புதிய தமிழ்ச் சிறுகதைகள்
சிறுகதைகள்
Back புதிய தமிழ்ச் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
Source:
புதிய தமிழ்ச் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட்
இந்தியா. புது டில்லி.
1984 (1906)
© உரிமை அந்தந்த ஆசிரியருக்கு
விலை: ரூ. 8-00
RECENT TAMIL SHORT STORIES (TAMIL)
Published by the Director,
National Book Trust, India,
A-5, Green Park, New Delhi-110016 and
printed at Sree Seva Mandir, 32, Bazullah Road, T.Nagar, Madras - 17.
--------------------
முன்னுரை
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுக்குப் பின் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு வளமூட்டிய படைப்புகளும் படைப்பாளிகளும் கொண்ட தொகுப்பு ஒன்றை அளிக்கும் முயற்சி இது.
இந்த இருபதாண்டுகளின் தொடக்கத்தில்தான் அணு ஆயுத யுத்தம் வந்தேவிட்டது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த ஆபத்து தற்காலிகமாக விலகியது என்றாலும் உலக அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியோர் எளியோரை நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தும் நிலைமை நீடிக்கத்தான் செய்கிறது. புதுப்பார்வை பெற்ற இளைஞர் சமுதாயம் உலகின் மனசாட்சிக்கு நெருக்கடி உண்டு பண்ணியது. ஆண்டாண்டு காலமாகப் பழக்க ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகள், கொள்கைகள், கோட்பாடுகள் கடுமையான மறுபரிசீலனைக்கு ஆளாயின. பல ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. உலகம் ஒரு புதிய ஒழுங்குக்கு வழிதேடத் தொடங்கியது.
இலக்கியவாதிகள் தீர்க்கதரிசிகள் என்ற கூற்று வெகு சாதாரணமாக வெகுகாலமாக ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று. ஆனால் இலக்கியத்தின் தன்மை அது காலத்துக்குச் சற்றுப் பின்தள்ளியிருப்பதுதான். ஒரு நிகழ்ச்சி அது நிகழ்ந்த உடனேயே இலக்கியமாகிவிடுவதில்லை. அதை ஊடுருவிப் பார்த்தறிய ஒரு குறைந்தபட்ச இடைவெளி தேவைப்படுகின்றது. தகவல் பரிமாற்றச் சாதனங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ் எழுத்துத் துறையிலும் நிகழ்ச்சிகளின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே பரபரப்புச் சிறுகதைகளும் கவிதைகளும் (நாவல்களும் கூட) நிறையவே தோன்றிவிடுகின்றன. ஆனால் அந்த நிகழ்ச்சியின் பரபரப்பு அமுங்கும்போது அந்த படைப்புகளும் அமுங்கிப்போய்விடுகின்றன. பரபரப்பை மட்டும் முக்கியமாகக் கொள்ளாமல் பரிணாமத்தின் ஒவ்வொரு காலத்திய சூட்சுமங்களைக் கலையுணர்வோடு வடித்துத் தருபவை என்று எனக்கு உறுதியாகத் தோன்றும் கதைகளில் சிலவற்றை இத் தொகுப்பின் அமைப்புக் கட்டுத்திட்டங்களுக்கு இணங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதே தொகுப்பு இன்னொருவர் தேர்வில் வேறு கதைகள், கதாசிரியர்கள் கொண்டிருக்கக் கூடும் என்றும் உணர்கிறேன்.
தமிழ்ச் சிறுகதைத் துறையின் பின்னணியை ஓரளவு கூர்ந்து பார்த்தால் 1960 அளவில் கூட இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய எழுத்தில் பிரதானமாயிருந்த ரொமாண்டிசிஸமும் இலட்சியவாதமும் தொடர்ந்து இருந்து வந்ததை உணரலாம். அந்நாளில் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் அனைவருமே இந்திய சுதந்திரத்திற்கு முன்பு மக்களிடையே நிலவிய ஒரு குறிப்பிட்ட இலட்சிய வேகத்தை மேலும் பிரதிபலிப்பதாகவே எழுதினார்கள். சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய இலட்சிய வேகத்தில் மேற்கத்திய வாழ்க்கை முறையம்சங்கள் இங்கு அப்படியே ஏற்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நம் நாட்டுப் பண்பாட்டுச் சிறப்பும் சம்பிரதாய வாழ்க்கை நெறியும் வலியுறுத்தப்பட்டன. பழைமையை அனுசரித்துப் போகும் இப்போக்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே மறுத்தவர்கள் இருந்தார்கள் எனினும், பொதுவாக மக்கள் உணர்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மறுப்பு வளர்ந்திருக்கவில்லை. மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்குப் பின் தமிழ் உரைநடையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, தமிழ்ச் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோர் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் முன்னேற்றப் போக்கை வடித்துத் தந்தார்கள். இவர்கள் பணியைத் தொடர்ந்து சம்பிரதாயக் கண்ணோட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற இயக்கம், இந்த நூற்றாண்டின் பின் பாதியின் துவக்கத்தில் தமிழ் வாசகர்களிடையே கணிசமான அளவு அறிமுகம் பெற்றது ஜெயகாந்தனால்.
ஜெயகாந்தனைப் போலவே இளம் வயதில் பிரபலமடைந்த தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஜெயகாந்தன் சிறந்த கதைகள் மட்டுமல்லாமல் காலத்திற்குத் தேவையான கருத்துகளை முன் வைத்தவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அவர் ஒதுக்கி விடுவதில்லை. தமிழ் எழுத்துலகில் யதார்த்த பூர்வமான சமுதாய மாற்றக் கருத்துகள் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெற வைத்ததில் ஜெயகாந்தனின் பங்கு கணிசமானது.
நவீன தமிழ் இலக்கியம் மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது வெகுஜனப் பத்திரிகைகளால் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் நல்ல இலக்கியம் வளர இதே பத்திரிகைகள் முட்டுக்கட்டையாகவும் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களைத் திருப்திப்படுத்துவதை முதற்கோளாகக் கொள்ள வேண்டியிருப்பதாலும் அதில் பெரும்பான்மையோர் தீவிர எழுத்துகளை ஏற்கத் தயாரில்லை என்று நினைப்பதாலும் எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து, கருத்துகளையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகின்றனர்; விற்பனைப் போட்டா போட்டியில் திருப்தியுடன் மட்டும் திருப்தியடையாமல் போதையூட்டுவது போலவும் கிளர்ச்சியூட்டுவது போலவும் பத்திரிகையை மாற்றிவிடவும் வேண்டி வருகிறது. இந்த போக்கில் முதலில் ஊனமுறுவது இலக்கியம்தான்.
இதில் உண்மையில்லை என்று இன்று யாரும் கூறிவிடுவதில்லை. ஆனால் வெகுகாலம் வரை பிரபலமடையும் எழுத்தே சிறப்பான எழுத்து என்ற எண்ணம் பல தமிழ்ப் பிரமுகர்களிடம் நிலவியது. இவர்கள் சமூக நிறுவனத்தின் தலைவர்களாகவும் இருந்ததால் தீவிர இலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுவது இன்னமும் கூர்மையடைந்திருந்தது. பத்திரிகை எழுத்து, தீவிர இலக்கியம் இவற்றின் வேறுபாடுகளை ஒரு சிறு வட்டம் வரையிலாவது நன்குணர்த்த அயராது பாடுபட்டவர்களில் க.நா.சுப்பிரமணியன் மிகவும் முக்கியமானவர். துர்ப்பலமான எழுத்துத்துறையை ஆரம்ப முதலே வாழ்க்கைச் சாதனமாக ஏற்றுக்கொண்டதோடு, அத் துறையிலே மிகவும் துர்ப்பலமான அம்சமாகிய தீவிர இலக்கியத்தையே அவர் சார்ந்திருந்தவர். நாவல், சிறுகதை, கவிதை முதலியன எழுதியதோடு விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வந்தார். முப்பது-நாற்பது-ஐம்பதுகளில் க.நா.சு.வுக்குப் பாதகமான முறையில் அவருடைய விமர்சனக் கட்டுரைகளும் அவர் தீவிர இலக்கியம், பத்திரிகை இலக்கியம் என்று பாகுபாடு செய்து குறிப்பிட்டதும் அமைந்தாலும் அறுபதுகள் தொடக்கத்திலிருந்து தமிழ் வாசகர்-எழுத்தாளர் மத்தியில் இப்பாகுபாடு பற்றிய சிந்தனை பரவலாகத் தோன்ற ஆரம்பித்தது. இதன் ஒரு விளைவு பல சிறு பத்திரிகைகளின் தோற்றம்.
க.நா.சு.வே சிறு பத்திரிகைகள் நடத்தினார். 'தாமரை', 'சரஸ்வதி', 'சாந்தி', 'கிராம ஊழியன்' ஆகியவை அந்நாளைய வேறு சில குறிப்பிடத்தக்க சிறு பத்திரிகைகள். சி.சு.செல்லப்பா, 'எழுத்து' எனும் பத்திரிகையைப் புதுக்கவிதைக்கு ஒரு தளம் அமைத்துத் தருவதாக நடத்தினார். அறுபதுகளில் தோன்றிய சிறுபத்திரிகைகளில் முக்கியமானவை கணையாழி, தீபம், நடை, ஞானரதம், கண்ணதாசன். எழுபதுகளில் கசடதபற எனத் தொடங்கி பல பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டி வரும். அறுபதுக்கு முற்பட்ட சிறு பத்திரிகைகளுக்கும் இந்த இருபதாண்டுச் சிறு பத்திரிகைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு, முந்தைய பத்திரிகைகளும் அவற்றின் ஆசிரியர்களும் பெருவாரி விற்பனையுள்ள பத்திரிகைகளும் அவை ஆதரிக்கும் எழுத்தும் போரிட்டு அகற்றக் கூடியதொன்று, அகற்ற வேண்டியதொன்று எனச் செயல்பட்டார்கள். இன்றைய சிறு பத்திரிகைகள், பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளை இந்தக் காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஏற்றிருப்பதையும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தம் மட்டில் தீவிர இலக்கியப் பணிகளில் ஈடுபடுவதை ஓர் எதிர்வினையாகக் கொள்ளாமல் சுயமாகச் செய்யவேண்டிய பணியாக நினைப்பதையும் காண முடிகிறது.
அறுபதுகளில் தொடங்கிய சிறு பத்திரிகை இயக்கம் ஆரம்பத்தில் ஏளனத்துக்குரியதாகத்தான் பெருவாரிப் பத்திரிகைகள் தயாரித்திருந்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது இச் சிறு பத்திரிகைகள் பற்றியும் அதில் ஈடுபட்டிருப்போர் பற்றியும் பெருவாரிப் பத்திரிகைகள் மிகவும் துச்சமாகக் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆனால், சிறு பத்திரிகைகள் இயக்கம் பெருவாரிப் பத்திரிகைகள் வாசகர்களைக் காட்டிலும் முன்னதாக அப் பத்திரிகைகளின் எழுத்தாளர்களிடமும் பாதிப்பு ஏற்படுத்தியது. சிறு பத்திரிகைக் கதைகளின் கரு, நடை, அழுத்தம், சிற்சில மாற்றங்கள் பெருவாரிப்பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்பட்டன. உருவம் பொருத்த வரையில் இன்று தமிழில் வெளியாகும் கதைகளில் பெரும்பான்மை தீவிர எழுத்துச் சாயல் கொண்டுதான் படைக்கப்படுகின்றன, பிரசுரிக்கப்படுகின்றன. ஆனால் உள்ளடக்கம், நோக்கம், அழுத்தம் போன்ற அம்சங்களில் விளைவு சாதகமாக உள்ளது என்று கூற முடியாது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் அடியெடுத்துவைத்திருக்கையில் இன்றைய தமிழ் பெருவாரிப் பத்திரிகைகளின் சிறுகதைகள் அனைத்திலும் அப் பத்திரிகைகளில் இடமே பெறாத தீவிர எழுத்தாளர்களின் சாயலைத் தவறாமல் காண முடிகிறது. சிறுகதையையும் ஒரு தொழில் விஞ்ஞான நுட்பத் துறையாகக் கருதினால் இதர டெக்னாலஜித் துறைகளைப் போலச் சிறுகதைத் துறையும் ஒரு காலகட்டத்தின் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவிவிடும் தொழில்நுட்ப அம்சமாகிவிட்டது. ஓர் ஆரம்ப எழுத்தாளனின் முதல் படைப்பில் கூட ஒரு குறைந்தபட்சத் தேர்ச்சியும் திறமையும் காண முடிகிறது. நல்ல கதை, நன்கு எழுதப்பட்ட கதை, என இனங் கண்டு பிரிப்பது கடினமாவதுடன் அத்தியாவசியமுமாகிறது.
புதுக் கதாசிரியர்களை அவர்கள் பொதுத்தன்மை குறித்து விவாதித்து வெளியிடப்பட்ட கருத்துகள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை; பல்கலைக்கழகங்களில் புது இலக்கியம் பாடமாகக் கற்பிக்கத் தொடங்கியும் புது நோக்குடன் வெவ்வேறு கால கட்ட எழுத்துகள் பற்றிச் சுலபமாகவும் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் அபிப்பிராயங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையில் க.நா.சு. தற்காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடம் ஒரு பொதுச் சரடு காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய எழுத்தாளர்களிடம் இருந்த இலட்சியவாதம் இப்போது மறைந்து போனதோடு மட்டுமல்லாமல் ஒருவித நம்பிக்கையின்மையும் இடம் பெற்றிருப்பதை உணர முடிகிறது என்றார் அவர். இன்று இன்னும் சில கருத்துகளும் கூற இயலும். எல்லாப் பிரச்னைகளையும் உள்ளடக்கியதாக அன்னியர் ஆதிக்கச் சுமை தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களின் ஆத்மாவை அன்று அழுத்தியது. பிரச்னைகளுக்கு அவற்றினூடே தீர்வு காண இயலுவதாக இன்றைய தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன. ஒரு பொது எதிரியை மனதில் வைத்து இயங்கியதால் தம் சமுதாயத்தினுள் உள்ள வேறுபாடுகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் அன்று அதிகம் பெரிது படுத்தப்படவில்லை. ஆனால் இன்றைய சிறுகதைகள் இவ்விஷயங்கள் குறித்துப் பகிரங்கமாக விவாதிக்கத் தயங்குவதில்லை. பிராந்திய வாழ்க்கை நுணுக்கமாகவும் விவரமாகவும் பிரதிபலிக்கப்படுகிறது. மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒர் எளிதான, கைக்கெட்டும் தொலைவிலுள்ள சர்வ வியாதி நிவாரணியாக விநியோகிக்கப்படுவதில்லை. பெண்கள் சம்பிரதாயக் கூட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பலவித பரிமாணங்கள் கொண்ட நபர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இப்போக்குகளைப் பெருவாரி விற்பனையுடைய பத்திரிகைகளில் கூட இன்று காணலாம்.
சிறு பத்திரிகைகளுடன் சில நூல் பிரசுரங்களும் கடந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டு பண்ணின. இவற்றில் முதலானதும் முக்கியமானதும் ஆகும் 'குருஷேத்திரம்'. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு நாடகம் ஆக மொத்தம் சுமார் நானூறு பக்கங்கள் கொண்ட இந்நூலை 1967-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில்வசிக்கும் நகுலன் என்ற எழுத்தாளர் தொகுத்து வெளியிட்டார். அதே ஆண்டில்தான் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது. தமிழ் மொழிக்கு வளமூட்டும் இவ்விரு நிகழ்ச்சிகளில் எது முதன்மையிடம் பெறும் என்று கூறுவது கடினம் என நினைக்கும் அளவுக்கு 'குருஷேத்திரம்' பிரசுரமானது தீவிர இலக்கிய அன்பர்களிடம் சலசலப்பு ஏற்படுத்தியது. இந்நூலில் பங்கு பெற்றவர் அநேகமாக அனைவரும் பெருவாரிப் பத்திரிகைகளில் இடம் பெறாதவர்கள். 'குருஷேத்திரம்’ வெளியானபோது இவர்களில் ஓரிருவரே நூல் வடிவத்தில் பிரசுரமானவர்களாயிருந்தார்கள். இருப்பினும் அந்தக்கால கட்டத்தின் புதுத்தமிழ் எழுத்தின் உன்னத எடுத்துக்காட்டாக ‘குருக்ஷேத்திரம்’ அமைந்திருந்தது. பிற்காலத்தில் பல பரிசோதனைப் பிரசுர முயற்சிகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியது. முழுக்க ஒரு தனிநபரின் முயற்சியும் தேர்வுமான ‘குருக்ஷேத்திரம்’ நவீன தமிழ் எழுத்தின் ஒரு மைல் கல்லாக நிலைபெற்றது.
‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருக்ஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்து ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டுறவு முயற்சியில் நூல் வெளிக் கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கிய கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது.
அரசியல் கலப்பற்ற எழுத்து சாத்தியமா? சம்பிரதாய இலக்கியப் பார்வைகளில் அரசியல் தனியாகக் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சோவியத் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பொதுவுடைமைக் கருத்துகளும் கோட்பாடுகளும் கவனம் பெறத் தொடங்கின. தமிழ் எழுத்தாளர்களிடமும் ‘நீங்கள் எந்தப் பக்கம்?’ என்றதொரு வினா ஐம்பதாண்டுகளாகவே நிலவி வருவதாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் சில சிறுகதையாசிரியர்கள் வெளிப்படையாகவே தமது கட்சி அரசியல் உறவுகளை அறிவித்துக் கொண்டனர். இலக்கிய விமரிசனத் துறையிலும் எழுத்தாளர்கள் அவர்களின் கட்சி கண்ணோட்டத்திலும், அவர்கள் எழுத்து தெரிவிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியின் அடிப்படையிலும் போற்றப்பட்டனர், அல்லது கண்டனம் தெரிவிக்கப்பட்டனர். பெருவாரிப் பத்திரிகைகள் இச் சர்ச்சையில் ஈடுபடாத நிலையிலும் சிறு பத்திரிகைகள் அணிவகுத்துக்கொண்டு தீவிரவிவாதங்கள் நடத்திக் கொண்டன. இவ் விவாதங்கள் நேரடியாகச் சிறந்த எழுத்தாளர்களையோ படைப்புகளையோ சாத்தியமாக்காத போதிலும் தமிழ்ச் சிறுகதைகளின் தளத்தையும் எழுத்தாளர் கவனத்திற்குப் பல புதிய நுட்பங்களையும் சேர்த்துக் கொடுத்தன. அதே நேரத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பப் பரிச்சயம் தொழில் நுட்ப விவரங்களைக் கதைகளில் பொருத்தி வைப்பதைச் சாத்தியமாக்கிற்று. பாட்டாளி மக்கள் கிராமவாசிகளின் வாழ்க்கை நுட்பங்கள் இடம் பெறத் தொடங்கியது போலவே இயந்திர நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், உயர்மட்டவாசிகள், கதாபாத்திரங்களாகி அவர்கள் மூலம் அதுவரை வாசகர்களுக்கு அறிமுகமாகாத பரிமாணங்கள் எடுத்தளிக்கப்பட்டன.
இந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறு கதைகள் பிற இந்திய மொழிகளில் நிறையவே மொழிபெயர்ப்புகள் மூலம் படிக்கக் கிடைத்திருக்கின்றன. ‘இண்டியன் கவுன்சில் ஃபார் கல்சரல் ரிலேஷன்ஸ்’ வெளியீடான ‘இண்டியன் ஹொரைஜன்ஸ்’ காலாண்டுப் பத்திரிகையில் பல தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் அராபிய மொழிகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இங்கிலாந்து பெங்குவின்ஸ் நிறுவனத்தாரின் ‘நியூரைட்டிங் இன் இந்தியா’ தொகுப்பு நூலில் மூன்று தமிழ்ச்சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. பல தேசிய தினப் பத்திரிகைகளும் வார-மாத இதழ்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் பல தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பல அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் தகவலும் இந்த இருபதாண்டுகளில்தான் அதிகம் தெரிய வந்திருக்கிறது. இது பரஸ்பரம் மக்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மட்டுமின்றி, தமிழ்ச்சிறுகதை உலக இலக்கிய அரங்கில் மதிக்கத் தக்கதொரு இடம் பெற்றிருப்பதையும் குறிக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே எக்காலத்துக்குமான தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத் தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது உறுதி.
சென்னை, செப்டம்பர் 19, 1980
அசோகமித்திரன்
-----------------------------------------------------------
பொருளடக்கம்
கிருஷ்ணன் நம்பி:
கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும், சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், சாது சாஸ்திரி என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதி வந்த திரு.அழகிய நம்பி 1976-இல் திடீரென நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது அவருக்கு 44 வயதே ஆகியிருந்தது. சாதாரண மனிதர்களைச் சாதாரண சூழ்நிலையில் பொருத்தி, மனித இனத்தின் அடிமனத்துத் தாபமும் சோகமும் பிரதிபலிக்க எழுதுவது இவருடைய சிறப்பு. ‘யானை என்ன யானை’ என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைத் தொகுப்பும், ‘நீலக்கடல்’ (1964), ‘காலை முதல்’ (1965) ஆகிய தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகளும் நூல் வடிவில் வெளிவந்துள்ள இவருடைய படைப்புகள். இவர் பிறந்தது நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த அழகிய பாண்டியபுரத்தில் (24-7-1932). இங்கே சேர்க்கப்பட்டுள்ள கதை இவர் கடைசியாக எழுதியவற்றுள் ஒன்று.
மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது.
சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கைரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.
மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால் படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!
மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன், ஸாது. தகப்பன் வேலைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் போட்டுக் கொடுத்துவிட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா?
ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக்கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கை மணம். வெறும் வற்றல் குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால் கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும். (மாமியார்கள் எப்போதும் ஏதேனும் குற்றம் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்துவதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் தானே.)
ருக்மிணிக்கு பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் நெஞ்சு வலிக்கும் என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்வதுண்டு. ஆனால் பலரும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது, பதில் பேசவும் கூடாது. ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம். நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும். இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகிவிட்டது. மேலும், கல்யாணத்துக்கு முன்பே ருக்மிணிக்கு லேசாக மார்வலியும் இறைப்பும் உண்டு. டாக்டர்கள் அவளைப் பரிசோதித்திருந்தால் ’டிராபிகல் ஈஸ்னோபீலியா’ என்றிருப்பார்கள். ஆனால் ஏன் அப்படிப் பரிசோதிக்க வேண்டும்? வைத்தியம் செய்கிறேன் என்று வருகிறவர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குக் காசு ஒன்றுதான் குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? அவள் வயசு என்ன? அநுபவம் என்ன? ஒரு குழந்தை பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லிவிட்டாள். அவள் மட்டுமல்ல; டாக்டரிடம் போவதற்கு இங்கு யாரும் சாகக் கிடக்கவில்லையே?
மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உட்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீ ராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.
ருக்மணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, ‘பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்’ என்று மீனாட்சி அம்மாள் அட்சரச் சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவதுபோல் தோன்றும் ருக்மிணிக்கு. மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. (ரொம்பவும் பொறுக்க முடியாமல் போய், யாரும் அறியாதபடி ருக்மிணி அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில்தான்.)
மருமகள் என்று வருகிறவர்களின் வாயைக் கிளறி எதையாவது பிடுங்கிக்கொண்டு போய் மாமியார்க்காரிகளிடம் கோள்மூட்டிச் சண்டை உண்டாக்கி வேடிக்கை பார்க்காவிட்டால் ஊர்ப் பெண்களுக்குத் தூக்கம் வராதல்லவா? ஆனால் ருக்மிணியிடம் அவர்கள் வித்தைகள் எதுவும் செல்லுபடியாகாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. சதா வீட்டோடு அடைந்து கிடக்கும் போது அவள் எப்போதாவது கோவிலுக்கோ குளத்துக்கோ அனுப்பப்படும்போது, அவளை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடிய பெண்கள் இப்போது ஓய்ந்து, ‘இந்தப் பெண் வாயில்லாப் பூச்சி’ என்று ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள்.
இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது, “மாட்டுப் பெண் எப்படி இருக்கா?” என்று துளைக்கிறவர்களிடம், “அவளுக்கென்ன, நன்னார்க்கா” என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். “அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்?” என்பார்கள் ஊர்ப் பெண்கள், ஒருவித அசூயையுடன்.
தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், “ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?” என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?” என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?” என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட் டது. "பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு" என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.
காலையில் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவும் மதியத்துக்கு மேல் ரொம்பச் சுறுசுறுப்பாகவும் இருந்தது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டாள். வீட்டிலிருந்து கூப்பிடுகிற தூரத்தில் ஆற்றுக்குப் போகிற வழியில் இருக்கிற தொடக்கப் பள்ளிதான் சாவடி. ராமலிங்கம் குளித்து விட்டுத் திரும்புகிற வழியில் ஆட்கள் பிடித்திழுக்க, ஈரத் துணியோடு அவன் வோட்டளிக்கும்படி ஆயிற்று.
மத்தியான்ன உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாட்டு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள் தாழ்வாரத்து நிலைப்படியில் தலை வைத்து படுத்துக் கிடந்தாள். ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அது சுமட்டுக் கட்டுக்கு ஒரு கட்டுப்புல் தின்று தீர்த் திருந்தது. அது குடிப்பதையும் தின்பதையும் பார்த்துக்கொண்டே இருப்பது ருக்மிணியின் மிகப் பெரிய சந்தோஷம்; மாமியாரின் அதிகார எல்லைகளுக்கு வெளியே கிடைக்கிற சந்தோஷம். "சவமே, வயத்தாலிக் கொண்டே எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங் காது" என்று பொய் கோபத்துடன் அதன் நெற்றியை செல்லமாய் வருடுவாள். மாடுன்னு நெனைக்கப்படாது, மகாலக்ஷ்மியாக்கும்! ஒரு நாழி கூட வயிறு வாடப்படாது; வாடித்தோ கறவையும் வாடிப் போயிடும். கண்ணும் கருத்துமாக் கவனிச்சுக்கணும்" என்பது மீனாட்சி அம்மாளின் நிலையான உத்தரவு. "பசுவே நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு! " என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. அவளுக்குச் சிரிப்புச் சிரிப் பாய் வரும். அதன் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப் பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம். அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள் மேல் ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். " நான் இன்னிக்கு ஓட்டு போடப் போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. சொல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லியா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதுமாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா அதவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளியைக் கண்டாலே ஆகாது.”
வாளியில் தண்ணீர் தணிந்து விடவே, குடத்திலிருந்து மேலும் தண்ணீரைச் சரித்துத் தவிடும் அள்ளிப் போட்டாள். அதற்குள் பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக்கொண்டு அப்படியே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்கவே, எரிச்சலுடன் அதன் வாயிலிருந்து வைக்கோலை அவள் பிடுங்கி எறியவும், வாளி ஒரு ஆட்டம் ஆடித் தண்ணீர் சிந்தியது. “சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா, அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்” என்று அதன் தாடையில் ஒரு தட்டுத் தட்டினாள். அது இடம் வலமாய்த் தலையை ஆட்டி அசைக்க, தவிட்டுத் தண்ணீர் பக்கங்களில் சிதறி ருக்மிணியின் மேலும் பட்டது. அவள் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
பசு இப்போது தண்ணீரை உறியாமல் வாளியின் அடியில் வாயைத் தணித்து, பிண்ணாக்குக் கட்டி ஏதாவது கிடைக்காதா என்று துழாவ, தண்ணீரின் மேல்மட்டத்தில் காற்றுக் குமிழிகள் சளசளவென வெளிப்பட்டன. மூச்சு முட்டிப் போய் முகத்தைச் சடக்கென அது வெளியே எடுத்து, தலையை மேல்நோக்கி நிமிர்த்தி, முசுமுசென்றது. அதன் முகத்தைச் சுற்றி விழுந்திருந்த தவிட்டு வளையத்தைப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. “கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போறாது. எனக்குக் கொழந்தை பொறந்தப்புறமும் இப்படியே நெறயக் கறந்துண்டிருக்கணும். எங் கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேண்டாமா? ஒங் கொழந்தை குடிக்கற மாதிரி எங் கொழந்தையும் ஒம் மடீல பால் குடிக்க சம்மதிப்பியோ? எங்காத்துக்காரர் சொல்றாப்லே, எனக்குத் தான் மாரே கெடையாதே. மார்வலிதான் இருக்கு. மாரில்லாட்டாப் பாலேது? ஆனா நிச்சியமா எனக்கும் கொழந்தை பொறக்கத்தான் போறது. பெறப் போறவள் எங்க மாமியார் சொல்றாப்லே, எப்பவாவது ஒரு தரம் படுத்துண்டாலும் பெறத்தான் செய்வாள். பெறாதவ என்னிக்கும் பெறப் போறதில்லே. யுத்தத்திலே செத்துப் போனானே எங்கண்ணா மணி, அவன்தான் எனக்குப் பிள்ளையா வந்து பொறக்கப் போறான். தெரியுமா ஒனக்கு? கொம்பக் கொம்ப ஆட்டு. ஓரெழவும் தெரியாது ஒனக்கு. நன்னாத் திம்பாய்!” பசு பொத் பொத்தென்று சாணி போட்டு, ஒருகுடம் மூத்திரத்தையும் பெய்தது. உடன் அவளே அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டுபோய்ச் சாணிக் குண்டில் போட்டுவிட்டு வந்தாள். புல்தரையில் கையைத் துடைத்து விட்டு, மிகுந்திருந்த தண்ணீருடன் வாளியையும் குடத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். பசு அவலை நிமிர்ந்து பார்த்து, ‘ம்மா’ என்று கத்திற்று. “போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக்குட்டியைக் குடிக்க விடறேன். மணி மூணு கூட இருக்காதே. அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?” பால் கட்டி மடி புடைத்துக் காம்புகள் தெறித்து நின்றன.
மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டுக்குள் வந்தாள். “சரி, சரி, தலய ஒதுக்கிண்டு, நெத்திக்கிட்டுண்டு பொறப்படு” என்று மாமியார் முடுக்கவும், ருக்மிணி அலமாரியைத் திறந்து சிறிய சிறிய பச்சைப் பூக்கள் போட்ட ஒரு வாயில் ஸாரியைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு மறைவுக்காக ஓடினாள். முகத்தின் மூன்றில் ஒரு பங்கு தெரிகிற கையகல வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, சீப்பு சமயத்துக்குத் தட்டுப்படாமல் போனதால் விரல்களாலேயே முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, நெற்றியில் ஏதோ ஒரு இடத்தில் குங்குமம் வைத்துக் கொண்டு வாசல் பக்கத்துக்கு ஓடோடியும் வந்தாள். வந்திருந்த பெண்களில் ஒருத்தி மீனாட்சி அம்மாள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, “ஏண்டி, எம்பிட்டு நேரம்டீ?” என்று கேட்கவும் ருக்மிணிக்குத் துணுக்கென்றது. “தலயக் கூடச் சரியா வாரிக்காமன்னா ஓடிவரேன்” என்று அவள் அடைக்கிற குரலில் பதில் சொல்லி முடிப்பதற்குள், “சரி, சரி, கிளம்புங்கோ!” என்று எல்லாரையும் தள்ளிவிட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, “இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ” என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, “ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா, பூனப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத போ” என்றாள்.
சாவடி அமைதியாக இருந்தது. பல வளைவுகளுடன் ஒரு பெண் வரிசையும் சற்று நேராக ஓர் ஆண் வரிசையும். பெண் வரிசையின் நீளம் சிறிது அதிகம். வர்ணங்கள் நிறைந்த பெண் வரிசை மலர்கள் மலிந்த ஒரு கொடி போலவும் ஆண் வரிசை ஒரு நெடிய கோல் போலவும் தெரிந்தன. வோட்டளித்து வெளி வந்த சில ஆண் முகங்களில் தந்திரமாய் ஒரு காரியம் நிகழ்த்தி விட்ட பாவனை தென்பட்டது. ஒரு சாவுச் சடங்கை முடித்து வருவது போல் சில முகங்கள் களையற்று வெளிப்பட்டன. அநேகமாய், பெண்கள் எல்லாருமே மிதமிஞ்சிய, அடக்கிக்கொள்ள முயலும் சிரிப்புகளுடன், பற்களாய் வெளியே வந்தனர். ருக்மிணிக்கு ரொம்பச் சந்தோஷம். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.
அந்தப் பள்ளிக் காம்பவுண்டுக்குள் செழிப்பாக வளர்ந்து நின்ற வேப்பமரங்களை அவள் மிகவும் விரும்பி நோக்கினாள். வெயில் மந்தமாகி, லேசுக் காற்றும் சிலுசிலுக்க, அது உடம்பை விட மனசுக்கு வெகு இதமாக இருப்பதாய் அவள் உணர்ந்தாள். கண்ணில் பட்டதெல்லாம் அவளைக் குதூகலப்படுத்திற்று. ' இன்னிக்கு மாதிரி என்னிக்காவது நான் சந்தோஷமாக இருந்திருக்கேனா?' என்று அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ஆ! அதோ அனிசமரம்! ஒருகோடியில், ஒரு கிணற்றடியில் ஒற்றைப்பட்டு அது நிற்கிறது. அது அனிசமரந்தானா? ஆம், சந்தேகமே இல்லை. வேம்பனூரில்தான் முதல் முதலாக அவள் அனிசமரத்தைப் பார்த்தாள். அதற்குப் பின் இத்தனை வருஷங்களில் வேறு எங்குமே அவள் பார்க்கவில்லை. உலகத்தில் ஒரே ஒரு அனிசமரந்தான் உண்டு; அது வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவள் இவ்வூரில் இன்னொன்றைக் கண்டதும் அதிசயப்பட்டுப் போனாள். ஒருகால் அந்த மரமே இடம்பெயர்ந்து இங்கே வந்துவிட்டதா? ஆ! எவ்வளவு பழங்கள்! ருக்மிணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அனிசமரம், அனிசமரம் என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. அனிச்சம்பழம் தின்று எவ்வளவு காலமாகிவிட்டது! அதன் ருசியே தனி!
வேம்பனூரில் அவள் ஐந்தாவது வரை படித்தபோது எத்தனை பழங்கள் தின்றிருப்பாள்! கணக்கு உண்டா அதற்கு? பையன்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவள் மரத்தில் ஏறுவாள். இரு தொடைகளும் தெரியப் பாவாடையைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொள்வாள். மரம் ஏறத் தெரியாத அவளுடைய சிநேகிதிகள், 'ருக்கு எனக்குப் போடுடி, எனக்குப் போடுடி' என்று கத்தியபடி கீழே அண்ணாந்து நிற்க, மரத்தின் உச்சாணிக் கிளைகளில் இருந்த படி பழம் தின்று கொட்டைகள் துப்பி மகிழ்ந்ததை நினைத்தபோது அவளுக்குப் புல்லரித்தது. கண் துளிர்த்தது. புளியங்கொட்டை ஸாரும் சள்சள் ஸாரும் ஞாபகம் வரவே அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. பாவம், அவர்கள் எல்லாம் செத்துப் போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் சின்னவளாகிப் பள்ளிக்குப் போக முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு!
மரங்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்ககவில்லை. அந்த அனிச மரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது. கிளை மேலும் கீழுமாக ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! 'கிளியே வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்பே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால் என் மாமியாரிடம் போய்ச் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா? என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய, சொல்லு? சரி, இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கள் வீட்டுக்கு வாயேன். நீ எப்போது வந்தாலும் என்னைப் பார்க்கலாம். மாட்டுத் தொழுவத்தில் தான் இருப்பேன். இப்போது வரச் சௌகரியமில்லை என்றால் பின் எப்போதாவது வா. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு வந்தாயானால் ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். என் குழந்தையும் உன் அழகைப் பார்ப்பான் அல்லவா? வரும்போது, கிளியே, குழந்தைக்குப் பழம் கொண்டு வா!'
ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளைக் கண்டவள் இல்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே! ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்துகொண் டிருந்தது. அவளுக்கு முன்னால் எட்டொன்பது பேர் பெண்கள். தான் அறைக்குள் பிரவேசித்ததும் வேற்று ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும் ஒரு வகை மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணிற்று. யாரையும் நிமிர்ந்து பாராமல், சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரமாக எண்ணிக்கொண்டு முன் நகர்ந்தாள்.
இளம் கறுப்பாய் மயிர் இன்றிக் கொழுகொழுவென இரு கைகள், ஒரு நீள் சதுர மேஜையின் மேல் காகித அடுக்குகள், சிவப்பு, மஞ்சள் பேனா பென்சில்களுக்கிடையே இயங்க, அவளுக்கு ஒரு வெள்ளைச் சீட்டு நீட்டப்பட்டது. யார் யாருடையவோ காலகள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளிட்டன. ஒரு நாணயம் தரையில் விழுந்த சத்தம் காதில் விழுந்தது. கடைசியில் ஒரு ஸ்கிரீன் மறைப்புக்குள் எப்படியோ தான் வந்துவிட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. 'ஸ்வாமி, என்ன அவஸ்தை இது!' பற்கள் அழுந்தின. 'ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே' என்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் 'ம்மாம்மா' என்று அவள் செவி களில் அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறு வானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையை பற்றவும், திடுக்கிட்டு, 'யாரது?' என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால் அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜந்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கை தான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்து விட்டது. ஆ! ருக்மிணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு! பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக் காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், "ருக்கு, யாருக்குடி போட்டே?" என்று ஒருத்தி கேட்க, "எங்க மாமியாருக்கு" என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்து வெளிப்படவும் கூடி நின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னை விடவும் மார்பு வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
-------------------------
அம்பை:
எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட 'அம்பை'யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம் புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகி யுள்ளன. 'அந்தி மாலை' (நாவல், 1966), 'நந்திமலைச் சாரலிலே' (குழந்தைகள் நாவல், 1961), 'சிறகுகள் முறியும்' (சிறுகதைகள், 1976) - இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். 'தங்கராஜ் எங்கே?' என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.
முகவரி : Flat 9, Dutt Kutir, Plot 20/12, Wadala, Bombay - 400 031.
மிலேச்சன் - அம்பை
ஊரின் ஒதுக்குப்புறத்தில், பிறரின் தொடல்களுக்கு அருகதையற்ற கீழ்ஜாதி ஆத்மாவாய்த் தன்னை உணர்ந்தான் சாம்பு அந்த இடத் தில்; அந்தச் சமயத்தில்.
அவனைச் சுற்றிலும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவன் பங்கேற்காததைப் பற்றிக் கவலைப்படாத பேச்சு. அவன் அங்கே யிருந்த நாற்காலிகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஸவிதா, அவ ளுக்கும் அவள் பெற்றோர்களுக்குமிடையே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள், காலை சிற்றுண்டி யின் போது. "அவர்களுக்கு நான் பெரிய பிசினஸ் எக்ஸிக்யூடிவைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை. எனக்கு அப்படியில்லை. அறிவு பூர்வமாக நான் ஒருவனை விரும்பவேண்டும். அவனுக்கு மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கத் துடிப்பு இருக்க வேண்டும்."
அவனுக்கு ஏனோ அவன் தங்கை இந்துவின் நினைவு வந்தது. ஸவிதா, உனக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. உன் அப்பா பெரிய வர்த்தகர். ஓர் அறிவு ஜீவியை நாடக்கூட உன் போன்ற வர்களுக்குத்தான் உரிமை. ஆனால் இந்து? அவள் காலையில் எழுந்து அம்மாவிடம் ஆயிரம் திட்டுகள் கேட்டவாறே இயங்கி, அவளே கஞ்சி போட புடைவை ஒன்றை உடுத்தி, குட்டி டிபன்பாக்ஸில் மத்தியான்னத்துக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள். பஸ்ஸில் இடம் விடும் முதல் ஆள் அவள் கவனத்தைக் கவர்ந்துவிடுவான். புன்சிரிப்புப் பூக்கும். அவள் மனம் குளிர ஓர் ஆண் முகம் போதும். தர்க்கரீதியாக இயங்குவது இல்லை அவள் மனம். அவள் வெறும் உணர்ச்சிகளின் கலவை. தியாகம், பாசம், தூய்மை, தேசபக்தி, அன்பு, காதல் போன்ற சொற்கள் அவள் மனத்தின் தந்திகளை மீட்டுபவை. அவளிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவள் மிரண்டுவிடுவாள். காலம் காலமாய் அவள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத, இருந்து பழக்கமில்லாத உரிமை அது. அவள் காதலித்தாலும் சினிமா கூட்டிப் போக, புடைவைகள் வாங்கித் தர, அடிக்காமல் அன்பு செலுத்த (அப்பாவிடம் வாங்கிய பெல்ட் அடிகளின் எதிரொலி) ஒருவனைத்தான் காதலிப்பாள். கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்றுச் சினிமாப் பார்க்கும் திருப்தியிலும் பண்டிகைகள் கொண்டாடும் பக்தியிலும் வாழ்க்கையைச் செலவழித்து விடுவாள். தனக்கு நிராகரிக்கப்பட்டது எது என்பதை அவள் அறியமாட்டாள். அந்த மட்டும் திருப்தி. அவன் அதை உணரும்போதுதான் சிக்கல்கள்.
"மதராஸி இன்று ரொம்ப யோசிக்கிறார்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சிரித்தாள் ஸவிதா. புன்னகை செய்தான் சாம்பு.
"ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவியைப் பற்றி என்ன நினைக்கிறாய் சாம்பு?" என்று கேட்டாள் ஆங்கிலத்தில்.
"நான் கூட ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவி தான். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்றான் பதிலுக்கு.
அவள் கடகடவென்று சிரித்தாள்.
"நல்ல ஜோக்" என்றாள்.
"ஏன்?" என்றான்.
"உன் கொள்கை என்ன?" என்றாள் உதடுகளை மடக்கிச் சிரித்தபடி.
"உன்னைப் போன்ற ஓர் அறிவு ஜீவியை மணப்பதுதான்" என்றான் பட்டென்று.
அவள் திடுக்கிடவில்லை. ஒரு நாளில் பத்து முறைகளாவது இவளை மணக்க விரும்புவது பற்றித் தெரிவிக்கும் ஆண்கள் அவள் தோழர்கள். சாம்பு சொன்னதுதான் அவளை வியப்பில் ஆழ்த்தியது.
"குடித்திருக்கிறாயா இத்தனை காலையிலேயே?" என்றாள்.
சாம்பு மேஜையை விட்டு எழுந்தான்.
சென்னை வீதிகளில் உலவும் மனிதர்களை வெறுத்து, மூச்சு முட்டும் அதன் கருத்துகளைப் பகிஷ்கரித்து அவன் டில்லியை வந்தடைந்தான். ஒரு நாள் விடிகாலை, எம்.ஏ. பரீட்சை முடிந்த நிம்மதியில் நடக்க அவன் கிளம்பினான் சென்னையில். கோலம் போட்டவாறே அவனை ஊடுருவி நோக்கும் சந்தியா; (காதலை அவள் நம்புகிறாள், மடப்பெண்!) வயதுக்கு வந்துவிட்ட தன் பேத்தியை மனத்தில் இருத்தி அவனை நோக்கும் எதிர் வீட்டுத் தாத்தா; யுகம் யுகமாய்ச் சிகரெட் கடன் தந்த பெட்டிக்கடை நாயர்; தெரு ஓரத்தில் எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மண்ணில் புரண்டு, சேற்றில் உளைந்து பக்கெட் பக்கெட்டாய் மூத்திரம் கொட்டும் எருமை மாடுகள்; வளைந்து குறுகி, பின் அகன்று மீண்டும் சுருங்கிக்கொண்ட, கோலங்கள் பூண்ட அந்த வீதி - எல்லாமே அந்த விடிகாலை வேளையில் ஓர் அந்நியக் கோலம் பூண்டன. திடீரென்று பெருங்கரம் ஒன்று அவனைத் தூக்கி அங்கே கொண்டுவந்து நிறுத்தியது போலத் தோன்றியது. அவன் சாம்பமூர்த்தி அல்ல. கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா போல், ஒரு மிலேச்சனின் கண்களோடு அந்த வீதியை நோட்டமிட்டான். அவனுக்கு மூச்சு முட்டியது.
அவனுக்குரிய இடமில்லை அது என்று தோன்றியது.
பாராகம்பாத் தெரு மரங்களின் நிழலில், இந்தியா கேட்டின் பரந்த புல்லில் பி.எச்டி பட்டத்துக்குப் படிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனையில் தன்னைக் கலந்துகொள்ள அவன் முயன்றான்.
"ஹலோ சாம்பு! இன்னிக்கு வராய் இல்லையா?" மணி கேட்டான். "எங்கே?"
"இன்னிக்கு ஸ்டிரைக். காம்பஸுக்குப் போகணும்." "எதுக்காக ஸ்ட்ரைக்?" "விலைவாசி ஒசந்ததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க."
"அரிசி என்ன விலை விக்கறதுன்னு தெரியுமா உனக்கு? டேய், பீர் விலை ஒசந்ததுன்னாதானேடா உனக்கு உறைக்கும்?"
"இதோ பாரு. உன்னோட பேச எனக்கு நேரமில்லை. நான் பிஸியா இருக்கேன். வரயா இல்லையா?"
"வரேன்."
"விலைவாசியை இறக்கு."
"இந்திரா ஒழிக."
"மாதாஜி முர்தாபாத்."
"டவுன் வித் ப்ளாக்மார்க்கடியர்ஸ் அண்ட் ஹோர்டர்ஸ்."
"சாம்புவைப் பாரேன். என்ன ஆக்ரோஷமாய்க் கத்தறான்."
"இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லேதான் ஒருத்தனோட அடங்கிக்கிடக்கிற மூர்க்கத்தனம் வெளியே வரது. கூட்டத்திலே அவன் ஒருத்தன் ஆயிட்டான் இல்லையா?"
சாம்பு பக்கத்தில் வந்தான்.
"காலையில் என்ன சாப்பிட்டாய்?"
"என்ன விளையாடறயா?"
"சொல்லு."
"முட்டை டோஸ்ட், ஜாம், காஃபி, வாழைப்பழம்."
"பயத்தம்பருப்புக் கஞ்சின்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"ஏன்?"
"அதுதான் எங்க வீட்டுலே கார்த்தாலே சாப்பிட. மிராண்டா ஹவுசில் படிக்கிறாளே உன் தங்கை, கெரஸின் க்யூன்னா என்ன, அதுலே நிக்கற அநுபவம் எப்படீன்னு தெரியுமா அவளுக்கு?"
"நீ சொல்றது தப்பு, சாம்பு. ஒரு விஷயத்தைப் பற்றி என் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கஷ்டப்படறவனை நான் பார்த்து அதைப் புரிஞ்சுண்டாப் போதும். நானே அதை அநுபவிக்க வேண்டிய அவசியமில்லை. கான்ஸரை ஆபரேஷன் செய்யற டாக்டர் அதோட கொடுமையைப் பார்த்துப் புரிஞ்சுண்டாப் போதும் - அவனுக்கே கான்ஸர் வரவேண்டிய அவசியம் இல்லை."
"இது வியாதி இல்லை."
"இதுவும் ஒரு வியாதிதான், சமூகத்தைப் பீடிக்கிற வியாதி."
"அப்படியே வைச்சிப்போம். நான் அதை அநுபவச்சிருக்கேன்."
"என் சின்னத் தம்பிக்குத் தூங்கறப்போ கதை சொல்லறச்சே, 'அதுதான் ராமராஜ்யம் ஒரே பாலும் தேனும் ஓடும், ரத்னங்கள் வீட்டுலே இறைஞ்சு கிடக்கும்' அப்படி எல்லாம் சொன்னா, ராம ராஜ்யத்துலே கெரோஸின் நிறையக் கிடைக்குமோ அப்படீன்னு அவன் கேள்வி கேக்கறப்போ எந்தப் பின்னணியிலேந்து அது பொறந்ததுன்னு எனக்குப் புரிகிறது. அம்மா கரண்டியைச் சாதத்துலே வெக்கறபோதே ரொம்பச் சமத்தா 'அம்மா, எனக்குப் பசிக்கலே; ஒரே ஒரு கரண்டி போதும்'னு என் கடைசித் தங்கை சொல்லறபோது அரிசி விளைவோட பாரம் என் நெஞ்சிலே ஏறிக்கறது."
பக்கத்தில் நின்றவாறு சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ஸவிதா பெரிதாகச் சிரித்தாள்.
கோஷங்கள் மாலையில் முடிந்தன.
மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ஆரதி பானர்ஜி அவனுடன் நடந்து வந்தாள். மென்குரலில் ஆங்கிலத்தில் கூறினாள்.
"உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். ஏனென்றால் நீங்கள் கூறும் அநுபவங்கள் என் வீட்டில் புதிதல்ல" என்றாள்.
"நீ பி.எச்டி. செய்யாமல் வேலைக்குப் போயிருந்தால் உன் வீட்டிற்கு அது பயன்பட்டிருக்கும் இல்லையா?"
அவள் புன்னகை செய்தாள்.
"ஆமாம். ஆனால் என் கனவுகள் என்னை இங்கே அழைத்து வந்தன."
"எந்த மாதிரிக் கனவுகள்?"
"மூன்று வருடங்களில் பி.எச்டி. முடித்துவிடலாம். பின்பு பெரிய வேலை. ஒருவேளை என் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க ஒரு பணக்காரக் கணவன் கூடக் கிடைக்கலாம். நிஜத்தில் நடந்தது வேறு. பி.எச்.டி.யின் முடிவில் கூடிய வயதும் மனம் பிடிக்காத வேலையும் நித்தியக் கன்னி பட்டமுந்தான் எஞ்சும் போல் இருக்கின்றன."
"உன் மனசுக்குப் பிடித்த யாரும் இங்கில்லையா?"
அவள் அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். பட்டென்று சொன்னாள்: "என்னிடம் உள்ள மொத்த புடைவைகள் ஐந்து."
"புரியவில்லை."
"ஓபராய் போய்க் காஃபி குடிக்கவோ, அக்பர் ஹோட்டல் போய்ச் சாப்பிடவோ அணிந்துகொள்ளக் கூடிய புடைவைகள் என்னிடம் இல்லை. பெரிய ஹோட்டல்களில் நுழைந்தவுடனேயே என் கண்கள் விரிந்து நாவடைத்துப் போய் விடுகிறது. என் முந்நூறு ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் நூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். மரியாதைக்குக் கூட என்னால் எங்காவது வெளியே போனால் 'நான் பில் தருகிறேன்' என்று சொல்ல முடியாது. எனக்கு இந்த மனநிலையில் ஏற்படும் எந்த அன்பும் காதல் என்ற பட்டம் பெற முடியாது. அது சுயநல எண்ணங்களோடு திட்டமிட்டுப் பின் நடைமுறையில் செய்யப்படும் வியாபாரந்தான். காதல் என்ற சொல்லுக்கே நம் வாழ்க்கை முறையில் இடம் இல்லை. இது குறிப்பிட்ட சிலரின் ஏகபோக உரிமை."
"ம்."
"ஒரு நிமிஷம்" என்று அப்பால் சென்றாள்.
"ஏய் சாம்பு, ஆரதியிடம் ஜாக்கிரதை. அவள் ஒரு கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். விழுந்து விடாதே."
பின்னால் கனைத்தாள் ஆரதி.
"ஆரதி, நான் ஒன்றும்..."
"பரவாயில்லை கோவிந்த். நீ டெல்லியின் நாற்றச் சந்துகளில், விளக்குக் கம்பம் புடைவை கட்டிக்கொண்டு வந்தால் கூடப் பின்னால் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். நான் உன்னை விடத் தேவலை இல்லையா?"
கோவிந்துக்குப் பலமான அடிதான்.
அதன்பின் மௌனமாகவே நடந்தனர்.
ஹாஸ்டலில் இந்துவின் கடிதம் வந்திருந்தது.
‘வைரத் தோடாம் அண்ணா. அப்பா முடியாது என்று கூறிவிட்டார். அண்ணா நீ பி.எச்டி. முடித்ததும் நமக்கு இந்த மாதிரி தொல்லை இல்லை. நீ புரொபஸராகிவிடுவாய். அண்ணா நீ நன்றாகப் படி. எனக்கு ஆஃபிஸில் வேலை ஜாஸ்தி. புது ஆஃபீஸர் ரொம்ப டிக்டேஷன் தந்துவிடுகிறார். நாங்கள் எல்லாருமாக ‘நேற்று இன்று நாளை’ போனோம். எனக்குப் பிடித்தது.”
இந்து, இந்து உன் உலகம் எவ்வளவு வித்தியாசமானது. என்னுடையதை விட?
பி.எச்டி. முடித்தால் புரொபஸராகி விடுவேனா? இந்த பி.எச்டி.யை எப்போதுதான் முடிப்பது? புரொபஸர் கருணையின்றி பி.எச்டி. வாங்க முடியுமா? அவர் ஜீனியஸ்தான். அதுதான் தொல்லை. பத்து வருடங்களுக்கு குறைந்து அவரிடம் பி.எச்டி. வாங்க முடியாது. தீஸிஸ் விஷயமாகப் போனால் மிக அழகாக ரெயில்வே ஸ்டிரைக் பற்றிப் பேசுவார். ஜோன் பேயனின் ஸெக்ஸி குரல் பற்றிப் பேசுவார். நிக்ஸன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிச் சொல்வார். ஜெரால்ட் ஃபோர்டு எதற்கும் பயனில்லை என்பார். யாரும் நினைவு வைக்க முடியாத சரித்திர சம்பவங்களை நினைவு கூர்ந்து ஜோக் அடிப்பார். ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.
“ஸார், என் சாப்டர்...”
“என்ன சாப்டர்?”
“ஒன்றாவது ஸார்.”
“வீட்டுலே குடுத்தியா ஆஃபிஸிலியா?”
“வீட்டுலேதான்.”
“இன்னொரு காப்பி உண்டா?”
“ம். ஸார்.”
“நாளைக்குக் கொண்டாயேன். பார்க்கலாம்.”
“சாரி, ஸார்.”
இரண்டு வருடங்களாக இதுதான் நடக்கிறது, இந்து. உங்களுக்கு எல்லாம் இது எப்படிப் புரியும்?
“என்ன சாம்பு, லவ் லெட்டரா?” தேஷ்பாண்டே கேட்டான்.
“இல்லை தேஷ்பாண்டே.”
“கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களா வீட்டில்?”
சிரித்தான் சாம்பு, “ம்ஹூம்.”
“சரி, இன்னிக்கு வெச்சுக்கலாமா?”
“வேண்டாம் தேஷ்பாண்டே.”
“டேய், நீ ஒரு முட்டாள் மதராஸி, வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மதராஸி.”
"இருக்கட்டும்."
"உனக்குத் தைரியம் இல்லை. ஒரு பெக் சாப்பிட்டா நீ டவுன் தான்."
"என்னைச் சாலஞ்ச் பண்ணாதே."
"சும்மா பேச்சுத்தான் நீ. அம்மா திட்டுவாளா?"
"சரி, இன்னிக்கு வெச்சுக்கலாம்."
சாயங்காலம் தேஷ்பாண்டேயின் அறையில் ஐந்தாறு நபர்கள் கூடினர். சுடச்சுடத் தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஸிக்கிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று யானை பலம் வந்தது போலிருந்தது. குறுக்காகத் தொப்பி வைத்துக்கொண்ட நெப்போலியன் தான் எனத் தோன்றியது. பிரஷ் மீசை வைத்த ஹிட்லராக மாறி யூதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிப்பது போல் தோன்றியது. வேஷ்டி சட்டையுடன் அண்ணாதுரை, ஒரு கூட்டத்தில் பேசுவது போல் தோன்றியது. சிவாஜி கணேசன் முகம் கொண்ட ராஜராஜ சோழன் தான் என்று மார் தட்டிக்கொள்ள அவா எழுந்தது. இழைய முடியாத டில்லி சூழ்நிலை. டைப் அடித்து அடித்து விரல்களைச் சொடுக்கிக் கொள்ளும் இந்து, பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தைக் கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மா, எல்லாம் மறைந்து அவனே பூதாகாரமாய் ரூபமெடுத்து அத்தனையையும் அடித்துக்கொண்டு மேலெழுந்து வருவது போல் உணர்வு தோன்றியது.
"ஸிக்கிமை ஆக்ரமிக்க வேண்டும்" என்று உரக்கச் சொன்னான்.
"ஏய் சாம்பு, என்ன ஏறிடுத்தோ நன்னா?" மணி கேட்டான்.
"சேச்சே, அதெல்லாம் இல்லை."
"ஜாக்கிரதை, ஒரேயடியாக் குடிக்காதே. மெள்ள மெள்ள."
"நான்ஸென்ஸ். நான் சரியாத்தான் இருக்கேன். ஸவிதா வரலியா?"
"ஸவிதா இங்கே எங்கேடா வருவா?"
"ஏன் வரக்கூடாது? நான்தான் அவ தேடற துடிப்புள்ள இளைஞன். நான் நடுத்தரக் குடும்பம்னா அவ என்னை லவ் பண்ணக்கூடாதா? நான் ஒரு துடிப்புள்ள இளைஞன்."
ஸிக்கிம் பற்றிய பேச்சு நின்றது.
சாம்பு பேசிக்கொண்டே போனான்.
"ஸவிதாவை எனக்குப் பிடிக்கறது. ஆனா இந்த உலகமே வேற. அரசியல், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்பு பற்றிப் பேசற அக்கறை இல்லாத உலகம் இது. தேஷ்பாண்டே, இங்கே ஓட்டை போட்டுண்டு வந்த எலி நான். இங்கே இருக்கிற யார் மாதிரியும் நான் இல்லே. நான் ஒரு துரத்தப்படும் எலி. பூனைகள் உலகத்துலே அகப்பட்டுண்ட எலி. ஸவிதாவை நெருங்க முடியாத எலி. என் தங்கை இந்து இருக்கிற உலகத்துலேயும் நான் இல்லே. கோலம், கோபுரம், புடைவை, சினிமா, கற்பு, கணவன், அம்மா, அப்பா இவர்கள் எல்லாருக்கும் நான் அந்நியமாப் போய்விட்டேன். ஓ, எங்கே?" என்று எழுந்து கால்களை உதறி அறை முழுவதும் தேடி ஓடினான்.
"ஹே, எதைத்தான் தேடுகிறாய்?"
"என் வேர்கள், என் வேர்கள்" என்று ஆங்கிலத்தில் கூறி அழுதான் சாம்பு.
திடீரென்று எழுந்து, "எனக்கு எங்கேயும் இடம் இல்லை" என்று கூறி ஓட ஆரம்பித்தவன் முறித்துக்கொண்டு கீழே விழுந்தான். அறை முழுவதும் வாந்தி எடுத்த நெடி.
"தேஷ்பாண்டே, இதெல்லாம் உன் தப்பு. ஹோல் ஈவினிங் கில்... ஸ்பாயில்ட்."
"ஏய், இவன் முழிக்கமாட்டேன் என்கிறானே?"
"முகமெல்லாம் வெளுத்துவிட்டது."
"குட் லார்ட்! டாக்ஸி கொண்டுவா. வெலிங்டன் ஹாஸ்பிடலுக்கு ஓடலாம்."
கண்ணை விழித்தபோது தேஷ்பாண்டேயின் முகம் தெரிந்தது.
"ஐ ஆம் சாரி."
"இட்ஸ் ஓ கே! எத்தனை பெக் குடித்தாய்?"
"ஒன்பது."
"ஜீஸஸ்!"
"எனக்கு அத்தனையும் தேவைப்பட்டது, தேஷ்பாண்டே! தேஷ்பாண்டே நான் இந்த இடத்தில் இருக்க வேண்டியவன் இல்லை. ஏழு வருஷம் பி.எச்டி. பண்ண என்னால் முடியாது. என் தங்கை கல்யாணம் ஆகாமல் தவித்து விடுவாள். என் அம்மா உருக்குலைந்து போய் விடுவாள். அறிவுஜீவியாவது கூட எனக்கு ஓர் ஆடம்பரமான விவகாரந்தான். அங்கேயும் நான் ஓர் அந்நியன் தான். ஆனாலும் அங்கே நான் தேவைப்படறேன்."
"டேக் ரெஸ்ட், சாம்பு."
தலை திரும்பியபோது ஆரதி வருவது தெரிந்தது.
தேஷ்பாண்டே எழுந்தான். ஆரதியைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகை செய்துவிட்டுப் போனான்.
"என்ன சாம்பு, இது என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்?"
கண்களில் நீர் பெருகியது.
"ஆரதி, நான் ரொம்பத் தனியனாக இருக்கிறேன்."
"ம்."
"என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை."
"ம்."
"உனக்கும் இந்த அனுபவம் உண்டா?"
கையிலிருந்த பையைப் பார்த்தவாறே ஆரதி பேசினாள்.
"ம், உண்டு. இதை விட உண்டு. உங்களுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும். அங்கே மூத்தபிள்ளை என்ற அந்தஸ்து உண்டு. எனக்குத் திரும்பிப் போக முடியாது. என் குடும்பம் நான் இல்லாமல் இருக்கப் பழகிவிட்டது. நான் அங்கே போகும்போதெல் லாம் வெளியாளாய் உணர்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை பிரச்னைகள் இல்லாத ஒரு பெண். அந்த எண்ணத்தை மாற்ற நான் விரும்பவில்லை. இரண்டு உண்மைகளை நான் உணர்வதால் என் நிலைமையை என்னால் ஏற்க முடிகிறது. ஒன்று, வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையால் பிறக்கும் உணர்வு. இரண்டு, நாம் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனியாள்தான் என்ற உணர்வு."
