ஜேன் அயர்
வரலாறு
Back
ஜேன் அயர்
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : ஜேன் அயர் (அப்பாத்துரையம் - 7)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 16+288 = 304
விலை : 380/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
ஜேன் அயர்
முதற் பதிப்பு - 1954
இந்நூல் 2003இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை 43, வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
இளமைக்காலம்
என் தந்தை ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்; கோயில் காரியக்காரராயிருந்து அவர் காலங்கழித்து வந்தார். ஆனால், என் தாய் செல்வக்குடியில் பிறந்தவள். அவள் தந்தையாகிய என் பாட்டன் ரீடை அறியாதவர் எங்கள் வட்டாரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் , என் தாய் அவர் கருத்துக்கு எதிராகவே மணஞ்செய்து கொண்டாள். இதனால் அவள் என் பாட்டன் ஆதரவையும், அவர் செல்வத்தின் உதவியையும் இழந்து, என் தந்தையின் வறுமையிலேயே முழுதும் கிடந்து உழல வேண்டியதாயிற்று.
மணவாழ்வின் பொறுப்பை என் தந்தை ஓர் ஆண்டுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. என்னை என் தாய்வயிற்றிலேயே விட்டு விட்டு அவர் காலமானார். நான் ஆணாய்ப் பிறப்பேனா, பெண்ணாய்ப் பிறப்பேனாஎன்பதைக் கூட அவர் அறியவில்லை. என் முகம் காணவுமில்லை. அவர் இறந்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் என்னை என் தாய் பெற்றெடுத்து, ஒரு மாதம் கூட என்னைக் கண்டு மகிழாமல் என் தந்தையைத் தொடர்ந்து சென்றாள்.
என் மாமன் ரீடு இப்போது தாய் தந்தையரற்ற என்னைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்தார். ஜான், எலியா, ஜார்ஜியானா ஆகிய அவர்கள் பிள்ளைகளுடன் அவர் என்னையும் வளர்க்க ஏற்பாடு செய்தார். ஆனால், அவரும் விரையில் காலமானதால் நான் என் அத்தையிடமே வேண்டா விருந்தாளியாக இருந்து வளர்ந்தேன்.
ஜான் எனக்கு நாலு ஆண்டு மூத்தவன். என் அத்தை அவனுக்குக் கொடுத்த இளக்காரத்தால் அவன் எப்போதும் நோயாளியாகவே நடித்து. மிகுதி உணவும் பண்டங்களும் தின்றதனால், உண்மையிலேயே நோயை வருவித்துக் கொண்டான்.
அவனுக்கு இளக்காரம் தந்த என் அத்தையிடமும் அவனுக்கு நன்றி கிடையாது. யாரிடமும் நேசமும் கிடையாது எல்லோரையும் ஒன்றுபோலத் திட்டியும் உதைத்தும் வந்தான். எனக்கு என் அத்தை கொடுக்கும் உதை, திட்டு ஆகிய வற்றிலிருந்து எப்போதாவது ஓய்வு கிடைத்தாலும் கிடைக்கும்; அவன் கொடுமைகளிலிருந்து ஓய்வு கிடைப்பதேயில்லை. எலிஸாவும் ஜார்ஜியானாவும் அவனுக்கே அஞ்சி, அவனுக்கு நல்லபிள்ளையாய் நடப்பதற்காக, என்னை ஓயாது அவனிடம் காட்டிக் கொடுப்பார்கள். நான் செய்த குற்றங்களும் நன்மைகளும் ஒருங்கே குற்றமாக, ஒரு தடவைக்குப் பல தடவையாகவும், ஒருவருக்கு இருவர் ஆகவும் பெருக்கிப் பேசுவார்கள். செய்யாத குற்றங்களும் வைது கட்டிக் கூறப்படும். தண்டனை களும் ஓயாமல் கிடைக்கும். தண்டனை கொடுத்து அலுத்தபின், ஜான் தான் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காகத் தாயிடம் கூறி, அவளிடமிருந்து எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பான். இவ்வாறாக, அடி அண்ணனாக, உதை தங்கையாக திட்டும் ஏச்சும் உணவாகக் கொண்டு நான் என் அத்தை வீட்டில் வளர்ந்தேன்.
ஓயாமல் அடி வாங்கி, வாங்கி என் உடல் காய்த்துப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பொறுமையாக நான் ஜானிடம் அடிகளை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அடிகளைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடிந்தது; பொறுக்க முடியாத வேறு செய்திகள் இருந்தன. அடிக்கடி அவன் கிள்ளுவான்; காதைப் பிடித்து முறுக்குவான். அப்போது நான் நோவு பொறுக்க மாட்டாமல் அலறுவேன். அதைப் பார்த்துக் கொண்டே வந்யதும் என் அத்தை, “ஏன் சும்மா கத்துகிறாய்?” என்று அதட்டுவாள்.
“ஜான் என் காதைப் பிடித்து முறுக்குகிறான். நோவு பொறுக்க முடியவில்லை,” என்பேன் நான்.
அவள் கண்முன் நடப்பதையே நம்ப மறுப்பாள். “நீ என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயே! எங்கே அவன் உன் காதை முறுக்குகிறான்? அவன் சும்மா இருக்கும்போது ஏன் இப்படிப் பொய் கூறுகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அவன் முறுக்காது விட்ட மற்றக் காதையும் அவள் முறுக்குவாள். அலறினாள் தண்டனை ஒன்று இரண்டாக, இரண்டு நாலாகப் பெருகும் என்று கண்டு நான் நாளடைவில் எவ்வளவு நோவையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கப் பழகினேன்.
ஜானுக்கு வயது பதினான்காகியும், அவன் பள்ளிக் கூடத்துக்குப் போகவில்லை. “பிள்ளை உடம்பு தேறட்டும்; அப்புறம் படித்துக் கொள்ளலாம்.” என்று அத்தை கூறி வந்தாள். ஜானோ, “படிப்பு உடம்புக்கு உதவாது; அதனால் மூளையும் கெட்டு விடும்” என்று சொல்லுவான்.
இந்தக் கொள்கையை அவன் தன்னளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. வீட்டுவேலை செய்து வந்த மங்கை பெஸ்ஸி தன் ஓய்வு வேளையில் எனக்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்து வந்தாள். அதை ஜான் தன்னாலான மட்டும் எதிர்த்தான். அப்படியும் நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது கண்டு, நான் புத்தகமெடுத்துப் படிக்காதபடி எப்போதும் கண்ணும் கருத்துமாயிருந்து பாதுகாத்து வந்தான். அவன் கருத்துப்படி, நான் செய்யக்கூடும் குற்றங்களிலெல்லாம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம் படிப்பது, அல்லது புத்தகத்தைத் தொடுவதே. புத்தகங்களிருக்கும் அறைப்பக்மே நான் போகக்கூடாதென்று கண்டிப்புச் செய்யப்பட்டது.
எனக்கு இயல்பாகவே எப்படியோ படிப்பதில் மிகுதி ஆர்வம் இருந்தது. ஜானின் இந்தக் கண்டிப்பு அவ் ஆர்வத்தை இன்னும் மிகுதியாக்கிற்று. அவனைக் காணாமல் ஒளிவு மறைவுடன் படிப்பதற்கான வாய்ப்பைநான் எப்போதும் எதிர்நோக்கியிருந்தேன்.
தோட்டத்தின் பக்கமாயிருந்த பலகணியில் பின்புறமாகக் கண்ணாடிக் கதவும், முன்புறமாகத் திரையும் இடப்பட்டிருந்தன. இந்த இரண்டுக்கும் இடையே ஒருவர் உட்கார்ந்திருக்க இடமிருந்தது. அப்படி உட்கார்ந்திருப்ப வரை வீட்டிலுள்ள எவரும் எளிதில் காண முடியாது. ஒளிந்து படிப்பதற்கு நான் இதை அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதுண்டு.
ஒரு நாள் அங்கிருந்து ஒரு புதிய புத்தகத்திலுள்ள படங்களை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜான் அந்தப்பக்கம் வந்து எங்கே என்னைக் கண்டு பிடித்து விடப் போகிறானோ என்று என் நெஞ்சம் துடித்துக் கொண்டிருந்தது.
ஜான் திடுமென அறைக்குள் வந்தான். அவன் இங்கும் அங்கும் திரிந்தான். அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் உள்ளே இருக்கவும் அச்சமாயிருந்தது. வெளியே வரவும் அச்சமாயிருந்தது. எது செய்தாலும் செய்யாவிட்டாலும் அடியும் உதையும் வழக்கம் போலக் கிடைக்கும். இதில் தனிப்பட்ட அச்சத்துக்கு இட மில்லை. ஆனால், என் வழக்கமான மறைவிடத்தை அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்றுதான் நான் அஞ்சினேன்.
இச்சமயம் எலிஸா உள்ளே வந்தாள். ஜான் அவளிடம் “எலிஸா! உடனே போய் ஜேனை எங்கும் காணவில்லை என்று சொல்லிவிட்டு வா” என்று கூவினான்.
எலிஸாவுக்கு என் மறைவிடம் எப்படியோ தெரிந்திருந்தது. “அவள் பலகணியின் திரைக்குள் தான் இருக்கிறாள்” என்று சொல்லிய வண்ணம் திரையைச் சுட்டிக் காட்டினாள்.
அவன் உள்ளே வந்து என்னைப் பிடித்து இழுக்கக் காத்திராமல் நானே வெளிவந்து, “என்ன வேண்டும் ஜான்?” என்றேன்.
அவன் நிமிர்ந்து பார்த்து, “என்னை ஜான் என்று கூப்பிடாதே! என்ன வேண்டும்? ஐயா!’ என்று நன்கு மதித்துக் கூப்பிட வேண்டும்; தெரியுமா!” என்று உறுக்கினான்.
நான் நடுக்கத்துடன் தலையசைத்தேன்.
“ஏன் விழித்துக் கொண்டிருக்கிறாய்? வா இங்கே,” என்றான் ஜான்.
நான் மெள்ள அருகே சென்றேன். அவன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கையை ஓங்கினான்.
அவன் அடிக்கப்போகிறான் என்று நினைத்து ஒதுங்க இருந்தேன். அதற்குள் அடியும் குத்தும் மாறி மாறி விழுந்தன. தாங்கமுடியாமல் நான் துடித்தேன். ஆனால், அத்தைக்கு அஞ்சி நான் அழவில்லை.
“நீ ஒளிந்திருந்ததற்கான தண்டனைதான் இவ்வளவும்; தெரிந்ததா? அதுபோகட்டும், அங்கே என்ன செய்த கொண்டிருந்தாய்?”
“படித்துக் கொண்டிருந்தேன்”
“புத்தகம் ஏது? எடு பார்ப்போம்.”
தேம்பிக் கொண்டே போய்ப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். “இந்தப் புத்தகங்களைத் தொட உனக்கு உரிமையில்லை. பணம் கொடுத்துப் புத்தகம் வாங்கத் தகுதி உள்ளவர்கள் தாம் படிக்கலாம். அது சீமான்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் இருக்கும். உன்னிடம் உண்டிக்கும் உடைக்குமே வழி இல்லை. எங்கள் அம்மா உனக்குத் தெண்டத்துக்குச் சோறும்போட்டு, இரக்கப்பட்டு உடைகளும் வாங்கித் தருகிறாள். அதை இனிக் கெடுத்துக் கொள்ளாதே. புத்தகத்தையும் திருடி, இதைப் படித்த குற்றத்திற்குத் தண்டனையாக இப்போது கதவண்டைபோய் நில்” என்றான் அவன்.
நான் போய் நின்றேன். ஆனால் போய் நிற்பதற்குள் புத்தகத்தை அவன் என்மீது வீசியெறிந்தான். அந்த வேகத்தில் நான் கதவின் மீது மோதிக் கொண்டேன். தலை கொண்டியில் பட்டுக் குருதி சிந்திற்று. நோவும் பொறுக்க முடியாததா யிருந்தது.
அவமதிப்பு, நோவு, வெறுப்பு மூன்றும் சேர்ந்து என் அச்சத்தைப் போக்கித் துணிச்சலை உண்டாக்கின. பல்லைக் கடித்துக் கொண்டு அவனைச் சீற்றத்துடன் நோக்கியவாறு, ’சீ! நீ ஒரு மனிதனா? நீ ஒரு கழுதை?" என்றேன்.
என் தலையின் காயத்தைக்கூடப் பாராமல் அவன் என் தலையைப் பற்றி மீண்டும் மீண்டும் சுவரில் மோதினான். நோவு மிகுதியாக, என் பிடிவாதம் தான் மிகுதியாயிற்று. “கழுதைக்கு வேறு என்ன தெரியும், உதைப்பதைத் தவிர,” என்றேன்.
என் துணிச்சல் எனக்கே வியப்பாயிருந்தது. ஆனால் அதன் பயன் இன்னும் வியப்பாயிருந்தது. அவன் அடிப்பதில் சோர்வடைந்து உட்கார்ந்து விட்டான். நான் மட்டும், “கழுதை; கழுதை” என்ற மந்திரத்தை விடவில்லை. வேலைக்காரி பெஸ்ஸி வந்து, “என்ன அடம் பிடிக்கிறாய், ஜானிடம்?” என்று கூறி என்னை அழைத்துச் சென்றாள்.
திருமதி ரீடின் காதில் இஃது எட்டியதும், என்னை ஓர் அறையில் அடைத்துப் போட்டு வைக்கும்படி கட்டளையிடப் பட்டது.
என்னை இட்டு அடைக்கவிருந்த அறை மாமன் ரீடு கிடந்து இறந்த அறை. அவர் ஆவி அதில் வந்து ஊடாடியதாக எல்லோரும் கருதியதனால், அதன் பக்கம் யாருமே செல்வதில்லை. எனக்கும் ஆவிகளைப் பற்றிய கிலி இருந்தது. ஆகவே, அதை அணுகும்போதே என் குலை நடுங்கிற்று. ஆனால் அறையில் நான் நெடுநேரம் கிடக்க நேரவில்லை. உள்ளே விட்டதே நான் அச்சத்தால் உணர்விழந்தேன். மீண்டும் உணர்வு வந்தபோது நான் பெஸ்ஸியுடன் பின்கட்டில் இருந்தேன்.
பெஸ்ஸி என்னைத் தேற்றியதுடன், அன்று நடந்து கொண்டதுபோல இனி நடக்கக் கூடாது என்று அன்புடன் கடிந்துகொண்டாள்.
அந்த வீட்டில் நான் மனமார நேசித்த ஒரே தோழி பெஸ்ஸி ஒருத்தியே.
என் துணிச்சலால் என்னையறியாமல் இன்னோர் எதிர்பாராத விளைவும் ஏற்பட்டு வந்தது. என்னை ஏன் வீட்டில் வைத்துச் சோறுபோட வேண்டும் என்று ஜான் தன் தாயிடம் ஓயாது முறையிடத் தொடங்கினான். அவளும் என்னை வீட்டைவிட்டு அகற்றத் திட்டமிட்டாள்.
ஒருநாள் பெஸ்ஸி மிகு விரைவாக என்னைத் தேடி வந்தாள். "முகம் கழுவி விட்டாயா? விரைவில் உடை உடுத்திக் கொள் என்று படப்படப்புடன் கேட்டாள்.
என் மறுமொழிக்கு அவள் காத்திருக்கவில்லை, விரைவில் ஈரத்துணியால் முகந்துடைத்து, இருக்கிற ஆடையை அவசரக்கோலமாக அணிவித்து, “அத்தை அழைக்கிறாள் போ” என்றாள். என்ன காரியம் என்று புரியாமல் நான் சென்றேன்.
திருமதி ரீட் நாற்காலியில் அமர்ந்து, மிக நெட்டையாகத் தோன்றிய ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“திரு பிராக்கிள் ஹர்ஸ்ட்! உங்கள் அன்புக்கு நன்றி, இதோ இந்தப் பெண்ணைப் பற்றித்தான் நான் பேசியது.”
“இது மிகச் சிறிய பெண்ணாயிற்றே! எத்தனை வயது இருக்கும்?”
“பத்து வயதாயிற்று”
அவர்கள் ஏதோதோ பேசினர். நான் அதைக் கவனிக்க வில்லை. என்னை என்ன செய்யத் திட்டமிடுகிறார்களோ என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தேன். ஆனால், அத்தை என்னைப் பற்றிப் பேசிய கடுமொழிகள் என்னைத் திடுமெனத் தட்டி எழுப்பின.
“நான் கூறியது நினைவிருக்கட்டும். இவள் மிகவும் குறும்புக்காரப் பெண். திருட்டும், வஞ்சகமும், பொய்யும் அவளுக்குரிய குணங்கள். பள்ளியில் சேர்த்துக் கொண்டால் மற்றப் பிள்ளைகளை இவள் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பும் உங்களைச் சாரும்” என்றாள் அத்தை.
ஜானை வெறுத்ததைவிடப் பத்துமடங்கு அவன் தாயை அந்த நொடியிலேயே என் உள்ளம் வெறுத்தது. என் உள்ளத் திலிருந்து தீயும் புகையும் அனற்பொறிகளும் எழுந்தன. என்னை முதன் முதலாக ஒருவரிடம் அறிமுகப்படுத்தும் போதே என்னைப் பற்றிய இந்த முடிவான தீர்ப்புக்கு அவரைக் கொண்டு வர நினைக்கிறாள். நான் எங்கும் உருப்பட்டு விடக்கூடாதே என்பதுதான் அவள் கவலை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அவள் கடைசிச் சொற்கள் இன்னும் என் மனித உணர்ச்சியைக் கெடுத்தன.
அவளுக்கு வீடும், குடியும் கிடையா. போக்குமில்லை, தகுதியுமில்லை. எந்த வகையிலும் யாருக்கும் பயன்படக் கூடியவள் என்று நம்பவும் முடியவில்லை.ஓய்வு நாட்களில் கூட அவளுக்குச் செல்ல இடம் கிடையாது. இந்த நிலைமையில் அவளை ஏற்றுக் கொண்டு என் கையைக் கழுவி விடுவதானால் எனக்கு அனுப்பத் தடையில்லை. அனாதையான இந்தச் சுமையை நான் எத்தனை நாள் வைத்துக் கொண்டிருக்க முடியும்?"
"அந்தோ! அவள் என் அத்தை என்பதையோ, நான் அவள் உறவினள் என்பதையோ கூட அவள் மறைத்துப் பேசிவிட்டாள். நான் ஓர் அனாதை. தங்கவீடில்லை; அன்பு காட்ட உறவில்லை; இவ்வளவு ஒட்டறுத்துப் பேசுவது போதாதாம் என்னைப் பொய்க்காரி, வஞ்சகி என்றும் அறிமுகம் செய்து வைக்கிறாள்’ இவற்றை எண்ணி எண்ணி என் நெஞ்சம் குமுறிற்று.
அவர் போனதும், என் ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் ஒரு தடவை கொட்டினேன்.
“திருமதி ரீட்! பொய் பேசுபவள் நான் இல்லை. என்னை பற்றி நீ கூறியவை யாவும் பொய். எனக்கு உறவே இல்லை என்று சொன்னாய். உன்னை என் அத்தை என்று தான் நினைத்திருந்தேன். யாராயிருந்தாலென்ன? இந்த உலகில் எனக்கு ஒருவர் பகைவர் உண்டானால், அது நீதான், நீதான் நீதான்!”
வெறுப்பும், வியப்பும், மலைப்பும் அவள் முகத்தில் வெடித்தன. ஆனால், வெளியே அனுப்பத் திட்டமிட்டபின் வேறு மிகுதியாக என்ன தண்டனை தரமுடியும்?
“ஜேன் அயர்! உன் துடுக்குத்தனத்துக்கு உனக்குத் தண்டனை கிடைக்காமல் போகாது. பார்க்கிறேன்”என்று அவள் கறுவினாள்.
அந்த வீட்டைவிட்டுப் போவதில் எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. ஆனால், அந்த வீட்டில் என் ஒரே தோழி, என் ஆசிரியர் பெஸ்ஸி இருப்பதை நினைத்தே எனக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.
பள்ளி வாழ்வு
என் ஒரே உறவினர் வீட்டிலிருந்து நான் என்றென் றைக்குமாக வெளியேறும்போது கூட, என்னை வழியனுப்ப யாரும் வரவில்லை. பெஸ்ஸி ஒருத்திதான் அஞ்சல் வண்டியை நிறுத்திவைத்து என் பெட்டியுடன் வந்து என்னை வழியனுப்பினாள். “சின்னஞ்சிறு பெண் பள்ளிக்குப் போகிறாள். பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று வண்டியோட்டியிடம் கூறும் கரிசனையும் அவளிடம் தான் இருந்தது.
என் பயணத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே நினை வில்லை. எவ்வளவு நேரம் பயணம் செய்தேன் என்பதும் எனக்குத் தெரியாது. நான் பயணமுழுவதும் ஒரே உறக்கமாக உறங்கிவிட்டேன். திடீரென்று வண்டி நின்ற அதிர்ச்சியால் நான் விழித்தேன். வெளியிலிருந்து ஒரு நாகரிகமான குரல் “இந்த வண்டியில் ஜேன் அயர் என்ற ஒரு பெண் வருகிறாளா?” என்று கேட்டது. என் பெயர் கேட்டதும் நான் “ஆம்; இதோ இருக்கிறேன்”, என்று எழுந்தேன். குரல் கொடுத்த மாது என்னைக் கைகொடுத்து இறக்கிவிட்டாள். வேறு ஒருவர் பெட்டியை வாங்கிக் கொண்டார்.
பொழுது விடியவில்லை. வண்டியிலிருந்து இறங்கியதும் குளிர்காற்று என்மீது வீசி என்னை நடுங்க வைத்தது. நாங்கள் அரையிருட்டிலேயே ஓர் அகன்ற கிளைப்பாதை வழியே சென்று, ஒரு பெரிய கட்டிடத்தில் நுழைந்தோம். பல அறை களைக் கடந்து சென்ற பின் கணப்படுப்பு செக்கச் செவேல் என்று எரிந்து கொண்டிருந்த ஓர் அறையில் நுழைந்தோம்.
என்னை இட்டுவந்த மாதை அப்போதுதான் நான் முதன் முதலாகத் தெளிவாகக் கண்டேன். அவர் வடிவம் நெட்டை யாகவும், முகம் அழகும் அருளொளியும் உடையதாகவும் இருந்தது. அவர் நடையில்அமைதியும் பெருமிதமும் நிறைந் திருந்தன. என்னுடன் பெட்டியைக் கொண்டுவந்த பெண் அவரை விட வயதில் சிறியவர். அவர் பெயர் செல்வி மில்லர் என்று அவர்கள் உரையாடலால் நான் அறிந்தேன்.
“இது மிகச் சிறு பெண். தனியே எங்கும் செல்லத்தக்க வயதன்று; கவனமாய்ப் பார்த்துக் கொள், செல்வி மில்லர்!” என்று அவர்கூறி, என்னை அவருடன் அனுப்பினார். அனுப்பு கையில் அவர் என் தோள்மீது கையை வைத்து ஆதரவாக ’பயணத்தால் நீ மிகவும் அலுப்படைந்திருப்பாய், அல்லவா?" என்று கேட்டார்.
“ஆம்; சிறிது களைப்பாகவே இருக்கிறது.” என்றேன்.
’அலுப்புமட்டுமென்ன? பசி கூடத்தான் இருக்கும். செல்வி மில்லர்! போய் விரைவில் உணவு கொடுத்துப் படுக்க வை"என்றார் அப்பெரிய மாது.
என்னைச் செல்வி மில்லர் இட்டுக் கொண்டு சென்ற அறை மிகவும் பெரியதாயிருந்தது. அதில் கிட்டத்தட்ட என் வயதுடைய பெண்களிலிருந்து எல்லா வயதுப் பெண் களும் நிறைந்திருந்தனர். பெரிய மேசைகளைச் சுற்றி அவர்கள் புத்தகமும் கையுமாக முனங்கிக் கொண்டிருந்தனர். செல்வி மில்லர் அவர்களிடம் என்னைப் புதிய பெண் என்று அறிமுகம் செய்துவைத்தபின், " இன்று, இப்போது சாப்பாடு கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். படிப்பை நிறுத்தி விடலாம்" என்றார்.
சாப்பாட்டுக்கு மாக்காண்டு1களும் நீரும் தரப்பட்டன. அதுமுடிந்து சிறிதுநேர வழிபாட்டுக்குப் பின் செல்வி
மில்லர் என்னைப் படுக்கையறைக்கு இட்டுச் சென்றார். ஆனால், வழிபாட்டிடம், படிப்பகம், வகுப்பு எல்லாமே அறைகளாயில்லை. கூடங்களாக இருந்தன. எல்லாம் பள்ளியின் எண்பது பிள்ளைகளுக்கும் பொதுவானதால் எண்பது பிள்ளைகள் இருந்து படிக்கவோ, படுக்கவோ தக்கவையா யிருந்தன. இத்தனைய பிள்ளைகளுக்கிடையே நான் படுத்துறங்க நேர்ந்தது முதலில் அன்றைக்குத் தான். தொடக்கத்தில் எனக்குச் சிறிது வெட்காமாயிருந்தது. ஆனால், பெண்கள் எங்கும் ஒருவரை ஒருவர் பொருட்படுத்தாது கண்டு, நானும் எவரை யும் பொருட்படுத்தாமல் படுத்து உறங்கினேன்.
பயண அலுப்பால் அன்றிரவு நான் அயர்ந்து தூங்கினேன். ஒரு மெல்லிய கனவுகூட அதைக் கெடுக்கவில்லை. ஆனால், இருள் அகலுமுன்பே பள்ளியின் மணி அடித்தது. மற்றப் பெண்கள் எல்லாரும் எழுந்து முகங்கை கழுவுவது கண்டு, நானும் எழுந்து என் எதிரே மேடையண்டையிருந்த நீர்த் தொட்டியில் முகம் அலம்பிக் கொண்டேன்.
மணி மறுபடியும் அடித்தது. பெண்கள் அனைவரும் இருவர் இருவராக இணைந்து படியிறங்கிப் பள்ளிப் பொதுக் கூடத்துக்குச் சென்றனர். அங்கே வழிபாட்டின் பின்செல்வி மில்லர் அவர்களிடையே வந்து ஆட்சியுரிமைப்படி கையை உயர்த்தி “வகுப்பணி! வகுப்பணி!” என்று கட்டளையிட்டனர்.
கொஞ்சநேரம் ஆரவாரமும் அமளி குமளியுமாக இருந்தது. ஆனால், விரைவில் ஒன்றன் பின் ஒன்றாய் நான்கு அரைவட்ட வளைவுகளில் நான்கு வகுப்புக்களாகப் பெண்கள் அணிவகுத்து நின்றனர். மில்லர் கண் சாடை காட்ட, ஒரு பெண் என்னை முதல் வகுப்பணியில் தன்னுடன் நிறுத்திக் கொண்டாள்.
அடுத்த மணி அடித்ததும், ஒவ்வோர் அணியாகப் பெண்கள்அவரவர் வகுப்பறை சென்றனர். ஆசிரியர்கள் அந்தந்த அறை நாற்காலிகளில் வீற்றிருந்தனர். பாடம் தொடங்கிற்று. தொடக்க வகுப்புக்குப் பின் பிள்ளைகளுடன் நான் அமர்ந்து என் பள்ளி வாழ்வில் புகுந்தேன்.
பாடம் ஒருமணிநேரம் நடந்தது. அதன்பின் அனை வரும் காலையுணவுக்குச் சென்றோம். எனக்கு அதற்குள் பசி மிகுதியாயிற்று. ஆனால், உணவு மேடையருகே சென்றதும் எனக்குக் குமட்டலெடுத்தது. காரணம் காலையுணவுக்காக வைத்திருந்த அப்பங்கள் முக்காற் பங்கு கருகிப் போயிருந்ததே. கருகல் வாடை மூக்கைத் துளைத்தது. மற்றப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.அவர்களுக்கும் என் உணர்ச்சி உள்ளூர இருந்தது என்பதையும், ஆனால், அவர்கள் அதை வெளிக்காட்டத் துணியவில்லை என்பதையும் உணர்ந்தேன். ஆசிரியர்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்தனரேயன்றி வாய் திறக்கவில்லை.
ஓர் ஆசிரியர் மற்றோர் ஆசிரியரின் காதண்டை திரும்பி மெல்ல முணுமுணுத்தார். என் கூரிய செவிப்புலனுக்கு அவர் கூறியது ஓரளவு நன்றாகக் கேட்டது. அதில் பிராக்கிள் ஹர்ஸ்ட் என்ற பெயர் இரண்டு மூன்று தடவை அடிப்பட்டது. “புதிய பெண் வந்த நாளாகப் பார்த்து இந்தக் கொடுமையா?” என்ற அவர் வாய்ச் சொற்கள் என்னை இதில் எவ்வகையிலோ தொடர்பு படுத்தியது.
ஆசிரியர்கள் உணவை அரைகுறையாகத்தான் உட் கொண்டார்கள். பெண்கள் கூடக் கண்களில் கண்ணீரைக் கசக்கிப் பல்லைக் கடித்துக் கொண்டு விழுங்கியும், உணவுத் தட்டை வெறுந்தட்டாக்க முடியாமலும் திணறினர். நானோ ஒரு துண்டுகூடத் தொடவில்லை.
மீண்டும் வகுப்பறையில் சென்று உட்கார்ந்த போது பாடத்தைவிடப் பசியையே அனைவரும் நினைத்திருக்க வேண்டும். ஆனால், எவ்வகையிலோ பசி முற்றிலும் காதை யடைத்தது. வகுப்பில் என்ன நடக்கிறது என்பதையே நான் கவனிக்க முடியாதவளானேன்.
என்னை முதலில் வரவேற்று மாது இப்போது ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்தார். அவர் வந்ததும் எல்லாரும் எழுந்து நின்று வணங்கினர். அவர்தாம் பள்ளியின் தலைமையாசிரிய ரான செல்வி டெம்பிள் என்று நான் இப்போது அறிந்தேன். அவர் எல்லா வகுப்புப் பிள்ளைகளையும் ஒருங்கே அழைத்து, “பிள்ளைகளே! இன்று நீங்கள் உண்ட உணவு உண்ணத் தகாதது. உங்களில் பலர்இன்னும் பசியுடனேதான் இருப்பீர்கள். ஆகவே, இன்று பிற்பகல் வரை பாடம் வேண்டாம். அத்துடன் தற் காலிகமாக, உங்களுக்குப் புரையப்பமும், பச்சை வெண்ணெ யும் தரும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை உண்டு, அடுத்த உணவுவேளை வரை இளைப்பாறி இருங்கள்,” என்றார்.
பிள்ளைகள் அனைவர் முகத்திலும் செத்த உயிர் பிழைத்தது போன்ற எக்களிப்பு ஏற்பட்டது. அதைக் கூட ஆரவாரத்தில் காட்டாமல், துள்ளிக்குதித்து அவர்கள் உணவகம் சென்றனர். உணவு முடிந்தபின் அவரவர் போக்கில் தோட்டத்தில் விளையாடச் சென்றனர்.
என் வாழ்விடமாய் அமைந்துவிட்ட இந்தப் பள்ளியைப் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தெரியாது. ஆகவே, பள்ளியின் ஒருபுறம் தொங்க விடப்பட்டிருந்த நீண்ட பலகையை நான் உற்றுக் கவனித்தேன். அதில் “லோவுட் நிலையம்” என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழே, சற்றுச் சிறிதாக, ஆனால், பெரிய எழுத்தைவிட விளக்கமாகத் தெரியும்படி தடித்த கெட்டி எழுத்தில் “இப்பகுதி திரு. நவமி பிராக்கிள் ஹர்ஸ்டின் வள்ளன்மையால் நிறுவப்பட்டது” என்று செதுக்கப்பட்டிருந்தது.
பள்ளி என்ற பெயர்தான் எனக்கு இதுவரை தெரியும். பள்ளிக்கு வருவதாகத்தான் எண்ணி வந்தேன். ஆனால் இங்கே பள்ளி என்ற பெயரினிடமாக ‘நிலையம்’ என்ற பெயரைக் கண்டு, அதன் பொருள் என்னவாயிருக்குமோ என்று மலைத்தேன்.
நான் வந்த ஒரு நாளைக்குள் என்னிடம் எளிதாகத் தோழியாய் விட்ட பெண் ஹெலன் பர்னஸ் என்பவளே. அவள் கதவருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டி ருந்தாள். நான் அவளிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன்.
“ஹெலன்! இந்தக் பலகையில் என்ன எழுதப்பட்டிருக் கிறது?”
“இது தெரியவில்லையா? ‘லோவுட் நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.”
“அது தெரியாமலா கேட்டேன்? எனக்கு நன்றாக வாசிக்கத் தெரியும். இந்தப் பெயர் எதைக் குறிக்கிறது?”
“ஏன்? இந்த இடத்தைத்தான்.”
“இது பள்ளிதானே? இதை ஏன் நிலையம் என்று குறித்திருக்கிறார்கள்?”
“அதுவா? சம்பளம் கொடுக்கும் பள்ளிக்கூடத்தைத் தான் பள்ளி என்று அழைப்பார்கள். அங்கே பிள்ளைகளுக்குப் பெற்றோர் இருப்பார்கள். அவர்கள் சம்பளம் கொடுப்பார்கள். புத்தகம் முதலியவை வாங்கிக் கொடுப்பார்கள். பிள்ளைகள் வீட்டிலிருந்தே உடை முதலியவற்றுடன் வருவார்கள். விடுமுறை நாட்களில் தங்கள் வீடு செல்வார்கள். இது அப்படிப்பட்ட பள்ளி அன்று; அறச்சாலை! இங்கே படிக்க வருகிறவர்கள் தாய்தந்தை இல்லாதவர்கள் ஏன்? நீயும் அம்மாதிரி வருகிறவள் அல்லவா?”
“என் பெற்றோர் எனக்கு நினைவு வருவதற்கு முன்பே இறந்துபோனார்கள்.”
“இங்கே உள்ள பிள்ளைகள் எல்லாருமே கிட்டத்தட்ட அந்த நிலைமையில் உள்ளவர்கள்தாம்!”
நான் நீண்ட நேரம் வாய்மூடி இருந்தேன். என் உள்ளம் எங்கெல்லாமோ சென்றது. சிறிதுநேரம் சென்றதும் நான் மீண்டும் கேள்விகள் கேட்டேன்.
“இதில், திரு. நவமி பிராக்கின் ஹர்ஸ்ட் என்பவரின் வள்ளன்மைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறதே! அவர் யார்?”
“இப்போது நிலையத்தை மேற்பார்த்துவரும் திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் தந்தை.”
’திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் எப்படிப்பட்டவர்? நல்லவர்தாமா?"
“அவர் ஒரு கோயில் காரியக்காரர்! நிறையப் பணம் உள்ளவர்”
“அவர் நிலையத்தை மேற்பார்ப்பானேன்? இல்லம் இல்லத் தலைவி செல்வி டெம்பிகளுக்கு உரியதல்லவா?”
“இல்லை; அப்படியிருந்தால் எவ்வளவோ நன்றா யிருக்குமே! செல்வி டெம்பிள் ஒவ்வொரு சிறு செய்தியிலும் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் கட்டளையிடுகிறபடி தான் செய்ய வேண்டியிருக்கிறது.”
ஹெலன் நல்ல பெண். அவள் மற்றப்பெண்களைப் போல என்னை அசட்டையாகப் பார்த்து விட்டுப் போவ தில்லை. நான் கேட்பதற்கெல்லாம் பொறுமையாக அவள் மறுமொழி கூறுவாள். அவள் நட்பின் பயனாக நான் விரைவில் தலைவியின் குணச்சிறப்புக்களைப் பற்றியும், ஆசிரியர்களின் பெயர், பண்புகளைப் பற்றியும் மற்றும் பள்ளிப் பெண்கள், பள்ளியைப் பற்றியும் பல விவரங்களை அறிந்தேன். எல்லாருடனும் எளிதாகப் பழக இது எனக்குப் பெரிதும் உதவிற்று.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் வருகை
நிலையத்தின் உணவு மிகவும் மட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், அத்தனை பெண்கள் உண்பதை யான் ஏன் உண்ணக் கூடாது என்று கருத்துட் கொண்டு மன அமைதியுடன் உண்டேன். கூடிய மட்டும் எல்லாப் பெண்களுடனும் இன்முகங்காட்டி நட்பாடவும் முயன்றேன். என் அமைந்த நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்குக் கூட நல்லெண்ணம் உண்டுபண்ணத் தக்கவையாயிருந்தன. ஆனால், திருமதி ரீட் அவளை அத்தை என்று கூற எனக்கு மனம் வரவில்லை. விதைத்த விதை தக்க நிலத்தில் இடம்பெற்று இதற்குள் முளைவிடத் தொடங்கிற்று.
திரு. பிராங்கிள் ஹர்ஸ்ட் அடுத்த நாள் பள்ளியைப் பார்வையிட வந்தார். என்னை அவர் எளிதில் பார்க்காதபடி நான் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் என் பக்கத்திலேயே இருந்தார். செல்வி டெம்பிளிடம் அவர் பேசியது முழுவதையும் என்னால் கேட்க முடிந்தது. அவர் உள்ளம் நான் எதிர்பார்த்ததைவிட மிகுதியாகத் திருமதி ரீட் உள்ளத்தின் வண்ணம் செறிந்ததாயிருக்கக் கண்டேன். ஆனால், அதே உரையாடல் செல்வி டெம்பிளின் உயர் பண்பையும் காட்டிற்று.
பிராக்கிள் ஹர்ஸ்ட் : பிள்ளைகள் செய்யும் வேலை வரவர நன்றாயில்லை. அவர்கள் துன்னும் துணிமணிகள் உயர் குடும்பப் பெண்கள் அணியத்தக்கவையாயில்லை. இனிமேல் திருத்தமாக வேலை பயிற்றுவிக்க வேண்டும்.
டெம்பிள் : அப்படியே செய்கிறேன்.
பிராக்கிள் ஹர்ஸ்ட்: இவ்வாரம் சில பெண்களுக்கு இரண்டு தடவை வெள்ளாடை கொடுத்தாக அறிகிறேன். ஒருதடவை கொடுக்கத்தானே பள்ளிக்குக் கட்டளை தரப்பட்டிருக்கிறது?
டெம்பிள்: ஆம், ஆனால், அந்தப் பெண்கள் சில நல்ல நண்பர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்காக அவர்களுக்கு வெள்ளாடை அளித்தோம்.
பிராக்கிள் ஹர்ஸ்ட் : நல்ல நண்பர்களை இந்தப் பள்ளிப் பெண்கள் பார்க்கப் போகவே கூடாது. நாளை இவர்கள் எந்தத் தரத்தில் வாழப் போகிறார்களோ, அந்தத் தரத்துக்கு மேற்பட்டவர்களுடன் பழகுவது அவர்களுக்கு நல்லதன்று.
செல்வி டெம்பிள் முகம் சிறிது கறுத்தது. ஆனால், அவள் ஒன்றும் கூறவில்லை.
பிராக்கிள் ஹர்ஸ்ட்: அதுமட்டுமன்று; சில நாட்களுக்கு முன் காலையில் மிகைப்பாடாக அப்பமும், வெண்ணெயும் செலவு செய்யப்பட்டிருக்கிறதே! அது என்ன காரணத்துக்காக?
டெம்பிள்: அன்று காலை உணவு முழுதும் கருகிப் போய்விட்டது. பெண்கள் யாரும் சாப்பிடவில்லை; பசியோடிருந்தனர். அதனால் மிகைப்பாடாக செலவு செய்ய வேண்டியதாயிற்று.
பிராக்கிள் ஹர்ஸ்ட் : இந்த மாதிரி இளக்காரத்தால் இந்த நிலையத்தின் நன்னோக்கங்கள் நிறைவேறாமல் கெட்டுப் போய்விடும் என்று அஞ்சுகிறேன். உணவுக்கே வகையற்ற இந்தப் பெண்கள் கருகிய உணவை உண்டால் என்னவாம்? அல்லது ஒருவேளை பட்டினியாய்க் கிடந்தால்கூட என்ன கெட்டு விட்டது? நாளை பல இன்னல்களைத் தாங்கும் வலிமையும் உரமும் இந்தப் பெண்களுக்கு வரவேண்டு மென்பதற்காக இந்த மாதிரித் தறுவாய்களை உண்டுபண்ண வேண்டியிருக்க, நீங்கள் வந்த தறுவாய்க்களைக் கூடப் பயன்படுத்தாது விடுகிறீர்களே! போகட்டும்; இனிமேலாவது பிள்ளைகள் கருகிய உணவு உட்கொள்ள, பட்டினி கிடக்கப் பயிற்சி கொடுத்து வையுங்கள்.
உணர்ச்சியற்ற முகத்துடன் செல்வி டெம்பிள் தலையசைத்தாள்.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் கண்கள் இப்போது பெண்கள் பக்கம் திரும்பின. ஒரு பெண் முகந்திருப்பி யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் கண்கள் அப்பெண்ணின் பக்கமாக ஊன்றி நோக்கின. பேசியதற்காக அந்தப் பெண்ணுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று நான் கவலை கொண்டேன். ஆனால், அவர் கவனத்தை ஈர்த்தது பெண்ணின் பேச்சன்று. அப்பெண்ணின் அழகிய மயிர்ச் சுருள்களே.
“செல்வி டெம்பிள்! அந்தப் பெண்ணின் தலையைப் பார்! அதற்கு ஏன் அத்தனை அழகான சுருள்? இது என்ன அழகு மடமா? அறநிலையமல்லவா?” என்று பிராக்கிள் ஹர்ஸ்ட் கேட்டார்.
செல்வி டெம்பிள் அவள் முன்னிலையில் இராவிட்டால் சிரித்திருப்பாள். அதை உள்ளூர அடக்கிக் கொண்டு, “அது சுருள் வைத்துச் சுருட்டியதன்று, ஐயனே! இயற்கையானது,” என்றாள்.
“இயற்கைக் கூடஇப்படி அறநிலையங்களில் எப்படி விளையாடலாம்? எங்கே மற்றப் பெண்களின் தலையையும் பார்க்கட்டும்; எல்லாரையும் சுவரைப் பார்த்து நிற்கச் சொல்லுங்கள்.” என்று பிராக்கிள் ஹர்ஸ்ட் கட்டளையிட்டார்.
பாவம்! செல்வி டெம்பிள் எல்லாவகைக் கட்டளை களையும் அப்படியே நடத்தித் தீரவேண்டியவள், பெண்கள் அனைவரும் சுவரைப் பார்த்து வரிசையாக நிற்கும்படி கட்டளையிட்டாள்.
கட்டளையின் பொருள் இன்னதென்று விளங்காமல் பெண்கள் சிறிது நேரம் விழித்தார்கள். கட்டளை இரண்டு தடவை திருப்பிக் கூறப்பட்டபின் தான் ஓரளவு அதைப் புரிந்து அவர்கள் திரும்பி நின்றார்கள். செல்வி டெம்பிளுடன் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் பெண்களின் தலைமுடியழகைப் பார்த்து கொண்டே சென்று திரும்பவும் வந்து உட்கார்ந்தார்.
பெண்கள் முகங்கள் சுவரைப் பார்த்து நின்றதே நல்லதாயிற்று. அவற்றைத் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தால், அவருக்கு நல்ல பாட மாயிருக்கும். ஏனென்றால், அவர்கள் செல்வி டெம்பிளைப் போலத் தம்மை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவர் புன்மதி போன வகையை உணர்ந்து அவர்கள் மனமாரச் சிரித்தனர்.
ஆனால், அவர் அடுத்த பேச்சு அவர்களனைவரையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டது. “எல்லா மாணவிகளின் மயிர்களையும் கத்தரித்துவிட்டு, இனி மயிர் சுருளாது வளரும்படி செய்யவேண்டும்; தெரிந்ததா?” என்றார் அவர்.
தம்மை அடக்கினால் போதாது; தம் மயிரையும் அடக்கிவிட விரும்புகிறார் பள்ளி மேற்பார்வையாளர் என்ற எண்ணம் அத்தனை பெண்கள் உள்ளத்திலும் ஒரே எண்ணமாக எழுந்து ஒரே அடக்க முடியாத சிரிப்பாயிற்று.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்டுக்கு இப்போது நாணம் பொத்துக் கொண்டு வந்தது. “ஆகா! பார்த்தீர்களா இப்போதே! ஒருநாள் பட்டினி போட்டிருந்தால், தலைகளைக் கத்தரித்திருந்தால் இவ்வளவு செக்கு இருக்குமா? சரி; அடுத்த தடவை வருவதற்குள் மயிர்கள் கத்தரித்து வயிறுகளும் நன்கு பயிற்று விக்கப்பட்டிருக்க வேண்டும்; தெரிந்ததா? இல்லையானால் உங்களையும் மாற்றிவிடுவேன். ஆசிரியர்மார்களையும் குறைத்துவிட நேரும்,” என்றார்.
திரு. செல்வி டெம்பிளின் முகம் சோர்வுற்றது. அதுகண்ட பெண்களும் தம் சிரிப்புக்கு வருந்தி முகங் கவிழ்த்தனர்.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் தம் வெற்றியை உறுதிப்படுத்த எண்ணி, “தலைச்சுருள், பட்டு, அணிமணி ஆகியவை நல்ல குடும்பப் பெண்களுக்கு அறிகுறியல்ல,” என்று தெளிவுபடுத்தி ஒரு சிறு சொற்பொழிவு செய்தார்.
அவர் சொற்பொழிவின் நடுவே ஒரு பெட்டி வண்டியில் இருந்து ஒரு சிங்கார மாதும், இரு சிங்காரச் செல்வியர்களும் இறங்கி நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் திருமதி பிராக்கிள் ஹர்ஸ்டும், அவர் புதல்வியரான செல்வியர் பிராக்கிள் ஹர்ஸ்டுமேயாவர். திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் சொற்பொழிவுக்கும், அவர் குடும்பத்தினர் தலைச்சுருள் பட்டாடை அணிமணிகளுக்கும் இடையேயுள்ள முரண் பாட்டைக் கண்டு பெண்கள் திருதிருவென்று விழித்தனர்.
திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் இந்தத் திண்டாட்டத்தி லிருந்து அவரை என் கவனக்குறைவு தப்ப வைத்து, அதில் என்னைச் சிக்கவைத்தது. அவர் புதல்வியரையே பார்த்துக் கொண்டிருந்த என் புத்தகங்களும் எழுதுகோலும் தொப் பெனப் பேரோசையுடன் கீழே விழுந்தன. எழுதுகோல் இரண்டாக முறிந்துவிட்டது.
திரு.பிராக்கிள் ஹர்ஸ்டின் கவனமும் கோபமும் என்மீது திரும்பின. நான் இன்னார் என்பதைக் கண்டு கொண்டதும் அவர் முகத்தில் பொய்ச்சிரிப்புத் தோன்றிற்று. விரைவில் சிரிப்புக் குறுநகையாகி, குறுநகை அச்சந்தரும் கடுமையாக மாற்றமுற்றது.
அவர் அறை மூலையிலிருந்த ஓர் உயர்ந்த நாற்காலியைச் செல்வி டெம்பிள் அருகே கொண்டுவரும்படி கட்டளை யிட்டார். அதன் மீது என்னை நிறுத்தும்படி செல்வி டெம்பிளுக்கு உத்தரவாயிற்று. நடுங்கிய கால்களுடன் நான் நாற்காலியில் ஏறி நின்றேன்.
"பெண்ணே! இந்தச் சிறு குழந்தையைப் பாருங்கள் வயதில் இது உங்கள் அனைவரையும் விடச் சிறுபெண்தான். பார்த்தால் கெட்ட பெண் என்று எவரும் எளிதில் நம்ப மாட்டார்கள். ஆனால், இதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். இது ஒரு சிறு சைத்தான். இதனுடன் யாரும் பேசவோ, விளையாடவோ, செய்யாதீர்கள். இதனுடன் எச்சரிக்கையாய்ப் பழகுங்கள்.
“ஆசிரியர்களுக்கும் கூறுகிறேன். இதை நன்றாகக் கண்டித்துத் தண்டித்து வையுங்கள். இந்த ஒரு பெண்ணால் இங்குள்ள மற்றப் பெண்களும் கெட்டுவிடப்படாது.”
"இந்தச் சிறு வயதுக்குள்ளேயே இது பொய் பேசுவதில் தேர்ந்திருக்கிறது. வஞ்சம், குறும்பு, பிடிமுரண்டு ஆகியவற்றுக்கு இப்பெண் இருப்பிடம்.
"இவ்வளவையும் நானாகக் கூறவில்லை. ஆதரவற்ற இந்தப் பெண்ணுக்கும் ஆதரவும் இடமும் கொடுத்துத் தன் வீட்டிலேயே வைத்திருந்த அன்புள்ளம் உடைய சீமாட்டி தான் இதைக் கூறினாள். நன்றிகெட்ட இந்தப் பெண் வீட்டிலிருந்தால், தன் பிள்ளைகள் கெட்டு விடும் என்றுதான் இங்கே என்னிடம் ஒப்படைத்தாள். ஆனால் வஞ்சகமில்லாமல், இந்த நிலையத்துப் பெண்கள் கெட்டு விடக்கூடாதே என்ற தன் கவலையையும் என்னிடம் தெரிவித்து எச்சரிக்கை செய்தார். ஆகவே, அனைவரும் இப்பெண் வகையில் விழிப்பாயிருங்கள்.’ என்று திரு.பிராக்கிள் ஹர்ஸ்ட் கூறி முடித்தார்.
என் உடலின் எண்சாணும் ஒரு சாணாகக் குன்றிப் போயிற்று. புதிய இடத்தில் வாழ்க்கை தொடங்கும் போதே எல்லார் உள்ளத்திலும் என் மீது கசப்பு உண்டு பண்ணப் பட்டது. என் அத்தையின் கொடுமையினும் இந்தக் கோர மனிதன் கொடுமை எத்தனையோ மடங்கு பெரிது என்று எண்ணி வருந்தினேன்.
செல்வி டெம்பிள் என்னை நாற்காலியிலிருந்து இறக்கி விட்டாள். பிராக்கிள் ஹர்ஸ்ட் செல்வியர் இருவரும் என்னைப் பார்க்க விரும்பாதவர்கள் போல முகத்தை மறைத்துக் கொண்டு, “ஆகா! என்ன கூழைப் பேயா இது?” என்று என்னை ஏளனமாகப் பேசினர்.
அன்றிரவு எனக்கு உணவு செல்லவில்லை. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட்டின் கட்டளையினால் யாரும் என்னண்டை வரவில்லை. நானும் யாரையும் பார்க்கத் துணியவில்லை.
அன்றிரவெல்லாம் என் கண்கள் துயிலை வெறுத்தன. என் தலையணை முழுதும் கண்ணீரால் நனைந்தது. “என்னை அறியுமுன்பே எல்லாரும் என்னைக் கெட்டவள் என்று ஒதுக்கிவிட்டனர். நான் இனி என்ன செய்தாலும் செய்யா விட்டாலும் கெட்டவளாகத் தானே வாழ வேண்டும்? இப்படி வாழ்வதை விட இறந்துவிட்டால் எவ்வளவோ நலமா யிருக்குமே,” என்று பலவும் எண்ணிக் கொண்டிருந்து இறுதியில் அயர்ந்தேன்.
காலையில் பெண்களனைவரும் எழுந்து சென்று விட்டனர். துயில் கூடத்தின் ஒரு மூலையிலிருந்து நான் மீண்டும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் என் தோழி ஹெலன் பர்னஸ் என் வகையில் ஏற்பட்டிருந்த தடை யுத்தரவைக் கூடச் சட்டை பண்ணாமல், என்னை வந்து கட்டிக் கொண்டாள் “யார் சொல்வதையும் நான் கேட்கப் போவதில்லை. நீ தங்கமான பெண், வருத்தப்படாத” என்று அவள் என்னைத் தேற்றினாள். அத்துடன் சூடான தேநீரும் அப்பமும் கொண்டு தந்து என்னை வறுபுறுத்தி உண்பித்தாள்.
என்னைப் போன்ற இச்சிறு உள்ளத்தின் இன அன்பு பெரிய மனிதர் எழுப்பிய வெறுப்புக் கோட்டையைச் சிதறடித்தது.
லோவுட் நிலையத்தின் வாழ்வில் ஹெலென் பர்ன்ஸின் தோழமை எனக்கு ஒரு விடிவெள்ளியாயிருந்தது. ஆனால், செல்வி டெம்பிளின் அருளுள்ளம் அவ்வாழ்வின் முழு ஞாயிறாக, முழுநிறை மதியாக விளங்கிற்று.
