பனியும் பனையும்
சிறுகதைகள்
Backபனியும் பனையும்
தொகுப்பு:
இந்திரா பார்த்தசாரதி
எஸ்.பொ.
----------------------------------------------
பதிப்புரை
'தமிழுக்கு எல்லையில்லை. கலைகளுக்கு எல்லையில்லை. தமிழின் புதுப்புனைவுகளுக்கு எல்லையில்லை. புது நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய கலை-இலக்கிய நேசிப்புகளும், ஆக்க முனைப்புகளும் கௌரவிக்கப்படல் வேண்டும்' என்றும், 'இந்தப் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களுடைய படைப்புகளைக் கௌரவிக்கும்' என்றும், "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது பாரதி வாழ்ந்த காலத்தில் ஓர் இலட்சியக் கனவு. ஆனால், இன்று தமிழ் உயர்ச்சியின் அவசிய இலக்கு' என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 'மித்ர வெளியீ'டின் முதலாவது நூலுக்குப் பதிப்புரை எழுதும் பொழுது என் ஆசைகளை வெளிப்படுத்தியிருந்தேன்.
இந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சரியான திசையிலே நமது இலக்கியப் பயணம் தொடருகின்றது என்பதற்கு 'பனியும் பனையும்' என்னும் இந்த நூல் சான்று. ஒன்பது நாடுகளைச் சேர்ந்த முப்பத்தொன்பது எழுத்தாளர்களுடைய சிறுகதைகள் இதில் உண்டு. பலர் புதியவர்கள்.
நமக்காக' கதைக் களஞ்சியங்கள்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியும் எஸ்.பொ.வும் அவற்றின் முன்னோட்டமாகவும், தமது பணிக்குச் சர்வதேசியப் படைப்பாளிகளின் ஒத்துழைப்பினை ஈர்க்கும் முகமாகவும் இதனைத் தொகுத்தமை பாராட்டிற்குரியது.
எதற்கும் ஓர் ஆரம்பம் உண்டு. ஆரம்பம் முழுமையாக அமைவதும் சாத்தியமில்லை. ஆனால், சத்தியத்தை மூலதனமாகக் கொண்டுள்ள பணிக்கும், அதன் துவக்கத்துக்கும் தவணையிடலாகாது. இந்த ஆரம்பத்தில் தவறிப் போயிருக்கக்கூடிய புதிய பார்வைகள், புதிய கோலங்கள். புதிய சுருதிகள், புதிய படைப்புகள் ஆகியவற்றுடன் ஆரோக்கியமானதும், ஆக்கபூர்வமானதுமான தொடர்புகளை இந்தத் தொகுதி ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.
புலம் பெயர்ந்த நாடுகளிலோ வாழும் தமிழர்கள், நம்மவர்களுடைய படைப்புகளைக் காசு கொடுத்து வாங்கி ஆதரித்தல் வேண்டும். இஃது உந்நதமான தமிழ்ச் சேவை என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்தால், நமது புதிய படைப்பாளிகள் ஊக்கமுடன் படைப்புத் துறையில் ஈடுபடும் ஆர்வம் பெருகும்.
அன்புடன்,
டாக்டர் பொன்.அநுர
Eastwood
Australia
14.11.94
நுழைவாயில்-1
1993 ஆகஸ்ட். நான் ஆஸ்த்திரேலியாவிலிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தேன். விமானத்தில் என் அருகில் ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளையர் ஒருவர். அவர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நானும் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்தவன் என்று, தமிழன் என்று.
அவர் ஆச்சர்யத்துடன் வினவினார்; 'இந்தியாவிலும் தமிழர்கள் இருக்கின்றார்களா?'
அவர் கேள்வி என்னை ஆச்சர்யத்துள்ளாக்கவில்லை. அந்த அளவுக்கு, இன்று ஆஸ்த்திரேலியாவில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை அங்கு அறிவித்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயரவில்லை. அரசியல் அவர்களை அகதிகளாக அயல் நாடுகளுக்கு அடித்து விரட்டியுள்ளது. இச்சூழ்நிலையில் அவர்கள் தங்கள் இருக்கையைத் தங்களுக்குத் தாங்களே புலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகிறது. கலாசாரப் பிரக்ஞைதான் இதற்கேற்ற 'ஆக்ஸ’ஜன்'. வேற்று முகங்களிடையே, பண்பாட்டுச் சூழலிலேயே அவர்கள் முகங்களை அவர்களுக்கே அடையாளப்படுத்திக் காட்டும் கண்ணாடி இலக்கியம். இது அவர்களுக்கு ஒரு வடிகால். கலாசார ஜ“விதப் போராட்டத்தின் உன்னத அறிகுறி. கம்யூனிஸ அமைப்பைப் புறக்கணித்து, அந்நாடுகளிலிருந்து பலர் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களைக் கலை இலக்கிய விற்பன்னர்களாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் உண்டு. ஆனால், அவர்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் சென்றவர்கள். இலங்கையிலிருந்து சென்ற தமிழர்கள் நாங்களாகவே தேர்ந்தெடுத்து இச்சிலுவையைச் சுமக்கவில்லை. அவர்களால் அகதிகளாய்ச் செவ்வதைத் தவிர்க்க முடியவில்லை. பனையை வேறோடு பறித்து, அதைப் பனி மண்ணில் வளர்த்தாக வேண்டுமென்று சபிப்பது போல.
அவ்வாறு 'சபிக்கப்பட்டால்', அது இலக்கியத்துக்கு ஆதாயம் என்பதை இத்தொகுப்பிலுள்ள கதைகள் உணர்த்தும்.
எஸ்.பொ.வை நான் 1993-ல் ஆஸ்த்திரேலியாவில் சந்தித்தபோதுதான் 'சர்வதேசத் தமிழ்க் கதைத் தொகுப்பு' ஒன்றைப் பல பகுதிகளாக பல்வேறு போக்குகளை எடுத்துக் காட்டும் வகையில், வரலாற்றுப் பார்வையுடன் வெளிக் கொணர வேண்டுமென்ற ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது.
எந்தப் பணிக்கும் ஒரு தொடக்கம் வேண்டும். அதுவும் குறிப்பிடத்தக்கது நல்லதொரு தொடக்கமாக இருத்தல் வேண்டும்.
அத்தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், முதற்கண் இத்தொகுப்பு நூலை, 'பனியும் பனையும்' என்று தலைப்பிட்டு வெளியிடுகிறோம்.
இது முழுக்க முழுக்க ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைப் பனி எப்படிப் பாதித்திருக்கின்றது என்று காட்டும் கலாசார அடையாளங்கள். இதில் ஆஸ்த்திரேலியாவிலிருந்து 9, ஐரோப்பாவிலிருந்து (பிரிட்டன், ஹாலந்து, சுவிட்ஸர்லாந்து, நார்வே, ஃப்ரான்ஸ், டென்மார்க் ஜெர்மன் ஆகிய நாடுகள்) 20, வட அமெரிக்காவிலிருந்து 10, ஆக முப்பத்தொன்பது கதைகள் உள்ளன.
இவர்கள் குடியேறிய அந்தந்த நாட்டுக்கும் ஒரு கலாசார சரித்திரம் உண்டு. அந்தச் சரித்திரத்துக் கேற்றபடி நான் அந்தந்த நாட்டின் சமகாலத்தியச் சமுதாயம் அமைந்திருக்க முடியும். புதிதாக குடியேறுகின்றவர்கள். அச்சமுதாயத்தில் வாழ முற்படும்போது ஏற்படுகின்ற பாதிப்புகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதற்கான காரணத்தை, இவ்வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால்தான் புரிந்து கொள்ள முடியும். இப்பாதிப்புக்கள் மிக அழகாக இப்படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இக்கதைகள் எல்லாவற்றையும் இணைக்கும் ஆதார ஸ்ருதி; நேர்மை, எழுத்து நேர்மை. கலாசாரத்தின் பேரில் பலவகையான தளைகளை தங்களுக்கிட்டுக் கொண்டு காரணமற்ற குற்ற உணர்ச்சியால் கீழை நாடுகளில் அவதியுறும் இளைஞர்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் இருக்கும் மேற்கத்திய சமுதாயங்களை நேர்கொள்ளும் போது, அவர்களுக்கேற்படும் அதிர்ச்சிகள், கேள்விகள், தயக்கங்கள், மனச்சலனங்கள், உடன்பாடுகள், மறுப்புக்கள் எல்லாமே அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பு ஒரு முன்னோட்டம். எங்களுடைய மகத்தான பணிக்கு ('சர்வதேசத் தமிழ்ச் சிறுகதைத் தொகப்பு') முன் அறிவிப்பு. இது விமர்சன ரீதியாகவும். வணிக ரீதியாகவும் அடையும் வெற்றிதான் எங்களுடைய சீரிய இன்னோர் பணிக்கு உரிய உற்சாகத்தையும், மனஉறுதியையும் அளிக்க வேண்டுமென்று தொகுப்பாசிரியர்கள் என்ற முறையில் எஸ்.பொ.வும் நானும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இந்நூலுக்கு, அவருக்கே உரித்தான அணுகலுடன், மிக நேர்த்தியான ஒரு முன்னுரை வழங்கியுள்ள எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு எங்கள் நன்றி.
இந்திரா பார்த்தசாரதி
3, 'Ashwarooda0
248-A. T.T.K. Road,
MADRAS-600 018.
8-11-94.
நுழைவாயில்-II
நான் நிர்ப்பந்த வசத்தால் பரதேசியானவன். இதனால் நேர்ந்த இழப்புகள் அனைத்தையும் தமிழ் ஊழியத்தினால் ஈடு செய்யலாம் என்ற ஞானம் பெற்ற பரதேசி. இந்த ஞானம் போதிமர நீழலின் சகாயமல்ல. படைப்பு சரஸ். இறக்கும் வரை நான் வசப்படுத்திய சரஸ் ஊறிக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் என் தவம். இதனாலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் தமிழ் ஊழியம் தொடர்ந்தது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் சிறுசஞ்சிகைளின் பரமார்த்த வாசகனும் நான். பல நாடுகளிலே வாழும் படைப்பாளிகளுடனும் ஞானப் பகிர்வினை யாசிப்பவனும், சிறு சிறு குழுக்களாய் நமது ரஸனையை எல்லைப்படுத்திக் கொள்ளுதல், நமது படைப்பு வீரியத்தினை சிதறச் செய்கின்றதோ என்கிற அச்சம் என்னுள் எழுந்தது. 'மறைவாகப் புதுக்கதைகள் பேசி' மகிழும் ஒரு போக்கு. தமிழின் ஆதாயமாகக் கனியாது என்கிற உண்மையும் உறைக்கலாயிற்று. நமது படைப்பு முயற்சிகள் ஒரு முகப்படுத்தப்படும் பொழுது புதியன சாதித்தல் சாத்தியம் என்ற ஞானம் விடிந்தது. இந்த ஞானத்தைச் செயற்படுத்தும் தலைமை ஊழியக்காரனாய் என்னை நானேநியமித்துக் கொண்டேன். இந்த ஊழியத்தின் நம்பிக்கைப் பேழையாய் இந்த நூல் அமைகின்றது.
'இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் ஈழத்தமிழரின் புதிய படைப்பாற்றல் தலைமை தாங்கும்' என்கிற சுவிசேஷத்தை என் இந்த யாத்ராவில் முன்வைத்தேன். பல வட்டங்களையும் சேர்ந்த இலக்கிய நேசர்களுடன் இது குறித்தும் பேசினேன்; விவாதித்தேன். என் கூற்றினை எண்பிக்க, புதிய படைப்பாற்றல்களின் கோலங்களின் வகையையும் வண்ணத்தையும் முன்வைக்கும் தொகுதிகளை வெளியிடுதல் அவசியம் என்பதையும் உணர்ந்தேன். இத்தொகுதிகளை வெளியிடும் முயற்சியின் முன்னோட்டமாகவும் பனியும் பனையும் அமைகிறது.
'பனியும் பனையும்' என்கிற தலைப்பே ஒரு குறியீடுதான். பனைமர மண்ணின் மணத்தையும், பண்பையும், உறவையும், தியானத்தை மறக்காத பரதேசிகள் நாங்கள். பனி பெய்யும் அந்நியச் சூழ்நிலைகளிலே, வாழ ஏர்வைப் பட்டுள்ளோம். புதிய நாடுகளிலே நமக்கு ஒரு தனித்துவ கலாசார Identity ஐத் தக்க வைக்கும் வேள்வியாகவும் நமது வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே, நமது படைப்புகளிலே பனையின் கலாசார வேர்களும், பனிக்குளிரின் புதிய நிர்ப்பந்தங்களும் சங்கமிக்கின்றன. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுடைய, சர்வதேசியப் பாங்கான இந்த முதலாவது தொகுதிக்கு இப்பெயர் நியாயமாகப் பொருந்தும். இத்தொகுதியைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் நாம் பூண்டுள்ள படைப்பு நேர்த்திகளைப் புலப்படுத்தும் தொகுதிகள் வெளிவருதல், அடுத்த நூற்றாண்டின் வாசகர்களைப் பதப்படுத்தவும் வசப்படுத்தவும் உதவும்.
இத்தொகுப்பு வேலைகள் என் படைப்பிலக்கியப் படைப்பு நேரத்தினை விழுங்கும் என்பது உண்மை. என் சொந்த இழப்புகள், என் இனத்தின் பெருமையையும் மகிமையையும் உயர்த்துமானால், அஃது இனிதே, ஓர் இனத்தினது கௌரவம் என் பிரபலத்திலும் பார்க்க மகத்தானது. அந்த இனத்தின் வீறார்ந்த பணியிலே நான் செயலூக்கமுள்ள ஊழியனாய்ப் பிணைவதினால், இழப்பு என்று சொல்லவும் ஏலாது. இதனாலும் இனிமை என்றேன்.
என் புகழையும் வித்துவத்தையும் பிரசித்தப்படுத்தும் ஓர் உபாயமாக, என் இலக்கிய ஊழியத்தை நான் என்றும் தரிசித்ததேயில்லை. என் அனுபவங்களை இளைய படைப்பாளிகளுடன் பகி‘ந்து கொள்வதை இலக்கிய சகாயத்திற்கு உதவும் ஒரு சல்லாபமாகவும் மதிக்கின்றேன். இதனை ஒரு போஷகமாகவும் நான் நினைக்கவில்லை. என்னைச் சதா இளமைப்படுத்துவதற்கு இந்தச் சல்லாபம் ஓர் ஊக்கியும். இதனைப் புதியவர்கள் விளங்கிக் கொள்ளுதல் என் பேறு.
இத்தொகுதிகள் தனிமனித முயற்சிகளாக அல்லாமல், கூட்டு முயற்சியாகக் கனிதல் வேண்டும். இதற்குத் தற்பற்றைத் துறக்கும் மனசுந் தேவை. குழு விசுவாசங்களை நெகிழ்த்தும் இலக்கியப் பக்தி வேணும். ஞானத்தைப் படைப்பதிலும் பகிர்வதிலும் ஆத்மார்த்த ஈடுபாடு அவசியம். தமிழ் இனத்தின் தனித்துவ முகத்தையும் அடையாளங்களையும் பேணும் உயர்வேள்வியின் ஆகுதியாக நம் எழுத்து ஏற்றம் பெறல் வேண்டும் என்கிற பக்குவம் தேவை.
அத்தகைய மனசர்கள், பக்தர்கள், பக்குவர்களுடைய சகல ஒத்துழைப்பையும் யாசிக்கின்றேன். நமது படைப்பின் வீறையும் விருந்தையும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் எடுத்துச் செல்வோம்.
எஸ்.பொ.
9-11-1994
கோபுர வாயில்
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகளின் மகத்தான இந்தத் தொகுப்பின் கதைகளைப் படித்து ரசித்தேன். சிறுகதை எழுதுவது மேல்நாட்டில் குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. உலகயுத்தத்திற்குப் பிறகு ப்ரெஞ்சு எழுத்தாளர்களில் மிகச் சிலரே சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்கள். அதே போல் குந்தர்ஃக்ராஸ், பீட்டர் ஹாண்கே, மாக்ஸ் ஃப்ரிஷ் போன்ற ஜெர்மானிய எழுத்தாளர்களுக்கும் கதைத் தொகுப்புக்கள் இல்லை. பிரிட்டிஷ் எழுத்தாளர்களிலும் சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடுபவர்கள் அரிதே. எல்லோரும் பெரிய பெரிய நாவல்கள் தான் எழுதுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ப்ரான்சு ஜெர்மனி இங்கிலாந்து ஆஸ்திரேலிய கனடா நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் மிகப்பெரிய சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. சிறுகதைக் கலை இறந்து விடவில்லை. இந்த அவசர யுகத்திலும் நன்றாக எழுதப்பட்ட சிறுகதைகள் ஒரு உணர்ச்சி பூர்வமான, எளிதில் மறக்க இயலாத அனுபவத்தைத் தருகின்றன.
இலங்கைத் தமிழர்களின் புலப்பெயர்ச்சிக்கு அந்த நாட்டில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும், மறுக்கப்பட்ட உரிமைகளும், நேர்ந்த சில சமூக அனியாயங்களும் காரணங்கள் என்பது நமக்குத் தெரியும். எந்தப் பிரிவிலும் துக்கம் இருக்கிறது. எந்த இழப்பிலும் தனிமையிலும் கவிதை கலந்த சோகமும் நல்ல சிறுகதைக் கான விஷயமும் இருக்கிறது. அதை மிகை தவிர்த்து எழுதத் தெரியவேண்டும். அவ்வளவே. இதில் பலர் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள். சிறுகதை எழுதிவதில் அனுபவமின்மை சிலரிடம் தென்பட்டாலும் அவர்கள் சொல்லும் ஆதாரக் கருத்தில், யோக்கியம் கதைகளைக் காப்பாற்றி வருகிறது.
புலம் பெயர்தல் மட்டுமே நல்லகதைக்குப் போதுமான கருப்பொருளாகாது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் தான் பலர் பலவகையில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். படிப்புக்காகவும் உத்தியோகத்துக்காகவும் மற்றமானிலங்களுக்கும் நாடுகளுக்கும் குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தொகுதியில் உள்ளது போன்ற சிறப்பான சிறுகதைகள் (நாஞ்சில் நாடன் போன்ற ஒரு சிலரைத் தவிர) எழுதவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் விரும்பிச் சென்றவர்கள்; விட்டுச் சென்றவர்கள். அப்படி விட்டுச்சென்ற தாய்நாட்டின் பால் அவர்களுக்கு ஏக்கமும் அதிகம் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் ஈழம் போல உயிர்வாழத் தவிப்புக்களும் சஞ்சலங்களும் இல்லை. வாழ்க்கையின் திசையை தீர்மானித்துப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்கள். அவர்கள் எழுதும் கதைகளில் எல்லாம் நாட்டுத் தமிழர்கள். அவர்கள் எழுதும் கதைகளில் எல்லாம் ஒரு விதமான குற்ற உணர்ச்சியும் திரும்பிவந்து நம்மூர் அவலங்களுடன் சமரசம் செய்து கொள்வதில் உள்ள சங்கடங்களையும் தான் காண்கிறேன். தீவிரமான தேச நேசம் இல்லை.
ஈழத்தமிழர்கள் அப்படி இல்லை.
"யாழ்நகரில் அப்படி இல்லை.
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில என் அம்மா
சுற்றம் ப்ராங்போட்டில்
ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம்போல் ஒஸ்லோவில்!!"
என்று ஜெயபாலன் சொல்வதுபோல் "காற்றில் விதிக் குரங்கு கிழித்தெரியும் பஞ்சுத் தலையணைபோல்" உலகெங்கும் சிதற அடிக்கப் பட்டவர்கள். அன்னிய நாட்டில் வேற்றுமுக வெறுப்புகளின் மத்தியில் இரவும் பகலும் குளிரும் மழையும் கருதாது ரெஸ்டாரண்டுகளிலும் ரயிலடிகளிலும் உழைத்து இயக்கத்துக்கும் குடும்பத்துக்கும் பணம் அனுப்பி பெரும்பாலும் தனிமையில் வாழும், அறைக்குவந்து சேர்ந்தபின் தாய்நாட்டின் பழமரங்கள் நட்டு வைத்த தோப்புக்களை அழியவிட்டுத் தொலை தூரம் வந்ததை எண்ணி ஏக்கப்படுகிறவர்களிடம் உக்கிரமான கவிதையும் கதையும் பிறப்பதில் வியப்பில்லை. 'பனியும் பனையும்' என்று தற்செயலாகப் பொருந்தும் தலைப்புக்கு உண்டான இரண்டு சிறுகதைகளும் சிறந்து விளங்குகின்றன. ஒன்று ஆஸ்திரேலியக் கதை. மற்றது ஜெர்மனி. ஒன்று கம்ப்யுட்டர் அலுவலகத்தில் நிகழ்வது மற்றது சிறையில்.
ஆஸ்திரேலியாவில் கம்ப்யுட்டர் திறமை இருந்தும் பொருளாதார அனிச்சியத்தால் எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படும் அபத்திரத்தில் வாழும் தமிழன் உடன் பணிபுரியும் போத்துகீசியனின் தைரியமான கருத்துக்களையும் தாய்நாட்டு ஏக்கத்தையும் வியந்து தன் விதியை எதிர்க்காமல் ஒப்புக்கொள்ள, நண்பன் வேலை இழந்து நாடு திரும்பும் போது இவன் செய்யக் கூடிய ஒரே ஒரு தீர காரியம் கணிப்பொறி திரையில் தன் தாய்நாட்டின் பனை மரத்தை வரைந்து பார்ப்பது தான் (சந்திரிகா ரஞ்சன்-'பனையும்'). ஜ“வமுரளியின் 'பனியும்' என்கிற கதை தமிழ் மொழிக்கு இதுவரை பரிச்சயமில்லாத சூழ்நிலையை அறிமுகப்படுத்துகிறது. ஜெர்மனியில் ஒரு சிறை. அதில் நான்கு ஆப்பிரிக்க ஒரு இதாலியக் கைதிகளுடன் ஒரு இலங்கைத் தமிழன் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்து ஐநூறு ஆண்டுகளுக்குப்பின் தாங்கள் ஜெர்மனியை கண்டு பிடித்ததாகக் கடுப்புடன் தொனிக்கும் இந்தக் கதை அந்த நாட்டின் நாஜி மிச்சங்கள் கருணையற்ற இனவெறி, சமுதாய அநீதிகள் இவைகளின் எதிரொலிகளை பெரும் சுற்று மதில் கொண்ட இட்லர் காலத்துச் சிறையில் உணர்கிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் உருளைக் கிழங்கு உண்டு தினத்தில் இருபத்து மூன்று மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். 'நான் வீட்டுக்குப் போகவேண்டும், நைஜ“ரியா எனதுவீடு' என்று பத்து அத்தியாயங்களில் சிலதலைப்புக்களை மட்டுமே கொண்ட ஜப்பான் கடவுள், இனவெறி அகதி புத்தகம் எழுதும் ராஸ்தா போன்ற பாத்திரங்கள் கொண்டு முற்றிலும் புதிய சர்வதேச பரிமாணம் தமிழக் கதைக்கு கிடைக்கிறது.
"எங்களின் செல்வங்கள் எங்களின் கோதுமை எங்களின் அரிசி எங்களின் ஆடைகள் எங்களின் உழைப்பு எல்லாம் கொள்ளை கொண்டு மலையாக ஐரோப்பாவில் குவித்து வைத்த இந்த தேசத்தில்" சிறைக்கைதியின் உக்கிரமான கதை இது. இவ்விதத்தில் தமிழ் சிறுகதைக்குபுதிய பின்னணிகள் கிடைப்பதுதான் இந்தத் தொகுப்பின் முக்கியமான சாதனையாகக் கருதுகிறேன். கலா மோகனின் "குளிர்" போன்ற கதைகள் ஐரோப்பாவின் கடுங்குளிரால் நாசித் துவாரத்து மேற்பரப்பில் முள்ளால் கீறப்படுவதுபோன்ற உணர்வு ஏற்படுவது தமிழ்க் கதைக்குப் புதிது.
மாத்தளை சோமுவின் ஒரேஇனம் கதையில் 'இவர்கள் அகதிகளாகப் பிறக்கவில்லை. அகதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் மேதைகள் முகிழ்வார்கள்' என்கிற நம்பிக்கை தருபவனும் ஆஸ்திரேலியன் 'These Fu...Refugees' என்று திட்டுவனும் ஆஸ்ரேலியன்தான்.
'மழை' என்கிற கதையில் நான்காண்டுகளுக்கு மேலாக புருஷனின் ஸ்பரிசம் இன்றி உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுகளுக்கும் ஷெல் அடிகளுக்கும் பயந்து கொண்டு தாய்நாட்டில் போராடும் மனைவியை தக்க சமயத்தில் நினைவு கொண்டு ஆஸ்திரேலிய பெண்ணின் சரசத்தை மறுக்கும் தமிழன் சொல்லும் காரணம் "என் மனைவியும் அங்கே இந்த சுகத்துக்காக உன்னைப்போல் ஒருவனைத் தேடிப் போகலாம் இல்லையா" என்பதே. இதுவும் புலம் பெயர்ந்தவர்களுக் குண்டான தனிப்பட்ட குற்ற உணர்ச்சிதான். யாழ் பாஸ்கரின் ஓய்வு நாள் மெல் போரினில் ஒரு சனிக்கிழமையின் தனிமையையும் அலுப்பையும் சிறப்பாக சித்தரிக்கிறது.
யோகனின் 'கதையின் கதை'யில் உறைமழையும் சூழல்காற்றும் என்கிற கதையை எழுதத் துவங்கிய நடா அதைப்பற்றி ஆத்ம விசாரங்களில் ஈடுபட்டு கடைசியில் கதையை எழுத தான்பட்ட அவஸ்தைகளையே கதையாக எழுதிவிடுகிறான்.
'விருந்து' ஒரு சிறப்பான நடுத்தர வர்க்கக் கதை. நண்பர்களும் மனைவியரும் ஒரு விருந்துக்காகக் கூடி ஆஸ்திரேலிய சுகவாசம் கொடுத்த குடிப்பழக்கம் போன்ற சலுகையில் பேச்சுவாக்கில் நாக்கு தடித்து நட்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கி விருந்தின் சந்தோஷம் அத்தனையும் துறந்து கடமைக்கு சாப்பிட்டு முடித்து விட்டு விளக்கை அணைக்கும் இந்த கதையின் பின்னணியில் அவர்கள் ஆதாரமான கோபத்தின் காரணம் அவர்கள் இடப் பெயர்ச்சியும் தாய்நாட்டை விட்டு வந்த சோகமுமே என்பது மிக இயல்பாக அமைந்திருக்கிறது.
குறிப்பிடத்தக்க மற்றொரு கதை அருட்குமாரனின் 'சபிக்கப்பட்டவர்கள்'. தாலிக்கொடி உட்பட சகல நகைகளையும் விற்று மகளை லண்டனுக்கு அனுப்பி வைத்த தாய் அவனுக்கு ஊறு விளையாமல் இருக்க பழனிக்கு நேர்ந்து கொண்டது நிறைவேறாமல் போக இவனை வருஷத்துக்கு ஒரு முறையாவது லண்டனில் கோவிலுக்கு போய் வருமாறு வேண்டுகிறாள். நாத்திகத்தனமான எக்சிஸ்டென்ஷ’யலிஸ்ட் சோக சிந்தனைகள் உள்ள மகனுக்கு லண்டன் கோயிலின் முரண்பாடுகள் உறுத்துகின்றன. சேலை யணியாப் பெண்கள். பூணுலுக்கு மேல் ஸ்வெட்டர் போட்ட ஐயர், ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அபிசேஷகப் பால், அர்ச்சனைக்கு கார்னேஷன் பூக்களும் ஆப்பிள் பழங்களும் இவ்வாறான வினோதங்களை புரிந்து கொள்ள முயலாமல் 'பப்'புக்கு போய் பியர் அடிக்கிறான். இரு கலாசார முரண்பாட்டை பின்னணியில் சிவனை எதிர்த்த நக்கீரனின் சங்கடத்தை அலிகொரியாக கொண்டு சிறப்பாக எழுதப்பட்ட கதை இது.
இந்தத் தொகுப்பில் உள்ள தமிழர்கள் வசிக்கும் உலகம் தனியானது. இவர்களுடன் பழகும் வெள்ளைக்காரர்களுக்கு நாம் எல்லோருமே கருப்பாக இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் கருப்பு என்று சொல்லிக்கொண்டு வரதட்சிணையை கூடுதலாக கேட்கிறோம் என்பது புரியவில்லை. மேல்நாட்டு வெளிப்படைக் கலாச்சாரத்துடன் இவர்கள் ஆழ் மனதில் யுககாந்திரமாக பதிந்திருக்கும் அடையாளங்களின் மோதல் தொகுதியின் பல கதைகளின் உட்கருத்தாக அமைந்திருக்கிறது.
கனடா தேசத்துக் கதைகளில் 'முகமிழந்த மனிதர்கள்' (பவான்) குறிப்பிடத்தக்க கதை. வீட்டிலே சாப்பிட்ட கோப்பை கழுவாத அண்ணன் கனடாவில் டாய்லெட்டுக்களையும் நாய்க்கழிவுகளையும் கழுவும் நிலைமை ஏற்பட்டு நிறையப் பணம் கிடைத்தாலும் இந்த வேலைக்குப் போனால் நானும் அடிமை வாழ்வுக்குப் பழகிவிடுவேன் என்று ஏதோ ஒரு ட்ரெயினில் ஏதோ ஒரு திசையை நோக்கி புதியதோர் வாழ்வைத் தேடிப் புறப்படும் 'முகமிழந்த' தம்பியின் இந்தக் கதை தொகுதியின் சிறப்பான கதைகளில் ஒன்று.
'பிரசவம்' சுதந்திர ஈழ நாட்டின் பிறப்பையும் ஒரு குழந்தையின் பிறப்பையும் பிரசவ வலியில் மட்டும் ஒப்பிடும் புதிய உத்திக்கதை.
'க. குழம்பும் க.வேறுபாடும்' அயல் நாட்டுக்கு வந்தாலும் நம் கருத்து வேறுபாடுகளுக்குள்ள சகிப்பின் எல்லை மிகக் குறுகலானது என்பதை எளிய கதை மூலம் சொல்கிறது. ஜெயபாலனின் 'செக்குமாடு' ஒரு நாவலின் கதைச் சுருக்கம் போல அத்தனை அடர்த்தியாக இருக்கிறது. இருப்பினும் நாம் எல்லோரும் ஒரு விதத்தில் நம்மைத் துரத்தும் 'பேய்'களை அடையாளம் தெரிந்து கொள்ளத்தான் முழு வாழ்நாளையும் செலவிடுகிறோம்.
பொதுவாகவே இந்த எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது. இதனால் சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன. வட்டார வழக்கு கதைக்கு ஒரு நம்பத் தக்க நிலையை அளிக்க மட்டும் பயன் படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
அதிகப்படியான ஆங்கில வாக்கியங்களின் பிரயோகமும் இவர்கள் தங்கள் கதைகளை சொல்வதில் உள்ள அவசரத்தைக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள் அல்ல; புலம் பெயர்ந்துபுகல் நாடிச் சென்றவர்கள். இவர்கள் முதல் கவலை சம்பாதிப்பதும் உயிர் பிழைப்பதும்தான். பெரும்பாலும் தனிமையைத் துரத்தவும் தாய் நாடடு ஏக்கத்தை நீக்கவும் எழுதப்பட்ட கதைகளாதலால் சிறுகதைக் கலைக்குரிய உத்திரீதியான குணாதிசயங்களை எதிர்பார்ப்பது நியாயமல்ல. இருந்தாலும் அத்தனை கதைகளிலும் உள்ள ஆதார உணர்வுகள் மிக உண்மையானவை.
இந்த மகத்தான பணியை முடித்து சாதனை படைத்த நண்பர் எஸ்.பொ. அவர்களுக்கு பாராட்டுக்கள். அவருடைய பணிகளுக்கு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் உறுதுணையாய் நிற்றல் மகிழ்ச்சிக்குரியது.
சென்னை-18
தீபாவளி நாள் 1994.
சுஜாதா
நண்பர்
தியாகேசன்
அன்னை
திருமதி ஆறுமுகம் ஆச்சிமுத்து
நினைவுகளுக்கு
அவுஸ்ரேலியக்
கதைகள்
ஒன்பது
__________________________
கதைஞர்
__________________________
சந்திரிகா ரஞ்சன்
மாத்தளை சோமு
மாவை நித்தியானந்தன்
முருகபூபதி, லெ
யாழ் பாஸ்கர்
யோகன்
ரதி
வாசுதேவன், ச
விஜயராணி, அருண்
பனையும்
__________________________________________________
சந்திரிகா ரஞ்சன்
__________________________________________________
அந்தக் கந்தோரில் நான் ஒருவனே வெள்ளையன் அல்லாதவன். தமிழன். சொந்த நாட்டின் பிரச்சினைகளை அந்நியர்களுக்குச் சொல்லி அநுதாபம் பெற வேண்டும் என்ற ஏக்கம் எனக்கு ஆரம்ப நாள்களில் இருந்தது. மற்றவர்களுக்கு என்னைப்பற்றி அறிய ஆர்வம் இல்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டேன். இந்த உலகம் வேறு. திங்கள் காலையில் வேலையைத் துவங்கும் போதே, வெள்ளி மதியத்துக்கு அப்பாலுள்ள ஓய்வையும் களியாட்டங்களையும் நினைவுப்படுத்திக் கொண்டு வேலையில் ஒன்றி விடுவார்கள். வேலை எது, இவர்கள் எது என்று பிரித்துப் பார்க்க இயலாத அத்வைதிகள். ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் சிட்னி வாசியாகிய நான் விரைவில் இசைவாக்கம் பெற்றேன். மற்றவர்களைப் போலவே நானும் வேலையாக மாறினேன். அப்பொழுது தான் ரொனி எங்கள் கந்தோரில் வேலைக்குச் சேர்ந்தான்.
சிலமாதங்களுக்குப்பின்னர், ரொனியின்வர்த்தமானத்தை றேச்சல் ஒரு சந்தர்ப்பத்திலே சொல்லக் கேட்டேன்.
1974 இல் போத்துக்கலில் ஏற்பட்ட புரட்சியினால் பாசிஸ ஆட்சி வீழ்ந்தது. அத்துடன் டி மில்கெய்ராவின் வசந்த காலமும் அஸ்தமித்தது. லிஸ்பனிலிருந்து ஐநூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள அத்தலயா என்ற கிராமத்தில் அவருடைய மாளிகை இருந்தது. அங்கு நூற்றுக்கும் அதிகமான அரச விருந்தினர்கள் ஏக காலத்தில் தங்கிக் களியாட்டங்களில் ஈடுபடுவார்களாம். நானூறு வருடப் பழம் பெருமை பேசிய அந்த மாளிகை அவர்கள் முன்னாலேயே எரிக்கப்பட்டது. இந்த இடிபாடுகளின் நிழலிலேயே அவர் படுத்த படுக்கையானார். வக்கிரபுத்தி கொண்ட உறவினர் மத்தியிலே வாழப் பிடிக்காதவனாய், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அவருடைய மகனான ரொனி சிட்னியிலே குடியேறினான்.
ரொனி என்னிலும் இளையவன். உருவத்திலும் சின்னவன். வெள்ளையருக்குரிய சராசரி தோற்றங்கூட இல்லை. ஆடம்பரமான உடைகள் மூலம் அதைச் சரிக்கட்டிக்கொள்ளலாம் என்று நினைப்பவன். இருப்பினும், அவன் வந்த பிறகுதான் கொம்பியூட்டரிலும் கொஞ்சம் மனித வாடை வீசத் துவங்கியது. அவனுடைய அடிநாபியிலிருந்து வரும் ஆங்கில உச்சரிப்பு விளங்காது. ஆனால் ரஸ’க்கக் கூடியதாக இருக்கும்.
காலையில் வரும்போதே, ஏதாவது ஒன்றைப் பற்றிக் குறைகூறி அலுத்துக் கொள்ளாவிட்டால், ரொனியால் திருப்தியாக வேலையைத் துவங்க ஏலாது. அப்படி ஒரு வாடிக்கை. கீழ் unit றில் வசிக்கும் கிழவி, அவுஸ்ரேலியாவின் முன்னாள் நிதி அமைச்சர் போல் கீற்றிங், பின்னால் வந்த கெரின், போத்துக்கலில் வாழும் உறவினர், இப்படிப் பலர் அவனிடம் absentee ஆக திட்டு வாங்குவதுண்டு. வளைகுடா யுத்த சமயத்தில் இருக்கும். 'Good Morning' பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். 'சதாம் ஒரு முட்டாள். இன்னொரு ஹ’ட்லர். அவன் கொல்லப்பட வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?'
நான் என்ன நினைப்பது? அப்பொழுதெல்லாம் றேச்சல் தான் தடுத்தாட் கொள்வாள். மூன்றாம் தலைமுறையைச்சேர்ந்த அவுஸ்ரேலியப் பெற்றோருக்குப் பிறந்தவள். இருபத்திரண்டு வயசு. சிறுமி போலவும் தோன்றுவாள். அப்படித்தான் சிலவேளைகளில் நடந்துகொள்ளுவாள். ரொனியை எதிர்த்து, விட்டுக் கொடுக்காமல் வாதாடுவது அவள் மட்டுமே! வளைகுடா யுத்தத்தில் அவுஸ்ரேலியாவின் ஈடுபாட்டைக் கண்டித்து சிட்னியில் நடந்த சமாதான ஊர்வலங்களில் முன்னணியில் பங்கு பற்றியிருக்கிறாள். இருவருக்கும் நடக்கும் விவாதங்களில் தனது பக்க வாத்தியமாக ரொனி என்னை அழைத்துக் கொள்வான். இந்தச் சந்தர்ப்பங்களிலே ரொனிக்கு 'ஆமாம் சாமியாக' இருப்பது புத்திசாலித்தனமானது என்று நான் நினைப்பதுண்டு.
'சிட்னி சீவிக்க முடியாத இடமாகி வருகிறது' என்ற பிரகடனத்துடன், ஒரு நாள் ரொனி கந்தோருக்குள் நுழைந்தாள்.
'ஏன்? என்ன விஷயம்?' என்று கேட்டேன். கேட்கா விட்டாலும் சங்கடம்.
' இந்த வியட்நாமியர்கள் படுமோசம். இன்று காலை கார் எடுக்கப் போனபோது அது தன்னுடைய இடத்திற்குள் நின்றதாக அவன் குறை கூறுகிறான். இத்தனைக்கும் அவனிடம் கார்கூட இல்லை.'
'பிறகு?'
'பிறகு என்ன பிறகு? இன்வேறு இடம் பார்க்க வேண்டியதுதான்! ஒரு வருடத்திற்குள் நாலாவது இடம். நல்ல இடம் என்று இங்கு வந்தால், இங்கேயும் வந்து விட்டான்கள்...'
'ஒருவனோடு ஏற்பட்ட பிரச்னைக்கு முழு இனத்தையும் ஏன் சண்டைக்கு இழுக்கிறாய்?' என்று றேச்சல் சம்பாஷணைக்குள் நுழைந்தாள்.
'முந்தி ஒரு முறை, கார் ஓட்டத் தெரியாமல், என்காரைப் பின்னால் அடித்து நொருக்கியவனும் ஒரு வியட்நாமியன்தான். என் நண்பன் ஒருவனின் காரை அடித்தவங்களும் அவங்கள்தான். உனக்குத் தெரியாது. அவங்கள் அப்படித்தான்.'
'அவர்கள் எல்லாரும் வியட்நாமியர்கள்தான் என்பதை எப்படி உன்னால் கண்டு பிடிக்க முடிந்தது? ஏசியர்கள் எல்லோரும் எனக்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறார்கள்.'
'எனக்குந்தான்...ஆனால் பிரச்சினை தருபவங்கள் வியட்நாமியன்கள்தான். அது சரி றேச்சல், நீ எப்படித் தான் அந்த இடத்தில் சீவிக்கிறாய்?' என்று ரொனி கேட்டான். பல இனமக்கள் வாழும் ஒரு புறநகர்ப் பகுதியிலே றேச்சல் வசிக்கிறாள்.
'ஏன்? அது நல்ல இடந்தானே?'
'இடம் நல்லதுதான். அயலவர்களை எப்படிச் சமாளிக்கிறாய்?'
'உன்னையே உன் அயலவர்கள் சமாளிக்கவில்லையா? நல்ல காலம். நான் இருக்கும் அயலில் நீ வாழவில்லை? நல்ல காலம். நான் இருக்கும் அயலில் நீ வாழவில்லை' என்று றேச்சல் புன்னகையுடன் சொல்ல, அவளிடமிருந்து நழுவி, புன்னகையுடன் சொல்ல, அவளிடமிருந்து நழுவி, ரொனி என்னில் தொற்றினான்.
'ஏசியர்கள், குறிப்பாக வியட்நாமியர்கள், நாகரீகமற்றவர்கள். மற்ற இனத்தவர்களுடன் பழகமாட்டார்கள். நீ என்ன சொல்லுகிறாய்?'
'இருக்கலாம். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை...' என்று சமாளிக்கப் பார்த்தேன். அவன் விடுவதாக இல்லை.
'யுவான் உன்னைப் போலவா? ஏன் வேலை போயிற்று? மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். தாங்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்கிற இறுமாப்பு.'
இப்படி அங்கு வேலை செய்பவர்களையும் தனிப்பட்டவர்களையும் ரொனி தாக்கத் துவங்கும்போது, றேச்சல் தனது வேலையில் நுழைந்து விடுவாள். நான் வழக்கமாக 'ஆமாம் சாமி' தான். யுவான் தொழில் விஷயத்தில் அநுபவஸ்தன். அவனிடம் நானும் ஒரு தடவை 'வாங்கிக் காட்டிய'தால், இந்தச் சந்தர்ப்பத்திலே ஆமாம் போடுவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. அவன் ஏசியர்களைச் சகட்டுமேனிக்கு ஏசுவது என் மனசைச் சங்கடப்படுத்தியது. இவர்கள் எங்களை ஏசியர்களாகக் கருதுவதில்லை என்பது உண்மை. சவுத் ஏசியர்கள் எல்லாரும் இவர்களுக்கு இந்தியர்களே! இருந்தாலும், நான் ஆசியாக்காரன் என்கிற நிதர்சனத்தையும் என்னால் உதற முடியவில்லை.
தர்க்கத்துக்குரிய விஷயங்களை அவுஸ்ரேலியக் கந்தோர் நண்பர்கள் எந்தக் காலத்திலும் தவிர்த்துக் கொள்வார்கள். ஆனால், ரொனி எந்த விதத் தயக்கமும் இன்றித் தனது இனவாதக்கருத்துக்களைச் சொல்லி விடுவான். நானும், அவனுடன் சேர்ந்து சீனர்களின் சின்னத் தனங்களைப் பற்றிக்கதைப்பதன் மூலம் பிழைத்துக் கொள்ளுவேன். எதையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பது பற்றிக்கின் சுபாவம். ஒப்பந்த அடிப்படையில் எங்கள் கந்தோரில் வேலை பார்க்கும் பற்றிக், பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்திலிருந்து குடியேறியவன். வாயைத் திறக்காமலே பேசும் வல்லமை இவனுக்கு உண்டு. எந்த விவதங்களிலும் முகத்தில் நிரந்தரமாக ஒடடி வைத்திருக்கும் அந்தச்சிரிப்பை உதிரவிட்டு, பக்கஞ் சாராத பக்குவவாதியாகத் தன் வேலையில் தியானித்து விடுவான். நிமிடங்களை அவன் டாலர்களாகவே மதிப்பீடு செய்பவன். விதண்டா வாதங்களிலே அதை வீணடிக்க முடியாது. வளைகுடா யுத்தத்தில் மட்டும் அவனால் வாயை மூடிக் கொண்டிருக்க முடியவில்லை. சமாதானத்திற்கான றேச்சலின் கூக்குரல் எவ்வளவு பிற்போக்கானது என்று நிரூபிக்க ரொனியைப் பார்க்கிலும் பற்றிக்தான் அதிக பிரயாசைப்பட்டதாக ஞாபகம்.
நாளாவட்டத்தில் ரொனி ஒரு Male Chavinist என கந்தோர் பெண்களாலே வர்ணிக்கப்பட்டான். அவன் தனது கொம்பியூட்டரை 'This Woman' என்று அழைப்பதும், கொம்பியூட்டரில் ஒரு நிர்வாணப் பெண் நடமாடும் தோற்றத்தை வரவழைத்துப் பெண்களுக்குக் காட்டுவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பின்னர் நடந்த ஒரு சம்பவந்தான் என்னை மிகவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது. தகவல்களைக் கொம்பியூட்டரில் ஒழுங்கு படுத்தும் முறை பற்றி இயக்குநருக்கும் ரொனிக்கும் இடையில் கருத்து வேறுபாடு. நான் ஏற்பாடு செய்த முறையே வழக்கத்தில் இருந்தது.
அதனைப் பின்பற்றும்படி இயக்குநர் சொன்னதை அவன் ஏற்கவில்லை.
'ஏன்? இப்படியும் செய்யலாம் தானே? இதில் என்ன தவறு? இலகுவில் விளங்கக் கூடியதாகவும் இருக்கிறது' என்று தன் கட்சி பேசினான் ரொனி.
'என்றாலும் ஒரே அலுவலகத்தில் இருவேறு முறைகளைப் பயன்படுதத ஏலாது.'
'அப்படி என்றால் இந்த முறையை நடைமுறைப்படுத்தலாம். இதில் வேறுபடுத்துவது இலகுவாகும்.'
'எது எப்படி இருந்தாலும் இங்கு ஏற்கனவே உள்ள முறைப்படியே செய்யும்' என்று இயக்குநர் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இயக்குநரின் கருத்திலுள்ள நியாயத்தை நான் எடுத்துச் சொல்ல எத்தனித்தது வீண்.
'அவர்களுடைய கொம்பனி. எனக்கென்ன? அவர்கள் சொன்ன மாதிரியே செய்கின்றேன்!' என்று அலுத்துக் கொண்டான்.
பல சந்தர்ப்பங்களிலே அவனுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே விவாதங்கள் ஏற்பட்டன. தொழில் நுட்ப விஷயங்களில் ரொனி அவர்களைப் பார்க்கிலும் அனுபவமுடையவனாகக் காணப்பட்டான். அவனே பல விஷயங்களில் சரி போலத் தோன்றியது. சுற்றிச் சுற்றி வந்து கடைசியில் ரொனியே சரியென்று கண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இந்த நேரங்களில் அவன் கடுஞ் சினத்திற்குள்ளாவான்.
பற்றிக்கின் ஒப்பந்த காலம் முடிந்தது. பொருளாதாரத் தேக்கம் கம்பனிக்கு வேலை கிடைக்கவில்லை. அவன் செல்லும்போது ரொனி மிகுந்த விசனப்பட்டான். பற்றிக் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே இங்கிலாந்து திரும்புவதாக அவன் முடிவெடுத்திருந்தான். சில நாள்களில் பற்றிக் இங்கிலாந்து சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.
கையிலிருந்த வேலையை அன்றே முடித்துவிட வேண்டும் என்ற தேவையினால், மதிய இடைவேளைக்கும் வெளியிற் செல்லாமல் நானும் ரொனியும் வேலையில் மூழ்கியிருந்தபோது, ரொனியை இயக்குநர் அழைத்தார்.
'இந்த நேரத்தில் இவர் வேறு' என்று அலுத்துக் கொண்டே சென்றான். சென்றவன் வேறொரு முகத்துடன் மெதுவாக வந்தான். அவசரமான நேரங்களில் பாய்ந்து நடக்கும் பழக்கமுள்ள ரொனி ஆறுதலாக வருவது ஆபத்தின் அடையாளம் என்றுணர்ந்த நான், 'ஏதாவது பிரச்சினையே?' என்றேன்.
'இவங்கள் எல்லாம் Bastards!'-அவன் வெடித்தான்.
'என்ன நடந்தது?'
'Recession and retrenchment. இது தானே சாட்டு? இன்னும், ஒரு வாரத்திற்குத்தான் இங்கு எனக்கு வேலை.'
சென்ற மாதந்தான் நமது கந்தோரில் வேலை செய்த எட்டுப் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். ஏனைய ஊழியர்களுடைய சம்பளத்தில் பத்து வீத வெட்டும் அமுலாக்கப்பட்டது. இருபது வருஷங்களிலே அவுஸ்ரேலியா அனுபவித்த மிக மோசமான பொருளாதாரத் தேக்கம் இதற்கு உபயமளித்தது. மிகவும் அவசியமானவர்களே எஞ்சியிருந்தனர். இனி, ஆட்குறைப்புக்கு அவசியம் ஏற்படாது என்று உத்தரவாதமும் தரப்பட்டது. ஆனால் இன்று...
இது ரொனிக்கு ஒரே வருடத்தில் ஏற்பட்ட மூன்றாவது வேலை வெட்டு!
அடுத்த நாள் வந்த ரொனி, 'நான் போத்துக்கலுக்குப் போகிறேன். உனக்கு ஒன்று சொல்லுகிறேன். இவர்கள் இனவாதிகள். நீயும் நானுந்தான் எஞ்சியிருந்த அந்நியர்கள். இப்பொழுது எனக்கு அடுத்தது உனக்கு. இப்பொழுதே வேறு வேலை ஒன்று தேடு!...' என்றான்.
'நீயும் வேறு வேலைக்கு முயலலாமே!'
'இனிப்போதும். என்னால் தாங்கேலாது!'
உழைப்பைப் பண்டமாக விற்று வாங்கும் வர்த்தக உலகத்தில் மனித நேயத்தை ரொனி எப்படி எதிர் பார்க்க முடியும்? அதை ஏற்கனவே பிறந்த மண்ணிலே தொலைத்துவிட்டு, இங்கு கிடைக்கும் என்று தேடி வந்தானா?
'போத்துக்கல் போய் என்ன செய்வாய்? உனக்குத்தான் அங்குள்ளவர்களைப் பிடிக்காது என்று சொல்வாயே?'
'நான் அத்தலயாவுக்குப் போகவில்லை. விஸ்பனுக்குப் போகிறேன். எனக்கு உறவினர்களைப் பிடிக்காது. ஆனால், என் மண் மிகவும் அழகானது, எங்களுடைய மொழியைப் போலவே!' பெருமையாகப் சொல்லிக் கொண்டான்.
மௌனமாக இருந்த கொம்பியூட்டரை முடுக்கினேன். 'நொய்' என்ற இரைச்சலுடன் அது உயிர்த்தது. ரொனி நிர்வாணப் பெண் நடமாடும் தோற்றத்தை வரவழைப்பான். என் மண்ணான காலையடியின் நிலவளத்தையும், அதன் வளத்தை எடுத்துச் சொல்வது போன்று வான்நோக்கிய உயர்ந்த பனை மரங்களையும்-அவுஸ்ரேலியாவுக்கு கங்காரு போல, என் மண்ணின் உயிர்ச் சின்னமாக நிலைத்துள்ள பனைகளையும்--கொம்யூட்டரிலே தோற்றுவிக்க என் மனம் தைரியத்தைத் தேடுகிறதா?
'என் மண் மிகவும் அழகானது, எங்களுடைய மொழியைப் போலவே' என்று கொம்யூட்டர் வசனம் பேசுகிறதா? அல்லது பனைகள் பேசுவதான மனக் குறளியா?...வேலையில் மூழ்கினேன்.
ஒரே இனம்
_____________________________________________________________
மாத்தளை சோமு
_____________________________________________________________
ரயில் வந்து நின்றதும், காந்தன் அவசரமாக ஏறிக் கொண்டான். அவுஸ்ரேலியாவில் அகதிகளாகக் குடியேறியுள்ள ஈழத் தமிழர்களுள் அவனும் ஒருவன்.
இதற்காக பெரியப்பாவுக்குத்தான் அவன் நன்றி சொல்ல வேண்டும். என்ஜினியரான அவர் கைநிறையச் சம்பளத்துடன் கொழும்பில் வேலை பார்த்தார். விதியோ, அன்றேல் தரகர் கணபதிப்பிள்ளையின் திருவிளையாடலோ? கொழுத்த சீதனத்துடன் 'டமிள்' பேசும் பணக்காரியை மணம் முடித்து, அவரையும் 'கொழும்பானா'க மாறிவிட்டார். 1983 ஆம் ஆண்டின் இனப் படுகொலையின் போதுகூட, அதிட்ட தேவதை அவர் பக்கலிலே நின்றாள். இழப்புகள் எதுவும் இல்லை. 'கொழும்பான்' என்று கொக்கரிக்க முடியாத அவதி மட்டுமே! மனைவியின் அண்ணன் அவுஸ்ரேலியாவில் குடியேறி வாழ்ந்தார். அவருடைய தூண்டுதலினாலும் Sponsor-ship இனாலும், குடும்பத்துடனும் 'மூட்டை முடிச்சு' களுடனும் குடியேறி, மெல்பனில் வாழத் தலைப்பட்டார். வசதி வழிந்தது. பெரியப்பாவுக்கு உடம்பெல்லாம் மச்சம் என்று சொல்வார்கள்!
அவனுடைய அப்பா பல்கலைக் கழக புகுமுக வகுப்பு மாணாக்கனாய் இருந்த காலத்திலேயே, செங்கொடி தூக்கி சமத்துவ-சமதர்மக் கொள்கைகள் பேசத் துவங்கியவர். கொள்கைகளை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியுடன் கலப்புத் திருமணஞ் செய்து, புரட்சி கண்டவர்! சொந்த உறவுகள் அறுந்த தனிவழி! மிடிமை கண்டு சிரித்தார். வீரம் மிகுந்த மேடைப் பேச்சுகள் தொடர்ந்தன. தமிழ் ஈழ அரசியலில் மேடைப் பேச்சுகள் குறைந்து, 'துப்பாக்கிகள்' பேசத் துவங்கின. காந்தனின் அண்ணன்மார் இருவர் ஒருநாள் 'காணாமற்' போய் விட்டார்கள். 'அப்பாவின் வழியில், அவருடைய புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், தமிழ் இனத்தின் விடுதலையைக் காண்பதற்காகவும் போராளிகளாகி விட்டோம்' என்று கடிதம் வந்தது. அம்மா அழுது பிரலாபித்தாள். அப்பா அழவும் இல்லை; சிரிக்கவும் இல்லை. 'அவங்கள் என்ரை பிள்ளைகள்' என்று மட்டும் சொன்னார். ஒரு நாள் அப்பா ராணுவ 'ஜ“ப்'பில் ஏற்றப்பட்டார். அவர் அதுவாக, உடல் வீடு வந்து சேர்ந்தது. உண்மையை சொல்ல மறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்' என்று விளக்கம் தரப்பட்டது. சிங்கள ஆதிக்க வெறியின் சூக்குமங்களை அறியாத காந்தனின் தாய், கைம் பெண்ணாக, அவனையும் அவன்தங்கையையும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்க்கத் தலைப்பட்டாள். அவர்கள் படும் கஷ்டங்களினால், 'மழுவராயர் பரம்பரையின் மானம் கப்பலேறுவதாக அவதிப்பட்ட உறவை புதுப்பித்துக் கொடுத்தார். பெரியப்பாவின் சகாயத்தினால், காந்தனின் குடும்பம் அவுஸ்ரேலியாவில் அகதிகளாகக் குடியேறி, நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.
'டமிள்' பேசும் பெரியம்மாவுக்கும், 'புறோக்கின் இங்கிலீசு' பேசும் அம்மாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. காந்தன் குடும்பத்தின் 'தமிழ்' பழக்க வழக்கங்களினால், தன் பிள்ளைகளின் aussie வளர்ப்புச் சோரம் போவதாகப் பெரியம்மா நச்சரிப்பாள். பெரியப்பாவுக்கு உயர் ஜாதி வேளாள 'அரிப்பு' எப்பவும் உண்டு. குடும்ப முரண்பாடுகளுக்குத் தீர்வு கஷ்டமானதல்ல. காந்தன் குடும்பம் சிட்டினியில் குடியேறியது. 'டோல்' பணத்துடனும், 'இரண்டு பேரும் உழைக்கும்' தமிழ்க் குடும்பங்களின் 'ஈழத்துணவு'ப் பரிமாறல்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் லேதிக வருமானத்துடனும் காந்தனின் குடும்ப காலட்சேபம் நடக்கின்றது. பெரியப்பாவும் யோக்கியன்! மாதத்திற்கு ஒரு முறையாவது தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, இவர்களுடைய சேம லாபங்களை விசாரித்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்? 'என்ரை ராசா, நீ ஊக்கமாக படிச்சாத்தான் எங்கடை குடும்பமும் விளங்கும்!'--இதுதான் அம்மாவின் அழுகை--கெஞ்சல்--பிரார்த்தனை சகலமுமாக இருந்தது.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது. பௌதிக புத்தகத்தைப் புரட்டினான். படிப்பில் மனம் ஒன்றவில்லை. பார்வையை ரயிலுக்கு வெளியே எறிந்தான். கரையிலே குத்திட்டு நின்ற மின்சாரக் கம்பங்களும், உயரிய பைன் மரங்களும், ஏனைய கறாளை மரங்களும் நெடிதும்-குள்ளமுமான கட்டடங்களும், தெருக்களும், அவற்றிலே விரைவு பயிலும் வாகனங்களும் எதிர்த் திசையிலே ஓடுவது போன்ற ஜாலம்.
நேற்றைய சம்பவங்கள்--எதிர்த் திசையில் ஓடுவனவற்றைப் போன்று--காந்தனின் மனத்திலே வலம் வந்தன.
காந்தனும், அவன் நண்பன் வான் அங் ஹோவும், விளையாட்டுத் திடலுக்குக் குடை விரித்த மரம் ஒன்றின் கீழ் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஹோ ஒரு வகுப்பு மூப்பு; பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறான். இருவரும் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள். பேச்சிலும் பார்க்க, மௌனமான பார்வைகள் இருவருக்குமிடையில் நட்பை வளர்த்திருந்தது. அந்த நேரத்தில் அஹமட் அங்கு வந்தான். அவன் லெபனானைச் சேர்ந்தவன். எப்பொழுதும் சத்தம் போட்டுப் பேசுவான். பிரின்சிபலோடும் அதே உரத்த குரல்தான். அது அவனுடைய ஆயுதம். அவனுக்கு நாற்று நட்டது போல மீசை. வயசையும் மீறிய வாலிய உணர்ச்சிகளுடன் நடந்து கொள்வதும் அவன் சுபாவம்.
பிரின்சிபல் கந்தோரில் 'கிளார்க்' ஆக இருக்கும் ஜூலி என்கிற வெள்ளைக்காரி அந்தப் பக்கமாக வந்தாள். அதீத ஒப்பனைகள் அவள் வயதினை விழுங்கும். இளமை 'டாட்டா' காட்டுவதற்கிடையில், இன்னொரு 'கணவ'னை இழுத்துவிட வேண்டும் என்பது போல அலை பாயும் பார்வை. வளைவுகளை மேலும் வளைவாக்கி, தசைப் பிரதேசங்களிலே இளமைத் துள்ளலைச் செயற்கையாக அப்பிக் கொண்டு நடப்பாள். அவளுடைய 'ஒயி'லில் அஹமட் 'கிக்' பெற்றிருக்க வேண்டும். அவன் விரசமாக விசிலடைத்து வரவேற்றான்!
காந்தனின் மனம் அடித்துக் கொண்டது. ஹோ முகத்தைச் சுழித்தான். ஜூலி திரும்பிப் பார்த்து முறைத்தாள். இருவரும் மெல்ல நழுவினார்கள். You guys are silly என்று சொல்லிச் சிரித்த அஹமட், வேறு பக்கமாகத் திரும்பி நின்றான்!
எதிரிலே புயல் போன்று வந்த ஹரிஸன், வெள்ளைத் தோலின் பெருமையைப் பாதுகாக்கும் தத்துவக்காரன் என்ற மிடுக்குடன், நடந்து கொண்டிருந்த காந்தனையும் ஹோவையும் வழி மறித்தான். 'you dirty biacks...You want to rape a white women' என்று கத்திக்கொண்டே, ஹரிஸன் காந்தனின் சேட்டைப் பற்றினான்.
ஹோவுக்குக் கோபம் வந்தது. அதனை அடக்கிக் கொண்டு சொன்னான்: Learn to talk nicely There is a saying: Give respect and get respect...'
'You Asian worm. Are you trying to teach me?' என்று ஆக்கிரோஷத்துடன் கூறிய ஹரிஸன், காந்தனை விலத்தி, ஹோ மீது பாய்ந்து, தன் பலம் முழுவதையும் முஷ்டியில் ஏற்றி, அவன் தாடையில் இரண்டு குத்துகள் விட்டான். தாடையில் இரத்தம்...
அவன் சிந்தனை அறுந்தது. எதிரில் அமர்ந்திருந்த இரண்டு சீனப் பெண்கள், உலகை மறந்து குறிப்பிட்ட ஒரு பதார்த்தஞ் செய்வது பற்றி சீன மொழியில் 'தாளித்து'க் கொண்டிருந்தார்கள்.
தனக்காகப்பேசி அடிபட்டு நின்றஹோவுக்கு உதவிக்குப் போகாது மௌனியாக நின்ற அந்தக் கோழை நிலை அவனுடைய உள்ளத்தை அரித்தது...'ஹோ, நீ எவ்வளவு இனிமையானவன்...சோகத்திலும் இனிமை சிந்தும் மலர் நீ...' ஹோவைப் பற்றிய நினைவுகள் அவன் மனதைப் பிசைந்தது...அந்தப் பிசைதலிலே, ஹோ தொட்டம் தொட்டமாகச் சொன்னவை, ஒரு வரலாறாக முகிழ்ந்தது.
ஹோ ஒரு கம்போடியன். பெற்றோர்களைப் பற்றி அவனுக்கு மங்கலான நினைவுதான் உண்டு. அவர்கள் அரசியல் பற்றி அறியாதவர்களாக வாழ்ந்த விவசாயிகள். 'நீங்கள் ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகள்; வாழத் தகுதியற்றவர்கள்' என்று கூறிக் கொன்று விட்டார்கள். சாவு பிள்ளைகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சமிக்ஞையுமாம்! மூன்று மகன்களை தம்முடன் அழைத்துச் சென்றார்கள். அண்ணன் இருவரும் அவர்கள் நடத்திய வேலை முகாம்களில் அரைகுறை வயிற்றுடன் உழைத்தும்...செத்துப் போனார்கள். அந்தக் குடும்பத்தில் மிஞ்சியது வான் அங் ஹோ மட்டுமே. கம்போடியாவில் பல போராட்டக் குழுக்கள் எது எதற்காகப் போராடுகின்றது என்கிற நியாயங்களையே மறந்து விட்டனவாம். சாவு அவனைப் பலசந்தர்ப்பங்களிலே பயமுறுத்தியது. எப்படியும் சாவுதான் என்கிற தைரியத்தில் தாய்லாந்துக்குத் தப்பியோடிய ஒரு சிறிய குழுவுடன் ஒட்டிக் கொண்டான். தாய்லாந்து, அகதி முகாமிலே மூன்று ஆண்டுகள் வாழ்ந்து, அவனுடைய மாமா ஒருத்தர் அவுஸ்ரேலியாவில் இருப்பது தெரிய வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து சேர்ந்தான்.
