ஸ்பெயின் குழப்பம்
வரலாறு
Back
ஸ்பெயின் குழப்பம்
வெ. சாமிநாத சர்மா
ஸ்பெயின் குழப்பம்
1. ஸ்பெயின் குழப்பம்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
4. சர்மாவின் பொன்னுரைகள்…….
5. நுழையுமுன்…
6. பதிப்புரை
7. I வாழ்வும் தாழ்வும்
8. II ஏற்றமும் இறக்கமும்
9. III முடியரசின் ஆட்டம்
10. IV குடியரசுத் தோற்றம்
11. V எதிர்ப்பில் ஒடுக்கம்
12. VI அடக்கினால் அடங்குமா?
13. VII ஒற்றுமையின் உதயம்
14. VIII ஜூலை குழப்பம்
15. IX வல்லரசுகளின் கவலை
16. X சர்வாதிகாரமா? ஜன ஆதிக்கமா?
17. ஸ்பெயின் குழப்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வரலாறு
18. முக்கிய சம்பவங்கள்
19. பொதுக் குறிப்புகள்
ஸ்பெயின் குழப்பம்
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : ஸ்பெயின் குழப்பம்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 13
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல் பதிப்பு : 2006
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16+184=200
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 185/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 6.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய ‘தேச பக்தன்’ நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் ‘நவசக்தி’ கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் ‘சுயராஜ்யா’ நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான ‘பாரதி’யில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது ‘குமரி மலர்’ மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகை யல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்ச மாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை?’ முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
‘காரல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளி வந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜிஎழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய ‘லெட்சுமிகாந்தன்’, ‘உத்தியோகம்’, ‘பாணபுரத்து வீரன்’, ‘அபிமன்யு’ ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக ‘வளவன் பதிப்பகம்’ மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
சர்மாவின் பொன்னுரைகள்…….
- மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.
- பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.
- உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே; உயர்வு உன்னைத் தேடி வரும்.
- பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.
- மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர்.
- தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.
- உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.
- ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.
- கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.
- ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.
- எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;
- உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.
- நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.
- விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான்.
சில செய்திகள்……
ஸ்பெயின் குழப்பம்
- 1936இல் போர்க் கோலத்துடன் ‘ஸ்பெயின்’ நாட்டை முன்னிருத்தி அந்த நாட்டின் வாழ்வையும், தாழ்வையும் ஏற்றத்தையும், இறக்கத்தையம் சித்தரிக்கும் நூல். தமிழ்மக்கள் அரசியல் தெளிவு பெற எழுதப்பட்ட நூல். பாசிசம், நாசிசம், சர்வாதிகாரம் குறித்த கொடுங் கொள்கைகள் (மக்கள் நலன் பேணா கொள்கைகள்) ஸ்பெயின் குழப்பத்தின் துன்பச் சுவடுகள்.
- ஸ்பெயின் நாட்டு வரலாற்றையும், சமூக அமைப்பையும் விளக்கி சர்வாதிகார சக்திக்கும், மக்களாட்சிக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டத்தை உள்ளடக்கியது தான் ஸ்பெயின் குழப்பம்.
நமது ஆர்யவர்த்தம்
- புராதன காலம், வேதகாலம், இதிகாச காலம், பௌத்த காலம், மௌரியர் ஆட்சிகாலம், குப்த மன்னர் காலம் எனும் 6 தலைப்புகளை உள்ளடக்கி தேசிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட நூல்.
ஆசியாவும் உலக சமாதானமும்
- உலகில் நிலையான ஒற்றுமை ஏற்படுவதற்குகான பல காரணங்களை உள்ளடக்கி அந்த நிலையான ஒற்றுமை ஏற்படுவதற்கு ஆசியாதான் வழிகாட்ட வேண்டும்,, அதற்காகத் தகுதி ஆசியாவிற்குத்தான் உண்டு எனும் உணர்வை தம் நூலின் வாயிலாக ஆசியா கண்டத்தை வழிநடத்திச் செல்லும் தலைவர்களுக்கு வலியுறுத்தி எழுதப்பட்ட நூல்.
நுழையுமுன்…
ஸ்பெயின் குழப்பம்
1. ஸ்பெயின் நாட்டு மக்கள் தொகை இன்று 4 கோடி. பரப்பளவு 1.95 சதுர மைல். சிறிய நாடாயினும் உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாடு அது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் தென் அமெரிக்காவும் (பிரேசில் தவிர) அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு (ருளுஹ) தெற்கில் உள்ள வடஅமெரிக்கா பகுதியும் ஆட்சியின் கீழ் வந்தன. எனவே வடதென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஸ்பானிய மொழிபேசுவோர் உட்பட இன்று உலகில் அம்மொழி பேசுவோர் எண்ணிக்கை 33 கோடி. (சீனமொழி பேசும் 108 கோடி பேருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளோர் ஸ்பானிஷ் மொழி பேசுநரே.)
2. ஸ்பெயினில் முதலில் குடியேறியவர்கள் ஐபீரியர்கள், பாஸ்குகள், கெல்டுகள் ஆகிய இனக் குழுவினர் ஆவர். பாஸ்குகள் மொழியான யூஸ்கரா திராவிட மொழி எனவே கருதப்படுகிறது. எனவேதான் பாஸ்கு பகுதியி லிருந்து வந்த ஹீராஸ் பாதிரியார் (சிந்துவெளி நாகரிகமும் மொழியும் லிபியும் திராவிடருடையவை என நிறுவியவர் .தம்மை ஸ்பெயின் நாட்டு திராவிடன் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக உரையில் அறிவித்தது மன்றி நாவலர் இரா.நெடுஞ்செழியனுடைய சங்க இலக்கியப் புத்தக முதல் தாளில் , “ஐ , வாந ரனேநசளபைநேன யஅ ய னுசயஎனையைn கசடிஅ ளுயீயin. ழ.ழநசயள ளுது; 143-1942) என்று எழுதிக் கையொப்பமும் இட்டார். (மன்றம் பொங்கல் மலர்; மலர் 4 இதழ் 18; 14.1.1956)
3. வரலாற்றுக் காலத்தில் ஸ்பெயின் நாட்டை ஒன்றன்பின் ஒன்றாக ஆண்டவர்கள் வருமாறு:
கி.பி.711 வரை: கார்தேஜ்; ரோம்; விசி காத் இனத்தவர்
கி.பி.8-11 நூற்றாண்டுகள்: முகம்மதியர்
கி.பி.1200-1492: தனித்தனிகிறித்துவ நாடுகள்
1492-1808 : ஸ்பானியப் பேரரசு
1808-1833: அமெரிக்க காலனிகள் சுதந்தரம் பெற்றன
1873-1874: முதல் குடியரசு
1931-1939: இரண்டாம் குடியரசு
1936-1939: இரண்டாம் குடியரசை எதிர்த்து பிராங்கோ தலைமையில் வலது சாரிகள் உள்நாட்டுப் போர். இதனைப்பற்றித்தான் “ஸ்பெயின் குழப்பம்” நூலில் சர்மா எழுதியுள்ளார். அக்காலக்கட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பல-சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், ரீப்பளிகன்கள், அனார்க்கிஸ்டுகள் ஆகியோர் கையில் ஸ்பானிய மக்களாட்சி அரசு இருந்தது. அவர்களிடம் ஒற்றுமை இல்லை. மேலும் பிராங்கோவுக்கு நாசி இட்லரும் பாசிச முசோலினியும் உதவி செய்தனர். கம்யூனிஸ்டுகள் ஸ்டாலின் உருசியாவிடம் உதவி பெற்றபோதிலும் உள்நாட்டுப் போரில் ஏனைய இடது சாரிகளை ஒடுக்க முனைந்தனர். இங்கிலாந்து, பிரான்சு நாடுகள் பிராங்கோ படையை எதிர்க்க ஸ்பானிய மக்களாட்சி அரசுக்கு உதவியிருக்கலாம்; ஆனால் கோழைத்தனமாக மறுத்துவிட்டனர் உதவ. (அப்பாவி ஸ்பானிஷ் மக்கள் அரசை நாசிச பாசிசத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தும் பிரான்சும் அப்பொழுதே உதவியிருந்தால் இட்லர் முசோலினி அரசுகள் போக்கு மாறியிருக்கலாம்.)
1939-1975: சர்வாதிகாரி பிராங்கோ ஆட்சி
1975 முதல் 1980 : ஸ்பெயினில் மீண்டும் குடியரசு ஆட்சி. பாஸ்கு பகுதிக்கும் கடலாலினியாவுக்கும் ஓரளவு சுய ஆட்சி. (ஹரவடிnடிஅல)
4. 1936-1939ல் நடந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரில் 10 இலட்சம் ஸ்பானிய மக்கள் அநியாயமாக இறந்தனர். அவலமான இப்போரைப் பற்றிய அருமையான நூல் ஹ்யூ தாமஸ் (Hyu Thomas) (1963) எழுதிய என்பதாகும். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் (இட்லர், முசோலினியைப் பகைக்க அஞ்சி) ஸ்பானிய மக்களாட்சிக்குக் கைகொடுக்காத போதிலும், அந்நாடுகளின் ஆர்வலர் பலர் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஸ்பானிய அரசுப்படைகளுக்கு உதவியாக அந்நாட்டுக்குச் சென்று போரிட்டனர்; சிலரும் உயிரும் விட்டனர். அன்னார் சிலர் எழுதிய நூல்கள் இன்றும் படித்தால் பயன்பெறத்தக்கவை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ழடிஅயபந வடி உயவயடடிnயை (1938) ஆர்தர் கோஸ்லர் எழுதிய (1939) ஆகியவை அவற்றில் அடங்கும். எர்னஸ்ஹெமிங்வே எழுதிய என்பது இப்போரைப்பற்றிய சிறந்த புதினமாகும்.
நமது ஆர்யாவர்த்தம் (புராதன காலம்)
இந்திய நாகரிகத்தில் ஆரிய, சமஸ்கிருதச் சார்பான வற்றை மிகைப்படுத்தியும் தமிழ (திராவிட) சார்பான பெரும்பாலான வற்றைப் பற்றிச் சரியானபடி விளக்காமலும் இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. எனினும் சர்மாவின் நோக்கம் இந்தியர் ஒற்றுமையும், முன்னேற்றமுமேயாகும். இந்திய வரலாற்றில் தமிழ், தமிழரின் முக்கியமான பங்கைப் பற்றி இன்றைய ஆய்வின்படி உள்ள செய்திகளை அறிய பி.டி.சீனிவாச ஐயங்கார் (1929) நூல் தமிழர் வரலாற்றின் 2007 மொழி பெயர்ப்பில் மொழி பெயர்ப்பாளர் தந்துள்ள 70பக்க ஆய்வு முன்னுரையைக் காண்க.
பி.இராமநாதன்
பதிப்புரை
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!’ என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழி நடையாகவும், உத்தியாகவும் கொண்டு நல்ல கருத்தோட்டங் களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டு அறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.
கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்க விடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்பு களை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டு மென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், “ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்
தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.
சர்மாவின் நூல்கள் பலவும் வரலாறு சார்ந்தவை. அவை வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவை பற்றி இன்றைய வரலாற்றறிஞர் பார்வை என்ன என்பதை விளக்கும் முன்னுரை படிப்பார் களுக்குப் பயன்பதருவதாகும். இந்நூலுக்கும் ஏனைய இது போன்ற வரலாற்று நூல்களுக்கும் அறிஞர் பி.இராமநாதன் அவர்கள் நுழையுமுன் என்ற தலைப்பில் எழுதித் தந்துள்ளார். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவி யாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப் பட்டுயுள்ளேன்.
பதிப்பாளர்
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
I வாழ்வும் தாழ்வும்
1492- ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் மூன்றாந்தேதி வெள்ளிக் கிழமை. அன்று காலை நேரத்தில் பாலாஸ்1 துறைமுகத்தில் மூன்று கப்பல்கள் வரிசையாக நிற்கின்றன. அவற்றின் மீது ஸ்பெயின் தேசத்துக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. கப்பலிலுள்ளவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக அங்கு மிங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். நடுவேயுள்ள கப்பலில் ஒருவன் கம்பீர மாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரே பிடிவாதம். அவன் கண்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவனைப்பார்த்துக் கரையிலே யுள்ளவர்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவனும், தொப்பியைக் கழற்றி வைத்துக்கொண்டு, தலைகுனிந்து வணக்கஞ் செலுத்துகிறான். கப்பல்களும் நகரத் தொடங்கிவிட்டன.
அந்தக் கம்பீர புருஷன் யார்? அவன்தான் கொலம்பஸ்.2 எங்கே போகி றான்? புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க. அப்பொழுது ஸ்பெயின் தேசத்து அரசு கட்டிலில் அமர்ந்திருந்த இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள் கொலம்பஸுக்கு எல்லாவிதமான ஆதரவு களையும் கொடுத்து அனுப்பினார்கள். அவன், ஸ்பெயினுக்குப் பலபிரதேசங்களைச் சேர்த்துக் கொடுத்ததோடுகூட, தானும் அழியாத புகழைச் சம்பாதித்துக்கொண்டான்.
கொலம்பஸ் புறப்பட்ட வெள்ளிக்கிழமை, ஸ்பெயின் தேச சரித்திரத்திலே குறிப்பிடத்தக்க நாள். அன்று முதல், ஸ்பெயினின் நல்வாழ்வு உச்சநிலைக்கு ஏறத்தொடங்கியது. சுமார் இருநூறு வருஷகாலம் வரையில் ராஜ்ய விஸ்தீரணம், குடிவளம், இலக்கிய வளர்ச்சி முதலிய அனைத்திலும் ஸ்பெயின் முன்னணியில் நின்றது.
1936 ஆம் வருஷம் ஜூலை மாதம் பதினேழாந்தேதி, அதே வெள்ளிக் கிழமைதான்! ஆனால் அன்று ஸ்பெயின் தேசம் எவ்வளவு கோரமான காட்சி யளித்தது! ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொருவரும் கையில் ஆயுதந்தாங்கிப் போர்க்கோலத்துடன் நின் றார்கள். வீதிகளில் தலைகள் உருண்டன! பிணங்கள் குவிந்தன! ரத்தம் பெருக்கெடுத்தோடியது! ஆ! என்ன வீழ்ச்சி! 450 வருஷங்களுக்கு முன்னர், இந்த நாடு இருந்த சீரென்ன? இருபதாம் நூற்றாண்டின் முற்பாகத்தில் இதற்கு இத்தகைய கதி ஏற்படு மென்று இஸபெல்லா- பெர்டினாந்து தம்பதிகள் கனவிலேனும் கருவி யிருப்பார்களா?
வாழ்வு ஒரு காலம்! தாழ்வு ஒரு காலம்!
ஸ்பெயின் எங்கே யிருக்கிறது? ஐரோப்பாவின் தென் மேற்கு மூலையில். இதன் மூன்று பக்கங்களிலும் சமுத்திரம். வடக்கே பிரான்ஸ் தேசம். இந்தத் தீபகற்பத்தின் மேற்குப் பக்கந்தான் போர்த்துகல் என்ற தனி நாடு போர்த்துகலும் ஸ்பெயினும் சேர்ந்த இந்தத் தீபகற்பத்திற்கு ‘இபேரியன் தீபகற்பம்’1 என்று பெயர். ஸ்பெயினுக்குச் சொந்தமாக, மத்திய தரைக் கடலில் சில சிறிய தீவுகள் உண்டு. இவற்றிற்கு ‘பெலாரிக் தீவுகள்’2 என்று பெயர். அப்படியே, ஆப்ரிக்காவுக்கு வடமேற்கே அத்லாந்திக் மகா சமுத்திரத்தில் சில தீவுகள் இதற்குச் சொந்தம். இவற்றிற்கு ‘கானரி தீவுகள்’3 என்று பெயர். இவையனைத்தையும் சேர்த்து ஸ்பெயின் ராஜ்யத்தின் மொத்த விஸ்தீரணம் 196,607 சதுரமைல். மொத்த ஜனத் தொகை 24,583,096. அதாவது விஸ்தீரணத்தில் சென்னை மாகாணத்தை விடப் பெரியது. ஆனால் ஜனத் தொகையில் ஏறக்குறைய பாதிதான்.
இந்த ஸ்பெயின் தேசத்தை மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னர் பொனீஷியர்கள் என்பவர்கள் கைப்பற்றி, இதன் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்குப் பிறகு, ரோமர்கள் இந்த நாட்டைப்பிடித்து ‘தெய்விகத் தன்மை பொருந்திய ரோம ஏகாதிபத்திய’த்தோடு சேர்த்துக் கொண்டார்கள். இவர்களுக்குப் பின்னர் விஸிகோதியர்களின்4 விஜயம். இவர்களும் சுமார் 300 வருஷம் வரை தான் இந்த நாட்டைத் தங்கள் சுவாதீனத் தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் கி.பி. எட்டாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலே, மூர்கள் என்று அழைக்கப்பெறுகிற அராபியர்கள் இந்த நாட்டின் மீது படையெடுத்து இதனைத் தங்கள் கைவசப் படுத்திக் கொண்டுவிட்டார்கள். இதனால் விஸிகோதியர்கள், ஸ்பெயினின் வடபாகத்திலுள்ள மலைப்பிரதேசங்களில் போய்த் தஞ்சம் புகுந்தார்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள். மூர்களோ இஸ்லாம் மதத்தைப் பரப்ப முயன்றவர்கள்.
மூர்கள், ஸ்பெயினின் தெற்குப் பிரதேசங்களை ஒரு கட்டுப் பாட்டுக் குட்படுத்தி, சுமார் 700 வருஷகாலம் திறமையாக ஆண்டு வந்தார்கள். ஜனங் களுடைய நன்மையை நாடிப் பல காரியங்களைச் செய்தார்கள். இப்பொழுது கூட, ஸ்பெயின் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும் ஒருவன், அங்குள்ள கட்டிடங்கள், ஜனங்களின் பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் மூர்களின் ராஜ்யபார அடையாளம் கலந்து கிடப்பதைப் பார்க்கலாம்.
மூர்கள், ஸ்பெயினில் சுமார் 700 வருஷம் ஆட்சிபுரிந்து வந்த போதிலும் நிம்மதியான வாழ்க்கையை நடத்தவேயில்லை. வட பாகத்தி லிருந்த விஸிகோதியர்களுக்கும் இவர்களுக்கும் எப்பொழுதும் போராட்டந் தான். கடைசியில், கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டில், இவர்கள், ஸ்பெயினி லிருந்து அடியோடு விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள் இதற்குக் காரணமா யிருந்தவர்கள் இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள். இவர்கள் தான், கொலம்பஸுக்கு ஆதரவு அளித்து, புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க அனுப்பியவர்கள். இவர் கள்தான், தனித்தனியாகப் பிரிந்திருந்த நாட்டரசர்கள் எல்லாரையும் ஒன்று கூட்டுவித்து, மூர்களை எதிர்த்து நின்று போராடி வெற்றி கொண்டவர்கள். ஐரோப்பிய அரசியல் அந்தஸ்திலே ஸ்பெயினுக்கு ஒரு கௌரவ ஸ்தானத்தைச் சம்பாதித்துக் கொடுத்த பெருமையும் இவர் களுடையதுதான். ஆனால் இந்தப் பெருமையிலே, புகழிலே ரத்தக் கறைகள் நிறைந்திருந்தன. வேறு பல மாசுகளும் படிந்திருந்தன.
இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள் காலத்திலிருந்து, அதாவது பதினைந்தாவது நூற்றாண்டின் கடைசி பாகத்திலிருந்து பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்பெயினுடன் சேர்க்கப் பட்டனவென்பது உண்மைதான். ஸ்பெயினின் ஏகாதிபத்தியக் கட்டிடம் வளர்ந்தது என்பது நிஜந்தான். ஆனால் எத்தனை நாகரிகங்களினுடைய அழிவின்மீது? இதற்காக எத்தனை உயிர்கள் யமதர்மராஜனுக்குக் காணிக்கை செலுத்தப்பட்டன தெரியுமா? மெக்ஸிகோ என்ற நாட்டைக் கண்டுபிடித்து அதனை ஸ்பெயி னுடன் சேர்த்த கோர்டெஸ்1 என்பான் கூறுகிறான்:-
“தங்கத்தையும் உயர்ந்த உலோகப் பொருள்களையுமே நான் தேடிக் கொண்டிருந்தேன். இதன் காரணமாக ஏற்பட்ட சுதேசிகளின் அழிவைப் பற்றியோ, அந்த நாட்டு நாகரிகத்தின் சீர்குலைவைப் பற்றியோ நான் கவலை கொள்ளவில்லை.”
இவன் மெக்ஸிகோவைக் கைப்பற்றுவதற்காக, சுமார் ஒரு லட்சம் மெக்ஸிகர்களை அழித்துவிட்டான். இப்படித்தான் வேறு பல ஸ்பானியரும் கப்பல்களில் ஏறிக் கடல் கடந்து சென்று, ‘புதிய உலக’த்தின் புதிய தேசங்கள் பலவற்றைக் கண்டு பிடித்து ஸ்பெயி னுக்குச் சேர்த்துக் கொடுத்தார்கள்.
அது மட்டுமா? இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள், ஸ்பெயினின் கட்டுப்பாடு உடையாமலிருக்கவும் அதன் அரசியல் அந்தஸ்தை உயர்த்தவும் மதத்தின் துணையை நாடினார்கள். இவர்கள் காலத்திலும் இவர்களுக்குப் பின்னரும் மதத்தின் பெயரால், அந்தோ! எவ்வளவு அக்கிரமங்கள்? எத்தனை உயிர்களின் பலி? கி.பி. பதினைந்து, பதினாறு, பதினேழாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் மத அட்டூழியங்கள் பல நடைபெற்றபோதிலும், ஸ்பெயின் தேசத் தில்தான் இவை தலை விரித்தாடின. கத்தோலிக்க கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளை அங்கீகரி யாதவர்கள் எல்லாரும் ‘வேதப் புரட்டர்கள்’ என்று சொல்லிப் பலவிதஹிம்சை களுக்குட்படுத்தப் பெற்றார்கள். ஆங்காங்கு விசாரணை சபைகள் ஏற்படுத்தப் பெற்றன. இந்த மத விசாரணை சபைகள் சுமார் 300 வருஷகாலம்-பதினெட்டாவது நூற்றாண்டு வரை-ஸ்பெயினின் பலபாகங்களிலும் நிலை பெற்று கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றின! இந்த 300 வருஷகாலத்தில் சுமார் மூன்றரை லட்சம் பேர் சொல்ல முடியாத கஷ்டங்களை அநுபவித் தார்கள். சுமார் முப்பத்திரண்டாயிரம் பேர் உயிரோடேயே கொளுத்தப் பட்டிருக்கிறார்கள்! எல்லாம் மதத்தின் பெயரால்!!
இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகளின் தலைமுறையார் சுமார் 200 வருஷகாலம் ஆண்டு கொண்டிருந்தனர். கி.பி. 1700 ஆம் வருஷம் ஆண்டு வந்த அரசன் சந்ததியில்லாமல் இறந்துவிட்டான். இவனுக்குப் பின்னால் பட்டத்துக்கு யார் வருவதென்பதைப் பற்றி ஒரு போராட்டம் நடைபெற்றது. கடைசியில் போர்பன்1 வமிசத் தினர் சிங்காதனத்தில் அமர்ந்தார்கள். இந்தப் பரம்பரைதான்1931 ஆம் வருஷம் வரை ஸ்பெயினில் ஆண்டு வந்தது.
கி.பி. 1800 ஆம் வருஷம் நெபோலியன் ஸ்பெயின் மீது கண்ணோட்டம் செலுத்தினான். தன் சகோதரனை ஸ்பெயின் சிங்கா தனத்தில் அமர்த்த ஆசை கொண்டான். உடனே ஸ்பெயின் மீது யுத்தந்தான். இந்த யுத்த காலத்தில் ஸ்பானியர் காட்டிய வீரம், ஸ்பெயின் தேச சரித்திரத்திலே மிகச் சிறப்பான ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது.
நெபோலியன் படையெடுப்புக்குப் பிறகு ஸ்பெயினின் கட்டுப் பாடு குலைந்துவிட்டது. ஜனங்கள் தங்கள் உண்மை நிலையை அறியத் தொடங்கினார்கள். அரசனுக்காக போர் புரிந்தார் களா னாலும் முடியரசில் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அக்காலத்தி லிருந்தே ஜனங்கள் மனத்தில் குடியரசு எண்ணம் தோன்ற ஆரம் பித்தது. எனவே பத்தொன்பதாவது நூற்றாண்டு முழுவதிலும், ஸ்பெயினில் அரசனுக்கும் குடிகளுக்கும் போராட்டம், முதலாளி தொழிலாளி சச்சரவு முதலியன பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றி ருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லையல்லவா? தவிர, இந்த நூற்றாண்டின் மத்தியிலேயே பொதுவுடமைக் கொள்கைகள் ஸ்பெயினில் பரவ ஆரம்பித்தன. அரச பரம்பரையினர் அமர்ந்திருந்த ஆசனமோ அடிக்கடி ஆட்டங்கொடுத்து வந்தது. அதில் அமர்ந்திருந்தவர்களோ பலஹீனர்களாயிருந்தார்கள். தங்கள் உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதே இவர்களில் பலருக்குக் கஷ்டமாயிருந்தது.