முன்னிரவிலேயே உணவுமேடையில் செல்வி டெம்பிள் என் உளநிலையை உன்னிப்பாகக் கவனித்து வந்தாள். காலையில் எல்லாருடனும் என்னைக் காணாது போகவே, அவள் என்னைத் தேடிவந்து துயிற்கூடத்தில் ஹெலன் பர்னஸுடன் என்னைக் கண்டாள். நான் எதிர்ப்பார்த்தபடி அவள் என்னைக் கண்டிக்கவில்லை, “நீ நேற்று உணவு கொள்ளவில்லை. இரவெல்லாம் உறங்காமல் அழுதிருக்கிறாய் என்று முகம் தானே கூறுகிறது. அழுது அமையப் போவது எப்போது ?” என்றாள்.
நான் மீட்டு மொருதடவை அழுது, "இனி நான் எப்படி அமையமுடியும்? எல்லாரும் என்னைக் கெட்டவள் என்று தான் முடிவுகட்டி விட்டார்களே; என்றேன்.
அவர் ஹெலென் பர்னஸைச் சுட்டிக் காட்டி, “இதோ பார்; இந்தப் பெண் முடிவு கட்டிவிடவில்லை. அத்துடன் நான் முடிவுகட்டி விட்டதாக நீ எண்ணுகிறாயா?” என்றாள்.
அந்தக் கேள்வி எனக்குப் பேரூக்கம் தந்தது. கரை காணாக் கடலில் மிதந்த எனக்கு அது ஒரு கலங்கரை விளக்கமாயிருந்தது.
“உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி. அதற்கு நான் என்றும் கேடு வருவிக்கமாட்டேன்,” என்றேன்.
“என் நல்லெண்ணம் மட்டுமன்று, எல்லார் நல் லெண்ண முமே இனி உன்சொல், உன் செயல், உன் நடத்தையிலேயே இருக்கிறது. சரி; நேற்றுத் திரு. பிராங்கிள் ஹர்ஸ்ட் கூறினாரே, அச்சீமாட்டியார் யார்? உன்னிடமிருந்தே உன் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறோம்,” என்றாள் அவள்.
நான் என் அத்தை வீட்டுக்கு வர நேர்ந்த வரலாறு, அங்கே வாழ்ந்த வாழ்வு, லோவுட்டுக்கு வந்தது ஆகிய யாவும் கூறி முடித்தேன்.
“நீ கூறியவை எல்லாவற்றிலும் உண்மையின் எடை இருக்கிறது. ஜேன்! உன் சொல்லைக் கொண்டே இனி யாவரும் உன்னை மதிப்போம். அதற்கு நான் பொறுப்பு. இனி நீ கவலையில்லாமல், உன் கடமைகளைச் சரிவரச் செய். முடியுமானால் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட்டின் மனங்கூட மாறும்படி செய்வோம். வா,” என்று கூறிச் செல்வி டெம்பிள் என்னை அழைத்துச் சென்றாள்.
வள்ளல் எனப் பெயர் வாங்கிய திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் தந்தையைவிட, அவர் வள்ளன்மையைச் சாக்காகக் கொண்டு நிலையத்தில் தம் இரும்புப் பிடியை நிலைநாட்டிய திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் ஆட்சியை விட, செல்வி டெம்பிளின் வள்ளன்மையும் அன்பாட்சியுமே லோவுட்டை அன்னைபோல் வளர்த்தன என்பதை நான் கண்டு கொண்டேன்.
செல்வி டெம்பிள் தலைவியாயிருக்கும் எந்த நிலையத்திலும் நான் எத்தனை துன்பத்தையும் பெறத் தயங்காதவளாக இருந்தேன். அவள் அருள் உள்ளம், துன்பப்படுகிறவர் துன்பத்தையெல்லாம் தமதாக்கிஅவர்கள் மீது இன்ப அமைதியாகிய நிலவைப் பொழிந்தது.
தார்ன்ஃவீல்டு இல்லம்
செல்வி டெம்பிளின் தலைமையிலேயே நான் லோவுட்டில் ஆறாண்டுகள் அறநிலைய மாணவியாகக் காலங்கழித்தேன். ஆனால், ஆறாண்டுக்குள் நிலையத்தில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. பள்ளியில் தொடங்கிய ஒரு காய்ச்சல் முதலாண்டிலேயே சுற்று வட்டாரங்களிலெல்லாம் பரவிற்று. இதை ஒட்டிப் பள்ளியில் பொது மக்கள் சார்பாகப் பல தேர்வாராய்வுகள் நடைபெற்றன. பெண்களின் உணவு உடைகளில் இது முதல் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன. ஆதரவும் பாராட்டும் நன்மதிப்பும் மிகுந்தன. கேட்ஸ்ஹெட்டில் அத்தையிடமும், அவள் பிள்ளைகளிடமும் பட்ட கடுவாழ்வுக்குப் பின் லோவுட்டின் தொடக்கக் கடமை பெரிதன்று. அத்துடன் படிப்படியாக, அது மேம்பாடு அடைந்து வந்தது.
செல்வி டெம்பிளின் நற்பயிற்சியாலும், நன் முயற்சி யாலும் நான் நிலையத்தில் மாணவி நிலையிலிருந்து உயர்த்தப் பட்டு ஆசிரியையாக இரண்டாண்டு தொண்டாற்றினேன். அதன் மேலும் என்னை அந்நிலையத்திலேயே உயர் பொறுப்பு ஏற்கும்படிதான் அந் நல்லுள்ளம் அவாவாயிற்று. ஆனால் அவள் இதற்குள் மணமுடித்துக் கொண்டு நிலையத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது. நிலையத்தார் அனைவருடனும் ஒத்துழைத்து அவளுக்கு நான் சிறந்த விடையளிப்பு விழா நிகழ்த்தினேன். அச்சமயத்தில் நான் அவளிடம் “தாங்கள் இல்லாமல் நிலையத்தில் இருக்க நான் விரும்பவில்லை. தாங்கள் தந்த பயிற்சியை நன்கு பயன்படுத்தி ஏதேனும் நல்ல குடும்பத்தில் வீட்டாசிரியை ஆக இருக்கத்தான் எண்ணுகிறேன்.” என்றேன்.
“எங்கிருந்தாலும் நீ வாழ்வாயாக,” என்று அவள் அன்பு வாழ்த்துரை வழங்கி அகன்றாள்.
முதலில் எனக்கு எங்கே போவது, என்ன செய்வது என்றே தோன்றவில்லை. பத்திரிகைகளில் என் தோழியர்கள் சில சமயம் விளம்பரங்களைக் காட்டிக் கேலி செய்வது நினைவுக்கு வந்தது. உடனே நான் நிலையத்துக்கு வந்த ஒரு பத்திரிகையில் ஒரு விளம்பரக் கடிதம் வரைந்தனுப்பினேன். அக்கடிதம் இது:
“பதினான்கு வயதுக்குக் கீழுள்ள நல்ல குடும்பப் பெண்களுக்கு ஆசிரியையாக வேலை பார்க்க ஓர் இளநங்கை விரும்புகின்றாள். தாய் மொழியும் இசையும் ஓவியமும் நன்கு கற்பிக்கும் ஆற்றல் உண்டு. கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுக.”
ஜே.அ.
அஞ்சல் நிலையம், லோவுட்
கடிதத்தை அனுப்பியதும், வாழ்க்கை தொடங்கும் வகையில் முதற்படியில் ஓர் அடி எடுத்து வைத்து விட்டது போன்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு நாளும் நான் மறுமொழியை எதிர்பார்த்து அஞ்சல் நிலையம் சென்று மீண்டேன். ஒரு வாரமாயிற்று. நான் நம்பிக்கை இழக்கலானேன். அச்சமயம் ஒரு கடிதம் வந்தது. அது வருமாறு:
“செல்வி ஜே.அ.தம் நன்னடத்தைக்கும் திறமைக்கும் தக்க சான்றுப் பத்திரங்கள் தரமுடியுமானால், இக் குடும்பத்திலுள்ள ஒரே மாணவியின் பொறுப்பு அவரிடம் விடப்படும். மாதம் முப்பது பொன் ஊதியமும் தரப்படும். மில் கோட்டில் தார்ன்ஃவீல்டு இல்லத்தில், திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்ற முகவரிக்கு மறுமொழி அனுப்பும்படி செல்வி ஜே.அ. கோரப்படுகிறார்.”
கடிதத்தை நான் நன்கு ஆராய்ந்தேன். முதுமை வாய்ந்த ஒரு மாதின் கையெழுத்து அது. திருமதி ஃவோஃவக்ஸே எழுதியிருக்க வேண்டும் என்பதையும், அவர் ஒரு முதிய மாது என்பதையும் இது காட்டிற்று. கடிதம் மொத்தத்தில் எல்லா வகையிலும் எனக்குப் பிடித்தமாகவே இருந்தது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் கோரிய சான்றிதழ்கள் என்னிடம் இருந்தன. அவற்றை அனுப்பினேன். மறு அஞ்சலிலேயே மறுமொழி வந்துவிட்டது. என் கோரிக்கை நிறைவேறிற்று. இரண்டு வாரங்களுக்குள் என்னை எதிர்பார்ப்பதாகத் திருமதி ஃவேர்ஃவக்ஸ் எழுதியிருந்தாள்.
லோவுட்டில் என் தோழியர்களிடமிருந்தும் புதிய தலைவியிடமிருந்தும் நான் முன்னாள் மாலையிலேயே பிரியா விடைபெற்றுக் கொண்டேன். இரவில் பெட்டி படுக்கையைக் கட்டிவைத்து விட்டேன். காலை நான்கு மணிக்கு அஞ்சல் வண்டி ஏறிப் பகல் முழுதும் பயணம் செய்து இரவு எட்டு மணிக்கு மில் கோட்டில் இறங்கினேன்.
ஜார்ஜ் அருந்தகத்தில் நான் சிற்றுண்டி அருந்தினேன்.
தார்ன்ஃவீல்டு இல்லம் எவ்வளவு தொலைவிலிருக்கும் என்று எனக்குத் தெரியாது. அதை உசாவி ஒரு வண்டி வைத்துக் கொண்டு செல்ல எண்ணினேன். இந்நோக்கத்துடன் அங்குள்ள ஏவலாளனிடம் “தார்ன்ஃவீல்டு இல்லம் எவ்வளவு தொலை இருக்கும், உனக்குத் தெரியுமா?” என்றேன்.
“தாங்கள் பெயர் அயரா?” என்று மறு கேள்வி கேட்டான் அவன்
“அம்; உனக்கு எப்படித் தெரியும்?”
“தங்களுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார்.”
எனக்காக காத்துக் கொண்டிருந்தது தார்ன் ஃவீல்டு இல்லத்தின் வண்டியோட்டியே. அருந்தகத்தின் வாயிலிலே ஓர் அழகிய பெட்டி வண்டி நின்றிருந்தது. வண்டியோட்டி பெட்டி படுக்கையை எடுத்து வண்டியிலேற்றி என்னையும் ஏறும்படி வேண்டினான். வண்டி விரைந்து சென்றது.
வண்டியின் தோற்றத்திலிருந்தும், வண்டியோட்டியின் நடையுடையிலிருந்தும் வண்டிக்குரியவர்கள் நயநாகரிகக் குடும்பத்தினர் அல்லர் என்று கண்டேன். இஃது எனக்கு அமைதி அளித்தது. ஏனென்றால், ‘நயநாகரிகம்’ என்பது என் உள்ளத்தில் திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் குடும்பத்துடன் தொடர்புடைய தாயிருந்தது.
பயணம் சற்று நீண்ட பயணமாகவே எனக்குத் தோற்றிற்று. பாதைகள் கரடுமுரடாயிருந்தன. கருக்கிருட்டாயிருந்த போதிலும் இருபுறமும் உள்ள நிலம் கட்டாந்தரையாகவே இருந்தது என்பது புலப்பட்டது. நான் செல்லும் இல்லம் ஊரிலிருந்து தொலைவிலுள்ள ஓர் ஒதுக்கிடம் என்பது சொல்லாமலே தெளிவாயிற்று. ஆனால், இதுவும் என் மனநிலைக்கும், விருப்பத்துக்கும் உகந்ததாகவே இருந்தது.
வண்டியோட்டி ஒருபெரிய பழங்கால மாளிகை முன் இறங்கி வாயிற்கதவுகளைத் திறந்தான். உட்கதவை வந்து திறந்த பணிப்பெண் வழிகாட்டி “இவ்வழி வருக அம்மணி” என்று கூறி முன் சென்றாள்.
நடுவிலிருந்த நீண்ட சதுரமான கூடத்தைத் தாண்டி ஒரு சிறிய அறைக்குள் பணிப்பெண் என்னை இட்டுச் சென்றாள். அங்கிருந்த முதுமை வாய்ந்த மாதுதான் என் கடிதத்துக்கு மறுமொழி வரைந்தவர் என்று உணர்ந்து கொண்டேன். அவள் நான் வந்ததும் எழுந்திருந்து “வா அம்மா! பயணம் எப்படி இருந்தது? உடல் நலந்தானே!” என்று அன்புக் கனிவுடன் கேட்டார்.
“நீங்கள் தாம் திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்று நம்புகிறேன்” என்றேன்.
“ஆம்; இப்படி உட்கார். நீண்ட பயணத்துக்குப் பின் அலுப்புடன் இருப்பாய். உணவு கொண்டு வரச் சொல்லுகிறேன். உண்டு ஓய்வு எடுத்துக் கொள். பின் நாளை பேசிக் கொள்ளலாம்,” என்றாள்.
"வீட்டாசிரியை நிலை ஓர் உயர் பணியாள் நிலையை விட மேலன்று என்பதை நான் அறிவேன். எனவே, இவ்வளவு மதிப் புடனும், அன்பாதரவுடனும் நான் வரவேற்கப்படுவது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆயினும், என் வேலையில் நான் கொண்ட அக்கறையைக் காட்ட வேண்டும் என்பதை நான் எண்ணினேன். என் மாணவி செல்வி ஃவேர்ஃவக்ஸை நான் இப்போதே காணமுடியுமானால் மகிழ்ச்சியடைவேன்,’ என்றேன்.
“செல்வி ஃவேர்ஃவக்ஸா? ஓகோ! உங்கள் மாணவி பெயர் செல்வி வாரன்ஸ் என்பது உங்களுக்குத் தெரியாதே!”
“அப்படியா! அது உங்கள் புதல்வி என்று நான் நினைத்தேன்.”
“எனக்குக் குடும்பமே கிடையாது. ஆனால், என்னைத் தவிரக் குடும்பத்தை மேற்பார்க்கவும் ஆளில்லை. உங்களை வரவேற்கும் பொறுப்பை அதனால் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது.”
திருமதி ஃவேர்ஃவக்ஸே குடும்பத் தலைவி என்று நான் நினைத்திருந்தது தவறு என்று கண்டேன். ஆனால், குடும்பத் தலைவிபோலவே அவள் நடந்து கொண்டது கண்டு மகிழ்ந்தேன். இத்தகைய இடத்தில் என் பணி நன்கு தொடங் கிற்று என்பதை நான் அன்றே கண்டு கொண்டேன்.
மறுநாள் காலை, கதிரவன் பொன் கதிர்கள் என் அறையில் புகுந்து என்னை எழுப்பியபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கேட்ஸ்ஹெட்டில் எனக்கென அறை இருந்ததில்லை. லோவுட்டில் ஆசிரியையானபின் தனி அறை இருந்தாலும், அது இந்த அறைக்கு ஈடன்று. நிலத்தளமெங்கும் கம்பளம் விரித்திரிந்ததினால் குளிர் தட்டாமல் எங்கும் வெது வெதுப்பாயிருந்தது. பலகணிகளுக்கு நீலத்திரை இடப் பட்டிருந்தன. கதிரவன் பொன்னொளியில் இது செந்நீலமாகத் திகழ்ந்து என் கண்களுக்கு விருந்தூட்டின. ஒரு புதிய வாழ்வில் புகுகின்றேன் என்ற எண்ணம் என்னையறியாமல் என்மீது ஊர்ந்தது.
நான் என்றுமே என் உடையணிகளைத் திருத்துவதில் கவனமில்லாதிருந்ததில்லை. இப்போது புதிய இடத்தில் புதிய ஆட்கள்முன் என்தோற்றம் எப்படியிருக்குமோ என்ற கவலையுடன் காலை உடையிலும் ஒப்பனையிலும் கருத்தைச் செலுத்தினேன்.
உணவுமேடை கூட நான் இதுவரை கண்டவற்றைவிட உயர்வுடையதாகவே இருந்தது.
"தார்ன்ஃவீல்டு உனக்கு எப்படியிருக்கிறது? பிடித்தம் தானோ? என்று கேட்டாள் திருமதி ஃவேர்ஃவக்ஸ்.
“ஆம்; முதல் நாளிலேயே பிடித்துவிட்டது.”
“அப்படியா! மிக மகிழ்ச்சி. ஆனால், இதை எவ்வளவு ஒழுங்குபடுத்தினாலும் திரு. ராச்செஸ்டர் இங்கே மிகுதி தங்குவதில்லை. அவர் தங்கினாலல்லாமல் இதை இன்னும் நீண்டநாள் வைத்துக் காக்க முடியாது.”
“திரு. ராச்செஸ்டர் யார் அம்மணி?”
“திரு. ராச்செஸ்டர் யாரா? இன்னும் இது தெரிந்து கொள்ளவில்லையா? அவர் தாம் இந்த வீட்டுக்குரியவர். அவர் மேற்பார்வையிலிருக்கும் பெண் தான் உன் மாணவியாகப் போகிற அடேல் வாரன்ஸ்.”
இதற்குள் அடேல் வாரன்ஸ்ஸே வந்து சேந்தாள். அவள் சின்னஞ்சிறு பெண். நன்கு சிரித்து விளையாடி யாரையும் எளிதில் வசப்படுத்த வல்லவன். மிக விரைவில் அவள் என்னுடன் பழகிவிட்டாள். முதல் நாள் பாடம் பாடமாகத் தோற்றவில்லை. இருவருக்கும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
பாட முடிவில் திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்னை அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டினாள். வழியில் அவள் ராச்செஸ்டரைப் பற்றிக் கூறினாள். விரிவாகக் கூறிக் கொண்டே சென்றாள்.
“அவர் அடிக்கடி வருவதில்லை. ஆனால், முன்னறி விப்பில்லாமல் எந்தச் சமயமும் திடுமென வந்துவிடக் கூடுமாதலால், வீட்டை எப்போதும் கட்டுச் செட்டாகவே வைத்துக் கொள்கிறேன்” என்று அவள் அளந்தாள்.
“அவர் எப்படிப்பட்டவர்? ஏன் இங்கே தங்குவதில்லை?” என்று கேட்டேன்.
“கெட்டவர் என்று கூறமுடியது. ஆனால் திறமை யுடையவர். மிகவும் விசித்திரமானவருங்கூட. உலகில் மிகவும் பயணம் செய்திருப்பதனால் எந்த இடமும் அவருக்கு எளிதில் பிடிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.”
வீட்டின் பல பகுதிகளையும் நாங்கள் பார்த்தோம். நான் எதிர்ப்பார்த்ததைவிட அது பெரிய இடமகன்ற மாளிகையாகத் தானிருந்தது. பல பகுதிகள் நேர்த்தியாகவுமிருந்தன. ஆயினும், மொத்தத்தில் அந்த மாளிகையைச் சுற்றிப் பழங்கால நினைவு கள் பின்னலிட்டுக் கொண்டிருந்தன என்ற எண்ணமே மேலிட்டது. பழைய சாதனங்களடங்கிய ஓர் அறையருகில் சென்றபோது இவ்வெண்ணம் உச்சநிலையடைந்தது. “இந்த வீட்டில் எங்காவது பேயாட்டம் உண்டா?” என்று கேட்கத் தோன்றிற்று. இது கேட்டதே, ஏதோ கண்டவள் போல் திருமதி ஃவேர்ஃவக்ஸ் சரேலென்று என்னை இட்டுக் கொண்டு கீழே இறங்கினாள்.
என் பின்னாலிருந்து அப்போது பேய் சிரித்தது போன்ற ஒரு சிரிப்புக் கேட்டது. “அஃது என்ன?” என்று கலவரத்துடன் கேட்டேன்.
“அஃது ஒரு பணிப்பெண் போடுகிற ஓசை”என்று கூறிவிட்டு, அவள் மறுபுறம் நோன்கி “கிரேஸ் : கிரேஸ்” என்றாள்.
கிரேஸ்பூல் என்ற வேலைக்காரி எங்கிருந்தோ வந்தாள். “ஏன் இவ்வளவு அலறல்? பேய் பிடித்தவள். அலறல் மாதிரி! போய் அமைதியாக வேலைபார்.” என்றாள் திருமதி ஃவேர்ஃவக்ஸ்.
பேச்சை மாற்ற விரும்புபவள் போல் திருமதி ஃவேர்ஃவக்ஸ் அடேலைப்பற்றிப் பேச்செடுத்தாள். இஃது உண்மையிலேயே எனக்கு விருப்பமான பேச்சாயிருந்ததனால் நான் விரைவில் அந்தச் சிரிப்பைப் பற்றிய எண்ணத்தை மறந்தேன்.
ராச்செஸ்டர் வருகை
என் புதிய வாழ்வில் நான் அமைந்து தட்டுத் தடங்கலெது வுமில்லாமல் இனிதாக மிதந்து சென்றேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் அன்பு ஒருபுறம்: அடேலின் கள்ளங் கபடமற்ற பாசம் ஒருபுறமாக என்னைக் களிப்பில் ஆழ்த்தின. இந்நிலையில் மூன்று மாதங்கள் மூன்று நாட்களாக கழிந்தன.
அடேலுக்கு ஒருநாள் நீர்க்கொண்டுவிட்டது. அதனால் அவளுக்கு அன்று ஓய்வு அளிக்கும்படி திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்னை வேண்டினாள். என்னிடம் அங்ஙனம் வேண்டிக் கொண்ட நயநாகரிக முறைக்கு இணங்க நானும் நயநாகரிக மாக நடக்க விரும்பினேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் கடிதங்களை வழக்கமாகப் பணியாள் நகரத்து அஞ்சல் நிலையம் சென்று போடுவது வழக்கம். “இப்போது எனக்கும் ஓர் ஓய்வுநாள் தந்தால், நகருக்குச் சென்று வருகிறேன். அத்துடன் கடிதங்களையும் நானே போட்டு வருகிறேன்.” என்று நான் சொன்னேன். திருமதி ஃவேர்ஃவக்ஸ் முக மலர்ச்சியுடன் “அப்படியே போய்வா, அவசரம் எதுவுமில்லை, போதிய நேரம் எடுத்துக் கொண்டு உலவி வா,” என்றாள்.
நகரில் அஞ்சல் நிலையமும் நகரும் இரண்டு கல் தொலைவில் இருந்தது. புலர் காலையாதலால், வழி ஆளற்று அமைதியாயிருந்தது. ஞாயிறு தன் மென் கதிர்களால் முகிற்கூட்டங்களின் செந்நீலத் திரைகளினூடே மங்கிய ஒளியைப் பரப்பி வந்தான். மேட்டு நிலத்தின் முகட்டை அணுகியதும், சற்றுக் களைத்து ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தேன்.
அச்சமயம் என் ஓய்வையும் அமைதியையும் கிழித்துக் கொண்டு தடதடவென்று ஓர்ஓசை எழுந்தது. அஃது எனக்கு எதிரே இருந்துவரும் குதிரைக் குளம்பின் ஓசை என்று தெரிந்ததும், அத்திரையாக அப்படி யார் செல்லக் கூடும் என்று வியப்புடன் எதிர்நோக்கியிருந்தேன். திடுமென ஒரு வெள்ளை நாய் பின் தொடர, கறுப்புக் குதிரை மீது புயல் வேகத்தின் என்னை ஒருவர் கடந்து சென்றார். அந்த வேகத்தின் அதிர்ச்சியில் நான் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். பின் வெயிலேறு முன் நகர் சென்று மீள எண்ணிப் புறப்பட எழுந்தேன்.
குதிரைக் குளம்படி ஓசை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், அது திடீரென நின்று தடாலெனப் பேரொலி எழுந்தது. அதனையடுத்து நாயின் அலறலும் கேட்டது. நான் என்னவென்று காணும் எண்ணத்துடன் சற்றுத் திரும்பிச் சென்று பார்த்தேன். சிறிது தொலைக்குள் குதிரையும் மனிதனும் நிலத்தின் மீது புரண்டுகிடந்தனர். மனிதரின் காலொன்று குதிரையினடியில் சிக்கிக் கொண்டதால், அவர் அதை விடுவிக்க முடியாமல் தவித்தார்.
நாய் என்னை நோக்கி ஓடிவந்தது. என்னைச் சுற்றிச் சுற்றி ஓடி மீண்டு வந்து பின்னும் சுற்றிற்று. அந்த வாய்பேசா விலங்கு என்னை உதவிக்கு அழைக்கிறது என்று அறிந்து, மனிதரை அணுகி, “ஐயா! உடம்பில் காயம் பட்டுவிட்டதா? நான் உதவட்டுமா,” என்றேன்.
அவர் முரட்டு மனிதராகவே தோன்றினார். பேச்சும் துடுக்குத்தனமுடையதாகவே இருந்தது. உதவி வேண்டும் நிலையில்கூட அவர் உதவிக்கு உரிய பண்பற்றவராகக் காணப் பட்டார். ஆயினும், உதவியில்லாமலே அவர் எழுந்து நடக்க முயன்றபோது, அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்மீது வந்த வெறுப்பைவிட, அந்நிலையில் அவர்மீது இரக்கமே என்னிடம் மேலெழுந்தது. நான் அவரைத் தாங்கி எழுந்து நிற்க வைத்தேன் அவர் தடை செய்யவில்லை.
“ஐயா! தங்களால் உதவியில்லாமல் இனிப்போக முடியாது என்று நினைக்கிறேன். தார்ன்ஹில் இல்லம் அருகேதான் இருக்கிறது. அங்கே சென்று யாரையாவது உதவிக்குக் கூட்டிக் கொண்டு வரட்டுமா?” என்றேன்.
“தார்ன்ஹில் இல்லமா? நீ யார்? உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்?” என்று அவர் சீற்றத்துடன் குறுக்குக் கேள்வி கேட்டார். அவர் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அந்நிலையில் அவரை விட்டுச் செல்லவோ, அல்லது கேள்விக்கு விடை கூறாமல் நிற்கவோ வழியில்லை. ஆகவே, நான் “அங்கே வீட்டாசிரியை” என்றேன்.
“ஆ, அப்படியா! நான் மறந்துவிட்டேன்!” என்றார் அவர்.
அதன்பொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் தார்ன் ஹில்லுடன் அவருக்கு ஏதேனும் தொடர் பிருக்கக் கூடும் என்று உய்த்துணர்ந்து கொண்டேன்.