மாமாவின் தையல் கடையிலே அவன் ஓயாது உழைக்க வேண்டும். பாடசாலையிலே கொடுக்கப்படும் வீட்டு வேலைகளைச் செய்வதற்குக்கூட நேரம் கிடைக்காது. ரயில் பயணத்தின் போது, லஞ்ச் நேர ஓய்வின் போது என்று அவன் எப்படியோ படித்துக் கொண்டிருந்தான். மரத்தடிக் கற்கையின் போதுதான் ஹோ காந்தனுக்கு அறிமுகமாகி நண்பனுமானான். 'எனக்கு இருக்கும் ஒரேயொரு உறவினரையும் என் எதிரியாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. அவரை விட்டுப் போனால் என் குடும்பத்திற்கு நான் அவமானந் தேடித் தந்தவனாவேன்' என்று சொல்லுவான். சோகங்களின் மத்தியிலும் பண்பை பாதுகாக்கப் பழகிக் கொண்டான். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுக்குள், தூரத்தில், யன்னல் ஓரத்தில், ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவள் சுடிதார் அணிந்திருந்தாள். நெற்றியில் திலகம். அவள் ஓர் இந்தியப் பெண்ணாக இருக்கவேண்டும். இங்குள்ள ஈழத் தமிழச்சிகள் பொட்டைத் துறந்து, 'ஸ்கேட்' 'பாண்ட்' ஆகிய புறக் கிருத்தியங்களால் விரைவாக 'ஓஸ’' களாகும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மயிலை நினைத்துச் சொந்தப் பாவனையையும் இழந்துவிட்ட வான்கோழிகள்! அந்தத் திலகம் இரத்த நிறத்தில்...
தாடையில் இரத்தம் வழிய நின்ற ஹோவின் உருவம் மீண்டும் காந்தனின் மனதில் எழுந்தது. குறுக்கிழையில் அப்பா-அண்ணன்மார்களின் உருவங்களும் வலம் வந்தன. 'நான் மட்டும் எப்படிக் கோழையானேன்?' காந்தனின் மனம் புழுங்கியது. ஆனால், ஹோ...? அவன் தன் சுள்ளி உடம்பிலே உம்பாரப் பலம் சுமந்தான். அகதி முகாமிலே அவன் 'கராத்தே' கற்றவனாம்.
தாடையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, 'If you understand only the language of violence, then come...' என்று ஹோ தயாரானான். இந்தப் பிரதிபலிப்பை ஹரிஸன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
யாரும் எதிர்பார்க்காத சடுதியில் மத்யு இடையிலே புகுந்தான். அவனுடைய தந்தை அகதிகள் புனர்வாழ்வுப்பணியிலே பெரிதும் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர். மத்யு இன-நிற வேறுபாடுகள் பாராட்டாதவன், மனித நேயத்தின் பக்தன். இதனாலும், இனங்களுக்கு அப்பாற்படவும், அவன் எல்லா மாணவர்களுடைய மரியாதையையும் சம்பாதித்தவன்.
'Harison, see sense...' என்று அவனைப் பிடித்து உலுக்கிய மத்யு 'கடகட' வென்று பேசினான்: 'வன் முறை வன்முறையைத்தான் பெருக்கும். இது 'அபோக்கள்' என்றழைக்கப்படும் பூர்வீக இனமான கறுப்பர்களின் நாடு. அவர்களுடைய உரிமைகளை அநியாயமாகப் பறித்துத்தான் நாங்கள் இந்த நாட்டிலே ஒரு வெள்ளை அவுஸ்ரேலியாவை உருவாக்கினோம்...நமது மூதாதையர் செய்தபாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு ஆண்டவன் நமக்கு ஒரு சந்தர்ப்பம் தந்திருக்கிறான்...அதனை நழுவ விடாதே...'
'These fu...are refugees' என்று ஹரிஸன் வெடித்தான். அவன் வெறி இன்னமும் தணியவில்லை. மத்யு தன் நிதானத்தை இழக்கத் தயார் இல்லை. பொறுமையாக ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி உச்சரித்தான்: 'இவர்கள் அகதிகளாகப் பிறக்கவில்லை...பிறருடைய ஆதிக்க ஆசைகளினால் அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் வெட்கப் படுவதற்கு எதுவும் இல்லை. அகதிகள் மலையனைய இடர்களைத் தாங்கும் வீரர்கள். இவர்கள் மத்தியில் மேதைகள் முகிழ்வார்கள். இந்த நூற்றாண்டின் சிந்தனைகளை மாற்றி அமைத்த விஞ்ஞான மேதை ஈன்ஸ்டீன்கூட ஓர் அகதி என்பதை மறக்காதே, எங்களுடைய மூதாதையர்களைப் பார்த்து விக்டோரியா மகாராணி காலத்து ஆங்கிலேயர்கள் எப்படி அழைத்தார்கள் தெரியுமா? சிறைப் பறவைகள் என்று...சிறைப் பறவைகள்!' சமர் நிலத்திலே கீதோபதேசம் வித்தப்பட்டதைப் போன்ற ஒரு சுகம்...
'நான் நம்புகின்றேன். சிறைப் பறவைகளின் வாரிசுகள் என்பதிலும் பார்க்க, அகதிகள் என்று அழைக்கப்படுவது கௌரவமானது...' என்று அமைதியாகவும், ஆழ்ந்த விசுவாசத்துடனும் மத்யு சொன்ன இறுதி வார்த்தைகள், காந்தனின் நெஞ்சக் குகையிலே எதிரொலித்தன.
ஹரிஸனை உருவாக்கிய அதே சமூகத்தினால் எப்படி மத்யுவையும் உருவாக்க முடியும்? 'ஏசு பிறந்த இனத்திலேதான் யூதாஸ”ம் பிறந்தான்; காந்தியும் கோட்சேயும் ஒரே மண்ணின் அவதாரங்கள்' என்றெல்லாம் பிரசங்கித்தவருடைய மகனான காந்தனுடைய புத்தியின் பிடிமானத்திற்குள் இந்த வினாவுக்கான விடை சிக்குப் படவில்லை.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது...கரையிலே குத்திட்டு நின்ற மின்சாரக் கம்பங்களும், உயரிய பைன் மரங்களும் ஏனைய கறாளை மரங்களும், நெடிதும் குள்ளமுமான கட்டடங்களும், தெருக்களும், அவற்றிலே விரைவுபயிலும் வாகனங்களும் எதிர்த் திசையிலே ஓடுவது போன்ற ஜாலம்...
ரயிலுக்கு சேர்விடம் உண்டு. இடையில் தரிக்கும் ஸ்ரேசன்களும் உண்டு.
அகதிகளுக்கு...
அடுத்த தரிப்பிலே காந்தன் இறங்க வேண்டும். ஹோவும், மத்யுவும் மட்டுமல்ல, ஹரிஸன்களும் அவனுக்காகக் காத்திருக்கலாம்...புத்தகங்களை மீண்டும் அடுக்கி, தன் 'ஸ்கூல் பேக்'கைக் காந்தன் சரி செய்து கொண்டான்.!
சுப்பர் மார்க்கெட்
__________________________________________
மாவை நித்தியானந்தன்
__________________________________________
'சுப்பர் மார்க்கெட்' என்றதும் சந்திரசேகரத்தின் மனதில் படமாகத் தோன்றுவது தண்ர்ப் போத்தல் தான்.
சந்திரசேகரம் கொழும்பில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த காலத்தில் தான், அங்கு முதன்முதலில் இரண்டு சுப்பர் மார்க்கெட்டுகள் திறந்தன.
பொருட்காட்சி, கார்ணிவல், சினிமாப்படம் எதையும் முதலாம் நாளே போய்ப் பார்த்துவிடும் வழக்கமுள்ள அவன், அதுபோலவே சுப்பர் மார்க்கெட்டுக்கும் போனான்.
எல்லாம் கவர்ச்சியாகத்தான் இருந்தன. அவன் சீவியத்திலேயே கண்டிராத வகை வகையான வெளிநாட்டு உணவுப் பொருட்கள்-அழகான பெட்டிகளில், தகரங்களில், போத்தல்களில்...ஒரு பொருட்காட்சியைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டு வந்தான். மனைவியையும் கூட்டிக் கொண்டுவந்து காட்டவேணுமென்று யோசித்தான்.
கடைசியில் அமேரிக்காவிலிருந்து இறக்குமதியாகி, தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ர்ப் போத்தல்களைக் கண்டதும் ஆச்சரியத்தால் கொஞ்ச நேரம் அவனுக்கு மூளையே வேலை செய்யவில்லை. அது உண்மையில் 'பச்சைத் தண்ர்த்தான்' என்பதை அங்கிருந்த ஒரு உதவியாளரிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னர் அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை. உடனே ஓடிப்போய் இந்த அதிசயத்தை மனைவிக்கும், காணுகிற எல்லாருக்கும் சொல்லிவிட வேணுமென்று ஒரு ஆசைத் துடிப்பு...இந்தத் துடிப்பாலும், ஆச்சரியத்தாலும் திக்குமுக்காடிக் கொண்டு சந்திரசேகரம் வெளியே நடையைக் கட்டினான்.
முதலில் தனியான ஒரு இடத்தில் போய் நின்று வேண்டிய மட்டும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவேண்டும் போலிருந்தது. சுற்றிவர ஆட்கள்.
இதற்குப் பிறகு சுப்பர் மார்க்கெட் என்றவுடன் எப்பொழுதும் தண்ர்ப் போத்தல்தான் அவனுக்கு ஞாபகம் வரும்.
சந்திரசேகரம் வெளிநாட்டுக்குக் குடிவந்தபிறகு, முதன் முதலாக சுப்பர் மார்க்கெட்டுக்குப் புறப்பட்ட போதும், அந்தத் தண்ர்ப் போத்தல்தான் முன்னால் வந்து நின்றது. நாகரிகமான புது உலகத்துக்கு வந்துவிட்ட பிறகு இப்படித் தண்ர்ப் போத்தலை நினைத்துச் சிரிப்பது அசிங்கமென்று தன்னைத்தானே ஒருமுறை கடிந்து கொண்டான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, கொழும்பு சுப்பர் மார்க்கெட்டும், இதுவும் எலிக்குஞ்சும் யானையும் போலிருந்தன. சங்கிலியால் கோர்த்திருக்கும் தள்ளு வண்டில்களை மற்றவர்கள் நாணயம் போட்டு எடுக்கும் விநோதத்தை ஒரு பக்கமாக நின்று கொஞ்சநேரம் அவதானித்தபிறகு, தானும் அதுபோலவே ஒரு நாணயத்தைப் போட்டு வண்டிலை எடுத்துத் தள்ளிக்கொண்டு கம்பீரமாக நடந்தான்.
மனைவி எழுதிக் கொடுத்த பொருட்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தான். முதலாவது பொருள் கோப்பி என்றிருந்தது. கோப்பி எந்தப் பக்கத்தில் இருக்குமென்று தெரியவில்லை. ஒரு திசையில் நடந்து பார்த்தான். எவ்வளவோ நேரம் தேடியும் கோப்பியை இன்னும் கண்டபாடில்லை. எரிச்சல் ஏற, ஓரிடத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்றபோது, விரக்தியால் கண்கள் ஒருமுறை மூடின. மீண்டும் அவை திறந்தபோது, என்ன ஆச்சரியம்! கோப்பிப் போத்தல்கள் நேரெதிரே தட்டில் மின்னலடித்தன. "எட, பாரன். முன்னாலை நின்றுகொண்டு தேடுறன்" என்று சொல்லித் தனக்குள் ஒருமுறை சிரித்துக் கொண்டான் சத்திரசேகரம். அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கொலம்பஸ் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்ற யோசனையும் ஒருமுறை வந்துபோனது.
கோப்பி இருந்த தட்டை ஆராயத் தொடங்கினான். இதுவரை அவனுக்கு 'நெஸ்கபே' யைத்தான் தெரியும். இங்கு எத்தனையோ விதமான பெயர்களில் கோப்பி இருந்தது. எதை எடுப்பது? எதை விடுவது? பெரிய சிக்கல்.
அரசாங்கம் தரும் உதவிப் பணத்தில் வாழ்க்கை நடாத்த வேண்டியது நினைவுக்கு வந்தவுடன், சிக்கல் தானாகத் தீர்ந்துவிட்டது. விலை குறைந்த கோப்பி எதுவென்று தேடத் தலைப்பட்டான். ஒவ்வொரு போத்தலும் ஒவ்வொரு நிறையிலும், ஒவ்வொரு விலையிலும் இருந்தது. 500 கிராம், 250 கிராம், 175 கிராம்... மீண்டும் சிக்கல்.
ஒவ்வொரு கோப்பியிலும் ஒரு கிராம் என்ன விலை என்பதைக் கணக்குப் பார்ப்பதென்று தீர்மானமெடத்தான். 'ஒருமைக்குக்கண்டு பன்மைக்குப் பெருக்கென்று' அடிச்சடிச்சுப் படிப்பிச்ச மணியம் மாஸ்டரும் ஒருமுறை 'பளிச்'செனத் தோன்றி மறைந்தார்.
எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கணக்குப் பார்ப்பது இயலாத காரியம். மனைவி பட்டியல் எழுதிக் கொடுத்த குட்டிக்கடதாசியில் சொட்டு இடமும் இல்லை. பக்கத்திலிருந்த தேயிலைப் பக்கற்றை எடுத்து, பின் பக்கத்தில் எழுதிக் கணக்குப் பார்த்தான். 500 கிராமுக்குப் பார்ப்பது சுகமாக இருந்தது. 175 கிராமுக்கு நெடும் பிரித்தல் செய்ய வேண்டியிருந்தது.
கடைசியில், கோப்பிக்குக் கோப்பி இருக்கும் பெரிய விலை வித்தியாசம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாயிற்று. 'ஹ!' என்றான் ஒருவித இறுமாப்புடன். தெரிந்தெடுத்த போத்தலைத் தள்ளுவண்டிலுக்குள் தூக்கிப் போட்டான். ஆனால் இது இந்த அளவில் முடிகிற சங்கதியல்ல என்பது புலப்பட அவனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. பற்பசை வகைகளைத் தேடிப்பிடித்த போது, மீண்டும் அதே பிரச்சனை.
ஒரு 'கல்குலேற்றர்' இல்லாமல் இது சரிக்கட்டக்கூடிய விஷயமில்லை என்று பட்டது. அன்றே ஒரு 'பொக்கெற் கல்குலேற்றர்' வாங்கிவிட வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டான். கல்குலேற்றரின் விலைக்கு மேலால் சுப்பர் மார்க்கெட்டில் மிச்சப்படுத்தும் பணமே வந்துவிடுமென்று பொருளாதார ரீதியில் செலவை நியாயப்படுத்தினான்.
மனைவி எழுதிக் கொடுத்த பட்டியலில் இருந்த ஒழுங்கின்படி ஒவ்வொரு சாமானமாகத் தேடிக்கொண்டு திரிந்ததில் கால்கள் வலித்தன. சுப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு ஓடைக்குள்ளாலும் இதுவரை குறைந்தது பத்துப் பதினைந்து தடவைகளாவது நடந்து முடித்திருப்பான் சந்திரசேகரம். எதிர்காலத்தில் மேலும் நன்கு திட்டமிட்டுச் செயற்பட வேண்டுமென நினைத்தான்.
சிவப்பு வெளிச்சமொன்றைச் சுற்றி ஆட்கள் குவிந்து நிற்பதைக் கண்டு அங்கே ஓடினான். Expiry date நெருங்கிவிட்ட ஜாம் போத்தல்களும், பிஸ்கட் பக்கற்றுகளும் குவித்திருந்தன. எல்லாம் அரைவிலை. சந்திர சேகரம் ஒரு கணம் யோசித்தான். "எங்கடை ஊரிலை வாங்கித் திண்டதெல்லாம் என்ன? Expiry date முடியாத சாமான்களே? அங்கை date முடிஞ்சாலும் சொல்லான்", என்றபடியே நாலு ஜாம்போத்தல்களையும், நாலு பிஸ்கற் பக்கற்றுகளையும் தூக்கி வண்டிலுக்குள் போட்டுக் கொண்டான்.
மனைவி தந்த பட்டியலின்படி எல்லாம் வாங்கி ஆயிற்று சந்திரசேகரம் வந்து க்யூவில் நின்றான். கவுன்ரரில் ஒரு அழகான பெண் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய முறை வந்ததும், "ஹவ் ஆர் யூ ருடே?" என்று கேட்டு ஒரு புன்னகையையும் உதிர்த்தாள். கடையில் இப்படி அறியாத ஒருத்தி சுகம் விசாரிப்பாள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. "ஐ ஆம் வெரி வெல், தாங்க் யூ. அண்ட் யூ?" என்று நண்பன் நவரத்தினம் சொல்லிக் கொடுத்த வாசகங்களைக் கச்சிதமாக ஒப்புவித்தான். இறுதியில் பல 'தாங்க் யூ' பரிமாற்றங்கள்.
காலை ஒன்பது மணிக்கு உள்ளேபோன சந்திரசேகரம் வெளியே வந்தபோது நேரம் ஒரு மணியைக் கடந்தாகி விட்டது. கால்கள் இயந்திர கதியில் இயங்க ஆரம்பித்தன.
வீட்டை வந்தடைந்தபோது, மனைவி வாசலில் காத்துக் கொண்டு நின்றாள். "சமையலுக்குச் சாமானுக்குச் சொல்லிவிட, எங்கை போய்க் கிடந்திட்டு வாறியள்?" அவளுடைய குரல் தூரத்திலேயே கேட்டது.
சந்திரசேகரம் தன்னுடைய திறமைகளையும், பணம் மீதப்படுத்திய விதங்களையும் ஆரவாரமாகச் சொல்லிய படியே, சாமான்களைப் பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வெளியே அடுக்கினான்.
திடீரென்று, தேள் கொட்டியவளைப் போல் மனைவி துள்ளி எழும்பினாள். "உதென்ன பேய் வேலை செய்திருக்கிறியள்? உந்த 'நோ நேம்', 'ஹோம் பிராண்ட் சாமான்களெல்லாத்தையும் அள்ளிக் கொண்டந்திருக்கிறியள்.
"ஏன், அதுக்கு இப்ப என்ன?"
"உதெல்லாம் குப்பையெண்டு தெரியாதே? மிசிஸ் நவரத்தினம் சொன்னவ, தான் ஒருநாளும் உந்தப் பேரில்லாத சாமான்களை வாங்கிறேல்லையெண்டு."
'வெள்ளைகாரரெல்லாம் உதுகளைத்தான் வாங்கிக் கொண்டு போறாங்கள். பாத்திட்டுத்தான் வாங்கினான்."
"எங்கை வாங்கிறாங்கள்? கொண்டு போங்கோ. போய்க் குடுத்திட்டு வாங்கோ. இஞ்சை வைக்க விடன்" என்று இரைந்தாள் மனைவி.
இப்படி ஆரம்பித்த சுப்பர் மார்க்கெட்விஜயங்கள் சந்திர சேகரத்துக்கு மிகவும் 'இன்ரறேஸ்டிங்க்' ஆகவே இருந்தன. மனைவி எத்தனை முறை கேட்டாலும், முகம் சுளிக்காமல் போய்ச் சாமான் வாங்கி வந்தான்--புதிதாகச் சைக்கிள் ஓடப்பழகிய சிறுவன் போல.
பணம் கொடுக்கும் கவுன்டர்களில் உள்ள பெண்களின் தேக சுகம்பற்றிய விசாரிப்புகள்தான் அவனுக்கு என்னவோ அசௌகரியமாக இருந்தன. சொல்லிப் பரிச்சயப்படாத முகமன் வார்த்தைகள். போலியாகவும் பட்டன. அத்துடன், சந்திரசேகரம் கொஞ்சம் பதட்டப்படும் சுபாவமுள்ளவன். கவுன்டர் பெண்ணின் வழமையான கேள்வியை எதிர்பார்த்து, பதிலை எப்பொழுதும் வாய்க்குள் தயார் நிலையில் வைத்திருப்பான். இதனால் கேள்வி வரமுன்பே அவசரப்பட்டு " வெரி வெல், தாங்க் யூ" என்று மறுமொழி சொன்ன நாள்களும் உண்டு.
எங்கெங்கே என்னென்ன சாமான் மலிவு என்ற விபரமெல்லாம் அவனுக்குத் தண்ர்பட்டபாடமாகிவிட்டது. வீட்டுத் தபாற்பெட்டியில் போடப்படும் விளம்பரங்களுக்கெல்லாம் அவன் ஒரு விசுவாசமான வாசகனாக இருந்தான். நண்பர்களும் அவனுடைய சேவையை நன்றாகப் பயன்படுத்தினார்கள். ரெலிபோன் செய்பவர்களுக்கெல்லாம், தகவல்களும் ஆலோசனைகளும் சொல்வதில் அவனுக்கு ஒரு தனிப்பெருமை.
ஆனால் வீட்டில் 'அரசியல் நிலைமை' இப்படித் திடீரென்று மாறுமென்று அவன் எண்ணியிருக்கவில்லை. மனைவியின் சொற்கேளாமல் தொடர்ந்தும் மலிவான சாமான்களையே வாங்கிக் கொண்டு வந்ததால், சந்திரசேகரம் பதவி இறக்கம் செய்யப்பட்டான். இனிமேல் தானும் கூடப்போகவேணுமென்று மனைவி தீர்மானம் எடுத்துவிட்டாள். இதற்குப்பிறகு சந்திரசேகரம் செய்ததெல்லாம் வண்டில் தள்ளும் வேலை ஒன்றுதான். அவன் எந்தப் பொருளையாவது தூக்கிப்போட்டால், அவள் உடனே திரும்ப எடுத்து வைத்துவிடுவாள். அவனுடைய ஆலோசனைகளையும் ஒருபொழுதும் கேட்டதில்லை. அவ்வளவு சந்தேகம் அவனில். இருந்தாலும் பொருட்கள் குவிந்திருக்கும் வண்டிலுக்குள், ஒழித்து மறைத்து தான் விரும்பும் எதையாவது திணித்து விடுவதில் பரம திருப்தி அவனுக்கு. இரண்டு மூன்று நாட்கள் இதனை அவதானித்துவிட்ட பிறகு, அவள் கவனமாக இருக்கத் தலைப்பட்டாள். கவுன்டருக்குப் போகமுன், தான் போடாத பொருள் எதுவும் வண்டிலுக்குள் இருக்கிறதா என்று கிண்டிக் கிளறிப் பார்த்து, எடுத்து வெளியே வைத்துவிட்டுக் கெட்டித்தனமாக நிற்பாள்.
என்ன நடந்த போதிலும், சூப்பர் மார்க்கெட்டில் நிறைவிலை ஆராய்ச்சிகளில் நேரத்தைச் செலவழிப்பது சந்திர சேகரத்துக்கு இப்பொழுதும் விருப்பமான பொழுது போக்குத்தான். இப்படி அவன் எங்காவது தரித்து நிற்கும் நேரங்களில் மனைவி எங்கோ போய்விடுவாள். பிறகு ஆளையாள் கண்டுபிடிக்க இருவரும் படும் கஷ்டத்துக்கு அளவில்லை. அதிலும், வண்டிலைத் தள்ளிக் கொண்டு அவளைத் தேடித் தேடித் திரிவது அவனுக்குப் பெரும் எரிச்சலாயிருக்கும்.
காலம் போகப்போக சுப்பர் மார்க்கெட்டில் சாமான் வாங்குவதில் இரண்டு பேருக்குமே ஆர்வம் கெட்டுவிட்டது. இரண்டு பேரும் தொழில் பார்த்ததால், நேரத்துக்குப் பெரும் தட்டுப்பாடு. "சுப்பர் மார்க்கெட் நேரமெல்லாத்தையும் குடிக்குது" என்று கத்தினாள் சந்திரசேகரம்.
மனைவி சுப்பர் மார்க்கெட் பக்கம் போவதை முற்றாக நிறுத்திவிட்டாள். சாமான் பட்டியல் மட்டும் தயாரித்துக் கொடுத்தாள். அதையே பெரும் வேலையென்று முறையிட்டாள்.
சந்திரசேகரமும் அவள் விரும்பாத நோ நேம், ஹோம் பிராண்ட் சாமான்கள் வாங்குவதை நிறுத்திவிட்டான். விலை ஆராய்ச்சிகளையும் நன்றாகக் குறைத்துவிட்டான். சுப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் போது, வெளிக்கிட்டால் போதும் என்றிருக்கும்.
மழை
_____________________________________________
முருகபூபதி
_____________________________________________
மழை தூறிக்கொண்டே இருந்தது.
'பப்' இன் ஒரு மூலையில் பியர் கிளாஸ”டன் அமர்ந்து கண்ணாடி யன்னலூடாக மழையை ரசித்தான்சந்திரன். ஃபிளட்டினுள் முடங்கி டி.வி.யை ரசித்துக் கொண்டே பியர் குடிப்தைவிட இப்படி இயற்கையை அனுபவித்து போதையில் மூழ்குவதும் நல்ல ரசனையாகவிருப்பதை சந்திரன் உணர்ந்தான்,
'பப்'புக்குள் சுவர்களை அலங்கரித்த அரை நிர்வாண அழகு மங்கைகளின் பெரிய உருவப் படங்களோ, அங்கு ஆக்கிரமித்துள்ள மேற்கத்தைய இசை வெள்ளமோ, சிகரட் புகையை கக்கிக் கொண்டு போதையில் பேசிச் சிரித்து மகிழும் குடிப்பிரியர்களான ஆண்களும், பெண்களுமோ சந்திரனைக் கவரவில்லை.
வெளியே பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கும் மழையே அவன் கண்களையும், கருத்தையும் கவர்ந்து இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது.
இப்படி ஒரு மழை நாளில்தானே வீட்டில் பயணம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். வடிந்த கண்ரைத் துடைத்துக் கொண்டே "கவனம்...ஒழுங்கா சாப்பிடுங்கோ... வருத்தங்களை தேடிக் கொள்ளாதையுங்கோ...கடிதம் போடுங்கோ..." இந்த எதிர்பார்ப்புகளுடன் விடை கொடுத்த மனைவி, "என்னவேண்டும்" எனக் கேட்டதற்கு "சொக்கலேட், பொம்மை, விளையாட்டுச் சாமான்" என முத்தமிட்டு வழியனுப்பிய செல்வங்கள்.
இப்பொழுதும் அங்கே மழை பெய்யுமா! மழை பெய்தால் 'பங்கருக்குள்' எப்படி இருப்பார்கள்?
சந்திரன் பெருமூச்சு விட்டுக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
இப்படியே குடித்து போதை தலைக்கேறியதும் ஃபிளட்டுக்குத் திரும்பி, இருப்பதை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு உறங்கி விட்டால் எல்லாம் மறந்து போகும். நாடு, ஊர், வீடு, மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், பாசம் அனைத்தும் ஆக்கிரமித்து தன்னையும் மறந்து உறங்கி விடலாம்.
பிரிவுத் துயரத்திலிருந்து மீட்சிபெற இதுவும் ஒரு உபாயம்தான். நிரந்தர மீட்சியற்ற ஒரு தற்காலிக சுகம்.
'இன்னும் இப்படி எத்தனை நாட்களைக் கழிக்கப் போகிறேன்?' என எண்ணிய மற்றுமொரு விடுமுறை நாளின் மாலைப் பொழுதிலேயே அவள்- 'அஞ்ஜெலா'- சந்திரனுக்கு அறிமுகமானாள். பல தடவைகள் அவளை அந்த பப்பில் அவன் நேருக்கு நேர் கண்டபோதிலும், "ஹவ் ஆர் யூ" என்ற சம்பிரதாய புன்னகையுடன் தனக்குரிய மூலையின் ஆசனத்தில் போய் அமர்ந்து கொள்ளும் சந்திரன், அவளுக்கு வியப்புக்குரிய பிராணியாக தென்பட்டிருக்கலாம்.
"இங்கே நானும் அமரலாமா?" எனக் கேட்டுக் கொண்டே பியர் கிளாசும், சிகரெடடுமாக அவன் முன்னால அமர்ந்தாள்.
"நான் அஞ்ஜெலா...நீங்கள்?" கையை நீட்டிக் கொண்டாள்.
"சந்திரன்."
"அஞ்ஜெலா...என்ற பெயருக்கு அர்த்தம் கேட்காதே. உனது பெயருக்கு ஏதும் அர்த்தம் இருந்தால் சொல்" அவளது பேச்சை அவன் ரஸ’த்து சிரித்து "மூண்" என்றான்.
"ஓ...மிஸ்டர் moon என்று இலகுவாக இனி அழைக்கலாம்." அவளது நகைச்சுவையை ரசிக்கும் மனநிலையற்ற போதிலும், "தாராளமாக..." என்று சந்திரன் சிரித்தான்.
சனி, ஞாயிறு, திங்களில் தொடர்ந்த மாலைப் பொழுதுகளில், அந்தப் 'பப்பின்' மூலை ஆசனங்களில் அவர்கள் இருவரும் அமரப் பழக்கப்பட்டுக் கொண்டனர்.
"உனக்கு மழையை பிடிக்குமா?" சந்திரன் கேட்டான்.
"ஏனில்லை? மழை இனிமையானது. ரசிக்கக் கூடியது. அதிலும் நனைந்து ஓடுவது ஆனந்தமானது. முன்பு எனது காதலனுடன் மழையில் பல தடவைகள் ஓடி மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் மழை அவனுக்கு பிடித்தமில்லை" என்றாள் அஞ்ஜெலா.
"அவனை ஏன் அழைத்து வருவதில்லை?"
"அவனை விட்டுவிட்டேன் என்று சொல்வதா அல்லது அவன் என்னைக் கைவிட்டு விட்டான் என்று சொல்வதா என்பது புரியவில்லை மிஸ்டர் மூண்."
"ஏதும் பிரச்சினைகளா?"
"ஆமாம்...எனக்கு பிடித்த மில்லாத ஒரு செயலை செய்யப் போனான். 'போகாதே' என்றேன். 'போவேன்'என்று போய் விட்டான். நானும் குட் பை போட்டுவிட்டேன்."
"விளங்கவில்லை அஞ்ஜெலா..."
* * * paniyum 1-ன் தொடர்ச்சி * * *
"என்னிடம் மழையைப் பிடிக்குமா எனக் கேட்டாய். நான் உன்னிடம் கேட்கிறேன்...உனக்கு யுத்தம் பிடிக்குமா?" ஏழாவது 'டன்ஹ’ல்' சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அஞ்ஜெலா கேட்டாள்.
"புதிரான கேள்வி இது."
"எனக்குப் பதில் தேவை. உனக்கு யுத்தம் பிடிக்குமா? பிடிக்காதா?"
"இல்லை; எனக்கப் பிடித்தமே இல்லை. யுத்தம் எனது நாட்டில் தொடர்வதனால்தான் எனது மனைவி, பிள்ளைகளை பார்க்கப் போக முடியாமல் தவிக்கிறேன்..." சந்திரனின் சிவந்த கண்களை அஞ்ஜெலா பரிதாபத்துடன் பார்த்து தலை குனிந்து சில வினாடிகள் மௌனமானாள். பின் எழுந்து மேலும் இரண்டு கிளாஸ்களில் பியர் நிரப்பி வந்தாள். "எனக்குப் போதும்." சந்திரன் மறுத்தான்.
"குடிமகனே...இதில் ஒன்றும் இல்லை...இறுதியில் யாவும் சிறுநீராக கழிந்துவிடும்...வெறும் தண்ர் தான்..."
சந்திரன் வாய் விட்டுச் சிரித்தான். அவளும் சிரித்து சிகரெட் புகையை அவன் முகத்துக்கு நேரே ஊதி விட்டாள். சந்திரன் முகம் சுளித்து, புகையை கையால் ஒதுக்க முயன்றான்.
"ஓ...மன்னித்துக்கொள்...உனக்கு சிகரெட் பிடித்த மில்லையல்லவா...?" அரைவாசியில் கனன்று கொண்டிருந்த சிகரெட்டை 'ஆஷ்றேயில்' அழுத்தி அணைத்தாள்.
தனது சௌகரியம் கருதி அவள் சிகரெட்டை அணைத்தது நாகரீகமாகப் பட்டது அவனுக்கு.
அவன் தன் காதலனைப் பற்றிய கதையைத் தொடர்ந்தாள்.
"லூயிஸ்...அவன்தான் இராணுவத்தில் இருந்தான். சதாம் ஹுசைனிடமிருந்து குவைத்தை பாதுகாத்துக் கொடுக்க போய்விட்டான். யுத்தம் மிகவும் கொடியது மிஸ்டர் மூண். அமெரிக்காவின் நட்பு இந்த நாட்டுக்கு தேவை. 'நானும் வருகிறேன், சதாமுக்கு பாடம் படிப்பிப்போம்' என்று போனான். அப்படிப் போனால் என்னை மறந்துவிடு என்றேன். 'அமெரிக்காவுக்கு ஆதரவு இல்லையா?' எனக் கேட்டான். 'யுத்தத்துக்கு ஆதரவு இல்லை' என்றேன். என்னைவிட, என் அன்பைவிட, என் காதலைவிட, அவனுக்கு அந்த யுத்தந்தான் முக்கியமாகப் பட்டது." அஞ்ஜெலாவின் கண்களில் மினுக்கம் போதையினாலும் இருக்கலாம் என நினைத்தான் சந்திரன்.
"எங்கள் நாட்டிலும் இப்படித்தான் யுத்தம், தொடர்கிறது அஞ்ஜெலா...என் குடும்பம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. நீண்ட காலமாக கடிதங்களும் இல்லை." உதட்டைப் பிதுக்கியவாறு சந்திரன் தலை குனிந்தான்.
"உன்னிடம் ஒரு வேண்டுகோள்...எனக்கு மன நிலை சரியில்லை...இன்று உன்னுடன் தங்கப் போகிறேன்...ஏதும் ஆட்சேபனை இருந்தால் சொல்லிவிடு."
சில வாரங்களாக இப்படி சந்தித்துப் பேசி பியரோ, விஸ்கியோ குடித்துப் பிரிந்தாலும், இவள் இப்படி ஒரு வித்தியாசமான வேண்டுகோளை இதுநாள் வரையில் விடுத்ததில்லை. இன்று இப்படிக் கேட்கிறாள் என்றால், அவளுக்கு நூயிஸ’ன் நினைவு வந்து விட்டதாகத்தான் அர்த்தம்.
தலை குனிந்திருந்த சந்திரனின் நாடியை விரலால் உயர்த்தி உற்றுப் பார்த்தாள் அஞ்ஜெலா...அவள் கண்களில் இனம் புரியாத தாபம் மேவிப் படர்ந்திருக்கின்றதா அல்லது எனது பார்வையில்தான் ஏதும் கோளாறா என்பது புரியாமல், "அஞ்ஜெலா, கவலைப்படாதே! வேண்டுமானால்...நாஙன உன்னுடன் வந்து உன்வீட்டில் விட்டுத் திரும்புகிறேன். எனக்கு இதனால் எந்தச் சிரமமும் இல்லை."
"முட்டாள் தனமாகப் பேசாதே...நீயா இவ்வளவு நாளும் எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாய்...? எனக்குப் போவதற்கு டாக்ஸ’ இருக்கிறது...உன் துணை தேவையில்லை."
அவளுக்கு கோபம் வந்திருக்கவேண்டும். வார்த்தைகள் வேகமாக வந்தன. அவளுடன் பழகியதிலிருந்து அவளுக்கு drug இல் நாட்டமில்லை என்பது சந்திரனுக்கு ஆறுதலாக இருந்தபோதிலும், தனது ஃபிளட்டுக்கு அவளை அழைப்பதில் தயக்கம்.
காதல் தோல்வியின் விரக்தியை தன்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்று அவளுக்குத் தனது பேச்சுத் துணை அவசியமாகவும் இருக்கலாம்.
பெண் அற்புதமான படைப்பு. ஆணின் சிறு துளி விந்தணுவை ஜ“வனாக்கும் ஆய்வுக்கூடம். அந்த மகா சக்தி எவ்வளவு வேதனைக்குரியதாயிருப்பினும் அச்சக்திக்கு வாரிசானவள். அத்தகைய சக்தி தம்மிடம் மட்டும்தான் உள்ளது என்பதை எத்தனை பெண்கள் உணர்ந்திருப்பார்கள்.
அந்த அத்தனை பேரில் இவளும் ஒருத்தியா? எந்த கட்டுக் காவலும், வேலியும் அற்ற சுதந்திரப் பறவையா?
அவளது வேண்டுகோள் அவனுக்கு கஷ்டமானது. வெளியில் காட்டிக் கொள்வதும் அநாகரீகமானது.
"கோபப்படாதே அஞ்ஜெலா...உனது வரவு நல்வரவாகட்டும்..." அவன் கை குலுக்கி அழைத்தான். அவள் ஆனந்தமாக எழுந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். இதனையும் அவன் எதிர்பார்க்கவில்லை. காற்றில் கால் பரப்பி நடப்பதைப் போன்ற உணர்வு சந்திரனுக்கு.
'பம்பை' விட்டு வெளியேறும் போது அஞ்ஜெலா அவனது கரத்தை தனது கரத்துடன் கோர்த்து 'நன்றி' சொன்னாள்.
தெருவில் இறங்கி அவனது ஃளாட்டை நோக்கி நடக்கும் போது அவளே உற்சாகமாக பேசிக்கொண்டு வந்தாள். அவளது வாதங்களை ஏற்பதாக, அவனும் ஆமோதித்துக் கொண்டு உற்சாகமாக நடந்தான்.
"மிஸ்டர் மூண்... இப்பொழுது உலகம் எல்லாம் பிரச்சனைதான். வீட்டில் பிரச்சனை...வீதியில் பிரச்சனை...நாட்டில் பிரச்சினை...வேலைத்தலத்தில் பிரச்சினை...எங்கும் பிரச்சினை தான்."
"உனக்கென்ன பிரச்சினை?"
"எனக்கு வாழ்க்கையே பிரச்சினையாகி விட்டது. லூயிஸ் என்னை ஏமாற்றி விட்டான். அவன் இப்போது என் முன்னே தோன்றவேண்டும்...உன்னை அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்...அப்படி ஒரு குரூரமான ஆசை இப்பொழுது எனக்கு."
"அவன் வெகு இயல்பாக எடுத்துக் கொண்டு, 'ஹலோ...எப்படி சுகம்?' என்று கேட்கலாம் தானே? அவன் எம்மிருவரையும் பார்த்து பொறாமைப்படுமளவுக்கு நான் ஒன்றும் உனது காதலன் இல்லையே...'பப்பில்'கிடைத்த அறிமுகம்...என்று நானே அவனுக்கு சொல்லி உன்னை அவனுடன் சேர்த்து வைப்பேன். அதை எனது நல்ல கடமையாகவும் கருதுவேன்."
"ஓ...நீ மிகமிக வித்தியாசமானவன்...உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. மிஸ்டர் மூண்! இங்கே இப்பொழுது ஒரு முக்கியமான நிலைமையை அவதானித்தாயா?" அவள் நின்று நிதானித்தாள்.
"சொல்."
"வீதிகளில் எங்கு பார்த்தாலும் மூடப்பட்ட நிலைமையில் கடைகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள்...வாடகைக்கு, விற்பனைக்கு, குத்தகைக்கு இப்படிப் பெரிதாக எழுதப்பட்ட அட்டைகளை தாங்கிக் கொண்டு பொருளாதாரம் படுபாதாளம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு இக்காட்சி நல்ல சான்று. விபசாரிகளுக்கும் இப்பொழுது வருமானம் குறைந்து விட்டதாம். டெலிவிஷனில் கூட இப்பொழுது விபச்சாரத்து விளம்பரம், அழகிய இதழ் விரித்து தொலைபேசி இலக்கம் சொல்லி...'என்னை அழையுங்கள்' என விளம்பரம்...என்னை மன்னித்துக் கொள். நான் சொல்லவேண்டிய விடயத்தை சொல்லாமல் வேறு எங்கேயோ போகிறேன்."
"பரவாயில்லை...கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது...சொல்..."
"இத்தனை கட்டிடங்களும், கடைகளும், நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் வருவாய் இன்றி உற்பத்தி இல்லாமல் மூடப்பட்டு காட்சி அளித்த போதிலும்...இந்த மதுச்சாலைகள் ஏதாவது மூடப்பட்டிருக்கிறதா...பார்!...சந்திக்கு...சந்தி...தெருவுக்கு....தெரு...'பப்புகள்!' அவை மூடப்படவில்லை. உற்சாகமுடன் இயங்குகின்றன. எவ்வளவு பொருளாதார உற்பத்தி வீழ்ச்சியிலிருந்த போதிலும், இதற்கு மட்டும் எந்தக் குறையும் இல்லை."
அஞ்ஜெலா இப்பொழுது அவனுக்கு ஒரு சராசரி பெண்ணாக தோன்றவில்லை. விவரம் தெரிந்த உலகப் பொது நிலவரம் புரிந்தவளாகவே, அவள் மீதான கணிப்பை உயர்த்துவதாகவே தோற்றம் காட்டினாள்.
"ஆமாம்...நீ சொல்வதை ஏற்கிறேன்...இதற்கு காரணம் என்ன...?"
"இன்னுமா...புரியவில்லை. மக்களுக்கு பிரச்சினைகள் அதிகமாகி விட்டன. அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு நன்றாக குடித்து போதையில் மூழ்கி உறங்குகிறார்கள். பிரச்சினைகள் பெருகப் பெருக மதுச்சாலைகளும் அதிகரிக்கப் போகிறது...வேண்டுமானால் இருந்து பார். புதிது புதிதாக குடிப்பிரியர்கள் அதிகமாகிறார்களே தவிர யாரும் குடியை விட்டதாக தெரியவில்லை."
அவளது வாதத்தை ஏற்பதா விடுவதா எனப் புரியாமல்...ஃபிளட்டின் படிக்கட்டுகளில்ஏறி...கதவைத் திறந்து...'நல்வரவு கூறி' வரவேற்றான் சந்திரன்.
இரவு பத்துமணி கடந்து விட்டது. இன்றைய இரவுப் பொழுது இவளுடன் வாதிப்பதில் கழிந்துவிடுமோ...அல்லது...அவனுக்கு வீட்டு நினைவு வந்தது.
அஞ்ஜெலா களைத்துப்போய் ஹோலில் இருந்த குஷன் செட்டில் 'தொப்'பென விழுந்து அமர்ந்து சாய்ந்தாள். அவள் அமர்ந்த தோரணையிலிருந்து குடித்ததினாலோ...நடந்து வந்ததனாலோ...அவள் களைப் புற்றிருக்கலாம் எனப் பட்டது சந்திரனுக்கு.
"உனக்கு இந்தத் தனிமை பிடித்திருக்கா மூண்..."
"அஞ்ஜெலா...'சந்திரன்'என்றே கூப்பிடு...அதென்ன மூண்...மூண்..."
"ஓ...மன்னித்துக் கொள்...நாம் இப்போது மிகவும் நெருக்கமாகி விட்டோம் இல்லையா?"
"அந்தக் கருத்துப்பட சொல்லவில்லை அஞ்ஜெலா...நாம் நண்பர்கள். பல விஷயங்களையும் அறிவுபூர்வமாக விவாதிக்கின்றோம்." என்று சொன்ன போதிலும் இவளுடனான இந்த நட்பு எப்போதோ கிட்டியிருக்க வேண்டும். இவளை மணந்து, இந்த அந்நிய மண்ணில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, பின்பு இவளை ஏதும் பணம் கொடுத்து விவாகரத்து செய்துவிட்டு ஊரிலிருந்து மனைவி, பிள்ளைகளை 'ஸ்பொன்ஸர்'மூலம் அழைத்திருக்கலாம். அது சாத்தியமானதா?
விண்ணப்பத்தில் மணம் முடித்தவன்; குடும்பம் இலங்கையில் என்றல்லவா எழுதினேன். அப்படி இருக்க இங்கு இப்படி ஒருத்தியை திருமணம் செய்யச் சட்டத்தில்‘ இடமில்லையே...அப்படித்தான் செய்வதாயிருந்தாலும் ஊரில் மனைவியிடம் விவாகரத்துப் பெற்றதாக அத்தாட்சி வேண்டுமே...
ஓ...எனக்கென்ன நடந்து விட்டது. மனம் ஏன் இப்படி பேதலிக்கிறது? இப்படி விபரீதமாக சிந்திக்க மனம் தூண்டுகிறதா...
சந்திரன் கண்களை மூடி மௌனமாக இருந்தான்.
அவள் எழுந்து வந்து அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்தவாறு நெருக்கமாக அவன் அருகில் அமர்ந்தாள். சந்திரன் கண்களைத் திறந்து அவளது கைகளை விடுவித்தான்.
சந்திரனுக்கு அவளது காதலோ, அன்றி காமம் மீதூறிய செயல்களோ, பிடித்தமில்லாததாயினும் அந்த சுகத்தை ஏற்பதா நிராகரிப்பதா எனப் புரியாமல் தவித்தான்.
"சந்திரன்...இந்த பாலியல் உறவு கூட ஒருவகை யுத்தம் தான்."
"லூயிஸ் உனக்குச் சொல்லித் தந்தானா?"
"அவன் முட்டாள்....அவனைப் பற்றி பேசாதே...அவனுக்கு துப்பாக்கி ஏந்த மட்டும்தான் தெரியும்...அதன் மூலம் எவரையும் சுட்டுக் கொல்ல மட்டும்தான் தெரியும்."
"அப்படிச் சொல்லாதே அஞ்ஜெலா...எங்கள் நாட்டில் மக்களை பாதுகாப்பதற்காகவும் துப்பாக்கி ஏந்தியவர்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள்."
"சொல்லுவார்கள்தான்...களத்தில் இல்லையல்லவா? மக்களை அழிப்பதற்காக துப்பாக்கி இராணுவப் படைகளும் இருக்கின்றன. இவன் குவைத்தை மீட்கப் போனானாம். எது எப்படி இருந்தபோதிலும் யுத்தங்களினால் ஆயுதம் விற்கும் வியாபாரிகளுக்குத்தான் நன்மை...லாபம்...அப்பாவிகளுக்கு ஒன்றும் இல்லை...உயிரிழப்பு மட்டும் தான். நான் இங்கே ஒருத்தி எத்தனை ஏக்கங்களுடன் இருக்கிறேன் என்பது அந்த முட்டாளுக்குத் தெரிய வில்லையே...அவன் இனிமேல் என்னை மீட்க வரமாட்டான் சந்திரன். நீயாவது என்னை மீட்கப் பார்...தயவு செய்து...என்னை மீட்கப் பார்..." அவள் கதறியழுது அவனை மூர்க்கமாக கட்டிப் பிடித்து அணைத்தாள். ஆ....எவ்வளவு பலம். சந்திரன் அவளை தேற்றினான்.
"வா...நாங்களும் யுத்தம் புரிவோம்....இந்த யுத்தத்தில்...எமக்கு வெற்றி தோல்வி இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து...அவரவர் பலத்தை சமமாகப் பிரயோகித்து..களைத்து சமாதானப்படும் யுத்தம் இது. இங்கே ஆயுதங்கள் இல்லை... உனது குடும்பப் பிரிவுத் துயரை நீ தணிக்கவும் இந்த யுத்தத்தை நாம் இன்று பிரகடனம் செய்வோம். நான் தயார்...நீயும் தயாராகு..."
அவள் தனது சிவந்த கண்களை இறுக மூடி அவனுக்கு முத்தமிட இதழ்களைத் திறந்தாள். சந்திரன் அவளை உதறித் தள்ளிவிட்டு எழுந்து நின்றான். அவளும் கோபத்துடன் சுட்டெரித்து விடும் பார்வையுடன் பார்த்தாள்.
"ஆண் வர்க்கமே இப்படித்தான்...."
"வாயை மூடு அஞ்ஜெலா...நான்காண்டுகளுக்கும் மேலாக என் ஸ்பரிசம் இன்றி...எனது உடல் சுகம் கிட்டாமல்...துப்பாக்கி வேட்டுகளுக்கும்...செல் அடிகளுக்கும்...பயந்து கொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம், வேண்டுகோள் நியாயமானதாகப் பட்டால் என் மனைவியும் அங்கே...இந்த சுகத்துக்காக உன்னைப் போல் ஒருவனைத் தேடிப் போகலாம் இல்லையா..."
"ஓ...அப்படி பேசுகிறாயா...அவள்மீது உனக்குள்ள அபார நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள் நண்பனே...நி வித்தியாசமான பூமியிலிருந்து வந்திருக்கிறாய். நீ இன்னும் பச்சை மண்...நான் சுட்ட மண். இரண்டும் ஒட்ட வழியில்லை. என்னை மன்னித்துக் கொள். எனக்குக் குடிக்க ஏதாவது வேண்டும்...குடித்தால்தான் நித்திரை வரும்...ஏதும் வீட்டில் வைத்திருந்தால் தா...நண்பனே...! அவன் லூயிஸ் முட்டாள்...அயோக்கியன்...சதாம் ஹுசைனுடன் படுக்கப் போய் விட்டான்...பொண்ணையன்...ஆண்மை அற்றவன்...சந்திரன் நீ வீரன். நீதான் இனி எனக்கு உண்மையான நண்பன்...போ...எனக்கு ஏதும் கொண்டுவா..பியர் இல்லையெண்டால் பிரண்டி அல்லது விஸ்க்கி...ம் எனக்கு உறக்கம் வேண்டும்...உறக்கம் வேண்டும்."
அஞ்ஜெலா வாய் பிதற்றியபடியே சோர்ந்து சரிந்து விட்டாள். அவளைத் தூக்கி உடையை சீர்படுத்தி, அந்த குஷன் செட்டியிலேயே உறங்கவைத்து 'பெட்ஷ“ட்' எடுத்து வந்து போர்த்தி விட்டான்.
அறையினுள் புளுக்கம். யன்னலைத் திறந்தான்.
மழை வெளியே பெய்து கொண்டிருந்தது...
ஓய்வு நாள்
____________________________________________________
யாழ் பாஸ்கர்
____________________________________________________
தூக்கம் கலைந்தும் கலையாத கோலம்.
நன்றாக விடிந்து விட்டது. 'இண்டைக்கு சனிதானே?...' என்கிற நினைவிலே, சோம்பல் முறிக்கக் கூடப் பஞ்சிப்பட்டான்.
'மச்சான் எழும்படா நேரம் எட்டாகுது. கனக்க வேலையள் கிடக்கு...உனக்கு ரீ போடவே?'
'போடு மச்சான்...இவன் சிவா எழும்பீட்டானே?'
'அவனை எழுப்பிப் போட்டுத்தான் வாறன்...'
சாந்தனின் திருப்பள்ளி எழுச்சிக்கு, இளையராஜாவின் இசையமைப்பு வாகாக உதவியது.
'மச்சான் ரீயைக் கெதியிலை குடியுங்கோ...ஆறப் போகுது...' முரளி துரிதப்படுத்தினான்.
'இண்டைக்கு என்ன மச்சான் எங்கடை பூறோகிறாம்?'
'முதலிலை சோப்பிங்...போன கிழமையும் வடிவாச் செய்யேல்லை...இண்டைக்கு விட்டால் பிறகு வாற கிழமைதான்.'
'இண்டைக்கு நல்ல வெதர்...நானும் சொப்பிங் வாறன்...'என்றான் சிவா டீயை மிடறு முறித்தவாறு.
'ஒவ்வொரு கிழமையும் புறோகிராம் எண்டு ஓடுவாய்...'
'இப்ப சமர்தானே?...சவுத்லண்டிலை சோக்கான ஷோ அல்லோ? உந்த வெள்ளைத் தோல்காரியள் உள்ளுக்கை அவியுதெண்டு காட்டிக் கொண்டு வருவினம்...மூண்டு வரிசமா நாங்கள் இங்கைகிடந்து காயிறது ஆருக்குத் தெரியும்?' சில ஆசைகள் சப்புக்கொட்டின.
'அதுக்குப் பேயா அலையிறதே?...ஒண்டைக் கொழுவுறதுதானே?'
'உதுகளுக்குப் பொசிப்பு இருக்கவேணும். புறோகிறாம் ஒண்டும் தவறவிடுறேல்லை...'
'பேந்து?'
'இவளவையளை முடிச்சுப் போட்டு ஆரால கட்டு அவிழ்க்க ஏலும்? எனக்கு மச்சான் இங்கிலீசு கத்திப் பிடி. இவளுகள் தமிழ் தெரியாதைபோலை இங்கிலீசிலையல்லே புழுத்துகினம்...'
'வெள்ளைக்காரங்கடை ஊத்தையளை எல்லாம் ஸ்டையில் எண்டு நினைச்சுக் கொப்பியடிப்பினம்...மத்த விஷயங்களிலை மூதேசியள் பாத்தியிலை போட்ட பனங்கொட்டையள்...'
'எங்கடை சனங்கள் வெள்ளைக்காரரைக் கலியாணம் செய்துகொண்டால் ஒரு பிரச்சினையும் இல்லை...'
'உதுதான் ஆகப் பேய்க் கதை. தமிழனாய்ப் பிறந்தவன் சாதியைக் கைவிட்டிட்டால், பேந்து லெவல் அடிக்கிறதுக்கு எங்களிட்டை என்ன இருக்குது?...Student Visa விலை வந்து P.R.ருக்காக வெள்ளைக்காரியளைக்கட்டி, பேந்து Divorce எண்டெல்லாம் சீரழிஞ்சதைக் கேள்விப் படேல்லையே...'
'இதுக்கும் ஒண்டு. தமிழன் வலு சுழியன். போற போற இடத்தில் புதிய சாதியளை உண்டாக்கிப் போடுவான். 83 அமளிக்கிள்ளை Open Visa விலை அள்ளுப்பட்டு வந்தவை, இப்ப தமிழ் தெரியாது எண்டு கெப்பர் அடிக்கினம். இவை ஒரு புதுச்சாதி...'
'ஓமோம்...இவை கொழும்பிலை அடி வாங்கேக்க
"மகே அம்மே..." எண்டு கத்தியிருப்பினம்..."
"உப்பிடிப் பேய்க் கதையள் கதைச்சுக் கொண்டிருந்தால்...எட, நேரம் பனிரெண்டாகுது. பேந்து இறைச்சியும் முடிஞ்சு போகும். கதையை விட்டிட்டுப் புறப்படுங்கோ...'என்று முரளி துரிதப்படுத்தினான்.
'சொல்லச் சொல்லக் கேளாமல் வழிஞ்சு திரிஞ்சியள். இப்ப என்ன நேரம்?...மச்சான் கெதி கெதியாச் சமைப்பம்...சாந்தன் நீ இந்தக் கோழியை வெட்டு. சிவா, நீ மரக்கறியையும் வெங்காயத்தையும் வெட்டு. நான் சோத்தைப் போட்டிட்டு கறியளைச் சமைக்கிறன்..."
'அது சரி மச்சான். இண்டைக்கு மூண்டு பேரும் ஒண்டாய் வீட்டிலை நிக்கிறம். போத்தில் ஏதாவது எடுப்பமே?'
'உதென்ன Refugee Application னோ? எடுத்தாப் போச்சு."
'வெயிலுக்கு பியர்தான் நல்லது...'
'சிவா பியர் வேண்டாம். அது சும்மா அம்மிக் கொண்டிருக்கும். பெரிசிலை எடுப்பம்.'
றெட் லேபலோ...பிளாக் டக்ளஸோ?'
'எதெண்டாலும் எடுத்துக் கொண்டு வாவன். உன்னெட்டைக் காசு இருக்குத்தானே? கொம்பனிக் கணக்கிலை போடுவம்.' சிவா புறப்பட்டான்.
டெலிபோன் மணி கிணுகிணுக்கிறது.
'மச்சான் டெலிபோனை ஒருக்கா எடு...'
'ஹலோ...'
'....'
'...ஸ்பீக் டு சாந்தன்...Who is speaking there? மீரா?... from where...preston...OK Just a minute...' பேசு முனையைக் கையால் பொத்திக் கொண்டு, 'சாந்தன் உனக்குத்தான்...என்றான் முரளி.
'ஆரடா?...நான் அறைக்குள்ளை போய் எடுக்கிறன்.'
'பேரை மாத்திச் சொன்னாப் போலை, உவள் ஆரெண்டு எனக்குத் தெரியாதாக்கும்' என்று முணுமுணுத்துக் கொண்டே போனை வைத்தான்.
'மச்சான் சமையல் எந்த அளவில் கிடக்கு?' சிவா போத்தலுடன் வந்தான்.
'எங்கை மச்சான்? அவன் போனோடை கொஞ்சிக் கொண்டிருக்கிறான்...கறியள் கொதிக்கட்டும்...நீ போத்திலை உடையன்...'
'பொறு மச்சான்...அவனும் வரட்டும்...'
'நீ கடைக்குப் போன கையோட போனிலை குந்தினவன்...இன்னும் பேசி முடிக்கேல்லை...நாங்கள் அதுக்குள்ளை ஒரு ரவுண்ட் எடுப்பம்.'
சிவாவும், முரளியும் ஒவ்வொரு 'சிப்' எடுத்துக் கிளாஸை வைச்ச பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. 'மச்சான், உதுகளை எடுத்து மறைச்சுவை. ஆரும் பொம்பிளையள் வந்தாலும்...'
'ஆரடா எங்கடை வீட்டுக்குப் பொம்பிளையள் வருப் போகுது?' சிவா கதவைத் திறந்தான்.
'அண்ணையே...வாருங்கோ...கண்டும் கனகாலம்...'
'எங்கையடா தம்பி நேரம்? இப்பிடித்தான் எப்பவாவது இருந்திட்டு வெளிக்கிடுகிறது.'
தர்மா அண்ணர் உள்ளே வந்ததும், கதவு மீண்டும் சாத்தப்படுகிறது.
'அண்ணைக்கும் ஒரு கிளாஸ் எடுத்துக் குடு...எப்பிடி யண்ணை வேலைப்பாடுகள்?'
'கிடக்கிறம்.'
'ஓவர் டைம் இல்லையோ?'
'இருந்திட்டுத்தான் கொத்தும். கையிலை நாலு காசு மிச்சம் பிடிப்பம் எண்டால் வலுவில்லங்கமாகக் கிடக்கு.'
"கிழமைக்கு Tax போக 500 டொலர் எடுத்தும் வில்லங்கமாம். வந்த புதிசிலை 150 டொலர் கிடைச்சாலே, கிழமைக்கு 4500 ரூபாயல்லோ? பொல்லாரை அடிச்ச காசு எண்டு வாயைப் பிளந்தவர்" என்று நினைத்தவாறே, இன்னும் இரண்டு கிளாஸ”களிலே உரிய சடங்குகளுடன் மதுவைக் கலந்த முரளி, 'டேய் சாந்தன்! கதைச்சது போதும்...பொட்டையள் எண்டால் போனுக்குள்ளாலை வழிவானுகள்' என்று குரல் கொடுத்தான்.
'அப்பிடியான வயசுதானே தம்பி?'
'என்னண்ணை வயசு? உவன்ரை வயசுக்கு உவன் சுழட்டப் பாக்கிற பொடிச்சியள் உவன்ரை பிள்ளையள் மாதிரி.'
'என்னடா, நான் கிழவனே? முப்பத்திரெண்டு, ஒரு வயசே?' என்று கேட்டவாறே சாந்தனும் வந்து கலந்து கொள்ள 'சமா' களை கட்டத் துவங்கியது.
'நீ சொன்னது சரி' என்று தர்மா அண்ணர் சொன்னார்.
'அவன்ரை தலைமயிரை ஒருக்கா முன்னாலை தூக்கிப் பாருங்கோ. அரைவாசியும் நரை.'
'இங்கத்தைய சுடுதண்ணிக்கும் ஸம்போவுக்கும் நரைக்கிறதுதான். என்ர தலையைப்பாரும். ரெண்டு காதோரமும் நரைக்கேல்லையே?' தர்மா அண்ணர் தன் தலைமயிர்க் கறுப்பை வைத்துத் தமது இளமையைப் பறை சாற்றுவது வழக்கம்.
'நாங்கள் படுகிற பாடு எங்கடை அப்பன் ஆத்தைக்குத் தான் விளங்கேல்லை எண்டால், இந்த இமிகிரேஷன் காரங்களுக்கும் விளங்குவதில்லையே! இப்பிடியே கிடந்து காலத்தைக் கடத்திப்போட்டு மண்டையைப் போடத்தான் சரி.' சாந்தன் அலுத்தான்.
'மச்சான், ஒரு சோக்கான ஐடியா. உன்ரை நரைச்ச முடியைக் கொஞ்சம் வெட்டி கடிதத்துக்குள்ளை வைச்சு, இது நல்லூரானுக்கு நேந்தது எண்டு அனுப்பிப் பாரன். அப்ப எண்டாலும் பொடியனுக்கும் வயசாப் போச்சுது எண்ட அறிவு அவையளுக்கு வருமோ பார்.'
'உந்த விசர்க் கதையளை விட்டிடு...மச்சான் கறியைக் கிளறிவிட்டு, கொஞ்சம் எலும்மிச்சம் புளியை விடு.'
'உப்புப் போட்டனியே? பேந்து வெறியிலை மறந்து போவாய்.'
'எல்லாம் சரி. மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. ஒரு ரவுண்ட் எடுக்கேல்லை. அதுக்குள்ள எனக்கு வெளியே? உந்தா, எல்லாக் கிளாஸ”ம் காலியாக் கிடக்கு.' அவன் எல்லாருடைய கிளாஸையும் நிரப்பினான்.
மறு ரவுண்ட் இறங்கிக் கொண்டிருக்கும் போதே, 'அது தர்மா அண்ணை...உங்களைப்பற்றி ஒரே கிசுகிசு நடக்குது. நீங்க அந்தப் பொட்டையைக் காரிலை கொண்டு திரியிறியளாம். ஒரு சின்ன வீடு செட்டப்போ?' என்று சிவா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
'எட, அம்மாவாணை...சனியங்களே, அப்பிடி ஒண்டும் இல்லை. அது தனியா வேறை இருக்கு. காரும் இல்லை. உதவி எண்டு கேட்டால், நேரம் இருந்தால் செய்யிறதுதானே? சகோதரி மாதிரி...'
'ஓம் அண்ணை. சகோதரம், சகோதரம் எண்டுதான் முதலிலை பழகவேணும்!...' என்று சாந்தன் இழுத்தான்.
'டேய், நீ எப்ப பாத்தாலும் விசர்க்கதைதான் கதைக்கிற. அடுப்பை நிப்பாட்டு.' தர்மா அண்ணருக்குக் கோபம் வராமல் முரளி சமாளித்தான்.
'ஓமோம்...கொஞ்சமா ஊத்து மச்சான்.'
'எங்கடை ஆக்கள் யாரா இருந்தாலும் உதவி எண்டு கேட்டாச் செய்ய வேணும்.'
'எங்கடை ஆக்கள்...எங்கடை ஆக்களுக்கை ஒரு நாளும் ஒற்றுமை வராது. வெள்ளைக்காரங்கடை குண்டியைக் கழுவுவம். எங்கடை ஆக்கள் எண்டோடனை அந்தப் ப...தெரியாதோ எண்டு நாக்கு வழிப்பம். ஊரிலை என்ன நடக்குது? என்னத்துக்கோ வெளிக்கிட்டவங்கள் எங்கேயோ போய் நிக்கிறாங்கள். தானும் செய்யானாம் தள்ளியும் படுக்கானாம் எண்டகதை. செய்யிறவங்களையும் விடுறாங்கள் இல்லை.'
ஊர் வம்வுகள் விடுத்து, வேதாளங்கள் அரசியல் என்ற முருங்கையில் தாவுவது கண்டு, முரளி சாப்பாடுகளைப் பரிமாற எடுத்து வைத்தான்.
'எங்கடை அரசியல் தலைவர்கள் பார்லிமேந்து கதிரைக்காக எங்களை வித்தவங்கள். ஆனால், புத்திசீவிகள் எண்டு தம்பட்டம் அடிக்கிறவங்கள் என்னத்தைச் செய்து சிழிச்சவை? செமியாக்குணத்திலை தத்துவம் பேசினது தானே மிச்சம்? சாதியையும் சீதனத்தையும் இப்பவும் கட்டிப் பிடிச்சுக் கொண்டுதானே இருக்கினம்? தங்களுடைய சொந்தத் தொப்பையையும் சொகுஸையும் பார்த்துக் கொண்டு தத்துவம் பேசிற உதகளை...எனக்கு வாற விசரிலை, லைட் போஸ்டுகளிலை கட்டித் தூக்க வேணும்.'