"நான் ஸவிதாவை விரும்புகிறேன்."
ஆரதி புன்னகை செய்தாள். "எனக்குத் தெரியும்."
"நான் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?"
"ம்ஹூம். உண்மைகளைப் பார்க்காதவர்."
"புரியவில்லை."
"ஸவிதாவை நீங்கள் விரும்புவது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் என்ற தாழ்மையுணர்ச்சியால்தான். அந்த வர்க்கத்து உணர்வுகளிலிருந்து விடுபட விரும்பும் வேகத்தால்தான். இந்த உணர்வே ஒரு தப்பிக்கும் முயற்சிதான். ஏணி மேல் ஏறி, எந்த வர்க்கத்தை ஏளனம் செய்கிறீர்களோ அதே வர்க்கத்தை நீங்கள் எட்டிப் பார்க்கிறீர்கள். கீழேயும் உங்களுக்கு இடம் இல்லை. மேலே யும் உங்களுக்கு இடம் இருக்காது."
"கோபிக்காதே. நீ என்னை விரும்புகிறாயா?"
அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் ஒரு கணவனை நிஜமாகவே தேடி அலையவில்லை. உண்மையான பரிவுணர்வைக் காட்ட என் போன்றவர்களுக்கும் முடியும்."
"ஐ ஆம் ஸாரி."
"டோண்ட் பி" என்று கூறிவிட்டு எழுந்தாள்.
அவள் போனபின் வெகுநேரம் நெஞ்சில் பல உணர்ச்சிகள் குழம்பித் தவிக்க வைத்தன. வேர்களற்ற நான் யார்? என்னை எந்த அநுபவங்களோடு நான் ஒன்றிப் போகவைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய நேரமோ, பணமோ அவனிடம் இல்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டம். அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள்; காலத்தை அலட்சியம் செய்யும் மனப் பான்மைதான். அவன் காலத்துடன், ஒன்று, அதனுடன் சண்டை யிட்டு, அதனிடம் மண்டிபோட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருளடை யும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை. குப்பைத் தொட்டியின் மேல் மல்லாக்கப் படுத்து இறந்து, காக்கை தன் வயிற்றைக் குத்திச் சதை யைப் பிடுங்கும் எலியாய்த் தன்னை உணர்ந்தான். அவன் வித்தியாச மாக எதையும் செய்ய முடியாது. அவனுக்கு நிராகரிக்கப்பட்ட உரிமை அது. அவன் எதிர்வீட்டு ஸந்தியாவை மணக்கலாம். அவ ளுடன் நல்ல கணவனாகப் படுக்கலாம். அவள்மேல் ஆதிக்கம் செலுத் தலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லாமல் தவிக்கலாம். ரிடையர் ஆகலாம், இறக்கலாம். குப்பைத் தொட்டி மேல் செத்த எலி போல, இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்.
வரம்புகள், வரம்புகள், வரம்புகள்!
ஆஸ்பத்திரியின் கட்டிலில்; அதன்மேல் அவன், கோபாலை யரின் மகன் சாம்பமூர்த்தி. அவனே அவனுக்கு அந்நியமானவனாகப் பட்டான்.
அவன் திரும்பிப் போவான். கோலங்களின் ஓரமாக எருமைகளைத் தாண்டி அந்தத் தெருவில் நடப்பான்; ஆனால் அதுவல்ல அவன் இடம். அத் தெருவின் மண்; அதன் மீது பஸ் பிடிக்க ஓடும் இந்து; சைக்கிளில் போகும் அப்பா; புத்தகப் பையுடன் போகும் தம்பி; எல்லாரும் எலிகள்; பொந்து போட ஓடும் எலிகள். வரம்புகளைக் கட்டிக்கொண்டு அதனுள் ஓடும் எலிகள்.
பல்லாயிரக்கணக்கான எலிகள், மாறுபட்ட அவனைக் கோரைப் பற்களால் சுரண்டி வால்களால் அவனைத் தாக்கி அவன் மேல் ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தான். திடீரென்று கோடிக்கணக்கான பூனைகள் எலிபோல் தோன்றிய அவனை நகங்களால் கீறி வாய்க்குள் அடைத்துக்கொள்வதைப் போல் தோன்றியது.
சாம்பு வீரிட்டான்.
--------
ஆதவன்:
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த(21-3-1942) இவருடைய இயற் பெயர் கே.எஸ்.சுந்தரம்.முப்பதாண்டு களுக்கு மேலாக டில்லிவாசி.இவருடைய படைப்புகள் இன் றைய தலைமுறையின் மிக நுண்ணிய உணர்வுகளைப் பல கோணங்களிலிருந்து பிரதிபலிப்பவை.நூலுருவில் வெளி வந்தவை:'காகித மலர்கள்'(நாவல்,1976),'என் பெயர் ராமசேஷன்'(நாவல்,1980),'இரவுக்கு முன்பு வருவது மாலை'(குரு* நாவல்கள்,1974),'கனவுக் குமிழிகள்'(1975), 'கால் வலி'(1975),'ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்' (1980)-கடைசி மூன்றும் சிறுகதைத் தொகுப்புகள்.பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் இவருடைய கதைகளின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன.ஒரு சிறுகதை 1973-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகச் சென்னை இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.இவருடைய 'காகித மலர்கள்' தமிழ் நாவலின் ஒரு மைல் கல்லாகப் பாராட்டப் பட்டுக் கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
முகவரி:c/o National Book Trust, India, A-5, Green Park, New Delhi-110016.
----------------
நிழல்கள் - ஆதவன்
பிரிய வேண்டிய வேளை வந்து விட்டது.பிரிய வேண்டிய இடம் வந்துவிட்டது.
அவளுடைய ஹாஸ்டல் கேட்.உயரமான இரும்புக் கிராதிகளா லான கேட்.அந்த கேட் அருகே நிற்கும்போது அவர்கள் இரு வருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர் களாகவும் தோற்றமளித்தார்கள்!ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப் புறச் சுவரில் பொருத்தியிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம் கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட் டிருந்தது.எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல் களும்,அந்த கேட்டின் நிழலின் மேலேயே,ஒன்றின்மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன.
"நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக்கொண் டிருக்கின்றன." என்றான் அவன்.
அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தாள்.நிழல் களைக் கவனித்தாள்.புன்னகை செய்தாள்.அவனுடைய அர்த்தத்தைக் கண்டு கொள்ளாதது போன்ற புன்னகை.எதையுமே தெரிவிக்காத,விட்டுக் கொடுக்காத புன்னகை.நிழல் தழுவுகிறது; புன்னகை செய்வதில்லை.அவள் புன்னகை செய்கிறாள்;ஆனால்- "இன்று என்னவோ ஒரே புழுக்கமாக இருக்கிறது,இல்லை?" என்றான் அவன். "உக்கூம்." "இந்தப் புழுதி வேறே,சனியன்-இப்போதெல்லாம் சாயங்கால மும் ஒரு தடவை நான் குளிக்கிறேன்-நீ?" "நான்கூட." "உனக்குக் குளிக்க எவ்வளவு நேரமாகும்?" "பதினைந்தே முக்கால் நிமிஷம்." "ரொம்ப அதிகம்.எனக்கு ஐந்து நிமிஷங்கூட ஆகாது." "நான் பாத்ரூமுக்குப் போனால் உடனே குளிக்கத் தொடங்க மாட்டேன்.கொஞ்ச நேரம் வாளியிலிருக்கும் ஜலத்தைக் கையினால் அளைந்து கொண்டு,யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். கால்விரல் நகங்கள் ஒவ்வொன்றின் மேலும் சொட்டுச் சொட்டாக ஜலத்தை எடுத்து விட்டுக் கொள்வேன்.தலைமையிரை ஒரு கொத் தாகப் பிரஷ் போல நீரில் தோய்த்தெடுத்து,அதனால் கைகால் களில் வருடிக் கொள்வேன்.செம்பைக் கவிழ்த்தவாறே ஜலத்தினுள் அமிழ்த்தி,பிறகு ஜலத்தினடியில் அதை மெல்ல நிமிர்த்தி 'பம்பும் பம்பும்'என்று அது பேசறதைக் கேட்பேன்." "நான் அந்தச் செம்பாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந் திருக்கும்!" "நான் உங்களுடன் பேசுவதில்லையென்றா சொல்கிறீர்கள்?" "உன்னுடன் தனியா....." "டோன்ட் பீ வல்கர்." அவள் குரலில் இலேசான ஒரு கண்டிப்பு இருந்தது.அந்தக் கண்டிப்பு அவனுக்குத் திருப்தியையும் குதூகலத்தையும் அளித்தது. அவளுடைய கவசத்தைப் பிளந்த குதூகலம்.அவளை உணரச் செய்த,உணர்ந்து கண்டிக்கச் செய்த குதூகலம்.
"நான் ஒரு வல்கர் டைப் இல்லை?"என்றான். "ஊஹூம்;ரொம்ப நைஸ் டைப்."அவள் சமாளித்துக்கொண்டு விட்டாள்."அதனால்தான்,நீங்கள் நைஸாகவே இருக்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்." "நான் அதை விரும்பவில்லை.அவ்வப்போது சற்றே வல்கராக இருப்பதுதன் எனக்குப் பிடிக்கும்." "நானும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர் களா?"
"சில சமயங்களில்-கொஞ்சம் கொஞ்சம்."
"எதற்காக?"
"மை காட்? அடுத்தபடியாக, உன்னை நான் எதற்காகக் காத லிக்கிறேன் என்று கேட்பாய் போலிருக்கிறது."
"அதற்காகத்தான் காதலிக்கிறீர்களா?அந்த லட்சியத்துடன் தானா?"
"எந்த லட்சியம்?"
அவள் பேசவில்லை.நிழல்களைப் பார்த்தாள். ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, ஒன்றில் ஒன்று ஆழ்ந்திருந்த நிழல்கள்.
"எல்லாரும் எதற்காகக் காதலிக்கிறார்கள்?" என்று அவன் கேட்டான்.
"நாம் இப்போது மற்றவர்களைப் பற்றிப் பேசவில்லை."
"சரி, நீ எதற்காகக் காதலிக்கிறாய்?"
"அழுகையையும் சிரிப்பையும் போல, எனக்குள்ளிருந்து பீறிடும் இயற்கையான உணர்ச்சி வெளியீடு இது-- என்னையுமறியாமல், எனக்கே புரியாமல்---"
"ஐ ஸீ!"
"ஆனால் அழுகையையும் சிரிப்பையும் போல அல்லாமல் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நபரை முன்னிட்டுத்தான் இந்த வெளியீடு நடைபெறுகிறது."
"நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி!"
"ஆனால் பொறுமைசாலியல்ல "
"அப்படியா?"
"ஆமாம்"
"என் அம்மா கூட அப்படித்தான் சொல்லுவாள். அவள் எது சமைத்தாலும் பாத்திரத்திலிருந்தே எடுத்துச் சாப்பிட்டு விடுவேன் நான்; அகப்பை, தட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பறிமாறுதல், காத்திருத்தல்-- இதெல்லாம் என் பொறுமையைச் சோதிக்கும் விஷயங்கள்."
அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. "அம்மா நினைவுவருகிற தாக்கும், என்னைப் பார்த்தால்? "
"பெண்கள், பெண்கள்தான்."
"ஆண்களின் பொறுமையைச் சோதிப்பவர்கள்--இல்லை? "
"ரொம்ப "
" ஆனாலும் சகித்துக்கொள்ளப்படவேண்டியவர்கள். "
"எங்கள் தலைவிதி."
"த்சு, த்சு,பா......வம்! " என்று அவள் அவன் தோளின்மேல் செல்லமாகத் தட்டினாள். மெல்லத் தடவிக் கொடுத்தாள். மென்மை[யான,] மிருதுவான அந்தத் தடவலில் அவனுடைய இறுக்கம் தளர்ந்தது. அவனுள் கெட்டியாக உறைந்து கிடந்த எதுவோ திடீரென்று இளகத் தொடங்கியது; பொங்கியெழும்பத் தொடங்கியது--அவன் சட்டென்று அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவளை இறுக அணைத்துக் கொண்டுவிடப் போகிறவன்போல முகத்தில் ஒரு தீவிரம், உன்மத்தம்.
“உம்ம்...ப்ளீஸ், வேண்டாம்!” என்று கோபமில்லாமல் இதமாகவும் கனிவுடனும் கூறியவாறு அவள் மெல்லத் தன் கையை விடுவித்துக் கொண்டாள். அந்தக் கணத்தில் அவனுக்கு அவளைக் கொலை செய்யவேண்டும் போலிருந்தது. நெருப்பு மூட்டுவதும் பிறகு ஊதி அணைப்பதும் - நல்ல ஜாலம் இது!
அவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவனுடைய உஷ்ணத்தை உணர்ந்தாள். சுமுகமான ஒரு மனநிலையில் அவனிடம் விடைபெற நினைத்து, அவன் தோளில் தட்டிக் கொடுக்கப் போக, பலன் இப்படியாகிவிட்டது.
“கோபமா?” என்றாள் அவள் மெதுவாக.
“சேச்சே, இல்லை; ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறேன். இதோ பார்த்தாயா, புன்னகை செய்கிறேன்.”
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். “ப்ளீஸ்! புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.”
“அது அவ்வளவு சுலபமாக இல்லை. இருந்தாலும் நான் என்னால் இயன்றவரை முயன்று கொண்டுதான் இருக்கிறேன். என்னை நம்பு.”
“எதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்-எல்லாவற்றையும் அல்ல-- பூரணமாக அல்ல.”
“பூரணமாக உன்னை நீ சமர்ப்பித்திருக்கிறாயா, பூரணமாக உன்னைப் புரிந்துகொள்வதற்கு?”
அவள் பேசவில்லை. வெடுக்கென்று இரக்கமில்லாமல் எப்படிக் குதறியெடுக்கிறான் அவளை? கருணையையும் கடுமையையும் பிரிக்கும் கோடு இவ்வளவு மெல்லியதா/
குப்பென்று குளிர்காற்று வீசியது, அவர்களிடையே நிலவிய சூழ்நிலைக்குச் சிறிதும் பொருத்தமில்லாததாக. மெயின் ரோடிலிருந்து பஸ்கள், கார்கள் செல்லும் ஓசைகள், ஹார்ன் ஒலிகள் மிதந்து வந்தன. தலைக்கு மேலே ஓர் ஒற்றைக் காக்கை ‘கக்கா பிக்கா’ என்று தன் அகால இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வது போலச் சப்தமெழுப்பிக் கொண்டு பறந்து சென்றது. எங்கும் எந்தப் பஸ்ஸுக்கும் (அல்லது மிஸ்ஸுக்கும்) காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமலிருந்தும், அதற்கு ஏனோ இன்று வீடு திரும்ப இவ்வளவு நேரமாயிருக்கிறது.
ஆனால் அவன் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கவேண்டும். 'குட் நைட்' என்று சொல்லிவிட்டு, 'கான்ஸலேஷன் ப்ரைஸ்' போல ஒரு புன்னகையை வீசிவிட்டு அவள் ஹாஸ்டலுக்குள் நுழைந்து விடுவாள். அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க வேண்டும். தன் நினைவுகளுடன் போராடியவாறு, அவற்றின் முற்றுகைக்குள் புழுங்கித் தவித்தவாறு, பஸ் வருவதை எதிர்பார்த்துப் பஸ் ஸ்டாண்டில் நிற்கவேண்டும். பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும். பஸ்களின் மேல் அவனுக்குத் தனியாகப் பாத்தியதையோ அதிகாரமோ இல்லை. மற்றவர்களைக் காக்க வைப்பது போல, அவை அவளையும் காக்க வைக்கட்டும், பாதகமில்லை. ஆனால் இவள் - இவள் ஏன் அவனைக் காக்கவைக்க வேண்டும்? எவ்வளவு சிறிய விஷயம்! அதை எவ்வளவு பெரிதுபடுத்துகிறாள்? எப்போதும், எதற்கும் காத்திருப்பதும் ஏங்கித் தவிப்பதும் அவன் தலைவிதி போலும். சிலருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு சுலபத்தில் கிட்டிவிடுகிறது!
சாலையின் குறுக்கே ஒரு வெள்ளை நாய் ஓடி வருகிறது. பின்னாலேயே ஒரு கறுப்பு நாய், வெள்ளை நாய் நிற்கிறது. கறுப்பு நாய் அதன் பின்னால் முகர்ந்து பார்க்கிறது. "நாய்கள் யோசிப்பதில்லை" என்றான் அவன்.
அவனுடைய மௌனத்தையும் பார்வையின் திசையையும் சிரத்தையாகக் கவனித்துக் கொண்டிருந்த அவள், குபீரென்று சிரித்தாள். தன் வார்த்தைகள் அவளை அதிரச் செய்யுமென்றும் புண்படுத்துமென்றும் எதிர்பார்த்திருந்த அவன் அவள் சிரித்ததும் தடுமாறிப் போனான். ஒரு முட்டாளைப் போல் உணர்ந்தான்.
திடீரென்று தொடங்கியதைப் போலவே, திடீரென்று நின்றது அவள் சிரிப்பு. அவள் முகத்தில் ஓர் ஆயாசமும் வாட்டமும் தேங்கியிருந்தன. எல்லாச் சிரிப்புகளுமே ஒரு குதூகலத்தையும் உல்லாசத்தையும் மட்டுமே வித்தாகக் கொண்டவையாக இருப்பதில்லை. "சில சமயங்களில், என்னை இதயமற்ற ஒரு கொடிய ராட்சஸியைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள்" என்றாள் அவள்.
"நீ மட்டும்? இங்கிதமோ நாசூக்கோ அற்ற காட்டுமிராண்டியைப் போல என்னை உணரச் செய்கிறாய்."
"ஒரு காட்டுமிராண்டிக்கும் ராட்சஸிக்குமிடையே மலர்ந்த காதல்" என்று கூறி அவள் மறுபடி சிரித்தாள். அடேயப்பா இவர்களுக்குத் தெரியாத தந்திரமில்லை. சிரித்து ஏமாற்றுவார்கள்; சிரிக்காமல் ஏமாற்றுவார்கள்; பேசி ஏமாற்றுவார்கள்; பேசாமல் ஏமாற்றுவார்கள்.
இப்படியே பேசி, இப்படியே மழுப்பி, இரவு முழுவதையும் இவள் கழித்துவிடுவாள். பிறகு காலையில் மறுபடி அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க வேண்டும் - ஹெல் - அதற்கு இப்போதே போய்விடலாம். மன்றாடுவதும், போராடுவதும், குதறுவதுமாக - சே! அவனுக்குப் படுக்கையில் போய் விழவேண்டும் போலிருந்தது. இறுக்கமான உடைகளைக் களைந்து, கை கால்களை இடைஞ்சலில்லாமல் நீட்டிக்கொண்டும் பரத்திக் கொண்டும் இளைப்பாற வேண்டும் போலிருந்தது. இதெல்லாம் எப்படியாவது தொலையட்டும். இவள் இஷ்டப்படுகிற விதத்தில், இஷ்டப்படுகிற கட்டத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் எனக்கும் அவ்வளவு விருப்பமில்லையோ என்னவோ? இவள் அதை ஒரு கௌரவப் பிரச்னையாக ஆக்குவதால், நானும் அதை ஒரு கௌரவப் பிரச்னையாக ஆக்குகிறேன் போலும்.
"சரி; அப்போது நான் கிளம்ப வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்" என்று அவன் தன் முகத்தில் ஒரு 'பிரிவுத் தருணப்' புன்னகையைத் தரித்துக் கொண்டான். "குட் நைட் - விஷ் யூ ஹாப்பி ட்ரீம்ஸ் - கனவுகளிலாவது, பிகு செய்துகொள்ள மாட்டாயே?"
"கனவில் வரப்போகிறீர்களா?"
"கனவில்தான் வரவேண்டும் போல் இருக்கிறது!"
அவள் சிரித்தாள். அவன் கையை உயர்த்தி, "கிளிக்!" என்று அவளைப் புகைப்படம் எடுப்பது போல அபிநயம் காட்டினான். "தாங்க் யூ மேடம்! பிரிண்ட்ஸ் நாளைக்குக் கிடைக்கும்" என்றான்.
"சாயங்காலம்?"
"ஆமாம், சாயங்காலம்."
"எங்கே?"
"நானே பர்ஸனலாக உங்களிடம் வந்து டெலிவரி பண்ணுகிறேன், மேடம்"
"ஓ, தாங்க்ஸ்."
"இட்ஸ் எ பிளஷர்" என்று அவன் இடுப்பை வளைத்து, சலாம் செய்தான். "வேறு ஏதாவது என்னாலாகக் கூடிய உபகாரம்...?"
"உங்களை நினைவு வைத்துக்கொள்ள எனக்கு ஒன்றும் கொடுக்கப் போவதில்லையா?"
"ஓ!" என்று அவன் தன் பைகளில் தேடுவது போலப் பாசாங்கு செய்தான். "த்சு, த்சு, விஸிட்டிங் கார்டு எடுத்துவர மறந்துவிட்டேன்" என்றான்.
"வேறு ஏதாவது கொடுங்கள்."
"எது வேண்டுமானாலும்?"
"ஆமாம்" என்று அவள் அவனருகில் வந்து, முகத்தை அவனை நோக்கி நிமிர்த்தினாள். "ஐ மீன் இட்" என்றாள். அவன் அவளுடைய பளபளக்கும் விழிகளைப் பார்த்தான். குறும்புத்தனமாக வளைந்திருந்த மூக்கைப் பார்த்தான். சிறிய உதடுகளைப் பார்த்தான் - எவ்வளவு சிறிய உதடுகள்! அவனுடைய அம்மாவின் உதடுகளும் சிறியவைதாம். "அம்மாவுக்கு முத்தா கொடு கண்ணா" என்று அவனருகில் வந்து முகத்தை நீட்டுவாள் அம்மா, அவன் சின்னவனாக இருந்தபோது.
இதோ, அவனருகில் நிற்பவளும் ஒரு நாள் அம்மாவாகப் போகிறவள்தான்; அம்மாவாகக் கூடியவள்தான். ஒரு குட்டி அம்மா! முரட்டுத்தனத்தை மறந்து, ஒரு திடீர் வாஞ்சையுடன் அவன் அவளுடைய வலது கையைப் பிடித்துத் தன் முகத்தை நோக்கி உயர்த்தி, அந்தக் கை விரல்களில் வெகு மென்மையாக முத்தமிட்டான்.
"அங்கே இல்லை" என்றாள் அவள்.
"பின்னே எங்கே?"
"த்சு, த்சு, குழந்தை - ஒன்றுமே தெரியாது" என்று அவள் பரிகாசமாகத் தலையை ஆட்டினாள். விழிகளில் ஒரு குறும்பு, ஒரு விஷமத்தனம் தான் போடும் விதிகளின் படி ஆட்டம் நடைபெறுகிற வரையில் அவளுக்குச் சந்தோஷந்தான், திருப்திதான். அவன் யாசிப்பதை அவள் தரவே மாட்டாள். ஆனால் அவள் தருவதை யெல்லாம் மறுக்காமல் அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் - நல்ல நியாயம்!
அவனுக்குத் திடீரென்று கோபம் திரும்பியது. வேடிக்கையும் விளையாட்டும் மறந்து போயிற்று. விளையாட்டுத்தனமாக அணிந்த 'போட்டோகிராஃபர்' போர்வை பறந்துபோயிற்று. இளகியிருந்த முகபாவமே மீண்டும் இறுகிப் போயிற்று. "இதென்ன பிச்சையா?" என்றான் அமைதியான குரலில்.
"உம்?" அவள் குரலில் வியப்பும், இலேசான ஒரு பயமும் தெரிந்தன.
"என்மேல் இரக்கப்பட்டுச் சில்லறை தருகிறாயா?"
அவள் முகத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்த குதூகலம் திடுமென வற்றிப் போயிற்று. 'இதை இப்படி இவ்வளவு கடுமையாகச் சொல்லியிருக்க வேண்டாமோ? என்று அவனுக்கு ஒரு பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. ஆனால் வாயிலிருந்து வார்த்தை விழுந்தது, விழுந்ததுதான். நிமிடங்களும் நிலைகளும் கலைந்தது, கலைந்ததுதான். ஒரு நிமிஷம் முன்பு அவன் விடைபெற்றுச் சென்றிருந்தால் எல்லாமே எவ்வளவு சுமூகமாகவும் இதமாகவும் இருந்திருக்கும்! ஆனால் இப்போது-
அவள் கண்கள் கலங்குவது போலிருந்தன; உதடுகள் துடிக்க யத்தனிப்பது போலிருந்தன - அழப் போகிறாளா என்ன? 'எவ்வளவு அஸ்திரங்களை இவர்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள்?' என்று இரக்கத்துடன் கூடவே ஒரு பிரமிப்பும் அவனுக்கு ஏற்பட்டது. அவள் நன்றாக மூச்சை உள்ளுக்கிழுத்து வெளியே விட்டாள். மார்பகங்கள் ஓரிரு முறை எழும்பித் தணிந்தன. எழத் துடித்த விசும்பல்களை எழாமலேயே அழுத்திவிடும் முயற்சியிலோ என்னவோ, அவள் உடல் முழுவதும் இலேசாகக் குலுங்கியது. "சில்லறை வேண்டாமாக்கும் உங்களுக்கு!" என்றாள். குரலில் ஒரு குத்தல்; ஒரு சவால்; ஒரு மிடுக்கு; "நோட்டுத்தான் வேணுமாக்கும் - சரி, எடுத்துக்கொள்ளுங்கள்."
அவன் கூசிப் போனான். பேசாமல் நின்றான் - அவள் வேண்டுவதும் இதுதானே! அவனை வெட்கப்படச் செய்ய வேண்டும், ஏதோ குற்றம் செய்துவிட்டவனைப் போலப் பச்சாதாபப்படச் செய்ய வேண்டும். "ஐ ஆம் ஸாரி" என்று மன்னிப்புக் கேட்கச்செய்ய வேண்டும். என்ன ஜோடனை. என்ன சாதுரியம்? இதமான சமர்ப்பணத்துக்குப் பதிலாக, எகத்தாளமான ஒரு சவாலை அளித்து, அவனைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறாள்.
இருந்தாலும் அவன் பணிந்திருக்கலாம். தவறு தன்னுடையது தானென்று அவளைத் தேற்றியிருக்கலாம். அவளை மன்னிப்பதன் மூலம், அவளுடைய சாகஸத்தைக் கண்டும் காணாதது போல இருப்பதன் மூலம், அவன் உயர்ந்திருக்கலாம். ஆனால் பணிவு இயல்பாக வருவதில்லை. சவாலுக்கு எதிர்ச் சவால், குத்தலுக்கு எதிர்க் குத்தல் - இவைதாம் இயல்பாக வருகின்றன.
" உம், எடுத்துக் கொள்ளுங்கள்" என்றாள் அவள் மறுபடி. "வேண்டுமென்பதை எடுத்துக் கொள்ளுங்கள்."
"இப்படியல்ல; வேண்டா வெறுப்பாக அல்ல."
"இது வெறுப்பு இல்லை."
"ரியலி?"
அவள் பேசவில்லை.
"உனக்குப் புரியவே இல்லை" என்று அவன் தலையைப் பலமாக ஆட்டினான். "இவ்வளவு நாட்களாகியும், நீ இன்னும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை, என்மேல் நம்பிக்கை வைக்கவில்லை."
"பல மனிதர்களுக்கிடையிலிருந்து உங்களை நான் ஏன் பொறுக்க வேண்டும் - ஒரு நம்பிக்கை தோன்றாவிட்டால்? உண்மையில் நம்பிக்கை இல்லாதது எனக்கல்ல, உங்களுக்குத்தான்."
"ஓகோ! பேஷ், பேஷ்." "என் நம்பிக்கையை உங்களுக்குத் திருப்தியேற்படும் வண்ணம் நான் நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறீர்கள் - இல்லையா?"
"அதெல்லாம் ஒன்றுமில்லை - ப்ளீஸ்! அப்படி நீ நினைக்கக்கூடாது" என்று அவள் கையை மறுபடியும் மென்மையாகப் பற்றிக்கொண்டான். "பரஸ்பர நிரூபணங்கள் தேவைப்படும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம் என்று நினைக்கிறேன்."
"ஒத்துக்கொள்கிறேன்."
"இது நிரூபணத்தைப் பற்றிய பிரச்னையல்ல. நமக்கென்று ஒரு பொதுவான உலகம் உருவாகிவிட்ட பின் அந்த உலகின் நியமங்களைப் பற்றிய பிரச்னை. தனி அறைகளையும் திரைகளையும் பற்றிய பிரச்னை."
"எந்தத் திரை எப்போது விலகவேண்டும் என்பதைப் பற்றிய பிரச்னை - இல்லையா?"
"ஆமாம். ஆனால் - இந்தத் திரைகள் அவசியந்தானென்று நீ நினைக்கிறாயா?"
"இது கற்காலம் இல்லை."
"இதோ பார் - உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல. ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப்பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல. எனக்கு வேண்டியது நீ - பூரணமான திரைகளற்ற நீ; முழுமையாக நீ; புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது...."
அவள் அவன் வாயைப் பொத்தினாள். "ப்ளீஸ்" என்றாள்.
"அந்த ஒன்றுக்காக நான் உன்னை அணுகவில்லையென்று சொல்ல வந்தேன்" என்று அவன் தொடர்ந்தான். "அந்தத் தேவையின் பூர்த்திக்காக மட்டுமல்ல - நாட் அட் ஆல். எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. பல பெண்களுக்கிடையில் நீ மட்டும் என்னைக் கவர்ந்தாய், சலனப்படுத்தினாய். இது முதலில் வருகிறது. மிச்சமெல்லாம் அப்புறந்தான் வருகிறது. பூரணமாக ஏற்றுக்கொள்ளவும் ஈடுபடுத்திக் கொள்ளவும் ஒன்றைத் தேடிப் பெற்றபின், அளிக்க வேண்டியவற்றை யெல்லாம் அளித்து, பெறவேண்டியவற்றை யெல்லாம் பெற்று, அதன் மூலம் முழுமையும் நிறைவும் பெறும் தாகத்தினால் வருகிறது - இதை நீ புரிந்து கொள்வது அவசியம்."
"எனக்கு இது புரிகிறது; ஆனால்-"
"போதும்" என்று அவன் அவளைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தான். "இது புரிந்தால் போதும். மற்ற எதுவும் முக்கியமில்லை. நம் தனியான உலகத்தின் நியமங்கள், சமூக, நியமங்களுக்கு விரோத மாக இருக்கக்கூடாதென்று நீ விரும்புகிறாய். உனக்கு என்னைப் புரி வது போல, எனக்கும் உன்னைப் புரிகிறது. உன் நம்பிக்கைகள் புரிகின்றன. அவற்றைக் கௌரவிக்கும் வரையில்தான் நான் உன் மதிப்புக்குப் பாத்திரமானவனாக இருப்பேன் - இல்லையா?"
அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நிர்மலமானதொரு புன்னகை தவழ்ந்தது. "தாங்க்ஸ்" என்றாள்.
"நான் உன் நம்பிக்கைகளை மதிக்கிறேன். ஆனால்?" அவன் தலையை ஆட்டினான். "ஒப்புக்கொள்ளவில்லை" என்றான்.
அவள் அவனருகில் இன்னும் நெருங்கி, "என்மேல் கோப மில்லையே?" என்றாள். அவன் அவள் தோள்களை ஆதரவாகப் பற்றினான். அவளை அணைத்துக்கொள்ளும் ஆசையைக் கட்டுப் படுத்திக்கொண்டு, உடனே கையை எடுத்தான். "உன்மீது நான் எப்படிக் கோபப்பட முடியும்?" என்றான். என்றைக்கும் போல அன்றைக்கும், தான் தோற்றுப் போனதை உணர்ந்தான். அதிக மாகப் பேசியதன் மூலமாகவே தான் கட்டுண்டுவிட்டதை உணர்ந் தான். தன்னை அவள் கண்களில் ஒரு ஜெண்டில்மேனாக நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சலிப்புடன் உணர்ந்தான்.
மெல்லத் தன்னை உணர்ச்சிகளின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு அவன் கிளம்பினான். "சரி-குட்நைட், இந்தத் தடவை இறுதியாக" என்றான்.
"கிளம்பி விட்டீர்களா?" "மணி எவ்வளவு தெரியுமல்லவா? பத்தரை." "நானும் உங்களுடன் வருகிறேன்." "பஸ் ஸ்டாண்டுக்கா?" "உங்கள் அறைக்கு."
அவன் திடுக்கிட்டுப் போனான். "சேச்சே! டோன்ட் பீ சில்லி!" என்றான். "அதெல்லாம் நாம் ஏற்கனவே பேசி முடிவெடுத்தாகி விட்டது. உனக்கு விருப்பமில்லாததை நீ செய்யவேண்டுமென்ற கட்டாயமில்லை."
"இப்போது எனக்கு விருப்பம் வந்திருக்கிறது."
"நோ, நோ! இனி உன்னை என்னுடன் கூட்டிப்போனால், ஒரு குற்றம் செய்ததைப் போலச் சங்கடப்படுவேன் நான்."
"உங்களை இப்படி விட்டுவிட்டு என் அறைக்குத் திரும்பிப் போனால், நான் சங்கடப்படுவேன்."
அவன் ஒரு கணம் தடுமாறினான். மறுபடி சமாளித்துக்கொண் டான். "இன்று எனக்கு மூட் கலைந்துவிட்டது. வேறு என்றைக்காவது பார்ப்போம்" என்றான்.
"இன்னொரு நாள் எனக்கு மூட் இருக்குமோ என்னவோ?" "பரவாயில்லை." வெகு முக்கியமாகத் தோன்றிய ஒன்று, அவ னுக்குத் திடீரென்று அற்பமாகத் தோன்றியது.
அவனுடைய திடீரென்ற விலகிய போக்கினால் சந்தேகமடைந் தவள் போல, அவனுக்குத் தன்னிடம் சிரத்தை குறைந்துவிட்டதோ என்று பயப்படுகிறவள் போல, அவள் திடீரென்று அவனை ஒரு ஆவேசத்துடன் இறுக அணைத்துக்கொண்டாள். "நான் பொய் சொல்லவில்லை. நிஜமாக, உங்களுடன் இப்போதே வரத் தயாரா யிருக்கிறேன் நான்" என்று அவன் கையுடன் தன் கையை இறுகக் கோர்த்துக் கொண்டாள். அவளுடைய இறைஞ்சும் பார்வையும் சரணாகதியும் அவனுக்கு உற்சாகமளிப்பதற்குப் பதிலாக, அதிர்ச்சி யைத்தான் அளித்தன. அவளைப் பற்றி அவன் மனத்தில் உருவாகி யிருந்த அழகிய பிம்பம் சேதமடைவது போல் இருந்தது. "ப்ளீஸ், ப்ளீஸ்! வேண்டாம்!" என்று அவன் மிகச் சிரமப்பட்டு, அவளைப் புண்படுத்தக் கூடாதென்ற ஜாக்கிரதையுடன், அவள் அணைப்பி லிருந்து வெகு மெதுவாகத் தன்னை மீட்டுக்கொண்டான். "நீ சொல் வதை முழுமையாக நம்புகிறேன். எனக்கு உன்மேல் கொஞ்சம் கூடக் கோபமில்லை. ஆனால் இன்றைக்கு வேண்டாம் - என்ன?"
"உங்கள் விருப்பம்போல்."
"ஓ.கே - பை! எங்கே, ஒரு ஸ்மைல் கொடு பார்க்கலாம்."
அவள் புன்னகை செய்தாள். அந்தப் புன்னகையை நினைத்துக் கொண்டு, வேறெதைப் பற்றியும் நினைக்க விரும்பாமல், அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். "உண்மையில் மற்றவர்களிடமிருந்து அவளைப் பிரித்துக் காட்டியது எது, என்னைக் கவர்ந்தது எது?" என்று அவன் யோசித்தான். 'என்னிடம் அவளுக்கு இருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கலையாமல் வைத்திருப்பது எது?' சாலை விளக்குகளின் வெளிச்சங்களினூடே, வெளிச்சங் களுக்கிடையிலிருந்த நிழல்களினூடே, அவன் விரைவாக நடந்து சென்றான். 'வெளிச்சம் வரும்போது கூடவே நிழல்களும் வந்து விடுகின்றன' என்று அவன் நினைத்தான்.
----------------------
வண்ண நிலவன்:
'வண்ண நிலவன்' என்ற பெயரில் எழுதும் உ.நா. ராமச்சந்திரன் திருநெல்வேலியில் 25-1-1948 அன்று பிறந்தவர். பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். அபூர்வத் தகவல் களும், நேரடியான நடையும், நுண்ணிய மனச் சலனங்களின் பிரதிபலிப்பும் இவருடைய படைப்புகளின் சிறப்பம்சம். இவ ருடைய நாவல் 'கடல்புரத்தில்' இலக்கியச் சிந்தனையின் 1977-ஆம் ஆண்டுச் சிறந்த நூல் விருது பெற்றது. இவருடைய இதர முக்கிய நூல்கள்: 'எஸ்தர்' (சிறுகதைகள், 1976). 'பாம்பும் பிடாரனும்' (சிறுகதைகள், 1978), 'கம்பா நதி' (நாவல், 1979), 'ரெயினீஸ் ஐயர் தெரு' (நாவல், 1981), 'துக்ளக்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
முகவரி: C/o Thuglak fortnightly. 29, Anderson Road - Nungambakkam, Madras - 600 006.
எஸ்தர் - வண்ணநிலவன்
முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும் பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது. காது கேளாது. பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சம் இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினாள். பேரப் பிள்ளைகளுக்கெல்லாம், கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட, எல்லா ருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. உபயோக மில்லாத பாட்டியை அழைத்துக்கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா?
வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித் தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தில், மேல் ஜன்னலுக்கு அருகே அந்தப் பழைய ஸ்டூலைப் போட்டுக்கொண்டு, பின் புறத்தில், புறவாசல் நடையில் என்று இருந்துகொண்டு 'அவரவர்' யோசித்ததையெல்லாம் சாப்பாட்டு வேளையில் கூடியபோது பேசி னார்கள். முன்னாலெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் எவ் வளவோ ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும், கேப்பையும் கொண்டுதான் வீட்டுப் பெண்கள் சமையல் செய்கின்றனர். நெல்லோடு ஆனந்த வாழ்வும் போயிற்றா?
அப்படிச் சொல்லவும் கூடாது. இன்னமும் சமையலின் பிரதான பங்கும் எஸ்தர் சித்தியிடமே இருக்கிறது. சக்கை போன்ற இந்தக் கம்பையும், கேப்பையையும் தான் எஸ்தர் என்னமாய்ப் பரிமளிக்கப் பண்ணுகிறாள்? ஒருவிதத்தில் இத்தனை மோசமான நிலையிலும் சித்தி எஸ்தர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும்? யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. மூன்று பெண்களுக்கும் ஒரு பையனுக்கும் தந்தையான அகஸ்டின் கூட மாட்டுத் தொழுவில் பனங்கட்டை உத்திரத்தில் இடுப்பு வேட்டியை அவிழ்த்து முடிச்சுப் போட்டு 'நான்று' கொண்டு நின்று செத்துப் போயிருப்பான்.
மூன்று பேருக்குமே கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளுடன் தான் இருக்கிறார்கள். அகஸ்டின் தான் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்ய முடியாது. அமைதியானவன் போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூற அப்படியல்ல அவன்; சதா சஞ்சலப்பட்டவன். இரண்டாவதுதான் டேவிட். இவன் மனைவி பெயரும் அகஸ்டினுடைய மனைவி பெயரும் ஒரே பெய ராக வாய்த்துவிட்டது. பெரியவன் அகஸ்டினுடைய மனைவியைப் பெரிய அமலம் என்றும் சின்னவன் மனைவியைச் சின்ன அமலம் என்றும் கூப்பிட்டு வந்தார்கள். சின்னவனுக்கு இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள்.
இது தவிர இவர்களின் தகப்பனார் மரியதாஸுடைய ஒன்று விட்ட தங்கச்சிதான் எஸ்தர். மரியதாஸ் சாகிறதுக்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பே எஸ்தர் சித்தி இந்த வீட்டுக்கு வந்துவிட் டாள். புருஷனுடன் வாழப் பிடிக்காமல்தான் வந்தாள் என்று எஸ்தரைக் கொஞ்சகாலம் ஊரெல்லாம் நைச்சியமாகப் பேசியது. இப்போது எல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. எஸ்தர் சித்தி எல்லோருக்கும் என்ன தந்தாள் என்று சொல்ல முடியாது. அகஸ்டினுக்கும் டேவிட்டுக்கும் அழகிய மனைவிகள் இருந்துங் கூட எஸ்தர் சித்தியிடம் காட்டிய பிரியத்தை அந்தப் பேதைப் பெண்களிடம் காட்டினார்களா என்பது சந்தேகமே.
எஸ்தர் சித்தி குள்ளமானவள். நீண்ட காலமாகப் புருஷசுகத்தைத் தேடாமல் இருந்ததாலோ என்னவோ உடம்பெல்லாம் பார்க்கிறவர் களின் ஆர்வத்தைத் தூண்டுகிற விதமாய் இறுகிக் கெட்டித்துப் போயிருந்தது. இதற்கு அவள் செய்கிற காட்டு வேலைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நல்ல கருப்பானதும், இடை இடையே நரைமுடிகள் சிலவுமாகச் சுருட்டை முடிகள். உள்பாடி அணிகிற வழக்கமில்லை. அதுவே அவள் மார்பகத்தை இன்னும் அழகான தாகப் பண்ணியது.
சித்திக்கு எப்போதும் ஓயாத வேலை. சேலை முன்றானை கரண்டைக் கால்களுக்கு மேல் பூனை முடிகள் தெரிய எப்போதும் ஏற்றிச் செருகப் பட்டே இருக்கும். சித்திக்கு தந்திர உபாயங்களோ நிர்வாகத் துக்குத் தேவையான முரட்டுக் குணங்களோ கொஞ்சம்கூடத் தெரி யாது. இருப்பினும் சித்தி பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அவ்வளவு பெரிய குடும்பத்தை மரியதாஸுக்குப் பின் நிர்வகித்து வருகிற தென்றால் எத்தனை பெரிய காரியம்! இத்தனை ஏக்கர் நிலத்துக்கு இவ்வளவு தானியம் விதைக்க வேண்டும் என்கிற கணக்கெல்லாம் பிள்ளைகளே போடுகிற கணக்கு. ஆனால் வீட்டு வேலைகளானாலும் காட்டு வேலைகளானாலும் சுணக்கமில்லாமல் செய்ய வேண்டுமே! வேலை பார்க்கிறவர்களை உருட்டி மிரட்டி வேலை வாங்கிக் காரியம் செய்வது எப்படி? சித்தி உருட்டல் மிரட்டல் எல்லாம் என்ன வென்றே அறியாத பெண். விதைக்கிற சமயமாகட்டும், தண்ணீர் பாய்ச்சுகிற நேரமாகட்டும்; காலையிலோ, மதியமோ அல்லது சாயந்திரமோ ஒரே ஒரு பொழுது வீட்டுக் காரியங்கள் போக ஒழிந்த நேரத்தில் காட்டுக்குப் போய் வருவாள். அதுவும் ஒரு பேருக்குப் போய்விட்டு வருகிறது போலத் தான் இருக்கும். ஆனால் வேலைகள் எல்லாம் தானே மந்திரத்தால் கட்டுண்டது போல் நடைபெற்றுவிடும். சாயங்காலம் காட்டுக்குப் போனாள் என்றால் இவள் வருகைக்காக, பயபக்தியுடன் எல்லா வற்றையும் குற்றம் சொல்ல முடியாதபடி செய்து வைப்பார்கள். வீடே சித்திக்காக இயங்கியது; வேலைக்காரர்களும், அந்த ஊருமே கூடச் சித்திக்காக கட்டுப்பட்டு இயங்கியது.
அந்த இரண்டு பெண்களுமே அபூர்வமான பிறவிகள். மூத்தவள் ஒரு பெரிய குடும்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். அவள் தன் பள்ளி நாட்களிலும் சரி, ஐந்தாவது வகுப்பைத் தன் கிராமப் பள்ளிக்கூடத்தில் முடிக்கும் முன்பே ருதுவாகி வீட்டில் இருந்த ஆரேழு வருஷமும் சரி, இப்போது இந்த வீட்டின் இந்த மூத்த அகஸ்டினுக்கு வந்து மனைவியாக வாய்த்து, மூன்று பெண்களும், ஓர் ஆண் மகவும் பெற்றுக் கொடுத்த பின்பும் கூட அவள் பேசின வார்த்தைகளைக் கூடவே இருந்து யாராவது கணக்கிட்டிருந்தால் சொல்லிவிடலாம். ஒரு சில நூறு வார்த்தைகளாவது தன்னுடைய இருபத்தெட்டுப் பிராயத்துக்குள் பேசியிருப்பாளா என்பது சந்தேகம். மிகவும் அப்பிராணி பெரிய அமலம்; சித்தி அவளுக்கு ஒரு விதத்தில் அத்தை முறையும், இன்னொரு சுற்று உறவின் வழியில் அக்கா முறையும் கூட வேண்டும். எஸ்தர் சொன்ன சிறுசிறு வேலைகளை மனங்கோணாமல் செய்வதும் கணவன் குழந்தைகளு டைய துணிமணிகளை வாய்க்காலுக்கு எடுத்துச் சென்று சோப்புப் போட்டு வெயிலில் உலர்த்தியும் எடுத்து வந்து, நன்கு மடித்து வைப்பதுமே இவள் வாழ்க்கையின் முக்கியமான அலுவல்கள் என லாம். தனக்கென எதையும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும், யாரிடமாவது கேட்டு வாங்கிப் பெற வேண்டுமென்ற நியாயத்தையும் அறவே அறியாதவள்.
சின்ன அமலம் எதிரிடையான குணமுடைய பெண். உள் பாவாடைகள் லேஸ் பின்னலாலும் 'பாடிஸ்'களை விதவிதமான எம்பிராய்டரி பின்னல்களினாலும் அலங்கரித்துக்கொள்ள ஆசைப் பட்ட பெண். பெரியவளை விட வசதிக் குறைவான இடத்தி லிருந்தே வந்திருந்தாள். எனினும் இங்கே வந்தபின் தன் தேவை களையும் புற அலங்காரங்களையும் அதிகம் பெருக்கிக் கொண்டவள். எல்லாரும் கீழேயே படுப்பார்கள். மச்சு இருக்கிறது. ஓலைப் பரை வீட்டுக்கு ஏற்ற தாழ்வான மச்சு அது. வெறும் மண் தரைதான் அங்கும். என்றாலும் குழந்தைகளையெல்லாம் கீழே படுத்து உறங்கப் பண்ணிவிட்டு மூங்கில் மரத்தால் ஆன ஏணிப்படிகள் கீச்சிட ஏறிப் போய்ப் புருஷனோடு மச்சில் படுத்துறங்கவே ஆசைப்படுவாள். பாட்டிக்குச் சரியான கண் பார்வையும் நடமாட்டமும் இருந்த போது சின்னவளை வேசி என்று திட்டுவாள். தன் புருஷன் தவிர, அந்நிய புருஷனிடமும் சம்பாஷிப்பதில் கொஞ்சம் விருப்பமுடைய பெண்தான். ஆனால் எந்த விதத்திலும் நடத்தை தவறாதவள்.
இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது? சாத்தாங்கோயில் விளையிலும், திட்டி விளையிலும் மாட்டை விட்டு அழித்த பிற்பாடும் இங்கே என்ன இருக்கிறது?
பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள். மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று நேற்று ஈசாக்கு வந்து அவர்களுக்குச் சொன்னான். ஊர் சிறிய ஊர்தான் என்றாலும் இரண்டு கடைகள் இருந்தன. வியாபாரமே அற்றுப் போய்க் கடைகள் இரண்டையும் மூடியாகி விட்டது. வீட்டில் இருக் கிற நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்று தான். கேப்பை கொஞ்சம் இருக்கிறதுல். சில நாட்களுக்கு வரும். கம்புங் கூட இருக்கிறது. ஆனால் நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்று இருந்தால் எத்தனை நாளுக்குக் காப்பாற்ற முடியும்?
அநியாயமாகப் பீடி குடிக்கிறதுக்காக வென்று, எஸ்தர் சித்திக் குத் தெரியாமல் டேவிட் நேற்று ஒரு குச்சியைக் கிழிக்கிற சத்தத்தை எப்படி ஒளிக்க முடியும்? இத்தனைக்கும் அவன் சத்தம் கேட்கக் கூடாதென்று மெதுவாகத் தான் பெட்டியில் குச்சியை உரசினான். எஸ்தர் சித்தி மாட்டுத் தொழுவத்தில் நின்றிருந்தாள் வழக்கத்தை விட அதிக முன்ஜாக்கிரதையாக நெருப்புக் குச்சியை உரசிய தால் சத்தமும் குறைவாகவே கேட்டது. இருந்தும் எஸ்தர் சித்தியின் காதில் விழுந்துவிட்டது. மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண் டிருந்தவள் அப்படியே ஓடி வந்துவிட்டாள். பதற்றத்துடன் வந்தாள். அடுப்படியில் நெருப்பு ஜ்வாலை முகமெங்கும் விழுந்து கொண்டிருக்க பீடியைப் பற்றவைத்துக்கொண்டு நின்றான் டேவிட்.
சித்தி அவனைக் கேட்டிருந்தால், ஏதாகிலும் பேசியிருந்தால் மனசுக்குச் சமாதானமாகப் போயிருக்கும். இவனுக்கும் ஒன்றும் பேசத் தோணவில்லை. வெறுமனே ஒருவர் முகத்தை ஒருவர் ஒரு சிறிது பார்த்துக்கொண்டதோடு சரி. வெறுமனே ஒன்றும் பேசா மல்தான் பார்த்துக்கொண்டார்கள். அது பேச்சை விடக் கொடுமை யானதாக இருந்தது. முக்கியமாக டேவிட்டை மிகுந்த சித்திர வதைக்குள்ளாக்கியது. எஸ்தர் சித்தியிடமிருந்த தயையும் அன்பும் அப்போது எங்கே போயின? இத்தனை காலமும் சித்தியின் நன் மதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமான அவன் இந்த ஒரு காரியத் தின் காரணமாக எவ்வளவு தாழ்ந்து போய்விட்டான்! அந்தப் பீடியை முழுவதுமாகக் குடிக்க முடியவில்லை அவனால். ஜன்னலுக்கு வெளியே தூர எறிந்துவிட்டான்.
அன்றைக்கு ராத்திரி கூழ்தான் தயாராகி இருந்தது. அந்தக் கூழுக்கும், மேலும் வீட்டுச் செலவுகளுக்கும் வர வரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது. ரெயில் போகிற நேரம் பார்த்து எந்த வேலை இருந்தாலும் ஈசாக்கும் சித்தியும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டி வந்தது. அந்த இஞ்ஜின் டிரைவரிடந்தான் தண் ணீருக்காக எவ்வளவு கெஞ்ச வேண்டி யிருக்கிறது? எஸ்தர் சித்தி யிடம் பேசுகிற சாக்கில் டிரைவர்கள் கொஞ்ச நேரம் வாயாடி விட்டுக் கடைசியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். ஊரில் எல்லா மக்களும் இருந்தபோது இதற்குப் போட்டியே இருந்தது. ஊரை விட்டு எல்லாரும் போனதில் இது ஒரு லாபம். நான்கைந்து பேரைத் தவிர, போட்டிக்கு ஆள் கிடையாது.
அன்று இரவு எல்லாரும் அரைகுறையாகச் சாப்பிட்டுப் படுத்து விட்டார்கள். சின்ன அமலம் எப்போதோ மச்சில் போய்ப் படுத்துக் கொண்டாள். டேவிட் வெகுநேரம் வரை திண்ணையில் இருந்து கொண்டிருந்தான். எஸ்தர் சித்தி அவனை எவ்வளவோ தடவை சாப்பிடக் கூப்பிட்டாள். எல்லாரையும் சாப்பாடு பண்ணி அனுப்பி விட்டு அவனிடத்தில் வந்து முடிகளடர்ந்த அவன் கையைப் பிடித்துத் தூக்கி அவனை எழுந்திருக்க வைத்தாள். அவனைப் பின்னால் அடுப்படிக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தட்டுக்கு முன்னால் உட் கார வைத்தாள். தலையைக் குனிந்தவாறே சாப்பிட மனம் இல்லாத வனாயிருந்தான். சித்தி டேவிட்டுடைய நாடியைத் தொட்டுத் தூக்கி நிறுத்திச் சொன்னாள்.
"ஏய் சாப்பிடுடே. ஓங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்." என்று சொன்னாள். அப்படியே டேவிட், சித்தியின் ஸ்தனங்கள் அழுந்த அவளுடைய பரந்த தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். சித்தி அவன் முதுகைச் சுற்றியணைத்து அவனைத் தேற்றினாள். டேவிட் லேசாக அழுதான். சித்தியும் அவனைப் பார்த்து விசும்பினாள். இருவருமே அந்த நிலையையும், அழுகையையும் விரும்பினார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு இதுவரை யிலும் இல்லாத அபூர்வமான பிரேமையும் கருணையும் சுரந்தன.
டேவிட் அழுவதில் நியாயமிருந்தது. ஆனால் சித்தியும் அழுதாளே? அவள் தான் டேவிட்டிடம் அத்தனை கடுமையாக நடந்துகொண்ட துக்காக வருத்தப்பட்டு தான் இவ்விதம் அழுகிறாளா? ஆனால் விஷயத்தைச் சொல்ல வேண்டும். எஸ்தருக்கு அவள் புருஷன் லாரென்ஸுடைய ஞாபகம் வந்தது. லாரன்ஸும் அவனைப் பற்றிய ஞாபகங்களும் இப்போது எல்லாருக்குமே மிகப் பழைய விஷயம். யாருக்கும் இப்போது லாரன்ஸின் முகம் கூட நினைவில் இல்லை. அவ்வளவாய் அவன் காரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. இரண்டு பேருக்குமே அப்போது அதை விடவும் உயர்வான காரியம் ஒன்றுமில்லை அந்த நேரத்தில்.
அன்று இரவு டேவிட் மச்சில் படுத்து நன்றாக நிம்மதியுடன் உறங்கினான். ஆனால் எஸ்தர் சித்தி உறங்கவில்லை. டேவிட் சாப்பிட்ட வெண்கலத் தாலத்தைக் கூடக் கழுவியெடுத்து வைக்கவில்லை. வெகுநேரம் வரை தனியே உட்கார்ந்து பல பழைய நாட்களைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தாள். பின்னர் எப்போதோ படுத்து உறங்கினாள்.
ரெயில் தண்டவாளத்தில் என்ன இருக்கிறது? அவள் இந்த வீட்டின் மூத்த மருமகளாய் வந்த காலம் முதல் அவளுக்குக் கிடைக்கிற ஓய்வான நேரங்களிலெல்லாம் புற வாசலில் இருந்துகொண்டு இந்தத் தண்டவாளத்தைத் தான் பார்த்துக்கொண்ட் டிருக்கிறாள். தண்ட வாளம், போட்டிருந்த இடத்திலேயே அப்படியேதான் இருக்கிறது. அந்தத் தண்டவாளம் அவளுக்குப் புதுசாக எவ்விதமான செய்தி யையும் அறிவித்துவிடவில்லை. சில சமயங்களில் அந்தத் தண்ட வாளத்தின் மீதேறி ஆடுகள் மந்தையாகக் கடந்து போகும். அதிலும் குள்ளமான செம்மறியாடுகள் தண்டவாளத்தைக் கடக்கிறதை விட வெள்ளாடுகள் போகிறதையே அவளுக்குப் பிடிக்கிறது. இரண்டுமே ஆட்டினந்தான். அவளுடைய வீட்டில் வெள்ளாட்டு மந்தை ஒன்று இருந்தது. இதற்காகத்தான் அவள் வெள்ளாடுகளை விரும்பி னாளாக இருக்கும். இப்போது அதுபோல ஒரு வெள்ளாட்டு மந்தை அந்த தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் போகாதா என்று இருந் தது. இப்போது ஊரில் மந்தைதான் ஏது? மந்தை இருந்த வீடுகள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன.
சும்மாக் கிடக்கிற தண்டவாளத்தைப் பார்க்கப் பார்க்கத் தாங்க முடியாத கஷ்டத்தில் மனசு தவித்தது. இப்படிக் கஷ்டப்படுவதை விட அவள் உள்ளே போய் இருக்கலாம். பள்ளிக்கூடத்தை மூடி விட்டபடியால் குழந்தைகள் எல்லாம் திண்ணையில் பாட்டியின் பக்கத்தில் கூடியிருந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அங்கே போய்க் கொஞ்ச நேரம் குழந்தைகளோடு இருக்கலாம். ஆனால் அதில் அவளுக்கு இஷ்டமில்லை. ஒருவிதத்தில் இவ்விதமான அள வற்ற கஷ்டத்தை அநுபவிப்பதை அவள் உள்ளூற விரும்பினாள் என்றே சொல்லவேண்டும். இவ்விதம் மனசைக் கஷ்டப்பட வைப் பது ஏதோவொரு விநோதமான சந்தோஷத்தைத் தந்தது.
முன்னாலுள்ள மாட்டுத் தொழுவில் மாடுகள் இல்லை. இவ்வளவு கஷ்டத்திலும் மாடுகளைக் காப்பாற்ற வேண்டிய துரதிருஷ்டம். இத்தனை நாளும் உழைத்த அந்த இரண்டு வாயில்லா ஜீவன் களையும் எங்கே என்று விரட்டிவிட முடியும்? ஈசாக்குதான் தண்ணீர் கூட இல்லாத சாத்தாங் கோயில் விளைக்குக் காய்ந்து போன புல்லையும், பயிர்களையும் மேய்கிறதுக்குக் கொண்டு போயிருக்கிறான். ஈசாக்கு மட்டும் இல்லையென்றால் மாடுகள் என்ன கதியை அடைந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை.
அத்தையையும் ஈசாக்கையும் ஊரில் விட்டுவிட்டுப் போக வேண்டுமாமே? அது எப்படி?
இவள் அத்தை இவளிடம் அதிகம் பேசினதே கிடையாது. இதற்கு இவள் - பெரிய அமலம் - ஒரு காரணமாக இருக்கும். யாரிடந்தான் அதிகம் பேசினாள்? அத்தையிடம் ஆழமான பணிவு உண்டு. இதைக் கற்றுத் தந்தது அம்மா என்றுதான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பாவுடைய அம்மாவும் இவளுக்கு ஆச்சி யான ஆலீஸ் ஆச்சியிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டதைச் சிறுவயது முதலே பார்த்திருக்கிறாள். எவ்வளவோ விஷயங்கள் ஆச்சிக்கும் அம்மாவுக்கும் இடையே நடந்தன; எதிர்ப்போ, சிணுங்கலோ இல்லாமல் அமைதியும் அன்பும் நிரம்பிய சந்தோஷமான பேச்சுகளை இவள் நேரில் அறிவாள்.எல்லாம் நேற்றோ முன் தினமோ நடந்ததுபோல் மனசில் இருக்கிறது.
ஆச்சிக்கு வியாதி என்று வந்து படுத்துவிட்டால்,அம்மாவின் குடும்ப ஜெபத்தின் பெரும் பகுதியும்,ஆச்சிக்கு வியாதி சொஸ்தப் படவேன்டும் என்றே வேண்டுதலுடன் இருக்கும்.அம்மா படிக் காத பெண்.அம்மாவின் ஜெபம் நினைக்க நினைக்க எல்லாருக்கும் அமைதியைத் தருவது.அந்த ஜெபத்தை அம்மாவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்று தெரியவில்லை.அம்மாவே யோசித்துக் கற்றுக் கொண்டது அந்த ஜெபம்.சின்னஞ் சிறு வார்த்தைகள்.பெரும் பாலும் வீட்டில் அன்றாடம் புழங்குகிற வார்த்தைகள்.தினந் தோறும் அம்மா ஜெபம் செய்யமாட்டாள்.ஜெபம் செய்கிற நேரம் எப்போது வரும் என்று இருக்கும்.படிக்காத பெண்ணின் ஜெபம், அதனால்தான் பொய்யாகப் பண்ணத் தெரியவில்லை என்று மாமா அடிக்கடி சொல்லுவார்.
அம்மா தன் அத்தையைக் கனம் பண்ணினாள்.பெரிய அமலத் துக்கும் இது அம்மாவின் வழியாகக் கிடைத்தது.அம்மாவைப் போலவே குடும்பத்தில் எல்லாரிடமும் பிரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளூறப் பேராசை வைத்திருந்த பெண் அமலம்.
அமலம் என்று நேசிக்கிற,உயரமான ஒரே ஆள் அவள் ஊரில் இருக்கிறான்.அவள் ஊருக்குக் கீழ்மேலாய் ஓடுகிற வாய்க்கால் உண்டு.வாய்க்காலிலிருந்தே ஊர் ஆரம்பமாகிறது. வாய்க்காலுக்கு அப்பாலும் கார் போகிற ரோடு வரை வெறும் தரையாக முட்செடிகள் அடர்ந்து கிடக்கின்றன.வாய்க்காலுக்கு அப்பால் ஊர் ஏன் வளரக்கூடாது என்று தெரியவில்லை.வாய்க்கா லுக்கு அப்பால் ரோடு வரை ஊர் வளர யாருக்கும் விருப்பமில்லை. வாய்க்காலிலிருந்தே ஒவ்வொரு தெருவும் ஆரம்பமாகி முடிகின்றது.
அமலத்துடைய வீடு இருக்கிற தெருவுக்குப் பெயர் கோயில் தெருவு.வெறும் சொரிமணல் உள்ள தெரு அது.அமலத்து வீட்டுக்கு வடக்கு வீடு,நீளமான வீடு.இளநீல வர்ணத்தில் வீட்டின் சுவர்கள் இருக்கும்.இந்த வீட்டில்தான் அமலமும் நேசித்துப் பேசிச் சிரிக்கிறவன் இருந்தான்.அவனை அமலம் விரும் பினது வெறும் பேச்சுக்காக மட்டும் இல்லை.அவன் இங்கேயும் எப்போதாவது வருவான்.ஏன் வந்தான் என்று சொல்ல முடியாது. வந்தவன் ஒரு தடவை கூட உட்காரக்கூட இல்லை.ஏன் வந்து விட்டு ஓடுகிறானென்று யாரும் காரணம் சொல்ல முடியாது.அமல மாவது அறிவளா?இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறவன் உட்காரக் கூட விருப்பமின்றி வந்ததும் புறப்பட்டுத் திரும்பிப் போகி றானே,இதெல்லாம் யார் அறியக்கூடும்?அமலத்துக்குத் தெரி யாமல் இருக்குமா?
இவ்வளவு மிருதுவான பெண்ணுக்கு எல்லாம் இருக்கிற வீட்டில் என்ன கஷ்டம் வந்தது?வீட்டில் யாரோடும் இணையாமல் தனியே இருந்து என்ன தேடுகிறாள்?யாரிடமும் சொல்லாத அவள் விருப்ப மும்,அவள் துக்கமுந்தான் எவ்வளவு விநோதமானவை?அமலத்தின் மனசை அவள் புருஷனும்,இவளுக்குக் கொழுந்தனுமான டேவிட்டும் கூட அறியவில்லை.
ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரம் ஆகிவிட்டது.ஈசாக் குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை.அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து.வெயிலும் வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பிவந்தாள்.காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை.காடு மறைந்துகொண் டிருந்தது.விளைச்சலும், இரவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கைச் சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்ச காலமாய் மறைந்து விட்டன.
ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப் போது ஒன்றுமே இல்லை.ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக் சொல்லுகிறான்.வெயிலின் நிறங்களை ஈசாக் நன்றாக அறிவான்.'மஞ்சள் வெயில் அடித்தால் நாளைக்கு மழை வரும்' என்று அவன் சொன்னால் மழை வரும்.கோடைக் காலத்து வெயிலின் நிறத்தையும்,மழைக்காலத்து வெயிலினுடைய நிறத்தையும் பற்றி ஈசாக்குக்குத் தெரியாத விஷயமில்லை.
ஈசாக்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும்,ஆடு மாடு களுக்காகவுமே உலகத்தில் வாழ்ந்தான்.ஆனாலும் ஈசாக்குக்குப் பிரியமான விளைகள் எல்லாமே மறைந்துகொண் டிருந்தன.கடைசி யாகத் திட்டி விளைவில் மாட்டை விட்டு அழிக்கப் போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான்.எவ்வளவு அழுதான் அன்றைக்கு?இத்தனைக்கும் அவன் பேரில் தப்பு ஒன்று மில்லை.தண்ணீரே இல்லாமல்,தானே வெயிலில் காய்ந்து போன பயிர்களை அழிக்கத்தான் அவனைப் போகச் சொன்னாள் எஸ்தர் சித்தி.காய்ந்து போன பயிர்களை அழிக்கிறதில் அவனுக்கு என்ன நஷ்டம்?ஆனாலும் கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான்?அவன் நிலம் கூட இல்லைதான் அது.
இவ்வளவு அக்னியை உயரே இருந்து கொட்டுகிறது யார்? தண்ணீரும் இல்லாமல்,சாப்பிடத் தேவையான உணவுப் பொருள்களும் கூட இல்லாத நாட்களில் பகல் நேரத்தை இரவு ஏழு மணி வரை அதிகப்படுத்தினது யார்? காற்றுக் கூட ஒளிந்துகொள்ள இடம் தேடிக்கொண்டது. பகலில் அளவில்லாத வெளிச்சமும் இரவில் பார்த்தாலே மூச்சைத் திணற வைக்கிற இருட்டும் கூடி யிருந்தன.
எஸ்தர் சித்தி ஒரு நாள் இரவு, ஹரிக்கேன் விளக்கு முன்னால் உட்கார்ந்திருந்தபோது சொன்னாள்: "இந்தமாதிரி மை இருட்டு இருக்கவே கூடாது. இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னு தெரியலே, இது கெடுதிக்குத்தான்." நல்லவேளை யாக இந்த விஷயத்தைச் சித்தி சொன்னபோது குழந்தைகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாகப் படுத்து உறங்கியிருந்தனர். சின்ன அமலத்துடைய கைக்குழந்தை மட்டும் பால் குடிக்கிறதுக்காக விழித்திருந்தது. சித்தி கூறிய விஷயத்தை உணர முடியாத அந்தக் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.
இப்போது இந்த இராவிருட்டு மேலும் பெருகிவிட்டது. நிலாக் காலத்தில் கூட இந்த மோசமான இருட்டு அழியவில்லை. ஊரில் ஆட்கள் நடமாட்டமே இல்லாதது வேறு, இருட்டை மேலும் அதிகமாக்கிவிட்டது. வீடுகளில் ஆட்கள் இருந்தால், வீடுகள் அடைத்துக் கிடந்தாலும் திறந்து கிடந்தாலும் வெளிச்சம் தெரு வில் வந்து கசிந்து கிடைக்காமல் போகாது. எவ்வளவு அமாவாசை இருட்டாக இருந்தாலும் வீடுகளிலிருந்து கேட்கிற பேச்சுச் சத்தங் களும், நடமாட்டமும் இருட்டை அழித்துவிடும். இருட்டை அழிப் பது இதுபோல் ஒரு சிறிய விஷயமே. இருட்டைப் போக்கினது பஞ்சாயத்துப் போர்டில் நிறுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை வீசுகிற நிலா வெளிச்சமோ அல்ல. இருட்டை அழித்தது, வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக் குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக்கொண்டிருந்தாலுங் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு எப்போதும் எஸ்தர் குடும்பத்துக்குத் துயரம் தருகிறதாக இருந்தது இல்லை. இப்போது இருட்டுத் தருகிற துக்கத்தை வெயிலின் கொடுமையைப் போலத் தாங்க முடியவில்லை.
வெயில், புழுக்கமும் எரிச்சலும் அளித்தது. வெயில் பகலின் துயரங்களை அதிகப்படுத்தியது. இருட்டோ வெயிலைப் போல எரிச் சலைத் தராமல் போனாலும் இன்னொரு காரியத்தைச் செய்தது. அது தான் பயம். வெறும் இருட்டைக் கண்டு குழந்தைகள் பயப் படுகிறது போலப் பயமில்லை. யாரும் ஊரில் இல்லை என்பதை, உறங்கக்கூட விடாமல் நடைவாசலுக்கு வெளியே நின்று பயமுறுத்திக்கொண் டிருந்தது இருட்டு.
இருட்டு கரிய பொருள். உயிரில்லாதது போல்தான் இத்தனை வருஷமும் இருந்தது. இந்தத் தடவை உயிர் பெற்றுவிட்டது விநோ தந்தான். எஸ்தர் சித்தி வீட்டுக்கு வெளியே நின்று முணுமுணுத் துக் கொண்டிருந்தது. அது என்ன சொல்லுகிறது? இவ்வளவு கருப்பாக முகமே இல்லாதது எவ்விதம் பயமுறுத்துகிறது? ஆனால் உண்மையாக இவ்விதமே இருட்டு நடந்து கொண்டது தெளிவாகப் பேச முடியாமல் இருக்கலாம். ஆனால் முணு முணுக்கிறது என்ன வென்று வீட்டிலுள்ள பெரியவர்களுக்குக் கேட்கிறது.
முக்கியமாக விவேகமும், அதிகாரமும் நிரம்பிய எஸ்தர் சித்திக்கு அது முணுமுணுப்பது கேட்கிறது. இருட்டுச் சொன்னதைக் கேட்டுத் தைரியம் நிரம்பிய எஸ்தர் சித்தியே பயந்தாள். இனி மீள முடி யாது என்பது உறுதியாகிவிட்டது. இருட்டின் வாசகங்கள் என்ன?
மேலே ஓடுகளினால் கூரை வேயப்பட்டிருந்த வீடுதான் அது என்றாலும் பக்கத்துச் சுவர்கள் சுட்ட செங்கற்களினால் கட்டப் பட்டவை. சுவர்களுக்குச் சுண்ணாம்பினால் பூசியிருந்தார்கள். நல்ல உறுதியான சுவர்கள் தான். இருட்டு பிளக்க முடியாத சுவர்கள். நம்பிக்கைக்குரிய இந்தச் சுவர்களைக் கூடப் பிளந்துவிடுமா? எஸ்தர் சித்தி பயந்தாள். இருட்டு சொன்னது கொடுமையானது.
'நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா?" இதுதான் எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது. இதை அது தினந்தோறும் இடைவிடாமல் முணுமுணுத்தது; பிடிவாதத்துடன் கூடிய, உறுதி நிரம்பிய முணுமுணுப்பு.
கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லாரும் தூங்கியான பிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக்கொண்டு வந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும். எவ்வளவோ வருஷங்களாகப் பார்த்துக்கொண்டே இருக்கிற கண்களுக்குள் இந்த நம்பிக்கை இருப்பது ஆச்சரியமே. கண்களுக்கு முதுமையே வராதா? இவ்வளவு தீவிரமாக நம்பிக்கை கொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருகிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன? ஈசாக் துணையாக இருப்பானா? அவனுக்குத் தருகிறதுக்குக் கூட ஒன்றும் இல்லை என்பதையும் எதிர்பாராமல் உழைத்தான் என்றாலும் வீட்டை நிர்வகிப்பவளுக்கு இதுவும் ஒரு கௌரவப் பிரச்னைதான்.
கூரையில் பார்க்க என்னதான் இருக்கிறது? பயிர்களின் வளர்ச்சி யைக் கூடவே இருந்த ஈசாக்கு அறிவது போல, கூரை ஓலைகளை வெயிலிலும் மழையிலும் காற்றும் முதுமையடையச் செய்து, இற்றுக் கொண்டிருப்பதை பாட்டி அறியாமலா இருப்பாள்? கூரையின் எந்தெந்த இடத்தில் ஓலைகள் எப்போது வெளுக்க ஆரம்பித்தன என்பது பாட்டிக்குத் தெரியும்.
அன்றைக்கு ராத்திரி மறுபடியும் எல்லாரும் கூடினார்கள். இருந் தது கொஞ்சம் போல் கேப்பை மாவு மட்டிலுமே. காய்ந்துபோன சில கறிவேப்பிலை இலைகளும் கொஞ்சம் எண்ணெயும் கூட வீட்டில் இருந்தது பெரும் ஆச்சரியமான விஷயம். கேப்பை மாவிலிருந்து எஸ்தர் களி போல ஒரு பண்டம் கிளறியிருந்தாள்.