இத்தகைய சிங்காதனத்திற்குரியவனாகவே 13வது அல் பான்ஸோ மன்னன் கி.பி. 1886 ஆம் வருஷம் பிறந்தான். இவன் பிறப்பதற்கு ஆறு மாதங் களுக்கு முன்னேரே இவன் தகப்பன் இறந்து விட்டபடியால் அரசுரிமை யுடனேயே இவன் பிறந்துவிட்டான். அதனால்தான் தனது வாழ்க்கையின் இடைக்காலத்திலேயே இவன் அந்த உரிமையை இழந்து விட்டான் போலும்! இவன் காலத்திலே ஸ்பெயினில் ஏற்பட்ட குழப்பங்கள் பல. இவன் கையாண்ட அடக்கு முறைகளும் பல. இவன் விக்டோரியா மகாராணியின் பெண் வயிற்றுப் பேத்தியாகிய ஈனா1 என்பவளை 1906 ஆம் வருஷம் விவாகஞ் செய்து கொண்டான். விவாக தினத்தன்றே இவன் உயிருக்கு உலை வைக்கப் பெற்றது. தெய்வாதீனமாகத் தப்பித்துக் கொண்டான். இதற்குப் பிறகு, இவனைக் கொலைசெய்ய நடைபெற்ற முயற்சிகள் பல. ஆனால் எல்லாவற்றினின்றுமே இவன் தப்பித்துக் கொண்டான். கடைசியில் இவன் 1931 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ஸ்பெயினை விட்டு வெளியேறிவிட்டான். இதனுடன் ஸ்பெயினில் முடியரசு மறைந்துவிட்டது. குடியரசு உதயமாயிற்று. ஆனால் இதனை அவ்வப்பொழுது மறைத்து வரும் மேகங்கள் தானெத்தனை?
II ஏற்றமும் இறக்கமும்
ஸ்பெயினிலே ஏற்றத்தாழ்வுகள் நிரம்ப உண்டு. இயற்கையிலே யாகட்டும், செயற்கையிலே யாகட்டும் இந்த வித்தியாசங்கள் பல படக் காணப்படுகின்றன. இதனாலேயோ என்னவோ, ஐரோப்பிய வல்லரசுகளின் ஆலோசனை மேடையில் இதற்கு ஒரு முக்கிய ஸ்தானம் கொடுக்கப் படவில்லை. ‘ஸ்பெயின் தேசம் ஐரோப்பாவிலே இருந்தாலும் ஐரோப்பாவினுடையதாக இல்லை’ என்று ஓர் ஆசிரியன், ஸ்பெயினின் நிலைமையை மிக அழகாகச் சுருக்கிக் கூறுகிறான்.
உயர்ந்த மலைத் தொடர்களுக்குப் பக்கத்திலே ஆழ்ந்த பள்ளத்தாக்குகள். செழுமையும் பசுமையும் நிறைந்த பூப்பிரதேசங்களின் அருகாமையின் வரண்டுபோன கட்டாந்தரைகள். ஜனநெருக்கம் ஒரு மாகாணத்தில்; அதற்குப் பக்கத்து மாகாணத்தில் ஜன நட மாட்டமே இராது.
ஜனங்களிடத்திலேயும் இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பல துறை களிலும் காண்கிறோம். ஏராளமான பூஸ்திதி படைத்த நிலச்சுவான் தார்களுக்குப் பக்கத்தில், நிலமே என்று ஏங்கி நிற்கும் லட்சக்கணக் கான ஜனங்கள் வாழ் கிறார்கள். ராஜபோகத்திலே வாழும் பெரிய மடாதிபதிகளின் முன்னே, கிராமப் பாதிரிமார்கள் பிச்சைக்காரக் கோலத்துடன் காட்சி தருகிறார்கள். கொழுத்த சம்பளம் வாங்கும் ராணுவத் தலைவர்களுக்குக் கீழே, வயிற்று ஜீவனத்திற்குக் கூட பற்றாத சம்பளம் வாங்கும் போர்வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் அறிவுத் துறையிலே கூட இந்த ஏற்றத்தாழ்வுதான். உலகம் புகழும் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், விஞ்ஞான சாஸ்திரிகள் முதலியோர் ஸ்பெயினிலே இருக்கிறார்கள். ஆனால் நூற்றுக்குச் சுமார் 45 பேர் எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள்.
நிருவாக சௌகரியத்திற்காக, ஸ்பெயினை ஐம்பது மாகாணங் களாக (ஜில்லாக்கள் போல)ப் பிரித்திருக்கிறார்கள். ஆனால் இயற்கை யிலேயே, இந்த நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ் வொரு பகுதி யினரும், தனித்தனி நாட்டினர் போலவே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்கள் பேசும் பாஷையும் வெவ்வேறு. பழக்க வழக்கங்களில் கூட மாறுபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக வடக்கேயுள்ள காடலான் மாகாணத் தவன் பேசும் பாஷையை, ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டி லுள்ளவர்கள் தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே கலீஷியா மாகாணத்தான், பாஸ்க் மாகாணத்தானை ஒரே மனப்பான்மை யுடன் சந்தித்துப் பேசமாட்டான். எப்படி இந்தியாவில் வசிப்பவர் அனைவரும் இந்தியர்கள் என்ற பரந்த எண்ணமில்லாமல், சென்னை மாகாணத்தான் என்றும், பஞ்சாப் மாகாணத்தான் என்றும், தமிழன் என்றும், தெலுங்கன் என்றும் மாகாணவாரியாகவும், பாஷைவாரி யாகவும் பிரித்துச் சிலர் பேசு கிறார்களோ அப்படியேதான், ஸ்பானி யர்களுடைய பழக்கமும். இதனாலேயே ஸ்பெயினை, ‘நாடுகள் பல அடங்கிய நாடு’ என்று சரித்திரக் காரர்கள் அழைக்கிறார்கள்.
வடக்கேயுள்ள காடலான் மாகாணம், பாஸ்க் மாகாணம், கலீஷியா மாகாணம் ஆகியவை, தங்களுடைய சுயேச்சைக்காக எப்பொழுதும் போராடி வந்திருக்கின்றன. இவற்றில் காடலான் மாகாணந்தான் செழிப்புள்ளது; கைத்தொழில்களில் அபிவிருத்தி யடைந்திருக்கிறது. இந்த மாகாணத் தலைவர்கள், தங்களை ஸ்பானியர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட காடலோனியர்கள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கிறார்கள். இந்த மாகாணத்தின் தலைநகராகிய பாரிஸிலோனா, மாட்ரிட்டைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காடலான் மாகாணத் தவர்கள், தங்களுடைய சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். கடைசியில் இவர்களுடைய மாகாண சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மாகாணத்திற்கென்று தனி பார்லி மெண்டு உண்டு. சட்டங்களை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வரும் அதிகாரங்கள் முதலியனவும் இதற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இனி, இந்த ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி நாம் சிறிது விவரமாகத் தெரிந்துகொண்டால்தான், 1936 ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள முடியும்.
ஸ்பெயின், இந்தியாவைப் போலவே ஒரு விவசாயநாடு. ஜனங் களிற் பெரும் பகுதியினர், விவசாயத்தின் மூலமாகவே தங்களுடைய ஜீவனத்தை நடத்துகிறார்கள். ஜனத்தொகையில், நூற்றில் 56 பேருக்கு விவசாயமே ஜீவனம்.
ஸ்பெயினில், நிலச்சுவான்தார்களுடைய ஆதிக்கம் பல தலை முறை களாக இருந்து வந்திருக்கின்றமையால், ஒரு சிலரிடத்தில் பெரும்பகுதி நிலங்ளும், பெரும்பாலோரித்தில் சிறுபகுதி நிலங்களும் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஸ்பெயினில் மொத்தம் 50 மாகாணங் களல்லவா? இவற்றில் 27 மாகாணங்களில், ஜனத்தொகையில் நூற்றுக்கு இரண்டு பேர்தான் நிலச்சுவான்தார்கள். ஆனால் இவர்களிடத்தில் நூற்றுக்கு 67 விகிதம் நிலங்கள் இருக்கின்றன. இதற்கு நேர்மாறாக, நூற்றுக்கு 76 பேரிடத்தில் நூற்றுக்கு 4¾ விகிதமே நிலங்கள் இருக்கின்றன. அநேக மாகாணங்களில், அந்தந்த மாகாணத்தின் பாதிபாகம், ஒரு சில நிலச்சுவான்தார்களுடைய சுவாதீனத்தில் இருக்கின்றது. இன்னொரு புள்ளி விவரத்தைக் கவனிப்போம். ஸ்பெயினில் மொத்தம் 8 லட்சம் விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு லட்சம் குடும்பங் கள்தான், அவைகளுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வரு மானத்தினால் ஜீவனம் செய்கின்றன. மற்ற 7 லட்சம் குடும்பங்களில் பாதி குடும்பங்கள், தங்களுக்கு விவசாயத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் போதாமல் வேறுவேலை களைச் செய்ய வேண்டியி ருக்கின்றது. மற்றப்பாதி குடும்பங்களோ, நிலமே இல்லாமல், மற்ற விவசாயிகளிடத்தில் கூலிவேலை செய்து பிழைக்கின்றன.
நிலச்சுவான்தார்கள், தங்களிடமுள்ள பூஸ்திதியில் ஒரு பாகத்தை, விவசாயத்திற்கே விடாமல், தாங்கள் வேட்டை யாடுவதற்கென்று, வேறுபல களியாட்டங்களுக்குரிய இடங்களாகவும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதனால், ஏராளமான பூப்பிர தேசங்கள் இருந்தபோதிலும், அவை பயன் படுத்தப் படாமலே கிடக்கின்றன. விவசாயத்திற்கு லாயக்கான மொத்த நிலவிஸ் தீரணத்தில் நூற்றுக்கு 40 பாகத்தில் தான், விவசாய உற்பத்தி செய்யப் படுகிறது. இதனால் என்ன தெரிகிறதென்றால், ஸ்பெயினில் அதிக மான நிலங்கள் இருக்கின்றன. அவைகளில் பொருள்களை உற்பத்தி செய்ய ஏராளமான ஜனங்களும் இருக்கிறார்கள். ஆனால் ஜனங்களுக்குத் தகுந்தபடி நிலங்களோ, நிலங்களுக்குத் தகுந்தபடி ஜனங்களோ ஈவு செய்யப்படவில்லை. இதனால் உழைத்துப் பிழைக்கத் தயாராயிருப்பவர்கள், நிலத்தை வைத்துக் கொண்டு அவற்றைப் பலருக்கும் பயன்படுத்தாத நிலச்சுவான்தார்களிடத்தில் அதிருப்தி கொள்ளலானார்கள். இந்த அதிருப்தியை அடக்க நிலச்சுவான் தார்கள் அரசாங்கத்தின் துணையை நாடியதில் என்ன ஆச்சரியம்?
ஸ்பெயினைப்பற்றி ஒரு பத்திரிகாசிரியன் வருணிக்கும்போது, ‘நாடில்லாத ஜனங்களைக்கொண்டது; ஜனங்களில்லாத நாடு இது’ என்று கூறினான். இஃது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது?
ஸ்பெயினில் கைத்தொழில்கள் அதிகம் இல்லை. காடலோனியா மாகாணத்தில்தான் நெசவுத்தொழில் முதலியன சிறிது நடைபெறு கின்றன. மற்ற மாகாணங்களில் நடைபெறும் கைத்தொழில்களில் பெரும்பாலான, அந்நியநாட்டாருடைய வசத்தில் இருக்கின்றன. எனவே முதலாளிகள் தங்கள் லாபத்தைக் கருதுவதும், தொழி லாளர்கள் தேசீய நன்மையை நாடுவதும் இயற்கைதானே. விளைவு என்ன? வேலை நிறுத்தம்! துப்பாக்கிப் பிரயோகம்! தொழிலாளர் அதிருப்தி!
எந்தத் தனி மனிதனையும் விட பல முள்ளது; எல்லாப் பணக் காரர் களையும் விட ஆடம்பர முள்ளது; அரசாங்கத்தைவிட அதிக அதிகார முடையது; ராணுவத்தைக் காட்டிலும் அதிகமாக வியா பித்துள்ளது. ஸ்பெயனில் இத்தகைய அதிசயம் ஒன்றைக் காணலாம். அஃது எது? அதுதான் பாதிரிமார்களின் ஆதிக்கம். ஸ்பெயினில் கந்தோலிக்க மதத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகம். மொத்த ஜனத்தொகையில் 35 ஆயிரம் பேர்தான் கத்தோலிக்கரல்லாதார். கிறிஸ்தவ மதத்தைப் பலாத்காரமாக வேரூன்றிச் செய்த பெருமை ஸ்பெயினைச் சேர்ந்ததல்லவா!
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவன் இத்தலியில் இருக்கிறார். அந்த நாட்டிலே கூட, இருபதினாயிரம் பேருக்கு ஒரு பாதிரி விகிதந்தான் இருக்கிறார். ஆனால் ஸ்பெயினில், தொள்ளாயிரம் பேருக்கு ஒரு பாதிரி. மொத்தம் ஸ்பெயினில் 106,734 பாதிரிகள் இருக் கிறார்கள். இத்தனை பேர் அதிகமாயிருப்பது கூட ஆச்சரியமில்லை. இவர்கள் ஒரு கட்டுப்பாடாக இருந்து, தேசத்தின் தலைவிதியை எழுதும் எழுத்தாளர் களாகவும் இருக்கிறார்கள். இவர்கள், ஜனங்களுடைய ஆன்மாவுக்கு மட்டு மல்ல, அவர் களுடைய உடலுக்குக்கூட காப்பாளர்களாக அமைந்து விட்டார்கள். இவர்கள் மதபோதகர்களாக மட்டுமில்லை. பள்ளிக்கூட ஆசிரியர் களாகவும், கைத்தொழில் முதலாளிகளாகவும், வட்டித்தொழில் செய் வோராகவும் இருக்கிறார்கள். தேசத்தின் மொத்த செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதிரிமடங்களை சேர்ந்தனவாயிருக் கின்றன. இந்தச் சொத்துக் களைப் பராமரிப்பதற்காக இவர்கள் எப்பொழுதும் முடியரசின் முக்கியத் தூண் களாக இருக்க வேண்டி யிருந்தது.
ஸ்பானியர்கள், பொதுவாகவே மதபக்தியுடையவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பக்தி, குருட்டு நம்பிக்கை களாகவே பரவியிருந்தது. ஸ்பெயின் தேசத்தில் ஒரு வழக்கம். அதாவது ஒருவன் இறந்துவிட்ட பிறகு, அவனுடைய ஆன்மா சாந்தி அடை வதற்கு, பாதிரி மார்களைக் கொண்டு பிரார்த்தனை செய்யச் சொல்வ துண்டு. ஒவ்வொரு பிரார்த்தனைக்கும், இவ்வளவு கட்டணம் என்று ஏற்பாடு செய்து இறந்து போகிறவர்களே, தங்களுடைய சொத்தில் ஒரு பாகத்தை உயில் எழுதி வைத்து விடுவார்கள். இதனால் இறந்து போனவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக ஆக, பாதிரி மடங்களின் சொத்துக்களும் பெருகிக் கொண்டு வந்தன. மனிதர்கள் இறக்கிறார்கள். ஆனால் மடங்கள் இறப்பதில்லை யல்லவா?
மற்றும், குடும்பங்களில் ஏதேனும் மதச்சடங்குகள் நடை பெற்றால், அப்பொழுது பாதிரிமார்கள் வந்து கூடுவார்கள். ஒவ் வொருவரும் தங்களுக்குரிய கட்டணத்தை வசூலிக்க முனைந்து நிற்பார்கள். ஆனால் மாதாகோவில்களில் நடைபெறும் தெய்வப் பிரார்த்தனைகளின்போது, பெயருக்காக ஓரிரண்டு பாதிரிமார்கள் இருப்பார்களே தவிர, அதிகமான பேர் காணப்பட மாட்டார்கள்.
ஸ்பெயினில் 1931 ஆம் வருஷம் வரை, அரசாங்கமும் மதமும் ஒன்றுபடப் பிணைக்கப் பட்டிருந்தபடியால், பாதிரிமார்களுக்குச் சட்ட பூர்வமாகவே சில சலுகைகள் காட்டப்பட்டிருந்தன.
இத்தகைய காரணங்களினால், மத பக்தி நிறைந்த ஸ்பானியர்கள், பாதிரிமார்களின் மீது துவேஷங்கொள்ள ஆரம்பித்தார்கள். பாதிரிமார்களோ, தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள எல்லா முறைகளையும் கையாண்டார்கள். இதற்காக அரசியலில் தலையிட்டார்கள். புதிய அரசியல் கட்சிகளை வகுத்துக் கொண்டார்கள்.
பாதிரி மடங்களுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் அதிகமான ஆதிக்கம் கொண்டிருப்பது ராணுவம். மற்ற ஐரோப்பிய நாடுகளி லுள்ள ராணுவங்களை விட, ஸ்பெயின் தேசத்து ராணுவம் பலவிதங் களிலும் தனித்துவம் வாய்ந்தது. எப்படியென்றால், ஸ்பானிஷ் ராணுவம் எந்த அந்நிய நாட்டு யுத்தத்திலும் வெற்றிபெற்றதே கிடையாது திறமையற்ற இந்த ராணுவத்திற்கு, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து செலவழிக்கப்பெறும் பணமோ ஏராளம். பொதுஜனங்களுடைய அபிலாஷைகளுக்கு இஃது எப்பொழுதுமே விரோதியாயிருந்து வந்திருக்கிறது.
இருபதாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே ஸ்பெயின் ராணுவத்திற்கு அதிகமான வேலை இல்லை. ஏனென்றால், அதற்கு முன்னரே, அமெரிக்காவுடன் யுத்தம் செய்து தனது குடியேற்ற நாடுகளை ஸ்பெயின் இழந்து விட்டது. எஞ்சி நின்றது மொராக்கோ பிரதேசம் ஒன்று தான். ஆனாலும், ராணுவத்தின் பலம் குறைக்கப் படவே யில்லை. எனவே, இது (ராணுவம்) தனது கவனத்தை உள்நாட்டில் செலுத்தத் தொடங்கியது.
1898 ஆம் வருஷத்திலிருந்து ஸ்பெயினில் தொழிலாளர் இயக்கம், குடியரசு எண்ணம் முதலியன வலுத்துந்தன. இவற்றினால் பாதிக்கப்பட்ட முடியரசினர், கைத்தொழில் முதலாளிகள், நிலச் சுவான்தார்கள், பாதிரிகள் முதலியோர் தங்களுடைய உரிமை களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ராணுவத்தின் துணையை நாடினார்கள். ராணுவ வர்க்கமும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, மேற்கூறியவர்களுக்கு உதவி செய்ய வேண்டியதாயிருந்தது. இவர்கள் அனைவரும் எப்பொழுதும் ஒரு கட்டப்பாடாகவே இருந்தார்கள். ஒருவருடைய ஆபத்திலே மற்றவர்கள் கைகொடுத்தார்கள். இந்தப் பரஸ்பர உதவியிலும் சுயநலந்தான். ஆம்; முதலாளித்துவமும் சுயநலமும் நெருங்கிய தொடர்புடையன வல்லவா? இந்தக் கூட்டத்தினர் அனைவரையும் ஒன்று சேர்த்தே, ‘பாசிஸ்டுகள்’ என்று பொதுவாக அழைத்தார்கள் அரசியல்வாதிகள்.
இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், ஸ்பெயினுடைய தேசீய வாழ்வின் எல்லாத் துறைகளிலும், பல வருஷங்களாகப் படர்ந்திருக்கின்றன. இவற்றைச் சமன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த கிளர்ச்சிகள் பல. இவற்றை அடக்க முற்பட்ட முயற்சிகளும் பல. இந்தக் கிளர்ச்சிக்கும் முயற்சிக்கும் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தி ருக்கிற போராட்டத்தின் ஒரு பகுதி வெளித் தோற்றந்தான் 1936 ஆம் வருஷ ஜூலை மாதத்துக் குழப்பம்.
III முடியரசின் ஆட்டம்
13-வது அல்பான்ஸோ மன்னன், தனது தகப்பனாருடைய மரணத்தின் நிழலிலே பிறந்தான். ஏற்கெனவே ஆட்டங் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிங்காதனத்தில் இவன் 1902ஆம் வருஷம் அமர்ந் தான். அதற்கு முன்னரே, ஸ்பெயினுக்குச் சொந்தமாயிருந்த குடியேற்ற நாடுகள் பலவும் சுதந்திரக் கொடியை நாட்டிவிட்டனவல்லவா?
இருபதாவது நூற்றாண்டு பிறந்தது. ஐரோப்பிய வல்லரசு களுக்கு, நாடு பெருக்க வேண்டுமென்ற ஆசையும் அதிகமாயிற்று. இந்த வல்லரசுகளின் கூட்டத்தில், அமெரிக்கா ஐக்கிய மாகாணமும் சேர்ந்து கொண்டு, ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த பிலிப்பைன் தீவுகள் முதலியவற்றைக் கைப் பற்றிக் கொண்டது. ஸ்பெயினின் ஏகாதிபத்தியக் கட்டிடம் இங்ஙனம் சரிந்து விழுந்து விட்டதற்கு முடியரசும், அதனைத் தாங்கி நின்ற முதலாளி வர்க்கமுமே காரணம் என்று பொது ஜனங்கள் நினைத்துவிட்டார்கள். அமெரிக்காவுடன் போராடித் தோல்வியடைந்து தாய் நாட்டுக்குத் திரும்பி வந்த ஸ்பானியத் துருப்புகள், மனக் கொதிப்புடனிருந்தார்கள். இந்தக் கொதிப்பிலே, இந்த அதிருப்தியிலே ஒரு புதிய உணர்ச்சி உண்டா யிற்று. இந்த உணர்ச்சி, முடியரசுக்கு எதிர்ப்பாக வளர்ந்தது. இளைஞர் இயக்கங்கள் பல தோன்றின. சுதந்திர வேகம் நிரம்பிய பல இலக்கியங்கள் உண்டாயின.
குடியேற்ற நாடுகள் பல தனித்துச் சென்றுவிட்டமையால், கைத் தொழில் முதலாளிகள், பெரிய வியாபாரிகள் முதலியோர், பண வருவாய்க்கு உள் நாட்டிலேயே புதிய வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். புதிய கைத்தொழிற்சாலைகள் பல ஸ்தாபிக்கப் பட்டன. குடியேற்ற நாடுகளிலே போட்டிருந்த பணத்தை யெல்லாம் திருப்பிக் கொணர்ந்து, இந்த ஸ்தாபனங் களிலே போட்டார்கள் முதலாளிகள். இந்தக் கைத்தொழிற் ஸ்தாபனங்களின் சுறு சுறுப்பைக் கண்டு, அந்நிய நாட்டு முதலாளிகளிற் சிலரும், ஸ்பெயினில் வந்து தொழில் நடத்த ஆரம்பித்தார்கள். இங்ஙனம் தொழிற் ஸ்தாபனங் கள் வளர்ந்து கொண்டு வந்தமையால், இந்த வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தொழிலாளர்களுடைய செல்வாக்கும் அதிகமாயிற்று. இவர்கள் முடியரசுக்கு விரோதமாகத் தோன்றிய இயக்கங்களில் கலந்து கொண்டார்கள். முதலாளிகள், பாதிரிமார், ராணுவ வீரர் முதலியோர், முடியரசைத் தாங்கி நிற்போராயினார். மத்திய வகுப்பார், நகரத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர், கிராம விவசாயிகள் முதலியோர் குடியரசுக்கு அடிகோலுவோராயினார். முடியரசு விளக்கு அணையாமலிருக்கும் வண்ணம் அதற்கு வெளிச்சங் கொடுத்துக் கொண்டிருந்தது முதலாளி வர்க்கம். இந்த இரவல் வெளிச்சத்தைக் கொண்டு முடியரசு எத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்?
1909 ஆம் வருஷம் தொழிலாளர் இயக்கம் வலுத்து நின்றது. முடியரசுக்கு விரோதமாகத் தோன்றிய கிளர்ச்சிகளில் தொழிலாளர் கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த வருஷம் பார்ஸிலோனாவில்,1 மிகப் பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் ஒன்று நடைபெற்றது. இது மேலுக்குத் தொழிலாளர் வேலை நிறுத்தமாகச் சொல்லப்பட்ட போதிலும், உண்மையில் முடியரசுக்கு விரோதமான புரட்சிக்காரர்களுடைய கிளர்ச்சி யாகவே இருந்தது. பார்ஸிலோனாவில் ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தம், ஸ்பெயின் முழுவதும் பரவியது.
உண்மையில் தொழிலாளர்களுக்கும் நிரம்ப அதிருப்தி இருந்தது. தேசத்தின் பொருளாதார நிலை அவ்வளவு சீர் கேடாயிருந்தது. இத னோடு, முடியரசுக்கு விரோதமான உணர்ச்சியும் கலந்து கொண்டது. கேட்க வேண்டுமா? மூன்று நாட்கள், அரசாங்கத் துருப்புகளுக்கும் தொழிலாளர் களுக்கும் வீதிகளில் கை கலந்த சண்டை. அரசாங்கத் தார் தேசமெங்கும் ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தனர். வேலை நிறுத்தம் முடிவடைந்தது. அடக்கு முறையும் தற் காலிகமாகப் பலித்தது.
ஆனாலும் பிரதி வருஷமும் வேலை நிறுத்தங்கள் அதிகமாகிக் கொண்டு வந்தன. பாமர ஜனங்களின் பொருளாதார நிலை சீர் கெட்டிருக் கிறபோது, அஃது எவ்விதமாக வேனும் வெளித்தோன்றத் தானே வேண்டும்.
1914 ஆம் வரும் ஐரோப்பிய யுத்தம் தொடங்கியது. ஸ்பெயின் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் எல்லாக்கட்சி யினருக்கும் யுத்தச் சாமான்களைத் தயார்ப்படுத்தி விற்பனைசெய்ய இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே தொழிற்சாலைகளின் யந்திரங்கள் சுறுசுறுப்பாக ஓடின. முதலாளிகள் அதிக லாபங் கண்டார்கள். அதிக லபாபத்திற்குத் தகுந்த மாதிரி தங்களுடைய கூலி விகிதமும் உயர்த்தப் படவேண்டுமென்று தொழிலாளர்கள் கேட்டார்கள். முதலாளிகள் எளிதில் சம்மதிக்கிறார்களா? பிணக்கு தான். போராட்டந்தான்.
ஆனால் இந்த யுத்தச் செழிப்பின் வேகம் நீடித்து நிற்க வில்லை. 1916 ஆம் வருஷம், ஸ்பெயினில் உணவுப் பொருள்களின் விலை ஏறி விட்டது. இதனால் ஏழை மக்களின் பாடு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்க அரசாங்கத்தார் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தொழிலாளர்கள் கேட்டார்கள். ‘செவிடன் காதிலே ஊதின சங்கு’தான். 1916 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி, ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசாங்கத்தார் சிறிது பணிந்து கொடுத்தனர். ஆனால், இந்தப் பணிவு, தொழிலாளர்களுக்கு நிரந்தரமான நன்மையைத் தரவில்லை.