'அவசரப்படாதை மச்சான்! உதுகளும் நடக்கும். கனடாவிலை கத்திக்குத்துக் கொலை நடக்கேல்லையோ? சிநேகிதனின்ரை அம்மாவைக் கூட்டிக் கொண்டு போற கிலிசகேடு நடக்கேல்லையே? உந்த நாகரிகம் எல்லாம், எங்கடை ஆக்கள் இருக்கிற எல்லா நாடுகளுக்கும் பரவும் எண்டுதான் நான் நினைக்கிறன்.'
'இங்கையும் செட்டியார், விதானையார், தாமகர்த்தா சேட்டை விடப் பாக்கிறவை இல்லையோ? சீதனம் டொலரிலை தரவேணும் எண்டு சொல்லத் தரகர்கள் பிடிக்கேல்லயோ?' என்று சொல்லிக் கொண்டே சிவா எலும்பைப் பக்குவமாகக் கடித்து நொருக்கினான்.
'நீங்கள் என்ன சொன்னாலும், படிச்சவன் படிச்சவன்தான்.' இவ்வளவு நேரமும் தாம் சாப்பாட்டிலே கவனமாக இருந்ததை மறைப்பதற்காக தர்மா அண்ணர் இடையில் புகுந்தார்.
'நீங்கள் மெடிக்கல் போய் வந்திட்டியள். பேந்தென்ன? இவன் முரளியைப் பாருங்கோ. ஐஞ்சு வருஷமாகப் போகுது. பெண்டில் பிள்ளையளை விட்டிட்டுத் தனியா இருக்கிறான். படுத்தாள் Medicare இல்லை. ஆனால், படிச்சவங்கள் தலைவர் பதவிக்காக ஒவ்வொரு சங்கமாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறாங்கள். பிள்ளைப் பேறு பார்க்க அம்மா வருவா. பிறகு Dole காசும் கிடைக்கும். அம்மம்மா பிள்ளையைக் கெடுத்துப் போடுவா எண்டு, வெள்ளைக்கார "சையில்ட் மயிண்டிங்." நாவிதன் குப்பையைக் கிளறினால் மசிர் தான் வரும். உதுகளை விட்டிட்டுச் சாப்பிடுங்கோ. முரளியே சமைச்சவன். அவன் உங்கினை ஒரு Sri Lankan Restaurent துவங்கினால் யாவாரம் புழையில்லாமல் போகும்.'
'மெய்யண்ண. கணேசு அவிட்டிருக்கிற கார் என்ன மேக்காம்.'
கார் பற்றிய அறிவு ஞானத்தைப் பறைசாற்றியவாறு தங்கள் சாப்பாட்டினை மிகவும் விமரிசையாக முடித்துக் கொண்டார்கள்.
சாப்பாட்டுப் பீங்கான்கள் கழுவிக் கொண்டிருக்கும் போது, 'நீங்கள் உதுகளை ஒதுங்கவையுங்கோ. நான் கனடாவுக்கு ஒரு போன் எடுக்க வேணும். எடுத்திட்டு 'டக்' கெண்டு வாறன்.'
'ஓ, நீ உந்தத் தண்ணியிலை போன் எடுத்திட்டு டக்கெண்டுதான் வரப்போறாய். மாடு மாதிரி உழச்சு டெலிபோனுக்குக் குடு.'
ஹாலுக்கு வந்தார்கள். Spice Centre ல் எடுத்து வந்த 'டூயட'படத்தை, டெக்கில் முரளி போட்டான்.
'டூயட்டோ? நல்ல கொப்பியோ?'
'கமரா கொப்பிதானாம். ஆனால், பிழையில்லையாம்.'
'அப்ப நான் வரட்டே?' என்றார் தர்மா அண்ணர்.
'இரவைக்கு ஒரு இடத்தில் சாப்பாட்டுக்கு வரச்சொன்னவை. எனக்குக் கொஞ்சம் கூடியும் போச்சுது. நேரை வீட்டை போய்க் கொஞ்சம் கண் அயருவம்.'
'உங்களுக்கு என்ன அண்ணை? ஒவ்வொரு கிழமையும் எங்கையாவது காப்புக் கையாலை சாப்பாடு விழும்.'
'உதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனவு வேணும் தம்பி. அது கிடக்க, இரவைக்கு உங்கடை புறோகிராம் என்ன?'
'சிவாவுக்குக் கூத்துக் கட்டுற வேலை. இண்டைக்கு கறுவல் வீட்டில் ட்ராமா பற்றி டிஸ்கஷனாம். சாந்தனுக்கு சனிக்கிழமை இரவு புரோகிறாம் என்ன எண்டது தெரியுந்தானே?'
'அவருக்கு எங்கேயடா உதுகள் விளங்கப் போகுது? அவற்ர வயசுக்கு உதுகள் சரி வருமே?'
'தம்பி, வயசு ஒரு பிரச்சினையில்லை. இந்த இங்கீலிசு தான். அது மட்டும வடிவாவந்தா, சிலரைப்போல நான் டிஸ்கோ எண்டெல்லாம் அலையமாட்டன். உங்கடை வயசிலை நாங்கள் ஆடாத ஆட்டமே.'
'ஓமோம். இப்ப கொஞ்சம் ஆட்டமா இருக்கிறியள் அண்ணை. இங்கை படுங்கோ. இப்ப கார் ஓடுறதும் வடிவில்லை. Fine கட்டினாப் பறவாயில்லை points அல்லோ வெட்டிப்போடுவான்.'
'மச்சான், முரளி வீடியோவை நிப்பாட்டு. நல்ல சாப்பாடு. பேசாமல் கொஞ்சம் நித்திரை கொண்டு எழும்புவம். பொழுது சாயட்டும். எழும்பினாப் பிறகு, மற்றப் புரோக்கிறாமுகளைப்பற்றி யோசிப்பம்.'
'அண்ணை, நீங்கள் என்ர கட்டிலிலை சரியுங்கோ. நான் இந்த செற்றியிலை கொஞ்சம் சரியிறன்.'
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரிலே பூத்த அந்த சனிக்கிழமை, இரவு நோக்கி நீளுகின்றது.
கதையின் கதை
______________________________________
யோகன்
______________________________________
நீண்ட நாட்களாக ஒரு கதை எழுத வேண்டும் என்று யோசித்திருந்தான் நடா. அது இலகுவான காரியமல்ல என்பதும், இப்போது குடும்பஸ்தனாகிவிட்ட அவனுக்கு இயலாத காரியமாகவும் தோன்றத் தொடங்கியது. தேனீக்கள் கூடு கட்டுவதுபோல சிறுகச் சிறுக விஷங்களைச் சேமித்து ஒரு கதையை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டான். நடா கதைகள் எழுதி அனுபவப் பட்டவனல்லன். நல்ல கதைகளைப் படிப்பதில் விருப்பமிருந்தது. இதனாலோ என்னவோ எழுதும்முயற்சியை அவ்வப்போது பின்போட்டு வந்திருந்தான். இதற்கு இரண்டு காரணங்களும் இருந்தன. தனது கதை வாசித்த கதைகளின் தரத்தை எட்ட வேண்டுமே என்ற பயமும், மேற்படி கதைகளின் சாயலில் அமைந்துவிடக் கூடாதே என்ற பயமுமே அக்காரணங்களாம். எனினும் விதிவசத்தால் எழுதப் போகும் இக்கதையே தன்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் என விசுவசித்தான் நடா.
இது ஒருபுறமிருக்க, போன மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து நடா அமைதியிழந்து காணப்பட்டதை அவன் மனைவி மனோ கவனித்தாள். வேலையில் ஏதாவது தகராறு இருக்கலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தாள். ஏனெனில் அவளுடனும் மனக்கசப்பு என்று குறிப்பிடத் தக்கதாக இல்லை. பாத்ரூம், டொய்லட்களில் நடா நீண்ட நேரம் செலவழிப்பதை மனோ அவதானித்து வந்தாள். எதேட்சையாக பாத்ரூமிற்கு வந்தபோது ஷவரைத் திறக்காமல் நடா ஏதோ தியான நிலையில் நிற்பது போல ஷவரின் கீழே நின்றதையும், அவளுடன் உரையாடும்போது எல்லாவற்றிற்கும் 'ம்' 'ம்' என்று ஆமோதிப்பதையும், இடையே தான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சில கணங்களில் பின் 'என்ன கேட்டீர்?' எனத் திருப்பிக் கேட்பதையும் வைத்து அவளால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
மேலும் நடாவுக்கு மறதி அதிகமாகிக் கொண்டு வந்தது. உதாரணமாக இருவருமாகச் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடிந்து கை கழுவுகையில், 'மனோ நீர் இன்னும் சாப்பிட வில்லையா?' என்று கேட்பான். கார்ச் சாவியையும், அதனுடனிருந்த வீடடுச் சாவியையும் காருக்குள் மறந்து போய் வைத்துப் பூட்டி விட்டதாக நினைத்து வீட்டுக்கு வெளியே இருந்த பப்ளிக் போன் மூலம் கார்க் கதவைத்திறக்க RACV ஐக் கூப்பிட்டான். கடைசியில் பொக்கட்டின் ஒரு மூலையிலேயே சாவிகிடந்தது. தெருச் சந்திகளில் பச்சை விளக்குக்காக காத்து நிற்கையிலும் ஏதோ சிந்தனையிலாழ்ந்து விடுவான். பச்சை விளக்கு விழுந்தபின் ஒவ்வொரு முறையும் மனோ ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. இவ்வறிகுறிகளை வைத்து நடா கதை எழுதுவதாக எப்படி அவளால் ஊகிக்க முடியும்? நடாவோ கதையை இரகசியமாக எழுதி முடித்துவிட்டு பிரசுரிக்கப்பட்டபின் மனைவியிடம் காட்டி அவளை ஆச்ரியப்படுத்தலாம் என எண்ணியே பேசாதிருந்தான்.
நடாவின் சொந்த வாழ்வு குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஆமை தலையை உள்ளிழுத்துக் கொள்வதுபோல ஒதுங்கியும், அவ்வப்போது நகர்வதும் போல வாழ்க்கையைச் செலுத்துவது அவனுக்கு உசிதமாகப்பட்டது. இதற்கிடையில் நடா வேலை பார்த்து வந்த தொழிற்சாலையின் களஞ்சிய அறையில் அவனுக்கு வேலை கிடைத்தது. முன்பு பார்த்த வேலையைவிட கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடைத்தது. தொழிற்சாலையின் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை டிறக்குகளிலிருந்து அல்லது லொறிகளிலிருந்து இறக்குதல், களஞ்சிய அறையில் அடுக்கி வைத்தல், விநியோகித்தல் போன்ற வேலைகளுக்கிடையில் அபூர்வமாக ஓய்வு கிடைத்தது. எழுதத் தீர்மாணித்திருந்த கதைக்கான குறிப்புகளை இடைக்கிடை குறித்துக் கொள்ளுவதற்கு இந்நேரத்தைவிட வேறெந்த நேரமும் வாய்ப்பாக இல்லை. வீட்டில் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, டி.வி.க்கு என்று தனது ஓய்வு நேரத்தைப் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டான். இல்லை; அவர்களாகவே பறித்துக் கொண்டனர்.
டி.வி.இல் செய்திகள் பார்ப்பதற்காக செற்றியில் அமர்ந்துவிட்டால் அதினின்றும் மீளமுடியவில்லை. இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்த நித்திரைக் களையோடு படுக்கையில் தடக்கி விழுந்து எழும்பி ஓடினான். வேலைக்கு இந்த டி.வி.இல் ஆழ்ந்து, செற்றியில் புதைந்து வாழும் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சலிக்கத் தொடங்கியது நடாவுக்கு. அந்தோ! அவனது வாழ்வின் பெரும் பகுதியை இந்தச் செற்றிகளில் புதைந்தன்றோ கழித்து விட்டான்! டி.வி. ஐயும் அதன் சகபாடியான செற்றிகளையும் தொலைத்து விட்டால் அவனது வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களன்றோ ஏற்பட்டிருக்கும்! இந்தப் நோக்கில் சிந்தித்ததின் விளைவுகளில் ஒன்றுதான் நடாவைக் கதை எழுதத் தூண்டியது என்றால் அது மிகையாகாது.
ஒரு அதிகாலையில் எழுந்து விளக்கைப் போட்டு ஒரே மூச்சில் கதையை எழுதி முடித்துவிட முனைந்த முயற்சி தோல்வியடைந்தது. அதிகாலைத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டதும், மின்சாரத்தை செலவழித்ததுந்தான் மிச்சம். நடாவால் ஒரே மூச்சில் கதை எழுத முடியவில்லை. கதைக்கு தலையங்கம் மட்டுமே வைக்க முடிந்தது. 'உறைமழையும் சுழல்காற்றும்.'
கொஞ்சம் கொஞ்சமாகக் கதைக்கான சம்பவங்களையும் உரையாடல்களையும் குறிப்புகளாகச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். நடா மனதில் நினைத்ததை உடன் குறித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் கடலில் தொலைத்துவிட்ட கூழாங்கல்லைப் போல தனது மூளையின் எப்பகுதியிலிருந்தும் அதனை மீட்டெடுக்க முடிவதில்லை. குறிப்புகளை வெள்ளைத் தாளில் எழுதி எட்டாக மடித்து பொக்கட்டினுள் வைத்துக் கொண்டு வேலைக்குப் புறப்படுவது வழக்கமாகிவிட்டது. 'உறைமழையும் சுழல்காற்றும்' கதை, குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளின் உறவு நிலைகளைச் சித்திரிப்பதாக அமையவிருந்தது. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள தன் நேரடி அநுபவங்களை உடனுக்குடன் குறித்துக் கொள்ளுவது கதைக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கும் என்று நம்பினான். மூளையில் நினைப்பதை அப்படியே பதிவு செய்து கொள்ளும் இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டால் தனக்கு எத்துணை உதவியாகவிருக்கும் என்றும் இக்காலத்தில் ஏங்குவதுண்டு.
நடாவுக்கு வேலை காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும். ஒன்பது மணிக்கு அவனது Supervisor வேலைக்கு வருவார். இந்த இடைப்பட்ட இருமணி நேரத்தில் லொறிகளிலிருந்து இறக்கும் வேலைகளோ, அன்றி நாளாந்த உற்பத்திக்கு விநியோகம் செய்யவேண்டிய வேலைகளோ குவிந்திருக்கும். அபூர்வமாக சில நாட்களில் லொறிகள் வராது விட்டால் இந்த நேரம் கொஞ்சம் ஓய்வாக இருக்கும்.
இன்று அப்படியான ஒரு அபூர்வமான நாளென நடா நினைத்தான். பெருமழை பெய்யப்போவது போல வானம் 'வெருட்டி'க் கொண்டிருந்தது. நனையாமல் பாதுகாக்க வேண்டிய பொருட்களை உள்ளே கொண்டு வந்து சேர்த்தான். இதனால் நடா நனைந்து போனான். வேலையில் மூழ்கிப்போனவனுக்கு இடையறுபட்டது போல போன வாரம் நடந்த இலக்கியக் கூட்டம் ஞாபகத்திற்கு வந்தது. கலாசார அவையினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அக்கூட்டத்திற்கு குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகள் வந்திருந்தனர். நடாவும் பேயிருந்தான். அங்கு பேசப்பட்ட இரண்டு கருத்துக்கள் நடாவைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்தி விட்டன.
முதலாவது கருத்து 'எதிலிருந்து தொடங்குவது' என்ற கேள்வியை எழுப்ப வல்லதாகும். நிகழ்ச்சியிலிருந்தா? அல்லது பாத்திரங்களிலிருந்தா? என்பதே அதன் உட்கிடையாகும். எழுத்தாளனுக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியை மையமாக வைத்து, பாத்திரங்களை பின்னர் கற்பனையில் தேடிக்கண்டுபிடித்து கதை எழுதுதல் ஒரு வகை என்றும், நாளாந்த வாழ்வில் சில பாத்திரங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பினால் நிகழ்ச்சி யொன்றை கற்பனை பண்ணி கதை எழுதுதல் இரண்டாம் வகை என்றும் நடா விளங்கிக் கொண்டான். அப்படியானால் நிகழ்ச்சி, பாத்திரம் இதில் ஏதாவது ஒன்று கற்பனையாக அமைந்து விடுவது தெரிந்தது நடாவுக்கு. அன்றியும் படைப்புகளில் கொஞ்சமாவது கற்பனை இருக்க வேண்டும் என்ற கருத்துடையவன் நடா. உண்மையையும் கற்பனையும் எந்த விகிதத்தில் கலப்பது என்கிற இரசாயனம் புரிந்து கொள்ள ஒரு எழுத்தாளனுக்கு நீண்ட காலம் எடுக்கும் என்று ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியதை அடிக்கடி நினைத்துக் கொள்வான். நிகழ்ச்சி, பாத்திரம் இரண்டும் ஒரு படைப்பில் உண்மையாக இருக்க முடியாதென நடா உய்த்தறிந்தான். அப்படி அமைந்தால் கதை உண்மைச் சம்பவமாகிவிடும்.
நிகழ்ச்சி, பாத்திரம் பற்றிய தனது ஆய்வில் கடைசியாக எஞ்சியிருந்த இரண்டும் கற்பனையாக இருத்தல் என்ற Combination நடாவுக்கு ஏற்புடையதாக இல்லை. முழுக்க முழுக்க கற்பனையாக கதையை எழுதிவிட்டு அடியில் 'யாவும் கற்பனை' என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டுவரும் மரபை அடியோடு வெறுத்தான். தனது உ.சு. கதையின் அடியில் 'யாவும் உண்மையல்ல' என்ற வாசகங்களை அடைப்புக் குறிக்குள் இடவே எண்ணியிருந்தான்.
பிறிதொரு வகையில் தனது ஆய்வு ஆபத்தமாகத் தோன்றியது நடாவுக்கு. நிகழ்ச்சியின்றி பாத்திரங்களில்லை. பாத்திரங்களின்றி நிகழ்ச்சியில்லை. அவ்வாறாயின் எதிலிருந்து தொடங்குவது?...மேலும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு பாத்திரங்களே காரணிகளாகவுள்ளன. இவ்விரண்டும் ஒன்றிலொன்று தவிர்க்க முடியாது தங்கியிருக்கையில் இரண்டையும் வேறுபிரித்து ஆராய்வது பொருத்தமாகத் தெரியவில்லை நடாவுக்கு. நிகழ்ச்சி, பாத்திரம் ஆகியவற்றை வைத்து உண்மை, கற்பனை குறித்து ஆராய்ந்த ஆய்வு, கணிதத்தில் இருபடிச் சமன்பாட்டின் மெய், கற்பனை மூலங்களைப் பற்றிய ஆய்வை ஒத்தது போல அமைந்தது ஆச்சரியத்தையும், அதேநேரம் களைப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து யோசித்ததனால் நடாவின் மூளை கொதிப் படைந்தது. தலைக்குள் சுடுசூளையொன்று இயங்கு நிலையில் இருப்பதாக தோன்றியது.
வெளியே மழை தூறத் தொடங்குகிறது. கட்டையாகவும், மொட்டையாகவும், தாடி மீசையுடனும் தோன்றிய ஒருவன் இப்போ களஞ்சிய அறையைக் கடந்து சென்றான். சலிப்பும் இதனாலேற்பட்ட துயரமும் கலந்த முகச்சாயல் அவனில் காணப்பட்டது. விரைவாகவும், ஆனால் நேர்த்தியாகவும் கைகள், கால்களை அசைத்து நடந்ததனால் அவனது நடை சுறுசுறுப்பாகவும் அதேநேரம் வினோதமாகவும் தோன்றியது.
நடாவோ மேற்படி ஆராய்ச்சியின் முடிவுகாலாகத் தான் பெற்றதை தனது கதையான உ.சு.இற்குப் பிரயோகித்துப் பார்க்க விரும்பினான். இக்கதை குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளின் உறவு நிலைகளில் ஏற்படும் மாறுதல்களையும், அதன் மீளாய்வுகளையும் பற்றியதாகும். சில நிகழ்ச்சிகளை கற்பனையில் வரைந்து கொண்டு பொருத்தப்பாடான பாத்திரங்களையும். அவற்றின் விபரங்களையும், உரையாடல்களையும் சித்தரிக்கவேண்டும். தனதும் தனது மனைவியினதும் குணவியல்புகளை ஒத்த பாத்திரங்களுடன் வேறொரு நண்பரின் குடும்பத்தினரின் பாத்திரங்களையும் புனை பெயரில் கதையில் இணைக்க விரும்பினான். நண்பரின் குடும்பம் தூர தேசத்திலிருந்தாலும் அவர்கள் ஒரு காலத்தில் அநுபவித்த பிரச்சினைகளுடன் கதையின் கரு ஒத்துப் போவதால் அவர்களது பாத்திரங்கள் இக்கதைக்கு அதிகப் பொருத்தப்பாட்டை உடையதாக இருந்தன.
ஆனால் என்ன துர்திர்ஷ்டம்! இலக்கியக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இரண்டாவது கருத்து அவனது இந்த எண்ணத்தை ஒரு புயல் காற்றுப் போல உலுப்பி விட்டது.
ஓர் எழுத்தாளனுக்கு தனது உட்கிடக்கையை வெளிப்படுத்தும் உரிமையுண்டே தவிர பிறருடைய சொந்த வாழ்க்கையையோ, அவர்தம் அநுபவங்களையோ பெயர் குறிப்பிடாவிட்டாலும் வெளிப்படுத்தும் உரிமை கிடையாது என்பதே கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இரண்டாவது கருத்தாகும். இதைச் சொன்னவர் உரிமை கிடையாது என்ற கடைசி வசனத்தை கோபாவேசத்துடன் சொல்லி மேசையில் வலக்கையால் குத்தி தனது பேச்சை முடித்து விட்டார். இருக்கையில் அமர்ந்து இரு கிளாஸ் தண்ர் குடித்தபின்பே அவரது கோபம் ஆறிற்று. பலர் கரசோஷமும், சிலர் விசிலும் அடித்துப் பாராட்டினர். அவரது பேச்சு சபையில் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டமைக்கு அதுவே அடையாளம் என எல்லோரும் எண்ணினர்.
அப்படியானால், நடாவின் உ.சு. கதையில் வரும் நிஜமான பாத்திரங்களின் குணவியல்புளையோ, அவர் தம் வாழ்வில் நடந்த அநுபவங்களையோ வெளிக் கொணரும் உரிமை நடாவுக்கு உண்டா? இவ்வாறு தன்னைத்தானே கேட்க முனைந்ததில் நடா மேலும் சோர்வுற்றான். தொலைதூரத்திலிருக்கும் நண்பரின், அவரது குடும்பத்தவரின், ஏன் தன்னுடனே கூடவிருக்கும் மனைவியின் பாத்திரத்தை கடதாசியில் எழுத தனக்கு உரிமையுண்டா? சிலரின் அநுபவங்களின் தாக்கத்தைப் பலருக்குச் சொல்லி விழிப்படைய வைக்கும் உரிமை அவனுக்கு உண்டா? இந்தச் சிலரைப் பெயர் குறிப்பிடாவிடினும், சமூகத்திலுள்ள பல மனிதரின் பலத்தின் அல்லது பலவீனத்தின் மாதிரிகளாகக் காட்ட முடியாதா? நீர்ச்சுழலில் அகப்பட்டவன் அதினின்றும் மீளமுடியாமல் சுழலுதல் போன்று நடா இந்தக் கேள்விகளுக்கிடையில் சுழற்றப்பட்டான். எந்த முடிவுக்கும் உடனே வரமுடியவில்லை.
குழப்பகரமான நிலையில் மேற்படி உ.சு கதையை தொடர்வது சாத்தியமற்றதாகத் தோன்றியது. எனவே உ.சு. கதையை தற்காலிகமாக கைவிடுவது என்று தீர்மானித்தான் நடா. மேலும் இப்போதுதான் குடும்பஸ்தனாகி இருக்கும் தனக்கு குடும்ப வாழ்வு பற்றிய போதிய அனுபவம் கிடைக்கும் வரை இக்கதையை எழுதுவது நல்லதல்ல என்று தன் மனதிற்குத் தானே சமாதானம் சொன்னான்.
இப்போது நடாவுக்கு மனதில் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. காலையில் நித்திரையினின்று எழுந்த புத்துணர்ச்சி போலவும், பீடித்திருந்த காய்ச்சல் நீங்கி விட்டது போலவும் உணர்ந்தான்.
* * * Paniyum-2 ன் தொடர்ச்சி * * *
இப்படியாக நடாவின் முதலாவது கதை நின்று போனது. ஆயினும் இப்பொழுது நடாவின் மனதில் புதிய எண்ணமொன்று தோன்றியுள்ளது. இந்த உ.சு. கதையை எழுதத் தொடங்கியதிலிருந்து தான் பட்ட அவஸ்தைகளை இன்னொரு சிறுகதையாக எழுதினாலென்ன என்பதே அவ்வெண்ணமாகும். நாலு மாதமாக தீர்மானித்து வைத்திருந்த கதை சிதைந்து போனது பற்றியும், இரண்டு மணிநேரத்தில் உதயமான இந்தப் புதிய கருவைப் பற்றியும் அதிகம் ஆச்சரியப்படவில்லை நடா. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல தனது கதை தேய்ந்து கட்டுரையாகும் ஆபத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதே அவன் முன்னேயுள்ள பிரச்சினை என உணர்ந்தான். மேலும் இந்தப் புதிய கருவை சிறுகதை வடிவத்திற்கு எப்படிக் கொண்டு வருவதென்று இப்பொழுது தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளான் நடா. மீண்டும் தலைக்குள் வெப்பம் அதிகரிப்பதாக இருந்தது. மீண்டும் இன்னொரு அவஸ்தைக்குள் அகப்படப்போகிறோமே என்பதை உணராமல், எழுதப்போகும் அச்சிறுகதைக்கு பின்வருமாறு பெயர் வைக்க உடனே தீர்மானித்தான்: ஒரு கதையின் சிதைவு.
'...நிறமில்லை'
_____________________________________________________
ரதி
______________________________________________________
Tram ஆல் இறங்கி சும்மா கால் போன போக்கில் நடந்தாள் சாந்தி. மெல்போனில் Sales நடக்கும் காலம். கடைகளில் இருக்கும் பல வர்ண துணிகளை நோட்ட மிட்டுக்கொண்டே போனாள். மனம் மட்டும் மீண்டும் மீண்டும் பெற்றோருக்கு அன்று காலை எழுதிய கடிதத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரவைக்கு ஜேம்ஸ”டன் Restaurant போக இருக்கிறாள். கலியாண ஏற்பாடுகள்தான் main menu item கதைப்பதற்கு...ஜேம்ஸ் இந்து முறையில் கலியாணம் நடக்க வேணும் என்று முன்பே சொல்லியிருந்தார்.
பல நிமிடங்கள் நடந்தபின் ஒரு Snack Bar க்குள் புகுந்தாள். ஒரு கப் cappacino வும் கேக்கும் ஓடர் பண்ணி விட்டு யன்னல் வழியே வெளியில் ஆள் நடமாட்டத்தை நோட்டமிட்டாள். மெல்பேர்னும் இப்போ பல சாதி ஆட்கள் வாழும் multi cultural society ஆகிவிட்டது. கறுப்பர்கள் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வந்து வாழ்கிறார்கள். கல்பச்சீனோ வந்தது.
ஒவ்வொரு முறையும் நாக்கை அள்ளியதையும் மறந்து, இன்றும் கப்பச்சீனோவைச் (சூட்டோடு) குடித்து வாயில் சூடு வாங்கிக் கொண்டாள். ஏனோ அந்தச் சூடு மீண்டும் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தை ஞாபகம் ஊட்டியது. கேக்குடன் கடிதத்தையும் அசை போட்டாள்.
அன்புள்ள அம்மா, அப்பா அறிவது,
உங்கள் கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. எனக்கு படித்து முடித்தது பெரிய ஒரு சாதனையாகத்தான் தோன்றுகின்றது. சாந்தி M.Sc முடித்து விட்டாள் என்று நீங்கள் எல்லோரிடமும் முழு நாளையும் விழுங்கி விடும். வேறு யோசனைகளுக்கு இடமில்லை. இப்போ வேலை தேடும் படலம்.
நீங்கள் மீண்டும் எனது கலியாண விஷயமாக எழுதியிருப்பதாக மாமா சொன்னார். இனிமேல் நீங்கள் அதைப்பற்றி எழுதத் தேவையில்லை. நான் இப்பொழுது எழுதுவது உங்களுக்குப் பெரும் அதிர்ச்சியையோ, ஆத்திரத்தையோ, கவலையையோ உண்டு பண்ணலாம். ஆனால் நான் நன்றாக யோசித்துத்தான் ஒரு முடிவு எடுத்தேன். என்னால் எந்த விதத்திலும் உங்களை ஆறுதல் படுத்த ஏலாது. சாதி, சனம், நிறம், மொழி, மாகாணம் என்று எத்தனையோ பேதங்களாகப் பிரிந்து தாங்கள் போட்ட வட்டத்துக்குள் பிள்ளைகளை வளர்ப்பது எங்கள் சமுதாயம். பிள்ளைகள் வளர்ந்த பின்னும் குழந்தைகளாகப் பாவிப்பதும் எங்கள் வழக்கு. எனக்கு இப்போ இருபத்தி ஒன்பது வயசு. உங்கு பல்கலைக்கழகம் படிப்பு முடித்து வேலையில் இருக்கும் போது எனக்குக் கலியாணம் பேசத் துவங்கி நானும் நீங்களும் பட்ட அவமானங்களை நினைத்துப் பார்க்கிறேன். படிப்பில், விளையாட்டில், பாட்டில், சமையலில் இசை யெல்லாவற்றிலும் திறமைசாலியாக இருந்த என்னை-உங்கள் ஒரே ஒரு பெண்ணை-கலியாணம்செய்ய ஒருவரும் முன் வரவில்லை. 'பொடிச்சி சாங்கமாக இருந்தாலும் நிறம் குறைவு பாருங்கோ. இதுக்கே இரு இரண்டு லட்சம் டொனேஷன் கேட்பினம்' என்று சொன்னவர்களும், 'கறுப்பு...இரண்டாம் தாரமாகச் செய்ய விருப்பமே?...' என்றவர்களும், 'வெளியில் இருக்கும் பெடியளும் tall, slim & fair என்று கேட்கிறார்கள்' என்று தட்டிக்கழித்தவர்களும்...
பக்கத்து வீட்டு ராசமாக்கா, தனது மகன் ராகவனுக்குச் செய்யலாமென்றும், டொனேஷன் ஒரு லட்சம் தந்தால் சரி, ஆனால் நகை எல்லாம் போடவேணும் என்று சொல்லிவிட்டு, ராகவன் வெள்ளைக்காரியைக் கட்டிக் கொண்டுவந்து நிற்க, நகை நடடில்லாமல் மருமகள் இருக்கிறாள் என்று தன் செலவிலேயே அந்த குண்டான-வடிவென்று சொல்ல ஒன்றுமில்லாத-- வெள்ளை மருமகளுக்கு நகை செய்து போட்டதையும் நினைத்துப் பா‘க்கிறேன்.
என்னுடைய மனதில் கலியாணம் என்றாலே கசப்பு என்ற எண்ணத்தையூட்டிய நிகழ்ச்சிகள் இவை. என்னில் பிழையா? எங்கள் சமுதாயத்தில் பிழையா? வெள்ளைக்காரன் எங்களை ஆண்டது பிழையா? ஏன் எங்கடை ஆட்கள் வெள்ளையைப் பூஜிக்கின்றார்கள்? எப்போ தொடக்கம் இந்த வழக்கம்? இக்கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இருக்கும் போதுதான் மாமாவின் அழைப்பு இருக்கும் வந்து, மேற்படிப்பிற்காக அவுஸ்ரேலியாவிற்கு வந்தேன்.
இங்கும் மாமா சும்மா இருக்கவில்லை. பலரிடமும் கேட்டுப் பார்த்தார். கறுப்பென்றால் தொட்டால் பாவம் என்ற மாதிரி, மரியாதைக்கு ஏதோ சாக்குச் சொல்லிப் போய்விட்டார்கள். முருகன் தெய்வானை கறுப்பென்று தானாம் வள்ளியைச் செய்தவன். அப்படி ஒரு நிலமை எனக்கும் வரலாம் என்றும் சொன்னாள் ஒரு மாமி.
இந்த நேரத்தில்தான் எனக்கு ஜேம்ஸ் என்னும் ஒரு அவுஸ்ரேலியருடன் பழக்கம் ஏற்பட்டது. பல்கலக் கழகத்தில் அவருடன் சேர்ந்து ஒரு project செய்ய நேர்ந்தது. எங்களுடைய பாரம்பரியத்திலும், சாப்பாட்டிலும் மிகுந்த விரும்பம் கொண்ட ஜேம்ஸ், இரண்டு வருட பழக்கத்திற்குப்பின், தான் என்னைக் கலியாணம் செய்துகொள்ள விரும்புவதாகப் போன கிழமை சொன்னார்.
அவருடைய நினைவாக நான் என்றும் போட்டிருக்க வேணும் என்று ஒரு வைர மோதிரம் தந்து...அந்த மோதிரத்தை எனது விரல் அலங்கரிக்கும் என்றும் சொன்னார். வைரத் தோடும் வேறு நகைகளும் அவற்றை அணியும் பெண்ணால்தான் அலங்கரிக்கப்படுகின்றன என்று நாம் எப்போதாவது நினைப்பதுண்டா?
ஒரு கிழமை கண்விழித்து பலதையும் யோசித்தபின் நேற்று நான் ஒரு முடிவுக்கு வந்தேன்; என்னை எனக்காக விரும்பும் ஒரு ஆடவனை ஒரு வித பாகுபாடும் காட்டாமல் எனது கணவனாக ஏற்பது என்று. ஏன் இவ்வளவு காலமும் கலியாணம் செய்து கொள்ளவில்லை என்று ஜேம்ஸ் கேட்டார். நான் எனது நிறத்தைக் காரணம் சொன்னதும் நம்பமுடியாமல் சிரித்தார்...நான் பொய் சொல்லுவதாக...'after all you are all different shades of brown' என்று சொல்லி, 'உங்களுக்குள் இப்படி ஒரு பாகுபாடா?' என்று கேட்டார்.
இவ்வளவு நாளும் நான் ஜேம்ஸைக் காதலிக்க எனது கட்டுபாடுகள் விடவில்லை. ஆனால் இன்று தொடக்கம் காதலிக்க, கலியாணம் செய்து கொள்ள இருந்த கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்துவிட்டு, எனக்கு நானே சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டேன். மாமாவிற்கு இதில் சம்மதம். உங்களிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் உடல் நிலைகளைக் கெடுக்காது என்னை ஆசீர்வதிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் விரும்பினால் கலியாணத்தை எங்கள் ஊரிலேயே வைக்கலாமென்று ஜேம்ஸ் சொல்கிறார். உங்கள் அனுமதி கோருகிறோம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்,
சாந்தி.
Waitress bill கொண்டுவந்து வைக்க, அவளது நினைவலைகளும் துண்டிக்கப்பட்டன.
'The ring looks lovely on your finger' என்று சொன்னாள் waitress.
'Thank you.' என்று சொல்லி bill லை settle பண்ணிவிட்டு பதினாறு வயதுக் குமரிபோல் ஒரு துள்ளளுடன், காதல் வசப்பட்ட பெண்ணுக்கேயுரிய பூரிப்புடன் சிரித்துக் கொண்டு எழுந்தாள். Tram stop ஐ நோக்கி அவளது கால்கள் நடந்தன.
விருந்து
__________________________________________________
ச.வாசுதேவன்
__________________________________________________
வசந்தன் வீட்டு வாசல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
யாராவது விருந்தாளிகளை விருந்துக்கு அழைத்தால் 'வீட்டுக்காரர் ரெடி', என்பதை விளம்புவது இந்த விளக்கின் கடமை.
ஒருவர் எத்தனை பேரை விருந்துக்கு அழைத்தார், அல்லது எத்தனை விருந்துக்குப் போகிறார் என்பதை வைத்தே ஒருவரது சமூகஅந்தஸ்தை அளந்து கொள்வது இங்கு குடியேறியுள்ள வயிற்றுப்பாட்டுக் கும்பலின் வழக்கம்,
குமரன் இப்படியான விருந்துகளை விலக்கிக் கொள்வது நல்லது என்பதை தனது ஆறு வருட அவுஸ்ரேலிய வாழ்க்கையில் அறிந்து கொண்டு, அதற்கிணங்க ஒழுகி வந்தான். ஆனாலும், இந்தப் பாழாய்ப் போன பழைய நண்பன் வசந்தன் 'வாடா மச்சான்' என்று அழைத்ததை இவனால் மறுக்க முடியவில்லை.
வசந்தனும் குமரனும் யாழ் மத்திய கல்லூரியில் வகுப்புத் தோழர்கள். வசந்தன் அவுஸ்ரேலியாவுக்கு வந்து ஆக ஒரு வருஷந்தான் ஆகிறது. வந்து இறங்கியதும் white pages ல் குமரனின் பெயரை ஜெய் குமரன் என்று கண்டதும், 'எட! இது எங்கடை ஜெயசிங்கத்தாரின்ரை மகன் குமரனல்லே...இஞ்சை வந்து இப்பிடிப் பேரை மாத்தியிருக்கிறான் போல கிடக்கு...எதுக்கும் ஒருக்கா அடிச்சுப் பாப்பம்...' என்று தொலைபேசியைச் சுழற்றியபோது, 'Jey here' என்று மறுமுனையிலிருந்து பதில் வந்தது.
வசந்தன் ஊருக்குப் புதிது என்பதால் சிறிது நிலை குலைந்து போனாலும், ஓரளவு தெம்பை வரவழைத்துக் கொண்டு, 'Iam sorry, I am looking for one Mr.Jeyasingam Kumaran' என்றான்.
'Yes speaking' என்று அடுத்தமுனை ஆணித்தரமாக பதில் சொன்னது,
பிறகென்ன?
வசந்தன் வழமையான மச்சான் தோரணையோடு ஆரம்பித்து, அடுத்து கல்லூரி அம்பிகா கலியாணம் முடித்த கதை, இந்தக் கதை என்று ஒரு அலசு அலசி, தான் வந்த நாள், இருப்பிடம், தொழில் தேடும் படலம் என்று விலாவாரியாக விளக்கி, குமரனை அடுத்த நாள் வருமாறு வலிந்தழைத்து முதல் நாள் பேச்சை முடித்துக் கொண்டான். இப்படியாகப் புதுப்பிக்கப்பட்ட சினேகிதம் இன்று, 'இல்லை' என்று சொல்லாமல், இரண்டு கறிச்சட்டிகளைக் காவிக் கொண்டு இங்கு வரவேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது.
பழைய நண்பன் என்ற உரிமையில் விருந்துக்கு முன்னரே போக வேண்டும்; வசந்தன் மனைவி மாதுரிக்கு உதவிகள் செய்யவேண்டும் என்ற கடமையோடு குமரனும், அவன் மனைவி அனுஷாவும் தங்கள் இரண்டு குழந்தைகளோடும் வேளைக்கே பிரசன்னமாகி விட்டார்கள்.
மாதுரியும், அனுஷாவும் பிளேட், சலட் என்று பிஸ’யாகி விட்டார்கள். குமரனின் குழந்தைகளை வசந்தனின் குழந்தை தனது அறைக்குள் அழைத்துச் சென்று தன் ஆசைப் பொம்மைகளின் அர்த்தங்களை விளக்கிக் கொண்டிருந்தது.
நேரஞ் செல்லச் செல்ல ஒவ்வொருவராக வந்தார்கள். இன்னமும் மணியம் குடும்பம் வராததால் தட்டில் கை வைக்கும் நேரம் தள்ளிப் போடப்பட்டது. நேரந் தள்ளிப் போடப்பட்டது 'தண்ணிப் பாட்டி'க்குத் தாராளமான நேரத்தை ஒதுக்கியது.
வசந்தனும் மாதுரியும் எதையும் அனுபவிக்க முடியாமல் ஓடியாடிக் கொண்டிருந்தனர். வந்தவர்கள் தங்கள் குழந்தைகள் கதிரைகளில் ஏறி, 'காப்பெட்'டில் புரண்டு களேபரப்படுத்துவதைக் கவனியாமல் கதையிலும், ஊர் வம்பிலும் கரைந்து போயினர். இந்தப் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம் வசந்தனின் 'முட்டைக் கண்ணை' மேலும் மேலும் உருள வைத்தது.
'நேரமாகுது, பிள்ளையளுக்குப் பசிக்கும். முதல் அவையைச் சாப்பிடப் பண்ணுவமே?' அனுஷா ஆபத்பாந்தவர் போல் சொன்னதும், மாதுரி இதுவே தருணம் என்று குழந்தைகள் அனைவரையும், அமுக்கிப் பிடித்து விட்டாள்.
ஆண்கள் பக்கம் பேச்சும் சிரிப்பும், போதை கலந்த உளறல்களும் மிதந்து கொண்டிருந்தன.
ரமணன் தள்ளாடியபடி எழுந்து, 'லேடீஸ், வைன் ஏதும் குடிக்கேல்லையே?....' என்று பெண்களை உபசரிக்கப் போனான். தனது மனைவிக்கு வைன் பிடிக்கும் என்பதை தனியாகச் சொல்லிக் மாட்டிக் கொள்ளாது, பக்கத்து இலைக்குப் பாயாசம் பரிமாறச் சொல்லும் பாணியிலே 'பிள்ளையார் சுழி' போட்டது அவனுடைய மனைவிக்குப் பிடித்திருந்தது.
'Come கமலா...என்ன அருந்ததி நீரும் எழும்புமன்...' என்று ரமணனின் மனைவி மற்றவர்களையும் வைன்'அடிக்'கப் பரிந்தழைத்தாள்.
வழமையான நெளியல்கள், முகச் சுழியல்களையெல்லாம் வீசி, நாணிக்கோணி நாரியர் கூட்டமும் கிளாசுகளை கையில் ஏந்தியது.
மணியம் குடும்பம் வந்து சேர்ந்தது.
மணியம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 'சூட்டோடு சூட்டாக' அவர் கையிலும் ஒரு கிளாஸ் திணிக்கப்பட்டது.
மணியம் அருகில் கலாதரன் வந்து அமர்ந்தார்.
'So when did you come to Australia'-- இது கலாதரன்!.
'I come in 1985...'மணியம் தாழ்ந்த குரலில் பதில் சொன்னார்.
'What do you do for living?' கலாதரன் விடுவதாகத் தெரியவில்லை.
மணியத்தின் மண்டைக்குள் சூடு ஏறியது.
'What do you do' என்று கொஞ்சம் உரத்த குரலில் திருப்பிக் கேட்டு வைத்தார் மணியம்.
மணியத்துக்கு முன்பே விருந்துக்கு வந்து மூன்று கிளாஸ் விஸ்கியை முடித்திருந்த கலாதரனின் மண்டைச்சூடு, மணியத்தின் அரைக் கிளாஸ் சூட்டை விட அதிகமாக இருந்ததால், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மறைந்து போயிருந்தது.
'I am asking you!' என்று மேலும் அரைக்கட்டை சுதியயை அதிகரித்துக் கேட்டான், கலாதரன்.
'Who are you to ask these sort of questions' என்று மணியம் உச்ச சுருதியில் கேட்டதும், 'சுதி' பண்ணிக் கொண்டிருந்த மற்ற ஆண்கள் something wrong என்று புரிந்து கொண்டார்கள்!
மணியத்தின் மனைவி எழுந்து, 'என்னப்பா, உங்களுக்குப் போற இடத்திலை சும்மா இருக்கத் தெரியாதே?' என்று கன்னத்தருகில் சென்று கண்ணியமாக எச்சரித்தாள்.
'கலாதரன் எங்கைபோனாலும் இப்படித்தான்!' ரமணனின் வாயிலிருந்து வந்த வார்த்தை கலாதரனின் காதில் விழந்து விட்டது.
'என்ன சொன்னனீர்? உம்மைப் பற்றி எனக்குத் தெரியாதே!' கலாதரன் அக்குவேறு ஆணிவேறாக அலசத் தொடங்கிவிட்டான்.
வசந்தனின் மனைவி மாதுரி, கணவனை முடுக்கி விட்டாள். வீட்டுக்காரன் என்ற முறையில் வசந்தன் தலையிட வேண்டியதாயிற்று.
'Enough is enough...வாருங்கோ சாப்பிடுவம்!' வசந்தன் அறைந்தது போலச் சொன்னதும் விருந்துக் கலகலப்பு மௌனத்தில் ஒளித்தது.
எல்லோரும் அவரவர் தட்டில் ஏதேதோ பொறுக்கிக் கொறித்து, சுமூகமான சூழலை விட்டு விலகி வெகுதூரம் போய், எதையோ பறிகொடுத்த பாவனையில் நடமாடினர்.
கலாதரன் மனைவியை மணியத்தின் மனைவியும், ரமணனின் மனைவியை கலாதரன் மனைவியும் சாத்தான்களின் மனைவிகளாகவும்--ஏன்?--எதிரிகளாகவும் பார்த்தவாறு, ஆத்திரம் தீர அப்பளத்தை நொருக்கிக் கொண்டிருந்தனர்.
நேரஞ் செல்லச் செல்ல ஒவ்வொருவராக வசந்தனுக்கு மட்டுமே சொல்லியும், சொல்லாமலும் Bye என்று பொதுவாகச் செல்லியும் பிரிந்து கொண்டனர்.
குமரனும் மனைவியும் முதல் வந்தது போலவே கழுவி அடுக்கிச் சுத்தம் செய்த பின், கடைசியில் செல்லத் தயாராகினர்.
போகுமுன் குமரன் வசந்தனிடம் 'இதுக்குத்தான் நான் இந்தப் பாட்டியள் வைக்கிறதுமில்லை. போறதுமில்லை. ஏன் வீண் வம்பு...' என்று சொன்னான்.
'நல்லாச் சொன்னாய் மச்சான்! இது இனி எனக்கும் ஒரு பாடம். தங்கள் தங்கள் ஈகோவைக் கொண்டு வந்து கழுவ இந்தப் பாட்டியளைப் பலபேர் பயன்படுத்துகினம்! இனிமேல் நானும் உன்னைப் போல் இருந்திடுவன்.'
'சரியப்ப வாறம்!' குமரனின் கார் விரைந்தது.
வசந்தன் வீட்டு வாசல் விளக்கும் அணைந்தது. இனி இந்த விளக்கு பாட்டிக்கு வீட்டுக்காரர் ரெடி என்பதை விளம்பாது!
ரகசிய ரணங்கள்
______________________________________________
அருண் விஜயராணி
______________________________________________
"அக்கா...இதுதான் நான் எழுதுற கடைசிக் கடிதம். இனிமேல் ஸ்பொன்ஸர் லெட்டருக்காகக் கெஞ்சமாட்டன். உன்னுடைய உறவும் இதோட சரி".
சாரதா அவளுக்கு எதிரில் நின்று பேசுவது போலிருந்தது வீணாவுக்கு.
அவள் எப்பவுமே அப்படித்தான். படபடப்பும், துடிதுடிப்பும் இயற்கையாகவே அவளுக்கு அமைந்து விட்டது. அந்த அந்த நிமிஷங்களுக்காக வாழ்பவள். எதிர் காலத்தை சிந்தித்து...சிந்தித்து நிகழ்காலத்தை வீணடிக்காத புத்திசாலி...
கடிதத்தை மடிக்கக்கூடத் தோன்றாமல் அப்படியே அதனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. குண்டு மல்லிகைகளை ஒன்றாகச் சேர்த்துக் கொட்டிவிட்டதைப் போன்ற கையெழுத்து...கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளலாம் போன்று. கையெழுத்து மட்டுமல்ல...அவள்கூட அத்தனை அழகுதான். இளைஞர்களை அலைக் கழிக்கும் அழகு. வீட்டுக்கு வந்து விட்டுப் போகும் எந்த இளைஞனும் போன் பண்ணி I Love you என உளற வைக்கும் அழகு...
'சாருவின் கடிதம் வந்து ஒரு கிழமையாகிவிட்டது. இன்னும் பதில் எழுதவில்லை. கட்டாயம் இண்டைக்கு முடிவு எடுத்துப் போடவேணும்...'
"விழுந்தடித்துக் கொண்டு பாத்ரூமிற்குள் ஓடினாள் வீணா.
நேற்றுக் குடித்த அத்தனை 'விஸ்கி'யும் நாற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருக்க...நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு...
டவலை நனைத்து இதமாக முகம் முழுவதையும் இலேசான சுடுதண்ரினால் துடைத்து விட்டவள்...கைத் தாங்கலாகக் கொண்டு வந்து இருத்தினாள். சூடான கோப்பியை அவன் முன்னால் நீட்டிய பொழுது தான்...பிரதீப் சுயநினைவுக்கு வந்தான்.
'Office ஸ”க்குப் போகேல்லயோ...வீணா?'
'இல்லை.'
'எனக்குத் தலையிடிக்குது...படுக்கப்போறன்...'
அவன் பின்னே சென்றவள்...அறையின் மது நெடி தாங்காமல் Air Freshner ஐ அடித்தாள். ஜன்னல் கேர்ட்டினை விலக்கிய பொழுது சூரியஒளி பாய்ந்து அறையின் இருட்டுப் பளீரெனத் தகர்ந்தது.
'கடவுளே...பளீரென இருந்த என்னுடைய வாழ்க்கையை நானே இருட்டாக்கிக் கொண்டு விட்டேனா?'
மடிப்புக் கலையாத உடுப்போடு...டிரைவர் கார் ஓட்ட...பிரதீப் கந்தோருக்குப் போய் வந்த அழகு...அவனுடைய திறமையும்...உழைத்த உழைப்பும்...
எதில் குறைவைத்தான் பிரதீப்? அவளைக் கொஞ்சுவதிலா...அவளுக்குத் தேவையானதை வாங்கித் தருவதிலா....
யோசிக்க...யோசிக்க மூளையெல்லாம் வலித்தது,
Foreign ற்குப் போக வேண்டுமென்ற ஆசை எப்படி என் மனதில் வந்தது?
"வீணா...இது என்னுடைய Sister London இல இருந்து அனுப்பினது...அங்க இப்ப latest fashion ஆம்..."
"வீணா...என்னுடைய Broker family Next week...Americaty இல இருந்து வாறார். Party ஒன்று Organize ஆகிறது. கட்டாயம் வாரும்..."
அத்தகைய Party களிலே அவர்கள் வெளிநாட்டுப் பெருமைகளைக் கதை கதையாக அளக்கும் போதும்... வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகளாக மகிழ்வதும் வெளிநாட்டுக்குச் செல்வதே பெரிய ஒரு தகுதியாகப்பாராட்டப்படுவதும்...வீணாவின் மனம் ஏக்கப் பெருமூச்சு விடும்.
மெல்ல மெல்லமாக வீணாவின் மனதில் துளிர்விட்ட ஆசை...வளர்ந்து, பெரிய மரமாகி, Foreign போகாவிட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றது என்பது போல...
'பிரதீப் நாங்கள் ஒஸ்ரேலியாவுக்குப் போனால் என்ன?'
'வீணாவுக்கு ஏன் இந்தத் திடீர் ஆசை? இங்கே என்ன குறை?'
'எனக்கென்னவோ...ஒரு Change க்கு வெளிநாட்டில போய் இருக்க வேணும்போல இருக்குது. என்னுடைய friends கனபேர் போட்டினம்-பிரதீப்...அங்கபோய் நல்லாய் உழைத்து..வசதியாக இருக்கினமாம்.'
'அதில என்ன பிழை வீணா? நாங்கள் இங்கை எவ்வளவு வசதியாக இருக்கிறம்? வெளிநாட்டுக்குப் போய் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டுமென்றில்லை...இங்கை உழைக்க முடியாதவை அங்கை போய் உழைத்து நல்லாக வரட்டுமன். வெளிநாட்டுக்குப் போன எத்தனையோ பேர் கஷ்டப்படுகினம் என்றும் நான் கேள்விப்பட்டனனான்.
'அதெல்லாம் படிக்காதவை தான் கஷ்டப்படுகினம். நீங்கள் ஒரு PhD. இங்கையே உங்களுக்கு எவ்வளவு பெயர். ஒஸ்ரேலியாவுக்கு போன உடனே வேலை கிடைக்கும்.'
'இங்கை மாதிரி servants யை வைத்துக் கொண்டு சொகுசாக அங்கை வாழ ஏலாது...'
'எதுக்கு machine உண்டு. மற்றவைபோல manage பண்ணலாம் தானே? ஒஸ்ரேலியாவுக்கு migrate பண்ணுவம்.'
கொஞ்சிக் கொஞ்சி, வீணா கெஞ்சியபொழுது பிரதீப் சம்மதித்து விட்டான்.
ஆனால் பிரதீபின் அப்பாவிடம் கேட்டபொழுது அவர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
'மகள் You are making the Wrong Decision
'இல்ல மாமா...இங்க பிரச்சினைகளுக்குப் பயந்து கொண்டிருக்காமல் நாங்கள் போகப் போறம்.'
'பிரச்சனை எண்டைக்கும் உங்களைப் பாதிக்காது. உடன டிக்கட் புக் பண்ணி...சிங்கப்பூருக்கோ..இந்தியாவுக்கோ...உங்களை அனுப்பி போடுவன்...'
'வீட்டை விட்டு Airport போற மட்டும் நாங்கள் உயிரோடு இருந்தால் தானே மாமா?'
அவர் வீணாவிடம் தோற்றுப்போனார். அவள் முடிவெடுத்துவிட்டது அவருக்கு நன்றாகப் புரிந்தது.
'வீணா...Business விஷயமாக...நான் வெளிநாடுகளுக்குப்போய் வந்தனான். நீ நினைப்பது போல் வெளிநாடு சொர்க்கபூமி...வசதியில்லாதவர்களுக்குத்தான். உங்களுக்கு அல்ல. பிரதீப்பை எனக்குத் தெரியும். அவனுக்கு ஞாயமான superiority complex. யாருக்கும் பணியமாட்டான், அவனைவிட நான் மற்றப்பிள்ளைகளைப் புகழ்வதையே தாங்கமாட்டாதவன். அப்படிப் பட்டவனை ஒஸ்ரேலியாவுக்கு கூட்டிப்போக நினைக்கிறாய்....நீ மனைவி. எதுவானாலும் இனி அனுபவிக்க வேண்டியவள் நீ...' என்று முத்தாய்ப்பு வைத்தார்.
ஆரம்பத்தில் அவுஸ்ரேலியா வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையாக இருந்தது? பிரதீப்புக்கு வேலை கூட உடனே கிடைத்தது.
"...How can he boss me around...என்னுடைய Qualifications இல கால்வாசி கூட இல்லை. என்னை டிக்டேட் பண்ணிக் கொண்டு...' முணு முணுக்க ஆரம் பித்தவன் ஒரு நாள் வேலையைத் தூக்கி எறிந்து விட்டு வந்து நின்றான்.
அடுத்தடுத்த வேலைகளும் அதேபோல! எந்த வேலைக்குச் சென்றாலும் அவனால் நிலைத்து நிற்க முடியவில்லை. தனக்குக் கீழ் பல பேரை அதிகாரம் செய்து வேலை வாங்கிய மனது...இங்கே அடிபணிய மறுத்தது.
'வெள்ளைக்காரன்கள் எண்டால் கொஞ்சம் அப்படித்தானாம்...'
'அவன்ட தோல் வெள்ளையெண்டால் எனக்கென்ன? முதல்ல மூளைக்குள்ள விஷயத்தை தெரிந்து வைச்சுக் கொண்டு பிறகு என்னை Boss பண்ணச் சொல்லு...'
பிரதீப்பிற்குள் உள்ள Superiority complex விஸ்வரூபங் கொண்டது.
வேலையில்லாம் குடும்பம் டோலில் ஆடியது.
அவனுடைய ஆரம்ப வேலையைக் கொண்டு Loan எடுத்து வாங்கிய வீடு Mortgage கட்ட முடியாமல், விற்று விட்டு வாடகை வீட்டுக்குப் போகவும் தன்மானம் இடம் கொடுக்காமல், பிள்ளைகளின் சிணுங்கள் அதிகமாக, வாழ்க்கையின் தரம் குறைய ஆரம்பிக்க, பிரதீப் எல்லாவற்றிலிருந்தும் விடுபடக் குடிக்க ஆரம்பித்தான். 'திரும்பக் கொழும்புக்கே போய் விடலாமா பிரதீப்?'
'நோ...அப்பா என்ன சொல்லுவார்? Friends எப்படிச் சிரிப்பார்கள்? Children cant cant adjust...'
தானும் adjust செய்வதுதான் வீணாவுக்கு வழியாக இருந்தது...குடும்பத்தில் கஷ்டம் நாளுக்கு நாள் மோசமாக...
'ஏன் அம்மா, அப்பா வீட்டிலே இருக்கிறார்? வேலை கிடைக்கும் வரை ஏதாவது factory இல் Work பண்ணுகிறது தானே?'
பதினைந்து வயது மகன் கேட்ட ரோஷத்தில் பிரதீப் வேலைக்குப் போகவில்லை. அவள் தான் படித்த படிப்பையும் ஒதுக்கி விட்டு factory இல வேலை செய்ய ஆரம்பித்தாள்.
அவள் வேலைக்குப் போய் இரண்டு மாதங்கள் தான். பிரதீப்புடன் படித்தவன், தன் பிள்ளைதயின் பிறந்த நாள் party ற்கு கூப்பிட்டான்.
Dinner முடிந்து ஆட்டமும் பாட்டமும் தொடங்கின. பிரதீப்பும் வீணாவும் நேரத்துடன் நண்பர்களிடம் விடை பெற Kitchenற்குள் நுழைந்த பொழுது...'பெரிய பணக்காரன்...ph.D எண்டீங்கள், அவருக்கு வேலையில்லையாம். அவ factory, இல work பண்ணுகிறவாம், இவையள் எல்லாரையும் கூப்பிட்டு...ஏன் எண்ட மானத்தை வாங்குறீங்கள்' என்று வீட்டுக்காரி அலுத்துக் கொள்ளவும், 'இல்ல மீரா அவன் Ceylon இல Ph.D.தான். நல்லாத்தெரியும்...' என்று பிரதீப் நண்பன் சமாதானம் சொல்லவும்...
சொல்லிக் கொள்ள வந்தவர்கள் சொல்லிக் கொள்ளாமலே வீடு திரும்பினார்கள்.
'This is Rubbish...How can they respect people by their work and wealth!' என்று பூகம்பமாக வெடித்து நிறுத்தியவன்தான்.
அதன் பின் சத்தமே இல்லாமல் போய்விட்டான்.
வேலைக்குப் போவதில்லை. நண்பர்களிடம் போவதில்லை. யாருடனும் கதைப்பதில்லை. சிரிப்பதில்லை.
சரியாகச் சாப்பிடுவது கூட இல்லை.
விடிய ஆரம்பிக்கும் குடி இரவு வரை நீண்டு மயக்கமும் விழிப்புமாக...
அவனை ஆறுதல் படுத்த வீணாவால் முடியவில்லை. திருத்தவும் முடியவில்லை.
வீட்டு Mortgage, பிள்ளைகளின் பள்ளிக்கூடச் செலவு, சாப்பாடு எல்லாமே ஒரு factory சம்பளத்திற்குள் அடங்கிவிடுமா?
அவள் Public Exam எடுத்துப் பாஸ் பண்ணி வேலைக்குப்போகத் துவங்கினாள்.
'I don't know...how...you sleep next to him...he stinks'
மகள் ராது, மூக்கைப் பிடித்து, அபிநயம் காட்டிச் சிரிப்பாள்.
"My friend's dad who worked as a Doctor in China is working as a Taxi driver....here. I don's know...why he is making such a big fuss?'
மகன் முரளி பெரிய மனிதன் போல் பேசிப் பிரதீப்பை நோகடிப்பான்.
கொஞ்சிக் கொஞ்சிப் பாசமழை பொழிந்த அப்பா...எல்லாம் அவர்கள் வரையில் கனவாகி...குடித்து விட்டுச் சதா படுத்துக் கிடக்கும் அப்பாதான் நிஜமாகிப் போனார்.
அவர்களுக்குப் பிரதீப்பைப் பிடிக்கவேயில்லை,
'He doesn't work...'
'He doesn't take you anywhere...'
'He doesn't do anything....'
'Do you still need him amma...?'
'Why don't you divorce him?'
பிள்ளைகள் ஆத்திரத்துடன் கத்தும் பொழுது...
'I still love him...I still love him...'
அவள் விம்மிக் கொண்டே கூறுவாள். அம்மாவின் அழுகை பிள்ளைகளுக்கு வியப்பாக இருக்கும்.
பிரதீப் அவள்மீது வைத்த ஆழமான அன்பை, அவளால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. வேலையும் வீடும் மட்டும் வாழ்க்கையாகப் போய்விட்டபின்பும் கூட, அவன் குடித்தால் கூட, உயிரோடு தன் அருகே இருக்கிறான் என்ற சின்னச் சந்தோஷத்தில்தான் அவள் இயங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பது அவர்களுக்குப் புரியுமா?
அவர்களுக்கு மட்டுமென்ன...? அவளுடைய அப்பா அம்மா...சாருக்குக்கூடத் தெரியாது. அதனால்தானே, சாருவும் ஆஸ்திரேலியா வரத் துடிக்கிறாள்? அவளுடைய sponsor letter இதனால் கிடைக்கும் points ற்கு ஏங்கிக் கொண்டு....
Engineering இல் 2nd year இல் இருந்தவள். ஒரே நாளில் படிப்பை தூக்கி எறிந்துவிட்டு வந்து நின்றாள்,
'அப்பா நான் இனிமேல் படிக்கேல்ல.'
'ஏனம்மா?'
'நான் ஜனனை மர்ரி பண்ணப் போறன்.'
'கல்யாணத்துக்கும் நீ படிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?'
'நான் Love பண்ணுகிற ஜனன்...அவ்வளவு படிக்கேல்ல. Commercial Bank இல cashier work பண்ணுகிறார்.'
'சாரு'!
'அப்பா... நீங்கள் எவ்வளவு கத்தினாலும் உங்களுடைய விருப்பத்தோடதான் நான் ஜனனைக் கல்யாணம் செய்வன்.'
அப்பா எவ்வளவு கெஞ்சியும் சாரு மேலே படிக்க மறுத்து விட்டாள்.
அப்பாவுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை.
மூத்த மருமகன் ஒரு cashier.
பேசாமல் தன்னுடைய company இல் அவனை Manager ஆக்கிவிட்டு...Wedding Invitations யை அடித்தார்.
Wedding Reception இல் சாருவும்...ஜனனும் கை கோர்த்து நடந்தபோது ஊர்க் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
'எனக்காக தன் படிப்பையே தூக்கி எறிந்தவளாக்கும்!' ஜனனின் முகத்தில்தான் எவ்வளவு கர்வம்!
வசதியான வாழ்க்கையில் அவர்கள் அடித்த கும்மாளங்கள்...கொண்டாட்டங்கள்தான் எத்தனை?
அந்த சொகுஸான வாழ்க்கை இங்கு கிடைக்காமல் போய் விட்டால்?
Ph.D. என்ற பட்டத்துக்குரியவனே இன்று ஏமாற்றம் தாங்காமல் குடிகாரனாகி விட்டபிறகு, சாதாரணமான ஜனன்...
அப்பாவைப் போல Company Manager ஆக அவனைத் தூக்கிப் போட இங்கு யார் இருக்கிறார்கள்?
அவளைப் போல ஜனன் இடத்துக் கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டாலும், பிரதீப்பைப் போலத்தானே சாருவும்? நினைத்தெல்லாம் தனக்குக் கிடைக்க வேண்டு மென்று, தான் நினைத்த வாழ்க்கை தனக்கு அமைய வேண்டுமென்று தன் வாழ்க்கை அழகை மற்றவர்கள் பார்த்து வியந்த வண்ணம் இருக்க வேண்டுமென்று...