அவர் என்னைச் சற்று ஏற இறங்கப் பார்த்தார். “உன் உதவியை நாடத்தான் வேண்டியிருக்கிறது. சற்று அருகே வந்து நிற்கிறாயா.” என்றார்.
அவர் குரலில் சிறிது மாறுதல் ஏற்பட்டதை நான் அப்போது கவனிக்கவில்லை. காலில் வலு இல்லாததால் உடலின் பளுவில் ஒரு பெரும்பகுதி என்மீது சாய்ந்தது. அதை நான் அரும்பாடுபட்டுத் தாங்கிக் கொண்டேன். அவர் குதிரையும் எழுந்து நின்றது. அவர் அதில் ஏறிக் கொண்டார்.
“உனக்குத் தந்த தொந்தரவை மன்னிக்கக் கோருகிறேன். இன்னும் ஓர் உதவி. என் கைத்தடி அதோ பாதையருகில் கிடக்கிறது. அதை எடுத்துக் கொடு” என்றார். கொடுத்தபின் அவர் “நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார். நான் அஞ்சல் நிலையத்தக்குப் போவது அறிந்து, சரி நீ போகலாம்; உன் உதவிக்கு நன்றி, என்று கூறி விடை தந்தார்.
அவர் எதிர்த் திசையில் மெல்லக் குதிரைமீது சென்று மறையும் வரை பார்த்திருந்து நான் நகர் நோக்கிச் சென்றேன்.
அஞ்சல் நிலையத்துக்குச் சென்று என் வேலையை முடித்துக் கொண்டு நான் நகரில் நண்பகல் உணவு உண்டு, கடைத்தெருவும் பூங்காக்களும் சுற்றி உலவிப் பொழுது போக்கினேன். திரும்பத் தார்ன்ஹில் இல்லம் வரும்போது பொழுது சாயும் நேரமாகி விட்டது.
இல்லத்தின் வாயிலில் ஒரு வெள்ளை நாய் காத்திருந்தது. அஃது என்னைக் கண்டதும் குரைத்து வால் குழைத்தது. அது தான் நான் குதிரையில் வந்தவருடன் கண்ட நாய் என்று அறிந்து கொண்டேன். அஃது இங்கே இருப்பானேன் என்ற வியப்புடன் ஏவலாளிடம் ‘இது யார் நாய்?’ என்றேன்.
“அது திரு. ராச்செஸ்டர் நாய். அவர் இன்று காலையில் தான் வந்தார். வரும்போதே வழியில் அவருக்கு ஓர் இடர் உண்டாயிற்று. கால் மிகவும் ஊனப்பட்டுப் படுக்கையில் இருக்கிறார்.” என்றான்.
என் உள்ளத்தில் பேரொளி உண்டாயிற்று. “என்னைக் காலையில் சந்தித்த சீமான் வேறு யாருமல்லர். அடேலின் காவலரான வீட்டுத் தலைவரே!” என்பது எனக்கு வெட்ட வெளிச்சமாயிற்று.
திரு. ராச்செஸ்டர் வருகை தார்ன்ஹில் இல்லத்தின் வாழ்வில் புத்துயிரூட்டிற்று. அஃது என் வாழ்வையும் தாக்கா மலிருக்க முடியவில்லை. அவர் வரும் போது நகரிலிருந்து அடேலுக்குப் பரிசாக ஒரு பெட்டி அனுப்பியிருந்தார். அஃது இன்னும் வந்து சேரவில்லை. பெட்டியிலிருந்த பரிசுகள் என்ன என்று அவர் கூறமறுத்துவிட்டதால், அதை ஊகிப்பதிலும், அதுபற்றி மனக்கோட்டைகள் கட்டி அழிப் பதிலுமே அவள் முற்றிலும் ஈடுட்டிருந்தாள். இந்நிலையில் அவள் மனம் பாடத்தில் செல்லவில்லை. ஏவலர்கள் ஓயாது திரு. ராச்செஸ்டருக்காக ஏதேனும் வாங்குவதிலோ, கொண்டு செல்வதிலோ பரபரப் புடையவராயிருந்தனர். திருமதி ஃவேர்ஃவக்ஸ் கூட இப்போது முன் எப்போதையும் விட மிகுதியாக வீட்டு வேலையிலீடு பட்டிருந்தாள். இந்நிலையில் நானும் அவர் வருகை, அவர் பண்புகள், தொலைவிடத்தில் அவர் வாழ்ந்த வாழ்வின் தன்மை ஆகியவற்றை நினைப்பது தவிர வேறு வேலையற்றவளானேன்.
அவர் நயநாகரிகமுடையவராகத் தோற்றவில்லை, ஆனால் நயநாகரிகமுடையவராக யிருந்திருந்தால் அவர் முதலில் என்னிடம் நடந்து கொண்ட முறை எனக்கு வெறுப்பையே கொடுத்திருக்கும். அவருடைய முரட்டுக்குணம் அவர் நடத்தை யிலுள்ள குறைபாட்டை நிரப்பிற்று. அவர் பின்னால் காட்டிய மதிப்பு இதனால் பன்மடங்கு எனக்கு மகிழ்ச்சி தந்தது.
முதலில் அவரை நான் சந்திக்கப் போனபோது, நான் அடேலுடன் சென்றேன். திருமதி ஃவேர்ஃவக்ஸ் முறைப்படி என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர் முன்பே என்னை அறிந்ததாகக் காட்டிக் கொள்ளவுமில்லை, அதேசமயம் என்னைத் தனிப்படக் கவனிக்கவுமில்லை. திருமதி ஃவேர்ஃவக்ஸ் தேநீர்க் கோப்பையை என்னிடம் வைத்து "திரு. ராச்செஸ்டருக்கு இதை நீயே எடுத்துக் கொடு. அடேல் அதை ஒரு வேளை கொட்டிவிடக்கூடும்,’ என்றாள்.
அடேலின் பரிசுப்பெட்டி இதற்குள் வந்துவிட்டது. அதிலுள்ள பொருள்கள் அவள் எதிர்பார்த்தவையாயிருந்தன. எனவே, அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் அதை அடக்க முடியாமல் எங்கும் தாவிக் குதித்துக் கும்மாள மடித்தாள். பின் திரு. ராச்செஸ்டரை அணுகி, எனக்குப் பரிசுகள் எவ்வளவோ நன்றாயிருக்கின்றன. ஆனால், செல்வி அயருக்குப் பரிசு எதுவும் வாங்கிவரவில்லையா?" என்றாள்.
அதுகேட்டு நான் சிரித்தேன்.
“உனக்குப் பரிசுகளில் விருப்பம் உண்டா?” என்று அவர் என்னைக் கேட்டார்.
எனக்கு இதுவரை யாரும் பரிசு கொடுத்ததாக நினைவுமில்லை; நான் விரும்பியதும் கிடையாது. மேலும், பரிசுபெற நான் என்ன செய்துவிட்டேன்! அடேல் நன்றாகப் படித்திருக்கிறாள். அவளுக்குப் பரிசு வேண்டுந்தான்," என்றேன் நான்.
அடேலுக்கு இப்போது நல்ல படிப்புத் தகுதி உண்டு என்பது உண்மை. ஆனால், அது முழுவதும் அவள் தகுதி அன்று என்பது எனக்குத் தெரியும். முன்பு வந்திருந்தபோதெல்லாம் அவளிடம் நான் கண்ட முன்னேற்றத்தை விட, இப்போது அடைந்த முன்னேற்றம் எவ்வளவோ மிகுதி. அது பேரளவில் உன் பயிற்சித் திறமையின் பலன்தான்!" என்றார் திரு. ராச்செஸ்டர்.
உடனே நான், "இப்போது நீங்கள் எனக்குப் பரிசு தந்துவிட்டீர்கள்,’ என்றேன்.
அவர் புன்முறுவல் பூத்தார். “நீ இங்கே வந்து எவ்வளவு நாளாயிற்று?” என்று கேட்டார்.
படிப்படியாக அவர் என்னிடமிருந்து என் பள்ளி வாழ்வு, குடும்ப நிலை ஆகியவற்றைக் கேட்டறிந்து என் மீது பரிவு காட்டினார். என் பலவகைத் தகுதிகளையும் உரையாடலுடன் உரையாடலாகவே பேசி அறிந்து கொண்டார். முதலில் எதற்காக அவர் இவற்றை உசாவுகிறார் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் திருமணம் செய்யப் போவதாகச் செல்வி ஃவேர்ஃவக்ஸிடமிருந்து அறிந்த பின் ஒருவாறு அவர் திட்டத்தை ஊகிக்க முடிந்தது. அவர் திருமணமாகி அடேலை வேறிடத்துக்கு இட்டுச் சென்றால், எனக்கு உகந்தவேறு ஏதேனும் நல்ல தொழில் பார்த்துக் கொடுக்க அவர் எண்ணியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று.
இடர்மேல் இடர்
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் நாங்கள் திரு ராச்செஸ்டருடனே தேநீர் அருந்தினோம். அப்போது நான் அவரை நேரடியாகக் காணவும் அவர் போக்கையும் குணங்களையும் கவனிக்கவும் முடிந்தது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் அவர் சிறு சிறு போக்குகளையும் வழக்கங்களையும் என்னிடம் விரித்துரைத்திருந்தாள். இப்போது அவற்றின் உண்மை இயல்புகளை என்னால் அறியமுடிந்தது. அவர் இந்தச் சிறுவயதுக்குள்ளாகவே வாழ்க்கையின் இன்னல்களுக்குப் பெரிதும் ஆளானவர் என்பது நன்கு விளங்கிற்று. இவர் வெளிக்கு முரட்டுத்தனமாகப் பேசியதும் இதனாலேயே என்று உணர்ந்தேன். அவர் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் வாழ்க்கைமீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பும் கசப்புமே வெளிவந்தன. அடேலுடன் பேசும்போது மட்டுமே இந்த வெறுப்புச் சற்றுக் குறைவாயிருந்தது. என்னிடம் தொடக் கத்தில் இந்த வெறுப்பை அவர் காட்டினாலும், படிப்படியாக அது குறைந்தே வந்தது. நான் அடேலின் நல்லாசிரியையாய்ச் செய்யும் பணியில் அவருக்கு இருந்த மதிப்பே இதற்குக் காரணம் என்று நான் நினைத்தேன்.
அவர் என்னை மதிக்குந்தோறும், எனக்கும் அவரிடம் மதிப்பு ஏற்பட்டது. வீட்டுத் தலைவர் என்ற முறையில் முதலில் அவருக்கு நான் காட்டிய தொலைமதிப்பு அவர் வாழ்வின் வரட்சிமீது இரக்கமாகவும், அன்பு மதிப்பாகவும் மாறிற்று. அவர் கருத்துகளுக்கு மற்றவர்களைப் போல் நான் வளைந்து கொடுப்பதில்லை. அவருக்கு இச்சகம் பேசி அவர் நட்பைப் பெற விரும்பவுமில்லை. என் கருத்துக்களை ஒளியாது அவரிடம் கூறினேன். கருத்து மாறுபாடுகளையும், விருப்பு வெறுப்புக்களையும் துணிவுடன் காட்டிக் கொண்டேன். அவர் இவற்றை வெறுக்கவில்லை. மாறாக, என்னிடம் அவர் நம்பிக்கை வளர்ந்தது. அவர் எதிலும் என் அறிவுரையைக் கோரிவந்தார். அடிக்கடி அடேலின் முன்னேற்றம் பற்றியும் வீட்டுக்காரியங் களைப்பற்றியும் நாங்கள் கலந்து பேசித் திட்டமிட்டு வந்தோம்.
ஆனால், அவர் வாழ்வின் மிக முக்கியமான ஒரு செய்தியைப் பற்றி மட்டும் அவர் என்றும் குறிப்பிடவே இல்லை. நானும் அதுபற்றிப் பேசவில்லை. அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற செய்தி மெள்ள வீட்டில் எங்கும் அடிப்பட்டது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் இதுபற்றி மிகுந்த அக்கறையும் கவலையும் காட்டினாள். பக்கத்திலுள்ள ஒரு குடுப்பத்தினுடன் அவர் அடிக்கடி ஊடாடி வந்தார். அக்குடும்பத்தைச் சேர்ந்த செல்வி பிளான்சிதான் இதற்கு மூலக்காரணம் என்று திருமதி ஃவேர்ஃவஸும் பிறரும் கருதினர். அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்? செய்து கொண்டால் தார்ன்ஹில் இல்லத்திலேயே தங்குவாரா? நகருக்குச் சென்றுவிடுவாரா?" என்பது பற்றியே எல்லாரும் கவலைக் கொண்டனர். ஏனெனில், அவர் வேறிடம் சென்று விட்டால், தார்ன்ஹில் இல்லம் புறக்கணிக்கப்படும். அதை ஒட்டி வாழ்ந்த அனைவர் வாழ்விலும் பொலிவு குன்றிவிடும்.
எனக்கும் இதுபற்றிய கவலைகள் இல்லாமலில்லை. உண்மையில் எவரையும்விட எனக்குத்தான் கவலை மிகுதி. திரு. ராச்செஸ்டர் மணம் செய்து கொண்டு நகரம் சென்றாலும் சரி, செல்லாவிட்டாலும் சரி, நான் என் வேலையை விடவேண்டி வருவது உறுதி. புதிய வீட்டுத் தலைவியின் கீழ் நான் நீடித்து இருக்க முடியாது. அது செல்வி பிளான்சியாயிருந்தால், நானே இருக்க விரும்பமாட்டேன். இதுவரை சரிசம நிலையில் எல்லாருடனும் நான் பழகிவிட்டேன். நய நாகரிகமுடைய செல்வி பிளான்சி எல்லாப் பணியாளர்களையும், பணியாளர்களாகவும், என்னைப் பணியாளர்களைவிடச் சற்று உயர்வாகவுமே நடத்துவாள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
இத்தனை கவலைகளையும் நான் காட்டிக்கொள்ளாமல் அடக்கியே வந்தேன். ஆயினும் திரு. ராச்செஸ்டர் இவற்றை ஓரளவு உய்த்தறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் என் எழுத்துத் திறமை, ஓவியம், இசைப்பயிற்சி ஆகியவற்றிலெல்லாம் கருத்துச் செலுத்தினார். “இலண்டன் நகரை நீ பார்த்திருக் கிறாயா? அங்கே இருக்க உனக்குப் பிடிக்குமா?” என்றெல்லாம் அவர் அடிக்கடி கேட்டார். இவற்றால், தமக்குத் திருமணமான வுடன் அவர் எனக்கும் இலண்டனில் வேறு வேலை பார்த்துத் தரத் திட்டமிட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று.
என் உள்ளம் இவ்வாறு அல்லற்பட்டதனால் எனக்கு இரவு உறக்கமே பிடிக்கவில்லை. தார்ன்ஹில் இல்லத்தின் பல காட்சிகளும் பல நிகழ்ச்சிகளும் அரைத்துயிலில் என்முன் கனவாக நின்று நடமிடும். தார்ன் ஹில்லை விட்டுச்செல்ல எனக்கு உள்ளூர மனமில்லை என்பதை இது எனக்கு நன்கு விளக்கிற்று. அத்துடன் திரு. ராச்செஸ்டரைச் செல்வி பிளான்ஸி போன்ற ஒரு பட்டுப்புழுவின் பிடியில் வைத்துப் பார்க்க எனக்கு எக்காரணத்தாலும் பொறுக்க முடியவில்லை. அவள் அவருக்குத் தகுந்த - பிறர் கருதியபடி பார்த்தால் - அவருக்கு மேற்பட்ட தகுதியையுடைய பெண் என்பதை நான் அறிவேன். ஆயினும், எப்படியோ எனக்கு அவள் மீது வெறுப்பும், புழுக்கமும் ஏற்பட்டன.
திரு. ராச்செஸ்டர், செல்வி பிளான்சி, தார்ன்ஹில் ஆகியவர்களைப் பற்றிய பல அரைக் கனவுகளிடையே ஒருநாள் என் கூரிய செவிகள் ஏதோ ஒரு கதவு மெல்லத் திறக்கப்படும் ஓசையையும், அடைக்கப்படும் ஓசையையும் கேட்டன. நான் இருந்த அறைக்கும் ராச்செஸ்டர் அறைக்கும் இடையே வெளியே தொலை மிகுதியாயிருந்தாலும், பின்புறம் இடையே ஒரு சுவர்தான் இருந்தது. அவர் உறக்கத்தின் மூச்சு ஒவ்வொன்றும், உருண்டு புரண்டு படுக்கும்போது படுக்கை அசையும் அசைவு ஒவ்வொன்றும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.
மணி இரண்டடித்தது. அச்சமயம் என் அறையின் கதவண்டை யாரோ வருவதும் கதவு திறப்பதும், எனக்குத் தெரிந்தது. நான் உரக்க, “யாரது?” என்று அதட்டினேன். உருவம் மெல்லப் பின் வாங்கிற்று. அத்துடன் அது அடங்காப் பேய்ச்சிரிப்புச்சிரித்தது. அந்தச் சிரிப்பு நான் முன் கிரேஸ்பூலின் அறையில் கேட்ட அதே சிரிப்புத்தான். கிரேஸ்பூல் எக் காரணத்தாலோ தார்ன்ஹில் இல்லத்தின் உள்ளிருந்து கொண்டே பகைமை எண்ணம் கொண்டிருக்கிறாள் என்று நான் முன்பே நினைத்தேன். அவள் பேய்ச்சிரிப்பும், இன்று நான் கண்ட காட்சியும் அதை உறுதிப்படுத்தின. அவள் என்னை என்ன செய்ய எண்ணி வந்தாளோ? என்மீது அவளுக்கு என்ன பகையோ? என்னால் அமைந்து படுக்க முடியவில்லை. திருமதி ஃவேர்ஃவக்ஸின் அறை சென்று அவள் துணை நாடலாம் என்று எண்ணி வெளியேறினேன்.
வெளியே போனபோது நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இடைவழிகளெங்கும் புகை கம்மிக் கொண் டிருந்தது. எங்கேயோ தீ மூள்கிறது என்பதில் ஐயமில்லை. நான் என் ஆடையை முகமீது இழுத்துப் போர்த்துக் கொண்டு புகையினுள் நுழைந்தேன். புகை வரும் திசைநோக்கிச் சென்றேன். புகை திரு. ராச்செஸ்டரின் அறையிலிருந்து தான் வருகிறது என்பதைப் பார்த்ததும் என் உடல் நடுங்கிற்று. கதவு திறந்து கிடந்தது. புகையின் நடுவிலேயே திரு. ராச்செஸ்டர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால், படுக்கையின் ஓரங்களி லெல்லாம் தீ கனிந்து கொண்டிருந்தது.
சிந்திக்கச் சிறிதும் நேரமில்லை. நான் உடனே ஓடோடியும் சென்று என் அறையிலிருந்த வாளிகளை எடுத்து நீர் கொண்டு வந்து அவர்மீதே கொட்டினேன். அத்துடன் ‘தீ, தீ’ எழுங்கள் என்று கூவினேன்.
அவருடைய வழக்கமான முன்கோபமும் முரட்டுத் தனமும்தான் முதலில் என்னை வரவேற்றன. “யாரது சனியன்? என்மேல் தண்ணீர்கொட்டி என்னைச் சாகடிக்கவா பார்க் கிறீர்கள்,” என்று கூக்குரலிட்டு அவர் எழுந்தார். என்னைப் பார்த்ததும் ஒன்றும் தோன்றாமல் “என்ன இது? என் மேல் ஏன் தண்ணீரைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாய்?” என்றார்.
நான் ஒன்றும் மறுமொழி கூறாமல் புகையைச் சுட்டிக் காட்டினேன். “என்ன நடந்தது? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே?” என்றார்.
“யாரோ உங்கள் அறையில் தீ வைத்திருக்க வேண்டும்? புகையைக் கண்டு நான் ஓடிவந்து தண்ணீர் கொட்டினேன். இனி தீ பரவாது. ஆனால் தீ வைத்தது யார் என்று விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்” என்றேன்.
அவர் உடனே பரபரப்புடன் எழுந்து விளக்கேற்றப் போனார். நான் “சற்றுப் பொறுங்கள்” என்று கூறி உலர்ந்த ஆடை தேடிக் கொணர்ந்து, “இனி ஆடை மாற்றிக் கொண்டு வெளியே போய்ப் பாருங்கள்,” என்றேன்.
திரு.ராசேஸ்டர் வர நேரமாயிற்று. நான் என் அறைக்கே சென்று காத்திருந்தேன். நெடுநேரம் கழித்து அவர் வந்தார். அவர் முகம் கவலை தோய்ந்திருந்தது.
“யாரோ ஒரு பேய்ச்சிரிப்புச் சிரித்ததாக நீ கூறினாய் அல்லவா?” என்றார்.
“ஆம்.”
“இதற்கு முன் அதே சிரிப்பை எங்காவது கேட்டதுண்டா?”
“உண்டு, இங்கே வேலைசெய்யும் கிரேஸ்பூல் என்ற பெண்ணின் அறையிலிருந்து அந்தச் சிரிப்பை ஒரு தடவை கேட்டேன். அவள் மீது எனக்கு ஐயம் ஏற்பட்டதுண்டு.”
அவர் முகத்தில் கவலை குறைந்தது. “ஆம், ஆம்” அவளாகத்தான் இருக்க வேண்டும். அவள் விசித்திரமானவள். அடிக்கடி அறிவு தடுமாறி எனனென்னவோ செய்து விடுகிறாள்" என்றார்.
‘இதுவகையில் திருமதி ஃவேர்ஃவக்ஸிடம் கூறி ஏதாவது எச்சரிப்பு செய்யலாமா’ என்றேன்.
“வேண்டா, இதில் நீ ஒன்றும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டா. நான் வேண்டிய ஏற்பாடு செய்து கொள்கிறேன். நீ இங்கே கண்டவற்றுள் எதனையும் யாரிடமும் இப்போதைக்குச் சொல்லாதிருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.”
அவர் விருப்பத்துக்குக் காரணம் என்ன என்று நான் கேட்காமலே, அவர் கூறியபடி செய்வதாக ஒத்துக் கொண்டேன்.
அவர் இப்போது முதல் தடவையாக என்னை என் முழுப் பெயர் கூறி அழைத்து, “ஜேன் அயர், நீ எப்போதும் எனக்கு இடரில் உதவுகிறாய். இன்று என் உயிரையே காப்பாற்றினாய். நான் உனக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன்.” என்று கூறி அன்பாதரவுடன் தம் கையை நீட்டினார். நான் தந்த கைக்கு அவர் முத்தமிட்டு என் முகத்தை உற்று நோக்கினார்.
அவர் நன்றி காட்டியபோது நான் வெட்கமடைந்தேன். “நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லையே; நல்ல குடும்பத்தில் இடம்பெறும் எவரும் செய்வதைத்தான் நான் செய்தேன்.” என்றேன்.
ஆம். ஆனால் சரிவர முழுமனதுடனும் திறமையுடனும் நீ செய்தால் நன்மை அடைபவன் நான்; அதற்கு நன்றி காட்டுவது என் கடமை. ஆனால் என் நன்றி சொல்லளவில் நில்லாது. வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்தில் உனக்கு ஓர் இடமுண்டு, என்று கூறிவிட்டு அவர் விடைபெற்று அகன்றார்.
விருந்தாளிகள்
இதற்குப்பின் நாளாக, திரு. ராச்செஸ்டரை நான் காணவில்லை. ஆனால், கிரேஸ் பூலை நான் அடிக்கடி கண்டேன். புகை கண்ட அன்றுமுதல் நான் அவளைப் பற்றிப் பலப்பல எண்ணமிட்டு வந்தேன். ஆனால், அவள் என்னிடம் எதுவும் நடவாதது போலவே பழகினாள். இஃது எனக்கு வியப் பாயிருந்தது. திரு. ராச்செஸ்டரை அழிக்கச் சதி செய்பவள் எவ்வாறு சூதுவாதற்றவள் போல என்னிடம் அளவளாவ முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.
அவள் என்னிடம் பேசிய பேச்சிலிருந்து திரு. ராச்செஸ்டர் தார்ன்ஹில் இல்லத்தில் இல்லையென்றும், திரும்பிவர இரண்டு மூன்று நாள் செல்லுமென்றும் அறிந்தேன். அவர் சென்ற இடம் மில் கோட்டிலிருந்து பத்துக் கல் தொலைவி லிருந்த திரு. எஃட்டன் இல்லம் ஆகும். அவ்விடத்தில் நடக்கும் விருந்தில் ஸர் ஜார்ஜ்லின், கர்னல் டென்ட் முதலிய பெரு மக்களுடன் இங்கிரம் பெருமகனார் தம் புதல்வி செல்வி பிளான்சி பெருமாட்டியுடன் கலந்து கொள்ளவிருந்தார். செல்வி பிளான்சியுடன் கலந்து பேசுவதற்காகவே திரு. ராச்செஸ்டர் அங்கே செல்வதாகக் கேள்விப்பட்டேன்.
தொடர்ந்து இரண்டு நாட்களாகத் திரு. ராச்செஸ்டர் தார்ன்ஹில் இல்லத்தில் இல்லாததால், அவ்வில்லம் வெற்றில்லமாக எனக்குக் காட்சியளித்தது. அவ்வில்லத்தில் எனக்கு ஏற்பட்டிருந்ததாக நான் கருதிய கவர்ச்சியில் ஒரு பெரும்பகுதி அவரே என்பதை நான் இப்போதுதான் உணரத் தொடங்கினேன். என்னை அறியாமல் என் உள்ளம் அவரை நாடிச் சென்றது காண, எனக்கே என்மீது சீற்றம் தோற்றிற்று. நான் எங்கே? செல்வி பிளான்சி சீமாட்டி எங்கே? அத்தகைய சீமாட்டியை நாடும் ஒருவருடன் நான் நட்புடன் பழகுவது கூடத் தகுதியற்றது என்று என் அறிவு என்னை இடித்துரைத்தது.
நாட்கள் இரண்டு மூன்றல்ல, இரண்டு வாரங்கள் இவ்வாறு சென்றன. நான் என் உள்ளத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர அவ்வாரங்கள் போதியன என்றுதான் தோன்றின. ஆனால், என்னிடம் முன்னுள்ள எழுச்சி இல்லை என்று திருமதி ஃவேர்ஃவக்ஸ் கண்டு கூறியதும், நான் திடுக்கிட்டேன். திரு. ராச்செஸ்டர் திருமணம் செய்து கொண்டால் எனக்கு மீண்டும் நல்ல இடத்தில் வேலை கிடைக்கவேண்டுமே என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறி வெளிக்குச் சமாளித்துக் கொண்டேன்.
ஒரு நாள் வீட்டுத் தலைவரிடமிருந்து கடிதம் வந்தது. மறுநாளே திரு. ராச்செஸ்டர் தம் நண்பர் சிலருடன் வருவதாக அதில் எழுதியிருந்தார். நண்பர்கள் யார் யார் என்று அதில் குறிப்பிடவில்லை. ஆனால் செல்வி பிளான்சி அதில் ஒருத்தியாயிருப்பது உறுதி என்று யாவரும் முடிவு கட்டினர்.
விருந்தினர்க்கான ஏற்பாடுகள் எல்லாம் விரைந்து நடைபெற்றன. விருந்துக் குழுவினர் அனைவரும் குதிரையேறியே வந்தனர். எதிர்பார்த்தபடி திரு. ராச்செஸ்டரும் செல்வி பிளான்சியும் எல்லாருக்கும் முன்னதாகவே வந்திறங்கினார்கள். செல்வி பிளான்சியின் பேரழகைக் கண்டு அடேல் கூடக் குதித்துப் புகழ்பாடத் தொடங்கினாள். திருமதி ஃவேர்ஃவக்ஸ் உட்பட மற்றவர்களோ அழகுத் தெய்வத்தைத் தொலைவி லிருந்து பார்ப்பது போல் பார்த்தார்கள்.
தார்ன்ஹில் இல்லத்தின் எதிர்பாரா விருந்தினரான இந்த அழகுத் தெய்வத்துடன் என்னை நான் சரிநிகராக வைத்துப் பார்த்ததற்காக நான் மிகவும் வெட்கமடைந்தேன். இதுவரை மாலை வேளைகளில் திரு. ராச்செஸ்டருடன் தேநீர் அருந்தச் செல்வது போல இப்போது செல்ல நான் துணிய வில்லை. அடேலை அனுப்பிவிட்டுப் பின் தங்க எண்ணினேன். அடேலுடன் நானும் வரும்படி திருமதி ஃவேஃவக்ஸ் மூலம் உத்தரவு வந்த பின்பும், நான் அங்கே சென்று தொலைவில் இருந்தேனேயன்றி அருகே செல்லவில்லை.
விருந்தின் போது திரு. ராச்செஸ்டரைப் பற்றி எண்ணா திருக்க என்னாலானமட்டும் முயன்றேன். ஆனால் அவர் தொலைவிலிருந்தாலும் என் எண்ணம் முழுவதும் அவர் திசையிலேயே இருந்தது. எப்படியும் அவ்விடத்தில் இருந்து அவர் பற்றிய சிந்தனைகளை வளர்க்காமல் நழுவிப் போய்விட நான் வழி தேடிக் கொண்டிருந்தேன். செல்வி பிளான்சி இசை மேளத்தைக் கையாடிய வண்ணம் திரு. ராச்செஸ்டரைப் பாட அழைத்தபோது அத்தகைய தறுவாய் எனக்குக் கிடைத்தது. ஆனால் என்னால் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் பாடியதை இதுவரை நான் கேட்டது கிடையாது. அதைக் கேட்கும் ஆர்வம் என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், அவர் நெடுநேரம் பாடவில்லை. அதை நிறுத்திவிட்டு அவர் வெளியேறினார். இப்போதாவது சென்று விடலாமென்று கருதி நான் அருகிலிருந்த கதவு வழியாக வெளியேறிக் கூடத்தைக் கடந்தேன்.
திரு. ராச்செஸ்டரைவிட்டுச் செல்லவே நான் வெளி யேறினேன். ஆனால், கூட்டத்தில் அவரே எனக்கெதிராக வந்தார். செல்வி பிளான்சி தோழமை இருக்கும்போது இப்போது அவர் என்னுடன் மிகுதி நேரம்பேசமாட்டார் என்றும், விரைந்து அவளிடமே செல்லத் துடிப்பார் என்றும் நான் எதிர்பார்த்திருந்தேன். அதற்குமாறாக அவர் என்னுடன் ஆர அமர நின்று பேசினார்.
"நீ ஏன் முன்போல என் அறைக்கு இப்போது வருவதில்லை?’ என்று அவர் கேட்டார்.
நான் இதற்கு மறுமொழி கூறவில்லை. அதே கேள்வியை என் மனம் உள்ளூரத் திருப்பிக் கேட்டுக் கொண்டது. “நீ ஏன் தேநீர் அருந்தும் போது கூட விருந்தினர்களுடன் சரிநிகராக வந்து பழகாமலிருக்கிறாய்?” என்று மீண்டும் கேட்டார்.
இதற்கும் என்னால் மறுமொழி கூற முடியவில்லை. ஆனால், அவர் விருந்தினரை உயர்வாகவும் என்னை வேறு வகையாகவும் நினைக்கவில்லை என்பது இப்போது எனக்குத் தெள்ளத் தெளிய விளங்கிற்று. ஆனால், ஒரு விட்டாசிரியைக்கு அவ்வாறு பழகும் உரிமை கிடையாது என்பதை நான் நன்கு அறிவேன்.
என் உள்ளம் திரு. ராச்செஸ்டரிடம் மதிப்பு, நட்பு ஆகிய இரு எல்லைகளையும் தாண்டிவிட்டது. அதை நான் கட்டுப்படுத்தியே வந்தேன். ஆனால், அவர் உள்ளத்தின் நிலையை என் உள்ளத்துடன் இணைத்துப் பார்க்கவும் நான் இதுவரை கனவு காணவில்லை. ஒரு வீட்டாசிரியையிடம் காட்டும் மதிப்பை விட எனக்கு உயர் மதிப்புத் தந்தார் என்று மட்டுமே எண்ணியிருந்தேன். இப்போது அவர் உள்ளமும் அம் மதிப்பெல்லை தாண்டி நட்பெல்லையில் நடமாடுகிறது என்று கண்டேன். இது எனக்கு என் அகத் துன்பத்திடையே பெருத்த ஆறுதல் தந்தது என்பதை என்னால் மறுக்க முடியாது. ஆனாலும் நட்புக் கூட என் உள்ளத்தின் போக்குக்கு மிகவும் இடையூறானது என்று நான் கருதினேன். அவர் நட்பு வலையிலிருந்து கூடியமட்டும் தொலைவில் விலகியிருக்கத் திட்டமிட்டேன்.
“நீ ஏன் முகவாட்டத்துடனிருக்கிறாய்? விருந்தினர் இருக்கும்வரை நான் அவர்களுடனேயே இருக்க வேண்டி யிருக்கிறது. ஆனாலும், எங்களுடன் நீ வந்து கலந்து கொண்டால் நான் உன்னை அவ்வப்போது காண வழியிருக்கும். நீ தங்குதடையில்லாமல் வரவேண்டுமென்று தான் நான் விரும்புகிறேன். உன்னை எதிர்பார்ப்பேன். ஏமாற்றிவிடாதே வருகிறேன்.” என்று கூறி அவர் ஏதோ அவசர வேலையை எண்ணிப் போய்விட்டார்.
நட்பு வலையிலிருந்து விலக நான் இட்ட திட்டம் இங்ஙனம் விரைவில் சாய்ந்தது. அவர் நட்புத் தாண்டி என்னிடம் பற்றுக் கொண்டு விட்டார் என்பது இப்போது தெரியவந்தது. செல்வி பிளான்சியை உள்ளடக்கி விருந்தினர் அனைவருடனும் அவர் வேண்டா வெறுப்பாகத்தான் கலந்து கொள்வதாகக் கூறிவிட்டார். ஆகவே, செல்வி பிளான்சியிடம் அவருக்குப் பாசம் இல்லை. ஆயினும் விருந்தினருக்காக இவ்வளவு பரிபவர், அவள் உயர் நிலையையும் பணத்தையும் எண்ணி அவளை மணக்க உடன்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று.
என் ஐயங்களையெல்லாம் அகற்றி என்னை அவருடன் பிணைக்கத்தக்க வகையில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது.
மற்றொரு தாக்குதல்
ஒரு நாள் திரு. ராச்செஸ்டர் வெளியே போயிருந்தார். அப்போது யாரோ ஒருவர் அவரை நாடி வந்தார். நான் அவரை ஓர் அறையில் காத்திருக்க வைத்துவிட்டுத் திரு. ராச்செஸ்டர் வந்ததும் செய்தி தெரிவித்தேன்.
“அவர் யாரென்று கேட்டாயா? எங்கிருந்து வந்தாராம்?” என்று அவர் கேட்டார்.
“திரு. மேஸன் என்று பெயர் கூறியதாக நினைவு, ஜமைக்காத் தீவிலுள்ள ஸ்பானிஷ் நகரிலிருந்து வந்திருக்கிறாராம்!” என்றேன்.
நான் இதைக் கூறியவுடன் அவர் முகம் சுண்டிற்று. “ஆ! மேஸனா, மேலை இந்தியத் தீவிலிருந்தா?” என்று கூறி என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார். அத்துடன் “ஜேன்! இப்போது ஒரு பேரிடரில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது?” என்று அங்கலாய்த்தார்.
அவர் கையில்தான் இன்னும் என் கை இருந்தது. அவர் என்னை என் தனிப்பெயரால் ‘ஜேன்’ என்று அழைத்தார். அதையும் நான் கவனிக்கவில்லை. கவனித்தாலும் அதில் எனக்கு என்ன உணர்ச்சி வந்திருக்குமென்று என்னால் கூறமுடியாது. அப்போதிருந்த என் மனநிலை முற்றும் அவர் கவலையைக் கண்டு கவலை கொண்டு அதில் பங்கு கொள்வதாக மட்டுமே, அவருக்கு ஆறுதல் தரத் துடிப்பதாக மட்டுமே இருந்தது.
’நான் இதில் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?" என்று நான் கேட்டேன்! அன்புடன் ஆதரவுடனும், அவர் என்னைப் பிடித்து இழுத்துத் தம்மருகில் இருத்திக் கொண்டு, “எனக்கு உதவி வேண்டும் போது, நான் உன்னிடம் கட்டாயம் கோருகிறேன். உண்மையைக் கூறுகிறேன். ஜேன், நீ இப்படிக் கேட்டதே என் கவலையில் பாதியைப் போக்கிவிட்டது, இந்தத் தொல்லை பிடித்த வாழ்வில் இருப்பதைவிட, அன்பு உள்ளம் படைத்த உன்னுடன், ஏதேனும் ஒதுங்கிய தீவில், ஒரு நாட்டுப் புறத்தில் ஒரு மூலையில் இருந்தால் எவ்வளவு நலமாயி ருந்திருக்கும்,” என்றார்.
அவர் பேச்சினாலும் தோற்றத்தினாலும் செயலினாலும் என் வகையில் அவர் உணர்ச்சிகள் எவ்வாறிருந்தன என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனால், அதே சமயம் என் மனமும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்ததால், அவர் போக்கைத் தடுக்கவோ, ஏற்கவோ செய்யாமல் வாளா இருந்தேன். அத்துடன் அவரைப் பிடித்த கவலையை எப்படி அகற்றுவது என்பதைத் தவிர வேறு எந்த எண்ணத்துக்கும் என் உள்ளத்தில் இடமில்லாதிருந்தது. அமைதியான நேரமாயிருந்தால், இன் னொரு பெண்ணை மணக்க இருக்கும் ஒருவர் என்னிடம் இப்படி நடந்து கொள்ள விட்டிருக்கமாட்டேன்.
“தீவில் இருக்கும் கனவு இருக்கட்டும். இப்போது கனவு காணும் நேரமில்லை. நனவிலேயே விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். நான் எப்போதும் உங்களுக்கு உதவ ஒருக்கமாக இருப்பேன்.” என்று கூறி நான் என் அறைக்குச் சென்றேன்.
நான் மீண்டும் அவரை அன்று காண நேரவில்லை. ஆனால் நள்ளிரவில் நன்கு ஒரு கூக்குரல் கேட்டு எழுந்தேன். எனக்கு நேரே இருந்த அறையிலிருந்து, “ஐயோ கொலை, கொலை! வாருங்கள் வாருங்கள்,” என்று ஒரு குரல் கேட்டது. அது திரு. ராச்செஸ்டர் குரலன்று. மேலும் அது ராச் செஸ்டரையே பெயர் கூறி உதவிக்கழைத்தது.
நான் பரப்பரப்புடன் ஆடையுடுத்தி வெளியே வந்தேன். நான் கேட்ட குரலை எத்தனையோ பேர் கேட்டிருக்க வேண்டும். பல கதவுகள் திறந்தன. மனிதர் அங்கும் இங்கும் ஓடினர்; கேள்விகள் எங்கும் பரந்தன. “என்ன அது?” -தீயா பற்றி விட்டது? - கொலை, யார் யாரை?" ஆனால், மறுமொழி கூறுவார் இல்லை. யாரோ ஒருவர் குரல், “ராச்செஸ்டர் எங்கே?” என்று கேட்டது. எதிர்ப்புறமிருந்து “இதோ” என்ற குரலுடன் திரு. ராச்செஸ்டர் எங்களை அணுகினார்.
“என்ன செய்தி? என்ன நடந்தது” என்றனர், பலர்.
“ஒன்றுமில்லை. சந்தடிதான் பெரிதாயிற்று. நான் வெட்கப்படுகிறேன். ஒரு வேலைக்காரி கெட்ட கனாக் கண்டு அலறியிருக்கிறாள். அவள் நோய்ப்பட்டவள். இன்னும் அமைதியடையவில்லை; அருள் கூர்ந்து எல்லாரும் கலைந்து செல்லும்படி வேண்டிக் கொள்கிறேன். ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும்.” என்றார் அவர்.
இன்னல் ஏதுமில்லை என்று கண்டதே எல்லாரும் வந்த வழியே கலைந்து சென்றார்கள். நானும் என் அறை சென்று ஓய்வுற்றேன். ஆனால், சற்று நேரத்துக்குள் தெரிந்தவர் தட்டுவது போலக் கதவு மெல்லத் தட்டப்பட்டது.
“திரு.ராச்செஸ்டர் தானே!” என்றேன்.
“ஆம், படுக்கையைவிட்டு எழுந்துதானே இருக்கிறாய்?”
“ஆம்.”
“சரி. சந்தடி செய்யாமல் என் பின்னே வா!”
மேல்மாடியேறி அதன் கோடிவரை அவர் என்னை இட்டுக்கொண்டு சென்றார். வழியில், “குருதி கண்டு நீ கலங்கமாட்டாயே!” என்று கேட்டார். “கலங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், உண்மையில் இதுவரை அத்தகைய காட்சியைப் பார்க்க நேர்ந்ததில்லை. ஏன்?” என்றேன்.
“பின்னால் தெரியும். இன்று உன் மன உரத்தையே நான் நம்பி வேலைசெய்ய வேண்டியிருக்கிறது,” என்றார்.
அவர் சந்தடி செய்யாமல் ஓர் அறைக்கதவைத் திறந்தார் அதுமுன் கிரேஸ்பூலை நான் கண்ட அறைக்கு அடுத்த அறையே. அறைக்குள் திரு. மேஸனைக் கண்டேன. அவர் படுக்கையில் கிடந்தார். அவர் கைகளிலும், முகத்திலும் குருதி சேர்ந்த கட்டுக்கள் இருந்தன.
நான் திடுக்கிட்டேன். திரு. ராச்செஸ்டர் வாயைப் பொத்தி எச்சரிக்கை செய்ததுடன் என்னைத் தனியாய் அழைத்து, “அவரிடம் எதுவும் பேசக் கூடாது. அவரையும் பேச விடக்கூடாது. நான் மருத்துவரை அழைத்து வரும்வரை நீ இந்த அறையில் அவருடன் அடைபட்டுக் கிடக்க வேண்டும்” என்றார்.
அவர் கலவரமே எனக்கு நெஞ்சுரம் தந்தது. நான் ‘சரி’ என்று தலையாட்டினேன்.
அவர் என்னை உள்ளேவிட்டு அறையை வெளியேயிருந்து பூட்டிக் கொண்டு சென்றார்.
ராச்செஸ்டர் நாட்கணக்கில் திரும்பிவராதது போல் எனக்குத் தோன்றிற்று. ஆனால், உண்மையில் அவர் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே வந்துவிட்டார். அந்த அறைக்கும் கிரேஸ்பூலின் அறைக்கும் இடையே ஒரு சிறு கதவு இருந்தது. அதன் பின்புற மிருந்து கட்டுண்ட புலிபோல யாரோ நடக்கும் அரவம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்துடன் அவ்வப் போது நான் முன்பு கேட்டிருந்த அதே பேய்ச் சிரிப்பும் செவிப்புலனுக்கு எட்டிற்று. ‘கிரேஸ்பூல்தான் மற்றொருமுறை ராச்செஸ்டரைத் தாக்க எண்ணி ஆளடையாளம் தவறித் திரு. மேஸனைத் தாக்கி இருக்க வேண்டும்’ என்று எண்ணினேன்.
திரு. ராச்செஸ்டர் வந்ததும் நான் அகலநின்றேன். மருத்துவர் காயங்களுக்கு மருந்திட்டு, உடல் தெம்புவர ஒன்றிரண்டு ஊசிகள் இட்டார். திரு. மேஸன் எழுந்திருந்தாலும் தன் உயிருக்கு மிகவும் அஞ்சியதாகத் தோன்றிற்று, ’நான் பிழைக்கப் போகிறேனா?" என்று கேட்டார். மருத்துவர். “அது பற்றி அச்சமில்லை. ஆனால் காயம் ஆற நாட்செல்லும். கையில் கத்தியின் வெட்டு அல்லாமல், சிதைவு வேறும் ஏற்பட்டிருக்கிறது.” என்றார்.
நான் ஒரு குத்துக்குமேல் குத்துவிடாமல் “கையைப் பிடித்துக் கொண்டபோது, அவள் அதே காயத்தின் மீது வன்மையாகக் கடித்துவிட்டாள். பல்லின் நச்சுத்திறம் என்ன செய்யுமோ என்று அஞ்சுகிறேன்.” என்றார் திரு. மேஸன்.
“இனி அச்சமில்லை. மருந்து அதைத் தடுத்துவிடும். நீங்கள் நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றர் மருத்துவர்.
திரு. ராச்செஸ்டர் திரு. மேஸனை வண்டியிலேற்றி, “நீர் அமெரிக்கா சென்று இதையெல்லாம் விரைவில் மறந்துவிடுவீர்; இப்போதே கப்பலுக்கு நேரமாகிவிட்டது. போய் வாருங்கள்,” என்று அனுப்பினார். அவருடன் சென்ற நண்பர் காட்டரிடமும் அவரை நன்கு கவனித்துக் கப்பலேற்றும்படி கூறினார்.
திரு.மேஸன் போய்ச் சில நாட்களுக்குள் எப்படியோ ராச்செஸ்டர் உள்ளத்தில் நானும், என் உள்ளத்தில் ராச்செஸ்டரும் நீக்கமற நிறைந்து இடம் பெற்று விட்டோம்.
“இந்த இருளடர்ந்த வீட்டில் அடைபட்டுக் கிடப்பானேன்? சிறிதுநேரம் தோட்டத்தில் சென்று இருந்து வரலாம் வா” என்று அவர் ஒருநாள் அழைத்தார்.
"இதை ஏன் இருளடைந்த வீடு என்கிறீர்கள்? இஃது அழகான இடமகன்ற மாளிகையாயிற்றே, என்றேன்.
அவர், “நீ இதன் வெளிப்புறத்தையே காண்கிறாய். அது என் வாழ்வை எவ்வளவு கருக்கிற்று என்பதை நீ அறியமாட்டாய். உண்மையில் அன்று என் படுக்கையில் எழுந்த தீ இந்த வீட்டைச் சாம்பலாக்கியிருக்கக் கூடுமானால்கூட, நான் வருத்தப்பட்டி ருக்கமாட்டேன்” என்றார்.
இருவரும் தோட்டத்தின் பக்கமாகப் பேசிக் கொண்டே சென்றோம்.
அவர் கிரேஸ்பூலின் தொல்லைகளை எண்ணியே வீட்டை வெறுக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. “கிரேஸ்பூலை இன்னும் வீட்டில் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். அனுப்பிவிட்டுத் தொல்லையில்லாமல் இருப்பது தானே?” என்றேன்.
“கிரேஸ்பூலை அனுப்புவதனால் வெளித்தொல்லை தான் தீரும். தொல்லை இங்கே என் நெஞ்சில் இருக்கிறது.” என்றார் அவர்.
அவருக்குச் செல்வி இங்கிரம் மீது காதல் இல்லை என்பதை நான் சில நாளாக அறிந்து கொண்டிருந்தேன். தம் குடும்ப மதிப்பை உயர்த்திக் கொள்ளவே அவளை மணம் செய்து கொள்வதாக அவர் எண்ணியிருக்க வேண்டும். எனவே ‘நெஞ்சில் தொல்லை’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் மனம் இதற்குள் அவரிடம் முழுதும் ஈடுபட்டுவிட்டதானாலும், அவர் எந்த அளவு என்னை நாடினார் என்பதனை நான் அறிய முடிய வில்லை. எப்படியும் செல்வி இங்கிராமின் திருமணத்தைத் தடுக்குமளவு அவர் உள்ளம் என்னிட பற்றுக் கொண்டிருக்க முடியாது! ஆகவே, அவருடன் வீணாகப் பழகித் தன் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று என் அறிவு கூறிற்று. ஆனால், நெஞ்சோ தொலைவிலிருந்து அவரைக் காணும் இந்த வாய்ப்பையாவது உதறாதிருக்கத்தான் தூண்டிற்று.
தோட்டத்தில் அவர் அன்று ஏதேதோ சொன்னார்; அதில் பெரும்பகுதி அவர் முதிரா இளமைப் பருவத் தவறுகளைப் பற்றியது. வெளிநாட்டிலிருக்கும்போது அவர் செய்த தவறுகள் அவரை விடாமல் பற்றித் துன்புறுத்தின புதிதாக வாழத் தொடங்குவதற்கு இவை தடையாயிருந்தன. ஒன்று அவர் அந்த வாழ்வுக்கு அடிமைப்பட வேண்டும்; அல்லது துணிந்து அதை உதறித்தள்ளி நெஞ்சுக்குகந்த வாழ்வில் இறங்கிப் பழம் பிழைகளை மறக்கடிக்க வேண்டும். இதில் எது செய்வது என்பதுபற்றி அவர் என் அறிவுரையைக் கேட்டார்..
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் கூறவும் முடியவில்லை. அவர் மீண்டும் வற்புறுத்தி என் கருத்துரை கோரினார். நான், “ஐயா! என்னைவிட அனுபவமிக்க தாங்கள் அறியாதபோது, நான் என்ன கூறமுடியும்? ஆனால் எல்லாம் அறிந்த ஒருவர் இருக்கிறார்; அவரிடம் உங்கள் வாழ்வை ஒப்படையுங்கள். அவர் வழிகாட்டுவார்,” என்று மேலே சுட்டிக் காட்டினேன்.
“ஆம், ஆனால் அவர்தாம் உன்னை அனுப்பியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார். என் கைகளை அவர் பற்றி ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அழுத்தினார். ஏதோ, என்னவோ என்று பீதியில் நான் சட்டென எழுந்து சென்றேன். தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தபோது அவர் என்னையே நோக்கி நின்றார்.
திருமதி ரீடின் முடிவு
கேட்ஸ்ஹெட்டிலிருந்து இப்போது எனக்குக் கடிதம் வந்தது. அத்தை திருமதி ரீட் அதை எழுதியிருந்தாள். “என் உடல்நிலை முற்றிலும் தளர்ந்து விட்டது. நீண்ட நாளாய் நான் பாயும் படுக்கையுமாக இருந்து இப்போது சாவின் வாயிலை அணுகிவிட்டேன். இறக்குமுன் உன்னிடம் தனித்துச் சில முக்கியமான செய்திகள் கூற விரும்புகிறேன். ஆகவே ஒரு தடவை வந்து போகும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவள் எழுதியிருந்தாள்.
நான் ஒருவாரம் போய் வரலாமென்று திரு. ராச்செஸ்டர் இணக்கம் அளித்தார். அத்துடன் நான் துணையாக யாரைக் கூட்டிக்செல்ல விரும்புகிறேன் என்றும் கேட்டார்.
“என் அத்தை தன் பணியாளை அனுப்பியிருக்கிறார்கள்,” என்றேன்.
’சரி, செலவுக்குப் பணம் வேண்டுமே. நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?"
“ஐந்து பென்னிகள்,” என்று எடுத்துக் காட்டினேன். அவர் ஒரு நாணயச்சீட்டை (நோட்டை) என்னிடம் நீட்டினார். அஃது ஐம்பதுபொன் சீட்டு. அவர் என் கணக்கில் தர வேண்டியது பதினைந்து பொன் தான்.
“என்னிடம் சில்லறை இல்லையே!” என்றேன் நான்.
“அப்படியா, அதுவும் சரிதான். உன்னிடம் முழுத் தொகையும் கொடுப்பதும் தப்புத்தான். ஐம்பது பொன்னைச் செலவு செய்து கொண்டு நீ மூன்று மாதம் இருந்தாலும், இருந்துவிடுவாய்! ஆகவே பத்து எடுத்துச் செல்.”
“சரி, அப்படியானால் நீங்கள் இன்னும் எனக்கு ஐம்பது பொன் தரவேண்டும்!”
“அதைத் திரும்பி வந்தால்தான் பெறலாம். அஃது என்னிடமே இருக்கட்டும்!”
அவர் போக இருந்தார். நான் திரும்பவும் அழைத்து “எனக்கு இன்னும் ஒரு செய்தி பேச வேண்டியிருக்கிறது,” என்றேன்.
“அவ்வளவு முக்கியமா? அது என்ன?”
“நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்!”
“ஆம். அதனாலென்ன!”
“அடேல் இனிப் பள்ளிக்கூடம் செல்லவேண்டி வரலாம். ஆகவே, நான் வேறு எங்காவது வேலை பார்க்கவேண்டும்.”
ஒரு சில நொடிகள் அவர் என்னை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “உன் வேலை வகையில் நீ முயற்சி எதுவும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அந்தப் பொறுப்பு முழுவதையும் என்னிடமே விட்டு விடும்படி கோருகிறேன்.”
‘அப்படியானால் மகிழ்ச்சியே!’
“நீ நாளையா புறப்படுகிறாய்?”
‘ஆம்’
‘சரி, போய்வா, பார்ப்போம்!’
திரு. ராச்செஸ்டரின் இளமைக் காலத்தின் முற்பகுதி பல இன்னல்களுக்கு இடமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை நான் எண்ணிக் கொண்டே சென்றேன். ஆனால், கேட்ஸ் ஹெட்டை அணுகுந் தோறும் என் இளமையின் முற்பகுதியும் அதைவிட உயர்ந்ததன்று என்பது நினைவுக்கு வந்தது.
ராச்செஸ்டர் வீட்டு வாழ்வில் அன்பு இல்லை. கேட்ஸ் ஹெட்டில் என் தொடக்க வாழ்வில் அதன் நிழல் கூடக் கிடையாது. அந்த அளவு இரண்டிலும் ஒற்றுமையே.
அவர் தாம் வாழ்வை விட்டு ஓடமுடியவில்லை என்கிறார்! நான் ஓடிவந்து விட்டேன். இதுதான் இரண்டினிடையிலும் உள்ள வேற்றுமை.
என் உள்ளம் இவ்வாறு ராச்செஸ்டர் வாழ்வையும், என் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கோட்டைகள் கட்டிற்று.
என் அத்தை உண்மையிலேயே சாவுடன் போராடிக் கொண்டுதான் இருந்தாள். அழைப்பு அனுப்பும் போதிருந்ததை விட நிலைமை மோசமாகி விட்டதால், அவள் என்னை அடையாளங் காணவே இல்லை. என்னை ஆதரித்துக் கல்வி புகட்டிய பணிமாது பெஸ்ஸிதான் என்னை வரவேற்றுப் பழைய நாட் கதைகள் கூறிப் பொழுது போக்கினாள். ஆனால், ஒன்றிரண்டு நாட்களில் திருமதி ரீடின் பார்வையில் சிறிது தெளிவு கண்டது. ஒருநாள் அவள் என்னை உற்று நோக்கினாள். “ஜேன் அயர்தானே!” என்றாள் மெதுவாக.
“ஆம். நீங்கள் அழைத்தபடி வந்திருக்கிறேன்,” என்றேன்.
அவள் நோயுற்ற கண்கள் மிரண்டு மிரண்டு சுற்று முற்றும் பார்த்தன. “அறையில் செவிலியோ வேறு யாருமோ இல்லையே!” என்றாள்.
இல்லை. நாம் இருவருமே இருக்கிறோம்." என்றேன்.
“உன்னைக் கண்டு பேசுவதற்காகத்தான் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நான் உனக்கு இரண்டு தடவை எவரும் மன்னிக்கமுடியாத தீங்கு செய்து விட்டேன். இறக்கும் இத்தறுவாயில் மன்னிப்புப் பெற்றாலல்லாமல் என் ஆவி அமைதியுடன் பிரியாது. ஆகவேதான் அவசர அவசரமாக உனக்கு அழைப்பு விடுத்தேன். தீங்குகளைச் சொன்னால் நீ மன்னிப்பது அருமை. ஆனாலும் நான் சொன்னால்தான் என் மனம் ஆறும். முதல் தீங்கு உன்னை மனமார ஆதரிப்பதாக என் கணவனுக்கு நான் அளித்த உறுதியை நான் ஒரு சிறிதும் பின்பற்றாததே. இதுவே பெருங்கொடுமை என்று இப்போது எனக்குத் தெரிகிறது. ஆனால் இரண்டாவது செய்த தீங்கு அதை ஒரு மின்மினியாக்க வல்லது. அதை…. அதை… அந்தோ; அதை என்னால் சொல்லக்கூட முடியவில்லை…. ஆனால் அதோ என் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார். அஃது உன் பெரிய தந்தை - என் அண்ணன் எழுதியது. அதை வாசித்துப் பார் எல்லாம் தெரியும்.” என்றாள்.
அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. சிறிது சாய்ந்து படுத்தாள். நான் சென்று கடிதத்தைப் படித்தேன். அது வருமாறு:
என் தம்பி மகள் ஜேன் அயர் இருக்குமிடமும் முகவரியும் அறிந்து எனக்குக் கூறும்படி வேண்டுகிறேன். அவளை நான் என்னிடம் அழைத்து மடீராவில் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு உடல் தளர்ந்து விட்டது. குழந்தையுமில்லை. ஆகவே நான் அவளுக்கு என் செல்வம் முழுவதையும் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்.
தங்கள் அன்புள்ள
ஜேம்ஸ் அயர்
கடிதத்தின் தேதியிலிருந்து அது மூன்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்டதாகத் தெரிந்தது.
“இதை இதற்குமுன் என்னிடம் ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டேன்.
“உன்னை நான் வேம்பாக வெறுத்ததனால் லோவுட்டுக்கு உன்னை அனுப்பினேன். அங்கிருந்து உயர்நிலைக்கு நீ சென்று வாழ நான் விரும்பவில்லை. அத்துடன், போகும்போது… நீ என்னை வெறுத்துப் பேசியதையும் என்னால் மறக்க முடியவில்லை.”
“நான் செய்தது தவறு என்று இப்போது உணர்கிறேன். ஆனால் அன்று மனமாரத்தான் செய்தேன். இப்போது உன்னிடம் மன்னிப்புப் பெறுவது முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடிய வில்லை,” என்றாள் திருமதி ரீட்.
என்னை அவள் வெறுத்தது மன்னிக்கமுடியாத தவறு என்பதை நான் உணர்வேன். உதவியற்ற நிலையில் அவள் என்னிடம் கொடுமை காட்டினாள். ஆனால் இன்று அவள் உதவியற்ற நிலையில்தான் இருக்கிறாள். அவளிடம் கடுமை காட்ட என்மனம் விரும்பவில்லை. ஆகவே, “உங்களை அன்று வெறுத்தேன். இன்று வெறுக்கக் காரணமில்லை. நீங்கள் இன்று என்னை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, என்னளவில் நான் உங்களை மனமார மன்னிக்கத் தடையில்லை. இனி, கடவுளிடம் மன்னிப்புக் கோருங்கள். அவரும் உங்களை மன்னிக்கும்படி நான் பணிவுடன் வேண்டுகிறேன்.” என்றேன்.
அவள் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் வருத்தத்தின் நிழலுருவுடன் போராடின. இறப்பவர் நல்லெண்ணத்தின் எழிலொளி நெற்றியில் படர்ந்தது. அவள் அமைதியுடன் கண்மூடினாள்.
திருமண ஏற்பாடுகளும் பேச்சும்
நான் கேட்ஸ்ஹெட்டில் எப்படியோ இன்று, நாளை, இவ்வாரம், அடுத்த வாரம் என்று ஒரு மாதம் தங்க வேண்டியதாயிற்று. அதற்கிடையே எனக்குத் திருமதி ஃவேர் ஃவக்ஸிடமிருந்து கடிதம் வந்தது. அதில் திரு. ராச்செஸ்டர் லண்டன் சென்றிருப்பதாகவும், அவர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஒட்டியே போயிருப்பதாகவும் எழுதியி ருந்தாள். செல்வி பிளான்சியை அவர் திருமணம் செய்ய விரும்புவதாக முன்பே என்னிடம் கூறியிருந்ததால், பெண் யார் என்று அவளும் எனக்கு எழுதவில்லை. நானும் வேறு எண்ணத்தக்க தனிக்காரணம் இல்லாததால் அவ்வாறே நினைத்தேன். என் மனத்தில் அவரைப் பற்றிக் கொண்ட பாசமும் அவர் மீது சினத்தையும் என்மீது வெறுப்பையும் தூண்டின. ஆனால், இந்நிலை நீடித்திருக்கவில்லை. அவர் திருமணம் செய்தால் நான் தார்ன்ஹில்லை விட்டுச் செல்ல வேண்டுமே என்ற கவலைதான் எனக்கு இருந்தது.
ஒரு மாதத்துக்குப் பின் நான் தார்ன்ஹில்லுக்குச் சென்றபோதும், ஒரு சிலநாள் தங்குவதற்குச் செல்வதாகத்தான் சென்றேன். ஆனால், என்னைக் கண்டதும் அடேல் குதித்த குதி அவளுக்கு என்னிடமிருந்த அளவுகடந்த விருப்பத்தைத் தெள்ளத் தெளியக் காட்டிற்று. தார்ன்ஹில்லில் வேலைக்காரர் எவரும் என்னை ஓர் அயலாளாகக் கருதவில்லை என்பதை அவர்கள் என்னை வரவேற்கும் ஆர்வத்தில் கண்டேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் சுருக்கு விழுந்த முகம் கூடப் புன்முறுவலால் மலர்ந்தது. இத்தனை அன்பும் ஆர்வமும் கலந்த ஓர் இல்லத்தி லிருந்து திரு. ராச்செஸ்டரின் திருமணம் என்னைப் பிரிக்கிறதே என்று நான் அடிக்கடி எண்ணினேன்.
நான் சென்ற ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திரும்பி வந்தார். ஆனால், திருமணத்தின் பேச்சையே அவர் எடுக்கவில்லை. செல்வி பிளான்சியைப் பார்க்க அவர் இங்கிரம் பெருமகனார் இல்லத்துக்கே செல்லவில்லை. யாருக்கும் எதுவும் தெளிவாகப் புரியவில்லை. பெண்ணை வரவேற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா? என்று திருமதி ஃவேர்ஃவக்ஸ் கேட்டபோது, அவர் சிரித்தாரே தவிர, வேறு விளக்கமான விடை எதுவும் பகரவில்லை.
ஒருநாள் கோடை வெப்பம் தாங்காத வேளையில் மாலையில் நான் தோட்டத்தில் சென்று உலவினேன். முன்னிரவிலும் வெப்பம் தணியாததால், தோட்டத்திலேயே இருந்தேன். அச்சமயம் வேறு யாரோ அதே தோட்டத்தில் இருப்பது தெரிந்து எழுந்து சென்றேன். இருந்தது திரு. ராச்செஸ்டர் என்பதைக் கண்டபின்னும், அவருடன் அங்கே அவ்வேளையில் இருக்க விரும்பாமல் விரைந்தேன். ஆனால், அவர் என் எதிரே வந்து, “இது வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நேரமல்லவே; சிறிது நேரம் கழித்துப் போகலாம்,” என்றார்.
நான் இருக்க விரும்பாவிட்டாலும் அவரைத் தட்டிப் போகவும் துணியாமல் தயங்கினேன்.
அதற்குள் அவர் என்னைப் பேச்சில் இழுத்து என்னை யறியாமலே உட்கார்ந்து உரையாடும்படி செய்துவிட்டார்.
“ஜேன்! உனக்குத் தார்ன்ஹில்ஃவீல்டு இல்லத்தின் வாழ்வு பிடித்திருக்கிறதா?” என்று அவர் தொடங்கினார்.
“ஆம்!”
“அடேல், பணியாட்கள், திருமதி ஃவேர்ஃவக்ஸ் யாவருமே?”
“ஆம், யாவருமே பிடித்திருக்கிறது.”
“இவ்வளவையும் விட்டுப் பிரிவதென்றால் உனக்கு எப்படியிருக்கும்?”
“பிரிய எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை.”
“ஆயினும் பிரியச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.”
“திருமணத்தையும் பிரிந்து செல்லுவதையும் மறந்து சில நாளாகிவிட்டது. அதைக் கேட்பது காதுக்கு நாராசமாயிருக்கிறது. இவ்வளவு கரிசனமாக இதுவரை பேச்சுக் கொடுத்துப் பீடிகை போட்டது இதற்குத்தானா!” என்று எனக்கு எரிச்சலாயிருந்தது.
“சமயம் வந்ததும் எந்தநேரத்திலும் போகச் சித்தமாயிருக் கிறேன் நான்.”
“சமயம் வருகிறதென்ன? இன்றே வந்துவிட்டது.”
எனக்குப் பின்னும் தூக்கி வாரிப்போட்டது. “அப்படி யானால் திருமணம் உறுதியாகிவிட்டதா?” என்றேன்.
“ஆம், எனக்குத் திருமணமானவுடன் நீ போய் விட வேண்டுமென்று நீ தானே சொன்னாய். ஆனால் எங்கே போவது என்று உறுதி செய்யும் பொறுப்பை என்னிடம் விட்டிருக்கிறாய்.”
“ஆம்; ஆனால் பெண் யார்? திருமணம் எப்போது?”
“திருமணம் விரைவில் வந்துவிடும். பெண் யாராயி ருந்தாலென்ன? செல்வி பிளான்சி இங்கிரமைப் போன்ற ஒருத்தி என்று வைத்துக் கொள்ளேன்!”
“எனக்கு எங்கே இடம் பார்த்திருக்கிறீர்கள்?”
“மேற்கு அயர்லாந்தில்,”
“அவ்வளவு தொலைவா?”
“ஆம்.”
“தார்ன் ஃவீல்டு இல்லத்தை விட்டுப் போனாலும் அருகிலேயே இடம் பார்த்து இருக்கலாம் என்று நினைத்தேன்.”
ஏன் அயர்லாந்துக் கடல் கடந்தவுடன் இந்த எண்ண மெல்லாம் போய்விடும். தார்ஃவீல்டையும் மறந்து விடுவாய், என்னையும் மறந்துவிடுவாய்."
அவர் என்னைப் பேச்சுப் பொறியில் சிக்கவைத்து விட்டார். நான் என்னையும் என் நிலையையும் மறந்தேன். “என் உள்ளத்தை நீங்கள் அறியப் போவதில்லை. நான் தங்களை ஒருநாளும் மறக்க முடியாது. நீங்கள்தாம் மறந்து திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்.”
வாசகம் என் வாயிலிருந்து நழுவிய பின்தான் என் தவற்றை உணர்ந்தேன்; விரலைக் கடித்துக் கொண்டேன்.
“அப்படியானால் என்னை விட்டு ஏன் போக வேண்டும்? இங்கேயே ஏன் இருக்கக்கூடாது?”
“உங்கள் மனைவி உங்கள் வீட்டுக்கு வருவாள். அடேலைப் பள்ளிக்கு அனுப்பிவிடவே அவள் விரும்பக்கூடும்.”
’நான் அனுப்பாது வைத்துக் கொள்கிறேன்."
“அப்போதும் என்னால் இருக்க முடியாது. என் மனநிலை இடங்கொடாது,” என்றேன்.
நான் மீண்டும் விரலைக் கடித்துக் கொண்டேன்.
“என்னையே திருமணம் செய்துகொண்டு நீ என் மனைவியானால்!”
நான் திடுகிட்டேன்; நான் விரும்பிய விருப்பம் ஈடேறு மென்பதை நான் என்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போதும் அவர் என்னிடம் துணிச்சலான கேலிப்பேச்சுப் பேசுவதாகவே எண்ணினேன்.
அவர் என் குறிப்பை அறிந்திருக்க வேண்டும். என் முன் மண்டியிட்டு நின்று, “ஜேன்! நான் விளையாட்டுக்காகப் பேசவில்லை. மனமார உன்னைக் காதலிக்கிறேன். உன்னை மணம் செய்து கொள்ளும் தகுதியும் வாய்ப்பும் எனக்கு இருந்தி ருந்தால், முன்பே வேறுவகையில் நடந்திருப்பேன். நம்மிடை யேயுள்ள வேலியைத் தாண்டுமுன், நீ தாண்ட விரும்புகிறாயா என்று அறியவே இவ்வளவு தகிடு தத்தம் செய்ய வேண்டிய தாயிற்று. இப்போது கேட்கிறேன். நீ என்னை மணந்து என் மனைவியாய் இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
என்னால் இதை நம்புவதும் கடினமாயிருந்தது. ஏற்கத் துணிவது அதினினும் அரிதாகியிருந்தது. நான் பேசாது நின்றேன்.
அவர் மீண்டும் மீண்டும் பலவகையில் மன்றாடி என்னை வேண்டினார்: “ஆம்” என்று ஒருசொல் சொல்லின் என் வாழ்வின் போக்கில் பாலூற்று - இல்லை, தலையசைத்தாவது என் உள்ளத்தின் புயலைத் தென்றலாக்கு," என்றார்.
என் தலை சுழன்றது. நான் சாய்ந்தேன். அவர் என்னைத் தாங்கினார். என் தலை அவர் தோள்மீது கிடந்தது. ’என்னால் நம்ப முடியுமானால், உங்கள், உணர்ச்சி நிலையானதானால்……" என்றேன்.
அவர் என்னை இறுகத் தழுவி முத்தமிட்டார். அந்த இன்பத்தில் நான் என் ஐயங்களெல்லாவற்றையும் மறந்தேன். “என்னால் நம்ப முடியுமானால், உங்கள் உணர்ச்சி நிலை யான தானால் என்னைவிட இன்பமுடைய பெண் உலகில் இருக்க மாட்டாள்,” என்று என் வாசகத்தை தழுதழுத்துக் கூறி முடித்தேன்.
மணவினையிடையே முறிவினை
எங்கள் மன இசைவை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமென்று ராச்செஸ்டர் விரும்பினார். நானும் அதற் கேற்ப வழக்கம் போல் அடேலுக்குக் கற்றுக் கொடுப்பதை நிறுத்தவில்லை. நாங்கள் இருவரும் முன்போல மாலை நேரத்தில் தேநீர் வேளையில் தான் சந்தித்தோம். ஆனால், இப்போது சந்திப்பு ஒரு நாள் கூடத் தவறுவதில்லை. அத்துடன் சில சமயம் தோட்டத்தில் சிறிதுபோது கண்டு அளவளாவிப் பேசி இருப்போம். மாறிய இச் சூழ்நிலையை எவரும் உய்த்துணர்ந்து கொள்ளாதது வியப்பே. ஆனால், நாங்கள் இருவரும் அதை எவரிடமும் கூறவில்லை. நான் மட்டும் மடீராவிலுள்ள என் பெரியப்பாவுக்கு இதுபற்றிக் கடிதம் எழுதியிருந்தேன்.
திருமணத்துக்குக் குறித்தநாள் அணுகிற்று. இன்னும் பெண்ணை யாரும் பார்க்கச் செல்லவுமில்லை. பெண் வர வுமில்லையே என்று எல்லாரும் கவலைப்பட்டனர். அவர்களிடம் இறுதிவரை மறைத்து வைத்து வேடிக்கை காட்ட அவர் எண்ணியிருந்ததால் நானும் எவ்வளவு சொல்ல விரும்பிய போதும் சொல்லாமல் அடக்கி வைத்தேன்.
மணப் பெண்ணுக்குரிய பொருள்களெல்லாம் பெட்டி களில் வைத்துப் பூட்டி அரக்கிடப்பட்டன. அவற்றின் மீது ராச்செஸ்டரே தம் கைப்பட ’திருமதி ராச்செஸ்டருக்கு, பொன்னொளி அருந்தகம், லண்டன் என்று முகவரியிட்டு வைத்தார். மணப்பெண்ணின் ஆடையணிகளும் மணமகன் கையால் நீக்குவதற்குரிய மெல்லிய முகமூடாக்கும் என் அறையிலேயே தொங்கின.
திருமணத்துக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவசர வேளையாக ராச்செஸ்டர் வெளியூர் சென்றார். ஆனால், அவர் வருவதற்குள் என் நெஞ்சைத் திடுக்கிட வைக்கத்தக்க ஒரு கனாக்கண்டு நான் மிகவும் பரபரப்படைந்தேன். இது திருமண வினைக்குரிய தீக்குறியாய் விடுமோ என்று அஞ்சினேன். அதுவகையில் ராச்செஸ்டரைக் கண்டு எச்சரிக்கை தரவும், அவர் ஆறுதலால் அமைதிபெறவும் நான் துடித்தேன்.
மணநாளன்று காலையிலேயே அவர் வந்தார். நான் அவருக்காகக் காத்திருக்கப் பொறுக்காமல் அவர் வரும் வழியில் நெடுந்தொலை சென்று காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாக நீண்டது. இறுதியில் அரை நில வொளியில் அவர் குதிரைத் தலையைக் கண்டு முன்னோடிச் சென்று வரவேற்றேன்.
என்னைக் கண்டதில் அவருக்கு மகிழ்ச்சியே. அதே சமயம் என்ன செய்தி என்ற கலவரக் கேள்வியும் எழுந்தது. பேரிடர் எதுவுமில்லை என்று உய்த்தறிந்ததும், “நானில்லாமல் உன்னால் ஒருநாள் கூடக் கழிக்க முடியாதென்று எனக்குத் தெரியும். எங்கே என் குதிரைமீது தள்ளி ஏறு பார்க்கலாம்,” என்றார்.
என் ஆர்வம் என்னுள் ஓர் இளங்குதிரை போலத் துள்ளிற்று. நான் அவர் நீட்டிய இரு கைகளையும் பிடித்துத் தாவி ஏறி அவர்முன் உட்கார்ந்து கொண்டேன். வீட்டண்டை வந்ததும் அவர் என்னை இறக்கிவிட்டார். நான் அவருக்குமுன் அறைக்குச் சென்றேன்.
அன்றுதான் நான் அவர் மடிமீது உட்கார இணங்கினேன். நான் என் கனவை, கனவு கண்ட உணர்ச்சி ஒரு சிறிதும் குன்றாமல் எடுத்துரைத்தேன்.
“தார்ன்ஃவீல்டு இல்லம் எரிந்து விழுந்ததாக நான் கனவு கண்டேன். அதில் நீங்கள் இடரில் சிக்கியிருந்தீர்கள். உங்களை மீட்க நான் உட்குதித்தேன். குதித்ததன்பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விழித்து விட்டேன்,” என்றேன்.
அவர் இதைக்கேட்டுச் சிரித்தார். “இவ்வளவு தானா? இதற்கா இவ்வளவு அச்சம்! என்னை மீட்டிருப்பாய், இப்போது என் வாழ்விலிருந்து மீட்கிறாயே அதுபோல,” என்றார்.
“கதை இன்னும் முடியவில்லை. எனக்கு மெய்ம்மயிர் சிலிர்க்கவைக்கும் செய்தி இனித்தான் இருக்கிறது,” என்று தொடங்கினேன்.
’கதைதான் முடிந்துவிட்டதே! இனி என்ன?" என்றார்.
“விழித்தெழுந்தபோது என் கண்முன் பின்னும் ஒளி தெரிந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தேன். என் முன் யாரோ நின்றிருந்தாள். அது பணிப்பெண் சோஃவியோ, என்று ஐயுற்று ’சோஃவீ! சோஃவீ! என்று அலறினேன். மறுமொழி இல்லை. என்னை அச்சம் பிடித்தாட்டிற்று. ஏனெனில் அது சோஃவியுமன்று, திருமதி ஃவேர்ஃவக்ஸு மன்று; கிரேஸ்பூல்கூட அன்று,” என்றேன்.
நான் சொல்லி முடிக்குமுன் அவர் ‘ஆ’ என்று வாய் விட்டு அலறிவிட்டார்; பின் சமாளித்துக் கொண்டு ‘அப்புறம்’ என்றார்.
“அது பெண்ணுருவம்தான். அவள் நெட்டையாய் வலுவான எலும்புக் கட்டுடையவளாய் அடர்த்தியாகக் கறுத்துத் திரண்ட தலைமயிருடையவளாய் இருந்தாள்.”
“நீ முகத்தைப் பார்க்கவில்லையா? அது கிரேஸ் பூலாகவோ, அல்லது வேறு யாராகவோ அண்டை அயலி லுள்ளவர் களாவோதாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
“இல்லை. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தேன். அவள் கிரேஸ்பூலுமன்று. இங்கே அண்டை அயலிலுள்ள எவரு மல்லர். ஆயினும் அவள் இந்தவீட்டுக்குப் புதியவளாகவோ, என்னை அறியாதவளாகவோ இல்லை. ஏனெனில் அவள் என்னை ஒரு முறைப்பு முறைத்துப் பார்த்து விட்டுச் சட்டென என் மணமூடாக்கை எடுத்துக் கிழித்து எறிந்தாள். மண ஆடையைத் தீயிட்டுக் கொளுத்தினாள். அதன்பின் என்மீது பாய்ந்துவந்தாள். நான் அச்சத்தால் கண்ணை மூடினேன். அதன்பின் என்ன நடந்ததென்று தெரியாது. நான் திரும்பவும் எழுந்திருக்க நேரமாயிற்று,” என்றேன்.
“இது முற்றிலும் கனவு என்பதில் ஐயமில்லை,” என்றார் அவர்.
"இல்லை. கிழிந்த முகமூடாக்கு. இதோ எரிக்கப்பட்ட மண ஆடையின் கரியினை நானே எழுந்தபின் கண்டேன். இது கனவுக் காட்சியன்று. இந்தப் பெண்ணும் ஆவியன்று; அவள் இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,’ என்றேன்.
“யாராயிருந்தாலும் நீ ஒரு பேரிடரிலிருந்து தப்பி யிருக்கிறாய் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், இது முன் என்னையும் திரு. மேஸனையும் தாக்கிய அதே கிரேஸ்பூல்தான் என்பதில் ஐயமில்லை. அவளுக்கு அடிக்கடி அறிவு பேதலிப்ப துண்டு. இத்தகைய பெண்ணை வைத்துக் கொண்டிருப்பதனால் ஏற்படக் கூடும் இதுபோன்ற இடையூறுகளை நான் எண்ணாத வனல்லன். ஆனால் அவற்றையும் பொருட்படுத்தாமல் அவளை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாய நிலைமையை நான் உனக்குப் பின்னால் விளக்குகிறேன். இனி உனக்கு எவ்வகை இடரும் வாராது. அச்சமில்லாமல், மணவினைக்கு ஒருங்கி மகிழ்வுடனிரு,” என்று கூறி என்னை அவர் ஆற்றுவித்தார்.
மணி ஏழடித்ததும் எனக்கு மண அணிபூட்டுவதற்கு சோஃவி என் அறைக்கு வந்தாள். அவளுக்கு மட்டுமே அப்போது செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்துக்குள் ராச்செஸ்டர் வந்து என்னை மிகவும் பரபரப்புடன் விரைவு படுத்தினார். சமய ஊர் முதல்வர் திரு. உட் எங்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறி அரைகுறை ஒப்பனையோடு என்னை இழுத்துச் சென்றார்.
சென்ற வேகத்தில் கோயில் வாயில் அணுகுமுன் எனக்கு மூச்சுத் திணறிற்று. அவர் என்னைச் சற்றே ஓய்வு கொள்ள விட்டுப் பின்னும் இழுத்துச் சென்றார்.
கோவிலகத்தில் நாங்கள் நுழைந்தபோது ராச்செஸ்டரும் சோஃவியுமே ஊர்முதல்வர் முன் நின்றோம். ஆனால், வினைமுறை தொடங்குமுன் அயலார் இருவர் அங்கே நின்றதைக் கண்டேன்.
தொடக்க வினைகள் முடிந்தபின் முதல்வர் மண வினைக்கு முன் சட்டப்படி கேட்கப்படும் முக்கியமான கேள்வியைக் கேட்டார்.
“இந்த இரண்டு இளந்துணைவர்களும் சட்டப்படி இணையும் வகையில் ஏதாவது தடங்கலுரைக்கு இடமுண்டு என்று இங்கே எவராவது கருதினால், அதை என்முன் வந்து தெரிவிக்கும்படி கோருகிறேன்,”என்றார்.
இது வழக்கமான நடைமுறை. ஆகவே, முதல்வர் எந்த மறுமொழியையும் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. முறைமைப்படி சிறிதுநேரம் வாளா இருந்து விட்டு, மேலே நடக்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தொடங்க இருந்தார். அதற்குள் முன்னிருந்து ஓர் உரத்த குரல் கிளம்பிற்று.
“சட்டப்படி இந்தத் திருமணம் நடைபெறக் கூடாது என்பதற்கான சரியான காரணம் ஒன்று இருக்கிறது,” என்பதே அக்குரல்.
இது கேட்ட அனைவரும் அதிர்ச்சியுற்றோம். சிறிது நேரம் அமைதி நிலவிற்று.
முதல்வர்தாம் முதலில் வாய்திறந்தார். “கூறவந்ததை முழுவதும் விளக்கிக் கூறுங்கள். இப்போது எழுந்த தடை நேர்மையானதா அல்லவா என்று அறியும்வரை நான் எந்த வினைமுறையும் தொடர்ந்து செய்ய முடியாது,” என்றார்.
முன் குரலெழுப்பியவர் வந்திருந்த அயலாளர்களுள் ஒருவரே; அவரே மீண்டும் பேசினார்.
“இந்தத் திருமணம் சட்டப்படி நடைபெறமுடியாத ஒன்று. ஏனென்றால் திரு. ராச்செஸ்டருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடனிருக்கிறாள்.”
என் காதலரை நான் உற்று நோக்கினேன். அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார். அதை என் பக்கமாகத் திருப்பி உற்று நோக்கினேன். அது விளறி வெளுத்து விறைந்து விருவிருத்துப் போயிருந்தது.
அவர் கைகள் நடுங்கின. ஆனால் ஒரு கையால் என்னை இறுகப் பற்றிக் கொண்டே அவர் அயலானைப் பார்த்து, "நீ யாரப்பா! என்று கேட்டார்.
“நான் ஒரு வழக்குரைஞர். என் பெயர் பிரிக்ஸ்.”
“நீர் அறிந்த சட்டப்படி எனக்கு இதற்கு முன்பு மண மாகியிருக்கிறதென்றா கூறுகிறீர்?”
“நண்பரே! உமக்கு இன்னும் உயிருடனே ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை மறைக்காதேயுங்கள்.”
“அப்படி நீர் கூற என்ன ஆதாரம்?”
"இதோ மணமுறியின் மெய்ப்படி:
’எட்வர்டு ஃரேர்ஃவெக்ஸ் ராச்செஸ்டர் - தார்ன்ஃவீல்டு இல்லம் - ஜெமய்க்காவிலுள்ள ஸ்பானிஷ் நகரிலுள்ள பெர்ததா மேஸன் - இருவருக்கும் திருமணம் இன்று நடந்தேறியது.
“ஐந்தாண்டுகட்கு முன் தேதியிட்ட இந்த மணமுறிக்கு என்ன சொல்லுகிறீர்?”
“சரி, இது மணம் நடந்ததற்குத்தானே சான்று, மணமகள் இன்னும் உயிருடனிருப்பதாக நீர் எப்படிக் கூற முடியும்?”
“இறந்ததற்கான சான்று கொடுக்க வேண்டியவர் நீர்தாம். ஏனென்றால், அவள் ஒரு வாரத்திற்கு முன் உயிருடனிருந்ததற் கான சான்றாளரை அழைத்து வந்திருக்கிறேன். இதோ அவரை முன்னிலைப் படுத்துகிறேன்.”
“திரு.மேஸன், அருள் கூர்ந்து இங்கே வாருங்கள்”
திரு. மேஸனின் பெயர் கேட்டதும் ராச்செஸ்டர் பற்களை நெறுநெறெனக் கடித்தார். கடுஞ்சீற்றத்தால் அவர் உடல் தளிரென நடுக்குற்றது. நானும் அப்பெயர் கேட்டுத் திடுக்கிட்டேன்.
மணவினை தடுத்தவர் திரு. மேஸனைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.
“இந்த மனிதர் மனைவி உயிருடனிருக்கிறாள் என்பது உமக்குத் தெரியுமா?”
“ஆம், இந்தக் கணத்திலும் அவள் தார்ன்ஃவீல்டு இல்லத்தில் இருக்கிறாள். சென்ற ஏப்பிரல் இறுதியில் தான் நான் அங்கே அவளைக் கண்டேன்.”
“உமக்கு அவளை எப்படித் தெரியும்?”
“நான் அவள் அண்ணன்.”
முதல்வர் திரு. உட் இப்போது குறுக்கிட்டார். “நான் இங்கேயே பல ஆண்டுகள் வாழ்கிறேன். தார்ன்ஃவீல்டு இல்லத்தில் திருமதி ராச்செஸ்டர் என்ற பெயருடன் எவரும் இருப்பதாக நான் அறியவில்லை,” என்றார் அவர்.
திரு. மேஸன் மறுமொழி கூற வாயெடுக்குமுன் ராச்செஸ்டர் தலையிட்டார்.
“அவளை எவரும் திருமதி ராச்செஸ்டர் என்ற பெயரால் அறியாமல் நான் பார்த்துக் கொண்டேன். என் செயல் இன்று வெளியாகிவிட்டது. போகட்டும்,” என்று அவர் வெறுப்புடன் கூறினார்.
இவ்வளவானபின் திருமணம் நடத்தமுடியாது என்று ‘உட்’ கூறிவிட்டுக் கோயிலை விட்டுச் சென்றார்.
ராச்செஸ்டர் பேய் பிடித்தவர் போலானார். நானோ பேயறைந்தவள் போலானேன். ஆனால், அவர் என்னையும் அயலார் இருவரையும் திரு. மேஸனையும் விடாது தம்முடன் தார்ன்ஃவீல்டுக்கு இழுத்துச் சென்று எங்களுக்குத் திருமதி ராச்செஸ்டரையே காட்டியபோது தான் ராச்செஸ்டரின் முழு வாழ்வின் மர்மமும் வெளிப்பட்டது.
அவர் திரு.மேஸன் இருந்த அறைக்கு அடுத்த அறை சென்று கதவைத் திறந்து கொண்டே கிரேஸ்பூலைக் கூவி அழைத்தார். கிரேஸ்பூல் ஓடிவந்து. “அம்மா உங்களைப் பார்த்துக் கொண்டிதானிருக்கிறாள். உள்ளே செல்லவேண்டா,” என்றாள்.
“இன்று நான் அவளுக்கு அஞ்சவேண்டியதில்லை. மேலும் இன்று அவளிடம் சுத்தி முதலிய கருவி எதுவும் இல்லை,” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார்.
திருமதி ராச்செஸ்டர் அமைதியாகவே இருந்தவள் சரேலென்று அவர்மீது பாய்ந்தாள். அவள் நகங்கள் அவர் தோள்களைக் கீறின. அவள் அவரைக் கடித்துக் குருதி குடிக்கப் போவதுபோல் இருந்தது.
ராச்செஸ்டரால் அவளைக் காயப்படுத்தித் தப்பியிருக்க முடியும். அவரிடம் கத்தி இருந்தது. ஆனால் அவர் உறுக்கக் கூட முடியவில்லை. பொறுமையாக அவர் அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அதற்குள் கிரேஸ்பூலும் மற்றவர்களும் அவளைக் கயிற்றால் ஒரு நாற்காலியுடன் சேர்த்துக் கட்டினார்கள்.
ராச்செஸ்டர் அவளைச் சுட்டிக் காட்டி, “இது தான் உங்கள் சட்டப்படி எனக்கு உரிய மனைவி. எனக்கு அவள் அளிக்கும் வரவேற்பையும், ஆதரவையும் கண்டீர்கள். சட்டப்படி அவளை நான் மனைவியாகக் கொண்டு வாழ வேண்டுமென்று கூறுகிறீர்கள்,” என்று வெப்பத்துடன் கேட்டார். பின் என்னைச் சுட்டிக் காட்டி, “இதோ நான் விரும்பி மணம் செய்ய இருந்த பெண்: என்னை விரும்பி எனக்கு ஆதரவு காட்டத்தக்கவள். உங்கள் சட்டப்படி இவள் தான் எனக்கு மனைவியாகத் தகாதவள். உங்கள் சட்டம் அளிக்கும் நேர்மை நான் இவளை இழந்து, அவளுடன் வாழவேண்டும் என்பது,” என்றார்.
அயலார் இருவரும் ராச்செஸ்டர் சொற்களின் உணர்ச்சியை ஒத்துக்கொண்டனர். “உங்களிடம் எங்களுக்கு ஒரு பகைமையும் கிடையாது. நாங்கள் எங்கள் கட்சிக்காரர் சொல்லியபடி செய்தோம். அவர் இதோ நீங்கள் மணம் செய்ய இருந்த பெண்ணின் பெரிய தந்தை. தன் திருமணத்தைப் பற்றி இவள் எழுதிய கடிதத்தை அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் நண்பரான திரு. மேஸன் உடனிருந்தார். அவர் மூலம் ராச்செஸ்டரின் பழைய திருமணச் செய்தி தெரிய வந்தது. தம் தம்பி புதல்வியின் நலங்கோரிய அவர் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிவந்தது,” என்றார்.
எனக்கு இப்போது நான் என் பெரிய தந்தைக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. நான் அதற்காக இப்போது வருந்தவில்லை. ஏனென்றால் ராச்செஸ்டரை நான் எவ்வளவு விரும்பினாலும், அவர் நிலைமைக்கு எத்தனை இரங்கினாலும், அவருக்காகச் சட்டம் மீறிய தொடர்பில் இறங்கவோ, என்னைப் பலியாக்கிக் கொள்ளவோ நான் விரும்பவில்லை.
ராச்செஸ்டரின் விளக்கம்
அயலாரும் திரு. மேஸனும் போய்விட்டனர். ராச் செஸ்டர் வெட்கத்தால் எங்கும் தலைகாட்டவில்லை. என் முகத்தில் விழிக்கவும் முடியாமல் தம் அறையிலேயே அடைப்பட்டுக் கிடந்தார். வீட்டில் உள்ள மற்ற எவரும் அவரையோ, என்னையோ, மிகுதியாகச் சந்திக்க விரும்ப வில்லை. ஆகவே, தனித் தனியாக நாங்கள் எங்கள் உள்ளங் களைத் திறந்து கண்டு அவரவர் துயரத்தை ஆற்றியிருந்தோம்.
என்னை ராச்செஸ்டர் ஏமாற்றியதற்கு என்னால் அவரை மன்னிக்க முடியவில்லை. அனுபவமற்ற நிலையில் என் பாசத்தால் அறிவுக்கண் மூடப்பெற்று, அவர் வலையில் சிக்கியதற்காக என்னையே நான் மிகவும் நொந்து கொண்டேன். ஆயினும் ராச்செஸ்டர் நிலை ஓரளவு அவர் பாசத்தையும் இக்கட்டையும் விளக்கியதால், நான் அவர் மீது சினமடைவதை விட்டு இனி நான் இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்கலானேன்.
இனி இந்த இல்லத்தில் ஒரு கணம் தங்குவதும் தவறு; ஆனால் எங்கே செல்வது? எனக்கு வந்த அவப்பெயருடன் எங்கேதான் வேலை எளிதில் கிடைக்கும்? ஆனால், எது வந்தாலும் இரவோடிரவு வெளியேறி விடத்துணிந்தேன். என் மூட்டை முடிச்சுகளுடன் நான் போனால் பயணம் தெரிந்துவிடும். தவிர இடமும் இலக்குமற்றுப் புறப்படும் எனக்கு, மூட்டை முடிச்சுகள் தாம் எதற்கு? நான் ஒரு மாற்றுடையும், ஒருநாள் உணவுக்கான சில உணங்கிய அப்பமும், தண்ணீர் மொண்டு குடிப்பதற்கான ஒரு புட்டியும் எடுத்துக் கட்டி வைத்துக் கொண்டேன்,முன்னிரவில் கதவை மெள்ளத் திறந்து கொண்டு வெளியேறினேன். ஆனால், ஏதோ ஒன்று தடுக்கி நான் விழ இருந்தேன். தடுத்தது ராச்செஸ்டர் கை அவர் என்னைத்தாங்கி அறைக்கே இழுத்து வந்தார். என் காலைப் பிடித்துக் கொண்டு என்னிடம் மன்றாடினார். எனக்கு முதல் தடவை யாகச் சீற்றம் ஏற்பட்டது.
“உங்கள் செயலால் என் பழைய வாழ்வும் கெட்டது. புது வாழ்வுக்கும் வழி இல்லை. இன்னும் என்ன செய்ய மேண்டு மென்கிறீர்கள்?” என்று நான் இரைந்தேன்.
“அதனால்தான் உன்னை ஆதரவற்றவளாக அலையவிட மனமில்லை. சட்டந்தவிர மற்ற எந்த வகையிலும் நான் உன்னை மனைவியாக நடத்துவதில் என்ன தவறு? நீதான் என் இரண்டுபட்ட நிலையைப் பார்த்தாயே! நீ போனால் நான் உயிர்வாழ முடியாது; என்மீது இரக்கங்கொள்,” என்றார். நான் சிறிதும் இணங்கவில்லை, “சீ! இந்த எண்ணம் உங்களுக்குத் தகாது. நான் இறந்தாலும் இறப்பேனே தவிர. என் தன் மதிப்பை இழக்க மாட்டேன்,” என்றேன்.
“குறைந்த அளவி எனக்காக இன்று போவதை நாளைக் காவது ஒத்திப்போடு. நான் செய்த தீங்கு பெரிது. அதை என்னால் இனிச் சரிசெய்ய முடியாது. ஆனால், என் வாழ்வின் போக்கை நான் உனக்கு முழுதும் கூறியாக வேண்டும். அதை நீ கேட்டபின் உன் மனம் எப்படியோ அப்படியே நடக்க விட்டுவிடுகிறேன். இந்த ஒரே ஒரு கருணை காட்டும்படி கோருகிறேன்,” என்றார்
அவர்மீது எனக்கு உள்ளூர இரக்கம் இல்லாமல் இல்லை. நான் இந்த அளவு என் திட்டத்தைத் தளர்த்த ஒத்துக் கொண்டேன்.
அவர் தொடங்கினார்:
"என் தந்தையிடம் பெருஞ்செல்வம் இருந்தது. ஆனால், அவர் பேராவல் அவரை அமைதியாக வாழ விடவில்லை. எனக்கும் எம் தமையனுக்கும் செல்வத்தைப் பங்கிட்டால் அது குறைந்துவிடும் என்று எண்ணி, அவர் அது முழுவதையும் என் தமையனுக்கே கொடுத்துவிட்டார். அத்துடன் முழுவயதும் அனுபவமும் பெறாதநிலையிலே என்னையும் விற்றுப் பணமாக்கிவிட எண்ணினார்.
"திரு.மேஸன் என் தந்தையின் நண்பர். அவரிடம் தந்தை யின் செல்வத்தின் மூவிரட்டி செல்வம் இருந்தது. ஆனால், எக்காரணத்தாலோ நீண்ட நாள் மணமாகாதிருந்த ஒரு புதல்வி அவருக்கு இருந்தாள். அவளை மணப்பவருக்குத் தம் செல்வத்தின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொடுக்க இருப்பதாக அவர் ஒரு நாள் என் தந்தையிடம் கூறினார். தந்தையின் பேரவா கிளைத்தெழுந்தது. மூன்றில் இருபங்கைத் தான் வாங்கிக் கொண்டு செல்வி பெர்தாமேஸனை என் மனைவி யாக்கத் துணிந்தார். திருமணம் செய்யுமுன் நான் பெர்தாவைத் தனியாகப் பார்க்கவில்லை. தனியாகப் பார்க்காததால், அவள் அழகில் மயங்கி நானும் ஒத்துக் கொண்டேன்.
"மணமானபின் தெரிந்தது, பெர்தா மணவாழ்வுக்குரிய பெண்ணல்லள் என்று! கொடிய பைத்தியம் அவளை ஒரு நாளைக்கொருதரம் பேயாக்கியிருந்தது. மற்ற நேரங்களிலும் எந்த ஆணைக் கண்டாலும் - தன் அண்ணனைக் கண்டால் கூட - அவளுக்குப் பித்த வெறி எழுந்துவிடும்.
"என் வாழ்வு பாழாயிற்று. எனக்கு அறிவு வந்ததே நான் எப்படி உடலோடு உயிர்க்கொலை செய்யப்பட்டுவிட்டேன் என்பது தெரியவந்தது.
"என் நகர வாழ்வைப் பிறர் அறியாமற் காக்கவே நான் என் தந்தை இறந்ததும் இந்த வெறிகொண்ட மனைவியுடன் இங்கே வந்தேன். கிரேஸ்பூல் மேஸன் வீட்டிலேயே பணி யாளாயிருந்து பெர்தாவைப் பார்த்து வந்தாள். அவளையே உடன் கொண்டு வந்து பெர்தாவைப் பேணவைத்தேன். ஆனால், அவள் என் மனைவி என்பதையே யாரிடமும் சொல்லாமல் அவளை வீட்டினுள் வைத்துக் காக்கும்படி நான் கிரேஸ்பூலிடம் வேண்டினேன். அவள் இணங்கினாள்.
“உன்னைக் காணும் வரை நான் வாழ்க்கையில் வெறுப்புற்று எல்லாரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதன் மர்மம் இதுவே. நீ வந்தபின் இந்நிலையை மாற்றினாய். என் மனைவி என்னறையில் தீ வைத்ததையும் தன் அண்ணன் திரு. மேஸனையே குத்திக் கொல்லப் பார்த்ததையும் நீ அறிவாய். வாழ்நாள் முழுவதும் மனைவியாக வாழமுடியாத இந்தப் பைத்தியத்தின் பெயரால் நான் நடைப்பிணமாக வாழ வேண்டுமா? நீயே சொல்! இந்தச் சட்டப் பொறியிலிருந்து நீ என்னை விலக்கலாம். நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். நீ என்னை எவ்வளவு மனமாரக் காதலிக்கிறாய் என்பதை நான் அறிவேன். திருமதி ராச்செஸ்டரைப் பார்க்க, கிரேஸ்பூல் இருக்கிறாள். அவள் தந்தையின் பெருஞ்செல்வம் இருக்கிறது. அடேல் கல்வியைக் கவனிக்கப் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் இருக்கிறது. எனக்கு நீயும் தன்னாண்மையுடன் கூடிய வறுமையும் போதும். உன்னுடன் இருந்து நான் தோட்ட வேலை செய்தால்கூட மனநிறைவாகவே இருக்கும். இனி உன் முடிவைப் பொறுத்தது என் வாழ்வு. அதை அறியக்காத் திருக்கிறேன்,” என்றார்.
மழை ஓய்ந்தது. அமைதி நிலவிற்று. அவர் என் மறு மொழியை எதிர்பார்த்து நின்றார். ஆனால், என்னிடம் தயக்கம் இல்லை. நானும் ஒரே துணிவுடன் பேசினேன்.
“நீங்கள் கூறுவதெல்லாம், உங்கள் அளவில் சரி. நீங்கள் பணத்தை உங்கள் தந்தைமாதிரி வழிபடாமலிருக்கலாம். ஆனால், பணக்கார நேர்மைதான் இன்னும் உங்களிடம் இருக்கிறது - நீங்கள் உங்கள் நலத்தைத்தான் நினைத்துப் பார்க்கிறீர்கள் - நானும் ஒரு மனித நெஞ்சம் படைத்தவள். எனக்கும் ஒரு தன்மதிப்பு உண்டு என்பதை மறந்தீர்கள். உங்களுக்கு வாழவழியில்லை. அது சரி, உங்களுக்குத் துன்பம் உண்டு. நான் வருந்துகிறேன். உங்களுக்கு அநீதி செய்யப் பட்டிருக்கிறது. நான் கண்டிக்கிறேன். இருக்கப்படுகிறேன். ஆனாலும் அதற்காக நான் உயிரை இழக்க ஒருப்படமாட்டேன். தன்மதிப்பை விட்டுவிட இணங்க மாட்டேன். மேலும் என் தன் மதிப்பு மட்டுமன்று. திருமதி ராச்செஸ்டரின் தன்மதிப்பு. என் தாய். உங்கள் தாய் எல்லாப் பெண்களின் பெண்மையின் தன்மதிப்பு. நான் உங்கள் மனைவியல்லள். நான் உங்களை மனமார நேசித்தாலும், உங்களுடன் நான் ஒருநாள் கூட இருக்க விரும்பவில்லை,” என்றேன்.
அவர் முகம் கவிழ்ந்தது. பேசாது எழுந்து சென்றார். சிறிது தொலை சென்றதும் திரும்பி நின்று, ’ஜேன், உனக்கு என்மீது உண்மைக்காதல் இல்லை," என்றார்.
“உண்மைக்காதலில் உரிமை உண்டு, அன்பரே! அதில் அடிமை இல்லை,” என்றேன்.
மருமத்தில் அம்பு பாய்ந்த விலங்குபோல், அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு சென்றார்.
பொழுது விடியவில்லை. நானும் என் சிறு முடிப்புடன் புறப்பட்டு வெளியேறிவிட்டேன்.
தாழ்வும் வாழ்வும்
என்னிடம் இப்போது பணம் இல்லை. எண்ணி இருபது வெள்ளிகள்தாம் சில்லரையாக இருந்தன. என் முழுச் செல்வமும் இதுதான். ஆகவே, இதை வண்டிக்கும் வழிக்கும் செலவிட நான் விரும்பவில்லை. அத்துடன் இன்ன இடத்திற்குப் போக வேண்டும். இன்ன வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாத நிலையில் வண்டியில் போய்த்தான் என்ன பயன்? என் சிறுதொகையைச் சிறுகச் சிறுக உணவுக்கு மட்டும் செலவு செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் கால் சென்ற திசையில் கால் கடுக்குமளவுக்கு நடந்தேன்.
பலநாள் நடந்தபின் கால் கடுக்கத் தொடங்கிற்று. உடல் தளர்வுற்றது. அடிக்கடி வழியின் வாய்ப்புக்கேடுகளாலும் அனுபவமின்மையாலும் வேளாவேளைக்கு உணவு நீர் இல்லாமல் தட்டழிந்தேன். குளிப்பு, ஆடைமாற்று எதுவுமே இல்லாதபடியால் படிப்படியாக எனக்கும் நாடோடி களுக்கும் இரந்து திரியும் ஆண்டிகளுக்கும் உள்ள வேற்றுமை அகன்று வந்தது. நாள்தோறும் நான் நடக்கும் தொலை பத்துக் கல்லிலிருந்து படிப்படியாக ஒன்றிரண்டு கல்லாகக் குறைந்தது. வரவரக் காலைத்தூக்க முடியாததாகி விட்டது. ஒருநாள் கை உணவுண்ண எழவில்லை.
எங்கே செல்வது எதற்கு என்று தெரியாவிட்டாலும் போய்க்கொண்டே இருக்க எண்ணினேன் - ஒருவேளை சாகும்வரை போய்க்கொண்டேதான் இருக்க வேண்டும் என்று கருதினேன். ஏனென்றால் அது தவிர வேறு நான் என்ன செய்ய முடியும்?
பயணம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட நான் வழியில் வரும் ஒரு வண்டியை நிறுத்தச் சொல்லி அதில் ஏறினேன். வண்டி எங்கே போகிறது. எவ்வளவு தொலைவு போகிறது என்று நான் கேட்கவில்லை. எங்கே போனாலென்ன நான் எங்கே போகவேண்டும் என்பதையும் கூறவில்லை. ஏனெனில் அது எனக்கே தெரியாது. என் கையில் அப்போது இருந்தது 12 வெள்ளி. அதை வண்டிக்காரன் கையில் கொட்டினேன். அவன் பேந்தப் பேந்த விழித்து, ’என்னம்மா எங்கே போக வேண்டும்? ஏன் இவ்வளவு பணம்?" என்றான்.
“உன் வண்டி எதுவரை போகிறதோ அதுவரை கொண்டுபோய் இறக்கி விட்டுவிடு. என்கையில் உள்ள பணம் அவ்வளவுதான். அது போதாதென்றால் அந்தப் பணத்துக்கு எதுவரை கொண்டு போகலாமோ அதுவரை கொண்டுபோய் இறக்கிவிட்டு விடு” என்றேன்.
வண்டிக்காரன் என்ன நினைத்தான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் வண்டியில் படுத்தவள் திரும்ப வண்டியில் கண்விழிக்கவில்லை. கண்விழித்தபோது சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வீட்டில் கட்டிலில் படுத்திருந்தேன். இரண்டு இளம் பெண்கள் என் அருகில் மாறி மாறி வந்து அமர்ந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் அக்காள் தங்கைகள். டயானா ரிவர்ஸ், மேரி ரிவர்ஸ் என்பது அவர்கள் கன்னிப்பெயர்கள் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன்.
மேரி ரிவர்ஸ் என்னருகில் வந்து, “அம்மா உடம்பை அலட்டிக் கொள்ளாதே நீ நல்ல நண்பர்களிடத்தில் தான் இருக்கிறாய். நாங்கள் இருவரும் எங்கள் அண்ணன் தூய திருஜானுடன் உன்னைக் கவனிப்போம்.” என்றாள்.
வண்டிக்காரன் என் நிலைகண்டு, இரக்கமும் கவலையும் கொண்டு, என்னைத் தன் ஊருக்கே கொண்டுவந்து பிறர்க்கு உதவும் பெரும் பண்புடைய இந்தக் குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருந்தான் என்பதை நான் அவர்கள் கூற அறிந்தேன். ஊர் பேர் அறியாத என்னை எந்த எதிர்நலனும் நோக்காமல் ஆதரித்த அவர்களின் அருள் தகைமை என்னை இழுதாய் உருக்கிற்று. என் உடல், பொருள், ஆவி மூன்றையும் அப்பெருந் தகையார்களுக்கே ஈடுபடுத்தவும் நான் சித்தமாயிருந்தேன்.
நான் என் உண்மைப் பெயரையோ வாழ்க்கை வரலாற்றையோ இத்தகையவர்களிடம் கூடத் தெரிவிக்க அஞ்சினேன். ஆகவே, என் பெயர் கேட்டபோது ஜேன் எலியட் என்று கூறினேன். இறுதி நிகழ்ச்சி தவிர மற்ற நிகழ்ச்சி களையும் ஊர் பேர் மறைத்துத் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் கேள்வியில் பிறர் செய்திகளைத் துருவியுணரும் சிறுமை யவா இல்லை. பெருந்தகைமை வாய்ந்த அன்புக் கனிவார்வம் மட்டுமே இருந்தது.
உடலில் சிறிது தெம்பு ஏற்பட்டதும், நான் ஏதேனும் வேலை செய்து அவர்களிடமிருந்து உழைக்க விரும்புவதாகக் கூறினேன். அவர்களும் சிறிது தடையுரைத்து, பின் என் தன்மதிப்பை மதித்தனர் நான் என் கல்வியைப் பயன்படுத்தி அண்டை அயலிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் கல்வி புகட்டியும், பள்ளிகளில் வேலையேற்றும் அந்நல்ல குடும்பத் தினர் வருவாயில் என் பங்கைச் சேர்த்து, அவர்களுடன் அளவளாவி வாழ்ந்தேன். தூயதிரு. ஜான் எனக்கு அண்ணனா யிருந்தால் கூட என்னை அவ்வளவு பேணியிருக்க மாட்டார். டயானாவும் மேரியும் என் உடன்பிறந்த தங்கையராயிருந்தால் கூட அவ்வளவு நேசபாசம் காட்டியிருக்க முடியாது. அந்த அளவு நாங்கள் நால்வரும் ஒரு குடும்பமானோம்.
உள்ளூரப் பட்டுப்போன என் வாழ்வு வெளித்தோற்றத்துக் கேனும் தளிர்விட்டது. உலகுக்கு ஜேன் எலியட், ஜேன் அயரின் ஒரு நிழல் அல்லது ஓர் ஆவியானாள். ஜேன் அயருக்கு கிடைத்த அன்புச் சூழலை விட ஜேன் எலியட்டுக்குக் கிடைத்த அன்புச் சூழல் தெய்விகச் சூழலாகவே இருந்தது. ஆனால், அன்பு வேறு, வாழ்க்கைப் பற்று வேறு. வாழ்க்கைப் பற்றற்ற நான் தாமரையிலையில் தண்ணீர்த் துளிபோலப் பிறருக்குக் கவர்ச்சிகரமாக ஒளி வீசினேன்.
என் வாழ்வில் மீண்டும் எதிர்பாராத திருப்பங்கள் இரண்டு நேர்ந்தன. ஒன்று என் ஆவிவாழ்வின் கட்டைப் பெருக்கி எனக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தது. இரண்டாவது எனக்குச் சொல்லொணாத் துன்பந் தந்தது. ஆனால், அதுவே எனக்கு முடிவில் வாழ்வும் அளித்தது.
தூயதிரு. ஜான், தூயதிரு. உட்டைப் போன்ற ஒரு சமயப்பணி முதல்வர். மக்கட் பணியாகிய கடவுட் பணியையும் சமயப்பணிவுடன் ஒன்றுபடுத்தியவர் அவர். அவருடைய நண்பர்களுள் என் திருமணத்தை வந்து தடுத்தவரும், என் பெரிய தந்தையின் வழக்குரைஞருமான திரு.பிரிக்ஸ் ஒருவர். இது எனக்குத் தெரியாது. திரு. பிரிக்ஸ் அவருக்கு எழுதிய கடிதங்களில் அடிக்கடி ஜேன் அயர் என்ற ஒரு பெண்ணைத் தான் எங்கும் துருவித் தேடி வருவதாகவும் அவளிடம் அவளைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தி கூற வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். திரு. ஜானே, தம்முடன் ஊர் பேரில்லாத ஜேன் எலியட் பெயரைத் தாம் கேட்டதில்லை என்றும் மறுமொழி எழுதியிருந்தார்.
ஒரு நாள் திரு. ஜான் இதை என்னிடம் கூறினார். “இது வரை நீங்கள் தாம் ஜேன் அயராயிருக்கக் கூடும் என்று நான் எண்ணாமல் போனேன். எண்ணியிருந்தால் நண்பர் கோரிய செய்தியில் தக்க தகவல் கூறியிருப்பேன்,” என்றார்.
அவர் கூறும் செய்தி, திரு.ராச்செஸ்டரைப் பற்றியதாகவே இருக்கவேண்டும் என்று மதித்து நான், “நானும் நீங்கள் கூறப்போகும் செய்தியைக் கேட்க ஆவலுடையவளாகத்தான் இருக்கிறேன். அது திரு. ராச்செஸ்டரைப் பற்றியதுதானே!” என்றேன்.
“ராச்செஸ்டரா? அப்படி ஒரு பெயரைப்பற்றி நான் கேள்விப்படவில்லை. என் செய்தி அது பற்றியதன்று. அஃது உங்கள் பெரியப்பாவைப் பற்றியது. என் நண்பர் பிரிக்ஸ் அவருடைய வழக்குரைஞர், அவர் தம் செல்வம் முழுவதை யும் உங்களுக்கே உரிமையாக்கி வைத்துவிட்டுச் சில மாதங்களுக்கு முன் இறந்துபோனார். நீங்கள் இப்போது எங்களுள் ஒருவர் அல்லர். உங்கள் பெயருக்கு இப்போது நாணயமாக 20,000 பொன் பொருளகங்களில் கிடக்கிறது,” என்றார்.
“அப்படியா? இருபதினாயிரம் பொன்னா? எனக்கா?”
“ஆம் உங்களுக்குத்தான் ஐயம் வேண்டா?”
என் பெருஞ்செல்வத்தைக் கண்டு என் நண்பர் மகிழ்ந்தனர் நான் அவ்வளவாக முதலில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பின் என் இடைக்கால உதவியற்ற நிலையில் என்னை ஆதரித்த ரிவர்ஸ் குடியினர்க்கு நான் என் கடமை நிறைவேற்றவும், அவர்கள் பணியை வளர்க்கவும் இஃது ஓர் ஒப்பற்ற கருவி என்ற எண்ணம் வந்தது. உடனே நான் பள்ளியில் தங்குவதை விடுத்து அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் வீட்டை என் வீடாக்கி அதைச் சீர்திருத்தியும் சேர்ப்பன சேர்த்தும் பெரிதாக்கியும் அவர்கள் வாழ்வை வளப்படுத்தினேன். தம் வீட்டை என் வீடு என்று நான் கூறும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை, என் வீடு என்று கூறி அவர்கள் வீட்டைப் பெரிதாக்குவதில் நானும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் செய்யும் சமூகப் பணிக்கென்று ஆயிரக் கணக்கான பொன் களை அவர்கள் வசம் ஒப்படைத்தேன். என் உள்நோக்கத்தை அவர்கள் அறிந்தும் என் மனம் புண்பட வேண்டா என்று இவற்றைப் பெற்றுக் கொண்டார்கள்.
என் புறவாழ்க்கை இப்போது நிறைவடைந்தது என்றே கூற வேண்டும். ஆனால் அகவாழ்வில் இம்மியளவும் நிறைவு ஏற்படவில்லை. திரு. ராச்செஸ்டரை உதறித் தள்ளியதனால் நான் என் தன்மதிப்பையும் பெண்மையின் மதிப்பையும் காத்துக் கொண்டேனே தவிர, என் உள்ளத்தில் அமைதியை உண்டுபண்ண முடியவில்லை. சட்டப்படி என் வாழ்வில் இடம்பெறாவிட்டாலும், உள்ளத்தில் இடம்பெறுவிட்ட ஒருவரைப் புறக்கணித்து அவரை துன்பத்திலாழ்த்திய நான் எப்படி அமைதி அடைய முடியும்?
அன்பின் குரல்
என்னை யாரோ என்று எண்ணியபோதே பேணிய ரிவர்ஸ் குடும்பத்தார் என் நல்லெண்ணம், பெருந்தன்மை வண்மை ஆகியவற்றைக் கண்டு என்னிடத்திலும் என் முன்னேற்றத்திலும் முன்னினும் மிகுதியாக அக்கறை காட்டினார்கள். சமயத் தொண்டிலும் சமூகத் தொண்டிலுமே ஈடுபட்டிருந்த தூயதிரு. ஜான் என் பணிக்குரிய நல்லிடம் இந்தியா தான் என்று வற்புறுத்தினார். தென் இந்தியாவில் அப்போது தாழ்த்தப்பட்ட மக்களிடையே கிறிஸ்துவின் நெறியுடன் கல்வியும் போதிக்கத் தக்க சமூகத்தொண்டு மனப்பான்மையுள்ள நல் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தேவைப்பட்டனர். இதில் கடவுள் தொண்டு கல்வித்தொண்டு ஆகியவற்றுடன் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட சேரிவாணர்களை உயர்த்தும் சமூகத்தொண்டும் இணைந்திருந்தது. என் பண்புகள் திறங்கள் அனைத்துக்கும் இஃது ஒப்பற்ற இடம் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.
திரு. ஜானின் உயரிய குறிக்கோள் எனக்குப் பிடித்த மாகவே இருந்தது. அதனினும் உயரிய தொண்டில் நான் ஈடுபட முடியாது. ஆயினும் பெண்ணின் நெஞ்சம் காதலித்த தன் உயிரின் பாதியை ஒதுக்கிப் புறக்கணித்துவிட்டு எதிலும் அமைதி பெறமுடியாது. ராச்செஸ்டரை என் மனம் நாடி நிற்குமளவும் சமூகத் தொண்டில்கூட நான் என் உள்ளத்தின் முழுநிறை இன்பம் பெறமுடியாது. எனினும் இக்காதல் வாழ்வு சமயம், கல்வி, சமூகம் ஆகிய முத்துறைப் பணிகளுக்கு ஈடு என்று என்னால் நம்பமுடியவில்லை. பெண்மையின் காதல் எவ்வளவு தெய்வீகமானாலும் அதில் தன் நலம்தான் இடம் பெறுகிறது. உலகுக்கு உழைக்கும் அகல் அருள் திறம் அதில் கிடையாது.
இவ்வாறு மாறி மாறி இருதிசையிலும் என் உள்ளம் ஊசலாடிற்று.
"கடவுளே! நீர்தாம் எனக்கு இரண்டிலும் எது உகந்தது என்று முடிவு காட்டி வழிவகுக்க வேண்டும்,’ என்ற வேண்டுகோளுடன் நான் கண்ணயர்ந்தேன்.
அன்றிரவு எங்கும் அமைதி நிலவிற்று. பலகணி களூடாக நிலவொளி எங்கும் புகுந்து அறையை நிறைத்தது. என் நெஞ்சம் வழக்கத்துக்கு மிகையாகத் துடி துடித்துக் கொண்டி ருந்தது. திடீரென்று அந்தத் துடிதுடிப்பு அடங்கியது போலிருந்தது. முகில்படலம் மறைந்தது போல நிலவொளி நிலவொளியாயிற்று. நான் எதையும் தெளிவாகக் காண முடியவில்லை. ஆனால் காதில் தெளிவாக ஒரு குரல், ஈன, தீனக்குரல் ஒலித்தது. ‘ஜேன்-ஜேன்- ஜேன்’ என்று உருக்கமாக அஃது என்னை அழைத்தது. அக்குரலில் துன்பம், அலுப்பு, ஆவல், சோகம் ஆகிய யாவும் நிரம்பியிருந்தன. அஃது என் நெஞ்சின் அகலங்கடந்து ஆழ்தடத்தில் சொல்லொணாத இரக்க அலைகளை எழுப்பிற்று.
அந்தக் குரல் ஏதோ, எங்கிருந்து வந்ததோ அறியேன். ஆனால், அது ராச்செஸ்டரின் குரலாயிருந்தது.
குரல் மேலிருந்தோ தொலைவிலிருந்தோ அணிமை யிலிருந்தோ கேட்கவில்லை. என் உள்ளத்திலிருந்து எழுந்த தாகவே தோன்றிற்று.
உள்குரலின் இந்த அழைப்பை என்னால் ஒரு கணமும் அசட்டை செய்ய முடியவில்லை. ‘என் உற்றார் ஒருவர் அருந்துன்பத்திலிருப்பதாக எனக்குத் தெரிய வருவதால், நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று வருகிறேன்’ என்று என் உயிர் நண்பர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.
தார்ன்ஃவீல்டிலிருந்து புறப்பட்டு வரும்போது இலக் கின்றி நோக்கின்றி நடந்து தளர்ந்து வந்தேன். ஆனால், திரும்பும்போது விரைவுமிக்க வண்டிகளில் சென்றேன். ஒரு கணம் கூட எங்கும் தங்கவில்லை. உணவைக்கூடப் பெரும் பாலும் வாங்கி வைத்துக் கொண்டு போகும்போது அரை குறையாக உண்டேன். உயிரை ஓடவிட்டுப் பின் தொடர்பவள் போல நான் விரைந்து சென்றேன்.
வழியிலெல்லாம் என் உள்ளம் என்னைப் பலவாறு சுட்டது; ‘அன்று உன் தன்மதிப்பை எண்ணி உன் உயிரினும் அரிய ஒருவரை இன்னலின் பொறியில் சிக்கவைத்து விட்டுச் சென்றாய். இன்று ஏனோ இந்த விரைவு?’ அவர் வேண்ட நீ மறுத்தாய்? இப்போது நீ வேண்ட அவர் மறுத்தால்?’ அவர் இப்போது உன் முகத்தில் விழிப்பாரோ, மாட்டாரோ?’ அவர் மனம் மாறியிருந்தால்! - அவர்நிலை உடல் எப்படியோ? உயிர் இருக்கிறதோ இல்லையோ? - உண்மையில் உயிர் இருக்கிற போது காலால் சவட்டி எறிந்த நீ, உன் மனச்சான்றைப் பசப்பி ஏய்க்கத்தானே இப்போது கரிசனை காட்டுகிறாய்?’ என்று பலவாறு என் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் எண்ண அலைகள் என்னைக் குத்திக் கிளறின.
நான் தார்ன்ஃவீல்டை யடைந்தேன். வழியில் நகரிலேயே யாரிடமாவது விவரம் உசாவியிருக்கலாம். ஆனால், கேட்க என் உள்ளம் கூசிற்று. யாரிடமும் பேசாமல் விரைந்து சென்று வீட்டின் முன்புறத்திலிருந்து அதன் வாழ்க்கை நிலையை உய்த்தறிந்தபின் உட்செல்ல எண்ணினேன்.
ஆனால், இல்லத்தை அணுகுமுன்பே அதன் காட்சி என்னைத் திகைக்கவைத்தது. முன்புறமும் பின்புறமும் உள்ளும் புறமும் எல்லாம் இடிந்து பொடிந்து, வெறும் பாழாகக் கிடந்தது. எங்கும் பற்றியிருந்த கரியும் தூசியும் அது தீக் கிரையாய் அழிந்த கட்டடம் என்பதைக் காட்டின. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மறைந்து பார்க்க வேண்டிய அவசிய மில்லாமலே உள்ளே சென்று எங்கும் சுற்றினேன். அங்கே கூடுகட்டியிருந்த சிலந்திகளும் பறவைகளுமல்லாமல் நிலை மையை விளக்க வேறு எவருமில்லை.
நான் வந்த வேகத்தைவிட இரட்டிப்பு வேகத்தில் நகருக்குத் திரும்பினேன். நகரும் ஓரளவு மாறியிருந்தது. ஆயினும் முன் நான் வந்து தார்ன்ஃவீல்டு இல்லம் பற்றி உசாவிய அதே அருந்தகம் சென்று உசாவினேன்.
‘தார்ன்ஃவீல்டு இல்லமா? ஏன்? என்ன வேண்டுமா?’ என்றான் ஒருவன்.
“அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எங்கே? அது இப்போது இந்நிலையிலிருப்பானேன்?”
“ஏன்! வீடுதான் எரிந்து விட்டதே! நீ அங்கே யாரைப் பார்க்க விரும்பினாய்? நான் அங்கே வேலை பார்த்தவன்தான். பெயரைச் சொன்னால் தெரிவிக்கிறேன்.”
“வீட்டின் தலைவர் திரு.ராச்செஸ்டர் என்ன ஆனார்? இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?”
’எட்வர்டு ராச்செஸ்டர் தாமே! அவர் இறந்திருந்தால் கூட அவருக்கு நன்றாகத்தானிருக்கும். எரிந்த வீட்டில் தீயின் வெப்புப்பட்டு அவர் கண் குருடாகிவிட்டது. அவர் இப்போது 30 கல் தொலைவிலுல்ள ஃவேர்ண்டீனில் ஒரு தோட்டப் பண்ணையில் சென்று மிகவும் துன்பத்துடன் காலங்கழிக்கிறார்."
அவர் நிலைகேட்டு நான் துடித்தேன். ஆனால், அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஆறுதல் அடைந்தேன். அவரைத் தேடப் புறப்படுமுன் அவரைப் பற்றிய முழு விவரமும் அறிய விரும்பினேன். முதலில் நான் கேட்ட கேள்வி, ‘திருமதி ராச்செஸ்டர் கூட இருக்கிறாளா?’ என்பதே.
“இல்லை, இறந்துவிட்டாள். அந்தப் பைத்தியந்தான் வீட்டுக்குத் தீயை வைத்துவிட்டுத் தானும் அத்தீக்கு இரை யாயிற்று. பாவம், தீ தன்னை எரிக்கிறது என்பது தெரியாமல் அவள் தீ எரியும் அழகைப் பார்த்துத் தாளம் போட்டுக் கூத்தாடிக் கொண்டிருந்தாள். தீயைக் கடந்து அவளைக் காக்க எவரும் துணியவில்லை. ஆனால், திரு. ராச்செஸ்டர் தீயின் நடுவிலேயே குதித்தோடி அவளைக் காப்பாற்ற முயன்றார். அப்போதும் அவளுக்குச் சிறிது அறிவிருந்தால் அவள் காப்பாற்றப் பட்டிருப்பாள். அவள் தீயைவிட்டு வெளியே வரமறுத்தாள்; தன் உயிரைப் பாராது தன்னைக் காக்க வந்த கணவனுடன் அவள் போராடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு வெளியே வருமுன் அவள் உடல் முற்றிலும் தீக்காயங்களுக்கு இரையாய் விட்டது. விரைவில் அவள் உயிர் நீத்தாள். ஆனால், அவள் பிடிவாதம் அவள் உயிருடன் நில்லாமல் திரு. ராச்செஸ்டர் கண்களையும் குருடாக்கி விட்டது.” எதன்று அவன் முழு விளக்கமும் தந்தான்.
திரு. ராசெஸ்டரின் கடுந்தவத்தின் பெருமையை எண்ணி நான் அவரைப் புறக்கணித்துச் சென்றதற்காக வெட்கமடைந்தேன்.
இப்போது என் ஒரே எண்ணம், ஒரே கவலை, திரு. ராச்செஸ்டரைத் தேடி அவர் இருக்குமிடம் செல்வதுதான்.
" ஃவேர்ண்டீனுக்குச் செல்ல இங்கே வண்டி கிடைக்குமா!" என்றேன்.
அவன் “என்னிடமே இருக்கிறது இதோ வருகிறேன்,” என்று கூறி அகன்றான்.
சிறிது நேரத்தில் அவன் வண்டியுடன் வந்தான். நான் ஃவேர்ண்டீனன் நோக்கிப் பயணமானேன்.
அமைதி
நான் ஃவேர்ண்டீன் சென்று சேரும்போது பொழுது சாய்ந்துவிட்டது. மழை சற்றே தூறிக் கொண்டிருந்தது. தோட்டத்தின் மங்கிய இருளினிடையே வீட்டின் சுவர்கள் மட்டும் வெள்ளை வெளேலென்று தெரிந்தது. அதன் வாசலில் ஓர் உருவம் நின்று கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்த்தது. அதன் நிலையிலிருந்து அது கண்பார்வை குன்றிய தென்று தெளிவாகத் தெரிந்தது. அதுதான் திரு. ராச்செஸ்டரா யிருக்க வேண்டும் என்று மதித்தேன்.
அவரைக் காண என் பெண் உள்ளம் ஒரு பாதி மலர்ந்தது. மறுபாதி அக்காட்சியைக் கண்டு வருந்திற்று. கண் தெரியாத அந்த நற்குணவாளனிடம் சென்று எப்படி என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் என் கால்கள் பின்தங்கின. ஆனால், முதலில் நான் அவரைச் சந்திக்கும்போது உடனிருந்த நாய் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைச் சுற்றிவந்து வால் குழைத்தது. மனிதர் அறிவும் குணமும் மாறினாலும் அப்பண்புகள் மாறாத நாயினத்தின் உயர்வை எண்ணி வருந்தினேன்.
நாய் மூலம் யாரோ தெரிந்தவர் வந்து நிற்பதாக மட்டுமே அவர் அறிந்தார். அது தன் பணியாள் ஆன ஜான்ஸனின் மனைவி மேரியே என்று கருதி, “போய் விளக்கு ஏற்றி வைத்து விட்டுத் தேநீர் கொண்டுவா”, என்றார். நான் இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணி அருகிலுள்ள மேரியின் குடிசைக்குச் சென்றேன்.
மேரியும் ஜானும் என்னை அடையாளம் கண்டு மகிழ்ந்து வரவேற்றனர். நான் அவர்களை வண்டியிலிருந்து என் பெட்டி படுக்கையைக் கொண்டுவர அனுப்பிவிட்டுத், தேநீரும் விளக்கும் கொண்டு சென்றேன்.
தேநீர் கொடுக்கும்போது என் கை நடுங்கிற்று. நாய் வேறு என்னை அறிமுகப்படுத்தும் ஆத்திரத்தில் கொஞ்சிக் குலவிற்று அவர் ஒன்றும் புரியாமல், “யார்? மேரி?” என்றார்.
“மேரி சற்று வெளியே சென்றிருக்கிறாள். நான் ஒரு விருந்தாளி,’ என்றேன். அவர்”ஆ, நான் கேட்பது கனவா, நனவா," என்றார். அவர் கைகள் என் கைகளைத் தேட முன்வந்தன. நான் என் கைகளை நீட்டினேன். அவர் அவற்றைப் பற்றிதும் “ஆ, என் ஜேன்! இறுதியில் என்னை மறக்காமல் பார்க்கவாவது வந்தாயா?” என்றார்.
“பார்க்க மட்டும் வரவில்லை. தங்களுடைனேயே இருந்து காலங்கழிக்க வந்தேன்” என்றேன்.
“உண்மையாகவா?” என்று கேட்டார்.
“ஆம். நான் எல்லாம் நகரில் வந்து உசாவி அறிந்து கொண்டேன். நான் முன்பே என் தன்மதிப்பை எண்ணியது தவறு. உங்களைக் கடுந்துயரில் விட்டு விட்டுச் சென்றேன். நீங்கள் அடைந்த துன்பங்கள் உங்களுக்கே உரியன அல்ல. அவை எனக்கு வரவேண்டிய தண்டனைகள். மொத்தத்தில் இறைவன் உங்கள் உயிரையாவது பாதுகாத்து எனக்கு அளித்ததனால் நான் பிழைத்தேன்,” என்றேன்.
மகிழ்ச்சியில் அவர் தம்மை மறந்தார். என் நலங்கள் முற்றும் உசாவினார். ஆனால், நான் என் புதிய வாழ்வைமட்டும் கூறவில்லை. அவர் கண்ணற்ற நிலையில் நான் அவரை என் வாழ்க்கைத் துணையாகத் தேறவேண்டாமென்று அவர் தடுத்துப் பார்த்தார். “நான் உங்களை என்றோ தேர்ந்தாய் விட்டது. நீங்கள் கண்ணிழந்தது எனக்காகவும் பெண்ணினத் திற்குரிய உங்கள் கடமைக்காகவுமேயாதலால், என் உள்ளத்தில் உங்கள் இடம் உயர்வடைந்து விட்டதன்றிச் சற்றும் குறை வடைய வில்லை,” என்று நான் கூறினேன். அதன்பின்னர் அவர் தமக்கு இப்போது வறுமையையும் ஏலமாட்டாமையும் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். நான் அப்போது என் புதுச்செல்வத்தின் செய்திகூறி, அவர் கவலைப்பட வேண்டா என்று ஆற்றினேன்.
எங்கள் திருமணம் ஒரு வாரத்துக்குள் ஜான், மேரி ஆகியவர்கள் துணையுடன் நடந்தேறியது. திருமணமானபின் ரிவர்ஸ் குடும்பத்தினருக்கும் திரு. பிரிக்ஸீக்கும் அழைப்பனுப்பி விருந்தளித்தோம். டயானாவும் மேரியும் ஜானுடன் வந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நான் இந்தியாவுக்குச் செல்லத் தயங்கிய காரணத்தைத் தூய திரு. ஜான் அறிந்தபோது அவர் என் பெருந்தன்மையையும், கடமை யுணர்ச்சியையும் காதலுறுதியையும் பாராட்டினார்.
சில நாட்களுக்குள் மகிழ்ச்சி காரணமாகவோ, என் பணிவிடையின் மேம்பாடு காரணமாகவோ, இறைவன் அருளாலே என் கணவர் ஒருநாள் திடுமெனக் கண்ணொளி பெற்றார். எங்கள் வாழ்வில் ஒளி புகுந்தது. திரு. மேஸன் கூடத் தம் தங்கையின் இறுதிநாளில் என் கணவர் அவளுக்காக எடுத்துக் கொண்ட பெருந்தியாகத்தைக் கேள்வியுற்று ஓடோடி வந்தது அவரைப் பாராட்டியதுடன், என்னையும் மனமார வாழ்த்தினார்.
அடேல் இப்போது பள்ளிக்குச் சென்று ஓய்வுள்ள நேரங்களில் என்னிடமே படித்து வருகிறாள்.
நீல வானையும் நிலாவையும் அழகிய மலர்களையும் மாநிலக் காட்சிகளையும் நான் என் இருகண்களாலும் மட்டுமன்றித் திரு. ராச்செஸ்டரின் இரு கண்களாலும் கண்டு களிக்கும் பேறுபெற்றேன். பழைய திருமதி ராச்செஸ்டரால் அவருக்கு ஏற்பட்ட குறைகள் என்னால் பெரிதும் மாற்றப் பட்டுவிட்டன என்றறிய நான் மகிழ்கிறேன். ஏனென்றால், தானறியாவிட்டாலும் பைத்தியத்தின் கோளாறினால் அவள் இழைத்த இன்னல்கள் அவர் பழைய வாழ்வில் உறுதி கொண்டிருந்தன.
வாழ்விலும் தாழ்விலும் ஒரு நிலைபட்ட அன்பின் ஆற்றல்போல் வாழ்வின் அமைதிக்கு உதவுவது வேறு எதுவுமில்லை. அதன் அமைதி என் வாழ்வில் ஒளிவீசுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக