனத் தெளிந்த அருளின் ஆறும்”
என்பது கம்பரின் பாடல் பகுதி. ‘ஆற்றுப்படை’ என்னும் நூற்பெயர்ப் பொருளும் கண்டு ஒப்புநோக்கற்பாலது. இதுகாறும் கூறியதிலிருந்து, ஆறுகள் மக்களிடத்தில் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது புரியும்.
இம்மட்டுமா? கம்பர் ஒரு பாடலில், கோதாவரி ஆற்றுக்கு, பெரும்புலவர் இயற்றிய கவியினை ஒப்புமை கூறுமுகத்தான், ஆறுகளின் பெருமைகளையெல்லாம் - பயன்களையெல்லாம் தொகுத்துக் கூறிப் புகழ்ந்துள்ளார். ஆறுகள் கவிகளைப்போல நாட்டுக்கு நல்லழகாம்; சிறந்த பொருள்களைத் தருமாம்; புலங்களை (வயல்களை) வளப்படுத்துமாம்; அகத்துறைகளைக் (குளிக்கும் நீர்த்துறைகளைக் கொண்டிருக்குமாம்; முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை நெறியும் (ஐந்து நிலங்களின் வழியாய் வரும் ஓட்டத்தையும்) உடையனவாம்; தெளிந்திருக்குமாம்; குளிர்ந்திருக்குமாம்; ஒழுங்கான நடை உடையனவாம். இக்கருத்துடைய கம்பரது பாடல் வருமாறு:
[7]"புவியினுக்கு அணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற் றாகி,
அவி அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி,
சவியுறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்."
நன்னூல் ஆசிரியர்கூட, நூற்பாவின் நிலைக்கு ‘ஆற்றொழுக்கு’ என்று பெயர் தந்துள்ளார்.
இத்துணை பெரும்புகழுக்குரிய ஆற்றங்கரை ஊர்களிலே மிக்க செல்வமும், சிறந்த கல்வியும் - கலைகளும், உயர்ந்த நாகரிகமும் தோன்றி வளர்ந்து பெருகித் திகழ்வதில் வியப்பேது! இந்நூலில் நாம் எடுத்துக் கொண்ட ‘கெடிலம்’ என்னும் ஆறு, இத்துணை பெரும் புகழுக்கும் மிகவும் உரியது என்று சொன்னால் மிகையாகாது.
* * *
↑ சேந்தன் திவாகரம் - இடப் பெயர்த் தொகுதி - நூற்பா : 88, 94.
↑ தொல் - பொருள் - அகம் - நூற்பா: 18.
↑ அகப்பொருள் விளக்கம் - அகத்திணையியல் - நூற்பா : 23.
↑ சேந்தன் திவாகரம் - இடப்பெயர்த் தொகுதி - 99.
↑ நல்வழி : 24.
↑ "கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - நாடவிட்ட படலம் - 22.
↑ "கம்பராமாயணம் - ஆரணிய காண்டம் - பஞ்சவடிப் படலம் - 1.
2. ஆறுகளின் தோற்றமும் நீளமும்
மலைப்பகுதியில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருகுவதாலும், கீழிருந்து ஊற்று நீர் மேலெழுவதாலும், பெருமழை பெய்வதாலும் ஆங்காங்கே ஆறுகள் தோற்றம் எடுத்து, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் சிறியனவும் பெரியனவுமாகிக் கடலை நோக்கி ஓடுகின்றன.
பெரும்பாலும், ஆங்காங்கே பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஆறுகளின் அகலமும் நீளமும் அமையும். அடுத்தபடியாக, தம்மொடு வந்து கலக்கும் அருவிகள், கால்வாய்கள், ஓடைகள், துணையாறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் உருவத்தையும் பொறுத்தும் ஆறுகளின் அகல நீளங்கள் அமைவதுண்டு.
ஓரிடத்திலிருந்து கடலை நோக்கிச் செல்லச் செல்ல தரை சரிவாயிருக்கும். அதனாலேயே கடலை நோக்கி ஆறுகள் ஓடுகின்றன. ‘பள்ளத்தைக் கண்ட வெள்ளம் போல....’ என்பது பழமொழியன்றோ? எனவே, கடலுக்கு அண்மையில் தோன்றும் ஆறுகள் நீளத்தில் குறைவாயிருப்பதும், கடலுக்கு மேலே வெகு தொலைவில் தோன்றும் ஆறுகள் நீளமாயிருப்பதும் இயல்பு ஐக்கிய அமெரிக்காவில் ஓடும் ‘மிசிசிப்பி’ என்னும் ஆறு [1] 4240) கல் நீளம் உள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆறு இதுதான். இந்தியாவில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் பொருநை என அழைக்கப்படும் தாமிரவருணி ஆறு 75 கல் நீளமே உடையது. இவ்விரண்டு ஆறுகளின் நீளத்திலும் இவ்வளவு வேறுபாடு இருப்பதற்குக் காரணம் என்ன?
மிசிசிப்பி ஆறு அமெரிக்காவின் வடமேற்கில் ராக்கி மலைப் பகுதியிலிருந்து தோன்றி, தென் கிழக்கில் மெக்சிகோ வளைகுடாவில் வந்து விழுகிறது. அது தோன்றும் இடத்திற்கும் முடியும் இடத்திற்கும் இடையே உள்ள பகுதி மிகமிக நீளமானது. அவ்விடைப் பகுதியிலே ஐக்கிய அமெரிக்காவின் பல நாடுகள் உள்ளன. எனவே, மிசிசிப்பி ஆறு அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போகிறது.
இந்தியாவிலோ, வடக்கேயிருந்து, தெற்கே வரவர நிலப்பகுதியின் அகலம் சுருக்கிக்கொண்டே வருகிறது, இந்தியாவின் தெற்குக் கோடி தமிழ்நாடு, கேரளம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தரைப்பகுதி கீழ்கடலை நோக்கிச் சரிவாயுள்ளது. கேரளத்தின் தரைப்பகுதி மேல்கடலை நோக்கிச் சரிந்துள்ளது. இரு கடல்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியின் நீளம் மிகக் குறைவு, ஒன்றோடொன்று மிக நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற இரு கடல்களுக்கிடையே, தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியாகிய திருநெல்வேலி மாவட்டத்திற்கும் கேரள நாட்டிற்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. அம்மலையின் மேற்கே தோன்றும் ஆறு மேல் கடலை நோக்கி மலையாள நாட்டிலும், அம்மலைக்குக் கிழக்கே தோன்றும் ஆறு கீழ்கடலை நோக்கித் தமிழ் நாட்டிலும் பாய்வது இயல்பு, அந்த முறையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பெரிய பொதிகை என்னும் அகத்தியர் மலையில் தோற்றங் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடி, கிழக்கே மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. ஒரு நாட்டின் ஒரு மாவட்டத்திற்குள்ளேயே தோன்றி முடியும் ஓர் ஆற்றின் நீளம் மிசிசிப்பியைப்போல் எவ்வாறு நீளமாயிருக்கமுடியும்?
இதுகாறும் கூறியவற்றால், நிலப்பகுதி வரவரச் சுருங்கிக்கொண்டுபோகும் தமிழகத்தின் ஆறுகள், உலக ஆறுகள் பலவற்றைப்போல் மிகமிக நீளமாயிருக்க முடியாது என்பது தெளிவாகும். எனவே, தமிழ்மக்கள், ஆறுகளைப் பொறுத்தமட்டில், ‘நாம் உலகினரோடு போட்டி போட முடியவில்லையே’ என்று ஏங்கவேண்டியதில்லை.
தமிழக ஆறுகளுள் கெடிலம்
தமிழகத்தில் ஓடும் ஆறுகளுக்குள்ளேயே 75 கல் தொலைவு ஓடும் தாமிரவருணியைவிட 165 கல் தொலைவு ஓடும் வையை ஆறு நீளமானது; அதனினும், 230 கல் தொலைவு ஓடும் பாலாறு நீளமானது; அதைவிட, 250 கல் தொலைவு ஓடும் தென்பெண்ணையாறு நீளமானது; அதைக்காட்டிலும், 480 கல் தொலைவு ஓடும் காவிரியாறு நீளமானது. இவ்வேறுபாடுகட்குக் காரணம் என்ன?
தாமிரவருணியும் வையையும் தமிழ்நாட்டிலேயே தோன்றித் தமிழ் நாட்டிலேயே முடிபவை. பாலாறும் தென்பெண்ணையும் தமிழ்நாட்டுக்கு அண்மையில் மைசூர் நாட்டுக் ‘கோலார்' வட்டத்தில் தோன்றித் தமிழ்நாட்டில் வந்து முடிபவை; எனவே, இவையிரண்டும் முன்னைய இரண்டினும் நீளமாயுள்ளன. காவிரியோ, குடகுநாட்டில் தோன்றி மைசூர்நாட்டுள் புகுந்து கடந்து தமிழ்நாட்டில் வந்து முடிகிறது; எனவே, இது, முன்னைய நான்கினும் மிகவும் நீளமாயுள்ளது.
தாமிரவருணி, வையை என்னும் ஈராறுகளை மட்டும் எடுத்துக்கொள்ளினும், இரண்டுமே மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றினாலுங்கூட, வையையாறு மதுரை மாவட்டத்தில் தோன்றி இராமநாதபுர மாவட்டத்தில் முடிகிறது. தாமிரவருணியோ, திருநெல்வேலி மாவட்டத்தில் தோன்றி அதே மாவட்டத்திலேயே முடிந்து விடுகிறது. அதனால்தான், வையையினும் தாமிரவருணி நீளத்தில் குறைவாயுள்ளது.
இதிலிருந்து, இந்தியப் பெருநிலத்திலேயே, அகன்ற வடபகுதியில் உள்ள ஆறுகளினும் குறுகிய தென்பகுதியில் உள்ள ஆறுகளின் நீளம் குறைவு என்பதும், தென் பகுதியிலும் பல மாநிலங்களில் ஓடும் ஆறுகளினும் ஒரு மாநிலத்தில் மட்டும் ஓடும் ஆறுகள் நீளக் குறைவானவை என்பதும், ஒரு மாநிலத்திற்குள்ளும் பல மாவட்டங்களில் ஓடும் ஆறுகளைவிட ஒரு மாவட்டத்தில் மட்டும் ஓடும் ஆறுகளின் நீளம் குறைவு என்பதும் புலப்படும். புலப்படவே, ஒரு மாவட்டத்தின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக்கோடிவரையும் ஓடிக் கடலில் கலக்கும் தாமிரவருணி போன்ற ஆற்றைக் காட்டிலும், ஒரு மாவட்டத்தின் நடுப்பகுதியில் தோன்றிக் கடலில் கலக்கும் ஓர் ஆறு மிகச் சிறியதாய்த்தான் இருக்கமுடியும் என்பதும் உடன் புலனாகும். அப்படி உள்ள ஓர் ஆறுதான் ‘கெடிலம்’ என்னும் ஆறு.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
[2]'உடல் சிறியர் என்றிருக்கவேண்டா’ என்பது ஔவைமொழி. [3]உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ என்பது வள்ளுவர் வாய்மொழி. இம்மொழிகள் கெடில ஆற்றிற்கு மிகவும் பொருந்தும். ‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது, என்றபடி, கெடிலம் உருவத்தில் - நீளத்தில் - சிறியதாயிருப்பினும், நீர்ப்பாசனப் பெருமை, அணைக்கட்டுப் பெருமை, துறைமுகப் பெருமை, போக்குவரவுப் பெருமை, வாணிகப் பெருமை, மண்வளப் பெருமை, பண்ணைப் பெருமை, தொழில் பெருமை, ஊர்ப் பெருமை, தலைநகர்ப் பெருமை, மலைப் பெருமை, கடல் பெருமை, மக்கள் பெருமை, அரசியல் பெருமை, ஆட்சிப் பெருமை, கோயில் பெருமை, நீராடல் பெருமை, பாடல் பெருமை, இலக்கியப் பெருமை, கல்விப் பெருமை, கலைப் பெருமை, வரலாற்றுப் பெருமை, நாகரிகப் பெருமை முதலிய அனைத்துப் பெருமைகளும் பெற்று மிளிரும் ஓர் உயிர்ப்பு உள்ள (சீவநதி) ஆறு ஆகும்.
மிசிசிப்பி ஆற்றையும் நைல் ஆற்றையும் உலகத்தார்க்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. கங்கையைப் பற்றியோ, பிரம்மபுத்திராவைப் பற்றியோ இந்தியர்க்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை. காவிரியையோ பெண்ணையாற்றையோ தமிழ்மக்கட்கு அறிமுகம் செய்யவேண்டியதில்லை இவ்வாறுகள் எல்லாம் பரவலாக விளம்பரம் பெற்றிருப்பவை, ஆனால், பல்வகைச் சிறப்புக்கள் நிறைந்தும் இருக்குமிடம் தெரியாமல் அடக்கமாய்த் தன்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிற கெடிலம் ஆற்றைத் தமிழ்மக்கட்கு - உலகினர்க்கு விரிவாக அறிமுகம் செய்யாதிருப்பது தவறாகும். எனவே, தமிழக ஆறுகட்கிடையே கெடிலத்தின் நிலையை ஆய்ந்து கண்ட நாம், உலக ஆறுகட்கிடையே கெடிலத்தின் நிலையையும் ஆய்ந்து அதன் தகுதியைக் கணித்து மதிப்பிட வேண்டும்.
உலக ஆறுகளுள் கெடிலம்
குறுகிய தொலைவே ஓடும் கெடிலம், ஏறக்குறைய 70கல் (112கி.மீ.) நீளமே உடையது. உலக ஆறுகளை நோக்கக் கெடிலத்தின் நீளமும் நீர்வசதியும் மிகமிகக்குறைவு என்பது பின் வரும் அட்டவணையால் புலனாகும். அட்டவணையில் முதலில் ஆறுகளின் பெயர்களும், அடுத்து அவற்றின் நீளமும் (மைல் கணக்கில்), பின்னர் அவை பாயும் வடிகால் நிலங்களின் பரப்பும் (சதுரமைல் கணக்கிலும் ஏக்கர் கணக்கிலும்), இறுதியாக அவற்றின் சராசரி ஒழுக்கும் முறையே கொடுக்கப்படும். அட்டவணையைத் தொடர்ந்து, கெடிலத்தின் பெருமையை நிலைநாட்டு முகத்தான் ஒருசிறிய ஆராய்ச்சியும் செய்யப்படும். இனி, ஆறுகளின் அட்டவணை வருமாறு:
ஆறுகள் மைல் நீளம் வடிநிலப் பரப்பு (000) ச.மைல் சராசரி ஒழுக்கு (000-ச.அடி செக)
அமேசான் (தென் ஆப்பிரிக்கா) 4000 2368 3300
காங்கோ (ஆப்பிரிக்கா) 2900 1430 4500
பரானா (அர்சன்டைனா) 2200 1100 970
யாங்சீ (சைபீரியா) 3200 700 800
மிசிசிப்பி (வட அமெரிக்கா) 4240 1258 700
எலிசி (சைபீரியா) 3240 968 700
பிரம்மபுத்திரா (இந்தியா) 1970 280 620
லேனா (சைபீரியா) 2850 920 585
கங்கை (இந்தியா) 1860 419 530
மெக்கன்சி (கானடா) 2510 682 500
ஆப்-இர்ட்டிஷ் (சைபீரியா) 3550 1122 400
வால்கா (ஐரோப்பா) 2300 563 300
நைல் (ஆப்பிரிக்கா) 4160 1120 56
கொலராடோ (வட அமெரிக்கா) 1,700 244 23
காவிரி (தமிழ்நாடு) 480 28000 சதுர மைல்
தென்பெண்ணை (தமிழ்நாடு) 250
பாலாறு (தமிழ்நாடு) 230 50000 ஏக்கர்
வைகை (தமிழ்நாடு) 165
கொள்ளிடம் (தமிழ்நாடு) 94
தாமிரவர்ணி (தமிழ்நாடு) 75 1750 சதுர மைல்
கெடிலம் (தமிழ்நாடு) 70 10,000 ஏக்கர்
மேலுள்ள அட்டவணையில் கெடிலத்திற்கு மேலே இருபது ஆறுகளைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நோக்கக் கெடிலத்தின் மிக எளிய தோற்றம் தெரியவரும்.
இஃதென்ன புதுமை! இந்த இருபது ஆறுகளுள் முதல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள அமேசான், காங்கோ, மிசிசிப்பி போன்ற ஆறுகளைப் பற்றி நூல் எழுதுபவர்கள் வேண்டுமானால், இப்படி ஓர் அட்டவணையைத் தந்து, “இதோ பாருங்கள்! உலக ஆறுகளை நோக்க இந்த ஆறு எவ்வளவு பெரியது - சிறந்தது என்று அறிந்துகொள்ளுங்கள்!” என்று கூறித் தாங்கள் எடுத்துக்கொண்ட ஆற்றின் பெருமையை வானளாவப் புகழலாம். இதுதான் இயற்கை. ஆனால், கெடில ஆற்றைப் பற்றி நூல் எழுதப் புகுந்தவர், இப்படி ஒர் அட்டவணையைக் காட்டி, கெடிலத்தை அட்டவணையின் அடியில் போட்டு இழிவுபடுத்தி அல்ல அல்ல - சிறுமைப்படுத்திக் காட்டலாமா?
அட்டவணையைக் கூர்ந்து நோக்குவோர்க்கு இன்றிய மையாத ஒர் உண்மை புலப்படும். அதற்காகவே இங்கே இந்த அட்டவணை கொடுக்கப்பட்டது. அட்டவணையின் முற்பகுதியில் உள்ள (தமிழ் நாட்டு ஆறுகள் அல்லாத) பதினான்கு உலக ஆறுகளைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். இந்தப் பதினான்கு ஆறுகளின் பெயர்களையும், அமேசான் முன்னதாகவும் கொலராடோ பின்னதாகவுமாக, இந்த வரிசையில் [4]அறிஞர்கள் அமைத்திருப்பது ஏன்? இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நீளத்தைக் கொண்டு மட்டும் ஆறுகளின் பெருமை சிறுமையைக் கணித்து விடக்கூடாது; மற்றத் தகுதிகளையும் நோக்கியே கணிக்க வேண்டும். பதினான்கனுள் முதலில் வைக்கப்பட்டுள்ள அமேசான் ஆறு 4000 கல் (6400கி. மீட்டர்) நீளம் உடையது. ஆனால், இதனினும் மிகுதியாய், முறையே 4240 கல் (6784 கி. மீட்டர்) நீளமும் 4160 கல் (6656 கி. மீட்டர்) நீளமும் உடைய மிசிசிப்பி ஆறும் நைல் ஆறும் முறையே ஐந்தாவதாகவும் பதின்மூன்றாவதாகவும் வைக்கப்பட்டிருப்பது ஏன்? இவ்விரண்டினும் நீளத்தால் சிறிய அமேசான் ஆற்றின் வடிநிலப்பரப்பு 2868 ஆயிரம் சதுர மைல். மிசிசிப்பியின் வடிநிலப் பரப்போ 1258 ஆயிரம் சதுர மைலே நைலின் வடிநிலப் பரப்போ 1120 ஆயிரம் சதுர மைலேதான். இதுமட்டுமா? அமேசான் ஆற்றின் சராசரி ஒழுக்கு 3800 ஆயிரம் க.அடி செக. மிசிசிப்பியின் சராசரி ஒழுக்கோ 700 ஆயிரம் க.அடி செக. தான். நைலின் சராசரி ஒழுக்கோ 56 ஆயிரம் க.அடி செக. அளவேதான். எனவேதான், நீளத்தால் குறைந்தாலும், வடிநிலப் பரப்பாலும் சராசரி ஒழுக்காலும் மிகுந்த அமேசான் முதல் இடத்தைப் பெற்றது. நீளத்தால் மிக்கிருந்தாலும், மற்ற இரண்டாலும் குறைந்த மிசிசிப்பி ஐந்தாம் இடத்தையும், நைல் பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றன. எனவே, நீளத்தின் மிகுதியைவிட, வடிநிலப்பரப்பின் மிகுதியும் சராசரி ஒழுக்கின் மிகுதியும் மிகவும் இன்றியமையாதவை என்பது தெளிவு.
வடிகால் பரப்பு, சராசரி ஒழுக்கு ஆகிய இரண்டுக்குள்ளும் சராசரி ஒழுக்கே மிகவும் இன்றியமையாதது. நீரோட்டம் இன்றி, ஆறு நீண்டும் வடிகால் பகுதி அகன்றும் இருந்து என்ன பயன்? இந்தப் பதினான்கு ஆறுகளுள், பிரம்மபுத்திராவையும் நைலையும் இங்கே எடுத்துக்கொள்வோம். பிரம்மபுத்திராவின் நீளம் 1970 மைல் (3152கி. மீட்டர்) தான். நைலின் நீளமோ 4160 மைலாகும். (6.656 கி. மீட்டர்). பிரம்மபுத்திராவின் வடிநிலப்பரப்பு 280 ஆயிரம் சதுர மைல்தான். நைலின் வடிநிலப் பரப்போ 1120 ஆயிரம் சதுர மைலாகும். அப்படியிருந்தும் அட்டவணையில் சிறிய பிரம்மபுத்திரா ஏழாவது இடத்தையும், பெரிய நைல், பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றிருப்பதற்குக் காரணம் என்னவென்றால், சிறிய பிரம்மபுத்திரா மிகுந்த அளவில் 620 ஆயிரம் க.அடி.செக, சராசரி ஒழுக்கும், பெரிய நைல் குறைந்த அளவில் 56 ஆயிரம் க.அடி. செ.க. சராசரி ஒழுக்கும் உடைமையேயாம்.
பதினான்கு ஆறுகளின் பெயர்களுமே, சராசரி ஒழுக்கின் அளவைப் பொறுத்தே முன் பின்னாக வரிசைப்படுத்தப் பட்டிருப்பதை அட்டவணையில் காணலாம். ஆனால், இது தொடர்பாக ஒரே ஒரு விதிவிலக்கு காணப்படுகிறது. முதலாவதாகக் குறிக்கப்பட்டுள்ள அமேசான் ஆற்றின் சராசரி ஒழுக்கு 3300 ஆயிரம் க.அடி செ.க. ஆகும். இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ள காங்கோ ஆற்றின் சராசரி ஒழுக்கோ 4300 ஆயிரம் க.அடி செ.க. ஆகும். அங்ஙனமெனில், சராசரி ஒழுக்கில் குறைந்த அமேசான் முதலாவதாகவும், சராசரி ஒழுக்கில் மிகுந்த காங்கோ இரண்டாவதாகவும் அட்டவணையில் அறிஞர்களால் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? காங்கோவைவிட அமேசான் சராசரி ஒழுக்கில் ஓரளவு குறைந்திருப்பினும், நீளம், பாய்ந்து பயன்படும் வடிநிலப் பரப்பு ஆகிய இரண்டிலே மிகவும் கூடுதலாக இருப்பதால் அமேசான் அட்டவணையில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகாறும் செய்த ஆராய்ச்சியின் முடிபாவது:- ஓர் ஆற்றை அதன் நீளத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது; மற்றத் தகுதிகளையும் உடன் கூட்டிப் பார்க்கவேண்டும் என்பதாம். இதனினும் இன்றியமையாத மற்றொரு கருத்தும் இங்கே ஆராய்ச்சிக்கு உரியது:
ஓர் ஆற்றின் நீளம், வடிநிலப்பரப்பு, சராசரி ஒழுக்கு ஆகியவற்றின் அளவுகள், ஒரு மாந்தனுடைய உயரம், பருமன், எடை ஆகியவற்றின் அளவுகளைப் போன்றனவாம். ஒருவரது தகுதியை, அவருடைய உயரம், பருமன், எடை ஆகிய உடல் பண்பைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. உடல் பண்பு இன்றியமையாததுதான் என்றாலும், அதற்கு மேல் சிறந்தனவாக உள்ளப் பண்பு, உயிர்ப் பண்பு என இரண்டு உள்ளன. இந்த இரண்டும் உடைமையே மக்கட் பண்பு ஆகும். இன்னும் கேட்டால் நீண்டு பருத்த மரம் போல் வாட்டசாட்டமான உடல்: உரம் மட்டும் பெற்று, உள்ளப் பண்பும் உயிர்ப் பண்பும் பெற்றிராதவரை மாந்தராக அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனை ‘மக்களே போல்வர் கயவர்’ ‘மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லா தவர்’ என்னும் திருக்குறள் பகுதிகளால் தெளியலாம்.
உருவத்தால் பெரியவராயினும் மக்கட் பண்பு இல்லாத மாக்களைவிட, உருவத்தால் சிறியவராயினும் சிறந்த உள்ளப் பண்பும் உயரிய உயிராற்றலும் உடையவர் மிகவும் மதிக்கத்தக்கவர். இதுபோலவே, ஓர் ஆறு உருவத்தால் சிறுத்திருப்பினும், துறைமுகப் பெருமை, ஊர்ப் பெருமை, பெருமக்கள் பெருமை, தலைநகர்ப் பெருமை, அரசாட்சிப் பெருமை, கோயில் பெருமை, நீராடல் பெருமை, பாடல் பெருமை, பழைய இலக்கியப் பெருமை, கல்விப் பெருமை, கலைப் பெருமை, நீண்டகால வரலாற்றுப் பெருமை, உயர்ந்த நாகரிகப் பெருமை முதலிய பெருமைகளைப் பெற்றிருப்பின், மிகப் பெரிய ஆறுகளைக் காட்டிலும் அது மிக உயர்ந்ததேயாம்.
ஓர் ஆற்றுக்குத் தலைநகர்ப் பெருமை, வரலாற்று நாகரிகப் பெருமை முதலியன அமைந்திருப்பது, ஒரு மனிதர்க்கு உயர்ந்த உள்ளப் பண்பும் உயிர் ஆற்றலும் அமைந்திருப்பது போன்றதாகும் என்னும் கருத்தைப் புரிந்து கொண்டால், உருவத்தால் சிறிய ஆறாகிய நமது கெடிலத்தின் ‘எவரெஸ்ட்’ பெருமையை எவரும் ஏற்றுக் கொள்வர். இந்த அடிப்படையிலேயே கெடிலத்தைப் பற்றிய இந்நூல் எழுகிறது.
மிகப் பெரிய இமயமலையைப் பற்றி மட்டும் உலகத்தில் ஆராய்ச்சி நடக்கவில்லை; கண்ணுக்குப் புலப்படாத மிகவும் சிறிய அணுவைப் பற்றியும் ஆராச்சி நடக்கிறது; அவ்வணுவுக்குள் அளவற்ற ஆற்றல் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தவும் படுகிறது. விண்ணில் கண்ணுக்குத் தெரியும் மிகப் பெரிய ஞாயிற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோடு அறிஞர்கள் அடங்கிவிடவில்லை; கண்ணுக்குத் தெரியாத மிக மிகச் சிறிய விண்மீன்களைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்தத்தான் செய்கின்றனர்.
எனவே, அமேசான், மிசிசிப்பி, கங்கை, நைல், காவிரி முதலியவற்றோடு ஆறுகளைப் பற்றிய நூல்கள் அமைந்து விட வேண்டியதில்லை; அப்பர் பெருமானால் ‘தென் கங்கை’ என்று சிறப்பிக்கப்பெற்றுள்ள கெடிலத்தைப் பற்றியும் ஆராய்ச்சி நூற்கள் எழவேண்டியதுதான்! அந்தப் பணியின் ஒரு கூறே இந்நூலின் எழுச்சி!
* * *
↑ 1 கல் என்பதை 1.6 சிலோ மீட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
↑ மூதுரை.
↑ 'திருக்குறள் - 667.
↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் - முதல் தொகுதி ! ஆறுகள் - பக்கம் 472.
3. கெடிலத்தின் தோற்றம்
தமிழ் நாட்டின் மாவட்டங்களுள் (Districts) ஒன்றாகிய தென்னார்க்காடு மாவட்டம் தன்னுள் எட்டு வட்டங்களைக் (Taluks) கொண்டது. அவை: செஞ்சி வட்டம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் வட்டம், கடலூர் வட்டம், திருக்கோவலூர் வட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், விருத்தாசலம் வட்டம், சிதம்பரம் வட்டம் என்பன. தென்னார்க்காடு மாவட்டம், வங்காளக்குடாக் கடலையடுத்து, செங்கற்பட்டு மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடையில் உள்ளது. இம் மாவட்டத்தின் வடபகுதியாகச் செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களும், தென் பகுதியாக விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றிற்கு இடையே மேற்கும் கிழக்குமாகக் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய வட்டங்கள் முறையே உள்ளன. இம்மூன்றனுள், மேற்கே உள்ள கள்ளக்குறிச்சிக்கும் கிழக்கே உள்ள கடலூருக்கும் நடுவே திருக்கோவலூர் வட்டம் உள்ளது. மொத்தத்தில், தென்னார்க்காடு மாவட்டத்தின் ‘நட்ட நடுவே’ திருக்கோவலூர் வட்டம் உள்ளதெனக் கூறலாம் (படம் பார்க்கவும்). இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு கெடிலம் ஆற்றுக்கு வருவோம்.
மையனூர்
கெடிலம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் என்னும் ஊருக்கு அருகில் தோன்றுகிறது. இந்த மையனூர், கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 16 கி.மீ. தொலைவிலும், தியாக துருக்கத்திற்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலும், ரிஷிவந்தியத்துக்கு வடமேற்கே 12 கி.மீ. தொலைவிலும், சங்கராபுரத்திற்குக் கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும், திருக்கோவலூருக்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையனூருக்குச் சாலை வசதியின்மையால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தொலைவு அளவு ஒரு தோற்றமாக தோராயமாகக் கணிக்கப்பட்டதேயாகும்.
ஓரளவு தெளிவான பாதை வழியாக மையனூரை அடையவேண்டுமெனில், திருக்கோவலூர் - சங்கராபுரம் மாவட்ட நெடும்பாதையில் போகும் பேருந்து வண்டியில் சென்று இடையேயுள்ள அரியலூர் என்னும் ஊரில் இறங்க வேண்டும். அரியலூருக்குத் தெற்கே ஒரு தோற்றம் ஐந்து அல்லது ஆறு கி.மீ. தொலைவில் மையனூர் இருக்கிறது. அரியலூரிலிருந்து மையனூருக்குச் செல்ல நல்ல சாலையின்மையால் பேருந்து வண்டி (பஸ்) வசதி கிடையாது. ஜீப் வண்டி செல்வதற்கும் வசதி போதாதென்றே சொல்ல வேண்டும். எனவே, கால்நடையாகவோ - கட்டை வண்டியின் துணைகொண்டோதான் மையனுரை அடையவேண்டும். மிதி (சைக்கிள்) வண்டியில் வேண்டுமானால் மிதித்து மிதித்துச் சென்று பார்க்கலாம். கட்டை வண்டியிலோ மிதி வண்டியிலோ மையனூர் வரையுந்தான் போகமுடியும். ஊரையடைந்த பின்னர், கெடிலம் தோன்றும் இடத்தைக் கண்டு பிடித்து வணங்க வேண்டுமென்றால் கால்கள் தெம்பாயிருக்க வேண்டும். வயலிலும் வரப்பிலும் கல்லிலும் முள்ளிலும் - பாறையிலும் புதரிலுமாக மூன்று நான்கு கி.மீ. தொலைவு சுற்றினால்தான் கெடிலத்தின் தோற்றத்தைக் காணமுடியும்.
மையனூர் மலை
மையனூருக்கு அண்மையில் தென்புறத்தில் ஒரு மலை உள்ளது. அது எந்த மலைத்தொடர்ச்சியையும் சேர்ந்ததன்று; தனி மலையே. மையனூர் மலை’ என்பது பெயர். ஒரு தோற்றம் 250 அடி உயரம் இருக்கலாம். அம் மலையைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இது, மலைக்குக் கிழக்கே நின்று எடுத்த படமாகும். இம் மலையைச் சுற்றி வடக்கும் தெற்கும் x கிழக்கும் மேற்குமாகப் பப்பத்து (10 x 10) கி.மீ. தொலைவு பரப்பளவுக்கு காடும் மலையும்
செறிந்த சூழல்தான் காட்சியளித்துக் கண்கட்கு விருந்துட்டுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்திலேயே கள்ளக்குறிச்சி வட்டத்தில்தான் காடும் மலையும் மிகுதி. கருடன் பாறை
மையனூர் மலையின் அடிவாரத்தில் - கிழக்குப்புறத்தில் தனித்த பாறை ஒன்று உள்ளது. அது 15 அல்லது 20 அடி உயரம் இருக்கலாம். அப் பாறையின் பெயர் கருடன் பாறை’ என்பது. அப் பாறை கருடன் அலகுபோல் இருப்பதாகவும், அப் பாறையில் கருடன் அலகால் கீறிச் சுனை உண்டாக்கியதாகவும் அவ் வட்டாரத்து மக்களால் கூறப்பட்டு ஒருவகைப் பெயர்க்காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருடன் பாறையை இப் படத்தில் காணலாம்.
சுனை
இந்தப் படமும் பாறையின் கிழக்குப்புறத்தில் இருந்து கொண்டு எடுத்ததுதான். பாறையில் நின்று கொண்டிருப்பவரின் வலக் காலடிக்கு அண்மையில் பாறையின் கீழ்பால் தரையை ஒட்டிக் கறுப்பாக மொத்தையாகப் படத்தில் ஒரு ப்குதி தெரிகிறதே. அங்கே ஒரு சுனை உள்ளது. சுனையைச் சுற்றிச் செடி - கொடி புதர் அடர்ந்து சூழ்ந்திருப்பதால் சுனை தனியாகத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, சுனையை மட்டும் தனித்துப் பிரித்து ஒரு படம் எடுக்க வேண்டியதாயிற்று. சுனையின் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.
கருடன் பாறையின் கீழ்பால் உள்ள சுனை
இந்தப் படமும் சுனையின் கிழக்கே இருந்தபடி எடுத்தாகும். சுனை கருடன் பாறையின் கீழ்பால் இருக்கிறது. இந்தச் சுனை மிகவும் சிறியது ஏறக்குறைய 4 அடி நீளமும் 2 அடி அகலமும் 3 அடி ஆழமும் கொண்டது; தென்புறத்திலிருந்து வடபுறம் வரவரக் குறுகிக் குவிந்துள்ளது. சுனைநீர் முழுவதும் தெரியாதபடி மேலே செடி கொடி - புதர் குவிந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம். வறட்சி மிக்க நாளிலும் சுனையில் நீர் இருந்து கொண்டேயிருக்கும் என அங்குள்ளவர் கூறுகின்றனர். மழை நாளில் சுனையிலிருந்து ஊற்றுப்பெருக்கு வெளியேறிக் கொண்டிருக்குமாம். இந்தச் சுனைப் படம், கோடை நாளாகிய சித்திரைத் திங்களில் எடுத்தது.
இதில் நீர் வெளியேற்றம் தெரியவில்லை. மழை நாளில் நீர் வெளியேற்றம் தெரிந்து கோடை நாளில் தெரியாவிடினும், எந்த நாளிலுமே சுனையிலிருந்து தண்ணீர் தரைக்குக் கீழே உள் ஊற்றாகச் சரிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சுனைதான் கெடிலத்தின் தோற்றம் (மூலம்) ஆகும். சுனையிருக்கும் பகுதி தெய்வத் தன்மை உடையதாகப் போற்றி மதிக்கப்படுகிறது. கருடன் அலகால் கீறி உண்டாக்கிய சுனை என்று சொல்லப்படுவதிலும் ஏதோ தெய்வக் கற்பனை அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
மையனூர் ஏரி
கோடை நாளில் உள் ஊற்று வழியாகவும் மழை நாளில் உள் ஊற்று மேல் ஊற்று இரண்டன் வழியாகவும் சுனையிலிருந்து தண்ணிர் வடக்குச் சரிவை நோக்கி ஓடி, அப் பகுதிக்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலுள்ள ஓர் ஏரியில் கலக்கிறது. அந்த ஏரியிலிருந்து வாய்க்கால் வடிவத்தில் பிரிந்து செல்லும் நீரோட்டமே கெடிலம் ஆறு ஆகும்.
கெடிலத்தின் தோற்றமாகிய இவ்வேரி ‘மையனூர் ஏரி’ என ஊர்ப் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஏரி மையனூர் மலையின் வடபால் உள்ளது; கிழக்கு மேற்காக ஒன்றரை கி.மீ. நீளம் இருக்கும். ஏரி நிரம்பி வழியும் கோடி கிழக்கேதான் உள்ளது. அந்தக் கிழக்குக் கோடிதான் ஆற்றின் இரண்டாவது பிறப்பிடம். இங்கிருந்து சித்திரைக் கோடையிலும் சிறு ஊறல் நீர் சுரந்து சென்று கொண்டேயிருக்கிறது. இதனால்தான் கெடிலம் ஓர் ‘உயிர் ஆறு’ (சீவநதி) என்று சொல்லப்படுகிறது.
இரு பிறப்பு
பூணூல் அணிந்து கொண்டிருக்கும் அந்தணர்களை ‘இரு பிறப்பாளர்’ என்று சொல்வது மரபு. அவர்கள் அன்னை வயிற்றிலிருந்து பிறந்தது ஒரு பிறப்பாம்; பின்னர்ச் சில்லாண்டுகள் கழித்துப் பூணுால் போட்டுக் கொள்வது மற்றொரு பிறப்பாம். அவர்கள் பூணுால் அணிந்த பின்னரே அந்தணர் என்னும் தகுதி பெறுகின்றனராம். அவர்களைப் போலவே கெடிலத்தையும் ‘இரு பிறப்பாறு’ என்று சொல்லலாம். அதன் முதல் பிறப்பு: கருடன் பாறையின் கீழ்பாலுள்ள சுனை, இரண்டாவது பிறப்பு: மையனூர் ஏரியின் கிழக்குக் கோடி. இவ்வகையில் கெடிலம் இருபிறப்பு உடையதாகிறது. இவ்வுண்மையறியாதார் சிலர் கெடிலத்தின் பிறப்பிடம் மையனுர் ஏரி என்றே சொல்லி முடிவு கட்டிவிடுகின்றனர்’ சிறு வகுப்புப் பாடநூல்கள் சிலவற்றில், ‘கெடிலம் கள்ளக் குறிச்சி வட்டத்தில் ஒர் ஏரியிலிருந்து தோன்றுகிறது’ என்றே எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இதிலும் உண்மையிருக்கிறதல்லவா?
‘நதி மூலமும் ரிஷி மூலமும்’
கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரி என்று சொல்பவர்கள், ஏரியுடன் நின்று விடாமல், அந்த ஏரிக்கு எங்கிருந்து தண்ணிர் வருகிறது என்பதையும் ஆராய வேண்டும். அண்மையில் சுனையுடன் கூடிய கருடன் பாறையை அடிவாரத்திலே பெற்றுள்ள மையனூர் மலைப்பகுதியில் ஊறும் நீர் இறங்கி வருவதால் உருவானதே மையனூர் ஏரி. அந்த ஏரி மழையை மட்டும் நம்பியதாயிருந்திருந்தால் அந்த ஏரியிலிருந்து கோடைக் காலத்திலும் நீர் ஊறி ஆறாக ஓடமுடியாது. எனவே, கெடிலத்தின் முதலிடம் (மூலம்) மையனூர் ஏரியன்று, மையனூர் மலைப் பாறைச் சுனைப் பகுதியே. நதிமூலமும் ரிஷிமூலமும் அறிய முடியாது’ என்னும் முதுமொழி ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
கெடிலமும் வையையும்
கெடிலமும் வையையும் ஒரே நாட்டில் தோன்றி ஒரே நாட்டில் முடிவதில் ஒற்றுமை உடையவை; அதாவது, கெடிலம் திருமுனைப்பாடி நாட்டில் தோன்றித் திருமுனைப்பாடி நாட்டிலேயே கடலில் கலக்கிறது; வையை பாண்டிய நாட்டிலே தோன்றிப் பாண்டிய நாட்டிலேயே கடலில் கலக்கிறது. இஃதன்றி, இவ்விரண்டிற்கும் வேற்றுமையில் ஒற்றுமையும் உண்டு; அதாவது, கெடிலம் மையனூர் மலையடிவாரத்தில் தோன்றி மையனூர் ஏரியில் புகுந்து அவ்வேரியிலிருந்து ஆறாய் உருவெடுத்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேற்குமலைத் தொடர்ச்சியில் ஏலக்காய் மலை சார்ந்த ‘வருடநாடு’ பள்ளத்தாக்கில் தோன்றும் வையையாறு, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே 18 கி.மீ. தொலைவிலுள்ள ‘பெரிய கண்மாய்’ என்னும் ஏரியில் போய் விழுந்து, பின்னர் அவ்வேரியிலிருந்து சென்று ‘பாக்’ கடற்காலில் (பாக் சலசந்தி) கலக்கிறது. கெடிலத்தின் தோற்றமும் வையையின் முடிவும் ஒற்றுமையாயிருக்கின்றன. அதாவது, கெடிலம் ஒர் ஏரியிலிருந்து தோன்றுவது போலவும், வையை ஒர் ஏரியில் முடிவது போலவும் தெரிகிறது. கெடிலத்தின் பிறப்பிடம் மையனூர் ஏரிதான் என்று சொல்வது போலவே, வையையின் முடிவிடம் பெரிய கண்மாய் ஏரிதான் என்று சொல்வதுண்டு மையனூர் மலைப்பகுதிக்கும் மையனூர் ஏரிக்கும் இடையேயும், பெரிய கண்மாய் ஏரிக்கும் பாக் கடற்காலுக்கும் இடையேயும் மழைக்காலத்தில் மட்டும் நீர்த்தொடர்பைக் காணமுடியுமாதலின் இவ்வாறு சொல்லப்படுகிறது. இவ்வாறாக, கெடிலம் பிறப்பிடத்தில் இல்லாவிடினும் முடிவிடத்திலாவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற ஒருவகை முறையில் வையையை ஒத்திருப்பதையறியலாம்.
4. கெடிலத்தின் பயணமும்
துணைகளும்
கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர்ப் பகுதியில் தோற்றமெடுக்கும் கெடிலம், அவ்வட்டத்தில் கிழக்கு நோக்கி ஏறக்குறைய எட்டு கி.மீ. தொலைவு ஓடித் திருக்கோவலூர் வட்டத்துக்குள் புகுகிறது; திருக்கோவலூர் வட்டத்தில் அரியூர் வரைக்கும் கிழக்கு நோக்கி ஓடிப் பின்னர் வடகிழக்காய் வளைந்து செல்கிறது; 10 கி.மீ. தொலைவு அளவு வடகிழக்காய் ஓடிய பின்பு தென் கிழக்காய்த் திரும்புகிறது; 20 கி.மீ. தொலைவு அளவு தென்கிழக்காய் ஓடிவந்து, பரிக்கலுக்கும் பாதூருக்கும் இடையே உள்ள மாறனோடை என்னும் ஊருக்கருகில் மீண்டும் கிழக்கு நோக்கிச் சென்று, சேந்தநாடு என்னும் ஊருக்கு வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் கடலூர் வட்டத்துக்குள் புகுகிறது. அங்கிருந்து கடலூர் வரைக்கும் சிறிது தொலைவு கிழக்கும் - சிறிது தெலைவு வடகிழக்கும் - சிறிது தொலைவு தென் கிழக்குமாக மாறி மாறி வளைந்து நெளிந்து நெளிந்து வளைந்து சென்று கடலூருக்கு அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. பிறப்பிடத்திலிருந்து முடிவிடம் வரைக்குமான கெடிலத்தின் பயணத் தொலைவின் நீளம் ஏறக்குறைய 112 கி.மீ. (70 கல்) ஆகும்.
கெடிலம் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் திருக்கோவலூர் வட்டத்தின் முற்பகுதியிலும் பெரும்பாலும் பாறைகள் நிறைந்த பாதையிலே வருகிறது என்று சொல்லலாம். இப் பகுதியில் சில இடங்களில் கெடிலத்தின் கரைகளையொட்டி வண்டியும் செல்ல முடியாத அளவுக்குப் பாறை நெருக்கம் மிக்குள்ளது. பல இடங்களில் ஆற்றுப் படுகையில் மணலைக் காண்பது அரிது. அந்த வட்டாரத்தில் அண்மைக்கு அண்மையில் சிறுசிறு பாறைகளும் சிறுசிறு கற்குன்றுகளும் இருக்கக் காணலாம். பாறையோ குன்றோ இல்லாத இடங்களில் தனித்தனிக் கற்களாயினும் தரைக்கு மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும்.
திருக்கோவலூர் வட்டத்தில் சேந்தமங்கலம் - திருநாவலூர்ப் பகுதிக்குக் கிழக்கிலிருந்து பாறைகளையும் கற்குன்றுகளையும் அவ்வளவாகப் பார்க்கமுடியாது. இங்கிருந்துதான் ஆற்றுப்படுகை மணற்பாங்காயிருக்கக் காணலாம். அதைத் தொடர்ந்து கடலூர் வட்டமும் மணற்பாங்கானதேயாம்.
கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர் மலைப்பகுதியில் தோன்றித் திருக்கோவலூர் வட்டத்தின் முற்பகுதி வரைக்கும் பாறைகளிடையே ஓடிவருவதால்தான், அப்பர் பெருமான் தேவாரத்தில்,
[1]"வரையார்ந்த வயிரத்திரள் மாணிக்கம்
திரையார்ந்த புனல்பாய் கெடிலம்"
[2]"வரைகள் வந்திழியும் கெடிலம்
என்று பாடியுள்ளார். கெடிலம், தான் தோன்றும் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வாய்க்கால் போலவும், திருக்கோவலூர் வட்டத்தின் தொடக்கத்தில் ஓர் ஓடை போலவுமே தோற்றமளிக்கிறது. பின்னர்க் கிழக்கு நோக்கி வரவரத்தான் வளர்ந்து விரிகிறது. இந்நிலை எல்லா ஆறுகளுக்கும் உள்ள பொது இயல்புதான்.
கடலூர் வட்டத்தில் அகன்று விரிந்துள்ள கெடிலம், அங்கே பாறைகளுக்கிடையே ஓடாவிடினும், திருவதிகைக்குக் கிழக்கே சென்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து கடலூர் பகுதி வரைக்கும், செங்கல் மலைத் தொடர்ச்சியாகிய கேப்பர் மலை (பீடபூமி) மேட்டு நிலத்தின் வடபுறமாக அதன் அடிவாரத்தையொட்டி ஓடி, கடலூர்க் கடற்கரைக்கு அருகில் மூன்று பிரிவாகப் பிரிந்து மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது.
துணைகள்
குறுகிய காலத்தில் குறுகிய முயற்சியில் தம் குறிக்கோளை முடித்து விடுபவர் போல, கெடிலம் 112 கி.மீ. (70 கல்) நீளம் குறுகிய பயணத்திலேயே தன் கதையை முடித்துக்கொள்ளினும், ‘அரைக்காசு கல்யாணமாம் - அதிலே ஒரு வாணவேடிக்கையாம்’ என்ற பழமொழியேபோல, தன் குறுகிய பயணத்திலேயே பேராறுகள் புரியும் அருஞ்செயல்களைத் தானும் புரிகிறது; பேராறுகள் பெற்றுள்ள பெரும் பேறுகளைத் தானும் பெற்றுள்ளது. அப்பேறுகளுள், பயணத்திடையே கிடைத்திருக்கும் துணைகள் குறிப்பிடத்தக்கவையாம்.
தாழனோடை ஆறு (சேஷ நதி )
‘துணையோடின்றித் தனிவழி ஏகேல்’ என்பதற்கேற்ப, கெடிலத்தின் பயணத்திடையே இரண்டு துணையாறுகளும் பல கால்வாய்களும் வந்து சேருகின்றன. முதல்முதலாகத் திருக்கோவலூர் வட்டத்தில் ‘தாழனோடை’ என்னும் சிறு துணையாறு வந்து கெடிலத்தோடு தென்கரையில் கலக்கிறது. இந்தக் கலப்பு, விழுப்புரம் விருத்தாசலம் புகைவண்டிப் பாதையிடையே பரிக்கல் நிலையத்திற்கும் உளுந்தூர்ப்பேட்டை நிலையத்திற்கும் இடையேயுள்ள பாதூர்ப் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 2 கி.மீ தொலைவு அளவில் மாறனோடை என்னும் ஊருக்கருகில் நிகழ்கிறது, இந்தத் தாழனோடை, தான் கெடிலத்தோடு கலக்கும் பாதூருக்கு மேற்கே ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் - இறையூருக்கும் எலவானாசூருக்கும் இடையேயுள்ள புகைப்பெட்டி, குஞ்சரம் என்னும் ஊர்களின் அருகிலிருந்து தோன்றி வருகிறது. ஒரு சிறிய ஏரிப் பகுதியிலிருந்து தோன்றும் இவ்வோடை, வழியிலும் சில ஏரிகளின் தொடர்புடன் சில கால்வாய்களையும் பெற்று வரவரப் பெரிதாகி 20கி.மீ. பயணத்தின் முடிவில் கெடிலத்தோடு கலந்துவிடுகிறது.
வேறு பெயர்கள்
சிலவிடங்களில் இச்சிற்றாற்றின் இரு கரைகளிலும் தாழை அடர்ந்திருப்பதால் இது தாழனோடை எனப் பெயர் பெற்றது. இந்த ஆறு எந்தெந்த ஊரின் வழியாக வருகிறதோ அந்தந்த ஊர்ப் பெயராலும் அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக, இது களவனூர் என்னும் ஊர் வழியாக வருவதால் ‘களவனூர் ஆறு’ என அவ்வூர்ப் பக்கத்தில் அழைக்கப்படுகிறது. இஃதன்றி, ‘சேஷநதி’ என்னும் பெயரும் இதற்கு வழங்கப் படுகிறது. புராண நம்பிக்கை அடிப்படையில், கெடிலத்தைக் கருடநதி எனவும் இந்தத் துணையாற்றைச் சேஷநதி எனவும் கொண்டு, கருடநதியும் சேஷநதியும் ஒன்று கூடுவதாகச் சொல்லப்படுகிறது. கருடனும் சேஷனும் (ஆதிசேஷன்) திருமாலுக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றதாகப் புராணக்கதை கூறுகிறதல்லவா?
பாலமும் அணையும்
இந் நீரோட்டம் ஓடை என்னும் பெயரால் அழைக்கப் படினும் கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல வளர்ந்து ஒரு சிறிய ஆறு போலவே தோற்றமளிக்கிறது. திருவெண்ணெய் நல்லூரிலிருந்து களமருதூர் வழியாக உளுந்தூர்ப் பேட்டை செல்லும் மாவட்டக் குறும்பாதையில் களவனூருக்கு அருகே இந்தத் தாழனோடை ஆற்றுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வழியாகப் பேருந்து வண்டி போக்கு வரவு இப்பொழுது நடைபெறுகிறது. தாழனோடையைக் கடக்கும் இக் குறும்பாதை கெடிலத்தையும் கடக்கிறது; ஆனால், இப் பாதையில் தாழனோடையில் பாலம் உண்டு; கெடிலத்தில் பாலம் இல்லை.
பாதூருக்கு அருகே தாழனோடை ஆற்றில் ஒரு சிறிய அணை கட்டப்பட்டுத் தண்ணீர் பாதூர் ஏரிக்கு அனுப்பப் படுகிறது. திருக்கோவலூர் வட்டத்தில் பாதூர் ஏரி ஒரு பெரிய ஏரியாகும். இவ்வாறாகத் தாழனோடை கெடிலம் போலவே பல ஏரிகளிலிருந்துதான் தண்ணீர் பெறுவதன்றி, தானும் ஏரி நிரப்பும் பணிபுரிகிறது.
மலட்டாறு
அடுத்து, திருக்கோவலூருக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் தென்பெண்ணை யாற்றிலிருந்து ஒரு சிற்றாறு பிரிந்து வந்து தென்கிழக்காக 35 கி.மீ. தொலைவு ஓடி, கடலூர் வட்டத்தில் அப்பர் பிறந்த திருவாமூருக்கு மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் வடகரையில் அதனோடு கலக்கிறது. இந்த ஆற்றிற்கு ‘மலட்டாறு’ என்பது பெயர். மலட்டாறு கெடிலத்தோடு கலக்கிறது என்று சொல்வதினும், ஒரு பாலம்போல் பெண்ணையாற்றையும் கெடிலத்தையும் இணைக்கிறது என்று சொல்லலாம்.
இந்த மலட்டாற்றின் கதையே தனி. இதன் கரையில் தேவாரப் பாடல் பெற்ற பதிகள் மூன்று உள்ளன. இது பெண்ணையாற்றின் பழைய பாதை எனக் கருதப்படுகிறது பெண்ணையாறு தன் பழைய பாதையை மலட்டாறு என்னும் பெயரில் விட்டுவிட்டு வடக்கு நோக்கி வளைந்து வேறு புதிய பாதை அமைத்துக்கொண்டு ஓடுகிறது. முன்பு, பெண்ணை யாற்றுப் பாதையாக இருந்தாலும் இப்போது மலட்டாறு மலட்டாறு தானே!
மலட்டாறு என்னும் பெயரிலிருந்தே அந்த ஆற்றின் வளம் புரிகிறது. மலடு என்றால் பிள்ளை பெறாத்தன்மை என்பது பொருள். இந்த ஆறு, தனக்கெனத் தனித்தன்மை ஒன்றும் இன்றி வேறொரு பெரிய ஆற்றிலிருந்து தோன்றுவதாலும், மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் பெற்று மற்ற காலங்களில் வறண்டிருப்பதாலும் மலட்டாறு என அழைக்கப்பட்டது. இது பழைய கதை. பிற்காலத்தில் பெண்ணையாற்றில் அணை கட்டப்பட்டிருப்பதால் பெண்ணையாற்றிலிருந்து ஓரளவு தண்ணீர் மலட்டாற்றிற்குக் கிடைக்கிறது. இது பெண்ணை யாற்றில் பிரிகிற இடத்திலிருந்து 16 கி.மீ. தொலைவு வரை ஓரளவு நீர் உடையதாகி 4,400 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியும் செய்கிறது. அதன் பின்னர், போதிய நீர்வளம் இன்றி வெற்று வடிகாலாக ஓடிவந்து கெடிலத்தில் இணைகிறது.
மலட்டாற்றினால் கெடிலத்தைவிடப் பெண்யைாற்றுக்கே நன்மை மிகுதி. மலட்டாற்றினால் கெடிலத்திற்கு நன்மையை விடத் தீமையே மிகுதி எனலாம். பெண்ணையாற்றிலிருந்து மலட்டாற்றின் வாயிலாகக் கெடிலத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீராவது கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வெள்ளக் காலத்தில் பெண்ணையாற்றின் அரக்க வெள்ளத்திற்கு ஒரு போக்குக் காட்டும் முறையிலேயே மலட்டாறு அமைந்துள்ளது. பெண்ணையாற்று வெள்ளத்தின் ஒரு பகுதி மலட்டாற்றில் திரும்பிவிடுவதால் அதன் வேகம் தணிய, அதன் கரையிலுள்ள பகுதிகள் ஓரளவு தப்புகின்றன. அதே நேரத்தில் அந்த அரக்க வெள்ளம் மலட்டாற்றின் வழியாகக் கெடிலத்தில் பாய்வதால் கெடிலக்கரைப் பகுதிகள் கேடுறுகின்றன.
வெள்ளக் காலத்தில் மட்டும் பெண்ணையாற்றிலிருந்து கெடிலத்திற்குக் கிடைக்கும் இந்த நீர்க்கொடை, மிகவும் வயிறு நிரம்பிவிட்ட ஒருவரது வாயில் மேலும் வலிந்து திணிக்கப்பட்ட உணவுப் பொருள் போன்றதாகும். பெண்ணையாறு தன்னால் தாங்க முடியாத சுமையின் ஒரு பகுதியைக் கழித்துக் கெடிலத்தின் தலையில் கட்டிவிடுகிறது என்றும் கூறலாம். பெண்ணைக்கும் கெடிலத்திற்கும் இடையே இந்த வேலையைச் செய்யும் தூதுவன்தான் மலட்டாறு. பெண்ணையாற்றின் வேகத்தைத் தடுப்பதற்காக இடையாறு என்னும் இடத்தில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புக்கரை போன்ற சிறு அணையை உடைத்துக்கொண்டு அரக்க வெள்ளம் ஓடி வந்து கெடிலத்தை ஒரு கை பார்த்து விட்டதுண்டு. அந்தோ, அதற்குமேல் மலட்டாறுதான் என்ன செய்யும்! எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கெடிலமோ, பெண்ணையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் எளிய இரவலனாக இல்லாமல் தலைக்குமேல் தனக்குத் துன்பம் உள்ள போதும், பெண்ணையாற்றின் துன்பத்திலும் பங்கு கொள்ளும் பெருந்தகையாளனாகக் காட்சியளிக்கிறது. கெடிலத்திற்கு இப்படியொரு பெருமையைத் தேடித்தந்த பெருமை மலட்டாற்றிற்கு உரியது; அதனால், மலட்டாற்றையும் பாராட்ட வேண்டியதுதான்.
பாலமும் அணையும்
மலட்டாறுதானே என்று இதை எளிதாய்ப் புறக்கணித்து விடுவதற்கில்லை. வெறும் தரைப் பாலம் அமைத்து இதை ஏமாற்றிவிட முடியாது. கடுமழை பெய்யும் காலத்தில் இதில் பெருவெள்ளம் ஓடுவதால் இதைக் கடப்பதற்குப் பெரிய பாலம் வேண்டியுள்ளது. கடலூரிலிருந்து பண்ணுருட்டி - திருவெண்ணெய் நல்லூர் வழியாகத் திருக்கோவலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பண்ணுருட்டிக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் மேல் உயரமான அழகிய பாலம் ஒன்று கட்டப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவெண்ணெய் நல்லூர் (ரோடு ) புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 11 கி.மீ. தொலைவில். திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் இடையாறு என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில் மலட்டாற்றில் ஒருசிறு அணை கட்டப்பட்டுள்ளது. இடையாறு அணை என்று இது அழைக்கப்படுகிறது. இப்படியாக மலட்டாறும் ஆற்றிற்குரிய இலக்கணங்களுள் பலவற்றைப் பெற்றுப் பயனளிக்கிறது.
விருத்த பினாகினி
மலட்டாறு என்றதும் ஒரு சிலருக்குக் குழப்பம் ஏற்படலாம். ஏனெனில், மலட்டாறு என்னும் பெயரில் மற்றும் ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறும் பெண்ணையாற்றிலிருந்துதான் பிரிகிறது. ஆனால், இது கடலோடு சென்று கலக்கிறது. இந்த மலட்டாற்றைப் பற்றி மட்டும் தெரிந்து வைத்து, கெடிலத்தோடு கலக்கும் மலட்டாற்றைப் பற்றி அறியாதவர்கள் குழப்பம் அடையத்தானே நேரும்! கெடிலத்தோடு கலக்கும் மலட்டாறு திருக்கோவலூருக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் வீரமடை என்னும் ஊருக்கருகில் பெண்ணையாற்றின் வலப்பக்கத்திலிருந்து பிரிந்து திருக் கோவலூர் வட்டத்தைக் கடந்து கடலூர் வட்டத்துள் புகுந்து திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலந்து விடுகிறது. கடலோடு கலக்கும் மலட்டாறு, பெண்ணையாறு திருக் கோவலூர் வட்டத்தைக் கடந்ததும், சிறிது தொலைவிலேயே விழுப்புரம் வட்டத்தில் அப் பெண்ணையாற்றின் இடப்பக்கத்திலிருந்து பிரிந்து, விழுப்புரம் வட்டம், கடலூர் வட்டம் முன்னாள் பிரஞ்சிந்தியாவாகிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சிறுசிறு திட்டுப் பகுதிகள் ஆகியவற்றின் வழியாக ஓடி, கடலூருக்கு வடக்கே சில கல் தொலைவில் மதலப்பட்.டு என்னும் ஊருக்கு அருகில் கடலோடு கலக்கிறது. இந்த மலட்டாற்றுக்கு ‘விருத்த பினாகினி’ என்றும் ஒரு விருதுப் பெயர் உண்டு. பினாகினி என்றால் பெண்ணையாறு. அதிலிருந்து பிரியும் மலட்டாறு விருத்த பினாகினி எனப்படுகிறது. எனவே, கெடிலத்தோடு கலக்கும் மலட்டாற்றை விருத்த பினாகினியினின்றும் வேறு பிரித்துணர வேண்டும்.
துணைக் கால்வாய்கள்
இப்படியாகக் கெடிலத்தோடு இரண்டு துணையாறுகள் கலப்பதன்றி, இடையிடையே கால்வாய்கள் பலவும் வந்து கலக்கின்றன. திருக்கோவலூர் வட்டத்தில் சீக்கம்பட்டு, தாமல் முதலிய ஊர்ப் பக்கத்திலிருந்து ஒரு கால்வாய் வந்து, புத்தனேந்தல் அணைக்கு மேற்கே கெடிலத்தின் தென்கரையில் கலக்கிறது. அடுத்து, பெரும்பாக்கம் ஏரியிலிருந்து கழிவாக வரும் ‘மல்லிகா ஓடை’ என்னும் கால்வாய் அந்தப் பகுதிக்கு அண்மையில் கெடிலத்தின் வடகரையில் கலக்கிறது. அதனை யடுத்துக் கிழக்கே, பரிக்கல் ஏரியிலிருந்துவரும் ‘மாறனோடைக் கால்வாய்’ வடகரையில் கலக்கிறது. அதற்கும் கிழக்கே, திருநாவலூர் ஏரிப் பக்கத்திலிருந்து திருநாவலூர்ச் சிவன் கோயிலின் மேற்கு மதிலையொட்டி வரும் ‘நாவலோடை’ என்னும் திருநாவலூர்க் கால்வாய் அவ்வூர்க்கருகில் வடகரையில் கலக்கிறது. அதற்கும் சில கி.மீ. கிழக்கே, அதாவது, திருவாமூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் ‘இராகவன் வாய்க்கால்’ என்னும் ஒரு கால்வாய் கெடிலத்துடன் வடகரையில் கலக்கிறது. இந்த இராகவன் வாய்க்கால், திருக்கோவலூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் பெண்ணையாற்றிலிருந்து பிரிந்து வழியிலுள்ள பல ஊர்களின் ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிக்கொண்டு இங்கே வந்து கெடிலத்தோடு கலக்கிறது. மலட்டாற்றினாலன்றி, இந்த இராகவன் வாய்க்காலாலும் பெண்ணையாற்றிற்கும் கெடிலத்திற்கும் தொடர்புள்ளமையை அறியலாம்.
அடுத்தபடியாக, திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தின் தென்கரையில் வந்து கலக்கும் ‘நரியன் ஓடை’ என்னும் கால்வாய் மிகவும் இன்றியமையாதது. கெடிலத்துடன் கலக்கும் கால்வாய்களுக்குள் இதனை மிகப் பெரியது எனலாம். கூட்டடி, ஆரியநத்தம், பாலக்கொல்லை முதலிய பல ஊர்ப் பக்கங்களிலிருந்து வரும் தண்ணீர் இந்த ஓடையாக உருவாகிறது. ஒரு சிற்றாறு போன்ற இந்தப் பெரிய ஓடையில் வெள்ளம் போகும் போது ஆண்டுதோறும் ஒரு சிலராவது அகப்பட்டு இறந்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்து, கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டிக்கு மேற்கே சேமக்கோட்டை, இலந்தைமேடு முதலிய ஊர்ப் பக்கத்திலிருந்து வரும் ‘இலந்தை மேட்டான் ஓடை’ என்னும் கால்வாய் கெடிலத்தின் வடகரையில் கலக்கிறது. மற்றும், திருவதிகைக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் ஆண்டிக்குப்பம் என்னும் இடத்திலிருந்து ஒரு கால்வாய் வந்து திருவதிகைக்கு அண்மையில் கெடிலத்தின் தென்கரையில் கூடுகிறது.
அதற்கும் கிழக்கே - அதாவது கடலூருக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் ‘நடுவீரப்பட்டு வாய்க்கால்’ என்னும் ஒரு கால்வாய் வந்து கெடிலத்தின் தென்கரையில் சேர்கிறது. இது சேருமிடத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு மலைப்பாங்கில் ‘தேவமேடு’ என்னும் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதிலிருந்து இந்தக் கால்வாய் தோன்றி, நடுவீரப்பட்டுக்கும் சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்கும் நடுவாக ஓடிவந்து அவ்வூர்கட்கருகில் கெடிலத்துடன் கூடுகிறது. இந்த நீரோட்டம் என்றும் வற்றுவதேயில்லை. பெருமழை பெய்யும்போது இதில் ஓடும் முழங்கால் அளவு தண்ணீரில்கூட யாரும் நடந்து கடந்து செல்ல முடியாது. மீறி நடந்தால், நடந்தவரை உருட்டிப் புரட்டியடித்து இழுத்துக் கொண்டு சென்று விடும். அவ்வளவு விரைந்து ஓடக்கூடியது இந்தக் கால்வாய். இது, தன்னைக் கடப்பதற்காக இரு கரைகளிலும் காத்திருப்பவர்களின் பொறுமையைச் சிறிது நேரம் பதம்பார்த்துவிட்டு உடனே அடங்கி விடும். அதாவது, மழை விட்டதும் கால்வாய்நீரும் அதன் வேகமும் மிகமிகக் குறைந்து விடும். மழையில்லாத கோடையில்கூட இக்கால்வாயில் சிறிதளவாவது இனிய தெளிவான ஊற்று நீர் ஓடிக்கொண்டிருப்பது, இந்தக் கால்வாய்க்கு மட்டுமின்றி, இதைக் கப்பமாகப் பெற்றுக்கொள்கின்ற கெடிலத்திற்கும் ஒரு பெருமையே.
இப்படியாக இன்னும் பல கால்வாய்கள் ஆங்காங்கே கெடிலத்தோடு வந்து சேர்கின்றன. துணைக்கால்வாய்கள் வந்து சேர்வது போலவே கிளைக்கால்வாய்களும் அணைகளிலிருந்து பிரிந்து பாசனத்திற்குப் பயன்படுகின்றன, தான் பெறுஞ்செல்வங்களைப் பிறர்க்கு வாரி வாரி வழங்கிவிட வேண்டுமல்லவா? அணைகள் உள்ள இடங்களில் அணைகளின் மேல்புறத்திலிருந்து கால்வாய்கள் பிரிவதன்றி, அணை இல்லாத சில இடங்களிலும் ஆற்றிலிருந்து கால்வாய்கள் பிரிக்கப்பட்டுப் பாசன வசதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘தாழனோடை’ அல்லது ‘சேஷநதி’ என்று சொல்லப்படும் துணையாறு கெடிலத்தோடு கலக்கும் இடத்திற்குக் கிழக்கே சிறிது தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் ‘சேந்தமங்கலத்தான் ஓடை’ என்னும் பெயரில் ஒரு கால்வாய் பிரிந்து, சேந்தமங்கலம், அதற்கும் தென் கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள சேந்த நாடு முதலிய ஊர்களில் சென்று பாய்கிறது.
மையனூர் ஏரியிலிருந்து தோன்றுகிற கெடிலம் - வழியில் பல ஏரிகளிலிருந்து தோன்றும் துணைக் கால்வாய்களைப் பெற்று வரும் கெடிலம், தானும் தன் கிளைக்கால்வாய்களின் வழியாகச் சில ஏரிகளை நிரப்புகிறது. எடுத்துக் காட்டாக, கடலூர் நகராட்சியின் தென்மேற்கு மூலையில் - புருகேசுபேட்டை என்னும் ஊர் எல்லையில் - கேப்பர் மலையின் அடியில் உள்ள ‘கொண்டங்கி’ என்னும் ஏரி கெடிலத்தின் கிளைக்கால்வாயால் நிரப்பப்படுகிறது, மூன்று பக்கம் மலை சூழ்ந்த இந்த ஏரிக்கரையில் நின்று மெல்லிய காற்றுடன் இயற்கைக் காட்சிகளை நுகர்வது கண்ணுக்குத் தெவிட்டாத பெருவிருந்து!
இப்படியாகக் கெடிலம், தன் பயணத்திடையே போக்கும் வரவும் புணர்வும் உடையதாய்த் திகழ்கிறது.
* * *
↑ அப்பர் தேவாரம் - திருவதிகைப் பத்தாம் பதிகம் - 11.
↑ அப்பர் தேவாரம் - திருவதிகைப் பதினோராம் பதிகம் - 7.
5. வரலாறு கண்ட திசைமாற்றம்
எந்த ஆறும், தோன்றும் இடத்திலிருந்து முடியும் இடம் வரைக்கும் பல இடங்களில் வளைந்து வளைந்து திரும்பித் திரும்பிப் பல திசைமாற்றங்களைப் பெறுவது இயல்பு. கெடிலமும் இதற்கு விதிவிலக்கன்று, பல இடங்களில் நெளிந்து வளைந்து பல திருப்பங்களைப் பெற்றுள்ளது. பெரும்பாலும் ஆறுகளின் வளைவான திசைமாற்றம் சிறிது சிறிதாகத்தான் நிகழ்ந்து கொண்டுபோகும். அதாவது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஓர் ஆறு, திடீரென ஓர் இடத்தில் இந்தக் கோணத்தில் வடக்கு நோக்கித் திரும்புவது அரிது. கிழக்கு நோக்கி ஓடிவரும் ஆறு வடக்கு நோக்கி வளைந்து திரும்பி யிருக்கிறதென்றால், அந்தத் திருப்பம் செங்கோணத்தில் இல்லாமல், குடையின் கைப்பிடிபோல் சிறிது சிறிதாக வளைந்தே ஏற்பட்டிருக்கும். ஆனால், கெடிலமோ, தன் பயணத்தின் இறுதியில் ஓரிடத்தில் _ இதுபோல் செங்கோணமாக வளைந்துள்ளது. இதனால், ஒரு வரலாற்று உண்மையும், இலக்கிய உண்மையும் தவறுபட வழி ஏற்படுகிறது. எனவே, அந்த வரலாறு நிகழ்ந்த பின்னரே இந்தச் செங்கோணத் திருப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தெளியவேண்டும். இதுபற்றிய சுவையான விவரம் வருமாறு:
திருவதிகைப் பக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் கெடிலம், திருவயிந்திரபுரம் வந்ததும் திடீரென இந்தச் செங்கோணத்தில் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இந்தத் திருப்பத்திற்குக் காரணம் கேப்பர் மலையின் (கேப்பர் மலைப் பீடபூமியின்) அமைப்புதான். திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து திருவயிந்திரபுரம் வழியாகக் கடலூரை நோக்கி மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையில், திருவயிந்திரபுரத்தையொட்டி ஒரு பிதுக்கம் காணப்படுகிறது. அதாவது, கேப்பர் மலையிலிருந்து ஒரு சிறு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டுள்ளது. கெடிலம் ஆறு, திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலை அடிவாரத்தையொட்டியே ஓடிவந்து கொண்டிருக்கிறது. வழியில் திருவயிந்திரபுரத்தில், கேப்பர் மலையிலிருந்து வடக்கு நோக்கிப் பிதுங்கி நீட்டிக் கொண்டிருக்கும் சிறுகுன்றுப் பகுதி தடுப்பதால், கெடிலம் தொடர்ந்து கிழக்கு நோக்கி ஒட முடியாமல்,_ இதுபோல் செங்கோணமாகத் திடீரென வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறது. அது திரும்பும் முனையில்தான் திருவயிந்திரபுரம் இருக்கிறது.
உத்தர வாகினி
இதுவரைக்கும் மேற்கும் கிழக்குமாக இருக்கும் கெடிலம் திருவயிந்திரபுரத்தருகில் தெற்கும் வடக்குமாகக் காட்சி யளிக்கிறது, இதனால், திருவயிந்திரபுரத்திற்கு ஒரு சிறந்த பெருமை வைணவப் பெரியார்களால் கூறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமையும் திருக்கோயில் பெருமையும் உடைய திருப்பாதிரிப் புலியூர், திருவதிகை, திருவாமூர், திருநாவலூர் முதலிய திருப்பதிகள் கெடிலத்தின் வடகரையிலும், திருமாணிக்குழி, சேந்த மங்கலம் முதலிய திருப்பதிகள் கெடிலத்தின் தென்கரையிலும் உள்ளன. இந்தத் திருப்பதிகளின் அருகே கெடிலம் மேற்கும் கிழக்குமாக ஒடுகிறது. இத்திருப்பதிகள் சைவசமயப் பெருமை பெற்றவை.
கெடிலக் கரையை ஒட்டியுள்ள புகழ்பெற்ற வைணவத் திருப்பதியோ திருவயிந்திரபுரம் ஒன்றே ஒன்றுதான். இந்தத் திருப்பதியில்தான் கெடிலம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒடுகிறது. இது ஒரு பெரிய சிறப்பாம். ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. வடக்கு நோக்கி ஒடும் ஆற்றின் கரையில் இருப்பது ஊருக்கும் ஒரு பெரிய சிறப்பாம். கெடிலம் இங்கே வடக்கு நோக்கி ஒடும் தனிப்பெருமை உடைத்தாயிருப்பதால், ‘உத்தர வாகினி’ என ‘வேதாந்த தேசிகர்’ போன்ற பெரியோர்களால் அழைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. உத்தரம் என்றால் வடக்கு உத்தர வாகினி என்றால், வடக்கு நோக்கி ஒடும் ஆறு.
கெடிலம் உத்தரவாகினி எனச் சிறப்பிக்கப் பெற்றிருப்பதிலுள்ள மறைபொருள் (இரகசியம்) யாது?
தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தில் வரவரக் குறுகிக் கொண்டிருக்கும் தென்கோடியில் இருப்பதாலும், தமிழ் நாட்டின் நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்திருப்பதாலும் தமிழ் நாட்டு ஆறுகள் மேற்கிலே மேற்குத் தொடர்ச்சி மலையிலே தோன்றிக் கிழக்கு நோக்கி ஓடி வங்கக் கடலில் வந்து கலக்கின்றன. இந்த நிலையில் வடக்கு நோக்கி ஒடுவதற்கு வாய்ப்பில்லை. கிழக்கு நோக்கி ஒடும் ஆறுகளும் சில இடங்களில் வடக்கு நோக்கியோ தெற்கு நோக்கியோ வளைவதுண்டு. அந்த வளைவும் செங்கோணமாக இருப்பது அரிது அப்படியே செங்கோணமாக வளைந்திருப்பினும், ஆற்றின் தெற்கு வடக்கான அந்தப் பகுதியில் புகழ்பெற்ற திருப்பதிகள் அமைந்திருப்பது அரிது. ஆனால், இந்த வாய்ப்பு கெடிலத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் ஒருசேரக் கிடைத்திருக்கிறது. ‘கிழக்கு நோக்கி ஒடுவதுதான் இயற்கையான முறை; வடக்கு நோக்கி ஓடுவது சிறப்பன்று’ என்று யாரும் வீண்வம்பு செய்யாதபடி, வடக்கு நோக்கி ஒடுவதைப் பெருமைக்கு உரியதாகப் பெரியவர்கள் பெரிதுபடுத்துப் பேசியிருப்பது, கெடிலமும் திருவயிந்திரபுரமும் சேர்ந்து பெற்ற பெரும்பேறே.
இயற்கைக் காட்சிச் சிறப்பு
உத்தர வாகினி எனப் பெரியவர்களால் புகழப்பட்டிருக்கும் தெய்வத் தன்மையினால் மட்டுமின்றி, இயற்கைச் சூழ்நிலை யாலும் அந்த இடம் மிகச் சிறந்ததே. கெடிலத்தின் பயணத் திடையே திருவயிந்திரபுரக் கரைப்பகுதிதான் அழகு மிக்க இயற்கைக் காட்சி உடையதாகும். ஆறு வளையும் செங் கோணத்தின் இரு சிறகுகளும் மலைதான். மலை மேலும் மலையின் கீழும் கோயில்கள் உள்ளன. கீழ்க்கோயிலின் சுவரின்கீழ் ஆறு ஓடுகிறது. கோயிலிலிருந்து ஆற்றிற்கு இறங்கும் படிகளில் நின்று கொண்டு மேற்கே பார்த்தால் ஆற்றின்
அனைத்தேக்கமும் பசுமையான எதிர்க்கரைப்பகுதிகளும் காட்சியளிக்கும். கிழக்கே திரும்பிப் பார்த்தால் கோயிலும் மலையும், தெற்கே பார்த்தால் மலையின் வளைவும் ஆற்றின் வளைவும். வடக்கே பார்த்தால் திருவயிந்திரபுரம் அணை. மலை ஆறு இவற்றின் வளைவு, கோயில், அணை ஆகிய மூன்றும் அடுப்புக் கூட்டியதுபோல் ஒன்றுக் கொன்று மிக அருகிலேயே இருக்கக் காணலாம். மேலே மலையும் கீழே ஆறும் ஒருசேர வளைந்துள்ள இடம், அணை கட்டுவதற்கு மிகவும் தகுந்த சூழ்நிலை உடையதல்லவா? அதனால்தான் இந்த இடத்தில் திருவயிந்திரபுரம் அணை கட்டப்பட்டுள்ளது, அணையின் தேக்கத்துக்கும் மலைக்கும் இடையிலுள்ள திருக்கோயில் பலவகையிலும் சிறப்புடையதே!
மேலுள்ளது, திருவயிந்திரபுரத்தில் ஆறு வடக்கு நோக்கி வளைவதற்குக் காரணமான கேப்பர் மலைப்பகுதியின் படமாகும். படத்தில், நம் வலக்கைப் பக்கமாக இருக்கும் மலை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிக் கிடக்கும் கேப்பர் மலை. இடக்கைப் பக்கமாக இருக்கும் மலை, கேப்பர் மலையிலிருந்து வடக்கு நோக்கிப் பிதுங்கி நீட்டிக் கொண்டிருக்கும் திருவயிந்திரபுரம் மலைக்குன்று. இந்தப் பிதுக்கம், கேப்பர் மலையிலிருந்து நேர் நீட்டமாக இல்லாமல், கொக்கிபோல் வளைந்திருப்பதைப் படத்தில் காணலாம். படத்தில் இருகைப் பக்கங்களிலும் தெரியும் இரண்டுமலைப் பகுதிகளின் நடுவே தொலைவிலே ஒரு மலைப் பகுதி இருப்பதைக் காணலாம். அது தனிமலையன்று; வலக்கைப் பக்கம் தெரியும் கேப்பர் மலையையும் இடக்கைப் பக்கம் தெரியும் திருவயிந்திரபுரம் குன்றையும் தொடர்ச்சியாக இணைக்கும் கொக்கி போன்ற மலை வளைவின் நடுப்பகுதியே அது. இந்த மலை வளைவின் நடுவே ஒரு மலைப் பள்ளத்தாக்கு இருப்பதையும். அப் பள்ளத்தாக்கைச் சுற்றி மூன்று புறங்களில் மலைப் பகுதியும் ஒரு புறத்தில் ஆறும் இருப்பதையும் காணலாம். அம்மலைச் சரிவுப் பள்ளத்தாக்கு, மிகவும் அழகானதும் வளமுள்ளதுமாகும். அது, சுற்றியுள்ள மலைப் பகுதியை நோக்கப் பள்ளத்தாக்கே தவிர தன் கீழே ஒடும் ஆற்றை நோக்க மேட்டுப் பகுதியே. இந்த மலைப் பிதுக்க வளைவின் கீழேதான் கெடிலம் வளைகிறது. இந்த இடம் கண் கொள்ளாக் காட்சியாகும்.
அடுத்த பக்கத்தில் காணப்படுவது கெடிலத்தின் கரையில் உள்ள திருவயிந்திரபுரம் தேவநாத சுவாமி கோயிற் காட்சி. கோயில் கோபுரங்களும் வேறு சில பகுதிகளும் தண்ணிருக்குள் தலைகீழாய்த் தெரிவதைக் காணலாம். ஆற்றின் வளைவுக்கும் அணைக்கும் இடைப்பட்ட பகுதி இது. இந்த இடத்தில் நின்று கொண்டு, நான்கு பக்கங்களிலும் சுற்றிச் சுற்றிக் கட்புலனை மேயவிட்டால் தெவிட்டாத விருந்து கிடைக்கும். இங்கிருந்து பிரிந்துவர மனமே வராது. ஆற்றின் வளைந்த தோற்றத்தின் அழகை அடுத்துவரும் படத்தில் கண்டு களிப்புறலாம்:
வரலாற்று மாற்றம்
திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கி வளையும் கெடிலம் ஏறக்குறைய ஒரு கி.மீ. (முக்கால் மைல்) தொலைவுக்கு நேர் வடக்காக ஒடிப் பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பி விடுகிறது; கிழக்கு நோக்கி, திருப்பாதிரிப்புலியூர் என்னும் நகருக்கு வடக்காக 4 கி.மீ. தொலைவு அளவு ஒடிப் பின்னர் மஞ்சக்குப்பம் மருத்துவமனைக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கித் திரும்புகிறது; இணைந்துள்ள, மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் என்னும் இரு நகர்கட்கும் மேற்குத் திசையிலும் திருப்பாதிரிப்புலியூர் நகருக்குக் கிழக்குத் திசையிலுமாக இரு பெரும்பகுதிகட்கும் இடையே, தெற்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவுக்குமேல் ஒடிப் பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பி விடுகிறது; புதுப்பாளையம் நகருக்குத் தென்பால்
கிழக்கு நோக்கி 3 கி.மீ. தொலைவு அளவு ஒடித் தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலில் கலந்து விடுகிறது. கெடிலத்தின் இந்த நான்கு முனை வளைவுக்கு நடுவே, திருக்கோயில் பெருமையும் வரலாற்றுச் சிறப்புமுடைய திருப்பாதிரிப்புலியூர் நகரம் இருக்கிறது. இந்த நகரின் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் கெடிலம் ஒடுகிறது. தெற்குப் பக்கம்தான் ஆற்றுப் பகுதி இல்லை. கீழுள்ள கோட்டுப் படம் காண்க
முன்பக்கத்திலுள்ள படத்தில், கெடிலம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே தெற்கு - வடக்காக ஒடுவதையும் திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கே மேற்கு கிழக்காக ஒடுவதையும், அந்நகருக்குக் கிழக்கே வடக்கு - தெற்காக ஒடுவதையும் காணலாம். நகருக்குத் தெற்கேதான் ஒன்றும் இல்லை. ஆனால் முற்காலத்தில் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கேதான் கெடிலம் ஓடியதாம். அப்படியென்றால், அந்நகரின் மற்ற மூன்று திசைகளிலும் கெடிலம் ஒடியிருக்க முடியாது. அதாவது,
இப்படித்தான் அப்போது ஆற்றின் அமைப்பு இருந்திருக்க முடியும். முடியும் என்றென்ன இப்படித்தான் இருந்தது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. வரலாற்றுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் ஒருபுறம் இருக்க, இன்னும் இப்பகுதிகட்கு நேரில் சென்று கூர்ந்து நோக்குவோர்க்கு உண்மை புலனாகாமற் போகாது. முதலில் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளைக் காண்போம்.
‘திருவதிகையில் சிவத்தொண்டு புரிந்து வந்த திலகவதியம்மையாரின் தம்பி திருநாவுக்கரசர் பாடலிபுத்திரம் என்னும் ஊர் சென்று சமண சமயத்தில் சேர்ந்தார்; இடையிலே சூலைநோய் ஏற்பட, திருவதிகை போந்து மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். இது பொறாத சமணர் சமண சமயத்தவனாயிருந்த பல்லவ மன்னனிடம் இதைக் கூறி, நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட ஏற்பாடு செய்தனர். கடலிலே எறியப்பட்ட நாவுக்கரசர், கடலோடு கலக்கும் கெடில ஆற்றின் வழியாக மேற்கு நோக்கி முன்னேறி, திருப்பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் உள்ள கரையேற விட்ட குப்பம்’ என்னும் இடத்தில் கரையேறினார்; பின்னர் நேரே திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானை வழிபட்டார்.’
இது சேக்கிழாரின் பெரியபுராண நூலையொட்டிய வரலாறு. செவிவழி வரலாறும் இப்படித்தான் செல்கிறது.
[1]"வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்"
என்பது பெரியபுராணப் பாடல். சேக்கிழாரால் ‘திருப்பாதிரிப் புலியூர்ப் பாங்கர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடம் ‘கரையேறவிட்ட குப்பம்’ என்னும் சிற்றுார். பாங்கர் என்றால் பக்கம். திருப்பாதிரிப் புலியூர்க்குத் தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் கரையேறவிட்ட குப்பம் இருக்கிறது. திருநாவுக்கரசராம் அப்பர் அடிகள் இந்த இடத்தில் வந்து கரையேறினமையால் இது, ‘கரையேறவிட்ட குப்பம்’ என்னும் காரணப் பெயரைப் பெற்றது. இந்த ஊருக்கு ‘வண்டிப் பாளையம்’ என்னும் வேறொரு பெயரும் உண்டு. இந்தக் காலத்தில், கரையேறவிட்ட குப்பம் என்னும் வழக்கு மறைந்து, வண்டிப் பாளையம் என்னும் பெயரே மக்களின் நாவிலும் எழுத்திலும் நடமாடுகிறது. ஆனால் ஆவணப் (ரிஜிஸ்டர்) பதிவுகளில், இன்றும் ‘கரையேற விட்டவர் குப்பம் மதுரா’ என்று பொறிக்கப்படுகிறது
இந்தக் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரைக் கொண்டு, அப்பர் இங்கேதான் கரையேறினார் என்பது தெளிவாகிறது. அப்படியென்றால், கடல் இங்கே இருந்தது என்று எண்ணக்கூடாது. இங்கிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவு சென்றால்தான் கடல் கிடைக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அந்தக் காலத்தில் கெடிலம் இந்த ஊர் வழியாக ஓடிக் கடலில் கலந்திருக்கிறது; எனவே, அப்பர் கடலிலிருந்து கெடிலத்தின் வழியாக மேல் நோக்கி எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறினார் என்பது தெரிகிறது. அப்பர் கடற்கரையில் வந்து கரையேறவில்லை; கடலிலிருந்து மேல் நோக்கிக் கெடிலம் ஆற்றிற்கு வந்து அந்த ஆற்றின் கரையிலே தான் கரையேறினார் என்பதற்குக் ‘கரையேற விட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் தெளிவான சான்று உள்ளது. அந்நூலில் - கரையேற விட்ட படலத்திலுள்ள
"கல்லதுவே சிவிகையதாக் கடலரசன் காவுவோனாச்
சொல்லரசர் மீதேறித் துனிநடத்தி வரவெதிர்ந்தே
மல்லலவன் மனைக்கெடில மாதுமொரு புடைதாங்கு
அல்லல்சிறி தவற்ககற்ற அவள்சார்புங் கொண்டுய்த்தார்
என்னும் (54) பாடலில், சொல்லரசராகிய அப்பர் கெடிலம் என்னும் மாதின் சார்புங் கொண்டு கரையேறினார் என்று கூறப்பட்டிருப்பது காண்க, மேலும் இப்புராணத்தில், கரையேற விட்ட நகர் என்னும் வண்டிப் பாளையத்தை ஒட்டிக் கெடிலம் ஓடியது என்னும் கருத்து பலவிடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்நூலின் தலவிசேடப் படலத்திலுள்ள
"தென் திசையில் கங்கையெனத் திகழ்கெடிலப் பூம்புனலே தீர்த்தமாமால்"(7}
"வீறுகரை யேற்றுதல விசேடமுமற் றதன்பாலே விளங்குங் கங்கை
ஆறெனுந் தீர்த்தக் கெடில அற்புதமும் அதற்கருகே அமர்ந்தன் பர்க்கு (17}
என்னும் பாடல் பகுதிகளில், கரையேறவிட்ட நகரின் தீர்த்தம் கெடிலம் எனக் கூறப்பட்டிருப்பது காண்க.
தெளிவிற்காக முன்பக்கத்தில் (பக்கம் 51) உள்ள கோட்டுப் படத்தைப் பார்த்தால் நிலைமை புரியும். அதுதான் கெடிலத்தின் பழைய பாதை. ஆற்றின் வடகரையில் கரையேற விட்ட குப்பம் இருப்பதையும் அதற்கும் வடக்கே திருப்பாதிரிப் புலியூர் இருப்பதையும் காணலாம்.
கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப்பாளையத்தை யொட்டித்தான் அந்தக் காலத்தில் கெடிலம் ஓடிற்று என்பதற்கு இயற்கைச் சான்றுகளும் உள்ளன. ஆறு ஓடியதாகக் கூறப்படும் பழைய பாதையில் இப்போது சிறு சிறு ஓடைகள் பல உள்ளன. அந்தப் பகுதியில் ஒரு முழம் ஆழம் தரையைத் தோண்டினாலேயே மணல் கிடைக்கிறது. அந்தப் பாதைப் பகுதி, தன் இரு பக்கங்களிலும் உள்ள நிலப் பகுதியை நோக்கப் பள்ளமாயிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கெடிலத்தின் தென்கரையைத் தொட்டாற் போல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கேப்பர் மலை, இங்கேயும் அதேபோல் அதே நெருக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கேப்பர் மலை அடிவாரத்தில் இருக்கும் வடுகுப்பாளையம் என்னும் ஊருக்கும் வண்டிப்பாளையம் (கரையேறவிட்ட குப்பம்) என்னும் ஊருக்கும் நடுவே, பேருந்து வண்டி (பஸ்) செல்லும் தார்ப்பாதை மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. பெருமழை பெய்யும் போது அந்தத் தார்ப்பாதை தண்ணீருக்குள் மறைந்து போக, அங்கே ஓர் ஆறு ஓடுவது போலவே தோற்றம் அளிப்பதுண்டு. ‘ஏன் இந்த இடம் இவ்வளவு தாழ்ந்திருக்கிறது?’ என்று அந்தப் பக்கத்து மக்களைக் கேட்டால், ‘முன் காலத்தில் ஆறு இந்த வழியாக ஓடிற்றாம்’ என்று சில நரைத்த தலைகளாயினும் சொல்லக் கேட்கலாம்.
வண்டிப்பாளையத்திற்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள பாதிரிக்குப்பம் என்னும் ஊரில், முத்தால் நாயுடு என்னும் முதியவரை ஒருநாள் தற்செயலாகக் கண்டபோது கெடிலத்தின் போக்கைப் பற்றி வினவ, அவர் கூறிய விடையாவது:
‘அந்தக் காலத்தில் கெடிலம் வண்டிப்பாளையம் வழியாக ஓடியது உண்மைதான்! நான் இளமையாய் இருந்தபோது அந்தப் பக்கம் தந்திக் கம்பம் நடுவதற்காகப் பலருடன் நிலத்தைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஒருநாள் ஓரிடத்தில் நிலத்தின் அடியில் மரத்தின் பகுதிகள் பாறையாக மாறிக்கிடக்கக் கண்டோம். அந்தக் காலத்தில் இங்கே ஆறு ஓடிற்று; ஆற்று வெள்ளத்தால் மரங்கள் மண்ணுக்குள்ளே மறைக்கப்பட்டு மடிந்து போயின என்று பெரியவர்கள் சிலர் அப்போது கூறினர்’ இது முதியவரின் பதில்.
வண்டிப்பாளையத்தை யொட்டித்தான் கெடிலம் அன்று ஓடியது என்பதை அறிவிக்கும் ஆணித்தரமான சான்றாக, இன்றைக்கும் அவ்விடத்தில் ‘அப்பர் கரையேறின நிகழ்ச்சி’ ஒரு திருவிழாவாகக் கொண்டாடி நடத்தப்படுகிறது. இந்த விழா அந்தக் காலத்திலிருந்தே நடத்தப்படுகிறதாம். அப்பர் கரையேறியது சித்திரைத் திங்கள் அனுட நாளிலாம். எனவே, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் அனுட நாளில் இவ்விழா நடைபெறுகிறது. அன்றைக்குத் திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலிலிருந்து சிவபெருமான் திருவுருவமும் அப்பர் திருவுருவமும் வண்டிப் பாளையத்திற்கு எழுந்தருளும், வண்டிப்பாளையம் திருக்கோயில் முருகப் பெருமானும் இதில் கலந்து கொள்வார்.
அப்பர் கரையேறியதாகக் குறிப்பிடப்படும் இடத்தில் ஓர் ஓடை ஊண்டு. நாற்பதாண்டுகட்கு முன்பு பெரிய ஓடையாகக் காட்சியளித்த அந்த நீர்ப்பகுதி, நாளடைவில் தூர்ந்து பாழடைந்து இப்போது ஒரு சிறிய குளத்தின் அளவிற்குச் சுருங்கி விட்டது, இந்தக் குளம் முன்னும் பின்னும் கால்வாய்களால் தொடர்பு கொண்டுள்ளது.
இந்தக் குளத்தில் திருவிழாவன்று தெப்பம் கட்டிமிதக்கும். தெப்பத்தில் அப்பர் திருவுருவம் ஏற்றப்பட்டுக் குளத்தைச் சுற்றிச்சுற்றி வந்து, குறிப்பிட்ட சுற்றுக்கள் முடிந்த பின்னர்க் கரையேறும். அப்பர் கல்லிலே கட்டிக் கடலிலே போடப் பட்டார் என்பதை அறிவிக்கும் முறையில் மரத்தெப்பத்திலே கருங்கல்லும் கட்டப்பட்டிருக்கும். அப்பர் திருவுருவத்துடன் தெப்பத்தில் ஏறிக்கொண்டிருக்கும் ஓதுவார்கள், அப்பர் கல்லிலே கட்டிக் கடலிலே எறியப்பட்டபோது பாடிக் கொண்டே கரையேறியதாகக் குறிப்பிடப்படும் ‘சொற்றுணை வேதியன்’ என்னும் தேவாரப் பதிகத்தைப் பண்ணோடு இசைத்துப் பாடுவது மிகவும் உருக்கமாக இருக்கும்.
குளத்தைச் சுற்றி எட்டின மட்டும் மக்கள் தலைகள் தெரியும். அந்தப் பகுதியினர்க்கு இது ஒரு பெரிய திருவிழாவாகும். மலையுடன் தோப்புக்களும் தோட்டங்களும் கழனிகளும் பழனங்களும் ஓடைகளும் கால்வாய்களும் நிறைந்த இன்பமான இயற்கைச் சூழ்நிலைக்கிடையே, தென்றல் வீசும் சித்திரை இளவேனிற் காலத்தே, தேவாரப் பண் இசைக்க அப்பர் திருவுருவம் தெப்பத்தில் மிதந்து கொண்டிருக்கும் காட்சி, அன்புச் சுவையுடன் அழகுச் சுவையும் கலைச்சுவையும் கலந்ததொரு கண்கொள்ளாக் காட்சியாகும். நாளடைவில் பாழடைந்து வந்து கொண்டிருந்த இந்தத் தெப்பக்குளம் 1959 ஆம் ஆண்டில் சீர்திருத்தப்பட்டதுடன், அப்பர் அங்கேதான் கரையேறினார் என்பதை அறிவிக்கும் அறிகுறிச் சான்றாகக் குளத்தின் கரையில் அழகிய ஒரு நினைவு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. மறுபக்கமுள்ள படத்தில் இதனைக் காணலாம்.
படத்தில் திருக்குளத்தையும் குளக் கரையில் மண்டபத்தையும் காணலாம். படத்தில் தென்னஞ்சாலைகளும் சோலைகளும் திகழ்வதையும் காணலாம். இந்தத் துறையில் ஆர்வம் உடையவர்கள் கடலூர் சென்றால் இந்த இடத்தையும் சென்று பார்ப்பது நலம்.
செவிவழிச் சான்று
மற்றும், இப் படத்தில் நம் வலக்கைப் பக்கமாக, நினைவு மண்டபத்திற்கு அருகில் ஒரு சிறு ஓட்டுக் கொட்டகை தெரிவதைக் காணலாம். அது வேறொன்று மன்று வண்டிப்பாளையம் சுடுகாடுதான். அக் கொட்டகையில் பிணங்களைச் சுடுவதும், அதைச் சுற்றியுள்ள பகுதியில் புதைப்பதும் வழக்கம். இந்தச் சுடுகாடு வண்டிப்பாளையம்
ஊருக்கு தெற்கே மிக அண்மையில் - ஒரு பர்லாங்கு தொலைவிற்குள் உள்ளது. இந்தக் காலத்தில், கிறித்துவர்களின் கல்லறைகள் ஊரையொட்டியும், ஊருக்குள்ளேயுங்கூட உள்ளன; ஆனால் அந்தக் காலத்தில் இப்படியன்று; ஊருக்குச் சேய்மையிலேயே சுடுகாடு இருக்கும். நிலைமை அப்படியிருக்க, வண்டிப்பாளையம் சுடுகாடு ஊரையொட்டி இருப்பதேன்?
வண்டிப் பாளையத்தானாகிய நான் சிறு வயதில் ஒரு நாள் எங்கள் வீட்டுத் தெருக்குறட்டில் சிறுவர் பலருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன் விளையாட்டு முடிந்து வெற்றுப் பேச்சு தொடங்கியது. இளஞ்சிறார்களின் பேச்சு நூற்றுக்கு நூறு எதிர்காலப் பயன் உடையதாகும். அப் பேச்சில் வியப்பூக்கமும் (Curiosity) ஆராய்வூக்கமும் விரவியிருக்கும். இளஞ்சிறார்களாகிய நாங்கள் பேய்கதை - பிசாசு கதை - திருடன் கதை - பாம்பு கதை முதலிய பல கதைகளும் பேசிவிட்டுச் சுடுகாட்டுக் கதைக்கு வந்தோம். இந்தக் கட்டத்தில் எங்களுள் ஒருவன் மற்றவர்களை நோக்கி, ‘நம் ஊருக்கு (வண்டிப்பாளையத்திற்கு) அருகில் சுடுகாட்டை ஏன் அமைத்தார்கள்? அந்தப் பக்கம் போக அச்சமாயிருக்கிறதே!'
என்று முன்னோர்களை நொந்து வைபவன் போல் ஒரு கேள்வி கேட்டான். அதற்கு மற்றவர்களிடமிருந்து, ‘சுடுகாடு கிட்ட இருந்தால் பிணத்தைத் தூக்கிக் கொண்டு கால் கடுக்க நெடுந்தொலைவு போக வேண்டியதில்லை’ என்றும், ‘ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் பிணத்தைச் சீக்கிரம் அடக்கம் செய்து விட்டு வந்து சீக்கிரம் சாப்பிடலாம்’ என்றும் ‘கிட்டவே புதைத்தால் அடிக்கடி போய்ப் பார்த்து விட்டு வரலாம்’ என்றும் பலவிதமான பதில்கள் வந்தன. அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த என் தந்தையார் எங்களை நோக்கி, ‘நம் ஊரில் ஏன் சுடுகாடு அருகில் இருக்கிறது தெரியுமா? அந்தக் காலத்தில் நம் ஊருக்குப் பக்கத்தில் கெடிலம் ஓடிற்றாம், ஆறு ஓடும் இடங்களில் ஆற்றங்கரையில் கடுகாடு அமைப்பது வழக்கம். அப்படியே நம் ஊர்ச் சுடுகாடும் கெடிலக்கரையில் அமைக்கப்பட்டதாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே, ‘அப்படியென்றால் அந்த ஆறு இப்போது எங்கே?’ என்று ஒரு பொடியன் ஒரு போடு போட்டான். ‘ஆறு வெள்ளம் அடித்து வேறு பக்கம் திரும்பி விட்டதாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள்’ என்று என் தந்தையார் கூறினார். நான் ஓரளவு பெரியவனானதும் இதுபற்றி என் தந்தையாரைக் கேட்டுள்ளேன். ‘இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்’ என வழி வழியாகப் பெரியவர்கள் சொல்லி வருவதாக அவர் கூறினார்.
இதுகாறுங் கூறியவற்றிலிருந்து, இப்போது திருப்பாதிரிப் புலியூருக்கு வடக்கே ஓடும் கெடிலம், அப்போது திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப் பாளையத்தை யொட்டி, ஓடிக் கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. இதற்குச் செவி வழி வரலாற்றுச் சான்றுகளேயன்றி, எழுதி வைக்கப்பெற்றுள்ள இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தொல்காப்பியத் தேவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூலில் இதற்குத் தக்க அகச்சான்று கிடைத்துள்ளது வருமாறு:
“நித்தில முறுவற் பவழவாய்ப் பிறழுங் கயல்விழி நிரைவளை யிடமாக்
கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர் கடிலமா நதியதன் வடபால்
செய்தலைக் குவளை மகளிர்கண் காட்டுந் திருக்கடை ஞாழலி லிருந்த
பைத்தலைத் துத்திப் பணியணி யாரெப் பரமர்தாள் பணிவது வரமே." (45)
“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி மோதியிரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித் தாமரையு நீலமு மணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்துவட பாலே மெல்லிய றவஞ்செய்கடை ஞாழலை விரும்பிப்
புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப் புணர்ந்துபிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே."
(100)
என்பன அந்நூற் பாடல்கள். இப் பாடல்களிலுள்ள ‘கெடில மாநதியதன் வடபால் ‘கெடிலத்து வடபாலே’ என்னும் பகுதிகள், கெடிலத்தின் வடபுறத்தே திருக்கடை ஞாழல் என்னும் மாற்றுப் பெயருடைய திருப்பாதிரிப் புலியூர் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கெடிலத்தின் தென்புறத்தேதான் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. எனவே, கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே வண்டிப்பாளையத்தினருகில் ஒடிக் கொண்டிருந்த போது ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூல் தொல்காப்பியத் தேவரால் இயற்றப்பட்டது என்பது தெளிவு.
இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்’ என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் நகருக்குத் தெற்கே கெடிலம் ஒடியபோது எழுதப்பட்டதென முன்பு கூறினோம். ஆனால், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணமோ, கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியதற்குக் காரணமும் அப் புராணம் கூறுகிறது. அது வருமாறு:
“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தப் பெருமானை வணங்கியதும், திருப்பாதிரிப் புலியூர் இறைவனை வணங்குவதற்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தார். திருப்பாதிரிப் புலியூர் இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலேயிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடியதாம் என்செய்வார் மணிவாசகர் ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும் மிகக் கடுமையா யிருந்ததால் தெப்பமும் விடப்படவில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட முடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மணிவாசகர்மேல் இரக்கங் கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி ‘உமக்கு என்ன வேண்டும்?’ என்று அவரைக் கேட்டாராம். ‘நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப் புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, ‘ஏ கெடிலமே! நீ வளைந்து திசை மாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மணிவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஓடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப் புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம். இச்செய்தியினை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள - பின்வரும் பாடல்களால் அறியலாம்.
[2]'அருவமா யுருவமா யருவுரு வகன்ற
உருவ மாகிய பரவெளி பெரும்பற்றப் புலியூர்த்
திருவ ருட்டிற மருவியாங் கிருந்துதீம் புனலூர்
மருவு முத்தர புலிசைமா நகர்தொழ வந்தார்' (32)
'தென்னகன் கரை யிருந்தனர் யாவருஞ் சிறந்த
மன்னு முத்தர தீரத்தின் வகை குறித் தார்க்குத்
தன்னை யொப்பருங் கலங்களுந் தெப்பமுஞ் சாரா
வன்ன பேருடற் கும்பத்தி னணைத்தவு மணையா' (35)
'உத்த ரத்திருப் புலிசைமா நகர்தொழ வுற்றேன்
தத்து வெண்புனல் சாகரத் தோடெதிர் தயங்கி
முத்தம் வாரியெற் றலைகளு மலையென முயங்கச்
சித்த சாமியிவ் ஆறுஇடை தடுத்ததென் செய்கேன்' (39)
'உயிரும் யாக்கையும் மகிழ்விக்கும் வல்லப முடையீர்
தயிரின் வெண்ணெய்போல் மறைந்தருள் இறைவர் நீர்
(தாமே
செயிர றுத்தெனை அக்கரை ஏற்றுதிர் சேர்ந்தோர்
அயர்வ றுக்கும்.அக் கரையேற விட்டவ ராவீர்' (41)
'கெடில மாநதி பாடலேச் சுரனிகே தனத்தின்
வடதி சைக்கணே மன்னுவித் துமைக்கொடு போதும்
புடவி தன்னிடைத் தாள்துணை ஊன்றியே போந்து
கடவுள் ஆலயம் கண் ணுறீஇ வழிபடும் என்றார் (45)
'அட்ட சித்தியும் புரிகுவோ மாதலி னுமக்காம்
இட்டம் யாவையும் செய்குது மெனவுரைத் திரைத்த
மட்டு வார்புனல் வடதிசை மருவவேத் திரத்தால்
தொட்டு நீக்கினர் அவ்வழி யேகின துனைநீர்’ (47)
'அன்ன ராமிரு முனிவரர்க் கபயமீந் தப்பான்
மன்னு தீம்புனல் வடதிசை மருவிடப் புரிந்து
முன்ன மேகிப்பின் வருவருள் செய்தனர் முனியைப்
பன்னு சித்தர்பின் மாணிக்க வாசகர் படர்ந்தார்.' (49)
[3]திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், பெரிய புராணம் ஆகிய நூல்களின் துணைகொண்டு கெடிலத்தின் திசை மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளவில்லையெனில், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகமும் பெரிய புராணமும் பொய்ச் செய்தி தெரிவிப்பதாக எண்ணவேண்டிவரும். இதைத் தெளியவைக்கு முகத்தான், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணமானது, கெடிலத்தின் இருவேறு திசைப்போக்குகளையும் சுட்டிக்காட்டி, போக்கு திசை மாறினதற்குக் காரணமாக மாணிக்க வாசகர் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
மாணிக்க வாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பின் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - இயற்றப் பெற்ற ‘கரையேற விட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம்’ என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.
புராண நம்பிக்கையுள்ளவர்கள், ‘மணிவாசகருக்காகத் தான் கெடிலம் திசைமாறியது; இது முற்றிலும் உண்மையான வரலாறேயாகும்’ என அடித்துப் பேசுவர். புராண நம்பிக்கை யில்லாத சீர்திருத்தக் கொள்கையினர், கெடிலம் பெருவெள்ளத்தினால் இயற்கையாகத் திசை மாறியது; ஆனால், திருப்பாதிரிப் புலியூர்ப் புராண ஆசிரியர், மணிவாசகருக்காக மாறியதாகச் செயற்கையாக ஒரு காரணம் கற்பித்து நிலைமையைச் சரிக்கட்ட முயன்றுள்ளனர்; இதுபோலப் புனைந்துரைப்பது புராணங்களின் வாடிக்கை’ என்று கூறி இக்காரணத்தைத் தட்டிக் கழிப்பர்.
இவ்விரு திறத்தாரின் கொள்கை முரண்பாடு எவ்வாறிருப்பினும், இவண் நமக்கு விளங்கும் உண்மையாவது: திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் எழுதிய தொல்காப்பியத் தேவரின் காலத்தில் நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் எழுதிய இலக்கணம் சிதம்பரநாத முனிவரின் காலத்தில் நகருக்கு வடக்கே ஓடியிருக்கிறது என்பதாம். அங்ஙனமெனில், கெடிலத்தின் வரலாறு கண்ட இத்திசை மாற்றம் நடந்த காலம் எது?- என ஆராய வேண்டும்.
திருநாவுக்கரசர் கரையேறியபோது கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஓடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த செய்தி. அதற்குப் பல சான்றுகளும் முன்பு காட்டப்பட்டுள்ளன. நாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் பலர்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. எனவே, அதன் பிறகுதான் கெடிலத்தின் திசைமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்துத் தொல்காப்பியத் தேவரின் காலத்தை ஆராய வேண்டும். தொல்காப்பியத் தேவர் இரட்டையர்களால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளார். இரட்டையர்கள், திருப்பாதிரிப் புலியூர் சென்றிருந்தபோது, அவ்வூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடித் தருமாறு அவ்வூரார் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள், ‘சிவன் மேல் கலம்பகம் பாடவேண்டுமென்றால் தொல் காப்பியத் தேவர் பாடவேண்டும்; நாம் பாடுவது இறைவனுக்கு ஏறுமோ?” என்று கூறியுள்ளார்கள். இதனை,
'தொல்காப்பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே'
என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இதிலிருந்து இரட்டையர் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்பது தெளிவு, அங்ஙனமெனில், இரட்டையர் காலம் எது?
இரட்டையர்கள் வாபதியாட்கொண்டான் என்னும் வள்ளலைப் பாடியுள்ளனர். வாபதியாட்கொண்டானின் வேண்டுதலால் வில்லிபுத்தூரார் பாரதம் பாடினார். வில்லிபுத்தூரார் காலத்தில் அருணகிரிநாதரும் காளமேகப் புலவரும் வாழ்ந்ததாக வரலாறு. இவர்களின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. எனவே, இரட்டையர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என அறியலாம். ஆகவே, இரட்டையரால் புகழ்ந்து பாடப்பெற்ற தொல்காப்பியத் தேவர் 15 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவர் என்பது புலனாகும்.
இரட்டையர் காலத்திலேயே தொல்காப்பியத் தேவரும் ஏன் இருந்திருக்கக்கூடாது? என்பதாக இங்கே ஓர் ஐயம் தோன்றலாம்.
இந்தக் காலத்தில் ஒருவர் ஒரு நூல் எழுதினால் அது உடனே அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட ஒரு திங்களில் உலகம் முழுவதும் பரவவுஞ் செய்கிறது. அந்தக் காலத்தில் ஒருவர் நூல் எழுதுவது ஓலைச் சுவடியில்தான். அது பலராலும் பல படிகள் எடுக்கப்பட்டுப் பல ஊர்களிலும் பரவுவதற்குப் பன்னெடுநாள் ஆகும். அதன் பிறகே அந்நூலின் சிறப்பு பலராலும் அறிந்து பாராட்டப்படும். இந்நிலையில், தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், புகழ் பெற்ற பெரும் புலவர்களாகிய இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்றிருக்கிறதென்றால், அக் கலம்பகம் அவர்கள் காலத்துக்கு முன்பே தோன்றித் தமிழ் நாட்டில் பரவிப் பாராட்டப்பெற்றிருக்க வேண்டும். எனவே, இரட்டையர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர். என்று கொள்ள வேண்டும். தேவரின் காலத்தை, பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்னால் தள்ளிக் கொண்டு போகவேண்டும்.
திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் இயற்றியவரும் சிவஞான முனிவரின் மாணாக்கருமாகிய இலக்கணம் சிதம்பரநாத முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அப் புராணத்தில் கூறியுள்ளபடி, கெடிலத்தின் திசை மாற்றத்திற்குக் காரணராக இருந்த மாணிக்கவாசகர் பழங் காலத்தவர். பழங் காலத்தவர் என்றால் இற்றைக்கு ஆயிரம் ஆண்டாவது முற்பட்டவர். ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கூறப்படும் சுந்தர மூர்த்தி நாயனார் என்னும் சுந்தரர், சைவ நாயன்மார்களின் பெயர்களைக் தொகுத்து எழுதியுள்ள ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் நூலில் மாணிக்கவாசகரின் பெயரைச் சேர்க்கவில்லையாதலின், சுந்தரர்க்குப் பிற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். ஆனால் சிலர், ‘மாணிக்க வாசகர் சந்தரர்க்கு மிகவும் முற்பட்டவர்; இவர் அறிவால் சிவனே யாயினார்; ஆதலின் மற்ற நாயன்மார்களினும் சிறப்பில் மிக்கவர்; அதனாலேயே, சுந்தரர் இவரை மற்ற நாயன்மார் களோடு இணைத்துத் தம் நூலில் பாடாது விட்டார்’ என்று கூறுகின்றனர். இக் கூற்றுப் பொருந்தாது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களின் மொழி நடையைக் காணுங்கால், மாணிக்கவாசகர் தேவார ஆசிரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் முற்பட்டவராயிருக்க முடியாது - பிற்பட்டவரே என்பது புலப்படாமற் போகாது. சில ஆண்டுகளாயினும் மாணிக்கவாசகர் சுந்தரர்க்குப் பிற்பட்ட வராயிருந்ததனால்தான், சைவ நாயன்மார்களைப் பற்றிச் சுந்தரரால் பாடப்பெற்ற நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறவில்லை.
முதல் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைக்கும், ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாணிக்கவாசகரின் காலத்தை அங்கு மிங்குமாகத் தூக்கிப்போட்டுப் பந்தாடினாலும், சுந்தரர் நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறாததைக் கொண்டும், திருவாசகப் பத்துக்களின் தலைப்புகளைக் கொண்டும் மொழி நடையைக் கொண்டும், சுந்தரர்க்குப் பிற்பட்டவரே மாணிக்கவாசகர் எனத் துணிந்து முடிவு செய்யலாம். இதற்கு இயற்கையான இன்னொரு சான்றும் உள்ளது: ‘சைவ சமய குரவர் நால்வர்’ அல்லது ‘நால்வர்’ என்னும் தொகைப் பெயர் வரிசையில், (1) திருஞானசம்பந்தர், (2) திருநாவுக்கரசர், (3) சுந்தரர், (4} மாணிக்கவாசகர் என மாணிக்கவாசகர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை காண்க. இவர் மற்ற மூவரினும் காலத்தால் பிற்பட்டவரா யிருந்ததனால்தான் இறுதியில் வைத்து எண்ணப்பட்டுள்ளார். மற்றபடி, பெருமையினால் நால்வரும் ஒரு நிகரானவர்களே.
இந்நால்வருள் முதல் இருவராகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தினர் - அதாவது ஏழாம் நூற்றாண்டினர். இவ்விருவரையும் தம் நூலில் பாடியுள்ள சுந்தரர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராக துணியப்பட்டுள்ளார். எனவே, மாணிக்க வாசகர், ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்றால், பல நூற்றாண்டுகள் பின் தள்ளியிருக்க முடியாது; ஓரிரு நூற்றாண்டுதான் பிற்பட்டிருக்க முடியும். பல நூற்றாண்டுகள் பிற்பட்டவராயிருந்திருந்தால், தமக்குள் அண்மை நூற்றாண்டினராகிய மூவருக்கும் பின்னால் நாலாமவராக மாணிக்கவாசகர் வைத்து எண்ணப்பட்டிருக்க மாட்டார்; பிற்காலத்துத் தோன்றிய சைவப் பெரியார்கள் சிலரைப்போல மாணிக்கவாசகர் தனித்து விட, அந்த மூவரும் மூவராகவே நின்றுவிட்டிருப்பர். அங்ஙனமின்றி, இந்நால்வரும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய சைவத் தலைகளாக விளங்கினமையால்தான் ‘நால்வர்’ என இணைத்துச் சிறப்பிக்கப்பெற்றனர். இஃது இயற்கையின் தீர்ப்பு! ஆம், மக்களின் தீர்ப்பு! எனவே, பத்தாவது நூற்றாண்டினர் மணிவாசகர் என்று கொள்ளலாம்.
இந்தக் கருத்துக்கு எதிராக அப்பர் தேவாரத்திலிருந்து ஓர் அகச்சான்று காட்டப்படுகிறது. அப்பர் தமது திருவாரூர்த் தேவாரப் பதிகத்தில்,
"நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதம் கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்...
என்று இறைவனின் திருவிளையாடல்களைக் கூறியுள்ளார். இதிலுள்ள ‘நரியைக் குதிரை செய்வானும்’ என்னும் பகுதியைக் கொண்டு, நரி பரியாக்கிய கதைக்கு உரிய மணிவாசகர் அப்பருக்கு முற்பட்டவராவார் என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால், இறைவன் மணிவாசகருக்காக நரியைப் பரியாக்கிய கதை இங்கே அப்பரால் குறிப்பிடப்படவில்லை. இறைவன் எதையும் செய்யவல்ல ‘சித்தர்’ என்ற கருத்திலேயே அப்பர் இதனைக் கூறியுள்ளார். அஃதாவது, இறைவன், நரியைக் குதிரையாக்க வல்லவன் - நரகரைத் தேவராக்க வல்லவன் - தாமாகவே விரதம் எடுத்துக் கொண்டு ஆடவல்லவன் - விதை போடாமலேயே செடி கொடிகளை முளைக்கச் செய்பவன் - என்பதாக இறைவனின் சிறப்பு மிக்க ‘சித்து’ விளையாடல்கள் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எனவே, இந்தத் தேவாரப் பகுதிக்கும் மணிவாசகர் பற்றிய கதைக்கும் இங்கே தொடர்பேயில்லை . தமிழறிஞர் எம். சீநிவாச அய்யங்கார் ‘தமிழாராய்ச்சி’ என்னும் தமது நூலில், ‘நரிபரியாக்கிய கதை தமிழகத்தில் பண்டு தொட்டு வழங்கி வருவது; அதற்கும் மணிவாசகருக்கும் தொடர்பில்லை’ என்பதாகக் கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது எனவே, மணிவாசகர், தேவார ஆசிரியர் மூவருக்கும் பிற்பட்டவர் - பத்தாம் நூற்றாண்டினர் என்பது போதரும்.
இதற்கு இன்னும் கூரான சான்று ஒன்று கொடுக்க முடியும். நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப்பெரியார், தமது ‘ கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ என்னும் நூலில், திருவாதவூரர் என்னும் இயற்பெயருடைய மாணிக்க வாசகரையும் அவர் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையையும் பற்றி,
"வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத்
தெருளாத புள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே" (58)
என்னும் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். நம்பியாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பது, அனைவரும் எளிதில் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. எனவே, அவருக்கும் முற்பட்டவர் மணிவாசகர் என்பது தெளிவு. ஆகவே, மணிவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் தெளிவு.
மற்றொரு வகையிலும் மணிவாசகரின் காலத்தைக் குறுக்கி நெருக்கிக்கொண்டு வரலாம். பதினோராம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பி பட்டினத்தாரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். பட்டினத்தாரோ, மணிவாசகரைப் பாராட்டிப் பாடியுள்ளார். எனவே, நம்பியாண்டார் நம்பிக்கும் முற்பட்ட பட்டினத்தார்க்கும் முற்பட்டவர் மணிவாசகர் என்பது புலனாகும். ஆகவே, நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டினரென்றால், பட்டினத்தாரின் காலம் பதினோராம நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், மணிவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கொள்ளலாம். பத்து - பதினோராம் நூற்றாண்டுகளாகிய இருநூறு ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையினர் (மணிவாசகர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி) இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை; அது நடக்கக் கூடியதே.
இஃது இங்ஙனம் இருக்க - புராணம் போன்ற மத நூல்களில் நம்பிக்கையுள்ள பெரியோர் சிலர்கூட - ஏன் [4] தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்களுங்கூட, கெடிலத்தின் திசைமாற்றத்திற்குக் காரணமாக மாணிக்கவாசகர் பற்றித் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்திற் கூறப்பட்டுள்ள செய்தியினைப் பொய்யான கற்பனையென மறுத்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறுங் காரணமாவது:- ‘நகரின் தெற்கே கெடிலம் ஓடுவதாகக் கலம்பக நூலில் எழுதியுள்ள தொல்காப்பியத் தேவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர்; எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி நகருக்கு வடக்கே ஓடியிருக்க முடியாது’ - என்பதாம்.
இவ்வாறு சிலர் புராணச் செய்தியை மறுப்பதற்குக் காரணங்கள் இரண்டு: மாணிக்கவாசகருக்காக இப்படி நடந்திருக்க முடியாது என்று எண்ணுவது ஒன்று; மாணிக்க வாசகர் காலத்தை மிக முற்பட்டதாகவும் தொல்காப்பியத் தேவர் காலத்தை மிகப் பிற்பட்டதாகவும் கணிப்பது மற்றொன்று. இவ் விரண்டிற்கும் உரிய மறுப்புப் பதில்களாவன:-
(1) மாணிக்கவாசகருக்காக ஆறு திரும்பியது என்பதை நம்பாவிட்டால் போகிறது. இயற்கையாகவே ஆறு மாறியதாக ஏற்றுக்கொள்வோம். ஆனால், அவர் காலத்தில் இயற்கையாக ஆறு திசைமாறியிருக்கலாம் என்பதையாவது நம்பலாமே! புராணங்கள் புளுகு மூட்டை என்பதாகச் சொல்லினும், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் இயற்றிய சிதம்பரநாத முனிவர், எத்தனையோ பெரியார்கள் இருக்க அவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுக் கெடிலத்தின் திசைமாற்றத்தோடு மாணிக்கவாசகர் பெயரை முடிச்சுப் போட்டிருப்பதில் ஏதேனும் பொருத்தம் இருக்கத்தான் வேண்டும் - மாணிக்கவாசகர் காலத்தில் ஆறு திசைமாறியதாகச் செவிவழிச் செய்தி (கர்ண பரம்பரைச் செய்தி) யொன்று சிதம்பரநாத முனிவர்க்குக் கிடைத்திருக்கலாம்; திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதி மக்கள் அவ்வாறு அவரிடம் தெரிவித்திருக்கலாம். அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மணிவாசகர் சித்தரை வேண்டிக் கொள்ள, சித்தர் திசை மாற்றினார் என்பதாக ஆசிரியர் புராணத்தில் புனைந்துரைத்திருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியல்ல - ஐரோப்பியரால் ஆளப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் - தேவலோகத்தையோ நரக லோகத்தையோ அதள சுதள பாதாள லோகத்தையோ பற்றி யல்ல - ஐரோப்பியர் ஆளத் தொடங்கிய திருப்பாதிரிப் புலியூரைப் பற்றிப் புராணம் பாடிய சிதம்பரநாத முனிவர், ஒரு பற்றுக்கோடும் இல்லாமல் வீணே வெறும் பொய் புளுகியிருக்க முடியாதல்லவா? ஒன்றாவது இருந்தால்தானே ஒன்பதாகச் சொல்ல முடியும்?
மாணிக்கவாசகருக்காகச் சித்தர் கட்டளையிட அதனால் கெடிலம் திசைமாறாவிட்டாலும், உண்மையில் என்ன நடந்திருக்கலாம்? மாணிக்கவாசகர் தில்லையிலிருந்து வடக்கு நோக்கி வந்து திருப்பாதிரிப் புலியூரை நெருங்கினபோது, வழியிலே கெடிலத்தில் வெள்ளம் ஓடியிருக்கலாம். அதனால் அவர் வெள்ளத்தின் வடிவை எதிர்பார்த்து அக் கரையிலேயே கடவுளை வேண்டிக் காத்திருக்கலாம். இந்த நேரத்தில், அவ்விடத்திற்கு மேற்கே திருவயிந்திரபுரத்தில் ஆற்று வெள்ளம் பிய்த்துக் கொண்டு திசைமாறி ஓடியிருக்கலாம். வந்து கொண்டிருந்த வெள்ளத்தின் பெரும்பகுதி மேற்கே திசைமாறி எதிர்ப்பக்கம் திரும்பியதால் மணிவாசகர் காத்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் குறைந்திருக்கலாம். இது மாதிரி இந்தக் காலத்திலும் நடப்பதுண்டு. (சிலர், ஆற்று வெள்ளம் தங்கள் ஊரை அழிக்காமல் இருப்பதற்காக எதிர்க்கரையில் சென்று அக்கரையை வெட்டிவிட்டு வெள்ளத்தை அக் கரைப் பக்கம் திருட்டுத்தனமாகத் திருப்பி விடுவதும் இக்காலத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.) தண்ணீர் குறைந்து வழக்கமாகக் கடக்கக் கூடிய அளவுக்கு வரவே, மாணிக்கவாசகர் எளிதாக ஆற்றைக் கடந்து அக் கரையடைந்திருக்கலாம். வேறு பக்கம் திசை மாறிய கெடிலம் அந்தப் புதுப்பாதையிலேயே தொடர்ந்து சென்றிருக்கலாம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகச் செவி வழியாக மக்களிடையே அறியப்பட்டு வந்திருக்கலாம். இதைக் கேள்விப்பட்ட சிதம்பரநாத முனிவர் புராணத்தில் பொருந்தப் புளுகிவிட்டிருக்கலாம். எனவே, மாணிக்கவாசகருக்காகத்தான் கெடிலம் திசை மாறியது என்பதை நம்பாவிட்டாலும், அவர் காலத்தில் திசை மாறியிருக்கலாம் என்பதையாவது நம்பி வைக்கலாமே!
(2) அடுத்து, மாணிக்கவாசகரை முற்பட்டவராகவும் தொல்காப்பியத் தேவரைப் பிற்பட்டவராகவும் கொள்ளுதலும் பொருந்தாது. பத்தாம் நூற்றாண்டினராகிய மணிவாசகருக்குச் சில ஆண்டுகளாயினும் தொல்காப்பியத் தேவர் முற்பட்ட வராகவே இருந்திருப்பார். ஏன், இருவரையும் ஒரு காலத்தில் வாழ்ந்தவராகக்கூட கூறலாமே! தொல்காப்பியத் தேவர் வயதில் மூத்தவராயிருந்து முன்னால் காலமாகியிருக்கலாம்; மணிவாசகர் வயதில் இளையவராயிருந்து பின்னால் காலமாகியிருக்கலாம் திருப்பாதிரிப் புலியூர்க்குத் தெற்கே கெடிலம் ஓடியதாக எழுதிய தொல்காப்பியத் தேவர் காலமான சில ஆண்டுகளில் கெடிலம் திசை மாறியிருக்கலாமே! எனவே, தொல்காப்பியத் தேவர் நூற்றாண்டுக் கணக்கில் மாணிக்க வாசகர்க்கு முற்பட்டவர் என்று கூறமுடியாவிடினும், சில ஆண்டுகளாயினும் முற்பட்டவர் என்று கூறலாமே!
சிலர், வேறொரு காரணங் காட்டியும் தொல்காப்பியத் தேவரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயலலாம். அஃதாவது, கலம்பகம், தூது, உலா முதலிய 96 வகைச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றியவை; எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவர் மணிவாசகருக்குப் பிற்பட்டவரே என்று கூறக்கூடும்.
கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்டனவே யெனினும், ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இத்தகு சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. கலம்பக நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றத் தொடங்கிவிட்டன என்பதும், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், நந்திக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள் கலம்பக நூல்களுக்குள் மிகவும் பழமையானவை என்பதும் தமிழிலக்கிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நன்கறிந்த செய்திகளாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. அவர் பதினோராம் நூற்றாண்டினர். எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம். இவ்வகையில் பார்க்குங்கால், மணிவாசகருக்குச் சிலவாண்டுகளாயினும் முற்பட்டவர் தொல்காப்பியத்தேவர் என்று கூறமுடியுமே.
மேலும், தேவர் என்னும் பட்டப் பெயரைப் பார்க்கும் போது, இவர் சமணராயிருந்து பிறகு சைவத்திற்கு மாறினதாகத் தெரிகிறது. தேவர் என்பது சமண முனிவரைக் குறிக்கும் பெயராகும். சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவர், சூளாமணி யாசிரியராகிய தோலா மொழித்தேவர் ஆகிய சமணப் பெரியார்களின் பெயர்களை ஈண்டு ஒப்பு நோக்குக. திருத்தக்க தேவரும் தோலா மொழித் தேவரும் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் காலத்தை யொட்டியவராகத் தொல்காப்பியத் தேவரையும் கொள்ளலாம். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுவரை - அதாவது அப்பரடிகள் காலத்திலிருந்து மணிவாசகர் காலம் வரை, சைவ - சமணப் புத்தமதப் போராட்டங்கள் கடுமையாக நடந்ததும், சமண புத்த மதங்களைப் பின்பற்றியிருந்தவர்கள் சைவத்திற்கு மாறினதும் அறிந்த செய்திகளே. எனவே, தொல்காப்பியத் தேவர் என்னும் பெயர் அமைப்பையும், அவர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதையும் எண்ணிப் பார்க்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம் எனச் சூழ்நிலையை யொட்டித் தெரிய வருகிறது.
ஈண்டு மீண்டும் ஒன்றை நினைவு கூரவேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர்கள், ‘தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர் இறைவன் மேல் கலம்பகம் பாடியபின் நாங்கள் பாடுவது எடுபடாது என்று கூறியிருப்பதைக் கொண்டு, தேவர் இரட்டையர்க்குச் சிறிது காலந்தான் முற்பட்டவர் என்று கொள்ளக்கூடாது. [5] ‘கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்ற புகழ் மொழிப்படி, கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் வல்லவர்கள். தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய சிறந்த நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள். எனவே, கலம்பக வல்லுநர்களாகிய அவர்கள் திருப்பாதிரிப்புலியூருக்கு வந்தபோது, தங்கள் ஊர்க்கும் ஒரு கலம்பகம் பாடும்படி அவ்வூரார் கேட்டனர். ஆனால், தொல்காப்பியத் தேவரின் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகமோ முன்னமேயே மிகவும் பெயர் பெற்று விளங்கியது. இந்நிலையில் திருப்பாதிரிப் புலியூர் இறைவன் மேல் தாங்களும் ஒரு கலம்பகம் பாடத் தேவையில்லை என இரட்டையர்கள் உணர்ந்து, தேவரின் கலம்பகமே போதும் எனக் கூறிவிட்டனர். எனவே, கலம்பகச் ‘சேம்பியன்கள்’ (Champions) ஆன இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்ற திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இரட்டையர்கட்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களால் பாராட்டப்பெற்று வந்திருக்க வேண்டும் என உணரலாம். ஆகவே, தொல்காப்பியத் தேவர், முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகரினும் முற்பட்டவராய், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார் எனத் துணியலாம்.
மேலே இதுவரையும் செய்த ஆராய்ச்சியில், தொல்காப்பியத் தேவரும் மாணிக்கவாசகரும் பத்தாம் நூற்றாண்டளவில் முறையே அடுத்தடுத்து வாழ்ந்தவராய் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அனைவரும் ஏற்றுக் கொள்வது அரிது. காலவாராய்ச்சி மிகவும் கடுமையானது; அதற்குத் திட்டவட்டமாய் அறுதியிட்டு உறுதி கூறி முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது. அந்தந்தக் காலச் சூழ்நிலையைக் கொண்டு இப்படி யிருந்திருக்கலாம் எனக் குறிப்பாகவே கூறமுடியும்.
இந்த அடிப்படையில் நோக்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலத்தையடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்பதும், அந்தக் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் புலப்படும். எனவே, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்பது தெளிவு.
மாணிக்கவாசகருக்காகக் கெடிலம் திசைமாறியதாகத் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் கூறப்பட்டிருப்பதனால் மட்டும். கெடிலம் பத்தாம் நூற்றாண்டில் - அதாவது ஆயிரம் ஆண்டுகட்கு முன் திசைமாறி யிருக்கலாம் என்ற முடிவுக்கு வரவில்லை; அதற்கு வேறு இயற்கைச் சான்றும் உள்ளது. மாணிக்கவாசகருக்காக ஆறு திசைமாறியது என்பதை நம்பாவிட்டாலும், மாணிக்கவாசகர் காலத்தில் திசைமாறி யிருக்கலாம் என்பதையாவது நம்பலாம் என்ற முடிவு, முன்னமே (பக்கம் - 67) தக்க சான்றுடன் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலும் துணைசெய்யும் இயற்கைச் சான்றாவது:
திசை மாறுவதற்கு முன் கெடிலம் ஓடியதாகச் சொல்லப்படும் பழைய பாதையை இப்போது பார்த்தால், அங்கே ஒரு காலத்தில் ஓர் ஆறு ஓடியதாக யாரும் சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நோக்குடன் பார்த்தால், அந்தப் பழைய பாதை சிறிது பள்ளமாயிருப்பதையும் ஆங்காங்கே சிறுசிறு ஓடைகள் இருப்பதையுங்கொண்டு, முன்பு ஆறு ஓடியிருக்கலாம் என்று கூற முடியும். ஆனால், பொது மக்கள் இயற்கையாகப் பார்த்தால், ‘அந்த இடத்தில் ஆறு ஓடியதாகச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அந்தப் பாதை மாற்றம் பெற்று நன்செய் வயல் பகுதியாகக் காட்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய மாற்றம் பெறவேண்டுமானால், குறைந்தது ஆயிரம் ஆண்டு காலமாயினும் தேவைப்படும். ஓர் ஆற்றின் பாதை தன் பழைய உருவை இழந்து, தன் இரு கரைப் பக்கங் களிலுமுள்ள வயல் பகுதியோடு வயல் பகுதியாய்க் கலந்து மாறுவது என்பது இரண்டு மூன்று நூற்றாண்டு கால அளவில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியன்று. எனவே, இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன் - அஃதாவது பத்தாம் நூற்றாண்டில் அஃதாவது மணிவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்ற முடிவுக்குத் துணிந்து வரலாம்.
உலகில் ஆறுகள் ஆங்காங்கே - அவ்வப்போது திசைமாறுவது இயற்கையே யென்றாலும், கெடிலத்தின் இந்தத் திசை மாற்றம், வரலாற்று உண்மையினையும் இலக்கிய ஆட்சியினையும் மாற்றும் நிலையில் இருப்பதால், ஈண்டு இத்துணை விரிவாக ஆராய்ச்சி செய்யவேண்டியதாயிற்று. இல்லாவிடின், வரலாறும் இலக்கியமும் பொய்யாகி விடுமன்றோ ? வைகையாறு கூட, மதுரையில் இப்போது ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் ஒரு காலத்தில் ஓடியதாகச் சொல்லப் படுவதுண்டு. மற்றும், தென்னார்க்காடு மாவட்டத்தில், அருணந்தி சிவாசாரியார் தோன்றிய திருத்துறையூர் என்னும் ஊருக்கு வடக்கே இப்போது ஓடிக்கொண்டிருக்கும் தென் பெண்ணையாறு, சுந்தரமூர்த்திநாயனார் காலத்தில் திருத்துறையூருக்குத் தெற்கே ஓடியதாகப் பெரிய புராணத்திலிருந்து தெரிகிறது. திருத்துறையூருக்குத் தெற்கே திருவதிகை உள்ளது. சுந்தரர் திருத்துறையூரிலிருந்து புறப்பட்டுத் தென்பெண்ணை யாற்றைக் கடந்து திருவதிகையை அடைந்ததாகச் சேக்கிழார் பாடியுள்ளார். இதனை, பெரிய புராணம் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலுள்ள
"திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான்
அமர்ந்தருளும்
பொருத்தமாம் இடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான்
மனங்கொண்டார் (81)
"மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனல் பெண்ணை யாறுகடந் தேறியபின்
நிலவு பசும் புரவிநெடுந் தேரிரவி மேல்கடலில்
செல அணையும் பொழுதணையத் திருவதிகைப்
புறத்தணைந்தார்" (82)
என்னும் பாடல்களால் அறியலாம். பாடல்களிலுள்ள திருத்துறையூர்தனைப் பணிந்து..... பெண்ணையாறு கடந்தேறிய பின் .... திருவதிகைப் புறத்தணைந்தார்’ என்னும் பகுதிகளை நோக்கின், திருத்துறையூருக்கும் அதற்குத் தெற்கேயுள்ள திருவதிகைக்கும் இடையே பெண்ணையாறு ஓடியமை புலப்படும். ஆனால், இப்போது திருத்துறையூருக்கு வடக்கே பெண்ணை ஓடுகிறது. திருத்துறையூருக்கும் திருவதிகைக்கும் இடையே ஆறு கிடையாது.
பெண்ணையினும் கெடிலத்தின் திசைமாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும். இந்தத் திசைமாற்றம் திருவயிந்திரபுரத்தில் ஏற்பட்டிருப்பதாக முன்னர்க் கூறினோம். பத்தாம் நூற்றாண்டிற்குமுன், வானமாதேவிப் பக்கத்திலிருந்து கிழக்குநோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் கெடிலம், திருவயிந்திரபுரத்தில் கேப்பர் மலையிலிருந்து பிதுங்கி நீட்டிக்கொண்டிருக்கும் சிறு குன்றைச் சிறிது தொலைவு வடக்கு நோக்கி வளைந்து சுற்றிக்கொண்டு மீண்டும் கிழக்குநோக்கிக் கேப்பர்மலை அடிவாரத்தை ஒட்டியே கரையேற விட்ட குப்பம் வழியாக ஓடிக்கொண்டிருந் திருக்கவேண்டும். பின்னர்ப் பத்தாம் நூற்றாண்டு அளவில், திருவயிந்திரபுரத்து மலைப்பிதுக்கத்தில் வடக்கு நோக்கி வளைந்த கெடிலம், சிறிது தொலைவிற்குள்ளேயே மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பாமல், தொடர்ந்து ஒரு கி.மீ. தொலைவிற்கு வடக்கு நோக்கியே ஓடிக்கொண்டிருக்கத் தொடங்கிவிட்டது. வெள்ளப் பெருக்கின் மிகுதியினால் இப்படி நடந்திருக்கவேண்டும். இவ்வாறு நெடுந்தொலைவு வடக்கு நோக்கி ஓடிப் பிறகு கிழக்கு நோக்கித் திரும்பியதால் தான், முன்னர்த் திருப்பாதிரிப்புலியூருக்குத் தெற்கே ஓடிக்கொண்டிருந்த ஆறு இப்போது அந் நகருக்கு வடக்கே காணப்படுகிறது.
கெடிலத்தின் சுவையான திசைமாற்ற வரலாறு இதுதான்!
* * *
↑ பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 131.
↑ 32. பெரும் பற்றப் புலியூர் - சிதம்பரம்; உத்தர புலிசை- திருப்ப பாதிரிப் புலியூர். 35. உத்தர தீரம் - வடகரை, 39, சாகரம் - கடல்.
↑ 45. பாடலேச்சுரன் நிகேதனம் - பாடலேச்சுரர் கோயில். 47. வேத்திரம் - பிரம்பு.
↑ திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் - பதிப்புரை
↑ தனிப்பாடல்.
6. கெடிலத்தின் முடிவு
திரிசூலம்
திருவயிந்திரபுரத்துக்கும் கடலூர்ப் புதுப்பாளையத்திற்கும் நடுவே நான்கு திசைமாற்றத் திருப்பங்களைப் பெற்றுள்ள கெடிலம், புதுப்பாளையத்திலிருந்து கிழக்குநோக்கி 3 கி.மீ. தொலைவு ஒடிக் கடலில் கலக்கிறது. கடலில் கலப்பதற்கு முன்னால், கெடிலத்திலிருந்து வடக்குநோக்கி ஒரு கிளையும் தெற்குநோக்கி ஒரு கிளையுமாக இரண்டு கிளைகள் பிரிகின்றன. இந்த வகையில் கெடிலத்தின் தோற்றத்திற்குத் திரிகுலத்தை ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம். இதனால் கெடிலம் மூன்று இடங்களில் கடலோடு கலப்பதைக் காணலாம்.
வடகிளை
கெடிலத்தின் வடகிளை அவ்வளவு சிறப்பானதன்று; அது தேவனாம்பட்டினத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு கடலில் கலக்கிறது. கெடிலத்தின் முக்கிய நடுப் பகுதிக்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தீவு போன்ற தரைப் பகுதி அமைந்துள்ளது. அதிலேதான் தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுார் உள்ளது. இவ்வூரின் கிழக்கே கடலும், தெற்கே கெடிலமும், மேற்கிலும் வடக்கிலும் கெடிலத்தின் வடகிளையும் இருக்கக் காணலாம் (கெடிலக்கரை - படம் பார்க்கவும்). இந்தத் தேவனாம்பட்டினத் தீவில் கடற்கரையை யொட்டிக் கெடிலத்தின் வடகரையில் வரல்ாற்றுச் சிறப்பு மிக்க செயின்ட் டேவிட் கோட்டை பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இது பற்றி வேறோரிடத்தில் விளக்கம் காணலாம்.
முக்கிய நடுப் பகுதி
செயின்ட் டேவிட் கோட்டைக்கு வெகு அண்மையில்தான் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதி கடலோடு கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கீழுள்ள படத்தில் கண்டு களிக்கலாம்:
படத்தில் தொலைவில் வெண்மையாய்த் தெரிவது கடல் அலை. அதற்கு முன்னால் இருப்பது கெடிலம் ஆறு. ஆறும் கடலும் கலக்கும் இடத்தில் அலை மோதுவதைக் காணலாம்.
கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகவும் இனிமையானது. மாலை வேளையில் மக்கள் வந்து இன்பப் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடம் இது. பணத்தைப் பாராமல் செலவு செய்து சீர்திருத்தினால், சென்னை மெரினா கடற்கரையைப் (Beach) போல இஃதும் குறிப்பிடத்தக்க ஒரு கடற்கரையாகக் காட்சியளிக்கும். சென்னை மெரினாபோல இங்கே நீளம் இல்லையெனினும் அகன்ற மணற்பரப்பு ஓரளவு உண்டு. இந்தக் கடலூர்க் கடற்கரையில் கெடிலம் ஆறு கடலோடு கலப்பது, சென்னை மெரினா கடற்கரைக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும். சென்னை மெரினாவில் காற்று மட்டுந்தான் வாங்கலாமே யொழிய, கடலோடு ஆறுகலக்கும் கண்கவர் காட்சியும், சோலைகள் நிறைந்த சூழ்நிலையும் இல்லை. மொத்தத்தில் இக் கடற்கரையின் அமைப்பு, இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கவுண்டி கடற்கரை’ போன்றதெனப் புகழப்படுகிறது.
மாலை வேளையில் இக் கடற்கரைக் காட்சியையும் காற்றையும் நுகர ஒரு சிலரே கடலூர் நகரிலிருந்து வருகின்றனர். பலர் திரண்டு வராததற்குக் காரணம், நகரக் குடியிருப்புப் பகுதிகளினின்றும் இரண்டு மூன்று கி.மீ. தொலைவு கடற்கரை தள்ளியிருப்பதே. மாலை வேளையில் கடற்கரைக்கு நிரம்பப் பேருந்து வண்டிகள் (டவுன் பஸ்) விடுவதன் வாயிலாக இக்குறையைப் போக்கலாம். இதை யார் செய்வது? நாம் இங்கிலாந்திலுள்ள கவுண்டி கடற்கரைக்குப் போகவேண்டியதில்லையே! நம் நாட்டிலேயே இயற்கையாய் அமைந்திருக்கும் இந்த வசதியை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாமே! இதற்கு முயற்சி நடை பெறாமலும் இல்லை. கடலூர் நகராண்மைக் கழகம் 1938 ஆம் ஆண்டில் கடற்கரையில் மின்விளக்குப் போட்டும் பூங்கா அமைத்தும் சில ஏற்பாடுகளைச் செய்தது. ஆயினும் இந்தச் சீரமைப்பு தொடர்ந்து போற்றப்படவில்லை. இனியாயினும் தக்க சீர்திருத் தங்களைச் செய்து போதிய பேருந்து வண்டிகளை விட்டால், பொதுமக்கள் கடலூர்ச் கடற்கரையைக் கைவிடாமல் அதற்கும் பெருமையளித்துத் தாமும் பயன் பெறுவர். என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும்.
தென்கிளை
கெடிலத்தின் போக்கில், கடற்கரைக்கு மேற்கே சிறிது தொலைவில் கெடிலத்திலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் கிளைதான் மிகமிக இன்றியமையாதது. இந்தக் கிளை ‘உப்பனாறு’ என அழைக்கப்படுகிறது. இது கெடிலத்திலிருந்து பிரிந்து தெற்கு நோக்கி 4 கி.மீ. தொலவு ஓடி, கடலூர் முதுநகர் (Cuddalore O.T.) என அழைக்கப்படும் கூடலூருக்கு அருகில் கடலோடு கூடுகிறது. இந்தத் தென்கிளையில் படகுப் போக்குவரவு உண்டு. கெடிலத்தின் பிரிவாகிய இந்த உ.ப்பனாற்றுப் பகுதிதான் கூடலூர்த் துறைமுகம் என அழைக்கப்படுகிறது. இந்த உப்பனாற்றின் மேற்குக் கரையில் கூடலூர் நகரம் உள்ளது.
கழிமுகத் தீவு - அக்கரை
கிழக்கே உப்பனாற்றிற்கும் கடலுக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலும், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு தெற்கு எல்லைகளாகக் கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக் கழிமுகத் தீவு ‘அக்கரை’ என மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு, கோரி என்னும் மூன்று சிற்றூர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும். தீவிற்குச் சென்றுவரப் படகுப் போக்கு வரவு உண்டு.
கடல் - முகத்துவாரம்
கெடிலத்தின் காட்சிகளுள் மிகச் சிறந்த தலையாய காட்சி, கெடிலத்தின் தென் கிளையாகிய உப்பனாறு கடலோடு கூடும் முகத்துவாரக் காட்சிதான்! ஆறு கடலோடு கூடும் இந்தக் கூடல், வரலாற்றில் குறிப்பிடத்தக்க கூடலாகும். இந்தக் கூடலினால்தான், இதன் அருகில் அமைந்துள்ள நகருக்குக் ‘கூடலூர்’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கூடலூர் என்னும் பெயர்தான் கடலூராக மாறியிருக்கவேண்டும் எனவும் எண்ண இடமளிக்கிறது. கூடல் என்றால் ஒரு கூடல் அன்று இரண்டு கூடல் அன்று இங்கே நான்கு கூடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவையாவன:
கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பனாறு கடலோடு கலக்கும் இடத்தில், தெற்கேயுள்ள சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவனாறு என்னும் ஒர் ஆறுவந்து உப்பனாற்றோடு சேர்ந்து கடலில் கலக்கிறது. எனவே, உப்பனாறு கடலோடு கூடுவது ஒரு கூடல் பரவனாறு கடலோடு கூடுவது இரண்டாவது கூடல்; உப்பனாறும் பரவனாறும் தமக்குள் கூடுவது மூன்றாவது கூடல், உப்பனாறும் பரவனாறும் இணைந்தபடியே கடலோடு கூடுவது நான்காவது கூடல் - என நான்கு கூடல் நிகழ்கின்றன. சுருக்கிச் சொன்னால், இந்த நான்கு கூடல்களும் ஒரே கூடல்தான்; அதாவது, உப்பனாறும் பரவனாறும் ஒரே இடத்தில் இணைந்து கடலோடு கலக்கின்றன. கீழுள்ள படத்தில் இந்தக் கூடலைக் காணலாம்.
ஆறுகள் கூடும் இடத்திற்கு நேரே சிறிது தொலைவில் கப்பல்கள் நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். கூடலூர்த் துறைமுகத்தில் படகுகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு உப்பனாற்றின் வழியாகக் கடலுக்குள் புகுந்து கப்பலில் சரக்குகளை இறக்கும்; அதேபோல், கப்பலிலிருந்து சரக்குகளை யேற்றிக்கொண்டு கடலிலிருந்து உப்பனாற்றுக்குள் புகுந்து வந்து உப்பனாற்றங்கரையிலுள்ள துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும். இந்த ஏற்றுமதி இறக்குமதிப் பணிகளில் பரவனாற்றுக்குப் பங்கு கிடையாது; அதில் ஒன்றும் நிகழவில்லை. உப்பனாறும் பரவனாறும் கூடுகிற இடத்திலே இரண்டு ஆறுகட்கும் நடுவில் ஒரு கி.மீ. நீளமுள்ள அணைபோன்ற தடுப்பு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பு, _j போன்ற வளைவுடன், மேலே வண்டி செல்லும் அளவுக்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆறுகளும் இணைந்து கடலிலே கலக்கும் முடிவிடம் வரையிலும் இந்தத் தடுப்பு இல்லை. குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடுகிறது. இந்தத் தடுப்பின்மேல் நின்று கொண்டு பார்த்தால் வடக்கே உப்பனாறும், தெற்கே பரவனாறும், கிழக்கே இரண்டு ஆறுகளும் சேர்ந்தபடி கடலிலே கலக்கும் முகத்துவாரமும் தெரிவது வியத்தகு கவின் காட்சியாகும்.
தண்ணிருக்கு நடுவே ஊடுருவி அமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புப் பாதை இல்லாவிடின், இவ்வளவு அண்மையில் நெருங்கிச் சென்று நான்கு கூடல்களுக்கும் நடுவில் நின்று கொண்டு இந்தக் கண்கொள்ளாக் காட்சியை நுகர முடியாது. உப்பனாற்றின் வழியாகக் கடலுக்குப் படகுப் போக்குவரவு நடைபெறுவதால், பரவனாறு மண்ணைக்கொண்டு வந்து உப்பனாற்றில் நிரப்பிப் படகுப் பாதையைத் தூர்த்துவிடாமல் இருப்பதற்காக, இரண்டு ஆறுகட்கும் இடையே இந்தத் தடுப்பு அமைக்கப்பட்டதாம். படகின் துணையின்றி, உந்து வண்டி (கார்) போன்ற ஊர்திகளின் துணைகொண்டு முகத்துவாரப் பகுதியை நெருங்கவும் உதவுகின்ற இந்தத் தடுப்பு பல நோக்கப் பயன் உடையதாயிருக்கிறது. முன்பக்கத்திலுள்ள படம், இந்தத் தடுப்பின் மேல் நீண்டதொலைவு சென்று நின்று கொண்டு எடுத்த படமே. படத்தில் நம் இடக்கைப் பக்கம் தெரிவதுதான் தடுப்பு.
7. கெடிலம் - பெயரும் காரணமும்
இந்த ஆறு பழைய இலக்கியங்களில் ‘கெடிலம்` என அழைக்கப்பட்டுள்ளது. அப்பர் தேவாரம், பெரியபுராணம், அருணகிரியார் திருப்புகழ், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலிய நூல்களில் ‘கெடிலம்’ என்னும் சொல்லுருவமே காணப்படுகிறது. ஆனால், இப்போது உலக வழக்கில் ‘கடிலம்’ என்று சிலர் அழைக்கின்றனர். அரசினரின் வெளியீடான ‘Madras District Gazetteers South Arcot’ (1962) எனும் ஆங்கில நூலில் ‘gadilam என்று காணப்படுகிறது, இந்த ஆங்கிலச் சொல்லுருவத்தைத் தமிழில் ‘கடிலம்’ என்று ஒலிக்க வேண்டும். ஒருசார் உலக வழக்கையொட்டி இந்த வெளியீடு ‘கடிலம்’ என்று பெயர் சொல்லுகிறது போலும்.
பல நூற்றாண்டுகட்குமுன் தொல்காப்பியத் தேவர் என்பவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூலில் கெடிலம், கடிலம் என்னும் இரண்டு சொல்லுருவங் களும் காணப்படுகின்றன. இச் செய்தி அந்நூலில் உள்ள
'ஐயர் திருக் கெடிலம் ஆட்டி’ (13)
'கடிலமா நதியதன் வடபால்’ (45)
'மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாலே’ (100)
என்னும் பாடற் பகுதிகளால் தெரியவரும். பழைய நூல்களெல்லாம் கெடிலம் என்றே ஒருமித்துக்கூற, ஆசிரியர் தொல்காப்பியத் தேவர் மட்டும், அந்த உருவத்தோடு கடிலம் என்னும் உருவத்தையும் கலந்து பயன்படுத்தியிருப்பதேன்?
ஒருவேளை, தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தின் நாற்பத்தைந்தாம் செய்யுளிலும் ‘கெடில மாநதி’ என்றே எழுதியிருக்கவும், அவருக்குப் பின்னால் ஏடு பெயர்த்து எழுதியவர்கள் ‘கெ’ என்னும் எழுத்திலுள்ள ‘ ௳ என்னும் கொம்பைக் கை தவறுதலாக விட்டுவிட்டுக் கடில மாநதி’ என எழுதிவிட்டிருப்பார்களோ? அல்லது, ஆசிரியரே, கடிலம் - கடிலம் என ஒலித்துப் பேசும் வழக்கத்தாலோ அல்லது கை தவறுதலாகவோ அந்தப் பாட்டில் ‘கடில மாநதி’ என எழுதிவிட்டிருப்பாரோ? அல்லது, இருவகையான வழக்குகளும் உள்ளன என்பதை அறிவிக்க வேண்டும் என்னும் கொள்கையுடன், கடிலம், கெடிலம் என்னும் இரண்டு உருவங்களையும் வேண்டுமென்றே ஆசிரியர் பயன்படுத்தி யிருப்பாரோ? இரண்டு உருவங்களுள் எது சரியானது?
தொல்காப்பியத் தேவர் 45 ஆம் பாடலில், ‘கமலம்’ என எழுதியிருப்பதற்குப் பொருத்தமான ஓர் அமைதி (சமாதானம்) கூற முடியும். ஈண்டு அப் பாடலின் இரண்டாவது அடி.’ முழுவதையும் நோக்க வேண்டும்.
"கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்"
என்பது பாடலின் இரண்டாம் அடி. இவ்வடியினை, ‘கைத்தலத்து’ என ‘கை’ என்னும் எழுத்தில் தொடங்கி யிருப்பதால், அதற்கு மோனைச் சொல்லாக, ‘கடில மாநதி’ என ‘க’ என்னும் எழுத்தில் சொல்லைத் தொடங்கியமைத்துள்ளார் ஆசிரியர். அ, ஆ, ஐ, ஒள என்னும் நான்கும் சொற்களின் முதலில் ஒத்துவருவது மோனையன்றோ ? இங்கே ‘கெடிலம்’ என எழுதிவிடின், ‘ஐ'யும் ‘எ'வும் அதாவது ‘கை'யும் ‘கெ’ வும் மோனையாக ஒத்துவர முடியாது. இதனை,
[1]"அகரமோடு ஆகாரம் ஐகாரம் ஔவாம்,
இகரமோடு ஈகாரம் எஏ
என்னும் மோனையிலக்கணப் பாடலால் அறிக. ஆயின், மோனைப் பொருத்தத்திற்காகக் கெடிலத்தைக் கடில மாக்குவதா? ‘குல்லாய்’ கொள்ளவில்லை என்பதற்காகத் தலையைச் செதுக்கலாமா? இதிலிருந்து தெரிவதாவது:மோனைப் பொருத்தத்திற்காக வலிந்து கெடிலத்தைக் கடிலமாக்கியிருக்க முடியாது. ‘கடிலம்’ என்னும் வழக்காறும் மக்களிடையே உள்ளதாலேயே தொல்காப்பியத் தேவர் துணிந்து ‘கடிலம்’ என்னும் சொல்லுருவத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
‘க'வுக்கும் ‘கெ'வுக்கும் எப்போதுமே போட்டியிருந்து கொண்டு வருகிறது. இந்த ஆறு இருக்கட்டும். கங்கை ஆற்றை எடுத்துக் கொள்வோம். அது ‘கெங்கை’ எனவும் பெயர் வழங்கப்படுகிறது. ஆறுகளின் பெயர்கள் இருக்கட்டும். கயாதரர் என்னும் புலவர் கெயாதரர் எனவும், அவரியற்றிய கயாதரம் என்னும் நூல் கெயாதரம் எனவும் இரண்டு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். சுந்தகம் கெந்தகம் எனவும், கஜமுகன் கெஜமுகன் எனவும், கடிகாரம் கெடிகாரம் எனவும், இவை போல் இன்னும் பல பெயர்களும் வழங்கப்படுவது கண்கூடு. ‘பல்லு குச்சைப் பல்லிலே போடப் பன்னிரண்டு மணி ஆய்விட்டது’ என்னும் தொடரை, ‘பெல்லு குச்சியெ பெல்லுலே போட பென்னண்டு மணி ஆயிட்டது’ எனச் சில ஊர் மக்கள் கொச்சையாக ஒலித்துப் பேசுகின்றனர். இப்படியே இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டலாம். ‘க'வுக்கும் ‘கெ'வுக்கும் இடையே நடந்து வரும் நீண்ட காலப் போராட்டம் இப்போது புலனாகுமே!
அங்ஙனமெனில், கடிலம் என்பது கெடிலம் என மாறியதா? அல்லது, கெடிலம் என்பதுதான் கடிலம் என்றாயிற்றா? இதற்குத் தீர்ப்பு வழங்குவது அரிது. முற்கூறிய எடுத்துக் காட்டுகளைக் கொண்டு தீர்ப்பு கூறப்புகின், கங்கை கெங்கையானது போல், கஜமுகன் கெஜமுகனானது போல், பல்லு குச்சு பெல்லு குச்சாக மாறியது போல், கடிலம் என்பதுதான் கெடிலமாக மாறியிருக்க வேண்டும் என எளிதில் சொல்லிவிடலாம்போல் தோன்றும். ஆனால், பெரியோர்களின் இலக்கியங்களில் ‘கெடிலம்’ என்ற உருவமே ஆட்சி பெற்றிருப்பது ஆழ்ந்து நோக்கற்பாலது.
கெடிலம் என்னும் சொல்லுக்கு அறிஞர்கள் பொருள் கூறுவதை நோக்குங்கால், கெடிலம் என்ற பெயரே சரியானது என்று தோன்றுகிறது. கெடிலம் என்னும் சொல்லுக்கு, ‘ஆழமான ஊற்று ஓடை’ என்னும் கருத்துப்படப் பொருள் சொல்லப்படுகிறது. இந்த ஆற்றைக் கடிலம் (Gadilam) எனவே எல்லாவிடங்களிலும் குறிப்பிடும் அரசாங்க விவரத் தொகுப்புச் சுவடி (Gazetteer) [2]ஓரிடத்தில் பின்வருமாறு எழுதுகிறது:-
- In ancient days it (Gadilam) was called the Kedilam meaning a deep gulf.”-
“பழங்காலத்தில் கடிலம் ஆறு ‘கெடிலம்’ என அழைக்கப்பட்டது; கெடிலம் என்றால் ‘ஆழமான நீர் ஓட்டம்’ என்பது பொருள்”. இது மேலுள்ள ஆங்கிலப் பகுதியின் கருத்து. இந்த ஆறு முன்பு கெடிலம் என அழைக்கப்பட்டதாகவும், இப்போது கடிலம் என அழைக்கப்படுவதாகவும் அரசாங்க வெளியீடு அறிவிக்கிறது. இது, கெடிலம் என்னும் சொல்லுக்கு deep gulf எனப் பொருள் கூறியுள்ளது, ‘deep’ என்பதற்கு ‘ஆழமான’ என்பது பொருள். ‘gulf’ என்பதற்கு, வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப் பள்ளம், நீர்ச் சுழல், நிரம்பா நெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப் பள்ளம் முதலிய[3] பொருள்கள் கூறப்பட்டுள்ளன. எனவே, ‘deep gulf’ என்பதைக் கொண்டு, கெடிலம் என்பதற்கு ‘ஆழமான நீரோட்டம்’ என்று பொருள் கொள்ளலாம்.
கெடிலம் என்னும் சொல்லுக்கு, [4]சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பின்வருமாறு பொருள் கூறியுள்ளது:-
கெடிலம் 1. Ketilam, n. cf. Garuda. 1. A river ncar Cuddalore; கடலூரை யடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா, 949, 1). 2. Deep stream; ஆழமான ஓடை . (W.)
கெடிலம் 2, Ketilam, N. cf. Kalila. 1. Den; கெபி. 2. Narrow passage; ஒடுங்கிய பாதை (W.)
இதன்படி நோக்குங்கால், கெடிலம் என்னும் சொல்லுக்கு, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்), ஒடுங்கிய பாதை என்னும் பொருள்கள் கிடைக்கின்றன. இந்தப் பொருள்கள், வின்சுலோ என்னும் ஆங்கில அறிஞரால் 1862 இல் உருவாக்கப்பெற்ற ‘வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி’ (M. Winslow, A Comprehensive Tamil and English Dictionary.) 67 GOLD அகராதியிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். வின்சுலோ அகராதியிலுள்ள பகுதி அப்படியே வருமாறு:-
“கெடிலம், S. The name of a river near Cuddalore, ஓர் நதி. 2. A byss, a deep gulf, ஆழமான ஓடை, 3. A den, கெபி. 4. A narrow passage, ஒடுங்கிய பாதை.”
வின்சுலோ அவர்களின் கருத்துப்படி., கெடிலம், மற்ற ஆறுகளுக்கு இல்லாத ஆழமோ பள்ளமோ, ஒடுங்கிய பாதையோ உடையதாகத் தோன்றவில்லை. ‘கெடிலம் ஓர் ஆறு என்னும் பொருள் வரையிலும் சரி. கெடிலம், காவிரி போன்ற ஆறுகளை நோக்க ஆழத்தில் மிகவும் குறைந்தது. வெள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவிற்குமேல் தண்ணீர் இல்லையென்று கூடச் சொல்லிவிடலாம். பிற ஆறுகளைப்போல் கெடிலமும் தொடக்கத்தில் ஒடுக்கமாயிருப்பினும் இதனினும் பள்ளமும் ஒடுங்கிய பாதையும் உடைய நீரோட்டங்கள் எத்தனையோ உள்ளன. எனவே, ஆழமோ, பள்ளமோ, ஒடுக்கமோ உடைமையால் இந்த ஆற்றிற்குக் கெடிலம் என்ற பெயர் சிறப்பாக ஏற்பட்டிருக்க முடியாது. அப்படி நோக்கினால், இதனினும் வேறு சில ஆறுகளுக்கே கெடிலம் என்னும் பெயர் மிகப் பொருந்தும்.
மற்றும், கெடிலம் என்னும் சொல்லுக்கு, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்), ஒடுங்கிய பாதை என்னும் முப்பொருள் களையும் வின்சுலோ எப்படி எங்கிருந்து கண்டு பிடித்தார் என்பது தெரியவில்லை. இஃது ஆராய்ச்சிக்கு உரிய தொன்று. வின்சுலோ, கெடிலம் என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளாமல், வடமொழிச் சொல்லாகக் கொண்டே, இப்பொருள்களைக் கூறியிருக்கிறார் என்று கருத வேண்டியிருக்கிறது. அவரது அகராதியில் கெடிலம், S. எனக் கெடிலம் என்னும் சொல்லின் பக்கத்தில் ‘S’ என்னும் குறியீடு காணப்படுகிறது. இந்த S என்பது Sanskrit என்னும் சொல்லின் சுருக்கக் குறியீடு (Abbreviation) ஆகும். Sanskrit என்றால், சமசுகிருதம் - அதாவது வட மொழிச் சொல் என்று பொருளாம். எனவே, கெடிலம் என்பது வடமொழிச்சொல் என வின்சுலோ கருதினார் என்பது விளங்கும். அதனால் தான், கெடிலம் என்னும் சொல்லுக்கு ஆழமான ஓடை, பள்ளம் என்றெல்லாம் அவர் பொருள் கூறியிருக்கிறார். அப்படியே கெடிலம் என்பதை வடிமொழிச் சொல்லெனக் கொண்டாலும், வடமொழியில் இந்தப் பொருள்களுடன் இப்படி ஒரு சொல் உண்டா என்பது ஐயப்பாட்டிற்கு உரியது.
வடமொழியில் கெடிலம் என ஒரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. வடமொழி வல்லுநர்களின் கருத்தும் இதுவே. வடமொழியில் 1. கடா (gada), 2. கடுலா (gadula), 3. கடலிகா (gaddalika), 4. கடரிகா (gaddarika) என்னும் சொற்கள் உள்ளன. இச்சொற்களுக்கு ‘A Sanskrit - English Dictionary By Sir Monier Williams, M.A., K.C.I.E’ - என்னும் வடமொழி - ஆங்கில அகராதியில்,
(கடா ) gada = ditch.
(கடுலா ) gadula = hump - backed.
(கடலிகா) (GL 60.5/s) gaddalika = Pravahena - like the current of the Gaddalika river, very slowly.
(கடரிகா) gaddarika = N. of a river with a very slow current (of which the source and course are unknown.)
என்று பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலுள்ள நான்கு சொற்களுக்கும் கெடிலம் என்னும் சொல்லுக்கும் உருவத்தில் ஒருசார் ஒப்புமை யிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொரு சொல்லாகப் பார்ப்போம்:
1. gada (கடா) என்ற சொல்லுக்கு அந்த அகராதியில் ditch எனப் பொருள் எழுதப்பட்டுள்ளது. ditch என்றால் குழி, பள்ளம், நீர்வடிகால் என்றெல்லாம் பொருள் உண்டு. வின்சுலோ அவர்கள், இந்த ‘கடா’ (gada) என்ற சொல்லிலிருந்துதான் கெடிலம் என்னும் சொல் உருவாகியிருக்க வேண்டும் எனக் கருதி, கெடிலம் என்ற சொல்லுக்கு ஆழமான ஓடை பள்ளம் என்ற பொருள்களைக் கூறியிருக்கவேண்டும் எனத் தோன்றகிறது. பார்க்கப்போனால், கடா எங்கேயோ இருக்கிறதே கெடிலம் எங்கேயோ இருக்கிறதே அதிலிருந்து இது எப்படி உருவாகியிருக்கக் கூடும், என்று கேட்கத் தோன்றும். இதற்கு வடமொழி வாணர்கள் எளிதில் விடையிறுப்பர். அதாவது, “வடமொழியிலக்கண முடிபுப்படி ‘இலச்’ என்பது சேர்ந்து, ஜடா என்னும் சொல்லிலிருந்து ‘ஜடில’ என்ற சொல்லும், பங்கம்’ என்னும் சொல்லிலிருந்து ‘பங்கில’ என்னும் சொல்லும் உருவாகியது போன்று ‘கடா’ என்ற சொல்லிலிருந்து ‘கடில’ என்ற சொல் உருவாகியிருக்கலாம். பின்னர் அது கடிலம் - கெடிலம் என்றெல்லாம் ஆகியிருக்கலாம்” என்று கூறக்கூடும். தமிழும் வடமொழியும் ஒருங்கறிந்த வின்சுலோவின் கருத்து இதுவாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், வடமொழியில் ‘கெடிலம்’ என்ற நேர்சொல் இல்லை. கடா என்பதிலிருந்து சுற்று வழியில் கெடிலம் உருவாகியதாக வின்சுலோ கருதிவிட்டார்.
வின் சுலோவின் கருத்துப்படி நோக்கினாலும் கெடிலம் அப்படியொன்றும் மிக்க ஆழமும் பள்ளமும் உடைய ஆறு அன்று. இப்படிப் பார்த்தால் இதனினும் வேறு எத்தனையோ ஆறுகளுக்கு இந்தப் பெயர் பொருந்தும்.
2. அடுத்து, Gadula (கடுலா) என்ற சொல்லுக்கு hump - backed எனப் பொருள் சொல்லப்பட்டுள்ளது. hump - backed என்றால், கூன் முதுகான - முதுகு கூனிய என்பது போலப் பொருள். இந்தப் பொருளுக்கும் ஆற்றுக்கும் தொடர்பில்லையாதலின் இந்தச் சொல்லை ஆராய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடலாம். ஒரு வேளை, ஆற்றின் வளைவைக் குறிப்பதாக ஏதேனும் தொடர்பு கூறுவதாயின், எல்லா ஆறுகளுக்குந்தான் வளைவு இருக்கிறது எனக் கூறித் தள்ளிவிடலாம்.
3. மூன்றாவதாக, gaddalika (கடலிகா) என்னும் சொல்லுக்கு, ‘கடலிகா’ என்னும் ஆற்றின் போக்கைப்போல் மிகவும் மெதுவாகச் செல்லும் நீரோட்டம் {Pravahena- like the current of the gaddalika river, very slowly) என்பதாகப் பொருள் செய்யப்பட்டுள்ளது. கடலிகா என்பது நமது கெடிலம் ஆற்றைக் குறிக்கும் பெயர் அன்று; அது எங்கேயோ உள்ள ஏதோ ஓர் ஆற்றைக் குறிப்பிடுகிறது. இதனை அடுத்த சொல் விளக்கத்தாலும் உறுதி செய்து கொள்ளலாம்.
4. இறுதியாக, gaddarika (கடரிகா) என்னும் சொல்லுக்கு, ‘கடரிகா என்பது மிகவும் மெதுவாகச் செல்லும் ஓர் ஆற்றின் பெயர், இந்த ஆறு எங்கே தோன்றி எங்கே ஓடுகிறது எனத் தோற்றமும் போக்கும் இப்போது தெரியப்படவில்லை’ (N, of a river with a very slow current of which the source and course are unknown) என்பதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து, கடரிகா, கடலிகா என்னும் இரண்டு சொற்களுமே ஏதோ ஓர் ஆற்றைக் குறிப்பன என்பதும், இந்த ஆறு இருக்குமிடம் தெரியவில்லை - வடமொழி நூற்களிலே பெயர் மட்டும் காணப்படுகிறது என்பதும் புலனாகலாம். ஆகவே, வடமொழி நூலிலே பெயர் காணப்படும் கடலிகா அல்லது கடரிகா என்னும் ஆறு, வடநாட்டுப் பக்கத்தில் உள்ள ஏதோ ஓர் ஆறாக இருக்கக்கூடுமே தவிர, தென்னாட்டில் உள்ள கெடிலமாகக் கருத வாய்ப்பே இல்லை. அன்றியும், தென்னாட்டில் எத்தனையோ பெரிய பெரிய ஆறுகள் இருக்க, சிறிய கெடிலத்தைப் பற்றிப் பழைய வடநூற்கள் குறிப்பிடக் காரணமேயில்லை.
மற்றும், கடா (gada), கடலிகா (gaddalika) என்பன போன்ற வடமொழிச் சொற்களின் அடிப்படையில் தமிழ் நாட்டு ஆற்றைக் குறிக்கும் கெடிலம் என்னும் சொல் உருவாகியிருக்க முடியும் என்ற கருத்துக்கு மொழி வரலாற்றுக் கொள்கையும் இடம் தராது. கெடிலக் கரையில் கல்மரத் துண்டுகள் காணப்பட்டதைக் கொண்டும், கெடிலம் கடலோடு கலக்குமிடத்தில் கழிமுகத் தீவுகள் ஏற்பட்டிருப்பதைக் கொண்டும் கெடிலம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என (அடுத்த பகுதியில்) ஆய்ந்து முடிவு கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு பழமையான ஆற்றின் பெயராகிய கெடிலம் என்பது, ஈராயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் நாட்டிற்கு வந்த வடமொழிச் சொல்லாக இருக்கவே முடியாது.
பிற்காலத்தில் தமிழ் நாட்டில் பல இடங்களின் பெயர்கள் வடமொழிச் சொற்களால் குறிக்கப்படுவதைப் போல, இந்த ஆற்றிற்குக் கெடிலம் என்னும் வடமொழிப் பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கூறலாம். அப்படியென்றால் இந்த ஆற்றின் பழைய பெயர் எது? பன்னுறாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ்நாட்டில் தோன்றித் தமிழ்நாட்டில் ஓடித் தமிழ்நாட்டுக் கடலில் கலக்கும் ஓர் ஆற்றுக்குத் தமிழில்தானே முதலில் பெயர் வைக்கப்பட்டிருக்கக் கூடும்? அந்தத் தமிழ்ப் பெயர் எது? திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஓர் ஆற்றைத் ‘தாமிரவருணி’ என்னும் வடமொழிப் பெயரால் இப்போது குறித்தாலும், ‘பொருநை’ என்னும் பழைய தமிழ்ப் பெயர் அதற்கு உள்ளமையை இலக்கியங்களால் அறிகிறோம். அதுபோல, கெடிலம் என்பது வடமொழிப் பெயராயின் பழைய தமிழ்ப்பெயர் எங்கே? அப்படி யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த அப்பர் தேவாரத்திலும் கெடிலம் என்ற பெயரே காணப்படுகிறது. பிற்காலத்தில் ‘கருடநதி’ என்ற ஒரு பெயர் ஏற்பட்டது. அது, திருவயிந்திரபுரப் பதிப்பெருமை தொடர்பாக ஏற்பட்டது. திருமாலின் தண்ணீர் வேட்கையைத் தணிப்பதற்காகக் கருடன் தன் அலகால் கீறி உண்டாக்கிய ஆறு ஆதலின் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுவது ஒரு வகைப் புராணக் கதை. இது குறித்துப் பின்னர் விவரிக்கப்படும். இந்தப் பெயர் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டது. மிகப் பழைய பெயர் கெடிலம் என்பதே. எனவே, அது தமிழ்ப் பெயரேதான்; வடமொழிச் சொல்லிலிருந்து உருவான பெயர் அன்று.
கெடிலம் என்பது வடமொழிச் சொல் அன்று என்று கூறுவது, ‘எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை’ என்று கூறுவதுபோல் இருக்கிறதே! என்று சிலர் சொல்லலாம். இங்கே இது குறித்து இவ்வளவு எழுதவேண்டி வந்ததற்குக் காரணம், ஆங்கில அறிஞர் வின்சுலோ அவர்களின் அகராதிப் பொருள்தான் அவர் கெடிலம் என்னும் சொல்லை வடசொல்லாகக் கொண்டு, ஒரு நதி, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்) என்றெல்லாம் பொருள் எழுதியுள்ளமை, பிற்கால ஆராய்ச்சியாளர்க்குக் குழப்பம் விளைவிக்கலாம். அக் குழப்பத்தைப் போக்கவே இங்கு இவ்வளவு எழுத நேர்ந்தது. எனவே, கடா - கடில - கெடிலம் எனக் கடாவுக்கும் கெடிலத்திற்கும் முடிச்சுப் போடாமல், கெடிலம் என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே கொள்ளவேண்டும்.
கெடிலம் என்பது தமிழ்ச் சொல்லாயின் அதன் பொருள் என்ன? இந்த ஆற்றுக்குக் கெடிலம் என்னும் பெயர் எதனால் ஏற்பட்டது? என்ற வினாக்கள் எழலாம். வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயர்களுக்குத்தான் நாம் பொருத்தமான பொருளும் சரியான காரணமும் கூறமுடியுமே தவிர, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய (Pre - History) காலத்தில் ஏற்பட்ட பெயர்களுக்கு நாம் சரியான பொருள் விளக்கம் தர முடியாது. மற்றும், ஊர்களின் பெயர்களுக்கு விளக்கம் கொடுக்க முடிந்தாலும், ஆறுகளின் பெயர்களுக்கு விளக்கம் கொடுப்பது அருமை. ஏனெனில், காலத்துக்குக் காலம் மக்கள் பெருகப் பெருக ஊர்களும் புதிது புதிதாகத் தோன்றுவதியல்பு; ஊர்கள் மக்கள் அறிந்து தோன்றுபவை; மக்களால் தோற்றுவிக்கப்படுபவை; அதனால், மக்கள் தம்மால் உண்டாக்கப்படும் ஊர்களுக்குப் பொருத்தமான காரணங்களுடன் பெயர்கள் வைக்கின்றனர்; அதனால் ஊர்கட்குப் பெயர்க்காரணப் பொருள் விளக்கம் கூறிவிட முடியும். ஆறுகளின் நிலையோ அத்தகையதன்று. மக்கள் தோன்றுவதற்கு முன்பே ஆறுகள் தோன்றிவிட்டிருக்கும். மற்றும், ஆறுகள் மக்களால் உண்டாக்கப்படவில்லை. மேலும் ஓர் ஆறு, ஓர் ஊரோடு அல்லது ஒரு நாட்டோடு அமைந்து விடவில்லை ; ஒரே ஆறு பலநாடுகளின் வழியாக பல ஊர்களின் வழியாக ஓடுகிறது. இந்த நிலைமையில், எந்த நாட்டார், எந்த ஊரார், தமக்கு முன்பே தோன்றியுள்ள ஓர் ஆற்றிற்கு எந்தக் காரணம் பற்றி எந்தப் பெயரை வைப்பது? பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய ஓர் ஆற்றுக்கு, வரலாற்றுக் காலத்துக்கு முன்பே - எப்போதோ ஏதோ ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அதன் காரணத்தைக் கண்டறிவது அறிது. பழங்கால மக்கள், தமக்கு முன்பே தோன்றியிருந்த மரம், மட்டை , இலை, கல், காடு முதலியவற்றை இப்பெயர்களால் அழைப்பதற்கு என்னென்ன காரணங்கள் கூற முடியும்? நம்மால் காரணங்கள் கூற முடியாது. அதே போலத்தான், அவர்கள் அழைத்த ஆற்றின் பழைய பெயருக்கும் காரணம் கூறமுடியாது. ஒர் ஆற்றின் பெயருக்குக் காரணப் பொருள் விளக்கம் கூறமுடியாதிருப்பதே, அந்த ஆறும் அந்தப் பெயரும் மிகமிகப் பழமையானவை என்பதற்கு ஒரு தக்க சான்றாகும்.
அன்றியும், ஒர் ஆற்றிற்குப் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுவதும் உண்டு; இருப்பினும், எல்லோரும் அறிந்த எல்லாராலும் வழங்கப்படுகிற பொதுப்பெயர் ஒன்றும் அந்த ஆற்றிற்கு இருக்கும். ஆறு ஓடிவரும் வழியில் உள்ள ஊர்களின் பெயரால் ஆற்றின் பெயர் அழைக்கப்படுவதும் உண்டு. செஞ்சி வட்டத்திலிருந்து தோன்றி வருவதும் சங்கராபரணி என்றும் வராகநதி என்றும் அழைக்கப்படுவதும் ஆகிய செஞ்சியாறு, வில்லியனூர் என்னும் ஊர்ப்பக்கத்தில் வரும்போது ‘வில்லியனுர் ஆறு’ என்றும், திருக்காஞ்சி என்னும் ஊர்ப்பக்கத்தில் வரும்போது ‘திருக்காஞ்சியாறு’ என்றும் வெளியூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. அதனையே, புதுச்சேரிப் பக்கத்தில் சுண்ணாம்பு ஆறு - கிளிஞ்சல் ஆறு என்றெல்லாம் அழைக்கின்றனர். இது போலவே, கெடிலம் கருடநதி என்று அழைக்கப்படுவதல்லாமல், திருவதிகைப் பக்கம் வரும்போது ‘திருவதிகை ஆறு’ என்றும் திருவயிந்திரபுரம் பக்கம் வரும்போது திருவயிந்திரபுரம் ஆறு’ என்றும் வெளியூர் மக்களால் இன்றும் அழைக்கப்படுகிறது. திருவதிகை அல்லது திருவயிந்திரபுரத்தில் உள்ள மக்கள் கெடிலத்தை வறிதே ஆறு என்றோ அல்லது ‘நம்மூர் ஆறு’ என்றோ குறிப்பிடக்கூடும். ஆனால், எல்லா ஊர்க்காரர்களுமே கெடிலம் என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடுவர். எனவே, கெடிலம் என்பதுதான் அந்த ஆற்றின் பழைய இயற்பெயராய் இருக்க முடியும். ஒர் ஆற்றின் பழைய இயற்பெயர்தான், பெரும்பாலான இலக்கியங்களிலும் பெரிதும் இடம் பெற்றுப் பொதுமைப் பெருமை அடைந்திருக்க முடியும். கெடிலத்தைப் பொறுத்த வரையில், பழைய இலக்கியங்களிலிருந்து புதிய இலக்கியங்கள் வரையும் பெரும்பாலும் கெடிலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. எனவே, கெடிலம் என்பதை, அந்த ஆற்றின் முதல் தமிழ்ப் பெயர் எனத் துணிந்து கூறலாம்.
கெடிலம் என்னும் தமிழ்ப் பெயருக்கு என்ன பொருள் விளக்கம் கூறுவது? கெடிலம் என்றால் ஒர் ஆறு என்னும் பொருளோடு தமிழ் அகராதிகள் அமைந்துவிட்டன. ஓர் ஆறு என்பது தவிர்த்து வேறு பொருள்கள் எல்லாம் வின் சுலோ கூறுபவை. அவர் வடமொழிச் சொல் எனக் கொண்டு வலிந்துகூறும் அப்பொருள்களை விட்டுவிடுவோம். கடலூரை அடுத்து ஒடும் ஆறு ஆதலின் கடிலம் கெடிலம் என்றாகி யிருக்கலாம் என்று சிலர் ஒரு தோற்றமாகக் கூறுகின்றனர். இது போன்ற பெயர்க்காரணங்கள் எல்லாம், ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகக் கூறும் பொருந்தா உரைகளாகும். கெடிலம் இருக்கட்டும்! ஊர் அறிந்த உலகறிந்த காவிரி யாற்றின் பெயர் விளக்கமே பலவிதாகப் பேசப்படுகிறதே!
காவிரி ஆறானது காவேரி எனவும் அழைக்கப்படுகிறது. உலக வழக்கில் மட்டுமன்று; செய்யுள் வழக்கிலும் காவேரி, காவிரி என்னும் இருவேறு பெயர்களும் காணப்படுகின்றன. சங்க காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்
[5]"கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி."
[6]“காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி."
[7]"ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி.”
[8]"பரப்பு நீர்க் காவிரிப் பாவை."
என்று இளங்கோவடிகள் காவேரி, காவிரி என்னும் இரு பெயர்களும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை முதலிய சங்க இலக்கியங்களில் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட இடங்களில் காவிரி என்னும் சொல்லாட்சியே காணப்படுகிறது. இடைக் காலத்தில் எழுந்த கம்பராமாயணத்தில்கூட,
[9]"காவிரி நாடன்ன கழனிநா டொரீஇ"
எனக் காவிரி என்றே கம்பரால் குறிப்பிடப் பட்டுள்ளது. பிற்காலத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு ஆட்சிகளும் உலக வழக்கில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் எந்தப் பெயரைச் சரியான பெயர் என்று எடுத்துக் கொள்வது? என்ன பெயர்க்காரணம் கூறுவது? காவிரி என்ற பெயருக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது; காவேரி என்ற பெயருக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது. இப் பெயர்க் காரணங்களுள் எதை ஏற்றுக்கொள்வது? முதலில் அப்பெயர்க் காரணங்களைப் பார்ப்போம்:
மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த சையமலையில் முன்னொரு காலத்தில் அகத்தியர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அவரது கைச்செப்பு (கமண்டலம்) தண்ணிருடன் வைக்கப்பட்டிருந்தது. இது நிற்க. அசுரர்க்கு அஞ்சிய இந்திரன் அவர்களை வெல்வான் வேண்டி இறைவனுக்குப் பூசனை புரியச் சீர்காழியில் மலர் வனம் வைத்து வளர்த்து வந்தான். அம் மலர் வனத்திற்கு நீர் வசதியளிக்குமாறு அவன் விநாயகரை வேண்டிக் கொண்டான். விநாயகர் காகத்தின் வடிவில் சையமலை சென்று அகத்தியரின் கைச்செப்பு நீரைக் கவிழ்த்து விட்டார். அந்த நீர் ஆறாக விரிந்து சீர்காழிவரையும் ஒடி வந்து இந்திரனது பூந்தோட்டத்திற்குப் பயன்பட்டது. இதுதான் காவிரி ஆறு. காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து ஆறு ஆனதால் ‘காகவிரி என்று ஆற்றிற்குப் பெயர் ஏற்பட்டதாம். ‘காகவிரி’ என்ற பெயர் நாளடைவில் சுருங்கிக் ‘காவிரி’ என்று ஆயிற்றாம். இவ்வாறு பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்திரனது ‘கா’ (பூஞ்சோலை) வளர்வதற்காக விரிந்து வந்த ஆறு ஆதலின் காவிரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பெயர்க் காரணங்கள் கூறுபவர்கள், கந்தபுராணக் கதையை ஆதாரமாகக் கொண்டவர்கள். இனி, காவேரி என்பதின் பெயர்க் காரணம் வருமாறு:
கவேரன் என்பவன் வீடுபேறு அடையப் பிள்ளைப்பேறு வேண்டிப் பிரமனை நோக்கித் தவஞ்செய்தான். பிரமன் தன் மகளாகிய விஷ்ணு மாயை என்பவளைக் கவேரனுக்கு மகளாகத் தோன்றச் செய்தான். கவேரனுக்கு மகள் ஆனதால் அவள் காவேரி எனப்பட்டாள். அவள் உலோபா முத்திரை என்னும் பெயருடன் அகத்தியரை மணந்துகொண்டாள். அகத்தியர் அவளை நீர் வடிவாக்கித் தம் கைச்செப்பில் அடக்கி வைத்தார். அவரது கைச்செப்பு கவிழ்க்கப்பட்டு நீர் ஆறாகப் பெருகி ஒடியது. அதுதான் காவேரி ஆறு. கவேரன் மகளாகிய காவேரி நீர் வடிவில் ஆறாக ஓடியதால் அந்த ஆற்றிற்குக் காவேரி என்னும் பெயர் ஏற்பட்டது. இப்படிப் பெயர்க்காரணம் கூறப்படுகிறது. ஆக்கினேய புராணத்தை ஆதாரமாகக் கொண்டது இது.
ஜனகன் மகள் ஜானகி என்பதுபோலக் கவேரன் மகள் காவேரி என்று ஆனது. வடமொழி இலக்கணத்தில் ‘தத்தி தாந்த நாமம்’ எனக் கூறப்படும். இப்படிப் பார்த்தால், காவேரி என்னும் பெயரை வடமொழிச் சொல்லாகக் கொள்ளநேரும். காவிரி என்பதன் பெயர்க் காரணத்தை நோக்கின், அதனைத் தமிழ்ச்சொல்லாகக் கொள்ள முடிகிறது. சிலர் காவேரி என்பதையும் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு, ‘கா என்றால் சோலை; வேரி என்றால் தேன்; காவேரி என்றால் சோலையில் தேன் பெருகப் பாய்ந்து வளப்படுத்தும் ஆறு - சோலைத் தேனுடன் பாய்ந்து வரும் ஆறு’ என்றெல்லாம் பொருள் கூறுகின்றனர்.
இப் பெயர்க் காரண விளக்கங்களைப் பார்க்கும்போது, காவிரி, காவேரி என்பவற்றில் எது உண்மையான பெயர்? அப் பெயர் ஏற்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்துத் திட்ட வட்டமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்ப நிலையே நிலவுகிறது. காவிரியைப் பற்றியே இப்படியென்றால், கெடிலத்தைப் பற்றி என்ன கூறுவது? எனவே, கெடிலத்தைப் பற்றித் திட்டவட்டமான பெயர்க்காரணம் ஒன்றும் கூறவியலாது என்பது தெளிவு.
கெடிலத்திற்குப் பெயர்க் காரணம் கூறமுடியாது என்று தெரிவிப்பதற்கு இத்தனை பக்கம் எழுதியது ஏன்? கெடிலம் என்பதை வடமொழிச் சொல்லாகக் கொண்ட வின்சுலோ அகராதியால் ஆராய்ச்சியாளரிடையே விளையக் கூடிய குழப்பத்தைத் தெளிவு படுத்தவே இவ்வளவு வேண்டியதாயிற்று.
கருடநதி
கெடிலத்திற்குக் ‘கருடநதி’ என்னும் மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. இப்பெயர் ஏற்பட்டதற்கு இரண்டு இடங்களில் இரண்டு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன. முதலிடத்து முதற்காரணமாவது:
கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி வட்டத்தில் - மையனூரில் ஒரு மலையின் அடியில் - ஒரு பாறையிலுள்ள ஒரு சுனையி லிருந்து தோன்றுகிறது என முன்னர்க் கண்டோம். கெடிலம் தோன்றும் பாறையின் பெயர் ‘கருடன் பாறை’ என்பதாகும். கருடன் பாறையிலிருந்து தோன்றும் நதி ஆதலின் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டதாக அந்தப் பக்கத்து மக்கள் கூறுகின்றனர். கருடன் பாறையின் தோற்றம் கருடன் அலகு (மூக்கு) போல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போது அப்படியொன்றும் தெளிவாகத் தெரியாவிடினும் முன்னொரு காலம் அப்படியிருந்திருக்கலாமோ - பின்னர் நாளடைவில் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாமோ - என்னவோ! அந்தப் பாறைப் பகுதியில் கருடப் பறவைகள் நிரம்பத் தங்கியிருந்ததால் ‘கருடன் பாறை’ என்ற பெயர் வழங்கப் பட்டும் இருந்திருக்கலாமே!
மற்றும், கருடன் அப்பாறையில் தன் அலகால் கீறி உண்டாக்கிய சுனையிலிருந்து ஆறு தோன்றுவதால் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டது என அங்கேயே வேறொரு காரணமும் கூறப்படுகிறது. மேலும், அந்தச் சுனை அடிப்பகுதி அகலமாகவும் முடியும் முனைப்பகுதி கூர்மையாகவும் கருடன் மூக்கு போல் இருப்பதால் அந்தச் சுனையிலிருந்து தோன்றும் ஆறு கருடநதி எனப்பட்டது என்று எவரேனும் ஒரு பெயர்க் காரணம் கூறினும் வியப்படைவதற்கில்லை . (படம் காண்க : பக்கம் - 33)
அடுத்து, திருவயிந்திரபுரச் சூழ்நிலையில் வேறொரு வகையான பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது:
முன்னோர் காலத்தில் வைகுந்தத்திலிருந்து திருமாலானவர் திருமகளுடனும் தேவ குழுவுடனும் வான் வழியாக உலாச் சென்று கொண்டிருந்தாராம். கடலூரை யடுத்துள்ள திருவயிந்திரபுரத்துக்கு மேலே போய்க்கொண்டிருந்த போது திருமால் நீர்வேட்கை கொண்டாராம்; உடனே கீழிறங்கி, ஆங்குள்ள மலைமேல் தங்கினாராம். கருடனும் ஆதிசேடனும் நீர் கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் ஒரு கிணறு தோண்டி அதிலிருந்து நீர்கொண்டு வந்தார். கருடனோ, மலைக்குக் கீழே தன் அலகால் (மூக்கால்) தரையைக் கீறினார். அந்த இடம் ஆறாகத் தண்ணீர் பெருகியது. அதிலிருந்து அவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார். அந்த ஆறுதானாம் கெடிலம். இது ஒரு புராணத்தின் கதை. இவ்வாறு கருடனால் உண்டாக்கப்பட்ட ஆறு எனச் சொல்லப்படுதலின், கருடநதி என்று அழைக்கப் படுகிறது. இது, இரண்டாவது வகையான பெயர்க்காரணம்.
கருடநதி என்பதுதான் நாளடைவில் சிறிது சிறிதாக மாறிக் கடிலநதி - கெடிலநதி என்றாகியிருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்து பொருத்தமாகப் புலப்படவில்லை. கருடன் எங்கேயோ இருக்கிறார் - கெடிலம் எங்கேயோ இருக்கிறது - இரண்டுக்கும் இடைவெளி மிகுதி - அன்றியும், திருவயிந்திரபுரப் பெயர்க் காரணம் பொருத்தமானதாய்த் தோன்றவில்லை. கெடிலம் திருவயிந்திரபுரத்திற்கு அண்மையில் முடியும் தறுவாயில் உள்ளது. அதாவது, திருவயிந்திரபுரத்துக்கு மேற்கே 90 கி.மீ. தொலைவிற்கு அப்பால் தோற்றம் எடுக்கும் கெடிலம், திருவயிந்திரபுரத்திற்குக் கிழக்கே 8 கி.மீ. அளவு தொலைவில் கடலோடு கலக்கிறது. புராணக் கதையின்படி கருடன் கீறி உண்டாக்கியதா யிருந்திருந்தால், திருவயிந்திர புரத்திற்கு மேற்கே உள்ள கெடிலத்தின் பெரும் பகுதியைப் பற்றி என்ன கூறுவது? மேடான மேற்கிலிருந்துதான் சரிவான கிழக்கு நோக்கித் தண்ணீர் ஓடி வந்து கொண்டிருக்கிறது. ஈண்டு, திருவயிந்திரபுரம் பற்றி வட மொழியிலுள்ள வைணவக் கந்தபுராணத்தில் உள்ள ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. திருமாலுக்காக நீர் கொண்டுவரச் சென்ற கருடன் தன் அலகால் கீறிக் கருடநதி என்னும் கெடிலத்தை உண்டாக்கியதாக இந்தப் புராணத்தில் கூறப்படவில்லை. அண்மையில் ஆறு ஒன்று வந்து கொண்டிருப்பதாகக் கருடன் திருமாலுக்குத் தெரிவித்ததாகவே இந்தப் புராணத்தின் முதல் பகுதி (அத்தியாயம்) கூறுகிறது. இந்தப் புராண ஆசிரியர் உண்மையை உள்ளவாறு கருடன் வாயிலாகக் கூறிவிட்டிருக்கிறார். எனவே, கருட பகவான் கதையைப் பற்றி ஆராய்ச்சி ஒன்றும் செய்யாமல், ‘பக்தி - புராணம்’ என்ற அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே, கெடிலத்தின் பெயர்க் காரணத்தோடு கருடனை முடிச்சுப் போடக்கூடாது.
தெய்வத்தோடு தொடர்பு படுத்தித் தெய்வத் தன்மையுடைய ஓர் ஆறாகச் சொல்லப்பட்டிருக்கிற வரைக்கும் கெடிலம் கொடுத்து வைத்ததுதான். இது போன்ற சிறப்பு எல்லா ஆறுகளுக்கும் கிடைப்பதரிது. காவிரி, கங்கை போன்ற உயர்ந்த ஆறு கட்கே இத்தகைய சிறப்பு ஏற்றிக் கூறப்பட்டுள்ளது. அகத்தியரின் கைச்செப்பில் (கமண்டலத்தில்) இருந்த நீரை, இந்திரனுக்காக விநாயகர் காகத்தின் உருவில் வந்து கவிழ்க்க, அதிலிருந்து தான் காவிரியாறு தோன்றியதாக முன்பு பார்த்தோம். பகீரதனது தவத்திற்கு இரங்கி, விண்ணுலகத்துக் கங்கையைச் சிவபெருமான் மண்ணுலகத்திற்குக் கொண்டு வந்தாராம். இது கங்கை தோன்றிய வரலாறு. இவ்விரண்டும் போலவே கதையில் கருடனால் கெடிலம் தோன்றியிருக்கிறது. கங்கை, காவிரி ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றிப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள் எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவு உண்மையானது, கருடனால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கெடிலத்தின் கதையும்! இன்னும் கேட்டால், கெடிலத்தின் தோற்றம்பற்றி மற்றுமொரு புராணக் கற்பனை உண்டு. அதாவது:- ‘சிவபெருமானிடத்திலிருந்து வியர்வை நீர்போல் வெளிவந்ததுதான் கெடிலம்’ எனத் திருவதிகைப் புராணம் கூறுகிறது. கங்கை சிவனது முடியி லிருந்து வந்தது; கெடிலம் சிவனது உடலிலிருந்து வந்தது; எனவே, கங்கையைப் போன்றது கெடிலம் எனத் திருவதிகைப் புராணம் கூறுகிறது. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தாவது: கங்கையைப் போல் - காவிரியைப்போல் ஒப்ப மதிக்கத்தக்க ஓர் உயரிய ஆறு கெடிலம் என்பதாம்.
* * *
↑ யாப்பருங்கலக் காரிகை - உரை.
↑ South Arcot District Gazetteer - Chapter I - Physical and General Description - Page 7.
↑ சென்னைப் பல்கலைக் கழகம்: ஆங்கிலம் தமிழ்ச் சொற் களஞ்சியம் - 2 ஆம் தொகுதி - பக்கம் 463.
↑ சென்னைப் பல்கலைக் கழகம் : தமிழ் லெக்சிகன் - 2 ஆம் தொகுதி - பக்கம் 1085. கெ .6.
↑ சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
↑ சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
↑ சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
↑ சிலப். புகார்க். நாடுகாண் காதை-146
↑ கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் கங்கைகாண் படலம் - 1.
8. கெடிலத்தின் தொன்மை
கெடிலத்தின் தொன்மை
கள்ளக்குறிச்சி வட்டத்தில் தோன்றிக் கடலூர் கடற்கரையில் துறைமுகப் பெருமையுடன் முடியும் கெடிலம் ஆறு வரலாற்றுக் காலத்துக்கும் அப்பாற்பட்ட தொன்மை உடையதாகும். இதற்குப் பல சான்றுகள் கூறமுடியும்.
கழிமுகத்தீவு (Delta)
கெடிலம் கடலோடு கலக்கும் முக்கிய முகத்துவாரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் கெடிலத்திலிருந்து வடபுறமாக ஒரு கிளை பிரிந்து கடலில் கலப்பதாகவும், தென்புறமாக ஒரு கிளை பிரிந்து சென்று கடலில் கலப்பதாகவும், தென் கிளையாகிய உப்பனாற்றில்தான் கூடலூர்த் துறைமுகம் அமைந்திருப்ப தாகவும், கெடிலத்திற்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தேவனாம்பட்டினத் தீவு இருப்பதாகவும், கெடிலத்திற்கும் தென்கிளைக்கும் நடுவே அக்கரை எனப்படும் கழிமுகத் தீவு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படி ஓர் ஆறு கடலில் கலப்பதற்கு முன்னால் அதிலிருந்து கிளையாறுகள் பிரிவதும், அவற்றிற்கும் கடலுக்கும் இடையே கழிமுகத் தீவுகள் ஏற்படுவதும் அந்த ஆற்றின் மிகுந்த தொன்மையை (பழைமையை) அறிவிக்கின்றன என்று புவியியல் ஆராய்ச்சி அறிஞர்கள் (geologists) கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆற்றில் அடித்துக்கொண்டு வரப்படும் பொருள்கள் முகத்துவாரத்தில் படியப்படிய, அந்தப் படிவுகளால் முகத்துவாரப் பகுதி மேடிடுகிறது; அதனால் ஆறு நேரே சென்று கடலில் கலப்பதற்குத் தடையேற்படுகிறது; அதனால் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு முன்னால் அதிலிருந்து கிளைகள் பிரிந்து வேறு இடங்களில் கடலில் கலக்கின்றன; அதனால் கழிமுகத் தீவுகள் ஏற்படுகின்றன. இந்த அமைப்புகளைக்கொண்டு ஆற்றின் தொன்மையை அறிந்துகொள்ளலாம்.
மற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு நோக்கி விரைவாக ஒடி அரபுக் கடலில் விழும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் கழிமுகத் தீவுகள் இல்லாமை இவண் குறிப்பிடத்தக்கது. மலை உயரத் தொடங்கியபின் நெடுங் காலத்திற்குப் பின்னால் இந்த ஆறுகள் தோன்றியதால், இவற்றிற்கு இன்னும் கழிமுகத் தீவுகள் ஏற்படவில்லை; எனவே, இந்த ஆறுகள் காலத்தால் மிகவும் பிற்பட்டவை, என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆற்றின் படிவு, பள்ளத்தாக்கு, அரிமானம், அரிமானச் சுற்றின் இளமை - முதிர்ச்சி முதுமை நிலைகள், மேடு, திட்டு, தேய்வு முதலிய அமைப்புகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின்படி பார்க்குங்கால், கழிமுகத் தீவுகளைப் பெற்றுள்ள கெடிலம் ஆற்றின் தொன்மை நன்கு புலப்படும்.
மரக்கல் (Wood Fossil)
கெடிலத்தின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்று கூறவியலும். கடலூருக்கு அண்மையிலுள்ள பாதிரிக் குப்பம் என்னும் சிற்றுரைச் சேர்ந்த முத்தால் நாயடு என்னும் முதியவர். தம் இளமைப் பருவத்தில், அப்பர் கரையேறின. பழைய கெடிலக்கரைப் பகுதியில் மண்தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, கல்லாக மாறிய மரப்பகுதிகள் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கக் கண்டதாகக் கூறினார் என்னும் செய்தியை முன்னர்ப் (பக்கம் - 54) பார்த்தோம்.
கல்லாக மாறிய மரத்தைப் பார்த்தால், வெளித் தோற்றத்திற்கு மரம் போலவே இருக்கும்; ஆனால் உள்ளமைப்பு கல்லாக இருக்கும். கல்லாக மாறிய மரம் பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டதாக இருக்கவேண்டும் எனப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நிலக்கரியின் வரலாறும் இது போன்றதுதானே! மரங்கள், புயலாலும் வெள்ளத்தாலும் புவி நடுக்கத்தாலும் கீழே விழுந்து, பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகளாக மண்ணுக்கு அடியிலே கிடந்து மடிந்து மலைக்கல் போல் இறுகி மாறியதுதானே நிலக்கரி யென்பது? நிலக்கரி தன் முற்றாநிலை முற்றியநிலை ஆகியவற்றைக் கொண்டு பழுப்பாகவோ கறுப்பாகவோ இன்னும் வேறு விதிமாகவோ இருக்கிறது. ஆனால், மரக்கல் (Wood Fossil) மரத்தின் நிறமாகவோ கற்பாறையின் நிறமாகவோ இருக்கிறது. நிலக்கரி எரியும்; மரக்கல் எரியாது.
தமிழ் நாட்டில் சில விடங்களில் கல் மரங்களைக் காணலாம். புதுச்சேரிக்கு வடமேற்கே 21 கி.மீ. தொலைவில் செஞ்சியாறு எனப்படும் சங்கராபரணி ஆற்றங்கரையில் திருவக்கரை என்னும் ஊர் ஒன்று உள்ளது. இது திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதி, இவ்வூரை யொட்டிச் சங்கராபரணி ஆற்றங்கரையில் பல கல் மரங்கள் படுத்துக் கிடப்பதை இன்றும் காணலாம். பார்ப்பதற்கு மரங்கள் போலவே இருக்கும். மரங்கள் போலவே என்றென்ன - மரங்களே! வேர்கள், பட்டைகள், பட்டைகளின் சுருக்கம், பெருங் கிளைகள், சிறு கிளைகள், காம்புகள், இலைகள், இலை நரம்புகள் முதலிய பல்வேறு உறுப்புக்கள் உட்பட அடிமரத்திலிருந்து நுனிமரம் வரையும் அப்படியே முழு மரத்தையும் ஒரு சேரக் காணலாம். ஆனால், அவ்வளவும் கல் பாய்ந்த மாற்றம்! கல்லோடு நமக்குத் தொடர்பு எவ்வளவோ அவ்வளவே இம்மரத்தோடும்! இப்படிக் கிடக்கும் மரங்கள் இரண்டல்ல - மூன்றல்ல! பற்பல - பலப்பல! நூற்றுக்கணக்கில் என்றுங் கூறலாம். ‘படுத்துறங்கும் கல் மரக்காடு’ என்று புனைந்துரைக்கலாம்.
இந்தக் காட்சியைக் கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பலமுறை பார்த்துச் சுவைத்திருக்கிறேன். ஆனால், ஆனந்த விகடன் 4-9-1966 இதழில் (பக்கம் 19) திரு. டி.எம். வீரராகவன் என்னும் பெரியார் எழுதியுள்ள ஒரு கட்டுரையைப் படித்தபோது ஒரு புதிய செய்தியைத் தெரிந்து கொண்டேன். அது வருமாறு:
“இங்கே கல் மரக்காடு எப்படி வந்தது தெரியுமா?
இந்த மரங்களைப் பார்த்த பூகர்ப்ப நிபுணர்கள் ‘ஓக்’ மரம் என்கிறார்கள். ஒவ்வொன்றும் பிரமாண்டமான நீளம் இருக்கிறது. இங்கிலாந்தில் பூகம்பம் ஏற்பட்டு, ஓக் மரங்கள் பூமியில் அமுங்கிப் போய், பின்னர், திருவக்கரையில் வெளி வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.”
இது ஆனந்த விகடன் கட்டுரைப் பகுதி, இதைப் படித்தபோது புராணங்களிலும் மாயாசாலக் கதைகளிலும் வரும் நிகழ்ச்சிகளைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. இதே மாதிரியில் ஓர் அணுகுண்டை ஆனந்த விகடன் 21-8-1966 இதழிலும் கண்ணுற்றேன். அந்த இதழில் (பக்கம் - 14) திரு. அமுநாரா என்பவர், ‘மரம் கல்லானது’ என்னும் தலைப்பில் படத்துடன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது, நான் பார்த்தறியாத புதிய செய்தி. அரியலூருக்கு அருகில் சாத்தனூர் என்னும் சிற்றூரில் ஓர் ஓடையின் குறுக்கே, 16 அடி நீளமும் 4 அடி சுற்றளவும் கொண்டு வேர்கள், கிளைகள் முதலிய உறுப்புக்களுடன் ஒரு பெரிய முழுக் கல் மரம் விழுந்து கிடக்கிறதாம். அம்மரத்தை இந்தியப் புவியியல் (பூகர்ப்ப ) மாணவர்களும், அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, பிரான்சு, சப்பான் முதலிய அயல்நாட்டுப் புவியியல் வல்லுநர்களும் வந்து பார்த்துவிட்டு மூக்கின்மேல் விரல் வைத்து வியக்கின்றனராம். அதற்குக் காரணமாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியா கடலாக இருந்த சமயம் கரையில் இருந்த இம்மரம், கடல் அலைகளால் கடலில் அமிழ்ந்து நாளாவட்டத்தில் மண்ணில் புதைந்து கல்லாக மாறிவிட்டதென்று பூகர்ப்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதி கடலாக இருந்தது என்பதற்கு அடையாளமாக இப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் அபூர்வமான மண்டை ஓடுகளும் எலும்புகளும் காணப்படுகின்றன.”
இது அக் கட்டுரைப் பகுதி.
கல் மரங்கள் திருவக்கரையில் ஆற்றங்கரையிலும் சாத்தனூரில் ஓடைப் பகுதியிலும் இருப்பதைக் கொண்டும், அவற்றின் தோற்றத்தைப் பற்றிப் புவியியல் வல்லுநர்கள் கூறியிருப்பதாக ஆனந்த விகடனில் வந்துள்ள கட்டுரைப் பகுதிகளைக்கொண்டும், ‘இத்தகைய மாற்றங்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் நிகழக்கூடும்’ என நாம் ஒருவாறு நுனித்துணரலாம். இதைத் தெளிவு செய்து கொள்ள ஒரு துணை நாடி ஐக்கிய அமெரிக்காவுக்குச் (U.S.A) செல்வோம்.
ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியாகிய கலிபோர்னியா, அரிசோனா ஆகிய இடங்களில் கல்மரக் காடுகளைக் காணலாம். அரிசோனா (Arizona) மாநிலத்தில் ‘ஃஆல்பரூக்’ (Holbrook) ஓடைப் பகுதிக்குக் கிழக்கே 34 கி.மீ. தொலைவில் 90.000 ஏக்கர் பரப்பில் 3 கல்மரக் காடுகள் காக்கப்பட்டு வருகின்றன. 6 அடி குறுக்கு விட்டமும் 100 அடி நீளமும் கொண்ட கல்லாக மாறிய அடி மரங்கள் பல உள்ளனவாம் அங்கே. இத்தகைய கல் மரங்களின் தோற்றத்தைப் பற்றி இந்தத் (Petrification) துறையில் வல்ல அறிஞர்கள் தொகுத்துக் கூறியுள்ள கருத்துக்களாவன:
‘மேட்டுப் பகுதிகளில் தோன்றி வளர்ந்து வந்த மரங்கள் ஓடைகளாலும் ஆறுகளாலும் இழுத்துக் கொண்டு வரப்பட்டுக் கரைப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டன. அவை நாளடைவில் மண்ணில் புதைந்து சில சூழ்நிலைகளால் கல்லாக இறுகிவிட்டன. அம் மரங்களின் உயிர் அணுக்களினிடையே, மண்ணுக்குள் உள்ள சிலிகா (Silica) கரைசல் படிவு புகுந்து கல்போல் இறுக்கி விடுகின்றன. பின்னர் நாளடைவில் மேலேயுள்ள மண் பகுதி கரைந்து கரைந்து நீங்கிப் போக. உள்ளிருந்த கல்மரங்கள் வெளித்தோன்றிவிட்டன. இவ்வாறு கல்லாகிய மரங்கள் ஏறக்குறைய 16 கோடி (16,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்க வேண்டும்.
இப்படியாக அறிஞர்கள் கூறியுள்ளனர். மரங்களைப் போலவே, மீன், தவளை முதலிய உயிரினங்களும் கல்லாக மாறுவதுண்டு. இது ஆங்கிலத்தில் ‘பாலியாந்தாலஜி’ (Paleontology) என அழைக்கப்படுகிறது. உயிரினங்களின் உடம்பிலுள்ள உயிர் அணுக்களுக்குள்ளே ‘கால்சியம் & கார்பனேட்’ (Calcium carbonate), சிலிகா கரைசல் படிவு (Silica Deposits) போன்றவை புகுந்து கல்லாக இறுக்கி விடுகின்றனவாம். இவ்வாறு கல்லாக மாறிய உயிரினங்கள் 45 கோடி (45,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்கக் கூடுமாம். கடற்கரைப் பகுதிகளில் இது நடக்கக் கூடும்.
இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஆராயின், திருவக்கரையிலுள்ள கல்மரங்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவை எனக் கொள்ள வேண்டியதில்லை. மிகப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்த மரங்களே அவை. மேற்குப் பகுதியிலிருந்து ஆற்று வெள்ளத்தால் அவ்வப்போது அடித்துக் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம். அல்லது, திருவக்கரைக்குக் கிழக்கே 16 கி.மீ. தொலைவில் இப்போது இருக்கும் கடல், அந்தக் காலத்தில் திருவக்கரைப் பக்கமாக இருந்திருக்கலாம். கடற்பெருக்காலும் கரைப் பகுதியிலுள்ள மரங்கள் சாய்க்கப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுக்கம் பெற்றிருக்கலாம். பின்னர்க் கடல் சிறிது சிறிதாகக் கிழக்கே தள்ளிப்போய்விட்டிருக்கலாம். திருவக்கரை, அதை அடுத்துள்ள சேதராப்பட்டு முதலிய விடங்களில் மீன்போன்ற உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ள உருவங்களும் கிடைக்கின்றன. இதனால், அந்தப் பகுதி மிகப் பழங்காலத்தில் கடல் சார்ந்ததாயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அரியலூருக்கு அருகில் சாத்தனூர் ஒடையில் காணப்படும் கல்மரம் பற்றியும் இது போன்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது: அஃதாவது, இலட்சக்கணக்கான ஆண்டுகட்கு முன் அந்தப் பகுதி கடலாக இருந்தபோது அந்த மரம் வீழ்த்தப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுகியிருக்க வேண்டும் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகாறுங் கூறியவற்றால், ஆற்று வெள்ளப் பெருக்காலோ அல்லது கடலின் சீற்றத்தாலோ, ஆற்றங்கரைகளில் அல்லது கடற்கரைகளில் கல்மரங்கள் உருவாகும் என்பதும், கல்லாக மாறியுள்ள அம் மரங்கள் நூறாயிரக்கணக்கான ஏன், கோடிக்கணக்கான ஆண்டு கட்குமுன் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் புலப்படும்.
இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கெடிலத்தின் தொன்மையை நாம் கணிக்கமுடியும். கெடிலம் திசைமாற்றம் அடைவதற்குமுன், திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒடிய பழைய ஆற்றுப் பாதைப் பகுதியில் அஃதாவது, அப்பர் கரையேறிய பகுதிக்குப் பக்கத்தில், மண்ணுக்கு அடியில் கல்மரத் துண்டங்கள் காணப்பட்டதாக முத்தால் நாயடு என்னும் முதியவரால் அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை இங்கே இணைத்துக் கொள்ள வேண்டும். கெடிலக்கரைப் பகுதியிலும் கல்மரத் துண்டங்கள் காணப்படுகின்றனவென்றால், அந்த ஆறு பல கோடி ஆண்டுகட்குமுன் தோன்றியதாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் படி மரக்கால் போட்டு அளக்க மனம் ஒவ்வாவிடினும், பல நூறாயிரக் (இலட்சக்) கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டது கெடிலம் என்பதையாவது ஏற்றுக் கொள்ளலாம். பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகட்குமுன் கெடிலம் ஆற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு ஒதுக்கப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியில் மண்ணுக்குள் மறைந்து, நாளடைவில் சிலிகா கரைசல் படிவால் இறுக்கம் பெற்றுக் கல்லாகி விட்டிருக்க வேண்டும். இந்தக் கல்மரத் துண்டங்கள் தாம் மண் தோண்டும்போது முத்தால் நாயுடு முதலிய தொழிலாளர் கண்களில் தென்பட்டுள்ளன. எனவே, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியது கெடிலம் என்பது உறுதி.
முதியவருக்கு நன்றி
கெடிலத்தின் தொன்மையைக் கணிப்பதற்கு உதவியான கருத்தை வழங்கிய உயர்திரு. முத்தால் நாயடு அவர்கட்கு மிகவும் நன்றி செலுத்தவேண்டும். இந்தச் செய்தி சிறிதும் எதிர்பாரா வகையில் அவரிடமிருந்து கிடைத்தது. 1967 சனவரி ஏழாம் நாள், கெடிலக்கரைச் செய்திகளைத் தேடித் திரட்டும் வேட்டையில் முனைந்து, உந்து வண்டி (கார்) எடுத்துக்கொண்டு கெடிலக்கரைப் பகுதிகளில் நெடுந்தொலைவு சென்று திரும்பிவந்து கொண்டிருந்தபோது, திருவயிந்திரபுரத்திற்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் இடையிலுள்ள பாதிரிக் குப்பம் என்னும் ஊரில் வண்டியை நிறுத்தி, பாதையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரையணுகிச் சில செய்திகளை வினவினேன் நான். அவரை விட்டுப் பிரிந்து வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு மீண்டும் இறங்கிப்போய் அவர் பெயரைக் கேட்டேன். முத்தால் நாயுடு என்றார் அவர். இப்படி முன்பின் அறியாத முத்தால் நாயடு அறிவித்ததுதான் கெடிலக்கரைக் கல்மரச் செய்தி. எனவே, அவர் அறிவித்த செய்தி நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் இருக்கும். அவர் கற்பனை கலந்து பொய்ச் செய்தி புகலக் காரணமேயில்லை. அவருக்கு நன்றி! அவர் வாழ்க!
செய்ய வேண்டியது
புவியியல் வல்லுநர்கள் (Geologists) முத்தால் நாயடு குறிப்பிட்ட பகுதியைத் தோண்டி ஆராய்ந்தால் கல் மரங்கள் பலவற்றைக் கண்டெடுக்கலாம். குப்பம் சென்று அவரை இடம் காண்பிக்கச் செய்து ஆவன புரியவேண்டும்.
9. இலக்கியத்தில் கெடிலம்
பாடல்பெற்ற கெடிலம்
ஒருவரோ, ஒர் இடமோ ஒரு பொருளோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ மக்களது பேச்சில் மட்டுமின்றி ஏட்டிலும், இடம் பெற்றுவிடின் ஒரு தனி மதிப்புதான்! ஏட்டிலும். உரை நடையினும் செய்யுள் நடைக்குச் சிறப்பு மிகுதி, செய்யுள் நடையிலும் பழங்காலச் செய்யுட்களில் சிறப்பிடம் பெற்றிருப்பின் மிகவும் பெருமை உண்டு. இந்த அடிப்படையில் தான், நாயன்மார்கள். ஆழ்வார்களின் பாடல் பெற்ற பதிகள் மிக்க பெருமைக்கு உரியனவாய்ப் போற்றப் பெற்று வருகின்றன. ஊர்களேயன்றி ஆறுகளும் பாடல் பெற்றிருக்குமாயின் மிக்க பெருமைக்கு உரியனவே. இவ்வாறு பாடல்பெற்ற பெருமை கெடிலம் ஆற்றிற்கும் உண்டு. பழைய சங்க இலக்கியங்களில் இடம் பெறும் வாய்ப்பு கெடிலத்திற்குக் கிடைத்திராவிடினும், சங்க காலத்தையடுத்த தேவாரத்தில் இடம் பெறும் வாய்ப்பு - தேவாரப் பாடல் பெறும் பெருமை கெடிலத்திற்கு உண்டு. இனி, தேவார காலத்திலிருந்து இலக்கியத்தில் கெடிலம் இடம்பெற்றுள்ளவற்றைக் கால வரிசை முறையில் காண்பாம்.
அப்பர் தேவாரம்
அப்பர் பெருமான் திருவதிகைமேல் பதினாறு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் எண்பத்தாறு இடங்களில் ‘கெடிலம்’ என்னும் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவருடைய பாடல் அடிகள் சில வருமாறு:
முதல் பதிகம்
"அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே"
இரண்டாம் பதிகம்
"கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்"
மூன்றாம் பதிகம்
"செய்ய பொன் கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே”
"தென்றிசைக் கெங்கைய தெனப்படும் கெடில வாணரே”
“வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.”
"ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.’’
நான்காம் பதிகம்
“வண்டு கொப்பளித்த தீந்தேன்
வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
கெடில வீரட்டனாரே"
ஏழாம் பதிகம்
“கெடில வேலி அதிகை வீரட்டனாரே"
எட்டாம் பதிகம்
“....பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழியவோடி அதனிடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டமேய கிளர்சடை முடியனாரே.’’
“கந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத்தாரே.”
ஒன்பதாம் பதிகம்
“மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்தே எங்கள் வீரட்டமே”
"பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுப்பர்
அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடிலக் கரைத்தே’’
"அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிரங்கார் தடந்தோள் மெலியக் குடைவார்
விம்மு புனற்கெடிலக் கரைத்தே எந்தை வீரட்டமே.”
“தூய தெண்ணீர்க் கெடிலக்கரைத் திருவீரட்டராவர்”
பத்தாம் பதிகம்
"ஆறெலாம் திரையார் ஒண்புனல் பாய் கெடிலக்கரை”
“ஆறுடைப் புனல்பாய் கெடிலக்கரை”
"வரையார்ந்த வயிரத்திரள் மாணிக்கம்
திரையார்ந்த புனல்பாய் கெடிலக்கரை”
பதினோராம் பதிகம்
"வாளமா லிழியும் கெடிலக்கரை”
"தெள்ளுநீர் வயல்பாய் கெடிலக்கரை”
"வரைகள் வந்திழியுங் கெடிலக்கரை”
"ஆலி வந்திழியுங் கெடிலக்கரை”
"மூரித் தெண்திரை பாய்கெடிலக் கரை”
பன்னிரண்டாம் பதிகம்
“எறி கெடிலத்தானை"
“செழுங் கெடில வீரட்டம் மேவினானை"
“எறி கெடில நாடர்”
பதினான்காம் பதிகம்
“அலை கெடில வீரட்டத் தாள்வாய்போற்றி”
"இருங் கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி"
“கார்க் கெடிலங் கொண்ட கபாலி போற்றி”
பதினைந்தாம் பதிகம்
"திரைவிரவு தென்கெடில நாடன்”
“நிறை கெடில வீரட்டம்”
"தெய்வப் புனல்கெடில நாடன்”
“திருந்துநீர்த் தென்கெடில நாடன்”
“கரைமாங் கலிக்கெடில நாடன்”
“செறி கெடில நாடர்”
“தணிபாடு தண்கெடில நாடன்”
பன்னிரண்டாம் பதிகம்
“செல்வப் புனற்கெடில வீரட்டமும்”
“தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்”
“சிறையார் புனற்கெடில வீரட்டமும்”
“செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமும்”
“தேனார் புனற்கெடில வீரட்டமும்”
"திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்”
இவை அப்பர் தேவாரப் பாடற் பகுதிகள்.
கெடிலக் கரையிலே பிறந்து கெடிலக் கரையிலே வளர்ந்து கெடிலக் கரையிலே உருவான நாவுக்கரசர் தம் தாய்த்திரு கெடிலத்தை ஆவல் தீரப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். “கெடிலம் தென்திசைக் கங்கையாம். கெடிலம் பொன் கொழிக்கிறதாம். கெடிலத்தில் வண்டுகள் மிழற்றுகின்றன; எருமைகள் பாய்கின்றன; மலர்கள் தேன் சொரிகின்றன; மந்திகள் தேன் நுகர்கின்றன: கயல் மீன்களும் தேன் மாந்துகின்றன; கெண்டைகள் தேன் கொப்பளிக்கின்றன. ஊருக்கு வேலிபோல் உள்ளது கெடிலம், கரைகளில் சோலைகள் சூழ்ந்துள்ளன; தெங்கின் முற்றிய மணிகள் நீரில் சிந்துகின்றன; ஒள்ளிய வெள்ளிய வாள்போல் நீரில் அலைகள் எழுகின்றன; அந்த அலைகளில் அன்னங்கள் ஊசல் (தொட்டில்) ஆடிக்கொண்டே உறங்கிவிடுகின்றன; வண்டுகள் தாலாட்டுப் பண்பாடுகின்றன. ஆற்றின் ஒருபால் தவளைகள் பறை கொட்டுகின்றன; நாரைகள் நடமாடுகின்றன; மற்றொருபால், சாந்து பூசிய - மாலையணிந்த மங்கையர்கள் இடுப்பு ஒடியத் தோள் மெலியத் தெண்ணிர்ப் புனல்குடைகின்றனர். கெடிலம் மலைப்பகுதியிலிருந்து புறப்பட்டு வருகிறது. மழை பொழிய நீர் திரளுகிறது; மணிவகைகள் அடித்துக் கொண்டுவரப்படுகின்றன. ஆற்றின் செழுமையான செல்வங் கொழிக்கும் நீர்ப்பெருக்கு வயல்களில் பாய்ந்து வளப்படுத்துகிறது. ஆற்றின் இருமருங்கும் கரைகள் உள்ளன. கெடில நீர் ஒரு செல்வப் புனலாகும் - தெய்வப் புனலாகும் தீர்த்தப் புனலாகும்” என்றெல்லாம் அப்பர் பெருமான் கெடில ஆற்றின் வளத்தையும் மாண்பையும் வாயாரப் புகழ்ந்துள்ளார். அவர் ஒரிடத்தில் ‘திருநீர்ப் புனல் கெடிலம்’ என்று கூறியுள்ளார். ‘திருநீர்’ என்பது, தீர்த்தம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகும்.
அப்பர் பெருமான் தம் பிற்கால வாழ்க்கையில் காவிரி நாட்டில் பன்னெடுங்காலம் கழித்திருப்பினும், தமது வாழ்நாளின் முற்பகுதியைக் கெடில நாட்டிலேயே கழித்தார். அப்பர் என்னும் கட்டடத்தைக் கட்டுவதற்குச் சேறு குழப்பிய தண்ணீர் கெடில ஆற்றின் தண்ணீர்தான். கெடிலத்தை அப்பர்
மறந்தாலும், அதைப் பாடுவதற்கு அவர் நா மறவாது - எழுதுவதற்கு அவர் கை மறவாது. அதனால்தான் ‘தென்திசைக் கெங்கைய தெனப்படும் கெடிலம்’ என்று பாடினார். ‘தென்கங்கை’ என்பதற்குமேல் என்ன சிறப்பு வேண்டும்?
சம்பந்தர் தேவாரம்
திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் இரண்டு இடங்களிலும், திருமாணிகுழிப் பதிகத்தில் இரண்டு இடங்களிலுமாக நான்கு இடங்களில் கெடிலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். முறையே அவை வருமாறு:
திருவதிகைப் பதிகம்
“கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
'வண்டு மருள் பாட..."
“கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்”
திருமாணிகுழிப் பதிகம்
"சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள்
கொண்டு கெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயும்மண மாருதவி
மாணி குழியே"
"உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி
மாணி குழிமேல்."
கெடிலத்தின் நீர் வளமும் அது பாயும் நிலவளமும் சம்பந்தரால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
சுந்தரர் தேவாரம்
சுந்தரர் பெருமான் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் பாடல்தோறுமாகப் பத்து இடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் சில வருமாறு:
"இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட்டானத்
துறைவானை"
“ஏந்துநீர் எறி கெடிலம்”
எனச் சுந்தரராலும் கெடிலத்தின் நீர்வளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வார் திருமொழி
திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியுள் - திருவயிந்திரபுரம் பற்றிய திருமொழியில் இரண்டிடங்களில் கெடிலத்தின் வளத்தைப் புகழ்ந்துள்ளார்; அவை வருமாறு;
மூன்றாம் பத்து - முதல் திருமொழி
“வரை வளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி
திரை கொணர்ந்தனை செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே”
“.....குலவுதண் வரைச்சாரல்
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே”
கெடிலம் காட்டு விலங்குகளையும் மணமிக்க மரங்களையும் இன்னபிற மலைவளங்களையும் உந்திக்கொண்டு மலைச்சாரலில் ஓடிவருவதாகவும், கமுகஞ் சோலைகள் சூழ்ந்திருப்பதாகவும், வயல்களில் பாய்ந்து நாட்டை வளப்படுத்துவதாகவும் ஆழ்வார் அறிவித்துள்ளார். திருமங்கை மன்னர் தம் பாடல்களில் ‘கெடிலம்’ என்னும் சிறப்புப் பெயரால் ஆற்றைக் குறிப்பிடாமல், ‘செழு நதி’ எனப் பொதுப் பெயராலேயே சுட்டியுள்ளார். ஒருவேளை, கெடிலம் நதிகளுக்குள் சிறந்தது; எனவே, நதி என்று பொதுவாகச் சொன்னாலும் அது கெடிலத்தையே குறிக்கும் என்று ஆழ்வார் சிறப்பாக எண்ணி யிருப்பாரோ என்னவோ! நதியிலும் ‘செழுநதி’ எனச் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
தொல்காப்பியத் தேவர் தமது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பக நூலில் மூன்றிடங்களில் கெடிலத்தைப் பாடியுள்ளார். அவையாவன:
“ஐயர் திருக்கெடிலம் ஆட்டி”
(13)
“கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்’’
(45)
“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியீரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமும ணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்து வடபாலே"
(100)
தொல்காப்பியத் தேவர், ‘திருக் கெடிலம்’ எனக் கெடிலத்தின் தெய்வத்தன்மையைச் சுட்டியுள்ளார்; ‘கடில மாநதி’ என அதற்கு ஒரு பேராற்றின் தகுதி அளித்துள்ளார். கெடிலத்தின் வெள்ளப் பெருக்கு உயர்ந்த மணிவகைகளையும் நறிய மரவகைகளையும் உருட்டிக் கொண்டு வந்து மதகுகளுடன் மோதிச் சோலைக்குள் புகுந்து பொய்கைகளை நிறைத்துச் செல்வ ஆரவாரம் புரிவதாகப் புலவர் பெருமான் புனைந்து பாடியிருப்பது படித்துச் சுவைத்தற்கு இன்பமாயுள்ளது.
பெரிய புராணம்
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கெடிலம் பல பாடல்களில் புகழிடம் பெற்றுள்ளது. அவற்றுள் சில வருமாறு:
தடுத்தாட் கொண்ட புராணப் பகுதி
“விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்திறை”
(84)
"பொன்திரளும் மணித்திரளும்
பொருகரிவெண் கோடுகளும்
மின்திரண்ட வெண்முத்தும்
விரைமலரும் நறுங்குறடும்
வன்திரைக ளாற்கொணர்ந்து
திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனும்
திருக்கெடிலம் திளைத்தாடி"
(89)
திருநாவுக்கரசர் வரலாற்றுப் பகுதி
“நீரார் கெடிலவட நீள்கரையில்”
(42)
"திரைக்கெடில வீரட்டா னத்திருந்த”
(69)
"பூவலர் சோலை மணமடி புல்லப் பொருண் மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக்
கடந்தணைந்தார்” (136)
கெடிலத்தின் நீர்வளத்தையும், அது பொன்னும் மணியும் பொரு கரியின் மருப்பும் மின்னும் வெண்முத்தும் மணநாறும் மலர்களும் மரத்துண்டங்களும் உந்தி உருட்டி வருவதையும் பாடி ஆவல் தீர்வதில் சேக்கிழாரும் பின் தங்கவில்லை. ‘திருக்கெடிலம்’ எனக் கூறி அதன் தெய்வ மங்கலத்தைப் போற்றியுள்ளார். சேக்கிழார்க்குக் கெடிலம் திருக்கெடிலம் மட்டுமன்று - அது செல்வக் கெடிலமாம் - காவல் கெடிலமாம் - செல்வத் திருக்கெடிலமாம் - காவல் திருக்கெடிலமாம் - காவல் செல்வத் திருக்கெடிலமாம் - இத்துணை அரும் பெரும் பொருள் ‘காவல் செல்வத்திருக்கெடிலம்’ என்னும் தொடரில் பொதிந்து செறிந்திருப்பதைக் கண்டு மகிழலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பர் பெருமானின் கருத்தை அடியொற்றி, ‘தென் திசையில் கங்கையெனும் திருக்கெடிலம்’ எனக் கெடிலத்தைக் கங்கையோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பெருமை செய்துள்ளார் சேக்கிழார் பெருமான்.
அருணகிரிநாதர் திருப்புகழ்
அருணகிரிநாதர் தமது முதல் திருவதிகைத் திருப்புகழின் ஈற்றில் பின்வருமாறு கெடிலத்தின் வளப்பெருக்கைப் புனைந்து புகழ்ந்துள்ளார்:
"திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச் செறியும் வயற் கதிரலையத் திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடில நதித் திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே"
இப் பாடற் பகுதியால் கெடிலக்கரையின் சோலை வளங்களும் வயல் வளங்களும் தெரியவருகின்றன. புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடி வருகிறதாம்; அப்போது உழவர்கள் ‘திமிதிம்’ எனப் பறை கொட்டி முழக்குகிறார்களாம். என்ன அழகு! என்ன வியப்பு! கோடை கழிய, கொண்டல் பொழிய, ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்தோடி வரும்போது, உழவர்கள் மழிச்சிப் பெருக்கெடுத்துப் பறை முழக்கிப் பூசனை புரிந்து ‘புதுப் புனல் விழா’ நிகழ்த்துவது பண்டைய மரபு அதனைத்தான் இப் பாடலில் அருணகிரியார் அறிவித்துள்ளார்.
புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடிவரும் மிடுக்கை அப்படியே சொல்லோவியப்படுத்திக் காட்டியுள்ளார் திருப்புகழார். மிடுக்கிற்கேற்ற சந்தம் பாடலில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பாடலை உரிய சந்தத்துடன் திரும்பத் திரும்பப் பாடுவோமாயின், புதுவெள்ளம் உண்மையிலேயே கமுகின் தலையை இடறுவது போலவும், வாழைக் குலையைச் சிதறுவது போலவும், கதிரை அலைப்பது போலவும், திரை மோதுவது போலவும், ‘திமிதிம்’ எனப் பறை முழக்குவது போலவும் உணர்ந்து வியந்து மனவெழுச்சி (Emotion) கொள்வோம்.
திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தாம் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் பல விடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்; சில வருமாறு:
தலவிசிட்டச் சருக்கம்
“துங்க வாவியே யயிந்திரம் கெடிலமேற் சொல்லும்” பாடலேச்சுரர் சித்தராய் விளையாடிய சருக்கம்
“சந்தனத் துருமங்களு மகில்களுஞ் சரளச்
சுந்தரத் துருமங்களுந் தொலைவில் பல்வளனுஞ்
சிந்துரத் துருக்கேசரி வயப்புலித் திரளுங்
கொந்து கொந்ததாய்க் கெடிலமா நதிகொணர் தருமால்” (33)
‘வாரி முத்தமுங் கயமருப் பற்புத மணியும்
வாரி மிக்கெழுங் கெடிலமா நதியள்ளி வந்து
வாரி மிக்கபல் கலன்களு மேற்றுதல் மான
வேரி மிக்கநீர்க் காலென வெதிர்தரு மேல்வை.” (34)
“கெடில மாநதி பாடலேச் சுரனிகே தனத்தின்” (45)
“கெடில மாநதி சேய்த்ததாய்க் கெழுமுவதன்றி” (54)
உயரிய நறிய மரங்களையும் கொடிய காட்டு விலங்குகளையும் விலையுயர்ந்த பல்வேறு மணிகளையும் கெடிலம் உருட்டிக் கொண்டுவந்து கடலிலுள்ள கப்பல்களில் ஏற்றுமதி செய்வதுபோல் தோன்றுவதாகப் புலவர் புனைந்துள்ளார். இவரும் கெடிலத்தை ‘மாநதி’ எனச் சிறப்பித்துள்ளார்.
கரையேறவிட்ட நகர்ப் புராணம்
திருப்பாதிரிப் புலியூர்ச் சிவசிதம்பரப் புலவர் அவர்கள், தமது கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் கெடிலத்தின் நீர்வளம் பற்றியும் அதனால் நடுநாடு பெற்றுள்ள நிலவளம் பற்றியும் பல இடங்களில் பாராட்டியிருப்பதன்றி, திருநாவுக்கரசரையும் சேக்கிழாரையும் பின்பற்றிக் கெடிலத்தைத் ‘தென்கங்கை’ எனப் பல இடங்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்; அவற்றுள் சில இடங்கள் வருமாறு:
திருநாட்டுப் படலம்
”..........கெடிலமாந் தகைப்பேர்
மேவு தென்திசைக் கங்கையும் விரிந்து கால்கொண்டே
ஓவுறாப் பெருவளஞ் செயவொளிர் நடுநாடாம்” (1)
விண்ணதிக் கிணையாகவே விளங்கும் ஒண்கெடிலம்
மண்ணதைத் தகைகாத்திடப் பயிரெலாம் வளர்த்தே” (9)
தலவிசேடப் படலம்
“விரைக்கடித்தண் கரையேற விட்டநக ரதுதீர்த்த
வியன்தென் கங்கை” (1)
"தென்திசையிற் கங்கையெனத் திகழ்கெடிலப்
பூம்புனலே தீர்த்தமாமால்” (7)
"வீறுகரை யேற்றுதல விசேடமுமற் றதன்பாலே
விளங்குங் கங்கை
ஆறெனுந் தீர்த்தக் கெடில அற்புதமும் அதற்கருகே
அமர்ந்தன் பர்க்கு ....” (17)
இவ்வாறு இன்னும் பல இடங்களில் கெடிலத்தின் மாண்பு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவதிகைப் புராணம்
திருவதிகை வாகீசபக்த நாவலர் தாம் இயற்றிய திருவதிகைப் புராணத்தில், கெடிலம் ஆற்றுக்கு என்றே இரண்டு படலங்கள் செலவிட்டுள்ளார்; அவை: கெடிலோற்பவப் படலம், தீர்த்த விசேடப் படலம் என்பனவாம்.
இவரும் கெடிலத்தைக் கங்கையெனக் குறிப்பிட்டு, இதன் பெருமையை நாவுக்கரசரும் ஞானசம்பந்தருமே புகழ்ந்துள்ளனரென்றால் நான் எம்மட்டில் என்று கூறியுள்ளார். இதனைக் கெடிலோற்பவப் படலத்திலுள்ள
"இத்திரு நதியே கங்கை யிதிற்படிந் தவர்க ணேயச்
சுத்தமா யுறுவ ரென்று சொல்லர சறைத லோடு
முத்தராங் காழி வேந்தும் மொழிந்தன ராத லாலே
பத்தியிற் சிறிதிலா யான் பகர்வதுந் துணிபே யாமால்"
என்னும் (12) பாடலால் அறியலாம். மற்றும், சிவனது உடலிலிருந்து வியர்வை நீர்போல் வெளிவந்தது கெடிலம் என்றும், இஃது ஓர் உயிர்ப்பு உள்ள - அஃதாவது என்றும் வற்றாத (சீவ நதி) உயிர் ஆறு என்றும் இந்நூலாசிரியர் தெரிவித்துள்ளார். இதனைத் தீர்த்த விசேடப் படலத்திலுள்ள
"கூடிய காலை யாங்கு குலவிய வியர்வை நீரே
நீடிய நீத்த மாகி நின்மலக் கெடிலம் என்ன
ஓடிய திதனைச் சீவ நதி என உரைப்பர் கற்றோர்"
என்னும் (2) பாடலால் அறியலாம். இவ்வாறு பல செய்திகள் இப் புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இன்னும், திருவதிகை மான்மியம், திருவதிகை உலா, திருநாவலூர்ப் புராணம், திருவாமூர்ப் புராணம், திருமாணிகுழிப் புராணம் முதலிய நூல்களில் கெடிலத்தின் ஆட்சியையும் மாட்சியையும் காணலாம்.
10. கெடில நாடு
காவிரி பாயும் நிலப்பகுதியைக் ‘காவிரி நாடு', ‘புனல் நாடு’ என்றெல்லாம் அழைப்பது மரபு. அதுபோல, கெடிலம் பாயும் பகுதியைக் ‘கெடில நாடு’ என்று நாம் அழைக்கலாம். இப் பெயர் புதுப்பெயர் அன்று. கெடில நாடு என்னும் பெயரை, நம் இருபத்தைந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டனார் ஒருவர் முன்னமேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவர்தாம் திருநாவுக்கரசர், அவர் தமது தேவாரத்தில் பன்னிரண்டாம் திருவதிகைப் பதிகத்தில் இரண்டிடங்களில் ‘கெடில நாடர்’ எனவும் பதினைந்தாம் திருவதிகைப் பதிகத்தில் ஏழிடங்களில் ‘கெடில நாடன்’ எனவும் இறைவனைக் குறிப்பிட்டுள்ளார். ‘காவிரி நாடு’ என்னும் பெயர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்பரால் சோழ நாட்டிற்கு இடப்பட்ட பெயராகும். ஆனால், கெடில நாடு என்னும் பெயரோ, ஆறாம் நூற்றாண்டிலேயே நாவுக்கரசரால் கெடிலம் பாயும் பகுதிக்கு இடப்பட்ட பெயராகும். எனவே, கெடிலநாடு என்பது, காவிரிநாடு என்பதனினும் அறுநூறு ஆண்டுகள் முற்பட்ட பழமையுடைய பெயராகும். இந்தக் கெடில நாடு என்ற பெயருக்கு உரியது முழுவதும் தென்னார்க்காடு மாவட்டமே. கெடிலத்தின் தோற்றம், ஓட்டம், முடிவு அத்தனையும் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே நிகழ்கின்றன அல்லவா? கெடில நாடு என்னும் பெயர் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்திற்கு உரியது என்றாலும், சிறப்பாக, தென்னார்க்காடு மாவட்டத்தின் நட்டநடுவேயுள்ள கள்ளக் குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களும் சேர்ந்த பகுதிக்கே மிகவும் உரித்து. இந்த மூன்று வட்டங்களில் தானே கெடிலத்தின் தோற்றமும் போக்கும் முடிவும் நிகழ்கின்றன? இருப்பினும், வரலாற்று ஆராய்ச்சிக்குள் புகும் நாம் இந்த மூன்று வட்டங்களை மட்டும் தனியே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது. சுற்றுப் புறச் சூழல்களையும் இணைத்தாற்போல், பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டம் முழுவதையும் மையமாகக் கொண்டே ஆராய்ச்சியைத் தொடங்கவேண்டும்.
மலையமா னாடு
தென்னார்க்காடு மாவட்டப்பகுதி சங்ககாலத்தில் ‘மலைய மானாடு’ எனவும் ‘மலைநாடு’ எனவும், ‘மலாடு’ எனவும் அழைக்கப்பட்டது. இந்தப் பகுதி அக் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் என்னும் மரபைச் சேர்ந்த மன்னர்களால் ஆளப்பட்டதால் மலையமானாடு என்னும் பெயர் பெற்றது. பின்னர் மலையமானாடு என்னும் பெயர் சுருங்கி மலாடு என மருவிற்று. இதனை இலக்கண நூலார் ‘மரூஉப் பெயர்’ என்பர். நன்னூலில்,
[1]"இலக்கண முடையது இலக்கணப் போலி
மரூஉ என் றாகு மூவகை யியல்பும்...."
என்னும் நூற்பா உரையில், “....மலையமானாடு என்பதனை மலாடு என்றும், சோழ நாடு என்பதனைச் சோணாடு என்றும் ... வருவனவும் இவ்வாற்றான் வருவன பிறவும் மரூஉ மொழி” என மயிலைநாதர் எடுத்துக்காட்டி யிருப்பது காண்க, அதே நன்னூலில்,
[2]"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்...."
என்னும் நூற்பாவின் விளக்கவுரையில், செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலங்களின் (நாடுகளின்) பெயர்களைக் கூறுமுகத்தான்,
"தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி,
பன்றி. அருவா, அதன் வடக்கு. - நன்றாய
சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"
என்னும் பழைய வெண்பா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பன்னிரண்டு நாடுகளுள் ‘மலாடு’ என்பதும் குறிக்கப் பட்டிருப்பது காண்க. ‘மலாட்டார் (மலாடு நாட்டார்) தோழியை இகுளை என்று வழங்குவர்’ என உரையாசிரியர் மயிலைநாதர் குறிப்பிட்டுள்ளார். [3]'மலாடர் கோமான்’ எனச் சேக்கிழாரும் இப் பெயரை ஆண்டுள்ளார். மலாடு என்னும் பெயர் இலக்கிய இலக்கண நூல்களிலேயன்றி,
'சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடானஜகந்நாத
வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்’ -
‘மிலாடு (மலாடு) ஆகிய ஜனனாத வளநாட்டுக்
குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்’ - என்பன போலத் திருக்கோவலூர்க் கல்வெட்டுக்களிலும் ஆட்சி பெற்றுள்ளது. இதிலிருந்து, ஒரு தனி நாட்டிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் அனைத்தும் அந்தக் காலத்தில் மலாடு நாட்டிற்கு. இருந்ததாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் மலையமான்களின் நல்ல ஆட்சியும் மாட்சியுமேயாகும். செஞ்சி வட்டத்தில் மலையமான் பெயரால் ‘மலையனூர்’ என ஓர் ஊர் இருப்பதும், தென்னார்க்காடு மாவட்டத்தில் மக்களுக்கு ‘மலையன்’ என்னும் பெயர் வைக்கும் வழக்கம் இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது, மலையமானுக்கு மலையன் என்னும் பெயர் உண்மையை, ‘செவ்வேல் மலையன் முள்ளூர் (குறுந்தொகை - 312), ‘முள்ளூர்....மலையனது’ (நற்றிணை - 170), ‘மலையன்....முள்ளூர் மீமிசை’ (புறநானூறு - 123) முதலிய சங்க இலக்கிய ஆட்சிகளால் அறிக.
இந்த நாட்டிற்கு மலாடு என்னும் பெயரையடுத்து, ‘நடுநாடு,’ ‘திருமுனைப்பாடி நாடு’ ‘சேதி நாடு,’ ‘மகத நாடு', ‘சகந்நாத நாடு', ‘சன நாத நாடு’ என்னும் பெயர் வழக்காறுகளும் ஏற்பட்டுள்ளன.
தமிழக சுவிட்சர்லாந்து
நடுநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவையாவன:
1. தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் நடுவே இருப்பதால் நடுநாடு எனப்பட்டது. அஃதாவது, தென்பெண்ணையாற்றுக்கு வடக்கேயிருப்பது தொண்டை நாடு; வடவெள்ளாற்றிற்குத் தெற்கே யிருப்பது சோழநாடு; இந்த இரண்டிற்கும் நடுவேயிருப்பது நடுநாடு.
2. மலையமான், தான் புரிந்த உதவிகளுக்காகச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தனக்கு அளித்த நிலப்பகுதிகளை இணைத்து, மூவர் நாடுகட்கும் எல்லை உடையதாக - மூவர் நாடுகட்கும் நடுவே அமைத்துக் கொண்ட நிலப்பகுதி யாதலின் நடுநாடு எனப்பட்டது.
3. முடியுடை மூவேந்தர்க்கும் பொதுவுடைமை உள்ளதாக நடுநிலைமையில் இருந்ததால் நடுநாடு எனப்பட்டது.
4. மலையமான் மரபினர் மூவேந்தரிடத்தும் நட்பு உடையவராக மூவேந்தரும் உதவி வேண்டிய போதெல்லாம் புரிந்தவராக - மூவேந்தர்க்கும் நடுநிலை உடையவராக இருந்தமையால் அவர்கள் ஆண்ட நாடு நடுநாடு எனப்பட்டது.
மேற்கூறிய பெயர்க் காரணங்கள் நான்கினையும் தொகுத்து இரண்டாகச் சுருக்கிவிடலாம். அவையாவன:
1. மிகப்பெரிய தொண்டை நாட்டிற்கும் மிகப் பெரிய சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள ஒரு சிறு நாடு ஆதலின் நடுநாடு எனப்பட்டது. இந்தக் காரணம் பொருத்தமாகத்தான் தெரிகிறது.
2. முடியுடைப் பேரரசர் மூவர்க்கும் நண்பராய் - நடுநிலைமை உடையவராய் - வாழ்ந்த மலையமான் மரபினர் ஆண்டதால் நடுநாடு எனப்பட்டது. இந்தக் காரணமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. இதன்படி பார்த்தால், இன்று உலகின் நடுநிலை நாடாகச் ‘சுவிட்சர்லாந்து’ என்னும் சிறுநாடு விளங்குவதுபோல, அன்று தமிழகத்தின் நடுநிலை நாடாக இது விளங்கி யிருந்தமை புலப்படும். இந்தக் கருத்துக்கு, புலவர் கபிலர் மலையமான் திருமுடிக் காரியின்மேல் பாடியுள்ள
"வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பா கியரென
ஏத்தினர் தருஉம் கூழே நுங்குடி"
என்னும் புறநானூற்றுப் (122) பாடல் பகுதி தக்க சான்று.
கரையேறவிட்ட நகர்ப் புராண ஆசிரியர் நடுநாடு என்னும் பெயர் வந்ததற்குக் கூறும் காரணம் இங்கே மிகவும் குறிப்பிடப்பட்டு மகிழ்தற்குரியது. ‘தொண்டை நாடு சான்றோர் உடைத்து'; ‘சோழ நாடு சோறுடைத்து’. என்பன முதுமொழிகள், இவ்விரு நாடுகட்கும் நடுவில் இருத்தலாலும், இவ்விரு நாடுகளின் தனிச் சிறப்பான சான்றோரையும் சோற்று வளத்தையும் தான் ஒருசேரப் பெற்றிருத்தலாலும் இப் பகுதி ‘நடுநாடு’ எனப்பட்டது என அவர் கூறியுள்ளார்; பாடல் வருமாறு:
[4]"சொற்றதிரு முனைப்பாடித் தூநாட்டை நடுநாடாச்
சொல்வார் ஆன்ற
கற்ற அறி வினரதற்குக் காரணநோக் கிடிற் சான்றோர்
கனிந்துற் றோங்கித்
துற்ற திரு நாட்டினுக்கும் சோறுகுறை வற்றவளம்
சூழ்நாட்டிற்கும்
தெற்றநடு ஆர்ந்து இரண்டு சீரும்மலிந்து ஓங்குகின்ற திறத்தாற் போலும்"
இப் பெயர்க் காரணம் மிகவும் பொருத்தமாகப் புலப்படுகிறது. இந்நாடு, வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில்,
"நடுவில் மண்டலத்துத் திருமாணிக் குழி"
என ‘நடுவில் மண்டலம்’ என்பதாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நடுவில் மண்டலம் என்பதற்கு, நடுவே உள்ள நடுநாடு என்பதாகத்தான் பொருள் இருக்க வேண்டும்.
திருமுனைப்பாடி நாடு
அடுத்து, திருமுனைப்பாடி நாடு என்பதின் பெயர்க் காரணம் வருமாறு:
திருமுனைந்து ஆடும் நாடு - அஃதாவது - திருமகள் மிகுந்த சிறப்புடன் வாழும் நாடு என்ற பொருளில் (திருமுனைப்பு ஆடி நாடு) திருமுனைப்பாடி நாடு எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனச் சிலர் கூறகின்றனர், இந்தக் காரணம் பொருத்தமானதாய்ப் புலப்படவில்லை. முனை என்பது போர் முனையை - போர்க் களத்தைக் குறிக்கும்; பாடி என்றால் பாசறை - போர் மறவர்கள் தங்கியிருக்கும் இடம். எனவே, முனைப்பாடிநாடு என்றால், போர்கள் பல நடந்த நாடு - போர் முனைகள் மிக்க நாடு - போர் மறவர்கள் நிறைந்த நாடு எனப் பொருள்படும். திரு என்பது மங்கலச் சொல், இப்படியாக - இந்தப் பொருளில் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயர் உருவாயிற்று என ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதுதான் பொருத்தமாய்த் தோன்றுகிறது.
இந்த நாடு தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் வடபுல மன்னர்களும் தென்புல மன்னர்களும் பலமுறை இங்கே மோதிக்கொண்டிருக்கலாம்; முடியுடை மூவேந்தர்கள் துணைவேண்டிய போதெல்லாம் மலையமான் மரபினர் மிக்க படை வீரர்களுடன் சென்று உதவியதாய் அறியப்படுதலின், பயிற்சியும் பட்டறிவும் மிக்க போர் மறவர்கள் மிகப் பலர் இங்கே இருந்திருக்க வேண்டும்; எனவே, இந்நாடு முனைப்பாடி என்னும் பெயருக்கு ஏற்றதே. மற்றும், இந்நாடு நடுநிலை நாடாக இருந்ததால், ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துச் சென்ற மன்னர் பலரின் படைகள் வழியில் இந் நாட்டைப் பாடிவீடாகக் கொண்டு தங்கி இளைப்பாறுவதும் வழக்கமாயிருந்திருக்கலாம்; இதனாலும் இந் நாட்டிற்குத் திருமுனைப் பாடிநாடு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
திருமுனைப் பாடிநாடு என்பதற்கு எத்தனை பெயர்க் காரணங்கள் கூறினாலும் அத்தனையும் மலையமான்களை மையமாகக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவனவாயுள்ளன. கெடிலமும் தெண்பெண்ணையும் பாயும் இத் திருமுனைப் பாடி நாட்டைப் புலவர்கள் மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். “நல்லொழுக்கம் மிக்க குடிமக்களையும் வளஞ்சிறந்த ஊர்களையும் உடையது திருமுனைப்பாடி நாடு, திருநாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறப்புடையது திருமுனைப்பாடி நாடு என்றால், இதற்குமேல் அதற்கு இன்னும் வேறு பெருமை கூறவியலாது” என்னும் கருத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தில்,
[5]"கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடி நாடு"
[6]"தொன்மைமுறை வருமண்ணின் துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு முனைப்பாடி வளநாடு"
[7]"மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மை நெறி
அறந்தருநா வுக்கரகம் ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு.”
எனத் திருமுனைப்பாடி நாட்டைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். மற்றும், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தமது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், “காஞ்சிபுர நாட்டுப் பகுதிக்குத் தெற்கிலும் காவிரி நாட்டுக்கு வடக்கிலும் உள்ளது திருமுனைப்பாடி நாடு; சுந்தரரும் நாவுக்கரசரும் தோன்றிச் சிறந்தது அந்நாட்டில்தான்; நாடுகளுக்குள் மேம்பட்டது திருமுனைப்பாடி நாடு என்று காவியங்கள் கூறுகின்றன” - என்னும் கருத்தில்,
[8]"இன்ன நாவலந் தீலனிற் காஞ்சியின் தென்பால்
பொன்னி நல்வளம் பரப்புநாட் டுத்தரம் பொலிந்து
தன்னை யொப்பரும் பெண்ணைநீர் பாய்ந்தகந் தழைத்து
மன்னி வாழ்வது திருமுனைப் பாடிமா நாடு"
அன்ன நாட்டினில் ஆலால சுந்தரர் உதிப்ப
என்னையாள் வெண்ணை நாயகர் தடுத்தினி தாண்டார்
முன்னர் நாவினுக் கரசரு முளைத்திந்தக் கடலின்
மன்னி யேகரை யேறவிட் டார்புகழ் வளர்த்தார்”
"நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடிநா டென்றே
ஏட்டின் மன்னிய காப்பியக் கவிகளே யிசைக்கும்..."
என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவதிகை வாகீச பக்த நாவலர் தமது திருவதிகைப் புராணத்தில்,
[9]"தெய்வநன் னாட்டின் மேலாம் திருமுனைப் பாடிநாடு"
[10]"திருவுறு கெடிலம் பாயு திருமுனைப் பாடிநாடு"
என்றெல்லாம் பல பாடல்களில் பலபடப் புகழ்ந்துள்ளார். இவரும், அப்பரும் சுந்தரரும் பிறந்ததால் பெருமை பெற்ற நாடு எனக் கூறத் தவறவில்லை . இதே பெருமையைச் சிவசிதம்பரப் புலவரும் தமது ‘கரையேறவிட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர். திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந் நாடு ‘சீராமன் வழிபட்ட நாடு’ எனவும் புகழ்ந்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு:
[11]"ஓவு றாப்பெரு வளஞ்செய ஒளிர்நடு நாடாம்
பாவு சீர்முனைப் பாடிநாட் டணிவளம் பகர்வாம்"
"உவப்புடன் ஒரு சீராமனும் வழிபட்
டுள்ளதும் இந்நடு நாடே."
மற்றும், புலவர் வரந்தருவார் வில்லிபாரதத்தின் பாயிரச் செய்யுளில், “திருமுனைப் பாடிநாடு நீர்வளம் மிக்கநாடு; பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதலாழ்வார் மூவரும் கோவலூரில் ஒன்று சேர்ந்து திருமாலைத் தொழுதநாடு; தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவராகிய நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறந்த நாடு"- என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவருடைய பாடற் பகுதிகள் வருமாறு:
"தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத் திருமுனைப் பாடிநன் னாdu”
"பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி முகுந்தனைத் தொழுதநன் னாடு
தேவரும் மறையும் இன்னமுங் காணாச் செஞ்சடைக் கடவுளைப் பாடி
யாவரும் மதித்தோர் மூவரில் இருவர் பிறந்த நாடு இந்தநன் னாடு."
இவ்வாறு புலவர் பலரால் போற்றிப் புகழப் பெற்ற பெருஞ்சிறப்பிற்குரியது திருமுனைப்பாடிநாடு. இலக்கியங் களிலேயன்றிக் கல்வெட்டுக்களிலும் ‘திருமுனைப்பாடிநாடு’ என்னும் பெயர் ஆட்சியைக் காணலாம்.
[12]"திருமுனைப் பாடிக் கீழாமூர் நாட்டுத் திருவாமூர்
ஊரோம்"
என்றும்
"திருமுனைப்பாடி நாட்டுப் பாண்டையூர் மங்கலங்
கிழான்"
என்றும் கல்வெட்டுக்களில் இப்பெயர் ஆளப்பட்டுள்ளமை காண்க சேதிநாடு
இந்நாட்டிற்குச் சேதி நாடு’ என்னும் பெயரும் இருப்பதை,
[13]"சேதிநன் னாட்டுநீடு திருக்கோவ லூரின்மன்னி" என்னும் பெரிய புராணப் பாடல் பகுதியால் அறியலாம். சேதிநாடு திருமுனைப்பாடி நாட்டின் ஓர் உட்பகுதியாக இருக்கலாம்.
மகதநாடு
திருக்கோவலூர் வட்டாரத்திலுள்ள ஆற்றுார் அல்லது ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு வாணர் என்னும் குறுநில மன்னர் மரபினர் ஆண்ட பகுதி ‘மகத நாடு’ என அழைக்கப்பட்டது. மகத நாட்டையாண்ட மன்னர்கள் ‘மகதேசர்’ என அழைக்கப்பட்டனர். மகத+ஈசர் = மகதேசர். அதாவது, மகதநாட்டின் தலைவர். இச்செய்தியை, ஏகம்ப வாணன் என்னும் வாண மன்னனைப் பற்றிப் பெருந்தொகை என்னும் நூலின் 1192ஆம் பாடலிலுள்ள
"மகதேசன் ஆறைநகர் காவலன் வாண பூபதி”
என்னும் பகுதியாலும், திருவண்ணாமலைக் கோயிலில் வாணவ கோவரையன் என்னும் வாண மன்னனைப் பற்றிய கல்வெட்டொன்றிலுள்ள
“ஆறகளுர் உடையான் மகதேசன் உலகம் காத்த
வாணவ கோவரையன்”
என்னும் பகுதியாலும் திருவயிந்திரபுரம் கல்வெட்டொன்றிலுள்ள ’மகதராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்னும் பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம்.
சனநாத நாடு
இந்நாட்டிற்கு, ’சனநாத நாடு’ என்னும் பெயரும் ஒருகால் ஒரு சிலரால் வழங்கப்பட்டமையை, திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களில் உள்ள,
“ஜநனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து
பிரம்மதேயம் திருக்கோவலூர் ஆன பூரீ மதுராந்தக
சதுர்வேதி மங்கலத்து திருவிடைகழி ஆழ்வார்க்கு
இவ் ஊர் சபையோம் விற்றுக் குடுத்த நிலமாவது....”
“மிலாடாகிய ஜனனாத வளநாட்டுக் குறுக்கைக்
கூற்றத்து திருக்கோவலூர்”
என்னும் பகுதிகளால் அறியலாம்.
சகந்நாத நாடு
இதே நாட்டிற்கு ‘சகந்நாத நாடு’ என்னும் பெயரும் வழங்கப்பட்டதை, திருக்கோவலூர்க் கல்வெட்டொன்றிலுள்ள
"மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக்
கூற்றத்துத் திருக்கோவலூர்
என்னும் பகுதியால் அறியலாம். சனநாத நாடு என்பது சகந்நாத நாடு எனத் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டதோ - அல்லது சகந்நாத நாடு என்பது சனநாத நாடு என மாற்றி வழங்கப்பட்டதோ - தெரியவில்லை. இரண்டும் தனித்தனிப் பெயராகவும் இருக்கலாம்.
இவ்வாறு கெடில நாட்டிற்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. இப்பெயர்களுள், சங்ககாலத்தில் மலாடு என்னும் பெயரும், சங்க காலத்திற்குப் பின் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயருமே வழக்காற்றில் பெரிதும் இடம் பெற்றன என்பது நினைவுகூரத் தக்கது.
உலக எல்லைக்குள் கெடில நாடு
கெடிலம் பாயும் தென்னார்க்காடு மாவட்டம் உலக எல்லைக்குள், வடகுறுக்கைக் கோடு (North Latitude) 11°5’ - 12°30’ ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கோடு (East Longitude) 78°37’ -80’ ஆகிய அளவிற்குள்ளும் அமைந்து கிடக்கிறது. இந்தப் பொது எல்லைக்குள்ளேயே, கெடிலம் பாயும் கள்ளக்குறிச்சி வட்டம், திருக்கோவலூர் வட்டம், கடலூர் வட்டம் ஆகிய மூன்று வட்டங்களும் அடங்கிய கெடில நாடு, வடகுறுக்கைக் கோடு {North Latitude) 11°30’ - 12°10’ ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கோடு (East Longitude) 78°40’ - 79°50’ ஆகிய அளவிற்குள்ளும் அமைந்துள்ளன. இது, உலக எல்லைக்குள், சிறப்பாகக் கெடில நாடு அமைந்திருக்கும் இட எல்லையாகும்.
* * *
↑ நன்னூல் - பெயரியல் - 10.
↑ நன்னூல் - பெயரியல் - 16.
↑ பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1.
↑ கரையேறவிட்ட நகர்ப்புராணம் - திருநாட்டுப் படலம் - 37.
↑ பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 1.
↑ பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 2, 11.
↑ பெரிய - திருநாவுக்கரசர் - 11.
↑ திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 102, 103, 104.
↑ திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 3.
↑ திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 7.
↑ கரையேறவிட்ட நகர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 1, 40.
↑ திருவாமூர்க் கோயில் கல்வெட்டு (கி.பி. 1090).
↑ பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1.
11. கெடில நாட்டு வரலாறு
வரலாற்றுத் தொன்மை
கெடிலக்கரை நாடு மிகப் பழம்பெரும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாடு, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே (Pre - Historic Period) மிகவும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. நாட்டுப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள், அரசர் பெயர்கள், தலைவர் பெயர்கள், காலக் கணக்கு அரசியல் - சமூக நிகழ்ச்சிகள் முதலியவை ஓரளவேனும் தெரியத் தொடங்கிய காலம் வரலாற்றுக் காலம் (Historic Time) எனப்படும். இவை ஒரு சிறிதும் தெரியாத காலம் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலம் (Pre - Historic Time) எனப்படும்.
உலகில் சில நாடுகள் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே உருவாகி மிகவும் சிறப்புடன் விளங்கியிருக்கும்; சில நாடுகள் வரலாற்றுக் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில், அதாவது இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்போ - அல்லது - சில ஆண்டுகட்கு முன்போதான் உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கும் - அல்லது - வளர்ந்து கொண்டிருக்கும். சிந்துவெளி, எகிப்து, மெசபொடோமியா, பாபிலோனியா, அசிரியா, காவிரிப் பூம்பட்டினம் முதலியவை வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே உருவாகி வளர்ச்சி பெற்றிருந்தவை. புது அமெரிக்கா, ஆசுதிரேலியா, சிங்கப்பூர் முதலியவை சில நூற்றாண்டுகட்கு முன் உருவாகி வளர்ச்சி பெற்றவை. இந்த இருபெரும் பிரிவுகளுள் முதல் பிரிவைச் (Pre - Historic Period) சேர்ந்தது திருமுனைப்பாடி நாடு. மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டாயிரம் - மூவாயிரம், இன்னும் ஏறினால் ஐயாயிரம் ஆண்டுகால உலக வரலாறு ஓரளவு நமக்குத் தெரியக்கூடும் இந்தக் காலக் கணக்கிற்கு எல்லாம் அப்பால், பதினாயிரக் கணக்கான - ஏன் நூறாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டது திருமுனைப்பாடி நாடு. உலகில் திருமுனைப்பாடி நாடு ஒன்று மட்டுமே மிகப் பழமையானது என்று சொல்ல வரவில்லை; உலகின் மிகப் பழைய நாடுகளுள் திருமுனைப்பாடி நாடும் ஒன்று என்பதுதான் இங்கே சொல்ல வந்த கருத்து. இதற்குத் தக்க சான்றுகள் இல்லாமற் போகவில்லை.
உலகில் முதல்முதல் தமிழகத்திலேயே மக்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் ஆராய்ச்சி ஒருபுறம் இருக்க, - ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில்,
[1]"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி
எனக் கூறியிருப்பது ஒருபுறம் இருக்க
[2]"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரித லின்று”
என்னும் திருக்குறள் உரையில்,
'பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற
குடியின்கட் பிறந்தார்; தொன்று தொட்டு வருதல் - சேர
சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலம்
தொடங்கி மேம்பட்டு வருதல்’
எனப் பரிமேலழகர் பொருள் எழுதி யிருப்பது ஒருபுறம் இருக்க, கெடிலக்கரையில் மரக் கற்கள் காணப்பட்டிருப்பதாலும், கெடிலம் கடலோடு கலக்குமிடத்தில் கழிமுகத் தீவுகள் ஏற்பட்டிருத்தலாலும் கெடிலம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி யிருக்கவேண்டும் என ஆராய்ந்து முன்னர்த் (பக்கம் - 93, 94} தெரிவித்துள்ள செய்தி ஈண்டு மிகவும் இன்றியமையாதது.
கெடிலமும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதியும் நூறாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியிருந்தால் போதுமா? அங்கே மக்கள் வாழ்க்கையும் அரசாட்சியும் நாகரிகமும் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியிருந்தால் தானே, அந்தப் பகுதியைப் பழமையான நாடு என்று கூற முடியும்? உலகின் எல்லாப் பகுதிகளுந்தான் நூறாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் தோன்றின. தோன்றியும், பல பகுதிகள் மக்கள் வாழ்க்கையற்றுக் கிடந்தன - இன்னும் சில கிடக்கின்றன. உலகின் தலைசிறந்த நாடுகளாக இன்று மதிக்கப்படும் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்து ஒரு காலத்தில் மீன் பிடிக்கும் தீவாகத்தானே இருந்தது! இன்றைய அமெரிக்கா ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்தானே உருவாயிற்று! இவை போன்றவற்றைப் பழம்பெரும் நாடுகள் என்று எவ்வாறு சொல்ல முடியும்? கெடிலக்கரைத் திருமுனைப்பாடி நாடு இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்டதாகும்.
கெடிலக்கரைப் பகுதியில் கரடு முரடான கல்மலைப்பாங்கோ காடுகளோ இல்லையாதலின் அன்று தொட்டே மக்கள் வாழ்ந்து வந்திருக்கவேண்டும். வரலாற்றுக் காலத்திற்கு முன்பே அங்கே மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குத் தக்க சான்று உண்டு. உழவுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையான நீரைத் தரும் ஆற்றங்கரைகளில் மிகுதியாக மக்கள் வாழ்வார்கள் என்ற இயற்கைச் சான்று ஒருபுறம் இருக்க, தென்னார்க்காடு மாவட்டத்தில் சிலவிடங்களில் கிடைத்துள்ள பழைய கற்கருவிகளும், பரவலாகப் பலவிடங்களில் காணப்படும் சவக்குழிகளும் அப்பகுதியின் பழைய பழமையைப் பறைசாற்றி யறிவிக்கின்றன. மக்கள் கல்லால் கருவிகள் செய்து பயன்படுத்திய காலம் ‘கற்காலம்’ (Stone Age) எனப்படும். இது, ‘பழைய கற்காலம்’ (Paleolithic) எனவும், ‘புதிய கற்காலம்’ (Neolithic) எனவும் இருவகைப்படும். கற்காலம் எனப்படுவது, இற்றைக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முற்பட்ட காலமாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இயற்கையாய் எளிதாய்க் கிடைத்த கற்களைக் கொண்டு கருவிகள் செய்து பண்டைய மக்கள் பயன்படுத்தினார்கள். இத்தகைய கற்கருவிகள் சிலவற்றைத் தென்னார்க்காடு மாவட்டத்துப் பழங்குடி மரபினர் சிலர் தம் கோயில்களில் வைத்துத் தெய்வத் தன்மை உடையனவாகக் கருதிப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாகக் கல்வராயன் மலை வட்டாரப் பகுதியில் இவற்றைக் காணலாம். இச்சான்று கொண்டு தென்னார்க்காடு மாவட்டமாகிய திருமுனைப்பாடி நாட்டின் பழமையைப் பழைய கற்காலம் வரைக்கும் கொண்டு செல்லலாம்.
மற்றும், இம்மாவட்டத்தில் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள கொல்லூர், தேவனூர் முதலிய இடங்களிலும், கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள கொங்கராய பாளையம், குண்டலூர் முதலிய இடங்களிலும் சவக்குழிகள் காணப்படுகின்றன. இவற்றுள் சில, 6 அடி நீளமும் 4 அடி அகலமும் 3 அடி ஆழமும் உடையனவாய்க் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. சிலவற்றில், எலும்புத் துண்டுகளுடன் மட்கலங்களும் இரும்புக் கருவிகளும் காணப்படுகின்றன. இவை, புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் புதைக்கப்பட்ட குழிகளாம். பழைய கற்காலத்திற்கும் உலோக காலத்திற்கும் (Metal Age) இடைப்பட்டது புதிய கற்காலம். புதிய கற்காலத்தில் மட்கலங்களும் இரும்புக் கருவிகளும் ஒரு சிறிது உண்டாகத் தொடங்கிவிட்டன.
பெரிய சால்களில் (பானைகளில்) பிணத்தை வைத்து மூடிப் புதைக்கும் வழக்கமும் அந்தப் பழங்காலத்தில் இருந்தது. இத்தகைய பிணச்சால்கள் கடலூர் வட்டத்துத் திருவதிகைப் பகுதியில் இப்போதும் கண்டுபிடிக்கப்படுகின்றன. எவ்வளவு வயதாகியும் இறக்காமல் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் தொண்டு கிழங்களை, இத்தகைய சால்களில் உணவு - தண்ணீருடன் உயிரோடு வைத்துப் புதைக்கும் வழக்கமும் அன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ! இத்தகைய சால்கள் ‘முசுமுசுக்குச் சால்’ என்றும் ‘முசுமுசுச்சாலை’ என்றும் உலக வழக்கில் சொல்லப்படுகின்றன; இலக்கிய வழக்கில், [3]முதுமக்கள் சாடி’ எனவும், [4]'ஈமத்தாழி’ எனவும், [5]முதுமக்கள் தாழி’ எனவும் அழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிணங்களைச் சவக்குழிகள் கட்டியிடுவதும் முசுமுசுச் சாலில் புதைப்பதும் மிக மிகப் பழங்காலத்து வழக்கங்களாகும். இத்தகைய குழிகளும் சால்களும் காணப்படும் திருமுனைப்பாடி நாடு மிக்க வரலாற்றுத் தொன்மையுடையது என்பது தெளிவு.
ஆட்சி வரலாறு
நமக்குத் தெரிந்த வரையில் தமிழ் நாட்டு ஆட்சி வரலாற்றுத் தொடக்க காலம் என்பது கடைச் சங்க காலம்தான், அப்படியென்றால் கடைச் சங்க காலத்திற்குமுன் தமிழ் நாட்டில் வரலாறு ஒன்றும் நிகழவில்லை என்பது பொருளன்று; கடைச் சங்க காலத்திற்குமுன் தமிழ் நாட்டில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதற்குரிய எழுத்துச் சான்று கிடைத்திலது என்பதே அதன் பொருள். கடைச் சங்க காலம் கி.மு. 500 -ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 500 - ஆம் ஆண்டு வரையும் இழுத்துக் கொண்டு வரப்படுகிறது. முந்தி என்கின்றனர் சிலர்; பிந்தி என்கின்றனர் சிலர். சங்க காலம் என்பது, மதுரையில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்தைக் குறிக்கும். அங்கே மூன்று முறை மூன்று சங்கங்கள் தோன்றி மறைந்தனவாம். இங்கே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடைச் சங்கம் என்பது மூன்றாம் சங்கமாகும். இதற்கும் பல நூற்றாண்டுகட்குமுன் இடைச் சங்கம் எனப்படும் இரண்டாம் சங்கம் இருந்ததாம். அதற்கும் பல நூற்றாண்டுகட்கு முன் முதற் சங்கம் இருந்ததாம். அங்ஙனமெனில், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழகம் சிறந்த இலக்கிய இலக்கணக் கலைச் செல்வங்களுடன், மிக்க வளர்ச்சியும் நாகரிகமும் பெற்றிருந்தமை புலனாகும்.
தமிழகம் முப்பெருஞ் சங்கங்களைப் பெற்றிருந்தும் தீவினைப்பயனால் முதற் சங்க நால்களும் இடைச் சங்க நூல்களும் கிடைக்கவில்லை; கடைச்சங்க நூல்கள் சில மட்டும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டுதான் திருமுனைப் பாடிநாடு உட்படத் தமிழகத்தின் வரலாற்றினை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கடைச் சங்க காலம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என ஒரு முடிவுக்கு வரலாம். எனவேதான், தமிழக வரலாற்றுத் தொடக்க காலம் கடைச் சங்க காலம் எனக் கூறப்பட்டது.
சோழப் பேரரசு
இலக்கியங்களின் துணைகொண்டு வரலாற்றுக்கு எட்டியுள்ள வரைக்கும், தொடக்க காலத்தில் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டவர்களாக அறியப்படுபவர்கள் சோழ மரபினராவர். கி.மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டி லிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரை - அதாவது - கி.பி. 250’ வரை, சோழப் பேரரசர்கள் சோழ நாட்டுடன், திருமுனைப்பாடி நாடு எனப்படும் நடுநாடு, தொண்டைநாடு ஆகியவற்றையும் இணைத்துத் தம் தலைமையின் கீழ் ஆண்டு வந்தனர். இவர்களுள், கி.மு. முதல் நூற்றாண்டில் ஆட்சி தொடங்கியவளாகக் கருதப்படும் கரிகாற் சோழன் மிகவும் இன்றியமையாதவன். ஆட்சிச் சிறப்பில் இவனுக்கு அடுத்த பங்குடையவனாயிருந்தவன் நெடுமுடிக் கிள்ளியாவான். சோழர்கள் நாட்டைப் பல கோட்டங்களாகப் பிரித்து, ஆங்காங்குத் தம் ஆணையரை அமர்த்தி, காடு திருத்தியும் நீர்ப்பாசன வசதி செய்தும் நன்கு மேற்பார்வையிட்டு ஆண்டு வந்தனர்.
மலையமான் மரபினர்
சோழரின் மேலாட்சி இருக்க, கி.பி. முதல் மூன்று நூற்றாண்டு கால அளவில், மலையமான் என்னும் மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்தார்கள் அப்போது இந்நாட்டிற்கு ‘மலாடு’ என்பது பெயர். இவர்கள் பெரும்பாலும் சோழர்க்குக் கட்டுப்பட்டே ஆண்டு வந்தனர்; அதே நேரத்தில் மற்ற மன்னர்களுடன் நட்புறவு கொண்டு நடுநிலையாளராகவும் விளங்கி வந்தனர். இவர்களுள், மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்னும் இருவரும் இன்றியமையாதவர்கள். மலையமான் மரபினருள், திருமுடிக்காரி மற்றவரினும் ஓரளவு தன்னுரிமை (சுதந்திரம்) உடையவனாயிருந்ததாகத் தெரிகிறது. திருக்கண்ணனோ முழுக்க முழுக்கச் சோழரைச் சார்ந்து வாழ்ந்தவனாகத் தெரிகிறது.
பல்லவப் பேரரசு
மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி. 250-க்கு மேல்) தொண்டை நாடு சோழர்களிடமிருந்து பல்லவ மன்னர் கைக்கு மாறியது; திருமுனைப்பாடி நாடு அதாவது - தென்பெண்ணைக்கு வடக்கேயுள்ள பகுதி அப்போதும் சோழர்களிடமே இருந்தது; ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து திருமுனைப்பாடி நாடும் பல்லவர் பேரரசின் கைக்குச் சென்று விட்டது. இந்நாட்டை ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் பல்லவப் பேரரசர்களே ஆட்சி புரிந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ‘அபராசிதன்’ என்னும் வலிமையற்ற பல்லவ மன்னன் ஆண்டான், அவனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மீண்டும் சோழர் ஆட்சி தலை தூக்கியது.
பல்லவப் பேரரசின் ஆட்சியில் சமண மதம் தழைத்திருந்தது. திருநாவுக்கரசர் தோன்றி, ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னனையும் (முதல் மகேந்திரவர்மன்) மக்களையும் மீண்டும் சைவத்திற்கு மாற்றினார்; பல்லவ மன்னர்கள் தங்கள் காலத்தில் நாட்டில் கலைவளமும் பொருள் வளமும் கொழிக்க நன்றாக ஆட்சி புரிந்தனர்.
கல்வெட்டுக்களின் துணைகொண்டும் இலக்கியங்களின் துணைகொண்டும் ஆராய்ந்து அறிந்துள்ள வரைக்கும், நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை, தொண்டை நாட்டுடன் திருமுனைப்பாடி நாட்டையும் இணைத்து அரசோச்சிய பல்லவகுலப் பேரரசர்களின் பெயர்களும் அவர் தம் ஆட்சிக் காலமும் முறையே வருமாறு:
(முதல் வரிசை)
முதலாம் குமார விஷ்ணு 325 - 35
முதலாம் ஸ்கந்தவர்மன் 350 - 375
வீரவர்மன் 375 - 400
இரண்டாம் ஸ்கந்தவர்மன் 400 - 436
முதலாம் சிம்மவர்மன் 436 -460
மூன்றாம் ஸ்கந்தவர்மன் 460 - 480
இரண்டாம் சிம்மவர்மன் 480 - 500
முதல் நந்திவர்மன் எனக் கருதப் படுகிறது வேறு சிலரும் இருந்திருக்கலாம் 500 - 574?
(இரண்டாம் வரிசை)
சிம்ம விஷ்ணு 574 - 600
முதலாம் மகேந்திரவர்மன் 600 - 630
முதல் நரசிம்மவர்மன் 630 - 668
இரண்டாம் மகேந்திரவர்மன் 668 - 670
முதலாம் பரமேசுரவர்மன் 670 - 680
இரண்டாம் நரசிம்மவர்மன் 680 - 729
இரண்டாம் பரமேசுரவர்மன் 730 - 731
இரண்டாம் நந்திவர்மன் 731 - 795
தந்திவர்மன் 795 - 845
மூன்றாம் நந்திவர்மன் 844 - 866
நிருபதுங்கவர்மன் 855 - 896
அபராசித பல்லவன் 879 - 897
இந்த அட்டவணையில் உள்ளாங்கு, அபராசித பல்லவ மன்னனோடு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பேரரசு மறைந்தது. இதற்கு, விசயாலயச் சோழனும் அவர் மரபினரும் காரணராவர்.
பிற்காலச் சோழர் ஆட்சி
கி.பி. 897 ஆம் ஆண்டு கால அளவில், விசயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்த சோழன் அபராசித பல்லவனை வென்று திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் மீண்டும் சோழப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். இந்தப் பிற்காலச் சோழ மரபினரின் ஆட்சி, 897 ஆம் ஆண்டு தொட்டு 1279 ஆம் ஆண்டு வரை திருமுனைப்பாடி நாட்டில் நிலவியது.
இவர்களின் பெயர்களும் ஆட்சிக் காலமும் முறையே வருமாறு:
விசயாலயச் சோழன் 870
முதலாம் ஆதித்த சோழன் 871 - 907
முதலாம் பராந்தகன் 907 - 954
கண்ட ராதித்தன் 954 - 957
அரிஞ்சயன் (சில திங்கள்கள்) 957
இரண்டாம் பராந்தகன் 957 - 973
உத்தம சோழன் 973 - 985
முதலாம் இராசராசன் 985 - 1014
முதலாம் இராசேந்திரன் 1012 - 1044
முதலாம் இராசாதிராசன் 1044 - 1054
இரண்டாம் இராசேந்திரன் 1054 - 1063
வீர ராசேந்திரன் 1063 - 1070
அதிராசேந்திரன் 1070
முதலாம் குலோத்துங்கன் 1070 - 1120
விக்கிரம சோழன் 1120 - 1135
இரண்டாம் குலோத்துங்கன் 1136 - 1150
இரண்டாம் இராசராசன் 1151 - 1163
இரண்டாம் இராசாதிராசன் 1163 - 1178
மூன்றாம் குலோத்துங்கன் 1179 - 1216
மூன்றாம் இராசராசன் 1216 - 1246
மூன்றாம் இராசேந்திரன் 1247 - 1279
மூன்றாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோழப் பேரரசு வீழ்ச்சியடைய, சடையவர்மன் சுந்தர பாண்டியன் தலைமையில் பாண்டியப் பேரரசு எழுச்சி பெற்றது.
இராட்டிர கூடர்
பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்கிடையே பல மரபுகளைச் சேர்ந்த மன்னர்கள் சில பல ஆண்டுகள் தலைதூக்கிப் பின்னர் மறைந்தனர். இவர்களுள் இராட்டிரகூட மரபினரும் ஒருவர். இவர்கள் கி.பி. 950 தொடங்கி 170 வரையும் கண்ணை முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் பராந்தகனும் முதலாம் இராசராச சோழனும் இவர்களை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர், இராட்டிரகூடர்களுள் மூன்றாம் கிருட்டிணன் என்பவன் சிறிது காலம் இப்பகுதியை ஆண்டிருக்கிறான்.
காடவராயர்
சோழர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கீழ்ச் சிற்றரசராய், காடவராயர் என்னும் மரபினர் திருமுனைப்பாடி நாட்டைச் சில காலம் ஆண்டனர். அழிந்து போன பல்லவப் பேரரசின் வழிவந்தவர்களே காடவராயர் எனப்படுபவர். சங்க காலச் சோழரின் கீழ் மலையமான் மரபினர் சிற்றரசர்களாய் ஆண்டது போல, பிற்காலச் சோழர்களின் கீழ், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர்கள் குறுநில மன்னர்களாயும் சோழ ஆணையர்களாயும் ஆண்டு வந்தனர்.
12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருமுனைப்பாடி நாட்டில், கெடிலக்கரையிலுள்ள திருமாணிகுழிப் பகுதியில் வளந்தானார் என்ற காடவர் சோழரின் கீழ் ஆட்சி புரிந்தார். இவர் வழிவந்தவருள் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் மிகவும் குறிப்பிடத்தக்கவன், இவன், கெடிலக்கரையிலுள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு 1243 முதல் 1279 வரை திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி புரிந்தான். இவனோடு காடவராய மரபினராட்சி ஒரு சேரச் சோழராட்சியுடன் 1279ஆம் ஆண்டளவில் பாண்டியரால் வீழ்த்தப்பட்டது.
பாண்டியப் பேரரசு
திருமுனைப்பாடி நாடு சோழர் தலைமைக்கு உட்பட்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனது ஆட்சிக்குப் பின் பாண்டியப் பேரரசின் கைக்கு மாறியது. இவ்வாறு மாற்றிய வெற்றியில் முறையே இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1239-1251), முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270), முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1311) ஆகியோர்க்கு மிக்க பங்கு உண்டு. பாண்டியர் ஆட்சி முக்கால் நூற்றாண்டுக்கால அளவு நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் பாண்டியர் காலமாகும்.
பதினான்காம் நூற்றாண்டில் பல்வேறு
அரசர்கள்
போசளர்
பதினான்காம் நூற்றாண்டின் முற்பாதியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் பாண்டியப் பேரரசின் மேலாட்சி பெரும்பாலான இடங்களில் இருந்தது ஒருபுறம் இருக்க, மாவட்டத்தின் மூலைக்குமூலை சிற்சில பகுதிகளில் பலவேறு அரசர்கள் ஆணை செலுத்தியதாகத் தெரிகிறது. சிலவிடங்களில், மைசூர் நாட்டைச் சேர்ந்த ‘ஓய்சாளர்’ அல்லது ‘போசளர்’ எனப்படும் மரபினரின் ஆட்சி நிலவியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலேயே போசள மரபினர் தென்னார்க்காடு மாவட்டத்தில் தம் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அப்போது, திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலக் கரையில் உள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனுக்கு உரியதாயிருந்த கடலூர்த் துறைமுகத்தை, வீரநரசிம்மன் என்னும் போசள மன்னன் தாக்கியிடித் தழித்தான், இப்படியாகப் போசளரின் ஆதிக்கம் 1340 வரை சில வட்டாரங்களில் இருந்தது.
சேரர்
மற்றும், திருவதிகைக் கோயில் கல்வெட்டின் துணை கொண்டு, 1313 தொடங்கி 1327 வரையும் குலசேகரன் என்னும் சேர வேந்தன் கடலூர் வட்டாரத்தை அரசாண்டதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
உடையார்கள்
மேலும், உடையார்கள் என்னும் மரபைச் சேர்ந்த சிற்றரசர்களும் 14ஆம் நூற்றாண்டில் தென்னார்க்காடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆணை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியப் பேரரசின் மேலாட்சியும் இம்மாவட்டத்தில் நடைபெற்றிருந்தது.
மதுரை சுல்தான்
பாண்டியரைத் தொடர்ந்து மதுரை சுல்தான் மாலிக் கபூர் 1334 முதல் 1378 வரை 45 ஆண்டு காலம் திருமுனைப்பாடி நாட்டை அரசு செலுத்தினார். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1310) வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தன் பங்காளிப் பாண்டியரை வெல்வதற்காக வடக்கேயிருந்த முசுலீம் மன்னரின் உதவியை நாடியதால், தென்னாட்டில் - மதுரையில் முசுலீம் ஆட்சி எளிதில் ஏற்பட வழி உண்டாயிற்று.
விசயநகரப் பேரரசு
பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (1378 - 1645) திருமுனைப்பாடி நாடு விசய நகரப் பேரரசின் கீழ் இருந்தது. தங்கள் மேற்பார்வையில் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட விசயநகர மன்னர்களுள், குமார கம்பனா (1343 முதல்), கிருஷ்ண தேவராயர் (1509 - 1529), இரண்டாம் சீரங்கன் (1614 முதல்), மூன்றாம் வேங்கடன் {1642 முடிவு) முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
செஞ்சி நாயக்கர்கள்
செஞ்சி நாயக்க மரபைச் சேர்ந்த மன்னர்கள் விசய நகரப் பேரரசின் தலைமையின் கீழ், செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். இவர்களது செல்வாக்கு 1370 தொட்டு 1648 வரைக்கும் ஓங்கியிருந்த தெனலாம். இம் மன்னர்களுள், கோபன்னா நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், அச்சுத இராமச்சந்திர நாயக்கர், வேங்கடப்ப நாயக்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; இவர்களுள்ளும் கிருஷ்ணப்ப நாயக்கரே {1570 - 1616) மிகவும் சிறப்புற்று விளங்கினார்.
ஏகம்ப வாணன்
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் மூலைக்கு மூலை இன்னும் சிலர் ஆண்டதாகத் தெரிகிறது. அவர்களுள் ஒருவர் வாணர் மரபினர். இந்தக் காலத்தில், திருக்கோவலூர் வட்டத்திலுள்ள ஆற்றூரைத் தலைநகராகக்கொண்டு ‘ஏகம்ப வாணன் என்னும் மன்னன் பெருஞ் சிறப்பு..... ன் ஆண்டான். திருமுனைப்பாடி நாட்டிற் குள்ளேயே இவன் ஆண்ட பகுதிக்கு ‘மகத நாடு’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
பீஜப்பூர் சுல்தான்
மொத்தத்தில் செஞ்சி நாயக்கர்கட்குப் பின் 1648 முதல் 1677 வரை திருமுனைப்பாடி பீஜப்பூர் சுல்தான் கைக்குள் அகப்பட்டுக் கிடந்தது. சுல்தானின் ஆணையர்களான சையது நாசிர்கானும், நாசிர் முகமது கானும் ஒருவர் பின் ஒருவர் முறையே ஆட்சி நடத்தினர். இந்த ஆட்சிக் காலத்தில்தான் கடலூர் இஸ்லாமாபாத்’ எனப் பெயர் வழங்கப்பட்டிருந்தது.
மராத்தியர் பங்கு
திருமுனைப்பாடி நாட்டு ஆட்சியில் மராத்தியர் பங்குக்கும் குறைவில்லை . மராத்தியப் பேரரசர் சிவாஜி 1677 தொட்டு 1698 வரை, சந்தாஜி, சம்பாஜி முதலிய உதவியாளர்களைக் கொண்டு இந்தப் பகுதியை ஆண்டார்.
மொகலாயப் பேரரசு
1698ஆம் ஆண்டு சனவரித் திங்களில் மராத்தியர் களிடமிருந்து நாடு ஔரங்கசீப்பின் கைக்கு மாறியது. ஔரங்கசீப்பின் உதவியாளர் கையில் தென்னார்க்காடு மாவட்டம் சிக்கியது. 1698 முதல் 1700 வரை ஒளரங்கசீப்பால் அமர்த்தப்பட்ட முசுலீம் ஆணையர்கள் ஆண்டு வந்தனர். தென்னிந்தியாவில் ஒளரங்கசீப்பின் பேரரசுக்குள் அகப்பட்டிருந்த மைசூர் மாநிலப் பகுதிகள் சிலவும் ஆந்திர மாநிலப் பகுதிகள் சிலவும், தமிழ் மாநிலப் பகுதிகள் சிலவும் இணைக்கப்பட்டுக் ‘கரு நாடகம்’ எனப் பெயர் கொடுக்கப் பட்டிருந்தன. 1700இல் ஔரங்கசீப்பின் ஆணைப்படி கருநாடகத்தின் தலைமை நவாப்பாக ‘தாவுத்கான்’ என்பவர் அமர்த்தப்பட்டார்; அவரது தலைநகரம் ஆர்க்காடு. அவரது தலைமையின்கீழ் செஞ்சிப் பகுதியின் ஆணையராக ‘சரூப்சிங்’ என்னும் இந்து மதவீரர் அமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில் வடக்கே ஔரங்கசீப் காலமாக, டில்லி ஆட்சி கலகலத்தது. தெற்கே யிருந்தவர்கள் உரிமையுடன் {சுதந்தரத்துடன்) நடக்கத் தொடங்கினர். கர்நாடகத் தலைமை நவாப்புக்குமேல் பெரிய தலைவராக ஐதராபாத்தில் ‘நிசாம்-உல் - முல்க்’ என்பவர் இருந்தார். இவர் தக்கணம் முழுவதற்கும் தம்மைத் தலைவரெனச் சொல்லித் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்.
செஞ்சி சிங்குகள்
இங்கே செஞ்சிப் பகுதியைக் கவனித்து வந்த சரூப்சிங், ஆர்க்காட்டு நவாப்புக்குக் கட்டுப்படாமலும் கப்பம் கட்டாமலும் தம்மைத் தனி உரிமை உடையவரெனச் சொல்லிக் கொண்டார். இவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதியைத் தம் ஆணையின்கீழ் வைத்திருந்தார். ஆங்கிலேயரின் கடலூர் செயிண்ட் டேவிட் கோட்டையையுங்கூடத் தாக்கினார். ஆங்கிலேயர் சிலரைச் செஞ்சியில் சிறைப் படுத்தியும் வைத்திருந்தார். இப்படியாகப் பல வீரச் செயல்கள் புரிந்து 1713இல் சரூப்சிங் இறந்து போனார். இவரைத் தொடர்ந்து இவர் மகன் தேசிங்கு என்னும் இளைஞர் பட்டத்துக்கு வந்தார். இவரும் தந்தை வழியைப் பின்பற்றினார். இவர் சில திங்கள்களே ஆட்சியில் இருந்தார். தாவுத்கானுக்குப் பின் கர்நாடக நவாப்பாக 1710 இல் ஆர்க்காட்டில் பட்டமேற்ற சதத்துல்லாகான், கப்பம் கட்டும்படி தேசிங்கை நெருக்கினார். கப்பம் கட்டாமல் நவாப்பை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தேசிங்கு முடிவுற்ற கதை நாடறிந்த வரலாறு.
கர்நாடக நவாப்புகள்
தேசிங்குக்குப் பின் தென்னார்க்காடு மாவட்டம் மீண்டும் முசுலீம் ஆணையரின் கீழ் வந்தது. 1732 ஆம் ஆண்டுகால அளவில் சதத்துல்லாகான் காலமானதும், அவருடைய வளர்ப்பு மகன் தோஸ்து அலி என்பவர் 1732இல் கர்நாடக நவாப்பாகப் பட்டமேற்று 1740 வரை அரசாண்டார். அவர் மகன் ‘சப்தர் அலி’ 1740 இல் ஆட்சிக்கு வந்தார். 1742இல் முர்தாஜ் அலி என்னும் கீழ் ஆணையன் சப்தர் அலியைக் கொன்று தன்னை நவாப் ஆக்கிக் கொண்டான். ஆனால், படை வீரர்கள் அவனை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி சப்தர் அலியின் மகனான சாகிப் ஜெக்தா என்னும் மறுபெயருடைய முகமது சையத்தை நவாப் ஆக்கினர். பின் 1743இல் காஜா அப்துல்லாகான் நவாப் ஆக்கப்பட்டார். சில நாளில் அவர் இறந்து போக, அன்வர் உத்தீன் என்பவர் நவாப் பட்டமேற்றார். இந்த நவாப்புகளை அமர்த்துவதிலும் வீழ்த்துவதிலும், தக்கணத்தின் பெருந்தலைவராகிய நிசாம் - உல் - முல்க் பெரும்பங்கு கொண்டிருந்தார்.
1748 இல் ஐதராபாத் நிசாம் - உல் - முல்க் காலமானார். அவருக்குப்பின் அவர் மகன் ‘நாசிர் ஜங்’ என்பவருக்கும் பேரன் ‘முசாபர் ஜங்’ என்பவருக்கும் இடையே பதவிப் போட்டி ஏற்பட்டது. இங்கே ஆர்க்காட்டில் அன்வர் உத்தீனுக்கு எதிராக, சந்தா சாகிப் என்பவர் கிளம்பினார். சந்தா சாகிப்பும் முசாபர் ஜங்கும் பிரெஞ்சுத் தலைவர் டூப்ளேயின் துணையுடன் பொருது தாம் எண்ணியதை முடித்தனர். அன்வர் உத்தீன் 1748 இல் கொல்லப்பட, சந்தா சாகிப் கர்நாடக நவாப் ஆனார். அங்கே முசாபர் ஜங் ஜதராபாத் நிசாம் ஆனார். இந்நிலையில் நாசிர் ஜங்கும், அன்வர் - உத்தீன் மகன் முகமது அலி என்பவரும் ஆங்கிலேயரின் துணை நாடினர்; எண்ணியதை முடித்தனர். ஆர்க்காட்டில் முகமது அலியும், ஜதராபாத்தில் நாசிர் ஜங்கும் பதவியைப் பிடித்துக் கொண்டனர். இவர்களை அகற்றி மீண்டும் சந்தா சாகிப்பும் முசாபர் ஜங்கும் பதவிக்கு வந்தனர். நாசிர் ஜங் கொல்லப்பட்டார். பின்னர் முசாபர் ஜங்கும் கொல்லப்பட்டு ‘சலாபாத் ஜங்’ என்பவர் நிசாம் ஆக்கப்பட்டார். இறுதியாக, சந்தா சாகிப் கொல்லப்பட்டு முகமது அலி கருநாடக நவாப் ஆக்கப்பட்டார்.
மைசூர் முசுலீம் குறுக்கீடு
நவாப் முகமது அலியின் ஆட்சிக் காலத்தில், மைசூரை ஆண்ட ‘ ஐதர் அலி’ என்னும் முசுலீம் மன்னர் 1780 இல் தென்னார்க்காடு மாவட்டத்தைத் தாக்கினார்; பிரெஞ்சுக்காரரின் உதவியுடன் கடலூரைப் பிடிக்க முயன்றார்; முடியவில்லை. ஆங்கிலேயர்கள் ஐதர் அலியை ஒடுக்கிவிட்டனர். 1782இல் ஐதர் அலி இறந்ததும், அவர் மகன் திப்பு சுல்தான் மைசூர் அரசரானார். அவரும் தந்தையின் வழியைப் பின்பற்றிப் போர் தொடுத்தார். அவரையும் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். 1799இல் திப்பு இறந்தார்.
இவ்வாறு, சந்தா சாகிப், முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்கள், மைசூர் முசுலீம் மன்னர்கள் முதலியோரின் போட்டிப் பொறாமைப் பூசல்களுக்கிடையே, ஆங்கிலேயரின் துணை வலிமையால் முகமது அலி 1748 முதல் 1795வரை கர்நாடக நவாப்பாக ஆட்சி புரிந்தார். அவருக்குப் பின் அவர் மகன் ‘உமதத் - உல் - உமர்’ என்பவர் 1795 தொட்டு 1801 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
இவ்வாறாகத் தென்னார்க்காடு மாவட்டம், 1698 முதல் 1801 வரை - அதாவது பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் - ஒளரங்கசீப்பின் ஆட்சி வழிவந்த மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இந்தக் காலத்தில் தான், மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஒருவர்க்கொருவர் நட்பாகவும் பகையாகவும் இருந்து கலந்து கொண்ட வரலாற்றுப் பெயர் பெற்ற ‘மூன்று கருநாடகப் போர்கள்’ நிகழ்ந்தன. இப்போர்களில் பெரும்பாலும் தென்னார்க்காடு மாவட்டமே மையமாக இருந்து பெரும்பங்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி, இந்த ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் புரிந்த திருவிளையாடல்களை ஒரு சிறிது சுருக்கமாக நோக்குவோம்:
ஐரோப்பியர்கள்
திறந்து கிடந்த நாட்டில் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பியர்களும் நுழைந்து விளையாடத் தொடங்கி விட்டார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் நம் நாட்டின் உடைமைக்காகத் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதன்றி, மொகலாய மன்னர்களுக்குள்ளும் இந்து மன்னர்களுக்குள்ளும் சிண்டு முடிந்து விட்டும் கலகத்துக்கு வத்தி வைத்தும் நாடு பிடிக்கும் தம் குறிக்கோளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். இந்தப் போட்டியில் டச்சுக்காரரையும் போர்ச்சுகேசியரையும்விட ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரருமே பெரும்பங்கு கொண்டிருந்தனர். ஆங்கிலேயருள் ‘ராபர்ட் கிளைவ் என்பவரும், பிரெஞ்சுக்காரருள் ‘டூப்ளே’ என்பவரும் இன்றியமையாதவர்கள்.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தென்னார்க்காடு மாவட்டத்தில் ஐரோப்பியர்கள் நன்கு வேரூன்றத் தொடங்கினர். போர்ச்சுகேசியரைப் பறங்கிப் பேட்டை கவர்ந்தது. டச்சுக்காரர் கடலூரில் தொழிற்சாலை கட்டத் தொடங்கினர். பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் கால் கொண்டனர். ஆங்கிலேயர்கள் கடலூரில் சரக்குக் கொட்டடியும் (1683), ‘செயின்ட் டேவிட்’ (Fort St, David) என்னும் பெயரில் ஒரு கோட்டையும் (1702) கட்டினர்.
ஆங்கில பிரெஞ்சுப் போட்டி
ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் என்றால், இங்கேயும் நமது மண்ணில் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போர்; அங்கே உடன்பாடு என்றால் இங்கேயும் உடன்பாடு; மீண்டும் அங்கே போர் என்றால் இங்கேயும் போர். ஐரோப்பாவில் தேள் கொட்டினால் நமது நாட்டில் நெறி கட்டிற்று; அங்கே மழை பெய்தால் இங்கே குடை பிடித்தார்கள் வெள்ளையர்கள். 1744 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போர் நடந்தபோது, இங்கே தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரம், பறங்கிப்பேட்டை , கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செஞ்சி முதலிய இடங்கள் செருக்களங்களாய் மாறின.
இவ்வாறு நிகழ்ந்த பல போர்களின் விளைவாக, சென்னை, செஞ்சி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்கள் ஆங்கிலேயர் கைக்கும் பிரெஞ்சுக்காரர் கைக்குமாக மாறி மாறிப் பந்தாடப்பட்டன. ஆங்கிலேயரின் கடலுர் செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்து நிலைப்படுத்திக் கொள்வதற்காக, பிரெஞ்சு தலைவர் டூப்ளே நான்கு முறை தாக்கினார் என்றால், ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே இருந்த போட்டி பொறாமை - போர்களின் கொடுமை நன்கு புலனாகுமே! இவ்வாறு பல தடவை கை மாறிய நிலையில், இறுதியாக 1783 இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே நட்பு உடன்படிக்கை ஏற்பட்டதால், இங்கே புதுச்சேரி பிரஞ்சுக்காரர்க்கும், கடலூர் முதலிய இடங்கள் ஆங்கிலேயர்க்குமாக மீண்டும் மாறி நிலை பெற்றன. இவ்விருதரப்பு வெள்ளையர்களின் போர்களுக்கிடையே, அவர்கட்கு நட்பாகவும் பகையாகவும் செயல்பட்டு ஐதர் அலி, அவர் மகன் திப்பு, ஆர்க்காடு நவாப்புகள், ஐதராபாத் நிசாம்கள் முதலியோர் பெரும்பங்கு பெற்றிருந்தனர்.
ஆங்கிலேயர் செல்வாக்கு
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒரு சில இடங்கள் ஆங்கில ஆணையரின் கீழ் இருந்தாலும், மொத்தத்தில் தென்னார்க்காடு மாவட்டம் 1748 முதல் 1795 வரை, கர்நாடக (ஆர்க்காட்டு) நவாப் முகமது அலியின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. நவாப்பின் உதவியாளர்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். 1795இல் முகமது அலி இறந்தபின், அவருடைய மூத்த மகன் உமதத் - உல் - உமர் பொறுப்பில் 1801 வரை ஆட்சி இருந்தது. இவ்வாறு இப்பகுதி கர்நாடக நவாப்புகளின் பொறுப்பில் இருந்தாலும், ஆங்கிலேயர்களின் இடையீடுகட்கும் தலையீடுகட்கும் அளவேயில்லை; அவர்கள், நவாப் மன்னர்களைப் பலவகைகளில் ஆட்டிப் படைத்து வந்தார்கள். இறுதியாக 1801 இல், தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களைப் போலவும், இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவும் தென்னார்க்காடு மாவட்டமும் (திருமுனைப்பாடி நாடும்) ஆங்கிலேயரின் முழு ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்து விட்டது.
ஆங்கில ஆட்சி
கர்நாடக நவாப் கையிலிருந்து 1801இல் ஆங்கிலேயரின் கைக்கு முற்றிலும் மாறிய திருமுனைப்பாடிநாடு (தென்னார்க்காடு மாவட்டம்) பாரதத்தின் மற்ற பகுதிகளைப் போலவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரை ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு வந்தது. மகாத்மா காந்தியடிகளின் அரும் பெரு முயற்சியால் 1947 நவம்பர் முதல் நாள், தென்னார்க்காடு மாவட்டத்தின் இடையிடையே உள்ள புதுச்சேரிப் பகுதிகள் பிரெஞ்சுக்காரரிடமிருந்து விடுதலை பெற்றன.
உரிமைப் போராட்டம்
விடுதலைக்காக அண்ணல் காந்தியடிகள் வகுத்து நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் தென்னார்க்காடு மாவட்டமும் முழுப்பங்கு ஏற்றிருந்தது. மாவட்டத்தில் விடுதலை வேண்டிப் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப் பெற்றன; ஒத்துழையாமை, வெளிநாட்டுப் பொருள் விலக்கல், கதர் இயக்கம், கள்ளுக்கடை மறியல், பதவி பட்டங்களைத் துறத்தல், வரி கொடாமை முதலிய பல்வேறு இயக்கங்களும் இடம் பெற்றன. கடலூர், பண்ணுருட்டி, விழுப்புரம் முதலிய இடங்களில் பல கிளர்ச்சிகளும் நடைபெற்றன. 1930 சனவரி 26 ஆம் நாள், ‘உரிமை நாள்’ (The Indcpendence Day) ஆக மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. 1930 ஏப்ரல் தொடங்கி மூன்று திங்கள் கால அளவுக்கு மேல் கடலூரில் உப்பு காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. திருவாளர்கள் நயினியப்பப்பிள்ளை , சுதர்சனம் நாயுடு, குமாரசாமிப்பிள்ளை முதலியோர் இப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களாவர். அரசு பலரைச் சிறையில் வைத்தது. இப் போராட்டம் கடலூரினும் திண்டிவனத்தில் மிகவும் சூடு பிடித்திருந்தது.
உரிமைப் போராட்ட காலத்தில் இந்த மாவட்டப் பகுதிக்கு எத்தனையோ இந்தியத் தலைவர்கள் வந்து போயிருப்பினும், 1921 செப்டம்பரிலும் 1927 செப்டம்பரிலும் காந்தியடிகள் வருகை தந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் வெளியில் காந்தியண்ணல் சொற்பொழிவாற்றி மக்களுக்கு எழுச்சியூட்டினார்கள். மக்கள் வீறு கொண்டெழுந்தனர்.
இப்படியாகப் பல்வேறு வகைகளிலும், காந்தியடிகளின் உரிமைப் போராட்டத் திட்டங்களை வரவேற்றுப் பின்பற்றி, நாடு விடுதலை பெறுவதற்குத் தென்னார்க்காடு மாவட்டமும் தன் கடமைப் பங்கை ஆற்றியுள்ளது.
ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை யடைந்ததிலிருந்து, மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் பேராளர் வாயிலாகத் தம்மைத்தாமே உரிமையுடன் ஆண்டு கொண்டு வருகின்றனர்.
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று (1967) வரை திருமுனைப்பாடி நாட்டின் சுருக்கமான வரலாறு இது தான்.
* * *
↑ புறப்பொருள் வெண்பாமாலை - கரந்தைப் படலம் - 14.
↑ திருக்குறள் - பொருட்பால் - குடிமை : 5.
↑ விக்ரமசோழன் உலா - வரி 15, 16; தக்கயாகப் பரணி - 376 - உரை.
↑ புறநானூறு - 256.
↑ புறநானூறு - 256 உரை.
12. கெடிலக்கரை அரசுகள்
கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டை வரலாற்றுக் காலந்தொட்டு கி.பி. இருபதாம் நூற்றாண்டுவரை அரசாண்டுவந்த மன்னர்கள் குறித்தும் அவர்தம் மரபுகள் குறித்தும் முறையே முன் பகுதியில் (கெடில நாட்டு வரலாறு) பொதுவான குறிப்புக்களே சுருக்கமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அம் மன்னர்கள் வரிசையில், திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக் கொண்டு அரசாண்ட மன்னர்களேயன்றி, தமிழகத்தின் வேறு பகுதிகளிலிருந்தும், பாரதத்தின் வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் வேறு (ஐரோப்பா) கண்டத்திலிருந்தும் வந்து அரசோச்சிய பேரரசர்களும் இடம் பெற்றுள்ளனர். இனி இந்தப் பகுதியில், திருமுனைப்பாடி நாட்டிலேயே (தென்னார்க்காடு மாவட்டத்தில்) பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக் கொண்டு அரசோச்சிய திருமுனைப்பாடி நாட்டு மன்னர்கள் சிலரைப் பற்றிய வரலாறுகள் முறையே சங்க காலந்தொட்டுக் கொடுக்கப்படும்.
இம்மன்னர்களுள், கெடிலம் ஆற்றிற்கு வடக்கே (6 மைல்) 10 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோவலூரைத் தலைநகரமாகக் கொண்டு செங்கோலோச்சிய மன்னர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாகக் காணப்படுகிறார்கள். சங்க நூல்கள், பிற்கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், வரலாற்று நூல்கள் ஆகியவை கெடிலக்கரை அரசுகளைப் பற்றி அறியத் துணை செய்கின்றன.
சங்க காலத்திலேயே சீர்சால் மன்னர்களால் கெடிலக் கரை நாடு மிகவும் சிறப்புற்றும் செழிப்புற்றும் திகழ்ந்தமையைச் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றனவெனில், கெடிலக்கரை நாகரிகத்தின் மாண்பு எத்துணையது என்பதை உய்த்துணரலாம்! கெடிலக் கரைக்குப் பெருமை தேடித்தந்த அம்மன்னர்களின் வரலாறுகள் வருமாறு:
மலையமான் திருமுடிக்காரி
பேரும் ஊரும்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்று கருதப்படும் சங்க காலத்தில் வாழ்ந்தவன் மலையமான் திருமுடிக்காரி. இவன், காரி, திருமுடிக்காரி, மலயன், மலயமான் என்றெல்லாம் இலக்கியங்களில் அழைக்கப்பட்டுள்ளான். மலையமான் என்பது மரபுப்பெயர்; காரி இயற்பெயர். இவனது நாடு, தென்பெண்ணையாறும் கெடிலமும் பாய்ந்து வளப்படுத்தும் திருமுனைப்பாடி நாடாகும். மலையமான் ஆண்டதால் மலையமானாடு. மலாடு என்று இது பண்டு அழைக்கப்பட்டது. மலையமாநாடு என்பதன் சுருக்கமான மரூஉப் பெயர் மலாடு என்பது. இது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.
காரியின் தலைநகர் கோவல் எனப்படும் திருக்கோவலூர், முள்ளூர் மலை இவனுக்கு உரிய மலை. இச் செய்திகளை, அம்மூவனார் பாடிய
“துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுரை
என்னும் அகநானூற்றுப் (35) பாடல் பகுதியாலும், கபிலர் பாடிய
“முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து
என்னும் குறுந்தொகைப் (312) பாடல் பகுதியாலும், கல்லாடனார் பாடிய
“முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி"
என்னும் அகநானூற்றுப் (209) பாடல் பகுதியாலும், கபிலர் பாடிய
“தொலையா நல்லிசை விளங்கு மலையன்...'
பயன்கெழு முள்ளூர் மீமிசை
என்னும் புறநானூற்றுப் (123) பாடல் பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம்.
கொடை வீரம்
காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் போற்றப் பெறுகிறான். இவன், தன்னை நாடிவரும் புலவர்கட்கும் கலைஞர்கட்கும் தேர்களை வழங்குவானாம்; அதனால் ‘தேர் வண்மலையன்’ (நற்றிணை - 100 ) எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளான். முடியுடை மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களுங்கூட, பல காரணம் பற்றி இவன் உதவியை நாடுவார்களாம். இவன் அவரவர்க்கு வேண்டிய உதவிகளைப் புரிவானாம். இவன் உதவியால் முடிசூடிக் கொண்டவரும் உண்டு. இச் செய்தியை, கபிலர் பாடிய
“வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉம் கூழே நுங்குடி”
என்னும் புறநானூற்றுப் (122) பாடல் பகுதிக் குறிப்பால் தெரிந்து கொள்ளலாம். கபிலர், பரணர், கல்லாடனார், கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், பேரி சாத்தனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் முதலிய சிறந்த புலவர் பெருமக்கள் பலர் மலையமான் காரியைப் புகழ்ந்து பாடியிருப்பதிலிருந்து, மலையமான் தமிழின் பால் மிக்க காதல் கொண்டவன் என்பதும், தமிழ்ப் புலவர்கட்கு வரையாது வாரி வழங்கிய வள்ளல் என்பதும் புலனாகும். சுருங்கச் சொல்லின், திருமுடிக்காரி ஒரு பெரிய கொடை மறவன் என்பது போதரும், ‘இவனுக்கென ஓர் உடைமையும் இல்லை; எல்லாம் பிறருடையன வாக்கினான்’ எனக் கபிலர் புறப் (122) பாடலில் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
படை மறம்
கொடை மறம், படை மறம் என்னும் இரண்டனுள் கொடை மறம் அரியது; படைமறம் எளிது. எனவே, அரிய கொடை மறத்திலேயே சிறந்தவனாயிருந்த காரி, எளிய படைமறத்தில் மிகமிகச் சிறந்து விளங்கினான் என்பது சொல்லாமலே விளங்கும்.
பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் துணை வேண்டிய போதெல்லாம் சென்று அவர்களின் பகைவர்களைவென்று அவர்களை அரியணையில் அமர்த்தியிருக்கிறான் காரி. குதிரையூர்ந்து போர் புரிவதில் வல்லவன் இவன். இவனது குதிரைக்கும் காரி என்பதே பெயர். இவன், ஓரியுடன் போர் புரிந்து கொன்று கொல்லியைச் சேரர்க்கு ஈந்தான் என்னும் செய்தியை,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி"
என்னும் சிறுபாணாற்றுப்படைச் செய்யுட் (110 -111) பகுதியாலும்,
“செவ்வேல், முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு நத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி"
என்னும் அகநானூற்றுப் பாடல் (209) பகுதியாலும் அறியலாம்
முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடிய செய்தி,
"ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு”
என்னும் நற்றிணைப் (170) பாடல் பகுதியால் தெரிய வருகிறது.
மலையமான் மக்கள்
மலையமான் பெருமறவனாய்த் திகழ்ந்திருந்தும், முடியுடை மூவேந்தர்க்கும் மாறிமாறி உதவி செய்யும் துணைவனாய் விளங்கியிருந்தும், கோவூர்கிழார் பாடியுள்ள புறநானூற்றுப் (46) பாடல் ஒன்றைப் படிக்குங்கால், மலையமான் குடிக்கும் சோழர் குடிக்கும் இடையே ஒருகால் பகை படர்ந்திருந்தமை புலப்படுகிறது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமானின் இளைய மக்கள் இருவரை யானையைக் கொண்டு இடறிக் கொல்ல ஏற்பாடு செய்தான். திறந்த வெளியில் மக்கள் பலர் குழுமியிருந்தனர். நடுவே மலையமான் சிறார்கள் நின்று கொண்டிருந்தனர். கொலை யானை கொண்டு வரப்பட்டது. சிறார்கள் தம் சிறுமையால் யானையை வேடிக்கை பார்த்து அதற்கு அஞ்சாமல், சுற்றியிருந்த மக்களைப் பார்த்து மிரண்டனர். இஃதறிந்த புலவர் கோவூர் கிழார், கிள்ளி வளவனை அணுகி, “சோழ மன்னா! நீயோ, புறாவுக்காகத் தன் உடலையீந்த சிபிச்சோழனின் வழிவந்தவன்; இச் சிறார்களோ, புலவர்க்குத் தம் உடைமையை வரையாது வழங்கும் வள்ளல் மரபினர்; எனவே, நீ இவர்களைக் கொல்லுதல் தகாது’ என அறிவு கொளுத்தினார். குழந்தைகள் இருவரும் உயிர் பிழைத்தனர். இச் செய்தியை அறிவிக்கும் புறப்பாடல் வருமாறு: “நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே. புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழா அன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே."
‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது.'(46)
இந்தப் பாடலின்படி, மலையமான் மக்களைக் கிள்ளி வளவன் கொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததென்றால், இதற்கு முன்னமேயே தந்தை மலையமான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகும். இந்த மலையமான், கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கருதப்படும் ‘ மலையமான் திருமுடிக்காரி’ என்னும் மலையமானா? - அல்லது - மலையமான் மரபைச் சேர்ந்த வேறொரு மலையமானா? - என்பது தெளிவுபடுத்தப்படவில்லை யாயினும், அவன் மலையமான் காரியாகத்தான் இருக்க வேண்டும்.
அதியமான் வெற்றி
மற்றும், அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன் திருக்கோவலூரை வென்றதாக ஒரு செய்தி, அதியமானை ஔவையார் பாடியுள்ள,
‘பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்டு திகிரி ஏந்திய தோளே’’
‘அதியமான் - கோவலூர் எறிந்தானை ஔவையார் பாடியது’
என்னும் புறநானூற்றுப் (99) பாடல் பகுதியால் தெரிய வருகிறது. அதியமானால் வெல்லப்பட்ட திருக்கோவலூர் மன்னன் யார்? என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. அவன் காரியாகத்தான் இருக்கக்கூடும்.
எப்படியிருந்த போதிலும், சங்க காலத்தில், மலையமான் திருமுடிக்காரி சிறந்த கொடை மறவனாயம் படை மறவனாயும் திகழ்ந்து திருமுனைப்பாடி நாட்டை ஆண்டான் என்பது தெளிவு.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
மலையமான் மரபைச் சேர்ந்த மன்னர் பலர், திருக்கோவலூரைத் தலைநகராகவும் முள்ளூர் மலையை அரணாகவும் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்களுள் ஒருவனே மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் இவனுக்கு ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கிள்ளி’ என்ற பெயரும் உண்டு. இவன் சோழ மன்னரின் படைத் தலைவனாய்ப் பணி புரிந்ததால் ‘சோழிய ஏனாதி’ என்னும் சிறப்புப் பட்டம் அளிக்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சங்ககாலக் குறுநில மன்னனாகிய இவனும், மலையமான் திருமுடிக்காரியைப் போலவே ஒரு வள்ளலாய்த் திகழ்ந்தான். இவனை மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் பெருமான் புகழ்ந்து பாடிய பாடலொன்று புறநானூற்றில் (174) காணப்படுகிறது. அதிலுள்ள சில கருத்துக்கள் வருமாறு:
சோழன் ஒருவன் நாடிழந்து பகைவர்க்கு அஞ்சி ஓடி வந்து மலையமான் திருக்கண்ணனிடம் அடைக்கலம் புகுந்தான். இவன் அவனைத் தன் முள்ளூர் மலையரணில் வைத்துக் காத்து வந்தான். தக்க சூழ்நிலை உருவாகியதும், மலையமான் சோழனைச் சோழ நாட்டிற்கு அழைத்துச் சென்று பகை களைந்து மீண்டும் அரியணையில் அமர்த்தினான். மன்னனையிழந்து மயங்கி வருந்திய சோழநாடு மகிழ்வெய்திற்று. இங்கே பாடலாசிரியர் ஓர் அழகான ஒப்புமை தந்துள்ளார்: “அரக்கர்களால் கதிரவன் மறைக்கப்பட உலகம் இருளில் ஆழ்ந்து வருந்தியபோது திருமால் கதிரவனை மீட்டு உலகிற்கு ஒளியுண்டாக்கியது போன்று, பகைவரால் சோழன் விரட்டப்படச் சோழநாடு கலங்கியபோது மலையமான் திருக்கண்ணன் மன்னனை மீட்டுக் கொணர்ந்து சோழ நாட்டை மகிழ்வித்தான்” எனப் புகழ்ந்துள்ளார் ஆசிரியர். அப் பாடலை மேலும் ஓர் உவமை அணி செய்கிறது. புலவர் திருக்கண்ணனை நோக்கி, “மழையின்றிக் கொடிய கோடையின் வெப்பம் உலகை வருத்தும்போது மிக்க மழை பெய்தாற்போல, நும் முன்னோன் விண்ணுல கடைந்ததால் நாடு துயருற்றபோது நீ மன்னனாய்த் தோன்றி நன்முறையில் நாடு காவல் புரிகின்றாய்” என்று புகழ்ந்துள்ளார். இனி, பாடலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
“அணங்குடை யவுணர்...--
அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை
புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந.......
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச் சென் றுணீஇயர்
உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்......
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல் ........
கோடை நீடிய பைதறு காலை.....
உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே.
(28 அடிகள் கொண்ட பாடலிலிருந்து, இன்றியமையாத 10 அடிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.) இப் பாடலில் - உள்ள பெரும்பெயர் நும்முன்’ என்னும் தொடருக்கு, ‘பெரிய புகழினையுடைய நும்முன்னாகிய தந்தை’ என, பெயர் தெரியாத பழைய உரையாசிரியர் ஒருவர் பொருள் எழுதியுள்ளார்; இக்காலத்து உரையாசிரியர் சிலரும் இவ்வாறே கூறுகின்றனர். இங்கே, பெரிய புகழுடைய தந்தை என்று குறிப்பிடப் பட்டிருப்பவன், மலையமான் திருமுடிக் காரியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், வரலாற்றுக்குத் தெரிந்தவரையில், மலையமான் மரபில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவன் திருமுடிக்காரி தானே! பாடலில் உள்ள ஈரடிகள் இந்தக் கருத்துக்கு மிகவும் துணை செய்கின்றன. திருக்கண்ணனுடைய முன்னோன், இந்த உலகில் செய்த நல்வினையின் பயனை அந்த (மேல்) உலகில் நுகர்வதற்காகச் சென்றுள்ளானாம். இக்கருத்தை, ‘நும்முன், ஈண்டுச் செய் நல்வினையாண்டுச்சென் றுணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன்’ என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அப்படி, இவ்வுலகில் மிகுதியாக நல்வினை - நல்லறம் செய்திருக்கும் மன்னன் மலையமான் மரபில் திருமுடிக்காரிதான். அவன் தன் உடைமைகளை யெல்லாம் வந்து கேட்ட இரவலர்க்கு உரித்தாக்கி விட்டதாகப் புறப்பாடல்களும் பிறவும் அவனைப் புகழ்ந்துள்ளன. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகவும் அவன் போற்றப் படுகிறான். எனவே, இப் பாடலில் ‘நும்முன்’ என்று சுட்டப்படுபவன் மலையமான் திருமுடிக்காரியே. அங்ஙனமெனில், மலையமான் திருமுடிக் காரிக்கு அடுத்தாற்போல் பட்டத்துக்கு வந்தவன் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பது தெளிவு.
இந்தத் திருமுடிக்காரிக்கும் திருக்கண்ணனுக்கும் இடையேயுள்ள உறவுமுறை யாது? பாடலிலுள்ள ‘நும்முன்’ என்னும் தொடருக்கு ‘நும்முன்னாகிய தந்தை’ எனப் பழைய உரையாசிரியரும் புதிய உரையாசிரியரும் பொருள் எழுதியிருப்பதாக முன்னர்க் கூறப்பட்டது. இந்தப் பொருளின்படி பார்த்தால், திருமுடிக்காரியின் மைந்தன் திருக்கண்ணன் என்ற கருத்து கிடைக்கிறது. ஆனால், இது பொருந்தாது; அஃதாவது, ‘நும்முன்’ என்பதற்கு ‘நும் தந்தை’ என உரையாசிரியர்கள் கூறியிருக்கும் பொருள் பொருந்தாது. உண்மையில் தந்தை என்று குறிப்பிட்டிருக்க வேண்டுமென்றால் ‘நுந்தை’ என்னும் சொல்லைப் பெய்திருப்பார் புலவர். அங்ஙனமின்றி, ‘நுமக்கு முன் பிறந்த அண்ணன்’ என்னும் பொருளிலேயே புலவர் ‘நும்முன்’ எனக் கூறியுள்ளார். ‘முன்’ என்னும் சொல், முன் பிறந்த அண்ணன் என்ற பொருளிலேயே ஆன்றோர்களால் ஆளப்பட்டுள்ளது. பெரும்பற்றப் புலியூர் நம்பி என்னும் புலவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், விநாயகர் ஆறு முகங்களையுடைய முருகனுடைய அண்ணன் என்னும் பொருளில்
*அறுமுகேசன் முன்"[1]
எனப் பாடியுள்ளார். இங்கே ‘முன்’ என்னும் சொல்லுக்கு, முன் பிறந்த அண்ணன் என்பது பொருள், முன் என்றால் முன் தோன்றிய அண்ணன் என்று பொருள் விளக்குவார் போன்று புகழேந்திப் புலவர்,
“பாண்டவரின் முன்தோன்றல் பார் முழுதும் தோற்று"[2]
என்று நளவெண்பாவில் பாடியுள்ளார். பாண்டவரின் முன்தோன்றல் என்றால், பாண்டவர்களுக்கு முன் பிறந்த அண்ணனாகிய தருமன், என்பது பொருள், திருமங்கையாழ்வாரும் திவ்வியப் பிரபந்தத்தில்,
"தன்னுடைய முன்தோன்றல் கொண்டேக"[3]
என அண்ணன் என்னும் பொருளில் பாடியுள்ளார்.
இன்னும் தெளிவான சான்று வேண்டுமானால் கம்பராமாயணத்துக்குச் செல்லலாம். காட்டிலிருந்து இராமனை நாட்டிற்கு அழைத்துவரச் சென்ற பர தன கங்கைக் கரையில் குகனை நோக்கி, ‘நம் அண்ணன் இராமன் இங்கே தங்கியிருந்த இடத்தைக் காட்டுக’ என்று கேட்டான். இந்தச் செய்தியை அறிவிக்கும் கம்பராமாயணப் பாடல் பகுதி,
*“எவ்வழி உறைந்தான் றம்முன் என்றலும்” [4]
என்பதாகும். ஈண்டு ‘நம்முன்’ என்பது ‘நம் அண்ணன்’ என்னும் பொருளைக் குறிக்கிறது. குகனும் ஓர் உடன் பிறந்தவனாக இராமனால் கொள்ளப்பட்டுள்ளான் என்பது நினைவு கூரத்தக்கது.
இவ்வாறு ஆன்றோர் பலரின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், ‘நும்முன்’ என்பதற்கு ‘நும் அண்ணன்’ என்ற பொருளே பொருந்தும் என்பது போதரும். இதனால், திருமுடிக்காரியின் தம்பி திருக்கண்ணன் என்ற உறவுமுறையும் தெளிவுப்படும். இந்தக் கருத்தையெல்லாம் வைத்துக் கொண்டு ஆராயின், இங்கே, ஒரு செய்தியைப் பின்வருமாறு நுனித்துணர்ந்து கூறலாம்:
‘மலையமான் திருமுடிக்காரி தன் வாணாள் இறுதியில் சோழப் பேரரசுடன் பகைத்துக் கொண்டிருக்கவேண்டும். இருதிறத்தார்க்கும் நடந்த போரில் சோழன் காரியைக் கொன்று அவன் இளஞ்சிறார்களைச் சிறைப்பிடித்துச் சென்று யானை இடறிக்கொல்ல ஏற்பாடு செய்தான். புலவர் கோவூர் கிழார் தடுத்துக் குழந்தைகளைக் காத்தார். கோவூர் கிழாரால் ஏற்பட்ட இந்த நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, திருமுடிக்காரியின் தம்பியாகிய திருக்கண்ணன் மீண்டும் சோழர் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான். சோழரின் கீழ்க் குறுநில மன்னனாயும் அவர் தம் படைத்தலைவனாயும் பணிபுரிந்து வந்தான். அதனால்தான், ‘சோழிய ஏனாதி’ என்ற பட்டமும் இவனுக்குக் கிடைத்தது.
மலையமான்கள் இருவரின் உறவு முறையைத் தெளிவு செய்து கொள்வதற்குச் சங்கநூற் பாடல்கள் நன்கு துணை செய்கின்றன. மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் (புறம் : 37, 39, 226) பாடியுள்ளார்; மலையமான் திருமுடிக்காரியையும் (புறம் : 126) பாடியுள்ளார்; மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனையும் (புறம் : 174) பாடியுள்ளார்; அதிலும், ஒவ்வொருவரையும் நேரில் விளித்துப் பாடியுள்ளார். எனவே, இந்த மன்னர்கள் மூவரும் மாறோக்கத்து நப்பசலையார் காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இது நிற்க, கோவூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நான்கு பாடல்களில் (புறம் : 41, 46, 70, 386) பாடியுள்ளார்; இவற்றுள் ஒன்றில் (புறம் : 46) மலையமான் மக்களைக் கொல்ல வேண்டா எனக் கிள்ளிவளவனுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது நிற்க, பரணர் என்னும் புலவர் மலையமானை ஒரு (நற்றிணை - 100) பாடலிலும், அதியமான் நெடுமான் அஞ்சியை ஒரு (அகநானூறு - 372) பாடலிலும் பாடியுள்ளார். இதிலிருந்து மலையமான் திருமுடிக்காரி காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சி வாழ்ந்துள்ளான் என்பதும் புலனாகும். அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோவலூரை வென்றதாக ஒளவையார் (புறம் : 99) பாடியிருப்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இதுவரையும் எடுத்து காட்டியுள்ள சங்க நூற்பாடல்களை அடிப்படையாக வைத்து ஆராயுங்கால், பின்வரும் செய்திகள் புலனாகலாம்:
“தன் நண்பன் ஓரியைக் காரி கொன்றதைப் பொறாத அதியமான் அஞ்சி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனோடு சேர்ந்துகொண்டு மலையமான் திருமுடிக் காரியை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறான். அவன் திருக்கோவலூரை அழித்ததாகப் பொதுப்படையில் ஒளவையார் குறிப்பிட்டிருப்பது இந்த வெற்றியாகத்தான் இருக்க வேண்டும். இந்தப் போரில் திருமுடிக்காரி செத்தே போனான். அவனுடைய இளஞ்சிறார்களைக் கிள்ளிவளவன் கொல்ல முயன்றான். கோவூர் கிழார் தடுத்துக் காத்தார். திருமுடிக்காரியின் மக்கள் இளஞ்சிறாராயிருந்ததனால், அவன் தம்பி மலையமான் திருக்கண்ணன் சோழரது நட்பைப் பெற்று அவர்தம் தலைமையின் கீழ்க் கோவலூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்” இவ்வாறு நடந்திருக்கலாம். எனவே, திருமுடிக்காரியின் தம்பி திருக்கண்ணன் என்ற கருத்து வலியுறும். ஆகவே, திருமுடிக்காரிக்குப் பின்னர்த் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டவன் திருக்கண்ணன் என்பது தெளிவுறும். இவர்கள் மரபினர் மிகமிகப் பிற்பட்ட காலம்வரையும் தொடர்ந்து சிற்றரசர்களாய் அரசாண்டு வந்தனர்.
மலையமான் மரபினர்
மலையமான் மரபினர்க்குத் திருக்கோவலூரேயன்றி, ஒவ்வொரு காலத்தில் ஆடையூரும் கிளியூருங்கூடத் தலைநகர்களாய் இருந்தன. கிளியூரிலிருந்து ஆண்ட மன்னர்கள் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆண்ட பகுதிக்குச் ‘சேதி நாடு’ என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. “கிளியூர் மலையமாந் பெரியுடையானான இராசராசச் சேதிராயனும், கிளியூர் மலையமாந் ஆகார சூரநான இராச கம்பீரச் சேதிராயனும்” - எனத் திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டொன்றிலுள்ள தொடர்களை ஈண்டு ஒப்பு நோக்குக.
சோழர் மேலாட்சி
பொதுவாக, மலையமான் மரபினர் மற்றவரினும் சோழப் பேரரசர்கட்கு உற்ற துணைவராய் அவர்தம் மேலாட்சியின்கீழ் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சான்றாக, சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னனும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனும் போர் புரிந்த போது மலையன் சோழனுக்குத் துணை புரிந்த செய்தியைப் பேரி சாத்தனார் பாடிய (125ஆம்) புறநானூற்றுப் பாடல் அறிவிப்பது காண்க.
மெய்ப்பொருள் வேந்தர்
நாடும் நகரும்
மெய்ப் பொருள் வேந்தர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலாடு (திருமுனைப்பாடி) நாட்டை ஆண்டவர். இந் நாட்டிற்குச் சேதிநாடு என்னும் பெயரும் உண்டு. இந்தச் செய்திகளை,
[5]*"சேதிநன் னாட்டு நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான் “
“இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து”
"சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்”
"இன்னுயிர் செகுக்கக் கண்டு எம்பிரான் அன்பர் என்றே
நன்னெறி காத்த சேதி நாதனார்”
என்னும் பெரிய புராணப் பாடல் பகுதியால் அறியலாம். மெய்ப் பொருள் வேந்தரை ‘மலாடர் கோமான்’ எனச் சேக்கிழார் கூறியிருப்பதைக் கொண்டு, இவ்வேந்தர் மலையமான் மரபில் வந்தவர் என்பது புலனாகும். மலையமான் மரபில் வந்தவர்களுள் பல பங்காளிக் குடும்பங்கள் இருந்திருக்கலாம், அவற்றுள் ஒரு பிரிவுக்குச் ‘சேதியர்’ என்னும் மரபுப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவரே ‘மெய்ப்பொருள் வேந்தர்’ அதனால்தான் இவர், ‘சேதியர் பெருமான்', ‘சேதி நாதனார்', என்றெல்லாம் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ளார். சேதியரால் ஆளப்பட்டதால் நாடு ‘சேதி நாடு’ எனப்பட்டது.
ஆட்சியும் மாட்சியும்
மெய்ப் பொருள் வேந்தர் அறநெறி வழுவாமல் நாடுகாத்தார்; சிறந்த வீரமும் வலிமையும் உடையராய் விளங்கினார்; போர் முனைகள் பல வென்றார். முத்தநாதன் என்னும் பகை மன்னன் ஒருவன் மெய்ப்பொருள் வேந்தரை வென்று சேதிநாட்டைப் பறித்துக் கொள்ளப் பலமுறை முயன்று படையெடுத்துப் பார்த்தான்; ஒவ்வொரு முறையும் தோல்வியே அவனுக்குக் காத்துநின்றது; எனவே, குதினால் வெல்லச் சூழ்ச்சி செய்தான்.
புராண வரலாறு
மெய்ப் பொருள் மன்னர் படைவீரத்துடன் கொடை வீரமும் உடையவராய்த் திகழ்ந்தார்; புலவர்களைப் போற்றினார்; சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டார்; அடியார்கள் விரும்பியன வெல்லாம் அளித்து வணங்கினார். மெய்ப்பொருளாரது இவ்வியல்பறிந்த முத்தநாதன் ஒரு சிவனடியார்போல் கோலங்கொண்டு கோவலூர் அரண்மனை யெய்தினான். அடியார் என நம்பிய மெய்ப்பொருளார் அவனை வரவேற்று வணங்கினார். தான் அரிதிற் கிடைத்த அருள் நூற் பொருள் விளக்க வந்திருப்பதாக அவன் அறிவித்தான். அவனை மேலிருத்தி, தாம் கீழிருந்து, அருளுரை வழங்க வேண்டினார் மன்னர். அவன் அருள் நூலை எடுப்பவன்போல், மறைத்து வைத்திருந்த கூரிய கொலைக் கருவியை எடுத்து அரசர்மேல் பாய்ச்சி நினைத்ததை முடித்தான். அடுத்து நின்றிருந்த அரசரின் உதவியாளனாகிய தத்தன் என்பான் முத்தநாதன்மேல் பாய முனைந்தான். அரசர் தடுத்து, அடியாரை நகர் எல்லை தாண்டும்வரை காவலுடன் இட்டுச் சென்று நலமுடன் வழியனுப்பி வரும்படி பணித்தார். அவனும் அவ்வாறே செய்தான். அந் நற்செய்தியறிந்து மகிழ்ந்து மன நிறைவுடன் உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் - இது பெரிய புராண வரலாறு.
நாயனார்
இறைவன் திருவருளே மெய்ப்பொருள் என உணர்ந்து ஒழுகியதால் இவர் மெய்ப்பொருள் வேந்தர் எனப் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில் இவருக்கு இயற்பெயர் ஒன்று இருந்திருக்கவேண்டும். இவர் சிவநெறியிலும் சிவனடியார் வழிபாட்டிலும் மிக்குச் சிறந்து விளங்கியதால், சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப் பெறுகிறார். சைவ உலகம் இவரை மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கும்.
காலம்
எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் சுந்தரரால் இவர் திருத்தொண்டத் தொகையில் பாடப்பட்டிருப்பதால், சுந்தரர் காலத்துக்கும் முற்பட்டவர் இவர் என்பது தெளிவு. “இவர் வழியில் சுதர்மான் முதலிய மூவர் வம்சம் உண்டாயிற்று. இவர் காலம் ஒளவையார் காலமாக இருத்தல் வேண்டும். தந்தை தெய்வீக அரசன், தாய் சோழன் குமாரியாகிய பொன்மாலை” - என இவரைப் பற்றி ‘அபிதான சிந்தாமணி’ ஆசிரியர் எழுதியிருப்பது ஆராய்ச்சிக்குரியது.
நரசிங்க முனையரையர்
நாடும் மரபும்
கெடிலக்கரை சார்ந்த திருமுனைப்பாடி நாட்டைப் பல்வேறு காலங்களில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். பல்வேறு மரபுகளைச் சேர்ந்த பேரரசர்கள் நேரடி ஆட்சி புரிந்திருப்பதன்றி, பேரரசர்களின் கீழ்ப் பல்வேறு மரபுகளைச் சேர்ந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் செங்கோல் செலுத்தியுள்ளனர்; அவர்களுள் ஒருவர் நரசிங்க முனையரையர் என்பவர். இவர் நரசிங்க முனையர் எனவும் அழைக்கப்படுவதைப் பெரிய புராணத்தில் காணலாம்.
நரசிங்க முனைரையரின் குலமரபின் பெயர் ‘முனைய தரையர்’ என்பதாகும்; இது, ‘முனையரையர்” எனவும், ‘முனையர்’ எனவும் பின்னர் மருவிற்று. இம்மரபு குறுநில மன்னர் மரபாகும். கொடி - இலச்சினை. சிங்கம்; நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி என்னும் நாட்டுப் பகுதியை அரசாண்டதாகச் சேக்கிழார் தெரிவித்துள்ளார்:
[6]"தேடாத பெருவளத்தில் சிறந்த திரு முனைப்பாடி
நாடுஆளும் காவலனார் நரசிங்க முனையரையர்"
என்பது பெரிய புராணப் பாடல். ‘முனைப்பாடி என்ற நாட்டின் பெயருக்கும் முனையரையர்’ என்னும் அரச மரபின் பெயருக்கும் சொல் அளவிலேகூட மிக்க தொடர்பு இருப்பதைக் காணலாம். முனையரையர்கள் ஆண்டதால் ‘முனைப்பாடி நாடு’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமா? அல்லது, முனைப்பாடி நாட்டை யாண்டதால் முனையரையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமா? - என்றெல்லாம் ஆராயத் தோன்றலாம். இவ்விரண்டனுள் எதற்கு எது காரணம் என்பது எளிதில் தெளிவுபடாவிடினும், இவ்விரண்டும் நெருங்கிய தொடர்புடையவை என்பது வரைக்கும் மலையத்தனை உண்மை!
திருமுனைப்பாடி நாட்டு மன்னராய நரசிங்க முனையரையர் எந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசு செலுத்தினார்? அவருடைய காலம் யாது? என்ற வினாக்கட்கு விடைகாண வேண்டும்:
தலைநகர்
நரசிங்க முனையரையர், திருநாவலூரில் பிறந்த நம்பி யாரூரர் என்னும் சுந்தரரைத் தம் செல்லப்பிள்ளையாக எடுத்து வளர்த்து வந்தார் எனப் பெரியபுராணம் தெரிவிக்கிறது.
[7] *நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்”
என்பது பெரிய புராணச் செய்யுள். இது வெற்றுப் புராணச் செய்தி மட்டுமன்று, திருநாவலூர் மக்களும் வாழையடி வாழையாகச் செவிவழி அறிந்து வைத்து இச் செய்தியைத் தெரிவிக்கின்றனர்.
மற்றும் சுந்தரருங்கூட, தமது தேவாரத்தில் திருநாவலூர்ப் பதிகத்தின் இறுதிப் பாடலில், நரசிங்க முனையரையர் திருநாவலூரில் இருந்து இறைபணி புரிந்தார்’ என்னும் செய்தியைத் தெரிவித்துள்ளார். அப் பாடல் வருமாறு:
"நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன்
ஆதரித்தீசனுக் காட்செயும் ஊர்அணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டன் ஆரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினைக் கட்டறுமே.”
‘திருநாவலூர், இறைவன் எழுந்தருளியுள்ள ஊராகும்; என்னுடைய ஊருமாகும்; நரசிங்க முனையரையன் இறைவனுக்கு ஆட்செயும் ஊருமாகும்’ எனச் சுந்தரர் கூறியுள்ளார். இதன் வாயிலாக, திருநாவலூர்க்கும் நரசிங்க முனையரையர்க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புலப்படும்.
மற்றும், முனையரையர் மரபினர் நரசிங்கன், இராமன் என்னும் இரு பட்டப் பெயர்களையும் மாறி மாறி வைத்துக் கொண்டு நரசிங்க முனையரையர், இராம முனையரையர் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நரசிங்கன், இராமன் என்னும் பெயர்கள் திருநாவலூர் வட்டாரத்து மக்களிடையே மிகுதியாய் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனாலும், முனையரையர் மரபினர்க்கும் திருநாவலூர் வட்டாரத்திற்கும் இருந்த உறவு அறியப்படும்.
இச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என நுனித்துணரலாம். இதற்குத் தக்க சான்று வேறு ஒன்றும் கூற முடியும்:
திருநாவலூரில் சிவன் கோயிலுக்கு எதிரேயுள்ள சிறிது மேடான நிலப்பகுதியை அவ்வூர் மக்கள் கச்சேரி மேடு என அழைக்கின்றனர். “கச்சேரி” என்பது அரசனது திருவோலக்க அவையைக் குறிப்பதாகும். அவ்விடத்தில் அரசவை கூடி அரச வினைகள் ஆராயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கே அரசவை கூடிற்றென்றால், அதுதானே அரசனது தலைநகராய் இருந்திருக்கக்கூடும்! எனவே, நரசிங்க முனையரையர் சுந்தரரைப் பிள்ளையாக எடுத்து வளர்த்த செய்தியைக் கொண்டும், கச்சேரி மேடு என்னும் பழைய வழக்காற்றுப் பெயரைக் கொண்டும், திருநாவலூர் நரசிங்க முனையரையரின் தலைநகராயிருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இது குறித்து மாற்றுக் கருத்து ஒன்றும் கூறலாம்:
கெடிலத்தின் வடகரையில் உள்ள திருநாவலூருக்குத் தென் மேற்கே 4 கி.மீ. தொலைவில் - கெடிலத்தின் தென்கரையில் சேந்த மங்கலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. நரசிங்க முனையரையருக்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்ட கோப்பெருஞ் சிங்கன் என்னும் வலிய மன்னனுக்குத் தலைநகராக விளங்கிய ஊர் இது. பாழடைந்த கோட்டை ஒன்றை இன்றும் இவ்வூரில் காணலாம். இவ்வூர் பற்றி, ‘கோப்பெருஞ் சிங்கன்’ என்னும் தலைப்பிலும், சேந்த மங்கலம்’ என்னும் தலைப்பிலும் வேறிடங்களில் விரிவாகக் காணலாம். இந்த ஊர் தான் நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. திருநாவலூர்க் கோயிலில் பூசனை புரியும் பெரியார் ஒருவர் இந்தக் 0கருத்துப்பட என்னிடம் சில கூறினார். சேந்த மங்கலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருத்தலானும், திருநாவலூருக்கு மிக அண்மையில் இருத்தலானும், இந்தக் கருத்தில் உண்மையிருக்க முடியும். அடுத்தடுத்துள்ள சேந்த மங்கலத்தில் அரசரது அரண்மனையும், திருநாவலூரில் அரசவை கூடும் மாளிகையும் இருந்திருக்கலாம். சேந்த மங்கலம் திருநாவலூர் உட்பட 10 கி.மீ. பரப்புக்குத் தலைநகரப் பகுதி விரிந்திருக்க வேண்டும் என அவ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது எப்படியிருந்த போதிலும், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகரப் பகுதி என்று பொதுப்படையாகக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.
காலம்
நரசிங்க முனையரையர் சுந்தரரை மகன் மை கொண்டு வளர்த்ததாக அறியப்படுவதால், இவரது காலம் சுந்தரர் காலம் என்பது புலனாகும். சுந்தரர் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இக் கால ஆராய்ச்சி குறித்து, ‘சுந்தரர்’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாகக் காணலாம். எனவே, நரசிங்க முனையரின் காலம், எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
அருட்பணி
நரசிங்க முனையரையர் நலமும் வளமும் பெருக நாடாண்டமாண்புடன், கனிந்த இறையன்பு மிக்கவராயும் திகழ்ந்தார். சிவன் பால் இவருக்கு இருந்த ஈடுபாடு வியத்தற்பாலது. அதனால் இவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப்பட்டு வருகிறார்.
இடையறாத சிவத்தொண்டில் ஈடுபட்ட நரசிங்க முனையர் திருக் கோயில்களில் செல்வங்களைப் பெருக்கினார்; திங்கள் தோறும் திருவாதிரை நாளில் சிவனுக்குச் சிறப்பு விழா நடத்தினார். அந்நாளில் வரும் சிவனடியார் ஒவ்வொருவருக்கும் நூறு பொற்காககள் பரிசளிப்பது இவர் வழக்கம். ஒரு நாள் ஒரு தொண்டர் காட்சிக்குக் காமுகர் போல் காணப்பட்டதால், அங்கிருந்த பலராலும் பழிக்கப்பட்டு இழிக்கப்பட்டாராம். அஃதறிந்த நரசிங்கர், சிவக்கோலம் கொண்டோர் எவரும் வழிபடுதற்கு உரியவரே என உரைத்து அவரைப் பெரிதும் போற்றி, அவருக்கு இரட்டிப்பாக இருநூறு பொற் காசுகள் நல்கியனுப்பினாராம். இவ்வாறு பெரியபுராணம் கூறுகிறது.
அரசர்க்கு அரசராய், அடியார்க்கு அடியாராய்த் திகழ்ந்து கெடிலக்கரை யீன்றளித்த செல்வமாய் விளங்கிய நரசிங்க முனையரையரைப் பற்றி, “இவர் காலம் ஒளவையார் காலம்; தந்தை தெய்வீக அரசன், தாய் பாண்டியன் குமரியாகிய காஞ்சனமாலை” என அபிதான சிந்தாமணியாசிரியர், கூறியிருப்பது ஆராயற்பாவது. மேலும் அந் நூலாசிரியர், ‘சுந்தரரை எடுத்து வளர்த்த நரசிங்க முனையரையர் வேறு, சிவனடியார்க்குப் பொன் வழங்கிய நரசிங்க முனையரையர் வேறு என்று கூறியிருப்பதும் ஆராயத்தக்கது. மற்றும், ‘நரசிங்கர்’ என்னும் பெயரைக் கொண்டு, இவர் பல்லவ மரபினரா யிருக்கலாம்’ என எவரேனும் கூறினும் வியப்படைவதற்கில்லை.
தெய்வீக மன்னன்
திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு தெய்வீகன் என்னும் மன்னன் நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டை முன்னொரு காலம் ஆண்டதாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. ஒளவையார் பாரி மகளிரை இந்தத் தெய்வீக மன்னனுக்கு மணம் செய்வித்ததாகவும், இம்மன்னன் வழியில் வந்தவர்களே மலையமான் மரபினர் என்பதாகவும் பல்வேறு செய்திகள் இவனைப் பற்றிக் கூறப்படுகின்றன. இவனைப்பற்றி அறியச் சங்கநூற் சான்று ஒன்றும் இலது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு இவனைப் பற்றிய செய்திகள் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ‘தெய்வீக மகாராஜன்’ என்னும் பெயரில் இவனைப் பற்றி அபிதான சிந்தாமணி ஆசிரியர் எழுதியுள்ள செய்திகள் அதில் உள்ளபடியே வருமாறு:
தெய்வீக மகாராஜன்
இவன் நடுநாட்டை ஆண்ட அரசருள் ஒருவன். இவன் கல்யாணத்தில் ஒளவை சென்று, பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு இம் மூன்றினையும் முறையே பால், நெய், வெண்ணெயாக வரும்படி ஏவினள். ஆதலால் அவ்வாறு வந்தன வென்பர். சிவமூர்த்தி தனித்து இருக்கையில் பர்வதராஜன் காணச்சென்று சாபம் அடைந்து குகமுனிவர் யாகத்தில் பிறந்து தெய்வீக அரசன் என்று பெயர் பெற்றனன். இவன் தெய்வப் புரவி ஊர்ந்து காசி, சிதம்பரம், இராமேச்சுரத்தை நாள் தோறும் தெரிசித்து வருவன். இவனிடமுள்ள குதிரையைப் பிடுங்க ஆவல் கொண்ட தமிழ் நாட்டரசர் மூவரும் மந்திரியரை ஏவிக் குதிரையைக் கேட்டு அனுப்பினர். அரசன் மறுத்தமையால் மூவரசரும் யுத்த சந்நத்தராய் நாங்கள் தோற்பின் எங்கள் கன்னியரைத் தருகின்றோம் நீர் தோற்பின் உமது குதிரையைத் தருக எனப் பந்தயம் இட்டு யுத்தத்தில் தோற்றுத் தமது கன்னியரை அரசனுக்கு மணஞ்செய்வித்தனர். இவன் காரண்டன், வல்லூரன் எனும் இரண்டு அசுரரை வதைத்து, பாண்டியன் புத்திரியாகிய காஞ்சனமாலையை மணந்து, நரசிங்க முனையரைய நாயனாரைப் பெற்றுச் சோழன் புத்திரியாகிய பொன் மாலையிடம் மெய்ப்பொருள் நாயனாரைப் பெற்றுச் சேரன் குமரியாகிய பத்மாவதியிடம் சித்திர சேநனைப் பெற்று முத்தி அடைந்தனன். இவன் வழியில் நந்தமான் வம்சம், சுதர்மான் வம்சம், மலையமான் வம்சம் உண்டாயின.
மேலுள்ள அபிதான சிந்தாமணிக் கருத்துக்களை நம்பினால், மெய்ப்பொருள் நாயனாரும் நரசிங்க முனையரையரும் தெய்வீகனின் மக்கள் எனவும் மலையமான்கள் தெய்வீகனின் பேரப் பிள்ளைகள் எனவும் கொள்ள வேண்டும். கொள்ளவே, மெய்ப்பொருள் நாயனாரும் நரசிங்க முனையரையரும், நரசிங்கரால் வளர்க்கப் பெற்ற சுந்தரரும், சங்க காலத்தில் வாழ்ந்த மலையமான் திருமுடிக் காரி முதலிய மன்னர்களினும் காலத்தால் முற்பட்டவர்கள் என்று கொள்ள வேண்டி வரும். இத்தகைய முடிவுகள் சிறிதும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவனவாகத் தெரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககால மலையமான்கள் எங்கே? எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினரான நரசிங்க முனையரையர் எங்கே?
சங்க கால மன்னர்களின் - மக்களின் பெயர்கள் தனித் தமிழ்ப் பெயர்களாகவும், சங்க காலத்துக்குப் பிற்காலத்து மன்னர்களின் - மக்களின் பெயர்கள் வடமொழிச் சார்புடையனவாகவும் இருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக, சங்க காலத்தில் சோழ மன்னர்களின் பெயர்கள் கரிகாலன், நெடுமுடிக்கிள்ளி என்பனவாகவும், பாண்டிய மன்னர்களின் பெயர்கள் இளம்பெருவழுதி, நெடுஞ்செழியன் என்பனவாகவும் இருந்ததையும், பிற்காலத்தில் சோழர் பெயர்கள் விஜயாலயன், இராஜராஜன் என்பனவாகவும், பாண்டியர் பெயர்கள் ஜடாவர்மன் , சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பனவாகவும் இருந்ததையும் காண்க. எனவே, தனித்தமிழ்ப் பெயர்களையுடைய மலையமான் திருமுடிக்காரி, மலையமான் திருக்கண்ணன் முதலியோர் முற்பட்டவர் என்பதும், வடமொழிப் பெயருடைய நரசிங்க முனையரையர் பிற்பட்டவர் என்பதும் தெளிவு.
இந்த ஆராய்ச்சி அடிப்படையில் வைத்துக் காணுங்கால், தெய்வீகன் மலையமான்களின் முன்னோனாக இருக்க முடியாது; மலையமான்களுக்குப் பின்னால், தெய்வீகன் என்னும் மன்னன் ஒருவன் திருக்கோவலூரை ஆண்டு இருக்கலாம் - என்பது புலனாகும். ஒரு வேளை, மெய்ப்பொருள் நாயனார் முதலியோர் வேண்டுமானால் தெய்வீகன் வழி வந்தவரா யிருக்கலாம். எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.
கோப்பெருஞ் சிங்கன்
குல மரபு
ஒரு காலத்தில் கெடிலக் கரையில் பேரும் புகழுமாய் அரசோச்சிய கோப்பெருஞ் சிங்கன் என்னும் மன்னவன், காடவர் அல்லது காடவராயர் என்று அழைக்கப்படும் குல மரபைச் சேர்ந்தவன். இம்மரபினர் ‘சம்பு குலக்காடவராயர்’ என்றும் அழைக்கப்படுவர். காடவர் அல்லது காடவராயர் என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். *[8]” காடவர் கோன் கழற் சிங்கன் என்னும் சுந்தரரது தேவாரப்பாடல் ஆட்சியினும் இதனை அறியலாம்.
மூன்றாம் நூற்றாண்டிற்கு மேல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் தமிழகத்தில் பல்லவப் பேரரசர்கள் பெருஞ் செல்வாக்குடன் அரசு புரிந்து வந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அபராசித பல்லவனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பின்னர், சோழப் பேரரசு தலையெடுத்து, பல்லவரது தொண்டை நாட்டையும் சேர்த்து விழுங்கி விட்டது. பல்லவ மரபு சிதைந்து பல்வேறு உருவம் எடுத்தது. பல்லவ மரபினருட் பலர், சோழப் பேரரசர்களின் அமைச்சராயும் படைத் தலைவராயும் அரசாங்க அலுவலராயும் பணி புரிந்தனர்; சிலர், சோழ வேந்தர்க்கு உட்பட்ட சிறு சிறு ஆணையர் (அதிகாரிகள்) ஆகவும் சிற்றரசர்கள் ஆகவும் குறுநில மன்னர்களாகவும் விளங்கி வந்தனர். இவர்கள் பிற்காலப் பல்லவர்கள்’ என வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளனர்.
தென்னார்க்காடு மாவட்டத்தில், பன்னிரண்டு - பதின்மூன்றாம் நூற்றாண்டு கால அளவில் பிற்காலப் பல்லவர்கள் சிலர் சோழப் பேரரசர்களின் சிறந்த சிற்றறசர்களாய் விளங்கி, பகைச் சிற்றரசர் பலரை முறியடித்துச் சோழப் பேரரசுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். விக்கிரம சோழன் (1120 -1135) காலத்தில் இவர்கள் மிக்க பெருமையும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கெடிலத்தின் தென்கரையில் உள்ள திருமாணிகுழி வட்டாரத்தில், வளந்தானார் என்ற காடவர் சோழரின் ஆணையராய் ஆட்சி நடத்தி வந்தார். அவரை யடுத்து, அவர் மரபை (வழியைச்) சேர்ந்தவர்களான ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் என்பவர்கள் ஆணை செலுத்தி வந்தனர். இறுதியில் குறிப்பிடப் பட்டுள்ள சீயன் என்ற காடவனின் மகன் தான் சீயன் கோப்பெருஞ்சிங்கன் என்பவன்.
ஆட்சி
இவன், தென்னார்க்காடு மாவட்டத்தில் - திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலத்தின் தென் கரையில் உள்ள சேந்தமங்கலம் என்னும் ஊரைத் தலைநகராகக்கொண்டு 1243ஆம் ஆண்டு பட்ட மேற்றான். இவன் வீரத்துடன் சூழ்ச்சியும் மிக்கவன்; தன்னை வலுப்படுத்திக்கொள்ளச் சோழப் பேரரசின் வீழ்ச்சியை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான்; சிற்றரசனாகிய தனக்கு மேல் பேரரசனாக மேலாட்சி செலுத்தி வந்த மூன்றாம் இராசராசச் சோழனிடம் அச்சமும் பணிவும் கொண்டவன் போல் நடித்துக் கொண்டே பாண்டியப் பேரரசுடன் கள்ள நட்புக் கொண்டிருந்தான், ஈழத்து இளவரசன் ஒருவனையும் தனக்குத் துணைவனாக்கி வைத்திருந்தான். சோழப் பேரரசும் தளர்ச்சியுறத் தொடங்கியது.
சோழனின் சோர்வை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய வேந்தன், 1230 - 31ஆம் ஆண்டு கால அளவில் மூன்றாம் இராசராசச் சோழனை வென்று முடிகொண்ட சோழபுரத்தில் வெற்றி விழாக் கொண்டாடினான். தோல்வியுற்ற சோழ மன்னன் போசள மன்னனின் ஆதரவை நாடச் சென்று கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்துக் கோப்பெருஞ் சிங்கன் தெள்ளாறு என்னும் இடத்தில் சோழனை இடைமறித்து வென்று தன் தலைநகராகிய சேந்தமங்கலத்தில் கொண்டு வந்து சிறைவைத்தான். திருவயிந்திரபுரத்திலும் சிறை வைத்திருந்ததாகச் சொல்லப் படுகிறது. செய்தியறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் (கன்னட நாட்டான்) படையுடன. புறப்பட்டு வந்து பொருது சோழனைச் சிறைமீட்டு மீண்டும் சோழப் பேரரசின் அரியணையில் அமர்த்தினான். இந்தப் போரில் கோப்பெருஞ் சிங்கனின் ஊர்கள் பலவும் கடலூர்த் துறைமுகமும் வீரநரசிம்மனால் அழிக்கப்பட்டன. இச் செய்தியைத் திருவயிந்திரபுரம் கல்வெட்டொன்று விரிவாகக் கூறுகிறது. பின்னர்க் கோப்பெருஞ்சிங்கன் போசள மன்னனைப் பெரம்பலூரில் பொருது வென்று இழிவு படுத்தியதாகச் சொல்லப் படுகிறது.
அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒன்றும் உறுதியாகக் கூற முடியாது போலும்! கோப்பெருஞ் சிங்கன் பாண்டியருடன் கொண்டிருந்த நட்பு நீடிக்கவில்லை. 1255ஆம் ஆண்டில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியமன்னன் கோப்பெருஞ் சிங்கனின் சேந்தமங்கலத்தை முற்றுகை யிட்டான். அரசியல் சூழ்ச்சியில் வல்ல கோப்பெருஞ் சிங்கன் ஒருவாறு பாண்டியனோடு நட்பு உடன்பாடு செய்து கொண்டான். எனினும், தோற்றம் உண்டேல் முடிவு உண்டல்லவா? 1279ஆம் ஆண்டில் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய வேந்தன் சோழநாடு, திருமுனைப்பாடி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சியும் முடிந்தது. அவனோடு காடவ குலஆட்சியும் முடிவுக்கு வந்தது. 1243இல் ஆட்சியேற்ற கோப்பெருஞ் சிங்கன், காஞ்சி புரத்திலிருந்து காவிரிக்கரை வரை தன் ஆட்சியைப் பரப்பி ஆட்சி புரிந்து விட்டு 1279இல் வீழ்ச்சியடைந்தான்.
மாட்சி
கோப்பெருஞ் சிங்கன் வீரமும் அரசியல் சூழ்ச்சியும் ஆட்சித்திறனும் உடையவனாயிருந்ததன்றி நல்ல தமிழ்ப் புலமையும் முதிர்ந்த கலையுணர்ச்சியும் கனிந்த கடவுள் அன்பும் மிக்கவனாயும் திகழ்ந்தான். தில்லைக் கூத்தப் பெருமானிடம் இவனுக்கு ஈடுபாடு மிகுதி. தில்லைக் கோயிலின் கீழைக் கோபுரம் கட்டியவன் இவனே. தெற்கே தஞ்சையிலிருந்து வடக்கே திராட்சாராமம் (ஆந்திரா - கோதாவரி மாவட்டம்) வரையும் சிவன் கோயில்கள் பலவற்றில் பல்வேறு திருப்பணிகள் புரிந்துள்ளான்.
சிவனுக்குத் திருப்பணிகள் புரிந்தது போலவே தமிழன்னைக்கும் இவன் பணி பல புரிந்துள்ளான்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ்க் கலைகளை வளர்த்தான். சொக்கசீயர் என்னும் புலவர் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். கோப்பெருஞ் சிங்கனும் ஒரு தமிழ்ப் புலவனாய் விளங்கினான். இவனது பாடல், கோதாவரி மாவட்டம் - இடர்க்கரம்பை அல்லது திராட்சாராமம் எனப்படும் ஊரிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டில் காணப்பட்டுள்ளது.
கோப்பெருஞ் சிங்கனைப் பற்றிப் பல்வேறு இடங்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. வடார்க்காடு மாவட்ட வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த வயலூரில் ஏரிக்கரை மேல் உள்ள [9] ஒரு கல் வெட்டின் பாடல்களில், கோப்பெருஞ் சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனையும் அவன் அமைச்சனையும் சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தி வைத்திருந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கல்வெட்டுப் பாடலில், கோப்பெருஞ் சிங்கனைக் குறிக்கும் பெயர்களாக, அவனி நாராயணக் காடவப் பெருஞ்சிங்கன், நிருபதுங்க சீயன், திரிபுவனராசாக்கள் தம்பிரான், மல்லைவேந்தன் முதலிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இவன் தமிழ் வாழப் பிறந்தவனாகப் புகழப்பட்டுள்ளான்.
நினைவுக் குறி
பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராய குல மரபின் பெருமன்னனாய்ப் பீடு பெருமையுடன் முப்பத்தேழு ஆண்டுகள் நாடாண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனின் நினைவுக் குறியாக, அவனது தலைநகராக இருந்த சேந்தமங்கலம் என்னும் ஊரில் அவனால் திருத்தி அமைக்கப்பட்ட கோட்டையும் கோயிலும் இடிந்தழிந்த நிலையில் இன்னும் இருப்பதைக் காணலாம். கீழே காண்பது பாழடைந்த சேந்தமங்கலக் கோட்டையின் ஒரு தோற்றம்.
இது, கோட்டை வெளிப்புற மதிலின் வடமேற்கு மூலையின் தோற்றம் மதிலுக்குமேலே ஒத்த இடைவெளிகளுடன் தனித் தனிக் கட்டைகள் இருப்பதைக் காணலாம். நான்குபக்க மதில்களின் மேலும் தொடர்ந்து இடைவெளிகளுடன் தனித்தனிக் கட்டைகள் இருந்ததற்கான சுவடுகள் உள்ளன. பல கட்டைகள் இடிந்துபோக, இப்போது சில கட்டைகளே எஞ்சியுள்ளன. இந்தப் படத்தில் மதிலுக்கு மேலே மூன்று கட்டைகள் இடைவெளிகளுடன் இருக்கக் காண்கிறோம். மதில்களின் மேலே இடைவெளிகளுடன் இந்தக் கட்டைகளை அமைத்திருப்பதன் நோக்கம் யாது? கட்டைகளுக்கு நடுவேயுள்ள ஒவ்வோர் இடைவெளியிலும் ஒவ்வொரு காவலர் படைக் கலத்துடன் நின்று காவல் காப்பதே இந்த அமைப்பின் நோக்கம். இக் காவல் மறவர்கள் தொலைவில் வரும் பகைவர்களை முன்கூட்டியறிந்து தம் அரசுக்குச் செய்தி தெரிவிக்கவும், எவரும் கோட்டையைத் தாக்கி உட்புகாதபடி தடுத்துக் காக்கவும் இந்த அமைப்பு அக்காலத்தில் உதவியது.
இவ்வளவு ஏற்பாடு செய்திருந்தும், இன்று கோட்டை எங்கே? கோப்பெருஞ்சிங்கன் எங்கே? மதி மயக்கங் கொண்ட மன்னர்களின் மண்ணாசை எங்கே? மதி மயக்கங் கொண்ட மன்னர்களின் மண்ணாசை எங்கே? பாழடைந்த இக் கோட்டையின் முன்பு - மக்களின்றி இடிபாடுகளுடன் தனித்துக் கிடக்கும் இக் கோட்டையின் எதிரில் நின்று பார்க்கும்போது, உலகத்தின் நிலையாமை உணர்வு உள்ளத்தில் உந்தத் தலை சுற்றுகிறது. வானவூர்தியில் வந்து அணுகுண்டுகளைத் துவும் இந் நாளில், இவ்வகைக் கோட்டைகளின் இரங்கத்தக்க நிலை என்னே - என்னே!
ஏகம்ப வாணன்
திருக்கோவலூருக்குத் தென் கிழக்கே 22 கி.மீட்டர் தொலைவில் கெடிலத்தின் தென்கரையிலுள்ள ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். ஆற்றுார் ஆறை’ எனவும் மருவி வழங்கும். வாணன் இலக்கியங்களில், ஆறையர்கோன், ஆறைநகர் காவலன், ஆறை ஏகம்பவாணன் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளான்.
தமிழகத்தில் இருந்த எத்தனையோ சிற்றரசர் மரபுகளுள் வாணர் மரபும் ஒன்று. அம் மரபினருள் ஏகம்பவாணன் மிகச் சிறந்தவனாக விளங்கினான். இவனும் கொடை மறமும் படை மறமும் ஒரு சேரமிக்குத் திகழ்ந்தான். சோற்றுக்கு அரிசி கேட்ட புலவர் ஒருவர்க்கு இவன் யானையைக் கொடுத்தானாம். இதனைப் பெருந்தொகையிலுள்ள
“சேற்றுக் கமலவயல் தென்னாறை வாணனையான்
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா றெல்வா றவன்"
என்னும் (1189) பாடலால் அறியலாம். சிற்றரசர் பலரேயன்றி, முடியுடைப் பேரரசராய சேர சோழ பாண்டியரும் இவ் வாணனுக்கு அடங்கியிருந்தனர் எனத் தொண்டை மண்டல சதகமும் பெருந்தொகைப் பாடல்களும், தமிழ் நாவலர் சரிதைப் பாடல்களும் அறிவிக்கின்றன. வாணனது வாயிற்படியில் ஆர் (ஆத்தி), வேம்பு, பனை, அரசு, அத்தி ஆகியவை நிற்கும் என்று பெருந்தொகைப் பாடல் (1192) ஒன்று கூறுகிறது. “....அவன் முன்றில்வாய்....
ஆரும் நிற்கும் உயர் வேம்பு நிற்கும் வளர்
பனையும் நிற்கும் அதனருகிலே
அரசு நிற்கும் அரசைச் சுமந்தசில
அத்தி நிற்கும் அடையாளமே”
என்பது அப் பாடலின் இறுதிப் பகுதி. இங்கே குறிக்கப் பட்டிருப்பவை மரங்கள் அல்ல. ஆர் நிற்கும் என்றால், ஆத்திமாலை யணிந்த சோழன் நிற்பான் என்பது பொருள். அவ்வாறே வேம்பு என்றால், வேப்பமாலை யணிந்த பாண்டியன், பனை என்றால், பனைமாலை யணிந்த சேரன் என்று பொருளாம். அரசு நிற்கும் என்றால் அரசர் பலர் நிற்பர் என்பது பொருள். அத்தி நிற்கும் என்பதற்கு, அரசர்கள் ஏறிவந்த யானைகள் நிற்கும் என்று பொருளாம். இப் பாடற் பகுதியால் வாணனது பெரும்புகழ் புலனாகும்.
நாடு
மலையமானாடு, மலாடு, சேதிநாடு, திருமுனைப்பாடி நாடு, நடுநாடு என்றெல்லாம் அழைக்கப்படுவது தென்னார்க்காட்டு மாவட்டப் பகுதிதான். இந்தப் பகுதிக்குள்ளேயே வாணர் மரபினர் ஆண்டுவந்த சிறு பகுதி ‘மகத நாடு’ என அழைக்கப்பட்டது. இதனை, பெருந்தொகை என்னும் நூலில் ஏகம்பவாணனைப் பற்றியுள்ள
"வாரும் ஒத்தகுடி நீருநாமும்
மகதேசன் ஆறை நகர் காவலன்
வாண பூபதி மகிழ்ந் தளிக்க மிகு
வரிசை பெற்றுவரு புலவன் யான்"
என்னும் பாணாற்றுப்படைப் (1192) பாடல் பகுதியால் அறியலாம். இப் பாடலில், ஆறைநகர் காவலனாகிய வாணன் ‘மகதேசன்’ எனச் சுட்டப்பட்டுள்ளான். மகத+ஈசன்=மகதேசன். அஃதாவது மகதநாட்டின் தலைவன் மகதேசன் என்பது பொருளாம். எனவே வாணர் ஆண்ட பகுதிக்கு மகதநாடு’ என்னும் பெயர் உண்மை புலப்படும். பெயர்க் காரணம்
ஏகம்ப வாணனது பெயர்க்காரணம் பற்றி ஒரு கதை வழங்கப்படுகிறது: “வாணன் குழந்தையாயிருந்த போதே பெற்றோர் இறந்து விட்டனர். குழந்தையை ஏகன் என்னும் பண்ணையாள் உடனிருந்து வளர்த்து ஆளாக்கினான். வளர்ந்து பெரியவனான வாணன் கம்பரிடம் கல்வி கற்றான். இவன் தன்னை உருவாக்கிய ஏகனுக்கும் கம்பருக்கும் நன்றி செலுத்து முகத்தான் அவ் விருவர் பெயரையும் இணைத்து இறுதியில் தன் குலப் பெயரையும் சேர்த்து (ஏகன்+கம்பன்+வாணன்- ‘ஏகம்ப வாணன்) எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டான்” - இது கதை. இந்தக் கதையில் கம்பரை இழுத்து வம்பு செய்திருப்பது பொருந்தாது. வாணன் காலம் எங்கே - கம்பர் காலம் எங்கே? ஏகம்பவாணனுக்குக் கூறப்படும் பெயர்க்காரணம், கம்பருக்குக் கூறப்படும் பல்வேறு பெயர்க்காரணங்கள் போன்ற கற்பனையே வாணனது ‘ஏகம்பன்’ என்னும் பெயர் காஞ்சி ஏகம்பரது பெயராக இருக்கக் கூடாதோ?
கால ஆராய்ச்சி
தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலில் ஏகம்ப வாணனைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. அவற்றுள், பாண்டியனது வேப்பமாலையை வாங்கிவருமாறு ஏகம்பவாணனால் அனுப்பப்பட்ட தாதியர் பாண்டியனைப் பார்த்துக் கூறியனவாகச் சில பாடல்கள் உள்ளன. அவற்றுள் (182, 183) இரு பாடல்களில்,
“தென்னவா மீனவா சீவலமாறா மதுரை
மன்னவா பாண்டி வரராமா’’ ....
“சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவலமாறா
தமிழை ஆய்ந்துரைக்கும் வீரமாறா"
எனப் பாண்டியன் விளிக்கப்பட்டுள்ளான். இங்கே ‘சீவலன்’ என்று குறிக்கப்பட்டிருக்கும் பாண்டியன், வெற்றி வேற்கை இயற்றிய அதிவீரராம பாண்டியனாவான். இதனை,
“கோ ஜடிலவர்மன் திரிபுவன சக்கர வர்த்தி
கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப்
பெருமாள் குலசேகர தேவர்’ நந்தனாரான அழகம்
பெருமாள் அதிவீரராமரான பூரீவல்லபதேவர்’’
என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். இக் கல்வெட்டிலுள்ள ‘அதிவீர ராமரான பூரீவல்லபதேவர்’ என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. ரீவல்லபன் என்பதுதான், சீவல்லபன், சீவலவன், சீவலன் எனப் படிப்படியாகத் தமிழில் மருவியது எனவே, தமிழ் நாவலர் சரிதையில் குறிக்கப்பட்டிருக்கும் சீவலன் அதிவீர ராம பாண்டியனே என்பது தெளிவு. இவனுக்கு வீரமாறன், இராமன் முதலிய பெயர்களும் உண்டு. வீரமாறன், இராமன் என்னும் பெயர்கள், சீவலன் என்னும் பெயருடன் இணைப்பாகத் தமிழ் நாவலர் சரிதைப் பாடல்களில் ஆளப்பட்டுள்ளதால், ஏகம்ப வாணனுடன் பிணங்கிய பாண்டியன் அதிவீரராமனே என்பது முழுத் தெளிவு. இப் பாண்டியனது ஆட்சிக்காலம் 1564 முதல் 1603வரை ஆகும்; எனவே, ஏகம்பவாணனது காலம் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது போதரும்.
* * *
↑ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - காப்பு - 2.
↑ நளவெண்பா - சுயம்வர காண்டம் - 1.
↑ திவ்வியப் பிரபந்தம் - இயற்பா - பெரிய திருமடல் - 53.
↑ *கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - கங்கை காண்படலம் - 38.
↑ *பெரிய புராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1,6,8,24.
↑ *பெரிய புராணம் - நரசிங்க முனையரையர் - 1.
↑ *பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 5.
↑ *சுந்தரர் தேவாரம் - திருத்தொண்டத்தொகை - 9.
↑ *இந்திய சாசனங்கள் - தொகுதி 23 பக்கம்: 174, 182,
13. கெடில நாட்டுப் பெருமக்கள்
வரலாற்றுக் காலந்தொட்டு இன்றுவரை கெடிலக்கரைப் பகுதிகளில் பிறந்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் தொடர்பு கொண்டும் புகழ்பெற்று விளங்கின. பெருமக்கள் பலராவர். சமயப்பெரியார்கள் என்ன! புலவர்கள் என்ன! கலைஞர்கள் என்ன! இப்படியாகப் பல துறைப் பெரியர்ர்கள் கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் சிறந்து விளங்கினர்; இன்றும் விளங்கி வருகின்றனர்.
ஒரு நாடு நல்ல நாடா அல்லது கெட்ட நாடா என்று எதைக்கொண்டு தீர்மானிப்பது? ஒரு நாடு, தன் மாட்டுள்ள நிலவளம் - நீர்வளத்தாலோ, இயற்கைக் கணிப்பொருள் வளத்தாலோ, இன்னும் பிறவளத்தாலோ சிறந்த நாடாகக் கருதப்பட முடியாது. ஒரு நாடு மேட்டுப் பாங்காகவோ அல்லது பள்ளம் படுகுழியாகவோ இருக்கலாம்; ஒருநாடு காட்டுப் பகுதியாகவோ அல்லது கடல் சார்ந்ததாகவோ இருக்கலாம்; இன்னபிற அமைப்புக்களைக் கொண்டு நல்ல நாடு என்றோ, கெட்ட நாடு என்றோ முடிவுகட்டிவிட முடியாது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் தகுதியைக் கொண்டே அந் நாட்டின் தகுதியையும் வரையறுக்கமுடியும். இதனை, ஒளவையார் பாடிய
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்ல வாழிய நிலனே'"
என்னும் புறநானூற்றுப் பாடல் (187) புலப்படுத்தும். இவ்வகையில் கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்த பெருமக்கட்குக் குறைவேயில்லை. அவர்களால் அந் நாட்டிற்கு உண்டான பெருமைக்கும் அளவேயில்லை. அவர்தம் வாழ்க்கைக் குறிப்புக்கள் வருமாறு:
சமயப் பெரியார்கள்
திருமுனைப்பாடி நாட்டோடு தொடர்பு கொண்டிருந்த சமயப் பெரியார்களுள் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்களின் வரிசையில், முதல் முதலாக அறியக் கிடைத்திருப்பவர்கள் திலகவதியாரும் திருநாவுக்கரசருமே. இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.
திலகவதியார்
கெடிலத்தின் வட கரையிலே உள்ள திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் தோன்றியவர் திலகவதியார். இவர்க்கு மருள் நீக்கியார் என்னும் தம்பி யொருவர் இருந்தார். திலகவதியார் மணப் பருவம் எய்தியதும், கலிப்பகையார் என்னும் படைவீரருக்கு இவரை மணம் பேசி முடிவு செய்திருந்தனர். திருமணம் நடைபெறுவதற்குமுன் போர் மூண்டதால், கலிப்பகையார் தம் மன்னனது படையொடு போந்து பகைவரோடு நெடுநாள் போர்புரிந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தீயூழாகப் புகழனாரும் மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்தனர். கலிப்பகையாரும் போரில் மாண்டுபோனார். திருமணம் ஆகாவிடினும் மணம் பேசி முடிவு செய்த கலிப்பகையாரைத் தம் கணவராகத் திலகவதியார் முன்னமேயே உள்ளத்தில் வரித்துக்கொண்டிருந்ததால், இப்போது அவர் இறந்ததும் அம்மையார் செய்வதறியாது திகைத்தார். கணவரையிழந்த அவர் தாமும் உயிர்துறக்கத் துணிந்தார். அப்போது தம்பி மருள்நீக்கியார் தமக்கை திலகவதியார் இறந்தால் தாமும் இறந்துவிடப் போவதாகக் கூறினார். பின்னர்த் திலகவதியார் தமது முடிவை மாற்றிக்கொண்டு தம்பிக்காக உயிர்வாழத் தொடங்கினார், கைம்மைக் கோலம்பூண்டு, திருவதிகை போந்து திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வரலாயினார்.
பூந்தோட்டம் வளர்த்தல், சிவபெருமானுக்குப் பூத்தொடுத்து அளித்தல், திருக்கோயில் அலகிடல், மெழுகிடல், புல் பூண்டுகளைதல் முதலிய திருப்பணிகளைத் திலகவதியார் புரிந்து வருகையில், தம்பி மருள் நீக்கியாரின் உள்ளத்தைச் சமண சமயம் கவர்ந்தது. அவர் தமது சைவ சமயத்தையும் தமக்கையாரையும் ஒருசேரத் துறந்து சமண சமயத்தில் சேர்ந்து பாடலி புத்திரம் என்னும் நகர்புக்குச் சமணத் தலைவராய் விளங்கினார். தருமசேனர் என்னும் தலைமைப் பட்டத்துடன் அங்கு வாழ்ந்துவந்த போது அவருக்கு வயிற்றில் சூலை நோய் கண்டது. சமணர்கள் எத்தனையோ மருத்துவங்கள் செய்து பார்த்தனர்; மருள் நீக்கியாரின் வயிற்று வலி தீர்ந்தபாடில்லை.
வலி பொறுக்க முடியாத மருள் நீக்கியார் சமணர்க்குத் தெரியாமல் தமக்கை திலகவதியாருக்குத் தமது நிலையைச் சொல்லியனுப்பினார். திருவதிகை வந்து விடுமாறு தமக்கையார் பதில் மாற்றம் சொல்லியனுப்பினார். அவ்வாறே சமணர் அறியாதபடி இரவோடிரவாகத் திருவதிகை போந்து தமக்கையின் அடிபணிந்தார் தம்பி, தமக்கையார் தம்பியின் நெற்றியில் திருநீறு பூசித் திருவதிகைச் சிவனை வணங்குவித்தார். மருள் நீக்கியாரின் சூலைநோய் பறந்தோடியது. சமணர்கள் இழைத்த பல கொடுமைகளினின்றும் மருள்நீக்கியார் தப்பிப் பிழைத்து, அப்பர், திருநாவுக்கரசர் என்னும் பெயர்களுடன், சிவப் பதிகள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஆயிரக் கணக்கான தேவாரப் பாடல்களை அருளிச்செய்து சைவமும் தமிழும் ஒருசேரத் தழைக்கச் செய்தார்.
திருநாவுக்கரசரால் தமிழுலகம் அடைந்திருக்கும் நன்மைக்கும் சிறப்பிற்கும் அளவேயில்லை. தமிழுலகத்திற்கு இந்த வாய்ப்பளித்த பெருமையில் திலகவதியார்க்குப் பெரும்பங்கு உண்டு. அம்மையார் இல்லையேல் நாம் அப்பர் அடிகளைப் பெற்றிருக்க முடியாது; திலகவதியார் இல்லையேல் நாம் திருநாவுக்கரசரைப் பெற்றிருக்க முடியாது; தருமசேனர் தான் கிடைத்திருப்பார். எத்தனையோ சேனர்களுக்குள் ஒரு சேனராகத் தருமசேனர் மறைந்துவிட்டிருப்பார். தரும சேனராக மாறிய மருள் நீக்கியாரைத் திருநாவுக்கரசராக மாற்றித் தந்த பெருமை திலகவதியாரையே சாரும்.
அந்தோ! அம்மையாரின் வாழ்க்கையை எண்ணும் போது இரக்கம் ஏற்படுகிறது. ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்று வாசகம் சொல்வது வழக்கம். ஆனால், அம்மையாரோ, ‘கல்யாணம்’ பண்ணாமலேயே கைம்பெண்’ ஆகிவிட்டார், என்ன கொடுமை! இந் நிலைமை அம்மையாரின் உயர்ந்த பண்பை அறிவிக்கிறது; அதே நேரத்தில் சமுதாயத்தின் கொடுமையையும் அறிவிக்கிறது. ஒருவேளை, திருநாவுக்கரசரை உருவாக்கி உலகிற்கு அளிப்பதற்காகத்தான் திலகவதியார்க்கு இரங்கத்தக்க இந்நிலை ஏற்பட்டதோ! அம்மையார் வீட்டு வாழ்க்கையில் தோல்வியுற்றாலும், நாட்டு வாழ்க்கையில் முழு வெற்றி பெற்று நற்பணி யாற்றி நற்பெயர் பெற்றிருப்பது. உள்ளத்திற்கு ஆறுதலும் நிறைவும் ஒருசேர அளிக்கிறது.
திலகவதியார் சைவவேளாளர் குலத்தினர். இவர்க்கு நேர்ந்த இரங்கத்தக்க நிலைமை தொடர்பான அச்சம், இன்னமும் திருவாமூர்ப் பகுதிச் சைவ வேளாளர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. மணம் பேசி உறுதி செய்ததும் மனம் நிறைவேறுவதற்கு முன்னே மணமகன் கலிப்பகையார் போரில் மாண்டு விட்டதால் திலகவதியார் கைம்மை பூண் நேர்ந்ததல்லவா? இந்த அச்ச உணர்வால், திருவாமூர்ப் பகுதி வேளாண் மக்கள், மணம்பேசி உறுதி (நிச்சயதார்த்தம்) செய்தல், திருமணம் நிகழ்த்துதல் ஆகிய இரண்டு வினைகளையும் ஒரே நாளில் நடத்தி வருகின்றனராம்.
தமது பெருந்தகுதியால் தமிழ்மக்களின் உள்ளங்களில் நீங்காது நிலைபெற்றுள்ள திலகவதியார் தம் கண்ணே போல் போற்றிக் காத்துவந்த மலர்வனத்தை இன்றும் திருவதிகையில் காணலாம். அஃதாவது, அந்த இடத்தில் வாழையடி வாழையாகத் தொடர்ந்து செடிகொடிகள் இருந்து வருவதைச் சிதைந்த நிலையில் இன்று காணலாம்.
திலகவதியாரின் பெருமைக்கு அழியாச் சான்றாக, திருவதிகைச் சிவன் கோயிலுக்குள் அவருக்கும் ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தெய்வங்களொடு தெய்வமாய்ச் சேர்ந்து வழிபடும் அளவிற்கு அம்மையாரின் புகழ் வானளாவ உயர்ந்துவிட்டது. உயர்ந்த உழைப்பின் பயன் வீண்போகாது போலும்! பெண்ணுலகிற்கு ஒரு பெருந் திலகமாய் வதிந்த திலகவதியார் புகழ் ஓங்குக! அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கோயில்கொண்டுள்ள கெடிலக்கரை வாழ்க!
திருநாவுக்கரசர்
வரலாறு
திலகவதியாரின் தம்பி திருநாவுக்கரசரின் வரலாறு, முன்னேயுள்ள திலகவதியாரின் வரலாற்றுப் பகுதியில் ஒருசிறிது சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசரின் இயற்பெயர் - இளமைப் பெயர் மருள்நீக்கியார் என்பது. அறியாமையாம் மயக்கம் நீக்கியவர் என்பது அதன் பொருள். எவ்வளவு அழகிய இனிய பொருள் பொதிந்த தமிழ்ப் பெயர்! இப்பெயரை இலங்கைத் தமிழரிடையே இன்றும் காணலாம். இவ்வளவு நல்ல பெயரைச் சூட்டிய பெற்றோரை யிழந்து, தமக்கையின் ஆதரவில் வளர்ந்து வந்த மருள் நீக்கியார் சமண சமயம் புக்கு, தருமசேனர் என்னும் பெயருடன் பாடலிபுத்திரத்தில் ஒருபெரிய சமணத் தலைவராய் விளங்கினமை, அவருடைய இயற்கைத் திறமைக்கு ஒரு பெரிய சான்றாகும். குறுகிய கால அளவில் ஒரு தலைவராய் விளங்குவது என்பது எல்லோர்க்கும் இயலக் கூடியதன்று. தருமசேனர் திறமை மிக்க தலைவராய் விளங்கியதனால் தான், அவர் சைவத்திற்கு மீண்டதும் சமணர்கள் மிகுந்த பரபரப்பு அடைந்தனர். அவர் சோற்றுக்குக் கேடான ஓர் எளிய சமணத் தொண்டனாய் இருந்திருந்தால், அவர் சைவத்திற்கு மீண்டதற்காகச் சமணர்கள் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். தலைசிறந்த தலைவனை இழந்துவிட்ட ஏமாற்றத்தால் ஏக்கத்தால், சமணர்கள் பல்லவ மன்னனின் துணைகொண்டு நாவுக்கரசரைச் சுண்ணாம்பு நீற்றறையில் இட்டனர்; நஞ்சூட்டினர்; யானையைக் கொண்டு தலையை இடறச்செய்ய முயன்றனர்; கல்லிலே கட்டிக் கடலிலே எறிந்தனர்; இன்னும் என்னென்னவோ தொல்லைகள் தந்தனர். எல்லாக் கொடுமைகளினின்றும் நாவுக்கரசர் தப்பினார்; நாட்டு மன்னனையும் மக்களையும் மீட்டு நாட்டில் சைவத்தை நிலைநாட்டினார்.
இவர் திருவதிகைச் சிவன் திருமுன்பு, ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்னும் திருப்பதிகம் பாடிச் சூலைநோய் நீங்கப்பெற்றதும், இவரது நாவன்மையை சொல்வன்மையைப் பாராட்டி இறைவன் இவரை ‘நாவுக்கரசு என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் சீர்கழி சென்று திருஞான சம்பந்தரைக் கண்டபோது, அவர் இவரை அப்பரே வருக என அழைத்தாராம். பிற்காலத்தில் இவர்க்குத் திருநாவுக்கரசர், அப்பர் என்னும் இருபெயர்களும் நின்று நிலைத்து விட்டன. வாகீசர், ஆளுடைய அரசு எனவும் இவர் அழைக்கப்படுவதுண்டு.
நாவுக்கரசர் நடுநாடு, சோழநாடு, தொண்டைநாடு, பாண்டிநாடு ஆகிய இடங்கட்கெல்லாம் முறையே சென்று, ஆங்காங்குள்ள திருப்பதிகள் தோறும் இறைவனை வணங்கித் திருப்பதிகங்கள் பல பாடியருளினார்; பல வியத்தகு நிகழ்ச்சிகளும் புரிந்தார். கைலை கண்டு வணங்க வேண்டும் என வடநாடு நோக்கிக் காசிவரையும் சென்றார். கைலை செல்வது அரிது என உணர்த்தப்பட்டு, தென்னாட்டிலுள்ள திருவையாறு அடைந்து அங்கே கைலைக் கோலத்தைக் கண்டு வழிபட்டாராம். இந்தக் காலத்தைப் போல் போக்கு வரவு வசதியில்லாத அந்தக் காலத்தில் காலே துணையாக அவ்வளவு தொலைவு பயணம் செய்ததை எண்ணும்போது, அடுத்த தெருவிற்கு வண்டியில் செல்லும் இருபதாம் நூற்றாண்டினர்க்குத் தலை சுற்றத்தான் செய்யும். அப்பர் பெருமான் பற்பல ஊர்கட்கும் சென்று பண்ணோடு தேவாரப் பாமாலை பல புனைந்து தமிழ் மொழியையும் தமிழ் நாட்டையும் ஒருசேர வளப்படுத்தி இறுதியில் திருப்புகலூரில் எண்பத்தோராவது வயதில் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். அப்பர் காலம்
அப்பர் பெருமானின் காலத்தை அறுதியிட்டுக் கூறத் திட்டவட்டமான சான்று எதுவுமில்லை. அவரது காலத்தைச் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். அவரது தேவாரத்திலோ, அவர் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்திலோ, அவர் காலத்தில் ஆண்ட பல்லவ மன்னன் இன்னான் என்று குறிப்பிடப்படவில்லை. பல்லவன் எனப் பொதுப்படையாகவே பெரியபுராணம் கூறுகிறது. அந்தப் பல்வன் மகேந்திரவர்மப் பல்லவனாகத்தான் இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றனர். அப்பரது முயற்சியால் பல்லவ மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதும், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக்கோயிலை இடித்துக் கொண்டுவந்து, திருவதிகையில் ‘குணபரேச்சரம்’ என்னும் பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. [1]
“வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண்கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்"
என்பது பெரியபுராணப் பாடல். பாடலிலுள்ள ‘குண்பர வீச்சரம்’ என்னும் கோயில் பெயர்தான் இங்கே உயிர்நாடி இது, குணபரேச்சரம், குணபரேசுரம், குணதரேச்சுரம் என்றெல்லாங் கூட அழைக்கப்படுகிறது. ஈச்சரம் அல்லது ஈசுரம் என்றால், ஈசுவரன் (சிவன்) எழுந்தருளியுள்ள இடம் (கோயில்) என்று பொருளாம். குணபர ஈச்சரம் என்றால், குணபரன் என்பவனால் கட்டப்பட்ட கோயில் என்று பொருளாம். தஞ்சையில், முதலாம் இராசராச சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில் ‘இராச ராசேச்சுரம்’ என அழைக்கப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, ஈண்டு, குணபரன் என்னும் பெயர் கோயில் கட்டிய பல்லவ மன்னனைக் குறிக்கின்றது என்பது தெளிவு. இந்தப் பெயர் எந்தப் பல்லவ மன்னனுடையது?
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பெரும் புகழுடன் அரசாண்ட மகேந்திரவர்ம பல்லவனுக்குக் குணபரன் என்னும் பெயர் ஒன்று வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுக்களி லிருந்துதெரிகிறது. செங்கற்பட்டு சில்லா வல்லத்திலிருக்கும் குகைக்கோயில் கல்வெட்டில் மகேந்திரவர்மனைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு சிறு பகுதி வருமாறு: “பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன்
குணபரன் மயேந்திரப் போத்தரசரு......."
இக் கல்வெட்டுப் பகுதியிலுள்ள மயேந்திரன் என்பது மகேந்திரனாகும். அவனைக் குறிக்கும் வேறுபெயர்கள்: பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்துரு மல்லன், குணபரன் என்பனவாம். இதிலிருந்து குணபரன் எனப்படுபவன் மகேந்திரனே என்பது நன்கு தெளிவாகும். இதற்கு இன்னும் ஒரு சான்று வருமாறு:
திருச்சி மலைக்கோயிலில் மலைக்குகை மண்டபத்தைக் குடைந்து உருவாக்கியவன் மகேந்திரனாவான். அம் மண்டபத்தின் தூண்களில் இவனைப் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வருமாறு: [2]
இந்த வடமொழிக் கல்வெட்டுப் பகுதியின் கருத்தாவது: “குணபரன் என்னும் பெயருடைய அரசன், சமணத்திலிருந்து மாறிப் பெற்ற மெய்யறிவு உலகில் நெடிது நிலைப்பதாகுக!” என்பதாம். அப்பரால் பல்லவ மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதையே இக் கல்வெட்டுப் பகுதி குறிக்கிறது.
மேற்காட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் மகேந்திர னுடையவை; எனவே, குணபரன் எனப்படுபவன் அவனே என்பதும், திருவதிகையில் குணபரேச்சரம் கட்டியவன் அவனே என்பதும், அப்பர் காலத்தில் வாழ்ந்தவன் அவனே என்பதும் முறையே ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாய்த் தெளிவுபடுகின்றன.
அப்பர் காலத்தில் ஆண்ட பல்லவன் மகேந்திரவர்மனே என்பது உறுதியாய் விட்டதால் அப்பர் காலத்தைக் கணிப்பது இனி எளிது. மகேந்திரவர்மன் கி.பி. 600ஆம் ஆண்டிலிருந்து 630ஆம் ஆண்டுவரை ஆண்டதாகப் பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கால அட்டவணையிலிருந்து தெரியவருகிறது. அப்பர் இந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். மற்றும், அப்பருக்கு எண்பத்தொன்று’ என்று தொடங்கும் பாடலினால், அப்பர் எண்பத்தோ ராண்டுகள் உயிர்வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவர் மகேந்திர மன்னனது ஆட்சிக் காலத்துக்கு முன்னும் இருந்திருக்கவேண்டும்; பின்னும் இருந்திருக்கவேண்டும். எனவே, அவர் ஆறாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வாழ்ந்திருக்க வேண்டும்.
அப்பர் கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்து கெடிலக் கரையில் கல்வி - கலைகளைக் கற்று, கெடிலக்கரையில் திருநாவுக்கரசராக உருவானவர்; அவரால் கெடிலக்கரை பெற்ற பெருமை மிகுதி. எனவேதான் இந்நூலில், அப்பரின் கால ஆராய்ச்சி இன்றியமையாததாயிற்று.
அப்பர் பிறந்த மனை
திருவாமூரில் அப்பர் பிறந்த மனை மிகவும் பொலிவுற்றுத் திகழ்கிறது. இதுதான் அப்பர் பிறந்த மனை என அவ்வூரார்
வாழையடி வாழையாக அறிந்து வைத்து வந்துள்ளனர். அந்த மனை வெள்ளாழர் மனை என ஊர் மக்களால்
வழங்கப்படுகிறது. வெள்ளாழர் என்பது வேளாளர் என்பதன் கொச்சை உருவம். அப்பர் வேளாள மரபைச் சேர்ந்தவராதலின், அவர் பிறந்த மனை வேளாளர் மனை’ என வழங்கப் படுவதில் தக்க பொருத்தம் உள்ளது. இதுதான் அப்பர் பிறந்த மனை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று அவ்வூராரைக் கேட்டதற்கு, வெள்ளாழர் மனை என்ற பெயரே போதிய ஆதாரமாயிற்றே” என்ற பதில் கிடைத்தது. அந்த மனையில் அப்பர் நினைவாக அவருக்கு அழகிய திருக்கோயில் கட்டப்பட்டு 14-7-1963இல் குட முழுக்கும் நடத்தப்பட்டுள்ளது. மேலுள்ள படத்தில் அந்தக் கோயிலின் தோற்றத்தில் ஒரு பகுதியைக் காணலாம்.
படத்தில், கோயிலுக்குச் செல்லும் முகப்பு வாயிலில், ‘திருநாவுக்கரசு நாயனார் திருக்கோயில்’ என்னும் தொடர் பொறிக்கப்பட்ட வளைவினைக் காணலாம். கோயிலின்
கருவறையில் திருநாவுக்கரசரின் அழகிய திருவுருவம் பொலிவுடன் திகழ்கிறது. திருநாவுக்கரசரின் திருமுன் (சந்நிதி) கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலின் வாயில் வடக்கு நோக்கியுள்ளது.
திருநாவுக்கரசர் பிறந்த திருமனையின் பெருமையை அறிவிக்கும் அறிகுறியாகவும், அவர் பிறந்த மனை இதுதான் என்பதை நிலைநாட்டும் தெய்வச் சான்றாகவும், திருநாவுக்கரசர் திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் களரிவாகை என்னும் ஒருவகை மரம் காணப்படுகிறது. அந்த மரத்தின் தோற்றத்தை மேலுள்ள படத்தில் காணலாம்:
களரிவாகை என்னும் பெயருடைய அம்மரம், ஐந்நூறு அறுநூறு ஆண்டுகளாக அந்த இடத்தில் இருப்பதாகத் திருவாமூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் கேட்டால், அம் மரத்தின் வயது என்ன - எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அம் மரம் தோன்றியது என்று எவரும் திட்டவட்டமாகக் கூறமுடியாதபடி மிகப் பழங்காலந்தொட்டு அம்மரம் இருந்துவருவதாக, வாழையடி வாழையாகப் பெரியவர்கள் சொல்லி வருவதாகச் சிலர் கூறுகின்றனர். மரம் நன்கு தழைத்து அகன்று பரந்துள்ளது. அம்மரத்தின் இலையும் கனியும் பட்டையும் பல்வகை நோய்களைப் போக்கக் கூடியவை என்றும், நச்சுக் கடிகட்கு நல்லவை என்றும் சொல்கின்றனர். எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மக்கள் மரத்தின் பட்டையை உரித்துக்கொண்டுபோய் விடுவதாகக் கூறிச் சிலர் வருத்தம் தெரிவித்தனர். திருநாவுக்கரசரின் பெருமைக்கு ஒரு தெய்வச்சான்றாக உள்ள அக் களரி வாகை மரம், இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நின்று நிலைத்துச் செழித்து வாழ்க!
விழாக்கள்
பல ஊர்ச் சிவன் கோயில்களில், திருநாவுக்கரசர் வீடுபேறடைந்த சித்திரைச் சதயநாளில் மட்டும் திருநாவுக்கரசருக்குத் திருவிழா நடத்துவது வழக்கம். திருவாமூரில் உள்ள திருநாவுக்கரசர் திருக்கோயிலிலோ, அவர் வீடுபேறடைந்த சித்திரைச் சதயத்திலும் திங்கள் தோறும் வரும் சதயத்திலும் விழா நடத்துவதல்லாமல், அவர் பிறந்த பங்குனி உரோகிணி நாளிலும் அவருக்குச் சிறப்பாகத் திருவிழா நடத்தப் பெறுவது குறிப்பிடத்தக்கது. பிறந்த இடத்தில் பிறந்தநாள் விழா நடத்துவது மிகவும் பொருத்தம் அல்லவா?
சுந்தரர்
வரலாறு
சைவ சமய குரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரர் கெடிலத்தின் வடகரையிலுள்ள திருநாவலூர் என்னும் ஊரில் தோன்றினார். தந்தையார் சடையனார் என்னும் பெயரினர்; தாயார் இசை ஞானியார் என்பவர். இவ்விருவரும் சைவ நாயன்மார் அறுபத்து மூவர் வரிசையில் வைத்துப் போற்றப் படுகின்றனர். திருக்கோயிலில் பூசனை புரியும் குருக்கள் மரபில் தோன்றிய சுந்தரரை, அவ்வூர் அரசர் நரசிங்கமுனையரையர் எடுத்து வளர்த்து ஆளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது இளமைப் பெயர் நம்பியாரூரர் என்பது.
புத்துரர் என்னும் ஊரில் சுந்தரர்க்குத் திருமண ஏற்பாடு நடந்தது. சிவ பூசையில் கரடி விட்டாற்போல், திருமண வேளையில் கிழ அந்தணர் ஒருவர் வந்து, சுந்தரரை நோக்கி, ‘நீ என் அடிமை’ என வாதிட்டார். சுந்தரர், ‘நீ ஒரு பித்தன்; நான் உன் அடிமை அல்லன்’ என மறுத்தார். மணம் தடைப்பட்டது. இருவரும் வழக்கிட்டுக் கொண்டு திருவெண்ணெய் நல்லூரிலிருந்த அறமன்றம் போந்தனர். வந்த அந்தணரே வழக்கில் வென்றார்.
இந் நிகழ்ச்சிக்குக் காரணமாக முன்பிறவி நிகழ்ச்சியொன்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பிறவி நிலையில் சுந்தரர் கைலாயத்தில் ஆலால சுந்தரர் என்னும் பெயருடன் சிவனுக்குத் தொண்டுபுரிந்து வந்தாராம். ஒரு நாள் மலர் கொய்ய மலர் வனத்திற்குச் சென்றிருந்தார். அங்கே, பார்வதி தேவியின் தொண்டர்களாகிய அநிந்திதை, கமலினி என்னும் மகளிர் இருவரையும் கண்டு காதல் கொண்டார். அக் குற்றத்திற்காக மூவரும் மண்ணுலகில் சென்று பிறக்கும்படி பணிக்கப்பட்டனர். ஆலால சுந்தரர் அஞ்சித் தம்மை ஆட்கொள்ளும்படி இறைவனை வேண்டினார். அவ்வாறே செய்வதாக இறைவன் அருள் புரிந்தார். பின்னர், ஆலாலசுந்தரர் திருநாவலூரில் நம்பியாரூராய்த் தோன்றினார். கமலினி திருவாரூரில் பரவையார் என்னும் பெண்மணியாகவும், அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும் பெண்மணியாகவும் பிறந்தனர். இது புராணக்கதை.
இந்தக் கதைக்கு ஏற்ப, சிவபெருமான் கிழ அந்தணராக வந்து, சுந்தரரின் திருமணத்தைக் கலைத்து வழக்கில் வென்று, உலகப் பற்றிலிருந்து அவரை ஆட்கொண்டதாகச் சொல்லப் படுகிறது. அந்தணராக வந்து வழக்குவென்ற இறைவன் கடவுட் கோலத்துடன் காட்சி தந்து, “பித்தன்” என்று வைத சுந்தரரை அவ்வாறே சொல்லிப் பாடும்படி பணிக்க, பித்தா பிறை சூடி’ என்று தொடங்கிப் பாடினாராம். இதுதான் சுந்தரரின் முதல் தேவாரப் பாடல்.
பின்னர்ச் சுந்தரர் பல திருப்பதிகட்கும் சென்று இறைவனை வணங்கித் தேவாரப் பதிகங்கள் பல பாடினார். திருவாரூர் சென்றபோது அங்கே பரவையாரை மணந்து கொண்டார். திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து கொண்டார். இந்த இரண்டு திருமணங்கட்கும் பழைய கைலாய நிகழ்ச்சி காரணம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சுந்தரர்க்குச் சேர மன்னராகிய சேரமான் பெருமாள் நாயனார் சிறந்த நண்பரானார். சுந்தரர் திருவஞ்சைக்களம் என்னும் திருப்பதி போந்து திருக்கோயில் வழிபாடுசெய்து கொண்டிருந்தபோது, சிவனது கட்டளைப்படி தேவர்கள் வெள்ளையானை கொண்டுவந்து அதில் இவரை அமர்த்திக் கைலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அஃதறிந்த சேரமானும் குதிரைe திவர்ந்து சுந்தரருடன் கைலை சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. சுந்தரர் காலம்
சுந்தரர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று சிலரும், எட்டாம் நூற்றாண்டு என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று சிலரும் கூறுகின்றனர். திருநாவுக்கரசரின் காலத்தைக் கணிக்க அவர் காலத்தில் ஆண்ட மகேந்திரவர்ம பல்லவன் உதவியாய் இருந்தது போல சுந்தரர் காலத்தைக் கணிக்க உதவக்கூடிய அரசர் யார் என்று ஆறாயவேண்டும். சுந்தரர் காலத்தில் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னனும், சேரமான் பெருமாள் என்னும் சேர மன்னனும், நரசிங்க முனையரையர், ஏயர்கோன், பெருமிழலைக் குறும்பர் முதலிய சிற்றரசர்களும் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இம் மன்னர்களுள் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னவன் சுந்தரர் காலத்திலேயே வாழ்ந்தான் என்பதற்கு, சுந்தரர் தேவாரத்தில் வெளிப்படையான அகச்சான்று கிடைத்துளது. அது [3]
★"கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்”
என்பதாகும். காடவர் கோன் என்பது, பல்லவரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். எனவே, கழற்சிங்கன் ஒரு பல்லவ மன்னன் என்பது புலனாகும். சுந்தரர் அவனை, ‘உலகெலாங் காக்கின்ற பெருமான் என நிகழ்காலத்தில் வைத்துப் புகழ்ந்துள்ளதால், அவர் காலத்தில் அவன் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது தெளிவு. எனவே, கழற்சிங்கனது காலம் தெரிந்தால் சுந்தரர் காலம் தெரிந்துவிடும். ஆனால், இந்தக் கழற்சிங்கன் என்பவன் எந்தப் பல்லவப் பேரரசன் என்பது தெரியவேண்டுமே!
கழற்சிங்கன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தான் (கி.பி. 630 -668) என்று சிலரும், இரண்டாம் நரசிம்மவர்மன் தான் (680 -729) என்று சிலரும், இரண்டாம் நந்திவர்ம பல்லவன்தான் (731 - 795) என்று சிலரும், மூன்றாம் நந்திவர்மன்தான் (844 - 866) என்று சிலருமாகப் பல்வேறு விதமாகச் சொல்கின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் கொள்கையை உறுதி செய்ய என்னென்னவோ சான்றுகள் தருகின்றனர். இந் நிலையில் எவர் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வது?
சுந்தரர் ஏழாம் நூற்றாண்டினராக இருக்க முடியாது. திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் என்பதும், திருநாவுக்கரசர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்பதும் முன்னர் பக்கம் - 170) அறிவிக்கப் பட்டுள்ளன. திருநாவுக்கரசரையும் திருஞான சம்பந்தரையும் மிகவும் புகழ்ந்து பாடி, அவர்கள் வாழ்ந்த திருவதிகையையும் சீர்காழியையும் காலால் மிதிக்க அஞ்சிய சுந்தரர் அவர்கள் காலத்திற்கு அடுத்த அடுத்த நூற்றாண்டினராகத்தான் இருந்திருக்க முடியும். எனவே, சுந்தரர் எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனப் பொதுப் படையாகக் கூறுவதோடு அமைதி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.
சுந்தரர் பதினெட்டு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. இது பொருத்த முடையதாகத் தெரியவில்லை. அவர் இன்னும் பல ஆண்டுகள் உலகில் வாழ்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது.
சுந்தரர் பிறந்த மனை
சுந்தரர், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சிறப்புப் பெயராலும் நம்பி ஆரூரர் என்னும் பிள்ளைமைப் பெயராலும் அழைக்கப்படுவதல்லாமல், திருநாவலூரில் பிறந்து வளர்ந்தவரானதால், திருநாவலூரார் என ஊர்ப் பெயராலும் அழைக்கப்படுகிறார். இவர் பிறந்த மனை இது என இன்றும் திருநாவலூரில் சுட்டிக் காட்டப்படுகிறது. அந்த மனை, திருநாவலூர்க் கோயிலுக்கு வடபுறமாகப் பக்கத்திலேயே உள்ளது. கோயில் பூசனை புரியும் குருக்கள் மரபினர் கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடு அமைத்துக் கொண்டு இருப்பது வழக்கம். சுந்தரர் குருக்கள் மரபினராதலால், கோயிலுக்குப் பக்கத்தில் சுட்டிக் காட்டப்படும் அந்த மனையை, சுந்தரர் பிறந்த மனையாகத் துணிந்து நம்பலாம். அந்த மனையில் சுந்தரர் நினைவாக இப்போது ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அக் கட்டடத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்.
இந்தப் புகைப்படம் 4-1-1967 ஆம் நாள் எடுக்கப்பட்டது. கட்டடம் இன்னும் முடியவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கிறது. இயற்கைச் சூழ்நிலையில் அமைக்கப்படும் இந்தக் கட்டடம், சுந்தரர் நினைவை என்றென்றும் உலகிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும். சுந்தரர்க்குத் திருநாவலூரில் இந்த நினைவு மாளிகை எழுப்பப்படுவதல்லாமல், பெரிய திருக் கோயிலுக்குள் அவருக்கென்று தனியாகச் சிறிய திருக்கோயில் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள சுந்தரரின் வார்ப்படச் சிலை, சுந்தரர் என்னும் பெயருக்கு ஏற்ப மிகவும் அழகாகக் கவர்ச்சியாக உள்ளது. கெடிலக் கரையில் பிறந்து வளர்ந்து தேவாரப் பாடல்கள் பல பாடித் தமிழையும் சமயத்தையும் வளப்படுத்திய சுந்தரர் புகழ் நீடு வாழ்க!
‘திருநாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்ததால் திருமுனைப்பாடி நாடு நாடுகளுக்குள் மிகச் சிறந்ததாகும்; இதற்கு மேல் இந்நாட்டிற்கு இன்னும் என்ன பெருமை வேண்டும்? இஃதொன்றே போதும் எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியுள்ள கருத்து ஈண்டு நினைவு கூரத்தக்கது.
மெய்கண்ட தேவர்
சந்தான குரவர்
சைவ மதத்தில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்க வாசகர் ஆகிய நால்வரையும் ‘சமய குரவர் நால்வர்’ அல்லது ‘சமயாசாரியர் நால்வர்’ என அழைப்பது மரபு. அதுபோலவே, மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் நால்வரையும் ‘சந்தான குரவர் நால்வர்’ அல்லது ‘சந்தானாசாரியர் நால்வர்’ எனச் சைவர்கள் அழைப்பர். இந்தச் சந்தான குரவர் நால்வருமே தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பின் இருவரும் சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்; முன் இருவருமோ, முறையே கெடிலம் பாயும் திருக்கோவலூர் வட்டத்தையும் கடலூர் வட்டத்தையும் சேர்ந்தவர்கள். இந் நால்வர்க்குள்ளும் முதல் ஆசான் மெய்கண்ட தேவர். மெய்கண்டார் எனவும் இவர் அழைக்கப்படுவார்.
பிறப்பு
மெய்கண்டார், நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பெண்ணாகடம் என்னும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றினார். தந்தை பெயர் அச்சுத களப்பாளர். இவரை இவர் தாய் மாமன் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூருக்குக் குழந்தைப் பருவத்திலேயே அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். இவரது இளமைப் பெயர் ‘சுவேதவனன்’ என்பது.
மெய்யறிவு
சுவேதவனன் இளமையிலேயே மெய்யுணர்வு உடையவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள் இவர் தெருவில் விளையாடிக்கொண் டிருந்தபொழுது பரஞ்சோதி முனிவர் என்பார் இவருக்கு மெய்யறிவு கொளுத்தி ‘மெய்கண்டார்’ என்னும் சிறப்புப் பெயர் ஈந்து சென்றார். மெய்கண்டார் சைவசித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகளை ஆய்ந்துணர்ந்து ‘சிவஞான போதம் ‘என்னும் சிறந்த நூல் ஒன்று இயற்றினார்.
அறிவாசான்
மெய்கண்டார் குடும்பத்தாருக்கு, திருத்துறையூர்ச் சகலாகம பண்டிதர் என்பவர் குருவாவர். இவர் ஆதிசைவ அந்தணர் மரபைச் சேர்ந்தவர். குருவாகிய இவரிடம் அறிவுபெற மெய்கண்டார் செல்லவில்லை. அதனால் இவரே மெய்கண்டாரிடம் வராத காரணம் வினவச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவத்தைப் பற்றி மாணாக்கர் கட்கு விளக்கிக்கொண்டிருந்தார். ‘ஆணவம் எப்படியிருக்கும்’ என்று சகலாகம பண்டிதர் மெய்கண்டாரைக் கேட்டார். ‘இதோ இப்படித்தான் இருக்கும், என்று மெய்கண்டார் பண்டிதரையே சுட்டிக்காட்டினார். பின்னர்ப் பண்டிதர் உண்மை தெளிந்து மெய்கண்டார்க்கு மாணாக்கரானார். மாணவர் குருவாகவும் குரு மாணவராகவும் மாறியது வியப்பே. மற்றும், வேளாள மரபினர் ஒருவர், ஆதிசைவ அந்தணக் குருக்கள் மரபினருக்கு அறிவாசானாக (ஞானகுருவாக) விளங்கியது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மெய்கண்டார் சகலாகம பண்டிதர்க்கு மெய்யறிவு நல்கி அருள்நந்தி’ (அருணந்தி) என்னும் திருப்பெயரையும் சூட்டினார். இத்தகு சிறப்பிற்குரியவர் மெய்கண்டார். இவருக்கு அருணந்தி உட்பட மாணக்கர் நாற்பத்தொன்பதின்மர் இருந்தனர்.
மெய்கண்டார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி எனச் சொல்லப்படுகிறது.
அருணந்தி சிவாசாரியார்
இவர் கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டிக்கு வடமேற்கே 10கி.மீ. தொலைவிலுள்ள திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவ அந்தண மரபில் தோன்றினார். இவரது இயற்பெயர் சதாசிவம். இவர் பல்வகைக் கலைநூல்களையும் கற்றுப் பெரும் புலவராய் விளங்கியதால் ‘சகலாகம பண்டிதர்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
சகலாகம பண்டிதர், குலமரபுப்படி தம் மாணாக்கரான திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவரால் மெய்யறிவு கொளுத்தப்பட்டு அருள்நந்தி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் சந்தானாசாரியர் நால்வர் வரிசையில், மெய்கண்டாருக்கு அடுத்தபடி இரண்டாம் தகுதி உடையவர். இவர் இயற்றிய நூல்கள்: சிவஞானசித்தியார், இருபா இருபஃது என்பன. காலம் : பதின்மூன்றாம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது.
மனவாசகம் கடந்தார்
இவர் கடலூர் வட்டத்தில் கெடிலத்தின் வடகரையிலுள்ள திருவதிகையில் பிறந்தவர். இதனால், இவர் ‘திருவதிகை மனவாசகம் கடந்தார்’ என அழைக்கப்படுவார். முதல் சந்தான குரவராகிய மெய்கண்டாரின் மாணவருள் இவரும் ஒருவர். இவர் 1255ஆம் ஆண்டளவில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் ‘உண்மை விளக்கம்’ என்னும் உயரிய நூல் ஒன்று இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர்
கெடிலம் ஆற்றின் கரையிலுள்ள ஒரே வைணவத் திருப்பதி திருவயிந்திரபுரமாகும். இங்கேதான் வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியார் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இயற்றினார். இவர் கெடிலக்கரையில் வாழ்ந்து பெருமையுற்றிருப்பினும், இவர் பிறந்தது பாலாற்றங்கரை. இவர் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாகிய துப்புல் என்னுமிடத்தில் அனந்த சூரி என்னும் பெரியாருக்கும் தோதாரம்பையார் என்னும் அம்மையாருக்கும் 1269ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இளமைப் பெயர், வேங்கடநாதன் என்பதாகும். இருபது வயதிற்குள் பல்கலை நூல்களும் பயின்று பெரிய அறிஞரானார். காஞ்சியினின்றும் வந்து திருவயிந்திரபுரத்தில் நிலையாகத் தங்கிப் பல்லாண்டுகள் இருந்தார். தமிழிலும் வடமொழியிலும் கைதேர்ந்த வேங்கடநாதர் அவ்விரு மொழிகளிலும் நூற்றுக்கும் மிக்க தரமான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய தமிழ்ப் படைப்புக்கள் ஆழ்வார்களின் உருட்பாடல்களுக்கு ஒப்பான பெருமையுடையவை எனவும், வடமொழிப் படைப்புக்களிற் பல காளிதாசன், வால்மீகி போன்ற மாபெரு வடமொழி அறிஞர்களின் படைப்புக்களோடு ஒத்த தகுதி உடையவை எனவும் போற்றப்படுகின்றன.
வேங்கட நாதர் தமிழ்மொழிக்காக ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரிய பெறுமானம் உடையது. தமிழில் பல நூல்கள் இயற்றியிருப்பதோடு இவரது தமிழ்த் தொண்டு அமைந்துவிட வில்லை; அதனினும் மிக்கது இவரது தமிழ்த் தொண்டு. இவர் செய்திருப்பது போன்ற செயல்களை இக் காலத்தினர் சிலர் ‘தமிழ் வெறி’ என்று கூட சொல்லக் கூடும். ‘வடமொழியே உயர்ந்தது - தமிழ் தாழ்ந்தது’ என்று பலர் எண்ணியும் பேசியும் எழுதியும் வந்த சூழ்நிலையில், “வடமொழிக்குத் தமிழ்மொழி எவ்வகையிலும் குறைந்ததில்லை; வடமொழி போன்றே தமிழ் மொழியும் மிகவும் உயர்ந்த மொழி; தமிழில் ஆழ்வார்கள் அருளியுள்ள பாடல்கள், வடமொழியிலுள்ள வேதங்களுக்கு ஒப்பான பெருமை உடையவை; அவை தமிழ் வேதங்கள் எனப்படும்” என்றெல்லாம் அடித்துப் பேசியும் எழுதியும் தமிழின் பெருமையை நிலைநாட்டினவர் வேங்கடநாதர். திருவரங்கப் பெருமான், இவரது தமிழ் அன்பையும் அறிவையும் அறிந்து வியந்து இவருக்கு ‘உபய வேதாந்தாசாரியர்’ என்ற விருதுப் பெயரை ஈந்ததாகக் கூறுவர். உபயம் என்றால் இரண்டு. அஃதாவது, ‘இருமொழிகளிலும் வல்ல வேதாந்த ஆசிரியன் என்பது அதன் பொருள். அதிலிருந்து இவர் வேதாந்த ஆசாரியர் எனவும் வேதாந்த தேசிகர் எனவும் அழைக்கப்படலானார். தேசிகர் என்றால் ஆசாரியர். தேசிகர் என்னும் பெயர் பொதுவாக ஆசாரியார்கள் அனைவர்க்கும் உரித்தான பெயர் என்றாலும், இவர் பிறந்தபின் இவரையே குறிக்கும் சிறப்புப்பெயராக மிளிர்கிறது. இஃதொன்றே இவர் பெருமைக்குப் போதிய சான்று பகரும்.
வேதாந்த தேசிகரின் தமிழ்த்தொண்டு இம்மட்டோடும் நின்று விடவில்லை. பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களைப் பூசனையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பலர் செய்த எதிர்ப்புகளுக்கிடையே, அவற்றைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என வாதிட்டு வெற்றியும் பெற்றார் வேதாந்த தேசிகர். இப்போது கோயில்களில் ஆழ்வார்களின் தமிழ்ப் பாடல்களும் நடமாடுவதைக் காணலாம். இவர் இன்னொரு புரட்சியும் செய்துள்ளார். தேவியைவிட்டுத் திருமாலை மட்டும் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தவர்களிடையே “திருமகளும் திருமால் போலவே வழிபடற்கு உரியவள், திருமகளும் சேர்ந்தே திருமால் தெய்வமாவார்; திருமகள் இல்லாத திருமால் வழிபாடு தெய்வ வழிபாடாகாது” என்ற உண்மையையும் (தத்துவத்தையும்) நிலைநாட்டினார். தேசிகர் பெண்ணின் பெருமையை மிகவும் உணர்ந்தவர் போலும்.
வடகலை வைணவர்கள் தேசிகரின் எல்லாக் கொள்கைகளையும் பின்பற்றுகின்றனர்; தென்கலை வைணவர்கள் ஒரளவு ஒப்புக் கொள்கின்றனர். நூறாண்டு வாழ்ந்த தேசிகர் இறுதி வரையும் இல்லறத்தாராகவே திகழ்ந்தார். இறையன்புக்குத் துறவறம் ஒன்றே ஏற்ற வழி என்பது இல்லை என இவரது வாழ்க்கையால் அறியலாம். வரதாசாரியர் என்னும் மைந்தர் ஒருவர் இவருக்கு இருந்தார். தேசிகர் பாரத நாடு முழுதும் பயணம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் 1369ஆம் ஆண்டு இறையடி எய்தினார். இவரைப் பற்றிய சிறப்புக்களை, குருபரம்பரை என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.
வேதாந்த தேசிகராலும் கெடிலக்கரை மிகுந்த பெருமை பெற்றுள்ளதன்றோ? இவர் வாழந்து வந்த இருப்பிடம், ‘வேதாந்த தேசிகர் மண்டபம்’ என்னும் பெயருடன் இவர் நினைவுக் குறியாகத் திருவயிந்திரபுரத்தில் திகழ்வதை இன்றும் காணலாம்.
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருவண்ணாமலையில் பிறந்தார். இப்போது வடார்க்காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருவண்ணா மலையும் திருவண்ணாமலை வட்டமும் (தாலுகாவும்) முதலில் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே அமைந்திருந்தன. மற்றும் தொன்று தொட்டு திருவண்ணாமலை நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்ததாகவே புலவர் பெருமக்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில், அருணகிரிநாதரும் இந்த நாட்டுப் பெருமக்கள் வரிசையில் இடம் பெற்று இந் நாட்டிற்கு மிக்க பெருமையளிக்கிறார்.
திருப்புகழ் என்னும் இயல் - இசைத் தமிழ்ச் செல்வத்தை நாட்டிற்கு வழங்கிய பெருமகனாரான அருணகிரிநாதர், வாழ்க்கையில் பட்டுத் தேறியவராகக் கருதப்படுகிறார். இளமையில் கூடாவொழுக்கம் கொண்டதால் குட்ட நோயுற்று வருந்தினார் எனச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலைக் கோயிலின் வடகோபுரத் தருகில் தவங்கிடந்ததாகவும் இறையருள் விரைவில் கிட்டாததால் கோபுரத்தின்மேல் ஏறிக் குதித்ததாகவும் முருகப்பெருமான் தாங்கி அருள்புரிந்ததாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
அருணகிரியார் ஆறுமுகக் கடவுளால் ‘முத்தைத்தரு’ என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுப் பாடத் தொடங்கினாராம். அவர் ஊர்தோறும் சென்று முருகன் மேல் பாடிய திருப்புகழ்ப் பாடல்களேயன்றி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய பாடல் நூல்களும் இயற்றியுள்ளார். பழைய காலப் படிப்பாளிகட்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தண்ணிர்பட்டபாடு. அருணகிரியார் சந்தப் பாடலுக்குப் பெயர் பெற்றவர். [4] ‘வாக்கிற்கு அருணகிரி’ என்பது ஆன்றோர் மொழி.
வில்லிபுத்தூரர்
பாரத இராமாயணக் கதைகள் இந்திய மக்கள் அனைவரும் அறிந்தவை. பாரதக் கதையைத் தமிழில் விருத்தப் பாவால் பாடியவர் வில்லிபுத்துரார் என்னும் பெருமகனாவார். கம்பர் பாடிய இராமாயணம் ‘கம்பராமாயணம்’ என அழைக்கப்படுதல்போல, வில்லிபுத்துரார் பாடிய பாரதம் ‘வில்லி பாரதம் என அழைக்கப்படுகிறது.
தமிழில் கம்பர் இராமாயணம் பாடியதுபோல் பாரதம் பாடிய பெருமைக்குரிய வில்லிபுத்துரார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூர் என்னும் ஊரில் வைணவ அந்தண குலத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் வீரராகவன். வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவராகிய பெரியாழ்வாருக்கு வில்லிபுத்துரார்’ என்னும் பெயரும் உண்டு, அவர்மேல் உள்ள அன்பினால் வில்லிபுத்துரார் என்னும் பெயர் இவருக்கும் சூட்டப்பட்டது. சுருக்கமாக இவரை ‘வில்லி’ எனக் குறிப்பிடுவதும் உண்டு.
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள வக்கபாகை என்னும் ஊரில் தோன்றிய கொங்கர்குலத் தலைவனாகிய வரபதியாட் கொண்டான் என்னும் குறுநில மன்னன் வில்லிபுத்துராரை ஆதரித்து வந்தான். அவனது வேண்டுகோளின்படி இவர் தமிழில் பாரதக் கதையைப் பாடினார். தம்மிடம் தோற்ற புலவரின் காதைக் குடைந்து அறுப்பது வில்லியின் வழக்கமாம். ‘குறும்பி யளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை’ என்னும் பாடற்பகுதி ஈண்டு நினைவு கூறத்தக்கது. ஆனால், இந்த வரலாறு எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இவர் திருவண்ணாமலை சென்றபோது அருணகிரி நாதரிடம் தோற்றுப்போனதாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.
வில்லிபுத்துாராரைப் பற்றிய செய்திகள் சில, அவர் பாடிய பாரதத்தின் முற்பகுதியில் அவர் மகன் வரந்தருவார் என்பவரால் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ள சிறப்புப்பாயிரச் செய்யுட்களால் அறியப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு:
“நீர்வளம் நிலவளம் மிக்க திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் வீரராகவன் என்பார்க்கு மைந்தராக வில்லிபுத்துரார் பிறந்தார். இவர் பெரும் புலவராய் எங்கும் புகழ் பரப்பி வந்தார். இதே திருமுனைப்பாடி நாட்டில் வரபதியாட் கொண்டான் என்னும் வள்ளல் தோன்றியிருந்தான்; கொங்கர் குலக் குறுநில மன்னனாகிய இவன் வில்லிபுத்துராரை ஆதரித்து வந்தான். ஒருநாள் இவன் வில்லியாரை நோக்கி, ‘நீங்களும் நானும் பிறந்த திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெரும்புகழ் நிலைத்து நிற்கும் படியாகப் பாரதம் என்னும் பெரிய கதையைத் தமிழில் விருத்தப் பாவால் பாடியளிக்கவேண்டும்’ என வேண்டினான். வில்லியார் அவ்வாறே பாடியருளினார்.” இந்தச் செய்திகள் அடங்கிய பாரதச் சிறப்புப்பாயிரச் செய்யுட் பகுதிகள் வருமாறு :
"தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாடு’ (8)
“பண்ணை நீள்வளம் பல்குசீர்ப்
பழையநன் னாட்டில்
வண்ண நான்கினும் உயர்ந்துளோன்
ஒருமுனி வந்தான்” (14)
“தார காயண வண்டலை தண்டலைச் சனியூர்
வீர ராகவன் அருள்பெறு வில்லிபுத் தூரன்’ (17)
“எங்குமிவன் இசைபரப்பி வருநாளில்
யாமுரைத்த இந்த நாட்டில்
கொங்கர்குல வரபதியாட் கொண்டானென்
றொருவண்மைக் குரிசில் தோன்றி’’ (18)
“பிறந்துய்யக் கொண்டவனிப் பேருலகம்
பெருவாழ்வு கூரு நாளில்
நிறைந்தபுகழ்ச் சனிநகர்வாழ் வில்லிபுத்து
ரனைநோக்கி நீயு நானும்
பிறந்ததிசைக்கு இசைநிற்பப் பாரதமாம்
பெருங்கதையைப் பெரியோர் தங்கள்
சிறந்தசெவிக் கமுதமெனத் தமிழ்மொழியின்
விருத்தத்தாற் செய்க வென்றான்" (22)
வில்லிபுத்துாரார் பாரதம் செய்வதால், தாம் இருவரும் பிறந்த திருமுனைப்பாடி நாட்டிற்கு அழியாப் புகழ் நின்று நிலைக்கும் என வரபதியாட் கொண்டான் கூறியிருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.
வரபதியாட் கொண்டான் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. எனவே, வில்லியாரின் காலமும் அஃதே!
நல்லாற்றுர் சிவப்பிரகாச சுவாமிகள்
கோயில் பெருமை
நல்லாற்றுார் கெடிலம் பாயும் கடலூர் வட்டத்தில் கடலூருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் கடலூர்த் தொகுதியில் - கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இங்கே சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் அடிகளார் தங்கி அருட்பணி புரிந்து வீடுபேறடைந்துள்ளார். அடிகளாரின் திருவுடல் அடக்கம் (சமாதி) இங்கே உள்ளது. அடக்கத்தின்மேல் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். அதற்குச் சிவப்பிரகாச சுவாமி கோயில்’ என்று பெயர். ஆண்டுதோறும், அடிகளார் வீடுபேறுற்ற புரட்டாசி முழுநிலா (பருவம்) நாளில் திருவிழா நடைபெறும்.
சிவப்பிரகாச அடிகளார் ஒரு பெரிய கல்விக் கடல் எண்ணற்ற கற்பனைகள் மிக்க நூல்கள் பல இயற்றியுள்ளார்; அதனால், ‘கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இத்தகைய அருட்கலைச் செல்வரின் திருக்கோயிலை வலம்வந்து வழிபட்டால் அறிவிலிகள் நல்லறிவு பெறுவர். கல்வியில் பின் தங்கியுள்ளவர்கள் நல்ல திறமை பெறுவர் - பேசாத பிறவி ஊமையரும் பேசுவர் - என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடத்தில் பரவலாக உள்ளது. அதனால், தொலைவிலுள்ள வெளியூர்களிலிருந்தும் மக்கள் பேசாத ஊமைப் பிள்ளைகளை அழைத்து வந்து நல்லாற்றுாரில் திங்கள் கணக்கில் தங்கிச் சிவப்பிரகாசர் கோயிலைப் பல சுற்றுக்கள் வலம்வந்து வழிபடச் செய்து அழைத்துப் போகின்றனர். இந்த வழிபாட்டால் தக்க பயன் கிடைப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்தில் உள்ளவர்களும் - இந்த விவரம் அறிந்தவர்களும் எங்கேனும் ஒர் ஊமைப் பிள்ளையைக் கண்டு விட்டால், அந்தப் பிள்ளையின் பெற்றோரைப் பார்த்து, ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமி கோயிலுக்கு அழைத்துப் போகக் கூடாதா?’ என்று கேட்டுச் சிவப் பிரகாச சுவாமி கோயிலை அறிமுகம் செய்து வைப்பது இன்றும் வழக்கத்திலுள்ளது. நம்பிக்கை ஒரு பெரிய மருத்துவம் அன்றோ?
வரலாறு
இத்தகு சிறப்பிற்குரிய சிவப்பிரகாசர் காஞ்சிபுரத்தில் வீரசைவ மரபில் தோன்றினார். தந்தையார் குமாரசாமி தேசிகர். தம்பியர் வேலையர், கருணைப் பிரகாசர் என்னும் இருவர். தங்கை ஞானாம்பிகை. தம்பியர் இருவரும் தமையனைப் போலவே புலவர்கள். சிவப்பிரகாசர் திருவண்ணாமலை போந்து குருதேவர் என்னும் ஆசானிடம் கல்வி பயின்றார். பின்னர்த் துறைமங்கலம் என்னும் ஊரடைந்து அண்ணாமலை ரெட்டியார் என்பார் அமைத்துத் தந்த அறப்பள்ளியில் (மடத்தில்) தங்கி அறிவுப்பணி புரிந்து வந்தார். பின் திருநெல்வேலி சென்று வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் ஆசானிடம் இலக்கணம் பயின்று தேர்ந்த புலவரானார்; தம் ஆசானை எதிர்த்த புலவரொருவருடன் திருச்செந்தூரில் போட்டியிட்டு, ‘செந்தில் நிரோட்டக யமக அந்தாதி’ என்னும் நூல் பாடி வெற்றி பெற்றார்.
பின் சிவப்பிரகாசர் ஆசானிடம் விடைபெற்றுக் கொண்டு வெங்கனூர் வந்தடைந்தார். அங்கே சில காலம் தங்கிப் பின் தில்லை போந்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சியை வழிபடப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். வழியில் சாந்தலிங்க சுவாமிகள் என்பவர் வாயிலாக, புதுச்சேரிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள பொம்மபுரம் எனப்படும் பொம்மைய பாளையம் என்னும் அழகிய ஊரில் எழுந்தருளி யிருந்த சிவஞான பாலைய தேசிகர் என்னும் அருளாசிரியரைப் பற்றி அறிந்து அவரையடைந்து வழிபட்டு அவரது அருளாதரவைப் பெற்றார்.
நல்லாற்றுார்
பொம்மபுர ஆதீன அடிகளார்க்கு மயிலத்திலும் நல்லாற்றுாரிலும் அறப்பள்ளிகள் உண்டு. சிவப்பிரகாசர் நல்லாற்றுாரில் வந்து தங்கினார். அவரது வாணாள் முடிவுற்றதும் இங்கேயே. சிவப்பிரகாசர் எங்கோ பிறந்து இடையில் எங்கெங்கோ தங்கியிருப்பினும், இறுதியில் நிலையாக வந்து தங்கி வாழ்ந்து முடிந்தது கெடில நாட்டு நல்லாற்றுார் ஆதலின், இவர் ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள்’ எனப் பெயர் வழங்கப் பெற்றார். ‘துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்’ என்னும் பெயர் மறைய, நல்லாற்றுருக்கு அந்தப் பெருமை கிடைத்தது. எத்தனையோ ஊர்கள் இவரது திருமேனியைத் தாங்கியிருப்பினும், அதனை நிலையாகத் தன்னிடத்தே அடக்கம் செய்துகொண்டு கோயில் கொண்டுள்ள பெருமையும் இந்த நல்லாற்றுாருக்கே கிடைத்தது.
சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்
பெரும் புலமைச் சிவப்பிரகாச அடிகளார் பல நூல்கள் இயற்றியுள்ளார். அவையாவன:
சோண சைலமாலை, செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை யலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்க பரிபாடை, நால்வர் நான்மணிமாலை, சத மணிமாலை, சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சு விடுதுது, சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு, சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ், சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம், சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி, கூவப் புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பழமலை யந்தாதி, பிட்சாடன நவமணிமாலை, பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பெரிய நாயகியம்மை நெடுவிருத்தம், இயேசு மத நிராகரணம், நன்னெறி, சிவநாம மகிமை, தலவெண்பா, இட்ட லிங்க அபிடேக மாலை, நெடுங்கழிநெடில், குறுங்கழிநெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சீகாளத்திப் புராணம் - இடைப்பகுதி முதலியனவாம்.
காலம்
சிவப்பிரகாச அடிகளாரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு எனச் சிலரால் கூறப்பட்டுள்ளது. இவர்தம் வாழ்நாளில், இத்தாலிநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து கிறித்துவம் பரப்பிய பெஸ்கி (Father Beschi) என்னும் வீரமாமுனிவருடன் சமயப் பிணக்குற்று ‘இயேசு மத நிராகரணம்’ என்னும் நூல் இயற்றி யிருப்பதாகத் தெரிகிறது. அந்த வீரமாமுனிவர் என்னும் வெள்ளைப் பாதிரியார் தமிழ் நாட்டில் கி.பி. 1710 முதல் 1747 வரை வாழ்ந்தார். எனவே, சிவப்பிரகாசரின் காலம், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்பது தெளிவு. இத்தனை பெரு நூல்கள் இயற்றிய கற்பனைக் களஞ்சியம் மொத்தம் வாழ்ந்தது முப்பத்திரண்டு ஆண்டுகள் தாம் என்பதை எண்ணும்போது உள்ளம் மிகவும் வேதனையுறுகிறது. இன்னும் பல்லாண்டுகள் இவர் வாழ்ந்திருப்பின், இன்னும் எத்தனையோ உயரிய நூல்கள் இயற்றியிருப்பாரே! வடலூர் வள்ளலார்
உலகில் கோடிக்கணக்கான மக்கள் தோன்றுகின்றனர் வாழ்கின்றனர் - மறைகின்றனர். அவர்களுள் தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாய்மொழிப்படி புகழோடு தோன்றி வாழ்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் மிகச் சிலரேயாவர். அனைத்துலகையும் ஆட்டிப் படைத்த அரசர்கள், மாமல்லர்கள், மாபெருஞ் செல்வர்கள், இன்ன பிறரும் வரலாற்று நூல்களில் பொறிக்கப்பட்ட்தோடு நின்று மறைந்து விடுகின்றனர். ஆனால், வள்ளல்கள், சமய குரவர்கள், புலவர்கள், புரட்சி எழுத்தாளர்கள் ஆகியோர் மட்டும் என்றும் மறைவதில்லை.
பாரி, குமணன், நோபெல், ராக்பெல்லர் முதலிய வள்ளல்கள் தாம் செய்த அறங்களாலும், புத்தர், ஏசு, முகமது நபி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமய குரவர்கள் தாம் நிறுவிய திருநெறிகளாலும், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், காளிதாசர், சேக்சுபியர், விக்தோரிகோ முதலிய புலவர்கள் தாம் படைத்த இலக்கியங்களாலும், சுப்பிரமணிய பாரதியார், ரூசோ போன்ற புரட்சி எழுத்தாளர்கள் தம் புரட்சிக் கருத்துக்களாலும் மக்கள் உள்ளங்களில் என்றும் நின்று நிலைத்துள்ளனர். மாபெரும் புகழ்ச்சிக்கும் வணக்கத்திற்கும் உரிய இத்தனை தரத்தாரின் இயல்புகளும் சிறப்புக்களும் ஒரு சேரப் பெற்றுத் திகழ்ந்தவர் வடலூர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளாராவார். ஆம்! இவர் ஒரு வள்ளலாகவும் சமய குரவராகவும் புலவராகவும் - புரட்சியாளராகவும் மிளிர்ந்தார்.
இத்தகு மாபெரும் பெரியார் இராமலிங்கர், தென்னார்க்காடு மாவட்டத்தில் தில்லைக்கு வடமேற்கே உள்ள மருதூர் என்னும் ஊரில், இராமையா பிள்ளை - சின்னம்மை என்பார்க்கு 5-10-1823ஆம் நாள் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த இவர் தமையனார் ஆதரவில் இருந்து வந்தார். இவர் பள்ளிப் படிப்பில் போதிய திறமை காட்டாததால் தமையனார் கடிந்து கொண்டதுமுண்டு. இவர் தமையனாருடன் சென்னையில் இருந்தபோது, சென்னை முத்தியாலுப் பேட்டையில் தமையனார் ஆற்றவிருந்த சொற்பொழிவிற்கு அவர் வரமுடியாமற் போகவே, அவருக்குப்பதில் இவர் சென்று சிறந்த முறையில் சொற்பொழிவாற்றினார். அதிலிருந்து இராமலிங்கர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது. பின்னர், இவர் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்து தங்கினார்.
இராமலிங்கர் பலரது வேண்டுகோளின்படி தனக்கோட்டி யம்மையார் என்பவரை மணந்து கொள்ளினும் புளியம் பழமும் ஒடும்போல் இல்லறத் துறவியாகவே இருந்து வந்தார்.
இராமலிங்கர் எல்லா வகை உயிரினங்களிடத்தும் பேரன்பும் பேரிரக்கமும் கொண்டிருந்தார். உலகத்தை, சாதி - சமய வேறுபாடற்ற ஒன்றிய ஒரே சமுதாயமாக மாற்ற வேண்டுமென்று கனவு கண்டார். தம் கொள்கைகளை நிறைவேற்ற வடலூரில் ‘சத்திய ஞானசபை நிறுவினார்; ‘சத்திய தருமச்சாலை அமைத்தார்; ‘சமரச சன்மார்க்க சங்கம்’ ஒன்றும் உருவாக்கினார்.
வடலூர் கடலூர் வட்டத்தில், கடலூர் - விருத்தாசலம் போகும் வழியில் உள்ளது. அங்கே இராமலிங்க அடிகளாரால் அமைக்கப்பட்டுள்ள ‘சத்திய ஞானசபை’ தாமரை வடிவில் எண்கோணமுடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதிலே, அருளொளி வடிவினனான இறைவனை, ஏழு திரைகள் விலக்கி ஒளிக்காட்சியாயக் காணும் ‘ஒளிவழிபாடு நடைபெறுகிறது. பொதுவாக எல்லாத் திங்களிலும் வரும் பூச நாளிலும் - சிறப்பாகத் தைப்பூச நாளிலும் அங்கே திருவிழா நடைபெறும். தைப்பூசத்தில் நடைபெறுவதோ மிகப் பெரிய விழாவாகும்.
வடலூரில் சத்திய ஞானசபை அமைத்த வள்ளலார், அதற்கு அண்மையில் தெற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள மேட்டுக் குப்பம் என்னும் ஊரிலேயே தங்கியிருந்தார். அங்கே அவர் தங்கியிருந்த மனைக்குச் சித்திவளாகம் என்பது பெயர். அஃது எளிய குடில் வடிவில் இன்றும் திகழ்கிறது. இராமலிங்க அடிகளார் தம் வாணாளின் இறுதியில் (1874ஆம் ஆண்டு) ஒரு நாள் சித்தி வளாகத்தின் ஒர் அறைக்குள் புகுந்து காப்பிட்டுக் கொண்டதாகவும், பின்னர் வெளிவரவேயில்லை என்பதாகவும் சொல்லப்படுகிறது. மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம் கண்டீர் என்று சாகாக் கலையை உலகிற்கு அறிவுறுத்திய அடிகளார் சாகாப் பெருநிலை எய்தினார்.
திருவருட்பா
இராமலிங்க அடிகளாரின் மணாக்கருள் ஒருவராய தொழுவூர் வேலாயுத முதலியார் அடிகளார் அருளியுள்ள பாடல்களையெல்லாம் ‘திருவருட்பா’ என்னும் பெயரில் தொகுத்துள்ளார். திருவருட்பா என்பதற்கு, இறைவன் திருவருளால் எழுந்த பாடல் - இறைவன் திருவருளைப் பற்றிய பாடல் என்றெல்லாம் பொருள் விளக்கம் கூறப்படுகிறது.
திருவருட்பா ஆறு திருமுறைகளாகப் (Volumes) பகுக்கப்பட்டுள்ளது. அருட்பாவில் இயல்தமிழ்ப் பாக்களோடு கீர்த்தனம், கண்ணி, கும்மி முதலிய இசைத்தமிழ்ப் பாக்களும் உள்ளன. பாடல்களேயன்றி, சீவகாருணிய ஒழுக்கம், மனு முறை கண்ட வாசகம் முதலிய இனிய உரை நடைகளும் அடிகளார் எழுதியுள்ளார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டுமானால், இராமலிங்க அடிகளாரையும் அவரது அருட்பாவையும் பற்றி அறியாத தமிழர் உலகில் இல்லை எனலாம்.
ஞானியார் சுவாமிகள்
இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் தமிழ் நாட்டில் “ஞானியார் சுவாமிகள்” என்றால், சிறுவர் முதல் முதியோர் வரை - கற்றவர் கல்லாதவர், தொழிலாளர், அரசாங்க உயர் அலுவலர், ஏழையர், செல்வர் முதலிய பலரும் அறிவர். அருள்மிகு சமயத் தலைவராயும், கற்றுத் துறைபோகிய பெரும் புலவராயும் தலைசிறந்த பேச்சாளராயும் திகழ்ந்த திருவருட் செல்வர் ஞானியார் அடிகள். அவர்களிடம் முறையே பாடங் கேட்டுப் பெரும் புலவரானவர்கள் நூற்றுக்கணக்கானவர். அடிகளாரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் புலமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர். அவர்தம் அருளுரைகளைச் செவிமடுத்து நல்லறமும் நல்லொழுக்கமும் உடையவராய்த் திகழ்ந்தவர்கள் நூறாயிரக் கணக்கானவர்கள்.
தமிழிலும் வடமொழியிலும் மிக்க புலமையும் ஆங்கிலத்தில் போதிய திறமையும் பெற்றுத் திகழ்ந்தவர் அடிகளார். கேட்பவர் உள்ளங்களைத் தம்பால் ஈர்த்துப் பிணித்து, நான்கு மணிநேரம் - ஐந்து மணிநேரம் சேர்ந்தாற்போல் தொடர்ந்து சொற்பொழிவாற்றும் பேராற்றல் படைத்தவர் அடிகளார். பெருந் தலைவர்கள் - பெரும்புலவர்கள் பலரும் அடிகளாரின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருநீறு பெற்றுப் பெருமையுறுவர். தமிழ்நாடு முழுவதும் அன்பராயினார் பலர், எங்கள் ஊருக்கு வரவேண்டும் - எங்கள் ஊருக்கு வரவேண்டும் என வேண்டி அன்புடன் அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றச் செய்து கேட்டு மகிழ்வர். அடிகளாரின் தலைமையில் பேசாத பெரும் புலவர்கள் இல்லை எனலாம்; அடிகளார் தலைமை தாங்கிப் பேசாத பெருங் கழகங்களும் இல்லை எனலாம்.
அடிகளார் இட்ட பணிகளை அன்புடன் செய்வதைத் தம் வாழ்நாளில் பெற்ற பெரும் பேறாகக் கருதியோர் பலர். அடிகளார்க்குத் தம் அன்புக் காணிக்கையாகப் பழ வகைகளைக் கூடை கூடையாகக் கொண்டுவந்து குவித்தவர் பலர். ஒருவரோ டொருவர் போட்டி போட்டுக் கொண்டு தாமே வலிந்து சென்று அடிகளார்க்கு விசிறி விசிறுவதைத் தம் பிறவிப் பெரும் பயனாகக் கருதி இறுமாந்தவர் பலர். மணிக் கணக்கில் அடிகளாரின் திருமுன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்து உரையாடி உவகைக் கடலில் திளைத்துச் செம்மாந்தவர் பலர்.
இத்தகு பெருஞ் சிறப்புகட்குரிய பெருமகனார் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே வாழ்ந்தார்?
பிறப்பு வளர்ப்பு
கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருநாகேசுரம் என்னும் திருப்பதியில், சீமுக ஆண்டு வைகாசித் திங்கள் நான்காம் நாள் (17-5-1873), வீரசைவ மரபினரான அண்ணாமலை என்னும் ஐயாவுக்கும் பார்வதி என்னும் அம்மையாருக்கும் திருமகனாராக அடிகளார் தோன்றினார். பெற்றோர் இட்ட பிள்ளைமைப் பெயர் பழநி என்பது. காவிரிக்கரையில் பிறந்த பழநி, பிறந்த ஆறு திங்களுக்குள் கெடிலக்கரைக்கு வந்துவிட்டார்.
கெடிலம் சுற்றி வளைத்துக்கொண்டு ஒடும் திருப்பாதிரிப் புலியூர் நகர் பற்றி முன்பே பேசப்பட்டுள்ளது. அந் நகரில் கோயில் தெருவில் ‘ஞானியார் மடாலயம்’ என்னும் ‘அருள்நெறியகம்’ ஒன்று உள்ளது. அவ் வருள்நெறியகத்தின் தலைவராய் (மடாதிபதியாய்) அப்போது ‘சிவ சண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் அடிகளார் வீற்றிருந்தார். இவர் நான்காம் பட்டத்து அடிகளாராவார். இவருக்கு முன்பு அருள் நெறியகத் தலைவராய் மூவர் வீற்றிருந்தனர். முதல் பட்டத்து அடிகளார் திருக்கோவலூரில் அருள்நெறியகம் அமைத்து அருளாட்சி புரிந்து வந்தார். அவர்கட்கு ‘ஆறுமுக சுவாமிகள்’ என்பது அருள்நெறிப் பட்டப் பெயர். திருக்கோவலூரிலுள்ள தலைமை நிலையத்திற்கு, செஞ்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், ஆரணி, திருப்பாதிரிப் புலியூர் முதலிய ஊர்களில் கிளை நிலையங்கள் ஏற்பட்டிருந்தன. அடிகளார் எல்லா ஊர் நிலையங்கட்கும் சென்று தங்கி வரினும், திருக்கோவலூரிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார். அவர்கள் இறுதி யெய்தியதும் அங்கேயே.
ஆறுமுக சுவாமிகட்குப் பின், இரண்டாம் முறை பட்டத்து அடிகளார் பெரும்பாலும் திருப்பாதிரிப் புலியூர் அருள் நெறியகத்திலேயே தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரையும் அடுத்தடுத்துப் பட்டத்திற்கு வந்த அடிகளார் அனைவரும் திருப்பாதிரிப் புலியூர் நிலையத்தையே தலைமை நிலையமாகக் கொண்டுவிட்டனர். இருப்பினும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார்மடம், ‘திருக்கோவலூர் ஆதீனம்’ என்றே இன்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
திருப்பாதிரிப் புலியூரில் அருளாட்சி புரிந்து வந்த நான்காம் பட்டத்து அடிகளார்க்கு, திருநாகேசுரத்தில் பிறந்த பழநியின் குடும்பத்தினர் உறவுமுறை உடையவர்கள். எனவே, அடிகளார், பழநியின் தந்தையைக் குடும்பத்துடன் பாதிரிப்புலியூருக்கு வந்து அருள் நெறியகத்தின் செயலாளர் பொறுப்பை ஏற்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவரும் ஆறு திங்களும் நிரம்பாத பச்சிளங் குழந்தை பழநியுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து பாதிரிப்புலியூரில் குடியேறினார்.
பட்டம் சூடுதல்
குழந்தை பழநி வளர்பிறையென வளர்ந்து வந்தது. தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறுவர் பழநிக்குக் கற்பிக்கப்பட்டன. 1889 ஆம் ஆண்டில் இளைஞர் பழநி பிரீ - மெட்ரிகுலேழ்சன் (Pre - Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது நான்காம் பட்டத்து அடிகள், தமக்கு உடல்நிலை மாறுபாடுற்று இறுதிநிலை அணுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்; பள்ளிப் படிப்பை நிறுத்திப் பழநிக்கு, விரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் மூன்றாம் நாள் (20-11-1889) துறவு (சந்நியாசம்) ஈந்தார்; ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் பட்டம் சூட்டினார்; ‘சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் பட்டப் பெயரும் ஈந்தார். நான்காம் பட்டத்து அடிகளார் இறையடி யெய்த, பழநி தமது பதினேழாவது வயதில் ஐந்தாம் பட்டத்து அடிகளாராகப் பதவியேற்றார்.
இளமையிலேயே துறவறமும் அருளாசிரியத் தலைமையும் ஏற்ற ஐந்தாம் முறை அடிகளார், மடத்துச் சோற்றை வளமாக உண்டுகொண்டு வறிதே தசை மூட்டையை வளர்த்துக் கொண்டிருக்கவில்லை; தக்க ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு தமிழ்மொழியையும் வடமொழியையும் பரந்த அளவில் பயின்று பெரும்புலமை பெற்றார்; தமது நேரம் முழுவதையும் நூல் ஆராய்ச்சியிலேயே ஈடுபடுத்தினார்.
அடிகளாரின் அருட்பணிகள்
கடல் நீரை முகந்து கறுத்துத் திரண்ட முகில்கள் பெருமழை பொழிவது போன்று, சிறக்கக் கற்றுத் தெளிந்த அடிகளார் கருத்துச் செறிந்த சொல் மழை பொழியத் தொடங்கினார். ஒரு மணிநேரம் பேசினாலே பெருமூச் செறிந்து மின்விசிறியைவிட்டு அகலாதிருக்கும் பெருமக்கள் நிறைந்த இவ்வுலகில், அடிகளார் ஒரே நாளில் ஒரே மூச்சாக ஐந்து மணிநேரம் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவது வழக்கம். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவார். யார் வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றலாம் - ஆனால், கேட்பதற்கு ஆட்கள் வேண்டுமே! மக்கள் ஐந்து மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்பதென்றால், மிகவும் கவர்ச்சியான, சுவையான பயன்மிக்க கருத்துக்களை வரையாது வாரி வழங்க வேண்டுமல்லவா? அதைத்தான் அடிகளார் செய்து வந்தார்.
ஒரு நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி இரவு பத்து மணி வரையும் சொற்பொழிவாற்றுவதோடு அடிகளாரின் பணி அமைந்துவிட்டதா? இல்லையில்லை. நாடோறும் முற்பகலிலும் பிற்பகலிலும் இடையறாது மாறி மாறி வரும் மாணாக்கர்கட்கு மணிக் கணக்கில் பாடம் கற்பிப்பதில் அடிகளார் பொழுதைச் செலவிடுவார். மாணாக்கர் குழுவில் எளிய இளைஞர்களும் இருப்பர்; அரசாங்க உயர் அலுவலர்களும் இருப்பர். சொற்பொழிவாற்றும் நேரம் போக பாடங் கற்பிக்கும் நேரம் போக - எஞ்சிய நேரங்களிலும் இடையறாது பலர் வந்து அடிகளாருடன் உரையாடிக் கொண்டிருப்பர். ஒவ்வோர் உரையாடலும் ஒரு பாடம் போலவே - ஒரு சொற்பொழிவு போலவே சுவை மிக்கதாய் - பயன் நிரம்பியதாயிருக்கும். தமிழை அடிகளாரின் திருவாயிலிருந்து கேட்க வேண்டும். உரையாடும் போதும், வழுவற்ற கொச்சையில்லாத செவ்விய இலக்கண நடையிலேயே அடிகளார். பேசுவார். இத்தகு பயன் செறிந்த உரையாடல்களும் பாடங்களும் சொற்பொழிவுகளும் திருப்பாதிரிப் புலியூரில் மட்டுமன்று - அடிகளார் செல்லும் ஊர்களில் எல்லாம் நடக்கும். ஒராண்டல்ல - ஈராண்டல்ல - தமது வாணாள் முழுதும் அடிகளார் இந்த அருட்பணியை ஆற்றிவந்தார்கள்.
சைவமும் தமிழும் தழைக்க அடிகளார் பல ஊர்களில் தமது தலைமையில் பல கழகங்கள் தோற்றுவித்துள்ளார்கள். 1900ஆம் ஆண்டு மடத்தில் ‘வாணி விலாசசபை’ அமைத்தார்கள்; பாலவநத்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவர் வாயிலாக மதுரையில் 24-5-1901ஆம் நாள் தமிழ்ச் சங்கம் தோன்றச் செய்தார்கள்; சென்னை சைவசித்தாந்த மகா சமாசம் 7-7-1905ஆம் நாள் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்டது. திருப்பாதிரிப் புலியூர் உட்படப் பல விடங்களில் அடிகளார் மாநாடு நடத்தினார்கள்; பல கழகங்களின் ஆண்டு விழாக்களுக்கும் வெள்ளி விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கினார்கள். இவற்றுள், சென்னை சைவசித்தாந்த சமாசத்தின் மாநாடுகள், திருப்பாதிரிப் புலியூர்ச் சைவப் பெரியார் மாநாடு, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளி விழா, புதுவைக் கலைமகள் கழக விழா - கோவல் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்கள் முதலியவை மிகவும் குறிப்பிடத் தக்கவை. புலியூரிலும் பிறவூர்களிலும் அடிகளாரின் தலைமையிலும் திருமுன்பும் சொற்பொழிவாற்றி அடிகளாரோடு தொடர்பு கொண்டு பெருமை பெற்ற பெருமக்கள் பலராவர்.
இப்படியொரு கல்விக் கடல் - அறிவுக் கதிர் - குணக் குன்று தன்னிடத்தே திகழக் கெடிலக்கரை நாடு மிகவும் கொடுத்து வைத்ததுதான்! கெடிலக்கரைக்குப் பெரும் புகழ் ஈட்டித்தந்த ஞானியார் அடிகளார் 1-2-1942இல் 69ஆம் வயதில் இறைவனடி எய்தினார்கள். அடிகளாரின் திருவுருவத் தோற்றத்தை முன் படத்திலும் முருகன் கோயிலுடன் கூடிய அவர்தம் திருமடத்தின் ஒரு பகுதியைப் பின்வரும் படத்திலும் காணலாம்.
பல்வேறு பெருமக்கள்
இதுகாறும் இப் பகுதியில், தன்னிடம் பிறந்தும் - வளர்ந்தும் - வந்து நிலையாகத் தங்கி வாழ்ந்தும் அருட்பணி புரிந்த பெருமக்களால் திருமுனைப்பாடி நாடு பெற்ற பெரும்பேறு விளக்கப்பட்டது. இஃதன்றி, தன்பால் அவ்வப்போது வந்து சென்ற பெருமக்கள் பலரால் திருமுனைப்பாடி நாடு பெற்றுள்ள பெருமைக்கும் குறைவில்லை. திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பட்டினத்தார் முதலிய பெருமக்கள் பலர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பல ஊர்கட்கும் வந்தருளி இறைவனை வழிபட்டுப் பாடல்கள் பல பாடி நாட்டிற்குப் பெருமையளித்துள்ளனர். சமயப் பெரியார்களாகிய இவர்களன்றி, திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்த புலவர் பெருமக்கள் பலரும் அண்டைப் பகுதிகளிலிருந்து வந்த புலவர் பெருமக்கள் பலரும் திருமுனைப்பாடி நாட்டு ஊர்களின் மேல் பல இலக்கியங்கள் இயற்றியருளி நாட்டின் புகழைப் பெருக்கியுள்ளனர். இவர்களேயன்றி, திருமுனைப்பாடி நாட்டிற்குப் பெருமை தேடித்தந்ததில் பல்வேறு கலைஞர்கட்கும் பங்கு உண்டு. அனைவருடைய புகழும் திருமுனைப்பாடி நாட்டின் புகழுடன் ஒருசேர வாழ்க!
* * *
↑ *பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - 146.
↑ *தென்னிந்தி சாசனங்கள் பக்கம் 29.
↑ *சுந்தரர் தேவாரம் - திருத்தொண்டைத் தொகை - 9.
↑ *தனிப்பாடல் திரட்டு, tதனிப்பாடல் திரட்டு - பொற்களந்தைப் படிக்கா சுத் தம்பிரான் பாடல்.
14. கெடிலக்கரை இலக்கியங்கள்
‘கெடிலக்கரை இலக்கியங்கள்’ என்ற தலைப்பில், கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டு ஊர்கள், கோயில்கள், அரசர்கள், தலைவர்கள், மக்கள் பற்றிய இலக்கியங்கள் அடங்கும், பிற நாட்டில் பிறந்தவர்கள் திருமுனைப்பாடி நாட்டுக் கோயில்களையும் அரசர்களையும் பாடியுள்ள பாடல்களும் இத் தலைப்பில் அடங்கும். அஃதாவது, திருமுனைப்பாடி நாட்டு உயர்திணைப் பொருள் - அஃறிணைப் பொருள்களைப் பற்றிய பாடல் பகுதிகள் யாவும் இதனுள் அடங்கும். இந் நாட்டுப் பகுதியைப் பற்றிச் சங்க காலத் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டுள்ள இன்றியமையாத சில இலக்கியங்களைத் தெரிந்த வரையில் - கிடைத்துள்ள வரையில் காண்போம்.
சங்க கால இலக்கியங்கள்
கெடிலம் பாயும் திருமுனைப்பாடி நாட்டைப் பற்றிச் சங்க நூல்களில் அறியக் கிடைத்துள்ள செய்திகள், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு அரசோச்சிய மலையமான் மரபினரைப் பற்றிய செய்திகளே. மலையமான் மரபினருள்ளும், மலையமான் திருமுடிக்காரி, அவன் மக்கள், அவன் தம்பி மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் மட்டுமே ஓரளவு தெரிய வந்துள்ளன. சங்க நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை என்னும் நூல்களில் மலையமான் மரபினர் இடம் பெற்றுள்ளனர். இவற்றுள், முதல் நான்கும் ஒருவரைப் பற்றி ஒரே புலவரால் பாடப்பட்ட நூல்கள் அல்ல; மன்னர் பலரைப் புலவர் பலர் பாடிய தனித்தனிப் பாடல்கள் பலவற்றின் தொகுப்பே இவை. எனவே, மலையமான் மரபினரைப் பற்றிய ஒவ்வொரு தனிப்பாடலும், கெடில நாட்டுத் தொடர்புடைய ஒவ்வொரு தனி இலக்கியம் போன்றதாம். இனி, ஒவ்வொருவரையும் பற்றிய பாடற் குறிப்புக்கள் வருமாறு :
மலையமான் திருமுடிக்காரி
நற்றிணையில், 77, 100, 120, 291, 320 ஆம் பாடல்கள் மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள், 77, 291, 320ஆம் பாடல்கள் கபிலராலும், 100ஆம் பாடல் பரணராலும் பாடப்பட்டவை, 120ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை.
குறுந்தொகையில், 208, 312ஆம் பாடல்கள் இம் மன்னனைப் பற்றிப் பேசுகின்றன. இவை கபிலரால் பாடப்பட்டவை.
அகநானூற்றில், அம்மூவனாரால் இயற்றப்பெற்ற 35ஆம் பாடலிலும், கல்லாடனாரால் இயற்றப்பெற்ற 209ஆம் பாடலிலும் திருமுடிக்காரியைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.
புறநானூற்றில், கபிலரால் பாடப்பெற்ற 121, 122, 123, 124ஆம் பாடல்களும், பேரி சாத்தனாரால் பாடப்பெற்ற 125ஆம் பாடலும், மாறோக்கத்து நப்பசலையாரால் பாடப்பெற்ற 126ஆம் பாடலும், பெருஞ் சித்திரனாரால் இயற்றப்பெற்ற 158ஆம் பாடலும் திருமுடிக்காரியைப் பற்றிய செய்திகளைத் - தெரிவிக்கின்றன.
மேலே நான்கு நூல்களிலும் குறிப்பிடப்பட்டவற்றுள், பல பாடல்கள் முற்றிலும் திருமுடிக்காரியைப் பற்றியவை; சில பாடல்கள் இடையிடையே அவனை எடுத்தாண்டு ஒரு சிறிது அவனைப் பற்றிக் கூறுபவை.
மற்றும், ஓய்மானாட்டு நல்லியக் கோடனைப் பற்றி இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியுள்ள சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூலிலும் இடையிடையே (வரிகள் : 91 - 95; 107 - 110) காரியின் படை வீரமும் கொடை வீரமும் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன.
திருக்கோவலூர்
மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர், அகநானூற்றில் அம்மூவனார் பாடியுள்ள 35ஆம் பாடலிலும், புறநானூற்றில் ஒளவையார் பாடியுள்ள 99 ஆம் பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளூர்
மலையமான்களின் இன்றியமையா இடங்களுள் (முக்கியக் கேந்திரங்களுள்) முள்ளூர் என்னும் ஊரும் ஒன்று. அங்கு மலையும் உண்டு, இந்த முள்ளூர், நற்றிணையில் ஆசிரியர் பெயர் தெரியாத 170 ஆம் பாடலிலும் கபிலர் பாடிய 291ஆம் பாடலிலும், குறுந்தொகையில் கபிலர் பாடிய 312 ஆம் பாடலிலும், அகநானூற்றில் கல்லாடனார் இயற்றிய 209ஆம் பாடலிலும் புறநானூற்றில் கபிலர் பாடிய 123ஆம் பாடலிலும் மாறோக்கத்து நப்பசலையார் இயற்றிய 126, 174 ஆம் பாடல்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரியும் கபிலரும்
திருமுடிக்காரியைப் பற்றிக் கபிலர் என்னும் புலவர்தாம் மிகுதியாகப் பாடியிருக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நூல்களில் ஒன்பது பாடல்களில் கபிலர் காரியைப் பாடியுள்ளார். கபிலர் முதலிய புலவர்களால் காரியைப் பற்றிச் சங்க நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள், இந் நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில் ‘மலையமான் திருமுடிக்காரி’ என்னும் தலைப்பில் முன்பே தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளனவாதலின், அவற்றை மீண்டும் ஈண்டு விரிக்க வேண்டா. இருப்பினும், காரியின் வரையாத வள்ளல் தன்மையின் உயர் எல்லையைக் கபிலர் புகழ்ந்து பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்கள் (121, 122, 123, 124) நான்கினை மட்டும் முறையே ஈண்டுக் காண்போம்:
“ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.”
“கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
அழல்புறந் தரூஉம் அந்தண ரதுவே
வியாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉம் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலைநீ பெருமிதத் தையே.”
“நாட்கள் ளுண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.”
“நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே.”
மேலுள்ள நான்கு புறநானூற்றுப் பாடல்களின் சுருக்கமான கருத்துக்கள் முறையே வருமாறு:
“திருமுடிக்காரியே! உன்னிடம் பரிசு பெறப் பலர் வருகின்றனர்; அவருள் சிறப்பிற் குறைந்தவரும் உளர், மிக்க வரும் உளர். நீயோ, அவரவர் தகுதி யறியாது அனைவருக்கும் ஒரே மாதிரியாக நிரம்ப வழங்குகின்றாய். அத்துணைக் கொடை மடம் உடையவனாக இருக்கின்றாயே நீ!”
“காரி மன்னா! உன் உடைமைகளையெல்லாம் மற்றவர்க்கு வாரி வழங்கிவிட்டாய்! கற்பிற் சிறந்த உன் மனைவியைத் தவிர உனக்கென வேறு ஓர் உடைமையும் இல்லையே!”
“உலகில் மற்ற மன்னர்கள் மதுவுண்டு மயங்கி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் பரிசிலர்க்கு ஒரு தேரை எளிதாகக் கொடுக்கக் கூடும். ஆனால், மகிழ்ச்சியற்ற கடுமையான சூழ்நிலையிலும் மலையமான் காரி பரிசிலர்க்கு வழங்கியுள்ள தேர்களின் எண்ணிக்கை, அவனது முள்ளூர் மலையுச்சியில் பெய்யும் மழைத் துளிகளின் எண்ணிக்கையினும் மிகுதியாம்.
“பரிசில் வேண்டுவோர் நல்ல நாள் அல்லாத கெட்ட நாளில் புறப்பட்டு, வழியில் பறவைகள் கெட்ட நிமித்தம் (கெட்ட சகுனம்) காட்டியும் அதையும் மீறிச் சென்று, மலையமான் மகிழ்ச்சியற்றுத் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிய சூழ்நிலையில் அவனை அடைந்து, பேசத் தகாத பொருத்தமற்ற பேச்சுக்களை அவனிடம் பேசினும், அவன் அவர்களை வறிதே அனுப்பாமல், அவர்க்கு நிரம்பப் பரிசு வழங்கி அனுப்புவான்."
இப் பாடற் கருத்துக்களை எண்ணிப் பார்க்குங்கால் எத்துணை இன்பம் ஏற்படுகிறது! உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சிகளைக் கிளறும் இந்த இலக்கியச் சுவை நயத்தை என்னென்பது! இங்கே காரியின் கொடை மடத்தைப் புகழ்வதா! அல்லது கபிலரின் இலக்கியத் திறனைப் போற்றுவதா! அல்லது கெடிலக்கரை நாகரிகத்தைப் பாராட்டுவதா!
மலையமான் மக்கள்
‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது’ என்னும் அடிக் குறிப்புடைய பாடல் (46) ஒன்று புறநானூற்றில் உள்ளது. சோழன் கிள்ளி வளவனிடமிருந்து புலவர் கோவூர்கிழாரால் காப்பாற்றப்பட்ட சிறார்கள் மலையமான் திருமுடிக்காரியின் மக்களாகத்தான் இருக்க வேண்டும். இப் பாடலும், இப் பாடல் பற்றிய கருத்தும் முன்னர்க் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது காண்க. (பக்கம் : 141-142)
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ள 174ஆம் பாடலில் இம் மன்னனைப்பற்றி அறியலாம். இவனைப்பற்றி முன்னர்க் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில், ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்’ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டிருப்பது காண்க (பக்கம் : 143).
மூவர் தமிழ்
கெடிலக்கரைப் பகுதிகளோடு தொடர்புடையனவாகக் கிடைத்திருக்கும் நூல்களுக்குள் சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, [1]ஔவையாரால் ‘மூவர் தமிழ்’ எனச் சிறப்பிக்கப்பெற்றுள்ள அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரங்களை முறையே நிறுத்தலாம். தேவாரம் எனப்படுவது ஒரு பொருள் பற்றிய ஒரு தனி நூல் அன்று. தேவார ஆசிரியர் ஒவ்வொருவரும் இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள ஊர்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஒவ்வோர் ஊர்மேலும் பதிகம் பாடினர். பின்னர் இப் பதிகங்கள், அகநானூறு, புறநானூறு முதலிய சங்கத் தொகை நூல்களைப்போல ஒன்றாகத் தொகுக்கப் பெற்றுத் தேவாரம் என்னும் பொதுப் பெயரில் மிளிர்கின்றன. எனவே, திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டு ஊர்கள் மேல் பாடப் பெற்றுள்ள தேவாரப் பதிகங்களைக் கெடிலக்கரை இலக்கியங்களாக நாம் கொள்ளலாம். மற்றும், இப்போது தேவாரங்களை அச்சிட்டிருப்பவர்கள் நாடு வாரியாகப் பதிப்பித்திருக்கிறார்கள். நடு நாட்டுப் பதிகங்கள் யாவும் ஒருசேரத் தொகுக்கப் பெற்றுத் தனியிடம் பெற்றுள்ளன. மூவர் தேவாரங்களிலும் உள்ள நடு நாட்டுப் பதிகங்கள் கெடிலக்கரை இலக்கியங்களே. இவற்றுள், காலத்தால் முற்பட்ட அப்பர் தேவாரப் பதிகங்கள் முதலில் வருமாறு:
அப்பர் தேவாரம்
நடு நாட்டில் அப்பர் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப் பெயர்களும், அவற்றிற்கு நேரே அவ்வவ்வூர்க்கு உரிய மொத்தப் பதிக எண்ணிக்கையும், மொத்தப் பாடல் எண்ணிக்கையும், அவற்றையடுத்துப் பதிகமும் பாடலும் இத்தனையாவது திருமுறையைச் சேர்ந்தவை எனத் திருமுறை எண்ணும் முறையே கீழே தரப்படும். அப்பர் தேவாரம் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டிருத்தல் ஈண்டு நினைவுகூரத்தக்கது.
ஊர்
மொத்தப் பதிகம் மொத்தப் பாடல் திருமுறை எண்
திருவதிகை 16 158 4, 5, 6
திருப்பாதிரிப் புலியூர் 1 10 4
திருவாமாத்துர் 2 21 5, 6
திருமுண்டீச்சுரம் (கிராமம்) 1 9 6
திருக்கோவலூர் (வீரட்டம்) 1 10 4
திருவண்ணாமலை 3 30 4, 5
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 1 10 6
திருத்துங்கானை மாடம் (பெண்ணாகடம்) 1 3 4
நெல்வாயில் அரத்துறை 1 10 5
இந்த ஊர்களேயன்றி, நடு நாட்டில் இன்னும் பல ஊர்களில் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் பாடியுள்ளார்; அவருடைய பதிகங்கள் பல கிடைக்கவில்லை என்ற செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் பதிகங்களிலும் சில பாடல்கள் கிடைக்கவில்லை. திருவதிகைப் பதிகங்களில் எட்டுப் பாடல்களும், திருமுண்டிச்சுரம் பதிகத்தில் ஒரு பாடலும், திருத்தூங்கானை மாடம் பதிகத்தில் ஏழு பாடல்களும் கிடைக்கவில்லை. வடார்க்காடு மாவட்டத்தில் பல பகுதிகள் தொண்டை நாட்டைச் சார்ந்தன வெனினும் திருவண்ணாமலை திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டைச் சேர்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்பட்டு வந்துள்ளது. இப்போது வடார்க் காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருவண்ணாமலை வட்டம் முன்பு ஒரு கால் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் இருந்தது என்பதும் ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது. இதனால்தான் அறிஞர்கள் திருவண்ணாமலைத் தேவாரத்தை நடு நாட்டுப் பதிகங்களுள் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களேயன்றி, நடு நாட்டிலுள்ள திருத்தினைநகர், திருமாணிகுழி, திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்கட்கும் திருநாவுக்கரசர் சென்று இறைவனை வழிபட்டதாகப் பெரியபுராணத்தில் சேக்கிழார் இதரிவித்துள்ளார். அவ்வூர்களின் பதிகங்கள் அகப்படவில்லை. அவர் பிறந்த திருவாமூர்ப் பதிகமே கிடைக்கவில்லையே! நாவுக்கரசர் மொத்தம் பாடியிருப்பவை இவ்வுளவு - இப்போது கிடைத்திருப்பவை இவ்வளவு என முன் ஓரிடத்தில் கூறியிருப்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
மற்றும், நடு நாட்டில் கடலூர் வட்டத்திலுள்ள ‘நல்லாற்றுார்’ என்னும் ஊருக்கும் அப்பர் பெருமான் சென்று வழிபட்டுள்ளார் என்னும் குறிப்பை, அவரது ‘அடைவுத் திருத்தாண்டகம்’ என்னும் பதிகத்திலுள்ள பின்வரும் பாடலால் அறியலாம்:
“பிறையூரும் சடைமுடியெம் பெருமானாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றுாரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஒத்தூரும் ஊற்றத்தூரு
மளப்பூரோ மாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோமூர்தானும்
துடையூரும் தொழவிடர்கள் தொடராவன்றே”
இந்த நல்லாற்றூர் மேலும் நாவுக்கரசர் முழுப் பதிகம் பாடியிருக்கக் கூடும். இப்படியாகத் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களுள் சென்றன போக நின்றனவாக உள்ளவை, கெடிலக்கரை இலக்கியங்களுள் சங்க இலக்கியப் பாடல்கட்கு அடுத்தபடி பலவகையிலும் முதன்மை உடையனவாகும். அப்பர் தேவாரத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியும் நடுப்பகுதியுமாகும்.
நாவுக்கரசர் நடு நாட்டில் பாடியிருப்பனவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களின் பதிகங்களேயன்றி, அவர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதும் சமணர்கள் அவரைப் பல்லவ மன்னனிடம் வருமாறு அழைத்தபோது அவர் அஞ்சாது பாடியதாகக் கூறப்படும் “நாமார்க்கும் குடியல்லோம்” என்று தொடங்கும் பதிகமும், அவரை நீற்றறையில் இட்டபோது பாடியதாகக் கருதப்படும் “மாசில் வீணையும்” என்று தொடங்கும் பதிகமும், அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டபோது பாடியதாகச் சொல்லப்படும் “சொற்றுணை வேதியன்” என்று தொடங்கும் பதிகமும் இன்ன சிலவும் அப்பர் அடிகள் கெடில நாட்டில் இருந்துகொண்டு பாடியனவேயாம்.
சம்பந்தர் தேவாரம்
நடு நாட்டில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப்பெயர்களும், அவ்வவ்வூர்க்குரிய மொத்தப் பதிகங்களும் மொத்தப் பாடல்களும், திருமுறை எண்ணும் முறையே கீழே தரப்படும். சம்பந்தர் தேவாரம் 1, 2, 3ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டிருத்தல் நினைவுகொள்ளத்தக்கது.
ஊர் மொத்தப் பதிகம் மொத்தப் பாடல் திருமுறை எண்
திருவெருக்கத்தம் புலியூர் 1 10 1
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 7 72 1, 2, 3
திருத்துங்கானை மாடம் (பெண்ணாகடம்) 1 11 1
நெல்வாயில் அரத்துறை 1 11 2
திருச்சோபுரம் (தியாகவல்லி) 1 11 1
திருமாணி குழி 1 11 3
திருப்பாதிரிப் புலியூர் 1 11 2
வடுகூர் (திருவாண்டார் கோயில்) 1 11 1
திருவதிகை 1 11 1
திருவாமாத்துர் 2 22 2
திருநெல்வெண்ணெய் 1 11 3
திருக்கோவலூர் (வீரட்டம்) 1 11 2
அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்) 1 11 2
திருவண்ணாமலை 2 22 1
திருப்புறவார் பனங்காட்டுர் (பனையபுரம்) 1 11 2
திருவக்கரை 1 11 3
இரும்பை மாகாளம் 1 11 2
அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) 1 10 2
இந்த ஊர்களேயன்றித் திருத்தினை நகர் முதலிய நடுநாட்டு ஊர்கட்கும் சம்பந்தர் சென்று வழிபட்டதாகப் பெரிய புராணத்தால் தெரிகிறது. ஆனால், திருத்தினை நகர்ப் பதிகம் கிடைக்கவில்லை. கிடைத்திருப்பனவற்றுள்ளும் திருவெருக்கத்தம் புலியூர்ப் பதிகத்தில் ஒரு பாடலும், திருமுதுகுன்றம் பதிகங்களில் ஐந்து பாடல்களும், அரசிலி பதிகத்தில் ஒரு பாடலும் கிடைக்கவில்லை. தேவாரம் பதிப்பித்துள்ள முன்னோர்கள் திருவக்கரை, இரும்பை, அரசிலி ஆகிய மூன்று ஊர்ப் பதிகங்களையும் தொண்டை நாட்டுப் பதிகங்களில் சேர்த்துள்ளனர்; இருப்பினும், இந்த மூன்று ஊர்களும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தைக் காட்டிலும் கெடிலக்கரைக்கு அண்மையில் இருப்பதால், கெடிலக்கரை பற்றிய இந்நூலில், இம் மூன்று ஊர்ப் பதிகங்களும் நடுநாட்டுப் பதிகங்களுடன் சேர்க்கப்பட்டன.
சம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் பதினொரு பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தர் தேவாரத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். சுந்தரர் தேவாரம்
நடுநாட்டில் சுந்தர மூர்த்தி தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப் பெயர்களும், அவ்வவ்வூர்க்குரிய மொத்தப் பதிகங்களும் மொத்தப் பாடல்களும் முறையே கீழே தரப்படும். சுந்தரர் தேவாரப் பாடல்கள் அனைத்தும் ‘ஏழாம் திருமுறை’ எனும் ஒரே திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
ஊர் மொத்தப் பதிகம் மொத்தப் பாடல்
திருவெண்ணைய் நல்லூர் 1 10
திருநாவலூர் 1 11
திருத்துறையூர் 1 11
திருவதிகை 1 10
திருத்தினை நகர் 1 10
திருக்கூடலை யாற்றுார் 1 10
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 3 31
திருவாமாத்துர் 1 11
திருவிடையாறு 1 10
நெல்வாயில் அரத்துறை 1 10
இவையேயன்றி, நடுநாட்டில் திருமாணிகுழி முதலிய திருப்பதிகட்கும் சுந்தரர் சென்று வழிபட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால், திருமாணிகுழி பதிகம் கிடைக்கவில்லை. திருமுதுகுன்றம் - மூன்றாம் பதிகத்தின் இறுதிப் பாடல் முழுதும் கிடைக்கவில்லை. இப்படியாக மூவர் தேவாரங்களிலும் பல பதிகங்களையும் பல பாடல்களையும் நாம் இழந்திருப்பது தீப்பேறே.
சுந்தரர் மேற்கூறிய நடுநாட்டு ஊர்கட்குத் தனித்தனியே பதிகம் பாடியிருப்பதன்றி, வேறு ஊர்ப் பதிகங்களில் திருக்கோவலூரை எடுத்தாண்டு பாடியுள்ளார். திருநாவலூர்ப் பதிகத்தின் ஆறாம் பாடலில்,
"கோட்டம் கொண்டார் குடமூக்கிலும்
கோவலும் கோத்திட்டையும்
வேட்டம் கொண்டார்”
எனவும், திருப்பரங்குன்றப் பதிகத்தின் முதல் பாடலில்,
“கோத்திட்டையம் கோவலும் கோயில் கொண்டீர்”
எனவும் கோவல் குறிப்பிடப்பட்டிருப்பது காணலாம்.
பாடல் பெற்ற நடுநாட்டு ஊர்கள்
பொதுவாகப் பாடல் பெற்ற ஊர்கள் என்றாலேயே ஒரு தனிப் பெருமைதான்! நடு நாட்டில் மூவர் தேவாரப் பாடல் பெற்றள்ளனவாகத் தேவாரம் பதிப்பித்துள்ள பெரியோர்கள் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அவர்கள் அமைத்துள்ள வரிசைப்படி வருமாறு:
நெல்வாயில் அரத்துறை, திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலை யாற்றூர், திருவெருக்கத்தம் புலியூர் (திருவெருக்கற்றம் புலியூர்), திருத்தினை நகர் (தீர்த்தன நகர்), திருச்சோபுரம் (தியாகவல்லி), திருவதிகை, திருநாவலூர் (திருநாம நல்லூர்), திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருநெல்வெண்ணெய் (நெய் வெண்ணெய்), திருக்கோவலூர் (கீழவூர்), அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்), திருவிடையாறு, திருவெண்ணெய் நல்லூர், திருத்துறையூர், வடுகூர் (வடுவூர், திருவாண்டார் கோயில்), திருமாணிகுழி, திருப்பாதிரிப் புலியூர், திருமுண்டீச்சுரம் (கிராமம்), திருப்புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்), திருவாமாத்தூர், திருவண்ணாமலை, இவற்றுடன், திருவக்கரை, இரும்பை, அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) ஆகிய மூன்று ஊர்களையும் நாம் சேர்த்துக் கொண்டுள்ளோம்.
தேவாரப் பதிப்பாசிரியர்கள் இந்த வரிசையில் ஊர்ப் பெயர்களை நிறுத்தியிருப்பினும், நாம் மேலே, தேவார ஆசிரியர் ஒவ்வொருவரையும் பற்றிய தனித்தனித் தலைப்பின்கீழ் இவ்வூர்ப் பெயர்களை வெவ்வேறு வரிசைகளில் (பக்கங்கள் : 200, 202, 203, 204) நிறுத்தியுள்ளோம். அஃதாவது, தேவார ஆசிரியர் மூவரும் அவ்வவ்வூர்க்குப் பயணம் செய்த வரிசை முறையில் அவ்வரிசைகள் நம்மால் அமைக்கப்பட்டன. அந்தப் பயண வரிசை முறை, சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ள வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
இனி, நடுநாட்டில் தேவாரப் பாடல் பெற்றுள்ள இவ்வூர்கள் எந்தெந்த வட்டத்தைச் (தாலுகாவைச்) சேர்ந்தன - யார் யாருடைய தேவாரத்தில் எத்தனை எத்தனை பதிகங்கள் பெற்றுள்ளன - என்பதைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்:
ஊர்கள் வட்டம் அப்பர் பதிகம் சம்பந்தர் பதிகம் சுந்தரர் பதிகம்
நெல்வாயில் அரத்துறை விருத்தாசலம் 1 1 1
திருத்தூங்கானை மாடம் விருத்தாசலம் 1 1 -
திருக்கூடலையாற்றுார் சிதம்பரம் - - 1
திருவெருக்கத்தம் புலியூர் விருத்தாசலம் - 1 -
திருத்தினை நகர் கடலூர் - - 1
திருச்சோபுரம் கடலூர் - 1 -
திருவதிகை கடலூர் 16 1 1
திருநாவலூர் திருக்கோவலூர் - - 1
திருமுதுகுன்றம் விருத்தாசலம் 1 7 3
திருநெல்வெண்ணெய் திருக்கோவலூர் - 1 -
திருக்கோவலூர் திருக்கோவலூர் 1 1 -
அறையணி நல்லூர் திருக்கோவலூர் - 1 -
திருவிடையாறு திருக்கோவலூர் - - 1
திருவெண்ணெய் நல்லூர் திருக்கோவலூர் - - 1
ஊர்கள் வட்டம் அப்பர் பதிகம் சம்பந்தர் பதிகம் சுந்தரர் பதிகம்
திருத்துறையூர் கடலூர் - - 1
வடுகூர் (திருவாண்டார் கோயில்) புதுச்சேரி மாநிலம் - 1 -
திருமாணிகுழி கடலூர் - 1 -
திருப்பாதிரிப் புலியூர் கடலூர் 1 1 -
திருமுண்டிச்சுரம் திருக்கோவலூர் 1 - -
திருப்புறவார் பனங்காட்டூர் விழுப்புரம் - 1 -
திருவாமாத்துர் விழுப்புரம் 2 2 1
திருவண்ணாமலை வடார்க்காடு - திருவண்ணாமலை 3 2 -
திருவக்கரை திண்டிவனம் - 1 -
அரசிலி திண்டிவனம் - 1 -
இரும்பை மாகாளம் திண்டிவனம் - 1 -
(இந்த வரிசை முறை, தேவாரப் பதிப்பாசிரியர்களின் வரிசை முறையை ஒட்டியவை.)
இந்த அட்டவணையைப் பார்க்குங்கால், சிதம்பரம் வட்டத்தில் திருக்கூடலையாற்றுார் தவிர வேறு ஊர்கள் நடுநாட்டில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. காரணம், சிதம்பரம் வட்டம் இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் சேர்ந்திருந் தாலும், முன்பு சோழ நாட்டில் சேர்ந்திருந்தமையேயாகும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களுள் பல, வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. நெல்வாயில் அரத்துறை திருவரத்துறை எனவும், திருத்துங்கானை மாடம் பெண்ணாகடம் எனவும், திருவெருக்கத்தம் புலியூர் இராசேந்திரன் பட்டணம் எனவும், திருத்தினை நகர் தீர்த்தன நகர் எனவும், திருச்சோபுரம் தியாகவல்லி எனவும், திருநாவலூர் திருநாம நல்லூர் எனவும், திருமுதுகுன்றம் விருத்தாசலம் எனவும், அறையணி நல்லூர் அரகண்ட நல்லூர் எனவும் வடுகூர் திருவாண்டார் கோயில் எனவும், திருமுண்டீச்சுரம் கிராமம் எனவும், திருப்புறவார் பனங்காட்டூர் பனையபுரம் எனவும், அரசிலி ஒழுந்தியாப்பட்டு எனவும், அழைக்கப்படுகின்றன. முன்னவை தேவாரப் பதிகங்களில் உள்ள பெயர்கள்; பின்னவை உலக வழக்கில் இன்று உள்ள பெயர்கள். குழப்பத்திற்கு இடமின்றிப் பெயர்களைத் தெளிந்து கொள்ள வேண்டும். திருக்கோவலூர் வட்டத்தில் கிராமம் என அழைக்கப்படும் திருமுண்டீச்சுரம் என்னும் ஊரை அவ்வாறு கொள்ளாமல், கடலூர் வட்டத்திலுள்ள திருக்கண்டீசுரம் என்னும் ஊர்தான் அஃது எனச் சிலர் கூறுகின்றனர்.
இத்தனை ஊர்த் தேவாரப் பதிகங்களும் கெடிலக்கரை இலக்கியச் செல்வங்களாகும்.
ஆழ்வார் பாடல்கள்
ஆழ்வார் பன்னிருவராலும் பாடப் பெற்றுள்ள வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டு உள்ளன. பாடல் பெறுதல் என்பதை ‘மங்களா சாசனம் செய்தல்’ என்று கூறுவது வைணவ மரபு. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் மிகுதியானவற்றிற்கு மங்களா சாசனம் செய்திருக்கும் ஆழ்வார் திருமங்கை யாழ்வார்தாம். இவரால் பாடப்பெற்றுள்ள திருப்பதிகள் மொத்தம் எண்பத்தாறாகும். இவருக்கு அடுத்தபடியாக மிக்க திருப்பதிகளைப் பாடியிருப்பவர், ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப்படும் நம்மாழ்வார்தாம். நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்றுள்ள திருப்பதிகளின் மொத்த எண்ணிக்கை முப்பத்தைந்தே
மிகுந்த திருப்பதிகட்கு மங்களா சாசனம் செய்துள்ள பெருமையேயன்றி மற்றொரு பெருமையும் திருமங்கை யாழ்வாருக்கு உண்டு. ஆழ்வார் பன்னிருவரும் பாடியுள்ள
பாடல்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய நாலாயிரமாகும். இந்த நாலாயிரத்தில் திருமங்கை யாழ்வாரின் பாடல்கள் 1361 ஆகும். மீதிப் பாடல்களையே மற்றப் பதினொருவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். திருமங்கை யாழ்வாரின் பாடல்கள், பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் நூல் தலைப்புக்களின்கீழ் உள்ளன.
நூற்றெட்டுத் திருப்பதிகளுள் நடு நாட்டைச் சேர்ந்தவை திருக்கோவலூர், திருவயிந்திரபுரம் என்னும் இரண்டு மட்டுமே. இவை யிரண்டினையும் திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார். இப்பாடற் பகுதிகள் பெரிய திருமொழியில் உள்ளன. திருமங்கை மன்னர் அருளிச் செய்துள்ள ‘பெரிய திருமொழி’ என்னும் நூல் பதினொரு பத்துக்களைக் கொண்டது. ஒரு பத்து என்பது நூறு பாடல்கள் கொண்டது; ஒரு பத்து என்பது நூறு பாடல்கள் கொண்டது; அஃதாவது ஒவ்வொரு பத்திலும் பத்து உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வோர் உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள் உண்டு. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒரு ‘திருமொழி’ எனப்படும்; அஃதாவது ஒரு திருமொழி என்பதில் பத்துப் பாடல்கள் இருக்கும். எனவே, பத்துத் திருமொழிகள் கொண்டது ஒரு பத்து; இப்படியாகப் பதினொரு பத்து கொண்டது பெரிய திருமொழி என்னும் நூல். ஆனால், இந்நூலின் பதினோராவது பத்தில் மட்டும் எட்டுத் திருமொழிகளே (80 பாடல்களே) உள்ளன; இறுதி இரண்டு திருமொழிகள் (20 பாடல்கள்) ஆழ்வாரால் பாடப் படவில்லையோ - அல்லது - பாடப்பட்டும் கிடைக்காமல் அழிந்துவிட்டனவோ - தெரியவில்லை.
திருக்கோவலூர்
திருமங்கையாரின் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ‘மஞ்சாடு’ என்று தொடங்கும் பத்தாம் திருமொழி திருக்கோவலூரைப் பற்றியதாகும். இதில், திருக்கோவலூரின் வளத்தையும் சிறப்பையும் இறைவனின் மாண்பையும் விளக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. பாடற் சுவையின் மாதிரிக்காக முதல் பாடல் வருமாறு:
ஆரபி ராகம் ஆதி தாளம்
"பஞ்சாடு வரையேழுங் கடல்க ளேழும்
வானகமு மண்ணகமு மற்று மெல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னைத்
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூயநான் மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுட் கண்டேன் நானே”
திருமங்கையார் தித்திக்கும் செந்தமிழால் எவ்வளவு சுவையாகப் பாடியிருக்கிறார்! இவ்வாறு இவர் பெரிய திருமொழியில் திருக்கோவலூருக்காகத் தனியே பத்துப் பாடல்கள் பாடியிருப்பதன்றி, வேறு சில விடங்களிலும் நடுநடுவே திருக்கோவலூரை எடுத்தாண்டுள்ளார்: பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாடலில்.
“குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான்.”
எனவும், ஏழாம்பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாடலில்,
“....மகரக் குழைக்காதனை மைந்தனை
மதிட்கோவ லிடைகழி யாயனை....”
எனவும். கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவையேயன்றி, திருமங்கையார் தாம் அருளியுள்ள திருநெடுந்தாண்டகத்திலும் மூன்று (6, 7, 17) பாடல்களில் கோவலூரைப் பாடியுள்ளார்; முறையே அப்பாடல்களில் சில அடிகள் வருமாறு:
“...புலம்பரந்து பொன்விளைக்கும் பொய்கை வேலிப்
பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே”
“...பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே”
“... தண்காவும் தன்குடந்தை நகரும் பாடித்
தண்கோவ லூர்பாடி ஆடக்கேட்டு.”
இந்நூல்களிலன்றி, திருமங்கை யாழ்வார் தமது ‘சிறிய திருமடல்’ என்னும் நூலில் (69),
“காரார் திருமேனி காணு மளவும் போய்ச்
சீரார் திருவேங் கடமே திருக்கோவ லூரே”
எனவும், ‘பெரிய திருமடல்’ என்னும் நூலில் (122),
“முன்னிவ் வுலகாண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னும் இடைகழியெம் மாயவனை”
எனவும் கோவலூரைப் பாடியுள்ளார்.
திருவயிந்திரபுரம்
திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமொழியில் மூன்றாம் பத்தில் ‘இருந்தண்’ என்று தொடங்கும் முதல் திருமொழி திருவயிந்திரபுரத்தைப் பற்றியதாகும். இதிலுள்ள பத்துப் பாக்களில், திருவயிந்திரபுரத்தின் இயற்கை வளமும் இறைவனின் மாண்பும் பரக்கக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்கு முதல் பாடல் வருமாறு:
செஞ்சுருட்டி ராகம் - ஆதி தாளம்
“இருந்தண் மாநில மேனம தாய்வளை
மருப்பினி லகத்தொடுக்கிக்
கருந்தண் மாகடற் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி இன்னிசை முரன்றெழு மளிகுலம்
பொதுளியம் பொழிலுடே
செருந்தி நாண்மலர் சென் றணைந் துழிதரு
திருவயிந் திரபுரமே”
திருமங்கை யாழ்வார் காலம் எட்டாம் நூற்றாண்டாகும். எனவே, அவர் படைப்புக்கள் எட்டாம் நூற்றாண்டு இலக்கியங்களின் வரிசையில் இடம்பெறும்.
பிற ஆழ்வார்கள்
நடுநாட்டுத் திருப்பதியாகிய திருக்கோவலூரைத் திருமங்கை யாழ்வரேயன்றிப் பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார் முதலியோரும் போற்றிப் பாடியுள்ளனர். முதலாழ்வார்கள் எனச் சிறப்பிக்கப்படும் மூவருள் முதல்வரும் காஞ்சியுரம் திருவெஃகாவில் பிறந்தவருமாகிய பொய்கை யாழ்வார் தாம் இயற்றிய ‘முதல் திருவந்தாதி’ என்னும் நூலில் (பா : 86),
“நீயுந் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா - வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி”
எனக் கோவலூரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். முதலாழ்வார்கள் மூவருள் இரண்டாமவரும் மாமல்லபுரத்தில் தோன்றியவருமாகிய பூதத்தாழ்வார் தாம் அருளிய இரண்டாந்திருவந்தாதி என்னும் நூலில் (பா : 70),
“தமருள்ளந் தஞ்சை தலையரங்கந் தண்கால்
தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்”
எனக் கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சேர்ந்து கோவலூரை வழிபட்ட வரலாறு சுவைமிக்கது. திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியில் மூவருள் ஒருவர் ஒருநாள் இரவு முடங்கிப்ப்டுத்துக் கொண்டிருந்தார். மழை பெய்யத் தொடங்கியது. மற்றொருவர் ஓடி வந்தார். வந்தவரும் முடங்கிப் படுத்திருந்தவரும் உட்கார்ந்திருக்க மட்டும் அவ்விடம் போதியதாயிற்று. அந்த நேரம் மூன்றாமவர் வந்தார். அந்த இடத்தில் மூவர் உட்கார்ந்திருக்க முடியாது. எனவே, மூவரும் எழுந்து நின்று கொண்டிருந்தனர். ஒரே இருட்டு. அவ்வேளையில் மூவருக்கும் நடுவில் யாரோ ஒருவர் புகுந்து மூவரையும் நெருக்கித் தள்ளினார். மூவரும் நெருக்குண்டு திக்குமுக்காடினர். நெருக்கியவர் திருமால் என்று பின்னர் மூவரும் உணர்ந்து இறைவனை மெய்ம்மறந்து பாடித் துதித்தனர். பொய்கை யாழ்வார் பாடிய நூல் ‘முதல் திருவந்தாதி’ எனவும், பூதத்தாழ்வார் பாடிய நூல் ‘இரண்டாம் திருவந்தாதி’ எனவும், பேயாழ்வார் பாடிய நூல் ‘மூன்றாம் திருவந்தாதி’ எனவும் பெயர் கொடுக்கப்பட்டு, திவ்ய பிரபந்தத்துள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மூவரும் கோவலூரில் இறைவனைப் பாடி வழிபட்டதை,
“பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவல் பாவலர்
பாதிநா ளிரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி முகுந்தனைத்
தொழுத நன்னாடு”
என்று வரந்தருவார் பாடியுள்ள பாரதச் சிறப்புப்பாயிரப் பாடற் பகுதியால் அறியலாம்.
இவர்தம் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்று சொல்லப்படுகிறது.
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
கெடிலக்கரையிலுள்ள திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி யுள்ள சிவன்மேல் பாடப்பட்ட கலம்பக நூல் ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ எனப்படும். இதில் பாயிரப் பாடல்கள் மூன்று உட்பட மொத்தம் நூற்று மூன்று பாடல்கள் உள்ளன.
இடைக்கால இலக்கியம்
கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய வகைகளைக் காலத்தால் பிற்பட்டவையெனக் கூறுவது வழக்கம். சிற்றிலக்கிய வகைகள் பிற்காலத்தில் தோன்றியவை என்பது உண்மையெனினும், கலம்பக இலக்கியம் சங்க காலத்திற்குப் பிற்பட்டதே தவிர, பொதுவாகப் பார்க்குமிடத்து இடைக்காலத்தைச் சேர்ந்ததே இது. கலம்பக இலக்கியத்தை இடைக்காலத்தைச் சேர்ந்த பெருமைக்கு உரியதாக ஆக்கிய பெருமை திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்திற்குண்டு.
கலம்பக நூல்களுக்குள் காலத்தால் முற்பட்டவை நந்திக் கலம்பகமும் திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகமும் ஆகும். இவ்விரண்டனுள் நந்திக் கலம்பகம் சில ஆண்டுகள் முற்பட்டது. 844ஆம் ஆண்டு தொடங்கி 866வரை ஆண்ட மூன்றாம் நந்திவர்ம பல்லவன்மேல் (பெயர் தெரியா ஒருவரால்) இயற்றப்பட்டது நந்திக் கலம்பகம். இஃது ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியைச் சேர்ந்தது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டதாகும்.
நூலாசிரியர்
இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியத் தேவர் என்பார். சீவக சிந்தாமணி இயற்றிய திருத்தக்க தேவர், சூளாமணி இயற்றிய தோலா மொழித் தேவர் முதலிய சமணசமயப் பெரியார்களின் பெயர்களோடு தொல்காப்பியத் தேவர் என்னும் பெயரை ஒப்பு நோக்குமிடத்து, இவர் முதலில் சமணசமயத்தைப் பின்பற்றியிருந்து பின்னர்ச் சைவ சமயத்திற்கு மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை மெய்ப்பிப்பதுபோல் இவரைப் பற்றிப் பின்வருமாறு ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது:
தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியில் ஒரு சைனக் கோயில் கட்டுவதற்காக ஓரிடத்தில் செங்கல் சூளைபோட ஏற்பாடு செய்தார். அது கண்ட திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலார் சிவனுக்கு உரிய எல்லையில் நீர் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்டு மறித்தனர். அதற்குத் தேவர், ‘உலகம் முழுவதுமே சிவனுக்கு உரியதாயிருக்க, நீவிர் இச்சிறு எல்லையை மட்டும் சிவனுக்கு உரியதாகக் கூறுகிறீர்களே’ என்னும் கருத்தில்,
“வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண்
பாதம் திருப்பா திரிப்புலியூர் - நாதர்
பரமாம் பரமாம் படுகடலென் திக்கும்
கரமாம் அவர்க்குயிர்ப்பாம் கால்”
என்னும் வெண்பாவை எழுதிபனுப்பினார். பாடலைப் படித்த சைவர்கள் மிகவும் வியந்து மகிழ்ந்து, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் படுமாறு தேவரை வேண்டினர். தேளுரும் அவ்வாறே பாடித் தந்தார்.
நூலில் இவ்வெண்பாவை இரண்டாம் பாடலாக ஆசிரியர் வைத்துள்ளார்.
இவ்வாறு முதலில் சைனராயிருந்த தொல்காப்பியத் தேவர் பின்னர்ச் சைவராக மாறினார். அவரது காலம், மத மாற்றங்கள் நிரம்ப நடந்த காலமாகும். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்ற செய்தி முன்பே ஓரிடத்தில் (பக்கம் : 69-70) ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.
நூல் பெருமை
கலம்பகம் பாடுவதில் இரட்டைப் புலவர்கள் மிகவும் வல்லவர்கள் (Champions) என்பதை, ‘கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்னும் ஆன்றோர் மொழியால் அறியலாம். இந்த இரட்டையர்கள் மிகவும் பெயர் பெற்று விளங்கிய திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தை மிகவும் விரும்பிப் போற்றிப் படித்து வந்தார்கள். இதன்பால் அவர்கட்கு இருந்த ஈடுபாடு அளவிடற்கரியது. கலம்பகச் சுவைகண்ட அவர்கள் தாமும் தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்பகம் முதலிய நூல்கள் பாடினர்.
ஒருமுறை இரட்டையர்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தபோது, கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான அவர்களை நோக்கி, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடுமாறு ஊர் மக்கள் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள், இவ்வூர் இறைவன்மேல் தொல்காப்பியத் தேவர் கலம்பகம் பாடிய பிறகு நாங்கள் பாடினால் எடுபடாது என்று கூறித் தட்டிக் கழித்தனர். இதனை,
“தொல்காப் பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே”
என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இக்கலம்பகத்தைப் புலவர்களே பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள் என்றால் - அதிலும், கலம்பகம் பாடுவதில் வல்ல புலவர்களே வியந்து பாராட்டியிருக்கிறார்கள் என்றால், இதன் மாண்சிறப்பு எத்துணைய தென்பது நன்கு விளங்குமே!
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
ஆசிரியர்
வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டையும் பற்றி அந்தாதித் தொடையாகப் பாடப் பெற்ற நூல் இது. இதன் ஆசிரியர் அழகிய மணவாளதாசர் என்னும் ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இந்நூலில், நடுநாட்டுத் திருப்பதிகளான திருவயிந்திரபுரமும் திருக்கோவலூரும் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய பாடல்கள் (72, 73) முறையே வருமாறு:
திருவயிந்திரபுரம்
“அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பர்
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம்”
திருக்கோவலூர்
“தாமைரையா னாதியாய்த் தாவரங்க ளீறான
சேம வுயிருஞ் செகமனைத்தும் - பூமடந்தைக்
காங்கோவ லாயுதன்பின் னாக வவதரித்த
பூங்கோவ லாயன் பொருள்”
காலம்
பல்வேறு ஆராய்ச்சிகளையும் கூர்ந்து நோக்குமிடத்து, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் காலம் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
அருணகிரிநாதர் திருப்புகழ்
திருப்பதிகள் தோறும் சென்று சிவபெருமான் மேல் மூவர் பதிகம் பாடியதுபோல, அருணகிரிநாதர் முருகப் பெருமான் மேல் அன்புப் பாடல்கள் பாடியுள்ளார். மூவர் பாடலுக்கும் தேவாரம் எனப் பெயர் வழங்கப்படுதல்போல, அருணகிரிநாதர் பாடலுக்குத் ‘திருப்புகழ்’ எனப் பெயர் வழங்கப்படுகிறது. முருகனது அழகிய - மங்கலமான தெய்வத்தன்மை மிக்க - வளவிய புகழைக் கூறும் பாடல் ஆதலின் ‘திருப்புகழ்’ எனப்பட்டது. திருப்புகழ் என்பது, தேவாரம் போலவே, அருணகிரிநாதர் பல காலங்களில் பலவிடங்களில் பாடிய பல பாடல்களின் தொகுப்பேயாகும்.
திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து உருவான அருணகிரிநாதர் நடுநாட்டில் உள்ள பல ஊர்கட்கும் சென்று முருகனை வழிபட்டுத் திருப்புகழ் பாடியுள்ளார். தேவார ஆசிரியர்கள் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகங்கள். பாடியிருப்பதைப்போல அருணகிரிநாதர் பாடவில்லை; ஒவ்வோர் ஊர்மேலும் தனித்தனியாக ஒரு பாடலோ இரு பாடல்களோ, நான்கு பாடல்களோ, இன்னும் பல பாடல்களோ பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் அவ்வவ்வூர்ப் பெயர் இருக்கும். இனி, அருணகிரியார் நடுநாட்டில் திருப்புகழ் பாடியுள்ள ஊர்ப்பெயர்களும் ஒவ்வோர் ஊர்க்கும் உரிய மொத்தப்பாடல் எண்ணிக்கையும் முறையே வருமாறு:
ஊர் மொத்தப் பாடல்
திருவண்ணாமலை 78
மயிலம் 1
திருவக்கரை 1
திருவாமாத்துார் 4
திருக்கோவலூர் 1
திருத்துறையூர் 1
திருவதிகை 2
திருவாமூர் 1
திருப்பாதிரிப் புலியூர் 1
திருமாணிகுழி 1
வடுகூர் (திருவாண்டார் கோவில்) 1
திருநாவலூர் 1
ஊர் மொத்தப் பாடல்
திருவெண்ணெய் நல்லூர் 1
திருக்கூடலையாற்றுார் 1
விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) 1
நெல்வாயில் அரத்துறை 1
யாழ்ப்பாணாயன் பட்டினம் 1
திருமுட்டம் 1
இவ்வூர்களில், யாழ்ப்பாணாயன் பட்டினம் என்பது திருவெருக்கத்தம் புலியூராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர். நடுநாட்டில் மூவர் தேவாரம் பெற்றுள்ளவற்றுள் பெரும்பாலான ஊர்கள் அருணகிரியாரின் திருப்புகழும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னார்க்காடு மாவட்டத்தில் மிகச்சிறந்த முருகன் திருப்பதியாய் விளங்கும் காரணத்தால் மயிலமும் இங்கே சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. அருணகிரியார் தமது சொந்த ஊராகிய,திருவண்ணாமலைமேல் எழுபத்தெட்டுப் பாடல்கள் பாடியிருப்பது கருதத்தக்கது.
அருணகிரிநாதர் வில்லிபுத்துரார், வரபதியாட்கொண்டான் முதலியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்; எனவே அவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்; ஆகவே, திருப்புகழ் பதினைந்தாம் நூற்றாண்டு இலக்கியம் என்பது போதரும். அருணகிரிநாதர் திருப்புகழின் மாதிரிக்காக, கெடிலக்கரைத் திருவதிகை முருகன்மேல் பாடியுள்ள முதல் திருப்புகழ் வருமாறு:-
திருவதிகை
தனனதனத் தனனதனத் தனனதனத் தனனதனத்
தனனதனத் தனனதனத் தனதான.
"பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் தமுதுறல்
பருகிநிறத் தரளமணிக் களபமுகைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் ருபைவிளைவித் துருகாமுன்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே."
நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்
முருகன் திருக்கோயில் கொண்டுள்ள பல ஊர்கள் மேலும் அருணகிரிநாதரால் பாடப்பெற்றுள்ள திருப்புகழ் போல, திருமால் எழுந்தருளியுள்ள நூற்றெட்டுத் திருப்பதிகள் பேரிலும் குருவை இராமானுசதாசர் என்பவரால் புகழ்ந்து பாடப் பெற்ற திருப்பாடல்களின் தொகுப்புதான் இந்த நூல். ஆசிரியர் இராமானுசதாசரின் வரலாறு, காலம் முதலியன பற்றி ஒன்றும் புலப்படவில்லை. இந் நூலுள் நடுநாட்டு வைணவத் திருப்பதிகளான திருவயிந்திரபுரம், திருக்கோவலூர் ஆகியவை பற்றிய அழகான திருப்புகழ்கள் இரண்டு உள்ளன. அவை மிகமிக நீளமாயிருப்பதால் ஊரைப்பற்றிய செய்தி அமைந்துள்ள இறுதிப் பகுதிகள் மட்டும் வருமாறு.
திருவயிந்திரபுரம்
”...சிறை கறங்களிகள் விளரி பண்கெழுமு துழனி பொங்கியெழு கழனி மிஞ்சிலளர்
திருவ யிந்த்ரபுர மிக விளங்கவரு பெருமாளே.”
திருக்கோவலூர்
”...கோலநீல மேனியாயு பாயமாய நேயதுய கோவ லூரில் வாழ்வு மேவு பெருமாளே”.
இந்தநூல் மிகவும் பிற்காலத்ததாய் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் பெருமையைக் கூறும் நூல், இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள ஒவ்வோர் ஊர் பேராலும் புராணம் இயற்றுவது பிற்கால மரபு. இப்புராணம் பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
நூலாசிரியர்
இந்நூலின் ஆசிரியர் இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் என்பவர். பெயரிலிருந்தே இவர் இலக்கணத்தில் வல்லவர் என்பது விளங்கும். இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவர். அக்காலத்தில் பெரும்புலமை பெற்றுச் சிறந்திருந்த சிவஞான முனிவரின் மாணாக்கர் சிதம்பரநாத முனிவர் என்பதொன்றே இவரது புலமைக்குப் போதிய சான்றாகும். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
நூல் அமைப்பு
இப்புராணத்தில் பாயிரம், திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், தல விசிட்டச் சருக்கம் முதல் திருவிழாச் சருக்கம் ஈறாகப் பதினாறு சருக்கங்கள் உள்ளன. ஆக மொத்தம் பத்தொன்பது உறுப்புக்கள் உள்ளன. நூல் முழுவதிலுமுள்ள மொத்தச் செய்யுட்கள் 987 ஆகும். சில செய்யுட்கள் முற்றிலும் கிடைத்தில. சில அரைகுறையாயுள்ளன.
பதிப்பு
இந்நூலினை, திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்து ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் 1896 ஆம் ஆண்டு ஒலைச் சுவடியை ஆராய்ந்து முதன் முதலாக அச்சிற் பதிப்பித்தார்கள். நூலின் முகப்பை, ஞானியார் அடிகளார் எழுதியுள்ள முகவுரையும், அன்று கூடலுர் நகர்க் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த மு. சாமிநாத ஐயரவர்கள் இயற்றிய பன்னிருபாக்கள் கொண்ட சிறப்புப் பாயிரமும் அணி செய்கின்றன. அச்சு இடுவதற்கு முன்பே ஒலைச் சுவடியின் முகப்பில் இருந்த சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் இரண்டு அச்சு நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை இயற்றியவர் பெயர் காணப்படவில்லை. ஏடு பெயர்த்து எழுதிய எவரோ ஒருவரால் இவை இயற்றப்பட்டிருக்கலாம். திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலார், இப்போது இப் புராணத்தைப் புதிதாகப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.
மு. சாமிநாத ஐயரவர்களைக் கொண்டு இப் புராணத்திற்குப் பொழிப்புரை போன்ற ஒர் உரைச் சுருக்கம் எழுதச் செய்து நூலுடன் இணைத்துப் பதிப்பித்துள்ள ஞானியார் அடிகளாரின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.
நூற் செய்திகள் சில
நூலில் திருநாட்டுப் படலத்தில் திருமுனைப்பாடி நாட்டின் வளங்களும் பெருமைகளும் சிறக்கக் கூறப்பட்டு உள்ளன. நமது இந்தியத் துணைக் கண்டமாகிய பாரத நாட்டிற்கு ‘நாவலந் தீவு’ என்னும் பெயர் உண்மையை ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.
"இன்ன நாவலந் தீவினில் காஞ்சியின் தென்பால்..
மன்னி வாழ்வது திருமுனைப்பாடிமா நாடு"
என்பது பாடல் (102) பகுதி. தீவு என்பதை இங்கே துணைக் கண்டம் என நாம் நிலைமைக்கேற்றாற்போல் பொருள் கொள்ள வேண்டும். மற்றும், “நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடி நாடு என்றே.”(104) எனத் திருமுனைப் பாடி நாட்டை நாடுகளுள் மேம்பட்டதாக ஆசிரியர் சிறப்பித்துள்ளார்.
அடுத்துத் திருநகரப் படலத்தில், திருப்பாதிரிப் புலியூரும் அதைச்சார்ந்த பகுதிகளுமான இன்றைய கடலூர் நகரம் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர்த் துறைமுகத்தின் பரந்த பெருமையை இப்படலத்தில் காணலாம்.
நூலுக்குள்ளே பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்தில், திருப்பாதிரிப் புலியூருக்கு, மாணிக்கவாசகர் வருகையும், அவருக்காகக் கெடிலம் ஆறு திசை மாறியதும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்புராணத்தில், உமையம்மையார் பாதிரி மரத்தின் கீழ் இருந்து நோன்பு கொண்ட நிகழ்ச்சியும் புலிக்கால் முனிவர், மங்கணர் முதலியோர் தவம் செய்து நற்பேறு பெற்றமையும் இன்ன பிற செய்திகளும் புராண மரபுப்படி விவரிக்கப்பட்டுள்ளன.
கரையேற விட்ட நகர் இலக்கியங்கள்
1. கரையேறவிட்ட நகர்ப் புராணம்
இப்போது வண்டிப் பாளையம் என அழைக்கப்படும் ஊர், அன்று அப்பர் கரையேறியதால் ‘கரையேற விட்டவர் குப்பம்’ என அழைக்கப்பட்டது. இவ்வூர்மேல் இயற்றப்பட்ட நூலே ‘கரையேற விட்ட நகர்ப்புராணம்’ என்பது.
ஆசிரியர்
இப் புராணத்தின் ஆசிரியர் க. ரா. சிவசிதம்பர முதலியார் என்பவர். இவர் ஊர் திருப்பாதிரிப் புலியூர். “இயற்றமிழ்ப் போதகாசிரியர் ” என இவர் நூலின் முகப்பில் குறிப்பிடப் பட்டுள்ளார். புலவர் பெருமக்கள் பலர் இவரைப் பல பாடல்களால் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். இவர் திருவதிகை மான்மியம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். இவர் கரையேற விட்ட நகர்ப் புராணத்தை 1892 ஆம் ஆண்டில் இயற்ற, வண்டிப்பாளையம் இராசப்ப முதலியார் 1896 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
நூல்
இந்நூலில் திருநாட்டுப் படலம் முதல் அன்பர் போற்றிசைப்படலம் ஈறாக ஒன்பது படலங்கள் உள்ளன. பாயிரம் உட்பட மொத்தச் செய்யுட்கள் 333 ஆகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ள சில செய்திகளாவன:
“கெடிலம் தென்கங்கை எனப்படும். இந்த ஆறு வண்டிப் பாளையத்தை ஒட்டி முன்பு ஓடியது. ஆற்றின் வடகரையில் வண்டிப்பாளையம் இருந்தது. இங்கே அப்பர் கரையேறினார். இவ்வூர் இறைவன் பெயர் திருக்காட்சிநாதர்; இறைவி பெயர் தெரிசனாம்பிகை. இவ்வூருக்கு வண்டு நகர், வண்டுபுரம், சித்திபுரம் என்னும் பெயர்களும் உண்டு. இவ்வூர் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயரும் உண்டு. சான்றோர் உடைத்தான தொண்டை நாட்டிற்கும் சோறுடைத்தான சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதாலும், சான்றோரையும் சோற்று வளத்தையும் ஒரு சேரக் கொண்டிருத்தலாலும் இந்நாடு நடுநாடு எனப்பட்டது. தேவார ஆசிரியர் மூவருள் இருவர் பிறந்தது நடுநாடு; பாரிமகளிரை ஒளவையார் தெய்வீக மன்னனுக்குத் திருக்கோவலூரில் மணமுடித்த நாடு நடுநாடு; சீராமன் வழிபட்ட நாடு நடுநாடு.
இவ்வாறு பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஊருக்குத் தெற்கே ஒடிய கெடிலம் மாணிக்கவாசகருக்காகக் கடவுளால் திசை மாற்றப்பட்டு வடக்கே ஒடுவதாக இப் புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஊர் இப்போது கெடிலத்திற்குத் தெற்கே உள்ளது; முன்பு வடக்கேயிருந்தது. 1892 இல் சிவசிதம்பர முதலியார் இந்நூலை எழுதினும், ஊர் ஆற்றுக்கு வடக்கே யிருப்பதாகவே எழுதியுள்ளார். படிப்பவர்களைப் பழைய காலத்துக்கு அழைத்துச் சென்று வரலாறு கூறுவது போல் இருப்பதால் பழைய காலத்தில் இருந்தவாறே ஆசிரியர் பாடவேண்டியதாயிற்று. இதனைச் சித்தர் திருவிளையாடற் படலத்திலுள்ள,
“வாய்ந்த தொல் கெடி லத்தின் வடகரை
ஏய்ந்த சீர்க்கரை யேற்றும் பதி...”
"தென்புறநின் றணிவடக்கைக் காட்டி விட்டார்
வெள்ளமதுஞ் சென்ற தாங்கே"
என்னும் பாடற்பகுதிகளால் அறியலாம். .
இந்நூலில் இராவணன் குறித்தும் திருநாவுக்கரசர் குறித்தும் ஒரு சுவையான செய்தி கூறப்பட்டுள்ளது: பண்டு இராவணன் கைலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான். சிவபெருமான் கால் பெருவிரலால் ஊன்றி மலையின் கீழே அவனை அகப்படச்செய்தார். இராவணன் வெளியேறும் வழியறியாது திணறித் திண்டாடினான். அப்போது கைலைமலையை வலம் வந்து கொண்டிருந்த வாகீசர் என்னும் முனிவர் இராவணன்பால் இரக்கமுற்று ‘இறைவன் மேல் சாமகானம் பாடினால் அவர் மகிழ்ந்து விடுவிப்பார்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அவன் அவ்வாறே பாடி இறைவனை மகிழ்வித்து மலையடியிலிருந்து விடுதலை பெற்றான். பின்னர்ச் சிவபெருமான் வாகீச முனிவரை அழைத்து, நீ இராவணனுக்குச் சூழ்ச்சி சொல்லித் தந்ததனால், மண்ணுலகில் பிறந்து உழன்று பின் ஈண்டு வருக’ என ஆண்ணயிட்டார். அவ்வாறே அவர் திருவாமூரில் வந்து திருநாவுக்கரசராகப் பிறந்தார்.
இவ்வாறு திருநாவுக்கரசருக்குத் தெய்வப் பிறப்பு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்தச்செய்தி கரையேற விட்ட படலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படலத்தில், இராவணன் பாடிய ‘சாமகானம்’ என்பதாக ஒரு பாடல் உள்ளது. அளபெடை வடிவிலுள்ள அப்பாடல் மிகவும் சுவையானது. அது வருமாறு:
"ஓஒ மாஅ தேஎ வாஅ ஊஉ மாஅ தேஎ சாஅ
சீஇ மாஅ தாஅ வாஅர் தேஎ காஅ வேஎ சாஅ
ஆஅ மாஅ நாஅ யேஎ னாஅ வீஇ போஒ மாஅ
காஅ மாஅ ரீஇ நீஇ காஅ வாஅ சாஅ மீஇ”
இந்தப் பாடலை அளபெடை நீக்கிப்பார்த்தால் பின் வருமாறு இருக்கும்.
"ஒமா தேவா ஊமா தேசா
சீமா தாவார் தேகா வேகா
ஆமா நாயே னாவீ போமா
காமா ரீநீ காவா சாமீ”
இந்நூலாசிரியரின் சிறந்த கற்பனைப் புலமைக்குள் இந்த அளபெடைப் பாடல் ஒர் எடுத்துக் காட்டாகும். இந் நூலின் திருநகரப் படலத்தில்,"
"ஆலைவாய்க் கரும்பாட்டு சாறு அட்டிடு புகையும்”
என, கரையேற விட்ட நகரில் கரும்பாலை இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. புராணங்களில் கற்பனைகள் பல இருப்பது உண்மையெனினும், கரும்பாலையைப் பொறுத்த வரையும் உண்மையாகவே தெரிகிறது. இந்த நூல் 1892ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. கரையேறவிட்ட நகராகிய வண்டிப் பாளையத்தில் 1843ஆம் ஆண்டிலேயே பாரி கம்பெனியாரால் கரும்பாலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றும், பாரி கம்பெனியார் ஆலை நிறுவுவதற்குமுன் பழங்கால முறையில் நாட்டு ஆலையும் நடைபெற்றிருக்கலாம்.
இவ்வாறு பல சிறப்புகட்குரிய கரையேற விட்ட நகர்ப் புராணமேயன்றி, மேலும் சில சிற்றிலக்கியங்கள் கரையேற விட்ட நகர்மேல் இயற்றப்பட்டுள்ளன. அவை வருமாறு:
2. கரையேற விட்ட நகர்
கற்பக வினாயகர் இரட்டை மணிமாலை
கரையேற விட்ட நகரில் கற்பக வினாயகர் திருக்கோயில் ஒன்று உள்ளது. இது வரலாற்றுத் தொடர்புடையது. கடலிலிருந்து கெடிலம் ஆற்றின் வழியாக இவ்வூரில் வந்து கரையேறிய திருநாவுக்கரசர் இங்கே தங்கி இளைப்பாறியதின் நினைவுக் குறியாக, இந்தக் கற்பக வினாயகர் கோயிலின் பக்கலில் திருநாவுக்கரசரும் இடம் பெற்றுள்ளார். அவருக்கும் சிலை உண்டு; பூசனை உண்டு. விநாயகர் எங்கும் உள்ளவர், ஆனால் இங்கே திருநாவுக்கரசரும் இணைந்து இடம் பெற்றிருப்பதால் இந்த விநாயகர் கோயிலுக்குச் சிறப்பு மிகுதி. இன்னும் சொல்லப்போனால், விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் காலத்திலிருந்தே விரிவாக ஏற்பட்டது. எனவே, விநாயகர் வழிபாட்டினும் திருநாவுக்கரசர் வழிபாடு தமிழகத்தில் சிறிது பழமையானது என்பது நினைவு கூரற் பாலது.
கற்பக விநாயகர்மேல் இரட்டை மணிமாலை பாடியவர் சிதம்பரம் - ஈசானிய மடம் இராமலிங்கசுவாமிகள் என்பவர். வெண்பாக்கள் பத்தும் கலித்துறைகள் பத்துமாக மாறி மாறி இருபது பாக்கள் கொண்டது இரட்டை மணிமாலை. இவ்விருபதுக்கு முன்னால் காப்புச் செய்யுள் ஒன்றும் இறுதியில் தனிவிருத்தப் பாக்கள் மூன்றும் ஆசிரியரால் இயற்றப் பட்டுள்ளன. இந்நூலின் மாதிரிக்காக, இறுதியிலுள்ள இரண்டாம் விருத்தம் வருமாறு:
“கருவாதைக் கடல் கடத்தி மன்பதையை முத்தியெனும்
கரையின் உய்ப்பான்
திருவாமூர் தனிலுதித்த வாகீசர் கருங்கல்லே
தெப்ப மாகப்
பொருவாரி எளிதகன்று கரையேறி விட்டநகர்ப்
பொலிந்தெல் லோர்க்கும்
பெருவாழ்வு பெரிதளிக்கும் கற்பக விநாயகன் தாள்
பேணி வாழ்வோம்."
இப்பாடலால், நாவுக்கரசர் கரையேறிய வரலாறும், அதனால் ஊருக்குக் கரையேற விட்ட நகர்’ என்னும் பெயர் ஏற்பட்ட காரணமும் நன்கு விளங்கும்.
3. கரையேற விட்ட நகர்
திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணிமாலை
இது, கரையேறவிட்ட நகர்-கற்பக விநாயகர் பக்கலில் ஒருபால் கோயில் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர்மேல், சிதம்பரம் - ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளால் இயற்றப்பெற்ற நூலாகும். இதில் திருநாவுக்கரசரின் வரலாறு ஒன்பது பாடல்களில் சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டுள்ளது. இறுதியில் தனிப்பாக்கள் இரண்டு உள்ளன. இரண்டாம் தனிப்பாடலில் வரலாற்றுக்குப் பயன்படும் செய்தியொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையேற விட்ட நகரில் கற்பக விநாயகர் கோயிலை ஒட்டித் திருநாவுக்கரசர் திருமடம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் திருநாவுக்கரசர் தங்கியிருந்ததாகக் குறிப்பின் உணரப்படுகிறது. இந்தச் செய்தியை உணர்த்தும் அப் பாடல் வருமாறு:
"திருவாக்கும் எழிலாமூர் தனிலுதித் தெக்கலையும்
தேர்ந்ததிகைப் பிரானருளால் செறிசூலை தவிர்ந்து
கருவாக்கு முருட்டமணக் கடலுமவர் வஞ்சக்
கடலுமவ ரிடுகடலுங் கடந்தருளிற் கதித்தே
மருவாக்கு மலர்ப்பொழில்சூழ் கரையேற விட்ட
மாநகரில் புரிமடத்தில் வாஞ்சையுடன் அமரும்
திருவாக்குக்கு அரையர்தமைப் பெருவாக்கி னிறைஞ்சிற்
சிந்தித்த பேறனைத்தும் சந்திக்கும் எளிதே."
கரையேற விட்ட நகர் - திருநாவுக்கரசர் திருமடம் இப் பாடலின் மூன்றாம் அடியில் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க.
4. கரையேற விட்ட நகர்
கற்பக வினாயகர் பஞ்ச ரத்தினம்
காப்புப் பாடல்கள் இரண்டும், கற்பக வினாயகர் கோயில் திருநாவுக்கரசர் திருமடம் ஆகியவற்றின் திருப்பணி செய்தவரைப் பற்றிய பாடல் ஒன்றும், கற்பக விநாயகரைப் பற்றிய பாடல்கள் ஐந்தும் முறையே கொண்டுள்ள இந்நூலில் ஆசிரியர் வா. இராசப்ப முதலியார் என்பவர். இவர், திருப்பாதிரிப் புலியூர் இயற்றமிழ் ஆசிரியர் சிவசிதம்பர முதலியார் அவர்களின் மாணாக்கராவார். ஆசிரியர் இராசப்ப முதலியார், கரையேற விட்ட நகர் - ஸ்கந்த பக்த ஜனசபையின் தலைவராய்ப் பணியாற்றியுள்ளார்.
நூல்களின் பதிப்பும் காலமும்
மேற்கூறப்பட்டுள்ள இரட்டை மணிமாலை, நவமணி மாலை, பஞ்சரத்தினம் ஆகிய மூன்று நூல்களும், “கற்பக விநாயகக் கடவுள் - திருநாவுக்கரசு சுவாமிகள் தரும கைங்கரியம் சு. சொக்கலிங்கம் பிள்ளையால், சோபகிருது ஆண்டு புரட்டாசித் திங்களில், சென்னை கலாரத்நாகர அச்சு யந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டன” - என்பதாக நூல்களின் முகப்பில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த ‘சோபகிருது’ ஆண்டு என்பது, நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருது ஆண்டு அன்று; அல்லது இற்றைக்கு நூற்றிருபத்து நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருதும் அன்று இற்றைக்கு அறுபத்து நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருது ஆண்டே இது. எனவே, 1903ஆம் ஆண்டில் இந்நூல்கள் அச்சிடப்பட்டன என்பது தெளிவாகும். ஆகவே, இந்நூல்களின் ஆசிரியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்கள் என்பதும் தெளிவு.
இந்நூல்கள் அளவால் சிறியனவாயும் காலத்தாற் பிற்பட்டனவாயும் இருப்பினும், கெடிலக்கரையோடு மிக்க தொடர்புடைய திருநாவுக்கரசரையும், கெடிலக்கரையின் இன்றியமையாத இடங்களுள் (முக்கியக் கேந்திரங்களுள்) ஒன்றான கரையேற விட்ட நகரையும் பற்றியனவாதலின் இந்நூலில் சிறப்பிடம் பெற்றன.
திருவதிகைப் புராணம்
ஆசிரியர்
திருவதிகையின் புகழ்பாடும் புராணம் திருவதிகைப் புராணமாகும். இதன் ஆசிரியர் திருவதிகை வாகீச பக்த நாவலர் என்னும் புலவராவார். இவருக்கு ‘அப்பாவு’ என்னும் பெயரும் உண்டு, இஃது இயற் பெயராயிருக்கக் கூடும். இவர், மயிலம் பொம்மபுரம் சிவஞான பாலைய தேசிகர் ஆதீனப் புலவராவார். இவர் திருவதிகைப் புராணமேயன்றி, புட்பாசலப் புராணம், திருநாவுக்கரர் சுவாமிகள் பிள்ளைத் தமிழ், திருநாவுக்கரசு சுவாமிகள் இரட்டை மணிமாலை, திருவதிகை உலா, திருவாமூர்ப் புராணம் முதலிய நூல்களும் இயற்றியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் இவர். திருவதி கைப்புராணம் 1902ஆம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது.
நூல்
இந்நூலில் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகியவை போக, திருநாட்டுப் படலம் முதற் கொண்டு நைமிச முனிவர் பூசித்த படலம் இறுதியாக மொத்தம் இருபத்தொன்பது படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்கள் 1037 ஆகும். இவையேயன்றி, நூலாசிரியரைப் பாராட்டிப் புலவர் பெருமக்கள் பலரால் இயற்றப்பெற்ற அணிந்துரைப் பாக்கள் பல நூலின் முகப்பை அணி செய்கின்றன. இனி இந்நூலில் உள்ள சில சிறப்புச் செய்திகள் வருமாறு:
திலகவதியார், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலானோர் தொடர்பாகத் திருவதிகையில் நிகழ்ந்தனவாகப் பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவும் சிறப்பாகவும் விரிவாகவும் திருவதிகைப் புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. மற்றும், திருவதிகையில் சிவபெருமான் முப்புரங்களை எரித்தது, தருமன் முதலிய ஐவர் வழிபட்டது, திருமால் புத்த அவதாரம் எடுத்தது, பிரமன், கருடன், நைமிச முனிவர் முதலியோர் பூசனை புரிந்தது முதலிய பல்வேறு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைலைமலையின் கீழ் அகப்பட்டுத் தவித்த இராவணனுக்கு, சாமகானம் பாடித் தப்பித்துக் கொள்ளும்படி சூழ்ச்சி சொன்ன வாகீச முனிவர் என்பவர், அக் குற்றத்திற்காகச் சிவனது ஆணைப்படி மண்ணுலகில் வந்து திருநாவுக்கரசராகப் பிறந்தார் என்ற செய்தி இந்த நூலிலும் கூறப்பட்டுள்ளது.
கெடிலம் ஆற்றிற்குத் திருவதிகைப் புராணத்தில் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. கெடிலோற்பவப் படலம், தீர்த்த விசேடப் படலம் என்னும் இரு படலங்கள் கெடிலத்தின் பெருமைக்கென்றே இயற்றப்பட்டுள்ளன. கங்கை சிவனது முடியிலிருந்து கீழே வந்தது; கெடிலம் சிவனது உடலிலிருந்து வியர்வையாய் வெளிவந்தது; எனவே இரண்டும் ஒத்த தன்மையன கெடிலத்தைக் கங்கையென்றே சொல்லலாம். என்னும் கருத்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது. கெடிலம் என்றும் வற்றாத ‘சீவநதி’ என்னும் உண்மை இப்புராணத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்நூலாசிரியர் திருமுனைப்பாடி நாட்டை மிகமிக உயர்த்திப் பேசியுள்ளார்.
“உலகுறு மலையின் மேலாம் உயர்கிரி இமயம் போலும்
திலகநன் னாட்டின் மேலாம் திருமுனைப் பாடி நாடு’’
என்னும் பாடலில் (திருநாட்டுப் படலம் -4), உலக மலைகளுள் உயர்ந்தது இமயம் (எவரெஸ்ட்) போல, நாடுகளுள் உயர்ந்தது திருமுனைப்பாடி நாடு எனப் புகழ்ந்துள்ளார் ஆசிரியர்.
பல்வேறு இலக்கியங்கள்
கெடிலநாட்டு ஊர்களின்மேல் இன்னும் பல்வேறு இலக்கியங்கள் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டு உள்ளன.
திருநாவலூர்ப் புராணம்
திருநாவலூரின் பெருமையை விளக்கும் இந்தப் புராணத்தில் ஒன்பது படலங்கள் உள்ளன. மொத்தச் செய்யுட்கள் : 514. இந்நூலின் ஆசிரியர், திருவெண்ணெய் நல்லூரில் தோன்றிய இராசப்ப நாவலர் என்பவர். இவர் திருவெண்ணெய் நல்லூர்க்கலம்பகம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். திருநாவலூர்ப் புராணத்தில் ஊர்ப்பெருமை, சுந்தரர் பற்றிய செய்தி முதலியவை புகழ்ந்து கூறப்பட்டுள்ளன.
இன்னும், திருக்கோவலூர்ப் புராணம், திருவாமூர்ப் புராணம், திருவதிகை மான்மியம், திருமாணிகுழிப் புராணம் முதலிய பல்வேறு புராண நூல்களும், திருவதிகை உலா, திருவயிந்திரபுரம் மும்மணிக் கோவை, நவரத்தின மாலை முதலிய பல்வேறு சிற்றிலக்கியங்களும் உள்ளன அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகும்.
* * *
↑ நல்வழி - 40ஆம் பாடல்.
15. கெடில நாட்டுக் கல்வெட்டுகள்
தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கான ஊர்களில் பதினாயிரக் கணக்கான கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டு பிடித்துப் படியெடுத்துச் சிலவற்றை வரிசை எண்களுடன் அரசினர் வெளியிட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட முடியாமல் அழிந்து சிதைந்துபோன கல்வெட்டுகள் பல அழியாமல் சிதையாமல் இருப்பனவற்றுள்ளும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை பல; கண்டுபிடிக்கப்பட்டிருப்பனவற்றுள்ளும் இன்னும் படி எடுக்கப்படாதவை பல படி எடுத்திருப்பனவற்றுள்ளும் இன்னும் அச்சிடப்படாதவை பல படி எடுத்தவற்றுள்ளும் இன்னும் அச்சிடப்படாதவை பத்தோ இருபதோ அல்லது நூறோ இரு நூறோ அல்ல; ஆயிரக் கணக்கானவை இன்னும் அச்சிடப்படவில்லை. எல்லாம் வெளிவந்த்ால் இன்னும் எவ்வளவோ செய்திகள் தெரிந்து கொள்ள முடியுமே!
கல்வெட்டுத்துறையில் தமிழகத்தில் கெடில நாடாகிய நடுநாட்டின் பங்குக்கும் குறைவில்லை. தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய முந்நூறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. இம் மாவட்டத்தின் எட்டு வட்டங்களுள், தொண்டை நாட்டைச் சேர்ந்த செஞ்சி வட்டம், சோழ நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் வட்டம் ஆகியவை நீங்கலாக மற்ற ஆறு வட்டங்களிலும் கல்வெட்டு படி எடுக்கப்பட்ட ஊர்களும் அவற்றிற்கு நேராகக் கல்வெட்டுகளின் எண்களும் வட்ட வாரியாக முறையே வருமாறு:
(110 - 119 என்று எண் கொடுக்கப்பட்டிருந்தால் 110 ஆம் எண்ணுள்ள கல்வெட்டிலிருந்து 119 ஆம் எண்ணுள்ள கல்வெட்டு வரை என்று பொருள் கொள்க.)
கள்ளக்குறிச்சி வட்டம்
கள்ளக்குறிச்சி 280.
ரிஷிவந்தியம் 110 முதல் 119 வரை.
உலகநல்லூர் 166 - 180.
திருவரங்கம் 66; 125 - 134.
கூகையூர் 93 - 124. முடியனுர் 267 - 270; 387 - 389. வரஞ்சரம் 181 - 191.
திருக்கோவலூர் வட்டம்
திருக்கோவலூர் - மேலுர் 1-2; 116 - 131, 243 - 266, 307 - 357.
திருக்கோவலூர் - கீழுர் 3 - 25, 200 - 201; 230 - 306.
அரகண்ட நல்லூர் - 26; 111 - 199; 386 - 391.
மணம் பூண்டி 232 - 233.
அங்கனூர் 379.
அரசங்குப்பம் 74 - 77.
அரியூர் 232 - 236.
அருங்குறுக்கை 259 - 260.
அத்திப் பாக்கம் 381.
ஆதிச்சனூர் 60.
ஆமூர் 307.
ஆர்க்காடு 49.
ஆலூர் 226 - 227.
ஆவியூர் 238 - 239.
இடைக்கல் 293.
இடையாறு 276 - 296., 395,
இல்லனுர் 285 - 286
இறையூர் 192.
உடையா நந்தல் 270.
எயுளத்துரர் 193.
எலவானாசூர் 128 - 179; 471 - 506.
எல்லப்ப நாய்க்கன் பாளையம் 356 - 357.
ஏமப் பேரூர் 513 - 533.
ஒடுவங் குப்பம் 55 - 56.
ஒரத்துர் 281.
கண்டாச்சிபுரம் 57 - 59; 236 - 237.
கரடி 218 - 222.
கழுமலம் 385 - 386.
களமருதுர் 297 - 298.
காங்கியனூர் 455 - 461.
காடகனூர் 69 - 72.
காடியார் 237.
காட்டு இடையாறு 202 - 205.
காட்டுப்பையூர் 256 - 258.
காந்தல வாடி 272. கிங்கிலிவாடி 67 கிருட்ணாபுரம் 223 - 227.
கீரனூர் 217.
கீழப் பாளையம் 507.
குஞ்சரம் 360 - 363.
குண்ணத்துர் 321.
குமாரமங்கலம் 294.
குலதீபமங்கலம் 383.
குளப்பாரை 243.
கூத்தனூர் 323.
கூவனூர் 393 - 394 கொடுக்குப்பட்டு 382.
கொல்லூர் 202 - 207.
கோட்டை மருதுரர் 221 - 222.
சந்தப்பேட்டை 225.
சம்பை 67 - 127; 429 - 445, சாங்கியம் 428.
சிக்காடு 206, சித்த பட்டணம் 462 - 463.
சித்தலிங்க மடம் 261 - 265, 367 - 431.
சித்தாமூர் 68.
சிறுப்பாக்கம் 380.
சிறுவத்துரர் 291.
சுந்தரவாண்டி 371.
செங்கணாங் கொல்லை 231.
சேந்தமங்கலம் 68 - 81, 274 - 279.
சொரயப்பட்டு 384.
சோழ வாண்டிபுரம் 251 - 253, தாயனூர் 234 - 235.
திம்மிச்சூர் 244 - 250 திருநறுங் கொன்றை 299; 381 - 385.
திருநாவலூர் 225 - 273, 325 - 380.
திருப்பயர் 290.
தென்குணம் 327.
தேவடியாள் குப்பம் 450 - 451.
தேவி அகரம் 254, தேவியாநந்தல் 390 - 392.
தொட்டி 223 - 224.
நகர் 303 - 306.
நத்தாமூர் 322.
நரியந்தல் 427 நாயனூர் 73.
நெடுமுடையான் 242.
நெமலி 240 - 241.
நெல்வெண்ணெய் 370 - 381.
நெற்குணம் 208 - 220.
நொணையவாடி 368.
பரமங்கலம் 336.
பரனுர் 61 - 66.
பரிக்கல் 275 - 276.
பரிந்தல் 364 - 365.
பழங் குணம் 369 - 370.
பழங்கூர் 210 - 213.
பள்ளிச்சந்தல் 446 - 449.
பனப்பாடி 400.
பாச்சப் பாளயம் 296.
பாதுர் 278 - 282.
பாலப் பந்தல் 27 - 29; 152 - 165; 401 - 426.
பிள்ளையார் பாளையம் 470.
புகைப்பட்டி 358 - 359.
புத்தமங்கலம் 292.
புல்லூர் 287 - 288.
பூமாலையனூர் 367.
பூவனூர் 324.
பெரும்பாக்கம் 283.
பேரங்கியூர் 199 - 220. 271.
பொய்கை அரசூர் 273.
மணக்குப்பம் 269.
மணலூர் பேட்டை 464 - 469.
மழவராயனூர் 284.
மாரங்கியூர் 78 - 104.
முகையூர் 235.
முண்டீச்சுரம் (கிராமம்) 180 - 198; 735 - 745.
முருக்கம்பாடி 452 - 454.
மெய்யூர் 396 - 399.
மேட்டத்துர் 274.
மேமாளுர் 228 - 230.
மேல பாளையம் 508.
மேல்தாயனூர் 215 - 216.
மேல்வாலை 52 - 53.
மோகலார் 214.
வடகுறும்பூர் 325 - 326.
விளந்தை 239.
வீரங்கிபுரம் 54.
வீரசோழபுரம் 50 - 51.
வீரணாம்பட்டு 255.
வீரப்பாண்டி 40 - 42.
திருவெண்ணெய் நல்லூர் 309 - 324; 420 - 512.
வேங்கூர் 209.
வேளாக்குளம் 228 - 231.
வேளுர் 295.
விருத்தாசலம் வட்டம்
விருத்தாசலம் 39 - 92; 94 - 102; 132 - 140.
பெண்ணாகடம் (திருத்துங்கானை மாடம்) 234 - 273.
நெல்வாயில் அரத்துறை 210 - 233.
எருக்கத்தம் புலியூர் (இராசேந்திர பட்டணம்)138-141; 377-383.
திட்டக்குடி 5 - 27.
நல்லூர்.
142 - 165.
அரியாரவி 274.
ஆதனூர் 125 - 130.
சாத்துக்குடல் 137.
கூத்தக்குடி 315 - 317.
கோபுராபுரம் 275.
திருவட்டத்துறை 198.
தொழுதுரர் 399 - 402.
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் 116 - 118.
திருவாமாத்துர் 1 - 71; 402 - 435.
பனையபுரம் 317 - 329; 436 - 438.
விக்கிரவாண்டி 283 - 290.
மாம்பழப்பட்டு 274 - 275.
அகரம் 368 - 390.
அன்னியூர் 620 - 624.
ஆனாங்கூர் 371 - 376.
எண்ணாயிரம் 330 - 351.
ஐயன்கோயில் பட்டு 32 - 35.
கோலியனுர் 110 - 115.
கண்டமங்கலம் 352 - 358.
பாணாமலை 616 - 619.
பூந்தோட்டம் 36 - 38.
மண்டகப்பட்டு 56.
திண்டிவனம் வட்டம்
திண்டிவனம் 30 - 35; 141 - 145; 204 - 218.
கிடங்கில் 222 - 229.
திருவக்கரை 166 - 208.
இரும்பை 277.
ஒழுந்தியாப்பட்டு (அரசிலி) 194 - 198.
ஆலத்துர் 49.
உலகாபுரம் 125 - 145.
பிரமதேசம் 158 - 195.
பெருமுக்கல் 36 - 47.
மரக்கானம் 23 - 43.
கோட்டைக் குப்பம் 175.
நொச்சிகுளம் 48.
கூனிமேடு 241 - 242.
கிளியனூர் 146 - 169.
தாதாபுரம் 822.
ரெட்டணி 389 - 392.
இடையாலம் 31 314
ஒலக்கூர் 351 - 357.
கந்தாடு 44 - 47.
சாத்தாம் பாடி 236 - 237.
வடசிறுவளுர் 382 - 383.
வெள்ளிமேடு பேட்டை 387 - 388.
தேவனுர் 238 - 249.
நாகாபுரம் 384 - 385.
புலியனுர் 386.
பெரமந்துர் 219 - 221.
முன்னூர் 50 - 99.
வேளுர் 100 - 124.
கைராபுரம் 253 - 258.
கடலூர் வட்டம்
கடலூர் 17 - 19; 273 - 282.
திருப்பாதிரிப் புலியூர் 115 - 135; 296 - 302.
மஞ்சக்குப்பம் 199 - 200.
செயின்ட் டேவிட் கோட்டை 84.
எய்தனூர் 141 - 147.
திருச்சோபுரம் 109 - 114.
திருத்தினைநகர் 115 - 127.
வழுதலம் பட்டு 223 - 224.
வேங்கடாம் பேட்டை 140; 366 - 370.
திருவயிந்திரபுரம் 85 - 109; 136 - 137, 243 - 257,
திருக்கண்டேசுரம் 128 - 151.
திருமாணிகுழி 148 - 170
திருவதிகை 28 - 60; 358 - 419
திருத்துறையூர் 207; 421 - 436
திருவாரூர் 131 - 139.
இவ்வூர்களிலேயன்றி, நடு நாட்டைச் சேர்ந்ததும் முன்பு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்திருந்ததும் இப்போது வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்திருப்பதுமாகிய திருவண்ணாமலையிலும் திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களிலும் பல கல்வெட்டுகள் உள்ளன. கடலூருக்கு அண்மையிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடலூர் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற பாகூர் முதலிய ஊர்களிலும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதுகாறுங் கூறிவந்த எல்லாக் கல்வெட்டுகளும் நடுநாட்டைச் சேர்ந்த செல்வங்களே, நடுநாட்டுக் கல்வெட்டு இலக்கியங்களின் மாதிரிக்காக உரைநடைக் கல்வெட்டு ஒன்றும் செய்யுள் நடைக் கல்வெட்டு ஒன்றும் காண்போம்:
உரைநடை
(கெடில வடகரை - திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலில் உள்ளது.)
பல்லவ பரமேச்வர வர்மன் - 8ஆம் நூற்றாண்டு
ஸ்வஸ்தி பூர் பரமேச்சுரப் போத்தரையர்க்கு யாண்டு மூன்றாவது, அவினூர்த்திரு அகத்தீச்வரத்து மஹாதேவர் அடியான் மணியன் திருப்பணி போவதற்கும் திரு அமிதுக்கும் ஒட்டிப் பொலியூட்டு வைத்த பரிசாவது கொறுத்தலை நாச்சன் மண்டை யாழ்வா. ரேத்தது மகிழரேத்தது மேல் உடைய அஞ்னுாற்றுக் காடியும் ஊருணி அகத்துப் பொற்குன்றச் சடங்கவியாரேத்தது மேலை பிராயசெறு வின்றலை றலை உடைய கலம் நெல்முப்பதின் காடியும் பொன் கழஞ்சும் இச் செறுவினுள் பொற்றத்தனார் கூறாயதும் கொடுஞ் செறுவு தலச்சமாடாக நெல் அஞ்பதின் காடிக்கும் பொலி ஊட்டுண்ண உடையது கொறுத்தலை பொற்க்கத்தியார் மகனிடை ஊருணி அகத்து கையீடொற்றி உடைய கலம் பொன் அறு கழஞ்சும் நெற்பதினாற் காடியும் கையீடொற்றி கொறுத்தலைப் பொற்றாழியார்ரிடை ஊருணி அகத்துக் கொண்டனங்குழி இவருடைய நிலத் தின்றலையும் கருப்பெத்தது இவருடைய மூன்று செறுவின் றலையுமாக உடைய கலம் அறுகழஞ்சும் நெல் அறுபதின் காடியும் மிக்கொண்டணங்குழி நடுவில் இரண்டு குழியின்றலையும் கொண்டணங் கிழவர் போழ நன்தியாரிடை உடைய நாற்பதின் காடி நெல்லும் பிண்டி ஊட்டிப் பட்டித் தேவபூதி அங்கமணி பெற்ற செறுவின்றலை உடைய நெல் நாநாற்பதின் காடியும் கொறுத்தலைப் பொற்கத்தியார் மகநிழுக்கங் காட்டுப்பட்டி நிலத்திலும்.லமான பட்டித்தலை உடைய அஞ்ஞாற்றுக்காடியும் கொறுத்தலைப் பொன்னிலனா ரேதத்துப்பட்டி நிலந் தலைச்சை மாடாக உடைய நெல் அஞ்னுாற்றுக் காடியும் அழிசுப் பொற்றிண்டத் திருவேதியார் தலைப் பாடகத்து ஆறு செறுவின்றலை உடைய கலம் அறு கழஞ்சு பொன்னும் இவரிடயே வடபாலை பள்ளச் செறுவின்றலை முப்பதின் காடி நெல்லும் பொலி ஊட்டு அழிசூர் சிற்றயன் தலைப்பாடகத்து மூன்று செறுவின்றலையும் அறுபதின் காடி நெல்லாலும் பதின் அஞ் காடி நெல்லும் பொலி ஊட்டுவதாகவும், இன் நெல் முதலால் பதின் காடியால் ஒரு காடி நெல் பொலி ஊட்டுவதும் பொன் கழஞ்சின் வாய் அறு கால் நெல் பொலி உண்பதாகவும் சபையும் பன்மாஹேச்வரரும். இத் தர்மம் ரrவித்தார் அடி என் தலை மேலன. கால்கடு தட்டம்.”
செய்யுள்
(கெடிலக் கீழ்கரை - திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ளது. தென்னிந்தியச் சாசனத் தொகுதி ஏழு). அடைய வளைந்தான் வீரர்
“அருள்புனை தொண்டையர் கோமா
னடைய வளைந்தபிரான்
பொருபடை மன்னவர் வீர
மொன்றே பொரும்போர் தொலைந்தும்
வருகதிர் முந்து குணதிசை
ஆள்வர் வடக்கிருப்பர்
வெருவெரு தென்திசை கொள்வர்
செல்லாநிற்பர் மேற்றிசைக்கே.”
இச் செய்யுள், தொண்டையர் கோமான் அடைய வளைந்தான் என்னும் வேந்தனுடைய படைமறவரின் பெருமையை அறிவிக்கிறது.
நடுநாட்டு ஊர்களிலுள்ள ஆயிரக்கணக்கான கல் வெட்டுகளைப் படித்துப் பார்த்தால், அந்நாட்டை அவ்வப்போது ஆண்ட மன்னர்கள், அவர்தம் காலம், ஆட்சிமுறை, அறச் செயல்கள், நடுநாட்டு மக்களின் கல்வி - சமயம் - குடும்பம் முதலியன பற்றிய வாழ்க்கை நிலைகள், நாட்டின் உட்பிரிவுகள், ஊர்களின் பழைய பெயர்கள், நாட்டு வளம் முதலிய பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
கெடிலநாட்டுக் கல்வெட்டுகள் அனைத்திலும் கெடில நாடு தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தையும் இங்கே எடுத்துக் கூறுவதென்றால் அதற்கு ஒர் எல்லையே யிராது; இந்நூல் ஆயிரக்கணக்கான பக்கங்களுடையதாய் மிக விரிந்துவிடும்.
“பண்டு தமிழில் உரைநடை இல்லை; ஆங்கிலேயர் வந்த பிறகே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தமிழில் உரைநடை தோன்றிற்று” என்று குறைகூறுபவர்க்கு, ஆங்கிலமொழி உருவாவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே - இற்றைக்கு 1500 ஆண்டு காலத்திற்கு முன்பே தமிழில் உரைநடை இருந்தது என்ற சூடான பதிலை நம்நாட்டுக் கல்வெட்டுகள் அளிக்கும்.
16. கெடில நாட்டு வளங்கள்
கெடிலக்கரை நாடு மிகமிக உயர்ந்த வளங்களை உடைய நாடு என்று சொல்ல முடியாவிடினும், வளம் அற்ற நாடு என்றும் சொல்ல முடியாது; கூடியவரையும் சராசரி வளமுள்ள நாடு என்று சொல்லலாம். மிகுந்த அளவில் இல்லாவிடினும், ஒரளவாயினும் மலை (குறிஞ்சி) வளம், காட்டு (முல்லை) வளம், வயல் (மருதம்) வளம், கடல் (நெய்தல்) வளம் என்னும் நானில வளமும் உடையது கெடில நாடு.
மலைவளமும் காட்டுவளமும்
கல்வராயன் மலை
பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் - சிறப்பாகக் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களுள் கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான மலைவளமும் காட்டுவளமும் உடையது. இங்குள்ள கல்வராயன் மலைத்தொடர் வளமுடையதாகும். இம்மலையில் தேக்கு மரங்கள், சந்தன மரங்கள், கடுக்காய் மரங்கள், மூங்கிற் காடுகள், முந்திரிக் காடுகள் முதலியவை உள்ளன. இங்கே ஏலம், இலவங்கம், காப்பி முதலியனவும் பயிரிடலாம். இன்னும் பல்வேறு காய்கறி கனிவகைகள் பயிரிடவும் ஏற்ற சூழ்நிலையுடையது இம்மலை. இம்மலையேயன்றி, இவ்வட்டத்தில் ஆங்காங்கே தனித்தனிக் குன்றுகளும் காட்டுப் பகுதிகளும் உள்ளன. கெடிலம் ஆறு தோன்றும் மையனூர் மலைக் காட்டில் பல்லாண்டுகட்குமுன் அகில், சந்தனம், தேக்கு, பாதிரி கொன்றை முதலிய மரவகைகள் நிறைந்திருந்தாக அந்த வட்டாரத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது உயர்வகை மரங்கள் அழிந்தும் - அழிக்கப்பட்டும் மறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கெடில ஆற்றின் வெள்ளத்தில் பலவகை உயர் மரங்களும் மணிகளும் காட்டு விலங்குகளும் அடித்துக் கொண்டுவரப் பட்டனவாகக் கெடிலக்கரை இலக்கியங்களில் பாடப்பட்டிருப்பதை உண்மையென்றே நம்பலாம்; ஏனெனில், கெடிலம் ஓரளவு மலைவளமும் காட்டு வளமும் உடைய கள்ளக்குறிச்சி வட்டத்திலிருந்து தோன்றி வருகிறதல்லவா?
முள்ளூர் மலைக்காடு
அடுத்துத் திருக்கோவலூர் வட்டத்திலும் சிறுசிறு மலைக் குன்றுகளும் சிறு சிறு காட்டுப் பகுதிகளும் உள்ளன.
தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாகக் காட்டுவளம் உடையது திருக்கோவலூர் வட்டந்தான். மலையமான் மரபு மன்னர்கட்கு உரியனவாகச் சங்க இலக்கியங்களில் பலபடப் புகழப்பட்டுள்ள முள்ளுர் மலையும், முள்ளுர்க் காடும் இப்பகுதியைச் சேர்ந்தனவே. இந்த முள்ளுர் மலை பின்வருமாறு சங்க நூல்களிற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது:
"ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு"
- நற்றிணை -170.
"மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து"
- நற்றிணை - 291 – கபிலர்.
"முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளுர்க் கானம் நண்ணுற வந்து"
- குறுந்தொகை - 312 - கபிலர்.
"முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி"
- அகநானூறு - 209 - கல்லாடனார்.
"பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட
மாரி உறையினும் பலவே"
- புறநானூறு - 123 - கபிலர்.
"கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பிற்
பறையிசை அருவி முள்ளுர்ப் பொருந"
- புறநானூறு - 126 - மாறோக்கத்து நப்பசலையார்.
"பொய்யா நாவின் கபிலன் பாடிய
மையணி நெடுவரை யாங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவல் செல்புறங் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளுர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந"
- புறநானூறு - 174 - மா. நப்பசலையார்.
இந்தப் பாடல்களில் முள்ளுர் மலையும் காடும் மலையமான் மன்னரும் புகழப்பட்டிருத்தலைக் காண்கிறோம். முள்ளூர் மலையை ஆரியர் முற்றுகையிட்டதாகவும் அவர்களை மலையமான் திருமுடிக்காரி முறியடித்ததாகவும் நற்றிணை கூறகிறது. பெரும்புகழுடைய முள்ளூர், மிகப் பெரிய முள்ளூர் என்னும் பொருள்களில் ‘பேரிசை முள்ளுர்’ ‘மா இரு முள்ளூர்’ என நற்றிணைப் பாடல்கள் கூறுவது காண்க. ‘முள்ளூர்க் கானம்’ என முள்ளுர்க்காட்டை கபிலரது குறுந்தொகைப் பாடல் குறிக்கிறது. முள்ளூர் மலைக்காட்டில் மழை மிகுதியாகப் பெய்வதாகக் கபிலர் புறநானூற்றுப் பாடலில் கூறியுள்ளார். இரவே தூங்குவது போன்ற இருள் செறிந்த அடர்ந்த காடும், பறையொலி போல் அருவி முழங்கியிறங்கும் மலையும் முள்ளூரில் இருப்பதாகப் புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் கூறியுள்ளார்; அவர் மேலும் ஒரு புறப்பாடலில், கபிலர் பாடிய குறைவற்ற பெருஞ்சிறப்புடைய பெரிய முள்ளுர் மலை எனக்குறிப்பிட்டு, அம்மலைக் காட்டில் வந்து பதுங்கியிருந்த சோழ மன்னனை மலையமான் திருக்கண்ணன் காப்பாற்றி, அச்சோழனுக்கு மீண்டும் சோழநாடு கிடைக்கும்படி செய்தான் என்று ஒரு செய்தி தெரிவித்துள்ளார். இவ்வாறு பாடல் பெற்ற பழம்பெரு வரலாற்றுப் புகழுடைய முள்ளூர் மலையையும் காட்டையும் தன்னகத்தே கொண்டது திருக்கோவலூர் வட்டம்.
இவ் வட்டத்தில் திருநாவலுர் வரையும் மலைப்பாங்கைக் காணலாம். ஆங்காங்கே தனித் தனிக் கற்களாயினும் தரைக்குமேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும். தோன்றும் இடத்திலிருந்து திருநாவலூருக்கு மேற்குப் பகுதி வரையும் கெடிலம் பாறைப் பாங்கிலேயே ஒடி வருகிறது என்று சொல்லலாம்; அந்தப் பகுதியில் சில இடங்களில் ஆற்றில் மணலைக் காண்பதரிது. சில இடங்களில் ஆற்றின் கரைப் பகுதிகளில் கட்டை வண்டியும் செல்ல முடியாத அளவிற்குப் பாறைகள் படர்ந்து பரவி இருக்கும். அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் ‘வரைகள் வந்து இழிதரும் கெடிலம்’ எனப் பாடியிருப்பது பொருத்தமே!
கேப்பர் மலை
அடுத்துக் கடலுர் வட்டத்திற்குள் வந்தால், கருங்கல் மலைக்குன்றுகளையும் பாறைகளையும் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக இங்கே கேப்பர் மலைத் தொடர்ச்சியைக் காணலாம். இம்மலை செம்மண் கலந்த செங்கல் மலையாகும். இம்மலைத் தொடர்ச்சி கூடலூருக்கு மேற்கே உள்ளது. கடல் மட்டத்திற்கு நூறடி உயரம் உடையது இது. கடலுர் வட்டத்தின் கிழக்குப் பகுதியில் சில கி.மீ. தொலைவு இம் மலையின் அடிவாரத்தை ஒட்டிக் கெடிலம் ஆறு ஓடி வருகிறது. இம் மலை சார்ந்த பகுதியில் முந்திரி நன்றாய் விளைந்து, முந்திரிப் பயறு வாயிலாக அயல் நாட்டுச் செலாவணி பெற்றுத் தருகிறது. இம்மலையிலிருந்து உடைத்து எடுக்கப்படும் செந்நிறக்கற்கள் பாதை போடப் பயன்படுகின்றன.
இம்மலை வண்டிப் பாளையத்திற்கு அருகில் இருப்பதால் வண்டிப் பாளையம் மலை எனப் பண்டு வழங்கப்பட்டது. மற்றும் இம்மலையைச் சார்ந்து உள்ள ஊர்ப்பெயர்களாலும் அவ்வவ்வூர்ப் பக்கங்களில் அழைக்கப்பட்டு வந்தது. செம்மண் மலை - செங்கல் மலை என்றும் இதனைச் சொல்லுவதுண்டு. சில இடங்களில் இதனை மலை என்று சொல்லுவதினும் ஒரு மேட்டுநிலம் (பீடபூமி) என்று சொல்லலாம். இதன்மேல் நிலக்கடலை முதலிய பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. பிரான்சிஸ் கேப்பர் (Francis Capper) என்னும் ஆங்கிலேயப் படைத்தலைவர் ஒருவர் 1796 ஆம் ஆண்டு கடலூருக்கு அண்மையில் இம்மலையில் ஒரு பகுதி பெற்று அதில் மாளிகையும் கட்டிக்கொண்டார்; அதிலிருந்து இம்மலை ‘கேப்பர் மலை’ என அழைக்கப்படுகிறது. இம் மாளிகை 1815இல் அரசாங்கத்துக்கு உரியதாயிற்று. இப்போது இதில் மாவட்டச் சிறைச்சாலையும் நுரையீரல், நோய்த் தடுப்பு நிலையமும் உள்ளன. சிறைச்சாலையில் சமுக்காளம் முதலிய உருப்படிகள் நெய்யப்படுகின்றன. கூடலூருக்குத் தெற்கே இம்மலையடிவாரத்தில் கேப்பர் குவாரி என்னும் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று உள்ளது. மலைக்கற்களை ஏற்றிச் செல்வதற்கு இந்நிலையம் பெரிதும் பயன்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த ஆங்கில பிரெஞ்சுப் போரில் இந்த மலை சிறப்பிடம் பெற்றிருந்தது. இந்த மலைக்காற்றும் நீரும் மூலிகைகளும் பைத்திய நோயைப் போக்குவதாகச் சொல்லப்படுகிறது.
வயல் வளம்
மருதம் எனப்படும் வயல் வளம் கெடில நாட்டில் போதுமான அளவு உள்ளது. கெடிலம் ஓடுமிடமெல்லாம் நிலம் வளங்கொழிக்கின்றது. வழியிலுள்ள அணைகளால் வயல்கள் பெரும்பயன் பெறுகின்றன. கெடிலக் கரைப்பகுதிகளிலுள்ள நன்செய் வயல்கள் மிக்க விலைப்பெறுமானம் உடையவை. கெடிலக்கரை நிலவளத்தைப் பற்றிக் கெடிலக்கரை இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மையே. எந்தப் பகுதியில் பழம்பெருந் திருக்கோயில்களும் அரசர் தலைநகர்களும் மிக்குச்சிறந்து இருக்கின்றனவோ அல்லது இருந்தனவோ, அந்தப் பகுதியை வளம் நிறைந்த பகுதியெனக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். கெடிலக்கரையில் பாடல் பெற்ற பழம் பெரும்பதிகள் பல உள்ளன. மற்றும், திருக்கோவலூர், கிளியூர், ஆற்றுார், சேந்தமங்கலம், திருநாவலூர், திருவதிகை, திருமாணிகுழி. கடலூர் முதலிய ஊர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு அரச மரபினர்கட்குத் தலைநகரங்களா யிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று கெடிலக்கரை நிலங்களில் சோற்றுக்கு நெல் விளைவதன்றி, கரும்பும் நிலக்கடலையும் நிறைய விளைந்து வெளிநாட்டுப் பணத்தைத் தருவிக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை.
கடல் வளம்
நெய்தல் எனப்படும் கடல் வளமும் ஒரளவு இங்கே உண்டு. கெடிலம் கடலோடு கலப்பதோடு அமைந்து விட்டிருந்தால் அவ்வளவு சிறப்பிருக்காது. கலக்குமிடத்தில் இயற்கைத் துறைமுகமும் அமைந்திருப்பதால்தான் கடல்வளம் இருப்பதாகச் சொல்ல முடிகிறது. மீன் பிடித்தல், உப்பளம் அமைத்து உப்பு எடுத்தல், படகு கட்டுதல், படகு ஒட்டுதல், ஏற்றுமதி - இறக்குமதி செய்தல், கப்பல் பயணம் செய்தல், கடல் வாணிகம் புரிதல் முதலிய நெய்தல் நிலத் தொழில்கள் பலவும், கெடிலம் கடலோடு கலக்கும் கடலூரில் நடைபெறுகின்றன. கூடலூர்த் துறைமுகம் மீன்பிடி துறைமுகமாகவும் இருந்து மீன்வளம் கிடைக்கச் செய்வது குறிப்பிடத்தக்கது.
நீர் வளம்
நீர்வளம் - நிலவளம் என்பார்கள். இதுவரையும் நானில (நான்கு நில) வளங்கள் விளக்கப்பட்டன. நானில வளங்கள் பெருகுவதற்கு நீர்வளம் இன்றியமையாதது. அதற்கு மழைவளம் வேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 1270 மில்லி மீட்டர் மழை பெய்கிறது; கடற்கரையை ஒட்டியுள்ள கடலூர் வட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 2000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சராசரி ஆண்டுக்கு 55 நாள்கள் மழை பெய்கிறது எனலாம். இப்பகுதியில் பெரும்பான்மை மழை வடகிழக்குப் பருவக் காற்றால் பெய்கிறது.
இவ்வட்டாரத்தில், புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மூன்று திங்கள்களும் மழைக்காலமாகும்; மார்கழி, தை, மாசி ஆகிய மூன்றும் பனிக்காலமாகும்; பங்குனி பனிக்காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடைப்பட்ட தரத்தது; சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்றும் கோடைக்காலமாகும்; ஆடி, ஆவணி ஆகிய இரண்டும் கோடைக் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் இடைப்பட்ட நிலையுடையவை. கெடிலத்தைப் பொறுத்த வரையும் எந்தக் காலத்திலும் நீர் வற்றுவதில்லை. மழை பெய்யாத போதும் ஊற்று நீர் ஆற்று நீர் ஆகிறது; அதனால் கெடிலம் வற்றாத ‘உயிர் ஆறு’ (சீவநதி) எனப் புகழப் படுகிறது.
நிலக்கனிவளம்
தமிழகத்திலேயே தென்னார்க்காடு மாவட்டமும் சேலம் மாவட்டமுந்தாம் நிலக்கனிவளம் (Minerals) மிக்க பகுதிகள். தென்னார்க்காடு மாவட்டத்துப் பழுப்பு நிலக்கரியும் சேலம் மாவட்டத்து இரும்புக் கனியும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்! பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் செம்பு, ஈயம், துத்த நாகம், வனேடியம், கெலேனியம், தோரியம், நிலக்கரி, நிலத்தடி எண்ணெய், சுண்ணாம்புக்கல், கெட்டி மண், பொம்மைக் களிமண் முதலிய நிலக் கனிவளங்கள் நிறைந்திருக்கின்றன; சிறப்பாகக் கடலூர் வட்டத்தில் எஃகு உண்டாக்க உதவும் வனேடியம், அணுவிலிருந்து ஆற்றலைப் பெருக்கப் பயன்படும் தோரியம், பல்முனைப் பயனுள்ள கெட்டி மண், உரம் செய்ய உதவும் வெண்காவி மண், பொம்மை செய்ய உதவும் களிமண், சிமிட்டி செய்ய உதவும் வெள்ளை மண், நிலத்தடி எண்ணெய், பல்வேறு பயனளிக்கும் பழுப்பு நிலக்கரி, சிமிட்டி முதலியவை செய்ய உதவும் சுண்ணாம்புக்கல் (சுக்கான்கல்) முதலியவை உள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கண்டு பிடிக்கப்பட்டுத் தோண்டி எடுக்கப்படுவது போலவே மற்ற வளங்களும் தோண்டி எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இப் பகுதியிலுள்ள சுண்ணாம்புக்கல் (Limestone) வளம் தோண்டியெடுக்கப்பட்டால் பெரும் பயன் விளைவும்.
நெய்வேலியில் நிலக்கரி தோண்டும்போது கிடைப்பது போன்ற வகைக் களிமண் கெடிலக்கரையிலுள்ள கடலுரில், பண்ணுருட்டி முதலிய ஊர்ப்பகுதிகளிலும் கிடைக்கிறது. நெய்வேலிக் களிமண்ணால் என்னென்னவோ செய்யப்பட விருக்கின்றன. கடலூர் - வண்டிப் பாளையம் பகுதியிலும் பண்ணுருட்டியிலும் வண்ணப் பொம்மைகள் பல செய்யப்படுகின்றன - பண்ணுருட்டிப் பொம்மைகள், மிகவும் பெயர் பெற்றனவன்றோ? பண்ணுருட்டிக்கு அடுத்த காடாம் புலியூர்ப் பகுதியில் உள்ள ஒருவகை வெள்ளை மண் சிமிட்டி செய்ய டால்மியாபுரத்திற்குக் கொண்டுபோகப் படுகிறது. அடுத்து, திருவயிந்திரபுரம் மலைப் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் வெண்காவிக் களிமண் குறிப்பிடத் தக்கது. கல் போல் கட்டி கட்டியாக வெட்டி எடுக்கப்படும் இம் மண், உரத்தொழிற்சாலைகட்குக் கொண்டுபோகப்பட்டு மணிலா பிண்ணாக்கு, மாட்டெலும்பு முதலியவற்றுடன் கலக்கப்பட்டு உரம் உண்டாக்க உதவுகிறது. மற்றும், வண்டிப் பாளையம் தென்னங் கீற்றுகள், நெல்லிக்குப்பம் வெற்றிலை, பண்ணுருட்டிப் பலாப்பழம் முதலியவை பெயர் பெற்றவை.
நிலக்கரி, சுண்ணாம்புக்கல், வனேடியம், கெலேனியம், தோரியம், நிலத்தடி எண்ணெய் முதலிய வளங்கள் ஒரு புறமிருக்க, - கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி வந்தவர்க்கெல்லாம் தன் உடைமைகளையெல்லாம் வரையாது வாரி வாரி வழங்கிய கொடைவளம் மிக்கிருந்த நாடு கெடில நாடு என்பதற்கு மேல் இன்னும் என்ன கூறிக் கெடிலநாட்டு வளத்தைச் சிறப்பிக்க வேண்டும்? இங்கே பின்வரும் [1]திருக்குறள்களை நினைவு செய்து கொண்டால் போதும்:
"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் ::இல்லவள் மாணாக் கடை"
"இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
* * *
↑ திருக்குறள் - 53, 1040.
17. பக்கத்து வீட்டுப் பணக்காரி
கெடிலத்தாளின் பக்கத்து விட்டில் ஒரு பணக்காரி இருக்கிறாள். இந்தப் பணக்காரி கெடிலத்தாளைவிட ஒரு சிறிது கூடுதலாக விளம்பரம் பெற்றுள்ளாள். அதற்குக் காரணம், அவள் கெடிலத்தாளினும் கூடுதலான உயரமும் பருமனும் உடையவளாயிருப்பதே. அவளுடைய செல்வம் என்பது இந்த உயரமும் பருமனுந்தான். பணக்காரியாகிய அவள் பக்கத்திலிருப்பதால், சில நேரங்களில் சிலர் கண்களுக்குக் கெடிலத்தாள் தென்படாமல் போய்விடுகிறாள். ‘பணக்காரரைச் சுற்றிப் பத்துப்பேர் இருப்பார்கள்’ என்பது பழமொழி யாயிற்றே! இதனால், திருமுனைப் பாடி நாட்டைப் புகழத் தொடங்கிய புலவர்களுள் சிலர் அந்தப் பணக்காரியின் பக்கமே பார்வையைச் செலுத்தியுள்ளார்கள். சங்க இலக்கியங்களில் கூட அப் பணக்காரிதான் இடம் பெற்றுள்ளாள். இருப்பினும், சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்ட பெரிய இலக்கியங்கள் பலவற்றில், தனது உயர்ந்த தன்மையாலும் வன்மையாலும் கெடிலத்தாளும் பரவலாக இடம்பெற்றுப் பாராட்டப்பட்டுள்ளாள்.
கெடிலத்தாளின் பக்கத்து வீட்டுப் பணக்காரியின் பெயர் தென்பெண்ணையாறு என்பது. மக்கள் இதனைப் பெண்ணையாறு என்றே அழைப்பர். இந்தத் தென்பெண்ணை, மைசூர் மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் நந்திதுர்க்கத்திற்கு வடகிழக்கே சன்னராயன் ப்ெட்டாவில் தோன்றுகிறது; கோலார் மாவட்டத்திலிருந்து வந்து பெங்களுர் மாவட்டம் வழியாகத் தமிழ் மாநிலத்தில் சேலம் மாவட்டத்திற்குள் புகுகிறது. பின் அம்மாவட்டத்தைக் கடந்து வடார்க்காடு மாவட்டத்தின் தென்மேற்கு மூலையில் புகுந்து செங்கம், திருவண்ணாமலை வட்டங்களின் வழியாக வந்து தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி வட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டித் திருக் கோவலூர் வட்டத்தில் புகுகிறது; திருக்கோவலூர் - விழுப்புரம் - கடலூர் ஆகிய வட்டங்களின் வழியே சென்று கடலூருக்கு வடக்கே 4. கி.மீ. தொலைவில் வங்காளக் குடாக்கடலில் கலக்கிறது. பெண்ணையாற்றின் நீளம் 400 கி.மீ. (250 மைல்) ஆகும்.
கெடிலமும் பெண்ணையும் திருக்கோவலூரிலிருந்து கடலூரில் கடலில் கலக்கும் இடம் வரைக்கும் பக்கத்தில் பக்கத்தில் நெருங்கித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. கடலூருக்கு அருகில் கெடிலத்திற்கும் பெண்ணையாற்றுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒன்றரை கி.மீ தொலைவுதான். இதனால்தான், பெண்ணையாறு கெடிலத்தின் பக்கத்து வீட்டுப் பணக்காரி என இங்கே உருவகம் செய்யப்பட்டது.
பெண்ணையாறு கெடிலத்தினும் நீளமும் அகலமும் உடைமையானும், மலையமான் மரபு மன்னர்களின் தலைநகராய்ச் சங்க காலத்தில் விளங்கிய திருக்கோவலுரை ஒட்டி ஒடுவதாலும் சங்கநூல்களில் பெண்ணையாறு இடம்பெற்றுள்ளது. அகநானூற்றிலுள்ள
"துஞ்சா முழவின் கோவல் கோமான்
நெந்தேர்க் காரி கொடுங்கான் மூன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்."
என்னும் (35) பாடல் பகுதியிலும், புறநானூற்றிலுள்ள
"நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே"
என்னும் (126) பாடல் பகுதியிலும் பெண்ணையாற்றைக் கண்டு கண் குளிரலாம். சங்ககாலத்திற்குப் பின்னும் தேவாரம், பெரியபுராணம் முதலிய பல்வேறு இலக்கியங்களிலும் பெண்ணையின் பெருமை பெரிதும் பேசப்பட்டுள்ளது. கெடிலம் போலவே பெண்ணைக்கும் தெய்வநெறிப் பெருமை உண்டு.
சங்க காலத்தில் மலாடு எனப் பெயர் பெற்றிருந்த திருமுனைப்பாடி நாட்டை, திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் மரபினர் ஆண்டு வந்தனர். அம் மரபினருள் சிறந்தவன் திருமுடிக்காரி. அவனைப் புகழ்ந்து பாடிய சங்கப் புலவர்கள் சிலர் கோவலூரையும் பெண்ணையாற்றையுங் கூடப் புகழ்ந்துள்ளனர். ஆனால் கெடிலத்தைப் பற்றிச் சங்கப் புலவர் எவரும் பாடவில்லை. காரணம்: பெண்ணையாறு பெரியதாய்த் திருக்கோவலூருக்கு அருகிலேயே ஒடுவதும், கெடிலம் சிறியதாய்த் திருக்கோவலூருக்குத் தெற்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவில் ஒடுவதும் ஆகும். அவ்விடத்திற்கு மேற்கே சில கல் தொலைவிலிருந்துதான் கெடிலம் தோன்றி வருகிறது. ஆதலின், அவ்விடத்தில் அது சிறியதாய்த்தானே இருக்க முடியும்? மற்றும், பக்கத்தில் பெரிய பெண்ணையாறு இருப்பதால் இதன் பெருமை அங்கே அடிபட்டுப் போயிற்று.
இருப்பினும், கெடிலம் திருக்கோவலூருக்கு மிக அண்மையில் சில கல் தொலைவிற்குள்ளேயே ஒடுவதாலும், அங்கே தன் குறுக்கே கட்டப்பட்டுள்ள புத்தனேந்தல் அணையின் வாயிலாகத் திருக்கோவலூர்ப் பகுதியை வளப்படுத்துவதாலும், திருக்கோவலூரின் பெருமைகள் அனைத்திலும் பெண்ணையாற்றைப் போலவே கெடிலத்திற்கும் பங்கு உண்டு. இந்த இரண்டு ஆறுகளும் பக்கத்தில் பக்கத்தில் இருப்பதால், கெடிலக்கரை நாகரிகத்தைப் பெண்ணைக்கரை நாகரிகமாகவும் பெண்ணைக்கரை நாகரிகத்தைக் கெடிலக் கரை நாகரிகமாகவும் கொள்வதால் தவறொன்றுமில்லை.
ஒரு கல்வெட்டு கெடிலத்தையும் பெண்ணையையும் இணைத்து முடிச்சு போட்டுள்ளது. திருக்கோவலூர் - கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் 1446 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட விசயராய மகாராயரது கல்வெட்டின் இறுதியில், இரண்டாற்றுக்கு நடு உடைய நாட்டார் எழுத்து’ என்னும் கையெழுத்துத் தொடர் உள்ளது. இங்கே இரண்டாறு எனச் சுட்டப்பட்டிருப்பவை கெடிலமும் பெண்ணையுமே. இரண்டாற்றுக்கு நடு உடைய நாட்டார்’ என்றால், இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் உள்ள பகுதியில் வாழ்பவர்கள் என்பது பொருள். இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி என்பார்கள்; இவர்களை இரண்டு ஆற்றில் ஊட்டின குட்டிகள் என்று சொல்லலாம்.
கெடிலமும் பெண்ணையும் தனித்தனி ஆறுகளாய்த் தத்தம் போக்கில் சென்று தனித்தனியே கடலில் கலக்கினும், இடையில் ஒரு பகுதியில் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. திருக்கோவலூருக்குக் கிழக்கே சிறிது தொலைவில் பெண்ணையாற்றின் வலப்பக்கத்திலிருந்து மலட்டாறு என்னும் ஒரு சிற்றாறு பிரிந்து திருக்கோவலூர் வட்டத்தைக் கடந்து கடலூர் வட்டத்துள் புகுந்து அப்பர் பிறந்த திருவாமுருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலந்துவிடுகிறது. இந்த வகையில் கெடிலமும் பெண்ணையும் உடல் தொடர்புடைய உறவினர் போல் நெருக்கம் உடையனவாயுள்ளன. இந்தக் கூட்டுறவால் பெண்ணைக்குப் பெருமையில்லை - கெடிலத்திற்கே பெருமை! ஆம் பெண்ணையின் பகுதி ஒரு துணையாறாகிக் கெடிலத்தோடு கலப்பதால் கெடிலத்திற்கே பெருமை!
உருவினால் பெரியவள் என்றாலும் பெண்ணைக்காரி வந்தவள், கெடிலக்காரியோ, பிறந்தவள். திருக்கோவலூர் ஒன்றினால் மட்டும் பெண்ணைக்காரி சிறந்தவள்; பல ஊர்களால் கெடிலக்காரி சிறந்தவள். நீர்ப்பாசனச் சிறப்போடு பெண்ணைக்காரி நின்று விடுகிறாள்; கெடிலக் காரியோ, நீர்ப்பாசனத்துடன், தன் கரையில் பெரியார்கள் பிறந்தமை, தொழில் துறை, வாணிகம், துறைமுகம் முதலிய பல்வேறு சிறப்புகளுடனும் பொலிந்து திகழ்கிறாள். சமயத்துறையிலும் பெண்ணைக்காரியினும் கெடிலத்தாளே பெரியவள்; அப்படியிருந்தும் ‘பெத்த பேர்’ பெண்ணைக்கே.
18. பாசனமும், பயிரும்
அணைக்கட்டுகள்
பாசனம்
ஆற்றுப்பாசனம் பெரும்பாலும் அணைக்கட்டுகளின் வாயிலாக நடைபெறுகிறது. கெடில ஆற்றின் குறுக்கே பல் வேறிடங்களில் பாசனத்திற்குப் பயன்படும் ஐந்து அணைக்கட்டுகள் உள்ளன, அவை முறையே முகலாற்று அணை, புத்தனேந்தல் அணை, திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவயிந்திரபுரம் அணை என்பனவாம். இவற்றுள் முதல் இரண்டு அணைகளும் திருக்கோவலூர் வட்டத்திலும் இறுதி மூன்று அணைகளும் கடலூர் வட்டத்திலும் உள்ளன. இவ்வைந்தனுள் இறுதி மூன்றுமே சிறந்தவை - பழமையானவை.
1. முகலாற்று அணை
மேற்கே திருக்கோவலூர் வட்டத்தின் தொடக்கப் பகுதியில் இந்த அணை உள்ளது. அருங்குறுக்கை என்னும் ஊருக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் முகலாறு என்னும் ஊருக்கு அருகில் சிறிய அளவில் ஒரு தடுப்பு போல் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. சீரழிந்த நிலையிலுள்ள இச் சிறு அணையால் பெரும் பயன் இல்லை. அணை என்ற பெயரளவில் இருக்கிறது இது.
2. புத்தனேந்தல் அணை
இது, திருக்கோவலூர் வட்டத்தில் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவில் புத்தனேந்தல் என்னும் ஊர் எல்லையில் உள்ளது. ஆற்றின் தென்கரையில் புத்தனேந்தல் ஊர் இருக்கிறது. இங்கே இயற்கையாகவே கெடிலத்தின் குறுக்கே அணைத்தடுப்புபோல் பாறைகள் உயர்ந்துள்ளன. அந்தக் குறுக்குப் பாறைத் தடுப்பு ஒரு சிறிய அணை போல் சிறிய அளவில் பயன் தந்து வந்தது. இங்கே ஆற்றிற்குத் தென்பால் தாமல் என்னும் ஊர் இருப்பதால் தாமல் அணை எனச் சிலரும், வடபால் மேமாளூர் என்னும் ஊர் இருப்பதால் மேமாளூர் அணை எனச் சிலரும் அழைத்து வந்ததும் உண்டு. இங்கே உள்ள குறுக்குப் பாறைமேல் 1953 ஆம் ஆண்டு சுவர் எழுப்பப்பட்டு உயரமாகச் செயற்கை அணை கட்டப்பட்டது. அதனால் இவ்வணை மற்ற அணைகளினும் மிகவும் உயரமாய்த் தோற்றமளிக்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் இருபக்கமும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக 519 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாசனத்தால் அந்த வட்டாரத்து வயல்கள் மிகவும் செழிப்பாக உள்ளன.
3. திருவதிகை அணை
அடுத்தாற்போல் கடலூர் வட்டத்திற்குள் புகுவோமானால் திருவதிகை அணையைச் சந்திக்கலாம். கடலூருக்கு மேற்கே 21 கி.மீ (13 கல்) தொலைவில், திருவதிகை என்னும் ஊருக்குக் கீழ்பால் 1847 - 1848 ஆம் ஆண்டு காலத்தில் இது கட்டப்பட்டது. அதற்குமுன் அங்கே களிமண் அணையே இருந்தது. அதை அகற்றி இந்த அணை கட்டப்பட்டது. முதலில் 443 அடி நீளமே கட்டப்பட்டிருந்தது. பின்னர் மேலும் நீட்டப்பட்டு இப்போது 523 அடி நீளம் உடையதாகத் திகழ்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் வடகரையிலிருந்து கால்வாய் பிரிந்து சென்று பல ஊர்களுக்குப் பாசன வசதி செய்கிறது. பெரிய கால்வாயிலிருந்து பல கிளைக் கால்வாய்கள் பிரிந்து அந்தப் பகுதி நெடுகிலும் ஊடுருவிச் செல்கின்றன. அந்தப் பகுதியில், மேல் பட்டாம் பாக்கம் என்னும் ஊரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிற்குள் உள்ள பாலூர்ப் பக்கம் வரவேண்டுமானால், இடையே பன்னிரண்டு வாய்க்கால்களில் ஏறி இறங்கவேண்டும். அண்மையில்தான் இந்த வாய்க் கால்களின் மேலே பாலங்கள் கட்டப்பட்டன.
திருவதிகை அணையின் வடபகுதி பார்ப்பதற்கு மிகவும் இனிமையான குளிர்ச்சியான தோற்றம் உடையது. ஆற்றின் கரையிலும் கால்வாய்க் கரையிலும் உள்ள சோலைகளும் தோப்புக்களும் கண்களுக்கு மிக்க கவர்ச்சி ஊட்டுகின்றன. அமைதியான சூழ்நிலையுடைய அந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருந்தாலும் சலிப்புத் தட்டாது. கோடைக் காலத்தில் குன்னுருக்கும் குற்றாலத்திற்கும் கோடைக்கானலுக்கும் போய்த்தான் தீரவேண்டும் என்பதில்லை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அணைக்கரைக்குச் சென்று பொழுது போக்கினாலே போதும். இளங்காதலர்கள் தனித்து இன்பப் பொழுது போக்குதற்கு உரியது மட்டுமன்றி, எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஏன், தவம் புரியும் முனிவர்களுக்குங்கூடத் தக்க சூழ்நிலை உடையது அந்த இடம். அத்தகைய திருவதிகை அணையின் படம் முன்பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.
முன்பக்கமுள்ள படம் அணையின் அழகான வடகரையில் இருந்துகொண்டு எடுத்த படம். அணைக்குமேல் நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அணைக்கு நடுவே, அணையின் சமதளத்துக்குமேல் சிறிது உயரமாக, மூடப்பட்டுள்ள நான்கு கண்கள் தெரிவதைப் படத்தில் காணலாம். 1967 சனவரி நான்காம் நாள் பிடித்த படம் இது. கோடைக் காலத்தில் இதுபோல் அணைக்குமேல் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்காது. அணைக்குக் கீழேதான் தண்ணீர் இருக்கும். கண்களைத் திறந்தே தண்ணீர் விடவேண்டும். ஆனால், என்றுமே தண்ணிர் வற்றுவது கிடையாது. எந்தக் காலத்திலும் ஒரளவு தண்ணிராவது அணைவழியாக வெளியேறிக்கொண்டிருக்கும். இப்போது அணையின் சமதளத்துக்கு மேல் கணுக்கால் அளவு தண்ணிர் வழிந்தோடுவதைப் படத்தில் காணலாம். மீனவர்கள் இக்கரைக்கும் அக்கரைக்குமாக அணையின்மேல் நடந்து சென்று மீன் பிடிக்கிறார்கள். அணையின் தளத்தில் இருக்கும் பாசி வழுக்கிவிடாமல் இருப்பதற்காக, மீனவர்கள் தம் கால் கட்டை விரல்களில் தழைகளைச் சுற்றிக் கொண்டு, கட்டை விரல்களை அழுந்த ஊன்றித் தேய்த்துக்கொண்டே நடந்து செல்லும் காட்சி, ஒரு வகை ‘சர்க்கஸ்’ காட்சிபோல் இருக்கிறது.
4. வானமாதேவி அணை
திருவதிகை அணையைத் தொடர்ந்து கிழக்கே ஏழு கி.மீ. தொலைவு வந்தால் வானமாதேவி அணையைக் காணலாம். இது, கடலூருக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் வானமாதேவி என்னும் ஊருக்குச் சிறிது தொலைவில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இது, 1862 - 1863 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. முதலில் கட்டினபோது. இதன் நீளம் 421 அடியளவே பிறகு இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது இதன் நீளம் 506 அடியும் 3 அங்குலமுமாகும். அணையின் தென்கரையிலிருந்து கால்வாய் பிரிந்து வாணமா தேவியைச் சார்ந்த பகுதிக்கும் அதன் கீழ்ப்பகுதிக்கும் பாசன வசதியளிக்கிறது. இவ்வணையிலும், கோடைக் காலத்திலும் கண்வாய்களிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருக்கும்.
வழக்குப் பெயர்
வானமாதேவி அணை என்னும் பெயர் இருப்பினும், ‘பல்லாநத்த அணை’ என்னும் பெயராலும் மக்கள் பலர் இதனை அழைக்கின்றனர். அண்மையில் ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் சிற்றுாரும் உள்ளதால், அவ்வூரின் பெயரால் மக்கள் அழைக்கின்றனர். ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் முழுப்பெயர்தான் மக்கள் வழக்கில் ‘பல்லா நத்தம்’ எனக் கொச்சையாகச் சிதைந்து மருவிவிட்டது. வானமாதேவி, பல்லவராயன் நத்தம் என்னும் ஊர்ப்பெயர்கள், பெரிய வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகின்றனவன்றோ? இவ்வூர்களைப் பற்றி, ‘கெடிலக்கரை ஊர்கள்’ என்னும் தலைப்பில் பின்னர்க் காண்போம்.
5. திருவயிந்திரபுரம் அணை
வானமாதேவி அணையைத் தொடர்ந்து கீழ்பால் எட்டு கி.மீ. தொலைவு வந்தால் திருவயிரந்திரபுரம் அணையை அடையலாம். இது கடலூருக்கு மேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊரை யொட்டிக் கட்டப்பட்டுள்ளது. 1835 - 1836 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையின் நீளம் 436 அடி ஆகும். 1903 இல் இது நன்கு வலுப்படுத்தப்பட்டது.
இந்த அணைக்குமேல் ஆற்றின் வலப்பக்கத்தில் கால்வாய் பிரிகிறது. இக்கால்வாய் கடலூரின் தென்பகுதியில் பாய்ந்து அவ்வட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது. பெரிய கால்வாயிலிருந்து சிறிய கால்வாய்கள் பல பிரிகின்றன. அவற்றிலிருந்து சிறுசிறு கால்வாய்கள் மேலும் பல பிரிகின்றன. ஓர் ஒப்புமையால் விளக்கவேண்டுமானால், நம் உடம்பு முழுவதும் உள்ள குருதிக் குழாய்கள் (இரத்த தாரைகள்) போல, இப்பகுதி முழுவதும் கெடிலத்தின் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிப் பிணைந்து ஓடிக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, திருப்பாதிரிப் புலியூரிலிருந்து தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள வண்டிப் பாளையம் வருவதற்கு ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடந்தாக வேண்டும்.
இந்தப் பகுதியை வற்றாத வளம் உடையதாகவும், கண்ணுக்கு இனிய காட்சி தருவதாகவும் செய்து கொண்டிருக்கிற பெருமை, திருவயிந்திரபுரத்து அணையினுடையதே. கடைசி அணையும் இதுதான்! முதலாவது அணையும் இதுதான். இதற்குங் கிழக்கே கெடிலம் கடலோடு கலக்கிற வரைக்கும் இடையே வேறு அணை இல்லாததால் இது கடைசி அணை எனப்பட்டது. முதல் அணையும் இதுதான் என்பது எப்படி? புத்தனேந்தல் அணை 1953ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்கும் 90 ஆண்டுகளுக்குமுன் 1862 - 1863இல் வானமாதேவி அணை அமைக்கப்பட்டது. அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன் 1847 - 1848இல் திருவதிகை அணை உருவாக்கப்பட்டது. அதற்கும் 12 ஆண்டுகளுக்குமுன் 1835 - 1836இல் இந்தத் திருவயிந்திரபுரம் அணை கட்டப்பட்டதால், இது முதலாவது அணை என்னும் பெருமைக்கு உரியதாயுள்ளது. மற்றும், கெடிலத்தின் அணைகளுள், ஏனைய அணைகளினும் இந்த அணைதான், அணை கட்டுவதற்கு ஏற்ற இயற்கைச் சூழ்நிலை மிக்கது என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
திருவயிந்திரபுரம் அணைப் பகுதிக்கும் திருவதிகை அணைப் பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவு 14 கி.மீ. அளவாகும். இந்தக் குறுகிய தொலைவிற்குள் வானமாதேவி அணை உட்பட மூன்று அணைகள் இருப்பதைக் காண்கிறோம். மூன்றனுள், மேல் புறத்தில் உள்ள திருவதிகை அணை 523 அடி நீளமும், இடையிலுள்ள வானமாதேவி அணை, முன்னையதினும் 17 அடி குறைவாக 506 அடி நீளமும், இறுதியில் கீழ்பால் உள்ள திருவயிந்திரபுரம் அணை, தனக்குமுன் உள்ளதினும் 70 அடி குறைவாக 436 அடி நீளமும் உடைத்தாயிருப்பது, கெடிலம் கீழ் நோக்கி வரவர அகலத்தில் சுருங்குகிறது என்பதை அறிவிக்கிறது. ஆறுகள் தோன்றும் இடத்தில் சிறுத்தும் நடுவில் பெருத்தும் முடிவில் மீண்டும் சிறுத்தும் போவது பொது இயல்பு தானே! கங்கையென்ன காவிரியென்ன - அவையும் இப்படித் தானே! கெடிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கா? ஆனால், கங்கையும் காவிரியும் முடிவில் சிறுத்துப் போகும் விகித அளவுக்குக் கெடிலம் முடிவில் சிறுக்கவில்லை.
கடலூர் வட்டத்திற்குள் உள்ள இந்த மூன்று அணைகளாலும் ஏறக்குறைய 8,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மொத்தம் ஐந்து அணைகளாலும் ஏறக்குறைய 10,000 ஏக்கர் நிலங்கள் பயன் அடைகின்றன. உலக ஆறுகளை நோக்கிக் கெடிலம் ஆற்றால் பயன்பெறும் நிலப்பகுதி அளவில் சிறியதாயினும், அப்பகுதி, ஐரோப்பாவின் மகிழ்விடம் (இன்பபுரி) ஆகிய அளவில் சிறிய சுவிட்சர்லாந்து போன்றதாகும்.
இவ்வணைகளேயன்றி, திருநாவலூர் - சேந்தமங்கலம் பகுதியில் கெடிலத்தில் ஒர் அணை கட்டவேண்டும் என்னும் ஒரு திட்டம் நெடுநாளாய்ப் பேச்சளவில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இஃது ஒருநாள் நிறைவேறலாம்.
பாசன முறை (ஆறு)
அணையின்மேல் புறத்தில் பெரிய வாய்க்கால் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த வாய்க்காலின் வழியாகச் சுற்று வட்டாரப் பகுதிகள் பயனுறுகின்றன. பெரிய வாய்க்காலிலிருந்து சிறிய வாய்க்கால்கள், அவற்றிலிருந்து இன்னும் சிறிய கால்வாய்கள், அவற்றிலிருந்து ஒற்றையடிப் பாதை போன்ற சிறுசிறு கால்கள் - இப்படியாகப் பிரிந்து நீர் ஒடுவதால் நிலங்கள் நேரடிப் பயன்பெறுகின்றன. சிறிது மேடான இடங்களில், வாய்க்கால்களிலிருந்து ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சப்படும். பள்ளமான இடங்களில் ஏற்றம் தேவைப்படாமல் சிறுசிறு கால்களின் வாயிலாகத் தானாகவே நீர் பாயும்; ஒருவர் மண்வெட்டியால் மடை மாற்றிவிட்டுக் கொண்டிருப்பார்; அவ்வளவுதான்! இந்தப் பகுதி நிலங்கள் மிகவும் உயர்ந்தனவாக மதிக்கப்படும். மற்றும், அணையில்லாத சில பகுதிகளிலும் ஆற்றிலிருந்து வாய்க்கால் வெட்டி நீர்ப்பாசனம் செய்கின்றனர்.
கொண்டம் போடுதல்
மேடான இடங்களில் வாய்க்கால்களில் ஏற்றம் போட்டு இறைப்பதுதான் வழக்கம். அங்கேயும் சில வேளைகளில், ஏற்றம் இறைக்காமலேயே நீர் பாய்ச்சுவதற்கு ஒரு முறை கையாளப்படுகிறது. அஃதாவது: உழவர்கள் பலர் ஒன்று திரண்டு ஒரு நாள் மாலையில், குறிப்பிட்ட ஒரிடத்தில் வாய்க்காலின் குறுக்கே ‘செயற்கை அணை’ கட்டுவார்கள், அஃதாவது, வாய்க்காலின் குறுக்கே கம்பங்களை நட்டு; கம்பங்களுக்கிடையே குறுக்குக் கழிகளைக் கட்டி அவ்விடத்தில் தழைக்கட்டு, வைக்கோல் கட்டு, மணல் முதலானவற்றைப் போட்டு உயரமாக நிரப்பி வாய்க்காலை அடைப்பார்கள். அந்தச் செயற்கை அணைக்குக் கீழ்ப்புறம் தண்ணிர் போகாமல் மேல்புறமே தேங்கிக் கரைக்கு மேல் வழிந்து நிலத்திற்குப் பாயும். இதற்குக் ‘கொண்டம் போடுதல்’ என்று பெயர் சொல்வார்கள். பெரும்பாலும் ஏற்றம் உள்ள இடங்கட்கு கீழ்பால் கொண்டம் போடுவதால், தேங்குகிற நீர் ஏற்றப் பாதையின் வழியாக வழக்கம் போல் சென்று நிலத்தில் பாயும். ஏற்றம் இறைத்துத் தொல்லைப்படும் உடலுழைப்பினைக் குறைக்கும் மாற்று முயற்சியே இது. இம்முறையில் இரவு முழுவதும் நீர் பாய்ச்சப்படும், பின்னர் வைகறையில் கொண்டத்தை எடுத்து விடுவார்கள். இவ்வாறு கொண்டம் போடுதல் அடிக்கடி நடைபெறாது. எப்போதோ ஒருவேளை உரியவரிடம் ஒப்புதல் பெற்றே செய்யப்படும். மற்ற வேளைகளில் ஏற்றமே பயன்படுத்தப்படும். மிகுந்த மேடான பகுதிகளில் இரட்டை ஏற்றமும் (இரண்டு ஆட்கள் மிதிப்பது), மேடுகுறைவான இடங்களில் ஒற்றை ஏற்றமும் (ஒராள் மிதிப்பது) பயன்படுத்தப்படும்.
பிற பாசனங்கள்
கெடிலக்கரைப் பகுதிகளில் பெரும்பாலும் ஆற்றுப் பாசனமே நடைபெறுகிறது. பெண்ணையாறு பக்கத்தில் இருப்பதால் அந்த ஆற்றுப் பாசனமும் சில இடங்களில் கெடிலக் கரை ஊர்கட்குப் பயன்படுகிறது. ஆற்றுப் பாசனமேயன்றி, சில இடங்களில் சிறுபான்மை ஏரிப்பாசனம், ஊற்றுக் கால்வாய்ப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகியவையும் நடைபெறுகின்றன.
பயிர் வகைகள்
கெடிலக்கரை நாட்டில் நெல், கரும்பு, மணிலா, கம்பு, கேழ்வரகு, எள், உளுந்து, காராமணி, மிளகாய், தென்னை, முந்திரி, மா, பலா, வாழை, வெற்றிலை, பருத்தி, சவுக்கு, ஆமணக்கு, அவுரி, முதலியவை பெரிய அளவிலும் சிறிய அளவிலுமாகப் பயிரிடப்படுகின்றன. மற்றப் பகுதிகளிலுள்ள பல்வேறு காய் கனி கிழங்கு கீரை வகைகளும் இங்கே உண்டு.
இந்தப் பகுதியில் பெரும்பாலும் இருபோகமே உண்டு. முப்போகம் மிகமிகக் குறைவு. அணை உள்ள பகுதிகளில் சில இடங்களில் இரு போகமும் நெல்லும், சில இடங்களில் ஒரு போகம் நெல்லும் - இன்னொரு போகத்தில் ஏதேனும் புன்செய்ப் பயிரும் விளைவிக்கப் படுகின்றன. கரைக்குத் தொலைவான இடங்களில் இரு போகமுமே புன்செய்ப் பயிர்கள் செய்யப்படுகின்றன.
நெல்
நெல் கடலூர் வட்டத்தில் சிலவிடங்களில் இருபோகமும் செய்யப்படுகிறது; மேற்குப் பகுதிகளில் ஒரு போகம் செய்யப் மொத்தத்தில் கெடில நாட்டில் சிறு மணி செங்கற்பட்டு சிறுமணி, பட்டரை சம்பா, கிச்சிலி சம்பா, ஒட்டு கிச்சிலி, குதிரைவால், கம்பன் சம்பா, சீரக சம்பா, சீவன் சம்பா, கோயமுத்துார் சம்பா, வையக் கொண்டான், கல்ச்சர். ஒட்டு கல்ச்சர், சொர்ணவாரி, பூம்பாளை, கார், பூங்கார், வெள்ளைக்கார், கருடன் சம்பா, வாடன் சம்பா, கலிக்கன் சம்பா முதலிய நெல் வகைகள் பல்வேறிடங்களிலும் பயிர் செய்யப்படுகின்றன. இத் துறையில் பாலூர் ஆராய்ச்சிப் பண்ணை உழவர்கட்கு உறுதுணையாயுள்ளது.
கரும்பு
கெடிலக் கரைக்குச் சிறிது தொலைவில் நெல்லிக் குப்பம் என்னும் ஊரில் ஒரு பெரிய கரும்பு ஆலை இருப்பதைக் கொண்டு இந்தப் பகுதியின் கரும்பு விளைச்சலைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை பாரி கம்பெனி நிறுவனத்தது; எட்வர்டு காம்ப்பல் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அவர் திருவெண்ணெய் நல்லூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும் ஆலைகள் நிறுவிக் கரும்பு விளைச்சலுக்கு வழி செய்தார். ஆயினும், நெல்லிக்குப்பம் ஆலையொன்றே அழியாமல் பெருவளர்ச்சி பெற்றுப் பேர் சொல்லுகிறது. பல்லாண்டுகட்கு முன் வண்டிப்பாளையம் என்னும் ஊரில் கூட ஒரு சிறு கரும்பு ஆலை இருந்து மறைந்து போயிற்று. கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையாகிய வில்வராயநத்தம் என்னும் சிற்றுாரில் பாரத அரசின் கரும்புப் பண்ணை ஒன்று இப்போது செயல்பட்டு வருகிறது. இத்தகைய அமைப்புகள் எல்லாம் கெடிலக்கரையின் கரும்பு விளைச்சலைப் பற்றிச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கரும்பு பயிரிட்டதால் பணக்காரரானவர் பலர் இப்பகுதியில் உளர்.
மணிலாக் கொட்டை
தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மல்லாகொட்டை ஜில்லா’ என்று கேலி செய்வது வழக்கம். மல்லாகொட்டை என்பது மணிலாக்கொட்டை என்பதன் திரிந்த கொச்சை உருவம். இதனை வேர்க்கடலை, நிலக்கடலை, கடலைக்காய் என்றும் அழைப்பர். மணிலா விளைச்சலில் உலகிலேயே இந்தியாதான் மிக்கது; இந்தியாவில் தமிழகம் மிக்கது: தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டம் மிக்கது. இம் மாவட்டத்தில் ஒரு தோற்றம் நான்கு நூறாயிரம் (4 இலட்சம்) ஏக்கர் நிலத்தில், இரண்டு நூறாயிரம் (2 இலட்சம்) டன் மணிலா விளைகிறது. இங்கே மிகுதியாக விளையும் ஒரு சிறப்போடு நின்று விடவில்லை; இங்கே விளையும் மணிலா ஏனைய இடங்களில் விளைவதனினும் மிக்க தரமும் உடையது. எனவே, மணிலா விளைச்சலில் இம் மாவட்டம் அளவு (Quantity), தரம் (Quality) என்னும் இருவகையாலும் சிறந்தது எனலாம். ‘மணிலாக்கொட்டை மாவட்டம்’ அல்லவா?
பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையரால் தொடங்கப் பெற்ற மணிலாப் பயிர், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று இம் மாவட்டத்தின் செல்வச் செழிப்பிற்கு வழி செய்துள்ளது. இம்மாவட்டத்தில் மணிலா எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. மணிலா விளைவைப் பெருக்க அரசு நல்ல திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. திண்டிவனம் ஆராய்ச்சிப் பண்ணை இந்தத் துறையில் செய்யும் பணி பாராட்டற்பாலது. பாரத அரசு 25 நூறாயிரம் ரூபாய் செலவில் மணிலா ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஏற்பாடு செய்துள்ளது. மொத்தத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் நெற்களஞ்சியமாகிய சிதம்பரம் வட்டம் தவிர மற்ற வட்டங்கள் யாவும் மணிலாப் பயிரால் பெரும் பயன் பெற்று வருகின்றன.
பிற பயிர்கள்
இப் பகுதியில் எள், உளுந்து, காராமணிப் பயறு, கேழ்வரகு முதலியவை தனியே பயிரிடப் படுவதன்றி மணிலாவுடன் ஊடு பயிராகவும் விளைவிக்கப்படுகின்றன. பல இடங்களில் கம்பும் பயிரிடப் படுகிறது. முன்பெல்லாம். கம்பும் கேழ்வரகும் கலந்து ஆக்கிய கூழ்தான் பகல் உணவாக இருந்தது; இரவில்தான் மக்கள் அரிசிச்சோறு உண்டு வந்தனர். இப்போது காலை, நண்பகல், மாலை, இரவு, இவற்றின் இடைவெளிகள் ஆகிய எல்லா வேளைகளிலும் நாகரிக வளர்ச்சி என்னும் பேரால் அனைவரும் அரிசி உணவையே நாடுகின்றனர்.
கெடிலக்கரைப் பகுதியில் தென்னைக்கு வண்டிப் பாளையம் வட்டாரமும், பலாவுக்குப் பண்ணுருட்டி வட்டாரமும், முந்திரிக்குக் கேப்பர் மலை வட்டாரமும் பண்ணுருட்டி வட்டாரமும், வெற்றிலைக்கும் கரும்புக்கும் நெல்லிக்குப்பம் வட்டாரமும், மணிலாக் கொட்டைக்கு எல்லா வட்டாரங்களும் பேர் பெற்றவையாய்த் திகழ்கின்றன.
19. போக்குவரவு
பாதைகளும் பாலங்களும்
கெடிலம் ஆற்றின் தோற்றத்திற்கும் முடிவிற்குமிடையே கி.மீ. கற்களுடன் கூடிய பெருநாட்டு நெடுஞ்சாலை (National Highways) ஒன்றும், மாவட்ட நெடும் பாதைகள் நான்கும் மாவட்டக் குறும் பாதைகள் நான்குமாக ஒன்பது தரைப்பாதைகளும், இரண்டு புகை வண்டிப் பாதைகளும் கெடிலத்தின் குறுக்கே கடந்து செல்கின்றன. ஒன்பது பெரிய தரைப் பாதைகளேயன்றி, ஆற்றின் அக்கரை வட்டாரத்திற்கும் இக்கரை வட்டாரத்திற்குமாகச் சிறிய சிற்றுார்ப்பாதைகள் பல உள்ளன. ஒன்பது பெரிய தரைப் பாதைகளுள் ஐந்து பாதைகளில் ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. புகைவண்டிப் பாதைகள் இரண்டிலும் புகைவண்டித் தொடர்ப் பாலங்கள் இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். இனி கெடிலத்தின் தோற்றத்திலிருந்து முறையே பாதைகளும் பாலங்களும் பற்றிய விவரம் வருமாறு:
தரைப் பாதைப் பாலங்கள்
கள்ளக்குறிச்சி வட்ட எல்லையில்
திருக்கோவலூர் வட்டத்தின் வடமேற்கு மூலையிலிருந்து மணலூர்ப் பேட்டை, மாடன் பூண்டி முதலிய ஊர்களின் வழியாகக் கள்ளக்குறிச்சி வட்ட எல்லையை ஒட்டித் தெற்கு நோக்கி வந்து கொண்டிருக்கும் மாவட்டக் குறும்பாதை ஒன்று, திருக்கோவலூர் வட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி வட்டத்திற்குள் புகும் எல்லைக்கருகில், வாய்க்கால் உருவத்தில் சிறியதாயுள்ள கெடிலம் ஆற்றைக் கடக்கிறது. இந்த இடத்தில் ஆற்றில் பாலம் இல்லை. இந்தப் பாதை நேர் தெற்காகச் சென்று, திருக்கோவலூரிலிருந்து தியாக துருக்கம் வழியாகக் கள்ளக்குறிச்சி நோக்கிச் செல்லும் மாவட்ட நெடும்பாதையுடன் கலந்து விடுகிறது.
திருக்கோவலூர் வட்டத்தில்
அரியூர் எல்லையில் (பாலம்)
திருக்கோவலூரிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு மாவட்ட நெடும்பாதை, திருக்கோவலூருக்குத் தெற்கே 12 கி.மீ. தொலைவில் அரியூர் என்னும் ஊருக்கு அருகில் கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே ஆற்றில் பாலம் உள்ளது. இந்த அரியூர்ப் பாலம் இந்த வட்டாரத்தில் போக்குவரவுக்கு மிகவும் இன்றியமையாததாகும். -
இங்கே பாலத்தைக் கடந்ததுமே ஆற்றின் தென் கரையில் பாதை இரண்டாகப் பிரிகிறது. அப்படியென்றால், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி - அஃதாவது திருக்கோவலூரை நோக்கி வந்து கொண்டிருக்கும் இன்றியமையாத இரண்டு மாவட்ட நெடும்பாதைகள் இங்கே அரியூர்ப் பாலத்தின் அருகில் ஒன்று கூடுகின்றன என்றும் சொல்லலாம்.
இவ்வாறு திருக்கோவலூரிலிருந்து வந்து அரியூர்ப் பாலத்தைக் கடந்ததும் இரண்டாகப் பிரிந்த பாதைகளுள் மேற்குப்பாதை, தென்மேற்காகச் சென்று கள்ளக்குறிச்சி வட்டத்திற்குள் புகுந்து ரிஷிவந்தியம் என்னும் ஊரைக் கடந்து தெற்குநோக்கி வளைந்து சென்று தியாக துருக்கம் என்னும் ஊருக்கு அருகில், கள்ளக்குறிச்சி வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையுடன் (State Highways) சேர்ந்து விடுகிறது. மேற்குப் பாதை இப்படியென்றால், கிழக்குப் பாதையோ, தென்கிழக்காகச் சென்று இறையூர் என்னும் ஊருக்கருகில் மீண்டும் தெற்கு நோக்கி வளைந்து எலவானாசூர்க்கோட்டை வழியே ஆசனூர் என்னும் ஊர் வனர சென்று, சென்னையி லிருந்து திருச்சி வழியாகத் தென்கோடிக்குச் செல்லும் பெரு நாட்டு நெடுஞ்சாலையுடன் (National Highways) கூடி விடுகிறது.
அரியூர்ப் பாலத்தைக் கடந்ததும் பிரியும் இந்த இரு பாதைகளும் நோக்கிச் செல்லும் குறி ( இலக்கு) இத்தகையது என்றால், அரியூர்ப் பாலத்தின் இன்றியமையாமை எத்தகையது என்பது புலனாகுமே!
களமருதூர் அருகில்
திருவெண்ணெய் நல்லூர்ப் பக்கத்திலிருந்து களமருதுார் வழியாகத் தெற்கு நோக்கிச் செல்லும் மாவட்டக் குறும்பாதை ஒன்று இவ்விரண்டு ஊர்கட்குமிடையே கெடிலத்தைக் கடக்கிறது. ஆற்றுக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் களமருதூர் உள்ளது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. இந்தப் பாதை தெற்கு நோக்கிச் சென்று கீரனூருக்கருகில் பெருநாட்டு (தேசிய) நெடுஞ்சாலையுடன் சேர்கிறது.
சேர்ந்த மங்கலம் அருகில் (பாலம்)
சென்னையிலிருந்து திருச்சி வழியாகத் தென்கோடிக்குச் சென்றுகொண்டிருக்கும் பெருநாட்டு (தேசிய) நெடுஞ்சாலை, சென்னைக்கு 185 கி.மீ (114 மைல்) தொலைவில், திருநாவலூரை அடுத்துள்ள சேந்தமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் கெடிலத்தைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் அழகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது வன்மையானது; இருபக்கங்களிலும் இரும்புச் சுவர் உடையது. இந்தப் பாலம் இல்லையெனில் நாட்டு நெடுஞ்சாலை இல்லை. நாட்டின் நெடுஞ்சாலையின் இன்றியமையாமையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எனவே, கெடிலத்தின் பாலங்களுக்குள் இந்தப் பாலமே மிகமிக இன்றியமையாததென்பது போதரும்.
கடலூர் வட்டத்தில்
பன்னுருட்டிக்கு அருகில் (பாலம்)
விக்கிரவாண்டி - விழுப்புரம் பக்கத்திலிருந்து தெற்கு நோக்கிக் கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டி - காடாம்புலியூர் வழியாக நெய்வேலிப் பக்கம் செல்லும் விக்கிரவாண்டி லோயர் அணைக்கட்டு ரோடு என்னும் மாவட்ட நெடும்பாதை ஒன்று, பண்ணுருட்டிக்கு அருகில் கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே பாலம் இல்லாதிருந்தது பெருங்குறையாயிருந்தது. அக்குறை 1962 ஆம் ஆண்டு போக்கப்பட்டது. இப்பக்கத்திலிருந்து நெய்வேலிக்குச் செல்ல வேண்டிய ஊர்திகள், பாலம் இல்லாத போது கடலூரைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பண்ணுருட்டிப் பகுதிக்கு, நெய்வேலி நகர் விரிவுப் பகுதி மிகவும் நெருக்கத்தில் வந்து விட்டது. நெய்வேலி நிலக்கரித் திட்டத்திற்கு இப் பாலம் பெரும்பயன் விளைப்பதாகும். தென்பகுதியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ஊர்திகளும் சிதம்பரம் - கடலூர் வழியாகச் சுற்றிக்கொண்டு செல்லாமல், நெய்வேலி பண்ணுருட்டி வழியாகச் சென்று தொலைவை மிச்சப்படுத்திக் கொள்வதற்கும் இப்பாலம் பேருதவி புரிகிறது.
பாலூர்ப் பக்கத்தில் (பாலம்)
பண்ணுருட்டிக்கும் கடலூருக்கும் நடுவில் உள்ள பாலூர் என்னும் ஊரிலிருந்து புறப்பட்டு, நடுவீரப்பட்டு வழியாகத் தெற்கு நோக்கிச் செல்லும் மாவட்டக் குறும்பாதை ஒன்று, புறப்படும் இடத்திற்கு அண்மையிலேயே பாலூருக்குப் பக்கத்திலேயே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே 1965 ஆம் ஆண்டில்தான் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாதை தெற்கு நோக்கிக் குறிஞ்சிப்பாடி வரையும் சென்று, கடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடி - நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்லும் மாவட்ட நெடும் பாதையில் (குறிஞ்சிப்பாடிக்கு அருகில்) கலந்துவிடுகிறது.
பாலூர்ப் பாலத்திற்குத் தெற்கே அஃதாவது ஆற்றின் தென்கரையில் சென்னப்ப நாயக்கன் பாளையம் - நடுவீரப்பட்டு என்னும் இரட்டை ஊர்கள் உள்ளன. இந்தப் பகுதி சென்னப்ப நாயக்கருக்கு உரியதாயிருந்த ‘பாளையப்பட்டு’ ஆகும். இந்தப் பாளையப்பட்டில் 8 பேட்டைகளும் 16 குப்பங்களும் அடங்கியிருந்தன. எனவே, இப் பகுதி மிகப்பெரியது என்பது புலப்படும். இப் பகுதியினர் இன்றியமையாத் தேவைகளை முடித்துக்கொள்வதற்குக் கடலூருக்கே வரவேண்டும். சில தேவைகளைப் பண்ணுருட்டியிலும் முடித்துக் கொள்ளலாம். பண்ணுருட்டி, கடலூர் இரு நகரங்களையுமே ஆற்றைக் கடந்தால்தான் அடையமுடியும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கான நாள்களில் இப் பகுதி மக்கள் அடைந்த அல்லலுக்கு அளவேயில்லை; இந்தக் காலத்தில் உறவினர் குடும்பங்களில் நல்லது கெட்டது நடந்தாலும் அக்கரையினர் அக்கரையிலேயே இக்கரையினர் இக்கரையிலேயே இருக்க வேண்டியதுதான்! உடல் தெம்பும் உள்ள உறுதியும் உடையவர்கள் வேண்டுமானால், ஆற்றின் தென் கரையை ஒட்டிச் செல்லும் மலை வழியாகக் கல்லிலும் முள்ளிலும் ஒற்றையடிப் பாதையிலும் நடந்து கடலூரை அடைய முடியும். பன்னெடுங்காலமாகத் தீராதிருந்த இப் பெருந்தொல்லை 1965 ஆம் ஆண்டு கட்டிய பாலத்தின் வாயிலாகத் தீர்ந்தது. மக்கள் மட்டில்லா மகிழ்வெய்தினர்.
மற்றும், இந்தப் பாலத்திற்குக் கிழக்கே சிறிது தொலைவில்தான் வானமாதேவி அணைக்கட்டு உள்ளது அப்பகுதியில் ஆற்றின் தென்கரையில் வானமாதேவி, திருமாணிகுழி முதலிய ஊர்கள் உள்ளன. இந்தச் சூழ்நிலையையும் இணைத்துப் பார்க்குங்கால், பாலூர்ப் பாலத்தின் இன்றியமையாமை இன்னும் நன்கு புலப்படும்.
வானமாதேவிக்கு
நெல்லிக் குப்பத்திலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு சிறு குறும் பாதை கெடிலத்தைக் கடந்து, தென்கரைக்கு அப்பால் சிறிது தொலைவிலுள்ள வானமாதேவிக்குச் செல்கிறது. மிக மிகக் குறுகிய இச் சிறுபாதையில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை.
திருவயிந்திரபுரம் அருகில்
கடலுரரின் ஒர் உட்பிரிவாகிய திருப்பாதிரிப் புலியூர் என்னும் நகரிலிருந்து ஒரு மாவட்ட நெடும்பாதை புறப்பட்டு, திருவயிந்திரபுரம், பண்ணுருட்டி, திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களின் வழியாகச் சென்று கடலூருக்கு வடமேற்கிலுள்ள திருக்கோவலூரை அடைகிறது. இந்தப் பாதை, தான் புறப்படும் திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊருக்கு அண்மையில் - திருவயிந்திரபுரம் அணைக்குக் கீழ்ப் பக்கத்தில் - கெடிலத்தைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. பாலம் இல்லாவிடினும், ஆற்றுப் படுகையின்மேல் பேருந்து வண்டிகள் (பஸ்) செல்கின்றன. திருவதிகைப் பக்கத்திலிருந்து கிழக்குநோக்கி ஓடிவரும் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் வடக்குநோக்கித் திரும்பித் திசைமாற்றம் பெற்றிருப்பதாக முன்பு (பக்கம் : 50 - 51) பார்த்தோமே - அந்த வடக்கு நோக்கிய ஆற்றோட்டத்தின் குறுக்கேதான் இந்தப் பாதை செல்கிறது. இந்தப் பாதைக்கு மேல்புறம் மிக அண்மையில் திருவயிந்திரபுரம் அணை இருப்பதால் ஆற்று நீர் அணைக்கு மேல்புறம் தேக்கப் பட்டுள்ளது; அதனால் அணையின் கீழ்புறம் ஆற்றில் மிக மிகக் குறைந்த நீரே கசிந்து ஒடிக் கொண்டிருக்கிறது; இதனால்தான் இப் பாதையில் பாலம் இல்லாமலேயே பேருந்து வண்டிகள் எளிதில் செல்ல முடிகிறது. ஆனால், மழைக்காலத்தில் மட்டும் செல்ல முடியாது.
கடலூர் நடுவண் (பாலம்)
மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூடலூர் என்னும் மூன்று பெரும் பிரிவுகளையுடையது கடலுர் நகராட்சி. இவற்றுள் கூடலூருக்கு ‘முதுநகர் (Old Town) என்றும், ஏனையவற்றிற்குப் ‘புதுநகர்’ (New Town) என்றும் பெயர். புதுநகர்ப் பகுதியில் மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்கும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கு தெற்காக ஒடுகிறது. ஆற்றின் கிழக்குக் கரையில் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியும், மேற்குக் கரையில் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியும் உள்ளன. இரு பகுதிகட்கும் இடையே தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு, மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம் பகுதிக்குத் தெற்கே கிழக்கு நோக்கித் திரும்பி ஓடுகிறது. திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் கூடலூர்ப் பகுதி உள்ளது; இவ்விரண்டிற்கும் இடையே ஆறு இல்லை.
கெடிலத்தால் பிரிக்கப்பட்டுள்ள மஞ்சக்குப்பம் -புதுப்பாளையம் பகுதியையும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியையும் கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இணைக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரம் கடலூர் தலைநகரின் உறுப்புகளும் நகராட்சி அலுவலகம் முதலியனவும் மஞ்சக்குப்பம் - புதுப் பாளையம் பகுதியில் உள்ளன. பாடல் பெற்ற திருக்கோயிலும் புகைவண்டி நிலையமும் பேருந்து வண்டி நிலையமும் பெரிய கடைத் தெருவும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியிலும், துறைமுகமும் வாணிகக் கூடங்கள் முதலியனவும் கூடலூர்ப் பகுதியிலும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்தப் பகுதிகளை இணைக்கும் ஆற்றின் பாலம் எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லாமலே விளங்கும்.
பரந்த கடலூர் நகராட்சியிலுள்ள மக்களுக்கும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் - இன்னும் சொல்லப் போனால் கடலூரைத் தலைநகராகக் கொண்ட தென்னார்க்காடு மாவட்டத்து மக்களுக்கும் உதவுவதோடு இப் பாலத்தின் இன்றியமையாமை அமைந்துவிடவில்லை. பிற மாவட்ட மக்களுக்குங்கூட போக்குவரவுத் துறையில் இப் பாலம் பேருதவி புரிகிறது. சென்னையிலிருந்து மரக்காணம் - புதுச்சேரி வழியாகவோ, அல்லது திண்டிவனம் - புதுச்சேரி வழியாகவோ, அல்லது திண்டிவனம் - விழுப்புரம் வழியாகவோ சிதம்பரத்திற்கும் அதற்கும் தென்பகுதிக்கும் செல்ல வேண்டியவர்களும், அதேபோல் அத்தென்பகுதியிலிருந்து இந்த ஊர்களின் வழியாகச் சென்னை செல்பவர்களும் இடையிலுள்ள கடலூரைக் கடந்தேயாக வேண்டும். இவ்வாறு கடலூரைக்
கடக்க உதவும் மாவட்ட நெடும் பாதை, கடலூர் நகருக்கு நடுவண் உள்ள கெடிலத்தின் பாலத்தின் மேல்தான் செல்கிறது. மற்றும், நெய்வேலி வழியாக விருத்தாசலம் - கடலூர்த் தலைநகர்ப் பகுதியிடையே பயணம் செய்பவர்களும் இப் பாலத்தைக் கடந்தே செல்ல வேண்டும். எனவே, போக்குவரவுப் பயனில் இந்தப் பாலம் மிக்க இன்றியமையாமை உடையது என்பது தெளிவு. இந்தப் பாலத்தில் இரும்பு மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர் இரும்பால் ஆனது. இதில் காலையிலும் மாலையிலும் நெரிசல் மிகுதியாக இருக்கும். அந்நேரத்தில் இப்பாலத்தைக் கடப்பதில் மிக்க விழிப்புத் தேவை. இதற்காகச் சில ஆண்டுகட்கு முன், இந்தப் பாலத்தின் இருமருங்கிலும் நடப்பவர்கட்கெனத் தனியே நடை பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் இதன் நெரிசல் மிகுதி விளங்கும்.
மேலுள்ளது, கடலூர் நடுவண் உள்ள கெடிலப் பாலம். ஆற்றின் கிழக்குக்கரையில் பாலத்தின் தென்புறம் இருந்து கொண்டு எடுத்த படம் இது. இதை எடுத்த நேரம் நடுப்பகல்; ஆதலால் பாலத்தில் போக்குவரவு நெரிசல் காணப்படவில்லை. படம் எடுத்த நாள் 7-1-1967 ஆகும்.
இந்தப் பாலத்தின் தென்பக்கத்தில், சிதைந்து போன சிறிய பாலம் ஒன்று தரை மட்டத்திற்குச் சிறிது உயரமாக இருக்கக் காணலாம். படத்தில் இப்போது தெரிகிற பெரிய பாலம் கட்டுவதற்கு முன் இருந்த பழைய பாலம் இது 7-1-1967 ஆம் நாளைய நிலவரம் இது.
சிதைந்து காணப்படும் இந்தப் பழைய பாலம் இப்போது (1970) புதிய பாலமாகவும் - பெரிய பாலமாகவும் மாற்றப் பட்டுள்ளது. இதை நோக்க, படத்தில் தெரியும் பெரிய பாலம் இப்போது (1970) சிறிய பாலமாகவும் பழைய பாலமாகவும் காணப்படுகிறது. அஃதாவது சிதைந்து போன சிறிய பழைய பாலம் உள்ள இடத்தில், 30,00,000 (30 இலட்சம்) ரூபாய் செலவில் ஒரு பெரிய அகலமான புதிய பாலம் கட்டப்பட்டு 1969 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு ‘அண்ணா பாலம்’ என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிகவும் அகலமாக இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதால், ஊறு இன்றிப் போக்குவரவு செம்மையாய் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராயிருப்பதன்றி, நெய்வேலித் திட்டத்திற்கு அருகில் இருப்பதையும் கெடிலத்தின் கிளையில் துறைமுகம் இருப்பதையும் ஈண்டு நினைவு கூர்ந்தால், இந்தப் புதிய பாலத்தின் இன்றியமையாமை புலப்படும்.
கெடிலம் ஆறு கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூரில் தோன்றும் இடத்திலிருந்து கடலூரில் கடலில் கலக்கும் இடம் வரைக்கும் இடையிடையே ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளுள் இறுதிப்பாதை கடலூர் நடுவண் உள்ள இந்தப் பாதைதான் - இறுதிப் பாலம் கடலூர் நடுவண் உள்ள இந்தப் பாலம்தான்.
ஆற்றின் தோற்றம் தொடங்கி முடிவுவரை இடையிடையே ஐந்து அணைகள் உள்ளமை போலவே ஐந்து பாலங்கள் உள்ளன. அணைகளைப்போலவே பாலங்களும், திருக் கோவலூர் வட்டத்தில் இரண்டும் கடலூர் வட்டத்தில் மூன்றுமாக அமைந்துள்ளன.
மாநில நெடுஞ்சாலை
கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் திருக்கோவலூர் வட்டத்திலும் கடலூர் வட்டத்திலும் உள்ள இன்றியமையாப் பாதைகளுள் பெரும்பாலன இதுவரை கூறப்பட்டுள்ளன. பெருநாட்டு நெடுஞ்சாலைக்கு (National Highways) அடுத்த படியான இன்றியமையாமையுடைய ஒரே ஒரு பாதைதான் இன்னும் கூறப்படவில்லை. அதுதான் மாநில நெடுஞ்சாலை (State Highways) யாகும். இது கடலூர் - மஞ்சக் குப்பத்தில் புறப்பட்டுத் திருக்கோவலூர்ப் பக்கமாகச் செல்கிறது. இதையொட்டி மாவட்ட நெடும்பாதை ஒன்றும் செல்கிறது. அது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநில நெடுஞ்சாலை எங்கும் கெடிலத்தைக் குறுக்கிட்டுக் கடக்காததால் இதுவரை இங்கே குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்த மாநில நெடுஞ்சாலை கெடிலக்கரைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்; ஏனெனில் கடலூரில் புறப்படும் இந்த நெடுஞ்சாலை, கடலூரிலிருந்து திருக் கோவலூர்ப் பக்கம் வரைக்கும் ஏறக்குறையக் கெடிலக் கரையை ஒட்டியே எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, பலமுனைப் பயன் நோக்கி இந்த மாநில நெடுஞ்சாலை கெடில நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.
பேருந்து வண்டி போக்குவரவு
மேற்கூறிய பாதைகளுள் பெரும்பாலனவற்றில் பேருந்து வண்டி (பஸ்) போக்குவரவு நடைபெறுகிறது. மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரிலிருந்து எல்லாப் பக்கங்கட்கும் போக்கு வரவு நடைபெறுகிறது. புதுச்சேரி காரைக்கால் பேருந்து போக்குவரவு, அரசின் சென்னை - தஞ்சாவூர் பேருந்து போக்குவரவு முதலியன கடலூர் வழியாக நடைபெறுகின்றன. கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே கால் மணி நேரம் - அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வண்டி உண்டு. பண்ணுருட்டிக்கும் கடலூருக்குமிடையே சிமிட்டியால் போடப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலையில் (State Highways) பேருந்து வண்டி, பேருந்து சுமை வண்டி (லாரி), மாட்டு வண்டி, முதலியவற்றின் நெரிசல் மிகுதி. இங்கே அடிக்கடி ஊறுகள் (விபத்துகள்) நேர்வதும் உண்டு. காரணம்: பண்ணுருட்டியும் கடலூரும் பெரிய வணிக நிலையங்களாக இருப்பதும், இரண்டிற்கும் இடையே நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை இருப்பதும் ஆகும். இந்தப்பகுதியில் கரும்பு ஏற்றிக் கொண்டு வரும் பேருந்துகளும் மாட்டு வண்டிகளும் மிகுதி.
கடலூர் வட்டத்தில் கடலூரிலும் நெய்வேலியிலும் அகநகர்ப் பேருந்து (டவுன் பஸ்) வசதி உண்டு.
புகைவண்டிப் பாதைப் பாலங்கள்
சேந்தமங்கலம் அருகில்
சென்னைப் பக்கத்திலிருந்து திருச்சி வழியாகத் தென் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் பெருநாட்டு நெடுஞ்சாலை (National Highways) சென்னைக்கு 185 கி.மீ. தூரத்தில் சேந்தமங்கலம் என்னும் ஊடுக்கருகில் கெடிலத்தைக் கடப்பதாகவும் அங்கே ஒரு தரைவழிப்பாலம் கட்டப் பட்டிருப்பதாகவும் பார்த்தோமே அந்தப் பாலத்திற்கு மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் குறுக்கே புகைவண்டித் தொடர்ப்பாலம் இருக்கிறது. தரைவழிப்பாலத்தில் நின்று கொண்டு பார்த்தால், புகைவண்டித் தொடர்ப்பாலம் நன்றாகத் தெரியும். சென்னைப் பக்கத்திலிருந்து புகைவண்டித் தொடர்ப் பாதையும் தரைவழி நெடுஞ்சாலையும் பக்கத்தில் பக்கத்தில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வது போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புகைவண்டித் தொடர்ப் பாதை சேந்தமங்கலத்திற்கு மேற்கே சிறிது தொலைவில், விழுப்புரம் விருத்தாசலம் பாதையிலுள்ள பரிக்கல் (Station) நிலையத்திற்கும் பாதுார் நிலையத்திற்கும் நடுவே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே உள்ள பாலம் கெடிலத்தின் குறுக்கே உள்ள புகைவண்டிப் பாலங்கள் இரண்டனுள் முதலாவதாகும். இரண்டாவது கடலூர் அருகே உள்ளது.
கடலூர் அருகில்
விழுப்புரம் (Junction) சந்திப்பிலிருந்து கூடலூர் (கடலூர் முதுநகர்) சந்திப்பிற்குச் செல்லும் புகைவண்டித் தொடர்ப் பாதையொன்று, வார்க்கால்பட்டு நிலையத்திற்கும் திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்ப் புதுநகர்) நிலையத்திற்கும் நடுவே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே ஒரு பெரிய புகைவண்டித் தொடர்ப் பாலம் இருக்கிறது. திருவயிந்திர புரத்திலிருந்து வடக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் மீண்டும் கிழக்கு நோக்கி வளையும் இடத்தில் இந்தப் பாலம் இருக்கிறது. இதற்கு மேல் புகைவண்டிப் பாலம் இல்லை.
புகைவண்டிப் போக்குவரவு
கெடிலக்கரை நாட்டில் இன்றியமையாத இரண்டு புகைவண்டி நிலையச் சந்திப்புக்கள் (Junctions) உள்ளன அவற்றுள் ஒன்று விழுப்புரம் மற்றொன்று கூடலூர். இரண்டுமே ஒவ்வொரு வகையில் மிகவும் இன்றியமையாதனவா யுள்ளன. விருத்தாசலம் சந்திப்பும் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்ததுதான்.
விழுப்புரம் சந்திப்பிலிருந்து ஐந்து பாதைகள் பிரிகின்றன. அவை: (1) செங்கற்பட்டு சந்திப்பு வழியாகச் சென்னை செல்வது; இப்போது இது மின் பாதையாக்கப்பட்டுள்ளது; (2) கூடலூர் சந்திப்பு வழியாக மாயவரம் பக்கம் செல்வது;
(3) விருத்தாசலம் சந்திப்பு நோக்கிச் செல்வது; (4) வேலூர் - காட்பாடி பக்கம் செல்வது (5) புதுச்சேரிக்குச் செல்வது. பல பக்கங்கட்கும் செல்லும் பெரிய சந்திப்பு ஆதலின் விழுப்புரம் சந்திப்பு இன்றியமையாததாய்க் கருதப்படுகிறது. கூடலூர்ச் சந்திப்பிலிருந்து நான்கு பாதைகள் பிரிகின்றன. அவை: (1) விழுப்புரம் செல்வது; (2) மாயவரம் செல்வது; (3) நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்வது, (4) கூடலூர்த் துறைமுகத்திற்குச் செல்வது. இந்தக் கூடலூர்ச் சந்திப்பு, தன் அருகில் துறைமுகம் உடைமையாலும், நிலக்கரி தோண்டும் நெய்வேலியைப் பக்கத்திலே உடைமையாலும் மிகவும் இன்றியமையாததாய் மதிக்கப்படுகிறது.
விருத்தாசலம் சந்திப்பிலிருந்து கூடலூருக்கு ஒரு பாதையும், திருச்சிக்கு ஒரு பாதையும் சேலத்திற்கு ஒரு பாதையுமாக மூன்று பாதைகள் பிரிகின்றன. அண்மையில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் செயல் படுவதால் இந்தச் சந்திப்பும் இன்றியமையாமை பெற்று வருகிறது.
மற்றும், நெய்வேலிப் புகைவண்டி நிலையத்திலிருந்து நெய்வேலிக்குள்ளே பொறிகளையும் பொருள்களையும் கொண்டு போவதற்காக 8 கி.மீ. தொலைவு அளவிற்கு ஒரு குறும்பாதை அமைக்கப்பட்டுள்ளது. புகைவண்டி நிலையமே இல்லாது கிடந்த நெய்வேலி, தன் நிலக்கரித் திட்டத்தால், 1961 ஆம் ஆண்டு ஆறு நூறாயிரம் (6 இலட்சம்) ரூபாய் அளவு பெறுமானமுள்ள புகைவண்டி நிலையக் கட்டடங்களைப் பெற்றிருப்பது பெருவியப்பிற்குரியது.
அடுத்து, கடலூர் வட்டத்தில் கூடலூர்ச் சந்திப்பு இருந்தாலும், அதன் வடக்கே அடுத்தாற்போல் உள்ள திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையம் கூடலூர் நிலையத்தினும் ஒருவகையில் சிறப்புடையதாகும். திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்கோயிலுக்கும், திருவயிந்திரபுரம் திருமால் கோயிலுக்கும், மஞ்சக்குப்பம் புதுப்பாளையம் பகுதியிலுள்ள மாவட்டத் தலைநகர்த் தலைமைச் செயலகங்கட்கும் செல்பவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் தான் இறங்கவேண்டும். இங்கே விரிவான கட்டடங்களும் மேம்பாலமும் உண்டு. தெற்கேயிருந்து வந்து கூடலூர்ச் சந்திப்போடு முடிந்து நின்றுவிட வேண்டிய வண்டிகள், கூடலூர்ச் சந்திப்பைத் தாண்டித் திருப்பாதிரிப் புலியூருக்கும் வந்துதான் பின்னர் ஒருமுறை கூடலூர்ச் சந்திப்புக்குச் சென்று நின்று தங்கிவிடும். அதேபோல், முதல் முதலாகக் கூடலூர்ச் சந்திப்பிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய வண்டிகளும் கூடலூரிலிருந்து வடக்கு நோக்கித் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்துதான் பிறகு ஒரு முறை கூடலூரை அடைந்து பின்னர்த் தெற்குநோக்கிச் செல்லும். இதிலிருந்து திருப்பாதிரிப் புலியூர் நிலையத்தின் இன்றியமையாமை பெரிதும் புலப்படும்.
கூடலூரிலிருந்து புதுச்சேரிக்குக் கால் மணி நேரம் - அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து வண்டிபோகியும், இட நெருக்கடி மிகுதியாயுள்ளது. இந் நெருக்கடியைக் குறைக்கவேண்டுமாயின், கூடலூர்ச் சந்திப்பிலிருந்து புதுச்சேரிக்குப் புகைவண்டி விடவேண்டும். அவ்வாறு இந் நாள்வரை விடப்படாமைக்குக் காரணம், கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே பல ஆறுகள் இருப்பதே. பொருட் செலவைப் பொருட் படுத்தாமல் இந்த ஆறுகளின்மேல் பாலங்கள் கட்டிப் புகைவண்டிப் பாதை அமைத்தால், இந்தப் பகுதி மக்கள் பெரும்பயன் எய்துவர்.
கெடிலக்கரைப் பகுதிகளிலுள்ள புகைவண்டிப் பாதைகள். 3 அடி 3 3/8 அங்குலம் அகலங்கொண்ட குறுகிய ‘மீட்டர் கேஜ்’ (Metre Gauge) பாதைகளே.
நீர்வழிப் போக்குவரவு
படகு
கூடலூரில் துறைமுகம் இருக்கும் கெடிலக் கிளையாகிய உப்பனாற்றிற்கும் கடலுக்கும் இடையே ஒரு தீவு உள்ளது. அத்தீவை அக்கரை என்று இக்கரையில் உள்ளவர் அழைப்பர். அந்த அக்கரைத் தீவில் கோரி, சிங்காரத் தோப்பு முதலிய சிற்றுார்கள் உள்ளன. கூடலூருக்கும் அக்கரைத் தீவிற்கும் இடையேயுள்ள உப்பனாற்றின் அகலம் ‘முக்கால் பர்லாங்கு’ இருக்கும். ஆற்றைக் கடந்து அக்கரைக்கும் இக்கரைக்கும் சென்றுவரப் படகுப் போக்குவரவு நடை பெறுகிறது. படகு என்றால் ஒன்று - இரண்டு அல்ல; ஆறு படகுகட்குமேல் பயன்படுத்தப் படுகின்றன. பள்ளிச் சிறார்கட்கும் நகராட்சி அலுவலர்க்கும் கட்டணம் இல்லை; ஏனையோர் பணங் கொடுத்தே படகுகளில் பயணஞ் செய்ய வேண்டும்.
கப்பல்
இந்தியக் கிழக்குக் கடற்கரையிலுள்ள சிறிய துறை முகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகம்.
இந்தத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பிறதுறைமுகங்கட்கும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலுமுள்ள சில நாடுகட்கும் கப்பல் போக்குவரவு நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களைக் ‘கூடலூர்த் துறைமுகம்’ என்னும் தலைப்பிலும், தொழில் வாணிகத் துறைகள் என்னும் தலைப்பிலும் விரிவாகக் காணலாம். இந்தத் துறைமுகத்தில் கப்பல்கள் கரைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் நின்று கொண்டிருக்கும்; துறைமுகத்திற்கும் கப்பல்களுக்கும் இடையே, உப்பனாற்றின் வழியாகப் படகுகள் இயங்கிப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும். கடல் நீரின் ஏற்றவற்றத்திற்கு இயைய, உப்பனாற்றில் நீர்மட்டம் உயர்ந்திருக்கும்போது படகுகள் விடப்பட்டு நன்கு போய்வரும்.
விண்வழிப் போக்குவரவு
திருக்கோவலூர் வட்டத்தில் செடிலம் ஆற்றிற்குத் தென்மேற்கே ஆறு கி.மீ தொலைவில் உளுந்துர்ப் பேட்டை புகைவண்டி நிலையத்திற்கருகில் ஒரு விண்ணூர்தி நிலையம் (விமானநிலையம்) உள்ளது. இஃது, இரண்டாவது உலகப் பெரும்போரின்போது 1942ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந் நிலையத்தின் வாயிலாக விண்ணுர்திப் போக்குவரவு இப்போது நடைபெறவில்லை இருப்பினும், இன்றியமையாத் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக இது நன்கு காக்கப்பட்டு வருகிறது.
இடைக் காலத்தில் இருமுறை இந் நிலையம் பயன்படுத்தப் பட்டது. 1954ஆம் ஆண்டு சனவரித் திங்களில், இந்தியத் தலைமையமைச்சராயிருந்த நேரு பெருமான் அவர்கள் தமிழகம் வந்தபோது, விண்ணுரர்தியில் சென்னையிலிருந்து இந்த உளுந்துார்ப்பேட்டை நிலையத்தில் வந்திறங்கிப் பின்னர் அங்கிருந்து சிதம்பரம் முதலிய இடங்கட்குச் சென்றார்கள். நேரு அவர்களைப் போலவே, ருசிய நாட்டுத் தலைவர் பிரெஷ்னோ அவர்களும் 1961 ஆம் ஆண்டில் விண்ணுர்தியில் வந்து இந்த நிலையத்தில் இறங்கி நெய்வேலி முதலிய இடங்கட்குச் சென்றார்கள்.
இஃதன்றி, இடையிடையேயும் அடிக்கடி இங்கே வானவூர்திகள் வந்து இறங்குவதுண்டு. அண்மையில் 1966 நவம்பர்த் திங்களில் ஒரு முறையும் 1967 மார்ச்சுத் திங்களில் ஒரு முறையும் இங்கே விண்ணுர்தி இறங்கிற்று. இப்படி ஏதோ தேவையுள்ள போதெல்லாம் இறங்குவது உண்டு. இதிலிருந்து, இந்த நிலையம் தொடர்ந்து காக்கப்பட்டு வருமாற்றை அறியலாம்.
இப்போது வறிதே கிடக்கும் இந் நிலையம், இரண்டாவது உலகப்பெரும் போர்க் காலத்தில் மிக்க நெரிசல் உடையதாயிருந்தது என்பதைப் புதிதாக அறிபவர் பெருவியப்பு அடையாமலிருக்க முடியாது. அப்போது இங்கே நூற்றுக் கணக்கான விண்ணூர்திகள் இருந்தன. போர்ச் சூழ்ச்சிகட்கு ஏற்ற அமைப்புக்களும் இங்கே இருந்தன. இதைக்கொண்டு, இந் நிலையத்தின் பரப்பையும் வன்மை - திண்மையினையும் அறிய முடிகிறது. அந்தப் பரப்பும் வன்மையும் இப்போதும் உள்ளன. போனது வந்ததைப் பழுது பார்த்துச் சீர்திருத்திப் போக்குவரவுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால், தென்னார்க்காடு மாவட்டத்திற்கு வருபவர்களும் இங்கிருந்து செல்பவர்களும் புகைவண்டியிலும் பேருந்து வண்டியிலும் நெடுந்தொலைவு சென்று படும் தொல்லை குறையலாம். இந் நிலையம் நெய்வேலித் திட்டத்திற்கு அருகில் இருப்பதாலும் பிற காரணங்களாலும் இனி எதிர்காலத்தில் பெரிய அளவில் விரிவாக்கப் படலாம் என உய்த்துணரலாம். [1]இப்போது, நெய்வேலி நிலக்கரித் திட்டப் பகுதியிலிருந்து இந்தப் பகுதிக்கு ஒரு சிறந்த நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
* * *
↑ *இந்தச் செய்திகள் எழுதிய நாள் : 5.5-1967
20. கூடலூர்த் துறைமுகம்
பெரிய துறைமுகங்களில் பெரும்பாலும் கப்பல்கள் கரையை யொட்டித் துறைமுகப் பகுதியிலேயே நிற்கும். சிறிய துறைமுகங்களிலோ, கரைக்கு வெகு தொலைவில் கடல் நடுவே கப்பல்கள் நின்றுகொண்டிருக்கும். பெரிய துறைமுகங்களில் கரைக்கும் கப்பலுக்குமாகப் பொறிகளின் துணைகொண்டு அப்படியே சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் செய்யலாம்; சென்னைத் துறைமுகத்தில் இப்படி நடப்பதை நேரில் காணலாம். ஆனால், சிறிய துறைமுகங்களிலோ, கரையோரத் துறைமுகப் பகுதிக்கும் - கடல் நடுவே நிற்கும் கப்பல்களுக்கும் இடையே படகுகள் தூதுபோய் வரும். படகுகளின் வாயிலாகவே சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி நடைபெறும்.
சிறிய துறைமுகங்களிலும் பல வகையுண்டு. கடற் கரையிலிருந்து படகுகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கப்பலுக்குச் செல்வதும், அதேபோல் கப்பலிலிருந்து ஏற்றிக்கொண்டு கரைக்கு வருவதுமாக உள்ளது ஒருவகை. இத்தகைய இடங்களில் கரைக்கும் படகுக்குமாகச் சில அடி தொலைவாயினும் சரக்குகளைக் கைகளால் தூக்கிக்கொண்டு கால்களால் நடந்து போகவும் வரவும் வேண்டும். மற்றும், சரக்குகளின் கனத்துடன் கரையின் மணற்பகுதிக்கும் - ஒரளவு ஆழமான தண்ணிர்ப் பகுதிக்குமாகப் படகுகளை நகர்த்திக்கொண்டு போவதற்கும் வருவதற்கும் மனித முயற்சி பெரிதும் தேவைப்படுகிறது. இந்த நிலைமையைக் காரைக்கால் துறைமுகம் போன்றவற்றில் காணலாம். (காரைக்காலில் மழைக்காலத்தில் மட்டும் அரசலாற்றின் வாயிலாய்ப் போக்குவரவு நடைபெறுவதுண்டு. மற்ற காலத்தில் முகத் துவாரம் அடைபட்டுவிடும்). இன்னன சிறிய துறைமுகங்களுக்குள் மிக மிகச் சிறிய வசதி குறைந்த துறைமுகங்களாம். இந்த வசதிக் குறைவைப் போக்குவதற்காக, கரையிலிருந்து கடலுக்குள் ஒரளவு தொலைவு வரையும் இரும்புப் பாலம் கட்டி ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்ற துறைமுகங்கள் மற்றொருவகை. இது செயற்கை முறைதான். இந்த நிலைமையைப் புதுச்சேரித் துறைமுகம், தூத்துக்குடித் துறைமுகம் முதலியவற்றில் காணலாம். இந்தப் பாலத்தின் முடிவில் கீழே கடலில் படகுகள் மிதந்து கொண்டிருக்கும். தரையிலிருந்து பாலத்தின் வழியாகச் சரக்குகளைக் கொண்டுசென்று படகுகளில் ஏற்றுவர். படகுகள் அவற்றைத் தொலைவில் நிற்கும் கப்பல்களில் கொண்டுபோய் ஏற்றும். அதேபோல் கப்பல்களிலிருந்து சரக்குகள் படகுகளின் வழியாகப் பாலத்தை யடைந்து பின்னர்த் தரைக்குக் கொண்டு வரப்படும். இந்தப் பாலத்திலிருந்து அண்மையிலுள்ள புகைவண்டி நிலையத்திற்குப் புகைவண்டிப் பாதை இணைப்பு இருப்பதும் உண்டு.
இவற்றினும் கூடலூர்த் துறைமுகம் வேறுபட்டது. இத் துறைமுகத்தில், மணலிலிருந்து படகுகளை வலிந்து ஒட்டிச் சென்று கப்பல்களை யடையவேண்டியதில்லை. செயற்கைத் துறைமுக அமைப்பான கடற் பாலமும் இங்கே கிடையாது தேவையும் இல்லை. கூடலூர்த் துறைமுகம் ஒர் இயற்கைத் துறைமுகமாகும். கடற்பாலத்தின் வேலையை இங்கே கெடிலத்தின் கிளையாகிய உப்பனாறு செய்து விடுகிறது. உப்பனாற்றிலிருந்து படகுகள் நேரே கடலுக்குள் புகுந்து கப்பல்களை அடைகின்றன. எனவேதான் இஃது இயற்கைத் துறைமுகம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதிகள் உப்பனாற்றின் மேற்குக் கரையில் நடக்கின்றன.இந்தத் துறைமுகப் பகுதியில் உப்பனாறு வடக்கும் தெற்குமாக உள்ளது: பின்னர்த் தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி வளைந்து திரும்பிக் கடலை அடைகிறது. கடல்நீரின் ஏற்ற வற்றத்திற்கு ஏற்ப உப்பனாற்றின் நீர் மட்டம் பார்த்துப் படகுகள் விடப்படும். உப்பனாற்றங்கரையில் இருக்கும் கூடலூர்த் துறைமுகத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்:
இதுதான் கூடலூர்த் துறைமுகத்தின் படம். இஃது, உப்பனாற்றின் மேற்குக் கரையில் நின்று கொண்டு எடுத்த படம். ஆற்றுக்கு அப்புறம் இருப்பது கிழக்குக்கரை. கிழக்குக் கரையில் ஒரு பெரிய தோப்பு தெரிவதைக் காணலாம். அந்தத் தோப்பில் மரங்கள் நீண்டு உயர்ந்திருப்பது தெரியும். ஆனால், அத்தனை மரங்களும் இலை தழை இல்லாத மொட்டை மரங்களே. இந்த மரங்களில் எப்போதுமே இலை தழைகள் இருப்பதில்லை. அப்படியென்றால் இஃது என்ன தோப்பு? இது தோணித் தோப்பு. அஃதாவது, தோப்பு ஒன்றுமில்லை; கிழக்குக் கரையில் நூற்றுக்கணக்கான தோணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்டு உயர்ந்து தெரியும் மரங்கள் எனப்படுபவை, தோணிகளின் நடுவே உள்ள பாய் மரங்களே. அந்தப் பாய் மரங்களின் எண்ணிக்கையைக் கொண்டு தோணிகளின் எண்ணிகையை அறியலாம். படத்தில் தோணிகள் தனித் தனியாகத் தெரியவில்லை. ஏதோ ஐந்து அல்லது பத்துத் தோணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் தோணிகளின் உருவம் தனித்தனியாகத் தெரியும். கணக்கற்ற தோணிகள் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கும்பலாய்க் குவிந்திருக்கும் இடத்தில் தனித்தனி உருவம் எப்படித் தெரியும்? இந்தக் காட்சியைக் கொண்டு, கூடலூர்த் துறைமுகத்தின் தகுதியை நாம் மதிப்பிட முடியும்.
படத்தில் நமது வலக்கைப் பக்கமாக அஃதாவது ஆற்றின் மேற்குக் கரையிலும் சில தோணிகள் நின்று கொண்டிருக்கக் காணலாம். அந்தத் தோணிகளில் சரக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் எடுத்தபோது, சேலம், ஹாஸ்பெட் ஆகிய இடங்களிலிருந்து புகைவண்டி வாயிலாக வந்த இரும்புக் கணிக் கற்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இவை, சப்பானுக்கும், ஐரோப்பாவிலுள்ள மேற்கு செர்மனி முதலிய நாடுகட்கும் அனுப்பப் படுகின்றனவாம். ஏற்றுமதி இறக்குமதி குறித்து வாணிகப் பிரிவில் பின்னர் விரிவாகக் காணலாம்.
இந்தத் துறைமுகப் பகுதியில் உப்பனாறு ஏறக்குறைய ‘முக்கால் பர்லாங்கு’ அகலம் உள்ளது. அதனால் தோணிகள் வசதியாக இயங்க முடிகிறது. கூடலூர்ப் புகைவண்டி சந்திப்பு நிலையத்திலிருந்து துறைமுகப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத் தொடர்பு இருக்கிறது. சரக்குகளைச் சுமந்து கொண்டுவரும் புகைவண்டிப் பெட்டி ஆற்றின் கரையிலேயே வந்து நிற்கும். புகைவண்டிப் பெட்டியிலிருந்து சரக்குகளை எளிதாகத் தோணியில் இறக்கலாம்; அதேபோல் தோணியிலிருந்து பெட்டியில் ஏற்றலாம் சிறு பிள்ளைகளும் இந்த வேலையைச் செய்யும் அளவுக்கு அவ்வளவு அண்மையில் கரையை யொட்டித் தோணிகளும் உள்ளன - புகைவண்டிப் பெட்டிகளும் உள்ளன. இதற்கேற்றாற்போல், ஆற்றின் கரை படிப்படியான சரிவாயில்லாமல் செங்குத்தாய்த் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
துறைமுகப் பகுதியில் நின்றுகொண்டு கிழக்கே நோக்கினால், இடையிலேயுள்ள அக்கரை எனப்படும் கழிமுகத் தீவுக்கு அப்பால் கடலிலே கப்பல்கள் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அதைக் காட்டும் படம் வருமாறு:
இந்தப் படம், உப்பனாற்றின் மேற்குக் கரையில் இருந்துகொண்டு எடுக்கப்பட்டதாகும். துறைமுகப் பகுதிக்கும் கடலுக்கும் நடவே தீவு தெரிவதைக் காணலாம்.
பெரிய சிறிய துறைமுகம்
கூடலூர்த் துறைமுகம் சிறிய துறைமுகமே யெனினும் சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகமாகும். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நான்கு பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவை: (1) தமிழ் மாநிலத்திலுள்ள சென்னைத் துறைமுகம், (2) ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகம், (3) ஒரிசா மாநிலத்திலுள்ள பாராதிப் (Paradip) துறைமுகம், (4) மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கல்கத்தா துறைமுகம் ஆகியவையாம். இந் நான்கனுள் கல்கத்தா துறைமுகம் கடற்கரையில் இல்லை; உள்ளே வெகு தொலைவு தள்ளி ஃஊக்ளி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்றும் வங்கக் கடற்கரையில் உள்ளன. தமிழ் நாட்டின் தூத்துக்குடித் துறைமுகத்தை, இந் நான்கிற்கும் அடுத்தபடியாகப் பெரிய துறைமுகங்கள் பட்டியலின் இறுதியில் சேர்க்கலாம். அஃதாவது, இஃது இரண்டாந்தரப் பெரிய துறைமுகமாகும். இந்தப் பெரிய துறைமுகங்கள் தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கக் கடற்கரையில் சிறிய துறைமுகங்கள் சிற்சிலவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலுள்ள “ஃபால்சு பாயின்ட் (Faise Point) துறைமுகமும் தர்மா துறைமுகமும், ஆந்திர மாநிலத்திலுள்ள காகிநாடா துறைமுகமும் மசூலிப்பட்டினம் துறைமுகமும், தமிழ் மாநிலத்திலுள்ள கூடலூர்த் துறைமுகமும், நாகப்பட்டினம் துறைமுகமும், புதுவை மாநிலத்திலுள்ள புதுச்சேரி துறைமுகமும் காரைக்கால் துறைமுகமும் சிறியவை. இந்தத் துறைமுகங்களுக்குள் புதுச்சேரியில் கடற் பாலம் வழியாகவும், மற்றவிடங்களில் ஆற்றங் கழி வழியாகவும் ஏற்றுமதி - இறக்குமதிகள் நடைபெறுகின்றன. இந்தச் சிறிய துறைமுகங் களுக்குள் மிகப் பெரியது கூடலூர்த் துறைமுகம். அஃதாவது, இந்தியாவின் கிழக்குக் கரையிலுள்ள சிறிய துறைமுகங் களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகமே.
பாடல் பெற்ற பழைய துறைமுகம்
தமிழ் மாநிலத்தில் தொண்டை நாட்டின் துறைமுகமாயிருந்த மாமல்ல (மகாபலி)புரமும், சோழ நாட்டின் துறைமுகமாயிருந்த காவிரிப்பூம் பட்டினமும், பாண்டி நாட்டின் துறைமுகமாயிருந்த கொற்கையும், சேரநாட்டின் துறைமுகமாயிருந்த முசிறியும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே சங்க இலக்கியங்களில் பழம் பெரு முது புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்டுள்ளன. அந்தோ! அந்தத் துறைமுகங்கள் இப்போது எங்கே? அனைத்துலக நாடுகளுடன் பெரு வாணிகம் புரிந்த அந்தப் பழம்பெருந் துறைமுகங்கள் இப்போது எங்கே? உலகின் பல நாட்டினரும் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டிருந்த அந்த மாபெருந் துறைமுகங்கள் இப்போது எங்கே? அவற்றைப் பேணிக் காத்து வந்த தமிழரசர்கள் இப்போது எங்கே? அந்தோ தமிழகமே! நீ அளியை!
தமிழகத்தின் பழம் பெருந் துறைமுகங்கள் மறைந்து விடினும், நடு நாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டின் துறைமுகமாகிய பழைய கூடலூர்த் துறைமுகமாவது இன்னும் ‘கண்ணை மூஞ்சை ‘ காட்டிக்கொண்டிருப்பது ஒரு நற்பேறே! பழம்பெரு நூல்களில் இல்லாவிடினும், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், கெடிலக் கிளையின் வாயிலாக நடைபெறும் கூடலூர்த் துறைமுகம் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. இங்கிருந்து சிங்களம், சோனகம், கொங்கணம், கன்னடம் முதலிய நாடுகளுடன் கப்பல் போக்கு வரவு இருந்ததாம். பல நாடுகளிலிருந்தும் பல்வகைப் பொருள்கள் வந்து குவிந்தனவாம். இச் செய்திகளை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - திருநகரப் படலத்திலுள்ள,
[1]
‘சிங்களம் சோனகம் சென்று பின்னரும்
கொங்கணம் கன்னடம் குறுகி மீடரும்
வங்கம் வெந் நரகினுஞ் சுவர்க்க மற்றினும்
தங்கி மீள் சூக்குமத் தனுவை மானுமால்’. (15)
‘பன்னிறக் கோசிக மணிப் பரப்பு மற்று
உன்னரும் பொருளெலாம் ஒருங்கு தாங்கிவந்து
இந்நகர்க்கு உதவிய வங்கம் யாவையும்
தன்னிடம் தருமுரு மாயை சாலுமால்: (17)
‘எவ்வகைத் தேசத்தின் வளமும் இந்நகர்க்
கவ்வியந் தீர்தரக் கொணர்ந் தளிக்குமந்
நவ்வியை நால்வகைப் பொருளு நாட்டுநூற்
செவ்விய வென்னவே தெரிக்க லாமரோ;’ (20)
முதலிய பாடல்களால் அறியலாம். கூடலூர்த் துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல், இலங்கை வழியாகத் துரக்கிழக்கு ஆசிய நாடுகட்குச் சென்றும், பின்னர் மேற்கு நாடுகட்குச் சென்றும், பின்னர்க் கொங்கணம் மைசூர் மாநிலக் கடற்கரை வழியாகக் கன்னியாகுமரி முனையைக் கடந்து மீண்டும் கூடலூர்த் துறைமுகத்தையடையும் என்ற குறிப்பு மேலுள்ள பாடல்களிலிருந்து புலனாகிறது. அஃதாவது, நுண்ணுடம்பு (சூக்குமத் தனு) செய்துள்ள தீவினையை நுகர நிரயத்திற்கும் (நரகத்திற்கும்) நல்வினையை நுகர வானுலகிற்கும் (சுவர்க்கத்திற்கும்) சென்று மீண்டும் மண்ணுலகத்திற்கு வருவதுபோல், கூடலூர்த் துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல் கீழை நாடுகட்கும் மேலை நாடுகட்கும் சென்று மீண்டும் கூடலூரை அடைவதாக முதல் பாட்டில் ('சிங்களம்......மா னுமால்') கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராண ஆசிரியராகிய சிதம்பர முனிவர் நேரில் பார்த்தே எழுதியிருக்கவேண்டும். இப்பொழுதும் கூடலூர் மீனவர்கள் படகுகளின் வாயிலாகவே இலங்கை வரையும் சென்று சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்துவரும் திறல் உடையவராயிருக்கின்றனர்.
பாடல் பெற்றதும் பழமையானதுமாகிய இந்தத் துறைமுகத்தில், ஒரு துறைமுகத்திற்கு இருக்கவேண்டிய கலங்கரை விளக்கு, சுமை தூக்கிகள் (Cranes), ஏராளமான படகுகள், தொழிலாளிகள், சேமிப்புக் கிடங்கு, கப்பல் வாணிக நிலையங்கள், புகைவண்டி இணைப்பு முதலிய அனைத்து வசதிகளும் உள்ளன. மிக்க பொருட் செலவுடன் மேலும் முயன்றால், இந்தத் துறைமுகமும் ஒரு பெரிய துறைமுகமாக மாறலாம்; பக்கத்திலேயே நெய்வேலித் திட்டமும் அதன் இணைப்பான சேலம் உருக்காலைத் திட்டமும் இருப்பதால் எதிர் காலத்தில் இது நடைபெறலாம்.
* * *
↑ *15 - சிங்களம் = இலங்கை, சோனகம் = சீனம், மலாசியா, இந்தோனேசியா, அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளைக் குறிக்கும் பொதுப் பெயர். கொங்கணம் = மகாராட்டிரத்திற்கும் மைசூர் மாநிலத்திற்கும் இடையில் கொங்கணமொழி பேசும் பகுதி, கன்னடம் = கன்னடம் பேசும் மைசூர் மாநிலம்; வங்கம் = கப்பல். 20 - நவ்வி = கப்பல்.
21. தொழில் - வாணிகம்
கைத்தொழில்கள்
கெடில நாட்டில் இப்போது பல வேறு பெருந்தொழில் களுக்கும் சிறு தொழில்கட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பினும் அன்றும் இன்றுமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பெரிய கைத்தொழில் நெசவுதான். இத்தொழில் பரவலாகப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
நெசவு
பண்டு நெசவுக்குரிய நூல்கள் கையாலேயே நூற்கப்பட்டன. இன்று ஆலைகளில் நூற்கப்பட்டு கிடைக்கின்றன. 20,40, 60, 80, 100 ஆம் எண்ணுள்ள நூல் வகைகளால் உடைகள் நெய்யப்படுகின்றன.
பண்ணுருட்டி, புதுப்பேட்டை ஆனத்துார், குடுமியாங் குப்பம், சென்னப்பநாய்க்கன் பாளையம், நடுவீரப்பட்டு, பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம், குணமங்கலம், நல்லாற்றுார், கம்மியன் பேட்டை, வண்டிப்பாளையம், புருகேசு பேட்டை, வசந்தராயன் பாளையம், கூடலூர், குறிஞ்சிப்பாடி, கருங்குழி முதலிய ஊர்களில் நெசவுத் தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. இங்கெல்லாம் வேட்டி, துண்டு, சேலை, கைலி (லுங்கி) முதலிய வகைகள் நெய்யப்படுகின்றன. இப்போது பெரும்பாலான ஊர்களில் கைலி மிகுதியாக நெய்யப்படுகிறது. கடலூர் - வசந்தராயன் பாளையத்தில் பட்டு நெசவு நடைபெறுகிறது. கடலூர் - கேப்பர் மலைச்சிறையில் சமக்காளம் - விரிப்பு முதலியவை நெய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி திருக்கோவலூர் வட்டங்களில் சில ஊர்களில் கம்பளி நூற்பும், கம்பளி நெசவும் நடைபெறுகின்றன. கள்ளக் குறிச்சி வட்டத்தில் சில இடங்களில் சணல் நூற்பும் சணல் பொருள்கள் செய்தலும் நடைபெறுகின்றன.
நெசவு பெரும்பாலும் கைத்தறிகள் வாயிலாகவே நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் விசைத்தறிகள் இயங்குகின்றன. மின்சாரத்தால் ஒடும் விசைத்தறிகள் ஏற்படுவதற்கு முன் தோன்றி இப்போது கையால் நெய்யப்படும் கைத்தறிகள் விசைத்தறிகள் என்று சொல்லப்படுகின்றன.
இதற்கும் முன்பு கையாலேயே நாடாவைப்போட்டுக் கோத்து வாங்கி நெய்தார்கள்; அப்போது அதனைக் கைத்தறி என்றார்கள். பின்னர், கையாலேயே சுங்கு பிடித்து இழுத்து நாடாவைத் தானாகவே போய் வரும்படி செய்தார்கள்; இதற்கு விசைத்தறி என்னும் பெயர் கொடுக்கப்பட்டது; இப்போது இந்தக் கைவிசைத்தறியைத்தான் கைத்தறி என்கிறோம். மின்சாரத்தால் ஒடும் தறி விசைத்தறி எனப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் ஆலையில் வேலை பார்க்கிறார் என்றால், ஆலை வேலை அவரோடு சரி, ஒருவர் அலுவலகத்தில் (ஆபிசில்) வேலை பார்க்கிறார் என்றால், அந்த வேலை அவரோடு சரி. ஆனால் நெசவுத்தொழில் அப்படிப்பட்டதன்று. ஒரு வீட்டில் ஒரு தறி ஆடுகிறதென்றால், அந்தக் குடும்பம் முழுதும் அதற்காக வேலை செய்ய வேண்டும். நூல் இழைத்தல், பாவு ஒடுதல், பாவு தோய்தல், பாவு பிணைத்தல், தார் சுற்றுதல் முதலிய பல்வேறு தொழில்கள் நெசவுக்கு முன் செய்யப்படுகின்றன. இத் தொழில்களில் பெண்களுக்கும் சிறுவருக்கும் பங்கு உண்டு. பெண்கள் - சிறுவர்கள் - கிழங்கட்டுகள் எல்லோருமாகச் சேர்ந்து சில்லறை வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தால்தான் ஆடவன் தறியில் அமர்ந்து நெய்து கொண்டிருக்க முடியும். ஒரு சில ஏழைக் குடும்பங்களில் பெண்களும் தறி நெய்கிறார்கள்.
செங்குந்தர், சேடர், சேணியர், தேவாங்கர், சாலியர் முதலிய இனத்தவர் நெசவு வேலை செய்கின்றனர். நெசவு இவர்களின் குலத்தொழிலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பல்வேறு இனத்தவரும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவுத் தொழில் செய்யும் செங்குந்தர்கள் குழு குழுவாக வாழ்கின்றனர். அவர்கள் வாழும் ஊர்களில் அவர்களே பெரும்பான்மையினராயுள்ளனர். மேலும் இந்தத் தொழில் கூடிச் செய்ய வேண்டிய குடிசைத் தொழிலாகும். மானங்காக்கும் இந்தத் தொழிலில் எந்தவகைத் தீமையும் இல்லையாதலின் இதனைத் திருவள்ளுவர் செய்தார் என்று சொல்லப்படுகிறது. ‘செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்கின், நெய்யுந் தொழிற்கு நிகரில்லை’ என்னும் முதுமொழியும் உண்டு.
முன்காலத்தில் கைத்தறித் துணிகள் தறியின் மேலேயே விற்பனையானதுண்டு. இப்போது நெசவாளர்கள் துணிக்கடைகளில் கொண்டுபோய்க் கொடுத்தும் சந்தைகட்குக் கொண்டு போயும், தலை மூட்டையாக ஊர் ஊராகத் தெருத் தெருவாகச் சுற்றியும் துணிகளை விற்பனை செய்கிறார்கள். இஃதன்றிப் பெரிய துணி வணிகர்கள் நெசவாளர்களிடமிருந்து துணிகளை வாங்கி வெளியூர்கட்கு அனுப்புவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இப்பகுதியில் உண்டாக்கப்படும் கைலி வகைகள் வெளிநாடுகட்கு அனுப்பப்பட்டு வெளிநாட்டுச் செலாவணியை நம் நாட்டுக்குத் தேடித்தருகின்றன. இந்த வகையில் கைலி நெசவு நாட்டுக்குப் பெருந்தொண்டு புரிகிறதென்று சொல்லலாம். கடலூர், குறிஞ்சிப்பாடி, சென்னப்ப நாய்க்கன் பாளையம் முதலிய இடங்களில் பெரிய கைலி வணிக நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கட்கு நம் நாட்டில் சென்னையிலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஏடன் முதலிய நாடுகளிலும் கிளைநிலையங்கள் உள்ளன. கெடில நாட்டுக் கைலிகள், சிலோன், பெனாங்கு, மலேயா, சிங்கப்பூர், சரவாக், போர்னியோ, சாவா, சுமத்ரா, தாய்லாந்து, பர்மா, இந்தோ சைனா, ஹாங்காங், சப்பான், ஏடன், மோரிஸ், அமெரிக்கா, பாகிஸ்தான் முதலிய நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன - செய்யப்படுகின்றன. இப்போது இப் பகுதியிலிருந்து கைலிகள் ‘வண்ணம் மாறும் சென்னைத் துணிகள்’ என்னும் பெயரில் சென்னை வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு அமெரிக்க டாலரைப் பெற்றுத் தருகின்றன.
கைலி வாணிகம் புரியும் வணிக நிலையங்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நடைபெறுகின்றன. அரை கோடி, முக்கால் கோடி, ஒரு கோடி ரூபாய் முதலீடுகளில் நடைபெறும் நிலையங்களும் உள எனலாம். இப்போது, பல்வேறு இடங்களிலும் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றி நெசவாளர்க்கும் நெசவுத்தொழிற்கும் நன்மை புரிந்து வருகின்றன.
இந்தப் பகுதிக் கைலிகள் இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாக அயல்நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில ஆண்டுகட்கு முன்வரையும் கெடிலக்கரையில் இருக்கும் கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாகவும் நடைபெற்று வந்தது.
நெசவைச் சார்ந்து, நூலுக்கும் துணிகளுக்கும் சாயம் போடும் தொழில் பலவிடங்களில் விரிவாக நடைறெகிறது. துணிகளுக்கு அச்சுக் குத்தும் தொழிலும் சில விடங்களில் ஒரளவு நடைபெறுகிறது. இது முன்பு விரிவாக நடைபெற்றதுண்டு.
பல்வேறு கைத்தொழில்கள்
துணி நெசவேயன்றி, கோரைப்பாய், ஈச்சம்பாய், பனையோலைப் பொருள்கள், மூங்கில் பொருள்கள், {hwe|{சூளை,|செங்கற்சூளை}} மண் பாண்டங்கள், செம்பு பித்தளைக் கலங்கள், வண்ணப் பொம்மைகள். மரவேலைப் பொருட்கள், தென்னங் கீற்றுகள், கயிறுகள், கயிற்றுப் பொருள்கள், மீன் வலைகள், படகுகள் முதலிய பொருள்களைச் செய்தலோடு பல தொழில்கள் பல்வேறிடங்களில் பரவலாகவும் விரிவாகவும் நடைபெறுகின்றன. பண்ணுருட்டி, நெல்லிக்குப்பம், வண்டிப்பாளையம் ஆகிய இடங்கள் பல வண்ண மண் பொம்மைகளுக்குப் பெயர் போனவை. உப்பள வேலை, துறைமுக வேலை, கயிறு திரித்தல், கயிற்றுப் பொருள்கள் செய்தல், மீன் பிடித்தல், மீன் வலை பின்னுதல், மரம் அறுத்தல், படகு செய்தல், படகோட்டுதல் ஆகிய தொழில்கள் கூடலூரில் நடைபெறுகின்றன. கள்ளக்குறிச்சி வட்டத்தில் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் மரச்சிற்ப வேலையும், சந்தன மரத்தால் சீப்பு, விசிறி, ஊன்றுதடி முதலிய பொருள்கள் செய்தலும் நடைபெறுகின்றன. பண்ணுருட்டியில் பாக்குச்சாயம் ஏற்றல், செங்கல் சூளைபோடல், மண் பாண்டத்தொழில் முதலியவை நடத்தப் பெறுகின்றன.
சிறு தொழிற்சாலைகள்
செக்கில் எண்ணெய் ஆட்டும் தொழில் சிற்றுார்களில் நடைபெறுவதன்றி, நகரங்களில் ஆலைகளில் எண்ணெய் ஆட்டப்படுகிறது. திருக்கோவலூர், பண்ணுருட்டி, கூடலூர் முதலிய இடங்களில் எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. பண்ணுருட்டியில் மணிலா எண்ணெய் ஆலையுடன் முந்திரி எண்ணெய் ஆலையும் இருக்கின்றது; இவ்வூரிலிருந்து, முந்திரிப் பயறு தூய்மை செய்யப்பட்டு, அமெரிக்கா போன்ற வெளிநாடுகட்கு அனுப்பப்பட்டு அந்நாடுகளின் நாணயங்களை நம் நாட்டிற்குப் பெற்றுத் தருகிறது.
முன்பு திருவயிந்திரபுரத்தில் கையால் காகிதம் செய்யும் தொழிற்சாலை இருந்தது; இப்போது எடுபட்டு விட்டது. கடலூரில் காகிதப் பொம்மைத் தொழிற்சாலை இருக்கிறது. உரத்தொழிற்சாலைகள், சோப்புத் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை முதலியவை கூடலூரில் உள்ளன. அரசினரின் அம்பர் சர்க்கா நிலையம் வடலூரில் உள்ளது.
பெரிய தொழிற்சாலைகள்
கெடிலக்கரைப் பகுதியில் - தென்னார்க்காடு மாவட்டத்திலேயே ஒரே ஒரு பெரிய தொழிற்சாலைதான் இருந்து வந்தது; அதுதான் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை. பின்னரே அண்மையில் நெய்வேலியில் பெரிய தொழிற் சாலைகள் தோன்றியுள்ளன.
நெல்லிக்குப்பத்தில்
தாமஸ் பாரி (Thomas Parry), என்னும் ஆங்கிலேயர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக 1788இல் தமிழகம் வந்தார். இவர் நாளடைவில் தனி வாணிகம் புரியத் தொடங்கினார். இவர் பெயரைக் கொண்டதே ‘பாரி கம்பெனி’ என்னும் நிறுவனம். இந்நிறுவனம் தென்னார்க்காடு மாவட்டத்தில் பல இடங்களில் சர்க்கரை ஆலைகள் நிறுவிற்று. அவற்றுள் நின்று நிலைத்தது நெல்லிக்குப்பம் ஆலை ஒன்றுதான்; இது 1848இல் நிறுவப்பட்டது. இந்த ஆலைக்கு அளிக்கப்பட்ட பெயர் ‘East India Sugar Distilleries and Sugar Factories’ என்பதாகும். இது தொடக்கத்தில் சர்க்கரை உண்டாக்கியதுடன் ஆண்டொன்றுக்கு 1,60,000 ‘காலன்’ சாராயமும் காய்ச்சி விற்பனை செய்தது. பின்னர்ச் சாராயம் நிறுத்தப்பட்டது; இப்போது சர்க்கரை வேலை மட்டும் விரிவாகக் கவனிக்கப்படுகிறது. மிகப்பெரிய முதலீட்டில் மூவாயிரவர்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த ஆலை இந்தியாவின் மிகச்சிறந்த சர்க்கரை ஆலையாக மதிக்கப்படுகிறது. இங்கே பெரிய அளவில் தொழிலாளர் சங்கமும் இயங்கி வருகிறது.
இந்த ஆலை ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானம் உள்ள மூன்றரை லட்சம் டன் (Tons) கரும்புகளை வாங்குகிறது; டிசம்பர் திங்கட்கு மேல் சூன் திங்கட்குள் உள்ள கால அளவில், மூன்றரைக் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள முப்பதாயிரம் டன் (Tons) சர்க்கரை உண்டாக்குகிறது. மற்றும் இங்கே, பத்து இலட்சம் காலன் (gallons) ‘ஸ்பிரிட்’ (Spirits), இருபது இலட்சம் பவுண்ட் (Pounds) ‘கார்பானிக் ஆசிட் காஸ்’ (Carbonic Acid Gas) ஆகியவையும் ஆண்டுதோறும் உண்டாக்கப்படுகின்றன. இங்கே உண்டாக்கப்படும் பொருள்கள் தமிழகம், கேரளம் முதலிய மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
பாரி கம்பெனியார் நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலையேயன்றி , 50,00,000 ரூபாய் முதலீட்டில் இனிப்புப் பண்டத் தொழிற்சாலையும் நடத்துகின்றனர். இதன் பெயர் “Parrys Confectionary, Limited’ என்பதாகும். இங்கே உண்டாக்கப்படும் இனிப்பு வகைகள் (மிட்டாய் இனங்கள்) இந்தியா முழுவதிலும் விற்கப்படுகின்றன.
ஐ. டபிள்யூ. ஜே. புஷ் புரொடக்ட்ஸ் கம்பெனி லிமிடெட் (I.W.J. Bush Products Company Limited.) என்னும் நிறுவனத்தார் நெல்லிக்குப்பத்தில் 4,00,000 ரூபாய் முதலீட்டில் நறுமணப் பொருள் (Flavouring Essences) p_airl Tä65th Glåm golff firóðau ஒன்று அமைத்து நடத்தி வருகின்றனர். இது, ஆண்டொன்றுக்கு 2,50,000 பவுண்ட் நறுமணச்சாரப் பொருள் வகைகளை உண்டாக்குகிறது.
கூடலூரில்
கூடலூரில், ‘கடலூர் ஆயில் புரொடக்ட்ஸ் கார்ப்பொரேஷன்” என்னும் நிறுவனத்தார் ‘மணிலா எண்ணெய்த் தொழிற்சாலை’ ஒன்று நடத்துகின்றனர். இதில் நாள் தோறும் பத்து ‘டன் எண்ணெய் உண்டாக்கப்படுகிறது. இங்கிருந்து எண்ணெய் சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகட்குச் செல்கிறது.
நெய்வேலியில்
இந்திய அரசினரால் 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு (Neyveli Lignite Corporation Private Limited.) நூற்றிருபது கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீட்டுடன் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் செய்தி உலகறிந்த தொன்றாகும்; இங்கே ஆண்டுதோறும் பல இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு அச்சுக் கட்டியாக்கப்படுகின்றது. அடுப்புக் கரிக்கட்டிகளும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. ரஷிய உதவியுடன் அனல் மின்சார நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடங்கப்பட்டுள்ள யூரியா உரத்தொழிற்சாலை உலகிலேயே மிகப் பெரியதென மதிக்கப்படுகிறது. நெய்வேலி நிலக்கரிக் கழிவைக் கொண்டு தார், டீசல் முதலியனவும், களிமண் வகைகளைக் கொண்டு சிமிட்டி, மின் கருவிகள், அழகுப் பொருள்கள் முதலியனவும் உண்டாக்கும் தொழில் நிலையங்கள் உருவாகியுள்ளன; நெய்வேலி நிலக்கரித் திட்டத்தின் சார்பாக இன்னும் எஃகு இரும்பு முதலிய பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படலாம். இங்கே பல்லாயிரவர் பணிசெய்து வாழ்கின்றனர்.
வடலூரில்
வடலூர்ப் பகுதியில் ‘சேஷசாயி இண்டஸ்ட்ரீஸ்’ என்னும் நிறுவனம், மின்கருவித் தொழிற்சாலை நடத்தி வருகிறது. இதன் முதலீட்டை விசாரித்தபோது, முக்கால் கோடிக்கு மேல் இருக்குமெனத் தெரிய வந்தது. பக்கத்திலுள்ள நெய்வேலித் திட்டத்தின் துணையால் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டு மின்சார இன்சுலேட்டர் முதலிய மின் கருவிகள் இங்கே செய்யப்படுகின்றன. இன்னும் பல்வேறு வகைப் பொருள்களும் இங்கே உருவாக்கப்படுகின்றன.
இன்னும் எதிர்கலாத்தில், நெய்வேலி, நிலக்கரித் திட்டத்தின் பயனாய்க் கடலூர் வட்டத்தில் எத்தனையோ செல்வ நிலையங்கள் எழக்கூடும்.
கள்ளக்குறிச்சியில்
கள்ளக்குறிச்சியை யடுத்த மூங்கிலடித்துறை என்னுமிடத்தில், அண்மையில் கூட்டுறவு முறையில் ஒரு கரும்பாலை தொடங்கப் பெற்றுள்ளது.
வாணிக முறை
கெடில நாட்டு வாணிகப் பொருள்களைத் தொகுத்துச் சொல்லின், உணவு தானியங்கள், பயறு, கொட்டை வகைகள், கரும்பு, சர்க்கரை, இனிப்பு வகைகள், வெல்லம், உப்பு, எண்ணெய் விதைகள், எண்ணெய்கள், நறுமணப்பொருள்கள், பலசரக்குப் பொருள்கள், சாயப்பொருள்கள், துணிவகைகள், நிலக்கரி வகைகள், தோல் வகைகள், மரப் பொருள்கள், பாய் வகைகள், பாண்ட வகைகள், பொம்மைகள், பாக்கு, வெற்றிலை, சாக்கு, கயிற்றுப் பொருள்கள், மின் கருவிகள், உரம் முதலியவற்றைச் சொல்லலாம். இப்பொருள்கள் உள் நாட்டில் புகை வண்டி, பேருந்து, சுமை வண்டி (லாரி) ஆகியவற்றின் வாயிலாகப் போக்கு வரவு செய்யப்பட்டு விற்பனையாகின்றன. பொருள்கள் கடைத்தெருக்களிலும், சந்தைகளிலும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பண்ணுருட்டி, வளையக்காரன் குப்பம், காராமணிக்குப்பம், புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, உளுந்துார்ப்பேட்டை, மதகடிப் பட்டு, கூட்டேரிப்பட்டு முதலிய இடங்களில் சந்தை கூடும். பண்ணுருட்டி, கடலூர், நெய்வேலி, உளுந்துர்ப் பேட்டை ஆகிய இடங்களில் பெருவாரியாக வாணிகம் நடைபெறுகிறது.
ஏற்றுமதி - இறக்குமதிகள்
கெடிலநாடு கூடலூர்த் துறைமுகம், சென்னைத் துறைமுகம் ஆகிய இரண்டின் வாயிலாக வெளிநாடுகளுடன் ஏற்றுமதி - இறக்குமதி செய்கிறது. முன்பு கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாக நடைபெற்ற சில ஏற்றுமதி - இறக்குமதிகள் இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாக நடைபெறுகின்றன. அவற்றுள் கைலி ஏற்றுமதி குறிப்பிடத்தக்கது. சென்னைத் துறைமுகத்தில் நெரிசல் மிகுந்து விட்டதாலும், அண்மையில் நெய்வேலி நிலக்கரித்திட்டம் நடைபெறுவதாலும் இப்போது மீண்டும் கெடிலக்கரைக் கூடலூர்த் துறைமுகம் சிறப்பிடம் பெறத் தொடங்கியுள்ளது.
இத்துறைமுகத்தில் முன்பு கைலி வகைகள், அச்சு குத்தின உடை வகைகள், மணிலாப்பயறு, மணிலா எண்ணெய், எள், இரும்பு, மட்பாண்ட வகைகள், கட்டடப் பொருள்கள் முதலியன ஏற்றுமதியாயின. தேக்கு, பாக்கு, பர்மா அரிசி, இந்தோனேசியாவிலிருந்து சர்க்கரை, இன்னும் பல நாடுகளிலிருந்து நூல், நிலக்கரி உரப்பிண்ணாக்கு வகைகள் முதலியவை இறக்குமதியாயின. மொத்தத்தில் ஏற்றுமதியை விட இறக்குமதியின் பெறுமானமே கூடுதலாக இருந்தது எனலாம்; எடுத்துக்காட்டாக, 1955 - 56ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து கூடலூர்த் துறைமுகத்தில் வந்து இறங்கிய நிலக்கரி, உரப்பிண்ணாக்கு வகைகள் முதலியவற்றின் பெறுமானம் 95 இலட்சம் ரூபாயாகும்; அதே காலத்தில் இங்கிருந்து வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கட்டடப் பொருள்கள், பொறியியற் பொருள்கள், மட்பாண்ட வகைகள் முதலியவற்றின் பெறுமானம் 5 இலட்சம் ரூபாயேயாகும். 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து அச்சு குத்தின துணிகள் இலங்கை, பிலிப்பைன்சு முதலிய நாடுகட்குச் சென்றன; இந்த நூற்றாண்டில் நின்று விட்டன. இப்படி இங்கிருந்து முன்பு ஏற்றுமதியான பொருள்கள் சில இப்போது நின்றுவிட்டன.
இப்போது கூடலுர்த் துறைமுகத்திலிருந்து இரும்புத் தாதுக்கட்டிகள், சர்க்கரை, சாக்லெட் போன்ற இனிப்பு வகைகள், முந்திரிப்பருப்பு, ஆசிட், மட்பாண்ட வகைகள், மணிலாப் பொருள்கள் முதலியவை ஏற்றுமதியாகின்றன. இரும்புத் தாதுக்கட்டிகள், ஹாஸ்பெட், பெல்லாரி ஆகிய இடங்களிலிருந்து புகைவண்டி வாயிலாக வந்து, பின் இந்தத் துறைமுகத்தின் வாயிலாகச் சப்பான் நாட்டிற்கு ஏற்றுமதியாகின்றன. மேலை நாடுகளிலிருந்து புகைவண்டிக்கு வேண்டிய நிலக்கரி வந்து இறக்குமதியாகிறது. மேற்கு செர்மனி, பெல்ஜியம் முதலிய நாடுகளிலிருந்து உரவகைகள் வந்து இறங்குகின்றன. இன்னும் பல இடங்களிலிருந்து நூல் - துணிவகைகள், இரசாயனப் பொருள் வகைகள் முதலியவை வருகின்றன. இப்போது இத்துறைமுகத்தின் ஏற்றுமதி இறக்குமதி அளவு 5 இலட்சம் டன்’ எனலாம். எதிர்காலத்தில் இஃது இரட்டிப்பாகும்; இது, நெய்வேலித் திட்ட வளர்ச்சியின் அடிப்படையைப் பொறுத்து எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர்த் துறைமுகத்திலிருந்து நாவாய்கள் இந்தியத் துறைமுகங்கட்கும் அயல்நாடுகளின் துறைமுகங்கட்கும் சென்று வருவதாகத் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் - பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பது உண்மையான செய்தியே. வெள்ளைக்காரர் காலத்தில் வாணிகக் கப்பல்கள் இங்கிருந்தபடி இந்தியக்கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கட்கும் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கட்கும் வழியிலுள்ள இலங்கைத் துறைமுகத்திற்கும் சென்று வந்தன; எனவே, இத்துறைமுகம் கப்பல்கட்கு ஒர் இன்றியமையா நிலையாக (முக்கியக்கேந்திரமாக) இருந்து வந்தமை புலனாகும். பாய்மரக்கப்பல்கள் இங்கிருந்து இரண்டு வார காலத்தில் இலங்கையை அடைந்துவிடும், சுருங்கக் கூறின், சப்பான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பிரான்சு, பெல்சியம், செர்மனி முதலிய வெளிநாட்டுத் துறைமுகங்கள் இந்தியத் துறைமுகங்கள் ஆகியவற்றோடு கூடலூர்த் துறைமுகம் தொடர்பு கொண்டு வருகிறது எனலாம். ஒரு துறைமுகத்திற்கு இருக்க வேண்டிய தூக்கி இறக்கிகள், படகுகள், கிடங்குகள், கப்பல் வாணிக நிறுவனங்கள், கலங்கரை விளக்கம், புகைவண்டிப் பாதை தொடர்பு முதலிய வசதிகள் பலவும் இங்கே உள்ளன. இன்னும் இங்கே எத்தனையோ வளர்ச்சிகள் காத்து நிற்கின்றன. இந்தியக்கிழக்குக் கடற்கரை யிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகம் என்பது ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது.
இங்குள்ள கப்பல் வாணிக நிறுவனங்களுள் பாரி கம்பெனி நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தார் கப்பல் வாணிக ஏற்றுமதி இறக்குமதித் தரகுப் பேராளராக இருந்து கொண்டு விரிவான முறையில் தொழில் - வாணிகம் நடத்தி வருகின்றனர். கூடலூர்த் துறைமுகத்தில் தொழிலாளர் சங்கங்களும் உள்ளன.
கூட்டுறவு
இந்தக்காலத்து வளர்ச்சியின் பயனாகக் கூட்டுறவு முறையில் வங்கி, வாணிக நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்கள் முதலியவை தோன்றித் தொழிற் பெருக்கத்திற்கும் வாணிக வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன.
22. கெடிலக்கரை ஊர்கள்
தென்னார்க்காடு மாவட்டம்
கெடிலம் ஆறு ஓடும் பகுதி இப்போது தென்னார்க்காடு மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இப்பெயர் ஆங்கிலேயர்களால் இடப்பட்டது. தமிழகத்தில் முதல் முதலாக ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மாவட்டம் இதுதான். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் வடபகுதி ஆர்க்காட்டு நவாபுகளால் ஆளப்பட்டது. அவர்கள் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள ‘ஆர்க்காடு’ என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். ஆர் என்றால் ஆத்தி, ஆத்தி மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாயிருந்ததால் ‘ஆர்க்காடு’ எனப்பட்டது. ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்ட பகுதி ஆர்க்காட்டுச் சீமையாயிற்று. அப்பகுதி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் அதன் வடபகுதி வடார்க்காடு மாவட்டம் எனவும், தென் பகுதி தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும்; தலைநகர் கடலூர்.
இம் மாவட்டத்தில் கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் கெடிலத்தின் அக்கரையிலும் இக்கரையிலும் கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிற்குள் உள்ள இன்றியமையாச் சிறப்புடைய சில ஊர்களைப் பற்றிய விவரங்களை வட்ட வாரியாக இப்பகுதியில்
கள்ளக்குறிச்சி வட்டம்
கள்ளக்குறிச்சி வட்டத்தில்தான் கெடிலம் தோன்றுகிறது. இந்த வட்டத்தின் பரப்பளவு 2,230 சதுர கி.மீ.; மக்கள் தொகை 3,83,500; தலைநகர் கள்ளக்குறிச்சி. தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்கு எல்லை இவ் வட்டந்தான். மாவட்டத்திற்குள்ளேயே இந்த வட்டத்தில்தான் மலையும் காடும் மிகுதி. இதன் மேற்குக் கோடியில் கல்வராயன் மலை உள்ளது.
கள்ளக்குறிச்சி வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்தின் மேடான மேற்குப் பகுதியில் இருத்தலானும் மலையுங்காடும் செறிந்திருத்தலானும், தென்னார்க்காடு மாவட்டத்து ஆறுகளுள் பெரும்பாலான இவ் வட்டத்தில்தான் தோன்றுகின்றன; அவை: கெடிலம், மணிமுத்தாறு, கோமுகி முதலியன.
கள்ளக்குறிச்சி வட்டம் மலைப் பகுதியாயிருத்தலானும் புகைவண்டிப் போக்குவரவு பெற்றிராமையானும், மற்ற வட்டங்களில் உள்ளாங்கு தொழில் - வாணிகப் பெருக்கம் இங்கில்லை. மலைவளமும் காட்டுவளமும் உள்ள இவ்வட்டத்தில், மலையூற்று ஒடும் பள்ளத்தாக்குகளில் நெல், கரும்பு, மணிலா முதலியவை விளைகின்றன. மேற்கேயுள்ள கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும், மற்றப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும் மிக்க வேறுபாடு உண்டு.
இனி, இவ் வட்டத்தில் கெடிலக்கரையை ஒட்டிய இன்றியமையாத இரண்டு ஊர்களைப் பற்றிய விவரங்களைக் காண்பாம்:
மையனூர்
‘கெடிலத்தின் தோற்றம்’ என்ற தலைப்பில் மையனுரைப் பற்றிய விவரங்கள் ஒரளவு கூறப்பட்டுள்ளன. அவ்வூருக்குத் தெற்கேயுள்ள மையனூர் மலையடிவாரத்துப் பாறைச் சுனையிலிருந்து கெடிலம் தோன்றி மையனூர் ஏரியில் கலந்து அங்கிருந்து ஆற்றுருவம் பெற்றுவருஞ் செய்தி முன்பு விளக்கப்பட்டுள்ளது.
மலையடிவாரத்துப் பள்ளத்தாக்கில் இருப்பதால் மையனூர் மிக்க வளம் பெற்றுத் திகழ்கிறது. நூறு அல்லது நூற்றிருபத்தைந்து வீடுகள் இச் சிற்றூரில் உள்ளன. இவ்வூர் வயல்கள் மிக்க வளமுடையவை. நெல், கரும்பு முதலியவை விளைவிக்கப் படுகின்றன. தங்கள் ஊர் வயல்களின் தரத்தைப் பற்றி மையனுர் மக்கள் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். கெடிலத் தாளைப் பெற்றளித்த மையனூர் நீடுழி வாழ்க!
ரிசிவந்தியம்
கள்ளக்குறிச்சி வட்டத்தில் கெடிலத்தின் நீளம் மிகக் குறைவு. கெடிலக் கரையை யொட்டியுள்ள இன்றியமையாத ஊர் இவ்வட்டத்தில் ரிசிவந்தியம் ஒன்றுதான். இவ்வூர் கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் கெடிலம் ஆற்றிற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காகக் கள்ளக்குறிச்சி வட்டம் ஆறு ஊராட்சி மன்ற ஒன்றியங்களாகப் (பஞ்சாயத்து பூனியன்களாகப்) பகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறனுள் ரிசிவந்தியம் ஒன்றியமும் ஒன்றாகும். இந்த ஒன்றியத்தில் தான், கெடிலம் தோன்றும் மையனூர் உள்ளது. இந்த ஒன்றியத்தின் தலைநகர் ரிசிவந்தியம் ஆகும். திருக்கோவலூர் தியாக துருக்கம் மாவட்ட நெடும் பாதைக்கிடையே ரிசிவந்தியம் இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு இவ்வூர் ஆங்கிலேயர் கைக்கு மாறிற்று.
இவ்வூரில் ஆங்கிலேயரும் பிறரும் அடித்துப் பிடித்துப் போரிட்டுக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிக்கு அப்பால், இவ்வூர்க்குச் சிறந்த பெருமை யளிப்பது, இங்கே உமையொருபாகரின் (அர்த்த நாரீசுவரரின்) பழமையான கோயில் இருப்பதாகும். மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோயிலில் சில சிறப்புகள் உள்ளன. கோயில் முதல் பெருவாயிலின் வலப்புறத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க மண்டபம் உள்ளது. கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது தேனை ஊற்றினால், இறைவன் அதில் உமையொருபாகராய் வீற்றிருப்பது தெரியும். தட்டினால் பண் இசைக்கும் தூண்கள் இங்கே உள்ளன. இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டு; அஃதாவது, இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது; பந்து போன்ற அவ் வுருண்டையை நம் கைவிரலால் எப் பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம்; ஆனால், வெளியில் எடுக்க முடியாது; இது சிறந்த சிற்ப வேலைப்பாடாகும். இந்தக் கோயிலில் திருமலை நாயக்கரின் உருவச்சிலை யிருப்பது, வரலாற்றுக் குறிப்புக்கு உதவி செய்கிறது.
திருக்கோவலூர் வட்டம்
திருக்கோவலூர் வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திற்கு நட்ட நடுவேயும் கெடிலம் ஒடும் வட்டங்களுக்குள் நடுவேயும் உள்ள வட்டமாகும். இதன் பரப்பளவு 1,500 சதுர கி.மீ., மக்கள் தொகை 4,00,150; தலைநகர் திருக்கோவலூர். இவ் வட்டம் ஆற்று வளமும் ஒரளவு மலைவளமும் காட்டுவளமும் உடையது. இஃது இப்போது ஐந்து ஊராட்சிமன்ற ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கெடிலம் ஆறு திருக்கோவலூர் வட்டத்தின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடிவரையும் வட்டத்தின் நடுவாக ஒடி வட்டத்தைக் கடக்கிறது. கெடிலத்தின் துணையாறாகிய தாழனோடை அல்லது சேஷ நதி எனப்படும் ஆறு தோன்றுவதும் கெடிலத்தோடு கலப்பதும் திருக்கோவலூர் வட்டத்திற்குள்ளேயே தான். இவ் வட்டத்தின் வழியாகத் தென்பெண்ணையாறும் அதிலிருந்து பிரியும் மலட்டாறுங்கூட ஒடுகின்றன. பாடல் பெற்ற திருப்பதிகள் பல இங்கே உள்ளன. பல்வேறு சமயப் பெரியார்கள் பலரின் தொடர்பும் புலவர் பெருமக்கள் பலரின் தொடர்பும் சங்ககாலந் தொட்டு இவ் வட்டத்திற்கு உண்டு. இங்கே கல்வெட்டுச் செல்வத்திற்குக் குறைவேயில்லை.
இப் பகுதிக்கு மலாடு, சேதிநாடு, மகதநாடு, சகந்நாத நாடு, சனநாத நாடு முதலிய பெயர்கள் வழங்கப் பட்டமையைக் ‘கெடிலநாடு’ என்னும் தலைப்பிலும், இப் பகுதியில் மலையமான்மரபு மன்னர்களும் வாணர் மரபு மன்னர்களும் பிற்காலப் பல்லவ மரபு மன்னர்களும் அரசோச்சிய வரலாற்றைக் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்ற தலைப்பிலும் விரிவாகக் காணலாம். கல்வெட்டுகளில்,
‘சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக் கோவலூர்’-
‘ஜநனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து பிரம்ம தேயம் திருக்கோவலூர் ஆன பூர் மதுராந்தக சதுர் வேதி மங்கலத்து திருவிடை கழி ஆழ்வார்க்கு இவ் ஊர் சபையோம் விற்றுக் கொடுத்த நிலமாவது’-
என்றெல்லாம் இருக்கும் பகுதிகளைப் பார்க்குங்கால், அன்று, தாலுகா (வட்டம்) என்பது போல் கூற்றம் என்பதும், ஜில்லா (மாவட்டம்) என்பது போல் வளநாடு என்பதும், மாகாணம் (மாநிலம்) என்பதுபோல் மண்டலம் என்பதும் வழங்கப்பட்டமை புலனாகும். அன்று, சோழர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ என அழைக்கப் பட்டமையும், தென்னார்க்கரடு மாவட்டம் போன்றிருந்த ஒரு பெரும்பகுதி சகந்நாத வளநாடு அல்லது ‘சனனாத வளநாடு’ என வழங்கப்பட்டமையும், திருக்கோவலூர் வட்டம் போன்றிருந்த ஒரு சிறு பகுதி ‘குறுக்கைக் கூற்றம்’ என அழைக்கப்பட்டமையும், திருக்கோவலூருக்கு ‘மதுராந்தக சதுர்வேதி மங்கலம்’ என வேறொரு பெயர் இருந்தமையும் மேலுள்ள கல்வெட்டுப் பகுதிகளால் புலப்படும்.
இனி, பழைய குறுக்கைக் கூற்றமாகிய திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலக்கரையை ஒட்டியுள்ள இன்றியமையாத சில ஊர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:
திருக்கோவலூர்
சங்க நூல்களில் கோவல் என வழங்கப்படும் திருக்கோலூர், அன்று மலையமான் மரபு மன்னர்கட்கும் மெய்ப்பொருள் வேந்தர் முதலியோர்க்கும் தலைநகராயிருந்ததன்றி, இன்று திருக்கோவலூர் வட்டத்திற்கும் திருக்கோவலூர் ஊராட்சிமன்ற ஒன்றியத்திற்கும் தலைநகராய்த் திகழ்கிறது. இவ்வூர், விழுப்புரம் காட்பாடி புகைவண்டிப்பாதை வழியிலும், கடலூர் - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையிலும், விழுப்புரத்திற்கு மேற்கே 32 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. ஊர், புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 3 கி.மீ. தொலைவிலுள்ளது. இதன் மக்கள் தொகை 16,700 ஆகும்.
திருக்கோவலூர் தென் பெண்ணையாற்றங்கரையில் இருப்பினும், கெடிலம் ஒடும் நடுநாயக இடமான திருக்கோவலூர் வட்டத்தின் தலைநகராக இருப்பதாலும், கெடிலம் ஆற்றுக்கு வடக்கே 8 கி.மீ. (5.மைல்) தொலைவிற்குள் இருப்பதாலும், ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் இந்நூலில் சிறப்பிடம் பெறுவதற்குரிய முழுத்தகுதியும் உடையதாகும்.
ஒளவையார் பாரிமகளிரைத் திருக்கோவலூர் மன்னர்க்கு மணமுடித்த வரலாறும், பாரியின் பிரிவாற்றாது கபிலர் வடக்கிருந்து தீப்பாய்ந்து உயிர் விட்ட ‘கபிலர் குன்று’ என்னும் பாறை திருக்கோவலூருக்கு அருகில் இருப்பதும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின் தலைமையகமும் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவல் தமிழ்ச்சங்கமும் திருக்கோவலூரில் இருப்பதும் அவ்வூர்ப் பெருமைக்குத் தக்க சான்றுகளாம். வரலாற்றுப் பெருமைக்கு உரியதான இச்சிறு நகர் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. இங்கே, ஒரு வட்டத்தின் (தாலுகாவின்) தலைநகரில் இருக்க வேண்டிய இன்றியமையா அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன.
மேலூர்
திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலுாராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; முதலாழ்வார் மூவரும் சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது. இங்கு நின்ற கோலத்திலுள்ள திருமால்
பெயர்: திருவிக்கிரமசாமி, உலகளந்த பெருமாள் முதலியன: தாயார் பெயர் பூங்கோயிலாள் என்பது. திருவிக்கிரமப் பெருமாள் கோயிலின் எடுப்பான மிடுக்கான தோற்றத்தை மேலேயுள்ள படத்தில் காணலாம்.
முதலில் உயரமாய்த் தெரியும் கோபுரம் கிழக்குக் கோபுரம்; பின்னால் தெரிவது மேற்குக் கோபுரம், வட புறமும் கோபுரம் உண்டு. தெற்கில் கோபுரம் இல்லை. கிழக்குக் கோபுரவாயிலுக்கு முன்னால் திருக்குளம் தெரிவதையும் படத்தில் காணலாம். (இருகோபுரங்களும் திருக்குளமும் தெரியும்படி ஒரு வீட்டு மாடியில் இருந்து கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.) கிழக்குக் கோபுரத்திற்கும் கிழக்கே மற்றொரு கோபுரம் கோயிலோடு தொடர்பின்றிச் சிறிது தள்ளி இருக்கிறது.
இக்கோயிலில், திருமங்கைமன்னர், பாண்டிய மன்னர், விசயநகரமன்னர் முதலியோரின் திருப்பணிகள் நடை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இங்கே பல கல்வெட்டுகள் உள்ளன. மற்றும் அம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கத் இம் மண்டபத்தின் நீளம் 55 1/2 அடி அகலம் 31 1/2 அடி. இது போன்ற அமைப்புள்ள மண்டபங்களுள் தமிழகத்திலேயே இதுதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. சிற்ப வேலைப்பாடு கட்கும் இக்கோயிலில் குறைவில்லை. இங்குள்ள பெண்டிர் கோலாட்ட நடனச்சிற்பம் காணத்தக்கது. இங்கே ஏகாதசி விழா மிகச்சிறந்த முறையில் நடைபெறுகிறது. திருக்கோவலூர்ப் பெருமாள் மாசி மகத்தன்று கூடலூர்க் கடற்கரைக்கு வந்து நீராடிச் செல்வார். பெருமாள் கோயிலில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா நடத்தப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்க்கும் பிறர்க்கும் போர் நடந்தபோது, திருவிக்கிரமப்பெருமாள் கோயில் ஒரு போர்க்கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது. 1758ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இதனை எடுத்துக் கொண்டனர். 1760 ஆம் ஆண்டு மைசூர் ஐதர் அலியின் படைகளின் தாக்குதல்களி லிருந்து இதனைக் காப்பாற்றவும் செய்தனர். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மெய்ப்பொருள் (நாயனாரின்) வேந்தரின் கோட்டை இந்தக் கோயில் இருக்கும் பகுதியில்தான் இருந்தது என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. முதல் கிழக்குக் கோபுரத்தை ஒட்டியுள்ள தெரு ‘கோட்டைத்தெரு’ என்று அழைக்கப்படுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
இந்தக்கோயில் ஒரு காலத்தில் சமணக்கோயிலாக இருந்தது என்று ஒரு சிலராலும், சைவக்கோயிலாக இருந்தது என்று வேறு சிலராலும் கூறப்படுகிறது. இந்தப் பிணக்கு ஏன்? திருவிக்கிரமப் பெருமாள் கோயில் திருமால் கோயிலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! ஒருவனே தேவன்!
கீழுர்
திருக்கோவலுரரின் கிழக்குப்பகுதி கீழுர் ஆகும்; இது கீழையூர், கீழவூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு சிற்றுார் (கிராமம்) போன்ற இப்பகுதியில் சிவன் கோயில் இருக்கிறது. கோயில் பெயர் வீரட்டானம் என்பது. சிவன் பெயர் வீரட்டானேசுவரர்; அம்மன் பெயர் சிவாநந்தவல்லி. சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய எட்டுத் திருப்பதிகளுள் (அட்ட வீரட்டங்களுள்) இந்த ஊரும் ஒன்று. சிவன் இங்கே அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழித்து மறச்செயல் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பதி, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பதிகங்களும், அருணகிரியாரின் திருப்புகழும் பெற்ற பெருமையுடையது. சுந்தரரும் வேறு ஊர்ப்பதிகங்களில் திருக்கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவ்வூர்க்குப் புராணமும் உண்டு. கோவல் வீரட்டநாதரின் திருக்கோயிலைப் பின்வரும் படத்தில் காணலாம்.
படத்தில் நமது இடக்கைப் புறமாக இருக்கும் கோபுரம் கோயிலின் முதற்பெரு வாயிலாகும். இது கோயிலின் மேற்கே உள்ளது. எனவே, இக்கோயில் மேற்கு நோக்கியது என்பது புலனாகும். இஃது ஒரு புதுமையே. படத்தில் நமது வலக்கைப் புறமாகத் தெரியும் கோபுரம் அம்மன் கோயில் கோபுரமாகும். அதற்குப் பக்கத்தில் இடக்கைப் புறமாகத் தெரியும் மரம் வில்வமரம். அதற்கும் பக்கத்தில் சிறு கோபுரம் போல் தெரிவது. சிவலிங்கம் இருக்கும் கருவறைக்கு (கர்ப்பக் கிருகத்திற்கு) மேலுள்ள தூபி விமானம் ஆகும்.
(இந்தப்படம், கோயில் வெளிக்கோபுரம், கருவறை விமானம், வில்வமரம், அம்மன் கோயில் கோபுரம் முதலியன ஒருசேரத் தெரிவதற்காக ஒரு வீட்டுக் கூரையின்மேல் ஏறி நின்றுகொண்டு குறுக்கு வாட்டத்தில் எடுக்கப்பட்டது.)
இந்தக்கோயிலில் பல்லவர், சோழர், இராட்டிரகூடர், விசயநகர மன்னர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. 79 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதலாம் இராசராசசோழன், அவன் மனைவி உலோகமாதேவி ஆகியோரின் அறக்கட்டளை பற்றிய கல்வெட்டுகள், விசயநகர மன்னரின் ஒர் அணை பற்றிய கல்வெட்டு முதலியவை குறிப்பிடத் தக்கன.
இந்தக் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் அரசன் அரசியைக் குறிக்கும் மேலுள்ள சிற்பம் காணப்படுகிறது.
இந்தச் சிற்பம் பல்லவ அரசன் - அரசியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், எந்தப் பல்லவன் என்று குறிப்பிட முடியாது. உருவ அமைப்பைக் கொண்டு பல்லவர் என உய்த்துணர வேண்டியுள்ளது. எனவே, இந்தக் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையுடையது எனக் கொள்ளலாம்.
மலையமான் மரபினரின் அரண்மனை இந்தக் கீழுர்ப் பகுதியில்தான் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்தின் முதல் ஆதீன மடம் கீழுர்ச் சிவன் கோயில் அருகில் உள்ளது. முதல் பட்டத்து அடிகளாரின் அடக்கம் (சமாதி) அம்மடத்தில் இருக்கிறது. முதல் பட்டத்து அடிகளார்க்குச் சிவபெருமான் ஆவணி மூலநாளில் அருள்புரிந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. திருப்பாதிரிப் புலியூர் ஐந்தாம் பட்டத்து அடிகளார் கோவலூர் மடத்தில் அடிக்கடி வந்து தங்கி ஆற்றிய பணிகள் மிகப்பல. இந்த ஆதீனமேயன்றி பைந்தமிழ் பரப்பும் குன்றக்குடி அடிகளார் மடத்தின் முதல் தலைமையாதீனமும் திருக்கோவலூரிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு கோணங்களில் திருக்கோவலூர் ஒளிவீசித் திகழ்கிறது.
திருநறுங்குன்றம்
இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 19 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இது, திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவுங்கூட அழைக்கப்படுகிறது. இச் சிற்றுாரின் மக்கள் தொகை 500 ஆகும். இது திருக்கோவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்ததாகும்.
இவ்வூர்க்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய கவின்மிகு சிறு குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் இரண்டு பெரிய உருளைக்கற்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றின் மீது பார்சுவநாதர் என்னும் சைனத்தீர்த்தங்கரரின் நான்கடி உயர உருவச்சிலை இருக்கிறது; மற்றொன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது; மற்றும், குன்றுப் பகுதியில் ஒரு சிறிய சமணக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன.
இந்த சமணசமயக் கோயில் அப்பாண்டைநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. அப்பாண்டைநாதன், அப்பாண்டைராசன் என்னும் பெயர்களைக் கொண்ட மக்கள் பலரைத் திருநறுங்குன்றத்தில் காணலாம். பண்டு இங்கே சமண சமயத்தைச் சார்ந்தவர் ஆயிரக்கணக்கில் வாழ்ந்தனர்; இப்போது நூற்றுக்கணக்கில்தான் இருக்கின்றனர். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் அப்பாண்டைநாதரைப் பாடியுள்ளனர் என்பதாகவும், கம்பர் இவ்வூர்ச் சமணர்களின் ஒப்புதலுக்குப் பிறகே தம் இராமாயண நூலை அரங்கேற்றினார் என்பதாகவும் பல செய்திகள் சமணர்களால் கூறப்படுகின்றன. இதைக்கொண்டு, ஒரு காலத்தில் இங்கே சமயப்பிணக்கு நிகழ்ந்திருக்க வேண்டும் என உய்த்துணரப்படுகிறது.
ஆற்றூர்
இவ்வூர், திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 22கி.மீ. தொலைவில் திருநறுங்குன்றத்திற்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. ஆற்றங்கரையில் இருப்பதால் ஆற்றூர் எனப்பட்டது போலும். இது பேச்சு வழக்கில் ஆத்தூர் என மருவி வழங்கப்படுகிறது. இவ்வூர், மேட்டு ஆத்தூர், பள்ள ஆத்தூர் என இரு பிரிவினதாயுள்ளது. பள்ள ஆத்தூரில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.
திருக்கோவலூர் நாட்டில் ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஏகம்பவாணன் என்னும் சிற்றரசன் ஆண்ட வரலாறும், அவன் ஆறையர்கோன் ஆறை நகர்க் காவலன் என்றெல்லாம் இலக்கியங்களில் அழைக்கப் பட்டிருக்கும் செய்தியும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. (பக்கம் : 185 - 189). அந்த ஆற்றுார் இந்த ஊராகத்தான் இருக்கவேண்டும். வாணர் மரபு, ஒர் உழவர் பெருங்குடி மரபு என்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. ஆற்றுாரும் திருக்கோவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
கிளியூர்
கிளியூர் மலையமான்களின் தலைநகராயிருந்த ஊர் இது. திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மலையமான் மரபினருள் ஒரு பிரிவினர், இந்தக் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியை ஆண்டதால் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் கிளியூர் ஒரு தலைநகராயிருந்தது என்பதை மெய்ப்பிக்கும் சுவடுகள் சில, அவ்வூர் வட்டாரத்தில் உள்ளன. கிளியூர் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பல அவ்வட்டாரத்து மக்களால் மிகவும் பெருமையாகப் பேசப்படுகின்றன.
கிளியூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவு அளவில் உள்ளது. இது பாதை வசதியற்ற குறுக்குவழித் தொலைவாகும். நல்ல பாதைகளின் வழியாகச் சுற்றிக்கொண்டு வரவேண்டுமானால் இன்னும் தொலைவு கூடுதலாகும். கிளியூருக்கு வடக்கே திருக்கோவலூர் - கடலூர் மாநில நெடுஞ்சாலையும், கிழக்கே சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையும், தெற்கே உளுந்துர்ப்பேட்டை - கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலையும், மேற்கே ஆசனூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையும் உள்ளன. இந்த நான்கு சாலைகட்கும் நடுவே கிளியூர் உள்ளது. ஒரு காலத்தில் ஒரு தலைநகராயிருந்த கிளியூருக்குக் கட்டை வண்டிப் பாதையைத் தவிர வேறு நல்ல பாதையில்லாமை இரங்கத்தக்கது!
திருநறுங்குன்றத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவிலும், பிள்ளையார் குப்பத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், களமருதூருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவிலும், இறையூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுமாக - இந்த நான்கு ஊர்கட்கும் நடுவே கிளியூர் உள்ளது. மலையமான்களின் தலைநகராயிருந்ததாதலின், இவ்வூர் இருக்குமிடத்தைத் தெளிவாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இஃதன்றி, வடமேற்கிலிருந்து தென்கிழக்காக ஒடிக் கொண்டிருக்கும் கெடிலக்கரைக்குத் தென்மேற்காக 4 கி.மீ. தொலைவில் கிளியூர் இருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இந்தப் பகுதி ஒரு காலத்தில் மகத நாடு எனவும் அழைக்கப்பட்டது. இப்போது கிளியூர், உளுந்துர்ப்பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வூர் மக்கள் தொகை 2,800,
திருநெல்வெண்ணெய்
இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயர் உருவமே காணப்படுகிறது. இறைவன் பெயர் வெண்ணெயப்பர்; இறைவி பெயர் நீலமர்க்கண் நாயகி. கோயிலில் கல்வெட்டுகள் உண்டு. கோயில் பழுதடைந்திருக்கிறது.
இவ்வூர் உளுந்துர்ப்பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தது; உளுந்துார்ப்பேட்டை புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல நல்ல பாதை இல்லை. மழைக்காலத்தில் மாட்டு வண்டியில் செல்வதும் அரிது. உளுந்துர்ட் பேட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள நெமலி என்னும் ஊர்வரைக்கும் பேருந்து (பஸ்) வண்டியில் செல்லலாம்; பிறகு நடை வண்டி கட்ட வேண்டியதுதான்.
இவ்வூர் கெடிலக்கரைக்கு 8 கி.மீ. தொலைவில் இருந்தாலும், கெடிலத்தோடு கலக்கும் துணை ஆறாகிய தாழனோடை என்னும் சேஷநதிக்கு அண்மையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உளுந்தூர்ப்பேட்டை
இது, சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையிலும் விழுப்புரம் விருத்தாசலம் புகைவண்டிப் பாதையிலுமாகக் கெடிலத்தின் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கெடிலத்துடன் கலக்கும் துணையாறாகிய தாழனோடை என்னும் சேஷநதிக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. மக்கள் தொகை 7,100,
இவ்வூரில் புகைவண்டி நிலையமும் விண்ணுார்தி நிலையமும் உள்ளன. உளுந்துக்குப் பேர் போன ஊர் இது. சந்தையும் இங்கே கூடும். இவ்வூரிலிருந்து விருத்தாசலம், திருச்சி கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம் ஆகிய ஐந்து பகுதிகளை நோக்கி, பெருநாட்டு நெடுஞ்சாலையும், மாநில நெடுஞ்சாலையும், மாவட்ட நெடும்பாதையும், மாவட்டக் குறும்பாதையுமாக ஐந்து சாலைகள் பிரிந்து செல்வதைக் கொண்டு, போக்குவரவுத் துறையில் இவ்வூர் பெற்றிருக்கும் இன்றியமையாமையைப் புரிந்து கொள்ளலாம். இச்சாலைகளேயன்றி, நெய்வேலிக்கும் இவ்வூர்க்குமாக ஒரு பெரிய நெடுஞ்சாலை அமைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது. இவ்வூரில் விண்ணுர்தி நிலையம் இருப்பதாலும், அண்மையில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் நடைபெறுவதாலும், எதிர்காலத்தில் இவ்வூரின் வளர்ச்சி மிகப் பெரியது என்பது புலனாகும்.
ஒரு வணிக நிலையமுமாக இருக்கிற இவ்வூர் வழியாக இப்போது நடைபெறும் பேருந்து வண்டி (பஸ்), பேருந்து சுமை வண்டி (லாரி) ஆகியவற்றின் போக்குவரவுக்கு அளவேயில்லை.
உலகியல் துறையிலன்றிச் சமயத்துறையிலும் உளுந்துர்ப் பேட்டை பின்வாங்கிவிடவில்லை. இங்கே சிவன் கோயில் ஒன்றும் இருக்கிறது. ‘முன்னொரு காலத்தில் ஒரு மிளகு வணிகன் மிளகு மூட்டையுடன் இங்கு வந்தான். இஃது என்ன முட்டை என்று ஒருவன் கேட்டான். உளுந்து மூட்டை என்று வேடிக்கையாக வணிகன் பொய் சொன்னான். ‘அஃது அப்படியே யாகுக’ என்று மற்றவன் கூறினான். அவ்வாறே மிளகு முட்டை உளுந்து மூட்டையாயிற்று. அப்படி ஆக்கிய பேர்வழி சிவன்தான். இது சிவனது திருவிளையாடல் என உணர்ந்த வணிகன் அங்கே சிவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்தான்.’ இப்படியொரு கதை சொல்லப்படுகிறது. உளுந்துார்ப்பேட்டை என்னும் பெயருக்கு ஏதேனும் காரணம் வேண்டுமல்லவா?
இவ்வளவு சிறப்பிற்குரிய உளுந்துர்ப்பேட்டை, உளுந்துர்ப் பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராயிருப்பதில் வியப்பில்லை. இந்த ஒன்றியம் வடக்கே கெடிலக்கரை வரைக்கும் பரந்துள்ளது; எனவே, கெடிலக்கரை நாகரிகத்தில் உளுந்துர்ப் பேட்டைக்கும் தக்க பங்கு உண்டு.
மலட்டாற்றங்கரை ஊர்கள்
திருக்கோவலூர் வட்டத்தில் பெண்ணையாற்றின் தென்கரையிலிருந்து பிரியும் மலட்டாற்றின் தென்கரையில் அடுத்தடுத்தாற்போல் மேற்கு - கிழக்காக இடையாறு. திருவெண்ணெய் நல்லூர், முண்டீச்சுரம் (கிராமம்) என்னும் மூன்று சைவத்திருப்பதிகள் உள்ளன. இம் மூன்றுமே திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தவை.
இம்மூன்று ஊர்களும் மலட்டாற்றின் கரையில் இருந்தாலும், இவற்றிற்குத் தென்மேற்கே முறையே 6, 8, 10 கி.மீ. தொலைவிற்குள் கெடிலம் ஆறு ஓடுதலாலும், இவ்வூர்களின் பக்கத்தே ஒடும் மலட்டாறு ஒரு துணை ஆறாய்க் கெடிலத்தில் போய் விழுந்து கலப்பதால் மலட்டாறு கெடிலத்தின் ஒர் உறுப்பாய்க் கருதப்படுதலானும், மலட்டாற்றங் கரையிலுள்ள இவ்வூர்கள் ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் இந்நூலில் இடம்பெறுவதற்கு முழு உரிமையும் உடையனவாகும். இனி முறையே ஒவ்வொன்றினையும் பற்றிய விவரங்கள் வருமாறு:
இடையாறு
இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 1 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதை வழியே செல்லும் பேருந்து வண்டியில் பயணம் செய்தால், இவ்வூர்ச் சிவன் கோயிலின் வடக்கு மதிற்புறமாக இறங்கலாம். இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்னும் பெயரும் உண்டு. ஏனாதிப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசரால் அளிக்கப்பட்ட ஊராக இருக்க வேண்டும். இங்கே மலட்டாற்றின் குறக்கே சிறு அணை ஒன்று உளளது.
இடையாறு சுந்தரரின் பாடல் பெற்ற பதியாகும். இறைவன் பெயர்: இடையற்றீசன்; அம்மன் பெயர்; சிற்றிடைநாயகி. இங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில், கோயிலின் பெயர் மருதந்துறை எனச் சொல்லப்பட்டுள்ளது.
திருவெண்ணெய் நல்லூர்
இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகை வண்டி நிலையத்திற்கு மேற்கே 6 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. திருவெண்ணெய் நல்லூர், திருக்கோவலூருக்குத் தென் கிழக்கே 22 கி.மீ. தொலைவிலும் விழுப்புரத்திற்குத் தென்மேற்கே 19 கி.மீ. தொலைவிலும் பண்ணுருட்டிக்கு வடமேற்கே 24 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. கடலுர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் செல்லும் பேருந்து வண்டியில் பயணஞ்செய்தால், இவ்வூர்ச் சிவன் கோயில் அருகே இறங்கலாம். மக்கள் தொகை 4,350. இவ்வூரை 1760இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் ‘அருள் துறை என்பது.’ *[1] ‘வெண்ணெய் நல்லூர் ‘அருள் துறையுள் அத்தா’ என்னும் சுந்தரர் தேவாரப்பாடற் பகுதியால் இதனை அறியலாம். இஃதன்றி, கிருபாபுரீசுரர் கோயில், தடுத்தாட்கொண்ட நாதர் கோயில் என்ற பெயர்களும் உண்டு. சிவன் பெயர்: தடுத்தாட்கொண்ட நாதர்; அம்மன் பெயர் வேற்கண்ணம்மை இவ்வூர்க்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள மணம் தவிர்ந்த புத்துரில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுந்தரர் திருமணத்தை, சிவன் ஒரு கிழ அந்தணனாய் வழக்கிட்டுத் தடுத்து இவ்வூர் அறமன்றத்திற்கு அழைத்து வந்து வழக்கில் வென்று சுந்தரரை ஆட்கொண்டதாகச் சொல்லப்படும் வரலாறு அறிந்ததே. இதற்குச் சான்றாக, இவ்வூருக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் ‘தடுத்தாட்கொண்ட ஊர்’ என்னும் ஒர் ஊர் இருப்பதும், இவ்வூர்க் கோயிலில் ‘வழக்கு வென்ற திரு அம்பலம்’ என்னும் பெயருடைய நூற்றுக்கால் மண்டபம் இருப்பதும் குறிப்பிடத்தக்கவை. சுந்தரர்’ பித்தா பிறை சூடி’ என்று தொடங்கும் தமது முதல் பதிகத்தைப் பாடியது இவ்வூரில் தான். சிவன் கோயிலுக்குள் சுந்தரர்க்கு ஒரு சிறு கோயில் உள்ளது. இவ்வூருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழும் உண்டு.
முதல் சந்தான குரவராகிய மெய்கண்ட தேவர் வளர்ந்து உருவாகி, சைவ சித்தாந்தத் தலைநூலாகிய ‘சிவஞான போதம்’ என்னும் உயரிய நூலைப் பாடியருளியதும் இவ்வூரிலேதான். மெய்கண்ட தேவரின் அடக்கத்தின் (சமாதியின்) மேல் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஊரில் மெய்கண்டார் பெயரில் மடம் ஒன்றும் உள்ளது. திருவாவடுதுறை ஆதீன அடிகளார் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் விசயதசமியில் இங்கே சைவ சித்தாந்த மாநாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
‘கம்பரை வளர்த்து உருவாக்கிய வள்ளல் சடையப்ப முதலியார் வாழ்ந்ததும், கம்பர் கல்வியறிவிற் பெரியவராய் உருவாகிப் பாடல் இயற்றத் தொடங்கியதும் திருவெண்ணெய் நல்லூரில்தான்’ என்பது உலகறிந்த செய்தி. ஆம், திருவெண்ணெய் நல்லூர் என்பது உண்மைதான்! ஆனால், எந்தத் திருவெண்ணெய் நல்லூர் என்பதிலே கருத்து வேற்றுமை உண்டு. சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு திருவெண்ணெய் நல்லூர் உண்டு. கம்பர் சோழ நாட்டில் பிறந்தவராதலால், அவரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்தது சோழ நாட்டுத் திருவெண்ணெய் நல்லூர்தான் என்று ஆராய்ச்சியாளர் சிலர் அறிவித்துள்ளனர். கேட்பதற்கு இச்செய்தி பொருத்தமாகவும் சுவையாகவும் இருப்பினும், தொன்று தொட்டுப் பல்லாண்டுகளாய் ஆராய்ச்சியாளர் பலர் கூறி வருவது திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூரைத்தான்! இக்கருத்து வேற்றுமைக்குத் திட்ட வட்டமான ஒரு முடிவு இன்னும் கிடைத்தபாடில்லை. ஆயினும், திருக்கோவலூர் வட்டத்துத் திருவெண்ணெய் நல்லூர்தான் சடையப்ப வள்ளலின் ஊர் என்பவர்கட்கும் சான்றுகள் கிடைக்காமலில்லை; இந்தத் திருவெண்ணெய் நல்லூரில் இப்போது சத்திரம் இருக்கும் இடத்தில்தான், அன்று சடையப்ப வள்ளல் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று மக்களால் சொல்லப்படுகிறது. மற்றும், இப்போது ஏரிக்கரையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான், அப்போது கம்பர் முதல் முதலாகப் பாடல் எழுதினார் என்றும் சொல்கின்றனர்.
இங்கே, பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் முதலிய பேரரசர் காலத்துக் கல்வெட்டுகளும் மற்றுஞ் சில சிற்றரசர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இவ்வூர், இறைவன்மேல் உள்ளூர்ப் புலவராகிய இராசப்ப நாவலர் என்பார் திருவெண்ணெய்க் கலம்பகம் என்னும் நூல் இயற்றியுள்ளார். அம்பிகை வெண்ணெய்க் கோட்டை கட்டி நோன்பியற்றி இறைவனது அருள் பெற்ற ஊர் ஆதலின் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றதாக நூல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் அர்ச்சுனன் (தீர்த்தயாத்திரை) தெய்வ நீராடல் மேற்கொண்டு தென்னாடு வந்தபோது திருவெண்ணெய் நல்லூருக்கும் வந்து வழிபட்டானாம். இதனை வில்லி பாரதம் - ஆதி பருவம் அருச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திலுள்ள,
"ஐயானனன் இயல்வாணனை அடிமைக்கொள மெய்யே
பொய்யாவணம் எழுதும்பதி பொற்போடு வணங்கா “
என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். ஐயானனன் என்றால் சிவன், இயல்வாணன் என்றால் சுந்தரர்; சிவன் சுந்தரரை ஆட்கொள்வதற்காகப் பொய் ஆவணம் எழுதிய பதி திருவெண்ணெய் நல்லூர். இந்தப் பதியையும் அர்ச்சுனன் வணங்கியதாகப் பாரதப்பாடலில் வில்லிபுத்துரார் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு பெருமைகட்கு உரியதாயுள்ள இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராய் இப்போது விளங்குவதில் வியப்பில்லை. சுந்தரர் காலத்தில் உயர்நீதி மன்றம் இருந்த ஊராயிற்றே!
மலட்டாறா? பெண்ணையாறா?
சுந்தரரின் திருவெண்ணெய் நல்லூர்த் தேவாரப்பதிகத்தைப் படிப்பவர்க்குக் கட்டாயம் ஒர் ஐயம் எழும். சுந்தரர் அப்பதிகத்தில்,
“வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருள்துறை....."
என்று, திருவெண்ணெய் நல்லூர் பெண்ணையாற்றின் தென்கரையில் இருப்பதாகப் பாடியுள்ளார். ஆனால் ஊர் இப்போது இருப்பதோ மலட்டாற்றின் தென்கரையில் இதற்கு என்ன பதில் சொல்லுவது?
திருவெண்ணெய் நல்லூருக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் பெண்ணையாறு ஒடுகிறது. இடையிலே ஊரையொட்டி மலட்டாறு ஒடுகிறது. பெண்ணையாற்றுக்கும் ஊருக்கும் இடையே 5 கி.மீ. தொலைவு இருப்பினும், பெண்ணை யாற்றுக்குத் தென்திசையில் ஊர் இருப்பதால் சுந்தரர் பாடியிருப்பது பொருத்தம் என்று சொல்ல முடியாது. பெண்ணையின் தென்கரைக்கு மிக அண்மையில் ஊர் இருந்தால்தான், சுந்தரர் பாடியிருப்பது பொருத்தமாகும். 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருப்பதை ஆற்றங்கரையில் இருப்பதாகப் பாடமுடியாது. மேலும், மலட்டாறு என்னும் ஆற்றின் கரையில் இருப்பதைப் பெண்ணையாற்றின் கரையில் இருப்பதாக எவ்வாறு பாடமுடியும்?
மலட்டாறு பெண்ணையாற்றிலிருந்து பிரிவதால் மலட்டாற்றையும் பெண்ணையாறாகவே கருதி, மலட்டாற்றங் கரையில் இருக்கும் ஊரைப் பெண்ணையாற்றங்கரையில் இருப்பதாகச் சுந்தரர் பாடி விட்டார் என்று கூறுவதும் பொருந்தாது. அங்ங்னமெனில், எதுதான் பொருந்தும்? இப்போது மலட்டாறு இருக்கிறதே, அதுதான் பெண்ணை யாற்றின் பழைய பாதை என்று சொல்வதே பொருந்தும்.
பண்டு பெண்ணையாறு திருவெண்ணெய் நல்லூரை ஒட்டி ஒடிக்கொண்டிருந்தது. இடையிலே ஒரு பெருவெள்ளத்தின் போது, இப்போதுள்ள மலட்டாறு பெண்ணையிலிருந்து பிரியும் இடத்திற்கு அண்மையில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின், பெண்ணை வடக்கு நோக்கி வளைந்து வேறு புதிய பாதை வகுத்துக் கொண்டது. அதிலிருந்து தொடர்ந்து புதிய பாதையிலேயே இன்றுவரையும் ஒடிக் கொண்டிருக்கிறது. பெண்ணைக்குத் தெற்கே இப்போதுள்ள மலட்டாறு என்பது பெண்ணையின் பழைய பாதையாகும். பெண்ணை தன் பழைய பாதையில் ஒடிக் கொண்டிருந்த போது அதனையொட்டிய தென்கரையில் இடையாறு, திருவெண்ணெய் நல்லூர், முண்டீச்சுரம் முதலிய ஊர்கள் இருந்ததால், ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்’ எனச் சுந்தரர் பாடினார். இப்போது பெண்ணையின் பழைய பாதை, மலட்டாறு என்னும் பெயரில் தண்ணிர் வளமின்றிக் காட்சியளிக்கிறது. இந்தக் கருத்துதான் பொருத்தமானதாகும். இதற்கு மறுக்க முடியாத சான்று ஒன்று உள்ளது.
சுந்தரர் திருத்துறையூரில் இறைவனை வழிபட்டு, அங்கிருந்து தெற்கேயுள்ள,திருவதிகைக்குப் பெண்ணை யாற்றைக் கடந்து சென்றார் என்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். [2]
“திருத்துறையூர் தனைப்பணிந்து.......
...பெண்ணையாறு கடந்தேறியபின்........
.......திருவதிகைப் புறத்தணைந்தார்"
என்பது பெரியபுராணப் பாடற் பகுதி. இதிலிருந்து, திருத்துறையூருக்குத் தெற்கே பெண்ணையாறு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். ஆனால், இப்போது திருத் துறையூருக்கு வடக்கே பெண்ணை ஒடுகிறது. எனவே, இப்போது திருத்துறையூருக்குத் தெற்கேயுள்ள மலட்டாற்றுப் படுகைதான் பெண்ணையின் பழைய பாதை என்பது புலனாகும். இந்தக் கருத்தை மலட்டாற்றங்கரை மக்களும் ஒத்துக் கொள்கின்றனர். ஆகவே, அன்றிருந்த சூழ்நிலையில் சுந்தரர் ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்’ எனப் பாடியிருப்பது பொருத்தமானதே. பெண்ணையின் பழைய பாதையாகிய மலட்டாற்றுப் படுகை கிழக்கு நோக்கி செல்லச் செல்லத் தேய்ந்து மறைகிறது. அந்தப் படுகையிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பகுதி திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலக்கிறது.
முண்டீச்சுரம் (கிராமம்)
முண்டீச்சுரம் எனத் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் இப்போது கிராமம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. மக்கள் தொகை 1,650. திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே ஒரு கி.மீ. தொலைவிலும் - திருவெண்ணெய் நல்லூர் ஊருக்குக் கிழக்கே மூன்று கி.மீ. தொலைவிலுமாக மலட்டாற்றின் தென்கரையில் இக்கிராமம் இருக்கிறது. இவ்வூர்க்குத் தென் மேற்கே பத்து கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதை வழியே போகும் பேருந்து வண்டியில் பயணம் செய்யின் இவ்வூர்ச் சிவன் கோயிலின் வடக்கு மதிற்புறமாக இறங்கலாம். கோயில் ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது.
முண்டீச்சுரம் எனப்படும் கிராமம் நாவுக்கரசரின் பாடல் பெற்ற பழம்பதி. சிவன் பெயர்: முண்டீசுரர், சிவலோகநாதர், அம்மன் பெயர். கானார் குழலி. இங்கே முதற் பராந்தகனது கல்வெட்டு உட்படப் பல கல்வெட்டுகள் உள்ளன. முண்டிச்சுரம் கோயில் முதல் இராசாதித்த சோழனால் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருத்திக் கட்டப்பட்டது.
சேந்தமங்கலம்
அன்று மன்னர் சிலரின் தலைநகராக இருந்ததும் இன்று திருநாவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் உள்ளதும் ஆகிய சேந்தமங்கலம், சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையில் சென்னைக்கு 183 ஆம் கி.மீட்டரில் (114 ஆம் மைலில்) கெடிலத்தின் தென்கரைக்கு அண்மையில் உள்ளது. இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 30 கி.மீ தொலைவிலும் - விழுப்புரத்திற்கு (மேற்கு சாய்ந்த) தெற்கே 25 கி.மீ தொலைவிலும் பண்ணுருட்டிக்கு (தெற்கு சாய்ந்த) மேற்கே 20 கி.மீ தொலைவிலும் - உளுந்தூர்ப் பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ தொலைவிலுமாக இருக்கிறது. சேந்தமங்கலத்திற்கும் திருநாவலூருக்கும் நடுவே கெடிலம் ஒடுகிறது. ஆற்றின் தென்கரையில் சேந்தமங்கலமும் வடகரையில் திருநாவலூரும் உள்ளன. குறுக்கு வழியாக நடந்து வந்தால் இரண்டு ஊர்கட்கும் இடையேயுள்ள தொலைவு 2 கி.மீ. ஆகும்; நல்ல சாலை வழியாக வந்தால் 4 கி.மீ ஆகும். சேந்தமங்கலமும் திருநாவலூரும் ஒன்றுக்கொன்று முறையே வடகிழக்கும் தென்மேற்குமாகச் சாய்ந்து கெடிலத்தின் எதிர் - எதிர்க் கரைகளில் உள்ளன. சேந்தமங்கலத்தின் மக்கள் தொகை 5,600.
ஒருகாலத்தில் செங்கோல் வேந்தரின் தலைநகராய்ச் செழித்துச் சிறப்புற்றிருந்த சேந்தமங்கலத்தை அடைய வேண்டு மெனில், ஊருக்கு அண்மையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நல்ல பாதை இல்லாதது பெருவியப்பிற்கும் பேரிரக்கத்திற்கும் உரியது. வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சேந்தமங்கலம் செல்லவேண்டுமெனில், சென்னை - திருச்சி பெருநாட்டு (National Highways) நெடுஞ்சாலையில் - சென்னைக்குத் தென்மேற்கே 183ஆம் கி.மீட்டரில் (114 ஆம் மைலில்) - கெடிலம் ஆற்றின்மேல் உள்ள பாலத்திற்குத் தென்புறமாக இறங்க வேண்டும். கெடிலம் பாலத்திற்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் பண்ணுருட்டியிலிருந்து திருநாவலூர் - பரிக்கல் வழியாகத் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் மாவட்டக் குறும்பாதை யொன்று சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையைக் குறுக்கிட்டுக் கடப்பதும், கெடிலம் பாலத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலை சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையைக் குறுக்கிட்டுக் கடப்பதும், பயணம் செய்வோர்க்கு உதவக்கூடிய அடையாளக்குறிப்புக்களாகும். இதற்கு, மேற்குப் பகுதிகளிலிருந்து சேந்தமங்கலத்தைச் சேர வேண்டுமாயின், உளுந்துார்ப்பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில் கெடிலம் பாலத்திற்குத் தென்புறமாகப் பெருநாட்டு நெடுஞ்சாலையில் இறங்க வேண்டும்.
பெருநாட்டு நெடுஞ்சாலையில் இறங்கியதும், அங்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மண்பாதை வழியே ஒரு கி.மீ. தொலைவு சென்றால் சேந்தமங்கலம் கோட்டையையும் கோயிலையும் கண்டுகளிக்கலாம். அல்ல கண்டு கடுந்துயர் எய்தலாம் நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குப் பேருந்து வண்டி (பஸ்) கிடையாது; கால்நடையாகவோ, கட்டை வண்டியிலோ செல்ல வேண்டும். அங்கே கட்டை வண்டி கிடைக்காதாதலின் கால்களைத்தான் நம்பவேண்டும். கோடைக்காலத்தில் வேண்டுமானால் சிற்றுந்து வண்டியில் (பிளழ்சர் காரில்) செல்லலாம். மழைக்காலத்தில் வழியில் உளைகள் ஏற்பட்டு விடுவதால் சிற்றுந்து வண்டியில் செல்வது அரிது. இங்கே இது குறித்து இவ்வளவு எழுதுவதன் காரணம், இதைப் படிப்பவர்கள், சேந்தமங்கலம் சென்று கோட்டையையும் கோயிலையும் கட்டாயம் காண வேண்டும் என்னும் நோக்கமேயாகும்.
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு முனையரையர் மரபு மன்னர்களும், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபு மன்னர்களும் அரசோச்சியுள்ளனர். இங்கே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் நரசிங்க முனையரையர் என்னும் மன்னர் ஆட்சி புரிந்த வரலாறு பற்றியும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப் பெருஞ்சிங்கக் காடவராயன் அரசோச்சிய வரலாறு குறித்தும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராசராச சோழனைச் சிறை வைத்தது இவ்வூர்க் கோட்டையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சேந்தமங்கலத்தில் கோட்டையும் கோயிலும் இணைப்பாக உள்ளன. கோட்டை மதிலுக்குள் கோயில் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் பலவிடங்களில் கோயில்கள் கோட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டமை வரலாறு கண்ட உண்மை ‘பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்றார் பாரதியார் அன்று! இன்று, கோட்டைத்தலம் அனைத்தும் கோயில் செய்தார்களா அல்லது கோயில் தலம் அனைத்தும் கோட்டை செய்தார்களா என்று தெரியவில்லை. கோயில் கோட்டையைச் சுற்றி அகழி உண்டு. இப்போது அகழியின் மேற்குப்பகுதி ஒரு கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து வருபவர்கள் இந்தப் பாலத்தைக் கடந்துதான் கோட்டைக்குச் செல்ல வேண்டும். இந்தப் பாலத்தைக் கடந்ததும், மண்பாதை போகப்போக உயரமாகிச் சில அடிதொலைவில் வடக்கு நோக்கித் திரும்புகிறது.
அந்தத் திருப்புமுனையில் 20 அடி உயரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. அம்மேட்டின் உச்சியில் ஒரு பிள்ளையார் (கருங்கல் சிலை) அமர்ந்திருக்கிறார்; அவர் ‘உச்சிப் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். முனை திரும்பி உச்சிப் பிள்ளையாரைக் கண்டு வணங்கிக் கடந்ததும் (அவரை வணங்காவிடின் என்ன செய்வாரோ? தம்மை வணங்கிச் செல்லாததற்காக தந்தை சிவனது தேரின் அச்சையே முறித்துவிட்டவராயிற்றே!), மிக அண்மையிலேயே கோட்டையையும் கோயிலையும் பார்க்கலாம். இவை இப்போது இடிந்து மிகவும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. கோட்டைக் கோயிலின் பாழடைந்த உட்புறத் தோற்றத்தை மேலுள்ள படத்தில் காணலாம். சேந்தமங்கலம் கோயில், வடக்கு நோக்கிக் கெடிலம் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம், முதல் பெருவாயிலைத் தாண்டி உள்ளே சென்று அவ்வாயிலின் அருகில் நின்று எடுத்ததாகும். இந்தப் படத்தின் நடுவில் தொலைவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே - அந்த இடம் கோயிலின் இரண்டாவது வாயிலாகும். எனவே இந்தப் படத்தில் தெரிவது, கோயிலின் முதல் வாயிலுக்கும் இரண்டாவது வாயிலுக்கும் இடையேயுள்ள வடக்குச் சுற்றின் (வடக்குச் சுற்றுப் பிரகாரத்தின்) தோற்றம் என்பது புலனாகும். எழில் மிக்க பெருமாடம் ஒன்று தன் நுண்ணிய சிற்பங்களுடன் இவ்வாறு இடிந்து அழிந்து கிடப்பதைக் காணுங்கால் கண்களில் நீர் கலங்குகிறது. நமது வலக்கைப் புறமாக நூற்றுக்கால் மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளடங்கியிருக்கிறது; இடக்கைப் புற மூலையில் ஒரு கிணறு உள்ளது; அதில் தண்ணிர் தரை மட்டத்திற்கு - மேலே இருக்கிறது; கயிறு தேவைப்படாமல் கையாலேயே தண்ணிர் மொள்ளலாம் (நாங்கள் பார்த்தது மார்கழி - சனவரித்திங்களில்). இந்தக் கோட்டைக் கோயிலின் முழுத் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.
இந்தப் படம், கோட்டைக் கோயிலின் தென்கிழக்கு மூலையில் இடிபாடுகட்கிடையே அரிதின் முயன்று கோட்டைச் சுவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு, கூடிய வரையும் கோயில் உட்பரப்பின் முழுத் தோற்றமும் தெரியும்படி எடுத்ததாகும். இப் படத்தின் நடுவில் உயரமாகக் கோபுரம்போல் தெரிவது கருவறைக்கு (கர்ப்பக் கிருகத்திற்கு) மேலேயுள்ள விமானத் துரபியாகும். கருவறையைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் கால்கள் கலகலத்துச் சிதைந்த நிலையில் நின்ற கொண்டிருப்பதைக் காணலாம். கோயில் முழுதும் கருங்கல் வேலையே. சிற்ப வேலைப்பாடுகளும் மிகுதி. திருச்சுற்றுச் சுவர்களில் காணப்படும் கருங்கல் பலகணிகள் (சன்னல்கள்) கவர்ச்சியான வேலைப்பாட்டுடன் கூடியவை. மேற்குச் சுற்றில் உள்ள குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி திருடன் கோயில் எனப் பெயர் சொல்லப்படுகிறது. இடிபாடுகளையும் செடி, கொடி புதர்களையும் ஊடுருவிக் கொண்டு சென்று திருடன் கோயிலை அடையவோ தெளிவாகக் காணவோ முடிய வில்லை. திருடன் கோயில் எனப் பெயர் வந்ததன் காரணத்தை அங்கிருந்தவர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை. கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருடர்கள் வழிபடும் பகுதியோ என்னவோ! மொத்தத்தில் கோட்டையும் கோயிலும் பாழடைந்த நிலையிலும் ஒருவகைக் கவர்ச்சியுடன் காணப்படுகின்றன;
பாழடைந்து விட்டதால் வரலாற்றுப் பெருமைக்கு உரியனவாய் விட்டன. இடிபாடுகளின் பாழ்த்தோற்றம், கவனிப்பாரற்ற நிலையினால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; போரில் பகை மன்னரால் இடியுண்டு பாழ்படுத்தப்பட்டதாகவே தேர்ன்றுகிறது. எலியுடன் சேர்ந்த தவளையைப்போலக் கோட்டையுடன் சேர்ந்ததால் கோயிலுக்கும் கேடு நேர்ந்தது. பாழ்பட்டுக் கிடக்கும் கோட்டையையும் கோயிலையும் பிரிய மனம் வரவில்லை. கோட்டைக் கோயிலைச் சுற்றிக் கோட்டை வெளிமதில்கள் சிதைந்த நிலையில் இன்றும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றன. இக் கோட்டை மதிலின் படத்தையும் உரிய விவரங்களையும், இந்நூலில் கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பிலுள்ள ‘கோப்பெருஞ்சிங்கன்’ என்னும் உட்பிரிவில் (பக்கம் : 156) காணலாம்.
இந்தக் கோட்டைக் கோயிலுக்குள் பல்லவர், பாண்டியர், விசயநகரக் கிருஷ்ண தேவராயர் முதலியோரின் கல்வெட்டுகள் பலவற்றைக் காணலாம். கோயிலின் இரண்டாவது வாயிற் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் ஒரளவு படிக்கக் கூடிய நிலையில் உள்ளன.
சேந்தமங்கலம் வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினால், எத்தனையோ கட்டடங்களும் பல்வேறு பொருள்களும் கிடைக்குமென அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். சேந்த மங்கலத்தைச் சுற்றி 10 கி.மீ. வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினால் கட்டடங்களின் இடிபாட்டுக் கற்கள் கிடைப்பதால், கோட்டை - அரண்மனை உட்படத் தலைநகரம் 10 கி.மீ. சுற்று வட்டாரத்திற்குப் பரவியிருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பரப்பெல்லைக்குள் திருநாவலூரும் அடங்கியிருக்க வேண்டும். இதற்குச் சான்று, திருநாவலூரில் உள்ள கச்சேரி மேடு என்னும் பகுதியாகும். கச்சேரி மேடு என்பது, அரசன் கொலுவீற்றிருந்து நாட்டு நடப்புக்களைக் கவனிக்கும் திருவோலக்க மாளிகை இருந்த இடமாகும்.
சேந்தமங்கலம் கோட்டைக்கு மேற்கே சிறிது தொலைவில் ஒரு தோப்பும் ‘நீராழிக்குளம்’ என்னும் பெயருடைய ஒரு குளமும் உள்ளன; அங்கிருந்து மேற்கே பாதுர்ப் பக்கம் ஒரு சுரங்கம் செல்வது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோட்டைக்கு எதிரில் வடபுறமாக ஒரு குளம் இருக்கிறது. அக் குளத்தங்கரையில் குதிரைச் சிலைகள் இருப்பதாகவும் போய்ப் பார்க்கும்படியாகவும் மக்கள் கூறினர். போய்ப் பார்த்தபோது, இரண்டு கருங்கற் குதிரைகள் இருப்பது தெரிந்தது. அவற்றுள், ஒன்று கால் உடைபட்டுப் படுத்துக் கிடக்கிறது; மற்றொன்று நான்கு கால் பாய்ச்சலில் பறப்பது போல் தோற்ற மளிக்கிறது. இப்படியாகச் சேந்தமங்கலத்தை ஆராய்ந்தால் வரலாற்றுச் சுவடுகள் பல கிடைக்கும். ஒரு காலத்தில் பேரொளிiசித் திகழ்ந்த கோட்டைக்கு எதிரில் இப்போது குடிசை வீடுகள் இருப்பது இரங்கத்தக்க காட்சியாகும்.
சேந்தமங்கலம் என்னும் பெயரில் பல்வேறு பகுதிகளில் பல ஊர்கள் உள்ளன. அவற்றினின்றும் இந்தச் சேந்த மங்கலத்தை வேறு பிரித்துணர வேண்டியது இன்றியமையாததாகும். ஒரு காலத்தில் சேந்தன் என்னும் பெயருடைய சிற்றரசனுக்கு உரியதாயிருந்ததால் இது சேந்தமங்கலம் என்னும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில், எல்லாச் சேந்தமங்கலத்தின் பெயர்க் காரணமும் இதுதானோ?
திருநாவலூர்
ஒரு காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகராயிருந்ததும், இப்போது திருநாவலுர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராயிருப்பதும் ஆகிய திருநாவலூர், பண்ணுருட்டிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. கடலூரிலிருந்து திருக்கோவலூருக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள். பண்ணுருட்டிக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில், அந்நெடுஞ்சாலையிலிருந்து தென்புறமாக ஒரு மாவட்டக் குறும்பாதை பிரிவதைக் காணலாம். அங்கிருந்து அப்பாதை வழியே 3 கி.மீ. தொலைவு சென்றால் திருநாவலூரை அடையலாம். இந்த மாவட்டக் குறும்பாதை வடமேற்கு நோக்கி வளைந்து, சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ் சாலையைக் கடந்து பரிக்கல் வழியாகத் திருவெண்ணெய் நல்லூர் செல்கிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து அம் மாவட்டக் குறும்பாதையில் கிழக்கு நோக்கி 3 கி.மீ. தொலைவு சென்றால் திருநாவலூரை அடையலாம். இவ்வூர் சேந்தமங்கலத்திற்கு அண்மையில் உள்ளது. முன் சேந்தமங்கலம் என்னும் தலைப்பில் சேந்தமங்கலத்தை அடைவதற்குக் கூறப்பட்டுள்ள வழி விவரங்களைத் திருநாவலூரை அடைவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில நெடுஞ் சாலைக்கும் பெருநாட்டு நெடுஞ்சாலைக்கும் இடையே திருநாவலூர் வழியாகப் பேருந்து வண்டிகள் செல்கின்றன. பேருந்துப் பாதையை ஒட்டினாற்போலவே ஊரும் சிவன் கோயிலும் உள்ளன. புகைவண்டியில் வருபவர்கள், விழுப்புரம் - திருச்சி குறுக்குப் பாதையில் உள்ள பரிக்கல் நிலையத்தில் இறங்கித் தென்கிழக்காக 3 கி.மீ. சென்றால் நாவலூரை அடையலாம்.
பண்டு நாவல் மரம் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக அடிபடுகிறது.
சைவ உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந் நால்வர்: சுந்தரமூர்த்தி நாயனார், அந்தச் சுந்தரரின் தந்தை சடைய நாயனார், தாய் இசை ஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் என்பவராவர். நாவலூரில் பிறந்ததால் 'நாவலூரர்’ என அழைக்கப்படும் சுந்தரர் தமது திருநாவலூர்த் தேவாரப் பதிகத்தின் இறுதிப் பாடலில்,
"நாதனுக்கு ஊர்நமக்கு ஊர்நரசிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்..."
எனக் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
நரசிங்க முனையரையர் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட வரலாறும், அதற்கொரு சான்றாகத் திருநாவலூர்க் கோயிலுக்கு எதிரே ‘கச்சேரி மேடு’ இருப்பதும், நரசிங்க முனையரையர் நாவலூரில் செய்த சிவப்பணியும் இன்ன பிறவும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் ‘நரசிங்க முனையரையர்’ என்னும் பிரிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முனையரையர் மரபு மன்னர்கள் நரசிங்க முனையரையர் - இராமன் முனையரையர் என மாறி மாறிப் பட்டப் பெயர்கள் வைத்துக் கொண்டார்கள் என்பதற்குச் சான்று, திருநாவலூர் வட்டாரத்து மக்கள் நரசிங்கன், இராமன் என்னும் பெயர்களை மிகுதியாக வைத்துக் கொண்டிருப்பதாகும். திருநாவலூரோடு நரசிங்க முனையரையர்க்கு இருந்த தொடர்பினை, திருநாவலூர்க் கோயிலில் அவருக்குச் சிலை இருப்பதைக் கொண்டும் அறியலாம். இச்சிலை மிகவும் அழகியது. இதன் படத்தை இந்நூலில் ‘கல்வி - கலைத்துறை” என்னும் தலைப்பில் காணலாம்.
திருநாவலூர்ச் சிவன் கோயிலின் பெயர்கள்: பக்த சனேசுவரர் கோயில், திருத்தொண்டீச்சுரம் என்பன. இறைவன் பெயர்: நாவலேசுரர்; அம்மன் பெயர், சுந்தரநாயகி, மனோன்மணி, மரம்; நாவல். இக் கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது, அருணகிரியாரின் திருப்புகழும் உண்டு. நாவுக்கரசர் இவ்வூரின் மேல் தனிப் பதிகம் பாடாவிடினும், தமது தேவாரத்தில் - பூவனூர்த் திருக்குறுந்தொகை எட்டாம் பாடலில்,
“'பூவனூர் தண்புறம் பயம் பூம்பொழில்
நாவலூர் நள்ளாறொடு நன்னிலம்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே’’
எனத் திருநாவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவ்வூர் மேல் இராசப்ப நாவலர் ஒரு புராணம் பாடியுள்ளார். இவ்வூர்க் கோயிலின் வெளித் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:
கிழக்கு நோக்கியுள்ள இக் கோபுர வாயில் கோயிலின் முதற்பெரு வாயிலாகும். இக் கோபுரத்திற்கு எதிரேயுள்ள மேட்டுப் பகுதி ‘கச்சேரி மேடு ‘ எனப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் நடுவில் (கி.பி. 935), முதல் பராந்தக சோழன் ஆண்டு கொண்டிருந்தபோதே அவன் மூத்த மகன் இராசாதித்த சோழன் திருநாவலூர்க் கோயிலின் உட்பகுதியைக் கருங்கல்லால் கட்டுவித்தான். அவனது திருப்பணியைப் பெற்றதனால் இக் கோயிலுக்கு ‘இராசாதித் தேசுரம்’ என்னும் பெயரும் சூட்டப்பட்டது. அன்று திருநாவலூர் இராசாதித்தனது மேற்பார்வையில் இருந்ததால் ‘இராசாதித்த புரம்’ எனவும் அழைக்கப்பட்டது. இராசாதித்தனது திருப்பணியால் உருவான கோயிலின் உள் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இராசாதித்தன் 949ஆம் ஆண்டில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்ணதேவனைத் தக்கோலம் என்னுமிடத்தில் பொருது முறியடித்தான். ஆனால், முறியடித்த அன்றிரவே, இராட்டிரகூட மன்னனின் மைத்துனனாகிய கங்க குலத்துப் பூதுகன் என்னும் பூதராசன், சூழ்ச்சியினால் இராசாதித்தனைக் கொன்று விட்டான். இந்தச் செய்தி [3] கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. இராசாதித்தனுடன் தக்கோலம் வரை போர் புரியச் சென்ற படை மறவர்களும் - தலைவர்களும் மன்னனையிழந்து திரும்பி வருகையில் இராசாதித்தனால் கட்டப்பட்ட திருநாவலூர்க் கோயிலில் இறந்துபோன அவன் பெயரால் பல திருவிளக்குகள் ஏற்றுவதற்கு அறக்கட்டளைகள் ஏற்படுத்திச் சென்றதாகப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தோ! மன்னனையிழந்த மாமறவர்கள் மனம் நெகிழ்ந்துருகி மன்னனது உயிர் நற்பேறு பெறவேண்டுமென அவன் பெயரால் திருவிளக்குகள் ஏற்றியிருப்பதாகத் தெரிகிறதே!
திருநாவலூர்ப் பெரிய கோயிலுக்குள் சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில் வரதராசப் பெருமாள் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கோயிலின் தென்கிழக்கு மூலையில் சுந்தரர் - பரவையார் - சங்கிலியார் ஆகியோர்க்கு ஒரு தனிக்கோயில் உள்ளது. கோயிலிலுள்ள இம்மூவரின் உலோக உருவச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்கே சுந்தரர் பிறந்த நாள் (ஆவணி உத்திரம்) விழாவும், வீடுபேறுற்ற நாள் (ஆடி - சுவாதி) விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கோயிலின் வடபால் சுந்தரர் பிறந்த மனையில் அவரது நினைவுக் குறியாக ஒரு மாளிகை கட்டப்பட்டு வருகிறது. அதன் படத்தைக் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - சுந்தரர்’ என்னும் தலைப்பில் காணலாம்.
திருநாவலூர்க் கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்களும் பலர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. தட்சணாமூர்த்தி இங்கே.நின்ற கோலத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் வட்டம்
கடலூர் வட்டம், தென்னார்க்காடு மாவட்டத்துக் கடலோர வட்டங்கட்கு நட்ட நடுவே உள்ளது. திருக்கோவலூர் வட்டத்திலிருந்து இவ் வட்டத்திற்குள் புகும் கெடிலம், இவ் வட்டத்தின் வடபுறமாகக் கிழக்கு நோக்கி ஒடிக் கடலூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. இதன் பரப்பளவு - 1060 சதுர கி.மீ, மக்கள் தொகை 5,11,400. தலைநகர் கடலூர் (கூடலூர்). இவ் வட்டம் ஆற்று வளமும், கடல் வளமும், நிலக்கரி வளமும் இவை காரணமாகத் தொழில் - வாணிக வளமும், உடையது. பெண்ணையாறு ஓடுவதன்றி, பெண்ணையாற்றிலிருந்து பிரியும் மலட்டாறு கெடிலத்தோடு கலப்பதும் இவ் வட்டத்தில்தான் கேப்பர் மலையும் முந்திரிக்காடும் இவ் வட்டத்தில் உள்ளன.
கடலூர் வட்டத்தில், பாடல் பெற்ற பல பதிகளும், அப்பர் பிறந்த திருவாமூரும், சிவப்பிரகாச சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்ட நல்லாற்றுரும் இராமலிங்க அடிகளார் அருட்பணி புரிந்த வடலூரும், ஞானியாரடிகள் வாழ்ந்த திருப்பாதிரிப் புலியூரும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரும் ஒரு துறைமுகமும் ஒரு புகைவண்டி நிலையச் சந்திப்புமுடைய கூடலூரும், சர்க்கரை ஆலை உள்ள நெல்லிக் குப்பமும், நிலக்கரி வளமும், இடையிடையே புதுச்சேரி மாநிலப் பகுதிகளும், இன்ன பிறவும் இருப்பது இவ் வட்டத்திற்கு மிக்க பெருமையாகும். அப்பர் சமணராக மாறி வாழ்ந்த பாடலிபுத்திரமும் (திருப்பாதிரிப்புலியூரை யொட்டிய பகுதி) ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் பெருந் தலைவலி தந்த கடற்கரையிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டையும் இவ் வட்டத்தின் வரலாற்று இன்றியமையாமைக்குத் தக்க சான்றுகளாம். இவ் வட்டம் இப்போது நான்கு ஊராட்சி மன்ற ஒன்றியங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இனி, கடலூர் வட்டத்தில் கெடிலக்கரையை யடுத்துள்ள இன்றியமையா இடங்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:
திருவாமூர்
திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரிய திருவாமூர், கடலூருக்க மேற்கே 35 கி.மீ. தொலைவில் பண்ணுருட்டிக்கு மேற்கே 9 கி.மீ தொலைவில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. இவ்வூருக்கு மேற்கே சிறிது தொலைவில் மலட்டாறு கெடிலத்தின் வடகரையில் கெடிலத்தோடு கலக்கிறது; சிறிது தொலைவில் ‘நரியின் ஒடை’ என்னும் பெரிய ஒடை தென்கரையில் கெடிலத்தோடு கலக்கிறது. திருவாமூரை அடைய வேண்டுமெனில், கடலூர் - திருக்கோவலூர் மாநில நெடுஞ் சாலையில் கடலூருக்கு மேற்கே 34 ஆவது கி. மீட்டரில் பண்ணுருட்டிக்கு மேற்கே 8 ஆவது கி.மீட்டரில் இறங்க வேண்டும். பின்னர், அவ்விடத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவு அளவுக்கு மண் பாதை வழியே சென்றால் திருவாமூரை அடையலாம். மாநில நெடுஞ்சாலையில் திருவாமூரை நோக்கி திருவாமூர்’ என்னும் கைகாட்டி நீட்டிக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலையிலிருந்து திருவாமூருக்குச் செல்லும் மண் பாதை, சிற்றுந்து வண்டி (பிளழ்சர் கார்) செல்லும் அளவுக்கு ஒரளவு வசதியாகவே இருக்கிறது.
திருவாமூர் (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது. அதற்கேற்றாற் போலவே இவ்வூர் நீர் வளமும் நிலவளமும் செறிந்து திகழ்கிறது. அப்பர் அடிகளின் காலத்தைத் தொடர்ந்து அறங்கள் பல நிகழ்ந்த ஊர் அல்லவா இது? இவ்வூர் பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் பசுபதீச்சுரம், சிவன் பெயர் பசுபதீசுரர்; அம்மன் பெயர்: திரிபுர சுந்தரி, சில ஊர்க் கோயில்களில் சிவன் ‘திருமுன்பு ‘(சந்நிதி) கிழக்கு நோக்கியும், அம்மன் ‘திருமுன்பு’ தெற்கு நோக்கியும் இருக்கும்; அவற்றுள் இவ்வூரும் ஒன்று. கோயில் சிறியது. இவ்வூரில் பிறந்த நாவுக்கரசர் இவ்வூர் இறைவன்மேல் தேவாரப் பதிகம் பாடித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது கிடைக்கவில்லை. அவருடைய பதிகங்கள் சில கிடைக்கவில்லை என்னும் செய்தி வேறிடத்திலும் கூறப்பட்டுள்ளது. இவ்வூர் முருகன்மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். பசுபதீசுரர் கோயிலைப் பின்வரும் படத்தல் காணலாம்:
படத்தில் தெரியும் வாயில் கோயிலின் மேற்குப் புறவாயில், கோயிலின் மேல் திசையில் திருவாமூர் இருத்தலாலும், மற்ற மூன்று திசைகளிலும் குளமும் வயலும் சூழ்ந்திருத்தலாலும், மேல்திசை வாயிலே பயன்படுத்தப்படுகிறது இக் கோயிலுக்குக் கோபுரம் ஒன்றுமில்லை. கோயிலின் தென்பால் ஒடை போன்ற பெரிய குளம் இருக்கிறது. கோயிலுக்குள் உள்ள கிணற்றில் தண்ணிர் தரை மட்டத்திற்கு உயர்ந்திருக்கிறது (நாங்கள் பார்த்தது: 4-1-1967 மார்கழித் திங்களில்). கோயில் சிறியதாயிருப்பினும் நன்கு அழகுபடுத்தப்பட்டுக் கவர்ச்சியாயிருக்கிறது. கருவறையில் இறைவன் திருமுன்புக்கு நேரே கிழக்குப் புறமாக வாயில் இல்லை; தென்புறமே வாயில் உள்ளது.
திருவாமூர் கோயிலால் சிறப்புப் பெற்றது என்று சொல்வதனினும், திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்ததாலேயே சிறப்புற்றது என்று சொல்வதே பொருந்தும். நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கும் செய்தியினையும் அக் கோயிலின் படத்தையும் அது சார்பான விவரங்களையும் இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - திருநாவுக்கரசர்’ என்னும் தலைப்பில் காணலாம். திருவாமூரில் அப்பர் பிறந்த பங்குனி உரோகிணி நாளிலும் அவர் வீடுபேறுற்ற சித்திரைச் சதய நாளிலும் சிறப்பாக விழாக்கள் நடைபெறுகின்றன. திங்கள்தோறும் வரும் சதயத்திலும் விழா உண்டு. திருமணம் உறுதி செய்த பின்னர்த் திருமணம் நிகழ்வதற்குள்ளாகவே மணமகள் திலகவதியார் மணமகன் கலிப்பகையாரைப் போரில் இழந்துவிட்டதால், அவர் மரபினராகிய வேளாளர்கள், திருமணம் உறுதி செய்த நாளிலேயே திருமணமும் நடத்திவிடுவதைத் திருவாமூர் வட்டாரத்தில் காணலாம்.
திருவாமூர்க் கோயிலில் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள முதற் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடத்தக்கது. அக் கல்வெட்டு முதற் குலோத்துங்க சோழனது 21ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1090) வெட்டப்பட்டது. திருவாமூர் மக்கள் கோயிலில் திருநாவுக்கரசருக்குப் பூசனை தொடர்ந்து நடைபெறுவதற்காக நிலம் விற்றுக் கொடுத்ததைப் பற்றி அக் கல்வெட்டு பேசுகிறது. அதன் இடையேயுள்ள,
"கங்கைகொண்ட சோழவள நாட்டுத் திருமுனைப்
பாடிக்கீழாமூர் நாட்டுத்திருவாமூர் ஊரோம்.’’
என்னும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது. இப் பகுதியால், திருவாமூர் இருக்கும் பேரரசுப் பெருநாட்டின் பெயர் ‘கங்கை கொண்ட சோழவள நாடு’ என்பதும், அதன் உட்பிரிவு ‘திருமுனைப்பாடிக் கீழாமூர் நாடு’ என்பதும் பெறப்படும். இங்கே ‘கீழாமூர்’ என்பதைப் பார்க்கும் போது, ‘மேலாமூர்’ ஒன்று உண்டு என்பதும் புலனாகிறது. பொதுவாகத் திருக் கோவலூர் வட்டமும் கடலூர் வட்டமும் திருமுனைப்பாடி நாடு என்று சொல்லப்படும். இவற்றுள், மேற்கே உள்ள திருக்கோவலூர் வட்டத்தில் ஒர் ஆமூர் இருக்கிறது; இது மேலாமூராகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அடுத்துக் கிழக்கேயுள்ள கடலூர் வட்டத்தில் ஒர் ஆமூர் இருக்கிறது; இதுதான் அப்பர் பிறந்த ஆமூர்; இதைக் கீழாமூராகக் கொள்ள வேண்டும். எனவே, திருமுனைப்பாடி நாட்டில் கீழாமூர் உள்ள பகுதி, ‘திருமுனைப்பாடிக் கீழாமூர் நாடு’ என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். இதைச் சேர்ந்தது அப்பர் பிறந்த திருவாமூர் என்பது கல்வெட்டுப் பகுதியால் உய்த்துணரப் படுகிறது. இந்தக் கல்வெட்டு, திருவாமூர்ச் சிவன் கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் தொடங்கித் தெற்குச் சுவர்ப்பக்கம் சென்று முடிவதைக் காணலாம்.
திருத்துறையூர்
திருத்துறையூர், விழுப்புரம் - கூடலூர் புகைவண்டிப் பாதையிலுள்ளது. திருத்துறையூரில் புகைவண்டி நிலையம் இருக்கிறது. ஊருக்கும் நிலையத்திற்கும் 3 கி.மீ. இடை வெளி இருக்கும். பண்ணுருட்டிக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. திருத்துறையூர் பெண்ணையாற்றின் தென்கரைக்குச் சில கி.மீ. தொலைவிலிருப்பினும், கெடிலத்தின் வடகரைக்கு 8 கி.மீ. தொலைவில் இருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
இவ்வூர் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்ற பதியாகும். சிவன் பெயர் : பசுபதீசுரர் : அம்மன் பெயர்: பூங்கோதை நாயகி. இங்கே சுந்தரர் இறைவனிடம் தவநெறி வேண்டியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. இரண்டாம் சந்தானாசாரியாரும் சைவசித்தாந்த நூல்களுள் சிறந்ததான சிவஞான சித்தியாரை இயற்றியவரும் ஆகிய அருணந்தி சிவாசாரியார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிந்த ஊர் இது. சிவன் கோயிலுக்குள் அருணந்தி சிவாசாரியாருக்கு ஒரு சிறு கோயில் உண்டு. இங்கும் பல கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் உண்டு.
பண்ணுருட்டி
பண்ணுருட்டி, கடலூருக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவிலும் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் - நெய்வேலிக்கு வடக்கே 26 கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. ஆற்றுக்கும் ஊருக்கும் ஒரு கி.மீ. இடைவெளி இருக்கும். கடலூரிலிருந்து திருக்கோவலூர்ப் பக்கம் செல்லும் மாநில (State Highways) நெடுஞ்சாலையும், மாவட்ட (Major District Road) நெடும்பாதையும் பண்ணுருட்டி வழியாகவே செல்கின்றன. பண்ணுருட்டியிலிருந்து தெற்கே நெய்வேலிப் பக்கம் ஒரு மாவட்ட நெடும்பாதையும், வடக்கே விக்கிரவாண்டி பக்கம் ஒரு மாவட்டக் குறும்பாதையும் செல்கின்றன. விழுப்புரம் - கடலூர்ப் புகைவண்டிப் பாதையும் பண்ணுருட்டி வழியாகத்தான் செல்கிறது; பண்ணுருட்டியில் புகைவண்டி நிலையம் உண்டு. இவ்வகையில் பண்ணுருட்டி போக்குவரவு நெருக்கடியுள்ள ஒரு நகரமாகும். தொழில் வாணிகச் சிறப்பேயன்றித் திருவதிகை மிக அண்மையில் இருப்பதும் இவ்வூருக்குத் தனிப் பெருமையாகும். பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராகிய பண்ணுருட்டியின் மக்கள் தொகை: 28,760. இவ்வூர் இப்போது நகராட்சியாகியுள்ளது.
பண் உருட்டி இசைபாடும் பாணர்கள் வாழ்ந்த ஊர் ஆதலின் பண்ணுருட்டி என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
செங்கல் சூளை, மண்பாண்டத் தொழில், பொம்மைகள் செய்தல், இசைக் கருவியாகிய கடம் செய்தல், பாக்குகளுக்குச் சாயம் ஏற்றுதல், ஆலைகளில் மணிலா எண்ணெய் ஆடுதல், முந்திரி எண்ணெய் ஆடுதல் முதலிய தொழில்களுக்குப் பண்ணுருட்டி பேர்போனது. மற்றும், முந்திரி, பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றிற்கும் பண்ணுருட்டி பேர்போனது. பண்ணுருட்டிக்குப் பக்கத்தில் காடாம்புலியூர்ப் பகுதியில் கிடைக்கும் வெள்ளை மண் சிமிட்டி செய்ய டால்மியாபுரம் அனுப்பப்படுகிறது.
பண்ணுருட்டி ஒரு தொழில் நிலையமாயிருப்பதையொட்டி ஒரு பெரிய வணிக நிலையமாகவும் விளங்குகிறது. வியாழன் தோறும் இங்கே பெரிய சந்தை கூடுகிறது. பாக்கு, புகையிலை, முந்திரிக் கொட்டை, வெல்லம் முதலியவற்றின் வாணிகம் இங்கே மிகுதி. பண்ணுருட்டிப் பலாப் பழமும் பண்ணுருட்டித் தலையாட்டிப் பொம்மையும் நாடறிந்தவை.
இத்துணை, தொழில் - வாணிக வளமுடைய பண்ணுருட்டியில் உயர்நிலைப் பள்ளி, தொழிற் பள்ளி, சிறு நீதிமன்றம், சிறைச்சாலை, துணைத் தாசில்தார் அலுவலகம் முதலியனவும் உள்ளன. நெய்வேலி நிலக்கரிப் பகுதி பண்ணுருட்டியை நெருங்கி வந்து கொண்டிருப்பதால் முன்னிலும் இவ்வூர் இப்போது மிகவும் இன்றியமையா இடம் பெற்றுள்ளது. இவ்வூர்க்கு அருகே கெடிலத்தில் பாலம் கட்டியிருப்பது நெய்வேலித் திட்டத்திற்கு மிகவும் உதவியாயிருக்கிறது.
இவ்வூரை யொட்டி மேற்கேயுள்ள புதுப்பேட்டை - சித்தவட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் முடிமேல் சிவன் தன் திருவடிகளைச் சூட்டியதாகச் சொல்லப்படும் [4] பெரிய புராண வரலாறு குறிப்பிடத்தக்கது.
திருவதிகை
திருவதிகை, பண்ணுருட்டி நகருக்குக் கிழக்கே பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. திருவதிகையின் மேற்கு எல்லையில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட (Major District Road) நெடும் பாதையும் கடலூர் திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலையும் ஒன்று கூடி, பண்ணுருட்டியின் மேற்கு எல்லையில் மீண்டும் தனித்தனியே பிரிந்துவிடுகின்றன. கடலூருக்கு மேற்கே 24 கி.மீ. தொலைவில் திருவதிகை இருக்கிறது. பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் திருவதிகையில்தான் இருக்கிறது.
திலகவதியாரும் திருநாவுக்கரசரும் திருக்தொண்டுபுரிந்த இடம் திருவதிகை, பாடலிபுத்திரத்தில் சமணத் தலைவராய் விளங்கிய நாவுக்கரசர் மீண்டும் வந்து சைவராக மாறி, ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்கும் முதல் தேவாரப் பதிகம் பாடிச் சூலை நோய் நீங்கப் பெற்ற இடம் திருவதிகை; நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்ம பல்லவன், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக் கோயிலை இடித்துக் கொண்டுவந்து ‘குணபரேச்சரம்’ என்னும் பெயரில் ஒரு சைவக்கோயில் கட்டிய இடம் திருவதிகை, சிவபெருமான் தனது புன்னகையால் முப்புர அரக்கர்களை எரித்ததாகச் சொல்லப்படும் இடம் திருவதிகை, வீரட்டானங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இடம் திருவதிகை தமிழகத்திலேயே முதல் முதலாகத் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்கு உரிய பதி திருவதிகை, திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள் பதினாறும், திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றும், சுந்தரரின் பதிகம் ஒன்றும், அருணகிரியாரின் திருப்புகழ் இரண்டும், பிற்காலப் புராணம் ஒன்றும், மான்மியம் ஒன்றும், உலா ஒன்றும், தொண்ணுற்றாறு கல்வெட்டுகளும் பெற்றுத் திகழும் இடம் திருவதிகை, சிறந்த சைவசித்தாந்த நூலாகிய ‘உண்மை விளக்கம்’ இயற்றிய ‘திருவதிகை மனவாசகங் கடந்தார்’ என்னும் பெரியார் பிறந்த இடம் திருவதிகை அருகிலுள்ள அணையால் செழிப்புற்றுத் திகழும் இடம் திருவதிகை.
வீரட்டானம்
திருவதிகைக் கோயிலின் பெயர் வீரட்டானம்; இறைவன் பெயர் வீரட்டானேசுரர்; இறைவி பெயர் திரிபுர சுந்தரி, பெரியநாயகி. மரம் கொன்றை கருவறையிலுள்ள இலிங்கம் பதினாறு பட்டைகள் கொண்டது. இலிங்கத்திற்குப் பின்னால் சுவரில் இறைவன் உருவமும் இறைவி உருவமும் உள்ளன. சுதையால் செய்யப் பெற்ற இந்த அம்மையப்பர் உருவத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாயிருக்கிறது. இந்த உருவங்கள் மேல் நோக்கிற்குப் புலப்படா விளக்கொளியை மிகுத்துக் கூர்ந்து நோக்கினாலேயே புலப்படும். திருவதிகையில் சிவபெருமான் உமையம்மையைத் திருமணம் செய்து கொண்டாராம்; அதன் அறிகுறியாகத்தான், சிவலிங்கத்திற்குப் பின்னால் அம்மையப்பர் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்; இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்ததாகச் சொல்லப்படும் திருப்பதிகளில் இப்படி அமைந்திருப்பது மரபாம். தேவ தேவியின் திருமணம் நடைபெற்ற இடம் திருவதிகையாதலால், வெளியூர் மக்கள் பலர் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு செல்கின்றனர். இங்கே திருமணம் செய்து கொண்டால் நன்கு வாழலாம் என்பது ஒரு தெய்வ நம்பிக்கை. திருவதிகையில் இறைவி தவமிருக்க, இறைவன் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு போனதால், இறைவியின் சிறப்பை அறிவிக்குமுகத்தான், திருவதிகைப் பெரிய கோயிலில் சிவன் கோயிலுக்கு வலப்புறம் அம்மன் கோயில் அமைக்கப் பட்டிருக்கிறது; மற்ற ஊர்களில் இறைவன் கோயிலின் இடப் புறத்திலேயே இறைவி கோயில் இருக்கும். இத்துணை சிறப்பிற்குரிய திருவதிகைக் கோயிலின் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இது கோயிலின் உள் தோற்றம். இந்தப் படம், கோயிலுக்கு உள்ளே வடமேற்கு மூலையில் இருந்து கொண்டு, வெளிக் கோபுரம், இடைக் கோபுரம், கருவறை விமானம் ஆகிய மூன்றும் தெரியும்படி எடுத்தது. படத்தில் நாம் பார்ப்பது, கோபுரங்களின் மேற்குப் புற அஃதாவது பின்புறத்
தோற்றத்தைத்தான் கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. படத்தில் நமக்கு இடக்கைப் புறமாகத் தொலைவில் தெரிவது கோயிலின் வெளிக் கோபுரம். அஃதாவது, முதற் பெருவாயிற் கோபுரமாகும். படத்தில் நடுவில் தெரிவது, கோயிலின் நடுவிலுள்ள இரண்டாவது கோபுரமாகும். படத்தில் நமக்கு வலக்கைப் புறமாகப் பாதி தெரிந்தும் தெரியாமலுமாக இருப்பது, கருவறையின் மேலுள்ள மிக அழகிய விமானமாகும்.
கோயிலின் முதல் கோபுரம் நாயக்க அரசரால் பதினாறாம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது; அதற்குச் சான்று, கோபுர வாயிலில் நாயக்க மன்னரின் உருவச் சிற்பம் இருப்பதாகும். இரண்டாவது கோபுரம் பாண்டிய வேந்தரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது; சான்று, அக் கோபுர வாயிலில் ‘மீன் இலச்சினை அமைக்கப்பட்டிருப்பதாகும். இந்தக் கோபுரம் கட்டிய பாண்டியன், கி.பி. 1251 - 1270 கால அளவில் தமிழ் நாட்டின் பெரும்பகுதியை ஆண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியனாகத்தான் இருக்க வேண்டும். எனவே, இரண்டாம் கோபுரம் கட்டப்பட்ட காலம், பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது புலனாகும்.
இந்த அடிப்படையில் பார்த்தால், திருவதிகைக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது கோபுரமாகிய உள் கோபுரம் கட்டப்பட்டிருக்க, பதினாறாம் நூற்றாண்டு வரையும் வெளிக் கோபுரம் (முதல் கோபுரம்) இல்லாதிருந்தது என்று கொள்ள வேண்டியதாயுள்ளது. உள் கோபுரம் இல்லாவிடினும் வெளிக் கோபுரம் கட்டுவதுதான் எங்கும் வழக்கம். பெரும்பாலான ஊர்களில் வெளிக் கோபுரம் மட்டுமே இருக்கக் காணலாம். எனவே, திருவதிகைக் கோயிலின் முதற் கோபுரம் நாயக்க மன்னரால் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதல், முதலாகக் கட்டப்பட்டது என்னும் கருத்தை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிக் கோபுரமும் முற்காலத்திலேயே கட்டப்பட்டிருந்து போர்க் காலத்தில் அழிந்தோ - சிதைந்தோ போயிருக்கலாம்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கனது ஆட்சியின்கீழ்த் திருவதிகை இருந்தபோது, போசள மன்னன் வீரநரசிம்ம தேவன், கோப்பெருஞ் சிங்கனால் சிறை செய்யப்பட்ட மூன்றாம் இராசராசச் சோழனுக்குப் பரிந்துகொண்டு திருவதிகை முதலிய இடங்களைக் கடுமையாய்த் தாக்கி அழித்ததாகத் திருவயிந்திரபுரத்திலுள்ள கல்வெட்டொன்று கூறும் செய்தி ஈண்டு நினைவு கூரத்தக்கது. இப்படி இன்னும் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அழிந்துபோன கோபுரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் புதுப்பித்தோ - திருத்தியோ கட்டியிருக்கலாம்; அதனால், அவரது உருவச் சிற்பம் அக் கோபுர வாயிலில் இடம் பெற்றிருக்கலாம். இந்த வெளிக் கோபுரத்தின் கிழக்குப் புறத் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இந்த முதல் கோபுரம் போலவே இரண்டாவது கோபுரமும் சுந்தர பாண்டியன் காலத்திற்கு முன்னமேயே கட்டப்பட்டிருக்க, சுந்தர பாண்டியன் தன் காலத்தில் அதனைப் புதுப்பித்தோ திருத்தியோ கட்டியிருக்கலாம். இரண்டு கோபுரமுமே பாண்டியப் பேரரசாலோ அல்லது அவர்கட்கு முன் ஆண்ட சோழப் பேரரசாலோ அல்லது அவர்கட்கும் முன் ஆண்ட பல்லவப் பேரரசாலோ கட்டப்பட்டும் இருக்கலாம்; பின்னால் - பின்னால் வந்தவர்கள் திருத்தியும் புதுப்பித்தும் திருப்பணிகள் செய்து தங்கள் நினைவுக் குறியை நிறுத்திச் சென்றிருக்கலாம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டதாகக் கருதப்படும் இரண்டாம் கோபுர வாயிலில், கி.பி. 730 - 731ஆம் ஆண்டில் அரசாண்ட இரண்டாம் பரமேசுரவர்மப் பல்லவ மன்னனின் கல்வெட்டு இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனால், பரமேசுரவர்மப் பல்லவன் காலத்தில் கோபுரமின்றி வாயில் மட்டுங்கூட இருந்திருக்கலாம்! இரண்டாம் கோபுரத்தின் காலம் எதுவாயிருப்பினும், முதல் கோபுரம் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், திருவதிகைக் கோயில் மிகவும் பழைமையானது; பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோரின் கல்வெட்டுகள் இதில் உள்ளன; அப்பர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டிலேயே மிகவும் புகழ்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக, கோயில் கருவறைமேல் உள்ள விமானம் பல்லவர் காலத்து வேலைப்பாடு உடையதாகத் தெரிகிறது; ஆதலின், அது பல்லவ மன்னரால் அமைக்கப்பட்டது என்று கொள்ளலாம். இதற்குத் தக்க சான்று உள்ளது. இந்த விமானம் நிருபதுங்கவர்மப் பல்லவ மன்னனது பதினாறாம் ஆட்சியாண்டில் அஃதாவது, கி.பி. 870 ஆம் ஆண்டளவில் - திருத்திப் புதுப்பிக்கப்பட்டதாக, கருவறையின் முன் மண்டப வாயில் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமானத்தின் அடிப்பகுதி கருங்கல்லால் ஆனது. கருங்கல் நிலையின் மேல் விமானம் தேர் போன்ற தோற்றத்தில் செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. விமானத்தைச் சுற்றி அடி தொட்டு முடிவரை சுதையாலான உருவங்கள் செறிந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இத்தகைய சுதை வேலைப் பாட்டை, இதேபோல் பல்லவர் படைப்பாகிய காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலில் கண்டுகளிக்கலாம். இந்த விமானத்தின் மிக அழகிய தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இந்த விமானத்தின் உச்சி நிழல் நிலத்தில் விழுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அடிப்படை அகன்றிருத்தலின் நிழல் அதற்குள்ளேயே அடங்கிவிடுகின்றது போலும். கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் - விமானத்தின் மேற்கே பல இலிங்கங்கள், உள்ளன; எல்லாம் பல்லவர் காலத்தவை; அவற்றுள், ஐந்து முகங்களையுடைய இலிங்கம் ஒன்றுள்ளது; ‘முகலிங்கம்’ என அழைக்கப்படும் இது காணத்தக்கது. கோயிலில் சிற்பச் சிறப்பிற்குக் குறைவில்லை.
வீரட்டானர் கோயிலுக்குள், திலகவதியார்க்கும் திருநாவுக் கரசர்க்கும் தனித்தனிச் சிறு கோயில்கள் உள்ளன. வெளிக் கோபுரத்தைத் தாண்டிக் கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே வலக்கைப் புறமாக ஒரு சமணச் சிலை தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் காணலாம். அதன் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் பார்க்கலாம்:
இந்தச் சிலை, ஒரு மன்னனது தோற்றத்தையும் சமண சமயக் குறிகளையும் குறிக்கிறது; எனவே, அப்பர் காலத்தில் சமண சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னனைக் குறிக்கும் சிலையாக இருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது. இதற்குச் சான்று பகரும் முறையில் கோயில் பெருவிழாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; அஃதாவது, சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதற்காக நாவுக்கரசரைப் பல்லவன் யானையைக் கொண்டு இடறச் செய்தான் அல்லவா? அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதிலடி கொடுக்குமுறையில் ஆண்டுதோறும் பெருவிழாக் காலத்தில் ஒருநாள் யானை கொண்டுவரப்பட்டு இந்தச் சமண மன்னனது சிலையை மோதுவதுபோல் ஒரு காட்சி (ஐதீகம்) நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிலை, ஊருக்கருகில் நிலத்தின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
குணபரேச்சரம்
திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலுக்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், மாநில நெடுஞ்சாலையிலிருந்து புறப்படும் ஒரு சிறு குறுக்குப் பாதை மாவட்ட நெடும் பாதையுடன் வந்து சேருமிடத்தில் குணபரேச்சரம் என்னும் கோயில் இருக்கிறது. இது, குணபர வீச்சரம், குணபரேசுரம், குணதரேச்சரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மகேந்திர வர்ம பல்லவனுக்குக் குணபரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு அந்தக் குணபரனால் கட்டப்பட்டதால் குணபரேச்சரம் என்னும் பெயர் பெற்றது. இது. இது தொடர்பான ஒரு சிறு ஆராய்ச்சியை இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் ‘திருநாவுக்கரசர்’ என்னும் தலைப்பில் காணலாம். பல்லவன் அப்பரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய பின், பாடலிபுத்திரத்திலிருந்த சமண கோயிலை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் இந்தக் கோயிலைக் கட்டினான் எனப் பெரிய புராணம் கூறுகிறது.
குணபரேச்சரம் மிகச் சிறியது; திருவதிகையில் இருக்கு மிடம் தெரியாமல் இருக்கிறது. இடிந்துபோன ஒரு சிறு வீடு போல் இருக்கிறது என்று சொல்ல மனம் வராவிடினும், சிதைந்துபோன ஒரு சிறு ஐயனார் கோயில் போல் இருக்கிறது என்று சொல்லலாம். கிழக்கு நோக்கிய கோயிலின் முன்பகுதியில், ஒரு வீட்டுத் தோட்டத்தில் இருப்பதுபோல் மரஞ்செடி கொடிகள் காணப்படுகின்றன. அவற்றைக் கடந்து உள்ளே போனால் இடிந்து பாழடைந்துள்ள மண்டபப் பகுதிகளில் பிள்ளையார், திருமால், நந்தி, சூரியன் முதலியோரின் சிலைகள் உள்ளன. ஒரு சுவரின் அடியில் மாடக்குழிபோல் உள்ள ஒரு பதிவில் தெற்கு நோக்கியிருக்கும் அம்மன் சிலை பார்ப்பதற்கு மிகவும் இரங்கத்தக்கதாயிருக்கிறது. கருவறையிலிருக்கும் இலிங்கம், வீரட்டானேசுரர் கோயிலில் உள்ள இலிங்கம் போலவே பதினாறு பட்டைகள் கொண்டதாய்க் காண்பதற்குக் கவர்ச்சியாய்க் களிப்பூட்டுகிறது. இலிங்கத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:
குணபரேச்சரத்தில் ஆதி சைவ அந்தணக் குருக்கள் பூசனை புரியவில்லை; ஐயனார் கோயில் போல் - காளி கோயில் போல் பூசாரியாரே பூசனை புரிகிறார். பூசாரியார் திருநீறு வைத்துச் சூடம் கொளுத்தும் பித்தளைத் தட்டில் ‘குணதர ஈசன் என்னும் பெயர் பொறிக்கப் பட்டிருக்கிறதே தவிர ‘குணபர ஈசன்’ என்ற பெயர் காணப்படவில்லை. ஆனால், சேக்கிழார் பெரிய புராணத்தில் ‘குணபர வீச்சரம்’ என்றே பெயர் கூறியுள்ளார். குணபர ஈச்சரம் = குணபரேச்சரம் என்றாகும். கோயில் தட்டில் உள்ள பெயரைக் கொண்டு பார்த்தால் ‘குணதரேச்சரம்’ என்றே பெயர் சொல்ல வேண்டும். எனவே, குணபரேச்சரம், குணதரேச்சரம் என்னும் இரண்டு பெயர்களும் அக்கோயிலுக்கு வழங்கப்பட்டன எனக் கொள்ள வேண்டும்.
குணபரேச்சரம் போற்றுவாரற்று இடிந்து பாழடைந்ததற்குக் காரணம் என்ன? அண்மையில் பெரும் புகழுடைய வீரட்டநாதர் கோயில் இருப்பதால், குணபரேச்சரம் மக்களிடையே எடுபடாமல் போயிருக்கலாம்; மற்றும், சமணக் கோயிலை இடித்துக்கொண்டு வந்து அந்தக் கோயிற் பொருள்களைக் கொண்டு இது கட்டப்பட்டதாதலின், இந்தக் கோயிலைச் சமண் கோயிலின் மாற்றுருவம் எனக் கொண்டு இங்கே சமண் வாடை வீசுவதாக எண்ணி மக்கள் புறக்கணித்திருக்கலாம்; மேலும், சமணக் கடவுள் சினந்து ஏதாவது பண்ணிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினாலும் மக்கள் இந்தப் பக்கம் தலைகாட்டாது விட்டிருக்கலாம்; அல்லது, பல ஊர்களில் பாடல் பெற்ற சிவன் கோயில்களே பாழடைந்து கிடப்பதுபோல், இயற்கையாவும் இந்தக் கோயில் பாழடைந்து போயிருக்கலாம். சிலர், வீரட்டானேசுரர் கோயிலையும் குணபரேச்சரத்தையும் ஒன்று எனக் கருதுகின்றனர்; அது தவறு.
பல்லவன் சமணனாய் இருந்த காலத்தில் திருவதிகையில் சமணக் கோயில்களும் பெளத்தக் கோயில்களும் இருந்தன. நரலோக வீரன் என்னும் குறுநில மன்னன் திருவதிகையில் புத்த பிரானுக்குக் கோயில் ஒன்று கட்டியதாகக் கல்வெட்டு ஒன்றால் அறியப்படுகிறது.
திலகவதியாரும் திருநாவுக்கரசரும் தங்கியிருந்த மடமும், அவர்கள் வளர்த்த மலர் வனமும் இன்றும் திருவதிகையில் உள்ளன. இவர்கள் தெருவையும் திருக்கோயிலையும் மிகவும் தூய்மையாகச் செய்து வந்தனர். திருவிழாக் காலங்களில் தெருக்களைத் திருவதிகையைப் போல் தூய்மை செய்ய வேண்டுமெனப் பல ஊர்களிலும் திருவீதி ஆண்டார்கட்கு அந்தக் காலத்தில் ஆணையிடப்பட்டிருந்ததாகப் பல ஊர்க் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. பாண்டிய நாட்டுப் பக்கத்தில் பெருவிழாக் காலங்களில் கொடியேற்று விழாவிற்கு முதல் நாள் திருநாவுக்கரசர் திருவீதி காணும் திருவிழா நடைபெறுவது மரபு. இச் செய்திகளிலிருந்து, அப்பர் பெருமானது அரிய உழவாரப் பணியின் மாண்பும், திருவதிகைமேல் பாண்டியர்க்கு இருந்த ஈடுபாடும் நன்கு புலனாகும்.
திருநாவுக்கரசர் திருப்பணி செய்த இடமாதலால் திருவதிகையைக் காலால் மிதிக்கக் கூடாது என்று கருதி, சுந்தரர் முதலில் திருவதிகைக்குள் வராமல் தொலைவிலேயே சித்தவட மடத்தில் தங்கியிருந்தார் என்னும் [5]பெரிய புராண வரலாறு ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
பாரத காலத்தில், நீர்ச் செலவு (தீர்த்த யாத்திரை) மேற் கொண்ட அர்ச்சுனன் தென்னாடு வந்தபோது திருவதி கையையும் வழிபட்டான் என்னும் செய்தி, வில்லிபாரதம் ஆதிபருவம் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள 17 ஆம் பாடலால் தெரிகிறது; அப்பாடல் வருமாறு:
"ஐயானன னியல்வாணனை அடிமைக்கொள மெய்யே
பொய்யாவண மெழுதும்பதி பொற்போடு வணங்கா
மெய்யாகம அதிகைத்திரு விரட்டமும் நேமிக்
கையான கீந்திரபுர முங்கண்டுகை தொழுதான்.”
இந்தச் செய்தியினால் திருவதிகையின் சிறப்பு மேலும் புலனாகிறது.
திருவதிகையில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறும். அப்பர் வீடுபேறுற்ற சதய நாளுடன் விழா நிறைவுறும் தேரோடும் நாளில், சிவன் முப்புரம் எரித்த விழா நடைபெறும். இவ் விழாக்காட்சி ஆற்று மணலில் நடைபெறும். பத்துநாள் விழாவில் இஃது ஒருநாள் விழா. சித்திரைச் சதயத்தன்று பெருந்திரளான மக்கட் கூட்டத்தைத் திருவதிகையில் காணலாம். கார்த்திகைத் திங்களில் சோமவார விழா இங்கே சிறப்பாக நடைபெறும்.
அரசர்களிடையே அதிகை
திருவதிகை, கல்வெட்டிலும் தேவாரத்திலும் ‘அதியரை மங்கை’ எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரின் அடித்தளத்தில் என்ன வரலாறு அடங்கியிருக்கிறதோ தெரியவில்லை. அதிகமான் (அதியமான்) மரபினர் இவ்வூரை ஒரு காலத்தில் ஆண்டதாலோ அல்லது கோயிலுக்குத் திருப்பணி செய்ததாலோ திரு அதிகை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதிகைமான் என்னும் பட்டப் பெயருடைய சமணச் சிற்றரசர் சிலர் எட்டாம் நூற்றாண்டில் திருவதிகையைத் தலைநகராகக் கொண்டு சுற்றுப்புற வட்டாரத்தை ஆண்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் ‘அதிகை என்னும் பெயர் உருவானதாகக் கருதப்படுகிறது.
இஃதிருக்க, நிருபதுங்கவர்மப் பல்லவ மன்னன் (855 - 896) காலத்துக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘அதிராஜ மங்கலியபுரம்’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிராஜ மங்கிலியபுரம்’ என்னும் பெயருக்கும் முன்பு சொன்ன ‘அதியரை மங்கை’ என்னும் பெயருக்கும் தொடர்பு இருப்பதாக உய்த்துணர முடிகிறது. அதிராஜன் என்றாலும் அதியரையன் என்றாலும் ஒன்றுதான் அரையன் - அரசன் - ராஜன். மங்கலியத்திற்கும் மங்கைக்கும் தொடர்பு உண்டு. சிவபெருமான் இங்கே வந்து மங்கை உமையம்மையை மணந்து சென்றதாகவும், அதனால் அம்மன்கோயில் வலப்பக்கம் இருப்பதாகவும் முன்னரே கூறப்பட்டுள்ளது. உமையம்மைக்கு மங்கலி என்ற பெயரும் உண்டு. எனவே, இப்படியொரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு அதியரை மங்கை, அதிராஜ மங்கலியபுரம் என்னும் பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். மலையமானாடு மலாடு எனவும் புதுச்சேரி புதுவை எனவும் மருவிச் சுருங்கியது போல, அதியரை மங்கை அதிகை என மருவிச் சுருங்கியும் இருக்கலாம்.
இன்று ஒரு சிற்றூராகத் தோற்றமளிக்கும் திருவதிகை பண்டு ஒரு பெரிய நகராகத் திகழ்ந்தது. பல காலங்களில் - பல ஆட்சிகளில் இவ்வூர் ‘திருவதிகை நாடு’ என்னும் சிறு பகுதிக்குத் தலைநகராக இருந்திருக்கிறது. பல்லவர் - சோழர் முதலியோர் காலங்களில் மட்டுமன்று; விசய நகரப் பேரரசர் காலத்திலும் - அஃதாவது பதினேழாவது நூற்றாண்டு வரையிலுங் கூடத் திருவதிகைக்குத் தலைநகர்த் தகுதி இருந்தது. அதனால்தான் சயங்கொண்டார் என்னும் புலவர் பெருமான் தமது கலிங்கத்துப் பரணி என்னும் நூலில் ‘அதிகை மாநகர்’ எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். அவர் திருவதிகையை மாநகர் என்று கூறியுள்ள சூழ்நிலையை ஆராயின் திருவதிகையின் சிறப்பு இன்னும் நன்கு விளங்கும்.
முதற் குலோத்துங்கன் ஒரு சமயம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் தன் பெரும் படைகளுடன் சென்று கொண்டிருந்தான். இந்தப் பயணத்தில்தான் அவன் படைகள் கலிங்கத்தை வெற்றி கொண்டன, குலோத்துங்கன் தில்லையைக் கடந்து காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியில் திருவதிகையில் தன் படைகளைத் தங்கவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டான் என்று புலவர் பாடியுள்ளார்:
[6]"தென்றிசையினின்றுவட திக்கின் முகம் வைத்தருளி
முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டு விடை கொண்டதிகை
மாநகருள் விட்ட ருளியே"
"விட்ட அதி கைப்பதியி னின்றுபய ணம்பயணம்
விட்டுவிளை யாடி யபயன்
வட்டமதி யொத்த குடை மன்னர் தொழ நண்ணினன்
வளங்கெழுவு கச்சி நகரே"
என்பன பாடல்கள். குலோத்துங்கன் அதிகை மாநகருள் படைகளை விட்டிருந்தானாம். படைகளை விட்டிருக்கும் இடம் படைவீடு அல்லது பாடிவீடு எனப்படும். ஒரு பேரரசன் படைகளைத் தங்க விடுவதென்றால் அவ்வூரில் எத்துணையோ வசதிகள் இருக்கவேண்டும். வீரர்களும் யானைகளும் குதிரைகளும் தங்குவதற்கு இடமும் உண்ண உணவும் அளிக்கும் வசதி அவ்வூரில் இருந்திருக்கவேண்டும். சோழப் பேரரசின் மேலாட்சியின் கீழ் ஒரு சிற்றரசன் திருவதிகையைத் தலைநகராகக்கொண்டு அந்தவட்டாரத்தை ஆண்டிருப்பான். அதனால்தான் குலோத்துங்கன் அங்கே பெரும் படைகளுடன் தங்க வசதி கிடைத்தது. இதைக் கொண்டு, அன்றைய திருவதிகை நகரின் தரத்தை அறியலாம். முதற் குலோத்துங்கனது ஆட்சிக் காலம் கி.பி. 1070 தொட்டு 1120வரை ஆகும். அவனது கலிங்க வெற்றியைக் கலிங்கத்துப் பரணி என்னும் நூலாகப் பாடிய புலவர் சயங்கொண்டார், அவனுடைய அவைக்களப் புலவராவார். எனவே, திருவதிகை பதினொன்று - பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகச் சிறப்புற்றிருந்தது என்பது புலனாகும்.
அன்று என்பது என்ன! பதினெட்டாம் நூற்றாண்டில் கூட, திருவதிகை அரசியல் அரங்கில் இன்றியமையா இடம் பெற்றிருந்தது. ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் தென்னாட்டில் நடந்த போரின்போது திருவதிகைக் கோயில் படாதபாடு பட்டது. இதில் ஆர்க்காட்டு நவாப் முகமது அலி, மராத்தியர்கள் ஆகியோரின் திருவிளையாடல்களும் சேர்ந்துகொண்டன. இந் நான்கு தரத்தார் கைகளிலும் மாறி மாறிப் புக்கது திருவதிகைக் கோயில். அவர்கள் இதனைப் படைகளைத் தங்கவிடும் பாசறைக் கோட்டையாகப் பயன்படுத்தினர். படை மறவர்கள் இங்கே தங்கியிருந்தது கொண்டு சுற்று வட்டாரங்களில் சென்று கொள்ளையடித்துக் கொண்டு வந்ததும் உண்டு. அந்தோ! திலகவதியாரும் திருநாவுக்கரசரும் போற்றிக் காத்த திருவதிகைக் கோயில் இப்படியா தூய்மையிழக்க வேண்டும்?
ஆர்க்காடு நவாப் முகமது அலி 1748 முதுல் 1795வரை தமிழகத்தின் வடபகுதியை ஆண்டார். அவர் பால் இருந்த திருவதிகையை 1750இல் டுப்ளே என்னும் பிரெஞ்சுக்காரர் தாக்கிக் கோட்டைக்கோயிலை எளிதில் கைப்பற்றிக் கொண்டு, எதிர்த்த அந் நவாப்பை ஆர்க்காட்டுக்கு விரட்டி விட்டார். 1752இல் முகமதுஅலி லாரென்சு என்னும் ஆங்கிலேயரின் துணையுடன் மீண்டும் கோட்டைக் கோயிலைப் பிடித்துக் கொண்டார். 1752இல் தோல்வியுற்ற பிரெஞ்சுக்காரரும் மராத்தியரும் 1753இல் மீண்டும் தாக்கிக் கோயிலைப் பிடித்துக் கொண்டனர். 1760இல் ஆங்கிலேயர்கள் பிடித்துக்கொண்டு 1947வரை நிலைப்படுத்திக்கொண்டனர். இந்தப் போராட்டங்களின் போது சிதைந்துபோன கோயில் கோபுரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பழுதுபார்க்கப்பட்டது. கோயில்கள் சுற்றிப் பெரிய உயரிய மதில்களுடன் அகன்று விரிந்திருப்பதால், எளிதில் போர்க் கோட்டைகளாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இது மிக மிகக் கொடுமை! கோயில்கள் கட்டியதின் நோக்கத்திற்கே எதிர்மாறான தீச் செயலாகும் இது.
அன்று மாநகராய்த் திகழ்ந்த திருவதிகை அத் தகுதியை இன்று அண்மையிலுள்ள பண்ணுருட்டிக்கு அளித்துவிட்டு, தான் ஒரு சிற்றுாராய் அமைதி பெற்றுள்ளது. அன்று திருவதிகை மாநகருள் பண்ணுருட்டியும் அடங்கியிருந்திருக்கும்.
வேகாக் கொல்லை
இவ்வூர் திருவதிகைக்குத் தெற்கே - கெடிலத்தின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. வேகாக் கொல்லை தனக்கு வடக்கே 11 கி.மீ. தொலைவிலுள்ள திருவதிகையோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. சிவபெருமான் முப்புர அரக்கர்களைப் புன்னகையால் எரித்த திருவதிகைப் பகுதியில் உள்ள மண் எரியுண்டு வெந்த மண்ணாம்; அதனால் அம் மண் சிவப்பான செம்மண்ணா யிருக்கிறதாம் - செம்மண்ணாயிருப்பது உண்மைதான். திருவதிகைப் பகுதிதான் எரியுண்டு வெந்ததே தவிர, வேகாக் கொல்லைப் பகுதி எரியுண்ணவோ - வேகவோ இல்லையாதலின் இங்குள்ள மண் வெள்ளை மண்ணாயிருக்கிறதாம். வெண் மண்ணாயிருப்பதும் உண்மைதான். இந்த ஊரில் மண்ணெடுத்துச் சூளைபோட்டால் பாதிக் கல்லே வேகும் - பாதி வேகாது. இந்த இயற்கை அமைப்பு, சிவன் முப்புரம் எரித்த புராணக் கதையோடு முடிச்சு போடப் பட்டுள்ளது. சூளைக்கு வேகாத மண் உள்ள பகுதி வேகாக்கொல்லைதானே!
இங்கே சிவன்கோயில் உள்ளது. திருவதிகையில் முப்புர அரக்கர்களை எரித்த இறைவன் இங்கே வந்து களைப்பாறினாராம். களைப்பாறிய இடம் ‘களைப்பாறிய குழி’ என அழைக்கப்பட்டது. இது களப்பாக் குழி என இப்போது கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியுள்ள சிவன் பெயர் களப்பானிசன், இப்பெயர், களைப்பாறிய ஈசன் என்னும் பெயரின் மரூஉ எனச் சொல்லப்படுகிறது. உண்மை யாதோ? சுற்றிலும் மலைப் பாங்காயுள்ள வேகாக் கொல்லை பார்க்க வேண்டிய பகுதியே! இங்கே பலாப்பழம் மிகுதியாய்க் கிடைக்கும். ஊர் மக்கள் தொகை: 1560.
வேங்கடம் பேட்டை
இவ்வூர் பாலூர் - குறிஞ்சிப்பாடி மாவட்டக் குறும் பாதையில் கெடிலத்தின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. பாலூருக்குத் தெற்கே 11 கி.மீ. தொலைவிலும் - குறிஞ்சிப் பாடிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவிலுமாக இவ்வூர் அமைந்திருக்கிறது. மக்கள் தொகை 2,700. இவ்வூரில் ஒரு பழைய பெருமாள்கோயில் இருக்கிறது; இது, பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது, தமிழகத்தில் ஒரு சிறந்த கோயிலாக மதிக்கப்படுகிறது. பெருமாள் பெயர் வேணுகோபாலசாமி, வைகாசி விசாக நாளில் இங்கே விழா நடைபெறும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் புதுச்சேரியில் டுப்ளேயின் மொழிபெயர்ப்பாளராயும் சிறப்பு அலுவலாளராயும் இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை வேங்கடம் பேட்டையோடு மிக்க தொடர்பு கொண்டிருந்தார். இவ்வூர் வேணுகோபாலசாமி கோயிலோடு அவர் மிக்க ஈடுபாடு கொண்டிருந்ததன்றி, தனியாகக் கண்ணன் கோயில் ஒன்றும் கட்டினார். ஆனந்தரங்கப் பிள்ளை இருக்கட்டும்; இராமரே தென்னாடு வந்தபோது இவ்வூரில் பள்ளிகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
வேங்கடம் பேட்டை, வேணுகோபால சாமி கோயிலால் சிறப்புற்றிருப்பதல்லாமல், தன்னிடமுள்ள இரண்டு அழகிய மண்டபங்களாலும் பெரும் புகழ் பெற்றுள்ளது. அவற்றுள் ஒரு மண்டபம் கோயிலின் வெளி முற்றத்திலுள்ளது. இது 50அடி சதுரப் பரப்புள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை. இம் மண்டபம் முடிவு பெறாத நிலையில் விடப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில், அரங்கநாதர் ஆதிசேடன்மேல் பள்ளி கொண்டிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் காணத்தக்கது.
இரண்டாவது மண்டபம் வேணுகோபால சாமி கோயிலின் எதிரே - கோயிலைப் பார்த்தாற்போல் உள்ளது. இது மிகமிக அழகிய மண்டபமாகும். 60 அடி சதுர வடிவில் உள்ள இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் நுழைவாயில் உண்டு. ஏழடி உயரம் கட்டப்பட்டுள்ள ஒரு மேடையின்மேல் இம்மண்டபம் மிடுக்கான தோற்றத்துடன் நிற்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு தூண்கள் வீதம் நான்கு பக்கங்களிலுமாக மொத்தம் பதினாறு தூண்கள் இதன் மேல் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் அடிப்பாகத்தில் 6 அடி சதுரம் கொண்டது. உயரமோ 34 அடி. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், அத்தனை தூண்களும் ஒற்றைக்கல் தூண்களே. தூண்களின் உச்சியில் கருங்கல் உத்தரங்கள் போடப்பட்டுள்ளன; அவற்றின்மேல் கருங்கல் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபம் முழுவதுமே சிற்ப வேலைப்பாடு மிக்கிருப்பினும், மண்டபத்தின் நான்கு நடுத்துரண்களும் மிகமிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடு களுடன் மிளிர்கின்றன. தென்னார்க்காடு மாவட்டத்திற் குள்ளேயே மிகவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மண்டபம் இதுதான். இந்த மண்டபமும் முடிவு பெறாத நிலையிலேயே உள்ளது. இருப்பதும் இப்போது அழிந்து கொண்டு வருகிறது. ஆனால், இதன் உச்சி ‘கோணவியல்’ ஆராய்ச்சி நிலையமாகப் (Trigonametrical Station) Lucăru()āpg|.
இந்த இரண்டு மண்டபங்களும் கட்டி முடிக்கப் பெறாத நிலையில் அரைகுறைத் தோற்றத்துடன் இருப்பதற்குக் காரணம், கட்டிக்கொண்டிருந்தபோது போர் ஏற்பட்டமையா யிருக்கலாம். இந்த மண்டபங்கள் இரண்டும் வேங்கடம்மா என்னும் அம்மையாரால் கட்டப்பட்டன என ஊரார் உரைக்கின்றனர். இந்த அம்மையாரால் மண்டபம் கட்டப்பட்ட பின் ஊர் வேங்கடம்மா பேட்டை என அழைக்கப்பட்ட தாகவும், பின்னர் அப்பெயர் சுருங்கி வேங்கடம் பேட்டை என்றாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறந்த நாட்குறிப்பு ஆசிரியர் (Diaryist) ஆகிய புதுவை ஆனந்தரங்கப் பிள்ளை தமது நாட் குறிப்பில் இவ்வூரை ‘வேங்கடம்மாள் பேட்டை’ என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த வேங்கடம்மா என்பவர், செஞ்சியையாண்ட மன்னர் ஒருவரின் உடன் பிறந்தவராவார்.
[7]வரலாற்றுக் குறிப்பு ஒன்று, வேங்கடம் பேட்டை என்னும் பெயர்க் காரணத்தோடு தொடர்பு படுத்திப் பின்வருமாறு ஒரு செய்தி தெரிவிக்கிறது:- வேங்கடபதி என்னும் தலைவர் ஒருவர் வேங்கடம் பேட்டையில் இருந்து கொண்டு 1478இல் செஞ்சிநாட்டின் மேல் ஆட்சி செலுத்தியதாகவும், அவர் சுற்று வட்டாரத்தில் இருந்த சமணர்களைக் கொடுமைப்படுத்திய தாகவும் அந்தக் குறிப்பு கூறுகிறது. வேங்கடபதி என்னும் இவர் பெயராலும் வேங்கடம் பேட்டை என்னும் ஊர்ப் பெயர் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு கொள்கை.
வேங்கடம் பேட்டையில் வேங்கடம்மா கட்டிய மண்டபங்களைப் போலவே ஒரு பெரிய கருங்கல்லும் வியப்பிற்குரிய பொருளாயுள்ளது. இந்தக் கல், கோயிலுக்கும் மண்டபத்திற்கும் இடையே உள்ளது. இதன் சுற்றளவு : 3 மீட்டர் உயரம் : 18 மீட்டர். இக் கருங்கல்லில் அமைந்திருக்கும் வியப்பு யாதெனில், இதன் அடிப் பகுதி சதுரமாயும் மேல் பகுதி எட்டுப் பட்டைகள் கொண்டதாயும் இருப்பதுதான்! இவ்வாறு காணவேண்டிய காட்சிகள் நம் நாட்டில் எத்தனையோ இருந்தும் காண்பவர் எத்தனை பேர்?
சென்னப்பநாயக்கன் பாளையம்
இவ்வூர் கடலூருக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல வேண்டுமெனில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் - கடலூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலுள்ள பாலூரில் இறங்கவேண்டும்; பின்னர், பாலூரிலிருந்து குறிஞ்சிப் பாடிக்குச் செல்லும் மாவட்டக் குறும்பாதை வழியே செல்ல வேண்டும், பாலூருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. இங்கே ஆற்றில் 1965இல் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் வாயிலாக ஆற்றைக் கடந்து தென்கரைக்கு ஒரு கி.மீ. தொலைவு சென்றால் ஊரை அடையலாம். கிழக்கேயுள்ள கடலூரிலிருந்தும் தெற்கேயுள்ள குறிஞ்சிப் பாடியிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துவண்டி வசதி உண்டு. ஆற்றில் பாலம் கட்டுவதற்குமுன், கடலூர் திருக்கோவலூர் சாலையில் பேருந்து வண்டியில் வருபவர்கள் பாலூரிலே இறங்கி நடந்து வரவேண்டும். வெள்ளக் காலத்தில் மக்கள் பெரிதும் தொல்லைப்பட்டனர். பாலம் கட்டாதபோதும், குறிஞ்சிப் பாடியிலிருந்து இவ்வூருக்குப் பேருந்து வண்டியில் வந்து செல்ல வசதி இருந்தது.
இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தது. மக்கள் தொகை: 7,500. காவல் (போலீசு) நிலையம், மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி முதலிய வசதிகள் அண்மையில் சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. இவ்வூர் பாளையம், நடுவீரப்பட்டு என்னும் இரு பெரும் பிரிவாக உள்ளது. மேலண்டைப் பகுதியாகிய பாளையத்தையும் கீழண்டைப் பகுதியாகிய நடுவீரப்பட்டையும் நடுவே ஒடும் ஒரு வாய்க்கால் பிரிக்கிறது. இவ்வூர் இப்போது செ. பாளையம் எனவும், பாளையம் எனவும் சுருக்கமாகவும் அழைக்கப்படுகிறது.
நாயக்க மன்னர் காலத்தில் சென்னப்பநாயக்கன் பாளையம் 8 பேட்டை 16 குப்பங்கள் அடங்கிய ஒரு பாளையப்பட்டாக (மிட்டாவாக), சென்னப்ப நாயக்கர் என்பவருக்கு உரியதாக இருந்தது. ஆர்க்காடு நவாப் முகமது அலியின் ஆட்சிக் காலத்தில் 1762 ஆம் ஆண்டு முகமது அலியால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ‘மிட்டா’வாக அளிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கே ஒரு பேராளரை (பிரதிநிதியை) இருத்தித் தொழிற்சாலையும் நிறுவித் துணி வாணிகத்திற்கு வழி செய்தனர். இன்றும் இங்கே நெசவுத் தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. 1807இல் இப் பகுதி அப்பு முதலியார் என்பவர்க்குக் கம்பெனியாரால் குத்தகைக்கு விடப்பட்டது; அவர் 1809இல் சங்கர நாயக்கர் என்பவருக்கு மாற்றினார். நாடு உரிமைபெறும் வரையும் இப் பகுதி சங்கர நாயக்கர் மரபினரின் பாளையப் பட்டாகவே இருந்து வந்தது. ஆவணப் பதிவுகளிலும் ‘மிட்டா கிராமம்’ என்றே குறிக்கப்பட்டு வந்தது. பாளையக்காரர்கள் மாசி மகத்தன்று பல்லக்கில் கடலூர்க் கடற்கரைக்குச் செல்வது மரபாயிருந்தது.
பாளையம் பகுதியில் சொக்கநாதர் கோயிலும், நடுவீரப் பட்டுப் பகுதியில் கைலாசநாதர் கோயிலும் பச்சைக்கந்த தேசிகர் ஆதீனமடமும் உள்ளன. இப்போது ஆதீனம் மறைந்து விட்டது. நடுவீரப்பட்டில் ஐப்பசி சஷ்டியில் சூரசம்மார விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பாளையத்தின் தெற்கு எல்லையில் உயரமான குன்று ஒன்று உள்ளது. இது கேப்பர் மலைத் தொடர்ச்சியைச் சார்ந்திருப்பினும் தான் தனித்து உயர்ந்துள்ளது. இதன் உச்சிமேல் பிள்ளையார் கோயில் இருக்கிறது. இதற்கு ‘மலைப் பிள்ளையார் கோயில்’ என்பது பெயர். உச்சிக்குச் சென்று வரப் படிக்கட்டு வசதி உண்டு. மலையடிவாரத்தில் கிழக்குப் புறம் இரண்டு குளங்கள் உள்ளன. தைத்திங்கள் மூன்றாம் நாளாகிய கரிநாள் அன்று இம்மலைப் பிள்ளையார் கோயிலில் மிகச் சிறப்பான திருவிழா நடைபெறும். அன்று இறையுருவம் கீழே இறங்கி ஊருக்குள்ளே வலம் வரும். வடக்கே கெடிலமும் மற்ற மூன்று பக்கங்களிலும் மலைகளும் அமையப் பெற்றுள்ள மலைப் பிள்ளையார் கோயிலில் நின்றுகொண்டு, இனிய குளிர்ந்த காற்றை நுகர்ந்துகொண்டு சுற்றிக் கட்புலனை மேயவிட்டால் கிடைக்கக் கூடிய இன்பத்திற்கு அளவேது?
வடலூர் இராமலிங்க வள்ளலார்க்குச் சென்னப்ப நாயக்கன் பாளையத்தோடு மிகுந்த தொடர்பு சொல்லப்படுகிறது. வள்ளலார் இவ்வூர்க்கு அடிக்கடி வந்து தங்கியிருந் தார்களாம்; இவ்வூர் இறைமேல் பாடல்களும் பாடியிருக்கிறார்களாம். (என் தாயைப் பெற்ற பாட்டனார் ஊர் சென்னப்ப நாயக்கன் பாளையம் தான். என் தாய்ப் பாட்டனார் மருத்துவம் சபாபதி முதலியார் குடும்பத்திற்கு வள்ளலார் மிகவும் வேண்டியவர் என்பதாகவும், என் பாட்டனார் வீட்டிற்கு வள்ளலார் பல முறை வந்துள்ளார் என்பதாகவும் என் தாயார் பலமுறை என்னிடம் தெரிவித்துள்ளார்கள்) பாளையத்திற்குத் தெற்கே 16கி.மீ. (10 மைல்) தொலைவில் தான் வடலூர் இருக்கிறது.
கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த சென்னப்ப நாயக்கன் பாளையத்து மக்கள் கிழக்கேயுள்ள கடலூருக்குப் பல வேலைகளை முன்னிட்டு அடிக்கடி வருவர். அவர்கள், கடலூருக்குப் போவதாகச் சொல்லமாட்டார்கள்; ‘கிழக்கே போகிறேன்’, ‘கிழக்கேபோய் வருகிறேன்’, ‘கிழக்கே போயிருக்கிறார்’ என்றெல்லாம் கூறிக் கடலூரைக் ‘கிழக்கு’ என்னும் சொல்லாலேயே குறிப்பிடுவார்கள். இஃது தமிழிலக்கணத்தில் ‘ஆகுபெயர்’ எனப்படும்.
இவ்வூர், சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்குக் கிழக்கே 2 கி.மீ. தெலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. இப் பகுதியில் கெடிலத்தின் தென்கரையைத் தொடர்ந்து கேப்பர் மலைத்தொடர்ச்சியைக் காணலாம். இத்தொடர்ச்சியில் விலங்கல்பட்டு என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு மலைமேல் ஒரு துறவியின் மடமும் முருகன்கோயிலும் உள்ளன. இக்கோயிலில் பங்குனி உத்தர விழா சிறப்பாக நடைபெறும். இக்கோயில் உள்ள மலை ‘விலங்கல் பட்டு மலை’ என்றழைக்கப்படும்.
வானமாதேவி
இவ்வூர், விலங்கல்பட்டுக்கு கிழக்கே 2கி.மீ. தொலைவிலும் - கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் தென்கரைக்கு 2.கி. மீட்டரில் இருக்கிறது. இந்தப் பகுதியில் கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வானமாதேவி அணை எனப்படும். அணைக்கு அருகிலேயே அருங்குணம், பல்லவராய நத்தம் ஆகிய ஊர்கள் இருக்கவும் 3 கி.மீ. தொலைவு எட்டியுள்ள வாணமா தேவியின் பெயரால் அணை அழைக்கப்படுவதிலிருந்து, இவ்வூரின் பழைய பெருமை புலப்படும். வாண மாதேவி என்னும் பெயர், சோழ மாதேவி, சேர மாதேவி, பாண்டி மாதேவி என்பனபோல் ஒர் அரசியின் பெயராகத் தெரிகிறது. பாணர் அல்லது வாணர் என்னும் மரபைச் சேர்ந்த அரசியை இப் பெயர் குறிக்கலாம். அவ்வரசியின் பேரால் இவ்வூர் அழைக்கப்பட்டு வரலாம். இப் பகுதியைப் பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றரச மரபினர் ஆண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
திருமாணிகுழி
கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவிலும் நெல்லிக்குப் பத்திற்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவிலுமாக, கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. மாவட்ட நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஒன்றரை கி.மீ. நடந்து - ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். வடக்கே கெடிலத்தையும் தெற்கே கேப்பர் மலைத்தொடர்ச்சியையும் உடைத்தாகி வாணமாதேவி அணையிலிருந்து நீர்ப் பாசனத்தைப் பெற்று வளங்கொழிக்கும் ஊர் திருமாணிகுழி.
இவ்வூரின் நீர்வள - நிலவளச் செழிப்பைத் திருஞான சம்பந்தர் இவ்வூர்மேல் பாடியுள்ள தமது தேவாரப் பதிகத்தில் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார். நாவுக்கரசரும் இவ்வூருக்கு வந்து வழிபட்டுப் பாடலும் பாடியதாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பதிகம் கிடைக்கவில்லை. அருணகிரியாரின் திருப்புகழ் இவ்வூருக்கு உண்டு. புராணமும் உண்டு. இவ்வூர்ச் சிவன் பெயர்: மாணிக்க வரதர்; அம்மன் பெயர்: மாணிக்கவல்லி; மரம்: கொன்றை.
மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவங்கொண்டு மாவலியை அழித்த பின்னர் இவ்வூருக்கு வந்து சிவனை வழிபட்டார் என்பது
புராணவரலாறு. மாணி வழிபட்ட இடமாதலின் மாணி குழி எனப் பெயர் பெற்றது. கோயிலில் இலிங்கம் இருக்கும் கருவறைப் பகுதி சிறிது பள்ளமாக குழியாக இருக்கும். அங்கே எப்போதும் தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும். எனவே, மாணி வழிபட்ட குழி மாணி குழியாயிற்று என்று பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பெயர்க் காரணம் முதிர்ந்த வைணவப் பற்று உடையவர்க்கு எரிச்சலை ஊட்டலாம். மற்றும், சிவனது மாண்பைக் குலைக்கும் முறையில் மற்றொரு பெயர்க்காரணம் சொல்லப் படுகிறது. எழுதக் கூடாத அந்தப் பெயர்க்காரணத்தை விட்டுத் தள்ளுவோம். திருமாணி குழிக்கோயிலின் முன்புறத் தோற்றத்தை முன்னுள்ள படத்தில் காணலாம். இது, கோயிலின் முதற்பெருவாயிற் கோபுரமாகும். கிழக்கு நோக்கியுள்ளது. பின்வரும் படத்தில் ஓரளவு கோயிலின் விரிவான தோற்றத்தைக் காணலாம்:
இந்தப் படம் கோயிலின் வடக்குப் புறத்தில் இருந்து கொண்டு எடுத்தது. படத்தில் தெரிவது கோயிலின் வடக்குப் புறத் தோற்றமாகும். கோபுரத்தின் மேற்குப்புற - அஃதாவது பின்புறத் தோற்றம் இப்படத்தில் காணப்படுகிறது. கோபுரத்தின் கிழக்குப் புறத்திற்கு எதிரே ஒரு சிறு மலை இருப்பதைக் காணலாம். படத்தில் மலையைக் கோபுரம் மறைத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் மலை ஓரளவு படத்தில் தெரிகிறது. திருவண்ணாமலை போலவே இம்மலையிலும் கார்த்திகைத் திங்களில் கார்த்திகையன்று தீபத் திருவிளக்கேற்றித் திருவிழா நடத்தப்படுகிறது. சுற்று வட்டாரத்தில் வெகு தொலைவிலிருந்து மக்கள் இவ் விழாவிற்கு வருவர்.
இவ்வூர்க் கோயிலில் மூலத்தானம் எனப்படும் கருவறை, எப்போதும் திரையிடப் பட்டேயிருக்கும்; அதனால் மூலவராகிய இலிங்கத்தைக் காணமுடியாது. திரையில், ஒருவகைத் தெய்வ இனத்தவர் என்று சொல்லப்படும் உருத்திரர்கள் பதினொருவருள் ஒருவராகிய பீம ருத்திரர் என்பவரின் உருவம் தீட்டப்பட்டிருக்கும். இவர் உள்ளேயிருக்கும் இறைவனுக்குக் காவலாக இருப்பதாகக் கதை. திரையில் இருக்கும் இந்தப் பீமருத்திரர்க்கே முதலில் எல்லாவகையான பூசனைகளும் நடத்தப்பெறும்; பின்னரே திரை விலக்கிச் சிவலிங்கத்திற்குப் பூசனை நடத்தப்பெறும். இந்த நேரத்தில் மட்டுந்தான் இலிங்கத்தைக் காணமுடியும். இது மற்ற ஊர்களில் இல்லாத ஒரு தனி முறையாகும். இவ்வூர் இறைவன் மாசி மகத்தன்று கடலூர்க் கடற்கரைக்குச் சென்று நீராடி வண்டிப் பாளையத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் தங்கி ‘மண்டபபடி விழா நடத்திக்கொண்டு விடிவதற்குள் ஊர் திரும்பிவிடுவார். வண்டிப் பாளையத்தார்க்கு இஃது ஒரு பெருவிழாவாகும்.
திருமாணி குழியில் சோழர், பாண்டியர், இராட்டிரகூடர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1136 - 1150) இவ்வூரில் முடி சூட்டிக்கொண்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. சோழன் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய தலை நகரங்களை விட்டுவிட்டு இங்கே வந்து முடி சூட்டிக் கொண்டது ஏன்? இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பகைவர் எவரும் சோழ நாட்டின்மேல் படையெடுக்கவில்லை. பரந்து விரிந்து கிடந்த சோழப் பேரரசில் அன்று அமைதி நிலவியது. ஆயினும், சோழப் பேரரசால் ஆங்காங்கே அமர்த்தப் பட்டிருந்த ஆட்சிப் பேராளர்கள் (பிரதிநிதிகள்) சிலர், தமது மேற்பார்வையில் இருந்த பகுதிகளைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில், திருமாணி குழிப்பகுதிக்குப் பொறுப்பேற்றிருந்த ஆளுநரும் (கவர்னரும்) சோழப் பேரரசுக்கு அடங்காது அப் பகுதியைத் தமதாக்கிக் கொண்டிருக்கலாம். செய்தியறிந்த குலோத்துங்கன் ஆங்குச் சென்று அவரையடக்கி, அப் பகுதிக்குத் தானே தலைவன் என்பதை உறுதிப் படுத்தும் முறையில் திருமாணி குழியில் முடி சூட்டிக்கொண்டிருக்கலாம்.
இந்த முடிசூட்டைப் பற்றி வேறு விதமாகவும் கருத்து கூறக்கூடும்: மக்கள் சிலர் திருக்கோயில் சிறப்புள்ள திருப்பதிகள் சிலவற்றில் சென்று திருமணம் செய்து கொள்வதுபோல, தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய திருமாணி குழியில் சென்று இரண்டாங் குலோத்துங்க சோழன் முதல் முதலாக முடிசூட்டிக் கொண்டிருக்கலாம். எதற்கும் திட்டவட்டமான காரணம் கூறமுடியாது. இந்த இரண்டாங் காரணத்தைவிட முதலில் சொன்ன காரணமே பொருத்த மானதாய்த் தோன்றுகிறது.
சோழன் தனக்கு அடங்காதவரை அடக்கித் திருமாணி குழியில் முடி சூட்டிக்கொண்டான் என்ற அடிப்படையைக் கொண்டு ஆராயுங்கால், அன்று திருமாணி குழி சுற்றுப்புற வட்டாரத்திற்குத் தலைநகரா யிருந்திருக்கிறது என்பது புலப்படும். அன்று திருமாணி குழி அரசியல் அரங்கில் இன்றியமையாத ஒரு மையமாகப் (கேந்திரமாகப்) பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம், அதைச் சுற்றியுள்ள இயற்கையரண்களேயாகும். எந்தப் பக்கத்திலிருந்து பகைவர் வருவதாயிருப்பினும், கெடிலம் ஆற்றையோ அல்லது கேப்பர் மலையையோ கடந்து வந்தால்தான் திருமாணி குழியை அடையமுடியும். திருமாணி குழியின் வடபுறம் உள்ள கெடிலம் ஆறும் தென்புறம் உள்ள கேப்பர் மலைத் தொடர்ச்சியும் திருமாணி குழிக்குக் கிழக்கே சிறிது தொலைவில் பக்கத்தில் - பக்கத்தில் நெருங்கியுள்ளன. இப்படியாக, நீர் அரணும், மலை அரணும், மிக்க உணவுப் பொருள் விளைக்கும் நிலவளமும் ஒருசேரப்பெற்றுத் திகழும் திருமாணிகுழி அரசியல் மையம் பெற்றிருந்ததில் வியப்பில்லை.
பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபின் தலைவரான வளந்தானார் என்பவர் சோழரது மேலாட்சியின் கீழ் ஒரு தலைவராய்ப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமாணிகுழிப் பகுதியை அரசாண்டார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய கோப்பெருஞ்சிங்கன் இந்த வளந்தானாரது மரபுவழி வந்தவனே. முதற் குலோத்துங்கன் கி.பி. 1070 தொடங்கி 1120 வரையும், அவர் மகன் விக்கிரம சோழன் 1120 தொட்டு 1135 வரையும் செங்கோல் செலுத்தினர். இவ்விருவருள் ஒருவரது காலத்திலோ அல்லது இருவர் காலத்திலுமோ வளந்தானார் திருமாணிகுழிப் பகுதியை ஆண்டிருக்கலாம். அவருக்குப்பின் அவர் வழியினரான மோகன் ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் என்பவர்கள் பரவலாகப் பலவிடங்களில் பொறுப் பேற்றிருந்தனர்.
இவர்களுள் மோகன் ஆட்கொல்லி என்பவன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அவனது மேலாட்சியின் கீழ்த் திருமாணிகுழிப் பகுதியை ஆண்டு வந்தான். இவன் பல ஊர்க் கோயில்கட்கு அறம் பல புரிந்துள்ளான். இவன் தனக்குப் பல பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டான் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது. இதைக் கொண்டு இவன் தன்னைச் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டான் என்பது புலனாகும். இவனைப் பற்றிய கல்வெட்டுகளும் இவனது வளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. இந்த நிலையில் இவர் திருமாணிகுழியைத் தனதெனச் சொல்லிக் கொண்டு சோழனுக்கு அடங்காதிருந்திருக்கலாம்; இவனையடக்கிச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன் திருமாணிகுழியில் முடிசூட்டிக் கொண்டிருக்கலாம். திருமாணிகுழியில் தொடர்ந்து அரசப் பேராளர் பலர் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோழர் காலக் கல்வெட்டுகளில் திருமாணிகுழி பின்வருமாறு குறிக்கப்பட்டிருக்கிறது:
‘விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு உதவித் திருமாணிகுழி’
‘இராசராச வளநாட்டு மேற்கா நாட்டுஉதவித் திருமாணிகுழி’
‘சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி’
கல்வெட்டுப் பகுதிகளிலுள்ள விருதராச பயங்கர வளநாடு, இராசராச வளநாடு, சயங்கொண்ட சோழவள நாடு என்பன, சோழப் பேரரசைக் (சோழ சாம்ராஜ்யத்தைக்) குறிக்கின்றன; அடுத்துள்ள ‘மேற்கா நாடு’ என்பது திருமாணிகுழி வட்டாரத்தின் பெயராயிருக்க வேண்டும். மேற்காநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்கு யாதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். அடுத்து, ‘உதவித் திருமாணிகுழி’ என ஊரின் முன் உதவி என்னும் சொல் இருப்பதைக் கூர்ந்து நோக்கின், திருமாணிகுழி பல வகையிலும் உதவியாயிருந்தமை புலனாகும். அரசியல் அரங்கில் சோழப் பேரரசர்க்குத் திருமாணிகுழிப் பகுதி பெரிதும் உதவியாய் இருந்திருக்கலாம். திருமாணிகுழி இறைவன் வணிகருக்கு உதவி செய்ததாகச் சொல்லப்படும் புராணக் கதையின் அடிப்படையிலும் ‘உதவித் திருமாணிகுழி’ என்னும் பெயர் பொருத்தமாயிருக்கிறது. திருமாணிகுழி கோயிலில் ‘உதவி நாயகர்’ என்னும் பெயரில் இறையுருவம் உண்டு என்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.
இவ்வூர், வீரபாண்டியன் (பதினான்காம் நூற்றாண்டு) காலத்துக் கல்வெட்டில் ‘நடுவில் மண்டலத்துத் திருமாணிகுழி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவில் மண்டலம் என்பது, சோழ மண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் இருப்பது அஃதாவது, ‘நடுநாடு’ என்னும் பொருளைக் குறிப்பதாயிருக்கலாம்.
ஓட்டேரி
கடலூருக்கு மேற்கே 9 கி.மீ. தொலைவிலும் திருமாணிகுழிக்குக் கிழக்கே ஒரு கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் தென்கரையில் ஓட்டேரி என்னும் சிற்றுார் இருக்கிறது. இங்கே ஆற்றின் தென்கரையை ஒட்டி ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இந்தப் பிள்ளையாருக்கு ‘ஓட்டேரிப் பிள்ளையார்’ என்பது பெயர். இவருக்குத் திறந்தவெளி அரங்கில்தான் விருப்பம் மிகுதி. கோயிலுக்கு உள்ளே இவர் இருக்க மாட்டேன் என்கிறார்; கோயிலின் வடக்கு மதிலையொட்டியுள்ள ஒரு திறந்தவெளி மேடையில் நிலையாக அமர்ந்துவிட்டார். கோயில் இறையுருவம் இன்றி வறிதே கிடக்கிறதே என்று கருதி மக்கள் பலமுறை இவரை உள்ளே கொண்டுபோய் வைத்தார்களாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர் வெளி மேடைக்கே வந்துவிட்டாராம். இப்படிப் பலமுறை முயன்று பார்த்த பின்னர் யாரும் இவர் வம்புக்குப் போகாமல், வெளிமேடையிலே இருந்து போகட்டும் என்று விட்டுவிட்டார்களாம். இவருக்கு நாடோறும் பூசனை உண்டு. ஆனால், காயும் வெயில், பெய்யும் பனி மழை, அடிக்கும் புயல் எல்லாம் இவர் தலைமேல்தான். என்ன செய்வது!
ஏதோ பித்தம் பிடித்தவர்போல் வெளியே உட்கார்ந்து கொண்டு கிடக்கிறாரே என்று இவரை எளிதாக எண்ணிவிடக் கூடாது. சுற்றுப்புற வட்டாரத்து மக்களிடையே இவருக்குப் பெரிய செல்வாக்குண்டு. இங்கே கெடிலத்தின் தென்கரையாக இப் பிள்ளையார் கோயிலும், வடகரையாகக் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையும் உள்ளன. அப்பாதை வழியே நடந்து ஊர்ப் பயணம் செய்பவர்கள் பலர் ஆற்றைக் கடந்து பிள்ளையாரை அடைந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். வெய்யில், வெள்ளம், இயலாமை, சோம்பல் முதலிய காரணங்களால் ஆற்றைக் கடக்க முடியாதவர்கள் சிலர் ஆற்றின் வடகரையில் நின்றபடியே, தென்கரையில் இருக்கும் பிள்ளையாரை நோக்கித் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்திக் கும்பிடு போட்டுச் செல்வர். இப் பிள்ளையாருக்கு இருக்கும் செல்வாக்கு இப்போது புரியுமே!
இம்மட்டுமா? இந்தப் பிள்ளையார் கோயில் பெரிய ‘பிக்னிக் சென்டர்’ (Picnic Centre) ஆகவும் திகழ்கிறது. சுற்றுப்புற ஊர் மக்கள் ஊரோடு திரண்டு வந்து பிள்ளையாருக்குப் பூசனை புரிந்து வழிபாடு செய்து, இங்கேயே உணவு சமைத்து உண்டு களித்துச் செல்வர்.
பாலூர்
பாலை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இவ்வூர் கடலூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் - பண்ணுருட்டிக்குக் கிழக்கே 11 கி.மீ. தொலைவிலும் - நெல்லிக் குப்பம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தொலைவிலுமாக, கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. ஆற்றில் பாலம் உண்டு. பாலூரிலிருந்து தெற்கேயுள்ள குறிஞ்சிப்பாடிக்கு மாவட்டக் குறும்பாதையொன்று செல்கிறது. பாலூரோடு தொடர்புடைய பாதைகளிலெல்லாம் பேருந்து வண்டிப் போக்குவரவு உண்டு. இவ்வூரில் புகழ் வாய்ந்த திரெளபதை அம்மன் கோயில் இருக்கிறது.
தன்னிடம் உள்ள வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணையினால் பாலூர் வெளியுலகிற்கு விளம்பரமாகி யிருக்கிறது. தமிழகத்தில் முதல் முதலாக ஏற்படுத்தப்பட்ட வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை பாலூர்ப் பண்ணைதான். 1905 ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. பாலூருக்குக் கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் கெடிலத்தின் வடகரையில் 16 ஏக்கர்ப் பரப்பில் தொடங்கப் பெற்ற இப் பண்ணை இப்போது 56 ஏக்கர் பரப்புக்கு விரிந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் பண்ணை என்பதற்குப் ‘ஃபாரம்’ (FARM) என்பது பெயர் அல்லவா? அந்தப் ‘பாரம்’ என்னும் பெயராலேயே இன்றும் இது சுற்று வட்டாரத்து மக்களால் அழைக்கப்படுகிறது. ‘பாலூர்ப் பாரம்’ என்பது மக்கள் வாயில் அடிபடும் பெயர். ஆங்கிலேயர்கள் - அல்ல அல்ல.ஆங்கிலம் படித்தவர்கள் அன்று கற்றுக் கொடுத்த பெயரை இன்றும் பொது மக்கள் விடமாட்டோம் என்கிறார்கள். பண்ணை யிருக்கும் பகுதி பாரம்’ என்ற பெயரில் ஒரு தனிக் குடியிருப்பு போல் வளர்ந்துள்ளது.
இந்தப் பண்ணையில் தொடக்கத்தில் மணிலாக் கொட்டை ஆராய்ச்சி மிக விரிவாக நடைபெற்றது; இப்போது நெல், கரும்பு, கம்பு, கேழ்வரகு, வரகு, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு முதலியவை பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. மற்றும், முட்டைக் கோசு, தக்காளிப் பழம், சப்போட்டா பழம் முதலியனவும் விளைத்துப் பார்க்கப்படுகின்றன. மாடு வளர்ப்பு - கோழி வளர்ப்பு பற்றிய முறைகளும் செயல் வாயிலாகக் கண்டறிந்து அறிவிக்கப்படுகின்றன. நெல் முதலிய தானிய விதைகள் உழவர்கட்கு அளிக்கப்படுகின்றன. உரம்போடும் முறையும் மற்ற மற்றப் பயிர் முறைகளும் ஆராய்ந்து தெரிவிக்கப்படுகின்றன. இந்த வகையில், கெடிலக்கரையின் பெருமையில் இந்தப் பண்ணைக்கும் பங்கு உண்டு.
பல்லவராய நத்தம்
இவ்வூர் பாலூருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையை ஒட்டியுள்ளது. ஊரின் பெயர் பல்லவ மன்னரை நினைவுபடுத்துவதால், பல்லவர் காலத்தில் இவ்வூர் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்ற இடமாய் இருந்திருக்க வேண்டும். பாலூர்ப் பண்ணை பாலூருக்கு அருகில் இல்லை - இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளது; அதே போல், வானமாதேவி அணை வாணமாதேவிக்கு அருகிலில்லை. இவ்வூருக்கு அருகில்தான் உள்ளது; அப்படியிருந்தும் பண்ணையின் பெயரும் அணையின் பெயரும், அந்தோ, இந்த ‘அப்பாவி’ ஊருக்குக் கிடைக்கவில்லை. பொது மக்கள் சிலர் மட்டும், ‘பல்லவ ராயநத்தம் அணை - பல்லா நத்தம் அணை’ என இவ்வூரின் பெயரால் அணையை அழைக்கின்றனர். இது கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ‘ஏதோ கிடைத்த வரையிலும் இலாபம்’.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் கடலூருக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நெடுஞ்சாலை நெல்லிக் குப்பம் கடைத்தெரு வழியாகச் செல்கிறது. ஊருக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் கெடிலம் ஓடுகிறது. இவ்வூரில் புகைவண்டி நிலையமும் உண்டு. நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது. விரைவுப் புகைவண்டிகள் (Express) இந் நிலையத்தில் நிற்பதைக் கொண்டு இதன் இன்றியமையாமை உணரலாம்.
நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகர் நெல்லிக் குப்பமாகும். ஊர் மக்கள் தொகை 23,000. இவ்வூரில் முசுலீம்கள் மிகுதி. கிறித்தவர்களும் ஒரளவு உள்ளனர். 1893ஆம் ஆண்டு ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ஆட்சி) பெற்ற இவ்வூர், வளர்ந்து 1967 ஆம் ஆண்டு நகராட்சி மன்றம் (முனிசிபல் ஆட்சி) பெற்றுள்ளது. கரும்பு, வெற்றிலை, அகத்திக்கீரை ஆகிவற்றிற்கு நெல்லிக்குப்பம் பேர் போனது.
ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நெல்லிக் குப்பத்தைத் திக்கெட்டிலும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவை, அங்கிருக்கும் பாரி கம்பெனியின் சர்க்கரை ஆலையும் இனிப்புப் பண்டத் (மிட்டாய்) தொழிற்சாலையும் ஆகும். ‘ஸ்பிரிட்’ (Spirits), ‘கார்பானிக் ஆசிட் காஸ் (Carbonic Acid Gas) ஆகியவையும் சர்க்கரை ஆலையில் செய்யப்படுகின்றன. இங்கு உண்டாக்கப் படும் பொருள்கள் வெளிநாடுகட்கும் அனுப்பப்படுகின்றன.
நெல்லிக் குப்பம் சர்க்கரை ஆலை 1848 ஆம் ஆண்டு பாரி கம்பெனியாரால் அமைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஆண்டுக்கு 1,60,000 காலன் வீதம் சாராயமும் உண்டாக்கியது. நாளடைவில் சாராயத்தை நிறுத்திவிட்டுச் சர்க்கரையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. மிகப் பெரிய முதலீட்டில் இந்த ஆலை நடைபெறுகிறது. மூவாயிரவர்க்கும் மேற்பட்டவர் தொழில் புரிகின்றனர். பாரி கம்பெனியார் 1811இல் சிதம்பரத்திலும், 1843இல் வண்டிப் பாளையத்திலும், 1848இல் நெல்லிக் குப்பத்திலும், கள்ளக்குறிச்சியிலும், 1855இல் திருவெண்ணெய் நல்லூரிலும் சர்க்கரை ஆலைகள் நிறுவினர். இவற்றுள், நெல்லிக் குப்பம் ஆலை ஒன்று மட்டுமே இப்போது நடைபெறுவதைக் கொண்டு இந்த ஆலையின் சிறப்பை உணரலாம். இந்தியாவின் மிகச் சிறந்த சர்க்கரை ஆலையாக இது மதிக்கப்படுகிறது. நெல்லிக் குப்பம் புகைவண்டி நிலையத்தி லிருந்து இந்த ஆலைப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத் தொடர்பு உண்டு.
இஃதன்றி, பாரி கம்பெனியார் நெல்லிக்குப்பத்தில் பெரிய முதலீட்டில் இனிப்புப் பண்டத் தொழிற்சாலை ஒன்றும் (Confectionary) நடத்தி வருகின்றனர். இத் தொழிற்சாலை இனிப்பு (மிட்டாய்) வகைகளுடன் குளுகோஸ் (Glucose), எசன்ஸ் (Essences) முதலியனவும் செய்து வருகிறது. இங்கே செய்யப்படும் பொருள்கள் இந்தியா முழுவதிலும் விற்பனையாகின்றன.
காராமணிக் குப்பம்
இவ்வூர் கடலூருக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் கடலூர் திருக்கோவலூர் மாநில நெடுஞ்சாலையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. இவ்வூருடன் இணைந்தாற்போல் தென்பகுதியில் குணமங்கலம் என்னும் ஊர் உள்ளது. இப்பகுதியில் நெசவுத் தொழில் மிகுதி. இங்கே திங்கட்கிழமை தோறும் சந்தை கூடும். இப் பகுதிக்கும் நெல்லிக்குப்பத்திற்கும் இடையே ‘பூலோக நாதர் கோயில்’ என்னும் பழைமையான சிவன் கோயில் ஒன்றும் அதே பெயரில் சிற்றூர் ஒன்றும் உள்ளன.
காராமணிக் குப்பத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு தோப்பு இருக்கிறது; அதில் ஓர் அழகிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது; அதையொட்டி ஒரு தாமரைத் தடாகம் இருக்கிறது. திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலிலிருந்து பாடலே சுரர் ஆனிப் பருவந்தோறும் இம் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். இறையுருவம் கெடிலம் ஆற்றிற்குச் சென்று நீராடும் விழா நடைபெறும். இந்த விழாவிற்குத் ‘தோப்புத் திருவிழா’ என்பது பெயர். இந்தப் பகுதி கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்ததாகும்.
பாகூர்
பாகூர் கெடிலத்திற்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவிலுமாகப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டத்தின் தெற்கு எல்லை பாகூர்ப் பகுதிதான், புதுச்சேரி நகரிலிருந்து தெற்கே 18 கி.மீ. தொலைவிலுள்ள பாகூர் வரையும் புதுச்சேரி மாநிலப் பகுதி தொடர்ந்து ஒரு சேர அமைந்திருக்கவில்லை; நடுநடுவே தமிழகத் தென்னார்க்காடு மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளன. இவ்வாறு சொல்வதைவிட, தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய வட்டங்களின் இடையிடையே விட்டு விட்டுப் புதுச்சேரி மாநிலத் திட்டுப் பகுதிகள் உள்ளன என்று சொல்லலாம்.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் எட்டு வட்டங்கள் உள்ளன; அவற்றுள், பாகூர் வட்டம் ஒன்றாகும். வட்டம் என்பது பிரெஞ்சு மொழியில் ‘கொம்மின்’ (Commune) எனப்படும். புதுச்சேரி மக்கள் ‘பாகூர் கொம்மின்’ என்றே சொல்லுவார்கள். இங்கே ஒவ்வொரு கொம்மினும் ஒரு நகராட்சி (முனிசிபாலிடி) போல ஆளப்படுகிறது, இந்த முறையில் பாகூர்ப் பகுதி ஒரு நகராட்சியாகவே நடத்தப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில் கெடிலம் நடுவே ஓடும் கடலூர் ஒரு பெரிய நகராட்சியாகும். கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையும் பாகூர் நகராட்சியின் தெற்கு எல்லையும் ஒன்றோடொன்று முட்டிக் கொள்கின்றன. இதிலிருந்து, கெடிலக்கரைக் கடலூருக்கும் பாகூருக்கும் உள்ள நெருக்கத்தை அறியலாம். பாகூர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்ததாயினும் அதற்கு அண்மையிலுள்ள பெரு நகரம் கடலூர்தான். எனவே, பாகூர்ப் பகுதி மக்கள் நகர்ப்புறத் தேவைகளைக் கடலூருக்கு வந்தே முடித்துக் கொள்கின்றனர்.
பாகூர் பெண்ணையாற்றங்கரைக்கு அண்மையில் இருப்பினும் கெடிலக்கரைக்கும் உரியதேயாம். எங்கேயோ தோன்றி ஓடிவரும் பெண்ணையாறு கடலூரை நெருங்க நெருங்கக் கெடிலத்திற்கு மிக அண்மையில் வந்து விடுகிறது. எனவே, பெண்ணையாற்றங்கரை நாகரிகமெல்லாம் கெடிலக்கரை நாகரிகமுமாகும். இந் நிலையில் இந்நூலில் இடம் பெறுவதற்குப் பாகூருக்கு முழு உரிமையும் உண்டு.
கடலூர் - புதுச்சேரி மாவட்ட நெடுஞ்சாலையில் கடலூருக்கு வடக்கே 4 ஆவது கி. மீட்டரில் மேற்கு நோக்கி ஒரு பாதை பிரிந்து பாகூருக்குப் போகிறது. அந்தப் பாதையில் 3 கி.மீ. தொலைவு சென்றால் பாகூரை அடையலாம். புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க இன்றியமையா இடங்களுள் பாகூரும் ஒன்றாகும். ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே பாகூரிலும் போர் நடக்கத் தவறவில்லை. 1752 இல் லாரென்ஸ் என்னும் ஆங்கிலேயர் பாகூரில் பிரெஞ்சுக்காரர்களைக் கடுமையாகத் தாக்கினார்.
அரசியல் துறையைவிட, கல்வித் துறையிலும் சமயத் துறையிலும் ஒரு காலத்தில் பாகூர் மிகமிகப் புகழ்பெற்றிருந்தது. இவ்வூரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய வடமொழி பல்கலைக்கழகம் இருந்தது. இது பாகூர் வட்டாரத்து அறிஞர்களாலேயே நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மாணாக்கர்கள் இங்கேயே உண்டு உறைந்து கல்வி கற்றனர். அந்தக் காலத்தில் அரசோச்சிய நிருபதுங்க வர்மப் பல்லவப் பேரரசன் (855 - 896) பாகூர்ப் பல்கலைக்கழகத்திற்கு மூன்று சிற்றூர்களை முற்றூட்டாக அளித்ததாகச் செப்பேடுகளால் அறியப்படுகிறது. அவ்வூர்களாவன: சேத்துப் பாக்கம், விளங்காட்டங் காடவனூர், இறைப்புனச்சேரி ஆகியவை. பாகூரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்ததிலிருந்து, இவ்வூர் அந்தக் காலத்தில் பெற்றிருந்த இன்றியமையாத்தன்மை இனிது புலனாகும்.
பாகூரில் சிவன் கோயில் உள்ளது. இது பல்லவ மன்னர் காலத்தது எனச் சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள நாட்டியச் சிற்பங்கள் மிகவும் காணத்தக்கவை. அவற்றுள் - சிலவற்றின் படங்களை, இந்நூலில் ‘கல்வி - கலைத்துறைகள்’ என்னும் தலைப்பில் காணலாம். கல்வெட்டுகளும் உள்ளன. கோயிலின் பெயர் மூலட்டானம். சிவன் பெயர்: மூலட்டர், மூலட்ட நாதர்.
இந்தக் கோயில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் அமோக வர்ஷன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் என்னும் கன்னர தேவனால் திருப்பணி செய்யப் பெற்றதாகும். கன்னர தேவன் கி.பி. 939இல் பட்டம் சூட்டிச் கொண்டான். இவன் சோழர்களோடு பொருது வென்று, அவர்தம் ஆட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளைச் சிறிது காலம் அரசாண்டான். சோழரைத் தான் வென்றதைக் குறிக்கு முகத்தான், ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்’ என்னும் வெற்றித் தொடரைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துப் பெருமையடித்துக் கொண்டான். முதலாம் பராந்தகன், அவன் மக்கள் இராசாதித்தன், கண்டராதித்தன் முதலியோரிடம் முரணிய கன்னர தேவனது கொட்டத்தை இரண்டாம் பராந்தக சோழன் ஒடுக்கிவிட்டான்.
கன்னர தேவன் தன் ஆட்சிக் காலத்தில் பல ஊர்க் கோயில்களில் திருப்பணி செய்துள்ளான். அவற்றுள், பாகூர்க் கோயிலும் ஒன்று. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில்லாண்டுகள் பாகூர்ப் பகுதி கன்னர தேவனது ஆட்சியின்கீழ் இருந்ததற்குச் சான்று பகரும் முறையில் பாகூர் மூலட்டானத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று வருமாறு:
(கன்னர தேவன், 8 கி.பி. 962)
“ஸ்வஸ்தி ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டு, வேசாலிப்பாடி வடகரை வாகூர் நாட்டு மன்றாடிகளே, வாகூர் ஸ்ரீ மூலட்டானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தன்மம் - கட்டிலேறப் போம்போது ஒரு. ஆடு குடுத்துக் கட்டிலேறுவோமாகவும், புறநாட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டிலேறு மன்றாடி வசம் ஒரு ஆடு குடுப்பதாகவும், குடாது திறம்பினோமைக் கணப் பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்ளப் பெறுவதாகவும், ஒட்டிக் குடுத்தோம் இஞ்ஞாட்டு மன்றாடிகளோம். இத்தன்மம் சந்திராதித்தவல் நிற்பதாக நிறுத்திக் குடுப்போமானோம். இஞ்ஞாடு மதகு செய்கின்ற மதகரோம் - ஸ்ரீ.”
இந்தக் கல்வெட்டு, கன்னர தேவன் பட்டம் ஏற்றுக் கொண்ட இருபத்திரண்டாம் ஆண்டில் வெட்டப்பட்டதாகக்
கூறப்பட்டுள்ளது. கன்னர தேவன் அவனது நாட்டில் பட்டம் ஏற்றது 939 ஆம் ஆண்டிலாகும். அதனோடு 22 ஆண்டுகள் சேர்த்தால் 962 ஆகிறது. ஆகவே, இக்கல்வெட்டு 962இல் வெட்டப்பட்டது என்பது தெளிவு. எனவே, 962ஆம் ஆண்டளவில் பாகூர்ப் பகுதி கன்னர தேவனது ஆட்சியில் அடங்கியிருந்தது என்பது புலனாகிறது. இவன் திருப்பணி செய்துள்ளான் என்பதை அறிவிக்கும் சான்றாகப் பாகூர்க் கோயிலில் இவனது உருவச் சிற்பம் உள்ளது. (மேலேயுள்ளது)
இது கன்னர தேவனது உருவச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று உய்த்துணரப்படுகிறது. சிவன் கோயிலுக்குச் செய்யப்பட்டுள்ள அறக்கட்டளையைக் கூறும் மேலுள்ள கல்வெட்டில், ‘வாகூர் நாட்டு மன்றாடிகளே, வாகூர் ஸ்ரீ மூலட்டானத்துப் பெருமானுக்கு’ என்றிருக்கும் பகுதி கவனிக்கத்தக்கது. பாகூர் கல்வெட்டில் ‘வாகூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மக்கள் பேச்சு வழக்கில் வாவூர்’ என்கின்றனர். இது நிற்க, ‘வாகூர் நாட்டு மன்றாடிகளே’ என்னும் தொடரைக் கொண்டு, அன்று பாகூரைச் சூழ்ந்த பகுதி ‘பாகூர் நாடு’ என அழைக்கப்பட்டதாகவும், அப் பகுதியின் தலைநகராகப் பாகூர் விளங்கியதாகவும் அறியலாம். பாகூர் நாடு இன்று புதுச்சேரி மாநிலத்தில் ‘பாகூர் கொம்மின்’ எனப்படுகிறது; தலைநகர் பாகூரேதான். இன்று பாகூரில் உயர்நிலைப் பள்ளி உள்ளது.
திருவயிந்திரபும்
கெடிலக்கரையை ஒட்டியுள்ள ஒரே ஒரு வைணவத் திருப்பதியான திருவயிந்திரபுரம், கடலூர்த் தலைநகரப் பகுதிக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் - கடலூர்த் திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக் கோவலூர் மாவட்ட நெடும்பாதையில், கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. ஊரின் வடக்கு எல்லையில் - அணையின் கீழ்பால் நெடும்பாதை ஆற்றைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. நெடும்பாதையில் பேருந்து வண்டி போக்குவரவு உண்டு. வெள்ளக் காலத்தில் மட்டும் பேருந்து வண்டிகள் இவ்வழியே செல்லாமல் மஞ்சக் குப்பம் வழியாகச் செல்லும். கடலூருக்கும் - திருவயிந்திர புரத்திற்குமாக உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) போக்குவரவு உண்டு. புகைவண்டியில் வருபவர்கள், திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. செல்ல வேண்டும். இங்கிருந்து பேருந்து வண்டி வசதியிருப்பதன்றி, மிகுதியாகக் குதிரை வண்டி வசதியும் உண்டு. திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தைவிட, அதனையடுத்து மேற்கேயுள்ள வரகால்பட்டுப் புகைவண்டி நிலையம் திருவயிந்திரபுத்திற்கு மிகவும் அணித்தாகும். இந்த நிலையத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கும் - கிழக்குமாக வளைந்து செல்கிறது. இந்த நிலையத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை கி.மீ. தொலைவு தெற்கு நோக்கி நடந்து ஆற்றின் வளைவைக் கடந்து திருவயிந்திரபுரத்தை அடையவேண்டும். நடக்க முடியாதவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி வண்டி பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது.
திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தையொட்டிக் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் ᒪஇந்தச் செங்கோணத்தில் நேர் வடக்காக வளைந்து திரும்புகிறது. இந்த இடத்தில், மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையிலிருந்து ஒரு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கேப்பர் மலையில் வடக்கு நோக்கி ஒரு பிதுக்கம் வளைந்து நீட்டிக் கொண்டிருப்பதாலேயே அம் மலையின் அடிவாரத்தைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறும் இவ்விடத்தில் வடக்கு நோக்கி வளைந்து செல்கிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவு ஓடி மீண்டும் கிழக்கு நோக்கி வளைந்து விடுகிறது.
கிழக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் வடக்கு நோக்கி திரும்புகிற முனையில் (ட) ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. இங்கே ஆறு தெற்கு - வடக்காக ஒடுகிறது. வடக்கு நோக்கியோடும் ஆற்றிற்கும் வடக்கு நோக்கியுள்ள மலைப் பிதுக்கத்திற்கும் நடுவே திருவயிந்திரபுரம் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலிலிருந்து மலைக்குப் படிக்கட்டு மேல்நோக்கிச் செல்கிறது; கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து ஆற்றிற்குப் படிக்கட்டு கீழ் நோக்கிச் செல்கிறது. இதிலிருந்து, ஆற்றிற்கும் மலைக் குன்றுக்கும் நடுவே கோயில் நெருக்குண்டு கிடத்தல் புலனாகும். ஆறு கோயிலின் மேற்கு வாயிலை முட்டி மோதிக்கொண்டு செல்கிறது எனலாம். கோயிலின் கோபுரம், மதில் முதலியவற்றின் தோற்றம் தலைகீழாய்த் தண்ணீரில் தெரிவதைக் காணலாம். திருவயிந்திர புரத்தில் வடக்கு நோக்கிப் பிதுங்கியுள்ள குன்றின் படத்தையும், வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் ஆற்றின் படத்தையும், தண்ணிரில் கோயிலின் தோற்றம் தெரியும் படத்தையும் இந்நூலில் ‘வரலாறு கண்ட திசை மாற்றம்’ என்னும் தலைப்பில் (பக்கம் : 48 - 50) காணலாம். மற்றும், கோயிலின் மிக அண்மையில் வடபுறம் இருக்கும் அணை பற்றியும், அந்த இடத்தின் இயற்கைக் காட்சிச் சிறப்புப் பற்றியுங்கூட அந்தத் தலைப்பில் விரிவாகக் காணலாம்.
திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வநாயகப் பெருமாள்; தாயார் பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் ‘திருந்திபுரம்’ எனக் கூறுகின்றனர். இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அயிந்திரன் அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது சில கல்வெட்டுகளில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாந்த தேசிகர் முதலிய வைணவப் பெருமக்கள், திருவயிந்திரபுரத்தருகில் ஒடும் கெடிலத்திற்கு ஒரு பெருமை கற்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுகின்றன; இவ்வாறே மேற்கு - கிழக்காக ஓடிவரும் கெடிலம் திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கித் திரும்பித் தெற்கு வடக்காக ஒடுகிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஓடுவது ஒரு புதுமையாம் - அற்புதமாம். இங்கே வடக்கு நோக்கி ஒடுவதால் கெடிலத்திற்கு ‘உத்தர வாகினி’ என்னும் சிறப்புப் பெயர் ஈந்து போற்றியுள்ளனர் பெருமக்கள். உத்தரம் என்றால் வடக்கு. வடக்கு நோக்கி ஒடும் ஒர் ஆற்றோட்டத்தின் கரையில் ஒரு தெய்வத் திருப்பதி அமைந்திருப்பது மிகவும் சிறப்பாம். இந்தச் சிறப்பு திருவயிந்திரபுரத்திற்குக் கிடைத்திருக்கிறது. வடக்கு நோக்கி ஓடும் உத்தர வாகினியாகிய கெடிலத்தின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் அமைந்திருப்பதால், இவ்வூர் மிகவும் பெருமைக்கு உரியதெனப் பெருமக்களால் போற்றப்படுகிறது.
இந்த அடிப்படையில், திருவயிந்திரபுரம் என்னும் பெயர் வந்ததற்கு ஒரு புதுக் காரணம் கற்பித்துக் கூற விரும்புகிறேன் அடியேன். அயிந்திரம் என்னும் சொல்லுக்குக் கிழக்கு என்னும் பொருளும் உண்டு. கெடிலத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஊர் ஆதலின் ‘அயிந்திரபுரம்’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அடியேன் கற்பித்துக் கூறும் காரணம். தமிழகத்தில் மற்ற ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுவதால், ஆற்றங்கரைத் திருப்பதிகள் ஆற்றின் வடகரையிலோ அல்லது தென்கரையிலோதான் இருக்கும்; ஆற்றின் கிழக்குக் கரையில் திருப்பதிகள் அமைவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இந்த நிலையில் திருவயிந்திரபுரம் கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பது ஒரு புதுமை - அற்புதம்! எனவே, அயிந்திரக் (கிழக்குக்) கரையில் அமைந்திருக்கும் இவ்வூரை ‘அயிந்திரபுரம்’ என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது அடியேனது புதிய கற்பனை. ஆறு வடக்கு நோக்கி ஒடுவது அற்புதம் என்றால், ஆற்றின் கிழக்குக் கரையில் தெய்வத் திருப்பதி அமைந்திருப்பதும் அற்புதம் என்பது சொல்லாமலே விளங்குமே! இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வர்,ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற முறையில் முடிந்த முடிபாக இங்கே அடியேன் கூறவில்லை - கூறவும் முடியாது; சிந்தனையைக் கிளறித் துண்டும் முறையிலேயே ஆராய்ச்சியாளர் முன் இந்தக் கருத்தை அடியேன் வைத்துள்ளேன். சிறப்பு கருதித் திசையின் பெயரால் கெடிலம் ‘உத்தர வாகினி’ என அழைக்கப்படுவதைப் போல, ஊரும் சிறப்பு கருதித் திசையின் பெயரால் அயிந்திரபுரம் என அழைக்கப்படலா மல்லவா? திருவயிந்திரபுரத்துக் கோயிலின் தோற்றம் முன்பக்கமுள்ளது.
இந்தப் படம் கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரேயுள்ள மலைமேல் நின்றுகொண்டு எடுத்தது. படத்தில் முகப்பில் மலைப் படிக்கட்டு தெரிவதைக் காணலாம். படிக்கட்டின் அடியில் - நடுவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே - அங்கேதான் கோயிலின் கிழக்கு வாயில் இருக்கிறது; அவ்வாயிலின்மேல் கோபுரம் இல்லை. மேற்கு வாயிலின்மேல் கோபுரம் இருக்கிறது; அது படத்தில் தொலைவில் தெரிகிறது. ஆற்றுப் பக்கமாக இருக்கும் மேற்குக் கோபுரவாயில் தான் கோயிலின் சிறப்பு (முக்கிய) வாயிலாகக் கருதப்படுகிறது. இறையுருவங்கள் விழாக்காலங்களில் வெளியில் செல்வது வருவது எல்லாம் இந்த மேற்குக்கோபுர வாயிலால் தான். மேற்குவாயிலே சிறப்பிடம் பெற்றிருப்பினும், கருவறையில் திருமால் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பது கிழக்கு நோக்கியே யாம். கோயிலின் நடுவிலும் ஒரு சிறுகோபுரம் உள்ளது. நடுக்கோபுரத்தையும் மேற்குக் கோபுரத்தையும் படத்தில் காணலாம். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே மலையிருக்கிறது; இம் மலையின்மேலும் கோயில் உண்டு; அம் மலைக்கோயில் அடுத்த பக்கமுள்ளது.
இந்த மலைக் கோயிலும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. ‘அயக்கிரீவன் கோயில்’ என்பது இதன் பெயர் அயக்கிரீவன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. திருமாலின் தோற்றங்களுள் அயக்கிரீவன் தோற்றமும் ஒன்று. கெ.23. அயம் (ஹயம்) என்றால் குதிரை; கிரீவம் என்றால் கழுத்து; அயக்கிரீவன் என்றால் குதிரைக் கழுத்து உடையவன் என்பது பொருளாம்; திருமாலின் அயக்கிரீவத் தோற்றத்தில் ஒரு புராணக் கதை அடங்கியுள்ளது. அயக்கிரீவன் கோயில் முகப்பில் இருக்கும் மண்டபத்தின் மேல் உள்ள விமானம் காணத்தக்கது. மலைமேலும் ஒரு கிணறு உண்டு.
அயக்கிரீவன் கோயில் உள்ள மலைக்கு ‘ஒளஷத கிரி’ என்னும் பெயர் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒளஷதம் = மருந்து; கிரி = மலை; ஒளஷதகிரி = மருந்து மலை, இந்த மலையில் மருத்துவ மூலிகைகள் பல உள்ளன. இந்த மலைக் காற்றும் மலையடிவாரத் தண்ணீரும் நோய் தீர்க்கும் மருந்துகளாம்; அதனால் இம்மலை மருத்துவமலை என அழைக்கப்படுகிறது.
“முன்னொரு காலம் விண்வழியே உலாச் சென்ற திருமால் மருத்துவமலையில் தங்கி இளைப்பாறினார். அப்போது அவர்க்குத் தாகவிடாய் தோன்ற, ஆதிசேடனும் கருடனும் நீர்கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் மலையின்கீழ்த் தரையை வாலால் அடித்துப் பிளந்து கிணறு உண்டாக்கி நீர் கொணர்ந்து தந்தார். அந்தக் கிணற்றுக்குச் ‘சேஷ தீர்த்தம்’ என்பது பெயர். கருடன் தன் அலகால் தரையைக் கிழித்து நீர் ஆறாகப் பெருகச் செய்து அதிலிருந்து நீர் கொணர்ந்தார்; அந்த ஆற்றிற்குக் ‘கருட தீர்த்தம்’ அல்லது ‘கருடநதி’ என்பது பெயர் அதுதான் கெடிலம் ஆறு” - இது புராணங்களை ஒட்டிய கதை. ஆதிசேடன் வாலால் அடித்துத் தோண்டியதாகச் சொல்லப்படும் சேஷதீர்த்தம் என்னும் கிணறு திருவயிந்திரபுரம் கீழ்க்கோயிலில் உள்ளது. அந்தக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஆதிசேடன் (பாம்பு) உரு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுத் தண்ணீரின் நிறமும் வாடையும் இயற்கைக்கு மாறாய் உள்ளன - அதாவது, நன்றாயில்லை. காரணம், வேண்டி நேர்ந்து கொண்ட (பிரார்த்தித்துக் கொண்ட) அன்பர்கள் பால், மிளகு, வெல்லம், குடம் முதலியவற்றை அக் கிணற்றில் கொட்டுகின்றனர்; காணிக்கையாகக் காசும் போடுகின்றனர்; இதனால் தண்ணீரின் தன்மை மாறுதலாயுள்ளது. ஆனால், இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான் கோயிலில் உணவுப் பொருட்கள் ஆக்கப்படுகின்றன; இந்தத் தண்ணீரில் ஆக்கப்படுவதால், உணவுப் பொருட்கள் மிகவும் சுவை உடையனவாகவும் நெடுநேரம் கெடாதனவாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வைணவர்களால் ‘நடுநாட்டுத் திருப்பதி’ எனச் சிறப்பித்துக் கூறப்படும் ‘திருவயிந்திரபுரம்’ திருக்கோயில், திருமங்கை யாழ்வாரின் மங்களாசாசனப் பாடல் பெற்றுள்ளது. இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்த மிகச் சிறந்த வைணவ ஆசாரியரான வேதாந்த தேசிகர் இவ்வூர் இறைவன்மேல் தமிழிலும் வடமொழியிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். இவ்வூரைப் பற்றி வடமொழியில் பிரம்மாண்ட புராணம், கந்த புராணம் (சைவக் கந்த புராணம் வேறு), பிருகந் நாரதிய புராணம் முதலிய நூல்கள் உள்ளன. கருட நதியாகிய கெடிலம் கங்கைக்கு ஒப்பானது எனத் திருமாலால் பாராட்டிப் புகழப் பட்டிருப்பதாகக் கந்த புராணம் (வைணவ புராணம்) முதல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலே, மும்மணிக் கோவை, நவரத்தினமாலை முதலிய சிற்றிலக்கியங்களும் இவ்வூரின் மேல் இயற்றப் பட்டுள்ளன. “வெற்புடன் ஒன்றி அயிந்தையில் வெவ்வினை தீர் மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை” என மும்மணிக் கோவையில் அயிந்தை (அயிந்திரபுரம்) பாராட்டப் பெற்றுள்ளது.
திருவயிந்திரபுரத்தில் சித்திரைத் திங்களில் பத்து நாள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் திருவிழா நாளான சித்திரைப் பருவத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அன்று மிகப் பெருந்திரளான மக்கள் இங்கே கூடுவர். எட்டாம் திருவிழா அன்று இரவே ஆயிரக் கணக்கான மக்கள்வந்து கூடி ஆற்று மணலில் படுத்து உறங்கியும் உரையாடியும் இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பர். வைகறையில் எழுந்து ஆற்றில் நீராடித் தேர்த் திருவிழாவைக் கண்டுகளிப்பர். இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையியற்றிய வேதாந்த தேசிகரின் நினைவாக ஒரு மண்டபம் உள்ளது. அம் மண்டபத்திற்கு விழா நாளில் இறையுருவம் கொண்டு செல்லப்படும். இது தேசிகரின் சிறப்பிற்குச் சான்று. தேசிகருக்குக் கருடாழ்வார் அருளுரை வழங்கிய விழா புரட்டாசித் திருவோணத்தில் நடைபெறும். கார்த்திகைத் திங்களில் ‘தாலாட்டு விழா’ என்னும் ஒருவகை விழா இனிது நடைபெறும். மாசி மகத்தன்று தேவநாதப் பெருமாள் கடலூர்க் கடற்கரைக்கு எழுந்தருளி நீராடுவார்; அன்றிரவு வண்டிப் பாளையத்திலுள்ள மண்டபத்தில் தங்கி விழா வயர்ந்து செல்வார்.
மக்கள் பலர் திருவயிந்திரபுரம் வந்து முடியெடுத்துக் கொள்வர். குடும்பப் பழக்கமாகக் குழந்தைகட்கு முடியெடுப்பதல்லாமல், நேர்ந்து வேண்டிக்கொண்ட பெரியவர்களும் வந்து முடியெடுத்துக் கொள்வதுண்டு. திருவயிந்திரபுரம் தெற்குத் திருப்பதி எனப் புராணங்களாலும் மக்களாலும் போற்றப்படும் பெருமையுடையதாதலால், திருப்பதிக்குப் போக முடியாதவர்கள் அங்கே செலுத்துவதாய் நேர்ந்துகொண்ட கடனை இங்கே வந்து செலுத்துவதும் உண்டு. திருப்பதி வேங்கடத்தான் கோயில் முன் காலத்தில் முருகன் கோயிலாய் இருந்தது என்று சிலர் சொல்வதுபோல், திருவயிந்திரபுரம் கோயிலும் முன்காலத்தில் சைவக் கோயிலா யிருந்தது எனச் சிலர் சொல்வதுண்டு; அவர்கள் தம் கூற்றுக்குச் சான்றாக, இக்கோயிலுக்குள் விநாயகர் உருவமும் சிவனது தட்சணாமூர்த்தி உருவமும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் ஊர்ச் சிவன் கோயில்களுக்குள்ளே கூடத்தான் திருமால் கோயில் இருக்கிறது. சிதம்பரத்தில் இரண்டும் அருகருகே இல்லையா? எனவே, இதுசார்பாக எதையும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. பழமுதிர்சோலை என்னும் கள்ளழகர் கோயில் பற்றியும் இதுபோன்ற கருத்து வேறுபாடு காணப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
நீராடு செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்ட அர்ச்சுனன் திருவயிந்திரபுத்திற்கும் வந்து நீராடி வழிபாடு நடத்தினானாம். இதனை வில்லிபாரதம் - ஆதிபருவம் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள,
"மெய்யாகம வதிகைத்திரு வீரட்டமு நேமிக்
கையாளான் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான்.”
என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். வெளியூரார் சிலர் திருவயிந்திரபுரம் கோயிலில் வந்து திருமணம் செய்து கொண்டு போவதும் உண்டு. திருவயிந்திரபுரத்தில் சோழர், பாண்டியர் முதலியோர் காலத்தைச் சேர்ந்தனவாய் ஐம்பதிற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் மூன்றாம் இராச ராசச் சோழனது கல்வெட்டொன்று மிகவும் குறிப்பிடத்தக்கது. பாண்டியர்க்குத் தோற்றோடிய அச்சோழனைக் கோப்பெருஞ் சிங்கன் சேந்தமங்கலத்தில் சிறை வைத்த செய்தியும், சோழனுக்கு நண்பனான போசள (மைசூர்) மன்னன் வீரநரசிம்ம தேவன் கோப்பெருஞ்சிங்களை முறியடித்துச் சோழனைச் சிறை மீட்ட செய்தியும் இந்நூலில்'கெடிலக்கரை அரசுகள் - கோப்பெருஞ் சிங்கன்’ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை விவரிக்கும் மூன்றாம் இராசராசனது கல்வெட்டு திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது; அது வருமாறு:-
“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜ ராஜ
தேவர்க்கு யாண்டு பதினைந்தாவதில் எதிராமாண்டு,
ப்ரதாபச் சக்கரவர்த்தி ஹொய்சண ஸ்ரீவீர
நரசிம்மதேவன் சோழ சக்கரவர்த்தியைக் கோப்பெருஞ்
சிங்கன் சேந்த மங்கலத்தே பிடித்து கொடுவந்து
தன்படையை இட்டு ராஜ்யத்தை அழித்து
தேவாலையங்களும் விஷ்ணஸ்தானங்களும்
அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி, சோழ
மண்டல ப்ரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி
நிலைநிறுத்தி அல்லது இக்காளம் ஊதுவதில்லை
என்று தோர சமுத்திரத்தினின்றும் எடுத்து வந்து மகத
ராஜ்ய நிர்ம்மூலமாடி, இவனையும் இவன் பெண்டு
பண்டாரமும் கைக்கொடு பாச்சூரிலே விட்டு கோப்
பெருஞ் சிங்கன் தேசமும் அழித்து சோழ
சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக் கொடு என்று
தேவன் திருவுள்ளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த
ஸ்வஸ்தி ஸ்ரீமனு மஹாப்ரதானி பரம விச்வாஸி
தண்டிந கோபன் ஜகதொப்ப கண்டன் அப்பண
தண்ணாக்கனும் சமுத்திர கோப்பய தண்ணாக்கனும்
கோப்பெருஞ் சிங்கன் இருந்த எள்ளேரியும் கல்லியூர்
மூலையும் சோழர்கோன் இருந்த தொழுதகையூரும்
அழித்து, வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான்
சீனத் தரையன், ஈழத்து ராஜா பராக்கிரம பாஹு
உள்ளிட்ட முதலி நான்கு பேரையும்....கொன்று
இவர்கள் குதிரையும் கைகொண்டு, கொள்ளிச்
சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,
பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து
தொண்டை மானல்லூர் உள்ளிட தமுக்குர்களும்
அழித்து அழி.......க்காடும் வெட்டிவித்து,
திறாப்பாதிரிப் புலியூரிலே விட்டு இருந்து, திருவதிகைத்
திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து,
வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்த மங்கலத்துக்கும்
கிழக்கு கடலிலே அழி ஊர்களும் குடிக்கால்களும்
சுட்டும் அழித்தும் பெண்டுகளை பிடித்தும் கொள்ளை
கொண்டும் சேந்த மங்கலத்திலே எடுத்துவிடப்போகிற
அளவிலே, கோப்பெருஞ் சிங்கன் குலைந்து சோழச்
சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக
தேவனுக்கு விண்ணப்பம் செய, இவர் விட்டு நமக்கும்
ஆள் வரக் காட்டு கையாலே சோழச் சக்கரவர்த்தியை
எழுந்தருளிவித்துக் கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது."
இந்தக் கல்வெட்டு வாயிலாக, போசன மன்னன் வீர நரசிம்மன் சோழனுக்குப் பரிந்து கொண்டு, கோப்பெருஞ் சிங்கனது ஆட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளைக் கண்டபடி தாக்கித் தீயிட்டு அழித்திருக்கிறான் என அறியலாம். இந்தக் கல்வெட்டின் இடையே ‘மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்றிருக்கும் பகுதியைக் கொண்டு, திருமுனைப்பாடி நாட்டின் ஒரு பகுதிக்கு ‘மகத நாடு’ என்னும் பெயர் அன்றிருந்தமை புலனாகும்.
தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் குறுநில மன்னனுடைய படை மறவரின் பெருமையை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்யுள் ஒன்று, தேவநாயகப் பெருமாள் கோவில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ள விவரமும் அச் செய்யுளும், இந்நூலில் ‘கெடில நாட்டுக் கல்வெட்டுக்கள்’ என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்குங்கால் அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் அரசியல் அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடம் புலப்படும். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனைச் சேந்தமங்கலத்தில் சிறை வைத்திருந்ததன்றித் திருவயிந்திரபுரத்திலும் சில நாள் சிறை வைத்திருந்ததாகச் சிலர் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. வேதாந்ததேசிகர் தம் பாடல்களில், “மகிழ்ந்து வாழும் போதிவை நாம் பொன்னயிந்தை
நகரில் முன்னாள்”
"அயிந்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்”
எனத் திருவயிந்திரபுரத்தை நகர் - மாநகர் எனச் சிறப்பித்துக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு, அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் ஒரு சிறந்த நகராய் விளங்கியதென அறியலாம்.
திருவயிந்திரபுரச் சீமையை ஆங்கிலேயர்கள் 1749ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப்பிடமிருந்து 28,000 ரூபாய்க்கு வாங்கினர். வடமொழியும் தென்மொழியும் பயின்று வந்த திருவயிந்திரபுரம் வைணவ அந்தணர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கினர். அதன் பயனாய்ப் பல குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறிடங்களில் இன்று அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கு அன்று இருந்த பொலிவு இன்று இல்லையென்றே சொல்லலாம். இந்த ஊரில் வடகலை வைணவர்களும் தென் கலை வைணவர்களும் பிணங்கி நீதிமன்றம் வரையும் சென்று வழக்கிட்டுக் கொண்டதுண்டு. சென்னப்ப நாயக்கன் பாளையத்தைப் போலவே இவ்வூரிலும், கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள கடலூர்ப் பகுதியைக் ‘கிழக்கு’ என்னும் திசைப் பெயரால் சுட்டும் வழக்கம் உள்ளது; அதாவது, ‘கிழக்கே போகிறேன்', ‘கிழக்கே போயிருக்கிறார்’ என்னும் வழக்கை இவ்வூரிலும் காணலாம். இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்துள்ளது.
இவ்வூரில் கெடிலத்தில் அணை கட்டப்பட்டிருப்பதால் வளத்திற்கும் குறைவில்லை. இவ்வூர் மலையிலும் மலையடிவாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்துள்ளது. வெள்ளைக் களிமண் வெட்டியெடுக்கப்பட்டு, உரம் செய்வதற்காகக் கூடலூரிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திருவயிந்திரபுரம் புகழ் பெற்றுத் திகழ்கிறது.
கடலூர்ப் பெருநகரம்
சென்னைக்கு நேர் தெற்கே 160 கி.மீ. (100 கல்) தொலைவிலுள்ள கடலூர் முதல் தரமான ஒரு பெரிய நகரமாகும். கெடிலம் ஆறு கடலுர் நகரைச் சுற்றி வளைத்து ஒடுகிறது. கடலூர் நகருக்கு நடுவே ஒடுகிறது; கடலூர் நகருக்கு அருகில் (கடலூர்க்) கடலில் கலக்கிறது. கடலூர் நகர எல்லைக்குள் கெடிலத்தின் கரையிலே பாடல் பெற்ற பதி, புகைவண்டி சந்திப்பு நிலையம், உயர்நிலைப் பள்ளிகள். தொழிற் பள்ளிகள், கலைக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவ நிலையம், திரைப்பட மாளிகைகள், தலைநகர்த் தலைமை அலுவலகங்கள், பெரிய உணவு விடுதிகள், பெருவெளித் திடல் (மைதானம்), தொழிற்கூடங்கள், வணிக நிலையங்கள், பெரிய கடைத் தெரு, தலைநகர்க் கோட்டை, துறைமுகம் முதலியவை அமைந்துள்ளன. இவையனைத்தும் தன் கரைக்கு அருகில் அகப்படும் அளவில் கெடிலம் ஆறு கடலூர் நகர எல்லைக்குள் பல வளைவும் பிரிவும் பெற்றுச் செல்கிறது.
நகராட்சி
கடலூர் முதல் தரமான நகராண்மைக் கழகம் (முனிசிபாலிடி) உள்ள பெருநகர். இந் நகராண்மைக் கழகம் 1866 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது; 1954ஆம் ஆண்டு முதல் தர நகராண்மைக் கழகம் என்னும் தகுதி பெற்றது. இதன் நூற்றாண்டு விழா 1967 சனவரி முதல் வாரத்தில் மிகச் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது; விழாவின் நினைவாக ஒரு சிறப்பு மலரும் வெளியிடப் பெற்றுள்ளது.
கடலூர் நகராட்சிப் பகுதியின் பரப்பளவு 30 சதுர கி.மீ.; மக்கள் தொகை 80,000. இந் நகராட்சியில் 32 உட்பிரிவுத் தொகுதிகள் (Wards) உள்ளன. திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம், புதுப்பாளையம், கூடலூர் என்னும் நகரப் பகுதிகளும், முட்டு குடிசை, கம்மியன் (கம்மிங்ஸ்) பேட்டை, கிஞ்சன் பேட்டை, சூரப்ப நாய்க்கன் சாவடி, வண்டிப் பாளையம், நத்தைவெளி, வடுகு பாளையம், புருகேஸ் (புரூக்ஸ்) பேட்டை, மஞ்சினி நாய்க்கன் குப்பம், வசந்தராயன் பாளையம், செல்லன் குப்பம், சிவானந்தபுரம், பணிக்கன் குப்பம், மாலுமியார் பேட்டை, குட்டகரை, ஏணிக்காரன் தோட்டம், அக்கரைகோரி சிங்காரத் தோப்பு - சோணங்குப்பம், சான்றோர் பாளையம், வன்னியர் பாளையம், தேவனாம் பட்டினம், கருமார்பேட்டை, லாதம்ஸ்பேட்டை, சொரக்கல்பட்டு, வேணுகோபாலபுரம், வில்வராய நத்தம் முதலிய நகர்ப்புறப் பகுதிகளும் சேர்ந்தது கடலூர் நகராட்சி.
தமிழகத்தில் கடலூருக்கெனத் தனிப் பெரும் பெருமைகள் சில உள; அவையாவன:
1. தமிழகத்தின் முதல் தலைநகர்
இப்பொழுது தமிழகத்தின் தலைநகராயிருப்பது சென்னை. ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தின் தலைநகராயிருந்தது சென்னை அன்று கடலூர்தான்! கடலூரில் கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்கு அருகிலுள்ள “செயின்ட் டேவிட் கோட்டை'யை (St. David Fort) மையமாகக் கொண்டே அன்று ஆங்கிலேயர் தமிழகத்தில் ஆட்சி தொடங்கினர். இந்தக் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் பலமுறை தாக்கி அழித்ததால் தமிழகத்தின் தலைநகராய்த் தொடர்ந்து விளங்கும் தகுதியைக் கடலூர் இழந்து விட்டது. கடலூர்க் கோட்டைக்குப் பிரெஞ்சுக்காரரால் ஊறு நேராதிருக்குமாயின், கடலூர் நகரம் கல்கத்தா நகரம் போல் மிகப் பெரிய நகரமாக விரிவு பெற்றிருக்கும்; சென்னை எடுத்துக் கொண்ட தலைநகர்த் தகுதி கடலூர்க்கே தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தின் வடக்குக் கோடியிலுள்ள சென்னையினும், தமிழகத்தின் நடுவேயுள்ள கடலூர் தலைநகராயிருப்பது நாடு முழுவதற்கும் வசதியல்லவா? அன்று கடலூர் தலைநகர்த் தகுதியைப் பெற்றிருந்ததற்குக் காரணமாயிருந்தது கெடிலம் ஆற்றுச் சூழ்நிலையே. கெடிலம் கடலோடு கலக்கும் இடத்தில் ஆற்றில் துறைமுகம் அமைந்திருந்ததால், வாணிகத்தின் பெயரில் கப்பல் ஒட்டிக் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் அங்கே கப்பலை நிறுத்தி இறங்கி வந்து ஆணியடித்துக் கொண்டு அமர்ந்து விட்டனர்.
2. மூன்று கழிமுகங்கள்
கடலூரின் வடக்கு எல்லையில் தென்பெண்ணையாறும், தெற்கு எல்லையில் பரவனாறும், நடுவே கெடிலம் ஆறும் கடலில் கலக்கின்றன. இது, எந்த நகரிலும் இல்லாத ஒர் அமைப்பு. ஒரு நகராட்சி எல்லைக்குள் மூன்று ஆறுகள் ஒடி வந்து கடலில் கலப்பது ஒரு தனியமைப்பே. இது, துறைமுகமும் கோட்டையும் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தந்தது.
3. சிறிய பெரிய துறைமுகம்
இந்தியாவின் கிழக்குக் கரையில் கல்கத்தா (வங்காளம்), பாராதிப் (ஒரிசா), விசாகப்பட்டணம் (ஆந்திரம்), சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் பெரியவை; இப் பெரிய துறைமுகங்களுக்குள் சிறியது தூத்துக்குடி, இவை போக, பல சிறிய துறைமுகங்களும் உள்ளன. கிழக்குக் கடற்கரையிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகம் கடலூர்த் துறைமுகந்தான். சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி போன்ற செயற்கைத் துறைமுகமாயில்லாமல், ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இயற்கைத் துறைமுகச் சிறப்பும் கடலூர்த் துறைமுகத்திற்கு உண்டு.
4. இரண்டாவது பெரிய நகர்ப் பரப்பு
நகராட்சிப் பரப்பளவில் சென்னை போகத் தமிழகத்தில் இரண்டாம் இடத்தைக் கடலூரே பெற்றிருக்கிறது.
5. முதல் பெரிய திடல்
தமிழகத்தில் நகர் நடுவேயுள்ள பெருவெளித் திடல்களுள் (மைதானங்களுள்) கடலூர்த் திடலே மிகப் பெரியது. தமிழகத்திற்கு மட்டுமன்று - தென்னிந்தியாவிற்கே இதுதான் பெரிய திடல் என்று சொல்லப்படுகிறது. இத் திடலின் நீளம் 800 மீட்டர்; அகலம் 600 மீட்டர்; பரப்பளவு 15 ஏக்கர். பல ஊர்களில் இதனினும் பெரிய திடல் இருக்கலாம்; ஆனால் அவை ஊருக்கு வெளியே ஒருபுறமாக ஒதுங்கியிருக்கக் கூடும்; போதிய காப்பும் அழகும் பொலிவும் மக்கள் புழக்கமும் பெற்றில்லாதிருக்கக் கூடும்; ஆனால் கடலூர்த் திடல் நகர் நடுவேயுள்ளது. திடலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் பெரிய மாளிகைகள் உள்ளன. திடலிலே சொற்பொழிவு மேடை, மணிக்கூண்டு, பூங்கா முதலிய வசதிகள் உண்டு. காண்பதற்குக் கவர்ச்சியாய், மணிக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுவது கடலூர்த் திடல்.
6. முதல் முதலமைச்சர்
1947 ஆம் நாடு விடுதலை பெற்றதும் தமிழகத்தின் முதல் முதலமைச்சராயிருந்த உயர்திரு ஓமந்துார் இராமசாமி ரெட்டியார், கடலூரைத் தலைநகராகக் கொண்ட தென்னார்க்காடு மாவட்டத்தினராவார்; இந்த முதல் முதலமைச்சரை இங்கே குறிப்பிடவில்லை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தினால் சென்னை மாநிலத்தில் முதல் முதலாக அமைச்சரவை ஏற்பட்ட போது 1920 - 21 ஆம் ஆண்டில் முதல் அமைச்சராய்ப் பணிபுரிந்தவர் கடலூர்ப் பெரியார் அ. சுப்பராயலு ரெட்டியார் என்பவராவர். இப் பெரியார் 1906 தொடங்கி 1920 வரை கடலூர் நகராண்மைக் கழகத்தின் தலைவராயும் (சேர்மன்) தொண்டாற்றியுள்ளார்.
1917 ஆம் ஆண்டிற்கு முன் மாவட்டக் கழகங்கள் (District Boards) கலெக்டர்களின் தலைமையிலேயே ஆளப்பட்டு வந்தன. 1917 ஆம் ஆண்டு தான் தமிழகத்திலேயே முதல்முதலாக மக்கள் தலைவர் ஒருவர் ஒரு மாவட்டக் கழகத்தின் தலைவராக அமர்த்தப் பெற்றார். அவர் சுப்பராயலு ரெட்டியார்தான். அந்த மாவட்டக் கழகம் தென்னார்க்காடு மாவட்டக் கழகம்தான். இந்த வகையிலும் கடலூர் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் முதலாக வட்டக் கழகங்கள் (Taluk Boards) ஏற்படுத்தப்பட்டதும் இம் மாவட்டத்தில்தான் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
7. தலை ஞாயிறு
தமிழக முழுவதும் அறிவொளி பரப்பிய தலை ஞாயிறாகிய ஞானியார் அடிகளார் வாழ்ந்த இடம் கடலூர்தான்.
8. கூட்டுத் தகுதி
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகப் பல்வேறு தகுதிகளும் ஒருங்கிணைந்திருக்கும் நகரம் கடலூர் ஒன்றுதான். ஒர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகர்த் தகுதி, ஒரு வட்டத்தின் தலைநகர்த் தகுதி, ஒரு மாவட்டத்தின் தலைநகர்த் தகுதி, மிகப் பெரிய நகர்ப் பரப்பு, பாடல் பெற்ற பழம்பதிப் பெருமை, கோட்டைச் சிறப்பு, புகைவண்டிச் சந்திப்பு நிலையம் (Junction), மூன்று ஆறுகள், கடற்கரை, துறைமுகம், வரலாற்றுச் சிறப்பு முதலிய பல்வேறு தகுதிகளையும் கூட்டாகப் பெற்றிருப்பதில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கடலூரைத் தவிர வேறு எந்த ஊரையும் குறிப்பிட முடியாது. மற்ற ஊர்களில் ஒன்று இருந்தால் மற்றொன்று இராது
வசதிகள்
கடலூர் நகராட்சி எல்லைக்குள் இரண்டு கலைக் கல்லூரிகள், ஒன்பது உயர்நிலைப் பள்ளிகள். ஒரு தொழிற் பயிற்சி நிலையம், மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஒரு தச்சுவேலை - கொல்ல வேலைப் பயிற்சி நிலையம், ஒரு கரும்பு ஆராய்ச்சி நிலையம், இரண்டு சவ்வரிசித் தொழிற்சாலைகள், மூன்று உரத் தொழிற்சாலைகள், ஐந்து எண்ணெய் ஆலைகள், ஒரு படகு கட்டும் தொழிற்சாலை, பல நெசவுத் தொழிற்சாலைகள், சாயம் போடும் தொழிற் சாலைகள், ஐந்து திரைப்பட மாளிகைகள் முதலியவை உள்ளன. நகராட்சியின் பல்வேறு பகுதிகட்கும் உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. கடலூரிலிருந்து தென்னார்க்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகட்கும் வெளி மாவட்டங்கட்கும் பேருந்து வண்டிகள் செல்கின்றன. கடலூரிலிருந்து புதுச்சேரிக்குக் கால்மணி - அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து வண்டி செல்கிறது.
இவ்வசதிகளேயன்றி, ஒரு மாவட்டத்தின் தலைநகரில் இருக்க வேண்டிய அரசு அலுவலகங்கள் - நிலையங்கள் அத்தனையும் கடலூரில் அமைந்துள்ளன. கடலூர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகர் என்பது நினைவு கூரத்தக்கது.
வரலாறு
பொதுவாகத் தமிழகத்தின் - சிறப்பாகத் தென்னார்க்காடு மாவட்டத்தின் வரலாற்றில் கடலூருக்குப் பெரும்பங்கு உண்டு. தமிழ்நாடு, தமிழருக்கு அல்ல - ஆங்கிலேயர்க்கா அல்லது பிரெஞ்சுக்காரர்க்கா என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம், பதினெட்டாம் நூற்றாண்டில் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தை - சிறப்பாகக் கடலூரை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே நடைபெற்றது. இவ்விரு தரத்தாருக்கிடையே கடலூர்ப் பகுதிகளும் புதுச்சேரிப் பகுதிகளும் பலமுறை கைம்மாறின. இன்றும் கடலூர் வட்டத்தின் இடையிடையே புதுச்சேரி மாநிலத் திட்டுப் பகுதிகள் சிற்சில இருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 1746 தொட்டு 1749 வரை சென்னை பிரெஞ்சுக்காரர் கையில் இருந்தது; அப்போது ஆங்கிலேயர்கள் கடலூரையே தம் தலைநகராகக் கொண்டு செயலாற்றினர். டூப்ளே முதலிய பிரெஞ்சுக்காரர்கள் கடலூரைக் கைப்பற்ற அரும்பாடு பட்டனர்; நடக்கவில்லை. ராபர்ட் கிளைவ் முதலிய ஆங்கிலேயர்கள் உறுதியுடன் கடலூரைக் காத்தனர்.
கடலூர் முதுநகர்ப் பகுதியிலுள்ள கிளைவ் தெரு, இம்பீரியல் ரோடு, வில்லிங்கடன் தெரு, சோனகர் தெரு, பாரீஸ் கார்னர், கொத்த வால் சாவடி முதலியவையும், கடலூரின் ஆட்சிப் பொறுப்பை ஒருவர் பின் ஒருவராய் ஏற்றிருந்த புரூக், லாதம், கம்மிங், கிஞ்சன் ஆகிய ஆங்கிலேயர்களின் பெயர்களைத் தாங்கிக் கடலூர் நகராட்சிக்குள் இருக்கும் புரூக்ஸ் பேட்டை (புருகேஸ் பேட்டை), கம்மிங்ஸ் பேட்டை (கம்மியம் பேட்டை), லாதம்ஸ் பேட்டை (லதாம் பேட்டை), கிஞ்சன் பேட்டை முதலியவையும், செயின்ட் டேவிட் கோட்டையும் கடலூரின் வரலாற்றுக்குச் சான்று பகரும்.
மற்றும், உரிமைப் போராட்டக் காலத்தில் 1921 செப்டம்பரில் ஒரு முறையும் 1927 செப்டம்பரில் ஒரு முறையும் காந்தியடிகளாரவர்கள் கடலூருக்கு வந்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பாகும். 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளை விட்டு ஏழாம் நூற்றாண்டிற்குச் செல்வோமானால், மிகப் பெரும் புகழ் பெற்றிருந்த ‘பாடலிபுத்திரம்’ என்னும் சமணர்களின் தலைமையிருப்பிடத்தைக் கடலூர்ப் பகுதியில் மனக்கண் முன் காணலாம். திருநாவுக்கரசர் ’தரும சேனர்’ என்னும் தலைமைப் பட்டத்துடன் சமணர்களின் தலைவராய்த் திகழ்ந்ததும் இந்தக் கடலூர்ப் பகுதியில்தான்! சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதால் கல்லிலே கட்டிக் கடலிலே போட அவர் தப்பிப் பிழைத்துக் கரையேறியதும் இந்தக் கடலூர்ப் பகுதியில்தான்! மற்றும், தன் துறைமுகத்தின் வழியாய் நடந்த வாணிகத்தின் வாயிலாகப் பல்லாயிரம் ஆண்டு காலமாக உலகின் பல்வேறு நாடுகட்கும் கடலூர் அறிமுகமாகியிருந்தது என்று சொன்னால் மிகையாகாது.
பெயர்ச் சிறப்பு
பெயரமைப்பும் கடலூரின் பெருமையைப் பறைசாற்றி அறிவிக்கிறது. கடலூர் என்பது குறிப்பிட்ட ஏதோ ஒர் ஊரின் பெயரன்று; பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெரு நகராட்சித் தொகுப்பிற்குச் சென்னை என்னும் பெயர் சூட்டப்பட்டிருப்பது போல, பல ஊர்கள் சேர்ந்த ஒரு நகராட்சித் தொகுப்பிற்குக் கடலூர் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இந்தக் கடலூர்த் தொகுப்பில் மிகப் பழைமையும் பெருமையும் உடைய பெரிய பகுதிகளாகக் கருதப்படுபவை திருப்பாதிரிப் புலியூர், கூடலூர் என்னும் இரண்டுமேயாகும். இவற்றுள், திருப்பாதிரிப் புலியூர் திருக்கோயிற் சிறப்பால் பெயர் பெற்றது; கூடலூர் தொழில் - வாணிகத் - துறைமுகச் சிறப்பால் பெயர் பெற்றது. இந்நிலையில், பன்னெடுங்காலமாக இப் பகுதிக்கு வந்துபோன வெளிநாட்டாரை, கோயில் சிறப்புடைய திருப்பாதிரிப்புலியூர் கவர்ந்திருக்க முடியாது; தொழில் வாணிகத் துறைமுகச் சிறப்புடைய கூடலூரே கவர்ந்திருக்க முடியும்; எனவே, அவர்கள் இந்த வட்டாரத்தைக் கூடலூர் என்னும் பெயராலேயே அழைத்திருப்பார்கள் - கூடலூர் என்னும் பெயர்தான் அவர்கட்குத் தெரிந்திருக்கும்.
இந் நிலையில் கூடலூர் என்னும் பெயர் ஐரோப்பியர்களின் வாய்களில் புகுந்து கடலூர் என மறுபிறவி எடுத்திருக்கக்கூடும். கடலூர் என்னும் பெயர் ஆங்கிலத்தில் Caddalore’ என, ‘க’ என்னும் முதலெழுத்தைக் குறிக்க Ca’ போட்டு எழுதப்படாமல், ‘Cuddalore” என, “க” என்னும் முதலெழுத்தைக் குறிக்க Cu’ போட்டு எழுதப்படுவது ஈண்டு ஆராய்ச்சிக்குரியது. Cu’ போட்டு கூடலூர் என்று எழுதியிருந்ததைக் கடலூர்’ என்று படித்து விட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘cut என்னும் சொல்லைக் ‘குட்’ என்று சொல்லாமல் ‘கட் என்று சொல்வது போல் இது நடந்து விட்டிருக்கிறது. ‘புதுச்சேரி என்பது பாண்டிச்சேரி” என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட கதையும் இது போன்ற எழுத்து மாற்றத்தால் ஏற்பட்ட வினையேயாகும். கூடலூர் என்னும் பெயர்தான் பழைய பெயர்: கடலூர் என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட புதிய பெயரே.
கடலூர் நகராட்சி மூன்று பெரும் பிரிவுகளை உடையது; அவை; திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம், கூடலூர் என்பன. கடற்கரையிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டைப் பகுதியை ஒரு தனிப் பிரிவாகக் கொண்டு கடலூர் நகராட்சியை நான்கு பிரிவாகக் கூறுவதும் உண்டு. இவற்றுள் திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், கோட்டைப் பகுதி ஆகிய மூன்றும் நகராட்சியின் வடபகுதியில் உள்ளன; இப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் நகராட்சியின் தென்பகுதியில் கூடலூர் உள்ளது. தெற்கேயுள்ள கூடலூர்ப் பகுதியைக் கடலூர் முதுநகர் - Cuddalore Old Town என்றும், வடக்கேயுள்ள திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், கோட்டைப்பகுதி ஆகியவற்றை இணைத்துக் கடலூர்ப் புதுநகர் - Cuddalore New Town என்றும் அழைக்கின்றனர். Old Town என்பதைச் சுருக்கி O.T. என்றும், New Town என்பதைச் சுருக்கி N.T. என்றும் மக்கள் அழைக்கின்றனர். ஓ.டி. என்.டி. என்று குறிப்பிடுவதுதான் இப்போது பெருவாரியான வழக்காக இருக்கிறது.
முதுநகரில் கூடலூரைத் தவிர வேறு சிறப்புப் பிரிவு கிடையாது. புதுநகரில், திருப்பாதிரிப் புலியூர் நகராட்சியின் மேற்கே இருக்கிறது; செயின்ட் டேவிட் கோட்டைப் பகுதி நகராட்சியின் கிழக்கே கடற்கரையோரமாக இருக்கிறது; இடையிலே மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதி உள்ளது. திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்கும் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்கும் நடுவே கெடிலம் ஆறு ஒடுகிறது. கெடிலத்தின் குறுக்கே ஒரு நல்ல பாலம் இருக்கிறது. அதன் பக்கத்திலேயே 30 இலட்சம் ரூபாய் செலவில் இப்போது மற்றொரு பாலம் கட்டப்படுகிறது. மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியில், மஞ்சக் குப்பம் வடக்கிலும் புதுப்பாளையம் தெற்கிலுமாக உள்ளன. மஞ்சக் குப்பத்திற்கும் புதுப்பாளையத்திற்கும் நடுவே பெருவெளித்திடல் (கடலூர் மைதானம்) இருந்து கொண்டு இரண்டையும் பிரிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையலுவலகங்கள் பெரும்பாலன மஞ்சக் குப்பத்தில்தான் உள்ளன; அதனால், தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மஞ்சக் குப்பம் ஜில்லா’ எனப் பொது மக்கள் அழைப்பதுண்டு. கடலூரின் பெரிய கடைத் தெருவும் நகர்ப் புகை வண்டி நிலையமும் பேருந்து வண்டி (பஸ்) நிலையமும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியில் உள்ளன; பாடல் பெற்ற சிவன் கோயிலும் ஞானியார் மடமும் இங்கேதான் உள்ளன. எனவே, முதுநகர்ப் பகுதியைக் காட்டிலும் புதுநகர்ப் பகுதிகள்தாம் பொது மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றன.
கடலூர் என்னும் பெயரைப் போலவே முதுநகர் - புதுநகர் என்னும் வழக்கும் கூடலூரை மையமாகக் கொண்டே எழுந்துள்ளது. துறைமுகத்தாலும் தொழில் வாணிகத்தாலும் வெளிநாட்டாரின் உள்ளங்களைக் கவர்ந்த பழைய நகரம் கூடலூர்தான் என்பது ஒரு புறம் இருக்க, தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையலுவலகங்கள் பெரும்பாலன தொடக்கத்தில் கூடலூரில்தான் இருந்தன; 1866 ஆம் ஆண்டிற்குப் பின்னரே புது நகராகிய மஞ்சக் குப்பம் பகுதிக்குச் சென்றன. மாவட்ட முதல்வரின் (கலெக்டரின்) அலுவலகங்கூட 1802 ஆம் ஆண்டு வரைக்கும் கூடலூரில்தான் இருந்தது; பின்னரே மஞ்சக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது. இப்போது மஞ்சக்குப்பம் பகுதியில் தலைமையலுவலகங்கள் வைத்திருக்கும் கடலூர் நகராண்மைக் கழகம் 1866 ஆம் ஆண்டு கூடலூரில் தான் தொடங்கப் பெற்றது. இதைக் கொண்டு, தொடக்கத்தில் கூடலூர்தான் விரிவும் விளம்பரமும் பெற்றிருந்தது என அறியலாம். இதனால்தான், கடலூர் என்னும் பெயரும் முதுநகர் - புதுநகர் என்னும் வழக்கும் கூடலூரை மையமாகக் கொண்டு எழுந்தன.
தொடக்கத்தில் கூடலூர் மையம் பெற்றிருந்ததற்குக் காரணம், அது துறைமுக நகரமாயிருந்ததுதான். பின்னர்ப் புதுநகர்ப் பகுதி உருவாகிப் பெருமை பெற்றதற்குக் காரணம், ஆங்கிலேயர்கள் புதுநகர்ப் பகுதியில் செயின்ட் டேவிட் கோட்டை கட்டி அதைத் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்தமைதான்! இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டே மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதி உருவாகிப் பெருவளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது. ஆனால், திருப்பாதிரிப் புலியூரும் புதுநகர்ப் பகுதியில் இன்று சேர்க்கப்பட்டிருந்தாலும், அது கூடலூரைப் போலவே பழைய நகர்தான். இருப்பினும், முதலில் தலைநகர்த் தகுதி பெற்றிருந்த பழைய நகராகிய கூடலூருக்கு எதிர்த்திசையில் - 4 கி.மீ. தொலைவில் புதிய புதுநகராகிய மஞ்சக்குப்பம் - புதுப் பாளையம் பகுதியோடு இணைந்திருத்தலின் திருப்பாதிரிப் புலியூரும் நடைமுறை வசதிக்காகப் புதுநகர் என அழைக்கப்பட்டு வருகிறது. நாம் திருப்பாதிரிப் புலியூரைப் பழைய புதுநகர் எனக் கூறலாம். கடலூரின் பெரிய கடைத்தெரு திருப்பாதிரிப் புலியூரில் உருவாகியிருப்பதற்குக் காரணம், இங்கே பாடல் பெற்ற பழம்பெருஞ் சிவன் கோயிலும், புதுப்பெரும் புகைவண்டி நிலையமும் பேருந்து வண்டி நிலையமும் இருப்பதுதான்! இதிலிருந்து, பழம்புது நகராகிய திருப்பாதிரிப் புலியூரின் பழைமையினையும் புதுமையினையும் ஒருசேர உணரலாம்.
இதுகாறுங் கூறிய விரிவான விளக்கத்திலிருந்து, கடலூர் என்னும் பெயர் கூடலூர் என்னும் பெயரிலிருந்து பிறந்ததே என்பது தெற்றென விளங்கும். ஆனால், கடலை அடுத்துள்ள ஊர் கடலூர் எனக் காரண இடுகுறிப் பெயராக இப்பெயர் ஏற்பட்டது என ஒருவகைப் பெயர்க் காரணம் சொல்லப் படலாம் - சொல்லப்படலாம் என்ன - சிலர் சொல்லவுஞ் செய்கின்றனர். கடலூர் என்னும் பெயர் மிகவும் பிற்பட்ட அண்மைக் காலத்தில் ஏற்பட்ட பெயராதலின் இக் காரணம் பொருந்தாது. அங்ங்னமே பொருந்தினும், கடலை அடுத்துள்ள ஊர் கூடலூர்தான்; திருப்பாதிரிப் புலியூரும் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியும் கடற்கரைக்கு மேற்கே இரண்டு - மூன்று கி.மீ. தொலைவு தள்ளியிருத்தலின், கடலூர் என்னும் பெயர் கூடலூருக்கே மிகவும் பொருந்தும். மற்றும் சிலர், ‘கெடிலம்’ என்னும் ஆற்றுப் பெயரை ‘கடிலம்’ என்றாக்கிக் கடிலத்திற்கும் கடலூருக்கம் ஒருவகை முடிச்சுப்போட முயல்கின்றனர். இந்தப் பெயர்க் காரணம், நூற்றுக்கு ஒரு விழுக்காடுகூடப் பொருந்தாது. எனவே, கடலூர் என்னும் சேயின் தாய் கூடலூரே என்பது முற்ற முடிந்த முடிபு. அங்ஙனமாயின், கூடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதன் காரணம் என்ன?
கூடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதன் காரணம், இந்நூலில் ‘கெடிலத்தின் முடிவு’ என்னும் தலைப்பில் படத்துடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கூடலூரில் நான்கு கூடல்கள் நிகழ்கின்றன; அவை: (1) கெடிலத்தின் தென் கிளையாகிய உப்பனாறு கடலோடு கூடும் கடல்; (2) சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவனாறு என்னும் ஒர் உப்பாறு வந்து கடலோடு கூடும் கூடல்; (3) கெடிலத்தின் கிளையாகிய உப்பனாறும் பரவனாறும் தமக்குள் கூடிக் கொள்ளும் கூடல்; (4) உப்பனாறும் பரவனாறும் இணைந்தபடியே கடலோடு கூடும் கடல் என நான்கு கூடல்கள் இங்கே நடைபெறுகின்றன. சுருங்கக் கூறின், இந் நான்கு கூடல்களும் ஒரே கூடலாகி விடுகின்றன. அஃதாவது, உப்பனாறும் பரவனாறும் கூடலூருக்கு அருகில் ஒரே இடத்தில் தமக்குள் இணைந்தபடியே கடலோடு கூடுகின்றன. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் இரண்டு ஆறுகள் குறிப்பிட்ட ஒரே இடத்தில் தமக்குள் இணைந்தபடியே கடலோடு கூடுவது உலக வியப்புகளுள் ஒன்றல்லவா? இதனால்தான், இந்த வியத்தகு கூடல், கூடலூர் என்னும் பெயர் ஏற்படுவதற்குக் காணமாயிருந்தது. இப்போது கூடலூர் மறைந்து கடலூராகியுள்ளது. முன்பு ‘கூடலூர் தாலுகா என்று குறிப்பிடப்பட்டது இப்போது ‘கடலூர் தாலுகா எனப்படுகிறது. கால வெள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை யாரே தடுக்க முடியும்?
இனி, கடலூர் நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பகுதிகளுள் இன்றியமையாத சிலவற்றைப் பற்றிய விவரங்களைத் தனித்தனியாகக் காண்பாம்:-
தேயமெல்லாம் நின்றிறைஞ்சும்
திருப்பாதிரிப் புலியூர்
[8]'தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர்” என ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசரால் புகழ்ந்து பாடப்பெற்ற திருப்பாதிரிப் புலியூர், இன்றும் தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூராகவே திகழ்கிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலுக்கும் புகைவண்டி நிலையத்திற்கும் உள்ள இடைவெளி ஒரு ‘பர்லாங்கு’ தொலைவு இருக்கலாம். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயில் (சந்நிதி) தெருவின் முடிவில் புகைவண்டி நிலையம் இருக்கிறது. நிலையத்தில் நிற்கும் புகைவண்டிகளில் இருந்தபடி மேற்கே பார்த்தால் கோபுர வாயில் தெரியும். வண்டியில் இருந்தபடியே மக்கள் கோயிலை நோக்கி வழிபடுவது வழக்கம். தேயத்து மக்களை ஏற்றிக் கொண்டு வரும் புகைவண்டிகள் அங்கே நிற்கின்றன; வழிபாடு நடக்கிறது. இவ்வகையிலும் ‘தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்” என்னும் புகழ்ச்சி பொருந்துகிறது. எனினும், திருநாவுக்கரசர் குறிப்பிட்டிருப்பது, பண்டைக் காலத்தில் பல தேயத்து மக்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்து வழிபட்ட மையையேயாம்! இதிலிருந்து, ஏழாம் நூற்றாண்டிலேயே திருப்பாதிரிப் புலியூர் பல தேயத்து மக்களும் வந்து வணங்கும் அளவுக்குப்பேரும் புகழும் பெற்றிருந்தமை புலனாகும்.
இவ்வூர்ப் புகைவண்டி நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் புகைவண்டிப் பாதையில் உள்ளது. கூடலூரில் புகை வண்டிச் சந்திப்பு நிலையம் (Junction) இருந்தாலும், இவ்வூர் நிலையத்திற்கும் சந்திப்பு நிலையத்தின் தகுதி உண்டு. கூடலூரிலிருந்து புறப்படும் வண்டியும் கூடலூரோடு முடியும் வண்டியும் இவ்வூர் நிலையம்வரை வந்துதான் பின்னர்க் கூடலூருக்குச் செல்லும்.
திருப்பாதிரிப் புலியூர் கெடிலம் ஆற்றின் தெற்குக் கரையில் இருக்கிறதா? - வடக்குக் கரையில் இருக்கிறதா? - கிழக்குக் கரையில் இருக்கிறதா? - மேற்குக் கரையில் இருக்கிறதா? என்று சொல்வது அரிது; நான்கு கரைகளிலும் இருப்பதாகச் சொல்லலாம். பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு கெடிலம் இவ்வூரின் தெற்கே ஓடியது; அப்போது ஆற்றின் வடகரையில் ஊர் இருந்தது; அதனால்தான், அப்போது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் என்னும் நூல் பாடிய தொல்காப்பியத் தேவர்,
‘கடிலமா நதியதன் வடபால்’ (45)
‘மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாலே’ (100)
என்று கூறியுள்ளார். கிழக்கு நோக்கி ஓடிய கெடிலம் பத்தாம் நூற்றாண்டளவில் திருவயிந்திரபுரம் அருகில் வடக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர்த் தெற்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிதுதொலைவு ஓடிக் கடலில் கலக்கிறது. கெடிலத்தின் -ᑨ தலைகீழ்ப் ‘ப’ போன்ற அடைப்புக்கு நடுவில் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. இவ்வகையில் பார்க்குங்கால், ஊரின் மேற்கே மூன்று கி.மீ. தொலைவிலும், வடக்கே அரை கி.மீ. தொலைவிலும், கிழக்கே கால் கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலம் ஊரை ஒரு சுற்று சுற்றிக் கொண்டு ஓடுகிறது எனலாம்.
இப்பகுதியில் அந்தக் காலத்தில் பாதிரிக்காடு நிறைந திருந்ததாலும், புலிக்கால் உடைய புலி முனிவர் (வியாக்ர பாதர்) வழிபாடு செய்ததாலும் ஊருக்குப் பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. புலிக்கால் முனிவர் வழிபட்டது ஒரு புறமிருக்க, பாதிரிக் காட்டில் புலிகளும் இருந்திருக்கலாமல்லவா? இவ்வூர்க் கோயில் மரம் (தல விருட்சம்) பாதிரி என்பது குறிப்பிடத் தக்கது. கோயிலுக்குள் பழங்காலத்தில் இருந்த பாதிரி மரம் ஒன்று பட்டுப்போய் இன்று தகட்டு உறை (கவசம்) போடப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்டு வருகிறது. கோயிலின் மேற்புற வெளித் திருச்சுற்றில் சில பாதிரி மரங்களை இன்றும் காணலாம். வடமொழியில் பாடலம் என்றால் பாதிரி என்பது பொருள்; எனவே, இவ்வூர் பாடலிபுரம், பாடலி நகர் என அழைக்கப்படுவதும் உண்டு. இவ்வூர் இறைவன் பெயர் பாடலேசுரர் (பாடல+ஈசுரர்) என்பதும் குறிப்பிடற்பாலது.
திருப்பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஒரளவு சுருங்கித் திருப்பாப்புலியூர் என்றே இன்று பலராலும் எழுதப்படுகிறது; பேச்சு வழக்கிலோ, திருப்பாப்புலியூர் என்பது மேலும் மேலும் சுருங்கிச் சுருங்கி, திருப்பாலியூர், திருப்பார், திப்பார் என்ற அளவுக்குக் கொச்சையாய் இறங்கி வந்துவிட்டது.
இலக்கியங்களில் இவ்வூருக்குக் கடை ஞாழல், கன்னி வனம், கன்னி காப்பு முதலிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. புலிநகக் கொன்றை என்னும் ஞாழல் மரமும் நிறைந்திருந்ததால் கடைஞாழல் எனவும், இறைவி இவ்வூர் வனத்தில் கன்னியாய் நோன்பியற்றியதால் கன்னி வனம் எனவும் இவ்வூருக்குப் பெயர்கள் ஏற்பட்டனவாம். மற்றும், திருப்பாதிரிப் புலியூர் பாதிரிப் புலியூர் எனவும், புலியூர் எனவும், அதன் மரூஉவாகப் புலிசை எனவும் வழங்கப்படுவதும் உண்டு ‘பாதிராப் புலியூர்’ என்னும் பெயரில் வேறிடங்களிலுள்ள சில ஊர்களினின்றும் திருப்பாதிரிப் புலியூரை வேறு பிரித்துணர வேண்டியது இன்றியமையாததாகும்.
மிக அழகான திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலின் பெயர் பாடலேசுரர் கோயில், இறைவன் பெயர்கள்; தோன்றாத் துணைநாதர், பாடலேசுரர்; இறைவியின் பெயர்கள்; தோகாம்பிகை, பெரிய நாயகி என்பன. இக்கோயிலின் தோற்றத்தை முன்னுள்ள படத்தில் காணலாம்.
கோயிலின் முகப்பிலுள்ள கோபுரமும், கோயிலை ஒட்டியுள்ள திருக்குளமும் படத்தில் தெரிவதைக் காணலாம். சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் தனித்தனியாக உள்ளன. சிவன் கோயிலின் இடப்புறத்தே அஃதாவது வடபுறம் அம்மன் - கோயில் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தனிக்கோபுரவாயில் உண்டு. இரண்டு கோயில்கட்கும் இடையிலும் வழி உண்டு. அம்மன் கோயிலை ஒட்டினாற்போல் அதன் வடபுறத்தே வடக்கு நோக்கியிருக்கும் பிடாரி கோயில் காணத்தக்கது. அம்மன் கோயிலுக்குச் செல்பவர் பிடாரி கோயிலுக்கும் தவறாது செல்வது மரபு.
திருப்பாதிரிப் புலியூர் நாவுக்கரசரின் தேவாரப் பதிகமும் ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகமும் அருணகிரியாரின் திருப்புகழும் பெற்றது. பட்டினத்தாரும் இவ்வூரைப் பாடியுள்ளார். இங்கே சோழர் - பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பல உள்ளன. தொல்காப்பியத் தேவர் இவ்வூர்மேல் கலம்பகமும், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இவ்வூர்மேல் புராணமும் பாடியுள்ளனர். வடமொழியிலும் இவ்வூருக்குப் புராணம் உண்டு. முயலுருப்பெற்றிருந்த மங்கணமுனிவர் நற்பேறு பெற்றது முதலான செய்திகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
இவ்வூரைச் சார்ந்திருந்த பாடலி புத்திரம் என்னும் இடம் பண்டு சமணர்களின் தலைமையகமாய் விளங்கியது; நாவுக்கரசர் தொடக்கத்தில் ‘தருமசேனர்’ என்னும் பட்டப் பெயருடன் சமணர் தலைவராய் விளங்கியது இந்தப் பகுதியில்தான். சைவராக மாறிய அவரைச் சமணர்கள் கல்லிலே கட்டிக் கடலிலே போட, அவர் கரையேறி வந்து திருப்பாதிரிப் புலியூர் இறைவன்மேல் ‘ஈன்றாளுமாய் என்னும் பதிகம் பாடி வழிபட்டார். மிகச் சிறந்த இப்பதிகத்தின் நான்காம் பாடலில்தான், ‘தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர் மேய நல்லான்’ என அவர் பாடியுள்ளார். நாவுக்கரசர் சைவத்திலிருந்து சமணத்திற்கு வந்தது. மீண்டும் சைவராக மாறியது, அதனால் அவருக்குச் சமணர்கள் இழைத்த கொடுமைகள், அவர் அவற்றினின்றும் தப்பிப் பல்லவ மன்னனையும் சைவராக மாற்றியது முதலிய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘பூம்புலியூர்’ என்னும் பெயருடைய நாடகம் ஒன்று இற்றைக்கு ஏழு அல்லது எட்டு நூற்றாண்டு கட்கு முன்பே நடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
திருப்பாதிரிப் புலியூரின் மேற்கு எல்லையிலுள்ள பெருமாள் கோயிலும், கிழக்கு எல்லையில் கெடிலக் கரையிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலும் குறிப்பிடத் தக்கவை. ஆஞ்சநேயர் கோயிலில், இலங்கைக்குத் தாவுவது போன்ற மிடுக்கான தோற்றத்தில் மிக்கவேலைப்பாட்டுடன் வடிக்கப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலை மிகவும் காணத்தக்கது. இற்றைக்குக் கால் நூற்றாண்டுக்குமுன் மிகப் பெரும் புகழ் பெற்று விளங்கிய ஞானியார் அடிகளாரின் மடம் சிவன் கோயில் தெருவில் உள்ளது.
திருப்பாதிரிப் புலியூரில் வைகாசித் திங்களில் பன்னிரண்டு நாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய வைகாசிப் பருவத்தில் தேரோடும் விழா நடைபெறும். பல ஆண்டுகட்குமுன் இவ்வூரில் இருந்த மிகப் பெரிய தேர் யாராலோ கொளுத்தப்பட்டுவிட்டது. திருவிழாவின் ஆறாம் நாள் இரவு வெள்ளித் தேர் விழா நடைபெறும். முழுதும் வெள்ளித் தகடு இட்ட தேரில் மின்விளக்கு ஒப்பனையுடன் இறையுருவம் உலாவருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்விழாவிற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வருவர். கார்த்திகைத் திங்களில் நடைபெறும் வெள்ளி விமான விழாவும் காணத்தக்கது.
கடலூரில் மாசி மகவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருப்பாதிரிப் புலியூர், வண்டிப் பாளையம், திருமாணி குழி, திருவயிந்திரபுரம், திருக்கோவலூர் முதலிய ஊர்களிலிருந்து இறையுருவங்கள் கடலூர்க் கடற்கரைக்குச் சென்று நீராடும். இந்தப் பக்கத்தில் இவ்விழா மிகப் பெரிய விழாவாகும். இவ்விழாவிற்கு நூறாயிரக் கணக்கில் மக்கள் வருவர். இவ்விழாவின் உறுப்பாகப் பலவகைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆண்டு தோறும் தைத் திங்கள் ஐந்தாம் நாளில் பெண்ணையாற்றுத் திருவிழா நடைபெறும் இவ்வூர் இறையுருவமும் இன்னும் பல ஊர் இறையுருவங்களும் பாகூருக்கு நேரேயுள்ள பெண்ணையாற்றங் கரைக்கு எழுந்தருளும். தைத் திங்களிலேயே இரதசப்தமியன்று ஒரு முறை வில்வராய நத்தத்திற்கு அடுத்தாற் போலுள்ள பெண்ணை யாற்றங்கரைக்கு இறையுருவங்கள் செல்லும், தைத் திங்களிலேயே அமாவாசை நாளன்று இறையுருவங்கள் கடலுக்குச் சென்று வரும். ஆனிப் பருவத்தில் பாடலேசுரர் காராமணிக்குப்பம் அருகிலுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கிருந்து கெடிலத்திற்குச் சென்று நீராடும் விழா நடைபெறும்.
பாடலேசுரர் ஆண்டிற்கு இருமுறை கரையேற விட்ட நகர் என்னும் வண்டிப்பாளையத்திற்கு எழுந்தருளுவார்; அந்நாட்கள். அப்பர் கரையேறிய சித்திரை அனுடம், வண்டிப்பாளையம் பங்குனிப் பெருவிழாவின் ஆறாம் நாள் ஆகியவை. பாடலேசுரர் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் புரிந்துள்ள அரும்பெரும் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கன.
திருப்பாதிரிப் புலியூர் திருக்கோயிலால் மட்டுமன்றிக் கடைத் தெருவாலும் கடலூரில் இன்றியமையாமை பெற்றுள்ளது. மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதியில் உள்ளவர்களும் பிற பகுதியினரும் இன்றியமையாப் பொருள் வாங்குவதற்கு இங்கேதான் வருவர். கடைத்தெரு, புகைவண்டி நிலையம், பேருந்து வண்டி நிலையம் ஆகியவை அடுப்புக் கூட்டியதுபோல் அண்மையில் உள்ளன. இத்தகு சூழ்நிலையால் கடைத்தெரு எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.
இவ்வூரில் மருத்துவமனைகள் இரண்டும், பெண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஒன்றும், பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும், ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் திரைப்படக் கொட்டகைகள் இரண்டும் உள்ளன. இவ்வூரில் உள்ள ‘முத்தையா ஹால்’ என்னும் திரைப்படக் கொட்டகை முன்பு நாடக அரங்காக இருந்தது. அன்று தமிழகத்திலேயே முத்தையா ஹால்தான் மிகப் பெரிய நாடக மாளிகை என்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் கேள்விட்டிருக்கிறேன்.
கம்மியன் பேட்டை
1778ஆம் ஆண்டு கடலூரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ‘வில்லியம் கம்மிங்’ (Wills cuming) என்பவர் பெயரால் ஏற்பட்டது கமிங்ஸ்பேட்டை. இஃது இப்போது கம்மியன் பேட்டை என வழங்கப்படுகிறது. இவ்வூர் 1798 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் அழிக்கப்பட்டது, அப்போது அங்கிருந்த நெசவாளர் குடும்பங்கள் வெளியேறிவிட்டனவாம். கம்மியன் பேட்டை திருப்பாதிரிப் புலியூரை ஒட்டி வடபால் உள்ளது: இரண்டிற்கும் இடையே புகைவண்டிப் பாதை செல்கிறது. திருப்பாதிரிப் புலியூர் நகருக்குள் இருந்த அர்ச்சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி அண்மையில் சில ஆண்டுகட்குமுன் கம்மியன் பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. கம்மியன் பேட்டையின் வடக்கு எல்லையில் கெடிலம் ஓடுகிறது,
பாடலி புத்திரம்
பாடலி புத்திரம் என்னும் ஊர் ஒன்று இருந்ததாகப் பெரிய புராணத்தால் தெரிய வருகிறது. ‘பாடலம் என்றால் பாதிரி, பாடலி புத்திரம் என்றால் பாதிரி மரம் நிறைந்த இடம்; எனவே, திருப்பாதிரிப் புலியூரைக் குறிக்கும் வட மொழிப் பெயர்தான் ‘பாடலி புத்திரம்’ எனப் பலரும் கூறுகின்றனர். பாடலி புத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? இந்த ஐய வினாவிற்குப் பெரிய புராணத்திலேயே விடை இருக்கிறது. இந்த இரண்டு இடப் பெயர்களையும் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் தனித்தனிச் சூழ்நிலையில் தனித்தனியாகக் கூறியுள்ளார். இதைக் கொண்டே இரண்டையும் வெவ்வேறாகத் துணியலாம்.
திருவாமூரில் திலகவதியாரின் தம்பியாகப் பிறந்த திருநாவுக்கரசர் இளமையில் பெற்றோரை இழந்தபின், பாடலிபுத்திரம் என்னும் ஊரை யடைந்து சமண மதத்தில் சேர்ந்து பெரிய தலைவராகத் திகழ்ந்தார். இதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்:
[9]“பாடலிபுத் திரமென்னும் பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார்”
“அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானவெலாம்
பொங்குமுணர் வுறப்பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுழு உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வாரவர்க்குத்
தங்களின்மே லாந்தரும சேனர்எனும் பெயர்கொடுத்தார்”
‘அத்துறையின் மீக்கூரும் அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண்
உய்த்தஉணர் வினில்வென்றே உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத் தலைமையினில் மேம்பட்டார்.”
மேலே முதல் பாடலின் தொடக்கத்திலுள்ள ‘பாடலி புத்திரம் என்னும் பதி’ என்னும் தொடரைக் காணுங்கால், பாடலிபுத்திரம் ஒரு தனி ஊராக இருந்தமை புலனாகும். மற்றும், அங்கே சமணமதத் தலைமையகம் இருந்தமையும், அங்கே சமணமதக் கலைகள் பல பயிற்றப் பட்டமையும், திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் தலைமை தாங்கியிருந்தமையும் பாடல்களால் அறியப்படுகின்றன. பாடலிபுத்திரத்தில் சமணமதத்தின் தலைமையகம் ஒன்று இருந்ததென்றால், அங்கே பல கலைகள் பயிற்றப்பட்டன என்றால், அங்கே பெருந்தலைவர் ஒருவர் தலைமை தாங்கியிருந்தார் என்றால், அப்பாடலிபுத்திரம் ஒரு சிற்றூராக இருந்திருக்க முடியாது; ஒரு பேரூராகவே இருந்திருக்க வேண்டும்.
சமண நூல்களைக் கொண்டு பார்க்கும் போதும், பாடலி புத்திரம் அன்று பெற்றிந்த பெருமை புலனாகிறது. இவ்வூர் மூன்றாம் நூற்றாண்டிலேயே சமணர்களின் சிறப்பிடமாய்த் திகழ்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி, சரவ நந்தி முதலிய சமணப் பெரியார்கள் இங்கே தங்கியிருந்தனர். சரவ நந்தியானவர் சிம்ம நந்தியின் உலோக விபாகத்தைப் புகழ்ந்து நூல் எழுதியது பாடலிபுத்திரத்தில்தான்! ஏழாம் நூற்றாண்டு வரையும் பாடலி புத்திரம் மிகச் சிறப்புற்றிருந்தது.
இங்கே சமணர்க்குத் தலைமை தாங்கியிருந்த நாவுக்கரசருக்குச் சூலைநோய் உண்டாக, அவர் தம் தமக்கை திலகவதியாரின் துண்டுதலால் சமணர்க்குத் தெரியாமல் இரவோடிரவாகப் பாடலிபுத்திரத்தினின்றும் புறப்பட்டுத் திருவதிகை போய்ச் சேர்ந்தார். இதனைச் சேக்கிழார்,
[10]பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 61.“பொய் தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய் தருவான் நெறியடைவார்
வெண் புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்”
என்னும் பாடலில் தெரிவித்துள்ளார். இப்பாடலில் ‘சமணர் இடம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாடலிபுத்திரமாகும். பாடலிபுத்திரத்திலிருந்து சமணர்க்குத் தெரியாமல் நாவுக்கரசர் ஒரே இரவில் திருவதிகை சென்று விட்டார் என்பது இப் பாடலால் புலனாகிறது. யாருக்கும் தெரியாமல் இரவில் புறப்படுபவர் முன்னிரவில் புறப்பட்டிருக்க முடியாது. எல்லாரும் படுத்த பிறகு இரபு பத்து அல்லது பதினொரு மணிக்கு மேல்தான் புறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு புறப்பட்டவர் விடிவதற்குள் திருவதிகையை அடைந்திருக்க வேண்டும். தெரியாமல் செல்பவர்கள் விரைவாக நடப்பது இயற்கையென்றாலும் சூலைநோய் (வயிற்றுநோய்) கொண்டிருந்ததால் நாவுக்கரசர் ஒரளவு மெதுவாக நடந்து சென்றிருப்பார். எனவே, ஒரு வயிற்று நோய்க்காரன் நள்ளிரவில் புறப்பட்டு விடிவதற்குள் சென்றடையக் கூடிய தொலைவிலேயே திருவதிகை இருந்தது என்பதும் இப் பாட்டிலிருந்து உய்த்துணரப்படலாம். அங்ங்னமெனில், திருவதிகையிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. (12 மைல்) தொலைவில் பாடலிபுத்திரம் இருந்திருக்கலாம் என்று கொள்ளலாம். இந்தக் கருத்தை நினைவில் இருத்தி அடுத்த கருத்துக்குச் செல்வாம். நாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதையறிந்த சமணர்கள் பொறாது துடிப்பதைச் சேக்கிழார் பின்வரும் பாடலால் தெரிவிக்கிறார்:
[11]“இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை எய்தி
மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய்”
இப்பாடலிலுள்ள “தொன்மையின் பாடலிபுத்திரநகர்” என்னும் பகுதியால், பாடலிபுத்திரம் மிகவும் தொன்மை வாய்ந்தது எனவும், ஒரு நகரம் எனவும் அறியலாம்.
‘நாவுக்கரசருக்குப் பல தொல்லைகள் தந்த சமணர்கள் இறுதியாக அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டனர். அவர் தப்பித்துக் கொண்டு திருப்பாதிரிப் புலியூர்ப் பக்கத்தில் கரையேறினார்; பின்னர்த் திருப்பாதிரிப் புலியூரை அடைந்து சிவபெருமானை வழிபட்டார்’ என்று சேக்கிழார் பாடியுள்ளார்; பாடல்கள்;
[12]“வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந்த தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்"
தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி விளங்கப் பாடுவார்."
இப் பாடல்களில், நாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூர்ப் பக்கத்தில் கரையேறியதாகவும், திருப்பாதிரிப் புலியூரில் சிவனை வழிபட்டதாகவும் சேக்கிழார் கூறியிருக்கிறாரேயொழிய, பாடலிபுத்திரத்தின் பக்கத்தில் கரையேறியதாகவோ பாடலி புத்திரத்தில் சிவனை வழிபட்டதாகவோ கூறவில்லை. இதைக் கொண்டு, பாடலிபுத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் வெவ்வே றானவை என்பது சேக்கிழார் கருத்து என உய்த்துணரலாம்.
அடுத்தபடியாக, சமணரைவென்ற நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்மப் பல்லவன், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக் கோயில், மடம் முதலியவற்றை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் ‘குணபரேச் சரம்’ என்னும் சிவன்கோயில் கட்டியதாகச் சேக்கிழார் பாடியுள்ளார்:
[13]"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித் துக்கொணர்ந்து குணபரஈச் சரம்எடுத்தான்
என்பது பாடல். இப் பாடலால் பாடலிபுத்திரம் பல்லவ மன்னனால் அழிக்கப்பட்டது என்பது புலனாகும். முற்காலப் பல்லவர்கள் ஆட்சி தொடங்கிய மூன்றாம் நாற்றாண்டிலிருந்து சிறப்புற்று விளங்கிய பாடலிபுத்திரம், ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திரவர்மப் பல்வன் ஆட்சியில் வீழ்ச்சியுற்றது.
இதுகாறுங் கூறி வந்த பெரிய புராண இலக்கியச் சான்றுகளைக் கொண்டு, ‘சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் கொண்டிருந்த பாடலிபுத்திரம் வேறு; சிவன் கோயிலைக் கொண்ட திருப்பாதிரிப் புலியூர் வேறு; இக் காலத்தில் ஆராய்ச்சியாளர் பலரும் தெரிவிப்பதுபோல் இரண்டும் ஒன்றல்ல’ - என்னுங் கருத்து தெள்ளத் தெளிய உறுதிப்படும். அப்படி இரண்டும் வெவ்வேறானவை என்றால், பாடலிபுத்திரம் அன்று எங்கே யிருந்தது? என்ற வினா எழும். இதற்கு விடை காணவேண்டும்.
சூலைநோய் கொண்டிருந்த நாவுக்கரசர் நள்ளிரவு அளவில் பாடலிபுத்திரத்தில் புறப்பட்டு விடிவதற்குள் திருவதிகை அடைந்ததாகத் தெரிவதால், திருவதிகையிலிருந்து பாடலி புத்திரம் 20 கி.மீ (12 மைல்) தொலைவில் இருந்திருக்கலாம் என்று முன்பு (பக்கம் - 377} கணித்தோம். மற்றும், மகேந்திர வர்மப் பல்லவன் பாடலிபுத்திரத்துப் பாழிகளையும் பள்ளி களையும் இடித்துக் கொண்டுபோய்த் திருவதிகையில் குணபரேச்சரம் என்னும் கோயில் கட்டினானென்றால், கருங்கற் பொருள்ளை நெடுங் தொலைவு இழுத்துக் கொண்டு போகாமல், 20 அல்லது 25 கி.மீ. தொலைவிலேயே சிவன் கோயில் கட்டினான் என்று கொள்ளலாம். இவ்வாறெல்லாம் தொலவைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, திருவதிகைக்கு 20 அல்லது 25 கி.மீ தொலைவில் சிறப்புற்றிருந்த இடமாகவும், பாடலம் என்னும் பாதிரி மரம் நிறைந்திருந்த இடமாகவும் அறியக் கிடப்பது, கிழக்கேயுள்ள திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியைத் தவிர, வேறு எந்தத் திக்கிலும் வேறு எந்த இடமும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியென்றால் பாடலி புத்திரமும் பாதிரிப் புலியூரும் ஒன்றா என்றால் இல்லையில்லை; பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் பாடலி புத்திரம் ஒரு தனிப் பகுதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இவ்விரண்டையும் தனித்தனி நகராகச் சேக்கிழார் குறிப்பிட்டிருப்பதை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்தவர்கள், புகழ்பெற்ற இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிறித்துவக் கோயில் (சர்ச்) எழுப்ப முயன்றதும், அம்முயற்சியில் சில இடங்களில் வெற்றி பெற்றதும் சில இடங்களில் தோல்வியடைந்ததும் நாடறிந்த உண்மை. எடுத்தக்காட்டாக, - தென்னார்க்காடு மாவட்டத்தில் மயிலம் மலைமேல் உள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. கோயில் உள்ள குன்றுக்குப் பக்கத்தில் இணைப்பாக மற்றொரு குன்று உள்ளது; அந்த வெற்றுக் குன்றில் மாதாகோயில் (சர்ச்) ஒன்று கட்டுவதற்காக ஐரோப்பியர் ஆட்சியில் கிறித்துவ மதத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றனராம்; முடியவில்லை. மதம் பரப்ப முயல்வோருக்கு இது வழக்கம் என்பதை அறிவிப்பதற்காக இங்கே இஃது எடுத்துக் காட்டப்பட்டது.
இதுபோலவே, பண்டு சமண சமயத்தைப் பரப்ப முயன்ற சமணர்கள், சைவசமயத்திற்குச் சிறப்பிடமாய்த் (முக்கிய கேந்திரமாய்த் திகழ்ந்த திருப்பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் சமணசமயத்திற்குச் சிறப்பிடம் அமைக்க முனைந்தனர்; அதன் பயனாய் உருவானதே பாடலிபுத்திரம். அங்ஙனமெனில், திருப் பாதிரிப் புலியூருக்கு நேர் வடக்கே 5 கி.மீ தொலைவிலுள்ளதும் பண்டு பெரிய வடமொழிப் பல்கலைக்கழகம் திகழ்ந்ததுமான பாகூர் பாடலிபுத்திரமாக இருந்திருக்கலாமோ எனில், இல்லை, பாகூருக்குப் பாதிரிமரத் தொடர்பு இல்லை; மற்றும், ஏழாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரம் மகேந்திரவர்மப் பல்லவனால் கலைக்கப்பட்டுவிட்டது; பாகூரோ ஒன்பதாம் நூற்றாண்டிலும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. பாகூர் வட மொழிப் பல்கலைக்கழகத்திற்கு ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்க வர்மப் பல்லவன் மூன்று சிற்றார்களை அளித்த செய்தி அறியப்பட்டுள்ளது. எனவே, ஏழாம் நூற்றாண்டிலேயே வீழ்ச்சியடைந்துவிட்ட பாடலிபுத்திரம் பாகூர் அன்று.
திருப்பாதிரிப்புலியூரினும் வேறாகச் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ள பாடலிபுத்திர நகரம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் தனியாக இருந்தது என்று உய்த்துணர வாய்ப்பிருக்கிறது. திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் ‘பாதிரிக்குப்பம்’ என்னும் சிற்றூர் ஒன்று இப்போதும் உள்ளது. இவ்வூர், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் திருப்பாதிரிப் புலியூருக்கும் திருவயிந்திரபுரத்திற்கும் நடுவில் உள்ளது. இந்தப் பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில்தான் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும். இதற்குச் சான்றுகள் இல்லாமற் போகவில்லை; அவையாவன:
{1} பாதிரிக்குப்பத்திற்கும் திருவதிகைக்கும் ஏறக்குறைய 20 கி.மீ. தொலவுதான் இருக்கும். சூலை நோய் கொண்டிருந்த நாவுக்கரசர் இந்தப் பகுதியில் நள்ளிரவில் புறப்பட்டுப் பையப் பைய நடந்திருப்பினும் விடிவதற்குள் திருவதிகை சென்றடைந்து விட்டிருக்க முடியும். இந்த இரண்டு ஊர்களும் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
(2) அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் நிறைந்திருந்ததால் பாதிரிக்குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. பாடலிபுத்தரம் என்றாலும் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் என்பதுதான் பொருள்; எனவே, பெயர்க்காரணத்தாலும் இந்தக் கருத்து பொருத்தமானது என்பது புலப்படும்.
(3) இந்த நூலில் கெடிலத்தின் திசை மாற்றம், கெடிலத்தின் தொன்மை என்னும் தலைப்புகளில் பாதிரிக் குப்பம் முத்தால் நாயடு என்னும் முதியவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். கெடிலம் முற்காலத்தில் வண்டிப் பாளையம் அருகே ஓடியதாகவும், அந்தப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது அடியில் கல்மரத் துண்டுகள் (Wood Fossil) அகப்பட்டதாகவும் முதியவர் முத்தால் நாயடு கூறியதாக அத் தலைப்புகளில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. முதியவர் முத்தால் நாயடுவிடம் நான் மேலும் சில வினவினேன்.
நான் : இந்த ஊருக்குப் பாதிரிக் குப்பம் என்று ஏன் பெயர்வந்தது? -
முதியவர் : அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந் திருந்ததால் பாதிரிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டதாகச் :::சொல்லுகிறார்கள்.
நான் : பழைய காலத்தில் இந்த ஊருக்கு என்ன பெருமை இருந்தது?
முதியவர் : என்ன பெருமை - ஒன்றும் தெரியவில்லையே!
நான் : கோயில் குளம் - அப்படி - இப்படி என்று ஒன்றும் பெருமை இருக்கவில்லையா?
முதியவர் : ஒ, அதுவா! ஏதோ கோயில் குடிக்காடு ஒரு காலத்தில் இருந்ததாகவும், அப்புறம் அழிந்து போய் :::விட்டதாகவும் சொல்கேள்வி.
நான் : என்ன கோயில் என்று தெரியுமா?
முதியவர் : தெரியாது.
நான் : சிவன் கோயிலா? பெருமாள் கோயிலா?
முதியவர் : நம்ம சாமி கோயில் இல்லை; வேறு சாமி கோயிலாம்.
நான் : வேறு சாமி கோயில் என்றால்...?
முதியவர் : ஏதாவது கிறித்தவர் கோயிலாயிருக்கும்.
நான் : கிறித்தவர் கோயில் என்றால், இங்கே யாராவது கிறித்தவப் பாதிரிமார்கள் இருந்திருப்பார்களா? அதனால்தான் இவ்வூருக்குப் பாதிரிக் குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதா? அல்லது நீங்கள் முதலில் சொன்னவாறு பாதிரிமரம் இருந்ததால் இப் பெயர் ஏற்பட்டதா?
முதியவர்: ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. இஃது எனக்கும் முதியவருக்கும் இடையே நடந்த வினாவிடை உரையாடல், முதியவர் கிறித்தவக் கோயிலா யிருக்கும் என்று சொன்னது சரியன்று. சமண பௌத்த மதங்களைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதாதலின் கிறித்தவக் கோயிலாயிருக்கலாம் என்று சொன்னார். மேலும், அங்கே கிறித்தவர்கள் இல்லையாதலின் கிறித்தவக் கோயில் எழக்காரணம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சியில் அஃது அழிவதற்குக் காரணம் இல்லை. அன்றியும் பழைய காலத்தில் அங்கே கிறித்தவக் கோயில் ஏற்பட வாய்ப்பில்லை. நான் கேட்டதற்காக, அவர் அறிந்த வேறு மதத்தை அம்முதியவர் குறிப்பிட்டார். சமணத்தைப் பற்றி அவருக்குத் தெரியாது. அழிந்து போன கோயில் குடிக்காடு இந்தப் பகுதியில் எங்கேயிருந்தது என்று நான் கேட்டதற்கு, முதியவர் நெடும் பாதையின் வடக்குப் புறமாகக் கையை நீட்டிக் காட்டினார். இந்த உரையாடல் நமது கருத்துக்கு ஓரளவு துணைபுரிகிறது.
(4) பாதிரிக் குப்பத்திற்கு மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் நெடும்பாதையில் குமரப்ப நாய்க்கன் பேட்டை என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரின் முகப்பில் பாதையோரம் வடபுறமுள்ள ஒரு சத்திரத் தோட்டத்தில் ஒரு சமணச்சிலை மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மேலேயுள்ள படத்தில் காணலாம்.
இந்தப் படம் காலைவேளையில் எடுத்தது. சிலை மேற்கு நோக்கியது; பின்னால் கிழக்குப்புறம் ஞாயிற்றின் ஒளி; அதனால் சிலையின் முகம் தெளிவாக விழவில்லை. சிலையில் முகம் தெளிவாகத்தான் இருக்கிறது. இது குமரப்ப நாய்க்கன் பேட்டையில் இருப்பதால் இதனைப் ‘பேட்டைக் கல்’ என்று சுற்றுவட்டாரத்து மக்கள் அழைக்கின்றனர். மேற்கே சில கி.மீ. தொலைவில் வயலைக் கொத்தி உழுதபோது இந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது சமணச் சிலையேதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தச் சூழ்நிலையை வைத்துக் காணுங்கால்; இந்த வட்டாரத்தில் ஒரு காலத்தில் சமண சமயம் தழைத்துச் செழித்திருந்தமை புலனாகும். .. மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு, பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும் என்றும், பாடலிபுத்திரம் வேறு - பாதிரிப்புலியூர் வேறு என்றும் உய்த்துணரலாம். உண்மை இங்ஙனமிருக்க, இரண்டையும் ஒன்றென ஆராய்ச்சியாளர்கள் கொண்டதற்குக் காரணம், இரண்டும் பக்கத்தில் - பக்கத்தில் இருந்தமையே! மற்றும், பாடலிபுத்திரம் ஒரு பெரு நகரமாக இலக்கியங்களில் படைத்துக் காட்டப்பட்டிருப்பதாலும் - திருப்பாதிரிப் புலியூர் இன்று ஒரு பெருநகரமாகத் திகழ்வதாலும் - அந்த நகரம் இந்த நகரமாகத்தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மயங்கிவிட்டனர். இன்றைய ஆராய்ச்சியாளரையும் அணைத்துக் கொள்ளும் முறையில் இந்தச் சிக்கலுக்குப் பின்வருமாறு கூறித் தீர்வு காணலாம். ‘பண்டு பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் இரட்டை நகரங்களாகத் திகழ்ந்தன’ என்பதுதான் அந்தத் தீர்வு!
பாட்னா - பாடலி புத்திரம்
பாடலிபுத்திரம் என்றதும், ஆராய்ச்சியாளர் பலர்க்கும் மற்றும் ஓர் ஊர் நினைவிற்கு வரும். இன்று பீகார் மாநிலத்தின் தலைநகராயிருக்கும் பாட்னா அன்று பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டது. பாட்னா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து. பழைய பாட்னா - பாடலிபுரத்தின் சிறப்புகள் புலனாகியுள்ளன. அப் பாடலிபுத்திரம், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளிலுமாக 900 ஆண்டுகாலம் மிகவும் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. கி.மு. 320 தொட்டு கி.மு. 185 வரை மௌரியர் ஆட்சியிலும், கி.மு. 185 தொட்டு கி.மு. 73 வரை சுங்கர் ஆட்சியிலும், கி.பி. 320 முதல் கி.பி. 600 வரை குப்தர் ஆட்சியிலும் பெரும் புகழ்பெற்று விளங்கியது.
இந்தப் பாடலி புத்திரம் ‘பாடலி’ என்னும் பெயரில் தமிழ் நூல்களிலும் புகழப்பட்டுள்ளது. படுமரத்து மோசி கீரனார் குறுந்தொகைப் (75) பாடலில்,
"வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயல்”
எனவும், மாமூலனார் அகநானூற்றுப் (265) பாடலில்,
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ"
எனவும், கொங்கவேளிர் பெருங்கதைப் (1-58 - 42) பாடலில்,
'பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்’
எனவும் பாடலியைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இப்புலவர்கள் பாடலி என்று வடநாட்டுப் பாடலிபுத்திரத்தையே குறிப்பிட்டுள்ளனர். பாடலி சோணையாற்றங் கரையில் இருப்பதாகப் படுமரத்து மோசி கீரனாரும், கங்கைக் கரையில் இருப்பதாக மாமூலனாரும் கூறியுள்ளனர். இவ்வூருக்கு அருகில் சோணையும் கங்கையும் ஒன்று கூடுகின்றன. ஆதலின் இவ்வாறு இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. இது பாடலிபுரம் எனவும் அழைக்கப்படும். பழைய மகத நாட்டின் தலைநகராகப் பாடலிபுத்திரம் விளங்கியது. இப்போதிருக்கும் பாட்னாவுக்கு அருகில் இஃது இருந்திருக்கக் கூடும் என உய்த்துணரப்படுகிறது.
வடக்கே பாட்னா பாடலிபுத்திரம் சிறப்புற்றுத் திகழ்ந்ததைப் போலத் தெற்கே திருப்பாதிரிப் புலியூர் சிறப்புற்றுத் திகழ்ந்ததால், இவ்வூரும் முகமனாகப் பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறிவிக்கின்றனர். வடக்கே வட மதுரை இருப்பதுபோலத் தெற்கேயும் மதுரை இருக்கிறது. வடக்கே காசி இருப்பது போலத் தெற்கேயும் தென்காசி இருக்கிறது. அங்கே வட கைலாசம் போல இங்கே தென் கைலாசம் இருக்கிறது. இவ்வாறே அங்கும் இங்கும் பாடலிபுத்திரங்கள் இருந்தன என்பது அவ்வாராய்ச்சியர்களின் கருத்து. மற்றும், சமண சமயம் வடக்கேயிருந்து தெற்குக்கு வந்தது என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. வடக்கேயிருந்து வந்த சமணர்கள் அங்கேயிருந்து பாடலிபுத்திரத்தையும் இங்கே கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பெயர் வழக்கு, சப்பான் நாட்டை ‘ஆசியாவின் பிரிட்டன்’ என்றும், பம்பாயைக் ‘கிழக்கத்திய இலண்டன்’ என்றும், கோயமுத்துரைத் ‘தென்னகத்தின் மான்செஸ்டர்’ என்றும் இந்தக் காலத்தில் அழைப்பது போன்றதாகும் இது.
இன்னும் கேட்டால், ‘பாடலிபுத்திரம் என்னும் பெயர் பாட்னா - பாடலிபுத்திரத்தைக் காட்டிலும் கடலூர்ப் பாடலி புத்தரத்திற்கே மிகவும் பொருந்தும்’ என்று பன்மொழிப் புலவர் டாக்டர் சுநீதி குமார் சாட்டர்ஜி என்னும் வங்காளப் பெரியார் அழுத்தம் திருத்தமாக சான்றுகள் காட்டி அடித்துக் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
இஃதன்றி, பாடலிபுத்திரம் என்னும் பெயர் வடக்கேயிருந்து தெற்கே இறக்குமதியானதைப் போலவே, அப்பாடலி புத்திரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த ‘மகத தேசம்’ என்னும் நாட்டின் பெயரும் தெற்கே இறக்குமதியாகி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஃதாவது கடலூர்ப் - பாடலிபுத்திரம் இருந்த திருமுனைப்பாடி நாடும் மகதநாடு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதை ஈண்டு நினைவுகூர வேண்டும். இச் செய்தியை இந்நூலில் ‘கெடில நாடு’ என்னும் தலைப்பில் காணலாம்.
வடக்கே பாலிபுத்திரம் அழிந்துவிட்டதைப் போலவே தெற்கேயும் பாடலிபுத்திரம் அழிந்து விட்டது. வடக்கே பாட்னா பகுதியை அகழ்ந்து ஆராய்ந்தது போலவே, தெற்கே கடலூர்ப் பாதிரிக்குப்பம் பகுதியை அகழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் எத்தனையோ உண்மைகள் தெரிய வரலாம்.
இதுகாறும் கூறியவாற்றால் பாடலிபுத்திரம் என்னும் பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் எதுவாயிருப்பினும், பெரிய புராணச் சான்றின்படி, பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்த தனித்தனி நகரங்கள் - இரட்டை நகரங்கள் என்பது தெளிவு.
வண்டிப் பாளையம் என்னும்
கரையேற விட்ட குப்பம்
வண்டிப்பாளையம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், கேப்பர் மலைக்குப் போகும் சாலையில் உள்ளது. நகரிலிருந்து இவ்வூருக்கு உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. வண்டி போகும் சாலை கண்கட்கு விருந்தாகும். சாலையின் இருமருங்கும் தென்னை மரங்கள் வரிசையாக வானளாவி நிற்கும். தென்னை மர வரிசைக்குப் பின்னால் நன்செய் வயல்களும் தென்னந் தோப்புகளும் பின்னிப் பிணைந்திருக்கும். கெடிலம் ஆற்றிலிருந்து பிரியும் பெரிய கால்வாயிலிருந்து பல சிறு கால்வாய்கள் பிரிந்து வண்டிப் பாளையத்தைச் சுற்றிலும் ஊடுருவிச் செல்கின்றன. நகரிலிருந்து வண்டிப் பாளையம் செல்லும் ஒன்றரை கி.மீ. (ஒரு மைல்) நீளச்சாலையில் ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடக்க வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
வண்டிப் பாளையம் ஊரைச் சுற்றிலும் பல தென்னந் தோப்புகள் இருப்பதல்லாமல், ஊருக்கு நடுவிலும் ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் பல தென்னை மரங்கள் இருக்கும். ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்தையும் ஒரு சிறு தோப்பு என்று சொல்லலாம். கோடைக்காலத்தில் குன்னூர் - குற்றாலம் - கோடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. வீட்டுத் தோட்டத்தில் போய் நின்றால் போதும். வீட்டுத் தோட்டத்தை யடுத்து நன்செய் வயல் இருக்கும். வயலோர வாய்க்கால்களில் கெடிலம் ஆற்றுத் தண்ணிரைக் காணலாம். ஒருமுறை பாவேந்தர் பாரதிதாசனார் வண்டிப் பாளையம் வந்திருந்த போது, தோப்புக்கு நடுவில் இவ்வூர் இருப்பதால்தான் இவ்வளவு குளிர்ச்சியாயிருக்கிறது என்று வியந்து புகழ்ந்தார். கடலூர் நகராட்சி எல்லைக்குள் மிகவும் நீர்வளம் நிலவளம் செறிந்தது வண்டிப் பாளையம் பகுதிதான்.
பெயர்க் காரணம்
திருவயிந்திரபுரத்தருகில் வடக்கு நோக்கி வளைந்து ஒடும் கெடிலம், பத்தாம் நூற்றாண்டுக்குமுன் அவ்வாறு வளையாமல் நேர் கிழக்காகவே வந்து வண்டிப் பாளையத்தின் தெற்கு எல்லையில் ஒடி இவ்வூருக்குக் கிழக்கே கடலில் கலந்தது. சமணர்கள் நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலில் போட, அவர் தப்பித்துக் கொண்டு, கடலிலிருந்து கெடிலத்தின் வழியாக எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறினார். அதனால் வண்டிப் பாளையம் அந்தக் காலத்தில் கரையேற விட்ட குப்பம்’ என அழைக்கப்பட்டது. இச் செய்தி, தக்க சான்றுகளுடனும் படத்துடனும் இந்நூலில் வரலாறு கண்ட திசைமாற்றம்’ என்னும் தலைப்பில் மிக விரிவாக விளக்கப் பட்டுள்ளது. இவ்வூருக்கு மாணிக்கவாசகர் வந்தபோது அவருக்கு வழி விடுவதற்காக ஆறு திசை மாறியதாகப் புராணம் கூறுகிறது.
மேற்கூறிய செய்தியிலிருந்து, வண்டிப் பாளையத்தின் பழைய பெயர் கரையேறவிட்ட குப்பம் என்பது புலனாகும். இன்றும் ஆவணப் (ரிஜிஸ்டர்) பதிவுகளில் கரையேற விட்டவர் குப்பம் மதுரா என்பது பொறிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக எங்கள் வீட்டு ஆவணப் பதிவு ஒன்றிலுள்ள பகுதி அதிலிருக்கிறபடியே வருமாறு:
"1963 ஜூலை மீ2 உ கூடலூர் தாலுக்கா கரையேற
விட்டவர் குப்பம் மதுறா புதுவண்டி பாளையம் - 33.
வினாயகர் கோவில் தெருவிலிருக்கும்....”
இது 1963 ஆம் ஆண்டு பதிந்தது. இந்தப் பதிவில் கரையேற விட்டவர் குப்பம் என்றிருக்கிறது. ஆனால், வழக்கில் கரையேற விட்ட குப்பம் என்றே இருக்கிறது. ஒரு வேளை, மற்ற எழுத்துப் பிழைகளைப்போல 'விட்டவர்” என்பதும் எழுத்துப் பிழையாயிருக்கலாமோ எனக் கருதி வேறு சில ஆண்டுப் (1947, 1956) பதிவுகளையும் பார்த்தேன் நான்; அவற்றிலும் கரையேற விட்டவர் குப்பம்” என்றே உள்ளது. கரையேற விட்டவர் என்பது, அப்பர் பெருமானைக் கரையேற்றிக் காப்பாற்றிய சிவனைக் குறிக்கும் பெயராகும்; எனவே, கரையேறவிட்டவர் குப்பம் என்றால், கரையேறவிட்ட சிவன் எழுந்தருளியுள்ள குப்பம் என்பது பொருளாம். இதிலிருந்து, வண்டிப் பாளையத்தில் ஒரு சிவன் கோயில் அன்று இருந்தது. அந்தக் கோயில் இறைவன் பெயர்தான் கரையேறவிட்டவர் என்பது புலனாகும்.
இதற்கு, கரையேறவிட்ட நகர்ப் புராணம் என்னும் நூற்பதிப்பின் பிற்சேர்க்கையிலும் சான்று உள்ளது. அந்நூலை 1896 ஆம் ஆண்டில் பதிப்பித்த இராசப்ப ஆசிரியரும் அவர் தம்பி பொன்னுசாமி என்பாரும் உரைநடையில் எழுதியுள்ள பிற்சேர்க்கையிலுள்ள சில பகுதிகள் வருமாறு:
“அப்பர் சுவாமிகள் சமணர்கள் கட்டிவிட்ட கற்றுரண் மிதப்பிற் கடல் கடந்து கரையேறிய காரணத்தால் விளங்கிய திருக்கோயில் கிலமாய்விட்டபடியால் இயன்ற மட்டில் இதைப் புதுப்பித்து அவ் வுற்சவத்தை நடத்தி அன்பர் குழாங்களை ஆனந்திக்கச் செய்ய விரும்பி. அச் சிறு தலத்துச் சிவாலயத் திருப்பணியை மேற்கொண்டார்....... அப்பர் சுவாமிகள் கரையேறிய ஸ்தானத்தில் சிதைந்த திருக்கோயிலை அமைக்க வேண்டுமென்றாலோ “கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது”” போலாமெனத் துணிந்து எங்கள் சொந்த மனையில் தட்டோட்டுக் கட்டட மொன்றமைப்பித்து..... கரையேற விட்டவர் குப்பம் கிராமத்தில் சுவாமியிருந்த கட்டடத்தில் காலையில் கொண்டுவந்து வைத்து.
மேலுள்ள பகுதியைக் கொண்டு, அப்பர் கரையேறிய இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்து அழிந்துபோனமை புலனாகும்; அக் கோயிலைப் புதுப்பிக்க முயன்றவர்கள் அது முடியாது எனக் கைவிட்டமையும் புலப்படும், ஆவணப் பதிவுகளிலேயன்றி இவ்வுரைநடைப் பகுதியிலும் கரையேற விட்டவர் குப்பம் என இருப்பது காணலாம்.
இந்தக் ‘கரையேற விட்டவர் குப்பம்’ என்னும் பெயர் சிறிது சுருங்கிக் ‘கரையேறவிட்ட குப்பம்’ என வழங்கப்படுகிறது; இலக்கியங்களில் ‘கரையேறவிட்ட நகர்’ என்னும் பெயர் காணப்படுகிறது. அப்பர் இங்கே கரையேறியதற்குச் சான்று பகரும் முறையில் இவ்வூரில் அவர் பெயரால் மடம் ஒன்று உள்ளது. மற்றும், அவர் கரையேறிய இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அப்பர் இங்கே கரையேறிய தால் கரையேற விட்டவர்) குப்பம் என்னும் பெயர் இவ்வூருக்கு ஏற்பட்டதென்றால், அப்பர் கரையேறுவதற்குமுன் இவ்வூருக்கு என்ன பெயர் இருந்திருக்கக்கூடும்? இவ்வினாவுக்கு விடையிறுப்பது கடினம், இருப்பினும் ஒருவாறு பதில் கூறலாம். அப்பர் கரையேறுவதற்கு முன் இவ்வூருக்கு வறிதே ‘குப்பம்’ என்னும் பெயர் இருந்திருக்கலாம்.
வண்டிப்பாளையம்
அடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க கரையேற விட்ட குப்பத்திற்கு வண்டிப்பாளையம் என்னும் பெயர் ஏன் எப்போது ஏற்பட்டது? என்ற வினாவிற்கு விடை காண வேண்டும், பாதிரி மரம் மிகுதியாக இருந்த ஊர் பாதிரிப் புலியூர் ஆனது போல, வண்டிகள் மிகுதியாக இருந்த ஊர் வண்டிப்பாளையம் எனப் பெயர் பெற்றது என்று எளிதில் சொல்லத் தோன்றும். இப்படி நோக்கின், அப்படியொன்றும் வண்டிப் பாளையத்தில் வண்டிகள் இல்லை . உழவர் மிக்க ஊரிலாவது உழவுத் தொழிலுக்காக வண்டிமாடுகள் இருக்கும். இந்த ஊரோ நெசவாளர் மிக்க ஊர். இங்கே வண்டிகள் மிகுதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வூர்க்காரனாகிய நான் சிறுவனாயிருந்த போது ஒருநாள் என் தந்தையை நோக்கி, ‘நம்மூரில் அவ்ளளவாக வண்டிகள் இல்லையே - ஏன் வண்டிப் பாளையம் என்னும் பெயர் வந்தது?’ என்று வினவினேன், அதற்கு என் தந்தையார் சொன்ன பதில் இன்னும் நினைவில் இருக்கிறது:- “நூறு இருநூறு ஆண்டுகளுக்குமுன் வெள்ளைக்காரர்களும் துலுக்கர்களும் ஒருவரோடொருவர் கட்சிசேர்ந்து கொண்டு இந்த வட்டாரத்தில் சண்டை போட்டார்களாம். அப்போது அவர்களுடைய தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வந்த வண்டிகள் நம்மூர்ப் பகுதியில் ஏராளமாக விடப்பட்டிருந்தனவாம். தொடர்ந்து பலமுறை சண்டை நடந்ததால், நம்மூர்ப்பக்கத்தில் தொடர்ந்து வண்டிகள் விடப்பட்டிருந்தனவாம். அவ்வாறு வண்டிகள் விடப்பட்டிருந்த இடம் ‘வண்டிப் பாளையம்’ எனக் குறிப்பிடப்பட்டதாம். இப்படி எனக்குப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.” இஃது என் தந்தையாரின் பதில். இப் பெயர்க் காரணம் உண்மையானால், ஐரோப்பியர் போர்புரிந்து கொண்ட பதினெட்டாம் நூற்றாண்டில் வண்டிப்பாளையம் என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும், எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது.
வண்டு நகர் - வண்டுபுரம்
இவ்வூருக்குக் கரையேறவிட்ட நகர், கரையேற விட்டவர் குப்பம் என்னும் பெயர்களேயன்றி, வண்டு நகர் வண்டுபுரம் - சித்திபுரம், என்னும் பெயர்களும் வழங்கப் பட்டதாகக் கரையேற விட்ட நகர்ப் புராணம் கூறுகிறது. சிவபெருமான் ஒருமுனிவர் உருக்கொண்டு வந்து கரையேற விட்ட நகர்ச் சோலையில் யாழ் மீட்டி வண்டு போல இன்னிசை எழுப்பினாராம்; அதனால் வண்டுநகர் எனப் பெயர் ஏற்பட்டதாம் - எனக் கூறகிறது அந்நூல், இதற்காக அந்நூலில் ‘வண்டு நகர்ப் படலம்’ என ஒரு படலமே உள்ளது. அப் படலத்தில் இப் பெயரையும் பெயர்க் காரணத்தையும் அறிவிக்கும் பாடல் வருமாறு:
"மலர்க்கண் ரீங்காரம் செய்யும் வண்டதின் முழக்க மேபோல்
அலர்க்கண் வார்சோலை யின்கண் டவமுனி முழக்கும் ஓசை
புலப்பட எழுந்த தாலே பொருந்தும் அந் நகர்க்கு நாமம்
வலப்படச் சார்ந்த தொண்சீர் வண்டுமா நகர மென்றே.” (27)
நீர்வளம் நிலவளம் மிக்க ஊராதலின் சோலைகள் பூத்துக் குலுங்கித் தேன் பிலிற்றுகின்றன; வண்டுகள் மலர்களைச் சூழ்ந்து ஊதுவதால் ‘வண்டுபுரம்’ என்னும் பெயர் ஏற்பட்டது என்னும் குறிப்பில்,
"அந்தண் போது சார்ந்து ஊதும் வண்டுபுரம்” (37)
எனவும் அதே படலத்தில் கூறப்பட்டுள்ளது. புராண ஆசிரியர், வண்டுநகர் - வண்டு புரம் என்னும் பெயர்களிலிருந்து வண்டுப் பாளையம் என்னும் பெயர் உருவாகிப் பின் வண்டிப் பாளையம் என்னும் பெயர் உருவாகிப் பின் வண்டிப் பாளைய மாயிற்று என்னும் கருத்தைக் கற்பிப்பதற்காக, இப் பெயர்க் காரணங்களைப் புனைந்து கூறியிருப்பாரோ - என்னவோ!
சித்திபுரம்
இவ்வூருக்குச் சித்திபுரம் என்னும் பெயரும் ஏற்பட்டிருந்ததாகப் புராணம் கூறுகிறது. சிவபெருமான் சித்தராய் வந்து, மாணிக்க வாசகருக்காகக் கெடிலத்தை வடக்கு நோக்கி ஏகச் செய்து சித்தி பல புரிந்ததனால் சித்திபுரம் என்னும் பெயர் ஏற்பட்டதாம். இதனை, கரையேறவிட்ட நகர்ப்புராணம் - சித்தர் திருவிளையாடற் படலத்திலுள்ள
"அத்தகுதென் திசைக்கங்கை யிருபுறமுஞ் சித்தேசன்
அமலப் பூந்தாள்
வைத்துவிளை யாடியமா வியத்தான மன்னதனால்
வாய்ந்த தந்தச்
சுத்தமுறுங் கரையேற விட்டநகர் சித்தபுரத்
தூவார் நாமம்
சித்திபுரம் எனநலோர் செப்பிடுவார் அருந்தவத்திற்
சிறந்த சான்றீர்”
என்னும் (45) பாடலால் அறியலாம்.
இவ்வூரில் முன்பு இருந்து இப்போது சிதைந்து போனதாகக் கருதப்படும் சிவன் கோயில் இறைவன் பெயர் காட்சிநாதர், திருக்காட்சிபிரான் என்பதாகவும். இறைவி பெயர் காட்சி நாயகி, தெரிசனாம்பிகை என்பதாகவும் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தால் அறியப்படும் செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
வண்டிப் பாளையம் பழைய வண்டிப் பாளையம் எனவும் புதுவண்டிப் பாளையம் எனவும் இரு பிரிவாக அமைந்துள்ளது. திருப்பாதிரிப் புலியூரிலிருந்து கேப்பர் மலைக்குப் போகும் சாலையின் கீழ்பால் இருப்பது பழைய வண்டிப் பாளையம், மேல்பால் இருப்பது புதுவண்டிப் பாளையம் இரண்டும் இணைந்தே உள்ளன.
பழைய வண்டிப்பாளையம்
இங்கே திருநாவுக்கரசர் திருமடமும் அதனையொட்டிக் கற்பக விநாயகர் கோயிலும் உள்ளன. கோயிலில் திருநாவுக்கரசர் சிலையும் உண்டு. அப்பர் கரையேறிய இடம் என்பதற்கு இது போதிய சான்று. சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் ‘கரையேறவிட்ட நகர் திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணி மாலை கற்பக விநாயகர் இரட்டை மணிமாலை என்னும் நூல்கள் இயற்றியுள்ளார். பழைய வண்டிப் பாளையத்தில் ‘சிறுத் தொண்டர் அமுது படையல் விழா சிறப்பாக நடைபெறும். இங்கே, பாரி கம்பெனியார் 1843 ஆம் ஆண்டு ஒரு கரும்பாலை நிறுவினர். அது தொடர்ந்து வெற்றியுடன் நடைபெறவில்லை. ஊரின் கிழக்கெல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்றும் கரும்பாலையின் புகைபோக்கியைக் காணலாம்.
புதுவண்டிப்பாளையம்
இங்கே ஒரு முருகன் கோயில் உள்ளது. இந்த வட்டாரத்தில் இது மிகவும் பெயர் பெற்றது. ஞாயிறு தோறும், ஒவ்வொரு திங்களிலும் (மாதத்திலும்) - கார்த்திகை (கிருத்திகை) நாள்தோறும் இக்கோயிலில் பேய்ப் பெண்கள் பெண்களாக்கப்படுகின்றனர்; அதாவது, பேய் - பிசாசு பிடித்த பெண்கள் இங்கே வந்து பேயோட்டிக் கொண்டு செல்கின்றனர்; பில்லி - சூனியங்களாலும் தீராப் பிணிகளாலும் தாக்கப் பட்டவர்களும் இங்கே வந்து வழிபட்டு ஆறுதலும் மாறுதலும் பெற்றுச் செல்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குத் திருச்சுற்றுப் பகுதியில் பேயோட்டல் நடைபெறுகிறது. வேல் ஒன்று உள்ளது; அந்த வேலின் முன்னால் இது நடைபெறும். பேயோட்டுவதற்கு என்று ஒரு ‘சாமியார் உள்ளார்; அவர், ஆடிப் பாடி அங்கலாய்க்கும் பெண்களை அமைதி பெறச் செய்கிறார்; இதைக் கொண்டு, அந்தப் பெண்களைப் பிடித்திருந்த பேய்ப் பீடை தொலைந்துவிட்டதாகப் பொருள் பண்ணிக் கொள்ள வேண்டும். பேயாட்டம் ஆடும் பெண்கள் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இவரைப்போல் ஒருவர் சாமியாராக மாறினால், புது வண்டிப்பாளையம் கோயிலில் கூட்டம் சேராது. இங்கே சாமியாடிக் குறி சொல்வதும் உண்டு.
புதுவண்டிப் பாளையம் கோயில் ஐப்பசித் திங்களில் கந்தர் சஷ்டிப் பெருவிழா ஆறுநாள் நடைபெறும். சஷ்டியன்று நடைபெறும் சூரசம்மார விழா காணத்தக்கது. மற்றும், பங்குனித் திங்களில் பத்து நாள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் உத்தரத்தன்று தேர் ஒடும். ஆறாம் நாளில் திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலிலிருந்து பாடலேசுரர் இக் கோயிலுக்கு எழுந்தருளி, மைந்தன் முருகனுடன் ஒரு நாள் மகிழ்ச்சியாய்ப் பொழுது போக்கி விழா வயர்ந்து செல்வார்; இது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தப் பங்குனி உத்தரப் பெருவிழா சில ஆண்டுகளாக நடைபெறவில்லை குளக்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் தேர் மக்கிக் பாழடைந்து வருகிறது.
அப்பர் கரையேறிய சித்திரை அனுட நாளிலும் அது சார்பாகப் பெரிய விழா நடைபெறும். அன்று திருப்பாதிரிப் புலியூர்ப் பாடலேசுரரும் வண்டிப் பாளையம் முருகனும் அப்பர் கரையேறிய இடத்திற்குச் சென்று கரையேற்றுவிழா நடத்துவர். இவ்விழா பற்றிய விரிவான விளக்கத்தை, இந்நூலில் ‘வரலாறு கண்ட திசைமாற்றம்’ என்னும் தலைப்பில் காணலாம்.
வண்டிப் பாளையம் முருகன், தைத்திங்களில் ஐந்தாம் நாளிலும் இரதசப்தமியன்றும் பெண்ணையாற்றிற்கும், தை அமாவாசையன்றும் மாசி மகத்தன்றும் கடற்கரைக்குச் சென்று நீராடி வருவார். மாசி மகப் பெருவிழாவன்று நூற்றுக் கணக்கான இறையுருவங்கள் கடற்கரைக்கும் செல்லும். அவற்றுள், திருப்பாதிரிப் புலியூர் இறையுருவம் முதலாவ தாகவும், திருமாணி குழி இறையுருவம் இரண்டாவதாகவும், வண்டிப் பாளையம் இறையுருவம் மூன்றாவதாகவும் செல்வது தொன்றுதொட்ட மரபு. இம் மரபை மாற்ற முடியாது. இதைக் கொண்டு, வண்டிப் பாளையம் முருகன் கோயிலின் சிறப்பை உணரலாம். இக் கோயில் முருகன்மேல், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடம் - இரண்டாம் பட்டத்து அடிகளார், ‘முருகர் அந்தாதி’ என்னும் நூல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வண்டிப் பாளையத்தில் நகர் மன்றம் நடத்தும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுள்ளது. ஞானியார் அடிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘சாமியார் தோட்டம்’ என்னும் பகுதி ஊருக்கு அருகில் இருப்பதும் ஒரு சிறப்பு.
தொழில் துறையிலும் வண்டிப் பாளையம் சிறப்புற்றுத் திகழ்கிறது. வண்டிப் பாளையம் தென்னங் கீற்றுகளுக்குச் செல்வாக்கு மிகுதி. பொம்மை செய்யும் தொழிலும் இங்கே நடைபெறுகிறது; இந்த வட்டாரத்துக் களிமண் அதற்கேற்ற நயப்பு உடையது.
வண்டிப் பாளையத்தைத் தலைசிறந்த ஒரு நெசவுத் தொழிற் பேட்டையாகச் சொல்லலாம். இங்கே நெசவாளர் குடும்பங்களே மிகுதி. இவ்வூரில் கைலிகளே நெய்யப்படுகின்றன. இவ்வூர்க் கைலிகள் மிகவும் தரம் உள்ளவை என வெளி நாடுகளில் புகழ் பெற்றுள்ளன. இவ்வூரில் கைலி வாணிக நிலையங்கள் (கைலி கம்பெனிகள்) பலவும், சாயத் தொழிற் சாலைகள் பலவும் உள்ளன. இவ்வூர்க் கைலிகள் வணிக நிலையங்களின் வாயிலாக, சிலோன், சிங்கப்பூர், சரவாக், போர்னியோ, மலேயா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, பர்மா, பாகிஸ்தான், மோரிசு, ஏடன், அமெரிக்கா முதலிய நாடுகட்குச் சென்றன - செல்கின்றன. இவ்வூர்க் கைலி வணிகர் சிலர்க்கு, இந்தோனேசியா ஏடன் முதலிய வெளிநாடுகளிலும் கிளை வணிக நிலையங்கள் உண்டு. வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவிற்கு இழுத்துத் தரும் இன்றியமையா நிலைகளுள் (முக்கியக் கேந்திரங்களுள்) வண்டிப் பாளையமும் ஒன்று. அமெரிக்க டாலரை வாங்கித் தரும் ‘வண்ணம் மாறும் சென்னைத் துணிகள்’ எனப்படுபவை வண்டிப் பாளையத்திலிருந்தும் செல்கின்றன. கைலி ஏற்றுமதி முன்பு கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாகவும் நடந்தது; இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது.
புருகேசு பேட்டை
இவ்வூர் வண்டிப் பாளையத்திற்குத் தெற்கே அரை கி.மீ. தொலைவில் கேப்பர் மலை அடிவாரத்தில் கொண்டங்கி ஏரிக்கரையில் உள்ளது. 1767 முதல் 1769 வரை கடலூரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த ஹென்றி புரூக் (Henry Brooke) என்பவர் பெயரால் இது ‘புரூக்ஸ் பேட்டை’ என அழைக்கப்பட்டது. மக்கள் இப்போது ‘புருகேசு பேட்டை” என்கின்றனர். இவ்வூரில் ஒரு முருகன் கோயில் உண்டு. அதை மையமாகக் கொண்டு ஞானியார் அடிகளார் இவ்வூருக்கு ‘முருகேச நகர்’ எனப்பெயர் சூட்டினார்கள். இந்தக் கோயில் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் ‘சண்முகக் கோட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது ‘புருகேசு’ ‘முருகேசு’ ஆயிற்று! இந்த ஊரும் ஒரு நெசவுத் தொழிற் பேட்டைதான்!
இந்தப் பகுதிக்குக் கிழக்கேயுள்ள ‘வசந்தராயன் பாளையம்’ என்னும் சிற்றுாரும் ஒரு நெசவுத் தொழிற் பேட்டையே. அங்கே பட்டு நெசவு மிகுதியாய் நடைபெறுகிறது. இதற்கு அணித்தேயுள்ள ‘மண(ல்) வெளி’ என்னும் இடத்தில் கோரைப் பாய் நெசவு பெரிய அளவில் நடைபெறுகிறது.
புதுப்பாளையம்
இது கடலூர்ப் புதுநகரைச் சேர்ந்த பகுதி, திருப்பாதிரிப் புலியூருக்குக் கிழக்கே கெடிலத்தின் கிழக்குக் கரையிலும் வடக்குக்கரையிலும் உள்ளது. கெடிலம் ட போல் வளைந்து புதுப்பாளையத்தைச் சுற்றிக் கொண்டு செல்கிறது. இதன் மேற்கு எல்லையும் தெற்கு எல்லையும் கெடிலம்; வடக்கு எல்லை மஞ்சக் குப்பம் பெருவெளித்திடம் (மைதானம்); கிழக்கு எல்லை செயின் டேவிட் கோட்டைப் பகுதி. இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அரசினர் கலைக்கல்லூரி, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, இரண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள், நகராட்சித் தலைமையலுவலகம், மாவட்ட மைய நூலகம், அரசுக் கருவூல அலுவலகம், சிறு நீதி மன்றம், ஒரு திரைப்பட மாளிகை, சிறந்த உணவு விடுதிகள், சில அலுவலகங்கள் முதலியவை உள்ளன. கெடிலக்கரையில் பகவந்த தயானந்த சுவாமிகள் மடம் உள்ளது. கோவா கத்தோலிக்க சபையினரால் 1884இல் கட்டப்பட்ட ‘ரோசரி சர்ச்’ என்னும் மாதா கோயில் இப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்பாளையம் பகுதியில் கெடிலத்தின் பாலத்துக்கு வடபுறம் ஆற்றின் கிழக்குக் கரையில் ‘பிருந்தாவனம்’ என்னும் பெரிய உணவு விடுதி ஒன்று இருப்பதைக் காணலாம். இப்போது இந்த இடத்தில் ‘கிளி கொஞ்சுகிறது’. சில்லாண்டுகட்கு முன் இந்த இடம் ஒதுக்குப் புறமாகப் பாழடைந்து கிடந்தது. அதற்கும் பல்லாண்டுகட்கு முன் இந்த இடம் மிகவும் சிறப்புற்றுத திகழ்ந்தது. இந்த இடத்தில் ஓர் அரசரின் அரண்மனை இருந்தது. ‘நவாப் உத்தவுலா’ பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கடலூரை ஒரு முக்கிய நிலையாகக் (கேந்திரமாகக்) கொண்டிருந்தார்; கெடிலக் கீழ்க்கரையில் மூன்றடுக்கு அரண்மனை கட்டிக் கொண்டார். அதற்குக் ‘கெடிலம் கேசில்’ (Gadilam castle) என்பது பெயர். அந்த அரண்மனையை யொட்டி எதிரில் ஒரு சிறு திடல் (மைதானம்) இருந்தது. அது ‘கேசில் மைதானம்’ என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பியர்களின் போராட்டத்திற்கிடையே அரண்மனை அகப்பட்டுச் சீரழிந்தது. 1940ஆம் ஆண்டளவில் கூட அந்த அரண்மனை பாழடைந்த நிலையில் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. இந்த அரண்மனைத் திடலில் ‘இடம் பெயரும் திரைப்படக் கொட்டகைகள்’ (டூரிங் சினிமா) இருந்து வந்தன. 1930 - 35 ஆம் ஆண்டளவில் பேசாத படங்கள் இங்கே திரையிடப்பட்டன; பின்னர்ப் பேசும் படங்கள் திரையிடப் பட்டன. இடையிடையே பாழடைந்து கிடந்த நிலைமைக்குப் பின் இப்போது ‘பிருந்தாவனம்’ உணவு விடுதி இந்த இடத்தை அணி செய்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இடத்தையொட்டிப் புதுப்பாளையம் அமைக்கப்பட்டுள்ளது. பெயரிலிருந்தே, இந்தப் பகுதி பிற்காலத்தது என்பதை உணரலாம். கடலூர்ப் புதுநகர், நியூ டவுன் (New Town), என்.டி. (N.T.) என்னும் பெயர்களின் தோற்றமே புதுப் பாளையத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான். இந்தப் பகுதியில், அலுவலகங்களில் பணிபுரிவோரும் வழக்கறிஞர்கள் பலரும் வாழ்கின்றனர்.
புதுப்பாளையத்தின் வடமேற்கு மூலையில் பெருவெளித் திடலை (மைதானத்தை) ஒட்டினாற்போல் நகராட்சி உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளி பல ‘அவதாரங்கள்’ எடுத்து இப்போது இந்த நிலையில் உள்ளது இது 1879ஆம் ஆண்டில் இரண்டாந்தரக் கலைக் கல்லூரியாக உயர்த்தப்பட்டு ‘டவுன் காலேஜ்’ (Town College) என்னும் பெயரில் கூடலூரில் நடைபெற்று வந்தது. பின் 1877இல் கல்லூரி வகுப்புகள் எடுபட்டு விட்டன, அடுத்த ஆண்டே - 1888இல் - மீண்டும் கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் 1902இல் மீண்டும் கல்லூரி வகுப்புகள் எடுபட்டு விட்டன. உயர் நிலைப் பள்ளிப் பிரிவு ஸ்கூல் கமிட்டி (School committee) என்னும் குழுவால் நடத்தப் பெற்று வந்தது. 1920 ஆம் ஆண்டில் அந்தக் குழுவினிடமிருந்து உயர்நிலைப் பள்ளியை நகராட்சி ஏற்று இங்கே நடத்தி வருகிறது.
இந்த உயர்நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில், 1967இல் பச்சையப்பன் உதவி நிதியைக் கொண்டு தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. இப்போது இது, மஞ்சக் குப்பத்திலிருந்து நெல்லிக் குப்பம் பக்கம் போகும் நெடுஞ் சாலை தொடங்கும் சிறிது தொலைவில், ‘கந்தசாமி நாயடு பெண்கள் கல்லூரி’ என்னும் பெயரில் தனிக்கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. புதுப் பாளையத்தின் கிழக்குக் கோடியில் அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி இருக்கிறது.
1963இல் தொடங்கப் பெற்ற இந்தக் கல்லூரி, புதுப் பாளையத்தின் வடக்கு எல்லைப் பாதையும் தெற்கு எல்லைப் பாதையும் கிழக்கே குவிந்து ஒன்று கூடும் இடத்தில் தேவனாம் பேட்டைக்குப் போகும் வழியில் அமைக்கப் பெற்றது. இப்போது இது விரிவான கட்டடத்தில் இயங்கி வருகிறது.
மற்றும், புதுப்பாளையம் பகுதியிலுள்ள தென்னார்க்காடு மாவட்ட மைய நூலகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது 1952இல் தொடங்கப் பெற்றது. தென்னார்க்காடு மாவட்ட நூலக ஆணைக்குழு (Local Library Authority) இந்நூலகத்தைச் சிறந்த முறையில் இயக்கி வருகிறது. இதில் ஏறத்தாழத் தரமான பத்தாயிரம் நூல்கள் இருக்கலாம். இந்த மைய நூலகத்தின் கீழ், பல ஊர்களில் கிளை நூலகங்களும் (Branch Libraries) நூல் அளிக்கும் நிலைகளும் (Delivery Stations) உள்ளன. மற்றும், தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒரு நூறு அளவிற்கு ஊராட்சி மன்ற நூலகங்கள் உள்ளன. அண்மையில் பாடலிபுத்திரத்திலும் பாகூரிலும் அந்தக் காலத்தில் இருந்த சிறந்த நூல் நிலையங்களை நினைவூட்டும் முறையில், தென்னார்க்காடு மாவட்ட மைய நூலகம், மக்களின் பல்துறை அறிவை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டு வருகிறது.
மஞ்சக் குப்பம்
மஞ்சக் குப்பம் புதுப்பாளையத்திற்கு வடக்கே இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளையும் பெருவெளித்திடல் (மைதானம்) பிரிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை உறுப்புகளும் தலைமை அலுவலகங்களும் மஞ்சக் குப்பத்தில் தான் உள்ளன. இதனால், தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மஞ்சக் குப்பம் ஜில்லா’ என அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இங்கே முன்பு மஞ்சள் நிரம்பப் பயிரிடப்பட்டதால் இந்தப் பகுதி மஞ்சள் குப்பம் - மஞ்சக் குப்பம் என வழங்கப்பட்டது. வெளிநாடுகளுடன் மஞ்சள் வாணிகம் மிகுதியாய் நடைபெற்றது. புதுப்பாளையம் போலவே மஞ்சக் குப்பம் நகர்ப் பகுதியும் ஐரோப்பியர்களின் காலத்தில் - பதினேழாம் நூற்றாண்டளவில் உருவானதே.
தென்னகத்திற்கே மிகப் பெரியதான ‘நகர் நடுப் பெருவெளித்திடல்’ (மைதானம்) மஞ்சக் குப்பத்தில்தான் உள்ளது. இது, ‘மஞ்சக் குப்பம் மைதானம்’ ‘கடலூர் மைதானம்’ என அழைக்கப்படும். இதன் தரையில் பசும்புல் படர்ந்து ஒட்ட நறுக்கப்பட்டதுபோல் காணப்படும். இந்தத் திடல் பழைய அரசு குறிப்புகளில், ‘The lawn’ (இன்பப் புல்வெளிப் பூங்கா) எனவும், ‘The green’ (பச்சைப் பசும்புல் திடல்) எனவும், ‘The Esplanade’ (கோட்டைக்கும் நகருக்கும் நடுவிலுள்ள அகலிடம்) எனவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் திடலின்கண் மாலை வேளையில் மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தமர்ந்து இன்பப் பொழுது போக்குவர். இதில் மணிக்கூண்டு, பூங்கா, சொற்பொழிவு மேடை ஆகியவை உள்ளன. இங்கே நூறாயிரக் (இலட்சக்) கணக்கான மக்கள் அமர்ந்து சொற்பொழிவு கேட்கலாம் கேட்கின்றனர். இத் திடலின் நான்கு பக்கங்களிலும் நல்ல சாலைகள் உள்ளன. இதைச் சுற்றிலும் பெரிய அலுவலகக் கட்டடங்கள் உள்ளன.
இதன் தென் கிழக்குக் கோடியில் உள்ள ‘லேடி ஆவ் மவுன்ட் கார்மல் சர்ச்’ என்னும் மாதாகோயில் காணத்தக்கது. திடலின் வடக்கே, மாவட்ட நீதிமன்றம், சிறைச்சாலை, காவல்துறைத் தலைமை அலுவலகம், மாவட்டத் தலைவர் (கலெக்டர்) அலுவலகம், நகர மண்டபம், மாவட்ட மைய நூல் நிலையம் முதலிய இன்றியமையா நிலையங்கள் உள்ளன.
திடலைச் சுற்றியுள்ள நிலையங்களுள் மாவட்டத் தலைவர் (கலெக்டர்) அலுவலகக் கட்டடம் மிகவும் குறிப்பிடத்தக்கது இதற்குக் ‘கார்டன் ஹவுஸ்’ (Garden House) என்பது பெயர். கவர்னராகக் கடலூரை ஆட்சி புரிந்த ராபர்ட் கிளைவ் என்னும் ஆங்கிலப் படைத்தலைவர் இந்தக் கார்டன் ஹவுஸ் மாளிகையில் தான் வாழ்ந்து வந்தார். இந்த மாளிகையையும் எதிரேயுள்ள பெருந்திடலையும் ஆங்கிலேயர்கள் 1705ஆம் ஆண்டளவில் நிறுவினர். மாளிகையினையும் திடலின் ஒரு பகுதியினையும் கீழேயுள்ள படத்தில் காணலாம்.
இதுதான் கார்டன் ஹவுஸ் மாளிகை. இது 1733இல் கட்டி முடிக்கப்பட்டது. கவர்னர் கிளைவ் வாழ்ந்த இந்த மாளிகை, 1758இல், ‘லாலி’ என்னும் பிரெஞ்சுக்காரரால், செயின்ட் டேவிட் கோட்டையுடன் சேர்த்துத் தாக்கிச் சிதைக்கப்பட்டது, பிறகு இது பழுது பார்த்துத் திருத்தியும் புதுக்கியும் கட்டப்பட்டு ஆங்கில வணிகப் பேராளர்களின் (Commercial Residents) வாழ் விடமாகச் சில காலம் இருந்து வந்து, பின்னர்க் கலெக்டர்களின் உறைவிடமாகவும் அலுவலகமாகவும் மாறியது.
அடுத்தபடியாக, மாவட்ட நீதி மன்ற மாளிகை குறிப்பிடத்தக்கது. இது 1866இல் கட்டி முடிக்கப்பட்டது. இம் மாளிகையின் பின்புறம் ஒரு குளம் இருக்கிறது. குளத்தின் நடுவில் உருக்குலைந்த ஒரு தூபி உள்ளது. கோபுர உச்சி போன்ற இந்தப் பகுதி, எங்கோ ஒரு கோயிலிலிருந்து ‘அடித்துக் கொண்டு’ வரப்பட்டதாக இருக்க வேண்டும்.
அடுத்து, மஞ்சக்குப்பம் பகுதியில் வடகிழக்கில் உள்ள ‘கர்னல் தோட்டம்’ என்னும் பகுதி குறிப்பிடத்தக்கது. ஆங்கிலப் படைத்தலைவர் (Colonel) ஒருவர் தங்கியிருந்ததால் இது இப்பெயர் பெற்றது. ‘கர்னப் பிள்ளை தோட்டம்’ என்றும் மக்கள் இதனை அழைக்கின்றனர். இந்த இடத்தை 1852ஆம் ஆண்டில் புதுச்சேரி ரோமன் கத்தோலிக்க சபைத் துறவி பொன்னாந்த் (Mgr. Bonnand) என்பவர் விலைக்கு வாங்கினார். இதில் 1884ஆம் ஆண்டு ஓர் உயர்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. இது, 1886ஆம் ஆண்டு இரண்டாந்தரக் கலைக்கல்லூரியாக உயர்த்தப் பட்டது. இதற்கு ‘செயின்ட் ஜோசப் காலேஜ்’ என்பது பெயர். இது புதுச்சேரி கடலூர் ரோமன் கத்தோலிக்கத் தலைமையகத்தால் நடத்தப்பட்டு வந்தது. 1909 ஆம் ஆண்டளவில் கல்லூரி வகுப்புக்கள் எடுபட்டு உயர்நிலைப் பள்ளி அளவில் நின்றுவிட்டது. இன்றும் இந்த உயர்நிலைப் பள்ளி நடைப்பெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிகுதியாய் வாழ்கின்றனர். மஞ்சக் குப்பம் பகுதியில் அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஒன்றும் உள்ளது.
மஞ்சக்குப்பத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் செம்மண்டலம் என்னும் இடத்தில், தொழிற் பயிற்சிப்பள்ளி (Industrial Institute), ஒன்று அரசினரால் நடத்தப் பெறுகிறது. இதையடுத்து இங்கே ‘பாலிடெக்னிக்’ - பல் தொழிற்கூடம் ஒன்று உருவாகி வருகிறது.
வில்வராய நத்தம்
இது, மஞ்சக்குப்பத்திற்கு வடக்சே - கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையாக உள்ளது. வில்வராய நத்தம் என்னும் ஊர்ப் பெயர், பல்லவராயநத்தம் என்பது போல் அரசர் தொடர்பால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பல்லவர் காலத்தது எனக் கருதப்படும் பழைய சிவன் கோயில் ஒன்று இங்கே உள்ளது. மத்திய அரசினரின் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேவனாம் பட்டினம்
பட்டினம் என முடிந்திருப்பதிலிருந்தே இவ்வூர் கடற்கரையில் உள்ள சிற்றுார் என்பது புலனாகும். தேவநாதன் பட்டினம் அல்லது தெய்வநாயகன் பட்டினம் என்பதுதான் தேவனாம்பட்டினம் என்றாகியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்தப் பெயருடைய பெரியார் ஒருவர் முன்பு இங்கே வாழ்ந்திருப்பார் அல்லது - இந்த ஊரோடு சிறப்புத் தொடர்பு கொண்டிருந்திருப்பார்.
தேவனாம் பட்டினம், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்குக் கிழக்கே கடற்கரையில் உள்ளது. இதனை ஒரு சிறு தீவு என்று சொல்லலாம். கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்கு மேற்கே சிறிது தொலைவில், கெடிலத்திலிருந்து ஒரு கிளை பிரிந்து வடக்கே சிறிது தொலைவு சென்று பிறகு மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிக் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்த வடகிளைப் பிரிவுக்குள் தேவனாம் பட்டினம் இருக்கிறது. அதாவது, இதன் கிழக்குப் பக்கம் கடலும், தெற்குப் பக்கம் கெடிலமும், மேற்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் கெடிலத்தின் வடகிளைப் பிரிவும் உள்ளன. இவ்வாறு நான்கு பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் இது ஒரு சிறு தீவு எனப்படுகிறது. இங்கே மீனவர்கள் தாம் மிகுதியாக வாழ்கின்றனர். மாசி மகத்தன்று நூற்றுக் கணக்கான இறையுருவங்கள் வந்து கடல் நீராடுவது இப்பகுதியில்தான்.
தேவனாம் பட்டினம் கடற்கரைக்குச் செல்லத் ‘தார்’ போட்ட நல்ல சாலைகள் உண்டு; கடற்கரையிலும் தார்ப் பாதை உண்டு. மாலையில் காற்று வாங்குவதற்கு ஏற்ற இடம் இது. இங்கிலாந்து நாட்டிலுள்ள “கவுண்டி பீச்” போன்ற அமைப்பு இங்கே இருப்பதாக அறிந்தவர்களால் புகழப்படுகிறது. அழகும் வசதியும் செய்து மக்களைக் கவர்ந்து இங்கே மாலைவேளைகளில் பெருங்கூட்டம் சேரும்படிச் செய்யவேண்டும் என்னும் பரந்த நோக்குடன், கடலூர் நகர் மன்றம் இங்கே 1938ஆம் ஆண்டில் மின் விளக்குகள் பொருத்திப் பூங்காவும் வைத்து அணி செய்தது. இருப்பினும் இந்தக் கடற்கரை, சென்னைக் கடற்கரையைப் போல் வளர்ச்சி பெறவில்லை. கோடையில் ஓரளவு மக்களே வந்து போகின்றனர். போதிய அளவு உள்நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி செய்யப்பட்டால் பெருங்கூட்டம் சேரக்கூடும்.
தேவனாம் பட்டினம் இயற்கைச் சூழ்நிலைச் சிறப்புடன், செயின்ட் டேவிட் கோட்டையை மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்பும் உடையதாகும்.
செயின்ட் டேவிட் கோட்டை
கப்பல் வழியாக வாணிகம் புரிய வந்த ஐரோப்பியர்களைத் தேவனாம் பட்டினம் தீவு கவர்ந்தது. இத்தீவிற்குள் பதினாறாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பியர்கள் புகத் தொடங்கிவிட்டனர்; இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர் தேவனாம் பட்டினத் தீவின் வடபகுதியில் ஒரு தொழில் நிலையம் நிறுவினர். இவர்கள் சரக்கு விற்பனை புரிந்ததன்றி, அடிமை வாணிகமும் செய்தார்களாம். இங்கிருந்தபடி இந்திய ஏழை மக்களை இந்தோனேசியாவுக்கு அடிமைகளாக விற்றார்களாம். என்னே கொடுமை! அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் உரிமை கொண்டிருந்த மராத்தியர்கள் 1678இல் டச்சுக்காரர்களைத் தேவனாம்பட்டினத் தொழிற் கூடத்திலிருந்து மஞ்சக் குப்பத்திற்கு விரட்டினார்கள்; பின்னர் அங்கிருந்தும் 1745ஆம் ஆண்டளவில் பரங்கிப் பேட்டைக்கு விரட்டினார்கள்.
டச்சுக்காரர் நிலை இவ்வாறு இருக்க, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தேவனாம் பட்டினத் தீவின் தெற்கு எல்லையில் கெடிலத்தின் வடகரையில் “செயின்ட் டேவிட்” என்னும் கோட்டை கட்டினர். முதலில் ‘எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர், சரக்குகள் வைப்பதற்காக ராமராஜா’ என்பவரிடமிருந்து ஒரு கிடங்கை விலை பேசி வாங்கினார். அதற்கு அண்மையில் “செயின்ட் டேவிட் கோட்டை (Fort St. David) கட்டப்பட்டது. 1683ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தவும் பட்டு வந்தது. 1745இல் ராபர்ட் கிளைவ் இதன் காவலில் நன்கு கவனம் செலுத்தினார்.
1745 தொட்டு 1750வரை ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைத் தங்கள் ஆட்சியின் தலைநகராகப் பயன்படுத்தினார்கள். அப்போது சென்னை பிரெஞ்சுக்காரர் கையில் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் சென்னையைக் கைப்பற்றி, செயின்ட் டேவிட் கோட்டைக்கு இருந்த தலைநகர்த் தகுதியைச் சென்னையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்கள்.
ஆங்கிலேயர்கள் செயின்ட் டேவிட் கோட்டையை எவ்வளவு விழிப்புடன் காத்துங்கூட, அது பகைவர்களால் பலமுறை தாக்கப்பட்டது. செஞ்சியை யாண்ட தேசிங்கு மன்னன் தந்தையான சாரூப்சிங் என்பவர் 1712ஆம் ஆண்டளவில் இந்தக் கோட்டையை ஒரு கை பார்த்தார். பிரெஞ்சு படைத் தலைவரும் கவர்னருமான டுப்ளே (Dupleix) என்பவர் மட்டும் இந்தக் கோட்டையை நான்கு முறை தாக்கியிருக்கிறார். அவர் முதல்முறையாக 1746 டிசம்பர் தொடக்கத்தில் தாக்கினார்; தாக்குதல் பயனளிக்கவில்லை. அதே டிசம்பரில் இரண்டாம் முறையாகக் கடல் பக்கத்திலிருந்து தாக்கினார். அப்போதும் பயனின்றி, புயலால் அலைக்கழிக்கப் பட்டுப் புதுச்சேரிக்கு ஓடிவிட்டார். மூன்றாம் முறையாக 1747 மார்ச்சில் தாக்கிப் பார்த்தார். நான்காம் முறையாக 1748 சூனில் தாக்கினார்; ஆனால், லாரென்ஸ் என்னும் ஆங்கிலப் படைத்தலைவரால் விரட்டப்பட்டார்.
செயின்ட் டேவிட் கோட்டையின் தலையெழுத்து இம்மட்டோடு நின்றுவிடவில்லை. 1756இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஐரோப்பாவில் போர் நடைபெற்றதால் இங்கேயும் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் போர் மூண்டது. பிரெஞ்சுக்காரர் செயின்ட் டேவிட் கோட்டையைக் கடுமையாய்த் தாக்கி இடித்துக் கேடு சூழ்ந்தனர். லாலி (Lally) என்னும் பிரெஞ்சுப் படைத்தலைவர் இக் கோட்டையைக் கடுமையாய்த் தாக்கி 1758 சூன் 2 ஆம் நாள் கைப்பற்றிக் கொண்டே விட்டார். 1760இல் ‘சர் அயர் கூட்’ (Sir Eyre Coote) என்னும் ஆங்கிலப் படைத் தலைவர் மீண்டும் பிரெஞ்சுக் காரரிடமிருந்து கோட்டையைக் கைப்பற்றினார்; அவர் 1761இல் புதுச்சேரியையும் பிடித்துக் கொண்டார். 1782இல் பிரெஞ்சுக்காரரும் திப்பு சுல்தானுமாகச் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரிடமிருந்து மீண்டும் செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துக் கொண்டனர். 1783 ஏப்ரலில் ஸ்டுவர்ட் (General Stuart) என்னும் ஆங்கிலப் படைத்தலைவர் செயின் டேவிட் கோட்டையைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து மீட்பதற்காக முற்றுகையிட்டுத் தாக்கினார். இந்த நிலையில், ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக 1783 சூன் 30 ஆம் நாள் செய்தி வரவே, கடலூர்ப்பகுதி ஆங்கிலேயர்க்கும் புதுச்சேரிப் பகுதி பிரெஞ்சுக்காரர்க்குமாக மீண்டும் கைம்மாறின. பிறகு நடந்த போரில் மீண்டும் புதுச்சேரி ஆங்கிலேயர் கைக்கு மாறி, மறுபடியும் பிரெஞ்சுக்காரர் கைக்கு வந்தது. இப்படியாகக் கடலூரும் புதுச்சேரியும் பலமுறை கைம்மாறிக் கைம்மாறி உலக நிலையாமையை உலகிற்கு எடுத்துக் காட்டின.
செயின்ட் டேவிட் கோட்டை பலமுறை பிரெஞ்சுக் காரர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படாமல் இருந்திருந்தால், கடலூர் கல்கத்தா போல் பெருநகராக உருவாகிச் சென்னையின் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராய்த் திகழ்ந்த செயின்ட் டேவிட் கோட்டை இன்றிருக்கும் நிலை மிகவும் இரங்கத் தக்கது. இடிந்துபோன இந்தக் கோட்டையின் எளிய நிலையைப் பின்வரும் படத்தில் காணலாம்:
இந்தப் படத்தில் உள்ளது, இடிந்து போன கோட்டையின் நடுவிலிருக்கும் ஒரு சிறு பகுதி, ஒரு சிறு அறை போன்று உள்ள இந்தப் பகுதியைக் கொண்டு பழைய செயின்ட் டேவிட் கோட்டையின் அளவையும் தரத்தையும் கணிக்கக் கூடாது. மிகப் பெரிய பரப்பளவில் கோட்டை இருந்தது. கோட்டையின் இடிபாடுகளும் அடிப்படைகளும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. இப்போது இந்தக் கோட்டைப் பரப்பின் எல்லைக்குள் தனித்தனியாகச் சில கட்டடங்கள் உள்ளன. அவற்றுள், மாவட்ட மருத்துவமனைத் தலைவர் வாழும் கட்டடமும் பாரி கம்பெனியாரின் புதிய விருந்தினர் மாளிகையும் குறிப்பிடத்தக்கன. தென்மேற்கு மூலையில் கெடிலத்தின் ஓரத்தில் இருக்கும் கட்டடப் பகுதி மிகவும் பழமையாய்க் காணப்படுகிறது.
கடலும் கழியும் கெடிலமும் சுற்றியுள்ள சூழ்நிலையில் இருக்கும் கோட்டைப் பகுதி, இப்போது காண்பவர்க்கு, ஒரு காலத்தில் தலைநகராயும் போர்க்களமாயும் இருந்த பகுதியாகத் தோன்றாமல், முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலை உடையதாகவே தோற்றமளிக்கும். காலம் செய்யும் கோலம் என்னே!
கூடலூர்
கடலூர் என்னும் பெயர் கூடலூர் என்னும் பெயரிலிருந்து தான் வந்தது என்னும் செய்தியும், கடலூர் நகராட்சியின் தலைமையகமும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை யகங்களும் தொடக்கத்தில் கூடலூரில்தான் இருந்தன என்னும் செய்தியும், கூடலூர்தான் மிகப் பழைய நகர் என்னும் செய்தியும், கூடலூரின் பெயர்க்காரணமும் முன் பக்கங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
கடலூர்ப் புதுநகர்ப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் - கடலூரின் தெற்கு எல்லையாகக் கூடலூர் முதுநகர் அமைந்துள்ளது. கடலூர்ப் புதுநகர்ப் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சிதம்பரம் செல்லும் மாவட்ட நெடும்பாதையும் நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்லும் மாவட்ட நெடும்பாதையும் கூடலூர் வரை ஒரே பாதையாகச் சென்று கூடலூர்க்குத் தெற்கே தனித்தனியாகப் பிரிகின்றன. கூடலூரில் புகைவண்டிச் சந்திப்பு நிலையம் உள்ளது. இச் சந்திப்பிலிருந்து, விழுப்புரம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், மாயவரம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், விருத்தாசலம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், கூடலூர்த் துறைமுகத்திற்கு ஒரு பாதையுமாக நான்கு புகைவண்டித் தொடர்ப்பாதைகள் பிரிந்து செல்கின்றன. துறைமுகம் இருப்பது, கூடலூரின் பழம் பெருந்தொழில் வாணிகப் பெருமைக்குத் தக்க சான்று பகரும். இத் துறைமுகத்தைப் பற்றி இந்நூலில் ‘கூடலூர்த் துறைமுகம்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.
கூடலூர் 1803 வரை அரண்மிக்க அரச நகரமாகவே இருந்தது; பின்னர் அரண்கள் பலவும் அழிந்துபட்டன. கூடலூரின் பழைய அரண் மிகு பெருமைக்குச் சான்றாக இப்போது எஞ்சி நிற்பவை இரண்டே யிரண்டு கட்டிடங்களே, அவற்றுள் ஒன்று; ‘கிறைஸ்ட் சர்ச்’ (Christ Church) என்னும் கிறித்துவக் கோயில்; மற்றொன்று; ‘பாக்டறி ஹவுஸ்’ (Factory House) என்னும் தொழிற்சாலை மாளிகை, கிறைஸ்ட் சர்ச் தொடக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவக் குழுவினரிடம் (Jesuits) இருந்தது. அவர்கள் அப்போது நடந்து கொண்டிருந்த ஆங்கிலோ - பிரெஞ்சுப் போரில் பிரெஞ்சுக்காரர்கட்கு உதவியாயிருந்து கொண்டிருந்ததால், அவர்களிடமிருந்து கிறைஸ்ட் சர்ச் 1749 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, கிறித்துவம் பரப்பும் வேறொரு (Society for the Propagation of Christian Knowledge) ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ‘பிராடெஸ்டன்ட்’ (Protestant) என்னும் கிறித்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இந்தக் கோயிலின் கல்லறையில் ஆங்கிலேயர் பலரின் அடக்கக் குழிகள் உள்ளன; இவர்கள், எங்கேயோ பிறந்து எங்கேயோ வந்து யார் மண்ணுக்காகவோ தாங்கள் போரிட்டு மாய்ந்து போனார்களே - அந்தோ!
அடுத்து, நில அறைகளுடன் கூடிய ‘பாக்டரி ஹவுஸ்’ மாளிகை, 1764 வரை அதன் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (Collectors), வாணிகப் பேராளர்கள் (Commercial Residents) முதலியோரால் பயன்படுத்தப்பட்டன. 1707 ஆம் ஆண்டளவில், இது, செயின்ட் டேவிட் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கவர்னரின் மாளிகையாகவும் பயன்பட்டது. ஒரு சமயம் ராபர்ட் கிளைவ், தோற்றுப் போன பிரெஞ்சுக்காரர்களை இங்கே சிறைவைத்திருந்ததும் உண்டு. நாளடைவில் இம்மாளிகை மாவட்ட நீதி மன்றமாகவும் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக இம் மாளிகை 1886இல், பாரி கம்பெனிக்கு 10,000 (பத்தாயிரம்) ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றும் இது பாரி கம்பெனியாரின் உடைமையாகவே இருந்து வருகிறது. இங்கே நிலத்தடியிலிருந்து ஒரு பழைய துப்பாக்கி தற்செயலாய்த் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மேடைமேல் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.
கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகக் கூடலூரில் 1717இல் ஒரு பள்ளி தொடங்கப் பெற்றது. அது நாளடைவில் வளர்ந்து உயர்நிலைப் பள்ளியாயிற்று. 1951 ஆம் ஆண்டுக்கு முன் பள்ளியின் பெயர்: எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளி; அதன் பின் இப்போது பள்ளியின் பெயர்: தூய தாவீது (St. David) உயர்நிலைப்பள்ளி. ஊர் முதுநகராயிருப்பது போலவே இப்பள்ளியும் முதுபள்ளியாயிருக்கிறது. இவ்வூரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்நகரில் 1879ஆம் ஆண்டில் ‘டவுன் காலேஜ்’ என்னும் பெயரில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுச் சில்லாண்டுகள் நடைபெற்றுப் பின்னர் மறைந்துவிட்டது.
கூடலூரில் பழைய தொழில் - வாணிக வாடை இன்றும் ஓரளவு வீசிக் கொண்டுள்ளது இங்குள்ள பாரி கம்பெனியால் பல்லாயிரவர் தொழில் பெற்றுப் பிழைக்கின்றனர். பாரி கம்பெனியார் பல்வேறு துறைகளில் வாணிகம் புரிவதன்றி, படகு கட்டும் தொழிற்சாலையும் உரத் தொழிற்சாலையுங்கூட நடத்துகின்றனர். கூடலூரில் மணிலா ஆலைகள், கால்நடை உணவுத் தொழிற்சாலை, சோப்புத் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை, பிரிமியர் பெர்டிலைசர்ஸ் உரத் தொழிற்சாலை முதலியவை உள்ளன. நெசவுத் தொழில் இங்கே மிகுதி, தேங்காய் நாரிலிருந்து கயிறு திரித்தலும் கோரைப் பாய் முடைதலும் இங்கே மிகுதியாய் நடைபெறுகின்றன. உப்பளங்கள் மறைந்து வருகின்றன. இங்கே முன்பு ஊசி ஆலை, பருத்தி ஆலை முதலியனவும் இருந்து மறைந்து போயின. மொத்தத்தில் கூடலூரை ‘மொத்த வாணிகம்’ (Whole Sale) நடைபெறும் நகரம் என்று சொல்லலாம்.
கூடலூரில் துறைமுகம் இருப்பதால், அது சார்பான அலுவலகங்களும் இங்கே உள்ளன. துறைமுகத்திற்கருகில் உரத் தொழிற்சாலைகளும் உள்ளன. துறைமுகப் பகுதியை ஒட்டியுள்ள சோனகர் தெரு, வில்லிங்டன் தெரு, கிளைவ் தெரு, இம்பீரியல் ரோடு, சராங்கு தெரு, சமண வேளாளர் தெரு முதலியவை கூடலூரின் வரலாற்றுப் பெருமைக்கும் வாணிகப் பெருமைக்கும் சான்றுகளாய் உள்ளன. துறைமுகப் பகுதியில் பிராடெஸ்டன்ட் கிறித்துவர்களும், உள்நகர்ப் பகுதியில் முசுலீம் மக்களும் மிகுதியாய் வாழ்கின்றனர். இந்து கோயில்களுள், காமாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் ‘கிண்ணித் தேர்விழா’ குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பழம் பெருஞ் சிறப்புகள் பலவற்றிற்கு உரியதான கூடலூர் முதுநகர், இன்று சுருக்கமாகவும் எளிதாகவும் ‘ஒட்டி’ ஒட்டி (O.T. = Old Town) என்று பலராலும் அழைக்கப்படுகிறது. இதுவே, பீஜப்பூர் சுல்தானது ஆட்சிக் காலத்தில் 1640 தொட்டு 1677 வரை ‘இஸ்லாமா பாத்’ எனப் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை அறியும் போது வியப்பாயிருக்கிறது. மற்றும், இந்தக் கூடலூரேயன்றி, மதுரை மாவட்டத்தில் ஒரு கூடலூரும், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கூடலூரும், உள்ளன. அவற்றினின்றும், பழம்பெரு நகரமாகிய இந்தக் கடலூர்க் கூடலூரை வேறு பிரித்துணர வேண்டும். கூடலூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் என்னும் சங்கப் புலவர்கள் எந்த எந்தக் கூடலூரைச் சேர்ந்தவர்களோ?
அக்கரை
கூடலூருக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் முக்கியப் பகுதி இருக்கிறது. அதிலிருந்து ஒரு கிளை பிரிந்து தெற்கு நோக்கி வந்து கூடலூரின் தெற்கு எல்லையில் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்தத் தென் கிளைக்கு ‘உப்பனாறு’ என்பது பெயர். உப்பனாற்றின் மேற்குக் கரையில் கூடலூர் இருக்கிறது கிழக்குக் கரையில் ‘அக்கரை’ என்னும் தீவு இருக்கிறது. அக்கரைக்கும் கூடலூருக்கும் நடுவே உள்ள உப்பனாற்றுப் பகுதிதான் துறைமுகம் எனப்படுவது.
உப்பனாற்றின் இக்கரையில் (மேற்கில்) இருக்கும் கூடலூர் மக்கள், உப்பனாற்றின் அக்கரையில் (கிழக்கில்) இருக்கும் பகுதியை ‘அக்கரை’ என்னும் பெயராலேயே அழைக்கின்றனர். இது நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இதன் கிழக்கே கடலும், வடக்கே கெடிலமும், மேற்கிலும் தெற்கிலும் கெடிலத்திலிருந்து பிரியும் உப்பனாறும் உள்ளன. இத்தீவு ஒரே மணற் பகுதியாக உள்ளது. இத்தீவிலிருந்து கூடலூர்ப் பகுதிக்குப் போகவும் வரவும் உப்பனாற்றில் படகுகள் விடப்படுகின்றன. பள்ளிச் சிறார்கட்கும் நகராண்மைக் கழக ஊழியர்க்கும் படகுக் கட்டணம் இலவசம், தீவு நகராட்சியைச் சேர்ந்ததால், இச்செலவு நகராட்சியால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் மக்கள் தொகை: 1,500
இத்தீவு மக்கள் துறைமுக வேலை, மீன் பிடித்தல், படகுசெய்தல், படகு ஓட்டுதல், கயிறு திரித்தல், பல்வகைக் கயிற்றுப் பொருள்கள் செய்தல் முதலிய தொழில்கள் செய்து வாழ்கின்றனர். படகுகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு இலங்கை வரை சென்று மீளும் ஆற்றல் படைத்த படகோட்டிகள் இங்கு உள்ளனர்.
இத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி முதலிய சிற்றுார்கள் உள்ளன. ஒர் ஊருக்கும் மற்றோர் ஊருக்கும் உள்ள இடைவெளி ஒரு பர்லாங்கு அளவு இருக்கலாம். ஒவ்வோர் ஊரும் ஒரு மணல் திட்டுபோல் காட்சியளிக்கிறது.
சோனங் குப்பம்
அயல் நாட்டாரைச் சோனகர் எனக் கூறுவது தமிழ் மரபு. இந்த ஊரில் சோனகர் வாணிகம் புரிவதற்காக வந்து தங்கியிருக்கலாம்; அதனால் இது சோனகர் குப்பம் எனப் பெயர் பெற்று, பின்னர் சோணாங்குப்பம் எனத் திரிந்து விட்டிருக்கலாம். கூடலூருக்குள்ளேயும் ‘சோனகர் தெரு’ என ஒரு தெரு இருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
சிங்காரத் தோப்பு
சிங்காரத் தோப்பு என்றால் இது சிங்காரமான தோப்புதான். தொலைவில் இருந்து பார்ப்பவர்க்கு இஃது ஒரு தோப்பாகத்தான் தெரியும்; உள்ளே வீடுகள் உள்ளன. தீவின் நடுப்பகுதியாகிய இங்கே கலங்கரை விளக்கம் (Light House) இருக்கிறது. இவ்விளக்கு 20 அல்லது 25 கி.மீ. தொலைவில் செல்லும் கப்பல்களுக்கும் ஒளி காட்டும். இப் பகுதியில் படகு கட்டும் தொழில் நடைபெறுகிறது.
கோரி
இங்கே சேர்க்கானவதியானுடைய கோரி இருப்பதால் இப்பகுதி கோரி என அழைக்கப்படுகிறது. இது பதினைந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. ஆர்க்காட்டு நவாப்புகள் இந்தக் கோரிக்குப் பல உடைமைகளை அறக்கட்டளையாக அளித்துள்ளனர்.
உப்பனாற்றைக் கடந்து சென்று இயற்கைக் காட்சிமிக்க அக்கரைத்தீவு ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது கண்கட்கும் கருத்துக்கும் ஒரு பெரு விருந்தாகும்.
வெளிப்புற ஊர்கள்
இதுகாறும், ‘கெடிலக்கரை ஊர்கள்’ என்னும் தலைப்பில் கெடிலம் ஆற்றின் தென்கரையிலிருந்தோ அல்லது வட கரையிலிருந்தோ 10 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் இன்றியமையா ஊர்களைப் பற்றிய விவரங்கள் ஆராய்ந்து விளக்கப்பட்டன. இனி, ஒருசார் தொடர்பு பற்றிக் கெடிலக் கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிற்கு அப்பாலும் கடலூர் வட்டத்திற்குள் உள்ள இன்றியமையா ஊர்கள் சிலவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:-
நல்லாற்றூர்
இது கடலூர்த் தொகுதியில் - கடலூர் ஊராட்சிமன்ற ஒன்றியத்தில் - கடலூருக்கு வட கிழக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்ச் சிவன் கோயில் திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தொண்டகத் தேவாரத்தில் பாடப் பெற்றுள்ளது. இறைவன் பெயர் சொர்ண புரீசுரர்; இறைவி பெயர்: திருவழகி. இவ்வூரில் ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள்’ எனப்படும் பெரியாரின் அடக்கமும் கோயிலும் உள்ளன. இக்கோயிலை வலம் வந்து வழிபடும் ஊமைகள் பேசுவர் என்னும் நம்பிக்கை இருந்து வருகிறது. மயிலம் - பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகளின் கிளைமடம் ஒன்றும் இங்கே உள்ளது.
புதுச்சேரியிலிருந்து நல்லாற்றுாருக்குப் பேருந்து வண்டிகள் மிகுதியாகச் செல்கின்றன. விழுப்புரம் - புதுச்சேரிப் புகைவண்டிப் பாதையில், கண்டமங்கலம் என்னும் சின்னபாபு சமுத்திரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் நல்லாற்றுார் உள்ளது.
திருச்சோபுரம் (தியாகவல்லி)
இவ்வூர் கடலூருக்குத் தெற்கே 17 கி.மீ. தொலைவில் கடற்கரையில் உள்ளது. பரவனாறு என்னும் உப்பங்கழியைப் படகு ஏறிக் கடந்து இவ்வூருக்குச் செல்ல வேண்டும். கூடலூர் - மாயவரம் புகைவண்டிப் பாதையிலுள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வட கிழக்கே 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது; கடலூர் - சிதம்பரம் பேருந்து வண்டிப் பாதையிலும் ஆலப்பாக்கம் அகப்படும்.
இவ்வூர்ச் சிவன்கோயில் திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்றது. இறைவன்: சோபுரநாதர்; இறைவி: சோபுரநாயகி. திருச்சோபுரத்திற்குத் தியாக வல்லி என்னும் பெயரும் உண்டு; இந்தப் பெயர்தான் வழக்கில் உள்ளது. திருச்சோபுரம் என்னும் பெயர் தேவார வழக்கு. தியாகவல்லி என்னும் அரசியின் பெயரோடு இவ்வூர் தொடர்புபடுத்தப் பட்டிருக்கிறது. அந்த அரசியின் உருவத்தைச் சிவன் கோயிலில் காணலாம்.
திருச்சோபுரம் கோயில், இருக்குமிடம் தெரியாமல் பல காலம் மணலால் மூடப்பட்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மாடு மேய்த்த சிறுவர்கள் ஒரு மணல்மேட்டில் ஒரு கலசம் தெரிவதைத் தற்செயலாய்க் கண்டு சொல்ல, பின்னர்க் கோயில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ தம்பிரான் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேவாரத்தில் இந்தக் கோயில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கொண்டு, இந்தப் பகுதியில் ஒரு கோயில் இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பார்; பின்னர்க் கோயில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். சென்னப்ப நாய்க்கன் பாளையத்தின் உடைமையாளர்களாயிருந்த குமரப்ப நாய்க்கரும் அவர் மகன் சங்கர நாய்க்கரும் கோயிலை முடியிருந்த மணலைத் தோண்டி அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சோழர்-பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள் சில உள்ளன. இவ்வூர் மக்கள் தொகை: 2250.
திருத்தினை நகர்
தேவாரத்தில் திருத்தினைநகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வூர், பேச்சு வழக்கில் ‘தீர்த்தன கிரி’ என்று அழைக்கப்படுகிறது. இது, கடலூருக்குத் தென்மேற்கே 19 கி.மீ. தொலைவில் ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்குத்
தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கடலூர் - சிதம்பரம் பாதையில் ஆலப்பாக்கத்திற்கு அருகிலுள்ள மேட்டுப் பாளையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. தொலைவு சென்றால் இவ்வூரை அடையலாம். கடலூர் - குண்டியமல்லூர் பேருந்து வண்டிப் பாதையில் பெருமாள் ஏரிக்கரையில் ஆயத்துறையில் இறங்கினால் அரை கி.மீ. தொலைவில் திருத்தினை நகர்ச் சிவன்கோயில் தென்படும். இவ்வூர் மக்கள் தொகை: 2,170.
இவ்வூர்ச் சிவன்கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது. நாவுக்கரசரும் ஞானசம்பந்தருங்கூட இவ்வூருக்கு வந்து வழிபட்டுப் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது; ஆனால், அவர்களின் பதிகங்கள் கிடைக்கவில்லை. இறைவன் பெயர்: திருந்தீசுரர்; இறைவி பெயர்; ஒப்பிலாநாயகி, மரம்: கொன்றை.
இவ்வூர்த் தொடர்பாகச் சுவையான ஒரு வரலாறு கூறப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். சிவன் ஒரு துறவியாய் அங்கே வந்து அவனிடம் உணவு கேட்டார். அவன் வீட்டிற்குச் சென்று உணவு ஆக்கிக் கொண்டு மனைவியுடன் வந்தான். அதற்குள் வெற்று நிலத்தில் தினை விளைந்து முற்றியிருந்தது. இஃது இறைவன் செயல் என அறிந்து வியந்து மனைவியுடன் இறைவனை வழிபட்டான். இதனால் ஊருக்குத் ‘தினைநகர்’ என்னும் பெயர் ஏற்பட்டதாம். இன்றும் இவ்வூர்க் கோயில் இறைவனுக்குத் தினையமுது படைக்கப்படுகிறது. இந்தவரலாறு கோயிலின் தென்புறச் சுவரில் சிற்பமாகச் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. இக் கோயிலில் இன்னும் பல சிற்பங்கள் உள்ளன.
இங்கே, பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. 1517இல் வெட்டப்பட்ட விசயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டொன்று, அவர் அளித்த அறக்கட்டளை பற்றியும், அவர் தென்னாட்டில் பெற்ற வெற்றிகள் பற்றியும், விவரிக்கிறது. அந்தக் காலத்தில் பெருவிழாக்களின் முதல் நாட்களில், தெருக்கள் துப்புரவாயுள்ளனவா எனக் காணும் முறையில் ‘திருநாவுக்கரசர் திருவீதி உலாவரும் திருவிழா நடைபெற்றதாக இந்த ஊர்க் கல்வெட்டொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் பெரிய நாகசுரக் கலைஞர் ஒருவர் பல்லாண்டுகட்கு முன் வாழ்ந்தார்; அவர் தீர்த்தனகிரி சின்னசாமி என மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.
வடலூர்
வடலூரை அறியாத தமிழர் இருக்க முடியாது. இவ்வூர், அரசுக் குறிப்புகளில் பார்வதிபுரம் எனப் பெயர் சுட்டப்பட்டுள்ளது. கடலூர் - விருத்தாசலம் பாதையிலுள்ள இவ்வூரில் புகைவண்டி நிலையமும் உண்டு. இந் நிலையம் குறிஞ்சிப்பாடி நிலையத்திற்கும் நெய்வேலி நிலையத்திற்கும் இடையில் உள்ளது. ஊர் மக்கள் தொகை: 1750.
வடலூர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் இங்கே சமரச சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, அறநெறிச்சாலை ஆகியவை நிறுவியதால் இவ்வூர் உலகப் பெரும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. இந்நிறுவனங்களின் நூற்றாண்டு விழா 1967 இல் நடைபெற்றது. வடலூர் சபை பற்றியும் வள்ளலார் பற்றியும் இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - வடலூர் வள்ளலார்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.
வடலூரில் ஏராளமான சத்திரங்கள் இருப்பதுடன், தைப்பூச நாளில் சத்திரங்களில் பலர் வந்து இலவசமாக உணவு இடுதலும் குறிப்பிடத்தக்கது. இங்கே, அரசினர் ஆதார ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அரசு அம்பர் சர்க்கா நிலையம், சேஷசாயி குழுவின் மின்சார இன்சுலேட்டர் தொழில்நிலையம், ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் நிறுவிய வள்ளலார் குருகுலம் - வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி - அப்பர் அனாதை மாணவர் இல்லம் - அப்பர் சான்றோர் இல்லம், சேலம் பெருமாள் செட்டியார் அருட்பா பாடசாலை முதலியவை இருப்பது, வடலூரின் இன்றியமையாமையை மேலும் மிகுதிப்படுத்துகிறது. இங்கே முந்திரி எண்ணெய்த் தொழிற்சாலையும் உள்ளது. இவ்வூர் கெடிலத்தின் தென்கரைக்கு 19 கி.மீ. (12 மைல்) தொலைவில் உள்ளது.
மேட்டுக் குப்பம்
இது, வடலூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமலிங்க அடிகளார் வடலூரில் ‘சத்திய ஞான சபை’ அமைத்தாலும், அவர் தங்கியிருந்தது இந்த மேட்டுக்குப்பம் ஊரில்தான். இங்கே அவர் குடில் வடிவிலுள்ள ‘சித்திவிளாகம்’ என்னும் பெயருடைய மனையில் தங்கியிருந்தார். அன்பர்கள் இந்தக் குடிலைச் சித்தி விளாக மாளிகை’ எனச் சிறப்புடன் அழைப்பர். வள்ளலார் தம் வாணாளின் இறுதியில் சித்திவிளாகத்திலுள்ள ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதாகவும் பிறகு வெளி வரவேயில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. இன்றும் பூட்டிய நிலையில் அந்த அறை காட்சியளிக்கிறது. சித்திவிளாகத்தில் அணையாத நந்தா விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிேயிருக்கிறது; அடிகளார் சுடரொளியில் (சோதியில்) கலந்துவிட்டார் என்பதை அறிவிக்கும் முறையில் இந்தச் சூழ்நிலை அமைந்துள்ளது.
வள்ளலார் நீராடியதாகச் சொல்லப்படும் ‘தீஞ்சுவை ஒடை’ மேட்டுக் குப்பத்தில்தான் இருக்கிறது. ஒடையும் ஓடையைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் காண்பதற்கு இன்பமாயுள்ளன. இந்த இடத்தில் இனந்தெரியாத ஒரு புத்துணர்வு தோன்ற்கிறது. “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே...'ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே...” என்னும் அடிகளாரின் அருட்பாவை இங்கே திரும்பத்திரும்பப் பாடவேண்டும் போல் தோன்றுகிறது.
மேட்டுக் குப்பம் ‘கருங்குழி’ என்னும் ஊரைச் சார்ந்த பகுதியாகும். வள்ளலார் கருங்குழியிலும் தங்கிப் பல பாடல்கள் அருளியுள்ளார். கருங்குழியின் மக்கள் தொகை: 3020.
நெய்வேலி
தன்னிடமுள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தால் உலகப் பெரும் புகழ்பெற்றுள்ள நெய்வேலி கடலூர் - விருத்தாசலம் பாதையில் உள்ளது. 1931ஆம் ஆண்டில் கூடலூர் - விருத்தாசலம் புகைவண்டிப் பாதை அமைக்கப்பட்டபோது நெய்வேலியில் நிலையம் இல்லை. 1950இல்தான் இங்கே புகைவண்டிகள் நிற்கத் தொடங்கின. அப்போதும் இங்கே நிலையம் கட்டப்பட வில்லை; ஒரு பழைய ஓட்டைப் புகைவண்டிப் பெட்டி நிலையமாக நிறுத்தப்பட்டு, பயணச் சீட்டு கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருந்தது; இந்த நிலைமை 1958 வரையுங் கூட நீடித்திருந்ததாக நினைவிருக்கிறது. பின்னர்ப் பெரிய அளவில் - ஆறு நூறாயிரம் (6 இலட்சம்) ரூபாய் செலவில் நிலையக் கட்டடங்கள் தொடங்கப்பட்டு 1961இல் கட்டி முடிக்கப்பட்டன.
நெய்வேலி கடலூருக்குத் தென்மேற்கே 35 கி.மீ. தொலைவில் இருந்தாலும், பண்ணுருட்டிப் பக்கமாகக் கெடிலத்தின் தென்கரைக்கு நேர் தெற்கே 20 கி.மீ. தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது; மற்றும், நெய்வேலி நிலக்கரி உள்ள பகுதி, கெடிலக்கரை வரையும் பரந்திருக்கிறது. நிலக்கரியை வெட்டிக்கொண்டு போகப் போக எதிர்காலத்தில் கெடிலத்தை நெருங்க வேண்டியது வந்தாலும் வரலாம். இந்த முறையில், நெய்வேலி நிலக்கரித் திட்டத்துடன் நெருங்கிய தொடர்பும் உரிமையும் கெடிலக்கரைக்கு உள்ளமை புலனாகும்.
சில ஆண்டுகட்குமுன் பொட்டல் வெளியாய்க் கிடந்த நெய்வேலிப் பகுதியில் ஓரிடத்தில் நீர் இறைப்பதற்காக நிலத்தில் குழாய் இறக்கப்பட்டது (தென்னார்க்காடு மாவட்டக் கழகத்தின் தலைவராகவும் கடலூர் நகராட்சித் தலைவராகவும் பணிபுரிந்த சம்புலிங்க முதலியார் என்பவரின் நிலம் என்பதாக நினைவு). உடனே நிலத்திலிருந்து நீர் பீறிட்டுக்கொண்டு வெளியாகிப் பெருக்கெடுத்தோடியது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரின் அளவும் விரைவும் இருந்தன. ஒயா அரக்கனைப்போல நிற்காமல் நீர் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. இதைப் பெரிதுபடுத்திப் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்ததைச் சிறு வயதில் கேட்ட நினைவு இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், நெய்வேலியில் நிலக்கரி இருப்பது பின்னர் 1948இல் கண்டுபிடிக்கப்பட்டது.
எளிய நிலையில் பொட்டல் வெளியாகக் கிடந்த நெய்வேலி இப்போது பெற்றிருக்கும் மாபெருஞ் செல்வ நிலையை விளக்கத் தேவையில்லை. ஏறக்குறைய நூறாயிரம் (இலட்சம்) மக்கள் வாழும் பெருநகராக நெய்வேலிப் பகுதி இன்று திகழ்கிறது. நெய்வேலிப் பகுதி இன்று தமிழக அரசின் ஆட்சிக்கு உட்படாமல், மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு’வின் நேரடி ஆட்சியின்கீழ் உள்ளது. இங்கே சிறந்த குடியிருப்புகள், உயர்நிலைப் பள்ளி, திரைப்பட மாளிகை, மருத்துவமனை முதலியனவாக வசதியளிக்கும் பல்வேறு நகர் உறுப்புகளும் உள்ளன.
நெய்வேலிப் பகுதியில் இருநூறு கோடி டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக 1951இல் ஆராய்ச்சி வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் நிலக்கரி எடுக்கும் பொறுப்பை மேற்கொண்டு ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு’ (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்) என்னும் குழுவை ஏற்படுத்தி வேலையைத் தொடங்குவித்தது. இப்போது ஆண்டு தோறும் பல இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, அனல் மின்சார நிலையம், அடுப்புக் கரிக்கட்டித் தொழிற்சாலை, யூரியா உரத் தொழிற்சாலை முதலியனவும் நிறுவப்பட்டுச் செயல்படுகின்றன. இன்னும் இவை தொடர்பாகப் பல்வேறு வகைத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுப் பல்வேறு வகைப் பொருள்கள் உண்டாக்கப்பட விருக்கின்றன. நிலக்கரித் திட்டத்தை மையமாகக் கொண்டு இங்கே ஏற்பட்டிருக்கும் 110 ஏக்கர் பரப்பளவுடைய நீர்த் தேக்கம் மிகவும் காணத்தக்கது. பல்லாயிரவர் இங்கே பணி செய்து பிழைக்கின்றனர்.
மாபெருஞ் செல்வச் செழிப்பிற்குக் காரணமாயுள்ள நெய்வேலி நிலக்கரித் திட்டம், பொதுவாகத் தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டத்தின் - பெருமைக்கு உரியதாயினும், சிறப்பாகக் கெடிலக்கரை நாகரிகத்தின் ஏற்றத்திற்கு உரியதாகும்.
* * *
↑ *சுந்தரர் தேவாரம் - திருவெண்ணெய் நல்லூர்ப் பதிகம்.
↑ *பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்: 81, 82.
↑ *இந்திய சாசனங்கள் தொகுதி 5 - பக்கம் 167 தொகுதி 6 பக்கம் 51 தொகுதி 7 - பக்கம் 195.
↑ *பெரிய புராணம் - தடுத்தாட் கொண்ட புராணம்: 85 - 87.
↑ *பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் : 83.
↑ கலிங்கத்துப் பரணி - அவதாரம் - 68, 69.
↑ Mackenzie Manuscripts.
↑ *திநாவுக்கரசர் தேவாரம் - திருப்பாதிரிப் புலியூர்ப் பதிகம் பாடல் 4 கெ.24.
↑ பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 38, 39, 40,
↑ பெரிய புராணம் - திருநாவுகரசர்- 61
↑ பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 79.
↑ பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 131, 133.
↑ பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 146.
23. மக்களும் வாழ்க்கை முறையும்
மக்கள் தொகை
தென்னார்க்காடு மாவட்டத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 28,00,000 (28 இலட்சம்) ஆகும். இதில் கெடிலம் ஓடும் கள்ளக்குறிச்சி வட்டத்தின் தொகை 3,83,500; திருக்கோவலூர் வட்டத்தின் தொகை 4,00,150; கடலூர் வட்டத்தின் தொகை 5,11,400 ஆகும். கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 13,00,000 (13 இலட்சம்) எனலாம். தமிழகத்தில் மக்கள் நெருக்கமுள்ள மாவட்டங்களுள் தென்னார்க்காடு மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் எட்டு வட்டங்களுள் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்த மக்கள் தொகை (13 இலட்சம்). இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் (28 இலட்சத்தில்) ஏறத்தாழப் பாதி இருக்கிறது. இதிலிருந்து, கெடிலக்கரைப் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுதி என அறியலாம்.
மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,770 சதுர கி.மீ. ஆகும். இவற்றுள் கள்ளக்குறிச்சி வட்டத்தின் பரப்பளவு 2,230 சதுர கி.மீ. ஆகும்; திருக்கோவலூர் வட்டத்தின் பரப்பளவு 1,500 சதுர கி.மீ. ஆகும்; கடலூர் வட்டத்தின் பரப்பளவு 1,060 சதுர கி.மீ. ஆகும். ஆகக் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்தப் பரப்பளவு 4,790 சதுர கி.மீ ஆகும். பரப்பளவு வகையில் பார்த்தாலும், கெடிலக்கரை வட்டங்களின் குறைந்த பரப்பளவில் நிறைந்த மக்கள் வாழ்வது புலனாகும். கெடிலக்கரை வட்டங்களுக்குள்ளும், 2,230 சதுர கி.மீ பரப்பளவுள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் 3,83,500 மக்களே வாழ்கின்றனர்; 1,500 சதுர கி.மீ. பரப்பளவுள்ள திருக்கோவலூர் வட்டத்திலோ 4,00,150 மக்கள் வாழ்கின்றனர். இவை யிரண்டினும் குறைந்த அளவான 1060 சதுர கி.மீ. பரப்பளவே உடைய கடலூர் வட்டத்தில், இவையிரண்டினும் மிக்க அளவில் 5,11,400 மக்கள் வாழ்கின்றனர்.
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 172 மக்கள் கள்ளக்குறிச்சி வட்டத்திலும், 267 மக்கள் திருக்கோவலூர் வட்டத்திலும், 483 மக்கள் கடலூர் வட்டத்திலும் வாழ்கின்றனர் எனலாம். இம்மூன்று வட்டங்களுள் இவ்வளவு ஏற்றத் தாழ்விற்குரிய காரணமாவது:கெடிலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் தோன்றுகிறது; அதனால் அங்கே பயன் ஒன்றும் இல்லை; மேலும் அவ்வட்டம் மலையும் காடும் மிக்கது. அடுத்து, கெடிலம் திருக்கோவலூர் வட்டத்தில் வளர்ச்சி பெற்று ஒரளவு பயன் அளிக்கிறது. அதனால் அங்கே முந்திய வட்டத்தினும் மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மேற்கொண்டு கெடிலம் கடலூர் வட்டத்தில் பெருவளர்ச்சியடைந்து பெரும் பயன் தருகிறது; மற்றும் கடலூரில் கடலிலே கலக்குமிடத்தில் துறைமுகத்தையும் பெற்றுள்ளது; இந்த வசதியால், கடலூரை ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராகவும், இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகவும் கெடிலம் ஆக்கியுள்ளது; இதனால் முந்திய இரண்டு வட்டங்களினும் கடலூர் வட்டத்தில் மக்கள் மிகப் பெருகியுள்ளனர். இதிலிருந்து, ஆற்றங்கரைப் பகுதிகளில் மக்கள் மிகுதியாக வாழ்வர் என்னும் உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது; இந்த உண்மை, கெடிலக்கரை வளத்திற்கும் நாகரிகத்திற்கும் சிறந்த சான்றாகிறது.
மதங்கள்
இந்த நாட்டின் மதம், இந்துமதம் எனப்படுகின்ற சிவநெறியாம் சைவமும், திருமால் திருநெறியாம் வைணவமுமே. மற்ற பெளத்தம், சமணம், சீக்கியம், இசுலாம், கிறித்துவம் முதலிய மதங்கள் எல்லாம் இந்த நாட்டிற்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்த புது மதங்களேயாம். வந்த மதங்களுள் பெளத்தமும் சமணமும் பழமையானவை. சங்க காலந்தொட்டு இடைக்காலம் வரை - அஃதாவது கி.மீ. 600 முதல் கி.பி.1300 வரை பெளத்தமும் சமணமும் திருமுனைப்பாடி நாட்டில் மாறிமாறி வளர்ந்தும் குறைந்தும் கால் கொண்டிருந்தன. பிற்காலத்தில் வளர்ச்சி அறவே நின்று வரவரத் தேயத் தொடங்கி விட்டது. புத்த மதத்தினர் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகமிகக் குறைந்து விட்டனர். சமணத்தில் 6000 அல்லது 7000 மக்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்தால் பெரிய செய்தியாம். இவர்கள், திருக்கோவலூர், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களில் உள்ளனர்; மற்ற வட்டங்களில் அவ்வளவாக இல்லை எனலாம். கெடிலக்கரை வட்டங்கள் மூன்றனுள் திருக்கோவலூர் வட்டத்தில் திருநறுங்குன்றம், மருதூர் முதலிய இடங்களில் சமணர்கள் குழுவினராக வாழ்கின்றனர்.
இந்துக்களுக்கு அடுத்தபடி இசுலாமியரே மிகுதியாயுள்ளனர். இம்மாவட்டத்தில் 90,000 இசுலாமியர் உளர் எனலாம். இசுலாம் 14ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் நாட்டிற்குள் புக்கு வேரூன்றத் தொடங்கிவிட்டது. 14ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்த வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தன் பங்காளிப் பாண்டியனை வெல்வதற்காக டில்லியிலிருந்த முசுலீம் மன்னனின் உதவியை நாடினான்; அம்முசுலீம் மன்னனுடன் மதமும் வந்தது. மேற்கொண்டும் பீஜப்பூர் சுல்தான், கோல்கொண்டா சுல்தான், ஐதராபாத் நிசாம், ஆர்க்காடு நவாப் முதலியோரின் ஆட்சி தென்னாட்டில் ஏற்பட்டபோதெல்லாம் முசுலீம் மதமும் வேரூன்றி வளரத் தொடங்கியது. பீஜப்பூர் சுல்தானது ஆட்சிக் காலத்தில் 1640ஆம் ஆண்டு தொடங்கி 1677 வரை கூடலூர் இசுலாமாபாத் என்று அழைக்கப்பட்டமை ஈண்டு நினைவு கூரத்தக்கது. முசுலீம் மக்களுள் சிலர் அரசு அலுவல், வாணிகம், மருத்துவம் முதலிய உயர்தொழில்கள் புரிகின்றனர்; ஒரு சிலர் தறி நெய்தற்கு வேண்டிய அச்சு கட்டுதல், பஞ்சடித்தல், இலாடம் அடித்தல், ஈயம் பூசுதல், பாய் நெசவு, வெற்றிலை பயிரிடல், வெற்றிலை விற்பனை முதலிய சிறுதொழில்கள் புரிகின்றனர். கெடிலக்கரைப் பகுதியில் கூடலூர், நெல்லிக்குப்பம் முதலிய இடங்களில் முசுலீம்கள் தொகுப்பாக வாழ்கின்றனர். இவர்களுள்ளும் பட்டாணியர், லப்பை, பஞ்சுகொட்டி, மரைக்காயர் எனப் பலவகையினர் உளர்.
இசுலாமியருக்கு அடுத்தபடியாகக் கிறித்தவர்களைச் சொல்லலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய 65,000 கிறித்தவர்கள் உளர் எனலாம். கிறித்தவம் 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே தமிழகத்துள் புகுந்துவிட்டது. இவர்களுள் கத்தோலிக்கர், பிராடஸ்டன்ட் என்னும் இரு பிரிவினர் உளர். கிறித்தவம் மேலை நாடுகளிலிருந்து கிறித்தவச் சபைகளின் வாயிலாக இங்கே நுழைந்தது. ஏழை எளியவர்களுட் சிலரும் தாழ்த்தப்பட்ட மக்களுட் சிலரும் எளிதில் கிறித்தவ மதத்திற்கு மாறினர். கெடிலக்கரப் பகுதியில் திருக்கோவலூர், பண்ணுருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், (இப்போது) நெய்வேலி முதலிய ஊர்களில் கிறித்தவர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மற்ற ஊர்களிலும் கடலூரில் மிகுதி எனலாம். கடலூர்ப் புதுநகர்ப் பகுதியில் கத்தோலிக்கரும் முதுநகர்ப் பகுதியில் பிராடஸ்டன்ட் கிறித்தவரும் மிக்குள்ளனர்.
தமிழகத்திற்கு வந்த பிற மதங்களுள் பெளத்தம், சமணம், இசுலாம், கிறித்தவம் என்னும் நான்கும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பெளத்தமும் சமணமும் இந்திய நாட்டு மதங்கள்; இசுலாமும் கிறித்தவமும் வெளிநாட்டு மதங்கள்; அப்படியிருந்தும் தென்னார்க்காடு மாவட்டத்தில் பெளத்தம் இருக்கும் இடம் தெரியவில்லை; சமணர்கள் ஏழாயிரவரே உள்ளனர்; ஆனால் இசுலாமியத்தில் 90,000 மக்களும் கிறித்தவத்தில் 65,000 மக்களும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? பெளத்தமும் சமணமும் சைவ நாயன்மார்களாலும் வைணவ ஆழ்வார்களாலும் மற்ற சைவ வைணவப் பெருமக்களாலும் முறியடிக்கப்பட்டன; இந்தச் சூழ்நிலையில் தமிழ் மன்னர்களும் அம்மதங்களை ஆதரிக்காது விட்டனர். ஆனால், இசுலாமும் கிறித்தவமும் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த பிற மன்னர்களின் ஆட்சியின் துணை கொண்டு புகுந்ததால், இப்பகுதியில் நன்கு வேரூன்றி ஆணியடித்துக்கொண்டன. அந்த அயல் ஆட்சியாளர்கள் தத்தம் ஆட்சிக் காலங்களில் தத்தம் மதங்களை நன்கு எருவும் நீரம் இட்டு ஆதரித்து வளர்த்தனர்.
இசுலாமியருள் பெரும்பாலானவர் வடக்கேயிருந்து வந்த மரபினர்; சிறுபான்மையினர் இசுலாமியராக மாறிய தமிழர்கள். ஏறத்தாழக் கிறித்தவர் எல்லாருமே மத மாறிய தமிழர்களே. வெளிக் கிறித்துவர் ஒரு சிலர் இருக்காம்.
இந்நாட்டில் பெரும்பான்மை மக்களான இந்துக்களும் பல்வேறு வகையினராயுள்ளனர். சைவர், சைவத்திலேயே வீர சைவர், வைணவர், வைணவத்திலேயே வடகலையார் - தென்கலையார், சங்கரர் - இராமாநுசர் - மாத்துவாசாரியார் முதலியோரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர், சிறு தெய்வங்களை வழிபடுவோர் முதலிய பல்வேறு வகையினர் இந்துக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் சிவன், பிள்ளையார், முருகன், தேவி, திருமால், திருமகள், கலைமகள், ஆஞ்சநேயர், மாரியம்மன், காளி, அங்காளியம்மன், துரோபதையம்மன், பிடாரி, அய்யனார், வீரர், மாடசாமி, மன்னார்சாமி, காத்தவராயன் முதலிய பல்வேறு பெயர்களையுடைய தெய்வங்களை வழிபடுகின்றனர். இத் தெய்வங்கட்குக் கூட்டாகவும் தனித்தனியாகவும் கோயில்கள் உள்ளன. சில தெய்வங்கள் சில இனத்தவர்களால் குலதெய்வங்களாகக் கொண்டு வழிபடப்படுகின்றன்; அந்த இனத்தவர் இருக்கும் ஊர்களில் அந்தத் தெய்வங்கட்குக் கட்டாயம் கோயில் இருக்கும். எடுத்துக்காட்டாக, செங்குந்த இனத்தவரின் குலதெய்வம் முருகன்; செங்குந்தர் இருக்கும் ஊர்களில் முருகன் கோயில் இருக்கும்.
இனங்கள் (சாதிகள்)
தமிழகத்தில் எங்கும் உள்ள இனங்கள் (சாதிகள்) இங்கும் உள்ளன. கெடில நாட்டில் மிகுந்த எண்ணிக்கையில் உள்ள இனத்தவர் வன்னியரே. இவர்கள் ‘வன்னிய குல க்ஷத்திரியர்’ என்றும் சொல்லப்படுவர். இந்த இனத்தவர் பெயருக்குப் பின்னால் படையாட்சி, நாயகர், கவுண்டர், பிள்ளை, இராயர், பூசாரி, உடையார், தேவர் முதலிய பட்டப் பெயர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் உடல் உரமும் உழைக்கும் ஆற்றலும் உதவி செய்யும் உயர்ந்த உளப்பான்மையும் உடையவர்கள், உழவுத் தொழில் புரிபவர்கள். இந்த நாட்டின் உழைப்பாளிப் பெருங்குடி மக்களாகிய இவர்கள், இவ்வளவு நாள் அடக்கப்பட்டும் அடங்கியும் பின்தங்கியிருந்தனர். இந்த இருபதாம் நூற்றாண்டில் விழிப்பெய்தி முன்னேறி வருகின்றனர். இவர்களைக் குறிக்கும் பல்வேறு பட்டப் பெயர்கள், இவர்கள் பண்டு படைஞராகவும் படைத்தலைவராகவும் இருந்ததைப் புலப்படுத்தும். இவ்வினத்தவர் பெரும்பாலான ஊர்களில் பெரும்பாலராகக் குழுவாக வசிக்கின்றனர்.
வன்னியருக்கு அடுத்தபடியாக மிக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், அரிசனர் என்றும் ஆதித் திராவிடர் என்றும் சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்களாவர். இவர்கள் தாழ்ந்த மக்கள் அல்லர், பிறரால் தாழ்த்தப்பட்ட மக்களே. இப்பகுதியில் இவர்கள் பறையர் என்னும் பெயரால் சுட்டப்படுகின்றனர். ஒவ்வோர் ஊருக்கும் அப்பால் ‘சேரி’ என்னும் பெயருடைய குடியிருப்புகளில் இவர்கள் தங்களுக்குள் குழுவாகவும், பிற இனத்தவரினின்றும் தனியாகவும் வாழ்கின்றனர். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள், உழவுத் தொழிலும் கூலி வேலைகளும் செய்து பிழைக்கின்றனர். தீண்டாதவர்கள் என ஒதுக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று அவ்விழிவு நீங்கி மற்றவர்போலவே பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.
அடுத்தபடி மிகுந்த எண்ணிக்கையினர் கைக்கோளர் எனப்படும் செங்குந்த முதலியாராவர். இவர்களும் பல ஊர்களில் குழுகுழுவாக வாழ்கின்றனர். இவர்களின் குலத்தொழில் நெசவு, நெசவு செய்பவர்கள் ஏழையர்களாகவும், வெளிநாடுகளுடன் கைலி வாணிகம் செய்பவர்கள் பெருஞ் செல்வர்களாகவும் இருக்கின்றனர். அடுத்து உடையார், நாயடு, ரெட்டியார் முதலிய இனத்தவர்கள், சிற்சில ஊர்களில் ஓரளவு குழுவாக வசிக்கின்றனர். மற்றபடி, வேறிடங்களில் வாழ்கின்ற பல்வேறு வகை வேளாளர், பிராமணர், பல்வேறு தமிழ்ச் செட்டிமார்கள். இலிங்க தாரிகள், கம்மாளர், அகமுடையார், இடையர், வாணியர், நாடார், குயவர், செம்படவர், கம்மவார், சேடர், சாலியர், சேணியர், தேவாங்கர், சாத்தானியர், வண்ணார், நாவிதர், குறும்பர், ஒட்டர், இருளர், வள்ளுவர்,
சக்கிலியர், குறவர் முதலிய பல்வேறு இனத்தவர்களும் இங்கே வாழ்கின்றனர்.
பெயருக்குப் பின்னால் முதலியார், பிள்ளை, செட்டியார், ஐயர் போன்ற பட்டங்கள் போட்டுக் கொள்பவர்கட்கு இடையே பல்வேறு பிரிவினர் உளர். வேளாளர்களும் அகம்படியர்களும் முதலியார், பிள்ளை என்றும், செங்குந்தர் முதலியார் என்றும், பிரமாணர் ஐயர், சாஸ்திரி, சர்மா, ராவ், ஐயங்கார், ஆச்சாரி என்றும், இலிங்கதாரிகள் ஐயர், பத்தர், என்றும், ஆயிரவர் பேரி வடக்கத்தியார் - அச்சிறு பாக்கத்தார் - சோழியர் முதலியோரும் வாணியர், கோமுட்டியர், சேடர், சேணியர், தேவாங்கர், சாலியர் முதலியோரும் செட்டியர் எனவும், கம்மாளர்கள் ஆசாரி, பத்தர் எனவும், இடையர்கள் கோனார், பிள்ளை, யாதவர் என்றும், கம்மவார்கள் நாயடு, நாய்க்கர் என்றும், சாணார் எனப்படுபவர் கிராமணி, நாடார், பிள்ளை என்றும், குயவர்கள் உடையார், பிள்ளை, பத்தர் என்றும், செம்படவர் செட்டியார், கரையாளர் என்றும் பட்டங்கள் போட்டுக் கொள்கின்றனர். கம்மாளர்களும் செட்டியார் என்னும் பட்டம் உடையவர்களும் பூணுால் அணிந்து கொள்கின்றனர். ‘க்ஷத்திரியர்’ என்ற முறையில் வன்னியருள்ளும் ஒரு சிலர் பூணூல் போட்டுக் கொள்கின்றனர். கள்ளக் குறிச்சி வட்டத்தில் கல்வராயன் மலைப் பகுதியில் மலையாளிகள் என்பவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் கேரள மலையாளிகள் அல்லர், தமிழக மலையாளிகள். கவுண்டர் எனவும் இவர்கள் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். மேற்சொன்னவர்களேயன்றி, இன்னும் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ் இனத்தவரும் தமிழக மல்லாத வேறு மாநில மக்களும் ஓரளவு வாழ்கின்றனர்.
வன்னியர் உழவும் சிறு தொளழில்களும், அரிசனர் உழவும் கூலி வேலைகளும், செங்குந்தர், சேடர், சேணியர், தேவாங்கர் நெசவும், வேளாளர், அகம்படியர், உடையார், ரெட்டியார் போன்றவர்கள் உழவும் உழுவித்தலும், பல்வேறு தமிழ்ச் செட்டிமார்கள் வாணிகமும், வாணியர் எண்ணெய் ஆடுதலும், கம்மாளர்கள் தச்சு வேலையும், நகை வேலையும் உலோகப் பொருள் வேலையும் சிறப்பாகச் செய்கின்றனர். மற்ற இனத்தவர்கள் செய்யும் தொழில்கள் அவர்களுடைய பெயர்களிலிருந்தே தெரிகின்றன; அவர்கள் மற்ற இடங்களில் போலவே இங்கேயும் அத்தொழில்களைச் செய்து வாழ்கின்றனர். பொதுவாக இந்தக் காலத்தில் எல்லாருமே எல்லாத் தொழில்களும் கலந்து செய்து வருகின்றனர் எனலாம். முற்றிலும் இனவேற்றுமையும் தொழில் வேற்றுமையும் ஒழிவது எந்நாளோ?
மொழி(கள்)
மதங்கள், இனங்கள் என்று பன்மையில் தலைப்பு இட்டதைப் போல ‘மொழிகள்’ எனப் பன்மையில் தெளிவாகத் தலைப்பு இட உள்ளம் ஒருப்பட வில்லை. மொழிகள் என்று பன்மையில் தலைப்பு இட்டாலும் பொருந்தக் கூடிய நிலைமை இன்று உள்ளது. கெடில நாட்டின் பெரும்பான்மையானமொழி இந்தக் காலத்திலும் தமிழ் மொழிதான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இங்கே தமிழ் மொழியேயன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளும் செளராஷ்டிரம், மராத்தி, இந்தி, உருது ஆகிய வடஇந்திய மொழிகளும் ஒரு சில பிரிவினரால் பேசப்படுகின்றன. கெடிலநாடு முழுதும் பரவலாக ஆங்கில மொழியும், கடலூர் வட்டத்தின் வடக்குப் பகுதியை ஒட்டிய பழைய பிரெஞ்சுப் பகுதியில் பிரெஞ்சு மொழியும் நடமாட்டத்தில் உள்ளன.
பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறாமல் தொன்றுதொட்டு இங்கேயே வழி வழியாக வாழ்ந்துவரும் மக்கள் நாட்டு மொழியாகிய தமிழ் மொழி பேசுகின்றனர். தமிழர்க்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் தெலுங்கர்களைக் குறிப்பிடலாம். ஆந்திரத்திலிருந்து விசயநகர மன்னர்களும் அவர்களின் மேலாட்சியின் கீழ் நாயக்கர்களும் வந்து இந்நாட்டையாண்ட போது தெலுங்கர்கள் மிகுதியாக இங்கே வந்து குடியேறினர்; தெலுங்கு மொழியின் மேலாட்சி அப்போது ஓங்கியிருந்தது. இப் பகுதியில், ரெட்டியார், நாயடு எனப்படும் நாயக்கர், சேடர், சாலியர், சேணியர், தேவாங்கர், சாத்தாணியர், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டி செட்டிமார், ஒட்டர், சக்கிலியர், குறும்பர் முதலிய இனத்தவர் தெலுங்கு பேசுகின்றனர். பிராமணர், கம்மாளர், இடையர், வண்ணார், இருளர் முதலிய இனங்களிலும் தெலுங்கு பேசும் பிரிவினர் உளர். தமிழர்களும் தெலுங்கர்களும் ஏறத்தாழ ஒரு மொழியினர் போலவே ஒன்றி வாழ்கின்றனர். தேவாங்கருள் தெலுங்கு பேசுபவரேயன்றி கன்னடம் பேசுபவரும் உள்ளனர். மைசூர்ப் பகுதியிலிருந்து வந்து வாழும் இலிங்கதாரிகள் எனப்படும் வீரசைவர் கன்னடம் பேசுகின்றனர். தமிழ்நாட்டு வீர சைவர்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். கேரளத்திலிருந்து மலையாளிகள் பலர் வந்து குடியேறியுள்ளனர்.
வடக்கேயிருந்து முகமதிய மன்னர்கள் இங்கே வந்து ஆண்டபோது அவர்களுடன் உருது, அரபு ஆகிய மொழிகளும் வந்தன. முகமதியர்களும் நிரம்ப வந்து குடியேறினர்; அவர்கள் உருதுமொழி பேசுகின்றனர். தமிழக முசுலீம்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். இங்கே மராத்தியரின் ஆட்சி நடந்தபோது மராத்தியர் சிலர் வந்து குடியேறினர்; இவர்கள் மராத்திமொழி பேசுகின்றனர். ராவ், ராஜா என்னும் பட்டப் பெயர்கள் இவர்கட்கு உண்டு. பட்டுநூல்காரர் எனப்படும் செளராஷ்டிரரும் இவண் ஒரு சிலர் உளர். இவர்கள் பாகவதர் எனச் சாதிப்பட்டம் போட்டுக் கொள்கின்றனர்; பேசும் மொழி செளராஷ்டிரம். இன்றுள்ள இந்தி மொழியின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கிறித்தவருள் பல்வேறு இனத்தவரும் உள்ளனர்; அவ்வவ் வினத்தவர் தத்தம் தாய் மொழி பேசுகின்றனர். இதுகாறுங் கூறி வந்த மதத்தவர், சாதியினர், மொழியினர் அனைவருமே பொதுவாகத் தமிழ் மொழி பேசுகின்றனர்.
இத்தனை மொழிகள் இருக்கவும், ஆரியம் சமசுகிரும் எனப்படும் வடமொழியும் நின்று நிலைத்துள்ளது. பிராமணர் சிலர். இம்மொழியைப் படித்து வருகின்றனர். நாடு முழுவதும் திருக்கோயில் பூசனை, பிறப்பு - திருமணம் - இறப்பு முதலியவை தொடர்பான சடங்குள் முதலிய பல்வேறு துறைகளில் பெரும்பாலும் வடமொழியின் ஆட்சியே இன்றும் (1967) காணப்படுகிறது. இது போலவே, கல்வித்துறை, வணிகத்துறை, ஆட்சித்துறை முதலியவற்றில் ஆங்கில மொழியின் உடும்புப் பிடி இன்றும் (1967) உறுதியாகவே உள்ளது. இசையரங்குகளில் தெலுங்கும் வடமொழியும் பேராட்சி புரிகின்றன.
ஆனால், எல்லாத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்கி ஆட்சி புரிய வேண்டும் என்னும் ஒருவகை இயக்கம் இப்போது உருவாகி நடைபெற்று வருகிறது; இதில் வெற்றி முகமும் தெரிகிறது. இடையில் எத்தனையோ மொழிகள் வரக்கூடும். அவ்வாறே போகவுங் கூடும். பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராகிருதமொழி எப்போதோ மறைந்து போயிற்று. பின்னர் வடமொழிக்கும் தென்மொழிக்கும் இடையே பாலமாக அமைக்கப்பட்ட கிரந்தம் என்னும் மொழி மறைந்து கொண்டே வருகிறது. அல்லது மறைந்த நிலையில் இருக்கிறது எனலாம். வந்த மொழி எந்த மொழியும் அழிந்துபோக வேண்டியதில்லை. ஆட்சி செலுத்தாமல் இருந்தால் போதும்! ஆனால் சொந்த மொழி தமிழ் எவ்வளவோ அழிந்துபோய்விட்டது என்பதை மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாது!
வாழ்க்கை முறைகள்
தமிழக முழுதும் பெரும்பாலும் வாழ்க்கை முறைகள் ஒத்திருப்பினும், சிறுபான்மை இடத்திற்கு இடம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருப்பதும் உண்டு. இந்த அடிப்படையில், பிற பகுதிகளினும் திருமுனைப்பாடி நாட்டின் வாழ்க்கை முறையில் சில வேறுபாடுகள் இருக்கக் கூடும். இந்த நாட்டிலேயே மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம் வேறுபாடு உண்டு. இசுலாமியர், கிறித்தவர், பிராமணர், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டி செட்டிமார் முதலிய இனத்தவரின் வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் தமிழகம் முழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, இத்தகு இனத்தவர்களை விட்டுவிட்டு. இடத்திற்கு இடம் மாறுபடும் பிற இனத்தவர்கள் திருமுனைப்பாடி நாட்டுப் பகுதியில் பின்பற்றும் வாழ்க்கை முறைகளையும் கையாளும் பழக்க வழக்கங்களையும் இங்கே ஆராய்வாம். இவர்களுள்ளும் இனவாரியாக நோக்காமல், ஏறக்குறைய எல்லா இனத்தவர்க்கும் பொதுவாகக் கருதப்படக்கூடிய முறைகளைக் காண்பாம். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறைகளையே அந்நாட்டின் பொதுவான வாழ்க்கை முறைகளாகக் கொள்ள வேண்டும் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. பின் கூறப்படும் வாழ்க்கை முறைகளுள்ளும் பழக்க வழக்கங்களுள்ளும் ஒரு சில, இனத்திற்கு இனம் வேறுபட்டி ருப்பினும், மிகப்பல, எல்லா இனத்தவர்க்கும் ஒத்தே இருக்கும்.
பிறப்பு வளர்ப்பு
முதல் பிள்ளைக்குத் தலைச்சன் என்றும் இரண்டாம் பிள்ளைக்கு இடைச்சன் என்றும் கடைசிப் பிள்ளைக்குக் கடைக்குட்டி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்றோடு நிறுத்திக் கொள்வது நல்லது என இந்தக் காலத்தில் அறிஞர்களாலும் அரசியலாராலும் பரிந்துரைக்கப்படுகிறது; கேட்டால் தானே? தலைச்சனைத் தலைப்பிள்ளை என்றும் சீமந்த புத்திரன் என்றும் சொல்லுவதும் உண்டு. முன் பிள்ளையையும் பின் பிள்ளையையும் ‘முன்னனை’ ‘பின்னணை’ என்று குறிப்பிடும் வழக்கமும் உளது. நிற்காமல் வரிசையாகத் தொடர்ந்து பிறந்து கொண்டேயிருக்கும் பிள்ளைகளைத் தலைச்சன் பேறு, இடைச்சன் பேறு, மூன்றாம் பேறு, நான்காம் பேறு, ஏழாம் பேறு, பத்தாம் பேறு, பன்னிரண்டாம் பேறு என்று எண் பெயரால் அடுக்கிக் கொண்டே போகும் பெயர் வழக்காறும் உண்டு.
முதல் பிள்ளை பெண்ணின் தாய் வீட்டில் பிறக்க வேண்டும். மூன்றாம் பிள்ளை பெண்ணின் தாய் வீட்டில் பிறந்தால் தாய் வீடு உருப்படாதாம்; அதனால் கணவன் வீட்டில்தான் பிறக்க வேண்டுமாம். எத்தனையாவது பிள்ளையானாலும் எத்தனை பிள்ளையானாலும் மருத்துவ மனையில் பிறப்பதற்குத் தடையில்லை - இன்று அதுதான் பெரும்பாலும் நடைபெறுகிறது. முதல் பிள்ளை சித்திரைத் திங்களிலும் புரட்டாசித் திங்களிலும் பிறப்பது கெடுதி என்று சொல்லப்படுகிறது. பிறக்கும்போது பிள்ளை கழுத்தில் குடலாகிய மாலை போட்டுக் கொண்டு பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்றும், குடலாகிய கொடி சுற்றிக் கொண்டு பிறந்தால் குடிக்கு ஆகாது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு மாலைபோட்டுக் கொண்டும் கொடி சுற்றிக் கொண்டும் பிறந்து விட்டால், முறையே தாய் மாமனும் தந்தையும் வாயில் தண்ணிர் ஊற்றிக் கொண்டு பிறந்த குழந்தையின்மேல் கொப்பளித்துத் துப்ப வேண்டும்; துப்பினால் துன்பம் விலகிவிடுமாம். இதற்கு இன்னும் ஏதாவது ‘சாந்தி’ செய்வதும் உண்டு.
பொதுவாக ஆண்கள் இரட்டைப்படைப்பேறாக அஃதாவது, இரண்டாவது - நான்காவது குழந்தையாகப் பிறக்க வேண்டுமாம்; பெண்கள் ஒற்றைப் படைப்பேறாக - அதாவது, மூன்றாவது ஐந்தாவது குழந்தையாகப் பிறக்க வேண்டுமாம். இவ்வாறு பிறந்தால்தான் வளமாக வாழ்வார்களாம். இது சார்பான பழமொழிகள் வருமாறு:
‘நான்காம் பேறு ஆணுக்கு நாதங்கி (தாழ்ப்பாள்) எல்லாம் பொன்னு.’
‘அஞ்சாம் பேறு பெண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது.’
‘ஆறாம் பேறு பெண்ணு ஆறாக்கினாலும் ஆக்கும் - நீறாக்கினாலும் ஆக்கும்’
‘ஆறாம் பேறு ஆணு ஆனை கட்டி வாழும்’.
‘ஏழாம் பேறு பெண்ணு இறவானம் எல்லாம் பொன்னு’
‘எட்டாம் பேறு பெண்ணு எட்டிப் பார்த்த இடம் குட்டிச்சு வரு’
‘எட்டாம்பேறு ஆணு வெட்டி அரசாளும்’.
பேறுக் கணக்குப் போலவே பிறந்த நாளும் (நட்சத்திரமும்) கருதப்படுகின்றது. இது சார்பான பழமொழிகளாவன:
‘அகவணியில் பிறந்தவர் அசுவம் (குதிரை) ஏறுவர்’
‘பரணியில் பிறந்தவர் தரணியை ஆள்வர்’
‘அவிட்டத்தில் பிறந்தவர்க்குத் தவிட்டுப் பானை யெல்லாம் காசு’
‘பூராடத்தில் பிறந்தவர் போராடுவர்’
‘கேட்டையில் பிறந்தவர் கோட்டையை இழப்பர்’.
இப்படி இன்னும் எத்தனையோ நம்பிக்கைகள் உள்ளன.
கருவுற்றிருக்கும் பெண்ணை நல்லபடியாக வைத்திருக்க வேண்டும்; துன்புறுத்தலோ புண்படுத்தலோ இன்றி மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும்; கேட்டதை வாங்கித் தரவேண்டும்; விரும்பிய உணவை ஆக்கிப் படைக்க வேண்டும் - இந்த நடைமுறை நம்பிக்கை உள்ளது. முதல் முதலாகக் கருவுற்ற ஐந்தாம் திங்களில் (மாதத்தில்) ‘ஐந்திற்கு இடுதல்’ என்னும் மங்கல வினையும், ஏழாம் திங்களில் ‘சூல்’ என்னும் மங்கல நிகழ்ச்சியும் நடத்தப் பெறுகின்றன. சூல் விழாவைச் ‘சூல் பண்டம்’ என்றும், சீமந்தம் என்றும், பூ முடித்தல் என்றும் இங்கே சொல்கின்றனர்; இதுதான் பிராமணர்களால் ‘வளைகாப்பு’ என அழைக்கப்படுகிறது; இதனையே எளிய மக்கள் பேச்சு வழக்கில் ‘நல்ல சோறு ஆக்கிப் போடுதல்’, ‘நல்ல கஞ்சி காய்ச்சி ஊற்றுதல்’ என வேடிக்கையாகக் கூறுவர். இந்த விழா பெண் வீட்டார் செலவில் பிள்ளை வீட்டில் நடைபெறும். பெண் வீட்டார் தத்தம் வசதிக்கேற்பப் பல்வேறு வரிசைகளுடன் வந்து விழாவை நடத்துவர்; மிடுக்கான விருந்து நடைபெறும். சூல்விழா முடிந்ததும் பெண்ணைத் தாய்வீட்டார் தம் இல்லத்திற்கு அழைத்தேகுவர்; அப்போது தவறினால் ஒன்பதாம் திங்களில் அழைத்துச் செல்வர். குழந்தை பிறந்த மூன்று அல்லது ஐந்தாம் திங்களில் பிள்ளை வீட்டார் காப்பரிசியுடனும் அணிகலன் முதலியவற்றுடனும் வந்து சிறப்புச் செய்து தாயையும் சேயையும் தம் வீட்டிற்கு அழைத்துப் போவர்; இந் நிகழ்ச்சிக்குக் காப்பிடுதல்’ என்று பெயராம்.
பொதுவாக எத்தனையாவது பிள்ளை பிறந்தாலும் பிறந்த ஒன்பதாம் நாள் ‘தீட்டுக் கழித்தல்’ என்னும் நிகழ்ச்சி நடைபெறும்; அன்று எருக்கம் நாரினால் ஆன அரைஞாண். கயிறு குழந்தைக்குக் கட்டப்படும். பெயர் சூட்டு விழாவும் உணவு ஊட்டும் விழாவும் சிலரால் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. பலர் செய்வதில்லை. முதலாண்டு அல்லது மூன்றாம் ஆண்டு அல்லது ஐந்தாம் ஆண்டு அஃதாவது ஒற்றைப்படை ஆண்டில் குழந்தைக்கு முடி எடுக்கின்றனர். பின்னர்க் காதணி விழா நடைபெறும். இவ்விரண்டும் குடும்ப வசதிக்கேற்ப நடைபெறும். விழா நடத்திக் காது குத்தாமல் வீட்டோடு காது குத்திக் கொண்டால் அதற்குத் ‘திருட்டுக் காது குத்துதல்’ என்று பெயர் சொல்லப்படுகிறது. ஐந்தாம் வயதில் எழுத்தறிவித்தல் (அட்சராப்பியாசம்) நடத்தப் பெறுகிறது. சிலர் இதனை ஒரு விழாப்போல் விரிவாக நடத்துகின்றனர். இந்தக் காலத்தில் பெரும்பாலார் விழா ஒன்றும் செய்யாது, ஆடுமாடுகளை மந்தைக்கு ஒட்டியனுப்புவதுபோல் பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். ஆனால், அந்தக் காலத்தில் ஆசிரியரிடம் அனுப்பும் முதல் நாள் ஒரு சிறப்பு நாளாகவே கொண்டாடப்பட்டது.
பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளையே பெரும்பேறாகக் கருதும் வழக்கம் இங்கும் உள்ளது. ஆனால் பத்து வயது நிறைந்ததுமே, ஆண் பிள்ளைகளினும் பெண் பிள்ளைகளை மிகவும் கவனமாக வளர்க்கின்றனர்; அவர்தம் கற்புடைமையைக் காப்பதில் பெற்றோர் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். பெண்பிள்ளைகள் பருவம் எய்தியதை ஒரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்றெல்லாம் பெயர் கூறுகின்றனர். எளிய பேச்சு வழக்கில் ‘மஞ்சள் தண்ணீர் சுற்றுதல்’ என்று சொல்வர். பெண்கள் எய்தும் இந்த நிலை, வயதுக்கு வருதல், பருவம் அடைதல், நன்மையாதல், பெரிசாதல், பெரிய மனுவியாதல், பூப்பு எய்துதல் என்றெல்லாம் பெயர் சுட்டப்படுகிறது. பூப்பு எய்திய பெண்ணைத் தனியிடத்தில் வைப்பர். சடங்கு முடிந்ததும் உள்ளே அழைத்துக் கொள்வர். ஒன்பதாம் நாளுக்குமேல் குறிப்பிட்ட வசதியான ஒரு நாளில் மாலை வேளையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். பெற்றோர்கள் பருவம் எய்திய பெண்ணை முன்போல் வெளியில் அனுப்பமாட்டார்கள்; ஆடவருடன் பேச விடமாட்டார்கள்; கணவன் கையில் ஒப்படைக்கும் வரையும் கண்ணைபோல் காத்து வருவர். சில குடும்பங்களில், சிறைச்சாலைக் கைதிகளைப் போல வயதுக்கு வந்த பெண்களை உள்ளே அடைத்துப் பூட்டாமல் பூட்டி வைப்பதும் உண்டு. அந்தோ! இந்தக் கொடுமை இப்போது கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.
“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”
என்பது வள்ளுவனாரின் வாய்மொழி யன்றோ?
திருமணம்
இந்தப் பகுதியில் தமிழ்ப் பெருங்குடி மக்களுள் மாப்பிள்ளை வீட்டார்தாம் பெண்தேடுவது வழக்கம். பெண்வீட்டாராகச் சென்று மாப்பிள்ளை தேடும் வழக்கம் இல்லை. பெண்வீட்டார் தாமாகச் சென்று மாப்பிள்ளை தேடுவது இழிவாகக் கருதப்படுகிறது. உறவினர் குடும்பங்களுக்குள்ளுங்கூட மாப்பிள்ளை வீட்டார்தாம் முதலில் பெண் கேட்பர். எவ்வளவு நெருக்கமான உறவாயிருந்தாலும் எங்கள் பெண்ணை உங்கள் பிள்ளைக்குக் கட்டிக் கொள்ளுங்கள் என்று பெண் வீட்டாராகக் கேட்கமாட்டார்கள். முதலில் மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டாலும் உடனே பெண் வீட்டார் ஒப்புதல் கொடுத்துவிட மாட்டார்கள் பொய்யாகவாவது ஒரு ‘பிகுவு’ காட்டிப் பிறகே பெண் தருவதாக உடன் படுவார்கள். இந்த நிலைமை கால்நூற்றாண்டுக்கு முன்பு வரையுங்கூட இந்தப் பகுதியில் கட்டுக் குலையாமல் இருந்தது. இப்போதும் பலரிடத்தில் இருக்கிறது. ஆனால், செல்வராக உள்ள ஒரு சிலர் படித்த மாப்பிள்ளை தேடித் தாமாகப் பெண்கொடுக்கப் போகும் வழக்கம் இப்போது சில்லாண்டுகளாகத் தோன்றிவருகிறது.
மாப்பிள்ளைக்குப் பணமும் (வரதட்சணை) கொடுத்துப் பெண்ணையும் அளிக்கும் ‘கன்னிகாதான முறை’ இந்நாட்டு மக்களிடம் இல்லை. அதற்கு மாறாக பெண்ணுக்குப் பரியப் பணம் கொடுத்துக் கட்டிக் கொள்வதே இந்நாட்டு வழக்கம். வரதட்சினை கொடுக்கும் இனத்தார்களிடையே, மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் தரவேண்டும் - பத்தாயிரம் தரவேண்டும் என்று பேரம் நடப்பதுபோல், இங்கே பெண்ணுக்குப் பரியப் பணம் கொடுக்கும் இனத்தார்களுள் ஐயாயிரம் - பத்தாயிரம் என்ற பேச்சு அடிபடாது; இருநூறு - முந்நூறு - ஏறினால் ஐந்நூறு - இந்த அளவில்தான் பேச்சு நடக்கும். மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் பத்தாயிரம் கேட்பது பணக்காரர் ஆவதற்காக! ஆனால், பெண்ணுக்கு இருநூறு - முந்நூறு கேட்பது வெறுந்திருமணச் செலவிற்காகத்தான்! மற்றும், ‘முலைப்பால்கூலி’ என்னும் பெயரில் தாய்வீட்டார் பெண்ணுக்கென ஏதேனும் வாங்குவது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது.
இந்நாட்டுப் பெருங்குடி மக்களுள்ளும் பெண்ணுக்குப் பரியப் பணம் கேட்கும் வழக்கம் இப்போது குறைந்து வருகிறது. முன்பெல்லாம் பரியம் (பரிசப்பணம்) எவ்வளவு கொடுத்தார்கள் என்று கேட்பது வழக்கம். இப்போது அவ்வாறு கேட்பதில்லை. பெரும் பணம் கொடுத்து மாப்பிள்ளை தேடும் பெருநோய் இன்று இம்மக்களிடத்தும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. பெண்ணுக்கோ ஆணுக்கோ பணம் கொடுக்கும் மாட்டுச் சந்தை பேரம் இப்போது அரச ஆணைக்கு அஞ்சி மறைமுகமாக நடப்பதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பெண் வீட்டார் எவ்வளவு பெருஞ் செல்வராயினும் திருமணம் மாப்பிள்ளை வீட்டில்தான் நடைபெறும். பெண் வீட்டில் திருமண்ம் நடைபெறுவது இருதரத்தார்க்கும் இழிவு எனக் கருதப்பட்டது. இப்போது இந்த முறையும் மாறி வருகிறது. மாப்பிள்ளை வீட்டார் சிலர், மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று ‘கட்டிக் கொடுக்கத்’ தொடங்கி விட்டனர்; மாப்பிள்ளைகள் சிலர் பெண் வீட்டிற்குச் சென்று ‘வாழ்க்கைப்படத்’ தொடங்கிவிட்டனர்.
இப் பகுதியில் அம்மான் மக்கள் - அத்தை மக்களுக்குள் திருமணம் நடைபெறும். மணமகன் தன் தமக்கை (அக்காள்) மகளைக் கட்டிக்கொள்ளும் வழக்கமும் உண்டு; தங்கை மகளைக் கட்டுவதில்லை. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தாய்மாமன் (அம்மான்) மிகவும் இன்றியமையாதவர். தொடக்கத்திலிருந்து இறுதிவரை அம்மானைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது. அம்மான் தன் மகனுக்குப் பெண் கேட்டால் கொடுத்தாகவேண்டும். அவர் கேட்கும் நிலையில் இல்லையென்றால்தான் வேறிடத்தில் பெண் கொடுக்கலாம் அம்மான் விருப்பப்படி நடக்காவிட்டால் அவர் மிஞ்சுவார்; பிறகு அவரைக் கெஞ்சவேண்டும். பரிய விழாவிலோ திருமண விழாவிலோ அம்மான்தான் வரிசை எடுத்து வைக்கவேண்டும். அன்பளிப்பிலும் அம்மானது அன்பளிப்புதான் முதலில் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு முன்பு சர்வாதிகாரிகள் ஆக இருந்துவந்த அம்மான்கள் இப்போது ‘சனநாயகவாதிகள்’ ஆக மாற்றப்பட்டு வருகிறார்கள்; அந்தோ அளியர்!
முன்பு உறவினருக்குள் திருமணம் மிகுதியாக நடைபெற்று வந்தது. இப்போது வெளியாருக்குள் மிகுதியாக நடை பெறுகிறது. தலைச்சன் பெண்ணுக்கும் தலைச்சன் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படி நடந்தால் வளர்ச்சி இல்லையாம். கடையும் கடையும் கட்டினாலும் கடைத்தேறாதாம். கடையும் தலையும் கட்டினால் கடலாக வாழுமாம் அஃதாவது, மணமக்கள் இருவருள், யாராவது ஒருவர் கடைசிப் பிள்ளையாகவும், மற்றொருவர் தலைப் பிள்ளையாகவும் இருந்தால் குடும்பம் நன்கு செழிக்குமாம். பிள்ளையைவிடப் பெண்ணுக்கு ஒரீராண்டு வயது குறையாயிருந்தால் போதாது; ஐந்து அல்லது ஆறு ஆண்டு வயது வேறுபாடாவது இருக்கவேண்டும். ஒரீராண்டு வயது குறைவான பெண்ணைக் கட்டிவைத்தால், கிழவியைக் கட்டி வைத்துவிட்டதாகக் கூறுவார்கள். பெண்ணுக்கு இருபது வயது ஆகிவிட்டாலோ - பிள்ளைக்கு முப்பது வயது ஆகிவிட்டாலோ கிழவி கிழவன் என்று முன்பு கிண்டல் செய்தார்கள். இப்போது அப்படியில்லை. உண்மையாகவே கிழவன் - கிழவிகளுக்குள் திருமணம் நடைபெறுகிறது. பண்டைக் காலத்தில் கூட, தமிழ்ப் பெருங்குடி மக்களிடையே குழந்தைத் திருமணம் நடைபெற்றதில்லை:
திருமணம் தொடர்பாக மூன்றுவகை நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண் முடிவானதும் பிள்ளைவீட்டாரும் பெண்வீட்டாரும் ஊரார் ஒரு சிலரும் சேர்ந்து பெண் வீட்டில் ‘தாம்பூலம் மாற்றுதல்’ என்னும் நிகழ்ச்சி நடத்துவர். பெண் அமர்த்தியாயிற்று என்பதை அறிவிக்கும் முதல் விழா இது. பின்னர்ச் சின்னாட் கழித்து, உற்றார் உறவின் முறையார் ஊரார் பலரும் அறிய விரிவான முறையில் ‘பரியம் போடுதல்’ என்னும் நிகழ்ச்சி பெண் வீட்டில் நடைபெறும். நிச்சயதார்த்தம், திருமண உறுதி என்றெல்லாம் சொல்வது இந்த இரண்டாவது விழாவினைத்தான். இறுதியாக, மணமகன் இல்லத்தில் திருமணவிழா நடைபெறும்.
திருமணம் தை, சித்திரை, வைகாசி, ஆணி, ஆவணி ஆகிய ஐந்து திங்கள்களிலேயே நடைபெறும். தெலுங்கர் புரட்டாசியிலும் நடத்துவர். இப்போது எல்லா இனத்தவரிலுமே ஒரு சிலர் எல்லாத் திங்கள்களிலும் திருமணம் நடத்தத் தொடங்கிவிட்டனர். பழைமை விரும்பிகள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. திருமண வீட்டார், ஊரார் - உறவினர்க்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் வைத்துத் திருமணத்திற்கு அழைப்பர். கொண்டான் கொடுத்தார்கட்குச் (சம்பந்திகட்கு) சிறப்புத் தாம்பூலம் வைக்க வேண்டும். இதற்குச் ‘சம்பந்தி தாம்பூலம்’ என்பது பெயர்.
திருமணப் பந்தல் போடுவதற்காக நல்ல நாள் பார்த்துக் ‘கால் நடுதல்’ என்னும் நிகழ்ச்சி நடத்துவர். திருமங்கலிகள் ஐவர் கூடிக் கால்நடுவர். பின்னர் வீட்டிலும் வெளியிலும் பந்தல் போடப்படும். பந்தல் முகப்பில் குலை உடைய வாழைமரங்கள், தென்னங்குலைகள், ஓலை - இலைக் கொடிகள் முதலிய மங்கலப் பொருள்கள் கட்டப்படும். தரையில் புதுமணல் பரப்பப்பெறும். திருமண முதல்நாள் மாலை, பெண்வீட்டார் பெண்ணை அழைத்து வந்து சேர்வர். ஊர்க் கோயிலிலோ, அல்லது பிள்ளை வீட்டாருக்கு வழக்கமாக ஆகிவந்த ஓரிடத்திலோ பெண்ணைத் தங்கச் செய்வர். பிள்ளை வீட்டார் வரிசையுடன் சென்று பெண்ணையும் பெண் வீட்டாரையும் வரவேற்பர். அப்போது நீர்மோர், பானகம் (வெல்லத் தண்ணிர்) முதலியன வழங்குதல் மரபு. பின்னர் மணப்பெண் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுப் பிள்ளை வீட்டை அஃதாவது திருமண வீட்டை அடைவாள். பெண் முதல் முதலில் வீட்டு வாயிற்படியில் வலக்காலை வைத்து ஏற வேண்டும். அப்போது நாத்திமார்கள் (மாப்பிள்ளையுடன் பிறந்த பெண்கள்) பெண்ணின் வாயில் சர்க்கரை கொட்டுவர். வீட்டிற்குள் சென்றதும், பெண்ணையும் பிள்ளையையும் ஒருசேர வைத்துக் கொண்டு ‘தாலி படைத்தல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பெறும்; அஃதாவது மாங்கலியத்தை இறையுருவத்தின் முன் வைத்து, வடை, சர்க்கரைப் பொங்கல் முதலியன செய்து படைப்பர். தாலி ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒவ்வொரு விதமாக இருக்கும்.
திருமணம் விடிவதற்கு முன் வைகறையிலோ அல்லது விடிந்தபின் முற்பகலிலோ குறிப்பிட்ட நல்ல நேரத்தில் நடைபெறும். நண்பகலிலோ, மாலையிலோ திருமணம் நடைபெறுவது இப் பகுதியில் வழக்கம் இல்லை. திருமணத்தில் பெண்ணுக்குப் பெண் தோழியும், பிள்ளைக்கு மாப்பிள்ளைத் தோழனும் துணையாக இருப்பர்; இந்தத் தோழன் - தோழியர், மைத்துன மைத்துனி முறையுடையவராயிருப்பர். தாலி கட்டும்போது கெட்டிமேளம் கொட்டப்பெறும்; மங்கல அரிசி போட்டு வாழ்த்தப்பெறும். தாலி கட்டியதும், அம்மான்கள், மாமிமார்கள், நாத்திமார்கள் ஆகிய பட்டாளங்களால் பெண்ணின் நெற்றியில் பல்வகைப் பட்டங்கள் கட்டப்பெறும். மணமக்கள் திருமண அரங்கைச் சுற்றி வரும்போது மணமகளின் உடன்பிறந்தாள் முன்னால் மங்கல விளக்கு ஏந்திச் செல்வாள். உற்றார் உறவினர் முதலியோர் மணமக்கட்கு அன்பளிப்பு வழங்குவர். அம்மான் அன்பளிப்பு முதலில் நடைபெற வேண்டும். பின்னர்க் கொண்டான் கொடுத்தான் சம்பந்திகளுள் முதல் சம்பந்தி, இரண்டாம் சம்பந்தி வாரியாக அன்பளிப்பு நடைபெறும். இந்த முறையில் தப்பித் தவறி ஏதேனும் மாறுதல் ஏற்பட்டுவிட்டால் திருமண அரங்கம் பெரிய போர்க்களமாக மாறிவிடும். கடைக்குட்டிப் பிள்ளையின் திருமணமாயின் விருந்தில் கடலை போடப்படும். மாலையில் ‘காப்புக் களைதல்’ என்னும் சடங்கு நடைபெறும். அப்போது மணமகளின் உடன் பிறந்தாள் மங்கல விளக்கு ஏந்துவாள்.
புது சம்பந்திகள் முதல்முதலாக வியாழக்கிழமையில் கை நனைக்க (விருந்துண்ண) மாட்டார்கள். ‘சம்பந்தங் கொண்டாடுதல்’ என்னும் சடங்கு நிகழ்த்திய பின்னரே ஒருவர் வீட்டில் இன்னொருவர் உணவு கொள்வர். திருமண நாளின் மாலையிலோ அல்லது மறுநாளோ பெண்வீட்டார் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருவூட்டுவர்; இதற்கு ‘மாப்பிள்ளை மருவுண்ணுதல்’ என்பது பெயர். பின்னர்ச் சின்னாட் கழித்துப் பிள்ளை வீட்டார் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து மருவூட்டுவர். இதற்குப் ‘பெண் மருவுண்ணுதல்’ என்பது பெயர். மணமக்களை அழைக்கும் போது நடக்கும் சடங்கிற்கு ‘அம்போகம் செய்தல்’ என்பது பெயர்.
மாப்பிள்ளை வீட்டில் பெண் மருவுண்டு அம்போகம் செய்தபின், பெண் வீட்டார் பெண்ணை மட்டும் தனியே தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். புதன்கிழமையில் மட்டும் மாப்பிள்ளையை விட்டுப் பிரித்துப் பெண்ணைத் தனியே அழைத்துச் செல்லமாட்டார்கள். ‘புதன் கால் பிரியக்கூடாது’ என்பது நம்பிக்கை. இந்த அம்போகச் சடங்குகளைத் திருமணமான திங்களிலேயே (மாதத்திலேயே) நடத்திவிடுவர்; மறுதிங்கள் வரையும் இழுத்துக் கொண்டு போகமாட்டார்கள். ஏனெனில், ‘இரட்டிப்பு மாதத்தில் எதுவும் செய்யக்கூடாது’ என்பது கொள்கை. திங்கள் இறுதியில் திருமணம் நடந்தால், தள்ள முடியாமல் வேறு வழியின்றி இரட்டிப்பு மாதத்தில் அம்போகம் செய்வதும் உண்டு. பெண்வீட்டார் பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று சின்னாட்கள் வைத்திருந்த பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சென்று அழைத்து வருவர். அதிலிருந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டாரின் உரிமையாகிவிடுகிறாள்.
பெண் வீட்டார் முதல் ஒரீராண்டுக்குப் பொங்கலின் போதும் தீபாவளியின் போதும் வரிசை வைத்து மண மக்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதற்குப் ‘பொங்கல் வரிசை’ - ‘தீபாவளி வரிசை’ என்று பெயராம். சிலர் ஆடித் திங்களில் ‘ஆடி வரிசை’ வைப்பதும் உண்டு. முதல் பிள்ளை பிறக்கும் வரையிலும் பெண்ணை ஆடித் திங்கள்களில் கணவன் வீட்டில் விட்டு வைக்கமாட்டார்கள். சிலர் மார்கழித் திங்கள்களிலும் விட்டு வைப்பதில்லை. ஆடியில் கரு ஏற்படின் சித்திரையிலும், மார்கழியில் கரு ஏற்படின் புரட்டாசியிலும் குழந்தை பிறக்கும்; ஆனால் சித்திரையிலும் புரட்டாசியிலும் தலைச்சன் குழந்தை பிறக்கக் கூடாது என்ற நம்பிக்கையிருக்கிறது; எனவே, ஆடியிலும் மார்கழியிலும் பெண்ணைப் பிள்ளை வீட்டில் பெரியவர்கள் விட்டு வைப்பதில்லை. ஆனால் சில குடும்பங்களில் பெரியவர்களுக்குத் தெரியாமல் ஆடியில் கரு ஏற்பட்டுவிடுகிறது; அதற்குப் பெரியவர்கள் என்ன செய்ய முடியும்!
ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் இப்போது உள்ள ‘புரோகிதத் திருமண முறை’ இல்லை. இஃது இடைக்காலத்தில் ஏற்பட்டது. இந்தக் காலத்தில் ஐயரை வைத்துச் செய்யும் புரோகிதத் திருமண முறை குறைந்து வருகிறது. ‘தமிழ்த் திருமணம்’ என்ற பெயரில், ஐயரும் புரோகித வடமொழி மந்திரமும் இன்றித் தமிழிலேயே நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்றுத் திருமணம் நிறைவேறுகிறது. இருப்பினும், இன்றும் (1967) புரோகிதத் திருமணமும் நடைபெற்று வருகிறது.
மனைவி இறந்துவிடின் கணவன் எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம் என்ற உரிமை தொன்று தொட்டு இருந்துவருகிறது. இஃதன்றி, மனைவியிருக்கவும் மேலும் திருமணம் செய்து கொள்ளும் உரிமையும் ஆடவர்க்கு இருந்து வந்தது; இப்போது இந்த உரிமை அரசு ஆணையால் தடுக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்தால் இன்னொருவனை மணந்து கொள்ளும் உரிமை பெரும்பாலும் பெண்களுக்கு இருந்ததில்லை. இப்போது சீர்திருத்தம் மறுமலர்ச்சி என்னும் பெயரால் மறுமணம் என்னும் விதவா விவாகம் சமூகத்தில் நடைபெறுகிறது. ஆனால், நெடுநாளாய்த் திருமுனைப்பாடி நாட்டில், கணவன் இறந்தால் பெண் மறுமணம் செய்துகொள்ளும் வழக்கம் சில இனத்தவரிடையே உள்ளது. இந்தப் பெண் ‘கட்டு பெண்’ என்று சொல்லப்படுவாள். இத்திருமணம் வீட்டோடு சுருக்கமாக நடைபெறும்; இதற்கு ‘நடு வீட்டுத் தாலிகட்டுதல்’ என்று பெயராம். ஆனால், கணவன் இருக்கும்போது மணவிலக்கு என்பது கிடையாது.
காதல் மணம் பண்டைக் காலத்தில் நடைபெற்றதாக இலக்கியங்களால் அறியப்படுகிறது. ஆனால், இடைக்காலத்தில் பெற்றோர் அறியாத காதல் மணம் களவொழுக்கமாகவே ஏன் - கற்புகெட்ட செயலாகவே கருதப்பட்டது; எல்லாரும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. பெற்றோரால் மணமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெறும் திருமணமே உயர்ந்த திருமணமாகக் கருதப்பட்டது. ஏற்ற மணமக்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை பெரியோர்க்கே இருப்பதாக நம்பப்பட்டது. கலப்பு மணமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், இப்போது காதல் மணமும் கலப்பு மணமும் தாராளமாகத் தலைகாட்டுகின்றன.
இறப்பு
எப்பேர்ப்பட்டவர்களுடைய வரலாற்றைப் படித்தாலும், இறுதியில் இறந்து போனதாகவே வரலாறு முடிகிறது. இதற்கு வேறு வழியில்லை போலும்! எந்த ஊருக்குச் சென்றாலும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் காணப்படுகின்றன. எவர் அழிந்தாலும் - எது அழிந்தாலும் இவற்றிற்கு அழிவேயில்லை போலும் பிணங்களை இடும் (புதைக்கும்) காடு இடுகாடு; சுடும் (எரிக்கும்) காடு சுடுகாடு. இந்த இடுகாடு - சுடுகாடுகள் ஆறு உள்ள ஊர்களில் ஆற்றங்கரையிலும், மற்ற ஊர்களில் ஊர் கடந்த எல்லையில் ஓர் ஒதுக்கிடத்திலும் உள்ளன.
திருமுனைப்பாடி நாட்டில் பெரும்பாலான மக்கள் பிணங்களைச் சுடவே செய்கின்றனர். கழுத்தில் இலிங்கம் கட்டிக் கொண்டிருக்கும் இலிங்கதாரிகள் எனப்படும் வீர சைவர்கள் பிணத்தைப் புதைக்கின்றனர். இவர்கள் அமர்ந்த நிலையிலேயே புதைக்கின்றனர். சுடுபவர்கள் சுட்ட மறுநாளே பால் தெளிக்கும் சடங்கு நடத்துகின்றனர். இடுபவர்கள் (புதைப்பவர்கள்) மூன்றாம் நாள் அஃதாவது புதைத்த மறுநாளுக்கு மறுநாள் ‘பால் தெளி’ நடத்துகின்றனர்; இதற்கு ‘மூன்றாங் கிரியை’ என்று பெயர் சொல்லப்படுகிறது. எட்டாம் நாள் துக்கம் கொண்டாடும் நிகழ்ச்சியொன்று நடைபெறும்; இதில் உறவினர்கள் உணவுப் பொருள்கள் கொண்டு வந்து வைத்துப் படைப்பார்கள்; இதற்கு ‘எட்டாம் துக்கம்’ என்பது பெயர். சுடுபவர்கள் பதினாறாம் நாள் இறுதிச்சடங்கு நடத்துவார்கள், இதற்குப் பதினாறாம் கிரியை, காரியம், கருமாதி, கல்லெடுப்பு என்றெல்லாம் பெயர் கூறுகின்றனர். இந்த இறுதிச் சடங்கு, வழக்கமாக இதற்கென ஊரில் உள்ள ஒரு தோப்பிலோ அல்லது மண்டபத்திலோ நடைபெறும். அங்கே, இறந்தவர் சார்பில் கல்நட்டுச் சடங்கு செய்வர். இதனால்தான் இதற்குக் ‘கல்லெடுப்பு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. முற்காலத்தில் போரில் இறந்த மறவர்கட்குக் கல்நடுவது வழக்கம்; இது ‘நடுகல்’ - ‘வீரக்கல்’ என்று சொல்லப்படும். இந்தப் பழக்கம் போரில் இறவாதவர்களுக்காவும் பின்னர் ஏற்பட்டு விட்டது. அதுதான் இன்று ‘கல்லெடுப்பு’ என்னும் பெயரில் நடைபெறுகிறது.
புதைப்பவர்கள் பதினோராம் நாள் வீட்டிலேயே சடங்கு நடத்துகின்றனர். இதற்குப் ‘பதினோராம் கிரியை’, ‘மோட்ச தீபாராதனை’ என்றெல்லாம் பெயர் சொல்வர், இருவகையினருமே இறுதி நாளுக்கு முன்னாள் இரவு ‘நடப்பு’ என்னும் ஒருவகைச் சடங்கு நடத்துவர், இரவு முழுதும் விட்டு விட்டு சாமத்திற்குச் சாமம் செத்த இடத்தில் படைத்துப் பெண்கள் அழுவார்கள். கணவன் இறந்திருந்தால் மனைவிக்குத் ‘தாலி வாங்குதல்’ என்னும் சடங்கு நிகழ்த்துவர். அஃதாவது, அவளிடமிருந்து தாலியை அகற்றி விடுவர். அது முதற்கொண்டு அவள் பொட்டு, பூ, மஞ்சள் முதலிய மங்கலப் பொருள்களை ஏற்றுக் கொள்ளமாட்டாள். அவளுக்குக் கைம்பெண், விதவை, அமங்கலி என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்படும் அந்தோ!
செத்த பிணத்தைக் குளிப்பாட்டிக் கோடி போர்த்தி எடுத்துச் செல்வர். பெண்கள் இறந்தால் தாய் வீட்டார் கோடி போர்த்துவர். செத்த பெண்ணின் கைகளில் வெற்றிலை பாக்கு வைத்து அவற்றைக் கணவன் அவளிடமிருந்து வாங்கிக் கொள்வது போன்ற பொருளில் எடுத்துக் கொள்ளச் செய்வர். கணவன் அடுத்த திருமணம் செய்து கொள்வதற்கு வழிவகுத்துக் கொடுத்ததாக இதற்குப் பொருளாம். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், கணவன் தம்பியாகிய கொழுந்தன், பிணம் எடுக்கும்போது அண்ணிக்குக் கோடி போடுவான். தாலி வாங்கும்போது தாய் வீட்டார், பெண்ணிற்குக் கோடி போடுவர் கோடி போடுதல் என்றால் கழுத்தில் கோடிப் புடவை போடுதலாம். தாயோ, தந்தையோ இறந்தால், இறுதிச் சடங்கின் போது சம்பந்திமார்கள் பிள்ளைகட்குக் கோடித் துணிகள் கொண்டுவந்து கொடுத்துத் தலையில் பாகையாகக் கட்டிக் கொள்ளச் செய்வர். இதற்குத் ‘தலை கட்டுதல்’ என்று பெயராம். இடுப்பில் கட்டிக் கொள்வதற்கும் கோடு கொடுப்பர். தலைகட்டிய மறுநாள் சாவு வீட்டாரும் சம்பந்திமார்களும் சேர்ந்து கொண்டு எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிச் சிறப்புணவு கொள்வர்; இதற்குக் கசப்புத் தலை முழுக்கு என்று பெயராம். செத்த முப்பதாம் நாளிலும் ஒருவகைச் சடங்கு நடைபெறுவதுண்டு; இதற்கு முப்பதாங்கிரியை என்பது பெயர். சாவுத் தொடர்பான ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் செத்த இடத்தில் செத்தவரின் துணிமணிகளை வைத்தும், உணவுப் பொருள்கள் வைத்தும் படைத்து, பெண்கள் குழுக் குழுவாகக் கட்டிக் கொண்டும் மாரடித்துக் கொண்டும் ஒப்பாரிப் பாட்டுப் பாடி ஓயாமல் அழுவார்கள்.
பெண்கள் வெள்ளிக்கிழமையில் இறந்தாலும் அல்லது வெள்ளிக்கிழமையில் பிணம் எடுத்துக் கொண்டு போனாலும் அப்பெண்களுடன் திருமகளும் (செல்வமும்) போய் விடுவதாகச் சொல்லி மக்கள் வருந்துவர். அவிட்டநாளில் (நட்சத்திரத்தில்) பிணம் எடுக்கமாட்டார்கள்; தள்ள முடியாமல் அவிட்டத்தில் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பிணம் கிடந்த இடத்திற்கு நேர் மேலே வீட்டுக் கூரையைப் பிரித்துப் போட்டு விட்டுப் பிறகே எடுத்துச் செல்வர். அவிட்டத்தில் பிணம் எடுத்தால் ஆவி இங்கேயே சுற்றிக் கொண்டிருக்குமாம்; மேல் கூரையைப் பிரித்துவிட்டால் ஆவி அந்தக் கூரை வெளி வழியாகப் போய்விடுமாம். இப்படியொரு நம்பிக்கை. மற்றும், பிணத்தை வீட்டிற்குள்ளிருந்து மூன்று வாயிற்படிகள் தாண்டி வெளியில் எடுத்துக் கொண்டு வரக்கூடாதாம், திருமுனைப்பாடி நாட்டு வீடுகளிலோ தெருநடைப் பகுதியிலேயே இரண்டு வாயிற்படிகள் இருக்கும். அதனால், நோயாளி அறையில் படுத்திருந்தால் உயிர் போகும் தறுவாயில் அறையை விட்டு வெளியே எடுத்து வந்து தாழ்வாரத்தில் கிடத்தி விடுவர். அறையிலேயே இறந்துவிடின் அறை வாயிற்படியையும் சேர்த்து மூன்று வாயிற்படிகள் ஆகிவிடும் அல்லவா? அதனால் அறைக்கு வெளியில் எடுத்துவந்து விடுவர். பிணத்தை எமகண்டம், குளிகம் ஆகிய காலங்களில் சுடலைக்கு எடுத்துச் செல்லமாட்டார்கள். இராகு காலம் இதற்குக் கணக்கில்லையாம்.
பெரியவர்கள் இறந்துவிடின், பிணத்தின் முன்னே தேங்காய் பழம் வைத்துச் சூடம் கொளுத்திப் படைத்து எல்லாரும் கீழே விழுந்து வணங்குவர். இதற்காக, சாவது உறுதி என்று தெரியத் தொடங்கியதுமே தேங்காய் - பழம் - சூடம் ஆயத்தம் செய்யத் தொடங்கிவிடுவர். சிலர் தம் சாவு நெருங்கிக் கொண்டிருக்கும் போதே, எதிரில் உள்ள குடும்பத்தார்களை நோக்கி, “தேங்காய் பழம் - சூடம் எல்லாம் ஆயத்தமாய் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டுக் கொண்டே சாவதும் உண்டு. ஆகா! சாகும்போதும் தம் குடும்பத்தார்க்கு அறிவுரை கூறி உதவி ஒத்துழைப்புச் செய்துகொண்டே சாகும் குடும்பச் சமுதாய அமைப்பை என்னென்று கூறி வியந்து பாராட்டுவது!
சிறு குழந்தைகள் இறந்தால் எல்லா இனத்தவருமே எரிக்காமல் புதைக்கின்றனர். ஆனால், தலைச்சன் குழந்தை இறந்துவிடின் எரித்துவிடுவர். அதைப் புதைத்தால், மந்திரவாதிகளும் சூனியக்காரரும் தோண்டி எடுத்துத் தம் மாய மந்திரச் சூனிய வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வராம். அப்படி அவர்கள் செய்துவிடின், பிறகு பெற்றோர்கட்கு அடுத்த குழந்தைகள் பிறக்கமாட்டாவாம். தள்ளமுடியாமல் தலைச்சன் குழந்தையைப் புதைக்க வேண்டிய கட்டாய நெருக்கடிச் சூழ்நிலை ஏற்படின், குழந்தையின் தலைமயிரிலும் நகங்களிலும் ஒரு சிறிது வெட்டி எடுத்துக் கொண்டே புதைப்பர். இவ்வாறு செய்துவிடின், பிறகு மந்திரவாதிகள் தோண்டினாலும் ஒன்றும் கைகூடாதாம் (பலிக்காதாம்).
சனிக்கிழமையில் ஒருவர் இறந்துவிடின், அடுத்த சனிக்குள் ஊரில் இன்னொருவர் இறந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது; ‘சனிப் பிணம் துணை தேடும்’ என்பது முதுமொழி.
கெ.28 வியாழக்கிழமையில் ஒருவர் இறந்துவிடின், அடுத்த வியாழனுக்குள் ஊரில் இன்னும் இருவர் இறந்து விடுவர் என்ற நம்பிக்கையும் உண்டு. ‘தங்கு வியாழன் தனியோடு மூன்று’ என்பது முதுமொழி.
செத்தவர்களைத் தெய்வமாக மதித்து ஆண்டுதோறும் செத்த நாளில் நினைவு விழா (திவசம்) கொண்டாடுவது மரபு. கணவன் இருக்க மனைவி சுமங்கலி இறந்துவிடின், அவளுக்குப் ‘பூவாடைக்காரி’ எனப் பெயர் இட்டு ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலில் புதுப் புடவை வைத்துப் படைத்து வழிபாடு செய்கின்றனர். செத்தவர்கள் எல்லாருமே தெய்வந்தான்! ‘செத்துத் தெய்வமாகப் போய்விட்டார்’ என்பது இந்தப் பக்கத்து வட்டார வழக்கு.
இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன், செத்தவர்களைக் கல்லால் கட்டிய சவக் குழிகளிலும், மண்பாண்டத் தாழிகளிலும் வைத்துப் புதைத்ததாகத் தெரிகிறது. இத்தகைய சவக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் திருமுனைப்பாடி நாட்டில் சில இடங்களில் கிடைத்து வருகின்றன.
உணவு
இந்தப் பகுதியில் நெல், கம்பு, கேழ்வரகு இவற்றாலான உணவுகளையே பெரும்பாலும் மக்கள் உண்கின்றனர். வரகு, தினை, சோளம் ஆகியவற்றை ஒரு சிலரே ஒரு சில போதே பயன்படுத்துகின்றனர் - இது மிக மிகக் குறைவு. கால் நூற்றாண்டுக்கு முன்வரையும் இருந்த உணவு முறை வருமாறு:-
செல்வர்கள் பகல், இரவு இருவேளைகளிலும் நெல்லரிசிச் சோறு உண்பர்; காலையிலும் மாலையிலும் சிற்றுண்டி அருந்துவர். கற்றவர்களும் அரசு அலுவலாளர்களுங்கூட இப்படித்தான். இவர்கள் நண்பகலில்தான் மிடுக்கான உணவு உண்பர்; இரவு உணவு எளிமையாய் இருக்கும். ஏழையரும் தொழிலாளிகளும் கம்பு, கேழ்வரகு இவற்றாலான கூழ் குடிப்பர்; இரவில் மட்டுமே நெல்லரிசிச் சோறு உண்பர். செல்வர் சிலரும் பகலில் கூழும் இரவில் சோறும் உண்பர். ஏழையர் சிலர் இரு வேளைகளிலும் கூழ் குடிப்பதுண்டு. சிறுவர் காலையில் பழஞ்சோறு (பழையது) உண்பர்.
பகலில் கூழ் குடிப்பவர்களும் அமாவாசையில் மட்டும் பகலில் சோறு ஆக்கிப் படைத்து உண்பர். ‘அமாவாசை பருக்கை அன்றாடம் கிடைக்குமா?’ என்னும் பழமொழி எழுந்தது இதனால்தான். ஒரு சிலர் கிருத்திகை (கார்த்திகை) நாளிலும் பகலில் சோறு ஆக்கிப் படைத்து உண்பர். இப்போது சிறுவர்கள் பேதி மருந்து உட்கொள்ளப் பின் வாங்குகின்றனரே - முன்பு பேதி மருந்து உட்கொள்வதென்றால் மகிழ்ச்சியாம்; ஏனெனில், பேதிக்கை மருந்து உட்கொண்டால் பகலில் கூழ் கிடைக்காமல் சோறு கிடைக்குமாம்.
சோறு உண்பவர்கள் வெறு நாட்களில், கீரை, ஒரு குழம்பு, இரசம், மோர் இவற்றுள் ஒன்றிரண்டைச் சோற்றுடன் சேர்த்துக் கொள்வர். கிருத்திகை அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில், ஒரு கீரை அல்லது ஒரு கூட்டு அல்லது இரண்டும், ஒரு பொரியல் அல்லது ஒரு வறுவல் அல்லது இரண்டும், ஒரு குழம்பும், ஓர் இரசமும் மோரும் சோற்றுடன் சேர்த்து உண்கின்றனர். சிறப்பு நாட்களில் இவற்றுடன் சர்க்கரைப் பொங்கல், வடை, அப்பளம், பாயசம் முதலியனவும் சேர்த்துக் கொள்வர். கூட்டு ‘கூட்டுக்கறி’ என்றும், பயறு இடாத குழம்பு ‘குழம்பு’ என்றும், பயறு இட்ட சாம்பார் ‘பருப்புக் குழம்பு’ என்றும் இங்கே அழைக்கப்படுகின்றன. இரசம் என்பது முன் காலத்தில் ‘மிளகுத் தண்ணீர்’ என்று அழைக்கப்பட்டது; இப்பெயர் இன்று மொளத் தண்ணி’ எனக் கொச்சையாகக் கூறப்படுகிறது.
இப்போது கூழ் குடிப்பவர் தொகை குறைவு. ஏழைகளும் தொழிலாளிகளுங்கூட இருவேளைகளிலும் சோறு உண்ணவும், காலையும் மாலையும் சிற்றுண்டியும் தேநீரும் உட்கொள்ளவும் தொடங்கிவிட்டனர். நகர்ப் புறத்தில் இந்த நிலையே இன்று உள்ளது. நாட்டுப் புறங்களில் மட்டும் சிலரிடையே கூழ் இன்றும் நடமாடுகிறது.
இப்பகுதியிலுள்ளவர்களுள் பெரும்பாலானவர் புலால் புசிப்பவர்களே வேளாளர், இலிங்கதாரிகள், ரெட்டியார், சேடர் போன்ற சில இனத்தவர்கள் புலால் உண்ணுவதில்லை; இந்தக் காலத்தில் இவர்களுள்ளும் சிலர் உண்கின்றனர். எந்தக் காலத்திலுமே எல்லா இனங்களிலுமே, வழிவழியாகப் புலால் உண்ணாத குடும்பங்கள் ஒரு சில இருந்து வரத்தான் செய்கின்றன.
உடை
இப்பகுதியில் கால் நூற்றாண்டு முன்பு வரையும் உடை முறைகள் வருமாறு:
பெண்கள் எங்கும் உள்ளவாறு புடைவையும் கச்சு என்னும் இரவிக்கையும் உடுப்பர். ஆண்கள் கீழேவேட்டி உடுத்து மேலே துண்டு போர்த்திக் கொள்வர். கஞ்சுகம் எனப்படும் சட்டை மேலே போட்டுக் கொள்வதில்லை. சிறப்பு நாட்களிலும் குளிர்காலத்திலும் மட்டுமே சட்டை அணிவர்; மற்ற நாட்களில் சட்டையைச் சட்டை செய்யார். ஒரு சிலர் எந்த நாளிலுமே சட்டை அணியாமல், மேலே துண்டு மட்டும் போர்த்திக் கொள்வர். மேலே சட்டை போட்டுக் கொள்பவரும் சட்டைக்கு மேல் கழுத்தில் துண்டும் போட்டுக் கொள்வர். சட்டைக்கு மேல் துண்டு போடாமல் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு வெளியே செல்வது மிகவும் இழிவாக மதிக்கப்படும். மேலே சட்டையில்லாதிருப்பது இழிவன்று; துண்டு இல்லாமலிருப்பதே இழிவு. சிலர் கறுப்புத் துணியோ கறுப்புக் கோடு இட்ட துணியோ உடுத்தார்.
இளைஞரும் நடுத்தர வயதினரும் கீழே துணியைச் சுற்றினாற்போல் உடுப்பர். பெரியவர்கள் கீழே துணியைக் ‘கீழ்ப் பாய்ச்சு’ கட்டிக் கொண்டு, தலையில் ‘மண்டாச்சி’ அல்லது ‘முண்டாசு’ என்னும் தலைப்பாகை கட்டிக் கொள்வர். பெரியவர்கள் வெற்று நாட்களில் எப்படியிருப்பினும், சிறப்பு நாட்களில் கீழ்ப் பாய்ச்சும் தலைப்பாகையும் கட்டாயம் கொள்வர். மணமகனும் தலையில் பாகை அணிந்து கொள்வான். பெரியவர்கள் சிறப்பு நாட்களில் கீழே துணி உடுத்திருப்பதல்லாமல், அத் துணிக்கு மேல் இடுப்பைச் சுற்றிக் கச்சு போல் ஒரு துண்டும் கட்டிக் கொள்வர்; அதே போல் மேலே போர்த்திய துணிக்கு மேல் ஒரு நீளத் துண்டு போட்டுத் தொங்க விட்டிருப்பர். சிறப்பு நாட்களில் கீழும் மேலும் பட்டும் சரிகைத் துணியும் உடுப்பர். இவையெல்லாம் பழைய முறைகள். இன்று எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
உறைவிடம்
நகர்ப் புறங்களில் கல்வீடுகள் இருக்கும். கல்வீடுகளிலும் ஓட்டு வீடுகளே மிகுதி, மாடி வீடுகள் குறைவு. சிற்றுார்களில் கூரை வீடுகளே மிகுதி, கல்விடுகள் குறைவு; கல்வீட்டிலும் மாடி வீடுகள் மிக மிகக் குறைவு. கூறை வீடுகள் தென்னங்கீற்று, பனையோலை மட்டை, வைக்கோல், கம்பந்தட்டு, சோளத்தட்டு, கருப்பஞ் சோலை, விழல் முதலியவற்றால் வேயப்பட்டிருக்கும். கூரை வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு அறைகளைத் தவிர வேறொன்றும் இரா. ஒரு சில கூரை வீடுகளில் ஓர் அறைகூட இராது. ஒரு சில கூரை வீடுகள் கல்வீடு மாதிரி இருக்கும் - அஃதாவது, மேலே மட்டும் ஓடு இல்லாமல் கூரை இருக்கும்; கீழே கல்வீட்டில் உள்ள எல்லா வசதிகளும் இருக்கும்; இத்தகைய வீடுகட்குத் ‘தூல பத்தி வீடு’ என்பது பெயர்.
உலகில் உரைவிடங்களின் அமைப்பில் இடத்திற்கு இடம், வேறுபாடு இருக்கக் காண்கிறோம். தமிழகத்திற்குள்ளேயே இடத்திற்கு இடம் வேறுபாடு உள்ளது. எனவே, திருமுனை பாடி நாட்டிலுள்ள கல் வீட்டின் அமைப்பு வருமாறு:-
வீட்டின் முகப்பில் வீடு கொண்ட அகலத்திற்கு உயரமான குறடு இருக்கும். தெருவிலிருந்து குறட்டிற்குப் படி இருக்கும். குறடு ஏறிக் கடந்ததும் வாயிற்படிக்கு முன்னால் இரு பக்கங்களிலும் திண்ணை இருக்கும். வாயிற்படிக்குள் நுழைந்ததும் நடை இருக்கும்; நடை என்பது, இரண்டு பக்கம் வழி கொண்ட ஓர் அறை போன்ற அமைப்பு உடையது. நடையைக் கடந்து உள்ளே சென்றதும் நான்கு பக்கங்களிலும் தாழ்வாரம் இருக்கும். நான்கு தாழ்வாரங்கட்கும் நடுவில் திறந்த வெளிவாசல் இருக்கும். சிலர் வாசலைத் திறந்தபடி விடாமல் மேலே கூண்டுபோல் கட்டி மூடிவிடுவதும் உண்டு; இதற்குக் ‘கல்யாணக் கூண்டு’ என்று பெயர் சொல்லப்படுகிறது. நான்கு தாழ்வாரங்களுள் ஒரு தாழ்வாரத்தை அடுத்துக் கூடம் இருக்கும். கூடம் என்பது தாழ்வாரத்தினும் ஓரளவு அகலமாகவும் உயரமாகவும் இருக்கும் அமைப்பாகும். தெற்கு நோக்கிய வீட்டிலும் வடக்கு நோக்கிய வீட்டிலும் மேற்குப் புறத் தாழ்வாரத்திற்கு மேற்பகுதியில் கூடம் இருக்கும். கிழக்கு நோக்கிய வீட்டிலும் மேற்கு நோக்கிய வீட்டிலும் வடபுறத் தாழ்வாரத்தின் வடபகுதியில் கூடம் இருக்கும்.
சில வீடுகளில் கூடம் இருக்காது; நான்கு தாழ்வாரங்கள் மட்டுமே இருக்கும். சிலவற்றில் கூடமும் இன்றி மூன்று தாழ்வாரங்கள் மட்டுமே இருக்கும். சிலவற்றில் மூன்று தாழ்வாரங்களும் கூடமும் இருக்கும். மூன்று தாழ்வாரங்கள் உள்ள வீட்டில் ஒரு நடையும் ஓர் அறையும், நான்கு தாழ்வாரங்கள் உள்ள வீட்டில் ஒரு நடையும் இரண்டு அறைகளும், கூடமும் உள்ள வீட்டில் இவற்றுடன் கூடுதலாக ஓர் அறையும் தெருப் பக்கத்தில் இருக்கும். அறையில் பலகணி உண்டு. பல வீடுகள் முன் கட்டோடு இருக்கும்; நகர வீடுகளில் பின்கட்டும் இருக்கும். வசதியானவர் வீடுகளில் மூன்று கட்டுகள் இருப்பதும் உண்டு. மாடி வீடுகளில் சிலவற்றில் இரண்டு அடுக்குகள் இருக்கும். மூன்று அடுக்குகளைக் காண்பது அரிது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் தோட்டம் இருக்கும். தோட்டத்தில் கிணறும் மரஞ்செடி கொடிகளும் இருக்கும்.
வடக்குப் பார்த்த வீட்டினும் தெற்குப் பார்த்த வீடும், மேற்குப் பார்த்த வீட்டினும் கிழக்குப் பார்த்த வீடும் வசதியானவையாகக் கருதப்படுகின்றன. தெருவாயிற்படிக்கு நேரே தோட்டம் வரையும் தடுப்புச் சுவர் இன்றித் திறப்பு வாயில்கள் இருக்கும். அவ்வாறு தடுப்புச் சுவர் இருந்தால் அதில் பலகணி (சன்னல்) இருக்கும். வீட்டுத் தெரு வாயிலுக்கு நேரே சந்துத் தெரு இருக்கக்கூடாது; அப்படியிருப்பதற்குச் ‘சந்து குத்து’ என்பது பெயர். சந்து குத்து இருந்தால் வீடு உருப்படாதாம். வீட்டிற்கு எதிரில் இன்னொரு வீடு இருக்கவேண்டுமே யொழியக் காலிமனை இருக்கக்கூடாதாம்; காலிமனை இருந்தாலும் வீட்டிற்கு வளர்ச்சியில்லையாம். வீட்டின் முன் புறத்தில் முருங்கை மரமும் பின்புறத்தில் புளிய மரமும் இருக்கக் கூடாதாம். ‘முன் முருங்கையும் பின் புளியனும் உதவா’ என்பது முதுமொழி. வீட்டில் கருவேப்பிலை மரம் போன்ற சிலவகை மரங்களும் இருக்கக்கூடாதாம்.
தெருவாயிற் படியில் இரட்டைக் கதவுகள் இருப்பின், ஒரே நேரத்தில் இரண்டு கதவுகளையும் திறந்து வைக்கமாட்டார்கள். ஒரு கதவுதான் திறந்தபடி இருக்கும். சாவு வீட்டில்தான் இரண்டு கதவுகளும் திருந்திருப்பது வழக்கம். கதவிலுள்ள தாழ்ப்பாளை யாரும் ஆட்டக் கூடாது; ஆட்டினால் சண்டை வருமாம்.
பாகம் பிரிக்கும்போது மூத்த பிள்ளைக்குக் கூடத்துப் பக்கம் கொடுக்கப்படும். ஒரே வீட்டில் குடியிருப்பினும் அல்லது தனித்தனி வீடுகளில் குடியிருப்பினும் மூத்தபிள்ளை மேற்குப் பக்கத்திலும் இளைய பிள்ளை கிழக்குப் பக்கத்திலும் இருக்கவேண்டுமெனச் சொல்லப்படுகிறது.
இந்தக் காலத்தில் வீடுகளின் அமைப்பில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்று சொல்லத் தேவையில்லை.
பெருநாட்கள்
பண்டிகை என்பது ‘பெருநாள்’ அல்லது ‘பெரிய நாள்’ என்னும் பெயரால் இங்கே மக்களால் குறிப்பிடப்படுகிறது. ‘நல்ல நாள் - பெரிய நாளிலே இப்படிச் செய்யலாமா?’ நல்ல நாளும் பெரிய நாளுமாய்ப் பார்த்தா இப்படிச் செய்கிறாய்? என்பன பேச்சு வழக்குகள். இப்பகுதியில் குறிப்பிடத்தக்க முறையில் ஆறு பெருநாட்கள் (பண்டிகைகள்) கொண்டாடப் படுகின்றன; அவை; சித்திரைத் திங்களில் தமிழ்ப் புத்தாண்டுப் பெருநாள், ஆவணித் திங்களில் பிள்ளையார் சதுர்த்திப் பெருநாள், புரட்டாசித் திங்களில் ஆயுதபூசை என்னும் கலைமகள் விழாப் பெருநாள், ஐப்பசித் திங்களில் தீபாவளிப் பெருநாள், கார்த்திகைத் திங்களில் கார்த்திகைப் பெருநாள், தைத்திங்களில் பொங்கல் பெருநாள் ஆகியவையாகும். இவையாறும் தமிழக முழுதும் கொண்டாடப்படினும், இப்பகுதியில் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பெறும் முறையில் சிறு வேறுபாடும் இருக்கலாம்.
தமிழ்ப் புத்தாண்டு
இது சித்திரைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடப் பெறும். வைகறையில் எழுந்து இல்ல முழுதும் தூய்மை செய்து, மஞ்சள் குங்குமத்தாலும் மாவிலையும் வேப்பிலையும் கலந்த புதிய இலைக் கொடியாலும் (தோரணத்தாலும்) வீட்டு வாயிற்படிகள் அனைத்தையும் அணி செய்வர். நண்பகலில் பல்வகைக் காய்கறி உணவுகளையும் சிற்றுண்டி வகைகளையும் இறைவனுக்குப் படைத்து உண்பர். அறுசுவை உண்டியும் இருக்கும். புத்தாண்டு நாளில் மகிழ்ச்சியுடன் இருந்தால் ஆண்டு முழுதும் மகிழ்ச்சி நிலவுமாம். இந்த நாளில் துன்புற்றால் ஆண்டு முழுதும் துன்பந்தானாம். அதனால் இந்த நாளில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளார்; சிறுவர்களை வைதலோ அடித்தலோ செய்யார். எதுவாயிருப்பினும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்கிறேன்’ என்பர். ‘ஒருவர் பிறந்த கிழமையில் புத்தாண்டு பிறந்தால், அவருக்கு அந்த ஆண்டு நன்றாயிராது’ என்ற நம்பிக்கை இப்பகுதியில் இருக்கிறது.
பிள்ளையார் சதுர்த்தி
ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் வழக்கமான துப்புரவுகளுடன் இது தொடங்கப்பெறும். களிமண் பிள்ளையார் செய்யப்படுவார்; அல்லது விலைக்கு வாங்கி வரப்படுவார். பிள்ளைகள் தும்பைப் பூ வில்வம், வன்னி இலை, நாவல்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கம்பங்கதிர், சோளக்கதிர் முதலியன கொய்து வருவர்; இலவசமாகக் கிடைக்காத இடங்களில் விலைக்கு வாங்கப்படும். பிள்ளையாரை முறைப்படி திருமுழுக்காட்டி அணிசெய்து, பலவகைப் பழவகைகள், காய்கறி வகைகள், சிற்றுண்டி வகைகள் வைத்துப் படைப்பர். சுண்டலும் கொழுக்கட்டையும் இன்றியமையாதவை. மறுநாளும் அதற்கு மறுநாளும் ஏதேனும் வைத்துப் படைப்பர். மூன்றாம் நாள் பிள்ளையாரைக் கொண்டு போய் ஏதேனும் ஒரு நீர்நிலையில் விட்டுவிட்டு வந்து விடுவர். பிள்ளையாரின் தொப்பையில் பதிக்கப்பட்டிருக்கும் காசு, கொண்டு போய் நீரில் விடும் சிறார்களைச் சேரும்.
கலைமகள் விழா
புரட்டாசியில் நடைபெறும் இதனை ஆயுதபூசை என்பர். ஒன்பது நாள் நவராத்திரிக் கொண்டாட்டம் பெரும்பாலான இனத்தவர்களின் இல்லங்களில் நடைபெறுவதில்லை. தமிழ் மக்களின் இல்லங்களில் ஒன்பதாம் நாளான வளர்பிறை நவமியில் மட்டுமே இது கொண்டாடப்படும். எல்லா வகைக் கருவிகளையும், பெட்டி பேழை - குதிர் முதலியவற்றையும் தூய்மை செய்து பூசை போட்டுப் பொட்டும் இடுவர். மாணாக்கர்கள் தங்கள் நூல்கள், எழுதுகோல்கள் முதலியவற்றிற்கும் பூசை போட்டுப் பொட்டிடுவர். எல்லாவற்றையும் நடுவிட்டில் இறையுருவத்தின் முன் கொலுவாக வைப்பர். அவல், சுண்டல், காய்கறி - சிற்றுண்டி வகைகள் வைத்துப் படைப்பர். எல்லாவற்றினும் அவல் - கடலை இன்றியமையாத பொருளாம். இவ்விழா தொழிற் கூடங்களிலும் வணிக நிலையங்களிலுங்கூட நடைபெறும். எங்கு நடைபெறினும், தென்னை ஓலை, மாவிலை முதலியவற்றாலான இலைக் கொடிகள் அணிசெய்து கொண்டிருக்கும். கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் கொலு கலைக்காமல் யாரும் எடுக்கக்கூடாது. அன்று மாலையோ, அல்லது மறுநாள் அஃதாவது பத்தாம் நாளான விசயதசமியன்றோ மறுபடையல் படைத்துக் கொலுவைக் கலைப்பர்; பின்னரே பொருள்கள் எடுத்துப் பயன்படுத்தப்படும். இந்தப் பெருநாட் காலத்தில் சிறார்களைப் புதிதாய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது உண்டு.
தீபாவளிப் பெருநாள்
ஐப்பசியில் அமாவாசைக்கு முந்தின சதுர்த்தசி நாள் இரவில் இது கொண்டாடப் பெறும். இரவு முழுதும் பெண்கள் கண் விழித்துத் தின்பண்ட சிற்றுண்டி வகைகள் செய்வர். பிள்ளைகள் பல்வேறு வகை வெடிகள் வெடித்தும் வாணங்கள் கொளுத்தியும் மகிழ்வர். வைகறையில் அனைவரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவர். பின் உணவு வகைகளும் புதிய உடை வகைகளும் வைத்துப் படைப்பர். சில குடும்பங்களில் பெண்கள் கோயிலுக்குச் சென்று நோன்பு எடுத்துக் கொண்டு வந்து பின்பு வீட்டில் படைப்பர். படைத்ததும் புத்தாடை உடுத்து, உணவு வகைகளை உண்டு மகிழ்வர். மகளைக் கட்டிக் கொடுத்த முதல் தீபாவளியாயின், மகளும் மருமகனும் வந்து தலைத் தீபாவளி மருவுண்பர். உறவினர்களும் நண்பர்களும் ஒருவர்க்கொருவர் உணவு வகைகளை வழங்கிக் கொள்வர்; ஏழை எளியவர்க்கும் அளிப்பர்.
கார்த்திகைப் பெருநாள்
இது கார்த்திகைத் திங்களில் கார்த்திகை (கிருத்திகை) நாளில் நடைபெறும். நண்பகலில் கடவுளுக்குச் சிறப்பாகப் படைத்து உண்பர். சில குடும்பத்தார் பகல் முழுதும் உண்ணாநோன்பு கொண்டு, மாலையில் கோயிலில் ‘தீபம்’ கண்ட பின்னரே வீட்டில் படைத்து உண்பர். பொழுது போனதும், தெரு முற்றத்திலும் வீடு முழுவதிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு அணிசெய்யும். கோயில்களின் உச்சியிலும் மலை உச்சியிலும் தீபவிளக்கு ஏற்றப்பட்டுத் திருவிழா நடைபெறும். தெருக்களில் ‘சொக்கப் பனை’ கொளுத்தப்படும்.
பிள்ளைகள், பனம் பூக்களைச் சுட்டுக் கரியாக்கித் தூளைத் துணியில் இட்டுப் பந்தாகச் சுருட்டிப் பனமட்டைக் கழிக்குள் வைத்துக் கட்டி நெருப்புப் பற்றவைத்துக் ‘கார்த்திகை’ சுற்றுவார்கள்; அதிலிருந்து தீப்பொறிகள் பூப்பூவாக விழுவது தெரு முழுதும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இதுபோல் தொடர்ந்து மூன்று நாள் சுற்றுவார்கள். முதல் நாள் அண்ணா மலையார் கார்த்திகை என்றும் இரண்டாம் நாள் நாட்டுக் கார்த்திகை என்றும் சொல்லிக் கார்த்திகை சுற்றுவார்கள். மூன்றாம் நாள் காட்டுக் கார்த்திகை என்று சொல்லிச் சுற்றி முடித்து விட்டு, இறுதியாகத் தெரு மூலைக் காட்டிலோ - ஊர் மூலைக் காட்டிலோ, சுற்றிய கார்த்திகைக் கழியைத் தரையில் அடித்துப் போட்டு விடுவார்கள்.
தமிழ் நாட்டில் பழம்பெருங் கார்த்திகை விழா சங்க நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விழா திருவண்ணா மலைக்கே சிறப்பானது. ஆதலின், முதல் நாள் விழாவை அண்ணாமலையார் கார்த்திகை என்கின்றனர். இரண்டாம் நாள் விழாவை, அந்த அந்த ஊருக்கு உரியதான ‘நாட்டுக் கார்த்திகை’ என்கிறார்கள். சில குடும்பங்களில் நாட்டுக் கார்த்திகை இரவு, கொழுக்கட்டை, துவரம் பருப்புக் கடையல், முருங்கைக் கீரை துவட்டல், வாழைக்காய்ப் பொரியல் (இவை நான்கும் கட்டாயம்) முதலிய உணவுப் பொருள்கள் செய்து படைத்து . உண்பர். புலால் உண்பவர்கள் ஒரே நேரத்தில் இருவகைப் படையல் படைப்பர். அஃதாவது, சைவக் கடவுளுக்குச் சைவ உணவு வகைகளை வழக்கமான இடத்தில் வைத்துப் படைப்பர்; அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ‘காத்தவராயன்’ என்னும் சிறு தெய்வத்திற்குப் புலால் உணவு வைத்துப் படைப்பர்; இதற்குக் ‘காத்தவராயன் படையல்’ என்று பெயராம். கள் - சாராயம் இருந்த காலத்தில் அவற்றையும் வைத்துப் படைத்தனர். மது அருந்தாத குடும்பத்தார் கூட, காத்தவராயனுக்குக் கள் - சாராயம் வைத்துப் படைத்துப் பிறரிடம் எடுத்துக் கொடுத்து விடுவது வழக்கம். நாட்டுக் கார்த்திகைப் படையல் ஒரு சில குடும்பங்களிலேயே உண்டு.
பொங்கல் பெருநாள்
தைத் திங்களின் தொடக்கத்தில் நடைபெறும் இது, தமிழ் நாட்டின் தனிப்பெரும் பெருநாள் விழாவாகும். மார்கழித் திங்களின் இறுதி நாளில் ‘போகிப் பண்டிகை’ என்பது நடைபெறும். அன்றைய வைகறையிருளிலே தேவையற்ற பழம் பொருள்கள் எரிக்கப்படும். இதற்குப் ‘போகி மூட்டம்’ என்று பெயர் கூறப்படுகிறது. இந்த எரிப்பு விழா நாளடைவில் வளர்ச்சி பெற்று, தேவையற்ற பழம் பொருள்களுடன்,தேவைப் பயனுள்ள விறகுக் கட்டைகள், பெரிய மரத் துண்டங்கள் முதலியவற்றையெல்லாம் போட்டு எரித்து வேடிக்கை பார்த்து அதிலொரு வகை இன்பங் காணும் நிலைக்கு வந்துவிட்டது. போகியன்று காலையில் வீடு முழுதும் பெரிய அளவில் துப்புரவு செய்யப்படும். போகிப் பெருநாள் ஒரு சில குடும்பங்களிலேயே விரிவாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படும் இல்லங்களில் காலையில் கூழ் படைத்து ஏழை எளியவர்க்கு ஊற்றப்படும். இதனைப் ‘போகிக் கூழ்’ என்றும் ‘கூழ் ஊற்றுதல்’ என்றும் குறிப்பிடுவர். அன்று இரவு சிறப்பான உணவுப் பொருள்களுடன் படைத்து உண்பர். இந்தப் படையலிலும், முன்சொன்ன நாட்டுக் கார்த்திகைப் படையல் போலவே சைவப் படையல், காத்தவராயன் புலால் படையல் என இருவகை உண்டு.
மறுநாள் - அஃதாவது தைத்திங்கள் முதல் நாள் பெரும் பொங்கல் விழா கொண்டாடப் பெறும். வீட்டிற்கு நடுவேயுள்ள திறந்த வெளிவாசலில் புதுப்பானைகள் வைத்துப் பச்சரிசிச் சோறு பொங்கியும், புதுச் சட்டிகள் வைத்துக் குழம்பு - காய்கறிகள் முதலியன செய்தும், அந்த நடுவாசலிலேயே குடும்பப் பழக்கத்திற்கு ஏற்றபடி ஐந்து இலைகளோ அல்லது இருபத்தோர் இலைகளோ போட்டுப் பரிமாறிக் கதிரவனுக்குப். (சூரியனுக்குப்) படைப்பர். படைக்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவிப் படைப்பர். இத்தனை பானைகள் வைப்பது இத்தனை படி அரிசி பொங்குவது என்றெல்லாம் குடும்பத்திற்கு ஏற்றபடி மாறுதல் இருக்கும். சிலர் சர்க்கரைப் பொங்கலும் செய்வர். கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு முதலியவை இந்தப் படையலுக்கு இன்றியமையாதவையாகும். சில குடும்பத்தினர் உணவு வகைகளைப் பூசணி இலையில் இட்டுப் படைப்பர். பொங்கல் இடும் பழக்கம் இல்லாத நெருங்கிய உறவினர்க்கும் நண்பர்க்கும் தொழிலாளர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவு வழங்கப்படும். இந்தப் படையலுக்குப் பெரும் பொங்கல் இடுதல்’ என்று பெயராம். சில குடும்பங்களில் இந்தப் படையல் இராது. சில குடும்பத்தார் நடு வாசலில் பொங்கிப் படைக்காமல், வழக்கமான அடுப்பங்கரையிலேயே பொங்கிப் படைப்பர். இந்தப் படையல், மழை பெய்வதற்கும் உணவுப் பொருள்கள் விளைவதற்கும் காரணமாயுள்ள ஞாயிற்றுக்கு (சூரியனுக்கு) நன்றி செலுத்தும் முறையில் நடைபெறுவதாகும்.
பெரும் பொங்கலையடுத்துத் தைத்திங்கள் இரண்டாம் நாள் ‘மாட்டுப் பொங்கல் விழா’ நடைபெறும். இந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர்; மாடுகளைக் குளிப்பாட்டி ஒப்பனை செய்து உணவு படைத்து மாலை வேளையில் ‘மஞ்சு விரட்டு’ நடத்துவர். இது ‘மாடுமிரட்டல்’ என்றும் சொல்லப்படும். வண்டி மாடுகளை வண்டிகளில் பூட்டி ஊரை வலம்வரச் செய்வர். அன்று முழுதும் மாடுகளை அடித்தலோ, வேலை வாங்குதலோ செய்யார். வீட்டிலும் - தெருவிலும் - ஊரிலும் ‘பொங்கலோ பொங்கல் - மாட்டுப் பொங்கலோ பொங்கல்’ என்று கூவும் முழக்கம் விண்ணைப் பிளக்கும். சிற்றுரர்களில் பொதுத் திடலில் இறையுருவம் கொண்டு வரப்படும். அதன் முன்னிலையில் ஊர் மாடுகள் கொண்டு வரப்பட்டு ‘மஞ்சு விரட்டு விழா’ நடைபெறும். வீடு முழுதும் கரைத்த அரிசி மாவினால் ‘மாக்கோலம்’ போட்டு அணி செய்வர். அன்றிரவு உணவுப் படையல் நடக்கும். புலால் உண்பவர் வீட்டில், நாட்டுக் கார்த்திகைப் படையல் - போகிப் படையல் போலவே சைவப் படையலும் காத்தவராயன் படையலும் இருக்கும். உணவு வகைகளுடன் புத்தாடைகளும் வைத்துப் படைக்கப்பட்டு உடுத்துக் கொள்ளப்படும். உழவர்கள் பொங்கல் படைத்த நீரைக் கொண்டுபோய் வயல்களிலுள்ள பயிர்களின்மேல் ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவித் தெளிப்பர். இதற்குப் ‘பொங்கல் கூறுதல்’ என்று பெயராம்.
காணும் பொங்கல் எனப்படுவது மூன்றாம்நாள் - கரிநாள் அன்று கொண்டாடப்பெறும். அன்று மக்கள் புத்தாடை உடுத்துப் புது ஒப்பனை செய்துகொண்டு ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று கண்டு அளவளாவுவர். சிறியவர்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாழ்த்து வேண்டுவர். பெரியோர் தாம்பூலம் அளித்து வாழ்த்துவர். தாம்பூலத்தில் தகுதிக்கேற்பப் பணமும் வைக்கப்படும். அன்று ஊரிலிருந்து பொங்கல் மருவுக்காகப் புதுமண மக்களாகிய மகளும் மாப்பிள்ளையும் வந்து சிறப்புகள் பெற்று விருந்துண்பர். அன்று எல்லா வகைத் தொழிலாளர்கட்கும் விடுமுறை நாள். இந்த விடுமுறை அவர்களாகவே விட்டுக் கொள்வது. சில ஊர்களில் கோயிலில் திருவிழா நடைபெறும். வயதானவர்கள் பல வேடிக்கைப் பேச்சுகள் பேசி மகிழ்வர். இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தெருக்களில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவர். சில ஊர்களில் குடைராட்டினம் அமைத்து ஏறிச் சுற்றி விளையாடுவர். கலைஞர்கள் கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், நாடகம் முதலிய பல வகையான கேளிக்கைகள் நடத்துவர். பல்வேறு தொழிலாளர்களும் கலைஞர்களும் அன்று வீடுதோறும் சென்று பரிசு பெறுவர். அன்றிலிருந்து ஊரிலுள்ள எல்லாவகைத் தொழிலாளர்கட்கும் கலைஞர்கட்கும் தொடர்ந்து சில நாள்கள் விடுமுறை இருக்கும். பின்னர் ஒரு நாள் வேலை தொடங்க வேண்டிய நாளாக ஊர்ப் பெருமக்களால் குறிப்பிடப் பெறும். அன்று தான் எல்லாரும் தத்தம் தொழில்களைச் செய்யத் தொடங்கலாம். அன்று கடவுளுக்குப் படைத்து வேலை தொடங்குவர். இதற்கு ‘நாள் கொள்ளுதல்’ என்று பெயராம். நாள் கொள்வதற்குமுன் எவரேனும் வேலை தொடங்கினால் அது பொதுக் குற்றமாகக் கருதப்படும். சலவைத் தொழிலாளர் நாள்கொண்டு வேலை தொடங்குவதற்குத் ‘துறை கும்பிடுதல்’ என்று பெயராம். அவர்கள் நீர்த்துறையில் பூசைபோட்டு வேலை தொடங்குவர்.
ஐந்தாம் நாள் சில ஊர்களில் ஆற்றுத் திருவிழா நடைபெறும். தை அமாவாசையன்று கடல் முழுக்கு நடைபெறும். தைத் திங்களில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை ‘தலை ஞாயிறு’ என்னும் பெயரில் சில குடும்பத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். அன்றும் பொங்கலிட்டுக் கதிரவனுக்குப் படைப்பர். சிலர் தலை ஞாயிறு நாளைக் ‘கன்று குட்டிப் பொங்கல்’ என்னும் பெயரிட்டுக் கொண்டாடுகின்றனர். அன்று கன்றுகளைக் குளிப்பாட்டி அணிசெய்து பொங்கல் படைத்து ஊட்டுவர். சிலர் அன்று கூழ் படைத்து ஏழையர்க்கு ஊற்றுவர்; அன்றிரவு சிறப்பு உணவு வகைகளுடன் படையலும் நடைபெறும்.
சில இனத்தார்களுள் - சில குடும்பங்களில் தைத்திங்கள் எட்டாம் நாள் ‘மயிலார்’ என்னும் நோன்பு பெண்களால் நோற்கப்படும். பெண்கள் காலையிலிருந்து உண்ணா நோன்பிருந்து மாலையில் படைத்து உண்பர். படைக்கும் இடத்தில் மயில் இற்கு வைக்கப்படும். பெண்கள் படைக்கும் போது ஆடவர் அங்கு இருந்து அதைப் பார்க்கக்கூடாது; அந்த நேரத்தில் ஆடவர் வீட்டினின்றும் வெளியேறிவிடுவர். அன்று மட்டும் முதலில் பெண்கள் உண்பர்; பின்னரே ஆடவர் உண்பர். பெண்கள் சிலர் மயிலார் நோன்பு நாளில் தரையைத் தூய்மை செய்து உணவைத் தரையில் வைத்து உண்ணுவர் எனச் சொல்லப்படுகிறது.
தைத் திங்கட் பூச நாளில் ஊர்களில் விழா கொண்டாடப்படுவதன்றிச் சில குடும்பங்களிலும் சிறப்புக் கொண்டாட்டம் நடைபெறும். நிரம்ப உணவு வகைகள் செய்து இறைவனுக்குப் படைத்து உற்றார் உறவினர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவளிப்பர். இதற்குப் பூச பாவாடை என்பது பெயர். சில குடும்பங்களில் இரவோ டிரவாக உணவு ஆக்கி விடிவதற்குள் படைத்துவிடுவர். சில ஊர்களில் கோயிலில் ‘பூச பாவாடை’ போட்டு ஊரார் அனைவரும் கலந்து உண்பர்.
இப்படியாகத் தைத் திங்களில் பொங்கலையடுத்துப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு பொங்கல் விழா பலநாள் நடப்பதையும், தொழிலாளர் விடுமுறை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு நாளில் நாள் கொள்ளுவதையும், முதல் ஞாயிறு தலை ஞாயிறாகக் கருதப்படுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயுங்கால், தைத்திங்கள் முதல் நாள் ஒரு காலத்தில் தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், தமிழ்மக்கள் பொங்கல் விழாவைத் தமிழ்த் தேசீய விழாவாகக் கொண்டாடி வந்தனர் என்பதும் உய்த்துணரப்படுகின்றன.
நோன்புகள் (விரதங்கள்)
இப் பகுதியில் பலவகையான நோன்புகள் பின்பற்றப் படுகின்றன. நோன்பு விரதம் எனப்படுகின்றது; ஒரு பொழுதே (ஒரு வேளையே) உண்பதால் ‘ஒரு பொழுது’ என்றும் சொல்லப்படுகிறது. ஆடித் திங்களில் வெள்ளிக் கிழமை தோறும் அம்மனுக்காகப் பெண்கள் சிலரும், புரட்டாசித் திங்களில் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்காகச் சிலரும், புரட்டாசித் திங்களிலேயே வளர்பிளை சதுர்த்தசியில் ‘அனந்த விரதம்’ என்னும் நோன்புப் பெயரில் சிலரும், ஐப்பசித் திங்களில் அமாவாசை கழித்த ஆறுநாள் ‘கந்தர் சஷ்டி விரதம்’ என்னும் பெயரில் சிலரும் கார்த்திகைத் திங்களில் திங்கட் கிழமை தோறும் ‘சோமவார விரதம்’ என்னும் பெயரில் சிவபெருமானுக்காகச் சிலரும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி என்னும் பெயரில் சிலரும், மாசியில் ‘சிவராத்திரி’ என்னும் பெயரில் சிலரும், பங்குனியில் உத்திரம்’ என்னும் பெயரில் சிலரும், திங்கள் தோறுமே கார்த்திகை, பூசம் அமாவாசை - சஷ்டி ஆகிய காலங்களில் சிற்சிலரும், வாரந்தோறுமே திங்கள் - செவ்வாய் - வெள்ளி - சனி ஆகிய கிழமைகளில் சிற்சிலரும் நோன்பு கொள்கின்றனர்.
மார்கழித் திங்கள் முழுதுமே பெண்கள் வைகறை இருட்டிலேயே நீராடி, தெரு முற்றத்தைத் தூய்மை செய்து விதம் விதமான அழகிய கோலங்கள் போட்டு அணி செய்வர். பெற்றோர்கள் சிறார்களை எழுப்பிப் படிக்கச் செய்வர். சில ஊர்களில் வழிபாட்டுக் குழு (பஜனை) ஆடல் பாடல்களுடன் ஊர் சுற்றி வரும். பண்டாரம் சங்கு ஊதிச் செல்வார். குடு குடுப்பைக் காரர்கள் நல்ல வாக்கு சொல்லிக் கொண்டு போவர். ஒரு சிலர் பறை முழக்கிச் செல்வர். கோயிலில் மணி முழங்கும்; பூசனையும் நடைபெறும் வைகறை வழிபாட்டிலேயே சுண்டல் முதலியன வழங்கப் பெறும். கோயிலில் ஒரு நாளைக்கு ஒரு வீட்டார் ‘உபயம்’ நடத்துவர். இதற்குத் திருப்பள்ளியெழுச்சி உபயம்’ என்பது பெயர். இவ்வாறாக மார்கழித் திங்களின் ஒவ்வொருநாள் வைகறையும் மிக்க கலகலப்பாயிருக்கும். இந்த மார்கழி வைகறைகளில் பெண்கள் கொள்ளும் நோன்பு பாவை நோன்பு’ எனப்படும் என்னும் செய்தி இலக்கியம் கண்ட செய்தியாகும். ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சியும் அந்தக் கால மக்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. இப்போதோ, ‘அப்படியென்றால் விலை என்ன?” என்று கேட்போர் பலர் உளர்.
கோயில் திருவிழாக்கள்
பல ஊர்களிலும் - பல்வேறு கோயில்களிலும் பின்வருமாறு பல்வேறு வகைத் திருவிழாக்கள் நடைபெறும்; சில விழாக்கள் சில ஊர்களில் நடைபெறா வேறு சில ஊர்களில் நடைபெறும்.
சித்திரைத் திங்களில் புத்தாண்டு முதல் நாள் விழா பெருமாள் கோயிலில் (திருவயிந்திரபுரம்) பத்து நாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) - பருவத்தில் தேர் ஒடுதல் - வசந்த உற்சவம் என்னும் இளவேனில் விழா - சதய நாளில் (திருவதிகை) அப்பர் விழா.
வைகாசித் திங்களில் (திருப்பாதிரிப் புலியூர்) பத்து நாள் பெருவிழா - விசாகத்தில் தேர் ஓடுதல்.
ஆணித் திங்களில் நடராசன் தரிசனம் - ஆணித்திரு மஞ்சனம்.
ஆடித் திங்களில் மாரியம்மன் கோயில்களில் விழா - தீமிதி விழா செடல் திருவிழா. ஆடிப் பூரத்தில் சிவன் கோயில்களில் வளையல் திருவிழா - பதினெட்டாம் பெருக்கு.
ஆவணி மூலத்தில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த விழா.
புரட்டாசியில் - நவராத்திரி - கலைமகள் விழா அம்மன் கோயில்களில் அம்புத் திருவிழா.
ஐப்பசியில் - கந்தர் சஷ்டி - சூரசம்மார விழா. கார்த்திகையில் - சோமவார விழா, தீபதரிசன விழா
மார்கழியில் - வைகுண்ட ஏகாதசி விழா - பாவை விழா - திருப்பள்ளியெழுச்சி விழா - நடராசர் ஆருத்ரா தரிசனம்.
தைத் திங்களில் பொங்கல் விழா - கரிநாள் விழா - ஆற்றுத் திருவிழா - கடல் முழுக்கு - தைப் பூச விழா.
மாசியில் - மாசிமக விழா - மகா சிவராத்திரி விழா. பங்குனியில் - பங்குனி உத்திர விழா - பத்து நாள் பெருவிழா உத்தரத்தில் தேர் ஓடுதல்.
இன்ன பிற பல்வேறு வகை விழாக்கள் திருமுனைப்பாடி நாட்டில் நடைபெற்று வருகின்றன.
நிமித்தங்கள்
இலக்கியங்களில் நிமித்தம் என்று சொல்லப்படுவது பேச்சு வழக்கில் ‘சகுனம்’ எனப்படுகிறது. திருமுனைப்பாடி நாட்டிலும் பல்வேறு நிமித்தங்கள் பார்க்கப்படுகின்றன: அவற்றுள் சில வருமாறு:
நன்னிமித்தங்கள்
மணி அடித்தல், சங்கு ஊதுதல், வேட்டு போடுதல், பீரங்கி வெடித்தல், கருடன் கூவுதல், கழுதை கத்துதல், நரி முகத்தில் விழித்தல், இரட்டைக் காகங்களைப் பார்த்தல், சவ ஊர்வலம், நாய் உடம்பை உதறல், திருமங்கலி (சுமங்கலி) எதிரே வருதல், பூக்கூடை - தண்ணிர்க் குடம் - தானிய மூட்டை - அழுக்குத் துணி மூட்டை முதலியன எதிரே வருதல், நடக்கும் கைகூடும் போய் வரலாம் - நல்லது முதலிய நற்சொற்கள் தற்செயலாய்க் காதில் விழுதல், பொருள் தவறிக் கீழே விழுதல் முதலியன நல்ல நிமித்தங்களாகக் (சகுனங்களாகக்) கருதப்படுகின்றன. வீட்டை விட்டுப் புறப்படும்போது, வீட்டிலுள்ள திருமங்கலி ஒருத்தியை வாயிற்படியில் நிற்கச் செய்து செயற்கை முறையில் நல்ல நிமித்தம் உண்டாக்கிக் கொண்டு போவதும் உண்டு.
தீ நிமித்தங்கள்
ஆந்தை அலறல், கோட்டான் கூவுதல், காகம் கரைதல், நாய் அழுதல், பூனை குறுக்கே போதல், மழை பெய்தல், கைம்பெண் (விதவை) ஒற்றைப் பார்ப்பார் ஒற்றைப் பூணூல்காரர் ஆகியோர் எதிரே வருதல், எண்ணெய்க் குடம் விறகுக்கட்டு, வைக்கோல் கட்டு கோடரி - மண்வெட்டி முதலியன எதிரே வருதல், நடக்காது போகாதே - அழிந்துபோகும் முதலிய தீச்சொற்கள் தற்செயலாய்க் காதில் விழுதல், கால் தடங்கல், எதிரே ஏதேனும் தடை ஏற்படுதல், தும் முதல், புறப்பட்டுப் போகும்போதும் ‘எங்கே போகிறாய்’ என்று யாரேனும் கேட்டல், புறப்பட்டுப் போகும்போது பெயர் சொல்லியோ கை தட்டியோ யாரேனும் அழைத்தல் முதலியன தீய நிமித்தங்களாகக் (சகுனங்களாகக்) கருதப்படுகின்றன.
புறப்படும்போது தீய நிமித்தம் ஏற்படின் புறப்பாட்டைச் சிறிது நேரம் ஒத்திப் போடுவர்; புறப்பட்டுப் போகுங்கால் சிறிது தொலைவில் தீய நிமித்தம் ஏற்படின் திரும்பி வந்து விடுவர். தீய நிமித்தத்தை வெல்வதற்காக வீட்டில் சிறிது நேரம் அமர்ந்தோ அல்லது ஒரு விழுங்காவது தண்ணீர் அருந்தியோ பிறகு மறுபடியும் புறப்படுவர். சிலர் பயணத்தை நிறுத்தி விடுவதும் உண்டு.
நம்பிக்கைகள்
இந்தப் பகுதியில் பின்வரும் நம்பிக்கைகள் உள்ளன. நம்பிக்கைக்கு ஏற்றபடி மக்களின் செயல் முறைகள் உள்ளன.
நாள் காலையில் நல்ல கையால் ‘போனி’ ஆனால் அன்று முழுதும் வாணிகம் நன்கு நடக்கும். நரி முகத்தில் விழித்து விட்டுச் சென்றால் வாணிகம் நன்கு ஊதியம் அளிக்குமாம். அங்காடிக் கூடையைத் தூக்கிவிட்டுக் கைதட்டினால் நன்கு விற்பனையாகுமாம். வாணிகம் செய்யுமிடத்திலும் தொழில் செய்யுமிடத்திலும் படுத்தால் வாணிகமும் தொழிலும் படுத்துவிடுமாம்.
கோடைக் காலத்தில் ‘கொடும் பாவி’ கட்டி இழுத்து மாரடித்து அழுது பின்னர் அதைக் கொளுத்திவிட்டால் மழை பெய்யும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஊர் எல்லைகளின் மணலில் கொடும்பாவி உருவங்கள் செய்து வைப்பதும் உண்டு.
ஊர் எல்லையில் எல்லைக் கல் நட்டு வழிபடின், ஊரைக் பிடிக்கவரும் துன்பங்களை எல்லைக் கல் தடுத்து நிறுத்திவிடும். வேப்பிலை பிணிகளைப் போக்கும் - பேய் பிசாசுகளை ஓட்டும்; இது தெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.
நல்ல கண் பட்டால் நல்ல வளர்ச்சி இருக்கும்; கெட்ட கண் பட்டால் எல்லாம் கெட்டுப் போகும். கெட்ட கண் படுதலுக்குத் ‘திருஷ்டி விழுதல்’, ‘கண்ணேறு விழுதல்’ என்றெல்லாம் பெயர் சொல்லப்படுகிறது. ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக் கூடாது’ என்பது பழமொழி. கண்ணேறு கழிப்பதற்காகத் தாய்மார்கள் ஏதாவது சுற்றிப் போடுவர்.
வெள்ளிக் கிழமையில் தம் வீட்டுப் பொருளைப் பிறர்க்கு அளித்தால் திருமகள் போய் விடுவாள். சிலர் செவ்வாய்க் கிழமையிலும் சிலர் ஞாயிற்றுக்கிழமையிலுங் கூட அளிக்க மாட்டார்கள். இந்தக் கிழமைகளில் வீட்டுத் தோட்டத்திலுள்ள குப்பை எருவை அப்புறப்படுத்தார். எந்தக் கிழமையிலுமே பொழுது சாய்ந்து விளக்கு ஏற்றி விட்டாலும் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். இரப்பவர்க்குப் (பிச்சைக்காரருக்குப்) பகல் பன்னிரண்டு மணி ஆய்விட்டால் அரிசி போடமாட்டார்கள். அதன் பின்னர், ஆக்கிய உணவே போடப்படும். வெற்று ஏனத்தில் பிச்சை போடப் பின் வாங்குவர். சிறப்பு நாள்களில் கடவுளுக்குப் படைத்தபின் உணவுப் பொருள் தவிர, வேறு எப்பொருளும் இரவல் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமையில் வீட்டைவிட்டு வெளியூர் செல்லார். எவருமே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டால் வெளியூர் செல்லமாட்டார்கள்; அப்படியே சென்றாலும் இரவு படுக்கைக்கு வீட்டிற்கு வந்துவிடுவர். வீட்டிலிருந்து யாரேனும் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றபின் அன்று யாருமே வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கமாட்டார்கள். மேற் சொன்னவற்றிலிருந்து மீறி நடந்தால் தீமை விளையும் திருமகள் போய்விடுவாள் என்பது நம்பிக்கை.
பிறந்த கிழமையிலும் செவ்வாய்க் கிழமையிலும் சனிக் கிழமையிலும் புதிய செயலோ - நல்ல செயலோ தொடங்கவோ செய்யவோமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமையில் ஊருக்குப் புறப்பட்டால் நாய் படாதபாடு படவேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடம் உள்ளது. வெள்ளிக் கிழமையை வளர்ந்த நாள் என்பர்; அதனால் அந்நாளில் புதிதாக மருந்து உண்ணார்; இழுபறியான செயல்களையும் தொடங்கார். புதன் கிழமையில் புற்றில் உள்ள பாம்பும் வெளியே புறப்படாது என்பது சிலர் கொள்கை.
வீட்டில் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவராம். தெருவில் நாய் அழுதால் சாவுச்செய்தி வருமாம். வடக்கே தலை
கெ.29 வைத்துப் படுத்தால் வயதுக் குறைவாம். தேங்காய் உடைத்தால் இரண்டு மூளிகள் சரியாய் உடைய வேண்டும். கோயிலுக்குச் சென்றால் காசு, உணவுப்பொருள் ஆகியவற்றை மீதி பண்ணி எடுத்து வரக்கூடாது சுடலையிலிருந்து எந்தப் பொருளையுமே எடுத்து வரக்கூடாது. ஊருக்குப் போன எட்டாம் நாள் - அஃதாவது அதே கிழமையில் திரும்பக் கூடாது.
சில பழக்க வழக்கங்கள்
நாடோறும் பெண்கள் வைகறையில் எழுந்து தெருவாயிற் படியில் சாணநீர் தெளித்து, அலகிட்டுத் தூய்மை செய்து கோலம் போடுவர். அதன் பின்னரே வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்வர். நடு இரவில் இரண்டு மணிக்கு யாரேனும் ஊருக்குப் புறப்பட்டாலும் அதற்கு முன் தெருவில் சாணம் தெளித்தே அனுப்புவர். இரவலர் (பிச்சைக்காரர்கள்) வந்தால் கூடிய வரைக்கும் ‘இல்லை’யென்று சொல்லாது ஏதேனும் இட்டு அனுப்புவர். இடுவதற்கு வாய்ப்பு வசதி இல்லையாயினும். ‘இல்லை’ என்னும் சொல்லைச் சொல்லாமல், ‘போய் வா’, ‘இன்னோர் இடம் போய்ப் பாரு’, ‘நேரம் ஆய்விட்டது’, ‘நேரம் ஆகும், என்றெல்லாம் ஏதேனும் சொல்லியனுப்புவர். விருந்தினர் வந்தால், தாம் எவ்வளவு ஏழையராயினும் வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, கை கால் தூய்மை செய்யத் தண்ணிர் கொடுப்பர்; வந்தவர் கை கால் தூய்மை செய்த பின்னரே, இடப்பட்டுள்ள இருக்கையிலோ அல்லது விரிப்பிலோ அமர்வர். உடனே ஒரு தட்டில் வெற்றிலை பாக்க கொண்டுவந்து வைப்பர். பின்னர் அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவந்து தருவர்.
சிலர் நாடோறும் கதிரவனை வணங்கியே உண்பர்; சிலர் கருடனைக் கண்ட பிறகே உண்பர்; சிலர் உண்பதற்கு முன் காகத்திற்கு உணவு வைத்துப் பின்னரே உண்பர். எல்லோருமே பகலில் கடவுளுக்குப் படைக்கும் நாளில், படைத்தபின் காகத்திற்கு உணவு வைத்துவிட்டுத்தான் உண்பர். சனிக்கிழமையில் பெருமாளுக்குப் படைப்பவர்கள் கருடனைக் கண்ட பிறகே உண்பர்.
மாலை வேளையில் - பொழுது சாயும் நேரத்தில் பெண்கள் தெரு வாயிற்படியிலும் குறட்டிலும் தண்ணீர் தெளித்துத் தூய்மை செய்து கோலம் போட்ட பின் விளக்கு ஏற்றி வைப்பர். நாடோறும் தெருவாயிற்படியில் முன்னிரவு வரையும், ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மின்சார விளக்கு இருந்தாலும், பழைய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒன்று ஏற்றித் தெருவாயிற்படியில் கொண்டுபோய் வைப்பர். விளக்கு வைப்பதற்கென்றே தெருத் திண்ணைக்கு மேலே மாடமோ அல்லது ஒரு கட்டையோ இருக்கும். தெருவில் விளக்கு வைத்த பின்னரே வீடு முழுதும் விளக்கேற்றுவர். தெருவில் விளக்கு அணைந்து விட்டால் அணைந்த விளக்கை வறிதே எடுத்துக்கொண்டு உள்ளே வரமாட்டார்கள். தெருவிலே ஏற்றி எடுத்துக் கொண்டுதான் உள்ளே வருவர். அணைந்த விளக்கை எடுத்து வந்தால் திருமகள் தெருவோடு போய்விடுவாளாம். வெளியில் எங்கேயாவது விளக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்றால், வீட்டிற்குள்ளே ஏற்றாமல், தெருவிலே வந்துதான் விளக்கை ஏற்றிக் கொண்டு எடுத்துச் செல்வர். வீட்டிற்குள்ளேயும் விளக்கைத் தானாக அணைய விடமாட்டார்கள்; அணைந்தாலும் இன்னொரு முறை ஏற்றியே அணைப்பர்.
மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் யாரும் சோம்பல் முரிக்கக்கூடாது; படுக்கக்கூடாது; காலை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கக்கூடாது; கெட்ட பேச்சுகள் பேசக்கூடாது. விளக்கு ஏற்றும்போது அங்கிருப்பவர்கள் கையெடுத்துக் கும்பிடுவர்; ஏற்றியவர்களும் கும்பிடுவர்.
“மாடும் கன்றும் வரும்வேளை
மஞ்சள்தண்ணீர் சுற்றும்
வேளை காலை மடக்கடி காமாட்சி
கையை முடக்கடி மீனாட்சி”
என்பது வட்டார வழக்குப் பாடல். மாலை நேரம் என்பது, மாடும் கன்றும் மந்தையிலிருந்து வரும் நேரமாகும் - பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீர் சுற்றும் நேரமாகும். விளக்கு வைக்கும் நேரமும் அதுவேயாகும் - அந்த நேரத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது; மடக்க வேண்டும் கையை மடக்கிக் கும்பிட வேண்டும் - என்பது இந்தப் பாடலின் கருத்து.
குழந்தை தும்மினால் ‘நூறு’ என்று சொல்லி அஃதாவது, நூறு ஆண்டு வாழவேண்டும் என்றபொருளில் சொல்லி மக்கள் வாழ்த்துவர்; குழந்தை இரண்டாவது தும்மல் தும்மினால் ‘இருநூறு’ என்று சொல்லி வாழ்த்துவர். பல்லி ஒலியெழுப்பினால், கையை நொடித்துச் சிட்டிகை கொட்டுவர் அல்லது, தரையைத் தட்டுவர். கொட்டாவி விடினும் கையை நொடிப்பர். இடி இடித்தால் ‘அர்ச்சுனா அர்ச்சுனா - கிருஷ்ணா அர்ச்சுனா’ என்பர்.
திருமணம் போன்ற ஒரு நன்னிகழ்ச்சியோ அல்லது வேறு ஒரு புதிய செயலோ தொடங்க வேண்டுமெனில் குறி கேட்டே தொடங்குவர். கூடுமா கூடாதா என அறிவதற்காக இறையுருவத்தின் முன்னிலையில் திருநீறும் குங்குமமும் தனித்தனியே மடித்துப் போட்டுச் சிறு குழந்தையை விட்டு எடுக்கச் செல்வர்; சிலர் கைவிரல்கள் இரண்டினைக் காட்டி, ஏதேனும் ஒன்றைத் தொடுமாறு குழந்தையைத் தூண்டுவர். சிலர் கோயிலுக்குச் சென்று பூசாரியிடம் - சாமியாடியிடம் - குறி கேட்பர். அம்மன்மேல் பூக்களை நிரப்பி, மேலே ஒர் எலுமிச்சம் பழத்தை வைத்துப் பூசாரி உடுக்கையடித்துப் பாட்டுப் பாடி வன்னிப்பார்; குறி கேட்கும் குடும்பத்து மகளிர் ஒருவர் முன்றானைத் துணியைக் கீழே ஏந்திக் கொண்டிருப்பார்; பழம் அத்துணியில் விழுந்தால் திருமணம் செய்யலாம்; கீழே விழின் செய்யக்கூடாது. இப்படியொரு நம்பிக்கை சில இனத்தாரிடம் - சில குடும்பத்தாரிடம் உள்ளது. எலுமிச்சம் பழம் துணியில் விழாததால் ஒரு சிலர்க்குத் திருமணம் பல ஆண்டுகள் தள்ளிப் போனதும் உள்டு.
நகர்ப் புறங்களில் அண்டை வீட்டினரும் எதிர்வீட்டினரும் அயலார்போர் வாழினும் (இங்கேயும் எல்லாரும் இப்படியில்லை) - சிற்றூர்களில் மதம் - இனம் - மொழி போன்ற வேறுபாடுகள் இன்றி ஒரு குடும்பத்தினர் போல் மக்கள் ஒன்றி வாழ்கின்றனர். ஒருவர் வீட்டிற்குள் இன்னொருவர் கேட்காமலேயே நுழைந்து தெருவிலிருந்து தோட்டம் வரையும் எங்கு வேண்டுமானாலும் தங்கு தடையின்றிப் போய்வருவார்; உண்ணும்போதும் உண்ணும் இடத்திற்குள் கூசாது நுழைவார். இது நாகரிகக் குறைவு அன்று; உயர்வு தாழ்வு இன்றி ஒற்றுமையுடன் பழகும் உயர்ந்த நாகரிகப் பண்பாகும் இது.
ஊருக்குள் அரசாங்கத்தின் தொடர்பு இல்லாமலேயே மக்களுக்குள் ஊராட்சி ஒன்று நடைபெறும். இதன் தலைவர் நாட்டாண்மைக்காரர் அல்லது பெரிய தனக்காரர் எனப்படுவார். நாட்டாண்மைக்காரர் அப்போதைக் கப்போது மக்களால் பேர்ட்டியின்றி ஒருமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்குத் துணையாக உறுப்பினர் சிலர் இருப்பர். எப்பேர்ப்பட்ட வம்பு வழக்குகளும் நீதிமன்றம் செல்லாமலேயே ஊராரால் தீர்த்து வைக்கப்படுவதுண்டு. சாவு - வாழ்வு தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் நாட்டாண்மைக்காரர் வருவார். அவர் வந்த பிறகே அவர் கையால் நிகழ்ச்சி தொடங்கப்பெறும். ஊராரின் ஒப்புதலுடனேயே எந்தச் செயலும் நடைபெறும். ஊராரை மீறி நடப்பவர் ஊராரால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படுவார், எத்தகைய ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்காது. ஆனால், எல்லாம் அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட அளவிலேயே நடைபெறும். ஊராட்சிக்காகத் தலைக்கட்டுக்கு இவ்வளவு என்று வரி உண்டு. ஊர்க் கூட்டத்தில் ஒன்று பேசி முடிவு செய்ய வேண்டுமெனில், வேலையை நிறுத்திவிட்டு ஊரார் அனைவரும் வந்தேயாக வேண்டும்.
இந்தப் பகுதியிலும் பெண்கள் இல்லத்தரசியராகவே இருக்கின்றனர் இல்லத்திற்கு வெளியே ஆண்களைப் போல் நடந்து கொள்வதில்லை; அயல்நாடுகளில் உள்ளது போல் ஆண்களுடன் கூசாது தொடர்பு கொள்வதில்லை. தம் கணவரிடங்கூட வீட்டிற்கு வெளியே நாணாது கூசாது உரிமையுடன் பழகுவதில்லை. பிறர் எதிரே தம் கணவருடன் பேசவும் கூசும் பெண்டிரும் உளர். வீட்டிலே உரிமை கொடுக்காவிடினும் அவ்வுரிமையைத் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் பெண்டிரும், வீட்டிற்கு வெளியே உரிமை கொடுத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த நிலைமையிலிருந்து இப்போது ஒரளவு மாறுதல் தெரியத் தொடங்கி யுள்ளமை வரவேற்கத் தக்கது.
கொச்சைப் பேச்சுகள்
இந்தப் பகுதியில் வழங்கப்படும் சில கொச்சைப் பேச்சுருவங்கள் வருமாறு:
தூய உருவம் கொச்சை உருவம்
தாராளமாக - தாளாரமாக
திருப்பி - திலுப்பி
நான்கு - நாலி
ஐந்து - அஞ்சி
முப்பது - துப்பது
எண்பது - எம்பளது
ஆமாம் போலிருக்கிறது - ஆமாம் பெலக்கு
இருக்கிறது - இருக்குது
என்று சொல்கிறார் - இன்றார்
என்று சொன்னார் - இன்னார்
கொஞ்சம் - கொஞ்சோண்டு
போய்விட்டு வருகிறேன் - போய்ட்டுவரேன், பூட்டுவரேன்
சொன்னேன் - சொஞ்ஞேன்
என்ன அது - எஞ்ஞா அது
எல்லாம் - அல்லாம்
சாப்பிட்டு - சாட்டு
எழுந்திருந்து - ஏன்ழ்சி
வட்டார வழக்குகள்
ஒருவரது பேச்ச வழக்கைக் கொண்டு அவர் இன்ன மாவட்டத்தினர் என ஏறத்தாழக் கூறிவிடலாம். இவ்வாறு கூறுவதற்குப் பரந்த அளவில் பட்டறிவு (அனுபவம்) வேண்டும். இந்த முறையில், தென்னார்க்காடு மாவட்டத்தினரை அடையாளம் காட்டிக் கொடுக்கும் சில பேச்சு வழக்காறுகள் உள்ளன. பிற மாவட்டத்தினர் சிலர் தென்னார்க்காடு மாவட்டத்தினரை ‘வந்துகினு - போய்க்கினு’ எனக் கேலி செய்வது உண்டு. ‘வந்துகொண்டு’, ‘போய்க் கொண்டு’ என்னும் சொற்களைத் தஞ்சாவூர் மாவட்டத்தினர் ‘வந்துகிட்டு’, ‘போய்க்கிட்டு’ எனச் சொல்லுவர்; தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘வந்துகினு’ ‘போய்க்கினு’ என்பர். ‘‘ரும்போது - போம்போது’ என்பதை ‘வர சொல்ல போ சொல்ல’ என்று வடார்க்காடு மாவட்டத்தினர் கூறுவர். இதையே தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘வரக்குளே போக்குளே’ என்றும், வரப்போ - போரப்போ’ என்றும் கூறுகின்றனர். அதன் பிறகு என்னும் பொருளில் சென்னைப் பக்கத்தில் ‘அப்பாலே’ என்பர்; திருநெல்வேலிப் பக்கத்தில் பெறவே என்பர்; தென்னார்க்காடு மாவட்டத்தில் ‘அப்புறம்’ என்பர்; சிலர் அப்புறம் என்பதை ‘அம்பறம்’ எனப் பிழைபட ஒலிப்பர். இப்படியாகப் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் - சிறப்பாகத் திருமுனைப்பாடி நாட்டில் பேச்சு வழக்கில் சில மாறுதல்கள் உள்ளன. அவற்றுள் மேலும் சில வருமாறு:
தந்தையை அப்பா என்று அழைப்பதல்லாமல் ‘அண்ணன்’ என்றும் சிலர் அழைப்பர்; சிற்றப்பாவைச் சின்னண்ணன் என்பர்; பெரியப்பாவைப் பெரியண்ணன் என்பர்; தெலுங்கரே யன்றித் தமிழருள்ளும் சிலர் தந்தையை நாயனா என அழைக்கின்றனர். சின்னம்மாவைச் சிலர் சின்னம்மா என்றும், சிலர் சித்தி என்றும், சிலர் சின்னாயி என்றும் அழைப்பர். பெரியம்மாவைச் சிலர் பெரியாயி என்பர். அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இடைப்பட்டவரை நடப்பா என்றும், அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் இடைப்பட்ட அம்மாவை ‘நடம்மா’ என்றும் அழைப்பர். அண்ணனை ‘அண்ணாத்தை’ என்பர் சிலர். தமக்கையைப் பெரும்பாலார் ‘அக்கா’ என்பர்; ஒரு சிலர் ‘ஆச்சி’ என்றும், மற்றும் ஒருசிலர் ‘அப்தா’ என்றும் அழைப்பர். தம்பி தம்பியேதான். தங்கையைப் படர்க்கையில் ‘தங்கச்சி’ என்றும், முன்னிலையில் ‘பாப்பா’ என்றும் குறிப்பிடுவர். பாட்டியை ஆயா என அழைப்பர்; ஒரு சிலர் ஆயி என்பர். பாட்டனாரைத் தாத்தா என்பர். எவரையும் அத்தான் என அழைக்கும் பழக்கம் இங்கே கிடையாது தாயுடன் பிறந்தவரும் மாமன்தான்; தமக்கையின் கணவனும் மாமன்தான்; (பெண்ணுக்குத்) தன் கணவனும் (மாமன்தான்; அஃதாவது, அம்மான், அத்தான் முதலிய அனைவருமே மாமாதான்.
கணவன் - மனைவியை, ஆம்படையான், (அகமுடையான் பெண்டாட்டி) என்பர். ஆடவரை ஆம்பிளை (ஆண் பிள்ளை) என்பர்; பெண்டிரைப் பொம்பிளை (பெண் பிள்ளை), பொம்மனாட்டி, பொண்டுவங்க என்பர். இளம் பெண்ணைப் பாப்பா என்பர்; இளம் பிள்ளையைப் பிள்ளையாண்டான் என்பர். சிறுமியரை ‘வெடை’ என்று கேலியாகச் சொல்வதும் உண்டு. கணவன் மனைவியை ‘எங்க வீட்டிலே’ என்றும், மனைவி கணவனை வீட்டுக்காரர் என்றும், ‘எங்க ஆம்பிளை’ என்றும் குறிப்பிடுவர். மனைவி கணவனை ‘ஏன்னா’ என்றும், கணவன் மனைவியை ஏன் என்றும், ‘டேய்’ என்றும் அழைப்பதும், இருவருமே ஒருவரையொருவர் ‘அவுங்க இவுங்க’ எனக் குறிப்பதும் உண்டு. பொதுவாகப் பெரிய இடத்து ஆடவரை ஐயா, ஐயாமார் என்றும், பெண்டிரை அம்மா, அம்மாமார் என்றும் மற்றவர் அழைப்பர். சிறு பையனை இலே அல்லது எலே என்று அழைக்கும் பழக்கம் திருமுனைப்பாடி நாட்டில் இல்லை; டேய் அல்லது ‘டேய் தம்பி’ என்றே அழைப்பர். சிறுமியரைப் புள்ளே (பிள்ளை) ‘தோபுள்ளே’ என்று சில ஊர்களில் அழைக்கின்றனர். கணவன் மனைவியருள்ளும் சரி - மற்ற ஆண் பெண்களுள்ளும் சரி. ஒருவரை யொருவர் ‘தே’ என அழைத்துக் கொள்ளும் பழக்கம் ஒரு சிலரிடையே உண்டு.
சிறு குழந்தைகளைக் குழந்தை குட்டிகள் என்னும் பொருளில் ‘புள்ளை சாதிவோ’ (பிள்ளை சாதிகள்) என்பர் சிலர். ஆண் பிள்ளையை ‘ஆணாய்ப் பிறந்தது’ எனக் குறிப்பிடும் வழக்கம் அவ்வளவு மிகுதியாக இல்லாவிடினும், பெண் பிள்ளையைப் பொண்ணா பொறந்தது (பெண்ணாய்ப் பிறந்தது) என்று குறிப்பிடும் வழக்கம் மிகுதியாயிருக்கிறது. இங்கே, பையன்கள் என்னும் சொல் கொச்சையாகப் ‘பசங்கள்’ எனச் சொல்லப்படுகிறது. பசங்கள் என்றால் ஆண் சிறுவர்கள் என்றே மற்ற மாவட்டத்தார் எண்ணக்கூடும்; இங்கே ‘பொம்பளே பசங்கள்’ என்று பெண் சிறுமிகளையும் ‘பசங்கள்’ எனக் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இங்கே ‘பசங்கள்’ என்னும் சொல் பொதுவாகச் சிறுவர் சிறுமியரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளைப் ‘பிள்ளை குட்டிகள்’ ‘பசங்க குட்டிகள்’ என்றும் இங்கே அழைப்பர். மிகுந்த குழந்தைகள் உடையவர் ‘பிள்ளை குட்டிக்காரர்’ எனப்படுகிறார்.
மரபு வழக்குகள்
இந்தப் பகுதியில், குறிப்பிட்ட ஒரு கருத்தை அதற்குரிய நேர்ச் சொற்களால் கூறாமல், சுவையான மாற்றுச் சொற்களால் சொல்லும் மரபு வழக்குகள் சில வருமாறு:- முதலில் நேர்ச் சொற்களும் பின்னர் மாற்றுச் சொற்களும் தரப்படும்.
இளம் வயதில் பிறந்த பிள்ளை; காலம் காத்தாலே பிறந்த பிள்ளை.
ஏமாற்றுதல், வஞ்சித்தல்: காதுகுத்தல், வாயிலே போட்டுக் கொள்ளுதல், தில்லாமுல்லு திருவாதிரை தெத்து மாத்து.
ஏமாற்றுக்காரன்: கேப்மாறி, முடிச்சிமாறி, மூணுதாளு. இறத்தல்: கண்ணை மூடிக் கொள்ளுதல், வாயைப் பிளத்தல், கட்டையைக் கீழே போட்டு விடுதல், பயணப்பட்டு விடுதல், போக வேண்டிய இடத்திற்குப் போய் விடுதல், மெய்யூருக்குப் போதல், அந்த லோகம் போதல், வைகுண்ட பதவியடைதல், கைலாய பதவியடைதல், சட்டையைக் கழற்றிக் கீழே போட்டு விடுதல், கட்டையை நீட்டி விடுதல், காலைக் கிளப்பிக் கொள்ளுதல், நிறைவேறி விடுதல்.
பெரிய திருடன்: முழுப் பாசுருட்டி
பெரிய புளுகன் : அல்டாப்பு, வண்டிப் புளுகன், மூட்டைப் புளுகன், அரிச்சந்திரன் வீட்டுக்கு அண்டை வீட்டுக்காரன்.
சிறை செல்லல்: பள்ளிக்கூடம் படித்தல், மாமனார் வீட்டிற்குச் செல்லல், கம்பி எண்ணுதல்.
கொஞ்சம் நகரு: ஒரு நெல்லுகனம் புரளு. கொஞ்சம்: ரவபோதும், ராவோண்டு (ரவையளவு). வாய்க்குப் புகையிலை கொடு: நாலாவது கொடு, (வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, புகையிலை என்ற வரிசையில் புகையிலை நான்காவது அல்லவா?)
இறங்குதல்: இழிதல். வேகமாய் நட கொஞ்சம் காலைத் துரக்கிப் போடு. எறிதல்: கடாசுதல், கடாவுதல். -
தொந்தி பெருத்தவர்: முன்பளுவு, மானம் பார்த்தான்.
குனிந்து வளைந்த கிழம்: முட்டுகிற மாடு.
தெளிவின்றிக் குழப்புபவர்: கொதாப்படி.
உடல் பருத்தவர். தடிப் போத்து. தடியாப் பிள்ளை, பொத்த சாக்கு, ரோட்டு உருளை, பிள்ளையார்.
ஆங்கிலத்தில் பேசுதல்: பாஷையிலே பேசுதல்.
தெலுங்கில் பேருரீதல்: தெலுங்கிலே மாட்டுதல்.
கோயில் பூசை செய்தல்: கல்லைக் கழுவுதல்.
விளக்கு அணைத்தல்: திருவணைத்தல், பெரிசாக்குதல்.
திருமணம்: விளக்கேற்றி வைத்தல், கன்னி கழிதல், துணைதேடுதல், கால்கட்டு போடுதல், கழுத்திலே முடிச்சு விழுதல், கட்டிக் கொடுத்தல், கழுத்தை நீட்டுதல்.
சாக்கடை: சாலாவம், சாலவம், சாலம்.
சோம்புதல், பின்வாங்குதல்: பால் மாறுதல்.
கொட்டாவி: கோட்டுவாய்.
கணவனும் மனைவியும்: ஒரு தலைக்கட்டு.
பிரசவ காலம்: பேறுகாலம், போதுகாலம்.
பேடி பெட்டை மாறி, பொண்டுவ சட்டி
திருவிழா: திருநாள்.
பண்டிகை பெருநாள்.
தீப்பெட்டி வத்திப்பெட்டி,
போதாமை: எட்டாமூட்டி.
சிக்கனம்: செட்டும் சிறுக்கும்.
வயதான கிழங்கள்: தள்ளாதவரு, தள்ளாதது, பெரியவரு, பெரியம்மா, தள்ளாத பெரியவரு, தள்ளாத பெரியம்மா, தள்ளாத கிழம், கிழங்கட்டு.
உண்ணுதலைப் பற்றி எளிமையாகவும் அடக்கமாகவும் தெரிவித்தல்: வயிற்றைக் கழுவுதல், ஏதோ ரெண்டு வாயிலே போட்டுக் கொள்ளுதல், ஏதோ ரெண்டு வயிற்றை நிரப்புதல், ஏதோ கஞ்சி குடித்தல், ஏதோ தண்ணி குடித்தல், ஏதோ கஞ்சி தண்ணி குடித்தல், ஏதோ கொதிக்க வைத்துக் குடித்தல்.
எளிய முறையில் உணவு ஆக்குதல்: கஞ்சி எரிய விடுதல், ஏதோ கொதிக்க வைத்தல்.
ஓரளவு நல்ல உணவு : நல்ல கஞ்சி, நல்ல தண்ணி,
மிகவும் நிரம்ப உண்ணுதல்: கொத்துப் பிடித்தல், மூக்கைப் பிடிக்கச் சாப்பிடுதல், மூக்கைக் கிள்ளி வைத்து விட்டுச் சாப்பிடுதல், முழுங்குதல் (விழுங்குதல், குலையை அறுத்தல் - குடலை அறுத்தல் (குடல் அறுபடும்படி உண்ணுதல்), வெள்ளைப் பூண்டுத் திருப்பாட்டம் விழுங்கினான் என்றல்.
மிக்க உணவு : முறஞ்சோறு படி குழம்பு; மலை சோறு சமுத்திரம் குழம்பு.
உயர்ந்த உணவு இடுதல்: பொன்னைப் பொரித்து வெள்ளியை வறுத்துத் தங்கத்தைத் தாளித்துப் போடுதல்.
பெருந்தீனிக்காரன்: வயிறுதாரி, வவுத்தான் (வயிற்றான்), வண்ணான்சாலு.
நிலக்கடலை, வேர்க்கடலை: கடலைக்காய், மணிலாக் கொட்டை, மல்லா கொட்டை (மல்லாட்டை).
பல் உடையும்: பல்லு வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும்.
பல்லை உடைத்து விடுவேன்: பல்லை எண்ணச் செய்துவிடுவேன், முப்பத்திரண்டு பல்லையும் தட்டிக் கையிலே கொடுத்து விடுவேன்.
உதை வேண்டுமா : உடம்பைப் பிடித்துவிட வேண்டுமா? உடம்பு ஒளதடம் கேட்கிறதா?
தூங்குதல் : தட்டிப் போட்டு முடங்குதல், சும்மா கொஞ்ச நேரம் கட்டையை நீட்டிப் போடுதல், கட்டையைக் கீழே போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுத்தல்,
குளித்தல் : உடம்பைக் கழுவுதல், கட்டையைக் கழுவுதல்.
பொறுமையாக : ஆர அமர, அமர, அமரிக்கையா, மெதுவா, மெள்ளமா.
பேதிக்கை சாப்பிடுதல்: மருந்து குடித்தல். (அந்தக் காலத்தில் பேதிக்கை மருந்தைத் தவிர வேறு மருந்து பெரும்பாலான மக்கட்குத் தெரியாது. அதனால், மருந்து குடித்தல் என்றால் பேதி மருந்து சாப்பிடுதலையே குறித்தது.)
காணாது போதல்: தாரை வார்ந்து போதல்.
திருட்டுத்தனமாக ஏமாற்றி எடுத்துக் கொண்டு போதல்: அடித்துக் கொண்டு போதல், தட்டிக் கொண்டு போதல், சுருட்டிக் கொண்டு போதல், கண்ணிலே மிளகாய்ப் பொடி தூவுதல்.
இழத்தல், பறிகொடுத்தல்: தலை முழுகல், தொலைத்துத் தலை முழுகல், எள்ளும் தண்ணியும் இறைத்தல், அவன் இழவுக்கு எள்ளும் தண்ணியும் இறைத்து எட்டாம் துக்கம் படைத்துவிட்டேன் என்று கூறுதல்.
சகுனத் தடையாயிற்று: கட்டுது, தாங்குது.
எதிர்பாராவிதமாய்: திடும்பிரவேசமாய்.
தற்செயலாய்: அகஸ்மாத்தாய்.
இவ்வாறு இன்னும் பல்வேறு மரபு வழக்காறுகள் உள்ளன. சிற்றுார்களில் சிறியவர்கள் பெரியவர்களை முறை சொல்லி அழைப்பதன்றி, மூத்தவர் - இளையவர் - நடுவிலவர் என்றும் அழைப்பர். பெண்களைப் பெரியவள் சின்னவள் என்று அழைப்பதன்றி, அவர்களின் பிறந்த ஊர்ப் பெயராலும் மக்கள் அழைக்கின்றனர். பொதுவாக ஒருவரையொருவர் வீட்டுப் பெயரால் குறிப்பிடும் வழக்கம் மிகுதியாயிருக்கிறது; சிற்றுார்களில் வீட்டிற்கு ஒரு பெயர் இருக்கும்; மற்றும் ஒருவரையொருவர் புனைபெயரிட்டு அழைத்துக் கொள்வதும் உண்டு; இந்தப் புனைபெயர் தாழ்வாகவும் இருக்கலாம்; அதற்காக எவரும் வருத்தப்படுவதில்லை. கணவரின் தமக்கையைச் ‘சின்னம்மா’ என்று அழைக்கும் வழக்கம் இப்பகுதியில் உண்டு.
சில மாவட்டத்தினர் ‘ழ’ என்னும் எழுத்தைச் சரியாக ஒலிப்பதில்லை. தென்மாவட்டத்தினர் சிலர் வாழைப் பழம் என்பதை ‘வால்ப் பலம்’ என்பர். வடக்கே சிலர் குழந்தையைக் ‘கொயந்தை’ என்றும், கழுத்து என்பதைக் கெயுத்து’ என்றும் ஒலிப்பர். ஆனால், திருமுனைப்பாடி நாட்டினர் வாழைப் பழம், குழந்தை, கழுத்து என ழகரத்தைத் தூய்மையாக ஒலிக்கின்றனர். இந்தப் பகுதியில் நான் என்பது ‘நானு’ எனப்படுகிறது. சில ஊர்களில் நீ என்பது ‘நீனு’ எனப்படுகிறது.
இவ்வாறு இன்னும் பல்வேறு வட்டார மரபு வழக்குகள் காணப்படுகின்றன. அனைத்தையும் விரிப்பிற் பெருகும்.
நாட்டுப் பாடல்கள்
இனி, இந்தப் பகுதியில் பாடப்படும் பல்வேறு வகை நாட்டுப் பாடல்கள் வருமாறு:
1. தாலாட்டுப் பாடல்கள்
“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆரடிச்சு நீ அழுதாய் -
அழுதகண்ணு நீர்தளும்ப
அடித்தாரைச் சொல்லியழு -
ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டாரைச் சொல்லியழு -
தொழுவிலங்கு பூட்டிடுவோம்
அத்தை அடித்தாளா
அலரிப்பூச் செண்டாலே
மாமன் அடித்தானா
மல்லிகைப்பூச் செண்டாலே
ஆரும் அடிக்கவில்லை
அங்கொருவர் தீண்டவில்லை
தானே அழுகிறாளாம் -
தாயாரைக் காணாமல்
புலம்பி அழுகிறாளாம் -
பெற்றவளைக் காணாமல்
ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”
“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
பாலும் அடுப்பினிலே பாலகனும் தொட்டிலிலே
பாலகனைப் பெற்றெடுத்த பாண்டியரும் கட்டிலிலே
பாலைத்தான் பார்ப்பேனா பாலகனைத் தூக்குவேனா
சோறும் அடுப்பினிலே சுந்தரியும் தொட்டிலிலே
சோற்றைத்தான் பார்ப்பேனா சுந்தரியைத் தூக்குவேனா
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
மாமாங்க மாடி மதுரைக் கடலாடி
மாமாங்க ராயருட மலர்ப்பாதம் பெற்றாளாம்
சீரங்க மாடி சீர்மைக் கடலாடி
சீரங்க ராயருட சீர்ப்பாதம் பெற்றாளாம்
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
"ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
வெள்ளிக்கு வெள்ளி விடியத் தலைமுழுகி
அள்ளி மிளகுதின்று அனந்த விரத மிருந்து
கேதாரி நோன்பாலே கிடைச்ச திரவியமே
ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
ஆறுஇரண்டு காவேரி அதன் நடுவே சீரங்கம்
சாமி கிருபையாலே தந்திட்ட திரவியமே
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
நித்திரைபோ நித்திரைபோ நேரமாச்சு நித்திரைபோ
சிற்றிலைபூந் தொட்டிலிலே சிகாமணியே நித்திரைபோ
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
"கண்ணே உறங்குறங்கு கண்மணியே நீஉறங்கு
கண்ணான கண்ணுக்குக் கண்ணாறு வந்ததென்ன
சுண்ணாம்பு மஞ்சளுமாய்ச் சுற்றி எறிந்திடுவோம்
வெற்றிலையும் பாக்கும் வீசி எறிந்திடுவோம்
ஆனையைக் கண்டுநீ அலறி அழவேண்டாம்
அதட்டியே ஓட்டிவிட்டோம் அஞ்சுகமே கண்வளராய்
பூனையைக் கண்டுநீ புலம்பி அழவேண்டாம்
ஈனமற ஒட்டிவிட்டோம் இளவரசி கண்வளராய்
வீதியிலே சாமி வெகுவேடிக்கை யாகவரும்
தாதிமார் காண்பிப்பார் தவம்பெறவே கண்வளராய்
கண்ணே உறங்குறங்கு கண்மணியே கண்ணுறங்கு."
நீண்ட நாள் பிள்ளை இல்லாமல் இருந்து வயதான காலத்தில் பிறந்த பிள்ளைக்குப் பாடும் தாலாட்டுப் பாடல் பகுதி:
"ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
கண்ணே உறங்குறங்கு கண்மணியே நீஉறங்கு
இலைவதங்கிக் கொடிகாஞ்சி இல்லையென்ற நாள்போக
மழைபேஞ்சி கொடிதுளுத்து மாஞ்சிமுளைச்ச கண்ணே
கறுத்ததலை நரைச்சி காலமெல்லாம் சென்றபோது
வறுத்தபனிப் பயறாம் மாஞ்சமுளைச்ச கண்ணே
இடிஞ்சமதி லெழுப்பி இருபுறமும் தூண்நிறுத்தி
குறைஞ்ச மதிலுக்குக் கொடியேத்தவந்த கண்ணே
கண்ணே உறங்குறங்கு கண்மணியே நீஉறங்கு
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
(காஞ்சி - காய்ந்து பேஞ்சி - பெய்து மாஞ்சி - மாய்ந்து; ஏத்த ஏற்ற)
அம்மன் தாலாட்டுப் பாட்டு
பச்சை இலுப்பை வெட்டிப் பால்வடியத் தொட்டிலிட்டு
தொட்டில் இட்ட அம்மானே பட்டினியாய்ப் போகாதே
நெல்லும் களத்தினிலே நீரும் கிணற்றினிலே
உரலும் உலக்கையும் ஊருணியான் சத்திரத்தே
அம்மியும் குழவியும் ஆவுடையார் கோயிலிலே
ஆக்கி யிடும்தாதி ஆலரசம் ஆகிவிட்டாள்
எனக்கும் தலைநோவு இருந்துபோ அம்மானே
நாழித் தனைகுற்றி நல்லருமைப் பால் காய்ச்சி
உண்ணுப்போ அம்மானே ஊர்வழியும் தூரமுண்டு
தங்கிப்போ அம்மானே காதவழி தூரமுண்டு
ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”
2. குழந்தைப் பாடல்கள்
இந்தப் பகுதியில் வழங்கும் பல்வேறு வகைக் குழந்தைப் பாடல்களின் மாதிரிக்காகச் சில பாடல்கள் வருமாறு:
குழந்தை தவழும் பாடல்
“தப்பளாங் குட்டி தவழ்ந்துவரத் தரைஎத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டி யானை குதித்துவரக் குடில்எத்தனை தவம் செய்ததோ!" 1
குழந்தை உணவுப் பாடல்
"மம்மு சுடம்மா மம்முசுடு மாணிக்கக் கையாலே மம்முசுடு
அள்ளித் தின்னம்மா அள்ளித்தின்னு அமிர்தக் கையாலே அள்ளித்தின்னு
பொட்டு குத்தம்மா பொட்டு குத்து பொன்னான கையாலே பொட்டுகுத்து" 2
குழந்தை நிலாப் பாட்டு
"நிலாநிலா ஓடிவா - நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா - மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவிட்டிலே வை - நல்ல துதிசெய்
வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு
அள்ளிஎடுத்து அப்பா வாயில்
கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு
குழந்தைக்குச் சிரிப்பு காட்டு." 3
குழந்தை சாய்ந்தாடல்
"சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயுங் காலத்திலே சாய்ந்தாடு
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாலைக் கிளியே சாய்ந்தா
குத்து விளக்கே சாய்ந்தா
கோயில் புறாவே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு
மணி விளக்கே சாய்ந்தாடு
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு.” 4
குழந்தை கைவீசல்
“கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி உண்ணலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
கைவி சம்மா கைவீசு.’’ 5
குழந்தை கைதட்டல்
“தட்டாங்கி தட்டாங்கி
தட்டாங்கி கொட்டம்மா தட்டாங்கி
தட்டாங்கி தட்டாங்கி
தட்டாங்கி கொட்டுமாம் பெண்ணு
தயிரும் பழையதும் தின்னு
ஆப்பத்தைக் கண்டால் அமுக்குமாம் பெண்ணு
அழாதேன்னு சொன்னால் இருக்குமாம் பெண்ணு"
"தட்டாங்கி தைலம்மே
தண்ணிக்கு வெந்நிக்குப் போகாதே
தட்டான் கண்டால் மறுப்பான்
தட்டிலே வச்சு நிறுப்பான்
கோயில் மேளத்தைக் கொட்டுவான்
கும்பிட்டுத் தாலி கட்டுவான்." 6
காதணி விழாப் பாடல்
"கண்ணான கண்ணுக்குக்
காதுகுத்தப் போறோமென்னு
முந்நூறு சேர்திறந்து
முடியளந்து நெல்லுகுத்தி
ஐந்நூறு தென்னைமரம்
ஆளைவிட்டுக் காய்பறித்து
எள்ளைப் பொரிச்சிக்கொட்டி
இளந்தேங்காய் சீவிக்கொட்டி
பச்சைப் பயறதனைப்
பாங்காக வறுத்துப்போட்டு
பாவைப் பதமாக்கிப்
பக்குவமாய் அரிசிகிண்டி
அள்ளி வழங்குங்கள்
அருமைப் பிள்ளைகாப்பரிசி
கொட்டி வழங்குங்கள்
குழந்தைப் பிள்ளைகாப்பரிசி." 7
3. சிறுவர் விளையாட்டுப் பாடல்கள்
ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பளதைப் பார்த்து மற்றச் சிறுவர்கள் பாடுவது
"ஐயையோ ஐயையோ எனக்குஎன்னா
ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
பொத்தல் செருப்பாலே போடுபோடு
ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
பொத்தல் செருப்பாலே போடுபோடு
ஐயையோ ஐயையோ அதோபாருங்கோ." 1
தாங்கள் விளையாடும் உழக்கைத் தூக்கிக்கொண்டு போய்விட்ட காக்கையைப் பார்த்து உழக்கைப் போடுமாறு கேட்டுச் சிறுமியர் பாடுவது: "காக்காச்சி உழக்கைத்தா
கம்பைக் கொட்டி உழக்கைத்தா
கம்மாசும்மா உழக்கைத்தா - எங்கள்
அம்மா அடிப்பாள் உழக்கைத்தா." 2
சிறுவருள் ஒரு குழுவினர் பெண் கேட்க, மற்றொரு குழுவினர் பெண் கொடுக்க மறுத்து விளையாடும் ஆட்டப் பாடல்:
(பெண் கேட்டல்)
"இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணுண்டோ - சிறு எலுமிச்சங் காயிலே பெண்ணுண்டோ
(பெண் மறுத்தல்)
இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணில்லே - சிறு எலுமிச்சங் காயிலும் பெண்ணில்லே
(பெண் கேட்டல்)
தாலி பீலி பெண்ணுண்டோ - சிறு தாமரைக் காயிலே பெண்ணுண்டோ
(பெண் மறுத்தல்)
தாலி பீலி பெண்ணில்லே - சிறு தாமரைக் காயிலும் பெண்ணில்லே." 3
வேடிக்கைப் பாடல்கள்
அதோ பாரு காக்கா
கடையிலே விக்கிது சீக்கா
பொண்ணு வரா சோக்கா
எழுந்து போடா மூக்கா."
"சின்னகுட்டி ஆம்படையான் சீமானாம்
சிங்கப் பூருகப்பலுக்குப் போனானாம்
அங்கே ஒருத்தியே கண்டானாம்
அடிபட்டு உதைபட்டு வந்தானாம்
ஆவட்ட சோவட்ட கொண்டானாம்
ஆக்கின சோத்த தின்னானாம்.’’ 4
சிறுவர் சிறுமியர் ஒருவர் பின் ஒருவராகச் சாரையிட்டு வருவர். சிறுவர் இருவர் கைகோத்துக்கொண்டு நிற்பர்; இவர்களின் கோத்த கைகளின் கீழ்ச் சிறார்சாரை புகுந்து செல்லும். கடைசியில் வரும் சிறுவரைக் கைக்குள் வளைத்துக் கொள்வர்; மற்றவர் அவரை விடுமாறு கேட்பர்; இவர்கள் விடமாட்டேன் என்பர். இந்த விளையாட்டின்போது, சாரையில் செல்பவர்கள் ஒன்றிலிருந்து பத்து வரையுமாகப் பின்வருமாறு பாடிச் செல்வர்: “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூபூத்து
இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டே பூபூத்து
... ... ... .. ... ... ... ... ... ...
பத்துக் குடம் தண்ணீர் ஊற்றிப் பத்தே பூபூத்து..."
என்று பாடிச் செல்வர். சாரையில் உள்ள ஒவ்வொருவராகப் பிடித்துக் கொண்டதும், சாரையின் தலைவர் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் தம் கணுக்கால், முழங்கால், இடுப்பு, கழுத்து ஆகியவற்றை முறையே ஒவ்வொன்றாகக் காட்டி, ‘அவ்வளவு பொன் தருகிறேன் விட்டுவிடு’ என்று கேட்பார்; அவர்கள் விடமாட்டோம் என்பர். இதற்குரிய பாடலாவது:
“இத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா துலுக்கா -உட மாட்டேன் மலுக்கா
அத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா தலுக்கா -உட மாட்டேன் மலுக்கா
கொட்டாஞ்சி பொன்னு தரேன் உடுடா துலுக்கா -உடமாட்டேன் மலுக்கா
கூடைப் பொன்னு தரேன் உடுடா துலுக்கா - உட மாட்டேன் மலுக்கா..."
கடைசியாக விட்டுவிடுவர்; ஆட்டம் முடிவுறும்.
பிடிக்கும் விளையாட்டுப் பாடல்
மரங்கொத்திக் குருவியைக் கேட்பதுபோலவும் அது பதில் சொல்வது போலவும் சிறுவர்கள் நடித்துப் பிடிக்கும் விளையாட்டு ஆடும்போது பாடுவது:
பையன் : “மரங்கொத்திக் குருவி!
குருவி : ஆஅஅ -ஓஓஓ
பை : வந்து பிடிச்சிக்கோ
கு : வரமாட்டேன் போ
பை : மரங்கொத்திக் குருவி
கு : ஏன் ஏன் ஏன்
தலையை நோவுது - தலைக்காணி போட்டுக்கோ
பாக்கு வேணும் பல்லைத்தட்டிப் போட்டுக்கோ
வெற்றிலை வேணும் - வேப்பிலையைப் போட்டுக்கோ
புகையிலை வேணும் - குதிரைவாலைப் போட்டுக்கோ
சுண்ணாம்பு வேணும் சுத்திசுத்தி ஒடிவா!
மரங்கொத்திக் குருவி ஆஅ ஒஒ!’
ஒருவர் பின் வரிசையாக நிற்கும் மற்றவரை இன்னொருவர் பிடிக்கும் விளையாட்டின்போது ஒருவர்க் கொருவர் மாறிமாறிப் பாடுவது:
ஆடு பிடிப்பேன் கோனாரே
ஏன் பிடிப்பே நாட்டாரே
கோழி பிடிப்பேன் கோனாரே
ஏன் பிடிப்பே நாட்டாரே
அடுப்பின் மேலே ஏறுவேன்
துடுப்பாலே அடிப்பேன்
ஊசி போட்டேன் - ஊதி எடு
காசு போட்டேன் - கண்டு எடு.”
திரிதிரி பந்தம்
பிள்ளைகள் வட்டமாக அமர்ந்திருப்பார்கள்; ஒருவன் தன் கையில் ஒரு சிறு துணியைப் பந்துபோல் சுற்றி வைத்துக் கொண்டு வட்டத்தைச் சுற்றி வருவான். அப்போது அவன் ஒரு பிள்ளையின் முதுகின் பின்னால் துணியைத் தெரியாமல் வைப்பான். உடனே அந்தப் பிள்ளை தன் பின்னால் துணி வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தான் எடுத்துக்கொண்டு சுற்றி வரவேண்டும். இவ்வாறு சுற்றி வருபவர்கள் பாடும் பாட்டாவது:
"திரிதிரிபந்தம் - திருமால் பந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒரு கொட்டு
திரிதிரி பந்தம் - திருமால் பந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருகொட்டு’ நிலா விளையாட்டு
நிலாக் காலத்தில் பிள்ளைகள் ‘நிழலா? வெய்யிலா?’ ஆட்டம் ஆடுவர். வெய்யில் என்பது நிலா வெளிச்சம். ஒருவனை மற்றவர் ‘நிழலா வெய்யிலா’ எனக் கேட்பர். அவன் வெய்யில் என்று சொன்னால், அவன் நிலா வெளிச்சத்தில் நின்று கொள்வான்; மற்றவர் நிழலில் நின்றுகொண்டு, வெய்யிலில் ஒடி ஒடிப் பின்வருமாறு பாடுவர்:
"வெய்யிலிலே நிக்கிறியே வெக்கங் கெட்டநாயே
வெய்யிலிலே நிக்கிறியே வெக்கங் கெட்டநாயே ::வெய்யிலிலே வந்தேனே வெக்க மில்லையோ
வெய்யிலிலே வந்தேனே வெக்க மில்லையோ’’
வெய்யிலில் வருபவர்களை வெய்யிலில் நிற்பவன் ஒடித் துரத்திப் பிடிப்பான். ஒருவன் நிழல்கேட்டு நிழலில் நின்று கொண்டால் மற்றவர் வெய்யிலில் நின்று நிழலுக்கு ஒடி ஒடிப் பின்வருமாறு பாடுவர்:
“நிழலிலே நிக்கிறியே நிலைகெட்டநாயே
நிழலிலே நிக்கிறியே நிலைகெட்டநாயே
நிழலுக்கு வந்தேனே வெட்கமில்லையோ
நிழலுக்கு வந்தேனே வெக்கமில்லையோ.”
4. கோலி விளையாட்டு பாடல்
சிறுவர் கோலிகுண்டு விளையாடும்போது ஒன்றிலிருந்து பத்துவரையும் எண்ணிக் கூறும் எண்பாடல் வருமாறு:
1. ஒக்காச்சி கொக்கு
2. இரட்டைப் பருந்து (அல்லது)
இரட்டைப் பிரம்பு
3. மூக்கிலே சொள்ளை (அல்லது)
மூக்கு சொளாங்கி
4. நாக்கிலே நந்தம்
5. ஐயப்பன் சொள்ளை (அல்லது)
ஐயப்பன் சோலை
6. அறுமுக தாளம்
7. எழுமா லிங்கம் (அல்லது)
எழுவா லிங்கம் 8. எட்டண கொட்டை
9. தோட்டிக்குத் தொம்பம் (அல்லது)
தொம்மன பீயம்
10. தோணிக்கு ராசா (அல்லது)
தோட்டிக்கு ராசா.
5. சடுகுடுப் பாடல்கள்
பிள்ளைகள் ஆடும் ‘சடுகுடு’ ஆட்டம் இந்தப் பக்கத்தில் பலி ‘பலிச்சான் கோடு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தின்போது இளைஞர்கள் மூச்சு பிடித்துக்கொண்டு பாடும் பாடல்களுள் சில வருமாறு:
“பலிபலி பலிபலி
பலிபலிக்குது நண்டு கடிக்குது
வரகஞ் சோறு மாரடைக்குறு
தண்ணி கொண்டா பிள்ளை தண்ணிகொண்டா
பாலுஞ் சோறும் மாரடைக்குது
தண்ணி கொண்டா தண்ணிகொண்டா
தண்ணி கொண்டா .... 1
"பலிபலிச்சான் கோடு அடிப்பானேன்
கையும் காலும் முறிவானேன்
கச்சேரிக்குப் போவானேன்
போவானேன் போவானேன்...2
“சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சப்பளாங்கி குடுகுடு குடுகுடு
வாகிட தோகிட வையட நக்கட
காலை முறியடா கட்டிப் பிடியடா
காலை முறியடா கட்டிப் பிடியடா
கட்டிப் பிடியடா பிடியடா பிடியடா
பிடிடா பிடிடா பிடிடா.....3
"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கீச்சு கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா
பட்டுப் போச்சடா, போச்சடா போச்சடா...4
"நான்தாண்டா ஒங்கொப்பன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வந்தேன்டா
தங்கப் பிரம்பெடுத்துத் தாலிகட்ட வந்தேன்டா
கோயில் பிரம்பெடுத்து சோதிக்க வந்தேன்டா
வந்தேன்டா வந்தேன்டா வந்தேன்டா.."
5 "காவெட்டி திருவெட்டி
காலுங் கீழே மண்ணைவெட்டி
இரும்புத் தகடடித்து
இந்திரானி கோட்டை கட்டி
சோளப் பொரி பொரித்து
சொக்கட்டான் சொக்கட்டான்
சொக்கட்டான் சொக்கட்டான்..."
6 "உச்சி உச்சி கம்மந்தட்டு
ஊட்ட பிரிச்சு கட்டு
காசுக்கு ரெண்டு கருணைக் கிழங்கடா
தோலை உரியடா தொண்டையிலே வையடா
தொண்டையிலே வையடா வையடா வையடா..."
7 "கறுப்புங் குதிரையுங் காலடியாம்
அதற்கு ரெண்டு வெண்டையமாம்
செருப்பு தைக்கிற செகநாதா
சேர்ந்து வாடா சண்டைக்கு
சேர்ந்து வாடா சண்டைக்கு - சண்டைக்கு..."
8 "சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
எள்ளுக்கா மேட்டுமேலே நான்
கொள்ளுக்கா பறிக்கப் போனேன்
வள்ளுவப் பண்டாரம் வந்து
வழியை மறித்துக் கொண்டான்
நான் திமிறிக் கொண்டேன்
திமிறிக் கொண்டேன் - திமிறிக் கொண்டேன்..."
9 "சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
காளை காளை வருகுது பார்
கறுப்புக் காளை வருகுது பார்
சூரியனுக்கு வட்டக் காளை
சொல்லிச் சொல்லி அடிக்குது பார்
அடிக்குது பார் அடிக்குது பார்."
10 "சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சிக்சிக் தாரா கிளிமூக்கு தாரா
சிக்சிக் தாரா கிளிமூக்கு தாரா
கிண்டலா செய்யற கிண்டலா செய்யற
சடுகுடு சடுகுடு குடுகுடு குடுகுடு."
11 6. ஏழாங்காய்ப் பாடல்
இளம் பெண்கள் ஏழுகாய்கள் வைத்துக்கொண்டு உயரே தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் ஒருவகையாட்டம் இந்தப் பகுதியில் உண்டு. இதற்கு ‘ஏழாங்காய் விளையாட்டு’ என்பது பெயர். ‘காய் சுங்குதல்’ என்றும் இதனைச் சொல்வதுண்டு. பெண்கள் கூடிப் பாடிக்கொண்டே விளையாடும் இதுபோன்றதொரு விளையாட்டு இலக்கியங்களில் ‘அம்மானை’ என்று சொல்லப்படுகிறது. ஏழாங்காய் விளையாட்டில், ஒரு காயை மேலே தூக்கிப் போட்டுக் கீழே முதலில் ஒவ்வொரு காயாகவும், பின் இரண்டிரண்டு காய்களாகவும், பின் மூன்று மூன்று காய்களாகவும் பின் இன்னும் பல்வேறு வகையாகவும் எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழ்நோக்கி வரும் காயையும் பிடித்துக் கொள்வர். ஒவ்வொரு காயாக எடுக்கும்போது ஒவ்வோர் எண்ணிற்கும் ஏற்ற பாட்டுப் பாடுவர். மற்றும் பல்வேறு வகையாகக் காய் எடுக்கும்போதும் அந்தந்தக் காய்களின் அளவிற்கேற்பப் பாடுவர். இந்தக் காய் எண் பாடல்கள் பலவிடங்களில் பலவிதமாகப் பாடப்படுகின்றன; இருப்பினும், பாடல்கள் யாவும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஒத்துள்ளன; சில பகுதிகளில் மட்டும் சிறுசிறு வேற்றுமைகள் உள்ளன. இனிப் பாடல் வகைகள் வருமாறு:
"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணி கரையிலே தகுந்த மனையிலே
பூமாதேவி அம்மா பிள்ளை வரம்கேட்கிறாள்.
ஈரியோ ராகவா என்தம்பி கேசவா
மாட்டை மடக்குடா மாதவா.
முக்கோட்டிலே என்னைப் பெத்து
கப்பலிலே தாலாட்டி
நாங்குத்தி யம்மா நல்லம்மா
நடந்து வாடி கண்ணம்மா.
அஞ்சிலே பிஞ்சி அவளுட நெஞ்சி
அஞ்சிலே பிஞ்சிலே என்ன வாழை
கும்ப கோணத்திலே குலை வாழை.
ஆறுநலாறு - தண்ணீர்ப் பந்தல் ஆறு.
ஏழையிலே கிடக்கிறேனே என்தோழி ஈசுவரி
மாயாப் பறக்கிறேன்.
கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணு ரெண்டும் கறப்பான்
கறந்த பால் குடிப்பான்.
அக்காடி அக்காடி - அக்கா ஆம்படையான் வந்தாண்டி
தெருவைப் பெருக்கடி - தென்னம் பாயைப் போடடி
(அல்லது)
ஊட்ட (வீட்டை பெருக்கடி உள்ளே பாயைப் போடடி
கிட்டவரப் பார்த்து - கட்டையாலே அடிடி.
தட்டு ஒண்ணு - தாம்பாலம் ரெண்டு
சோளப் பொரிமூணு - சொக்கட்டான் நாலி.
பொத பொத பொன்னும் பொத
வரவர வைக்கோல் தழை
சுடசுட சுக்குத் தண்ணீர்."
"அல்லுக்கு சில்லக்கு காமாட்சி விளக்கு
திருவாரூர் திருச்செங்க நாடு
நாடுநல்ல நாடு - நல்ல பாம்பு தலையாட்ட
ஈருகுத்தற மாதவா இலைபறிக்கிற தூதுவா
மணத்தக் கார யாதவா.
முக்கோட்டு சிக்கோட்டு பாகற்கா
முள்ளில்லா ஏலக்கா.
நாவே நாவே இந்திராணி
நாவல் மரத்திலே பட்டாணி.
ஐவால் அரக்கு மஞ்சள்
தெய்வம் குளிக்கு மஞ்சள்.
அக்கூர் அடிவாழ அண்ணன் தலைவாழ.
ஏழலூர் எங்களுர் பெங்களுர்.
கீழ்க்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிரண்டும் கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே வளர்வான் செல்வக் குமரன்.
கையேந்தி கையேந்தி கடலைச் சுடலேந்தி
ஏந்தி யேந்தி நாதா என்பிறப்பே வாராய்.
புதையார் புதைப்பார் மகளார் மதிப்பார்
மதிகொண்ட ராசன் திருக்கோலம் போவான்
திருவாரூர் திருச் செங்கநாடு
நாடுநல்ல நாடு - நல்ல பாம்பு தலையாட்ட"
"கொத்தவரங்காய் அடுப்பிலே கொத்துசாவி இடுப்பிலே.
சாதா கம்மல் காதிலே சைன் அட்டிகை கழுத்திலே
புதுமாப்பிளை பொன்னம்பலம் போட்டதெல்லாம் பித்தளை.
ஈரிகோ ராகவா என்தம்பி கேசவா
மாட்டை மடக்கும் மகாதேவா.
முக்கோட்டு சிக்கோட்டு பாகற்காய்
முள்ளில்லாத ஏலக்காய்.
நான்கே நடந்துவா - பாம்பே படர்ந்துவா.
ஐவாள் அரக்கு மஞ்சா - பம்பாய் குளிக்கு மஞ்சா
கூறும் கூறும் சித்தப்பா
கூழு குடிக்கும் பெரியப்பா.
ஏழண்ணன் காட்டிலே
எங்க ளண்ணன் வீட்டிலே
மஞ்சா சரட்டுக் குள்ளே.
கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிலே கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே உண்பான் செல்வக் குமாரன்.
கையேந்தி கையேந்திக் கடலை சுடலேந்தி
ஏந்தி ஏந்தி நாதா என்பரப்பில் வாடா
பச்சைப் பிள்ளைக்கும் தாய்க்கும் பசுவேநாதா.
மார்தட்டு கீழ்தட்டு மாமி மறுதட்டு
சோளப் பொரித்தட்டு சோற்றை வடிகட்டு.
புதை புதை பொன்னம் புதை
வர வார வைக்கத் தாழை
சுடசுட சுக்குத் தண்ணி.
செல்லம் போட்டா காப்பித் தண்ணி
சர்க்கரை போட்டா டீத் தண்ணி.
கோங்காட கோங்காட கோகிலாம்பாள் தேரோட
பாம்பாட பாம்பாட பார்வதியம்மாள் தேரோட"
3
"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணித் துறையிலே தகுந்த மனையிலே
பூமாதேவி யம்மா பிள்ளைவரம் கேட்கிறாள்.
அல்லல்ல அரசல்ல தித்திப்புப் பண்டம்
பாலாறு பழம்பழுக்கப் பலாச்சுளை.
இரட்டைக்குச் சிட்டை இராமனாத்தி முட்டை
கோழிக்குஞ்சு சப்பட்டை.
ஈரே இறுச்சிக்கோ பூவைப் பறிச்சிக்கோ
பெட்டிக்குள்ளே வச்சிக்கோ.
நான்கே நடந்துவா - பாம்பே படர்ந்துவா.
நாங்க ளாடும் பம்பரம் - சீதையாடும் சிதம்பரம்.
ஐவா குய்வா தட்டாத்தி
அழுக் கெடுப்பா வண்ணாத்தி
கூறும் கூறும் சித்தப்பா
கூழு குடிப்பார் பெரியப்பா.
ஏழைநீதி வாழை எங்கள் நீதி தோட்டம்
மணவாளத்து சர்க்கரை.
கீழ்காணி மேல்காணி கீழே அரைக்காணி
கண்ணிரண்டும் கறப்பாள் கறந்த பால்குடிப்பாள்
தேனிலும் பிறப்பாள் செல்வக் குமாரி.
ஈரோன் ரெண்டு
மாதாக் குண்டு மல்லிகைப்பூச் செண்டு.
பக்கா பக்கா லேலிலோ பறங்கிப் பக்கா லேலிலோ
குண்டு பக்கா லேலிலோ குடுகுடுத்தா லேலிலோ
வாங்கித் தின்னா லேலிலோ வட்டமிட்டா லேலிலோ.
மார்மார் ஒன்று - மத்தாப்பு இரண்டு
சோளப்பொரி மூன்று - சொக்கட்டான் நாலு
சோழி ஐந்து"
"சீ சிலுத்துக்கோ மாதுளங்கொழுந்து தண்ணியிலே
வெண்ணெய் சம்சாரப் பெண்ணை
சிலுக்கா கெண்டை மலுமலுக்கா கொண்டை
நாலகப்பை அரிக்கும் சட்டி
எடுக்கப் போனேன் தவறிப் போச்சு.
வெள்ளி முளைச்சிக் குச்சு விடிகாலம் ஆயிட்டுது
ஆலைக் குழாய் கூவிட்டுது அஸ்தகாலம் ஆயிட்டுது
இடியாப்பக் காரன் குடியைக் கெடுத்தான்.
ஈரி இறுச்சிக்கோ இலந்தம் பழுத்துக்கோ
ஏறி உலுக்கிக்கோ.
முக்கோட்டிலே பிள்ளை பெற்று - கப்பலிலே தாலாட்டி
நான்கே நான்கே நடந்துவா - பாம்பே பாம்பே படர்ந்துவா.
அஞ்சிலே பிஞ்சிலே என்ன வாழை
கும்பகோணத்திலே குலை வாழை.
பூ பொறுக்கி நாட்டிலே புடலங்காய் காய்ச்சுது
கா பொறுக்கி நாட்டிலே கடலைக்காய் காய்ச்சுது.
சிட்லா புட்லா காயே சீமை நெல்லிக் காயே
கடிச்சிப் பார்த்தா தெறிச்சிப் போகும்
கண்டங் கத்தரிக் காயே.
பக்காவே பக்காவே பாலடை விற்குது
எந்தத் தெருவிலே சந்தைத் தெருவிலே
வாங்கப் பணமில்லை வரிசை வைக்கத் தட்டில்லே."
5 "பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணி குடத்திலே தவழ்ந்த மலையிலே
பூமா தேவியம்மா பிள்ளைவரம் கேட்டாளாம்.
ஈரோன் ரெண்டு மாதா மணிக்கூண்டு
மல்லிகைப் பூச் செண்டு
முக்கோட்டு சிக்கோட்டு மூன்றாம் படிக்கட்டு
ஏழைக் கண்ணாட்டி தூது விளையாட்டி
துலுக்கன் பெண்டாட்டி.
கீழ்க்காணி மேல்காணி கீழே சுரக்கானி
கன்றுள கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே செல்லம் செல்வக் குமாரன்.
பக்கா பக்கா லேலிலோ பறங்கி பக்கா லேலிலோ
குண்டு பக்கா லேலிலோ குடுகுடுத்தா லேலிலோ
வாங்கித் தின்னா லேலிலோ வச்சிப் படைக்கிற லேலிலோ
அஞ்சு களாக்கா தும்பைப்பூ
அதுமேலே வாராள் ராசாத்தி
ஐவால் ரேக்கு பம்பாய் சிலுக்கு.
ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்.
ஆக்கூரு சீக்கூரு அறிந்த களிக்கூரு
ஆக்கூரு மச்சான் பாக்கு வச்சான்
அதிலே ரெண்டு பணத்தை வச்சான்.
ஏழைப் பெண்ணு இடையப் பெண்ணு
மோரு விக்கிற மொட்டைப் பெண்ணு
மூத்தாரைக் கண்டால் பேசாளே."
பொறுக்கி சிறுகுருவி பொங்கும் மனக்குருவி
தந்தம் தனக்குருவி தாயில்லாப் பேய்க்குருவி
பேய்க்குருவி வாசலிலே பெண்பிறந்தால் ஆகாதோ.
ஆளா பொறுக்கி ஆசாரக் கள்ளி
துக்கம் துளசி பொறிவிளங்கா நாச்சி
விளையாடா நல்லாள் ஊஞ்சல் தாலாட்ட
இரட்டை இணைச்சிக்கோ தாவி அணைச்சிக்கோ
தட்டாரக் கோவிலிலே தாலி பிரிச்சிக்கோ.
4 "நாங்கள் சிங்கல் ஆடவே
ராயர் பட்டணம் கட்டவே
பட்டணத்தான் செட்டி மகன்
பாக்குத் தின்று பறிபோனான்
நாங்கே நீ நடந்துவா பாம்பேநீ படர்ந்துவா
அஞ்சிலே பிஞ்சி அவளுட நெஞ்சி
ஆக்கூரு வாசலிலே பாக்கை வெட்டிப் பந்தலிட்டான்.
ஏழைப் பெண்ணு எங்க பெண்ணு
மோரு விக்கிற மொட்டப் பெண்ணு
தயிரு விக்கிற தர்மப் பெண்ணு.
எட்டால் அடிச்சான் செட்டி மகன்
இடிஇடிச்சான் ராசா மகன்.
கோங்கா நங்கா வடிவச்சி
குண்ட லுரு தாதச்சி - இந்தாடி ஆயா
உன்பேரன் பொறந்தான் பார்த்துக்கோ
பழம் கொடு திருப்தியா நான் வருவேன்.
கட்ட வச்சவ யாரடி
லவுட்டு அடிச்சவ யாரடி
கட்டை கட்டை ஒன்று
கருவங் கட்டை இரண்டு
வேலங் கட்டை மூன்று
விறகு ஒடிக்கப் போனேன்
கத்தாழை முள்ளு - கொத்தோடு தச்சிது.
கீழ்க்கண்ணன் வெள்ளாழக் கீழண்டைத் தெருவிலே
சின்னண்ணன் பெண்டாட்டி சிறுக்கி சண்டை போட்டாளாம்
அப்போது பெரியண்ணன் அலறி அலறி அழுதானாம்."
“அல்லலேகு முத்தண்ணா ஆனைத்தடி யண்ணா
குள்ள நரியண்ணா கோவைப் பழமண்ணா
பொறுக்கி கிட்டே போனேன் பொங்கல் சோத்தைப் போட்டாள்
வாவென அழைச்சாள் வண்ணத் தடுக்கிட்டாள்
குத்துப் பருப்பிட்டாள் கூசாமல் நெய்விட்டாள்.
ஈரி குத்துற மாதுளை இலை பறிக்கிற தூதுளை
மணத்தக் காளி வேதளை.
முக்கோட்டு சிக்கோட்டு ராவணா
முத்து சரவணா.
நாங்குத்தி நல்லம்மா நடந்து வா கண்ணம்மா.
அஞ்சு களாக்காய் தும்பைப் பூ
அறுத்து கொட்டடி பண்ணைப் பூ.
ஆறுன்னா ஆறலியே அவிச்சா தணியலியே.
ஏழம்பூ தாழம்பூ ஏரிக்கரை சித்தம்பூ
காசிக்குக் களம்பூ.
கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிரண்டும் கறப்பாள் கறந்ததைக் குடிப்பாள்.
அக்காடி அக்காடி அத்தானுக்கு என்னகறி
ஊசிப் பலாக்கொட்டை உசுட்டேரி மாங்கொட்டை
காட்டு மரவட்டை போட்டுக் குழம்பிட்டேன்."
8 "நாரத்தம் பழமே நான் வளர்த்த செல்வமே
நான் செத்துப் போனால் நீ எங்கே இருப்பாய்
ஆத்தங்கரை ஓரத்திலே அழுதுகொண் டிருப்பேன்
சித்தாத்தா வருவாள் சீத்தாப்பழம் தருவாள்
பெரியாத்தா வருவாள் பிரப்பம்பழம் தருவாள்
கப்பல்காரன் வருவான் கப்பல் ஏற்றிப் போவான்."
9 7. ஏற்றப் பாட்டு
ஏற்றப் பாட்டு முழுமையும் போடுவதென்றால் ஒரு தனி நூல்போல் விரியும். அதனால், மாதிரிக்காக ஒருசில பகுதிகள் மட்டும் வருமாறு:
"வள்ளியாரே பாடும் - பிள்ளையாரே வாழி
பிள்ளையாரே வேலும் - பிழைவராமல் காரும்
மழைவரக் கண்பாரும் மகாதேவா பாரும்
கந்தன் அருளாலே கனகவல்லி தாயே
காரும் இந்தவேளை கால்களே நோவாதே
கால்கை நோவாதே கண்ணாறு வராதே
எங்களைக் காரும் எழுந்தருள் தேவி
ஒன்னுடைய ராமா
இரண்டுடைய ராமா
மூனுடைய ராமா
நாலுடைய ராமா
நாலு பிள்ளையாரே நாவல்மரம் பாரே
ஆரை மறந்தாலும் ஐயனாரை மறவேன்
பேரை மறந்தாலும் பெருமாளை மறவேன்
புத்தி மறந்தாலும் பத்தி மறவேனே
பத்தி மறந்தாலும் கீர்த்தி மறவேனே
கீர்த்தி மறந்தாலும் கினவு மறவேனே
கினவில் மறந்தாலும் நினைவில் மறவேனே
ஐந்துடனே வாழி ஆறுடனே வாழி
ஏழுடனே வாழி எட்டுடனே வாழி
எட்டியடி வச்சேன் கட்டிச்சு பெருமாளே
தாவியடி வச்சேன் தாங்குது பெருமாளே
ஓங்கியடி வச்சேன் ஓடுது பெருமாளே
ஒண்ணேருட வாழி இருபதியா லொன்று."
மேலுள்ள ஏற்றப் பாட்டு, இந்தப் பகுதியில் பல இடங்களிலும் பாடப்படும் ஏற்றப் பாட்டின் தொடக்கப் பகுதியாகும். இனி, ஏற்றப் பாட்டின் நடுநடுவே பாடப்படும் சில அடிகள் வருமாறு:
'ஏண்டி யம்மா பெற்றாய் ஏத்தக் கட்டை தொங்க'
'எருமுட்டையில் பாம்பு இட்டிடுங்காண் தீம்பு'
'மாமனுக்கு ஒண்ணு மரக்காலாட்டம் பெண்ணு'
‘குதிக்காதடி பெண்ணே நிலைக்கா திந்த வாழ்வு
மாணிக்கமே குட்டி சாணிக்காடி நீ போறே’
‘அம்புபோன வேகம் தம்பிபோனான் காணாம்
அம்புக் கேத்த வில்லு தம்பிக் கேத்த பெண்ணு’
‘ஏத்தக் காரஐயா எந்தப் பெண்ணுவேனும்
நாலு பேரு போறாள் நடுவிலே இருக்கிறவ வேணும்’
‘முண்டக் கண்ணு குட்டி சண்டை போடகெட்டி
முண்டன் கிட்டே சொன்னேன் சண்டை வேண்டா மென்று
நட்டுக் கிச்சாம் ஏத்தம் குட்டி பண்ண மோசம்’
‘மாவு இடியேன் பெண்ணே மயிலத்துக்குப் போவோம்
மாவிடிக்க வில்லை மயிலத்துக்கு வல்லே
பூமுடியேன் பெண்ணே புதுச்சேரிக்குப் போவோம்
பூமுடிக்க வில்லை புதுச்சேரிக்கு வல்லே.’
8. நடவுப் பாட்டு
உழவர்கள் வயலில் நடவு செய்யும்போது பாடும் சில பாட்டுகள் வரமாறு:
"வள்ளி வள்ளி கொடி நடுவாய்
கிள்ளி வந்து கிழங் கெடுத்து
குழிதனில் நடுவ தென்ன
மானெடுத்து நடுவ தென்ன
மஞ்சம் குரல் கேட்ட தென்ன
பூனை ஓடி நடுவ தென்ன
புள்ள குரல் கேட்ட தென்ன
வெள்ளானை உழுதுவர வேடமக்கள் புல்பிராய
கருப்பானை உழுதுவர கள்ளமக்கள் புல்பிராய
சிவப்பானை உழுதுவர சேடமக்கள் புல்பிராய
சிவப்பு நாயும் சங்கிலியும் சேடருட கூட்டினங்கள்
கருப்பு நாயும் சங்கிலியும் கள்ளருட கூட்டினங்கள்
காடு வெட்டிக் கல்பொறுக்கிக்
கம்பு சோளம் தினை விரைக்க
மோடு வெட்டி முள்பொறுக்கி முத்து சோளம் தினை விரைக்க
அள்ளி விரைச்சதினை அள்ளித்தின்ன மாளலையோ
சாய்ந்து விரைச்சதினை சாய்ந்துதின்ன மாளலையே
பிடிச்சி விரைச்சதினை பிடிச்சித் தின்னமாளலையோ
வீசி விரைச்சதினை வீசித்தின்ன மாளலையோ கொட்டி
விரைச்சதினை கூடித் தின்ன மாண்டுதம்மா
ஓராம் திங்களுக்கு ஓர் இலை தினைப் பயிர்
ஓர் இலைக்குக் காப்பு கட்டி ஒருபானை பொங்கல் வைத்து
ஈராம் திங்களுக்கு ஈர்.இலை தினைப்பயிர்
ஈர் இலைக்குக் காப்புகட்டி இருபானை பொங்கல் வைத்து
மூனாம் திங்களுக்கு மூனு இலை தினைப்பயிர்
மூனு இலைக்குக் காப்புகட்டி மூனுபானைபொங்கல் வைத்து
நாலாம் திங்களுக்கு நாலுஇலை தினைப்பயிர்
நாலு இலைக்குக் காப்புகட்டி நாலுபானை பொங்கல் வைத்து
ஐந்தாம்திங்களுக்கு ஐந்துஇலை தினைப்பயிர்
ஐந்து இலைக்குக் காப்புகட்டி ஐந்துபானை பொங்கல்வைத்து
ஆறாம் திங்களுக்கு ஆறுஇலை தினைப்பயிர்
ஆறு இலைக்குக் காப்புகட்டி ஆறுபானை பொங்கல் வைத்து
ஏழாம் திங்களுக்கு ஏழுஇலை தினைப் பயிர்
ஏழு இலைக்குக் காப்புகட்டி ஏழுபானை பொங்கல்வைத்து
எட்டாம் திங்களுக்கு இலை வதங்கிப் போகுதம்மா
ஒன்பதாம் திங்களுக்கு ஓலை ஒடிச் சுருங்குதம்மா
பத்தாம் திங்களுக்கு பட்சி வந்து இறங்குதம்மா
ஆராளோ காவல் வைப்பேன் என் அழகான சிந்தனைக்கு
சின்ன அண்ணன் பெண்டாட்டி சீதையாளைக் காவல் வைப்பேன்
சிதையாளைக் காவல் வைத்து சிந்திடும் தினைக்கதிர் காப்பேன்
பெரிய அண்ணன் பெண்டாட்டி பெரியாளைக் காவல் வைப்பேன்
பெரியாளைக் காவல் வைத்து பெரிதான தினை காப்பேன்.’’ 1
"குன்று குன்றா மப்பு இறங்க ஏலேலம்படி ஏலம்
கொடிகாலும் மின்ன மின்ன ஏலேலம்படி ஏலம்
விடியற் காலம் பேய்ஞ்ச மழை ஏலேலம்படி ஏலம்
வெள்ள முண்டோ வள்ளியாரே ஏலேலம்படி ஏலம்
வெள்ளம் புரண்டுவர ஏலேலம்படி ஏலம்
கல்லு உருண்டு வர ஏலேலம்படி ஏலம்
காடு வெட்டிக் கல்பொறுக்கி ஏலேலம்படி ஏலம்
கம்பு சோளம் தினைவிரைச்சி ஏலேலம்படி ஏலம்
மோடு வெட்டி முள்பொறுக்கி ஏலேலம்படி ஏலம்
முத்து சோளம் தினைவிரைச்சி ஏலேலம்படி ஏலம்
வெள்ளானை உழுதுவர ஏலேலம்படி ஏலம்
வேட ரெல்லாம் புல்பிராய ஏலேலம்படி ஏலம்
கருப்பானை உழுதுவர ஏலேலம்படி ஏலம்
கள்ள ரெல்லாம் புல்பிராய ஏலேலம்படி ஏலம்
அள்ளி விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
அள்ளித் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
பிடிச்சு விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
பிடிச்சுத் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
வீசித் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
கொட்டி விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
கூடித் தின்ன மாண்டுதம்மா ஏலேலம்படி ஏலம்."
2
9. நெல் குத்துவோர் பாடல்
நெல் குத்திக்கொண்டே மாமியாரும் மருமகளும் மாறிமாறிப் பாடுவதுபோல் பெண்டிர் இருவர் பாடும் பாடல்:
"மூச்சு பிடிச்சி போடடிகுட்டி
முத்துமணி குத்தி சோறாக்கணும்
ஆச்சுதா அத்தே சாயங்காலம்
அள்ளிக்கோ இந்தா அரிசிமணி
மச்சான் வருவான் போடடிகுட்டி
மாளலியா இன்னும் நெல்லுகுத்தி
மாமியாரே அத்தே மஞ்சிபோச்சி
மச்சான் வரட்டும் மிஞ்சிபோச்சி
பொழுது போகுது போடடிபுள்ளே
பொன்னுமணி குத்தி பொங்கிடணும்
பொழுதும் பூட்டுதா அத்தையாரே
புடைச்சிதரேன் இந்தா புட்டரிசி
குழந்தை தூங்கிடும் குத்தடிசெல்லீ
கூட்டுகறி சோறு ஆக்கிடணும்
குழந்தைக்குப் பால்கொடுக்கணும் அத்தே
குத்திவிட்டேன் இந்தா முத்தரிசி."
10. சுண்ணாம்பு இடிப்போர் பாடல்
வீடு கட்டும்போது சுண்ணாம்பு இடிக்கும் பெண்கள் மாறிமாறிப் பாடும் பாடலில் ஒரு சிறு பகுதி வருமாறு:
"அக்கா தங்கச்சி அஞ்சு பேரண்ணா -
ஏலம்மா ஏலம்
அஞ்சு பேரண்ணா - ஏலம்மா ஏலம்.
ஆத்தங்கரை தாண்டமாட்டோண்ணா -
ஏலம்மா ஏலம்
தாண்டமாட்டோண்ணா - ஏலம்மா ஏலம்.
கொல்லத்துக்காரன் கொடுமைக்காரன் -
ஏலம்மா ஏலம்
கொடுமைக்காரன் - ஏலம்மா ஏலம்
கொஞ்சமும் மனம் இரங்கலியே -
ஏலம்மா ஏலம்
இரங்கலியே - ஏலம்மா ஏலம்."
1
"ஒருசுத்து வேப்பமரம் - ஆரியமாலா
வேப்பமரம் - ஆரியமாலா
ஓராண்டிலும் காவலில்லே - ஆரியமாலா
காவலில்லே - ஆரியமாலா
சித்திரம்போல் உருவங்கொண்டு - ஆரியமாலா
உருவங்கொண்டு - ஆரியமாலா
பிள்ளையாரை கேட்டா வரம் - ஆரியமாலா
கேட்டா(ள்) வரம் - ஆரியமாலா
பூமுடிச்சா பொன்னுருவி - ஆரியமாலா
பொன்னுருவி - ஆரியமாலா
பிள்ளைவரம் பலிச்சதுண்டே - ஆரியமாலா
பலிச்சதுண்டே - ஆரியமாலா."
2
11. வண்டி யோட்டும் பாடல்
"ஏய் ஏய் இந்தா...
செல்லுங்கடா சீக்கிரமாய் துள்ளிவிழும் காளைகளா
வெள்ளிநிலா காயுதுபார் வீதிஒளி பாயுதுபார்
பள்ளமேடு பார்த்து நீங்கள் பாய்ந்து போவீர் பாதையிலே
வெள்ளம்போல் எதுவரினும் வெட்டி செல்வீர் தோழர்களே
வீடுசெல்வோம் விரைவாக வெற்றிநடை போடுங்கடா
ஆடிசெல்லும் காதுமணி அலங்கரிக்கும் கழுத்துமணி
தேடிவரும் குளம்போசை தேன்பாயும் காதுக்குள்ளே
செல்லுங்கடா சீக்கிரமாய் துள்ளிவிழும் காளைகளா
ஏய் ஏய் இந்தா போ போ..."
12. பரதவர் பாடல்
"விடிவெள்ளி நம்விளக்கு - ஐலேசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலேசா
அடிக்கும் அலை நம்தோழர் - ஐலேசா
அருமை மேகம் நமதுகுடை - ஐலேசா
பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலேசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலேசா
காயும் ரவிச்சுடர்கூரை - ஐலேசா
கட்டுமரம் வாழும்வீடு - ஐலேசா
பின்னல்வலை அரிச்சுவடி - ஐலேசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருள்கள் - ஐலேசா
மின்னல் இடிகாணும்கூத்து - ஐலேசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலேசா
முழுநிலாதான் நம்கண்ணாடி - ஐலேசா
மூச்சடக்கி நீந்தல்யோகம் - ஐலேசா
தொழும் தலைவன்பெருவானம் - ஐலேசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலேசா"
(இந்தப் பாடலைப் புத்தகத்தில் படித்து மனப்பாடம் செய்துகொண்டதாக ஒருவர் கூறினார்.)
இவ்வாறு இன்னும் பல்வேறு வகைப் பாடல்கள் இப் பக்கத்தில் வழக்காற்றில் உள்ளன. இன்னும் ஊர் வாரியாகத் திரட்டினால் பாடல்கள் ஒரு தனி நூலாகப் பெருகி விரியும். சில ஊர்ப் பக்கத்துப் பாடல்கள் மட்டுமே ஒரளவு இங்கே தரப்பட்டுள்ளன. பாடல்களைப் போலவே கெடில நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளும் ஒரளவே தரப்பட்டுள்ளன. இவற்றுள் சில தமிழக முழுவதற்கும் பொதுவாயிருப்பினும், கெடிலக்கரை நாட்டிலும் இவ் வாழ்க்கை முறைகள் உள்ளன என அறிந்து கொள்ளலாம்.
24. கல்வி - கலைத்துறை
கல்வி
ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் கற்றவர்கள் மிக்கிருந்தனர். மிக்கிருந்தனர் என்றால், மற்ற மாவட்டங்களை நோக்க மிகுதியே தவிர, இன்றைய நிலையை நோக்க மிகவும் குறைவே. 1822ஆம் ஆண்டில் தமிழகத்தில் கற்றவர் தொகையை ஆராய்ந்து கணக்கிடுவதற்காகத் தாமஸ் மன்ரோ (Sir Thomas Munro) என்பவர் தலைமையில் ஒரு குழு புறப்பட்டது. அந்த ஆராய்ச்சியினால், தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்திலும் தஞ்சை மாவட்டத்திலுமே கற்றவர் மிகுதி என்பதும், தஞ்சை மாவட்டத்தில் கற்றவர் விழுக்காடு 2.0% (நூற்றுக்கு இரண்டு) என்பதும், தென்னார்க்காடு மாவட்டத்தில் கற்றவர் விழுக்காடு 2.3% என்பதும் தெரிய வந்தன. பின்னர்த் தமிழகத்தில் ஏற்பட்ட எத்தனையோ துறைக் கல்வி வளர்ச்சியில் தென்னார்க்காடு மாவட்டம் வேறு சில மாவட்டங்களினும் பின் தங்கியது என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக, மற்ற மாவட்டங்களின் தலைநகர்களிலும் உள்நகர்களிலும் பல்லாண்டுகளாகக் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் முதலியன மிக்க எண்ணிக்கையில் நடைபெற்று வந்தும், தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரில் 1963ஆம் ஆண்டில்தான் கலைக்கல்லூரி ஏற்பட்டது; மாவட்டத்தில் சிதம்பரம் தவிர மற்ற நகர்களில் இதுவரை கலைக்கல்லூரி ஏற்படவில்லை; இப்போதுதான் சில நகரங்களில் உருவாகத் தொடங்கியுள்ளது. இந் நிலையைக் காணுங்கால், இம் மாவட்டத்தின் பின்தங்கிய நிலை நன்கு புலப்படுகிறது.
ஆனால், கல்லூரிகளின் எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களினும் தென்னார்க்காடு மாவட்டம் பின் தங்கியிருக்கும் எளிய நிலையை ஈடு செய்யும் முறையில் சிதம்பரத்தில் பல்லாண்டுகளாக ஒரு கல்லூரி அன்று-ஒரு பல்கலைக் கழகமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்களின் அருட்பெருக்கால் தோன்றியுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை
வைத்துப் பார்க்கும்போது, தென்னார்க்காடு மாவட்டம் கல்வித் துறையில் சென்னைக்கு அடுத்தபடி சிறப்பிடம் பெற்றுள்ளது என்று சொல்லலாம். மற்றும், அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருப்பதனால்தான், கடலூரில் இவ்வளவு நாள் கல்லூரி தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. கடலூர் வட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாடோறும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குப் புகைவண்டியில் சென்று கல்வி கற்றுவந்தது நினைவுகூரத்தக்கது.
கடலூர்க் கல்லூரிகள்
கடலூரில் 1963ஆம் ஆண்டில்தான் ஆண்கள் கலைக் கல்லூரியும் 1967 ஆம் ஆண்டில்தான் பெண்கள் கலைக் கல்லூரியும் ஏற்பட்டிருப்பினும், சென்ற நூற்றாண்டிலேயே இங்கே இரண்டு கலைக்கல்லூரிகள் தோன்றி நடைபெற்று வந்தன என்பதை மறந்து விடுவதற்கில்லை. கடலூரில் 1879ஆம் ஆண்டில் ‘டவுன் காலேஜ்’ (Town College) என்னும் பெயரில் ஒரு கலைக்கல்லூரி அரசினரால் தோற்றுவிக்கப்பட்டு 1902ஆம் ஆண்டுவரை நடைபெற்றுப் பின்னர் மறைந்து விட்டது. அடுத்து, 1884ஆம் ஆண்டில் ‘செயின்ட் ஜோசப் காலேஜ்’ (St Joseph’s College) என்னும் பெயரில் தனியார் கலைக்கல்லூரி ஒன்று தோன்றி 1909ஆம் ஆண்டு வரை இயங்கிப் பின்னர் எடுக்கப்பட்டுவிட்டது. இவ்விரு கல்லூரிகளையும் வைத்துக் காணுங்கால் சென்ற நூற்றாண்டில் கல்வித் துறையில் கடலூர் பெற்றிருந்த தலைமைநிலை புலனாகும்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
கடலூர்க் கல்லூரிகளை அடுத்து இம் மாவட்டத்தில் செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியாரவர்கள் சிதம்பரத்தில் 1920ஆம் ஆண்டு ஒரு கலைக்கல்லூரியும், பின் ஓர் இசைக் கல்லூரியும், 1927இல் தமிழ்க் கல்லூரி, தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, வடமொழிக் கல்லூரி முதலியனவும் தம் அன்னையார் மீனாட்சியம்மை பெயரால் தொடங்கி நடத்தினார்கள். இவை 1929இல் ஒருங்கிணைக்கப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாறின; இன்று இப் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ வகைக் கல்விப் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. வள்ளல் அண்ணாமலை செட்டியார் புகழ் வளர்க!
மயிலம் தமிழ்க் கல்லூரி
அடுத்து, இம்மாவட்டத்தில் மயிலம் என்னும் ஊரில் சிவத்திரு, சிவஞான பாலைய அடிகளாரால் 1938இல் நிறுவப் பட்ட தமிழ்க் கல்லூரி மிகவும் குறிப்பிடத்தக்கது. இதனாலும் இம்மாவட்டத்திற்குப் பெருமை மிக உண்டு. இன்று தமிழகத்தில் பத்திற்கு மேற்பட்ட தமிழ்க் கல்லூரிகள் உள்ளன. இவற்றுள், திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் பழைமையானவை; மூன்றாம் இடம் மயிலம் தமிழ்க் கல்லூரிக்கு உரியது.
பாடலிபுத்திரம்
இன்று கெடிலக்கரை நாட்டில் பல ஊர்களிலும் உயர்நிலைப் பள்ளிகள், பல்வகைத் தொழிற் பள்ளிகள் முதலியன நடைபெற்ற வருவது கண்கூடு. பண்டு இந்த நாட்டுப் பகுதியில் பாடலிபுத்திரம், பாகூர், எண்ணாயிரம் முதலிய ஊர்களில் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. திருப்பாதிரிப் புலியூரை அடுத்திருந்த பாடலிபுத்திரத்தில் பெரிய சமணசமய நிலையம் இருந்தது. இங்கே ஐந்தாம் நூற்றாண்டிலேயே சிம்மசூரி, சரவநந்தி முதலிய சமணத் தலைவர்கள் தங்கியிருந்து பல நூல்கள் இயற்றியுள்ளனர். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் சமணத் தலைவராய் இங்கே வீற்றிருந்தார். அங்கே அருங்கலை நூல்கள் பல பயிலப்பட்ட செய்தியை,
[1]“அங்கவரும் அமண்சமயத்து அருங்கலை
நூலான வெலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே
அந்நெறியில் புலன்சிறப்ப”
என்னும் பெரியபுராணப் பாடற் பகுதியால் அறியலாம்.
பாகூர்
பாகூரில் ஒரு வடமொழிப் பல்கலைக் கழகம் எட்டாம் நூற்றாண்டிலேயே இருந்தது. இங்கேயே மாணவர்கள் உண்டும் உறைந்தும் கல்வி கற்றனர். ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்கவர்மப் பல்லவன் இந்தப் பல்கலைக் கழகத்திற்குச் சேத்துப்பாக்கம், விளங்காட்டங்காடவனுர், இறைப்புனச்சேரி என்னும் மூன்று ஊர்களை முற்றூட்டாக அளித்தான். இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தர்ம சாத்திரம், புராணம், ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தர்வம், அர்த்த சாத்திரம் ஆகிய பதினெட்டுப் பிரிவுகள் பயிற்றப்பட்டன.
பாடலிபுத்திரம், பாகூர் முதலிய இடங்களில் இருந்த அமைப்புகளைக் கொண்டு, தமிழகத்தில் சங்ககாலத்தை யடுத்துச் சமண பெளத்த சமயங்களின் ஆட்சியும் வடமொழியின் ஆட்சியும் வேரூன்றி வளரத் தொடங்கிவிட்டன என அறியலாம். சமண பெளத்தமும் வடமொழியும் இங்கே வேரூன்றுவதற்குப் பல்லவர்கள் பெருந் துணைபுரிந்தனர். அவர்கள் வடமொழியை நன்கு வளர்த்தனர். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் பெரிய வடமொழிப் புலவனாகவும் திகழ்ந்தான்; அவன் இயற்றிய ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்னும் வடமொழி நாடகம் அக்காலத்தில் பெரிய விளம்பரம் பெற்றிருந்தது. பல்லவர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் ஓரளவு ஆதரவு அளித்து வந்தனர். பல்லவர் காலத்துக்கு முன்னும் பின்னும் சோழ பாண்டிய மன்னர்களால் தமிழ்மொழி பெரிய அளவில் வளர்க்கப்பட்டது. சோழ பாண்டிய மன்னர்களின் மேலாட்சியின் கீழ்த் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசர்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தனர். யார் என்ன செய்தும், தமிழுடன் வடமொழியும் வளர்ந்து கொண்டே வந்தது.
பள்ளிக்கூடங்கள்
பண்டைக்காலத்தில் பொதுப் பள்ளிகள் கோயில்களிலும் மடங்களிலும் நடைபெற்றன. சமண பெளத்தக் கோயில்களும் மடங்களும் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டன. அந்த இடங்களில் கல்விக் கூடம் நடைபெற்றபோது ‘பள்ளிக்கூடம்’ என அழைக்கப்பட்டது. அந்தப் பெயர் நின்று நிலைத்துவிட்டது. இத்தகைய பொதுப் பள்ளிகள் சமயச் சார்புடையன வாகவே இருந்தன. இவையேயன்றி, ஊர் தோறும் தனித்தனி ஆசிரியர்களால் அவரவர் இல்லங்களில் தனித்தனிப் பள்ளிகள் பல நடத்தப்பெற்று வந்தன. இவ்வகைப் பள்ளிகட்குத் திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம் என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட்டன. நாட்டில் இத்தகைய பள்ளிகளே மிக்கிருந்தன என்று சொல்லலாம். ஆசிரியர் ஒவ்வொருவரும் பல்கலைப் புலவராகத் திகழ்ந்தனர்; கணிதம், வானவியல், மருத்துவம் முதலிய கலைகளில் திறமை பெற்றிருந்தனர். மாணாக்கர்க்குப் பல்வகைக் கலைகளும் பயிற்றப்பட்டன.
ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கிய போது, தென்னார்க்காடு மாவட்டத்தில் உருப்படியான பழையமுறை நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தொள்ளாயிரத்துக்கும் (900) மேற்பட்ட எண்ணிக்கையில் நடைபெற்று வந்ததாகத் தாமஸ் மன்றோ குழுவினரால் கணக்கிடப்பட்டுள்ளது. மூலை முடுக்கு ஊர்களில் இருந்த இன்னும் எத்தனையோ பள்ளிகள் இந்தக் குழுவின் கணக்கிற்குள் அகப்படாமல் இருந்திருக்கலாம். பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை மிக்கிருந்தும், படித்தவர் விழுக்காடு 2.3% என்னும் அளவிலேயே இருந்தது. இதிலிருந்து, ஊர் தோறும் பள்ளிக்கூடம் இருந்தும், அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை; ஒரு சிலரே ஆசிரியரை அடுத்துக் கல்வி கற்றனர் - என்னும் உண்மை புலனாகிறது. அதனால் தான் இப்போது கட்டாயக் கல்விமுறை தேவைப்படுகிறது.
அறிஞர் பெருமக்கள்
திருமுனைப்பாடி நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை கல்வியின் தரம், கற்றவர் தகுதி, இலக்கியங்களின் அமைப்பு முதலியவை எப்படி இருந்தன என்று கணிப்பதற்கு, இந்த நூலிலுள்ள ‘கெடிலக்கரைப் பெருமக்கள்’, ‘கெடிலக்கரை இலக்கியங்கள்’ என்னும் இரண்டு தலைப்புகளும் பெருந்துணை புரியும். ‘கல்வி - கலைத்துறை’ என்னும் இந்தத் தலைப்பிற்குள் அந்த இரண்டு தலைப்புகளையும் அடக்கிக் கொள்ளவுஞ் செய்யலாம். கபிலர், பரணர், ஒளவையார், அம்மூவனார், கல்லாடனார், பேரிசாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார், கோவூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் முதலிய சங்க காலப் புலவர்கள் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ திருமுனைப்பாடி நாட்டில் பன்னாள் வாழ்ந்ததாலோ, திருமுனைப்பாடி நாட்டு மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றதாலோ இந்நாட்டோடு மிக்க தொடர்புடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுள் பெரும் புலவராய கபிலர் திருக்கோவலூரோடும் மலையமான் திருமுடிக்காரியோடும் கொண்டிருந்த தொடர்பு பெரிதும் குறிப்பிடத்தக்கது. அவர் வடக்கிலிருந்து தீயிட்டுக்கொண்டு உயிர் நீத்த இடமாகக் குறிப்பிடப்படும் கபிலர்குன்று திருகோவலூர்ப் பகுதியில் உள்ளது.
சங்கப் புலவாகளை அடுத்து, இடைக்காலத்தில் திருநாவுக்கரசர், சுந்தரர், தொல்காப்பியத்தேவர், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், வில்லி புத்தூரார், அருணகிரிநாதர், முதலிய பெருமக்கள் பிறந்து வளர்ந்ததாலும் நிலையாக நெடுங்காலம் வாழ்ந்ததாலும் திருமுனைப்பாடி நாட்டோடு மிகமிக நெருங்கிய தொடர்புடையவர்களாவார்கள். தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவரான நாவுக்கரசரும் சுந்தரரும் கெடிலக்கரை ஊர்களில் பிறந்து மிகப்பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்ததால் திருமுனைப்பாடிநாடு மிக்க பெருமைக்கு உரியது எனப் புலவர் பலராலும் பல நூல்களில் பாராட்டப் பெற்றிருப்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது.பாரதம் பாடிய வில்லிபுத்துரார் பிறந்த சனியூரும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்ததே. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பிறந்த திருவண்ணாமலையும் இந்நாட்டினதே. (முதலில் திருவண்ணாமலை வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே சேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்று வளர்ந்த திருவெண்ணெய் நல்லூர் சோழ நாட்டில் உள்ள ஊர் என்று சிலர் கூறினும், திருமுனைப்பாடி நாட்டில் உள்ள ஊர் என்று பலர் கூறுகின்றனர்; இஃது உண்மையானால், திருமுனைப்பாடி நாட்டின் கல்விப் பெருமைக்குக் கணக்கேயில்லை. இப்பெருமக்களே யன்றி, திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை யாழ்வார், சேக்கிழார், பட்டினத்தார் முதலியோரும் திருமுனைப்பாடி நாட்டுப் பதிகளை வணங்கிப் பாடி நாட்டிற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
பிற்காலத்தில் நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார், இலக்கணம் சிதம்பரநாத முனிவர், ஈசானிய மடம் இராமலிங்கசாமி, திருவதிகை வாகீச பக்த நாவலர், திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப நாவலர், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார், திருப்பாதிரிப் புலியூர் சிவசிதம்பரப் புலவர், வண்டிப் பாளைம் இராசப்ப ஆசிரியர் முதலிய பெருமக்கள் பலர் இப் பகுதியில் வாழ்ந்து. சிறந்த நூல்கள் இயற்றியும், பலர்க்குப் பாடங் கற்பித்தும் தமிழ்மொழியை வளர்த்துள்ளனர். திருப்பாதிரிப் புலியூரில் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் வாழ்ந்த காலத்தில் ஞானியார் மடம் ஒரு பெரிய தமிழ்ப் பல்கலைக் கழகமாக விளங்கிற்று, மடத்தில் அடிகளாரிடத்தில் கல்வி கற்றுப் பெரும் புலவர்களாய் உயர்ந்தோர் மிகப் பலராவர். இன்னும் இந்த நூற்றாண்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல துறைக்கல்வி கற்றுப் பலர் பேரறிஞர்களாய்த் திகழ்வது வெளிப்படை.
திருமுனைப்பாடி நாட்டில் திருநாவுக்கரசர், சுந்தரர், மெய்கண்டார் முதலிய அருட்பெருங் குரவர்கள் பிறந்தும் வாழ்ந்தும் அரும்பெரும் படைப்புகளை அளித்துள்ளனரென்றால், இந்நாட்டில் அன்றிருந்த கல்விச் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! மாபெருஞ் சிறப்பிற்குரிய இலக்கியப் படைப்புகளேயன்றி, ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் திருமுனைப்பாடி நாட்டில் அமையப் பெற்றிருப்பது நாட்டின் பழம் பெருஞ் சிறப்பிற்கு மேலும் தக்க சான்றாகும். செய்யுள் வடிவிலும் கல்வெட்டுகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இந்நூலில் ‘கெடில நாட்டுக் கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பில் காணலாம்.
கலைகள்
இயல், இசை, கூத்து (நடனம்), ஒவியம், கட்டடம் முதலிய பொறியியல், சிற்பம் முதலிய கலைகள் திருமுனைப்பாடி நாட்டில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தன. பல்லவ மன்னர்களும் சோழ வேந்தர்களும் இக்கலைகட்குப் போதிய ஆதரவு அளித்து வந்தனர். இத்தனை கலைகளையும் திருக்கோயில்களில் காணலாம்.
இயல்
இயல் கலையாகிய இலக்கியத்திற்கு இந்நாட்டில் குறைவேயில்லை. மலையமான் மன்னர்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள், அப்பர் - சுந்தரரின் தேவாரங்கள், மெய்கண்டார் - அருணந்தி சிவாசாரியார் ஆகியோரின் சித்தாந்த சாத்திர முதன்மைத் தலைநூல்கள், வேதாந்த தேசிகரின் நூற்றிற்கு மேற்பட்ட வைணவப் பெருநூல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், வில்லிபுத்தூராரின் பாரதம், நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகளின் கற்பனைக் களஞ்சிய நூல்கள், வடலூர் வள்ளலாரின் அருட்பா முதலிய இயற் கலைப் படைப்புகள் திருமுனைப்பாடி நாடு தந்த செல்வங்களேயாம்.
இசை
பண்டு திருக்கோயில்களில் தமிழ்ப் பண்களின் முழக்கமே கேட்கப்பட்டது. தேவாரத் - திருப்புகழ்ப் பாடல்கள் தமிழிசைப் பண்களின் நிலைக்களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்தத் தேவார ஆசிரியர் மூவருள் இருவராய அப்பரும் சுந்தரரும், திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரிநாதரும் பிறந்தது திருமுனைப்பாடி நாடுதான்! மற்றும், கெடிலக் கரையிலுள்ள பண்ணுருட்டி (பண் + உருட்டி) என்னும் ஊரின் பெயரும் இந்நாட்டு இசை வளர்ச்சிக்குச் சான்று பகரும்.
கூத்து
கூத்து என்னும் கலையில் நடனம் (ஆடல்), தெருக்கூத்து, நாடகம் முதலியவை அடங்கும். பாடல் பெற்ற பெரிய திருக் கோயில்கள் ஆடல் கலைக்கு நிலைக்களமாக இருந்தன. இதற்கென்றே கோயில்களில் ஆடல் மாதர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர்; அவர்கள் விழாக் காலங்களில் ஆடல் விருந்து அளித்துவந்தனர். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் ஆடற்கலை பெற்றிருந்த பெரு வளர்ச்சிக்குத் திருக்கோவலூர், திருவதிகை, பாகூர் முதலிய கோயில்களில் உள்ள ஆடற்
சிற்பங்கள் போதிய சான்று பகரும். எடுத்துக்காட்டாக, பாகூர்ச் சிவன் கோயிலிலுள்ள பல்வேறு ஆடல் சிற்பங்களுள் ஓர் ஐந்தினை மட்டும் இங்குக் காண்போம். ஐந்தும் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ளன. இவை பத்தாம் நூற்றாண்டில் படைக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த ஐந்துக்கு மேலும் பல ஆடற் சிற்பங்கள் பாகூர்க் கோயிலில் உள்ளன. சிற்பங்களின் முகங்கள் சிறுவர்களால்
சிதைக்கப்பட்டுப் பொலிவிழந்துள்ளன. இவையே யன்றி, திருவதிகைக் கோயிலிலும் ஆடல் மாதரின் சிற்பங்கள் உள்ளன. திருக்கோவலூர்ப் பெருமாள் கோயிலிலுள்ள பெண்டிர் கோலாட்ட நடனச் சிற்பம் மிகவும் கண்டு களிக்கத்தக்கது. இவ்வாறு சிற்பிகள் கற்சிற்பங்களாக வடிக்கும் அளவிற்கு அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் ஆடற்கலை பெருவளர்ச்சி பெற்றிருந்தது. அடுத்து, அம்மன்கோயில், ஐயனார்கோயில் முதலிய சிறுகோயில்கள் தெருக்கூத்துக் கலையை வளர்த்தன.
இந்தக் கோயில்களில் விழா நடக்கும் நாள்களில் தெருக் கூத்துகள் நடத்தப்பெறும். கடலூர், திருக்கோவலூர் முதலிய இடங்களில் மிகப் புகழ் பெற்ற தெருக்கூத்துக் குழுவினர் உள்ளனர். இது போக, அரங்கங்களில் நாடகங்களும் நடிக்கப்பட்டன. திருநாவுக்கரசரின் வரலாற்றை மையமாகக் கொண்டு ‘பூம்புலியூர்’ என்னும் பெயருடைய நாடகம் ஒன்று இற்றைக்கு எண்ணுாறு ஆண்டுகட்கு முன்பே நடிக்கப் பட்டதாகத் தெரிகிறது. பூம்புலியூராகிய திருப்பாதிரிப் புலியூரில் ‘முத்தையா ஹால்’ என்னும் பெயருடைய நாடக அரங்கம் ஒன்று உள்ளது; கால் நூற்றாண்டுக்கு முன், இந்த அரங்கமே தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய அரங்கம் என்று சொல்லப்பட்டது.
அடுத்து, நாட்டுப் புறக் கும்மி, கோலாட்டம், கரகம் சிலம்பு, பொய்க்காலிக் குதிரையாட்டம் முதலியவற்றையும் கூத்து வகைகளுள் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வகைக் கலைகள் இந்தப் பகுதியில் நிரம்ப உண்டு. பொய்க்காலிக் குதிரையாட்டக் கலைக்குக் கடலூர் மிகவும் புகழ்பெற்ற ஊராகும். மாசிமக விழாவிலும், மற்றப் பெருவிழாக்களிலும் இந்தக் கலைகளை இந்தப் பகுதியில் கண்டுகளிக்கலாம்.
ஓவியம்
ஒவியக்கலை பற்றிக் குறிப்பிடத்தக்கதாக ஒன்றுமில்லை. பல்லவ மன்னர்கள் குடைந்த குகைக் கோயில்களிலும் கட்டிய கற்கோயில்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. தென்னார்க்காடு மாவட்டத்தில் மண்டகப்பட்டில் பல்லவர் குடைந்த குகைக்கோயில் உள்ளது. வேறு சில இடங்களில் கற்கோயில்களும், கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பொதுவாகச் சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு ஆகிய (Vegetable Colours) நிறங்களால் தீட்டப்பட்டிருந்தனவாகக் கூறப்படும் ஓவியங்களை இப்போது காண முடிவதில்லை. பல்லவர் காலத்திற்குப் பின் ஒவியக்கலை இந்தப் பகுதியில் அவ்வளவு வளர்ச்சி பெற்றதாகத் தெரியவில்லை.
கட்டடம் - சிற்பம்
கட்டடக் கலையும் சிற்பக் கலையும் பெற்றிருந்த வளர்ச்சிக்கு, இப் பகுதியிலுள்ள கோயில் கட்டடங்களும் கோபுரங்களும் கோயில்களிலுள்ள சிற்பங்களும் சிலைகளும் சான்று பகரும். சிறப்பாக, மண்டகப்பட்டுக் குகைக்கோயில் திருக்கோவலூர்ப் பெருமாள் கோயில் மண்டபம், ரிஷி வந்தியம் கோயிலில் கருங்கல் யாளியின் திறந்த வாய்க்குள் உருளும் கல் உருண்டை,வேங்கடம் பேட்டையிலுள்ள மண்டபங்கள்,
சேந்தமங்கலம் கோட்டைக்கோயில், திருவதிகைக் கோயிலின் கருவறை விமானம், திருநாவலூரிலுள்ள சுந்தரர், பரவையார், சங்கிலியார், நரசிங்கமுனையரையர் ஆகியோரின் உலோகச் சிலைகள், திருப்பாதிரிப் புலியூரில் ஆஞ்சநேயர் கோயிலிலுள்ள ஆஞ்சநேயரின் கருங்கற்சிலை முதலியவை மிகவும் குறிப்பிடத்தக்கன. மாதிரிக்காக, நரசிங்க முனையரையரின் உருவச்சிலையின் படமும், திருவதிகைக்கோயில் கருவறை விமானப்படமும் மேலே காட்டப்டபெற்றுள்ளன.
இந்த உலோகச்சிலை நரசிங்க முனையரையர் என்னும் அரசர்க்கு உரிய எல்லாவகையான ஒப்பனைகளும் அமையப் பெற்று மிகவும் பொலிவுடன் திகழ்வதைக் காணலாம். திருநாவலூர்க் கோயிலிலுள்ள சுந்தரர், பரவையார், சங்கிலியார் ஆகிய மூவரின் உலோகச் சிலைகள் மிக மிகப் பொலிவுடன் விளங்குகின்றன. சுந்தரர் என்றால் சுந்தரரே தான் (அழகரே தான்).
இந்த விமானம் பற்றிய செய்திகளை இந்நூலில் ‘கெடிலக்கரை ஊர்கள் - திருவதிகை’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். இது பல்லவர் கால வேலைப் பாடுடையது. இதன் அடிப்பகுதி கருங்கல்லாலானது; அக்கருங்கல் நிலையின் மேல் தேர் போன்ற தோற்றத்தில் விமானம் செங்கல்லாலும் சுதையாலும் அமைக்கப்பட்டிருக்கிறது. விமானத்தைச் சுற்றிலும்
கெ.32 அடியிலிருந்து முடிவரைக்கும் சுதையாலான உருவங்கள் கண்கட்குத் தெவிட்டா விருந்து அளித்துக் கொண்டிருக்கின்றன. விமானத்தின் உச்சி நிழல் நிலத்தில் விழாவாறு அடிப்படை அமைத்துக் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கெடிலநாட்டுச் சிற்பக்கலைச் செல்வத்திற்கு இன்னும் எத்தனையோ சான்றுகள் உள.
கைவினைப் பொருள்கள்
வரலாற்றுக் காலத்திற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் முற்பட்ட கற்காலம் (Stone Age), உலோக காலம் (Metal Age) ஆகிய காலங்களிலேயே கெடில நாட்டு மக்கள் கல்லாலும் இரும்பு முதலிய உலோகங்களாலும் கருவிகள் செய்து பயன்படுத்தி வாழ்ந்தனர். அத்தகு கருவிகள் நிலத்திலிருந்து கிடைத்துள்ளன - என்னும் செய்தி இந்நூலில் ‘கெடில நாட்டு வரலாறு’ என்னும் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு, கெடில நாட்டின் கைவினைக் கம்மியக் கலையின் சிறப்பை உய்த்துணரலாம்.
இவ்வாறு இன்னும் கணிதம், வானவியல், மருத்துவம், முதலிய பல்வேறு கல்வி - கலைத்துறைகளிலும் இந்நாடு நெடுநாளாய்ச் சிறப்புற்று வருகிறது.
* * *
↑ பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - 39.
25. கெடிலக்கரை நாகரிகம்
நாகரிகம்
நாகரிகம் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது அரிது; எது நாகரிகம் என்று அறுதியிட்டுக் கூறுவது அதனினும் அரிது. நகர் அடிப்படையில் நாகரிகம் பிறந்ததாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது. நகரங்களில் தொழில் வளமும் வாணிக வளமும் மிகுதி; அதனால் மக்கள் தொகையும் மிகுதி. நகரங்களில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அதனால், ஒரு பிரிவினர்க்கு இன்னொரு பிரிவினர் இளைத்தவரல்லர் என்ற முறையில் ஒருவர்க்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடையுடை முதலியவற்றால் தங்களைச் சிறந்தவராகக் காட்டிக் கொள்ள முயல்கின்றனர். அதனால் வெளித்தோற்றத்திற்கு ஏதோ ஒருவகை ஆரவார ஆடம்பர அமைப்பு காணப்படுகிறது; இந்த அமைப்பையே ‘நாகரிகம்’ என்னும் சொல்லால் பலர் குறிப்பிடுகின்றனர். இதனால், நகரிலிருந்து நாகரிகம் பிறந்தது என்பதாக ஒருவகைப் பெயர்க்காரணம் கூறப்படுகிறது.
நகரங்கள் உருவானதற்கு ஆற்றுவளம் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆற்றுப்பாசன வசதியால் பல்வேறு வகைப் பொருள்கள் விளைய, அதனால் தொழில் வளமும் வாணிக வளமும் பெருக, அதனால் வாழ்க்கை வசதி உயர, அதனால் மக்கள் ஒன்றுதிரள நகரங்கள் உருவாயின; நகரங்களிலிருந்து ‘நாகரிகம்’ தோன்றிப் பரவியது - எனக் கூறப்படுகிறது.
பழைய நாகரிகங்கள்
உலகில், எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், இந்தியச் சிந்துவெளி நாகரிகம் முதலிய நாகரிகங்கள் மிகவும் பழைமையானவை எனப் பாராட்டப்படுகின்றன. இவை யாவும், ஆற்றங்கரைச் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே. எகிப்திய நாகரிகம் நைல் ஆற்றையும், மெசபட்டோமிய நாகரிகம் டைக்ரீஸ் - ‘யூப்ரடிஸ்’ என்னும் இரண்டு ஆறுகளையும், சிந்து வெளி நாகரிகம் ‘சிந்து’ ஆற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. இவை போலவே, கெடிலக் கரை நாகரிகம் ‘கெடிலம்’ ஆற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.
இற்றைக்கு 8000 அல்லது 10,000 ஆண்டுகட்கு முன்பே உலகம் ஓரளவு நாகரிகம் அடைந்திருந்தது. பழைய நாகரிகங்கள் எனப்படுபவை சில, கி.மு. 6000 தொட்டு கி.மு. 3000 வரை செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் காலத்திலேயே உழவு, நெசவு, மண் மர உலோகக் கைத்தொழில்கள், பண்டமாற்று வாணிகம், குறிப்பு எழுதி வைத்தல், ஓவியம், சிற்பம், கட்டடவியல், கணிதம், வானவியல், கடவுள் வழிபாட்டு நெறி, அரசியல் அமைப்பு முதலியவை இருந்தன.
இந்தியாவில் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையில் தொல் பொருள் ஆராய்வாளர்கள் சிந்து மாநிலத்தில் ‘மொகஞ்சதாரோ’ முதலிய இடங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் ‘ஹரப்பா’ முதலிய இடங்களிலுமாக 60 இடங்களில் 1921 - 22 ஆம் ஆண்டு காலத்தில் அகழ்ந்து ஆராய்ந்து பல பொருள்களைக் கண்டறிந்து பல செய்திகளை வெளிப்படுத்தினர். சிந்து வெளி நாகரிகம் எனப்படும் இதன் காலம் கி.மு. 3000 - கி.மு. 1500 ஆகிய ஆண்டுகட்கு இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிந்து வெளி அகழ்வாராய்ச்சியினால், பல வசதிகளுடன் கூடிய கட்டடங்களைக் கொண்டிருந்த நகரங்கள் புதையுண்டு கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்திய நாகரிகம் போலவே சீன நாகரிகமும் பழைமையானது. ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்கு முன்னே அமெரிக்கக் கண்டத்திலும் ஆஸ்ட்டெக் நாகரிகம், ‘மாயா’ நாகரிகம், இன்கா நாகரிகம் எனப் பல நாகரிகங்கள் தோன்றிப் பதினாறாம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்தன.
இப்படியாக உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி வளர்ந்து மறைந்துள்ளன. ‘உயிரினங்களைப் போலவே நாகரிகங்களும் பிறந்து வளர்ந்து மறைகின்றன’ என ‘ஆஸ்வால்டு ஸ்பிங்ளர்’ (Oswald Spingler) என்னும் அறிஞர் ‘மேல் நாடுகளின் வீழ்ச்சி’ என்னும் நூலில் கூறியுள்ளார். ‘எகிப்து, மெசபடோமியா முதலிய நாடுகளின் சிற்பங்களைக் கொண்டு, நாகரிகத்தில் வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி என மூன்று படிகள் இருந்தமை புலனாகிறது’ என்பதாக ‘சர் ஃபிலிண்டர்ஸ் பெட்ரி’ (Sir Flinders Petrie) என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியறிஞர் தெரிவித்துள்ளார்.
ஒரு பகுதியில் ஆற்றுவளச் சிறப்பால் விளைவும், அதனால் தொழில் வாணிகமும், அவற்றால் செல்வமும் முறையே செழிக்கின்றன; அதனால் பசிக்கவலை வாழ்க்கைக் கவலை நீங்க, பல்வேறு வகைக் கலைகள் தோன்றி வளர்கின்றன; இத்தகைய அமைப்பு நாகரிகம் எனப்படுகிறது. இத்தகைய அமைப்பு உள்ள இடங்களின் பெயரால் ‘நாகரிகங்கள்’ பெயர் வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டு:- எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம் முதலியன. இத்தகைய நாகரிகங்கள் நிலநடுக்கம், எரிமலை, நீண்ட வறட்சி, புயல், வெள்ளம், மண் மேடிடுதல், கடல்கோள் முதலிய இயற்கையின் சீற்றத்தாலும் மாற்றத்தாலும் அழிந்துபோவதுண்டு; மற்றும், அரசியல் போர் - பிணக்கு முதலியவற்றாலும், வேற்று அரசு - மொழி - சமயம் - நாகரிகம் முதலியவற்றின் இடையீட்டாலும் தலையீட்டாலும் மேலாட்சியாலும் குறிப்பிட்ட ஒரு நாகரிகம் மறைந்து போவதும் உண்டு. இன்ன பிற இடையூறுகளினின்றும் தப்பி நெடுநாளாய் நிலையாய் ஒரு நாகரிகம் இருக்கிறதென்றால் அது மிகவும் குறிப்பிடத்தக்கதாம். பொதுவாக இந்திய நாகரிகம், சிறப்பாகத் தமிழ் நாகரிகம் நெடுநாளாய் நின்று நிலைத்திருப்பதாகச் சொல்லலாம். கெடிலக் கரை நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே.
தமிழகத்தில் நடுநாடு என அழைக்கப்படும் திருமுனைப் பாடி நாட்டில் கெடிலம் ஆறு ஓடுகிறது. எனவே, கெடிலக்கரை நாகரிகத்தைத் தமிழகத்தின் நடுநாகரிகம் அஃதாவது பொது நாகரிகம் என ஒருவாறு கூறலாம். இந்தக் கெடிலக் கரை நாகரிகத்தின் தொடக்க காலத்தைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. வரலாற்றுக் காலத்திற்கு மிக முற்பட்டது இந்த நாகரிகம். இந்நூலில் ‘கெடிலத்தின் தொன்மை’ என்னும் தலைப்பில், ‘கெடிலம்’ ஆறு காலம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது” என்னும் உண்மை பல சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. மற்றும் இந்நூலில் ‘கெடில நாட்டு வரலாறு’ என்னும் தலைப்பில், ‘கெடிலம் பாயும் திருமுனைப்பாடி நாட்டில் கற்கருவிகளும் சவக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் கிடைப்பதால், இந்நாடு கற்காலத்திற்கு முற்பட்ட பழம்பெருமை உடையது’ என்னும் உண்மையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதைக்கொண்டு, கெடிலக் கரை நாகரிகத்தின் பழைமை புலனாகிறது.
உலகில் பழைய எகிப்திய நாகரிகமும், மெசபட்டோமிய நாகரிகங்கள் எனப்படும் சூமிரிய நாகரிகம் - பாபிலோனிய நாகரிகம் - அசிரிய நாகரிகம் ஆகிய நாகரிகங்களும், இந்தியச் சிந்துவெளி நாகரிகமும், அமெரிக்கக் கண்டத்தின் பழைய நாகரிகங்களான ஆஸ்ட்டெக் நாகரிகம் - மாயா நாகரிகம் இன்கா நாகரிகம் ஆகிய நாகரிகங்களும் இன்ன பிற பல்வேறு நாட்டு நாகரிகங்களும் ஒரு காலத்தில் தோன்றி இன்னொரு காலத்தில் மறைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால், கெடிலக்கரை நாகரிகம் தோன்றி - வளர்ந்து - மறைந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை - வளர்ந்துகொண்டே யிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் கி.மு. 3000 - மறைவு கி.மு. 1500 எனவும், மெசபட்டோமியா முதலிய பழைய நாகரிகங்களின் தோற்றம் கி.மு. 6000 - மறைவு கி.மு. 3000 எனவும்
சொல்வதுபோல் கெடிலக்கரை நாகரிகத்திற்குத் தோற்றம் - மறைவு சொல்ல முடியாது. உயிரினங்களைப் போலவே நாகரிகங்களும் தோன்றி வளர்ந்து - மறைகின்றன என்பதாக ‘ஆஸ்வால்டு ஸ்பிங்ளர்’ (Oswald Spingler) என்பார் கூறியுள்ள பொதுவிதி கெடிலக்கரை நாகரிகத்திற்குப் பொருந்தாது விலக்காகிறது. கெடிலக்கரை நாகரிகம் கற்காலத்திற்கு முற்காலந்தொட்டு இன்றுவரை படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
கெடிலக்கரை நாகரிகத்தின் வளர்ச்சியின் இடையிடையே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த மாற்றங்கள், இயற்கையின் ஆற்றலாலும் காலத்தின் கோலத்தாலும் மதமாற்றங்களாலும், ஆட்சி மாற்றங்களாலும் அயலவர் தலையீட்டாலும் நிகழ்ந்திருக்கலாம். இடையிடையே ஏற்பட்ட மாற்றங்களுள் பொருந்தாத சிலவற்றைக் கெடிலக்கரை நாகரிகம் வென்று விழுங்கித் தனது பழைய தூய தனித்தன்மையை இழவாதிருப்பதுடன், வேறு சில நல்ல மாற்றங்களை வரவேற்றுப் பெற்று வளரவுஞ் செய்துள்ளது. ஒரிடத்து நாகரிகத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் நல்ல மாறுதல்களை வளர்ச்சியின் படிகள் என்று சொல்ல வேண்டும். வளர்ந்து வரும் குழந்தையின் தோற்றத்திலும் செயலிலும் பண்பிலும் பருவத்திற்குப் பருவம் மாறுதல்கள் இருக்கத்தானே செய்யும்?
எது நாகரிகம்?
சிறப்பாகக் கெடிலக் கரை நாகரிகம் எனப்படுவது எது என்று ஆராய்வது ஒருபுறம் இருக்க, பொதுவாக உலகில் நாகரிகம் எனப்படுவது எது என முதலில் ஆராய வேண்டும். ஆடம்பரமான ஆடையணிகள் அணிந்து மேனி மினுக்கி வாழ்வது நாகரிகம் எனச் சிலர் கூறலாம். மாட மாளிகை கூடகோபுரம் காட்டிச் செல்வச்செழிப்புடன் வாழ்வதுதான் நாகரிகம் என வேறு சிலர் சொல்லலாம். விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளின் துணைகொண்டு வியத்தகு வாழ்க்கை வாழ்வதே நாகரிகம் என மற்றொரு சாரார் மொழியலாம். கல்வியறிவொழுக்கங்களால் தலைசிறந்தவராய்த் திகழ்வதே நாகரிகம் என இன்னொரு சாரார் இயம்பலாம். இவையெல்லாம் சேர்ந்ததே நாகரிகம் என ஒரு சிலரும், இவற்றுள் எது ஒன்றும் நாகரிகமாகாது என வேறு சிலரும் கூறவுங்கூடும்.
[1]‘கிளைவ் பெல்’ (Clive Bell) என்னும் அறிஞர் நாகரிகம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: “கடவுள் நம்பிக்கையோ, கற்புடைமையோ, பெண்ணுரிமையோ, திருடாமையோ, உண்மை பேசுதலோ, தூய்மை உடைமையோ, நாட்டுப் பற்றோ, இன்ன பிறவோ நாகரிகம் ஆகமுடியாது. ஏனெனில், மிகவும் நாகரிகமுடையவர் என்று கூறிக்கொள்ளும் இனத்தவர் பலரிடையே மேற்கூறிய பண்புகள் காணப்படுவதில்லை; அதற்கு மாறாக, மிகவும் நாகரிகமற்றவர் எனக் கூறப்படும் பழங்குடிமக்கள் பலரிடையே மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன” என்பதாகக் ‘கிளைவ் பெல்’ கூறுகிறார். இன்னின்ன நாட்டுப் பழங்குடி மக்களிடம் காணப்படும் இன்னின்ன நற்பண்புகள், இன்னின்ன நாட்டு நாகரிக மக்களிடம் காணப்படவில்லை எனக் கிளைவ் பெல் பெயர் சுட்டியும் கூறியுள்ளார். இவரைப் போலவே ‘வெஸ்டர் மார்க்’ (Wester Marck) என்னும் அறிஞரும் ஒத்த கருத்துத் தெரிவித்துள்ளார். அங்ங்னமெனில், இதுதான் நாகரிகமென எதை எடுத்தியம்புவது?
மேலும், ஒரு காலத்தில் நாகரிகமுடைய செயலாகக் கருதப்பட்ட ஒன்று, இன்னொரு காலத்தில் நாகரிகம் அற்ற செயலாகக் கருதப்படுவது உலகியலில் கண்கூடு. முன்னர் உலகில் உயர்வு - தாழ்வு கருதப்பட்டது; உயர் குலம் இழிகுலம் என்ற வேறுபாடு இருந்தது; ஆண்டான் - அடிமை என்ற பாகுபாடு இருந்தது; உயர்ந்த குலத்தினர் நாகரிகம் உடையவராகவும் மற்றவர் நாகரிகம் அற்றவராகவும், அவர்கட்கு இவர்கள் அடிமை ஊழியம் செய்ய வேண்டியவராகவும் உலகச் சூழ்நிலை முன்பு இருந்தது. இப்போதோ உயர்வு தாழ்வு பாராட்டுவதும், ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்திச் சுரண்டுவதும், ஒருவரோடொருவர் பிணங்கிப் பொருவதும் நாகரிகமற்ற செயல்களாக இழிக்கப்படுகின்றன. அளவுமீறி ஆடம்பரமாக உடுத்துவதும் உண்ணுவதும் மிகுந்த பொருட்செலவில் திருமணம் முதலிய நிகழ்ச்சிகள் நடத்துவதும் இன்ன பிறவும் முன்பு மிக்க நாகரிகச் செயல்களாகக் கருதப்பட்டன; இவை இப்போது நாகரிகம் அற்ற செயல்களாகப் பழிக்கப்படுகின்றன. இன்னும் கேட்டால், மிகுதியாகப் பிள்ளை பெறுவதும் இன்று நாகரிகம் அற்ற செயலாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், ‘எது நாகரிகம்’ என்னும் பெருஞ்சிக்கலை அவிழ்ப்பதற்குப் பின்வருமாறு ஒரு தீர்வு கூறப்படுகிறது: ‘மற்ற உயிரினங்களினின்றும் மாந்தரை வேறு பிரித்துக் காட்டும் உயர்பண்பே நாகரிகம்’ - என்பதாக அறிஞர்களால் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. இந்தக் கருத்து உண்மையே என்றாலும், மற்ற உயிரினங்களினின்றும் மாந்தரை வேறு பிரித்துக் காட்டும் உயர்பண்பு எது? - என்பதாக மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது.
இந்த நிலையில், நாகரிகம் எது எனத் தெரிந்து கொள்வதற்கு உலகப் பேரறிஞராகிய திருவள்ளுவப் பெருந்தகையாரின் துணையை நாடுவது பயனளிக்கும். பேரிரக்கமாகிய கண்ணோட்டமே நாகரிகம் என வள்ளுவனார் மொழிந்துள்ளார். இதனைத் தெளிவு செய்து கொள்வதற்காகத் திருக்குறள் பொருட்பாலில் ‘கண்ணோட்டம்’ என்னும் தலைப்பிலுள்ள பத்துக் குறட்பாக்களும் வருமாறு:
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 1
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. 2
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னும்
கண்ணோட்டம் இல்லாத கண். 3
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 4
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். 5
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். 6
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 7
கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்தில் வுலகு. 8
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. 9
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 10
திருவள்ளுவர் கண்ணோட்டத்தைப் பற்றிய பத்துக் குறள்களுள் முதல் ஒன்பது குறள்களில் கண்ணோட்டம் என்னும் சொல்லை இட்டுக் காட்டியுள்ளார்; இறுதியான பத்தாவது குறளில் கண்ணோட்டம் என்னும் சொல்லுக்குப் பதிலாக நாகரிகம் என்னும் சொல்லைப் பெய்துள்ளார். எனவே, நாகரிகம் என்னும் சொல்லுக்கு வள்ளுவனார் தரும் பொருள் ‘கண்ணோட்டம்’ என்பது புலனாகிறது.
‘கண்ணோட்டம் இல்லையேல் உலகம் இல்லை; கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவர்; கண்ணோட்டம் உடையவர்க்கு உலகம் உரியது; தம்மைத் துன்புறுத்தும் கொடியோரிடத்தும் கண்ணோட்டம் கொள்வதே தலையாய பண்பு’ என்றெல்லாம் கூறிவந்த திருவள்ளுவர், இறுதிக் குறளில் கண்ணோட்டத்தின் உயர் எல்லைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளார். உலகில் எவர் எவரோ எது எதையோ நாகரிகம் என்கின்றனர். அந்த உலகியல் நாகரிகங்களினின்றும் உண்மையான நாகரிகத்தை வேறு பிரித்து உணர்த்துகிறார் வள்ளுவர்; யாவரும் விரும்பத்தக்க உண்மையான நாகரிகம் இதோ இருக்கிறது என எடுத்துக் காட்டுகிறார் பொய்யாமொழியார், அஃதாவது, ‘எவரும் விரும்பும்படியான அருட் கண்ணோட்டம் என்னும் நாகரிகத்தை விரும்புபவர், ஒருவர் நஞ்சை ஊற்றித் தர நேரில் பார்த்தும், அவரை மகிழ்விப்பதற்காக அந் நஞ்சை அருந்தி அமைதிகொள்வர்’ - என்பதுதான் திருவள்ளுவனார் நாகரிகம் என்னும் பண்புடைமைக்குக் கூறும் விளக்கமாகும்.
எனவே, திருவள்ளுவரின் கருத்துப்படி, வானளாவ நூறடுக்கு மாளிகை - கூடகோபுரம் கட்டி வாழ்வதோ, ஒருவர்க்கு ஒரு சிற்றுந்துவண்டி (கார்) வீதம் வைத்து வாழ்வதோ, ஆரவார ஆடையணிகலன்கள் அணிந்து வாழ்வதோ, உலகிலுள்ள எல்லாக் கல்வி - கலைகளையும் கற்று வாழ்வதோ, அனைத்து அறிவியல் படைப்புகளையும் பயன்படுத்தி வாழ்வதோ உண்மையான நாகரிகங்கள் ஆகா; இவை இருப்பினும் இல்லாவிடினும், அருட் கண்ணோட்டம் உடைமையே உயரிய உண்மையான நாகரிகமாகும் - என்பது தெளிவு. பேரிரக்கமாகிய - அருட் கண்ணோட்டமாகிய உண்மை நாகரிகத்திற்கு வள்ளுவர் கூறும் பெயர் ‘நயத்தக்க நாகரிகம்’ என்பதாகும். இந்த நயத்தக்க நாகரிகமே கெடிலக்கரை நாகரிகம்.
ஒருவரின் உடல்மட்டும் வளர்ந்திருத்தல் முழுவளர்ச்சி யாகாது; உடல் வளர்ச்சியுடன் அவருடைய உள்ளப் பண்பும் உயிராற்றலும் ஒருசேர வளர்ந்திருந்தாலே அவர் முழுவளர்ச்சி உடையவராக மதிக்கப்படுவார். அது போலவே, ஒரு நாடும் செல்வவளத்தால் வளர்ந்திருப்பது மட்டும் நாகரிகமாகாது; அதனுடன் கல்வி கலைகளாலும், உயர் ஒழுக்கப் பண்புகளாலும் வளர்ந்திருந்தாலேயே, அந்நாடு உயரிய உண்மையான முழு நாகரிகம் உடையதாக மதிக்கப்படும். பண்பால் வளராமல் செல்வத்தால் மட்டும் வளர்ந்திருக்கும் ஒரு நாட்டினும், செல்வத்தால் வளராமல் பண்பால் வளர்ந்திருக்கும் ஒருநாடு உயரிய நாகரிகம் உடையதாகப் போற்றப்படும். இந்த உயர் நாகரிகப் பண்பு பொதுவாகத் தமிழக முழுவதற்கும் உண்டு; சிறப்பாகக் கெடிலக்கரைக்கும் உண்டு.
கெடிலக்கரை நாகரிகத்தை விளக்கப் பொதுவாக இந்நூல் முழுதும் துணை புரியினும், சிறப்பாக இந்நூலிலுள்ள ‘கெடில நாட்டுப் பெருமக்கள்’ என்னும் தலைப்பு பெருந்துணை புரியும். ஒரு நாட்டின் உயர்வையோ அல்லது தாழ்வையோ அந்நாட்டின் வளத்தால் வரையறுக்க முடியாது; அந்நாட்டு மக்களின் பண்பாலேயே வரையறுக்க முடியும் என்னும் கருத்து அந்தத் தலைப்பின் தொடக்கத்தில் நன்கு விளக்கப்பட்டுள்ளது: (பக்கம் : 164-165) கெடிலநாடாகிய திருமுனைப்பாடி நாடு தன்னிடம் பிறந்தும் வாழ்ந்தும் சிறப்புற்ற பெருமக்களால் நாடுகளுக்குள் மிக்க பெருமைபெற்றுத் திகழ்கிறது என்னும் செய்தி இந்நூலில் பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பண்பு ஒரு காலத்தில் உயர்ந்திருக்கலாம்; இன்னொரு காலத்தில் தாழ்ந்து போகலாம். கெடில நாட்டின் பண்போ, அன்றுதொட்டு இன்றுவரை தாழவேயில்லை; வர வர உயர்ந்து வளர்ந்துகொண்டே யிருக்கிறது; இதற்குச் சான்று பகர, நமக்கு ஒரு தலைமுறைக்கு முன் நம் தந்தையார் - பாட்டனார் காலத்தில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க வள்ளலார் ஒருவரே போதுமானவர். இந்நூலில் ‘கெடில நாட்டுப் பெருமக்கள் வடலூர் வள்ளலார்’ என்னும் தலைப்பில் இராமலிங்க அடிகளாரைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் முழுதும் ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கன.
‘வடலூர் கடலூர் ஆகும்’ எனக் கூறிக் கடலூர் வட்டத்தில் உள்ள கடலூரில் வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் ஒரே உலகக் கண்கொண்டு ‘ஒருமை நன்னெறி இயக்கம்’ (சமரச சன்மார்க்க சங்கம்) கண்டார்; உலக மக்களை வேறு பிரிக்கும் சாதி - சமய சாத்திரப் பாகுபாடுகளைக் கடிந்தார்; எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி அருட்கண்ணோட்டம் செலுத்தினார்; இன்ன பிற உயரிய கோட்பாடுகளை மற்றவர்க்கும் அறிவுறுத்தித் தாமும் பின்பற்றி யொழுகினார். ஈண்டு, அவர் அருளிய,
“பித்தெலா முடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்த சன்மார்க்க
சங்கம் என்றோங்குமோ...”
“ஒருமையின் உலகெலாம் ஓங்குக வெனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்.”
“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே...”
“சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்”
“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணியுள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமெனநான் தேர்ந்தேன்...”
முதலிய அருட்பாக்கள் ஆழ்ந்து படித்து ஆராயத்தக்கன. வள்ளலார், மாந்தருக்குள் பாகுபாடு கருதாதது மட்டுமன்று உயிர்கட்குள்ளும் பாகுபாடு கருதினாரல்லர்: அதனால்தான் ‘எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி’ என்று மொழிந்தார். வள்ளலார் கொண்டிருந்த நயத்தக்க நாகரிகமாகிய அருட் கண்ணோட்டத்தின் எவரெஸ்ட் உயர் எல்லைக்குப் பின்வரும் பாடல் தக்க சான்று பகரும்:
“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைக ளாய்நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”
வள்ளலார், ஏழைகளாய் உடல் மட்டுமன்று உள்ளமும் இளைத்துப் போனவர்களைக் கண்டு தாமும் இளைத்துப் போனாராம்; பிணியினால் வருந்தினோரைக் கண்டு உள்ளம் துடிதுடித்தாராம்; வீடுதோறும் இரந்தும் பசிநீங்காது சோர்ந்து போன எளியோரைக்கண்டு உள்ளம் பதைபதைத்தாராம். அவரது அருள் உள்ளம் என்னே! அதனால்தான் வடலூரில் அறச்சாலை நிறுவி ஏழை எளியோர்க்கு உணவளிக்க ஏற்பாடு செய்தார்; அந்தப் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறறிவு பெற்ற உயர்திணையாகிய மக்களுயிரிடத்து வள்ளலார் அருட்கண் செலுத்தியிருப்பதனினும், ஓரறிவே உடைய அஃறிணை உயிராகிய பயிர்வகையிடம் அருட்கண்ணோட்டம் செலுத்தியிருப்பது பெருவியப்பிற்குரியது. ‘வா’டிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் உளம் நெகிழ்ந்து உரைத்திருப்பது, கல் நெஞ்சையும் கரையச் செய்கிறது. இதனினும் உயர்நாகரிகப் பண்பு இன்னும் என்ன வேண்டும்? இத்தகைய அருள்வள்ளலை உருவாக்கிய பெருமை திருமுனைப்பாடி நாட்டினுடையதாகும். வடலூர் வள்ளலார் கண்ட ஒருமை நன்னெறி இயக்கம் தமிழக முழுதுமட்டுமன்று தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் பரவிவருகிறது; வள்ளலார் பெயரால் ஆங்காங்கே மன்றங்கள் தோன்றிப் பணிபுரிகின்றன. வள்ளலாரின் அருட்பாக்கள் உலகம் முழுதும் பரவும் நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை. இதற்குரிய பெருமை கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டைச் சாரும்.
கெடிலக்கரை நாகரிகம்
‘ஒருமையின் உலகெலாம் ஓங்குக’ என வள்ளலார் கண்ட ஒரே உலகக் கொள்கையும், எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணியுள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் என அவர் கண்ட ஒத்துரிமைக் கொள்கையும் இன்று உயர்ந்த நாகரிகக் கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன. வள்ளுவனார் தண்ட நயத்தக்க நாகரிக உள்ளம் வளர்ந்தாலேயே, வள்ளலார் கண்ட ஒரே உலக ஒத்துரிமைக் கோட்பாடு வெற்றி பெற முடியும். என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும்; இதுதான் கெடிலக்கரை நாகரிகம்!
அணு குண்டுகளையும் நீரகக் (ஹைட்ரசன்) குண்டுகளையும் செய்து விறகு அடுக்குவதுபோல அடுக்கிவைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் படைக் கருவிகளைப் படைத்து வைத்துக்கொண்டு காலத்தை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் பாராளுமன்றங்களில் படித்த பெருமக்கள் நாற்காலி, மிதியடி முதலியவற்றைத் தூக்கியெறிந்து, ஒருவரோடொருவர் அடித்துப் பிடித்துக்கொள்ளும் இவ்வுலகில் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது போல, வெளியிலேயுள்ள வேண்டாத பிணக்குகளையெல்லாம், உலக நாடுகளின் ஒற்றுமைக் கழகமாகிய ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) மன்றத்திலும் புகுத்திப் போர் விளையாட்டு புரிகின்ற இவ்வுலகில் ஒருவரையொருவர் உயிரோடு அப்படியே எடுத்து விழுங்கிவிட முயலும் இவ்வுலகில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்’ நயத்தக்க நாகரிகம் நானூறு கோடி மக்களுக்கும் வேண்டும் என்னும் நல்லுரையை வடலூர் வள்ளலார் வாயிலாக நயமாக அறிவிக்கிறது கெடிலக்கரை நாகரிகம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” [2]என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முழங்கிய தமிழநாகரிகம் இன்றுவரையும் சிறிதும் ஒளிகுன்றாமல், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அளவுக்குக், கெடிலக்கரை நாட்டில் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. வாழ்க கெடிலக் கரை நாகரிகம்!
[3]“நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் -
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”
* * *
↑ Clive Bell’s Civilisation (Book)
↑ புறநானூறு - 192 கணியன் பூங்குன்றனார்.
↑ புறநானூறு - 187: ஒளவையார்.
பிற்சேர்க்கை:
மேற்கோள் நூல்கள்
நூற்பெயர் - ஆசிரியர் பெயர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
தொல்காப்பிய உரை - நச்சினார்க்கினியர்
நன்னூல்- பவணந்தி முனிவர்
நன்னூல் உரை - மயிலைநாதர்
யாப்பருங்கலக் காரிகை உரை - குணசாகரர்
அகப்பொருள் விளக்கம் - நாற்கவிராச நம்பி
சிறுபாணாற்றுப்படை - இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
மலைபடு கடாம் - இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார்
நற்றிணை - சங்கப் புலவர்கள்
குறுந்தொகை - சங்கப் புலவர்கள்
பதிற்றுப் பத்து - சங்கப் புலவர்கள்
அகநானூறு - சங்கப் புலவர்கள்
புறநானூறு - சங்கப் புலவர்கள்
புறநானூற்று உரைகள் - (உரையாசிரியர் சிலர்)
திருக்குறள் - திருவள்ளுவர்
திருக்குறள் உரை - பரிமேலழகர்
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்
சூளாமணி - தோலாமொழித் தேவர்
பெருங்கதை - கொங்கு வேளிர்
திருநாவுக்கரசர் தேவாரம் - திருநாவுக்கரசர்
சம்பந்தர் தேவாரம் - திருஞானசம்பந்தர்
சுந்தரர் தேவாரம் - சுந்தர மூர்த்தி
திருவாசகம் - மாணிக்கவாசகர்
திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்:
பெரிய திருமொழி - திருமங்கை யாழ்வார்
பெரிய திருமடல் - திருமங்கை யாழ்வார்
சிறிய திருமடல் - திருமங்கை யாழ்வார்
திருநெடுந் தாண்டகம் - திருமங்கை யாழ்வார்
முதல் திருவந்தாதி - பொய்கை யாழ்வார்
இரண்டாந் திருவந்தாதி - பூதத் தாழ்வார்
திருப்பாவை - ஆண்டாள்
நந்திக் கலம்பகம் - (பெயர் தெரியவில்லை)
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் - தொல்காப்பியத் தேவர்
ஆளுடைய பிள்ளையார்
திருக்கலம்பகம் - நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் - நம்பியாண்டார் நம்பி
திருத் தொண்டத் தொகை - சுந்தரமூர்த்தி
திருத் தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
பெரிய புராணம் - சேக்கிழார்
கம்பராமாயணம் - கம்பர்
நளவெண்பா - புகழேந்தி
விக்கிரம சோழன் உலா - ஒட்டக் கூத்தர்
தக்கயாகப் பரணி உரை - (உரையாசிரியர்)
கலிங்கத்துப் பரணி - சயங்கொண்டார்
சிவஞானபோதம் - மெய்கண்டார்
சிவஞான சித்தியார் - அருணந்தி சிவாசாரியார்
திருமுறை கண்ட புராணம் - உமாபதி சிவாசாரியார்
உண்மை விளக்கம் - மனவாசகங் கடந்தார்
வேதாந்த தேசிகர் நூல்கள் - வேதாந்த தேசிகர்
திருவயிந்திரபுர மும்மணிக் கோவை நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
நூற்றெட்டுத் திருப்பதி திருப்புகழ் - குரவை இராமாநுசதாசர்
இரட்டையர் பாடல் - இரட்டையர்
தில்லைக் கலம்பகம் - இரட்டையர்
திருவாமாத்துர்க் கலம்பகம் - இரட்டையர்
பட்டினத்தார் பாடல் - பட்டினத்தார்
திருப்புகழ் - அருணகிரிநாதர்
கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர்
வில்லி பாரதம் - வில்லிபுத்துரார்
பாரதம் - பாயிரம் - வரந்தருவார்
கந்தபுராணம் - கச்சியப்ப சிவாசாரியார்
ஆக்கினேய புராணம் - -
வடமொழி வைணவக் கந்த புராணம் - -
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
பெருந்தொகை - (புலவர் பலர் - தொகுத்தவர்: மு. இராகவையங்கார்)
தொண்டைமண்டல சதகம் - படிக்காசுப் புலவர்
தமிழ் நாவலர் சரிதை - (புலவர் பலர்)
தனிப்பாடல் திரட்டு - (புலவர் பலர்)
குரு பரம்பரை - (வைணவ ஆசாரியர்கள்)
நல்வழி - ஒளவையார்
நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்
செந்தில் நிரோட்டகயமக அந்தாதி - சிவப்பிரகாச சுவாமிகள்
திருவருட்பா - வடலூர் இராமலிங்க அடிகளார்
திருவெண்ணெய் நல்லூர்க் கலம்பகம்
திருநாவலூர்ப் புராணம் - இராசப்ப நாவலர்
திருவாமூர்ப் புராணம் - வாகீச பக்த நாவலர்
திருவதிகை மான்மியம் - சிவசிதம்பர முதலியார்
திருவதிகைப் புராணம் - சிவசிதம்பர முதலியார்
திருவதிகை உலா - சிவசிதம்பர முதலியார்
திருமாணிகுழிப் புராணம் - சிவசிதம்பர முதலியார்
திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - இலக்கணம் சிதம்பரநாத முனிவர்
கரையேறவிட்ட நகர்ப் புராணம் - சிவசிதம்பர முதலியார்
கரையேறவிட்ட நகர் கற்பக விநாயகர் இரட்டைமணிமாலை - சிரம்பரம் ஈசானியமடம் இராமலிங்க சுவாமிகள்
கறையேறவிட்ட நகர் திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணி மாலை - சிரம்பரம் ஈசானியமடம் இராமலிங்க சுவாமிகள்
கரையேற விட்ட நகர் கற்பக விநாயகர் பஞ்சரத்தினம் - இராசப்ப முதலியார்
முருகர் அந்தாதி - திருப்பாதிரிப் புலியூர் இரண்டாம் பட்டம் ஞானியார் அடிகளார்
திலகவதி அம்மைதுதி - திருப்பாதிரிப் புலியூர் ஐந்தாம் பட்டம் ஞானியார் அடிகளார்
கந்தர் சட்டிச் சொற்பொழிவுகள் - திருப்பாதிரிப் புலியூர் ஐந்தாம் பட்டம் ஞானியார் அடிகளார்
நாட்டுப் பாடல்கள் - (வழிவழி வந்தவை)
தென்னிந்தியக் கல்வெட்டுகள் - (வழிவழி வந்தவை)
ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு - ஆனந்தரங்கப் பிள்ளை
அபிதான சிந்தாமணி - சிங்காரவேலு முதலியார்
தமிழ் லெக்சிகன் - சென்னைப் பல்கலைக் கழகம்
தமிழாராய்ச்சி - எம். சீநிவாச அய்யங்கார்
கலைக் களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை
ஆனந்த விகடன் - (கிழமை இதழ்)
வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி - வின்சுலோ
A Sanskrit - English Dictionary - Sir Monier Monier Williams
Madras - District Gazetteers - South Arcot - Dr. B.S. Baliga, B.A. (Hons.,) Ph.D. (Lond.)
Mackenzie Manuscripts - Mackenzie
Clive Bells Civilisation - Clive Bell
கருத்துகள்
கருத்துரையிடுக