இப்படியெல்லாம் எதிர்பார்த்து வருபவளுக்கு ஒன்றுமே கிடைக்காமல் போய்விட்டால்? Foreign வாழ்க்கையும், உடுப்புக்களும், holidayற்குப் போய் நின்றால் சொந்தக்காரர்கள் எல்லோரும் வாயைத் திறந்து பார்ப்பதில் கிடைக்கும் போலியான சுகமும் என்னைப் போலவே உன்னையும் மயக்க வேண்டாம் சாரு...
இந்த Australia இல் இன்னொரு பிரதீப்பும் வீணாவும் உருவாக வேண்டாம்.
ஐரோப்பியக் கதைகள்
--------------------------------------------
பத்தொன்பது
--------------------------------------------
________________
கதைஞர்
________________
இங்கிலாந்து அருட்குமாரன், எம்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஒல்லாந்து சார்ள்ஸ் லோகா
சுவிற்ஸர்லாந்து செல்வ மதீந்திரன்
டென்மார்க் ஆதவன்
கரவை தாசன்
' முல்லையூரான்
நோர்வே சந்திராதேவி
தேவகி இராமநாதன்
பிரான்ஸ் கலாமோகன்
கலைச்செல்வன்
சுகன்
புவனன்
ஜேர்மனி கருணாகரமூர்த்தி
சிறீரங்கன்
சுசீந்திரன்
தேவா
ஜ“வமுரளி
சபிக்கப்பட்டவர்கள்
________________________________________________
அருட்குமாரன், எம்
________________________________________________
சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட நக்கீரருக்குக் குளத்தில் முழுகி எழுந்தும் உடல் உபாதை தணியவில்லை. தான் மதுரை மாநகரை விட்டு அகற்றப்பட்டது நியாயமா என்று அவருக்குள் இருந்த ஐயம் இன்னுந் தீரவில்லை, 'குற்றங் குற்றமே' என்று சொன்னது எவ்வகையிலும் குற்றமென்று அவரால் இன்னும் ஏற்க முடியவில்லை. புலமை இல்லாத ஒருவன் தனக்கே விளங்காத இரவற் கவிதை வாசித்துப் பரிசு பெற்றதையிட்டுத் தன் மனதில் ஏற்பட்ட கொதிப்பு முதற் கண் தன் ஆணவத்தின் பாற் கொதிப்பு முதற் கண் த ஆணவத்தின் பாற் பட்டதா அல்லது நியாய உணர்வின்பாற் பட்டதா என்ற கேள்விக்கும் அவரால் முடிவு காண முடியவில்லை, வீடு, வாசல், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், அரச சபை, எல்லாவற்றையும் ஒருவாக்கு வாதத்திற்காக, சபையோர் நடுவே விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற வீம்புக்காக, வரட்டுக் கௌரவத்திற்காக இழந்து, பரமசிவனாருடைய கோபத்துக்கு ஆளாகிய முதலாவது சாதாரண மனிதன் என்றுவருந்துவதா, இல்லைப் பெருமைப் படுவதா என்றுகூட அவருக்கு நிச்சயமில்லை, நெற்றிக்கண் பட்ட அவரது தேகத்தின் தகிப்பு அதிகமா அல்லது அநியாயமாக அவமதிக்கப்பட்டுத் தண்டிக்கப் பட்டோமே என்ற மனத்தின் தகிப்பு அதிகமா என்றும் அவருக்குத் தெரியவில்லை. நெடுங் காலமாகத் தன்னை அறிந்த பாண்டியன்கூடத் தனக்காகப் பரிந்து பேசவில்லையே என்ற ஏமாற்றம் மனதைக் குடைந்தது. துதி கேட்டே பழகிவிட்ட செவிக்குத் தன் மனைவியின் கூந்தல் இயற்கை மணம் கொண்டது, என்று சொன்னவனின் புகழுரையைவிட இல்லையென்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரிச் சொல்கிறவனுடைய சத்திய வசனமா பிடிக்கும்? கற்புள்ள பெண்களின் கூந்தலில் எல்லாம் இயற்கை மணம் இ
க்குமென்றால், பாண்டியனின் பட்டத்தரசியை விட்டால் மற்ற எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா?
பாண்டியனுக்காவது அதிகாரத்தால் வந்த அகந்தை நியாயத்தைக் காணாதவாறு கண்ணை மறைத்தது. மற்றப் புலவர்கள்? இப்படியும் ஒட்டு மொத்தமான கோழைத்தனமா? பாண்டியனின் பண முடிச்சும் பரம சிவனாரின் கோபமும் ஒன்று சேர்ந்து நிற்கும்போது துணிந்து எதிர்க்கும் நெஞ்சுறுதி எத்தனை பேரிடம் உண்டு என்று நினைத்தபோது, நக்கீரரின் எரிமலை நெஞ்சுக்குள் விளைந்த கணநேரப் பெருமிதம் சில்லென்று குளிரூட்டிச் சிலிர்க்க வைத்து மறைந்தது.
என்ன பயனற்ற நடைமுறைக்கு ஒவ்வாத யோசனைகள். வாழ்நாள் முழுவதும் 'குற்றங் குற்றமே' என்று சொன்ன வீம்பை மட்டுமே நினைத்துக் கொண்டு திருப்திப்பட முடியுமா? இதற்காக நாளை ஒருநாள் உலகம் பாராட்டவுங்கூடும். ஆனால் இன்றைக்குச் சோறு போடுவது யார்? சிவபெருமானே சீற்றம் தணிந்து நடந்தவை நடந்தவையா யிருக்கட்டும் என்று மன்னித்ததோடு மட்டுமின்றி விமோசனம் பெறப் பாதையும் காட்டி விட்டார். அடுத்த காரியத்தைக் கவனிக்க வேண்டியதுதான். சிவபெருமானே வந்து தன் துணிவை மெச்சினாலொழிய அரச சபையில் உள்ள பிச்சைக்காரப் பட்டாளம் தன்னுடன் உறவு கொண்டாடத் துணியாது. புகழ்பாடும் கும்பல் உள்ள வரைக்கும் பாண்டியனுக்குத் தன் அவையில் நக்கீரர் இருந்தாலென்ன, போனாலென்ன? அவனுடைய தேவியின் கூந்தலின் இயற்கை மணத்துக்கு ஈடாக ஊரில் ஒரு மலருக்கும் மணமில்லை என்று வாயுளையப் பாடப்பேகிற கூட்டத்தின் நடுவே 'குற்றம் குற்றமே' என்ற நிலையினின்று பின்வாங்கிய நக்கீரன் இருந்தாலும் வெற்றி; தன் நிலைப்பாட்டைக் கைவிடாமல் அல்லற்பட்டு அழிந்தாலும் வெற்றி. பாண்டியனுக்கு எந்த வகையான மகிழ்ச்சியை மறுப்பது என்று மனம் தடுமாறியது. மனைவி, குடும்பம், மதுரை மாநகர் என்று மாறி மாறி எழுந்த நினைவுகள் சாப விமோசனத்தை நோக்கி நக்கீரரை உந்தின. மனதை ஒரு நிலைப்படுத்தித் தியானத்தில் ஆழ்வோம் என்ற முடிவுடன் நக்கீரர் குளத்தில் இறங்கி முழுகியெழுந்து ஈர வேடடியுடன் குளக்கரை மர நிழலில் சப்பாணி கொட்டியவாறு மனதை ஒடுக்க முற்பட்டார். அப்போது...
இளங்கீரனுடைய தூக்கம் கலைந்தது. "மச்சான், கீரன் எழும்படா! ஊராலை கடிதம் வந்திருக்குது" என்ற பிரகடனத்துடன் கதவைத் தடதடவென்று தட்டினான் அடுத்த அறையிலிருக்கும் சுரேன் எனப்படுகின்ற சுரேந்திரகுமார்.
"மூதேசியள்! சனி. ஞாயிரெண்டாலும் ஆறுதலாய்ப் படுக்க விடாதுகள். ஒண்டில் ஆரேன் ஒருத்தன் மாறி மாறி மணியடிப்பான். இல்லாட்டி அறைக்குள்ளை வந்து குழப்புவான்." முனகியவாறே தலையணையிலிருந்து தலையை வெகு சிரமப்பட்டுப் பிய்த்தெடுத்து நிமிர்த்தி வைக்கு முன்னமே கதவைத் திறந்து கடிதத்தைக் கட்டிலில் வீசிய சுரேன் அறையை விட்டுப்போக மனமில்லாமல் நின்றான்.
கீரனுக்கும் அவனைப் போகச் சொல்ல மனம் வரவில்லை. மனம் வந்தாலும் சுரேன் இலேசில் போகப் போவதில்லை. 1990 க்கு முதலே எவருக்கும் ஊரிலிருந்து கடிதங்கள் வருவது குறைவு. இப்போது கடிதம் வருவதே அபூர்வம். யாரிடமாவது கையிற் கொடுத்தனுப்பிக் கொழும்பில் போட்டால் வந்து சேரும். அதுவும் நிச்சயமில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் பிந்தி வருகிற கடிதத்தில் எதுவும் பெரிய வுதினம் இராது. நீண்ட காலமாகவே இயக்கங்களுடைய செய்திப் பிரச்சாரங்களுக் குள்ளிருந்தும் வதந்திகளிலிருந்தும் கண் காது முளைத்து வரும் தகவல்களிலிருந்தும் ஊர் நடப்புகளை ஒவ்வொருவரும் அவரவர் மனவிருப்புக் கேற்றபடி விளங்கி, வியாக்கியானஞ் செய்யப் பழகிவிட்டாலும், ஊரிலிருந்து கைப்பட எழுதின கடிதத்துக்கு ஒரு மதிப்பு இருந்தே வந்தது. சுரேனும், கீரனும் அடுத்தடுத்த ஊர்க்காரர்கள். சுற்றி வளைத்துச் சொந்தமும் உண்டு. சுரேனுக்குக் கடிதம் வந்து ஆறேழு மாதமிருக்கும். மனத்துக்குள் இருக்கிற கவலையை பிறரறியாமல் ஆர்ப்பாட்டமான பேச்சாலும் அட்டகாசமான சிரிப்பாலும் மூடப் பழகிவிட்டான்.
"அம்மாவே எழுதியிருக்கிறா?" சுரேன் ஆவலை அடக்க முயலவில்லை.
"ஓம்" என்று சொல்லி, உறையைத் திறந்து கடிதத்தை வாசிக்கத் தொடங்கிய கீரனுடைய மௌனத்தைக் குலைக்க வழி தெரியாது சுரேன், "மச்சான். கோப்பி ஒண்டு ஊத்தட்டா?" என்று கேட்டுவிட்டுக் கீரனுடைய மறுமொழிக்குக் காத்திராமல் அறையை விட்டுப் போனான்.
கீரன் கடிதத்தை வாசித்து முடிததபோது அறையிலிருந்து மாற்றக்கட்டிலில் கோப்பியை உறிஞ்சியபடி சுரேன் இருந்தான். கீரனுடைய கட்டிற் தலைமாட்டுக்கு அருகே கம்பளத்தின் மேல் கீரனுடைய கோப்பி வைக்கப்பட்டிருந்தது.
"கோப்பையைச் சரியாய்க் கழுவினியா?" என்ற கீரனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் "அம்மா என்னவாம்?" என்று கேள்வி எழுப்பினான் சுரேன்.
"நீ ஒரு நாளும் கோப்பை சரியாய்க் கழுவமாட்டாய்."
"சோம்பேறித் தடியனுக்கு கோப்பி கொண்டந்ததுங் காணாமல்..."
"உன்னை ஊத்தச் சொன்னனானே?"
"பாவமெண்டு கொண்டுவந்தால் அறுவான்ர வாய்க் கொழுப்பு..."
"பாவம் பார்த்தே கொண்டந்தனீ? கடிதம் பார்க்க வெல்லோ உன்ரை இரக்கமெல்லாம்?"
"சரிசரி, என்னவாம் புதினம்?"
"எல்லாம் தெரிஞ்ச கதைதான். புதிசாஒண்டுமில்லை." ஒரு நிமிஷ நேரத் தயக்கத்தின் பின், "இந்தா வாசி" என்று கடிதத்தை நீட்டினான் கீரன்.
"எப்ப கோயிலுக்குப் போறாய்?"
"ஏன் போகவேணும்?"
"அம்‘ என்னவோ கெஞ்சி மண்டாடிக் கோயிலுக்குப் போ எண்டு எழுதியிருக்கிறா. ஒருக்காப் போனா மூதேசியாருக்குத் தேஞ்சு போகுமே?"
"இதுதான் உன்னட்டைக் கடிதத்தைக் காட்டினா வாற வினை. உங்கை கோயில்வளிய யாவாரமெல்லோ செய்யினம்."
"ஊரில் எண்டா யாவாரம் இல்லையோ?"
"இந்தளவு மோசமில்லை. எண்டாலும் அங்கேயே போகாமல் விட்டிட்டன்."
"ஓ! அதுதானே அம்மா இவ்வளவு தெண்டிக்கிறா. கும்பிடாட்டிலென்ன, பகல் சாப்பிடவெண்டாலும் போகலாம்." கடிதம் வாசித்த திருப்தியுடன் சுரேன் வெளியேறினான்.
கீரன் கோயிலுக்குப் போவதை நிறுத்திய காலந் தொடங்கி அம்மாவுக்கு பெருங் கவலை. அரச படையினர் இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் பெருந்தொகையிற் பிடித்துச் சென்று விசாரணையின்றி மறிக்கவும் வதைக்கவும் தொடங்கிய பிறகு கீரன் கடவுளைப் பகைத்துக் கொண்டு என்ன கஷ்டப்படப் போகிறானோ என்று அம்மாவுடைய மனக் கவலை மேலும் அதிகரித்தது. யார் யாரை ஏன் எப்போது எவ்வாறு கொல்வார்கள் என்றே தெரியாத காலம் வந்துங்கூடக் கீரன் நாட்டை விட்டு வெளியேற முயலவில்லை. 1987-இல் அமைதி காக்கும் படையின் வருகைக்குப் பிறகு நடந்த சம்பவங்களை அடுத்து அவனாற் தொடர்ந்தும் ஊரில் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அம்மா தாலிக்கொடி உட்படக் கையிலும் கழுத்திலும் இருந்த சகலத்தையும் விற்று அவனை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தாள்.
கீரன் விக்கனமில்லாமல் பத்திரமாக இங்கிலாந்து போய்ச் சேர்ந்தால் எப்படியும் பழனி முருகனுக்குக் காவடி எடுப்பேன் என்று அம்மா தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள். அது எப்படிச் சாத்தியப்படும் என்றெல்லாம் அப்போது யோசிக்க அவகாசம் ஏது? கீரனுக்கு லண்டன் பிழைப்புப் பழகிவிட்டாலும் இயந்திர கதியில் நடக்கும் உழைப்பும் சாரமற்ற வாழ்க்கையும் மனதை வாட்டின. இது பற்றி வீட்டிற்கு, எழுதிய கடிதங்களிற் குறிப்பிட்டது அம்மாவின் அபிப்பிராயத்தை மேலும் உறுதிப்படுத்தியது. அப்பாவுக்கும் மெல்ல மெல்ல அந்தக் கருத்துடன் உடன்பாடு ஏற்படத் தொடங்கிவிட்டது. அம்மாவுக்கோ முன்பின் யோசியாமல் பழனிக்கு நேர்ந்துவிட்டோமே என்ற புதிய கவலையும் சேர்ந்து கொண்டது. கீரன் வருஷத்துக்கு ஒரு முறையாவது கோயிலுக்குப் போய் முருகனுக்கு ஒரு அர்ச்சனை செய்தாலும் தெய்வம் பொறுத்துக் கொள்ளும் என்ற நப்பாசையை ஒவ்வொரு கடிதத்திலும் தவறாமற் தெரிவிப்பாள். மொழிப்பிரச்சனை, இனக்கலவரம், அரசபடைகளின் அட்டூழியம், இயக்கங்களின் மோதல், போர், கொலைகள், வதைகள் இவை யெல்லாம் தெய்வச் செயலா? தமிழர் எல்லாருமே ஒருமுறை பழனிக்குப் படையெடுத்தால் நாட்டில் முழுப் பிரச்சனையும் தீர்ந்துவிடுமா? மூடநம்பிக்கைகளும், வரட்டு ஆசாரங்களும் அறியாமையும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தானா இருக்கிறது? கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றால், முட்டாள்களின் உலகத்தில் அறிஞன் வாழ முடியுமா? அறிஞன் தான் கடவுளை நம்பவில்லை என்பதை முட்டாள்களுக்கு நிரூபிக்க என்ன அவசியம்? அம்மாவுக்காக கோயிலுக்கு ஒரு தடவை போனால் அவனது கொள்கைப் பிடிப்பு எங்கே போவது? சிநேகிதர்கள் சிரிக்க மாட்டார்களா? சிநேகிதர்களின் சிரிப்புக்குப் பயந்தா அவன் நாத்திகத்தைக் கடைபிடிக்கிறான்? அம்மாவுக்கும் மேலாக ஒரு தெய்வம் இல்லையென்றால் அம்மாவுக்கும் மேலாக என்ன நாத்திகம்? நீண்டநேரம் மனக்குடைச்சலுக்குப் பிறகு கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை செய்வது என்ற முடிவுக்கு வந்தான்.
மரத்திலிருந்து ஓர் இலை குளநீரில் விழுந்தது. விழுந்த இலை திடீரென்று ஒரு பாதி பறவையாகி மேலே பறக்க முற்பட்டது. மறுபாதி மீனாகி நீருள் முழுக முயன்றது. தியானத்தில் இறங்கு முன்னிருந்த நக்கீரரின் மன நிலையின் படிமந்தானோ அது? நிச்சயமின்மை, சஞ்சலம், சபலம், சலனம், முடிவின்மை, ஐயங்கள், கேள்விகள், மேலுங் கேள்விகள், மனதின் தத்தளிப்பு, தவிப்பு, பதட்டம், துடிப்பு, வேதனை, குமுறல். கொதிப்பு, ஓய்வற்ற இயக்கம், இழுபறி...
அந்த இலை ஏன் மரத்திலிருந்தபடியே இருந்திருக்கக்கூடாது? விழுந்தாலும் ஏன் தரையில் விழுந்து சருகாகவோ நீரில் மிதந்து நாளடைவில் அழுகியே போயிருக்கக்கூடாது? பாண்டியன் அவையில் மற்றப் புலவர்கள்போல், மரத்தில் பாதுகாப்பாக இருக்கிற இலைகள்போல், மரத்தில் இதுமட்டும் ஏன் இப்படித் தவிக்க வேண்டும்? பறவையாகி இழுக்கிற பாதி மேலெழுந்து மரத்தில் அமர்ந்து ஏதோ வகையில் மரத்துடன் உறவு கொண்டாட முனையும் நக்கீரரின் நப்பாசையா? மீனென்ன அரச சபையுடன் உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலும் தான் தானாகவே இருக்க முனைகின்ற நக்கீரரின் ஆணவமா? நீரில் விழுந்தாலும் நீருக்குள்ளேயே ஓர் இருப்பைக் காணமுடியுமென்ற தைரியத்தின் வெளிப்பாடா?
நக்கீரர் கண்ணை மூடித் தியானத்தில் ஆழ்வதற்கு முன்னமே இலையாக விழுந்து விளைந்த அந்த வினோத சிருஷ்டி நக்கீரரின் பார்வையில் விழுந்தது. இது நிசமா அல்லது கற்பனையா? நீரில் இறங்கி அதை நெருங்கிப் பார்க்கலாமா? மீனையும் பறவையையும் பிரித்து அந்த அவஸ்தையை முடிவுக்குக் கொண்டு வரலாமா? பிரித்தால் இரண்டுமே அழிந்து அந்த இருப்பே முடிவுக்கு வந்து விடுமா? மதுரை மாநகரில் பாண்டியனின் அவையில் நடந்தவை யாவும் மனதில் நிழலாடின. மரத்தோடு மரமாக மறுபடியும் ஒர் இலையாக ஒட்டிப்பேர்ய மற்ற ஊமைப் புலவர்களைப் போல சடவாழ்க்கை வாழ்வதற்குத்தானா இந்தத் தியானம்? நக்கீரரின் நெஞ்சுரத்தை மீண்டும் பரீட்சிப்பதற்குத் தான் அந்தப் பரம்பொருள் ஈடுபடுமாறு கூறியதா? உணர்வு கடந்த அந்தப் பரம்பொருளுக்கு நக்கீரரைத் தண்டித்து என்ன பயன்? நக்கீரரை மன்னித்து என்ன பயன்? தன் நெஞ்சைப் பொய்த்து ஒரு தியானமா?
மேலும் ஐயங்கள், மேலும் நிச்சயமின்மை, மேலும் மனக்கொதிப்பு, மேலும் உடற்கொதிப்பு. இம்முறை தன்னிரக்கத்தாலோ துன்பத்தாலோ அல்ல. அறிவே சுடராக எழுந்து விரிந்து நக்கீரரை உள்ளும் புறமும் தகித்தது.
கோயிலுக்குப் போனபோது பூசை தொடங்கிவிட்டது. கீரனுக்குக் கடைசியாக ஊர்க் கோயிலிருல் பார்த்தவற்றிலிருந்து பலதும் வித்தியாசமாக இருந்தது. பெண்கள் எல்லாருமே சேலையுடன் வரவில்லை. ஆண்கள் எவருமே வேட்டியுடன் காணப்படவில்லை. ஐயர் பூனூலுக்கு மேலே சட்டையும் ஸ்வெற்றரும் அணிந்திருந்தார். பூசையின் முடிவில் பஜனைப் பாடல்கள் கேட்டன. கஸெற்பெட்டி மேளவாத்தியம் ஒலித்தது. பிளாஸ்றிக் போத்தல்களில் அபிஷேகத்திற்குப் பால் வந்தது. பூக்கள் இலையுந் தண்டுமாக பூச்சட்டிகளிலும் தட்டங்களிலும் கிடந்தன. ஆளை வாழைப்பழங்கள் நுனி வெட்டாமல் படைக்கப்பட்டன. காணேஷன் பூக்களும், சிவப்பு அப்பிள் பழங்களும் கண்ணைப் பறித்தன. இதெல்லாம் காலத்துக்கும் இடத்துக்கு மேற்ற மாற்றங்களா? நாம் செய்யும் மாற்றங்கள் பிரதியீடுகளுடனேயே நின்று விடுகின்றனவா? கோயிற் தரையை மூடிய கம்பளத்தைச் சுத்தமாக வைத்திருக்காமல் மனிதன் விழுந்து கும்பிடலாமா? கோயிற் சுவரில் கேளிக்கை நிகழ்ச்சி விளம்பரங்களும் அரசியல் விளம்பரங்களும் காணப் படலாமா? எல்லாமே மாற்றத்துக்குரியன என்றால் சடங்குகளையும் ஏன் மாற்றக்கூடாது? மாட்டைப் போக விட்டுக் கயிற்றை மேய்க்கிற காரியமா பார்க்கிறோம்? கீரனுடைய மனத்தில் எழுந்த கேள்வி அலைகள் முடிவின்றி நீண்டு வளர்ந்தன. கீரனுக்கு அம்மா செய்யச் சொன்ன அர்ச்சனை நினைவுக்கு வந்தபோது பூசை முடிந்து விட்டது. ஐயரிடம் போய் அர்ச்சனைக்குக் காசை நீட்ட அவர் துண்டு வாங்கிக் கொண்டு வரும்படி சொன்னார். துண்டு வாங்குமிடத்தைக் கண்டுபிடித்துக் கணக்கப்பிள்ளை வரும்வரை காத்திருந்து வாங்கித் திரும்பி வந்தபோது ஐயர் வேறு அலுவலில் இறங்கி விட்டார். அர்ச்சனைத் துண்டை மடித்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு வெளியில் வந்து சம்பாத்தை மாட்டித் தெருவில் இறங்கினான்.
"என்ன மச்சான் கீரன், கோவிலுக்கே வந்தனீ?" என்று கேட்ட குரல் பெற்றோல் ஷெட்டில் பழக்கம் பிடித்த தம்பிராசாவுடையது.
"இல்லை....சும்மா..." என்று கீரன் இழுத்து முடிக்கு முன்னே, "கண்டு கனகாலம், வாடா 'பப்பு'க்குப் போய் ஒரு பியர் அடிப்பம்" என்றவாறே தம்பிராசா கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
தியானங் குலைந்த நக்கீரரைப் பூதமொன்று தன் குகைக்குள் சுமந்து சென்றது.
அரங்கேற்றங்கள்
_________________________________________________
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
_________________________________________________
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவர்களின் குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம். பெரியண்ணா வீட்டுக்கு வருவது குறைவு. வேலை செய்யுமிடம் எங்கள் வீட்டிக்கு அதிக தூரத்தில் இல்லை என்றாலும் அவன் எங்களுடன் இருக்காமல் தன் சினேகிதர்களுடன் வீடு எடுத்துக் கொண்டு போய்விட்டான்.
எனக்கு இரவெல்லாம் சரியாகத் தூக்கமில்லை. ஆனாலும் அந்த ரெயினில் கால் வைத்ததும் வழக்கம் போல் ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கிறேன். 'ஏதோ ஒரு' புத்தகமில்லை. கொஞ்சம் நாள்களாக Freud தியறிகளில் ஒரு விருப்பம். எனது சிநேகிதி சைகோலஜி செய்வதும் அவள் விழுந்து விழுந்து Frued ஐப் பற்றிப் படிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ரெயின் முழுவதும் மனித முகங்கள். ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியாது. ஒவ்வொரு தரமும், அல்லது எனக்கு மனதில் சோகமான நேரங்களில் என்றாலும், என்னை இந்த மனிதர்களுடன் பிணைத்து ஏதோ ஓர் உறவைத் தேட யோசிக்கிறேன்.
நாங்கள் எல்லாம் 'வெற்று மனிதர்களாய்' அந்த ரெயினில் குவிந்து கிடப்பது போன்ற பிரமை, ஒவ்வொருத்தரும் எங்கள் மனதுக்குள் ஒவ்வோர் உலகத்தில் உறவாடிக்கொண்டிருப்போம். ஒரே ஒரு உறவு, இவர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் காலை 7.45 ரெயின் எடுத்து 8.30 மணிக்கு யூஸ்ரன் ஸ்ரேசனுக்குப் போகிறேன். அதன் பின் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைகளில் பிரிந்து போகிறோம். பின்னேரங்களில் 6.05 ரெயினுக்கு நான் ஓடிவரும்போது பெரும்பாலான மனிதர்களை மீண்டும் பார்க்கிறேன். ஒரு கூட்டத்துடன் என்னைப் பிணைத்துக் கொள்கிறேன்.
ஒருதரம் யூஸ்ரன் ஸ்ரேசனில் ஐ.ஆர்.ஏ.காரர் குண்டு வைத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தில் எங்களை ரெயினால் இறக்கி விட்டபோது ஒரு அரை மணித்தியாலம் ஸ்ரேசனுக்கு வெளியில் நாங்கள் காத்திருந்தோம். ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக் கொள்ளவில்லை. ஒரு நாடக மேடையின் ஊமை நாடகங்களா?
ரெயின் ஓடத் தொடங்கியதும் நான் Freud இன் Phychoanalysis இல் கண்களைப் பதிக்கிறேன். மனம் மட்டும் வீட்டுக்கு ஓடிப் போய்விட்டது. புத்தகத்தில் கவனம் செல்லவில்லை. முன்னிருக்கும் வெற்று மனிதர்களில் முகம் பதிக்காமல் கண்களை மூடிக் கொண்டால் அம்மாவின் கலங்கிய கண்களும் அப்பாவின் தொங்கிய முகமும் தெரிகிறது.
அக்கா ஒன்றிரண்டு நாள்களாக வீட்டுக்கு வரவில்லை. அண்ணா கிழமைக் கடைசியில் எப்போதோ எட்டிப் பார்ப்பான். என்னை மட்டும் ஹாஸ்டலில் இருந்து படிக்காமல் வீட்டிலிருந்து போகச் சொல்லி விட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்கு மேல் பிரயாணத்தில் போகிறது. அந்த நேரத்தைப் படிப்பில் செலவிடலாமென்றால் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. 'படிக்கவேண்டிய பிள்ளை எப்போதும் வீட்டிலிருந்து படிக்கும்தானே' என்று சொல்லி விட்டாள்.
அம்மாவுக்கு நானும் அக்கா மாதிரிப் போய் விடுவேனோ என்ற பயமும். அக்காவை அசல் தமிழ்ப் பெட்டைகள் போலத்தான் அம்மா வளர்த்தாவாம். அவள் இப்படிச் செய்யலாமோ என்று அம்மா மூக்கைச் சீறிக் கொள்கிறாள்.
'உங்களின் நல்ல வாழ்க்கைக்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம்?' அம்மா இப்படித்தான் நேற்று என்னைப் பேசிக் கொண்டிருந்தாள். வீட்டுக்குப் போகவே சிலவேளை மனம் எரிச்சல்படுகிறது.
கொஞ்ச நாட்களாக அப்பா சரியாக சாப்பிடவில்லை. அது ஒரு விதத்தில் அவர் உடம்புக்குச் சரிதானே என்று சொல்ல நினைக்கிறேன். அப்பாவுக்கு நல்ல உடம்பு. High Bood Pressure என்று டாக்டர் சொல்லிவிட்டாராம். அதனால் அப்பா உடம்பு மெலிந்தால் நல்லதென்று நினைக்கிறேன். ஆனால் அப்பா சாப்பிடாமலிருப்பது டாக்டர் Hypertension என்று சொல்லி விட்டாரென்றல்ல. அவருக்கும் அம்மாவுக்கும் பிடிக்காத ஒருத்தனை அக்கா கல்யாணம் செய்யப் போகிறாளாம். அம்மா அடிக்கடி மூக்கைச் சீறி அழுதபடி எங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அப்பா தன் அறைக்குள் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டு 'எங்களைச் சரியாக வளர்க்கவில்லை' என்று அம்மாவைத் திட்டிக்கொண்டிருக்கிறார்.
அப்பாவைப் பார்க்க அவரின் சிநேகிதர்கள், அதாவது எங்கள் குடும்ப நண்பர்கள், வந்தார்கள். லண்டனில் பிள்ளைகளை வளர்க்கும் கஷ்டங்களைப்பற்றி ஒரு குட்டி மாநாடு நடத்தினார்கள். "எங்கள் குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோம்? இந்தக் குழந்தைகள் தங்களுக்கு வயது வந்ததும் எங்கள் கலாச்சாரத்தை--பண்பாட்டை மறந்து தங்கள் விருப்பப்படி ஆட வெளிக்கிடுதுகள்." மஞ்சுளா மாமி இப்படித்தான் போன கிழமையிலிருந்து சந்தம் போட்டா. மஞ்சுளா மாமியின் ஒரு மகள் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம். அதற்கான காரணத்தை மஞ்சுளா மாமி போனபின் அம்மாவும் சத்தியா மாமியும் குசுகுசுத்துக் கொண்டார்கள். என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். 'இதெல்லாவற்றையும்' தெரிந்து கொள்ளும் வயது எனக்கில்லையாம்.
எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அதை நினைத்ததும் என் முகத்தில் அதன் பிரதிபலிப்புத் தெரிந்திருக்க வேண்டும். நினைவிலிருந்து கண்களைத் திறந்ததும் முன்னாலிருந்த பிரயாணி என்னை உற்றுப்பார்த்தார். இந்தப் பிரயாணிக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்? என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? எனக்கு இருபது வயது. லண்டன் யூனிவேர்சிற்றியில் Biology செய்கிறேன். இந்த வருட Projects மிக கஷ்டமானது. Sexual Practices and HIV Injection என்ற கட்டுரை ஒன்றை போன வாரம்தான் எழுதி முடித்தேன். அந்தக் கட்டுரை எழுத நான் எவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது; என்னென்ன அறிந்து கொண்டேன் என்று என் தாய்க்குத் தெரியாது.
அவளுக்கு நான் அவளது செல்ல மகள். மூன்றாவது சின்ன மகள். அம்மா பாவம். நிறையச் சீதனம் கொடுத்து மிகப்படித்த அப்பாவைக் கல்யாணம் செய்திருப்பாள். லண்டனுக்கு வந்து நாங்கள் எல்லாம் பாட சாலைக்குப் போகத் தொடங்க வீட்டிலிருக்கப் பயந்து 'செயின்ஸ்பரி'யில் வேலை எடுத்துக் கொண்டாளாம்.
கவுண்டரில் ரில் அடிக்கத் தெரிந்து கொண்ட அம்மா, தன் வளரும் குழந்தைகளின் வாழ்க்கையின் மாற்றத்தை உடல் வளர்ச்சியை எடைபோடுவதுடன் மட்டும்தானா கண்டு கொண்டாள்?
அடுத்த ஸ்ரேசனில் எனக்கு முன்னாலிருந்த பிரயாணி இறங்கிவிட இன்னொருத்தர் வந்து உட்கார்ந்து கொள்கிறார். இவ்வளவு தூரமும் பச்சைப் பசேலென்று தெரிந்த இடங்களை அடிக்கடி சந்தித்த கண்கள், இதனி எதிர்வரும் லண்டன் கட்டிடங்களைச் சந்திக்க வேண்டும்.
நான் திரும்பவும் கண்களை மூடிக் கொள்கிறேன். அண்ணா வந்து சேர்கிறாள் என் கண்களுக்குள். அண்ணா ராஜேந்திரன் வாட்ட சாட்டமானவன். எனக்கும் அவனுக்கும் எட்டு வயது வித்தியாசம். அவனைப்பற்றிய முதல் நினைவு எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது என்று நினைக்கிறேன். நாங்கள் அப்போதுதான் லண்டனுக்கு வந்திருந்தோமென்று ஞாபகம். வாங்கிய வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய ஊஞ்சல் இருந்தது. அண்ணா என்னை ஊஞ்சலில் ஏற்றி ஆட்டிக் கொண்டிருந்தான். நான் தவறி விழுந்து அடிப்பட்ட போது ஆவென்று அலற, அப்பா அலறிப்புடைத்துக் கொண்டு ஓடிவந்தார். அப்பா அண்ணாவைத் திட்டினார்.
அண்ணாவுக்குச் சரியான அடி. அப்பா மிகவும் பொல்லாதவர். அடியாத மாடு படியுமா? என்று அண்ணாவுக்கு அடிப்பார். "மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாய்; ஒரு சின்ன பெண் பிள்ளையைப் பார்க்கத் தெரியவில்லை."
அப்பா அண்ணாவை அடித்ததை என்னால் மறக்க முடியாது. அப்போது அண்ணாவுக்குப் பதினொரு வயது. அம்மா அளவுக்கு வளர்ந்திருந்தான். அம்மாவின் உயரம் ஐந்தடி.
அப்பா அண்ணாவை அடிக்க, நாங்கள் ஓலமிட, அம்மா இடையில் ஓடிவந்து விழ, பக்கத்து வீட்டுக்கார வெள்ளைக்காரன் வேலியால் எட்டிப் பார்க்க...அந்த நாடகம் என் மனதைவிட்டு அகலவில்லை. "இந்தப் பேயன் என்னென்று பெண் பிள்ளைகளைப் பார்ப்பன்? அவளவை யாரோடும் ஓடினாலும் இவன் ஆவென்று நிற்கப் போறான்."
அப்பா இப்படி எத்தனையோ தரம் அண்ணவைப் பேசியிருக்கிறார். தகப்பன்-மகன் உறவை Frued தியறி மூலம் எனது சிநேகிதி றேச்சல் போன கிழமை விளங்கப்படுத்தத் தொடங்கியபோது அண்ணாவையும் அப்பாவையும் நினைத்துக் கொண்டேன்.
அண்ணா அப்பா சொன்னது போல் அவனின் தங்கைகள் யாரோடாவது ஓட முதல் தானே வீட்டை விட்டுப் போய்விட்டான். யூனிவர்சிற்றியால் அண்ணா வெளிக்கிட்டு லண்டனுக்கு வெளியில் ஒருவேலை கிடைத்தபோது, எப்போது இந்தச் சந்தர்ப்பம் என்று காத்திருத்தவன்போல் தன்னோடு வேலை செய்யும் சிநேகிதர்களுடன் ஒரு வீடெடுத்துக் கொண்டு போய் விட்டான். "வீட்டிலிருந்து பிரயாணம் செய்திருக்கலாம்." அப்பா உறுமினார். அண்ணா இப்போது அப்பாவைவிடக் கூட வளர்ந்திருக்கிறான். அம்மா வழக்கம்போல் கண்களைத் துடைத்தாள். "சாப்பாடு எப்படியோ?" அம்மா வடையும் மீன் பொரியலும் செய்து கட்டிக் கொடுத்தாள்.
அக்கா அந்த வருடந்தான் யூனிவர்சிற்றிக்கு எடுபட்டிருந்தாள். அவள் இந்த நாடகத்தில் அதிகம் பங்கெடுக்கவில்லை. அக்காவின் அம்மாவுக்கு ஒரு பெருமை. அக்கா பார்க்க அழகாக இருப்பாள். ஒரு நல்ல தமிழ்ப்பிள்ளையாக வளர்க்க எத்தனையோ முன்னேற்பாடுகள். அந்தக் காலத்தில் லண்டனில் நடன அரங்கேற்றம் செய்தவர்களில் அக்காவும் ஒருத்தி. எங்களுக்குத் தெரிந்த மாமாவின் பெண்ணொருத்தி நடன அரங்கேற்றம் வைத்ததைவிட ஆடம்பரமாக வைக்க வேண்டுமென்று அப்பா வங்கிக் கடனும் எடுத்தார். அக்கா அரங்கேற்றம் நடந்தபோது மிகமிக அழகாக இகுந்தாள். நடனத்தின் பாரம்பரியம் தெரிந்ததோ இல்லையோ பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
அப்பாவும் அம்மாவும் மிகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். தமிழ்ப் பண்பாட்டைத் தாங்கள் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பிக்க வேண்டிய அவசியத்தை அப்பா தன் சிநேகிதர்களுடன் 'விஸ்கி' ஊற்றியபடி விளக்கினார். அப்பா இரண்டு, மூன்று கிளாஸ் விஸ்கி எடுத்துக் கொண்டதும் தமிழ்க் கலாச்சாரம் பற்றி மிக ஆசேவமாக பேசினார். சேர்ந்திருந்த மாமாக்கள் சந்தோஷத்துடன் தலையாட்டிக் கொண்டனர்.
அம்மா கத்திரிக்காய்க் குழம்பு வைத்து இட்லியும் வடையும் செய்ய, அப்பா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் போட்டுக் கேட்டுக் கொண்டு விஸ்கிப் போத்தல்களைக் காலி செய்வார். எனக்கென்னவோ தமிழ்க் கலாச்சாரம் குழம்பமாகத்தான் தெரிந்தது. அம்மா மேல் வீட்டில் கோயில் வைக்க அப்பா Drink Bar கீழ் வீட்டில் வைத்திருக்கிறார். அக்கா யூனிவர்சிற்றி ஹாஸ்டலில் படிப்புக் காரணமாக நிற்கப் போகிறேன் என்று சொன்னபோது அம்மா தயங்கினாள். அப்பா எத்தனையோ கேள்விகள் கேட்டார். கடைசியில் அக்கா தான் வென்றாள். யூனிவர்சிற்றி முடிந்து பெட்டி படுக்கைகளுடன் வீட்டுக்கு வந்தபோது அக்கா தன்னுடன் ஒரு வெள்ளையனையும் அழைத்துக் கொண்டு வந்து தன் சினேகிதன் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறிமுகம் செய்துவைத்தபோது நான் A Level சோதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் பெரிய நாடகம். பரத நாட்டியத்தைவிடப் பெரிய அரங்கேற்றம்.
ரெயின் இன்னொருதரம் நின்றது. என்னை அறியாமல் இடது பக்கத்து ஜன்னலைத் திரும்பிப் பார்த்தேன். எப்போதும் போல 'அவன்' ரெயின் நிற்பதைக் கண்டதும் பேப்ரை மடித்து வைத்துக்கொண்டு ரெயினில் ஏற வந்தான்.
அவன் ஒரு இலங்கையனாக இருக்கலாம். அல்லது இந்நியனாகவோ பாகிஸ்தானியாகவோ இருக்கலாம். என்னைவிட நாலைந்து வயது வித்தியாசமிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் லண்டனில் stock & Share இல் வேலை செய்பவன் என்று நான் நினைத்ததற்கு ஒரு காணரமுண்டு. சில வேளைகளில் எனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் தன் சூட்கேசைத் திறந்து பைல்களைப் புரட்டுவான். தற்செயலாக நான் பார்க்கும் நேரிடும்போது அவன் பைல்கள் stock & Share பற்றிய தகவல்களைக் கொண்டிருப்பதை அவதானித்தேன்.
அவன் இன்றும் எனக்கு முன்னால் உட்கா‘ந்தான். நான் ஒரு Biology Student என்று அவன் தெரிந்திருப்பான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒருநாள் ரெயினால் இறங்கியபோது எனது புத்தகங்கள் தவறி விழ அவன் பறந்துபோன சில பேப்பர்களைப் பொறுக்கித் தந்து உதவி செய்தான். நான் Viruses களையும் Bacteria க்களையும் படித்துக் கொண்டிருப்பதை அவன் கட்டாயம் அவதானித்திருப்பான்.
அவன் முன்னால் உட்கார்ந்ததும் வழக்கம் போல் நான் நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிகிறேன். அதுதான் எங்கள் 'ஹலோ.' அதற்கு மேல் ஏதும் பேசுவதற்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அவன் பெயர் பரமசிவமாகவோ, ரஹ“மாகவோ, சமரக் கொடியாகவோ இருக்கலாம். எனது பெயர் வனிதா என்பது அவனுக்குத் தெரியாமலேயே இருக்கலாம். Miss மயில்வாகனம் என்று சொல்லி அலுத்துவிட்டேன். வனிதாவுடன் நிற்பது மனதுக்குச் சுகமாயிருக்கிறது. இப்போது ரெயின் லண்டனுக்குள்ளால் போய்க்கொண்டிருக்கிறது. உடைந்த கட்டிடங்கள், உடைபடும் கட்டிடங்கள், வானளாவும் கோபுரங்கள், வாழத் தெரியாத-முடியாத மனிதர்கள்; நான் Freud ஐ மூடிவைத்துவிட்டு ஜன்னலால் வெளியில் பார்க்கிறேன், வீட்டை விட்டுப் போன அக்காவைத் தேடிகிறேன். எனது அக்கா இங்கேதான் எங்கேயோ தன் வெள்ளைக்கார 'போய் பிரண்டுடன்' சீவிக்கிறாள். அக்கா கெட்டிக்காரி. எந்தச் சூழ்நிலையிலும் வாழ்ந்து கொள்வாள். அக்காவை ஏன் பொற்றோர்கள் விளங்கவில்லை?
அம்மாதான் துடிக்கிறாள். அப்பா தன் அறையில் புகுந்து படுத்திருக்க, தெரிந்த மாமாக்கள் வந்து ஏதோ 'செத்த வீடு' நடந்ததுபோல் துக்கம்விசாரிக்கிறார்கள். இவர்களில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். அந்தப் பிள்ளை இப்படிச் செய்திருக்கக் கூடாது. வைத்தியநாதன் மாமா தன் ஊதிய வயிற்றைத் தடவிக்கொண்டு அம்மாவிடம் சொன்னார். இவர் ஒருகாலத்தில் தான் காதலித்த சிங்கள செக்ரெட்டரியை கைவிட்டு விட்டு மாமி சீதாலட்சுமியை சீதனத்துக்காகச் செய்து கொண்டவர் என்று அம்மாவும் மஞ்சுளா மாமியும் வடைக்கு உழுந்து அரைந்த போது அலட்டிக் கொண்டார்கள்.
"என்னதான் இருந்தாலும் எங்கள் கலாச்சாரத்துக்கு நாங்கள் கௌரவம் கொடுக்கவேண்டும்." இன்னொரு மாமி ஒப்பாரி வைத்துக் கொண்டார். அவள் மூன்றாம் சிளாஸ் விஸ்கி போக முதல் வாய் திறந்து நான் கண்டதில்லை. ஒரு சாதாரண சம்பாஷணைக்கு மூன்று விஸ்கி எடுப்பவள் வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்க்க எவ்வளவு விஸ்கி எடுப்பாள்?
அக்கா கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக அவளின் Boy Friend உடன் தொடர்பு வைத்திருக்கிறாள். அவனைத் தமிழ்க் கலாசாரத்துக்காக 'தியாகம்' செய்து விட்டு முன்பின் தெரியாத இன்னொருத்தனைத் தாலிக் கயிற்றால் பிணைத்துக் கொண்டு கோயிலுக்கும் சந்தன குங்குமத்துக்கும் அவள் மனச்சாட்சியை அழித்துக் கொள்ளவா சொல்கிறாள்? தமிழ்க் கலாச்சாரம் என்பது பொய்மையின் மறு பெயரா?
"எக்ஸ்கியூஸ் மீ"
முன்னாலிருந்தவன் முதல் தரமாக என்னைப் பார்த்துக் கதைக்கிறான். நிமிர்ந்து பார்க்கிறேன். அக்காவைப் பற்றி இவனிடம் சொல்லி அழவேண்டும் போல் இருக்கிறது.
அவன் கண்கள் அழகானவை. தலைமயிர் சுருண்டு நேர்த்தியாய் வாரப்பட்டு, முகம் செழுமையாய்ச் சவரம் செய்யப்பட்டு...நான் அவனை அளவிடுவதை அவன் தர்மசங்கடத்துடன் தாங்கிக் கொண்டான். அவன் கையில் 'whats on' இருந்தது. Bethovan Piano Concert இல் என் பார்வையைப் பதித்துக் கொண்டேன். அவன் என்ன சொல்ல வந்தானோ தெரியாது. நான் அவன் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராய் இருப்பதாகக் காட்டிக் கொண்டேன்.
"கொன்சேர்ட்டுக்குப் போக இரண்டு ரிக்கட் வாங்கினேன். தங்கச்சிக்கு வர முடியாதாம். எனக்குத் தனியாகப் போக விருப்பமில்லை..." அவன் தயங்கினான். என்னை வாழ்க்கை முழுக்கத் தெரிந்தவன்போல் அவன் பேசினான். கையில் இரண்டு ரிக்கட்டுகள் இருந்தன.
அவன் என்ன சொல்கிறான்? முன் பின் தெரியாத என்னைத் தன்னுடன் 'Bethovan Piano Concers' க்கு வரச் சொல்கிறானா?
வருடக்கணக்காக அக்கா பழகிய தன் அன்பனைக் கல்யாணம் செய்து வைக்காமல் அம்மாவும் அப்பாவும் நாடகம் அரங்கேற்றுகிறார்கள். இவனுடன் நான் இசைவிழா பார்க்கப் போனால் அம்மா இட்லிக்குப் பதில் ஏதும் விஷயத்தை விழுங்கிவிட மாட்டாளா?
நான் அவனைப் பார்த்தேன்...." அவன் மென்று விழுங்கினான்.
முன் பின் தெரியாதவனுடன் Concert க்குப் போகக் கூடியவளாகவா நான் தெரிகிறேன்? எங்களை யாரென்று இருவருக்கும் தெரியாது. இந்த ரெயினில் ஒவ்வொரு நாள் காலையிலும் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் என்பதைத் தவிர வேறென்ன தெரியும்?
"நீங்கள்..." அவன் இன்னும் தயங்குகிறான். அவனுக்குப் பெயர் என்னவாக இருக்கலாம்? எனது அப்பாவின் பெயர் மயில்வாகனம். அந்தப் பெயர் இல்லாமல் வேறேதாகவும் இருக்கட்டுமே!
"உங்களுக்குத் தேவையானால் இதைப் பாவியுங்கள்." அவன் ஒருபடியாகச் சொல்லி முடித்துவிட்டான். ஒரு சில நிமிட நேரத்தில் எனது மனதில் நடந்த நாடகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி.
என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்? அவன் 'எக்ஸ் கியூஸ் மீ' சொன்ன நேரத்திலிருந்து இந்த விநாடி வரை அவனை எத்தனை கதாபாத்திரங்களாக்கி என் மனதில் அரங்கேற்றி விட்டேன்? இவனிடம் எனது அக்காவைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும்போல் இருக்கிறது.
"தாங்ஸ், எனக்கு நிறையப் படிக்கக் கிடக்கிறது" நான் உண்மையான காரணத்தைச் சொல்கிறேன். என் மனதில் அம்மா, அப்பா, அக்கா, அவள் Boy Friend எல்லாரையும் விட Bacteria வும் Viruses உம் முன் நிற்கின்றன. எனது படிப்பு சிந்தனையை அழுத்துகிறது. அக்காவுக்காக அம்மா, அப்பா நடத்தும் நாடக அரங்கேற்றத்தை நான் மனதிலிருந்து அகற்றவேண்டும். வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். ரெயின் நின்றுவிட்டது. நாங்கள் அவசரப்பட்டு இறங்கிக் கொண்டோம். நான் ஒரு நாளைக்கு அவன் பெயரைத் தெரிந்து கொள்வேன்.
இன்று...
________________________________________
சாள்ஸ்
________________________________________
அது ஏப்பிரல் மாதம். முதல் வாரத்தின் கடைசிநாள். 'வின்ரர்' முடிந்தது போல 'ருல்பன்' கிழங்குகள் மண்ணைப் பிளந்து தண்டுகளை வெளியே தள்ளி இளவேனிற் பூக்களை விரிக்கத் தொடங்கி விட்டன.
கடந்த சில நாள்களாய் வெப்பநிலை உயர்வு அதிசயமாய் இருந்தது.
'இது வழமைக்கு மாறானது' என்றே எல்லோரும் பேசிக் கொண்டு 'சம'ரை அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்.
நாங்கள்....
இன்று அவளது ஆறாவது பிறந்த நாள். மிக நேர்த்தியாய் நீல சைனிங் துணியில் அந்த இந்தியன் கடைக்கவுண். முன்பக்க கொலரில் வெள்ளை முத்துக்கள் அடுக்காய் மினுங்கின. குறைத்து வெட்டிய தலைமயிரை நாலாய் வகிடு பிரித்து உச்சியில் கட்டிய முடி, பிரிந்து கிடக்கும் தென்னம் பாளையாய் தெரிந்தது. தாயிடம் அடம் பிடித்து பொட்டும், பூச்சும் அப்பியிருந்தாள்.
தன் வகுப்பில் சிறுவர்கள் கீறிக் கொடுத்த வர்ணப் படங்கள் ஒவ்வொன்‘றய் தூக்கி வைத்து தன் கரிய விழிகளால் நளினம் காட்டி எடுப்பாகக் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அங்கும் இங்கும் 'பிஸ’யாய்ஏ நடப்பதும், வெளியே தோட்டத்தில் 'ரூல்பனுக்' கிடையிலே ஓடுவதும், பின்னர் 'பொம்மி'க் கொண்டிருக்கும் சட்டையை ஒதுக்கிக் குந்துவதும், அடிக்கடி வாசலைப் பார்ப்பதுமாக அவள்...
தன் முதலாம் வகுப்பில் தனக்குப் பிடித்த ஆறு தோழிகளும், தன்னைக் கேலி செய்யாத ஒரு தோழனும் அவளது சொந்த விருப்பத்தின் பேரில் அழைக்கப்பட்ட விருந்தாளிகள்.
அவளது இன்றைய நினைவுகள் அவர்களுடைய விளையாடுவதும், அவர்களது பரிசுகளும்.
நானும் மனைவியும் அடிக்கடி அவளைப் பார்த்து எங்களுக்குள் சிரித்துக் கொண்டோம்.
அவர்களுக்கான பானங்கள், சிற்றுண்டிகள், மாலைச் சாப்பாட்டுக்கான 'பிறிகண்டேல்', 'பொற்றாற்', 'கொம் கொமர்' எல்லாமே எடுத்து வைத்து விட்டோம்.
நேரம் இரண்டு மணி. தாய்மார்கள் பிள்ளைகளுடன் வரத் தொடங்கி விட்டனர்.
'அப்பா-அம்மா கதவைத் திறவுங்கோ...'
'கத்தத் தொடங்கீற்றாள்'--தாய்
'அவசரப்படாதே! அவர்கள் பெல்லை அமத்தட்டும்' என்றேன் அதட்டலுடன்.
தலையைச் சிறிதாய் கவிண்டு மேற்கண்ணால் முறைத்தாள்.
கேலி செய்தாள், கோபமாய் அதட்டினால்-தன் எதிர்ப் புணர்வை இப்படிக் காட்டுவாள்.
'அவவிட மன்னையும் முழியும்'--நான்.
பிள்ளைகளைக் கூட்டி நாங்களே கூட்டிவந்து வீட்டில் ஒப்படைக்கிறோம்'--வாக்களித்து அவர்களை அனுப்பி விட்டோம்.
இப்போது அவள் மிகக் குதூகலமாகிவிட்டாள். பெரிய மனுஷ’யாய் வளவளவென்று டச்சில் அவர்களுடன் பேசினாள்.
பரிசுப் பொருள்களைப் பக்குவமாய் பிரித்து மேஜையில் பரப்பினாள். விதம் விதமாய் உகந்ததாய்...கலர் பென்சில்கள், மிருகங்கள்-பறவைகளின் படங்களுடன் புத்தகங்கள். வண்ணம் தீட்ட கோடிட்ட புத்தகங்கள், பார்பி பொம்மைகள்...எல்லோருக்கும் நன்றி சொன்னாள்.
நாங்கள் அவர்களை இருக்க விட்டு பானங்களையும், சிற்றுண்டிகளையும் பரிமாறினோம். சாப்பிடாமலே விளையாடித் துடித்தனர்.
ஒளித்துப் பிடித்தல், கெந்துதல், கயிறடித்தல், பலூன் நடனம். அன்னமரி கூக்கூ..அந்த எட்டுப் பேர்களுடன் இரண்டு வயது மூத்தவனான அவன் அண்ணனும்.
பள்ளிப்பாடல்களை சத்தமாய் பாடினர். இன்று அவர்களுக்கு மிக இன்பமாய் கழிந்து கொண்டிருந்தது பொழுது.
நேராய் எந்தக் கூச்சமுமற்றுத் தேவையானதைக் கேட்கவும் சேர்ந்து விளையாடவும் எந்த ஒளிவு மறைவில்லாத தனி உலகம் அவர்களுடையது. எந்தப் பேதங்களுமற்ற வாழ்க்கை. கறுப்பு, வெள்ளை, இனப்பிரிப்பு, ஏற்றத் தாழ்வுகள் எதுவுமே அறியாத பருவம்.
வளர வளர எத்தனை ஆயிரம் வேற்றுமைகளில் ஊறிப் போய்...ஒன்றுக்கு ஒன்று குரோதமாய்...
இந்த உலகம் சிறுவர்களுக்காக மட்டும் சிந்திப்பதாய் இருந்திட வேண்டும்.
வயது வந்த 'முட்டாள்கள்' உலகத்தின்மீது சுமத்தியிருப்பது எத்தனை ஆயிரம் குரோதங்களும்...கொடூரங்களும்...'எதிர்காலம் சிறுவர்களுடையது' என்று ஏமாற்றிக் கொண்டு...
'நீங்கள் விளையாடி முடித்தீர்கள் என்றால் நாம் வெளியே சிறிது தூரம் நடக்கலாம்' என்றேன்.
'எங்கே?' ஆவலாய்க் கேட்டனர்
'ஆற்றங்கரையிலுள்ள சிறுவர் பண்ணைக்கு.'
இரட்டை ஆனந்தம் 'யுப்பி, யுப்பி' சொல்லி கைகளைத் தூக்கிக் கொண்டு துள்ளினார்கள்.
நாம் எல்லோரும் வெளியே நடக்கத் தொடங்கினோம். நெதர்லாந்தின் மத்தியிலமைந்த ஒரு சிறுகிராமம் இது. ஐரோப்பாவை அரவணைத்து வரும் றயின் நதியில் கிளை பிரிந்து 'குறோமறயின்' என்ற பெயரில் ஒரு குட்டி ஆறு--இக்குக்கிராமத்தைச் சுற்றி இதன் மூன்றில் இரண்டு பகுதிகளை முத்தமிட்டு தண்ர்ப் பாம்பாய் நீளுகின்றது. கரையெங்கும் நீண்டு வளர்ந்த 'அய்க்கென்' மரங்களும், அந்த நிழல் மரக்குகைளை ஊடறுத்துச் செல்லும் நடைபாதையும், இருமருங்கும் பூத்துக் குலுங்கும் காட்டுச் செடிகளும் உள்ளே புகுந்து 'பிறாம் போஷன்' பழங்களைப் பிடுங்கித் தின்ன அவர்கள் நுழைவதும், எனக்கு என இளமைக்கால வன்னிக்காடுகளின் நினைவுகளை மீட்டது.
எம் குடியிருப்புக்கு வெளியே விரியும் அப்பிள், பியர்ஸ், திரட்சை, கேர்சன், செரி மரத்தோட்டங்களும்-அவை நிரையாய்ப் பூத்து இலைதெரியாமல் காய்த்துநிறைந்து கிடப்பதும் பார்க்க கொள்ளை ஆசை தரும்.
ஆபிரிக்க நாடுகளிலிருந்தும், ஸ்பெனிலிருந்தும் 'சமர்' வந்துவிட்டால் இங்கு கூட்டமாய்ப் பறந்து வந்து இந்தக் கூடல்மரங்களைத் தமதாக்கிக் கொண்டு, அந்தப் பழத்தோட்டங்களில் 'கெரில்லா' போர் நடத்துகின்ற அந்த சிறு 'ஸ்பிறால் குருவிகள்' எவ்வளவு சுறு சுறுப்பானவை.
'தேசங்கள் முழுவதும் எமக்குமுரியன' என்று ஆக்ரோஷமாய் பாடுகின்றன அவை.
எரிச்சலும், வாழ்வில் வெறுமையும், பயமும் பதட்டமும் ஒரு அரை குறை மனநோயாளியாய் வாழ்த்தலைப்பட்ட ஒரு அகதியின் நம்பிக்கைக்குரிய பாடல்களை இந்தச்சிறு குருவிகள் 'தேசங்கள் முழுவதையும் உனக்காக்கிக் கொள்' என்று இசைப்பதாய் எனக்கொரு கனவு.
பூமியால் மறைக்கப்பட்ட சூரியன் சிவந்து தன் கோபக் கதிர்களைப் பரப்பியிருக்கும் அந்த மாலைப் பொழுதில் அந்த ஸ்பிறால் குருவிகளின் பாடல்களில் லயித்துக் கிடக்க பேரார்வம்...
அந்த நடைபாதையில் மேலும் மூன்று நிமிடங்கள் நடக்க அந்தச் சிறுவர் பண்ணை. மயிலிலிருந்து லவ்பேட்ஸ் வரையிலான பறவைகள். பரந்த கம்பிக் கூடுகளிலும், திறந்த பகுதிகளிலும்! ஆடுகளிலிருந்து எலிவரையிலான சிறு சிறு மிருகங்கள். சிறுவர்கள் தடவவும், உணவு வழங்கவும் தக்கதாய் தலையைத் தூக்கி, கழுத்தை நீட்டி பயமில்லாமல் நிற்கின்றன. அவர்கள் மிகச் சந்தோஷமாய் தடவி, கதைபேசி, குட்டிகளையும், குஞ்சுகளையும் தூக்கி உற்சாகமாயிருந்தனர். உயிர்களை நேசிக்கின்ற பண்பை இந்தச் சிறுவர்களிடம்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கள்ளம் கபடமற்ற பொய்மையில்லாத அன்பு....
நாம் பெரியவர்கள் என்ற திமிரில் எல்லாவற்றையும் விற்றுக் கொண்டிருக்கிறோமா?
அவர்களுக்கு நாம் எம் குரோதம், பாகுபாடு, இனவெறி, கொலைவெறி எல்லாவற்றையும் கற்பித்துக் கொண்டுவருகிறோமே! ஏன்?
அதட்டுதல், அதிகாரம் செலுத்துதம், அடித்தல் எல்லாமே எம்மில் ஊறிப்போன வன்முறையின் அல்லது ஆற்றாமையின் பிரதிபலிப்புக்கள்.
என் நினைவுகளிலிருந்து விடுபட்டு, பொம்மையற்ற அந்தச் சிறுவர்களின் முகங்களைப்பார்த்து என் மகளின் தகப்பனாய் அடிக்கடி சிரித்துக் கொண்டேன்.
அங்கிருந்து திரும்பும் பொழுது ஆட்டமும் பாட்டும்ஒருவர் பின் ஒருவராய் றெயின் விளையாட்டும் நடத்தி வீடு வந்த போதும் அவர்களிடம் துள்ளுகின்ற குதூகலம் குறையவே இல்லை.
மாலை நெருக்க நண்பர்கள் உறவினர்கள் என்று சிலர் வரத் தொடங்கிவிட்டனர். எம்மீதும் எம் குழந்தைகள் மீதும் உரிமையோடு பங்கெடுத்துக்கொள்ளும் அவர்கள் அழைப்புகள் இல்லாத விருந்தாளிகள். அவளுக்கு ஆளுக்கு ஒரு பரிசுப் பொருளுடன். அவர்களின் வருகையை அவதானித்த சிறுமியொருத்தி, 'உனது ஓமாவும், ஓப்பாவும் வந்திருக்கிறார்களா?' என்று விளித்தாள். நெதர்லாந்தில் சிறுவர்களின் பிறந்த நாள்களில் அவர்களில் அவர்களின் பேரன் பேத்திகளின் வருகையும், அவர்களின் பரிசுப் பொருட்களும் மிக முக்கியமானது என்பதுபோல் இருந்தது அக்கேள்விகள்.
'இல்லை அவர்கள் சிறிலங்காவில்.'
'சிறிலங்கா தூரமா? காரில் வர முடியாதா?'
'இல்லை பிளேனில்தான் வரவேண்டும்.'
தொடர்ந்தும் அவர்களது உரையாடலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தோம் நாம் எல்லோரும்.
'என்ர தாத்தா செத்துப் போனார். அம்மா நெடுக அழுது கொண்டிருப்பா. அவர்தான் அது' சுவரில் தொங்கும் அந்தப் படத்தை கைளைத் தூக்கி ஒற்றை விரலால் சுட்டினாள்.
'இலங்கையில யுத்தம். அதிலதான் அவர் செத்தவராம். என்ர பெரியப்பாவும் காணாமல் போயிட்டாராம்...'
'ஏன் யுத்தம் நடக்குது?' என்றாள் அந்தச் சிறுமிகளில் ஒருத்தி.
'அது எனக்குத் தெரியாது. என் பெற்றோருக்குத்தான் தெரியும்...' என்றாள் இவள்.
இந்தக் குழந்தைகள் இக்கேள்விகளை என்னிடம் கேட்டால் என்ன பதில் சொல்வது நான்? உங்களுக்கு இது வெல்லாம் தேவையில்லை என்று மழுப்புவதா? அதுவும் சரியில்லை. கதையை வேறு வழிக்குத் திருப்புவதா?
ஏன் யுத்தம் நடக்கிறது?
அந்தக் கதை அத்துடன் துண்டுபட்டு வேறு விளையாட்டில் அவர்களின் கவனம் திரும்பியிருந்தது.
அந்தச் சிறு சிட்டுக் குருவிகளுக்கு உணவளித்து வீடுகளில் சோப்பிக்க நேரமாகிவிட்டது.
அடுத்த தரிப்பு
__________________________________
லோகா
__________________________________
நித்திரையும் விழிப்பும் யாருக்கு வேண்டியிருக்கிறது? இந்தியாவில் இரண்டு வருட அகதி வாழ்க்கையில் எத்தனை அனுபவங்களை...
இந்தப் பயணங்கள் நளினிக்கு என்றுதான் முடியுமோ?
இன்றைய காலை நளினிக்கு பஞ்சாப்பில் விடிகிறது. நேற்றைய பயணத்தின் அசதியில் படுத்திருக்க சுகமாகத்தானிருக்கிறது.
எதிரே லதா படுத்திருக்கிறாள்.
'எழும்புவமே?'