நெருப்புக்காகக் கஷ்டப்படவேண்டி வரவில்லை. காய்ந்த சுள்ளிகளை இதற்காகவே ஈசாக்கு தயார் செய்துகொண்டு வந்து போட்டிருந்தான். கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைத்த நாள் முத லாய் நெருப்பை அணையாமல் காத்து வருகிறார்கள். ஈசாக்கு மட்டும் காட்டிலிருந்து லேசான சுள்ளி விறகுகளைக் கொண்டு வந்து போடாமல் போயிருந்தால் இதுபோல நெருப்பைப் பாதுகாத்து வைத்திருக்கமுடியாது. நெருப்பு இல்லாமல் என்ன காரியம் நடக்கும்?
இவ்வளவு விசுவாசமான ஊழியனை எவ்விதம் விட்டுவிட்டுப் போக முடியும்? பயிர்களைப் பாதுகாத்து வந்தான். கால்நடைகளைப் போஷித்தான். மழையிலும், புழுக்கத்திலும் புறவாசலில் கயிற்றுக் கட்டிலே போதுமென்று இருந்தான். பாட்டிக்காக ஈசாக்கைச் சாக\ விட முடியுமா? இவளே சோறு போட்டு வளர்த்துவிட்டாள். இவளே மார்பில் முடிகள் வளர்வதையும் மீசை முடிகள் முளைக் கிறதையும் பார்த்து வளர்த்தாள். இரவில் எத்தனை நாள் கயிற்றுக் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து ஓசைப்படாமல் நின்றுகொண்டு ஈசாக்கு கிடந்து உறங்குவதைப் பார்த்துக்கொண் டிருக்கிறாள்.
ஈசாக்கிடம் என்ன இருக்கிறது? காட்டு வெயிலில் அலைந்து கறுத்த முரட்டுத் தோலினால் மூடப்பட்ட் உடம்பு தவிர வேற என்ன வைத்திருக்கிறான் ஈசாக்கு? புறவாசலில் மாட்டுத் தொழுவில் நின்று தன்னுடைய மோசமான வேர்வை நாற்றமடிக்கிற காக்கி டிரவுசரை மாற்றுகிறபோது எத்தனையோ தடவை சிறுவயது முதல் இன்று வரையிலும் முழு அம்மணமாய் ஈசாக்கைப் பார்த்திருக்கிறாள்! இது தவிரவும் அந்த முரடனின் ஈரப்பசையே இல்லாத கண்களில் ஒரு வேடிக்கையான பாவனை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது ஆடுகளையும், மாடுகளையும் பார்க்கிறபோது தெரிகிற பாவனையில்லை. நன்றாக முற்றி வளர்ந்த பயிர்களுடனே நடந்து போகிறபோது கண்களில் மினுமினுக்கிற ஒளியும் இல்லை. எல்லா விதங்களிலும் வேறான ஓர் ஒளியை எஸ்தரைப் பார்க்கிறபோது அவனுடைய கண்கள் வெளியிடுகின்றன.
யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பரிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு. சின்ன அமலம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். அது அவளுக்கு இயல்புதான்.
"நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க" என்று பெரிய அமலத்தை யும் சின்ன அமலத்தையும் பார்த்துக் கூறினாள். இரண்டு பேரும் அதற்குப் பதிலே சொல்லக் கூடாது என்கிறது போல் எஸ்தர் சித்தி யின் குரல் இருந்தது. அவர்களும் பதிலே பேசவில்லை.
"நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க. மதுரையிலே போய்க் கொத்த வேல பார்ப்போம். மழை பெய்யுந்தண்ணியும் எங்கன யாவது காலத்த ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும்."
இதற்கும் அகஸ்டினும், டேவிட்டும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து டேவிட் மட்டும் பேசினான். கைவிரல் களில் கேப்பைக் களி பிசுபிசுத்திருந்ததை ஒவ்வொரு விரலாக வாய்க்குள் விட்டுச் சப்பியபடியே பேசினான்.
பாட்டி இருக்காளா?"
எஸ்தர் அவனைத் தீர்மானமாகப் பார்த்தாள். பிறகு பதிலே சொல்லவில்லை. படுக்கப் போகும்போது கூடப் பதிலே சொல்ல வில்லை. ஆனால் அன்றைக்கு இராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுவீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் போய்ப் படுத்துக் கொண்டாள்.
அதிகாலையிலும் அந்த வறட்சியான காற்று வீசிக்கொண்டு இருந்தது. அது குளிர்ந்தால் மழை வரும். அது குளிராது. குளிர்ந்து போக அக் காற்றுக்கு விருப்பம் இல்லை. மெலிந்து போயிருந்த இரண்டு காளை மாடுகளும் அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தன. அதை அரைகுறையான தூக்கத்தில் புரண்டுகொண்டிருந் தவர்கள் எல்லாரும் நன்றாகக் கேட்டிருக்க முடியும். அந்த மாடு களின் பெருமூச்சை அதிக நேரம் கேட்க முடியாது. தாங்க முடியாத சோகத்தை எப்படியோ அந்தப் பெருமூச்சில் கலந்து அந்த மாடு கள் வெளியிட்டுக்கொண்டிருந்தன. அந்தக் காற்றாவது கொஞ்சம் மெதுவாக வீசியிருக்கலாம். புழுக்கத்தை வீசுகிற காற்றுக்கு இவ் வளவு வேகம் வேண்டாம். காய்ந்து கிடக்கிற மேலக்காட்டிலிருந்து அந்தக் காற்று புறப்பட்டிருக்க வேண்டும். காட்டில் விழுந்து கிடக்கிற காய்ந்த மாட்டுச் சாணம், ஆட்டுப் பிழுக்கை ஆகியவற்றின் மணம் காற்றில் கலந்திருந்தது. மேல் காட்டில் தான் கடைசியாக இந்த வருஷம் அதிகம் மந்தை சேர்ந்திருந்தது.
பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிற துக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப் பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமை யாக வாங்கிக்கொண்டு வந்தான். அதற்குள் சாயந்திரமாகி விட் டிருந்தது. பாதிரியார் ஊரிலில்லை யென்று கோயில் குட்டியார் தான் பாளையஞ்செட்டி குளத்தூரிலிருந்து வந்திருந்தார். ஊரை விட்டுக் கிளம்புகிறதுக்காகவென்று எஸ்தர் சேமித்து வைத்திருந்த பணத்தில் பாட்டியின் சாவுச் செலவுக்கும் கொஞ்சம் போய்விட்டது.
யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின. கல்லறைத் தோட்டம் ஒன்றும் தொலைவில் இல்லை. பக்கத்தில்தான் இருந்தது. கோயில் தெருவிலும், நாடாக்கமர் தெருவிலும் இருந்த இரண்டே வீட்டுக்காரர்கள் கொஞ்ச நேரம் வந்து இருந்துவிட்டுப் போய் விட்டார்கள். துக்க வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கின்ற பொறுப்பை அவ்வளவு லேசாகத் தட்டிக் கழித்துவிட முடியுந்தானா?
எஸ்தர் சித்திக்கு மட்டும் பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துகொண்டே இருந்தது. வெகுகாலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.
-----------------------------------------------------------
சார்வாகன்:
செங்கல்பட்டுத் தொழுநோய் மருத்துவமனை யில் ஸர்ஜனாக இருக்கும் சார்வாகனின் இயற்பெயர் ஹரி.ஸ்ரீனி வாசன்.பிறந்தது வேலூரில்(7-9-1929).இவருடைய கவிதை களும் சிறுகதைகளும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலேயே வெளிவந்திருப்பினும் பரவலான வாசகர் கவனமும் பாராட் டும் பெற்றவை-சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட "அறுசுவை" என்ற குறுநாவல் தொகுப்பிலும்,திருவனந்தபுரம் நகுலன் தொகுத்த "குருக்ஷேத்திரம்" நூலிலும் இவருடைய படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.'கனவுக்கதை'என் னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது.இவருடைய சிறுகதை களில் சில,ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகி-யிருக்கின்றன.
முகவரி:2,Varadanar Street,Vedachalam nagar, chingleput-603001
உத்தியோக ரேகை – சார்வாகன்
"பிச்சுமணி என்ன பண்ணறார் இப்போ?"நான் வீட்டுக்கு வந்ததும் கேட்டேன்.
"அவன் போயி நாலஞ்சு மாசம் ஆகியிருக்குமே"என்றாள் அம்மா.
அவளுக்கு எப்போதுமே பிச்சுமணியைப் பிடிக்காது.ஏனென்று கேட்டால் சரியாகப் பதில் சொல்ல மாட்டாள்."அவனா, பெரிய தகல்பாஜியாச்சே?ஆட்டைத் தூக்கி மாட்டில் போடறதும், மாட்டைத் தூக்கி ஆட்டில் போடறதும்,அவன் காரியம் யாருக் குமே புரியாதே,ஜகப்புரட்டன்"என்றுதான் சொல்வாள்.
இன்றைக்குப் பஸ்ஸிலே கருப்பாகக் கச்சலாக நரைமயிர் விளிம்பு கட்டின வழுக்கைத் தலையுடனும் உள் அதுங்கியிருந்த மேவா யில் பஞ்சு ஒட்டினமாதிரி அரும்பியிருந்த மீசை தாடியுடனும் புகையிலைத் தாம்பூலம் அடக்கி வைக்கப்பட்டுத் துருத்துக்கொண் டிருந்த இடது கன்னம்,முழங்கைக்குக் கீழே தொங்கும் 'ஆஃபாரம்',தட்டுச் சுற்று வேட்டி ஜமக்காளப் பையுடனும் இருந்த ஒருத்தரைப் பார்த்தேன்.அசப்பிலே பிச்சுமணி போலவே இருந்தார்.வாய்விட்டுக் கூப்பிட்டிருப்பேன்.அதுக்குள்ளே இது வேறே ஆள் என்பது புலனாகவே சும்மாஇருந்து விட்டேன்.அந்த ஞாபகத்திலேதான் வீட்டுக்கு வந்ததும் அம்மாவைக் கேட்டேன்.
அவர் காலமாகி விட்டர் என்று அம்மா சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"அட பாவமே"என்றேன்.
"என்ன பாவம் வேண்டிக் கிடக்கு?கட்டின பொண்டாட்டியைத் தள்ளி வெச்சுட்டு அவள் வயிறெரிஞ்சு செத்தா.பெத்துப் போட்ட அம்மா தொண்டுக் கிழம்;அவளை என்னடான்னா 'வீட்டிலே பொம்மனாட்டி யாரும் இல்லை,நானோ ஊர் ஊராகப் போகணும். இங்கே நீ இருந்தா சரிப்பட்டு வராது,சுலோசனா வீட்டிலே போய் இருந்திடு'ன்னு வெரட்டினான்.அவளுக்குக் கொள்ளி வைக்கிற துக்குக் கூட கிடைக்கலே.அவன் ஒண்ணும் கஷ்டபட்டுச் சாகல்லே.சுகமா வாழ்ந்து சுகமாத்தான் செத்தான்.ஒரு நாள் விழுப்புரமோ உளுந்தூர்ப்பேட்டையோ,அங்கே எங்கேயோ ஒரு ஓட்டல்லே ராத்திரி சாப்பிட்டுட்டுப் படுத்தானாம், கார்த்தாலே எழுந்திருக்கல்லே, அவ்வளவுதான்."
அம்மாவுக்கு ஒரே கோபம்.பிச்சுமணி பேர் எடுத்தாலே அவள் அப்படித்தான்.
"அப்புறம்?"
"அப்புறம் என்ன?ஓட்டல்காரன் வந்து கண்டுபிடிச்சான். பையைக் கிளறி அட்ரஸ் கண்டுபிடிச்சு நாணுக்குத் தந்தியடிச்சு போன் பண்ணினான்.அவனும் சாமாவும் போய்ப் படாத பாடு பட்டு டாக்டருக்கும் போலீசுக்கும் டாக்ஸிக்கும் பணத்தை வாரிக் கொடுத்து ஊருக்கு எடுத்துண்டு போயி கொள்ளி வெச்சா.சாம் பலாகறவரைக்கும் அவனாலே யாருக்கு என்ன சுகம்?"என்று சொன்னாள் அம்மா.
"அவர் எங்கே விழுப்புரத்துக்கும் உளுந்தூர்ப்பேட்டைக்கும் போய்ச் சேர்ந்தார்?"என்று கேட்டேன் நான்.
"அவனுக்கு வேற வேலை என்ன?ஏதாவது பிள்ளை தேடிக் கிண்டு போயிருப்பான்"என்று அம்மா அசுவாரசியமாகச் சொல்லி விட்டாள்.
இதைக் கேட்டதும் பிச்சுமணிக்குக் கல்யாணத்துக்காக அரை டஜன் பெண்கள் காத்துக் கிடக்கின்றன என்று நினைத்துவிடப் போகிறீர்கள்,விஷயமே வேற.
எனக்குப் பிச்சுமணியை ரொம்பத் தெரியாது.அவருக்கு அறுபது வயசுக்குக் குறைவிருக்காது.வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுவிட்டார்,ஓரே ஒரு பையன் இருக்கிறான்,இவ்வளவு தான் தெரியும்.அவர் என்ன வேலை செய்தார் என்றும் எனக்குத் தெரியாது.அம்மாவுக்கும் தெரியாது."என்னமோ கமிஷன் ஏஜன்ட், ஊர் ஊராகச் சுத்தற உத்தியோகம்" என்று துச்சமாகச் சொல்லி விடுவாள்.பிச்சுமணி விஷயத்தில் அவர் ஓய்வுபெற்ற பின்னும் ஊர் ஊராய் அலைவது மாத்திரம் என்ன காரணத்தாலோ நிற்க வில்லை.எப்போதும் யாரையாவது யாருக்காவது ஜோடி சேர்த்து விட முயற்சி செய்தபடி இருப்பார் என்று மாத்திரம் கேள்விப் பட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் நான் அறிந்தவரை அவர் ஒன்றும் இன்பமான இல்லற வாழ்க்கை நடத்தினதில்லை.பத்துப் பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னாலேயே முதல் முதல் நான் அவரைச் சந்தித்த போதே அவருடைய மனைவி உயிருடன் இல்லை.
எப்போதாவது மூணு நாலு வருஷத்துக்கொரு முறை அவரை ஏதாவது கல்யாணத்தில் நான் சந்தித்தாலே அதிகம்.ஒரே ஒரு முறைதான் அம் மனிதரின் உள்ளே இருக்கும் உண்மை மனிதனைச் சில நிமிடங்கள் நேருக்கு நேர் பார்த்து உணர முடிந்தது.அந்தச் சமயம் எனக்கு ரொம்பவும் தருமசங்கடமாகப் போயிற்று. இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஆறு வருஷத்துக்கு முன்னால் என் தூரபந்து ஒருவரின் கலியாணத்துக்குப் போயிருந்தேன்.கலியாணம் கோயமுத்தூரில் நடந்தது.அங்கே போன பிறகுதான் மாப்பிள்ளைக்கு என்னவோ முறையில் பிச்சுமணி நெறு*ங்கிய உறவினர் என்பது எனக்குத் தெரியவந்தது.காலையிலே என்னைப் பார்த்ததுமே பிச்சுமணி சந்தோஷத்தோடு என்னை வரவேற்றுக் குசலம் விசாரித்தார்.அதே சமயம் அவர் எனக்காக 'கிளியாட்டம்' ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருந்ததாகவும்,ஆனால் நானோ எல்லாரையும் ஏமாற்றிவிட்டு அவருக்கும் வேறு யாருக்கும் சொல்லாமல் என் கலியாணத்தை முடித்துக் கொண்டு விட்டேன் என்றும் குற்றஞ் சாட்டினார்."ரெண்டு லட்சம் ரூபாய் பெறுமான ஆஸ்தி வேறே போச்சே" என்று கூறி, எனக்காக அங்கலாய்த்துக் கொண்டார்.எனக்குச் சிரிப்பு வந்ததே தவிர வேறென்ன செய்வது என்று தெரியவில்லை.எதையோ சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.முகூர்த்தம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் கலியாண மண்டபத்தின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் அறையில் தூங்கப் போய்விட்டேன்.
ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருந்தபோது மணி மூணாகி விட்டிருந்தது.தூக்கம் கலைந்து விடவே கீழே என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று இறங்கி வந்தேன்.
கலியாணக்கூடம் வெறிச்சென்றிருந்தது.ஒரு பக்கம் விரித் திருந்த கசங்கி மடிப்பேறின ஜமக்காளத்தில் ஒரு மூலையில் இடுப் பில் ஒரு கயிறு மாத்திரமேஅணிந்து மற்றபடி வெறும் மேனி யுடன் இருந்த குழந்தை குப்புறப்படுத்து நீந்துவதுபோல மாறு கை, மாறு காலை நீட்டி மடக்கின நிலையில் தூங்கிக்கொண் டிருந்தது. மண்டபத்தின் வாயிலில் துவார பாலகர்களைப் போல நிறுத்தி வைத்திருந்த வாழை மரங்களின் இலைகளைத் தின்ன ஒரு சிவந்த மாடு எட்டி எட்டி முயற்சி செய்தது. முகூர்த்தத்துக்குப் ' பெரிய மனிதர்கள்' யாராவது வந்தால் உட்காருவதற்காக ஒரு பக்கத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் யாரோ ஒருவர் முதுகைக் காட்டியபடி முழங்காலை மடக்கிக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண் டிருந்தார். இன்னொரு மூலையில் பளிச்சென்று நீலமும் பச்சையும் சிவப்பும் மஞ்சளுமாகப் பட்டுப் சேலையும் தாவணியும் உடுத்தி யிருந்த இளம் பெண்கள் ஆறேழு பேர் கூடிக் குசுகுசுவென்று பேசிச் சிரித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சிலும் சிரிப் பிலும் கலந்துகொள்ளாமலும் அதே சமயம் அவர்களைவிட்டு அகலா மலும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர், சில வாலிபர்கள். எல்லாருமே கொஞ்சம் கர்நாடகமோ அல்லது நிஜமாகவே ஒருத்தருக்கொருத்தர் பரிசயமில்லையோ? ஒட்டு மொத்தத்தில் இருபால் இளைஞர் கூட்டத்தில் இருக்கவேண்டிய கலகலப்பை அங்கே காணவில்லை.
சரி, நாம்தான் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்தில், பேசிச் சிரித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத் துக்குச் சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொண்டேன். அவர் கள் எல்லாரும் உடனே மௌனமாயினர். அந்தக் கூட்டத்தில் நளினிதான் எனக்குத் தெரிந்தவள். என் சிற்றப்பாவின் கடைசி மகள். அவள் கையில் புதுமாதிரியாக மருதணையோ அல்லது வேறெதோ புத்தம் புதுவண்ணக் கலவைச் சாயமோ பூசிக்கொண் டிருந்தாள்.
"நளினி, உன் கையைக் காட்டு பார்ப்போம்" என்றேன்.
அவள் கையை நீட்டினாள். நான் பார்த்துக்கொண்டிருந்தபோது மூக்குக் கண்ணாடி அணிந்த இன்னொரு பெண், "ஏன் மாமா, உங் களுக்கு ரேகை பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டாள்.
"ஓ தெரியுமே" என்று சொன்னபடியே நளினியின் கைரேகை களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
உண்மையில் எனக்கு ரேகை சாஸ்திரத்தில் நம்பிக்கையே கிடை யாது. பதினாலு பதினைஞ்சு வயசில் சில புத்தகங்களைப் படித்திருந் தேன் என்பது என்னவோ வாஸ்தவந்தான். ஆனால் இப்போது இருபது வருஷத்துக்கு மேலாயிற்றே? இருந்தாலும், ஒரு யுவதி கேட்கும்போது, "எனக்குத் தெரியாது. ரேகையாவது சாஸ்திர மாவது? எல்லாம் வெறும் ஹம்பக்" என்று சொல்ல மனம் வரவில்லை. இதையெல்லாம் யோசிப்பதற்கு முன்னாலேயே வாய் முந்திக் கொண்டு, "ஓ தெரியுமே!" என்று சொல்லி விட்டது.
மூக்குக் கண்ணாடிக்காரி என்னை விடாமல், "அப்போ என் கையைப் பாருங்களேன்" என்று சொன்னபடி தன் இடக் கையை நீட்டினாள். நான் சிரித்துக்கொண்டே அவள் கையைப் பற்றி ரேகை பார்க்க ஆரம்பித்தேன். கைரேகைகளைக் கவனித்துப் பார்ப் பவன் போலவும், பிறகு உச்சிமேட்டைப் பார்த்துக் கணக்குப் போடுவது போலவும் கொஞ்ச நேரம் பாசாங்கு செய்துவிட்டு, "நீ கொஞ்சம் சோம்பேறி, கெட்டிக்காரிதான். ஆனால் உடம்பை வளைச்சு வேலை செய்ய உன்னால் ஆகாது. மூளை இருக்கு. நல்லா படிப்பு வரும்" என்று கூறி அவள் முகத்தையும் மற்றவர்கள் முகத்தையும் பார்த்தேன். கூட இருந்த தோழிகளில் ஒருத்தி 'கொல்' லென்று சிரித்துவிட்டாள்.
"ரொம்ப ரைட் மாமா, நீங்க சொல்றது. வீட்டிலே ஒரு துரும் பைக்கூட அசைக்கமாட்டா. காலேஜிலே எல்லாத்திலேயும் முதல்லே வருவா" என்று சொல்லி என்னை உற்சாகமூட்டினாள். உடனே அந்தப் பெண்கள் கூட்டத்தில் என் மதிப்பு உயர்ந்துவிட்டது. நாணிக் கோணிக் கொண்டிருந்த பெண்களும் தங்கள் கைகளை நீட்டி என்னை ரேகை பார்க்கச் சொல்லவே எனக்கும் குஷி பிறந்து விட்டது. நானும் ஒவ்வொருத்தியின் கையாகப் பார்த்துத் தமாஷாக வும், சமயோசிதமாகவும் எனக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்லிக்கொண் டிருந்தபோது -
"அடே, உனக்கு ரேகை பார்க்கவும் தெரியுமா?" என்று ஒரு குரல் கேட்டது.
நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பிச்சுமணி நின்றுகொண்டிருந்தார். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கூச்சமாகக்கூட இருந் தது. அத்தனை பெண்களின் நடுவே நான் உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய கையைத் தொட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தைப் பிச்சுமணி பார்த்துவிட்டாரே என்று வெட்கமாயிற்று.
அவசரமாக எழுந்திருந்து, "ஹி... ஹி. அதெல்லாம் ஒண்ணு மில்லை. எனக்குத் தெரியாது" என்று சொன்னபடி வெளியேற யத்த னித்தேன். அவர் என் பின்னாலேயே வந்தார்.
"நோ, நோ, அதெல்லாம் பரவாயில்லை. டேய் நாணு; இங்கே வாடா. நீ கொஞ்சம் நாணுவின் கையைப் பாரேன்" என்று நாணு வுக்கும் எனக்கும் உததரவிட்டார்.
"நாணு யார்?" என்று கேட்டேன்.
"நாணுவை உனக்குத் தெரியாதா? என்னுடைய பிள்ளை. ஒரே பிள்ளை; பிரின்ஸ் ஆப் வேல்ஸ். ஐவேஜுக்கு வாரிசு. ஆனால் நான் தான் ராஜா இல்லை. ஐவேஜும் இல்லை" என்று எனக்குச் சொல்லி விட்டு-
"டேய் நாணு இங்கே வாடா, வெக்கப்படாதே" என்று தம் புத்திரனுக்குத் தைரியமூட்டினார்.
மறுபடியும் என்னைப் பார்த்து, "அவன் கையைக் கொஞ்சம் பார்த்துப் பலன் சொல்லேன்" என்றார்.
எனக்குத் தர்ம்சங்கடமாகிவிட்டது. உண்மையை ஒப்புக்கொள் வது தான் உத்தமம் என்று எனக்குப் பட்டது.
"இதைப் பாருங்கோ, எனக்கு ரேகை சாஸ்திரமும் தெரியாது, ரேகை ஜோசியம், ஆரூடம் இதிலெல்லாம் நம்பிக்கையும் கிடை யாது. என்னவோ கொஞ்ச நேரத்தைக் குஷியாகக் கழிக்கலாமென்று ரேகை பார்க்கிறதாச் சொன்னேனே தவிர, எனக்கு ரேகை பார்க்கவே தெரியாது" என்று சொல்லி அத்துடன் நிறுத்தாமல் விஷமமாகச் சிரிப்பதாகப் பாவனை செய்து, "ரேகை பார்க்கிறதா சொன்னாத்தானே இந்தப் பெண்கள் கையைத் தொட என்னை விடுவாங்க? என்றேன். எதையாவது சொல்லித் தப்பித்துக் கொண்டாக வேணுமே?
அவர் என்னை விடுவதாக இல்லை.
"நோ, நோ, அதெல்லாம் பரவாயில்லை. நான் தான் பார்த்தேனே. நீ ரொம்ப நன்னா ரேகை பார்க்கிறதை. ஏ குட்டிகளா, நீங்களே சொல்லுங்கோ, இவர் நன்னா ரேகை பார்த்தாரோ இல்லியோ?" என்றார். என்னிடமும் அந்தக் குட்டிகளிடமும்.
அந்தப் பைத்தியங்கள் என்னைப் பழிவாங்க வேணுமென்றோ அல்லது உண்மையென்று அவர்கள் நம்பினதாலோ, ஒரே குரலாக, "அவர் நன்னாப் பார்க்கிறார் மாமா. ரகசியத்தையெல்லாம் கூடக் கண்டுபிடிச்சுடறார்" என்று கூவின. எனக்கு எரிச்சலாக வந்தது. அவ்வளவு அழகாகவும் லட்சணமாகவும் படித்தும் இருக்கிற அந்தப் பெண்கள் இவ்வளவு முட்டாள்களாகவும் இருப்பார்கள் என்று நான் துளிக்கூட எதிர்பார்க்கவில்லை. அவர்களைக் கோபத் தோடு முறைத்துப் பார்த்தேன்.
அப்போது பிச்சுமணி, "பார்த்தியா, இதுகள் சொல்றதை? ரொம்பப் பிகு பண்ணிக்கிறயே என் கிட்டே கூட?" என்று செல்ல மாகக் கடிந்துகொண்டார். நானும் விடாப்பிடியாக இருந்தேன்.
"இல்லை, நிஜமாகவே எனக்கு ரேகை பார்க்கவே தெரியாது" என்றேன்.
அந்தப் பெண்களோ கலகலவென்று சிரித்துக்கொண்டு பிச்சு மணியை நோக்கி, "அவர் பொய் சொல்றார் மாமா, நீங்க நம்பா தீங்க. நிஜமாத்தான் சொல்றோம். ரொம்ப நன்னா ரேகை பார்க் கிறார்" என்றார்கள். இதற்குள் நாணுவும் வந்துவிட்டான். சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்துக்கொண் டிருந்த இளவட்டங்களில் அவனும் ஒருவன்.
"டேய் நாணு, சாருக்கு நமஸ்காரம் பண்ணுடா" என்று பிச்சு மணி உத்தரவிட்டதும் உடனே தரையில் விழுந்து ஒரு நமஸ்காரம் செய்தான்.
எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. யாரையும் யாரும் விழுந்து நமஸ்கரிப்பது என்பது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காத விஷயம். ரேகை, ஜோசியம், ஆரூடம் முதலான வருங்காலத்தை முன்னதாகக் கண்டுபிடித்துச் சொல்வதாகக் கூறும் 'சாஸ்திரங்கள்' எல்லாம் வெறும் புரட்டு என்பது என் திடமான அபிப்பிராயம். சும்மா விளையாட்டுக்கு என ஆரம்பித்தது இந்த மாதிரி வினை யாகப் போய்க்கொண்டிருக்கிறதே என்கிற ஆத்திரம் வேறே. முட்டாள் பெண்களையும், ரேகை சாஸ்திரத்தையும், தந்தை சொல் தட்டாத தனயர்களையும், பிச்சுமணியையும் மனதாரச் சபித்துக் கொண்டே அவரை ஒதுக்குப்புறமாக, சற்றுத் தள்ளியிருந்த பெரிய தூணருகில் அழைத்துச் சென்றேன்.
தூணை அடைந்ததும் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "நிஜமாகவே சொல்றேன், எனக்கு ரேகை பார்க்கவும் தெரியாது, அதுலே நம்பிக்கையும் கிடையாது. சும்மா பொழுதுபோக, தமாஷாக ரேகை பார்க்கிற மாதிரி நடிச்சேனே தவிர வெறொண்ணுமில்லை. அவ்வளவு தான்" என்றேன்.
நான் பேசி முடிப்பதற்குள், அதைக் காதில் வாங்காமலே, பிச்சுமணி, "அதெல்லாம் பரவாயில்லேன்னா, நீ பார்க்கிற அளவு மத்தவா பார்த்தாலே போதுமே. அதுவே யதேஷ்டம். நீ நம்ப வேண்டாம். உன்னை யார் நம்பச் சொல்றா? நான் நம்பறேன். அவ்வளவுதானே வேண்டியது" என்றார். மேலும் தொடர்ந்து, "எனக்காக அவன் கையைப் பாரேன், ப்ளீஸ்" என்றார்.
என்னை விட இவ்வளவு பெரியவர் இவ்வளவு தூரம் வற்புறுத்தும் போது இன்னும் மறுத்தால் நன்றாயிராது என்றுதான் எனக்குப் பட்டது. வேறு என்ன செய்வதென்றும் எனக்குத் தெரியவில்லை. "சரி" யென நான் ஒத்துக்கொள்ள அவரும் நாணுவுமாக மீண்டும் கூடத்தின் மத்தியில் வந்தோம்.
"நாணு சார் கிட்டே கையைக் காமி" என்று பிச்சுமணி தன் குமாரனுக்கு உத்தரவிட்டார்.
நான் எரிச்சலோடு நாணுவைப் பார்த்தேன். பலியாடு போலத் தலைகுனிந்து மௌனமாகத் தன் கையை நீட்டினான்.
அவன் சோளக்கொல்லை பொம்மை போல் இருந்தான் என்று சொல்ல வந்தேன். யோசித்துப் பார்த்தால் அது பொருத்தமில்லை என்று படுகிறது. அதுக்கு உருண்டை முகமும், புஸு புஸுவென்று வைக்கோல் திணித்த உடம்புமாகவல்லவா இருக்கும்? நாணு அப்படி இல்லவே இல்லை. கச்சல் வாழைக்காய் போல, இன்னும் சொல்லப் போனால் பழைய பாத்திரக் கடையில் நெடு நாளாக மூலையில் கேட்பாரற்று அழுக்கேறி நசுங்கிக் கிடக்கும் பித்தளைப் பாத்திரம் போல் இருந்தான். ஆனான் குண்டாக இல்லை. அவ்வளவு தான். சட்டை போட்டு மார்புக்கூட்டை மறைத்திருந்தாலும் கண் ணுக்குத் தெரிந்த முழங்கை, முன் கை, மணிக்கட்டு, கழுத்து, முகம் இத்யாதிகளைப் பார்த்தாலே ஆள் ஒன்னும் பயில்வான் இல்லை என்பது தெள்ளத் தெரிந்தது. முகத்தில் கண்களும் கறுத்துப் போயிருந்த உதடுகளும் தான் பெரிசாயிருந்தன. கன்னம் குழிவிழுந் திருந்தது. கைவிரல்கள் சப்பாணிக் கயிற்றைப் போல் இருந்தன.
அவன் கையை வாங்கியபடியே கடைசி முறையாகப் பிச்சு மணியைப் பார்த்து, "நிஜமாகவே எனக்குத் தெரியாது" என்றேன். அவர் மாத்திரம் அன்று ஆசையினால் குருடாக்கப்படாமல் இருந் திருந்தால் என் முகபாவத்திலிருந்தே நான் படும் பாட்டையும் 'சும்மா ஒப்புக்குச் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல் கிறேன்' என்பதையும் தெரிந்துகொண் டிருப்பார்.
"பரவாயில்லை. தெரிஞ்சதைச் சொல்லு, அது போதும்" என்றார் அவர்.
வேறு வழியில்லாமல் நான் நாணுவின் கையைப் பார்க்க ஆரம்பித் தேன். நுனியில் மஞ்சள் கரையேறியிருந்த ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும், தறிக்கப்படாமல் அழுக்கைச் சுமந்துகொண்டிருந்த நகங்களையும் தவிர வேறொண்ணையும் காணக் கிடைக்கவில்லை.
"தேக சௌக்கியம் அவ்வளவாக இருக்காது. 'ச்செஸ்ட் வீக்'. ஆனால் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை" என்று ஆரம்பித்து எனக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லலுற்றேன். பெரிதா யிருந்தாலும் உயிர்க்களையே இல்லாமல் பாதி மூடினபடி வெள் ளாட்டுத் தலையின் கண்ணைப் போலிருந்த அவன் கண்களும் நான் சொல்வதைக் கேட்டு உயிர்பெறத் தொடங்கின. பிச்சுமணி நின்றபடியே தலையை ஆட்டி ஆட்டி நான் சொல்வதையெல்லாம் ஆமோதித்து என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். சுற்றி வளைத்து ஜோடனை செய்து என்ன என்னவோ சொன்னேன். அவனது உடல்நிலை, புத்திக்கூர்மை, அழகுக் கலைகளில் அவனுக் கிருந்த அபிமானம், கலைத்திறன், அவன் பிறருடன் பழகும் சுபாவம், ஐம்பத்திரண்டாம் வயசில் அவனுக்காகக் காத்திருக்கும், 'மலை போல் வந்து பனி போல் விலகிப் போகும்' ஆயுள் கண்டம், புத்திர பாக்கியம் என்றெல்லாம் சொன்னேன். கடைசியில் வேறொண்ணும் சொல்வதற்கில்லை என்றானபோது, "இவ்வளவு போதுமே, இதுக்கு மேலே எனக்கு ஒண்ணும் தெரியல்லே" என்றேன்.
பிச்சுமணி தொண்டையைக் கனைத்துக் கொண்டார். நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவர் திருப்தியடையவில்லை என்பது அவர் முகத்திலிருந்தே தெரிந்தது.
"நான் கேக்குறேன்னு கோவிச்சுக்காதே. உத்தியோக பாக்கியம் எப்படி?" என்றார், கொஞ்சம் கம்மின குரலில்.
"ஏன், நல்லாய்த்தானிருக்கு" என்றேன் நான், பட்டும் படா மலும்.
"உத்தியோக ரேகை தீர்க்கமாயிருக்கா, பார்த்துச் சொல்லேன். பீ.ஏ. பாஸ் பண்ணிட்டு நாலு வருஷமாக உட்கார்ந்திண்டிருக் கான். ஊரெல்லாம் சுத்திப் பார்த்துட்டேன். கேக்காத இடமில்லை, பார்க்காத ஆளில்லை. காலைப் பிடிச்சுக் கெஞ்சாத குறைதான். எவனும் இப்போ வா அப்போ வான்னு சொல்லிக் கடைசியிலே கையை விரிச்சுடறானே தவிர, உருப்படியா ஒரு பியூன் வேலை கூடப் போட்டுத் தரமாட்டேங்கறான். இவனுக்கோ சமத்துப் போறாது. டவாலி போடற ஜாதியிலே பொறந்துட்டு எனக்கு இந்த வேலை வேண்டாம்; நான் அங்கே போயி அவனைப் பார்க்க மாட்டேன்னு சொல்ல முடியுமோ? வீட்டிலியே உட்கார்ந்திருந்தா எவன் கூப்பிட்டு இந்தா வேலையின்னு குடுப்பான். நாம நம்மாலே ஆனது அத்தனையும் செய்ய வேண்டாமோ? அது இவனுக்குத் தெரியல்லே; அதான் கேக்கறேன்" என்று சொல்லிவிட்டுத் தோள் துண்டால் கழுத்துப் பிடியைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.
"ரேகை பார்க்கிறது ஜாதகம் பார்க்கிற மாதிரியில்லை. உத்தி யோகத்துக்குன்னு தனியா வேற ரேகை கிடையாது. இருக்கிற ரேகைகளைக் கொண்டு நாமே ஊகிச்சுத் தெரிஞ்சு கொள்ளணும்" என்று ஆரம்பித்தவன், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்த வுடன் நிறுத்திக்கொண்டு, மவுனமாக அவனுடைய வற்றிப்போன கையில், ரேகைகளில் ஏதோ பொக்கிஷம் ஒளிந்திருக்கிற மாதிரி தேட ஆரம்பித்தேன், என்ன தேடுகிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நாய் வேஷம் போட்ட பிறகு குரைக்க வெட்கப் பட்டு என்ன செய்வது?
சும்மா ஒரு நிமிஷம் இந்தமாதிரி தேடிவிட்டு, பிறகு, "இப்போ வயசு சரியா என்ன ஆகிறது?" என்று கேட்டேன். அது என்னவோ மிக முக்கியமான விஷயம் போலல்.
"இருபத்து நாலு முடிஞ்சி இருபத்தஞ்சு நடக்கிறது. இன்னும் மூணரை மாசத்திலே இருபத்தஞ்சு முடிஞ்சுடும்" என்றான் நாணு.
இந்த ரேகை பார்க்கும் நாடகம் ஆரம்பித்ததிலிருந்து அவன் இப்போதான் முதல் முறையாக வாயைத் திறந்து பேசினான். அவன் குரலைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அசாதரண மான கட்டைக் குரலில் அவன் பேசினான். அவன் வாயைத் திறந்ததும் 'குப்'பென்று வீசிய நாற்றத்தை விட அவனுடைய கட்டைக் குரலிலிருந்த பெரும் ஆர்வமும் பெருந்தாகமும் என்னைச் சங்கடத் தில் ஆழ்த்தித் துக்கங் கொள்ளச் செய்தன.
மேலும் ஒரு நிமிஷத்தை ஏதோ கணக்குப் போடுவது போலக் கழித்து கடைசியாக, "இன்னும் ஆரேழு மாசம் ஆகும் வேலைன்னு கிடைக்க. இருபத்தாறாம் வயசின் முன்பகுதியிலோ அல்லது நடுவிலேயோ தான் வேலையாகும். அதுக்கப்புறம் ஒரு கஷ்டமும் இருக்காது" என்று சொல்லிவிட்டு என்னைக் காத்துக்கொள்ள, "அப்படீன்னுதான் நான் நினைக்கிறேன்" என்றேன்.
அதுக்கும் மேற்கொண்டும் அவர்களை ஏமாற்ற எனக்கு விருப்ப மில்லை. "காபி ரெடியாயிட்டுதான்னு பார்த்துட்டு வரேன்" என்று சொன்னபடி, அவ்விடம் விட்டுக் கிளம்ப ஆயத்தம் செய்தேன். பிச்சுமணி விடவில்லை.
"நோ, நோ, நாணுவைப் பார்த்துண்டு வரச்சொல்றேன்" என்று என்னிடம் சொல்லிவிட்டு, "டேய் நாணு, காபி ஆயிடுத்தான்னு பார்த்துட்டு ஸ்ட்ராங்கா ரெண்டு கப் இங்கே அனுப்பி வை" என்றார் நாணுவிடம். அவனும் 'சரி'யென்று தலையாட்டி விட்டுச் சென்றான்.
ரேகை பார்ப்பது என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல், 'சீரியஸ்' ஸாகப் போய்விடவே இங்கிருந்த குட்டிகளும் ஒருத்தர் ஒருத்தராக நழுவி விட்டிருந்தனர். குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை விட்டால் அந்தப் பரந்த கலியாண மண்டபத்தில் நானும் பிச்சுமணியுந்தான். அவர் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு என் இரு கைகளையும் பிடித்துக்கொண் டார்.
"ஒனக்கு எப்பிடி உபசாரம் சொல்றதுன்னே தெரியலே. நாணுவுக்குச் சமத்துப் போறாது. என் மாதிரி இடிச்சுப் பூந்து வேலையை முடிச்சுக்கிற சாமர்த்தியம் கிடையாது. எனக்கோ ஹார்ட் வீக்காயிட் டிருக்கு. நாளைக்கே 'டப்'புனு நின்னாலும் நின்னுடும். இல்லே, பத்து வருஷம் ஓடினாலும் ஓடும். ஒண்ணும் சொல்றதுக்கில்லேன்னுட்டான் டாக்டர். இவனைப் பத்திதான் எனக்கு எப்பவும் கவலை. நான் இருக்கிறப்பவே ஒரு நல்ல வேலையாப் பார்த்து அமர்த்தலேன்னா நான் போனப்புறம் இவனுக்கு வேலையே கிடைக்காது. இந்த வருஷத்துக்குள்ளே நிச்சயம் நல்ல ஒசத்தி வேலை கிடைக்கும்னு நீ சொன்னது என் வயத்துலே பாலை வார்த்த மாதிரி இருக்கு. நீ தீர்க்காயுசா சுக சௌக்கியத்தோடே நன்னா வாழனும்" என்று தொண்டை தழுதழுக்கச் சொன்னார்.
எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.
"ஒரு நிமிஷம், இதோ வந்துட்டேன்" என்று சொன்னபடி அவசரமாக எழுந்து ஏதோ இவ்வளவு நேரம் மறந்திருந்தது திடீரென்று ஞாபகம் வந்தாற்போல் பாவனை செய்து அவ்விடம் விட்டு வேக மாகப் போய்விட்டேன். அதன் பிறகு அங்கே இருந்த சில மணி நேரங்களை அவர் கண்ணில் படாமல் ஒதுங்கிப் பதுங்கிக் கழித்து விட்டேன்.
இப்போது அவர் கண்காணாத இடத்தில் அநாதை போல ஒரு ஹோட்டல் அறைக்குள் செத்துக் கிடந்தார் என்று கேள்விப்பட்ட போது எனக்கு உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது.
அவர் எதுக்குப் பிள்ளை தேடிப்போனார்? எனக்குத் தெரிஞ்சவரை அவருக்கு நாணு ஒருத்தன் தானே? "அவருக்குப் பெண் இருக்கா என்ன?" என்று நான் அம்மாவைக் கேட்டேன்.
"அவனுக்கு ஏது பெண்? நாணு ஒருத்தன் தான். இருக்கிற பிள்ளைக்கு நல்ல இடமாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வெக்க மாட்டானோ? ஆனா என்னிக்குத்தான் அவன் தன் குடும்பத்துக்குனு ஒரு துரும்பை எடுத்து அந்தப் பக்கத்திலேயிருந்து இந்தப் பக்கம் வெச்சிருக்கான்?"
"பின்னே யாருக்காகப் பிள்ளைத் தேடி அலைஞ்சார் இவர்?"
"ஓ, அந்தக் கதை ஒனக்குத் தெரியாதா, சொல்றேன் கேளு" என்று ஆரம்பித்தாள் அம்மா.
பிச்சுமணி ஒரு பெரிய ஆபிஸரிடம் (அவர் என்ன 'ஆபிஸர்' என்று அம்மாவுக்குத் தெரியவில்லை) நாணுவுக்காக வேலை கேட்டுப் போனாராம். வேலை வாங்கிக்கொடுத்தால் தன் பெண்ணை நாணுவுக்குக் கல்யாணம் செய்துவைக்க ஒத்துக்கொள்ள வேணும் என்று அந்த ஆபீஸர் சொன்னாராம். பிச்சுமணியும் ஒப்புக்கொண்டு விட்டார். வேலை கிடைத்த பிறகு நாணுவிடம் விஷயத்தைச் சொல்லியிருக் கிறார். அவன் மறுத்துவிட்டானாம். என்னென்னவோ சொல்லியிருக் கிறான். பெண் அழகாயில்லை. கண் ஒன்றரை. குரல் நன்றாக இல்லை. இப்படியெல்லாம் சொல்லி மாட்டவே மாட்டேன் என்று விட்டான். பிச்சுமணியும் அவனைச் சரி செய்யப் பார்த்தார். அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை. 'மாறு கண்ணுன்னா அதிர்ஷ்டம். உனக்காகத் தேவலோகத்திலிருந்து ரதி கிடைப்பாளா, நீ என்ன மன்மதன்னு நினைப்போ? நீ சொல்ற மாதிரி பார்த்தா உலகத்திலே பாதிப் பெண்கள் கன்யா ஸ்திரீயாக இருந்துவிடவேண்டியதுதான்' என்றெல்லாம் சொன்னாராம். அவன் கேட்கவில்லை. கடைசியாகத் தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகவாவது ஒத்துக்கொள்ளச் சொன்னா ராம். அதற்கு நாணு, "இது என்ன சினிமான்னு நெனைச்சுட்டியா அப்படியெல்லாம் செய்ய? எப்படியாவது சொன்ன வாக்கைக் காப்பாத்தணுமானா நீயே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கோ" என்று சொல்லிவிட்டானாம். பிச்சுமணி அந்த ஆபிஸரிடம் போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, "ஒங்க பொண்ணுக்கு நல்ல பிள்ளையாகத் தேடிக் கல்யாணம் செய்து வைக்காமே நான் என் வீட்டு வாசற்படி ஏறமாட்டேன்" என்று சபதம் செய்து கொடுத்தாராம். அதன் விளைவாகத்தான் சென்ற ஐந்து வருஷங்களாக அவர் அந்தப் பெண்ணுக்காக வரன் தேடி ஊரூராக அலைந்துகொண் டிருந்திருக்கிறார்.
"அவனை மூணாம் வருஷம் ராமு கல்யாணத்திலே பார்த்தப்போ இதெல்லாம் சொன்னான். அவனுக்கு ஆதிநாளிலேருந்து ஊரூராகச் சுத்திப் பழக்கம். ரிட்டயர் ஆனப்புறமும் அலையறதுக்கு இந்தமாதிரி ஒரு சாக்கு. அவ்வளவுதான். வேலை குடுத்தாப் போதும்னு இவனே ஏதாவது சொல்ல்லிப்பிட்டு பின்னாலே அவஸ்தைப்பட்டிருப்பான். ஏன்னா அவன் சொல்றதை நம்பிட முடியாது. ஒண்ணுன்னா நூறும் பான்" என்று முடித்தாள் அம்மா.
பிச்சுமணியை யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் நம்பத் தயார். என்னுடைய ரேகை ஜோசியம் பலித்துவிட்டது பற்றி எனக்குச் சந்தோஷந்தான். நாணுவுக்கு எப்போது கல்யாணம் ஆகும் என்று என்னை அவர் அன்று கேட்காமல் இருந்தது பற்றி எனக்கு அதைவிடச் சந்தோஷம்.
-------------------------------
இந்திரா பார்த்தசாரதி:
கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். 'இ.பா' (இயற் பெயர் - ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து 'குருதிப்புனல்'என்னும் நாவலுக்காக 1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நூலுருவில் பதினைந்துக்கு மேல் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை இவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய, உலக மொழிகளில் இவருடைய படைப்பு கள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. 'மழை', 'போர்வை போர்த்திய உடல்கள்', 'நந்தன் கதை' ஆகிய இவருடைய நாடகங்கள் தமிழ் மேடைகளில் மட்டும் அல்லாமல் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டுப் பெரும் வெற்றியும் பாராட்டும் பெற்றிருக்கின்றன. முகவரி: H-37, South Extension Part 1, New Delhi - 110049
தொலைவு - இந்திரா பார்த்தசாரதி
ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன.
"அப்பா, அதோ "*ஸ்கூட்டர்..." என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாரா மல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி.
"கமலி!" என்று கத்தினான் வாசு.
அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான்.
"வாக்'னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு. இது கூடத் தெரியலியே?"
"அந்த ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும் ஏறிடுவாப்பா." "ஏறிட்டுப் போகட்டும். ரோடை இப்போ கிராஸ் பண்ணக் கூடாது." --------------- *தில்லியில் ஆட்டோ ரிக்ஷாவை "ஸ்கூட்டர்" என்று குறிப்பிடுவது வழக்கம்.
"அதோ எல்லாரும் பண்றாளேப்பா!"
"ஒத்தர் தப்புப் பண்ணினா எல்லாரும் பண்ணணுமா?"
கமலிக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. அரை மணி நேரமாக இருவரும் ஸ்கூட்டருக்காக அலைகிறார்கள். ப்ளாசாவி லிருந்து அவளை இதுவரை நடத்தியே அழைத்து வந்துவிட்டான் வாசு.
அவர்கள் பஸ்ஸில் போயிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம் பொங்கி வழிந்தது. குழந்தையையும் இழுத்துக் கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா? - வாசுவால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. டாக்சியில் போகலாமென்றால் அதற்கு வசதியில்லை. லோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும். இடைக்கால நிவாரணம் கொடுக்கப் போகிறார்கள்; வாஸ்தவந்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக ஆகிவிட்டது. அதற்கு வாங்கிய கடன் தீர வேண்டும். கடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக் காத காரியம். ஆனால் திடீர் திடீரென்று செலவுகள் ஏற்படும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பது?
"அப்பா, அந்த ஸ்கூட்டரிலே யாரோ ஏறிட்டா" என்று அலுத்துக் கொண்டே சொன்னாள் கமலா.
குழந்தையின் எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர் கூடக் கனாட் பிளேசில் கிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
தனக்கு என்றுமே அதிர்ஷ்டம் கிடையாது என்று நினைத்தான் வாசு. அவன் மெடிக்கல் காலேஜில் சேரவேண்டுமென்று ஆசைப் பட்டான். அதற்கு வேண்டிய நல்ல மார்க்கும் வாங்கியிருந்தான். ஆனால் இண்டர்வியூவில், "மத்திய ஆப்பிரிக்காவில் இரண்டாண்டு களுக்கு முன் எவ்வளவு அங்குலம் மழை பெய்தது?" என்று கேட்ட போது, அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஆகவே, அதற்கு அடுத்த வருஷம், "உலகம் நெடுக எங்கெங்கு மழை பெய்கிறது? எப்படி வெயில் காய்கிறது?" என்பவை பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து விட்டு, இண்டர்வியூவுக்கு போனான். 'மெக்ஸிகோவில் மத்தியான வேலைகளில் மக்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அந்த வருஷமும் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பி. ஏ. படித்து விட்டுத் தில்லியில் மத்திய அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டு மென்று அவன் தலையில் எழுதியிருந்தது - அப்படித்தான் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
"அப்பா, 'வாக்'னு வந்துடுத்து."
"சரி, கையைப் பிடி. ஓடாதே!" ஸிந்தியா ஹவுஸ் பக்கம் போய் இருவரும் நின்றார்கள்.
"காலை வலிக்கிறது" என்றாள் கமலை. மரீனா ஹோட்டலருகே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஏறியிருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம். அந்த ஸ்கூட்டர்காரனும் லோதி காலனிப் பக்கம் போக வேண்டியவன்தான் போல் இருக்கிறது. வாசுவை ஏற்றிக்கொள்ள இணங்கினான். ஆனால் ஒரு பெண் கோபமாக வந்து, அந்த ஸ்கூட்டரைத் தானே முதலில் கூப்பிட்டதாகச் சொன்னாள். ஸ்கூட்டர்காரன் அவள் எங்கே போகவேண்டுமென்று கேட்டான். அந்த பெண் கர்ஸன் ரோட் போகவேண்டும் என்றாள். நடந்தே போய்விடலாம் என்று யோசனை சொன்னான் ஸ்கூட்டர்காரன். அந்தப் பெண் முதலில் கூப்பிட்டிருந்தால் அவள் கோபம் நியாயமானது என்றே பட்டது வாசுவுக்கு. அவளை அழைத்துப் போகும்படி சொல்லிவிட்டு விலகிக்கொண்டான். அந்த பெண் நன்றியைச் சொல்லாமல் உரிமைப் போராட்டத்தில் வெற்றி அடைந்தது போல் ஏறிக்கொண்டாளே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை. நியாயத்தைப் பற்றி அப்பொழுது அவன் அவ்வளவு கவலைப்படாமல் இருந்திருந்தானானால் கமலிக்கு இப்பொழுது காலை வலித்திருக்காது.
வாழ்க்கையில் அடிப்படையான சில விஷயங்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், சமுகத்தில் வாழ்ந்து என்ன பிரயோசனம்? சிக்கலாகிக்கொண்டு வரும் சமுதாயத்தில் இது சாத்தியமா?
பிளாசா அருகே மூன்று ஸ்கூட்டர்கள் காலியாக நின்றுகொண்டிருந்தன. வாசு கமலியின் கையைப் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்றான். ஒருவராவது அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. வாசு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்துச் சொன்னான்: "ஸ்கூட்டர் வேண்டும்."
அவன் வாசுவைப் பார்க்காமலே கேட்டான்: "எங்கே போக வேண்டும்?"
"லோதி காலனி."
அவன் பதில் சொல்லவில்லை. சிகரெட்டைப் பலமாக இழுத்துப் புகையை விட்டான். இன்னொருவன் வாசு செங்கோட்டை வருவதாக இருந்தால் அங்கு அழைத்துப் போவதாகப் கூறினான். லோதி காலனிக்குப் பதிலாகச் செங்கோட்டைக்கு அருகில் தான் இருந்திருக்கக் கூடாதா என்று வாசுவுக்குத் தோன்றிற்று. அப்பொழுது சுவரருகே நின்றுவிட்டுப் பைஜாமாவை இருக்கக் கட்டிக்கொண்டே வந்த ஒருவன், நாலு ரூபாய் கொடுப்பதானால் லோதி காலனிக்கு வருவதாகச் சொன்னான். டாக்ஸிக்கே நாலு ரூபாய்தான் ஆகும். அந்த வசதி இருந்தால் ஸ்கூட்டருடன் எதற்காகப் பேரம்? - வாசுவுக்கு மிகுந்த கோபம் வந்தது. யார் மீது என்று அவனுக்கே புரியவில்லை.
"அப்பா, அதோ ஸ்கூட்டர்" என்றாள் கமலி.
மேற்புறம் திறந்து வெயிலுக்குச் சௌகரியமாய், காற்றோட்டமாய் இருந்தது அந்த ஸ்கூட்டர். சார்ட்டைப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்தது கட்டண மீட்டர். வாழ்க்கையின் லட்சியமே கைகூடி விட்டாற்போல் ஓடினான் வாசு. ஆனால் இரண்டு தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. மூன்றாம் தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. சீறி விழுந்தான். "ரேடியேட்டர் சூடாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எங்கும் போவதாக இல்லை." ரேடியேட்டரைக் காட்டிலும் அவன்தான் சூடாயிருந்தான் என்று வாசுவுக்குத் தோன்றிற்று.
தனக்கு மிகவும் பிடித்திருந்த ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே என்று எரிச்சலாக வந்தது, வாசுவுக்கு. புதிய கட்டணம் அமலுக்கு வந்து ஆறு மாதமாகிறது. முக்கால்வாசி ஸ்கூட்டர்களில் சார்ட் தான் தொங்குகிறது; கணக்குப் பார்த்துக் கொடுப்பதற்கு ஒருவன் தன் சிந்தனை முழுவதையும் ஒருமைபடுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றி விடுவார்கள். புதிய மீட்டரில் பழைய மீட்டரைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்தாலும் பரவாயில்லை. பழைய மீட்டரில் ஏமாறாமலிருப்பதுதான் தீய எதிர்ச் சக்திகளினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போலாகுமென்று நினைத்தான் வாசு. தில்லி போன்ற நகரங்களில் ஒருவனுக்குத் தான் ஏமாறாமல் இருக்கவேண்டுமென்ற ஜாக்கிரதை உணர்வே முழு நேரக் காரியமாக இருந்தால், அவன் ஆக்கப் பூர்வமாக வளர்வது எப்படி?
"டாக்ஸியிலே போகலாமாப்பா?" என்று கேட்டாள் கமலி. அவளுக்குக் கால் வலிக்கிறது என்ற பிரத்தியட்ச உண்மையைத் தவிர, மாதத்துக் கடைசி வாரத்தில் மத்திய சர்க்கார் அஸிஸ்டெண்டால் இதைப் பற்றி யோசித்துப் பார்க்க முடியுமா என்ற பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவனால் அது முடியாது என்பது இருக்கட்டும்; மாத முதல் வாரத்தில் கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி இல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திர பூர்வமாகிவிட்ட சமுகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக் குற்ற உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்குக் கண்டிஷன் செய்துவிடுகின்றன போல் இருக்கிறது.
"ஸ்கூட்டரே கிடைக்காது"என்று சாபம் கொடுப்பது போல் சொன்னாள் கமலி.
"அவசரப்படாதே, கிடைக்கும்."
"பஸ்ஸிலே போகலாமே!" அப்பா தன்னை டாக்ஸியில் அழைத்துச் செல்ல தயாராக இல்லை என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.ஸ்கூட்டரே குறிக்கோளாகய் அலைவதைக் காட்டிலும் பஸ்ஸில் போகலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று.
"கூட்டத்திலே ஏற முடியுமா உன்னாலே?"
"பின்னாலே என்னதான் பண்றது? ஆத்துக்குப் போகாமலேயே இருக்கலாங்கறேளா?"
இக்கேள்வி ஒரு பயங்கரமான எதிர்காலத்தை அவன் மனக் கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே கிடைக்காமல் ஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும் கனாட் பிளேஸில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவன் கிழவனாகி விடுகிறான். கமலியும் வளர்ந்து பெரிய பெண்ணாகி விடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த தலைமுறையும் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.
" அப்பா, இதோ பஸ் காலியா வரது.போயிடலாம்."
வாசு திரும்பிப்பார்த்தான், பஸ் காலியாகத்தான் இருந்தது. ஆனால் லோதி காலனி செல்லும் பஸ் அல்ல; அது மதராஸ் ஹோட்டலுடன் நின்றுவிடும். அதனால்தான் கூட்டமே இல்லை.
" இந்தப் பஸ் லோதி காலனி போகாது" என்றான் வாசு.
"ஏன் எல்லாப் பஸ்ஸையும் லோதி காலனிக்கு விடமாட் டேங்கறா?"
இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லுவது? லோதி காலனி ரோம் அல்ல, எல்லா சாலைகளும் அங்கே செல்ல. அரசாங்கம் பஸ் போக்குவரத்து நடத்துவதன் நோக்கம் என்ன என்று கமலிக்கு விளங்க வைக்க முடியுமாவென ஒரு கணம் யோசித்தான். சமூகத்தைப் பற்றிக் கவலைப்படும் சர்க்காருக்குத் தான் தனி மனிதனைப்பற்றி அக்கறை இல்லை. தனி மனிதன் தன் உரிமைகளைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தால்தான் சமூகம் என்ற கருத்துப் பிறக்கிறது. இது கமலிக்குப் புரியுமா?
அவளுக்கு என்ன, இது யாருக்குத்தான் புரிகிறது? தனிமனிதன் சமூகத்துக்குள் புகுந்துகொள்வதே, சமூகம் என்ற மானசீகத்தைத் தனக்குச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் என்று தோன்றுகிறது. இதில் வெற்றியடையும் சிலரே தங்களை அத்தகைய 'ஃப்ராங்கென்ஸ்டீன்' பூதமாக்கிக்கொண்டு தனி மனிதனை மேய்ந்து வருகிறார்கள்.ஆனால் தன்னளவில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி,சமூகத்தில் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே இந்த ஸ்தாபனத்தின் யந்திரக் குரூரத்தை ஓரளவு எதிர்த்துப் போராடு வது போல்தானே?ஹரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறு பேசுவதேயில்லை என்பதைக் கண்டதும் விசுவாமித்திரனுக்கு எவ் வளவு எரிச்சல்,ஆத்திரம்!
"அப்பா,அதோ மூர்த்தி மாமா போறா!"
வாசு திரும்பிப் பார்த்தான்.கமலியின் குரலைக் கேட்டதும், மூர்த்தி காரை நிறுத்தினான்.அவன் வாசுவோடு படித்தவன்.கல் லூரியில் படிக்கும் போது அவன் பெயர் கோபாலன்.பெயர் வைத்த தோஷமோ என்னவோ,வெண்ணெய்க்குப் பதிலாக அவன் மற்ற மாணவர்களின் சைக்கிள்களையெல்லாம் திருடி விற்றுவிடுவது வழக்கம்.ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டான்.அவனும் நாதன் என்ற இன்னொரு பையனுமாகச் சேர்ந்து அந்தக் களவைச் செய்து வந்தார்கள்.இரண்டு பேருக்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.நாதன் இப்போது சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீல்.கோபாலனோ மூர்த்தியாகி, தில்லியில் ஒரு கம்பெனியில் லையாசான் ஆபீஸராக இருந்து வருகிறான்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் மூர்த்தியை உத்தியோக் பவனில் வாசு பார்த்தான்."கோபாலன்"என்று கூப்பிட்டதும் ஓரளவு திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.பிறகு வாசுவைத் தெரிந்த மாதிரியே அவன் காட்டிக்கொள்ளவில்லை."என் பெயர் மூர்த்தி, கோபாலன் இல்லை;யூ ஆர் மிஸ்டேக்கன்"என்றான்.வாசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.இப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா? இரண்டு நாள் கழித்து வாசுவின் வீட்டைத் தேடி வந்து அவன் சொன்ன பிறகுதான் விஷயம் புரிந்தது."என் பெயர் இனிமேமூர்த்தி தான்;கோபாலனை மறந்துடு.இங்கே ஏதோ நல்லபடியா இருக் கேன்.கிட்டத்தட்ட காலேஜ்லே செஞ்சிண்டிருந்த வேலை மாதிரி தான்.ஆனா அப்போ நாதன் பார்ட்னர்.இப்போ கவர்ன்மென்ட்டு.... கார் வெச்சிண்டிருக்கேன்.சுந்தர் நகர்லே வீடு.ஆத்துக்கு வாயேன் ஒரு நாள்."
உத்தியோக் பவனில் வேலை பார்க்கும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்பது வாசுவுக்கு அவன் வீட்டுக்குப் போன பிறகுதான் புரிந்தது.போவதை நிறுத்திவிட்டான்.ஆனால் அவன் வாசுவின் வீட்டுக்கு ஐந்தாறு தடவை வந்து போயிருக்கிறான்.
"ஹல்லோ,வாசு!எங்கே போகணும்,வீட்டுக்கா?"
"ஆத்துக்குத்தான்"என்று சொல்லிக் கொண்டே வாசுவை நம் பிக்கையுடன் பார்த்தாள் கமலி.
ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே, இவனுடன் போய்விடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான் வாசு. கூடாது: தான் அவனுக்கு ஒரளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு தனக்கு ஏற்படக் கூடாது. இந்த உணர்வே சால்ஜாப்பாக, அவனிடமிருந்து வேறு பல சௌகரியங்கள் எதிர்பார்க்கக்கூடிய இச்சை ஏற்படக்கூடும். தனக்கு அப்படி ஏற்படவேண்டும் என்றுதான் மூர்த்தி எதிர்பார்க்கிறான். ஓருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் சமுகம் என்ற கருத்து, எப்படி ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டு சமுகம் தரும் வாய்ப்புக்களை யெல்லாம் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வது என்று ஆகிவிட்டது! -மூர்த்தியுடன் போனால் தானும் இந்தக் கருத்துக்கு உடன்பட்டது போலாகும். உடனடியான சௌகரியத்துக்காகக் கொள்கையைத் தியாகம் செய்யலாம?- கூடவே கூடாது.
"நான் வல்லே, நீ போ" என்றான் வாசு.
"லோதி காலனிப் பக்கந்தான் நான் போறேன், வா!"
"நீ எதிர்த் திசையிலே போறே, லோதி காலனிப் பக்கந்தான் போறேங்கிறேயே?"
"இங்கே ஒத்தரைப் பார்த்துட்டு, லோதி காலனி போகணும், வா."
"நீ சுந்தர் நகரிலே இருக்கே. லோதி காலனி வழியாச் சுத்திண்டு போகணுமா? - நீ போ. தாங்க் யூ!"
"என்ன இவ்வளவு 'பிகு' பண்ணிக்கிறே? - உத்தியோக் பவனுக்கு வந்து உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன், சரிதானே? ஐ நோ லாட்ஸ் ஆஃப் அதர் பீபிள் இன் உத்யோக் பவன்."
எதற்காக இதைச் சொல்லுகிறான்? - 'நீ உன் ஆபிஸில் அற்ப மானவன். உன் உதவி தேவையில்லை' என்பதற்காகவா? அல்லது, 'யார் யாருக்கோ நான் பணம் தரத் தயராக இருக்கும்போது என்னுடன் படித்த நீ ஏன் இப்படி அப்பாவியாய் இருக்கிறாய்?' என்று சுட்டிக்காட்டவா? பணத்தினால் எதைத்தான் சாதிக்க முடியாது? - இதோ, இப்பொழுது இவனுடைய அந்தரங்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. டாக்ஸியில் போயிருக்கிலாம். ஏன், சொந்தக் காரே வைத்திருக் கலாம்.
"என்ன யோஜிக்கிறே? கம் ஆன், ஏறு."
"நோ... ப்ளீஸ்..." கமலியின் கையை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றான் வாசு.
கமலி கோபத்தில் வாசுவின் கைகளை உதறினாள். "எனக்கு நடக்கத் தெரியும்."
வாசு அவள் கோபத்தைப் புரிந்து கொண்டான்.ஒன்றும் சொல்லவில்லை.
'ஸிந்தியா ஹவுஸ்'எதிரே இரண்டு ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தன.ட்ரைவர்களைக் காணவில்லை.ஒரு ஸ்கூட்டரின் அருகே போய் நின்று சுற்று முற்றும் பார்த்தான் வாசு.அப்பொழுது கமலி 'ஹார்ன்' அடித்தாள்.
"நோ.அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது."
எங்கிருந்தோ ஒரு டிரைவர் அப்பொழுது அங்கே திடீரென்று தோன்றினான்."எங்கே போக வேண்டும்?"என்றான்.
"லோதி காலணி."
"திரும்பி வர வேண்டுமா?"
"இல்லை."
டிரைவர் பதில் கூறாமல் பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.
"என்ன ஸ்கூட்டர் வருமா? வராதா?"
"என் நம்பர் இப்பொழுது இல்லை.அந்த ஸ்கூட்டர்காரனைக் கேளுங்கள்."
"அந்த ஸ்கூட்டர்காரன் எங்கே?"
"தெரியாது."
இதற்குள் ஐந்தாறு பேர்கள் ஸ்கூட்டருக்காக அங்கு வந்து விட்டார்கள்.எல்லாருக்கும் ஒரே பதில்தான்.
அந்த ஸ்கூட்டர்காரன் கால்மணி கழித்து வந்தான். வாசு அவனிடம் ஓடினான்."லோதி காலனி போக வேண்டும்." என்றான்.
அப்பொழுது ஓர் அழகானப் பெண்.கண்களால் சிரித்துக் கொண்டே கேட்டாள்."காக்கா நகர் போகவேண்டும்.
ஸ்கூட்டர்காரன் அந்தப் பெண்ணை ஏறச்சொன்னதும் வாசு கூறினான்:"நான் இங்கே கால்மணி நேரமாகக் காத்துக்கொண் டிருக்கேன்.இந்த ஸ்கூட்டர்காரரைக் கேளுங்கள்...."
அந்த ஸ்கூட்டர்காரன் தன்னைச் சாட்சிக்கு அழைத்ததும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு விட்டான்.வாசு விடவில்லை. "யார் முதலில் வந்தார்கள்?"என்று அவனைக் கேட்டான்.
"யார் வந்தால் என்ன?அதோ அவள்* கிளம்பிப் போய்விட் டான்*."என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,அந்த ஸ்கூட்டர்க் காரன்.
அந்தப் பெண் 'டாடா,பைபை'சொல்லாத குறை! ஸ்கூட்டர் போய்விட்டது.அவன் உடம்பு கோபத்தால் ஆடியது. அங்கிருந்த இன்னொரு ஸ்கூட்டரையும்,டாக்சி ஸ்டாண்டிலிருந்த டாக்சிகளையும்,தெருவில் போய்க்கொண்டிருந்த கார்களையும், பஸ்களையும் - எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற வெறி வந்தது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குப் போவதற்கு அவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ, ஸ்கூட்டரையோ அல்லது டாக்சியையோ எதிர்ப்பார்த்துகொண்டா இருந்தான்? - தன்னால் இப்பொழுது கமலியைத் தூக்கிக்கொண்டு லோதி காலனிக்கு நடந்துபோக முடியாதா?
கமலி தூக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கலாம். அவளைச் சமாதானப்படுத்தித் தூக்கிக்கொண்டு போகலாம் என்றாலும், அவனுக்குப் பைத்தியக்காரன் என்ற பட்டந்தான் கிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன், 'சமுகம் என்றால் தன்னைத் தவிர மற்றவர்கள்' என்ற பிரக்ஞையோடு அவர்கள் அபிப்பிராயத்துக்கு இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டும்.
"கமலி வா, நடந்தே போயிடலாம்" என்றான் வாசு.
"நடந்தேவா?" என்று அவள் திகைத்தாள்.
"நடக்க முடியலேன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்" என்றான் வாசு.
வரிசை வரிசையாகக் கார்களும், டாக்ஸிகளும் விரைந்துகொண்டிருந்தன.
வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.
--------------------------------
நீல. பத்மநாபன்:
தமிழ்நாட்டு எல்லைகளுக்கப்பாலிருந்து தமிழ் இலக்கியம் படைப்பவர்களுள் மிகுந்த கவனமும் பாராட்டும் பெற்றவர் நீல. பத்மநாபன். (பிறந்த தேதி: 26-4-1938) பன்னிரண்டு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் நூல் வடிவில் வெளிவந்துள்ள இவருடைய படைப்புகள். 'தலைமுறைகள்' (நாவல், 1968) ஆங்கிலம், மலை யாளம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. 'பள்ளிகொண்டபுரம்' (நாவல், 1970) நேஷனல் புக் டிரஸ்டின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் இதுவரை ஹிந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 'உறவுகள்' (1975) ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் ரூ. 10,000 பரிசு பெற்ற நாவல். இவருடைய பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டிருப்பதோடு பல்கலைக் கழக அளவில் ஆய்வும் செய்யப்படு கின்றன. மலையாளத்திலும் தமிழிலும் இரு தொகுப்பு நூல்கள் தொகுத்திருக்கிறார். கேரள மாநில மின்சார வாரியத்தில் உதவி எக்ஸிகியூடிவ் இன்சினியராகப் பணியாற்றும் இவருடைய முகவரி: 'Nilakant'. Manacaud P.O. Trivandrum - 695 009.
சண்டையும் சமாதானமும் - நீல. பத்மநாபன்
'அம்மா...'
மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை.
செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன.
நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு நல்ல தெளிவு இருக்கவில்லை. எனினும் மங்கலாகத் தெரிந்த பரந்த முகமும், இருபக்கங்களிலும் முறுக்கிவிடப்பட்டிருந்த பெரிய மீசை யும் அவனை இனம் கண்டுகொள்ள வைத்துவிட்டன.
காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்த அவன் கையை, நட்டாற்றில் முழுக இருந்தவளுக்குக் கிடைத்த அடைக்கலமாய் அவள் பற்றிக்கொண்டாள்.
மாரியம்மையின் முகத்தில் மகிழ்ச்சியின் வரிகள் மின்னின. அவள் விழிகள் நிறைந்துவிட்டன.செல்லையா ஒன்றும் பேசவில்லை. தொண்டை கரகரக்க அவளே கேட்டாள்:
"நீ எப்பம்லே வந்தே?"
"ரண்டுமூணு மனி நேரத்துக்க முந்தியே நா வந்தாச்சு.ஒன்னைக் கூப்பிட்டேன்.நீ களைச்சுப் போய் நல்லா ஒறங்கிட்டிருந்தே.எளுப் பாண்டா முண்ணு நேரே "தட்டுக்கு"ப் (மாடிக்கு) போயி தம்பி தங்கசாமீட்டே பேசீட்டு இருந்தேன்."
"ஓஹோ!"
மாரியம்மையின் முகத்தில் சற்றுமுன் பளீரென்று பிரகாசித்த நம்பிக்கையின் ஒளி சடக்கென்று மறைந்தது.அங்கே மீண்டும் ஏமாற்றத்தின் இருள் சூழ்ந்து கொண்டது.
"அப்பம் நீ நேரத்தையே வந்தாச்சா?"
அவள் பெருமூச்சு விட்டாள்.
நாலைந்து நாட்களாகப் பகல் இரவு நேரங்களின் பேதத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க இயலாமல் கிடந்த அவள் சுற்றுமுற்றும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.
மங்கலாக மின்சார விளக்கு அழுது வடிகிறது.எதிரில் தெரிந்த ஜன்னல் கம்பிகள் கருமையான ஆகாயப் பின்னணியை நெடு நீளத்தில் கோடு கிழித்துக் காட்டுகின்றன.
அப்போ,ராத்திரி ஆயாச்சா?அப்படியென்றால் மருமகள் தமிழ்க் கொடியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருப்பாள்.
தெருவில் சிறுவர் சிறுமிகள் ஓடிப் பிடித்து விளையாடும் அரவம் கேட்கிறது.தெருநடையில் கைக்குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு நிற்கும் ஒன்றிரண்டு பெண்களின் முகங்கள் நிழலாடு கின்றன.
கீழ்ப் போர்ஷனில் வசிக்கும் வீட்டுச்சொந்தக்காரி சொர்ணம்மா மெல்ல வெளியே வந்து திண்ணை நடையில் நின்றாள்.
"ஆனாலும் உங்கம்மைக்கு இந்த வயசான காலத்திலெ இவ்வளவு பிடிவாதம் கூடாது.இந்த நாலஞ்சு நாளா அறப்பட்டினி.மூத்த மகன் பெங்களூரிலிருந்து வரமுந்தி,செத்துப் போனா போகட்டு முண்ணு,ஒரு சொட்டுத் தண்ணியோ,மருந்தோ கூடக் குடிக்காமே அந்தக் கெடையா கெடக்கா..."
கால் சட்டையும், ஷூஸும் அணிந்திருந்ததால் தரையில் உட்காருவதில் இருக்கும் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் அம்மா படுத்திருந்த அந்தப் பாயின் ஓர் ஓரத்தில் ஒருவாறு கஷ்டப் பட்டு அவன் உட்கார்ந்தான்.
"உம்...நாலஞ்சு நாளா பட்டினி.ஏதாவது குடிக்காண்டாமா?"
"ஒண்ணும் வேண்டாம்லே. கொஞ்சம் வெஷம் இருந்தா வாங் கிட்டுவா. எனக்கு இவ்வளவு நாளு வாந்தது எல்லாம் போரும்ப்பா போரும்."
'தன்னிடம் வந்து விவரங்களைக் கேட்டு அறியும் முன், தங்க சாமியிடமும் அவன் அருமாந்தப் பெண்டாட்டி தமிழ்க்கொடி யிடமும் போய் அவர்கள் வாய் வழி எல்லாவற்றையும் கேட் டறிந்துவிட்டு, சாவகாசமாய்த் தன்னிடம் வந்திருக்கிறானே இவன்?' என்று செல்லையாவின் மீதும் ஒருவித எரிச்சல் வர, தன் தலையில் அடித்தவாறு இப்படிச் சொல்கையில் அவள் அழுதே விட்டாள்.
செல்லையாவுக்கு அந்தக் காட்சி மிகவும் வேதனையை உண்டு பண்ணியது என்பதை அவன் முகம் காட்டியது.
தங்கசாமியைவிடப் பத்து வயசு மூத்தவன் அவன். செல்லையா வுக்கு இப்போது முப்பத்தஞ்சு வயசு இருக்கும். நாகர்கோயிலில் நாகம்மாள் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறான். என்னவோ ஒரு புதிய மெஷினின் ஆறு மாதப் பயிற்சிக்காக, மில்லில் இருந்தே அவனைப் பெங்களூருக்கு அனுப்பியிருந்தார்கள். பெங்களூருக்குப் போய் மூணு மாசம் கூட இருக்காது; அதற்குள் அம்மாவின் அவசரக் கடிதம் கண்டு திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறான். அவனுக்கு, சின்னவனைவிட அம்மாவிடம் அதிகப் பாசம். இது மாரியம்மைக்கு நன்றாகத் தெரியும்.
"சரி, தம்பி வீட்டிலிருந்துதானே ஒண்ணும் குடிக்கமாட்டே? நா கடேலிருந்து வாங்கீட்டு வந்து தந்தாலும் குடிக்கமாட்டெயா? உம். நா இன்னா வந்துட்டேன்" என்று எழுந்தான் அவன்.
மாரியம்மையின் சம்மதத்துக்குக் காத்திராமல் வெளிவாசலின் பக்கத்தில் சென்றவன் திரும்பிச் சொர்ணம்மாளிடம், "டீ வாங்கீட்டு வர ஒரு சின்னப் பாத்திரம் இருந்தா தாருங்க" என்று கேட்ட போது அவள் உள்ளே சென்று, திருகு மூடி போட்ட ஒரு ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான்.
இனி, செல்லையா திரும்பி வந்த பிறகுதான் கேஸ் விஸ்தாரம் நடக்கும் என்பதை அறிந்துகொண்டு அதை ஒரு இடைவேளையாகக் கருதி தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற அண்டை வீட்டுப் பெண்கள்.
கனத்த இமைகளைத் திறக்க முடியாமல் அந்தத் திண்ணையின் ஓரத்தில் மாரியம்மை ஒடுங்கிப் போய்த் தனிமையில் அப்படியே கிடந்தாள்.
தூக்கமா மயக்கமா என்று புலப்படவில்லை. மாடியில் குடியிருக்கும் இளைய மகன் வீட்டுச் சந்தடி, அதோடு கீழ்ப்போர்ஷனில் வசிக்கும் சொர்ணம்மா குடும்பத்து இயக்க ஒலிகள், வீட்டின் உள்ளிலும், வெளியில் தெருவிலும் நடப்பவர்களின் காலடியோசைகள்.
சுரம் தொடங்கும் நாள் வரை வயிற்றில் பசி கிள்ளுவதை அவளால் நன்கு உணர முடிந்தது. இப்போது பசியை அவளால் உணர்ந்தறிய முடியவில்லைதான். எனினும், செல்லையாவின் கையி லிருந்து சுடச்சுட ஏதாவது வாங்கிக் குடித்துத் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டால் தேவலை என்ற மன உறுத்தலும் இப்போது இல்லாமல் இல்லை.
சற்றுக் கழிந்து சரக்சரக்கென்று ஷூஸ் தெருவில் உராயச் செல்லையா உள்ளே வந்தான். கையில் ஒரு சிறு பொட்டலத்தில் ரொட்டியும் ஆரஞ்சும் இருந்தன. தவிர, பாத்திரத்தில் சுடச்சுட டீயும்.
கால் சட்டை ஜேபிலிருந்து எடுத்த வர்ண வெள்ளித் தாளில் அழகாக ஒட்டியிருந்த ஏழெட்டு மாத்திரைகளில் ஒன்றைக் கிழித் தெடுத்தான். மாரியம்மையைக் கைத்தாங்கலாகத் தாங்கி உட்கார வைத்து அவள் வாயில் மாத்திரையைப் போட்டுவிட்டு, அவள் பிகு செய்வதைப் பாராட்டாமல், டீயைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிக்கவைத்தான். ஒரு ஆரஞ்சை உரித்துச் சுளைகளையும், ஒரு ரொட்டித் துண்டையும் கட்டாயப்படுத்தி அவளைத் திங்கவைத்து விட்டுப் படுக்க வைத்தான். பிறகு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, பக்கத்தில் சுவரில் சாய்ந்தவாறு பாயில் சௌகரிய மாக உட்கார்ந்தான் செல்லையா.
இப்போது மாரியம்மைக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.
"சரி, நீ எனுத்துக்கு அப்படி அவசரம் அவசரமா 'உடனேயே புறப்பட்டு வா' ன்னு எனக்கு எழுத்து (காயிதம்) போட்டே? என்று அவன் மெல்ல ஆரம்பித்தான். "எல்லாத்தையும் ஒனக்கே அருமைத் தம்பியும் தம்பிக்க கொண்டாட்டியும் ஒண்ணுக்குரண்டா ஒங் கிட்டெச் சொல்லி யிருப்பாங்களே? இனி நான் வேறெ சொல்ல ணுமா?" என்ற அவள் குரலில் இருந்த எரிச்சலையும் இளக்காரத்தை யும் பாராட்டாமல் அவன் மீண்டும் அவளை வற்புறுத்தினான். "அவ்வொச் சொன்னதெல்லாம் கெடக்கட்டும். நீ சொல்லு" என்று விட்டு, மீண்டும் தெருவாசலில் வந்து இடம் பிடித்துக்கொண்டு விட்ட அண்டை வீட்டுப் பெண்களைத் தலை உயர்த்திப் பார்த்தான்.
அவன் பார்வையின் பொருள் சொர்ணம்மாவுக்கும் புரிந்தது. அந்த வீட்டின் கீழ்ப்போர்ஷனில் சொர்ணம்மாவின் கூட அவள் மகன், மகன் பெண்டாட்டி, மகனுடைய இரண்டு வயசான மகள் இத்தனை பேர்களும் வசிக்கிறார்கள். வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்று மேல் மாடியை, கன்யாகுமரி ஜில்லாவிலிருந்து சமீபத்தில், திருவனந்தபுரம் ஐ.ஜி. அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்து வந்திருக்கும் தங்கசாமியின் குடும் பத்துக்கு நாற்பது ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தான். மகன் தங்கச்சாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டு இதோ மாரியம்மை கிடக்கும் இந்த வெளித் திண்ணை வழியாகத் தான் மேலே வசிக்கிற வர்கள் கீழே பின் பக்கத்திலுள்ள குளியலறைக்கோ, வெளியில் தெருவுக்கோ போய் வரவேண்டும். தங்கசாமி குடும்பத்துக்கு மேல்மாடியை மட்டுமே வாடகைக்குக் கொடுத்திருப்பதால், சரி யாகச் சொல்லப் போனால், இந்தத் திண்ணையில், போகவர ஒரு வழி என்பதற்கு மேல் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
எனினும், மாரியம்மை கடந்த நாலைந்து நாட்களாக அங்கே படுத்திருப்பதையோ, இப்போது அவள் மூத்த மகன் செல்லையா அங்கே உட்கார்ந்திருப்பதையோதான் தடுக்கவில்லையே? ஆனால் தனக்குப் பழக்கமான அண்டைவீட்டுப் பெண்கள் அங்கே வந்து வேடிக்கை பார்த்துக்கொண் டிருப்பதை 'உங்க வேலையைப் பார்த்துப் போங்கோ'ண்ணு ஒரேயடியாக விரட்டியடிக்க முடியுமா?" என்ற கேள்விக் குறியுடன் சொர்ணம்மா பேசாமல் நின்றுகொண் டிருந்தாள்.
இவையெல்லாம் செல்லையாவுக்கும் தெரிந்திருந்ததால், பிறகு அவன் அதைச் சட்டை செய்யாமல் அவன் அம்மா சொல்வதைக் கேட்பதில் மும்முரமானான்.
"லே, செல்லய... ஒனக்குத்தான் தெரியுமே. தங்கச்சாமிக்கு ஆபீஸுக்குப் போக என்னைக்கும் காலம்பர ஒம்பது மணிக்கு இங்கே வீட்டை விட்டு எறங்கணும். பூந்துறைப் பள்ளிக்கூடத்தில் வாத்தி யாரு வேலைப் பாக்கும் தமிழ்க் கொடிக்குக் காலம்பரெ ஏழுமணிக்கு வீட்டிலிருந்து போகணும். கைப்புள்ளெ வேறெ! நா இந்த வயசான காலத்திலெ நேரம் விடிய முன்னே அஞ்சு மணிக்கே எந்திச்சு சாப்பாட்டைத் தயாரிச்சு அவ கையிலெ கொடுத்தனுப்பு வேன். தங்கச்சாமி காலம்பரப் போனா பொறவு சாயங்காலம் பாத்தாப் போரும். உச்சைக்கு (மாத்தியானத்துக்கு)ப் பையன் கிட்டெ அவனுக்குச் சோறு கொடுத்தனுப்புவேன். கைப்புள்ளையைப் பாக் கணும். ராத்திரிச் சாப்பாட்டுக்குச் சோறு வைக்கணும். அடுத்த நாள் காபிக்குத் தோசை மாவு அரைக்கணும். இதையெல்லாம் நா ஒத்தேலெ மாடுபோல இந்த வயசான் காலத்திலே செய்தேன்."
மாரியம்மைக்குத் தான் பட்டப் பாட்டையெல்லாம் எண்ணி எண்ணிச் சொல்லச் சொல்லத் துக்கம் தொண்டையை அடைத்தது. "அம்மா, நீ கட்டப்படல்லேனு இப்பம் ஆராவது சொன்னாளா?" என்று செல்லையா கேட்டதும் மாரியம்மைக்கு இன்னும் கோபம் வந்தது.
"சொன்னா அந்தக் கடவுளுக்குப் பொறுக்குமா? ஆனா, என்னை வேலைக்காரீன்னா ரண்டு பேரும் நெனச்சா? இவ ரண்டு பேரும் தொரையும் தொரைசாணியுமா வேலைக்குப் போயிருவா. நா மட்டும் வீட்டிலெக் கெடந்து இந்தப் பாடான பாடெல்லாம் பட்டு இவ்வளுக்கு பண்டுவம் பாத்தேன். அந்தப் பசலையை வளர்த் தேன். கடேசியிலெ அந்தப் புள்ளைக்கப் பொறந்த நாளைக் கொண் டாட தமிழ்க் கொடிக்குத் தள்ளை வீட்டுக்கு (அம்மா வீட்டுக்கு) மூளமூட்டுக்கு ரண்டு பேருமா புள்ளையை எடுத்தூட்டுப் போறப்பம் போயிட்டு வாறேன்னு எங்கிட்டெ ஒரு வாக்குச் சொன்னா என்னா? நானும் கூடெப் போயிரவாப் போறேன்?"
அழுகையால் மேலே பேச்சைத் தொடரமுடியாமல் திணறினாள் மாரியம்மை. சொர்ணம்மாதான் நடந்ததைச் செல்லையாவிடம் விளக்கினாள்.
நாலு மாசத்துக்கு முன் ஒரு நாள். பின் பக்கத்தில் சென்று சேலையெல்லாம் அடித்துத் துவைத்துக் குளித்துவிட்டு மாரியம்மை மாடியில் சென்று பார்த்தபோது, மகனையும் காணவில்லை. மருமகளை யும் காணவில்லை. தொட்டிலில் பேரப்பிள்ளையும் இல்லை. அடுத்த நாள் பிள்ளைக்கு ஒரு வயசு திகையும் நாள் என்பது ஞாபகம் வந்ததும், அவளுக்கு வந்த துக்கமும் கோபமும் இவ்வளவு அவ்வளவு இல்லை. பிள்ளையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட இருவரும் எங்கே போயிருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியாததல்ல. எனினும் அந்த நன்றிக்கேட்டை அவளால் சகிக்க முடியவில்லை. அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, மாடிக் கதவைப் பூட்டி, சாவியைக் கொண்டு வந்து சொர்ணம்மா கையில் கொடுத்துவிட்டுச் சொன்னாள்:
"இந்தப் பாடான பாடுபட்டு அந்தப் புள்ளயை நா வளத்தினேன். அவனுக்குப் பொறந்த நாளைக் கொண்டாடுவதை நா அறியப் படாதாம். வேலைக்காரிக்குக் கூட இதைவிட மதிப்பிருக்கும், இங்கே பெற்ற தாய்க்கு அதுகூட இல்லை. மதியாத வீட்டை மிதிக்கமாட் டேன். நா என் மக தாயிக்க வீட்டுக்கு, பணகுடிக்குப் போறேன். இனி பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவு இவ்வொ ரண்டுபேரும் வேலைக்குப் போனா ஆரு வந்து பொங்கிப் போடப் போறா, பார்ப் போம்" என்றுவிட்டுப் பணகுடியிலிருக்கும் தன் மகள் வீட்டுக்குப் போய்விட்டாள் மாரியம்மை.
அதன் பிறகு நடந்ததையும் சொர்ணம்மாதான் செல்லையாவிடம் சொன்னாள்.
"பொறந்த நாளெல்லாம் களிஞ்சு ரண்டு மூணு நாளுக்குப் பொறவு இங்கே வந்த தங்கசாமி கிட்டேயும், தமிழ்க்கொடி கிட்டே யும், ஒங்க அம்மா வருத்தப்பட்டுக்கிட்டுப் பணகுடிக்குப் போய்விட் டதை நாதான் சொன்னேன். பள்ளிக்கூடம் அடச்சுவிட்டா; அதனாலே ரெண்டு பேரும் அதிகமாக அலட்டிக்கொள்ளல்லே. பள்ளிக்கூடம் தெறக்கப்பட்ட நாள் நெருங்கியதும் தமிழ்க்கொடி முளமூட்டுக்குப்போயி அவ அம்மைக்க ஏற்பாட்டிலே, பத்துப் பந்த ரண்டு வயசிருக்கும், ஒரு குட்டியைக் கூட்டிக்கிட்டு வந்தா. பள்ளிக்கூடம் தொறந்த பிறவு, இந்த ரெண்டு மாசமா அதிகாலையி லேயே எந்திச்சி, சோறெல்லாம் வச்சு, மத்தியானத்துக்கும் எடுத்துக் கிட்டு, புள்ளையை அந்தக் குட்டிகிட்டே விட்டுவிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போறா தமிழ்க்கொடி. எனக்குத்தான் மனசு கேக் காமெ, 'அம்மாவை வரச்சொல்லி எளுத்துப் போடப்படாதா பாவம்னு!' ரண்டு மூணு மட்டம் தங்கசாமி கிட்டே நா சொல்லிப் பாத்துட்டேன். 'உம், உம். போனது போலெ வரட்டும். வரச் சொல்ல விருந்துக்காரியா என்ன?' என்று சொல்லிப் பேச்சை முடிச்சுவிடுவான் அவன்."
மாரியம்மை மனத்தைத் தேற்றிக்கொண்டு நடந்ததைச் செல்லையா விடம் சொன்னாள்.
"பெத்த மனசு தான் பித்து. பள்ளிக்கூடம் தொறந்தப் பொற வாவது தங்கசாமி வருவான் வருவான்னு பாத்துக்கிட்டே நா பணகுடியில் தாயி வீட்டிலெ இருந்தேன். பள்ளிக்கூடம் தொறந்து மாசம் ரண்டான பெறவும் 'வா'ன்னு எனக்கு ஒரு எளுத்துக்கூடப் போடாமெ கல்லுப்போல இருந்திட்டான் இவன். உம்....இவனா வந்து கூப்பிடாமெ வலிய வரப்படாதுன்னுட்டுத்தான் நா இருந் தேன். ஆனா தாயிக்க மாப்பிள்ளைக்கு மதுரைக்கு வேலை மாற்றம் வந்துட்டது. வீடெல்லாம் பார்த்து முடிக்காமெ அவளையும் புள்ளை களையும் அங்கே கூட்டீட்டுப்போக முடியாதுன்னு, தாயியையும் புள்ளைகளையும் அங்கே தக்கலையிலிருக்கும் அவருக்கு அப்பா அம்மாகிட்டே கொண்டுபோய் விட்டுவிட்டு, மதுரைக்கு அவரு மட்டும் ஒத்தேலே போகப் போறதா அறிஞ்சம் பொறவு நா அங்கே நிக்க முடியுமா? வேறெ போக்கடியில்லாமெ நேரா இங்கையே வந்துட்டேன். நீ இருந்தேன்னா நாகர்கோயிலுக்குத் தான் வந்திருப்பேன். உம், நீயும் பெங்களூருக்குப் போயிட்டே!" என்று ஆதங்கப்பட்டாள் மரியம்மை.
அவளே பேசட்டுமென்று மௌனமாய் உட்கார்ந்திருந்தான் செல்லையா. "நா இங்கே வரப்போ சமயம் மத்தியானம் இருக்கும். வேலைக்காரக் குட்டி மட்டும் புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருக்கு.புள்ளயைக் கையிலெ எடுத்தப்பம் என்னால பொறுக்க முடியல்லே. பயல் தேஞ்சுப் போயிருந்தான். தங்கச்சாமி ஆபிஸிலிருந்து வரும் நேரமாவல்லே. அவன் வந்து ரண்டு மணி நேரம் களிஞ்சுதான் தமிழ்க்கொடி பள்ளிக்கூடத்திலிருந்து வருவா. எனக்கானா ஒரே பசி. அடுக்களையில் போயிப் பாத்தா தமிழ்க்கொடிக்குச் சாயங் காலம் வந்து சாப்பிட கொஞ்சம் சோறு மட்டுந்தான் இருந்தது. பரணையில் இருந்த டப்பாவிலிருந்து கொஞ்சம் வறுத்தமாவை எடுத்துக் கரச்சு ஒரு ஒறட்டியும் சுட்டுத் திண்ணு கொஞ்சம் பச்சத் தண்ணியும் குடிச்சேன். இவ துரைசாணி அம்மா பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும், 'நா எங்கம்மை வீட்டிலிருந்தாங்கோம்மாவு கொண்டு வச்சிருந்தேன். இவ ராசாத்தி மாதிரி வந்து ஒரு சோலி யும் செய்யாமெ திண்ணிட்டா' ன்னு என்னைத் திட்டின திட்டு, அப்பப்பா! அதுக்கம் பொறவு அந்த வீட்டிலே இருந்து பச்சைத் தண்ணி வாங்கி நா குடிக்கல்லே" என்று அழுகையோடு முடித்தாள் மாரியம்மை.
செல்லையா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுத்தான் கேட்டான்; "தங்கச்சாமி ஒண்ணும் சொல்லலையா?"
"உம்... அவனா?" கிழவி பெருமூச்சு விட்டாள்.
"வாய் தொறந்தா முத்து உதிந்திராதா? கொஞ்சம் நாளா வீட்டிலே இல்லாமெ பெத்த தள்ளையல்லவா வந்திருக்கான்னு தலைநிமிர்ந்து என்னைப் பார்க்கணுமே. ஆரஈயோ திட்டுதான்னு அவனுக்கப் பாட்டுக்கு வெளியே எறங்கி நடந்துட்டான் அவன்."
மேலே மாடிக்குச் செல்லும் வாசலை ஆத்திரத்தோடு பார்த்தான் செல்லையா. தங்கசாமியைக் கூப்பிட்டுக் கேட்பதா வேண்டாமா என்று அவன் திணறுவது போலிருந்தது. சொர்ணம்மா சொன்னாள்:
"மாடிக்கு வாடகை தருவது ஒங்க தம்பி. அதனாலே அவனை நா குத்தம் சொல்லப்படாதுதான். ஆனா நடந்ததைச் சொல்லாமே இருக்கவும் என்னாலே முடிய மாட்டேங்குது. இவ்வோ பெத்தத் தள்ளையா, இல்லை வேறெ ஆருமா? பணகுடியிலிருந்து இங்கே வந்த அண்ணைக்கு அந்த ஒறட்டிச் சுட்டுத் திண்ணதுதான்; அதுக்கம் பொறவு முழுப்பட்டினி. அதுக்கக்கூடக் காய்ச்சல் வேறெ சேந்து ஆளைத் தூக்கித் தூக்கிப் போடுது. இந்தப் பாயில் இதே இடத்திலெ அந்தக் கெடையா கெடக்கா. பெத்த மகனுக்கும் சொந்த மருமகளுக்கும் இல்லாத அக்கறையா நமக்குன்னு என் பாட்டுக்கு இருந்தேன் நான். ஆனா இவளைத் தாண்டி அங்கையும் இங்கையும் போறாளே அல்லாமெ இப்படியொருத்தி இங்கணெ கிடக்காளேன்னு ஆராவது மூண்டு கேக்கணுமே? எனக்கு தீரப் பொறுக்கல்லே. என்ன நெனச்சாலும் சரீன்னு அவனைக் கூப்பிட்டு, 'டேய் தங்கச்சாமி, இது ஒன்னைப் பெத்த அம்மையல்லவாடா? இப்படி பட்டினிக் கெடந்து, காய்ச்சல் பிடிச்சு இந்தக் குளிரிலெ கெடந்து பாடாத படுதா, அவளை அங்கே கூப்பிட்டுப் படுக்கவச்சு, கஞ்சியோ மருந்தோ கொடுத்தா என்ன? இது பெரிய பாவம்டா. ஒனக்கும் ஒரு புள்ளை இருக்கான். மறந்திராதே' ன்னு என்னவெல் லாமோ சொன்னேன். அதுக்குச் தங்கச்சாமி சொல்லுதான்: 'எனுத் துக்கு இவ விருந்தாளி மாதிரி ஒதுங்கி வந்து கெடக்கணும்? அங்கே மேலெ வந்து அதிகாரத்தோடெ படுக்கத்தானே வேணும்? அவசியம் உள்ளதைத் தமிழ்க் கொடிட்டெ இருந்து கேட்டு வாங்கிக் குடிச்சா, மாடியை வயசான காலத்திலே இவ ஈசு கொறஞ்சு போயிருமா? நீங்க மாடியை மட்டுந்தானே எங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்க? இவளுக்கு இந்தத் திண்ணையில் என்ன அதிகாரம்? ஒண்ணுலே மேலே வரச்சொல்லுங்க. இல்லாட்டே வெளியே போகச் சொல்லுங்க' என்று விட்டு அவன் பாட்டுக்கு ஆபீசுக்கு இறங்கிப் போயிட்டான்."
செல்லையா குபீரென்று எழுந்தான். தங்கசாமியை இங்கே கூப்பிட்டு இத்தனை பேர்களுக்கிடையில் வைத்து விசாரணை செய்து குடும்ப மதிப்பை இன்னும் குறைத்துக் கொள்ள அவன் விரும்ப வில்லை போல் தோன்றியது. ஆனால் அவன் முகபாவம் தங்கசாமி யிடம் தாங்க முடியாத வெறுப்பையும் கோபத்தையும் காட்டுவது போலிருந்தது. என்னவோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் மரத்தாலான மாடிப்படிகளைப் படபடவென்று உதைத்தவாறு ஏறி மாடிக்குச் சென்றான்.
சிறிது நேரத்துக்கு மாரியம்மைக்குச் செல்லையாவின் சத்தம் மேலே மாடியில் கரகரவென்று கேட்டுக்கொண் டிருந்தது. இடையில், அமர்ந்த குரலில் தமிழ்க்கொடியின் என்னவோ பேச்சொலி.சற்று நேரத்தில் அந்தச் சத்தமும் கேட்கவில்லை.
களைப்பும் தூக்கமும் ஒரு சேர வந்து இமைகளை அழுத்துவது போலிருந்தது மாரியம்மைக்கு. எத்தனை நேரம் தூங்கினாளோ தெரியாது. திடீரென்று மேலே பேரப்பிள்ளை வீல் வீல் என்று அழும் ஓசை கேட்டதும் அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.
சுற்று முற்றும் பார்த்தபோது யாரையும் காணவில்லை. மேலே அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியச் சண்டையை எதிர்பார்த்து ஏமாந்து போய், தத்தம் வீடுகளுக்குச் சொர்ணம்மா வும், ஏனைய அண்டை வீட்டுப் பெண்களும் போய்விட்டார்கள் போலிருக்கிறது.
குழந்தையைச் சற்று நேரத்துக்கு யாரும் எடுக்கவில்லை. பிறகு தமிழ்க்கொடி என்னவோ எரிந்து விழுந்தவாறு குழந்தையை எடுத்து அதன் அழுகையை அடக்கும் அரவம் கேட்டது.
சற்றுக் கழிந்து, மிகவும் நிதானமாகச் செல்லையா மாடிப்படிகளில் இறங்கித் தன்னருகில் வந்து நிற்பது தெரிந்தது மாரியம்மைக்கு. மேலே செல்லும்போது அவனிடத்தில் இருந்த வேகம் தணிந் திருந்தது.
"வயசான காலத்திலே ஒனக்கு இவ்வளவு ஆங்காரம் கூடாது. அவர் சொல்வதெப் பார்த்தா ஒன் மேலேதான் தப்புன்னு தோணுது. ஒனக்கு இங்கே அதிகாரம் இல்லையா? எனுத்துக்கு இப்படி விருந்துக்கு வந்தவ மாதிரி விலகிப் போய் இருக்கணும்? கூடமாட வேலை செய்யணும். உள்ளதை விட்டுக் குடிக்கணும். அதை விட்டுட்டு எனுத்துக்கு இந்த அவதாளியெல்லாம்? வயசான காலத்திலே நானோ நானல்லவோன்னு பிடிவாதம் பிடிக்காமே அவ்வகூட ஒத்துப்போகப் பாரு. தமிழ்க்கொடி தான் வேற ஆருமா? அவதான் என்னவாவது சொல்லீட்டா அதைப் பெரிசு படுத்தாமே அங்ஙணே அடங்கிக் கெடக்கப் பாரு. உம்.... அதுதான் ஒனக்கு நல்லது. சரி, எனக்கி நிற்க நேரமில்லே. அடுத்த ரயில்லையேப் போகணும். நா போயிட்டு வாரேன்."
செல்லையாவின் குரல் மிகவும் கரகரப்பாகவும் கண்டிப்பாகவும் ஒலித்தது.
அவள் பதிலுக்குக் காத்திராமல் செல்லையா நடந்து தெருவாசல் அருகில் சென்றதும், தெருவிலிருந்து தங்கசாமி உள்ளே ஏறி வந்தான்.
"பெங்களூருக்குத் திரும்பியாச்சா? கொஞ்ச முன்னே மாடியி லிருந்து வெளியே போகும்போது இங்கே பார்த்தேன். உன்னை இங்கே காணவில்லையே? எங்கே போயிட்டே?"
செல்லையாவின் முகத்தில் தங்கசாமியை அப்போது அங்கே எதிர்பாராத ஒரு தடுமாற்றம். எனினும் சமாளித்துக்கொண்டு, "இல்லே, அம்மைக்கு மருந்து வாங்கீட்டுவரப் போயிருந்தேன். அப்பம்தான் நீ மாடியிலிருந்து வெளியில் போயிருக்கே போலிருக்கு. சரி, நா போயிட்டு வாரேன். அடுத்த ரயிலுக்குப் போகணும். எனக்கு லீவில்லே" என்று விட்டுத் தம்பியின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தெருவில் இறங்கிச் சரக் சரக் என்று பூட்ஸ் கதற விறு விறுவென்று நடந்தான் செல்லையா.
----------------------
ஆ. மாதவன்:
திருவனந்தபுரத்தில் பிறந்து (6-2-1933) அங்கேயே வாணிபத்தில் ஈடுபட்டிருக்கும் ஆ. மாதவன் தம் இருபதாவது வயது முதலே எழுதிவருகிறார். இதுவரை அறு நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நான்கு குறுநாவல்களும், இரு நாவல்களும் எழுதியுள்ளார். 'புனலும் மணலும்' (நாவல், 1974), 'கிருஷ்ணப் பருந்து' (நாவல், 1980), 'கடைத்தெருக் கதைகள்'(சிறுகதைகள், 1975), 'மோக பல்லவி' (சிறு கதை கள், 1975), 'காமினி மூலம்' (சிறுகதைகள், 1978)இவருடைய சில நூல்கள். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் சில படைப்பு கள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. பல அபூர்வத் தகவல்கள் கொண்டிருக்கும் இவருடைய படைப்புகளில் மனித மனச் சிக்கல்கள் திறம்படச் சித்திரிக்கப்பட்டிருக்கும். 'தீபம்' இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் இடம் வகிக்கிறார்.
முகவரி: Selvi Stores, Chalai, Trivandrum - 695 023.
நாயனம் - ஆ. மாதவன்
இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டை யுடன், நீட்டி நிமிர்ந்து அந்திமத் துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித்தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறைநாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது.
'யென்னைப் பெத்த யப்போவ்... யெனக்கினி ஆரிருக்கா...? என்று கால்மாட்டில் பெண்கள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்குப் பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது.
சாயங்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தென்னந்தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புதுவெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலி களின் நடுவில் - வாய்க்கால் கரையிலிருந்து, முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்துகொண்டு வந்து, முற்றத்தில் பாடை ஏணி தயாரிக் கிறார்கள். பிளந்த கமுகுமரம், வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகிக் கிடக்கிறது.
வாசலில், இளவுக் கூட்டத்தினரிடையே, செத்தவரின் தடியன் களான ஆண்பிள்ளைகள் இரண்டும் அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு கறுகறுவென்று, எண்ணெய்ச் சிலைகள்போலத் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார்கள். சின்னவன், கொஞ்சம் அழுகிறான். பெரியவன் முழங்கையைக் கன்னத்துக்கு முட்டுக்கொடுத்துக் கூரை யின் துலாக் கட்டையைப் பார்த்துக்கொண் டிருக்கிறான். உள்ளே யிருந்து வரும் ஒப்பாரி, இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது.
"இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வரு முன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்; என்ன தங்கப்பா?"
"ஆமாமாம், நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்கிறாங்க, அழைச்சார."
"வடிவேலும், சின்னண்ணனும் போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே இன்னிக்கு ஆம்புட்றது கஸ்டம். அல்லாம், முத்துப்பட்டி திருவிளா வுக்குப் போயிருப்பாங்க."
"சின்னண்ணன் போயிருக்கிறான்லியா அப்போ நிச்சயம் யாரையாவது இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது."
மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்துகொண்டு, வயல் வரப்பு வழி யாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்துகொண் டிருக்கிறான். விளக்கின் ஒளியில், வாழை மரமும், பச்சை ஓலைப் பந்தலும் பெரிய பெரிய நிழல்களாக வளர்ந்து திரைக்காட்சி போல மாறிமாறிப் போயிற்று.
விளக்கு சுமந்து வந்தவன். வேர்க்க விறுவிறுக்க முற்றத்தில் ஸ்டாண்டு மேல் விளக்கை இறக்கி வைத்தான். விளக்கின் உஸ்..ஸ்! உள்ளே அழுகை ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது. விளக்கு வந்துவிட்ட வசதியில், முற்றத்துச் சந்தடி, அங்கிங்காக விலகி நின்று கொண்டு இருட்டில், தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக்கொண் டிருக்கிறது. சலிப்பு - எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட் டிருக்கிறது. சும்மாவேணும் எத்தனைதரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கிறது?
"விடிஞ்ச மொதக்கொண்டு ஒண்ணுமே சாப்பிடலே. எப்போ இந்தக் காரியம் முடியறது, குளிச்சு மாத்திச் சாப்பிடுறதோ? சரியான தொந்தரவு போ." யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு,வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடி வந்தான்.
"சிண்னண்ணனும்,வடிவேலுவும் தட்ராம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க.மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆம் புடலியாம்.சேதி சொல்லச் சொன்னாங்க."வந்தவன் பந்தலையும்- கியாஸ் விளக்கையும்-முசுமுசுத்த கும்பலையும்-உள்ளே பெண்களின் அர்த்தமற்ற அலமலங்களையும்-மாறி மாறிப் பார்த்து விட்டுப் பீடிக்கு நெருப்புத் தேடி ஒதுங்கினான்.எப்பிடியும் தட்றாம் பட்டி போய் ஆளை இட்டுக்கொண்டு வர இன்னும் ஒரு மணியோ, ஒன்றரை மணியோ நேரமாகலாம்.கும்பலின் முகம் சுணங்கியது.
"இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும் பல்லக்கும் வச்சுக் கிறாங்க?ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு?இப்போ பாரு,எத்தினி பேரு இதுக்கோ சரம் காத்துக் கெடக்கிறாங்க?"
"இல்லே,மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது.செத்தவரு முன் னாடியே சொல்லிவச்ச சங்கதியாம்.தமக்கு,சுடுகாடு யாத்திரை தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு.அதாம் அந்தப் பொண்ணும் அழுகையா அழுதிச்சி.செத்தவங்க ஆத்துமா நிம்மதி யாப் போகட்டுமேன்னுதான்,இப்போ,மேலத்தூர் போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்கிறாங்களாம்."
"நல்ல ரோதனையாப் போச்சு.செத்தவங்களுக்கென்ன?அவுங்க போயிட்டாங்க.இருக்கிறவங்க களுத்து அறுபடுது."
மழை வந்தேவிட்டது.ஹோவென்று, கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது.சுற்றிலும் கமுகு,தென்னை தாழைப்புதர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட்டது.கியாஸ் லைட்டைத் திண்ணைமேல் தூக்கி வைத்தார்கள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்களின் தலை முண்டாசும்,தலையும் பெரிய நிழல்களாகச் சுவரில் உருக்குலைந்து தெரிந்தன.
உள்ளே ஏதோ குழந்தை அடம்பிடித்து அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள்.பிய்த்து எறிவேன் என்கிறாள்."சனியனே,உயிரை வாங்காதே"என்கிறாள்.குழந்தை நிறுத்தாமல் அழுகிறது.
எல்லோர் முகத்திலும் சலிப்பும், விசாரமும்,பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்றன.தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை,என்ன பேசி,நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரிய வில்லை.எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்.மழை சட்டென்று ஒய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.
இதற்குள்ளியும் பாடை தயாராகி, உடம்பு சிவப்புப் பட்டு மூடிக் கொண்டு, நீட்டி நிமிர்ந்து - பந்தலில் தயாராகி இருந்தது. நீர் மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும், மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு, பிணத்தின் தலைமாட்டில் வந்து, முக்காடிட்ட முண்டச்சிபோல நின்றார்கள்.
"பொம்மனாட்டிங்க குலவை போடுங்க தாயீ. அதுக்கும் சொல் லியா தரவோணும்?" என்று தலையாரி குரல் கேட்க, தாமதித்து நின்றவர்கள் போல் கிழவிகள், கொலு கொலுவென்று ஒப்பாரி போலவே குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர் ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து திண்ணையில் நுழைந் தார்கள்.
"வாய்க்கரிசி போட இன்னும், உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது" என்றார் தலையாரி.
"அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதிசாத் தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு, அடியைப் புடிடா ஆப்பையாண்டீன்னு, முதல்லே இருந்தே ஆரம்பிக் கோணுமா? தம்பி, சின்னத்தம்பு உன் கைக் கடியாரத்திலே மணி யென்ன இப்போ?"
மணியா? அதெல்லாம் ரொம்ப ஆச்சு. ஒம்போது ஆகப் போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து - எப்போ பொறப்பட போறமோ?
எல்லாரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக்கொண் டிருந்தன. இப்போது - மரண சம்பவத்தை விட, நாயனந்தான் முக்கியப் பிரச்னையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக் கொண்டு நின்றது.
"யாரோ வர்றாப் போல இருக்குதுங்களே" என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப் பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது.
"ஆமண்ணோவ். வர்றாங்க போல. யாரப்பா அது வெளக்கை சித்தெ தூக்கிக்கொண்டு போங்களேன். மழையிலே சகதியும் அதுவுமா கெடக்குது. சின்னண்ணந்தான், தோள் அசைப்பைப் பார்த்தா தெரியுதில்லே."
எல்லாரது முகங்களும் தெளிவடைந்தன. இடுப்பு வேஷ்டியை முறுக்கிக்கொண்டு, முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லோரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண்பிள்ளைகள், உள்ளே பெண்களிடம் போய் விடைபெற்று வந்தனர்.உள்ளே விட்டிருந்த அழுகை "யங்கப்போ"என்று பின்னும் ஈனமாக எழுந்தது.
கியாஸ் விளக்கு வட்டத்தில், சின்னண்ணணும் வடிவேலும், வென்று வந்த வீரர்கள் போல முன்னால் நின்றனர்.
"அட,மேலாத்தூரிலே போனா அங்கே ஒரு ஈ,காக்கை இல்லெ. படு ஓட்டமா ஓடினோம்.வீரண்ணன் சேரியிலே,ஒரு நல்ல வித்வான்.மாரியம்மன் கொடையப்போ கூட நம்மூருக்கு வந்து வாசிச்சான்.முனிரத்தினம்னு பேரு.எப்படியும் அவரெ இட்டாந் திரலாம்னு போனா,மனுசன்,சீக்கா படுத்த படுக்கையா கெடக் கிறான்.விட்டா முடியாதுன்னு, சைக்கிளைப் புடிச்சோம்.தட்றாம் பட்டுலே,தோ.... இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமயத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புன்யமாப் போச்சு."
எல்லாரும் பார்த்தார்கள்.
காய்ந்து போன மூங்கில் குழாய் போல,சாம்பல் பூத்த நாய னத்தை வைத்துக்கொண்டு.மாறு கண்ணும்,குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக,ஒரு குட்டை ஆசாமி.'இவனா'என்று கருவுவதற்குள்,'இவனாவது அந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே' என்ற சமாதானம்,எல்லாருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது.தவுல்காரன் அடுப்படி தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க,'ஐயோ'என்ற பார்வையில்,முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான்.
"வெட்டியானெ கூப்பிடறது.நெருப்பெல்லாம் ரெடி.சங்கை ஊதச் சொல்லு.பொறப்படலாமா?உள்ளே கேட்டுக்கோ."
தாறுடுத்திக் கொண்டு பாடைப் பக்கம் நாலு பேர் தயாரானா ர்கள்.கருமாதிக்கான பிள்ளைகள் இரண்டும்,பெரியவன் தீச்சட்டியை வெட்டியான் கையிலிருந்து வாங்கிக் கொண்டான்.சின்னவன் ஈர உடையில்,வெட வெடவென்று நடுங்கிக்கொண்டு,பெரியவன் பின்னால் செய்வதறியாமல் நின்றான்.
"பொறப்படுங்கப்பா.தூக்கு"என்ற கட்டளை பிறந்ததும், தாறுடுத்தநால்வரும்பாடையின் பக்கம்வந்தார்கள்.உள்ளேயிருந்து பெண்கள் முட்டிக் கொண்டு தலைவிரிகோலமாக ஓடி வந்தார்கள். "யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே?"என்று கதறல்,சக*தியும் அதுவுமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங் கினார்கள்.பெண் மட்டும்"ங்கப்போ எனக்கினி யாருருக்கா?" என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள்.
"கோவிந்தா!கோவிந்தா!"என்ற கோஷத்துடன் பாடை தோளில் ஏறிற்று."யாருப்பா அது நாயனம்.உம்...சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டியாந்தோம்.முன்னாடி போங்க.வெளக்குத் தூக்கிறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க."
நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்து வந்த வேலண்ணன் அவன் காதருகில் ஏதோ சொன்னான். நாயனக் காரன் மெல்ல நாயனத்தை உதட்டில் வைத்து, 'பீ...ப்பீ...' என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம், சகதி வழுக்கும் வரப்புப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில் எல்லார் நிழலும் தாழைப் புதரின் மேலே கமுகு மர உச்சிவரை தெரிந்தது.
'கூ...ஊ...ஊ' என்று, வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரன் வாசிக்க ஆரம்பித்திருந்தான்.'பீ....பீ' என்ற அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் - சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தை போல - வாத்தியத்தைத் தொப்பு தொப்பென்று மொத்தினான்.
விவஸ்தை கெட்ட மழை வருத்தி வைத்த அலமலங்கலும், கீழே வழுக்கும் வரப்புப் பாதையும், தாழைப் புதரும், கமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும், மரணமும், பசியும், அசதியும் வெறுப்பும், துக்கமும், எரிச்சலும், கோபமும், எல்லா ருடைய உள்ளங்களிலும், நாயனத்தின் கர்ண கடூரமான அபஸ் வரமாக வந்து விழுந்து வயிறெரியச் செய்தது.
கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது. தீச்சட்டி யில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
'பீ...ப்பீ...பீ....பீ'
எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப் பிய்த்தது.
பின்னும், 'பீ...ப்பீ...பீ...பீ!"
ஊர்வலம், 'சனியனே' என்ற பாவனையில் அவனையே பார்த்துக் கொண்டு வழி நடந்தது. யாராருக்கெல்லாமோ பாதை வழுக்கியது. பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன், சகதி தேங்கிய பள்ளத்தில் விழுந்தான். உடன் வந்த ஒருவர், அவனைத் தூக்கிவிட்டு, "நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும், சனியனே?" என்று, எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாகக் கொட்டினார்.
ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில், கடந்து வஞ்சித் துறையிலிருந்து தவளைகள், 'குறோம் குறோம்' என்று எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் கறுப்புப் பன்றிகள் போலப் பாறை கள் நிறைந்த ஆற்றில், புதுவெள்ளம் இரைச்சலோடு ஒழுகும் அரவம் கேட்டது. குளிர், இன்னும் விறைப்பாக உடல்களை குத்திற்று.
சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது.இன் னும், 'பீ...ப்பீ...பீ...பீ...'
நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்துகொண் டிருந்த தலையாரி முத்தன், அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத் தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன், நாயனக்காரனின், அந்தப் பொட்டைக் கண் முகம், எரிச்சலை இன்னும் வளர்த்தது.
இன்னும், பீ.....ப்பீ.....பீ....பீ.....
"படவா ராஸ்கல், நாயனமா வாசிக்கிறே?" தலையாரி முத்தன் ரொம்ப முரடு. அவரது அதட்டலை, பாடை தூக்கிக்கொண்டு முன் னால் போய்க் கொண்டிருந்தவர்கள் கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.
அவ்வளவுதான் !
தலையாரி, நாயனக்காரன் பிடரியில், இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாய னத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால்முட்டின் மேல் வைத்து, இரண்டு கைகளாலும், 'சடக்', இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடி கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண்டுகள் போய் விழுந்தன.
"ஓடிக்கோ பய மவனே. நாயனமா வாசிக்க வந்தே? நின்னா, உன்னையும் முறிச்சு ஆத்திலே வீசி யெறிஞ்சுடுவேன்."
ஊர்வலம் தயங்கிக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், 'முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்குத் தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்' என்ற திருப்தி பளிச்சிட்டது.
"என்ன நின்னுட்டீங்க? அட, போங்கப்பா. தோ மயானம் வந்தாச்சே. நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க."
இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளி யில் இல்லை. ஆற்றின் இடப்பக்கச் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக, இரண்டு பேரும் 'செத்தோம் பிழைச்சோம்' என்று விழுந்து எழுந்து ஓடிக் கொண்டிருந்தனர்!
விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைந்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.
-------------------------
சுஜாதா:
சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன் சென்னையில் 3-5-1935 அன்று பிறந்தவர். எழுபதுகளில் இவருடைய இலக்கியப் பிரவேசம், தமிழ் நடையிலும் கதைகளின் உட் பொருளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் விளைவித்தது. பிரபல பத்திரிகைகள் அனைத்தாலும் மிகவும் விரும்பப்படும் எழுத் தாளராக விளங்கும் இவருடைய படைப்புகளில் இருபத் தைந்துக்கு மேல் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. 'கரை யெல்லாம் செண்பகப் பூ'(1980), '24 ரூபாய்த் தீவு' (1979), 'கனவுத் தொழிற்சாலை' (1980),இவரது புகழ் பெற்ற நாவல் களில் சில. இவரே மேடை நாடகங்களையும் எழுதி அரங் கேற்றியிருக்கிறார். சிலநாவல்கள் திரைப்படங்களாகவும் வெளி வந்திருக்கின்றன. வேறு இந்தியமொழிகளில் இவருடைய படைப்புக்கள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. விஞ்ஞானப் புனைகதைகள் எழுதியுள்ள இவர் ம. இராஜாராமுடன் சேர்ந்து எலெக்ட்ரானிக்ஸ் துறை பற்றிய நூலொன்றும் எழுதியிருக் கிறார். பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார்.
முகவரி: D 9, B.E.L. Colony, Bangalore - 560 013.
நகரம் - சுஜாதா
"பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் 'மட்ரா' என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் 'மதுரா' என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் 'மெதோரா' என்று குறிக்கப்படுவதும் இத்தமிழ் மதுரையேயாம்.
-கால்டுவெல் ஒப்பிலக்கணம்
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் வித விதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையில் - ஆ.கே கட்பாடிகள் - எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள். ஹாஜி மூசா ஜவுளிக் கடை (ஜவுளிக் கடல்) -30-9-73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.
மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல் 'பைப்' அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் 'டெட்டானஸ்' கவலை இன்றி மண்ணில் விளையாடிக்கொண் டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பஸ்கள் தேசீயம் கலந்த டீஸல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த, ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் 'இங்கிட்டும் அங்கிட்டும்' செல்லும் வாகன - மானிடப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக் கொண் டிருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவித ப்ரௌனியன் இயக்கம் போல் இருந்தது. (பௌதீகம் தெரிந்தவர்களைக் கேட்க வும்.)
கதர்ச் சட்டை அணிந்த, மெல்லிய அதிகம் நீளமில்லாத ஊர்வலம் ஒன்று, சாலையின் இடப்புறத்தில் அரசாங்கத்தை விலை வாசி உயர்வுக்காகத் திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக் கட்டு ஜனங்கள், மீனாட்சிக் கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகைப் பாலம்.....மதுரை!
நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தன் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பீ.டிபார்ட்மெண்டின் காரிடாரில் காத்திருந் தாள். முதல் தினம் பாப்பாத்திக்குச் சுரம். கிராமப் ப்ரைமரி ஹெல்த் செண்டரில் காட்டியதில் அந்த டாக்டர் பயம் காட்டி விட்டார். "உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போ" என்றார். அதிகாலை பஸ் ஏறி.
பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தாள். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயதிருக் கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்திலெ பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று. மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி ஜுரத் தூக்கத்தில் இருந்தாள். வாய் திறந்திருந்தது.
பெரிய டாக்டர் அவள் தலையைத் திருப்பிப் பார்த்தார். கண் இரப்பையைத் தூக்கிப் பார்த்தார். கன்னங்களை விரலால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்து பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர். போஸ்ட்கிராஜுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொஃபஸர். அவரைச் சுற்றிலும் இருந்த வர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள்.
"acute case Meningitis. Notice the..."
வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாஷணையின் ஊடே தன் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக்கொண் டிருந்தாள். சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆஃப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குள்ளே பார்த்தார்கள். 'டார்ச்' அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள். குறிப்பு கள் எடுத்துக்கொண்டார்கள்.
பெரிய டாக்டர், "இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங்கள்" என்றார்.
வள்ளியம்மாள் அவர்களின் முகங்களை மாறிமாறிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், "இத பாரும்மா, இந்தப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உட்கார்ந்திருக்காரே, அவர் கிட்டப் போ. சீட்டு எங்கே?" என்றார்.
வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.
"சரி, அவரு கொடுப்பாரு. நீ வாய்யா, இப்படிப் பெரியவரே!"
வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, "அய்யா குளந் தைக்குச் சரியாய்டுங்களா?" என்றாள்.
"முதல்லே அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம். டாக்டர் தனசேசரன், நானே இந்தக் கேஸைப் பார்க்கிறேன். ஸீ தட் ஷி இஸ் அட்மிட்டட். எனக்குக் கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கிறேன்."
மற்றவர்கள் புடை சூழ அவர் ஒரு மந்திரிபோல் கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லி விட்டுப் பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.
சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.
"இங்கே வாம்மா. உன் பேர் என்ன? டேய் சாவு கிராக்கி! அந்த ரிஜிஸ்தரை எடுடா?
"வள்ளியம்மா."
"பேஷன்ட் பேரு?" சீனிவாசன் நிமிர்ந்தான் "அவரு இறந்துபோயிட்டாருங்க."
சீனிவாசன் நிமிர்ந்தான்.
"பேஷண்ட்டுன்னா நோயாளி... யாரைச் சேர்க்கணும்?"
"என் மகளைங்க."
"பேரு என்ன?"
"வள்ளியம்மாளுங்க"
"என்ன சேட்டையா பண்றே? உன் மகப் பேர் என்ன?"
"பாப்பாத்தி."
"பாப்பாத்தி! அப்பாடா, இந்தா, இந்தச் சீட்டை எடுத்துக் கிட்டுப் போயி அப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப்படி கிட்டே நாற்காலி போட்டுக்கிட்டு ஒருத்தர் உட்கார்ந்திருப்பார். வருமானம் பாக்கறவரு. அவரு கிட்ட கொடு."
"குளந்தைங்க?"
"குளந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்திருக்கட்டும். கூட யாரும் இல்லையா? நீ போய் வா. விஜயரங்கம் யாருய்யா?"
வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியை விட்டுப் போவதில் இஷ்ட மில்லை. அந்த க்யூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தன. இறந்து போன தன் கணவன் மேல் கோபம் வந்தது.
அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு அவள் எதிரே சென்றாள். நாற்காலி காலியாக இருந்தது. அதன் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள். அவர் எழுதிக் கொண்டே சீட்டை இடக் கண்ணின் கால் பாகத்தால் பார்த்தார். "இரும்மா, அவரு வரட்டும்" என்று காலி நாற்காலியைக் காட்டினார். வள்ளியம்மாளுக்குத் திரும்பத் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில், 'காத்திருப்பதா - குழந்தை யிடம் போவதா?" என்கிற பிரச்னை உலகளவுக்கு விரிந்தது.
'ரொம்ப நேரமாவுங்களா?' என்று கேட்கப் பயமாக இருந்தது அவளுக்கு.
வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை அட்மிட் பண்ணி விட்டு மெதுவாக வந்தார். உட்கார்ந்தார். ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக்கொண்டு கர்ச்சீப்பைக் கயிறாகச் சுருட்டித் தேய்த்துக்கொண்டு சுறுசுறுப்பானார்.
"த பார், வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்பூச்சி மாதிரி வந்தீங்கன்னா என்ன செய்யறது?"
வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்த பின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.
"டாக்டர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வா. டாக்டர் கையெழுத்தே இல்லையே இதிலே!"
"அதுக்கு எங்கிட்டுப் போவணும்?" "எங்கேருந்து வந்தே?" "மூனாண்டிப் பட்டிங்க!" கிளார்க், "ஹத" என்றார். சிரித்தார். "மூனாண்டிப் பட்டி! இங்கே கொண்டா அந்தச் சீட்டை."
சீட்டை மறுபடி கொடுத்தாள். அவர் அதை விசிறி போல் இப்படித் திருப்பினார்.
"உன் புருஷனுக்கு என்ன வருமானம்?" "புருசன் இல்லீங்க." உனக்கு என்ன வருமானம்? அவள் புரியாமல் விழித்தாள். "எத்தனை ரூபா மாசம் சம்பாதிப்பே?" "அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும். அப்புறம் கம்பு, கேவரகு!"
"ரூபா கிடையாதா! சரி. தொண்ணூறு ரூபா போட்டு வெக்கறேன்."
"மாசங்களா"
"பயப்படாதே.சார்ஜீ பண்னமாட்டாங்க.இந்தா,இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு இப்படியே நேராப் போய் இடப் பக்கம்-பீச்சாங்கைப் பக்கம் திரும்பு.சுவத்திலே அம்பு அடை யாளம் போட்டிருக்கும்.48-ஆம் நம்பர் ரூமுக்குப் போ."
வள்ளியம்மாள் அந்தச் சீட்டை இரு கரங்களிலும் வாங்கிக் கொண்டாள்.கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனத்தை மேலும் குழப்பி இருக்க,காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள்.அவளுக்குப் படிக்க வராது.48-ஆம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது.திரும்பிப் போய் அந்தக் கிளார்க்கைக் கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.
ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு நோயாளிகள் உட்கார்ந்துகொண்டு பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் சொருகி இருக்க அவளைக் கடந்தார்கள்.மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் சாம்பார் சாதம் நகர்ந்து கொண்டிருந்தது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன. அலங்கரித்துக்கொண்டு, வெள்ளைக் கோட் அணிந்துகொண்டு, ஸ்டெதாஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள் நர்ஸ்கள் எல்லாரும் எல்லாத் திசைகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்கப் பயமாக இருந்தது.என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை.
ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்றுகொண் டிருந் தார்கள்.அங்கே ஒரு ஆள் அவள் சீட்டுப் போலப் பல பழுப்பு நிறச் சீட்டுக்களை சேகரித்துக் கொண்டிருந்தான்.அவன் கையில் தன் சீட்டைக் கொடுத்தாள்.அவன் அதைக் கவனமில் லாமல் வாங்கிக் கொண்டான்.வெளியே பெஞ்சில் எல்லாரும் காத்திருந்தார்கள்.வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது.அந்தப் பெண் அங்கே தனியாக இருக்கிறாள்.சீட்டுக்களைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான்.பாப்பாத்தி யின் பெயர் வந்ததும் அந்தச் சீட்டைப் பார்த்து "இங்கே கொண்டு வந்தியா!இந்தா!" சீட்டைத் திருப்பிக் கொடுத்து,"நேராகப் போ" என்றான்.வள்ளியம்மாள் "அய்யா,இடம் தெரியலிங்களே"என் றாள்.அவன் சற்று யோசித்து எதிரே சென்ற ஒருவனிடம்,"அமல் ராஜ்,இந்த அம்மாளுக்கு நாப்பத்தி எட்டாம் நம்பரைக் காட்டுய்யா, இந்த ஆள் பின்னாடியே போ.அவர் அங்கேதான் போறார்" என்றான்
அவள் அமல்ராஜின் பின்னே ஓடவேண்டி யிருந்தது.
அங்கே மற்றொரு பெஞ்சில் மற்றொரு கூட்டம் கூடியிருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கிக் கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றுமே சாப்பிடாததாலும் அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.
அரை மணி கழித்து அவள் அழைக்கப்பட்டாள் அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பிப் பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்.
"ஓ.பி. டிபார்ட்மெண்டிலிருந்து வரியா?" இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
"அட்மிட் பண்றதுக்கு எளுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக் காலையிலே சரியா ஏழரை மணிக்கு வந்துடு. என்ன?"
"எங்கிட்டு வரதுங்க?" "இங்கேயே வா. நேரா வா, என்ன?" வள்ளியம்மாளுக்கு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளுக்கு ஏறக்குறைய ஒன்றரைமணி நேரம் தனியாக விட்டு வந்துவிட்ட தன் மகள் பாப்பாத்தியின் கவலை மிகப் பெரியதா யிற்று. அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஒன்று போல் இருந்தன. ஒரே ஆசாமி திரும்பத் திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. ஒரு வார்டில் கையைக் காலைத் தூக்கி, கிட்டி வைத்துக் கட்டி, பல பேர் படுத்திருந்தார்கள். ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுதுகொண்டிருந்தன. மிஷின் களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக, அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.
"அம்மா" என்று ஒரு பெண் டாக்டரைக் கூப்பிட்டு, தான் புறப் பட்ட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். "நிறைய டாக்ட ருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க. பணம் கொடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. எம் புள்ளையை அங்கிட்டு விட்டுட்டு வந்திருக்கேன் அம்மா!"
அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக் கதவு பூட்டிக் கிடந்தது. அப்போது அவளுக்குப் பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்றுகொண்டு அழு தாள். ஒரு ஆள் அவளை ஓரமாக ஒதுங்கி நின்று அழச் சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அஸெப்டிக் மணம் போல் எல்லாருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.
"பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டுப் பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்?" என்று பேசிக்கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே செல்லும் வாசல். அதன் கேட்டைத் திறந்து வெளியே மட்டும் செல்லவிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.
வெளியே வந்துவிட்டாள். அங்கிருந்து தான் தொலைதூரம் நடந்து மற்றொரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமியின் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!
ஆனால் வாயில் தான் மூடப்பட்டிருந்தது. உள்ளே பாப்பாத்தி ஓர் ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரெச்சரில் கண்மூடிப் படுத்திருப் பது தெரிந்தது.
"அதோ! அய்யா, கொஞ்சம் கதவைத் திறவுங்க. எம் மவ அங்கே இருக்கு."
"சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்." அவ னிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான். அவன் கேட்டது அவளுக்குப் புரியவில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக்கொண்டு யாருக்கோ அவன் வழிவிட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்.
பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து முடிந்ததும் ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு வார்டுக்குச் சென்றார். அவருக்குக் காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது. B.M.J. யில் சமீபத்தில் புதிய சில மருந்துகளைப் பற்றி அவர் படித்திருந்தார்.
"இன்னிக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே மெனின்ஜைடிஸ் கேஸ் பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா?"
"இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர்."
"என்னது? அட்மிட் ஆகலையா? நான் ஸ்பெஸிஃபிக்காகச் சொன்னேனே! தனசேகரன். உங்களுக்கு ஞாபகம் இல்லை?"
"இருக்கிறது டாக்டர்!"
"பால்! கொஞ்சம் போய் விசாரிச்சுட்டு வாங்க. அது எப்படி மிஸ் ஆகும்?"
பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளார்க்குகளிடம் விசாரித்தார்.
"எங்கேய்யா! அட்மிட் அட்மிட்னு நீங்கபாட்டுக்கு எழுதிப் புடறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது!"
"ஸ்வாமி! சீஃப் கேக்கறார்!" "அவருக்கு தெரிஞ்சவங்களா?" "இருக்கலாம். எனக்கு என்ன தெரியும்?" "பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ப பக்கம் வரலை. வேற யாராவது வந்திருந்தாக்கூட எல்லாரையும் நாளைக்குக் காலை 7-30க்கு வரச் சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட் காலியாகும். எமர்ஜென்ஸின்னா முன்னாலேயே சொல்லணும்! இல்லை. பெரியவருக்கு அதிலே இண்ட்ரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா?"
வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை 7-30 வரை தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரிய வில்லை. அவளுக்கு ஆஸ் பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவளுக்குத் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக்கொண்டு, மார்பின் மேல் சார்த்திக்கொண்டு, தலை தோளில் சாயக் கைகால்கள் தொங்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிறச் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண் டாள். அவனைப் பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.
"வாட் நான்ஸென்ஸ்! நாளைக்கு ஏழரை மணியா? அதுக்குள்ள அந்தப் பெண் செத்துப் போய்ரும்யா! டாக்டர் தனசேகர், நீங்க ஓ.பி.யிலே போய்ப் பாருங்க. அங்கே தான் இருக்கும். இந்த ரெச்சட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லேன்னா நம்ம டிபார்ட்மெண்ட் வார்டுலே பெட் இருக்குது. கொடுக்கச் சொல்லுங்க! க்விக்!"
"டாக்டர்! அது ரிஸர்வ் பண்ணி வெச்சிருக்கு!" "I don't care. I want that girl admitted now, right now!" பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்ததில்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா என்கிற தலைமை நர்ஸ் எல்லாரும் வள்ளியம்மாளைத் தேடி ஓ.பி.டிபார்ட்மெண்டுக்கு ஓடினார்கள்.
"வெறும் சுரந்தானே? பேசாமல் மூனாண்டிப்பட்டிக்கே போய் விடலாம். வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டாம். அந்த டாக்டர் தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாகப் போய்விடும். வெள்ளைக்கட்டிப் போட்டு விபூதி மந்திரித்து விடலாம்." சைக்கிள் ரிக்ஷா பஸ் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வள்ளியம்மா, "பாப்பாத்திக்குச் சரியாய்ப் போனால் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன்" என்று வேண்டிக் கொண்டாள்.
------------------------
சா. கந்தசாமி:
நான்கு எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலாகிய ‘கோணல்கள்’ மூலம் பரவலான இலக்கிய ரசிகர்களின் கவனத்துக்கு வந்த சா. கந்தசாமி மாயவரத்தில் பிறந்தவர் (23-7-1940). தற்போது சென்னைத் துறைமுகத்தில் பணி புரிகிறார். இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படும் ‘கசடதபற’ இலக்கிய இதழில் இவர் பெரும் பொறுப்பு வகித்தவர். தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காகச் சிறிய வனம் ஒன்று அழிக்கப்படுவது பற்றிய ‘சாயா வனம்’ (1969) என்ற நாவல் இவருடைய முக்கியமான நூல். ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ (சிறுகதைகள், 1974), ‘அவன் ஆனது’ (நாவல், 1981) ஆகியவை நூல் வடிவில் வந்துள்ள இவருடைய பிற படைப்புகள். படைப்பிலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
முகவரி: I-20, Turnbulls Road, Madras - 600 035.
ஒரு வருடம் சென்றது - சா. கந்தசாமி
ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்புக்குள் நுழைந்தான் ராஜா.
நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதிக் கொண் டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற் போல எழுதிக்கொண்டு வந்துவிட்டான்.
மணியடித்துப் பிரேயர் முடிந்த பின் வகுப்புத் தொடங்கும். அதற்கு இன்னும் நேரமிருந்தது. ராஜா வகுப்பின் நடுவில் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தான். பிறகு சற்றே குனிந்து சிலேட் டைப் பலகைக்குக் கீழே வைத்துவிட்டு, நழுவும் சட்டையை இழுத்துக் கட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
அவன் மேல்சட்டை கால்சட்டை எல்லாம் காக்கி. அதைத்தான் எப்போதும் போட்டுக்கொண் டிருப்பான். ராணுவத்தில் கொடுக்கப்படும் காக்கி அது. பிரித்துச் சிறியதாகச் சட்டை தைத்ததின் அடையாளங்கள் எப்போதும் அதில் தெரியும்! சண்டை வந்தால் சக மாணவர்கள் அவனிடம் அதைச் சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். அவர்கள் குரல் ஓங்க ஓங்க அவனுக்கு ஆத்திரம் வரும்; கோபம் வந்தால் முகம் வீங்கும்.வலப்பக்கத்திலிருந்து இடப் பக்கத்துக்கு வாய் கோணக் கோண இழுக்கும்.ஏற்கனவே அவன் தெற்றுவாய்.இப்போது சுத்தமாக ஒரு வார்த்தையும் வராது.
"தெத்துவாயா"என்றுதான் சார் கூப்பிடுவார்.
சாருக்கும் அவனுக்கும் ஒரு ராசி,கெட்ட ராசி, ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிக்காது. ஆசிரியரைப் பார்க்கும் போதெல்லாம் தன் தகப்பனாரைப் பார்ப்பது போல இருக்கும் அவனுக்கு. உறுமு வான். 'சாரைக் கொன்னு போடணும். நாற்காலியிலே முள்ளு வைக்கணும். நல்ல கருவேல முள்ளா,சப்பாத்தி முள்ளா கொண்டாந்து வைக்கணும்.' என்று சொல்லிக் கொள்ளுவான்.இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் அவன் நடத்தை விபரீதமாக மாறும்.
சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பான்.பக்கத்தில் இருக்கிற வன் தொடையில் நறுக்கென்று கிள்ளுவான். திடீரென்று பாய்ந்து ஒரு மாணவன் முகத்தில் பிராண்டுவான். சற்றைக்கெல்லாம் வகுப்பில் கலவரம் மூளும். மாணவர்களும் மாணவிகளும் பயந்து மூலைக் கொருவராக ஓடுவார்கள்.
ஆசிரியர் பாய்ந்து வந்து ராஜா காதைப் பிடித்து முறுக்கி அடிப் பார். கன்னத்தில் கிள்ளுவார். பிரம்பு பளீர் பளீரென்று தலையிலும் முதுகிலும் பாயும். அவனோ வலியையும் துயரத்தையும் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருப்பான். உடல் அப்படியும் இப்படியும் நெளியும். ஆனால் கண்களிருந்து ஒரு சொட்டு நீரும் பெருகாது. அதைப் பார்த்ததும் சாருக்குக் கோபம் வரும். "பாரு,கொறப்பய அழறானா?" என்று பல்லைக் கடித்துக்கொண்டு தலையைப் பிடித்து மடாரென்று சுவற்றில் மோதுவார்.
இரண்டு மாதங்களாக ராஜா அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வருகிறான். அவன் நினைவெல்லாம் மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு வந்ததிலிருந்துதான் தொடங்குகிறது.மற்றதையெல்லாம் அவன் மறந்துவிட்டான். ஓரோர் சமயம் கீழ் வகுப்புப் பிள்ளை களைப் பார்க்கும்போது,அந்த வகுப்பெல்லம் தான் படிக்கவில்லை போலும் என்ற உணர்வு தோன்றும்.
நான்காம் வகுப்புக்கு வந்ததுமே அவனுக்கு அடி விழுந்தது. பிரேயருக்கு நிற்கையில் பின்னாலிருந்து யாரோ நெறுக்கினார்கள். வரிசை திடீரென்று உடைந்தது. நான்கு பேர் 'கேர்ள்ஸ்'மீது போய் விழுந்தார்கள். பெண்கள் 'ஓ'வென்று கத்தினார்கள். ஆனால், உடைந்த வரிசை மறுகணத்திலேயே ஒன்றாகக் கூடியது. காலைச் சாய்த்து வைத்து நின்றுகொண் டிருந்த எம்.ராமானுஜத்தின் சட்டை யைப் பிடித்து,'சரியா நில்லு' என்றான் ராஜா.அப்போதுதான் தலையில் ஓர் அடி விழுந்தது.தலை வேகமாகப் பின்னுக்குப் போவது மாதிரி இருந்தது. காது, கண், நெஞ்சு - எல்லாம் பற்றி எரிந்தன. காகை இருகப் பொத்தினான். பிரேயர் வரிசை, டீச்சர், பள்ளிக்கூடம், பிள்ளையார் கோவில் அவனைச் சூழ்ந்த ஒவ்வொன்றும் கிர்கிர்ரென்று வேகமாகச் சுற்றின.
ஆசிரியர் கையைப் பிடித்திழுத்து, "ஒழுங்கா நில்லு" என்று உறுமினார். அந்தக் குரல் தன் அப்பாவின் குரல் மாதிரியே இருந்தது. அவனுக்கு நெஞ்சு அடைத்தது.
எல்லா மாணவர்களும் அவனுக்கு இடம் விட்டு ஒதுங்கினார்கள். இரண்டு பேர் மூன்று பேர் நிற்கவேண்டிய இடத்தில் அவன் ஒடுங்கி நின்றான். கீச்சுக் குரலில் நான்கு பெண்கள், "உலகெல்லாம் உணர்ந்து" - என்ற பாட்டை இழுத்து இழுத்துப் பாடினார்கள். தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் சிறு பிரசங்கம் செய்தார்.
பிரேயர் முடிந்தது; அவன் வரிசை நகர்ந்தது. வகுப்புக்குள் காலடி வைத்ததுமே மாணவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடி இடம் பிடித்துக்கொண்டார்கள். ஆனணால் ராஜாவோ எல்லாருக்கும் வழிவிட்டுக் கடைசியாகப் போய்ச் சுற்றுமுற்றும் பார்த்தான். முன் வரிசைகள் நான்கு நிறைந்துவிட்டன. ஆனாலும் மூன்றாவது வரிசை யில் அவனுக்கொரு இடம் வைத்துக்கொண்டு சங்கரன், "ராஜா, இங்க வா!" என்று அழைத்தான். அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டுப் பின்னால் போய் உட்கார்ந்தான் ராஜா.
பிரேயரில் வாங்கிய அடியில் தலையும் காதும் இன்னும் எரிந்து கொண்டிருந்தன. காதை மெல்ல இழுத்துத் தடவிவிட்டுக் கொண் டான். அப்பா அடிக்கும்போதெல்லாம் அம்மா இப்படித்தான் செய் வாள் என்ற நினைப்பு வந்தது.
"ரொம்ப வலிக்குதாடா, ராஜா?" சங்கரன் அவன் அருகே வந்து குனிந்து கேட்டான்.
"இல்லே."
"அப்பவே பிடிச்சு காதைத் தடவிக்கிட்டே இருக்கிறியே!"
ராஜா, சங்கரனைக் கூர்ந்து பார்த்தான்.
"சார் வராங்க" என்று கத்திக்கொண்டு பின்னே இருந்து முன்னே ஓடினார்கள் சிலர். முன்னே இருந்து பின்னே சென்றார்கள் சிலர். சங்கரன் முன்னே போக ஒரு காலை எடுத்து வெத்தான். சார் நீண்ட பிரம்பைக் கதவில் தட்டிக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார். சங்கரன் ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். ஆனால், எட்டாம் நாள், "அந்த முரடன்கிட்ட குந்தாதே: என்று சார் அவனைப் பிரித்துக்கொண்டுபோய் முன்வரிசையில் உட்காரவைத்தார்.
"நான் ஒண்ணும் முரடனில்லே; நீதான் முரடன்; முழு முரடன்" என்று முணுமுணுத்தான் ராஜா. "சார் தலையில் சிலேட்டால் படீர் படீரென்று அடிக்கனும், காஞ்சொறி கொண்டாந்து அழ அழ தேய்க்கணும்' என்ற உணர்வு தோன்றியது. பரபரக்கச் சிலேட்டை யெடுத்துப் பெரிதாக ஒரு படம் போட்டான். சாருக்கு இருப்பது மாதிரி சிறிதாக மீசை வைத்தான். மீசை வைத்தவுடனே கோபம் வந்தது. குச்சியால் தலையில் அழுத்தியழுத்திக் குத்தினான். கண் களைத் தோண்டினான். கண்ணை மூடிக் கொண்டு கீர்கீர்ரென்று படம் முழுவதும் கோடுகள் கிழித்தான். குறுக்கும் நெடுக்குமாகக் கோடு கள் விழும்போது மனதில் இன்னொரு காட்சி படர்ந்தது.
வீட்டில்,சாந்தா பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் அப்பா வீட் டுக்குள் வந்ததும் வராததுமாக,'அந்த முரடங்கிட்டே குந்தாதே அம்மா,இங்கே வா' என்று அவளைத் தூக்கி அணைத்துக் கொள் வார். ராஜா கீழ்க் கண்ணால் தங்கையையும் அவள் கன்னத்தில் குனிந்து முத்தமிடும் தகப்பனாரையும் பார்ப்பான். நெஞ்சில் என் னவோ இடறுவதுபோல் இருக்கும். புத்தகத்தை அப்படியே போட்டுவிட்டு,"அம்மா"என்று உள்ளே ஓடுவாள்.அம்மா அவனை அணைத்துக்கொண்டு கொஞ்சுவாள். அவன் தங்கையை நோக்கிப் 'பழிப்புக்' காட்டுவான்.
ராஜா சிலேட்டைத் திருப்பிப் பார்த்தான். சார் படம் கிறுக்க லில் மறைந்து போய்விட்டது. மனத்தில் ஒருவிதமான சந்தோஷம் தோன்றியது. சிலேட்டை ஒரு குத்துக் குத்திப் பலகைக்கடியில் வைத்துவிட்டு.'சார் நாற்காலியில் ஒரு நாளைக்கு முள்ளு வைக்க ணும்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு எழுந்தான்.
நாட்கள் போகப் போகத் தன் தனிமையை அவன் அதிகமாக உணர்ந்தான்.அது துக்கத்தைக் கொடுத்தது. தெரியாத கணக்கைச் சொல்லித்தர ஆள் இல்லை; மனக்கணக்குப் போடும்போது சிலேட்டை லேசாகத் திருப்பிக் காட்ட ஆள்இல்லை. அவன் எழுதும் தமிழ்ப் பாடத்தைப் பார்த்தெழுத யாரும் இல்லை. கைகளை முறுக்கிச் சுவரில் குத்தினான் ராஜா.
ஆரம்பிச்சுட்டியா?" என்று பிரம்பைக் காட்டி ஆசிரியர் உறுமி னார். அவன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.
சார் பத்து மனக்கணக்குக் கொடுத்தார்.அவனுக்கு எட்டுத் தப்பு. அவன்தான் வகுப்பிலேயே ரொம்ப தப்புப் போட்டான்.
ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு "எத்தனை தப்பு?"என்று வினவினார்.
அவன் "ரெண்டு ரைட்."என்றான்.
சார் ஒரு சிரிப்புச் சிரித்தார்; கை காதைப் பற்றியது.
"எத்தனை தப்பு?"
"ரெண்டு ரைட் சார்."
"யாரைப் பார்த்து எழுதினே?"
"நானே போட்டேன் சார்!"
சார் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.
"யாரைப் பார்த்துக் காப்பி அடிச்சே?"
"நான் தனியாப் போட்டேன்,சார்."
"எனக்குத் தெரியும்! நிஜத்தைச் சொல்லு."
"நாந்தான் சார் போட்டேன்!"
"ஏலே, மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா?"
சார் பிரம்பு அவன் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தது. துள்ளிக் குதித்துக்கொண்டு பின்னுக்கு ஓடினான். அவன் காலடியில் இரண்டு சிலேட்டுக்கள் மிதிபட்டு உடைந்தன. சார் அவன் பின்னே ஓடிச் சட்டையைப் பிடித்து நிறுத்தினார்.
"உண்மையை உன் வாயாலேயே வரவழைக்காட்டா பார்" என்று கூவினார்.
"இன்னமெ ஓடுவியா?"
"......."
"வாயைத் திற!"முட்டிக் காலுக்குக் கீழே பிரம்பு சாடியது.
அவன் நெளிந்தான்.
"ஓடினா உடம்புத் தோலை உறிச்சுப்புடுவேன்."
"....."
"ஓடுவியா?"
"மாட்டேஞ் சார்!"
"கையை நீட்டு....நல்ல.."
உள்ளங்கையை விரிய நீட்டினான் ராஜா.
"முட்டிப் போடு."
அவன் முழங்காலிட்டு அவருக்கு நேரே கையை நீட்டினான். சார் அவனைக் குத்திட்டு நோக்கினார்.
"இப்ப நிஜத்தைச் சொல்லு,அந்த ரெண்டையும் யாரைப் பார்த்துப் போட்டே?"
"நானே போட்டேஞ் சார்!"
"சுவாமிநாதனைப் பாத்துத்தானே?"
"நானே சார்."
"நிஜத்தைச் சொல்லமாட்டே?" பிரம்பு உள்ளங்கையில் குறுக் காகப் பாய்ந்தது.
அவன்,'நான்'என்று ஆரம்பித்தான்.வாய் கோணக் கோண இழுத்தது. அந்த வாக்கியம் முழுதாக வரவில்லை. முகம் வீங்க, மண்டியிட்டபடியே இருந்தான். சார் அடித்துக் களைத்துப் போனார். பிரம்பைப் பின்னால் வீசியெறிந்துவிட்டு, "இரு,உன்னை ஒழிச்சிடுறேன்!" என்று பிடரியைப் பிடித்து அவனைத் தள்ளினார்.
அவன் தப்புச் செய்யும்போதெல்லாம் சிலேட்டைப் பிடுங்கி எறிவார். சலிப்புற்று,"உனக்குப் படிப்பு வராது: மாடு மேய்க்கத் தான் போகணும்"என்கிறபோது,அவன் மௌனமாகத் தலை குனிந்தபடியே நிற்பான். சார் நிமிர்ந்து பார்ப்பார். மனத்தில் திடீரென்று எரிச்சல் மூண்டெழும்: "எதுக்கு நிக்கறே?போய்ஒழி" என்று கத்துவார்.
ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து சார் பாடம் நடத்துவது குறைந்துகொண்டே வந்தது.ஒரு நாள்,ஐந்து கணக்குகள் கொடுத்துவிட்டுச் சென்றவர் மறுநாள் திரும்பி வந்தார். எல்லாரும் சிலேட்டை எடுத்துக்கொண்டு கூட்டமாக ஓடினார்கள். ஆனால், சாரோ,புதிதாக ஒன்பது கணக்குகள் கொடுத்தார். "சிலேட்டிலே இடம் இருக்காது சார்!"என்று ஒருவன் கத்தினான்.
"இருக்கிற வரைக்கும் போடு" என்று வேகமாக வெளியே சென்றார்.
ஐந்தாம் வகுப்பில் அவர் படம் போட்டுக்கொண் டிருப்பதாக மூன்றாம் நாள் வி.ஆர்.பாப்பா வந்து சொன்னாள்.அதை யாரும் நம்பவில்லை. "கேர்ல்ஸ்" பக்கத்திலிருந்து வந்த தகவலைப் "பாய்ஸ்" பொருட்படுத்தவில்லை.
ஆனால்,மறுநாளும் மறுநாளும் அதே செய்தி திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சங்கரனும் வேணுகோபாலனும் ஐந்தாம் வகுப்பு ஜன்னல் பக்கமாகப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அப்புறம் தான் அது நிஜமென்று ஊர்ஜிதமாயிற்று.சார் படம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தவுடனே பாடம் எழுதுவதையும் கணக்குப் போடுவதையும் விட்டுவிட்டார்கள்.
ராஜா ஐந்தாம் வகுப்பு ஜன்னல் பக்கமாகச் சென்று பார்த்தான். சார்,மேசைமீது நின்றுகொண்டு உயர்ந்த வெள்ளைச் சுவரில் பெரிதாக மரம் போட்டுக் கொண்டிருந்தார்.மரத்துக்கு அப்பால் இன்னொரு மரம்;சற்றுச் சிறியது.இப்படியேஒரு பத்துநூறு மரங்கள். ஒரு பெரிய வனம்.வனத்தின் ஒரு பக்கத்திலிருந்து பைசன் எருமை உடம்பைக் குலுக்கிக்கொண்டு தலை குனிந்தவாறு சீறிக்கொண்டு வந்தது. ராஜா கண்களைத் தாழ்த்திப் பார்த்தான். அவனுக்குப் படம் ரொம்பப் பிடித்திருந்தது.முதல் முறையாக தன்னுடைய ஆசிரியரைக் கொஞ்சம் சிரத்தையோடு கவனித்தான்.அவர் கை வேகமாக உயர்ந்து தாழ்ந்துகொண் டிருந்தது. பெருங் கிளைகளி லிருந்து சிறு கிளைகளும்,சிறு கிளைகளிலிருந்து தழைகளும் தோன்றின.
இந்த விந்தையைக் காண ராஜா ஒவ்வொரு நாளும் ஐந்தாம் வகுப்பு ஜன்னலோரம் சென்றுகொண் டிருந்தான்.
பல நாட்களுக்குப் பிறகு, ஐந்தாம் வகுப்பு முழுவதும் பெரிய பெரிய படங்கள் வரைந்துவிட்டுச் சார் தன் வகுப்புக்கு வந்தார். வகுப்பு அலங்கோலமாகவும் ஒழுங்கற்றும் இருந்தது. ஆனால், அவர் இதையெல்லாம் கவனிக்கவில்லை.வெள்ளைச் சுவரை அங்குமிங்கும் தொட்டும் தட்டியும் பார்த்தார். திருப்தியாக இருந்தது.
ராஜா உட்காருகிற இடத்துக்கு மேலே பெரிதாகச் சுவரை அடைத்துக்கொண்டு காந்தியின் படத்தை வரைந்தார். பொக்கை வாய்க் காந்தி; அதில் லேசான சிரிப்பு; சற்றே மேல் தூக்கிய கை; அறையில் சிறு துண்டு; இடுப்பிலிருந்து ஒரு கடிகாரம் செயினோடு தொங்கியது. இவ்வளவையும் ரொம்பப் பொறுமையாக மெல்ல மெல்ல வரைந்துகொண்டு வந்தார்.
சார் படம் வரைய ஆரம்பித்தவுடனே வகுப்பில் பாடம் நடப்பது நின்று போயிற்று. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவிக்கொண் டிருந்தார்கள். கூச்சல் பொறுக்க முடியாமல் போகும்போது, "வரணுமா?"என்று கத்துவார். இரைச்சல் திடீரென்று அடங்கி அமைதியுறும்.
காந்தியின் படத்தை முடித்துவிட்டு,சார் ஒரு கொடி வரைந்தார். மூவர்ணக்கொடி; காந்தி படத்தைவிடக் கொஞ்சம் சிறியது; ஆனால் உயரமானது. காற்றில் படபடத்துப் பறப்பது மாதிரி ஒரு தோற்றம். கொடியில் முதலில் ஆரஞ்சு;அப்புறம் வெள்ளை,நடுவில் நீல நிறத்தில் சக்கரம். இவையெல்லாம் பூர்த்தியான மூன்று நாள் கழித்து,கொடியின் கீழே பச்சை வர்ணம் தீட்டப்பட்டது.சக்கரம் போடும்போது தலைமையாசிரியர் ராமசாமி ஐயரும் கமலம் டீச்சரும் வந்தார்கள்.
சார் மேசையிலிருந்து கீழே இறங்கினார்.
"சாப்பாட்டுக்குக் கூடப் போகல போல இருக்கே,சந்தானம்?" என்று கேட்டார் தலைமையாசிரியர்.
"ரெண்டு ஆரம் இருக்கு.அதை முடிச்சிட்டுப் போகலாம்னு இருக்கேன்"
தலைமையாசிரியர் திருப்தியுற்றார்."எட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டேன்.நமபளதுதான் முதல்லே நிக்குது.இதுக்குக் காரணம் நீங்கதான்.
சார்,கமலம் டீச்சர் பக்கம் சற்றே திரும்பினார்.
"இது என் டியூட்டி சார்"
"சார்,நம்ப கிளாசைத்தான் கவனிக்கிறது இல்லை"என்றாள் கமலம் டீச்சர்.
"எனக்கு எங்கே நேரம் இருக்கு டீச்சர்?"
ராமசாமி ஐயர் தலையசைத்தார்.
"அவருக்கு நேரமே இல்லே அம்மா."
கமலம் டீச்சர் சிரித்துக் கொண்டே படி இறங்கினாள்.
ஒரு நாள், படமெல்லாம் போட்டு முடித்த பிறகு எல்லா மாணவர் களையும் அருகே கூட்டிவைத்துக் கொண்டு, "நமக்குச் சுதந்திரம் வருகுது, தெரியுமா?"என்று கேட்டார் ஆசிரியர். அவர் குரலில் தென்படும் உணர்ச்சி பாவத்தைக் கண்டு எல்லோரும் தலையை அசைத்தார்கள்.
"நமக்குச் சுதந்திரம் பதினைந்தாம் தேதி வருகுது. இதுதான் முதல் சுதந்திரதினக் கொண்டாட்டம். ரொம்ப விமரிசையாக் கொண்டாடணும். ஆளுக்கு ஒரு ரூபா கொண்டாங்க."என்றார் ஆசிரியர்.
அடுத்த நாளிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் பேர்கள் கூடிக் கொண்டே வந்தன. ராஜா ஐந்தாவதாகப் பணம் கொடுத்தான். தெத்துவாய் என்றெழுதிய சார், சட்டென்று அதனை அடித்துவிட்டு ஆர்.ராஜா என்றெழுதினார். பின்னால் ஒருநாள் மாலையில் எல்லா மானவர்களையும் அருகே உட்கார வைத்துக்கொண்டு,"ஆளுக் கொரு கொடி கொண்டு வரவேணும்" என்றார். அதோடுகூடக் கொடியின் நிறங்கள்,அதன் வரிசை,நீள அகலங்களைப் பற்றி விவரித்தார்.உள்ளே இருக்கும் சக்கரத்தின் ஆரங்கள் இருபத்து நான்காக இருக்கவேணும் என்றார்.
"துணிக்கொடி கொண்டாரலாமா சார்?"என்று கேட்டான் சங்கரன்.
ஆசிரியர் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு"இல்லே,காகிதக் கொடிதான்"என்றார்.
வகுப்பை ஜோடிக்கும் வேலை சங்கரனோடு ராஜாவுக்கும் கிடைத்தது.அதை மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டான். பனை-தென்னங்குருத்துக்கள் வெட்டித் தோரணங்கள் முடைந்து குவித்தான்.பதினான்காம் தேதி மாலை வெகுநேரம் வரையில் அவனுக்கு வேலை இருந்தது.கமலம் டீச்சரோடு சேர்ந்துகொண்டு கலர்க் காகிதங்கள்,ஜிகினாக் காகிதங்கள் எல்லாம் ஒட்டினான்.அவன் வேலை செய்த பரபரப்பையும், சாதுரியத்தையும் கண்ட கமலம் டீச்சர்,"உன் பெயரென்ன?"என்று வினவினாள்.அவன் வேலையில் ஆழ்ந்தபடியே,"ஆர்.ராஜா"என்றான்.
மறுநாள் பொழுது விடிந்தது.ராஜா புத்தாடை அணிந்துகொண்டு மொட மொடக்கும் கொடியைக் கவனமாகத் தூக்கிப் பிடித்தவாறு பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றான். வடக்குத் தெருவைத் தாண்டும்போது வாத்தியார் வருவது தெரிந்தது. அவன் சற்றே பின்வாங்கிக் குறுக்கு வழியில் சென்றான். பள்ளிக்கூடம் பிரமாதமாக இருந்தது. இது தான் படிக்கும் பள்ளிக்கூடந்தானா என்றுகூட ஆச்சரியமுற்றான்.
பெரிய காரிலிருந்து ஒருவர் இறங்கி வந்து மெல்ல கொடியேற்றி னார். கொடி மேலே சென்றதும் தலைமை ஆசிரியர் கயிற்றை அசைத்தார்.ஏற்கனவே கொடியில் முடிந்திருந்த ரோஜா இதழ்கள் சிதறிப் பரவின. எல்லாப் பிள்ளைகளும் உற்சாகமாகக் கைதட்டி னார்கள்.
'தாயின் மனிக்கொடி பாரீர்'என்று கமலம் டீச்சர் உச்ச ஸ்தாயில் பாடினாள். அவள் குரல் கணீரென்று வெகு தூரம் வரை யில் கேட்டது. ராஜா விரலை ஊன்றி எழும்பி நின்று இசையைக் கேட்டான். விழா முடிந்ததும் அவளிடம் ஓடிப்போய்."டீச்சர், உங்க பாட்டு ரொம்ப நல்லா இருந்திச்சு டீச்சர்" என்றான்.
கமலம் டீச்சர் வியப்போடு கண்களைத் தாழ்த்தி அவனைப் பார்த்தாள்.
"நீ எந்த வகுப்பு?"
"ஃபோர்த் பி"
"அடுத்த வாரம் என் கிளாஸ்க்கு வந்துடுவே."
அவனுக்கு அது தெரியாது.மௌனமாக இருந்தான்.ஆனால் அடுத்த வாரம் அவன் சார் மாற்றலாகிப் போனார்.நான்காம் வகுப்பு "பி"."ஏ"யுக்குச் சென்றது. அவன் வகுப்புக்குள் நுழைந்த போது கமலம் டீச்சர் என்னவோ எழுதிக்கொண் டிருந்தாள்.
முதல் இரண்டு நாட்களிலும் டீச்சர் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் நாள் வீட்டுப் பாடத்தைக் கொண்டுபோய்க் காட்டியபோது குண்டுகுண்டான எழுத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்த டீச்சர் சற்றுத் தயங்கினாள். நினைவைக் கூட்டினாள்.அப்புறம் புன்சிரிப்புடன், "ராஜாதானே?"என்று கேட்டாள்.
"ஆமாம்.டீச்சர்."
"அன்னிக்கு என் பாட்டைப்பத்திச் சொன்னது நீதானே?"
அவன் தலையசைத்தான்.
டீச்சர் அவன் சிலேட்டை வாங்கி எல்லாருக்கும் காட்டினாள். "கையெழுத்தென்றால், இப்படித்தான் முத்து முத்தா யிருக்கணும். நீங்களும் எழுதுறீங்களே?"என்று பெண்கள் மீது பாய்ந்தாள். அவன் சிலேட்டை வாங்கிக் கொண்டு பின்னால் சென்றபோது,"ராஜா,எங்கே போறே?இங்கே வா!" என்று அழைத்து, முதல் வரிசையில் அவனுக்கு இடம் ஒதுக்கினாள்.
கணக்கில் அவன் தப்புப் போடும்போதெல்லாம்,"இங்க வா ராஜா!"என்று அருகே கூப்பிட்டு,"மத்த பாடமெல்லாம் நல்லா படிக்கிற நீ இதுலே மட்டும் ஏன் தப்புப் பண்ணுறே?" என்று கேட்டு,ஒவ்வொரு கணக்காகச் சொல்லித் தருவாள். சில சமயங் களில் அவனுக்கு அவள் வீட்டிலும் கணக்குப் பாடம் நடை பெறும். மூன்று மாதத்தில் அவனுக்குக் கணக்கில் குறிப்பிடத் தக்க அபிவிருத்தி ஏற்பட்டது. கொடுத்த எட்டுக் கணக்கையும் சரியாகப் போட்டதும் கமலம் டீச்சர் பூரித்துப் போனாள். தலையசைத்துச் சிரித்துக்கொண்டே நூற்றுக்கு நூறு போட்டாள்.
கமலம் டீச்சரோடு சிநேகிதம் கூடக்கூட,அவன் நடத்தையில் மாறுதல் ஏற்பட்டது.இப்போதெல்லாம், சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பதில்லை; பக்கத்தில் இருக்கிறவன் தொடையில் கிள்ளுவதில்லை. வாத்தியார் படம் போட்டுக் கண்ணைத் தோண்டுவ தில்லை. இதற்கெல்லாம் நேரம் இல்லாதவன் போல் கமலம் டீச்சரோடு சுற்றிக்கொண் டிருந்தான் அவன்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் வீட்டிலிருந்து கமலம் டீச்சருக்குத் தாழம்பூப் போகும். தாழம்பூவைப் பார்த்ததும், "எனக்கு இதுன்னா ஆசைன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவனைத் தன்னோடு அணைத்துக் கொள்வாள். இதமான கதகதப்பில் அவன் மருகிப் போவான். இதற்காகவே தினந்தோறும் டீச்சர் வீட்டிற்குப் போகவேண்டும் போல் இருக்கும் அவனுக்கு.
ஒரு நாள், மாடியில் உட்கார்ந்திருந்தபோது நீண்ட சடையைப் பிரித்துவிட்டுக்கொண்டே கமலம் டீச்சர்,"எனக்குக் கல்யாணம் ஆகப்போவுது" என்றாள்.
அவன் மெல்ல டீச்சரை ஏறிட்டுப் பார்த்தான்.
"அதுக்கு இன்னங் கொஞ்ச நாள் இருக்கு"என்று சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கீழே இறங்கி வீட்டுக்கு ஓடினான். ஆனால் அன்று மாலையே தயங்கித் தயங்கிக்கொண்டு திரும்பி வந்தான். அவன் வருகை கமலத்துக்கு ஆச்சரியம் அளித்தது. வாசலுக்கு வந்து "வா ராஜா"என்று கரம்பற்றி அவனை வரவேற்றாள்.
ஒரு சனிக்கிழமை கமலம் டீச்சர் நிறையப் பூவைத்துத் தலை பின்னிக்கொண்டு பள்ளிக்கூடம் வந்திருந்தாள்.இன்னும் பள்ளிக் கூடம் தொடங்கவில்லை.
தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் பரபரப்போடு மூன்றாம் வகுப்புக்குச் சென்றார். ஆசியர்களெல்லாம் ஒன்றுகூடித் தணிந்த குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள். மாணவர்கள் பிரேயருக்குக் கூடியதும் தேசீயக் கொடி அரைக் கம்பத்தில் தாழப் பறந்தது.
ராமசாமி ஐயர் முன்னே வந்து,"மகாத்மா காந்தி நேற்றுக் காலமாகிவிட்டார்.யாரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள்"என்றார். அவர் கண்களில் நீர் பெருகியது.பேச முடியவில்லை. துயரத்தோடு பின்னுக்குச் சென்றார்.
ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி நிலவியது.
"வாழ்க நீ எம்மான் காந்தி...." என்று கமலம் டீச்சர் உருக்க மாக மெல்லிய குரலில் பாடினாள். பாட்டு முடிந்ததும் தேசப் பிதா வுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
பள்ளிக்கூடம் இல்லையென்று அறிவிக்கப்பட்டது. ராஜா தயங்கிய வாறு டீச்சரிடம் சென்றான்."கொஞ்சம் இரு"என்று சொல்லிவிட்டு ராமசாமி ஐயரோடு உள்ளே சென்றாள். எட்டு வாத்தியார்களும் தேசத்துக்கு நேர்ந்த துர்ப்பாக்கிய சம்பவத்தைப் பற்றி வெகுநேரம் பேசிவிட்டுக் கலைந்தார்கள்.
கமலம் வெளியே வந்தததும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
வழிநெடுகக் கொடிகள் தாழப் பறந்துகொண் டிருந்தன. திறந்த கடைகளை அவசர அவசரமாக மூடிக்கொண் டிருந்தார்கள். ஹர்த்தால் போலும்.
வீடு போய்ச் சேர்ந்ததும் அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள் கமலம் டீச்சர்.
"அடுத்த வாரத்திலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன்."
"ஏங்க டீச்சர்?"
"எனக்குக் கல்யாணம்."
"எப்பங்க டீச்சர்?"
"இன்னும் ஒரு மாசம் இருக்கு."
டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து அவனை வெறித்துப் பார்த் தாள்.அவன் வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டான்.
"இங்கே பாரு ராஜா."
அன்று வெகுநேரத்துக்குப் பிறகு ராஜா வீடு திரும்பினான். அம்மா கோபித்துக் கொண்டாள்;திட்டினாள்.ஆனால்,அவன் பதிலே சொல்லவில்லை. களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. திண்ணையில் போய்ப் படுத்தான்.
ராஜா சேர்ந்தாற்போல ஒரு வாரம் பள்ளிக்கூடம் போகவில்லை. அம்மா அவனைச் சீர்காழிக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.
அவன் பள்ளிக்கூடம் போனபோது கமலம் இல்லை.
"டீச்சர் புதன்கிழமையே போயிட்டாங்க" என்றான் சங்கரன்.
"உம்...."
"ஒன்னப்பத்தி டீச்சர் என்னை ரெண்டு வாட்டி கேட்டாங்க."
அவன் எரிச்சலோடு "சரி" என்றான்.
சில நாட்கள் சென்றன.வகுப்புப் பிரிந்தது.ஒரு செவிட்டு வாத்தியார் வந்தார்.ராஜா பின்வரிசைக்குச் செண்றான். கணக்கில் மீண்டும் பல தவறுகள் போட்டான்.
முழுப்பரிட்சை வந்தது.ராஜா எல்லோரையும் போலக் காப்பி அடித்தான்.கணக்கில் ஒன்பதாவதாகவந்தான்.
----------------------------
நாஞ்சில் நாடன்:
நாஞ்சில் நாடன் என்ற பெயரில் எழுதும் ஜி. சுப்பிரமணியன் 30-12-1947 அன்று வீர நாராயணமங்கலத்தில் பிறந்தவர். பம்பாயில் ஒரு தொழில் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஏழாண்டுகளாக எழுதும் இவருடைய முக்கிய உந்துதல் 'சொந்த மண்ணை, மண் செய்த மனிதர்களை இழந்த ஏக்கம்', தலை கீழ் விகிதங்கள்' (1977-நாவல்) 'என்பிலதனை வெயில் காயும்' (நாவல்-1979), கல்கத்தா தமிழ் மன்றத்தின் வெள்ளி விழாச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இவையெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகள், 'மாமிசப் படைப்பு' (நாவல்), 'தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்' (சிறுகதைத் தொகுப்பு) சமீபத்திய நூல்கள், தீபம் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் பங்கேற்றிருக்கிறார்.
முகவரி C/o W.H. Brady & Co. Ltd., Brady House, 12/14, Veer Nariman Road, Bombay - 400 023
ஒரு 'இந்நாட்டு மன்னர்' - நாஞ்சில் நாடன்
அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! 'வைத்தியன்' என்று பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவன் அழைக்கப்பட்டு வந்தான். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப் போன கொம்பையாத் தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லதம்பிக் கோனார் சார்பிலோதான் அவன் ஓட்டுப் போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. 'உருளை' சின்னமுடைய உமையொருபாகன் பிள்ளையும், 'பூசணீக் காய்' சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும் உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட அதுவும், எல்லாருக்கும் தெரிந்த அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோல கல்லோலப் படும் வேளையில், தான் ஒரு புற வெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு. இது வரையில்லாமல், தன் ஜனநாயக உரிமை புறக் கணிக்கப் படுவதில் ஓர் எரிச்சல்.
ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக் காரர்களுக்கும் ஏமாற்றந்தான். அவன் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென்றால், அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது இராஜாங்கம் நடத்தும் தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன் தான். எனவே அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
அவன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான் ஆர்வத்தோடு, அவனிடமே கேட்கலா மென்றாலும், "அதெல்லாம் இப்ப என்னத்துக்குப் போத்தி? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ?" என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில், அந்த உண்மைப் பெயரால் வாக்காளர் பட்டியலில் ஓட்டு இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று.
அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள் இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்த 'பூசணிக் காய்' ஆதரவாளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்து இரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான்.
"கோச்ச நல்லூர்' என்று வழக்கமாகவும், 'கோச்சடைய நல்லூர்' என்று இலக்கணச் சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில் உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும். நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்பு முறை மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தண்டனிட்டுச் சொல்லிக்கொள்கிறேன்.) என்ற பிரிவில் உட்பட்ட வேளாளர்கள் மொத்தம் அறுபது வீடுகள். (செங்குந்தர், காணி யாளர், கார்காத்தார், வீரசைவர், துளு வேளாளார்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் எப்படி இங்கே இல்லாமல் போகலாம் என்பதில் இந்தக் கதாசிரியனுக்கு மிகுந்த மனத்தாங்கல்.)
'கிராமம்' என்றும் 'பிராமணக்குடி' என்றும் அழைக்கப்படுகிற 'எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும்' வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லாரும் 'ஐயர்கள்' என்ற நினைப்பே வேளாளர் களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்களின் 'ஒற்றுமை'யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டுப் போல - நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.
இவை நீங்கலாக, தான் இந்துவா, கிறிஸ்துவனா இல்லை, இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன், ஈனாப்பேச்சி, இசக்கி அம்மன், தேரடிமாடன், புலைமாடன், முத்துப்பட்டன், கழுமாடன், வண்டி மறிச்சான், முண்டன், முத்தாரம்மன், சூலைப்பிடாரி, சந்தன மாரி, முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலைவிட இது பெரிது.
மேற்சொன்னவர் அனைவரும் இந்துக் கடவுள்களும் கடவுளச்சி களுந்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிற்வுவீர்களேயானால், அந்த மக்களும் இந்துக்கள் தான். 'ஏ' யானது 'பி' க்குச் சமம். 'பி' ஆனது 'சி' க்குச் சமம். எனவே 'ஏ' 'சி' என்ற கணித விதியை இங்கே கையாண்டால், இவர்கள் இன்னின்ன கடவுள் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள்; அந்தக் கடவுள்களும் கடவுளச்சிகளும் இந்துங்கள்; எனவே இவர் களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்துவிடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும், பல தெய்வங் களும், பலதரப்பட்ட மொழி, பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தை 'இந்தியா' என்றும், இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும்! இந்த நாட்டில் இத்தனை சதவிகிதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும், ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களை யும் உள்ளடக்கித்தான்.
இப்படி 'இராம ராஜ்ய' யோக்கியதைகள் பல கோச்சநல்லூ ருக்கு இருந்தாலும், ஊராட்சித்தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா? பொறி பறக்கும் போட்டி. இதில் ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால், போட்டியிடும் இருவரும் வேளாளர்கள்; அதிலும் குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள். எனவே காரசாரமான போட்டி இருந்தாலும் வகுப்புக் கலவரங்களாவது இல்லாமல் இருந்தது. ஊர் முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடு களைத் தவிரவும் பச்சைப் பாசி படர்ந்த ஒரு தெப்பக்குளமும், அதன் கரையில் ஒரு செயலிழந்த காத்தாங்கோயிலு, சில சில்லறைப் பீடங்களும், ஒரு பாழடைந்த மண்டபமும், இரவு ஏழு மணிக்கு மேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமான 'தண்ணீர்ப் பந்த' லும், ஒரு சுக்குக்காபிக் கடையும், வெற்றிலை பாக்கு முதல் 'டாம் டாம்' டானிக் ஈறாக விற்கும் ஒரு பலசரக்குக் கடையும், ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும், இருபது களங்களும், சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர, பிற தாவர ஜங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாமல் போனதுகூட ஒரு சௌகரியந்தன். இல்லையென்றால், இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இருக்கின்ற வாக்குகளில், யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும் எங்கே பார்த்தாலும் நீக்கமற இருந்தன. 'பூசணிக்காய்' வேட்பாளரின் தங்கைக்கு இந்த ஊரில் ஓட்டு இருப் பதால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில் இருந்து அவள் வந்தாயிற்று. மனைவியை அழைத்து வர வேண்டாம்; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக் காயின் தங்கை. (வசதி கருதி இங்கே தொட்டு சின்னம் வேட் பாளரைக் குறிக்கிறது.) என்ன தான் கணவன் கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள் பூசணிக்காய்க்குப் போட்டுவிட்டால்? இங்கு ஒரு ஓட்டுக் கூடினால் என்ன பயன்? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்துவிடலாமே!
கூட்டிக் கழித்து, வகுத்துப் பெருக்கிப் பார்க்கையில் யார் வென்றாலும், பத்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்லமுடியும் என்று நோக்கர்கள் கணித்தனர். தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை, பீடி, சுக்குக்காபி, வடை, சீட்டுக்கட்டுகள் செலவு எல்லாம் ஜியாமெட்ரிக் புராகிரஷனில் வளர்ந்தது. நாளைக் காலை தேர்தல் என்ற நிலையில், இந்த வேகம் காய்ச்சலாகி, ஜன்னி கண்டு விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண் டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்திப் பெறப்போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான்.
இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க, தான் கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள், வைத்தியனே தான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல், ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான் என்று அவனுக்குத் தெரியும்.
சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பித்த போதே, 'சதக்' கென்று சிந்தனை எதையோ பிரித்தது. நேர்வழியாகப் போனால், இந்த நேரத்தில் இவன் இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க மாட்டார்களா? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது, சந்தேகம் வலுக்கத்தானே செய்யும்? அதுவும் 'உருளை' ஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால் துப்புத் துலக்கவோ, பின் தொடரவோ ஆரம்பித்தால் மோசமாகி விடுமே! தன் மூளையைக் கசக்கி, இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை, மாற்றுக் கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால்...?
சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோச னையை மெச்சிக்கொண்டே, சாத்தான் கோயிலுக்குச் சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழி மடை வந்து பத்தினுள் இறங்கி, வரப்பில் நடந்து, வழி நடைத் தொண்டில் ஏறி, கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளை கட்ட ஆரம்பித்தது.
கோயில் முகப்புக்கு வந்தான். பனி மாதம். ஆகையால் அங்கே ஒரு குருவியைக் காணோம். ஈசான மூலையில், சுவரை அணைத்துக் கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி, கை நடுங்க ஆரம்பித்து, காதுகளில் ஓரத்தில் தன்னையறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கைவிட்டுப் போனபிறகு, அந்த மூலை வைத்தியனின் நிரந்தரமான இடமாகிவிட் டிருந்தது.
மணி ஒன்பதைத் தாண்டிவிட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்துக் கொருமுறை, 'நானும் இருக்கிறேன்' என்று காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்று கொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்கொண் டிருந்தபோது இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப் போகிறார்கள்?
வைத்தியனைப் பார்த்துச் சன்னமாகக் குரல் கொடுத்தான். "வைத்தியா...ஏ வைத்தியா!"
பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால் கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும், புடைக்காமலும் நிதானமாக எழுந்து உட்கார்ந்த அவன் நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்தான்.
"ஏன் போத்தி...? வீட்டிலே யாராவது...."
அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்றச் சமயமாக இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதில் வேறுவித மாக இருக்கும். ஆனால், இன்று அந்த ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான்.
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்கிட்டே ஒண்ணு கேட் கணும்."
வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில் தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்?
"உன் பேரு அணஞ்ச பெருமாளா?" வைத்தியன் முகத்தில் ஒருவிதப் பிரமிப்பு.
"அட, இதென்ன விண்ணாணம்? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப் புடிக்கேரு...."
"பேரு அதானா சொல்லு?" "உமக்கு யாரு சொல்லிட்டா? நானே அயத்துப் போன துல்லா... இப்ப என்ன வந்திட்டு அதுக்கு?"
'யார்கிட்டேயும் மூச்சுக் காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு. நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன். காப்பி சாப்பாடு எல்லாம் உண்டு. உருளைக்காரப் பயங்க வந்து கேட்டா இல்லேன்னு சொல்லிரு. ஆமா!"
தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் - தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு - வைத்தியனுக்குப் புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச் சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன.
"நான் ஏம் போத்தி சொல்லுகேன்? அண்ணைக்கு அந்த உருளைக் கார ஆளுக சொன்னாளே, 'இதுவரை நீ செத்தவன் ஓட்டையும் போட்டே. சரி, ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே, பொறவு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திடுவோம்' அப்படின்னுல்லா சொன்னா. நானும் அதால கம்முனு இருக்கேன். மச்சினனும் மச்சினனும் இப்போ அடிச்சிக் கிடுவாங்க. நாளைக்கு நானும் நீயும் சோடி, கடைக்குப் போகலாம் வாடின்னு கழுத்தைக் கட்டிக்கிட்டு அழுவாங்க. நமக்கு என்னாத் துக்கு இந்தப் பொல்லாப்புன்னு தாலா சலம்பாமல் கிடந்தேன். இப்பம் நம்ப பேரு லிஸ்டிலே இருக்கா? தெரியாமப் போச்சே இதுநாள் வரை..."
"இதுவரை இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ. நான் தான் கண்டுபிடிச்சேன். முன்னாலேயே ஒன் பேரு இருந்திருக் கும். ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா...? அது கிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும் வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற எங்கூட வந்து இட்லி திண்ணுப் போட்டு, புதுத் துணியும் உடுத்திக்கிட்டு ஓட்டுப் போட்டிரணும். எல்லாம் நான் சொல்லித் தாறேன். ஆனா எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே. என்னா?" ஒரு 'இந்நாட்டு மன்னர்'
"இனி நான் சொல்வேனா? நீங்க இம்புட்டு சொன்னதுக்கப் புறம்..."
வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து, தன் சாதனையை நினைத்து மாரஇ்பு விம்ம, பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம்.
அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். பங்களாவில் நடுநாயகமாகப் பூசனிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்த பெஞ்சுகளும், நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. கல்யாணக் களைதான். வந்து வந்து தன் விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள் இரண்டு மூன்று ஆங்காங்கே கண் பிதுங்கி நிறைந்து கிடந்தன. வந்தவர்களுக்கு வற்றாமல் ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக் காப்பி அண்டா. அந்த நூறு வீட்டு ஊரின் இரதவீதிகளைக் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள். நாளைக் காலைக் காப்பிக்கான ஆயத்தங்கள்.
இட்லிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்தால் 'கொர்' என்ற சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆன படியால், பூசணிக்காய் சாம்பாருக்காக அரிந்து பனையோலைப் பாய் மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுக்கள் இடத்தை அடைத் துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல். செயித்தால் வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்பு வதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில் அடுக்கி வைக்கப்பட் டிருந்தன.
பூசணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்றப் பிறகு தெருவில் போட்டு உடைப்பதற்காக உருளையும் இரண்டு மூட்டை கள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருப்பதாகக் கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்தமுறை ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சிக் கோணம் முழுவதும் பூசணிக்கொடி போடப் போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மானித்திருப்பதாகத் தகவல்.
நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று சொல்லத் தேவை யில்லை. ஒரேயொரு அசௌகரியந்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப்போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடிநயாது. அதில் ஒரு 'புத்திசாலி' உருளை என்றால் உருளைக்கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.
இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், அங்கே மொத்த ஓட்டுக் களே இருநூற்று எழுபது. நூறு சதமானம் வாக்களிப்பு நடந்தாலும், இருநூற்றெழுபது வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும், நான்கு வாடகைக்; கார்களும். அது மட்டுமல்ல. வாக்கெடுப்பு நடக்கப்போகும் அரசினர் ஆரம்பப்பள்ளி, ஊர் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டு செல்வது?
மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததை தல்லிப் பழுக்க வைப்பது போன்று, சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதமாகியிருந்ததால். கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப் பார்கள். அவ்வளவு அவசரமும் பதற்றமும்.
ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள். அதைத் தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலை யிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச்செய்து, புதிய வேட்டியையும் துவர்த்தும் உடுத்து, வெண்ணீறு பூசி, ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரு புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்..
பத்துமணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெற லாயிற்று. டாக்ஸிகள் எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக் காளை கள் குடங்குடமாகப் பீச்சித் தெருக்களை மெழுகின. சைக்கிள் கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப் பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும் போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி, பலகாரம், டாக்ஸி சவாரி. சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து, காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அநுபவிப்பது?
இரண்டு வேட்பாளர்களும் வாக்குச் சாவடியில் பிரசன்னமாயிருந் தார்கள். அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால், இரண்டு போலீஸ்காரர்கள் கர்ம சிரத்தை யோடு* கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
வைத்தியன் என்ற அணஞ்ச பெருமாளை மாணிக்கம் வாக்குச் சாவடி முன் காரில் கொண்டு வந்து இறக்கியபோது எல்லோர் கண்களும் நெற்றிமேல் ஏறின. வெள்ளையும் கொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக, வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர்.
"நாறப்பய புள்ளைக்கு என்ன தைரியம் இருந்தா இப்போ உள்ளூர் எலக்ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும் ... ம்...வரட்டும் வரட்டும்."
கறுவினார் உருளை.
மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் வந்து நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா, இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர்.
இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையைவிட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்துவிட்டது என்று புருவக் கோட்டை உயர்த்தினார் பூசணிக்காய். 'என் எதிரிலேயே, எனக்கு விரோதமாக் கள்ள ஓட்டுப் போட வந்திருக்கானாக்கும்' என்ற பாவனையில் மீசைமீது கைபோட்டு இளக்காரத்துடன் பூசணிக் காயைப் பார்த்தார் உருளை.
வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின் தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான்.
"கெழட்டு வாணாலே! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு? எங்கே சுடுகாட்டுக்கா ஓடுகே?"
"அட, சத்த போடாதேயும் போத்தி. இன்னா வந்திட்டேன்" வைத்தியனின் குரலில் அவசரம்.
"அதுதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்? பிரி களந் திட்டோவ்...?"
"இரியும் போத்தி, ஒரு நிமிட்லே வந்திருக்கேன்."
"ஓட்டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேன்கேன்."
"அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு? காலம்பற முகத்தைக் கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன். வயசான காலத்திலே செசரிக்கவா செய்யி. சித்த நிண்ணுக்கிடும். இன்னா ஒரு எட்டிலே போயிட்டு வந்திருக்கேன்."
வைத்தியன் குளத்தங்கரையோரம் போய்க் கால் கழுவி வருவதற் குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்ழறு கருதி, மீண்டும் காரிலேற்றி, வீட்டுக்குக் கொண்டு போய்க் சாப்பாடு போட்டு முதல் ஆளாக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில் முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான்.
இடைவேளைக்குமப்பிறகு, வாக்கெடுப்பு துவங்கியதும், கையில் வைத்திருந்த 'அணஞ்வ பெருமாள்' சீட்டுடன் வாக்குச் சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாடம் படிப்பித்துத்தான் அனுப்பவேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் புொலிங் ஆபீசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன். உருளை ஒரு உறுமல் உறுமினார்.
"ஏ வைத்தியா, உனக்கு ஓட்டு இருக்கா?"
சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான்.
"இருக்கு போத்தியோ. இன்னா நீரே பாருமேன்..."
அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்குக் கொஞ்சம் மலைப்பு. அவர் மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல்.
"அணஞ்ச பெருமாளா உன் பேரு?"
"ஆமா போத்தி. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன்?"
உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர் முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்திலக் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது.
"இதுவரைக்கும் கள்ள ஓட்டுப்போட்டாலும் நாடுவிட்டுப் போன ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப் போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ்?"
"இல்லை போத்தி. என் பேரு அணஞ்ச பெருமாளுதான். நான் பொய்யா சொல்வேன்?"
"அட உன் பேரு அணஞ்ச பெருமாளோ, எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம் இருந்திட்டுப் போகுது. ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளைன்னுல்லா போட்டிருக்கு?"
"என்னது? பொம்பிளையா?"
"பின்னே என்னா? நல்லாக் கண்ணை முழிச்சுப் பாரு. அது நம்ம கொழும்புப் பிள்ளை பாட்டாக்கு அம்மையில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே? ஓட்டா போட வந்தே ஓட்டு? வெறுவாக் கட்ட மூதி... போ அந்தாலே ஒழிஞ்சு."
வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்றுவிடுவதைப்போல் அவர் அவனைப் பார்த்து விழித்தார்.
--------------------------
வண்ணதாசன்:--
'வண்ணதாசன்' என்ற பெயரில் எழுதும் எஸ். கல்யாணசுந்தரம் 22-8-1946 அன்று திருநெல்வேலியில் பிறந்தவர். 'கல்யாண்ஜி' என்ற பெயரில் கவிதைகளும் எழுதுகிறார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவருடைய சிறுகதைகள் அடுத்தடுத்து 1974, 1975-ஆம் ஆண்டுகளில் 'இலக்கியச் சிந்தனை ' யின் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. நூல் வடிவில் வெளிவந்துள்ள இவருடைய படைப்புக்கள்--'கலைக்கமுடியாத ஒப்பனைகள்' (சிறுகதைகள்.1976): 'தோட்டத்திற்கு வெளியிலும சில பூக்கள்' (சிறுகதைகள். 1978) தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவருடைய சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.
முகவரி:-- 21 E, Sudalaimadan Koil Street, Tirunelveli - 627 006.
தனுமை - வண்ணதாசன்
இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல்முறையாக வெள்ளோட்டம் சென்றது இந்தப் புதிய மில் காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக்கொண் டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகைகலைந்து பாதையை விழுங்கும்போது உடை மரங்களுக்கும் தேரிமணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந் தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயேவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள்.
ஒருவகையில்மகிழ்ச்சி. தன்னுடைய பலவீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வரவேண்டும். முன்பு போல் இவளுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸுக்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லாருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது.
இந்த ஆர்பனேஜ் மர நிழல்களுக்குக் கையில் புஸ்தகத்துடன் ஞானப்பன் இனி வரவேண்டிய அவசியமில்லை. பழையபடி தெற்கே தள்ளி, உடைமரக் காடுகளுக்குள்ளே போய்விடலாம். எங்கே பார்த்தாலும் மணல். எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று 'சில்லாட்டான்' ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமன வானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சகணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கை வைத்த இடமெல்லாம் எலும்பும் முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு, உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து கருப்பட்டி காய்ச்சுகிற வாடை வரும். கோழி மேயும். நத்தைக் கூடுகள் நெல்லிக்காய் நெல்லிக்காயாக அப்பியிருக்கிற முள்ளை வெட்டி இழுத்துக்கொண்டு போகிறவளின் உடம்பும், பாடத்தை விட்டு விலக்கும். பலதடவை பேச்சுக் கொடுத்த பிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைத்திருந்த ஒருத்தியின் கறுத்தக் கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும்.
நடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய் விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது கூட அன்றுதான். "தனு! இந்த வழியாகப் போயிர லாமாடி?" என்றும் எப்போதும் கூடச் செல்கிற பையன் காட்டினான். அவள் தம்பி, யூனிபாரம் அணிந்த அவளின் சின்ன வழித்துணை.
ஞானப்பன் யதேச்சையாக அன்று ஆர்பனேஜிற்கு படிக்க வந்திருந்தான். படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டை வண்டியின் நோக்காலில் உட்கார்ந்து, பள்ளிக்கூடக் கட்டிடத்துக்கு முன்னாள் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை.
வட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ளே பீநாறிப் பூச்செடி நட்டிருந்தார்கள். அந்தப் பூவும் செடியும் அவனுடைய ஊருக்கு இறங்க வேண்டிய ரெயில்வே ஸ்டேஷனிலும் சிறு வயதிலிருந்து உண்டு. கல் வாழைகள் அப்போது வந்திருக்க வில்லை. ஊர் ஞாபகம், இரவில் இறங்குகையில் நிலா வெளிச்சத் தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம், லாந்தல் சத்திரம், மினுகட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்து கொண்டிருந்த போதுதான் - "தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?" என்ற சத்தம்.
கைலியை இறக்கிவிட்டுக் கொண்டு, நோக்காலில் இருந்து இறங் கினான். இறுக்கிக் கட்டின போச்சுக்கயிறு கீச்சென்று முனகியது. தொழுவஙகளில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பது போல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்த தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக்கம் வந்துவிட, ஒரே ஒரு விநாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல் விரிப்பும் உடை மரங்களும், உடைமரம் பூத்தது போல மெல்லிசான மணமாக இவள், தனு.
ஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பது போல மென்மையாக மூங்கிலை உருவி, அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள் ஒடுங்கின பரபரப்பில் மூங்கில் தவறி மண்ணில் இறங்கி கறையான்கள் உதிர்ந்தன. தனுவின் தம்பி, தாங்ஸ் என்று சொன்னான். தனு உஸ் என்று அவனை அடக்கி இழுத்துப் போனாள். ஒரு சிறுமியைப் போல மெலிந்திருந்த தனு தூரப் போகப் போக – நேர் கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் கினியா மலர்களின் சோகைச் சிவப்பும் கெந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர்வந்தன, அழகாகப் பட்டன.
எதிரே டெய்ஸி வாத்திச்சி வந்து கொண்டிருந்தாள். கன்னங்களில் பரு இல்லாமல் இருந்தால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நிற்கிற உடம்பு, ஒரு கறுப்புக் குதிரை மாதிரி, நுணுக்கமான வீச்சுடன் அவள் பார்த்து விட்டுச் செல்லும்போது ஞானப்பனுக்கு உடம்பு அதிரும். இன்று குறைவாக, இவனைப் போல் இங்கே படிக்க வருகிற வேறு சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது.
ஞானப்பனுக்குத் தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க, மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிகுந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட விரவ முட்டி முட்டி விலகிக்கொண்டிருக்கிறாள். அவளைப் போன வருஷத்தில் இருந்தே அவனுக்குத் தெரியும்.
ஒரு டிசம்பர் மாதம், ஹார்மோனியம் நடைவண்டி நடையாக்க கேட்டது. பத்துப் பதினைந்து பையன்களின் கூச்சலுக்கு மத்தியில் ஒரு பையன் கொஞ்சம் துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் கொண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம், கண்ட மத்தியில் ஆரம்பித்து இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறைந்திருக்கும். ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள்.
ஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான், சினிமாப் பாட்டு வரை. "படிங்க சார், படிங்க சார்" என்று குரல்கள், "என்ன பாட்டுடே படிக்க?" என்று கேட்டுக்கொண்டே அவன், "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று தொய்வாக வாசித்து நிறுத்தி விட்டுக் கேட்டான். "என்ன பாட்டு, சொல்லுங்க பாக்கலாம்?"
"எனக்குத் தெரியும்." "நாஞ் சொல்லுதேன் ஸார்." "இந்த நல் உணவை - பாட்டு ஸார்." ஞானப்பனுக்குக் கடைசிப்பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. 'இந்த நல் உணவைத் தந்த இறைவனை வணங்குவோம்' என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்துகொண்டு கோதுமை உப்புமாவுக்கும் மக்காச் சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது. அநாதைகளை மேலும் மேலும் அநாதைப் படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உணர்ந்த பையனின் உயிரையும் ஜீவனுமற்ற முகத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஞானப்பனுக்கு வேறு எந்தக் கிறிஸ்துவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லாக் கிறிஸ்துவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. "எல்லாம் ஏசுவே, எனக்கெல்லாம் ஏசுவே!" பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.
அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவது போல வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய் வருகிறவர்களின் புழுதிக் கால்களின் பின்னணி போல - பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு வரிசையாகத் தோட்ட வேலை செய்கிறவர்கள் பாடுவது போல - வாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம்தெரியாத அம்மாவின் முகத்தை நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம் போல - எந்தச் சத்துக் குறைவாலோ 'ஒட்டுவாரொட்டி'யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகணிச் சிரங்கிற்கான பிரார்த்தனை போல - கிணற்றடியில் உப்பு நீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப் பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல் போல இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல –
ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.
ஞானப்பனுக்கு ஒரேயடியாக அந்த இடத்தில் அவளை அடித்துத் தள்ளவேண்டும் என்று தோன்றியது.
டெய்ஸி வாத்திச்சியின் பார்வையைப் போலவே, சைக்கிளில் போகிற ஒரு இங்கிலீஷ்காரப் பெண்ணையும் ஞானப்பன் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம்.
முதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய்ப் போகிற ஜனங்கள், பதநீர் குடிக்கிறவர்கள் முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்திரி ஷிப்ட் முடிந்து பஞ்சும் தலையுமாக டீக்கடையில் பேப்பர் படிப்பவர்கள்; அவர்களின் சைக்கிளில் தொங்குகிற தூக்குச் சட்டிகள். இவர்களுக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குடும்பமோ சைக்கிளில் சர்ச்சுக்குப் போகும். அப்பா, அம்மா எல்லோருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புகளை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந் தொடையும் பிதுங்க அவள் செல்லும்போதெல்லாம், அவன் அநாவசியமான ஒரு அருவருப்பை அடைய நேர்ந்திருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவிவிடுவது போல் தனு வருவாள். அந்தத் தனுவை இனிமேல் ஜாஸ்தி பார்க்க முடியாது. மறுபடியும் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறி, கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அலைய வேண்டியதுதான். ஆர்பனேஜ், தனுவின் ஒரு காலத்துப் பாதையாக இருந்தது என்பதால், இங்கு வராமலும் இனி முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க
ஒரு தகர டின்னில், வரிசையாக நிற்கிற வேப்ப மரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேசப் போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல் போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்து கொண்டு காகங்கள், இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங் கொட்டை எச்சத்தை சேகரிக்கிற சந்தோஷம் இவனுடன் பேசுவதில் இருக்காது.
பக்கத்தில், ஊடு சுவருக்கு அந்தப்புரம் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொரிந்து கிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கஞ் செடிகளில் போய் வண்ணத்துப் பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக் கொண்டிருக்கிற இவர் களிடையில், தனுவும் விலகினபின், எந்த அமைதியில் படிக்க?
மற்றப் பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும் 'ஐயா'க்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை, 'போவ், போவ்' என்று முன்னைப் போலக் கூப்பிடவும் தோன்றவில்லை. 'ஐயா'க்களைப் போல எல்லாவற்றி லிருந்தும் ஒதுங்கிவிட்டால் போதும் என ஞானப்பனுக்குத் தோன்றியது. அவன் வகுப்பில், கல்லு}ரியில் இதே போல வெள்ளை முழுக்கைச் சட்டை, வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அநாதைகள்தாமா? தனுக்கள் எதிர்ப் படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அநாதையா?" ஞானப்பனுக்கு மனத்துள் குமைந்து வந்தது.
ஊருக்கு போகவேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிற அப்பாவின் வம்ச வாடையை உடம்பில் ஏந்தியிருக்கிற தன்னிடம், நெற்றியில் எலுமிச்சங்காய் அளவு புடைத்திருக்கிற 'கழலை' அசையச் சில சமயம் சந்தோஷமாகப் படிப்புப் பற்றி விசாரிப்பதும், "படிச்சு பாட்டத் தொலச்ச" என்று அலுத்துக்கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி – தனு முகமாகி ...
உருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து, பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்த போது, அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி, நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கியது. கிழிறங்கின பின்னும் ஞானப்பனுக்குப் பார்வை நீலமாக நின்றது.
நீலப் பூ. புத்தகங்களுக்கிடையில் வைத்துப் பாடம் பண்ணின நீலமான பூ. சிவப்பாக இருந்து ஒருவேளை நீலமாகிப் போன பூ. அல்லது வெளிறல் மழுங்கி நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க, ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனத்தில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும், அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாய் முன்பு இருந்தது, இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ.
இடிந்த சர்ச்சின் சுவர்கள் ஞானப்பனுக்கு ஞாபகம் வந்தது. இந்த ஆர்பனேஜ் ஆண்களுக்கு மட்டுமானது என்பதன் அடிப் படையில் எழுதப்பட்ட கொச்சைகள், பெயர், கெட்ட வார்த்தைகள் எல்லாம் கறுப்பாகச் சுவரில் சிந்தியிருக்கும். இவன் பார்வையில், இவனுடன் படிக்கிறவர்கள் கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங் களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சி கூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக, வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள்.
புத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்த படி மூடினான். படிக்கவேண்டும். வேகமாக நிழல் பம்மிக்கொண் டிருந்தது. கிணற்றடியில் முகத்தை அலம்பி, பள்ளிக்கூடத்துப் பின்பக்க வராந்தாச் சுவரில் சாய்ந்துக்கொண்டு வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். மற்ற அமைதியிலிருந்து மீள அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது.
பெரிய ஐயாவுடைய தாராக் கோழிகளின் கேறல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இறைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச் சார்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின்னிங் மில் ஓடுகிற மூச்சு ரொம்பத் தள்ளி இரைந்தது.
மழை வருமா என்ன?
சென்ற மழைக்காலம் அடர்த்தியாக இருந்தது. வானம் நினைத்துக் கொண்ட போதெல்லாம் மழை. அநேகமாக மாலை தோறும் கருக்கலுக்கு முன்னாலேயே ஹாஸ்டலில் விளக்கு எரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் கண்ணப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சை யடைத்தது. பனை மரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங் கறுப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத் தெளிப்பாகப் பூத்து மினுங்கியது.
ஞானப்பன் ஆர்பனேஜ் வாசலுக்குள் ஓடி, வாசல் பக்கத்து மரத்தடியில் நின்றான். பின்னும் நனைந்தது. முன் கட்டிடத்துக்கு ஓடினான். புறத்தே வகுப்புகள் இருப்பதுபோல இவற்றிலும் இருந்தன. ஆறு முதல் எட்டு. உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள், புடைவைத் தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி. நனை வதற்கு முன்பு வந்திருக்கவேண்டும்.
ஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி, ரஸ்தாப் பக்க வாய்த் தலை திருப்பி நின்றது. கீழே புழுக்கை, காவல்கார வயசாளி குப்பை வாளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, துவண்டது போல் மடங்கிப் புகைத்துக்கொண் டிருந்தான். டெய்ஸி வாத்திச்சி கொஞ்சமும் அசையாமல் நின்றாள். வெளியே பெய்கிற கனத்த மழை அவளை, அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி, மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல் துல்லியமான ஒரு புதிய வடிவில் தெரிந்தாள்.
ரஸ்தாவில் ஓடத்தைப் போல் தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ்ஸ்டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலிருந்து குலுங்கித் தண்ணீர் கொட்டியது. பஸ் திரும்பி நின்றதும் டெய்ஸி வாத்திச்சி அவசரமாக ஓடினாள். 'தனுவைப் போல் இல்லாமல் முதிர்ந்து முற்றலாக இருக்கற டெய்ஸி வாத்திச்சி இவ்வளவு புறக்கணிப்பாகக் கூட நின்று செல்ல முடியுமா?' - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக்குட்டி கத்தியபடி, சுவரில் ஏறி நின்றது.
தனுவின் கல்லூரியிலிருந்து புறப்படுகிற காலேஜ் To காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைப் கூட்டிப் போகக் குடையுடன் நின்று கொண்டிருந்தார்கள். காலேஜ் வாசல் பக்கம் காலையில் பதநீர் விற்ற பனையோலைப் பட்டைகள் மேலும் நனைந்து பச்சையான குவியலாகக் கிடந்தன.
மஞ்சள் ஆட்டோக்கள் ஈரமான ரோட்டைச் சிலுப்பிக்கொண்டு காலனிப்பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து, காலேஜின் இரண்டாவது வாசலுக்குப் பக்கம் உள்ள ஒற்றையடித் தடத்தில் வேகமாக நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது.
மில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது.
புஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது, மௌனம் இளகி ஓடி அலையலையாகி, மத்தியில் தனு அலம்பி அலம்பி நின்றாள்.
ஒரே வரியில் வழக்குமரம் ஏறின வெறும் வாசிப்பை மறுபடியும் ஆரம்பித்தபொழுது வராந்தாவில் ஏறி டெய்ஸி வாத்திச்சி உள்ளே வந்தாள். 'படிப்பு நடக்கிறதா?' என்பதாகச் சிரித்தாள். 'குடையை வச்சுட்டுப் போய்ட்டேன்'.- செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழு வழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து, வாசலுக்கு இடப் புறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்குப் பாரம் வைத்தது போல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனைப் பார்த்துக் கேட்டாள்.
"நாற்காலி வேணுமா?"
"இல்லை. வேண்டாம். நேரமாச்சு. போக வேண்டியதுதான்."
கவனமாகப் பூட்டை இழுத்துப் பார்த்தான். கைக்குட்டை கிழே விழுந்திருந்தது.
"நேரமாயிட்டுதுன்னா லைட்டைப் போட்டுக்கிறது." - கைக் குட்டையை எடுத்து மூக்கை ஸ்வச்சைக் காட்டிச் சுளித்தாள். கால், செருப்பைத் தேடி நுழைத்துக்கொண்டிருந்தது.
"இல்லை, வேண்டாம்." ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான்.
"தனலெட்சுமிதான் வேணுமாக்கும்!" ஒரு அடி முன்னாள் வந்து சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள்.
இருட்டும் வெளிச்சமுமாகக் கிடந்த ஆர்பனேஜ் வெளியே ஞானப்பன் எட்டிப் பார்க்கையில் தடதடவென்று அந்தப் பஸ் இரைந்துகொண்டே போயிற்று.
ஸ்டாப் இல்லாவிட்டால் கூட, டெய்ஸி வாத்திச்சி வழியிலேயே கையைக் காட்டி நிறுத்தி நிச்சயம் ஏறிக்கொள்வாள்.
----------------------------
கி. ராஜநாராயணன் :
இடைசெவலில் வசிக்கும், விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கி. ராஜநாராயணன் (பி: 1923) தமிழில் எழுதும் பிராந்திய எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். பல அபூர்வத் தகவல்கள், பழக்கவழக்கங்களுடன் ஒரு தனித்த இயல்புடைய நகைச் சுவையும் இவருடைய படைப்பில் காணக் கிடைக்கும். 'கதவு' (சிறுகதைத் தொகுதி, 1965) தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. 'பிஞ்சுகள்' (குழந்தைகள் நாவல், 1979) இலக்கிய சிந்தனையின் ஆண்டின் சிறந்த நூல் விருது பெற்றது. 'கோபல்ல கிராமம்' (நாவல், 1976); 'தமிழ் நாட்டு நாடோடிக் கதைகள்' (1966, ஆறு பதிப்புகள்); 'கன்னிமை' (சிறுகதைகள், 1975); 'அப்பா பிள்ளை அம்மா பிள்ளை' (சிறுகதைகள், 1980) இவை இவருடைய இதர முக்கிய நு}ல்கள்.
முகவரி : 'Raja Bhavanam', Idaiseval Post, (via) Nallattinputtur, PIN 627 716.
நாற்காலி - கி. ராஜநாராயணன்
'நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?' எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது. அவ்வளவுதான்; குடும்ப 'அஜெண்டா'வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது.
முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். வந்தவர் நம்மைப் போல் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான் உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள், அவளுக்கு பாரியான உடம்பு. எங்கள் தாத்தா தச்சனிடம் சொல்லி அதைக் கொஞ்சம் அகலமாகவே செய்யச் சொல்லியிருந்தார்.
சப்ஜட்ஜுக்கும் கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால் அதைத்தான் அவருக்கு கொண்டுவந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு உட்காரப் போனார். இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றhல் அதன் கால்களுக்கு நேராக இல்லாமல் பக்கத்தில் பாரம் அமுங்கினால் தட்டிவிடும்! நாங்கள் எத்தனையோ தரம் உறியில் வைத்திருக்கும் நெய்யைத் திருட்டுத்தனமாக எடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும் போது அஜாக்கிரதையினால் பலதரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம், இந்த சப்ஜட்ஜும் இப்பொழுது கீழே விழப்போகிறாரே என்று நினைத்து, அவரை எச்சரிக்கை செய்ய நாங்கள் வாயைத் திறப்பதற்கும் அவர் தொபுகடீர் என்று கீழே விழுந்து உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித் தங்கை மூவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க ஓடினோம். சிரிப்பு அமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள். பின்னும் கொஞ்சம் எங்கள் சிரிப்பு நீளும்.
எங்கள் சிரிப்புக்கெல்லாம் முக்கிய காரணம் அவர் கீழே விழும் போது பார்த்தும் எங்கள் பெற்றோர்கள், தாங்கள் விருந்தாளிக்கு முன்னாள் சிரித்துவிடக்கூடாதே என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டதை நினைத்துத்தான்!
ஆக, நாங்கள் எல்லாருக்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல் அடி எடுத்து வைத்து நுழைந்து பார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள விருந்தாளியை காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. 'அதை அவர் கையோடு கொண்டு போயிருப்பாரோ?' என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள் ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.
'நகரத்தில் செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போச்சு' என்று எங்கள் பெத்தண்ணா ஒரு யோசனையை முன் வைத்தான். அது உறுதியாக இராது என்று நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.
பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாது என்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தை சொன்னாள்.
அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, 'ஆமா, இவ ரொம்பக் கண்டா' என்கிற மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அப்பா வேலையாளைக் கூப்பிட்டு, அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்து உட்கார்ந்தார். இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.
"தேக்கு மரத்தில் தான் செய்ய வேண்டும். அதுதான் தூக்க வைக்க லேசாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் இருக்கும்" என்றாள் பாட்டி, தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவி விட்டுக் கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடைய கால்களின் மீது மிகுந்த பிரியம். சதா அவற்றைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பாள்!)
இந்தச் சமயத்தில் எங்கள் தாய் மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள் பெத்தண்ணா ஓடிபோய் அந்த முக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிதுநேரம் வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.
மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காரு வதற்கு அவரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். தலை போனாலும் அந்த இடத்தில்தான் அவர் உட்காருவார். பட்டக சாலையின் தெற்கு ஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத் தம் குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்து கொடுத்துத் திரும்பவும் குடுமியை இறுக்கிக் கட்டிக்கொண்டு விடுவார். இது அவர் தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்து விட்டு அவர் தம்மையொட்டியுள்ள தரையைச் சுற்றிலும் பார்ப் பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கிழே விழுந்ததாகத் தெரிய வில்லை" என்று அண்ணா அவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச் சிரிப்பான்.
அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படிக் காகித பாணங்களினால் துளைத்தெடுக்கப்படுவார்! 'சம்பந்திக்காரர்கள்; நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்' என்கிற மாதிரி திறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவர் பாட்டுக்கு உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாகிப் பேச்சுக்களின் காரம் அதிகமாகும்போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடு வாள். அந்த அதட்டிடு வாக்கியத்தின் கடைசி வார்த்தை "கழுதைகளா" என்று முடியும்.
மாமனார் வந்து உட்கார்ந்ததும், அம்மா எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத் தொடர்ந்து ஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித் தம்ளரில் காயமிட்ட மோரை எடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா அவளுக்குத் தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படி வலிப்புக் காட்டிக்கொண்டே அவள் நடந்துவருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற மாதிரி பிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, 'அவா அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையா மோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப் பாரு' என்று சொல்லு கிறது மாதிரி இருந்தது.
மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும் போல் இருந்தது.
மாமனார் பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று நினைப்போம். அந்தப் பசுமாட்டின் மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி. அதாவது, ஈயாத லோபி என்று நினைப்பு எங்களுக்கு.
இந்தப் பசுவை அவர் தம்முடைய தங்கைக்காகக் கன்னாவரம் போய்த் தாமே நேராக வாங்கிக்கொண்டு வந்தார். இந்தக் காராம்பசுவின் கன்றுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித் தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப் போகும்போதும் வீட்டுக்குள் வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றிச் சுற்றி வந்து அதைத் தடவிக்கொடுத்து (தன் கண்ணே எங்கே பட்டு விடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப் புகழ்ந்து விட்டுத்தான் போவார். 'பால் வற்றியதும் பசுவை அவர் தம்மு டைய வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார். கன்றுக்குட்டியும் பசுவோடு போய்விடும்' என்ற பெரிய பயம் என் சிறிய உடன் பிறப்புகளுக்கு.
பின்னால் ஏற்படப் போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்றுக்குட்டியின் மெல் பிரீதியையும் மாமனாரின் பேரில் அதிகமான கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. அவர் ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ்சிறுசுகள் தங்களுடைய பார்வை யாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!
நாற்காலி விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தமக்கும் ஒரு நாற்காலி செய்ய வேண்டுமென்று பிரியம் இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது மாதிரி ஆயிற்று.
வேப்ப மரத்தில் செய்வது நல்லது என்றும், அதில் உட்கார்ந்தால் உடம்புக்கு குளிர்ச்சி என்றும், மூலவியாதி கிட்ட நாடாது என்றும் மாமனார் சொன்னார். வேப்பமரத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடு கூடிய திருட்டு முழியால் கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் நின்று வைரம் பாய்ந்த ஒரு வேப்பமரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள் தான் எங்கள் பண்ணைக்காரனிடம் அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார்.
பெத்தண்ணா சொன்னான், "பூவரசங் கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண் இறுக்கமுள்ள மரம். நுண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட" என்றhன்
அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர் நிறத்திலுள்ள வைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால் இதுகள் மேல்; நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லு கிறேன், செங்கரும்பு நிறத்திலோ அல்லது எள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்கள் இஷடம்." பளிச்சென்று எங்கள் கண்களுக்கு முன்னால் கண்ணாடி போல் மின்னும் பளபளப்பான கறுப்பு நிறத்தில் கடைந்தெடுத்த முன்னத்தங் கால்களுடனும், சாய்வுக்கு ஏற்றபடி வளைந்த, சோம்பல் முறிப்பது போலுள்ள பின்னத்தங் கால்களுடனும் ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.
எல்லாருக்குமே அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும், எங்கள் மாமனார் வீட்டுக்கு ஒன்றுமாக இரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்த நாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால் மற்றதைப் பார்க்க வேண் டாம். அப்படி ராமர் லெச்சுமணர் மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக்கொண்டு மாமனார் வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப் பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.
ஒவ்வொருத்தராய் உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும் உட்கார்ந்து பார்க்கவேண்டுமே என்பதற் காக எழுந்திருக்க வேண்டியிருந்தது. பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். ஆ…ஹா என்று ரசித்துச் சொன்னான். இரண்டு கைகளா லும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு உட்கார்ந்து பார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டு விட வேணும். இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அக்கா சொன்னாள்.
குட்டித் தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும், "நீ அப்போப் பிடிச்சி உட்கார்ந்துகிட்டே இருக்கியே? எழுந்திருடா, நான் உக்காரணும் இப்போ" என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே உட்கார்ந்தேன்; பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப் போகும் முகத்தைப் போல் வைத்துக்கொண்டு.
தீ மாதிரி பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங் கூட்டமாக வந்து வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். சிலர் உட்கார்ந்தே பார்த்தார்கள். ஒரு கிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம், உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப் பாராட்டினார்.
கொஞ்ச நாள் ஆயிற்று.
ஒரு நாள் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். உள் திண்ணையில் படுத்திருந்த பெத்தண்ணா போய் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்து போய்விட்டாரென்றும் நாற்காலி வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.
இறந்துபோன ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய் துட்டியில் கலந்துகொண் டோம். துட்டி வீட்டில் போய் பார்த்தால்...? எங்கள் வீட்டு நாற்காலியில் தான் இறந்துபோன அந்தப் 'பிரமுகரை' உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.
இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்து போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்கவைத்து அது உருண்டுவிடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப் பாட்டுவசத்தில் உரலின் மேல் சாத்தி, அந்தச் சாய்மான திண்டுவில் இறந்துபோனவரை, சாய்ந்து உட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.
இந்த நாற்காலியில் உட்காரவைக்கும் புதுமோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில் போய் பார்த்துவிட்டு வந்தார்களோ? எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை. (தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்)
அந்தவீட்டு 'விசேஷம்' முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன்தொழுவில் கொண்டுவந்து போட்டுவிட்டு போனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனை கூப்பிட்டு அதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து வாளி தண்ணீர்விட்டுக் கழுவி, திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில் போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்கார ஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டு வருவது என்றும் தெரிய வில்லை.
ஒரு நாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்து அவருக்குப் போடச் சொன்னோம். அவரோ, "பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்" என்று ஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம், அவர் எங்கே கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று. குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலி யில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும் குட்டித் தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவருக்கு என்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக் கொள்வார்கள்!
மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்து எங்களுக்கு மேலும் ஆறுதல் தந்தார். ('இப்போதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக் கொள்கிறார்!' என்று பெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச் சொன்னான்.)
இப்படியாக, அந்த நாற்காலியைப் 'பழக்கி'னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம். குழந்தைகளுக்கு இன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்" என்று கெஞ்சுவாள், குட்டித் தங்கை தம்பிப் பயலைப் பார்த்து. "ஏன் நீ உட்காருவதுதானே?" என்பான் அவன் வெடுக்கென்று.
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத் தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்து உட்காரவைத்தாள், அந்த நாற்காலியில். அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல் உட்கார ஆரம்பித்தார்கள்.
திரும்பவும் ஒரு நாள் ராத்திரி, யாரோ இறந்துபோய்விட்டார்கள் என்று நாற்காலியை தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் இப்படி அடிக்கடி நடந்தது.
நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தை வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான் இவர்கள் வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள்!
தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில் சாகிறார்களோ தெரியவில்லை?" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.
"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க் காரன்கள் உட்காருவதற்காக, சே!" என்று அலுத்துக்கொண்டான் அண்ணன்.
"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.
பெத்தண்ணா ஒரு நாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக் கொண்டோம்.
ஒரு நாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.
நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற் காலியில் அமர்க்களமாய் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண் டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக்கொண் டிருப்பதே சுவாராஸ்யமான பொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலு விரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, 'நோகுமோ நோகாதோ' என்று அவ்வளவு மெல்லப் பக்குவ மாகத் திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்பு களைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ள நரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, "முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை வெண்ணையைத் தடவி...." என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப் பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.
களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் 'சொக்கு' ஏற்படாதாம். அடுத்து அந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக, ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவை மூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள் சென்றுவிடும்.
ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித் தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப் பொருள்களின் மேல் தடவமாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். பதினைந்து வருஷத்துக்கு முன் வாங்கிய எவரெடி டார்ச் லைட் இன்னும் புத்தம் புதுசாக இப்போதுதான் கடையி லிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்து வாங்கிய எங்கள் வீட்டு டார்ச் லைட் சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக, சாகப் போகும் நீண்ட நாள் நோயாளி யைப் போல் காட்சியளிக்கிறது.
நாற்காலியை அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாக அதைத் துடைத்து வைப்பார். ஓர் இடத்திலிருந்து அதை இன்னோர் இடத் துக்குத் தாமே மெதுவாக எடுத்துக்கொண்டு போய்ச் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.
மாமனார் என்னைக் கண்டதும், "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார். "கொஞ்சம் வெற்றிலை போடலாமோ?" என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே சொன்னார்: "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால் கோழி முட்டும்!"
அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாம் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவை எழுப்பினேன்.
நாற்காலிக்காக வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார்கள். பெத்தண்ணா அவர்களைத் தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன். வந்த விஷ யத்தை அவர்கள் சொல்லி முடித்ததும் பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாகப் பதில் சொன்னான்.
"நாற்காலிதானே? அது எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது அங்கே போய்க் கேளுங்கள், தருவார். நாங்கள் சொன்னதாகச் சொல்ல வேண்டாம். இப்படிக் காரியங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அங்கே கிடைக்காவிட்டால் நேரே இங்கே வாருங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்வோம்" என்று பேசி அவர் களை அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் வந்து இருவரும் சப்தமில்லாமல் சிரித்தோம்.
அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே, " யார் வந்தது?" என்று கேட்டார்.
"வேலை என்ன? பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.
துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.
இப்பொழுது மாமனார் காட்டில் பெய்து கொண்டிருந்தது மழை!
ரொம்ப நாள் கழித்து, நான் மாமனாரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும் பேச்சுடனும் என்னை வரவேற்றார்.
"என்ன இப்படிக் கீழே? நாற்காலி எங்கே?" சுற்று முற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக, "அந்தக் காரியத்துக்கே அந்த நாற்காலியை வைத்துக் கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?" என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப் பெத்தண்ணா விடம் வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.
---------------------------
ஆர்.சூடாமணி :
நிதானமான, மிக உறுதியான இலக்கிய வளர்ச்சியும் சாதனைகளும் கொண்டது சூடாமணியின் எழுத்துப் பணி (பிறப்பு: சென்னை, 10-1-1931) 'கலைமகள்' பத்தரிரிகையின் வெள்ளி விழா சிறுகதைப் பரிசு (1957), கலை மகள் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஐயர் நாவல் பரிசு (1959- 'மனதுக்கு இனியவள்' நாவலுக்காக) தொடங்கி, கடந்த இருப தாண்டுகளில் முப்பதுக்கு மேலான நூல்கள் வெளி வந்துள்ளன. இவருடைய நாடகங்கள், 'ஆனந்த விகடன்' 1961லும், பம்பாய் தமிழ்ச்சங்கம் 1966லும் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நூல் பரிசும் (1966), இலக்கியச் சிந்தனை 1972-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைப் பரிசும் இவருடைய பணிக்கு அளிக்கப்பட்ட இதர பரிசுகள். ஆங்கிலத்திலும் இவர் எழுதுவதுண்டு. இவருடைய பல கதைகள் ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. அழுத்தமான சமுதாய முன்னேற்றக் கருத்துகளும், கண்ணியமும், பரிவும், பலதரப்பட்ட தேர்ச்சி யான பாத்திர வார்ப்பும், இயல்பான மனோதத்துவப் பின்னணியும் இவருடைய எழுத்தின் தனிச் சிறப்புகள்.
முகவரி: 7, Dr. Alagappa Chettiyar Road, Madras - 600 084.
அந்நியர்கள் - ஆர். சூடாமணி
"வா...வா" என்பதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை. மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத் திணறவெத்தது. பார்வையும் புன்சிரிப்புமே பேசின.
"ஹலோ ஸவி, என்ன ப்ளெசன்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷ னுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே" என்று முகமலர்ச்சி யுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.
"எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு! என்னை நீ ஸ்டே ஷனில் எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது" என்றாள் ஸவிதா.
ஸௌம்யா சிரித்தாள். "அப்பாடா! நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு."
இரண்டு நிமிஷங்கள் வரையில் ஒரு மௌனமுகங்களாய்ச் சகோ தரிகள் எதிரெதிரே நின்றார்கள்; பேச்சுக்கு அவசியமற்ற அர்த்தமய மான, இதயமயமான நிமிஷங்கள். சாமான்களுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து வெளிவந்து டாக்சியில் ஏறிக் கஸ்தூரிபா நகர் வந்து சேரும் வரை பரஸ்பரம், "எப்படியிருக்கே? உங்காத்துக்கார், குழந்தைகளெல்லாம் சௌக்கியமா?" எனபதற்கு மேல் உரை யாடவே இல்லை. டாக்ஸியில் அவ்வளவு இடம் இருந்தபோது தம்மையறியாமல் நெருக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே எல்லாமாய்ப் பொலிந்தது.
ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றுக் குசலம் விசாரித்த பின், "நீ வரது நிச்சயமானதிலேருந்து உன் அக்காவுக்குத் தரையிலே கால் நிக்கலே!" என்று சிரித்தார்.
சௌம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது. மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம். புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.
"இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே. ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு. வேறேதும் வித்தியாசமில்லே" என்றாள்.
நரை! ஸவிதா லேசாய்ச் சிரித்துக்கொண்டாள். 'காலம் செய்யக் கூடியதெல்லாம் அவ்வளவுதான். பாவம் வருஷங்கள்!' என்று சொல் வது போல் இருந்தது, அந்தச் சிரிப்பு. பிரிந்திருந்த காலமெல்லாம் இந்தச் சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசமுள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாய்த் தொடர்ச்சியை மேற்கொண்டு விடமுடிகிறது! சௌம்யா சொன்னதுபோல், இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரிய வில்லை. மனத்தளவில் அவர்களுள் வித்தியாசம் ஏது? எனவே பதினோர் ஆண்டுகளின் இடைவெளி கணப்போதில் தூர்ந்து விட்டது. பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இரு வரும் ஒன்றாய் வாழ்ந்துகொண்டிருந்தது போலவே தோன்றியது.
விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அந்தச் சூழ்நிலையே வேறு. வெவ்வேறு இடங்களி லிருந்து பறந்து வந்து ஒன்று சேர்ந்ததெல்லாம் ஒரு துக்கத்தில் பங்குகொள்ள. அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள். பேச்செல்லாம் அம்மாவும் அவள் இறுதியின் விவரங்களுந்தான். காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத் துக்கு திரும்பிவிட்டார்கள்.
அதன்பின் இப்போதுதான் உண்மையான நெருக்கம். சிறிது காலமாக ஒருவித ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம் யாவை அவள் கணவர், ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக்கொள்வ தாய்ச் சொல்லிவிட்டு ஒரு மாறுதலுக்காக அவளுடைய அக்கா விடம் பம்பாயிலிருந்து அனுப்பிவைத்தார்.
இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண் டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற் போல் இருந்தது. முதல் நாளின் மௌனத்துக்குப் பிறகு ஆந்தரிகமும் தோழைமையும் பேச் சில் உடைப்பெடுத்துக் கொண்டன. "அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாளாது போலிருக்கே!" என்று ஸவிதாவின் கணவர் பரிக சிப்பார். அவள் மக்கள் கிண்டலாய்ச் சிரிப்பார்கள். அது ஒன்றுமே ஸவிதாவுக்கு உரைக்கவில்லை. பேச்சு என்றாள் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது. ஒரு நாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன் றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, "அதுக் காகத்தான் நான் சொல்றேன்..." என்று தொடரும்போது இழை கள் இயல்பாய் கலந்துக்கொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியை விடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப் பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்துகொள்ளல்.
மற்றவர்களுக்கு உறைப்புச் சமையலைப் பரிமாறிவிட்டுத் தானும் தங்கையும் மட்டும் காரமில்லாத சாம்பாரை உட்கொள்ளும் போது அந்த ஒத்த ருசி இன்னும் ஆழ்ந்த ஒற்றுமைகளின் சிறு அடையாளமாய்த் தோன்றியது. அவ்விருவருக்கும் காபியில் ஒரே அளவு இனிப்பு வேண்டும். இருவருக்கும் அகலக் கரை போட்ட புடைவைதான் பிடிக்கும். மாலை உலாவலை விட விடியற்காலையில் நடந்துவிட்டு வருவதில்தான் இருவருக்கும் அதிக இஷ்டம். உறக் கத்தினிடை இரவு இரண்டு மணிக்குச் சிறிது நேரம் கண்விழித்து நீர் அருந்திவிட்டு, மறுபடி தூங்கப் போகும் வழக்கம் இருவருக் கும் பொது. இப்படி எத்தனையோ! ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வோர் இனிமை. ஸவிதாவுக்கு நாற்பது வயதாகப் போகிறது. சௌம்யா அவளை விட மூன்றரை வயது இளையவள். ஆனால் அந்த இனிமைக்குச் சிரஞ்சீவி யௌவனம். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒன்று.
வைத்தியமும் நடந்தது, ஒரு கடமை போல.
ஸவிதா சகோதரியை உற்றுப் பார்த்தாள். "உனக்கு ரத்தம் கொஞ்சம் ஊறியிருக்குன்னு நினைக்கிறேன். முகம் அத்தனை வெளிறினாப்பல இல்லே."
"உன் கைபாகந்தான்!இல்லேன்னா பம்பாயில் பார்க்காத வைத்தியமா?"என்று ஸௌம்யா சிரித்தாள்.
தயிரில் ஊறவைத்துச் சர்க்கரை சேர்த்த வற்றலை ஸ்பூனால் எடுத்துச் சாப்பிட்டவாறு இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந் தார்கள்.அந்த டிபன் அவர்கள் பிறந்தகத்தில் பழக்கம்.
"இங்கே யாருக்கும் இது பிடிக்கறதில்லே.இப்போத்தான் எனக்கு ஜோடியாய்ச் சாப்பிட நீ வந்திருக்கே"என்று கூறி மகிழ்ச்சியுடன் தயாரித்திருந்தாள் ஸவிதா.
மாலை நாலரை மணி இருக்கும்.ஸவிதாவின் மூத்த மகன் ராஜு, பத்தொன்பது வயதான எம்.எஸ்ஸி முதல் ஆண்டு மாணவன், கல்லூரிலிருந்து திரும்பி வந்தான்.
"அம்மா,நாளைக்கு எங்க காலேஜில் எம்.எஸ்ஸி முடிச்சுட்டுப் போற ஸ்டூடன்ஸுக்கெல்லாம் 'ப்ரேக்-அப்'பார்ட்டி நடக்கிறது. நான் நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கு வரமாட்டேன்.ராத்திரி தங்கிட்டு அடுத்த நாள்தான் வருவேன்"என்றான்.
"சரி"என்றாள் ஸவிதா. ஸௌம்யா அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"நீ முதல் வருஷ ஸ்டூடண்ட்தானே ராஜு? ஓவர்நைட் இருந்துதான் ஆகணுமா?"
"ஆகணும்னு ஒன்னுமில்லே சித்தி.ஆனா எனக்கு ஆசையா யிருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பப் பேர் இருக்கப் போறா."
அவன் அங்கிருந்து சென்ற பின் ஸௌம்யா."இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா ஸவி?" என்றாள்.
"ஆமாம்."
"நீயும் வேணாம்னு சொல்றதில்லையா?"
"எதுக்குச் சொல்லணும்?"
"இப்படியெல்லாம் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பிச்சு தான் இந்த நாள் பசங்க எல்லா வழக்கங்களையும் கத்துக்கறா. இல்லையா?சுருட்டு,கஞ்சா,குடி அப்புறம் கோ-எட் வேற.... நான் இப்போ ராஜுவை ஏதும் பர்சனலாய்ச் சொல்லலே."
"புரியறது ஸௌமி.ஆனா காலம் மாறரதை நாம் தடுத்து நிறுத்திட முடியுமா?
"குழந்தைகளை நாம் தடுத்துக் காப்பாத்தலமே?"
"உலகம்னா இப்படியெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் இந்த நாள் பசங்க வாழ்ந்தாகணும். அதுக்குமேல் ஒழுங்காகவோ ஒழுக்கங்கெட்டோ நடந்துக்கறது அவா கையில இருக்கு."
"பெரியவாளுடைய கன்ட்ரோலே அவசியம் இல்லேங்கறயா?"
"கன்ட்ரோல் பண்ணினா இன்னும் பிச்சுண்டு கிளம்பும், அவ்வளவுதான்."
"குழந்தைகளுக்கு உதவி தேவை. அப்பா அம்மா வேற எதுக்குத்தான் இருக்கா?"
"தங்களுடைய அன்பு என்னிக்கும் அவாளுக்காகத் திறந்தே இருக்கும்னு குழந்தைகளுக்குக் காட்டத்தான். வேறு எப்படி உதவ முடியும்?"
சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. ஒரே சீராய்ப் போய்க் கொண்டிருந்த ஒன்றில் சிறு இடறலுணர்வா? ஸௌம்யா தன் டிபன் தட்டை மேஜைமேல் வைத்தாள். வற்றல் இன்னும் மீதம் இருந்தது. ஸவிதா கணநேரம் அமைதி இழந்தாள். பிறகு கையை நீட்டித் தங்கையின் கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.
"இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸௌமி. அடிபட்டுக்காமல் யாரும் வளர முடியாது. குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா? முதல்லே, அவ அதை ஏத்துப்பாளா? சொல்லு, போகட்டும், புதுசா ஒரு ஹிந்திப்படம் வந்திருக்கே, போகலாமா? நீ அதை ஏற்கனவே பம்பாயில் பாத்துட்டியா?"
"இன்னும் பார்க்கலே, போகலாம்."
புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகுநேரம் அதைப்பற்றி விவாதித்தார்கள். ஸௌம்யாவுக்குப் படம் பிடிக்கவில்லை. "இப்படிப் பச்சையாய் எடுத்தால்தான் நல்ல படம்னு அர்த்தமா? இப்போதெல்லாம் சினிமா, இலக்கியம் எல்லாத் திலேயும் இந்தப் பச்சைத்தனம் ரொம்ப அதிகமாகி அசிங்கமா யிண்டு வரது. உனக்கு அப்படித் தோணலே?" என்றாள்.
"நாம் அசிங்கத்தை விட்டுட்டு அதிலெல்லாம் இருக்கக்கூடிய கதை, கலை முதலான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துண்டு ரசிப்போம்."
"முதல்லே விஷத்தை கொட்டுவானேன்? அப்புறம் அதில் நல்லது எங்கேன்னு தேடிண்டிருப்பானேன்? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற சமாசாரந்தான்."
அன்று இரவு ஸௌம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.
ஸவிதாவின் கண்கள் விரிந்தன. "அட, உன் பேர் போட்டிருக்கே! கதையா? நீ கதைகூட எழுதறியா! எப்பலேருந்து? எனக்குச் சொல்லவே இல்லையே?"
"வெக்கமாயிருந்தது. மெள்ளச் சொல்லிட்டுக் காட்டலாம்னு தான் எடுத்துண்டு வந்தேன். இப்போ ஒரு வருஷமாய்த்தான். எப்ப வானும், சும்மா ஆசைக்கு, படிச்சுப் பாரேன்."
படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.
"ரொம்ப அருமையாய் எழுதியிருக்கே ஸௌமி! நீ காலேஜில் இங்கிலீஷ்லே மெடலிஸ்ட்னு ஒவ்வொரு வரியும் சொல்றது. அற்புதமானநடை."
"நடை கிடக்கட்டும். விஷயம் எப்படி?"
ஸவிதா ஒரு கணம் தயங்கினாள். பிறகு, "நல்ல கதைதான், ஆனா... நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு" என்றாள்.
"நம்மைச் சுத்தி எங்கே பார்த்தாலும் ஆபாசமும் பயங்கரமும் இருக்கறதனால எழுத்திலேயாவது நல்லதையும் தூய்மையையும் காட்டணுங்கறது என் லட்சியம்."
இருவரும் மௌனமானார்கள். அந்த மௌனம் ஸவிதாவின் நெஞ்சில் உறுத்தியது. மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம் போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவி விட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது. அப்பாடா! எல்லாம் முன்புபோல் ஆகிவிட்டது.
ஒன்பது மணிக்கு நூலகத்திலிருந்து சேவகன் புதிய வாராந்தரப் புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பழையவற்றை வாங்கிக்கொண்டு போனான். ஸௌம்யா புதிய புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். இரண்டில் மெலிதாயிருந்ததன் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் கண்டதும், "ஓ இந்தப் புஸ்தகமா? நான் படிச்சிருக்கேன். ஸவி, நீ இதை அவசியம் படி. உனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
ஸவிதா அப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். எவ்விதமான இலக்கியத் தரமோ மானிட ரீதியான வெளிச்சமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை அந்த நூல். இதையா அவளுக்குப் பிடிக்கும் என்றாள் ஸௌம்யா அவள் சொன்னதிலிருந்தெல்லாம் ஸௌம்யா புரிந்துகொண்டது அவ்வளவுதானா?
"ஈராஸ் தியேட்டரில் வர ஒவ்வொரு தமிழ்ப் படத்துக்கும் அவளை அழைச்சுண்டு போயிடறயே, ஸௌமி மேலே உனக்கு என்ன கோபம்?" என்றார் அவள் கணவர்.
"பம்பாயில் அவளுக்கு அடிக்கடி பார்க்க முடியாதது தமிழ்ச் சினிமா தானே? அவள் இஷ்டப்பட்டுத்தான் நாங்க போறோம். இல்லையா ஸௌமி?"
"ஓரா" என்றாள் ஸௌம்யா. மற்றவர்கள் அர்த்தம் புரியாமல் விழித்தபோது ஸவிதாவுக்குமட்டும் மகிழ்ச்சியாயிருந்தது. சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக்கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள். அவர்களாக ஏற்படுத்தும் பதங்களுக்கும் ஒலிச் சேர்க்கைகளுக்கும் தனித்தனியே அர்த்தம் கொடுத்த அந்தப் பிரத்தியேக அகராதியில் 'ஓரா' என்றால் ஆமாம் என்று பொருள், திடீரென அந்தரங்க மொழியை ஸௌம்யா பயன்படுத்தியபோது தம் ஒருமை மீண்டும் வலியுறுத்தப்படுவதுபோல் ஸவிதாவுக்குத் தோன்றியது. சகோதரிகள் புன்சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.
"சாயங்காலம் லேடீஸ் கிளப்புக்குப் போகணும். ஞாபகமிருக்கா?" என்றாள் ஸவிதா.
அவள் அங்கம் வகித்த மாதர் சங்கத்துக்கு அதுவரை சிலமுறை கள் சகோதரியை அழைத்துப் போயிருந்தாள். இன்று மற்ற உறுப் பினர்களிடம் தன் தங்கை கதை எழுதுவாள் என்று சொல்லிக் கொண்டபோது கண்களிலும் முகத்திலும் பொருமை ததும்பியது.
மன்றத் தலைவி ஸவிதாவிடம் அருகாமையில் உறைந்த ஓர் ஏழைப் பையனைப் பற்றி அன்று கூறினாள். கால் விளங்காத அவனைக் குடும்பத்தார் கைவிட்டார்களாம். பையன் படிக்கவேண் டும். அதைவிட முக்கியமாய்ச் சாப்பிட்டாக வேண்டும். அருகி லிருந்த ஒரு பள்ளிக்கூடக் காம்பவுண்டுக்குள் நாலைந்து நாட்களாகப் படுத்துக்கொண்டு அங்கிருந்து நகரமாட்டேனென்று அடம் பிடிக் கிறான். அவனது உடனடி விமோசனத்துக்காக மன்றத் தலைவி நிதி திரட்டிக்கொண்டிருந்தாள். "உங்களாலானதைக் கொடுங்க" என்று அவள் கேட்டபோது ஸவிதா பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தாள். "நீங்க...?" என்று அப்பெண்மணி ஸௌம்யாவைப் பார்த்துக் குரலை நீட்டினாள். கணநேரம் தாமதித்த ஸௌம்யா ஒரு தரம் சகோதரியை ஏறிட்டுவிட்டுத் தன் பங்காக ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.
வீடு திரும்பும் வழியில் ஸவிதா, "பாவம், இல்லே அந்தப் பையன்?" என்றபோது ஸௌம்யா உடனே பதில் சொல்லவில்லை.
"என்ன ஸௌமி பேசாமலிருக்கே?"
"என்ன பேசறது? பாவம். எனக்கு மட்டும் வருத்தமாயில்லேன்னு நினைக்கறியா? ஆனா .."
"ஆனா...?"
"இதெல்லாம் பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்னை. தனி மனுஷா உதவியில் என்ன ஆகும்? நம்ம நாட்டில் வறுமை ஒரு அடியில்லாத பள்ளம். அதில் எத்தனை போட் டாலும் நிரம்பாது, அதனால், போட்டு என்ன பிரயோசனம்?"
"அடியில்லாத பள்ளந்தான். போட்டு நிரம்பாதுதான். அதனால் போட்டவரைக்கும் பிரயோசனம்."
சட்டென்று பேச்சு தொய்ந்தது. இருவரும் மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தனர். இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.
ஹாலுக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கு ஒரே கூச்சலாக இருந்தது. ஸவிதாவின் பதினான்கு வயதான மகளின் கையிலிருந்து அப்போதுதான் வந்திருந்த பத்திரிகையைப் பிடுங்குவதற்காக அவளைவிட இரண்டு வயது இளையவனான தம்பி ஓடித் துரத்திக் கொண்டிருந்தான்.
"குட்ரீ அதை என்கிட்ட!"
"போடா தடியா, நான் பாத்துட்டுத்தான்"
"அமிதாப்பச்சனை ஒடனே பாக்காட்டா தலை வெடிச்சுடுமோ?"
இருவரும் கத்திக்கொண்டே விடாமல் ஓடினார்கள். சோபா வுக்குப் பின்னிருந்து வேகமாய்த் திரும்பிப் பாய்ந்தபோது பையன் சுவர் அலமாரியில் மோதிக் கொண்டான். அதன் கண் ணாடிக் கதவு உடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓர் உயரமான 'கட்கிளாஸ்' ஜாடி பக்கவாட்டில் சரிந்தது. அது கீழே விழுமுன் ஸவிதா ஓடிப்போய் அதைப் பிடித்துக்கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. "கடன்காரா, அதென்ன கண்மூடித்தனமாய் ஓட்டம்? இப்போ இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?" என்று மகனைப் பார்த்து மூச்சிரைக்கக் கோபமாய்க் கத்தினாள்.
பையன் தலை கவிழ்ந்தது. "ஸாரிம்மா!" வேகம் அடங்கி அவனும் அவன் அக்காவும் அறையை விட்டு வெளியேறினார்கள். ஸவிதாவின் படபடப்பு அடங்க சிறிது நேரம் ஆயிற்று, ஸௌம்யா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பாரேன் ஸௌமி, நம்ம அப்பா அம்மா கொடுத்ததுன்னு நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி காப்பாத்தி வச்சுண்டிருக்கேன். அது தெரிஞ்சும் இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?"
ஸௌம்யா ஏதும் சொல்லவில்லை.
"இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருந் திருக்கும். இதன் ஜோடியை உனக்குக் கொடுத்தாளே, நீயும் பத்திரமாய்த்தான் வச்சிருப்பே, இல்லையா?"
"பத்திரமாய்த்தான் இருக்கு."
"இதேமாதிரி ஹால்லேதான் பார்வையாய் வச்சிருக்கியா நீயும்?"
"வச்சிருந்தேன்"
"அப்படின்னா?"
"மேல் ஃப்ளாட் பொண்ணு அதைப் பார்த்து ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டினாள். அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்துட்டேன்."
ஸவிதா அதிர்ந்து நின்றாள்.
”என்ன! கொடுத்துட்டயா? அதை விட்டுப் பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது?”
”ஏன் வரக்கூடாது?”
”அப்பா அம்மா நினைவாய்...”
”அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?”
மீண்டும் கத்தி முனையில் விநாடி இடறியது. சகோதரிகள் ஒருவரையொருவர் தீவிரமாய் வெறித்தார்கள். பார்வையில் குழப்பம்.
” நான் போய் நமக்குக் காபி கலக்கிறேன் ஸவி. ஜாடியை ஜாக்கிரதையாய் வெச்சுட்டு வா.”
ஒரே அளவு இனிப்புச் சேர்த்த காபியை அவள் எடுத்துவர, இருவரும் பருகினார்கள். நழுவிப் போகும் ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொள்ளும் செயலாய் அது இருந்தது.
அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப் போகின்றன? அந்த ஏக்கம் இருவர் பார்வையிலும் தெரிந்தது. அடிக்கடி ஒருத்தி தோழமையை மற்றவள் நாடி வந்து உட்கார்ந்துகொள்வதிலும் 'இது அவளுக்குப் பிடிக்கும்' என்று பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், 'அடுத்த சந்திப்பு எப்போதோ?' என்ற தாபம் தொனித்தது. எனினும் அத்தனை ஆந்தரிகத்திலும் இப்போதெல்லாம் பேச்சில் ஒரு கவன உணர்வு. சிரித்துக்கொண்டே அரட்டை யடிக்கும்போது, பழைய நினைவுகளையோ இத்தனை வருஷக் கதைகளையோ பகிர்ந்து மகிழும்போது, சட்டென்று எழும்பிவிடக்கூடிய சருதி பேதத்தைத் தவிர்க்க முனைந்துகொண்டே இருக்கும் ஒரு ஜாக்கிரதை. விளிம் புக்கு இப்பாலேயே இருக்கவேண்டுகிற கவலையில் நிழலாடும் ஒரு தயக்கம்.
அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பிரதியைத் தபால்மூலம் பார்த்துவிட்டு ஸௌம்யாவின் கணவர், ”அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே! 'நான்தான் ஸௌம்யா' என்று நெற்றியில் அச்சடித்துக்கொண்டு வா” என்று எழுதியிருந் தார். அவரும் குழந்தைகளும் எழுதும் கடிதங்கள் மேற்போக்கில் உல்லாசமாயும் இயல்பாகவும் தொனித்தபோதிலும் அவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது. விரைவில் கிளம்பிவிட வேம்டியதுதான்.
தாம் இனி இப்படி வருஷக்கண்க்காகப் பிரிந்திராமல் ஆண்டுக் கொரு தடவை ஒருவரையொருவர் முறை வைத்துப் போய்ப் பார்க்க வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக்கொண்டார்கள்.
"நியூ இயர் ரெஸொல்யூஷன் மாதிரி ஆயிடக்கூடாது இது!" என்று ஸௌம்யா கூறிச் சிரித்தபோதே அவள் தண்கள் பனித்தன. ஸவிதாவின் மோவாய் நடுங்கியது. எதுவும் சொல்லாமல் ஓர் அட்டைப் பெட்டியை எடுத்து வந்து நீட்டினாள். அதனுள் ஓர் அடையாறு கைத்தறி நூல் சேலை. சிவப்பு உடல்,மஞ்சளில் அகல மான கோபுரக் கரை.
" எதுக்கு இதெல்லாம் ஸவி? "
" பேசப்படாது,வைச்சுக்கோ."
" உன் இஷ்டம். எனக்கு மட்டுந்தானா?"
" இதோ எனக்கும்."
மயில் கழுத்து நிறம். ஆனால் அதே அகலக் கரை. மீண்டும் புன்னகைகள் பேசின.
நாட்களின் தேய்வில் கடைசியாக இன்னொரு நாள். ஸௌம்யா ஊருக்குப் புறப்படும் நாள். ரெயிலுக்குக் கிளம்பும் நேரம்.. சாமான் கள் கட்டி வைக்கப்பட்டுத் தயாராயிருந்தன.
"கிளம்பிட்டாயா ஸௌமி? " ஸவிதாவின் குரல் கம்மியது.
" நீயும் ஸ்டேஷனுக்கு வரயோன்னோ ஸவி? "
ஆவலுக்கு ஆவல் பதிலளித்தது. "கட்டாயம்."
" எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறத்துக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்."
ஸவிதா மௌனமாய் இருந்தாள். ஸௌம்யா. ஸௌம்யாவின் கண்களில் கலக்கம் தெரிந்தது.
"ஆனா இங்கேபூஜை அறையே இல்லையே? " என்றாள் தொடர்ந்து.
" இல்லாட்டா என்ன? மனசிலேயே வேண்டிக்கோயேன். நம்பிக்கை இருந்தால் அது போறாதா?"
" நம்பிக்கை இருந்தால்' னா? உன் நம்பிக்கை அந்தமாதிரின்னு சொல்றயா? " திடீரென்று ஸௌம்யாவின் முகம் மாறியது. " அல்லது உனக்கு நம்பிக்கையே இல்லேன்னு அர்த்தமா?"
" நான்...நான் அதைப்பத்தி ஏதும் யோசிச்சுப் பார்த்தது கிடை யாது." ஸவிதாவுக்குச் சங்கடம் மேலோங்கியது. " இப்போ எதுக்கு விவாதம் ஸௌமி, ஊருக்குக் கிளம்பற சமயத்திலே?"
" என்ன ஸவி இது! இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்பிராயம் இல்லையா?"
"இதை ஒரு பெரிய விஷயம்னு நான நினைக்கலே."
ஸௌம்யாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களு டைய சிறுமிப் பருவத்தின் சூழ்நிலை எத்தனை பக்தி மயமானது! அம்மா அன்றாடம் பூஜை செய்வாள். சாங்காலமானால், ' போய்ச் சுவாமி அறையிலும் துளசி மாடத்திலும் விளக்கு ஏத்துங்கோடி' என்று பணிப்பாள். அவர்களை வெள்ளிக்கிழமை தவறாமல் கோயிலுக்கு அழைத்துப் போவாள். தோத்திரங்களெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். 'வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் துணை இருக் கிறது ஆண்டவன் பெயர் ஒண்ணுதான்' என்று போதிப்பாள். தான் அந்த வழியிலேயே நடந்து வந்திருக்க, இவளுக்கு மட்டும் என்ன ஆயிற்று?
"தெய்வ நம்பிக்கையை இழக்கறமாதிரி உனக்கு அப்படி என்ன அநுபவம் ஏற்பட்டுது ஸவி?"
"அந்த நம்பிக்கையை இழந்துட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாய்த் தெரியாது. ஆனா, அநுபவம் நமக்கே ஏற்பட்டால் தானா? கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு? போகட்டும், உலகத்தின் பிரச்னைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலைபோகிற பிரச்னையாய் எனக்குத் தோண லேன்னு வச்சுக்கோயேன்."
"எத்தனை அலட்சியமாய்ச் சொல்லிட்டே? ஆனா நான், தெய் வத்தை நம்பலேன்னா என்னால் உயிரோடயே இருக்க முடியாது."
பார்வைகள் எதிரெதிராய் நின்றன. அவ்ற்றில் பதைப்பு, மருள், ஸௌம்யாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. தமக்கையைப் பார்த்த அவள் பார்வை 'இவள் யார்?' என்று வியந்தது. பிறகு கண்கள் விலகின.
ஸவிதா தவிப்பும் வேதனையுமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அர்த்தம் இருக்கும் போலவும் தோன்றவில்லை. ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள் தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவான வைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு?
ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமை கின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வ தெல்லாம் கடைசியில் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டு மல்ல.
அன்பு ... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதனாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத்தான் அது இருக்கிறது.
மன்னிக்கவும், ஹெரால்ட்ராபின்ஸ்! வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத் தான் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.
"நாழியாறதே! பேசிண்டேயிருந்தால் ஸ்டேஷனுக்குக் கிளம்ப வாணாமா? வாசலில் டாக்ஸி ரெடி" என்றவாறு அங்கு வந்த அவள் கணவர் அவர்களைப் பார்த்து, "உங்க பேச்சுக்கு ஒரு 'தொடரும்' போட்டுட்டு வாங்கோ, அடுத்த சந்திப்பில் மறுபடியும் எடுத்துக் கலாம்" என்றார் சிரித்துக்கொண்டே.
"இதோ வரோம், வா ஸௌமி!" ஸவிதா தங்கையின் கையைப் பற்றிக்கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
----------------------------------
ஜெயந்தன்-
ஜெயந்தனின் இயற்பெயர் எம்.பி. கிருஷ்ணன்.பிறந்தது மணப்பாறையில் (15-6-1937). கால்நடை ஆய்வாளராகப் பணியாற்றும் இவருடைய முதல் படைப்பு 1974-இல் வெளியாயிற்று.மிகக் குறுகிய காலத்தில் இவருடைய சிறுகதைகளும் நாடகங்களும் இலக்கிய ரசிகர்கள், வெகுஜனப் பத்திரிகை வாசகர்கள் ஆகிய இருவர் மத்தியிலும் உற்சாகமான வரவேற்புப் பெற்றன.நூல் வடிவில் வந் துள்ள இவருடைய படைப்புகள்:'ஜெயந்தன் நாடகங்கள்' (1976),நினைக்கப்படும்' (நாடகம்,1978),'சம்மதங்கள்' (சிறுகதைகள்,1978),'அரும்புகள்'(சிறுகதைகள்,1980). இவருடைய 'நினைக்கப்படும்' நாடகம் 1978-ஆம் ஆண்டின் சிறந்த நூல் விருது பெற்றது.
முகவரி:9.Thamarai Nagar, Behind Pankaj Colony,Madurai-625009
பகல் உறவுகள் - ஜெயந்தன்
காலை மணி ஒன்பது.கதைவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில் இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அது தினசரி வழக்கம்.
டெரிகாட்டன் பேண்ட்,டெரிலின் சட்டை,கூலிங்கிளாஸ், மிடுக்கான நடை இவையோடு அவனும்.கலர் மேச் ஆகின்ற உல்லி உல்லி சேலை,ஃபுல்வாயில் ஜாக்கெட்,செருப்பு,கைப்பை இவையுடன் அவளும். அந்த ஜோடி நடை தினம் வேடிக்கைப் பார்க்கப்படுகின்ற ஒன்று. கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் அப்படித்தான் புறப்படுகிறார்கள்,வந்து சேருகிறார்கள் என்றாலும் சிலரது கவனத்தை இன்னமும் ஈர்க்கத் தவறாத ஒன்று. சிலருக்கு அவர்கள்மேல் பொறாமை கூட,குறிப்பாக அவள்மேல். ஏனென்றால் அவள் உள்ளூர்க்காரி.'அட,சின்னப்பிள்ளையில் மூக்க ஒழுக விட்டுக் கிட்டு,கையும் காலும் சொரி சொரியாப் பார்க்கச் சகிக்காதுங்க' என்று சொல்பவர்களும் உண்டு.'அவங்கம்மா பாவம்'களை எடுத்துக் காப்பாத்துச்சுங்க'என்பவர்களும் உண்டு.
அவர்கள் இருவரும் அரசு ஊழியர்கள்.அங்கிருந்து ஐந்து மைலில் இருக்கும் முத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியனில் வேலை பார்க்கிறார்கள். அவன் கேஷியர். அவள் டைப்பிஸ்ட், வீட்டு வசதிக்காக இங்கே தங்கித் தினம் பஸ்ஸில் போய்வந்தார்கள்.
அவர்கள் இருவரும் தெருவில் வரும்போது எதிர்ப்படும் சிலர் புன்னகை செய்வார்கள். சிலர், "என்னா பொறப்பட்டாச்சா?" என்று கேட்பார்கள். அவன் மிடுக்காகத் தலையாட்டுவான். அந்த மிடுக்குத் கொஞ்சம் அதிகந்தான். நான் பெரிய ஆள் என்பதால்தான் சின்ன மனிதர்களாகிய நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள் என்று சொல்கிற மாதிரியான மிடுக்கு. யாராவது அவளிடம் அப்படிக் கேட்டால் அவள் பதிலாக ஒருமாதிரி சிரிப்புச் சிரிப்பாள். அது அழகாக இருக்கும். அது பல நேரங்களில் அவனுக்கு எரிச்சல் தருகின்ற சிரிப்பு. 'போயி காட்டான் மூட்டான் கிட்ட எல்லாம் பல்லக் காட்டிக்கிட்டு...'
அவர்கள் கிறிஸ்துவர்கள். அவள் ஆதி கிறிஸ்துவச்சி. அவன் பாதியில் கிறிஸ்துவனானவன். அதாவது இவளைக் கட்டுவதற்காக அப்படியானவன்.
அவர்கள் ஒன்பது பத்துக்கெல்லாம் பஸ் ஸ்டாப் வந்து விட்டார்கள். பஸ் ஒன்பது இருபதுக்கு. பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அதிகமாக இருந்தது; டிக்கட் கிடைக்காதோ என்று பயப்படும் அளவுக்கு அதிகமாக இருந்தது. அப்படி அன்று திடீர்க் கூட்டத் துக்குக் காரணமாக அங்கிருந்தவர்கள் ஆளுக்கொன்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இவன், உடனே கூட்டமாகக் கூடிக் கல்யாணம் செய்பவர்களை யும், தேர்த்திருவிழா என்று வைத்துக்கொண்டு கூட்டம் கூட்டுபவர் களையும் முணுமுணுப்பில் திட்டினான்.
ஏதோ வாங்குவதற்காக அவள் பெட்டிக்கடைப் பக்கம் நகர்ந் திருந்தபோது அவன் பக்கமாக வந்த பாலகுருவா ரெட்டியார், "என்னங்க இன்னிக்கு அவங்கள காணும்?" என்றார். இது கிராமத்துப்பழக்கம். குட்மார்னிங் சொல்வதற்குப் பதிலாக இப்படி எதையாவது கேட்டு வைப்பார்கள். அவன் வழக்கப்படி கௌரவ மாகவும் விரைப்பாகவும், "வந்திருக்காங்க" என்றான். அவன் வெளியிடங்களில் அவளைக் குறித்துப் பேசும்போது மரியாதை யாக, 'அவங்க' என்றுதான் சொல்வான். அவள் அவனை, 'எங்க சார்' என்பாள்.
ஒன்பது இருபது பஸ் ஒன்பது நாற்பதுக்கு வந்தது. வரும் போதே அது நிறைந்து ஸ்டாண்டிலும் நிறைய ஆட்கள் நின்று கொண்டு வருவது அதன் கண்ணாடி வழியாகத் தெரிந்தது. இங்கே இதுவரை இங்குமங்குமாக நின்ற கூட்டம் ஒரே திரளாகி, பரத்துப் பஸ்ஸின் படிக்கட்டு எந்த இடத்தில் நிற்கும் என்று கணக்குப் போட்டுக்கொண்டு நின்றது. பஸ் நின்றபோது நெருக்கியடித்து முண்டி ஏறப் போய், 'யாரும் ஏறாதீங்க' என்ற கண்டக்டரின் கண்டிப்பான கட்டளையால் தயங்கி ஏறாமல் அண்ணாந்து கொண்டு நின்றது.
அவனும் அவளுங்கூட அங்கே ஓடி வந்திருந்தார்கள். அவள், பஸ் படியின் இடதுபுறக் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த பாலகுருவா ரெட்டியாருக்கு அடுத்தபடியாகப் பஸ் பாடியில் உரசியபடி நின்றுக்கொண்டிருந்தாள். அவன் முதலிலேயே கொஞ்சம் முன்னாள் வந்திருந்தாலும் கூட்டம் நெருக்க நெருக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கிக் கூட்டத்தின் கடைசிக்கு வந்துவிட்டான்.
பஸ் ஸ்டாப்பில், கூட்டத்துக்குப் பின்னால் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பார்த்தசாரதி என்னும் இளைஞன், "கண்டக்டர் சாருக்கு ரெண்டு டிக்கெட் போடு, ஆபீஸ்டிக்கெட்" என்று பலமாகச் சொன்னான். சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். அவள் அந்தப் பாதிச் சிரிப்பைக் காட்டினாள். இவனுக்குப் பொசு பொசுவென்று வந்தது. பார்த்தசாரதி அங்கே சும்மா நின்று கொண்டிருந்தான். அவன் பஸ்ஸிற்குப் போவதாக இருந்தால் கம்பியைப் பிடித்துக் கொண்டிருக்கும் முதல் ஆளாக அவன் தான் இருப்பான். அப்போது வாயில் சாரும் வராது மோரும் வராது.
பஸ்ஸிலிருந்து நான்கைந்து பேர் இறங்கினார்கள். அவர்கள் இறங்கியதும் கண்டக்டர் இடக்காலை நீட்டி வாசலைக் குறுக்காக அடைத்துக்கொண்டு, "எடமில்லே" என்றான். பின்பு, பின்னால் திரும்பி கண்ணாடி வழியாகப் பார்த்தபடி, "என்னா எறங்கியாச்சா?" என்றான். மேலே டாப்பில் எதையோ போட்டுவிட்டு ஒரு ஆள் ஏணி வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.
கண்டக்டர் பார்க்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் அவள் தன் பாதிச் சிரிப்போடு கையை உயர்த்தி இரண்டு விரல்களைக் காட்டினாள். கண்டக்டர் சிரித்தபடி, "இல்லீங்க, நான் உதயசூரியன்" என்றான். தேர்தலுக்கு இரண்டு மூன்று நாள்தான் இருந்ததால் அதைப் பார்த்தவர்கள் புரிந்துகொண்டு சிரித்தார்கள். அவள் அரைச் சிரிப்பை முக்கால் சிரிப்பாக்கினாள். கண்டக்டர் மறுபடியும் ஒரு முறை அவளைப் பார்த்துக்கொண்டான். பின்புறம் ஏணியி லிருந்து இறங்கிய ஆள் வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டதும் கண்டக்டர் அவளைப் பார்த்து, "நீங்க ரெண்டு பேரும் வாங்க" என்றான்.
பஸ் புறப்பட்டதும் கண்டக்டருக்கு இடம் போடும் பிரச்னை. எப்படியோ ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டுக் குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு அவளுக்கு ஓர் இடம் கொடுத்தான். கடைசியாக அவள் உட்கார்ந்த சீட்டில் ஒரு இடம் பாக்கி விழுந்தது. நிற்பவர்களில் பெண்கள் இல்லை. யாரோ ஒருவர், “சார், அங்க உக்காரட்டும்” என்று யோசனை சொன்னார். அதன் பேரில் பின்னால் நின்றுகொண் டிருந்த இவன் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். பஸ்ஸில் வந்த சிலர் தம்பதிகள் என்றாலே அவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தில் இவர்களைப் பார்த்தார்கள். இதை உணர்ந்த அவன் இன்னும் கொஞ்சம் டிரிம் ஆக உட்கார்ந்துகொண்டு பஸ் கண்ணாடி வழியாக நேரே சாலையைப் பார்த்தான்.
அவர்கள் அலுவலக காம்பவுண்டிற்குள் நுழைந்தபோது வராந் தாவில் நின்று சில ஸ்டாப்கள் பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் இவர்களைக் கண்டதும் ஏதோ பேசிவிட்டுப் பிறகு சிரித்தார்கள். இவர்களைப் பார்த்தே சிரித்தார்கள். இவன் வந்து படியேறியபடியே, “என்னா?” என்றான். அட்டெண்டர் கிருஷ்ணன் சிரித்தபடியே, “இப்ப எங்களுக்கு ஒரு சந்தேகம் சார். இப்ப இவங்க” என்று அவளைக் காட்டி, “நம்ப ஆபிஸ் டைபிஸ்டா; இல்ல மிஸஸ் கேஷியரான்னு” என்றான். புருஷனும் மனைவியும் வெறுமனே சிரித்தார்கள். டெப்போ கிளார்க் ஜகந்நாதன், “நான் சொல்றேன், டைப்ரைட்டர் முன்னால் உக்காந்திருக்கப்ப டைபிஸ்ட், எந்திருச்சுட்டா மிஸஸ் கேஷியர்” என்றான்.
எஸ்டாபிளிஸ்ஷ்மெண்ட் மகாலிங்கம் உடனே, “ஆனா அதே சமயத்தில் இவரு cash-ல் உக்காந்திருக்கணும். இல்லேனா மிஸஸ் ராஜமாணிக்கம் ஆயிடுவாங்க” என்றான். எல்லோரும் சிரித்தனர். பிறகு அவர்கள் ஒரு பெண்ணை அவள் கணவன் பெயரைச் சொல்லி, இன்னார் மிஸஸ் என்று சொல்லும்போது ஓர் ஆணை அவன் மனைவியின் பெயரைச் சொல்லி இன்னாருடைய மிஸ்டர் என்று ஏன் சொல்லக்கூடாது?
ஆணை மட்டும் ஏன் சுயம்புவாக மிஸ்டர் என்று சொல்லவேண்டும் என்று வாதித்தார்கள். அவளை ஏன் மிஸ்டர் பிலோமினா என்று கூப்பிடக்கூடாது என்று கேட்டார்கள். இவர்கள் சிரித்தபடியே உள்ளே போனார்கள். அவன் சிரிப்பில், பாதி ‘ஒங்களுக்கு என்னா வேலை’ என்கிற தோரணை. அவள் சிரிப்பில் ‘அப்படியெல்லாம் நானும் உங்களைப் போல் கலகலவென்று பேசிவிடக்கூடாது, முடியாது’ என்ற சாயல்.
அவர்கள் இருவரும் மானேஜர் மேஜைக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடவும் அங்கே மானேஜர் வரவும் சரியாக இருந்தது. அவள் தன் மேஜைக்கும் அவன் தன் அறைக் கும் சென்றார்கள்.
அவள் டைப்ரைட்டர் முன்னால் உட்கார்ந்து சுமார் பதினைந்து நிமிஷங்கள் வரை உருப்படியாக ஒன்றும் ஆரம்பிக்கவில்லை. ஏதோ இப்படியும் அப்படியுமாகப் பொழுதைப் போக்கிக்கொண் டிருந்தாள். பிறகும் மனமில்லாமல் டைப்ரைட்டரில் கார்பனோடு சில பேப்பர்களைச் செருகினாள்.
அவளுக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி அந்த ஹாலில் கடைசி யாக உட்கார்ந்திருக்கும் டெஸ்பாட்ச் கிருஷ்ணன் இரண்டொரு முறை அவளைப் பார்த்தான். அவள் அந்த அலுவலகத்தில் ஐந்து வருஷங்களுக்கு முன்பிருந்த பிலோமினாதானா என்று சந்தேகம் வந்தது. இதை அவன் அவர்கள் வராந்தாவில் நின்று பேசிக்கொண் டிருந்த போதே, அவள் தன் கணவன் பின்னால் நின்று வெறுமனே சிரித்து விட்டுப் போனபோதே நினைத்தான். அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது. இவள் மூன்று வருஷங்களுக்கு முன் இருந்த அந்த பிலோமினா அல்ல. அவளாக இருந்திருந்தால் அவளும் இவர் களோடு சேர்ந்து ஜோக் அடித்திருப்பாள். கலகலவென்று சிரித் திருப்பாள். அப்போதெல்லாம் அவள் முகத்தில் அலாதியான களையின் துள்ளல் இருக்கும். ஒரு தடவை அவள் இதே டைப் ரைட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு அடித்த ஜோக் இன்னும் அவன் நெஞ்சில் பசுமையாக இருந்தது.
அப்போது ராஜமாணிக்கம் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்க வில்லை. சாயக்காடு யூனியனில் இருந்தான்.
அவன் இங்கு மாற்றலாகி வந்ததுந்தான் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார்கள். அதற்கு முன் இந்த அலுவ லகத்தில் சோசியல் வெல்ஃபேர் ஒர்க்கராக இருந்த சாமி சுப்ர மணியம் உபதொழிலாகச் செய்துவந்தார். அவர் இவளுக்கொரு வரன் பார்த்தார். அந்த வரன் மதுரை எல்.ஐ.சி யில் வேலை பார்த்தான். கல்யாணப் பேச்சு ஆரம்ப நிலையில் இருந்தபோது பெண் பார்க்க ஒரு நாளைக்கு அவன் இந்த ஆபீஸ் வருவதாக இருந்தது. ஆனால் அப்படிச் சொன்னபடி அவனால் இரண்டு முறை வரமுடியாமல் போய்விட்டது. ஒரு நாள் அலுவலகம் முழுவதும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தபோது இவள் சத்தம் போட்டுச் சாமி சுப்பிரமணியத்திடம் கேட்டாள்; "என்னா சார் ஒங்க மாப்புள? எப்ப சார் வரப்போறாரு?"
அடுத்த தடவை, " அவரு பொண்ணு பார்க்க வரப்போறாரா இல்ல நான் மாப்புள பாக்க வரவான்னு கேட்டுட்டு வந்துடுங்க." இதைக் கேட்டு அந்த அலுவலகமே வெடித்துச் சிரித்தது. இதைச் சொல்லி விட்டு அவளும் அதே விகிதத்தில் சிரித்தாள்.
இரண்டு மெட்டர்னிட்டி அஸிஸ்டெண்டுகள் மானேஜர் மேஜை வரை வந்து யாரையோ தேடிவிட்டுப் போனார்கள். டைப் செய்துகொண்டிருந்த பிலோமினா அவர்களைக் கவனிக்கவில்லை. கிருஷ்ணன் பார்த்தான். அவர்களில் ஒருத்தி போவூர் மங்களம். சுமார் மூன்று மாதங்களுக்கு முன் அவளுக்கும் பிலோமினாவுக்கும் ஈவோக்கள் ஹாலில் நடந்த சண்டையும், அதில் ராஜமாணிக்கமும் கலந்துகொள்ள, முடிவு மிகவும் அசிங்கமாகிப் போனதையும் அவன் நினைத்துக் கொண்டான்.
ஒரு நாள் பிலோமினா இந்த ஹாலில் குடி தண்ணீர் தீர்ந்து விட்டதென்று ஈவோஸ் ஹாலுக்கு வந்தாள். அங்கே எப்போதும் பத்துப் பேர் இருந்துகொண்டிருப்பார்கள். பெரிய பீரோக்கள் அப்படியும் இப்படியுமாக நிறுத்தப்பட்டிருக்கும். அங்கே ஒருவர் இருப்பதை ஒருவர் கவனிக்காமல் இருந்து விடவும் வாய்ப்பு உண்டு. பிலோமினா வந்தபோது அங்கு ஒரு மூலையில் நின்று நான் கைந்து மெட்டர்னிட்டி அஸிஸ்டெண்டுகள் பேசிக்கொண்டிருந் தார்கள். அவர்களில் போவூர் மங்களமும் ஒருத்தி. அவர்கள் பிலோமினா வந்ததைக் கவனிக்கவில்லை. அவர்களுக்கு ஏதோ பயணப் படி Cash ஆகி வந்திருந்தது. அதை வாங்க வந்திருந்தார்கள்.
ராஜமாணிக்கம் பொதுவாக மனிதர்களை மதிக்காதவன். அதிலும் Cashன் முன் உட்கார்ந்து விட்டால் கமிஷனரையே மதிக்கமாட் டான். சும்மாவா? பணம் அல்லவா எல்லாருக்கும் கொடுக்கிறான்? அப்படியிருக்க இந்த அற்ப மெட்டர்னிட்டி அஸிஸ்டென்டுகளை மதிப்பானா? இவர்கள் போய்ப் பணம் கேட்டபோது, "அப்புறம்" என்று சொல்லிவிட்டான். பேசிக்கொண் டிருந்தவர்களிடம் புதிதாக வந்து சேர்ந்த அவர்களில் ஒருத்தி, "என்னா பணம் வாங்கியாச்சா?" என்றாள். அதற்கு இந்தப் போவூர் மங்களம், "அந்தக் கடயன் அதுக்குள்ள குடுத்துடுவானா? அவங்க அப்பன் வீட்டுப் பணத்தை அதுக்குள்ள வெளியே எடுத்துடுவானா?" என்றாள். அவர்கள் மெது வாகச் சிரித்தார்கள்.
இதைக் கேட்ட பிலோமினா உடனே சட்டென்று முகம் சிவக்க "மரியாதையா பேசுடி. நீ நெனச்ச ஒடனே குடுக்க நீயா சம்பளம் குடுத்து வச்சிருக்கே?" என்றாள். அவளை அங்கே கண்ட அவர்கள் திகைத்தார்கள். இருந்தாளும் மங்களம் சேசுபட்டவள் அல்ல. அவளுக்குப் பட்டப் பெயர் போவூர் ரௌடி. சண்டை சச்சரவுகள் அவளுக்கு மிக்ஸர் காராபூந்தி மாதிரி. எதையும் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் விறைப்பாக, "ஒண்ணும் மோசம் போயிடல. அவரும் எங்களக் காணாதப்ப அவளக் கூப்பிடு, இவ ளக் கூப்பிடுன்னுதான் சொல்லிக்கிட்டு இருக்காரு" என்றாள்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் காரமான வாக்குவாதம் நடந்து கொன்டிருந்தபோது விஷயம் தெரிந்து ராஜமாணிக்கம் வேகமாக வந்தான். வரும்போதே என்ன ஏதென்ற நிதானம் இல் லாமல், "தூக்கிப் போட்டு மிதிச்சா ரௌடிப் பட்டமெல்லாம் பறந்து போயிரும்" என்று சொல்லிக்கொண்டே வந்தான். இதைக் கேட்டு மற்றவர்கள் எல்லாம் என்ன நடக்குமோவென்று பயந்துவிட்ட போதிலும் மங்களம் மட்டும் எதிர்த்து, "எங்கடா, மிதி பார்க்கலாம்" என்று முன்னே வந்தாள்.
இது சில பெண்களின் துருப்புச் சீட்டு. ஓர் ஆணைப் பார்த்து 'அடா' என்று சொல்வதோடு 'அடிடா பார்க்கலாம்' என்றும் சொல்லி விட்டால் சரியானபடி அவமானப்படுத்தியதாகவும் இருக்கும். அதோடு நாளைக்கு நாலு பேர்," என்னா இருந்தாலும் பொம்பள மேல கைவக்கலாமா?" என்று கேட்பார்கள் என்று யாரும் அடிக்கப் போவதும் இல்லை. பொதுவாக இந்த இடத்தில் எல்லா ஆண்களும் திகைத்துப் போவார்கள். ஏதோ பெரிதாக ரத்தத்தைக் குடிக்கிற மாதிரி செய்யவேண்டும் போல் இருக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
அவள் சொன்னவுடன் ராஜமாணிக்கத்துக்கும் ஒரு கணம் அப்படித் தான் இருந்தது. ஆனாலும் அடுத்த நொடி சமாளித்து இவளை அடித்த பின் உண்டாகக்கூடிய அவமானத்தைவிட இப்போது அடிக்காமல் விடுகிற அவமானம் ஒன்றும் குறைந்ததல்லவென்று, "என்னாடி செஞ்சுடுவே?" என்று முன்னால் வந்து அவள் கன்னத்தில் அறைந் தான்.
இதை மங்களம் எதிர்பார்க்கவில்லை. அறை வாங்கிய ஒரு கணம் திகைத்துப் போனாள். ஆனால் அதன் பிறகு அவனையும் அலுவலகத்தையும் சாக்கடையாக்கி அடிக்க ஆரம்பித்தாள். வார்த் தைகளை, " டேய் அடிச்சுட்டியா? என் தம்பிகளைவுட்டு ஒன் கைய முறிக்கச் சொல்லல, போலீசில சொல்லி ஒன் முட்டிய முறிக் கச் சொல்லலவிருந்து அவனைப் பற்றிய அசிங்கமான வர்ணனை கள், அர்ச்சனைகள் வரையில் கொட்ட ஆரம்பித்தாள்.
இதைத் தடுக்க அவன் மேலும் அவளை அடிக்க முனைய வேண்டி யிருந்தது. ஆனால் மற்றவர்கள் ஒருவழியாக அவர்களைப் பிரித்து விட்டார்கள். அது கமிஷனர் வரை போய் அலுவலகத்தின் மானத் தைக் காப்பாற்றப் போலீசுக்குப் போகவேண்டாமென்று அவர் அவளைக் கேட்டுக்கொண்டதோடும், அவரது அறையில் வைத்து இவர்கள் இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கேட்டுக்கொண்ட தோடும் முடிந்தது.
அந்த நிகழ்ச்சி முழுவதிலும் பிலோமினாவின் முகத்தில் இருந்த கடுமையை நினைத்துக்கொண்ட கிருஷ்ணன், இப்போதைய முகத்தோடு அதை ஏனோ ஒப்பிட்டுப் பார்க்க விரும்பியவனாக அவள் முகத்தைப் பார்த்தான். அவன் பார்த்தபோதே அகஸ் மாத்தாக நிமிர்ந்து அவனைப் பார்த்த அவள், "என்னா சார், பார்க் கிறீங்க?" என்றாள். அவன், "ஒண்ணுமில்லை" என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
மாலை மணி மூன்று இருக்கும். அலுவலகத்தில் ஒரு பரபரப்பு. எல்லாரும் மெதுவாகச் சேர்மன் அறை முன்பாக கூட ஆரம்பித்து விட்டார்கள். பிலோமினா மட்டும் தன் டைப்ரைட்டர் முன்னால் மூக்கை உறிஞ்சியபடி படுத்திருந்தாள். ராஜமாணிக்கம் சேர்மன் அறையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். சேர்மன் பதிலுக்கு மிக மெதுவாகப் பேசியதால் வெளியே இருந்தவர்களுக்கு விஷயம் சரியாக விளங்கவில்லை. தவிர, சேர்மன் கிளர்க் வேதநாயகம் வேறு அறையின் வெளியே நின்றுகொண்டு, "கூட்டம் போடா தீங்க, கூட்டம் போடாதீங்க" என்று எல்லாரையும் தூரத்திலேயே நிறுத்திக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் ராஜமாணிக்கம், "அவ என்னோடு ஒய்ஃப்ங்கற தனாலும் நீங்க நெனச்சுப் பாத்திருக்கணும்" என்று கத்தியதும் அவரும் பதிலுக்கு, "அதுனாலதான்யா அத வுட்டதே; இல்லாட்டி அது பேசின பேச்சுக்கு நடந்திருக்கிறதே வேற" என்று உரத்துச் சொன்னதும் மட்டும் தெளிவாகக் கேட்டது. பிறகு, 'பாத்துக் கிறேன்' என்றதும் 'பாரேன்' என்றதுமான சவால்கள் கேட்டன.
வெளியே வந்த அவன் முகம் மிகவும் சிவந்திருந்தது. "மூன்று ஓட்டு வாங்கிக்கிட்டு வந்துட்டா என்னா வேண்ணாலும் பேசிடலாம்னு நெனப்புப் போல இருக்கு. அதெல்லாம் வேற ஆளுகிட்ட வச்சுக் கணும்" என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குப் போனான். கொஞ்ச நேரத்தில் சேர்மன் மேனேஜரைக் கூப்பிட்டனுப்பினார்.
ஆறுமணி சுமாருக்கு அவர்கள் பஸ் ஸ்டாண்ட் வந்தார்கள். அவர்கள் வெளியூர் திரும்பியிருந்த கமிஷனரை வீட்டில் வைத்துப் பார்த்து விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்திருந்தார்கள்.
காலையில் நின்றுகொண்டும் இடிபட்டுக்கொண்டும் வந்த பிரயாணிகளுக்கு நஷ்டஈடு செய்வதுபோல் பஸ் ஹாயாகக் கிடந் தது. மொத்தமே நான்கைந்து பேர்தான் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஏறி ஒரு சீட்டில் உட்கார்ந்துகொண்டார்கள். ஊர் வந்ததும் காலையில் போலவே ஜோடியாக வீடு வந்தார்கள். பூட்டைத் திறந்தார்கள்.
பூட்டைத் திறந்ததும் காலை ஒப்பந்தம் தானாக முறிந்தது. அவன் சென்று சட்டையைக் கழற்றிவிட்டு முகத்தைக் கழுவி உடம் பெல்லாம் அரை டின் பவுடரைக் கொட்டிக்கொண்டு, நிலைப் படிக்கு வந்து யாரோ வரப்போகிறவனை அடிக்கக் காத்திருப் பவனைப் போல இடுப்பில் கையை வெத்துக்கொண்டு நின்றான். அப்புறம் உள்ளும் வெளியுமாக நடந்தான்.
அவள் நேராக அப்படியே, சேலைகூட மாற்றாமல் போய் ஈஸிச்சேரில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள். இருவரும் வெகுநேரம் பேசவில்லை. பொது எதிரி போன்ற ஒருவனோடு இருவரும் இணைந்து சண்டை போட்டு வந்திருக்கும்போது சாதாரண மாக உண்டாகியிருக்கக்கூடிய ஒரு பற்றுதல் கூட அங்கே இல்லை.
ஒரு அரைமணி நேரத்தில் பால்காரப் பெண் வந்து பால் வைத்துவிட்டுப் போனாள். அரு ஒரு கால்மணி நேரம் வைத்த இடத்திலேயே இருந்தது.
இவன் முடிவாக உள்ளே வந்து வேறு திசையில் பார்த்துக் கொண்டு, "சோறு ஆக்கலியா?" என்றான். அவள் மெதுவாக, கண்ணைத் திறக்காமல், "ஆக்கலாம்" என்றாள். அவன் கடிகாரத் தைப் பார்த்தபடியே, "எப்ப ஆக்கறது? எப்ப திஙகறது?" என்றான்.
அவள் அதே பழைய நிதானத்தோடு, "என்னா செய்யறது? எனக்கு மட்டும் கையும் காலும் இரும்பாலயா அடிச்சுப் போட் டிருக்கு?" என்றாள். அவன் முகம் இறுகியது. பழையபடி உள்ளும் வெளியுமாக நடக்க ஆரம்பித்தான்.
மேலும் சுமார் பத்து நிமிஷம் சென்றதும் அவள் எழுந்து அடுப் படிக்குப் போனாள். ஸ்டவ்வைப் பற்றவைத்து அது பிடித்ததம் காற்றடித்துப் பால் பாத்திரத்தை வைத்தாள். பால் காய்ந்ததும் அதை இறக்கிவிட்டு ஸ்டவ்வில் உலைப் பானையை வைத்தாள். பிறகு அரிசி களைய ஆரம்பித்தாள். அப்போது அவன் அங்கு வந்து நின்றான். அவள் காபி போட்டுத் தருவாள் என்று எதிர்பார்த் தான் அவளோ அரிசி களைந்தபடியே, "பால் காஞ்சுடுங்க, புரூ போட்டுக் குடிங்க" என்றாள். அவன் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு ஒரு டம்ளரில் பால் ஊற்றி எடுத்துக்கொண்டு சர்க்கரையும் புரூவும் எங்கேயிருக்கின்றன என்று பார்த்தான்.
உலையில் அரிசி போட்டதும் அவள் ஒரு டம்ளரில் பால் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து படியிறங்க ஆரம்பித்தாள். அவன், அவள் பின்னால் இவளை வெட்டலாமா குத்தலாமா என்பது போல் பார்த்துக்கொண்டு நின்றான். இருந்தாலும் அவனால் அதைத் தடுக்க முடியாது. தடுக்க முனைந்த ஒன்றிரண்டு சமயங்களில் வாசலில் ஊர் கூடியதுதான் மிச்சம்.
அந்தத் தெருவில் மூன்று வீடு தள்ளி அவள் அக்காள் இருக் கிறாள். அக்காக்காரி சீக்குக்காரி. சமீபத்தில் ஒரு மாதமாக அவள் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அவள் புருஷனுக்கு ஹோட்டல் சாப் பாடு. அவனுக்கு இரவில் பால் காய்ச்சிக் கொடுக்கும் பொறுப்பை மட்டும் இவள் ஏற்றுக்கொண் டிருந்தாள்.
ஒரு தடவை இவன் கத்தினான். ஏன், "யாராச்சும் பசங்க கிட்ட எடுத்து வுடக்கூடாதா ?" அவளும் பதிலுக்குக் கத்தினாள். " நான் போனா அக்காவப் போய்ப் பாத்தீங்களா, எப்பிடியிருக்குனு ரெண்டு வார்த்த கேட்டுட்டு வருவேன்."
அவள் சென்று பதினைந்து நிமிஷம் கழித்துத் திரும்பி வந்தாள். அது வரை இங்கே இவன் சட்டியில் விழுந்த அரிசியாய் உள்ளே பொரிந்து கொண்டிருந்தான். அவள் வந்து சமையற்கட்டுக்குள் நுழையப் போனபோது, " கள்ளப்புருஷனோட கொஞ்சிட்டு வந்தாச்சா?" என்றான்.
அவள் நின்று திரும்பி ஒரு கணம் நிதானித்துவிட்டு அடக்கிய ஆத்திரமாக, " ஆமடா பயலே" என்று அவன் பிறந்த ஜாதியையும் சேர்த்துச் சொன்னாள், பலமாக. இது அவளது சமீபத்திய பழக்கம். அவனை அடிப்பதற்குரிய பெரிய ஆயுதமாக இதை அவள் கண்டு பிடித்திருந்தாள்.
அவன் ஜாதிகள் இல்லையென்று நினைப்பவனோ அல்லது தன் ஜாதி வேறு எதற்கும் சளைத்தது அல்லவென்று நிமிர்ந்து நின்று குரல் எழுப்புபவனோ அல்ல. ஏதோ ஒன்றின் நிழலில் தன்னை மறைத்துக்கொண்டால் போதுமென்று நினைப்பவன். அதன் காரணமாகத்தான் ஆண்டி என்ற தன் இயற்பெயரைக் கூட ராஜ மாணிக்கம் என்று மாற்றியிருந்தான். பிற்பாடு அவள் காரணமாக மதம் மாறவேண்டி வந்தபோது, அவனுக்கு உண்டான இன்னொரு பெரிய சந்தோஷம் தன் ஜாதிப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கிறது என்பது. தான் ரெட்டியார்-சிவப்பாக இருப்ப தில் அவனுக்கு ஒரே சமயத்தில் பெருமையும் உண்டு, உருத்தலும் உண்டு. யாராவது தன் பழைய ஜாதியைச் சொன்னாலோ அல்லது உறவினர்களைக் கண்டாலோ கூட அவனுக்கு எரிச்சலாக வரும். இந்த லட்சணத்தில் அவன் பழைய ஜாதியைச் சொல்லி, அதுவும் தானே திட்டினால் அவனுக்கு எப்படியிருக்குமென்று அவளுக்குச் சென்ற வாரச் சண்டையின்போது தோன்றியது. அதைப் பரீட் சித்துப் பார்த்து வெற்றியும் கண்டிருந்தாள்.
அவன் துள்ளி எழுந்து பாய்ந்து வந்து அவள் தலைமயிரை வலது கையால் பலமாகப் பற்றிக்கொண்டு, "ஆமாடி .... பயதான் ஏண்டி கட்டிக்கிட்டே?" என்றான்.
"சரிதான் விடுடா."
அவன் முடியை இடக் கைக்கு மாற்றிக்கொண்டு வலக் கையால் அவள் கன்னத்தில் அறைந்தான். "சொல்லுவியோ?" என்று கேட் டான். இரத்தம் தெறிக்கும் அந்த அடியை வாங்கிக்கொண்டு அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகம் சிவந்து கன்னி நின்றது. அது அவனைக் காட்டிக் கொடுத்தது. தான் அடித்த அடியும் சாதாரணமானதல்ல என்பது அவனுக்குப் புரிந்தது. ஆகவே அந்த அஸ்திரத்தையே திரும்பவும் செலுத்தினான். அழுத்தம் திருத்த மாகச் சொன்னாள்: "....பயலே!"
அவன் பின்னும் ஆத்திரத்துடன் அவள் தலையைக் கீழே அழுத்தி முதுகில் அடித்தான்.
"சொல்லுவியா?"
"பயலே!"
குத்தினான்.
"...பயலே!"
அவள் முடியை இழுத்து ஆட்டி அங்குமிங்கும் அலைக்கழித்தான். மீண்டும் மீண்டும் அடித்தான். குத்தினான். அவள் அவனது ஒவ்வொரு செயலின் போதும் அதையே விடாமல் சொல்லிக்கொண் டிருந்தாள். கையாளும் சொல்லாலும் என்ற இந்தப் போர் சில நிமிஷங்கள் நீடித்தது. என்ன ஆனாலும் சரி, இந்தப் போரில் தான் தோற்கப் போவதில்லையென்று அவள் உறுதி எடுத்து விட்டதாகத் தெரிந்தது. அவன் அடிகளுக்குத் தகுந்தமாதிரி அவள் குரலும் உயர்ந்துகொண்டே போயிற்று. கடைசியில் அவனுக்குத் தான் பயம் வந்தது. இனிப் பயனில்லை, ஊரைக் கூட்டிவிடுவாள். கூட்டி அவர்களிடம் இதைச் சொல்லுவாள் என்று பயந்தான். ஆகையால் களத்திலிருந்து தானே வாபஸாக நினைத்து அவளை ஒரு மூலையில் தள்ளிவிட்டு முறைத்துக்கொண்டு நின்றான். அவள் தள்ளாடிப் போய்த் தொப்பென்று விழுந்தாள். இருந்தாலும் எழுந்து உட்கார்ந்துக்கொண்டு தலையைத் தூக்கிச் சொன்னாள்: "பயலே!" அவனுக்கு ஓடி அப்படியே மிதிக்கலாமா என்று வந்தது. ஆனால் யாரோ கூப்பிட்டு அதெல்லாம் பிரயோஜனமில்லை என்று சொன்னதுபோல் தன்னை அடக்கிக்கொண்டு, "இரு, ரெண்டு நாளை யில் ஒனக்கொரு வழி பண்ணிவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு நாற்காலிக்குப் போனான். நாற்காலியில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.
சிறிதுநேரம் சென்றதும் அவள் அந்த இடத்திலேயே படுத்துக் கொண்டாள். உடல் வெந்த புண்ணாய் வலித்தது. ஆனால் தான் மட்டும் அடிவாங்கிவிட வில்லையென்ற நினைப்பு அந்த வலிக்கு ஓரளவு ஒத்தடமாக இருந்தது. இருந்தாலும் போராட்டத்தின்போது வராத கண்ணீர் இப்போது வந்து தரையில் தேங்கியது.
அங்கே கொசு அதிகம். மிக அதிகம். நிகழ்ச்சி நினைவுகள் அவர்கள் மூளையைப் பிடுங்கிக்கொம்டிருந்தபோது இவை அவர்கள் உடலைப் பிடுங்கின. கடைசியாக அவன் எழுந்து அடுப்படிக்கு வந்தான். ஸ்டௌவ்வும் உலையும் தன்னால் நின்று போயிருந்தன. அவன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வந்து கட்டிலில் படுக் கையை விரித்துக் கொசுவலையைத் தொங்கவிட்டுக்கொண்டு படுத் தான்.
கொசுக்கூட்டம் முழுவதும் அவள் மேல் திரும்பியது. சிறிது நேரத்தில் அவளும் எழுந்து தான் படுக்கும் இடத்துக்குச் சென்று படுக்கையைப் போட்டுக் கொசுவலையைக் கட்டிக்கொண்டு படுத் தாள்.
நீண்ட நேரம், மிக நீண்ட நேரம். அவளுக்குத் தூக்கம் வர வில்லை. இப்போது மணி ஒன்று அல்லது ஒன்றரை இருக்கலாம் என்று அவள் நினைத்தபோதுகூடத் தூக்கம் வரவில்லை. நிகழ்ச்சி-- நினைவுகள் மையம் பலவீனமடைந்து இதர சாதாரண் விஷயங்கள் இடையிடையே வந்தபோதுகூடத் தூக்கம் வரவில்லை. மாலையில் சேரமன் கேட்டதும் தொடர்ந்து நடந்ததும் நினைவில் வந்தன. நாளை செய்தாக வேண்டிய வேலைகள் வநதன. சென்ற ஆ்ண்டு உண்டான அபார்ஷன் வந்தது. தூக்கம் மட்டும் வரவில்லை. இப்போது, வாங்கிய அடிகளைவிட இந்தத் தூக்கமின்மை அதிக வேதனையை தர ஆரம்பித்தது. ஏதோ பத்தோடு பதினொன்றாக உடல் உறவும் நினைவில் வந்தது. அவள் சட்டென்று அதற்காகத் தன் மேலேயே எரிச்சல் பட்டாள். ' அதையா, இனிமேலா, இவனோடா' என்று நினைத்தாள். இனி செத்தாலும் அது மட்டும் கூடாதென்று உறுதி செய்துகொண்டாள். ஆனால் இப்படிப்பட்ட முன்னைய உறுதிகள் தகர்ந்துபோனதும் நினைவுக்கு வந்தது. விரோதமும், குரோதமும் கொப்பளித்து நின்ற சில நாட்களிலேயே. இன்னும் அவை நீறு பூத்த நெருப்பாக இருந்தபோதே அவர்கள் உடல் உறவு கொண்ட துண்டு. அதில் வியப்பு என்னவென்றால், ஒரு காலத்தில் அவர் கள் இரவிலுங்கூடக் கணவன் மனைவியாக இருந்தார்களே, அந்த நாட்களில் நடந்ததுபோலவே, இதிலும் கூட மூச்சுத் திணறும் அணைப்புகளும் ஆழ்ந்த முத்தங்களும் இருந்ததுதான். அதை இவள் ஒன்றிரண்டு தடவை நினைத்துப் பார்த்திருக்கிறாள். இப்போதும் கூட அது எப்படிச் சாத்தியமாகிறதென்று நினைத்தாள். ஆனால் இப்போது ஏதோ, மங்கலாக, நிரவலாக அதற்கு விடை போல ஒன்று தெளிந்தும் தெளியாமலும் தெரிந்தது.
அந்த நேரத்திய கொடுக்கல் வாங்கல்கள் ராஜமாணிக்கத்துக்கும் பிலோமினாவுக்கும் இடையே நடந்ததல்ல. ஓர் ஆணினுடையதும் ஒரு பெண்ணினுடையதுமான உடல் உணர்ச்சிகள் வடிகால் தேடிய போது சாத்தியமாகியிருந்த ஓர் ஆணின் மூலமாகவும் ஒரு பெண்ணின் மூலமாகவும் செயல்பட்டுக்கொண்ட நிகழ்ச்சிகள்.
கடைசியாக அவள் மெதுவாகக் கண் அயர்ந்தாள். எப்படித் தான் கொசுவலையைக் கட்டினாலும் விடிவதற்குள் எப்படியோ இரண்டு கொசுக்கள் உள்ளே வந்துவிடத்தான் செய்கின்றன. அப்படி வந்து இதுவரை இப்படியும் அப்படியுமாக இருந்த இரண்டு கொசுக்கள் அவள் உறங்கிவிட்டதும் நிம்மதியாக அவள்மேல் போய் உட்கார்ந்தன.
இனி அவை கொஞ்சம் இரத்தம் குடிக்கும். குடித்த பிறகுதான் வெளியே போக வழியில்லாதது அவற்றுக்குத் தெரியும். பிறகு வலையின் சுவர்களில் அங்குமிங்கும் சென்று மோதும். கடைசியாக ஒரு மூலை உயரத்தில் சென்று பிராண்டிப் பார்க்கும். காலையில் அந்த வலை சுருட்டப்படும் வரை அங்கேயே உட்கார்ந்து விடுதலைக்காகத் தியானம் செய்து கொண்டிருக்கும்.
-------------------------
அசோக மித்திரன் –
அசோகமித்திரன் என்ற ஜ.தியாகராஜன், முன்னர் நிஜாம் சம்ஸ்தானமாக இருந்த சிகந்திராபாத் நகரில் பிறந்தவர் (22-9-1931). 'கணையாழி' பத்திரிகையின் தொடக்கத்திலிருந்தே அதன் ஆசிரியப் பொறுப்பில் பங்கேற்றுள்ள இவர் தமிழ், ஆங்கிலம், இரு மொழிகளிலுமே எழுதி வரும் முழுநேர எழுத்தாளர். இவருடைய படைப்புகள் பல, இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிப் பெயர்ப்பாகியுள்ளன. 'கரைந்த நிழல்கள்' (நாவல், 1969), 'வாழ்விலே ஒரு முறை' (சிறுகதைகள், 1971), 'தண்ணீர் (நாவல், 1973), 'விடுதலை' (குறுநாவல்கள், 1979) இவருடைய சில முக்கிய நூல்கள். 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா' நடத்திய அகில இந்தியச் சிறுகதைப் போட்டியில் இவருடைய கதை பரிசு பெற்றது. '18-ஆவது அட்சக்கோடு (நாவல், 1977) ஆண்டின் சிறந்த நூலாக 'இலக்கியச் சிந்தனை' விருது பெற்றதோடு, நேஷனல் புக் டிரஸ்டின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ், பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களின் அழைப்பிற்கு இணங்க அமெரிக்காவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் சென்று வந்துள்ளார்.
முகவரி : 23, Damodara Reddy St., T.Nagar, Madras - 600017.
காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்
அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்துவிட்டது.
"ஹோல்டான்! ஹோல்டான்!" என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப்படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்த தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்கு மிங்கும் ஆடி அவனை நிலை தடுமாற வைத்துக் கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கி யிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கிய வண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை வடிவத்தில் உப்பிப் போயிருந்தது. அதனால் ஒரு கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை போலத் தூக்கிக் கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால் 'ஹோல்டான், ஹோல்டான்' என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தம் இல்லாத ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கை யுடன் பஸ் பின்னால் கத்திக் கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும்.
பஸ்! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான்? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து, பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில்நிலையம் போய்ச் சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் பின்வழியாக ஆண் களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறிய வண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத்தூரல், சாலையில் ஒரே மாடுகள், அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த இடத்தில் மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்தகதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக் கொண்டிருந்தது. பெருச்சாளி சந்து கிடைத்த இடத்தில் மட்டும் தன் பெருத்த, வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நிற்பதுபோல், அவன் ரெயில்நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் ஏறித் தங்கிவிட்டது. ரெயில்நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச் சொல்லிப் பஸ் நிற்கும் இடம் எங்கேயோ? அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா? ஒரு மைல் கூட இருக்கும்.
வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன், செருப்பு தைப்பவன், ஒரு குஷ்டரோகி, ஐந்று குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப்பிச்சை கேட்கும் ஒரு குடும்பம். ஐந்று குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் அசையாமல் கொள்ளாமல் அந்த மாலை நேரத்தில் எப்படித் தூங்க முடியும்? குழந்தைகளைக் கொன்று கிடத்திவிட்டார்களா? ஐயோ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை? இல்லை. குழந்தைகளை எப்படியோ தூங்கப் பண்ணிவிட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம், அதுதான் குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவி விட்டிருப்பார்கள். பாவம்! குழந்தைகள்!
அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள். நொண்டிகள், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன் முட்டாள். இப்படிச் சைக்கிளை நடை பாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச் சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஜந்துக்கள் எங்கே போவது? அவனைச் சொல்ல முடியாது; அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற் போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய்விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடைபாதைக்காரர்களை நிறுத்தி விட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழிகொடுத் திருக்கிறான். நான்கு லாரிகள், ஒவ்வொன்றும் பூதமாக இருக்கின்றது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவ தானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாய மாக மறைந்து போகமுடியும். அலாவுதீனுக்காக ஓர் அரண் மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண்முன் னால் கொண்டுவந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்தி வைத்து விடும்.
ஆயிற்று, நிலையத்தை அடைந்தாயிற்று. ெரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா? நான்கு டவுன் புக்கிங்கு ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம் வேலையில்லாமல் வெற்றிலைபாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட் வாங்கப் போயிருந்தால் வெற்றிலைப் பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள், யாரோ சொன்னார்கள், ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக் கொள் ளேன் என்று, யார் அந்த மடையன்? பக்கத்து விட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும், 'எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று இருந்துவிட்டான்.
இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ வரிசை. எல்லாம் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லரை சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்கவேண்டா மென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று, டிக்கெட் வாங்கி, சில் லரையைச் சரி பார்த்துக்கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால், எல்லாச் சட்டதிட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப் போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதை பிச்சைக்காரக் குழந்தைகள் போல அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்கவேண்டும். பிச்சைவாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண், பெண் இருவரும் அப்பா அம்மாவாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். அந்தக் குழந்தைகளுக்குப் பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது? அம்மா ஏது? அப்பா, அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா, அம்மா இல்லை. எங்கெங்கோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து மயக்கமருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி, அவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது கொடுப்பார்களா? கொடுக்கவேண்டும். அப்படித் தின்னக் கொடுக் காமல், ஒன்றும் தின்னக் கிடைக்காமல் எத்தனை குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப்போய் விடுகின்றனவோ? அப்பா, அம்மா இருந்து இதோ இவன் மயக்கம் போடாமல் பிச்சைக்காகக் காத்திருக் கிறான். பிச்சையில் ஒரு கட்டந்தான், இதோ, இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்றுகொண்டிருப்பது. ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும்.
இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. இப்போது கூட ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்கவேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர ஆரம்பித்து விட்டது.
ஓடினான். பிளாட்பாரத்தில் உலகத்தில் இல்லாதது இல்லை. எல்லாம் கூடை கூடைகளாக, மூட்டைகளாக, தகர டப்பாக்களாக இருந்தன. இவன் மோதிய ஒரு கூடை திடீரென்று கிரிச் கிரிச்சென்று கத்திற்று, கோழிகள். கூடைகூடையாக உயிரோடு கோழிகள். கூடைக்குள் நகர முடியாதபடி அடைத்து வைக்கப்பட்ட கோழிகள். அவற் றினால் கத்தத்தான் முடியும். கூற முடியாது. அதைத்தான் செய்தன, இவன் மோதியவுடன். அப்புறம் இந்தத் தபால்காரர்களின் தள்ளு வண்டி. வண்டியில் மலை மலையாகத் தபால் பைகள். புடைத்துப் போன தபால் பைகள், எவ்வளவோ ஆயிரம் பேர்கள் எவ்வளவோ ஆயிரம் பேர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரில் பார்த்துப் பேசமுடியாததை எல்லாம் கடிதமாக எழுதியிருக்கிறார்கள். இவர்கள் நேரில் பார்த்தால்தான் எவ்வளவு பேசமுடியப் போகிறது? கடிதத்தில், 'இங்கு யாவரும் நலம். தங்கள் நலம் அறிய ஆவலாய் இருக்கிறேன்' என்று மறுசிந்தனை இல்லாமல் எழுதிவிடலாம். கடிதத்தில் அது ஒரு செளகரியம்.
இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரெயிலைப் பிடித்துவிட முடியமா? முடியலாம். ரெயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப் பிடிக்கவே முடியாது. அதுதான் உண்மை போலத் தோன்றுகிறது. எதையுமே எட்டிப் பிடிக்க முடிவதில்லை. இருந்தபோதிலும் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக் கிறது; இந்த ரெயிலைப் பிடித்றுவிட வேண்டும்.
"ஹோல்டான், ஹோல்டான்!" என்று கத்திக்கொண்டு ஒற்றைச் சிறகை விரித்துக்கொண்டு பையில் திணித்திருக்கும் அலுமினியத் தம்ளர் கணத்துக்கு ஒருதரம் அவன் விலா எலும்பைத் தாக்க அவன் ரெயில் பின்னால் ஓடினான். திடீரென்று பிளாட்பாரம் முழுக்க காலியாகப் போய்விட்டது. அவன், அந்தரெயில், அந்த இரண்டுந்தான். இப்போறு நிச்சயம் ஓடிப் போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள்!
"தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும்!"
"அந்த ரெயிலையா?"
"ஆமாம். அதைப் பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்துமணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்!"
"வேலை கிடைத்துவிடுமோ?"
"வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!"
"நீ என்ன ஜாதி?"
"நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு சடங்கு, கர்மம் செய்வதில்லை. பெரிதாக மீசை வளர்த்றுக் கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின் இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது. தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!"
"நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா?"
"போ தள்ளி! பெரிய கடவுள்."
மீண்டும் ஒற்றைச் சிறகு. ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன் அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன? இப்போது நேரம் இல்லை. அந்தத் தம்ளரே எதற்கு? தண்ணீர் குடிப்பதற்கு அல்ல; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து ஒழுங்காகச் சவரம் செய்துகொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும் இண்டர்வீயூவுக்கு முகச்சவரம் செய்து கொண்டு போகவேண்டும்! இந்த கடவுளுக்குத் தெரியுமோ. எனக்கு வேலை கிடைக்காதென்று?
இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். ரெயில் மெதுவாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ஓர் அவதி. ரெயிலின் கடைசிப் பெட்டியில் ஏறிக் கொள்ள முடியாது. அது கார்டு வண்டியாக இருக்கும். முற்றும் மூடிய பார்சல் பெட்டியாக இருக்கும். ஆதலால் ரெயிலை எட்டிப் பிடித்துவிட்டால் மட்டும் போதாது. ஒன்றிரண்டு பெட்டிகளையும் கடந்து செல்லவேண்டும். மீண்டும் கடவுள்.
"அட ராமச்சந்திரா! மறுபடியுமா?"
"ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான்."
"அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யுமேன்!"
"நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகக் கிளம்பியிருக்கக் கூடாது?"
"ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?"
"அப்போது அநுபவிக்க வேண்டியதுதான்."
"இதைச் சொல்ல நீர் எதற்கு? நான்தான் அநுபவத்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளிப் போம்"
இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. இதற்காக எத்தனை பக்தர்கள், எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு பட்டிருக்கிறார்கள்? இல்லாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்! புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன்! கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே?
இப்படி ஓடி ஓடியும் ஐந்து நிமிஷம் பத்து நிமிஷக்காலத் தாமதத்தில் எவ்வளவோ தவறிப் போயிருக்கிறது. தவறிப் போவதற்கென்றே திட்டமிட்டுக் காரியங்களைக் காலதாமதமாகச் செய்ய ஆரம்பித்து, அப்புறம் இல்லாத ஓட்டம் ஓடி, கடைசியில் என்ன ஓடினாலும் முடியாது என்று ஆகும்போது, "பார் என் துரதிஷ்டம்! பார், என் தலையெழுத்து!" என்று சொல்லச் சௌகரியமாயிருக்கிறது.
நாளையோடு இருபத்தைந்து வயது முடிகிறது. இனிமேல் இந்த மாதிரி இடங்களில் உத்தியோகம் எதிர்பார்க்க முடியாது. வேலை வாய்ப்பு என்பது நாளை கழிந்தால் அப்படியே ஒன்றுக்குக் காலாகி விடும். முழுவாசி வேலை வாய்ப்பில் படிப்பு முடிந்து இந்த ஆறு வருஷங்களில் விட்டுவிட்டு எண்பத்தொரு நாட்கள் தினக்கூலி வேலை. ஒரு மாதம் நான்கு நாட்கள் ஒரு பண்டாபீஸில் தாற்காலிகமாக. அவ்வளவுதான். ஒரு வேளை வேலைக்கென்று உண்மையாகவே தீவிரமாக முயற்சி செய்யவில்லையோ? முயற்சி. விடாமுயற்சி, தீவிரமுயற்சி. முயற்சி திருவினையாக்கும். திருவினை யாக்கும். பணக்காரன் ஆகலாம். பணம் வந்தால் ரெயில் நிலையத் துக்குப் பஸ்ஸில் வரவேண்டாம். ஒரு டாக்ஸியில் குறித்த நேரத்தில் வரலாம். ரெயில் பின்னால் சிறகொடிந்த நெருப்புக் கோழிபோல ஓட வேண்டியதில்லை. அதுவும் 'ஹோல்டான்! ஹோல்டான்!' என்று கத்திக்கொண்டு. இந்த ஹோல்டான் என்ற சொல்லே தரித்திரத்தின் குறியீடு.
நகர்ந்துகொண்டே இருக்கும் உலகத்தை ஹோல்டான் சொல்லி நிறுத்திவிட முடியுமா? உலகம் நகர்ந்துகொண்டா இருக்கிறது? பயங்கரமான வேகத்தில் அண்டவெளியில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல. இன்னும் ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான அண்டங்கள், உலகங்கள், தலைதெறிக்கும் வேகத்தில் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கின்றன. இத்தனை அண்ட சராசரங்களைச் சிருஷ்டித்துவிட்டு அவற்றைக் கனவேகத்தில் தூக்கி எறிந்துவிட்டு இந்த கடவுள் என் முன்னால் நின்று நான் ஓடுவதைத் தடுக்கிறது!
நான் எங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன்? ஒரு ரெயிலைப் பிடிக்க, இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான் ரெயிலைப் பிடிக்கவேண்டும், அல்லது அது என்ன விட்டுப் போய்விட வேண்டும். அந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக் கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக் கூடக் கொண்டுவந்து விட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?
எனக்குத் தெரியாது. எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந் ததே காலம். அல்லது இரண்டும் இல்லை. என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்றுகொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை. நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியே தான் இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள். ஆறு ஆண்டுகள். எண்பத்தொரு நாட்கள். ஒருமாதம் நாந்கு நாட்கள். பஸ்ஸில் பெருச்சாளி ஊர்தல், ஐந்து குழந்தைகள், கூடைநிறையக் கோழிகள். கிரிச், கிரிச், கொக்கரக்கோ இல்லை. இருமுறை கடவுள் பிரத்தியட்சம். கடவுள் என்றால் என்ன? என் மனப்பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார்? அவருக்கு என்ன அடையாளம் கூறமுடியும்? அவர் என்னும் போதே கடவுள் ஏதோ ஆண்பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண்பாலா? ஐந்து குழந்தைகள், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள், மயக்கம் தெளியும் வரையில் அந்தக் குழந்தை களுக்குக் காலம் நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண் டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன? எங்கே ரெயில்? எங்கே ரெயில்?
அவன், டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். உப்பியிருந்த தோல் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக்கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்தது.

ஆசிரியர் | சிறுகதை | பக்கம் |
முன்னுரை | v | |
1. கிருஷ்ணன் நம்பி | மருமகள் வாக்கு | ... 1 |
2. அம்பை | மிலேச்சன் | ... 10 |
3. ஆதவன் | நிழல்கள் | ... 20 |
4. வண்ணநிலவன் | எஸ்தர் | ... 31 |
5. சார்வாகன் | உத்தியோக ரேகை | ... 45 |
6. இந்திரா பார்த்தசாரதி | தொலைவு | ... 57 |
7. நீல. பத்மநாபன் | சண்டையும் சமாதானமும் | ... 66 |
8. ஆ. மாதவன் | நாயனம் | ... 76 |
9. சுஜாதா | நகரம் | ... 83 |
10. சா. கந்தசாமி | ஒரு வருடம் சென்றது | ... 91 |
11. நாஞ்சில் நாடன் | ஒரு இந்நாட்டு மன்னர் | ... 103 |
12. வண்ணதாசன் | தனுமை | ... 113 |
13. கி. ராஜநாராயணன் | நாற்காலி | ... 122 |
14. ஆர். சூடாமணி | அந்நியர்கள் | ... 132 |
15. ஜெயந்தன் | பகல் உறவுகள் | ... 144 |
16. அசோகமித்திரன் | காலமும் ஐந்து குழந்தைகளும் | ... 157 |
1. கிருஷ்ணன் நம்பி : மருமகள் வாக்கு

2. அம்பை: மிலேச்சன்

3 ஆதவன்: நிழல்கள்

4. வண்ண நிலவன் : எஸ்தர்

5. சார்வாகன் : உத்தியோக ரேகை

6. இந்திரா பார்த்தசாரதி : தொலைவு

7. நீல. பத்மநாபன்: : சண்டையும் சமாதானமும்

8. ஆ. மாதவன் : நாயனம்

9. சுஜாதா : நகரம்

10. சா. கந்தசாமி : ஒரு வருடம் சென்றது

11. நாஞ்சில் நாடன் : ஒரு 'இந்நாட்டு மன்னர்'

12. வண்ணதாசன் : தனுமை

13. கி. ராஜநாராயணன் : நாற்காலி

14. ஆர்.சூடாமணி : அந்நியர்கள்

15. ஜெயந்தன் : பகல் உறவுகள்

16. அசோக மித்திரன் : காலமும் ஐந்து குழந்தைகளும்

கருத்துகள்
கருத்துரையிடுக