தொழிலாளர்களின் வாழ்க்கை அந்தஸ்து குறைந்த பட்சம் இத்தன்மையதாகத்தான் இருக்க வேண்டுமென்று சட்ட பூர்வமாக நிர்ணயித்து விடுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக, 1917ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 27ஆம் தேதியிலிருந்து பெரிய தொரு வேலை நிறுத்தம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முடி யரசுக்கு விரோதமான எண்ணங்கள் பகிரங்க மாக வெளியிடப் பெற்றன. ஏகாதிபத்தியத்தைக் காலத்திற்கேற்ற முறையில் திருத்திய மைத்தால் தான். அஃது இன்னும் சிறிது காலம் உயிரோடு இருக்க முடியும் என்று கருதிய ஏகாதிபத்தியவாதிகள் கூட, அரசாங்கத்தைக் குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு புறம் தொழிலாளர் கிளர்ச்சி! மற்றொரு பக்கம் குடியரசு உணர்ச்சி! வேறொரு சார்பில் உலக வல்லரசுகள் வளர்ந்து வரும் காட்சி இவை களினிடையே, ஸ்பெயின் தேசத்து முடியரசின் பிற் போக்கான தன்மை நன்றாகப் பிரகாசித்தது.
இந்தக் காலத்தில், 1917ஆம் வருஷத்தில், ஸ்பெயின் தேசம் இருந்த நிலைமையை வருணித்து, அல்பான்ஸோ மன்னனுக்கு, அவனுடைய நண்பனும் பிரபல பத்திரிகாசிரியனுமான லியா போல்டோ ரோமியோ1 என்பான் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறான்:-
“தற்கால ராணுவத்திற்குத் தேவையான அமிசங்கள் எதுவும் ஸ்பெயின் ராணுவத்தினிடம் இல்லை. கப்பற் படையோ, துறை முகங்களிலே நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கும் கலகக்கட்சியாக இருக்கிறது. நீதியென்பது, நீதிபதி களின் விருப்பத்திற்கிணங்க, நீதி மண்டபங்களில் கூடும் சில அன்பர் களின் கூட்டமாகவே இருக்கிறது. பாதிரிமார் களிலிருந்து பீரங்கிகளையும், பீரங்கிகளிலிருந்து பாதிரிமார் களையும் உற்பத்தி செய்யக் கூடிய திறன்வாய்ந்த பெரிய மனிதர்களுடைய தயவினால் அபிஷேகம் செய்யப்பட் டிருக்கும் ஒரு சிலர் நிருவகிக்கிற ஸ்தாபனமாகவே கிறிஸ் தவமடங்கள் இருக்கின்றன. அதிகாரவர்க்கமோ, அதிகாரத் தைத் துஷ்பிரயோகம் செய்வதின் உற்பத்தி ஸ்தானமாயி ருக்கிறது. பார்லிமெண்டோ, காலத்தை வீணாக்குவதற்குத் தகுந்த இடமாயிருக்கிறது.”
1918 ஆம் வருஷம் பிறந்தது முடியரசு அதிகமாக ஆடத் தொடங்கியது. இந்த வருஷத்திலிருந்து 1923 ஆம் வருஷத்திற்குள், ஐந்து வருஷ காலத்தில், மொத்தம் பன்னிரண்டு மந்திரிச் சபைகள் மாறியிருக்கின்றன வென்ப தொன்றைக் கொண்டே, அரச முடியின் நிலையற்ற தன்மை நன்கு புலனாகும். இப்படி மாறிமாறி அமைந்த ஒரு மந்திரிச் சபையாவது, வளர்ந்து கொண்டுவந்த தொழிலாளர் களின் மனக்கசப்பையோ, குடியரசுக்குச் சாதகமாக நடந்துவந்த கிளர்ச்சியையோ சிறிது கூட அடக்க முடியவில்லை.
இந்தக் காலத்திலேதான் இத்தலியிலிருந்து ‘பாசிஸம்’ என்ற கூக்குரல் கேட்க ஆரம்பித்தது. இந்த வார்த்தை ஸ்பானியர்களுக்குப் புதிதாக இருந்த போதிலும், இஃது அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. இத்தலியில், பெயருக்கு அரசன் இருந்த போதிலும், எல்லாக் காரியங் களையும் முஸோலினியே சர்வாதிகாரியாக இருந்து நடத்துகிற விவரங்கள் ஸ்பெயினுக்கு எட்டின. பார்த்தான் அல்பான்ஸோ மன்னன். தானும் ஒரு சர்வாதிகாரியை நியமித்து அவனிடத்திலே எல்லாப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து விட்டுத் தனது மணி முடியைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்தான்.
அல்பான்ஸோ மன்னனின் பொறுப்பு, ஜனங்களின் ஆத்திரம், இவை களுக்கிடையே பிரிமோ-டி-ரிவேரா1 1923 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி சர்வாதிகாரியானான். ‘தாய்நாடு, முடியரசு, கிறிஸ்தவ மதம்’ இவை மூன்றுமே இவன் கொண்ட கொள்கைகள். இவன் பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் சட்டத் திற்கு மதிப்பே கிடையாது. பலாத்காரச் செயல்கள் பல நிகழ்ந்தன. அரசாங்கப் பொக்கிஷம் காலியாயிருந்தது. அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறதாவென்ற கேள்வியை ஜனங்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் பணக்காரர்கள், நிலச்சுவான் தார்கள், பாதிரிமார்கள், முடியரசைத் தாங்கிய உத்தியோகஸ்தர்கள், ராணுவத் தலைவர்கள் முதலியோர், ரிவேரா சர்வாதிகாரியானதைக் கேட்டு, ‘நிம்மதி என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டார்கள்.’
ரிவேரா, தனது முதல் மந்திரிச் சபையை, ராணுவத் தலைவர் களைக் கொண்டே நிரப்பினான். ராணுவத் தலைவர்கள், அரசியலில் தலையிட்டு, எங்குக் குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்களோ வென்று கருதியே, ரிவேரா, அவர்களைக் கொண்டே மந்திரிச் சபையை அமைத்து, அவர்கள் மீது பொறுப்பைச் சுமத்திவிட்டான். பிறகு, 1925ஆம் வருஷத்தில்தான், போர்த் தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் சேர்த்து மந்திரிச் சபை அமைத்தான். இதன் பிறகு, அபேதவாதிகளையும் மந்திரிச் சபையில் சேர்த்துக் கொண்டான். இவர்கள் அனைவருடைய துணை கொண்டு, பொதுவுடமைக்கட்சியை நசுக்கினான்.
ரிவேரா, சர்வாதிகாரியா வந்த பிறகு, இத்தலியுடன் சிநேக உடன்படிக்கை செய்து கொண்டான். அப்பொழுதிருந்தே, முஸோலினி, பல அறிஞர்களை ஸ்பெயினுக்கு அனுப்பி, பாசிஸத்தின் மேன்மை களை வலியுறுத்திக் பிரசாரஞ் செய்வித்தான். இதற்கு, ரிவேராவின் பூரண ஆதரவும் இருந்தது. அந்தக் காலத்திலேயே முஸோலினிக்கு எதியோப்பியாவின் மீது கண்ணிருந்ததா, மத்திய தரைக்கடலில் செல்வாக்குத் தேடிக்கொள்ள வேண்டு மென்ற எண்ணம் அப் பொழுதே உண்டாயிற்றா என்பவைகளை இப்பொழுது நிர்ண யித்துக் கூற முடியாது.
ரிவேராவின் சர்வாதிகார ஆட்சி ஆறு வருஷங்களுக்கு மேல் நீடித்து நிலைக்க முடியவில்லை. இதற்குக் காரணங்களென்ன? இத்தலியிலும் ஜெர்மனியிலும் இந்தச் சர்வாதிகார ஆட்சி நிலை பெற்றிருக்க, ஸ்பெயினில் மட்டும் ஏன் முடியாமற் போகவேண்டும்?
முதலாவது, முஸோலினிக்குக் கறுப்புச் சட்டைப் படையினரும், ஹிட்லருக்குப் பழுப்புச் சட்டைப் படையினரும் பக்கபலமாக இருந்தனர். ரிவேரா, இத்தகைய ஸ்தாபனம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் தனக்குத் துணையாயிருக்க ‘தேசீயக் கட்சி’யென்ற பெயருடன் ஒரு கட்சியை அமைத்துக் கொள்ளப் பார்த்தான். பயனடையவில்லை.
தவிர, தனி உரிமை வேண்டி நின்ற காடலோனியர்களை இவன் விரோதித்துக் கொண்டான். காடலோனிய பாஷையை எங்கும் உபயோகிக்கக் கூடாதென்று தடுத்துவிட்டான்.
அபேதவாதிகளும், பொதுவுடமைக் கட்சியினரும் சேர்ந்து, ரிவேராவின் சர்வாதிகாரத்திற்கு விரோதமாகப் பல கிளர்ச்சிகள் செய்தார்கள். அவற்றை இவன் நிர்த்தாட்சண்யமாக அடக்கிப் போடவில்லை. தாட்சண்யம் பார்க்கிற ஒருவன், வெற்றியுள்ள சர்வாதிகாரியாக இருக்க முடியுமா? மற்றும் இவன் ராணுவத்திற்குச் சில சலுகைகள் காட்டி அதன் தயவைச் சம்பாதித்துக் கொள்ளப் பார்த்தான். அது நேர்மாறான பலனை அளித்தது. ராணுவத்தின் பீரங்கிப் படையினர் இவனுக்கு விரோதமாகக் கிளம்பிவிட்டனர்.
1928ஆம் வருஷத்திய உலகப் பொருளாதார மந்தம் ஸ்பெ யினையும் தாக்கியது. நாணயத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. ஜனங் களுடைய அதிருப்தி அதிகமாயது. ரிவேராவின் பலஹீனத்தையும் ஜனங்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். யாராருக்கு இவன் சலுகைகள் காட்டி வந்தானோ அவர்கள் எல்லாரும், அதாவது ராணுவத் தலைவர்களும் பாதிரிமார்களும் இவனுக்கு விரோத மானார்கள். இவர்களை அடக்கியாளப் போதிய திறமை ரிவே ராவுக்கு இல்லை. இதனால், ஜனங்கள் இவனிடத்தில் முதலில் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
பொதுவாகவே, ஸ்பானியர்கள் அடிக்கடி மாற்றங்களை விரும்பும் சுபாவமுடையவர்கள். அவர்களுக்கு ஏதேனும் புதுமைகள் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். ரிவேரா, இந்தச் சுபாவத்தை அறிந்து நடந்தானில்லை.
1928ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ஒரு புதிய அரசியல் திட்டம் வகுத்து அதனை ஜனங்கள் முன்னிலைப்படுத்தித் தேர்தல் நடத்த வேண்டுமென்றும், இதன் மூலமாக ஜனங்களுடைய அதிருப்தியைச் சிறிதளவேனும் குறைக்கலாமென்றும் ரிவேரா, அல்பான்ஸோ மன்னனுக்கு ஆலோசனை கூறினான். ஆனால் அரசன் இதற்கு இணங்கவில்லை.
இந்த நிலையில் ரிவேரா என்ன செய்திருக்கவேண்டும்? ‘தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேனோ?’ வென்று அரசனை யல்லவோ கேட்க வேண்டும்? அதனை விடுத்து தரைப் படை, கப்பற் படை முதலிய ராணுவ உத்தியோகஸ்தர்களுடைய நம்பிக்கையை நாடினான். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பினான். இதனை அரசனுக்குத் தெரிவிக்கவுமில்லை. ராணுவத் தலைவர்களோ, இவனுடைய வேண்டுகோளுக்கு மௌனஞ் சாதித்துவிட்டனர். இதை இவன் எதிர்பார்க்கவேயில்லை. இது காரண மாக அரசனுக்கும் ரிவேராவுக்கும் பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டது. கடைசியில் 1930 ஆம் வருஷம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ரிவேரா, தனது சர்வாதிகாரப் பதவியினின்று விலகிக் கொண்டான்.1
இவனுக்குப் பிறகு, பெரெங்குயர்2 என்பவனையும் அஸ்நர்3 என்பவனையும், முறையே சர்வாதிகாரிகளாக நியமித்து, தனது அரச பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அல்பான்ஸோ முயன்றான். இதற் காக, ஒன்றுபட முடியாத அரசியல் கட்சிகளைக்கூட ஒன்று படுத்தித் தனக்குப் பக்கபலமாக இருக்கச் செய்தான். ஆனால், தேசத்திலே முடியரசுக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டுவந்தது. சட்ட ரீதியான அரசாங்கத்தை ஏற்படுத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான் அரசன். விசேஷ உத்திரவுகள் மட்டும் பிறந்து கொண்டிருந்தன. அரசனுடைய விசேஷ உத்திரவுகளைக் கொண்டு எவ்வளவு கால அரசாங்க யந்திரத்தை நகர்த்திக் கொண்டிருக்க முடியும்? தேசத்தின் பல பாகங்களிலும் வேலை நிறுத்தங்கள்! குழப்பங்கள்! ஜனங்கள், பசிப்பிணியாலும், வரிச் சுமையாலும் முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள். ‘வீழ்க அரசன்’ என்ற ஆரவாரம் தேசமெங்கும் எதிரொலி செய்தது.
முடியரசின் கௌரவம் கீழ் நோக்கிப் போய்க் கொண்டி ருந்தது. எந்த நிமிஷத்திலேனும் அது, மீட்க முடியாத பாதாளத்தில் விழுந்துவிடக்கூடும் என்பதை அல்பான்ஸோ அரசன் உணர்ந்து விட்டான். ஆனால் பதவி மோகம் யாரை விட்டது?
குடியரசுக் கட்சித் தலைவர்கள், இதுதான் சமயமென்று எண்ணித் தங்களுக்குள்ளிருந்த அபிப்பிராய பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமையுடன் முடியரசைத் தாக்கத் தீர்மானித் தார்கள். ஸான் ஸெபாஸ்டியன் என்ற ஊரில் 1930ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி, இவர்கள் ஒரு சிறு கூட்டம் கூடினார்கள். இதற்கு, ஜமொரா,1 லெர்ரு,2 மவ்ரா3 முதலியோர் வந்திருந்தார்கள். குடியரசுத் திட்டத்தை வகுத்தார்கள். இதற்கு முதற்படியாக, நாடெங்கும் வேலை நிறுத்தங்களை ஏற்பாடு செய்வ தென்றும், இதற்காகவும் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள் வதற்கும் ராணுவத்தின் துணையை நாடுவதென்றும் தீர்மானித்தார்கள். ஆனால் இவர்களுக்குள்ளேயே பரஸ்பர அவநம்பிக்கை இருந்தது. ஒரே சமயத்தில் தேசத்தில் புரட்சியை உண்டு பண்ணுவதென்று இவர்கள் திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் பரஸ்பர அவநம்பிக்கை காரணமாக 1930ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி, ஜாகா என்ற ஊரில், தளபதி கலான்4 என்பவன் புரட்சிக்குக் கிளம்பிவிட்டான். மற்றவர்கள் தயாராக வில்லை. எனவே, கலான் புரட்சி விபரீதமான தோல்வியில் முடிந்தது. இவன், மரண தண்டனை விதிக்கப்பட்டான். இன்னும் பலர் பீரங்கி வாயில் வைத்துச் சுடப் பட்டார்கள்.
இச்சமயத்தில், அரசாங்கத்தின் பிரதம மந்திரியாயிருந்த அஸ்நர் என்பவனிடத்தில் அவ நம்பிக்கை கொண்டு 1931ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அல்பான்ஸோ மன்னன், குவெர்ரா5 என்பவனை அழைப்பித்து, அரசாங்கத்தை நடத்துமாறு கூறினான். ஆனால் இவன் மறுத்து விட்டான். இந்த குவெர்ரா 1929 ஆம் வருஷம் ரிவேராவுக்கு விரோதமாகக் கலகஞ் செய்தவன். இதற்காகப் பத்து மாதம் சிறைவாசத்தையும் அநுபவித்தவன். ஆனால் ஆபத்திலே இன்னாருடைய துணையைத்தான் நாடுவதென்கிற நியதிகூடப் போய்விடுகிறதல்லவா?
1931ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஸ்பெயின் முழுவதும் ஸ்தல ஸ்தாபன தேர்தல்கள் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தத் தேர்தலின் மூலமாகவே, தங்கள் அரசியல் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று ஜனங்கள் தீர்மானித் தார்கள். குடியரசா முடியரசாவென்பது தான் இப்பொழுது நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம். குடியரசுக்கட்சியினர் பலத்த பிரசாரஞ் செய்தனர். ‘நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஓட்டும் முடியரசின் இதயத்திலே பாயும் ஓர் அம்பு’ என்றெல்லாம் கூறினர். தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 5,446,000 வாக்காளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் குடியரசுக்குச் சாதகமாக ஓட் கொடுத்தார்கள். குடியரசுக் கட்சியினர், 972 ஸ்தானங்களைப் பெற்றார்கள். முடியரசுக் கட்சியினருக்கோ 595 ஸ்தானங்கள்தான் கிடைத்தன. ஒரே நாளிலே, ஜனங்களின் மனப்பான்மை எப்படி மாறிவிட்டது! அரசன் வேறு, தேசம் வேறு என்று கருதி விட்டார்கள்!
இனி என்ன செய்வது? பலாத்காரத்தின் துணை கொண்டு தான், சிங்காதனத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டு மென்று, அல்பான்ஸோவுக்குச் சிலர் ஆலோசனை கூறினர். அது லேசான காரியமா? தேசமுழுவதையு மன்றோ விரோதப் படுத்திக் கொள்ள வேண்டும்?
இரண்டு நாட்கள் தியங்கி நின்றான் அரசன்!
1931ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி மாலை 6.30 மணி. அல்பான்ஸோ மன்னன், தனது மந்திரிமார்களுடன், இனிச் செய்யவேண்டுவ தென்ன வென்பதைப்பற்றி ஆலோசித்துக் கொண் டிருக்கிறான். அவன் முகத்திலே அரச களையே இல்லை. அவன் அகன்ற நெற்றியிலே கவலைக் குறிகள் அன்று காலையில் தான் குடி யரசுக் கட்சித் தலைவர்களிற் சிலர், அவனிடம் வந்து, ‘மாலைக்குள் நாட்டைவிட்டு வெளியே போய்விடுங்கள்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஜனங்களுடைய ஆத்திரம் அவ்வளவு அதிகமா யிருந்தது! என்ன செய்வான் அல்பான்ஸோ?
அரசன், மந்திரிகளுடன் ஆலோசனையிலிருக்கின்றான் என்பதைக் குடியரசுக்கட்சித் தலைவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். அரசன், முடிதுறக்கப் போகிறானென்றும் ஊகித் தார்கள். உடனே அன்று மாலை ஏழரை மணிக்கு (14-4-31) குடியரசு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதாகப் பகிரங்கப்படுத்தி விட்டார்கள்.
அன்று இரவு ஒன்பது மணி. வரிசையாகச் சில மோட்டார் வண்டிகள் மாட்ரிட் நகர எல்லையைத் தாண்டி வேகமாகச் சென்றன. இவையொன்றில், போர்பன் வமிசத்துக் கடைசி நட்சத்திரம், ஒளி மழுங்கி முகம் வாடி உட்கார்ந்து கொண்டிருந்தது.
அல்பான்ஸோ அரசன் நாட்டைவிட்டுச் சென்று விட்டான்!
மறுநாள் அரச குடும்பத்தினர், மாட்ரிட் நகரம் விட்டுச் சென்றனர். அரண்மனை காலியாகிவிட்டது.
அல்பான்ஸோ நாட்டை விட்டுச் சென்றானே தவிர, தனது அரசுரிமையை மட்டும் துறக்கவேயில்லை. ஏப்ரல் 17ஆம் தேதி, இவன் வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் வாக்கியங்கள் குறிப் பிடத்தக்கன:-
“நான் எல்லா ஸ்பானியர்களுக்கும் அரசன். நானும் ஒரு ஸ்பானியன். எனது உரிமைகளில் ஒன்றைக்கூட நான் துறக்க வில்லை. அந்த உரிமைகள் என்னுடையனவல்ல என்னால் ஒரு நாள், கணக்குத் தீர்க்கப்படவேண்டிய சேம நிதி.”
அரசன் ஊரை விட்டு வெளியேறி விட்டான் என்று கேட்ட மாட்ரிட் நகரவாசிகளுக்குள் எவ்வளவு குதூகலம்! குடியரசு பிறந்து விட்டதென்று என்ன சந்தோஷம்! அன்றிரவு முழுவதும் ஜனங்கள் ஆடினார்கள்! பாடினார்கள்! குடியரசுக்கு அடையாளமாயமைந்த ஊதா நிறக்கொடிகள் எங்கும் பறந்தன! போலீஸ் அதிகாரிகள் முதலிய அரசாங்க உத்தியேகஸ்தர்கள் கூட, ஊதா நிற நாடாவைத் தங்கள் மேற்சட்டையிலே சேர்த்துக்கட்டிக் கொண்டார்கள். ஊதா நிற‘டை’. ஊதா நிற ‘காலர்’ எல்லாம் ஊதா நிறந்தான். ஐம்பத்தாறு வருஷ முடியாட்சிக்குப்பிறகு இப்பொழுதுதான் ஜனங்கள் சுதந்திர மூச்சு விட்டார்கள். ஆனால் இந்த மூச்சு வேகத்திலே ஒரு பூச்சிகூட சாகவில்லை.
IV குடியரசுத் தோற்றம்
அல்பான்ஸோ மன்னன், நாட்டைவிட்டு வெளியேறிய தினத் தன்றே, குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. இந்தக் குடியரசு மந்திரிச்சபையில் அபேதவாதக் கட்சியினர், குடியரசுக்கட்சியினர் முதலிய பலரும் சேர்ந்தார்கள். இவர்கள், அரசாங்க நிருவாகத்தை உடனே ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஜமொரா, குடியரசின் தற்காலிக பிரசிடெண்ட் ஆனான். லெர்ரு வெளிநாட்டு மந்திரி; மவுரா உள்நாட்டு மந்திரி; அஜனா யுத்த மந்திரி; கபல்லெரோ தொழில் மந்திரி. இப்படியாகப் பலரும் சேர்ந்த மந்திரிச் சபை அமைந்து விட்டது.
ஆனால் ஒரு சிலர், இந்த அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டு இதனை அரிக்கத் தீர்மானித்து விட்டனர். இவர்கள், குடியரசு ஸ்தாபிக்கப் படுவதை மனப்பூர்வமாக விரும்பவில்லை. ஆனால் தங்கள் வெறுப்பை வெளியில் காட்டிக் கொள்ளவும் முற் படவில்லை. எனவே, இவர்கள், குடியரசுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து அதில் பொறுப்புள்ள பதவிகளையும் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘பாசிஸ்டுகள்.’ இத்தகையவர் களில் எமிலியோ மோலா1 என்பவனும் ஒருவன். இவன் ரகசிய போலீஸ் இலாகா தலைவனாயிருந்தான்.
குடியரசு ஸ்தாபிதமாகி விட்டது. எனவே, இதனை எதிர்த்து நிற்பதில் பயனில்லை என்று தெரிந்த பணக்காரர்கள், நிலச்சுவான் தாரர்கள், ராணுவத் தலைவர்கள், பாதிரிமார்கள் முதலியோர் குடி யரசை அங்கீகாரம் செய்ய முற்பட்டனர்.
இந்தக்குடியரசு தற்காலிக மாகத்தானே ஏற்பட்டது. இதனைச் சட்ட பூர்வமாக ஸ்திரப்படுத்திவிட வேண்டாமா? எனவே புதிய அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி 1931 ஆம் வருஷம் ஜூன் மாதம் புதிய தேர்தல் களும் நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் அபேதவாதக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பெரும் பான்மையோராக வெற்றி பெற்றனர். கோர்டெஸ் என்று அழைக் கப்பெறும் ஸ்பெயின் பார்லிமெண்டும் கூடியது. புதிய குடியரசுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இது 1931ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பத்தாந்தேதி அமுலுக்கு வந்தது.
இந்தக் குடியரசு,‘எல்லாப் பிரிவுத் தொழிலாளர்களினுடைய ஜனநாயக் குடியரசு’ என்றே கூறப்பட்டது. இதன் கீழ், மதமும் அர சாங்கமும் வேறு வேறாயின. தேசீய முன்னேற்றத்திற்கு, யுத்தத்தை ஒரு சாதனமாக உபயோகிக்கக் கூடாதென்று சொல்லப்பட்டது. சட்டத்தின் கீழ், எல்லோரும் சமமாகவே கருதப்பட்டனர். குடி யரசுக்கு விரோதமாயுள்ள மத ஸ்தாபனங்கள் கலைக்கப்பட்டன. அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து மத ஸ்தாபனங்களுக்குக் கொடுக்கப் பெற்று வந்த தொகைகள் நிறுத்தப்பட்டன. மத அநுஷ்டானங் களிலே இருந்த கட்டுப்பாடு நீக்ககப்பட்டது. பிரஜா உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டங்கள் கூட்டுவிக்க உரிமை முதலியன பலவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
‘தேசத்தின் செல்வமனைத்தும், அந்தச் செல்வத்திற்கு யார் சொந்தக் காரரா யிருந்தபோதிலும் சரி, தேசீயப் பொருளாதார நன்மை களுக்குட்பட்டது தான்’ என்று குடியரசுச் சட்டம் கூறியது.
இங்ஙனமே, தொழிலாளர்களுக்கு நலம் பல பயக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. விவாக சம்பந்தமானது, அரசாங் கத்தின் விசேஷப் பாதுகாப்புக்குட்படுத்தப்பெற்றது. குழந்தை களைப் பாதுகாப்பதும், அவர்களுக்குக் கல்வி போதிப்பதும், பெற் றோர்களின் கடமையென்று சட்ட ரீதியாக வற்புறுத்தப்பட்டது.
ஏற்கனவே யிருந்த ‘போர்டெஸ்’ என்கிற ஸ்பெயின் பார்லி மெண்டு திருத்தி யமைக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் நான்கு வருஷம். 23 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் இந்தப் பார்லிமெண்டுக்கு அபேட்சகர் களைத் தெரிந்தெடுத் தனுப்பும் உரிமையுண்டு. குடியரசுக்குத் தலைவன் ‘பிரசிடெண்ட்.’ இவனுடைய உத்தியோக காலம் ஆறு வருஷம். பார்லிமெண்டு அங்கத்தினர்களும், வேறு சில ஜனப் பிரதிநிதிகளும் சேர்ந்து இந்த ‘பிரசிடெண்டை’த் தெரிந்தெடுப்பார்கள். அரசாங்க நிருவாகத்தை, பிரதம மந்திரியும், அவனால் தெரிந்தெடுக்கப்பெற்ற மந்திரிச் சபையும் சேர்ந்து நடத்தும்.
ஏற்கெனவே, தற்காலிய ‘பிரசிடெண்டா’கத் தெரிந்தெடுக்கப் பட்ட ஜமொரா என்பவனே, சட்ட ரீதியாக அமைந்த குடியரசின் ‘பிரசிடெண்டாக’த் தெரிந்தெடுக்கப்பட்டான். இது நடந்தது 10-12-31 இல்.
இந்த ஜமொரா என்பவன், 1923ஆம் வருஷம் வரை முடி யரசை ஆதரித்துக்கொண்டு வந்தவன். ரிவேரா சர்வாதிகாரியாக வந்த பிறகு, இவனுக்குக் குடியரசு மோகம் உண்டாயிற்று. இவன் பெரிய சொத்துக்காரன். ஆடம்பரப் பிரியன். குடியரசுத் தலைவன் என்ற ஹோதாவில் இவனுடைய வருஷ சம்பளம் இருபது லட்சம் பெஸேடா1 இவன், குடியரசுச் சட்டத்தில் கண்ட திட்டங்களை நடைமுறையில் கொணரவில்லை யென்பதில் என்ன ஆச்சரியம்? “ஜமொரா ‘பிரசிடெண்டாக’ இருக்கிறவரையில், ஸ்பெயினில் நடக்கிற சம்பவங்களைக் கண்டு நாம் பயப்படவேண்டியதில்லை” யென்று ரோமாபுரி போப்பும், ஸ்பெயின் தேசத்துப் பாதிரிமார் களுக்குத் தைரியம் கூறும்படியான நிலைமை ஏற்பட்டதென்றால், நாம் அதிகம் கூற வேண்டிய தில்லை யல்லவா?
இந்தக் குடியரசு, பொதுவுடமைக் கட்சியினருக்குப் பிடிக்க வில்லை. பொதுவுடமைக் கட்சியானது, தனித்ததொரு கட்சியாக ஸ்பெயினில் அமைந்தது 1921ஆம் வருஷத்தில். அது முதல் 1931 ஆம் வருஷம் வரை, இது பலவிதமான கஷ்டங்களை அநுபவித்தது. ரிவேரா, சர்வாதிகாரியாக இருந்த போது, இதனைச் சட்ட விரோத மான ஸ்தாபனமென்று சொல்லி அடக்கி விட்டானல்லவா? அது தவிர, இந்தக் கட்சிக்குள்ளேயும் பலவிதமான பிணக்குகள் இருந்தன. 1931 ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட பிறகு, அதனோடு கலந்தே போராட வேண்டுமென்று தீர்மானித்தனர் இந்தக் கட்சியினர். அவ் வருஷம் நடைபெற்ற பார்லிமெண்டு தேர்தலில், தங்களுடைய கட்சி அபேட்சகர்களை நிறுத்தினார்கள். அது முதல் இந்தக் கட்சி வலுத்து வரத் தொடங்கியது குடியரசு ஏற்படுவதற்கு முன்னர், இந்தக் கட்சியில் ஆயிரம் அங்கத்தினர்களே இருந்தார்கள். குடியரசு ஏற் பட்ட சிறிது காலத்திற்குள் இந்த அங்கத்தினர் தொகை முப்பதினா யிரமாக உயர்ந்தது. இந்தப் பொதுவுடமைக் கட்சியினர், பார்லி மெண்டுக்குள்ளிருந்து கொண்டே குடியரசை எதிர்த்துக் கொண்டு வந்தனர்.
குடியரசு ஏற்பட்டுவிட்டபடியால், தங்களுக்குப் பூரண விடுதலை கிடைத்துவிட்டதாகத் தொழிலாளர்கள் நினைத்து விட்டார்கள்.2 முடியரசின் கீழ் இவர்கள் பலவிதமாக அடக்கப் பட்டிருந்தபடியால், குடியரசு ஏற்பட்ட வுடனே இவர்கள் சட்டம், ஒழுங்கு என்பவைகளை மறக்கலானார்கள். இதனால் பல இடங் களில் வேலை நிறுத்தங்கள் உண்டாயின. இவற்றைக் குடியரசு அர சாங்கத்தினர், உறுதியாக அடக்கவில்லை. 1931 ஆம் வருஷத்தில் 710; 1932 இல் 830; 1933 இல் 1499. இப்படி வருஷந்தோறும் வேலை நிறுத்தங்கள் அதிகப்பட்டுக் கொண்டே போயின.
குடியரசு அரசாங்கத்தினர், எதிர்க் கட்சியினரை நிர்த்தாட் சண்யமாக அடக்கிப் போடாமல் அதற்குப் பதிலாக அவர்களுக்கு எல்லாவித சலுகை களையும் காட்டினர். சலுகைகள் காட்டி, அவற்றின் மூலமாக முதலாளி களையும், தொழிலாளிகளையும் திருப்தி செய் விக்கலாம் என்று நினைத் தார்கள். இது நடக்கிற காரியமா? புதிய சட்டங்களை நிறைவேற்றச் சட்ட புத்தகத்தில் ஏற்றி வைத்தார்களே தவிர, அவற்றை விரைவில் நடை முறையில் கொணரத் துணிந் தார்களில்லை.
அரசாங்க அமைப்பின் மேல்தளத்திலே மட்டுந்தான் சில மாறுதல்கள் நிகழ்ந்தனவேயன்றி, அடிப்படையில் எவ்வித சீர்த் திருத்தமும் செய்யப்படவில்லை விவசாயிகளின் நிலைமை பழைய மாதிரியேதான் இருந்தது. ராணுவத்தைக் குறைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு, முழுச் சம்பளமும் பென்ஷனாகக் கொடுத்து விலக்கினார்கள். இப்படி விலகியவர்கள், குடியரசைத் தகர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
V எதிர்ப்பில் ஒடுக்கம்
முடியரசு விழுந்துவிட்டது வாஸ்தவந்தான். ஆனால் அதற்குப் பின்னர் வந்த குடியரசோ மிகப் பலஹீனமுள்ளதாக இருந்தது. இதனால் பொது வுடமைக்காரர்கள் இந்த அரசாங்கத்தில் நம்பிக் கையை இழந்துவிட்டார்கள். முதலாளிகள், பாதிரிமார், விலக்கப் பட்ட ராணுவத் தலைவர்கள் முதலியோர், இதனை வீழ்த்திவிட ஒன்று சேர்ந்தார்கள். இப்படி இரண்டுக்கு மிடையே அகப்பட்டுத் தத்தளித்தது குடியரசு அரசாங்கம்.
பாசிஸ்ட் கொள்கைகளை ஆதரித்து ஆங்காங்குப் பல சங்கங்கள் தோன்றின. இவற்றில் சில, ஜெர்மனியில் தோன்றிய நாஜி கட்சி ஸ்தாபனங் களை முன் மாதிரிகளாகக் கொண்டு தோன்றின. இன்னும் சில, இத்தாலிய ஸ்தாபனங்களைப் பின்பற்றி எழுந்தன. இவை களுக்கு ஜெர்மானியிலிருந்தும், இத்தலியிலிருந்தும் பொரு ளுதவி கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. ஸ்பெயினிலிருந்த பணக்காரர் சிலரும் இவைகளுக்கு உதவி செய்தார்கள். ஸ்பெயினின் தேசீய வாழ்வுடன் பல வருஷகாலமாகப் பின்னிக்கிடக்கும் ஏற்றத் தாழ்வுகள், இந்த பாசிஸ்ட் கொள்கை வலுப்படுவதற்கு உறுதுணை யாயிருந்தனவென்று பொதுவாகக் கூறலாம்.
இந்த ஸ்தாபனங்களைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங் கெடுத்துக் கொண்டவர்கள் கில் ரோப்ளெஸும்1 சர்வாதிகாரி ரிவேரா மகனான ஜோஸே ரிவேரா2வுமாவார்கள். இவர்கள் நிலச் சுவான்தார்கள், பாதிரிமார்கள் முதலியவர்களை, தனித்தனிக் கட்சி யினராகச் சேர்த்தார்கள். குடியரசுச் சட்டங்களினால், பரம்பரை யாக அநுபவித்துக்கொண்டு வந்த உரிமைகள் யாவும் பறிக்கப் படுகின்றன வென்று பயமுறுத்திப் பிரசாரம் செய்தார்கள். இக் காலத்தில் ஆயுத பலத்தையும் இவர்கள் சேகரித்துக் கொண்டார்கள். இவர்களில் ஜோஸே ரிவேரா, ‘ஜெர்மன் சூறாவளிப்படை’ மாதிரி ஒரு ஸ்தாபனம் அமைத்தான். இது, பின்னர் அதிகமான செல் வாக்குப் பெற வில்லை. கில் ரோப்ளெஸ் தான், பாசிஸ்ட் கட்சியில் அதிகமான செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வந்தான். இவன் மதம் வேறு, அரசாங்கம் வேறாகப் பிரிக்கக் கூடாதென்று பாதிரிமார்களைத் தூண்டிவிட்டான். நிலச் சீர்திருத்தங்களைச் செய்யவொட்டாதபடி நிலச்சுவான்தார்களைக் கிளப்பி விட்டான். இவன் திரை மறை விலிருந்து வேலை செய்வதில் மகா நிபுணன்.
இப்படி சுமார் இரண்டரை வருஷகாலம், குடியரசு பல பேருடைய எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்றது. இந்த இரண்டரை வருஷ காலமும் இது பலஹீனமான ஓர் அரசாங்கமாகவே இருந்து வந்தது.
இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலியோர் குடி யரசினரால் அதிகமான நன்மையைச் செய்ய முடியவில்லையே யென்று அதிருப்தி கொண்டார்கள். நிலச்சுவான்தார்கள், பாதிரிமார்கள் முதலியோர், குடியரசினர் முற்போக்கான சட்டங்களை நிறை வேற்றித் தங்கள் உரிமைகளைப் பாழ்படுத்துகின்றனரே யென்று கோபங் கொண்டனர். பொதுஜனங்கள், குடியரசின் வேலையைத் துரிதப்படுத்த முயன்றனர். பாசிஸ்டுகள் என்ற முதலாளி வர்க்கத் தினர் ஸ்பெயினைப் பின்னுக்கிழுக்கப் பார்த்தனர்.
பாசிஸ்டுகள் 1932 ஆம் வருஷத்திலேயே கலகஞ் செய்யத் தொடங்கிவிட்டனர். 1932ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பத்தாந் தேதி, தளபதி ஸான்ஜுர்ஜோ1 என்பவன், செவில்லே என்ற ஊரைப் பிடித்துக்கொண்டு, அண்டலூஸ்யா மாகாணத்திற்கு, தான் கவர்னர் என்று விளம்பரப் படுத்திக்கொண்டான். ஆனால் செவில்லே யிலிருந்த தொழிலாளர்கள், இவனுடைய நோக்கம் நிறைவேற இடங் கொடுக்கவில்லை. கடைசியில் இவன் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டடான். ஆனால் பிரசிடெண்ட் ஜமொரா இவனுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தான்.
பாசிஸ்ட் மனப்பான்மை கொண்ட ராணுவத் தலைவர்களைப் பொறுப்புள்ள பதவிகளில் நியமித்துத் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள அவர் களுக்குச் சந்தர்ப்பம் கொடுதத்தது, குடியரசு அரசாங்கத்தினர் செய்த பெரிய தவறாகும் என்று அப்பொழுதே பலர் கூற முற்பட்டனர். உதாரணமாக, ஸான்ஜுர்ஜோ, குடியரசுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தான். மொராக்கோவின் கமிஷனராக நியமிக்கப்பட்டான். பிறகு அண்டலூஸ்யா மாகாணத் தின் கமிஷனராக நியமனம் பெற்றான். இங்கிருந்தே இவன் கலகத்துக்குக் கிளம்பினான். இவன் கமிஷனராயிருந்த காலத்தில், தனது அதிகார பலத்தினால் பொதுவுடமைக் கட்சியினரையும், அபேதவாதிகளையும் பல வழியாகத் துன்புறுத்தினான்.
தற்காலிகக் குடியரசு அரசாங்கம் ஏற்பட்ட போது, லெர்ரு என்பவன் அந்நிய நாட்டு மந்திரியாக நியமனம் பெற்றானல்லவா? இவன், குடியரசினர் விபரீதமான சீர்திருத்தங்கள் ஒன்றையும் செய்து விடாதபடி தடுக்கவே மந்திரிச் சபையில் புகுந்துகொண்டான். நிரந்தரக் குடியரசு ஏற்பட்ட பிறகு அப்பதவியிலிருந்து விலக்கப் பட்டான். பின்னர் இவன், கில் ரோப்ளெஸோடு சேர்ந்துகொண்டு, அரசாங்கத் திட்டங்கள் நடைமுறையில் கொணர முடியாதபடி திகைந்து வந்தான். பார்லிமெண்டில் அரசாங்கத்தார் ஒரு மசோதா கொண்டு வந்தால், அதனைத் தள்ளிப் போடுமாறு செய்வது முதலிய பல அரசியல் சூழ்ச்சிகளினால், ரோப்ளெஸும் லெர்ருவும் சேர்ந்து, குடியரசு அரசாங்கத்தின் நன்னோக்கங்களைச் சிதைத்து வந்தனர்.
இவர்களுடைய இத்தகைய சூழ்ச்சிகளினாலே, குடியரசு அரசாங்கத்தின் முதல் மந்திரிச் சபையானது, 1933ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ராஜீநாமா செய்துவிட்டது.
பார்லிமெண்ட் தேர்தல்கள் நடைபெற்றன. குடியரசு அரசாங் கத்தை நடத்திக்கொண்டு வந்த குடியரசுக் கட்சியினரும், அபேத வாதக் கட்சியினரும் பெருந் தோல்வியடைந்தனர் ரோப்ளெஸ் கட்சியினரும் லெர்ரு கட்சியினரும் வெற்றியடைந்தனர். பாசிஸத் திற்கு வெற்றி!
லெர்ரு, மந்திரிச் சபையை யமைத்தான். ரோப்ளெஸ், மந்திரிச் சபையில் ஸ்தானம் ஏற்றுக் கொள்ளவில்லை. லெர்ரு அரசாங்க மானது, ரோப்ளெஸின் தூண்டுதலின் பேரில், 1931ஆம் வருஷம் முதல் 1933 ஆம் வருஷம் வரை குடியரசுக் கட்சியினர் அமுலுக்குக் கொண்டுவந்திருந்த திட்டங்களையெல்லாம் பயனற்றனவாகச் செய்து விட்டது. பழைய மாதிரியே, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பாதிரிமார்களுக்குப் பணம் அளிக்கப்பட்டது. பாதிரிமார்களின் ஆதிக்கத்தில் நடைபெற்று வந்த பள்ளிக்கூடங்கள் முன்போல் திறக்கப்பட்டு நடைபெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. நாடு கடத்தப் பட்டவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையுத்திரவுகள் ரத்து செய்யப் பட்டன. காடலோனியா மாகாணத்திற்குப் பொறுப்பாட்சி கொடுக்கப் பட்டிருந்ததல்லவா? அதனை லெர்ரு குறைக்கப் பார்த்தான். ஆனால் காடலோனியர்கள், 1934 ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஒரு தேர்தல் நடத்தி, தங்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொண்டனர்.
இதனிடையே லெர்ருவுக்கும் ரோப்ளெஸுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. குடியரசின் பிரசிடெண்டும், லெர்ருவின் திட்டங்கள் சிலவற்றிற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. கடைசியில், லெர்ரு மந்திரிச்சபை, 1934 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ராஜீநாமா செய்துவிட்டது.
ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிகார்டோ சாம்பர்1 என்பவன், மந்திரிச் சபையை அமைத்தான். ரோப்ளெஸ், இந்த மந்திரிச் சபைக்கு ஆதரவு கொடுத்ததோடு, பாசிஸ்ட் இயக்கத்தையும் பலத்த பிரசாரத்தின் மூலம் ஸ்திரப்படுத்திக்கொள்ள முயன்றான். இதனால் தொழிலாளர்களும், மற்றப் பொதுவுடமைக் கட்சியினர் முதலாயி னோரும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கினர். நாட்டிலேயோ பொரு ளாதார நிலை மிகவும் மோசமாயிருந்தது. கிராம விவசாயிகளும் நகரத் தொழிலாளர்களும், பலவிதமான அதிருப்திகளுக்குள்ளா யினார்.
கடைசியில் 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி சாம்பர் மந்திரிச்சபை வீழ்ந்து விட்டது. ரோப்ளெஸெ இதற்குக் காரணமாயிருந்தவன்!
ரோப்ளெஸ் மறுபடியும் லெர்ருவைக்கொண்டு மந்திரிச் சபையை அமைக்கச் செய்தான். இருவரும் சேர்ந்து, இத்தலியிலும் ஜர்மனியிலும் இருக்கிற சர்வாதிகார முறையை ஸ்பெயினிலும் ஏற்படுத்தத் தீர்மானித்தனர். இது, குடியரசுக் கட்சியினர், தொழி லாளர் கட்சியினர் முதலியோருக்குத் தெரிந்தது. எனவே, பாசிஸ்ட் ஆட்சி முறையை எவ்வகையிலும் எதிர்த்து நிற்பதென்று உறுதி கொண்டார்கள்.
VI அடக்கினால் அடங்குமா?
1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம், ஸ்பானியருடைய நினைவிலே எக்காலத்திலும் இருக்கும். அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, ஸ்பெயின் தேசத்துத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர் களும் வேலை நிறுத்தம் செய்து, லெர்ரு-ரோப்ளெஸ் மந்திரிச் சபையின் மீது தங்களுக்குள்ள அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்ள அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டுமென்று தொழிலாளர் கட்சியினர் அறிக்கை வெளி யிட்டனர். அப்படியே, பல இடங்களிலும் வேலை நிறுத்தங்கள் செய்யப் பட்டன. ஆனால் வேலை நிறுத்தம் செய்தவர்கள் நிர்ணயமான திட்ட மொன்றையும் வகுத்துக்கொள்ளவில்லை. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக வேலை நிறுத்தஞ் செய்தவர்கள் நடந்துகொண்டார்கள். சில இடங்களில், பாசிஸ்ட் கட்சியினர் இவர்களை அடக்கிவிட்டார்கள். இன்னும் சில இடங்களில், அதிகார ஸ்தாபனங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள் தொழிலாளர்கள்.
பாசிஸ்ட் கட்சியினருக்கும் தொழிலாளர்களுக்கும் பல இடங்களில் கைகலந்த சண்டை நடந்தது. தொழிலாளர்கள், எந்தெந்த பிரதேசங்களில் அதிகார ஸ்தாபனங்களைக் கைப்பற்றிக் கொண்டார் களோ அந்தந்த இடங்களில் மிக ஒழுங்காகவே நடந்துகொண்டார் கள். இந்தச் சமயங்களில் இவர்கள் காட்டிய ஒழுங்கு, தீரம், பொறுமை முதலியவற்றைப் பலரும் பாராட்டினர். பொதுஜன அமைதிக்கு எவ்வித பங்கமும் இவர்களால் விளையவில்லை. அதற்கு மாறாக இவர்கள் கைப்பற்றிக்கொண்ட பொதுஜன ஸ்தாபனங்களை மிகத் திறமையாக நடத்திக் காட்டினார்கள். பிற்காலத்தில் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டால் எப்படி நடத்துவதென்பதற்கு, இந்த எழுச்சியே ஒரு பாடமாயமைந்தது.
அது மட்டுமல்ல. தொழிலாளர்கள், இதற்கு முன்னர் எவ்வித ராணுவப் பயிற்சியும் பெறாதவர்களாயிருந்தும், ஸ்பெயினின் நல் வாழ்வின் மீது கொண்ட ஆவலினால் செய்த எண்ணரிய தியாகங் களும் இந்த எழுச்சியின் போதுதான் வெளிப்பட்டன. சிறப்பாக அஸ்டூரியா மாகாணத்தில், இவர்கள் தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சமயம், அஸ்டூரியா மகாணத்தின் தலைநகரமாகிய ஒவீடோவில், பாசிஸ்ட் படை யினருக்கும் தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற போராட்டத்தின் பயனாக, பல தொழிலாளர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை செய்து கொண்டு, உடனே சண்டைக்குப் புறப்பட்டு விடுவார்கள். டாக்டர்கள் சிறிது தாமதப் படுத்தினாலும் இவர் களுக்குக் கோபம் வரும். இங்கு ஒரு சிறிய உதாரணம். காயமடைந்த ஒரு தொழிலாளிக்கு, டாக்டர் சிகிச்சை செய்து கொண்டிருக் கிறான்.
தயை செய்து சீக்கிரமாக எனக்குச் சிகிச்சை செய்யுங்கள். நான் திரும்பிச் செல்ல வேண்டும். நாங்கள் ‘சாண்டா கிளாரா பாரக்ஸைக்’ கைப் பற்றிக் கொள்ள வேண்டும். அங்கு ‘பாசிஸ்டுகள் நிறைந்திருக் கிறார்கள்’ என்றான் காயமடைந்த தொழிலாளி வீரன்.
‘இல்லை; இன்னும் சில நாட்கள் நீ படுக்கையிலிருக்க வேண்டும்’ என்றான் டாக்டர்.
ஆனால் அந்த வீரன் படுத்திருக்க மறுத்துவிட்டான். சிகிச்சை செய்து கொள்ளாமலே, சண்டைக்குப் புறப்பட்டான். மறு நாள், அந்தோ! அவன் பாதையிலே இறந்து கிடந்தான்!
தேசத்திற்காக என்ன தியாகம்! வறுமைக்கும் தியாகத்திற்கும் நெருங்கிய உறவு என்பதை, ஸ்பெயின் தேசத்து ஏழைத் தொழி லாளர்கள், இந்த எழுச்சியினால் நன்கு காட்டி விட்டார்கள்.
ஆனால் லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத்தார் இந்த அக்டோபர் மாத எழுச்சியைப் பலாத்காரத்தினால் அடக்கிவிட்டனர். பலாத் காரம் என்றால் லேசான பலாத்காரமா? ஒவீடோ என்ற ஊரை, ஆகாய விமானங்களைக் கொண்டும், யந்திர பீரங்கிகளைக் கொண்டும் தாக்கினார்கள். மற்றும், மொராக்கோ துருப்புகளைக் கொண்டும், தொழிலாளரை அடக்கினார்கள். இங்ஙனம் பல இடங்களிலும் தோன்றிய தொழிலாளர் எழுச்சியை அரசாங் கத்தினர் அடக்கினரே யாயினும் ஒவீடோவில் இவர்கள் நடத்திய திருவிளை யாடல்கள் சகிக்க முடியாதனவாயிருந்தன. ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் யந்திர பீரங்கிகள் முன்னர் துண்டு துண்டானார்கள். இங்ஙனம் இறந்து போனவர்களை வரிசையாக அடுக்கி, ஒரே சமயத்தில் தீக்கிரையாக்கினார்கள்.
சுதந்திரம் பெற வேண்டுமானால் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது!
தொழிலாளர் எழுச்சியைப் பலாத்காரத்தினால் அடக்கி விட்ட பிறகு, லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத்தார் அடக்கு முறைக்கு ஆரம்பித்தனர். சொல்ல வேண்டுமா? வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம், அதிகார பலத்தோடு சேர்ந்து விட்ட தேயானால் அடக்குமுறைக்கு ஒரு வரம்பு முண்டோ? சுமார் அறுபதினாயிரம் பேருக்கு அதிகமானவர் கைதியாயினர். இவர்களில் முப்பதினாயிரம் பேருக்கு மேல் சிறைவாசத் தண்டனை விதிக்கப் பட்டனர். ஸ்பெயின் சிறைச்சாலைகள் நிரம்பிவிட்டன.
ராணுவச் சட்டம் அமுலுக்குக்கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம், சுமார் ஐந்து மாதகாலம் ஆர்ப்பாட்டம் செய்தது. இந்த ஐந்து மாத காலத்தில், ஐயோ, ஜனங்கள் என்னென்ன விதமான துன்பங்களை அநுபவித்தார்கள்! எவ்வளவு ஹிம்சைகளைத் தேசத் துக்காகச் சகித்துக் கொண்டார்கள்! ராணுவச் சட்டம் அமுலுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள், அரசாங்கத்திற்கு விரோதமானவர் களென்று சுமார் ஏழாயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள்! புரட்சிக்குக் கிளம்பின தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர் முதலாயி னோருடைய உணர்ச்சிகளை அடக்கி அவர்களுடைய மனத்திலே ஒரு பயத்தை உண்டு பண்ணிவிட வேண்டுமென்ற நோக்கத்துடன், கைதியான வர்கள் நீண்ட காலச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார்கள். தொழிலாளர் சங்கங்கள் முதலியன சட்ட விரோதமென்று சொல்லி நசுக்கப் பட்டன. அக்டோபர் புரட்சி யிலே கலந்து கொண்டவர்கள் என்று எவர்கள் மீதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் உடனே சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.