'இப்ப எழும்பினா ரொயிலற்றுக்கு கியூவிலதான் நிக்கோணும். ராத்திரி வந்த சனமும் இப்ப எழும்பி நிற்கும்.'
'அம்மாவிற்கு கடிதம் ஒன்று எழுதோணும்...'
எத்தனை நாளைக்கெண்டு பொய்யைப் பொய்யை எழுதுவது? இரண்டு நாளில் போயிடலாம் எண்டுதான் ஏஜென்ஸ’ நம்பிக்கையூட்டினார். இப்ப மூன்று மாதமாய் டெல்ஹ’, பம்பாய் என்று இழுபட்டாச்சு. ஆனாலும், 'எங்கு நிண்டாலும் கட்டாயம் கடிதம் போடுபிள்ளை'
என்று அம்மா சொல்லி விட்டது...
அம்மாவை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.
அந்த அறையின் ஒரு மூலையில் அவர்கள் கொண்டு வந்திருந்த சூட்கேசுகள் திறப்பாரற்றுக் கிடந்தன. கையோடு வீட்டிற்குக் கடிதம் எழுதவெனக் கொண்டு வந்த 'ஏரோக்கிராம்'களும் கசங்கிய இந்திய ரூபாய்களும் மேசைமீது கிடந்தன.
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலண்டரில் பஞ்சாபி உடையில் தண்ர் அள்ளிக் கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் காட்சி. நேற்றிரவு இந்த ஹோட்டேலுக்கு வந்தபோது அந்தக் கவுண்டரில் இருந்தவன் பார்த்த பார்வை, இன்னும் ஏதோ சந்தேகமாகவும் பயமாகவும் இருந்தது.
டெல்ஹ’யில் நின்று போது அவளின் முன்னும் பின்னும் திரிந்த ஏஜென்ஸ’க்கு காசு கட்டிய பொடியன்களின் பாடல்களும், நக்கல் கதைகளும், சிலவேளை ஏஜென்ஸ’க்காரனின் ஒருவித பார்வையும் பெரும் நரகம். ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்புக்களை அறியாது அவளைக் கட்டிலுக்கு அழைக்கும் ஆண்களின் வெட்கமற்ற தனமும் அவளை அருவருக்க வைத்திருக்கின்றன.
தொடர்ந்து வரும் அவமானங்களினால் பெட்டி படுக்கைகளை எறிந்துவிட்டு சென்னைக்கு அம்மாவிடம் ஓடி விட வேண்டும் போல் இருந்தது. பயணம் புறப்பட்டபின்னர் ஒவ்வொரு இரவுகளும் பயத்துடன்தான் கழிகின்றன. எங்களோடு வந்த பொடியன்களும் சரி, ஏஜென்ஸ’யும் சரி, இவர்களுடன் போய்த் தங்கும் இடங்களின் ஆண்களும் சரி, எல்லோருமே வெறும் இச்சைக்கு அலையும் ஆண்களாகவே தெரிகின்றனர். தாய்க்குலம், தாய்க் குலம் என்று வாய்கிழியக் கத்தும் இந்திய மண்ணிலும் இந்த ஆண்களின்...
நேரம் இரவு பதினொன்று ஆகிவிட்டது. லதாவும், நளினியும் இந்த மூன்று மாதகாலங்களில் இருவர் பற்றிய தங்கள் அனைத்தும் செய்திகளையும் பரிமாறிக் கெண்டனர்.
ஜேர்மனி, பிரான்ஸ’லிருக்கு அண்ணன்மார்கள், அந்த இடங்களில் கலியாணம் பேசியிருக்கும் பொடியன்கள் பற்றிய தெரிந்த தகவல்கள் இன்னும், இன்னும்...
ஆனால் பேசிக்கொள்ள இன்னும் ஏதோ இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அடுத்த தரிப்பு பாகிஸ்தானாம்...
வெளியே யாரோ கதவை அண்மிக்கும் சத்தம் கேட்கிறது. மிக மெதுவாக இவர்களின் அறைக் கதவு தட்டப் படுகிறது. இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள மட்டும் முடிகிறது.
கதவை யார் தட்டினாலும் திறக்க வேண்டாம் என்று ஏஜென்ஸ’ வேறு சொல்லியிருக்கிறார்.
இவர்களின் ரிக்கற் விடயம் சரிவந்தால் இரவு வந்து சந்திப்பதாக ஏஜென்ஸ’ சொல்லி விட்டிருந்தார். அவராயிருக்குமோ?
'ஏஜென்ஸ’ 'என்று லதாவைப் பார்த்து வாயசைத்தாள் நளினி.
'ஊகூம், ஊகூம் பொடியள்' என்று மெல்லியதாக மறுதலித்தாள் லதா.
ஏஜென்ஸ’, அல்லது பொடியள் என்றால் கட்டாயமாகப் பேர் சொல்லியிருப்பார்கள்...
நீண்டநேர இடைவெளிக்குப்பின் மீண்டும் கதவு தட்டப் படுகிறது.
"யார்" எனக் கேட்டாள் நளினி. எதுவித பதிலுமில்லை. ஆனால் தொடர்ந்து தட்டப்பட்டது கதவு.
ஒருவித துணிவை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள் நளினி.
அதே பஞ்சாப்காரன் அதிகாரத்துடன் அறைக்கதவைப் பூட்டினான்.
தொல்லை இரவுகள் மீண்டும் தொடர்கின்றன. இவனிடமிருந்து தப்பித்துக் கொண்டு இன்னும் எத்தனை, எத்தனை இரவுகளும் தப்பித்துக் கொள்ளலும்?
அகதி அ...
_______________________________
செல்வமதீந்திரன்
_______________________________
நான் சுவிஸ் வந்து ஐந்து முழுமையாக முடியவில்லை. அதற்கும், இன்னும் சில மணிநேரங்கள் பாக்கியிருக்கிறது. சுவிஸ் வந்தவுடன் முதல் வேலையாக மறக்காமல் மனைவிக்கொரு லெட்டர் எழுதினேன். அதுவும் முகவரியில்லாமல்தான் எழுதினேன். ஏனென்றால், இன்னமும் எனக்கு முகவரி தரவில்லை. எனது முகத்தை யவர்கள் முழுமையாக நம்பவில்லை. நம்ப வைப்பதில்தான் நான் இங்கு இன்னும் சிலகாலம் நிரந்தரமாக இருப்பது உறுதியாகும். அதன் பின்னர் மனைவியைப் பற்றிய முடிவினை மறுபரிசீலனை செய்ய முடியும்.
எதெப்படியிருந்தும், இப்போது அரை மணித்தியாலத்துக்கு முன்னர், தற்காலிக முகவரி கொடுத்து 'அகதிகள் திணைக்களம்' எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் வாசகம் மனதுக்குள் ஒரு சின்ன அதிர்ச்சியையும், மறைக்க முடியாமல் முகத்திலொரு முனகலையும் ஏற்படுத்தியது. என்றாலும் அகதியந்தஸ்து வழங்கி ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை தளரவில்லை. ஏனென்றால், என்பக்கம் நிஜங்களை நிறுத்தியிருக்கின்றேன். அவற்றை நிரூபிப்பதுதான் எனது பொறுப்பு. இதில் பொறுமையும் தேவை. அறிவை அதிகளவு பயன்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. வந்துள்ள கடிதத்தின்படி, 'நாளை காலை 9,20 க்கு அகதியந்தஸ்து வழங்கும் அதிகாரியை நான் சந்தித்தேயாகவேண்டும்! குறிப்பிட்ட நேரத்துக்கு நேர்முகப் பரீட்சை நடைபெறும். அதில் எந்தவித மாற்றமுமில்லை. எப்படித்தான் இரவு தூக்கம் வந்ததோ தெரியாது. தூங்கிவிட்டேன்.
காலையில் எழுந்து கடிகாரத்தை பார்த்தேன் 9.05. இன்னும் பதினைந்து நிமிடத்தில் அகதிகள் திணைக்கள அதிகாரியின் அலுவலகத்துக்கு முன்னால் நின்றேயாக வேண்டும். பஸ்சில் போனால் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். ஆனால் பஸ்சில் போகுமளவுக்கு மொழி தெரியாது. பரட்டைத் தல வளர்த்த பழைய 'காய்கள்' தான் (முதல் வந்த தமிழர்கள்) பஸ்சில் போவதாம். இருந்தும் ஆங்கிலத்தில் கதைத்தால் அதுவும் ஒரு சிலருக்குத்தான் புரியும். அதனால் ஓரளவு இலக்கை வைத்துக் கொண்டு அகதிகள் திணைக்கள அலுவலகத்தை நோக்கி நடந்து இடத்தை நெருங்கி விட்டேன். இன்னுமொரு நிமிஷத்தில் சென்று விடலாம். எதிரே தெரிந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். மைகாட்! குறிப்பிட்ட நேரத்துக்கும் ஒரு நிமிஷந்தானிருந்தது. வீதியை குறுக்கறுப்பதற்காக பச்சைச் சிக்னல் விழும்வரை பார்த்து நின்றேன். அதற்குள் மனசு பரபரக்கிறது. ஏற்கனவே 'கறுப்பர்களை' அவர்களுக்கு பிடிககாது. ஆனால், எங்கள் கருத்து அவர்களைக் கவருமா? கலியுகத்திலது நடக்காது. இதில் தாமதமானால்...இல்லை இது என் வர்ழக்கையின் தாமதம். சடாரென்று வீதியால் முன்னேறினேன். வேகமாகப் போன வாகனங்கள் பிரேக் போட்டு நின்று கோன் பண்ணின.
அலுவலகத்தின் முன்னறையை அடைய, எதிரே நின்ற வெள்ளைக்காரனிடம் வெறுப்பான பார்வை. 'வெளிநாட்டான் எங்களுடைய நாட்டை பழுதாக்கின்றான்' என்னும் அர்த்தத்தை அவரின் பார்வை படம்பிடித்திருந்தது. இருந்தும் எனக்கு அவசரம். உடனே கடிதத்தைக் காட்டினேன். அவரோ டொச்சில் சொன்னார். எனக்கு புரியவில்லை. அவருக்கும் தெரியும், இது இவனுக்குப் புரியாது என்பது! இருந்தும் ஏனிந்த இறுமாப்பு? கைவிரலால் சுட்டிக் காட்டினார்: 'அது தான் போக வேண்டிய அறை.'
கதவை மெதுவாக இரண்டு தடவைகள் தடடினேன். ஜேர்மன்மொழியில் ஏதோ சொன்னார்கள். புரியாததால் மீண்டும் தட்டினேன். 'யெஸ் கம் இன்' கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது, மிடுக்கான அலங்காரத் தோரணையில் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த அதிகாரியிடமிருந்து 'குட்தன் மோர்க்கன்' (காலை வணக்கம்) பறந்து வந்தது. ஓ...மொழிப் பற்றா? இல்லை பண்பாடா? எது எப்படியிருந்தால் எனக்கென்ன? அதிகாரி தன்னை 'அல்வின்' என்று கைகுலுக்கிக் கொண்டார். நானும் என்னை 'சுகந்தன்' என அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
'ப்ளீஸ் சிட்டவுன்.'
'தங்க்கியூ சார்.'
'மிஸ்டர் சுகந்தன்.'
'யெஸ்சார்.'
'நீங்கள் எங்களது மொழி பெயர்ப்பை தேவையில்லை என்றீர்கள்.'
'ஆம்.'
'ஏன் எதற்காக?'
'என்னால் உங்களது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியும். அதனால், இன்னொரு தமிழ் மொழி பெயர்ப்பாளர் தேவையில்லை. மேலும் என் பிரச்சனைகளை இன்னுமொருவர் அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.'
'வெரிகுட்...உங்களது பிரச்சினை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?'
'ஆம். அதை முடிவெடுப்பது உங்கள் கையில்.'
'நன்றாக பேசுகின்றீர்கள்...என்ன வேல€ செய்தீர்கள்?'
'நானொரு பொறியிலலாளன்.'
'ஏன் வேலையை விட்டீர்?'
'பிடிக்கவில்லை.'
'காரணம்?'
'அரசியல் தலையீடுகள் அதிகம்.'
'எப்படியான அரசியல் தலையீடுகள்?'
'எனது உயிருக்கு ஆபத்தான...!'
'எந்த வகையில் ஏற்பட்டது?'
'எனது தலைமையில் இயங்கிய இயந்திர பொறியியல் பகுதியில் சில சம்பவங்கள்.'
'நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமளவுக்கு அவை எவ்வாறு பாதித்தது?'
'எனது பொறியியல் பகுதிக்கு வருமானம் அதிகம். அவற்றில் அரசியல்வாதிகள் மறைமுகமாக பங்கு கேட்டனர்.'
'அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?'
'தரமுடியாது என்றேன்.'
'அவர்கள் என்ன சொன்னார்கள்?'
'தம்பிக்கு உயிர்மீதாசையில்லைப் போலென்றார்கள்.'
'பின்னர்...?'
'ஒரு மாதம் எந்தத் தலையீடுமிருக்கவில்லை.'
'அதற்குப் பின்னர்...?
'எனது இயந்திரங்கள் எரிக்கப்பட்டன.'
'எத்தனையாம் திகதி?'
'இதோ' என்று பேப்பர் கட்டிங்கைக் கொடுத்தேன்.'
'தங்க்கியூ' பெற்றுக் கொண்டார்.
'இதைவிட வேறு ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டதா?'
'ஆம். அதில் இரண்டு வகையான நிகழ்வுகளை எதிர் நோக்கினேன். நான் புரட்சிகர அமைப்புகளுக்கு ஆயுத உற்பத்திகளைச் செய்ததாக அரசு சார்பான பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை பிரசுரித்து...இயந்திரங்களை எரித்து ஒரு வாரங்களுக்குப் பின்னர் எனது வீட்டிற்குள் இனம் தெரியாத ஆயுத பாணிகள் புகுந்து வீட்டை நொருக்கினார்கள். நானும் மனைவியும் தலைமறைவாயி, ஓடி தப்பினோம். அதற்கு அடுத்த மூன்று நாட்களும் தொடர்ச்சியாக என்னைத் தேடி வலை விரித்தார்கள். மனைவியையும் அழைத்துக் கொண்டு நான் சிறிய காட்டுப்பகுதி ஒன்றில் தலைமறைவாக இருந்தேன்.'
'உங்களுக்கு தாய்நாட்டில் உயிர்வாழ முடியாத பிரச்சனை...'
அதனை ஆமோதித்தேன்.
'அங்கு வாழும் ஏனைய மக்களுக்கு பிரச்சனையில்லையா?'
'பொதுவாக பிரச்சனைதான்.'
'அப்படியானால் அவர்கள் ஏன் வெளியேறவில்லை?'
'அவர்கள் வெளியேற்றத்தை விரும்பாமலிக்கலாம்.'
'அப்படியானால், அவர்களுக்கு உயிர்வாழ ஆசையில்லையா?'
'அவரவரைப் பொறுத்த சில பிரச்சனைகளிருக்கலாம்'
'அதாவது எதனைச் சொல்ல வருகிறீர்கள்?'
'இதையவர்களிடம் கேட்க வேண்டும்.'
அல்வினில் முகம் மாறியது. ஆனால் அவர் மாறவில்லை. அதனை மறைக்க முனைந்தார்.
'மிஸ்டர் சுகந்தன், ஒரு உண்மையான அகதி எப்படியிருப்பானென்று சொல்ல முடியுமா?'
'நிச்சயமாக இப்படித்தான் இருக்க வேண்டுமென்றில்லை.'
'எங்கள் நாட்டுக்கு வருமகதிகளை பெரும்பாலும் இரண்டாக பிரித்துள்ளோம். அதாவது அரசியலகதி-பொருளாதாரகதி என்று. இதில் நீங்கள் எந்த ரகம்?'
'நிச்சயமாக நான் பொருளாதாரகதி யில்லை.'
இதனை என்னால் நிரூபிக்க முடியும். இதில்தான் எனது சாமர்த்தியமே தங்கியுள்ளது.' நான் சொல்லி முடிப்பதற்கிடையில் அல்வின் குறுக்கிட்டார். 'எங்கள் நாட்டில் 10 சுவிஸ்பிரஜைக்கு 3 அகதிகள் என்ற வீதத்தில் கணிப்பீடிருக்கிறது. அகதிகளில் உண்மையான அகதியை தேர்ந்தெடுத்து அவருக்கே அகதியந்தஸ்து வழங்க முடியும். நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள்.'
'உண்மையிலே நான் அரசியலகதி.'
'ஓ.கே. மிஸ்டர் சுகந்தன். உங்களுக்கு அரசியல் பிரச்சனை என்கிறீர்கள்...அப்படியானால்...உங்கள் மனைவிக்கு பிரச்சனையில்லையா?'
'மனைவி என்பதால் எனது பிரச்சனையின் பாதிப்பு.'
'ஏனவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை?'
'அதற்கு பலகாரண முண்டு.'
'அதனை சொல்ல முடியுமா?'
'முடியும். மனைவி காப்பவதி. அதனால் பிரயாணம் பண்ண முடியாது...அதுவும் இப்போது மறைவிடம் ஒன்றில் வாழ்கிறார்...'
'அதே போல் உங்களால் ஏன் மறைந்திருந்து வாழ முடியாது?'
'எனது முகம் எல்லோருக்கும் பரிச்சயம்.'
'உங்கள்மனைவியழகானவரா?'
'இது அநாவசியமான கேள்வி.'
'அவசியத்துடன் கேட்கின்றேன். மனைவியின் பரத நாட்டியம் பார்த்த பத்திரிகையாளர்கள் சிறந்த அழகியென்று எழுதினார்கள். உங்களை விட உங்கள் மனைவியின் முகம் எல்லோருக்கும் பரிச்சயம். மிஸ்டர் சுகந்தன், உளவியல் ரீதியாக பார்க்கும் போது ஆண்களைவிட அழகிய பெண்களைத்தான் அதிகம் நினைவு வைத்திருப்பார்கள். இதுகூட உங்களுக்குத் தெரியாதா?'
நான் மௌனம் சாதித்தேன். 'உங்கள் மனைவிக்கு பிரச்சனையில்லை. உங்களுக்கு பிரச்சனையில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்?' என்று என்னை மடக்கிய தோரணையில் அல்வின் பேசியபோது எலாரம் அலறியது. மணி 11.30 'மீண்டும் 12 மணிக்கு தொடரலாம்...' என்று கைகுலுக்கிக் கொண்டு சாப்பிடச் சென்று விட்டார்.
முளைத்த தாடியைத் தடவிக் கொண்டு வெளியில் வந்த போது, எதிரே இருந்த பார்க் கண்ணில் பட்டது. கிட்டத்தட்ட என்னைப் போல் முகம் இழந்த அகதியாக, ஒரு நீளக்கதிரை, சருகுகள் மத்தியில் அனாதரவாக இருந்தது. அதுவும் இன்னொரு வகையில் என்னைப் போல்! அனாதைகளுக்கு அனாதைகள் தான் ஆறுதல் சொல்வார்கள் என்பதுபோல சருகைத் தட்டிவிட்டு கதிரையின் மேல் அமர்ந்தேன்.
'ஏங்க ..! எனக்கு இரண்டு தரம் மாரடைப்பு வந்து மயிரிழையில் தப்பிவிட்டேன். அதற்குள் வயிற்றில் குழந்தை. இதோட எனது வெளிநாட்டுப் பயணம் பயங்கரமானது. எதுக்கும் முதல்ல நீங்க வெளிநாட்டுக்கு போங்க. அப்போது எனக்கு நிம்மதி இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு நாட்டுக்கு போன பின் அங்கு நிலமையை விளக்கி...வெளிநாட்டுத் தூதரகத்தின் மூலம் உங்களிடம் வரலாமுங்க...' மனைவியின் வார்த்தைகளிலே மிதந்தேன்.
கடிகாரம் 12.00 யைக் காட்டியது. அலுவலகத்துக்குள் நுழைந்தேன். அல்வின் அகம் மலர வரவேற்றார். எனக்குள்ளொரு சின்னத் திருப்தி. அகதியந்தஸ்து வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அப்போது அறைச் சுவர்களை அவதானித்தேன். சக்தி வாய்ந்தமைக் வகைகள் பொருத்தப் பட்டிருந்தது. இது எதற்கு என்பதுபோல் பார்த்தேன். அல்வினதனை புரிந்து கொண்டவர்போல் விளங்குகிறார். 'இந்த அறையினுள் நாம் உரையாடிய அனைத்தும் இன்னு ஏழு உயரதிகாரிகளுக்கு கேட்கும். அதனை வைத்து அவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ தெரியாது? இப்போது உங்கள் பிரச்சினை ஆய்வு செய்யப்படுகின்றது. ஆனால் முன்னர் எல்லாம் ஆறுதலாகத்தான் அகதிகளின் விண்ணப்பங்களை விசாரிப்பது. இப்போது அகதிகள் அதிகம் வருவதால் உடனுக்குடன், விசாரணையை நடத்தி முடிவைச் சொல்லி விடுகிறோம்...'
றிங்...றிங்...!
அல்வின் தொலைபேசியை காதோடு கட்டியணைத்துக் கொண்டார். மறுமுனையில் ஆங்கிலத்தில் அதிகாரி ஒருவர் பேசினார். அவரது பேச்சு எனக்கு நன்றாக கேட்டது. 'மிஸ்டர் சுகந்தனுக்கு அகதியந்தஸ்து வழங்குவதில் சில பிரச்சனைகளுள்ளன. சுகந்தன் உண்மையான அகதி என்பது ஒரு பக்கம் உறுதிப் படுத்தப் படுகிறது. அடுத்த பக்கம் அரசியலில் அவருக்கு நிறையப் பிரச்சனைகளிருக்கின்றன. நமது அகதிகள் சட்டப்படி சுகந்தனுக்கு தஞ்சம் கொடுக்கும் பட்சத்தில் அவரது மனைவியை நமது தூதரகத்தின் மூலமாக அழைக்க வேண்டும். இதனை நாம் செய்வோமானால் அந்நாட்டு அரசாங்கத்துடன் சில மன முடிவுகளை சந்திக்க நேரிடலாம். அத்தோடு சர்வதேசச் சந்தையிலும் நாம் சில இழப்புகளை எதிர்கொள்ள நேரலாம்...இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, சுகந்தனுக்கு அகதி அந்தஸ்து வழங்க முடியாது...' தொலை பேசி துண்டிக்கப்படுகிறது.
வரம்
______________________________
ஆதவன், க
______________________________
அவள் நிமிர்ந்து கிடந்தாள். நான் அதிர்ந்து போனேன். மயக்கமாய்...பேச்சுமூச்சற்று...! கீழ்ச் சொண்டு பெரிதாய் மொத்தமாய்த் தெரிந்தது! கண்கள் மேலே சொருகி இருந்தது. பயத்தை மேலும் அதிகரித்தது. கட்டிலின் மெத்தை தொக்கையாய் இருந்தது. ஆஸ்பத்திரி மணம் மூக்கைப் பிடுங்கியது. வெள்ளைநிற தாதிகளும் டொக்டர்களும் சுற்றிவர நின்று குசுகுசுத்தார்கள். மார்பகங்கள் இயக்கமேதுமிலாது இடமும் வலமுமாய் சிதைந்து தன் பாட்டில் கிடந்தன. அரை நிர்வாண கோலத்தில் அவளைக் கிடத்தினார்கள்.
காலையில் ஒன்றும் நடக்கவில்லை. இது நடந்து 2 மணிநேரம் இருக்கும். என்னவளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. அனாதரவானவள் போல்-யாருமற்ற அனாதைப் பிரேதம்போல்-கட்டையாய்...ஒருசருகாய்...கிடந்தாள்.
வேர்த்துக் கொட்டியது எனக்கு!
வேலை முடிந்து வந்த நான்-பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சேதியறிந்து துடித்துப் பதைத்து வந்து...ஆஸ்பத்திரி தேடி ward தேடி...வந்து பார்த்தபோது கண்ட தரிசனம்-இது.
ஒன்றுமே புரியவில்லை. யாரைக் கேடகலாம்? டொக்டரைக் கேட்கலாம். கேட்டேன்.
'You are Lucky' என்றார்.
'ஏன்?'
'கொஞ்சம் பிந்தியிருந்தால் ஆளைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றார்.
'உற்பத்தியான கரு, கருப்பையில் தங்கவில்லை. வேறொரு குழாயில் தங்கியிருந்தது. அந்தக் குழாய் கருவைத் தாங்கும் வல்லமையற்றது. அது வெடிக்கும்! வெடித்தால் அது நஞ்சாகும். நஞ்சினை இரத்த நாடிகள் உடலெங்கும் கொண்டு செல்லும், உடலே நஞ்சாகும். பின்னர் ஆள் தப்புவதற்கான chances 0.01% தான்.
'எல்லாம் விளங்கிவிட்டேன் டொக்டர்' என்று மட்டும் சொன்னேன்.
ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. எல்லாம் தான். விளக்கமும்தான்.
'இதுக்கு என்ன வழி?'
அந்தக் குழாயை வெட்டவேண்டியது தான்.'
'வெட்டியாச்சோ?'
'இப்ப 1 மணித்தியாலமும் 38 நிமிசமும் ஆகுது' என்றார் சிரித்தபடி.
'இனி?'
'பிள்ளை பிறக்கிறதுக்கான chances ஐக் கேக்கிறீரோ?'
'--'
மனித உடலின் அமைப்பு இனப் பெருக்கத்திற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழாயை வெட்டினால் மறு குழாயிற் கூடாககருக்கட்டல் நடக்கும். 50% chances உண்டு. ஆனால் உம்மடை wife வின்ரை மற்றக் குழாயும் சற்றுப் பழுதடைந்துள்ளது இதனால் chances 12% வீதம்தான்.' நான் கேட்காமலே சொல்லி முடித்தார். எனக்கு ஏதோ வீதக் கணக்குப் படிப்பிப்பது போல் பட்டது.
எனினும் இனி குழ நதை கிடைக்காது என்பது மட்டும் ஏனோ தெளிவாய்த் தெரிந்தது.
எவ்வளவு ஆர்வத்துடனும் ஆசையுடனும் இருந்தாள் அவள். ஆண் குழந்தையே பிறக்குமெனத் திடமாக நம்பினாள். பெயர் வைப்பது வரை அவள் மனக் கோட்டை கட்டியிருந்தாள். பிள்ளைக்கான துணி மணிகள் சேகரிப்பதிலும் ஆர்வங் காட்டியிருந்தாள். அவளுக்கு இப்பிடி நடந்திருக்கக் கூடாது என மனம் சொல்லிற்று.
எப்படியெனினும் அவளைத் தேற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அவள் கண்விழிக்க இன்னும் 2 மணி நேரமாவது செல்லும் என்றான். தலையில் பெரிய வெள்ளை நீத்துப்பெட்டி போன்ற ஒன்றைக் கிளிப்" பண்ணிக் கொண்ட தாதி, அவள் தான் அங்கு பெரிய தாதியாக இருக்க வேண்டும். இல்லையெனின், அவளது குரலில் இவ்வளவு உறுதி தொனித்திருக்காது.
என்னவளின் தலையை மட்டும் ஒரு பாவியாய் வெளியே வருடிவிட்டு visiting hallலந்து 2 சிகரட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பற்றினேன்.
இரண்டு வாரங்கள் கழித்து ஆஸ்பத்திரியிலிருந்து கைத்தாங்கலாக அவளை Taxi யில் ஏற்றி வீட்டை நோக்கி வருகையில், 'உங்களுக்கு ஒரு Present வாங்கி வைச்சிருக்கிறேன். வீட்டை வந்து பாருங்கோ' என்றேன்.
'என்னது' என்றாள் சொண்டுகளை நாக்கால் நனைத்தபடி.
Taxi வீடு வரும்வரை அவள் துருவித்துருவிக் கேட்கவே இல்லை. முன்னை மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் நான் சொல்லியே விட்டிருப்பேன். அவ்வளவுக்கு என்னைத் துளைத் தெடுக்காமல் விட்டிருக்க மாட்டாள். அவளது இந்த நிலைக்காக நான் மிகவும் அனுதாபப்பட்டேன். இந்த 'அதிர்ச்சி' அவளை நன்றாகப் பாதித்து விட்டதை உணர்ந்தேன்.
வீட்டில் வந்து ஆற அமர இருந்த பின்னர்தான் கேட்டாள்.
'என்ன உங்கடை Present?'
முன்னால் இருந்த room ஐச் சுட்டிக் காட்டி 'அங்கை போய்ப் பாருங்கோ' என்றேன். நானும் பின்னால் தொடர்ந்தேன்.
கறுப்பு வெள்ளையில் ஒரு பெரிய கடதாசிப் பெட்டியின் மூலையில் அழகிய சிறிய பூனைக்குட்டி உறங்கிக் கொண்டிருந்தது.
'ஐயோ நல்ல வடிவப்பா' என்றபடி ...மலர்ந்தபடி பூனைக்குட்டியைத்தூக்கித்தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
அவளின் சந்தோஷத்தில் நானும் என் தெரிவு பற்றிப் பெருமிதப் பட்டுக் கொண்டேன்.
'இது கடுவனோ பெட்டையோ' என்று கேட்டாள்.
'கடுவன்தான்' என்றேன் சிரித்தபடி.
'என்ன பேர் வைப்பம்?'
'சும்மா எல்லாரும் வைக்கிறது மாதிரி 'ஜிம்மி' 'ஜாக்கி' 'ரொமி' எண்டு வைக்காமல் தமிழ்ப் பேரொண்டு வைப்பம்' என்றேன்.
'ராஜா' என்று சொல்லிவிட்டு செல்லமாய் அதன் முகத்தருகே தன் முகத்தைக்கொண்டு சென்றாள். அது 'மியாவ்' என்றது தன் மழலையில் நாங்களிருவரும் எங்களை மறந்து சிரித்தோம்.
'ராஜா' நாம் இருவர் என்ற நிலையை நாம் மூவர் என்று மாற்றினான். துள்ளித் துள்ளி...அங்கம் இங்கும் ஓடித் திரிந்தான். T.V.க்கு மேலே பாய்ந்து ஒரு அழகிய ம்ண் சிலையை உடைத்து எங்களிடம் தாறுமாறாக ஏச்சுவாங்கினான்.
முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு விரல் இடுக்குகளால் பார்த்தாலும், தன்னைப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். தனது உணவைத் தானே கேட்டுப் பெற்றுக் கொண்டான்.
பல ஏக்கங்களை இல்லாமற் செய்தான்.
ஒருநாள் எங்கள் வீட்டுக்கு ஒரு முதியவர் வந்தார். அவருக்கு மிருகங்களைப் பற்றி நன்கு தெரியும். அவர் 'ராஜா'வை உற்று பார்த்தார். நாங்களும் அவரைப் பார்த்தோம். அவர் ராஜாவைத் தூக்கிக் கால்களை அகட்டிப் பார்த்தார். 'பெட்டைப் பூனைக்கு ராஜா எண்டு பேர் வைக்கலாமோ' என்றார். நாங்கள் அதிர்ந்து போய் ஆளையாள் பார்த்தோம். 'பெட்டைப் பூணையளை வீட்டிலே வைச்சிருக்கக்கூடாது' என்றார். நாங்கள் ஆளையாள் பார்த்தோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னவள் ஓடிச்சென்று 'ராஜா' வைத் தூக்கி அணைத்தபடி 'ராணி' என்றாள். எனக்கு ஒரே சந்தோஷமாயிருந்தது. பிரச்சினை ஏதும் இல்லாமல் இந்தப்பிரச்சினை ஒரு சிறிய அணைப்பில் பெயர் மாற்றத்தில் தீர்ந்து போனதை வேடிக்கையாக நினைத்தேன்.
party ஒன்றுக்குப் போய் வந்தோம். தல்ல Mood ல் இருவரும் இருந்தோம். 'கலவி' ஒன்று முடிந்து போயிற்று.
அந்த நேரத்தில் முன் room இலிருந்து 'ராணி' பெரிதாக அழுது கொண்டிருந்தாள். சோம்பலைப் பாராமல் எழுந்து சென்று பார்த்தேன்.
நிலத்தில் புரண்டு புரண்டு அழுதாள். என் கால்களை தன் முழு உடம்பினாலும் உரஞ்சித் தேய்த்தாள். உரத்த குரலில் 'மியாவ் வோய், மியாவ் வோய்' என்று கத்தினாள். அவளது குரல் ஒரு மாதிரியாய் இருந்தது. 'என்னப்பா நடந்தது?' என்றபடி என்னவளும் வந்து விட்டாள். அவளுக்குப் பயமாய் இருந்தது. கிட்டப் போய்த் தூக்க முயன்றாள். ராணி புரண்டு புரண்டு கத்தினாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ராணி தன் நாலு கால்களையும் அகல விரித்து தன் வயிறு முழுவதும் தரையில் படும்படி உரஞ்சிக் கொண்டு அரைந்தாள். எங்கள் கண்களை நேரே பார்த்து ஏரோ சொல்ல முனைந்தாள். அதே குரலில் கத்தினாள். விடிந்ததும் நான் அந்த முதியவரைக் கூட்டிக் கொண்டு வந்தேன்.
ராணியை ஒரு தடவை பார்த்து விட்டுச் சொன்னார் 'ராணி வயதுக்கு வந்து விட்டாள்' என்று.
'இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னனான். பெட்டைப் பூனையளை வீட்டிலே வைச்சிருக்கப்படாது என்று' மேலும் தொடர்ந்தார்.
நாங்கள் ஆளையாள் பார்த்தோம்.
'இதுக்கு என்ன செய்யிறது?' என்றேன்.
'மனிசருக்குத் துணைமாதிரி அதுகளுக்கும் துணை வேணும், கலவி வேணும், பிள்ளை வேணும், இனம் பெருக வேணும் எண்ட நியதி இருக்குத் தம்பி. இதைக் கொண்டுபோய் காட்டிலே விடும். இல்லாட்டிக் 'கருத்தடை' மாத்திரை இருக்கு. ஒரு மிருகவைத்தியரிட்டைப் போய்க் கேட்டாத் தருவார். அதைக் குடுத்தீர் எண்டா இப்பிடிக் கத்தாது. ஏக்கம் இருக்காது. இது தான் வழி' என்றார். நாங்கள் ஆளையாள் பார்த்தோம்.
நான் ராணியைப் பார்த்தேன். அது ஏக்கத்துடன் என்னைப் பார்த்தது. நான் என்னவளைப் பார்த்தேன். அவளும் அதே மாதிரி என்னைப் பார்ப்பது போல் பட்டது.
மூக்குக் கண்ணாடிக்குள் கீழால் என்னைப் பார்த்தபடி குளிகைகளை என்னிடம் தந்தார் அந்த மிருக வைத்தியர். நான் அவரைப் பார்த்தேன்.
'என்ன பார்க்கிறீர்? இது Power ful ஆன Pills. பிள்ளை உண்டாகிறதுக்கான chances ஐக் கேட்கிறீரோ? 12% தான்' என்றார்.
Pills ஐக் குடுப்பதற்கு என்னவள் தடுத்து விட்டாள். இருவருமாக ஒரு முடிவெடுத்தபின் ராணியைத் தூக்கிச் சென்று காட்டில் விட்டுவிட்டு வந்தோம். நீண்ட நாட்களின் பின் என்னவள் சாமிப் படத்தருகே நீண்ட நேரம் நின்றிருந்தாள். தெரியாதவன் போலவும், நிலைமையைச் சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குமாய் 'உங்கை என்ன செய்யிறீர்' என்று கேட்டேன். மிகத் தெளிவாக இயல்பாக 'வரம்' என்று மட்டும் சொன்னாள்.
company வேலை முடிந்த களைப்பில் Carல் வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் றோட்டுக் கரையோரத்தில் பற்றைகளுக்கு அருகில் ஒரு பூனை செத்துக் கிடந்தது. கண்கள் இறுக மூடின. கால்கள் 120 Kump ல் car ஐ இயக்கின.
'நீர் உங்கை என்ன செய்யிறீர்?'
'வரம்'
'நீங்கள் உங்கை என்ன செய்யிறியள்?'
'நீர் செய்யிற அதே வேலைதான், ஆனா இது வீதக் கணக்கு', என்றேன்.
என்னையு மறியாமல் என்கண்கள் கலங்கின.
கதை தொடரும்
___________________________________
கரவைதாசன்
___________________________________
இப்பொழுது பாரதிநகரும் சிவாவின் அஞ்சலியில் பங்கு கொள்ளத் தயாராகி விட்டது.
போஸ்டர் ஒட்டி, கறுப்புக் கொடி கட்டியவர்கள் கீழே இறங்கி புறப்படத் தயாரானார்கள். ஆனால், அந்த ஒருவன் மட்டும்...? நிலத்தில் ஊன்றிய எஸ்.எல். ஆருடன் மூலையிலிருந்த கல் ஒன்றில் போஸ்டரையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அங்கே சிவா கம்பீரமாக 'மண்ணைப் பிரிந்து விண்ணில் கலந்து விட்ட உத்தமவீரன்' என்ற பெரிய எழுத்துக்களின் மேல்...! தன்னைப் பார்த்து ஏதோ சொல்வதுபோல் இவன் உணர்ந்தானா? என்ன சொன்னான் சிவா? அவன் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. நடந்த கதைக்கு இவனே சாட்சியாகி இருந்தவன்தான். அது நடந்த கதை மட்டுமல்ல, ஒருவகையில் இன்றும் தொடரும் கதை கூட.
இவனது மனம் பின்னோக்கிச் சுழன்றது.
அந்த அழகிய கிராமத்தின் பெயர் செல்லப்பட்டி. ஒரு கோயில், ஒரு குளம், தெற்கால்போல வடலிக் காணிகள், மேற்குப் புறத்தே வயல்வெளி, அதற்கப்பால் கிளை பிரிந்ததுபோல் வேங்கைப்பட்டியும் செல்வபுரமும்.
செல்லப்பட்டி கிராமத்தின் சந்தை, கடை, கபே எல்லாமே பேபி அக்காவின் 'தேத்தண்ணி'க் கடைதான். கிராமத்தின் முக்கால்வாசிப் பேர்கள் பேபி அக்காவின் கணக்குக் கொப்பியின் பக்கங்களை நிறைத்துவிட்ட கடன்காரர்கள். அதில் அவனும் இவனும்கூட விதிவிலக்காகவில்லை.
அன்று அவனும் இவனும் பேபி அக்காவின் கடையிலே அமர்ந்திருந்து கடனுக்கு பாணும் தேத்தண்ரும் வாங்கி பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென வோக்கி டோக்கி அலறியறு, செல்லப்பட்டி கிராமத்தை இராணுவம் சூழ்ந்து கொண்டதாக...
இருவரும் துப்பாக்கியிலிருந்து பாயும் ரவைபோல தமது இருப்பிடத்தினை அணுகினர். அங்கிருந்த தடயங்கள் யாவற்றையும் அகற்றிவிட்டு வேறிடம் செல்லத் தயாரானபோது வோக்கி டோக்கி மீண்டும் செய்தி தெரிவித்தது; தெற்குப் பகுதியிலுள்ள வடலிக்காணி தான் உங்களுக்கு தப்பிக்க வழி. மற்ற மூன்று புறங்களிலும் இராணுவம் சூழ்ந்து விட்டது.
சிந்திக்க நேரமற்றவர்களாக வடலிக் காணித் திசையை நோக்கி சைக்கிளை உளக்கினர். வடலிக் காணியில் சைக்கிளை மறைத்துவிட்டு அதனோடு சென்று வேங்கைத் திடலை அடைந்தனர்.
செல்லப்பட்டினதும் வேங்கைத் திடலினதும் எல்லையைக் குறிப்பதே அந்த உடையார் குடியிருப்பு பிள்ளையார் கோவில்தான். பல தலைமுறைகளாக பல அரசியல் தலைவர்கள் தலையிட்டும்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்படாதிருந்த கோயில் அது. 1977 ம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழர் கூட்டணிக் கட்சியினர் தலையிட்டும் தர்மகர்த்தாவாக இருந்த வல்லிபுரம் உடையார் அந்தக் கோயிலை திறந்துவிட சம்மதிக்கவில்லை. இப்போது அவனும் இவனும் பூட்டியிருந்த சுற்றுமதில் பெருஞ்சுவர்க் கோயிலைப் பார்த்த படி மலைத்துப்போய் நின்றிருந்தனர். வேங்கைத் திடலையும் இராணுவம் சூழ்ந்துவிட்டிருந்த நிலையில் அவர்களால் செய்யக்கூடியது கோவிலுக்குள் நுழைந்து பதுங்கிக் கொள்வதுதான்.
இருவரும் மதிலைத் தாண்டி கோவில் வளாகத்துள் சென்றனர். வெளியே இராணுவ ராங்கிகள் மரம், செடி, கொடி, வீடுவாசல் யாவற்றையும் சின்னா பின்னம் செய்து கொண்டிருந்தன.
கோயில் மண்டபத்துள் நுழைந்தவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். அங்கே, வல்லிபுரம் உடையார்! அவனையும் இவனையும் கண்டவர், 'ஐயோ ஐயோ, என்னைச் சுட்டுப்போடாதேயுங்கோ, நான் பிள்ளை குட்டிக்காரன், என்னை நம்பித்தான் வீட்டில அஞ்சு குமருகள் இருக்கு' என்று கதறத் தொடங்கிவிட்டார். தமது கையிலிருந்த துப்பாக்கிகளைக் கண்டுதான் உடையார் பயந்து போனார் என்பதை ஊகித்துக் கொண்ட இவன், 'சத்தம் போடாதயுங்கோ, அது நான் செல்வராசா தான்' என்றான். 'ஆர் தம்பித்துரையின்ர மோனே?' என்று தெரிந்த தெளிந்த குரலில் கேட்டபடி முன்னே வந்தார் உடையார்.
'தம்பி, நிலமை என்ன மாதிரி இருக்குது?'
'மோசமாய்த்தான் இருக்கு. இப்ப இதைவிட தப்பிக் கிறதுக்கு வேறு வழியில்லை.'
'அப்ப வா, உள்ள போயிடலாம்' என்று கூறி அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மூலப்பிரகாரத்தை நோக்கி விரைந்தார் உடையார்.
'பொறுங்கோ...பின்னால சிவா நிக்கிறான்' என்றான் இவன்.
'தெரியும். தெரிஞ்சுதான உன்னை மட்டும் கூப்பிட்டன்' என்றபடி இரண்டாவது மண்டபக் கதவைத் திறந்து கொண்டிருந்தார்.
கிராமம் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களால் எங்கும் ஒரே கூக்குரல். தீ நெடி! தீயில் தீய்ந்த சடல நெடி! அப்பப்பா!
இராணுவம் கோவிலைச் சமீபித்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மூன்று பேரின் உயிர்களும் போய்விடப் போகின்றன. மூலப் பிரகாரத்துள் ஒளிந்து கொண்டால் தப்பிக்க வாய்ப்புத்தான். ஆனால், உடையார்...?
அந்த நிலைமையை உடையாரும் தெரிந்திருந்தார்தான். ஆனாலும், அந்த பிராணாபய காலத்தில் கூட சாதி வெறி அவரை விடவில்லை. உடையார் சொன்னார்; 'தம்பி செல்வராசா, இந்தளவு தூரம் அவனை நான் வரவிட்டதே நிலைமையைத் தெரிஞ்சபடியால் தான். செத்தாலும் சாவனேதவிர, இதுக்குமேல அவன் உள்ளவரச் சம்மதிக்க மாட்டன். தெரிஞ்சுகொள்?'
இவனது கண்கள் சிவக்கத் தொடங்கின. ஒரு அரக்கன் தன்முன்னே நின்று பேசுவதாக எழுந்த நினைப்பில் சினத் தீ எழுந்தது. ஆனால், ஏதொன்றையும் பொருட்படுத்தாத உடையார் தீடீரென அவனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து மூலப் பிரகாரக் கதவைச் சாத்திக் கொண்டார்.
கோயில் தேர் முட்டிக்கு தீ வைத்த இராணுவம் மதில் கதவை உடைத்து உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. தனக்கிருந்த ஒரேயொரு வழியை சிவா நன்றாகத் தெரிந்து ஒரேயொரு வழியை சிவா நன்றாகத் தெரிந்து கொண்டான். வெளியே கதவையுடைக்கும் முயற்சியில் வெற்றி கொண்ட இராணுவம் திமுதிமுவென உள்ளே நுழைந்த மாத்திரத்தே சிவாவின் எந்திரத் துப்பாக்கி சடசடக்கத் தொடங்கியது.
வெளியே வர முயன்று கொண்டிருந்த இவனுக்கு சிவா என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. தான் வெளிவந்த சிவாவுக்குத் துணையாகச் சேர்ந்தே ஆகவேண்டும். இப்போது துப்பாக்கிச் சத்தங்கள் அடங்கத் தொடங்கிவிட்டிருந்தன. இவன் உடையாரை தள்ளிக்கொண்டு வெளியே வந்தான். அங்கே கோவில் முன் பிரகாரத்தில் விழுந்து கிடந்திருந்தான் சிவா.
கல் மேல் அமர்ந்திருந்து சிவா அமரமான அந்த நாளை நினைத்துக் கொண்டிருந்த இவனை யாரோ உசுப்பினார்கள். திடுக்கிட்டு பிரக்ஞையடைந்த இவன் சிவாவின் போஸ்டர் மீதிருந்த பார்வையை மீட்டு, தன் நண்பனைப் பார்த்துச் சிரித்தான் ஒருமுறை. பின் எழுந்து எஸ்.எல்.ஆருடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அவர்கள் இராணுவத்துக் கெதிராகப்போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெதிராக எத்தனை சக்திகள் திரண்டிருக்கின்றன! 'சிவா வீழ்ந்தது இராணுவத்திலா? அல்லது, அந்த இன்னொரு சக்தியாலா?'--நடந்து கொண்டிருந்த இவன் மனத்தில் கேள்விச் சிதறல்கள்.
சுழற்சி
__________________________
முல்லையுரான்
__________________________
என் அம்மா பழையவள்தான். ஆனால்-அவளின் முகச் சுருக்கங்கள் எனக்குப் புதியவை.
பொப்பல்வாய்-5
சிவா தினமும் பாடசாலைக்கு அதே புகையிரதத்தைத் தான் பிடிப்பான்.
அல்லது நேரத்தைக் கடைப்பிடிக்கத் தெரியாதவன் என்ற பெயர் கேட்க வேண்டிவரும். இவன் இலங்கையிலிருந்து வந்து அகதியாக டென்மார்க்கில் வாழுகிறானே தவிர அவனுடைய பழக்க வழக்கங்கள் எதுவுமே பெரிதாக மாறவில்லை. மாற்றிக் கொள்வதில் அவனுக்கு ஒன்றும் ஆட்சேபனை கூடக் கிடையாது. ஆனாலும் ஒன்றும் ஆட்சேபனை கூடக் கிடையாது. ஆனாலும் அவனால் அப்படி மாற முடியவில்லை. சிவாவைவிட டென்மார்க்குப் பிந்தி வந்தவர்களில் அனேகமானவர்கள் பெருமளவு மாற்றத்தை அடைந்திருந்தனர்.
இத்தகையவர்களுடன் சிவா அவ்வளவாகப் பேச்சுக் கொடுக்கப் பயந்தான், காரணம் அவர்களுடைய கிண்டலும் கேலியும் சிவாவுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை.
சிவாவின் எதிர்காலம் பற்றி அவனே அதிகம் நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வப்போது அவனுடைய சோசலொபீசர்-சமுக ஆலோசகர்-நினைவு படுத்தினாலுண்டு. எதிலுமே ஒரு பிடிப்பற்ற நிலையில் சிவா இருந்தான். ஊருக்கு காசு அனுப்பவேண்டும் என்கிற சுமை கூடக் கிடையாது.
ஆனாலும் நிறையவே கடிதத் தொடர்புகள் அவனுக்கும் அவனுடைய தாயாருக்குமிடையே இருக்கிறது. இந்தக் கடிதப்பாலம் ஒன்றே அவன் கடைப்பிடிக்கும் கட்டுப் பாடுகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. தாய், தகப்பனுக்கு சிவா ஒரே ஒரு பிள்ளை என்பதனால் தான்; அவனாவது உயிர்தப்பி வாழட்டும் என்ற அவனுடைய தாயாரின் விருப்பமும், சிவாவின் பயந்த சுபாவமும்தான் சிவா நாட்டிலிருந்து இடம் பெயரக் காரணமாக இருந்தன.
காலையில் வேலைக்குச் செல்பவர்கள் விரைந்து கொண்டிருந்தனர். அது ஒரு 'சமர்'காலம் என்பதனால் மனித முகங்களில் சந்தோஷமும், உற்சாகமும் தெரிந்தது. சிவாவைக் கடந்து கார்கள் வேகமாகச் சென்றன.
ரோவகெத-9
இந்த வீட்டில் ஒரு வயதான பெண்ணும் அவளுடைய கணவனும் தான் வசிக்கின்றனர். அந்த வீடு மிக விசாலமானதும், பெரிய ஒரு தோட்டத்தையும் கொண்டது. வகைவகையான மலர்கள் வளர்ப்பதே அவர்களுடைய வேலை. பச்சைப் புல் நடுவே மஞ்சள்ச் செவ்வந்திப் பூக்கள் நல்லவடிவாக இருக்கும். ஆனாலும் சிவாவுக்கு மிகவும் பிடித்தது அந்த வயதான அப்பிள் மரம் தான்.
ஒழுங்காக கத்தரிக்கப்பட்ட அந்தப் புல்வெளியில் திரண்டு நெறிந்து ஒரு நடனமாதுவைப் போல நிற்கும் அந்த அப்பிள் மரத்தை அடியோடு பிடுங்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். 'கிழடுகள்' என்று சபித்தபடி சிவா சென்று கொண்டிருந்தான்.
கிசோக சந்தி
சிவா உன்னிப்பாக பார்த்தான். அவனை இன்று காணவில்லை. செம்பட்டைத்தாடியும், மீசையுமாக கையில் ஒரு உல்ப் போத்திலுமாய் இந்தச் சந்தியில் தினமும் நிற்பவனைக் காணவில்லையே? என்று யோசித்தபடியே சிவா நடந்து கொண்டிருந்தான். 'இனித்தான் வருவானாக்கும்' என்று வாய் முணு முணுத்தது.
அந்தத் தாடிக்காரன் தான் சிவாவைக் கண்டு முதன் முதலில சிரித்தவனும்! அத்துடன் ஆவலுடனும் அனுதாபத்துடனும் சிவாவின் கதையைக் கேட்டவனுமாகும்.
அதனாலோ என்னவோ அந்தத் தாடிக்காரன் மீது சிவாவுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருந்தது. சிவாவின் தனிமையை, இழப்புகளை புரிந்துகொண்ட அவன் ஒருநாள் 'சில புதிதாக முயற்சி செய்' என்று சொல்லியிருக்கிறான். இது ஒரு பெரிய தாக்கத்தையும், சிவாவைச் சிந்திக்கவும் வைத்தது.
ஸ்ரேசன்
கொமுனில வேலை செய்யிற அந்த தொக்கை (நகர சபை) மனுஷ’. கிம்நாசியத்தில படிக்கிற அந்தப் பெட்டையள். காலுக்குச் சில்லுப்பூட்டிக் கொண்டு ஓடிவாற அந்த போலந்துக்காரன்-மாட்டின், பல்லு மிதந்த டோட்டா, எல்லாரும் இன்றும் நிற்கிறார்கள். இந்த முகங்கள் சிவாவுக்கு தினமும் பழக்கப்பட்ட முகங்கள். தினமும் வணக்கம் சொல்லும் அளவுக்கு மட்டும் பழக்கம் இருந்தது. கொஞ்சம் தூரம் தள்ளி அந்த ரைக்காரனும் நிக்கிறான். எப்பவும் முகம் 'உம்' எண்டுதான் கிடக்கும். 'கையில் கிடக்கிற சூட்கேசுக்கும் உவனுக்கும் என்ன வித்தியாசம்? சும்மாய் நிப்பான். உவனுக்கு பொஞ்சாதி குடும்பம் இல்லப்போல...?' சிவா வழமையாக நினைப்பதுபோலவே நினைத்த படியே வந்துநின்ற றெயினில் ஏறிக் கொண்டான்.
பயணம்
கோதுமை வயல்களையும், வீட்டுக் குவியல்களையும் சின்னச் சின்ன யோபயாத் தோட்டங்களையும் ஊடறுத்துக்கொண்டு செல்லும் அந்தப் புகையிரதத்தில் பயணம் செய்வது சிவாவுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் அதே மனிதர்களுடனும், அதே வீதிகளிலும் தொடர்ந்து பயணம் செய்வது என்பது அவனுக்குப் பிடித்திருக்கவில்லை. அதனாலோ என்னவோ யூலண்டுக்கு மாறுகிற உத்தேசம் கூட வந்தது. சிவா பல குழப்பமான நினைவுகளில் இருப்பது புரிகிறது. மாற்றங்களை விரும்புகின்ற அதே வேளை, தனது பழைய உறவுகளையும், இழந்துவிட்ட எத்தனையோவற்றையும் நேசிக்கிறானே!
இடைக்கிடை புகையிரதம் நிற்பதும் சில புதியவர்களுடன், அதே பழையமுகங்கள் இறங்குவதும் ஏறுவதுமாக சிவாவின் புகையிரதப் பயணம் வழமையான அதே ஆலைச் சங்கொலியுடன் முடிந்தது.
வகுப்பு
அவனுடைய வகுப்பிலும் அதே மாணவர்கள், அதே ரீச்சர் அதே புத்தகங்கள். அதே...அதே சிவாவுக்கு எரிச்சலும் தலையிடியுமாக இருந்தது. சிவா ரீச்சரிடம் சொல்லிக் கொண்டு வகுப்பு முடிவதற்கு முன்னதாகவே வீடு செல்லும் திட்டத்துடன் ரீச்சரிடம் கதைத்தான். அவன் 'ஏன்?' என்று கேட்டாள். 'ஊரில இருந்து கடிதம் வரயில்ல. தலையிடிக்குது...அது தான்...' என்றான் சிவா.
'சரி, நீர் இன்றைக்குப் போகலாம். ஆனால் கடிதம் வந்ததனால் தலையிடி என்று நாளைக்கு வராமல் நிற்கக் கூடாது' என்ற ஒரு புத்திமதியுடன விடை கொடுத்தாள்.
மீண்டும் பயணம்
சிவா வீடுநோக்கி பயணமானான். இடைக்கிடை கிசோக் சந்தியில் நிற்கும் அந்த தாடிக்காரனின் ஞாபகம் வந்து போனது. 'ஏன் வரயில்லை உவன்...தண்ணி அடிக்கிறத விட்டிட்டானோ? அல்லது...புதிய இடம், புதிய குடிகார நண்பர்கள் என்று மாறி விட்டானோ? நிச்சயமாய் தண்ணி அடிக்கிறத விட்டிருக்கமாட்டான்! சாகும்வரை குடிப்பன் எண்டுதான் அண்டைக்குச் சொன்னவன்...சரி...என்ன இழவெண்டாலும் எனக்கென்ன?' என்று சிவாவினால் அந்த நினைவிலிருந்து தப்பமுடியவில்லை.
டென்மார்க் வாழ்க்கை. என்ன இது? ஊருக்கு வந்தால் உயிர் தப்பாது. இப்ப வரவேண்டாமெண்டு அம்மா கடிதம் எழுதினா...அப்ப...பாலாண்ண சொல்லுறது போல...இஞ்சினேக்க...பிளாயயெம்மில சாகிறதே? இப்படி பலவிதமான நினைவுகளில் மூழ்கியபடி தன் வாடகை வீடுள்ள அந்தச் சின்னக் கிராமத்தில் இறங்கினான்.
கிசோக் சந்தி
அந்தச் சந்தியில் இப்போதும் வழமைபோல அதிகம்பேர் நின்று உல் குடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலரை சிவாவுக்குப் பழக்கம் என்பதனால் அருகிற் சென்று அந்தத் தாடிக்காரனைப் பற்றி விசாரித்தான். 'ஓ! நீர்...ஊலவைச் சொல்லுறாய் போல இருக்கு...அவன் நேற்றுச் செத்துப் போனான்...' என்றபடி அவர்கள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர். மாற்ற முடியாத அந்த மரணத்துக்கும் பிறப்புக்கும் யார் விதி விலக்கானார்கள். சிவா நடந்தான்.
ரோவகெத 9
சிவா வீடுநோக்கி தொடர்ந்தான். அவனுக்குப் பிடித்த அந்த பெரிய அப்பிள் மரம் அதே வளவுக்குள் பிரட்டி நடப்பட்டிருந்தது. அதன் அடிப்பாகத்தில் கீறல்களும் உராய்வுகளும் இருந்தன. முந்திய அழகு அதில் இப்போது இல்லை. அது வலிந்து அழிக்கப்பட்டிருந்தது. 'ஏன் இப்படி?' என்று கிழவியிடம் கேட்டான். இந்த மரம் நிழல் தருகிறது, அதனால் அதை புரட்டி விட்டோம். இதன் பழங்களும் சுவையானதல்ல.
'அந்த இடத்தில் பல புதிய பூக்களை நடலாமல்லவா?' என்றாள் கிழவி. சிவாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'என்ன உலகமிது'...அவரவர் விருப்பங்களுக்காக எவரெவரோ...எதுவெல்லாமோ...எங்கெங்கோ...எப்படி எப்படியோ...நகரவேண்டியதாய்ப் போயிற்று...புரட்டி எடுத்து சில மணி நேரங்களிலேயே ...அது சற்று வாடிவிட்டது. இது திரும்பவும் வேர் விடுமா? இளைய மரமென்றால் நிச்சயம் வேர் விடும். இது ஒரு பழைய மரமாயிற்றே.
கடிதம் பார்க்கும் ஆவலுடன் துரிதமானான்.
பொம்பல்வாய்-5
சிவா குடியிருக்கும் அந்த வாடகை வீடு வந்துவிட்டது. தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது கேட்டு நின்றான்.
'அட உவன் புருசனை விட்டிட்டு இருக்கிறவள்...முன்னம் வண்டியத் தள்ளிக்கொண்டு திரிஞ்சாள்...இப்ப ஒரு வண்டிலத் தள்ளிக்கொண்டு வாறாள்...பிள்ள பெத்திட்டாள் போலகிடக்கு...ஆரது...பக்கத்த வாறது...உவன்தான் பழைய புருஷனோ?' என்று சிவா நினைத்துக் கொண்டு நிற்க, அவர்கள் அவனை நெருங்கினார்கள். அவள் அவனை அறிமுகப்படுத்தினாள். 'இது என் புதிய புருஷன்.' அவன் சிவாவோடு கைகுலுக்கினான். வண்டிலுக்குள் அந்தச் சின்னக் குழந்தை அழுதது.
தாடிக்காரன் செத்துப் போனான்.
பிள்ளை பிறந்து விட்டது.
அவளுக்குப் புதிய புருஷன்.
அப்பிள் மரம்? சிவா??
கலாச்சாரங்கள்
________________________________________
சந்திராதேவி
________________________________________
வெள்ளிக் கிழமை
'ஓமோரோ மூலை' என்று அழைக்கப்படும் இளைப்பாறும் அறையின் வலது பக்க மூலை மெள்ள மெள்ள உயிர்பெறத் தொடங்கியது. அந்த வைத்திய சாலையின் சலைவைப் பிரிவில் பணிபுரியும் கறுத்தத் தோல் வெளிநாட்டவர்கள் அனைவரும் அந்த மூலையில் வந்து அமர்வது ஒருவித வழமையாகி இருந்தது. பொதுவாக நோர்வேஜியர்கள் 'ஓமோரோ மூலைக்கு' வருவது குறைவு. அதற்காக அவர்களை இனவாதிகள் என்று கருதிவிட முடியாது. வெடிச் சிரிப்புகளாலும், சூடான விவாதங்களாலும் எப்போதும் அதிர்ந்து கொண்டிருக்கும் 'ஓமோரோ மூலை'. அமைதியாக இளைப்பாற விரும்புபவர்களுக்கு உகந்த இடமல்ல. மேலும் ஆங்கிலம் தான் 'ஓமோரோ மூலை'யின் உத்தியோக மொழியென்பதும் நோர்வோஜியர்கள் இங்கு வந்து அமராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த மூலைக்கு இவ்வாறு பெயர் வரக் காரணமாக இருந்தவன் காம்பிய நாட்டவனான ஓமோரோ தான். பார்த்தால் நமது ஊர்க்கோவில்களில் இருக்கும் சூரன் சிலைபோல் இருப்பான். ஆனால் உருவத்திற்கு முற்றிலும் எதிரான இயல்பு. யாராவது ஒருவர் வேடிக்கையாக ஏதாவது சொல்லி விட்டால் இரண்டு மூன்று நிமிடங்கள் தொடர்ச்சியாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பான். அரசியல் விவாதங்களில் ஆரம்பித்து விட்டால் நேரம், உணவு எல்லாவற்றையும் மறந்துவிட்டு நரம்புகள் கொதிக்கப் பேசுவான். அவனைவிட அகலமான அவனது மனைவி நியோ 'இடைவேளை முடியும் நேரமாகிவிட்டது ஓமோரோ! தயது செய்து சாப்பிடு' என்று அவனுக்கு உணவை நினைவு படுத்துவாள்.
'ஓமோரோ மூலையில் எப்படியும் அஞ்சாறு ரிக்கற்றாவது விக்கவேணும்' என்றவாறு மறவாமல் ரிக்கற் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள் ரஞ்சனி.
'அவங்கள் எல்லாரும் ரெண்டு மூண்று வேல செய்யிற ஆக்கள்...வருவாங்களெண்டு நான் நினைக்கையில்லை...' கௌரிக்கு நம்பிக்கையில்லை.
'ஒரு அஞ்சு ரிக்கற்றாவதுவிக்காட்டி மரியாதையில்லை. பிறகு ஒறே நக்கலடிப்பீனம் கௌரி!'
ரஞ்சனியின் பரிதாபத்தைப் பார்க்க கௌரிக்கு சிரிப்பாயிருந்தது. 'சரி வாருமன் கதைச்சுப் பாப்பம்...ஓமோரோவுக்கும் பெண்சாதிக்கும் இதுகள்ள நல்ல இன்றஸ்ற்தானே...கேட்டுப் பாப்பம்!'
இருவரும் 'ஓமோரோ மூலை'க்கு வந்த போது, ஓமோரோ பாண்பொதியை அநாதரவாகத் தவிக்க விட்டு அமெரிக்க ஜானாதிபதி ஜோர்ஜ்புஷ்ஷ’ன் சட்டையைப் பிடித்து ஆத்திரத்துடன் உலுக்கிக் கொண்டிருந்தான். நியோவுக்கு புஷ்ஷ’ன் சட்டை கிழிவதைப் பற்றிக் கவலையில்லை; ஆனால் இடைவேளை முடிவதற்குள் தன் கணவன் பாண்பொதியைத் திறக்காமல் விட்டு விடுவானோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். 'சதாம் ஹுசைன் செய்தது முட்டாள்தனமான காரியம் தான்... ஆனால் அதைக் கேட்பதற்கு இந்த முட்டாளுக்கு என்ன உரிமை இருக்கிறது?...கிரனடாவை எப்படி மறக்கலாம்...பனாமாவை எப்படி மறக்கலாம்...' என்று முழங்கிக் கொண்டிருந்தவனை 'ஒரு நிமிடம் ஓமோரோ!' என்று கௌரி நிறுத்தினாள்.
'இடையில் குறுக்கிடுவதற்கு மன்னித்துக் கொள்... ஆனால் இடைவேளை முடிவதற்குள் உங்களிடம் சொல்லியாக வேண்டிய விடயமொன்று ரஞ்சனியிடம் இருக்கிறது...'
'ஓ...சஞ்சனி என்ன சொல்லப் போகிறாள் என்று எனக் குத்தெரியுமே...அவளுக்கு ஒரு காதலன் கிடைத்து விட்டான்.'- புஷ்ஷை மறந்து குளிர்ந்துபோன ஓமோரோ குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். நியோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாண் பொதியைத் திறந்து அவனிடம் கொடுத்தான்.
ரஞ்சனி விஷயத்தைச் சொன்னபோது கௌரி எதிர் பார்த்தது மாதிரியே பலர் பின்வாங்கிக் கொண்டார்கள். வாழ்நாளில் நூறு குரோணர்களுக்கு ரிக்கற் வாங்கியறியாத இம்தியாஸ் 'நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு இன்று சொன்னால் எப்படி? நீ முன்னரே சொல்லியிருந்தால் நிச்சயமாய் வாங்கியிருப்பேன்' என்று சாதுரியமாக கழன்று கொண்டான். பர்வீஸ், தோமஸ் இருவரும் உண்மையிலே சனி, ஞாயிறு இரவுகளில் Taxi சாரதிகளாகச் சம்பாதிப்பவர்கள். சகூப்தா இந்த இரண்டு நாட்களிலுந்தான் கணவன் பிள்ளைகளுடன் வீட்டில் இருப்பவள். இந்தர்ஜித் தான் வருவது நிச்சயமில்லை. ஆனால் ரிக்கற் வாங்குவதாகக் கூறி வாங்கிக் கொண்டான். தமிழர்களின் கலாசார விழா என்றதும் ஆர்வத்தோடு வாங்கியது ஓமோரோ மட்டும்தான். சுகவீனமுற்றிருக்கும் சினேகிதி ஒருத்திக்கு வந்து உதவி செய்வதாக வாக்களித்திருந்ததனால் நியோ தன்னால் வரமுடியாதுள்ளது என்று வருந்தினாள்.
ரஞ்சனி இரண்டு ரிக்கற்றாவது விற்க முடிந்ததே யென்று ஆறுதற்பட்டுக் கொண்டாள்.
'நீங்கள் அங்கே நிற்பீர்கள் தானே...தெரிந்தவர்கள் ஒருவருமில்லாமல் நான் நின்று மிரளவேண்டி இருக்காதல்லவா?' ஓமோரோ கேட்டான்.
'அது பிரச்சனையில்லை...நீ சரியாக ஆறுமணிக்கு அரங்க வாசலுக்கு வா...நாங்கள் வந்து உன்னை அழைத்துப் போகிறோம்' கௌரி சொன்னாள்.
சனிக் கிழமை
ஒப்பனைக்கு உதவி செய்ய வேண்டியிருந்ததால் ஓமோரோவை அழைத்து வரும் பொறுப்பை ரஞ்சனி கௌரியிடம் ஒப்படைத்துவிட்டுப் போனாள். நேரம் ஆறு பத்தாகியும் ஓமோரோ வரவில்லை. சிலவேளை வர மாட்டானோ என்று நினைக்கையில் 'தேபானைத் தவறவிட்டுவிட்டேன்...மன்னித்துக்கொள்' என்றபடி மூச்சிரைக்க வந்து சேர்ந்தான் ஓமோரோ. 'பறவாயில்லை...இப்போதுதான் ஆரம்பித்தார்கள்' என்றபடி அவனை அரங்கத்தினுள் அழைத்துச்சென்றாள் கௌரி. வணக்கம் வாருங்கள் என்று வாசலில் நின்று பன்னீர் தெளித்தவர் கௌரியையும் ஓமோரோவையும் ஒன்றாய் கண்டதும் அவசரமாய் கண்களை இறுக்கிக் கொண்டார்.
* * * Paniyum 5-ன் தொடர்ச்சி * * *
பல நூற்றுக் கணக்கான கண்களினால் தான் பின் தொடரப் படுவதை அறியாத ஓமோரோ, அலாரிப்பின் அபிநயங்களைப் பார்த்து அதிசயித்தபடி கௌரியைப் பின்தொடர்ந்து அவளருகே அமர்ந்து கொண்டான். 'உடனே திரும்பிப் பார்ப்பதே...கொஞ்சம் செல்லத் திரும்பிப் பார்' என்ற சங்கேதச் செய்தி தொடைகளைச் சீண்டியபடி அசுரவேகத்தில் பரவிக் கொண்டிருக்கையில் கௌரி அரங்கத்தில் அபிநயிக்கப்பட்டுக் கொண்டிருந்த நவரசங்கள் பற்றி ஆங்கிலத்தில் சிரமத்துடன் ஓமோரோவுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.
அவனின் பல கேள்விகளுக்குத் தெரியாது என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. நிகழ்ச்சிகளின் இடைவெளிகளின் போது ஆபிரிக்க கிராம நடனங்களையும், தென்னமரிக்கத் தங்கோ, லம்பாடா நாட்டியங்களையும் பரதனாட்டியத்தின் அசைவுகளுடனும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தான் ஓமோரோ. தங்கள் நாட்டினைப்போல் வயது பால் வித்தியாசமில்லாமல் எல்லோரும் சேர்ந்து ஆடும் நாடடியங்கள் இல்லையா என்று அவன் கேட்ட போது 'முன்னர் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் இப்போதைய எங்கள் கலாசாரத்தில் அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது' என்று கௌரி சொன்னாள்.
முன் வரிசையில் இருந்தவர்களில் பலர் சாதாரணமாக பின்னால் பார்ப்பதுபோல் கழுத்தைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து இவர்களைப் பார்த்துவிட்டு, வந்த செய்தி உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்கள். திடீரென்று தலையை நிமிர்த்திய கௌரியின் பார்வையில் சிக்குண்டுபோன யாமினி, பிளாஸ்டிக் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
பதினைந்து நிமிட இடைவேளை விட்டு சிற்றுண்டி வழங்கினார்கள். வடையைச் சாப்பிட்டுவிட்டு 'மிக அருமையாக இருக்கிறது' என்று கண்கலங்கியபடி ஓமோரோ சொன்னான். 'என்ன கௌரி உங்களக் காணக்கிடைக்குதில்லை...ஒரே பிஸ’ போல' என்று ஒரு மாதிரிச் சொல்லிவிட்டு ஓமோரோவுக்கு 'ஹய்' சொல்லிச் சென்ற கணேஷ் கூட்டமாய் நின்றவர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் திரும்பி தன்னைப் பார்ப்பதையும் பார்த்த பின்னர்தான் கௌரி உணர ஆரம்பித்தாள். சுருசுருவென மண்டையில் ஊசிகள் ஏற ஆரம்பித்தன.
இடைவேளை முடிந்து மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. கோலாட்டத்தை ஓமோரோ ரசிக்க ஆரம்பித்தான். 'என்னை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்...நீ தயவு செய்து எதிர்ப்புறமாக உள்ள ஆண்களோடு போய் இருக்கிறாயா?' என்று அவனிடம் எப்படிக் கேட்பது? அல்லது அவனருகில் இருக்காமல் எழும்பிப் போய் யாமினிக்குப் பக்கத்தில் இருந்தால் கொஞ்சக் கற்பனையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்! ஆனால் திடீரென்று எழுந்து போனால் இவன் என்ன நினைப்பான்? தன்னால் ஒரு அப்பாவிப் பெண் ஒரு நடத்தை கெட்டவளாகப் பிரகடனப் படுத்தப் பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் தாள லயத்தில் தன்னை மறந்திருந்தான்.
ஆரம்பத்திலேயே அவனை ஆண்கள் பக்கம் இருக்கும் படி சொல்லியிருக்கலாம். இந்த மரத்தை மூளைக்கு ஏன் இந்த விசயம் நேரத்தோடு வெளிக்கவில்லை? இந்த ரஞ்சனி எங்கே போய்த் தொலைந்தாள்? இடையிடையே இரண்டொரு கேள்விகளை ஓமோரோ கேட்ட போது கேள்வியைக் காதில் வாங்காமலே தெரியாது என்று பதில் சொன்னாள்.
'மன்னித்துக்கொள் ஒரு சினேகிதியிடம் ஒரு முக்கிய விடயம் சொல்ல வேண்டும்' என்று இவனிடம் சொல்லி விட்டு யாமினிக்குப் பக்கத்தில் போய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை! விழா முடிந்ததும் இவன் கண்களில் படாமல் மறைந்துவிட்டு திங்கட்கிழமை எதையாவது சொல்லிச் சமாளித்துவிடலாம்!...அவள் மீது பரவிக் கொண்டிருக்கும் கறையைச் சமாளிப்பதுதானே இப்போது முக்கியம்!
ஆனால் அவள் சொல்லும் முன்னர் நேரத்தைப்பார்த்த ஓமோரோ முந்திக் கொண்டான். நியோவின் சினேகிதி வீட்டுக்குப் போய் அவளை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதனால் தான் போக வேண்டும் என்று சொன்னான்; இது ஒரு இனிமையான மாலையென்றும் தான் நிறையக் கற்றுக் கொண்டதாயும் மானசீகமாகக் கூறினான். மறவாமல் ரஞ்சனிக்கும் தான் ஹலோ சொன்னதாகச் சொல்லச் சொல்லி விடைபெற்று, கௌரிக்கு நிம்மதியைக் கொடுத்தான்.
ஞாயிற்றுக் கிழமை
இது ஐந்தாவது தடவை.
இந்த முறை பேசியவன் அடித்தொண்டையில் பேசினான். 'ஹலோ'
'ஹலோ கௌரியா பேசுறது?'
'கௌரிதான்...நீங்க யாரு பேசுறீங்க?'
'நான்தான்...?'
'நானெண்டா...?'
'நானெண்டாத் தெரியாதே...அது சரி கறுப்பங்களோட கொண்டாட வெளிக்கிட்டவுடன எங்கள அடையாளம் தெரியாமல் போயிடும் என்ன...எப்படி அந்தக் கறுப்பன் நல்லா...'-சோர்ந்து போய் தொலைபேசியை வைத்தாள்.
இவர்கள் எந்த வகையான ஒரு மனிதர்களாக இருப்பார்கள்? தாயென்றும் சகோதரிகளென்றும் சில பெண்கள் இவர்கள் வாழ்வில் இருக்கமாட்டார்கள்? இவர்களால் எப்படிக் கூச்சமில்லாமல் ஒரு பெண்ணிடம் இப்படிப் பேச முடிகிறது?
தொலைபேசியை எடுத்துக் கீழே வைத்துவிடலாம் என்றால் ரஞ்சனி அதற்குச் சம்மதிக்கவில்லை. அக்காவிடமிருந்து போன் வருமாம்!
ரஞ்சனியின் போக்குத்தான் கௌரிக்கு அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. குழம்பிப் போயிருக்கும் தனக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ இருக்க வேண்டியவள் கௌரிக்கு அனாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்ததும் திடீரென்று நிறம் மாறிப்போனாளே!
'எங்கட பெடியங்களிட குணம் உமக்குத் தெரியும் தானே! நீர் ஏன் ஓமோரோவோட...சோடி போட்டுக் கொண்டிருந்தனீர்? அவனை ஆம்பிளயள் இருந்த பக்கத்தில் போய் இருக்கச் சொல்லியிருக்கலாந்தானே!'
சினேகிதி என்று இன்று காலைவரை நம்பியிருந்த ரஞ்சனியிடமிருந்து இந்தவிதமான பேச்சைக் கௌரி எதிர்பார்த்திருக்கவில்லை. இவளுக்கும் இப்போ தொலைபேசியில் துணியைப் போட்டுக் கதைத்து இவளை அழவைத்து மகிழும் இந்த இரக்க மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஆறாவது தடவையாகத் தொலைபேசி அழைத்தது. ஜெர்மனியிலிருந்து சொந்தக் குரலில் கத்தினான். ஆனால் விடயம் ஒன்றுதான்.
'நான் மாப்பிள தேடி இங்க எல்லாருக்கும் பல்லைக் காட்டிக் கொண்டு திரியிறன். நீயென்னெண்டா உங்க காபிலியளோட சுத்திறியாம்.'
சில மணித்தியாலங்களுக்குள் கௌரியின். நடத்தை பற்றிய தகவல்கள் அடுத்த நாடுகளுக்கு போய்ச் சேருமளவுக்கு எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயற்பட்டிருக்கிறார்கள்?
கதவு மணி வழக்கத்துக்கு மாறாக இடைவிடாது அடித்தது. 'என்ன நாள் முழுக்க ரெலிபோன் எங்கேஜ்டாக இருக்கு...அப்படி யாரோட கதைக்கிறியள்?' என்று ஆத்திரத்துடன் கேட்டபடி ரஞ்சனியின் அக்காவின் கணவர் வந்தார். அக்கா அவர் பின்னால் மௌனமாக வந்து நின்றாள்.
'அத்தாருக்கு முன்னால அக்கா சத்தம் போட்டுக் கூடச் சிரிக்கமாட்டா' என்று ரஞ்சனி அக்காவைப் பற்றிக் கௌரியிடம் சொல்லியிருக்கிறாள். 'ரஞ்சனி வாரும்...உம்மோட கொஞ்சம் தனியாக் கதைக்கவேணும்...' அத்தார் காரம் குறையாமல் சொன்னார்.
கௌரி எழுந்து தனது அறைக்குள் சென்றாள்.
அத்தார் ஒரு நாகரீகத்திற்காக ரஞ்சனியிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னாரே தவிர அவரது முழு நோக்கமும் தான் பேசுவது கௌரிக்குக் கேட்க வேண்டும் என்பதுதான்.
'நாட்டவிட்டு வெளியால வந்திட்டால், நினைச்சபடி ஆடலாம் எண்டு நினைக்கிறதுகளோட நீர் இருந்தால் மற்றவர்கள் உம்மையும்தான் பிழையா நினைப்பினம்...'
அத்தார் முழங்க ரஞ்சனி எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். கௌரிக்கு நடப்பதெல்லாம் ஏதோ படம் பார்ப்பது மாதிரி இருந்தது. இன்று முழுவதும் இவளைப் படுத்தாது படுத்துகிறார்களே! அப்படி என்ன குற்றத்தை நான் செய்துவிட்டேன். யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் என்று யோசித்தாள். ஒரு அந்நியனுக்குப் பக்கத்தில் இருந்தேன். அதுவும் நூறு பேருக்கு மத்தியில்! ஒது ஒரு குற்றமா? அவன் என்னுடன் ஒன்றாக வேலை செய்பவன். திருமணமானவன். அது தவிர வேறு ஒரு தொடர்பும் எனக்கும் அவனுக்கும் இல்லையென்று எப்படி இந்த தொலைபேசிச் சண்டியர்களையும், அண்ணனையும், ரஞ்சனியின் அத்தாரையும் நம்ப வைப்பது?...என்று நினைத்தவளுக்கு திடீரென இன்னொரு விசயம் உதயமானது.
ஆனால் இவர்களை ஏன் தான் நம்பவைக்க வேண்டும்? அப்படி நினைத்துப் பார்ப்பதே புதுமையாக இருந்தது. இவர்கள் யார்? இவர்களெல்லாரும் எப்படி உனக்கும், என் வாழ்வுக்கும் எசமானனானார்கள்? இது எனது வாழ்வல்லவா? இவர்கள் யாரோடு போனார்கள், யார் யாருக்குப் பக்கத்தில் இருந்தார்கள் என்று நான் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லையே! இன்று இவர்கள் என்னோடு பேசியதுபோல் நான் இவர்களுடன் பேசியிருக்க முடியுமா? இல்லையே! அப்படியிருக்க இவர்கள் மட்டும் என்வாழ்வை ஏறிமிதிக்க நான் எப்படி அனுமதித்தேன்? உயிருக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவந்தவர்களெல்லாரும் என்னை, ஒரு பெண்ணை இம்சைப்படுத்த மட்டும் தீட்டிய வாளும் தினவெடுத்த தோளுமாக வீரம் கொப்பளிக்க அணிவகுத்து நிற்கிறார்கள். இவர்கள் குரல் மாற்றித் தொலைபேசியில் பேசியதும் நான் அழுதபடியால் தானே இவர்கள் தாங்கள் சண்டியர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்!...
நான் மட்டும் அழ மறுத்தால்...?
தனது அறையிலிருந்து கௌரி வெளியே வந்தாள்.
அத்தார் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு மானம் எவ்வளவு முக்கியமென்று மிக நுணுக்கமாக ரஞ்சனிக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
'அண்ண, என்னட்டச் சொல்ல விரும்புறத என்னட்டச் சொல்லுங்க...அவளைப் போட்டு ஏன் அறுக்கிறீங்க'.-கௌரி மரியாதைக் குறைவாய்ச் சொன்னதுபோல் அத்தாருக்குப் பட்டது.
'உம்மை மாதிரி ஆக்களுக்கு மானம் மரியாதையைப் பற்றிச் சொன்னால் விளங்கவே போகுது?' அத்தார் சூடாகினார்.
'மானம் மரியாதையைப் பற்றி நீங்க கதைக்காதீங்க...ஏஜன்சி நடத்திறனண்டு சொல்லி, நம்பி வந்த எத்தன பொம்பிளையலன்ர மானம் மரியாதய வாங்கினனீங்க கெண்டு எனக்குத் தெரியுமண்ண...உங்கட பெஞ்சாதி ஏன் நஞ்சு குடிக்க வெளிக்கிட்டவ எண்டதெல்லாம் மறத்திட்டீங்களா?...எனக்கு மானம் மரியாதயப் பற்றிச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?'- நாலு பக்கமும் மறிக்கப்பட்ட பூனையாய் பாய்ந்தாள் கௌரி.
அத்தாரின் தலைக்குள் ஷெல் விழுந்து வெடித்தது. ரஞ்சனியின் அக்காவின் முகத்தில் பளீரென்று ஒரு புன்னகை தோன்றிப் பின்னர் பதுங்கிக் கொண்டது. அத்தாரைப் பற்றி எப்போதோதான் சொல்லியிருந்த விசயங்களை கௌரி இப்படித் திடீரென்று எடுத்து வீசுவாள் என்பதை கனவிலும் எதிர்பார்த்திராத ரஞ்சனி திகைத்துப் போய் நின்றாள்.
அத்தார் குழம்பிப் போனார். தனது அசிங்கங்களையெல்லாம் ரஞ்சனி கௌரியிடம் சொல்லியிருப்பாள் என்று தெரிந்திருந்தால் மானம் மரியாதை பற்றி விளக்கம் கொடுக்க இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டார். இப்போ என்ன செய்வது? 'என்னடி சொன்னனீ நாயே?' என்றபடி கௌரிமீது பாய்ந்தால் இதமாக இருக்கும். ஆனால் பதிலாக கௌரி எதை எடுத்து விடுவாளோ என்று தயக்கமாக இருந்தது. ரஞ்சனி எதைச் சொல்லியிருப்பாள், எதை விட்டிருப்பாள் என்று அவருக்கு எப்படித் தெரியும்.
எனவே, 'வயதுக்கு மூத்த ஆக்களோட எப்படிக் கதைக்கிறதெண்டு நெரியாததுகள் வீட்ட வந்தது நம்மட பிழை' என்று சொல்லியவாறு, வேண்டுமென்றால் கதவை ஓங்கிச் சாத்திவிட்டுப் போகலாம் என்று, இலாபம் இல்லாவிட்டாலும் நட்டமில்லாமல் தப்பிக் கொள்ள வேண்டும் என்று அவரது ஏணன்சிப் புத்தி அறிவுறுத்தியது.
அக்காவும் அத்தாரும் போனதும் ரஞ்சனி அழுதழுது சொன்னாள். 'கௌரி உம்மப் பற்றி இண்டைக்குத் தான் எனக்குத் தெரியுது...இனிமேல் நான் உம்மோட இருக்க மாட்டன்...நாளைக்கு நான் வேற இடம் பார்க்கப் போறன்.'
கௌரியும் சளைக்காமல் சொன்னாள். 'அது நல்ல விசயம்...நானே சொல்லவேணுமெண்டு நினைச்சனான்.'
திங்கட் கிழமை
தேனீர்க் கோப்பையுடன் 'ஓமோரோ மூலை'க்கு வந்த கௌரியை 'வாருங்க வணக்கம்' என்று ஓமோரோ வரவேற்றான்.
'நேற்று முழுவதும் உங்கள் கலாசார நிகழ்ச்சியைப் பற்றியே ஓமோரோ பேசிக் கொண்டிருந்தான். இவன் சொல்லச் சொல்ல ஒரு அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்ட துக்கம் எனக்கு அதிகமாயிற்று...ஒரு உண்மை மட்டும் எனக்குத் தெரிந்தது. இன்னும் இரண்டு தடவை உங்கள் கலாசார நிகழ்ச்சிக்கு வந்தால் நிச்சயமாக இவன் தமிழனாக மாறிவிடுவான்'-என்று சொல்லிச் சிரித்தாள் நியோ.
கௌரிக்கும் சிரிப்பு வந்தது. வேட்டி, சால்வை அணிந்து சந்தனப் பொட்டுடன் ஓமோரோ தொலைபேசியைத் துணியால் சுற்றிவிட்டு தூஷணத் தமிழ் பேசுவதை கற்பனை பண்ணிப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. ஒன்பதாம் பிரிவுக்குத் துவைத்த துணிகளை கொடுத்தாக வேண்டும் என்றவாறு எழுந்த ஓமோரோ, ரஞ்சனி உணவுத் தட்டுடன் 'ஓமோரோ மூலை'க்கு வராமல் முன்னால் போவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.
'ஏன் உங்களுக்குள் ஏதாவது மனஸ்தாபமா?' என்று ஓமோரோ கேடடபோது 'மனஸ்தாபமொன்றுமில்லை...இதுதான் எங்களின் கலாசாரம்' என்று கௌரி சொன்ன பதில் தனக்குப் புரியவில்லை என்று சொன்னான்.
'உனது வேலையை முடித்துக் கொண்டு வா...விபரமாய்ச் சொல்கிறேன்' என்றாள் கௌரி.
போயின...
___________________________________________
தேவகி இராமநாதன்
___________________________________________
ஞாயிற்றுக் கிழமை. அமைதியாக இருந்தது. நந்தினி கட்டிலில் புரண்டபடி அருகில் இருந்த மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் ஒன்பது.
எழும்புவமா, வேண்டாமா என்ற கேள்வியுடன் போர்வையை விலக்கி எழுந்து கட்டிலில் இருந்து, யன்னலினூடாக பார்வையை ஓடவிட்டாள். இன்னமும் விடியவில்லை. விடிவதற்கு காலம் இருக்கிறது என்ற நினைவு வர எழுந்து சோம்பல் முறித்தபடி தண்ணியை வைத்துவிட்டு, அடுத்த நாள் பள்ளிக்கூடப் பாடப் புந்தகத்தை விரித்தபடி மேசையில் போய் அமர்ந்தாள் நந்தினி.
இரண்டு கேள்விகளுக்கு விடை எழுதி முடிய கேத்தல் கூவத் தொடங்கியது. கோப்பியை தயாரித்து மீண்டும் புத்தகத்தில் கவனத்தை செலுத்த முயன்றபோது மனசு எங்கோ தாவியது.
வெளியே மலையில், கடலில், லயித்த மனசு, இங்கு வந்து எத்தனை ஆண்டுகள்...
'வெளிநாடுதான் ஒரே ஒரு பாதுகாப்பு வளையம்,' என்கிற நம்பிக்கை ஊரிலுள்ளவர்களுக்கு!
கண்ணில் முழிக்காவிட்டாலும், கடல் கடந்த தேசத்தில் எங்காவது ஓர் மூலையில் உயிரோடிருந்தால் சரி என்பதில் அம்மா மிகவும் உறுதியாக இருந்தாள். நந்தினி கடல் கடந்து, வட துருவத்துக்குக் கிட்ட வந்து விட்டாள்.
Air Port ல் வெள்ளை வானில் ஏற்றி, ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு, நந்தினியும் கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப சொல்லி...காம்ப் வாழ்க்கை முடிவுக்கு வந்து...கையில் பயணப் பத்திரத்தை வழங்கி...நந்தினிக்கு ரஷ்யாவின் எல்லையோடிருந்த கிராமம் ஒன்றில் வேலை கிடைத்தது!
வேலை நேரத்தோடு தொடங்கிவிடும், குளிர் கடுங்குளிர். பனியும் பெய்யும். பகலைத் தொலைத்த பல மாதங்கள். மீனுக்கு முள்ளு வெட்டுவது வேலை. நீண்ட வலிசைகளில் ஆயுத பாணிகளாக, வெள்ளைச் சீருடையில் மழைக்கால காலனியுடன், வெண்ணிற தொப்பியுடன்...துரிதமாக இயங்கும் கைகள். இவர்கள் பெண்களும்.
முள் வெட்டுவது, pack பண்ணுவது, லேபல் ஒட்டுவது, நின்ற நிலையில் ஏழரை மணித்தியாலங்கள்.
குளிர், நாரி உழைவு, கால் நோ வாட்டி எடுக்கும், ஆனாலும் அம்மாவின் நகைகளும், காணி உறுதியும் மனதில் எட்டி பார்க்க, அதிவேகத்துடன் இயங்கும் கைகள்! வட்டி கூட்டிக் கழித்து கடன் அடைத்து அப்பாடா என்று நிம்மதி. சில வருடங்களில்.
வந்த நாளிலிருந்தே சீலன், சந்திரன், குமரன், சிவா எல்லோருமே ஒரே இடத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். நந்தினி அவர்களுடன் அவசியமின்றிக் கதைப்பதில்லை. வேலை, வீடியோ, பொழுதை விழுங்கி விடும்.
ஐந்தாறு பேர் மட்டுமே குடியிருந்த அந்த கட்டிடத்தில், இப்போது பலர் குடி இருந்தனர். இவர்களோடு வந்தவர்களில் ரவியும் ஒருவன். Factoryஇல் வேலை முறைகள் மாற்றப்பட்டு பக்கிங்கிற்கு நந்தினியும் மாற்றப்பட்டாள். அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த ரவியுடன் அறிமுகம் கிடைத்தது.
வேலையில் ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் தரித்தது. அம்மாவுடன் கடிதங்கள். படங்கள், உறவைப் பேணின. அதே கட்டிடத்தில் தளபாடங்களுடன் கூடிய புதிய அறைக்கு மாற்றம் கிடைத்தது. ஆரம்பம் சந்தோஷமாகவே ஓடி மறைந்தது.
Winter-ம் Summer-ம் அவசரமாக வந்து போயின. நந்தினியும், ரவியும் சந்தோஷமாக வேலை, வீடியோ என்று பொழுதை கழித்தனர். இரண்டாவது வருட கலியாண நாளை சந்தோஷமாக கொண்டாடி முடிய, இருவரிடையேயும் ஏதோ என்று விலகி நிற்க வைத்தது.
ரவியும் நாட்களை எண்ணி களைத்து, எங்களுக்கு பிறகு கலியாணம் செய்தவை எல்லோருக்கும் பிள்ளை இருக்கு. எங்களுக்கு மட்டும் ஒண்டையும் காணவில்லை என்று பொருமத் தொடங்கினான்.
குழந்தை கிடைக்கவில்லை என்பது இருவரிடமும் விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது.
ரவி காரணங்கள் ஏதுமின்றி எரிச்சலடையத் தொடங்கியிருந்தான். கோபம் காரணம் இன்றிய எப்போதும் எட்டிப் பார்க்க தயாராக இருந்தது.
நந்தினியை டொக்டரிடம் காட்டியிருந்தும் உடனடியாக பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு ரவியை அடியோடு மாற்றியிருந்தது.
கோபம், கோபம். எதையெடுத்தாலும், எல்லாவற்றிலும் பிழை கண்டுபிடிப்பவனாகவும், எதிலும் திருப்தி அற்றவனாகவும் இருந்தான். வேலை, வீடியோ என்றிருந்த ரவி இப்போதெல்லாம் நேரங்கழித்தே வீடு வரத் தொடங்கியிருந்தான்.
ஒரு நாள் ரவி ஓவர்ரைம் முடிந்து வீட்டுக்கு வந்த வேளையில் நந்தினி ஏதோ சீலனுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டிருப்பதை பார்த்து கதவை அடித்துச் சாத்தியபடி குளியலறைக்குள் போய்விட்டான்.
சீலன் போன பின்பும் ரவி நந்தினியுடன் கதைக்க வில்லை. படுக்கும்போது மட்டும், 'ஏன் வீட்டில வேலை ஒண்டும் இல்லையே, குடும்ப பொம்பிளையா ஒழுங்கா இருக்கத் தெரியாதே, கண்ட கண்டவையோட என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு' என்று பேசிவிட்டு படுத்து விட்டான்.
நாட்கள் நகர, நகர, கோபமும் அதை வெளிக் காட்டும் செயல்களும் அதிகரித்து வந்தன. நந்தினி இப்போவாய் திறந்து கதைக்கவே பயந்திருந்தாள். கண்ணாடியில் ரவிக்கு முன்னால் அழகுபார்த்தால் போதும். 'வடிவு தான் குறைச்சல் போய் வேலையை பார்' என்று எரிந்து விழுவாள்.
நந்தினி எல்லாவற்றையும் தன்னுள்ளே அழுது தீர்த்துக் கொள்வாள். அம்மாவும் அடிக்கடி விசாரித்து எழுத தொடங்கியிருந்தாள்.
கலியாணமான புதிதில் பெண் குழந்தை என்றால் நிவேதிதா என்று பேர் வைக்கலாம். 'நிவே' என்று கூப்பிடலாம், ஆண் குழந்தை பிறந்தால் அபிராம் என்று பேர் வைக்கலாம் 'அபி' என்று கூப்பிடலாம், என்றெல்லாம் நிறையவே கற்பனைகள் இருந்தன. இப்ப மெல்ல மெல்ல நம்பிக்கை குறைந்து கொண்டிருந்தது. கடந்த கால இனிமையான பொழுது இனி வருமா?
ரவி இப்போது தாடி வைத்திருந்தான். குடிக்கத் தொடங்கியிருந்தான். நந்தினியுடன் கதைப்பதை நிறுத்தி, நாட்களாகி இருந்தன. சுற்றி பல தமிழ் குடும்பங்கள் இருந்தாலும் நந்தினியுடன் யாருமே மனம் விட்டுப் பழகுவதில்லை. நந்தினிக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு திரை.
நந்தினி தனியே வெளிநாடு வந்தவள்.
அவர்கள் தாரமாக வந்து சேர்ந்தவர்கள்.
நாளுக்கு நாள் தனிமையும், வேதனையும் அதிகரித்த படி, ரவியின் பாராமுகமும் நந்தினியை மிகவும் சித்திரவதை செய்தன. இப்போது ரவி எரிச்சல் வந்தால் சாமான்களை போட்டு உடைத்துத் தீர்த்துக் கொள்வான். எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை வழக்கத்தில் சந்தோசமான நாள். தொடர்ச்சியாக இரண்டு நாள் லீவு. எலாம் மணிக்கூட்டிற்கு அடிபணியத் தேவையில்லை. ஆற அமர எழும்பி, அமைதியாக இருக்கலாம். அன்று வேலை முடிய வீட்டுக்கு வந்த ரவி ஏதோ ஒரு கசற்றை மாற்றி வைத்ததை தாங்க முடியாது கசற்றை தூக்கி எறிந்து சண்டை பிடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான்.
நந்தினி யன்னலில் நின்று, வெறுமையைப் பார்த்து, அழுதபடி படுத்துவிட்டாள்.
வெளியே போன ரவி நேராகவே Bar க்கு போனான். மனம் போன மாதிரி குடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பினான். கீழ் வீட்டில் ஹோலில் வெள்ளி இரவை, உல்லாசமாக கழிப்பதற்கு சந்திரன், குமரன், சீலன் இன்னும் பலர் கூடியிருந்தார்கள். ரவி வருவதைக்கண்டு குமரன் அவனையும் கூப்பிட்டான். ரவி வந்தவுடன் மூலையில் இருந்த கதிரையில் குந்தினான். அவனுக்கு கொஞ்சம் வெறி ஏறி இருந்தது.
வேறுபட்ட உயர, உருவ பருமன்களில் போத்தல்கள் மேசையில் கொலுவிருந்தன. நடுவில் பெரிய ஆஸ்ரே. கிண்ணங்களில் கச்சானும், chips ம் கூடவே குந்தியிருந்தன.
சமையல் அறையிலிருந்து கறியின் மணம் ஹோலில் ஆட்சி நடத்தியது.
சீலன் ரை கட்டும் முயற்சியிலீடுபட்டிருந்தான். பக்கத்தில் ஒரு 'அறை' இருந்தது.
சந்திரன் சிரித்துக் கொண்டிருந்தான். கையில் கிளாஸ் காலியாகி இருந்தது.
சந்திரன் சம்பாஷணையை ஆரம்பித்தான்.
'என்னடா ரவி நீ வெள்ளணையோட போட்டு வந்திட்டாய். என்ன அங்க சனம் இல்லையே? நேரம் செல்லத் தான் அவளவை வருவாளவை, அந்த மாதிரி இருக்கும். வெளிக்கிடு, போவம்'
'அங்க சனம் வரத் தொடங்க நான் வந்திட்டன்' என்றான் ரவி.
'எடேய் எப்பிடி? புது அயிட்டம் வந்திருக்கே?' இது சீலன்.
'அவனைப் போய் கேள் நி. வெளிக்கிடடா போவம்' சந்திரன் அவசரப்படுத்தினான்.
'நான் ரெடி. இவன் சீலன் தான் ரை கட்டிறான். இப்ப நாலு மணித்தியாலமா...'
'உத விட்டிட்டு வெளிக்கிட்டா...சென்ரை அடி. நல்ல சப்பாத்தா போட்டுக் கொண்டு வா' இன்னும் அவசரமானான் சந்திரன்.
சீலனுக்கு ரையை ஒழுங்காக கட்டி முடிக்காமல் போக மனசில்லை. போன கிழமைதான் இவ்வளவு நாள் ஒழுங்காக டிஸ்கோக்குப் போனதின்ர பலனையே அனுபவிக்க தொடங்கி இருக்கிறான். மொனிக்கா அவனோடு டான்ஸ் ஆட சம்மதித்திருந்தாள். இந்த கிழமையும் ஆடவந்தால் சரி. இனி அவள் என்னோட கொஞ்ச நாளைக்கு, என்ற நினைவுகளோடு இழுபறிபட்டபடி சீலன் போனான். அவனுக்கு முன்னால் சந்திரனும் போய்க் கொண்டிருந்தான். குமரனும் சிறியும் மது இன்பத்திலே இறங்கினார்கள்.
'என்ன ரவி கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதேன் பிரச்சனையே?'
ரவி ஒன்றும் சொல்லாமல் யன்னலினூடாக வெளியே பார்த்தான்.
'அவனுக்கென்ன பிள்ளையே, குட்டியே? அவன் சந்தோஷமாத்தான் இருக்கிறான். உனக்கென்ன...வெளியே?'
கம்பாஷணை தொடர்ந்து factory ல் வேலை செய்யும் Anna பற்றி அவள் Morter இணை விட்டு பிரிந்து தனியே வாழ்வது பற்றி, summer Job க்கு வந்த 18 வயது Kina 40 வயது Olav வோடு காதல் புரிவதையும் கதைத்து பலதும் பத்தும் முடிந்து, டிஸ்கோவிற்கு புறப்பட்டனர். ரவி தனித்து விடப்பட்டான்.
சமையலறையின் பக்கமா சிங்கப்பூரில் செய்துவந்த நகையும், ஊர் புதினமம் அலசுப்பட்டு நந்தினி வீடும் சந்திக்கு வந்தது.
'சுகந்தி நீ கண்டனீயே? இண்டைக்கு நந்தினி வேலையால வரேக்க அழுது கொண்டேல்லே வந்தவ?'
'நான் கேட்டனான். அவ ஒண்டும் சொல்லேல்ல...'
ஏதோ பிரச்சனை போல...'
'ஓம் அவைக்கு பிள்ளையில்லை எண்டு மனக்கசப்பு போல...'
'என்னெண்டு வரும்?' என்று ஏளனத்துடன் நிறுத்தினாள் ராணி.
'சிலபேருக்கு late ஆகவும் பிறக்கிறது.'
'உவவுக்கு பிறக்காது. நீ இருந்து பார்.'
'இவ ஏதோ சாத்திரம் சொல்லுறா, நீ கேள்.'
'இஞ்ச சாந்தி. நாங்கள் நந்தினியின்ரை பக்கத்து ஊர், தெரியுமே உமக்கு? நான் இஞ்ச வர வெளிக்கிடேக்க அங்க உவவைப் பற்றி சனம் கதைச்சது. பொடியன்களோட இருந்தவவாம். ஆரோடையோ தொடர்பாம். பிள்ளை வந்து அழிச்சுப் போட்டாவாம் எண்டு அங்க சொன்னவை. முதல் பிள்ளையை அழிச்சா பிறகு பிள்ளை பிறக்காதெண்டேல்லே சொல்லுறவை. அந்த பெடியன்ர பேர் தெரியாது?' என்று தனது விடுப்பை முடித்தாள்.
சோபாவில் தனித்து விடப்பட்டிருந்த ரவியின் காதுகளுக்கு இச்செய்தி எட்டியிருந்தது. ஆரோடு தொடர்பும், பிள்ளை அழித்ததும் திரும்ப திரும்ப காதில் வந்து ஒலிக்க, ரவி வேகமா வீட்டிற்கு வந்தான். உள்ளே சென்ற பானங்கள் உசார் வழங்க கதவை ஓங்கி அடித்து சாத்தினான்.
கட்டிலில் படுத்திருந்த நந்தினியின் தலைமயிரை பிடித்திழுத்து கட்டிலில் மோதினான். நித்திரைக் கலக்கத்திலும், ரவியின் தாக்குதலினாலும் குழம்பிய நந்தினிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
'எடியேய், பத்தினிக்கு நடிக்கிறியோடி, நீ ஆரோடையோ தொடர்பு வைச்சு பிள்ளையளிச்சனியாம் எண்டு கதைக்கினமடி' என்று குழறியபடி நந்தினியை அடிக்கத் தொடங்கினான். சுற்றி இருந்த பொருட்களை இழுத்து அவள் மேல் எறிந்தான். நந்தினியை பிடித்து தர தரவென்று இழுத்து வந்து வெளியில் விட்டு கதவை அடித்து சாத்தினான்.
நந்தினியின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நந்தினி ஓ வென்று ஒப்பாரி வைத்து அழுதபடி, படியில் குந்தியதும் வீட்டிற்குள் ரவி சாமான்களை உடைக்கும் ஒலி கேட்டுக் கொண்டிருந்ததும் நினைவு இருந்தது. நந்தினி கண் விழித்தபோது தலை வலித்தது. உடம்பு முழுவதும் வலியாக இருந்தது. கண்களிலிருந்து கண்ர் வழியத் தொடங்கியது. அருகே ஆதரவான பார்வையுடன், வெள்ளைச் சீருடையும், பொலீஸ் உடையும் சம்பவத்தை வலுக்கட்டாயமாகக் கோவைப்படுத்த வைத்தது. சம்பவத்தை விபரிக்க தொடங்க, ஓரிரு வசனங்கள் மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கு. நிலைமை புரிந்த தாதி மொழி பெயர்ப்பாளரை கூப்பிட அனுமதி கேட்டாள். 'ஆம்' என தலையசைத்தாள் நந்தினி.
குளிர்
___________________________________________
கலாமோகன்
___________________________________________
தினங்கள் யுகங்களாகி என்முன் கரைந்தபடி. கோடைகள், குளிர்கள், இலையுதிர்கள், இலைதளிர்கள் அனைத்துமே இந்தத் தினயுகத்துள் சங்கமம். தணலிலிருந்து குளிருள் இறங்குகின்ற ஒவ்வொரு தடவையும் நாசித்துவாரத்து மேற்பரப்பில் முள்ளால் கீறப்படுவது வேதனை. தினத்துகள்களின் கைபட்டு வேதனை மங்கி, வெளியில் வெளியாகி, குளிரில் குளிராகி...இருத்தலற்ற இருத்தலின் முக்தி நத்தி வாழ்வெனப்படும் போரில் இறங்கும் இரண்டு கால் பிராணிகளின் வரிசையில் நான்.
முக்தி, வாழ்வு, போர், போருக்குள் முக்தியும், முக்திக்குள் போரும், போர், முக்தி இவைகளிற்குள் வாழ்வும்...மாயக் கம்பளத்தால் உடலையும், உயிரையும் போர்த்தி இருந்தால் வாழும் விநோதத்தைக் கற்றேன். தணல் நிலத்தில் வியர்வைக் குளியலை ஏய்த்துவிட்டு, குளிர் நிலத்தில் பனிச்சேறு பூசி, ஓர் முடிவற்ற வேள்வியில் வாழும் இவன் முன் தினங்கள் யுகங்களாகின்றன.
யுகங்கள். இந்த யுகங்களிற்குள் தினங்களைத் தேடுவதில் ஏற்படும் நிறைவற்ற நிறைவும் சிலவேளைகளில் உயிரோடு இனிய புணர்ச்சி செய்யும் ஒன்றாகிவிடுகிறது.
பச்சை மஞ்சள் அரைந்து...கரைந்து...கிணற்றின் வட்டக்கட்டில் பாதை கிழிந்து..வடிந்து...நீரினையும் நீரினங்களையும் புனிதமாக்கியது யுகத்திலல்ல, தினத்தில். எவளின் விரல்கள் பச்சைமஞ்சளை அரைத்ததோ, அவளின் நீள் கூந்தலிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளால் நிலம் வெட்கித்தது தினத்தில், யுகத்தில்ல. செவ்வாழையும், செவ்வந்திப்பூக்களும், பூவரசுகளும் தமது நிர்வாணங்களின் மீது என்றாவது ஒருநாள் உதிரம் கொட்டுமெனக் கனவு காணாதிருந்த அந்தத் தினங்களில் உப்பு நீரின் கரிப்பு என் காதில் தேனாகப் பாய்ந்தது. ஊமைக்கடலின் மீது ஓடியும், நடந்தும், ஆடியும், பாடியும் சூரியனைப் பிடிக்கத் துடித்த அந்த நாள்கள் யுகங்களேயல்ல.
வாழப்பட்ட தினங்களை நான் எண்ணவேயில்லை. எண்ணப்படவேண்டும். இப்படி நான் நினைத்ததுமில்லை. கடலையும் காற்றையும் எப்போதோ விழுங்கிவிட்டேன். இப்போது நான் கட்டிடக் காட்டுக்குள்.
மணியின் அலறல். நேரம் காலை 4.30 சுமையால் போர்க்கப்பட்டுள்ள உடல் கட்டிலில் புரண்டு கொள்கின்றது. நேரம். காலை 4 இற்கு எழுந்து, எனக்கு அருகே கட்டிலில் கிடந்த துருக்கிய இளம் தொழிலாளியின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது. அவனும் என்னைப் போல, யுகங்களில் தினங்களை வாழத் துடிப்பவன். புறோக்கிண் பிரெஞ்சில், அவன் தனது காதலியின்-அவள்தூரத்தில், தூரம் துருக்கி, வதனத்தை வர்ணிக்கும்போது கையால் எழுதி மழையால் வாசிக்கப்பட்ட ஒரு கவிதையைத் தரிசிப்பதாக எனக்குப்படும். உடல் போர்வைக்குள். அவன் எனப்படும் உடலோ போர்வையோடு வெளியே. சுமைப்போர்வை. எங்காவது ஒரு வீதியில், குளிர் உடலைக் கடிக்க, குப்பைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் சாக்குகளைத் தூக்கி வாகனத்துள் போட்டுக் கொண்டிருப்பான். தினத்தைக் குளிருள் வாழ்ந்தபடி....குளிர், உடல்களைக் கடிக்கும் பொல்லாத குளிர். எழுவதா? எழாது விடுவதா? வாழ்வதும் வாழாது விடுவதும்-எழுவதும் எழாது விடுவதையும் போல. வாழும் விருப்பு குளிர்க் கிருமிகளால் அரிக்கப்பட்டு 'சாதல்' தன்னை வாழ்வதற்குத் திணறிய நிலையில்...
'விஷம்'
மதுச்சாலைக்குள், என்னைப்போல் கவிதைக் கிருமிகளாலும், குளிர்க் கிருமிகளாலும், பாதிக்கப்பட்ட ஒருவனின் உதடுகளை விட்டு வெளியேறிய, இந்த அற்புதமான சொல் என் காதில் வீழ்கின்றது.
அவனை நோக்கி அசைகின்றது எனது உடல்.
'விஷம், இது ஒர் அழகிய கவிதை. உன்னிடமிருந்தால் என்குத் தா.'
'ஏன்?' விழிகளில் குறும்புத்தனம் கலந்த மருட்சி.
'ஏனா? நான் எனது சாதலை வாழ்வதற்கு.'
'அப்படியா' இரண்டு மிடறுகளால் நேசிக்கப்பட்ட தனது மதுக்கிண்ணத்தை அகதியாக்கிவிட்டு வெளியேறுகின்றான். பதின்மூன்று நிமிடங்களின் பின் மீண்டும் அவன் மதுச்சாலைக்குள், எனக்கும் வெறுமையான மதுக்கிண்ணத்திற்கும் மத்தியில்.
'நீங்கள் கேட்டதை நான் கொண்டு வந்துள்ளேன்.'
'என்ன? நான் உங்களிடம் ஏதாவது கேட்டேனா?'
'ஆம், விஷம். இதோ! நீங்கள் உங்களது சாதலை வாழ வேண்டும் என்பதற்காகத் தான். நான் எனது சாதலை வாழ்வதற்காகக் குறித்த நாளை ஒத்திப்போட்டு விட்டு, இதனை வாழ நேற்று வாங்கிய விஷத்துடன் இங்கு வந்துள்ளேன். இதனைத் தயவு செய்து எனது அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள், தயவு செய்து உங்களது சாதலை வாழுங்கள். அதுவும் என்முன்.' எனது உடலில் சிறிது நடுக்கம்.
'உங்களது கனவைத் திருடுதல் எனது சுதர்மத்திற்கு உடன்பாடானதல்ல. நீங்கள் எனக்கு வழங்கும் விஷத்தை நான் உங்களிற்கே அன்பறிப்புச் செய்கின்றேன்.'
'உங்களிற்கு ஒரு சுதர்மம் இருப்பதைப் போல, எனக்கும் ஒரு சுதர்மம் உண்டு.'
'எது உனது சுதர்மம்?'
'வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களில் சுயநல முடையவனாக இருந்து விட்டேன். இந்த விஷ விஷயத்திலாவது சுயநலமில்லாதவனாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது சுதர்மம். நேற்று என்னிடம் காசிருந்தது. நண்பனொருவன் கடன் கேட்டான். இல்லையென்று பொய் சொல்லிவிட்டேன். அவன் போனபின் என்னை வருத்தியது பொய். இன்று என்னிடம் காசு இல்லை. விஷம் உண்டு. இனிமேலும் பொய்யை வாழக்கூடாது என்பதற்காகவே, விஷத்தை உங்களிற்கு அன்பறிப்புச் செய்கின்றேன். இதோ விஷம்! ஏற்றுக் கொள்ளுங்கள். அருந்துங்கள்.'
'உங்களது உபசரிப்பு எனது உயிரை நெருடுகின்றது. இந்த ஒரேயொரு காரணத்திற்காகவே, நீங்கள் உங்களது சுதர்மத்றிற்குத் துரோகம் செய்யாமல் எனக்கு வழங்குவதை, நான் உங்களிடமே திரும்ப வழங்குகின்றேன். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது சாதல் வாழப்பட எனது ஆசீர்வாதங்கள்.'
'சரி. ஆனால், எந்தவித சுயநலமுமற்று இந்த விஷயத்தை உங்களிடம் தருவதற்குத் தயாராகவிருந்தேன் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பீர்களா?'
'ஆம் இது சத்தியம்.'
முடிவில், உடல் சுமையோடு எழுந்துவிட்டது. ரயில் ஏறி, சிறிது தூங்காமல் தூங்கி...இறங்கியபின், சிகரெட் ஒன்நைச் சாம்பராக்கி விட்டு...வழமை போல சுரங்க ரயிலில் ஏறி...பின் இன்னொரு விஷேட ரயில் ஏறி இறங்கும்போது...பனிப்பூக்களால் கோர்க்கப்பட்ட மாலை சூட்டி வரவேற்கக் காத்திருக்கின்றது குளிர். குளிர். இது ரயில் பயணங்களில் தூங்காமல் தூங்கும் போது தணலாகி, என்னைச் சில வேலைகளில் தினங்களை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். தினங்களினதும், தினத்துகள்களினதும் தற்காலிக இருப்புக்காக.
குளிர். இலவச விளம்பரப் பத்திரிகைகளோடு எங்கள் உடல்களைக் காவிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வெறுமையாக, நான் முந்தி நீ முந்தியென்ற மூர்க்கத்தோடு உள்ளே ஏறி உடல்களைக் கைகளால் கட்டிக்கொண்டு, தூங்காமல் தூங்கும் இரண்டு கால் பிராணிகள் அனைத்தும் வெளியே. ஏறப்போன எனது உடல் இழுத்து வெளியேறப்பட்டது.
'ஏன்? இன்று எங்களுக்கு லீவு நாளா?' இது எனது உடல்.
'இல்லை. நாங்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துவிட்டோம்' இவை ஏனைய உடல்கள்.
'ஏன்?'
'இந்தக் குளிருள் வேலை செய்வதற்கு எமக்கு விஷேட சப்பாத்துகள் தேவை. கைக்குள் போடுவதற்கான கிளஸ்சுகளும் தாம். கடந்த மூன்று வருடங்களாக நாம் இங்கு வேலை செய்கின்றோம். எமது சம்பளமோ உயர்த்தப்படவில்லை. விலைவாசியோ பல தடவைகள் உயர்ந்துள்ளது. எங்களுக்குச் சம்பள உயர்வும் தேவை. இவைகளிற்காகவே, நாம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளோம். நீயும் குதி!'
'முதலாளி, நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருவாரா?'
'இங்கே 'நீங்கள்' எனப் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. 'நாங்கள்' எனத் திருத்திக்கொள். உரிமைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும்...'
முதலாளியின் பிரசன்னம். எங்களை கேலித்தனமாகப் பார்த்துவிட்டு பேசுகின்றனர்:
'ஒரு குளிர்காலத்தில்தான் நீங்கள் எனது நிறுவனத்தில் வந்து சேர்ந்தீர்கள். அப்போதெல்லாம் நீங்கள் குளிர்ப் பற்றி பேசவில்லை. நீங்கள் மிகவும் அடக்கமானவர்களாக இருந்தீர்கள். அந்தக் குளிர்காலத்தில் அடிக்கடி சூடு பற்றிப் பேசிய நீங்கள், குளிரையும் சூடு என வருணித்த நீங்கள், இன்று மட்டும் குளிரைச் சூடாக மொழிபெயர்க்காமலிருப்பது எனக்குள் விசித்திரத்தை யூடுட்கிறது. உங்கள் மத்தியில் ஓர் அசுத்தமான ஆவி ஊடுருவிட்டதுதான் இதற்குக் காரணமென நான் நம்புகிறேன். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நான் முடிவெடுத்தால் எனது நிறுவனம் இழுத்து மூடப்படுதல் தவிர்க்க முடியாததாகிவிடும். நீங்கள் வெளி நாட்டவர்கள். தற்போது வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் உங்களிற்கு மிகவும் நன்றாகத் தெரியுமென்று நினைக்கின்றேன். இவைகளை மனதில் வைத்து நீங்கள் உங்களது நடைமுறைக்குப் பொருந்தாத கோரிக்கைகளைக் கைவிட்டுவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்பிவருதல் உங்களது எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும். உடனடியாக நீங்கள் வாகனங்களுக்குள் ஏறுங்கள்...'
'நீங்கள் சொல்வதனைத்தும் பொய். எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும். நிறைவேற்றப்படும் வரை நாங்கள் வாகனங்களுக்குள் ஏறமாட்டோம்.'
'அப்படியா? நீங்கள் உடனடியாக உங்கள் வீடுகளுக்குப் போகலாம்.'
அருகேயிருந்த ரயில் நிலையத்தை நோக்கித் திரும்பின எமது கால்கள். அதனுள் நாம், இருக்கைகளின் மீது தூங்காமல் தூங்கியபடி எமது உடல்கள் பேசுவது எனது செவியுள் வீழ்கின்றது.
'முதலாளி சொல்லிறது சரி. வேலையில்லாத் திண்டாட்டம் இஞ்சை இருக்கிறதெண்டது உண்மைதான். பிரெஞ்சுக்காரங்களே வேலையில்லாமத் தவண்டை அடிக்கிறாங்கள். எங்களை நிப்பாட்டிட்டு, முதலாளி அவங்களை எங்கடை இடத்துக்குப் போட்டா நாங்கள் என்ன செய்யிறது?'
'வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது உண்மைதான். ஆனா, பிரெஞ்சுக்காரர் எப்பயெண்டாலும் எங்களைப்போல குளிருக்கை நடுங்கி நடுங்கி வேலை செய்ததை நீ கண்டனியே?'
'முதலாளிமார் இப்பிடித்தான், அவங்கள் வெருட்டிருவாங்கள் பயப்படக்கூடாது.' 'எனக்கெண்டா வேலை போறதைப்பற்றிக் கவலையில்லை. வேலை போனா சோமாஸ் (வேலையால் நிறுத்தப்பட்டவர்கட்கு வழங்கப்படும் உதவிப்பணம்) தருவாங்கள். சோமாஸையும் எடுத்துக்கொண்டு, ஒரு கள்ள வேலையும் செய்தனென்டா எனக்கு ரெண்டு சம்பளமெல்லே கிடைக்கும்.'
'அண்ணை, நான் உப்பதான் வேலையிலை சேர்ந்தனான். முதலாளி என்னையும் நிப்பாட்டுவாரோ...'
'நாங்கள் இருக்கிறம். நீ ஒண்டுக்கும் கவலைப் படாதை.'
'குளிர் மட்டும் இல்லாட்டி, கொஞ்சக் காசெண்டாலும் உது நல்ல வேலைதான்.'
'தோழர்களே! நீங்கள் நாளையும் வழமைபோல வேலைத் தளத்திற்கு வரவேண்டும். நாளை நாம் எமது ஏனைய நடவடிக்கைகள் பற்றிக்கலந்தாலோசிப்போம்.' ஒவ்வொருவராக இறங்கிப் போனபின் ஏறினேன். மீண்டும் இறங்கி ஏறினேன். இறங்கினேன். பனிப்பூக்களால் வழி கொழுத்துக்கிடந்தது. பாதங்களை அதன் மீது புதைந்து விரைந்தது உடல். வழியில் பலர். பனிப்பூக்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன இவர்களது உதடுகள்.
'மூன்று வருடங்களின் பின் இப்போதுதான் பனிப்பூக்கள் மிகவும் நன்றாகக் கொட்டியுள்ளன. ஆ! இது எவ்வளவு அழகான காட்சி.'
குளிர்ப்பூக்களை வாரி அள்ளிப் பந்துகளும் மனித உருவங்களும் செய்தபடி சிறுவர்கள். பூரிப்பு குளிரையும் இவர்களிற்குத் தணலாக்கிவிட்டது. என்னைப் போல இவர்களும் யுகங்களுள் தினங்களைத் தேடுபவர்களா? றூம் வந்து...சுமையால் உடல் போர்த்தி, தூங்கும் போது...வேலை நிறுத்தம் நாளையும் தொடருமென்பதை மறந்து போகின்றேன்...நாளை...எனது பலத்தையும் பலவீனத்தையும் மீறியது. வேலை...இது அனைத்தையும் மீறி என்முன்.
நான் ஓர் அடிமை. முன்பு றுப்பியாலும் இப்போது பிரெஞ்ச் பிரெங்கினாலும் கட்டி வைக்கப்பட்டுள்ளேன். நாளை அமெரிக்கா போனால் டொலரும், டென்மார்க் போனால் குறோனும், இங்கிலாந்து போனால் பவுண்ஸ”ம், ஜப்பான் போனால் யென்னும் நான் வேலை செய்வதற்கு ஓம் போடுவேனாகில் என்னை அடிமையாக வாங்கிவிடும். இல்லையேல், வீதிக்குத் தள்ளவோ அல்லது விமானத்தில் ஏற்றி றுப்பிகளின் சாம்ராஜ்யத்துக்கு அனுப்பவோ தயங்கமாட்டா. அடிமை, அடிமையாகக் கருத்தரிக்காமல், அடிமையாக ஜனித்த இரண்டு கால் பிராணி நான். மனிதம் என மொழியப்படும் பிராணி வர்க்கத்தினது சங்கத்தில் சந்தாப்பணம் கட்டி வருபவன். சங்கங்களும், சங்கமங்களும் என்னை நாக தாழிப்படுக்கையில் கிடத்தி, தூரத்து விடிவெள்ளியைச் சுட்டிக்காட்டும் வேலைகளில் ஒளியைத்தேடும் எனது விஞ்ஞானம் கூடத் தனது கட்புலனை இழந்துவிடுகின்றது. நான் மலிவு. எவராவது என்னை விலைக்குனு வாங்க வராது விடுவார்களாயின் விஷம் கூடத் தனக்கு வரவேண்டிய கவிதா பட்டத்தை இழந்துவிடும். விஷம் என்னுள் கரைந்து தன்னை வாழுதலிலற்கு நான் தடையாகவிருக்க வேண்டுமா? நேற்று உடல் நடுங்க, அன்பளிப்புச் செய்தவனிடமிருந்து தப்பிவிட்டேன். இது தவறு. எனக்கு இப்போது விஷம்வேண்டும். என்னை வாசித்து அது தன்னை...வாழ வேண்டும். தூக்கத்தை அறுக்கின்றது விழிப்பு. விஷத்தைத் தேடி மதுச்சாலையை நோக்கி இவனது கால்கள். குளிர் தணலாகி சப்பாத்து வெடிப்பின் வழியாக உடலில் ஏறுகின்றது. தணல் குளிராவதும் குளிர் தணலாவதும் விநோதமான சமாச்சாரங்கள்தாம்.
* * * paniyum 6-ன் தொடர்ச்சி * * 8
கால்கள் மதுச்சாலைக்கு வந்து விட்டன. துருதுருப்புடன், அவர்களுள் அவனை மட்டும் தேடியபடி எனது விழிகள். வந்திருக்கவேண்டிய நேரம். அவனோ இன்னமும் வரவில்லை. ஒரு வேளை பிந்தி வரலாம். பியர் கிளாஸைத் தூக்கியபடி, ஒரு மூலையில் என்னை இருத்திக்கொள்கின்றேன். திடுதிடுப்பென ஜோர்ஜின் தரிசனம். இவன் அவனல்ல, வேறொருவன். குளுரின்யமன். மாடிவீடுகளின் முன், குளிரை நடுங்க வைத்துத் தான் நடுங்காமல் பூனைக்குட்டிபோல தூங்கிக் கொண்டிருப்பவன். இரண்டு கால்களோடு நுழைந்து நான்கு கால்களோடு வெளியேறுபவன். எனது லைட்டரால் தனது சிகரெட்டை மூட்டிக் கொண்டபின் அப்பால் போய்விடுகின்றான். ஜோர்ஜ்...ஓ‘ சுதந்திரப்பிராணி.
இன்னும் பலர், எனக்குத் தெரிந்தோர் நுழைகின்றனர். அவன் மட்டும் இல்லை. கிளாஸைக் காலியாக்கி விட்டு மீண்டும் நிரப்பிக் கொள்கின்றேன். விஷமும், அவனும் என்முன் வந்து போனபடி. காத்திருப்பு, தவமியற்றாது தக்கித்த நிலையில் நேரம் போய்விட்டது. அவன் வருவான் என்ற நம்பிக்கையும்தான். கிளாஸை விர்ரெனக் காலியாக்கிவிட்டு மதுச்சாலை முதலாளியின் முன் போய் நிற்கின்றேன்.
'ஸ்டீபன், ஏற்கனவே இங்கு வந்து போய்விட்டாரா அல்லது வரவேயில்லையா?'
'உங்களிற்கு இன்னமும் விஷயம் தெரியாதா?'
'என்ன விஷயம்?'
'அவர் இறந்து விட்டார்.'
'என்ன! எப்போது?'
'நேற்றிரவு, நீங்கள் போனபின், அவர் மீண்டும் இங்கு வந்தார், இங்குதான் அவர் இறந்தார்.'
'இங்கா? எப்படி அவர் இறந்தார்?'
'எங்கள் அனைவர் முன்னிலையிலும் நஞ்சினை அருந்தி.'
ஸ்டீபன் தனது சாதலை வாழ்ந்து விட்டான். அதுவும் எல்லோர் முன்னிலையிலும், அவன் சுயநலமில்லாதவன். இதை நான் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். மீண்டும், ஒரு பியரை வாங்கிக் குடித்துவிட்டு வெளியே வருகின்றேன்.
முகத்தில் குளிரின் அடி. தினங்கள், புகங்கள் அனைத்தையும் மூடியபடி பனிப்பூக்கள். சுமையால் உடலை இழுத்து மூடுகின்றேன். நாசித்துவாரத்து மேற்பரப்பை முள்ளால் கீறத் தொடங்குகின்றது குளிர்...
கூடுகளும்....
__________________________________________
கலைச்செல்வன்
__________________________________________
எந்த முட்டாள் சிகரெட்டை அணைக்க மறந்து போய் படுக்கைக்குப் போனானோ தெரியவில்லை. அந்த விடிந்தும் விடியாத வேளையில் பேரோசை கிளப்பிக் கொண்டு போன 'பொம்பியே'யின் (தீயணைக்கும் படை) சத்தத்தால்தான் பரமலிங்கம் தூக்கம் கலைந்தார் என்றில்லை. அவர் எப்போதோ விழித்து விட்டிருந்தார். நினைவில் அவரது தாயின் கடிதம் வயலின் வாசித்துக் கொண்டிருந்தது. அவரோகண லயத்தில்.
"தம்பி பரமு, காசு கழஞ்சி கையிலை இல்லை. உன்னைத்தான்ரா நம்பியிருக்கிறன்; நான் சாகும் முன்னம் ஒருக்கா உன்னைப் பார்க்க ஆசை. முடிஞ்சா வந்திட்டுப் போடாமோனை."
பரமலிங்கமும் பலதடவை ஊருக்குப் போய்த் தாயைப் பார்த்து விட்டுவர முயன்றார். அவர் கையிலையும் காசு கழஞ்சு இல்லை. வயசு வளர முன்னம் நஞ்சை விழுங்கி நரையும் விழுந்திட்டுது. ஏதோ இருக்கிறதைக் கொண்டாவது போய்வருவம் என்றாலும் இயந்திர மனிதர்கள் நடமாடும் நாடு என்று நெஞ்சில் ஒரு பிசாசுப்பயம் ஏறுகின்றது.
ஒன்றும் வேண்டாம் போகட்டும், அம்மா ஊரில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதற்காவது ஏதாவது அனுப்பிக் கொண்டிருப்பதே போதும் என்று அங்கலாச்ச மனசுக்கு அறைந்து ஒரு பூட்டுப் போட்டுப் பூட்டிவிட்டார். அதற்குள் அம்மா அந்த மருமோனை அங்கை கூப்பிடு, இந்த மருமோனை இஞ்ச கூப்பிடு. இருந்தா இதுகளும் இல்லாமல் போயிடும் என்று எழுதிக் கொண்டுதான் இருக்கிறா. எப்படியாவது இன்றைக்கு காசு அனுப்ப வேண்டும் என்ற தன் முடிவுக்கு பெருமூச்சு முத்தாய்ப்பு வைத்துவிட்டு மங்களம் பக்கம் திரும்பினார். மங்களம் எப்போதோ எழும்பியிருக்க வேண்டும். முகட்டைப் பார்த்துக் கண்ணை அடிக்கடி வெட்டிக் கொண்டிருந்தாள். "உனக்கென்ன யோசனை?" சற்று செருமிக் கொண்டு கேட்டார்.
எப்போதும் பொறுப்பும் யோசனையும் ஆம்பிளையளுக்கு மட்டும்தான் வரும் என்ற macho வண்ணம் பதினைந்து வருடகால பாரிஸ் சீவியத்தைப் பண்ணிப்பார் என்றது.
"இல்லை இன்றைக்கு சுபாங்கியின் பிறந்தநாள் எல்லோ?" மெல்லிய உவகை முகத்தில் மின்னியது.
ம்...கூட்டிய பரமலிங்கம் எதுவும் பேசவில்லை.
"அவள் இன்று வருவாளா?"
"ம்...வருவாள்" அவர் தன் மகளைப்பற்றி நிறையவே நினைத்துக் கொண்டாலும் எதையும் மங்களத்தோடு பெரிதாகப் பகிர்ந்து கொள்வதில்லை. மகளைப் பற்றி எது கதைத்தாலும் இறுதியில் தான் அழுவதோடுதான் கதைமுடியும் என்பதால் மங்களமும் பெரிதாக ஒன்றும் எதிர்பார்ப்பதும் இல்லை.
நாங்கள் அக்காலத்து ஆட்கள், பிள்ளைகள் இக்காலத்துப் பிள்ளைகள்.
எங்கள் நாடு இலங்கை, பிள்ளை பிரான்ஸ்.
நாங்கள் தமிழ்(?) கலாசாரம். பிள்ளை பிரஞ்சுக் கலாசாரம்.
நாங்கள் தமிழ், பிள்ளை பிரெஞ்ஷ். இது பரமலிங்கம் விவாதம்.
என்னதான் இருந்தாலும் பிள்ளை எங்கட பிள்ளை. எங்களுக்கு என்றொரு கலாசாரம் இருக்கு. அதிலதான் வளரவேணும்.
தமிழுக்காகவோ--கலாசாரத்திற்காகவோ, அக்காலத்திற்கோ-இக்காலத்திற்கோ எதிலும் சுபாங்கிக்கு அக்கறையில்லை. அந்த லிஸ்ரில் அம்மா அப்பாவும் அடக்கம்.
மங்களம் கட்டிலைவிட்டு எழுந்து போய்விட்டாள். அவன் தன் வழமையான சம்பளமில்லாத வேலையைத் தொடங்கிவிட்டாள் என்பது குசினிச் சத்தத்தில் தெரிந்தது.
பரமலிங்கத்திற்கு எழும்ப மனமில்லை. இரண்டு தாய்களும் சுற்றிச் சுற்றி, மாறிமாறிக் கயிறிழுத்தனர்.
'உன்னை நம்பித்தான்ரா இருக்கிறன்'--அம்மா. இடையிடையே அக்கா தங்கைகள்.
'பிள்ளையை அப்படியே விட்டால் நாளைக்கு நாங்கள் யாரை நம்பியிருக்கிறது?'-மங்களம்.
'நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறன்.'
'ம்...இப்பவே பொண்டிப்போனியள் இனியெங்கை!'
தன்னை வித்து தமக்கைக்கும் கழுத்தில் மாட்டி நாலு வருஷம்.
இதற்கிடையில் மங்களத்தின் மடியில் சுபாங்கி.
எழுபத்தியேழுக் கலவரம்.
சுற்றம் சூழ உள்ள இளசுகளைப் போல் இயந்திரம் தின்ன பரமலிங்கம் பிரான்சுக்கு வந்தவர். வந்தவர் உழைக்க என்று சொல்லுறதைவிட மற்ற இரு தங்கைகளையும் பிடிச்சுக் கொடுக்க வந்தவர் என்பதுதான் அதிகப் பொருத்தம். சின்ன வயசிலேயே தேப்பனைத் திண்டிட்டு ஒவ்வொரு கவளம் வாயில் போடேக்கையும் 'மூன்று குமரடா' என்ற தாயின் முனகலோடு வளர்ந்தவர். வந்ததுதான் வந்தவர், தூளோடு வந்தாரே! அப்படி வந்தவர்கள் எல்லாம் அப்பவே வீடும் வாங்கி...
பரமலிங்கம் பன்னிரண்டு பேருடன் *கெத்தை (Gaite) யில் தங்கும் பாக்கியம்தான்...
அது ஒரு தொடர் மாடிக்கட்டிடம். எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் மாதிரி! தங்கியிருந்த எல்லாருமே 'ஆண்ட பரம்பரை'யின் வாரிசுகள்!
எல்லாருக்குமாகக் கீழ் மாடியில் ஒரேயொரு மலசல கூடம். காலமை கக்கூசடியில் இவர்களுக்காகத் தண்ர்ப் போத்தல்கள் கியூவில் தவமிருக்கும் நிலமை. குடியிருந்த கட்டடத்தைக் 'கொண்டெம்' பண்ணி குண்டிக்கு அலவாங்கு கொடுத்துத் தெண்டியும் சனங்கள் எழும்பவில்லை.
'எலக்றிசிற்றி 'கட்' பண்ணிநடு அறையுக்கை பென்னம் பெரிய ஓட்டையள் போட்டும் ம்...ஊம். எங்கை போறது?
வீட்டுக்கு வீடு வாசற்படி--எவன் வீட்டுக்குப் போனாலும், அவன் அடுப்படியில் தலைவைக்கிறான். இவன் கக்கூசுக்குள் கால் போடுகிறான். இப்படித்தான் இஞ்சை படுத்தெழும்புறாங்கள் என்று குந்தியிருந்து கோப்பி குடிக்கவும் சங்கடப்படுத்தி அனுப்பிப்போடுவாங்கள். வேறயெங்கை போறது? வேலைதேடப் போறது? பசிச்சா சுப்பமார்க்கெற்றுக்குள் சாமான் தேடுகிறமாதிரி எதையாவது கொறிச்சு Coke கையும் குடிச்சிட்டு வெளியில் வாறது. இப்படியொருக்கா வருகிறபோதுதான் எல்லாருடைய உடுப்பு பொக்கிஷங்கள் எல்லாம் அறையுக்கை இருக்கத் தக்கதாகவே பொலிசு கதவுக்கு கல்லடுக்கி மூடியே விட்டுப்போனது. அதோடை றோட்டுக்கு வந்தவர். தற்கொலை எண்ணம் கூடத் தலை நீட்டியது. குசினிப் பொட்டுக்கை நாய் தலை நீட்டியுக்கை தாயார் அங்கு மட்டையாலை அடிக்கிற மாதிரி, தாயில் இருந்து சுபாங்கி வரை எல்லாருமாய்ச் சேர்ந்து தற்கொலைக்கு சணல்அடி. அவர்கள் எதிர்பார்ப்பு, வாழ்க்கை கடவுள் எல்லாம் நிஜத்தில் நானே என்று மனசில் வைச்சிரம் காச்சி ஊற்றியவர்தான். இன்னும் அந்த வச்சிரம் பழுதாய்ப் போய் விடவில்லை.
இடையில் வேண்டாம் இந்த பரி(சு)ஸ் கெட்டவாழ்க்கை என்று நாட்டுக்குத் திரும்ப யோசித்தபோது சுட்ட பன்றி யைக்கூட இறந்த பின்பே கருக்கும் மனிதர்கள், மனிதர்களையே உயிருடன் கருக்கும் நிலைக்கு வளர்ந்திருந்தனர்.
பொடியன் வந்து இஞ்சை வேகவேணுமோ என நினைத்த தாய்-விசயம் இதுதான் என்று மங்களத்தையும் மகளையும் பிடிச்சு அனுப்பிவிட்டார். பதினைஞ்சு வருசம். சிறைக்குள் இருந்த மாதிரி உழைச்சு உழைச்சு ஒரு மிச்சமும் இல்லை. சுபாங்கி மட்டும்...பார்த்தால் நெஞ்சில் ஒரு பெருமிதம் மிஞ்சும், அவ்வளவுதான்,
மங்களம் கோப்பியோடு வந்தாள்.
"இந்தக் கிழமை முழுக்க மகள் போன் பண்ணவில்லை. நீங்களாதல் ஒருக்கால் போன் பண்ணியிருக்கலாம்"
"ஏன் நீ பண்ணியிருக்கலாமே?..."
"இப்ப சொல்லுவியள், பேந்து அவளை ஏன் இடைஞ்சல் படுத்துகிறாய் என்பியள்."
உண்மைதான். வளர்ந்த பிள்ளைகளுக்குப் பெற்றோருடன் கதைக்கப் பேசப் பெரிதாகஎதுவும் இருப்பதில்லை-ஆனால் இந்தப் பெற்றோருக்கு நிறையவேதான் இருக்குமே-தன்பாட்டுக்கே நிறையக் கதைத்துக் கொண்டிருப்பார்கள்-பிள்ளைதான் முழு உலகமும் ஆகி...
இரண்டு வரிக்கு மிஞ்சி அவளுடன் கதைக்க வெளிக்கிட்டால் ஏன் அம்மா அறுக்கிறீங்கள் என்று கேட்காத குறை. இனி அம்மா கொஞ்சம் நீட்டி நிமிர்த்தி, "வேலைக்குப் போறியா? காசை என்ன செய்யிறாய்? இரவு போன் பண்ணினன் காணேல்ல" என்றால் "இது எல்லாம் என் சொந்த விசயம் இதையெல்லாம் ஏன் நீங்கள் கேட்கின்றீர்கள்" என்ற கேள்வி வந்தாலும் வரலாம். அவள் வயசு அப்படி.
மங்களம் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள மாட்டாள். இதனால்தான் பரமலிங்கத்தார் அடிக்கடி போன் பண்ணுவதை விரும்பவில்லை. மங்களம் குசினிக்குள்ளேயே இருந்தாள். பரமலிங்கம் கோப்பிக் கப்போடு குசினிக்குள் நுழைந்தபோது அந்த மாதிரி ஒரு சமையல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. 'இன்றைக்கு அம்மாவுக்கு காசு அனுப்பவேணும். பாங்கிலை கிடக்கிறது காணுமோ தெரியாது.' முகம் கழுவியபடி முணு முணுத்தார் பரமலிங்கம்.
"சுபாங்கிக்கு போன் பண்ணிக் கொஞ்சம் காசு கேட்டுப் பாருமன்" என்றவர் உடனே, "வேண்டாம், அவளின் எடுப்புச் சாய்ப்புக்கே அவளின் சம்பளம் போதாது. இதற்குள் நான் கேட்க! வேண்டாம் கிடக்கிறதை எப்படியும்...!"
ரெலிபோன் மணியடித்தது. பரமலிங்கம் நகருமுன் மங்களம் ரிசீவரைத் தூக்கினாள். கதையில் சுபாங்கி தான் என்பது புலனானது. பறுவமாகிக் கதைத்தவள் தேய்பிறையாய் நழுவி சரி சரி என்ற முணுமுணுப்போடு அமாவாசையாகி ரிசீவரை வைத்தாள்.
என்னவாம் என்பதுபோல் பார்த்தார் பரமலிங்கம்.
"வேலைக்குப் போகிறாளாம். பின்னேரம் இஞ்சைவருவாளாம்"
'வாறாள்தானே பேந்தென்ன!' என்று முணுமுணுத்துக் கொண்டாலும் பரமலிங்கத்திற்கு மங்களத்தின் நிலை விளங்காமல் இல்லை.
"உதிலை பாங்கிற்கு ஒருக்கா இறங்கிவிட்டு வாறன்" பரமலிங்கம் படியிறங்கினார். தாயும் மகளும் வந்த போதும் அவர் இப்படியொரு ஆறாம் மாடியில்தான் இருந்தார். அது ஒரு குஞ்சு அறை. பதினைந்து சதுர மீற்றரும் தேறாது. குசினி குளியலெல்லாம் அதற்குள் தான். மங்களம் சுபாங்கியை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டாள். அவளுக்கும் எட்டு வயசுவர இந்த வீட்டுக்கு வந்தார்கள்.
தலையை நீட்டிப் பின்ன கழுத்தோடு வெட்டு என்று தொடங்கிய சண்டை, சங்கீதம் பழக யாஸ் பழகி, வீணை பழக கிற்றார் பழகி, பரத நாட்டியம் பழக டிஸ்கோ பழகி நீண்டது. மங்களமும் 'லா சப்பெலில்' எத்தனையோ சேலைகள் வேண்டிப்பார்த்தாள். அவள் ஒரு நாள்கூடக் கட்டிப் பார்த்ததில்லை. மங்களமும் எவ்வளவோ செய்து பார்த்தும் அவளிடம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. இறுதியில் இந்தச் சண்டை அப்பா-அம்மா ஒரு நாட்டுப் புறத்தாக்கள் என்று கருதத்தான் வைத்தது.
அவள் விரும்பியதெல்லாம் செய்து கொடுக்க முடிந்தவரை கஷ்டப்பட்டார் பரமலிங்கம்.
அவளைச் சந்தோசப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்ல, பிரஞ்சுமொழியும் பிரெஞ்சு வாழ்க்கை முறையும் தெரியாப் பாமரத்தனமும்தான். மகள் கேட்பதெல்லாம் சரி பிழைக் கப்பால் 'பிரெஞ்சுப் பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்களாம்' என்று விட்டு விட்டார். பிள்ளையும் வளர பிரச்சனைகளும் வளர்ந்தன. பிரெஞ்சில் படித்து வளர்வதால் தமிழில் சரளமாகப் பேசக் கஷ்டப்பட்டாள். உற்சாகமாக இருக்கும் போதும் உணர்ச்சி வசப்படும்போதும் பிரெஞ்சில் கதைத்தாள். அப்பா அம்மாவிற்கு விளங்குவதில்லை என்பதால் நாளடைவில் கதைப்பதும் குறைந்து விட்டது. ஒரு வகை ஊமை உறவு. ஊமை வாழ்க்கை. வெளியில் சென்றால் நண்பர்களை வீட்டுக்கு கூட்டிவர முடியவில்லை. 'பூபெல்' 'குப்பைவாளி' தளபாடங்களில் நிரம்பியது தான் தன் வீடு என்ற தாழ்வு மனப்பான்மையைவிட, அப்பா அம்மாவின் பிரெஞ்சுக் கடலில் அவள் தற்கொலை செய்து கொள்வாள்.
இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்ட பரமலிங்கம் ஒருநாள் மங்களத்திற்கு சொல்லிக் கொண்டார். 'ஊரில எங்களுக்கு ஆயிரம் உறவுகள். அண்ணன்-தம்பி, மச்சான்-மச்சாள், சித்தப்பா-பெரியப்பா, மாமா-மாமி...உரிமைகொண்டாட ஊரெல்லாம் உறவுகள். அவளுக்கு யார் இங்கே? அவளுக்கு நல்ல நண்பர்கள்தான் உறவுகள், அதற்கு நாம் ஒருபோதும் இடைஞ்சலாக இருக்கக் கூடாது.'
வயசும் பதினாறாக ஒரு 'கொப்பனும்' (Boy Friend) நெருக்கமானது. வெள்ளி பகல் நீண்டது. சில இரவுகளுக்கும் வீடு இல்லாமல் போனது. பரமலிங்கத்தரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். மங்களமும் மன்றாடிப்பார்த்தாள். அவர்களைப் பொறுத்தவரை கற்புடன் ஒரு கலியாணம் காட்சியை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல்தான். சுபாங்கி முடிவாகச் சொல்லிவிட்டாள். 'நான் உங்களை எல்லோருக்கும் மேலாக நேசிக்கின்றேன். அதைவிட என் சுதந்திரம், என் சந்தோசத்திற்கும்; ஏன் உங்கள் சந்தோசத்திற்கும் மிக முக்கியமானது. நானே ஒரு நல்ல துணையை உருவாக்குகின்றேன். நீங்கள் தயவு செய்து இடைஞ்சல் செய்யாதீர்கள்.'
மங்களம் இதற்கு மிஞ்சி மூச்சும் காட்டவில்லை. பரமலிங்கமும் அடங்கிவிட்டார். சற்று நாட்களுக்கு முன் சார்சலில் (Sarcelles) நடந்த அந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. மாடி வீட்டிற்குள் அடக்கி வைக்க, முனைந்ததால் வெளியில் பாய்ந்து கோமாவில் இருக்கும் அந்தப் பதினெட்டு வயதுப்பெண்.
இரண்டு வருஷங்கள் பாரிசில் இருந்து தூர உள்ள யூனிவர்சிற்றியில் இருந்தாள். பாரிஸ் வந்ததும் தன் 'கொப்பன்' உடன் தங்கிவிட்டாள். பரமலிங்கத்தார் நூலில் தொங்கும் உறவு அறுந்துபோகக்கூடாது என்று அவளிஷ்டப்படியே விட்டு விட்டார். அவள் புறம்பாக இருந்தாளேயொழிய மற்றும்படி அவளுக்குத் தங்கள் மேல் இருந்த பாசம் குறைந்த மாதிரித் தெரியவில்லை. ஆரம்பத்தில் அடிக்கடி வந்தாள். இப்போது இடையிடையே வருகிறாள். வருகிறபோது தன்வீடு மாதிரியே எல்லாம் பண்ணிக் கொண்டு சில வேளைகளில் இங்கேயே தங்கியும் விடுகிறாள்.
எல்லாம் நாம் ஒரு குடும்பம் மாதிரியே காட்டிக் கொண்டாலும் எவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை இடைஞ்சல் செய்வதில்லை. அவ்வளவுதான். தாய் பிள்ளை உறவின் முழுப் பரிமாணங்களும் இவ்வளவுதான் என்பது போலாகிவிட்டது.
மாலை மகள் வந்தாள். பெரிய அழகிய பூங்கொத்தை தாயிடம் கொடுத்தாள். இருவரையும் ஆசையாகக் கொஞ்சினாள். அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்று தாய் செய்து வைத்திருந்த 'கட்லற்'றை அடிக்கடி சாப்பிட்டாள். அவள் முகத்தின் மலர்வையே தான் பெற்ற பாக்கியம் என்று அவளையே வலம் வந்து கொண்டிருந்தாள் மங்களம்.
பரமலிங்கம் வாங்கி வந்த 'கத்தோ' (கேக்கை) வை வெட்டி ஒரு கோப்பியும் குடித்த கையுடன் சுபாங்கி எழுந்தாள். 'இரவு கொப்பனோடு ரெஸ்ரோறன்றுக்கு போகிறேன்' என்று மிக இயல்பாகவே சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் அழுத்திக் கொஞ்சி 'நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' என்று வாழ்த்திப் போய் விட்டாள்.
ஆசையாகச் செய்த புரியாணி மேசையில் அலட்சியமாகச் சிரித்தாலும், விக்கித்துப் போய் நின்ற மங்களத்தை தாங்கி அணைத்துக் கொண்டு உள்ளே போனார் பரமலிங்கம்.
ஓ! அவள் மீண்டும் வருவாள்!
மாலை மயக்கங்கள்
____________________________________
சுகன்
____________________________________
சனிக்கிழமை நேரத்திற்கு வந்து அப்பிள் தோல் சீவிக் கொண்டிருந்த நான் Bar ல் வேலை செய்யப் போய்க் கொண்டிருக்கும் சில்வியை வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டிருக்கும் மொலூத் கிழவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தேன்.
சில்வியின் அழகில் கிழவன் எப்போதும் வாயூறித்தான் போய் விடுகிறான்.
"இவளின் வடிவுக்கு ஒரு நாள்..."
என்றபடி கிழவன் எனது தலையைத் தடவினான்.
கொக்கத்தடிக்கு குறைவான உயரம். இளமையில் திடகாத்திரமான அழகு கந்தர்வனாக இருந்திருக்க வேண்டும்.
அவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையுடன் வாழ இங்கு கொடுத்து வைக்கவில்லை என்று நான் வருவதுண்டு. தூரத்துத் தண்ர் தாகத்துக்கு உதவாது என்பது மொலூத் கிழவனின் தத்துவம் போலும். அல்ஜ“ரியாவின் கபில் இனத்துக் கிழவன் இங்கு பிலிப்பைன்ஸ் மனிஷ’ ஒன்றை வைத்திருக்கிறான். விபச்சாரம் செய்யும் அல்ஜ“ரியப் பெண்ணும் கிழவனைத் தேடி ரெஸ்ரூரண்டுக்கு வருவதுண்டு. அவளுடைய ரெலிபோன் நம்பரை எனக்கு ஏற்கெனவே தந்திருந்தான். இப்போது சந்தோஷமாக இருக்கும் கிழவன், இன்னும் கொஞ்ச நேரத்தில் நாயாகி விடுவான். அவனது எதிரிகள் சனிக்கிழமை பின்னேரம் ரெஸ்ரூரண்டுக்கு சாப்பிட வருபவர்கள்தான்.
"ஒரு நாளைக்கு விளக்குமாறு எடுத்துத்தான் எல்லாருக்கும் வெளுப்பேன்" என்று சொன்னால் அது சனிக்கிழமை பின்னேரம்தான்.
ஜப்பானிய சுற்றுலாக்குழு ஒன்று இன்று ரெஸ்ரூரண்டில் பதிவு செய்திருந்தது. கிழவன் இன்று நிலத்தில் விழுந்து விடுவான்.
'சலோ', 'கொனார்', 'கெதே' என்று 'செவ்'வைப் பேசிக் கொண்டே இருந்தான். செவ்வும், பத்திரோனும் 'கம்பி'க்காரர்கள் என்று கையால் செய்து காட்டினான். அவன் செய்து காட்டிய விதத்தில் பத்திரோனு செல்வும்கூட அப்படிச் செய்வார்கள் என்பது சந்தேகமே. செவ் 'பற்றிக்ஸ்' இளம் பெடியன்; கிழவன் பேசுவதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே வேலைக்கு வந்தான்.
நேரே என்னிடம் வந்து 'உன்ர சிநேகிதன் ஆரையும் இண்டைக்கு பிடிக்க முடியுமா கழுவுறதுக்கு'
'ரெலிபோன் அடித்துப் பார்க்கிறேன்' என்று கூறிவிட்டு சாந்தகுமாருக்கு அடித்தேன்.
'இப்ப கழுவவாறியா ரெஸ்ரூரண்டுக்கு' என்று கேட்க 'விசா கேட்பானோ?' என்றான் சாந்தன்.
'ரதி மச்சியின்ர விசாவை வாங்கிக் கொண்டு வா' என்றேன்.
'பகிடியை விட்டிட்டு சொல்லுங்கோ அண்ணை. விசாலில்லாமை உங்கை செய்யலாமோ' என்றான்.
'உன்ர விசா இங்கை செல்லாது' என்றேன்.
சாந்தன் எல்லோருக்கும் பாஸ் எழுதிக் கொடுத்துவிட்டு தனக்கும் ஒன்று எழுதிக்கொண்டு போன மாதம் வந்தவன்.
சாந்தன் வர கிழவன் சிரித்தான். சாந்தன் முதலாவது கோப்பையை போட்டுடைக்கும் போது எல்லோரும் சிரித்தார்கள். சாந்தன் பயந்து போய் என்னைப் பார்த்தான். கிழவன் 'மிகவும் நல்லது' என்றான். நரகத்தில் இடர்ப்பட்டோம். வேலை முடிந்தது.
'கடைசி றெயின்தான் இண்டைக்குப் பிடிக்கலாம். எல்லாத்தையும் தொட்டியுக்கை அடுக்கிப் போட்டு மிசினை நிப்பாட்டிப் போட்டு வா. நான் நிலத்தைக் கழுவிறன்' என்றேன்.
'...த்த வேலை, பேப்பர் வேலை சம்பளம் குறைவெண்டாலும் வேலை சுகம்' என்றான் சாந்தன்.
'ரெண்டு மூன்று நாளைக்கு கொஞ்சம் கஸ்ரமாத்தானிருக்கும். கடும் சுடுதண்ணியில் கழுவாதை. வேலை கூடினா கோப்பையைத் துடைக்காதை. அப்பிடியே தூக்கி அடுக்கு. சூட்டுக்கு தன்பாட்டிலை காஞ்சு போடும். ஜவல் கனக்கப் பாவியாதை, கை எரிச்சுப் போடும். கண்ணுக்கும் கூடாது. தாச்சியின்ர பின் பக்கம் ஒண்டும் கழுவாதை. சும்மா துடைச்சுப் போட்டு தூக்கி யெறி' என்றேன்.
அண்ணரும் வேலை முடிந்து கடைசி றெயினுக்கு வந்திருந்தார். சாந்தனைப் பார்த்துச் சிரித்த அண்ணர்,
'எப்பிடி வேலை சுகமோ' என்று கேட்டார்.
'ஓ..செய்யலாம்' என்றான் சிரித்தபடியே.
நான் இரண்டு போரையும் விட்டிட்டு தனியே இருந்த சீற்றில் இருந்து நாரியை நிமிர்த்தினேன்.
அன்ன ஆகாரமில்லாமல் காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த துருவன்முன் 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார் கடவுள்.
'உட்காருவதற்கு எனக்கு நிரந்தரமாக ஒரு இடம் வேண்டும். அங்கிருந்து என்னை யாரும் விரட்டக் கூடாது' என்றான் துருவன். அவன் துருவநட்சத்திரமானான்.
நவீன அகதித் துருவர்களால் சில நிமிடத்திற்குள் இருக்கையில் நிறைந்துவிட்டன. ரெயின் போய்க்கொண்டிருக்கிறது. ஆறுதலாக இருக்கிறேன். என நினைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தேன். இறங்குகிற ஸ்ரேசன் வருகிற நேரமாகிறது என்று மனதிற்குள் நினைக்க அண்ணர் வந்து தட்டினார்.
வழமைபோலவே பிள்ளைகள் நல்ல நித்திரை. ரதி மச்சி முழித்திருக்க வேண்டும். சற்று முன்னர்தான் கந்த சஷ்டி கவசம் படித்து முடித்திருக்கிறாபோல் இருக்கிறது.
"பிள்ளைகள் தின்னும் புழைக்கடைமுனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராக்கதரும்
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட
இரிசி காட்டேறி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டிக்காரரும் சண்டாளங்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட"
ரதி...என்று வழமைபோல் கதவைத் தட்டினார் அண்ணர். நான் உடுப்பை மாற்றிவிட்டு குழம்பைச் சூடாக்கினேன். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்தோம் ரெலிபோனை இழுத்து விட்டுவிட்டு.
அண்ணர் மச்சியுடன் ஒரு வார்த்தை கதைப்பதற்கு எங்கே ஓய்வு நேரம் கிடைக்கிறது. அதிகாலை வந்து படுத்து காலை எழும்பி ஓடுவதுதான்.
"என்ன நித்திரை வரயில்லையோ...ம்..."
ஒரு வார்த்தை கதைத்தால் அனேகமாக இதாய்தான் இருக்கும்.
அண்ணரின் அறைக்குள் கட்டில் சத்தம் கேட்டது. அல்லது கேட்டது போலிருந்தது. தலகாணி கடித்தது. முகத்தில் ஏதோ ஊர்வதுபோல இருந்தது. லையிற்றைப்போட்டு தோச்சு சேர்ட்டால் தலகணியைச் சுற்றிப் போர்த்தினேன். கன்னத்தை அழுத்திப் படுத்தேன். இதமாக இருந்தது.
அன்புள்ள நண்பனுக்கு...
______________________________________
புவனன்
______________________________________
...இன்று நல்ல மழை. இருந்தும் யன்னலினூடாகத் தெறிக்கும் காலைக் கதிர்கூட எவ்வளவு வெம்மையாக இருக்கிறது. கட்டிற்கரை எறும்புகள் என்னை நிறையவே தொந்தரவு செய்கின்றன.
நேற்றிலிருந்து உடல்வேறு கொதித்துக் கொண்டு இருக்கின்றது. பக்கத்து அறையில் இருந்த ராமச்சந்திரனுக்கு 'பொக்கிளிப்பான்' வந்து நேற்றுத்தான் முழுகினான். எனக்கும் தொற்றிவிடுமோ என்று பயமாக இருக்கின்றது.
இந்த வேளையாகப் பார்த்துத்தான் ஏஜென்ஸ’க் காரனும் 'ரிக்கற்'றுடன் வந்து நிற்பான். ராமச்சந்திரனுக்கும் இப்படித்தான்...அவன் பாவம் வருத்தத்தில் கிடந்து துடித்துக்கொண்டிருக்க ஏஜென்ஸ’க்காரன் ரிக்கற்றோடு வந்து நின்றான்.
"உமக்கு நாளைக்கு Flight ஐஸே! என்ன செய்யப் போறீர்? ரெண்டு வருஷமாய் உம்மட கஸ்டம் விளங்கித் தான் இப்ப இவ்வளவு 'றிஸ்க்'எடுத்து அலுவல் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறன். நீர் என்ன டாண்டா...வருத்தத்தைத் தேடி வைச்சுக்கொண்டு நிக்கிறீர். நான் என்னைஸ்ஸே செய்யிறது!"
ஏஜென்ஸ’ நல்லாவே நடித்தான்.
ராமச்சந்திரன் அழுதான். விக்கி விக்கி அழுதான். பார்க்கப் பாவமாக இருந்தது.
எங்கள் 'லொட்ஜில்' எல்லாமாக அறுபதுபேர் வரையில் இருக்கிறோம். 'பாங்கொக்' நகரத்தில் எல்லாமாகப் பார்த்தால் ஆயிரம்பேருக்கு மேல் வரும்.
எல்லோரும் என்னைப்போலவே வெளிநாட்டு ஆசையில் வெளிக்கிட்டவர்கள்தான். ஒவ்வொருவருடைய கதைகளும் சோகம் நிறைந்தவை. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது?
சிவலிங்கம் என்றொரு நாற்பது வயது நண்பர் எங்களோடு இருக்கிறார். இடையிடையே சித்தப்பிரமை பிடித்தவர்போல கத்துகிறார். நேற்றுச் சாமமும் 'சிலலை' என்று அவர் போட்ட அலறல் சத்தம் இன்னமும் என் அறையில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நான் இங்கு வந்து மூன்று மாதத்திற்குள் இது மாதிரி அலறலை பலதடைவைகள் கேட்டிருக்கிறேன். ஏதாவது யோசித்துக் கொண்டிருப்பார். திடீரென்று 'ஐயோ என்ர சிவலை' என்று கத்துவார். மீண்டும் பழையபடி எங்காவது வெறித்தபடி இருப்பார். அவரைப் பார்க்கிற எல்லோருக்கும் பரிதாபமாக இருக்கும். அதேவேளை தாமும் இப்படி ஆகிவிடுவோமோ என்ற பயமும் தொற்றிக்கொள்ளும்.
'சிவலை' வேறொன்றுமல்ல. அவர் வளர்த்த காளைமாடு வயலில் ஒருநாள் உழுதுகொண்டிருந்த வேளை 'ஹெலி' மேலால் சுட்டுக்கொண்டு வந்ததாம். தான் கலப்பையையும் மாடுகளையும் அப்படியே விட்டுவிட்டு ஓடி பனைகளுக்குள்ளே ஒழிந்துவிட்டாராம். எல்லாம் அமைதியாக, திரும்பி வந்து பார்த்தபோது சிவலை செத்துக்கிடந்ததாம்.
"தரை முழுக்க ரத்தம். மற்றது வெருண்டுபோய் நிக்குது. என்ர சிவலை...ஐயோ!" இதை அவர் சொன்னபோது பலமுறை தலையில் அடித்துக் கொண்டார். கேவிக்கேவி அழுதார். கேட்பதற்கே மிகவும் சங்கடமாக இருந்தது.
வீடு, மனைவி, பிள்ளைகளை அவர் நினைக்கும் போதெல்லாம், இறந்துபோன காளை, தனித்து நிற்கும் மற்றக்காளை நினைவில் வந்து குறுக்காடுகின்றன. வர வர அவர் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இவர் வெளிநாடு போவதோ அல்லது இலங்கை திரும்புவதோ கஷ்டம். பாவம்.
எங்கள் லொட்ஜில் ஆண்டுக்கணக்காக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கு வந்தபின் சிலருக்குப் பிள்ளை கூடப் பிறந்திருக்கிறதென்றால் யோசித்துப்பாரேன்!
ஒவ்வொருவரும் நாளை நாளை என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஏஜென்சியும் அப்படியே வடிவாகக் கதைத்துக் கொள்கிறான். இடையிடையே ஏயர்போர்ட் வரையில் கூட்டிக்கொண்டு போய்த் திருப்பிக் கூட்டிக்கொண்டு வருகின்றான். இன்று நிலைமை சரியில்லை. முதல் போனது பிடிபட்டுப் போச்சு. அடுத்த றிப் பார்ப்பம் என்பான்.
எங்களுக்கு இப்ப எல்லாம் விளங்குகிறது. ஆனால் என்ன செய்வது! ஒன்றா இரண்டா! நாலரையை அல்லவா அவன் கைகளுக்குள் திணித்திருக்கிறோம். எல்லாருக்கும் சனியன் ஏழரையில் என்பார்கள். ஆனால் எங்களுக்கு இப்போ நாலரையில்.
என்னுடைய அறையில் இருக்கும் நாகராஜனும் இன்று ஏயர் போர்ட் போய்த் திரும்பி வந்தவன். இது அவனுக்கு நாலாது முயற்சி. வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது இவனும் நாலரையோடு தான் வெளிக்கிட்டவன். இப்போ இரண்டோடு நிற்கிறான். முதல் தடவை மொஸ்கோவில் வைத்துத் திருப்பி அனுப்பப் பட்டவன். இரண்டாவது தரம் ஆபிரிக்க நாடொன்றில், மூன்றாவது தடவை இந்தா சுவிஸ’னுள் போய் விட்டேன் என்று நுழைய போடரில் வைத்து...
சின்ன வயதில் குடும்பமானவன். குடும்பக் கஷ்டம். கஷ்டப்பட்டுக் கட்டி முடித்த வீடும், ஆமிபாதுகாப்பு என்று கிளீயர் பண்ணிக் கொண்டுவர தரைமட்டம் ஆனது. அதிகம் கதைக்கமாட்டான். சாப்பிடமாட்டான். சிலவேளைகளில் எங்காவது ஒரு மூலையில் இருந்து தேம்பித்தேம்பி அழுது கொண்டிருப்பான். பாவம் யார் யாருக்கு ஆறுதல் சொல்வது?
பேயறைந்தது போல என்று கேள்விப்பட்டிருப்பாய். நேரில் பார்க்கவேண்டுமா? உடன் இங்கே வா. எங்கள் எல்லோர் முகங்களும் அப்படித்தானிருக்கும், வெளியிலிருந்து வருபவர்களைத் தவிர.
இங்கு பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், கனடா போன்ற நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். தங்கள் சகோதரர்களை, மனைவிமார்களைக் கூட்டிப்போக அல்லது ருறிஸ்டுகளாக.
ஏஜென்சிகாரர்களிலும் பெரும்பகுதி இவர்கள்தான். இவர்களுக்கு 'சப்' ஏஜென்ஸ். பிறகு அவருக்கொரு 'சப்' என்று ஏஜென்ஸ’களில் பல வகை.
ஐரோப்பாவிலிருந்து வருகிறவர்களைப் பார்க்க எங்களுக்கு ஏக்கமாக இருக்கும். விதம் விதமான உடுப்புக்கள். கை நிறையக்காசு. உதாரணத்திற்கு ஒரு பிரெஞ் பிராங்கின் பெறுமதி ஐந்து 'பாத்'துக்கள். அதோடு ஐரோப்பிய விலைகளோடு ஒப்பிடும்போது பொருட்களின் பெறுமதியும் இங்கு காற்பங்காம், பிறகென்ன கேட்கவா வேண்டும்!
வருகிறவர்கள் காசுகளை விசுக்கி எறிவார்கள். எறிகிறவற்றை ஏந்துவதற்கென்றே எங்களில் பலர். நாங்களும் தான் என்னசெய்வது? இயலாமை தான்.
நாங்கள் இங்கு வந்தவுடன் ஏஜென்ஸ’காரன் எங்களைக் கொண்டுபோய் U.N.O.வில அகதியாகப் பதிந்து விடுவான். U.N.O. எங்களுக்கு உதவிப்பணமாக மாதாந்தம் மூவாயிரம் பாத்துக்கள் தரும். இந்தப் பணம் ஒருவர் வாழுவதற்குப் போதுமானதல்ல. இருந்தபோதும் இதாவது கிடைக்கின்றதே என்ற திருப்தி. இதைவிட வேறெந்த உதவியும் எமக்குக் கிடைப்பதில்லை.
தாய்லாந்து நாட்டில் தங்குவதற்கு இரண்டு மாதம் மட்டும்தான் விசா தருவார்கள். திரும்ப விசா 'றினியூ' பண்ணுவதாக இருந்தால் வேறுநாட்டுக்குப் போய்த் திரும்பவேண்டும். அவர்களுடைய நாட்டில் அப்படி ஒரு சட்டம்.
நாங்கள் பக்கத்திலுள்ள லாவோஸ் நாட்டிற்குச் சென்று திரும்புவோம். இதற்குரிய செலவு இரண்டாயிரம் பாத். அதுவும் இந்த மூவாயிரம் பாத்திற்குள்தான் என்றால் யோசித்துப் பாரேன்!
ஐரோப்பாவிலிருந்து வரும் நண்பர்களுக்கு நாங்கள் மலிவான கடைகள் தேடிக் காண்பிப்போம். பின் அவர்கள் வாங்கும் பொருட்களை காவியும் கொடுப்போம். அவர்கள் ஒய்யாரமாக நடந்து வருவார்கள்.
இந்த நண்பர்கள் யார் என்ற சந்தேகம் எழுகின்றதா? வேண்டாம். அவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. 'சகோதரர்கள்' தான்.
சகோதரர்கள் எங்களுடன் பிரெஞ் மொழி பேசுவார்கள். டொச் மொழி பேசுவார்கள். நாங்கள் பேந்தப் பேந்த முழிப்போம். அவர்கள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார்கள். ஆனால் ஆங்கிலம் மட்டும் கதைக்கிறார்களில்லை.
எனக்கென்னவோ எங்கள் சகோதரர்களைப் பார்க்கவும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி போகட்டும்.
ஓ! எங்கள் ரெலிபோஃனை மறந்து விட்டேன். எங்கள் லொட்ஜிலிருக்கும் அந்த ஒரேயொரு ரெலிபோஃனையும் கேட்டால் பல ஆயிரம் கண்ர்க் கதைகள் சொல்லும். இதோ! இப்பவும் அடிக்கிறது யாருக்கோ தெரியவில்லை. கீழ்மாடியில் இருப்பவர்கள் ஒருமுறை உன்னிவிட்டு மீண்டும் காத்திருப்பர். அநேகமாக அது லொஜ்ட் முதலாளிக்காகத்தானிருக்கும்.
இந்தக் காத்திருப்பு மிகவும் கொடுமையானது. எனக்கு மட்டும் பெரிதாகச் சொல்லிக் கொள்ள யாரும் இல்லாததால் இந்தப் பிரச்சினையில்லை. சிலர் காலை எட்டு மணி முதல் இரவு பதினொரு மணிவரை கூடக் காத்திருப்பர். ஆனால் கோல் வராது.
மறுநாள்...மறுநாள் மறுநாளும் இப்படியே!
இப்போ எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் விசயங்கள் தெரிய வருகின்றன. ஐரோப்பிய அகதி வாழ்க்கையும் நாங்கள் நினைப்பது போல் இல்லையாம்.
பிரான்ஸ’லிருந்து நாடு பிடிக்கவில்லையென்று நண்பன் ஒருவன் ஜேர்மனிக்கு ஓடுகின்றான். அங்கிருந்து இன்னும் பலர் சீ...இதுவும் சரியில்லை என்று சுவிசுக்கும் கனடாவுக்கும் ஓடுகின்றார்களாம். பிறகு அங்கும் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு...
சுத்தித்சுத்தி எங்கேதான் ஓடுகின்றோம்?
கடைசியில் எப்படியும் இலங்கைதான். பூமி உருண்டை என்று சொல்லுவதற்கு கலிலியோ பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். நாங்களே போதும்.
குழந்தை விசாரங்கள்
_____________________________________________
பொ. கருணாஹரமூர்த்தி
_____________________________________________
அது மாலை நேரம். குளித்து விட்டு பழைய தினசரி ஒன்றைத் தரையில் வைத்து அதில் நகங்களை வெட்டிப் போட்டுச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். என் மகள் காருண்யா தினசரியை குறுக்கும் மறுக்குமாக மிதித்துக் கொண்டு நடக்கிறாள். நான் எழுத்து சரஸ்வதி என்றும் அதை மிதிக்கக் கூடாதென்றும் எச்சரித்தேன்.
என்னை விரோதமாகப் பார்த்துவிட்டுகேட்டாள். 'டாடி நான் சின்னக்குழந்தை. ஐந்து வயது. அதுவும் சொக்ஸ் போட்டிருக்கிறேன். நான் பேப்பரை மிதிக்கக் கூடாதெண்டால் நீங்கள் 'ஊத்தை' நகத்தை வெட்டிப் போடலாமா?'
என்னை மடக்கிய பெருமிதத்தில் நான் என்ன சொல்கிறேன் என்று பார்த்துக்கொண்டு நின்றாள். எதிர்பாராத சாட்டை அடி. சுதாகரித்துக் கொண்டேன்.
'நான் செய்ததும் தப்புத்தான். இனிமேல் எழுத்துள்ள பேப்பரில் நக போடவே மாட்டேன்.'
ரான் செய்ததும் தப்புத்தான். இனிமேல் எழுத்துள்ள பேப்பரில் நகர் போடவே மாட்டேன்.'
அவளிடம் மன்னிப்புக் கேட்டது கொஞ்சம் 'குஷ’' பண்ண என்னிடம் ஒட்டிக்கொண்டு அறுக்கத் தொடங்கினாள்.
எனது படிக்கும் அறையின் ஈசான மூலையில் வாகாக இருந்த ஒரு பதிவான புத்தக அலமாரியின் மேலே அணைத்துத் தெய்வப்படங்களும் வைத்து அவற்றுடன் நடராஜர்-தேவி செப்புச் சிலைகளும் வைத்திருக்கிறாள் என் மனைவி.
'எழுத்தெல்லாம் கடவுள் என்றியள். வியூ காட்டில் வந்த வெள்ளைக் கல்லை கடவுள் என்றியள். ஐ அம் கொன்ஃபியூஸ்ட்...'
இப்பொழுது மனைவியும் குளித்துவிட்டு வந்து சாமிப்படங்களுக்கு எல்லாம் சாம்பிராணிப் புகை காட்டிவிட்டு வணங்குகிறாள்.
காருண்யா (நடராசரைக் காட்டி) 'இவரேன் காலைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்?'-கேட்டாள்.
தாய் சாமி கும்பிட்ட பின்னால் பேசலாமென்று ஜாடையில் அவளை பேசவிடாது தடுத்தேன். கும்பிடும் வரையிலும் காத்திருந்து மறுபடியும் கேட்டாள்.
'அவர் எங்கள் கடவுள். டான்ஸ் பண்றார்.'
'எங்கு டான்ஸ் பண்றார்.?'
'தில்லைக் கோவிலிலே, அப்படி நடனம் ஆடுவதாலே அவருக்கு நடராஜர் என்று பெயர்'
'எங்கிருக்கு தில்லைக்கோவில்?'
'இந்தியாவிலேயிருக்கு. அக்கோவிலை சிதம்பரம் என்றும் சொல்லுவார்கள். அந்தக் கோவிலிலே கனக சபை என்று ஒரு சபை-ஹோல் இருக்கு. அங்குதான் டான்ஸ் பண்ணுகிறார்.'
'சிதம்பரம் போனால் நடராஜரைப் பார்த்திட்டு வரலாமா?' என்று கேட்பாளோ என நான் பயப்படவும் கேள்வி வேறொரு கோணத்தில் முளைத்தது.
'நடராஜரின் டான்ஸ் பார்ட்னர் யார் டாடி?'
'பார்வதி என்று ஒரு அம்மா'
'எப்பவும் நடராஜர் பின்னாலே நின்றுதான் ஆடுவாளோ?'
'ஏன் அப்படிக் கேட்கிறே?'
'அவர் கைகள் மட்டுந்தான் தெரியுதே?'
'இதிலே இவர் தனியத்தான் ஆடறார், நடராஜருக்கு நான்கு கைகள் இருக்காம்!'
இரண்டு வருஷத்துக்கு முன்பு பிராங்பேட்டில் ஒரு இந்தியன் ரெஸ்ரோறன்ட் போயிருந்தபோது ஒஃப் பாரிஸ’னாலான லட்சுமி சிலையை சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டு கேட்டாள்: இவ பின்னால ஒளிஞ்சிருக்கிறது யார்?
'ஏன் கேட்கிறே?'
'அதுதான் நாலு கை தெரியுதே!'
அப்போது என்ன சொல்லி வைத்தேனோ தெரியவில்லை. அதை இப்போது ஞாபகம் வைத்திருந்து சொன்னாள்.
'பிராங்பேட் ரெஸ்ரோறண்டில இருக்கிற லட்சுமிக்கும் நான்கு கைதான்!'
'கடவுள் இல்லையா அதனால் நான்கு கைகள்'
'யாருக்கு கடவுள்?'
'எங்கள் எல்லோருக்கும் கடவுள்'
'ஜெர்மன்காரருக்கும்?'
'ம்...'
'அதுதான் கும்பிடறீங்களா?'
'ம்...'
'ஏன் கும்பிடோணும்?'
'அப்பதான் எங்களையெல்லாம் காப்பார்'
'Ich glaube nicht' (நான் நம்ப மாட்டேன்)
'ஏண்டா?'
'இந்தச் சின்னக் குழந்தையையே (முயலகன்) காலுக்கை போட்டு நாக்கு வெளியில வர மிதிக்கிறார்...இவர் எப்பிடி எங்களை காப்பார்?'
சில நாட்கள் கழித்து டிவியில் (முன்னைய) கிழக்கு ஜெர்மனியில் பராமரிப்பு இன்மையால் சிதிலமாகிப் போன தேவாலயம் ஒன்றில் ஜெர்மன் ஒருங்கிணைப்பின் பின் புணருத்தாரண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை விபரமாகக் காட்டினார்கள்.
கல்வாரி மலைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் சொரூபங்கள் வர்ணம் பூசப்படுவதை ஒழுங்கு முறைப்படி திரும்பத் திரும்பக் காட்டினார்கள். அவள் புரிந்துகொள்ளும்படி நிகழ்ச்சிகளை விளக்கினேன்.
யேசுநாதர் ஆணியறைபட்டு இரத்தம் வழியும் காட்சி காருண்யாவை மிகவும் உலுப்பி விட்டது.
இவர்கள் அட்வைஸ் கிண்டர் கார்டனின் குழந்தைகளுக்கு டிவி காட்டப்படாதென்பது, அதிலும் புராணம் மற்றும் Fantacy சம்பவங்கள் அறவே கூடாது.
ஈஸ்டரின் போது வகுப்பாசிரியை 'பிறிற்ற' பொம்மை யேசு பாலன் ஒன்றை வைத்து ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு வேஷமணிந்து பாலன் பிறப்பினை ஒரு நாடகம் போல செய்து காட்டினாள். இவளுக்கும் ஒருபாத்திரம். அதனால் யேசு கடவுளின் குமாரன் என்பது தெரியும்.
'ஏன் டாடி யேசுவுக்கு ஆணி அடித்தவை?'
'யேசு, 'கடவுள் ஒருவர் இருக்கிறாரென்றும், கடவுளுக்குப் பிடிக்காதவாறு உயிர்களைக் கொல்லுதல், பொய் சொல்லுதல், களவு செய்தல் போன்ற காரியங்கள் செய்தல் பாவம்' என்றும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வந்தது அவர்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் யேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்றாங்க. ஆனால் 'யேசுநாதர் மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்து வந்து விட்டார்.'
'அப்படியென்றால் எங்கள் தாத்தாவும் உயிர்த்து எழுந்து வந்திடுவாரா டாடி?'
'இல்ல வரமாட்டார். யேசு நாதர் கடவுளின் குழந்தையல்லோ, அதுதான் உயிர்த்தெழுந்து வந்தார்.'
'யேசுவுக்கு கையில் மட்டுந்தான் ஆணி ஆடித்தவை அப்ப செத்திருக்க மாட்டார். எங்கட யேசு சின்ன பேபி. நாங்கள் ஆணி அடிக்கவேயில்லை. அவர் பிறந்திருக்கிறாரென்று எல்லாரும் வந்து வந்து பார்ப்பார்கள். அவ்ளோதான். 'பிறிற்ற' எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டா.'
மகளின் கேள்விகளை அவதானித்துக் கொண்டே தாய் 'டெக்கில்' கசெற் ஒன்றைப் போட்டாள்.
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம்செய்தனை?
எங்கும் நிறை பரம்பொருள் உன்னை
அம்மா வென்றழைக்க என்ன தவம் செய்தனை' என்று
பாடிய பின் மீண்டும் ஒரு கண்ணன் பாடல் போனது.
தாயே யசோதா உந்தன் ஆயர் குலுத்துதித்த மாயன்
கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்?
'ஆயர் குலமென்றால் என்ன டாடி?'
'நிறைய மாடுகள் வளர்த்து பால் எடுத்து மற்றவங்களுக்கெல்லாம் கொடுக்கிறவை?'
'அப்ப Milky way ஆண்டியும் ஆயரோ?'
(டிவியில் 'மில்க்கி வே' சொக்கலேட் விளம்பரத்தில ஒரு 'மில்க் மெயிட்' பால்வாளியுடன் வருவாள்!)
'யெஸ். அப்படிச் சொல்லலாம்...'
கண்ணனை யசோதா கையில் இடுக்கி வைத்திருக்கும் படமொன்று அறையில் உண்டு. அதை அப்போதுதான் முதன் முதல் பார்ப்பது போலச் சற்று நேரம் உற்றுப் பார்த்தாள்.
'கண்ணன் கடவுள் இன்னும் சின்ன பேபியோ?'
'சின்ன பேபியாகத்தான் யேசு பிறந்தது போல பிறந்தாராம்.'
'அப்ப நாங்களும் அவர் மாதிரி கடவுளோ?'
'நல்ல பிள்ளைகளாயிருந்தால் எல்லாக் குழந்தைகளும் கடவுள் தான்!'
'எங்களை யார் கும்பிறடது? ஜெர்மன்காரர் கும்பிடுவினமோ?'
பெர்லினில் மயூர சுப்பிரமணியசுவாமி என்றொரு முருகன் கோவில் அண்மையில் ஸ்தாபித்துள்ளார்கள். மனைவி கோயிலுக்குப் போகும் போதெல்லாம் காருண்யாவும் கூடப் போவாள்.
அங்கு பூஜை மந்திரங்கள் எல்லாம் அவளுக்குப் புரியாத புதிய பாஷையாக இருந்ததால் அவளின் அம்மொழி பற்றிய கேள்விகளுக்கு அதுதான் கடவுளின் பாஷையென்று தற்காலிக 'விளக்கம்' கொடுத்துள்ளாள் மனைவி.
யோகீந்திரனாம் பதங்கþஸ்வதிக ஸ்மதுரம் முத்தியாஜாம் நியாஸோ
என்று ஆரம்பிக்கும் நாராணயம் சமஸ்கிருத சுலோகத்தில் 'காருண்ய சிந்தோ' என்று தன் பெயரும் வருவதால் அந்த கசெட்டைத் தானாகவே அடிக்கடி போட்டுக் கேட்பாள்.
'டாடி ஜேசுதாஸ”க்கு கடவுள் பாஷை தெரியுமோத?'
"ஏன் கேட்கிறே?"
"அவரும் ஐயர் மாதிரி பாடறாரே?'
'ஜேசுதாஸ் படிச்சு வைச்சிருக்கிறார் போலதான் இருக்கு.'
சற்று கழித்து--சாஸ்திரிய சங்கீதக் கசெட்டைப் போட்டு கேட்டுக் கொண்டே நான் எழுதிக்கொண்டிருக்க மீண்டும் என் அறைக்குள் வந்தாள்.
'இப்போ பாடறது யார்?'
'முசிறி சுப்பிரமணிய ஐயர்'
'கைகர் (வயலின்) இழுக்கிறது?'
'அதுவும் ஒரு ஐயர்...'
'அதுதான் கடவுளின்ரை பாஷையில் பாடறாரோ? சர்ச்சில் டொய்ச்சில் (ஜெர்மன் மொழி) தானே பூசை வைக்கினம், அப்ப டொய்ச்சும் என்ன கடவுள் பாஷையா?'
'மனசில் உண்மையான அன்போட, நம்பிக்கையோட சொல்லப்படுகிற எல்லாம் பாஷையுமே கடவுள் பாஷை தான்'...
'ஜெர்மன்காரர் ஏன் எங்கிட கோயிலுக்கு வாரதில்லை?'
'அவங்க கோயிலுக்குப் போவாங்க...'
அவள் சற்று யோசித்துக் கொண்டு நிற்கிறாள். நானும் சிந்திக்கத் தொடங்கினேன்.
ஆவீன மழை...
______________________________
ப வி. சிறிரங்கன்
______________________________
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...
இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழிய வில்லை. எனினும், என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள் உருண்டன.
கூடவே கோதாரிபுடிச்சு உடம்பும் சிதறிப் பிய்ந்தது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...
நாசீயேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற அகத்தடியாள் விம்மியழ வாரீசு வதங்கித்துவன...
இருப்பைக் காக்கத்தாம் யாவும்
ஈழத்தைவிட்டு ஜேர்மனியில் வாழ்வதும், சாவதும் இருப்பைப்பற்றிய கனவின் உந்துதல்தாம்.
நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.
சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்
மனைவி.
ஒலி.
எதிரொலி!
என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது. பிரபஞ்ச இரைச்சல். ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது. ஒலியே அநாதி!
சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது.
ஈழத்துப்பிரஜை என்ற உந்துதலோ என்னவோ!
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக...
என் அகத்தடியாள் அழுதாள். மெய்நோக நோக விம்மி விம்மியழுதாள்.
அடிமை?
இவ்லோகத்தின் அடிமை?
தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.
என் வீரியத்தின் மகுடம் துவண்டு கிடந்தது. மூச்சில்லை முகங் கற்குவியலுக்குள்.
நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. உச்சியிலிருந்து குருதி கசிந்தது. அவன் மீது கட்டப்பட்ட கனவுகள் கோடி. தவிடுபொடி யாவும். என் மீது நான் கொள்ளும் பச்சோதாபம் அவனுருவில் வலிமை சேரும்.
எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாகிப் போன போது அவன் எனக்கு ஆரம்பத் தொடரானான். இதற்குக் குண்டு முற்றுப் புள்ளி வடிவில் வந்து சேர்ந்தது.
இயலாமை மீண்டும் உச்சியில் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது என்னை. அவன் மனிதத்தை இறுகப்பற்றியிருந்தான்.
குருதியினால் அதை தூய்மைப்படுத்தவா?
போன கிழமைதான் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ் நண்பர்களின் முயற்சி அது.
மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில் குடிகளுக்குள் வருகின்றன?
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள...
இருப்பதே வாடகைக் குடியில்; இதற்குள் விளைவிப்பதற்கேது நிலம்?
ஒருநாளைக்கு உடம்புக்கு முடியாது போனால் வாடகை வீட்டு ஞாபகம், கிருஷ்ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக...அதற்குள் மானுடம் புழுவாக, நெழியும் காட்சியாக விரியும்.
நேற்றும் வேலைக்குப் போனபோது என்னுடன் வேலை பார்க்கும் என் நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையிலிருந்து நீக்கியிருந்தார்கள். போன மாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பிய போது தட்டந்தனியனாக நின்று எதிர்த்தவன்.
டொச்சில் Ausbeutung Systeme. (சுரண்டல் பொறி முறை) என்று கோசம் போட்டவன்.
நேற்று...
இன்று நான், என் குடும்பம் வெடிகுண்டுப் புகைக்குள் குருதி சிந்தி...உயிர் கொடுத்து...
இடிபாடுகளுக்குள் இருந்து, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வேலைக்குப் போக முடியாமல் நேர்ந்ததை எண்ண அது மயமாகி என் வீட்டு இழப்பைக் கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள்.
டொச் லாண்ட (Deutchland) புகைகளின் பின்னே...எனக்கு, ஈழம் இப்போது சிறப்பானதாகப்பட்டது. யுத்தத்தை மறுத்து தூக்கம் வரும்போது தூங்கி, பசி வரும்போது கொட்டாவி விட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன் காலந்தள்ளி...அமைதியாய் உடல் அசைந்து உயிர் தாங்கும்.
டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கியிருந்தது.
ஆனால், குண்டை எப்போது வழங்குமென்று தெரியாமற் போய்விட்டது. தெரிந்திருந்தால்...
என் வீரியம்...என் கனவு..என் மனைவி...
நான், அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து, என் மனைவியை...என் மழலையை அண்மிக்க முயன்று தோற்றேன்.
சில நிமிடங்கள் கழிய
கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்தெறித்தன.
இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலியை ஞாபக மூட்டியது.
நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள்...
இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதுராடியது.
சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஓடியடித்து எமை அண்மித்தனர். அவர்கள் Vof fuf காரர்கள் (அவசர அழைப்புக் காரர்கள்) கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார்கள். அது துவண்டு விட்டது!
நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய முறையில் அவனைப்பார்க்கவில்லை. அவன் வாழ்நாளில் பலமணிநேரங்களை நான் அவனுக்காக செலுத்தாமல் புத்தகங்களுடன் செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல் நூல்களுக்குள் புழுவாகிப்போனதாலேயோ என்னவோ அவன் என்னை விட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான், எனக்குள் நொந்து வெதும்பினேன்.
இனி, இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ?
நான் இதையறியேன்.
ஏதோ வொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி.
அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து...அகோரமான வாழ்வுப்படலத்தை சொல்லாமற் சொன்னது.
இரு விழி சிந்தும் நீரை பாராதே என் இதயம் மகிழ்வதைப்பார்! என்று அவைகள் கூறவில்லை. இயற்கை வலிமையுடையது.
சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும்.
மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே பட்டது.
தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை தற்போது தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப்பிதற்றினாள். துவண்டதை அணைத்து மூர்ச்சையானாள்.
அவள் உடலெங்கும் இரத்தக்காயங்கள். தலையிலிருந்து குருதி வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது.
என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூல€யில் சிதறாமல் கிடந்தது.
என் குழந்தையும் இப்படி...
என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது. உப்புநீர், சீதை சிந்திய கண்ர் மலைபோன்ற எதுனூடே சென்று எங்கோ அடைந்ததாம். எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி வர்ணிப்பானோ தெரியாது.
ராமாயணத்தை சுவைபடி விளக்கிய ஆசிரியர் சபாரெட்ணம் என் விழிமுன் வந்து போனார்.
எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன.
என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும் சென்றார்கள்.
என்னைக் கைத்தாங்கலாய் கூட்டுச்சென்றார்கள்.
நேரம். அதிகாலை நான்கை நகரவைத்தியசாலைக்குள் காட்டியது. எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்து நாளைக்கு எழுதப்பட்டது. கூடவே உடற்சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது. மனைவியைவிபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள் கடுமையாக குண்டடி பட்டுவிட்டாள்.
நான் 'என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ' என்று ஏங்கித் தவித்தேன்.
மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்து கொள்ள எனக்கு உணர்வும், உடல் இயக்கமும் இருந்தது.
என்ன பாவம் செய்தேனோ தெரியாது!
புண்ணியம் செய்திருந்தால் கூடவே, நானும் போயிருப்பேன். இப்போது நான்...
இருள் விடிந்து காலை மணி ஏழாகியது.
என் உடலில் வலுவிருந்தது.
வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத்துண்டு வழி வகுத்தது. அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தளத்திற்குச் செல்லக் கிளம்பினேன்.
வழியில் ஞானம் எதிர்ப்பட்டான்.
'என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுக்கள்?'
நான் மௌனமாகியிருந்தேன்.
'மச்சான் போன மாதம் வேண்டின ஆயிரத்தையும், தாவன்ராப்பா. வீட்டுக்காரர் கொழும்பில வந்து நிற்கினம். இப்ப அவையளோட ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கேதான் நீயும் கடவுளேயெண்டு நேரில வாறாய். காசைத் தாவன்ரா...'
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக
மாவீரம்போகு தென்று விதை கொண்டோட
வழியிலே கடன் காரன் மறித்துக் கொள்ளச்...
வேலை போகுதென்று மருத்துவ விடுப்புக்
கொண்டோட
வழியிலே கடன் காரன் மறித்துக் கொள்ளச்
சாவீடு என் வீட்டில் நிகழ...
நான் விழி பிதுங்கி நிற்க...
ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை. பத்தாண்டுகளுக்குப்பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில் அவன் தன்னை மறந்திருந்தான்.
'பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன், 'என்றேன்.
'சரி மச்சான்,' ஏதோ சிந்தனை வயப்பட்டவனாய் விடை பெற்றான்.
அவனைப் பிரிந்து கிளம்பினேன்.
வானம் அழத் தொடங்கியது.
குண்டுச் சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின எனக்கு.
நிம்மதி இல்லை.
என் மழலை பற்றிய கனவுகள்...
வாழ்வின்மீது வெறுமை கவ்வியது.
வேல ஏன்?
மருந்து விடுப்பேன்?
எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன!
பொன் எழில்கொள் மேனியைக் கண்ணநீரினால் கழுவி ஆடுவேனோ?
மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன். என் செல்வத்தின் எழில் முகத்தைப் பார்க்க மனம் அவாப்பட்டது.
அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி.
கண்கள் மீண்டும் மலர்ந்தான்.
விழி நீரினூடே அவன் மலர்ந்தான்.
விழி நீரிலாட அவன் மலர்ந்தான்.
குயிலும் கரும்பும் செழுந்தேனும்
குயிலும் யாழும் கொம்பாகும்
அயிலும் அமுதம் சுவைதீர்த்த
மொழியைப் பிரிந்தான் அழியானோ!...
சீதைக்கும் இராமனுக்குமா இது பொருந்தும்?
எனக்கும்தாம்!
என் மழலையை எந்தச் சவக்காலைக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள்? மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன. இரத்தம் ஏற்றினார்கள்.
எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளஸ்மா மூலம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன்.
டாக்டர்கள் கேட்கவில்லை.
அவள் நிலைமையை நானறியேன்.
ஓடினேன். ஓடினேன், என் குழந்தை நினைவால்...அவள் நினைவால்! வைத்தியசாலை அண்மித்தது.
என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத் தலைகள் தென்பட்டன.
'என்ன தம்பி உமக்கு இப்படி...?' பெரியவர் ஒருவர் நா தளதளக்க கேள்விக்குறியால் ஆறுதல் படுத்தினார். ஞானமும் மௌனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான். மனைவி கோமாவில் இருந்தாள்.
நான் தலைமை வைத்தியரிடம் என் மழலை பற்றிய விபரம் அறியச் செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச் சென்றேன்.
என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய் சொன்னார்கள். பதில் கிடைத்தது.
தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது....மீண்டும்.
அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
பஸ்.டிராம். கார் யாயுமே மெதுவாகச் செல்வதாக வுணர்ந்தேன்.
இதனாற் கால்களினால் ஓடினேன். ஓடினேன்.
பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை. இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன். இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலி யெடுத்தது. மணி சுழன்றது. மால்வரை சுழன்றது. மதியோர் எண் சுழன்றது. சுழன்றது.
அவ்வெறி கடல் ஏழும் விண் சுழன்றது. சுழன்றது கதிரொடு மதியும்.. என்று கம்பன் சொன்னது போல் நான் சுழன்றேன். வாய் மட்டும் அசைந்தது.
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமைசாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ளத்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொண விருந்து வர சர்ப்பந்தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கச்
குருக்கள் வந்து தட்சனை கொடு என்றாரே
எனப் புலம்பினேன்.
எனக்கு நீர்த்தாகம் எடுத்தது. நா வரண்டு கண்கள் இருண்டன. சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என் வீட்டினிலேயே நிகழ்ந்தது. அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை.
கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள். குருக்கள் வடிவில் போன கிழமை...
அவர்கள் அவசரகால யுத்தநிதி என் விருப்பை அறியாமலே ஐந்நூறு மார்க் என எழுதி ரசீது தந்து பணம் அபகரித்தார்கள்.
இவையாவும் காட்சியுருவாகின.
கண்களை இருள் முழுமையாக கவ்வியது. நான் மூர்ச்சையானேன்.
நினைவு திரும்பியபோது ஒரு வைத்தியசாலைக் கட்டிலில் கிடப்பது புரிந்தது.
கண்ணெதிரே என் மழலை புலப்பட்டது.
விழிகளை கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன்.
கண்ர் மட்டும் நிஜமாகின.
விழிகளை இறுக மூடினேன்.
மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது. அகத்தடியான் மெய்நோக...
அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலை பார்க்கும் வரை, வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழு முயன்றேன் முடியவில்லை. உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது.
மீண்டும் என் மழலையின் பேச்சொல்லி செவிகளிற் பட்டுத் தெறித்தன.
இப்போது கண்களில் இருந்த நீர் வரவில்லை.
வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன். வானத்தில் முழுநிலவு. அது என் மழலையின் நிர்மலமான தோற்றத்தை உரித்துவைத்தாற்போல காட்டி நிற்க...
என் வாய் மட்டும் ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...? என முணுமுணுக்க விழிகள் பனித்தன.
புருஷ வீதிகள்
_________________________________________
ந. சுசீந்திரன்
_________________________________________
சோசல் காசு கிடைத்ததும் இரண்டு வைன் போத்தல் வாங்கிக் கொண்டேன். தனியாகக் குடிப்பதில் சுவாரஸ்யம் இருக்காது.
நான் முன்பிருந்த வேலையில்லாதோர் விடுதிக்கு பஸ் எடுத்துப் புறப்பட்டேன். அங்கே தோமாஸ் குப்புறப் படுத்துக் கிடந்தான். முதன் நாட்குடியின் மறுநாளைய மயக்கத்தில் இருந்து அவன் இன்னும் மீளவில்லை. இந்த அதிகாலையில் குடிக்கவும் அவன் மறுத்து விட்டான்.
பக்கத்து அறையைத் தட்டினேன். அவள் இருந்தாள். கூடவே அவள் சினேகிதியும். எனது ஜக்கட்டுக்குள் இருந்து இரண்டு வைன் போத்தலையும் வெளியே எடுத்து வைத்ததும் அவர்கள் சந்தோசப்பட்டிருக்க வேண்டும். இருவரும் ஏற்கனவே குடித்து விட்டிருந்தார்கள். நான் கொண்டு சென்ற போத்தலை மூவரும் பங்கிட்டோம்.
ஒருத்தி அழுதாள் ஏன் அழுகிறாள் என்பது புரியவில்லை. குழந்தை, சிநேகிதன், பணம், உடல், உபாதை, பயம் இவற்றில் ஒன்றோ பலவோ மையக் காரணமாக இருக்கலாம்.
குழந்தை பற்றியதாக இருக்கக வேண்டுமென்று எடுத்துக் கொண்டேன். எனக்கத் தமிழைத் தவிர எந்த மொழியும் தெரியாவிட்டாலும், ஏதோவொரு மொழியை நாம் பேசுகிறோம்.
இங்கு வந்த சிறிது நேரத்துக்குள் இந்த சிநேகிதியின் நிர்வாண உருவம்தான் என் மனதுக்குள். அவளோடு உறவுகொள்வதற்கான என் விருப்பத்தின் வெளிப்பாடுகளும், பிரயத்தனங்களும் இங்கு வந்தவுடனேயே தொடங்கிவிட்டன.
அவளும் இசைந்து கொண்டாலும் குடிப்பதை இன்னும் நிறுத்தவில்லை.
"இந்த இடம் சரியில்லை. எனக்குத் தெரிந்த இடம் நகரில் இருக்கிறது. இங்கு போவோம்! என்றான். நகரத்தின் ஜனவெள்ளத்தில் கரைந்து, விரிந்து போய்க் கிடக்கின்ற விலா எலும்புக் கட்டிடக் கோவுரங்களுக்கு முன்னாலும் பின்னாலும் மூத்திரச் சுவர்களின் ஒதுக்குப் புற வெளிகளில் எல்லாம் நாங்கள் அறிந்த முகங்கள்.
அவளால் நடக்க முடியவில்லை. தாங்கலாகப் பிடித்துக் கொண்டு நின்றேன். கையில் இருக்கும் வைன் போத்தலை மட்டும் பிடித்துக் குடிக்கிறாள். அதை வாங்கி அப்பால் எறிந்தேன். இனி அவளால் நடக்கமுடியாது. நான் விட்டால் விழுந்து விடுவாள்.
இடையே என் மனைவி குழந்தை தென்படுகின்றனர். கொழும்பின் சக்தித் தெருவொன்றின் குடிசைக்குள்...
சின்ன வயது; இயற்கை கொலுவிருக்கும் எங்கள் கிராமம்; முத்துக் கனவுகளில் நூறு வருடங்கள் நான் வாழ்ந்தேன். காலம் என்னோடு சேர்ந்து வர மறத்து விட்டது. நீங்கள் காலத்தோடு கணக்கிட்டால் நான் வாழ்ந்தது சில வருடங்கள். நானே நூறு, இருநூறு இன்னும் இன்னும் அதிகம் வாழ்ந்து விட்டேன். போதும் என்ற நினைவு என்னிடத்தில் இல்லை. என் மனைவியை எவ்வாறு பழிவாங்குவது? எத்தனை சந்தர்ப்பங்களில் அவள் என்னை மட்டந்தட்டியிருப்பாள். நான் உடைந்தேன். உருக்குலைந்தேன். என்னள் இப்போ எதுவும் இல்லை. சில கேள்விகள்?
நான் வாழ்ந்தேனா? வாழ்கிறேனா? எதற்காக? எவ்வாறு?
யாரிடம் எதற்கு நான் என்ன எதிர் பார்க்கிறேன்? என்னை ஆத்மீக உலகுக்குத் தள்ளி இன்னும் இன்னும் பிரயோசனமற்ற மனிதனாக்கப் பார்க்கிறீர்கள்!
கடவுளைப்பற்றி நினைத்தறியாத என் மனதிற்கு மனத்தின் ஆழங்களைப்பற்றி அறியவும் வாய்ப்பின்றி எதுவும் புரியாமல் நட்ட நடுத்தெருவில் நடுநிசியில் நிரந்தரமாக்கி சூனியப் பிரதேசம் சுழன்று என்னை எங்கே கொண்டு செல்லப் போகிறது?
உங்களோடு ஏன் வந்து உறவுகொண்டேன்? நான் உறவு கொண்டால், என்னை ஏன் உங்கள் உலகிற்காக உருமாற்றம் செய்தீர்கள்? விடுதலையும் தருவதில்லை, விடியவும் விடுவதில்லை. ஏன் இந்த மூர்க்கவதை! வதைக்கும் உலகில், உங்கள் உலகில் உறவு, உண்மை, வாழ்வு, மரணம், பிறப்பு இவையெல்லாம் என்ன கருத்தைக் கொடுக்கிறது?
ஆயிரம் மனிதர்கள் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். எங்கிருந்து வந்ததுஎனக்கிந்த வல்லமை! அவளை எப்படியோ நகர்த்தி இரண்டொரு வீடு தள்ளி வீதியோரத்தில் கிடத்தினேன். அது ஒரு வீட்டின் கதவோரம். ஆடைகளைக் கழற்ற முடியவில்லை; கிழித்தேன்...
ஜன்னல் வழியாக ஒருவன் பெரிதாகச் சத்தம் போடுகிறானா?
இப்போது என் ஆசையின் வெறி தீர்கிறது. உலகைப் பொசுக்கும் உணர்வு போய்விட்டது; நான் மனிதனல்ல என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். மனிதர்கள் சத்தம் போடுவது இப்போது கேட்கிறது...
எங்களைச் சுற்றி பொலிஸ் வாகனங்களும், கொஞ்சம் மனிதர்களும். அவள் நிலத்தின் குளிரில் விறைத்துப் போய்விட்டாள். விறைத்த அவளது உடலை வாகனத்தில் ஏற்றுகிறார்கள்.
"உனக்கு அடிக்கவேணும். ஆனால்..." என்று ஒரு பொலிஸ்...என்னை அந்தப் பொலிஸ்காரர்கள் துரத்தி விட்டார்கள்.
அவள் இறத்திருக்கமாட்டாள்.
ஆண்பிள்ளை
___________________________________________
தேவா
___________________________________________
பாமினிக்கு லேசாய் இடுப்புவலி இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள். 'இவருக்கு சாப்பாடு கொடுத்து விடவேண்டும்' பொறுப்பு அவளை வருத்தியது. இரண்டு பேரே நிற்க கூடிய அந்தக் குசினியுள் அவள் அடுப்பைத் திறந்து அரிசியை கழுவி, குனிந்து பாத்திரங்களைத் தேடி...'என்ன செய்கிறீர்? எனக்கு நேரமாயிட்டுது...' கணவன் குளியல் அறையில் இருந்து குரல் கொடுக்கிறான். 'என்னை என்ன சொல்லுறியள்? உவளெவயிட்ட உதவி செய்யச் சொல்லுங்கோவன் நானே கிடந்துசாகிறன்...'
இடுப்புவலி இன்னும் கூடவே வருத்தியது பாமினியை. 'உன்ர பெட்டையள்தானே நீ வளத்த வளப்பு! வாங்கடி இங்க கொம்மாவுக்கு எதென்டாலும் உதவி செய்யுங்களடி' என்று மோகன் குரல் கொடுத்தான்.
ஒருத்தி மட்டும் குசினியை குசினியை எட்டிப்பார்த்தாள். கடைசி மகளின் நிழலைக் கண்ட பாமினிக்கு எரிச்சல் கூடியது. 'இஞ்ச பாருங்கோவன். குமரிகள் எல்லாம் ரிவி பாக்கு துகள்...சின்னப் பெட்டையை மட்டும் இங்க அனுப்பியிருக்கிறாளவை...'
அடி ஏச்சு அழுகை இவையெல்லாம் ஒன்று திரண்டு சுவர்களில் முட்டி மோதின. ரி.வி. நிற்பாட்டப்பட்டது. எல்லாப் பெண்களுமே ஓடிப்போய் பெற்ரூமில் மறைந்து போனார்கள். ஒருத்தி மட்டும் அம்மாவிடம் வந்தாள். 'என்ன செய்யச் சொல்லுறாய்?' அவள் முழுக்கோபமும் அம்மாவின் இருந்தது. 'தேங்காயைத் துருவித்தாவனடி' ஜெர்மனிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தேங்காய்ப்பால் விட்டுக்கறி சமைத்துத் தந்துவிடும் பெருமையைப் பெரிதாகவே சிநேகிதிகளிடம் சொல்லிக்கொள்வாள் பாமினி.
'நான் அங்க மாடு மாதிரி பாடுபடுறன் இதுகள் படம் பார்த்துக்கொண்டு திரியுதுகள். இதுகளுக்காக நான் மாஞ்சு போறன்...இதுகள்' மோகனுக்கு எதில் ஆத்திரம் என்று தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.
கணவனுடைய சாப்பாட்டைக் கரியலில் போட்டு மூடும் போதே, பாமினிக்கும் அவன்பால் மிகவும் பரிவு ஏற்பட்டது. 'பாவம் மனிசன்...எங்களுக்காத்தானே இப்பிடி அவதிப்படுது? ஐஞ்சு பெட்டையளுக்கும் எனக்கும் அழைக்கிற தெண்டால்...சும்மாவே? அந்த வெக்கேக்க வேலை செய்திட்டு வருது பாவம்...இந்த மனிசனும் என்ன மாதிரி உடைஞ்சிட்டுது?'
'நானுந்தான் இந்தக் குளிர் நாட்டுக்கு வந்து பாத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வருஷத்துக்கு இந்த மனிசனுக்கு நாலுகிழமை லீவு எண்டுதான் பேர். ஆற அமரபடுத்து எழும்பவும் எண்டு இருந்தால்தானே...எவனும் வந்திடுவாங்கள். பார்ட்டி எண்டு இரவு பகலாய் கூத்துத்தான் ம்...கஷ்டப்பட்டு உழைக்கிறதுகள்...வாடி! இஞ்ச கமலா சப்பாத்தைக் கொண்டு வா...'
அப்பா வீட்டைவிட்டு வெளியேறினால் போதும் என்ற அற்ப சந்தோஷத்தில் சின்னவள் சப்பாத்து, மேஸ் கொண்டுவந்து தந்தாள். மோகன் கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறியதுதான் தாமதம். மூத்தவள் ஓடிவந்து ரிவியைப் போட்டாள். மற்ற நால்வரும் ஓடி வந்து தங்கள் இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.
பாமினியின் இடுப்பு வலி குறைந்த மாதிரி இருந்தது. அவளும் வந்து வசதியாக உட்கார்ந்து கொண்டாள். 'என்ன நடந்தது இடையில நான் பாக்கேல்ல ரிவைன்ல விடன்' 'நீங்கதான் அப்பாட்ட கோள்முட்டி விட்டனீங்க...'கடைசிப் பெட்டை வாயாடி என்று பெயரெடுத்தவள். பாமினி கள்ளச் சிரிப்புச் சிரித்தாள். 'உண்மைதானே! உதவி செய்தால் தானே சாப்பிடலாம். படமும் பார்க்கலாம்.'
'தெரியும் எங்களுக்கு. இண்டைக்கு எங்களுக்கு பாண்தானே.'
'பெரிய சமையல் ஏன் உங்கட கொப்பருக்குச் சமைச்சுக் கொடுத்துவிடேல்லையே? உழைக்கிற மனிசன். வரட்டும் சொல்லித்தாறன்...'
இந்த ஆயுதம் ஒன்றுதான் பாமினிக்கு எப்போதும் உதவிக்கு வரும். அவள் பேச்சை இந்த ஐந்து பெண்களும் கணக்கெடுக்கவே மாட்டார்கள். இப்படி நடப்பது ஜெர்மனிக்கு வந்துதானா? இல்லையே...
அதுவும் ஒரு படுக்கையறை. ஒரு வசிப்பறை. குளியலறை. குசினி. இதற்குள் ஐந்து பெண்களும் தானும் கணவனும் நடத்தும் வாழ்க்கை பாமினிக்கு பல சமயங்களில் வெறுப்பூட்டும். 'ச்..இதென்ன...விசர்வாழ்க்கை...' என அலுத்துக் கொள்வாள். இதுக்கிடையில் இன்னொண்டு, அவள் படம் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனம் என்னவோ அசைபோட்டுக் கொண்டிருந்தது. 'நான் வேணாம் எண்டன். இந்த மனிசன் கேட்டால்த்தானே' ஐந்துபெட்டைக்கு பிறகெண்டாலும் ஒரு பொடியன் வேணுமாம்.
* * * Paniyum 8-ன் தொடர்ச்சி * * *
இந்தச் சமயத்தில் அவளைப்பயம் பிடித்துக்கொண்டது. குசினிக்குப் போய் ஒரு கோப்பி குடித்தால் நல்லது போலிருந்தது. வயிற்றுக்குள் என்னென்னவோ நடந்து கொண்டிருந்தது. 'எங்க போறீங்க? மறுபடி ரிவைன் பண்ணமாட்டம்....இருந்து பாருங்கோ' ஒருத்தி கத்தினாள்.
இந்தச் சமயத்தில் அவளைப்பயம் பிடித்துக்கொண்டது. குசினிக்குப் போய் ஒரு கோப்பி குடித்தால் நல்லது போலிருந்தது. வயிற்றுக்குள் என்னென்னவோ நடந்து கொண்டிருந்தது. 'எங்க போறீங்க? மறுபடி ரிவைன் பண்ணமாட்டம்...இருந்து பாருங்கோ' ஒருத்தி கத்தினாள்
பாமினியின் பயம் ஒரு கோப்பி குடிப்பதனால் போய் விடுமா? மனசு புறுபுறுத்தது. இந்த மனிசன் விடியவும் சொல்லிப்போட்டுது...இந்த முறையும் பெட்டை யெண்டால்! ஆசுப்பத்திரிக்கு உன்னைப் பாக்கவும் வரமாட்டன்.
'அதுக்கு நான் என்ன செய்யிறது? உங்களையெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு காசு செலவழிச்சு கடன் வாங்கி எடுத்திருக்கிறன்.'
பாமினியால் இதற்கும் ஆண்பிள்ளைக்கும் என்ன 'சம்மந்தம்' என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. 'அவருக்கும் ஆசைதானே. எல்லாம் பெட்டைகளாய் பிறந்திட்டுதுகள். பெடியன் ஒண்டு வேணுந்தானே...
இந்த மனிசன் சொன்ன மாதிரி ஆசுபத்திரிக்கு வராமலும் விட்டிடும். அங்கு ஒரு இளவும் எனக்கு விளங்காது...'
'எனக்கு உக்காந்து நிம்மதியா எண்டாலும் இருக்கேலாது. இஞ்சபாரன் வயித்துள்ள உதைநடக்குது. ஓடி விளையாடுது.'
இரண்டாவது மகள் மட்டும் அம்மாவை ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் படத்தில் லயித்து விட்டாள். இந்த முறையும் பெட்டை பிறந்திட்டால்?...இவள் மூத்தவளுக்கும் அப்பிடி இப்பிடி எண்டு கொஞ்சம் டொச்கதைப்பாள். நான் எப்படி இதுகளை சமாளிக்கப் போறன்? கடவுளே! எனக்கு இந்த முறை எப்பிடியெண்டாலும் ஒரு ஆண்பிள்ளை பிறக்கவேணும். ஊரில்ல இருக்கிற அம்மனுக்கு வைச்ச நேத்திக்கடனை எப்பிடியும் முடிப்பன்.
இன்னும் நாலு கிழமைக்குள் பிள்ளை பிறக்கும் என்று டொக்டரும் சொல்லிப் போட்டார். டொக்டர் சொல்றதெல்லாம் இதுக்கு விளங்குதோ? எல்லாத்துக்கும் தலையாட்டிப் போட்டு வரும். இஞ்ச என்னட்டைத்தான் எல்லாப் போடும் போடுவார்.
'மூடுங்கடி ரி.வி.யை. ஒரே பாத்தபடி. படிக்கிறதில்லையோ?' பாமினிக்கு எல்லாவற்றிலும் வெறுப்பு வந்தது. இந்தப்பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாய் இருக்கிறார்கள். எதற்கோ எல்லாப் பெண்களும் சேர்ந்து சிரித்தார்கள். அவள் வார்த்தையை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை.
'இப்ப மூடப்போறீங்களோ...இல்லையோ...? கொப்பர் வரட்டும் சொல்லித்தாறன்.'
'கொப்பிய நாளைக்கு மாமா வந்து திருப்பிக் கொண்டு போடுவார். பாத்துப் போட்டுத்தாறன் எண்டு நீங்கதானே வேண்டினியள்...' வந்த எரிச்சலில் பாமினி, ஓம்.ஓம். பொழுது விடிஞ்சா உங்களுக்கு படம் தான்' என்றவளுக்கு படுத்தால் தேவலை என்றிருந்தது.
நீண்டு கிடந்த மூன்று கிழமைக்காலம் அவளுக்கு பெரிய பாரத்தைத் தந்தது. பெட்டையாய் பிறந்திட்டால்...ஊருக்கு போயிடுவன் இஞ்சை இருந்து என்ன செய்ய? ஒரே நோயும் குளிரும் தான். இந்த மனுசனும் பத்து வருஷமாய் உழைச்சு என்னத்தைக் கண்டது? பேசாம அங்கேயே இருந்திருக்கலாம். இடுப்புவலி வருகிற மாதிரி இருந்தது. புரண்டு படுத்தாள். இன்னும் நாள் கிடக்குதானே ஆம்பிளையெண்டால் முந்திப் பிறக்கும் எண்டு சொல்லுவினம்.
அவனுக்கு சில சமயம் சந்தோஷமாயும் இருந்தது. அந்த மகிழ்ச்சியில் உறங்கிப் போனாள். அவள் கணவன் வந்து தனது பக்கத்தில் படுத்துக் கொண்டதோ, தனது பெண்கள் சாப்பிட்டதோ அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
அவள் விழித்து எழுந்திருக்க முயற்சி செய்த போது வயிறு மீண்டும் பாரம் கூடினமாதிரி தெரிந்தது. பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது மோகனும் எழுந்துவிட்டான்.
'இண்டைக்கு டொக்டரிட்ட போவேணும் தெரியும் தானே?' பாமினியின் குரல் ஒரு எதிர்ப்பார்ப்போடு இருந்தது.
'இவள் மூத்தவளை கூட்டிக்கொண்டு போவன். நான் லீவு எடுக்கேலாது'
'நேற்றும் எனக்கு சாடையா வலிவந்திட்டுது. சில வேளை ஆம்பிளபிள்ளையோ?' அவன் முகத்தை ஆவலோடு பார்த்தாள் பாமினி. 'பார்ப்போம் உம்மட லக் எப்பிடி எண்டு. நான் சொன்னபடி செய்வன். உமக்கு ரெண்டு பவுண் கொடியில போட வாங்கித் தருவன்' கணவன் கண்களைச்சிமிட்டி சொன்னபோது அவளுக்கு பெருமையாய் இருந்தது.
'ஆண்பிளபிள்ளைதான்...'
'சரி சரி தேத்தண்ணியகொண்டா. பகல் ஷ’ப்ருக்கு போக முந்தி இன்னொரு நித்திரை கொள்ளவேணும்.'
'இஞ்ச பாருங்கோ. பருப்பு, மரக்கறி வேண்டவேணும். காசை தந்திட்டு போய்ப்படுங்கோ.'
'காசு காசு எண்டுதான் அழுவியள், பாங்குக்குத்தான் போகவேணும்' அவன் சேட்டை மாட்டிக் கொண்டு போகும்போது பாமினி நினைத்தாள்.
பாங்கில காசை எப்படி எடுக்கிறதெண்டு காட்டி குடுத்தால் நானும் போய் எடுப்பன் தானே?...தானும் பத்தும் ஐந்தும் ஆக வீட்டுச்செலவுக்கு கொடுக்கும் காசில் பிச்சம் பிடித்து வருவது இவருக்கு எங்கே தெரியப் போகிறது? இவர் பத்து வருஷமா உழைச்சவராம்! என்னத்தைக் கண்டார்? நான் வந்து அப்பிடி இப்பிடி எண்டு ரெண்டு செயின் வாங்கிப் போட்டன். இவ்வளவு காலத்துக்கு நான் எண்டா எவ்வளவு சேத்திருப்பன்? பாமினிக்கு கொஞ்சம் அலைந்து திரிந்தால் தேவலை போலிருந்தது. வயிற்றுப்பாரம் முட்டிமுட்டி நெஞ்சுக்கு ஏறிக்கொண்டு இருந்தது. இந்தக் கிழிமை பிறந்திட்டா.
அவள் நினைவுகள் தன் கணவன் விருப்பு வெறுப்புகளிலேயே நிலைத்தது. சில வேளை பிறந்திட்டால்...தன் மீதே வெறுப்பு வளர்ந்தது. பின்நேரம் டொக்டரிட்ட போகாமல் விட்டால்தான் என்ன...? ஒழுங்காய் செக் பண்ணினால், தானாமே ஏதோ உதவிக்காகம் கிடைக்குமாம். இல்லாட்டி இவரும் பேசுவார். போகத் தான் வேணும். இந்த மனிசன் வரமாட்டுதாமே...இவள் மூத்தவளைத்தான் கூட்டிக் கொண்டு போவம்.
அவளும் எவ்வளவு நாளா கேட்டு கொண்டிருக்கிறாள். றேடியோவுக்கு பற்றிரி வேணுமேண்டு, அது வேண்டி கொடுத்தாத்தான் வருவாள். இவரிட்ட கேப்பம். கதவு திறப்பப்படும் சத்தம் கேட்ட மோகன் திரும்பி விட்டான். 'இடுப்புவலி சாடையா வந்தபடியால் இண்டைக்கு டொக்டரிட்ட போ.''நீங்க வாங்கோவன் லீவு போட்டுட்டு' அவனுடைய அன்பைத்தேடி அலைந்தது அவளது ஆத்மாவும் கூட..'உமக்கென்ன விசரே எத்தனை பெட்டயள பெத்திட்டீர். இன்று...நான் லீவு போட அவன் என்ன மச்சானா...காசை அவள் கையில் திணித்துவிட்டுப் படுக்கப்போய் விட்டான். பாமினிக்கு உலகமே வெறுத்துப் போனது. பேசாம ஊரில் கிடந்திருக்கலாம்.
மகளை இழுத்துக்கொண்டு போனாள் டொக்டரிடம்.
அங்கே பரிசோதனையின் பின் வெளியில் நின்ற மகள் உள்ளே வந்தாள். 'உங்கள இப்பவே ஆசுப்பத்திரிக்கு போகட்டாம்...' பாமினியின் கால்கள் பலமிழந்து போயின. 'நான் போகேலாது. நாள் கிடக்குத்தானே. சொல்லன்?' மகள் திரும்பி இவளிடமே வந்தாள், 'அவளவ சொல்லினம் உங்கள ஆசுபத்திரிக்குப் போகட்டாம்...'
'அப்ப கொப்பருக்கு யார் சொல்லுறது? என்ற துணி மணிகள் எப்பிடி எடுக்கிறது?'
'நான் கொணந்து தாறன். வாங்க போவம் ஆசுப்பத்திரிக்கு.'
பாமினிக்கு முழு உடம்பும் நடுங்க ஆரம்பித்தது. தன் உடம்பு ஏன் இப்படி பாரமாகிப் போனது? கால்கள் அடியெடுத்து வைக்கவே மறுத்தன.
'பின்ன இண்டைக்கே பிறந்திடுமோ? இந்த மனுஷன் என்னைத் தேடி பார்க்கவருமோ...' எல்லாம் வெள்ளையாய் வெறுமையாய் தெரிந்தது. கட்டிலில் ஏறிப்படுத்தது மட்டும் தெரியும். ஒன்றையும் யோசிக்க முடியவில்லை. தான் செத்துப் போய் விட்டால் என்ன என்ற நினைப்பு மேலோங்கி நின்றது. பாமினி நினைவிழந்தாள்.
யாரோ தொட்டு தன்னை எழுப்பின மாதிரி இருந்தது... மோகனின் சிரித்த முகம் அவள் கனவில் வந்த மாதிரி தெரிந்தது. வயிற்றை தொட்டுப் பார்த்தாள். பாரம் குறைந்து சுருங்கி இருந்தது.
'பிள்ளை எங்கே...?' அதிர்ச்சியடைந்து போன பாமினியை மோகனின் கரங்கள் சமாதானப்படுத்தின. பக்கத்துத் தொட்டிலில் ஒரு சின்ன ஜ“வன் உறங்கிக் கொண்டிருந்தது.
...பனியும்
_____________________________________________
ஜ“வமுரளி
_____________________________________________
பனைகளுக்கும், பனம்பொருளின் மகிமைக்கும் புதிய பரிமாணம் கண்டது பருத்தித்துறை. அங்கிருந்து சென்ற எனது நண்பன் கைக்கல். அமெரிக்காவுக்குப் பக்கத்திலுள்ள கனடாவைக் கண்டுபிடித்தான். அதற்கு அத்தாட்சியாக மூன்று ஹைகூ கவிதையொன்றை அனுப்பியிருந்தான்.
நிலவை உடைத்தேன் ஆவல் மீற
உள்ளிருந்ததோ
இருளின் கண்கள்
ஐரோப்பாவிலிருந்து சென்ற கொலம்பஸ் அமெரிக்காவைக் 'கொன்று' பிடித்த ஐநூறு ஆண்டுகளின் பின்தான் நான். ராஸ்தா, அல்போன்ஸ், சிரி, யூனா எல்லோரும் ஐரோப்பாவைக் கண்டு பிடித்தோம்!
ஜேர்மனியை நாங்கள் கண்டுபிடித்த பின்புதான் சிறைக்கைதிகளாக்கப் பட்டோம். ஜேர்மனி, டொச்லாண்ட் என்ற பொருளில் துப்புரவு செய்யப்பட, நாங்கள் வீசி எறிவதற்கொப்பான குப்பைகளானோம்.
யூதர்களின் அவலச்சுவடுகள் மீண்டும் மிதந்து வர நாங்கள் சிறையினுள் ஒடுங்கியிருந்தோம்.
நான் இலங்கையன். ராஸ்தா, அல்போன்ஸ், சிறி, யூனா ஆபிரிக்கர்கள், முறையே நைஜ“ரியா, எபறிக் கோஸ், கம்பியா, லைபீரியாவைச் சேர்ந்தவர்கள். பின்பு சல்வத்தோறையும் வந்தான். அவன் இத்தாலியன்.
பழைய சிறை துப்புரவு செய்யப்பட்டதன் பெயரில் கைதிகள் வெவ்வேறு நகரங்களிலுள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். பழைய சிறை இனி ஜேர்மனியக் கைதிகளுக்கு மட்டுமே என்று பேசப்பட்டது.
ராஸ்தாவும் நானும் இன்னும் சில கைதிகளும் பஸ் ஒன்றில் ஏற்றப் பட்டோம். அது நான்கு பேர் கொள்ளக் கூடிய குட்டி அறைகளைக் கொண்ட நீண்ட பஸ்.
ராஸ்தா, நான், இரண்டு யூகோஸ்லாவியர்கள். இந்த நால்வரும் பஸ்ஸ’ன் குட்டிச்சிறை ஒன்றுக்குள்ளிருந்தோம். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. ராஸ்தா கதைத்துக் கொண்டிருந்தான். அவன் எங்கள் மூவரில் யாருடனும் பேசவில்லை. யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தான். இரண்டு மாதங்களின் பின்னர் பஸ்ஸ’ன் சிறிய கண்ணாடி வழியாக மரங்களைப் பார்க்க முடிந்தது.
ராஸ்தாவுக்கு அலட்சியமாய் விடப்பட்ட சுருண்ட கட்டையான தாடி. கீழ்வாய் உதடுகளை முட்ட எத்தனிக்கும் மீசை. பிரித்தெடுக்க முடியாத ஒன்றுடன் ஒன்று ஒட்டிப்போன நீண்டு சுருண்ட தலைமுடி. அவன் பெயர் றொபேட் ராஸ்தா என்றே அழைத்தேரம்.
அவன் யாரையும் லட்சியம் செய்வதாயில்லை. தொடர்ந்து கதைத்துக் கொண்டும், இடையிடையே திட்டிக் கொண்டுமிருந்தான். நிறுத்தவில்லை. உயர்ந்த கடவுளிடமும், தன் ஆத்மாவுடனும் பேசிக் கொள்கிறானாம். அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டான். கைதிகள் எல்லோரும் இவன் கிறுக்கன் என்றே பேசிக் கொண்டனர்.
காற்சட்டைப் பையில் கையை விட்டு ஏதோ தேடிக் கொண்டிருந்தான். ஒன்றும் அகப்படவில்லை. குனிந்து, பொலித்தீன் பாக் எடுத்தான். அதிலிருந்து காகிதச் சரையொன்றை எடுத்தான். மோசமான நெடி. ஒட்டி உறிஞ்சி வீசப்பட்ட சிகரட், ரபாக் அடிக்கட்டைகள். ஒரு விரல் நீளமான காகிதம் ஒன்றைக் கிழித்து, அதன்மேல் ரபாக் தூள்களை உதிர்த்து புதிய ரபாக் சுருளொன்றை தயாரிக்க முயன்றான்.
'ஏய் ராஸ்த்தா! அதை வீசு...இந்தா...' என்று ஒரு சிகரெட்டை நீட்டினேன். பற்ற வைத்துக்கொண்டான். க்ளுக்...க்ளுக் ஒரு விக்கல் சிரிப்பு. அவன் விக்கல் சிரிப்பு எப்பொழுதும் முப்பது வினாடிகளுக்கு குறையாது. எனது உடுப்புக்கள் இருந்த 'பாக்'கின் மேல் ஒரு அப்பிள். அதை அடிக்கடி பார்ப்பதும் சிரிப்பதுமாக விருந்தான்.
'ஏய்! இந்த அப்பிளை எனக்குத் தருவாயா?'
'தாராளமாக, இந்தா எடுத்துக்கொள்' என்றேன்.
அப்பிளைக் கடித்தபடியும் புகைத்தபடியும் பாடத் தொடங்கினான். அது ஓர் ஆபிரிக்கப் பாட்டாக இருக்க வேண்டும்.
'ஒப ஒப நம் கிம் கொ...ஒப ஒப ம் கிங் கொ...'
யூகோஸ்லாவியர்கள் இருவரும் கை தட்ட, நான் பஸ்ஸ’ன் சுவரில் தாளம் போட அவன் தலையையும் தோள்களையும் ஆட்டி பாடிக் கொண்டிருந்தான்.
இடையில் பாட்டை நிறுத்திவிட்டு 'ஏய்!ஏய்!' என்ற படி என் தோள்களைத் தட்டினான். 'ஏய்...அப்பிள் அப்பிள்...'
'என்னிடம் ஒன்றுதான் இருந்தது. அதைத்தான் தந்து விட்டேனே' என்றேன்.
'அது, இல்லை...அப்பிள்...அப்பிள்...உனக்குத் தெரியுமா?'
ஒரு வார்த்தையை இரண்டு தடவைகள் உச்சரித்தான். சிலவேளை நான்கைந்து தடவைகள் கூட உச்சரித்தான். எங்கள் மூவரில் ஒருவர்க்கும் ஒன்றும் விளங்கவில்லை.
'ஓம்...அ பிள்...அப்பிள்...' என்று தனக்குள் பேசினான்.
தலைக்கு மேல் வலது கையை உயர்த்தி விரலைச் சுரண்டியபடி, 'உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா?...அ..ஆ...ஆண்களும் ஆண்களும் தங்களின் அன்பை தெரிவிக்க அப்பிள் பரிமாறிக் கொள்ளலாம் என்ன?...இது நல்ல விசயம்...இது நல்ல விசயம். அது தான் சரியானது... அது சரியானது' என்ற படி மீண்டும் பாடத் தொடங்கினான்.
நான் யன்னலின் சிறு கண்ணாடி வழியாக மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் என்னைச் சுரண்டினான்.
'ஏய்...தக்காளி...தக்காளி...'மீண்டும் தலைக்கு மேல் வலது கையை உயர்த்திச் சுண்டியபடி, 'பெண்களும்... பெண்களும் தங்களின் அன்பை தெரிவிக்க தக்காளி பரிமாறிக் கொள்ளலாம் என்ன! இது நல்லது... இது நல்லது...'பாடுவதுபோல சொன்னான்.
'இனிமையான விசயம்... இனிமையான விசயம்...அ.ஆ..' மீண்டும் நீண்ட விக்கல் சிரிப்பு. வெள்ளை பற்களும் வெளிச்சமான கண்களும்.
நானும் அவன் கூற்றிற்கு தலையாட்டிவிட்டு 'மனிதர்களும் மனிதர்களும் தங்கள் அன்பைத் தெரிவிக்க கோதுமையும் அரிசியும் பரிமாறிக் கொள்வதில் தடைகள் விழுந்து விட்டனவே!' என்று கவலை தெரிவித்தேன்.
'அ...ஆ..நீ மனிசன்...நீ சரி...' என்றபடி பொலித்தீன் பையிலிருந்து சில காகிதங்களையும் டைம் சஞ்சிகை ஒன்றினையும் எடுத்தான். சஞ்சிகையின் அட்டைப்படத்தில் உள்ள புஷ்ஷ’ன் தலையிலும், கிளின்டனின் தலையிலும் 'புள்ஷ’ட்' என்று எழுதப்பட்டிருந்தது. காகிதங்களில் தாறுமாறாக எழுதியிருந்தான்.
தான் நினைத்ததை உச்சரித்தபடியே உயர்ந்த கடவுளரையும் ஆம்மாவையும் நோக்கி அவர்களுடன் பேசியபடியே எழுதத் தொடங்கினான்.
'உனக்குத் தெரியுமா...உனக்குத் தெரியுமா?... எனக்குத்தெரியும். இந்த வெள்ளையர்களின் இனவெறி எந்தளவு என்று எனக்குத் தெரியும். நான் களைத்துப் போய்விட்டேன். இந்த வெள்ளையர்களினால் நான் நிறையவே களைத்துப் போய்விட்டேன். நான் வீட்டிற்கு போகவேண்டும். நைஜ“ரியா எனது வீடு. நான் வீட்டிற்கு போகவேண்டும்....'
அவன் கைகளால் மேலே எழுதமுடியவில்லை. தூஷணங்களை உச்சரித்தபடியே மீண்டும் எழுத முயன்றான். முடியவில்லை. அந்த காகிதத்தை வைத்துவிட்டு புதிய தொன்றையெடுத்து அத்தியாயம் ஒன்று, அத்தியாம் இரண்டு என்று மேலிருந்து கீழாக பத்து வரை எழுதினான்.
அத்தியாயம் ஒன்றில் ஜப்பான் என்றும், அத்தியாயம் பத்தில் உயர்ந்த கடவுள் என்றும் எழுதிவிட்டு எங்கள் மூவரையும் கூர்ந்து பார்த்தான். பின் அத்தியாயம் இரண்டில் ஜேர்மெனியென்றும், மூன்றின் இனவெறியென்றும், நான்கில் அகதியென்றும், ஐந்து ஆறு ஏழு தவிர்த்து, எட்டில் புத்தனென்றும் ஒன்பதில் அணுகுண்டென்றும் எழுதிவிட்டு விக்கி விக்கி சிரித்தபடியே, 'பைத்தியக்காரர்கள்...பைத்தியக்காரர்கள்...' என்றான்.
நாங்கள் அடுத்த சிறையையும் வந்தடைந்துவிட்டோம். ராஸ்தாவோ ஆயாசமாய் தன் வீட்டிற்குப் போவதற்காக விமானநிலையம் வந்திருப்பதாகவே எண்ணியிருந்தான்.
ராஸ்தா எழுந்து கண்ணாடி வழியே பார்த்துவிட்டு, 'ஏய்...இது எந்த விமான நிலையம்?' என்று கேட்க, 'இது விமான நிலையம் இல்லை, இன்னொரு சிறை...' என்றேன்.
கைகளை ஓங்கி பஸ்ஸ’ன் சுவரில் குத்தினான்.
'புள்ஷ’ட்...புள்ஷ’ட்...'தன் காற்சட்டைப்பையில் மறுபடியும் கையை விட்டுத் தேடினான். ஒன்றும் அகப்படவில்லை.
பெரும் சுற்று மதில்களைக் கொண்ட மிகப் பழைய சிறை. முன்னைய சிறைக்கும் இதற்குமுள்ள வித்தியாசங்களை மிக எளிதில் தெரிந்து கொண்டோம். இது ஹ’ட்லர் காலத்துச் சுவடுகளில் ஒன்றாகவே இருந்தது. ஜேர்மனியின் எந்தச் சிறைகளும் இதுபோல இல்லை என்பது முன் அனுபவமுள்ள சல்வதோறின் கணிப்பு.
ராஸ்தாவும் நானும் தனித்தனி அறைகளில் பிரிக்கப்பட்டு விட்டோம். நேற்றும் உருளைக்கிழங்கு இன்றும் உருளைக்கிழங்கு நாளையும் அதுதான். பாண் துண்டுகள். பைப் தண்ணி. நாக்குச் செத்துவிட்டது. பூட்டுவதும் திறப்பதுவுமாக காவலாளிகள் இருந்தனர். பகல் வந்து, மறைந்து இரவுகள் மட்டுமே தெரிந்தன.
ஒவ்வொரு காலையும் ஒரு மணி நேரம் நூறு பேருக்குக் குறையாமல் சிறைக்குள் உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில் ஆட்டுமந்தைகள் போல் சுற்றி நடந்தோம். அது "விடுதலை" மணித்தியாலம் என்று சொல்லப்பட்டது. ஒரு நாளின் 23 மணித்தியாலங்கள் பூட்டிய அறையில் இருந்தோம். யூகோஸ்லாவியர்கள் ஒரு குழுவாக, பஞ்சாபியர்கள்-ஆபிரிக்கர்கள் என்றும் குழுக்களாக, நான், தனித்த ஒருவனாக. சுற்றி நடந்தோம். நான் ஆபிரிக்கர்களான அல்போன்ஸ், சிறி, யூனாவோடு இணைந்துகொண்டேன். ராஸ்தாவும் எங்களுடனேயே இருந்தான். ஆனால் அவன் உணர்ந்த கடவுளரிடமும் ஆத்மாவுடனும் பேசியபடியே தனித்த ஒருவனாகவே நடந்தான்.
சிகரெட்டுக்கும் ரபாக்குக்கும் வைரக் கல்லைக்கூட மாற்றாகக் கொடுப்பதற்கு கைதிகள் தயாராகவிருந்தனர். ராஸ்தா இன்று காலை வந்ததிலிருந்து எல்லாரிடமும் ரபாக் கேட்டுப் பார்த்துவிட்டான். கையை விரித்து விட்டார்கள்.
இடதுகையை இடுப்பில் வைத்தபடி, வலதுகையை உயர்த்தி சுட்டுவிரலைக் காட்டியபடி திட்டிக் கொண்டே வேகமாக நடக்கத் தொடங்கினான். குனிந்து ரபாக் அடிக்கட்டைகள் தேடிப்பார்த்தான். ஒன்றும் அகப்படவில்லை. அவை ஏற்கனவே பொறுக்கப்பட்டுவிட்டன.
உரத்துத் திட்டியபடியே கைகளை வீசி, வானத்தைப் பார்த்துத் துப்பி அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஜேர்மனியையும் திட்டிக் கொண்டு நடந்தான்.
அல்போன்சும் நானும் ஒரு மூலையில் குந்தியிருந்தோம். அவனிடம் நான்கு அல்லது ஐந்து ரபாக்குகள் சுற்றக் கூடிய தூள்கள் மட்டுமே இருந்தன. அதில் ஒரு ரபாக்கிற்கு அளவான தூள்களை மட்டும் வெளியே எடுத்து ஒளித்து வைத்து சுற்றினான். ராஸ்தா கண்டு விட்டு ஓடிவந்தான். அல்போன்ஸ் தன்னிடம் ஒன்றுமில்லாத போல் ஒளிக்க, ராஸ்தா கோபத்தோடு காவலாளிகளிடம் திரும்பி ஓடினான்.
'ஏய்! நான் உடனேயே வீட்டிற்குப் போகவேண்டும் நைஜ“ரியாவிற்கு-ஓம் வீட்டிற்குப் போகவேண்டும். அனுப்ப ஏற்பாடு செய்'
அவன் அதையே திருப்பி திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். காவலாளிகள் விழுந்துவிழுந்து சிரித்தனர். சககைதிகளும் வேடிக்கை பார்த்தபடி அவனுக்குகிறுக்கு என்றே பேசிக் கொண்டனார்.
அல்போன்ஸ் ஓடிச் சென்று ராஸ்தாவின் கையைப் பிடித்து குந்தியிருந்த மூலைக்குக் கூட்டிவந்து ரபாக் சுருளொன்றைக் கொடுத்தான். விக்கல் சிரிப்பும் சந்தோஷமும் பொங்க கண்களைக் கூசியபடியே சூரியனைப் பார்த்தான். ரபாக் கிடைத்த பொழுதுகளில் அவன் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தான். நான் அவனிடம் அந்த ஜப்பான் விசயத்தை பற்றிக் கேட்டேன். அவன் குஷ’யாகிவிட்டான். ஜப்பானில் தனக்கு ஐந்து காதலிகள் என்றும், அதில் இரண்டுபேர் ஜப்பானிலும், ஒருத்தி நைஜ“ரியாவிலும், மற்றொருத்தி அமெரிக்காவிலும் இருப்பதாகச் சொன்னான்.
அல்போன்ஸ் என்னைப் பார்த்து சிரித்தான்.
'ஏய்! உனக்குத்தானே அமெரிக்கா பிடிக்காது' என்றேன் நான்.
அமெரிக்கக் கறுப்பர்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், தன் காதலி ஒரு அமெரிக்க கறுப்பி என்றும் விளக்கினான்.
'ஜப்பானில் உனக்கு இரண்டு காதலிகளா?' என்றபடி அல்போன்ஸ்' கொடுப்புக்குள் சிரித்தான்.
ராஸ்தானின் குஷ’ கூடிக்கொண்டே போனது. ஜப்பான் காதலிகள் பற்றி நிறையச் சொல்லத் தொடங்கி விட்டான். நாங்கள் இருவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம். இடையில் அல்போன்சிடம் ரபாக் கேட்க, அவன் கையை விரித்தான். ராஸ்தா எழுந்து கைகளை வீசியபடி உயர்ந்த கடவுளரிடமும் ஆத்மாவிடமும் பேசியபடி நடக்கத் தொடங்கினான்.
மறுநாள் காலை "விடுதலை" மணித்தியாலம் என்று எங்களுக்குச் சொல்லப்பட்ட நேரத்தில் நான், அல்போன்ஸ், சிரி, யூனா வட்டமாய் ஒரு மூலையில் இருந்து ராஸ்தாவைப் பற்றி பேசிக்கொண்ருந்தோம். ராஸ்தா, இன்று அமைதியாகவே உயர்ந்த கடவுளரிடமும், ஆத்மாவிடமும் பேசியபடி நடந்து கொண்டிருந்தான். காரணம், யூனா தன்னிடமிருந்த காசில் ரபாக் பக்கற்றொன்றைப் பரிசளித்திருந்தான்.
ராஸ்தாவை சிறியும் கிறுக்கன் என்றே சொல்லிக் கொண்டான். நானும், அல்போன்சும், யூனாவும் மறுத்தோம்.
ராஸ்தாவைச் சுற்றி ஆறு, ஏழு பேர் நிற்க அவர்களுக்கு ரபாக் தானம் செய்து கொண்டிருந்தான். இப்ப என்ன சொல்கிறாய் என்றான் அல்போன்ஸ். சிறியோ, அவனுக்குக் கிறுக்கைத் தவிர வேறொன்றுமில்லையென்றான்.
எங்களை நோக்கி வந்த ராஸ்தா எங்களிடம் இருக்கிறதா என்று கேட்க நாங்கள் ஓமென்றோம். கையில் வைத்திருந்த ரபாக் பக்கற்றை காற்சட்டைப் பொக்கற்றுக்கள் வைத்துவிட்டு இனி என்னிடம் இல்லையாக்கும் என்றபடியே திரும்பி நடந்தவன், சில அடிகள் தள்ளி நின்று, 'ஏய்! ஆபிரிக்காவின் அதிகாரம் எங்களின் கையில் தான் கிடைக்கும். இருந்து பார், சிங்கிள் வாழைப்பழம்கூட இந்த வெள்ளையர்களுக்கு போகவிடமாட்டேன். என்றான்.
சிறியால் இந்தமுறை ராஸ்தாவிற்கு கிறுக்கென்று சொல்ல முடியவில்லை. நாங்கள் குந்தியிருந்த மதில்களில் விழுந்த வெயில் தாழ்த்து வந்தது. மேலாடைகளைக் கழற்றி வெயில் காய்ந்து கொண்டிருந்தோம். அல்போன்ஸ் ஒரு ஆபிரிக்க நடன கலைஞன். உடற்பயிற்சியால் இறுகிப்போன அவன் உடல் இங்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் சற்று தளர்ந்து போய்விட்டது. இருந்தாலும் இத்த வெயிலில் அவன் தேகமும், முகமும் பொலிவாகவே இருந்தது. தன்னளவில் தான் சுதந்திரமாகத் திரிந்ததாகவும் விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று இப்பொழுது உணருவதாகவும் சொல்லிக் கொண்டான்.
'எங்களுக்கு நண்பர்கள் இருந்தார்கள்.
நாங்கள் நண்பர்களை இழந்தோம்'
என்று பாடிக்கொண்டே அல்போன்ஸ் ஆடத்தொடங்கினான். அவன் மிகச் சத்தமாக மதில்களின் உயரத்திற்கு மேலால் பாடினான். உடல் வியர்த்துக் கொட்டியது. ஒவ்வொரு வியர்வை முத்துக்களிலும் ஒவ்வொரு சூரியன் தெரிந்தது.
காவலாளிகளில் ஒருவன் சத்தம் போட்டான். 'ஏய்! ஆபிரிக்கனா! பாடாதே நிப்பாட்டு...இது சிறை தெரியுமா? பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.'
சிறி எழுந்து நின்று சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கிவிட்டான்.
'என்ன சிரிப்பதும் வடவா?' என்றபடி காவலாளியைப் பார்த்தான்.
காவலாளி பேசாமல் இருந்து விட்டான். மறுபடி சிறி சத்தமாக குரலெடுத்து சிரித்தான்.
'சும்மா இரு சிறி...அவன் வெள்ளையன் அப்படித் தான் சொல்லுவான்' என்று அல்போன்ஸ் தடுத்தான். 'அவன் வெள்ளையன் என்றால், நான் சர்வதேசக் கறுப்பன்' என்றபடி அல்போன்ஸைப் பார்த்தான்.
'இல்லை அல்போன்ஸ், இவங்கள் எங்களை எப்பொழுதும் மனிசனாய் பார்த்ததில்லை. எப்படி மனிசனாய் இருக்கிறது என்பதுவும் இவங்களுக்கு மறந்து போச்சு. எல்லாரும் தனித்தனி "ப்ரோக்கிரட்"...'
ஜேர்மனி மேல் சலிப்பும் வெறுப்பும் மீற, கம்பியாவிற்குத் திரும்பிச் செல்வதற்காக சோஷல் அதிகாரியிடம் உதவி கேட்டு சென்றிருக்கிறான் சிறி. இவனிடம் பாஸ்போட் இருக்கவில்லை. சோஷல் அதிகாரி பொலிஸைக் கூப்பிட, பொலிஸ் வந்து, 'பாஸ்போட் தயாராகும் வரை உள்ளே இரு' என்று சொல்லிவிட்டது. அவனிடம் விசா இருந்தும், எவ்வளவு வாதாடியும், கம்பியாவிற்கு திரும்பிப் போகப் பொலிஸ் அனுமதிக்கவில்லை.
யூனாவோ லைபீரிய இராணுவம் குறித்து நடுங்கிக் கொண்டிருந்தான். இங்கு ஒரு கிராமத்தில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும், பின் பிரிந்து சென்று விட்டதாயும், அதன் பிறகு அந்தக் கிராமத்தில் ஒரு இளைஞனும் அவளைக் காதல் செய்ய வரவில்லை யென்றும், பின்பு ஒருநாள் தன்னிடம் திரும்பி வந்து விட்டதாயும், அவளின் மேல் தனக்கு மிகுந்த காதல் இன்றளவில் இருப்பதாயும், இந்த இரண்டு காரணங்களிற்காகவும் தான் வழக்கறிஞர் மூலம் வாதாடி இங்கேயே இருந்தவிடப் போவதாகவும் சொன்னான். அல்போன்சும், சிறியும் யூனாவைப் பார்த்து சிரித்தார்கள்.
'யூனா நீ இன்னும் திருந்தவில்லையா? இனியும் இங்கு இருக்க விரும்புகிறாயா!'
'நான் லைபீரியாவிற்கு போகமுடியாது. போனால் செத்து விடுவேன்' என்றான் யூனா.
'வேண்டாம், நீ ஐவரிக்கோஸ்ற்க்கு வா' என்றான் அல்போன்ஸ்.
'அதெப்படி முடியும்?' என்றான் அல்போன்ஸ்.
'அதெப்படியோ? இங்கு மட்டும் தொடர்ந்து இருக்க நினைக்காதே, உன்னை அழிக்க நினைக்காதே' என்றான் சிறி.
நானும் முழி பிதுங்க இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அல்போன்ஸ் என்னைப் பார்த்து சிரித்தபடியே, 'நீ என்ன சொல்கிறாய்?' என்றான்.
நான் யூனாவை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு, 'எனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு சென்றால், என் கடைசித் தம்பி விளையாட்டாகவே சுட்டுவிடுவான்' என்றேன். பிறகு, இராணுவம் குறித்துப் பயம் இருந்தபோதிலும், வீட்டிற்குப் போக கொள்ளை ஆசை இருப்பதைச் சொன்னேன்.
நர்ன இலங்கைக்குப் போவது ஆபத்தென்றும் இங்கேயே இருக்கவேண்டுமென்றும் வாதாடினான் யூனா.
அல்போன்சும் சிறியும், யூனா என்னைக் கெடுப்பதாகச் சொன்னார்கள்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த ராஸ்தாவை அல்போன்ஸ் கூப்பிட்டு இது குறித்து அபிப்ராயம் கேட்டான்.
'These guys ara crazy; fucking Germans I want to to home...' என்றபடி ராஸ்தா உணர்ந்த கடவுளரிடமும் ஆத்மாவுடனும் பேசியபடி மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
உருளைக்கிழங்கின் மேல் வெறுப்பு ஏற்பட்டது. பகலில் தூங்குவதும் வழக்கமாகியது. விழித்திருந்து கற்பனை செய்வதைவிட, தூங்குவது நல்லதாகப் பட்டது. தூங்கினால், கனவுகள் தூக்கத்தைக் கெடுத்து விடுகின்றன. கனவுகளிடமிருந்து தப்பித்துக் கொண்டிருந்தால் இந்தக் காவலாளிகள் கதவைத் திறந்து பூட்டும் இடியோசையும், அருகிலுள்ள சேச்சின் மணியொலியும் இம்சிக்கின்றன.
தொடர்ந்து கட்டிலில் தூங்குவதும், தூங்கமுடியாமல் படுத்திருப்பதாலும், உடல்முழுக்க வலி ஏற்பட்டது. எனக்கு வியர்த்துக் கொட்டவேண்டும். உடல் இலேசாக வேண்டும். ஒரு மாற்றத்திற்காக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்.
நாளின் ஒரு மணிநேரம் தவிர மீதியை இந்த மூன்று வாரங்களும் தனித்தே கழித்துவிட்டேன். நேற்று சர்வதோரை வந்தது நாளின் நீளத்தைக் குறைத்துவிட்டது. இரட்டையடுக்குக் கட்டிலில் எனக்கு மேல் படுக்கை. அவனுக்கு கீழ் படுக்கை. என் படுக்கையோரம் ஜன்னல். இதிலிருந்து சுற்று மதிலைத்தாண்டி வெளியே பார்த்தால், மரங்களின் உச்சியும், சேச்சின் கோபுரமும், கோபுரத்தின் மேல் யேசுவின் சிலுவையும், சிலுவையின் உச்சியில் ஒரு கோழியும் தெரியும். சேச்சின் பக்கமாக நகரின் வேலை வாய்ப்பு அலுவலகம்.
கோபுரத்தின் உச்சியைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் கோழியின் மேல் கேள்வியும், பரிதாபமும் ஏற்பட்டது. என்னைப் போல் பகலில் தூங்க முடியாது. தூங்குவது போல் பாசாங்கை வரவழைத்து, பிரண்டு பிரண்டு படுத்திருந்த சல்வதோரையைத் தட்டினேன்.
'ஏய்! அந்தக் கோழியைப் பார்த்தாயா?'
'கோழியா எங்கே' என்று திடுக்கிட்டு எழும்பினான். நான் கோவுரத்தின் உச்சியைக் காட்டினேன்.
'அதுவா...நானும் ஏதோ உண்மைக் கோழி என்று நினைத்துவிட்டேன். மக்டொனாஸ்டிலிருந்து தப்பி வந்திருக்கும் என்று...'வாக்கியத்தை முடிக்காமலே திரும்பிப் படுத்துவிட்டான்.
நான் என் படுக்கையிலிருந்தபடியே அந்தக் கோழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மாறுதலுக்காக திரும்பினால் வானம் தெரியும்.
சேச்மணி ஒலிக்கத் தொடங்கியது. குறைந்தது பத்து நிமிடங்களாவது இந்த ஒலியைச் சகித்தாக வேண்டும். சல்வதோரை 'இது வேற சனியன்' என்றபடி கட்டிலை விட்டு எழும்பி, இந்தச் சிறிய அறைக்குள் மாறி மாறி நடக்கத் தொடங்கினான்.
நான் அந்தக் கோழியைப் பார்த்தபடியே இருந்தேன்.
'என்ன கோழி பறந்துவிட்டதா? இருக்கிறதா?' என்றான் சல்வதோரை.
'அது அங்கேயே நிற்கிறது' என்றேன் நான்.
'ஏய் அந்தக் கோழியும் என்னைப் போல் தஞ்சம் கேட்டிருக்குமா பார். அதற்கு சிறகுகளைக்கூட காணவில்லை. அந்திரத்தில் வேறு நிற்கிறது. அதை இறக்கிவிட்டால் என்ன?' என்றபடி சல்வதோரையிடம் திரும்பினேன். நடந்து கொண்டிருந்தவன், யன்னலோரம் வந்து என்னையும் கோழியையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தான். ஓரத்திலிருந்த கதிரையை இழுத்துப்போட்டு இருந்தான். கடுமையான யோசனை செய்பவன் போலத் தோன்றினான்.
சேச்மணி இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவன் மறுபடியும் எழும்பி மாறிமாறி நடந்தான்.
'டாண் டாண்.. டாண் டாண்' என்று அவனும் ஒலி எழுப்பியபடியே மணியொலிக் கேற்றவாறு வலது தோளையும் இடது தோளையும் அசைத்தபடி நடந்தான். 'ஹ’ட்லர் ர்ர்ர்ர்' என்று நீட்டிக் கத்தினான். மறுபடியும், 'டாண் டாண் ...டாண் டாண்' என்று எனக்கு கிட்ட வந்து கையைக் காட்டி சிரித்தபடியே, மணியோசையுடன் கத்தினான்.
அவனால் ஓர் இடத்தில் நிற்க முடியவில்லை. அங்கும் இங்கும் நடப்பதாகவும் புகைப்பதாகவும் இருந்தான். நானும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகள். மனைவி இருபத்தைந்து வருடமாக ஜேர்மனியில் இருப்பதாகவும், ஒரு திருட்டுக் குற்றத்திற்காக பத்தொன்பது மாதங்களாக பன்னிரண்டு வருடங்களிற்கு முன்பு கைதியாக இருந்ததினால் இந்த நாடு கடத்தலென்றும், இனி ஆறு வருடங்களிற்குள் ஜேர்மனிக்குள் நுழைய முடியாதென்றும் சொன்னான்.
'இத்தாலிக்குப் போனால் என்ன செய்வாய்? குடும்பம்? திரும்பி வருவாயா?' எனக் கேட்டேன்.
இல்லையென்றும், தன் மனைவி ஹொலண்டைச் சேர்ந்தவளென்றும், அங்கு, குடியேறவிருப்பதாகவும் சொன்னான்.
அந்தத் திருட்டு விசயத்தைப் பற்றி கேட்க எனக்கு விருப்பமாகவிருந்தது. கோபித்துக் கொள்வானோ என ஒரு தடவை யோசித்தேன். இருந்தாலும் கேட்டேன். அவன் அதைப் பற்றி உற்சாகமாகவே சொன்னான்.
ஒரு மில்லியன் பெறுமதியான சுவர்க்கடிகாரம் என்றும் அப்படி உலகத்தில் நான்கைந்து தான் இருக்கிற தென்றும், அதுவொரு பணக்காரன் வீட்டில் இருந்த தென்றும், அதைத்தான் திருடி இருநூற்றியம்பது ஆயிரம் மார்க்குகளுக்கு ஒரு யூதனுக்கு விற்றுவிட்டதாகவும், அப்பணத்திலே தான் கோட் செலவுகள் செய்ததாகவும், மீதியில் ஹொலண்டில் வீடு வாங்கியதாகவும் சொன்னான்.
'பகிடி தெரியுமா? நான் திருடியதாக கோட்டால் நிரூபிக்க முடியவில்லை' என்றான் சல்வதோரை சிரித்தபடியே.
'திருடனென்று நிரூபிக்காமலா பத்தொன்பது மாதங்கள் சிறையிலிருந்தாய்.'
'அதைவிடு. பணம் கிடைத்ததே...' என்றான் உத்ஸாகமாக.
மாலை ஒன்பது மணியைத் தாண்டிவிட்டது. வெயில் இன்னும் தாழவில்லை. நானும் சல்வதோரையும் பேசிக்கொண்டிருந்தோம். பக்கத்து அறைக் கதவு உதைத்து சத்தம் கேட்டது. அதில் அல்போன்சும் சிறியும் இருந்தார்கள். காலையில் அல்போன்ஸ் தனக்கு உடம்பு சரியில்லையென்றதும் ஞாபகம் வந்தது.
கதவு தொடர்ந்து தட்டப்பட்டுக் கொண்டிருந்தது. காவலாளி வந்து, 'என்ன வேண்டும் உங்களுக்கு' என்று கத்தினான்.
'டொக்டரைக் கூப்பிடு, அல்போன்சுக்கு நெஞ்சுவலி...கதவைத்திற' என்று சிறி கத்தினான்,
'...இப்ப முடியாது. ஜன்னலைத் திறந்துவிட்டு படு. காலையில் விண்ணப்பம் எழுதிக் கொடு' என்று கத்திக் கொண்டு காவலாளி போய்விட்டான்.
'இன்றைக்குச் செத்துப் போ. நாளைக்கு விண்ணப்பம் எழுது. விண்ணப்பம் தெரியுமா விண்ணப்பம்' என்று எனக்குச் சொன்னபடியே சிறி கதவருகில் போய் நின்றான். குரலைச் செருமி காவலாளிகளின் தடித்த குரலை தனக்கும் வரவழைத்தபடி, 'என்ன! என்ன வேண்டும் உனக்கு! முடியாது...இப்ப இல்லை நாளைக்கு...ஓம் நாளைக்கு விண்ணப்பம் எழுது' என்று 'மிமிக்கி' செய்து சிரித்துக் கொண்டிருந்தான். விண்ணப்பம் எழுதி எழுதி நாங்கள் ஓய்ந்து போவோம். 'தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்' என்பதற்கிணங்க நாங்கள் 'தட்டிக் கொண்டும் கேட்டுக் கொண்டும்' இருந்தோம். திறக்கப்பட்டதா கொடுக்கப்பட்டதா என்பது செத்துப் போன யேசுவிற்கு தெரிய நியாயமில்லை. நாங்கள் தேடிக் கொண்டு மட்டும் இருந்தோம். சல்வதோரைக்கு ஹ’ட்லரைக் கண்டு பிடிக்க இருப்பத்தைந்து வருடங்கள் ஆயின.
அம்மா சூரியன். அப்பா நிலவு.
நாங்கள் வெயிலின் குழந்தைகளாகப் பிறந்தோம்.
...பனியிலும், பனியின் நிழலிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோம். பனி வெள்ளை நிறம் என்பதைக் கண்டு பிடித்தோம்.
பனி நிலத்தின் வெயில் காலமொன்றில் கைதிகளாக்கப் பட்டோம்.
எங்களின் தோலின் நிறம் வெள்ளை அல்ல என்பதை ஐரோப்பாவை நாங்கள் கண்டுபிடித்த பின்னர்தான் உணர்ந்து கொண்டோம்.
எங்களை சமுத்திரத்திலும், நிலத்திலும் தேசங்கள் தாண்டி தேசங்களுக்கு வீசி எறியவும் ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களுக்காகவே உதவின என்பதையும் கண்டுபிடித்தோம்.
கொலம்பஸ’ன் வாரிசுகள் உலகத்தின் தரித்திரங்களென்றும், ஐரோப்பாவையும் ஐரோப்பியரையும், ஹ’ட்லரையும், ஹ’ட்லரின் ஜேர்மனியையும், ஜேர்மனியரையும் பிரித்துப் பிரித்து கண்டுபிடித்தோம். எங்களின் செல்வங்கள், எங்களின் கோதுமை, எங்களின் அரிசி, எங்களின் ஆடைகள், எங்களின் உழைப்பு, எல்லாம் கொள்ளை கொண்டு மலையாய் ஐரோப்பாவில் குவித்து வைத்ததையும் கண்டுபித்தோம்.
பின் குறிப்புகள்:
கருத்துகள்
கருத்துரையிடுக