இந்த அடக்கு முறை, சிறப்பாக அஸ்டூரியா மாகாணத்தில்தான் அதிக மும்முரமாக இருந்தது. ஏனென்றால் இந்த மாகாணத்தவர்கள் தான், வேலை நிறுத்தத்தில் அதிகமான பங்கெடுத்துக் கொண்ட தோடு அரசாங்கத்தையும் எதிர்த்து நின்றனர். இந்த மாகாணத்தில் கைதி செய்யப்பட்டவர்கள், சிறைச் சாலையிலே எவ்வளவு கஷ்டங்களை அநுபவித்தார்கள்? ஒவீடோ சிறையி லிருந்தவர்களில் 564 பேர் சேர்ந்து ஒரு மகஜர் தயாரித்து அரசாங்க வக்கீலுக்கு அனுப்பினார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:-
“நவீன மத விசாரணை சபைகள் நிறுவப்பட்டி ருக்கின்றன. பீஜங்களைப் பிசைதல்; ஜனனேந்திரியங்களையும் மற்ற அவயவங்களையும் சுட்டு எரித்தல்; சாவணத்தைக் கொண்டு கைகளையும் கால் கட்டை விரல்களையும் நசுக்குதல்; சுத்தியைக் கொண்டு கைக் கணுக்களிலும் கால் கணுக்களிலும் அடித்தல்; பல் குத்திகளை நகங்களினிடை செலுத்துதல்; கொதிக்கக் கொதிக்க வெந்நீரை மேலே ஊற்றுதல்; ‘இதுதான் உங்களுடைய சவக்குழி’ என்று சொல்லி கைதிகளையே குழி தோண்டச் செய்தல்; தாய் அல்லது சகோதரி அல்லது மனைவி இவர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் கைதிகளை அடித்தல். இத்தகைய துன்பங்களையெல்லாம் நாங்கள் அநுபவித்துக் கொண்டி ருக்கிறோம்.”
காடலான் மாகாண சுதந்திரத்திற்காகப் போராடின லூயிஸ் கொம்பனிஸ்1 முதலிய பலர், முப்பது வருஷச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு ஓடிப் போய் விட்டார்கள்.
லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கம், ஒரு பக்கம் அடக்கு முறையை அநுஷ்டித்தது. மற்றொரு பக்கம் குடியரசு அரசாங்கத் தினரின் சீர்திருத்த முறைகளை நடை முறையில் வராதபடி தகைந்து விட்டது. மற்றும் முதலாளித்துவத்தை ஆதரிக்கிற எல்லாக் கட்சி யினரையும் ஒன்று படுத்தி, இந்தச் செல்வாக்கை, அரசாங்க ஸ்தாபனங்கள் அனைத்திலும் பிரயோகிக்கத் தொடங்கியது.
இந்த அக்டோபர் புரட்சி காரணமாக, சிறைவாசத்திற் குள்ளானவர்கள் சுமார் எண்பதினாயிரம் பேர்; இறந்து போனவர் சுமார் ஐயாயிரம் பேர்; காயமடைந்தவர் சுமார் பதினாயிரம் பேர்.
இந்த அடக்கு முறைகளினால் சில நன்மைகளும் உண்டாகா மலில்லை. சிறையிலே துன்பம் அநுபவித்துக் கொண்டிருந்த அபேத வாதிகள், பொதுவுடமைக் கட்சியினர், புரட்சியிலே நம்பிக்கை கொண்டவர்கள் முதலிய பலதிறப்பட்டவரும் ஒன்று சேர்ந்தார்கள். தங்களுக்குள்ளிருந்த சில்லரை வேற்றுமைகளையெல்லாம் மறந்தனர். புரட்சியில் ஏன் தோல்வியுற்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், அதனின்று பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், சிறைச் சாலைகள் பள்ளிக்கூடங்கள் போல் அமைந்தன. சிறைச் சாலைகளில் ‘ஒற்றுமைக் கமிட்டிகள்’ தோன்றின. இந்தக் கமிட்டிகள் மூலமாகவே, கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குறைந்த காலத் தண்டனையை அநுபவித்துவிட்டு சிறைகளி லிருந்து வெளி வந்தவர்கள் சும்மாயிருக்கவில்லை. சோர்ந்து விடவு மில்லை. அரசாங்கத்தினால் நசுக்கப்பட்ட தொழிலாளர் ஸ்தாபனங் களைப் புதுப்பிக்கத் தொடங்கினார்கள். எனவே 1935ஆம் வருஷம் மே மாதத்திலிருந்து, தொழிலாளர் ஸ்தாபனங்கள் முக்கிய நகரங் களில் மறுடியும் தலை காட்ட ஆரம்பித்தன.
லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கம் அநுஷ்டித்து வந்த அடக்கு முறைகள் அரசாங்க அங்கத்தினர்களுக்கே பிடிக்கவில்லை. தவிர, சபைக்குள்ளேயே பலவித அபிப்பிராய பேதங்கள் அடிக்கடி தோன்றலாயின. இதனால் மந்திரிச் சபைகள் மாறி மாறி யமைந்தன. 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தி லிருந்து, 1935ஆம் வருஷம் கடைசி வரை, ஐந்து முறை, மந்திரிச் சபைகள் மாறின. ஆனால் ரோப் ளெஸ் மட்டும், யுத்த மந்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டு யுத்த சன்னத்தங்கள் பல செய்து கொண்டு வந்தான்.
இப்படி மந்திரிச் சபைகள் மாறி மாறித் தோன்றினமையால், ஜனங்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. தேசத்தின் பொருளாதாரம், எவ்வளவு கெட வேண்டுமோ அவ்வளவு தூரம் கெட்டுவிட்டது. மாறி மாறியமைந்த மந்திரிச் சபைகளும், முதலாளித்துவத்தின் சார்பு பற்றி நின்றமையால், தேச ஜனங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கல்வி, சுகாதராம், விவசாயம் முதலியவற்றிற்காக, அரசாங்க பொக்கிஷத்திலிருந்து அதிகமான பணம் செலவழிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, பாதிரிமார்களுக்கும், முதலாளிகளின் வியாபார திட்டங்களுக்கும் அதிக பணம் செலவழிக்கப் பட்டது. தொழி லாளர்கள், விவசாயிகள் முதலியோருடைய வருமானம் குறைந்தது. தேசத்தின் ஏற்றுமதி வியாபாரம் சுருங்கியது. வேலை யில்லாதோர் தொகை பெருகியது. 1933ஆம் வருஷத்தில் சுமார் ஐந்தரை லட்சம் பேர் வேலையில்லாமலிருந்தார்கள். ஆனால் 1935ஆம் வருஷத்தில், இவர்களுடைய தொகை சுமார் பதினைந்து லட்சமாகப் பெருகியது.
சிறைச்சாலைகளிலே தோன்றின ‘ஒற்றுமைக் கமிட்டி’கள் தேசத்தின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன. இவற்றில் மத்திய வகுப்பினரும் சேர்ந்தனர். எனவே, முதலாளித்துவத்தை ஆதரிக் கிறவர்கள் ஒரு கட்சியினராகவும், மற்ற அனைவரும் வேறொரு கட்சியினராகவும் பிரிந்தார்கள்.
இந்த நிலையிலே 1935ஆம் வருஷம் கழிந்தது.
ரோப்ளெஸ், அரசாங்க நிருவாகப் பொறுப்பு அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு, சர்வாதிகாரியாக வந்துவிட வேண்டு மென்று முயன்றான். இதற்கு, குடியரசின் ‘பிரசிடெண்ட்’ ஜமொரா இடங்கொடுக்கவில்லை. இதனால் அபிப்பிராய பேதங்கள் பல ஏற்பட்டன. 1936ஆம் வருஷம் ஜனவரி மாதம் 7ஆம் தேதியன்றும், மார்ச்சு மாதம் முதல் தேதியன்றும் பார்லிமெண்டு தேர்தல்கள் நடைபெற நிச்சயிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் ஒரே ஒரு பிரச்னைதான் முன்னணியில் நின்றது. குடியரசா? பாசிஸமா?
VII ஒற்றுமையின் உதயம்
1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் எழுந்த புரட்சியினால் பொதுவாக ஸ்பானியர்களும், சிறப்பாகத் தொழிலாளர்களும் அதிகமான துன்பத்தை அநுபவித்தார்களே யாயினும், அதன் மூலமாக, அடுத்த போராட்டத்திற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். அதற்காக ஓர் ஆயுதத்தையும் தேடிக்கொண்டார்கள். அதுதான் ஒற்றுமை.
முதலாளித்துவத்திற்கு விரோதமாயுள்ள எல்லாக் கட்சி யினரும் ஒன்றுபட வேண்டுமென்று 1930ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே முயற்சி செய்யப்பட்டது. இது, 1934ஆம் வருஷம் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு வலுவடைந்தது. 1936ஆம் வருஷம் பிப்ரவரி தேர்தலுக்கு முன்னர், இந்த ஒற்றுமை உருவாகியது. இதற்கே ‘பொதுஜன முன்னணி’1 என்று பெயர்.
பாசிஸம் என்ற முதலாளித்துவத்திற்கு விரோதமாயுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய வகுப்பார் முதலிய அனை வரும் இந்தப் ‘பொதுஜன முன்னணி’யில் சேர்ந்தனர். இதில் சம்பந்தப் பட்ட ஸ்தாபனங்கள், தங்களுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அனைத்தும், பாசிஸத்திற்கு விரோதி என்ற முறையில் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். பொதுவாக ஜனங் களுடைய, சிறப்பாக ஏழை ஜனங்களுடைய வாழ்க்கை அந்தஸ்து உயரவேண்டும் என்பதே இந்த ஒற்றுமை ஸ்தாபனத்தின் நோக்கம்.2
பிப்ரவரி தேர்தலுக்கு முன்னர், இந்தப் ‘பொதுஜன முன்னணி’ உருவாகியது என்று சொன்னோமல்லவா? 1936ஆம் வருஷம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி, ஸ்பெயினிலுள்ள பொதுவுடமைக் கட்சி, அபேதவாதக் கட்சி, குடியரசுக் கட்சி, தொழிலாளர் கட்சி முதலிய பல கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கு ‘பொதுஜன முன்னணி ஒப்பந்தம்’ என்று பெயர். இந்த ஒப்பந்தத்தில் எட்டு பிரிவுகள் அடங்கியிருந்தன. இவற்றைச் சுருக்க மாகத் தெரிந்து கொள்வோம்.
1. அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட வர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பெறுவார்கள். வேலை நிறுத்தங்களில் கலந்து கொண்டதற்காக அரசாங்க உத்தியோகங் களினின்று விலக்கப் பட்டவர்கள், மீண்டும் அந்த ஸ்தானங்களில் அமர்த்தப்படுவார்கள்.
2. குடியரசுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற பிரஜா உரிமைகள் பாதுகாக்கப்படுகிற முறையில், நியாயஸ்தலங்கள், பார்லிமெண்டு, மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவை திருத்தியமைக்கப் படும். காரணங் காட்டாமல் கைது செய்யப்பெறுகிற வழக்கம் இனி இராது. சிறைச்சாலை நிருவாகம் ஒழுங்கான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெறும். போலீஸாரும், மற்ற ராணுவ உத்தி யோகஸ்தர்களும் செய்த அட்டூழியங்களைப் பற்றி விசாரிக்கப்படும்.
3. நிலவரி, குத்தகைத் தொகை முதலியவைகளைக் குறைத்தும், வேறு வகைகளிலும் விவசாயிகளுக்குச் சாதகம் செய்யப்பெறும்.
4. சில்லரைக் கைத்தொழில்கள், வியாபாரங்கள் முதலிய வற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கப்பெறும்.
5. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பெறும்.
6. தேசத்தின் பொக்கிஷ நிலைமை சீர்திருத்தியமைக்கப் பெறும்.
7. தொழிலாளர் நன்மைகளுக்குரிய சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பெறும். மற்றும், தனிப்பட்டவர் களுடைய நிருவாகத்திலிருக்கும் தரும சொத்துக்களை ஒன்று சேர்த்து தேசத்தின் பொது நன்மைக் குபயோகமாகுமாறு செய்யப் பெறும்.
8. தேசத்தின் கல்வி முறை சீர் திருத்தியமைக்கப்பெறும்.
கடைசியாக, ஸ்பெயின் தேசத்து வெளிநாட்டுக் கொள்கை யானது, சர்வதேச சங்கத்தின் கொள்கைகளையும் முறைகளையும் தழுவியதாகவே இருக்கும்.
தொழிற் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு, இந்த எட்டு திட்டங்களும் மிகச் சாதாரணமாகவும் மிதவாதத் தன்மையுடையன வாகவும் தோன்றிய போதிலும், ஒற்றுமையை முன்னிட்டும், தேச நன்மையைக் கருதியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லாக் கட்சியினரையும் சேர்த்து, இனி, முன்னணிக் கட்சியினர் என்றே அழைப்போம்.
மேற்படி ஒப்பந்தத்தை வாக்காளர்கள் முன்னிலையில் கிளத்தி, இந்த முன்னணிக் கட்சியினர், பிப்ரவரி தேர்தலுக்குப் பல அபேட் சகர்களை நிறுத்தினார்கள். தீவிரமான பிரசாரம் செய்தார்கள்.
1936ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பார்லிமெண்டில் மொத்தம் 437 ஸ்தாபனங்கள். இவற்றில் முன்னணிக் கட்சியினருக்கு 268 ஸ்தானங்கள் கிடைத்து விட்டன. எதிர்க் கட்சியினராகிய பாசிஸ்டுகளுக்கு 205 ஸ்தானங்கள்தான் கிடைத்தன இதை, பாசிஸ்ட் கட்சியினர் எதிர்பார்க்கவேயில்லை.
ஸ்பெயின் ஜனங்கள், குடியரசா பாசிஸமா என்ற கேள்விக்குப் பதில் கூறிவிட்டார்கள்.
தேர்தலைப்பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டதும் ஜனங்கள், தலைகால் தெரியாமல் சந்தோஷம் கொண்டாட ஆரம் பித்தார்கள். இதனால், சில இடங்களில் வரம்பு கடந்த செயல்களும் நிகழ்ந்துவிட்டன. 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் புரட்சியில் கலந்து கொண்டதன் காரணமாக லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத் தினரால் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களை, ஜனங்கள் பலவந்த மாக விடுதலை செய்வித்தார்கள். இவைகளை எல்லாம் கண்ட அரசாங்கத்தினர், தாமே முப்பதினாயிரம் கைதிகளை விடுதலை செய்துவிட்டனர். தவிர, முன்னர் வேலையினின்று விலக்கியவர் களை யெல்லாம் மீண்டும் அந்தந்த உத்தியோகங்களில் நியமித்தார்கள். ஆனால் மன வெறுப்புடன்தான்!
பார்லிமெண்ட் தேர்தலில் வெற்றி கண்டதோடு ஜனங்கள் திருப்தி யடையவில்லை. குடியரசின் பிரசிடெண்டாயிருந்த ஜமொ ராவையும் விலக்கிவிடத் தீர்மானித்தார்கள். ஏனென்றால் இவன், லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத்து அடக்குமுறைகளுக்கெல்லாம் துணைக் கருவியாயிருந் தானல்லவா? முன்னணிக் கட்சியினர், இவனிடத்திலே அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். கடைசியில், 1936ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஏழாந்தேதி பார்லி மெண்டில், இந்தப் பிரச்னைவாதத்திற்கு வந்தபோழ்து, ஜமொராவை, பிரசி டெண்ட் பதவியிலிருந்து விலக்குவதென்று 238 பேரும், கூடா தென்று 5 பேரும் வாக்குக் கொடுத்தார்கள்.
ஜமொரா, பிரசிடெண்ட் ஸ்தானத்தினின்று இறக்கப்பட்டு விட்டான்.
பின்னர், மே மாதம் பத்தாந்தேதி நடைபெற்ற தேர்தலில் மான்யுவல் அஜனா1 பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். இவன் ஸ்பெயின் குடியரசின் இரண்டாவது பிரசிடெண்ட். முன்னணிக் கட்சியினர் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டனர். காஸரஸ் குவிரோகா1 என்பவன் பிரதம மந்திரியானான்.
தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியைச் சிதறவிடக் கூடா தென்று, முன்னணிக் கட்சியினர் முன்னைவிட அதிகமாக ஒற்றுமைப் படலாயினர்.
இந்த முன்னணிக் கட்சியினருக்கு எதிராயிருந்த மற்ற பாசிஸ்ட் கட்சியினரோ, தாங்கள் அடைந்த தோல்வியை எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்று, கங்கணங் கட்டிக்கொண்டார்கள். முதலாளிகள் பலரும் ஒன்று சேர்ந்துகொண்டு, தேசத்தின் பணப் புழக்கத்தில் ஒருவித சிக்கலை உண்டு பண்ணினார்கள். பணத்தை யெல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். பாங்கிகளில் போட்டு வைத்திருந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். வியாபாரத்தில் மந்தம் உண்டாகுமாறு செய்தார்கள். நிலச்சுவான் தார்கள், தங்கள் சுவாதீனத்திலிருந்த நிலங்களையெல்லாம் உழுது சாகுபடி செய்யாமல் கரம்பாகப் போட்டுவிடத் தீர்மானித்தார்கள். ஏன் இப்படி என்று இவர்களை யாராவது கேட்டால், விவசாயி களின் கூலி விகிதம் அதிகமாகிவிட்டதென்றும், சாகுபடியில் தங் களுக்குப் பங்கு வேண்டு மென்று விவசாயிகள் கிளர்ச்சி செய்கிறார் களென்றும் காரணங்கள் கூறினார்கள்.
இப்படி முதலாளி வர்க்கத்தினர், ஒருபுறம் செய்து கொண் டிருக்க, ரோப்ளெஸ் முதலிய பாசிஸ்ட் கட்சியினர், அஜனா அரசாங் கத்தைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். தேசத்தில் ‘அமைதியும் ஒழுங்கும்’ நிலை பெறாவிட்டால், பொருளாதார வாழ்வில் ஒரு நிம்மதி காண முடியாதென்று கூறினார்கள். ரகசிய முறையில் தங்க ளுடைய ஆயுத பலத்தையும் பெருக்கிக் கொண்டு வந்தார்கள். செல்வமும், அதன் மூலமாக ஏற்பட்ட செல்வாக்கும் இவர்களிடத் திலே இருந்ததல்லவா? பயமுறுத்திக் கொண்டு வந்ததோடு இவர்கள் நிற்கவில்லை. பின்னாடி ஏற்படப்போகிற பெரிய சண்டைக்கு வேறு பல வகைகளிலும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியைச் சேர்ந்த ராணுவ உத்தியோகஸ்தர் பலர், மொராக் கோவுக்குச் சென்றார்கள். ரோப்ளெஸோ அடிக்கடி பிரான்ஸுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ‘உல்லாசப் பிரயாணம்’ என்று இதற்குச் சமாதானம் சொல்லப்பட்டது.
முன்னணிக் கட்சிக்குட்பட்ட தொழிலாளர் முதலியோர், தற்காப்பு நிமித்தம், தனித்தனித் தொண்டர் படைகளை நிறுவினார்கள். பொதுஜன அமைதியைக் காப்பதற்காக, அரசாங்கப் படைகளுடன் ஒத்துழைப்பதே இந்தத் தொண்டர் படைகளை ஏற்படுத்தியதன் நோக்கம். இந்தத் தொண்டர் படைகளில், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலிய ஏழை மக்களும், மத்திய வகுப்பினரும் அதிகமாகச் சேர்ந்தார்கள்.
1936ஆம் வருஷத்துப் பிப்ரவரி தேர்தலுக்குப் பிறகு, சுமார் நான்கு மாத காலம் ஆங்காங்குச் சில்லரைக் குழப்பங்களும், பலாத்காரச் செயல்களும், கொலைகளும் நடைபெற்றுக்கொண்டு வந்தன. முன்னணிக் கட்சியினரைப் பாசிஸ்டுகள் கொலை செய்வதும், பின்னவர் முன்னவரைக் கொலை செய்வதும் சாதாரண சம்பவங் களாகிவிட்டன.
இதனிடையே 1936ஆம் வருஷம் ஜூன் மாதம் ஒரு பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால், அரசாங்கத்தார் இதனை ஒருவாறு சமரஸப்படுத்திவிட்டனர். இந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிவிட்டவர்கள் பாசிஸ்ட் கட்சியினரே என்று பின்னால் சொல்லப்பட்டது.
ஆனால் பாசிஸ்டுகளோ, தேசத்திலே ஏற்பட்டுள்ள நெருக் கடிக்கு, முன்னணிக் கட்சியினரும், தற்போதைய அரசாங்கமே காரணமென்று பல புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டினார்கள். 1936ஆம் வருஷம் ஜூன் மாதம் பதினேழாந்தேதி, பார்லிமெண்டில் ரோப்ளெஸ் பேசியபோது, (முன்னணிக் கட்சியினரால்) 251 மாதா கோவில்கள் எரிக்கப்பட்டன வென்றும் 269 பேர் கொலை செய்யப் பட்டிருக்கிறார்களென்றும், 1500 பேருக்குக் காயம் ஏற்பட்டிருக் கிறதென்றும், பத்து பத்திரிகாலயங்களில் சேதம் உண்டுபண்ணப் பட்டிருக்கின்றதென்றும், 340 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றி ருக்கின்றன வென்று கூச்சலிட்டான்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னணிக் கட்சியினரும், அவர் களுடைய பத்திரிகைகளும் பதில் கூறின. பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டவர்கள், தாக்கப்பட்டவர்கள், பயமுறுத்தப்பட்ட வர்கள் இத்தனை பேர் என்று புள்ளி விவரங்களோடு இவர்களும் எடுத்துக் காட்டினார்கள். மாதா கோயில்களைத் தாக்கியதும் எரித்ததும் உண்மைதான். ஆனால் கோயில்கள் மீதோ, கத்தோலிக் கர் மீதோ கொண்ட துவேஷத்தினாலன்று. பாசிஸ்டுகள், இந்த மாதா கோயில்களைத் தங்களுடைய ஆயுத சாலைகளாக உபயோகப் படுத்திக் கொண்டார்கள். இந்த மாதா கோயில்களே, பாசிஸ்டு களின் சூழ்ச்சி ஸ்தாபனங்களாயிருந்தன. இதனாலேயே மாதா கோயில்கள் எரிக்கப்பட்டன. இப்படியெல்லாம் முன்னணிக் கட்சி யினர் சமாதானம் கூறினார்கள். ஒரு தேசத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கட்சியினர், மற்றொரு கட்சியினரைப் பற்றிக் குறை கூறுவதும், குற்றஞ்சாட்டுவதும் சகஜமே.
1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 12ஆம் தேதி. அன்று மாட்ரிட் நகரம் நரகக் காட்சியை அளித்தது. முன்னணிக் கட்சியைச் சேர்ந்த தளபதி காஸ்டில்லோ1 என்பவன் கொலை செய்யப் பட்டான். யாரால்? தெரியாது. ஆனால், அவன் கொலை செய்யப் பட்ட ஆறுமணி நேரங் கழித்து, பாசிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவனான கால்வோ ஸோடெலோ2 என்பவன் கொலை செய்யப் பட்டுவிட்டான். இநத ஸோடெலோவின் உத்திரவின் பேரிலேயே, மேற்படி காஸ்டில்லோ கொலை செய்யப்பட்டான் என்று, அன்று மாட்ரிட்டில் வதந்தி உலவியது.
ஸோடெலோவின் பிரேத ஊர்வலத்தை, பாசிஸ்டுகள் மிக ஆடம்பரமாக நடத்தினார்கள். அப்பொழுதே, இவர்கள் கலகஞ் செய்யத் தொடங்கினார்கள். அரசாங்கத்தைத் தாக்கி எழுதிவந்த இரண்டு பாசிஸ்ட் கட்சிப் பத்திரிகைகள் மீது தடையுத்திரவு பிறப் பிக்கப்பட்டது. முன்னணிக் கட்சியில் சேர்ந்திருந்த எல்லாக் கட்சியினரும் ஜுலை மாதம் 13ஆம் தேதி ஒன்றுகூடி, எவ்வகை யாலும் தாங்கள் ஒற்றுமைப்பட்டிருப்பதென்றும், தற்போதைய அரசாங்கத்திற்கு எல்லாவிதமான ஆதரவுகளையும் கொடுப்ப தென்றும் பிரமாணம் செய்து கொண்டார்கள்.
பிறகு மூன்று நாட்கள் மாட்ரிட் நகரம் ஒரே அமைதியா யிருந்தது. ஆனால் இந்த அமைதியிலே ஒருவித பயங்கரம் காணப் பட்டது. புயற்காற்றுக்கு முன்னே உண்டாகிற அமைதிதானே!
VIII ஜூலை குழப்பம்
1936ஆம் வருஷம் ஜூலை மாதம் பதினேழாந் தேதி பயங்கர அமைதி குலைந்தது. குழப்பம் ஆரம்பித்து விட்டது. இந்த நாளில் கலகத்திற்குக் கிளம்புவதென்று பாசிஸ்டுகள், ஏற்கெனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்கள். இந்தக் கலகத்தைக் கண்டு ஸ்பானிஷ் பொதுஜனங்கள் ஆச்சரியப்படவில்லை. ஆனால் இதன் பயங்கரத் தன்மையையும், கலகக்காரர்கள் செய்து வைத் திருந்த முன்னேற்பாடுகளையும் பொது ஜனங்களோ அரசாங்கத் தாரோ பூரணமாகத் தெரிந்து கொள்ளவுமில்லை. 1932ஆம் வருஷம் செவில்லே என்ற ஊரில், தளபதி ஸான்ஜுர்ஜோ, கலகத்திற்குக் கிளம்பினானல்லவா, அதைப்போலவேதான், இந்தப் பதினேழாந் தேதிக் குழப்பத்தையும் ஒரு சிலர் தூண்டிவிட்டிருக்கின்றனர் என்று அரசாங்கத்தார் முதலில் கருதினார்கள். இதனை எளிதில் அடக்கி விடலாமென்று பொய் நம்பிக்கையும் கொண்டுவிட்டார்கள்.
ஒரே நாளில் தேசத்தின் பல பாகங்களிலும் கலகத்திற்குக் கிளம்பி, ஆங்காங்குள்ள முக்கிய ஸ்தாபனங்களைக் கைப்பற்று வதென்று பாசிஸ்டுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ராணுவத்தில் பெரும் பகுதி இந்தப் பாசிஸ்டுகள் பக்கம் சேர்ந்து விட்டது. இதில் ஆச்சரிய மொன்றுமில்லை. ஸ்பெயின் தேசத்து ராணுவம் எப் பொழுதுமே பாசிஸம் என்கிற முதலாளித்துவத்தை ஆதரித்து வந் திருக்கிறதல்லவா? மற்றும், கலகத் தலைவர்களில் பெரும் பான்மையோர், ஏற்கெனவே ராணுவத்தில் உயர்தர உத்தியோகங்கள் வகித்தவர். தேசத்திலுள்ள முக்கியமான பாதைகள், ஆங்காங்குள்ள முக்கிய ஸ்தானங்கள், அரசாங்கத்தின் ராணுவ பலம் முதலியவை களைப் பற்றிய எல்லா விவரங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. ஆனால் இந்தக் கலகத் தலைவர்களிடத்தில் ஒரு குறை இருந்தது. அதாவது இவர்கள் ராணுவத்தில் சேவை செய்து கொண்டிருந்த போது, யதேச்சாதிகாரிகளாகவே காரியங்கள் நடத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் நெருக்கடியான சமயங் களில் கூட ஒற்றுமைப்பட்டுக் காரியங் களை நடத்த முடியாத மனப் பான்மை யுடையவர்களா யிருந்தார்கள். எனவே, கலகம் ஆரம்பித்தபோழ்து, ஒரே மாதிரியான திட்டத்திற்குட்பட்டு, ஒரே சமயத்தில் கலகத்திற்குக் கிளம்ப முடியாதவர்களானார்கள். ஒவ் வோரிடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இவர்களின் புரட்சி ஏற்பாடு கள் இருந்தன. இதனால், முதலில் சிறிது அயர்ந்தாற் போலிருந்து விட்ட அரசாங்கத்தார், எச்சரிக்கையுடனிருக்கவும், தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
பாசிஸ்டுகள், தங்கள் ராணுவ பலத்தை, எட்டு முக்கிய களகர்த்தர்களின் கீழ் பிரித்து வைத்திருந்தார்கள்.1 இவர்களில், பிராங்கோ என்பவன்தான், கலகப் படைகளின் சேனாதிபதியாக இருந்தான்.
பாசிஸ்டுகள், கலகத்திற்குப் பின்வருமாறு திட்டம் போட்டி ருந்தார்கள்:-
பிராங்கோ, கானரி தீவுகளிலிருந்து வந்து மொராக்கோ பிர தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து, மொராக்கோ துருப்புகளுடன் வடக்கே யுள்ள செவில்லேயை யடைவது; கோடெட், பலாரிக் தீவுகளி லிருந்து வந்து பார்ஸிலோனாவில் ஏற்கெனவேயுள்ள பாடெட்டுடன் வந்து கலந்துகொள்வது;
மோலா, வடக்கே பர்கோஸ் நகரத்திலிருந்து தெற்கு நோக்கி வருவது:
கபன்னெலலாஸ், வடகிழக்கிலிருந்து தென் மேற்காகப் புறப்பட்டு வருவது;
ஸான்ஜூர்ஜோ, மேற்கிலிருந்து கிழக்கே நோக்கி வருவது;
இங்ஙனம் நாலா பக்கங்களிலிருந்தும் படை திரட்டி வந்து ஸ்பெயினின் மத்திய பாகத்திலேயுள்ளதும் அரசாங்கத்தின் தலைமை ஸ்தானமாயிருப்பது மான மாட்ரிட் நகரத்தைத் தாக்குவது. இதே தினத்தில் மாட்ரிட்டிலும் பார்ஸிலோனாவிலும் அங்குள்ள சிறு படைத் தலைவர்களைக் கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணுவது.
இதுவே கலகக்காரர்களின் திட்டம். இந்தத் திட்டப்படி 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 17ஆம் தேதி, பிராங்கோ, க்யூடா துறைமுகத்திலிருந்து ரேடியோ மூலம், அரசாங்கத்தை எதிர்த்துக் கலகம் கிளம்பிவிட்டதென்றும், தேசத்தார் அனைவரும் இந்தப் புரட்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் ஒரு செய்தி விடுத்தான். பின்னர், க்யூடா துறைமுகத்திலிருந்து மொராக்கோ துருப்புகளை ஸ்பெயினுக்கு அனுப்புவிக்க கப்பற்படையின் துணையை நாடினான். ஆனால் கப்பற்படையினர் இதற்கு இணங்க மறுத்துவிட்டனர். ஆரம்பத்திலேயே, பாசிஸ்டுகளுக்கு இது முட்டுக்கட்டையாகப் போய்விட்டது. மற்றும், ஸ்பெயின் அரசாங்கத்து ஆகாய விமானப் படையும், பாசிஸ்டு களுக்கு ஏற்பட்டது. அதாவது ஸான்ஜூர்ஜோ, மேற்கிலிருந்து மாட்ரிட்டை நோக்கி வரவேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததல்லவா? இவன் வரும்போது, வழியில் ஆகாய விமானத்திலிருந்து விழுந்து இறந்துவிட்டான். இவனையே, அஜனாவுக்குப் பதில், குடியரசின் பிரசிடெண்டாக நியமிக்க பாசிஸ்டுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்படி இவர்கள் செய்த ஏற்பாடுகள் சில, ஆரம்பத்தில் சரிவர நிறைவேறவில்லை யானாலும், மனமுடையாமல் படை திரட்டி வந்தார்கள்.
கலகம் தொடங்கிவிட்டதென்று பிராங்கோ அறிவித்த அதே தினத்தில் (17-7-36) வேறு பல இடங்களிலும், பாசிஸ்டுகள் கலகக் கொடி தூக்கி விட்டார்கள். லானோ என்பவன், செவில்லேயைக் கைப்பற்றிக் கொண்டான். மோலா முதலியோர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் மாட்ரிட் நகரத்தையும், பார்ஸிலோனா நகரத்தையும் கலகக்காரர்கள் எளிதில் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை. இங்கு அரசாங்கக் கட்சியினர் பலமாக எதிர்த்து நின்றனர். இந்தக் கட்சியில் சேர்ந்திருந்தவர்கள் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் முதலி யவர்களே. இவர்களுக்கு யுத்த அநுபவம் அதிகமாக இல்லை. ஆனால் இவர்கள் உள்ளத்தில் தேசபக்தி கொழுந்துவிட்டெரிந்து கொண்டி ருந்தது. அரசாங்கத் தார் இவர்களுக்கு, அரசாங்க ஆயுதசாலையி லிருந்த ஆயுதங்களை வழங்கினர். மற்றும் தொழிற்சாலைகளில் பழுது பார்ப்பதற்காகக் கொடுக்கப் பட்டிருந்த ஆயுதங்களை யெல்லாம் இவர்கள் வசம் ஒப்புவிக்கச் செய்தார்கள். இங்ஙனம் ஆண்கள் மட்டும் யுத்த சன்னத்தராகவில்லை. பெண்களும் யுத்த கோலம் பூண்டார்கள். இவர்கள், ஆண்களை யுத்தகளத்திற்கு அனுப்பி விட்டு, அவர்களுக்குப் பதிலாக நகரங்களிலும் கிராமங்களிலும் அமைதி குலையாமல் பாதுகாத்து வரலாயினர். இன்னும் பல மாதர்கள், ஆண்களோடு சேர்ந்து கொண்டு பாசிஸ்ட் படைகளை எதிர்த்துப் போராட முன் வந்தனர். ஐரோப்பிய சரித்திரத்திலேயே இது புதிய விஷயம் என்று சொல்லவேண்டும். எந்த யுத்தத்தின்போதும், இங்ஙனம் ஆயிரக்கணக்கான பெண்கள், படைக்கலந் தாங்கிப் போர் புரிந்ததாகத் தெரியவில்லை. அதிலும், ஸ்பானியப் பெண்கள், ஆண் களைப்போலவே உடையணிந்து, படை தாங்கி, முகத்திலே சிறிது கூட அச்சத்தைக் காட்டிக் கொள்ளாமல் புன் சிரிப்புடன் போர் முகத்திற்கு நடந்துசெல்லத் துணிந்தது, சரித்திரத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாகும்.
இங்ஙனமே, தேசத்தின் பல பாகங்களிலும் தொழிலாளர்கள் முதலியோர், தனித்தனிப் படைகளாகத் திரண்டு பாசிஸ்டுகளை எதிர்க்கலானார்கள்.
பாசிஸ்டுகள், யுத்த முறையில், பழகின வீரர்களை அதிகமாக உடையவர்களா யிருந்தார்கள். ஆனால் பொதுஜன நல்லெண்ணம் இவர்கள் பால் இல்லை. இதனால் இவர்கள் தங்கள் படைபலத்தைக் கொண்டு சில பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டபோதிலும் அங்கு ஜனங்களின் ஆதரவு இல்லாமலே இருந்து வந்திருக்கிறது. மற்றும், பாசிஸ்டுகள் முதலில் நினைத்தபடி எந்த ஊரையும் சுலபமாகக் கைப்பற்றிக் கொண்டுவிட முடிய வில்லை. ஏனென்றால், ஜனங்கள் நவீன ராணுவப் பயிற்சி பெற்றிரா விட்டாலும், சத்துருக் களுக்கு எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை.
தவிர, பாசிஸ்டுகளிடத்தில் ஜனங்களுக்கு மற்றொரு விதத்திலும் துவேஷம் வளர்ந்து வரலாயிற்று. பரம்பரையாகவே, மொராக்கோ வாசிகளான மூர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் விரோதம். 1920ஆம் வருஷத்திலிருந்து 1926ஆம் வருஷம் வரையில் ஸ்பானியர்களுக்கும் மூர்களுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக, ஸ்பெயின் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து ஏராளமான பணம் செலவழிக்கப் பட்டது. இந்த மொராக்கோ யுத்தத்தின் காரணமாக, பொருள் நஷ்டம் மட்டும் உண்டாகவில்லை. ஆள் நஷ்டமும் ஏராளமாக உண்டாயிற்று. இந்த யுத்தத்தில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொண்டவன் பிராங்கோ. இவன் மூர்களைச் சிறிதுகூடக் கருணை யின்றி நடத்தினான். ஆனால் இதே பிராங்கோ, மூர்களின் துவேஷத்தைப் பாசிஸ்ட் கட்சிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தீர் மானித்தான். தனது நாட்டினரை அடக்க மொராக்கோ துருப்பு களை உபயோகப்படுத்தலாயினான். இது ஸ்பானியர்களுக்கு அதிக மான வெறுப்பை உண்டுபண்ணியது.
பாசிஸ்டுகளுக்கு மற்றொரு பக்க பலமாயிருந்தது அந்நியக் கூலிப்படைகள். பல தேசத்துக் கீழ்மக்கள் நிரம்பியது இந்தப் படை. இந்தப் படையைச் சேர்ந்தவர்களை, சாதாரண ஜனங்களோடு கூடப் பழக விடுவ தில்லை. இழிவான, கொடுமையான காரியங்களைச் செய்வதற்குத்தான் இந்தப் படையை ஏவுவது வழக்கம். இத்தகைய படையை ஸ்பானிஷ் அரசாங்கத்தார் பல வருஷங்களாக மொராக் கோவில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இந்தப் படையினரை யும் பிராங்கோ, ஸ்பானியர்களுக்கு விரோதமாக உபயோகப் படுத்தி வரலாயினான். இதுவும், பாசிஸ்டுகளுக்கு விரோதமான உணர்ச் சியை ஜனங்களிடையே உண்டு பண்ணியது.
தவிர 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் அன்டூரியா மாகாணத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது, மிகக்கடுமையாக நடந்து கொண்டவன் பிராங்கோ. ‘ஈவு இரக்க மில்லாதவன்’ என்றுதான் அம்மாகாண வாசிகள் இவனை அழைப் பார்கள். அத்தகைய இவன், பாசிஸ்ட் படைகளின் பிரதம தலைவனா யிருந்தபடியால் ஜனங்களுக்கு இன்னும் அதிகமான ஆத்திரம் உண்டாயிற்று.
கலகம் ஆரம்பித்த ஒரு மாத காலத்திற்குள், தேசத்தின் ஒரு பாதிபாகம் பாசிஸ்டுகள் கையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. இஃது ஒரு விதத்தில் உண்மையே. ஆனால், கலகக்காரர்கள் வசத்தில் சிக்கிக் கொண்ட பிரதேசங்கள் ஜனப் பழக்கம் அதிகமான இல்லாதவை. அரசாங்கத்தார் வசமிருந்த பிர தேசங்கள் செழிப்புள்ளவை; ஜனநெருக்கமுள்ளவை. முக்கியமான துறைமுகங்கள், போக்கு வரவுக்கு லாயக்கான இடங்கள் முதலியன இந்தப் பிரதேசங்களிலேயே இருக்கின்றன.
யுத்தம் வலுக்க வலுக்க, ஸ்பானியப் பொது ஜனங்களின் ஒற்றுமையும் வளர்ந்து வந்தது. பொதுவுடமைக் கட்சி, அபேதவாதக் கட்சி முதலிய பல கட்சிகளிலிருந்துவந்த சில்லரை வேற்றுமைகள் யாவும் மறைந்து போயின. தேசத்தின் சக்திகளனைத்தையும் ஒரு முகப்படுத்தி, பாசிஸத்திற்கு விரோதமாக நிற்க வைப்பதுதான், எல்லாக் கட்சிகளின் லட்சிமா யமைந்துவிட்டது.
இந்தப் போராட்டம், குடியரசுக்கும் பாசிஸத்திற்கும் நடக்கிற போராட்ட மென்று, தற்போதைய ஸ்பானிஷ் முன்னணி அரசாங் கத்தார் கூறுகின்றனர். ஆனால் பாசிஸ்ட் கட்சியினரோ, தற்போதைய அரசாங்கத்தார் தங்களுடைய அதிகாரபலத்தின் மூலம், தேசத்தில் பொதுவுடமை இயக்கத்தைப் பரப்பி வருகிறார்களென்றும், இதனின்று ஸ்பெயினைக் காப்பாற்றுவதற்காகவே தாங்கள் படை தூக்கி யிருப்பதாகவும் பறைசாற்றிவருகிறார்கள். இதற்காதார மாக, இவர்கள் ருஷ்யாவின் உதவி இந்தக்குடியரசு அரசாங்கத்திற்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசாங்கத்தாரோ, பாசிஸ்டுகளுக்கு, ஜெர்மனியும் இத்தலியும் உதவி செய்கின்றனவென்று கூறுகின்றனர்.
ஜூலை மாதம் 17ஆம் தேதி குழப்பம் ஆரம்பித்த தல்லவா? ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், மூன்று முறை குடியரசு அர சாங்கத்தின் மந்திரிச்சபை மாற்றியமைக்கப்பட்டது. குழப்பம் ஆரம்பிக்கிற காலத்தில், காஸரஸ் குவிரோகா பிரதம மந்திரியாயி ருந்தான். குழப்பம் வலுக்க இவன் ராஜீநாமா செய்துவிட்டான். பின்னர், பாரியோஸ்1 என்பவன் பிரதம மந்திரி யானான். இவன் எட்டு மணி நேரந்தான் உத்தியோகம் பார்த்தான். பின்னர் இவனும் ராஜீநாமா செய்யவே, கிரால் பெரீரா2 என்பவன் பிரதம மந்திரி யானான். இவன் 1936ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் குழப்பத்தில் சம்பந்தப் பட்ட இரண்டு கட்சிகளைப் பற்றியும் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டான்:-
“ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், பாதிரிமார்கள், பாசிஸ்டுகள் ஆகியோர் ஒன்று சேர்ந்து, ஜனங்களால் தெரிந் தெடுக்கப்பட்ட நியாயமான குடியரசு அரசாங்கத்திற்கு விரோதமாகக் கலகம் செய்யக் கிளம்பியிருப்பதினாலேயே, ஸ்பெயினில் தற்போதைய நெருக்கடியான நிலைமை ஏற்பட் ளடிருக்கிறது.”
இந்த கிரால் மந்திரிச்சபையானது, 1936ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி ராஜீநாமா செய்துவிட்டது. அன்று லார்கோ கபல்லெரோ1 என்பவனுடைய தலைமையில் புதிய மந்திரிச் சபை அமைந்தது. இந்த கபல்லெரோ என்பவன் ஸ்பெயின் தேசத்து அபேதவாதக் கட்சியின் தெய்வமாகப் போற்றப்படுகிறவன். இவன் கீழ் அமைந்த மந்திரிச்சபையானது, முன்னணிக் கட்சியின் உண்மை யான பிரதிநிதித்துவம் வாய்ந்த மந்திரிச்சபையென்று கூறலாம். ஏனென்றால், இந்த மந்திரிச்சபையிலுள்ள பெரும்பான்மையோர் மத்திய வகுப்பினர். இன்னும் சிலர் பொதுவுடமைக் கட்சியினர். 1936ஆம் வருஷம் பிப்ரவரி தேர்தலுக்குப் பிறகு அமைந்த மந்திரிச் சபைகள், முன்னணிக் கட்சியின் பிரதிநிதிச் சபைகளாயிருந்தன. கபல் லெரோவின் கீழ் அமைந்த மந்திரிச் சபையோ முன்னணி மந்திரிச் சபையென்றே கூறும்படியாயிருக்கிறது. இந்த முன்னணி மந்திரிச் சபையின் அமைப்பு வருமாறு:-
லார்கோ கபல்லெரோ - பிரதம மந்திரியும் யுத்த மந்திரியும். (அபேதவாதக் கட்சி).
டெல் வாயோ - அந்நிய நாட்டு மந்திரி. (அபேதவாதக் கட்சி).
இரண்டலேஷ்யோ ப்ரீடோ - ஆகாயப்படை கப்பற்படை மந்திரி. (அபேதவாதக் கட்சி).
ஜூவான் நெக்ரின் - பொக்கிஷ மந்திரி. (அபேதவாதக் கட்சி).
அனஸ்டேஷ்யோக்ரேஷியா - வியாபாரக் கைத்தொழில் மந்திரி. (அபேதவாதக் கட்சி).
ஏஞ்சல் காலர்ஸா - உள்நாட்டு மந்திரி. (அபேதவாதக் கட்சி).
விஸிண்டே உரிபே - விவசாய மந்திரி. (அபேதவாதக் கட்சி).
ஜேஸஸ் ஹெர்னாண்டஸ் - கல்வி மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி).
மரியானோ ப்யூனஸ் - நீதி மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி).
பெர்னார்டோ ரியோஸ் - போக்கு வரவு மந்திரி. (குடியரசு ஐக்கியக் கட்சி).
ஜூலியோ ஜஸ்ட் - மராமத்திலாகா மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி).
ஜோஸே பெரீரா - பொது மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி).
குடியரசின் தலைவனாக முன்போலவே மான்யுவல் அஜனா யிருந்தான். இந்த மந்திரிச்சபையார், அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டதும், தங்கள் கொள்கைகளை வரையறுத்துப் பின்வரும் அறிக்கை யொன்றை வெளியிட்டனர்:-
“ஆயுத பலம் பொருந்திய கலகக்காரர்களினின்று ஸ்பெயின் தேசத்து ஜனநாயகக் குடியரசைக் காப்பாற்றும் பொருட்டுப் பல முகப்புகளிலும் போர் புரிந்து கொண்டி ருக்கும் அரசியல் சக்திகளின் நேர்முகமான பிரதி நிதியாக இந்த மந்திரிச்சபை அமைந்திருக்கிறது. விசாலமான பிரதி நிதித்துவம் வாய்ந்த ஒரு மந்திரிச்சபை தற்போது இருக்க வேண்டுவது அவசியமென்று குடியரசுத் தலைவர் மான்யுவல் அஜனா கருதுகிறார். இப்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ள மந்திரிகள், எந்தெந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருக் கிறார்களோ, அந்தந்தக் கட்சியினரும் இந்த ஏற்பாட்டை உடனே அங்கீகரித்துக் கொண்டார்கள். இதனால் தற் போதைய அரசாங்கத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் அடங்கியிருக்கின்றன.
ஜனங்களுடைய முயற்சிகளையெல்லாம் ஒன்று படுத்திச் செயல் முறையில் திருப்பித் தேச நன்மைக்கு உப யோகப்படுத்துவதன் மூலம், கலகத்தை அடக்கி வெற்றி காணவேண்டுமென்ற உறுதியான நோக்கத்துடன் மந்திரிச் சபையின் வேலைத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற அரசியல் நோக்கங்களைக் காட்டிலும், இந்த லட்சியத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கலகத்தை அடக்குவதைத் தவிர வேறு எண்ணமே தற்போது இருக்க முடியாதல்லவா?
ஸ்பெயினுக்கு எவ்வித ஏகாதிபத்திய எண்ணங்களும் இல்லை. எனவே, சமாதான நோக்கத்தையே அரசாங்கம் வலியுறுத்துகிறது. மந்திரிச் சபையின் ஏகமனதான அபிப் பிராயமும் இதுவாகும். தேச நன்மைக்கும் இஃது உகந்ததாகும். ஏனெனில் உலக சமாதானத்தில்தானே நாம் வாழமுடியும்?
எல்லா நாடுகளிடத்திலும் ஸ்பெயின் நேசப் பான்மை கொண்டிருக்கிறதென்பதை இச்சமயம் அரசாங்கம் வற் புறுத்துகிறது. மற்ற நாடுகளிடம் ஸ்பெயின் எப்படி மரியாதை செலுத்துகிறதோ, அதேமாதிரி, ஸ்பெயினுக்கும் மற்ற நாடு களிலிருந்து மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.
என்ன விபரீதங்கள் நேர்ந்த போதிலும், ஸ்பெயின் தேசத்திற்குரிய பிரதேசங்களை கலகக்காரர்கள் வெற்றியடை வதனால் உண்டாகும் ஆபத்தினின்று காப்பாற்ற அரசாங்கம் உறுதியாகத் தீர்மானித்திருக்கிறது.
குடியரசின் நியாயத்தன்மையைக் காப்பாற்ற, தரைப் படை, கப்பற் படை, ஆகாயப்படை முதலியனவும், பொது ஜனப்படையும் செய்து வரும் முயற்சிகளுக்காக அப்படையைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் மிகுந்த உற்சாகத்துடன் வந்தனம் அளிக்கிறது. அந்த வீரர்களின் தியாகத்திற்குப் பாத்திரமாயிருக்கும் வண்ணம் அரசாங்கம் நடந்து கொள்ளும். தேசீய முன்னேற்றத்தில் அந்த வீரர்கள் கொண்டுள்ள நியாய மான ஆவலை அரசாங்கம் எப்பொழுதும் பாதுகாத்து நிற்கும்.”
எனவே, இந்த முன்னணி அரசாங்கத்தின் முக்கிய நோக்க மெல்லாம், பிற்போக்கான எண்ணங்களுக்கும், உரிமைகளுக்கும் பிரதிநிதியாகத் தோன்றிப் போராடும் பாசிஸத்தைத் தோற்கடிப்பது தான். ஆனால் இந்த ஓர் அமிசத்தோடு கபல்லெரோ அரசாங்கம் திருப்தியடைந்துவிடவில்லை. பாசிஸத்தைத் தோல்வியுறச் செய்வ தென்பது அழிவு வேலைதானே. அதனைத் தொடர்ந்தாற்போல் ஆக்கவேலைகளும் நடைபெற்றால்தானே குடியரசு நிலைபெறும். இதனைக் கபல்லெரோ அரசாங்கம் உணராமலில்லை. இதற்கான திட்டங்களையும் இது வகுத்திருக்கிறது. இவ்விஷயமாக அரசாங்கம் கொண்டுள்ள கொள்கைகளை ஒரு பிரபல ஸ்பானிஷ் பத்திரிகை பின் வருமாறு எடுத்துக் கூறுகிறது:-
“நாம் ஜனநாயகக் குடியரசுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி போராடவேண்டுமென்பது ஜனங்களின் அபிப்பிராயமுமாகும். இது முற்றிலும் உண்மை நாம் போராடுகிறோம். ஸ்பெயின் தேசத்து ஜனங்கள் அனைவரும் போராடுகிறார்கள். எதற்கு? ஜனநாயகக் குடியரசுக்காக. குடியரசு என்பது வெறும் வார்த்தை என்று நாம் கருதுகிறோமில்லை. ஜனங்களும் அங்ஙனம் கருதுகிறார்களில்லை. சமூக வாழ்விலும் பொருளாதார நிலையிலும் ஜனங்கள் திருப்தியடைகிற விதமாகவே, இந்தக் குடியரசு உணர்ச்சியை நாம் பார்க்கிறோம். இதனைப் பொதுஜனங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டி ருக்கிறார்கள்.
அரசாங்கப் படைகளால் வெற்றிகொள்ளப் பெற்ற பிரதேசங்களில், சமூக, பொருளாதார சீர்திருத் தங்களை அமுலுக்குக் கொண்டு வருவதுதான், வெற்றி கொண்டதன் அடையாளமாகும். இந்த வேலையை அரசாங்கமே செய்ய வேண்டும். ஜனநாயகக் குடியரசு என்றால் என்ன? நிலச்சுவான் தார்கள், பணக்காரர்கள் முதலியோரிடமிருக்கும் நிலங்களை விவசாயி களுக்குப் பகிர்ந்து கொடுப்பது; விவசாயிகளுக்குப் பண வசதிகள் செய்து கொடுப்பது; வரிக்குறைவு; கடன்களை ரத்து செய்தல்; சமூக வாழ்வுக்குரிய சீர்திருத்தங்களை நடை முறையில் கொணர்தல்; தொழிலாளர்களின் வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்துதல்; சில்லரை வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல்; பிற்போக்கான கட்சிகளைச் சட்ட ரீதியாகக் கலைத்து விடுதல் முதலியனவாம்.”
குடியரசு அரசாங்கத்தினர், கலகம் தொடங்கிய சில மாதங் களுக்குள் அரசாங்கத் தலைமை ஸ்தானத்தை, மாட்ரிட்டிலிருந்து, வாலென்ஷியாவுக்கு மாற்றிக் கொண்டார்கள். இது, ஸ்பெயினின் கிழக்குப் பக்கத்திலுள்ள ஒரு துறைமுகம். இப்படி மாற்றிக் கொண்டது, அரசாங்கத்தின் பலஹீனத்தையே காட்டுகிறதென்று பாசிஸ்டுகள் கூறுகிறார்கள். போக்கு வரவு சௌகரியத்தை உத் தேசித்தும், கிழக்குப் பக்கத்து மாகாணங்களில் அதிகமான பொது ஜன ஆதரவு இருப்பதை முன்னிட்டும் வாலென்ஷியாவுக்குத் தங்கள் தலைமை ஸ்தானத்தை மாற்றிக் கொண்டதாக அரசாங்கத்தார் சொல்கிறார்கள்.
பாசிஸ்டுகள் படை திரட்டிப் போர் புரிவதோடு நிற்கவில்லை. இவர்கள் கலகம் தொடங்கிய ஆறாவது நாளன்றே-அதாவது 24-7-1936லேயே - யுத்த நெருக்கடியான காலங்களில் சாதாரணமாக ஏற் படுத்தப் பெறும் ராணுவ அரசாங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். எந்தெந்த பிரதேசங்களை இவர்கள் கைப்பற்றுகிறார்களோ, அந்தந்தப் பிரதேசங்களில் இவர்கள் இந்த ராணுவ அரசாங்க முறையையே அமுலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். எனவே, கலகத்தின் விளைவாக ஸ்பெயினில் இரண்டு விதமான அரசாங் கங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள அன்பர்கள் ஆசைப்படலாம். இதற்கு முன்னிருந்த அரசாங்கங் களையெல்லாம் ஆட்டிப் புடைத்து வந்த ரோப்ளெஸ் என்பவன், கலகம் தொடங்கிய மறுவாரம், போர்த்துகலுக்கு ஓடிப் போய் விட்டான். இவனுடன் ஸ்பெயின் தேசத்து மிகப் பெரிய பணக்காரனென்று சொல்லப்படுகிற ஜூவான் மார்ச்1 என்பவனும் சென்று விட்டான். ரோப்ளெஸுக்கு எப்பொழுதுமே பணக்காரர் களுடைய ஆதரவு உண்டு. கலகம் ஆரம்பித்த பிறகு, ரோப்ளெஸும், ஜூவான் மார்ச்சும் வெளி நாட்டிலிருந்துகொண்டு, பாசிஸ்டு களுக்குப் பண உதவி செய்து கொண்டு வருவதாகச் சொல்லப் படுகிறது.
IX வல்லரசுகளின் கவலை
ஸ்பெயினில் கலகம் தொடங்கியது முதல், அஃது ஒரு சாதாரண உள்நாட்டுக் குழப்பம் என்று எந்த ஐரோப்பிய வல்லரசும் கருதவில்லை. சில நாடுகளில் அவ்வப்பொழுது ஏற்படும் கட்சிச் சண்டைகள் மாதிரி ஆரம்பித்து அப்படியே அடக்கிவிடும் என்று எந்த ராஜ தந்திரியும் நினைக்கவில்லை. இதனை, உலகப் பிரச்னை யாகவே எல்லாரும் கருதி வந்திருக்கிறார்கள். இதற்குக் காரண மென்ன?
மத்தியதரைக் கடலின் மேற்குப் பாதுகாவலன் போல் ஸ்பெயின் தேசம் அமைந்திருக்கிறது. அத்லாந்திக் மகா சமுத்திரத்தையும் மத்திய தரைக் கடலையும் ஒன்று சேர்த்து வைப்பது ஜிப்ரால்டர் ஜல சந்தி, இந்த ஜல சந்திக்கு வடக்கிலும் தெற்கிலுமுள்ள பிர தேசங்கள் ஸ்பெயினைச் சேர்ந்தவை. கீழ் நாடுகளுடனும் ஆப்ரிக்கா கண்டத்துடனும் எந்த ஐரோப்பிய வல்லரசேனும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு மத்திய தரைக் கடலில் ஓரளவு ஆதிக்கம் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்காக, ஸ்பெயின் தேசத்திலே யார் அதிகமான செல் வாக்கைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் மத்திய தரைக்கடலிலே மட்டுமல்ல, ஐரோப்பா கண்டத்திலேயே செல்வாக்குடன் இருக்க முடியும்? அதாவது, ஸ்பெயின் தேசம் எவ்வளவுக் கெவ்வளவு பல ஹீனமாயிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு ஐரோப்பிய வல்லரசு களுக்கு நல்லது. இதனாலேயே, ஸ்பெயின் தேசத்துக் கலகம், ஐரோப்பிய வல்லரசுகளின் கவனத்தைப் பெரிதும் இழுத்திருக்கிறது.
மத்திய தரைக் கடலில் செல்வாக்குச் சம்பாதித்துக் கொள்ளும் விஷயத்தில், கிரேட் பிரிட்டனே, மிகவும் முன் யோசனையுடன் நடந்து கொண்டிருக்கிறதென்று சொல்ல வேண்டும். சுமார் 230 வருஷங்களுக்கு முன்னரேயே, அதாவது 1704ஆம் வருஷத்திலேயே, ஜிப்ரால்டரை கிரேட் பிரிட்டன் ஆக்ரமித்துக் கொண்டது. இப்படி ஆக்ரமித்துக் கொண்டதற்கு, வழக்கமாகச் சொல்லப்படும் காரணங்கள் கூட இல்லை. ஏனென்றால் அங்கே எவ்விதமான ஜனங்களும் வசிக்கவில்லை அவர்களை நாகரிகப்படுத்து வதற்கு. குரங்குகள்தான் அந்தப் பாறாங்கல்லிலே வசித்துக் கொண்டிருந்தன. அப்படியிருந்தும், அந்த ஜிப்ரால்டரைக் கைப்பற்றிக் கொள் வானேன்? இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகச் செல்ல இது முக்கியமான பாதை. இந்த ஜிப்ரால்டர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாகவே மொராக் கோவின் வடக்கேயுள்ள க்யூடா துறைமுகமும் மத்திய தரைக்கடலிலேயுள்ள பெலாரிக் தீவுகளும். இவை யிரண்டும் ஸ்பெயின் ஆதிக்கத்திலிருக்கின்றன. பிரிட்டிஷார் ஜிப்ரால்டரை எப்படி சுவாதீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரோ, அப்படியே க்யூடாவையும் பெலாரிக் தீவுகளையும் தத்தம் சுவா தீனத்தில் வைத்துக் கொள்ள முடியுமாவென்று ஜெர்மெனியும் இத்தலியும் முயற்சி செய்கின்றன.
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லருக்கும், இத்தலியின் சர்வாதிகாரியான முஸோலினிக்கும் நாடு பெருக்கும் ஆசை இருக்கிற தென்பது வெளிப்படை. வார்சேல் ஒப்பந்தந்தான் இந்த ஆசைக்குக் காரணம் என்பதைப் பற்றி நாம் ஏன் இங்கு விஸ்தரித்துக் கொண்டுபோக வேண்டும்? முஸோலினியின் ஏகாதிபத்திய ஆசை, எதியோப்பியாவை ஆக்ரமித்துக் கொண்டதன் மூலமாக வெளியாகி விட்டது. ஆனால் இந்த ஆசை இதனோடு நிற்கும் என்பது என்ன நிச்சயம்? மற்றும், எதியோப்பியா, எரீட்ரா, இத்தாலிய சோமாலி லாந்து முதலியவைகளுக்குச் செல்லும் வழியில் பெலாரிக் தீவுகளும், க்யூடா துறைமுகமும் இருக்கின்றன. இந்த இரண்டு பிரதேசங் களில் ஏதேனும் ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டால், பிரிட்டிஷார் இந் தியாவுக்குச் செல்லும் பாதை பாதிக்கப்படும். அப்பொழுது, மத்திய தரைக் கடலின் ஆதிக்கத்தில் ஓரளவு பங்கு பெறலாம் என்பது முஸோலினியின் கருத்து. ஸ்பெயினிலுள்ள பாசிஸ்ட் கட்சியினருக்கு இத்தலி உதவி செய்வதற்கு இதுவே காரணம்.
ரிவேரா, ஸ்பெயினில் சர்வாதிகாரியாக இருந்த காலத்திலேயே, முஸோலினி, பாசிஸக் கொள்கையைப் பரப்பச் செய்தது எவ் வளவோ முன் யோசனையுடன் தான். இது சம்பந்தமாக பிராங் கோவுக்கும் முஸோலினிக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, பிராங்கோ, இந்த ஸ்பெயின் குழப்பத் தில் வெற்றி பெற்று, நிரந்தரமான ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்து வானாகில், அப்பொழுது, ஸ்பெயின் தேசத்துக் கைத்தொழில்களின் அபிவிருத்திக்காக, இத்தலி, ஒரு பெருந்தொகை கடன் கொடுக்க வேண்டியது; ஸ்பெயின் தேசத்திலுள்ள ரெயில்வே பாதைகளைப் பொறுப்பாக வைத்துக் கொண்டு இந்தக் கடன் தொகையைக் கொடுக்க வேண்டியது; இரண்டு அரசாங்கங்களும் பின்னர் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியது; வேறு விதமான தடைகள் குறுக்கிடாவிட்டால், க்யூடா துறைமுகத்தை யும், பெலாரிக் தீவுகளில் ஒன்றையும் இத்தலிக்கும் கொடுத்துவிட வேண்டியது; அப்படி கொடுக்க முடியாவிட்டால், அவ்விரண்டு இடங்களிலும் கப்பல் படைகளை வைத்துக்கொள்ள இத்தலிக்கு அநுமதி கொடுக்கவேண்டியது. இந்த ஒப்பந்தம் இருப்பதனாலேயே, பிராங்கோவுக்கும், மற்ற பாசிஸ்ட் தளபதிகளுக்கும், இத்தலியி லிருந்து ஏராளமான உதவிகள் கிடைக்கின்றன வென்று சொல்லப் படுகிறது.
ஜெர்மனியை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர், ஆப்ரிக்கா கண்டத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த குடியேற்ற நாடுகளை மீண்டும் பெறுவதற்கு, கானரி தீவுகளிலோ, பெலாரிக் தீவுகளிலோ ஒரு பகுதி கிடைத்தால், அதையே வியாஜ மாக வைத்துக்கொண்டு மற்றக் குடியேற்ற நாடுகளையும் திருப்பிக் கேட்கலாமல்லவா? இதற்காக, ஸ்பெயினில் பாசிஸ்டுகளின் ஆதிக்கம் நிலைபெற வேண்டுவது அவசியம். இதனாலேயே ஸ்பானிஷ் பாசிஸ்டு களுக்கு ஜெர்மனி ஆதரவு கொடுக்கிறது.
மற்றொரு காரணமுமுண்டு. அதாவது, பிரான்சுக்கும் ஜெர் மனிக்கும் பரம்பரைப் பகைமையல்லவா? இப்பொழுது, பிரான் சிலே அபேதவாத அரசாங்கம் நடைபெறுகிறது. இந்த அரசாங்கத் தார், சோவியத் ருஷ்யாவுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டிருக் கின்றனர். இது ஜெர்மனிக்குப் பிடிக்க வில்லை யென்பது உலகறிந்த விஷயம். இதனால், ஸ்பெயினிலே பாசிஸ்ட் ஆட்சியை நிலைக்கச் செய்தால் பிரான்ஸை ஒரு பந்தோபஸ் திற்குட் படுத்தினது போலாகு மல்லவா.
ஸ்பெயினில், நாஜி கட்சி ஸ்தாபனங்கள் பல வருஷங்களாக இருந்து வருவதாகவும், இதற்காதாரமான பல தஸ்தவேஜுகள் கிடைத்திருக்கின்றன வென்றும் சொல்லப்படுகின்றன. மற்றும் ஸ்பெயினிலேயுள்ள அந்நிய நாட்டார்களில், ஜெர்மானியர்கள்தான் மிக அதிகமாயிருக்கிறார்கள். இவர்கள் குடியேறுவதையும், நாஜீயத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வதையும் கில் ரோப்ளெஸ் ஆதரித்து வந்தான். ஜெர்மனியிலிருந்து ஏராளமான யுத்த தளவாடங்கள், கலக ஆரம்பத்திலிருந்து ஸ்பெயினுக்குள் வந்து இறங்கிக் கொண்டு வந்தன. இங்ஙனமே, ஜெர்மானியர்கள் பலர், ஸ்பானிஷ் பாசிஸ்ட் படையில் சேர்ந்து போர் புரிகிறார்கள்.
இஃது இப்படியிருக்க, ஸ்பெயினின் முன்னணி அரசாங்கத் திற்கு, ருஷ்யாவின் உதவி அதிகமாகக் கிடைக்கிறதென்று பாசிஸ்டு கள் கூறுகிறார்கள். இப்பொழுது, ஸ்பெயினில் குடியரசின் சார்பாக, அபேதவாதக் கட்சியினரும் பொதுவுடமைக் கட்சியினரும் நடத்தி வரும் போராட்டமானது, ஸ்பெயினை மட்டும் பொறுத்த ஓர் உள் நாட்டுக் குழப்பமாகாதென்றும், முதலாளித்துவத்திற்கும் பொது வுடமைக்கும் நடைபெறுகிற உலகப் போராட்டமாகவே இதனைக் கொள்ள வேண்டுமென்றும், எனவே, தற்போதைய ஸ்பெயின் அர சாங்கத்தை, தான் ஆதரியாவிட்டால் அது பின்னாடி, தன்னையே பாதிக்கு மென்றும் ருஷ்யா கருதுவதாக தெரிகிறது.
“ஸ்பெயின் தேசத்துக் குடியரசைக் காப்பாற்றி அதன் மூலமாக உலக சமாதானத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்படியில்லாமல், இந்தக் குடியரசை அழிக்க விட்டு விட்டோமானால், கடுமையான உலக யுத்தம் ஏற்படுவது நிச்சயம்” என்று ஒரு ருஷ்ய அறிஞன் கூறுகிறான்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கை, எவ்வித உறுதிப் பாடுடைய தாகவும் இல்லை. ‘மதில்மேல் பூனை’யின் நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கிறதென்று கூறலாம். மத்திய தரைக் கடலின் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் பாதை பாதிக்கப்படா மலிருக்க வேண்டுமென்பதுதான் இதன் ஒரு நோக்கம். மற்றபடி ஸ்பெயினில், யார் வெற்றி கொண்டாலும் அல்லது தோல்வியடைந் தாலும் அதைப்பற்றி அவ்வளவு கவலையில்லை. ஆனால் ஸ்பெயினில் யார் வெற்றியடைகிறார்களோ, அவர்கள், தங்கள் நோக்கத்திற்கு இணங்கினவர்களா யிருந்தால் போதும். தற்போதைய அபேதவாத அரசாங்கம் நிலைத்துவிட்டால், அதனையும் இது மனப்பூர்வமாக விரும்பாது. அதற்கு மாறாக பாசிஸ்டுகள் வெற்றி கொண்டால், மத்திய தரைக் கடலில், தான் அநுபவித்து வரும் உரிமைகள் பாதிக்கப்படலாமோவென்ற சந்தேகமும் பிரிட்டனுக்கு இருக்கிறது. அல்பான்ஸோ மன்னன், ஸ்பெயின் சிங்காதனத்தில் இருந்த வரையில் அவன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கைகளினால் ஆட்டி வைக்கப்பெற்ற ஒரு பொம்மையாகவே இருந்து வந்திருக்கிறான். அவன் சென்று, குடியரசு ஏற்பட்டது முதற்கொண்டே, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளின் உள்ளத்தில் ஒருவித சஞ்சலம் ஏற்பட்டிருக் கிறதென்று சொல்லவேண்டும். இந்த மாதிரியான சங்கடமான நிலைமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவே, ஸ்பெயின் குழப்பத்தில் எந்த நாடும் தலையிடக்கூடாதென்று பிரான்ஸ் கொண்டு வந்த ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கம் உடனே ஏற்றுக் கொண்டது.
இனி, இந்தத் ‘தலையிடாத திட்டம்’ என்னவென்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். ஸ்பெயினில் கலகம் தொடங்கிய தினத் தன்றே பிரான்சின் நிலைமை தர்ம சங்கடமாகிவிட்டது. ஸ்பெயினி லுள்ள அபேதவாத அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்தால், அதனையே காரணமாக எடுத்துக்காட்டி, ஜெர்மனியும் இத்தலியும் ஸ்பானிஷ் பாசிஸ்டுகளுக்கு அதிகமான உதவிகளைச் செய்யத் தொடங்கிவிடும். அதனைப் பார்த்து, ருஷ்யா, ஸ்பானிஷ் அபேத வாதிகளுக்குத் துணைவனாக முன்வரும். இது பிறகு பெரிய யுத்தமாகவன்றோ முடியும்? இவற்றையெல்லாம் உத்தேசித்தும், இத்தலியும், ஜெர்மனியும் ஸ்பானிஷ் பாசிஸ்டுகளுக்கு உதவி செய்யா மலிருக்க ராஜ தந்திர முறையில் தடுப்பதற்கும், ஸ்பெயின் குழப்பத்தில் எந்த நாடுமே தலையிடக் கூடாதென்றும், அப்படி தலை யிடாமலி ருந்தால்தான் அதனை ஓர் உள்நாட்டுக் குழப்பமாக அடக்கிவிடலா மென்றும் சொல்லி, பிரான்ஸ் ஒரு திட்டத்தை வெளியிட்டது.
1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 17ஆம் தேதி, ஸ்பெயினில் குழப்பம் தொடங்கியதல்லவா? அது தொடங்கிய இரண்டாவது வாரத்தில், அதாவது 1936ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி மேற்படி திட்டத்தை பிரான்ஸ் வெளியிட்டு, மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைக் கேட்டது. பிரிட்டன் உடனே ஆதரவு அளித்தது. இப்படியே, ஜெர்மனி, இத்தலி முதலிய இருபத்தாறு நாடுகள் அங்கீ காரம் கொடுத்தன. காகித அளவில் எல்லாத் திட்டங்களையும் அங்கீகரித்துவிடலாம். ஆனால் செயல் முறையில்? இந்தத் திட்டத்தைக் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்த்துகல், ருஷ்யா ஆகிய ஐந்து நாடுகளும் ஏற்றுக்கொள்வதாயிருந்தால் தானும் உடன்படு வதாக இத்தலி கூறியது ஜெர்மனியின் பதிலும் இதே தொனியில் தான் அமைந்திருந்தது. ஆனால் இந்த இரண்டு நாடுகளும், ஸ்பானிஷ் பாசிஸ்டுகளுக்கு யுத்த சாமான்களை அனுப்பிக் கொண்டு தானிருந்தன!
இருபத்தாறு நாடுகளின் ஆசிபெற்ற இந்தத் தலையிடாத திட்டத்தைப்பற்றி ஆலோசிக்க, 1936ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி லண்டனில் சர்வதேசப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மகாநாடு கூடியது. ஒரு விஷயத்தை எவ்வளவு தூரம் மழுப்பி வைக்கலாமோ அல்லது செயலில் கொணராமல் தள்ளிப்போட லாமோ அவ்வளவுக்கும் இந்த மகாநாடுகள் உதவிக் கருவிகளா யிருக்கின்றன! இந்த மகாநாட்டுக்குப் போர்த்துகல்1 தேசத்துப் பிரதி நிதி வரவேயில்லை. ஸ்பெயினின் உள்நாட்டுக் குழப்பத்தில் மற்ற நாடுகள் தலையிடாமலிருக்க என்னென்ன முறைகளைக் கை யாளலாம் என்பதைப்பற்றித் திட்டம் வகுக்க ஒரு சிறு கமிட்டியை நியமித்துவிட்டு, இந்த மகாநாடு கலைந்துவிட்டது. இந்தக் கமிட்டி, பல தடவைகள் கூடிக்கூடிக் கலைந்தது. கடைசியில், ஸ்பெயினுக்கு எந்த நாடும், எந்த விதமான ஆள்பலத்தையோ ஆயுத பலத்தையோ உதவக் கூடா தென்றும், இந்தத் தடைத் திட்டமானது சரியானபடி நடைமுறையில் கொணரப்படுவதற்காக, ஸ்பெயினைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் ஒருவிதப் பாதுகாவல் ஏற்படுத்த வேண்டு மென்றும் ஒரு தீர்மானத்தை இந்தக் கமிட்டி நிறைவேற்றியது. இந்தத் திட்டம் 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப் படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
கலகம் தொடங்கி எட்டு மாதங்கள் கழித்து, அதில் மற்ற நாடுகள் தலையிடாதிருப்பதற்குரிய வழிகள் என்னவென்பதைப் பற்றித் திட்டம் போடப்பட்டது! அதுவும் திட்டந்தான்! சமாதான வாத்தியம், எவ்வளவு ஈனஸ்வரத்துடன், அபஸ்வரத்துடன் கூட வாசிக்கப்படுகிறது!
X சர்வாதிகாரமா? ஜன ஆதிக்கமா?
தற்போது உலகத்திலே இரண்டு விதமான சக்திகள் மோதிக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம், பாசிஸம் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிற சர்வாதிகார சக்தி ஒரு புறத்தில் தனது ஆயுத பலம், பொருள் வலிமை என்பனவற்றைத் துணையாகக் கொண்டு வீறிட்டு நிற்கிறது. அதற்கு எதிரில் நூற்றாண்டுகள் கணக்கில், தனது உரிமைக்காகப் போராடிப் போராடி வீழ்ந்தும் எழுந்தும் வந்திருக் கின்ற ஜன ஆதிக்க சக்தி, உண்மை, உழைப்பு, தியாகம் இவற்றைப் பக்கபலமாகக் கொண்டு மார் தட்டி நிற்கிறது. இந்த இரண்டு சக்தி களின் பகிரங்கமான மோதுதல்தான் 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் ஸ்பெயினில் தோன்றிய குழப்பம்.
இந்தக் குழப்பத்தில் எந்தச் சக்தி வெற்றி பெற்றாலும், அஃது உலகத்தையே பாதிக்கும் என்பது நிச்சயம். இதனாலேயே, ஏகாதி பத்திய சக்தி களெல்லாம் ஒன்றுதிரண்டு, தளபதி பிராங்கோவின் கலகத்திற்கு ஆசியளிக் கின்றன. அப்படியே, ஜன ஆதிக்க சக்தி களெல்லாம் கபல்லெரோவின் குடியரசு அரசாங்கத்திற்கு அநுதாபங் காட்டுகின்றன.
ஸ்பெயினில் தற்போது நிருவாகத்தை நடத்திவரும் முன்னணி அரசாங்கமானது, ஏதோ ஒரு சில கட்சிகளின் பிணைப்பு என்றோ, அல்லது தற்காலிகமாக இவை ஒன்று கூடியிருக்கின்றனவென்றோ எவரும் கருதி விடுவதற்கில்லை. தவிர, ஜன சமூகத்தின் தாழ்ந்த படியில் உள்ளவர்கள் மட்டுந்தான் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு காட்டு கிறார்கள் என்பதற்கு மில்லை. ஜன சமூகத்தின் மேற்படியிலுள்ள வர்கள் என்று கருதப்படுகிற பணக்காரர்கள், பேரறிஞர்கள் முதலிய பலரும், போராட்டம் தீவிரமாகப் பரவப் பரவ அரசாங்கத்திற்கு அதிகமான ஆதரவு காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் முன்னணி அரசாங்கம், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறு மானால், அது தேசத்தின் பூரணப் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாகவேஇருக்கும்.1
தவிர, அரசாங்கத்தின் சார்பில், தேசத்தின் ஜீவசக்திகளெல்லாம் திரண்டு, ஆண், பெண் என்ற வேற்றுமையின்றிப் போர் புரிகின்றன. பெண்கள், படைதாங்கிப் போர்புரிவதோடு மட்டும் நிற்க வில்லை. சிலர், தேசப் பாதுகாப்புக்கான காரியங்களைச் செய் கிறார்கள். இன்னும் சிலர், தாதிமார்களாக இருந்து காயமடைந் தவர்களுக்கு உபசாரஞ் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஆண்களுக்கு உற்சாக மூட்டும் பொருட்டுப் பிரசங்கங்கள் செய்தும், பாட்டுக்கள் பாடியும், உணவு அளித்தும் தொண்டு செய்கிறார்கள். சிறப்பாக, டோலொரெஸ் இபரெர்ரி1 என்ற நாரீமணி, ஆங்காங்குச் சென்று தனது பேச்சுத் திறமையினால், ஜனங்களை ஊக்கப்படுத்திவரும் காட்சியை எங்ஙனம் குறிப்பிடாமலிருக்க முடியும்?
பாசிஸ்டுகளுக்கு இத்தகைய பொதுஜன ஆதரவு இருப்பதாகத் தெரிய வில்லை. ஒரு கால் அவர்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றால், அது; பொதுஜன துவேஷத்தின் மத்தியில் நீடித்து வாழ முடியுமா வென்பது கேள்வி. அப்படி பாசிஸ்டுகள் வெற்றி பெற்றால் எந்த விதமான ஆட்சியைப் புகுத்துவார்கள் என்பது அநேகருடைய கேள்வியாயிருக்கிறது. மீண்டும் அவர்கள் முடியரசை நிலைக்கச் செய்வார்களா? அல்லது, ரோப்ளெஸும் லெர்ருவும் ஒரு சமயம் கருதியபடி சர்வாதிகார ஆட்சியைப் புகுத்துவார்களா? இதைப்பற்றி ஒன்றும் இப்பொழுது சொல்வதற்கில்லை. ஆனால், மாஜி ஸ்பெயின் மன்னனாகிய அல்பான்ஸோ, பாசிஸ்டுகள் அடைந்து வரும் வெற்றி களில் அதிக சந்தோஷங் காட்டுகிறான். 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில், இவன் பிராங்கோவின் வெற்றிகளைப் பாராட்டி ஒரு செய்தியும் அனுப்பியிருக்கிறான். இவன், என்ன விதமான கனவு கண்டு கொண்டிருக்கிறானோ?
1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், கபல் லெரோ அரசாங்கத்தார், கட்டாய ராணுவச் சேவக முறையை அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இதன் மூலமாக, தேசத்தி லுள்ள வயது வந்த எல்லாரும் படை முகத்துக்குச் செல்லும் காட்சியைக் கவிகளே வருணிக்கவேண்டும்.
இந்தக் குழப்பத்திலே ஜனங்கள்படும் அவஸ்தை சொல்லி முடியாது. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடு வதில் ஸ்பானியர்கள் காட்டும் உணர்ச்சி போற்றத்தக்கது. அது மட்டுமல்ல. இந்தத் துன்பத்திலே அவர்கள் இன்பத்தையும் காண்கிறார்கள். கலகம் ஆரம்பித்து எட்டு மாதங் களுக்குள் சுமார் இரண்டு லட்சம் பேர் இறந்திருக் கிறார்கள். ஆனாலும் ஜனங்கள் சிறிது கூட மனத்தளர்ச்சியடையவில்லை. ‘மரண தேவதையிடத்தில் எங்கள் ஆயுதங்களை ஒப்புவிப்போமே தவிர, சத்துருக்கள் வசம் சிக்கவிடமாட்டோம்’ என்ற ஒரே உறுதிதான் இவர் களிடத்தில் காணப்படுகின்றது. 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மத்தியில், பாசிஸ்டுகள் வசம் மலாகா என்ற துறைமுகம் சிக்கிக்கொண்டது. இந்த ஊரி லிருந்து ஆயிரக்கணக்கான ஜனங்கள், சத்துருக்கள் வசம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதென்று ஓடி னார்கள். இந்தக் காட்சியை, கபல்லெரோ அரசாங்க மந்திரியொரு வன் பின் வருமாறு வருணிக்கிறான்:-
“மலாகாவிலிருந்த ஜனங்கள், கலகக்காரர்களுடைய கையில் அகப் பட்டுக் கொள்ளக்கூடாதென்று தப்பி ஓடி னார்களே, அஃது ஒரு ஜன சமுத்திரம் திரண்டு செல்வதைப் போலவே இருந்தது. எதிர்பாராத இந்த ஆபத்து ஐரோப்பிய சரித்திரத்தில், எந்தச் சமூகத்தாருக்கும் ஏற்பட்டதில்லை. இந்த ஜனங்கள் மீது ஆகாய விமானங்களிலிருந்து குண்டுகள் விழுந்தன. யந்திர பீரங்கிகள் நெருப்பை வாரி இறைத்தன. பாதைகளெல்லாம் பிணங்கள் தான். குழந்தைகுட்டிகளுடன் சென்றவர்கள் நடக்க முடியாத நிலையில், குழந்தைகளின் கழுத்தை முறித்துக் கீழே போட்டு விட்டுப் போனார்கள். பாசிஸ்டுகள் கையில் தங்கள் குழந்தைகள் அகப்படக்கூடா தென்பது இவர் களுடைய நோக்கம். அப்படி குழந்தைகளைக் கொன்றுவிட்டபிறகு தாங்களும் தங்கள் தலைமீது பாறாங் கற்களை வேகமாகப் போட்டுக் கொண்டு இறந்தார்கள். அல்லது மோட்டார் லாரிகளின் சக்கரத்தின் கீழ் அகப் பட்டுக் கொண்டு மாண்டார்கள். இந்த ஜனத்திரளில் பல குழந்தைகள் காலில் மிதி பட்டு இறந்தன. நடக்கச் சக்தியற்ற வயோதிகர்கள், ஸ்திரீகள் முதலியோர் ஊர்ந்து சென்றார்கள். அப்படிச் சென்ற விடமெல்லாம் ரத்தக்கறை. இவர்களுக் கெல்லாம் குடிக்கத் தண்ணீரேது? சாப்பிட ஆகாரம் ஏது? படுக்க இடமேது?
ஸ்பெயினிலே இப்பொழுது நாம் என்ன காண்கிறோம்? வீடுகள் எரிகின்றன. ஆகாய விமானங்களிலிருந்து குண்டுகள் பொழிகின்றன. தாய்மார்கள், குழந்தைகளை மடியிலே வைத்துத் தாலாட்டிக் கொண்டிருக்கும் போது, அப்படியே துடிக்கத் துடிக்க உயிர் விடுகிறார்கள். புருஷன், துப்பாக்கி முனையிலே இறந்துபட, அவன் மனைவி வீரா வேசங் கொண்டு பழிதீர்க்கச் செல்கிறாள். நிரபராதி களான வயோதிகர்கள், கர்ப்ப ஸ்திரீகள் முதலியோர் நிர்த் தாட் சண்யமாக, ஈவு இரக்கமின்றி பீரங்கிகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள்.
ஸ்பெயின் குழப்பமானது உலக யுத்தம் என்ற தீயை மூட்டி விட்டு அதிலே தானும் ஐக்கியப்பட்டுவிடுமா?
உலகத்திலே இனி சர்வாதிகாரமா, அல்லது ஜன ஆதிக்கமா என்ற பிரச்னை ஸ்பெயினில் தீர்க்கப்படுமா?
இத்தகைய கேள்விகளை, உலக ராஜதந்திரிகள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயினே! உன்னுடைய பதில் என்ன?
ஸ்பெயின் குழப்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வரலாறு
Largo Cabillero - லார்கோ கபல்லெரோ: இவனே, 1936ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி ஏற்பட்ட முன்னணி அரசாங்கத்தின் தலைவன். இவன், ஸ்பானிஷ் அபேதவாதக் கட்சியின் சிறந்த தலைவனாகவு மிருக்கிறான். ஐரோப்பிய அபேத வாத இயக்கத்தில் லெனின் எப்படி ஒரு காலத்தில் முக்கிய ஸ்தானத்தை வகித்தானோ அதே ஸ்தானத்தை இப்பொழுது கபல்லெரோ வகிக்கிறான் என்று சொல்ல வேண்டும். இவன் 1869ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓர் ஏழைக் குடியானவன் குடும்பத்தில் பிறந்தவன். இளமையில் இவன் கல்வி கற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில் இல்லை. ஏழு வயது முதற் கொண்டே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான். ஆரம்பத்தில் கடற்படையில் கூலியாளாக அமர்ந்தும், பின்னர் சுண்ணாம்பு பூசும் தொழிலில் ஈடுபட்டும் பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு வந்தான். இருபது வயதுக்குப் பிறகுதான் இவன் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டான். இவன் அபேதவாதக் கட்சியில் சேர்ந்து பல பொறுப்பான பதவி களை வகித்தான். 1917ஆம் வருஷம் இவன், அரசாங்கத்தினரால் ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதிக்கப் பெற்றான். பின்னர் விடுதலையடைந்து, 1931ஆம் வருஷ குடியரசு அரசாங்கத் தில் தொழில் மந்திரியாக நியமனம் பெற்றான். 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஏற்பட்ட புரட்சிக்கு இவன் தூண்டுகோலா யிருந்தானென்று சொல்லி, லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கம், இவனைக் கைது செய்து விசாரணையின்றிப் பதின்மூன்று மாத காலம் சிறையில் வைத்திருந்தது. இவன் மனைவியையும் இழந்து விட்டான். இவனை ‘ஸ்பானிஷ் லெனின்’ என்று அனைவரும் அழைப்பர். இவன் பேச்சுக்களும் லெனின் பேச்சுக்களைப் போலவே உணர்ச்சி யற்று, வெறும் உண்மையை மட்டும் எவ்விதச் சொல் லடுக்கும் இன்றிக் கூறுவதாக இருக்கும். உருவத்தில்கூட, லெனினும் இவனும் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே இருப்பார்கள். இவனுக்கு, ஸ்பெயினில் சென்ற விடமெல்லாம் சிறப்பு உண்டு.
Alvarez Vayo - அல்வரேஸ் வயோ: அபேதவாதக் கட்சியில் தீவிரமானவன். ஸ்பெயினிலுள்ள சிறந்த அறிஞர்களுள் ஒருவன். பத்திரிகா நிபுணன். பெரிய ராஜ தந்திரி. குடியரசு அரசாங்கத்தின் கீழ், மெக்ஸிகோவுக்கு ஸ்பெயின் ஸ்தானீகனாகச் சென்றிருந்தான்.
Indelecio Prieto - இண்டெலேஷ்யோ ப்ரீடோ : மிகப் பெரிய உருவினன். உருவத்திற்குத் தகுந்த குரல். குரலுக்கேற்ற நாவன்மை. கட்சிச் சண்டையில் கெட்டிக்காரன். எதிர்க் கட்சியினர் எப் பொழுதுமே இவனைக் கண்டு பயப்படுவதுண்டு.
Hernandez - ஹெர்னாண்டெஸ் : பொதுவுடமைக் கட்சியில் தீவிரவாதி. ஆனால் நிதான புத்தியுடையவன். முன்னணிக் கட்சி அரசாங்கத்தில் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டான். அப்பொழுது இவனுக்கு வயது 28. இள வயதிலே பொறுப்புள்ள பதவியை வகித்த அறிஞர் குழுவைச் சேர்ந்தவன்.
Gil Robles - கில் ரோப்ளெஸ் : 27-11-1898இல் ஸாலமங்கா என்ற ஊரில் ஒரு கல்லூரி ஆசிரியனின் மகனாகப் பிறந்தவன். சட்டக் கல்லூரியில் பயின்று, சட்ட போதகாசிரியனாகவும் உத்தி யோகம் பார்த்தான். 1923ஆம் வருஷம் இவன் இந்த உத்தியோகத்தை விடுத்து அரசியலில் புகுந்தான். பத்திரிகாசிரியனாக வேலை பார்த்தான். நிலச்சுவான்தார்கள், பாதிரிமார்கள் ஆகிய இவர் களுடைய கட்சியை ஆதரித்தான். அவர்களுக்காக பார்லிமெண்டில் போராடினான். இவன், குடியரசாங்கத்திற்கு விரோதமாகவே எப்பொழுதும் நடந்து கொண்டு வந்தான். பணக்காரர்களுடைய ஆதரவு இவனுக்கு மிகவும் அதிகம். 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் கலகம் தொடங்கியதும் இவன் போர்த்துகலுக்குச் சென்று விட்டான்.
Alejandro Lerroux - அலெஜாந்த்ரோ லெர்ரு : இவன் 1864ஆம் வருஷம் பிறந்தவன். பிற்போக்கான கொள்கைகளை யுடையவன். குடியரசு அரசாங்கத்தை வாழவிடக் கூடாதென்ற நோக்கத்துடன், 1931ஆம் வருஷம் ஏற்பட்ட தற்காலிக்கக் குடியரசு அரசாங்கத்தில் அந்நிய நாட்டு மந்திரிப் பதவியை ஏற்றுக் கொண்டான். 1933ஆம் வருஷத்திலிருந்து 1936ஆம் வருஷத்திற்குள் நான்கு முறை பிரதம மந்திரிப் பதவியை வகித்திருக்கிறான். 1934ஆம் வருஷத்திலிருந்து 1936ஆம் வருஷம் வரை ஸ்பெயினில் நடைபெற்ற அடக்கு முறைகளுக்கெல்லாம் இவனும் ரோப்ளெஸும் பொறுப் பாளிகளாவார்கள்.
Francisco Franco - பிரான்சிஸ்கோ பிராங்கோ: இவன் பாசிஸ்ட் படைகளின் பிரதம சேனாதிபதி. இவனுக்கு இது போழ்து 46 வயதுதான் ஆகிறது. 32வது வயதிலேயே ராணுவத்தில் இவனுக்கு ஒரு படைத் தலைவன் பதவி கொடுக்கப்பட்டது. மொராக்கோவி லுள்ள அந்நியப் படைகளின் தலைவனாக இவன் 1921ஆம் வருஷத் திலிருந்து 1926ஆம் வருஷம் வரை உத்தியோகம் பார்த்தான். 1934ஆம் வருஷம், அஸ்டூரியா மாகாணத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போழ்து அவர்களை மன மிரக்கமின்றி அடக் கினான். 1936ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முன்னணி அரசாங்கத் தினர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு இவன், கானரி தீவுகளின் நிருவாகஸ்தனாக அனுப்பப் பெற்றான். அங்கிருந்துதான் இவன் கலகத்திற்குக் கிளம்பியது.
Emilio Mola - எமிலியோ மோலா: இவன் ஸ்பானிஷ் தொழிலாளர்களின் துவேஷத்தைப் பெற்றுள்ளவர்களில் ஒருவன். 1931ஆம் வருஷம் குடியரசு அரசாங்கம் ஏற்பட்டபோது அதற்குள் புகுந்து அரித்தவர் களுள் சிறந்தவன். இவன் போலீஸ் படைத் தலை வனாக இருந்து வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் நிர்த்தாட் சண்யமாக நடத்தியிருக்கிறான்.
Queipo de Llano - குவிபோ டி லானோ: குடியரசுக்கு முடியரசினால் அளிக்கப்பட்ட ஒரு நன்கொடை என்று இவனைச் சொல்லலாம். ஆனால் இவன் ஒரு காலத்தில், முடியரசுக்கு விரோதமாகக் கலகம் செய்தவன். இவன் பின்னர், போர்த்துகலுக்கு அனுப்பப்பட்டான். பிராங்கோவின் முயற்சியால் இவன் மீண்டும் வரவழைக்கப்பட்டு, செவில்லேயிலிருந்த பாசிஸ்ட் படைத் தலைவனாக நியமனம் பெற்றான்.
Domingo Batet - டாமிங்கோ பாடெட்: 1934ஆம் வருஷம் காடலோனியாவில் எழுந்த கலகத்தை அடக்கியவன். கலகத்திற்குக் காரணமாயிருந்த லூயி கொம்பனிஸ் என்பவனை முப்பது வருஷ சிறைவாசத்திற்கு அனுப்பிய பெருமை இவனுடையதே.
Jose Sanjurjo - ஜோஸே ஸான்ஜுர்ஜோ: பாசிஸ்ட் படைத் தலைவன். 1932ஆம் வருஷம் புரட்சிக்குக் கிளம்பித் தோல்வி யடைந்தவன். இவன் 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆகாய விமானத்தி லிருந்து விழுந்து இறந்த போது இவனுக்கு வயது 65. இவன் நிரம்ப அநுபவ முடையவன் என்றும், பாசிஸ்ட் கட்சி வெற்றியடைந்தால் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவனாக நிய மிக்கப்படலாமென்றும் சொல்லப்பட்டு வந்தது.
Jose Rivera - ஜோஸே ரிவேரா: இவன் ப்ரிமோ டி ரிவேரா வின் மகன். ஜெர்மனியில் ‘சூறாவளிப் படை’ ஏற்படுத்தப்பெற்ற மாதிரி, ஸ்பானிஷ் படை (ளுயீயniளா ஞாயடயnஒ) யொன்றை ஏற்படுத் தினான். இவன் 1934ஆம் வருஷம் ஹிட்லரைக் கண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
Zamora - ஜமொரா: அல்பான்ஸோ மன்னன், 1931ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, தனது அரசுரிமையை விடுத்துச் சென்ற பிறகு, ஸ்பெயினில் ஏற்பட்ட தற்காலிகக் குடியரசு அர சாங்கத்தின் தலைவனாயிருந்தவன். பிறகு சட்டபூர்வமாக ஸ்திரப்படுத்தப்பட்ட குடியரசின் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். இந்தப் பதவியை 10-12-1931 முதல் 6-4-1936 வரையில் வகித்தான். பிறகு, இவன் பார்லிமெண்டின் பெரும் பான்மையான வாக்குகளால் விலக்கப்பட்டான். (பக்கம் 55) இவன் அரசியலில் பிற்போக்கான கொள்கை கொண்டவன். இவன் வெளிக்குக் குடியரசு வேஷம் போட்டுக் கொண்டிருந்தானாயினும் உண்மையில் அதன் முற்போக்குக்குத் தடையாயிருந்தவன்.
Azana - அஜனா: குடியரசுக் கட்சியில் தீவிரவாதி. 1931ஆம் வருஷம் அக்டோபர் மாதத்திலிருந்து 1933ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் வரையிலும், 19-2-36 முதல் 10-5-36 வரையிலும் குடியரசு அரசாங்கத்தில் பிரதம மந்திரியாயிருந்தவன். 10-5-36இல் குடியரசின் இரண்டாவது தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.
Aznar - அஸ்நர்: சிறந்த கப்பற்படைத் தலைவன். அல் பான்ஸோ மன்னனின் கீழ் 18-2-31 முதல் 13-4-31 வரை பிரதம மந்திரியாயிருந்தான்.
Berenguer - பெரெங்குயர்: முடியரசைத் தாங்கி நின்ற ஒரு சேனா வீரன். 30-1-30 முதல் 18-2-31 வரை முடியரசாங்கத்தில் பிரதம மந்திரியாயிருந்தவன்.
Calvo Sotelo - கால்வோ ஸோடெலோ : பாசிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன். ரிவேராவின் சர்வாதிகார அரசாங்கத்தில் பொக்கிஷ மந்திரியாயிருந்தவன். 13-7-36இல் கொலை செய்யப் பட்டான். இதுவே, 1936ஆம் வருஷம் ஜூலை 17ஆம் தேதி ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணமாயிருந்தது.
Quirga - குவிரோகா.: குடியரசுக் கட்சியில் தீவிரவாதி. கலீஷியா மாகாணத்தில் நிரம்பச் செல்வாக்குடையவன். 13-5-36 முதல் 18-7-36 வரை உள்நாட்டு மந்திரியாயிருந்தான்.
முக்கிய சம்பவங்கள்
1898 ஸ்பெயின், குடியேற்ற நாடுகளை இழந்தது.
1909 பார்ஸிலோனாவில் குழப்பம் ஏற்பட்டது.
1923 பிரிமோ டி ரிவேரா, ஸ்பெயினின் சர்வாதிகாரியானது.
1930 பிரிமோ டி ரிவேரா சர்வாதிகாரப் பதவியினின்று விலகியது.
1931 குடியரசு ஸ்தாபிதம். அல்பான்ஸோ அரசன் ஸ்பெயினை விட்டுச் சென்றது. ஜமொரா, குடியரசுத் தலைவனானது.
1932 காடலோனியாவுக்கு மாகாண சுதந்திரம் ஓரளவு அளிக்கப் பட்டது.
1933 பாசிஸ்டுகளின் பிரசாரம். லெர்ரு பிரதம மந்திரியானது.
1934 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். அடக்குமுறை ஆர்ப்பாட்டம்.
1935 லெர்ரு-ரோப்ளெஸ் கூட்டுறவின் ஆதிக்கம்.
1936 பார்லிமெண்ட் தேர்தல். பொதுஜன முன்னணிக் கட்சியின் வெற்றி. ஜமொரா, குடியரசுத் தலைமைப் பதவியினின்று இறக்கப்பட்டது. அஜனா குடியரசுத் தலைவனானது. கால்வோ ஸோடெலோவின் கொலை. ஜூலை மாதம் 17ஆம் தேதி பாசிஸ்டுகளின் குழப்பம்.
1937 ஸ்பெயின் குழப்பத்தில் வல்லரசுகள் தலையிடக் கூடா தென்று போட்ட திட்டம் ஓரளவு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. குடியரசு அரசாங்கத்தார் கட்டாய ராணுவச் சேவகத்தை அமுலுக்குக் கொண்டுவந்தது.
பொதுக் குறிப்புகள்
பழக்க வழக்கங்கள்:
ஸ்பெயின் பல சமூகத்தவர்கள் அடங்கிய ஒரு நாடாக இருப்ப தனால், ஸ்பானியர்களின் பொதுவான பழக்க வழக்கங்கள் இன்னவை யென்று நிர்ணயித்துக் கூறிவிடுவதற்கில்லை. ஆனால் பொதுவாக, இவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைப் பொருட் படுத்தாமல் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்குத் தங்கள் பழமையிலே ஒரு பெருமையும், எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கையும் உண்டு. குரூரமான விளையாட்டுகளில் நிரம்பப் பிரியமுடையவர்கள். காளை மாடுகளைக் கொழுமையாக வளர்த்து அவற்றோடு சண்டையிடுவது இவர்களுடைய முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. இத்தகைய மாட்டுச் சண்டைகள், திருவிழாக்கள் போல் நடைபெறும். ஆயிரக்கணக்கான ஜனங்கள் வேடிக்கை பார்க்கக் கூடுவார்கள். எப்படி சிலர் குதிரைகளைக் கருத்துடன் வளர்க்கிறார் களோ அப்படியே, ஸ்பெயினில் காளை மாடுகளை வளர்ப்பார்கள். இதற்காகப் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கான பணத்தைச் செல வழிப்பார்கள். காளை மாடுகளைப் போலவே குதிரைகளையும் வளர்ப்பார்கள். இந்தமாதிரியான விளையாட்டுகளுக்காக, வருஷத்தில் சுமார் மூவாயிரம் பிராணிகள் பலியாகின்றன. ஆனால் சென்ற சில வருஷங்களாக, இந்த ரத்தவெறி பிடித்த விளையாட்டுகள் புறக் கணிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்பானியர்கள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவார்கள். எதிலும் மிதத்தன்மை யுடையவர்கள். ஆகாரத்தில் அதிகமான வெள்ளைப் பூண்டைச் சேர்த்துக்கொள்வார்கள். ஆகாரம் முதலிய வற்றில் மிதமாக இருந்தாலும், ஸ்பானியர்கள் பொதுவாக தேக பலமும் மனோ உறுதியும் கொண்டவர்கள். எதனையும் எளிதில் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். ஆனால் அடிக்கடி மாறுதல் களை விரும்புவார்கள். அரசியல், இலக்கியம், சமூக வாழ்க்கை முதலிய ஏதேனுமொன்றில் அடிக்கடி இவர்கள் மாற்றங்களைக் காணவே ஆசை கொள்வார்கள்.
ஆண்களும் பெண்களும் நிரம்பப் பொறுமையுடையவர்கள். குடி தண்ணீர் அகப்படாத கிராமங்களில் பெண்கள் தலைமேல் பெரிய மண் ஜாடிகளை வைத்துக் கொண்டு மைல் கணக்கான தூரம் சென்று தண்ணீர் கொண்டு வருவார்கள். இங்ஙனமே ஆண்களும் ஜீவனோபாயத்திற்காக மைல் கணக்காக நடந்து செல்லப் பின் வாங்கமாட்டார்கள்.
முக்கிய நகரங்கள்:
மாட்ரிட் - ஜனத்தொகை சுமார் 10 லட்சம்
பார்ஸிலோனா - ஜனத்தொகை சுமார் 11 லட்சம்
வாலென்ஷியா - ஜனத்தொகை சுமார் 3ஙூ லட்சம்
செவில்லே - ஜனத்தொகை சுமார் 2ஙூ லட்சம்
மலாகா - ஜனத்தொகை சுமார் 2 லட்சம்
ஸர்கோஸா - ஜனத்தொகை சுமார் 1ஙு லட்சம்
மூர்ஷியா - ஜனத்தொகை சுமார் 1¾ லட்சம்
பில்போ - ஜனத்தொகை சுமார் 2 லட்சம்
ஐம்பதினாயிரம் பேருக்கு அதிகமான ஜனத் தொகையுடைய நகரங்கள் மொத்தம் 18 உண்டு.
தேசீயக்கொடி: சிவப்பு, மஞ்சள், ஊதா ஆகிய மூவர்ணங் களும் வரிசையாகக் கிழக்கு மேற்கில் தீட்டப்பெற்றிருக்கும்.
குடியேற்ற நாடுகள்: ஆப்ரிக்கா கண்டத்தின் சமுத்திரக்கரை யோரமாக வுள்ள சில சிறிய தீவுகள் ஸ்பெயினுக்குச் சொந்தம். இவையனைத்தையும் சேர்த்த மொத்த விஸ்தீரணம் 82,400 சதுர மைல். மொத்த ஜனத் தொகை 275,000. இவற்றுள் முக்கியமானது, ஆப்ரிக்காவின் வடக்கேயுள்ள பொராக்கோ. இங்கே ஸ்பானியர் களும், பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து ஆதிக்கம் செலுத்து கிறார்கள். மொராக்கோ வாசிகள், ஸ்பெயினுக்கு விரோதமாகப் படைதூக்கி 1920ஆம் வருஷம் முதல் 1926ஆம் வருஷம் வரை போர் புரிந்தார்கள். இவர் களின் தலைவனான அப்துல் கரீம், கடைசியில் பிரெஞ்சுக் காரருடைய ஆயுதபலத்திற்கு முன்னர் சரணடைந்து விட்டான். இதன் பிறகு, ஒரு பாகத்தில் ஸ்பானியரும், மற்றொரு பாகத்தில் பிரெஞ்சுக்காரரும், பெயரளவில் ஒரு சுல்தானை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்து கிறார்கள்.
நாணயம்: பெஸேடா, ஸெண்டிஸ்மோ முதலியன நாணய வகைகள். நூறு ஸெண்டிஸ்மோக்கள் கொண்டது ஒரு பெஸேடா.
பெயர்கள்:
ஸெனோர் - ளுநடிச- ஸ்ரீமான் என்பதுபோல.
கோர்டெஸ் - ஊடிசவநள - ஊடிரசவள என்பதன் திரிபு. ஸ்பெயின் பார்லிமெண்டுக்குப் பெயர்.
கட்சிகள்:
அபேதவாதக்கட்சி - ளுடிஉயைடளைவ ஞயசவல
குடியரசுக்கட்சி - சுநயீரடெய் ஞயசவல
பொதுவுடமைக்கட்சி - ஊடிஅஅரnளைவ ஞயசவல
இந்தக் கட்சிகளிலேயே தீவிர வாதிகளென்றும் மிதவாதி களென்றும் பல பிரிவினர், தனித்தனிக் கிளைக் கட்சிகளாக வகுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்கள் தனித்தனிக் கட்சிகள் வகுத்துக் கொண்டி ருக்கின்றனர்.
தீவிர நோக்குடைய எல்லாக் கட்சிகளும் சேர்ந்ததே ‘முன்னணிக் கட்சி’ - ஞநடியீடந’ள குசடிவே.
இவை தவிர கன்ஸர்வேடிவ் கட்சி, ஜனநாயகக் கட்சி, தேசீயக் கட்சி முதலியன இருக்கின்றன. இவை முதலாளிகள், பாதிரிமார்கள், நிலச்சுவான்தார்கள் முதலியோருடைய கொள்கைகளை ஆதரிக்குங் கட்சிகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக